பொருளடக்கத்திற்கு தாவுக

நவம்பர் 15, 2024

அறிவு.

ஊரெல்லாம் சுற்றி விட்டு ஊர் வந்து சேர்ந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  அப்பா பாகம் பிரித்து கொடுத்து விட்டு தான் தனியாக கிராமத்து வீட்டுக்குச் சென்று விட்டார். சின்னஞ்சிறு கிராமம். அப்பாவின் பெயருடன் ஒட்டிக் கொண்டிருந்த அந்த ஊரின் பெயரைத் தான் கேட்டிருக்கிறான்.  அவர் இருந்த இடம் சென்றான்.

என்னப்பா இது? ஒன்னும் இல்லடா , நீ எங்க போன, ஏதோ வெளி நாட்டில் செட்டிள் ஆகி விட்டான் என்றனர்.  இப்ப தான் என் நினைவு வந்ததா?  “வெளி நாடெல்லாம் இல்லை நம்ம நாட்டுக்குள்ளேயே தான் சுற்றிக் கொண்டிருந்தேன், எவ்வளவு இடங்கள். எத்தனை வித மனிதர்கள், மொழிகள், அவரவர்களுக்குன்னு ஒரு பண்பாடு, வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இந்த  நம்ம ஊர் னு பற்றுதல் அவசியம்னு புரிஞ்சிண்டேன்.  நிறைய போட்டோ எடுத்தேன்.”

உன் அண்ணன் களைப் பாத்தியா? பாத்தேன் அப்பா,  “நீ இருக்கியா இல்லையான்னு கூட தெரியல்ல. அதனால் நாங்க நாலு பேரும் இருப்பதை பிரித்து எடுத்துக் கொண்டோம்.  உனக்கு அப்பா தான் பாக்கி,  “வேண்டுமானால் அவரை எடுத்துக்கோ என்றான் ஒருவன், மற்றவர்கள் ஓஹோன்னு எதோ ஹாஸ்யம் போல சிரித்தார்கள்.

அப்பாவும் சிரித்தார். எவ்வளவு பிரவசனங்கள் பண்ணியிருப்பார். தர்மம், நீதின்னு கதையெல்லாம் சொல்வார். கூட்டமெல்லாம் மெய் மறந்து கேட்கும்.  பாகவதர் சொல்வதே அழகு என்று சால்வையெல்லாம் போத்தி மரியாதை பண்ணுவார்கள். அத மட்டுமாவது இவருக்கு போத்திக் கொள்ள கொடுத்தார்களா? அதுவும் இல்லையா.

ஏண்டா வருத்தப் படற – பாகவதமே இப்படி ஒரு சம்பவம் பத்தி சொல்றது. இவா அல்ப வீடு வாசல் தானே எடுத்துண்டா – அந்த ராஜாவுக்கு ஐந்து பையன்கள். ஒருவன் இளம் வயதிலேயே தவம் செய்யப் போகிறேன் என்று கிளம்பிப் போய் விட்டான்.  அதனால்  தந்தையே மற்றவர்களுக்கு   ராஜ்யத்தை பகிர்ந்து கொடுத்து விட்டார். பல நாட்களுக்குப் பின் வந்தான்.   உன்னைப் போல அவனும்  வெகு நாட்களுக்குப் பின் வந்து கேட்டான்.  அந்த சமயம் தான்  இந்த வாக்கியம் ‘நீ அப்பாவை எடுத்துக்கோ’ ன்னு சொன்னதாக பாகவத கதை. இந்த கதையை கேட்டிருந்தார்களோ என்னவோ, இந்த வாக்யம் மட்டும் நினைவு இருக்கு. பிழைச்சது போ. அந்த அப்பா என்ன சொன்னார் தெரியுமா? “அதோ பார், ஒரு சிலர் யாகம் பண்ண வந்திருக்கிறார்கள்  தெரிந்தும் தெரியாமல் ஏற்பாடுகள் செய்து விட்டார்கள். சரியான மந்திரம் நான் உனக்குச் சொல்லித் தரேன்.  அவர்களிடம் போய் சொல்லு, உனக்கென்று ஒரு வழி பிறக்கும்,” என்றார்.  மகனும் அவர்களிடம் போய் அவர்களுக்கு கூடவே இருந்து செய்ய வேண்டியவைகளைச் சொல்லிக் கொடுத்து, மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்து உதவியதில் மிகவும் மகிழ்ந்தனர்.  பதிலுக்கு ஏதாவது செய்ய விரும்பினர். “ நாங்கள் கந்தர்வர்கள். பூலோக வழக்கம் தெரியவில்லை.  இங்கிருந்து எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. அதனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. இந்த யாகத்தில் பயன்படுத்திய அனைத்து பொருள்களையும் நீ எடுத்துக் கொள்” 

அவர்கள் மறைந்த பிறகு, அந்த சிறுவன் யாக சாலை பொருட்களை மூட்டைக் கட்டிக் கொண்டிருந்த பொழுது ஒரு கரியவன் வந்தான்.  “இதெல்லாம் எனக்கு சொந்தம் என்றான்.” 

அவர்கள் எனக்கு கொடுத்தனரே என்றவனிடம் “இன்று  நேற்று என்று இல்லை. தக்ஷ யாகத்தின் முடிவில் ருத்ரனை சமாதானப் படுத்த மற்றவர்கள், யாக சேஷம்- யாகத்தில் மீந்தது உன்னுடையது என்று உறுதி அளித்தனர்.”

சிறுவன் கேட்டான்.  ‘ஏன் அவருக்கு யாகத்தில் பாகம் இருக்குமே”

வந்தவன்: “அதைத்தான் கொடுக்காமல் தக்ஷன் ஏமாற்றினான் என்று தானே அனர்த்தமே வந்தது. சண்டை, பின் ப்ரும்மா வந்து சமாதானம் செய்து யாகத்தில் மீந்ததை எடுத்துக் கொள். “ என்றார். நாங்கள் அந்த ருத்ரனின் அடியாட்கள்” என்றான்.

சிறுவன்  எடுத்ததை கீழே வைத்து விட்டு, “ இது தெரியாது. இந்த கந்தர்வர்கள் போகும் பொழுது சொன்னார்கள். நீ எடுத்துக் கொள், என்றனர். “ அதனால் என்ன? உங்கள் உரிமை என்றால் எடுத்துக் கொள்ளுங்கள், என்றான். 

அதன் பின், வந்தது சாக்ஷாத் ருத்ரனே என்றும், அவர் அந்த சிறுவனுக்கு வரம் கொடுத்தார் என்றும் கதை போகும். என்னால் என்ன வரம் கொடுக்க முடியும்?   இந்த வீடு தான் இருக்கு. கிராமம் இப்போ நிறைய மாறியிருக்கு. இது தந்தை வழியாக எனக்கு வந்தது. மிக இளம் வயதில் அக்கம் பக்கம் உன் அத்தைகள், மாமா என்று இருந்தனர். இது வரை அந்த க்ருஷ்ணன் கோவில் அர்ச்சகர் இருந்தார். வயதாகி விட்டது.  மகனுடன் இருக்க போய் விட்டார்.  உன் அண்ணன் மார்கள் பாங்கில் வேலை – நால்வருமாக அந்த வீட்டை அடுக்கு மாடிகளாக கட்டி அதில் இருக்கப் போகிறார்களாம்.  அந்த வரை அருகில் தானே இருப்பார்கள். கட்டி முடிக்கட்டும். அதுவரை இங்கு இருக்கலாம் என்று தான் வந்தேன். ஆனால் வந்த பின் எனக்கு இங்கு நன்றாக பொழுது போகிறது. அமைதியாக இருக்க முடிகிறது. பக்கத்து சிவன் கோவிலை புதுப்பித்து பெரிதாக பூஜைகள், யாகங்கள் நடக்கின்றன. அதனால் நானும் அதில் பங்கெடுத்துக் கொள்கிறேன். வேத பாராயணங்கள் செய்தால் எதோ சன்மானம் கிடைக்கும்.  சாப்பாட்டுக்கு போதும். வீடு  நமது. யாரும் போ என்று சொல்லப் போவதில்லை. விடு.  சரி, சரி, குளித்து விட்டு வா, சாப்பிட்ட பின் பேசலாம்.

அவரே சமைத்தார். இருவருமாக தரையில் அமர்ந்து சாப்பிடும் பொழுது, குடி இருந்தவர்  தன் அலமாரி, சாப்பாட்டு மேசை, எல்லாவற்றையும் எனக்காக வைத்து விட்டு தான் போனார்.  நீ சொல்லு, உன் அனுபவங்களை என்றார்.

நான் சென்னை போனது ஒரு காலேஜ்ல சேர, அதுக்கு வேணும்கற பணம், அங்கேயே தங்கி படிக்கன்னு என் சாமான்கள் எல்லத்தையும் எடுத்துண்டு போனேன். இது வரை உனக்குத் தெரியும். நான் போய் சேர பத்து நிமிஷம் லேட்டாயிடுத்து. அதனால் அந்த சீட்டை வேற யாருக்கோ கொடுத்துட்டா.  திரும்ப ரயில்வே ஸ்டேஷன் வந்தேனா, வருத்தமா இருந்தது. ஊருக்கு வந்து என்ன செய்ய? அந்த ஸ்டேஷன்ல ஒரு குடும்பம் பெங்களூரில் இருந்து வரா- பத்ரி நாத்- கேதார் போகப் போறதா சொன்னா. ஒரு தாத்தா, அவர் மகன் குடும்பம். இரண்டு பையங்கள், சின்னவன் என்னிடம் பேச்சு கொடுத்தான். அவனிடம் ஒரு விளையாட்டு அட்டை இருந்தது. விளையாட வரயா ன்னான்.  குழந்தை தனமான விளையாட்டு. ஆனால் அது எனக்கு யோசிக்க நேரம் கொடுத்தது.  அதுல ஜயிக்கிறது பிரமாதமில்ல, ஆனா ஏதோ கோடி காட்டின மாதிரி இருந்தது. நீ ஜயிப்படா ன்னு நீ சொல்ற  கேட்டது அப்பா.   

கூட்டம் ஜாஸ்தி இல்ல. நானும் டில்லி போனா என்ன? அவா கிட்ட பேச்சு கொடுத்தேன். தங்க இடம் ஏற்பாடு பண்ணிண்டு இருந்தாளாம். என் கதையை கேட்டுட்டு வா, எங்களோட பத்து நாள் யாத்திரை. டில்லியில் இருந்து பஸ் கிளம்பும். சாப்பாடு தங்க ஏற்பாடுகள் எல்லாம் சேர்த்து ஏதோ சொன்னார். போய் டிக்கெட் வாங்கிண்டு வந்தேன். அதே பெட்டியில் இடம் மாற்றிக் கொண்டு வந்து உட்கார்ந்தேன்.

புது டில்லி – அங்கிருந்து மறு நாள் கிளம்பி அவர்கள் கூடவே எல்லா இடங்களுக்கும் போய் விட்டு வந்தேன். பத்து நாள்- அதற்குள் நான் நிறைய தெரிந்து கொண்டு விட்டிருந்தேன்.  என்னைப் போல வேலை தேடி வருபவர்கள் கூடும் ஒரு இடம் விலாசம் கிடைத்தது.  டில்லியில் இறங்கியவுடன் கூட வந்தவர்களிடம் விடை பெற்றுக் கொண்டேன். இனி தனி ஆள். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு எங்கே போகப் போகிறேன். 

தமிழ் நாட்டில் இருந்து முதல் முறை தில்லி போகிறவர்களுக்கு அந்த சிற்றுண்டி சாலை தெரியும்.  அந்த இடம் நான் போய் சேர்ந்தது தெய்வச் செயல் தான். என்னைப் போல பலர் வந்து போகும் இடம்.  ஐந்து பேர் சேர்ந்து ஒரு வீட்டில் குடி இருந்தனர். வாடகையை பகிர்ந்து கொண்டிருந்தனர். ஒருவன் அந்த மாதக் கடைசியில் வேறு இடம் போகிறான் என்று தெரிந்தது. அந்த இடத்துக்கு நானும் போய் சேர்ந்தேன்.
புது தில்லி – எனக்கு புத்தம் புதிதாகத் தெரிந்தது.  அனேகமாக சம வயதினர், சமமான  வாழ்க்கை பிரச்னை. ஊரை விட்டு வந்தாயிற்று. காலை ஊன்றிக் கொள்ள வேண்டும். ஏதேதோ பரீக்ஷைகள் எழுதினேன். ஓரிடத்தில்  கிடைத்தும் விட்டது. அரசு பணி, ஆர்டர் கிடைத்தவுடன் போய் சேருவேன்.  குளிரும், வெய்யில் வாட்டும் என்றார்கள்.

எதுவானாலும் சரி.  எதுவோ நினத்தோம், எப்படியோ வாழ்க்கை அமைகிறது. உன் காலில் நிற்பது சந்தோஷம். ஆனால் ஊரை விட்டு போகிறாய்.  நல்ல படியாக இரு என்றார் அப்பா.

ஊரைச் சுற்றி ஆறு ஓடும் என்று தெரியும். அருகில் சென்று பார்த்த பொழுது தான் அது ஒருநாள் இரு கரைகளையும் தொட்டு ஓடிக் கொண்டிருந்த நதி, தற்சமயம் நடுவில் ஓடையாக மட்டுமே தெரிந்தது, முடிந்தவரை ஆக்கிரமித்து இருந்தார்கள். கம்பு நட்டு சின்னச் சின்ன கடைகள். கிடைத்த இடத்தில் சிலர் கீரை, வெள்ளிரி பயிரிட்டிருந்தனர். அவரவருக்கும் வாழ்க்கை பிரச்னை.  சில சிறுவர்கள் பாறையிருந்து நீரில் குதித்து நீந்திச் சென்று கரையை அடைந்து பின் திரும்ப பாறைக்கே வந்தனர். அவர்கள் இதில் முழு மனதுடன் ஈடுபட்டிருந்தனர்  என்பதை முக மலர்ச்சியே காட்டியது.

யாரோ புதியவன் என்பதால் ஒருவர் வந்து விசாரித்தார். நான் யார் என்பதையும், பல நாட்களுக்கு முன் இந்த நதி  முழுமையாக இருந்ததாக அப்பா சொன்னார். அவர் பார்த்தவர்.  தற்சமயம் ஏன் இப்படி இருக்கிறது என்றும் கேட்டேன். அவன் பதில் சொன்னான்.  ‘நான் இங்கு வந்ததில் இருந்து இப்படித் தாங்க இருக்கு. வெள்ளம் வரும், அல்லாத்தையும் அடிச்சித் தள்ளும்.  அப்ப பாக்கனும் – கல கலன்னு  ஓடற தண்ணிய பாக்கறதே சந்தோஷம். கொஞ்ச நாளில் வத்திடும். அது வரை காட்டுக்குள்ள இருப்போம்.  துணி மணி, கடைச் சாமான்களை மட்டும்  கொண்டு போவோம். பின்னால் திரும்பி வந்து உடைஞ்சதை, அடிச்சிட்டு போனதை சரி செஞ்சுக்குவோம். பளகிடுச்சுங்க. ‘  என்றான்.

வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு உதவி செய்யறதாக சொல்வாங்களே. இதற்குள் அவர்களைச் சுற்றி குளித்து  கொண்டிருந்த பையன்கள், தவிர மேலும் சிலர் வந்து கூடினர். நமுட்டுச் சிரிப்புடன் அவர்கள் தங்களுக்குள் எதோ சொல்லிக் கொள்வது போல தெரிந்தது. “நீங்க யாருங்க? ‘ என்றார் ஒருவர். ரிபோர்டரா? கட்சிக்காரனா?

ஏன்? என்றவன் ஆச்சர்யத்துடன் கேட்டேன். பிறகு என் தந்தையைப் பற்றிச் சொல்லி அவரை பார்க்க வந்த தாகச் சொன்னேன். அவர்கள் அவரை அறிந்திருந்தனர். எனவே பதில் சொன்னார்கள். ‘தருவாங்க. பத்து நாள் கழித்து ஒத்தர் வந்து எத்தனை பேர், யாருக்கு என்ன நஷ்டம்னு கேட்டுட்டு போவாரு. இன்னும் பத்து நாள் கழித்து பழைய துணிகளைக் கொண்டு வந்து போட்டு எடுத்துக்குங்க என்பாங்க. அதுக்குள்ள நாங்களே சமாளித்துக்குவம். துணிகளை தொட மாட்டோம். அதை வாங்கிக்க அடுத்த கிராமத்துல இருந்து வருவாங்க. அவங்களுக்கு இதை வச்சி கயிறு பண்ணத் தெரியும் கயிறாக்கி ஆடு மாடு கட்ட, இப்படி அவங்க தேவைக்கு ஏதோ செஞ்சுப்பாங்க.  இன்னம் பத்து நாள் கழிச்சு இரண்டு மூணு பேர் வருவாங்க.  பேர எழுதிகிட்டு ஏதோ பணம் கொடுப்பாங்க – அத வாங்கிக்குவம். ‘ இதற்குள் அவர்களில் சிலர் ஏனோ சிரித்தார்கள். என்ன, ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டேன். அதுக்கு பொறவு கைய நீட்டுவாங்க. அவ்வளவு தூரம் வந்தாங்கல்ல – செலவுக்கு பணம் வேணும்ன்னு?  கீரை, வெள்ளரிக்காய்  இப்படி மீதி இருக்கறத கேட்டு வாங்கிட்டு போவாங்க. இனி அடுத்த வெள்ளம் வடிஞ்ச பிறவு தான் பார்ப்போம்.

பின் வெள்ளம் வந்து நஷ்டமானத எப்படி சமாளிப்பீங்க. ? அது வரப் போவுதுன்னு எங்க பெரியவங்க சொல்லிப் போடுவாங்க. தண்ணி ஓட்டம் பாத்தே சொல்லிப் போடுவாங்க. நாங்களும் கூட இருந்து கத்துக் கிட்டோம். ஆனா அவுங்க சொல்றது என்னிக்கும் தப்பானதே இல்ல. உடனே காட்டுக்குள்ள மேடா  இருக்கற இடத்துக்கு போயிடுவோம்.

அறிவு எங்கெல்லாம் மறைந்து இருக்கிறது என்று வியந்தேன்.

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக