பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் பாகவதம்

மே 3, 2024

மூன்றாவது ஸ்கந்தம்- கபிலரின் உபதேசம்

அத்யாயம்25

ஆத்ம ஞானம் என்பதை உலகுக்கு தெரிவிக்க தானே தன் மாயையால், கபிலராக பிறந்தார் என்பது தெரியும். அவருடைய உபதேசம் என்ன என்பதைச் சொல்லுங்கள், சூதரே என்று சௌனகர் வினவினார்.  சூதரும் தொடர்ந்தார்.

தந்தை வனம் சென்றதும், பிந்து சரஸ் என்ற அந்த இடத்தில் தாயுடன் கபிலர் இருந்தார்.  தத்வ மார்கத்தை பிரசாரம் செய்வதாகச் சொன்ன மகனிடம் தேவஹூதி கவலையுடன் சொன்னாள்.  ப்ரும்மாவின்,  பகவானே உன் மகனாக பிறப்பான் என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.  நீ சாக்ஷாத் பகவானே என்று அறிவேன்.  தமோ குணத்தால்  அறிவு என்ற கண் பார்வை மறைக்கப்பட்ட மனிதர்களுக்கு நீ சூரியன் போல ஒளியை அருள்வாய். அதனால் என் மோகத்தையும் தீர்த்து வை. என் வாழ்க்கையில் இதுவரை நான் உலகியலைத் தவிர எதையும் அறியவில்லை. நான், என்னுடையது என்பது மட்டுமே எனது அறிவின் எல்லை. அதனால் உன்னை சரணடைகிறேன். உன் அடியார்களின் சம்சாரம் என்ற பெரிய மரத்தை அடியோடு சாய்க்கும் கோடாலி நீ.  நான் இப்பொழுது என் போன்றே அறியாதவர்களின் சார்பாக உன்னை வணங்கி ஞானத்தை யாசிக்கிறேன்.

மைத்ரேயர் விவரித்தார். தன் தாயார் இவ்வாறு சொல்லவும், சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.  அவரே அபவர்க வர்தனன் என்று சொல்லப் படுபவர்- முன் ரிஷிகளுக்குச் சொன்ன அதே விஷயம் தான். யோகம் உடல் அங்கங்களுக்கு நல்லதைச் செய்யும்.  பந்தத்தில் ஆழ்வது மனதின் காரணமாகவே.  மூன்று குணங்கள், சத்வ ரஜஸ் தமஸ் என்பவை மனதை ஆட்டுவிக்கின்றன.  நான், என்னுடைய என்ற அபிமானம்.  காமம் லோபம் முதலானவைகளுக்கு அடிப்படை.  மனம் சுத்தமானால் சுகமும் துக்கமும் சமமாக ஆகும்.  ப்ரக்ருதி அல்லது இயற்கை என்பதற்கும் மேலான ஆத்மா நிரந்தரமானது. ஸ்வயம் ஜோதி ரூபமானது. அணுவைப் போல பிளக்க முடியாதது.  ஞானம், வைராக்யம் இவைகளுடன் பக்தியும் சேர்ந்து  தன்னிலிருந்து வேறாக உலகியலை தானே பார்த்துக் கொண்டிருக்கிறது.  தூண்டுகோலாக ஆத்மா இல்லாதவரை  ப்ரக்ருதி தானாக எதையும் செய்வதில்லை.  அகிலாத்மாவான பகவானிடத்தில் பக்தி இல்லாத இடத்தில், ப்ரும்ம சித்தியை அடைய  வேறு வழி கிடையாது.

ஆத்மாவை  மூப்பில்லாதது, அழியாதது, என்று  கவிகள் அறிவார்கள்.  அதனால் ஆத்மாவை அறிவதே முக்திக்கு வழி என்று அவர்கள் வகுத்தார்கள்.  அப்படி முக்தி பெற விரும்புபவர்கள் தயை உடையவர்கள். அனைத்து உயிரினங்களிடமும் நட்பாக இருப்பவர்கள்.  இவர்களுக்கு சத்ரு என்று எவரும் இல்லை. சாந்தமாக, சாதுவாக இருப்பவர்கள். இந்த சாதுவான அமைதியான குணமே ஆபரணமாக இருப்பார்கள்.

மாற்று எண்ணம் இன்றி என்னையே திடமாக நம்பி பக்தி செய்பவர்கள், என் காரணமாக தன் செயல்கள், பந்து ஜனங்கள்  இவர்களைக் கூட தியாகம் செய்பவர்கள். என்னையே ஆசிரயித்து, என் கதைகளில் மகிழ்ந்து, தானும் சொல்லி, சொல்பவர்களிடம் கேட்டும், பலவிதமாக விரதங்களைச் செய்து, என்னையே நம்பி இருப்பவர்கள்  எந்த தாபத்தையும்- கஷ்டத்தையும் அடைவதில்லை. இவர்கள் தனித்து இருப்பார்கள்.  அப்படி கூட இருப்பவர்களையும் தங்கள்  நல்ல குணத்தால் குற்றம் இல்லாதவர்களாகச் செய்து விடுவர். அவர்களையும் ஞான மார்கத்தில் கொண்டு வந்து விடுவர்.  புலன்களின் வசம் ஆவதில்லை. கண் பார்த்தும், செவி கேட்டும் உணர்வது என் செயல் என இருப்பர். யோக மார்கத்தில் மனதை செலுத்துவர். ஞான வைரக்யம் நிரம்பிய குணம், என்னிடம் அர்ப்பித்த யோகம், அதனுடன் பக்தியும் சேர்ந்து என் போலவே ஆவார்கள்.

தேவஹூதி கேட்டாள்: எந்த விதமான பக்தி? என் கண்களுக்கு தெரிந்த அல்லது நான் அறிந்து அனுசரிக்க கூடிய  பக்தி மார்கம் எது?  எந்த விதத்தில் நான் நீ சொல்லும் முக்தி என்பதை அடைய முடியும்? யோகம் என்பது என்ன? நிர்வாணம் அல்லது முக்தி என்று நீ எதைச் சொல்கிறாய்? அதன் தன்மை என்ன? அதன் பகுதிகள் என்ன என்ன? தத்வ அவபோதம்- உண்மையை அறிதல் என்று சொன்னாய்- அந்த உண்மைப் பொருள் எது?  மந்த புத்தி நான். எனக்கு புரியும்படி சொல்லு.  ஹே ஹரே!  கடினமான இந்த ஞான மார்கம் உன் அனுக்ரஹத்தால் நான் சுலபமாக அறிந்து கொள்ளும் படி சொல்லு.

மகனிடம் தாய் இவ்வாறு சொன்னதும், அன்புடன் திரும்பச் சொல்ல ஆரம்பித்தார். சாங்க்யம் அல்லது ஞான மார்கம் என்பது என்ன என்று இன்னமும் தெளிவாக சொல்லலானார்.  பக்தியுடன் இணைந்த யோகம் என்று வேதங்களில் சொல்லியிருப்பதை விவரமாக சொல்லானார்.  

தேவர்கள் இயல்பாகவே சத்வ குணம் மிக்கவர்கள்.  அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்பவர்கள்.  உண்மையான நம்பிக்கையும் அளவில்லாத பக்தியும் சித்திகள் என்பனவற்றை விட சிறந்தவை.  ஜடராக்னி- வயிற்றில் உள்ள நெருப்பு உண்ட உணவை  விழுங்குவது போல, சேர்ந்து வரும்  பந்த பாசங்களால் அடைந்த சரீரம் என்ற உருவை ஞானம் உடனடியாக அழித்து விடும். ஆத்மாவை அறிந்த ஞானிகளை பந்த பாசங்கள் பாதிப்பதில்லை.  என் பாதங்களை சேவித்தவர்கள்.  தங்களுக்குள் என் பக்தர்கள் பேசி விமரிசித்துக் கொள்வார்கள்.  சாயுஜ்யம், மோக்ஷம் என்பது பற்றி கூட ஆசைப் படுவதில்லை. என்னைப் பற்றி என்ன சொல்வார்கள் தெரியுமா அம்மா?  ப்ரசன்னமான முகம், அருணன் போல சிவந்த கண்கள், அழகான உருவம், கைகள் வரம் கொடுப்பதே காரியமாக  இருப்பவை, என் பேச்சு ரசிக்கத் தகுந்ததாக இருப்பதாகச் சொல்வார்கள்.  அவர்கள் என் அவயவங்கள் காணத் தகுந்தவை என்பர்.  கண்களால் சிரிப்பதாக, நகைப்பும், உல்லாசமும் நிறைந்த சொற்களால் விளையாட்டாக பேசி விரும்பாதவர்களையும் என் பால் கொண்டுவந்து விடுவதாக சொல்வர்.   என் மாயையால்  ஐஸ்வர்யம், அஷ்டாங்கம்- எட்டு விதமான செல்வங்களையும் அடைவர்.  சிறந்த செல்வம் என்று பாகவதர்களையே விரும்புவர்.  ஒரு போதும் என் நினைவின்றி இருக்க மாட்டார்கள். நான் அவர்களுக்கு பிரியமான ஆத்மா, மகன், சகா, குரு, நண்பன், இஷ்ட தெய்வமும் ஆவேன்.

இந்த உலகம், அதே போல பரலோகம் இரண்டிலும் ஒரே விதமாக பற்றின்றி இருப்பர்.  சரீரத்தில் பற்றில்லாததால், இந்த தனம், தன் வீடு, பசுக்கள் என்ற சாதாரண விஷயங்களில் ஈடுபாடு இருக்காது. இவ்வாறு என்னையே சகலமும் என்று நம்பி இருப்பவர்களை நான் ம்ருத்யு பயத்திலிருந்து காப்பேன்.  மறு பிறவி அவர்களுக்கு கிடையாது.  பயம் அவர்களை அண்டாது.  என்னிடம் உள்ள மரியாதையால் அவர்களை காற்று அலைக்கழிக்காது.  சூரியன் தபிக்காது. இந்திரன் தவறாது வர்ஷிப்பான். அக்னி தஹிக்காது. மரணமும் அண்டாது.  ஞான வைராக்யம் இவற்றுடன் பக்தியும் சேர்ந்து இருப்பதே பக்தி யோகம் என்பது.  இவர்கள் என்றும் க்ஷேமமாக,  எதிலும் பயம் என்பதே இல்லாமல், என் பாத மூலம் அடைகிறார்கள்.  இது போன்ற மனிதர்கள் தான்  திடமான நம்பிக்கையால் இந்த உலகில் நன்மைகளை கொண்டு வருவார்கள். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபத்து ஐந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-44 

 அத்யாயம்-26

பகவான் தொடர்ந்தார்.  இப்பொழுது இன்னமும் ஆழ்ந்த தத்வங்கள் என்ற விஷயங்களைச் சொல்கிறேன்.  தனித் தனியாக விவரிக்கிறேன். இதை அறிந்தவர்கள்,  உலகியல், இயற்கையாக உள்ள பல விஷயங்களை பற்றி தெளிவாக இருப்பார்கள்.  வேதம் சொல்லும் மூன்று மார்கங்கள், ஞானம், யோகம், பக்தி என்பவை.  மனிதனின் ஆத்ம தரிசனம் ஞானம். இது பற்றி முதலில் சொல்கிறேன்.  அஹங்காரம் என்பதை அழிக்கும் ஞானம் ஆத்ம தரிசனத்திற்கு வழி வகுக்கும்.

ஆத்மா அழிவற்றது. புருஷன் என்பவன் (பரமாத்மா) குணங்களால் பாதிக்கப் படாதவன். (உடல் தன் அவயவங்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும் அதை இயக்க பரமாத்மாவின் அம்சமாக ஆத்மா வேண்டும். பூரயதி இதி புருஷ: – வெற்றிடத்தை நிரப்பி இயக்குவதால் புருஷன் என்பது பொருள்) அந்த பரமாத்மா  தனக்கென்று ஒரு பிரகாசம் உடையவன், தனக்கென்று இருப்பிடம் உள்ளவன், தானே ஒளியாக உலகில் பரவியிருப்பவர்.   எதேச்சையாக தானே வந்து சேர்ந்த  இயற்கை தத்வங்களை  (பஞ்ச பூதம் -ஆகாயம்,வாயு முதலானவை)விளையாட்டாக ஏற்றுக் கொண்டார்.  இவை சூக்ஷ்மமானவை, இவை உண்டானது பகவானிடத்திலிருந்து என்பதால் தெய்வீகம்.   குணங்கள் என்பவைகளும் பகவானிடமிருந்து தோன்றியவையே.  விசித்ரமாக குணங்களுடன் பஞ்ச பூதங்களுடனும் சேர்ந்து ஒரு நிலையில்   பிரஜைகள் உருவங்களோடு வெளிப்பட்டார்கள்.  அதில் ஏற்பட்ட குதூகலத்தால், மேலும் அறிந்து கொள்ள விழைந்தார்.  இயற்கை தத்துவங்களைக் கொண்டு பலவிதமாக மாற்றி மாற்றி அமைத்து பார்த்தார்.

மனிதன் தன்னிலும் வேறாக இயற்கை தானாகவே செய்வதையும் தான் செய்வதாக எண்ணுகிறான். அதனாலேயே சம்சார பந்தம், அதன் விளைவாக அதிலேயே கட்டுப்படுகிறான்.   ஈஸ்வரனின் செயல் என்று ஞானிகள் விலகி இருப்பர்.  கார்யம்-செயல், காரணம்-இயற்கை, கர்த்ருத்வம்- செய்பவன், இந்த மூன்றில் காரணம் என்பது ப்ரக்ருதி.  சுக துக்கங்களின் அனுபவம் என்பதில் புருஷன் என்றபரமாத்மா, ப்ரக்ருதி என்ற இயற்கை தத்வங்களுக்குள் வருவதில்லை.  அந்த அனுபவங்கள் பரமாத்மாவுக்கு இல்லை.

தேவஹூதி கேட்டாள்: ப்ரக்ருதி, புருஷன் இரண்டையும் பற்றி விவரமாகச் சொல்லு, புருஷோத்தமா!.  என்ன காரணம் ? எதனால், நல்லது,  நல்லதல்ல  என்று அறியப் படுகிறது.  இரண்டுமே ஒரே பகவானிடம் தானே தோன்றியவை என்றாய்.

மூன்று குணங்கள், இவை கண்களால் காண முடியாத உணர்வுகள்.  இயற்கையை ஸ்தூலம் என்றும், ப்ரதானம் என்ற பகவானின் அம்சத்தை , சூக்ஷ்மம் என்றும் சொல்வர். இருபத்து நாலு தத்வங்கள். பஞ்ச பூதங்கள் ஐந்து, நிலம்,நீர்,அக்னி,வாயு,ஆகாசம் என்ற ஐந்து – தன் மாத்ரைகள், கந்த-வாசனை ரசம்-ருசி, ரூபம், ஸ்பர்ஸ-தொடு உணர்வு, சப்தம் என்பன. – செவி,கண் முதலிய 5,   கை,கால் முதலிய அவயவங்கள் பத்து, கண்,காது,நாசி,வாய், சருமம், கைகல்-2,கால்கள்2, வாய், மேட்ரம்,பாயு  என்ற கர்மேந்திரியங்கள் பத்து, மனம், புத்தி, அஹங்காரம்,சித்தம்  என்ற ஐந்தும் அந்தராத்மா வில் அடங்கும். இவர் நான்கு விதமாக அதன் செயல்கள், லக்ஷணங்கள், ரூபம் என்ற அடிப்படையில் பிரிக்கப் பட்டுள்ளது.  இவ்வளவு தான் கணக்கு, ப்ரும்மாவுடையதும், குணங்களுடன் உள்ள மனிதர்களுக்கும்.  இருபத்தைந்து விதமான காலங்கள். சன்னிவேசம் எனப்படும்.

ப்ரபாவம், பௌருஷம் என்பவை  ஒரு காலன் –   அதுவும் இயற்கை தான் என்றாலும் மனிதனின் அறிவின்மை,  அவனிடத்தில் பயம்.  உள்ளே புருஷ ரூபம், வெளியில் காலன் இதை பகவான் தன் திறமையால் சமமாக நிர்வகித்து வருகிறான்.  காலன் என்ற இந்த தேவனும் பகவானின் ஸ்ருஷ்டியே.  தன்னுள்ளேயே விஸ்வம் என்பதை யோசித்து தயார் செய்து கொண்டு தான் பகவான் உலகின் பீஜமாக இருந்து தன் தேஜசால், சத்வம் என்ற  தெளிவான, சாந்தமான சத்வ குணத்தால் வாசுதேவன் என்ற பெயருடைய சித்தம் என்பதுடன் மஹத் என்பதை ஸ்ருஷ்டி செய்தார்.  தெளிந்த நீரைப் போல  மிகத் தெளிவானது, மாறாதது, சாந்தமாக இருப்பது என்பவை புத்தியின் செயலுக்கு லக்ஷணமாக சொல்லப்படுகிறது.

இந்த மஹத் என்ற தத்துவத்தை பகவானுடைய வீர்யமும் சேர்ந்து க்ரியா சக்தி, அஹங்காரம் (தன்னியல்பு) மூன்று விதமான தோன்றின.  அதன் பின் மேலும் தாமசத்துடன் சேர்ந்து மனம் இந்திரியங்கள், பஞ்ச பூதங்கள் இவை உண்டாயின.

ஆயிரம் தலைகளுடன்  அனந்தன் என்று சொல்லப் படுபவர், சங்கர்ஷணர் என்பவர், பஞ்ச பூதங்கள்,மனம், இந்திரியங்கள் இவைகளுடன் சேர்ந்த பரம புருஷன்.   அஹங்காரம் என்பதன் விளைவுகள், செயல்களை (கர்தா-செய்பவன்) செய்தல், செயலுக்கு காரணமாக இருத்தல், (கரணத்வம்)., செயல் (கார்யத்வம்) என்பவை.  சாந்தம், கோரம்,  விமூடம் (மூடத்தன்மை)  வைகாரிகம் என்ற மாற்றத்தால், மனம் என்ற தத்வம் வந்தது. இதனுடைய சங்கல்பம், விகல்பம் என்பவைகளால் காமம் என்பது உண்டாயிற்று.  இதை அனிருத்தன் என்பர். நீல மேக ஸ்யாமளனாக அனிருத்தனை யோகிகள் சொல்வர்.

{ஸங்கர்ஷணர் என்ற ஹரி சூக்ஷ்மமான அஹங்காரம். ஸ்தூலமான அஹங்காரம் ப்ரத்யும்னன். அனிருத் என்பவன் மனத்தை நிர்வஹிக்கும் ஹரி ரூபம். }

 தேஜஸ் (அக்னி) என்பதன் திரிபினால், புத்தி என்பது உண்டாயிற்று. த்ரவ்யம், உணர்ச்சி, விக்ஞானம் என்பவை- பொருள்களை அடையாளம் காணுதல், தானாக உணருதல், மேம்பட்ட அறிவுத்திறன், அதாவது தானாகவே புது விஷயங்களை  கண்டறிவது என்பன புத்தியின் செயல்.

சந்தேகம் என்பது ஒரு பொருளை பலவிதமாக காணுதல். அதுவும் மனதின் வேலையே. பொதுவான அறிவு வேறு விதமாகவும் நினைக்கும்.  தூங்கும் போதும் புத்தி செயல்படும் (நன்றாக தூங்கினேன் என்பது சாதாரணமாக நாம் சொல்வது) தேஜஸ் இந்திரியங்களோடு சேர்ந்து செயல், அறிவு, என்ற இரண்டு விதம். ப்ராணன் -க்ரியா சக்தி, புத்தி- தானே உணரும் சக்தி என்பதாக.

தாமஸ குணத்தோடு   பகவானின் வீர்யமும் சேர்ந்து சப்தம் உண்டாயிற்று. அதனுடன் ஆகாயம் (ஓலியை பரப்புவதாக),  காது சப்தத்தைக் கேட்கும் அவயவமாக,  உண்டாயின.  அர்த்தம் சப்தத்தின் அடிப்படை. கண் பார்வைக்கு உருவம். தன்மாத்ரம் (ஓலி)  என்பது ஆகாயத்தின் அடையாளம் என்று அறிஞர்கள் சொல்வார்கள்.

பஞ்ச பூதங்களின் சேர்க்கை பலவிதமாக (அளவில்)  ஏற்படுத்துவதால், உள்ளும் புறமும் ப்ராண, இந்திரிய, ஆத்ம சக்தி என்பவை ஆகாயத்தின் செயல்கள்.  ஆகாயத்தின் சப்தம் என்ற தன்மாத்ரம் கால கதியில் பட்டு மாறுபடுவதால், ஸ்பர்ஸம் என்பது ஏற்பட்டது. ஸ்பர்ஸம் வாயுவின் குணம். சருமம் என்பது வாயுவின் இடம். ஸ்பரிசம்- தொடுகை என்ற உணர்வை அறிவது உயிரினங்களின் சருமத்தாலேயே.  ம்ருதுவோ, கடினமோ,குளுமை, உஷ்ணம் என்பதை உணர்வது தொடுகை உணர்வால், அதை நிர்வகிப்பது ஆகாயத்தின் தன்மாத்ரம்- உட்பொருள். 

சலனம், அசைவது போன்ற  இந்திரியங்களின் செய்கைகள் வாயுவின் அடையாளம். வாயுவின் தொடுகை என்ற தன்மாத்ரம், 

ரூபம் என்ற ஒரு தத்துவம் தெய்வ தொடர்பால் புதியதாக தோன்றியது. கண் என்ற அவயவம் ருபத்தைக் காண்பதாக தோன்றியது.  

தேஜஸ் என்ற அக்னியின் குணமும் சேர்ந்து உருவம் என்பதின் பல செயல்களை செய்யலாயின.   நான்கு விதமான உண்ணும் வழக்கம், மெல்லுதல், கடித்தல், குடித்தல், விழுங்குதல் – என்பவை இவை அக்னியின் காரியங்கள். இவைகளின் பலன் பசி தாகம் முதலியன.  உருவம் என்ற தன்மாத்திரையோடு, சேர்ந்து மாறுதல் அடைந்து, அக்னியும், தெய்வ சங்கல்பமும் சேர்ந்து, ரஸம் என்ற தன்மாத்திரை உண்டாயிற்று.  அதிலிருந்து நீர் என்பது வந்தது. 

 நாக்கு ரஸத்தை அறியும் அவயவமாயிற்று.  கஷாயம் (கடுப்பு), மதுரம், புளிப்பு, கட்வம்ல- கடுமையான புளிப்பும் கசப்பும் சேர்ந்தது பல ருசிகள், பௌதிகமான மாறுதல்களால் ரஸம் என்பது பலவகைப் படும். மேலும் பல நீரின் செயல்கள்.

 ரஸம் என்ற தன்மாத்திரையோடு செய்வ சங்கல்பமும் சேர்ந்து கந்தம்-வாசனை என்ற புதிய தத்வம் உண்டாயிற்று.  இதன் இருப்பிடம் பூமி, மூக்கு என்ற அவயவம் வாசனையை நுகர்வதாக ஆயிற்று. வித விதமான வாசனகள், தீவிரமாக, சுகமாக என்ற வேறு பாடுகளை முக்கு அல்லது நாசி என்ற அவயவம் உணரும்.ஸ்தானம், தாரணம் -தாங்குதல், என்பவை விசேஷ குணங்கள். சத்வ குணங்களின் பல பேதங்கள், ப்ருதுவீ என்ற பூமியின் அடையாளங்கள். 

நபோ-ஆகாயம் என்பதன் விசேஷமான பொருள் ஸ்ரோத்ரம்- கேள்வி என்பது போல வாயுவின் விசேஷமான பொருள் ஸ்பரிசம் என்றும்,   அக்னி-தேஜஸ் என்பதன் விசேஷமான பொருள் பார்வை -கண் என்பதும், நீரின் விசேஷமான பொருள் ரசனம்- நாக்கு என்பதும், பூமியின் விசேஷமான பொருள் நுகர்தல், அதன் அவயவம் நாசி, நுகருதல் என்பதும், விளங்குகிறது. மஹத் எனும் ஏழு தத்வங்களும் கால,கர்ம,குண எனும் மூன்று தத்வங்களுடன் இணைந்தும் பிரிந்தும் உலகங்கள் என்ற ரூபத்தை அடைந்தன.அசேதனமான அந்த அண்டத்தில் இருந்த (நித்ரையில் இருந்த) பகவான் எழுந்தார்.  அது தான் விராட் ஸ்வரூபம். அண்டம் என்ற இந்த விசேஷ பொருளை, கிரமமாக தண்ணீரால் சூழ்ந்து இருந்ததை,பிளந்து,   பிரதான புருஷனான ஸ்ரீ ஹரி தன் சங்கல்பத்தால் லோகங்களை  உண்டாக்கினார்.பொன் மயமான அந்த அண்டகோசத்திலிருந்து எழுந்து நீரிலிருந்து அதை வெளிக் கொணர பிளந்தார். அப்படி பிளந்த பொழுது ஏற்பட்ட சப்தத்தால் (வாணி), முகம் (வாய்) தோன்றியது.  வாணியிடமிருந்து அக்னி வந்தது. அதன் பின் நாசியில் பிராணன் என்பதும் தோன்றின. அதன் அவயவமாக மூக்கு எழுந்தது. நாசி-க்ராணம் என்பதிலிருந்து வாயுவின் தாக்கத்தால்  இரண்டு கண்கள் தோன்றின.  அதில் சூரியன் நுழைந்து அதன் தாக்கத்தால், காதுகள், ஸ்ரோத்ரம்-கேட்கும் அவயவம், அதன் பின் திசைகள் என்று வரிசையாக வந்தன.இவ்வாறு த்வக்-சருமம்,  ரோமம்-மேல் தோலில் மயிர்கால்கள்,  மீசை முதலியன தோன்றின. அதன் பின் ஜனன உறுப்புகளும் உடல் நீர்களும் வந்தன. ரேதஸ் என்பதில் தண்ணீர் இருந்தது.  குதம், அதிலிருந்து அபான வாயு, இது ம்ருத்யு எனப்படும். பிராணன் பிறப்பு -ஆரம்பம்- இது முடிவு 

கைகளை இணைத்தார். அவைகளில் பலம் என்பதை கூட்டினார். சுயம்பூ-ஸ்வராட் -என்ற பகவான் கால்களை இணைத்தார். அவைகளுக்கு கதி-நடை என்பதை குணமாக கூட்டினார்.  பின் நாடிகள், அவைகளில் லோஹிதம் என்ற ரத்தம்- இது அம்ருதம் எனப்பட்டது -இதைக் கூட்டினார். வெளியுலகில் நதிகள் தோன்றின.  மனித உடலில் உதரம் என்ற வயிற்று பாகம், வெளி உலகில் சமுத்திரம்.  பசி தாகம் இவை தோன்றின.

அதன் பின் ஹ்ருதயம் என்ற அவயவம். அவருடைய ஹ்ருதயத்திலிருந்து மனம் என்பதும் உண்டாயிற்று. மனதில் இருந்து சந்த்ரமா  வந்தான்.  புத்தியும், புத்திக்கு அதிபதியாக வாக்பதி என்ற ப்ரும்மா.  அஹங்காரம் என்பது ருத்ரனாக, சித்தம் அதனுடன் வந்தது.  இவ்வளவும் வந்த பின்னும் தேவர்களால் இதை எழுப்ப முடியவில்லை. தாங்களே பொறுப்பு ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு அவயவத்தையும் அசைக்க முயன்றனர்.

அக்னி முகத்தில் சொல் என்பதாக,  முகத்தில் குடியேறியது.  விராட் ஸ்வரூபம் அசையவில்லை.

வாயு நாசியில் அமர்ந்தது. விராட் ஸ்வரூபம் அசையவில்லை. 

இரண்டு கண்களிலும் சூரியன் நுழைந்தான், விராட் ஸ்வரூபம் அசையவில்லை.

கேள்வி என்பதன் காதுகளில் திசைகள் நுழைந்தன, விராட் ஸ்வரூபம் அசையவில்லை.

சருமத்தில், ரோமங்களில் ஓஷதிகள் நுழைந்தன, விராட் ஸ்வரூபம் அசையவில்லை.

ரேதஸ் என்ற பீஜ ஸ்தானத்தில் ஆப: என்ற நீர் இடம் கொண்டது, விராட் ஸ்வரூபம் அசையவில்லை. குதத்தில் அபான வாயு ம்ருத்யுவாக இடம் கொண்டது, விராட் ஸ்வரூபம் அசையவில்லை.,

இந்திரன் கைகளில் பலம் என்பதாக வந்தான், விராட் ஸ்வரூபம் அசையவில்லை.

விஷ்ணு தானே கதியாக பாதங்களில் வந்தார், விராட் ஸ்வரூபம் அசையவில்லை,

நாடிகளில் நதிகள் ரத்தமாக ஓடின, விராட் ஸ்வரூபம் அசையவில்லை,

பசி, தாகம் என்று உதரத்தை சமுத்திரம் ஆட்கொண்டது, விராட் ஸ்வரூபம் அசையவில்லை,

சந்திரன் மனம் என்பதாக  ஹ்ருதயத்தில் வந்தமர்ந்தான். விராட் ஸ்வரூபம் அசையவில்லை,

ப்ரும்மாவும் ஹ்ருதயத்தில் புத்தியாக வந்தமர்ந்தார். விராட் ஸ்வரூபம் அசையவில்லை,

அபிமானம் அல்லது அஹங்காரம் (தன்னியல்பு) என்பதாக ருத்ரன் வந்து அதே ஹ்ருதய்த்தில் இடம் பிடித்தார், விராட் ஸ்வரூபம் அசையவில்லை,

சித்தத்தில் மனசாட்சி என்பது குடியேறியது. விராட் ஸ்வரூபம் அசையவில்லை. 

அச்சமயம் விராட் புருஷன் சூழ்ந்திருந்த தண்ணீரிலிருந்து எழுந்தார்.

மனிதன் தூங்கி விழிப்பது போல இருந்தது.  அவரே ப்ராணன், இந்திரிய, மனம்,புத்தி  -அவர் இல்லாமல் வேறு யாரால் விராட் புருஷனை எழுப்ப முடியும்?  ஆத்மானம் -தன்னுடையதே ஆன யோக முறையால் பக்தி, விரக்தி, ஞானம் என்பவைகளைக் கொண்டு யோசித்தார். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபத்து ஆறாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -72

அத்யாயம்-27

ஸ்ரீ பகவான் சொன்னார்.

ப்ரக்ருதி என்ற உலகியலில் இருந்தாலும் புருஷ என்ற பரமாத்மா, உலகியல் இயல்புகளை ஏற்றுக் கொள்வதில்லை.  குளத்து நீரில் சூரியனின் பிம்பம் தெரிவது போல – குளத்து நீரில் பிம்பம் அசைவது உண்மையில் சூரியனின் அசைவு இல்லை என்பதை நாம் அறிவோம்.  அதே போல நீரின் குணமான குளுமை அந்த சூரியனை பாதிக்காது. 

அதே போலத்தான் பரமாத்மா உயிரினங்களில் இருப்பதும்- மாறுதல்கள் அதற்கு இல்லை. செயல்களும் அதற்கு இல்லை. அதற்கு தனியாக ஒரு குணம், அதாவது அடையாளம் என்பதும் இல்லை. உடலுக்கு ஏற்படும் சுக துக்கங்கள் அதை பாதிப்பதும் இல்லை.  ஆனால் மனிதன் பரமாத்மாவின் அனுக்ரஹத்தை உணராமல் நான் செய்கிறேன் என்று சொல்வது அபத்தம்.  பின், ஏன் சம்சார பந்தத்தில் ஈடுபடவேண்டும்?   பரமாத்மா இன்றி இயக்கமே இல்லை. அவனன்றி அணுவும் அசையாது என்பது ஆன்றோர் வாக்கு.  உயிரினங்களின் உடலை இயக்குவது இந்திரியங்கள் மட்டுமாக செய்வதில்லை,  ஆத்ம சக்தி என்பது பகவானின் அம்சம்.  அதை மனிதன் உணர வேண்டுமானால்  முன் சொன்ன பக்தியோ, ஞானமோ, கர்ம  யோகமோ (வேதோக்தமான யாகாதிகள் செய்வது) செய்து சாதனகள் செய்யவேண்டும்.

தேவஹூதி கேட்டாள். ப்ரக்ருதியும் புருஷனும் அன்யோன்யமாக இருந்து தான் உலகமே வந்தது.  இரண்டும் நித்யமானதே, ஒன்றையொன்று சார்ந்து இருப்பதே என்று சொன்னாய். பூமிக்கு கந்தம், நீருக்கு ரஸம் என்பது போல புத்திக்கு பரமாத்மா என்ற புருஷன் என்ற வகையில்  சுக துக்கங்கள், மற்ற செயல்களின் விளைவுகள்  ப்ரக்ருதிக்கு மட்டுமே,  நான் சம்பந்தப் படவில்லை என்று புருஷன் எப்படி விலகி இருக்க முடியும்?  அப்படி சம்சாரம் என்ற உலகியலில் மூழ்கி இருக்கும் ஜீவன்கள், கைவல்யம் என்று எப்படி அறிவார்கள்? அதை அடைவது என்பது என்ன?  ஏதோ காரணத்தால், குணம் பற்றிய விவரங்கள் அறியாததால், இயற்கையின் தாக்கத்தால் பயம்-ஆபத்து ஏற்பட்டால், எப்படி மீள்வது?

பகவான் சொன்னார்: கனவில் காண்பதை நிஜம் என்று எண்ணி பயப்படுவதோ, கலங்குவதோ போலத் தான் சம்சாரமும்.  புத்திமானாக இருப்பவன் என்னை நம்புகிறான்.  பக்தி மார்கத்தில் ஈடுபடுவான். ஞானம் உள்ளவன் மனோ பலத்தால் வைராக்யத்தால், தவத்தால்,  என்னை அடைவான். யோக மார்கம் ஆத்ம சமாதி போன்ற நியமங்களால் என்னை அடைய வழி வகுக்கிறது. இவ்வகையில் தன்னையே உயர்த்திக் கொள்ள உள்ள வழிகள் பயத்தைப் போக்கும். ஈஸ்வர சகாயம் அவர்களை நல்ல கதியில் சேர்க்கும். தானாக விழித்துக் கொள்ளாத மனிதனை எழுப்புவது சுலபமல்ல. அதே சமயம் விழித்துக் கொண்டிருக்கும் மனிதனை மோகமும் அண்டாது.  இவ்வாறே, உண்மையை உணர்ந்தவன் இயற்கை என்பதையும், அதில் என் பங்கையும் தெரிந்து கொள்வான்.  அத்யாத்மம் என்பதில் லயித்தவர்கள், பல ஜன்மங்களில் தொடர்ந்து சாதனைகளைச் செய்து ப்ரும்ம பதத்தையே அடைவார்கள்.  பக்தி செய்பவன் என் அருளால் என் இருப்பிடமான கைவல்ய பதவியை அடைவான்.  ஞானியோ தானே பல விஷயங்களை கண்டும் கேட்டும் தெரிந்து கொண்டு அனுபவ பூர்வமாக என்னை அடைவான். இது போன்ற எந்த முயற்சியிலும் மனதை செலுத்தாமல், மாயையான உலகையே சாஸ்வதமாக நம்புபவன் அவனும் காரணமின்றியே, ம்ருத்யு பயம் இல்லாத நிலையை கடைசியாக அடைவான்.

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த    காபிலேயோபாக்யானம்  – என்ற மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபத்து ஏழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -30

அத்யாயம்-28

ஸ்ரீ பகவான் சொன்னார்:   யோகத்தின்  லக்ஷணம் என்பதைச் சொல்கிறேன்.  அதன் பீஜங்களோடு விவரிக்கிறேன். அதன் மூலம் மனிதன் நல் கதியை அடைவான்.

தன் தர்மத்தை கடை பிடித்தலும், பர தர்மத்திலிருந்து விலகி இருப்பதும் முதல் படி. தெய்வ அனுக்ரஹத்தால் கிடைத்ததில் சந்தோஷமாக இருப்பது அடுத்தது.  அவரிடம் பக்தியுடன் இருப்பது.  உலக வாழ்க்கையில் அதிகம் உழலாமல், மோக்ஷம்  என்பதை அறிந்து கொள்ளுதல். அதை அடைய மிதமான ஆகாராதிகள், மற்ற உலகியல் அனுபவங்கள் அந்தந்த தேவைகளுக்கு மட்டுமாக, இதற்கு மேல் ஒரு விஷயம் உள்ளது என்பதை சதா நினைவில் இருத்திக் கொள்ளுதல்.

அஹிம்சை, சத்யம், திருடாமை, தன் செல்வம் தானே ஈட்டியது போதும் என்று இருப்பது, ப்ரும்ம சர்யம், தவம், ஒழுக்கம், உடலும் மனமும் சுத்தமாக இருத்தல், தன் கல்வி, அறிவை மேம்படுத்திக் கொள்ளுதல், பகவானை வணங்குதல்- இவையே தினசரியையாக இருக்க வேண்டும். .அளவாக பேசுவதும் மௌனம் என்பதும் நல்லது. ப்ராணாயாமம் செய்வதும், (ப்ராணாயாம், ப்ரத்யாஹாரம் என்ற இரண்டும்) மனதை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.  அனாவசிய சபலங்கள் அலைக்கழிக்காது.  இவ்வாறு மெள்ள மெள்ள யோக சாதனையைச் செய்து வந்தால் சில நாட்களில் தியானம் செய்வது சுலபமாகும்.   சுத்தமான இடத்தில், சுகாசனத்தில் அமர்ந்து ப்ராணனை பூரக, கும்பகம், ரேசகம் என்ற முறைகளில் தன் வயப் படுத்திக் கொண்டு,  தியானம் செய்து வர, மனம் சீக்கிரமே தன் வசப் படும். இவ்வாறு சுவாசத்தை ஜயித்தவர்கள் தான் யோகிகள்.  காற்றையும் அக்னியையும் கொண்டு லோஹம்-இரும்பை சுத்தம் செய்வது போல இது. 

ப்ராணாயாமத்தால், உடல் சுத்தமாவது போலவே, தாரணை என்பதும் ப்ரத்யாஹாரம் என்பதும் பயிற்சிகள். ஈஸ்வரனை நினைத்து தியானம் செய்யும் பொழுது, ப்ரத்யாஹாரத்தால், சம்சர்கம்- பற்றுதல்  என்பது விலகும். இந்த நிலை வந்தபின், உடலை கட்டையாக நிலையாக வைத்துக் கொண்டு நாசி யில் கண் பார்வையை ஸ்திரமாக வைத்து, யோக சாதனையை செய்வது அடுத்த படி.   ப்ரசன்ன வதனன், பத்ம கர்பன், அருண லோசனம், நீலோத்பலதள ஸ்யாமளன்,  சங்க சக்ர தா தாரியான பகவானை, பங்கஜ த்தின் மகரந்தத்தின் நிறத்தில் ,பீதாம்பர தாரியாக, ஸ்ரீவத்ஸ, கௌஸ்துப மணிகள் பிரகாசிக்க,  வனமாலை, உயர்ந்த ஹாரம், அங்கத வளையங்கள், கிரீட, நூபுரங்கள் காஞ்சி முதலிய ஆபரணங்களுடன் அவரது உருவையே த்யானம் செய்து  வேறு எந்த நினைவும் இல்லாமல் சர்வ லோகமும் வணங்கும் குழந்தையாக,  அவரது முழு  உருவையும் நினைத்து மனம் சிறிதும் சிதறாமல் ஒரே நிலையில் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். அண்டியவர்களை காக்கும் அவர் அருளால்  தானாகவே  அந்த நினவு  உடல் முழுதும் வியாபித்து விடும்.  நடப்பதாகவோ, அமர்ந்து இருப்பதாகவோ, சயனித்த கோலமோ, நின்ற கோலத்தில் பாத பத்மங்களோ, த்யானிக்கலாம்.

மேலும் விவரமாக ஒவ்வொரு அங்கமாக சொல்லி, மனதில் நிறுத்திக் கொண்டு முழுமையாக பகவானின் உருவத்தை மனதில் உருவாக்கிக் கொண்டு, த்யானம் செய்வதைச் சொல்கிறார்.

பாதங்கள்: வஜ்ர, அங்குசம்,த்வஜம், சரோருஹ என்ற சின்னங்களுடன் இருக்கும். நகங்கள்-சற்றே உயர்ந்து அதன் ஒளியால், மனதின் அறியாமை என்ற அந்தகாரத்தை நீக்கும். அதில் பாவனமான கங்கையை தியானம் செய்ய வேண்டும். இந்த பாதத்திலிருந்து தோன்றிய கங்கை நீரை பரமேசனும் தலையில் தெளித்துக் கொள்வார்.

ஜானுத்வயம் – இரண்டு முழங்கால்கள்:  ஜலஜ லோசனா- பத்மம் போன்ற கண்களுடைய ஜகஜ் ஜனனி, அனைத்து தேவர்களும் வணங்கி நிற்க, லக்ஷ்மி தேவி, அவர்கள் பார்த்து இருக்கையிலேயே இந்த முழங்கால்களில் கால் வைத்து ஏறி பகவானின் மார்பில் அமர்ந்தாள். 

கருடனின் புஜங்களில் பதிந்த தொடைகள். அதசீ குஸுமம் என்ற மலர்-(க்ருஷ்ண வர்ணம்) போல பிரகாசமாக விளங்கும், பீதாம்பரம் மறைக்க காஞ்சி எனும் இடையாபரணம் மறைந்து, இருக்கும்.

நாபி பிரதேசம். இதில் புவனகோசமே அடங்கும் லோக பத்மத்தை ஆத்ம யோனியாக இருந்து, ப்ருமாண்டத்தின் அனைத்து சர அசர எனும் ஜீவ ராசிகளின்  விதைகளை, பத்மத்தின் மகரந்தம் போல வைத்துள்ள ப்ரதேசமாக தியானிக்க வேண்டும்.

வக்ஷஸ் என்ற மார்பு பிரதேசம். இங்கு வ்ருஷபாரூடனாக  பகவானை தியானிக்க வேண்டும். 

கழுத்து  கௌஸ்துப மணியின் இடம். அகில உலகும் வணங்கும் தேவனாக தியானம் செய்து வணங்க வேண்டும். அடுத்து புஜங்கள். மந்தர மலையைத் தாங்கிய பொழுது மலை அசைந்து அசைந்து வடுக்களை தோற்றுவித்ததே வளையங்கள் என்ற ஆபரணங்கள் எனத் தியானிக்க வேண்டும்.

ஆயிரம் ஆரங்களுடைய சக்கரமும், சங்கமும் தாங்கிய கரங்கள், கௌமோதகி என்ற ஆயுதமும், எதிரிகளை விரட்டிய சமயம் அவர்களின் ரத்தம் தோய்ந்து கறையானதோ எனும் படி இருக்கும்.

வனமாலை – விசேஷமான அவரது மணியும், மலர்களாலும் ஆன மாலை, தன் அடியார்களை அரவணத்துச் செல்லும் அவர் குணத்தை எண்ணி தியானிக்க வேண்டும்.

மகர குண்டலங்கள் பளிச்சிட முகம் என்ற தாமரை மலரை தியானிக்க வேண்டும். குண்டலங்களால் ஒளியூட்டப் பட்ட கன்னங்களும், நிமிர்ந்த நாசியும், லக்ஷ்மீ கரமான கேச சுருள்கள், அதில் மலர்கள் நிறைந்து முகத்தை சுற்றி இருப்பதாக எண்ணி தியானம் செய்ய வேண்டும்.

இரண்டு மீன்களோ, இரண்டு பத்மங்களோ எனும் படி உள்ள கண்கள்.  உல்லாசமான மனோ மயன் (மன்மதன்) தோன்றும் இடம் புருவங்கள்.  கண்கள் அதை விட்டு விலகவே விலகாது. தாப த்ரயம் என்பதிலிருந்து விமோசனம் அளிக்க வேண்டி புருவ ப்ரதேசத்தை தியானம் செய்ய வேண்டும்.  கருணையுடன் மென் முறுவலோடு கூடிய வதனத்தை வெகு நேரம் தியானித்து மன குகையில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவருடைய முறுவல் வணங்கும் ஜீவன்களின் தாபத்தை உடனடியாக போக்கி விடும். தன் மாயையால் அடியோடு மோகத்தில் ஆழ்த்தும் இந்த மோகன ரூபம், மகர த்வஜன் என்ற மன்மதனின் உதவிக்காக உள்ளதோ எனும்படி உள்ளவை.புருவத்திலிருந்து முகம் முழுவதும் பரவும் முறுவல்.

அதரங்களும், இடையில் பளிச்சிடும் முல்லை மலர் போன்ற பல் வரிசையும், தன் இதய குகையில் ஸ்தாபித்துக் கொண்ட விஷ்ணுவின் ரூபத்துடன் சேர்த்து தியானிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீ ஹரியின் முழு உருவத்தையும் மன குகையில் வைத்துக் கொண்டு பக்தியுடன் மனம் ஒன்றி, கசிந்த கண்களுடன் உடல் புல்லரிக்க, தொண்டை உணர்ச்சி வசத்தால் அடைபட, மெள்ள மெள்ள தன் இதயத்தில் நமஸ்கரித்து தெளிவை அடைவார்கள்.

இப்படி மனதில் பகவானை நிலை நிறுத்திக் கொண்ட சாதகன் திடுமென தன்னை ஏதோ ஒளி சூழ்ந்ததாக உணர்வான்.  முடிவான இந்த மன ஓட்டம் அடங்கியவனாக, அவருடைய மஹிமை என்பதில் மூழ்கி உலகியலான சுக துக்கங்களை அறவே மறந்தவனாக , கட்டையாக யோக சித்தியை அடைவான். 

தன் தேகத்தையே வெளியிலிருந்து அன்னியனாக பார்க்கும் நிலை வந்து சேரும். தெய்வ வசமாக வந்த தேகம், தெய்வத்தாலேயே மறைக்கப் பட்டு விட்டது. மதுவை குடித்தவன் தன் உடையை துச்சமாக எண்ணுவது போல இந்த நிலையை அடைந்த பின் தேகமும் பொருளற்றதாக ஆகும்.  செயல்களுக்கான கருவியே காயம் என்ற இந்த உடல்.  தன்னையே அறிந்த பின், தன் தோற்றத்துக்கான காரணமான ப்ரும்ம ஸ்வரூபத்தையே அறிந்த பின், அதை கனவில் கண்டது போல உணர்கிறான்.

தன் புத்ரனே ஆனாலும் தன் உடல் வேறு, மகன் உடல் வேறு என்று பொதுவான அறிவு அனைவருக்கும் உண்டு.  அதுவே செல்வம், மற்ற விஷயங்கள் வேறு என்ற எண்ணமும் அதில் தனது என்ற பற்றும் விலகும். 

தீயிலிருந்து வெளிப்படும் தீப்பொறிகள், புகை இவைகளை தீ உரிமை கொண்டாடுமா, அது போல தனது என்ற அபிமானம் விலகும்.

பஞ்ச பூதங்கள், புலன்கள்,அந்த:கரணங்கள் இவை சேர்ந்து உயிரினம் -ஜீவன் என்பது உருவாயிற்று. இதில் ஆத்மா என்ற ப்ரும்மா தள்ளியிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவ்வளவே.

அனைத்து ஜீவன்களிலும் தன்னையும்,  தானும் அவைகளை தன்னில் காண்பதாகவும் சொல்வதாக பகவானை சொல்வர். 

(सर्व भूतेषु चात्मानम्, सर्व भूतानि च आत्मनि – )  சம பாவம் என்பதை காண்கிறார். பல விதமான பிறவிகள். அவைகள் தோன்றும் இடத்தைப் பொறுத்து உருவமும் குணமும் மாறுவதே அன்றி  ஒரே பகவானின் அம்சமாக தோன்றியவையே. 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபத்து எட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 44

அத்யாயம்-29 

தேவஹூதி கேட்டாள்:  மஹத் முதலானவைகளின் லக்ஷணம், ப்ரக்ருதி, பரம புருஷன்  என்று விவரித்தாயே, அதில் பாரமார்த்திகம் எங்கே எப்படி வரும்?  ஞான யோகம் என்று சொன்னாய். அதன் பின் பக்தி யோகம் என்றாய். அதையே விஸ்தாரமாகச் சொல்லு.  விராகம்- பற்றின்மை என்பது உலக வாழ்க்கையில் எப்படி சாத்யம்? எதை தெரிந்து கொண்டால் சாதாரண ஜனங்களுக்கு சௌக்யமோ அதைச் சொல்லு.  பகவானே! நீ தோன்றியதன் காரணமே, உலகில் மக்கள் தவறான  அறிவுடன் , கண்கள் இருந்தும் தூக்கத்திலேயே பொழுதை கழிக்கிறார்களே, எதை நம்பலாம், எதை நம்பக்கூடாது என்ற விவேகம் இல்லாமல், ஓய்ந்து போய் இருக்கிறார்களே, அந்த  ஜனங்களுக்கு நல்லதைச் சொல்லவே.  யோக பாஸ்கரனாக நீ வந்தாய்.

தாயார் இவ்வாறு கேட்டதும், அவளுக்கு புரியும்படியாக, அவளுக்கு பிடித்த விஷயங்களையே சொல்ல ஆரம்பித்தார்.  பக்தி யோகம் பலவிதமாக, அவரவர் ஸ்வபாவம், குணம், அவரவர்களுக்கு பிடித்த மார்கம் என்று மாறும். பொதுவாக, ஹிம்சையில் நாட்டம்,  அடம்பரம் , பொறாமை . பரபரக்கும் தன்மை, இத்துடன் பக்தி செய்கிறேன் என்றால் அது தாமசமானது. தன் புலன் இன்பத்திற்காக, புகழோ, ஐஸ்வர்யமோ கிடைக்கும் என்பதால் பகவானின் மூர்த்திகளை வைத்து பூஜைகள் செய்பவன், ராஜஸன்.  பரம புருஷனிடமே  மனதை அர்ப்பித்து, யாக காரியங்களை செய்பவன் சாத்விகன்.   என்னைப் பற்றி கேட்பதும், அனைத்து            உயிரினங்களிலும் அந்தர்யாமியாக  இருப்பவன் என்ற பாவனையோடு, மனத் தடுமாற்றம் இன்றி கங்கை நீர் கடலில் சேருவது போல, தொடர்ந்து ஒரே கதியில் செல்லும் மனோ பாவம் – பக்தி யோகத்தின் லக்ஷணம். 

காரணமேயின்றி புருஷோத்தமனிடத்தில் பக்தி என்பதே உயர்வு.  சாலோக்யம், சாமீப்யம், சாரூப்யம், அல்லது பகவானுடன் ஒன்றாக ஆதல், இவைகளைக் கூட உயர்வாக எண்ண மாட்டார்கள்.  முக்குணங்களையும் கடந்து என் பாவமே பெரியதாக உணருவார்கள்.   ஸ்வ தர்மத்தை விடாமல் செய்து கொண்டு இருப்பார்கள்.  சுலபமான கர்ம யோகம்- யாக காரியங்கள் அல்லது சாஸ்திரங்களில் விதிக்கப் பட்ட காரியங்கள் மட்டுமே. அதிலும் அளவுக்கு மிஞ்சி போகாமலும்,  உடல் வருத்திக் கொள்வதும் இல்லாமல், நித்யமும் என் தியானம், தர்சனம், ஸ்பர்ச, பூஜா விதிகள், துதி, வந்தனைகள், சகல உயிர்களிடமும் என்னையே காண்பது, சத் சங்கம் இவற்றுடன், பெரியவர்களிடம் மரியாதை, சிறியோர்களிடம் பரிவு, சமமானவர்களிடம் நட்பு, மற்றும் யம நியமங்கள், என்று இருப்பார்கள்.  ஆத்யாத்மிக  சொற்பொழிவுகளைக் கேட்கலாம், நாம சங்கீர்த்தனைகளில் கலந்து கொள்ளலாம், நேர்மையாக உள்ள மக்களுடன் இணைந்து செயலாற்றலாம்,  தான் செய்கிறேன், தனது என எண்ணாமல் பொது வேலைகளில் ஈடுபடலாம், இவைகள் என் தர்மத்தைப் பேசுபவை, என் நாமத்தை கேட்டுக்கொண்டிருந்தாலே இந்த குணங்கள் வந்து சேரும்.  எங்கோ காற்றில் கலந்த மணத்தை நம் நாசி இழுத்துக் கொள்வது போலத்தான். யோகத்தில் கவனம் உள்ள மனம் தன் ஆத்மாவை அறிந்து கொள்ளும்.  நான் எல்லா உயிரினங்களிலும் எப்பொழுதும் இருப்பவன். இதை அறிந்த மனிதர்கள் என்னை அர்ச்சா வடிவில் வணங்குகிறார்கள்.  அனைத்து உயிரினங்களிலும் உள்ள என்னை அர்ச்சா (சிலை, படங்கள்) என்று பார்ப்பதும் ஒரு வழி.. மனதில் தனக்கும் மற்றவர்களுக்கும் தாரதம்யம் பார்க்காமல்  இருப்பவன் நல்ல கதியடைவான். எல்லா ஜீவன்களுமே ஸ்ரேஷ்டர்கள்- சிறந்தவர்கள் தான்.  அதில் சித்தம்-மனம் புத்தி இருப்பவன் சற்றே மேலானவன். அதிலும் ஸ்பர்ஸ வேதி களைவிட, ரஸம் அறிந்தவர்கள் மேல்.  அதை விட கந்தம் நுகர முடிந்தவர்கள் மேல். அதை விட சப்தம் அறிந்தவர்கள் மேல்.  ரூப பேதங்களை அறிபவர்கள் சிறந்தவர்கள்.  நிறைய பாதங்களை உடைய ஜீவன்களை விட, நான்கு கால்களுடைய  ஜீவன்கள் மேல்., அதை விட மேல் இரு கால்கள் உடைய மனிதன்.

அதே போல வர்ணங்கள் நான்கு. அதில் ப்ராம்மணன் முதல், அவர்களிலும் வேதம் அறிந்தவன், அதை விடவும் அதன்  பொருளை உணர்ந்தவன் மேல். பொருள் அறிந்தவர்களிலும் சந்தேகங்களை சரியாக விவரித்து தகுந்த பதில் சொல்ல அறிந்தவன் மேல். அதைவிட தானே தன் வேலையைச் அல்லது தொழிலைச் செய்பவன்.  கூட்டம் சேர்க்காமல் தானே தர்மத்தை உணர்ந்து செய்பவன் அதிக பலன் பெறுவான்.

பகவான் ஒரு அம்சமாக என்னுள் உள்ளது போலவே அனைத்து உயிரினங்களிலும் இருக்கிறான் என்பதை திடமாக உணர்பவன் தான் சிறந்தவன். பக்தி யோகம், கர்ம யோக மார்கம்  இரண்டுமே மனிதர்களுக்கு உகந்தது. ஏதோ ஒன்றில் நம்பிக்கை வைத்து அனுசரித்து வந்தாலே பகவானை அடையலாம்.

ப்ரும்மன் என்றும் பரமாத்மா என்றும் ப்ரதானம் என்றும், புருஷன், என்றும் சொல்லப்படுபவன். தைவம் என்பது கர்மா அல்லது செயலை குறிக்கும்.  ரூப பேதங்கள் அடிப்படையில் தெய்வம்,  காலம் எனப்படும்.

பஞ்ச பூதங்கள், மஹத் முதலானவை, இவையும் பகவானால் படைக்கப் பட்டவையே.  யாரும் தன்னைச் சார்ந்தவன் என்றோ, த்வேஷி என்றோ , எளியவன் என்றோ, பலவான் என்றோ பேதங்கள் பகவானுக்கு இல்லை.

அவரிடம் பயந்து வாயு வீசுகிறது, சூரியன் தபிக்கிறான், மழை காலத்தில் பொழிகிறது, நக்ஷத்திர  கூட்டங்கள் பிரகாசிக்கின்றன. காட்டில் மரங்கள் வளருகின்றன, லதா, செடி கொடிகள், புதர்கள்  ஔஷதிகள் தங்கள் பருவ காலங்களில் தவறாமல் பூக்கின்றன, பழுக்கின்றன.

அவருடைய கண்காணிப்பில் ஆறுகளில் நீர் ப்ரவஹிக்கிறது.  சமுத்திரம் தன் எல்லையை கடக்காமல் இருக்கிறது. அக்னி எரிபொருளில் மறைந்தே இருக்கிறது. மலைகளையும், மரங்களையும் தாங்கும் நிலம் மூழ்குவதில்லை. ஆகாயம் மூச்சு விடும் உயிர்களுக்கு தன் உடலைத் தருகிறது. – பிராணிகள் விடும் உள்மூச்சு வெளி மூச்சு ஆகாசத்தில் கலக்கிறது. அகங்காரத்துடன் கூடிய மஹத் தத்வம் ப்ரும்மாண்டத்தில்  ஏழு ஆவரணங்களுடன் விஸ்தரிக்க இடம் கொடுக்கிறது.

காலம் என்ற நியமத்தால், விஷ்ணு முதல் படைப்புத் தொழிலில் உள்ள அனைவரும், சராசரங்களில், ஜகத் ரசனா- உலகை உருவாக்குதல் என்ற காரியத்தை செய்ய முடிகிறது.  மற்றவர்களுக்கு தடை விதித்தும், முடித்தும் வைக்கும்  காலன் ஸ்வயம் அனாதி எனப்படுகிறான்.  (ஓரு ஜீவனின் காலத்தை முடிக்கும் பொழுதே மற்றொன்று பிறக்கச் செய்கிறான்- தந்தையிடமிருந்து புத்திரனை உத்பத்தி செய்கிறான் என்பதாக)  தன்னுடைய சம்ஹார சக்தி – ம்ருத்யு என்பதை கொண்டு, யமராஜன் முதல் அனைவருக்கும் முடிவைத் தர வல்லான். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், இருபத்து ஒன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 45)

அத்யாயம்-30

கபிலர் சொன்னார்: பொதுவாக ஜனங்கள் காலத்தின் சக்தியை உணருவதில்லை.  மேகத்தை வாயு அலைக்கழிக்கிறது. அதன்  சக்தியை அறியாத மேகம், காற்றினால் தான் தள்ளப் படுவதை உணருவதில்லை. அது போலத் தான்.  பின்னால் சுகமாக இருக்க இப்பொழுது உழைக்கிறார்கள்.  தன் தேகம் சுற்றத்தார் அனைவரும் சாஸ்வதம்- அழிவில்லாமல் இப்படியே இருப்போம் என்ற எண்ணம். வீடு, நிலம், செல்வம் எல்லாமே நிலை பெற்று என்றும் இருக்கும் என அறிவில்லாமல் நம்புகிறார்கள். எந்த விதமான உடலோ, ஜீவன் அதிலேயே லயித்து வாழ்கிறது.  மிக வருத்தமான சூழ்நிலையிலும் உடலைத் தியாகம் செய்ய முன் வருவதில்லை.   தான், தன் மனைவி, மகன்,வீடு, பசுக்கள், செல்வம், உறவினர் இவர்களிடம் பற்றுதல் -அதன் காரணமாக தன்னை பெரியதாக எண்ணிக் கொள்கிறான்.  சிறு குழந்தையின் கல கலவென்ற பேச்சு , பெண்களின் சகவாசம் தரும் சுகம்,  வீட்டின் துக்கம் தரும் செயல்களையும் சுகமாகவே நினைக்கிறான். செல்வத்தை நிறைய சேர்த்தால் சுகம் என்று நம்புகிறான்.  வெட்டி பேச்சு, காரணமின்றி மற்றவர்களிடம் பொறாமை,  குடும்ப பொறுப்பு, அதைச் சார்ந்த வேலைகளால் ஓய்ச்சல்,  செலவு அதிகம், வரவு குறைவு, பற்றாக்குறை,  அதனால்  கவலை. இப்படி உலக வாழ்க்கையில் தான் தன்னைச் சேர்ந்தவர்களை காப்பாற்றவே திணறுகிறான்.  அப்படி செய்தாலும் வயதான காலத்தில் தன் உடலும் சக்தி இழந்து, அவர்களிடமும் மதிப்பு இல்லாமல் போகிறது.   வயதான பசு போல.  தவிர, முதுமை பலவிதத்திலும் சிரமத்தையே தருகிறது. மரணத்தை எதிர் நோக்கி, பயத்துடனே வாழ வேண்டியிருக்கிறது.  வியாதி காத்திருக்கிறது. கபம், ஆயாசம், இருமல் என்று பல வித தொல்லைகள்.  யம தூதர்கள் வருவார்கள்.  ராஜ சேவகர்கள்  போல, கட்டி இழுத்துச் செல்ல வருவார்கள். நரகமா, அந்ததாமிஸ்ரம் என்ற இருட்டு குகையா, எங்கு செல்லப் போகிறோம் என்பது தெரியாது.  எங்கு செல்வோம் எப்படி இருப்போம் எந்த உறவினர்கள் உடன் வருவார்கள், எதுவுமே தெரியாது. இந்த ஜன்மத்திலேயே நரகம் போன்ற துக்கத்தையும் ஸ்வர்கம் போல சுகங்களையும் அனுபவித்து விடுகிறார்கள்.  குடும்பத்தை நிர்வக்கிக்கவும், தன் உதர நிமித்தமோ செய்த செயல்களை, சேமித்தவைகளை விட்டுப் போகும் ஜீவன் இந்த ஜன்மத்தின் கர்ம பலனை அனுபவிக்கிறான்.  அதர்மமாக தனக்கு, தன் சுற்றத்தார்களுக்கு மட்டுமாக செய்த செயல்களின் பலன் அந்ததாமிஸ்ரம் என்ற  மிக தாமசமான இடத்தையடைகிறான்.  இந்த லோகத்துக்கு கீழே நரகம் இன்னமும் கடுமயான அந்த் தாமிஸ்ரம் என்ற நிலைகள்,  இவைகளில் யாதனைகள்- தண்டனைகளை அனுபவித்து விட்டு மீண்டும் பிறக்கிறான்.  

மேலும் விவரமாக கர்ம பலனாக நரகத்தை அடைவதை சொல்கிறார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், முப்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 34)

அத்யாயம்-31

வினைப் பயனை அனுபவித்து முடிந்தவுடன்  புது உடலுடன் பிறப்பதை சொல்கிறார்.   முன் சொன்னபடி, பிறப்பும் இறப்பும் தெய்வ சங்கல்பம் .  அதன் படி, புருஷ ஜீவனின் ரேதஸ், ஒரு துளி, ஸ்த்ரீ தேகத்தில் புகுந்து புது ஜீவனை உருவாக்குகிறது.  ஆரம்பத்தில் இரண்டும் சேர்ந்து ஐந்து இரவுகளில் உருண்டையான  சேறு போல குழம்பி இருக்கும். அதன் பின் பத்து நாட்களில் இலந்தை பழம் (பதரீ) அளவு வளரும். இந்த சமயம் கடினமாக உருவம் பெறும். ஒரு மாதத்தில் தலை, இரண்டாவது மாதம் கைகள், மூன்றாம் மாதம் நகம், ரோமம், அஸ்தி (எலும்புகள்) மேல் தோல், ஆண், பெண் குறி, நாலாவது மாதம் தாதுக்கள், (ஏழு) ஐந்தாவது மாதம் பசி தாகம், ஆறாவது மாதம் உயிர் வருவதால் இடது பக்க  வயிற்றினுள் வளைய வரும்.   தாயின் உண்ணும் உணவில் அந்தந்த பிறவியின் இயல்புக்கு ஏற்ப,  பிறக்கும் புது ஜீவன் தன் உணவைப் பெறும். ஆயனீ என்ற நாடியால் தாயின் நாபியுடன் இணக்கப்படும்.

இந்த நிலையில் உணர்வுகள் பசி, தாகம் தவிர, புத்தி (மூளை) செயல்படுவது, பல முன் பிறவிகளின் நினைவுகள், அதனால் கூண்டில் அடைபட்ட பறவை போல தவிக்கும்.  ஏழாவது மாதத்தில் மேலும் அறிவு வளரும். பூர்வ ஜன்ம வாசனை இருந்தால் பகவானை துதிக்கும்.  கர்பத்தில் தங்குவதற்காக ஏழு விதமான பந்தங்களால் கட்டுபட்டிருக்கும் ஜீவன் ஆவலுடன்  கர்பாவாசம் முடிந்து பூமியில் பிறப்பதை எதிர் நோக்கி இருக்கும்.  தாயின் ஒவ்வொரு அசைவினாலும் பாதிக்கப் படும் ஜீவன்  வருந்தி அழும். ஸ்ரீ க்ருஷ்ணரை வணங்கி இனி பிறவியே வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளும்.

ஜந்து வேண்டுதல்:  பல சரீரங்களில் இருந்து புறப்பட்டு வந்த பின்னும், இந்த ஜகத்தில் பிறக்க ஆசைப்பட்டேனே.  இனி பிறவியே வேண்டாம் , உன்னையே சரணடைகிறேன்.  என் வினைகளே தான் தற்சமயம் இந்த தளைகள் என்று அறிந்து கொண்டேன்.  இந்த மாயா மயமான சரீரத்திலும் நீ என் ஹ்ருத்யத்தில் வசிக்கிறாய்.  உன்னை வணங்குகிறேன்.  பஞ்ச பூதங்களால் ஆன இந்த சரீரத்தில் மறைந்திருக்கும் அளவற்ற மகிமையுடைய ப்ரக்ருதி புருஷன் என்ற இரண்டு விஷயங்களுக்கும் மேலான பர புருஷனை வணங்குகிறேன். இவ்வாறு பலவாறாக துதிக்கும்.  பிறந்த பின் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற பயம் ,மற்றொரு முறை இந்த கர்ப வாசம் வேண்டவே வேண்டாம் பகவானே என்று கதறி அழும்.

பத்து மாதம் ஆனவுடன், சூதி மாருத:- ப்ரசவத்தை நடத்தி வைக்கும் வாயு வந்து கீழே தள்ளிவிடும். திடுமென பிறப்பு – வாக்கும் இன்றி, கவலையுடன் கஷ்டப்பட்டு- மூச்சு விட கூட சிரமத்துடன்  மெள்ள நகரும். இதுவரை இருந்த ஞானம் எங்கே போயிற்று?  மல மூத்திரங்களின் இடையில்  மனதில் நினைப்பதை வெளியில் சொல்ல முடியாமல் வாய் மூடி கிடக்கும்.  தூங்கப் பண்ணுவார்கள். படுக்கை பிடிக்காது. ஏதேதோ, வேர்வை முதலான பழக்கமில்லாத நெடி  இது ஒரு வாதனை. சற்றே வளர்ந்த பின் வேறு விதமாக அவஸ்தைகள்.  கேட்டது கிடைக்காது. அறியாமை, சம்பந்தமில்லாத கோபம், ஆத்திரம். வருத்தம். காம க்ரோத லோபங்களுடனேயே வளரும் மனித ஜீவன். பஞ்ச பூதங்களாலான சரீரம் என்பதெல்லாம் மறந்து,  நான் எனது என்றே நினைத்திருக்கும். திரும்பவும் வினைப் பயங்கள்,  புதிய கர்ம பந்தனங்கள், யாருடன் நட்பு, எது  கூடா நட்பு என்பது தெரியாது.   உடல் உபாதைகள், இதற்கிடையில் சிறிய சிறிய சந்தோஷங்கள், முன் போலவே வாழும். சத்யம், தயா, மௌனம், ஒழுக்கம், புத்தி, ஸ்ரீ, ஹ்ரீ, புகழ், பொறுமை, சம தமம், பகம் என்ற ஆறு குணங்கள்  இவைகள் அசத் சங்கத்தால் கெடும். 

இவ்வாறு உலக வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களையும், சங்கத்தால் உயர்வதும் தாழ்வதும், காம க்ரோதாதிகளை அடக்க முடியாமல் தவிப்பதுமான  உலக வாழ்கையை விவரித்து, பின் சமாதானமாக சொல்கிறார்.  புத்தியால், நல்ல விஷயங்களை அறிந்து,  இது தான் ஜீவ கதி என்று தெரிந்தபின் முக்தியை அடையும் வழியில் மனதை செலுத்தி  யோக வைராக்யங்களுடன் ,மாயையால் பாதிக்கப்படாமல் இந்த உலகில் வாழ்ந்து பரகதியை அடையலாம். அதனால் கவலையோ, பயமோ, பதட்டமோ வேண்டாம்.  என்றார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், முப்பதாவது ஒன்றாவதுஅத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 34)

அத்யாயம்-32

மனிதனாக பிறந்தவன் வளர வளர, பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறான்.   குடும்ப வாழ்க்கை, குழந்தைகள், முதியவர்கள், சுற்றத்தார் என்று பலருக்கும் அவன் உதவி செய்வதும்  அந்தந்த வயதுக்கான தர்மத்தை பாலனம் செய்வதும் இயல்பாக அமைகிறது.  பொருள் ஈட்டவும், பல செயல்களைச் செய்யும் பொழுதும்,  நல்லதும் நன்மை அல்லாததுமான இருவிதமான வினைகள் தொடருகின்றன. பகவத் பக்தி மட்டுமே என்றிருந்த நிலை மாறி, யாக காரியங்கள், தேவ காரியங்கள், பித்ரு காரியங்கள் என்று அவனுடைய கவனம் சிதறுகிறது. குடும்பஸ்தனுக்கு இவை தேவையே. இதில் ஏற்படும் சிரத்தை பகவானிடத்தில் மனம் ஒன்றி பக்தி செய்யும் நேரத்தையும், ஈடுபாட்டையும் குறைக்கிறது.  அதனால் இந்த பிறவி முடிவில் மரணித்த பின் சாந்த்ரமஸம் என்ற லோகம் செல்கிறான். இந்த இடத்திற்கு சென்றவர்கள் வினைப் பயனுக்கு ஏற்ப சுகமாக இருந்துவிட்டு  திரும்ப பிறப்பார்கள்.   பாம்பணையில் துயிலும் பகவான் போல இந்த குடும்பஸ்தர்களுக்கு இக வாழ்க்கை முடிகிறது. தீரர்களாக இருப்பவர்கள், காமார்தங்களில் மூழ்காமல், தர்மம் மட்டுமே என்று இருப்பவர்கள், இவர்கள் சுத்தமான மனதுடன் தனிமையில் சாந்தமாக யோக சாதனைகளோ, தியானங்களோ செய்வர்.

ஞான மார்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள், தான், தனது என்ற மமதை இல்லாமல், தன் தர்மத்தை செய்வதிலும் சாத்விகமாக சுத்தமான மனதுடன் செய்வார்கள். இவர்கள் சூரியனின் வழியில் மேலுலகை அடைகிறார்கள். அனந்தனான பகவானிடத்தில்  சென்று. அழியாத தன்மையை அடைவார்கள். மறு பிறப்பு இவர்களுக்கு இல்லை. தன் இக லோக வாழ்க்கையில் பற்றின்றி இருந்ததன் பலனாக,  நிலம்,நீர்,காற்று,தீ,காற்று, வானம் எனும் ஐந்தும் மனம் இந்திரியங்கள் என்பவைகளும் சேர்ந்து உண்டாகும் அழியும் தன்மையுடைய  பூத உடல் இவர்களுக்கு வராது.  வைகுண்ட லோகம் எனும் பரமாத்மாவின் உலகிலேயே சாஸ்வதமாக பகவானின் பணியில்,  ஈடுபட்டவர்களாக இருப்பர்.

தாயே! அந்த சர்வ ஜீவன்களின் ஹ்ருதயத்திலும் வசிக்கும் நாம் கேட்டு அறிந்த பகவானையே சரணம் அடைவாயாக. இவர்  ஆதி – முதல் முதல்வர். வேத கர்ப:- வேதத்தை அறிந்த ரிஷிகளுடன் இருப்பார்.  யோகேஸ்வர்கள்.  குமாரர்கள், சித்தர்கள், யோக சாதனையில் வென்றவர்கள் இவரை சூழ்ந்து இருப்பர்.  

அபிமானம் முதலான தன் பிறர் என்ற உணர்வு இல்லாமல் தனித்து சாதனைகள செய்ய, சகுணமாக -உருவத்துடன் புருஷோத்தமன் ப்ருஷர்ஷபன்- என்றெல்லாம் அழைக்கபடும் ப்ரும்ம தத்வம்  இவற்றைஅந்த ஈஸ்வர மூர்த்தியில் கண்டு, வழிபடுவதும் ஒரு முறை. இவர்களுக்கும் மறு பிறவி உண்டு.

தர்ம வழியில் உழைத்து சேர்த்த செல்வம், அதையும் தர்ம வழியிலேயே பலருக்கும் உதவுமாறு செலவழித்த நன் மக்களும் மறு பிறவியடைவார்கள். யாக கரியங்களை செய்பவர், கர்ம யோகிகள், இவர்கள் செய்யும் செயலில் ஈடுபாட்டுடன் செய்வதுடன், பலனை எதிர் பாராமல் செய்கிறார்கள்.  சிரத்தை – செய்யும் தொழிலில் நம்பிக்கையும், திறனும் தான் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் செய்வது-  இவர்கள் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். பொது மக்களுக்கு அனுகூலமாக இருப்பவர்கள். இவர்களுக்கும் மறு பிறவி உண்டு.

ராஜஸ குணமே மேலோங்கி இருப்பவர்கள்.   இந்திரியங்களை அடக்க முடியாதவர்கள், காமமே பெரிதென்று வாழ்பவர்கள். இவர்கள் பித்ரு லோகத்தை அடைகிறார்கள்.  அதன் பின்னும் தன் குடும்பத்தாரை நேசிப்பார்கள்.

ஹரியை எதிர்ப்பவர்கள்,  அவரை வணங்காத பலர் தெய்வ நிந்தனை செய்பவர்களாக, அச்யுத கதையின் ருசி தெரியாதவர்களாக, வேண்டாத கதைகளை கேட்பவர்களாக, விஷத்துக்கு சமமான மட்டமான ஆகாரங்களை உண்பவர்கள், தென் திசை நோக்கிச் செல்வர். பித்ரு லோகம் செல்வர்.  இவர்கள் திரும்ப பிறந்து,  இறந்து என்று,  மரணம் வரையிலான வாழ்க்கையையே திரும்ப வாழ்வர்.  இவர்கள் செய்த சுக்ருதங்கள், நல்ல காரியங்களின் பலன் தீரும் வரை,  தேவ லோகமோ, பித்ரு லோகமோ அதில் இருந்து, புண்யம் தீர்ந்தவுடன் , மறுபடியும் பூமியில் விழுவார்கள்.  

அதனால், பரமேஷ்டி என்ற பகவானை மனம் ஒன்றி பூஜை செய்.  அவருடைய அருளால் நல்ல கதியை அடைவாய். வாசுதேவன்  தான் பகவான். அவனிடத்தில் செய்வது தான் பக்தி யோகம். அதை செய்யும் பொழுது சீக்கிரமே வைராக்யம் கை கூடும்.  ப்ரும்ம தர்சனம் என்ற ஞானம் வரும்.   தனக்கு பிரியமானவன், மற்றவன் வேறு என்ற எண்ணம் மாறும்.  அனைவரையும் சமமாக பார்க்கும் , தள்ளத் தகுந்தது, இது ஏற்கத் தகுந்தது என்ற பாகுபாடுகள் அவனிடத்தில் இல்லை.  மாறு பட்ட கொள்கையுடையவன் என்பதால் ஒருவனை வெறுக்காத அவன் பதம் தான் நமக்குத் துணை.  பர ப்ரும்மம் – ஞானமே உருவானவன்- அறிவே அவன். பரமேஸ்வர:- பலவிதமான பாவனைகளுடன் பார்த்தாலும் பகவான் ஒருவனே.

இந்த நிர்குணமான ப்ரும்மத்தையே, சிலர் அர்த்த ரூபத்தில் காண்பர்.  மகானான இவன் ரூபம், மூன்று விதமாக விரியும். ஐந்து விதமாக  விரிந்து ஸ்வராட்- , பதினோறு விதமாக விரிந்து ப்ரும்மாண்டம் என்று பார்த்தோம். இதை சிரத்தையுடனும், பக்தியுடனும் தியானம் செய்.

இது தான்  ப்ரும்ம தரிசனம் – இந்த பிறவியில் நாம் பெறக் கூடிய பெரிய அறிவு, செல்வம் எல்லாம். ப்ரக்ருதி, புருஷன் என்ற தத்வங்கள்.  முடிவாக நாம் அறிவது, ஞானமோ, கர்மமோ, யோகமோ,  அதனதன் சிறப்புகளையுடையதே.   , சகுணமோ, நிர்குணமோ, தன்னையறிதல் என்பதோ ஆத்ம தத்வம் என்பதை காலக்ரமத்தில்  தெரிந்து கொள்ள உதவும்.  பலவிதமான வழிகள், ஜீவனின் கதிகள்,  எந்த உடலில் பிரவேசித்து உயிர் வாழ்கிறதோ.  ஆத்மாவை அறிய மனிதனுக்குத் தான் வழிகள் உள்ளன. இந்த உண்மையை வினயம் இல்லாதவன் நிம்பிக்கையில்லாதவன் புரிந்து கொள்ள முடியாது. அசடானவன், முற்றிலும் மாறான எண்ணம் உடையவனும் புரிந்து கொள்ள முடியாது.  அவர்களுக்கு இவற்றைச்  சொல்லவே வேண்டாம்,   லோபம் உடையவனுக்கும், என்னை எதிர்க்கும்  மூடர்களுக்கும்  சொல்ல வேண்டாம். தெரிந்து கொள்ள விரும்புபவன்,  உண்மையான அறிவு தாகம் உடையவனுக்கு சொல்லுங்கள். அவன் தன்னை மேம்படுத்திக் கொள்ள உதவும்.  பொறுமையாக கேட்க விரும்பும் தன் ஒழுக்கத்துடன் இருப்பவனுக்குச் சொல்லுங்கள். வெளி வேஷம் போடுபவனிடம் விழிப்புடன் இருங்கள்.  அவனால் கெடுதலே.

தாயே! இதை கேட்பவனுக்கும் நன்மைகள் வந்து சேரும். சிரத்தையுடன் கேட்பவன் என் அருளைப் பெறுவான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், முப்பதாவது  இரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 43)

அத்யாயம்-31

மைத்ரேயர் சொன்னார்:   கபிலர் இதுவரை சொன்ன விஷயங்களக் கேட்ட பின் தாயான தேவஹூதி, கர்தம தர்ம பத்னி,  தன் மோகம் விலகியதாக உணர்ந்தாள். கபிலரை வணங்கினாள். மகனிடம் சொன்னாள்.  நீயே தான் அந்த அஜன்.   பூமியில் பிரஜைகள், மற்றும் சகல உயிரினங்களின் நன்மைக்காக பிரளய ஜலத்தில் உறங்கிய ஆத்ம மயமான உருவம்.  குணங்களே ப்ரவாஹமாக உள்ளவன். அனைத்து உயிரினங்களுக்கும் பீஜமாக இருப்பவன் என் வயிற்றில் பிறந்தாய்.

ஆத்மேஸ்வரன்,  ஆயிரக் கணக்கான சக்திகளை  உடையவன். உலகுக்கே தந்தையாக இருப்பவன் என் வயிற்றில் பிறந்தாய்.  என்ன பாக்கியம் செய்தது என் வயிறு.  யுக முடிவில் வடபத்ர சாயியாக இருப்பவன் என் மகனாக, விரலை சூப்பிக் கொண்டு தூங்கினாய்.  இந்த தேகமே நீ அளித்தது.  ஸூகரன் முதலான அவதாரங்கள் உன் அடியார்களை உய்விக்கவே. இந்த அவதாரமோ, உன்னை அடையும் வழியைச் சொல்ல மட்டுமே. எவருடைய நாம ஸ்ரவணம்- பெயர்களை கேட்பதும், தானும் சொல்வதும், வணங்கி, சதா மனதில் எண்ணி இருப்பதும் உடனடியாக பலனளிக்க கூடியதோ.அதைச் சொன்னாய்.   கண்ணெதிரில் கண்டவர்களின் பாக்கியத்திற்கு அளவேது?  உன்னை நமஸ்கரிக்கிறேன்.  நீயே  பரப்ரும்மம் ,   உன் தேஜஸால் முக்குணங்களையும் ஆள்பவன்,  நீயே  வேதத்தை   தன்னுள் வைத்திருக்கும் அந்த மஹா விஷ்ணு, கபிலனாக வந்துள்ளாய், 

கபிலர் தாயை சமாதானப் படுத்தினார்.  தாயே! என்னுடைய உபதேசங்கள் அனைவருக்கும் ஆனாலும், உனக்கு நல்ல கதியைத் தரவே. இந்த கொள்கை ப்ரும்ம வாதிகளுக்கானது.  அவர்கள் விரும்பியபடி உடலை தியாகம் செய்யக் கூடியவர்கள்.  நீயும் இதில் நம்பிக்கை வத்து சிரத்தையாக அனுசரி.  அதற்காகவே தான் நான் அவதாரம் செய்ததும்.  இப்பொழுது எனக்கு விடை கொடு. 

தாயாரிடம் அனுமதி பெற்று கபிலர்  வட திசையில் மறைந்தார்.  அவளும் சரஸ்வதி நதி தீரத்தில் தவம் செய்து, யோக சாதனைகளை முறையாக செய்து, தீவிரமாக தவத்தில் ஈடுபட்டாள்.  ப்ரஜாபதி கர்தமருடன், தனது இக லோக குடும்ப வாழ்க்கையை நினைத்து பெருமை பட்டாள். அவருடன் விமானத்தில்  சென்றதும், ஒப்புவமை இல்லாத இல்லறம்.  கர்தமருடைய அன்பும், தன் தேஜஸால் விமானத்தில் அழைத்துச் சென்றதும். அதில்  இருந்த வசதிகளையும் நினைத்துப் பார்த்தாள்.  மகன் சொன்ன வழியிலேயே தற்சமயம்  தன் தேவைகளைக் குறைத்து, பகவத் தியானமாகவே இருந்து சித்தர்கள் அடையும் உயர் பதவியை அடைந்தாள். 

இந்த கதையை கேட்பவர்களும் நல்ல அறிவை அடைவார்கள்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், முப்பத்து மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 37

 மூன்றாவது ஸ்கந்தம் நிறைவுற்றது.

|| ஸ்ரீமத் பாகவதத்தில் காபிலோபாக்யானம் என்ற மூன்றாவது ஸ்கந்தம் நிறைவுற்றது || 

ஓம் தத் சத் ||

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக