சின்ன பையன்
நுண்ணியதிலும் நுண்ணியது
த்ரஸரேணு – ஸ்ரீமத் பாகவதத்தில் காலத்தின் நுண்ணிய அளவு இமை கொட்டும் நேரம் என்பது போல பரமாணு என்பதை குறிக்க இந்த த்ரஸ ரேணு என்ற பதத்தை சொல்லியிருக்கும். இதை தெளிவு படுத்த பாகவதம் சொல்லும் முறை – ஸூரிய வெளிச்சம் மூடியிருந்த கதவின் சிறு துவாரம் வழியாக வரும் ஸுரிய கிரணங்கள் நேர்க்கோடாகத் தெரியும் – அந்த ஒளிக் கற்றையில் அறையில் இருக்கும் தூசியின் துகள்கள் பறப்பது போலத் தெரியும். அந்த தூசி துகள் ஒன்றின் அளவு -த்ரஸரேணு அல்லது பரமாணு -நுண்ணிய பொருளிலும் நுண்ணியது. தற்கால விக்ஞானிகள் இதை அறியாமலா இருப்பார்கள். இதற்கும் மேல் பல தூரம் சென்று விட்ட விக்ஞானமும், அறிவு ஜீவிகளும் இன்னமும் எட்டாத பல செய்திகளை உலகில் கண்டு பிடித்து விட்டார்கள். இன்னமும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். பாகவதம் விவரித்துள்ள பல விஷயங்கள் இன்னமும் பாட திட்டங்களில் சேர்க்கப் படவுமில்லை. அவர்களை கண்டு சொன்ன ரிஷிகள் பெயர்கள் கூட ஏதோ அன்னிய மொழி போல பார்க்கப் படுகிறது என்பது தான் உண்மை நிலை.
சின்ன பையன் – அவனுக்கு ஒரு இயற் பெயர் உண்டு – சுந்தரேசன் – ஆனால் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை என்பதோடு, ஒரு கால் மற்றதை விட கால் அங்குலம் குறைவு. அதனால் வேகமாக ஓட முடியாது. அதனால் மற்ற மாணவர்களோடு ஒப்பிடும் பொழுது சிறியவன், அதனால் கூப்பிடு பெயரும் சின்ன பையா என்பது நிலைத்து விட்டது. அதையும் சுருக்கி, உடன் படிக்கும் சிறுவர்கள் எஸ்.பி என்றழைப்பர்.
அவன் அம்மா பாகவதம் கேட்கப் போவாள். ஒரு நாள் ஒரு பெரியவர் தமிழில் பாகவதம் மொழி பெயர்ப்பை கொடுத்திருந்தார். அதிலிருந்து விடாமல் தினமும் படிக்கிறாள். பெரிய புத்தகம். அம்மா, தரையில் அமர்ந்து, குட்டி ஸ்டூலில் பாகவத புத்தகத்துக்கு சந்தன குங்கும பொட்டு வைத்து மரியாதையுடன் வணங்கிய பின், குனிந்து படிப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். தான் படித்ததை அன்றன்று ஒரே ரசிகனான கடைக்குட்டி சின்னப் பையனிடம் சொல்வாள். இன்று கதையில்லை. வேறு ஏதோ பூகோள சம்பந்தமான விஷயங்கள். கடவுள் எப்படி படைத்தார் என்பது போல. இந்த விஷயமும் சொல்லி, கதவைச் சாத்தி வெளிச்சத்தில் தூசித் துகளையும் காட்டினாள். இந்த அளவு குப்பையோடு தான் நாம் இந்த வீட்டில் இருக்கிறோமா. தினமும் பெருக்கி துடைக்கிறாயே என்று கேட்டான் சின்ன பையன்.
ஆனால், அந்த சொல் பிடித்தது. த்ரஸ ரேணு – என்று ஜபித்துக் கொண்டே கை கம்பினால் ஒரு கல்லைத் தட்டியபடி கடைக்குச் சென்று கொண்டிருந்தான். அம்மா தான் அனுப்பினாள். அவள் புடவையை மடித்து iron பண்ணித் தரும் ஒருவர் – அவரிடம் கொடுத்து விட்டு நின்று வாங்கிக் கொண்டு வா என்று சொல்லியிருந்தாள்.
போகும் வழியில் ஒரு பள்ளம். எதற்காகவோ வெட்டி பாதியில் விடப்பட்ட ஆளுயர பள்ளம். அங்கிருந்து கூக்குரல் கேட்டது. எட்டிப் பார்த்தான். ஒரு சிறுவன், ஐந்து வயதிருக்கும் எப்படியோ விழுந்து வெளி வர முடியாமல் அழுது கொண்டிருக்கிறான். என்ன செய்வோம், திடுமென சில நாட்கள் முன் அம்மா சொன்ன கதை நினைவு வந்தது. ஒரு பெண் பாழும் கிணற்றில் விழுந்து விட்டிருந்தாள். அந்த தேசத்து அரசன் குதிரையில் வந்து கொண்டிருந்தவன், பயத்துடன் அலறும் அவள் குரலைக் கேட்டு தன் மேல் ஆடையை பள்ளத்தில் போட்டு, அதை அவள் பிடித்துக் கொள்ள மெள்ள தூக்கி வெளியே கை எட்டியவுடன் தூக்கி வெளிக் கொணர்ந்தான். அதே சாக்காக நீ தான் என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்தாள். வேறு வழியின்றி கல்யாணம் பண்ணிக் கொண்டான், கஷ்டப் பட்டான். அம்மா அப்படித்தானே சொன்னாள். கல்யாணம் பண்ணிண்டா கஷ்டம் ன்னா ஏன் பண்ணிக்கிறா. யாராவது வந்து பொண்ணுக்கு கல்யாணம்ன்னு சொன்னா, அம்மாவும் அப்படியா, ரொம்ப சந்தோஷம் ன்னு தானே சொல்லுவா.
சட்டென்று அம்மா புடவையை எடுத்து பள்ளத்தில் வீசினான். பையா, இதை கெட்டியாக பிடிச்சுக்கோ, நான் மேலே இருக்கேன்— யாராவது வந்தால் உதவிக்கு கூப்பிடலாம். சுற்றும் முற்றும் பார்தான். வகுப்பு மாணவர்கள் சிலர் வந்தனர். நானும் விழாமல் இந்த புடவையுடன் சிறுவனை இழுத்து மேலே கொண்டு வரும் வரை என் காலை அழுத்தி யாராவது கெட்டியாக பிடிச்சுக்கோங்கோ. அந்த சிறுவர்களும் உடனே புரிந்து கொண்டு அவன் கால்களை இறுக்கி பிடித்துக் கொண்டனர்.
சின்னப் பையன் மெள்ள மெள்ள புடைவையுடன் அந்த குண்டு சிறுவனை மேல் நோக்கி இழுத்தான் . குண்டு பையன், என்ன கனம், அதே கவனமாக இருந்தும் மனம் தன் போக்கில் யோசித்துக் கொண்டே இருந்தது. அந்த ராஜா ஏன் மாட்டேன்னு சொல்லல்ல. எப்படிச் சொல்வான். என்னைப் போலத் தான் இருந்திருப்பான். அதற்குள் கூட்டம் கூடியது. பெரியவர்கள், அவன் தாத்தா போன்ற ஒருவரும் வந்தார். அழுது விடுவார் போல இருந்தது. நாராயணா, நாராயணா என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார். இவர் ஏன் நாராயணா என்று சொல்கிறார். யமன் வந்த போது ஒருத்தர் சொன்னாராமே, நாராயணன் என்ற தன் மகனை பெயர் சொல்லி அழைத்தார், அதைக் கேட்டு அந்த கடவுள் நாராயணனின் ஆட்கள் வந்து விட்டார்களாம். எல்லாம் தெரிந்தவர்னு சொல்றா, அனா அவருக்கு. இந்த மனிதன் தன்னைக் கூப்பிடவில்லை, தன் பிள்ளையைக் கூப்பிடுகிறான் ன்னு தெரியாதா?
கீழே பார்த்தான். பள்ளம் இன்னமும் அதிகமாக தெரிந்தது. பாதாளம் போல. காலையில் பாதாளம்ன்னு யார் சொன்னா? யோசித்தான். அன்று காலை .. ஒரு பாட்டு பாதாளம்..இன்னும் என்னவோ – அது சிவன் பாட்டு இல்லையோ, இந்த தாத்தா நாரயணா – நாராயணா ன்னு சொல்லிண்டு இருக்காரே. பாவம்..
கீழே இருந்து சிறுவன் அழுவது கேட்டது. அழாதே, இதோ பார் நிறைய பேர் வந்துட்டோம். சின்னப் பையனுக்கு பெருமையாக இருந்தது. தான் செய்வது மிக வீரச் செயல் – சிறுவனை மீட்ட சின்னப் பையன் – நாளைக்கு டிவி நியூஸ்ல வரும்… அம்மா பாத்து சந்தோஷப் படுவாள். என்னிக்குமே திட்டினது இல்ல – ஆனா மத்த பசங்க எல்லாம், மார்க் நிறைய வாங்கினாலோ, ஸ்போர்ட்ஸ்ல ஜயித்தாலோ அவன் தன் உடற் குறையை நினைத்து ஏம்மா, எனக்கு மட்டும் இப்படி குட்டை உடம்பும், வளைந்த காலும் – மத்தவங்க கேலி பண்ணற மாதிரின்னு அழுதா, யார் சொன்னா? நீ குட்டைன்னு, திடு திடுன்னு வளந்துடுவ பாரு என்பாள்.
இன்னும் கொஞ்சம் தான் – பொதுவாக சொன்னான். என் காலை நன்னா புடுச்சிக்கோங்கோ, இந்த புடவையையும், ஒருத்தர் வாங்கிக்கோங்கோ, நான் அவன் கை எட்டற மாதிரி இருக்கு, குனிஞ்சு கைய பிடிச்சு தூக்கிடறேன், அப்படியே அடி பணிந்து செய்வது போல நாலு கைகள் கால்களை தரையோடு இறுக்கி பிடிக்க, கையைப் பிடித்து கிழே விழுந்த பையனைத் தூக்கி மேல் வரை கொண்டு வந்தவன் தான் பின்னால் விழுந்தான். அந்த சமயம் ஸ்கூட்டரை கீழே போட்டு விட்டு ஓட்டமாக ஓடி வந்த ஒருவர், அவசரமாக அவனை தூக்கிக் கொண்டார். பின்னாலேயே அவர் மனைவி போல ஒருவள் அவளும் ஓடி வந்தாள் – இருவருமாக அந்த குண்டு பையனை கன்னத்தை திருப்பியும், உடம்பு பூரா பாட்டிருக்க ன்னு கேட்டும் பேசிக் கொண்டே சென்று விட்டனர். காப்பாற்றியவனை ஏன் என்று கூட கேட்கவில்லை.
சின்னப் பையனை விட அவன் சக மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம். திரும்பி தாங்க்ஸ் கூட சொல்லாமல் போறான் பாரு. நீ இனி எஸ் பி இல்லடா, பீ பீ ன்னு ஒத்தன் சொல்ல, அப்படின்னா பெரிய பையன் – பீபீ ன்ன நன்னா இல்ல நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பிக்கிற போது முதல்ல சொல்வா – அது வேண்டாம் – பையன்கள் யோசிக்கும் முன் தாத்தா அருகில் வந்தார். அம்மாவும் பறந்தடித்துக் கொண்டு வந்தாள். நேரமாகிறது என்று IRON தொழிலாளி கடைக்கு போய் இருக்கிறாள். விஷயம் தெரிந்து ஓடி வந்திருக்கிறாள். தாத்தா, உங்க பையனா என்றார். ஆமாம் – விக்கலிடையே அம்மா சொன்னாள். யாருமே எதிர்பார்க்கவில்லை – அந்த தாத்தா நெடுஞ்சான் கிடையாக அம்மா காலில் விழுந்தார். தாயே! உன் மகன் சாதாரணமானவன் அல்ல. என் குலத்தையே காத்தவன், பெத்தவள் நீ புண்யம் செய்தவள், எந்த கஷ்டமும் இல்லாமல் சௌபாக்யவதியாக இரு – இந்த ஏழையின் ஆசிகள் இவனும் நன்றாக இருப்பான். குழந்தை உன் உடம்பு தான் சின்னது, புத்தி விசாலமா இருக்கு. பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து நன்னா சம்பாதி, அம்மாவை நன்னா வச்சுக்கோ. தாமோதரன் இவன்.
புடவை கிழிந்து விட்டதோ என்று ஆராய்ந்து கொண்டிருந்தவனிடம் அந்த iron தொழிலாளி வந்தார். குடு தம்பி, நான் பாத்துக்கறேன். அவசியமானா சலவை பண்ணிட்டு பொட்டி போடறேன். சமயத்தில உனக்குத் தோணித்தே, இதை வச்சு குழியிருந்து தூக்கலாம்னு.சமத்து பையன் நீ.
போகும் வழியில் தமோதரன்னாரே, அப்படின்னா என்னம்மா? அம்மா சொன்னா, நன்னா தெரியாது, ஆனா தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை- ன்னு பாடுவா, சாமி பேரு தான்- கேட்டிருக்கேன். என்றாள்.
சக மாணவர்கள் அருகில் வந்தனர். டேய், நீ டிஎஸ்பி டா – தாமோதரன் சின்ன பையன். ஓவென்று இரைச்சலாக சிரித்தபடி வீடு வரை உடன் வந்தனர்.