பொருளடக்கத்திற்கு தாவுக

ராகம்

திசெம்பர் 20, 2024

தர்மவதி ராகம். ஆனந்தமாக இருந்தது.  கோவிலின் உள்ளே நுழைந்ததும் பெரிய ரசிகர் கூட்டத்தையும் , மேடையில் பக்க வாத்யங்கள் வாசிப்பவர்களுமாக இருக்கும் என் நினைத்து உள்ளே நுழைந்தோம். தப்பாயிற்று.  அவர் மட்டுமே. தானே தம்பூராவை மீட்டிக் கோண்டிருந்தார். எதிரில் ஒரு தாளம் அறிவிக்கும் மின்சார கருவி இருந்தது.  அனாயாசமாக மூன்று ஸ்தாயிகளிலும் ஏறி இறங்கி வந்து கொண்டிருந்த ராக ஆலாபனை.  ப்ரும்மாண்டமான பழைய கோவில். பல நடைகள் கடந்து  சுவாமி சன்னிதி வந்து சேர்ந்தோம். ஒரு மூலையில் அவர் மட்டும் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார்.  அருகில் சென்று அமர்ந்தோம்.

25 ஆண்டுகளுக்கு முன், ஒரு உறவினரை சந்திக்க மகாராஷ்டிர மாநிலத்தில் தேவ்லாலி என்ற ஊருக்கு சென்றிருந்தோம். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் மேலும் சில இடங்களைக் காண சுற்றுலா என்று ஏற்பாடு செய்திருந்த பஸ்ஸில் கிளம்பினோம்.  தனியார் பஸ் இருபது பிரயாணிகள் மட்டுமே.  நாசிக்கிலிருந்து கிளம்பி தண்டகாரண்யம், ராமாயணத்தில் அறிந்திருந்த சில இடங்கள்.  சீரடி சாய்பாபா அடுத்து  கோதாவரி மேலும் சில நதிகள் உற்பத்தியாகும் மலை உச்சி –  இளைய வயதினர் வேகமாக நடந்து மலை மேல் ஏறி விட்டனர்.  தொட்டில் போல உட்கார வசதியாக ஒன்று.  அதில் ஏற்றிக் கொண்டு முன்னும் பின்னுமாக இருவர் ஒரு நபரை என்று தூக்கிக் கொண்டு சிலர் வந்தனர்.  உயரமான மலை  – எங்கள் இருவரையும் பார்த்து  பின்னாலேயே வந்தனர். ஏறிக் கொண்டால் தூக்கிக் கொண்டு போய் மலை உச்சியில் விடுவார்களாம். உச்சியில் சில தீர்த்தங்கள், பாண்டவர்கள் தங்கியிருந்த இடம் , – நதியின் உற்பத்தி ஸ்தானம் – அருகில் சில குகைக் கோயில்கள் நாங்கள் தரிசித்து விட்டு திரும்பும் வரை காத்திருந்து பின் திருப்பி கீழே கொண்டு வந்து விடுவார்கள். வேண்டாம் என்றால் கேட்கவில்லை. பின்னாலேயே வந்தனர். பணம் கொடுப்பது பெரிதில்லை. தூக்க செய்வது மனதுக்கு பிடிக்கவில்லை, என்று நாங்கள் மறுத்தோம்.  அவர்கள் தங்கள் கஷ்டத்தைச் சொன்னார்கள். வாரத்துக்கு ஒருநாள் தான் இவர்கள் பணி.  பலர் இந்த வேலைக்கு தயாராக வருவதால் போட்டியைக் குறைக்க இந்த ஏற்பாடு என்றார்கள். அன்றைக்கு இப்படி யாத்ரிகர்களை கொண்டு விட்டு அழைத்து வருவது  தான் அந்த வாரம் முழுவதற்கும் –  இருவரையும் இருவர் இருவராக தூக்கிச்  செல்வார்கள்.  பின்னாலேயே சொல்லிக் கொண்டே வந்தனர். ‘அம்மா ஏறிக் கொள்ளுங்கள் நான் கொண்டு விடுகிறேன், அப்பா முன்னால் ஏறிக் கொண்டு விட்டார். ‘ மறுக்கவும் முடியாமல் ஒத்துக் கொண்டோம். விடு விடு என்று அந்த மலை மேல் சுமையையும் தூக்கிக் கொண்டு விரைவில் கொண்டு சேர்த்தனர்.  மலைமேல் தெளிந்த நீருடன் ஐந்து குளங்கள்.  நதிகளின்  கோமுகம்,- பசுவின் முகம் அதிலிருந்து நீர் வருவது போல ஒரு சிலை –  சின்னஞ் சிறு குழாயில் வருவது போல நீர் வந்து கொண்டிருந்தது.  அதன் பின் அந்த நீர் போன இடமே தெரியவில்லை. அந்த மலையின் பெயர் ப்ரும்ம கிரி.  சஹயாத்ரி மலைத் தொடரின் ஒரு பகுதி. மலை பல பெருமைகள் உடையது.  மலையின் நடுவில் இருந்து கங்கையாக வெளி வருவாள் என்றனர். தக்ஷிண கங்கா என்றும் இந்த நதிக்கு பெயர். நீளமான நதி பல மாநிலங்களை வளமாக்கிக் கொண்டு கடந்து செல்லும். இந்த நதிக் கரை பல பெருமைகள் உடையது. ஸ்ரீ ராமரும், லக்ஷ்மணனும் இந்த கோதாவரி நதிக் கரையில் தங்கியிருந்தனர்.  மகரிஷி கௌதமர் இதன் கரையில் வசித்தார்.  இதன் ஐந்து சிகரங்களும் சிவபெருமானின் ஐந்து முகங்களாகவும் அவைகளில் இருந்து கோதாவரியின் உப நதிகள் பாய்ந்து வருவதாகவும் நம்பிக்கை. இந்த விவரங்கள் அந்த சுமை தூக்கிகளான உள்ளூர் வாசிகள் சொன்னது. மலையில் நுழைந்து வெளி வரும் இடத்தின் அருகில் சிறு சிவன் கோவில், சிவ லிங்கம் அருகில் கோதாவரி தாயாரின் சன்னிதி உள்ளன.

மற்ற நாட்களில் மனித நடமாட்டமே அதிகமாக இருக்காது. கிரி பிரதக்ஷிணம் செய்யும் யாத்ரீகர்கள் வந்தால் தான் இவர்களுக்கும் வரும்படி.  கீழிறங்கி வந்தவுடன், பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் விரைந்து இறங்கி மறைந்து விட்டனர்.

இன்னும் சிறிது தூரமே இறக்கம்.  படிகள் தான். மெதுவாக காலடி வைத்து ஜாக்கிரதையாகத் தான் இறங்கினோம். திடுமென ஒரு படியை விட்டு அடுத்ததில் கால் வைத்து தள்ளாடியதில்,  என்னவரின்  வலது கணுக்காலில் சுளுக்கு, நடக்கவே முடியவில்லை.  மரியாதையாக மற்றவனை தூக்கச் சொல்லாமல் தானே ஏறியிருந்தால் இப்படி ஆகியிருக்காதா, அல்லது மேலே ஏறியபின் இந்த சுளுக்கு வந்தால் எப்படி இறங்கி இருப்போம்,

மற்ற பயணிகள் வேறு ஒரு இடத்துக்கு போய் விட்டிருந்தனர். த்ரயம்பகேஸ்வர் சன்னிதியில் சந்திப்பதாக ஏற்பாடு.  மிகவும் சிரமத்துடன்  மீதி படிகளைக் கடந்து, கிடைத்த ஒரு வாகனத்தில் கோவில் வந்து சேர்ந்தோம். இங்கு தான் களைப்பையெல்லாம் பறக்கடிக்கும் தர்மவதி ராகத்தை ஒருவர் பாடிக் கொண்டிருந்தார்.  நாங்கள் இருவர் தான் ரசிகர்கள்.  மகா ராஷ்டிர மாநிலத்தில் தென்னாட்டு சங்கீதம் – அதுவும் சிறந்த வித்வானாகவும் தெரிந்தார்.   பாடுபவரும் அந்த ஊரைச் சேர்ந்தவர்  போல இல்லை.  தென்னாட்டில் இருந்து வந்து குடியேறியவராக இருக்கலாம்.  முடியும் வரை கேட்டுக் கொண்டிருந்தோம். மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.  எங்களைப் போல மற்றவர்கள் இசையை ரசிக்கவும் இல்லை, அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவும் இல்லை என்பது சற்று ஏமாற்றமாக இருந்தது. அவரை பாராட்டி விட்டு, விசாரித்தோம்.   பாட்டு பிடிக்கும். ஆனால் தொழில் அதுவே இல்லை.  கிடைத்த நேரத்தில் கேட்டும், பாடியும் தானாக வளர்த்துக் கொண்ட ஞானம் தான்.  அவரை பொறுத்தவரை சங்கீதம் தானே உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார். மற்றவர் கேட்டால் மகிழ்ச்சி.  பொழுது போக்காக நினைக்காமல் நிறைய சாகித்யங்களை கற்றுக்  கொண்டதாகச் சொன்னார்.  இதுவும் யோகம் தான். செய்வன திருந்தச் செய் – என்பது தானே யோகம்.

மேலும் தொடர்ந்தார். பாட வேண்டும்  போல இருந்தால் இடம், சமயம் பார்க்காமல் வாயில் வந்து விடுகிறது. மற்றவர்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காவிட்டாலும் பெருந்தன்மையாக பேசாமல் இருக்கலாம். ஆனால் நம் மனசாட்சி உறுத்துகிறதே.  நமக்கு பிடிக்காத சப்தம் நம்மால் எவ்வளவு நேரம்  பொறுத்துக் கொள்ள முடியும். அது தான் பகவான் சன்னிதியில் பாடினால் நம் மனதுக்கும் திருப்தி,யாருக்கும் இடைஞ்சலும் இல்லை.

நான் சொன்னேன்.  என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கும் இந்த வழக்கம் உண்டு.  தன் வீட்டில் காலை எழுந்தவுடன் பாடினால் கூட யாருக்கும் தடையாகத் தெரியாது. அதனால் தோன்றும் போது தானாக பால் பொங்குவது போல சர சரவென்று பாடி விடுவேன். எதோ கேட்ட பாட்டு அல்லது எப்படியோ நினைவுக்கு வந்த பழைய பாட்டு, அது மற்றவர்களுக்கு இடைஞ்சல் என்ற எண்ணமே வந்ததில்லை.

அவர் சொன்னார்.  மனதுள் ஒலி நாடா சுழலுவது போல தெரிந்த ராகங்கள், பாடல்கள் வந்து கொண்டே இருப்பது போல யோசியாமல் , முன் ஏற்பாடு இல்லாமல் நாதம் வெளி வர கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  நாத ப்ரும்மம் என்று சும்மாவா சொன்னார்கள்.   தாள வாத்தியங்கள் வாசிப்பவர்களை கவனித்து பார்த்தால் அவர்கள் விரல்கள் தாளம் போட்ட படியே இருக்கும். வெளி வேலைகள், பொறுப்புகள் இருந்த பொழுது இந்த தடுக்க முடியாத , தவிர்க்க முடியாத வெளிப்பாடு  கொஞ்சம் குறைந்திருந்தது.  ஏகாந்தமான இடங்களில் தான் மட்டுமே அனுபவிக்க கூடியது இசை மட்டுமே. தானே பேசிக் கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்? இசையானால் கூட தினசரி காதில் விழுந்தால், உள் உணர்வே ஏற்றுக் கொள்ளாது. வெளி உலக ஓசைகள் விதம் விதமாக தினம் கேட்கிறோமே, நம்மை பாதிக்காத வரை நாம் கேட்டாலும், நினைவில் நிற்பது இல்லை. இன்று நீங்கள் நின்று கேட்டதே இந்த இசைக்கு உங்கள் மன உணர்வுகள் பழகி விட்டிருக்கின்றன என்பதும், இதே அனுபவம் உங்களுக்கும் உள்ளது என்பதால் தானே. 

பல நாட்களுக்கும் முன் எங்கள் ஊரில் ஒருவர் நைட் டூட்டி முடிந்து திரும்பும் பொழுது mouth organ- என்ற வாத்யத்தில் அந்த நாளைய சினிமா பாட்டு, அல்லது பாரதியார் பாடல்களை வாசித்துக் கொண்டே சைக்கிள் பின்னால் உட்கார்ந்து கொண்டு போவார்.  இரவின் நிசப்தத்தில் மிக இனிமையாக இருக்கும். அவருக்கு இறைவன் அருள், கலையை மட்டும் கொடுத்து விட்டு வாழ்வின் கஷ்டங்களுக்கு சமன் செய்து விட்டார் போலும். இல்லாவிடில் மில் தொழிலாளி அந்த அளவு ரசிக்கும் படி வாசிக்க முடியுமா? 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக