பொருளடக்கத்திற்கு தாவுக

பார்த்தசாரதி

நவம்பர் 8, 2024

பல நாட்களுக்கு முன் படித்த தொடர் கதையில் ஒரு பாத்திரம் பாட்ராச்சார் என்பவர். அவருக்கு இனிப்பு பிடிக்கும்.  ஒரு நாள் வீட்டில் ரவை கேஸரி செய்தாள் அம்மா. அவர் அதை வர்ணித்ததை நாங்கள் யாருமே மறக்கவில்லை. புது நெய் விட்டு ரவையை வறுத்து மாப்பிள்ளைக்காக பண்ணியிருக்கேள்.  கேஸரி வர்ணப் பொடி கொஞ்சமா போடுங்கோ, ஆஹா, முந்திரி பருப்பு வறுத்த வாசனை என்பார்.  ஆனால் கொடுத்தால் சாப்பிட மாட்டார். அவர் மனைவி போன பின் இனிப்பு சாப்பிடுவதில்லை என்று விரதம் என்பார்.  அடிக்கடி வருவார். வந்தால் ஊர்க் கதை தன் கதை என்று ஏதோ பேசுவார். வீட்டில் அனைவருக்கும் அவரைப் பிடிக்கும். 

என் அக்கா மணமான புதிது. இன்னமும் புகுந்த வீடு போகவில்லை. மாப்பிள்ளை வீட்டார் ஏதேதோ காரணம் சொல்லி தாமதித்துக் கொண்டிருந்தனர்.  நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றனர். 365 நாட்களில் ஒரு நல்ல நாளா கிடைக்காது. என் தம்பி பரவாயில்லக்கா நீ இங்கேயே இருந்துடு  என்பான். சீ போடா என்று அம்மா விரட்டுவாள். அவள் கையில் எதோ  துணியில் பூவேலை செய்து கொண்டிருந்தாலும் கண்களில் ஜலம் நிரம்பும். எனக்கு புரியாது, எதற்கு இவள் வருத்தப் படுகிறாள். இங்கு நாங்கள் எல்லோரும் பிரியமாகத் தானே இருக்கிறோம். அம்மா என்னை ஏதாவது சிறு வேலைகளைச் செய்யச் சொல்வாள். கடைக்கு ஓடிப் போய் சாமான் வாங்கி வா என்பாள். அவளை எதுவும் சொல்ல மாட்டாள்.

அப்பொழுது தான் இந்த  பாட்ராச்சார். மாதிரி ஒரு ஆசாமி வந்தார். அவளிடம்  வெகு நேரம் பேசிக்  கொண்டிருந்தார்.  அதற்குப் பின் அக்காவும் தைரியமாக இருந்தது போல இருந்தது. ஒரு நாள், அவளிடம் வந்து ஏதோ சொல்லி விட்டு, தைரியமா போ. அங்கு உன்னை ஒன்றும் செய்ய முடியாது.  நான் கொண்டு விடுவேன். ஆனால் அது மரியாதை இல்லை. உன் அப்பாதான் கொண்டு விடணும் என்றார்.  அப்பாவையும் சம்மதிக்க வைத்தார். அப்படிக்கென்ன போய் தான் ஆகணுமா என்று என் அந்த வயதில் நான் துள்ளியது நினைவு வருகிறது.

அப்பா எதற்கோ பயந்தவர் போல இருந்தார். அவருக்கே துணை வேண்டும் போல இருந்தது.  அம்மா அடுப்படியில் வெந்தாள். சம்புடம் சம்புடமாக பக்ஷணங்கள் தயார் செய்து கொண்டிருந்தாள்.  நானும் தம்பியும் சண்டைக்கு நின்னோம். எதுக்கும்மா யாரோ சாப்பிட இத்தனை செய்கிறாய். எனக்கு எனக்கு என்று இருவரும் கை நீட்டினோம். என்ன நடந்ததோ தெரியவில்லை. அப்பா மட்டும் திரும்பி வந்தார். அக்கா அழகா கோலம் போடுவாள். ஸ்ரீ ஜயந்தி வந்தால் அவள் போட்ட பாதங்களை ஸ்ரீ க்ருஷ்ணனே வந்தால் கூட மிதிக்காமல் தாண்டி வருவார்.  எங்கள் பாடப் புத்தகங்கள், நோட்டுகள் எல்லாவற்றிலும் அட்டை போட்டு பெயர் எழுதி தருவாள்.  வீட்டில் அவள் கை வண்ணம் தெரியாத இடமே இல்லை என்பது போல கை வேலை, சித்திரங்கள் என்று இருக்கும்.

நாட்கள் ஓடின. அவள் புக்ககம் போனாள்.  ஒரு முறை வரக் கூடாதா, வரவேயில்லை. அம்மா  அவளை நினைத்து நினைத்து கண் கலங்குவாள்.  ஆனால் எங்களுக்குத் தெரியாதது,  அந்த பாட்ராச்சார்- அவர் இயற் பெயர் தெரியாது- இதே நிலைத்து விட்டது.  அடிக்கடி போய் பார்த்திருக்கிறார்.

ஒரு நாள் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவர் போனபொழுது அக்கா வீட்டு வேலையாக இருந்தாள். மாமியாரே பேசினார். யார் என்ன என்று கேட்டு விட்டு நீங்களே சொல்லுங்கோ, வாக்கு தவறலாமா? கையில் பணம் இல்லன்னார், மாமா (அவள் கணவனை அப்படித்தான் சொல்வாள்) கொடுத்தார். கடனாக, ஒரு வருஷத்தில் திருப்பித் தருவதாகச் சொன்னார் அந்த சம்பந்தி. கடன் பத்திரம் கையெழுத்து போட்டு வட்டியுடன் தருவதாக. யாரும் எதிர்பார்க்கவில்லை இந்த சம்பந்தம் அமையும் என்பதை. இது தான் தெய்வச் செயல்.   எங்க பையன் பாவம், அதனால் சரி வான்னு கூட்டிண்டோம்.  அதற்கு மேல் அவர் சொன்னது எனக்கு புரியவில்லை. அப்பா எப்படியோ மாட்டிக் கொண்டிருக்கிறார். யாருக்கு யார் கடன் தருவது. அவர்கள் மகனுக்குத் தானே கல்யாணம் – அதற்கு அவர் கடன் கொடுப்பராமா,  என்ன நியாயம்?  நானும் என் தம்பியும் எங்களுக்குள் பேசிக் கொண்டோம். நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று நான் ஸூளுரைக்க, அவன் நான் வரதட்சினையே வாங்கிக்க மாட்டேன் என்றான். இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது.

சீமந்தம் என்று வீடு அல்லோல கல்லோலப் பட்டது.  நாங்கள் இருவரும் கூடிய மட்டும் அந்த குடும்பத்தினரிடம் தள்ளியே இருந்தோம்.  அக்காவை விட்டு விட்டு அவர்கள் மட்டும் திரும்பிப் போனார்கள். 
வீட்டில் அப்பாவை விட அதிகமாக அக்கா இந்த பாட்ராச்சாரிடம் தான் பேசினாள்.  

எப்படி சமாதானம் ஆயிற்று என்பது வெகு நாட்கள் கழித்து தான் எனக்குத் தெரிந்தது. கையில் குழந்தையுடன் அப்பா அவளை அவர்கள் வீட்டில் கொண்டு விட்டார். எல்லோரும் உபசாரம் செய்தனர்.  அந்த வீட்டில் இவனைத் தவிர இன்னமும் நாலு பையன்கள். அடுத்த பையன் கல்யாணம் என்று பத்திரிகை வந்தது.  அம்மா போய் விட்டு வந்து சொன்னாள். இவா தான் எங்கள் முதல் சம்பந்தி  என்று எல்லோரிடமும் அறிமுக படுத்தினாளாம்.  நாங்கள் எங்கள் அக்கா எல்லோரிடமும் நல்ல பெயரை வாங்கி விட்டாள் என்று மகிழ்ந்தோம்.  

ஒரு நாள் நானே பாட்ராச்சாரிடம் கேட்டேன். ஏன் மாமா இது என்ன நியாயம், அந்த பையனுக்கு சொல்லத் தெரியாதா, என் மனைவி நான் அழைத்துக் கொண்டு வருவேன் – ன்னு   சொல்ல தைரியம் இல்லையா. இவள் தான் ஏன் அங்க போகனும்னு தவித்தா.  குழந்தை, உனக்கு உலகம் தெரியும் பொழுது புரியும்.  அந்த பையன் ஏன் பேசல்ல – அது உங்க அப்பா அவன் தந்தையிடமே  செலவுக்கு கடன் வாங்கி இருந்தார். அதை திருப்பிக் கேட்க மாட்டார் என்று உங்க அப்பா நம்பினது தான் தவறு.   சென்னையில் இவர் வீடும் அவர்கள் வீட்டுக்கு அருகில் தானாம்.  அதனால் நான் அந்த பையனிடம், அது தான் உன் அக்கா புருஷனிடம் பேசினேன்.  அவனுக்கும் அப்பொழுது தான் தெரிந்தது.   இது என்ன அசட்டுத் தனம் என்றான்.  கடன்னு வாங்கினா திருப்பித் தந்து தான் ஆகனும்.   கல்யாணம் ஆன பின் அந்த சம்பந்தி மனிதன் வேண்டாம் , நமக்குள்ள என்ன என்று சொல்லியிருந்தால் அவர் பெருந்தன்மை.  அவரிடம் உங்க அப்பாவும் மனம் விட்டு பேசல்ல. செலவு ஜாஸ்தியாயிடுத்து அப்புறமா முடிந்த பொழுது தரேன்னு சொல்லியிருந்தா கூட போதும்.  பேச வேண்டிய இடத்தில் பேசித்தான் ஆகனும். அவர் செய்யல்ல, அவசரம் என்று கேட்ட பொழுது அவராக தரேன்னு சொன்ன பொழுதும் எப்படி திருப்பி தருவோம்னு யோசிக்க வேண்டாமா? உன் அம்மாவுக்கு கூடத் தெரியாது அவர் கடனாக வாங்கினது.    நாம் ஏன் கடனை திருப்பித் தராம இருக்கனும்.  அவரிடம் பேசியிருந்தால் விடாப் பிடியாக கொடுத்து தான் ஆகனும்னு சொல்ற மனிதரும் இல்லை. வாயில் வார்த்தை வேணும் குழந்தை, பணிய வேண்டிய இடத்தில் பணிந்து தான் ஆகனும்.     நானே மணி ஆர்டர்ல அந்த பணத்தை அனுப்பி விட்டேன்.  உன் அத்திம்பேர்,  மொத்தமா தர முடியல்லன்னு, மாதா மாதம் எனக்கு கொடுத்து விட்டான்.  புரிந்ததா?

இப்படியும் மனிதர்கள்.  இனி இவர் இயற் பெயராலேயே அழைக்கலாம். பார்த்த சாரதி- அக்காவை பொறுத்தவரை அவர் திருவல்லிக்கேணியில் குடி கொண்ட பார்த்தனுக்கு தேர் ஓட்டியவரே.

அம்மா அந்த காலத்திலேயே ஆங்கிலம் அறிந்தவள். கான்வெண்ட் ஸ்கூலில் படித்தவள். எட்டாம் வகுப்பில் நிறுத்தி கல்யாணம் என்று பண்ணி அனுப்பி விட்டார்கள். அவர்கள் பொறுப்பு தீர்ந்ததாம்.  நானும் என் தம்பியும் அம்மாவிடம் சண்டை போட்டிருக்கிறோம். அதெப்படி தான் பெற்ற பெண்ணையே சுமையாக நினைத்தார்கள்.  வேறு வீட்டிற்கு அனுப்பி விட்டால் இவர்களுக்கு சுமை குறைந்து விட்டதா?  நன்றாக படித்துக் கொண்டிருந்த பெண், படிக்க வைத்திருக்கலாம்.  நாங்கள் இருந்தது ஒரு வீட்டின் ஒரு பக்கத்து போர்ஷன். வலது இடதாக பிரித்த வீடு. தானும் இருந்து கொண்டு, அருகில் ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்தால் வரும்படியும், பேச்சுத் துணையும் ஆச்சு என்ற எண்ணத்துடன் பெரிய வீட்டை இரண்டாக பிரித்திருந்த வீட்டுக்கு சொந்தக்காரர், வெளியூர் சென்று விட்டார். எனவே அந்த பக்கத்து பெரிய பகுதிக்கும் ஒருவர் குடி வந்தார். நல்ல வேலையில் உள்ளவர் போலும்.  அந்த வீட்டு வயதான ஒருவர், அம்மாவோ, யாரோ, தாங்கள் அதிக வாடகை கொடுப்பதால் எங்களை விரட்டலாம் என்று நினைத்தவர் போல இருப்பார். அதனால் நாங்கள் அவர் கண்ணில் படாமல் சுற்றிக் கொண்டே போவோம். நிற்க.

இவர்கள் அனைவரும் எங்கள் சின்ன பகுதி திண்ணையில் கூடுவார்கள். இன்னும் சிலர், எதிர் வீட்டு பெண்மணி, வாயில் வெற்றிலையை மென்று கொண்டே பேசும் ஆச்சி,  அவர் வளர்ப்பு நாய் உடன் இருக்கும். அதனால் அவர் வாசல் படிக்கட்டிலேயே அமர்ந்து கொள்வார்.  நீளக் கயிற்றில் அதை கட்டி ஒரு முனையை பிடித்திருப்பார். அங்கும் இங்குமாக அது ஓடிக் கொண்டிருக்கும்.  இந்த பாட்டியும் வருவார். தரையில் உட்கார முடியாமல் தன் நாற்காலியை கொண்டு வந்து போட்டுக் கொள்வார். அம்மா இவர்களுக்கு அந்த வார விகடன் பத்திரிகையை படித்துக் காட்டுவாள். ஸ்ரீமதி மைதிலி வந்த காலம்.  அம்மா படிக்க படிக்க இவர்கள் கார சாரமாக விவாதம் செய்வார்கள். ஒவ்வொரு வாரமும் அந்த கதை தொடரும். நாங்கள் வேடிக்கை பார்ப்போம். அந்த பாட்டி கடன்காரன் என்று  கதையில் வரும் ஒரு பாத்திரத்தை திட்டுவார். எதிரில் அந்த மனிதர் ஒரு அடி கொடுத்திருப்பார் போல இருக்கும்.  யாருக்கோ பரிதாப படுவார்கள்.  அம்மா படித்து முடிந்தவுடன் கையோடு அந்த  கூட்டத்தில் பத்திரிகையை வாங்கியவர் பத்திரமாக எடுத்துக் கொண்டு போய் விடுவார். அதைப் பார்க்க ஆசை இருந்தாலும் எட்டிப் பார்ப்பதோடு சரி.   பிற்காலத்தில் வசதி வந்து விகடன் பத்திரிகை வந்தவுடன் அட்டை படத்தை பார்க்க போட்டி போடுவோம்.  ஏதாவது ஜோக், அல்லது கார்ட்டூன் படம் இருக்கும்- முன் ஜாக்கிரதை முத்தண்ணா, எலி வளை ஆனாலும் தனி வளை போன்ற வாசகங்கள் இன்னமும் எங்கள் வீடுகளில் பேசப் படும் சொற்றொடர்கள். 

இந்த சமயம் தான் அப்பாவின் பெற்றோர்  எங்களுடன் வசிக்க வந்தனர். இடம் போதவில்லை என்று சற்றுத் தள்ளி வீடு பார்த்துக் கொண்டு போனோம். குதிரை வண்டியில் சாமான்களை போட்டுக் கொண்டு, நாங்கள் ஆளுக்கு ஒரு துணி மூட்டையை தோளில் போட்டுக் கொண்டு  போய் சேர்ந்தோம். அதன் பின் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டு குடி போனபின் இந்த விகடன் வாசகர்கள் கூட்டத்துடன் தொடர்பே இல்லாமல் ஆயிற்று.  அக்கா கல்யாணம் ஆனதும் இங்கு வந்த பின் தான்.

அப்பா எப்பொழுதுமே அதிகம் பேச மாட்டார். இப்பொழுது எப்பொழுதும் கவலை தோய்ந்த முகமாகவே தான் அவரை கண்டிருக்கிறோம். பெரிய குடும்பம், வீடு கட்டி தனி வளைக்கு வந்தாலும் செலவு இழுத்து பறித்தது.  தனி வளை பணத்தை விழுங்கியது.  இதையெல்லாம் புரிந்து கொள்ள நானும் மணமாகி குடித்தனம் செய்ய வேண்டியிருந்தது. எப்படி சமாளித்தார்கள். இருவரும் அதிக சாமர்த்தியமோ, பேச்சுத் திறமையோ, பண வசதியோ இல்லாதவர்கள். இருந்தும் எங்களுக்கு உணவிலோ, உடையிலோ குறை இருக்கவில்லை. நாள் கிழமைகள் வடை பாயசம் இல்லாமல் சென்றதில்லை. இப்பொழுது இத்தனை வசதிகள்,  புகை இல்லாத அடுப்புகள், சமையறையை அடைத்துக் கொண்டு அரைக்கவும் கரைக்கவும் என்று இயந்திரங்கள், ஆனால் நாள் கிழமை வடையோ, பாயசமோ தான் மிஸ்ஸிங்க்.  பண்ணினாலும் சாப்பிட பொறுமையில்லை. பொறுமையிருந்து சாப்பிட்டாலும் மறுநாள் ஏதோ கோளாறு.  பதினாறு மணி நேரம் ஃபாஸ்டிங்க்.

திரும்ப அந்த பார்த்த சாரதி மாமாவுக்கு வருவோம். அந்த பகுதியில் நிலத்தை துண்டு துண்டாக பிரித்து வித்தவரிடம் இவர் வேலை செய்தார் என்று நினைவு.

என் தம்பி காலேஜ் செல்லும் சமயம். கடுமையான போட்டி. உள்ளூரில் இருந்த கல்லூரிகளில் மட்டும் தான் விண்ணப்பித்து இருந்தான். நல்ல மதிப்பெண்கள் இருந்தாலும், வெளியூரில் அதாவது  மற்ற பெரிய நகரங்களில் இடம் கிடைத்திருக்கும். சற்றுத் தள்ளி இருந்த உள்ளூர்  கல்லூரியில் சேர்ந்தான்.  இந்த கல்லூரிக்கு குறைந்த பட்ச மதிப்பெண்களே போதும். நானும் அந்த கூட்டத்தோடு போய்க் கொண்டிருக்கிறேன் என்று அங்கலாய்ப்பான்.  பாவமாக இருக்கும்.  அப்பவும் இந்த பாட்றாசாரியார்- இல்லை பார்த்த சாரதி மாமா வந்தார். என்னவோ அவன் மனதுக்கு உறைக்கச் சொல்லி இருந்தார் போலும். நிறைய படித்தான்.  லைப்ரரி புத்தகங்கள் வீட்டில் அவன் படித்த இடத்தில் கிடக்கும். அம்மாவும் நானும் திருப்பி தரணும், பொறுப்பில்லாமல் இங்கேயே வைத்திருக்கிறான், என்று எடுத்து அவன் மேசையில் வைப்போம்.  மூன்று வருட படிப்பு முடிந்ததும் மேற்கொண்டு படிப்பேன் என்று தானே முயன்று பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான்.  ஐஏஎஸ் எழுதப்  போவதாகச் சொன்னான்.  வெளி உலகமே தெரியாமல் வளர்ந்த நானும் பள்ளிப் படிப்பை முடித்து விட்டிருந்தேன்.  உடன் படித்த மாணவிகள் செய்தனர் என்று நானும் அரசாங்க வேலைக்கான தேர்வை எழுதினேன்.  ஏதோ ஒரு சிறிய அரசு அலுவலக வேலை.  ஆனாலும் வேலை கிடைத்து வெளியில் போன முதல் பெண் எங்கள் குடும்பத்தில் நான் தான்.

தம்பி அந்த தேர்வில் பாஸாகி விட்டிருந்தான்.  அவன் படிக்கும் காலத்தில் தான் முதன் முதலாக வீட்டில் தினசரி பத்திரிகை வந்தது.  அதனால் நானும் அம்மாவும் அவன் படித்த பின் படிப்போம்.  அதில் என் தம்பி பெயரைப் பார்த்து திகைத்தவள், என்ன விவரம் என்று படித்தேன். அந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் முதலாக வந்திருக்கிறான்.  எங்களுக்கு மகிழ்ச்சியும் திகைப்பும்  எங்கே போனான், அவனைத் தேடிக் கொண்டு நான் அவன் நண்பர்கள் வீட்டிற்குச் சென்றேன். அவன் இந்த பார்த்த சாரதி மாமாவின் வீட்டில்  இருந்தான். அவருக்கு நெடுஞ்சாண் கிடையாக -சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான். என்னடா, அம்மா தேடறாள் இங்க இருக்க, என்று வியப்புடன் பார்த்தேன்.  எங்கள் குடும்பத்துக்கு பார்த்த சாரதியாக வந்தவர் தான் அவனுக்கு எதை படிக்க வேண்டும் என்று அறிவுரை சொன்னாராம். அவர் வீட்டில் முதன் முறையாக சென்ற நான், அறை முழுவதும் புத்தக அலமாரிகளைக் கண்டு திகைத்தேன்.   நாளில் பாதி நேரம் அவன் அங்கு தான் படித்துக் கொண்டு இருந்திருக்கிறான்.  நீ ஒரு அடி முன்னால் வா, நான் பத்து அடிகள் உன் பக்கம்  வருவேன் – எங்கேயோ படித்த ஞாபகம்.  அவன் தன் முயற்சியால் தான் ஜயித்தான்.  செய், செயல் தான் பலன் தரும், பின் பலமாக நான் இருப்பேன் என்று அபயம் அளித்த பகவான் தான் இப்பொழுதும்  இவர் ரூபமாக வந்து உதவி இருக்கிறார் – நானும் அவரை நமஸ்கரித்தேன்.  தீர்க சுமங்கலி பவ என்று ஆசீர்வதித்தார்.  திரும்பவும் கல்யாணம், புக்ககம்  தானா எனக்கு,  நான் படிக்க மாட்டேனா, எனக்கு ஏன் இவர் இப்படி ஆசிர்வாதம் பண்ணனும் என்று சுள்ளென்று கோபம் வந்தது.  இவ்வளவு ஆண்டுகளுக்கு பின் சதாபிஷேகம்,  இரு பக்கத்து உற்றார் உறவுகளுடன் மாட்டியிருக்கும்  அக்கா-அத்திம்பேரின் போட்டோ என்னைப் பார்த்து சிரிக்கிறது – எது தேவை, என்பதை விட எது நன்மை என்று தானே பெரியவர்கள் நினைத்திருக்கிறார்கள்.    

ஒரு நாள் சின்ன தம்பி தன் சைக்கிளை இரண்டு துண்டுகளாக தூக்கிக் கொண்டு வந்தான். அவன் உடலிலும் காயம். அப்பாவும் அம்மாவும் சைக்கிளை உடைத்து விட்டானே என்று திட்டினார்கள். அப்பொழுது பக்கத்து வீட்டு செட்டியார் அம்மாள் வந்தாள். ‘முதல்ல புள்ளய உள்ள கூட்டிட்டு போயி அடி பட்டிருக்கா பாரும்மா, சைக்கிள் கிடக்குது’ என்றார்.  அப்பா உள்ள வா, அந்த நாரதர் வந்து கொண்டிருக்கிறான் என்றார்.  திரும்பி பார்த்தால் தெருக் கோடியில் இந்த பார்த்தசாரதி மாமா வந்து கொண்டிருந்தார்.எனக்கு புரியவில்லை, பிடிக்கவும் இல்லை. நாரதர் என்ன பண்ணினார் ?  நாரதர் கலஹம் செய்வார் என்று பிரசித்தி போலும். இவர் உதவி தானே செய்கிறார். அப்பா அவரிடம் சரியாக பேசுவதில்லை என்று எனக்கு தோன்றியதுண்டு. ஈகோ, தன் குழந்தைகள் அவரிடம் மதிப்புடன் இருக்கிறார்களே என்று. இருக்கலாம். எங்களுக்கு மட்டுமல்ல – அந்த குடியிருப்பில் எல்லோருமே அவரிடம் உதவி பெற்று அவரிடம் மதிப்புடன் தானே இருந்தார்கள்.

எல்லோருமாக வீட்டின் உள்ளே நுழைந்தோம்.  தெருக் கோடியில் இந்த பார்த்தசாரதி மாமா வந்து கொண்டிருந்தார். சைக்கிள் வாசலிலேயே கிடந்தது. செட்டியாரம்மா அவரிடம் விஷயத்தைச் சொன்னார்.  அவர் உள்ளே வருவார் என்று நினைத்தேன், வரவில்லை. வேகமாக எங்கோ சென்று விட்டார். சற்று பொறுத்து நான்கு பையன்களை விரட்டிக் கொண்டு வந்தார். அவர்கள் தான் என் தம்பியை அடித்து, சைக்கிளையும் உடைத்திருக்கிறார்கள். இவன் ஏன் அவர்களுடன் போனான். அழுது கொண்டே அந்த பையன்கள்  சைக்கிளை எடுத்துக் கொண்டு போனார்கள். இரண்டு நாள் கழித்து ரிப்பேர் பண்ணி திருப்பி கொடுக்க வந்த பொழுது நாங்கள் கேட்டோம் என்ன நடந்தது என்று.  இவனும் அந்த கூட்டத்தில் சில நாட்கள் இருந்திருக்கிறான். ஆனால் சில நாட்களில் அவர்கள் செய்யும் அடாவடித்தனம் பிடிக்காமல் விலகி விட்டான்.  பாதியில் பள்ளியில் இருந்து ஊர் சுற்றப் போவார்களாம். அந்த நாளில் இளம் வயதினருக்கு மறுக்கப் பட்ட பீடி, சிகரெட் என்ற வழக்கங்கள். மட்டமான பேச்சு.  இன்னும் என்ன கெட்ட வழக்கங்களோ – தெரியாது.  நடுவில் இந்த மாமா ஒரு முறை பார்த்து இவனுக்கு புத்தி சொல்லி விலக்கி விட்டார். நான் யார் தெரியுமா?  போலீஸ்ல சொல்லி உள்ள தள்ளி விடுவேன் என்றாராம். அதன் பின் தான் நம்ம பையனுக்கு புத்தி வந்திருக்கிறது.  அதன் பின் பள்ளி இறுதி வகுப்பு பரீட்சை வந்தது. பரீட்சையில்  இவன் காப்பி அடிக்க விடவில்லை என்று கோபமாம். அது தான் காரணம். 

ஆனால் வெறு யாரோ பள்ளி தலைமை ஆசிரியரிடம் சொல்லி இருக்கின்றனர். இவன் பாடங்கள் எழுதியிருந்த நோட்டை கொடு என் பிடுங்கி இருக்கிறார்கள். கை கலப்பு, ஒருவருக் கொருவர் திட்டு, அடி.  பள்ளி தலைமை ஆசிரியரிடம் சொன்னது நான் இல்லை என்றாலும் கேட்காமல் அடித்திருக்கின்றனர். உண்மை காரணம் வேறு ஏதோ, இன்று வரை தெரியாது. பார்த்த சாரதி மாமாவுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவரைக் காணவே இல்லை. என் தம்பியும் அவர் ‘ யாரிடமும் சொல்லாதே நீயே சமாளி’  என்றாராம்.  ஒரு வாரம் சென்றிருக்கும். அவர் வந்தார்.  வேறு ஊருக்கு போகிறாராம். சமர்த்தா இரு குழந்தை என்றார் என்னிடம்.  எங்கிருந்தோ வந்தார், எங்களிடம் பரிவுடன் இருந்தார், எங்கேயோ  கிளம்பி போய் விட்டார்.  யாருக்கு யார்?

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக