பொருளடக்கத்திற்கு தாவுக

மூன்று கதைகள்

ஓகஸ்ட் 28, 2024

ஜானகி கிருஷ்ணன்

கடற்கரை ரோடில் சிக்னலுக்காக காத்திருந்த பஸ்ஸின் கண்டக்டர் மணி,  இருவர் நடந்து போவதை ஜன்னல்  வழியாகக் கண்டான். அனேகமாக இந்த நேரத்தில் அவர்களைக் காண்பவன் தான். பெண்ணின் சாயல் தன் தாயை ஒத்திருந்ததால் அவன் நினைவில் அவள் நின்றாளே தவிர, வேறு விவரங்கள் எதுவும் அவளைப்பற்றி தெரியாது. இருவரும் பேசிக் கொண்டே மெள்ள நடப்பார்கள். திடுமென அவள் நின்றாள். அவன் பேசிக்கொண்டே அவள் நின்று விட்டதையறியாமல் சற்று தூரம் சென்று விட்டிருந்தான்.  பஸ் கிளம்ப ஆயத்தமான சமயம் அவள் பரபரப்புடன் பஸ்ஸில் ஏறினாள்.  வெளியில் அந்த மனிதன் திரும்பி பார்த்து அவளைத் தேடுவது போல இருந்தது. மேலும் கவனிக்கும் முன் பஸ் வேகம் எடுத்து வளைவில் திரும்பி விட்டது. காத்திருந்த நேரத்தை சரி செய்ய ஓட்டுனரின் அவசரம்.  அதன் பின் மணியும் தன் வேலையில் மூழ்கினான். ஓரத்து சீட்டில் அமர்ந்திருந்தவள்  அனிச்சையாக பணத்தை எடுத்து கொடுக்கவும் அவள் தினமும் இறங்கும் இடம் அறிந்திருந்த மணி அவளுக்கான டிக்கெட்டைக் கொடுத்து விட்டு தன் வேலையில் முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்தவன், ஏதோ இருவருக்கும் இடையில் தகராறு என்ற வரை புரிந்து கொண்டான். அவள் முகத்தில் வாட்டம் , கண்களில் நீர் நிரம்பியிருந்ததா தன்னுடைய கற்பனையா, பார்த்துக் கொண்டே நகர்ந்தான்.

மாலை நேரம் அலுவலகத்திலிருந்து திரும்புபவர்கள் பெரும்பாலும் இறங்கி விட்டனர். கடைசி நிலையம் வரை செல்பவர் ஒரு சிலரே.  இந்த பெண் ஏன் இன்னும் இறங்கவில்லை? தானே கடைசி நிலையம் வரை அவளுக்கான டிக்கெட்டை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டான்.  பதினைந்து நிமிஷங்கள் இடைவெளி. பஸ் திரும்பி கிளம்பும்.   மெள்ள அருகில் சென்று, நின்றான். ஏறிட்டு பார்த்தவள், திடுக்கிட்டு, இங்கிருந்து அடுத்து இருந்த ஏதோ ஒரு கிராமத்தின் பெயரைச் சொல்லி அங்கு போக இந்த நிலையத்திலிருந்து போகும் பஸ் எது? அது வேறு ரூட்? அதன் அருகில் ஏதோ ஒரு இடத்தில் இறக்கி விடுகிறேன், சற்று தூரம் நடந்தால் பேரூந்து நிலையம் வரும், விசாரித்துக் கொண்டு போகலாம் என்று சொல்லி விட்டு, நகர்ந்தவனை நிறுத்தி, ஒரு உதவி செய்ய முடியுமா? இது என்னுடைய ரூம் மேட், பாரு, அவளிடம் நான் ஊருக்கு போவதை மட்டும் தெரிவித்து விடுங்கள் என்று ஒரு போன் நம்பரைக் கொடுத்தாள்.  வேகமாக இறங்கி நடந்து விட்டாள்.

யார், என்ன எதுவும் தெரியாத அந்த பெண்ணிடம் இரக்கமாக இருந்தது. அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அந்த நம்பரைக் கூப்பிட்டதில்,  யாரும் எடுக்கவில்லை. செய்தியை மட்டும் சொல்லி வைத்து விட்டான். எதுவும் விவரம் தெரியாமல் அந்த சினேகிதி தான் என்ன செய்வாள்? குழப்பமாக இருந்தாலும் தன் கையில் எதுவும் இல்லை என்று திரும்பினான். மனதில் சங்கடம் வயிற்றை பிசைந்தது.

இரவு சாப்பாட்டின் பொழுது மனைவி  மகள்  வந்து சற்று நேரம் இருந்து விட்டு போனதாகச் சொன்னாள். .  உள்ளூரில் அவள் புகுந்த வீடு.  உயர் நிலை பள்ளி ஆசிரியை. படிப்பு முடிந்தவுடனேயே மணமாகி போனவள் தான். இரு பக்கமும் தெரிந்த இடம். பிரச்னைகள் இல்லாமல்  திருமணம் முடிந்து  நகரத்தில் மாப்பிள்ளைக்கு வேலை. அவளும் அங்கு ஒரு வேலையை தேடிக் கொள்லவும், மூன்று ஜதை கணவன் மனைவிகளும் தனித் தனியாக வசிக்க நேர்ந்தது.  முடிந்த பொழுது வருவாள். இரண்டு ஜோடி பெரியவர்களும் ஒரே வயதினர், வீட்டில் பழையபடி இருவர் மட்டுமே.  எந்த சிறு விஷயமானாலும் தாங்களே கற்பனை செய்து வளர்த்தி இப்படி இருக்கலாம் என்று பேசிக் கொள்வது ஒரு பொழுது போக்கு. அப்பொழுது தான் இந்த யோசனை வந்தது. இந்த சம்பவத்தின் அடிப்படையில் நீ ஒரு கதை எழுது. நான் ஒன்று எழுதுகிறேன் என்று ஆரம்பித்தது, இது வரை முழுமையாக எதுவும் எழுதவில்லை.

என் கதை:

பாகம்-1

கல்பனா சென்னை வந்து வேலையில் சேர்ந்து சில ஆண்டுகள் ஆகி விட்டன.  மற்றொரு பெண்ணும் அதே சமயம் அந்த ஸ்தாபனத்தில் சேர்ந்து இருந்தாள்.  இருவராக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தாங்களே  சமாளித்துக் கொண்டு வாழ்ந்தனர். செலவு மிச்சம், தவிர, பிடித்த மாதிரி சமைத்து சாப்பிடவும் இருவருக்கும் பழகிப் போனது. ஆறு மாதம் முன்பு ஊரிலிருந்து பெற்றோர் பார்த்து முடிவு செய்த ஒரு பையனை கடற்கரையில் சந்தித்து பேசி, இருவரும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.  நிச்சயம் என்று ஆன பின் இன்னும் ஒரு மாதத்தில் நடக்க இருந்த திருமணம் ஆதலால், அலுவலகத்திலிருந்து திரும்பும் சமயம் இருவரும் கடற்கரையில் சந்திப்பதும் வழக்கமாகி விட்டிருந்த து.

அன்றும் அப்படித்தான்.  அமர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு இரு குழந்தைகளுடன் ஒரு தம்பதி வந்தமர்ந்தனர்.  இன்னும் ஐந்தாறு ஆண்டுகளில் நாமும் இப்படித்தான் இருப்போம் என்று கல்பனா சொன்னாள்.  ரங்கன் பதில் சொல்லவில்லை. அதன் பின்னும் அதிகம் பேசவும் இல்லை. வெளியில் வந்து பேருந்து  நிறுத்தம் நோக்கி நடக்கும் பொழுதும் அவள் மனதில் யாரென்று அறியாத, ஒரு முறையே பார்த்த குழந்தைகளின் நினைவே ஓங்கி இருந்தது. திடுமென அவளை நோக்கித் திரும்பியவன், அப்படியெல்லாம் ரொம்ப கற்பனை செய்யாதே. நான் வேறு விதமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு பேரும் வேலைக்கு போனால் வீட்டின் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும் என்று அறியாதவனா.

எனக்கு  பெண் பார்க்கும் பொழுதே சொல்லியிருந்தேன்.  சுமாரான அழகு, சாதாரணமாக இருப்பவள்,  நல்ல வேலையில் இருக்கிறாள் அதுவும் உள்ளூரே என்பதால் தான் சம்மதித்தேன்.

நமக்கென்று, வீடு, வாகனம் வாங்கிய பின் தான் மற்ற யோசனைகள் எல்லாம்.  பேசிய தோரணையும் அவளுக்கு புதிது.  திடுமென பயம் வந்தது.  அலுவலகத்திலும் சினேகிதகளின் வாழ்க்கையிலும் எவ்வளவு கேள்விப் பட்டு இருக்கிறாள்? 

கல்பனாவின் மனதில் ஏதோ ஒன்று முறிந்தது போல இருந்தது.   இவன் வழி வேறு. இவனிடம்  இது வரை நான் அறியாத பேராசையும்,  முரட்டுத் தனமும், அருகில் அவளுக்காகவே வந்து நிற்பது போல் இருந்த பஸ்ஸில் ஏறி விட்டாள்.  தான் நின்று விட்டதையறியாமல் பேசிக் கொண்டே செல்லும்  ரங்கன் ஏதோ புதியவன் போல் இருந்தான்.

திடுமென வந்து நின்றவளைப் பார்த்து அம்மா திகைத்தாலும் எதுவும் கேட்கவில்லை. மாலை நேரம், இரவு சாப்பாட்டு நேரம். கல்பனாவின் அண்ணனும் வந்த பின் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.

மெதுவாக அண்ணன் கேட்டான். என்ன விஷயம், ஏதோ கவலை படுவது போல இருக்கிறதே.  மேலெழுந்தவாரியாக பார்த்தால் கல்யாணம், புது வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். கிட்ட நெருங்க நெருங்க பொறுப்புகள், புது மனிதர்கள், புது இடம் கொஞ்ச நாள் ஆகும் புரிபட. பயப்படாதே. அம்மா காலத்தில் 15 வயது பெண்ணை கொடுத்து எங்கேயோ வட நாட்டுக்கு அனுப்பினார்களே. பாஷையும் தெரியாது,   கல்யாணம் பண்ணிக் கொண்டு உடனே அழைத்து வந்த ஒரு மனிதன் தான் தெரிந்தவன். எப்படி பயந்திருப்பாள்?  அதிகம் யோசிக்காமல் இருப்பதே ஒரு விதத்தில் நல்லது கல்பனா,  என்றவன், சொல்லு, என்ன நடந்தது?

அண்ணிப்பான் என்று சிவ புராணத்து வார்த்தைக்கு பொருள் கேட்ட பொழுது அவன் தான் சொன்னான். அண்ணியிருப்பவன் என்றால் அருகில் இருப்பவன். எது தேவையானாலும் முதலில் உதவுபவன் அண்ணன் தான் என்று விளக்கினான்.  அதனாலும் அவள் நினைவில் முதலில் வருபவன் அவனே.  மெள்ள நடந்ததைச்  சொன்னாள். ஏனோ, புதிய ஒருவனைப் பார்ப்பது போல இருந்தது. அந்த கடுமையான  சொற்களைக் கேட்டதேயில்லை போல.  அல்ப விஷயம் இவ்வளவு கோபம் வருவானேன். 

அண்ணா சிரித்தான். நீங்கள் எல்லாம் கதைகளில், டீவீ சினிமாக்களைப் பார்த்து என்ன கற்பனையில் இருக்கிறீர்களோ,  நிஜ வாழ்க்கையில்  அதையே எதிர் பார்த்தால் ?  படத்தில்  ஸ ரி க ம கற்றுக் கொள்பவன், அடுத்த நாளே ஹிந்தோளம் பாடுவான். அது முடியுமா? நீயே சிரித்து இருக்கிறாய்.  சரி, வா, நடந்து விட்டு வரலாம்.

இருவரும் அந்த கிராமமும் இல்லை, நகரமும் இல்லை என்ற ஊரில் பழைய முறையில் இருந்த வீடுகளைத் தாண்டி சற்று நேரம் சுற்றி வந்தார்கள்.  எட்டு மணி கூட ஆகவில்லை. ஊர் அடங்கி விட்டது. விடியற் காலை  நான்கு மணிக்கே எழுந்து விடும்.  வழியெல்லாம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தவன் திரும்பி வரும் வழியில், நின்று அவளையே பார்த்தபடி கேட்டான். இது மட்டுமா, உன் மனதை வாட்டுகிறது. வேறு ஏதாவது பிடிக்காமல்  நடந்ததா?

அதெல்லாம் இல்லை. பத்து நிமிஷம் தான் கடற்கரையில் பேசிக் கொண்டிருப்போம். அதற்கு மேல் விஷயமும்  இருக்காது. இருவருக்கும் வீடு போய் சேர்ந்து மறு நாள் செய்ய வேண்டியதை தான் நினைத்துக் கொண்டு இருப்போம்.  ஆனால் அந்த ஒரு நிமிஷம், முகத்தின் கோபம், பேச்சில் இருந்த அலட்சியம், தாங்கவே முடியவில்லை. அது தான் வந்து உங்கள் எல்லோரையும் பார்த்து விட்டு போக வந்தேன்.  ஆனால் அண்ணா, பயம் தான் மேலோங்கி இருக்கிறது. இவ்வளவு நாள் கழித்து கூடி வந்த கல்யாணம், நிறுத்த வேண்டாம் என்று தோன்றினாலும், எதற்கு? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.  . 

இதுவே தாமதம் தான். உனக்கும் இருபத்தைந்து வயது ஆகப் போகிறது. கை நிறைய சம்பாதிக்கிறாய் என்றாலும் அதுவே வாழ்க்கையா?  நானும் வந்து பேசிப் பார்க்கிறேன். எல்லா ஆண்களுக்கும் ‘ தான்’ என்ற அகம்பாவம் அதிகமாகத் தான் இருக்கும்.  நயமாக பேசி, பொறுமையாக இரு என்று முன் காலத்தில் சொன்ன அறிவுரை இப்பொழுது ஏற்குமா?  ஆரம்பத்தில் இருந்தே, அதிகமாக எதிர்பார்க்காதே. நீயாக எதுவும் கேட்காதே. உனக்கு அதற்குத் தேவையும் இல்லை.  காலம் வலியது, கூடவே இருந்தால் புரிதல் அதிகமாகும். வாழ்க்கையில் இருவருமாக சேர்ந்து இருப்பது மிக அவசியம்.  எதுவும் நூறு சதவிகிதம் ஒத்து போகாது.   பயப்படாதே. அப்படியே பிடிவாதமாக தான் சொன்னது தான் சரி என்று சாதித்தால் முடிந்த வரை விட்டுக் கொடு.  கூறாமல் சன்யாசம் கொள், என்று சொன்னது அந்த காலத்தில் ஆண் மகனுக்கு.  மனைவி ஒத்து வர வில்லையெனில் விடு என்றார்கள்.  அதுவே இரு பாலாருக்கும் பொருந்தும். சமூகம் எதுவும் சொல்லாது. சொன்னாலும் பரவாயில்லை. இது ஒரு ஆயுதம் மட்டும் தான். எடுத்த எடுப்பில் பிரயோகிக்க வேண்டாம்.  நம் தெய்வங்கள் கையில் ஆயுதம் இல்லாமல் இருப்பதில்லையே.   நாளாக ஆக, இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்ட பின் நாமா இப்படி நினைத்தோம் என்று இருக்கும்.  வந்த வரை ஒரு வாரம் இருந்து விட்டு போ. அம்மாவுக்கும் முடியவில்லை. கொஞ்சம் சமையல்,  அவசியமான விஷயங்களைக் கற்றுக் கொள். 

மனது இலகுவாகி விட்டது. பயப் படாதே, இது தான் பெரிய மந்திரம் என்று யாரோ பெரியவர் சொல்லி கேட்டது நினைவுக்கு வந்தது. ஒரு வாரம் லீவுக்கு உடன் இருக்கும் தோழியிடம் சொல்லி அலுவலகத்தில் சொல்லச் சொல்ல வேண்டும்.

மனைவி: ரொம்ப சிம்பிளாக முடித்து விட்டீர்கள்.  பரவாயில்லை. முதல் கதை தானே. நானும் எழுத ஆரம்பித்தேன்.  ஓடவேயில்லை. எது எழுதினாலும், எங்கேயோ படித்த மாதிரி அல்லது அக்கம் பக்கத்தில் நடந்த மாதிரி இருக்கிறது. யாராவது வந்து என் வீட்டுக் கதையை ஏன் எழுதினாய் என்று திட்டினால்..   கொஞ்சம் டைம் கொடுங்க.

ஆமாம், அந்த அண்ணனுக்கு குடும்பம் இல்லையா? இப்படி உபதேசம் பண்ண முடிந்தால் பத்து வயதாவது பெரியவனாக இருப்பான்.  இந்த பொண்ணு மாதிரியே ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி நிறைய வருஷங்கள் வீட்டு வேலையே செய்து கொண்டு இருந்ததாம்.  அவன் வேளைக்கு வந்து சாப்பிடுவதோடு சரி.

எந்த காலத்து கதை?

ரொம்ப பழைய காலத்து கதை.  நேத்து கோவிலில் யாரோ பாகவதம் சொல்லிட்டு இருந்தார். கொஞ்ச நேரம் உட்கார்ந்து கேட்டேன். பக்கத்து வீட்டு அம்மா பிரதக்ஷிணம் முடித்து வர காத்திருந்தோம்.  ஒரு ரிஷியாம். ஒரு ராஜா யாரோ சொன்னாங்கன்னு, மணைவியோடு  மகளையும் கூட்டிட்டு வந்துட்டாராம். அந்த ரிஷி கிட்டயும், அவ்ருடைய அப்பா, ஒருவர் பெண், கொடுக்க வருவார். மாட்டேன்னு சொல்லாதேன்னு சொல்லி விட்டுப் போனாராம். வந்தவர்களைப் பார்த்து அசந்துட்டார். ராஜா, பெண்ணும் ராஜ குமாரி, அந்த அழகு. தன் வத்த குச்சி உடம்பை வச்சுட்டு எப்படி கல்யாணம், குடித்தனம் பண்ரதுன்னு தோணிச்சாம். கல்யாணமும் ஆச்சு. ஆனாலும் ஒட்டாமலயே தான் யாகம் பண்றேன், தபசு பண்றேன்னு சுத்திட்டு இருந்திருக்காரு.  ரொம்ப நாள் ஆனபின் வீட்டுக்கு வந்தால், அந்த பெண் பெயர், தேவஹூதின்னு சொன்னாரு- இளைச்சு உருமாறி இருந்துச்சாம். தனியாக, அதுவும் எல்லா வீட்டு வேலைகளையும் செஞ்சு பழக்கம் இல்லை, இந்த மனுஷனும் சாப்பிட்டாயான்னு கூட கேக்கல்ல போல இருக்கு. பாவமாக இருந்ததாம். உடனே வெளியில போயிட்டு ஒரு விமானம் கொண்டு வந்தாராம்.

அடி சக்கை. விமானமா?

ஆமாம். தட தட ன்னு நாலைஞ்சு பொண்ணுக வந்து நின்னுதாம்.  இந்த குளத்தில குளிச்சுட்டு வா, வெளியில போலாம்னாராம். கண் மூடி திறக்கறத்துக்குள்ள, அந்த சேடி பொண்ணுங்க, அவளுக்கு தலை சிக்கெல்லம் எடுத்து அலங்காரம் பண்ணி, குளிச்சுட்டு வந்தவுடனே நல்ல டிரெஸ், நகை யெல்லாம் போட்டு அந்த மனுஷன் கிட்ட  கொண்டு விட்டாங்களாம். கையை பிடிச்சு அந்த விமானத்தில் ஏத்திக் கிட்டு, தானும் அதுக்குள்ள முடிந்த வரை டிரெஸ் பண்ணிக்கிட்டு அவள் கிட்ட பிரியமா பேசி, ஊரெல்லாம் சுத்தி, ஊரெலாம் இல்ல, உலகமெல்லாம் சுத்திக் காட்டி சந்தோஷமா வச்சுட்டாராம். அதுக்கு பின்ன அந்த பொண்ணு ஒம்பது பொம்பிளைப் புள்ளங்கள பெத்தாளாம். 

நல்லாயிருக்கே.  அந்த பொண்ணு மாதிரி இந்த நாளு பொண்னுங்க இருக்குமா?

இந்த பொண்ணுக்கும் அவ புருஷன் மனசு அறிஞ்சு நடக்கிறவனா இருக்கட்டும்.

சரி, சரி, நேரமாகுது, நீ அந்த அண்ணன் கதைய எழுது.

பகுதி-2

இரவு மணி ஏழு இருக்கும். வீட்டுக்குள் நிழைந்த மணி, மனைவியிடம் கேட்ட முதல் கேள்வியே எழுதினயா?

அதென்னங்க.  சித்திரமும் கை பழக்கம்னு சொல்வாங்க, நான் எங்க எழுதினேன்.  ஒரு பக்கம் எழுதறதுக்குள்ள வேர்த்து விறுவுறுத்து போச்சு. மனசுல இருக்கு கைக்கு வாரதில்ல.

அது நல்லது தானே. மனசுல இருக்கிறத சொல்லு, நான் எழுதிடரேன்.  ஒவ்வொத்தங்க சேர்ந்து, பாடுவாங்க, ஒன்னும் இல்லன்ன சீட்டாடுவாங்க. நம்மளுக்கு பாடவும் தெரியாது. சீட்டாடவும் தெரியாது. செய்வோமே,

சாப்பிடும் பொழுது மனைவி கோமதி சொன்னாள். உம் கொட்டியபடியே கேட்டவன், இன்னும் யோசி. அதுக்குள்ள நீ இது வரை சொன்னதை எழுதிடரேன்.

 கல்பனாவின் கல்யாணம் ஆடி மாதம் முடிந்த மறு நாளே  முஹூர்த்தம் இருக்கவும், வசதியாயிற்று. மணமான கையோடு வந்து வேலையிலும் சேர்ந்து விட்டாள்.  புது இடம்,  வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்குவதிலும், வந்திருந்த உறவினர்கள் ஊர் திரும்பவும் ஒரு வாரம் ஆயிற்று.  ஒரு மாத லீவில் சேர்ந்த வேலைகளை முடிக்க அலுவலகத்திலும் வேலை நெட்டி முறித்தது.  அன்று ஏதோ பேரணி, போராட்டம். ஒழிக என்று கூட்டம்  கடந்து போகவும் பின்னாலேயே மற்றொரு கூட்டம் வாழ்க கோஷத்தோடு வந்தது.  யாருக்கு இந்த வேளையில் தெருவுக்கு வந்து கோஷம் போட நேரமும், கத்த தெம்பும் இருக்கிறது என்று நினத்தபடியே நடந்தவள், வெகு தூரம் வரை எந்த வாகன வசதியும் இல்லாமல் போக கிடைத்த ஆட்டோவில் ஏறி வந்து சேர்ந்தாள். 

முகம் கழுவி கண் எரிச்சல் போக புடவைத் தலைப்பால் கண்களை மூடியபடி நின்றவள் முதுகில் ஒரு கை கனமாக விழுந்தது. இப்ப தான் வந்தயா? அப்பாடா- உடல் ஆயாசம் முழுவதையும் அந்த ஒரு ஆதரவான அணைப்பும், வார்த்தையும் விலக்கி விட்டன போல இருந்தது.  ஏதோ புரிந்தது போலவும் இருந்தது. உலகம் பூராவும் கணவன் மனைவி ஏன் இணை பிரியாமல் இருப்பதை உயர்வாக சொல்கிறார்கள்.  கடற்கரை சம்பவத்திற்கு பிறகு அவள் மனதில் இருந்த சந்தேகமும், பயமும் அவளை அலைக்கழித்திருந்தன. எப்படி இருந்தாலும், உன்னால் சமாளிக்க முடியும், தைரியமாக இரு என்று அண்ணனும், அம்மாவும் சொன்னது நினைவுக்கு வந்தது.

மெள்ள மெள்ள இருவரிடையும் அதிகம் பேசிக் கொள்ளாமலேயே, புரிதல் வந்து விட்டது.  நம்மை போலவே எப்படி இருப்பாளோ, சமாளிக்க முடியுமா என்ற கவலை இருந்திருக்கும்.  ஒரு நாள், சீசந்தி வரதே, உனக்கு பக்ஷணம் பண்ணத் தெரியுமா? என்றான். சீசந்தி… பாட்டி சொல்வாள். அம்மா கோகுலாஷ்டமி என்று தான் சொல்வாள்.  ஸ்ரீ ஜயந்தி  தெரியும்.  ஜன்மாஷ்டமி என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறாள்.  ஓ, இவன் பாட்டி காலத்தவன். அந்த நாளைய மக்களுடைய எதிர் பார்ப்புகளும், நம்பிக்கைகளும் உள்ளவன்.  பாட்டி நிறைய நாட்கள் இருந்தாள். பாசத்தைக் கூட வெளிப் படையாக காட்டத் தெரியாது.  ஆனால் அவளுக்கு மட்டும் தான்  அவள் பேரில் பாட்டிக்கு இருந்த அன்பும் அரவணைப்பும் புரியும்.  ஒரு வித நிம்மதியே மனதில் படர்ந்தது. 

மத்தியானமா படி  என்று சொல்லி தான் எழுதியதை அவளிடம் கொடுத்து விட்டு மணி கிளம்பினான்.

மாலை வீடு திரும்பியவனிடம் அந்த பெண்ணை பார்த்தீர்களா என்றாள்.  இல்லையே, ஏன் என்றான்.  மத்தியானம் லதா போன் பண்னினாள். நாம் எழுதற கதையைச் சொன்னேன்.  நல்ல காரியம் அம்மா, உங்களுக்கு நல்ல பொழுது போக்கு. இப்படித்தான் மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று இப்பெல்லாம்  சொல்கிறார்களே, என்று சொல்லி விட்டு கதையைச் சொல்லு என்றாள். நான் படித்துக் காட்டினேன்.

நீ உன் காலத்து கதையை எழுதியிருக்கிறாய். இங்க என் சினேகிதியின் உறவு பெண் என்ன செய்தாள் தெரியுமா? உன் கதா நாயகி போல அவளுக்கு அண்ணன் இல்லை. ஆனல் அத்தை இருந்தாள். நடந்ததைச் சொல்றேன்., நீங்கள் இருவருமாக தொடருங்கள் என்றாள். 

நாலே வரியில் அவள் எழுதியிருந்ததை படித்து முடித்துவிட்டு சிரித்தவனிடம்,  அவ்வளவு தான் சொன்னாள் லதா. சிறிது நேரம் கிடைத்த நேரத்தில் அவள் கூப்பிட்டு இருக்கிறாள். அதற்கு மேல் பேச முடியவில்லை.

கதை-2

மைதிலி, தன்னை பெற்றவளை பார்த்ததேயில்லை.  அத்தை தான் வளர்த்தாள். அப்பா சார்டர்ட் அக்கௌண்டண்டாக நிறைய சம்பாதித்தார். அத்தை வீட்டோடு வந்ததில் இருந்து அவள் தான் வீட்டுக்கு பொறுப்பு. மகள் மைதிலியிடம் உயிரையே வைத்திருந்தார். பி.காம் படித்து முடித்தவுடனேயே, நல்ல வரன் என்று சிவராமனுக்கு கொடுத்தார். விமரிசையான திருமணம். மைதிலி வந்த இடத்தில்  அனைத்தும் புதுமையாக இருக்கக் கண்டாள்.  மடி ஆசாரம் என்று அத்தை மாதிரி இல்லாவிட்டால் போகிறது,  நாள் கிழமைகள் என்று விசேஷங்களோ எதுவுமே தன் வீடு போல இல்லையே என்று தோன்றிக் கொண்டே  இருந்தது.  அப்படிக்கு ரொம்ப பணக்காரர்களோ,  புதுமை விரும்பிகளோ இல்லை.  சமையல் சாப்பாடு, நாக்கு ருசி எல்லாம் பக்கா தமிழன் தான்.  ஆனால் அனைவரும் அவளிடம் பிரியமாக இருந்தனர்.

முதல் வருஷம் கடந்தது.      இரண்டாவது ஆண்டில்,  மாமியார் சிரித்துக் கொண்டே, “என்ன ப்ளானிங்கா “ என்றாள்.  திகைத்து நின்றவளிடம், இன்னும் நாள் கடத்த வேண்டாம், அது அது ஆகிற காலத்தில் ஆவது நல்லது என்றாள். இல்லம்மா, என்றவளிடம் முதல் வருஷம் தட்டினா மூன்றாம் வருஷம் னு சொல்வாங்க.  கவலைப் படாதே என்றாள்.  அந்த முறை தன் ஊருக்குப் போனவள் அத்தையிடம் சொன்னாள். அத்தை அப்பாவிடம் சொல்லியிருப்பாள் போலும்.  மாலை மூவருமாக பேசிக் கொள்டிருந்த பொழுது அப்பா சொன்னார். வீணாக கவலைப் படாதே. நேரத்தை வீண் பண்ணாமல் சி.ஏ படி. இங்கிருந்து புஸ்தகங்கள் எடுத்துக் கொண்டு போ. சமயம் கிடைத்த பொழுது வா.  எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை, அதுவும் குழந்தை பேறு நாள் தள்ளியும் வரலாம்.  அந்த முறை தேவையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அப்பாவிடம் கொடுத்து விட்டு வந்தாள்.

அதே காரணமாக, சமயம் கிடைத்த பொழுது வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டாள். இவ்வளவுக்கும் சிவராமன் பேசவேயில்லை. ஏன் வீட்டில்  இல்லை என்றும் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை. எதுவுமே விசாரிக்காமல், என்ன செய்கிறாய் என்றும் கேட்காமல் ஒவ்வொரு நாளும் தன் ஆபீஸ் போவதும் , இரவில் வந்து சாப்பிட்டு படுப்பதுமாக இருந்தவனை என்ன சொல்ல.

சோதனை வேறு விதத்தில் வந்தது.  முதலாண்டு பரீக்ஷைக்கு ஒரு மாதம் இருக்கையில் அவள் கருத் தரித்தாள். எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி.  முதல் மகன் பிறந்ததை அவன் பெற்றோர் கொண்டாடியது போல அவன் அதிக மகிழ்ச்சியாகவும் காட்டிக் கொள்ளவில்லை.   அத்தை பார்த்துக் கொள்வதாகச் சொன்னதால் அவளிடமே விட்டு விட்டு பரீக்ஷைகள் எழுதினாள்.   வராமல் இருந்த குழந்தை பேறு ஆண்டு தோறும் வரவும் அதுவே பிரச்னையாகவும்  ஆயிற்று. அந்த வருஷம் கடைசி ஆண்டு தேர்வு எழுத ஊருக்குப் போனவள், அத்தையிடம் தனிமையில் இது என்ன கஷ்டம் என்று சொல்வேன், ஒட்டுதலே இல்லாமல் ஒரு வாழ்க்கை. இது நாலாவது. அடுத்ததும் வந்தால் என்ன செய்வேன், என்று அந்தரங்கமாக சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட அப்பா, இந்த தடவை அவன் வந்து அழைத்துக் கொண்டு போகட்டும். அப்படி வரும் வரை இங்கேயே இரு என்று தீர்மானமாக சொல்லி விட்டார்.

வரவேயில்லை. நாட்கள் கடந்தன – தானாக தனித்து சமாளிக்கத் தெரிந்து கொண்டு விட்டவள்,  திரும்பி போவதைப் பற்றி  மறந்தே போனாள். ஆரம்பத்தில் மாமியாருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள். அவரும் பதில் எழுதினார்.  ஒரு முறை, தனக்கு உடம்பு முடியவில்லை அதனால் தன் மகளிடம் போவதாக எழுதியிருந்தார்.  அதன் பின் மூச். ஒரு விவரமும் தெரியவில்லை.

வாழ்க்கை ஓடியது. குழந்தைகள், ஸ்கூல் படிப்பு, பெரியவன் கல்லூரியில் சேர்ந்து விட்டான்.  அப்பா ஒருமுறை விசாரித்த பொழுது சிவராமன் வேலையை விட்டு வேறு ஊருக்கு புது வேலை தேடிக்  கொண்டு  போய் விட்டான் என்று அவன் ஆபீசில் சொன்னார்களாம்.  அதற்கு மேல் ஒரு மனைவியாக யாரைப் போய் கேட்பாள். அவள் வாழ்க்கையே திசை மாறி விட்டது.  குழந்தைகளே உலகம். அப்பாவும் போன பின் அத்தை தான் உறுதியாக துணை நின்றாள்.  எந்த காரணமும் இல்லாமல், எந்த குற்றமும் இல்லாமல், வசதிகள் அனைத்தும் இருந்தும் இந்த திருமணம் இப்படி முடிவானேன்.

கதை-3

வாசல் வரை வந்த மணி நின்றான். அந்த தெருவுக்கு யாரோ புது மனிதர்கள் வந்திருக்கிறார்கள்.

மாலையில் கோமதி வந்து விவரங்கள் சொன்னாள். டில்லியில் வேலையாக இருந்தாராம். இன்னும் ஐந்தாறு மாதங்களில் ஓய்வு பெறுவாராம். இந்த பக்கத்தில் இருந்தவர் தான்.  ஓய்வு பெற்ற பின் குடி வருவாராம்.

ஐந்தாறு மாதங்களுக்கு பிறகு அவர்களும் வந்து வீட்டை சரி செய்து கொண்டு, சாமான்கள் லாரியில் வந்து சேர காத்திருந்தனர்.   சில நாட்களில் அவர்கள் வீட்டில் க்ருஹ ப்ரவேசம் என்று அழைத்தார்.  அனைவரும் பரிச்சயம் செய்து கொண்டனர்.  அதன் பின் கண்ட பொழுது ஹலோ சொல்வதோடு சரி.

ஒரு நாள் சந்தித்த பொழுது குடும்பம் பற்றி விசாரித்த பொழுது மகன் அமெரிக்காவில் இருப்பதாகச் சொன்னார்.  ஏதோ ஒன்று அவர் மகிழ்ச்சியாக இல்லை என்று எண்ணத் தோன்றியது. எப்படி கேட்பது? தன்னைப் பற்றி விவரங்களும் சொல்லி, மகனுக்கு மணம் ஆகி விட்டதா என்று கேட்ட உடன் அவர் மனம் ஒடிந்து அழுது விடுவார் போல இருந்தது. வீட்டினுள் அழைத்து வந்து, தண்ணீர் குடிக்க கொடுத்த மணி, நல்ல வேளை கோமதி வீட்டில் இல்லை என்று நினைத்துக் கொண்டார். .

டில்லியில் அரசாங்க உத்யோகஸ்தராக இருந்தவர். ஒரே மகன். விஷால், நன்றாக படித்தான். பொறியியல் படித்து முடித்து. மேலும் உயர் கல்வி கற்க வேறு மானிலம் சென்றான்.  மூன்று வருஷ படிப்பு. கடைசி வருஷம் படித்துக்  கொண்டிருந்த பொழுது ஒரு பெண் முதல் ஆண்டில் வந்து சேர்ந்தாள்.

அது வரை மாணவர்கள் தங்களுக்குள் வேடிக்கையாக பேசிக் கொள்வதும், சீண்டுவதுமாக இருந்தவர்கள் அவளைப் பற்றியே பேசுவதாக ஆயிற்று. உயர் ஜாதி குதிரை போன்ற வாட்ட சாட்டமான உடல் அமைப்பு. வடமேற்கு மாகாணங்களில் உள்ளவர்கள் பெரும்பாலும் அந்த நிறமும் உடல் வாகும் கொண்டவர்களே.

விஷால் அமெரிக்கா போக விரும்பி அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால், அதில் அதிகம் ஈடுபடவில்லை.  இயல்பாகவே கூச்சம் வேறு. முன்னுக்கு வரும் ஆர்வம், படிப்பில் கவனம் என்று இருந்தான். மூன்றாவது ஆண்டு படிக்கையில் அமெரிக்க பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டு இருந்தான்.  நல்ல மார்க் கிடைத்திருந்தது.  அதே சமயம் காம்பஸ் இன்டெர்வ்யூ வில்  ஒரு தனியார் கம்பெனியில் வேலையும் கிடைத்து விட்டிருந்தது.

ஓரு வருஷம் வேலையில் இருந்த பொழுது , அமெரிக்க பல்கலை கழகத்திலிருந்து அனுமதி கிடைக்கவும், அனைவரும் மகிழ்ந்தோம்.   

ஓரு நாள் மேலதிகாரியுடன் பேசும் பொழுது என் மகன் பற்றி பெருமையாக சொல்லி விட்டேன். அன்றைக்கு என் வாயில் சனி வந்து இருந்தான் போலும். அமெரிக்கா போகிறான் என்றவுடன் அக்கறையாக விசாரித்தார். படித்த கல்லூரியைச் சொன்னதும், என் மகளும் அங்கு தான் சேர்ந்திருக்கிறாள் என்றார்.   மறு நாள் அவர் மனைவியும் அவருமாக என் அரசு குடியிருப்பு வீட்டுக்கே வந்து விட்டனர். எனக்கு அவரைப் பற்றி அதிகம் தெரியாது.

தென்னிந்திய சிறு ஊரில் இருந்து டில்லி போனவன் நான், அரசு குடியிருப்பில் இருந்ததால்  வீட்டுக்கு என்று அலையாமல் ஓரிடத்தில் இருந்து மகனை படிக்க வைக்கவும் முடிந்தது. இவர் என் மேல் அதிகாரி, அதிகம் நெருங்கியவரும் இல்லை.வட மானிலம் என்பது மட்டும் தான் தெரியும்.  அதுவும் மனைவியுடன் வந்திருக்கிறார்.  அதை விட அதிகம் திகைக்கும்படி மேற்கொண்டு அவரிடம் பேசிய பொழுது சொன்ன செய்திகள். அவர் மொழி, பண்பாடுகளில் வேறுபாடு இருந்தாலும்,  தன் மகளை என் மகனுக்கு கொடுக்க விரும்புகிறார்.  மகிழ்வதா, மறுப்பதா எதுவுமே புரியவில்லை.   என் மனைவி சுமாராக ஹிந்தி பேசுவாள். எனினும் அவர்களுடன் நீடித்து பேச்சுக் கொடுக்கத் தயங்கி நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.   

மகனைக் கேட்கவேண்டும் என்று அவள் எண்ணியதை மெள்ள என்னிடம் சொன்னாள். எனக்கு புத்தியே ஸ்தம்பித்து போய் இருந்தது.  அவர்கள் சம்மதம் கேட்கவா வந்திருக்கிறார்கள், அவர்கள் வரையில் நிச்சயம் செய்து கொண்டு தான் வந்திருக்கிறார்கள் என்பது பின்னால் புரிந்தது.

மகனிடம் சொன்ன பொழுது பயமாக இருக்கும்மா, காலேஜையே கலக்குபவள், அட்டகாசமாக பேச்சும், நடையும், என் நண்பர்கள் சொல்வதில் இருந்து நல்ல அபிப்பிராயம் இல்லை, வேண்டாம் என்றான்.  சொல்லத்தான் நினைத்தேன், மனதினுள் ஒத்திகை பார்த்துக் கொண்டு, ஸார், இது பொருந்தாது, உங்கள் உயரம் என்ன, நாங்கள் என்ன.. பல விதமாக வார்த்தைகள் மனதில் வந்தன, ஒன்று கூட அவர் எதிரில் போன பொழுது எனக்கு கை கொடுக்கவில்லை.   என் வரப் போகும் சம்பந்தி என்று எடுத்த எடுப்பில் என்னை அவர் சக அதிகாரிக்கு அறிமுகம் செய்து விட்டார்.   

வீட்டில் மனைவி வறுத்து எடுத்தாள், மகனுக்கு இஷ்டம் இல்லை என்று சொல்ல வேண்டியது தானே.  இவ்வளவு தீர்மானமாக இருப்பவர் என் மகள் விரும்புகிறாள் அதனால் தான் இறங்கி வந்தேன் என்று சொல்ல மாட்டாரா.  என் வாயடைத்து விட்டது.

பிராரப்தம், அந்த திருமணம் நடந்தது. அவனுடன் அவளும் அமெரிக்கா சென்றாள்.  சில நாட்கள் சுமுகமாக சென்றது. ஒருநாள் நானும் வேலைக்கு போவேன் என்றாளாம். அதற்கென்ன விட்ட இடத்தில் இருந்து படி என்று சொல்லியிருக்கிறான்.  படிப்பவளா அவள்.  வெளியூரில் இடம் கிடைத்திருக்கிறது என்று பொய் சொல்லி விட்டு, அங்கு கிளம்பி போனவள் தான்.  விஷால் கல்யாணம் நிச்சயமானதுமே அவன் சினேகிதர்கள் வாழ்த்தும் முன், ஒரு முகமாக ‘ஏய் அகப்பட்டுக் கொள்ளாதே உன்னை கங்கால் ஆக்கிவிடுவாள்’ என்றனராம்.

அது தான் நடந்தது. ஒரு வாரம் சென்றது.  கிரெடிட் கார்டு பணமில்லை என்று திரும்பி வந்ததும், வங்கியில் விசாரிக்கச் சென்ற பொழுது தான் தெரிந்தது.  கங்கால் ஆக்கி விட்டு தான் போய் இருக்கிறாள்.  இருவருக்குமான ஜாயிண்டு அக்கௌண்டு காலி.   பெற்றோர் எப்படியோ, அவள் அமெரிக்கா செல்ல ஒரு பாதையாகத் தான் விஷாலை பயன் படுத்திக் கொண்டிருக்கிறாள்.

நானும் ஓய்வு பெற்று விட்டேன். அவள் பெற்றோர் கண்டு கொள்ளவேயில்லை. அவள் என்ன சொன்னாள், என்பதெல்லாம் தெரிய எங்களுக்கு வழியும் இல்லை. போய் பார்க்கவா முடியும்.  எங்கேயோ மகனை அனுப்பி விட்டு கையை பிசைந்து கொண்டு நிற்கிறோம்.

மணி திகைத்து அப்படியே நின்று விட்டான். இப்படி கூட நடக்குமா?  யயாதி கதையில் சுக்ராசாரியார் மகள் என்பதால் பிடிவாதமாக அவனை மணம் செய்து கொண்டவள் தேவயானி. உண்மையில் அவள் எண்ணம் சர்மிஷ்ட்டாவை பழி வாங்குவதாக அல்லவா இருந்தது. அது தான் நினைவுக்கு வந்தது.

வருடங்கள் பல கடந்து விட்டன. யதேச்சையாக தன் சொந்த கிராமம் சென்றான், பஸ் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வையில் ஒரு பெண், மூன்று குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வதைப் பார்த்தான். முகம் தெரியாமேலேயே நடையிலிருந்து சந்தேகம் வர, அருகில் வந்த பின் அடையாளம் கண்டு கொண்டான்.

ஓ, இவள் தான் என்னை கதை எழுத வைத்தவள். கண் கலங்க பஸ்ஸில் ஏறியவள்.  நலமாக இரு என்று மனதினுள் வாழ்த்தினான்.

******

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக