பொருளடக்கத்திற்கு தாவுக

குடும்பஸ் சொத்து

பிப்ரவரி 6, 2025

குடும்பச் சொத்து

ஐயா, நீங்கள் அமெரிக்கா போகிறிர்களா? வாசு திகைத்தான். எதிரில் நின்றவர் அந்த ஹோட்டலில் வேலை செய்பவர் என்பது சீருடையில் தெரிந்தது.  ஆமாம். என்றான்,    SFO அருகிலா? தள்ளியா? ரொம்ப தள்ளி இல்லை. அந்த ஊர் கணக்கில் நாற்பது நிமிஷ கார் டிரைவ். ஏன் கேட்கிறீர்கள் ?

ஓரு சின்ன உதவி, என் மகன் கலிபோர்னியாவில் இருக்கிறான். அவன் விலாசம் இது.  அவனும் இப்படித்தான் சொன்னான். நாற்பது நிமிஷ டிரைவ் என்று. பல ஆண்டுகள் ஆகி விட்டன அவனைப் பார்த்து.  இந்த சின்ன சம்புடம்.   இதில் எங்கள் குல தெய்வ உருவங்கள் உள்ளன.  சாளகிராமம் என்போம். பூஜையில் வைத்து எங்கள் குடும்பத்தார் பரம்பரையாக பூஜை செய்து வந்தனர். அவனிடம் சேர்பிக்க வேண்டும். அவனுக்கு கடிதமும் எழுதி இருக்கிறேன். பார்த்திருக்கிறான். அதனால் புரிந்து கொள்வான். கையலக சிறு பெட்டகம். இதில் எதுவும் இரும்பு பொருளோ, கத்தி போன்ற பொருளோ இல்லையே என்றான், வாசு. திறந்து காட்டினார். அவனுக்கு கல் தான் தெரிந்தது. ஐந்து கற்கள்.  அவர் ஒவ்வொன்றையும் எடுத்து இது விஷ்ணு, இது கணபதி,இது சிவ பெருமான் என்று ஒவ்வொன்றாக விளக்கினார்.  எனக்கும் முழு விவரங்கள் தெரியாது. எதனால் இது சிவ பூஜையில் பயன்படுத்துகிறார்கள் என்பது. என் தந்தை 90 ஆண்டுகள் இருந்தார். அவரே பூஜை செய்தார்.  என் கைக்கு வந்த பின் விஸ்தாரமாக பூஜை செய்யாவிட்டாலும், தினமும் பூ போட்டு வணங்கி வருகிறேன். அவனும் செய்யட்டும். குல தனம். வேறு யாரிடமும் கொடுப்பதை விட அவன் கையில் இருக்கட்டும்.

யோசனையாக இருந்தாலும் அவர் சொன்னதில் கள்ளம் இல்லை. அவரே தொடர்ந்தார். நான் இந்திய கடல் படையில் இருந்து ஓய்வு பெற்றவன். . என் மனைவி இந்த ஊர் பள்ளி ஆசிரியை.  அடுத்த மாதம் ஓய்வு பெறுவாள். அதன் பின் நாங்கள் இருவருமாக இந்திய புண்ணிய தீர்த்த ஸ்தலங்களுக்கு யாத்திரை போகப் போகிறோம்.  அடுக்கு மாடி கட்டிடத்தில் ஒரு வீடு இருக்கிறது.  இந்த மூன்று ஆண்டுகளாக பொழுது போக இங்கு வேலை செய்கிறேன்.  என் பெயர் சங்கர லிங்கம்.  இரண்டு தலை முறைக்கு முன் என் முன்னோர் இங்கு வந்து விட்டனர்.  அதனால் ஆந்திர வாசியாக, தெலுங்கு தான் சரளமாக வருகிறது என்றார். வாசுவும் அதை அப்பொழுது தான் கவனித்தான். தமிழ் பேசினாலும், தெலுங்கு உச்சரிப்பு.

நீங்களே வரலாமே, இப்பொழுது நிறைய பெற்றோர் வந்திருக்கிறார்களே, என்றான்.  ஆமாம், மகனும் அழைத்தான். இந்த யாத்திரை முடிந்த பின் யோசிக்கிறோம். இதை வீட்டில் வைத்து விட்டு போவதை விட அவனிடம் சேர்ப்பித்தால்  நல்லது என்று தோன்றியது.  வாசு அவர் கொடுத்த விலாசத்தில் பெயரை படித்தான். ஹரிஹர ராம சுப்ரமணியம்.  ஏன் இவ்வளவு நீளப் பெயர். என்றான். என் தாத்தா வைத்த பெயர். அவரும் நீண்ட ஆயுளோடு இருந்தார். இது என் விலாசம்.  அவனை பார்க்க முடியவில்லை என்றால் அடுத்த முறை வரும் பொழுது திருப்பி கொண்டு வந்து விடுங்கள். நீங்கள் தான் ஆண்டுக்கு ஒரு முறை வருகிறீர்களே,  என்றார்.  வாசு உடலை சிலிர்த்துக் கொண்டான்.  அவர் கவனித்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக வருகிறான். பத்து பதினைந்து நாட்கள் வேலை.  முடிந்த பின்    திரும்பி விடுவான். ஹோட்டலைத் தவிர எங்குமே போய் ஊரைக் கூட பார்த்ததில்லை.

வாசுவின் அலுவலக வண்டி வந்து விட்டது. அந்த சிறு பொருளை, ஏதோ ஒரு ஸூட்கேஸில் திணித்தான். விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டான்.

திடுமென நினைவு வந்தது. மற்றவர் பொருள் எடுத்துச் செல்வதை தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு அறிவிப்பு.  பாதுகாப்பு என்ற பெயரில் இப்படி ஒரு முடிவு எடுத்தது யாரோ. என்ன செய்யலாம். இதைச் சொன்னால் அனாவசியமாக செக்கிங்க் என்ற பெயரில் நிறுத்துவார்கள். மறதியாக ஒரு முறை காலில் வெடிப்பு வந்தால் தடவிக் கொள்ள  கொண்டு வந்த ஒரு வாசிலைன் பாட்டில், அதை கொண்டு போகக் கூடாது என்று செக்கிங்க் செய்கிற இடத்தில் நிற்க  வேண்டி வந்தது.  தூக்கிப் போட்டு விட்டு இவர்களை அனுமதித்து விட்டார்கள். இருந்தாலும் ஒரு நிமிட தலை குனிவு- எதற்கு?  மறுத்து விடலாமா? மிகச் சிறிய பொருள் தான்- கல் லென்று நான் நினைத்தது அவர் கடவுள் என்கிறார்.  திரும்பவும் திறந்து பார்த்தான். அந்த விமான நிலையத்திலேயே விட்டு விட்டு போய் விடலாமா? அது வேற – நிஜமாகவே வெடி கிடி என்று இருந்தால் அகப்பட்டுக் கொள்வோம். திரும்பவும் பையில் போட்டான். 

ஆனது ஆச்சு. கடவுளே காப்பாத்து என்று வேண்டிக் கொண்டான்.  சில நாட்கள் முன்பு யாரோ பாடியதைக் கேட்டிருந்தான்.  ‘ப்ரோசேவா ரெவரு- நின்னு வினா ‘  தெரிந்தவன் போல அடிக்கடி ஹைதராபாத் வர நேர்ந்ததால் கற்றுக் கொண்ட சிறிது தெலுங்கு மொழி- அது புரிந்தது.  பாடியவர் குரலும், பாடிய விதமும் பிடித்து போக பாட்டை ரசித்ததோடு  மனைவியிடம் பெருமையாக சொல்லிக் கொண்டான். தியாகராஜர் தெலுங்கில் பாடிய பாட்டு.  நமக்கெல்லாம் தெலுங்கு தெரியாமலே பாடிக் கொண்டிருக்கிறோம் இதன் அர்த்தம் தெரியுமா?   ரகு பதே! நீ யில்லா விட்டால் யார் என்னை காப்பாற்றுவார்கள்?

அருகில் இருந்த மகன் கேட்டான். எதுக்கு காப்பாத்தனும்? ஏதோ கஷ்டம் போல இருக்கு.  யார் காப்பாத்துவா- ரகுபதி.  ரகுபதி ஹூ?   அவர் தான் கடவுள் .  எப்படி வருவா?  – மகன் கேட்டான். பதில் சொல்லத் தெரியவில்லை.   அதற்குள் அவன் சினேகிதன் விளையாட அழைக்கவும் ஓடி விட்டான்.   கடவுளே அல்ப அறிவு, பெருமைப் பட்டது தப்பா? ரகுபதே! காப்பாத்து. 

அவன் முறை வந்தது. தன் ஸூட் கேசை எடுத்து அதன் இடத்தில் வைத்து விட்டு பாஸ் போர்ட் மற்றும் தேவையானவைகளைக் கொடுத்து அதற்கான சீட்டும் வாங்கிக் கொண்டு நகர்ந்தான்.  செக்கிங்க் முடிந்தது விட்டது.  அட டா? சொல்லி இருக்கலாமோ –  என்றைக்குமே இப்படி மனப் பூர்வமாக ராம ராம என்று சொன்னதில்லை. அதே ஜபம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.  ஆபீஸ் செலவு, மேல் வகுப்பு ஆசனம்  நிம்மதியாக இருக்க விடவில்லை. அனாவசிய பயம் என்று உதற முடியவில்லை.  தூங்க முயன்றாலும் தூக்கம் வராமல் படுத்தியது. ஒரு பொழுதும் இப்படி இருந்தது இல்லை.  ஹைதராபாத்தில் பிர்லா மந்திர் இருக்கு ஸார், வேங்கடேஸ்வரா கோவில் என்று அங்கு பணி புரிபவர் அழைத்தார். அதற்கு நேரமே கிடைக்கவில்லை.  ஒரு முறை போய் இருக்கலாம். எதைத் தான் பார்த்தான். போன அன்றிலிருந்து இந்தியா, தாய்லாந்து, அமெரிக்கா என்று மாற்றி மாற்றி அந்தந்த ஊர் ஆபீஸ்களுடன் தொடர்பு கொண்டு பேசியே நேரம் கழிந்தது. இந்த தூக்கம் என் வரவில்லை. வழக்கமாக வந்தவுடன் தூங்கி விடுவேனே.   

நேர் வழி என்பதால் SFO  விமான நிலையம் வந்து  விமானம் நின்றது.  வெளியில் வர காத்திருக்கத் தேவையிருக்கவில்லை. அலுவலக சக அதிகாரி வந்தார் அழைத்துச் செல்ல.  வட இந்தியர். நல்ல சிவ பக்தர். அவரிடம் கேட்கலாம் என்று தோன்றியது. வீடு வரை கொண்டு செல்வானேன்  அவரிடம் அதைக் காட்டினான்.   அவரோ அதைக் கண்டதும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு வணங்கினார்.  எங்க ஸார் கிடைத்தது.  சாளகிராமம் இப்பல்லாம் கிடைக்கிறதே இல்லை. இன்னும் நிறையச் சொன்னார். எதுவும் மூளையில் ஏறவில்லை. எதற்காக எனக்கு இந்த  சந்தேகம் வரணும்?  கல் என்று நினைத்திருந்தால் கவலையே வந்திருக்காது. கடவுள் என நம்பியிருந்தால் மரியாதை தானே தோன்றியிருக்கும்.  வெடி மருந்து என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது.  இரவும் பகலும் இதே நினைவாக உள்ளூற பயந்தேனே.  அதான் ப்ரொசேவாரெவரு, ரகுபதே,  புரிந்தது.  பெரிய ஆபத்து வந்தால் தான் என்று இல்லை.  நம்ம மனதே படுத்தும் பாடு, இதிலிருந்து முக்தி வேணும். இது தெரியும் வரை ஏதோ வெடி மருந்து தான் என்று என்னை நினைக்க வைத்ததும் அதே பகவான் தானே.  

தான் இந்தியா கிளம்பும் முன் வீட்டில் நடந்த சம்பாஷனை நினைவில் மோதியது. ரகுபதி ஹூ என்று மகன் கேட்டதுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம் என்ற சுய பச்சாதாபம் மேலோங்கியது. வேரை விட்டு எவ்வளவு தூரம் விலகி விட்டோம்? 

நேரில் போய் கொடுக்கலாம் என்று அவருடன் போனில் பேசிய போது முடிவு செய்தான்.  அந்த வார இறுதியில் தான் மட்டுமாக அவர் மகன் வீட்டைத் தேடிக் கொண்டு சென்றான்.  அவர் பெயரில் ஹரன் மட்டும் தான்  இருந்தது. ஹரி ஹர ராம சுப்ரமணியம்  என்று அழைத்த பொழுது தானே எஸ்,ஹரன்  என்று பதில் வந்த தும்  புரிந்து கொள்ள   முடிந்தது.

வீட்டில் நுழையும்  முன் வந்து விட்டதைச்  சொல்லி விட்டதால் கதவை திறந்து வெளியே வந்தவரைப் பார்த்த உடனேயே சங்கர லிங்கம் மகன் என்பது தெரிந்தது. அந்த அளவு தந்தையைப் போலவே தோற்றம்.  தான் யார் என்ன என்பதைச்  சொல்லி முடிக்கும் முன், அப்பாவை பார்த்தீர்களா? எப்படி இருக்கார் என்று குரல் கம்மக் கேட்டான்.  கண்களில் நீர் கோர்த்து விட்டிருந்தது.  பார்த்து வருட க் கணக்காக ஆகி விட்டது என்றவன், ஒரு நிமிஷம் என்று உள்ளே போய் மூன்றும் ஐந்தும் வயது இரு பையன்களை அழைத்து வந்தான். இரண்டும் கை கூப்பி நமஸ்தே சொல்லின.  வாசலில் வண்டி  வந்து விட்டது இவர்களை அனுப்பி விட்டு வருகிறேன் என்றான். 

வார கடைசி ஏது  ஸ்கூல் என நினைத்து முடிக்கும் முன் வந்தான் – இவர்கள் இருவரையும் பார்த்துக் கொள்ள ஒரு இந்திய பெண்மணி அருகில் இருக்கிறாள். அவளே அழைத்து போவாள்.  இன்றும் நாளையும் பாதி நாள். மற்ற நாட்கள் நாள் நான் கொண்டு விட்டு அழைத்து வருவேன் என்றான்.  ஏதோ கம்பெனி பெயர் சொல்லி, அதில் இருந்தேன், layoff – அதனால் வீட்டில் இருக்கிறேன்.  இவர்களின் அம்மாவுக்கு வங்கியில் வேலை. அதனால் காலம் செல்கிறது. நானும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன். அது வரை வீட்டு வேலை என்னுடையது.  அதனால் தான் அப்பா இதை அனுப்பி இருக்கிறார். இது வீட்டில் இருந்தாலே நன்மை என்று நினைப்பவர். 

இது சர்வ சாதாரணமாகி விட்டது. திடுமென  முன்னறிவிப்பின்றி  வேலையை விட்டு நீக்கி அனுப்பி  விடுகிறார்கள்.  வீடு வாங்கி, இதோ காலூன்றி விட்டோம் என்று இருப்பவர்கள் பெரும்பாலும் மாத சம்பளம் மட்டுமே என்று இருப்பவர்கள்.  தாத்தா காலத்து முன் திண்ணையும், முற்றமும், பின் புறத் தோட்டமும்  பிடிக்காமலா வந்தோம். மேலும் வசதி, மேலும் செல்வம் – பேராசை தானோ.   உலகம் முழுவதுமே இங்கு வந்து குவிகிறதே, எல்லோருமா வசதியானவர்கள்.  பத்து பேர்  மேலே வந்தால் அதைப் பார்த்து நாமும் அப்படி சம்பாதிப்போம் என்று நினைத்து வருபவர்கள்.  இதற்கு முடிவு என்ன? உள்ளூரில் மற்றவர்களும் வாழ வகை செய்து கொடுத்து தானும் வாழலாமே – யார் அப்படி துணிந்து இருக்கிறார்களோ அவர்கள்  தான் மேலானவர்கள்.  அதை விட அதிகம் ஊரில் இருப்பவர்கள் அமெரிக்கா  போனவன் தான் உயர்வு என்று பெண் கொடுப்பதிலிருந்து வீடு வாடகைக்கு கொடுப்பதிலிருந்து இந்த மோகத்தை வளர்த்து விட்டு இருக்கிறார்கள். ஏதோ இங்கு வந்தால் சுவர்க்கம் என ஒரு மாயத் தோற்றம்.  யாருக்குத் தெரியும், காலை எழுந்தவுடனே எந்த கம்பெனி எத்தனை பேர் வேலை இழக்கிறார்கள் என்று காதில் விழுவதே அதிகமாகி விட்டது.

சக்கரம் சுற்றும். காலம் மாறும். கீழே உள்ளவன் மேலே வருவான். இது போல layoff ஆனவனும் எவனும் ஊர் திரும்புவதில்லை. இதை விட்டால் மற்றொன்று.   அடுத்த சந்ததி எப்படி இருக்கப் போகிறதோ.  தூங்கி எழுந்தால் இந்த சிந்தனைகள் மறந்து போகப் போகிறது. திரும்பவும் அதே ஆபீஸ், வேலை.  இந்த நிலையில் ஹைதராபாத் போகும் பொழுது எல்லாம்  இங்கே வேலை கிடைக்க சிபாரிசு பண்ணச்  சொல்லி விண்ணப்பங்கள், நானும் வாங்கிக் கொண்டு வருகிறேன்.

வாசு, விசாரித்தான்.  உங்கள் அப்பா இதை வைத்து பூஜைகள் செய்யும் முறைகள் அறிவீர்கள்  என்றார்.  ஹரன் பதில் சொன்னான்.   தாத்தா செய்யும் பொழுது அருகில் இருந்து பார்த்தவன் என்பதால் செய்முறைகள் தெரியும்.  தாத்தாவை நினைத்தாலே   –  நல்ல உயரம்- ஆஜானுபாகு என்பார்களே – அப்படி இருப்பார். அவர் ஓய்ந்து இருந்து பார்த்ததே இல்லை.  விஸ்தாரமாக பூஜை செய்வார். கண்டிப்பான நியமங்கள். அவரிடம் பலரும் யோசனை கேட்க வருவார்கள். விவசாயிகளுக்கு விலை விவரங்கள், பருவ மாறுதல்கள், மழை காற்று என்பதைச் சொல்வார்.  கல்யாணம் , புது வீடு வாங்குவதிலிருந்து பல விஷயங்களுக்கு நல்ல நாள் பார்த்துச்  சொல்வார். தெருவில் நடந்தாலே அனைவரும் வணக்கம் சொல்வர். கோவில் விசேஷங்களில் முன் நிற்பார்.  எல்லா இடத்திலும் இருப்பார். பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் பெரிய பாத்திரத்தில் கிளறிக் கொடுப்பார்.  வாசல் பந்தக்கால் நடுவதிலிருந்து அவரைக் கேட்காமல் செய்ய மாட்டார்கள்.  தொண்ணூறு வயது வரை வாழ்ந்தவர் ஒரு நாள் கூட படுக்கவில்லை.  அதைப் பார்க்க நாம் என்ன செய்தோம், இங்கு வந்து யாருக்கு என்ன உதவி செய்கிறோம்,  எதற்கு வந்தோம் என்று கூட தோன்றுகிறது.

அந்த சமயம் ஒருவர் ஹரனைப் பார்க்க வந்தார்.  அவரையும் அறிமுகப் படுத்தினான். இவரும் என்னைப் போலத்தான்.  சற்று வயதானபின்  ஐம்பது வயதில் layoff  ஆனவர். எழுபது வரை வேலை செய்வேன் என்று சொன்னவர் தான். அதன் பின் சுதாகரித்துக் கொண்டு விட்டார். வீடு கடன் முடிந்து விட்டது. அதனால் அதிகம் கவலைப் பட தேவையில்லை.  தேவையான அனுமதிகள் வாங்கி குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் காப்பகம் -நடத்துகிறார்.  குழந்தைகள் பெரியவர்கள் வேறு மாகாணங்களில் படிக்கிறார்கள். இவரும் எங்களைப் போன்றவர்களின் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் வேலையைச் செய்கிறார்.  

அப்படியா, ரொம்ப சிரமமே என்றான் வாசு. கஷ்டம் என்று அருகில் போகாமலே இருந்தால் கஷ்டம் தான். எங்களுக்கு பொழுதும் போக வேண்டும், இந்த வயதுக்கு மேல் வேலை தேடவும் மனமில்லை.  இது ஒரு தேவை – வேறு கலை எதுவும் தெரியாது. ஆபீஸ் வேலை மட்டும் தான்  – என்று வாழ்க்கை ஓடி விட்டது.   உதவிக்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒரு டிரைவரும் வண்டியும் – அழைத்து வர –  மணிக்கணக்காக கட்டணம் என்பதால் அனாவசியமாக அதிக நேரம் குழந்தைகளை அழைத்து போக வராமல் இருக்க மாட்டார்கள். இப்படி ஆகும் என்று நினைத்தோமா-  குழந்தைகள் இருவரும் படித்து முடித்து ஒரு விதமாக அவர்கள் காலில் நிற்கத்  தெரிந்து விட்டால், ஊர் திரும்பலாம் என்று எண்ணம்.

வாசுவிற்கு  என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த அமெரிக்க மோகம் வெறும் காகிதப் பூ தான் போலும்.

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக