பாகவதம்- இரண்டாவது பகுதி
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஸ்ரீமத் பாகவதம் – பத்தாவது ஸ்கந்தம்- இரண்டாம் பகுதி
அத்யாயம்-50
கம்சன் இறந்த பின், அவன் மனைவிகள் தங்கள் செல்வங்களை எடுத்துக் கொண்டு பிறந்தகம் சென்றனர். தந்தையான ஜராசந்தனிடம் வருத்தத்துடன் தாங்கள் கணவனை இழந்தவர்களாக வர நேர்ந்த சம்பவங்களை விவரித்தனர். அதைக் கேட்டு ஜராசந்தன் மிக கோபம் கொண்டான். பூமியில் யாதவனே இல்லாமல் ஆக்குகிறேன் என்று சபதம் செய்தான். இருபது அக்ஷௌஹிணீ சேனையுடன் அத்துடன் மற்றும் மூன்று மடங்கு அதிகமான படை வீர்களுடன் மதுரா நகரை முற்றுகையிட்டான்.
சமுத்திரம் அலையடித்துக் கொண்டு முன்னேறி வருவது போல வந்த படை வீரர்களைக் கண்டு மதுரா நகர ஜனங்கள் பயந்தனர். நகரை முற்றுகையிட்டிருந்த பெரும் படையைக் கண்டு ஸ்ரீ க்ருஷ்ணனும் கவலைப் பட்டார். தான் அவதரித்த காரணமே அது தானே. பூமிக்கு பாரமான இந்த கூட்டத்தை அழிப்பேன் என்றார். மகத நாட்டு அரசன் ஜராசந்தனுடன் வந்த குதிரை வீரர்கள், யானை மேல் ஏறி வந்தவர்கள், ரதங்களில் வந்தவர்கள் தவிர காலாட்படைகள், இவற்றை அழித்தால் போதாது. இவனுக்கு இன்னமும் படை வீரர்கள் மீதமிருக்கலாம். மறுபடி படையெடுப்பான். தன் பலத்தில் கர்வம் கொண்டவன், எனவே, அவதார காரணமான சாது சம்ரக்ஷணம், துஷ்ட நிக்ரஹம்- என்பதை யோசித்து செய்ய திருவுள்ளம் கொண்டார். இன்னமும் தர்மத்தை நிலை நிறுத்த பல காரியங்கள் இருக்கும் நிலையில் என்ன செய்யலாம், இந்த போரில் நேரத்தை வீணாக்காமல் ஏதாவது செய்தாக வேண்டுமே- இப்படி யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, ஆகாயத்திலிருந்து அவருடைய இரண்டு ரதங்களும், அதன் சாரதிகளோடு, திவ்யமான ஆயுதங்களோடு வந்து சேர்ந்தன. அதைக் கண்டு பலராமனை அழைத்து இதோ பார் ஆயுதங்கள் வந்து விட்டன. போருக்கான சாதனங்கள் ரதங்கள், சாரதிகளும் தயாராக வந்து விட்டனர். வா, நாம் போய் நம் மக்களைக் காப்போம். பெரும் படை வந்து நிற்கிறது, அதை எதிர் கொண்டு நம் குலத்தினரை காக்க வேண்டும், என்றார்.
இருவரும் ரதத்தில் அமர்ந்து முன் வரிசையில் நின்று சங்கத்தை முழங்கினர். இதை எதிர் பாராத எதிரி படை வீரர்கள் நடுங்கினர். மகதன் கூவினான், ஏ க்ருஷ்ணா, அல்ப மனிதன் நீ, (புருஷாதமா) உன்னுடன் சண்டையிட மாட்டேன். சிறுவனுடன் நேருக்கு நேர் நின்றால் என் மதிப்பு என்னாவது. பந்துக்களை கொன்றவன் நீ. பலராமா! உனக்கு தைரியமிருந்தால் வா, உன் சரீரத்தை என் அம்புகளால் துளைக்கிறேன், முடிந்தால் என்னைக் கொல் என்றான்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: ஹே அரசனே! வீரர்கள் வெற்று வார்த்தைகளைப் பேசி நேரத்தை வீணாக்குவதில்லை. செயலில் காட்டு. பயந்து நடுங்கிக் கொண்டு, இதோ விழுந்து விடுவோமோ என்று உயிரை கையில் வைத்துக் கொண்டு நிற்கும் உன் போன்றவர்களிடம் என்ன பேச்சு?
ஸ்ரீ சுகர் சொன்னார்: இதற்குள் ஜராசந்தன் தன் படைகளுடன் இருவரையும் சுற்றி வளைத்துக் கொண்டு விட்டான். ஸுரியன், அக்னி, வாயு இவற்றுடன் ஆகாயத்தை புழுதி மூடியது போல இருந்தது. அவன் வாகனங்கள், கொடிகள், குதிரைகளும், சாரதிகளும் நாலாபுறத்திலும் நெருக்கின.
கருடன், தாளத்வஜம், இவை அடையாளமிட்ட ரதங்களில் ஸ்ரீ ஹரியும், பலராமனும் அதனால் பாதிக்கப் படாமல் நின்றனர். ஊர் மக்கள், பெண்கள் தங்கள் வீடுகளின் மாடிகளிலிருந்து பார்த்து பயந்தனர். ஸ்ரீ ஹரி தன் வில்லிலிருந்து நெருப்பை உமிழ்வது போல அம்புகளை இடைவிடாமல் தொடுத்து கூட்டமாக வந்த எதிரி படையை சிதற அடித்தார். தன் சார்ங்க தனுசை கையில் எடுத்து நாணை மீட்டி ஒலி வரச் செய்தார். தூணியிலிருந்து இடை விடாமல் அம்புகளை எடுப்பதும், அடிப்பதுமாக இருந்தவர், ரதங்களை குறி வைத்து உடைத்தும், யானைகளிலும், குதிரைகளிலும் வந்த வீரர்களை சரிந்து விழச் செய்தும், இடைவிடாது சக்ரம் போல சுழன்று அடித்தார். யானைகளின் முகப்படங்கள் விழுந்தன. பல குதிரைகள் கழுத்தில் அம்பு பட்டு ஓடின. ரதங்களின் குதிரைகள் ஓடி விடவும் சாரதிகள் திணறினர். கால் நடை வீரர்கள் அடி பட்டு உடைந்த கை கால்களுடன் ரண பூமியை விட்டு விலகினர். யானை கலக்கிய குளம் போல ரண பூமி குழப்பமாக ஆயிற்று.
உடைந்த உடல் பாகங்கள் கைகளும், கால்களும், கேசங்கள் சிதறி கிடக்க, யுத்த பூமி காணவே பயங்கரமாக இருந்தது. யுத்தம் தொடரவும், அதிலேயே கவனமாக போர் புரிந்தவர்கள் மேலும் மேலும் முன்னேற, சங்கர்ஷணனின் கதையால் அடிபட்டவர்கள், அவருடைய அளவில்லாத தேஜஸைக் கண்டு திகைத்தனர். அந்த மகத ராஜனின் படை மெள்ள மெள்ள பலமிழந்து பின் வாங்கியது. இருவரும் ஜகதீசர்கள், அவர்கள் விளையாட்டாக போர் புரிகின்றனர் என்பதை உணர்ந்தனர். தன் லீலையால் உலகை காக்கவும் அழிக்கவும் சங்கல்பம் எடுத்துக் கொண்ட பகவான் அவருடைய பராக்ரமத்தை வர்ணிக்கவா முடியும், ஆனாலும் மனிதனாக எடுத்த அவதாரம் என்பதால் அந்த நிலையிலேயே போர் நடந்தது.
சங்கர்ஷணன் ஜராசந்தனை ரதத்தை விட்டு இறங்கிய நிலையில் சிறை பிடித்தான். பெரும் பாலான படை வீரர்கள் அடிபட்டு, அகற்றப் பட்டு விட்டதால் தனித்து நின்றான் ஜராசந்தன். இருவரும் இரண்டு சிங்கங்கள் போல நின்றனர். வருணாஸ்திரத்தால் கட்டப் பட்ட ஜரா சந்தனை, தன் படை வீரர்கள், அல்லது தன்னைச் சார்ந்தவர்கள் உடன் இல்லாத காரணத்தால், கோவிந்தன், பின்னால் சில செயல்கள் இவன் மூலம் நடத்திக் கொள்ள வேண்டும் என்று பலராமனிடம் சொல்லி விடுவிக்கச் செய்தான். அவனும் தோற்றதால் வந்த வெட்கத்துடன் தவம் செய்யப் போகிறேன் என்று கிளம்பினான். அவனை வழியில் சந்தித்த சக அரசர்கள் தடுத்தனர். யது வம்சத்தினரிடம் தோற்றது அவமானம் தான், ஆனால் விதி என்று என்று விட்டு விடு. மகத வீரர்களும் மனம் வாடி திரும்பினர்.
முகுந்தனும் தன் படை வீரர்கள் அதிக சேதமில்லாமல் பிழைத்ததை எண்ணி, எல்லையில்லாத எதிரியின் படை பலம் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு திரும்பினர். தேவர்களும் அனுமோதித்து பூமாரி பொழிந்தனர். மதுரா நகர ஜனங்கள் வந்து வாழ்த்தினர். வெற்றியைக் கொண்டாடி புகழ்ந்து சூதர்களும், மாகதர்களும் பாட , சங்க துந்துபி நாதங்கள் முழங்க நகரின் உள் ப்ரபு ப்ரவேசித்தார்.
வழி முழுவதும் நன்னீர் தெளித்து கொடிகளால் அலங்கரித்து மகிழ்ச்சியுடன் ஊர் மக்கள், ப்ரும்ம கோஷத்தை முன்னிட்டுக் கொண்டு, குதூகலமாக பின் தொடர்ந்தனர். பெண்கள் பூக்களையும் அக்ஷதைகளையும் தூவி ஆசீர்வதித்தனர்.
இவ்வாறே பதினேழு முறை மகத ராஜா பெரும் படையுடன் வருவதும், க்ருஷ்ணரால் பாதுகாக்கப் பட்ட யாதவர்களுடன் போரிட்டு தோற்பதுமாக சென்றது. அனேகமாக போர் வீரர்கள் முற்றிலும் மறைந்த நிலையிலும் க்ருஷ்ண தேஜஸால் சூழப்பட்டிருந்த வ்ருஷ்ணி குல மக்கள் போரில் ஈடுபட்டனர். ஜரா சந்தனும் பதினெட்டாவது முறை படையை கூட்டிக் கொண்டிருக்கும் சமயம்,
நாரதர் அனுப்பிய யவன வீரன் மதுரா வந்து சேர்ந்தான். ம்லேச்சர்கள் – இந்திய நாட்டின் எல்லை தாண்டிய இடத்து வாசிகள்- மூன்று கோடி மல் யுத்த வீரர்களுடன் மனித உலகில் வ்ருஷ்ணி வம்சத்து வீரர்கள் சிறந்த போர் வீரர்கள் என்று கேள்விப் பட்டதாகச் சொன்னான். அவனும் மதுரா நகரை முற்றுகையிட்டான். அதைக் கண்டு ஸ்ரீ க்ருஷ்ணன் சிந்தையில் ஆழ்ந்தார். இந்த யவனன், முற்றுகையிட்டிருக்கிறானே, இன்றோ, நாளையோ மகதனின் படைகளும் வந்து விடும், இந்த யவனர்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் சமயம் ஜராசந்தன் வந்தால், நம் ஜனங்களை அழிப்பது அவனுக்கு சுலபமாகி விடும். அல்லது உயிருடன் பிடித்து தன் நகரம் கொண்டு செல்வான். அதனால் நமது கோட்டையை இரு மடங்கு பலப் படுத்துவோம். அங்கு நம் பந்துக்களை நிம்மதியாக இருக்கச் செய்து விட்டு யவனர்களை சந்திப்போம். இவ்வாறு யோசித்து சமுத்ர மத்தியில், இருபத்திரண்டு யோஜனை தூரம், எவராலும் மனதால் சிந்திக்க முடியாத வேகத்தில் கோட்டையைக் கட்டினார். அதில் பழமையான விஞ்ஞானம், சில்ப நேர்த்தி, ரத வீதிகளின் அமைப்பு, நால்வழிப் பாதைகளாக அமைந்த சாலைகள், வாஸ்து சாஸ்திரப் படி கட்டப் பட்டன.
தேவலோகத்திலிருந்து கல்ப வ்ருக்ஷங்களும், உத்யான செடி கொடிகளும், நடு நடுவில் ஓய்வெடுக்க மண்டபங்களும், மேல் கூரையுடன் ஸ்படிகங்களால் படிக்கட்டுகளும் ஆசனங்களும் போடப் பெற்று, அழகான கோபுரங்கள், வெள்ளியினால் ஆன கொட்டகைகள், சில தங்கத்தால் கூறையிடப் பெற்றன. மற்றும் சில ரத்னங்களால் அலங்கரிக்கப் பட்டன, சில மகா மரகதம் என்ற மணியால் அலங்கரிக்கப் பட்டன. தரைகளும் அப்படியே.
வாஸ்து சாஸ்திரப் படி வளையங்களாக வீடுகள் அமைக்கப் பட்டன. நால் விதமான ஜனங்களும், அவரவர் வர்ணாஸ்ரம செயல்களைச் செய்ய ஏதுவாக அமைத்தனர். யாதவ தலைவர்கள் இல்லங்களும் ப்ரகாசமாக அமைக்கப் பட்டன. சுதர்மம், பாரிஜாதம் இவைகளை இந்திரன் கொண்டு வந்து கொடுத்தான். மனிதனாக இருக்கும் பொழுது மனித தர்மமே ஏற்றது. மேக சியாமளமான காதுகளைக் கொண்ட குதிரைகளை வருணன் கொண்டு வந்து நிரப்பினான். அவை மனோ வேகத்தில் ஓடக் கூடியவை என்றான். எட்டு விதமான நிதிகளும் கொண்ட பொக்கிஷ பெட்டிகளை லோகபாலனான தனதன்- குபேரன் கொண்டுவந்து கொடுத்தான்.
எந்தெந்த பதவிகள் பகவான் அவர்களுக்கு கொடுத்தாரோ, அதில் தாங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்தார்களோ. பகவான் பூமியில் அவதரித்த சமயம் அவைகளையே அவருக்கு திருப்பி தந்தனர் போல. தன் யோக ப்ரபாவத்தால் பந்து ஜனங்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சங்கர்ஷணனை அங்கு செல்ல பணித்தார். ஆயுதம் இன்றி பத்ம மாலைகள் அணிந்து தானும் வெளி வாசல் வழியாகவே சென்றார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாவது பகுதியில், துர்க நிவேசனம் என்ற ஐம்பதாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 58
அத்யாயம்-51
ஸ்ரீ சுகர் சொன்னார்: கோட்டையிலிருந்து வெளியேறும் ஸ்ரீ க்ருஷ்ணனை யவனர் தலைவன் பார்த்தான்.வான வெளியில் சந்திரன் போன்று தனித் தன்மையுடன் தெரிந்த உருவம். காணவே மனம் கவரும் வண்ணம் மேகத்தின் நிறம். பீதாம்பரம் அணிந்து, ஸ்ரீவத்ஸம் மார்பில் துலங்க, கௌஸ்துபமும், திரண்டு உருண்ட நீண்ட நான்கு புஜங்கள், அன்றலர்ந்த செந்தாமரை போன்ற கண்கள், எப்பொழுதும் மகிழ்ச்சி துலங்கும் வதனம், அழகிய கன்னங்கள், இளம் முறுவலோடு மகர குண்டலங்கள் ஆட – ஆ ! வாசுதேவன் இவன் என்று யவன அரசன் உணர்ந்தான். நாரதர் சொன்ன மகா புருஷன் இவனே என்று தெரிந்தவுடன், அதே ஸ்ரீவத்ஸம் அடையாளம், அரவிந்தாக்ஷன்,வன மாலை தரித்தவன் சுந்தரன், இவைகள் தானே நாரதர் சொன்னது, ஆயுதமின்றி செல்கிறான், நானும் ஆயுதமின்றி இவனுடன் போரிடுகிறேன் என்று பின் தொடர்ந்தான்.
மகா யோகிகளுக்கும் முயன்றும் கிடைக்காத வாசுதேவனை பிடிக்கச் சென்றான். காணாதது போல வேகமாகச் செல்லும் ஸ்ரீ ஹரியை இதோ என் கைகளில் அகப்பட்டு விட்டான் என்னும் தூரத்திலேயே தொடர்ந்து பின் சென்றான். ஒவ்வொரு அடியிலும் இதோ,இதோ என்பது போலவே தென்பட்டவன், வெகு தூரம் அழைத்துச் சென்று ஒரு பெரிய மலையின் குகைக்கு அருகில் நின்றவனைப் பார்த்து மூச்சிறைக்க, யது குலத்தில் பிறந்தவன் இப்படி ஓடுவது அழகல்ல என்று சொல்லியபடி அருகில் வர முயன்றவன் இன்னமும் கைக்கெட்டாமலேயே இருப்பதைப் பார்த்து திகைத்தான். அவர் குகைக்குள் நுழைந்ததும் தானும் தொடர்ந்தான். அங்கே ஒரு மனிதன் படுத்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அவனை அச்யுதன் என்று நினைத்து, இவ்வளவு தூரம் என்னை அலைக்கழித்து இங்கு வந்து தூங்குகிறான் என்று காலால் அந்த உருவத்தை உதைத்தான். வெகு காலமாக தூங்கியவன் திடுமென எழுப்பப் பட்டதால் எதுவும் புரியாமல் விழித்தது அந்த உருவம். நாலா புறமும் பார்த்து தன்னை சுதாகரித்துக் கொண்டு எதிரில் நின்றவனைப் பார்த்தது. கோபத்துடன் பார்த்த அதன் பார்வையின் தீக்ஷ்ணம் தாங்காமல் யவனன் அந்த க்ஷணமே பொசுங்கி பஸ்மமானான்.
பரீக்ஷித் ராஜா வினவினான்: ப்ரும்மன்! யாரது? என்ன வீர்யம் அவனுடையது? ஏன் குகைக்குள் இருந்தான்? என்ன தேஜஸ் அவனுடையது? யவனனை பொசுக்கும் அளவு அவனுக்கு என்ன பலம்?
ஸ்ரீ சுகர் சொன்னார்: அவனா? இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன். மாந்தாதா என்பவரின் மகன். முசுகுந்தன் என்பது அவன் பெயர். ப்ரும்ம வழியில் நின்றவன். சத்யவாதி. இந்திரன் முதலானோர்கள் யாசிக்கவும் அவர்கள் சார்பாக அசுரர்களுடன் போரிடச் சென்றான். வெகு காலம் நடந்த போரில் தேவர்கள் பிழைக்க உதவி செய்தான். போர் முடிந்து வீடு திரும்பியதும், இந்திரன், அரசனே, எங்களை காப்பாற்றி பேருதவி செய்திருக்கிறாய். ஓய்வு எடுத்துக் கொள் என்று நன்றியுடன் சொன்னான். பூ உலகில் அவனுடைய வீட்டிலேயே கொண்டு வந்து விட்டு, ராஜ்யத்தை இடையூறின்றி ஆள்வாயாக என்று சொல்லி, வேண்டிய வரம் கேள் என்றான். எங்களுக்கு நீ செய்த உதவிக்கு எதுவானாலும் தர நாங்கள் கடமைப் பட்டவர்களே என்றான். புதல்வர்கள், மனைவிகள், தாயாதி பந்துக்கள், அமாத்ய மந்திரிகள், ப்ரஜைகள் இந்த இடைவெளியில் கால கதியடைந்து விட்டனர். காலன் பலவான், அதை மீற முடியாது. ஈஸ்வரனான பகவான் தான் அழிவற்றவன். பசுக்களை இடையன் மேய்ப்பது போல ஜீவன்களை அவைகளின் காலம் முடியும் வரை மேய்க்கிறான். பத்ரம் தே! உனக்கு நன்மை உண்டாகட்டும். வேண்டிய வரம் கேள். கைவல்யம் மட்டும் தான் என்னால் தர முடியாது, அதைத் தவிர வேறு எதுவானாலும் கேள், அதை ஈஸ்வரனான பகவான் தான் தர முடியும் எனவும், எதுவும் வேண்டாம், தூங்க விரும்புகிறேன் என்ற முசுகுந்தனிடம் இந்திரன் சொன்னான்- இந்த குகையில் நிம்மதியாக தூங்கு. யாராவது வந்து நிர்பந்தமாக எழுப்பினால், உன் பார்வை பட்ட மாத்திரத்தில் அவன் பஸ்மமாக போகட்டும் என்று வரமளித்தான்.
யவனன் பஸ்மமாக ஆனதும், பகவான் வெளியே வந்தார். நீருண்ட மேகம் போன்ற நிறமும், பீதாம்பரமும் ஸ்ரீவத்சமும் காட்டிக் கொடுத்தன அவர் யாரென்பதை. இன்னமும் தூக்கம் கலையாத நிலையில், முசுகுந்தன், தாங்கள் யார்? இந்த காட்டுக் குகையில் வந்து நிற்க என்ன காரணம்? வரும் வழியில் கல்லும் முள்ளும் நிறைந்திருக்குமே, அதில் பத்ம பாதம் நோக நடந்து வந்தீர்களா ? தேஜஸ்வீ என்று தெரிகிறது. ஸூர்ய பகவானே தானா? தேஜவிகளுக்குள் தேஜஸ்வீ, என்று விபாவசுவைச்-ஸுரியனை- சொல்வார்கள், சோமனா, மஹேந்திரனா, லோகபாலர்களுள் ஒருவனா? மூன்று முழு முதற் தேவர்களுள் ஒருவன் என்று ஊகிக்கிறேன். இந்த குகையே உங்கள் ஒளியால் பிரகாசமாகி விட்டதே என்றான். மனிதனாக இருந்தால் மனிதருள் மாணிக்கம் என்ற சிறந்த மனிதன். முடிந்தால், உங்கள் பிறவி, செயல், கோத்ரம் இவைகளைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள். புருஷவ்யாக்ர! மனிதர்களுள் புலி போன்றவனே! நான் இக்ஷ்வாகு வம்சத்தின் அரசன். முசுகுந்தன் என்பது என் பெயர். யுவனாஸ்வன் என் தந்தை. ப்ரபோ! வெகு நாட்கள் தூங்கியதால் என் நினைவுகள் மழுங்கி விட்டன. ஜன நடமாட்டம் இல்லாத இந்த காட்டில் தனியாக இருந்திருக்கிறேன். யாரோ எழுப்பி விட்டார்கள். இப்பொழுது தான் கண் விழித்தேன். யாரோ பஸ்மமாக ஆகி இதோ கிடக்கிறார்கள். பாவம். அதன் பின் நீங்கள் எதிரில் வந்தீர்கள். உங்கள் தேஜஸ் என் கண்களை மறைக்கிறது. நன்றாக பார்க்க முடியவில்லை. மஹாபாக! யாரோ, மிக்க மதிப்புள்ளவராக இருக்க வேண்டும் தாங்கள்.
இவ்வாறு முசுகுந்த ராஜா சொன்னதைக் கேட்டு, பகவான் பலமாக சிரித்து விட்டார். தன் கம்பீரமான குரலில் பதில் சொன்னார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: என் பெயர், செயல், கோத்ரம் என்று கணக்கில்லாமல் இருக்கின்றன, நண்பனே. ஆயிரக் கணக்கான பெயர்களையும், கோத்ரங்களையும் எவராலும் நினைவு கூர்ந்து சொல்ல முடியாது. என்னுடைய பிறப்பும் செயல்களும், மூன்று காலங்களையும் கடந்தவை. தொடர்ந்து வருபவை அதற்கு முடிவே இல்லை. இருந்தாலும் தற்சமயம் நான் யார் என்று சொல்கிறேன்.
முன் ஒரு சமயம் ப்ரும்மா என்னை வேண்டினார். தர்மத்தை பாதுகாக்க வேண்டும். பூமியில் பாரம் அதிகமாகி விட்டது. அதைக் குறைக்க வேண்டும். அசுரர்கள் எண்ணிக்கையில் மிக அதிகமாகி விட்டதால் அவர்களை குறைக்க வேண்டும். அதை நிறைவேற்ற நான் யதுகுலத்தில் அவதரித்திருக்கிறேன். ஆனக துந்துபி வீட்டில் வளர்ந்தேன். என்னை வசுதேவன் மகன் வாசுதேவன் என்பர்.
கால நேமியான கம்சனை வதைத்தேன். ப்ரலம்பன் முதலான பலர் என் கையால் மாண்டனர். இந்த யவனன் அரசனே! உன்னுடைய தீக்ஷ்ணமான கண் பார்வை பட்டு எரிந்து பஸ்மமானான். பல காலம் முன்பு யாசித்தாய். அதனால் இந்த குகையில் யுத்தம் செய்த அலுப்பு தீர உறங்கினாய். இப்பொழுது என்ன வரம் வேண்டுமோ, கேள். எதுவும் யோசிக்காதே. நான் ப்ரசன்னமாக அனுக்ரஹம் செய்யவே இந்த குகைக்குள் வந்துள்ளேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஸ்ரீமன் நாராயணனே எதிரில் நிற்பது என அறிந்து கொண்ட முசுகுந்தன் கர்க முனிவர் முன் ஒருமுறை சொன்னதை நினைத்து, மகிழ்ந்தான். வணங்கினான். பின்,
முசுகுந்தன்: பகவானே, நானும் ஈசனுடைய மாயையால் உண்மையறியாது திகைத்தேன். உன்னுடைய தயவால் தான் உன்னை துதிக்கவே தோன்றும். இல்லாவிடில் தவற்றைத் தான் முதலில் காண்பார்கள். சுகத்தின் அருமையை துக்கம் தொடர்ந்து அனுபவித்தவர்களே அறிவர். வீடுகளில் பெண்களோ, புருஷர்களோ வாழ்க்கையில் கஷ்டம் என்று அனுபவித்தபின் நல்லகாலம் வந்தால் மகிழ்வது போல.
மனித பிறவி கிடைப்பதே அரிது. அதில் உன்னை பஜிப்பதை நினையாமல் காலத்தை வீணே போக்குகிறார்கள். வீட்டுபசு இருட்டில் கிணற்றினுள் விழுந்தது போல புத்தியில்லாமல் விழுகிறார்கள். அஜித! எனக்கும் என் வாழ் நாள் வீணே கழிந்தது. முதலில் ராஜ்யம், மகன், மனைவி எல்லாம் இருந்தன. அலங்காரம், கேச, பூஷணங்கள் என்று கவனம் சிதறியது. முடிவில்லாத கவலைகள். இந்த சரீரத்தில், வெறும் உடையக் கூடிய மண் பானை என்ற நினைவில்லாமல் நரதேவன் என்று பெருமை கொண்டேன். ரதம், யானை குதிரைகள், கால் நடை வீரர்கள், சேனைகள் என்று உலகைச் சுற்றி அலைந்த சமயம் உன் நினைவே இல்லை.
மிக அதிகமான கர்வம், தன்னம்பிக்கை, அதனால் பெருகிய லோபம், விஷய ஆசைகள், இவைகளே சிந்தனை. அதிக கர்வமோ, தன்னம்பிக்கையோ இல்லாதவர்கள் உன்னை சுலபமாக அடைகிறார்கள். பசித்தால் எலியை தின்னும் பாம்பு போல.
முன்பு பொன் மயமான ரதங்களில் ஏறியோ, யானை மீதோ அரசன் என்று பெருமையாக சுற்றினேன். காலம் சென்றது. என் உடல் நிரந்தரம் என்று நம்பிருந்தேன். இது ஒருநாள் பஸ்மமாகும் என்பது மனதில் உறைக்கவில்லை. திசைகளை வென்றேன். இதர அரசர்கள் போற்றும்படி வராசனத்தில் அமர்ந்தேன். அதுவே சுகம் என்று வீடு வந்ததும் மனைவி மக்களோடு மகிழ்ந்து விளையாடியபடி பொழுதைக் கழித்தேன்.
நியமமாக தவமும் செய்யவில்லை, போகங்களை தியாகம் செய்யவும் இல்லை, சக்ரவர்த்தி என்ற மமதையிலேயே இருந்திருக்கிறேன். அச்யுதா ! உன் அருளாலேயே சத் சங்கம் அமையும், அலை பாயும் மனது அடங்கி நல் வழியில் செல்லும், ஈஸ்வரனிடத்தில் கவனம் செல்லும். இதுவே எனக்கு அனுக்ரஹம், ஈசனே. ராஜ்யம், விஷய சுகம் இவைகளிலிருந்து எதேச்சையாக விடுபட்டேன். உன் பாத சேவையை செய்வதைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. உன்னை வணங்கி வேறு என்ன வேண்டுவர்? அபவர்கபதம் தான் பெரியவர்கள் வேண்டுவர். மற்ற லௌகிகமான வரங்கள் திரும்பவும் பந்தத்தில் தள்ளும்.
எனவே என்னை ஆசீர்வதியுங்கள் ப்ரபோ. முக்குணங்கள் என்னை பாதிக்காமல் இருக்கட்டும். அத்வைத பரமான நிரஞ்சனம், நிர்குணமான உன்னை அறிதல் மட்டுமே, பரம புருஷனான உன்னிடம் வேண்டுகின்றேன். வெகு காலம் இந்த சம்சாரக் கடலில் மூழ்கி திருப்தியும் அடையவில்லை. சாந்தியும் கிடைக்கவில்லை. எப்படியோ உன் பதாப்ஜம் கண்டு கொண்டேன். அபயம் அளிப்பவனே, அம்ருத்மான, சோகம் இல்லாத நிலையை அளித்து என்னை காத்தருள்வாய். ஈசனே உன்னையே சரணடைகிறேன்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: சக்ரவர்த்தியாக ஆண்டவன் நீ, மகாராஜாவாக வலம் வந்தவன். உன் மனம் காம போகங்களிலிருந்து விடுபட்டது உன் மனம் நிர்மலமாக ஆகி விட்டதைக் குறிக்கிறது. அதனால் தான் நானே தருவதாக சொன்னாலும், உன் மனம் உலகியல் நன்மைகளை விரும்பவில்லை. பக்தர்கள் எளிதில் ஆசை காட்டுவதில் மயங்குவதில்லை. ப்ராணாயாமாதிகள் செய்து சாதனைகள் செய்பவர்களும் கடைசியில் சற்று வாசனா பலத்தால் திரும்ப உலக வாழ்க்கையை விரும்புவர். சிறிது நாட்கள் உலகில் என் நினைவோடு வாழ்ந்து வா. என்னிடம் நிரந்தரமான பக்தி வந்து விட்டதால், க்ஷத்ர தர்மத்தை அனுசரித்து வேட்டையாடுவதோ, எதுவானாலும் செய். தவம் செய்து குறைகளைக் களைந்து கொள். ராஜன்! அடுத்த ஜன்மத்தில் அனைத்து உயிரினங்களையும் சமமான நட்புடன் பார்த்து, சிறந்த அந்தணனாக பிறந்து என்னை வந்தடைவாய்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாவது பகுதியில், முசுகுந்த ஸ்துதி என்ற ஐம்பத்தோராவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 64
அத்யாயம்- 52
இவ்வாறு ஸ்ரீ க்ருஷ்ணனின் அனுக்ரஹம் பெற்ற இக்ஷ்வாகு அரசன், அவரை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து வணங்கினான். குகையை விட்டு வெளியேறினான். மனிதர்கள் மிக சிறிய உருவத்தினராக இருப்பதைக் கண்டு வியந்தான். பசுக்களும், காட்டு மரங்களும் கூட உருவம் சிறுத்துக் காணப் பட்டன. சரிதான், கலியுகம் ஆரம்பித்து விட்டது என்று நினைத்தபடி வடக்கு திசையில் நடந்தான். கந்த மாதனம் எனும் இடத்தை அடைந்தான். ஸ்ரீ க்ருஷ்ணனை கண்டதும் பேசியதும் மனதிலேயே இருந்ததால், தனியாக இருப்பதாக உணரவேயில்லை. பதரி ஆஸ்ரமம் அடைந்து, நர நாராயண ஆலயத்தை தரிசித்தான். அங்கு அமைதியாக அமர்ந்து தவம் செய்யலானான்.
இங்கு, பகவான் தன் நகரம் வந்து முற்றுகையிட்டிருந்த யவனர்களுடன் போர் புரிந்து அவர்களை தோற்கடித்து அவர்களிடம் இருந்த செல்வத்தை எடுத்துக் கொண்டு த்வாரகை சென்றார். வழியில் செல்வத்தை அபகரிக்க ஜராசந்தனின் ஆட்கள் எதிர்ப்பட்டனர். ஸ்ரீ க்ருஷ்ணனின் பசுக்களும், ஆட்களும் அந்த பெரிய படையைக் கண்டு மிரண்டனர். க்ருஷ்ணனும் மனிதனாக வேகமாக ஓடலானார். அந்த பெரும் தனத்தை விட்டு விட்டு பயந்தவன் போல வெகு தூரம் ஓடி, பின் மெதுவாக நடக்கலானார். ஓடும் யாதவர்களைப் பார்த்து மகத ராஜா பலமாக சிரித்தான். பின் தொடர்ந்து பிடிக்க எண்ணி கூட்டத்தோடு வந்தான். அவர்களை பின் தொடர விட்டு ப்ரவர்ஷணம் என்ற இடத்தையடைந்தார். நித்யம் மழை பொழியும் இடம் அது. ஓடிக் களைத்து அதன் சிகரத்தில் ஏறி காலடி கேட்பது நின்றவுடன் அங்கு இருந்த சருகுகளை வைத்து தீ மூட்டினார். அது மலைச் சாரலில் கிடைத்த கட்டைகளை எரித்தபடி கீழ் நோக்கி வேகமாக பரவியது. கிட்டத்தட்ட பத்து யோஜனை தூர உயரமான மலையுச்சியிலிருந்து நெருப்பு ப்ரவாகமாக பூமியை நோக்கி தீ அருவியாக விழுந்து பரவியது. இனி பயமில்லை என்று எண்ணி சகோதர்கள் இருவரும், பல ராம, க்ருஷ்ணன் இருவரும் தங்கள் சமுத்திரம் சூழ்ந்த நகரம் வந்து சேர்ந்தனர். இருவரும் அந்த தீயில் பொசுங்கி விட்டார்கள் போலும் என்று எண்ணி மாகதன் படையோடு திரும்பி விட்டான்.
ஆனர்த என்ற பகுதியின் அரசன் ரைவதன் என்பவன் தன் மகள் ரேவதியை பலராமனுக்கு மணம் செய்வித்தார். பகவானும் வைதர்பியான பீஷ்மக சுதா- பீஷ்மகரின் மகளை ஸ்வயம் வரத்தில் மணந்தார். உலகத்தின் தாயாரான லக்ஷ்மி தேவியே அவள். சால்வ, சேதி, அரசர்களும் போட்டியிட்ட அந்த சுயம்வரத்தில் அனைவரும் பார்த்திருக்க, கருடன் அம்ருதத்தை கவர்ந்தது போல அந்த தேவியை கவர்ந்து சென்றார்.
பரீக்ஷித் அரசன் கேட்டான்: பகவன்! பீஷ்மகர் மகள் ருக்மிணியை ராக்ஷஸ விதியில் மணந்தார் என்று கேள்வி. பகவன் அந்த கதையை, எப்படி மாகதன், சால்வன் இவர்களை ஜயித்து கன்னியை அபகரித்தார் என்பதை விவரமாகச் சொல்லுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பீஷ்மகன் என்ற அரசன் விதர்ப தேசத்தை ஆண்டு வந்தான். மகான் என்று புகழ் பெற்றான். அவனுக்கு ஐந்து புதல்வர்கள், ஒரு புதல்வி, அவள் தான் ருக்மிணி. ருக்மி என்பவன் மூத்தவன், ருக்ம ரதன்,ருக்ம பாஹு, ருக்மகேசன், ருக்ம மாலி என அவர்கள் பெயர்கள்.
அவள் முகுந்தனுடைய ரூப,வீர்ய குணங்களை அந்த ராஜ்யத்திற்கு வந்த பாடகர்கள் பாடுவதைக் கேட்டு கேட்டு முகுந்தனையே தன் மணாளனாக வரித்து விட்டாள். க்ருஷ்ணனும் அதே போல அவளைப் பற்றி புத்திசாலி, அழகி, நல்ல சீலமும், பெருந்தன்மையும் உடையவள் என்று கேட்டு கேட்டு, அவளையை தன் மனைவியாக மனதளவில் தீர்மானித்தான். பந்துக்களும் சம்மதித்து க்ருஷ்ணனுக்கு ருக்மிணியைத் தர ஏற்பாடுகள் செய்தனர். ருக்மீ என்ற மூத்தவனுக்கு ஏனோ க்ருஷ்ணனுக்கு தன் சகோதரியை கொடுப்பதில் விருப்பமில்லை. சேதி நாட்டரசனுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்றான். இதையறிந்து ருக்மிணி மிகவும் வருந்தினாள். யோசித்து யோசித்து, ஒரு அந்தணரை அழைத்து க்ருஷ்ணனிடம் தூது அனுப்பினாள். அவரும் துவாரகை சென்று வாயில் காப்போர்கள் மரியாதையாக உடன் வர ஸ்ரீ க்ருஷ்ணனை சந்தித்தார். பொன் மயமான ஆசனத்தில் ஆதி புருஷன் அமர்ந்திருப்பதை அந்தணரான அவர் உடனே தெரிந்து கொண்டார். அவரும் உத்தமமான ப்ரும்ம வாதி என அறிந்து தன் ஆசனத்திலிருந்து இறங்கி வரவேற்றார். தன் நெருங்கிய பந்துவை உபசரிப்பது போல உபசரித்தார். ஆகாரம் அளித்து, அவர் உண்டபின் விஸ்ராந்தியாக இருந்த சமயம் வரை காத்திருந்து, அவர் பாதங்களை தொட்டு வணங்கி, என்ன விஷயம் என்று கேட்டார்.
அந்தண ஸ்ரேஷ்டரே! நீங்கள் வசிக்கும் இடத்தில் அனைவரும் நலமா? உங்கள் வாழ்க்கை தர்மம் குறைவின்றி நடக்கின்றனவா? சந்தோஷமாக இருக்கிறீர்களா? அந்தணர்கள் திருப்தியாக வாழும் இடம் தான் உயர்ந்தது. தர்மம் அங்கு தழைக்கும் என்றார். தேவராஜனாக இருந்தாலும், உலகம் முழுவதும் அடைந்த பின்னும், சந்தோஷம் இன்றி இருப்பதும், எதுவும் இல்லாதவன் கூட மனம் நிறைந்து நிம்மதியாக உறங்குவதும் உண்டு. அந்தணர்கள் கிடைத்ததில் திருப்தியடைபவர்களாக இருக்க வேண்டும். சாதுக்களாக, அஹங்காரம் இன்றி, சாந்தமாக இருப்பவர்களை தலை வணங்கி நமஸ்கரிக்கிறேன். ப்ரும்மன்! அந்த ராஜ்யத்தில் ப்ரஜைகள் நலமாக இருக்கிறார்களா? எந்த ராஜ்யத்தில் ப்ரஜைகள் நிம்மதியாக திருப்தியாக இருக்கிறார்களோ, அந்த ராஜ்யம் எனக்கு பிடித்தமானது. அது இருக்கட்டும். நீங்கள் இவ்வளவு தூரம் வந்த காரியம் என்னவோ, நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?
அந்தணர் இதைக் கேட்டு மனதினுள் சிலாகித்தார். விளையாட்டாக எடுத்த மனித அவதாரம். மனிதனாக பேசுகிறான் என்று எண்ணிக் கொண்டார். தான் வந்த காரியத்தைச் சொன்னார். ருக்மிணியின் தூது வார்த்தைகளை அப்படியே சொன்னார்.
ருக்மிணி சொன்னாள்:
श्रुत्वा गुणान् भुवनसुन्दर शृण्वतां ते निर्विश्य कर्णविवरैर्हरतोऽङ्गतापम् ।
रूपं दृशां दृशिमतामखिलार्थलाभं त्वय्यच्युताविशति चित्तमपत्रपं मे ॥ ३७॥
का त्वा मुकुन्द महती कुलशीलरूप-विद्यावयोद्रविणधामभिरात्मतुल्यम् ।
धीरा पतिं कुलवती न वृणीत कन्याकाले नृसिंह नरलोकमनोऽभिरामम् ॥ ३८॥
तन्मे भवान् खलु वृतः पतिरङ्ग जाया-मात्मार्पितश्च भवतोऽत्र विभो विधेहि ।
मा वीरभागमभिमर्शतु चैद्य आराद्-गोमायुवन्मृगपतेर्बलिमम्बुजाक्ष ॥ ३९॥
पूर्तेष्टदत्तनियमव्रतदेवविप्र-गुर्वर्चनादिभिरलं भगवान् परेशः ।
आराधितो यदि गदाग्रज एत्य पाणिं गृह्णातु मे न दमघोषसुतादयोऽन्ये ॥ ४०॥
श्वोभाविनि त्वमजितोद्वहने विदर्भान् गुप्तः समेत्य पृतनापतिभिः परीतः ।
निर्मथ्य चैद्यमगधेन्द्रबलं प्रसह्य मां राक्षसेनविधिनोद्वह वीर्यशुल्काम् ॥ ४१॥
अन्तःपुरान्तरचरीमनिहत्य बन्धून्त्वामुद्वहे कथमिति प्रवदाम्युपायम् ।
पूर्वेद्युरस्ति महती कुलदेवियात्रा यस्यां बहिर्नववधूर्गिरिजामुपेयात् ॥ ४२॥
यस्याङ्घ्रिपङ्कजरजःस्नपनं महान्तो वाञ्छन्त्युमापतिरिवात्मतमोऽपहत्यै ।
यर्ह्यम्बुजाक्ष न लभेय भवत्प्रसादं जह्यामसून् व्रतकृशान् शतजन्मभिः स्यात् ॥ ४३॥
அச்யுதா!உன் குணங்களைக் கேட்டு கேட்டு என் மனம் வெட்கத்தையறியாது உன்னையே விரும்புகிறது. புவன சுந்தர, என் காதுகள் செய்த நல்வினை, உன் கதைகள் அதன் வழியாக உன் குணங்கள், ரூபம் பற்றிய வர்ணனைகளை என் மனதில் நிரப்புகிறது. கண்கள் படைத்த பயனே உன்னைக் காண்பது தான்.
முகுந்தா! நல்ல குடியில் பிறந்த எந்த பெண் தான் உன்னை விரும்ப மாட்டார்கள்? குலம், சீலம்,ரூபம், வித்யா, செல்வம், பெருந்தன்மையில் ஒப்பில்லாத வீரன் என் உன்னை அறிந்த பெண்கள் உன்னை விரும்புவதில் அதிசயம் எதுவுமில்லை. சமயத்தில் ந்ருசிங்கமாக வந்து மனிதர்களுக்கு நன்மை செய்பவன். ஜீவன்கள் மனம் விரும்பும் வீர புருஷன் நீ.
விபோ! அம்புஜாக்ஷ! நான் உன்னை பதியாக வரித்து விட்டேன். என் ஆத்மாவை உனக்கே அர்ப்பித்து விட்ட என்னை கை விடாதே. வீரனுக்காக வைக்கப் படும் பொருளை சைத்யன்- சேதி நாட்டு அரசன் தொட விடாதே. அது ம்ருகபதியான சிங்கத்தின் பங்கான உணவை நரி முகர்ந்து பார்ப்பது போல ஆகும்.
கதாக்ரஜ- பலராமனை மூத்தவனாக கொண்டவனே! பூர்த்தங்கள்- பொது மக்களுக்குத் தேவையான குளம் வெட்டுதல் போன்றவை, இஷ்ட-யாகங்கள், தானம், நியமங்கள், விரதங்கள், தேவ, அந்தணர்கள், பித்ருக்கள் இவர்களை நியமம் தவறாது பூஜித்தல், இவைகள் அனைத்தும் உயர்வு என்றால், அவைகளுக்கும் மேலானது பரம புருஷன் பகவானை ஆராதித்தல் என அறிவேன். வந்து என் கைகளைப் பற்றி அழைத்துச் செல், தம கோஷன் மகன் மற்றும் அவனைப் போன்றவர்களை நெருங்க விடாதே.
அஜித! நாளை நடக்கப் போகும் சுயம்வரத்தில் யாருமறியாமல், முக்கியமாக விதர்ப நாட்டு இளவரசர்கள் அறியாமல் வா. சேதி நாட்டு, மகத நாட்டு படைகள் சூழ்ந்து நிற்கின்றன. எனவே போர் புரிய தயாராக வா. அவர்களை முறியடித்து, ராக்ஷஸ விதியால் என்னை மணந்து, அழைத்துச் செல். வீர்ய சுல்கா – வெற்றி பெற்றவனுக்கே என்று அறிவிக்கப் பட்டவள் நான்.
அந்த:புர பெண்கள் சூழ்ந்திருப்பார்கள், உன்னை எப்படி காண்பேன் என்பாயா, ஒரு வழி சொல்கிறேன். முதல் நாள் மிகப் பெரிய குல தேவ பூஜை செய்ய யாத்திரையாகப் போவோம். அதில் புது மணப் பெண் என்பதால் என்னை அடையாளம் கண்டு கொள். நாங்கள் கிரிஜா- பார்வதி யின் ஆசீர்வாதம் பெற செல்வோம்.
எவருடைய பாத தூளியை மகான்கள் தங்கள் தலையில் படுவதை பிரசாதமாக நினைப்பார்களோ, உமாபதி நினைப்பது போலவே தங்கள் அறியாமை அதனால் விலகும் என்பார்களோ, அம்புஜாக்ஷ! கண்டிப்பாக வா. அந்த பாதங்களை எனக்கும் அருள் செய். வராவிடில் நான் உயிரை விடுவேன், நூறு ஜன்மம் எடுக்க வேண்டி வந்தாலும், விரதங்கள் செய்து இளைத்து, உன்னையே அடைவேன்.
யது தேவனே! இது தான் சந்தேசம். சொல்லி விட்டேன். இதன் பின் என்ன செய்ய வேண்டுமோ செய். உன் பொறுப்பு- என்றார் அந்த உத்தமனான அந்தணர்.
(இது வரை ஸ்ரீ மத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாவது பகுதியில், ருக்மிண்யுத்வாஹ ப்ரஸ்தாவம் என்ற ஐம்பத்திரண்டாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 44
அத்யாயம்- 53
ஸ்ரீ சுகர் சொன்னார்: விதர்ப நாட்டு இளவரசியின் சந்தேசத்தைக் கேட்டு வாய் விட்டு சிரித்த ஸ்ரீ க்ருஷ்ணர், அந்தணரின் கைகளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு பதில் சொன்னார்.
அந்தணரே, நானும் அதே சிந்தனையில் இரவில் தூக்கமே வராமல் தவித்தேன். ருக்மியின் த்வேஷத்தால் எங்கள் திருமணம் நின்றது என்பதை அறிந்தேன். கண்டிப்பாக அவளை அபகரித்து அழைத்து வருவேன். எதிர்க்கும் அரசர்களை போரில் வென்று, என்னிடம் அன்புடன், என்னையே நினைத்து இருப்பவளை, விறகிலிருந்து தீயின் நாக்கு கிளம்புவது போல வேகமாக கவர்ந்து வருகிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: சீக்கிரமே விவாகம் என்று நிச்சயித்திருப்பதை அறிந்து கொண்டவர், தாருகன் என்ற சாரதியை அழைத்து, ரதத்தை பூட்டச் சொன்னார். அவனும் வேகமாக செல்லும் குதிரைகளை இணைத்து ரதம் தயாராக கொண்டு வந்து விட்டான். அந்தணரையும் ஏற்றிக் கொண்டு ரதத்தை மிக வேகமாக ஓட்டிக் கொண்டு ஆனர்த்தம் என்ற தன் ஊரிலிருந்து ஒரே இரவில் விதர்ப தேசம் வந்து சேர்ந்தார்.
குண்டினபுர அரசன், மகன் சொன்னதன் பேரில் சிசுபாலனுக்கு ( சேதி ராஜன்) தன் மகளைக் கொடுப்பதாக வாக்களித்து திருமண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். ஊர் கோலாஹலமாக இருந்தது. வீதிகளும் பெரிய ராஜ வீதிகளும் அலங்கரிக்கப் பட்டிருந்தன. விசித்ரமான கொடிகள், பதாகைகள், தோரணங்கள் நிறைந்து காணப் பட்டன. மணம் மிகுந்த மலர்களால் மாலைகள் தொங்க விடப் பட்டிருந்தன. தூசியின்றி சுத்தமாக பந்தல்கள் கட்டி வைத்திருந்தனர். பெண்களும் புருஷர்களும் தங்கள் வீடுகளில் உத்சாகமாக அலங்கரிப்பதிலும் அகரு முதலிய தூபங்களால் மணம் மிக்கதாகச் செய்வதிலும் ஈடுபட்டிருந்தனர்.
மண விழாவின் தொடர்பாக பித்ருக்கள், தேவ பூஜைகளை அரசர் செய்து கொண்டிருந்தார். அந்தணர்கள் பலர் கூடியிருந்தனர். அவர்கள் மங்கள வாசகங்களை சொல்லிக் கொண்டிருந்தனர். அழகிய பற்களுடைய கன்யாவை, ஸ்னானம் செய்வித்து, கௌதுக மங்களங்களைச் செய்து, அழகிய ஆடைகளை அணிவித்து, உத்தமமான ஆபரணங்களை அணிவித்து, வைதிகர்கள், சாம,ருக் ,யஜுர் வேத வாசகங்களைச் சொல்லி காப்பு கட்டினர். க்ரகங்களின் சாந்திக்கான மந்திரங்களை புரோஹிதர்கள் ஓதினர். பொன்னும் வெள்ளியும் கொண்டு ஆடைகள் பூ வேலை செய்யப் பட்டிருந்தன. வெல்லம் கலந்த எள்ளையும், பசுக்களையும் அரசர் பீஷ்மகர் அவர்களுக்கு தானமாக கொடுத்தார்.
அதே போல சேதி நகர அரசன் தமகோஷனும் தன் மகனுக்கான மண விழாவிற்காக மந்திரம் அறிந்த அறிஞர்களைக் கொண்டு, உசிதமான செயல்களைச் செய்தார். மதம் கொண்ட யானைகள் அணி வகுத்து முன்னால் வந்தன. ரதங்கள் பொன்னால் அலங்கரிக்கப் பட்டு தரமான குதிரைகள் வேகமாக இழுத்து வர, சைன்யத்துடன் குண்டினம் வந்து சேர்ந்தார். விதர்பாதிபதி சம்பந்தியை எதிர் கொண்டு அழைத்து, மரியாதைகள் செய்து, அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மண்டபத்துள் அழைத்து வந்தார். அங்கு சால்வன், ஜராசந்தன், தந்த வக்த்ரன், முதலியவர்களும் வெகு தூரத்திலிருந்து வந்து சேர்ந்திருந்தனர். சைத்ய சேனை வீர்கள், பௌண்ட்ரகர்கள் என்பவர்கள், மற்றும் ஸ்ரீ க்ருஷ்ணனையும், பலராமனையும் வெறுக்கும் கூட்டம் சற்று எதிர் பார்ப்புடனேயே இருந்தனர். ஸ்ரீ ஹரியும், பலராமனும் ஒருவேளை வந்தாலும் சண்டையிட்டு, திருமணத்தை இடையூறின்றி நடத்தத் தயாராக இருந்தனர். அவர்களுடன் போரிடவும் எந்த விதமான எதிர்ப்பையும் சமாளிக்க என்று பெரும் படைகளுடன்,வாகனங்களுடனும் காத்திருந்தனர்.
பலராமன் இவைகளை ஊகித்தான். ஒவ்வொருவரையும் கவனித்து குறித்துக் கொண்டான். எதிர் தரப்பு அரசர்கள் அவர்களின் ஏற்பாடுகளை முறியடிக்கத் தயாராக இருப்பதையும், தனியாக க்ருஷ்ணன் சென்றதையும் அறிந்து, கவலையுடன் கலஹம் வரும் என்று எதிர் பார்த்தவனாக, தன் பெரும் படையுடன் வேகமாக குண்டின புரம் வந்து சேர்ந்தான். யானைப்படை, குதிரைப் படை, ரதங்கள் என்று அழைத்து வந்தான்.
பீஷ்மரின் மகள், ஸ்ரீ க்ருஷ்ணன் வரவையே எதிர் பார்த்து, தூது சென்ற அந்தணர் வருகிறாரா என்று கவனித்தபடி இருந்தாள். அவருக்கு ஏதும் தீங்கு நேர்ந்திருக்க கூடாதே என்ற பதைப்பும் கூடியது. இவ்வளவு அவசரமாக என் திருமணத்தை ஏன் ஏற்பாடு செய்தார்கள் என்று வருந்தினாள். ஏன் இன்னும் வரவில்லை. என் சந்தேசத்தை கொண்டு சென்ற மனிதரும் வரவில்லையே, எதாவது விபரீதமாக நடந்திருக்குமோ, என் பாணி க்ரஹணத்துக்கு முன் வந்து சேராவிடில் என்னாவது? தெய்வங்கள் எனக்கு துணையாக இல்லையா? மகேஸ்வரனை வேண்டிக் கொண்டாள். கௌரி தேவியை வேண்டினாள். அவள் ருத்ராணி, கிரிஜா, எதற்கும் அஞ்ச மாட்டாள். இதே சிந்தனையாக, கோவிந்தனையே நாம ஸ்மரணம் செய்த படி இருந்தாள். திடுமென அவள் இடது புஜமும், துடைகளும், கண்களும் துடித்தன, இந்த சுப நிமித்தங்களால் சற்று மன சாந்தியடைந்தாள்.
அதே சமயம் அவள் அனுப்பியிருந்த அந்தணர் அந்த:புரத்தில் இருந்த தேவியைக் கண்டார். ராஜகுமாரி, அவருடைய மகிழ்ச்சி நிறைந்த முகக் குறிப்பிலேயே அவர் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார் என்பதை அறிந்தாள். அவளிடம் சுருக்கமாக யது நந்தனன் வந்து விட்டான் என்பதை சொன்னார். என்னையும் அவர் தான் கொண்டு வந்து விட்டார் என்றார். வந்து விட்டான் என்பது தெரிந்ததுமே ருக்மிணியின் மனக் கவலைகள் விலகின. பிரியமான செய்தி சொன்னவருக்கு என்ன கொடுப்பது? அவரை உள்ளன்புடன் விழுந்து நமஸ்கரித்தாள்.
தன் மகள் விவாகத்தைக் காணவே ஆவலுடன் அவர்கள் வந்திருப்பதாக எண்ணி துர்ய கோஷங்களோடு விதர்ப ராஜா பீஷ்மகர் அவர்களை வரவேற்றார். மதுபர்கம் கொடுத்து, நல்ல ஆடைகள், பரிசுகள் நிறைய கொடுத்து விதிப்படி உபசரித்தார். அவர்கள் இருவருக்கும் இருக்க ஏற்பாடு செய்து கொடுத்து, கூட வந்த பரிஜனங்களுக்கும் குறைவின்றி வரவேற்பு உபசாரங்களைச் செய்தார். வந்திருந்த அரசர்கள், விருந்தினர் அனைவருக்கும் தகுதிக்கு ஏற்ப, பரிசுகள், வயது, வீர்யம், பலம், செல்வம் இவைகளின் அடிப்படையில் உபசாரங்கள் நடந்தன. க்ருஷ்ணன் வந்து விட்டான் எனத் தெரிந்து விதர்ப புர வாசிகள் கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்க வந்து அவரைப் பார்த்தனர். இவனுக்குத் தான் ருக்மிணி மனைவியாக வேண்டும், சரியான மணமகன் இவனே என்றும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
மூவுலக நாயகன். உலகில் பல நன்மைகளைச் செய்தவன். அனுக்ரஹம் செய்யட்டும், வைதர்பி-ருக்மிணியை गृह्णातु -க்ருஹ்ணாது- கை பிடிக்கட்டும், அச்யுதன் இவன். நம் ராஜ குமாரிக்கு தகுதியானவன். என அன்புடன் ஊர் ஜனங்கள் பேசிக் கொண்டனர். இதனிடையில் அந்தரங்க காவலர்கள் தொடர, ருக்மிணி பலத்த காவலுடன் பவானி அம்பிகா கோவிலுக்கு கிளம்பினாள். கால் நடையாக கோவினுள் நுழைந்து தேவியை நமஸ்கரித்து பூஜைகள் செய்ய, முகுந்தனை தியானம் செய்தபடியே சென்றாள்.
சகிகள், தாய்மார்களுடன் சூழப்பட்டவளாக, ரகசியமாக ராஜ படர்கள் கண்காணித்தபடி இருக்க, கைகளில் ஆயுதங்களோடு, எந்த நிமிஷமும் செயல் பட தயாராக இருந்தவர்கள் ஸூழ்ந்து வர, ம்ருதங்கமும், சங்கமும், பணவான் மற்றும் துர்ய பேரீ வாத்யங்கள் முழங்க, பூஜை பொருட்களுடன் ஆயிரக் கணங்கான சேடிகள் கைகளில் மங்களப் பொருட்களுடன் தாலங்களை ஏந்தியபடி, பாடுபவர்கள், துதிகளைச் சொல்பவர், வாத்யங்களை வாசிப்பவர்கள், மணப் பெண்ணைச் சுற்றி நின்று உடன் நடந்தனர். தேவியின் கோவிலை அடைந்து கால்களையும், கைகளையும் கழுவி சுத்தம் செய்து கொண்டு, சலனமில்லாமல் அமைதியாக தேவியின் மூர்த்தி அருகில் சென்றாள். பவ பத்னி, பவானி, பவம் எனும் உலகை காப்பவள் என்று உடன் வந்த சக வயது பெண்கள் பாட, பூஜை முறைகளை அறிந்த அந்தண பெண்கள் பூஜைக்கான முன்னேற்பாடுகளைச் செய்தனர்.
‘அம்பிகே உன்னை வணங்குகிறேன். தன் சந்தானத்தோடு இருக்கும் சிவா, உன்னை நமஸ்கரிக்கிறேன். க்ருஷ்ணனே என் கணவனாக வேண்டும் – அதை அங்கீகரிக்க வேண்டும்.’- என்று மனமார வேண்டினாள்.
புண்யமான தீர்த்தங்கள், வாசனைப் பொருட்கள், தூபங்கள், புத்தாடைகள், பூ மாலைகள் இவற்றுடன் பலவித நிவேதனங்கள், தீப ஆரத்திகள் என்று விமரிசையாக பூஜை நடந்தது. சுமங்கலிகளான பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உப்பு போட்ட வடைகள், தாம்பூலம், கண்ட சூத்ரம், பழங்கள், கரும்பு இவைகளை அந்தப் பெண்கள் மணமகளுக்குக் கொடுத்தனர். முதிய பெண்கள் ஆசீர்வதித்தனர். அவைகளைப் பெற்றுக் கொண்டு மணப் பெண் அவர்களை நமஸ்கரித்தாள்.
அது வரை மௌனமாக இருந்தவர்கள், பூஜை முடிந்தவுடன் கலகலவென்று பேசியபடி வெளியேறலானார்கள். அருகில் இருந்த பெண்ணுடன் கை கோர்த்தபடி ருக்மிணியும் கிளம்பினாள்.அவளைப் பார்த்த பெண்கள் தேவமாயா, வீர மோஹிணி, சுமத்யமா, குண்டலம் ஆட ப்ரகாசமான முகம், ஸ்யாமா, இடையில் ரத்ன மேகலையை அணிந்து, நெற்றியில் கேசத்தின் சுருள்கள் பரவியிருக்க, கண்களை மறைக்காமல் கோதி விட்டபடி, மென் முறுவலோடு அனைவரையும் நோக்கியபடி வந்தவளை, பிம்ப பழம் போன்ற அதரங்கள், அழகிய மலர் மாலைகள் அணிந்து, கல ஹம்ஸம் போல சிரிப்பவள், மெள்ள நடந்தாள். அவள் நடைக் கேற்ப காலில் நூபுரங்கள் ஒலிக்க, வாயிலில் எதிர்ப்பட்ட வீரர்கள் அதிசயத்துடன் பார்த்தனர். அந்த அழகில் மயங்கினர். அரசர்கள் அந்த உல்லாசமான சிரிப்பில், கண்களில் வெட்கத்துடன் பார்த்த பார்வையில் மனம் மயங்க தங்கள் ஆயுதங்கள் நழுவி கீழே விழுவதைக் கூட கவனிக்கவில்லை. ரத வீதியில் ஊர் வலமாக நடக்கும் வியாஜத்தில், ஸ்ரீ ஹரியை எதிர் நோக்கிய மனதுடன் மெல்ல நடந்தவளை, அடிக்கடி இடது கையால் முன் நெற்றியில் புரளும் கேசக் கற்றைகளை விலக்கியபடி, எந்த திசையில் அவள் கண்கள் சென்றனவோ, அங்கு இருந்த அரசர்கள் மெய் மறந்தனர். அவளும் அவர்களிடையில் அச்யுதனைக் கண்டு கொண்டாள்.
அனைவரும் காண்கையிலேயே, அவளை ரதத்தில் ஏற்றிக் கொண்டு மாதவன், அரச சமூகம் அனைத்தும் க்ஷண நேரம் செய்வதறியாது நிற்கையிலேயே ரதத்தை ஓட்டிக் கொண்டு மறைந்தான்.
அதன் பின் பலராமனும் உடன் வந்த வீரர்களும் வெளி வந்தனர். ஜராசந்தன் முதலானோர் இதை தங்களுக்கு இழைத்த அவமானம் எனக் கருதி பொறுக்க மாட்டாமல், அஹோ திக், கையில் ஆயுதங்களோடு நாம் நிற்கையிலேயே, இந்த இடையர் கூட்டம், கேசரி- சிங்கத்தை ஏமாற்றி அதற்குரியதை அபகரித்த மான் கூட்டம் போல சென்று விட்டனர் என்று அலறினர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாவது பகுதியில், ருக்மிணீ ஹரணம் என்ற ஐம்பத்து மூன்றாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 57
அத்யாயம்- 54
கண் மூடித் திறக்கும் முன் நடந்த விஷயங்களால் அனைவரும் திகைத்தனர். எது நடந்து விடுமோ என்று பயந்தனரோ, படை பலங்களோடு விவாக அரங்கத்துக்கு வந்தனரோ, அதே போல நடந்தே விட்டது என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அனைவரும் பல்லைக் கடித்தபடி தங்கள் வாகனங்களில் ஏறி, கைகளில் வில் அம்புகளுடனும், தங்கள் படை பலத்துடனும் துரத்திக் கொண்டு சென்றனர். யாதவ சைன்யத்தைச் சேர்ந்தவர்கள் அவைகளை தடுத்து தாங்களும் தங்கள் வில்லில் அம்புகளை வைத்துக் கொண்டு தயாராக நின்றனர். குதிரைகளின் மேல், யானையின் மேல், என்று யாதவ வீரர்களும் போர் புரியும் உத்சாகத்துடன் எதிர்த்தனர்.
தன் கணவன் படை பலத்துடன் ஆயுதங்களோடு தான் வந்திருக்கிறான் என்று அறிந்த ருக்மிணீ, வெட்கத்துடனும் பயத்துடனும் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அதை கவனித்த பகவான், பயப் படாதே, இந்த யுத்தம் நீடிக்காது. சங்கர்ஷணனின் படை சத்ருக்களை சீக்கிரமே கட்டுப் படுத்தி விடும். ரதங்கள் யானைகள், குதிரைகள் மோதிக் கொண்டு அலறும் ஓசை நாராசமாக கேட்டது. பல தலைகள் கிரீடங்கள், குண்டலங்களோடு அடிபட்டு விழுந்தன. எங்கும் ரத்த வெள்ளம். வ்ருஷ்ணி வம்சத்தின் வீரர்களிடம் இந்த திறமையை எதிர் பார்க்காத ஜரா சந்தன் முதலானோர் கிளம்பி விட்டனர். சிசுபாலனை சமாதானப் படுத்தினர். தனக்கு மனைவியாவாள் என்று எதிர் பார்த்திருந்தவன், ஏமாற்றத்தை தாங்க மாட்டாமல், முகம் வாடி, உத்சாகமின்றி நின்றான்.
நீயும் வீரனே. இதற்காக மனதை தளர விடாதே. அரசர்கள் இது போல சின்ன விஷயங்களுக்கு முக்யத்வம் கொடுக்கக் கூடாது. திடமாக நில். பொம்மலாட்டத்தில் மரத்தால் ஆன பெண்மணி சூத்ரதாரி ஆட்டியபடி ஆடுவாள். அதே போல இதுவும் ஈஸ்வரன் செயல். சுகம் துக்கம் என்று மனிதர்கள் உணருவது க்ஷண காலமே. இந்த சௌரி வம்சத்தினரை பதினேழு முறை நான் தோற்கடித்திருக்கிறேன். இருபத்து மூன்றாவது முறை ஆனாலும், என் படைகளுடன் நானே தோற்கடிக்கிறேன். அதனால் தான் இந்த சம்பவத்தால் நான் வருந்தவில்லை. போரில் வெற்றி, தோல்வி இரண்டும் மாறி மாறி வரும். அதனால் வென்றால் நான் மகிழ்வதுமில்லை. தோற்றதால் துக்கமும் இல்லை. நமக்கும் தெய்வ சங்கல்பத்தால் வெற்றி கிட்டும். இப்பொழுது நாம் அனைவரும் நம் படைகள், படைத் தலைவர்களோடு தந்திரமாக ஜயிக்கப் பட்டோம். க்ருஷ்ணன் வேலை இது. நம் ஊர்களுக்குச் செல்வோம். காலம் ஒரே போல நிற்காது. சுழன்று வரும். அந்த சமயம் நமக்கு நல்ல காலமாக இருக்கும். இதே போரில் யாதவர்களை வெற்றி கொள்வோம்.
ஆனாலும் சகோதரன் ருக்மிக்கு மனம் சமாதானமாகவில்லை. ராக்ஷஸ விவாகம் செய்து கொண்டு தன் சகோதரியை அபகரித்துக் கொண்டு போனவனின் ரதத்தை பின் தொடர்ந்து அக்ஷௌஹிணி சேனையோடு வேகமாக சென்றான். பலமாக ஸூளுரைத்தான். க்ருஷ்ணனை கொல்லாமல், ருக்மிணியை திரும்பக் கொணராமல், குண்டின புரத்தில் நுழைய மாட்டேன். இது சத்யம் என்றான். அதன் பின் ரதத்தில் ஏறிக் கொண்டு சாரதியை விரட்டி, குதிரைகளை வேகமாக ஓடச் செய். க்ருஷ்ணனுடன் யுத்தம் செய்வேன், என்றான். இன்று பார், கூர்மையான அம்புகளை விட்டு கோபாலனின் தலையை கொய்து எடுப்பேன். துர்மதி, என் தங்கையை அபகரித்துக் கொண்டு போனால் நான் வாளா இருப்பேனா? இவ்வாறு பொருளின்றி உளறியபடி, ஈஸ்வரனின் செயலை தான் நிறுத்தி விடப் போவதாக சொல்லிக் கொண்டே போனான். நில், நில், என்று கத்தினான்.
தன் வில்லை எடுத்து க்ருஷ்ணன் மேல் மூன்று அம்புகளை விட்டான். யது குல த்ரோஹியே, ஒரு நிமிஷம் நில் என்று கூவினான். எங்கு போவாய், மாயாவி நீ, தந்திரமாக என் சகோதரியை கவர்ந்து கொண்டு போக விட மாட்டேன். இதோ, உன்னை கொல்கிறேன், என்றவனை பார்த்து சிரித்தபடி க்ருஷ்ணனும் தன் வில்லை எடுத்து அவன் கைகளிலும், சாரதி பேரிலும், விட்டவர், கொடியை உடைத்து விழச் செய்தார். அவனும் ஒன்பது சரங்களை க்ருஷ்ணன் மேல் ப்ரயோகித்தான். இருவரும் பாணங்களாலும், பரிகம், பட்டிசம் என்ற ஆயுதங்களாலும் தொடர்ந்து போர் செய்தனர். கையில் வாளை எடுத்துக் கொண்டு ருக்மி ரத த்தை விட்டு இறங்கி வந்தான். அவனைத் தடுத்து ருக்மியை கொல்ல முயன்ற க்ருஷ்ணனை , அவர் பாதங்களில் விழுந்து கண்ணீர் மல்க பயத்துடன் வேண்டினாள். யோகேஸ்வரா! அப்ரமேயாத்மன்! தேவ, தேவ ஜகத்பதே! கொல்லாதே, என் உடன் பிறந்தவன். கருணை செய். மகா புஜ! என்றாள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அவள் பயத்தால் உடல் நடுங்க, துயரம் மண்டிய முகத்தோடு, குரல் கம்ம, பயத்துடன், தன் பொன் மாலைகள் சிதற, தன் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறுவதைப் பார்த்து கருணையுடன் அவனை கொல்லாமல் விட்டார். தண்டனையாக, மீசையையும், கேசத்தையும் மழித்து விட்டு அவனை உயிருடன் போக விட்டார். அதற்குள் யாதவ படைக்கும், மற்ற சைன்யங்களுக்கும் இடையே பெரும் போர் நடந்து, யாதவர்கள் வெற்றி முழக்கம் செய்தனர்.
அவர்கள் க்ருஷ்ணன் இருக்குமிடம் ஓடி வந்து ருக்மியைக் கண்டனர். அடிபட்டு கிடந்த, பாதி உயிருடன் இருந்தவனை கருணையுடன் சங்கர்ஷணன் கட்டுகளை விடுவித்து, சாந்தமாக பேசி சமாதானம் செய்து விட்டு, க்ருஷ்ணனைப் பார்த்து, க்ருஷ்ணா, இது சரியல்ல. இவன் நம் இனத்தவன். எதற்கு இப்படி மீசையை, கேசத்தை மழித்து அவமதிக்கிறாய். இது நம் மக்களையே வதம் செய்வதற்கு சமம். நம் மக்களை நாமே மட்டமாகவோ,அசூயையோடோ பார்க்கலாமா? வெளியிலிருந்து எந்த துக்கமும் வராது. நாம் செய்யும் துர் வினைகளே நமக்குத் துன்பத்தைக் கொண்டு வரும். பந்துவை, வதம் தான் வழி என்றாலும் கூட வதம் செய்யக் கூடாது. அவன் தவறு செய்திருந்தால் அந்த தோஷமே அவனை தண்டிக்கட்டும். ப்ரஜாபதி விதித்த க்ஷத்திரிய தர்மம் இது. உடன் பிறந்தவர்களே, ஒருவரையொருவர் அடித்துக் கொண்டால், அதை விட கோரமானது எது?
ராஜ்யத்திற்காக, பூமி, செல்வம் வேண்டி, பெண்களுக்காக, அல்லது தன் கௌரவம் என நினைத்து, தனக்கு தேஜஸ் அதிகம் என்று காட்ட, வேறு காரணங்களுக்காகவும் செல்வம், சக்தி படைத்தவன் மதம் கொள்கிறான். அதனாலேயே விழுவான். எப்படி உனக்கு இந்த அசட்டு புத்தி வந்தது. அனைத்து உயிரினங்களையும் நட்போடு பார்ப்பவன். சுற்றியுள்ள தோழர்கள், உறவினரிடையே உனக்கு ஆபத்து என்று ஏன் நினைக்கிறாய், அது மந்த புத்தியுள்ளவர்கள் தான் நினைப்பார்கள்.
அரசர்களுக்கு அதிக தன்னம்பிக்கையும், மனிதர்களுக்கு தன்னைப் பற்றிய மோகமும் தெய்வ கல்பிதம். இவன் நண்பன், இவன் விரோதி, இவன் லட்சியமில்லை என்ற பாகுபாடு இவர்களுக்கு தோன்றுவதும் தேகமே எல்லாம் நினைப்பதால் தான். ஒருவன் தான் பரமாத்மா. எல்லா உடல் எடுத்த உயிரினங்களுக்கும் ஆத்மாவாக இருப்பவன். தேகம் ஆதியும் அந்தமும் உடையது.திட பொருள்களாலும் ப்ராண, மற்றும் குணங்களாலும் ஆனது. ஆத்மாவைப் பற்றி அறியாதவன் தேகத்தை உயர்வாக நினைப்பான். பிரிவும், கூடுதலும், தூங்கி விழித்தவன் கனவைப் பற்றி நினைப்பது போல அனுபவிக்கிறான். இதெல்லாம் உனக்கு தெரியாததா ? உன்னை உணர்ந்து கொள். க்ருஷ்ணன் மென் முறுவலோடு கேட்டுக் கொண்டிருந்தான். இப்பவும் சிரிப்பு தானா? ஸ்வஸ்தமாக இரு.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பலராமன் வந்து உபதேசம் செய்யவும் ருக்மிணி, தன் உடன் பிறந்தான் என்பதற்காக கொண்ட கவலையை துறந்தாள். தன்னை சமாளித்துக் கொண்டாள். ருக்மியின் உயிர் பிழைத்தது, ஆனால் பலமான அடி. தன்னை விரூபமாக்கியது வேறு ஆங்காரத்தை அதிகரித்தது. முன்னமே சூளுரைத்திருந்த படி, தோற்றால் குண்டின புரம் திரும்ப மாட்டேன் என்று, அங்கு போகாமல் போஜகடம் என்ற ஊருக்குச் சென்றான். க்ருஷ்ணன் தன் இளையவளை விவாக தினத்தன்று கடத்திச் சென்றது மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது.
இவ்வாறு மற்ற அரசர்களை வென்று, பீஷ்மகரின் மகளை வெற்றி கொண்ட பின், தன் ஊர் வந்து விதி முறைப்படி மணந்தார். யது புரியில் ப்ரும்மாண்ட உத்சவமாக கொண்டாடப் பட்டது. ஆண்களும், பெண்களுமாக, மகிழ்ச்சியுடன், குண்டலங்கள், பாரி பர்ஹ எனும் ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு,வீடுகளையும் பல விதமாக அலங்கரித்தனர்.
அந்த விருஷ்ணிபுரி உத்தமமான இந்த்ர கேது – இந்த்ர கொடிகள், விசித்ரமான மாலைகள் தோரணங்கள், தூபங்கள் நிரம்பிய கும்பங்கள் ஆங்காங்கு மணம் வீசும்படி வைத்து, தீபங்களால் அலங்கரித்து, அழகுற விளங்கியது. மார்கங்கள் சுத்தம் செய்யப் பட்டு, நீர் தெளித்து, வாசல்களில் வாழை, பாக்கு மரங்கள் கட்டி, குரு, ஸ்ருஞ்ஜய, கைகேய, விதர்ப, யது, குந்தன என்ற யது வம்ச அரச குலங்கள் ஒன்று கூடி மகிழ்ந்தனர். ருக்மிணியை வீர சுல்காவாக – வெற்றி பெற்றவருக்கே- என்ற முறையில் ஜயித்து, கொண்டு வந்ததையும் பாடலாக பாடி மகிழ்ந்தனர். த்வாரகா நகரமே குதூஹலமாக விளங்கியது. ரமாபதியே க்ருஷ்ணன், ருக்மிணி சாக்ஷாத் ஸ்ரீ லக்ஷ்மி தேவியே என்றனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாம் பகுதியில், ருக்மிணி விவாகம் என்ற ஐம்பத்து நாலாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 60
அத்யாயம்-55
ஸ்ரீ சுகர் சொன்னார்: காமன் வாசுதேவனின் அம்சமே. ஒரு சமயம் ருத்ரனின் கோபத்தால் பஸ்மமாக்கப் பட்டான். தனக்கு சரீரம் வேண்டும் என்று அவரையே வேண்டினான். அவர் அருளால் விதர்ப ராஜ குமாரிக்கும் க்ருஷ்ணனுக்கும் மகனாக பிறந்தான். ப்ரத்யும்னன் என்ற பெயரோடு ப்ரசித்தமானான். தந்தையின் கடைசி மகன்.
சம்பரன் என்ற அசுரன் தன் விருப்பம் போல் உருவம் எடுத்துக் கொள்ள வல்லவன். அந்த சிசுவை தன் எதிரியாக நினைத்து கவர்ந்து சென்று கடலில் வீசி விட்டு தன் இருப்பிடம் சென்று விட்டான். ஒரு பெரிய மீன் அந்த சிசுவை முழுதாக விழுங்கியது. மற்றும் சில மீன்களோடு ஒரு மீன் பிடிப்பவனின் வலையில் சிக்கியது. அவன் சம்பரனுக்கே கப்பமாக அல்லது பரிசாக அந்த சிசுவை விழுங்கிய மீனையே கொடுத்தான். சமையல் செய்பவர்கள் சந்தேகத்தால் அவசரமாக அதை நறுக்காமல் கவனமாக பிளந்தனர். உள்ளே இருந்த சிசுவை, பாலன் இவன் என்று மாயாவதி என்பவளிடம் கொடுத்தனர். நாரதர் ஒருசமயம் அந்த பக்கம் வந்த பொழுது அவரிடம் தன் சந்தேகத்தை தெரியப்படுத்தினர். உண்மையில் பாலன் யாருடைய குழந்தை என்பதை அறிந்தவரானதால், மாயாவதியிடம் எப்படி மீன் வயிற்றில் வந்தது என்பதையும் நாரதர் சொன்னார். அவளோ காமனுடைய ரதி என்ற பத்னியே. அவள் தன் பதி எரிந்து சாம்பலான பின் திரும்ப தேகம் எடுத்து வருவான் என்ற நம்பிக்கையோடு இருந்தவள். சம்பரன் அவளை தன் சமையல் அறையில் வேலைக்கு நியமித்து இருந்தான். காமதேவன் தான் சிசுவாக பிறந்தவன் என்பதையறிந்து அவள் அதனிடம் மிகுந்த அன்பு கொண்டாள். சீக்கிரமே, அந்த பாலன், யௌவனம் அடைந்தான். அழகிய தன் ரூபத்தால் பெண்களை ஆகர்ஷிக்கலானான். அவள் தன் பதி தான் என்பதால், பத்மதளம் போன்ற கண்களும், நீண்ட கைகளும், நர லோக சுந்தரனாகவும், கண்டதும் தன் பதி தானே என்ற எண்ணத்துடன் காமத்துடன் அணுகினாள். பகவான் தாயே, தாயாக என்னை அன்புடன் வளர்த்தாய். அதனால் காமினீ என்ற நிலை தவறாகுமே என்றான்.
ரதி சொன்னாள்: நடந்ததைச் சொல்கிறேன், கேள். ஸ்ரீமன் நாராயணன் மகனாக தோன்றினாய். சம்பராசுரன் பிறந்த சிசுவான உன்னை தூக்கி வந்து கடலில் போட்டான். நான் உன் நிரந்தரமான பத்னி ரதி. ப்ரபோ, நீங்கள் தான் காமன். பிறந்த உடனேயே கவர்ந்து வந்த சம்பாசுரன் கடலில் வீசியதை இந்த மீன் விழுங்கியது. அது பிடிபட்டு மீனவன் கொண்டு வந்து கொடுத்தான். அதன் வயிற்றிலிருந்து உன்னை எடுத்து நான் வளர்த்து வருகிறேன்.. அதனால் இந்த சத்ருவை ஒழி. உன் மனதில் இருக்கும் இந்த அனாவசிய சந்தேகங்களை விடு. தவிர்க்க முடியாத சத்ரு மனமே. உனக்கு நூற்றுக் கணக்கான மாயைகள் வசமாகி உள்ளன. மோஹனங்கள் தெரியும்.உன் தாயார் வருந்திக் கொண்டிருக்கிறாள். பசு தன் கன்றைத் தேடி தவிப்பது போல தவிக்கிறாள். மாயாவதி இவ்வாறு பலவும் சொல்லி சர்வ மாயா வினாசகமான மஹாமாயா பற்றிச் சொன்னாள். சம்பரனை போரில் அழி என்று அறிவுறுத்தினாள். அது மட்டுமல்லாமல் மாயையிலிருந்து விடுபட மஹா வித்யாவையும் சொல்லிக் கொடுத்தாள்.
அவனும் சம்பரனை எதிர்த்து போராட அழைத்தான். கலி காலத்தை தட்டி எழுப்பியது போன்ற துர்வசனங்கள். பலவிதமான வாக்குவாதங்கள், வார்த்தைகளாலேயே சாடினான். துர்வசனங்களை பொறுக்க மாட்டாமல் அவனும் காலால் மிதபட்ட சர்ப்பம் போல எழுந்து வந்தான். கதையுடன் கண்கள் சிவக்க, கோபத்துடன் எதிர்த்தான். இடி போல பெருங்குரலில் முழக்கமிட்டுக் கொண்டு வந்தவனை ப்ரத்யும்னன் தானும் கதையை எடுத்துக் கொண்டு எதிர்த்தான். அவனோ மயன் மூலம் வந்த, தைத்யர்களுக்கே உரிய மாயா யுத்தம் செய்யலானான். ஆகாயத்தில் மறைந்து நின்று கொண்டு, கார்ஷ்ணன்-ப்ரத்யும்னின் மற்றொரு பெயர்- பேரில் அம்புகளை மழையாக பொழிந்தான். இதனால் பாதிக்கப் பட்டாலும் தன் மேல் விழுந்த அஸ்திரங்களை மஹா வித்யா என்பதால் அழித்தான். சம்பரன் வெளியில் தெரியாத காந்தர்வ, பைசாச என்ற ராக்ஷஸ அஸ்திரங்களை ஏவினான். ப்ரத்யும்னனும் நிசாத என்ற வாளை எடுத்து கிரீட குண்டலங்களோடு சம்பரனை உடல் வேறு தலை வேறாக்கினான். தேவர்கள் பாராட்டி புஷ்ப மாரி பொழிந்தனர். அதன் பின் தாய் தந்தையரைப் பார்க்க தன் மனைவியின் உதவியோடு ஆகாய மார்கமாக ஊர் வந்து சேர்ந்தான்.
அந்த:புரத்து பெண்கள் கொண்டாடினர். ஆகாயத்திலிருந்து மின்னல் இறங்கி வந்தது போல வந்தவனை, மேக ஸ்யாமளனாக க்ருஷ்ணனின் மறு வடிவாக கண்டனர். அதே போல் பீதாம்பரம், நீண்ட கைகள், சிவந்த கண்கள், மென் முறுவலோடு கூடிய அழகிய முகம். ருக்மிணியும் முதலில் திகைத்தாள். யாராக இருக்கும்? அதே போல நடையுடை பாவனைகள், யோசித்து தன் மகன் தானோ என நினைத்த சமயம் அவள் இடது புஜமும் கண்களும் ஆம் என்பது போல துடித்தன. அதே சமயம் க்ருஷ்ணன் அங்கு வந்தான். அவள் குழப்பதையறிந்தும் பேசாமல் இருந்தான். நாரதர் வந்து சம்பரன் சிசுவை கடத்திச் சென்று கடலில் வீசியதையும் மற்ற விவரங்களையும் சொல்லி, சம்பரனை ஜயித்ததையும் சொல்லி விளக்கினார். பெண்கள் அனைவரும் பல வருஷங்களுக்கு முன் மறைந்த குமாரன் என்று அறிந்து மகிழ்ந்தனர். க்ருஷ்ணனும், பலராமனும் மகனை அனைத்து மகிழ்ந்தனர். தொலைந்து போன ப்ரத்யும்னன் வந்து விட்டான் என்று துவாரகையே கொண்டாடியது. தந்தையின் ப்ரதி பிம்பம், தாயின் சாயல் என்று பார்த்து பார்த்து சொல்லி மகிழ்ந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பாகத்தில், ப்ரத்யும்னோத்பத்தி நிரூபணம் என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-40
அத்யாயம் 56
சத்ராஜிதன் என்ற அரசன் தன் மகளை க்ருஷ்ணனுக்கு கொடுக்க நினைத்திருந்தான். அவனிடம் இருந்த ஸ்யமந்தகம் என்ற மணியையும் தானாகவே கொடுத்தான்.
ராஜா கேட்டான்: க்ருஷ்ணனுக்கு என்ன தவறு செய்தான். ஸ்யமந்தகம் என்ற மணி அந்த அரசனுக்கு எப்படி எங்கிருந்து கிடைத்தது. எதனால் தன் மகளையும் அந்த மணியையும் சேர்த்து கொடுத்தான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: சத்ராஜித், ஸூரியனை வணங்குபவன், நாளடைவில் ஸுரியனுடைய சிறந்த சகாவாக ஆகிவிட்டான். அவனிடம் மகிழ்ந்து ஸுரியன் ஸ்யமந்தக மணியை பரிசாக கொடுத்திருந்தான். அதை தன் கழுத்தில் அணிந்து கொண்டு பிரகாசமாக த்வாரகை வந்தான். மணியின் ஒளி ஸுரிய ஒளிக்கு இணையாக இருந்தது. அதனால் வருவது யார் என்பது கூட ஊராருக்குத் தெரியவில்லை. பகவானிடம் வந்து, கண்களை மறைக்கும் ஒளியுடன் ஸுரியன் இறங்கி வந்து விட்டான் என்று முறையிட்டனர்.
நாராயண, நமோ(அஸ்து} சங்க சக்ர கதா தர, தாமோதரா, அரவிந்தாக்ஷ, கோவிந்த, யது நந்தன, இதோ சவிதா- ஸூரியன் வந்து கொண்டிருக்கிறான், உங்களை தரிசிக்கத் தான் வருகிறான் போலும், தன்னுடைய உஷ்ணமான ஒளியால் எங்கள் கண்களை குருடாக்கிக் கொண்டு, வருகிறான். அல்லது நீங்கள் யார் என்று தெரிந்து கொண்டு ப்ரும்மா தான் மற்ற ரிஷிகள், அறிஞர்களோடு, பார்க்க வருகிறாரோ என்றனர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: சிறுவர்கள் போல முறையிட்டவர்களைப் பார்த்து சிரித்து, அம்புஜ லோசனனான பகவான் சொன்னார். இது ஸூரிய பகவான் இல்லை. சத்ராஜித், மணியின் ஒளியால் யார் என்பது தெரியாமல் மறைக்கப் பட்டிருக்கிறான் என்றார்.
சத்ராஜித். தன் வீட்டுக்கு வந்து, லக்ஷ்மீகரமான கௌதுக மங்களங்கள் என்பதைச் செய்து, தன் பூஜை அறையில் மணியை அந்தணர்களை கொண்டு ப்ரதிஷ்டை செய்து வைத்தான். அந்த மணியின் விசேஷம் தினம், தினம், எட்டு பாரம் ஸ்வர்ணம் தரும். இந்த மணி இருக்கும் இடத்தில் துர்பிக்ஷம்- பஞ்சம் பட்டினி என்ற கொடுமை -இராது. நோய்கள் மக்களை அண்டாது. சர்ப்பங்கள் போன்றவை கடித்து விஷம் ஏறாது. எந்த விதமான அசுபமும் வராது. யார் வேண்டுமானாலும் அர்ச்சனைச் செய்து மணியை வேண்டிக் கொள்ளலாம்.
யது ராஜனான க்ருஷ்ணன் அதை யாசித்த பொழுது கூட தரவில்லை. பொருள் தரும் என்பதால் அதை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. யாசித்து கொடுக்காமல் இருப்பதா என்று நினைக்கவேயில்லை.
அதை ஒருநாள் ப்ரசேனன் என்ற அவன் இளைய சகோதரன் தான் கழுத்தில் அணிந்து கொண்டு, குதிரையில் ஏறி வேட்டையாட வனம் சென்றான். ஒரு சிங்கம் அவனையும் அவன் வந்த குதிரையையும் அடித்துக் கொன்று விட்டு, மணியை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் நிழைந்தது. அந்த மணியை கண்டதும் அங்கு இருந்த ஜாம்பவான் அதை ஆசைப்பட்டு சிங்கத்தை அடித்து போட்டு விட்டு, மணியை எடுத்துக் கொண்டு தன் குகைக்குள் வந்து, தன் குமாரனுக்கு விளையாட்டு பொருளாக கொடுத்தார்.
மணியுடன் சென்ற சகோதரன் திரும்பி வராததால் கவலையுடன் சத்ராஜித் தேடிக் கொண்டு வந்தான். அவனையும் காணாமல் க்ருஷ்ணன் தான் மணியை அபகரிக்க வனம் சென்றவனை அடித்து கொன்று விட்டார் என்று சந்தேகப் பட்டு சொன்னது ஊர் ஜனங்களின் செவி வழி செய்தியாக ஊர் முழுவதும் பரவியது. பகவான் காதுக்கும் இந்த செய்தி எட்டியது. இது என்ன தன் பேரில் களங்கத்தை ஏற்படுத்தும் செய்தி, இதை வளர விடக் கூடாது என்று எண்ணி, தானே ஊர் மக்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு ப்ரசேனனை தேடக் கிளம்பினார்.
ப்ரசேனன் கொல்லப் பட்டிருப்பதையும் அருகில் குதிரையையும் கண்டு, வனத்தில் சிங்கம் தான் அடித்து விட்டிருக்கும் என்று ஊகித்தார். கேஸரி -சிங்கத்தைத் தேடிச் சென்ற பொழுது அது குகை வாசலில் அடிபட்டு கிடந்ததைப் பார்த்தனர். கரடி ராஜன் தான் அடித்திருப்பான் என்பது ஜனங்களுக்கு புரிந்தது. கரடியின் குகை இருட்டாக, ஆழமாக இருந்தது. கண்கள் அந்த இருட்டில் எதையும் காண முடியவில்லை. அதனால் பகவான் தான் மட்டும் ப்ரவேசித்தார். மற்றவர்கள் வெளியில் காவல் நின்றனர்.
அந்த குகைக்குள் குமாரன் மணியை விளையாட்டுப் பொருளாக உருட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த சிறு குழந்தையின் முன் போய் நின்றார். எதிர்பாராத, முன் கண்டிராத மனிதனைக் கண்டு குழந்தையை பார்த்துக் கொண்டிருந்த தாத்ரி பயந்து அலறினாள். அலறலைக் கேட்டு ஜாம்பவான் உள்ளிருந்து கோபத்துடன் வெளியே வந்தான். தன்னுடைய இஷ்ட தெய்வமே தான் என்பதையறியாமல், ஏதோ உள்ளூர் வாசி என்று நினத்து கோபத்துடன் சண்டைக்கு வந்தான். இருவரும் த்வந்த யுத்தம் செய்தனர். சமமான பலசாலிகள், கற்களும், மரக் கட்டைகளும் ஆயுதமாக, தோள்களாலேயே முட்டித் தள்ளிக் கொண்டு தன் இரைக்காக போட்டியிடும் கழுகுகள் போல மல் யுத்தம் செய்தனர்.
இருபத்தெட்டு நாட்கள் தொடர்ந்த யுத்தம். இரவும் பகலுமாக வஜ்ரத்துக்கு சமமான முஷ்டிகளால் தாக்கிக் கொண்டனர். ஜாம்பவானுக்கு அதிசயமாக இருந்தது. தன்னை பலசாலியாக நினைத்திருந்த ஜாம்பவான் உடல் தளர்ந்து க்ருஷ்ணனைப் பார்த்து ‘யார் நீ? சர்வ பூதங்களுக்கும் ப்ராணனான ஓஜஸ் நிறைந்த பலசாலியான விஷ்ணுவே தான் என்று அறிகிறேன். புராண புருஷன், ப்ரபு, உலகின் ஆதாரமான விஷ்ணுவே.
விஸ்வத்தை படைத்தவன் நீ, படைத்தவர்களை காத்து, காலம் வந்தால் கலைப்பவனும் நீயே, பரமாத்மா நீயே.
எவனுடைய சிறிதளவு ரோஷத்துடன் பார்த்த மாத்திரத்தில், சமுத்திரம் – தன்னை அண்டியிருந்த நக்ரங்கள், திமிங்கிலங்கள் வருந்துவதைக் கூட பொருட்படுத்தாமல், தன் மேல் சேதுவைக் கட்ட அனுமதித்து, லங்கையை தீக்கிரையாக்க வழி செய்து கொடுத்து, ராக்ஷஸர்களின் தலைகள் உருண்டு விழ வழி செய்தானோ, அந்த ராமசந்திரனே.
இப்படி சரியாக தன்னை அடையாளம் கண்டு கொண்ட கரடி ராஜனிடம், மகா ராஜா தேவகீமகன், தன் கைகளால் கரடி ராஜனை தடவிக் கொடுத்து, என் பரம பக்தன் என்ற கருணையுடன் அன்புடன் கம்பீரமான குரலில் சொன்னார்.
ருக்ஷபதே! கரடி ராஜனே! மணியைத் தேடி இங்கு வந்தோம். இந்த மணியின் காரணமாக எனக்கு பெரிய அவமானம் வந்து சேர்ந்தது. நான் தான் திருடி விட்டேன் என்றனர். அந்த களங்கத்தை நீக்கவே இந்த காட்டிற்கு வந்தேன். தேடிக் கொண்டே இந்த குகை வந்தோம். அதைக் கேட்டு ருக்ஷ ராஜன் ஜாம்பவான் தன் மகள் ஜாம்பவதியை மணம் செய்து கொடுத்து ஸ்யமந்தக மணியை திருமணப் பரிசாக கொடுத்தார்.
கூட வந்த ஜனங்கள் குகைக்குள் நுழைந்தவனைக் காணோமே என்று பரிதவித்தனர். இருபத்திரண்டு நாட்கள் காத்திருந்து விட்டு வருத்தத்துடன் ஊர் திரும்பினர். தேவகியும், ஆனக துந்துபியும், ருக்மிணியும் நண்பர்களும், உறவினர்களும் குகைக்குள் சென்றவன் திரும்பி வரவில்லையென வருந்தினர். சத்ராஜிதனை சபித்தனர். மஹா மாயாவை வணங்கி க்ருஷ்ணன் திரும்பி வர வேண்டும் என வேண்டிக்கொண்டனர். அவர்களுக்கு தேவியும் ப்ரத்யக்ஷமாகி ஆசீர்வதித்தாள். அதே சமயம் புது மனைவியோடும் சிரித்துக் கொண்டே, சென்ற காரியத்தை வெற்றிகரமாக முடித்தவனாக, ஸ்ரீ ஹரி ப்ரசன்னமாக வந்து சேர்ந்தான். கவலையுடன் இருந்தவர்கள், மறு பிறவி எடுத்து வந்தவன் போல, எதிரில் நின்றவனைக் கண்டு மகோத்சவமாக கொண்டாடினர். ராஜ சபைக்கே சத்ராஜித்தை வரவழைத்து நடந்த விவரங்களைச் சொல்லி மணியையும் அவனிடம் ஒப்படைத்தான்.
மணியை வாங்கிக் கொண்டவன், வெட்கத்தால் தலை குனிந்து தன் செயலுக்காக வருந்தி, அதே நினைவாக எப்படி இந்த தவற்றை ஈடு செய்வோம் என யோசித்தான். மனம் அமைதியடையவில்லை. அதன் பின் என் மகள் சத்ய பாமாவைத் தருகிறேன், மணப் பரிசாக மணியையும் கொடுத்து விடுகிறேன் என்று தீர்மானித்தான். சத்யபாமாவை முறைப்படி ஸ்ரீ கிருஷ்ணன் மணந்தான். நல்ல சீலம், அழகிய ரூபம், பெருந்தன்மையான குணம் இவற்றால் அவளை மணந்து கொள்ள கடும் போட்டியிருந்தது. மணியை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். நீ ஸுரிய தேவனின் பக்தன். அதனால் பெற்ற பரிசு. அதை அனுபவிக்க வேண்டியவன் நீயே என்றார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாவது பாகத்தில், ஸ்யமந்தகோபாக்யானம் என்ற ஐம்பத்தாறாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 45
அத்யாயம்-57
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவான் பாண்டவர்கள், தாயார் குந்தியுடன் எரிக்கப் பட்டார்கள் என்ற செய்தியை அறிந்தார். பலராமனுடன் குரு க்ஷேத்ரம் சென்றார். பீஷ்மர், க்ருபர், விதுரர், காந்தாரி, த்ரோணர், அனைவரையும் சந்தித்து, அவர்களோடு சமமாக துக்கித்தவர்கள் போல ஹா கஷ்டம் என்று சொல்லி வருத்தம் தெரிவித்தனர். இதனிடையில் சததன்வா என்பவனிடம் அக்ரூர, க்ருத வர்மா இருவரும் ஸ்யமந்தக மணியை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று விசாரித்தனர். சததன்வா தன் மனக் குமுறலைச் சொன்னான். எனக்கு தருவதாகச் சொன்ன தன் மகளை க்ருஷ்ணனுக்கு கொடுத்து விட்டான். அதனால் அவனிடம் தனக்கு விரோதம் என்றான். அந்த கோபத்தால் தூங்கும் பொழுது சத்ராஜித்தைக் கொன்று விட்டான். பெண்கள் அனாதைகளாக அலறினர். பசுக்களை சேனை வீரர்கள் அடித்து நொறுக்குவது போல மணியை மட்டும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டான்.
சத்யபாமா தன் தந்தை கொல்லப் பட்டதை கேள்விப்பட்டு, மிகவும் வருந்தினாள். மூர்ச்சையடைவதும், தந்தையை எண்ணி அழுவதுமாக இருந்தாள். எண்ணெய் கொப்பரையில் அவர் உடலை பத்திரமாக வைத்து விட்டு க்ருஷ்ணன் இருந்த குரு தேசம் சென்றாள். இதற்குள் விவரம் தெரிந்து கொண்டு விட்ட க்ருஷ்ணனிடம் வந்து தன் தந்தை கொல்லப் பட்டதை தாங்க முடியாத துக்கத்துடன் சொன்னாள். பலராமன், க்ருஷ்ணன் என்ற அந்த இரு வீரர்களும் சாதாரண மனிதர்கள் போல ஹா கஷ்டம் என்று துக்கித்தனர். கண்ணீர் விட்டனர். பலராமனும் உடன் வர, சத்யபாமாவுடன், அவள் தந்தையை கொன்றதற்காகவும், மணியை திரும்பப் பெறவும் சத தன்வாவின் ராஜ்யத்தின் மேல் படையெடுத்தார்.
பயந்து போன சத தன்வா, க்ருத வர்மாவிடம் உதவி கேட்டான். க்ருத வர்மா, தன் இயலாமையை சொல்லி உதவ மறுத்தான். நாம் ராம க்ருஷ்ணர்களை எதிர்த்து ஜயிக்க முடியாது. அவர்களை எதிர்த்து இது வரை யாரும் வெற்றி கொண்டதில்லை.கம்சன் அவன் சகோதரனுடன் அழிந்தான். அவன் செல்வமும் அழிந்தது. ஜராசந்தன் பதினேழு முறை படையெடுத்துச் சென்று தோற்றிருக்கிறான். அதன் பின் அருகில் இருந்த அக்ரூரரை யாசித்தான். அக்ரூரரும், யார் தான் அந்த ஈஸ்வர்களுடன் சண்டையிட வருவார்கள்? என்னால் முடியாது என்றான். அந்த க்ருஷ்ணன் சாக்ஷாத் ஈஸ்வரன். உலகம் இயங்குவதே அவன் கட்டளையால், ப்ரும்மா முதல் அவன் லீலையை புரிந்து கொண்டவர்கள் எவருமில்லை. என்னை விடு, என்று விலகி விட்டான். உனக்கு தெரியாததா? ஏழு நாட்கள் மலையை விளையாட்டாக சிறுவன் தன் விளையாட்டு சாமானை தூக்குவது போல தூக்கி தன் கையால் தாங்கியவன். அந்த பகவானுக்கு நமஸ்காரம். க்ருஷ்ணனுக்கு நமஸ்காரம். அத்புதமான செயல்களைச் செய்பவனுக்கு நமஸ்காரம். அவன் அனந்தன். முதலில் தோன்றியவன். அறிய முடியாத ரகஸ்யமானவன். ஆத்ம தத்வமானவன்
இப்படி அக்ரூரரும் உதவி செய்ய மறுத்த பின் சத தன்வா, மணியை அவர் கையில் பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டு, நூறு யோஜனை தூரம் குதிரையில் பயனித்து ஒரு மலையை அடைந்து ஒளிந்து கொண்டான். பலராமனும், க்ருஷ்ணனும் கருடக் கொடியுடன் ரதத்தில் ஏறி பின் தொடர்ந்தனர். குருவான சத்ராஜித்தை கொன்ற துரோகி என்றனர். மிதிலா நகரம் வரைச் சென்று ஒரு உபவனத்தில் களைத்துப் போன குதிரையை விட்டு விட்டு, கால் நடையாக மலை மேல் ஏறி, பின் ஓடினான். பயத்துடன் திரும்பி பார்த்தபடி ஓடியவனை க்ருஷ்ணனும் தொடர்ந்தார். நேருக்கு நேர் கண்ட பின், தன் சக்ரத்தால் தலையை துண்டித்த பின் அவன் உடைகளில் மணியைத் தேடினார். மணி கிடைக்கவில்லையென்ற பின், பலராமனிடம் வந்து, அனாவசியமாக சத தனுவைக் கொன்றேன். அவனிடம் மணி இல்லை. பலராமன் சொன்னார், மணியை யாரிடமாவது கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லியிருக்கலாம். கண்டிப்பாக யாரிடமாவது இருக்கும். நீ கிளம்பு. நான் என் பிரிய சகாவான விதேக ராஜாவை பார்த்து விட்டு வருகிறேன், என்று சொல்லி விடை பெற்று, அவர் மிதிலா நகருக்குள் நுழைந்தார்.
பலராமனைக் கண்டதும் மிதிலாதிபதி பரபரப்புடன் எழுந்து வந்து வரவேற்று உபசரித்தார். அதிதி சத்காரங்களை முறைப்படி செய்தார். அவரும் சில காலம் மிதிலையில் வசித்தார். ராஜ மரியாதைகளோடு பிரியமுடன் ஜனகராஜாவுடன் மகிழ்ச்சியுடன் இருந்தார். அதன் பின் சுயோதனன், த்ருதராஷ்டிரனின் மகனுக்கு கதாயுதத்தை பிரயோகிக்க கற்றுக் கொடுத்தார்.
இங்கு, துவாரகா வந்து சேர்ந்த க்ருஷ்ணன், சததன்வாவை பின் தொடர்ந்து அடித்த விவரங்களையும், மணி கிடைக்காததையும் பாமாவிடம் சொன்னார். தன் நெருங்கிய பந்துக்கள், சகாக்களை கூர்ந்து கவனித்தார். இவர்களில் ஒருவரிடம் தான் மணி இருக்க வேண்டும் என்பது அவர் ஊகம். அக்ரூரரும், க்ருத வர்மாவும், சததன்வா மடிந்ததைக் கேட்டு துவாரகையை விட்டே ஓடி விட்டனர். துவாரகா வாசிகள், அக்ரூரர் காணாமல் போனதால் வருந்தினர். பற்றாக்குறையால் வருந்தினர். பலவிதமான உடல் உபாதைகள், இயற்கை உத்பாதங்கள் தோன்றின. அக்ரூரர் காசி சென்றிருக்க வேண்டும் என்று ஊகித்தனர். முனிவர்கள் வசிக்கும் காசியில் தேவர்கள் வர்ஷிக்கிறார்கள். காசி ராஜா தன் மகள் காந்தினியை அக்ரூரருக்கு மணம் செய்து கொடுத்திருக்கிறார். அக்ரூரர், இருக்கும் இடங்களில் பஞ்சமோ, கஷ்டமோ இல்லை. மகா மாரி போன்ற நோய்கள் இல்லை என்று முதியவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்ட பகவான், அக்ரூரரை வரவழைத்து உபசரித்த பின், பல கதைகளையும் பேசிய பின், அனைத்தும் அறிந்தவர், தெரியாதவர் போல, சிரித்துக் கொண்டே, தனபதே! உங்களிடம் சத தன்வா மணியை பாதுகாக்க சொல்லி கொடுத்ததாக, கேள்வி. ஸ்யமந்தக மணி பற்றி முன்னாலேயே அறிந்திருக்கிறோமே. சத்ராஜித் மகன் இல்லாததால் மகளின் வம்சத்தினர் தான் வாரிசு. அவருக்கு நீத்தார் கடன்களை செய்யவும், செல்வத்துக்கும் அவள் கணவன் தான் அதிகாரியாவான். அப்படி இருந்தும், ஏன் முத்தவன் நான் இருக்க, உங்களிடம் மணியை கொடுத்தான். மகாபாக, அதைக் காட்டுங்கள். பந்துக்களுக்குள் சண்டை வராமல் இருக்க, அமைதி விளங்கச் செய்யுங்கள். நீங்கள் நிறைய யாகங்கள் செய்வதாகவும், பொன்னால் வேதிகள் கட்டுவதாகவும் கேள்விப் பட்டேன். இப்படி சமாதானமாக கேட்டதும், ஸ்வபலக தனயன்- அக்ரூரன், மணியை தன் உடைகளுக்குள் இருந்து எடுத்துக் கொடுத்தார். ஸுரியனுக்கு சம மான ஒளி யுடைய மணி, அதை தன் பந்துக்கள், தாயாதிகளுக்கு காட்டி விட்டு திரும்பவும் அவரிடமே ஒப்படைத்தார். இது எனக்கு களங்கம் ஏற்படுத்தியது, அதனால் எனக்கு வேண்டாம் என்றார்.
இது தான் அரசனே, ஈஸ்வரனான விஷ்ணுவின் வீர்யம். உலகினரின் கஷ்ட நஷ்டங்களை உடனே களைபவன் , மங்களங்களை அருளுபவன், அவருடைய சரித்திரம். இதை படிப்பவர்களும், கேட்பவர்களும், நினைப்பவர்களும் அபவாதங்களிலிருந்து விடுபடுவார்கள். அமைதி யடைவார்கள்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாம் பாகத்தில், ஸ்யமந்தகோபாக்யானம் என்ற ஐம்பத்தேழாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 42
அத்யாயம்-58
ஒரு சமயம் பாண்டவர்களை சந்திக்க இந்திரப்ரஸ்தம் சென்றார். யுயுதானன் முதலானோர் உடன் வந்தனர். க்ருஷ்ணன் வந்ததை அறிந்த குந்தி பரபரப்புடன் எதிர்கொண்டு அழைக்க வந்தாள். மற்ற வீரர்களும் உடனே கிளம்பி வந்தனர். முக்யமான ப்ராணனே வந்தது போல மகிழ்ந்தனர். அச்யுதனை அணைத்து அவர் முகத்தின் புன் சிரிப்பிலேயே அன்யோன்யமான அன்பையும், தன் மகிழ்ச்சியையும் தெரியப் படுத்தியவரை தாங்களும் மகிழ்ச்சியுடன் உபசரித்தனர். யுதிஷ்டிரன், பீமன் இருவரையும் பாத வந்தனம் செய்த பின், பால்குனனை, அடுத்து இரட்டையர்களான நகுல சகதேவர்களையும் வாழ்த்தினர்.
தகுந்த ஆசனத்தில் அவர் அமர்ந்த பின், சாத்யகியை சமீபத்தில் மணமாகி வந்த மருமகள்,த்ரௌபதி வந்து வணங்கினாள். அங்கேயே சாத்யகியும், பாண்டவர்களால் பூஜிக்கப் பெற்று, மற்றொரு ஆசனத்தில் அமர்ந்தான். சாத்யகியும் குந்தியை வணங்கி, அவள் பாசத்துடன் கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்க, வரவேற்றதில் உணர்ச்சிமயமானான். அவளும் அவன் நலமா என்றும், மருமகள்கள், தந்தை, தன் சகோதரிகள், என்று அனைத்து உறவினர்களின் நலனையும் விசாரித்தாள். வெகு காலமாக பிரிந்து இருந்த பிரியமான பந்துக்கள், அவர்களுடன் அனுபவித்த நன்மை தீமைகளையும் நினைவு கூர்ந்து விசாரித்தவள், நீங்கள் அருகில் இருக்க, அவர்கள் நலமாகவே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. க்ருஷ்ணா, என் சகோதரன் அனுப்பினானா? உனக்கு தன் மனிதர்கள், பிறர் என்ற எண்ணம் இல்லை. விஸ்வமே உன் பந்துக்கள் நிறைந்ததே. இருந்தும் நாங்கள் எந்த கஷ்டத்தில் இருந்தாலும் நினைத்தவுடன் வந்து உதவ தயாராக இருக்கிறாய்.
யுதிஷ்டிரன் சொன்னார்: என்ன பாக்யம் செய்தோமோ, ஆதி பகவானே! யோகீஸ்வரர்கள் கூட எளிதில் பெற முடியாத உன் அருகாமை எங்களுக்கு கிட்டியது என்றார். இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டு, மழை நாட்கள் முடியும் வரை அங்கேயே தங்கும்படி அன்புடன் அரசன் யுதிஷ்டிரர் வேண்டிக் கொண்டதன் பேரில் அங்கு தங்கினார். இந்திரப்ரஸ்த வாசிகளும் மகிழ்ந்தனர். கண் பெற்ற பாக்யம் அவரது தரிசனம் கிடைத்தது என்று சொன்னார்கள்.
ஒரு சமயம் விஜயன்-அர்ஜுனன் தன் வானர த்வஜத்துடன் கூடிய ரதத்தில் ஏறிக் கொண்டு, காண்டீவம் வில், தூணியில் குறைவில்லாத அம்புகளையும் எடுத்துக் கொண்டு, க்ருஷ்ணனுடன் , வனத்தில் வேட்டையாடச் சென்றான். நிறைய புலிகளும், மற்ற மிருகங்களும் நிறைந்த வனத்தில் ப்ரவேசித்தனர். அங்கு பல பன்றிகளையும், மகிஷங்களையும், சிறு ருரூ என்ற முயல்களையும், சரபங்கள், மாடுகள், கட்கம் என்ற மான் வகைகள், மற்றும் முயல் சல்லகம் எனும் விலங்கு இவைகளையும் வேட்டையாடினர். சற்று நேரத்தில் களைத்து, தாகத்தால் தவித்த உடன் வந்த வீரர்கள், யமுனைக் கரையில் தங்கி விட்டனர். க்ருஷ்ண, அர்ஜுனர் இருவரும் அவர்களுடன் சுத்தமான அந்த நீரைப் பருகினர். இருவரும் அங்கு வந்த ஒரு அழகிய பெண்ணை பார்த்தனர். க்ருஷ்ணன் அனுப்பி, பால்குணன் முன்னால் சென்று அந்த பெண்ணிடம் யார் என்று விசாரித்தான்.
அழகிய பெண்ணே! யார் நீ? எங்கிருந்து வந்தாய்? ஏதாவது வேண்டுமா? இளம் பெண், கன்யா, இன்னும் மணமாகாதவள் என்று அறிகிறேன். விவரமாகச் சொல்லு? என்றான்.
காலிந்தி சொன்னாள்; நான் சூரிய தேவனின் மகள். சிறந்த வரனான விஷ்ணுவை மணந்து கொள்ள தவம் செய்கிறேன். வேறு யாரையும் நான் மனதால் நினைக்க மாட்டேன். அவர் தான் லக்ஷ்மீபதியான பகவான் முகுந்தன். அனாதைகளுக்கு ஆஸ்ரயமானவர் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். என் பெயர் காலிந்தீ. இந்த யமுனைக் கரையில் வசிக்கிறேன். தந்தை எனக்கு இங்கு பவனம்-வீடு அமைத்து கொடுத்திருக்கிறார். அச்யுதனைக் காணும் வரை இங்கு இருப்பேன். இதைக் கேட்டு குடாகேசன் என்ற அர்ஜுனன், அவளையும் வாசுதேவனையும் ரதத்தில் ஏற்றிக் கொண்டு தர்ம ராஜனிடம் அழைத்து வந்தான். (தர்ம ராஜன் காலிந்தியின் மூத்த சகோதரன்)
அதற்குள் க்ருஷ்ணன் பாண்டவர்களுக்காக விஸ்வகர்மாவை அழைத்து அவர்கள் சுகமாக வசிக்கத் தகுந்த இருப்பிடம் அமைத்து தரச் செய்தான். அவர்களுடன் அங்கு தங்கி சந்தோஷமாக இருந்த சமயம் தானே சாரதியாக அர்ஜுனன் உடன் சென்று அக்னி தேவனுக்கு அது விரும்பியபடி காண்டவ வனத்தைக் கொடுத்தான். அக்னி அந்த வனத்தை விழுங்கியது. அதனால் திருப்தியடைந்த அக்னி ஒரு வில்லையும் வெண்ணிற குதிரைகளுடன் ரதமும் அர்ஜுனனுக்கு பரிசாக கொடுத்தான். அது தவிர, என்றும் குறையாத அம்புகளைக் கொண்ட தூணியையும், பிளக்க முடியாத கவசத்தையும், கொடுத்தான். மயன் அந்த அக்னியிலிருந்து காப்பாற்ற பட்டிருந்தான். அதனால் அரச மாளிகையை கட்டிய பொழுது சபா இருந்த இடத்தை அக்னிக்கு கொடுத்தான். அதனால் அந்த தரை பள பளத்து, துர்யோதனுக்கு, நீரா,தரையா என்ற சந்தேகத்தை கிளப்பியது.
அதன் பின் அவர்களிடம் விடை பெற்று சாத்யகி, மற்றும் உடன் வந்தவர்கள் அனைவரோடும் துவாரகா வந்து சேர்ந்தார். வந்தவுடன் நல்ல நாள், முஹூர்த்தம் பார்த்து சுபமாக காலிந்தியை மணந்தார். அவரைச் சார்ந்தவர்கள் பரமானந்தம் அடைந்தனர். துர்யோதனின் வசத்தில் இருந்த விந்த, அனுவிந்தா, என்பவர்கள், தங்கள் சகோதரிக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யவும், அவள் க்ருஷ்ணனை விரும்பினாள். அதன் படியே, க்ருஷ்ணனுக்கே மணம் செய்து கொடுத்தனர்.
ராஜாதி தேவியின் மகள் மித்ரவிந்தா. பல அரசர்கள் கூடியிருந்த சபையில் அவைவரும் காண அவளை அபகரித்து வந்தான். அவள் க்ருஷ்ணனின் அத்தை மகளே.
கோசல நாட்டு ராஜா அதி தார்மிகனான நக்ன ஜித். அந்த அரசனின் மகள் சத்யா என்பவள். நாக்னஜிதீ என அழைக்கப் பட்டாள். அவளை மணந்து கொள்ள ஒரு போட்டி வைக்கப் பட்டது. ஏழு காளைகளை அடக்குபவனுக்கே என்று அறிவித்திருந்தான் அரசன். கூர்மையான கொம்புகளுடன், மூர்க்கமாக இருந்த காளைகள், எவரும் அருகில் நெருங்கக் கூட துணியவில்லை. அப்படி நெருங்கியவர்கள் காயம் பட்டு, உடல் அங்கங்கள் முறிய வெளியேறினர். அதையறிந்த ஸ்ரீ க்ருஷ்ணன் பெரும் சைன்யத்துடன் கோசல நாட்டிற்கு சென்றார். அந்த அரசன், யது நந்தனா! இவைகளை நீ அடக்கி விட்டால், உனக்கு விருப்பமானால் இதைச் செய். உனக்கே என் மகள் என்றான். ஸ்ரீய:பதி! நீயே ஸ்ரீ லக்ஷ்மிதேவியின் பதி. இதைக் கேட்டு தன்னை ஏழாக பிரித்துக் கொண்டு, தகுந்த உடைகளை அணிந்து, அந்த முரட்டு காளைகளை அடக்கினார். அதை கயிறுகளைக் கொண்டு கட்டி, அவைகள் தங்கள் திமிரை இழந்து சாது ஜீவன் களாக நின்ற பின், விதி முறைப் படி, அரச குமாரியை மணந்தார். அரச குலமும் நல்ல வரன் என்று மகிழ்ந்தது. நாக்னஜிதா க்ருஷ்ணனை பிரியமான பதியாக அடைந்தாள். சங்க பேரி வாத்யங்கள் முழங்க, கீத வாத்யங்களும் இசைக்கப் பட, நாட்டின் அனைத்து பெண்களும், புருஷர்களும் நல்ல ஆடைகள், அலங்காரங்களுடன் வந்து கலந்து கொள்ள திருமணம் கோலாஹலமாக நடந்தது. பத்தாயிரம் பசுக்கள் மகளுக்கு ஸ்ரீ தனமாக கொடுத்தார். மூவாயிரம் பணிப் பெண்கள், நல்ல ஆடைகள் நகைகளுடன் உடன் வந்தனர். ஒன்பது ஆயிரம் யானைகள், அதை போன்று பத்து பங்கு ரதங்கள், ரதங்களைப் போல பத்து பங்கு குதிரைகள், அதைப் போல பத்து பங்கு அதிகமான காலாட் படை வீரர்கள் அரச குமாரியுடன் வந்தனர். தம்பதி ரதத்தில் ஏறியதும், இந்த சேனை வீரர்கள், யானை,ரதம், குதிரைகளுடன் மகளை வழியனுப்பி வைத்தான் கோசல நாட்டு அரசன்.
இதைக் கண்ட தோற்ற அரசர்கள், இவனுக்கு பெண்ணையும் கொடுத்து இவ்வளவு சீர் வரிசைகளையும் செய்த அரசனைக் கண்டு பொறாமைப் பட்டனர். காண்டிவத்தோடு அர்ஜுனனை அருகில் நிற்கக் கண்டு எதிர்க்காமல் திரும்பினர். மனைவி சத்யாவுடன் இப்படி பரிவாரத்தோடு துவாரகை வந்து சேர்ந்த க்ருஷ்ணனை ஊர் ஜனங்களும் உறவினரும் வரவேற்றனர். அவளுடன் மகிழ்ச்சியாக இருந்தார்.
அதன் பின் ஸ்ருத கீர்த்தி என்பவரின் மகள், பத்ரா என்பவளை மணந்தார். அவளும் ஒரு அத்தையின் மகளே. கைகேயி என்பது அவள் பெயர். சகோதரர்கள் சந்தர்தனர்கள் எனப்படுவர், அவர்கள் கையளித்து மணம் செய்து கொடுத்தனர்.
அதன் பின் மத்ராதிபதி, லக்ஷணா என்பவளை, மிக்க அழகியான அவளை ஸ்வயம் வரத்தில் மணந்தார். சுபர்ணன் ஒருசமயம் அம்ருதத்தை அபகரித்தது போல.
இன்னும் பலரை அந்தந்த சமயத்துக்கு ஏற்ப மணந்தார். பௌமனை எதிர்த்து வெற்றி கொண்ட பின் அவன் சிறைப் படுத்தியிருந்த ஆயிரக் கணக்கான பெண்களையும் மணந்தார்.
(இது வரை ஸ்ரீமத் பாகவத த்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பகுதியில், அஷ்டமஹிஷ்யுத்வாஹோ -என்ற ஐம்பத்தெட்டாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 58
அத்யாயம் -59
அரசன் பரீக்ஷித் வினவினான்: பௌமன் எப்படி கொல்லப் பட்டான்? அந்த பெண்கள் யாவர்? எங்கிருந்து கவர்ந்து வரப் பட்டனர்? எதற்காக? சார்ங்க தன்வாவான க்ருஷ்ணன் எப்படி அவர்களை விடுவித்தான்? அதை விவரமாக சொல்லுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ப்ராக் ஜ்யோதிஷபுரம் என்ற ராஜ்யத்தில் வசித்த பௌமன்- பூமியின் மகன், நரகன்- அசுரன்.
ஒரு முறை இந்திரன் துவாரகா வந்தான். அவன் குடை, குண்டலங்கள், இவைகளை நரகாசுரன் அபகரித்துச் சென்று விட்டான். அவன் இருப்பிடம் இருக்கும் இடத்திற்கு தன்னால் போக முடியவில்லை, நரகனை வென்று என் ஆபரங்களையும் குடையையும் மீட்டுத் தர வேண்டும் என வேண்டினான்.
ஸ்ரீ க்ருஷ்ணன், மனைவி சத்யபாமாவுடன் கருடனின் மேல் பிரயாணம் செய்து அந்த இடத்தை அடைந்தார்.
உயர்ந்த மலைகளால் ஒரு கோட்டை, சஸ்திரங்களால் ஒரு கோட்டை, ஜலம் சூழ்ந்த ஒரு அரண்,அக்னி சூழ்ந்த இடம் ஒரு அரணாக, அதன் பின் கடும் காற்று வீசும் மரு ப்ரதேசம், முரம், பாசம் இவைகளை கையில் வைத்துக் கொண்டு திடமான கோரமான காவலர்கள் காவல் காக்க இருந்த இடம் வந்து சேர்ந்தார்.
தன் கதையால் மலைகளை பொடிப் பொடியாக்கினார். அம்புகளைக் கொண்டு சஸ்திரங்களை அடித்தார். சக்ரத்தால் அக்னியை, ஜலம், வாயு ப்ரதேசங்களை அழித்தார். முரனின் பாசங்களை வாளால் அறுத்து வீசினார். சங்க நாதம் செய்தார். அந்த நாதமே கேட்டவர்களை நடுங்கச் செய்தது. அதன் பின் யந்த்ரங்கள், மற்றும் ஆயுதங்களால் அங்கிருந்த ஜீவன்களின் இதயம் நடுங்கச் செய்தார். ப்ராகாரங்களை தன் பெரிய கதையால் அடித்தார். பாஞ்சஜன்யத்தின் நாதம் கேட்டு, யுகாந்தம் வந்தது போல பயந்த முரன் என்ற அசுரன் தூங்கிக் கோண்டிருந்தவன் திடுக்கிட்டு விழித்தான். ஐந்து தலைகளுடன் அந்த தைத்யன் தண்ணீரிலிருந்து எழுந்தான். த்ரிசூலத்தை தூக்கிக் கொண்டு, யுகாந்த ஸூரியன் போல உஷ்ணமாக அதிலிருந்து கதிர்கள் வெளிப் பட, மூவுலகையும் தன் ஐந்து முகத்தால் முகர்ந்து பார்ப்பது போல பார்த்தவன், பாம்பைக் கண்ட கருடன் பாய்ந்து வருவது போல வந்தான்.
தன் சூலத்தால் வேகமாக கருடன் மேல் இருந்தவர்களை அடித்தான். ஐந்து முகத்தாலும் அதை இடித்தான். பற்களைக் கடித்தவாறு, ஆகாயம் முழுவதும் பரவி நின்றான். த்ரிஸூலத்தை, பொடிப் பொடியாக்கினார் ஸ்ரீ க்ருஷ்ணன். அவன் தன் பெரிய கதையை எடுத்துக் கொண்டான். க3தாக்ரஜன் தன் கதையை வீசி அடித்ததில், அவன் முகத்தில் நல்ல அடி பட்டது. மேலும் க3தையாலேயே அவனுக்கு பதிலடி கொடுக்க, அவன் கைகள் இற்று விழுந்தன. ஸ்ரீ க்ருஷ்ணன் தன் சக்ரத்தால் அவன் தலையை துண்டித்தார்.
அவன் தலையின்றி நீரில் விழுந்தான். நுனி மட்டும் விழுந்த பெரிய மலை போல இருந்தான். அவனுடைய ஏழு புதல்வர்களும் தந்தையை அடித்தவர்களை பழி வாங்க களத்தில் இறங்கினர். தாம்ரன், அந்தரிக்ஷன், ஸ்ரவணன், விபாவசு, வசு, நபஸ்வான், அருணன் என்ற எழுவர். ஆயுதங்களை ஏந்தியவர்களாக அவர்கள் போர்க் களத்தில் முன்னேறினர். கைக்கு கிடைத்த ஆயுதங்கள் அனைத்தையும் ப்ரயோகித்தனர். அம்புகள், க3தைகள், சதி, இஷ்டி, சூலம், நெருப்பு பந்துகள், என்ற இவைகளை அனைத்தையும் பகவான் தன் சக்ரத்தாலேயே எதிர் கொண்டார். பீடன் என்பவன் தலைமையில் வந்த அவர்களை, யம லோகம் அனுப்பிய பின் பூமி சுதனான நரகன் மட்டும் எதிரில் நின்றான். நீரில் யானை போல நின்றவன், மனைவியுடன் இருந்த தன் எதிரியை நோக்கி சதக்னீ என்ற ஆயுதத்தை ப்ரயோகித்தான். அவரும் விசித்ரமான கூர்மையான பாணங்களால் அவன் யானைகள் குதிரைகளை அடித்தும் கலங்காமல் நின்றான் நரகாசுரன். யானையிலிருந்து கீழே தள்ளி, சக்ரத்தால் குண்டலங்கள், கிரீடம் இவைகளோடு பூமியில் விழுந்தான். இந்திரனுடைய குண்டலங்கள், கொடி இவைகளை மட்டும் எடுத்து கொண்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
பூ தேவி வந்து கை கூப்பி அஞ்சலி செய்தவளாக பகவானை துதி செய்தாள்.
தேவ தேவனே, நமஸ்காரம். சங்க சக்ர கதா தரனே, நமஸ்காரம். பக்தன் வேண்டியதை நிறைவேற்ற எடுத்த அவதாரம் இது. உனக்கு நமஸ்காரம். நம: பங்கஜ நாபாய, பங்கஜ மாலினே, நமஸ்தே, பங்கஜ நேத்ராய, நமஸ்தே பங்கஜாங்க்ரயே. வாசுதேவாய, விஷ்ணவே, புருஷாய ஆதி பீஜாய பூர்ண போதாய நமஸ்காரம். அஜன் – பிறப்பற்றவன் நீ. ஜனயித்ரு, படைப்பவனே நீ. ப்ரம்மனே, அனந்த சக்தயே, பராவ்ராத்மன், பூதாத்மன், பரமாத்மன், நமோஸ்து தே. என்று போற்றி துதித்தாள். இவனும் உன் மகன் போலவே எண்ணி இவனை காப்பாற்று. உன் கையை இவன் தலை மேல் வைத்து ஆசிர்வாதம் செய். இவனுடைய கல்மஷங்கள் போகட்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு பூ தேவி ப்ரார்த்தித்தவுடன், அபயம் அளித்த பகவான், வினயமாக பக்தியுடன் அவள் வேண்டிக் கொண்டபடி பௌமனின் வீட்டிற்குச் சென்றார். அங்கு இரண்டு ஆறாயிரம் அரச குமாரிகளை அவன் அபகரித்து கொண்டு வந்து சேர்த்திருப்பதை பார்த்து திகைத்தார். அவர்களும் விடுபட்டு ப்ரும்மாவிடம் வேண்டினர். இந்த வீரனே, எங்களுக்கு பதியாக வேண்டும் என்றனர். ஒவ்வொருவரும் தனித் தனியாக க்ருஷ்ணனை விரும்பி வேண்டினர். அவர்கள் அனைவரையும் துவாரகைக்கு அங்கிருந்த செல்வங்களோடு அனுப்பி வைத்தார். ரத, அஸ்வ, தனம், ஐராவதம், குலேபம், நான்கு தந்தம் உடைய யானைகள், என்று நரகாசுரன் மூவுலகிலிருந்தும் அபகரித்து வந்தவைகள் துவாரகைக்கு சென்றன. இந்திர பவனம் சென்று இந்திராணியுடன் அவன் செய்த உபசரிப்பை ஏற்றார். மனைவி சத்ய பாமா கேட்டதன் பேரில், பாரிஜாத மரத்தை வேரோடு எடுத்துக் கொண்டு வந்து அவள் வீட்டில் நட்டு வைத்தார். அதன் மணம் தேவலோகத்திலும் பரவியது.
ஊர் வந்து சேர்ந்ததும் அவர்களை மணந்தார். அவர்களை தனித்தனியாக வீடுகளில் குடியேற்றி, வசதியாக இருக்கச் செய்தார்.
ரமாபதியை தாங்களும் அடைந்த மிகிழ்ச்சியோடு அந்த பெண்கள், ப்ரும்மா முதலானவர்கள் வியந்து பாராட்ட, மகிழ்ச்சியுடன் இருந்தனர். சிறு சிறு சேவைகளை மனப் பூர்வமாக செய்தனர். தாஸ்யம் என்ற நிலையில் பகவானை ஆஸ்ரயித்து இருந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பகுதியில், பாரிஜாத ஹரண, நரக வதம் என்ற ஐம்பத்தொன்பதாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-45
அத்யாயம்-60
ஸ்ரீ சுகர் சொன்னார்:
ஒரு சமயம் ஜகத் குருவான பகவான் தன் அறையில் இருந்தார். மணி தீபங்களாலும், நறு மணம் வீசும் மல்லிகை போன்ற மலர்களாலும், ஜன்னல் வழியே வந்த சந்திரனின் கிரணங்களாலும், உபரியாக பாரிஜாத மலரின் தெய்வீகமான வாசனையாலும் நிரம்பியிருந்த அறை.
தன் கணவன் சௌக்யமாக தன் கட்டிலிலில் அமர்ந்து இருப்பதைக் கண்ட ருக்மிணி, அவள் சகிகள் தயாரித்த ஏதோ ஒரு தின்பண்டத்தை கொடுத்தபடி மெதுவாக பேச்சுக் கொடுத்தாள். வாள வ்யஜனம்- விசிறி, தன் சகியின் கையிலிருந்து வாங்கிக் கொண்டு தானே வீசலானாள்.
அவரது கவனத்தை கவர, ருக்மிணி தன் வளையல்களையும் நூபுரங்களையும் ஆட்டி ஒலியெழச் செய்தாள். ஹரி அவள் ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்பதை உணர்ந்த்து மெல்ல சிரித்தபடி பதில் சொன்னார். ராஜ புத்ரி! ஏதோ சொல்ல விரும்புகிறாள் போலும். உலகத்து அரசர்கள் அனைவராலும் விரும்பப் பட்ட ராணி, மஹானு பாவர்கள், செல்வம் படைத்தவர்கள் தங்களுக்கு கிடைக்குமா என்று ஆவலுடன் காத்திருந்த, அழகிய ரூபமும், உயர் குடி பிறப்பும், குணமும் வாய்ந்த அழகி, சேதி அரசனையும் உடன் வந்தவர்களையும் ஜயித்தபின், பொருத்தமில்லாதன் எனக்கு உன் தந்தையும், சகோதரனும் கொடுத்து விட்டனர் என்று பரிகாசமாக பேசினார். ஜராசந்தன் போருக்கு வந்த பொழுது ஓடி துவாரகையில் ஒளிந்தவன், நாங்கள் எதுவும் இல்லாதவர்கள். எப்பொழுதும் எதுவுமில்லாத பாமர ஜனங்களையே விரும்புபவர்கள். அதனால் செல்வம் படைத்தவர்கள், எங்களை ஒரு பொருட்டாக நினைப்பதேயில்லை, சுமத்யமே-அழகியே என்றார். பிறப்பிலேயே செல்வம் மிகுந்த குடியில் பிறந்தவர்கள், அதே போல பிறவியிலேயே ஐஸ்வர்யம் நிரம்பிய குடும்பத்தில் பெண் கொடுக்க நினைப்பார்கள். அந்த குடும்பத்துடன் அவர்களுக்கு நல்ல போக்கு வரவும் உறவும் செழிக்கும். அதுவே இது போல சம அந்தஸ்து இல்லாத விவாகங்களில் நடப்பதில்லை. வைத்ர்பீ! இதை எதுவும் அறியாமல், தீர்க்மாக யோசிக்காமல், பிக்ஷுக்கள் ஸ்லாகிக்கும் என்னை வீணாக தேர்ந்தெடுத்து விட்டாய்.
இப்படி ஒரு விரும்பத் தகாத வார்த்தைகளைச் சொன்னது தன் கணவன் தானா என்று சந்தேகம் எழ, பயந்து போன ருக்மினி ஒரு கணம் தன் இதயமே நொறுங்கியது போல வேதனையும், தாங்க முடியாத கவலையாலும் அழுகையை அடக்கிக் கொண்டு ஒரு வினாடி, பாதங்களால் தரையில் கோலமிட்டபடி நின்றவள் சட்டென்று அந்த இடத்தை விட்டகன்றாள். கண்களில் பொங்கிய நீர் மேலாடையை நனைக்க, பேச்சு எழாமல், கையிலிருந்து விசிறி விழுந்தது தெரியாமல், வாழை மரம் பெரும் காற்றில் அலைவது போல உடல் நடுங்க, ஒரு எட்டு எடுத்தவளை, ஹோ என்ற சிரிப்புடன் ஹாஸ்யமாக எடுத்துக் கொள்ளத் தெரியாத சாது பெண், அவள் அன்பை நான் அறியாததா என்று நினத்த ஸ்ரீ ஹரி, கட்டிலில் இருந்து இறங்கி வந்து அவளைத் தடுத்து அணைத்து, கேசத்தை அளைந்து முகத்தைப் பார்த்து கண்ணீரை துடைத்தபடி பேசினார். தன் கைகளுக்குள் அணைத்துக் கொண்டு சமாதானமாக சொல்லலானார்.
வைதர்ப ராஜகுமாரி! பயப்படாதே. உன்னை எனக்குத் தெரியாதா. என்னையே நினைத்து எனக்காகவே வளர்ந்தவள். என்ன சொல்கிறாய் பார்க்கலாம் என்று விளையாட்டாகச் சொன்னேன். நான் தான் அதிர்ஷ்டசாலி.
ருக்மிணி சொன்னாள், அப்படியா. நான் உங்களுக்கு சமமான துணைவி அல்ல என்று சொன்னாலும் சரியே. அழகு, செல்வம், திறமை அனைத்தும் அமைந்த மற்ற மனைவியரின் முன் நான் யார்.? அவர்கள் எங்கே, நான் எங்கே. மூவுலகுக்கும் நாதனான உங்களுக்கு அறிவோ, திறமையோ இல்லாமல் உங்கள் பாதமே கதி என்று இருப்பவள், என்ன பொருத்தம்?
அது இருக்கட்டும், உங்களைப் பற்றி நான் கேட்டதையும் சொல்கிறேன். யுக முடிவில் சமுத்திர ஜலத்தில் மூழ்கி கிடந்த சமயம் பயந்ததாக சொல்வார்கள். உண்மையா? குணங்கள் அண்டக் கூடாது என்று தூங்கியதாகவும், ஆத்மா மட்டுமாக இந்திரிய கணங்களை துறந்து, இருந்தீர்களாம். அப்படியும் உங்கள் பாத பங்கஜ மகரந்தம் என்றும் அதை சேவிக்கிறோம் என்றும் முனி கணங்கள் சூழ்ந்து இருந்தனராம். தெளிவில்லாத உங்கள் அவதார ரகசியங்கள். ந்ருபசு- நரசிங்கமாக தோன்றியது. உலகியல்புக்கு முற்றிலும் பொருந்தாத வேஷம். எதுவுமில்லாதவன் என்று சொல்லிக் கொண்டீர்கள். என்ன இல்லை? பலியிடம் யாசித்து அனைத்தையும் வாங்கிக் கொண்டது என்னவாயிற்று? அதை ப்ரும்மா முதலியவர்கள் பிடுங்கிக் கொண்டு விட்டார்களா? அவர்கள் செல்வ செழிப்பில் இருந்தவர்கள், அந்த கர்வத்தால் தான் உங்களை யாசிக்க அனுப்பினார்களா? மனித ஜீவனில் நன்மையாக சொல்லப் படுவது உங்களை அறிவது தான் என்று சொல்வார்களே. அதை விரும்பி நல்ல அறிவுடையவர்கள் மற்ற இக போக சௌக்யங்களை தியாகம் செய்து சாதனைகள் செய்கிறார்களே. விபோ, அவர்கள் உங்களுடைய பரிவாரங்களே. ஆண்களோ, பெண்களோ, இவர்கள் சாதாரண ப்ரஜைகள். சுகம் துக்கம் என அல்லல் படுபவர்கள் தானே.
நீங்கள் தண்டம் எடுப்பதில்லை என்று உறுதியேற்றவர். இருந்தும் முனிவர்களுக்காக அவர்கள் சொன்னபடி செய்தவர். மூவுலகிலும் நானே ஆத்மா, ஆத்மாவாக இருப்பவன் என்று இருந்தீர்களாம். உலகை படைக்க, உங்கள் புருவங்களிலிருந்து காமன் வந்தான் என்றும் உங்கள் ஆசியுடன் உங்கள் நாபியில் வந்த ப்ரும்மா தேவ லோகத்தை ஸ்ருஷ்டி செய்தார் என்றும் சொல்வார்கள். உண்மை தானே.
கதாக்ரஜ, இது என்ன அறிவில்லாத பேச்சு. பயந்து ஓடியதாக சொன்னீர்கள். அரசர்களை பயந்து ஓட ஓட விரட்டி என்னை கைப் பிடித்தீர்கள். சார்ங்க சப்தமே அவர்களை அலறி ஓடச் செய்தது, நான் அறிவேன். சிங்கம் தன் பலியை மற்ற மிருகங்கள் தொட விடாமல் துரத்துமோ அப்படி இருந்தது அந்த காட்சி. அவர்களிடம் பயந்தா சமுத்திரத்தில் சரணம் (துவாரகையில்-ஜராசந்தனால் துரத்தப் பட்டு என்று சொன்னதற்கு பதில்) அடைந்தீர்கள்? விரும்பி பேரரசர்கள், அங்க, வைன்ய,நாஹுஷ, கயாதி போன்ற பேரரசர்கள் ராஜ்யத்தை விட்டு வனம் சென்றனர். அவர்கள் உங்கள் அனுபதவியை அடைந்து வருந்துகிறார்களா, என்ன?
மனிதர்கள் வேறு யாரை அடைக்கலமாக வேண்டுவார்கள். அறிஞர்கள் பலரும் சொன்ன உங்கள் பாதங்களை சேவிப்பதே வழி என்று சொன்னதால் நம்பியவர்கள், குணாலயன், அவனை சரணடையுங்கள் என்றார்கள். சதா சம்சார பயத்திலேயே உழலும் சாதாரண ஜனங்கள், வித விதமான கொள்கைகளை என்ன கண்டார்கள்.
ஜகதீச! எனக்கு அனுரூபமாகவே உங்களை அடைந்துள்ளேன். ஆத்மானம் – என் தேவைகளை, இகத்திலும் பரத்திலும் என் விருப்பங்களை நிறைவேற்றுபவராக. என் மனதில் எப்பொழுதும் உங்கள் பாதங்களை சேவிக்கும் எண்ணமே இருக்கட்டும். நிலையில்லாமல் அலையும் மனம் உள்ளவர்களும், அப்படி பூஜித்து அபவர்கம் என்பதை அடைகிறார்கள். அச்யுத! நீங்கள் அரசர்களுக்கு செய்த உபதேசம் அவர்கள் புரிந்து கொண்டார்களோ இல்லையோ. காதிலேயே வாங்கிக் கொள்ளாமலும் இருந்திருக்கலாம். அப்படி உங்களைப் பற்றி கேட்டதேயில்லை, மறந்தும் உங்களை வணங்கவோ, தெரிந்து கொள்ளவோ முயலவில்லை என்று இருக்கும் பெண்களுக்கு, கழுதை, காளைகள் போல சதா பாரம் தூக்கும் பிறவிகள் போல சம்சார பாரத்தை தாங்குபவர்களாகவோ, அல்லது நாய் போல வீட்டின் முற்றத்தில் படுத்து கிடந்து கிடைத்தை உண்ணும் பிறவிகளாகவோ, அல்லது பூனை போல திருடி தின்னும் ஜீவனாகவோ சிசுபாலன் போன்ற அரசர்களோ, பதியாக அமையட்டும். அறிவில்லாத மனிதனே அவர்களை ஏற்கட்டும். அறியாமையால் அவர்கள் தங்கள் பதி என்று எண்ணி அவர்களுடன் வாழ்வார்கள். ஆனால் ஸ்ரீ லக்ஷ்மி தேவி அப்படியா? அவள் சதா உங்கள் அருகில் இருப்பவள். பாதங்களில் மனம் லயித்து இருப்பவள்.
அம்புஜாக்ஷ! எனக்கு உங்களிடம் உள்ள ஈடுபாட்டை அறிந்து தான் சம்மதித்து என்னை மணந்தீர்கள். அந்த கருணை மட்டும் தான் என்றாலும் எனக்கு அதுவே போதும். மது சூதனா! அது இயல்பானதே. அம்பா தேவியைப் போன்ற அன்புள்ள கணவன் அமைவது ஏதோ ஒரு கன்னிப் பெண்ணுக்கு எப்பொழுதாவாவது எங்காவது தான் நிகழும்.
நன் நடத்தை இல்லாத பெண்ணை மணந்தவன் கூட மனம் ஒன்றி தினம் தினம் புதுமையாக உணர்ந்து ரசித்து வாழ்கிறான். மிகச் சிறந்த புத்திசாலிக்கு அசத்தான மனைவியை ஏற்க முடியாது தான்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: சாது, நல்லது, இதை கேட்கத்தான் உன்னை சீண்டினேன். என்னைப் பற்றி நீ சொன்னதெல்லாமே சத்யமே. பாமினி! என்னிடம் சதா ஏகாந்த பக்தியுடையவள் நீ. கல்யாணி, என்னிடம் நீ விரும்புவதை பெறுவாய் என்பதில் சந்தேகமேயில்லை. உனக்கு என்ன குறைவு? பதியின் பூர்ணமான ப்ரேமையுடைவள் நீ. அனகே! ஏதோ சொன்னதற்காக என்னிடம் நீ சற்றும் மரியாதை குறைவாக பேசவில்லை. தவம், விரதங்கள், மற்றும் மனைவியாக தாம்பத்யம் என்று பஜித்தவர்கள் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் தான் இருப்பார்கள். அபவர்கம் வேண்டினாலும் அதுவும் எதிர்பார்ப்பே. தவறு என்று சொல்லவில்லை அது என் மாயை.
மானினீ! செல்வத்தை மட்டுமே பதியிடம் எதிர்பார்ப்பவர்கள் மந்த பாக்யர்கள். நல்ல வேளையாக, வீடு, ஐஸ்வர்யம், என்று மறந்து கூட கேட்கவில்லை. பவ மோசனமான அனுவ்ருத்தி, எதிர் பார்ப்புகளும் இல்லை, என்னை எனக்காகவே பஜிக்கிறாய். இது மிக துர்லபம் தேவி. உன்னைப் போன்ற பிரியமான க்ருஹிணீ, இல்லறத் துணைவி எங்குமே பார்த்ததில்லை. நம் விவாக சமயத்தில் வந்த ஏராளமான அரசர்கள், அவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல், அந்த அந்தணரிடம் ரகசியமாக சொல்லி அனுப்பினாயே. சத் கதைகளை கேட்டே என்னை விரும்பியதாக சொல்லி அனுப்பினாய்.
உன் சகோதரனை விரூபம் செய்தேன். விவாகம் ஆன பின், அக்ஷ கோஷ்டி யை வதம் செய்தேன். உன் மனம் வருந்தாமலா இருந்திருக்கும். நீ பொறுத்துக் கொண்டாய். நீ எதுவும் சொல்லாமலே என்னை ஜயித்து விட்டாய். தூது அனுப்பினாயே, மந்தரம் போன்ற வாக்யங்கள். உடனே என்னை கிளம்பி வரச் செய்த வார்த்தைகள். அதை நான் மிகவும் ரசித்து மகிழ்ந்தேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு அவளை சமாதானப் படுத்தி தன் மனதில் அவளுக்கு உயர்ந்த இடத்தை அளித்திருப்பதாக உறுதியளித்து, ரமாவான அவளுடன் மகிழ்ந்து இருந்தார். அதற்காக மற்ற மனைவிகளையும் அலட்சியம் செய்யவும் இல்லை. சாதாரண கணவன் மார்கள் போலவே அவர்களுடனும் தாம்பத்ய தர்மத்தை அனுசரித்து இருந்தார். ஸ்ரீஹரி, லோக குரு தர்மங்களை அறிந்தவர் என்பதற்கேற்ப.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாம் பாகத்தில், க்ருஷ்ண ருக்மிணி சம்வாதம் என்ற அறுபதாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 59
அத்யாயம்-61
ஸ்ரீ சுகர் சொன்னார்: அதன் பின் ஒவ்வொரு மனைவியிடமும் பத்து மகன்கள், பத்து பெண்கள் பிறந்தனர். ஒவ்வொரு மனைவியும் க்ருஷ்ணன் தன்னிடம் தான் அதிக பிரியமாக இருப்பதாக எண்ணினர். தங்களுடன் தான் மிக அதிகமாக நேரம் செலவழிப்பதாகவும், தங்களை மட்டுமே நேசிப்பதாகவும் நினைத்து பெருமைப் பட்டனர். சூரியனின் கிரணங்கள் போல் ஸ்ரீக்ருஷ்ணன் அவர்கள் அனைவரையும் தன் அன்பு வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு சமமாக எல்லோரிடமும் பிரியமான கணவனாக நடந்து கொண்டார். ரமா பதியை கணவனாக அடைந்த அந்த ஸ்த்ரீகள், அடைந்த சுகத்தை ப்ரும்மா முதலான தேவர்கள் கூட அனுபவித்ததில்லை. எப்படி சாத்யமாயிற்று என்று வியந்தனர். அனைவரிடமும் சிரித்து பேசி நலம் விசாரித்து அவர்களை கவலையின்றி வாழ வைத்ததை, ஒவ்வொருவரும் தான் தான் தாம்பூலம் கொடுத்தேன், பாத சேவை செய்தேன், விசிறி கொண்டு வீசி, கந்த மால்யங்கள் அணிவித்தேன், கேசத்தை ஒருங்கிணைத்தேன், ஸ்னானம் செய்ய ஏற்பாடுகள் செய்தேன், படுக்கை விரித்து ஓய்வு எடுக்க உதவினேன் என்று சொல்லி மகிழ்ந்தனர். இப்படி ஒரு தாஸ்யம், பணிவிடை செய்ய போட்டியா என தேவர்கள் நினைத்தனர்.
அந்த கூட்டத்தில் அஷ்ட மகிஷிகள் அவர்கள் புதல்வர்கள் தான் அரச குமாரர்கள். அவர்கள் பெயர்கள் வரிசையாக சொல்லப்பட்டுள்ளது. அவர்களுக்கும், ருக்மிணியின் மகனுக்கு போஜகட அரசன் ருக்மியின் மகளைக் கொடுத்தும் அவர்கள் மூலம் கோடி கணக்கான வாரிசுகள். க்ருஷ்ணனின் மற்ற மனைவிகளின் வழியில், ஆயிரக் கணக்கிலும் ஆயினர்.
பரீக்ஷித் அரசன் வினவினான்: ருக்மி தன் சகோதரி விவாகத்தை எதிர்த்தானே. அவன் மகனுக்கு பெண்களைக் கொடுத்தாரா? எதிர் பாராத ஒன்று, நடந்த விஷயம், நிகழ் கால நடப்புகள், இவை தவிர மனதால் யோசித்து உணரும் கஷ்ட நஷ்டங்கள், இவைகளை யோசித்து தானே செயலில் இறங்க வேண்டும்?
ஸ்ரீ சுகர் சொன்னார்: ருக்மிணியை ஸ்வயம் வரத்தில் மற்றவர்களை தோற்கடித்து வென்றார். தான் தனியாக ஒரே ரதத்தை ஓட்டிச் சென்று ருக்மிணியை கவர்ந்து சென்றது அனங்கன்- காமனின் வசத்தில் செய்த செயல். அந்த சமயத்து வைரம் மனதில் இருந்தாலும், சகோதரியிடம் பாசம் உள்ளவனான ருக்மி அவன் மகனுக்கு தன் மகளை மகிழ்ச்சியுடன் கொடுத்தான். ருக்மிணியின் மகளை க்ருதவர்மாவின் பலசாலியான மகன் மணந்தான். அவள் பெயர் சாருமதீ. பேரன் அனிருத்தனுக்கு தன் பேத்தியை ருக்மி மணம் செய்து வைத்தான். அழகிய பெண் அவள், சகோதரியை மகிழ்விக்கவே இந்த சம்பந்தங்கள், யௌவனத்தில் கோபம் கொண்டதும், போரிடச் சென்றதும் அந்த வயதின் கோளாறே என்றான்.
அந்த திருமண வைபவத்துக்கு, பலராமனும், ருக்மிணியும் போஜகடம் சென்றனர். சாம்பன், ப்ரத்யும்னன் முதலானோரும் சென்றனர். அந்த சமயம் காளிங்கன் முதலான அரசர்கள், விளையாட்டாக ருக்மியை ஸூதாட அழைத்தனர். அக்ஷ வித்தையை நான் கற்றதில்லை, மேலும் அது நல்லதும் அல்ல என்று மறுத்தவனை கட்டாயப் படுத்தி ஆட வைத்தனர். பலராமன் அந்த ஸூதாட்டத்துக்காக இரண்டாயிரம் பணம் கொடுத்தான். ருக்மி அதை வைத்து விளையாடினான். காளிங்கள் ஜயித்ததோடு, தன் பெரிய பற்களைக் காட்டி அட்டகாசமாகச் சிரித்தான். பலராமனால் அதை பொறுக்க முடியவில்லை. ருக்மிக்காக தான் ஆடி ஜயித்தான். தான் ஜயித்து விட்டதாக ருக்மி அறிவித்தான். மாற்றி மாற்றி ஒருவர் தோற்பதும் மற்றவர் எக்களிப்போடு சீண்டுவதுமாக ஓரிரு முறை ஆடியபின் ருக்மி பார்வையாளர்கள் சொல்லட்டும் நான் தான் ஜயித்தேன், என்றான். அச்சமயம் ஆகாயத்தில் அசரீரி எழுந்து பலராமன் தான் ஜயித்தான், ருக்மி ஆட்டத்தில் ஏமாற்றினான், பலராமன் நியாயமாக ஆடினான் என்று தீர்ப்பு வந்தது.
அப்படியும் விதர்ப அரசனான ருக்மி, துஷ்ட சகவாசத்தால் பலராமனை பரிஹசித்தான். உங்களுக்கு என்ன அக்ஷ வித்தை தெரியும், வனத்தில் திரியும் கோபாலர்கள் என்றும், அரசர்கள் தங்கள் கை பாணத்தாலும், அக்ஷ வித்தையில் ஜயிப்பதாலும் புகழ் பெறுவர் என்றும் உங்களைப் போன்றவர்கள் ஜயிப்பதாவது என்றான். கூடியிருந்த அவன் சகாக்கள் சிரித்தனர். அந்த அரசர்கள் பார்த்திருக்கையிலேயே, கோபத்துடன் பரிகம் என்ற ஆயுதத்தை எடுத்து அவனை வதைத்து விட்டான். களிங்க ராஜனை வேகமாக துரத்தி பிடித்து, பற்களை அடித்து விழச் செய்தான். அவன் பல்லைக் காட்டி நகைத்தானே, அதற்கு பழி வாங்க. மற்ற அரச வம்சத்தினர் எதிர்த்தவர்களை அடித்து த்வம்சம் செய்து பலர் கை கால் களை இழந்தவர்களாக விழுந்தனர். மற்றவர் ஓடி பரிகத்தின் முன் நிற்க மாட்டாமல் ஓடி விட்டனர்.
இரு தரப்பினரும் செய்தது சரியா தவறா என்ற விஷயத்தை கையிலெடுக்காமல், பந்துக்களுக்குள் விரோதம் வளர விடாமல், ருக்மிணி முதலானோர், அனிருத்தன்-மணமகள் ஸுர்யா, இவர்களை ஏற்றிக் கொண்டு குசஸ்தலம் என்ற இடம் சென்றனர். பல ராமன் முதலானோர், போஜகடாம் என்ற அந்த இடத்திலிருந்து , மது ஸூதனனைச் சேர்ந்தவர்களும் தாஸார்ஹ என்ற இடத்துக்கு கிளம்பினர்.
( இதுவரை ஸ்ரீ மத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பகுதியில், அனிருத்த விவாகத்தில், ருக்மி வதம் என்ற அறுபத்தொன்றாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-40
அத்யாயம்-62
பரீக்ஷித் வினவினான்: மஹா யோகின்! பாணன் மகளையும் யதுபதி மணந்தான் என்று கேட்டிருக்கிறேன். ஹரி சங்கர இருவருக்கிடையில் பயங்கர யுத்தம் நடந்ததாமே. அது பற்றிச் சொல்லுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பாணாசுரன், மகாபலியின் நூறு பிள்ளைகளில் மூத்தவன். வாமன ரூபத்தில் வந்த ஹரிக்கு அவன் சகலத்தையும் தானம் செய்தவன் என்று நீ அறிவாய். அவன் மகன் பாணன் எப்பொழுதும் சிவ பக்தனாக எப்பொழுதும் மதிப்புடனும், நிறைய தான தர்மங்கள் செய்பவனாக, புத்திமானாக, சத்ய சந்தனாக, தீர்மானமான கொள்கையுடையவனாக இருந்தான். சோணிதம் என்று ராஜ்யத்தை ஆண்டு வந்தான். ஸ்ரீ சங்கரரின் அருளால், தேவர்கள் அசுரனானாலும் அடி பணிந்து இருந்தனர். ஆயிரம் கைகள் உடையவன். வாத்யங்கள் வாசித்தும். தாண்டவ ந்ருத்யம் செய்தும் பகவான் சங்கரரை மகிழ்வித்தான்.
பகவான் சங்கரரும் சரணடைந்தவரை காக்கும் பக்த வத்சலன். அவன் விரும்பிய வரங்களைக் கொடுத்தார். நகரத்தை ஆளும் பதவியை கொடுத்தார். நாளடைவில் வீர்ய மதம் – தன் வீரத்தினால் தோன்றும் அதீத நம்பிக்கை உடையவனானான். ஒருசமயம் அருகில் நின்றபடி ஸ்ரீ சங்கரரை துதி செய்தான்.
நமஸ்யே த்வாம் மகாதேவ, லோகானாம் குரும் ஈஸ்வரம். மனிதர்களின் நிறைவேறாத ஆசைகளையும் பூர்த்தி செய்பவன். இரண்டாயிரம் கைகள் கொடுத்தீர்கள். அதுவே பாரம். மூவுலகிலும் எனக்கு சமமாக சண்டையிட யாருமேயில்லை. நீங்கள் ஒருவர் தான் அதற்கு தகுதியானவர். என் தோள்கள் யுத்தம் செய்ய தினவு எடுக்கின்றன. திக் கஜங்களுடன் மோதி பார்த்தேன். அதனால் திருப்தியடையவில்லை. ஒரு முறை மலைகளுடன் மோதினேன். அவர்களும் தயாராக இல்லை. ஓடி விட்டனர்.
இதைக் கேட்டு பகவான் வெகுண்டார். மூடனே! எனக்கு சமமாக உன்னை நினைத்து கர்வம் கொள்கிறாயா. உன் கேது-த்வஜம் எப்பொழுது முறிகிறதோ அன்று நீ அழிவாய் என்று சபித்தார். புத்தி விபரீதமானதால் பாணனுக்கு அது சாபமாக தோன்றவில்லை. தனக்கு சரிக்கு சரி போட்டியிட அவரே வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தான். அவன் மகள் உஷா என்பவள், ப்ராத்யும்னன் – ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு ருக்மிணியிடம் பிறந்த மகன் ப்ரத்யும்னன் அவன் மகன் ப்ராத்யும்னன்,-அவன் மகன் அனிருத்தன் – அவனை கனவில் கண்டு அவனையே பதியாக வரித்தாள். நேரில் காணாமலும், யார் என்று தெரியாமலும் அவனையே நினைத்து உருகினாள். சகிகளிடம் சொல்லி எங்கு இருக்கிறான் தெரியவில்லையே என்று வருந்தினாள். பாணாசுரனுடைய மந்திரி கூஷ்மாண்டன், அவன் மகள் சித்ரலேகா. அவளும் சகிகளில் ஒருவள். அவள் யாராக இருக்கும் என்று அறியும் குதூகலத்தால், எப்படிப் பட்டவன் சொல்லு என்று வினவினாள். உஷா கனவில் கண்டபடி விவரித்தாள்.
ஏதோ ஒரு மனிதன், ஸ்யாம வர்ணன், கமல லோசனம், மஞ்சள் பட்டாடை அணிந்தவன், பெரிய தோள்களும் பெண்களைக் கவரும் தோற்றம். கனவில் அவன் என்னை முத்தமிட்டான். உடனே மறைந்து விட்டான். அவன் தான் எனக்கு மணாளனாக வேண்டும் என்றாள்.
சித்ரலேகா, உன் வேதனையை தீர்க்க நான் ஒரு உதவி செய்கிறேன். மூவுலகிலும் தற்சமயம் தகுந்த வரன், வாலிபனாக உள்ள அனைவரையும் வரைந்து காட்டுகிறேன். நீ கண்டு சொல் என்று சொல்லி தேவ கந்தர்வர்கள். சித்த சாரணர்கள் என்று ஒருவரையும் விடாமல் யக்ஷ, மனிதர்கள் உட்பட அந்த வயது உள்ளவர்களை வரைந்து காட்டினாள். மனிதர்களில், விருஷ்ணி வம்சத்தினர், ஆனக துந்துபியின் வழியில் வந்தவர்கள், பல ராம, க்ருஷ்ணன் வரை வரைந்து காட்டினாள். அனிருத்தனை கண்டதும் உஷா துள்ளி எழுந்தாள். வெட்கத்துடன் இவன் தான் என்றாள். சித்ரலேகா அவன் யார் என்று விசாரித்தாள். ஸ்ரீ க்ருஷ்ணனின் பேரன் என்று தெரிந்து கொண்டு, வான மார்கத்தில் துவாரகா சென்று, படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த அனிருத்தனை கட்டிலோடு தூக்கிக் கொண்டு சோணித புரம் வந்தாள். உஷா அவனைக் கண்டதும் கனவில் வந்தவன் அவனே என்று சொல்லி, தன் கடும் காவல் சூழ்ந்த வீட்டில் அவனுடன் மகிழ்ந்து இருந்தாள்.
நல்ல ஆடைகள், பூ மாலைகள், வாசனை திரவியங்கள், தூப தீபங்கள் நல்ல உணவு பக்ஷ்யங்கள், இனிமையான வார்த்தைகள் என்று அவன் மனம் மகிழும்படி பணிவிடைகள் செய்வது என்று தன் அன்பை வெளிப் படுத்தினாள். கன்யா க்ருஹம். சுற்றிலும் பெண்களே நிறைந்த அந்த:புரம். உஷாவை அவன் மறுக்க எந்த காரணமும் இல்லை என்பதால், தவிர அவள் யது வீரன் என்று அறிந்தே தன்னை விரும்புகிறாள் என்பதால் இணங்கினான்.
காவலர்கள் அரசனுக்கு தெரியப் படுத்தினர். மகள் தானே வரனைத் தேடிக் கொண்டது தன் குலத்தையே அவமதித்ததாக அரசன் வெகுண்டான். மகளின் நடத்தையை மறைக்க ஒருவரும் இல்லாத சமயம் என் மகளை யது வீரன் மயக்கி மணந்து கொண்டான் என்று குற்றம் சொன்னான். வீட்டுக்கு வந்து மகளையும் மணம் செய்து கொண்ட வாலிபனையும் பார்த்து குழம்பினான். காமனுடைய மகன், உலக அழகன், ஸ்யாமள வர்ணமும் பீதாம்பரமும், அம்புஜம் போன்ற கண்களும், பெரும் தோள்கள், குண்டலங்கள், முன் நெற்றியில் அலையும் கேச சுருள்கள், அழகிய கண் பார்வை, சிரித்த முகம், அவனருகில் தன் பெண் முகம் முழுவதும் மகிழ்ச்சி தெரிய, நல்ல வீரனுக்குரிய தேக வாகு, மனைவியை அணைத்த படி நின்றவனைப் பார்த்து திகைத்து நின்றான்.
மாதவன் எழுந்து நின்று கையில் பர்கத்துடன் எதிர்க்கும் காவலர்களை அந்தகன் போல கொல்லத் தயாராக நின்றவனைப் பார்த்து பயந்தே காவலர்கள், மற்றும் சுற்றி நின்றவர்கள் அனைவரும் ஓடி விட்டனர். பாணாசுரன், தன் சைன்யத்தை அடித்து விரட்டிய அனிருத்தனை நாக பாசத்தால் கட்டி விட்டான். உஷா சோகமும் பயமுமாக பலமாக அழுதாள்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாவது பகுதியில், அனிருத்த பந்தோ என்ற அறுபத்திரண்டாவது அத்யாயம். ) ஸ்லோகங்கள்- 35
அத்யாயம் 63
ஸ்ரீ சுகர் சொன்னார்: அனிருத்தனைக் காணோம் என்று அவன் பந்துக்கள் தேடினர். நான்கு மாதங்கள் ஓடி விட்டன. மழைக்காலம் முடியும் வரை காத்திருந்தனர். யதேச்சையாக நாரதர் வந்தார். அவர் மூலம் அனிருத்தனின் இருப்பிடம் தெரிந்து, அவன் கட்டுப் பட்டிருப்பதையும் அறிந்து வ்ருஷ்ணி குலத்தினர் சோணிதபுரம் சென்றனர். ப்ரத்யும்னன். யுயுதாநன், கதன், சாம்பன், சாரணன், நந்த உப நந்தன், பத்ர முதலானோர் பலராமன், க்ருஷ்ணனுடன் சென்றனர். இருபத்திரண்டு அக்ஷௌஹிணி சேனையுடன் பாணனுடைய சோணித புரத்தை முற்றுகையிட்டனர். நகரங்களிலும், உத்யான வனங்களிலும் தேடிக் கொண்டே சென்றனர். பாணனுக்கு சகாயமாக ஸ்ரீ ருத்ரன் தானே நந்தி வாகனத்தில் போரிட வந்தார். அவருடைய ப்ரமத கணங்களும் வந்தன. மயிர் கூச்செரியும் பயங்கர யுத்தம். க்ருஷ்ண சங்கரர்களுக்கிடையில் ப்ரத்யும்னனும் குஹனும் என்று போர் நீடித்தது. கும்பாண்ட கூப கர்ணன் என்ற பலசாலிகளின் படை, சாம்பன் பாண புத்ரனுடன் மோதினான். ப்ரும்மா முதலான தேவ கணங்கள், சித்த சாரணர்கள், கந்தர்வ அப்சரஸ்கள், யக்ஷர்கள் தங்கள் விமானங்களில் போர் நடப்பதைக் காண வந்தார்கள். சங்கரரை அனுசரித்தவர்கள், சௌரி, பூத, ப்ரமதன, குஹ்யகர்கள், டாகினீ, யாது தானர்கள், வேதாளங்கள், விநாயகருடன் எதிரி படையை கலங்கடித்து கூர்மையான ஆயுதங்களால், சார்ங்க தனுவிற்கு சமானமான வில்களுடன் அடித்து நொறுக்கினர்.
வித விதமான ஆயுதங்கள் பினாகத்துடன் ஸ்ரீ ருத்ரனும், சார்ங்க தனுவுடன் ஸ்ரீ க்ருஷ்ணனும் மோதினர். இருவரும் சளைக்கவில்லை. ப்ரம்மாஸ்த்ரம் என்றால் ப்ரும்மாஸ்திரம், வாயவ்யம் என்றால் அதற்கு ஈடாக பார்வதம் என்ற ஆயுதம், ஆக்னேயம் என்பதை பார்ஜன்யம், நைஜம் என்பதை பாசுபதம் என்ற ஆஸ்திரத்தால்
ஒரு நிலையில் ஸ்ரீ ருத்ரனை ஜ்ரும்பாஸ்திரம் என்பதால் மோகத்தில் ஆழ்த்தி விட்டு, பாணனுடைய ப்ருதனா என்பதை சௌரி, வாள், கதை, அம்புகள் இவைகளைக் கொண்டு அடித்தார். கும்பாண்டனும், கூப கர்ணனும் முஸலம் என்ற ஆயுதத்தால் அடி பட்டு விழுந்தனர். அவர்கள் இருவரும் வீழ்ந்ததைக் கண்ட அவர்களின் படை வீரர்கள் ரண களத்தை விட்டே விலகி ஓடி மறைந்தனர். பாணன் மிகுந்த கோபத்துடன் முன்னேறி சாத்யகியை அடித்தான். ஐநூறு வில்களை ஒரே சமயத்தைல் கைகளில் எடுத்துக் கொண்டு சரமாரியாக அடிக்கலானான். பகவான் அவைகளை எதிர் கொண்டதோடு, பாணனுடைய ரதத்தையும், சாரதியையும், குதிரைகளையும் அடித்து விழச் செய்தார்.
அவன் தாய் தலை விரி கோலமாக ஸ்ரீ க்ருஷ்ணனிடம் வேண்டிக் கொள்ள வந்தாள். க்ருஷ்ணனிடம் தன் மகன் ப்ராணனை காப்பாற்ற வேண்டி வந்தாள். அவளை நேருக்கு நேர் பார்க்காமல் முகத்தை மறைத்துக் கொண்டு கதாக்ரஜன், பாணனுடன், ரதமின்றி, உடைந்த வில்லுடன் ஊருக்குள் நுழைந்தான். அதன் பின் யுத்தம் வேறு விதமாக தொடர்ந்தது. பூத கணங்கள் ஓடி விடவும், த்ரிசிரஸ் தன் ஜ்வரம் என்ற ஆயுதத்தால், தாசார்ஹர்களை தீயால் சுடுவது போல தகிக்கச் செய்து ஓட செய்தான். வைஷ்ணவ ஜ்வரம் திருப்பி அடித்தது.
இப்படி போர் மாகேஸ்வர ஜ்வரம், வைஷ்ணவ ஜ்வரம் என்பதன் இடையில் கடுமையாக நடந்தது. இடைவிடாமல் நடக்கவும், மாகேஸ்வர ஜ்வரம் அதை நிறுத்த ஹ்ருஷீ கேசனிடம் அடைக்கலம் வேண்டினார். போர் நின்றது.
ஜ்வரம் துதி: பகவானே, நமாமி த்வாம் என்று ஆரம்பித்து அந்த சக்தி, பரேசன் என்று அறிவேன். சர்வாத்மாவான நீ உன் சங்கல்பத்தால் உலகில் உத்பத்தி, ஸ்தான, சம்ரோதம் இவைகளை நடத்திச் செல்ல ப்ரும்ம, சிவன், விஷ்ணு என்று தோற்றமளிக்கிறாய்.
காலன் தான் தெய்வம், கர்மமே ஜீவன். ஸ்வபாவம் என்பது த்ரவ்யம். க்ஷேத்ரம்-ப்ராணன், ஆத்மா மாற்றம் இவைகள், விதைகளில் இருந்து முளைப்பதும், வளருவதும் உன் மாயையால், அதை தடுப்பதும் உன்னுடைய மாயையே. பலவிதமான பாவங்கள். உன் லீலையால் வந்து சேருகின்றன. தேவர்கள், சாதுக்கள், என்று மூவுலகிலும் தொடர்பை வைத்துக் கொள்கிறாய். ஹிம்சையே ப்ரதானமாக இருப்பவர்களை நீ வதைக்கிறாய். உன் அவதாரமே பூமியில் பாரத்தை குறைப்பதற்கே. என் இயல்பும் தாங்க முடியாத உன் தேஜஸால் உண்டானதே. உடலில் தாபத்தை உண்டாக்குகிறேன். உக்ரமான ஜ்வாலைகளில் இருந்து சாந்தமாகி விட்டேன். உன் பாதங்களை சேவிக்கும் பக்தர்களை நான் நெருங்க மாட்டேன்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: த்ரிசிரஸா! நான் ப்ரசன்னமாக உனக்கு வரம் தருகிறேன். என் மாயையால் உண்டான ஜ்வரம் உன்னை பாதிக்காமல் இருக்கட்டும். இவ்வாறு சொல்லவும், மாகேஸ்வரமான ஜ்வரம் அவரை வணங்கி விட்டு விலகியது.
பாணன் மட்டும் இன்னமும் க்ரோதம் தீராமல் ஆயிரம் கைகளுடன் போர் புரிய வந்தான். பகவான் தன் சக்ராயுதத்தால், அதன் எண்ணற்ற ஆரங்களைக் கொண்டு அவற்றை வீழ்த்தினார். பார்த்துக் கொண்டிருந்த பவன்-ஸ்ரீ ருத்ரன், போரை நிறுத்த பகவானை வேண்டினார்.
ஸ்ரீருத்ரன்- நீயே ப்ரும்ம, பரம் ஜோதி, வாக்குக்கு அதிபதியான ப்ரும்மாவிடம் வாக்காக இருப்பவன். ஆகாயம் போல் பரவி இருப்பவன் என்று சுத்த ஞானிகள் அறிவர். உன் நாபி தான் நபோ என்ற ப்ரும்மாண்டம், அக்னி முகம், ரேதஸ் நீர், திசைகள் ஸ்ருதி, பாதங்களின் விரல்கள் பூமி, சந்திரன் மனஸ், கண்களே ஸூரியன், ஆத்மா நீயே, சமுத்ரம் வயிறு, புஜங்கள் இந்திரன், ரோமங்களே தாவரங்கள், நீரை கொண்டு செல்லும் மேகங்கள் கேசம், புத்தி விரிஞ்சன் , ப்ரஜாபதி ஹ்ருதயம், என்று இருப்பவன், இவைகளின் தர்மம் நீயே, இது தான் உன் லோக ஸ்ருஷ்டியில் உன் ரூபம்.
அளவற்ற ஆற்றல் உடைய உன் அவதாரம் இது. தர்மத்தை காக்கவும், உலகின் நன்மைக்காகவும். நாங்கள் அனைவரும் உன்னை அனுசரித்து நடப்பவர்கள். ஏழு உலகங்களும் சரிவர இயங்க நாங்களும் உன்னுடன் இருக்கிறோம். ஆதி தேவன் நீயே. உன்னையன்றி மற்றொன்று இல்லை. உன் மாயையே குணங்களும், அதனால் தோன்றும் மாற்றங்களும். ஸூரியன் தன் சாயாவுடன் உருவங்களை காட்டியும் மறைப்பதையும் செய்கிறானோ, அதே போல நீ மறைந்தும், நல்ல ஆத்மாக்களுக்கு ப்ரகாசமாகவும் தெரிகிறாய். அதனால் தான் ஜீவன்கள் உலகில் புத்ர தாரர்கள் என்று மோகத்தில் ஆழ்கிறார்கள். தெய்வத்தின் அருள் என்று இந்திரியங்களை அடக்க முடியாதவர்கள் உன்னை சேவிப்பதில்லை. அம்ருத்தை விட்டு விஷத்தை தேர்ந்தெடுத்தவர்கள் அவர்கள்.
அப்படிப்பட்ட உன்னை உலக நன்மைக்காக ஜகதாத்மா, ஒப்புவமையில்லாதவன், சர்வ லோக சுஹ்ருத்- அனைவருக்கும் நண்பனானவன், என்று வணங்குகிறேன். நான் ப்ரும்மா, முனிவர்கள், ஞானிகள், அனைவரும் மனமுவந்து உன்னை அடைக்கலம் அடைகிறோம். இவன் என்னை நம்பி சரணடைந்தவன். என்னால் அபயம் அளிக்கப் பட்டான். இவனை உன் அருளுக்கு பாத்திரமாக ஏற்றுக் கொள். தைத்ய பதி என்றாலும் உன் படைப்பே
ஸ்ரீ பகவான் சொன்னார்: பகவன், உங்கள் விருப்படியே செய்கிறேன். நீங்கள் சொல்வதை சரியென்று அனுமோதிக்கிறேன். இவனை கொல்லவில்லை. வைரோசனி சுதன் ப்ரஹ்லாதனுடைய மகன், ப்ரஹ்லாதனுக்கு வரம் கொடுத்திருக்கிறேன், உன் வம்சத்தினரை நான் வதைக்க மாட்டேன் என்பதாக. இவனுடைய கர்வத்தை அடக்க வேண்டியிருந்தது. ஏராளமான கைகள் நானே கொடுத்தேன். பூமியால் தாங்க முடியாத பாரமாக அவை ஆகி விட்டன. நான்கு புஜங்களுடன் அமரனாக இருப்பான். உன்னை நம்பியவனை நானும் துன்பம் அடைய விட மாட்டேன்.
இப்படி ஸ்ரீக்ருஷ்ணன் அபயம் அளித்து விடுவிக்கவும், பாணாசுரன் தலை வணங்கி, அனிருத்தனை தன் மகளுடன் ரதத்தில் ஏற்றி, ஏராளமான பரிசுகளுடனும் அழைத்து வந்தான். ஸ்ரீ ருத்ரனின் அனுக்ரஹத்துடன், தன் மனவியுடன் வந்து மரியாதைகளுடன் வரவேற்று அழைத்துச் சென்றான்.
ஸ்ரீ க்ருஷ்ண ருத்ரனிடையில் நடந்த யுத்தம் இதை நினைப்பவர்களுக்கு தோல்வி வராமல் காக்கும்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாவது பகுதியில், அனிருத்தானயனம் என்ற அறுபத்து மூன்றாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 53
அத்யாயம்-64
ஒரு சமயம், யது குல குமாரர்கள், ஒரு உல்லாச பயணமாக உபவனத்திற்கு சென்றார்கள். சாம்பன், ப்ரத்யும்னன், சாரு பானு, கதன் முதலானவர்கள். வெகு நேரம் சுற்றியலைந்து, விளையாடி விட்டு, தாகம் நீர் இல்லாத ஒரு குளத்தில் ஒரு பெரிய பல்லி, அத்புதமாக இருந்ததைக் கண்டனர். மலை போன்ற உருவம், அதை வெளிக் கொணர முயற்சித்தனர். ஏற முடியாமல் தவிப்பதாக நினைத்து, தோல் கயிறுகளைக் கொண்டு கட்டி மேலே இழுத்தனர். ஸ்ரீ க்ருஷ்ணனிடம் வந்து அது பற்றிச் சொன்னார்கள்.
பகவான் அங்கு வந்து பார்த்தார். விஸ்வத்தை உள்ளபடி அறிந்தவன் ஆதலால் தனது கையால் எளிதாக தூக்கி விட்டார். உத்தம ஸ்லோகன், அவர் கை பட்டதும் அந்த பல்லி அந்த க்ஷணமே தன் பல்லி உருவத்தை விட்டு சுய ரூபத்தை அடைந்தது. புடமிட்ட பொன் போன்ற நிறமும், சுவர்க லோக வாசிகள் போல ஆடை அலங்காரங்களுமாக மலர் மாலைகள் அணிந்தவனாக எதிரில் நின்றான்.
தெரிந்திருந்தும் முகுந்தன் மற்றவர்கள் அறிய வேண்டுமே என்பதால், யாரப்பா நீ? ரூபத்தை வைத்து நல்ல நிலமையில் இருந்தவன் என்று ஊகிக்கிறேன், என்றார். என்ன தவறு செய்தாய்? இந்த சரீரத்துடன் கிணற்றில் கிடக்க? தெரிந்து கொள்ள ஆவலுடன் கேட்கிறோம், எங்களுக்கு சொல்லலாம் என்றால் சொல்லு, என்றார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அந்த அரசன் ஸ்ரீ க்ருஷ்ணனை தன் கிரீடம் அவர் காலில் பட நமஸ்கரித்து, சொல்லலானான்.
ந்ருக என்ற அந்த அரசன் சொன்னான்: என் பெயர் ந்ருகன். நரேந்திரன், அரசன். இக்ஷ்வாகு தனயன். ப்ரபோ! பெரிய கொடையாளி என்று பெயர் பெற்றேன். அதே வெறியாக தானம் செய்ததை நீங்களும் கேட்டிருக்கலாம். உங்களுக்குத் தெரியாததா, சர்வ பூதங்களுக்கும் ஆத்ம சாக்ஷியாக இருக்கும் நாதன் தாங்கள். ஒரு வேளை வெகு காலம் ஆனதால், கேட்பதால் சொல்கிறேன். எவ்வளவு மணல் பூமியில் உள்ளதோ, எவ்வளவு தாரகைகள் வானின் உள்ளனவோ, மழை தாரைகளின் எண்ணிக்கை எவ்வளவோ, அந்த அளவு பசுக்களை தானம் செய்ய முயன்றேன். பார்த்துப் பார்த்து, நிறைய பால் கொடுக்கும் இளம் தாய் பசுக்கள், நல்ல ரூபமும், கபில நிறமும், அழகிய கொம்புகளும், நியாயமான விலையில் வாங்கியவை, கன்றுகளுடன், வெண் பட்டு உடுத்தி, ஆபரணங்கள் பூட்டி கொடுத்தேன்.
விரதங்கள் மேற்கொண்டு இளைத்த ருத்விக்குகள், தவமும், வேத ஞானமும், ப்ரும்ம வாதிகளான சாதுக்கள், இளைஞர்கள், கல்வி கற்பவர்கள் என்று பார்த்து தானம் செய்தேன். யாகங்கள் செய்து அதன் முடிவில், பூமி, ஹிரண்யம், வாகனங்கள், அச்வ, யானைகள், கன்னிகள், எப்பொழுதும் பயன் படுத்தக் கூடிய மென்மையான படுக்கைகள், ஆடைகள், ரத்னங்கள், வேலையாட்கள், ரதங்கள் இவை அனைத்தும் வேண்டியவர்களுக்கு கொடுத்தேன். இஷ்டம், யக்ஞம், பூர்த்தம் என்ற தர்மங்களையும் செய்தேன்.
ஒரு சமயம் அந்தணருடைய பசு ஒன்று, தவறுதலாக என் பசுக் கூட்டங்களோடு கலந்து விட, அதை அறியாமல், மற்றொருவருக்கு தானம் செய்யும் பொழுது அவைகளுடன் சேர்ந்து தானம் வாங்கியவர் அதை ஓட்டிக் கொண்டு சென்று விட்டார். அவர் அதை ஓட்டிக் கொண்டு போகும் பொழுது அதன் சொந்தக்காரர், ஆ இது என்னுடையது என்றார். தானம் வாங்கியவர், எனக்கு ந்ருக ராஜ கொடுத்தது, ஆகவே என்னுடையது என்று பிடிவாதமாக திருப்பித் தர மறுத்து விட்டார். இருவரும் விவாதம் செய்து கொண்டு என்னிடம் வந்தனர். நீ என்ன தாதா, என் பசுவை அபகரித்தவன் என்று குற்றம் சொன்னதைக் கேட்டு செயலிழந்து அதை போல நிறைய லக்ஷக் கணக்கான பசுக்களைத் தருகிறேன், உரிமையாளரிடம் திருப்பி கொடுத்து விடுங்கள் என்று சமாதானம் செய்ய முயன்றேன். அனுக்ரஹம் செய்யுங்கள். எனக்கு அறியாமல் செய்த பிழை, இதனால் வரும் அபவாத்தை தவிர்க்கவே தாசனாக கேட்கிறேன், ஆணையிடவில்லை என்று மன்றாடியும், அவர் விட்டுக் கொடுக்காமல் ஓட்டிக் கொண்டு போய் விட்டார். உரிமையாளரும் என் பசுவைத் தான் வேண்டினேன், வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லி திரும்பி போய் விட்டார்.
காலம் சென்றது. கடந்து யமதூதர்கள் என்னை யமனிடம் அழைத்துச் சென்றனர். தேவ தேவா, ஜகத்பதே! யமன் என்னை விசாரித்தார். தான, தர்மத்திற்கு எல்லையேயில்லை. அதனால் முதலில் நீ செய்த அசுபமான செயலுக்கு தண்டனையை அனுபவி என்று பூமியில் தள்ளி விட்டார். அன்றிலிருந்து இப்படி பல்லியாக கிணற்றில் ஒட்டிக் கொண்டு தவிக்கிறேன் என்றார்.
கேசவ, நான் தானம் செய்ததில் தவறு என்ன? ப்ரும்மண்யன்- வேத சாஸ்திரங்களை பின் பற்றியவன், உன் தாஸன், இன்னமும் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை, எதனால் நான் இந்த துன்பத்தை ஏற்க நேர்ந்தது. என் கண் எதிரில் தோன்றியுள்ள தாங்கள், பராத்மா, யோகேஸ்வரர் என்று வேத சாஸ்திரங்கள், தரிசனம் என்ற வேதாந்தங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். சாக்ஷாத் அதோக்ஷஜன். மிகுந்த துன்பத்திற்கு ஆளானதால் என் புத்தியே மந்தமாகி விட்டது போல உணர்கிறேன். எனக்கு நல்வழி காட்டு. அபவர்க மார்கத்தைக் காட்டு.
தேவ தேவ ஜகன்னாத! கோவிந்த புருஷோத்தம! நாராயண, ஹ்ருஷீகேச, புண்யஸ்லோக, அச்யுதா! அவ்யயன்- அழிவற்றவனே! எனக்கு அனுமதி கொடுங்கள். தேவகதியை அடைய அனுக்ரஹம் செய்யுங்கள். அங்கும் பக்தர்களான நல்லோர்கள் சேர்க்கையே எனக்கு கிடைக்க வேண்டும். நமஸ்தே! சர்வபாவாய, ப்ரும்மணே அனந்த சக்தயே, க்ருஷ்ணாய, வாசுதேவாய, யோகானாம் பதயே நம: – என்று சொல்லி வணங்கினான். ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, தன் தலையால் அவர் பாதங்களை ஸ்பர்சித்து, அவர் அனுமதித்து, விமானத்தில் ஏறி மற்றவர்கள் பார்த்திருக்கையிலேயே சுவர்க லோகம் சென்றான்.
அதன் பின் கூடியிருந்தவர்களுடன் இதைப் பற்றி பேசும் பொழுது, நல்ல மனிதன், சாஸ்திரங்களை அனுசரித்தவன், தர்மாத்மா, தெரியாமல் நெருப்புத் துண்டை வாயில் போட்டுக் கொண்டவன் போல் கஷ்டம் அனுபவித்திருக்கிறான். ஹாலா ஹலம் கூட விஷம் அல்ல. ப்ரும்மஸ்வம் தான் விஷம். அதற்கு பரிகாரமே இல்லை. உண்டவனை விஷம் தாக்கும். அக்னி நீரால் அடங்கும். ப்ரும்மஸ்வன் என்பவனின் தாபம், அரணி கட்டையின் உள்ளிருந்து மறைந்திருந்து சமயத்தில் வெளிப்படும் அக்னி போன்றது. குலத்தையே தாக்கும் ப்ரும்ம ஞானியிடம் தவறு செய்தால். பத்து தலைமுறை முன்னும் பின்னும் பாதிக்கும்.
ஒரு விதத்தில் அரச குலத்தினர், ராஜ்ய லக்ஷ்மியை அடைந்து மகிழ்ந்து இருப்பவர்கள், வரப் போகும் இன்னல்களை அறிவதில்லை. சுலபமாக மற்றவர்களை மதிப்பதில் தவறி விடுகிறார்கள். ப்ரும்ம வாதியின் கண்ணீர் பூமியில் விழுந்தால், குடும்பஸ்தர்களின், தன் வாழ்வாதாரத்தை இழந்த நல்லவர்கள், இவர்களின் கண்ணீர் மண்ணில் விழுந்தால், அதன் பலன் தான் விபரீதமாக அரசனை நரகத்தில் உழலச் செய்யும். எனவே என்னைச் சேர்ந்தவர்கள் யாராயினும் ப்ரும்ம வாதிகளிடம் அவமரியாதையாக எதையும் செய்து விடாதீர்கள். மிக அதிகமாக சாபமிடுபவர் ஆனாலும் நமஸ்கரித்து விட்டு அவர் வழியில் போக விடுங்கள். எந்த ப்ராம்மணனுக்கும் தண்டனை அளிக்கும் முன் கவனமாக இருங்கள். இந்த அரசன் தெரியாமல் செய்த அபகாரத்திற்கே இப்படி பல்லியாக அனுபவித்திருக்கிறான். இவ்வாறு பேசிக் கொண்டிருந்து விட்டு தன் இருப்பிடம் சென்றார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாம் பாகத்தில், ந்ருக உபாக்யானம் என்ற அறுபத்து நாலாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 44
அத்யாயம்-65
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-65
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு சமயம் பல பத்ரன், தன் பழைய நண்பர்களை சந்திக்க, தன் ரதத்தில், கோகுலம் சென்றார். அங்கு நந்தன், மற்றும் பெரியவர்களை வணங்கி கோப கோபியர்களின் குசலம் விசாரித்தார். நேரில் அவர்களைக் கண்ட பொழுது, அவர்களும் கண்களில் நீர் பெருக, தாசார்ஹனே, நீயும், உன் சகோதரனும் என்றும் எங்களை காக்க வேண்டும் என்றனர். பெரியவர்கள் ஆசீர்வதித்தனர்.
சந்தோஷமாக உணவும், தின் பண்டங்களும் அளித்து உரையாடினர். முதியவர்கள், அவர்கள் வயதொத்த யாதவர்களைப் பற்றி விசாரித்தனர், மற்றவர்கள் தங்கள் வயது உறவினர்களைப் பற்றி விசாரித்தனர், அவரவர்களுக்கு யார் யார் உறவினரோ, பந்துவோ அவர்கள் நலன் விசாரித்து தெரிந்து கொண்டனர். அனைவரும் வந்து சூழ்ந்து அமர்ந்து முகம் மலர கை குலுக்கியோ, அணைத்தோ தங்கள் அன்பை தெரிவித்தபடி சிரம பரிகாரம் செய்து கொண்ட பின் விசாரிக்கலானார்கள்.
கிருஷ்ணன் எப்படி இருக்கிறான்? அவர்கள் உணர்ச்சி மேலிட குரல் தழ தழக்க, எங்களை நினைக்கிறானா?என்றனர். மனைவிகள் புதல்வர்கள், புதல்விகள் யார் யார் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தனர். நல்ல வேளையாக பாபி கம்சன் மடிந்தான். மேலும் எதிரிகள் ஒருவர் இல்லாமல் வதைத்து நம் குலத்தை காத்தான் என்று அறிந்து கொண்டோம். கோபிகளும் சிரிந்துக் கொண்டே அங்கும் நகர பெண்களிடம் இங்கு இருந்தது போலவே இருக்கிறானா? அவனுக்கு பெண்களை பிடிக்குமே என்றனர்.
தாய் தந்தையரை, எங்களை நினைவு வைத்திருக்கிறானா? ஒரு தடவை வந்து தாயார் யசோதாவை பார்த்து போகக் கூடாதா என்று அங்கலாய்த்தனர். அவனைப் பெற்றவர்கள் மகிழ்ந்து இருப்பார்கள். அவர்களிடம் இவன் மரியாதையுடனும், பாசத்துடனும் இருக்கிறானா? திடுமென கடமை என்று எங்களை, இந்த கோகுலத்தை, உறவினர்களை, பிரியமான சகாக்களை விட்டுப் போனான். அவனிடம் நாங்கள் என்னவென்று எதிர்பார்த்து பேசப் போகிறோம். நகரத்து பெண்கள் அறிவுடையவர்கள், நாகரீகமானவர்கள். கோபிகளுடன் இருந்த காலத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு சிரிக்கிறானா? நாங்களும் அவனைப் போலவே, பழைய கதைகளை எண்ணி சிலசமயம் பேசிக் கொள்வோம். காலம் செல்கிறது. என்றனர். இப்படி சிரித்துக் கொண்டே க்ருஷ்ணனுடன் இருந்த காலத்து நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து சொல்லிக் கொண்டே வந்தவர்கள், கண்களில் நீர் பெருகி வழிந்தது.
சங்கர்ஷணன் அந்த சமயத்தில் உடன் இருந்தவனே ஆனதால் மனப் பூர்வமாக ஆறுதலாக பேசினான். வாக்கு வல்லமை உடையவன், ஒருவரையும் விடாமல் மனம் ஆறுதலடையும் படி மதுராவின் நடப்புகளை சொல்லி சமாதானப் படுத்தினான். இரண்டு மாதங்கள் அங்கு தங்கி யமுனை கரையில் நிலவொளியில் நடந்தும் கடந்த காலத்தை நினைத்து மகிழ்ந்தான்.
அந்த சமயம் வருணன் அனுப்பி, வாருணீ என்பவள், மரத்தின் பொந்திலிருந்து கீழே விழுந்தாள், சுகமான ஒரு வாசனை அவளிடமிருந்து வனம் முழுவதும் பரவியது. காற்றில் மிதந்து வந்த சுகந்தம், அதை நோக்கி மற்ற கோப கோபிகளோடு அதைத் தேடிச் சென்றார். (கந்தர்வர்கள் பாடுவது போல இருந்தது. யானைகளின் தலைவன் மாஹேந்திரன் போல யானைக் கூட்டம் வந்தது. துந்துபி வாத்யங்கள் இசையும், பூமாரி பொழிவதும், முனிவர்களும் கந்தர்வர்களும் திடுமென பலராமனை துதிப்பது போலவும், காட்சிகள் தெரிந்தன. கூட்டமாக வந்த சகாக்களுடன் அந்த பெண்ணை அழைத்தார். நிஜமா, தோற்றமா என்று தெரியாத நிலையில் தன் கதையால் யமுனையில் தட்டி கோபத்துடன், பாபியே, நான் அழைத்தும் ஏன் வராமல் இருக்கிறாய், எனவும், யமனையின் தேவதை பயந்தபடி அருகில் வந்தாள். ராமா, ராமா, உன் விக்ரமம் எனக்கு தெரியாது. யார் என்பது தெரியவில்லை என்பதால் தனிமையில் இருக்கும் நான் மறைந்து கொண்டேன் என்றாள். என்னைக் கட்டாதே. பெருந்தன்மையுடையவன் நீ. உன்னை சரணடைகிறேன். என்னை விட்டு விடு என்று வேண்டியவளை, அவள் விரும்பியபடி போக விட்டார். அவளுக்கு நல்ல ஆடை ஆபரணங்களை அளித்தனர். அதன் பின் அனைவரும் யமுனையில் இறங்கி ஆடி பாடி குதூகலித்து மகிழ்ந்தனர்.
இன்றும் யமுனையில் கதையால் தட்டியதால் யமுனை நதியில் வக்ரமான போக்கை காணலாம்.
கோகுல வாசிகள் பலராமனுக்கு நல்ல வஸ்திரங்கள், ஆபரணங்கள் அளித்தனர். காலம் சென்றதே தெரிய வில்லை. சந்தோஷமாக அவர்களுடன் இருந்து விட்டு வ்ரஜ தேசத்திலிருந்து திரும்பி வந்தார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாம் பகுதியில், பல தேவ விஜயம், யமுனாகர்ஷ்ணம் என்ற அறுபத்தைந்தாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-32
அத்யாயம்- 66
ஸ்ரீ சுகர் சொன்னார்: பலராமன் நந்த வ்ரஜ தேசம் போய் இருப்பதையறிந்து, கரூஷாதிபதி, (கரூஷ என ப்ரதேசம்) நான் தான் வாசுதேவன் என்று சொல்லிக் கொண்டு, ஸ்ரீ க்ருஷ்ணனிடம் ஒரு தூதனை அனுப்பினான். நீ, நான் தான், வாசுதேவன், பகவான் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு திரிகிறாய். ஜகத்பதி என்ற அச்யுதன்,வாசுதேவன் நானே. தூதன் துவாரகா வந்தான். சிறுவர்கள் விளையாட்டில் வேஷம் போடுவது போல. சபையில் வந்து நின்று கொண்டு, தான் தூது வந்த விஷயத்தைச் சொன்னான். அரசனின் தூதை வாசித்தான்.
வாசுதேவன், ஜீவன்களுக்கு நன்மை செய்யவே அவதரித்தவன் நான். நான் மட்டுமே. அதனால் பொய்யாக உன்னை அரசனாகவும் அவதரித்த மகா புருஷனாகவும் சொல்லிக் கொள்வதை நிறுத்து. உன் மந்த புத்தியால் என்னைப் போலவே வேஷம் இட்டுக் கொண்டுள்ளாய். அவைகளை களைந்து விட்டு என்னை சரணடை. இல்லையெனின் என்னுடன் மோத வேண்டியிருக்கும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்த அசட்டுப் பேச்சைக் கேட்டு, பௌண்ட்ரகன் என்ற அந்த அரசனின் மந்த புத்தியை நினைத்து உக்ர சேனர் முதலானோர் சபையில் இருந்த பெரியவர்கள் அனைவரும் பலமாக சிரித்து விட்டனர். பகவானோ அந்த தூதனிடம் கேட்டார். எந்த அடையாளங்கள் பற்றிச் சொல்கிறாய்? போய் சொல்லு. அந்த அடையாளங்களை நானே வந்து உன்னிடமிருந்து அகற்றி விடுகிறேன். நாய்கள் போல அலைய விடுகிறேன்.
தூதன் திரும்பிப் போய் அப்படி அப்படியே சொன்னான். க்ருஷ்ணனும் ரதத்தில் ஏறி காசி நகரம் சென்றார். பௌண்ட்ரகனும் அக்ஷௌஹிணீ சேனையுடன் தன் நகரை விட்டு வேகமாக வந்தான். காசி ராஜன் அவன் நண்பன். அவனை உதவிக்கு அழைத்துக் கொண்டான். காசி ராஜனுடைய சேனையும் சேர்ந்து மூன்று அக்ஷௌஹிணீ சேனையாயிற்று. அவனைப் பார்த்த க்ருஷ்ணனே திகைத்தார். தன்னைப் போலவே சங்கம், வாள், கதா, சார்ங்கம், ஸ்ரீவத்ஸம், இவைகளுடன் கௌஸ்துப மணியும், வனமாலையும் தரித்தவனாக அவனும் நின்றான். மஞ்சள் நிற பட்டு வஸ்திரம், கருட த்வஜம், விலை மதிப்பில்லாத முத்து ஆபணரங்கள், மகர குண்டலங்கள் ப்ரகாசிக்க சாக்ஷாத் தன்னைப் போலவே ஆடையலங்காரங்களுடன் எதிரில் இருந்தவனை நாடக மேடையில் நடிக்க வந்தவன் போல இருந்தவனைப் பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்தார்.
ஸூலங்கள், கதைகள் பரிக, சக்தி, இஷ்டி, ப்ராஸ தோமரம் வாட்கள், பட்டசங்கள், பாணங்கள் இவையனைத்தையும் ஸ்ரீ க்ருஷ்ணன் பேரில் அந்த பௌண்ட்ரகன் ப்ரயோகித்தான்.
ஸ்ரீ க்ருஷ்ணன் அந்த பௌண்ட்ரகனின் பலத்தையும், உதவ வந்த காசி ராஜனின் பலத்தையும் நன்றாக பார்த்து யானைகள், ரதங்கள், அஸ்வங்கள், காலாட்படை வீர்கள் அனைத்தையும், கதை, வாள், சக்ரம் இவைகளைக் கொண்டு எதிர்த்தார். யுகாந்தம் போல இருந்தது. ஒரு பக்கம் அக்னி, மறு புறம் ப்ரஜைகள் என்று யுக முடிவில் தான் இருக்கும். அந்த யுத்தம், பூதபதி- மாஹேஸ்வரன், ஒரு சமயம் செய்த யுத்தத்தை ஒத்திருந்தது. ஏதோ விளையாட்டை ரசிப்பது போல கண்டவர்கள் ரசித்தனர். பௌண்ட்ரகனைப் பார்த்து பகவான் சொன்னார். ஹே பௌண்ட்ரக! நீ தூது அனுப்பினாயே, என் அஸ்திரங்களை விடச் சொன்னாயே, இதோ அவைகளை விடுவிக்கிறேன் என்று சொல்லியபடி, என் பெயரையும் தியாகம் செய்கிறேன், யுத்தம் வேண்டாம், என்று சொல்லியபடி தன் கூர்மையான பாணங்களை விட்டார். அவை பௌண்ட்ரகனைத் தாக்கி தலையை துண்டித்தன. ரதத்திலிருந்து இந்திரனின் வஜ்ரத்தால் அடிபட்டு மலை உச்சியிலிருந்து விழுவது போல தடாலென்று விழுந்தான். மற்றொரு ஆயுதம் காசி ராஜனின் தலையை கொய்து கொண்டு காசி நகரில் போட்டது. பத்ம மலரின் மகரந்தத்தை காற்று கொண்டு போவது போல அனாயாசமாக அந்த செயல் நடந்தது.
பொறாமை கொண்டவன், தனக்கு போட்டியாக பகவானை நினைத்தவன் என்றாலும் அனவரதமும் பகவானையே நினைத்து தியானித்து வந்தவன் என்பதால் நல் கதியே அடைந்தான். அவன் சகா காசி ராஜன், தலையை கோட்டை வாசலில் கண்ட ஊர் ஜனங்கள், இது யாருடய தலை எப்படி இங்கு வந்தது என்று மயங்கினர். காசி ராஜனே என்றறிந்த அவன் மனைவி மக்களும், உறவினரும் ஹா ஹா என்று அலறினர். சுதக்ஷிணன் என்ற அவன் மகனை அரசனாக நியமித்து, ஊர் பெரியவர்கள் மந்திரிகள் அவனுக்கு அறிவுரை கூறினர். எதிர்த்து போர் செய்வது இயலாது, மனதை அடக்கி தியானம் செய்து மஹேஸ்வரனை வேண்டிக் கொள். அவர் அருளால் உன் தந்தையை அழித்தவனை நீயும் அடக்கலாம் என்றனர். அதே போல சுதக்ஷிணன் தவம் செய்தான். அவன் தவத்தை மெச்சி பகவான் மாகேஸ்வரர் ப்ரத்யக்ஷமானார். என் தந்தையை கொன்றவனை வதம் செய்ய உபாயம் சொல்லுங்கள் என்று வேண்டியவனைப் பார்த்த அவர் சொன்னார், தக்ஷிண அக்னியை வேண்டிக் கொள், ப்ராம்மணர்களுடன் ருத் விக்குகளைக் கொண்டு அபிசார விதானம் என்ற முறையில், ப்ரமத என்ற பூத கணத்தை அக்னி அளிக்கும் என்றார். அரசனும் அவ்வாறே அபிசார யாகம் செய்து அக்னியை வேண்டி விரதம் இருந்தான். யாக குண்டத்திலிருந்து அக்னி உருவம் எடுத்து எழுந்து வந்தது. பயங்கரமாக, புடமிட்ட பொன் போன்ற நிறத்தில் கேசம் அலை பாய, மீசையும் உடல் ரோமங்களும் குத்திட்டு நிற்க, பெரிய பற்கள், புருவங்கள் தண்டம் போல இருக்க, கடுமையான முகம், நாக்கை நீட்டி கிடைத்ததை விழுங்க காத்திருக்கும் ஒரு வெற்று உருவம், மூன்று சிகைகளுடன் கூடிய யாகத் தீ போலவே காணப் பட்டது. தாளம் தவறாமல் காலடி எடுத்து வைத்து பூமி நடுங்க நடந்து, துவாரகையை நோக்கி ஓடியது. கால் வைத்த இடங்களில் தீ ஜ்வாலை தகித்தது. துவாரகா வாசிகள் நடுங்கினர். காட்டுத் தீ சூழ்ந்த வனத்தின் மிருகங்கள் போல ஓடினர்.
சதுரங்க காய்களை வைத்து அரச சபையில் விளையாடிக் கொண்டிருந்த பகவானை பயத்துடன் சரணடைந்தனர். அவர்கள் சொன்னதைக் கேட்டு, உடனே பர பரப்புடன் எழுந்த பகவான், பயப்படவேண்டாம், இதோ நான் பார்க்கிறேன் என்று சொல்லி யார் என்ன என்று கவனித்து பார்த்தார். அனைத்து ஜீவன்களிலும் உள்ளிருந்து இயக்கும் மாஹேஸ்வரமான க்ருத்யா என்ற நெருப்பு அவள், என்பதையறிந்து, சக்ரத்தை ஆணையிட்டார். ஸுரிய கோடி ப்ரகாசமான அந்த சுதர்சன சக்ரம், ப்ரகாசித்துக் கொண்டு ப்ரளய காலத்து அக்னி ஜ்வாலை போலவே தகித்துக் கொண்டு, மூவுலகையும் ப்ரும்மாண்டத்தையும் ஒளி மயமாக ஆக்கிக் கொண்டு முகுந்தனின் கட்டளையை நிறைவேற்ற கிளம்பியது.
அதற்கு முன் க்ருத்யா என்ற அந்த தீ யால் ஆன பெண் உருவம் தாக்கு பிடிக்க முடியாமல், தான் புறப்பட்ட இடத்திற்கே வந்து வாரணாசியில் யாகம் செய்து கொண்டிருந்த சுதக்ஷிணனையும் அவன் பரிவாரங்கள், ருத்விக்குகள் அனைவரையும் சேர்த்து அழித்தது.
விஷ்ணுவின் சுதர்சன சக்ரம் வாரணாசியை கோபுரங்கள் கோட்டைகளோடு கொட்டில்கள், வீடுகள் என்று ஒன்று விடால் எரித்து விட்டு திரும்பி க்ருஷ்ணரிடம் வந்து ஆணையை நிறைவேற்றி விட்டதாக அறிவித்தது போல அடங்கியது.
இதுவும் உத்தம ஸ்லோகனின் லீலையே. இதைக் கேட்பவர்களும் படிப்பவர்களும் நன்மை அடைவர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாம் பகுதியில், பௌண்ட்ரகாதி வதம் என்ற அறுபத்தாறாவது அத்யாயம்.)
அத்யாயம்- 67
ஸ்ரீ சுகர் சொன்னார்: பரீக்ஷித் அரசன் பலராமனின் பராக்ரமத்தைப் பற்றி மேலும் அறிய விரும்பினான். பலராமனும் அனந்தன், அபரமேயன் என்ற ப்ரபு தான்.
சுகர் தொடர்ந்தார். நரகனுடைய சகா த்விவிதன் என்பவன், என்ற வானரம். சுக்ரீவனுடைய மந்திரியாக இருந்தவன். மைந்தன் என்ற வானரத்தின் பலசாலியான சகோதரன். தன் சகா மடிந்ததால் வருந்தியவன், மனம் போன படி ராஜ்யங்களை அழிக்கலானான். நகரங்கள், க்ராமங்கள், பசுக்கள் தங்கும் கொட்டில்கள், என தென்பட்டதையெல்லாம் தீக்கிரையாக்கினான். சில சமயம் பெரும் கற்களை எடுத்து வீசி, தேசங்களை பொடி பொடியாக்கினான். ஆனர்த என்ற யது வம்ச நகரத்தை மிக அதிகமாக அழிக்க முற்பட்டான். ஸ்ரீ ஹரி அங்கு இருந்தது தான் காரணம்.
ஒரு சமயம் சமுத்திரத்தில் நின்று கொண்டு இரண்டு கைகளையும் குவித்து அந்த ஜலத்தை எடுத்து ஊர்களின் மேல் வீசி மூழ்கச் செய்தான். மகரிஷிகள் இருந்த ஆசிரமங்களில் இருந்த மரங்களை உடைத்தும் அடியோடு பெயர்த்தும், அவர்கள் யாகம் செய்யும் இடங்களில் சிறு நீர் கழிப்பது போன்ற அல்ப செயல்களால் தூஷித்தான். யாகம் செய்யும் அக்னியில் அழுக்கான பொருட்களை போடுவான். மனிதர்கள், ஆண், பெண் அனைவரையும் தூக்கிக் கொண்டு போய் குகையில் அடைத்தான். அல்லது மலைப் பாறைகளின் அடியில் இருக்க வைத்தான். இப்படி ஜனங்களை, குல ஸ்த்ரீகளை அவமதித்தும், வருத்தியும் மகிழ்ந்தவன், ஏதோ லலிதமான கீதம் கேட்டது என்று ரைவதக மலை சென்றான்.
அங்கு யது பதியான பலராமன், பல விதமான அழகிய மாலைகளை அணிந்து, சர்வாங்கமும் சுந்தரனாக, காட்சிக்கு இனியவனாக. பல பெண்களுடன், பாடிக் கொண்டும், வாருணீ என்ற மதுவை குடித்துக் கொண்டும், வானரத்துக்கு நேர் எதிராக இருந்தான். துஷ்டனான அந்த சாகா மிருகம்- வானரம், மரங்களில் ஏறி கிளைகளை த்வம்சம் செய்து, கில கில என்று சத்தமிட்டு தான் வந்திருப்பதை தெரிவித்துக் கொண்டது. கபியின் துஷ்டத்தனம், அதன் கர்வம் இவைகளைப் பார்த்து, பெண்கள் இந்த வானரங்களின் குணமே அது என்று சிரித்தனர். பலதேவன் அருகில் இருந்ததால் பயமின்றி இருந்தனர். அதன் அசட்டு அங்க சேஷ்டைகளை யாரும் பொருட்டாக நினைக்கவில்லை. பலராமன் தன் கையில் இருந்த கரண்டியால் ஓர் அடி கொடுத்தார். அதை பிடுங்கிக் கொண்டு மதிரா கலசத்தையும் தூக்கிக் கொண்டு ஹி ஹி என்று இளித்தபடி சிரித்துக் கொண்டே கலசத்தை உடைத்து, அவர்கள் ஆடைகளை பற்றி இழுத்தது. பலராமன் இந்த வினயம் இல்லாத செயலையும், பல தேசங்களை நாசம் செய்ததையும் அறிந்து கோபத்துடன் முசலம் என்ற தன் ஆயுதத்தையும், ஹலம் என்ற தன் ஆயுதத்தையும் எடுத்து, துஷ்ட வானரத்துக்கு பாடம் கற்பிக்கவே நினைத்தார். அதுவோ, சால மரத்தை அடியோடு பிடுங்கி அடிக்கலாயிற்று. பலமாக சங்கர்ஷணனின் தலையில் போட்டது. அதை அப்படியே பிடுங்கி தன் கையில் வைத்துக் கொண்டு, சுனந்தம் என்ற தன் வாளால் அதை அடித்தார். ரத்தம் பெருகி வழிய மற்றொரு பாறையை எடுத்து அடிக்கலாயிற்று. அது கையில் எடுத்த அடி மரங்களோ, பாறைகளோ நூற்றுக் கணக்காக பிளந்து விழுந்தன. வனத்தில் இனி மரமே மீதியில்லை என்பது போல ஆயிற்று. தன் முஷ்டியால் ரோஹிணி புத்ரனை மார்பில் அடித்தது. இனியும் விடக் கூடாது என்று நினைத்து யாதவேந்திரன் பலராமன். முசலத்தால் அதன் தோள் பட்டையில் ஒரு அடி கொடுக்க அது ரத்த விளாறாக கீழே விழுந்தது.
அந்த வானரம் வேகமாக கீழே விழுந்த சப்தம் மலைகளை மற்ற தாவரங்களோடு அசைத்து விட்டது. பெரும் காற்று நடுக் கடலில் பாய் மரத்தை அலைக்கழிப்பது போல இருந்தது. ஜய சப்தமும், நம சப்தமும் வானளாவி எழுந்தன. சாது சாது என தேவர்களும் சித்த முனீந்திரர்களும் பாராட்டினர். பூ மாரி பொழிந்தனர். உலகை துன் புறுத்திக் கொண்டிருந்த த்விவிதனை வதைத்து பலராமன் பலரும் பாராட்ட, தன் நகரம் வந்து சேர்ந்தார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாம் பகுதியில். த்விவித வதம் என்ற அறுபத்தேழாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 28
அத்யாயம்- 68
ஸ்ரீ சுகர் சொன்னார்: அரசனே! துர்யோதனனுடைய மகளுக்கு சுயம்வரம் நடந்தது. அதில் ஜாம்பவதியின் மகனான சாம்பன் அவளை அபகரித்து வந்தான். கௌரவர்கள் வெகுண்டனர். இந்த வாலிபன் வினயம் இல்லாதவன். எங்கள் மகள் அவனை விரும்பவே இல்லை. அவளை பலாத்காரமாக தூக்கிக் கொண்டு போகிறான் என்றனர். இவனை பிடித்து கட்டுங்கள். வ்ருஷ்ணியர்கள் என்ன செய்வார்கள்? நம் ஆட்சியில் நமக்கு அடங்கி கப்பம் கட்டும் நிலையில் உள்ளவர்கள் தானே. மகன் கட்டுண்டதை கேட்டு, ஒரு வேளை வ்ருஷ்ணி வம்சத்தினர் வந்தால், அவர்கள் கர்வத்தை அடக்குவோம். அதன் பின் அவர்களுக்கு ராஜ்யம் என்பது ஏது? நாம் அளித்த கொடையில் வாழ்பவர்கள். இவ்வாறு கர்ணன், சலன், பூரியஜஸ், அக்ஞகேது, சுயோதனன், சாம்பனை கட்ட முயன்றனர். குரு குல மூத்தோரும் அனுமதித்தனர்.
கௌரவர்கள் பின் தொடருவதைப் பார்த்த சாம்பன், தன் வில்லை எடுத்துக் கொண்டு பதிலடி கொடுக்கத் தயாரானான். இதை எதிர் பாராத கௌரவர்கள், அவனுடன் போரிட்டு ஜயிக்கலாம் என்ற எண்ணத்துடன் வந்து நில், நில் என்று கத்தியபடி பின்னால் வந்தனர். கர்ணன் முதலானோர் தங்கள் வில்லை எடுத்து பாணங்களை அவன் பேரில் எய்தினர். இதனால் பாதிக்கப் படாத சாம்பன், சிறுவனின் விளையாட்டு புத்தியால், தன் பலத்தில் நம்பிக்கையுமாக, சிங்கம் சிறு விலங்குகளை வேட்டியாடுவது போல தன் வில்லை எடுத்து அம்புகளை தொடுத்தான். ஒவ்வொருவர் பேரிலும் அந்த அம்பு தைத்தது. கர்ணன், மற்றும் உடன் வந்த ஆறு மகாரதிகள் எதிர் தரப்பில் இருந்தனர்.
நான்கு விதமான வாகனங்களில் வந்தவர்கள், அவன் ரதத்தின் மேல் அவர்களுடைய அம்புகளால் அடித்து, வீழ்த்தி ரதம் இன்றி சாரதியும் இன்றி தவிக்கும் படி செய்தனர். ஒருவர் குதிரைகளை அடித்தார். அவன் சராசனம் இன்னொருவர் கையில் வீழ்ந்தது. அவனை கட்டி, தங்கள் மகளையும் அழைத்துக் கொண்டு தங்கள் ஊர் திரும்பினர்.
நாரதர் மூலம் இதைக் கேள்விப் பட்ட உக்ர சேனர் ஆணையிட கௌரவர்களுடன் ப்ரதியுத்தம் செய்ய சேனை வீரர்கள் தயாராயினர். தயாராக நின்ற வ்ருஷ்ணி வம்சத்து வீரர்களை சமாதானம் செய்து விட்டு, பலராமர், நமக்குள் சண்டையிடலாகாது என்று சொல்லி, தான் மட்டும் தன் ரதத்தில் ஏறி ஹஸ்தின புரம் சென்றார். உடன் குல மூதோர்கள், அந்தணர்கள், என்று பலரையும் அழைத்துக் கொண்டு கஜாஹ்வயம் என்ற அவர்கள் நகரத்திற்குச் சென்றார். ஊருக்கு வெளியிலேயே உபவனத்தில் இருந்து கொண்டு உத்தவரை தூது அனுப்பினார். அவரும் அம்பிகா புத்ரன்- த்ருதராஷ்ட்ரன்- பீஷ்மர், த்ரோணர், பால்ஹிகர், துர்யோதனன், இவர்களை முறைப்படி வணங்கி பலராமர் வந்திருப்பதை தெரிவித்தார்.
பலராமன் வந்திருப்பதையறிந்து சந்தோஷமாக அவரை வரவேற்று, உபசாரம் செய்து மங்களகரமாக அழைத்துச் சென்றனர். அவருடைய பெருமையை அறிந்தவர்கள் ஆனதால், தலை வணங்கி அர்க்யம் முதலியவைகளை கொடுத்து, பந்துக்களின் குசலம் விசாரித்தனர். பரஸ்பரம் குசலம் விசாரித்து, சுமுகமாக பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் உக்ர சேனர் படை திரட்டிக் கொண்டிருக்கிறார். நமக்குள் எதற்கு போர். சீக்கிரம் ஒரு முடிவுக்கு வருவோம். உங்கள் பலம் அதிகம். அவரால் தாக்கு பிடிக்க முடியாது என்று தெரிந்தே போர் புரிய முயன்றால் உங்களுக்கு என்ன பெருமை. அதனால் இரு பக்கத்திலும் ஏற்படும் நஷ்டம் ஒரு புறம் இருக்க, ஜயித்தாலும் உறவினர்களுக்கிடையில் உள்ள நமது சினேகமும் பாதிக்கப் படும்.
வீரம், சௌர்யம், பலம், உயர்ந்த ஆத்ம சக்தி இவைகளை உடையவர் பலராமர், அதனால் அவரது சொல்லை மதித்தனர். இருந்தாலும், ஆஹா, விசித்திரம், நீங்கள் சொல்லும் சமாதானம். அவர் தலையில் முகுடம் தங்குவதே எங்கள் தயவால் என்பதை மறந்து விட்டார் போலும். யது வம்சம் என்ற ஒரே பந்தம் தான், எங்களுக்கு சரியாசனம் கொடுத்தோம், எங்களுக்கு சமமான அரியணையில் அமரச் செய்தோம், என்பதை மறந்து விட்டார்கள் போலும். எங்கள் தயவால், கிரீடம், சாமர வ்யஜனங்கள், சங்கம், வெண் குடை, ஆசனம், சயனாசனம், என்று அனுபவிக்கிறார்கள். போதும், இந்த யது வம்சத்தினரின் அரச போக ஆசைகள், சற்றும் லஜ்ஜையின்றி, இன்று எங்களுடனேயே மோத தயாராகி விட்டார்களோ. இந்திரன் கூட குரு வம்சத்தினரின், பீஷ்ம, த்ரோண, அர்ஜுனர் முதலானோர்கள் சம்பந்தப் பட்டது என்றால் அதில் தலையிடாமல் விலகி விடுவார்கள். எப்படி சிங்கம், தானே வேட்டையாடாமல் மற்ற மிருகங்கள் அடித்ததை ஏற்காதோ, அது போல.
ஸ்ரீ சுகர் சொன்னார்: குல பிறப்பு, பந்துக்கள் சகாயம், செல்வம் இவைகளால் மதம் கொண்டவர்கள். பலராமரிடம் மரியாதைக் குறைவாக பேசி விட்டு ஊருக்குள் சென்று விட்டனர். பலராமன் அவர்கள் தன்னிடம் தகாத வார்த்தைகளை சொன்னதை கேட்டு, பலமாக சிரித்தார். செல்வ மதம் கொண்டவர்கள், இவர்களிடம் சாந்தமாக பேசுவது எடுபடாது. தண்டம் தான் இவர்களுக்கு புரியும். பசுக்களுக்கு லாடம் அடிப்பது போல. யாதவ சைன்யம் கிளம்புவதையும், ஸ்ரீ க்ருஷ்ணன் கோபித்து எதுவும் செய்யும் முன் தடுக்க நினைத்தேன். மந்த புத்தி உடையவர்கள், கலஹமே இவர்கள் பொழுது போக்கு, துஷ்டர்கள், என்னை அவமதித்து தகாத வார்த்தைகளைச் சொன்னார்கள். உக்ர சேனன், போஜ, வ்ருஷ்ணி,அந்தக என்ற யாதவ பிரிவுகள் அனைத்திற்கும் அரசன். இந்திரன் முதலான லோக பாலர்களும் அனுமதித்த அரசு. சுதர்மா ஆக்ரமித்த சமயம், அவனுடன் போரிட்டு, பாரஜாத மரத்தை தேவராஜன் கொண்டுவந்து கொடுத்தான், அவன் தானே அரியாசனத்தில் இருப்பவன். சாக்ஷாத் ஸ்ரீ தேவி பூஜிக்கும் பாதங்கள் அவனுடையவை. அவள் அகிலேஸ்வரி. ஸ்ரீயின் பதி அவன். சாதாரண மனிதர்கள் இகழ்ந்து சொல்லும் சொல்லுக்கு அருகதை உடையவன் அல்ல.
அரச பதவியை அவனுக்கு கொடுத்தார்களாமா, என்ன அறியாமை. எவருடைய பாதங்களில் லோக பாலர்களும் தேவராஜனும் வணங்கி நிற்கிறார்களோ, ப்ரும்மா, பவன், நான் உட்பட எந்த பகவானுடைய அம்சமாக இயங்குகிறோமோ, ஸ்ரீ தேவியுடன் அவனை வணங்குகிறோமோ, அவருக்கு துண்டு பூமியை கொடுத்தார்களாம். வ்ருஷ்ணி குலத்தவர்கள் இவர்களுக்கு அடங்கியவர்களாம். குரு வம்சத்தினர் தான் தலையாம். அஹோ, ஐஸ்வர்ய மதம் தலைக்கேறி உள்ளது. இவர்கள் சொற்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை காட்ட வேண்டும். இன்று கௌரவர்களே இல்லாமல் ஆக்க என்னால் முடியும். ஹலம் என்ற தன் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு மூவுலகையும் தகித்து விடும் அளவு கோபம் கொண்டவராக கிளம்பியவர், தன் கதையின் நுனியால் கஜாஹ்வயம் என்ற நகரத்தின் கோட்டையை தகர்த்து, கங்கை நதியோடு சேர்த்து சுழற்றி அடித்தார்.
நகரம் கங்கையின் நீரில் மிதந்தது. அப்படி ஆக்ரமிக்க கூடியவன் எவன் என்று பார்த்தவர்கள் பலராமரைக் கண்டு பயந்து, கை கூப்பி அஞ்சலி செய்தவர்களாக, வந்து ராம, ராம, நீ அகில உலகுக்கும் ஆதாரமானவன் அல்லவா. உன் ப்ரபாவம் தெரியாமல் பேசி விட்டோம். எங்களுடைய அறியாமை, மன்னித்து விடு, உன்னை சரணடைகிறோம். இதோ உங்கள் சாம்பன், எங்கள் மகள் லக்ஷ்மணா, என்று சமர்ப்பித்தனர்.
உன் லீலையால் பூமண்டலத்தை தாங்குகிறாய். ஆயிரம் தலைகளுடன் செயல் படுபடும் அனந்தன் நீயே. யுக முடிவு வரும் சமயம் உன்னுள் அகில உலகங்களும் அடைக்கலம் பெறுகின்றன. சேஷ படுக்கையில் தூங்குபவனும் நீயே. ஸ்திதி- உலகை காப்பதும் உன் செயலே. உன் பெரும் கோபம் எங்களை தகித்து விட அனுமதிக்காதே. மனித உலகமே அழிந்து விடும். நமஸ்தே! சர்வ பூதாத்மன்!, சர்வ சக்தி தரன் நீயே. அவ்யயன். விஸ்வ கர்த்தா உனக்கு நமஸ்காரம். உன்னை சரணடைகிறோம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு உடல் நடுங்க, வணங்கி வேண்டிக் கொண்டவர்களை பார்த்து, பயப்படாதீர்கள் என்று சொல்லி அபயம் கொடுத்தார். துரியோதனன் பரிசு பொருளாக, மகளுக்கு சீதனமாக யானைகள், குதிரைகள் என்று எண்ணிக்கையில்லாமல் கொடுத்தான். ரதங்கள், பொன் மயமாக, சூரிய கிரணங்கள் போல பிரகாசமானவைகள், தாசிகள், என்று தன் மகளிடம் இருந்த பாசத்தால் கொடுத்தான்.
அந்த செல்வத்தோடும் மணமக்களுடனும் பலராமர் ஊருக்கு வந்தார். சபையில் குரு வம்சத்தினரின் செயல்களைப் பற்றிச் சொன்னார். கங்கையின் போக்கு அந்த இடத்தில் இழு பட்டது போல இன்றளவும் காணலாம்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாம் பாகத்தில், ஹாஸ்தின புரகர்ஷ்ண ரூப, சங்கர்ஷண விஜயம் என்ற அறுபத்தெட்டாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-54
அத்யாயம்- 69
ஸ்ரீ சுகர் சொன்னார்: நரகன் மடிந்தான், அதன் பின் அவன் சிறையிட்டிருந்த பெண்கள் அனைவரையும் க்ருஷ்ணன் ஒருவனே மணந்தார் என்ற செய்தியை கேட்டு நாரதர், அவரை தரிசிக்க வந்தார்.
ஆச்சர்யம். ஒருவனாக இவ்வளவு பெண்களுடன் எப்படி வாழ்கிறாய் என்று வியந்தவர், நேரில் காண துவாரகா வந்தார். மலர்கள் நிறைந்த உபவனங்கள், ஓய்வெடுக்கும் இடங்கள், மலர்ந்த தாமரைகளுக்கிடையில் ஹம்ஸங்களும், சாரஸ பக்ஷிகளும் தென்பட்டன. விலையுயர்ந்த ரத்னங்களும், ஸ்படிகமும் வீடுகளின் அலங்காரத்துக்கு பயன்படுத்த பட்டிருந்தன. அழகிய ரத வீதிகள், கடை வீதிகள், மது சாலா என்பவைகள், பதாகைகளும், மலர் மாலைகளும் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்தன. அந்த:புரம் வரை சென்றார். தன் திறமை முழுவதையும் காட்டி த்வஷ்டா கட்டியிருந்த அழகிய மாளிகை அது. ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்துக் கொண்டே நடந்தார். பணிப் பெண்கள் கூட அழகிய குண்டலங்களும் ஆடை ஆபரணங்களையும் அணிந்து கொண்டிருந்தனர்.
அவரைக் கண்டவுடன் ஸ்ரீ ஹரி எழுந்து வந்து வணங்கி உபசரித்தார், தனக்கு அருகில் அழகிய ஆசனத்தில் அமரச் செய்தார். அதிதி சத்காரம் முறைப்படி செய்தார். பாதங்களின் நீர் விட்டு, அதை தன் தலையில் தெளித்துக் கொண்டார். ஜகத்குரு என்றாலும் ப்ரும்மண்ய தேவர் என்று நாரதரை உபசரித்தார். பழைய கதைகளை சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, பகவான் வினவினார், ‘ப்ரபோ! தங்களுக்கு என்ன தேவை. நான் என்ன செய்ய வேண்டும்’ என்றார்.
நாரதர் சொன்னார்: நாராயணன், நரசகன் நீ. அதனால் இது பெரிய அத்புதம் இல்லை. உலக நாயகன், அனைவரிடமும் சம மாக நட்பு செலுத்துபவன். உன்னுடைய அவதார காரணமே அது தானே. துஷ்டர்களை அடக்குவதும், சஜ்ஜனங்களை காப்பதும் என்று அறிவோம். உன் பாதங்களே தரிசிக்கும் ஜனங்களுக்கு அபவர்கம் என்பதை அளிக்க வல்லது. சம்சாரம் என்ற கிணற்றில் விழுந்தவர்களை கை தூக்கி விடுபவன். அதே த்யானத்துடன் தான் நான் உலகில் சஞ்சரிக்கிறேன். உன் யோக மாயையை அறிய விரும்புகிறேன் என்றார்.
தானும் க்ருஷ்ண பத்னியாக வேஷம் தரித்து, ஒவ்வொருவரையும் தரிசித்தார். அங்கும் க்ருஷ்ணன், உத்தவருடன் இருக்க, அந்த வீட்டுப் பெண், க்ருஷ்ண பத்னி அவர்களுக்கு உபசாரம் செய்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு வீட்டிலும் ஸ்ரீ க்ருஷ்ணன், குழந்தைகளை கொஞ்சிய படியோ, பேசிக் கொண்டோ இருப்பதைப் பார்த்தார், சில விடுகளில் பூஜை செய்து கொண்டோ, அக்னி காரியங்களை செய்து கொண்டோ, சாதாரண இல்லறத்தான் போலவும், பாடகர்களுடன் தானும் பாடிக் கொண்டோ, குதிரைகள், யானைகளுடன் அல்லது ரதத்தில் பலராமனுடன் செல்பவனாகவும், மந்த்ராலோசனை செய்பவனாக, உத்தவர் முதலானோர்களுடன் ஏதோ விவாதம் செய்பவனாக, ஜலக்ரீடை செய்பவனாக, சிலர் வீடுகளில் இதிகாச புராணங்களை படித்து சொல்பவர்களுக்கு சன்மானம் செய்பவனாக, ஹாஸ்ய கதைகளைச் சொல்லி தானும் சிரிப்பவனாக, தர்ம, அர்த்த காமங்களை எடுத்துரைப்பவனாக, சில சமயம் தனியாக அந்த வீட்டில் அல்லது பலராமனுடன் என்று எங்கும் வியாபித்து இருந்தவனைப் பார்த்து திகைத்தார். தன் மனைவி மக்களுடன், பெண் குழந்தைகள், புத்திரர்கள் இவர்களுடன் மஹோத்ஸவம் காண புறப்பட்டுக் கொண்டிருந்தவனாக, தேவ பூஜைகள் அல்லது யாகங்களில் ஈடுபட்டவனாக, சில இடங்களில் பூர்த்தம் என்ற சமூக சேவைகளைச் செய்பவனாகவும், ஓய்வு எடுக்கும் மடங்களும், கிணறுகள் வெட்டுபவர்களுடன் தானும் வேலை செய்பவனாகவும் கண்டார். சில சமயம் வேட்டையாடச் சென்றவன், சிந்து தேசத்து குதிரை மேல் ஏறி மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு யாதவ கூட்டம் உடன் வர செல்வதைப் பார்த்தார். அந்த: புரம் மட்டுமல்ல, சகல இடங்களிலும் அந்தந்த சமயத்துக்கு தகுந்த வேஷ பூஷணங்கள், மனிதனாக பிறந்தவன் தன் வாழ்நாளை கழிக்கும் அனைத்து தொழில்களையும் செய்து காட்டுபவனாக அறிந்து வியந்தார்.
நாரதர் சிரித்துக் கொண்டே ஹ்ருஷீகேசனைப் பார்த்து, யோக மாயாவினால் மனிதனுக்கு நல்வழி காட்டி விட்டாய். உன் யோக மாயா காணக் கிடைக்காதது. யோகேஸ்வராத்மன்! உன் பாத சேவையால் எனக்கு கிடைத்தது. அனுமதி கொடுங்கள். உலகங்களில் உங்கள் புகழை பரப்பும் என் வேலை, சுற்றிக் கொண்டே புவன பாவனி- உலகையே பவித்ரமாக்கும் உங்கள் செயல்களை பாடிக் கொண்டே செல்வேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: சத்தான இல்லற தர்மம், எப்படி வாழ வேண்டும் என்று காட்டுவது போல, மனைவி, குழந்தைகளை அரவணைத்துக் கொண்டு போகும் பொழுதே, சமூகத்துக்கான நன்மைகளையும் செய்பவனாக யாரையும் ஒதுக்காமலும், எவரையும் உயர்த்தி புகழாமலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சந்தம்- நல்ல மனிதனைக் கண்டதாக நாரதர் பரவசத்துடன் சொல்லி விடை பெற்றார். அனந்த வீர்யனான க்ருஷ்ணன், யோக மாயாவின் பெரும் தோற்றம், திரும்பத் திரும்ப மனதில் நினைத்து, மற்ற ரிஷிகளிடம் சொல்லி சொல்லி தன் வியப்பையும், குதூகலத்தையும் பகிர்ந்து கொண்டார்.
இவ்வாறு அர்த்த, காம, தர்மங்களை தானே ஸ்ரத்தையுடன் அனுசரித்து வழி காட்டியது போல இல்லறத்தை வளமாக ஆக்கி உபதேசித்தானோ என்று நினைத்தபடி திருப்தியுடன் நாரதர் சென்றார். மனிதனாக பிறந்த இந்த அவதாரத்தில், நாராயணன், அகில உலகின் நன்மைக்காகவும், தன் சக்தியை பதினாறு ஆயிரம் பெண்களை மணந்தது மட்டுமல்லாமல் அவர்களுடன் இனிமையாக வாழ்ந்தும் காட்டியதை பார்த்த பின் தான் சந்தேகப்பட்டதற்காக வெட்கப் பட்டார். நினைத்து நினைத்து அதைக் காண வழி செய்தவனின் நட்பு,நகைப்பு, கண் பார்வைகளால் சொன்ன செய்திகள் என்று ஒவ்வொன்றாக நினைத்து மனதினுள் மகிழ்ந்தார்.
உலகில் என்ன என்ன தொழில்கள், வாழ்வாதாரங்கள் உள்ளனவோ, செயல்கள், பலவிதமான விஷயங்கள், அனைத்தையும் ஸ்ரீ ஹரி செய்து காட்டினார். இதை கேட்டு புரிந்து கொண்டோ, படித்தோ, பாடியோ அனுமோதிப்பவர்களுக்கு ஹரி பக்தி தானே வரும். அபவர்கம் என்ற பரலோகம் அழைத்துச் செல்லும்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பகுதியில், ஸ்ரீ க்ருஷ்ணனின் கார்ஹஸ்த்யம்- இல்லற வாழ்க்கை- என்ற அறுபத்தொன்பதாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-45
அத்யாயம்-70
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு நாள், விடியற்காலையில், கோழிகள் கூவியதும் எழுந்த க்ருஷ்ண பத்னி வைதர்பி, –ருக்மிணி, தூக்கம் கலைந்தாலும் எழுந்திருக்க மனமின்றி, அரண்மணை பாடகர்கள் பள்ளியெழுச்சி பாடுவதைக் கேட்டபடி சுகமான மந்தார வனத்திலிருந்து வந்த காற்றை ரசித்தபடி இருந்தாள். அதற்கு முன்பே ப்ரும்ம முஹூர்தத்தில் எழுந்து தண்ணீரில் கை கால்களை கழுவிக் கொண்டு மாதவன், ப்ரசன்னமாக காணப் பட்டார்.
தானே ஜோதி ஸ்வரூபமாக உள்ளவன், அனந்தனான அழிவற்றவன், தன் திடமான கொள்கைகளுடன் கல்மஷம் என்பதே இல்லாமல் சுத்த சத்வமாக இருப்பவன், ப்ரும்மா எனப்படுபவன், உலகின் உத்பத்தி, இருப்பு, நாசம் என்ற தொழில்களைச் செய்பவன், அதற்கான சக்தியும், உணர்வுகளை- கையாளவும் தெரிந்தவன்,
நீரில் மூழ்கி எழுந்து விதி முறைப்படி, வசதியான ஆடைகளை அணிந்து கொண்டு, சந்த்யா கால ஜப தபங்களை செய்து விட்டு, நித்யம் செய்ய வேண்டிய ஔபாசனம் போன்ற அக்னி காரியத்தையும் முடித்து, ப்ரும்ம ஜபம் என்பதை செய்து கொண்டிருந்தவனை கண்டாள்.
ஸூரிய நமஸ்காரம் செய்து, தன்னுடையதே ஆன கலைகள், தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள், முதியவர்கள், அந்தணர்கள் அனைவரையும் அர்ச்சித்து, ஆத்மவான், பசுக்களை காணச் சென்றான். பொன் நிற கொம்புகளுடன் பசுக்கள், சாதுவான ஜீவன்கள், மடி நிறைந்து பால் கொடுக்கும் கன்றுகளுடன் கூடிய பசுக்கள், சினையை தாங்கி நின்ற பசுக்கள், அனைத்தும் ஆடைகள் அணிவிக்கப் பட்டு மங்களகரமாக இருந்தன. அவைகளை தடவிக் கொடுத்து சிலவற்றை அந்தணர்களுக்கு தக்ஷிணையுடன் பட்டுத் துணிகள், மான் தோல்கள், எள், இவற்றுடன் தானமாக கொடுத்தார். தினம் தினம் இவ்வாறு கொடுப்பதும் வழக்கமாகி விட்டது.
இது போல கோ-பசு, விப்ர-அந்தணன், தேவதா, முதியவர்கள், குரு, பஞ்ச பூதங்கள் அனைத்திற்கும் தினம் செய்ய வேண்டிய உபசாரங்களை செய்தும், அந்த தினத்தை துவங்குகிறார்.
மனிதனாக தன்னை அலங்கரித்துக் கொண்டார். அழகிய ஆடைகள், ஆபரணங்களாலும், தனக்கு விருப்பமான வாசனை திரவியங்களை பூசிக் கொண்டும், மலர் மாலைகளை அணிந்து கொண்டும், ஆஜ்யம்,ஆதர்சம் என்பவைகளுடன், சர்வ வர்ணங்களையும் சேர்ந்த புர வாசிகள், அந்த:புர பணிகளை செய்பவர்கள் உட்பட, தேவையானதை கொடுத்தும், மகிழ்வித்து தானும் மகிழ்ந்தார்.
அவரைக் காண அறிஞர்கள் வந்தனர். அவர்களுடன் உரையாடி, தாம்பூலம், மலர்கள், வாசனை திரவியங்கள் என்று அளித்து அனுப்பி விட்டு, தன் நண்பர்களுடனும், மனைவி குழந்தைகளுடனும் நேரம் செலவழித்தார். அதற்குள் சாரதி ரதத்தை தயார் செய்து அழகிய நீண்ட கழுத்து கொண்ட குதிரைகளை பூட்டி, தயாராக வந்து விட்டதை அறிவித்தான். சாரதி கை கொடுத்து உதவ ரதத்தில் ஏறி, சாத்யகி, உத்தவர் இருவரும் உடன் வந்தனர்.
அந்த:புர ஸ்த்ரீகள் கையசைத்து விடை கொடுக்க சிரித்தபடியே ஊர் சுற்ற கிளம்பினார். சுதர்மா என்ற அரச சபை. வ்ருஷ்ணி குலத்தினர் நிறைந்திருந்தனர். சபையில் அந்தந்த ஆசனங்களில் அதற்கான அரச பதவியினர் அமர்ந்திருந்தனர் தன்னுடைய அரியாசனத்தில் அமர்ந்த பின், தன் தேக காந்தியால் சபையை அலங்கரித்தவர் நர சிங்கம் போன்ற பலசாலிகளான யதுகுல வீரர்கள் நடுவே, தாரா கணங்களுடன் தெரியும் சந்திரன் போல விளங்கினார்.
பல சிற்றரசர்கள் வந்து வணங்கினர். நாட்யம் ஆடுபவன் தன் மாணவர்களுடன் வந்து நடனம், தாண்டவம் என்ற நாட்டிய கலைகளை தனித் தனியாக நிகழ்த்தினார். ம்ருதங்கமும், வீணா வாத்யமும், முரசமும், வேணு, தாள வாத்யங்களும், பல தார,மத்யம,கீழ் சுருதிகளில் ஒருங்கிணைந்து சுஸ்வரமாக ஒலித்தது. சூதர்கள், மாகத, வந்திகள் என்ற பாடல்களைப் பாடுபவர்கள் பாடியும், ஆடியும் சபையில் அனைவரும் மனம் மகிழச் செய்தனர். அறிஞர்கள் சிலர் புகழ் பெற்ற முந்தைய அரசர்களின் கதையை சொன்னார்கள்.
அந்த சமயம் அது வரை கண்டிராத ஒரு புதியவன் வந்து அரச சபையில், காவலர்கள் மூலமாக சொல்லியனுப்பி, அனுமதி பெற்று உள்ளே அழைத்து வரப் பெற்றான்.
ஸ்ரீ க்ருஷ்ணரை வணங்கி, சபையினரையும் வணங்கி, தன் துக்கம் என்ன என்பதை தெரிவித்தான். ஜராசந்தனால் தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் படும் பாட்டைச் சொன்னான். ஜராசந்தன் திக் விஜயம் செய்யும் சமயம் வந்து வணங்கி மரியாதை செய்யாத மனிதர்களை கட்டி காடுகளில் தனித்து இருக்கச் செய்தான். க்ருஷ்ண க்ருஷ்ணா! அப்ரமேயாத்மன்! அண்டியவர்களின் பயத்தை போக்கும் உன்னை சரணடைகிறோம். பயத்தால் ஒவொருவரும் ஒவ்வொரு விதமாக தண்டிக்கப் படுகிறோம். என்றான்.
உலகில் அவதரித்த காரணமே நல்லவர்களை காக்கவும், துஷ்டர்களை அழிக்கவுமே என்பது அறிவோம்.உங்களுக்கு இது வரை இந்த விஷயம் தெரிய வராமல் இருந்திருந்தால், சாதாரண பொது மக்கள் என்ன செய்வார்கள்? அரச போகம் கனவு போன்றது. மற்ற அனைவருக்கும் தலைவனாக பொறுப்பு இருப்பதால் சுதந்திரம் இல்லாதது. நாங்களே எப்பொழுதும் பயத்துடன் இந்த பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறோம். எந்த நிமிஷமும் மரணம் வரலாம் என்ற பயம் தான் காரணம். நீங்கள் தான் எங்களுக்கு அபயம் அளிக்கக் கூடியவர். ஜராசந்தனை அடக்குவதால் எங்களுக்கும்,உங்களுக்குமே நிம்மதியாகும். மிகவும் துன்புறுத்தப் பட்டதால் தீனர்களாக வேண்டுகிறோம்.
நீயே சரணம் என்று வந்து நிற்கிறோம், உன் பாதங்களே அடியார் துயர் தீர்க்கும் என நம்பி வந்துள்ளோம். மகதன் என்ற இந்த கர்ம பாசத்திலிருந்து எங்களை விடுவி. இவன் இரண்டு ஆயிரம் யானைகளின் பலம் உடையவன் என்று சொல்கிறார்கள். காட்டில் சிங்கம் எளிய எலிகளை துரத்துவது போல வீட்டில் இருந்து கொண்டு எங்கள் விரட்டுகிறான். நீங்களும் அவனிடம் பதினெட்டு முறை தோற்று ஓடியதாக மார் தட்டிக் கொள்கிறான், அதுவே அவன் துஷ்டத்தனம் அதிகமாகவும் காரணமாகி விட்டது. அளவில்லாத வீர்யம் உடையவன் எனப் புகழ் பெற்றவனே, சண்டையில் என்னிடம் தோற்று புற முதுகிட்டு ஓடினான் என்று அவன் தன் கர்வத்தை பெருக்கிக் கொள்கிறான். உங்கள் ப்ரஜைகள் நாங்கள் வருந்துகிறோம், நீங்கள் தான் காக்க வேண்டும். இது தான் மாகதனால் துன்புறுத்தப் படும் சிற்றரசர்களின் வேண்டுதல். உங்களைக் காண விரும்புகிறார்கள், என்றான்.
ராஜ தூதன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே தேவரிஷி நாரதர் ஜடைகளை கையால் அளைந்தபடி சூரியன் திடுமென உதித்தது போல அங்கு வந்தார். அவருக்கு தகுதியான ஆசனங்கள் கொடுத்து சிரத்தையுடன் உபசரித்த பின் வந்த காரியம் என்ன என்பதை விசாரித்தார்.
ஸ்ரீ நாரதர் சொன்னார்: விபோ! உன் மாயையை நான் பல முறை கண்டு வியந்திருக்கிறேன். விஸ்வஸ்ருஷ்டா- உலகை படைத்தவனே நீ. உன் சக்தியால் உயிரினங்களின் உள்ளும் சஞ்சரிக்கக் கூடியவன், மறைந்திருக்கும் நெருப்பு போன்றவன், அதனால் உன் செயல்கள் என்னை ஆச்சர்யப் படுத்தவில்லை. எவராலும் சுலபமாக புரிந்து கொள்ள முடியாதவன் நீ. எதற்காக இந்த ஸ்ருஷ்டி, இதை எப்படி கட்டுக்குள் நடத்திச் செல்கிறாய் என்பதெல்லாமே உன் மாயை தான். அப்படிப் பட்ட வித்தியாசமான உனக்கு நமஸ்காரம்.
ஜீவன்களுக்கு உலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து விமோசனம் அளிப்பது நீயே. சரீரமே எல்லாம் என்று நினைக்கும் சாதாரண ஜனங்கள், விமோசனம் பெற அவதரித்திருக்கிறாய். அதுவே உன் புகழை காட்டுகிறது. அந்த பெருந்தன்மைக்கு நமஸ்காரம்.
இருந்தாலும் ப்ரும்ம ரூபனே, நான் ஒரு செய்தியைச் சொல்கிறேன். உலக நன்மைக்காக. அரசனின் தாயாதிகள் மற்றும் நலம் விரும்பிகள் சொல்லி பாண்டவன் ராஜ சூய யாகம் செய்ய இருக்கிறான். சக்ரவர்த்தி என்று பதவி பெற இந்த யாகத்தை துவங்கியுள்ளவன், அவனை தாங்கள் ஆசீர்வதியுங்கள். அந்த யாகத்தில், தேவர்கள் உங்களைக் காண வருவார்கள், பல அரசர்களும் வருவார்கள். கேள்வி, பாடுவது, த்யானம் செய்வதால், அந்தே வாசின: எனும் உன்னடி பணியும் அடியார்களுக்கு வழிகள் இருந்தாலும், ப்ரும்ம மயமான உன்னை கண்களால் காணவே வருகிறார்கள். நிர்மலமான உன் புகழ் எங்கும் பரவியிருக்கிறது. பூமியிலும் புவன மங்கள – மங்களமான நன்மையை செய்யும் மந்தாகினீ என்று தேவ லோகத்திலும், போகவதீ என்று பூமியிலும் கங்கை என்றும் உன் சரணத்திலிருந்து வரும் புண்ய தீர்த்தமே பவித்ரமாக்குகிறது.
ஸ்ரீ சுகர் சொன்னார்: உத்தவரைப் பார்த்து பகவான், சிரித்துக்கொண்டே நம் பக்கம் உள்ளவர்கள், மற்றவர்கள் யார் யார் என்று தெரியுமா என்றார். உத்தவா நீ சொல். நம் நலம் விரும்பிகள் என்றால், விவரம் அறிந்தவன் நீ தான் சொல்ல முடியும். அவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றார். தெரிந்து கொண்டே நம்மை கேட்கிறார் என்று நினைத்தாலும் உத்தவர், ஆணை என்று தலையால் அதை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்தார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாவது பகுதியில், பகவத் தியான விசாரம் என்ற எழுபதாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 47
அத்யாயம்- 71
ஸ்ரீ சுகர் சொன்னார்: தேவ ரிஷி சொன்னதைக் கேட்டு உத்தவர் பதில் சொன்னார். ஸ்ரீ க்ருஷ்ணனின் மற்றும் சபையினரின் அனுமதியை பெற்று சொல்லலானார்.
உத்தவர்: ரிஷி சொன்னது உங்கள் தந்தை வழி உறவினர்கள், அவர்களின் சார்பாக பேசினார். இரண்டு செயல்கள். ஒன்று சரணம் என்று வந்தவர்களுக்கு அபயம் தருவது, இரண்டாவது தன் உறவினர் என்பதால் அவர்களுக்கு கை கொடுப்பது. விபோ! ராஜ சூய யாகம் சக்ரவர்த்தியாக நினைப்பவர்கள் செய்ய வேண்டிய செயலே. அதற்காக மற்ற அரசர்களை ஜயிக்க வேண்டும். எந்த விதத்திலும் எதிர்ப்பு இல்லாத அரசன் தான் ராஜசூய யாகத்தை செய்ய முடியும். எனவே ஜராசந்தன் என்ற தடையை நீக்க வேண்டியது இரண்டும் ஒரே பலனைத் தரும் என்பது என் எண்ணம். விபோ! இதனால் நமக்கும் பெரிய நன்மை இருக்கிறது. ஜராசந்தனிடம் சிறை பட்டிருக்கிற அரசர்களை விடுவித்து அவர்களும் பாண்டவ தலைமையை ஏற்க வழி செய்வோமானால், கோவிந்தா! உங்கள் புகழும் வளரும், பாண்டவர்களுக்கு உதவினதாகவும் ஆகும்.
இதில் ப்ரச்னை என்னவென்றால். இந்த ஜராசந்தன் மிக்க பலசாலி. ஆயிரம் யானைகள் பலம் கொண்டவன். மற்ற யாரும் அவனை வெல்ல முடியாது. சம மான பலம் உடையவன் பீமன் மட்டுமே. படை பலம் மட்டும் போதாது. எதிரெதிராக மல் யுத்தம் செய்துதான் வெல்ல வேண்டும். அவனும் வாக்குக்கு கட்டுப்படுபவனே. அந்தணர்களுக்கு எப்பொழுதும் ஆதரவுடனேயே இருந்திருக்கிறான். அதனால், தன்னை யார் என்று தெரிவிக்காமல், அந்தணர் வேஷத்தில் சென்று வ்ருகோதரன் என்ற பீமன் யாசிக்கட்டும். சமமான பலம் உடைய இருவரும் உன் எதிரில் மல் யுத்தம் செய்யட்டும். இதற்கு மேல் தெய்வம் விட்ட வழி. விஸ்வத்தில் படைப்பதும், அழிப்பதும் எவருடைய செயலோ அந்த மகேஸ்வரனே பொறுப்பு. காலம் என்பதை பகவான் மாகேஸ்வர சக்தியால் தான் செய்கிறார்.
வீடுகளில் தேவிகள்-மனைவிகள், தங்கள் கணவன்மார் யுத்தம் செய்ய சென்றால் உங்களை தான் வேண்டிக் கொள்வர். தன்னைச் சார்ந்த அரசர்கள் வெற்றி பெறச் செய்யவும், தங்கள் விடுதலைக்காகவும் உங்களையே சரணடைவர், இடையர் குல பெண்கள், கஜேந்திரன், ஜனகாத்மஜா, பித்ருக்கள், முனிவர்கள், என்னைப் போன்றவர்கள் எல்லோருமே உன் நம்பகமான செயல்களை அறிவர்.
க்ருஷ்ணா! ஜராசந்தனின் வதம் பல விதங்களிலும் நன்மை பயக்கும். இந்த ராஜ சூய யாகம் உங்களுக்கும் சம்மதமே, அது நன்றாக நடக்கவும், பொதுவாக நன்மை, தீமைகளை ஆராய்ந்து பார்த்தாலும் அதுவே வழி.
ஸ்ரீ சுகர் சொன்னார்: உத்தவரின் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். ஸ்ரீ க்ருஷ்ணன், தேவ ரிஷி நாரதர், யது குல மூத்தோர் யாவரும் அவரை பாராட்டினர். அதன்பின் பிரயாணத்துக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். தாருகன், ஜைத்ரன் என்ற பணியாட்களிடம் கட்டளையிட்டு பெரியவர்களையும் கிளம்பச் சொல்லிய பின் தன் புதல்வர்கள், அவர்கள் பரிவாரங்களுடன்,, யது ராஜனான சங்கர்ஷணனிடம் விவரங்களைச் சொல்லி, வீரர்களான சேனாபதிகள், அனைவரிடமும் யுத்தம் என்று வந்தாலும் தயாராக இருக்கும்படி கிளம்பச் சொல்லி விட்டு தன் ரதத்தில் ஏறினார். ரதம் கிளம்பியதும் பரிவாரங்கள், ரதங்கள், யானைகள்,கால்நடையாக என்று அதனதன் தலைவர்களோடு, தன் சேனை ம்ருதங்க பேரீ ஆனக துந்துபி, கோமுகம் என்ற வாத்யங்கள் முழங்க, கோஷங்கள், பதில் கோஷங்கள் என்று உத்சாகமாக கிளம்பினர். காவலர்கள், குதிரைகள் தொடர, பொன் மயமான சிவிகைகளில் தங்கள் மகன்,மகள் இவர்களோடு பதிகளைத் தொடர்ந்து அழகிய ஆடைகளும், ஆபரணங்களும் அணிந்து அரச குல பெண்கள் கிளம்பினர். அலங்காரமாக காவலர்கள் வாள், தோல் உறைகள் இவற்றுடன் சூழ்ந்து வர சென்றனர். ஒட்டகங்கள், பசுக்கள். மகிஷங்கள், கழுதைகள் பெண் யானைகள் இவைகளில் பணிப் பெண்கள், தாங்களும் நன்றாக அலங்கரித்துக் கொண்டு வந்தனர். தேவையான கம்பளங்கள், பாத்திரங்கள், மற்றும் பல பொருட்களையும் எடுத்துக் கொண்டு உடன் வந்தனர். கடல் போல கல கலவென்ற சப்தமும், பெரிய பெரிய த்வஜங்கள், சாமரங்களை இவைகளையும் சிறந்த ஆயுதங்களையும், கிரீடங்கள் இவைகளையும் எடுத்துக் கொண்டு போர் வீரர்கள் உத்சாகமாக வந்தனர். அவர்களுக்கு முகுந்த தரிசனமே பலத்தை கொடுத்தது. அதையடுத்து முனிவர்கள், யது பதியான பலராமன் ஏற்பாடு செய்து, வசதியாக பிரயாணம் செய்தனர்.
ராஜ தூதனைப் பார்த்து பகவான், பயப்படாதே, தூதனே உனக்கு நன்மை உண்டாகட்டும். மாகதனை வதைத்து உங்களை விடுவிக்கிறேன் என்று சொல்லி விடை கொடுத்தார். அவனும் மகிழ்ச்சியோடு, சௌரியின் ஆதேசத்தை ஏற்றுக் கொண்டு ஊர் திரும்பினான். தனக்கு அரசர்கள் இட்ட கட்டளையால் ஸ்ரீ க்ருஷ்ணனை சந்திக்க கிடைத்த வாய்ப்பை எண்ணி மோக்ஷம் வேண்டி பகவானை வேண்டும் முனிவர்கள் போல மகிழ்ந்தான்.
ஆனர்த்த, சௌவீர, மரு என்ற ப்ரதேசங்களை கடந்து மலைகளையும், நதிகளையும் நகரங்களையும் பார்த்தபடி, க்ராமங்கள், வ்ரஜ தேசங்கள் இவைகளைத் தாண்டி, ருஷத்வதீ என்ற நதியை கடந்து சரஸ்வதி நதிக் கரை வந்தனர். பாஞ்சால தேசம், மத்ஸ்ய தேசம், சக்ர ப்ரஸ்தம்(இந்திர ப்ரஸ்தம்) வந்து சேர்ந்தனர்.
அவர் வரவையறிந்து அஜாத சத்ரு, உபாத்யாயர்கள், உற்றம், சுற்றம் சூழ கீதங்கள் வாத்யங்களோடு, ப்ரும்ம கோஷம் அதையும் மீறி ஒலிக்க, ப்ராணிகள் ப்ராணனை அடைந்தது போல மகிழ்ச்சியுடன் வரவேற்றார். வெகு காலமாக பிரிந்திருந்த பிரியமான உறவினான ஸ்ரீ க்ருஷ்ணனை உணர்ச்சி மேலிட திரும்பத் திரும்ப ஆறத் தழுவி வரவேற்றார். ரமாபதியை தோள்களை அணைத்தபடியே அழைத்துச் சென்றார். உலகையே மறந்தவர் போல இருந்தார். பீமன் வந்தான். இரட்டையர்களான நகுல, சகதேவர்கள், கிரீடீ என்ற அர்ஜுனன் வந்தான் அனைவரும் கண்களில் நீருடன் அணைத்து வரவேற்றனர். இரட்டையர்களை ஆசீர்வதித்து, அர்ஜுனை குசலம் விசாரித்து, கூடியிருந்த குல மூத்தோர்கள், அந்தணர்கள் என்று ஒவ்வொருவராக குசலம் விசாரித்தபடி ஸ்ரீ க்ருஷ்ணன் சென்றார். குரு, ஸ்ருஞ்சய, கேகய குலத்தை சேர்ந்தவர்களை முறைப்படி மரியாதைகள் செய்தார். சூத, மாகத, வந்தி என்று பாடுபவர்கள் கூட்டமும் தொடர்ந்து வந்தது. ம்ருதங்க, சங்க, படஹ, வீணா, பணவ அக கோமுகம் என்ற பலவித வாத்யங்களும் இசைக்கப் பட்டன. அந்தணர்கள் போற்றி பாடல்களைப் பாடியும், ஆடியும் வரவேற்றனர். சிறப்பாக அலங்கரிக்கப் பட்ட நகரினுள் நுழைந்தார்.
மத ஜலம் பெருக்கும் பெரிய யானைகளை கொண்டு மாலைகள் அணிவித்தனர். விசித்ரமான த்வஜங்கள் கனக கும்பங்கள், தோரணங்கள், வழியெங்கும் ஆண்களும் பெண்களும் புத்தாடைகள் அணிந்து மங்களகரமான பொருட்களுடன் நின்று வரவேற்றனர். அவர்கள் கையிலிருந்த மலர்களிலிருந்தும், தூபங்களிலிருந்தும் இனிய மணம் காற்றில் மிதந்து வந்தது. ஒவ்வொரு வீடும் விளக்குகளின் வரிசையால் ஒளிர் விட்டன. வீடுகளின் மேல் ரத்ன கலசங்கள், வெள்ளியிலான கோபுரங்கள் என்று குரு ராஜ தானி செல்வ செழிப்பை காட்டுவதை கவனித்தபடி சென்றார். நர லோசன பான பாத்ரம்- கண்கள் பெற்ற பாக்கியம் கண்ணனைக் காண்பதே- என்ற சொல்லுக்கு ஏற்ப, தாங்கள் செய்து கொண்டிருந்த வீட்டு வேலைகளை கணவன், குழந்தைகளைகளை அப்படியே விட்டு விட்டு யுவதிகள் வீடுகளின் மாடிகளில் வந்து நின்றனர்.
அந்த ஊர்வலம் யானைகள் அஸ்வங்கள், ரதங்கள், கால் நடை வீரர்கள் தொடர வந்து கொண்டிருந்ததையும், அதில் மனைவியுடன் இருந்த ஸ்ரீ க்ருஷ்ணனையும் அனைவரும் தரிசித்தனர். இருந்த இடத்தில் இருந்தே மலர்களைத் தூவினர். வியப்பினால் விரிந்த கண்களுடன் மனப் பூர்வமாக சுஸ்வாகதம் சொன்னார்கள். ஸ்ரீக்ருஷ்ணனின் மற்ற மனைவிகளும் சந்திரனை தொடரும் தாரகைகள் போல சென்றனர். ஆங்காங்கு நிறுத்தி ஊர் மக்கள் மங்கள ஆரத்திகள் எடுத்தனர். சுற்றி ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்தனர். இவைகளை அங்கீகரித்தும், ரசித்தும் அவர்கள் மனம் மகிழச் செய்து விட்டு அரச மாளிகையினுள் நுழைந்தார்.
ப்ருதா-பாண்டவர்களின் தாய் குந்தி, தன் அண்ணன் மகனை அன்புடன் வரவேற்றாள். அவளுடைய மருமகளும் உடன் வந்து நமஸ்கரித்தாள். அரசர் கோவிந்தனை வீட்டுக்கு அழைத்து வந்து, அதன் பின் எதைச் செய்வது என்று செய்வதறியாது நின்றார். வயதில் மூத்தவர்கள் தந்தை வழி உறவினர்கள், குரு பத்னிகள் அனைவருக்கும் வணக்கம் சொன்னார். அவருடைய பத்னிகளும் அவ்வாறே அனைவரையும் வணங்கினர். ருக்மிணி, சத்யபாமா, சத்யா, பத்ரா, ஜாம்பவதி, காலிந்தீ, மித்ரவிந்தா, சிபி நாட்டு நாக்னஜித், அனைவருக்கும் தகுந்த உபசாரங்கள் செய்து, வாசஸ்தலங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜனார்தனன் வசதியாக இருக்கும்படி சைன்யத்துடனும், மந்திரி வர்கங்களுடனும், மனைவிகளுடனும் இருக்க ஏற்பாடுகள் இருந்தன. பால்குணன் என்ற அர்ஜுனனோடு அக்னி காரியங்களைச் செய்து விட்டு மயன் நிர்மாணித்த புது சபா மண்டபத்தைக் காணச் சென்றார். சில மாதங்கள் பகவான் பாண்டவர்களோடு அங்கே வசித்தார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பகுதியில், க்ருஷ்ணஸ்ய இந்த்ரப்ரஸ்த கமனம் என்ற எழுபத்தி ஒன்றாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-46
அத்யாயம்-72
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு சமயம், யுதிஷ்டிர் தன் சபையில் அமர்ந்திருந்தார். அவரை சுற்றிலும், அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைஸ்யர்கள், சகோதரர்கள் அமர்ந்திருந்தனர். ஆசார்யர்கள், குல மூத்தோர், தாயாதிகள், சம்பந்திகள், மற்றும் உறவினர்கள், அனைவரும் இருந்தனர். அனைவருக்கும் கேட்கும் படி யுதிஷ்டிரர், பேசலானார்.
கோவிந்தா! யாகங்களில் அரசனாகச் சொல்லப் படும் ராஜ சூயம் செய்ய விரும்புகிறேன். பவித்திரமானது அந்த யாகம். ப்ரபோ! அதற்கான தகுதியை உன்னிடம் வேண்டுகிறேன் என்றார். உன் பாதங்களை அனவரதமும் பூஜிப்பவர்கள், இடையூறு இன்றி செயல்கள் நடக்க உன்னை நியமம் தவறாமல் பூஜைகள் செய்து வருகிறார்கள். உன் அருளால் அபவர்கம் என்பதையும் அடைகின்றனர். உன் அருள், ஆசிகள் இருந்தால் மட்டுமே அனைத்தையும் பெற முடியும். வேறு என்ன வேண்டும்?
உலகமே இதை அறியட்டும். தங்கள் சரணாரவிந்த சேவையின் பலன் இக பர சௌக்யங்களை தர வல்லது என்பதை சந்தேகமின்றி புரிந்து கொள்வர். குரு, ஸ்ருஞ்சயர்கள், இவர்களும் அறியும்படி உன் பொதுவான நிலையை தெரியப் படுத்து. ப்ரும்மா என்ற இடத்தில் இருப்பவன் நீ, உனக்கு தன்னைச் சார்ந்தவர்கள், பிறர் என்ற வித்யாசம் கிடையாது. சர்வ ஜீவன்களிடத்தும் சமானமான நோக்குடையவன் , சர்வமும் சுகமாக இருக்க வேண்டும் என்றே நினைப்பவன். யாரையும் அன்யமாகவோ, எதிரியாகவோ நினைப்பதில்லை. கல்பக வ்ருக்ஷம்- போன்று யாராயினும் யார் என்ற பாகுபாடின்றி, வேண்டுபவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பவன் நீ.
ஸ்ரீ பகவான் சொன்னார்: சத்ருவே இல்லாதவன் நீ அரசனே! அதனால் உன் சொல் உலகில் எடுபடுகிறது. உன் புகழ் உலகத்தினர் எங்கும் பரவியுள்ளது.
இந்த யாகம் ரிஷிகளுக்கும், பித்ரு தேவதைகளுக்கும், நலம் விரும்பிகளான உன்னைச் சார்ந்தவர்களுக்கும், அனைவருக்குமே நன்மை தரும் யாகம் இது. மற்ற அரசர்களை வெற்றி கொண்டு, உலகையே வசத்தில் வைத்திருப்பவன் தான் இதைச் செய்யலாம். இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு யாகத்தை ஆரம்பி. உன் சகோதரர்கள் இதோ இருக்கிறார்கள். இவர்கள் லோக பாலர்களான தேவர்களின் அம்சம் உடையவர்கள். என் அருளும் உனக்கு உண்டு. நிறைவான சாதகர்களுக்கு கூட கிடைக்காத என் அருகாமையும் உனக்கு உள்ளது. தேவர்களேயானாலும், தேஜஸோ, புகழோ, செல்வமோ, பதவியோ, எதுவும் நான் அறியாமல் அல்லது என் அருள் இல்லாமல் பெற முடியாது. அரசர்கள் எம்மாத்திரம்?
ஸ்ரீ சுகர் சொன்னார்: அரசன் யுதிஷ்டிரனும், பகவானின் பதிலைக் கேட்டு உடல் புல்லரிக்க, முகம் மலர்ந்து தன் சகோதரர்களுக்கு ஆணையிட்டு திக் விஜயம் செய்ய திட்டம் வகுத்தான். சகதேவன், தென் திசையில் செல்லவும் , உதவியாக ஸ்ருஞ்ஜயர்களை (பாஞ்சால அரசனின் அனுதாபிகள்) அனுப்பினான். நகுலனை மேற்கு திசையில், வடக்கில் சவ்யசாசி என்ற அர்ஜுனன், கிழக்கில் வ்ருகோதரன்- பீமன், மத்ஸ்ய, கேகய, மத்ரகர்களின் உதவியோடு திக் விஜயம் போவது என்று தீர்மானிக்கப் பட்டது. அவர்களும் அந்தந்த திசைகளில் உள்ள அரசர்களிடம் சென்று அஜாத சத்ருவின் ஆணைப்படி வெற்றி கொண்டு அவர்களிடம் ஏராளமான பொருளுதவியும் பெற்று யாகத்தின் செலவுக்காக பெற்றுத் திரும்பினர். இன்னமும் ஜராசந்தனை அவர்கள் ஜயிக்கவில்லை என்பதையறிந்து ஸ்ரீ ஹரி உத்தவர் சொன்ன ஒரு உபாயத்தை விளக்கிச் சொன்னார். பீமன், அர்ஜுனனோடு க்ருஷ்ணனும் அந்தணர்கள் போல வேடமணிந்து ப்ருஹத்ரதன் என்ற அரசனின் மைந்தன் ஜராசந்தன் இருந்த கிரிவ்ரஜம் என்ற இடம் சென்றனர். ஜராசந்தன் அதிதிகளை உபசரித்துக் கொண்டிருந்த வேளையில் அங்கு சென்றனர். மற்றவர்களுடன் தாங்களும் யாசிக்கும் வரிசையில் நின்றனர். அவர்கள் முறை வந்த சமயம் வெகு தொலைவிலிருந்து வந்தவர்கள் போலும் என்று எண்ணிய ஜராசந்தன், அதிதிகளை விசாரிப்பது போலவே, விசாரித்தான். அவர்களும் பத்ரம் தே, என்று சொல்லி, தங்கள் தேவை இதுவே என்று பதிலிறுத்தனர்.
பொறுமையுடன் அதே தியானமாக அறிந்து கொள்ள விரும்பும் சாதகர்களுக்கு எட்டாத அறிவு ஏது? பிறவியிலேயே அசாது- துஷ்டனாக உள்ளவனுக்கு எதை தான் செய்யலாம் , செய்யக் கூடாது என்ற பாகுபாடு ஏது?தானம் கொடுப்பதில் சிறந்தவர்கள் யாசிப்பவர்களுக்கு எதைத் தான் மறுப்பார்கள் ? அனைத்தையும் சமமாக காணும் உள்ளம் உள்ள அறிஞர்களுக்கு யார் தான் அன்னியனாக தெரிவான்? ஆகவே அனித்யமான அழியக் கூடிய இந்த சரீரத்தில் இருக்கும் வரை நல்லவர்கள் புகழ் பாடும் படி வாழ வேண்டும். அப்படி இல்லாதவன் மற்றவர்கள் ஏளனம் செய்யும் படி வாழ்வான், மற்றவர்கள் அவனுக்காக இரங்கும்படி ஆகும். ரந்தி தேவன், ஹரிச் சந்திரன், உஞ்ச வ்ருத்தி என்பவர், சிபி, பலி, வேடன், புறா, இப்படி பலர் தானம் செய்து புகழ் பெற்றார்கள் அழியாத நிலையை அடைந்தனர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஜராசந்தன் சந்தேகம் கொண்டான். உடல் வாகு, மற்றும் பேச்சு இவற்றால், பந்துக்கள் அல்ல என்ற வரை தீர்மானித்தான். இவர்களை முன் சந்தித்திருக்கிறோமா என்று யோசித்தான். ராஜ வம்சம் தான் அந்தண வேஷத்தில் வந்துள்ளார்கள் என்று ஊகித்தான். போகட்டும், கேட்டதைக் கொடுக்கிறேன். என்னையே கேட்டாலும் சரி. பலி கதையை சொன்னார்களே, நாமும் கேட்டிருக்கிறோம். அந்தண வேஷத்தின் வந்து விஷ்ணு யாசித்தான், அதை அறிந்தும் கல்மஷம் இல்லாமல் கொடுத்ததால் இன்றளவும் புகழப் படுகிறான். இந்திரனுக்கு செல்வத்தை கொடுக்கவே, வந்த த்விஜன்-அந்தணன் , வந்து நிற்கிறான் நம்பாதே என்று குரு சொன்னார். அதையும் மீறி கொடுத்தான். க்ஷத்ர பந்து, அந்தணன் யாசித்தான், மறுக்க கூடாது என்றெண்ணி கொடுத்து தன்னையே தியாகம் செய்தான். க்ருஷ்ண, அர்ஜுன, வ்ருகோதர மூவரையும் பார்த்து சொல்லிவிட்டு, ஹே, அந்தணர்களே! உங்கள் தேவை என்ன என்று சொல்லுங்கள், என் தலையையே கேட்டாலும் தருகிறேன், என்றான்.
பகவான் சொன்னார்: எங்களுடன் யுத்தம் செய். இருவர் மட்டுமே செய்யும் த்வந்த யுத்தம். யுத்தம் செய்யும் ஆசையில் வந்தோம். ராஜ வம்சத்தினர் தான். வேறு தேவை எதுவும் இல்லை. இது வ்ருகோதரன் என்று புகழ் பெற்ற பாண்டவன். அவன் சகோதரன் அர்ஜுனன் இவன். இவர்களின் மாமன் மகன் நான் க்ருஷ்ணன் என்பர். என்னை அறிவாய். வெகு காலமாக உன் எதிரியாக இருப்பவன். ஜராசந்தன் பலமாக சிரித்தான். கோபமில்லாமல் யுத்தம் தானே, தருகிறேன். உன்னுடன் அல்ல க்ருஷ்ணா, நீ கோழை, பாதி யுத்தத்தில் உன் ஊரான மதுராவையே விட்டு வெகு தூரத்தில் சமுத்திர கரையில் புது ஊரை நோக்கி ஓடினாய். அர்ஜுனனும் வேண்டாம், எனக்கு சமமான பலசாலி அல்ல. வயதிலும் சிறியவன். பீமனோடு போர் புரிகிறேன். எனக்கு சரிக்கு சரியாக த்வந்த யுத்தம் செய்யக் கூடியவன் என்றான். பீம சேனன் கையில் ஒரு பெரிய கதையை கொடுத்து மற்றொன்றை தான் எடுத்துக் கொண்டு ஊரை விட்டு வெளியே ஒரு திடலுக்குச் சென்றான்.
இருவரும் சம பலசாலிகள். வீரர்கள். ஒருவரையொருவர் எதிர்த்து நின்று போரிட்டனர். இருவரும் போர் வல்லமை வாய்ந்தவர்கள். விடாது அடித்துக் கொண்டனர். விசித்திரமான மண்டலங்கள், (சுற்றுகள்) இடது வலது என்று சுழன்று சுழன்று போர் தொடர்ந்தது. மேடையில் நாட்யம் ஆடுபவர்களைப் போல இருவரும் நியமங்கள் தவறாமல், விதி முறைகளை மீறாமல் போரிட்டனர். பட படவென்ற சப்தம் கதைகள் மோதுவதாலும், பற்களை கடிப்பதாலும் மற்றவர்களுக்கு கேட்டது. இருவரும் தங்கள் புஜ பலத்தால் கதையை வீசினர். வேகம் பிடிக்கப் பிடிக்க, கோபமும், ஆத்திரமும் அதிகரித்தது. கதையை விட்டு முஷ்டிகளால் அடித்துக் கொண்டனர். கைதலத்தால் அடித்த சப்தம் பலமாக கேட்டது. இருபத்தேழு தினங்கள் இடைவிடாது இந்த போர் நடந்தது. இருவரும் களைத்ததாகவும் தெரியவில்லை. ஒரு இரவில் பீமன் க்ருஷ்ணனிடம், மாமன் மகனே, இவனை வீழ்த்த என்னால் முடியவில்லையே என்றான். சத்ருவின் பிறப்பு பற்றி தான் கேட்டிருந்ததை நினைத்துக் கொண்டு, அவனை வளர்த்த தாய் ஜரா என்பவளால் அவனுக்கு தந்த ஆயுள், அதனால் தான் அவன் காலம் முடியவில்லை என்று புரிந்து கொண்டார். பீமனை தன் சக்தியால் காத்தபடி, , என்ன செய்யலாம், என்ன உபாயத்தால் முடிப்போம் என யோசித்து, ஒரு குச்சியை எடுத்து உடைத்து காட்டினார். அதை புரிந்து கொண்ட வ்ருகோதரன், எதிரியின் பாதங்களைப் பற்றி கீழே வீசினான். ஒரு பாதத்தை தன் கால்களால் அழுத்திக் கொண்டு மற்றொன்றை கைகளால் பற்றி மரக் கிளையை முறிப்பது போல நடுவிலிருந்து கிழித்தான்.
மகதேஸ்வரன் வீழ்ந்தான். ஹாஹா என்ற சப்தம் எழுந்தது. அர்ஜுனனும் க்ருஷ்ணனும் அருகில் சென்று பீமனை ஜய ஜய என்று சொல்லி ஆஸ்வாசப் படுத்தினர். அவன் மகன் சகதேவன் என்பவனை பகவான் அபிஷேகம் செய்வித்து, மகத அரசன் என்று அறிவித்து விட்டு, ஜராசந்தனால் சிறையில் அடைக்கப் பட்டிருந்த அரசர்களை விடுவித்தான்.
(இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாவது பகுதியில், ஜராசந்த வதம் என்ற எழுபத்திரண்டாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 48
அத்யாயம்-73
ஸ்ரீ சுகர் சொன்னார்: இரண்டு இரண்டாயிரம்- நாலாயிரத்து நூற்றெட்டு அரசர்களை சுலபமாக வென்று மலைக் குகையில் அடைத்து வைத்திருந்தான். குப்பையும் கூளமும் நிறைந்த அந்த இடத்தில், பசி தாகம் வதைக்க, முகம் வாடி இளைத்து கிடந்தவர்கள் கன ஸ்யாமம், பீத கௌசேய வாஸஸம்- நீருண்ட மேகம் போன்ற நிறமும், பொன்நிற ஆடையும், ஸ்ரீவத்ஸம் என்ற மணி அடையாளம் இட்ட மார்பும், நான்கு கைகளுடன், பத்மத்தை உள்ளடக்கிய அருணன் வண்ணத்தில் கண்களும், அழகிய, காணவே மனம் மகிழ மலர்ந்த வதனமும், ப்ரகாசிக்கும் மகர குண்டலங்களும், பத்ம ஹஸ்தம், கதை, சங்கம், வாள், ரதாங்கம் இவைகளுடன்,கிரீட ஹார கடக கடி சூத்ரங்கள் அணிந்த பள பளவென மின்னும் மணி க்ரீவம்- கழுத்தில் ஒளி விட்ட மணியும், வன மாலையை அணிந்து, எதிரில் இருந்த உருவத்தை கண்களாலேயே பருகுவது போலவும், நாக்கினால் நக்கி விடுவது போன்ற ஆவலுடனும், நாசிகளால் முகர்ந்து பார்ப்பது போலவும், கட்டி அணைக்கத் துடிக்கும் கைகளுமாக விளங்கினர். எங்கள் பாபம் தொலைந்தது என்ற நிம்மதியுடன் ஸ்ரீ ஹரியின் பாதங்களில் தலைபட வணங்கினர். ஸ்ரீ க்ருஷ்ணனைக் கண்ட மன எழுச்சியும், அதனால் அடைந்த ஆஸ்வாசமும் இதுவரை அனுபவித்த கஷ்டங்களை அடியோடு தீர்த்து விட்டது போல உணர்ந்தனர். கை கூப்பி நின்றபடி அந்த அரசர்கள் ஹ்ருஷீகேசனை துதி செய்து பாடினர்.
அரசர்கள்: நமஸ்தே தேவ தேவேச! ப்ரபன்னார்த்தி ஹர, அவ்யய ! க்ருஷ்ணா! கோரமான அனுபவங்கள் நீங்கியது. உன்னை சரணடைகிறோம், எங்களை காப்பாற்று. மாகதன் எங்கள் ராஜ்யத்தை அபகரித்து துன்புறுத்தப் பட்டதும் நன்மைக்கே அதனால் தானே உன் தரிசனம் கிடைத்தது. விபோ! உங்கள் அனுக்ரஹம் கிடைத்தது. அதனால் மாகதனை கூட நாங்கள் பகையாக எண்ணவில்லை. ராஜ்யஸ்ரீ இருந்தவரை செல்வ செழிப்பில் மதோன்மத்தராக அரசர்கள் ஆகிறார்கள். உன் மாயை என்பதை உணருவதேயில்லை. அழியாத செல்வ செழிப்பு, அதுவே நிரந்தரம் என்று நினைத்து மோகத்தில் இருக்கிறார்கள். சிறுவர்கள் கானல் நீரைக் கண்டு ஏதோ பெரிய ஏரி நீர் நிறைந்து இருப்பதாக எண்ணுவது போல வஸ்துக்கள், பொருள் சேர்த்து வைத்து அவைகளின் மேல் அளவில்லாத பற்று வைத்து இவை ஒரு நாள் மாறும் என்ற உணர்வே இல்லாமல் வாழ்ந்தோம்.
ப்ரபோ! நாங்கள் முன்னால் செல்வ செழிப்பில் இருந்தோம். அதை தொலையாமல் பாதுகாக்கவே வாழ்ந்தோம். மேலும் மேலும் ஆசைகள். கருணையின்றி எங்கள் ப்ரஜைகளை வருத்தி, அதைச் சேர்த்தோம். ஒரு நாள் ம்ருத்யு வரும் இந்த செல்வம் என்னாகும் என்ற நினைப்பே இல்லாமல் வாழ்ந்தோம். க்ருஷ்ணா! இன்று உன் கருணையால் அந்த கர்வம் விலகியது. எங்கள் அல்ப வீர்யமும், செல்வத்தால் அடைந்த கஷ்ட நஷ்டங்களும் தீர்ந்து, உடல் படைத்த பயனாக , உன் பாதங்களை நினைக்கவும் வணங்கவும் அருள் பெற்றோம்.
அதனால் கானல் நீர் போன்ற ராஜ்யம் வேண்டாம். பூமியில் விழுந்து திரும்பத் திரும்ப உன்னை சேவித்து எங்கள் புஜங்கள் வருந்தட்டும். விபோ! காதுகள் உன் லீலைகளைக் கேட்டு மகிழட்டும். என்றும் உன்னை மறக்காமல் இருக்கும் படியான வரத்தையே வேண்டுகிறோம். க்ருஷ்ணாய, வாசுதேவாய, ஹரயே, பரமாத்மனே, ப்ரணத க்லேச நாசாய கோவிந்தாய நமோ நம: என்று சொல்லி வணங்கினர்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: அப்படியே ஆகட்டும். இன்று முதல் என்னிடம் திடமான பக்தியையே உங்களுக்கு ஆசீர்வதிக்கிறேன். அரசர்களே! உண்மையாக உள்ளத்தில் உள்ளபடி பேசினீர்கள். ஐஸ்வர்யம் ஒருவனை குணமில்லாத பேராசை கொண்டவனாக ஆக்குகிறது. ஹைஹயன், நகுஷன், வேணன், ராவணன், நரகன், இன்னும் பலர், அளவுக்கு மீறிய செல்வம், அதிகாரம் இவைகளால், தேவ, தைத்ய, நரேஸ்வர்கள், தங்கள் பதவியிலிருந்து தள்ளப் பட்டார்கள். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ப்ரஜைகளை தர்ம வழியில் பாலனம் செய்யுங்கள். வேதோக்தமான யாக காரியங்களை விடாமல் செய்யுங்கள். அது தான் என்னை பஜிக்கும் வழி. நியாயமாக, ப்ரஜைகள், வம்சம் அறுபடாமல், சுகம், துக்கம், கிடைத்தது, எதிர் பார்த்து கிடைக்காமல் போனது என்று வருந்தாமல், ப்ராப்தம் – நமக்கு அமைந்தது இதுவே என்று அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். மன உறுதியோடு தேகத்தில் பற்றை உதறி, உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். என்னிடம் மனம் நிலைத்து இருந்தாலே முடிவில் ப்ரும்ம பதவியை அடைவீர்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: புவனேஸ்வரனான ஸ்ரீ க்ருஷ்ணன், அந்த அரசர்களுக்கு உபதேசம் செய்து, மகத ராஜாவான ஜராசந்தனின் மகனை அவர்களுக்கு ஸ்னானம் முதலானவைகள், நல்ல ஆடைகள், மற்றும் அரசர்களுக்கான தேவைகள், நால் வகை உணவுகள் கொடுக்கச் செய்து தாம்பூலங்கள், என்று உபசாரங்கள் செய்யச் சொன்னார். அவனும் அப்படியே செய்து ரதங்களை ஏற்பாடு செய்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தான். அலங்காரங்களும் கிரீடம் குண்டலங்களுமாக அவர்கள் விடை பெற்றனர். மழை காலம் முடிந்த பின் க்ரஹங்கள் தெளிவாக தெரிவது போல ஆனார்கள். விடுபட்ட மகிழ்ச்சியுடன், க்ருஷ்ண தியானமும், ஜகத் பதி செய்தவைகளையும் நினைத்தபடி சென்றனர். பாடலாக பாடினர்.
ஜராசந்தனை வதைத்து விட்டு கேசவன், பாண்டவர்களுடன், மகத அரசன் சகதேவன் மரியாதைகளோடு வழியனுப்ப காண்டவப்ரஸ்தம் வந்து சேர்ந்தார். சங்க த்வனியைக் கேட்டு இந்திர ப்ரஸ்த நிவாசிகள் மாகதன் ஒழிந்தான் என்று அறிந்து மகிழ்ந்தனர். ராஜா வந்து அவர்களை அழைத்துச் சென்றார். நடந்தவைகளை அவர்களுக்குச் சொல்லிய பொழுது தர்மராஜாவால் நன்றி உணர்ச்சி மேலிட்டதால் பேசவே முடியாமல் தவித்தார். கண்ணீர் வழிய கேட்டபடி இருந்தார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாம் பகுதியில், க்ருஷ்ணாத்யாகமனே என்ற எழுபத்து மூன்றாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 35
அத்யாயம்-74
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஜராசந்த வதம், அதையடுத்த நிகழ்ச்சிகள் ஸ்ரீ க்ருஷ்ணனின் நல்ல குணத்தை காட்டுவதாக நினத்த யுதிஷ்டிர் பேசலானார்.
மூவுலகுக்கும் குருவானவர், அனைத்து லோக மஹேஸ்வரர்கள் எளிதில் அடைய முடியாத அதிகாரத்தை கிடைக்கப் பெற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை, ஹே பகவன்! தாங்கள் செய்து காட்டி விட்டீர்கள். தாங்கள் அரசர்கள் என்று எண்ணியிருந்தவர்கள் விதி வசத்தால் தாங்களே துன்பம் அனுபவித்தார்கள். அவர்களுக்கு உபகாரமாக நீங்கள் செய்தது, மிகவும் சிறப்பு வாய்ந்ததே. உங்களையன்றி வேறு ஒருவர் இல்லை. பரமாத்மா, ப்ரும்மமே என்றாலும் உங்கள் செயல்களால் உங்கள் தேஜஸ் அதிகமாகிறது. மாதவா! நான், எனது என்பதையே திருப்பி, நீ, உனது என்று மாற்றி அமைத்து விட்டாய். அஜித! ப்ரும்மாவின் தன் படைப்பில் பலவிதமான ஜீவன்களை பலவிதமான புத்தியுடன் அமைப்பது போல. உடலை பாதுகாப்பதும், அதையே நிரந்தரமாக நினைப்பது போல் அல்லாமல் உன் பக்தர்கள் தெளிவான மனதுடன் பரதத்வத்தை அறிகிறார்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொல்லிவிட்டு யுதிஷ்டிர் யாக காரியங்களை கவனிக்கச் சென்றார். தகுந்த ருத்விக்குகள் என்ற யாகம் செய்யும் விதி முறைகளை அறிந்த பெரியவர்கள், அந்தணர்கள் அனைவரையும் வரவழைத்தார். த்வைபாயனர், பரத்வாஜர், சுமந்து, கௌதமர், அசிதன், வசிஷ்டர், ஸ்யவனர், கண்வர், மைத்ரேயர், கவஷஸ்ரித: விஸ்வாமித்ரோ, வாம தேவ:, சுமதி, ஜைமினி, க்ரது:, பைல:, பராசரன், கர்கன்,வைசம்பாயனன், அதர்வா, கஸ்யபர், தும்யர், பார்கவ ராமன், ஆசுரி என்பவர், வீதி ஹோத்ரன், மதுச் சந்தா, வீரசேனோ, ஆக்ருத வ்ரண: என்பவர், உபஹூதர்கள், தவிர, த்ரோண, பீஷ்ம, க்ருபர், முதலானவர்கள், த்ருதராஷ்டிரன், தன் மைந்தர்களோடு, மகாமதியான விதுரர், மற்றும் அனைத்து ப்ராம்மண, க்ஷத்திரிய, வைஸ்ய, சூத்ரர்கள், யாகத்தைக் காணவும், நேரில் பங்கு கொள்ளவும் அழைக்கப் பட்டனர்.
அரசன் யுதிஷ்டிரரை காப்பு கட்டி யாக தீக்ஷையை செய்து வைத்தனர். முன்பு வருணனுக்கு செய்தது போல, இந்திரன் முதலானோர், லோக பாலர்கள், ப்ரும்மா, பவன்- மகேஸ்வரன் இவர்களுடன் , சகணங்கள்-விஷ்ணு பார்ஷதர்கள்- பகவானின் அணுக்கச் சேவகர்கள், சித்த கந்தர்வர்கள், வித்யாதர மஹோரகர்கள், முனிவர்கள், யக்ஷ ரக்ஷஸர்கள், கக- ஆகாயத்தில் சஞ்சரிக்கும், கின்னர சாரணர்கள், வந்து சேர்ந்தனர். அரசர்கள் அவர்கள் பத்னிகளுடன் அழைக்கப் பட்டனர். பாண்டு சுதனின் யாகத்திற்கு அனைவரும் மகிழ்ச்சியுடன் வந்தனர். க்ருஷ்ண பக்தன் என்பதால் நேரடியாக ஸ்ரீ க்ருஷ்ணன் வந்ததை சகஜமாக ஏற்றுக் கொண்டனர். யாகம் செய்பவர்களும் தெய்வீகமான தேஜசுடன் விளங்கினர்.
மற்றொரு ப்ரசேதஸ் போல, ராஜ சூய யாகத்தை விதி முறைகளின் படி பூமியை ஆளும் அரசர்கள், சபா பதிகள், யாகம் செய்பவர், ரதங்களை ஓட்டுபவர், இவர்களுக்கு தகுந்த மரியாதைகளைச் செய்தார். சபையில், முதல் மரியாதையைப் பெறுபவர் யார் என்ற பேச்சு சபையினுள் எழுந்தது. சகதேவன் எழுந்து இந்த உலகமே எவரால் இயங்குகிறதோ, யாகங்கள் எவருடைய ஆத்மாவாக கருதப் படுகிறதோ, அக்னி, அதன் மூலம் அழைக்கப்படும் தேவ தேவதைகள், மந்திரங்கள், சாங்க்யம் என்ற ஞானம், யோகம் இவைகளைத் தவிர இன்னமும் உயர்ந்தது என்ற அனைத்தும் உள்ள அத்விதீயன்- இரண்டற்ற , தனக்கு சமமாக மற்றொன்று இல்லையென ப்ரசித்தி பெற்றவர், இவர். இவருடைய ஆத்மாவால் உலகில் உயிரினங்கள் அனைத்தும் இயங்குகின்றனவோ, அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக உறைபவர் எவரோ, சபையினரே! அவர்தான் படைக்கிறார், காக்கிறார் என்பதால் அஜன் எனப் படுகிறார். பலவிதமான கர்ம மார்கங்களை தோற்றுவித்து, கண்காணித்து, அதற்கான பலன்களைத் தருபவர், அவரே எல்லா ஸ்ரேயஸ்- நன்மைகளும், தர்மங்களும் உருவாக உள்ளவர்.
எனவே மகானான க்ருஷ்ணனுக்குத் தருவோம். பரமார்ஹணம் என்ற முதல் மரியாதையை. அவருக்கு செய்வதால் அனைத்து உயிரினங்களுக்கும் மரியாதை செய்ததாக ஆகும். சர்வ பூதாத்ம பூதாய, க்ருஷ்ணாய, அநன்ய தர்சினே, சாந்தாய, பூர்ணாய, – இவருக்குத் தான் தரவேண்டும். குறைவின்றி அனைவருக்கும் கொடுக்க விரும்பினால் இவருக்கு கொடுப்பதே சரியானது. சகதேவன் சொல்லி நிறுத்தியதுமே, சபையில் அனைவரும் சாது சாது என்று கொண்டாடினர். சபையினர் அனைவரும் ஆமோதிக்கவும், ஹ்ருஷீகேசனை பரம ப்ரீதியுடன் அழைத்து அமரச் செய்து, பாதங்களை கழுவி லோக பாவனமான அந்த ,நீரை தலையில் தெளித்துக் கொண்டு, தன் மனைவியுடனும், சகோதர்களுடனும் மந்திரிகள், குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். (ஆவஹனம்- வரவேற்றல்)
உயர்தரமான பட்டு வஸ்திரங்கள், பூஷணங்கள், பெரும் செல்வம், ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு அளித்தார். அதை தவிர எதையும் காணவே கூட விருப்பம் இல்லாதவர் போல அவர் கண்கள் குளமாகின. இவ்வாறு மரியாதை செய்யப் பட்டவரைக் காண சபையினர் அனைவரும் வணங்கி, நமோ என்றும், ஜய ஜய என்று கோஷமிட்டு, பூமாரி பெய்தனர்.
இதைக் கேட்டு தமகோஷ சுதன்- சிசுபாலன் எழுந்தான். க்ருஷ்ணனை வர்ணித்ததால் எழுந்த கோபம் மேலிட, கைகளை உயரத் தூக்கி சபையினரைப் பார்த்து கத்தினான். பகவானை கடுமையான சொற்களால் நிந்தித்தான். சற்றும் பயமின்றி, கடவுளே!, காலம் எப்படி மாறி விட்டது. முதியவர்கள், அறிஞர்கள் இருக்க, சிறுவனின் வார்த்தையை ஏற்பதா? என்ன நியாயம்? தகுதியுடையவர்கள் பலர் இங்கு உள்ளார்கள். அவர்கள் அனைவரும் கூட ஏன் எதிர்க்காமல் ஓத்துக் கொள்ளும் அளவு புத்தி மழுங்கி விட்டதா? இந்த க்ருஷ்ணனை எப்படி உயர்வாக நினைக்கிறீர்கள். தவத்தில் சிறந்தவர்கள், வித்யா விற்பன்னர்கள், ஞானத்தில் கரை கண்டவர்கள், தூய்மையே உருவான பரம ரிஷிகள், ப்ரும்ம நிஷ்டர்கள், லோக பாலர்கள், இருக்கும் இந்த சபையில், இடையச் சிறுவன், குல நாசகன், இவனை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
இவன் வர்ணாஸ்ரம தர்மத்தில் வராதவன். அரச குலமான க்ஷத்திரியன் அல்ல. இடையன். குலத்தை அழித்தவன். சபா பதியாக தகுதியில்லாதவன். ( அவனுடைய சொற்களே துதியாகவும் அமைந்ததாக உரையாசிரியர்கள். புரோடசம் அன்னத்தை சேர்த்து வைக்கபடும் கூர்மம் போன்ற அமைப்பில் உள்ள பிண்டம் புரோடாசம் எனப்படும். கோபாலன் என்பதை வேத ரக்ஷகன் என்றும், காக என்பதை ஆப்த காமன் என்றும் பொருள் சொல்வர். காகத்தின் கையில் யாக முடிவில் பலியை-புரோடாசம் கொடுத்தது போல என்றது நிந்தனை போலத் தோன்றினாலும், துதியே.) அனைத்து தர்மங்களையும் மீறியவன். தன்னிஷ்டம் போல நடப்பவன். குணமே இல்லாதவன். இவன் எப்படி மரியாதைக்குரிய தலமையை ஏற்க அனுமதிக்க முடியும். இவன் குலமே யயாதியால் சபிக்கப் பட்டது. நல்லவர்கள் விலக்கி வைத்தனர். வீணாக குடிப்பதில் பிரியம் உள்ளவன், இவனை எப்படி சபை தலைவராக தேந்தெடுத்தீர்கள்.
ப்ரும்ம ரிஷிகள் இருக்கும் இடங்களை விட்டு சமுத்திரக் கரையை ஆக்ரமித்து, அங்குள்ள மக்களை துன்புறுத்துகிறான். இது போல பல குற்றச் சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போனான். அமங்களவானவன் அவனே. பகவான் எதுவும் சொல்லவில்லை. காட்டுச் சிங்கம், குள்ள நரி அதைப் பார்த்து ஊளையிட்டால் அமைதியாக இருப்பது போல இருந்தார். சபையில் இருந்தவர்கள் இந்த நிந்தனைச் சொற்களைக் கேட்டு காதுகளை மூடிக் கொண்டனர். சேதி ராஜனான சிசுபாலனை திட்டியபடி வெளியேறினர். இவ்வாறு அவர்கள் வெளியேறுவதையும் பொருட்படுத்தாமல் நிந்தனையை நிறுத்தாத சேதி அரசனை, எதிர்த்து பாண்டவர்கள் கொதித்து எழுந்தனர். மத்யர்கள், கைகய, ஸ்ருஞ்சயர்கள், உதாயுத என்பவர்கள், சிசுபாலனை கொல்லும் உத்தேசத்தோடு நெருங்கினர். அப்பவும் சிசுபாலன் அசையவில்லை, பயப்படவில்லை. தன் வாளை உறையிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டான் க்ருஷ்ண பக்ஷத்தில் உள்ளவர்களை பயமுறுத்துவது போல.
பகவான் தனக்கு உதவியாக வந்தவர்களை தடுத்து விட்டு தானே சக்ரத்தை எடுத்துக் கொண்டார். எதிரியான அவனை அதன் கூரான ஆரங்களால் தலையை துண்டித்து விழச் செய்தார். சிசுபாலன் மாண்டான் என்றதைக் கண்டு கூட்டத்திலிருந்து கோலாஹலமான சப்தம் எழுந்தது. சிசுபாலனை தொடர்ந்து வந்திருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினர். சிசுபாலனின் உடலில் இருந்து ஒரு ஒளி கிளம்பி வாசுதேவனிடம் ஐக்யமாகியது. அனைவரும் கண் எதிரில் ஏதோ ஒளி ஆகாயத்திலிருந்து விழுந்ததோ என்ற ப்ரமையை அடைந்தனர். மூன்று பிறவிகள், என் வைரியாக இருந்து பின் என்னை அடைவாய் என்று முன் அருளியதை அறிஞர்கள் நினைவு கூர்ந்தனர். அவன் பூமியில் பிறந்ததற்கே அது தான் காரணம்.
அதன் பின் யாகம் தொடர்ந்தது. யாகம் முடியும் வரை சில மாதங்கள் க்ருஷ்ணன் அங்கு இருந்தார். யோகேஸ்வரான ஸ்ரீ க்ருஷ்ணன் அதன் பின் அரசரிடம் விடை பெற்று, மனைவிகளுடன் துவாரகை திரும்ப ஏற்பாடுகளைச் செய்தார்.
அரசனே! விஸ்தாரமாகவே இந்த கதையை உனக்கு சொல்லி விட்டேன். வைகுண்ட வாசிகள் இருவரும் சனகாதிகளின் சாபத்தால் திரும்பத் திரும்ப பிறந்தனர். அது தான் இந்த பிறவியோடு சாப விமோசனம் அடைந்தனர். ராஜ சூய யாகம் முடிந்த அவப்ருத ஸ்னானம் செய்தார் யுதிஷ்டிரர். மன நிறைவோடு தன் ஆசனத்தில் தேவ ராஜன் போல வீற்றிருந்தார். தேவர்கள் முதல் அனைத்து அரசர்களும் கிளம்பிச் சென்றனர். துர்யோதனன் பாண்டவனுடைய இந்த செல்வத்தையும் பெரும் செல்வாக்கு அடைந்ததையும் பொறுக்க மாட்டாமல் மனதினுள் பொருமினான். இதுவும் விஷ்ணுவின் லீலைகளில் ஒன்றே.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாவது பகுதியில், சிசுபால வதம் என்ற எழுபத்து நாலாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-54
அத்யாயம்-75
அரசன் சொன்னான். அஜாத சத்ருவின் யாகம் நல்ல விதமாக முடிந்ததில் துர்யோதனனைத் தவிர மற்ற அரசர்கள், ரிஷிகள், தேவர்கள் தவிர வந்திருந்த அனைவரும் மகிழ்ந்தனர் என்று கேட்டிருக்கிறேன். பகவன்! என்ன காரணம் ?
ரிஷி சொன்னார்: உன் பாட்டனார் யாகம் செய்த பொழுது, உடன் இருந்த உறவினர், பணிவிடை செய்தவர்கள், எல்லோருமே ஈடு பாட்டுடன் செய்தனர். பீமன் ஒருபக்கம், துர்யோதனன் தனாத்யக்ஷனாகவும், பண வரவு செலவுகளைப் பார்ப்பவனாகவும், சஹ தேவன் பூஜை சம்பந்தமானவைகளை கவனித்துக் கொண்டான். நகுலன் தேவையான பொருட்களை சேர்ப்பதில் இருந்தான். குரு ஜனங்களை உபசரிப்பதிலும், அவர்கள் தேவைகளை ஏற்பாடு செய்வதும் ஸ்ரீ க்ருஷ்ணன் பொறுப்பேற்றுச் செய்தார். உணவு பரிமாறுதல் போன்ற செயல்கள் துருபதன் மகள் பார்த்துக் கொண்டாள். பெருந்தன்மையான மனம் படைத்த கர்ணன் தானம் வழங்கும் இடத்தில் இருந்தான். யுயுதானன், விகர்ணன், ஹார்திகர்கள், மற்றும் விதுரர் முதலானவர்கள், பால்ஹீகரின் மக்கள், பூரி, சந்தணர்கள் என்ற வம்சத்தினர், அந்தந்த பொறுப்பில் நியமிக்கப் பட்டவர்கள் பொறுப்புடன் செய்தனர். அனைவருமே அரசன் யுதிஷ்டிரரிடம் மதிப்பு உடையவர்களாகவே இருந்தனர்.
ருத்விக்குகள், சபையில் இருந்த அறிஞர்கள், நண்பர்கள், நல்ல கவனிப்பும், தாராளமாக தக்ஷிணைகளை தாங்கள் பெற்றுக் கொண்டதோடு தங்கள் உடன் வந்தவர்களுக்கும் கிடைக்கும் படி கவனித்துக் கொண்டனர். சேதி அரசன் சாத்வத பதியான பகவானிடம் போய் சேர்ந்தவுடன், அவப்ருத ஸ்னானம் என்பதை ஆகாய கங்கையில் செய்தனர். ம்ருதங்க சங்க, பணவ, துந்துபி, ஆனக, கோமுகம் என்ற வாத்யங்களுடன் அந்த அவப்ருத ஸ்னான மகோத்சவத்தில் கலந்து கொண்டனர். நடனம் ஆடும் பெண்கள் ஆடினர். மகிழ்ச்சியுடன் பாடகர்கள் பாடினர். கூட்டம் கூட்டமாக பாடினர். வீணை, வேணு, கை தாளங்கள், சபையினரை தேவ லோகத்துக்கே இட்டுச் சென்றது. சித்ர த்வஜங்கள், கொடிகள், பதாகைகள், யானைகளையும் ரதங்களையும் அலங்கரித்தன. காவல் வீரர்களும் கூட நல்ல அலங்காரங்களுடன் வந்திருந்த அரசர்களை வரவேற்றும், வழியனுப்பியும் மரியாதை செய்தனர். யது, ஸ்ருஞ்சய, காம்போஜ, குரு, கேகய கோசல நாடுகளின் பூமியே ஆட்டம் காணும் அளவு இந்த வீரர்களின் எண்ணிக்கை இருந்தது. சபையினர், ருத்விக்குகள், அந்தணர்கள், சிறப்பாக ப்ரும்ம கோஷம் செய்தனர். அதைக் கேட்டு தேவர்களும் பித்ருக்களும், மகிழ்ந்து பூமாரி பொழிந்தனர். ஆண்களும் பெண்களும் நன்கு அலங்கரித்துக் கொண்டவர்களாக வாசன திரவியங்களும், மலர் மாலைகளும் அணிந்து புத்தாடைகள், ஒருவர் மற்றவர் மேல் வாசனை பூச்சுகளை பூசியும், வாசனைப் பொடி கலந்த நீரை தெளித்தும் பல விதமாக தோன்றியபடி கொண்டாடினர். ஆண்களும் எண்ணெய், கோரசம், மணம் மிந்த மஞ்சள் குங்குமங்கள் இவைகளை மற்றவர் மேல் பூசியும், வாசனைப் பொருள் கலந்த நீரை தெளித்தும் மகிழ்ந்தவர்களாக அவப்ருத ஸ்னானம் என்பதை கொண்டாடினார்கள்.
வீடுகளில் மாமன், அத்தை மகள்கள் என்று உடனொத்த வயதினர் தங்களுக்குள் நீரை வாரியிறைத்தும் குதூகலமாக பேசியும் சிரித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். அனைவரும் மலர்ந்த முகத்துடன் களிப்பை வெளிப்படையாக தெரிவித்துக் கொள்ளும் விதமாக சொந்த பந்தங்களோடு இருந்தனர். இப்படி நீரை வாரியிரைத்து, உடைகள் ஈரமாக, கேசம் அவிழ்ந்து அதில் சூடியிருந்த மலர்கள் உடல் முழுவதும் பரவ, அதுவே விளையாட்டாக ஒருவரையொருவர் பரிகசித்தும், உடல் களைக்கும் வரை நனைந்தனர்.
சக்ரவர்த்தியாக ஆன அரசன் தன் பத்னிகளுடன் பொன் மயமான ரதத்தில் ஏறி கிளம்பினார். பத்னிகளுடன் அவருக்கு ருத்விக்குகள் கங்கை நதியில், ஸ்ரீ க்ருஷ்ணனுடன் அவப்ருத ஸ்னானம் செய்வித்தனர். அந்த சமயம் தேவ துந்துபிகள் முழங்கின. பூமாரி பொழிந்தது. எங்கும் மகிழ்ச்சியும் மலர்ந்த முகங்களுமாக மனதார தேவ, ரிஷி, பித்ரு, மனிதர்கள் அனைவரும் வாழ்த்தினர். அவருக்குப் பின் அனைவரும் கங்கையில் மூழ்கி ஸ்னானம் செய்தனர். மகா பாதகம் கூட அந்த அவப்ருத ஸ்னானம் செய்தால் உடனே மறையும் என்பது நம்பிக்கை.
சக்ரவர்த்தி வந்து தான் புத்தாடைகள் ஆபரணங்களை அணிந்து கொண்டு மற்றவர்களுக்கும், சபையினர், ருத்விக்குகள், அந்தணர்கள், பந்துக்கள், பங்காளிகள், அரசர்கள், வந்திருந்த மித்ர, நெருங்கிய நண்பர்கள் மற்றும் வந்திருந்த அனைவருக்கும், வேண்டிய அளவு, ஆடைகள் கொடுத்தார். நாராயண பரம் என்றே அனைவரையும் மதித்தார்.
அனைவரும் வேண்டியதை பெற்றனர். குண்டலங்கள், பட்டாடைகள், விலையுயர்ந்த ஹாரங்கள் கனக மேகலைகள் என்ற ஆபரணங்களும் கிடைக்கப் பெற்றனர். எந்த வித பாரபக்ஷமும் இன்றி, சீலம் மிகுந்த ருத்விக்குகள், ப்ரும்ம வாதிகள், சபையினர், அந்தணர்கள், க்ஷத்திரிய, வைஸ்ய சூத்ர்கள், மற்றும் அரசர்கள் அனைவரும் ஒரே விதமான மரியாதைகள் பெற்றனர். தேவ ரிஷி பித்ருக்களுக்கான பூஜைகள், லோக பாலர்கள் தங்கள் பரிவாரங்களுடன் விடைபெற்றுச் சென்றனர். அவரை புகழ்ந்து பேசி அலுக்காமல் அம்ருதம் கிடைத்தவன் விடாது குடிப்பது போல திருப்தியே அடையாமல் தொடர்ந்து புகழ்ந்தனர்.
சக்ரவர்த்தி தர்மபுத்திரர், அன்புடன் அவர்களை வழியனுப்பி வைத்தார். அடுத்து நெருங்கிய பந்துக்கள், சம்பந்திகளை வழியனுப்பத் தயங்கினார். ஸ்ரீ க்ருஷ்ணனை பிரிய மனமின்றி அவர்களை உடனே செல்லாமல் தடுத்தார். பகவான் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு, யது வீரர்கள், சாம்பன் முதலானோருடன் குசஸ்தலீம் என்ற ஊருக்கு புறப்பட தீர்மானித்தார். அனைவரும் இந்த மிக அரிய ராஜ சூய யாகம் க்ருஷ்ணன் அனுக்ரஹத்தால் நல்ல விதமாக முடிந்தது என் நிம்மதியடைந்தனர்.
துரியோதனன் அந்த: புரத்தில் ஒரு நாள் ராஜ சூய யாகத்தை முன்னிட்டு வந்து சேர்ந்திருந்த செல்வங்களைப் பார்க்க நேர்ந்தது. அச்யுதனின் உதவியால் இந்த அளவு உன்னதமாக நடந்தது என்று உள்ளூற அறிந்தாலும், மனித மனம் மறுபக்கம் பொறுமியது. எல்லா இடங்களிலிருந்தும் லக்ஷ்மி-செல்வம் வந்து சேர்ந்திருந்தது. நரேந்திரர்கள், திதிஜேந்திரர்கள், சுரேந்திரன் என்று அனைவரும் வாரி வழங்கியிருந்தனர். விஸ்வஸ்ருஜ்- உலகையே படைத்தவன் அனுக்ரகம் பெற்றவன், அந்த பகவானுக்கே கொடுப்பது போல கொடுத்தார்களோ. கணவன்மாருடன் த்ரௌபதி அங்கு வந்தாள். அவளைப் பார்த்ததும் குருராஜன் மனதில் மேலும் பொறாமை வளர்ந்தது. யது பதியின் ஆயிரக் கணக்கான மகிஷிகள், ஆபரணங்களின் ஓசை மேலிட அவளுடன் பேசி மகிழ்ந்தபடி வந்தனர். மயன் கட்டிய சபையில் தர்மராஜன், தன் சகோதர்களுடனும், க்ருஷ்ணனுடனும் மற்றும் சில பந்துக்களுடனும் வீற்றிருந்ததையும் பார்த்தான். பொன்னாலான அரியணையில் இந்திரன் போல வந்திகள் துதி பாட அளப்பரிய செல்வத்துக்கு அதிபதியாக அமர்ந்திருந்தவனைப் பார்த்தான். கையில் எப்பொழுதும் இருக்கும் வாளுடன் துரியோதனன் மனக் குமுறலை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சகோதர்களுடன் அவர்கள் இருந்த இடம் வந்தான். ஆடை தடுக்கி தரையில் கால் வைத்த இடம் நீர் போல இருக்கவும், தாண்ட முயன்றவன் தடுக்கி தரையில் விழுந்தான். மயனுடைய கலை தரைக்கும், தண்ணீருக்கும் இடையே மாயத் தோற்றம் கொடுத்திருந்தது. பீமன் அதைப் பார்த்து பலமாக சிரித்தான். தொடர்ந்து மற்ற அரசர்களும் பெண்களும் சிரித்தனர். தர்மபுத்திரர் தடுத்தும் கேளாமல் அவர்கள் சிரித்தனர். க்ருஷ்ணன் எதுவும் சொல்லாமல் இருந்ததை அவரும் அனுமோதித்ததாக துரியோதனன் நினைத்தான்.
துரியோதனன் இதை தாங்க முடியாத அவமானமாக நினைத்தான். கோபம் கொப்புளிக்க சிவந்த கண்களுடன் எதுவும் பேசாமல் உடனே கிளம்பி கஜாஹ்வயம் வந்து சேர்ந்தான்.
எதிர்பாராத இந்த நிகழ்ச்சி அதனால் ஏற்பட்ட மனஸ்தாபம் என்ன ஆகுமோ என்ற கலையும் பயமும் வர ஹா ஹா என்று சபையினர் கூவினர். அஜாதசத்ரு மிகவும் மனம் வருந்தினார். பகவானோ பேசாமல் இருந்தார். என்ன நினைத்தாரோ, பூமி பாரம் குறைய அவதரித்தவர் தானே, வரப் போகும் அனிஷ்டமான செயல்கள் பற்றி நினைத்தாரோ.
ராஜன்! இது தான் துரியோதனனின் விரோதம் துவங்கிய காரணம். ராஜ சூய யாகசாலையில் துவங்கியது.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாம் பகுதியில், துரியோதன மான பங்கோ என்ற எழுபத்தைந்தாவது அத்யாயம். ) ஸ்லோகங்கள்-40
அத்யாயம்-76
ஸ்ரீ சுகர் சொன்னார்: அரசனே, ஸ்ரீ க்ருஷ்ணனின் மற்றொரு அதிசயமான செயலைச் சொல்கிறேன் கேள். தன் விருப்பம் போல், மனித சரீரம் எடுத்து அவதரித்தவர், சௌப என்ற நாட்டு அதிபதி அவனையும் வதம் செய்தார். அது பற்றிச் சொல்கிறேன். சிசுபாலனின் நண்பன் அவன். சால்வன் ருக்மிணி திருமணத்துக்கு வந்தவன். ஜராசந்தனுடன் யாதவர்களுடன் போரிட்டுத் தோற்றான். அனைவரும் கேட்க சபதம் செய்தான். உலகில் யாதவர்களே இல்லாமல் ஆக்குகிறேன் என்றான். என் ஆற்றலைப் பாருங்கள் என்று சூளுரைத்தான்.
இவ்வாறு அறிவிலி ஒரு சபதம் செய்து விட்டு, பசுபதியைக் குறித்து தவம் செய்யச் சென்றான். ஒரு முஷ்டி அளவே உணவு, அதுவும் எப்பொழுதோ ஒரு முறை. வருட முடிவில், பகவான் ஆசு தோஷர் – எளிதில் மகிழ்ச்சியடைபவர், உமாபதி, சரணடைந்த சால்வனுக்கு வரமருள வந்தார். சால்வன் ஒரு வாகனம் வ்ருஷ்ணி ஜனங்கள் கண்டாலே நடுங்கும்படி, என் இஷ்டப்படி சஞ்சரிக்க வசதியாக, தேவாசுரர்களோ, கந்தர்வ உரக ராக்ஷஸர்களோ அதை எதிர்த்து அழிக்க முடியாதபடி, இருக்க வேண்டும், அதையே வேண்டுகிறேன் என்றான். கிரீசன் அப்படியே ஆகட்டும் என்று வரமும் தந்தார். மயனை அழைத்து இரும்பாலான ஒரு விமானத்தை அமைத்து கொடுக்கச் செய்தார். அதைப் பெற்றதும் சால்வன் நேரே துவாரகா சென்றான். வ்ருஷ்ணி வம்சத்தினர் அங்கு வசித்தனர். அதை முற்றுகையிட்டான். பெரும் சேனையோடு சென்று அந்த முற்றுகையை ஊரின் உபவனங்கள், உத்யானங்கள் இவற்றை நாசமாக்கினான். கோபுரங்கள், பெரிய கதவுகள், ப்ராகாரங்கள், மற்றும் சிறப்பான கட்டிடங்கள், விளையாடும் இடங்கள், முதலிய இடங்களில் தன் விமானத்தில் இருந்து கொண்டு அம்புகளை எய்தான்.
பெரிய பாறைகள், மரங்கள், அமரும் பலகைகள், சர்ப்பங்கள் இவைகளுடன் பயங்கரமான புயல் காற்று வீசுவது போல அந்த யுத்தம் இருந்தது. புழுதியால் உலகமே மூடியது போல ஆயிற்று. க்ருஷ்ணனுடைய நகரம் என்பதால் அதை முற்றுகையிட்டிருந்தான். க்ருஷ்ணன் ஊரில் இல்லாததால், ப்ரத்யும்னன் தன் பிரஜைகள் பாதிக்கப் படுவதைக் கண்டு, பயப்படாதீர்கள் என்று ரதத்தில் ஏறி, சாத்யகி, சாருதேஷ்ணன் இவர்களுடன், சாம்பன், அக்ரூரன், அவர் சகோதரன், ஹார்திக்யர்கள், பானு விந்த வம்சத்தினர், கதன், சுக சாரணர்கள் இன்னும் பெரிய வீரர்கள் தங்கள் படைகளுடன் ரதங்களில் உதவ வந்தனர். மேலும் பல குதிரை,யானை, கால் நடை வீர்களும் வந்தனர். அசுர படை போலவே, இருந்தது. ருக்மிணியின் மகன் ப்ரத்யும்னன் அந்த இரும்பு வாகனத்தை பிளக்கும் யுக்தியை அறிந்து கொண்டான். சௌபதியின் மாயை, அதை திவ்யாஸ்திரங்களைக் கொண்டு நாசம் செய்து விட்டான். சரமாரியாக அம்புகளைப் போட்டு அந்த சால்வனின், கொடி தூக்குபவன் முதல், சிறிது சிறிதாக படை வீரர்களை, பின் வாகனங்களை என்று அடித்து நொறுக்கினான். அந்த வாகனமோ மயன் நிர்மாணித்தது. அதைக் காணும் முன் மறைந்து பின் எதிரில் வந்து என்று அலைக்கழித்தது. சில சமயம், பூமியில், மலைகளில் வானத்தில் என்று தென்பட்ட வாகனம், அதிலிருந்து வரும் பாணங்களைக் கொண்டு ஓரளவு அதன் இடத்தை ஊகித்துக் கொண்டு ப்ரத்யும்னன் பதிலடி கொடுத்தான். சால்வனின் மந்திரி த்யுமான் என்ற சாரதி, மௌர்ய வம்சத்து அரசனுடன் சேர்ந்து வந்து, அவனை தன் கதையால் மார்பில் அடித்து மூர்ச்சையடையச் செய்தான். உடனே ப்ரத்யும்னின் சாரதி ரண பூமியிலிருந்து அகற்றி வெளியே கொண்டு சென்று விட்டான்.
முஹூர்த நேரத்தில் நினைவு திரும்பியதும், தன் சாரதியைப் பார்த்து,ப்ரத்யும்னன், சாரதே! இது நியாயமல்ல. நாங்கள் யாதவர்கள், போர் புரியும் திறமையற்றவர்கள். என்னை அபகரித்தால், என் தந்தை கேசவனும், பெரிய தந்தை பல ராமனும் வந்து கேட்டால் என்ன பதில் சொல்வோம் என்றான். சகோதரன் மைந்தர்கள்,சிரிப்பார்கள்.
சாரதி சொன்னான்: வேறு வழியின்றி, தெரிந்து தான் செய்தேன். விபோ! சாரதியாக என் கடமை. ரதத்தில் உள்ளவனை ரக்ஷிப்பதே முதல் கடமை. மூர்ச்சித்து கிடந்த உங்களை காப்பாற்றவே, ரண பூமியிலிருந்து வெளியேற்றிக் கொண்டு வந்தேன் என்றான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாவது பகுதியில், சால்வ யுத்தம் என்ற எழுபத்து ஆறாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 33
அத்யாயம்-77
ஸ்ரீ சுகர் சொன்னார்: ப்ரத்யும்னன் நீரில் இறங்கி தன்னை சுத்தம் செய்து கொண்டு, பல் விளக்கி காலைக் கடன்களை முடித்து சாரதியிடம், என்னை அவன் எதிரில் கொண்டு நிறுத்து என்று ஆணையிட்டான். நேரடியாக தன் படையுடன் சென்று, எதிரியுடன் மோதி, ருக்மிணி புத்திரன் தன் வீரத்தை நிரூபித்தான். நாராசமான பாணங்கள் பிரயோகித்து எதிரியின் வாகனங்கள் ஒரு சாரதியை, ஒருவன் கொடியை விழச் செய்தும், மற்றவன் வில்லை ஒடித்தும், ஒருவன் தலையை கொய்தும் பயங்கரமாக போரிட்டான். எவ்வளவு தான் கடுமையாக போரிட்டாலும் சம மான பலமுடைய எதிரி ஆனதால் மூன்று நவ ராத்ரிகள்-27 நாட்கள் போர் தொடர்ந்தது. எதிர்த்தவனும் க்ருஷ்ணன் இந்திரப்ரஸ்தம் சென்றிருப்பதையும், சிசுபால வதத்தையும் கேள்விப்பட்டு, சிறுவன் என்று எண்ணித் தானே போரை தொடுத்தான்.
குல மூத்தவர்களிடம் அனுமதி பெற்று கிளம்பிய க்ருஷ்ணனின் மனதில் உள்ளூற சந்தேகம் இருந்தது. சிசுபால வதத்தின் எதிர் விளைவாக துவாரகையில் ஏதேனும் தாக்குதல் அவனுடைய உற்றார் உறவினர், நலம் விரும்பிகளின் கூட்டம் செய்து இருக்கலாம் என்று எதிர் பார்த்தார். சால்வ ராஜா, சௌபன், தாருகன் இவர்களின் மூலம் எதிர்ப்பு வரலாம் என்றும் ஊகித்தார். அதனால் சாரதியிடம், சௌபராஜன் மாயாவி, எனவே அவன் இருக்கும் இடம் என்னை அழைத்துச் செல் என்றார். அவர்களின் வருகையை அறிந்த தாருகன், மற்றவர்களிடம் சொல்லி எச்சரித்தான். சால்வன் க்ருஷ்ணனைக் கண்டதுமே தன் பலத்தை இழந்தவன் போல ஆனான். ஆயினும் க்ருஷ்ணனின் ரத சாரதியை அடிக்க சக்தி என்ற ஆயுதத்தை பிரயோகித்தான். ஆகாயத்திலிருந்து நெருப்புத் துண்டங்கள் விழிவது போல் வேகமாக வந்த அந்த அஸ்திரத்தை சமயத்தில் பார்த்து விட்ட ஸ்ரீ க்ருஷ்ணர் அதை தன் பாணத்தால் பொடிப் பொடியாக்கினார். பதினாறு பாணங்களை ஏக காலத்தில் பிரயோகித்து ஆகாயத்திலேயே சௌப அரசனை தாக்கினார். சூரியனுடைய கிரணங்களோ என் மயக்கிய தீவிரமான பாணங்கள் அவை. சால்வனும் விடவில்லை. தன் சரங்களால், சார்ங்க தன்வனான ஸ்ரீ க்ருஷ்ணனை நோக்கி அடிக்க சார்ங்கம் கை நழுவியதை யாருமே எதிர்பார்க்கவில்லை. எங்கும் ஹா ஹா என்ற அலறலே நிறைந்து. சௌப ராஜன் கொக்கரித்தான்.
‘மூடனே! நீ என் சகோதரனுக்கான பெண்ணை அபகரித்துக் கொண்டு போன நாளில் இருந்தே உன்னை எதிர்த்து வருகிறேன். சபை மத்தியில் என் சகாவை கொன்றாய். இன்று தப்பிக்க முடியாது. என் கூர்மையான பாணங்கள் உன்னை துண்டு துண்டாக்கும், திரும்பி வர முடியாத இடத்துக்கு அனுப்புகிறேன். என் எதிரில் நின்று பார்’ என்றான்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: ஏன் வீணாக கத்துகிறாய்? மந்த புத்தியே! இதோ நீதான் அந்த அந்தகனின் இடம் செல்லப் போகிறாய். சூரர்கள், தங்கள் பலத்தை செயலில் காட்டுவார்கள். வாய் வார்த்தையால் அல்ல, என்றார். சொல்லிக் கொண்டே பெரிய கதையை எடுத்து சுழற்றி சால்வனின் மேல் வீசினார். அவன் தோள் பட்டையில் பட்டு ரத்தம் வழியே விழுந்தவன், தன்னை மறைத்துக் கொண்டு விட்டான். ஒரு முஹூர்த்த காலம் எதுவும் தெரியவில்லை. என்ன ஆனான். அதன் பின் யாரோ ஒருவன், தேவகி அனுப்பினாள் என்று சொல்லிக் கொண்டு வந்து தலை வணங்கி நின்றபடி அழுது கொண்டே, சொன்னான்.
‘க்ருஷ்ண! க்ருஷ்ண! மகா பாகோ! உன் பிரியமான தந்தையை சால்வன் கட்டி, சௌனிகனோடு பசுவை கட்டி கடத்திச் செல்வது போல கொண்டு சென்று விட்டான், என்றான். தந்தையிடம் மிகுந்த பற்று வைத்திருந்த க்ருஷ்ணன் இதைக் கேட்டு, பாமரன் போல மனம் வாடி, மனிதனாக வருந்தினார். தேவர்களையும், அசுர்களையும் பலராமன் உதவியோடு வென்றேன். தற்சமயம் அவன் அருகில் இல்லாத சமயம் என் தந்தையை கடத்திச் சென்றவனை எப்படி மீட்பேன்? ஆ விதி தான் இவ்வளவு கொடியது, என்று புலம்பினார்.
கோவிந்தனே இப்படி புலம்பிய சமயம் , சௌபராஜன் திரும்பி வந்தான். வசுதேவரை ஒப்படைத்து விட்டு க்ருஷ்ணனிடம், இதோ உனக்கு உயிர் கொடுத்தவர், உன்னைப் பெற்ற தந்தை. இதோ கொல்லப் போகிறேன். உனக்கு ஆற்றல் இருந்தால் காப்பாற்றிக் கொள், அறிவிலியே! என்றான். இப்படிச் சொல்லிக் கொண்டே மாயாவியான அவன், ஆனக துந்துபியான வசுதேவரை, வெட்டி, தலையை எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் மறைந்தான். அனைத்தும் மாயையே என்பது முஹூர்த்த நேரத்தில் தெரிந்தது. மயங்கி விழுந்த உடன் இருந்தவர்கள் நினைவு திரும்பி எழு முன், அசுரனின் மாயை என்பதை உணர்ந்திருந்த அச்யுதன் மட்டுமே கலங்காமல் இருந்தார். தூதனும் இல்லை, அந்த தலையும் இல்லை கனவு போல இருந்த ஒரு தோற்றமே. மறைந்து வெட்ட வெளியில் நடமாடிக் கொண்டிருந்த சௌப ராஜனைக் கண்டு கொண்டு எப்படியும் கொல்ல எத்தனித்தார்.
ராஜ ரிஷியே! ரிஷிகள் சொல்வார்கள். வாக்கினால், நினைவினால் அறிய முடியாத அந்த பர புருஷனுக்கு, எங்கிருந்து கவலை, வருத்தம், பாசம், பயம் வரும். பகவானிடத்தில் இவையனைத்தும் அசம்பவமே. அகண்டமான ஞானம், விக்ஞானம் இவைகளே செல்வமாக உள்ளவன். அவன் ஏன் கவலைபடப் போகிறான்.
ஆத்ம வித்தையால் அவனுடைய பாத சேவையையே வேண்டுகின்றனர். அனாதியான எதிர் விணையாற்றும் க்ரஹங்களையும் அடக்கி விடுவர், தன்னையறிதல் என்ற உயர்ந்த ஞானத்தையே பெரிதாக எண்ணி வரும் சாதகர்கள், அவர்களின் பரம தெய்வமான அவருக்கு மோஹம் ஏது? சஸ்திரங்கள் அவருடைய தேஜசை அழிக்காது. சால்வனுடைய சரங்கள், அமோக விக்ரமம் உடைய ஸௌரி-ஸ்ரீ க்ருஷ்ணனின் கதையால் துளைக்கப் பட்டுஅவனுடைய சிரோ மணி- தலையில் இருந்த மணியுடன், அவனையும் துளைத்துக் கொண்டு சுக்கு நூறாக ஆக்கி ரத்தம் பெருக பூமியில் விழச் செய்தது. அவனும் ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில் ஐக்யமானான்.
சால்வன் வீழ்ந்தான் என்று அறிந்து துந்துபிகள் முழங்கின. தேவர்கள் பாடினர். அதற்குள் தன் சகா விழுந்தான் என்று கேள்விப்பட்டு தந்தவக்த்ரன் கோபத்துடன் எதிர்த்தபடி வந்தான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாம் பகுதியில், சௌப வதோ என்ற எழுபத்து ஏழாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 37
அத்யாயம்- 78
ஸ்ரீ சுகர் சொன்னார்: சிசுபாலன், சால்வன். அறிவிலியான பௌண்ட்ரகன் இவர்களுக்கு மூத்தார் கடன்களைச் செய்தனர். அந்த சமயம் ஒரு கால் நடை வீரன், கோபத்துடன் கையில் கதையுடன் வந்தான். உடனே தானும் கதையை எடுத்துக் கொண்டு ரதத்திலிருந்து இறங்கி வருபவன் யாரென்று பார்த்தார். காரூஷன் கதையை உயர்த்தி பிடித்தபடி முகுந்தனைப் பார்த்து என் நல்ல காலம் நீ இன்று என் கண்ணில் தென்பட்டாய். நீ எங்களுக்கு மாமன் மகன் க்ருஷ்ணா, மித்ரனாக இருக்க வேண்டியவன் என்னை கொல்ல நினைக்கிறாய். அதனால் இன்று என் வஜ்ரத்துக்கு சமமான கதையால் அடிக்கப் போகிறேன். அதன் பின் இருவரும் சமமாக ஆவோம். . யாருக்கும் யாரும் கருணையும் காட்ட வேண்டாம், த்வேஷமும் கொள்ள வேண்டாம். உடலில் வந்த வியாதி உடலையே அழிப்பது போல பந்துக்கள் எதிரி போல நடந்து கொண்டால், கொல்லத் தான் வேண்டும்.
இப்படி மெள்ள ஏதோ துதி செய்வது போல குரலில் சொல்லிக் கொண்டே கதையால் க்ருஷ்ணனை தலையில் அடித்தான். பெரும் குரலில் சிங்கம் போல கர்ஜித்தான். கதையால் அடி பட்டது போல காட்டிக் கொள்ளாமல் தன் கௌமோதகியால் அவன் மார்பில் ஓங்கி அடிக்க அவன் அந்த க்ஷணமே மாண்டான். அவனும் சூக்ஷ்மமான ஜோதியாக க்ருஷ்ணனிடம் கலந்து விட்டான். சேதி அரசன் க்ருஷ்ண சரீரத்திலேயே ஜோதியாக கலந்தது போலவே இருந்தது. அவனுடைய உடன் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் வந்தான். அவனும் பெரிய கதையுடன், வேகமாக வந்து க்ருஷ்ணன் மேல் ப்ரயோகித்தான். குண்டலமும், கிரீடமும், வேஷ பூஷணங்களும் சிதற க்ருஷ்ணனின் சக்ரத்தால் அடிபட்டவன் பூமியில் விழுந்தான், அவன் தான் தந்தவக்த்ரன் என்ற அசுரன். இவர்கள் மூவருமே, சௌபன், சால்வன், தந்தவக்த்ரன் க்ருஷ்ணன் கையால் அடிபட்டு மடிவதற்காகவே பூமியில் பிறந்தவர்கள். தேவர்களும், மற்றவர்களும் மகிழ்ந்தனர். முனிவர்களும், சித்த கந்தர்வர்களும், வித்யாதர மகோரகர்களும், அப்சரர்களும், பித்ரு, யக்ஷ கணங்களும், கின்னர சாரணர்களும், விஜய கீதங்களைப் பாடலானார்கள். பூமாரி பொழிந்தனர். வ்ருஷ்ணி குலத்தவர் சூழ்ந்து கொண்டனர். அனைவருடனும் தன் நகரம் வந்து சேர்ந்தார். சாதாரண பூவுலகில் பிறந்த ஒரு ஜீவனாகவே நினைத்தவர்கள் கூட தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஜய கோஷம் செய்தனர்.
இதற்குள், குரு பாண்டவ யுத்தம் பற்றி செய்தி வரவும், பலராமன் தீர்த்த யாத்திரை என்ற காரணம் சொல்லி யார் பக்கமும் தான் போரிடப் போவதில்லை என்பதைச் சொல்லி விட்டார். ப்ரபாஸம் என்ற இடத்தில் ஸ்னானம் செய்து விட்டு, அங்கிருந்து சரஸ்வதி நதிக் கரை சென்றார். அவருடன் அறிஞர்களான அந்தணர்கள் வந்து சேர்ந்து கொண்டனர். வரிசையாக தீர்த்த ஸ்தானங்கள், ப்ருதூடகம், பிந்து சரஸ், ஸ்த்ரித கூபம், சுதர்சனம், விசாலம், ப்ரும்ம தீர்த்தம், சக்ரம், ப்ராசீ, சரஸ்வதி என்றும், யமுனா, கங்கா என்ற புண்ய நதிகளிலும் ஸ்னானம் செய்து கொண்டே நைமிஷம் என்ற இடத்தை அடைந்தனர். அங்கு ரிஷிகள் யாகம் செய்து கொண்டிருந்தனர். வெகு காலமாக யாகம் செய்து கொண்டிருந்தவர்கள் அவர் வந்ததையறிந்து வணங்கி வரவேற்று, அதிதி சத்காரங்கள் செய்து, அமரச் செய்தனர். தகுந்த ஆசனத்தில் அமர்ந்த பின் அவர்களிடம் குசலம் விசாரித்தபடி அனைவரையும் பரிச்சயப் படுத்திக் கொண்டார். ரோம ஹர்ஷணர் என்ற முனிவர் அமர்ந்திருப்பதைப் பார்த்து, மஹரிஷியின் சிஷ்யன்,ஏன் மற்றவர்கள் போல மரியாதையாக எழுந்திருக்க வில்லை, அமர்ந்த படியே இருப்பதும், வணக்கமோ, கைகூப்பி அஞ்சலி கூட செய்யாததும், அவருக்கு கோபமூட்டியது.
மற்றவர்களிடம் காரணம் கேட்டார். ஏன் இவன் பெரியவர்கள் கூடியிருக்கும் இடத்தில் மரியாதை செய்யாமல் அமர்ந்தே இருக்கிறான். அவமரியாதை செய்பவன் வதம் செய்யப் பட வேண்டியவன் என்றார். நல்ல ரிஷி குருவாக கிடைத்தும், சிஷ்யனாக பல விஷயங்களை அவரிடம் கற்ற பின்னும், இதிகாசம், தர்ம சாஸ்திரங்கள் இவைகளைக் கற்றவன் வினயம் இல்லாமல் தன்னை பண்டிதனாக-அறிந்தவனாக நினைக்கிறானா? அது நல்லதல்லவே. நாடக நடிகன் அறிஞனாக நடிப்பது போல், பொதுவான தர்மங்களை கூட அனுசரிக்காதவன், அவனிடம் என்ன நல்ல குணம் இருக்கும். இப்படிப்பட்ட கர்வம் கொண்டவர்களை அழிக்கவே நான் அவதரித்தவன், தர்மத்தை காப்பவர்கள் நீங்கள் அனைவரும், இவனுக்கு ஏன் அறிவுறுத்தவில்லை, அறிவிலி, அபிமானி என்று வதம் செய்திருக்க வேண்டுமே, இவ்வாறு சொல்லிக் கொண்டே கிளம்பி விட்டார். ஒரு புல்லைப் பிடுங்கி ரோம ஹர்ஷணரை அடித்து விட்டார். முனிவர்கள் வருந்தினர். ஹா ஹா என்று பரிதாபமாக சொன்னார்கள். ப்ரபோ! தாங்கள் செய்தது சரியல்ல. இவருக்கு யாகத்தின் ப்ரும்மாவாக ஆசனம் அளித்திருக்கிறோம். யாகம் முடியும் வரை இவருக்கு ஆயுளும் அளித்திருக்கிறோம். இவரும் யோகேஸ்வரர். ப்ரும்மாவாக வரித்து யாக சாலையில் அமரச் செய்த நாங்கள் தான் அவரை வணங்க வேண்டும். அனாவசியமாக ப்ரும்ம வதம் செய்து விட்டீர்களே. வேத சாஸ்திரப் படி நியமங்கள் என்ன என்று நிர்ணயித்தவரே பகவானான நீங்களே தானே.
ரிஷிகள் சொன்னார்கள்; எங்களுடைய வாக்கும் சத்யமாக வேண்டும், உங்கள் அஸ்திரமும் தன் சக்தியை இழக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு என்ன செய்வீர்களோ, செய்யுங்கள், என்றனர்.
பலராமன் சொன்னார்: ஆத்மா வை புத்ர உத்பன்ன- என்ற நியாயம், தானே தான் தன் மகனாக பிறக்கிறான் என்ற நியாயப் படி இவருடைய மகனுக்கு இவருக்கு அளித்த புராணங்களை சொல்லும் வக்தா என்ற தகுதி அனைத்தும் கிடைக்கட்டும். என் தவறை உணர்ந்து கொண்டேன். என் அஸ்திரம் அதனால் பலனின்றி போவதை தடுக்க நீங்கள் சொல்வதைச் செய்கிறேன் என்றார்.
தாசார்ஹனே! இல்வலன் என்பவனின் மகன் பல்வலோ என்று மகா கொடூரமான தானவன். அவனை அழி, அவன் வந்து யாகத்தை கெடுக்கிறான். கண்ட அசுத்தங்களைக் கொண்டு வந்து யாக சாலையை தூஷிக்கிறான். இந்த தவற்றுக்கு பரிகாரமாக பாரத வர்ஷம் முழுவதும் தீர்த்த யாத்திரை பன்னிரண்டு மாதங்கள் மேற் கொள்ளுங்கள். தீர்த்த யாத்திரை உங்களுடைய பாபத்தை போக்கும் என்றனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பகுதியில், பலதேவ சரித்ரே, பல்வல வதோபக்ரமோ என்ற எழுபத்தெட்டாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 40
அத்யாயம்-79
மழைக் காலம் தொடங்கியது. பயங்கரமாக காற்று வீசியது. மேகம் இடிந்து விழுவது போல இரைச்சலுடன் மழை உக்ரமாக பொழிந்தது. அந்த சமயம் குப்பை கூளங்களை பல்வளன் வர்ஷித்தான். யாக சாலையை நாசமாக்க அவன் கையில் சூலத்துடன் வந்து நின்றான். பெரிய உருவத்துடன் அவன் வந்து நின்றதும், அஞ்சன மலை பிளந்து விட்டதோ எனும் கருமையான நிறத்துடன், தாமிர வர்ண கேசம், மீசை, பயங்கரமான பெரிய பற்கள், கரிய புருவங்களுடன் முகம் இவனை எப்படி வதைப்பது என்று யோசித்து பலராமன் தன் முசலம் என்ற ஆயுதத்தை மனதால் நினைத்தார். எதிரி சைன்யத்தை ஓட ஓட விரட்டிய ஆயுதம் அது, தவிர, தன் ஹலம்-கலப்பை என்ற ஆயுத்தையும் மனதால் நினைத்து தருவித்துக் கொண்டார்.
ஆயுதங்கள் கைக்கு வந்தவுடன் ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பல்வலனை முஸலத்தால் ஓங்கி அடித்தார். தலையில் அடி பட்டு அவன் வீழ்ந்தான். வஜ்ரத்தால் அடிபட்ட மகா மலை போன்று, பூமியில் விழுந்து புரண்டு அலறினான். முனிவர்கள் பலராமனை துதி செய்தனர். அனைவரும் ஆசிகள் வழங்கினர். வ்ருத்ரனைக் கொன்ற தேவராஜனை அபிஷேகம் செய்தது போல அபிஷேகம் செய்தனர். உயர்ந்த பட்டாடைகளும் ஆபரணங்களும் கொண்டு வந்து பரிசளித்தனர். அதன் பின் அவர்களிடம் விடை பெற்று தன்னுடன் வந்த அந்தணர்களோடு, கௌசிகீ என்ற நதிக் கரையை அடைந்தார். அந்த நதியில் ஸ்னானம் செய்து, தேவ, தேவதைகளை பூஜை செய்து, புலஹாஸ்ரமம் என்ற இடம் சென்றார். கோமதி, கண்டகி நதிகளில் ஸ்னானம் செய்து விபாசா என்ற நதியில், பின், சோணா என்ற நதியில், மூழ்கி ஸ்னானம் செய்தார். அங்கிருந்து கயா என்ற இடம் சென்றார். பித்ருக்களுக்கு அபர காரியங்களைச் செய்து விட்டு கங்கை சாகரத்தில் கலக்கும் இடம் சென்றார். மஹேந்திர மலையை தொட்டு வணங்கி, அங்கு பரசு ராமரைக் கண்டு வணங்கி விட்டு, மேலும் தென் திசையில் சென்றார். சப்த கோதாவரியை தரிசித்து, வேணா, பம்பா, பீமரதீ என்ற இடங்களில் யாத்திரையை தொடர்ந்தார். அங்கு ஸ்கந்தனைப் பார்த்து வணங்கி விட்டு மேலும் சென்றார். ஸ்ரீ கிரீசனின் ஆலயம் அமைந்துள்ள ஸ்ரீ சைலம் என்ற மலை மேல் பகவானை தரிசித்தார். தென் திசையில் மகா புண்யமான இடம் அது. அதன் பின் மற்றொரு புண்ய க்ஷேத்ரமான திரு வேங்கட மலை சென்றார். மலையே புண்யமானது என்று அறிந்து அதன் மேல் வேங்கட நாதனை தரிசித்தார். காம கோடீ என்ற புண்ய க்ஷேத்திரமான காஞ்சியையும், சிறந்த நதியான காவேரியையும் தரிசித்து ஸ்ரீரங்கம் என்ற புண்ய க்ஷேத்ரம் வந்து சேர்ந்தார். அங்கு நிலை கொண்ட ஸ்ரீ ஹரியை – ரங்க நாதனைக் கண்டு வணங்கி விட்டு, ரிஷபாத்ரி வந்து சேர்ந்தார். இதுவும் ஸ்ரீ ஹரியின் க்ஷேத்ரமே. அதன் பின் தக்ஷிண மதுரை வந்து சேர்ந்தார். அங்கிருந்து சமுத்திர கரைக்கு வந்து சேதுவை தரிசித்தார். சேது தரிசனமே மகா பாதக நாசனம் என்பர். அங்கு நிறைய பசுக்களை அந்தணர்களுக்கு தானம் செய்தார். ஹலம் என்ற ஆயுதம் ஏந்தியவர், என்பதால் ஹலதர: என்று பெயர் பெற்ற பலராமன், அங்கிருந்து க்ருத மாலா என்ற வைகை நதியையும், தாம்ரபரணியையும், மலயம் என்ற குலாசலத்தையும் தரிசித்தார். அங்கு வசித்து வந்த அகஸ்தியரை தரிசித்தார். தபஸ்வியான அவரை நமஸ்காரம் செய்து வணங்கி, அபிவாதனங்கள் சொல்லி ஆசிகள் பெற்று, அவரிடம் விடை பெற்று சமுத்திர கரைக்குச் சென்றார். கன்யா என்ற பெயர் பெற்ற, தக்ஷிண தேசக் கோடியில் துர்கா தேவியை தரிசித்தார்.
அதன் பின் பால்குணம்- அனந்த சயனன் – பகவான் பள்ளி கொண்ட கோலத்தில் தரிசித்து விட்டு, அதன் அருகில் பஞ்ச அப்சர என்ற ஏரியில் சாக்ஷாத் ஸ்ரீ விஷ்ணு ப்ரசன்னமாக உள்ள இடத்தை அடைந்தார். அந்த இடத்தில் ஸ்னானம் செய்து இரண்டு பசுக்களை தானம் செய்தார். அதன் பின் கேரளம் என்ற தேசத்தில், த்ரி கர்தக என்பவர்கள் வசித்த இடம், அதன் பின் கோகர்ணம் என்ற இடத்தில், ப்ரசித்தமான சிவ க்ஷேத்ரம், அங்கு தூர்ஜடீ என்ற பெயருடன் பகவான் மகேஸ்வரன் போற்றப் படுகிறார்- த்வைபாயனீ – த்வீபம் தீவு அங்கு வசிப்பவள்- தேவி க்ஷேத்ரம் அங்கு தரிசித்து விட்டு, தண்ட காரண்யம் வந்தார். சூர்பணகா என்றே பெயர் பெற்ற இடத்தையடைந்தார். தபதி, பயோஷ்ணீ என்ற நதிகளை விந்த்ய மலையில் கண்டு ஸ்னானம் செய்து விட்டு, தண்டகம் என்ற இடத்தில் உள்ளே சென்று ரேவா நதியையும், மாஹிஷ்மதீ என்ற நகரத்தையும் கண்டார். மனு தீர்த்தம் என்ற அந்த இடத்து தீர்த்தத்தில் ஸ்னானம் செய்து விட்டு, திரும்ப ப்ரபாஸ க்ஷேத்ரம் வந்து சேர்ந்தார்.
அங்கு இருந்த ரிஷிகளும் அந்தணர்களும் குரு பாண்ட யுத்தம் பற்றியும், ஏராளமான அரசர்கள் மடிந்த செய்தியையும் அறிந்தார். பூ பாரம் குறைந்தது என்று அவர்கள் சொல்லக் கேட்டார். அன்று துரியோதன, பீமனிடையில் கதை யுத்தம் என்பது காதில் விழுந்தவுடன், அவர்கள் உபசரித்ததை ஏற்காமல் உணவை உண்ணாமலே யுத்த பூமிக்கு சென்றார்.
யுதிஷ்டிர், க்ருஷ்ண,அர்ஜுன அனைவரும், அவரை வணங்கினர். எதுவும் பேசாமல் நின்றனர்.
பலராமன் இருவரும் கைகளில் கதையுடன் யுத்தம் செய்வதை பார்த்தார். இருவருமே ஜயிக்கவே போரிட்டனர். விசித்ரமான மண்டலங்கள், இடை விடாது சுற்றிச் சுற்றி வந்தவர்களைப் பார்த்து அவர் சொன்னார்: இருவரும் சமமான பலம் உடையவர்கள். ஹே ராஜன்! ஹே வ்ருகோதர! ப்ராணனை காப்பாற்றிக் கொள்வது வெற்றியை விட மேல் என்று எண்ணுகிறேன். ஒருவன் தான் ஜயிக்க முடியும். ஜயமோ மற்றதோ, கவலைப் படாமல் பயனற்ற இந்த யுத்தத்தை உடனே நிறுத்துங்கள் என்றார். இருவரும் வைரத்தின் உச்சியில் இருந்தனர். அவர் வார்த்தையை கேட்கவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர் தனக்குச் செய்த அநீதியை மட்டுமே மனதில் கொண்டு தொடர்ந்து யுத்தம் செய்தனர்.
போதும் பார்த்தது என்று பலராமன் துவாரகா சென்று விட்டார். உக்ர சேனர் முதலான உறவினர்களுடன் சிறிது நேரம் செலவழித்து விட்டு நைமிஷம் சென்று விட்டார். அங்கு யாகம் செய்து கொண்டிருந்த ரிஷிகளுடன் அமர்ந்து தானும் அதில் பங்கேற்றார். அவர்கள் அனைத்தையும் துறந்து வைராக்யமாக இருப்பதைப் பார்த்து அவர்களிடம், விசுத்தம், விக்ஞானம், என்று தன் கவனத்தை பகவானிடமே செலுத்தி விட்டார். விஸ்வம் முழுவதும் பரவியுள்ள ஏகாத்மாவான பகவானின் அம்சமாக தான் வந்ததை உணர்ந்து கொண்டார். தன் மனைவி, பந்துக்களுடன் அவப்ருத ஸ்னானம் செய்து விரதத்தை முடித்தார்.
பலராமனும் மாயா மர்த்யனாக அவதரித்து பல அத்புதமான செயல்களைச் செய்தார். அவைகளை நினைத்து ஸ்ரீமான் மகா விஷ்ணுவின் அனுக்ரகத்துக்கு பாத்திரமாக ஆகலாம்.
( இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பகுதியில், பலதேவ தீர்த்த யாத்ரா என்ற எழுபத்து ஒன்பதாவது அத்யாயம்) ஸ்லோகங்கள் -34
அத்யாயம்-80
அரசன் பரீக்ஷித் வினவினான்: பகவன்! அனந்த வீர்யன் என்று பகவானைச் சொல்கிறீர்கள். எல்லையில்லாத ஆற்றல் படைத்தவன். அவருடைய ஆற்றல் வெளிப் படும்படி என்ன என்ன செய்தார்? கேட்கவே நன்றாக இருக்கிறது. உத்தம ஸ்லோகனுடைய சத்கதைகள். உலகியலில் துன்பப்படும் சாதாரண மக்கள் முதல் விசேஷமான அறிவுடையவர் வரை இந்த கதைகளினால் உலகில் பற்றைத் துறப்பர். அவர்கள் வாக்கினால் அவருடைய குணங்களைப் பாடுவர். கைகளால் அவருக்கு சேவை செய்வர். மனதால் ஸ்மரித்து தியானம் செய்வர். அவர் அசையும் அசையாத அனைத்து சராசரங்களிலும் இருப்பதைக் காண்பர். காதுகள் அவருடைய புண்ய கதைகளை கேட்கவே. தலை வணங்கவே. அவரைக் காணும் கண்களே கண்கள். வணங்கும் அங்கங்களே சரீரம். அவருடைய பாதத்தில் சமர்ப்பித்த நீரை தன் தலையில் தெளித்துக் கொள்வதே பாவனமான நீர்.
சூதர் சொன்னார்: விஷ்ணுராதன் – அரசன் பரீக்ஷித், பேசியதைக் கேட்டு பாதராயணி எனப்படும் ஸுதர், சற்று நேரம் பேசாமல் இருந்தார். தானும் வாசுதேவனின் நினைவில் மூழ்கியவராகத் தோன்றினார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஸ்ரீ க்ருஷ்ணனின் ஒரு சகா ப்ரும்ம வித் எனும் அந்தண ஸ்ரேஷ்டன். தன் வரை புலனடக்கி, விரதங்களைச் செய்து, அமைதியான மனதுடன் பற்றின்றி வாழ்ந்தவர். எதேச்சையாக இல்லற வாழ்வில் ஈடுபட்டார். குசேலர் என்ற அந்த அந்தணருடைய மனைவி நாளடைவில் பண வரவு எதுவும் இல்லாமல் போகவே உணவுக்கும் வழியின்றி பசியால் வாடினாள். வேறு வழியின்றி கணவனிடம் மன்றாடினாள். தரித்ரம்- தேவைக்கு கூட செலவழிக்க முடியாத வறுமை- தாங்க முடியாத வேதனையோடு சொன்னாள். ப்ரும்மன்! உங்கள் சகா ஸ்ரீ தேவியின் பதி என்றீர்கள். அண்டியவர்களைக் காக்கும் பெருந்தகை. அந்தணர்களை மதிப்பவன், மதிப்பு வாய்ந்தவன் என்று நீங்கள் சொல்லி அறிகிறோம். அவரிடம் சரணடையுங்கள். சாதுக்களுக்கு வேறு அடைக்கலம் எவருண்டு. குடும்பி, வறுமையால் தவிக்கிறேன் என்று சொல்லி யாசியுங்கள். நிச்சயம் உதவுவார். இப்பொழுது போஜவதி, வ்ருஷ்ணி வம்சங்களின் அரசன். தன்னை நினைப்பவர்களுக்கு வேண்டுவது எதுவானாலும் தாராளமாக தருவார் என கேள்வி. செல்வம் வேண்டுவது தவறில்லை. ஜகத்குருவானவர், எளிய ஏழை மக்களுக்கு உதவ மாட்டாரா? பலமுறை அந்த மனைவி பிரார்த்தனை செய்யவும், இதிலும் உத்தம ஸ்லோகனை தரிசிக்க வாய்ப்பு இருப்பது ஒரு லாபமே என்று எண்ணியவாறே கிளம்பினார். கல்யாணி! அவருக்கு கொடுக்க ஏதாவது உபாயனம்- பரிசுப் பொருள், இருக்கிறதா? என்று மனைவியை வினவினார். யாசித்து நாலு முஷ்டி அவல் -ப்ருதுக தண்டுலான்- வைத்திருக்கிறேன் என்று சொல்லி ஒரு துணியில் மூட்டைக் கட்டி கொடுத்தாள்.
அதை எடுத்துக் கொண்டு அந்த அந்தண ஸ்ரேஷ்டர் துவாரகை நோக்கிச் சென்றார். எனக்கு க்ருஷ்ண தரிசனம் கிடைக்குமா? எப்படி இருக்கும்? என்ற சிந்தனையே மனதை நிறைத்தது. ஸ்ரீ க்ருஷ்ணரின் மாளிகையில் மூன்று அறை வரை யாரும் எதிர்படவும் இல்லை. அந்தக, வ்ருஷ்ணி குலத்தவரின் மாளிகை கிருஷ்ணன் இருந்த அந்த மாளிகை. இரண்டாயிரத்து எட்டு மகிஷிகள் வாழும் வீடு. அனைவரையும் ஒரே சமயத்தில் பார்த்தவர் ப்ரும்மானந்தம் அடைந்தது போல மகிழ்ந்தார்.
சற்று தூரத்திலிருந்தே பார்த்த ஸ்ரீ க்ருஷ்ணர், அவசரமாக ஆசனத்தை விட்டு இறங்கி அருகில் வந்து கைகளைப் பிடித்து வாழ்த்துச் சொல்லி வரவேற்றார். பிரியமான சகா என்பதால் அணைத்து ஆலிங்கணம் செய்து கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்க, அன்புடன் பேசினார். தன்னுடன் சரியாசனத்தில் அமரச் செய்து அதிதி சத்காரம் என்பதைச் செய்தார். பாதங்களை தானே தன் கைகளால் கழுவி, அந்த நீரை தலையில் தெளித்துக் கொண்டார். சந்தன, அகரு குங்குமம், என்று வாசனைப் பொருட்களை தானே பூசி விட்டார். தூப தீபங்கள் என வழக்கமான உபசாரங்கள் செய்த பின், குசலம் விசாரித்தார்.
குசேலர், மலினமான உடை, தமனி-சரீரத்தின் உள் நரம்புகளை எண்ணி விடலாம் போன்ற உடல், வற்றி உலர்ந்த சரீரம் உடைய அவருக்கு, அந்தணருக்கான உபசாரங்களை குறைவின்றி செய்ய, ஸ்ரீ க்ருஷ்ணரின் பத்னி, தானே, விசிறியால் விசிறி, உபசாரங்கள் செய்தார். அந்த:புர பெண்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். கிட்டத்தட்ட அவதூதராக காட்சியளித்த பரம ஏழை, ஸ்ரீ தேவியே, உள்ளன்புடன் பரிசாரகம் செய்வதா என்று ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இந்த ஏழை ப்ராம்மணன் என்ன புண்ணியம் செய்தாரோ, இது வரை செல்வத்தின் நாயகியின் கடைக் கண் பார்வை கிடைக்கப் பெறாமல் ஏழ்மையில் உழன்று யாசிக்க வந்தவர், உலகில் இவரை யாரும் மதிப்பார்களா? இங்கு வந்து மூவுலகுக்கும் குருவான ஸ்ரீ நிவாசனே தன் படுக்கையறையில் சரியாசனம் கொடுத்து தனக்கு முன் பிறந்தவனுக்கு செய்வது போல மரியாதைகள் செய்கிறாரே. இருவரும் கை கோர்த்தவாறு குருகுலத்தில் இருவருமாக அத்யயனம் செய்த சமயம் நடந்த கதைகளை நினைவு படுத்தி பேசிக் கொண்டனர்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: ப்ரும்மன்! குருகுல வாசம் நினைவு இருக்கிறதா? உனக்கு தக்ஷிணை கிடைத்தது. அதன் பின் திருமணம் ஆனதாக கேள்விப்பட்டேன். மனைவி எப்படி இருக்கிறாள், உனக்கு அனுசரனையாக இருக்கிறாளா? சாதாரணமாக உன் போன்ற பணம், பொருள், காமம் என்ற உலகியல் விஷயங்களில் நாட்டமில்லாத மனிதர்கள் வீடுகளில் பெரும்பாலும் விரும்பப் படுவதில்லை என்று அறிவேன். சிலர் அது போல விஷயங்களில் நாட்டமில்லாதவர்கள் கர்ம மார்கத்தில் ஈடுபடுவர். மனித பிறவியின் இயல்பான ஆசைகளைத் துறந்து என்னைப் போல உலக தர்மத்தை நிலை நாட்டவே செயல்களைச் செய்வார்கள். குரு குலத்தில் இருந்த சமயம் குரு உபதேசம் செய்தார். நினைவிருக்கிறதா? குருகுல வாசமே நினைவில் இருக்கிறதா? நம் குரு அறியாமையை அகற்றும் உத்தமமான அறிவை புகட்டினார். நாம் அறிய வேண்டியது அனைத்தும் அவரிடம் கற்றோம். அவர் சாக்ஷாத் சத் கர்மா என்பது போல நியமங்களை கண்டிப்பாக அனுசரித்தவர். அது போல குரு கிடைப்பது அரிது.
நானும் அங்கு மாணவனாக இருந்தேன். இன்று ஞானம் தரும் குருவாக இருக்கிறேன். அவரது வழியில் சம்சார கடலைக் கடக்கும் வழியை உபதேசிக்கிறேன். எனக்கு யாகங்கள், தவம் இவற்றால் மகிழ்ச்சி இல்லை. குருவுக்கு சிஷ்யன் செய்யும் பணிவிடைகளால் மிகவும் மகிழ்கிறேன்.
ப்ரும்மன்! சிலர் பொருளாதாரத்தில் சிறந்த அறிவுடையவர்களாக இருப்பார்கள். வர்ணாஸ்ரம முறையில் நமது சமூகத்தில், பலர் பொருளாதார அறிவுடையவர்கள். குருவின் உபதேசத்தால், உயர்ந்த பொருள் பொதிந்த சொற்கள், இன்றளவும் நினைவில் உள்ளது. ப்ரும்மன்! நாம் அங்கு வசித்த சமயம் குரு பத்னிகள் சொன்னதால் விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்றோம். பெரும் காடு. உள்ளே நுழைந்தபின், கடுமையான மழை வந்து விட்டது. காற்று துணை போக மழை சாரல்கள் மேகமே இறங்கி வந்தது போல இரைச்சலுடன் பொழிந்தது. ஸுரியன் மறைந்து ஒரே இருட்டு. கால் வைத்த இடம் எல்லாம் தண்ணீர். செய்வதறியாது திகைத்தோம். திக்கு திசை தெரியவில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக கைகளை பற்றிக் கொண்டோம். விடியும் வரை அதே இடத்தில் காத்திருந்தோம். விடிந்ததும், குரு சாந்தீபினீ நம்மைத் தேடிக் கொண்டு வந்து விட்டார். ஹே! புத்ரகா:! எங்களுக்காக இங்கு வந்தவர்கள் பெரும் கஷ்டத்தில் மாட்டிக் கொண்டு விட்டீர்களே. உயிரினங்களுக்கு தன் ஆத்மா தான் உயர்வு. அதைக் கூட எண்ணாமல் எங்கள் தேவைகளுக்காக வனம் வந்து விட்டீர்கள். அது தான் நல்ல சிஷ்யர்களுக்கு அழகு. கல்மஷம் இல்லாமல் குருவுக்காக எதையும் அர்ப்பணம் செய்ய தயாராக இருக்கும் உங்கள் செயலால் மகிழ்ந்தேன். உங்கள் மனோ ரதங்கள் பூர்த்தியாகட்டும். கற்ற வேதங்கள் துணையிருக்கட்டும். இக லோகத்திலும் பரத்திலும் அழிவில்லாத வேதங்கள், அனவரதமும் நன்மைகளை செய்ய வல்லவை அவை உங்களை காக்கட்டும். இவ்வாறு பலவாறாக ஆசீர்வதித்து அழைத்துச் சென்றார். குருவுடன் அந்த இடத்தில் வளர்ந்து ஆளானோம்.
அந்தணர் சொன்னார்: தேவ தேவ ஜகத் குரோ! நாங்கள் என்ன செய்தோம். தாங்கள் சத்ய காமன். உங்கள் அருகாமையால் நீங்களும் உடன் வசித்ததால், குருவும் அவ்வாறு அமைந்தார். என்ன என்ன சந்தஸ்- வேத மந்திரங்கள் உண்டோ, உடலை வளர்க்கும் நன்மைகள் உண்டோ, அவை அனைத்தும் அந்த குருவிடம் இருந்த பொழுது அடைந்தோம் மறக்கவே முடியாது.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பகுதியில், ஸ்ரீதாம சரிதம் என்ற எண்பதாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-45
அத்யாயம் 81
இவ்வாறு தன் பால்ய சகா, நெருங்கிய சினேகிதன் என்பதைக் காட்ட உரிமையுடன் குருகுல கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபின் சிரித்துக் கொண்டே, ப்ரும்மன்! என்றபடி அன்புடன் பார்த்தார். எனக்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறாயா? அணு அளவு கொண்டு வந்து அன்பளிப்பாக கொடுத்தாலும் எனக்கு சம்மதமே பக்தியுடன் பக்தர்கள் அளிப்பது சிறிதேயானாலும் எனக்கு அது மிகப் பெரிது. ஏராளமாக கொடுத்தாலும் பக்தியில்லாமல் கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சியில்லை.
பத்ரம், புஷ்பம், பலம், தோயம், யோ மே பக்த்யா ப்ரயச்சதி, ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்னாமி ப்ரயதாத்மன:
ஒரு இலை அல்லது புஷ்பம், தண்ணீர், எதோ ஒரு சிறு பொருள் பக்தியுடன் கொடுத்தால் நான் அதை விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். பக்தியில்லாமல் ஏராளமாக கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சியில்லை.
பகவானே கேட்டதும், அந்த அந்தணர் வெட்கப்பட்டார். ஸ்ரீ தேவியின் பதி. செல்வத்துக்கே அதிகாரி. எதுவும் பேசாமல் அவல் மூட்டையை கொடுத்தார். சர்வ பூதாத்ம த்ருக், – உலகம் முழுவதும் தானே காண்பவன், அவர் வந்த காரணத்தையும் ஊகித்து விட்டார். இதற்கு முன் இவர் என்னிடம் செல்வத்தை யாசித்ததே இல்லை. அனுசரணையான மனைவி, அவள் சொல்லி வந்திருக்கிறார், அவளை திருப்தி படுத்துவதே இந்த எளிய அந்தணரின் நோக்கமே தவிர, இவர் மனதார செல்வம் தேவை என்று நினைப்பவர் கூட இல்லை. என்று இவ்வாறு யோசித்து அந்த அவல் இருந்த சிறு துணி மூட்டையை வாங்கி அவிழ்த்து, ஆஹா அவல், எனக்கு பிடிக்குமே என்று சொன்னபடி ஒரு முஷ்டி அவலை எடுத்து வாயில் போட்டுக் கொண்டவர், அடுத்த கவளத்தை கையில் எடுத்தார். உடனே அருகில் இருந்த லக்ஷ்மி தேவி அவர் கையை பிடித்து தடுத்தாள். விஸ்வாத்மன், இதுவே போதும், சர்வ சம்பத்தையும் அளிக்கும். இக லோகத்திலும் பரலோகத்திலும் உன்னை சந்தோஷப்படுத்தியதன் பலன் இவருக்கு கிடைத்து விடும்.
அன்று இரவு அங்கு தங்கி மறுநாள் காலை அந்தணோத்தமர் வீடு திரும்ப கிளம்பினார். அங்கு இருந்தவரை உண்டதும், பருகியதும் கனவு போல இருந்தது. சுவர்க வாசம் போல மகிழ்ந்தார். மறு நாள், விஸ்வ பாவன்- பகவானால் சந்தோஷமாக வழியனுப்பி வைக்கப் பட்டு, தன் வீடு திரும்பினார். வழி முழுவதும் மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. தான் யாசிக்கவுமில்லை, க்ருஷ்ணனிடமிருந்து எதுவும் பெறவுமில்லை -வீடு நெருங்க நெருங்க கவலையும் வெட்கமும் அரித்தன. மிக அரிய காட்சியைக் கண்ட பின் இருந்த பரவசம் விலக, உண்மை நிலை உரைக்கலாயிற்று. ப்ரும்மண்ய தேவன் என்று பகவானுக்கு ஒரு பெயர். ப்ரும்ம வாதிகளின் தலைவன் எனப் படுவார். என்னிடம் அந்த ப்ரும்மத்வம்- ப்ராம்மணனுக்குரிய அடையாளங்களை அறிந்திருப்பார். த்ரித்ரத்திலும் தரித்ரன் என்னை அணைத்து சாக்ஷாத் லக்ஷ்மி தேவி உறையும் திரு மார்பில் பட ஆலிங்கணம் செய்து கொண்டார். என் பொல்லா வினை என்னை தரித்ரனாக பிறக்கச் செய்துள்ளது. தரித்ரன் நான் எங்கே, ஸ்ரீ நிகேதனான க்ருஷ்ணன் எங்கே. ப்ரும்ம பந்து நான் (ஒரு நிந்திக்கும் சொல்) என்னை தன் புஜங்களால் அணத்தாரே. தன் மனைவியுடன் இருக்கும் கட்டிலில் அமரச் செய்தார். உடன் பிறந்தவன் போல மரியாதைகள் செய்தார். அவன் மனைவியைக் கொண்டு வெண் சாமரம் வீசி உபசரித்தார். தேவர்களுக்கு செய்வது போல பாத ப்ரக்ஷாலனம் முதலான அதிதி சத்காரங்களை முழுமையாகச் செய்தார். அவன் தானே தேவ தேவன், சுவர்கம் அபவர்கம் என்பவைகளையும், பூமியில் செல்வம் அனைத்துக்கும் இருப்பிடமானவன், சித்திகளின் பலனாக உள்ளவன், அவனுடைய பாத வந்தனம் தானே ஆரம்பம்.
நான் யார்? பரம ஏழை. செல்வம் என்பதே என் அருகில் கூட வராது. இவனுக்கு தனம் கொடுத்தால் கர்வம் தலைக் கேறிவிடும், என்னை மறந்து விடுவான் என்று நினத்தாரோ, காருண்யம் மிக்கவன் அவன் உள் எண்ணம் அதுவாகத்தான் இருக்கும். அதனால் எனக்கு ஏராளமான செல்வத்தை தரவில்லை. இப்படி சிந்தனையில் மூழ்கியவராக தன் வீட்டின் அருகே வந்து விட்டார். தன் வீடு எங்கே?
சூரிய, சந்திர, அக்னி மூன்றும் கலந்து விட்டது போன்ற ப்ரகாசமான மாளிகை. விமானங்களுடன் உயர்ந்து நின்றது. சுற்றிலும் விசித்திரமான உத்யான வனங்கள். பறவைகளின் கூக்குரல் கேட்டது. தாமரைக் குளங்கள். குமுதம், தாமரை மலர்கள், வெண் தாமரை மலர்கள் உத்பலம் என்ற நீரில் விளையும் மலர்கள். எங்கும் தங்களை அலங்கரித்துக் கொண்டு வளைய வரும் ஆண்களும் பெண்களும். யார் இவர்கள்/ என்ன இடம் இது? யாருடைய வீடு? திடுமென இந்த இடத்தில் எப்படித் தோன்றியது? என்று சர மாரியாக கேள்விகள் அவர் மனதில் தோன்றின.
திடுமென ஒரு சிலர் ஆண்களும் பெண்களுமாக வாத்யங்களுடன் வந்து அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்ல வந்தனர். இந்த ஆரவாரத்தைக் கேட்டு தன் கணவன் வந்து விட்டான் என்பதையறித்த அவர் மனைவி, பரபரப்புடன் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தாள். கையை பிடித்து அந்த மாளிகைக்குள் அழைத்துச் சென்றாள். அவளே, சாக்ஷாத் மகா லக்ஷ்மி போல இருந்தாள். அவரைக் கண்டு அன்புடன் வணங்கி கண்களை மூடியபடி மனதால் அவரை ஆலிங்கணம் செய்தாள். தன் பத்னியை அடையாளம் கண்டு கொண்டார். ஆச்சர்யமாக அவளும் ப்ரகாசமான ஆடை ஆபரணங்களுடன் விளங்கினாள். பல பணிப் பெண்கள் ஏவியதைச் செய்ய காத்திருந்தனர். அவள் சொல்லி, இது நமது தான், நம் வீடு தான் என்ற நம்பிக்கை எழ, மஹேந்த்ர பவனம் போல இருந்த அந்த வீட்டினுள் நுழைந்தார்.
பால் நுரை பொன்ற வெண்மையான படுக்கை விரிப்புகள். நூறு மணி ஸ்தம்பங்கள், வெள்ளியும், பொன்னும் எங்கும் மின்னின. படுக்கை இருந்த கட்டிலின் கம்பங்கள் பொன்னாலவை. அருகில் சாமர வ்யஜனங்களும் இருந்தன. அழகிய ஆசனங்கள், ம்ருதுவான விரிப்புகள். முத்துகளின் ஒளியை பறிக்கும் மேல் விதானங்கள். பளிங்கு போல சுத்தமான அகல்கள், மகா மரகதம் போன்ற விளக்குகள், ரத்ன தீபங்கள், எங்கும் அழகிய பணிப் பெண்கள். அந்த நிறைவைப் பார்த்த அந்தணோத்தமர், யோசித்தார். இது நிஜமா? மாயையா? காரணமின்றி இந்த செல்வ,சம்ருத்தி எப்படி வரும்? பரம ஏழை, சிறிதும் பாக்யமே இல்லாதவன். நிரந்தரமாக வறுமையே என் தலையில் விதி எழுதியது என்று இருக்க நிறைந்த செல்வச் செழிப்பும், மகா விபூதியைக் காண்பவர்கள் அதே போல தாங்களும் பெற யது குல தலைவனை நெருக்குவார்கள்.
எதுவும் சொல்லாமல் எனக்கு செல்வம் அளித்தவன். யாசிப்பவனுக்கு மழை போல வர்ஷிப்பவன் என்பதும், அவனுடைய இயல்பு. தாசார்ஹன் எனக்கு உற்றத் தோழன் என்பதே எனக்கு போதும். ஏதோ சில பொருள் கொடுத்தாலும் நான் மகிழ்வேன் என்றான். என்னிடம் இருந்து அவலை தானே எடுத்துக் கொண்டான். அதற்கு ப்ரதிபலனாக இதைச் செய்திருக்கிறான். மகாத்மா அவன். அவனிடம் எனக்கு இதே போன்ற தோழமை ஒவ்வொரு பிறவியிலும் அமையட்டும். மஹானுபாவன் அவன். நற்குணங்களுக்கு இருப்பிடமானவன்.
பக்தனுக்கு மனதில் பகவான் தான் சம்பத்து. ராஜ்யமோ, பெரும் செல்வமோ, அஜனான அவனே அதை உயர்வாக எண்ண மாட்டான். என் குறைந்த அறிவை அளந்து விட்டிருக்கிறான். இவனால் இவ்வளவு தான் ஆசைப் பட முடியும், என்பதாக, தானே பார்த்து வேண்டிய அளவு கொடுத்திருக்கிறான். செல்வந்தர்கள் அந்த செல்வத்தாலேயே மதம் பிடித்தவர்கள் போல நடந்து கொள்வதைக் கண்டவன். இப்படி நினைக்க நினைக்க பகவானிடம் பக்தியே அதிகமாகியது. தன் மனைவியுடன் அனாவசிய ஆசைகள் எதுவுமின்றி திருப்தியாக வாழ்ந்தார். அந்த ப்ரபு யக்ஞபதி. தேவ தேவன். அந்தணர்களைக் காப்பவன். அவர்களுக்கு தெய்வம் என்று வெளியில் எதுவும் இல்லை.
இவ்வாறு எண்ணியவர் அதிகம் பேசாமலும், அவர்களுடன் ஒட்டாமலும் தன் தியானமே கவனமாக இருந்து சீக்கிரமே சத்கதியை அடைந்தார். இந்த ஏழை அந்தணருக்கு அளப்பரிய செல்வம் பகவானே கொடுத்தாலும் அவர் மனம் போகத்தில் செல்லாமல் பகவத் தியானமே சிறந்தது என்று வாழ்ந்ததை அறிபவர்கள் கர்ம பந்தம் என்பதிலிருந்து விடுபடுவார்கள்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பகுதியில், ப்ருதுகோபாக்யானம் என்ற எண்பத்து ஒன்றாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 41
அத்யாயம்-82
ஒரு சமயம் பலராமனும், க்ருஷ்ணனும் துவாரகையில் வசிக்கும் பொழுது முழு ஸூரிய கிரஹணம் வந்தது. கல்ப க்ஷயத்தில் வருவது போல ஸூரியன் முற்றிலும் மறைந்து விடும் என்பதையறிந்த ஜனங்கள் முன் கூட்டியே சமந்த பஞ்சகம் என்ற இடம் சென்றனர். அது ஒரு க்ஷேத்ரம், அங்கு தான் அரச குலத்தை அடியோடு அழிக்கும் விரதம் எடுத்துக் கொண்டிருந்த பரசுராமர், அந்த அரசர்களின் ரத்தத்தினால் குளத்தை நிரப்பினார். அந்த சமயம் அனைத்தையும் துறந்தவராக இருந்த பரசுராமர், உலக நன்மைக்காக அனைவரும் செய்வது போல ஒரு ப்ராயசித்தம் போன்ற யாகத்தைச் செய்தார். மிகப் பெரிய தீர்த்த யாத்திரைகளை மேற்கொள்ளும் பாரத தேசத்து ப்ரஜைகள், விருஷ்ணி குலத்தவர், அக்ரூரர், வசுதேவர், ஆஹுக வம்சத்தினர் அனைவரும் வந்தனர், அந்த க்ரஹண சமயம் தீர்த்தங்களில் ஸ்னானம் செய்வது பாப நாசனம் என்பதால் கத, ப்ரத்யும்ன, சாம்பன், சுசந்த்ரன், சுக சாரணர்கள் அனிருத்தனை ரக்ஷிக்கும் பொருட்டு வந்திருந்தனர். படைத் தலைவனான க்ருத வர்மா பெரும் படையுடன் குதிரை படை, கால் நடை படைவீர்கள் என்று பெரும் கூட்டமாக வந்திருந்தனர். அலங்கரிக்கப் பட்ட யானைகளின் பொன் முடாங்கள் பள பளத்தன.
ஸ்னானம் செய்த பின் திவ்யமான வஸ்திரம், மாலைகள் அணிந்து அனைவரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். அந்தணர்களுக்கு பசுக்கள், வஸ்திரங்கள் தானம் செய்தனர். வ்ருஷ்ணிகள் மறுமுறை பரசுராம குளத்தில் மூழ்கி எழுந்தனர். ஸ்ரீ க்ருஷ்ணரிடம் எங்கள் பக்தி குறையாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். உண்ட பின், மர நிழல்களில் அமர்ந்து வந்திருந்த சம்பந்திகள், மற்றவர்களுடன் பரிச்சயம் செய்து கொண்டனர்.
மத்ஸ்ய, உசீனர,கௌசல்ய,விதர்ப,குரு, ஸ்ருஞ்ஜயான், காம்போஜ, கைகய, மத்ர, குந்தீ, ஆனர்த, கேரள, மற்றும் பல தேசங்களிலிருந்தும் அவர்களைச் சேர்ந்தவர்கள் நூற்றுக் கணக்கான அரசர்கள், நந்தன் முதலானோர், தோழர்கள், இடையர் குல ஆண்களும் பெண்களும், என்று அனைவரும் அவர்களைக் காண ஆவலுடன் வந்திருந்தனர்.
நந்தன் க்ருஹத்தில் இருந்த சமயம் உடன் இருந்த பால்ய நண்பர்களுடன் பல நாட்களுக்குப் பின் கண்டதால் மகிழ்ச்சியுடன் அணைவரையும் அணைத்தும், கண்கள் பனிக்க, உடல் புல்லரிக்க, குரல் கம்ம அன்புடன் உரையாடினர். பெரியவர்களை வணங்கி நலம் விசாரித்தும், இளையவர்களை ஆசீர்வதித்தும் அவர்கள் கூட்டத்துடன் கலந்து கதைகளைப் பேசிக் கொண்டு இருந்தனர். உறவினர்களான ப்ருது வம்சத்தினர், சகோதரர்கள், மாமனார்கள், சம்பந்திகள் அவர்கள் தனயர்கள், மருமக்கள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். பின் முகுந்தனைச் சுற்றி அமர்ந்தனர்.
குந்தி சொன்னாள்: அண்ணன்மார்களே, என்னை மறந்து விட்டீர்களா? எனக்கு ஆசிகள் வழங்கவில்லையே. என் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சமயங்களில் கூட நீங்கள் என்னை நினைக்கவில்லையா? என் தோழர்கள், தாயாதிகள், மகன் உறவினர்கள், சகோதர்கள், ஏன், தந்தை மார் கூட என்னை தன்னைச் சார்ந்தவளாக நினைக்கவில்லை. தெய்வம் என்னிடம் பராமுகமாக இருந்தது போலவே என்னை கை விட்டீர்களா?
வசுதேவர் சொன்னார்: அம்ப! எங்களைக் குற்றம் சொல்லாதே. தெய்வம் ஆட்டி வைத்தபடி ஆடும் சாதாரண மனிதர்கள் நாங்கள். அவன் வசத்தில் செயல்களை செய்விக்கப் படுகிறோம். நாங்களாகவா செய்கிறோம்? கம்சனால் கடுமையாக துன்புறுத்தப் பட்டோம். எங்களில் பலர் திக்குக்கு ஒருவராக ஊரை விட்டு ஓடி விட்டனர். இப்பொழுது தான் அனைவருமாக ஒன்று கூடியிருக்கிறோம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: வசு தேவர், உக்ர சேனர், மற்ற யாதவர்கள் வந்திருந்த அரசர்களை வரவேற்று, உபசரித்தனர். அச்யுதன் அமர்ந்திருந்த இடம் வந்து தரிசித்து பேசி விட்டு பரமானந்தம் அடைந்தவர்களாக திரும்பினர். பீஷ்மரும், த்ரோணரும், அம்பிகா புத்ரனும், காந்தாரி, தன் தனயர்களுடன், மனைவி மக்களுடன் பாண்டவர்கள், குந்தி, சஞ்சயன், விதுரன், க்ருபாசாரியார், குந்தி போஜன், விராடன், பீஷ்மகன், நக்னஜித், புருஜித், த்ருபதன், சல்யன், த்ருஷ்ட கேது, காசி ராஜன். தமகோஷன், விசாலாக்ஷன், மதிலையின் அரசன்,மத்ர, கேகய தேசத்து அரசர்கள், யுதாமன்யு, சுசர்மா, பால்ஹீகர் தன் தனயர்களுடன் இவர்களுடன் மேலும் பல அரசர்கள் யுதிஷ்டிரனின் பக்ஷபாதிகள், சௌரி- ஸ்ரீக்ருஷ்ணன், ஸ்ரீ தேவியுடன் – ஸ்ரீ நிவாசனாக காட்சி தந்ததை பரவசத்துடன் பார்த்து வணங்கினர்.
பலராமனும், க்ருஷ்ணனுமாக அவர்களுக்கு செய்து கொடுத்த வசதிகளையும், உபசரிப்புகளையும் பாராட்டி விட்டு, மற்ற க்ருஷ்ணனைச் சேர்ந்த வ்ருஷ்ணி குலத்தவர்களைச் சந்திக்கச் சென்றனர்.
அஹோ! போஜ பதே! இங்குள்ள அனைத்து அரசர்களை விட அதிக பாக்யம் செய்தவர்கள் நீங்களே. தினமும் ஸ்ரீ க்ருஷ்ணனைப் பார்த்தும் பேசியும், யோகிகளுக்கு கூட கிடைக்காத மகா பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது என்றனர்.
வேதங்கள் அவரை போற்றிப் பாடுகின்றன. நிர்மலமான இவரை தரிசித்தாலே பிறவி பயனாக பாவனமாகின்றன. பாதங்களில் வணங்கி, பாதம் பட்ட நீரை தலையில் தெளித்துக் கொள்வதும், அவர் சொல்லைக் கேட்பதும், சாஸ்த்ரம். பூமி, காலத்தினால் பல வித மாறுதல்களுக்கு ஆளானாலும், இவருடைய பாத ஸ்பர்சம் பட்டதால், புது சக்தி பெறுகிறாள். எங்களுக்கு பலவிதமான செல்வங்களையும் வாரி வழங்குகிறாள்.
இவரை காண்பதும், அருகில் இருந்து ஸ்பர்சித்தாலும், உடன் நடந்து செல்வதாலும் (அவர் கால் தடங்களில் கால் வைத்து) அவருடன் பேசுவதாலும், உடன் இருக்கும் மனைவிகள், தாயாதிகள், இவர்களுடைய க்ருஹங்களில் இருக்கும் பேறு பெற்றவர்கள் ஸ்வர்காபவர்க பதவிகளை அடைவது நிச்சயம். இவரே சாக்ஷாத் ஸ்ரீ மகா விஷ்ணு.
ஸ்ரீ சுகர் சொன்னார்: நந்தன் அங்கு வந்த யாதவர்களைப் பார்த்து அவர்கள் க்ருஷ்ணனின் மூத்தவர்கள் என்பதால், அவருடன் வந்த கோப குலத்தினர் அனைவருமாக சூழ்ந்து நின்று பரிச்சயம் செய்து கொண்டனர். வ்ருஷ்ணி குலத்தவரும் அவர்களைக் கண்டதில் மிக மகிழ்ந்தனர். வசுதேவரும் வந்து அணைத்து, அன்புடன் நலம் விசாரித்தார். என் மகனை உங்களிடம் பாதுகாப்பாக வைத்த காரணத்தாலேயே உங்கள் வ்ரஜ தேசம் கம்சன் ஆட்களால் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது என்று சொல்லி வருத்தப் பட்டார். பலராமனும், க்ருஷ்ணனும் வந்து நந்தகோபரை அன்புடன் அணைத்து தந்தைக்கு செய்யும் முறையில் அபிவாதனம் செய்தார்கள். குரல் கம்ம, கண்கள் பனிக்க எதுவும் பேச முடியாமல் உணர்ச்சி மயமாக நின்றனர்.
அவரை இருவருமாக கைகளால் அணைத்தபடி அழைத்துச் சென்று, தகுதியான ஆசனத்தில் அமரச் செய்தனர். மகா பாக்யசாலியான யசோதாவும் அவர்களை ஆசீர்வசித்தாள். ரோஹிணீ, தேவகீ, இவர்களும் வ்ரஜ தேசத்து ராணியான யசோதையை அணைத்து வரவேற்று அன்புடன் உபசரித்தனர். அவள் தங்களுக்குச் செய்த மகத்தான உதவியை நினைத்து கண்கள் குளமாக பேசினர். ‘வ்ரஜேஸ்வரி! உன்னை யாரால் மறக்க முடியும். உன் நட்பும் உதவியும் இந்திர பதவியே கொடுத்தாலும், ஐஸ்வர்யங்களை வர்ஷித்தாலும் அதற்கு ஈடாகாது.
இப்படி தந்தை ஸ்தானத்தில் இருந்த பெரியவர்களை வணங்கியும், சம வயதினரான அவர்கள் தனயர்களை உடன் பிறந்தவர்களாக பாவித்து உபசரித்தும், அவர்களுக்கு ஆகார வசதிகளையும் தங்கும் வசதிகளையும் செய்து கொடுத்தும் கண்களை இமைகள் காப்பது போல காத்தனர். நல்லவர்களுக்கு தன், பிறர் என்ற எண்ணமோ, பயமோ ஏது?
ஸ்ரீ சுகர் சொன்னார்: நெடு நேரம் காத்திருந்து இடையர் குல பெண்கள் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் வந்தனர். வெகு நாட்களாக காணத் தவித்த கண்களால் இமைப்பதையும் மறந்து நோக்கினர். மனதார கண்களால் பருகியவர்களாக, மற்ற எவருக்கும் கிடைக்காத அண்மையை, பாவ பூர்வமாக உணர்ந்தனர். பகவான் அவர்களை நலம் விசாரித்து, அணைத்து தானும் அதே போன்ற அன்புடனும் ஆவலுடனும் அவர்களுடன் உரையாடினார். சிரித்துக் கொண்டே அவர்களிடம் கேட்டார். ‘என்னை நினைக்கிறீர்களா, சகிகளே! நாங்கள் இருவரும் அரச பொறுப்புகளால் உங்களை விட்டு வந்தோம். எதிரி பக்ஷத்தினரை அடக்க ப்ரயத்னங்கள் நீண்டு கொண்டேயிருந்தன அதனால் கோகுலம் வரவே முடியவில்லை என்றார். என்னை நன்றி மறந்தவனாக நினைக்க வேண்டாம், பகவான் தான் உயிரினங்களை சேர்த்து வைக்கிறார், அவர் சங்கல்பத்தால் பிரிக்கிறார்.
வாயு எப்படி, மேகங்களைக் கொண்டு,புல், பூண்டு, புழுதி அனைத்தையும் நனைத்து, பின் பழையபடி இருக்கச் செய்கிறதோ, அது போல பூத க்ருத் என்ற பகவான், சேர்த்து பிடித்து வைத்த உயிரினங்கள், பின் மணல் கோட்டையை கலைப்பது போல கலைக்கிறது.
என்னிடம் பக்தி செய்வதே மனிதர்களுக்கு அம்ருதம் போன்றது. உங்கள் அத்ருஷ்டம்- நல்ல காலம்- என்னிடம் ஸ்னேகமும், அன்பும் உங்களுக்கு கிடைத்தது. பெண்களே! நான் சர்வ பூதங்களுக்கும் ஆதியானவன். அந்தமானவன். இடையில் இருப்பவன். வெளியில் சுற்றுபவன். இயற்கைத் தத்துவங்களான, வானம், வாயு. பூர்,புவ,ஸ்வ: என்பவையும், ஜோதியும் நானே. இவ்வாறு என்னிடமிருந்தே தோன்றிய இவ்வுலகங்கள், இயற்கையின் சக்திகள், உயிர்களில் நானே ஆத்மாவாகவும் இருந்து அவைகளை இயங்கச் செய்கின்றேன், என்னை இவ்வாறு செய்பவனாகவும், செய்விப்பவனாகவும் பாருங்கள். அழிவில்லாதவன் நான் என்று அறிந்து கொள்ளுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி அந்த எளிய இடையர் குல பெண்களுக்கு அத்யாத்ம ஞானத்தை புகட்டினார். அந்த பெண்களும் அத்யாத்ம ஞானம் அடைந்தவர்களாக ஸ்ரீ க்ருஷ்ணனாலேயே உபதேசிக்கப் பெற்றவர்களாக, அவரை உள்ளபடி உணர்ந்து, உலகியல் ஆசைகளைத் துறந்து பகவானான அவரை துதித்தனர். .
நளின நாப! பத்மனாபனே! உன் பதாரவித்தம் யோகேஸ்வரர்களுக்குக் கூட கிடைக்காது. அவர்கள் மனதில் உன்னையே நினத்து ஆழ்ந்த பக்தியுடனும் நியமங்களுடனும் வேண்டுவர். சம்சாரம் என்ற கிணற்றில் விழுந்த ஜீவன் களை உத்தாரணம் செய்யும் பொருட்டு ஒரே பிடிமானமான உன் பாதங்களை, க்ருஹஸ்தர்களான எங்களுக்கும் அனுக்ரஹிக்க வேண்டுகிறோம். சதா எங்கள் மனதில் இதே விதமான பக்தியே இருக்க வேண்டும் என்றனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாவது பகுதியில், வ்ருஷ்ணி கோப சங்கமோ என்ற எண்பத்தி இரண்டாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 49
அத்யாயம்-83
ஸ்ரீ சுகர் சொன்னார்: பசுக்களை பாலிப்பதே தொழிலாக கொண்ட இடையர் குல பெண்களுக்கு பகவான் குருவாக இருந்து நல்வழி காட்டினார். கேட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரரையும் அங்கிருந்த அனைவரையும் பார்த்து நலம் விசாரித்தார். லோக நாதன், அவருடைய கடைக் கண் பார்வைக்காக காத்திருந்தவர்கள், அவரே தங்கள் நலம் பற்றி விசாரிக்கவும், அவர்கள் மகிழ்ச்சியடைந்து பர பரப்புடன் உணர்ச்சி மயமாக ஆகி துதிகள் செய்தனர்.
ப்ரபோ! உங்கள் சரணாரவிதத்தை வணங்கும் எங்களுக்கு நன்மையே அன்றி கெடுதல் வருமா என்ன? உங்கள் பாதாம்புஜ சேவை எனும் அம்ருதம் பருகி, சில சமயம் அம்ருத மயமான உங்கள் சொற்களை காதுகள் நிரம்பக் கேட்டு அதே நினைவாக இருக்கிறோம். தேஹ க்ருத், இந்த தேகத்தை தோற்றுவித்தவனும் நீயே, அதை பாதுகாக்கவும் செய்கிறாய், எங்கள் மனதில் அந்த நினைவு மட்டும் மாறாமல் இருக்க வேண்டுகிறோம்.
உங்கள் இருப்பிடமான வைகுண்டத்தை விட்டு இறங்கி எங்களை காக்கும் பொருட்டு வந்தவன். தானே செய்த மூன்று அவஸ்தைகளையும், பிறவி,இருத்தல்,அழிவு என்ற மூன்று நிலைகளையும் செய்தவன். ஆனந்த சாகரத்தில் மூழ்கி, அகண்டமான ஆத்ம போதத்தில் இருப்பவன், நிகமங்கள் என்ற வேதங்களை ரக்ஷிப்பவன். . தானே எடுத்த மாயா உருவங்கள்- அவதாரங்கள், எங்களை உய்விக்கவே. பரம ஹம்ச கதியைத் தரும் உங்களை நமஸ்கரிக்கிறோம்.
ரிஷி சொன்னார்: இப்படி உத்தம ஸ்லோக சிகாமணியாக ஜனங்களிடத்தில் போற்றப் படும் கோவிந்தனை, அந்தக, கௌரவ ஶ்த்ரீகளும் இணைந்து தங்களுக்குள் இணைந்து பாடிய லோக கீதம் – இது. கேளுங்கள், சொல்கிறேன்.
த்ரௌபதி சொன்னாள்: ஹே வைதர்ப அரசிளங்குமரியே ருக்மிணி, பத்ரே! ஹே ஜாம்பவதி! கௌசலே! ஹே சத்யபாமே! காலிந்தீ! சைப்யே! ரோஹிணி! லக்ஷ்மணே! ஹே க்ருஷ்ண பத்னிகளே! எங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லுங்கள். எப்படி பகவானையே மணந்தீர்கள்? அவர் தான் தன் மாயையால் லோகத்தை படைத்தவர் என்று அறிவோம்.
ருக்மிணி சொன்னாள்: என் மனதில் ஸ்ரீ க்ருஷ்ணனையே மணாளனாக வரித்ததை ஏற்காமல், என் பிறந்த வீட்டார், சேதி அரசனுக்கு கொடுப்பதாக தீர்மானித்து, ஆயுதமேந்திய வீரர்கள் என்னை காவல் காத்தார்கள். திடுமென ம்ருகேந்திரன் தன் பாகத்தை எடுத்துக் கொள்வது போல ஸ்ரீ ஹரி என்னை கடத்தி தூக்கிச் செல்ல தானே வந்து விட்டான். அவன் சரணங்களில் என் மனம் நிலைத்து நிற்கட்டும். நான் பூஜை செய்யும் அவன் பாதங்களே காக்கட்டும்.
சத்யபாமா சொன்னாள்: என் தந்தை மணிரத்னம் காணாமல் போனதால் மிகவும் வருந்தினார். என்ன காரணத்தாலோ அந்த மணியை நீதான் திருடினாய் என்று ஒரு அபவாதம் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு வந்து விட்டது. அதை போக்க மணியைத் தேடிக் கொண்டு சென்றார். கரடி ராஜனின் குகையில் மணியைக் கண்டு கரடி ராஜனே அதையும் மகளையும் க்ருஷ்ணனுக்கு கொடுத்தார். அதைக் கொண்டு வந்து என் தந்தையிடம் ஒப்படைத்தார். என் தந்தை வியந்து பாராட்டி மணியுடன் என்னையும் மணம் செய்து கொடுத்தார். மணியை திருப்பிக் கொடுத்து விட்டார்.
ஜாம்பவதி சொன்னாள்: என் தந்தை சீதாபதியான ஸ்ரீ ராம பக்தர். அவரே தான் அவதரித்திருக்கிறார் என்பதையறியாமல் மணியைத் தேடி வந்தவருடன் என் தந்தை போரிட்டார். மூன்று ஒன்பது-27 தினங்கள் இருவரும் மல் யுத்தம் செய்தனர். ஒரு நிலையில் என் தந்தை இவரை யாரென்று அறிந்து கொண்டார். உடனே அவர் பாதங்களில் விழுந்து வணங்கி மணியையும், என்னையும் ஒப்படைத்தார். அன்று முதல் நான் அவருக்கு சேவை செய்து வருகிறேன்.
காலிந்தி சொன்னாள்: நான் தவம் செய்து கொண்டிருந்தேன். அவரை மணந்து பாத சேவை செய்வதே வேண்டுதலாக. தன் சகிகளுடன் அங்கு வந்தவர் என்னையும் பாணிக்ரஹணம் செய்து கொண்டார். அன்றிலிருந்து நான் அவருடைய க்ருஹத்தில் வசிக்கிறேன் (க்ருஹ மார்ஜனீ- வீட்டை சுத்தம் செய்பவள்)
மித்ரவிந்தி சொன்னாள்: எனக்கு ஸ்வயம் வரம் ஏற்பாடாகி இருந்தது. அதற்கு தன் படையுடன் வந்து மற்ற அரசர்களை ஜயித்து, யானை மேல் வந்தவர்கள் நாய் கூட்டம் போல சிதறச் செய்து, எதிர்த்த என் சகோதர்களையும் அடக்கி, தன் ஊருக்கு கொண்டு வந்து விட்டார். ஸ்ரீ தேவியான ருக்மிணி தேவியிடம் தான் அவருடைய மகிமைகளையும், அண்டியவர்களை காக்கும் குணத்தையும் பற்றி அறிந்தேன்.
சத்யா சொன்னாள்: என் தந்தையிடம் ஏழு உக்ரமான காளைகள் இருந்தன. கூர்மையான கொம்புகளுடன் அதி வீர்யமுடைய காளைகள். பார்த்தாலே பயம் தோன்றும். அரசர்களுக்குள் வீர்யவானை கண்டு கொள்ள அவைகளை அடக்குபவனுக்கே என் மகள் என்று அறிவித்து விட்டார். எந்த வீரனாலும் அடக்க முடியவில்லை. எதிர்பாராத ஒரு தருணத்தில் அதன் கொம்புகளைப் பற்றி விளையாட்டாக அதன் மேலேறி அடங்கச் செய்ததும் அல்லாமல் சிறுவர்களுக்கு விளையாட்டு பொருளாக கொடுத்து விட்டார். இப்படி வீர்ய சுல்கா- வீரனுக்கே பரிசாக கொடுக்கப்பட்ட என்னை என் தந்தை பெரும் ஐஸ்வர்யத்துடன், பல பணிப் பெண்களையும் உடன் அனுப்பினார். வழியிலும் இடர் செய்த அரசர்களை எதிர்த்து போரிட்டுக் கொண்டே வரும்படி ஆயிற்று. அந்த பாதங்களின் சேவையே எனக்கு நிரந்தரமாக இருக்கட்டும்.
பத்ரா சொன்னாள்: என் தந்தை. மாமன் மகனான இந்த க்ருஷ்ணனுக்கு தானே மனமுவந்து அழைத்துக் கொடுத்தார். அக்ஷௌஹிணி சகி ஜனங்கள் என்னுடன் அனுப்பப் பட்டனர். நானும் க்ருஷ்ணா- நிறத்தால்,என்னை க்ருஷ்ணனுக்கே கொடுத்தார். வந்த பின் எனக்கு எது நன்மை என்பதை அறிந்து கொண்டேன். பிறவி தோறும் இந்த பாத ஸ்பர்சங்களே எனக்கு ஸ்ரேயஸ் தரும். என்னை உலகியல் ஆசைகள் எதுவும் அலைகழிக்காமல் ஆத்ம ஞானம் அருளும் பாதங்களே என் மனதில் நிறைந்திருக்க வேண்டும்.
லக்ஷ்மணா சொன்னாள்; நானும் ராஜ குமாரியே. நாரதர் பாடிக் கொண்டு வந்ததைக் கேட்டேன். பிறவி துன்பம் அகல முகுந்தனை நினை என்றார். நானும் அவ்வாறே மனதில் பத்ம ஹஸ்தனை தியானித்து அரச ஆடம்பரங்களைத் துறந்து இருப்பதை என் தந்தை கண்டார். என்னிடம் அதிக பிரியம் வைத்திருந்த என் தந்தை ப்ருஹத் சேனர் என்பவர், ஒரு உபாயம் செய்தார். ஸ்வயம்வரத்தில் பார்த்தனே ஜயிக்க முடியும் என்பது போல ஒரு மத்ஸ்யம் அடையாளமாக வைத்திருந்தார். அது வெளியிலும், நீரில் அதன் நிழல் தெரியும் படியும் இருந்தது. இதையறிந்து அனேக அரசர்கள் எங்கள் ஊருக்கு வந்தனர். சர்வாஸ்த்ர சஸ்த்ர விற்பன்னர்கள், தங்கள் உபாத்யாயர்களுடனும், ஆயிரக் கணக்காக வந்தனர். என் தந்தை அவர்கள் வீர்யம், வயது, தகுதி என்ற அடிப்படையில் கௌரவித்தார். அம்புகளுடன் கூடிய வில்லும் அருகே வைக்கப் பட்டது. பலர் அதை முயன்று தோற்றனர், சிலர் வில்லின் நுனி பாகம் மேலே பட்டு காயம் அடைந்தனர். வில்லில் அம்பைத் தொடுத்து, மாகதன், அம்பஷ்டன், சேதி அரசன், பீமன், துர்யோதனன், கர்ணன் வரை முயன்றனர். மீனின் நிழலை நீரில் பார்த்து அதை மனதில் கணித்துக் கொண்டு பார்த்தனும் அம்பை குறி பார்த்து எய்தான். அதுவும் குறி தவறியது. நிஜ மீன் மேல் படாமல் கீழே விழுந்தது. இப்படி அரசர்கள் அனைவரும் திரும்பிய பின் பகவான் வந்தார். தனுஷை கையில் எடுத்து நாணைப் பூட்டி விளையாட்டாக குறி வைத்து மீனின் நிழலை நீரில் பார்த்து குறி பார்த்து அடித்து விழச் செய்தார். சரியாக சூரியன் அபிஜித் முகூர்த்தத்தில் இருந்த சமயம். உடனே தேவர்கள் துந்துபியை முழங்கினர். ஜய சப்தம் பூமியை நிறைத்தது. பூ மாரி பொழிந்தது. எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் ஒலிக்கலாயிற்று.
அந்த அரங்கத்திற்கு நான் நூபுரங்கள் ஒலிக்க கைகளில் பொன்னாலும், மலர்களாலும் அமைந்த மாலையை எடுத்துக் கொண்டு புத்தாடை சல சலக்க, பட்டு உத்தரீயத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு வெட்கத்துடன், மலர்ந்த முகமுமாக அழைத்து வரப் பட்டேன். என் முகத்தை நிமிர்த்தி குண்டலங்களின் இடையே பள பளத்த கன்னங்களுடன், மென் முறுவலோடு, கண் பார்வையே மோக்ஷத்தை அருளும் என்பதற்கேற்ப கனிவாக பார்த்தபடி இருந்த முராரிக்கு மாலையிட்டேன். சுற்றிலும் அரசர்கள் சாக்ஷியாக, மனதுக்குகந்தவனையே அடைந்தேன். உடனே, ம்ருதங்க படகம் என்ற வாத்யங்கள் முழங்கின. சங்க பேரிகள் முழங்கின. நட நர்த்தகிகள் ஆடினர், பாடினர். பாடகர்கள் பாடினர். இப்படி நான் பகவானையே மணந்ததை ஏற்க முடியாமல் கூடியிருந்த அரசர்கள், பொறாமையால் வெடித்தனர். மனதிலும் இருந்த தங்கள் ஆற்றாமையை வெளிக் காட்ட நாங்கள் ஏறி வந்த ரதத்தை தொடர்ந்து வந்து தாக்கினர். நான்கு உயர் ஜாதி குதிரைகள் பூட்டிய ரதம், அதில் கையில் சார்ங்கம் என்ற வில்லை ஏந்தி சதுர் புஜனாக பகவான் நின்றார். சாரதி திறமையாக ஓட்டினான். பொறாமையால் பின் தொடர்ந்த அரசர்களை ம்ருகேந்திரன் மிருகங்களை விரட்டுவது போல விரட்டி விட்டார். சார்ங்கத்திலிருந்து புறப்பட்ட அம்புகள் பட்டு கைகால்கள் உடைந்த வீரர்கள் ஆங்காங்கு விழுந்து விட்டனர்.
அதன் பின் அலங்கரிக்கப் பட்ட குசஸ்தலீம் என்ற ராஜதானியில் நுழைந்தோம். பலவிதமான தோரணங்கள் பதாகைகளால் ஊர் முழுவதும் கோலாகலமாக இருந்தது. ஊர் ஜனங்கள் உத்சாகமாக வரவேற்பளித்தனர். தேவ லோகத்திலும், பூவுலகிலும் ஒரே சமயத்தில் வாழ்த்துக்கள் நிறைந்தன. எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.
என் தந்தை, சம்பந்திகள், உறவினர், நண்பர்களுடன் வந்தார். உயர்ந்த ஆடை ஆபரணங்களையும், ஆசனம், கட்டில்கள், படுக்கைகளையும் மணப் பரிசாக தந்தார். பணிப் பெண்கள், மற்றும் சர்வ சம்பத்தும், உடன் வீர்களும். ரத கஜம் துரக சேனைகளும் வந்தன. உயர்ந்த ஆயுதங்களையும் பக்தியுடன் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு சமர்ப்பித்தார், இவரோ ஆத்மாராமன். நாங்கள் அவருக்கு க்ருஹலக்ஷ்மிகளாக வந்து சேர்ந்தோம். தாசிகளாக, எந்த குறையுமின்றி வாழ்கிறோம்.
மகிஷிகள் சொன்னார்கள்: பூமி புதல்வனான நரகனை வதைத்தார். அவன் எங்கள் நாட்டு அரசர்களை வெற்றி கொண்ட பின், அரச குலத்து பெண்களை அபகரித்து கூட்டமாக அடைத்து வைத்திருக்கிறான் என்றறிந்து, அனைவரையும் விடுவித்தார். நாங்களும் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்து விடுதலை அடைந்தவர்கள். வேறு எதுவும் வேண்டாம், முகுந்த பாதாம்புஜ சேவையே தான் வேண்டும் என்று வேண்டினோம். எங்கள் ஆசை நிறைவேறியது. அனைவரையுமே மணந்தார். நாங்கள் சாதுக்களாக சாம்ராஜ்யங்கள், எங்களுக்கு உரிய ராஜ்யம், போகங்கள் எதையும் விரும்பவில்லை. வைராக்யம், பாரமேஷ்ட்யம் என்ற உயர் அறிவு, இவற்றை ஸ்ரீ ஹரியின் பாதம் தான் தரும் என்று உணர்ந்து திருப்தியாக வாழ்கிறோம். இந்த அருகாமையே போதும். எங்கள் தலையால், சரீரத்தால் அந்த க 3தையை ஏந்திய பகவானின் சரணங்களைத் தாங்குவோம். வ்ரஜ தேசத்து பெண்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டவன், அவர்கள் விரும்பியதும் அது தானே. மணல் வெளிகளில், புல் படுகைகளில் காட்டு மரங்களிடையில் பசுக்களை மேய்த்துக் கொண்டு போகும் இடையர்கள் இந்த மகாத்மாவின் பாத ஸ்பர்சத்தை அனவரதமும் அனுபவித்தார்கள்.
( இது வரை ஸ்ரீமத் பாகவ த த்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பகுதியில், எண்பத்து மூன்றாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 43
அத்யாயம்-84
ஸ்ரீ சுகர் சொன்னார்: யாக்ஞசேனீ – த்ரௌபதி, க்ருஷ்ண பத்னிகளிடம் பேசியதை குந்தி, சுபல புத்ரி, மாதவி மற்றும் வந்திருந்த அரசர்களின் மனைவிகள் அனைவருமே கேட்டு வியந்தனர். உலகமே ஸ்ரீ க்ருஷ்ணனிடம் அன்பு வைத்திருப்பதையறிந்து அதிசயித்தனர், இப்படி பெண்கள் பெண்களுடன், அரசர்கள் அரசர்களுடன் என்று உரையாடிக் கொண்டு இருந்த சமயம் முனிவர்கள் ஸ்ரீக்ருஷ்ணன், பலராமன் இருவரும் வந்திருப்பதைக் காண வந்தனர்.
த்வைபாயன், நாரதர், ச்யவனன், தேவலன், அசிதன், விஸ்வாமித்திரர், சதானந்தர், பாரத்வாஜர், கௌதமர் , ராமர், சிஷ்யர்களுடன் வசிஷ்டர், காலவர், ப்ருகு, புலஸ்த்யர், கஸ்யபர், அத்ரி, மார்கண்டேயன், ப்ரஹஸ்பதி, இருவர் இருவராக, மூவர் மூவராக, நால்வர் நால்வராக சிலர் தனியாக ப்ரும்ம புத்ரரான ஆங்கிரஸ், அகஸ்தியர், யாக்ஞவல்க்யர் வாமதேவர் முதலானோர் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களைக் கண்டதும் ஆசனங்களில் அமர்ந்திருந்த அரசர்கள் அவசரமாக எழுந்திருந்து, உலகப் புகழ் பெற்ற அந்த முனிவர்களை வணங்கினர். பாண்டவர்கள், க்ருஷ்ண, பலராமனும் அதே போல வணங்கினர்.
பலராமனுடன் அச்யுதன், தானே முன்னின்று அவர்களை வரவேற்று, அதிதி சத்காரங்களைச் செய்தார். ஸ்வாகதம், ஆசன, பாத்யம், அர்க்யம், மாலைகள், தூபங்கள் என்று முறைப்படி வரிசையாக செய்தபின், அமரச் செய்து அவர்கள் கூடிய சபையில் பேசினார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: அஹோ! பிறவிப் பயனாக உங்கள் தரிசனம் கிடைத்தது. இது போன்ற அறிஞர்களின் வரவு அபூர்வமாகவே அமையும். தேவர்களுக்குக் கூட கிடைக்குமா என்பது சந்தேகமே. யோகேஸ்வரர்கள் உங்களை இப்படி சாதாரண பொது அறிவு மட்டுமே உடைய மனிதர்கள், அரசர்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தில் காண்பதும், உபசரிப்பதும், உரையாடுதலும் எண்ணிக் கூட பார்க்க முடியாதது. மனிதர்களை, புண்ய தீர்த்தங்கள், பாவனமான அதன் நீரால் பாவனமாக்கும், மண்ணாலோ, கல், உலோகங்களாலோ செய்த மூர்த்திகளைக் கண்களால் கண்டு வணங்குவதால் பாபம் தீர்ந்து நன்மை உண்டாகும், சாது ஜனங்களை தரிசித்தாலே அந்த பலன்களை பெறுவர். அக்னியோ, சூரியனோ, சந்த்ர தாரகைகளோ, பூமியோ, நீரோ, வானமோ, காற்றோ, வாக்கு மனம் முதலியவைகளை உபாசித்தால் ஓரளவு பாபத்தை குறைக்கும். ப்ரும்ம தத்வத்தை உணர்ந்த பெரியவர்களை, ஒரு முஹூர்தம் அவர்களுக்கு செய்யும் பணிவிடையாலேயே இந்த அளவு நன்மைகளைப் பெறுவர்.
ஆத்ம தத்வம் அறிந்த ஞானிகள் சரீரத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. (குணபம்- உயிரற்றது, அதாவது அதன் தேவைகளோ, சுக துக்கங்களோ அதை வாட்டாது.) உடல் மூன்று தாதுக்களால் ஆனது. அதன் இயல்பு படி இருக்கட்டும் என்ற அறிவுடையவர்கள் அதை பற்றி அலட்டிக் கொள்வதில்லை. மனைவி மக்களோ , பூமி முதலிய செல்வங்களோ பொருட்டல்ல. நீரில் தீர்த்தம் என்ற எண்ணம் சாதாரண ஜனங்கள் நினைப்பர். உயர் பதவியில் இருப்பவர்களின் புகழும் அவர்களுக்கு உயர்வாகத் தெரியும். ஆனால், பசு மாடு மதிப்புக்குரியது என்றாலும் அதன் குரல் கடுமையானதே அல்லது கழுதையானாலும், பசுவானாலும் மிருகமே என நினைப்பர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ரிஷிகள் ஸ்ரீ க்ருஷ்ணனுடைய சொற்களில் பல வித பொருள் இருப்பதையறிந்தனர். பதில் எதுவும் சொல்லாமல் இருந்தனர். பின், புன் முறுவலோடு, பகவன்! ஜகத்குரு தாங்கள், உங்கள் வார்த்தைகளின் பொருளை அறிய விரும்புபவர்கள் வெகு காலம் தாங்களே ஆராய்ந்து அறிந்து கொள்ளட்டும்,
முனிவர்கள் சொன்னார்கள்: நாங்கள் தத்வங்களை அறிந்தவர்கள் ஆனதும் உங்கள் மாயையே. உங்கள் அருளே. நாங்களும் விஸ்வஸ்ருட், விஸ்வத்தை தோற்றுவித்தவரான தங்கள் ஆளுமைக்கு உட்பட்டவர்களே. எங்கள் ஆவலால் கற்றோம். ரகசியமான மந்த்ரார்த்தங்களையும் தெரிந்து கொண்டோம். அஹோ! பகவானின் சிருஷ்டி விசித்ரமானது என்பதை கண்டு கொண்டோம். அவ்வளவே.
ஒரே ஆத்மா, பலவிதமான உயிரினங்களிலும் ப்ரதி பலிப்பதை, அதனால் பிறப்பும், இருத்தலும், மறைதலும் சாத்யமாவதை புரிந்து கொண்டோம். பஞ்ச பூதங்களினால் ஆன பூமியில் பலவித உருவ, பெயர் அடையாளங்களோடு அவதரித்து செய்யும் செயல்களையும் ஆச்சர்யத்துடன் காண்கிறோம். தேவையான காலங்களில் உங்களைச் சார்ந்த அன்பர்கள், நம்பும் பக்தர்கள் இவர்களின் நலனுக்காகவும், துஷ்டர்களை அடக்கவும், உங்கள் லீலாவதாரம். சனாதனமான வேத மார்கத்தை நிலை நிறுத்தவும் வர்ணாஸ்ரமங்களை பாகு படுத்தி கொடுக்கவும் பரம புருஷணான தாங்களே சக்தியுடையவர்.
ப்ரும்ம ரூபமானவனே! உங்கள் ஹ்ருதயம் சுத்தமானது. தெளிவான வெண்மை நிறமே அதற்கு உதாரணமாகும். தவம், ஸ்வாத்யாயம், சம்யமம் இந்த சாதனைகளால் தான் அப்படி ஒரு சுத்த சத்வமான உள்ளம் அமைய முடியும். வெளிப்படையாக தெரியவும் தெரியும், மறைந்தும் காணப் படும். அதற்கும் மேல் உணர்வினால் அறியத் தான் முடியும். அதனால், ப்ரும்மன், ப்ரும்ம குலம், அந்தணர்கள், சாஸ்திரங்களில் உங்களைக் காண்கிறார்கள். சத்வ ஸ்வரூபமான தாங்களே அதில் ஓலி மயமாக இருப்பதை கண்டு கொள்கிறார்கள். அந்த ப்ரும்ம குலத்துக்கு முதன்மையாக இருப்பவர் தாங்களே.
இன்று எங்கள் ஜன்மம் சாபல்யமடைந்தது. எங்கள் வித்யை, தவம், தத்வ தரிசனங்கள் பெற்றது, நேரில் உங்களைக் கண்டதால் நன்மைகளின் முழுமையான நன்மையை அடைந்து விட்டோம். இதை விட ஸ்ரேயஸ் வேறு என்ன இருக்க முடியும்?
நமஸ்தஸ்மை பகவதே! க்ருஷ்ணாய அகுண்ட தேஜஸே, – குறைவற்ற தேஜசுடையவனான பரமாத்மாவான உங்களுக்கு-
ஸ்வயோகமாயா – தன்னுடைய யோக மாயையால்
ஆச்சின்ன மஹிம்னே- மறைத்துக் கொண்ட மகிமையை உடைய பரமாத்மா –
உங்களை வணங்குகிறோம்.
இந்த அரசர்கள் அறிய மாட்டார்கள். சகலாத்மாவான உங்களை அனைத்தும் அறிந்தவராக உணர மாட்டார்கள். பெயரளவில் இந்திரியங்களுடன் தங்களிடையில் உலவும் மனிதனாகவே காண்பார்கள். உலக இன்னல்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது அவர்களுக்குத் தெரியாது.
இன்று அமோகமான அகமர்ஷணம்- குற்றங்களைக் களையும், தீர்த்தாஸ்பதம்- சர்வ புண்ய தீர்த்தங்களும் தரும் பலனைத் தரும் உங்கள் பாத தரிசனம், எங்கள் இதயத்தில் யோகங்களை சாதனை செய்ததால் அறிந்து கொண்டோம். அதனால் எங்கள் பக்தி பெருகுகிறது. ஜீவ கோசம் என்ற உடலில் பற்றும் அழிகிறது. பக்தர்கள் நாங்கள். அதனாலேயே உங்களை கண்டு கொண்டோம். பரதத்வமான உங்களையே அடையும் தகுதியை அனுக்ரஹிக்க வேண்டுகிறோம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு துதித்து, அனுமதி பெற்று, தாசார்ஹன், த்ருதராஷ்ட்ரன், யுதிஷ்டிரன், இவர்களிடமும் விடை பெற்று தங்கள் இருப்பிடம் செல்லத் தயாரானார்கள். அதைக் கண்ட வசு தேவரும் வந்து வணங்கினார். அவர்களை துதி செய்தார்.
நமோ நம: சர்வ தேவேப்ய ரிஷய:, ஒரு விண்ணப்பம்,கேளுங்கள். கர்மா என்ற செயலாலேயே, கர்ம பந்தம் விடுபடும் என்ற கொள்கை அதை சற்று விவரித்துச் சொல்லுங்கள், என்றார்.
நாரதர் சொன்னார்: ரிஷிகளே, இது இயல்பே. தந்தை தன் மகனை அறியாச் சிறுவனாக பார்க்கிறார். ஸ்ரீ க்ருஷ்ணன் அவருக்கு மகனாக மட்டுமே தெரிகிறான். அதனால் கேட்கிறார். அருகில் இருப்பவைகள், மனிதர்களுக்கு மதிப்பாகத் தெரிவதில்லை. கங்கைக் கரையில் இருப்பவர்கள், வெளி இடங்களில் புண்ய தீரத்தங்களை நாடுவது போலத் தான். காலத்தினால் வரும் அனுபூதி- அனுபவம், லயம், உத்பத்தி இவைகளால், நாம் அதிகம் விவரித்துச் சொல்ல முடியும் என்று நம்புகிறார். தானே அறிந்து கொள்ள முடியாத விஷயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள் என்று அறிவோமே.
கர்ம மார்கம் க்லேசம்-உடல் உழைப்பையும், முழு கவனத்தையும் வேண்டுவது. ஒப்புவமை இல்லாத ஈஸ்வரனை சற்றும் இடைவிடாத சாதனைகள்- ப்ராணாயாமம், முதலிய நியமங்களுடன் செய்ய வேண்டியவைகள். திடமான நம்பிக்கையுடன் அனுபவத்தால் அடைய வேண்டிய வழி. மேகங்களும், பனியும் மறைக்கும் ஸூரியன் போல என்று சிலர் சொல்வர்.
அதன் பின் ரிஷிகள், அந்த அரசர்களுக்கும், உடன் அமர்ந்திருந்த பலராமன்,க்ருஷ்ணனுக்கும் சேர்த்து விவரமாக சொன்னார்கள்.
கர்ம- சாஸ்திர சம்மதமான செயல்கள், யாக காரியங்கள் இவைகளே, கர்ம வினையை தவிர்க்கலாமென்பதை மிக தெளிவாக நிரூபித்து உள்ளார்கள். ஸ்ரத்தையுடன், யக்ஞ ஸ்வரூபியான பகவானை யாகங்கள் செய்து அனுபவம் பெற்றவர்கள் உணர்கிறார்கள்.
மனதின் கட்டுப்பாடு தான் முக்கியம். சாஸ்திரங்கள் அறிந்த கவிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். யோக மார்கம் சுலபமானது. அதே போல சாஸ்திரங்களில் சொல்லும் தர்மமும் நடைமுறையில் மன நிறைவைத் தரும். இது அந்தண குடும்பஸ்தர்கள் செய்யக் கூடிய எளிய வழி. நேர்வழியானதால் சந்தேகத்துக்கு இடமின்றி இறுதியில் இலக்கையடையச் செய்யும். தன்னிடம் உள்ள பொருட்களைக் கொண்டே செய்யலாம். உடலும் உள்ளமும் சுத்தமாக இருந்து மனிதர்கள் சிரத்தையுடன் செய்தால் போதுமானது.,
செல்வம் உடையவர்கள், யாகங்களில் தானங்கள் செய்யலாம். வீடுகள், மனைவி மக்கள் இவர்கள் நன்மையை உத்தேசித்தும், தன் சுய லாபம், சுற்றியுள்ளவர்களுக்கு நன்மை இவைகளை தொடர்ந்து செய்து அனுபவப் பட்டவர்கள் பெறுவது கண்கூடு. நகரங்களில் இருந்து இது போல பொதுவாக யாகங்களைச் செய்து அனுபவம் மிக்கவர்கள் வயதான காலத்தில் தபோ வனங்களுக்கு செல்வதுண்டு, தனியாக ஆத்ம விசாரம் செய்ய. இந்த நிலையில் அவர்கள் உலக பற்றை சுலபமாக விட முடியும்.
மனிதப் பிறவி எடுத்தவர்களுக்கு மூன்று கடமைகள் உள்ளன. தேவர்களுக்கு செய்ய வேண்டியது, ரிஷிகளுக்கு செய்ய வேண்டியவை, மற்றும் பித்ருக்களுக்கு செய்ய வேண்டியவை, யாக காரியங்கள் தேவர்களை திருப்தி படுத்தும், அத்யயனம்- கல்வி ரிஷிகளை, வம்ச வ்ருத்தியும், குணவான்களாக தன் தனயர்களை வளர்ப்பது குலத்தின் முன்னோர்களை மகிழ்விக்கும்.
வசுதேவ! தற்சமயம் ரிஷிகளுக்கும், குல மூத்தோர்களுக்கும் செய்ய வேண்டியவைகளை செய்து விட்டாய். இனி யாகங்களை செய்து தேவர்களை திருப்தி படுத்துவது மட்டுமே. அதையும் செய்து பிறவிக் கடன்கள் தீர விடுபட்டவனாக ஆவாய். பகவானை மகனாக அடைந்ததால் சுலபமான வழி இது. மனதார ஜகதீஸ்வரனை, க்ருஷ்ணனை பக்தியுடன் வழிபடு. உன் நல்வினையின் பலனாக பகவானையே மகனாக பெற்றுள்ளாய்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: வசுதேவர் இதைக் கேட்டு அவர்களை தலை வணங்கி மரியாதையுடன் தான் யாகம் செய்ய ருத்விக்குகளாக இருக்க வேண்டினார். அவர்களும் சம்மதித்து அந்த புஷ்கர க்ஷேத்திரத்தில், உத்தம மான ஏற்பாடுகளுடன், யாகங்களைச் செய்தனர். வ்ருஷ்ணி வம்சத்தினர் புஷ்கரத்தில் நீராடி, சுத்தமான ஆடைகளும், அலங்காரங்களுமாக தங்கள் மனைவி மார்களுடன் வந்து யாக தீக்ஷை எடுத்துக் கொண்டனர். யாகத்துக்கான பொருட்களை அவர்கள் கொண்டு வந்து சேர்த்தனர்.
ம்ருதங்கம், படஹம், சங்க, பேரி வாத்யங்களின் நாதங்கள் வானளாவ எழுந்தன. நட, நர்த்தகிகள், ஆடினர். சூத, மாகதர்கள் பாடினர். நல்ல குரல் வளம் உள்ள கந்தர்வ பெண்கள் சுஸ்வரமாக சங்கீதம் பாடினர். அவர்கள் கணவன்மார்களும் உடன் பாடினர்.
வசுதேவரை அவருடைய பதினெட்டு மனைவிகளுடன் அபிஷேகம் செய்வித்தனர். பட்டாடைகளும் ஆபரணங்களுமாக அவர்களும் உடன் அமர்ந்தனர். இந்திரன் சபையில் நடப்பது போல காண வந்திருந்தவர்களும் மகிழ்ச்சியுடன் பலவிதமான ரத்னங்கள், பட்டாடைகளுடன் உத்சாகமாக வந்தனர். பலராமனும், க்ருஷ்ணனும் தங்கள் தங்கள் பந்துக்களுடன், தங்கள் தனயர்கள், பந்துக்கள் உறவினர்களுடன் வந்து அமர்ந்தனர். அவர்கள் விதிகளை அனுசரித்து அனுயக்ஞம் – தாங்களும் பங்கேற்பது, என்பதைச் செய்தனர். அக்னிஹோத்ரம் முதலியவைகளைச் செய்தனர். சாதாரண மக்கள் செய்வது போலவே, வைதிக காரியங்கள், தான, யாக காரியங்களைச் செய்தனர். வேண்டியவர்கள் வேண்டியபடி பொருட்களையும் செல்வத்தையும் தானம் செய்தனர். பசுக்களும், நிலமும், கன்யா பெண்களும் தானமாக அளிக்கப் பட்டனர். யாகம் முடிந்து அனைவரும் பத்னிகளுடன் அந்த பரசுராம குளத்தில் அவப்ருத ஸ்னானம் என்பதைச் செய்தனர். பின் நல்லாடைகள் அணிந்து வந்திருந்தவர்களும் நல்ல வஸ்திரங்கள், ஆகாராதிகள் இவைகளை அளித்து கௌரவித்தனர். பந்துக்கள் அவர்கள் மனைவிகள், மக்களுடன், வந்தவர்களுக்கு பரிசுப் பொருட்களும் நிறைய கொடுத்தனர். விதர்ப, கோசல,,குரு தேசத்து, காசி,கேகய, ஸ்ருஞ்சய நாட்டு அரசர்கள், யாக சாலையில் ருத்விக்குகள், தேவர்களும், பித்ருக்களும் மனித உருவில் வந்து யாகத்தில் கலந்து கொண்டிருந்தனர். ஸ்ரீ நிகேதன் தானே யாகம் செய்கிறான் என்பதால் நேரில் வருவதையே உசிதமாக நினைத்தனர்.
த்ருத்ராஷ்டிரனும், பாண்டவர்களும், பீஷ்மர், த்ரோணர், குந்தி, இரட்டையர்களான நகுல சகதேவர்கள், நாரதர், பகவான் வியாசர், மற்றும் நெருங்கிய பந்துக்கள், தோழர்கள், சம்பந்திகளுடன் வந்திருந்தனர். பந்துக்களை அணைத்தும், யாதவர்களை நட்புடன் விடை கொடுத்தும், அனுப்பி வைத்தனர். ப்ரியா விடை பெற்று அவர்களும் தங்கள் தேசங்களுக்கு கிளம்பினர்.
நந்தனும், உடன் வந்த ஏராளமான கோகுலத்து ஜனங்களும் முறையாக கௌரவிக்கப் பட்டனர். அவரும் பந்துக்களான பலராமன், க்ருஷ்ணன், உக்ரசேனன் இவர்களிடம் விடை பெற்றனர். வசுதேவர் அவர் கைகளை தன் கையில் வைத்துக் கொண்டு அன்யோன்யமான பந்துக்கள் உடன் இருக்க நல்ல முறையில் தன் விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சி தெரிய நந்தனிடம் சொன்னார்: சகோதரனே! தெய்வ சங்கல்பம். மனிதர்கள் பாசத்தால் இணைவதும், பரஸ்பரம் அன்புடனும், பற்றுதலோடும் வாழ்வதும். பரம யோகிகள், ஸூரர்களானாலும் உறவும், உண்மையான அன்பும், பாசமும் கை விட முடியாதவைகளே. என்ன கை மாறு செய்வோம். எங்களுக்கு தவிர்க்க முடியாமல் அந்த நிர்பந்தமான செயலை செய்ய வேண்டி வந்தது. அதனால் உற்ற தோழனான உங்களிடம் என் மகன்களான பலராம, க்ருஷ்ணன் இருவரையும் ஒப்படைத்தேன். கம்சனின் ஆட்சியில் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். மனிதனுக்கு ராஜ்ய லக்ஷ்மி நேர் வழியில் செல்ல விரும்புவர்களுக்கு நன்மையை செய்வதில்லை. தன் மக்கள் தன் பந்துக்கள் என்பவர்களைக் கூட கண்களுக்கு தெரியாமல் மறைக்கிறது.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஆனகதுந்துபி இப்படிச் சொல்லி, கண்ணீர் விட்டார். சமயத்தில் செய்த அவருடைய உதவியை நினைத்து உணர்ச்சி வசப் பட்டார்.
நந்தனும் சகாவான வசு தேவரின் பிரியமான வற்புறுத்தலால். இன்று நாளை என்றபடி, பலராமன், க்ருஷ்ணன் இவர்களுடன் மூன்று மாதங்கள் வசித்தார். அதன் பின்னும் தங்க முடியாமல் வ்ரஜ தேசத்து வேலைகள் இருந்தன. விடை பெற வந்தவருக்கு, விலையுயர்ந்த பட்டாடைகளையும், ஆபரணங்களையும் மற்றும் பலவிதமான பரிசுப் பொருட்களையும் கொடுத்தார் வசுதேவர்.
கோப குலத்து ஆண்களும் பெண்களும் நந்தனுடன் கிளம்பினர். வசு தேவர், உக்ர சேனர், க்ருஷ்ணர். உத்தவர், பலராமன், அனைவரும் ஏதோ ஓரு அன்பளிப்பைக் கொடுத்தனர். வசதியாக வ்ரஜ தேசம் செல்ல பிரயாண ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். அவர்கள் அனைவருமே, கோவிந்தன் நினைவே மனதில் நிறைந்திருக்க, தயங்கியபடியே தங்கள் ஊர் திரும்பினர். மழைக் காலம் நெருங்கி வருவதால் துவாரகை திரும்பிச் செல்ல அவர்களும் அவசரமாக கிளம்பினர்.
அவரவர் ஊர் திரும்பியதும், தங்கள் ஜனங்களிடம் தாங்கள் பங்கு கொண்ட யாகம் பற்றியும், சந்தித்தவர்களைப் பற்றியும் கதையாக பேசிக் கொண்டனர்.
( இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பகுதியில், தீர்த்த யாத்ரானுவர்ணனம் என்ற எண்பத்து நாலாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 71
அத்யாயம்-85
ஸ்ரீ பாதராயணி சொன்னார்: ஒரு சமயம் அவருடைய புதல்வர்கள், பலராமனும், அச்யுதனும் வந்து தந்தையை வணங்கினர். வசுதேவர் மகிழ்ந்து அவர்களை அசீர்வதித்து, பேச்சுக் கொடுத்தார்.
முனிவர்கள் மூலம் அவர்களுடைய பிறவி ரகசியமும், ஆற்றலும் தெரிந்து கொண்டவர். அது தவிர தானே நேரடியாகக் கண்ட நிகழ்ச்சிகளாலும் அது உறுதியாயிற்று. ஆதலால், பரிபாஷை- குறிச் சொல் என்ற முறையில் பேச்சைத் தொடர்ந்தார்,
க்ருஷ்ண, க்ருஷ்ண மகா யோகின்! சனாதனமான சங்கர்ஷணனே! ப்ரதான புருஷர்கள் நீங்கள் இருவரும் என்பதை சந்தேகமற புரிந்து கொண்டேன். உலகியலுக்கு அப்பாற்பட்டவர்கள். என்ன, என்ன, எங்கிருந்து, யாருக்கு, யாரிடமிருந்து, எது எது எப்படி, எப்பொழுது இருக்க வேண்டும் ? பகவான் தானே சுய உருவில் எப்பொழுது இருக்க வேண்டும்? ப்ரதான புருஷேஸ்வரன்- மிக முக்கியமான உயிரினங்கள் அனைத்திற்கும் காரணமானவன் ஆக இருப்பதும் சாத்யமா? என்றார்.
உயிரினங்களுக்கு உலகையே தோற்றுவித்தவனின் மூலம் கிடைக்கும் சக்திகள் என்னென்ன? வேறு இடங்களில் இருந்து கிடைப்பவை எவை? தன் அளவில் சுதந்திரம் இல்லாமல் பாரத்ந்த்ரியம்- ஏதோ ஒரு விதத்தில், எவரிடமோ கட்டுப்படுதல், தானாக சுதந்திரமாக செயல் பட முடியாமல் இருத்தல்- அல்லது ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பது, சமத் தன்மை இல்லாமல் வித விதமான படைப்புகள், இவைகளையும் விளக்கிச் சொல்லுங்கள். காந்தி-ஒளி, தேஜஸ், ப்ரபா, சத்தா-ஆற்றல் உடமை, அல்லது ஆளுமை, சந்த்ர, சூரிய,அக்னி,மின்னல் இவைகளின் அடிப்படைத் தன்மை, அரசர்களுக்கு அல்லது நிலம் உடையவருக்கு,அந்த நிலத்தை எப்படி பயன்படுத்தலாம்?, கந்தம் எங்கிருந்து வருகிறது?
தர்ப்பணம், ப்ராணனம், தேவத்வம் , ஓஜஸ், பொறுமை, பலம், நடத்தை, செயல்-நடை,என்ற வாயுவின் குணம், இவைகளும் உங்கள் ஆளுமையால் தானா?
திசைகளில் அவகாசமாக-இருப்பிடமாக , திசைகள் வானத்தின் ஒரு பகுதியை ஆஸ்ரயித்து இருப்பது, நாதம், வர்ணம்-எழுத்து, ஓங்காரம், உருவங்களுக்கு தனித் தனியான அமைப்பு,
புலன்களில் அதன் தன்மையாக இருப்பதாகவும், தேவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்பதாகவும் ஆனால், புத்தி வேலை செய்வதும் புதிதாக அறிந்து கொள்வதும், உங்களால், புத்தி தன் பிறவியின் குணத்தை புரிந்து கொள்வதும் உங்கள் அருளால்,
பஞ்ச பூதங்களில், இந்திரியங்களில் தேஜஸ், மாறுதல்கள், விகல்பமாவது. அவை அனைத்துக்கும் ஆணையிடும் ப்ரதான புருஷனாக
அழியக் கூடிய பாவங்களில் நீ அழியாதவனாக இருக்கிறாய். மாறும் தன்மை கொண்ட தத்வங்களில், அதன் உண்மைத் தன்மையாக இருப்பதும் நீயே.
சத்வ ரஜஸ், தமஸ் என்பவை, குணங்கள் மூன்று. உன்னிடமிருந்து பெற்று ப்ரும்மா உன் மாயையால் உண்டாக்கப் பட்டார்.
அதனால் தான் இவை ப்ரும்மாவிடம் உள்ளது என்றால், உன்னால் வித்யாசமாக செய்யப்பட்டது என்றால், நீ அந்த மாறுதல்களில் எப்படி செயல்படுவாய்?
குண ப்ரவாகங்கள் இவைகளில் கட்டுண்டு, அகிலாத்மா, அவன் செயல்கள் என்று தெரிந்து கொள்ளாத சாதாரணன் தன் செயல்களின் போக்கு என்னவாக இருக்கும் என்று எப்படி தெரிந்து கொள்வான்.
எதேச்சையாக அரசனாக ஆனவன் நான். சுலபமாக அடைய முடியாதவற்றையும் அடைந்ததால், என் சுய நலமே பெரிதாக நினைப்பவன். வயதும் ஆகி, உன் மாயையால் ஈஸ்வரனே!, இது,நான், என்னுடையது இந்த தேகம் என்று மட்டுமே தெரிந்தவன், பந்தமும் பாசமும் என்னை கட்டுப் படுத்துகின்றன- இப்படி என்னை மட்டுமல்ல உலகையே மோகத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறீர்கள்.
நீங்கள் இருவரும் என் தனயர்கள் அல்ல. ப்ரதான புருஷர்கள் என்று அறிகிறேன். பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்தவர்கள் என்கிறார்கள்.
அப்படிபட்ட உங்கள் இருவரையும் சரணடைகிறேன். எளிதில் கிடைக்காத உங்கள் பாதாரவிந்தங்களில் சரணடைந்த என்னையும், ஆர்த்த பந்தோ! பயந்தவனுக்கு அபயம் அளிக்கும் நீங்கள் தான் என்னையும், பிறவித் துன்பம் என்ற பயத்திலிருந்து காக்க வேண்டும்? இந்த பிறவி போதும். மனம் போன போக்கில் உலக வாழ்க்கையே சுகம் என்றும், சாதாரண உடல் சம்பந்தமான விஷய சுகங்களே பெரிது என்றும் வாழ்ந்து விட்டேன். அதனாலேயே, எந்த தகுதியில் உங்களை என் தனயர்கள் என்று எண்ணினேன். ப்ரசவ அறையிலேயே ப்ரபோ! பேசினீர்கள். நீங்கள் இருவரும் பிறவியில்லாதவர்கள் , உலகில் ஞானத்தை பரப்ப ஒவ்வொரு யுகத்திலும் நம் தர்மத்தைக் காப்பாற்ற பலவிதமான உடலை ஏற்று, ஆகாயம் போன்று பரந்தும் அளித்தும், பின் அழிக்கிறாய் இதையெல்லாம் யார் அறிவர், உன் விபூதி மாயம் என்பதை பூமியின் நிரந்தரத் தன்மை எதனால் என்பதை.
ஸ்ரீ சுகர் சொன்னார்: தந்தையின் இந்த சொற்களைக் கேட்டு பகவான், மெல்ல சிரித்துக் கொண்டு அவருக்கு புரியும்படியான சொற்களால் பதில் சொன்னார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: தாத! தந்தையே உங்கள் கேள்விகளுக்கு பொதுவான, சாரமான தத்வம் என்ன என்பதைச் சொல்கிறேன். உங்கள் புதல்வர்கள் என்று இல்லாமல் உயர் தத்வங்களை அறிந்தவர்கள் என்பது போல கேள்விகள் கேட்டீர்கள்.
நான், நீங்கள் இருவரும், இந்த துவாரகா வாசிகள், இன்னும் உலகமனைத்தும் யாதவ ஸ்ரேஷ்டரே, உலகில் உள்ள சராசரமும்- அசையும் அசையா பொருட்களும், ஒன்றே என்பதை புரியும்படி சொல்கிறேன்.
ஆத்மா ஒன்றே. தானே ஜோதி மயமானது. நித்யமானது. நிர்குணமானது. குணங்களால் இது பாதிக்கப் படாது.என் ஸ்ருஷ்டியில், இந்த ஆத்மா அனைத்து உயிருள்ளவைகளிலும் இயங்குகிறது. வானம், வாயு, ஜோதி, தண்ணீர், பூமி, இவைகளில் உள்ளது. விஸ்தாரமானது அதே சமயம் அல்பமாக உள்ளது அனைத்திலும் ஆத்மா பலவிதமாக உள்ளூடாக இருக்கிறது.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு ஆரம்பித்து பகவான், வசு தேவருக்கு பல வித உதாரணங்களுடன் விவரித்துச் சொன்னார். வசு தேவரும் என் அறியாமை அகன்றது என்று திருப்தியுடன் ஆனந்தமாக ஆனார்.
அதே சமயம் தேவகி, தன் புதல்வர்கள், தங்கள் குருதக்ஷிணையாக, குரு புத்ரனை மீட்டு கொணர்ந்து அவருக்கு அளித்த செய்தியை அறிந்தாள்.
தேவகி சொன்னாள்: ராம ராம, அப்ரமேயாத்மன்! க்ருஷ்ணா! யோகேஸ்வரா! அதைக் கேட்டவுடனேயே நான் புரிந்து கொண்டேன். நீங்கள் இருவரும் உலகையே படைத்து காக்கும் ஈஸ்வரர்கள், ஆதி புருஷர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். காலத்தினால் வதைக்கப்பட்ட உயிர்களை, சாஸ்திரங்களை மறந்த அல்லது மீறிய அரசர்களை பூமிக்கு பாரமாக இருப்பவர்களை குறைக்கவே அவதரித்தவர்கள் என்பதை இன்று நான் தெரிந்து கொண்டேன்..
உங்களுடைய அம்சத்திலும் அம்சமாக, உலகில் உத்பத்தி, லயம், பின் மறுமுறை தோன்றுதல் என்ற சுழற்சி தவறாமல் நடக்கிறது. விஸ்வாத்மன் நீ, உன்னால் நான் இன்று நல்ல கதியை அடைகிறேன்.
என்றோ இறந்த குருவின் மகனை, பித்ரு லோகத்தில் இருந்து மீட்டுக் கொணர்ந்து அவருக்கு குரு தக்ஷிணையாக கொடுத்துள்ளீர்கள். அதே போல எனக்கும் செய்யுங்கள், நீங்கள் இருவரும் யோகேஸ்வரர்கள். உங்களால் முடியும். என் வயிற்றில் பிறந்த குழந்தைகள் போஜ ராஜனால் கொல்லப் பட்டனர். அவர்களை பெற்றத் தாயார் நான், என் குழந்தைகளைக் காண விரும்புகிறேன்.
ரிஷி சொன்னார்: தாயார் இவ்வாறு வேண்டிக் கொள்ளவும், பல ராமனும், க்ருஷ்ணனும், தங்கள் யோக மாயையால் சுதலம் சென்றனர். அங்கு தைத்யர்களின் அரசனான மகா பலி, இந்த்ரசேனனைக் கண்டு விஸ்வரூபனான தானே அந்த குழந்தைகளைக் கண்டு கொண்டார். அவர்களைக் கண்டதில் மகா பலி மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அது வெளிப்படையாக கண்களில் நீராகவும், உடலில் மயிர் கூச்செரிவதாவும் இருக்க துதி செய்தார்:
நமோ அனந்தாய ப்ருஹதே நம: க்ருஷ்ணாய வேதஸே! சாங்க்ய யோக விதானாய, ப்ரும்மணே பரமாத்மனே’ உங்களைக் காண்பதே உயிரினங்களுக்கு துர்லபம். அடைவது அதை விட துர்லபம். நாங்கள் ராஜஸ தாமஸ குணங்களே அதிகமான பிறவிகள். யதேச்சையாக எங்களுக்கு தரிசனம் கிடைத்தது பெரும் பேறு. தைத்ய தானவ கந்தர்வர்கள், சித்த வித்யாதர சாரணர்கள், யக்ஷ ரக்ஷ பிசாசங்கள், பூத ப்ரமத்த நாயகர்கள், விசுத்த சத்வமே இருப்பிடமாகக் கொண்ட உங்களிடத்தில், சாஸ்திரமே சரீரமாக கொண்டவர்களை, என்றுமே வைரியாக பாவித்து வந்திருக்கிறார்கள். எங்களிலும் சிலர் அப்படியல்ல. ஒரு சிலர் அந்த வைரத்தாலேயே, சிலர் பக்தியினால், சிலர் தங்கள் ஆசைகளால், என்று தேவர்களிலும் இந்த பாகுபாடு உள்ளதே. இது இப்படித்தான் என்று யோகேஸ்வரா! அறுதியிட்டு யாரால் அறிய முடியும். உன் யோக மாயைக்கு முன் நாங்கள் எம்மாத்திரம். அதனால், ப்ரசீத, பக்ஷபாதமின்றி அருளுபவர்கள் நீங்கள் இருவரும். அதனால் இருண்ட கிணற்றுக்குள் விழுந்தவர்கள் போல அறியாமையில் மூழ்கி இருக்கும் சாதாரண உயிர்களும் உங்கள் படைப்பே, உங்கள் சரணாரவிந்தங்களில் மனதைச் செலுத்தி நான் சாந்தமாக என்னைச் சார்ந்தவர்களுடன் இருப்பேன். ஆணையிடுங்கள், வந்த காரணம் என்னவோ என்றான்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: மரீசி -ஊர்ணா தம்பதியினரின் முதல் மன்வந்தரத்தில் பிறந்த ஆறு குழந்தைகள், ப்ரும்மாவை தன் மகள் ஸ்தானத்தில் இருந்த சரஸ்வதியை விரும்புவதைக் கண்டு சிரித்ததால், சபிக்கப் பட்டனர். உன் தந்தைக்கு பிறந்து, அடுத்த பிறவியில் தேவகி என்ற எங்கள் தாயார் வயிற்றில் பிறந்தனர். அவர்கள் கம்சனால் கொல்லப் பட்டனர். அவள் தற்சமயம் தன் குழந்தைகளைக் காண விரும்புகிறாள். ஆகவே நாங்கள் அவர்களைத் தேடி வந்தோம். எனக்கு முன் பிறந்தவர்கள். அவர்களை அழைத்துச் சென்று அவளை சாந்தப் படுத்தி விட்டு அவர்களுக்கு நல்ல கதி அளிக்க விரும்புகிறோம். சாஸ்திரங்களில் இது போன்ற முக்தி மார்கம் சொல்லப் பட்டிருக்கிறது. சிறு பூச்சிகள், பட்டாம் பூச்சி, க்ருணி என்ற மிகச் சிறிய உயிர், போன்ற ஆறு உயிர்கள், இவைகள் என் அனுக்ரத்தால் நல்ல கதி பெறுவார்கள்.
இவ்வாறு சொல்லி அவர்கள் தேடி வந்த குழந்தைகளை அடையாளம் காட்டினார். அவரை ஆசீர்வதித்து, விடைபெற்று இருவரும் குழந்தைகளுடன் உடனே திரும்பி வந்தனர். தேவகி அந்த சிசுக்களைப் பார்த்து மிக மகிழ்ந்தாள். ஆறத் தழுவி, மடியில் இருத்திக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டு, கொஞ்சினாள். அவள் மடியில் குழந்தைகளின் ஸ்பரிசத்தால் பால் சுரந்தது. சின்னஞ் சிறு சிசுக்களாக அவைகளை பாலூட்டி, பராமரித்து ஸ்ருஷ்டியின் விசித்திரத்தை எண்ணி ஆச்சர்யப் பட்டாள். அவளிடம் அம்ருத மயமான தாய்ப் பாலைக் குடித்த அவைகள், தங்களுக்கு பின் பிறந்த பல ராம, ஸ்ரீ க்ருஷ்ணன் இருவரின் அங்க ஸ்பரிசத்தாலேயே, தங்கள் பூர்வ வினைப் பயன் அழிந்து போக, ஆத்ம தரிசனம் பெற்றவர்களாக, கோவிந்தனை, தாயார் தேவகியை, வசுதேவரை, பலராமனை வணங்கி சாதகர்கள் அடையும் தெய்வீகமான பதவியை அடைந்தனர்.
கனவு போல, இறந்தவர்கள் திரும்பி வந்ததும், திரும்ப மறைந்ததையும் க்ருஷ்ணனுடைய மாயையே என்று உணர்ந்து கொண்டாள். மனதில் இருந்த க்லேசம் -சிசுக்களைப் பறி கொடுத்தால் உண்டான வருத்தம்- நீங்கி ஆச்சர்யத்துடன் நடந்தவைகளை மனதினுள் நினைத்து நினைத்து பரவசமானாள்.
பாரத! இது போல பல அதிசயங்களை ஸ்ரீ க்ருஷ்ணன் இந்த அவதாரத்தில் நடத்திக் காட்டினார்.
சூதர் சொன்னார்: இந்த சரித்திரத்தை சொல்லிக் கேட்டவர்கள், சொன்னவர்கள், முராரியின் அம்ருத மயமான சரித்திரங்களை, விவரமாக வியாச புத்திரர்கள் வர்ணித்து சொல்லியிருக்கிறார்கள். உலகின் துன்பத்தை நீக்கும், பக்தர்களுக்கு கர்ணாம்ருதம் போல இருக்கும் இவை அவர்களுக்கு பகவானின் அருகிலேயே இருகும் படியான ஸ்தானம் கிடைக்கும் என்பது நிச்சயம்.
( இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாம் பகுதியில், ம்ருதாக்ரஜானயனம் என்ற எண்பத்து ஐந்தாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-59
அத்யாயம்-86
அரசன் பரீக்ஷித் வினவினான்: ப்ரும்மன்! பலராமனுக்கும், க்ருஷ்ணனுக்கும் சகோதரியை, அர்ஜுனன் மணந்தாள். அவள் என் தந்தையைப் பெற்றவள் எனக்கு பிதாமஹி. அவளைப் பற்றிச் சொல்லுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அர்ஜுனன் தீர்த்த யாத்திரை சென்ற சமயம், பல தீர்த்த ஸ்தானங்களுக்கும் கால் நடையாக சென்று கொண்டிருந்தான். ப்ரபாஸம் என்ற இடத்தில் மாமன் மகள் இருப்பதையறிந்து அங்கு சென்றான். அவள் தனக்குரியவள் என்ற நினைத்தான். பலராமன், அவளை துரியோதனுக்கு தர இருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டு, த்ரிதண்டி என்ற சன்யாச வேஷம் பூண்டு துவாரகை சென்றான். மழைக் காலம் முடியும் வரை அங்கு தங்கியிருந்தான். பலராமர் சன்யாசி என்பதால் பிக்ஷை- விருந்துக்கழைத்து தன் வீட்டில் உபசாரம் செய்தார். சன்யாசிகளுக்கான முறையில் ஸ்ரத்தையுடன் அவர் செய்த விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டு அங்கு வந்த அழகிய கன்யா, வீரமும் அழகும் ஒன்று சேர மனதைக் கவரவும், அன்பினால் மலர்ந்த கண்களுடன் அவளை ஏறிட்ட உடனேயே அவளிடம் மனதை பறி கொடுத்தான். அவளும் விரும்பினாள் என்பது அவள் பார்வையிலேயே தெரிந்தது. அர்ஜுனன் பெண்கள் விரும்பும் வீரன் ஆனதால் அதில் வியப்பும் எதுவுமில்லை. வெட்கத்துடன் புன் முறுவலோடு வளைய வந்தவள் மாற்றானுக்கு ஏற்கனவே வாக்களிக்கப் பட்டவள் என்பதால் மனம் சோர்ந்தான். தன்னை அடக்க மாட்டாமல், அவள் ரத யாத்திரை சென்ற சமயம் கவர்ந்து கொண்டு வந்து விட்டான். அதற்கு க்ருஷ்ணனின், மற்றும் அவள் பெற்றோரின் அனுமதியும் இருந்ததும் அனுகூலமாக விட்டது. ரதத்தில் ஏறியதுமே தன் சன்யாசி வேஷத்திலிருந்து மாறி, வில்லும் அம்புமாக சுய ரூபத்தில் காவலர்களை தன் அம்பால் துளைத்து அகற்றி விட்டு அனைவரும் அலற, அலற தன் இரையை எடுத்துச் செல்லும் மிருகேந்திரன்-சிங்கம் போல வேகமாகச் சென்று விட்டான். அதைக் கேட்டு பலராமன் மிகவும் ஆத்திரமடைந்தார். பருவகாலத்தில் பெரும் கடல் பொங்குவது போல அவர் கோபம் பெருகியது. க்ருஷ்ணன் அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டு சமாதானம் செய்தார். அதன் பின் வர வதூக்களுக்கு, அர்ஜுனன்-சுபத்ரா என்ற மணமக்களுக்கு அன்பளிப்பாக நிறைய கொடுத்து ஆசீர்வதித்தார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: க்ருஷ்ணனுடைய ஒரு பக்தன் ஸ்ருத தேவன் என்பவன் க்ருஷ்ணனிடம் தன்னையே அர்ப்பணித்தவனாக, விதேஹ ராஜ்யத்தில் வசித்து வந்தான். குடும்பஸ்தன் ஆனாலும் க்ருஷ்ண பக்தியே ப்ரதானமாக கொண்டவன். திருப்தியும், சாந்தியும் அவன் குணங்கள். தன்னிடம் யாசித்தவர்களுக்கு இல்லையெனாமல் தனக்கு கூட மீதி வைத்துக் கொள்ளாமல் தருபவன். உடலைப் பேணும் அளவுக்கே அவனிடம் பொருள் இருந்தது. ஆனாலும் தினமும் அதிதிகள் வருவதும், அவர்களுக்கு உணவு அளிப்பதும், தொடர்ந்து நடந்தன. அந்த ராஜ்ய அரசன், பஹுலாஸ்வன் என்பவன் மிதிலா தேசத்து நிரஹம்மான் என்பவனும், இருவருமே அச்யுதனிடம் பக்தி பூண்டவர்களே, அவர்கள் அழைத்ததால் தன் சாரதியிடம் சொல்லி ரதத்தை கொண்டு வரச் செய்து, அவ்விருவரையும் காண மிதிலை சென்றார். நாரதர், வாமதேவர், அத்ரி,க்ருஷ்ணர், பலராமன், அசிதன், ஆருணி, நான், ப்ருஹஸ்பதி, கண்வர், மைத்ரேயர், ச்யவனர் மற்றும் பலர் உடன் சென்றோம்.
அர்க்யத்தை எடுத்துக் கொண்டு உதய ஸூரியனை தொடரும் க்ரஹங்கள் போல போகும் வழியெல்லாம் ஊர், நகர ஜனங்கள், ஜான பதம் எனும் சிற்றூர்களிலிருந்தும் தரிசிக்க வந்தனர். ஆனர்த்த, தன்வ, குரு, ஜாங்கல, கங்க, மத்ஸ்ய, பாஞ்சால, குந்தி, மது, கேகய, கோசல நாடுகள், அவை தவிர அருகில் இருந்த சிற்றூர்களிலிருந்தும் க்ருஷ்ணனை தரிசிக்கவே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவரது மலர்ந்த முகமும், மென் முறுவலும், கண்களின் கடாக்ஷமும் அவர்களை கவர்ந்து மெய் மறக்கச் செய்தன. கண்களால் பருகுவது போல பார்த்தனர். அவர்களைப் பார்த்து மூவுலக குருவான பகவான் அவர்களை நலம் விசாரித்தபடியே பயணித்தார். அவர்கள் பாடுவதை கேட்டு ஸ்லாகித்தார். மெள்ள மெள்ள அந்த ரதம் விதேஹ ராஜ்யத்தையடைந்தது.
அரசர்கள் இருவரும், ஊர் மக்கள் சூழ, கையில் அர்க்ய பாத்திரத்தோடு எதிர் கொண்டழைத்தனர். அஞ்சலி ஹஸ்தர்களாக மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினர், இது வரை கேள்வியால் மட்டுமே அறிந்திருந்த ரிஷிகளையும் தனித் தனியே வணங்கினர். எங்களை அனுக்ரஹிக்கவே வந்துள்ளான் என்ற எண்ணத்துடன் ஒரு பக்கம் ஸ்ருத தேவனும், மிதிலா தேச அரசர்களும் ஜகத்குருவின் பாதங்களில் பணிந்தனர்.
இரு தரப்பினரும் தங்களுக்காகவே வந்திருப்பதாக நம்பி உபசாரங்கள் செய்தனர். அரசர்கள் தாசார்ஹம் -ஸ்ரீ க்ருஷ்ணனை வேத விற்பன்னர்களான அந்தணர்களைக் கொண்டு வரவேற்பு உபசாரங்களை முன்னின்று செய்தனர். ஸ்ருத தேவனும் கை கூப்பியபடி வரவேற்றான். இருவரையும் சமமாக எண்ணிய பகவான் இருவராக தானே ஆகி அவர்களின் விருந்தோம்பலை ஏற்றார். இருவரில் ஒருவரை உயர்வாக எண்ணாமல் இருவர் வீட்டினுள்ளும் நுழைந்தார். இதை அவர்களே அறியவில்லை.
தன் வீட்டிற்கு வந்தவர்களை உபசரிக்க மிக நேர்த்தியான ஆசனங்கள், மற்ற வசதிகள் என்று மிக கவனமாக ஏற்பாடுகள் செய்திருந்தான் அரசன். உள்ளார்ந்த பக்தியுடன் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன், அவர் பாதங்களை பாத்யம் என்ற நீர் விட்டு கழுவி, அந்த நீரை தலையில் தெளித்துக் கொண்டான். பாவனமான அந்த நீரை தன் குடும்பத்தினர், அனைவருக்கும் தெளித்தான். விஸ்தாரமான பூஜைகள் செய்து, கந்தம், பூக்கள், புத்தாடைகள்,தூப தீப, அர்க்யம் முதலியவைகளைச் செய்தான். மதுரமான வார்த்தைகளால், அவரை மகிழ்வித்து, துதி செய்தான்.
சர்வ பூதங்களுக்கும் ஆத்மாவானவர் தாங்கள். உலகத்தின் இயக்கத்திற்கே சாக்ஷியாக இருப்பவர். அனைத்தையும் கண்களால் காண்பவர். எங்கள் நல்வினைப் பயன் உங்களை நேரில் காண வாய்ப்பு கிடைத்துள்ளது. என்றும் மறக்க முடியாத அனுபவம் இது. எங்கள் அழைப்பை ஏற்று, வருவதாகச் சொன்ன சொல்லை சத்யமாக்க, இவ்வளவு தூரம் வந்து எங்கள் கண்களுக்கு விருந்தாக வந்து, எங்களை கௌரவித்துள்ளீர்கள், இது எங்களால் நினைத்து கூட பார்க்க முடியாத பெரும் பாக்கியம். உங்கள் பாத தூளிகளையே தலையால் தாங்கும் பெருமை, அதையே நாங்கள் மிகப் பெருமையாக ஏற்கிறோம். யார் தான் இப்படி மகிமை வாய்ந்த உங்கள் அம்புஜ சரணங்களை ஒரு முறை பற்றியவர்கள் கை விட நினைப்பார்கள், எதுவுமில்லாத ஏழையானாலும், அல்லது அனைத்தையும் துறந்த சாந்தமே உருவான முனிவர்கள், இவர்களுக்கு நீங்கள் தன்னையே-தனக்கு சம மான பதவியைத் தருபவர்.
நமஸ்துப்யம் பகவதே! க்ருஷ்ணாய அகுண்ட மேதஸே! நாராயணாய ரிஷயே, சுசாந்தம் தப-ஈயுஷே!
பகவனான ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு நமஸ்காரம். அளவற்ற மேதா விலாசம் உள்ளவனுக்கு நமஸ்காரம். ரிஷியான நாராயணன், சாந்தமானவன், விரும்பியதை விரும்பியபடி கொடுப்பவன்.
எங்களுடன் பல நாட்கள் தங்கியிருக்க வேண்டுகிறோம். வேத விற்பன்னர்களான அந்தணர்களும் உடன் இருப்பர். எங்கள் குலம் உங்கள் பாத தூளியால் புனிதமடையும்.
இப்படி வேண்டிக் கொண்ட அரசனால், லோக பாவனான பகவானும் அந்த நகரத்து கூட்டமாக வந்த ஆண், பெண்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
ஸ்ருத தேவரும் தன் வீட்டிற்கு அதிதியாக வந்த பகவானை, தந்தையாக பாவித்து வணங்கினார். உடன் வந்த முனிவர்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றார். புல்லால் ஆன ஆசனங்கள், விரிப்புகள், இவைகளில் அமரச் செய்து, தன் மனைவியுடன் வந்து நமஸ்கரித்து, பாத ப்ரக்ஷாலனம் செய்து அந்த நீரை தலையில் தெளித்துக் கொண்டார். தன் மனைவி, மக்களுக்கும் தெளித்தார். தன் மனோரதங்கள் அனைத்தும் பூர்த்தியானதாக நினைத்து, மன நிறைவுடன் பூஜித்தார். பழங்கள், அவைகளின் ரஸம், இவ்வாறு அவர் அளவில் உயர்ந்த பதார்த்தங்களைக் கொண்டு உபசரித்தார். சத்வ குணத்தை மேம்படுத்தும் உணவும், குடி நீரும். மனமார்ந்த உபசரிப்புகள், மனதில் என்ன பாக்கியம் செய்தேனோ என்ற பாவனை, இவைகளுடன் பூஜித்தார். ஏழ்மையான குடும்பம் என்றாலும் பக்தியால் பகவானை அருகில் காணப் பெற்றார். சம்சாரம் என்ற பாழும் கிணற்றில் விழுந்தவன் நான், என்னையும் உத்தாரணம் செய்ய சர்வ தீர்த்தங்களுக்கும் மேலான பாத தூளியினால் என்னை கை தூக்கி விட வந்துள்ளார், தன் ஆத்மாவில் அனைத்து அரசர் முதல் ஆண்டி வரை வைத்து அருளுபவர். வசதியான ஆசனத்தில் அவர் அமர்ந்த பின், தன் மனைவி, உறவினர், தன் குழந்தைகளுடன், வணங்கினார். பாதங்களைப் பற்றியபடி, மன நெகிழ்வுடன் சொன்னார்.
பகவானே! இன்று தான் என் க்ருஹத்தில் தரிசனம் தந்துள்ளீர்கள். ஆனால் உங்கள் சக்தியாலேயே ஸ்ருஷ்டித்து, உயிரினங்கள் அனைத்திலும் உங்கள் ஆத்மாவின் அம்சமாக உடன் இருப்பவர் நீங்கள். தூங்கிக் கொண்டிருந்தவர், (ப்ரளய ஜலத்தில்) மனதால், தன் ஆத்ம சக்தியால் மட்டுமே, மாயை – தனித்வமான உங்கள் மறைக்கும் தன்மையால் – உலகை படைத்தீர்கள். மனிதன் காணும் கனவு போன்ற ப்ரும்மாண்டமான உலகம். உங்கள் சரித்திரங்களைக் கேட்பவர், பாடுபவர், சததம் அர்ச்சனை செய்பவர், என்றும் வணங்குபவர், மனதில் தியானம் செய்பவர், மனதில் நல்லெண்ணங்களைத் தவிர வேறு எண்ணமின்றி துதிக்கும் மனிதர்கள் இவர்கள் மனதில் நிலைத்து இருப்பது போல அதே சமயம் தொலைவில் இருப்பவனாகவும், தன் செயல்களில் மூழ்கி அதையே நிரந்தரம் என்னும் மனிதர்கள் மனதில் தானாக எட்ட முடியாத இடத்தில் இருக்கும் பரப்ரும்மம், முடிவில் அவர்களுடைய சாதனைகளால் அடைய முடிந்த அருகாமையிலேயே இருப்பவர்.
நமோஸ்து தே அத்யாத்மவிதாம் பராத்மனே, அனாத்மனே ஸ்வாத்ம விபக்த ம்ருத்யவே, சகாரணாகாரண லிங்கமீயுஷே, ஸ்வமாயயா சம்வ்ருத ருத்த த்ருஷ்டயே||
அத்யாத்ம தத்வத்தை அறிந்தவர்களுக்கும் பரமான ஆத்மாவான, அனாத்மாவான், உன்னை, பிரிவுகள் இல்லாத ஒரே கால ரூபன்-ம்ருத்யு- காரணங்களுடனும் அகாரணமாகவும் அவதார சமயங்களில் உருவம் எடுத்தவனும் , தன் மாயையாலேயே தன்னை மறைத்துக் கொண்டு தென்படாமல் இருப்பவன்.
அப்படிபட்ட நீ எங்களுக்கு ஆணையிடுங்கள். உங்கள் அடியார்கள் நாங்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும், தேவனே! இத்துடன் எங்கள் துன்பங்கள் விலகின, நீங்களே கண்ணெதிரில் இருக்கையில் தேவைகள் என்ன இருக்க முடியும்?
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவான், ப்ரணதார்த்தி ஹரன் என்று சொல்லப் படுபவன், வணங்கியவர்களின் கஷ்டங்களைத் தீர்ப்பவன்- அவர் கைகளை தன் கையில் வைத்துக் கொண்டு சிரித்தபடியே பதில் சொன்னார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: ப்ரும்மன்! முனிவர்களுக்கு அனுக்ரஹம் செய்யவே வந்தவர்கள் இந்த முனிவர்கள் என்று அறிந்து கொள்வாயாக.. இவர்கள் என் ஆணையால் பூமியை தங்கள் பாத தூளிகளால் பாவனமாக்கியபடி நடமாடுகிறார்கள். வேதங்கள், திவ்ய க்ஷேத்ரங்கள், புண்ய தீர்த்தங்கள், இவைகளைக் கண்டும், தொடுவதாலும், அர்ச்சனைகள் செய்வதாலும், மெள்ள மெள்ள, காலம் காலமாக பாவனமாக்கிக் கொண்டு வந்துள்ளார்கள். அதை விடவும் இவர்கள் கண் பார்வையாலேயே நன்மையைத் தரக் கூடியவர்கள்.
அந்தணர்கள், ப்ரும்ம வித்தையை அறிந்தவர்கள், மற்றவர்களுக்கு க்ஷேமம் – நன்மை. செய்யவே பிறந்தவர்கள். பிராணிகள் அனைத்தையும் தன் தவத்தால், வித்யா-கல்வியால், தான் மனம் நிறைந்து இருப்பதால், காக்கிறார்கள். என் அம்சமாக -ஒரு கலையாக இவர்களில் நான் இருக்கிறேன் என்பதால். இப்படி நியமமாக உள்ள ப்ராம்மணர்கள் என்னில் ஒரு பாகமாகவே செயல்படுகிறார்கள். சர்வ வேத மயமானவன் என்பதைக் குறிக்க நான்கு புஜங்கள், சர்வ தேவ மயன் அல்லவா நான்.
அறிவில்லாதவர்கள் இதையறியாமல் அசூயைப் படுவார்கள். நானே குருவான ப்ரும்மா. அர்ச்சாவதாரத்தில் என்னை இவர்கள் அர்ச்சித்து அர்ச்சித்து கண்டு கொள்கிறார்கள். இந்த உலகம், சராசரம், என்னென்ன பாவங்கள் உண்டோ, அதன் காரணங்கள் எவையோ, என் உருவங்கள் எத்தனை விதமாக உள்ளனவோ, அறிவின் பிரிவுகள் என்னென்ன உண்டோ, அனைத்தையும் என் கடாக்ஷத்தால் ப்ராம்மணன் கற்றுக் கொள்கிறான். எனவே, ப்ரும்மன்! இந்த ப்ரும்ம ரிஷிகளை, என்னிடம் கொண்ட சிரத்தையுடனேயே அர்ச்சித்து வா. இவர்களை மதித்து, அர்ச்சித்து வருவதை என்னை கௌரவித்ததாகவே கொள்வேன். ஏராளமான நிலமோ, செல்வங்களோ அந்த நிறைவைத் தராது.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு ப்ரபு தானே ஆணையிட்டதும், ஸ்ரீ க்ருஷ்ணனுடன் அந்த ரிஷிகளையும் அதே உள்ளன்புடன் ஆராதித்தான். மிதிலா தேசத்து அரசனும் அதே பாவத்துடன் நல்ல கதியை அடைந்தான்.
இவ்வாறு ராஜன்! பகவான் தன் பக்தர்களில் பக்தியை மட்டுமே காண்கிறான். உயர்வு தாழ்வு என்பது பகவானைப் பொறுத்தவரை பொருளற்றதே. அங்கும் வசித்தார். சன்மார்க உபதேசம் செய்து விட்டு திரும்ப துவாரகா வந்து சேர்ந்தார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பாகத்தில், ஸ்ருத தேவ அனுக்ரஹோ என்ற எண்பத்தாறாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-59
அத்யாயம்-87
அரசன் பரீக்ஷித் வினவினான்: ப்ரும்மன்! ப்ரும்மா நிர்குணன் என்று சொன்னீர்கள். அவருடைய கட்டளைபடி குணங்கள் மற்றும் ஸ்ருதிகள் எப்படி நல்லது, தவறானது என்பதை நிர்ணயிக்கின்றன.
ஸ்ரீ சுகர் சொன்னார்: புத்தி, இந்திரிய, மனம், ப்ராணன் இவைகளை மனிதர்களுக்கு பகவான் நிர்ணயித்தார். சொல்லும், பொருளும், அவை குறிக்கும் பதார்த்தங்களும் தன் அறிவினாலேயே பெறுகிறான்.
அது தான் உபனிஷத். ப்ரும்ம மயமானது அல்லது ப்ரும்மாவினால் உண்டாக்கப் பட்டது. நமது முன்னோர்களுக்கும் முன்னோர்கள் அவர்கள் காலத்தில் நம்பி நடை முறையில் அனுசரித்தவை. சிரத்தையுடன் அனுசரித்தால் ஒன்றும் அறியாதவன் அல்லது அறியாதவனுக்கு கூட அவை க்ஷேமத்தைத் தரும். அதை நான் இப்பொழுது உனக்கு விவரமாகச் சொல்கிறேன். நாராயணனுக்கும் நாரதருக்கும் இடையே நடந்த ஒரு சம்பாஷனை மூலம் புரியும்படி சொல்கிறேன்.
ஒரு சமயம் நரதர் உலகங்களை சுற்றி வரும் சமயம், சனாதனமான ரிஷி என்று அறியப் பட்ட ஸ்ரீமன் நாராயணனை சந்திக்கச் அவருடைய ஆசிரமம் சென்றார். அவரோ, பாரத வர்ஷத்தில், இதன் நன்மைக்காக, அரசர்களும் ப்ரஜைகளும் நலமாக இருக்க, தர்ம, ஞான, பொறுமை இவைகளுடன் பலகாலமாக தவம் செய்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றி பல ரிஷிகள் அமர்ந்திருந்தனர். கூடவே கிராம வாசிகள். இந்த கூட்டத்தில் நடுவில் அமர்ந்திருந்தவரிடம் இதே கேள்வியைத் தான் கேட்டார். அவருக்கு பகவான் என்ன பதில் சொன்னாரோ, மற்ற ரிஷிகளும் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த ப்ரும்ம வாதம் நம் முன்னோர்களுக்கு, அந்த ப்ரதேசத்து நிவாசிகளான பலருக்கும் அதே பதில் தான் சொன்னார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: ஸ்வாயம்புவ என்பவரின் காலத்தில் ப்ரும்ம சத்ரம்- ப்ரும்ம யாகம் என்பதை சன்யாசிகள், துறந்தவர்களே செய்தனர். அந்த சமயத்தில் இருந்த ஜனங்களும் அனேகமாக முனிவர்கள். ஸ்வேத த்வீபம் என்ற இடத்திற்கு நீ ஈஸ்வரனைக் காணச் சென்றிருந்தாய். அந்த இடத்தில் வேத விற்பன்னர்கள், அனவரதமும் வேதங்களை ஓதிக் கொண்டிருந்தனர். அங்கு தான் இந்த கேள்வி, தற்சமயம் நீ என்னை கேட்கிறாயே, அதே போல எழுந்தது. அவர்கள் அனைவருமே சமமான அறிவுத் திறன், கல்வி உடையவர்கள். சீலமும் ப்ரவசனம் எனும் சொற்பொழிவு செய்யும் ஆற்றலும் உடையவர்கள். தான் அறிந்ததை மற்றவர்களிடம் சொல்லியும், சந்தேகங்களை பரஸ்பரம் விவாதித்தும் புரிந்து கொண்டிருந்தனர்.
சனந்தனர் சொன்னார்: வேதங்களின் அடிப்படையில் நாம் அறிவது, பூ மண்டலம் தண்ணீரில் கிடந்தது. அதில் தன் சக்திகளோடு தானும் மூழ்கி இருந்து உறங்கிக் கொண்டிருந்தவர், அதன் பிறகு, நினைவு வந்து விழித்துக் கொண்டார் என்பதாக. அந்த சமயம் உறங்கிக் கொண்டிருந்த சக்ரவர்த்தி போல அவரது பராக்ரமங்களைச் சொல்லி எழுப்பினர். அவர்கள் அவரை அனுசரித்து வாழ்ந்தவர்கள். அழகான ஸ்லோகங்களாலான பாடல்கள் அவை.
வேதங்களே சொல்லின:
ஹே! அஜித, ஹே அக ஜகதோகஸாம், அகிலசக்த்யவபோதக ஜய ஜய, தோஷப்ருக், பீத குணாம்,ஜகதோகஸாம் அகாம் ஜஹி, யத், யத: த்வம், ஆத்மனா சமவருத்த சமஸ்த பக: அஸி, க்வசித் , அஜயா ஆத்மனா ச சரதோ அனு சராம: ||
ஜய ஜய, எழுந்திரு, பிறவியில்லாதவனே, பயந்தவர்களுக்கு அபயம் அளிப்பவர் ஜய ஜய, நீங்கள், உங்களுடைய ஆத்மாவால் பகம் எனும் குற்ற உணர்ச்சிகள் லோகத்தை ஆக்ரமிக்காவண்ணம் தடுத்து நிறுத்து. அசையும் அசையா ஜகத்தின் உயிர்கள் (தாவரங்களுக்கும் உயிர் உண்டு) அவையவைகளுக்குத் தேவையான சக்தியைத் தட்டி எழுப்புபவன், உன்னை நிகமங்கள் என்ற வேத சாஸ்திரங்கள் போல உன் ஆத்மாவான ப்ரும்மா அனுசரித்துச் செல்வதையே தாங்களும் அனுசரிக்கின்றன.
“ வேதைஸ்ச சர்வரை ரகமேவ வேத்யோ- வேதாந்தக்ருத் வேத விதேவ சாஹம்”
ப்ருஹத்- மிக ப்ருமாண்டமானது, இதில் எதையும் விடாமல் அனைத்தையும் காப்பவன். எங்கிருந்து உதயாஸ்தமனங்கள் தோன்றுகின்றனவோ, பூமியில் மாறுதல்கள்-ஏற்றத் தாழ்வுகள், மாற்றமேயில்லாத உன்னை அந்த இடத்தில் உள்ள ரிஷிகள் மனோ வாக் காயம் மனம், சொல், உடல்- இவைகளால் உன்னை பூஜிக்கின்றனர்.
மகா ப்ரளயத்தில் மறைந்த பூ மண்டலம் திரும்ப உயிர் பெற்ற சமயம் ப்ரும்ம ரூபமாக இருந்து ஸ்ருஷ்டியைச் செய்தவன் பகவானே. மண் பாண்டம் உதாகரணமாக சொல்லப் படுகிறது. மண் பாண்டம் உடைந்தாலும் மண் என்ற பொருளே மீத மாகும். இந்த்ராதி தேதைகள், ஸூரிய சந்திரர்கள் முதல் படைப்பு அனைத்தும் அந்த ப்ரும்மத்திலிருந்து தோன்றியவையே என்பதால் ப்ரும்மத்தின் அம்சமாகவே சொல்கிறார்.
த்ரயதிபதே, ஸூரய:, தவ, அகில லோகாமல, க்ஷபணக்தாம்ருதாப்திம், அவகாஹ்ய, தபாம்சி ஜஹு:, ஹே பரம ஸ்வ தாம விதுதாசய கால குணா: சந்த: அகஜஸ்ர சுகானுபவம், தே பதம் பஜந்தி, தே தபாம்சி, ஜஹதி இதி கிமுத
“ வேதைஸ்ச சர்வரை ரகமேவ வேத்யோ- வேதாந்தக்ருத் வேத விதேவ சாஹம்”
யத்கத்வா ந நிவர்தந்தே த்தாம பரமம் மம’ மாமுபேத்ய புனர்ஜன்ம து:காலயமஸாஸ்வதம்| நாப்னுவந்தி மஹாத்மான: சம்சித்திம் பரமாம் கதா: “ கீதை
மூவுல நாயகனே! உலகத்தில் பிறந்த அனைத்து அசையும் அசையா ஜீவன்களும் துயர் தீர்ந்து நலம் பெறவே, தவம் செய்பவர்கள் உன் கதைகள் என்ற அம்ருதத்தில் மூழ்கி மகிழ்கிறார்கள். உன் இருப்பிடத்தை விட்டு வந்து, கால குணங்களையும் கடந்து, இடைவிடாது தியானம் செய்பவர்கள் அடையும் சுகானுபவத்தை எப்படி விவரிப்போம்?
சர்வே ஜனா, த்ருதய இவ, விதா ஸ்வசந்தி, யதி ச , யே தவ, அனுவிதா: ஸ்யு:, த தா ஏவ, அஸுப்ருத:, பவந்தி, யஸ்ய அனுரஹத: மஹத் அஹமாதய:, அண்டம், அஸ்ருஜன், ய: புருஷ வித:, அத்ர அன்னமயாதிஷு, அன்வய: ச, அன்னமயாதிஷு உபதிஸ்யமானேஷு சரம:.ச ஏவ, தா, யத், சதசத:, பரம், ஏஷு (அன்னமயாதிஷு) அவசேஷம், ருதம், ச யத், தத் த்வம்||
கண் தெரியாதவனை பின் தொடர்ந்து செல்லும் குருடர்கள்- இது ஒரு சொற்றொடர்.
முன் ஸ்லோகத்தில் சொன்னபடி, உன்னை அனுசரித்து நடக்கும் ஜனங்கள் ஸ்வசந்தி- உயிருடன் சுவாசிக்கிறார்கள். மற்றவர்கள் இரும்புத் தொழில் செய்வனின் தோலாலான துருத்தி போல காற்றை உள் வாங்கி விடுகிறார்கள். பக்தர்கள் அல்லாதவர்களுக்கும் காமம், போகம் இவைகளும் உண்டு என்பது கார்ய காரண அனுக்ரஹத்வம், செயலை அதன் பலன் தொடரும் என்ற நியாயப் படி மஹத் அஹங்காரம் முதலியவை , மஹானஹங்காரஸ்ச – ஸ்ருஷ்டியில் அன்ன மயமான கோசம் – அந்தந்த பிறவிகளின் சரீரத்தில் ப்ரவேசித்து சம்ஷ்டி, வ்யஷ்டி ரூபம் என்று ஸ்ருஷ்டியில் செய்ததால், அந்தந்த உருவங்களுக்கு ஏற்ப தானே ஆத்மாவாக, புத்தியாக இருந்து இயக்குவதாலும் சத் அசத் – ஸ்தூல ஸூக்ஷ்ம என்பவைகளுக்கு அப்பால், தானே சாக்ஷியாக இருக்கிறேன் என்று சொன்னதே சத்யம், -அப்படியானால், இது தான் தலை இது தான் மற்ற அவயவங்கள் என உணர்த்துவது அந்த புத்தி ரூபமான ப்ரும்மமே.
த்வௌ பூத ஸர்கௌ லோகே அஸ்மின் தைவ ஆசுர ஏவ ச – இரு விதமான பிறப்பு ஒன்று தைவீகம், மற்றொன்று ஆசுரம்.-கீதை
அன்ன மயமான புருஷ தேகத்தில், உள்ளே, ஆத்மா ப்ராணமயமாக உள்ளது. , ப்ராணன் என்பது வாயு. வாயு தோலை பாதுகாக்கிறது. மூக்கின் வழியே செல்லும் வாயுவின் சலனம், உள் மூச்சு, வெளி மூச்சு என்பவை தான் ப்ராணன் அல்லது உயிர். அதே வாயு கீழ் நோக்கிச் செல்லும் பொழுது அபானம். இவை தேகத்திற்கு பலம். இது தவிர மனோ மயமான ஆத்மா இந்த தேகத்தை நிரப்புகிறது, அதனால் புருஷன் ஆகிறான்.
மனோ மயமான புருஷனுக்கு யஜுர்வேதம் தலை. ருக் -த்க்ஷிண பக்ஷம், சாமம்- உத்தர பக்ஷம், ஆதேசம் என்பது ஆத்மா.
சங்கல்பம், விகல்பம் – சரியானது, தவறானது- இவைகளை அறியும் அந்த:கரணம் – மனசாட்சி மனோமயமான ஆத்மா. இரண்டும் சேர்ந்து தான் பூர்ணமான பிறவி என்றாகிறது. மனஸா பஸ்யதி மனஸா ஸ்ருணோதி என்று வேதம் – மனதால் தான் பார்வை முதலியன . மஹத் தத்வம் இவைகளுடன் இணைந்து செயல்படுவது.
ஸ்ரத்தை தான் தலை. ருதம் என்பது மென்மையான வாணி-பேச்சு. எல்லா காரியங்களுக்கும் காரணங்களே ப்ரதிஷ்டா என்படும். அதுவே மஹத் – அது புச்சம்-வாலாக ப்ரதிஷ்டா என்ற நிலை நிறுத்தும் செயல். இது விக்ஞான மயம். ப்ராணமயம் என்பதில் ஸ்ரேஷ்டம் , சூக்ஷ்மம்.
மனோமயம் வேதாத்மகமானது. வேத அர்த்தங்களை அறியும் அறிவு தன்மை அல்லது விக்ஞானம். ப்ரமாண விக்ஞான பூர்வகமாகவே யாகங்கள் செய்யப் படுகின்றன. இந்த விக்ஞானம் உள்ளவர்களே கர்தவ்ய செய்ய வேண்டியவைகளை, கை விட வேண்டியவைகளை அறிவார்கள். அதுவே ஸ்ரத்தை. இந்த ஸ்ரத்தை என்பதே எல்லா செயல்களுக்கும் முதலில் வருவதால் அது சிரசாக உவமிக்கப் பட்டது.
மஹத்வ- அஹங்கார சக்தி+ஆகாயம் முதலான பஞ்ச பூதங்கள், அவைகளின் சூக்ஷ்ம மான சக்தி,பதினோரு இந்திரியங்கள் இவை சேர்ந்தே ப்ரும்மாண்டம்.
சரீரம்-ப்ராணன்-மன-விக்ஞான, ஆனந்தம்- புருஷனாக உருவம் எடுப்பதில் அதன் தர்மத்தில் சத்யம் – ஆனந்த மயமான ரூபம்- அது பகவானே.
வயிற்றை உபாசிக்கிறார்கள் ரிஷிகள். அது கூர்ப்பம் போல முறம் போல அகன்றும் குறுகியதுமான வடிவம். இரண்டாவது ஸ்கந்தத்தில் சொன்ன சுஷும்னா முதலான நாடிகளும் அவைகளின் விவரங்களும் மறைமுகமான பொருளாக உள்ளன.
அஹம் வைஸ்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹமாஸ்ரித: | ப்ராணாபான சமாயுக்த: பசாம்யன்னம் சதுர்விதம் – கீதை
– ப்ராணிகளின் உடலில் வைஸ்வானரனாக இருந்து நான்கு விதமான ஆகாரங்களை செரிக்கச் செய்கிறேன்- கீதை.
அதன்படி ஜடரா என்ற அக்னியாக இருக்கும் ப்ரும்மஸ்தானம் வயிறு. ப்ரும்மத்தை உபாசனம் செய்யும் ரிஷிகள், ஆருண என்ற ரிஷிகள் தஹரம் என்ற ஹ்ருதயத்தையும், மற்றும் சிலர், அனந்தன் மூலாதாரத்திலிருந்து எழும்பி சிரஸ் என்ற தலையை அடைகிறான் என்பதால், சிரஸ் தான் உன் இருப்பிடம் என்பர். அவரவர்கள் தேர்ந்தெடுத்த வழி. ஜாடராக்னி இருக்கும் வயிற்றிலோ, தஹராகாசத்தில் அருணன் போன்ற உன்னையோ விருப்பத்துடன் பாடுபவர்களுக்கும், உன் இருப்பிடமான வைகுண்டமே சிரஸ்-தலை. பரமபதமான அதை அடைந்தவர்கள் க்ருதாந்தன் என்ற மரண தேவனின் பிடியில் அகப்படுவதில்லை. மரணமில்லாத மறு பிறவியில்லாத நிலை அடைகிறர்கள்.
தானே செய்த விசித்ரமான அவதாரங்கள், பலவித உருவங்களுடன், ஒவ்வொன்றும் ஒரு காரணத்திற்காக என்று அறிவோம். உயர்வு தாழ்வு என்று பாராமல் நெருப்பு போல தன் வினையை அனுபவிக்கும் பிறவிகள், களைத்துப் போன இவர்களை சமமாக உன் தாமம்-வைகுண்டத்திற்கு சமமான இடத்தை பெறச் செய்கிறாய்.
நீயே ஸ்ருஷ்டி செய்த புரங்கள், அதாவது தேகங்கள், இவைகளின் உள்ளும் வெளியும், சுற்றிலும் இருப்பதும் உன் அடியார்களே. இவர்கள் உன் அம்சமான சக்தியை உடையவர்கள். இவ்வாறு மனிதனின் கதியை விவரித்து கவிகள், நிகமங்களை அனுசரித்து உன் பாதங்களை வணங்குகின்றனர். அவர்கள் பூமியில் மதிக்கப் பெறுகிறார்கள்.
சிரம சாத்யம் என்று நினைத்து ஆத்ம தத்வம் என்பதை தேடி கண்டு கொள்ள அதற்கான தவம் முதலியவை கடினமானவை என்பதால், உன் சரித்திரங்களை கேட்டால் போதுமானது என்றும் அதுவே அம்ருதம் என்றும் சமாதானம் செய்து கொள்கிறார்கள். இதையும் உள்ளன்புடன் செய்பவர்கள் நல்கதியான அபவர்கம் என்பதை அடைகிறார்கள். அதை விட சரணாம்புஜத்தில் மனம் வைத்து வீடு பெறுவதையே உயர்வாக எண்ணுவர்- அங்கு உலவும் ஹம்ஸ குலம் – பரம ஞானிகளின் குலம் இருப்பதால்.
உன்னையே பின் பற்றும் குடும்பம் இந்த உலகம். தனக்கு பிரியமான தோழன் போல உன்னை அனுசரித்து தொடருகிறது. அதிலும் கஷ்டம், சிலர் மற்ற எதையோ நம்பியும் எண்ணியும், அது உண்மையல்ல என்ற அறிவு இல்லாமல், தங்கள் ஆத்மாவையே இழக்கிறார்கள். அதன் விளைவாக எதோ ஒரு மட்டமான சரீரத்தில் மறு பிறவி பெறுகிறார்கள். அஹோ – கஷ்டம்.
முனிவர்கள், மனதை கட்டுக்குள் வைத்தும், தன் மூச்சை அடக்கி ப்ராணாயாமம் முதலியவை செய்தும், அக்ஷ யோகம் என்பதையும், மனதில் தங்களுக்குள் உன்னை நிறுத்தி உபாசிக்கிறார்கள். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். பார்க்கப் போனால் அனவரதமும் நினைத்தே எதிரிகள் அடைந்தனர். பெண்கள், உரகேந்திரன்- பாம்புகளின் தலைவன், போகத்திலும், புஜ பலத்திலும் பெருமையுடன் இருந்தவர்கள் மற்றும் நாங்களும், சமமே. சமானமான ஞானம் அடைந்தவர்களே. எதனால்? உங்கள் பத்ம பாதங்களில் வணங்கி, அந்த சுதா ரஸத்தை பருகியவர்கள்.
இங்கு தெள்ளத் தெளிய அறிந்தவர்கள் யார்? சொல்லுங்கள். படைப்பு வரிசையில் கீழ் நிலையில் இருக்கும் ஜீவன்களாக அவதாரம் எடுத்தவன், அவரை தேவர்கள் பாடுகிறார்கள். முனிவர்கள், ரிஷிகள் போற்றுகிறார்கள். இரண்டு சத்-நல்லது அசத்- அல்லாதது என்பது பொருளின்றி போகிறது. அதாவது பிறவிகளில் உயர்வு தாழ்வு என்பது இல்லை. அனைத்தும் காலத்தின் வேகத்தில் அடிபட்டுப் போகின்றன.
உலகில் அறிந்தவர்கள், அறியாதவர்களுக்கு உபதேசிக்கின்றனர். அவர்கள் அறிந்ததும் ஓரளவே. முக்குணங்களே வடிவானவன் என்று சொல்வர். அது கூட ஒரு உருவகமே.
தங்கத்தின் தூள் போல அனைத்திலும் பகவானின் தன்மை உள்ளது. எந்த நிலையிலும், ஆபரணமாக இருந்தாலும். தூளானாலும் அதன் மதிப்பு மாறாது என்பதை உவமையாகச் சொல்கிறார்கள். ஆத்மாவை அறிந்தவர்கள் சத் அசத் என்பதற்கான பேதங்களை சொல்வதில்லை. எந்த நிலையிலும் ப்ரும்ம தத்வம் உண்டு என்பார்கள்.
உன்னை அருகாமையில், அண்டி இருப்பவர்கள் நிருருதி – தென் திசையின் அதிபனான யமனிடம் பயப்படுவதில்லை. அந்த திசையை தாண்டி விடுகிறார்கள்.
நீயே சுதந்திரமானவன். அகில காரகன். சக்தி தரன். உன் பலத்தை தான் அனிமிஷா: (தேவர்கள் கண்களில் இமை என்பது இல்லாமையால் கண் கொட்ட முடியாதவர்கள் என்பது இதன் பொருள்) எனும் தேவர்கள் தாங்குகிறார்கள். உன் அம்சமாக இருப்பதால் உன் சக்தியை, பலத்தை அவர்களும் ஓரளவு பெறுகிறார்கள். மழை பொழிவது இந்திரனின் வேலை, என்பது போல அவர்களுக்குள் கடமைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். விஸ்வ ஸ்ருட்- உலகங்களையே சிருஷ்டித்தவன் என்பதால் அனைத்தையும் உன் ஆளுமைக்குள் வைத்திருக்கிறாய்.
ப்ரும்மனின் படைப்பில் அசைவன – உயிரினங்கள், அசையாத தாவரங்கள் என்ற பேதம் சில காரணங்களுக்காக அமைந்தவை.
ப்ரும்மாவின் படைப்பில் புதியதாக தோன்றுவதும் இல்லை, இருப்பது குறைவதுமில்லை என்பது ப்ருக்ருதி புருஷர்கள் என்ற இருவரும், இயற்கையின், பகவானின் என்ற இரு தத்வங்களாலும் தோன்றுவதும் மறைவதும் இந்த சம நிலையை நிர்வஹிப்பதால் தான். ஜலத்தில் நாம் காணும் நீர்க்குமிழிகள் போன்றதே வாழ்வு. பலவிதமான பெயர்களால் அழைக்கப்படும் பகவானிடத்தில் (நீர்க் குமிழி அதே நீரில் மறைவது போல) லயமாகிறார்கள். நதிகள் சமுத்திரத்தில் மறைவது போலவும் மது – தேனில் எல்லா ரஸங்களும் உள்ளடங்குவது போலவும் பிறந்தன அனைத்தும் ப்ரும்ம ரூபமான உன்னிடத்தில் ஐக்யமாகிறார்கள்.
உன் மாயையால் மனிதர்களுக்கு ப்ரமம் – சந்தேகம் தோன்றுகிறது. உன் புருவத்திலிருந்து ஸ்ருஷ்டி வந்தது எனும் பொழுது பவ பயம் – உலகியல் துயர்கள் ஏன்? என்ற கேள்வியும், மூன்று இமைகளும்- முக்கண்ணனின் – இருக்க திரும்பவும் ஏன் துயரும் பயமும் வருகின்றன.
மனம் என்ற குதிரையை அடக்கியவர்கள், அவர்களும் பல உபாயங்களை நாடுகிறார்கள். குருவின் சரணத்தை நம்பியவர்களே அவர்கள். பின் ஏன் பலவிதமான கஷ்டமான தவம் முதலியவைகளை செய்கிறார்கள். வியாபாரி போல, சமுத்திரத்தில் செல்லும் படகில் கர்ணதரா-பாய் மரம் என்ற பாதுக்காப்பை செய்து கொள்ளாதவன் போல.
தன் மகன்,தன் உறவினர்,மனைவி, தன்னுடைய தனம், பூமி, என்றே கவனமாக இருப்பவர்கள், ஏன் உன்னை பஜிப்பதில்லை. சர்வேஸ்வரன் என்று உன்னை பஜிக்காமல் தங்கள் விஷய சுகங்களிலேயே ஈடுபாட்டுடன் அதுவே நிரந்தரமானது என்று நம்புகிறார்கள். அது அவர்கள் துர்பாக்யமே.
பூமியில் புண்ய தீர்த்தங்கள், கோவில்கள் என்று செல்வர். அது ஒரு வழி உன்னை தியானிக்க. ரிஷிகள் தங்கள் ஹ்ருதயத்தையே கோவிலாக்கி உன்னை பஜிப்பர். ஒரு நிமிட நேரம் உன்னை தியானித்தாலும் நித்ய சுகத்தை அடையலாம். இதையறிந்தவர்கள் அந்த ரிஷிகள்.
இது தான் உண்மை இது அசத்யம் என்பது தர்க்கத்தை சார்ந்த முறை. எது, என்ன, எப்படி என்ற கேள்விகளைத் தவிர முடிவான பதில் இந்த தர்க்கத்தில் அடைவதில்லை. பொருளற்ற சொற்களே. பரம்பரையான உவமை – குருடர்கள் அழைத்து செல்லும் குருடர்கள் செல்லும் இருண்ட பாதை என்பர்.
இது இங்கு இருந்தது, இருக்கிறது, இன்னும் வரும் என்ற முக்காலங்கள், என்பதும் ப்ரமையே. பிறக்கும் பொழுதே முடிவும் நிர்ணயம் ஆகி இருக்கும் என்பது தான் உண்மை. இதில் செல்வம் உடையவன், ஜாதிகள், என்ற பேதங்களை சொல்பவர்கள் புத்தியில்லாதவர்களே.
எதை ப்ரும்மா என்ற பிறவி இல்லாதவன், பிறவியெடுக்கும் ஜீவன்களுக்கு அளிக்கிறானோ, அது மட்டும் தான் அந்த ஜீவன்கள் பெறுவது. சட்டையை உரித்து போட்டு விட்டு, மற்றொன்றை பெறும் பாம்பு இங்கு உதாரணமாகச் சொல்லப் படுகிறது. இந்த சரீரம் போன பின் மற்றொன்றை அடைகின்றன என்பர்.
உத்தாரணம் – விடுதலையை அடையாத ஜீவன்கள், இதை அடைவது கடினம். காமத்தை வென்ற யதிகள் உன் பதத்தை அடைகிறார்கள். இவர்கள் மட்டுமே அந்தகனின் வசத்தில் அகப்படாமல் உன் பதத்தை அடைவர்.
உன்னையறியாதவன் எது சுபம் அது அசுபம் என்பதை அறியாதவனே. சொல்லின் பொருளையோ, குணங்களின் பாகுபாட்டையோ எப்படி அறிவான். ஒவ்வொரு யுகத்திலும் நீ சகுணனாக அவதரித்த பாடல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். மனிதனுக்கு அபவர்கம் அருளும் சரித்திரங்கள் உன் லீலைகள்.
தேவர்கள் மட்டும் தான் அனந்தமான நிலையில் இருப்பதாக எண்ண வேண்டாம். ப்ரும்மாண்டத்தில் அவர்களுக்கும் சுற்றிலும் எல்லை உள்ளது. வானத்தில் வாயுவும், புழுதியும், போல என்று ஸ்ருதிகள் சொல்கின்றன. யுக முடிவில் உன்னிடமே அவர்களும் அடைக்கலமாகிறார்கள்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: இதைக் கேட்டு சனந்தன் என்ற அந்த ரிஷியை, அங்கிருந்த சித்தர்கள், பூஜித்தனர். ஆத்ம ஞானம் என்பதை அடைந்தனர். இந்த சம்பாஷனையில் அனைத்து விதமான வேத சாஸ்திரங்களில், புராணங்களில், உபனிஷதுக்களில், சாரமாக இருப்பதாக பாராட்டினர். மகாத்மாக்கள், நமக்கு முன்னோர்கள் ஆராய்ந்து அறிந்து சொன்ன உண்மைகள் என்றனர். நீயும் ப்ரும்ம தாயாதி- அந்த குலத்தில் வந்தவன், அந்த நீதிகளை அனுசரித்து ராஜ்யத்தை ஆளுவாயாக.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ரிஷிகள் இவ்வாறு சொல்லி ஆசீர்வதித்து, அதை சிரத்தையுடன் கேட்டு ஏற்றுக் கொண்ட ஸ்ருத ரதன் என்ற அரசன் , பூர்ணமான நம்பிக்கையுடன், வீரவ்ரதன் என்ற முனிவனான்.
நாரதர் சொன்னார்: நமஸ்தஸ்மை பகவதே! க்ருஷ்ணாய அமல கீர்த்தயே| யோ தத்தே சர்வ பூதானாம் அபவாய உசதீ: கலா : || அந்த பகவானான க்ருஷ்ணனுக்கு நமஸ்காரம். அமலமான கீர்த்தியுடையவன். பவ பயத்தை நீக்குபவன்.
இவ்வாறு பலவகையாக தங்களுக்குள் பேசியும், விவாதித்த பின் அந்த முனிவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு சென்றனர். சாக்ஷாத் ஸ்ரீமன் நாராயணன் மூலமே ஞான உபதேசம் பெற்றவர்கள் திருப்தியுடன் சென்றனர். அதைத் தான் நான் உனக்கு சொன்னேன் என்றார்.
இவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன ப்ரும்ம ஞானம் என்பது பகவானை அறிவதே. ஆதி, மத்ய, முடிவு என்பதை நமக்குத் தெரியாமல் பின் நின்று இயக்குபவன். அனைத்து உயிர்களுக்கும் ஈஸ்வரன். இதை படைத்ததுடன் நிற்காமல், அவனே உள்ளிருந்து தன் அம்சமாக ஆத்மா என்பதான மேம்பட்ட அறிவு, இவன் மனதை கட்டுபடுத்துவதோடு, நிர்வகிக்கிறான். தூங்கி எழுந்தவன் கண்ட கனவை மறப்பது போல. இந்த ஞானம் அடைந்தவன் தான் தன் குடும்பம் என்பதை மட்டுமல்லாமல் பிற உயிர்களையும் தானாகவே- தன்னைப் போன்றே பகவதம்சம் உடையது என நினைக்கிறான். அந்த கைவல்யம் எனும் மோக்ஷம் தரும், அபயமளிக்கும் ஸ்ரீ ஹரியையே அனவரதமும் தியானம் செய்து பஜிக்க வேண்டும்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் ,இரண்டாவது பகுதியில், நாரத நாராயண சம்வாதே வேதஸ்துதி என்ற எண்பத்து ஏழாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 50
அத்யாயம்-88
அரசன் பரீக்ஷித் கேட்டான்: தேவ, அசுர, மனிதர்கள் லக்ஷ்மீ பதியான ஸ்ரீ ஹரியை பூஜிக்காமல் அமங்களமாக தெரியும் சிவனை ஏன் வழிபடுகிறார்கள்? அவர்களில் அனேகர், செல்வந்தர்கள், நல்ல அனுபவம் உடையவர்களாக இருப்பதும் ஏன்?
இது எனக்கு மிகப் பெரிய சந்தேகத்தை கிளப்புகிறது. இருவரும் எதிர் எதிரான சீலம் உடையவர்கள். இருவரும் ப்ரபு எனப்படுகிறார்கள். அவர்களை வழி படுவோர் அடையும் பலனும் வித்யாசமாக இருக்குமா?
ஸ்ரீ சுகர் சொன்னார்: சிவன் சக்தியுடன் சேர்ந்து இருக்கும் சமயம் எப்பொழுதும் மூன்று விதமான உருவமும், குணங்களும் சூழ இருப்பார். வைகாரிகம், தைஜஸம், தாமஸம் என்ற மூன்று. அதிலிருந்து பதினாறு விஷயங்கள் தோன்றின. அந்த விபூதிகளை பின் தொடர்ந்து அனைவரும் நல்கதியை அடைகின்றனர்.
ஸ்ரீ ஹரி தான் நிர்குணன். சாக்ஷாத் புருஷன். ப்ரக்ருதி-இயற்கைக்கு அப்பாற்பட்டவன். அவன் சர்வத்தையும் காணக் கூடியவன். உபத்ரஷ்டா என்பர். அவரை பஜித்து நிர்குணம் என்பதை அடையலாம்.
உன் பிதாமஹர், யாகம் நிறைவேறியதும், பகவத் கதைகளைக் கேட்டு தர்மம் என்பது என்ன என்று பகவானிடமே வினவினார். அவருக்கு பகவான் அரசர்களின் நன்மைக்காக யது குலத்தில் உதித்தவன் என்பது தெரியும். ஆதலால் அன்புடன் உபசரித்து பணிவிடைகள் செய்தார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: யாரை நான் அனுக்ரஹிக்கிறேனோ அவர்களின் செல்வத்தை மெள்ள மெள்ள குறைத்து விடுவேன். தனமில்லாதான் என்று உற்றார் உறவினர் கை விடுவர். துக்கம் அனுபவித்தாலும், என்னிடம் பற்றுடையவர்கள், தனம் பறி போனதால் கவலைப் படாமல், வேறு நிர்பந்தமான செயல்களும் இன்றி இருப்பர். அவர்கள் என் பக்தர்கள் அருகிலேயே இருப்பார்கள். அவர்களுடன் நட்புடன் இருப்பர். அந்த சமயம் நான் அவர்களை அனுக்ரஹிப்பேன். அந்த ப்ரும்மம் பரம சூக்ஷ்மமானது. சின்மாத்ரம். சதா ஆனந்தமயமாக இருப்பது. அதனால் என்னை ஆராதிப்பது கடினம் என நினத்து அன்ய தேவதைகளை ப்ரார்த்திப்பர். ஆசுதோஷன்- விரைவில் சந்தோஷப் படும் குணமுள்ள மகேசனிடம் ராஜ்ய லக்ஷ்மி முதலியவைகளைப் பெறுவர். செல்வம் வந்த பின் மதமும், அலட்சியமும், வர தானத்தையே மறப்பதும் உண்டு.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ப்ரும்ம, விஷ்ணு, சிவன் என்ற மூவருமே சாபம் கொடுப்பதும், அருள் புரிவதும் உண்டு. மற்ற இருவரும் மகேசனும், ப்ரும்மாவும் இவ்வாறு உடனடியாக செய்வர். ஆனால் அச்யுதன் அவ்வாறு எடுத்த எடுப்பில் சாபமோ, அருளோ செய்ய மாட்டார்.
வ்ருகன் என்ற அசுரன், சகுனியின் புத்ரன், யதேச்சையாக வழியில் நாரதரைப் பார்த்தான். அவரிடம், மூன்று தேவர்களில் யார் விரைவில் அனுக்ரஹம் செய்வர் என வினவினான். அவரும் கிரீசனை பூஜை செய். அவரை பணிந்து வேண்டிக் கொள்.. அவர் தான் அல்ப காரணங்களுக்காக கோபிப்பார், அல்ப காரணங்களால் மகிழ்ச்சியடைந்து வரங்கள் அருளுவார். பத்து தலை ராவணன், பாணன் இவர்களுக்கு பாடகர்கள் போல் துதி செய்து பாடியதிலேயே மகிழ்ந்து ஏராளமான ஐஸ்வர்யங்களைக் கொடுத்து, பின்னால் சங்கடப் பட்டார்.
இதைக் கேட்டு சகுனி புத்ரன் அவரிடம் ஓடினான். தன் சரீரத்திலிருந்தே யாகத்துக்கான த்ரவ்யமான கவ்யம் என்பதை வெட்டி எடுத்து அக்னியில் ஹோமம் செய்தான், ஸ்ரீ ஹரனுடைய முகமே அக்னி. எனவே அக்னி தேவனின் அருளால் ஏழு நாட்கள் செய்த ஹோமத்திலேயே ஆசு தோஷனான ப்ரத்யக்ஷம் ஆக வில்லையென்று தன் தலையையே ஹோம குண்டத்தில் ஹவிஸாக போட முயன்றான்.
உடனே மகா காருணிகனான பகவான் மகேஸ்வரன், தூர்ஜடீ – ஜடாதாரி, நாம் அக்னியில் விழுந்த பொருளை எடுப்பது போல, இரு புஜங்களாலும் தடுத்தார். அந்த ஸ்பர்சத்தினாலேயே அவன் உயிர் பிழைத்தான். அவனிடம், மகனே, அலம் அலம்- போதும் போதும் என்று சொல்லி, என்ன வேண்டுமோ கேள், உன் விருப்பம் நிறைவேறும்படி வரம் அருளுவேன் என்றார். வெறும் தண்ணீரால் என்னை ஆராதித்தாலே, அபிஷேக ப்ரியன் என்பதால், நான் மகிழ்வேன். நீ உன்னையே ஆகுதி செய்ய தயாராகி விட்டாய் என்றார். வீண் வேலை. அவனோ, கள்ளத் தனமாக தேவனிடம் பூத பயாவஹம், மற்ற ஜீவன்கள் பயப்படும் அவரிடம், நான் எவரெவருடைய தலையில் கை வைப்பேனோ, அந்த மனிதன் உடனே மடிய வேண்டும் என்றான்.
இதைக் கேட்டு ஸ்ரீ ருத்ரன் வருத்தப் பட்டது போல இருந்தது. ஆனால் ஓம் என்று சிரித்துக் கொண்டே சொல்லி பாம்புக்கு அம்ருதம் (பால்) வார்த்தது போல வரமளித்து விட்டார்.
இதைக் கேட்டதும் அந்த அசுரன் ஹரனையே நாசம் செய்யும் நோக்கத்தோடு பரீக்ஷை செய்கிறேன் என்ற வியாஜத்தோடு, அவர் தலையிலேயே கை வைக்க முயன்றான். அவரோ தன் செயலின் தவற்றை உணர்ந்து ஓடலானார். தான் ஸ்ருஷ்டித்த அசுரனால் உலகமே அழியும் என்பதை தாமதமாக உணர்ந்தவர் போல, பூமி, தேவலோகம் எங்கும் இந்த கரையிலிருந்து அந்த கரை வரை ஓரு இடம் மீதமில்லாமல் ஓடினார். அவரே தந்த வரம், தேவர்கள் எதுவும் செய்ய இயலாமல் பார்த்தபடி இருந்தனர். வைகுண்டம் போய் சேர்ந்தார். பிரகாசமாக தாமசமே-இருட்டே நெருங்காத இடம் போல இருந்த வைகுண்டம். ஸ்ரீமன் நாராயணன் இருந்த இடம்- சரணடைந்தவர்களுக்கு புகலிடமாக விளங்கும் இடம். அங்கு அபயம் வேண்டி வந்தவர்கள் பயம் தீராமல் திரும்பியதில்லை.
உலகியலில் துன்பங்களை களைய எப்பொழுதும் தயாராக இருக்கும் பகவான் அவரை வெகு தொலைவிலேயே கண்டு கொண்டார். தன் யோக மாயையால் தன்னை சிறு அந்தண சிறுவனாக ஆக்கிக் கொண்டார். மேகலை, மான் தோல் கையில் தண்டம், அக்ஷமாலா, தேஜஸால் அக்னி போல ஜ்வலிக்கும் உருவம். வேகமாக துரத்தி வந்த வ்ருகனின் முன் அபிவாதனம் சொல்லி வணங்கினார். சாகுனேயே! சகுனியின் மகனே! வெகு தூரம் பயணம் செய்தவர் போலத் தெரிகிறது. களைப்பு முகத்திலேயே தெரிகிறது. ஒரு க்ஷணம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றான். தன் உடலைப் பேணுவது தான் முதல் கடமை, அது நலமாக இருந்தால் தானே, மற்ற விருப்பங்கள் நிறைவேறுவதை அனுபவிக்க முடியும் என்றான். என்னிடம் சொல்ல முடியும் என்றால் சொல்லுங்கள். என்ன காரணத்திற்காக இப்படி ஓடோடியும் வருகிறீர்கள் எனவும் அவனும் விஸ்தாரமாக சொன்னான்.
அப்படியா? நாங்கள் அவருடைய வார்த்தைகளை உள்ளபடியே நம்ப மாட்டோம். அவர் தானே, தக்ஷனுடைய சாபத்தால் பிசாசம் என்ற உருவத்தை அடைந்தவர். அவர் உடன் இருப்பவைகளும் பூத, ப்ரேத பிசாத கணங்கள் தானே. தானவேந்திரனே, ஜகத் குரு அவர் என்று விஸ்வாசம் இன்னமும் இருந்தால், அவர் சொன்னது சாத்யமா என்று தன் தலையில் கை வைத்து பரீக்ஷை செய்து பார்த்து விடலாமே, ஒருவேளை அவர் தீவிரமாக நினைத்துச் சொல்லவில்லை, உண்மையில் அப்படி நடக்கவே முடியாது. அது அசத்யம் என்று தெரிந்தால் பொய் சொன்ன காரணத்திற்காகவே அவரை வதைக்கலாமே, என்று மதுரமான குரலில் சொல்லவும் தானவனும் அப்படியே செய்தான். குணமில்லாத மூடன், அடுத்த வினாடியே, வஜ்ரத்தால் அடிபட்டது போல தலை வெடிக்க மடிந்து வீழ்ந்தான்.
ஜய ஜய எனும் சப்தம் வானளாவ எழுந்தது. நம: சப்தமும் பூமாரியும் பொழிந்தன. வ்ருகாசுரன் பாபி, இறந்தான் என்று உலகெங்கும் மகிழ்ச்சி ஆரவாரம், பெரும் சங்கடம் விலகியது என்று தேவ ரிஷி கந்தர்வர்கள் மகிழ்ந்தனர்,
தப்பி பிழைத்த கிரீசனை புருஷோத்தமனான பகவான், அஹோ தேவ, மஹாதேவ! தன் வினையாலேயே இவன் இறந்தான். அனாவசியமாக பெரியவர்களிடம் அறிந்து கெடுதலைச் செய்ய நினைத்தால் இது தான் தண்டனை தானாகவே வந்து சேரும்.
சக்தி வாய்ந்த சாக்ஷாத் பரமாத்மாவான ஸ்ரீ ஹரன், பகவானின் சமயோசிதமான செயலால் இடர் நீங்கி நலம் அடைந்த இந்த சரித்திரம், எதிர்பாராத எதிர்ப்புகளை சமாளித்து மீண்டு வர சக்தி அளிக்கும்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம்,இரண்டாம் பகுதியில், ருத்ர மோக்ஷணம் என்ற எண்பத்து எட்டாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-40
அத்யாயம்-89
ஸ்ரீ சுகர் சொன்னார்: சரஸ்வதி நதிக் கரையில், அரசனே! ரிஷிகள் சேர்ந்து ஒரு யாகம் செய்ய ஆரம்பித்தனர். இடையில் மூம்மூர்த்திகளில் யார் பெரியவர் என்ற தர்க்கம் எழுந்தது. அங்கிருந்தவர்கள் அதையறிய ப்ருகு முனிவரை அனுப்பினர். அவரும் ப்ரும்மாவின் சபைக்குச் சென்றார். வழக்கமாக செய்வது போல வணங்கி துதிகள் செய்யவில்லை. ப்ரும்மா வெகுண்டார். இது என்ன மரியாதை இல்லாத செயல் என்று பொங்கி வந்த கோபத்தையும் தானே நெருப்பை நீரால் அணைப்பது போல தன்னைத் தானே சமாதனம் செய்து கொண்டார். கோபம் விலகியது. எதுவும் சொல்லவில்லை. அதன் பின் ப்ருகு முனிவர் கைலாசம் சென்றார். மஹேஸ்வரன் எழுந்து சகோதரனை வரவேற்க வந்தார். அவரை வணங்காமல் உறவினர் என்பது போல அணைக்க முயன்றது ஹரனுக்கு ஆத்திரமூட்டியது. முக்கண்ணன் தன் ஸூலத்தை எடுத்தார். உடனே தேவி வந்து தடுத்து, அவர் கால்களில் விழுந்து பணிந்து வேண்டினாள். ப்ருகு முனிவர் அங்கிருந்து புறப்பட்டு, வைகுண்டம் வந்தார். சயனத்தில் இருந்தவரை திடுமென நெருங்கி மார்பிலேயே உதைத்தார். லக்ஷ்மி இருக்கும் இடம் , பகவான் உடனே எழுந்து ஸ்வாகதம் ப்ரும்மன் என்று வரவேற்றார். ஒரு க்ஷணம் இதோ இந்த ஆசனத்தில் அமருங்கள் என்று சொல்லி நீங்கள் வருவது தெரியாது, அதனால் வந்தவுடன் வரவேற்கத் தயாராக இல்லை மன்னிக்கவும் என்று சொல்லி அவரை அதிதிகளுக்கு செய்வது போல பாத்யம் அர்க்யம் இவைகளைக் கொடுத்து உபசரித்தார். பாதோதகம் – லோகம்,லோக பாலர்கள் அனைவரையும் புனிதமாக்கட்டும் என்று சொன்னார்.நான் லக்ஷ்மியுடன் தனிமையில் இருந்த சமயம் அது. என் மார்பிலேயே வசிப்பவள், சர்வ சம்பத்துகளும் அளிக்கும் ஸ்ரீ தேவி. உங்கள் பாதம் அவளை உதைத்தது என்றார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொன்னவரை, அவருடைய இனிமையான வார்த்தைகளால் தானே தன் தவற்றை உணர்ந்தவராக, எதுவும் பேசாமல் கண்கள் குளமாக திரும்பி விட்டார். திரும்பி வந்து யாகம் செய்து கொண்டு இருந்த முனிவர்களிடம், நடந்தவைகளைச் சொன்னார். முனிவர்கள் சந்தேகம் தீர்ந்து, சந்தேகமில்லாமல் பகவான் ஸ்ரீ விஷ்ணுவே நமக்கு சாந்தியளிப்பவர் என்றனர். தர்மமே உருவானவர், அவரிடமிருந்து தான் ஞானம் வைராக்யம் இவை பிறக்கின்றன. எட்டு வித ஐஸ்வர்யங்களும் அவரிடமே அடைக்கலமாகி இருக்கின்றன. மாசு நெருங்காத அவரது புகழ் நமக்கும் நலன் தரும். நம்மைப் போன்றவர்கள் தண்டம் எடுப்பதில்லை. யாரையும் நாம் தண்டிப்பதில்லை. சித்தத்தை சீராக வைத்துக் கொண்டு, சாந்தமாக பொருள் ஆசையின்றி, சாதுக்களாக வாழ்கிறோம். நமக்கு அடைக்கலம் அவரே என்றனர். அவருடைய மூர்த்தி சத்வமே ப்ரதானமானது. நம் இஷ்ட தேவதையாக உள்ளவர். அறிஞர்கள் அவரையே பூஜிப்பர். மூன்று விதமான, தேவர்கள், அசுரர்கள், ராக்ஷஸா: என்று ஸ்ருஷ்டித்தவர். அதுவும் அவர் மாயையே. தீர்த்தங்களுக்குள் அவர் பாத தீர்த்தமே உயர்ந்தது.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சரஸ்வதி நதிக் கரையில் அந்தணர்கள் அவரையே வணங்கி தங்கள் யாகத்தை முடித்தனர்.
ஸூதர் சொன்னார்: அவர்களுக்கு தெரியாது என்பதல்ல. மற்றவர்களும் அறியச் செய்ய என்பதற்கே என்று அறிவோமாக. இதை அறிபவர்களும் வழி நடையில் பாதை தவறி சிரமப் பட மாட்டார்கள் என்பது நிச்சயம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு சமயம் துவாரகையில், ஒரு அந்தணருடைய குமாரர்கள், பிறந்த உடன் இறந்தன. பூமியை தொட்ட மாத்திரத்தில் ஆயுள் முடியுமா? அந்த அந்தணன் இறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு ராஜ சபைக்கு வந்தான். வருத்தத்துடன் அழுது கொண்டே சொன்னான்- அரசனே, அரசன் அந்தணர்களை எதிர்த்தாலும், புத்தி இல்லாமல் தன் சுகமே பெரிதென்று இருந்தாலும், அவர்கள் தீவினைப் பயனாலும் ப்ரஜைகள் பாதிக்கப் படுவர் என்பது நியதி. ப்ரஜைகளின் வறுமைக்கும், துக்கத்திற்கும் அரசனே பொறுப்பு. என் குழந்தைகள் அகாலமாக மரிக்க நீங்கள் ஏதாவது செய்யுங்கள் என்று சொல்லி குழந்தையை அரச மாளிகை வாசலிலேயே கிடத்தினான்.
அர்ஜுனன் தொடர்ந்து குழந்தைகள் மரிப்பதையும், அது ஒன்பதாவது சிசு என்பதையும் அறிந்து அவரைப் பார்த்து, ப்ரும்மன்! நீங்கள் யாகங்கள் செய்பவர். வில் எடுத்து யுத்தம் செய்ய அறியாதவர்கள். எங்கள் ப்ரஜை நீங்கள். உங்களை ரக்ஷிப்பது என் கடமை. ப்ரதிக்ஞை செய்கிறேன். உங்கள் குழந்தையை காப்பாற்றாவிட்டால் நான் நெருப்பில் விழுவேன் என்று சொல்லி சமாதானம் செய்தான்.
அந்த அந்தணன் சொன்னான்: சங்கர்ஷணன், வாசுதேவன், ப்ரத்யும்னன், தனுஷை எடுத்தவர்களில் சிறந்தவன் எனும் பெயர் பெற்ற அனிருத்தன், யாருமே என் குழந்தையை காக்க முடியவில்லையே. நீங்கள் இந்த கடினமான செயலை செய்வதாக சபதம் ஏற்பது சரியல்ல. விடுங்கள். இதை நானும் உங்களிடம் எதிர் பார்க்கவில்லை. என்றான்.
அர்ஜுனனோ ப்ரும்மன்! நான் சங்கர்ஷணன் அல்ல, க்ருஷ்ணனோ, ப்ரத்யும்னோ அல்ல தான். நான் அர்ஜுனன், காண்டீபம் என் வில், என்னை குறைவாக எண்ண வேண்டாம். த்ரயம்பகனை ஆராதித்து வரங்கள் பெற்றவன். ம்ருத்யுவை ஜயித்து உங்கள் மகனை காப்பாற்றித் தருகிறேன் என்று, தன்னம்பிக்கையோடு வாக்களித்தான். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். ப்ரசவ காலத்தில் பாஹி பாஹி என்று வேண்டியபடியே, அர்ஜுனன் இருந்த இடம் வந்து வேண்டினார்.
உடனே தான் சுத்தமாக ஆகி, மகேஸ்வரனை வணங்கி, திவ்யாஸ்திரங்களை எடுத்துக் கொண்டு, காண்டீவத்தை ஏந்தியபடி அவர் வீட்டின் வாசலில் பாதுகாப்பாக காவல் காத்து வந்தான். பலவிதமான அரிய சஸ்திரங்களைக் கொண்டு வலை போல அமைத்து கூண்டு போல ஆக்கினான். எங்கிருந்தும் யம தூதர்கள் நுழைந்து விட முடியாதபடி நெருக்கமான வலைப் பின்னல். குழந்தை பிறந்தான். அந்தணரின் மனைவி அழும் குரல் கேட்டது. அவள் அழுதுகொண்டே, சிசு உடலுடன் ஆகாயத்தில் பறந்து விட்டது என்றாள்.
ஸ்ரீ க்ருஷ்ணனின் எதிரிலேயே, அந்தணன் அர்ஜுனனை குற்றம் சொன்னான். நீ எப்படி வாக்கு கொடுத்தாய், அதை நடத்திக் காட்ட முடியாமல் திகைத்து நிற்கிறாய். நீ பலராமனோ, கேசவனோ, அனிருத்தனோ, ப்ரத்யும்னனோ அல்ல, திக், உன்னால் முடியாத காரியத்தை ஏன் ஏற்றுக் கொண்டாய் என்றார். தற்பெருமை பேசினாய். மூடனே என்று வசை பாடினார்.
அந்த குழந்தை எங்கே என்று தேடியபடி இந்திரசபைக்குச் சென்றான் அர்ஜுனன். அக்னி., நைருதி, சௌம்யம், வாயவ்யம் வாருணி என்று திக்குகளில் தேடினான். ரஸாதளம், நாக ப்ருஷ்டம் என்ற இடங்களிலும் ஒரு இடம் விடாமல் தேடிச் சோர்ந்தான். குழந்தை கிடைக்கவில்லை என்பதால் தான் வாக்கு கொடுத்ததையும், அத்துடன் செய்த சபதத்தையும் நினைத்து நெருப்பை மூட்டி அதில் விழத் தயாரானான். அப்பொழுது அங்கு வந்த ஸ்ரீ க்ருஷ்ணன் தடுத்து வா, நானும் வருகிறேன், இருவருமாக இந்த அந்தணரின் மகனைத் தேடுவோம் என்று அழைத்துச் சென்றார். திவ்யமான தன் ரதத்தில் அவனையும் ஏற்றிக் கொண்டு மேற்கு திசையில் சென்றார். சப்த தீபங்களை-தீவுகளை, ஏழு கடல்கள், ஏழு ஏழு மலைகள், இவைகளைக் கடந்து அப்பால் இருந்த லோகாலோகம் என்ற ப்ரும்மாண்ட வெளியிலும் நுழைந்தனர். அங்கு ஆஸ்வா:, சைப்யா:, சுக்ரீவ, மேக புஷ்ப, பலாஹகா:, என்று பலர் இருட்டில் வழி தடுமாறி, வந்திருந்தனர். அவர்களைப் பார்த்து பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன், மகா யோகேஸ்வரர், தன்னுடைய ஆயிரம் ஆரங்கள் கொண்ட சக்ரத்தால், ஒளிரச் செய்தார். கோரமான இருட்டு, தாமசமே உருவானது போல இருந்த சூழ்நிலை மாறி, அந்த ப்ரகாசமான ஒளியில், மனதின் வேகத்தில் செல்லும் ராம சரம் எதிரிகளின் கூட்டத்தையே ஊடுருவிச் செல்வது போல சுதர்சனத்தின் ஒளி ஊடுருவியது. கண்கள் கூச, பால்குணன் தன் கண்களை கைகளால் மூடிக் கொண்டான். அங்கிருந்து ஜலம் -நீர் சூழ்ந்து இருந்த வான் வெளியில் மேக கூட்டங்களில் தேடினர். அங்கு அத்புதமான ஆயிரமாயிரம் மணிகளால் ஆன ஸ்தம்பங்களுடன் விளங்கும் மாளிகை போல ஸுரிய மண்டலத்தைக் கண்டனர். சிதி கண்டனின் நாக்கு போல வெண்ணிறமான வானவெளியோ எனும்படி இருந்த பனி மலையைக் கண்டனர். . ஆயிரம் தலை ஆதி சேஷனின் படங்கள் போல பரந்து கிடந்த பனி மூடிய மலை சிகரங்கள். அங்கு போகம்- நாகங்களே ஆசனமாக விபு, மாஹானுபாவன், புருஷோத்தம என்பவர்களிலும் உத்தமமானவர், அமைதியாக அசையாது நிற்கும் தாமரை மலர் போன்றவரை, ப்ரசன்னமான முகத்துடன் , பீதாம்பரம் எனும் ஆடையுடன் இருந்தவரை கண் குளிரக் கண்டனர்.
கிரீட குண்டலங்களில் இருந்த உயர் மணிகள் ப்ரகாசிக்க, அந்த ஒளியில் ஆயிரமாயிரம் கேசத்தின் குழல்கள் பளிரென்று தெரிய, நீண்ட அழகிய எட்டு கைகளுடன், கௌஸ்துபம் ஸ்ரீ வத்ச அடையாளங்களோடு, வன மாலை அணிந்து, சுனந்தன், நந்தன் என்ற தன் அணுக்கத் தொண்டர்களுடன், அவர்களும் சக்ராயுதங்களும், தன்னைப் போலவே ஆயுதங்கள் தரித்தவர்கள் போலத் தெரிய, ஸ்ரீ தேவியும் அருகில் இருக்க, புத்திமான்களான பலரும் வந்து வணங்கி புகழ் பாட, இருந்த பரமேஷ்டியான தலைவனாக ஸ்ரீமன் நாராயணனைக் கண்டனர்.
தானே தன்னை வணங்குவது போல் அச்யுதனும் அவரை வணங்கினான். ஜிஷ்ணுவான அர்ஜுனனும் வணங்கினான். எங்கிருந்தோ கேட்பது போன்ற குரலில் பகவான் சொன்னார். அந்தணச் சிசுவை நான் தான் இங்கு தருவித்தேன். ஒரு தர்மத்தைச் சொல்ல வேண்டியிருந்தது. என் கலையால்-அம்சமாக உலகில் அவதரித்து ஏராளமான அதர்மியான அரசர்களை அழித்து, திரும்பி பூர்ண காமனாக திரும்பி வந்துள்ள நீங்கள் இருவரும் நர நாராயணர்கள் என்ற இரட்டையர்கள். ரிஷிகளாக இருந்தவர்கள். உலக நன்மைக்காக பகவான் இந்த அவதாரம் எடுத்தார். அதன் பின் ஓம் என்று சொல்லி, அந்தண சிசுவைக் கொணர்ந்து அவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்தார்.
திரும்பிச் செல்லுங்கள். தந்தையிடம் இந்த சிசுவை ஒப்படைத்து உங்கள் வாக்கை காப்பாற்றுங்கள். முன் பிறந்தவைகளையும் சேர்த்து எந்த வயதில் எப்படி இருப்பர்களோ அதே போல கொடுங்கள் என்றார். பார்த்தன் வியந்து நோக்கினான். வைஷ்ணவம் விஷ்ணுவின் இருப்பிடம் தன் தவற்றை உணர்ந்தான். என்னிடம் எந்த அளவு வீர்யம் இருந்தது என்று நினைத்தேனோ அது ஸ்ரீக்ருஷ்ணனின் அருளின் ஒரு துளியே என்று உணர்ந்து சொன்னான். பல வீரச் செயல்களைச் செய்து, பாமரமான விஷய சுகங்களை பெரிதாக நினைத்து மகிழ்ந்தேன். ஸ்ரீ க்ருஷ்ணனோ, ப்ரஜைகள் அனைவருக்கும், எந்த வர்ணத்தார் ஆனாலும், யாரானாலும் தன் அருளை வர்ஷித்து காக்கிறான். எது எந்த சமயம் தேவையோ, இந்திரன் காலத்தில் மழை பொழிவது போல வர்ஷிக்கிறான். அதர்மமாக ஆட்சி செய்த அரசர்களை, அழிக்க அர்ஜுனன் மற்றும் பல வீரர்களைக் கொண்டு போர் என்ற வ்யாஜத்தால் அழித்தான். தர்மசுதன் முதலானோர் கருவிகளே.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், இரண்டாம் பகுதியில், த்விஜ குமாரானயனம் என்ற எண்பத்தொன்பதாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-66
அத்யாயம்-90
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஸ்ரீ க்ருஷ்ணன் துவாரகையில் மன நிறைவோடு வசித்து வந்தார். லக்ஷ்மி தேவியே அருகில் இருந்ததால், துவாரகை சர்வ செல்வங்களும் நிறைந்து இருந்தது. உறவினர்களான வ்ருஷ்ணி குலத்தவர் உடன் இருந்தனர். அழகான பெண்கள், சிறப்பான அலங்காரங்களுடன் வளைய வந்தனர். யௌவனம், ஆரோக்யம் நிறைந்தவர்களாக விளையாடி மகிழ்ந்தனர்.
நித்யம் யானைகளை கனக மயமான பட்டயங்கள் அணிவித்து அலங்காரமாக வீதிகளில் நடமாடச் செய்தனர். ரதங்களும், காவல் வீரர்களும் தினசரி ஊர்வலம் வந்தனர்.
உத்யான, உப வனங்கள் நிறைந்து, அவைகளில் பூத்துக் குலுங்கும் செடி கொடிகளும் மரங்களும் எல்லா பருவ காலங்களிலும் பூக்களும், பறவைகளின் கூக்குரலுமாக இருந்தது.
பதினாறு ஆயிரம் பத்னிகளின் நாயகனாக, விசித்ரமான வேஷ பூஷணங்களுடன் அந்த மாளிகையில் வசித்தார். அரண்மனை தோட்டத்தில் குளங்கள், அதிலும் பலவிதமான நீர் வாழ் பறவைகள், அதில் மூழ்கி நீராடுபவர். துதி பாடும் வந்திகள், மாகதர்கள், கந்தர்வர்கள் தங்கள் ம்ருதங்க பணவ வாத்யங்களோடு வந்து பாடுவார்கள். சில சமயம் யக்ஷர்களும் யக்ஷிகளும் -இவர்கள் சிறந்த பாடகர்கள்- வருவார்கள். பெண்கள் அனைவரும் கணவனிடம் ப்ரேமை மிக்கவர்களாக, மலர்ந்த முகமும், மனம் நிறைந்த உல்லாசமுமாக அந்த மாளிகையில் இருந்தனர். அதே போல க்ருஷ்ணனும் அனைவரிடமும் அன்புடன் இருந்தார். நட நர்த்தகிகள் ஆடுவர். அவரவர் அளவில் தேவையானதை பெற்று மகிழ்ச்சியாக காலம் சென்றது.
மகிஷிகள் பாடுவதை வர்ணிக்கிறார். குரீ என்ற பக்ஷியைப் பார்த்து சொல்வது போல, ஏ குரீ, நீ இரவு முழுவதும் தூங்க மாட்டாயா? எங்களைப் போலவே நீயும் இந்த நளின பூக்கள் மலருவதை காண்பதற்கே காத்திருக்கிறாயா- க்ருஷ்ணனின் நளினமான நயனங்கள், சிரிப்பு- பூ மலருவது போல,
சக்ரவாகி, பகலில் பந்துவைக் காணாமல் குரல் கொடுத்த வண்ணம் இருக்கிறாய். பாவம் நீ. எங்களைப் போலத்தான், யாருக்கு கிடைக்கும் சேவை செய்ய என்ற போட்டி எங்களுக்குள்.
இவ்வாறு பறவைகள், மேகங்களை, கோகிலம், என்று அவர்கள் தங்களுடன் ஒப்பிட்டு பாடுவது போன்ற பாடல்கள் அதன் அழகான பதங்கள், கற்பனைகளுக்காக ரசிக்கத் தகுந்தவை.
வேதங்களில் சொல்லியபடி க்ருஹஸ்த தர்மத்தை அனுசரித்து அந்த பெண்களும், ஜகத் குருவான பகவானை பாத சேவைகள், மற்றும் வேண்டியவைகளைச் செய்தும், கணவன் என்று தங்களையே அர்ப்பணித்து சததமும் அதே நினைவாக, அவரை மகிழ்விப்பதே வாழ்க்கையின் குறிக்கோளாக வாழ்ந்தனர். அவர்களுடைய தவம் இது. அதை எப்படி வர்ணிப்போம்? இல்லறம் என்பதன் தர்மம் என்பதை தானே வாழ்ந்து காட்டியவர்கள். தர்மார்த்த காமங்கள் என்பவைகளும் இவர்கள் வாழ்வில் நிறைவாக இருந்தன. க்ருஷ்ணனும் உயர்வான இல்லற தர்மத்தை நடத்திக் காட்டினர். ஒவ்வொருவருக்கும் பத்து பத்து புதல்வர்கள். அவர்கள் பெயர்களையும் சொல்கிறார்.
ப்ரத்யும்னன், அனிருத்தன், தீப்திமான், பானு, சாம்பன், மது, ப்ருஹத்பானு, சித்ர பானு,வ்ருகன் அருணன்-
புஷ்கரன், வேதபாஹு, ஸ்ருததேவன், சுநந்தனன், சித்ரபாஹு, வீருக, கவி, ந்யக்ரோத என்பவர்கள் இவர்களில் ப்ரத்யும்னன் முதலானவன். ருக்மிணியின் சகோதரன் ருக்மியின் மகளை மணந்தான். அவன் மகன் அனிருத்தன்.
அந்த குலத்தில் பிறந்தவர்கள் அனைவருமே செல்வந்தர்களாக, ப்ரஜைகளுடனும், தீர்காயுளுடனும், வீரர்களாகவும், இருந்தனர். யது வம்சத்தில் பிறந்தவர்கள், சங்க்யா என்ற ஞான மார்கத்தில் நாட்டம் இருக்கவில்லை. மூன்று கோடி ஆயிர வருஷங்கள் வாழ்ந்தார்கள், அவர்கள் ஆசார்யர்கள் உடன் இருந்தார்கள் என்று கேள்வி.
தேவாசுர யுத்தங்களில் உயிர் பிழைத்த தைத்யர்களும் க்ருஷ்ணரின் காலத்தில் பிறந்தனர், அதே பிறவி குணங்களோடு வாழ்ந்தனர். கர்வத்துடன் துன்புறுத்துவதே செயலாக இருந்தனர். அவர்களை அடக்க வேண்டியே யதுகுலத்தில் தேவர்களையும் பிறக்கச் செய்தார். எண்ணிக்கையில் அவர்கள் அந்த அசுரர்களை விட மிக அதிகமாக இருந்தனர். அதற்காகவே தான் அரசனாகவும் பதவி வகித்தார். குலம் பெருகியதும் அதற்காகவே. அவர் ஆளுமையில் யாதவர்கள் அவரை அனுசரித்து எல்லா வசதிகளுடனும் சுகமாக இருந்த போதிலும் பொறுப்புடன் வளர்ந்தனர். மனதில் ஸ்ரீ க்ருஷ்ண தியானத்துடனேயே இருந்தனர்.
தீர்த்த யாத்திரைகள் செய்வர், யாதவ குலத்தில் பிறந்த பரம் பொருளை தியானம் செய்வர், அவரது பாத தூளிகளை, பாதோதகம் என்ற பாதம் பட்ட நீரை பவித்ரமாக தலையில் தெளித்துக் கொள்வர், அறிஞர்கள் அன்புடன் எந்த ஸ்வரூபத்தை தியானித்து எந்த ஸ்ரீ யுடன் தரிசிக்க, என்ன என்ன யத்னங்கள் உண்டோ, அனைத்தையும் செய்வரோ, எவருடைய பெயரை உச்சரித்தாலே மங்களம் என நினைத்து நாமங்களைப் பாடுவார்களோ, எதையெண்ணி கோத்ர த்ரமங்களை அனுஷ்டிப்பார்களோ, அவை அனைத்தையும் செய்தனர். அந்த ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு இவை புதிதல்ல. அவனே கால சக்ரத்தை சுழற்றுவிப்பவன். பூமியை காப்பதும், அதன் பின் காலத்தில் மறையச் செய்வதும் அவனே.
ஜயதி ஜன நிவாசோ, தேவகீ ஜன்ம வாதோ, யது வர பரிஷத், ஸ்வ தோர்பி: நஸ்யன் அதர்மம், |
ஸ்திர சர வ்ருஜினக்ன: சுஸ்மித ஸ்ரீ முகேன வ்ரஜ புர வனிதானாம் வர்தயன் காமதேவம்||
ஜனங்களின் மத்தியில் வசிக்க வந்தவன், தேவகியின் மகனாக, யது குல நாயகனாக, தன் புஜங்களின் பலத்தால் அதர்மங்களை நாசம் செய்தவன், அசையாத, அசையும் உயிரினங்கள் இவர்கள் படும் துயரைக் களைபவன், எப்பொழுதும் சிரித்த ஸ்ரீ முகத்துடன் வ்ரஜ தேசத்து பெண்களின் உள்ளத்தில் காமத்தை-அன்பை வளர்த்தவன் ஜயதி- போற்றி போற்றி.
மர்த்யதயா அனுசவமேதிதயா முகுந்த ஸ்ரீமத் கதா ஸ்ரவண, கீர்த்தன, சிந்தயா ஏதி|
தத்தாம துஸ்தர க்ருதாந்த ஜவாபவர்கம், க்ராமத்வனம் க்ஷிதி புஜோ அபி யுர் யதர்தா: ||
மனிதர்கள் அவருடைய வழிகாட்டலில் வாழ்ந்தனர். முகுந்த ஸ்ரீமத் கதைகளை கேட்பதும், மனதில் தியானம் செய்வதும், அடைய முடியாத அவருடைய அருகாமை, அபவர்கம் என்ற பரகதி, அதை அடைவதே குறிக் கோளாக அரசர்களும் தங்கள் நகரங்களை, சுக போகங்களை விட்டு வனம் சென்றனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் இரண்டாம் பகுதியில், ஸ்ரீ க்ருஷ்ண சரிதானுவர்ணனம் என்ற தொண்ணூறாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-50
இத்துடன் தசம ஸ்கந்தம்- பத்தாவது ஸ்கந்தம் நிறைவுற்றது.
||ஓம் தத்சத் ||