ஸ்வாமு பாட்டி
ஸ்வாமு பாட்டிக்கு நூறு வயசாகப் போறதாம். எல்லோரையும் பாக்கனுங்கறா இந்த மாசக் கடைசியில யாருக்கெல்லாம் வர முடியுமோ கண்டிப்பா வாங்கோ. உங்க சௌகரியத்தச் சொன்னா முன்னே பின்ன பாத்து கடைசி தம்பியின் பையனுக்கும் கல்யாணம் வக்கலாம். இல்லைன்னா அவன் இருக்கிற மும்பையில இடம் பார்த்து இப்பவே பதிவு செய்யனுமாம். உடனே பதில் போடுங்கோ .
பெரிய தாத்தா – ஸ்வாமு பாட்டியின் மூத்த பையன் எல்லோருக்கும் செய்தி அனுப்பி இருந்தார். அவரே எதிர் பார்த்திருக்க மாட்டார். எல்லோருமே வரேன்னு சொல்லிட்டா. கிராமத்து வீட்டை வெள்ளையடித்து எல்லோரும் இருக்க அடுத்து இருந்த வீட்டிலும் ஏற்பாடு பண்ணி பெரிய தாத்தா தயாரானார். நாங்களும் ராஜ்கோட்டிலிருந்து கிளம்பினோம்.
தமிழ் நாடு வந்ததே இல்லை. தமிழ் பேசினா புரியும் – படிக்கத் தெரியாது. சின்ன ஊர், தஞ்சாவூர் பக்கத்துல -னு மட்டும் தெரியும். ஆறு பேர் ஸ்வாமு பாட்டியின் குழந்தைகள், அவர்கள் பிள்ளை பெண்கள், அவர்களுக்கும் இரண்டோ மூணோ, குழந்தைகள் பாட்டியின் கொள்ளு பேரன்களே பதினெட்டு பேர். இந்த பதினெட்டு பேரும் whatsaspp ல் பேசிப்போம். பிறந்த நாள் வாழ்த்து, தீபாவளி , பொங்கல் வாழ்த்து என்று அனுப்பியதோடு சரி. இப்ப போனா நேரில பாக்கலாம். சந்தோஷமாக இருந்தது. என்னைப் போலவே மற்றவர்களும் நினைத்தார்கள் போலும் – இதோ கிராமம் வந்து சேர்ந்து விட்டோம்.
ஒவ்வொருவரும் தங்கள் பெயரைச் சொல்லி மற்றவர்களை அறிமுகப் படுத்திக் கொண்ட பின்,, அந்த வீட்டையும் தோட்டத்தையும் சுற்றி பார்த்து விட்டு தள்ளி நின்றபடி வேகமாக பிரவகித்து ஓடும் காவேரி நதியைப் பாரத்து விட்டு வந்து விட்டோம் . தனியாக யாரும் எங்கயும் போகக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. சரி இந்த விஸிட்டுக்கு கதா நாயகி பாட்டி ஸ்வாமு தானே , அவளைச் சுற்றி அமர்ந்தோம்.
இருபதிலிருந்து மூன்று வயது வரை குழந்தைகள் பாட்டியின் நான்காம் தலைமுறை – சில வாண்டுகள், சில அமைதியானவை. உயரம் குட்டை என்று வளர்த்தியில் வித்தியாசம். பாட்டி எங்கள் பெயர்களை மறக்காமல் சரியாக சொன்னாள். எந்த வகுப்பு படிக்கிறேன் சொல்லுங்கோ என்று ஆழம் பார்த்தவர்களிடம் தோன்றியதை சொன்னாள். முகம் மலர அனைவரையும் அருகில் வைத்து தொட்டு தடவி மகிழ்ந்தாள்.
என்ன பேர் பாட்டி, ஸ்வாமு – என ஒருவன் கேட்டான். சிவகாமி ன்னு பேர் தான் இப்படி ஆயிடுத்து. அப்படித்தான் உங்க பெரிய தாத்தாவ சுந்து சுந்து ன்னு கூப்பிட்டோமா – அவன் சினேகித பசங்க கேலி பண்ணினாங்க – மாத்துன்னு வந்து அழுதான். ஏன்? என்ன சொல்லி கேலி பண்றான்? சுந்து மந்து – ஒரு பாட்டு பாடத்தில வருது, ‘மந்தி சிந்தும் கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் – ன்னு வரும். அப்படின்னா என்ன கேலியா? மந்தி ன்னா – பெண் குரங்கு – அது முதல்ல பழத்தை எடுத்துக்குமாம் அது கீழ போடாதான்னு மத்த ஆண் குரங்குகள் கெஞ்சுமாம் – போதுமா – ன் னான் அழுதுண்டே. பாட்டி சொல்லி முடிக்கும் முன் ஓ வென்று சிரிப்பு – அப்புறம் பெரியப்பா என்ன செய்தார். உங்க கொள்ளு தாத்தா அவனை சுந்தா- ன்னு கூப்பிடலாம் – சுந்தரேசன் ன்னு பேர், அவன் மாமனார் மட்டும் தான் முழுசா கூப்பிடுவார்.
அதுக்குள்ள பெரிய கிளாஸ் போயிட்டான் – பாடம் படிக்கறதும் , எழுதறதும் சரியா இருந்தது. சுந்தாவே எல்லோருக்கும்.
உங்க வயசு என்ன பாட்டி? எப்ப பொறந்தேள். பாட்டி பிரபவ வருஷம். ஒரு மாமாங்கம் கும்மோணத்துல – விடாம எல்லோரும் போவோம், போய் விட்டு வந்த பின் பொறந்தேனாம். மாமாங்கம் ன்னா ? பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவ நடக்குமாம். எங்கள் கூட்டத்திலேயே ஒரு பையன் சொன்னான். , பிரபவ வருஷம் அது என்ன? பாட்டியே பதில் சொன்னாள். அப்பல்லாம் காலண்டர் கிடையாது, அறுபது வருஷம் பேர் – பிரபவ, விபவ ன்னு பாட்டி வரிசையா சொன்னா.
அடுத்த மாமாங்கம் நானும் போனேன். அங்க என்ன பாத்துட்டு தாத்தா ஆத்திலேந்து பொண்ணு கேட்டு வந்தாளாம். அங்கயே நிச்சயமாயித்து – ஆ, அவ்வளவு சீக்கிரமா- பண்ணண்டு வயசு தானே – ஒரு மாமாங்கம் தானே ஆனதா சொன்னேள். உடனே கல்யாணம் ஆகல்ல. மூணு வருஷம் கழித்து தான். என்ன காரணம் சொல்லட்டுமா – சிரிப்பேள். அங்க எங்க அம்மா வழி தாத்தா வீட்டில தானே இறங்கி இருந்தோம். யாரோ வந்தா. கூஜா தெரியுமா? வெண்கல கூஜா – கனமா இருக்கும் அதுல வழி நடைக்கு தண்ணி கொண்டு போவா. அதை வாசல் ரேழி- வாசல் கதவு திறந்து உள்ளே வர ஒரு நடை இருக்கும், அதை ரேழி ன்னு சொல்லுவா. ஒரு குட்டித் திண்ணை. அதன்மேல் அந்த கூஜா இருந்ததா. வந்தவர் என்னைப் பார்த்து சாடையில், வாயில் வெற்றிலை இருத்ததால், இந்த கூஜாவில் தண்ணீர் நிரப்பி கொண்டு வா என்றார்.
அழுக்கா, பல நாள் தேய்காத மாதிரி – வெண்கலம் தேய்த்து வைத்தா தங்கம் மாதிரி இருக்கும். எனக்கு பாக்க பாவமா இருந்தது. அதை எடுத்து கொண்டு போய் தேச்சு காவேரி தண்ணிய ரொப்பி வச்சேனா- பள பள ன்னு இருந்ததா அத பார்த்து அந்த மாமா அசந்துட்டார். இந்த பொண்ணு தான் எங்காத்து மாட்டுப் பொண்ணு – உங்க சௌகரியம் போல கல்யாணத்த வச்சுக்கலாம். யாருமே பையன் எங்கேன்னும் கேக்கல்ல – பெரியவா ஏதோ பேசிண்டா – சரின்னுட்டா.
அடுத்த மாமாங்கம் வந்த போது நான் போகல்ல- கல்யாணம் ஆயிடுத்து- தாத்தா பட்னத்துல இருந்தா – நான் கிராமத்துக்கு வந்திருந்தேன். ஏதோ அசௌகரியம் – வரல்ல. அதுக்கடுத்த மாமாங்கம் வரத்துக்குள்ள உங்க பெரிய தாத்தா தொடங்கி ஆறு குழந்தைகள். வரல்ல. அதுக்கடுத்த மாமாங்கம் உங்க பெரிய தாத்தா பூணலும், ஒரு பெண் கல்யாணமும். கும்பகோண வீட்டுல தான் நடந்தது. ஏன் பாட்டி மாமாங்கம் கணக்கு சொல்றேள் – பன்னிரண்டு பன்னிரண்டா கூட்டறது கஷ்டமா இருக்கு. அந்த கணக்கு தான் எனக்கு வரது. நா ஸ்கூலுக்கே போகல்லையே. ரொம்ப நாள் கழிச்சு கையெழுத்து போட வேணுமே அதற்காக கத்துண்டேன். தமிழ் படிப்பேன். நிறைய ஸ்லோகங்கள், தமிழ் பாட்டுகள் காத்துண்டேன். பாட்டு வாதத்தியார் சொல்வார. சொல்ல எழுதிப்போம். உங்க தாத்தா நன்னா பாடுவார். பெரிய குரல். எனக்கு கணக்கு ரொம்ப வரல்ல. கூட்டல் கழித்தல் மட்டும் தான். அதான் எனக்கும் கணக்கு வரமாட்டேங்கறது- ஒரு குரல் அங்கலாய்த்தது.
பட்னம் னா – ஒரு குழந்தை கேட்டது. அதுவா தஞ்சாவூர் ஜில்லா காரா இப்ப நீங்க சென்னைன்னு சொல்றத பட்னம்னு சொல்லுவா. அப்புறம் அடுத்தடுத்து கல்யாணம் – ஒவ்வொன்னும் ஒவ்வொரு ஊருக்கு போச்சு. கடை பெண் தன்பாத் ன்னு ஒரு ஊர் போனா. அந்த மாப்பிள்ளைக்கு அங்க வேலை. கொண்டு விட போயிட்டு காசி, கயா ன்னு நிறைய இடம் பாத்துட்டு வந்தோம். காலம் ஓடினதே தெரியல்ல உங்க தாத்தா ரிடையர் ஆயிட்டா. இந்த கிராமத்துக்கே வந்துட்டோம். .
எங்க அப்பாவின் விவசாய நிலம் இருந்தது. உங்க தாத்தா அதை பாத்துண்டார். வக்கீலா இருந்தவர் அவா கிட்டயே பேசி விவசாயம் பத்தி தெரிஞ்சுண்டா. மண் எடுத்துண்டு கோயமுத்தூர் காலேஜில போய் டெஸ்ட் பண்ணி எந்த நிலம் என்ன பயிருக்கு நல்லது, அதுக்கு என்ன உரம் போடணும் எல்லாம் தெரிஞ்சுண்டு வந்தா. எல்லாத்தையும் ஒரு நோட்டில எழுதி வரிசையா வச்சுருக்கார். தண்ணிய குறைவா செலவழிச்சா போரும். அப்புறமும் நிறைய புத்தகம் வாங்கி படித்து அவாளுக்கு சொல்லுவா. ஆனதால் மத்தவாளுக்கும் உதவியா, தேவையான விவரங்கள் சொல்லிக் கொடுத்து அந்த குடியானவா எல்லாம் ரொம்ப மரியாதையா நடந்துண்டா. அதோ இருக்கு பார். அலமாரி மாதிரி அது தான் குதிர். திரும்பிப் பார்த்த குழந்தைகள் கீழே பூட்டு போட்டிருக்கு, நடுவில தானே போடுவா என்று ஒன்று சொல்ல சிலர் எழுந்து அருகில் போய் பார்த்து விட்டு வந்தனர்.
பாட்டி சொன்னா, ஆமாம், அது மேல ஒரு கதவு இருக்கு பாரு அது வழியா மூட்டை மூட்டையாக கொண்டு வந்த நெல்லை அதுல போடுவா. வருஷத்துக்கு ஒரு தடவை. கீழ இருக்கே பூட்டு அதை திறந்தா சின்ன கதவு திறக்கும். அது வழியே வேணும் என்ற போது நெல்லை எடுத்து அதுக்கு ஒரு இடம் இருக்கு பெரிய மில்- அதுல போட்டு உமியை பிரிச்சு அரிசி மட்டுமா கொண்டு வருவா.
பாட்டி, நெல் – அப்படின்னா ? அதுவா, தேங்காய் உடைச்சா, உள்ள பருப்பு இருக்கும் மேல தோல் பாத்து இருக்க தானே. அது போல ஒவ்வொரு அரிசிக்கும் சட்டை போட்ட மாதிரி ஒரு மேல் தோல் இருக்கும். அது இருந்தா தான் அடுத்த செடி முளைக்கும். நமக்கு அரிசி மட்டும் தானே வேணும். அதனால் அதை மட்டும் எடுத்துடுவா. கடைசியா தீர்ந்து போன சமயம் குட்டி குழந்தைகளை மேல் கதவு வழியே உள்ளே போய் அடியில் இருக்கிற தானியங்களை ஒரு மட்டையால் தள்ளச் சொல்வோம். அதுக்குள்ள குடியானவன் அடுத்த வருட மூட்டைகளை கொண்டு வந்துடுவான். இப்படி சில வருஷங்கள் போச்சு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு தானே. குடியானவா எதுக்கோ கலகம் பண்ணினா. கண்ணுக்கு எட்டின வரை பச்சை பசேல் என்று இருந்த நிலம் காலியா கிடந்தது. வேறு வழியில்லாம் தாத்தா வித்துட்டா. ஆனா அந்த வருத்தம் அவர் உடம்புக்கு வந்து படுக்கையில் தள்ளித்து. சரியாகி எழுந்தார்.
அடுத்த பிரபவ வருஷம் வந்துடுத்து. ஆ , அப்படின்னா அறுபது வருஷம் ஆச்சு. பாட்டி, உங்களுக்கும் அறுபது வயசாயிடுத்து, அப்படித்தானே.
ஆமாம். அதுவரை தாத்தா விஸ்தாரமா பூஜை பண்ணுவா. நான் சமைச்சதை நைவேத்யம் பண்ணுவா. நானா பூஜை பண்ணல்ல. சதுர்த்தி விரதம் னு ஒரு பூஜை. அதை அறுபது வயதுக்கு மேல் ஆனவா, பெண்கள் செய்யலாம். அதை எடுத்துண்டேன். ஒவ்வொரு அமாவாசைக்கும் அப்புறம் வர நாலாம் நாள். அன்னிக்கு பிள்ளையார் பூஜை செய்யணும்- 108 தடவை ஆன பின் பெருசா, எல்லோரும் வந்து இரண்டு பேருமா, வாத்தியார்கள் வந்து ஹோமம் பண்ணி, அக்கம் பக்கம் நம்ம குடும்பத்து மனுஷா எல்லோருமா வந்து கல்யாணம் போல உத்சவமா பண்ண வேணும். அடுத்த நாள், ரிஷி பஞ்சமி ன்னு பெரு. அதுவும் விஸ்தாரமா பூஜை – ஒரு குடும்பத்துல ஒருவர் பண்ணினாலே விசேஷம். அதைச் செய்ய குடுத்து வச்சிருந்தது. அப்பவும் இப்படித்தான் உங்க தாத்தா எல்லோரும் வந்தா.
ஒரு வயசுக்கு மேல் தனியா இருக்க குழந்தைகள் விடவில்லை. ஒவ்வொத்தரும் ஒரு ஊர், அதனால் சுத்திண்டே இருந்தோம். உங்க கொள்ளு தாத்தா போன பின் என் கூடப் போறந்தவா இரண்டு பேர் , ஒரு அண்ணாவும், தங்கையும சேர்ந்து இந்த வீட்டில் இருக்கோம்.
சுந்தர காண்டம் ன்னு தெரியுமா? ராமாயணம். ஹனுமார் சீதையை தேடின்னு போவார். அவர் கண்ல படறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி சீதை நினைப்பா எதுக்கு இருக்கோம், இரண்டு மாசம்- அதுக்கு அப்புறம், உன்னையே பிரேக் பாஸ்ட் – காலை உணவா தின் னுடுவேனே ன்னு ராவண ராக்ஷஸன் சொல்லிட்டான் . அவன் வயத்துக்குள்ள போவானேன், நாமே நம்ம முடிவ பாத்துக்கலாம் – இப்படி நினைசசா. யார் அங்க விஷம் கொடுப்பா, இல்ல கத்தி மாதிரி ஏதாவது கொடுப்பா, – அதனால் தன் தலை மயிரையே மரத்துல கட்டி இதோ இருக்கிண்டு போயிடுவா ங்கற சமயத்தில ஹனுமான் பாத்தார். அடடா என்ன செய்யறதுன்னு ராம ராம ன்னு பலமா சொன்னார். யாரது இந்த அரக்கி கூட்டத்துல ராம சொல்றது ன்னு இறங்கி வந்தா. அதுக்குள்ள ஹனுமான் ராமர் கதையையே சொல்லி அவளை சமாதானப் படுத்தினார். அப்ப சீதை சொல்லுவா – மனுஷன் என்ன கஷ்டம் வந்தாலும் கலங்க கூடாது. உயிரோடு இருந்தால் ஒருநாள் நல்ல காலம்- ஆனந்தம்- வரும்’ அதனால் கஷ்டம்னு நினைக்காதே, இரண்டும் கலந்து தான் வரும். மேலே போன சக்கரம், கீழே வரும், கீழே இருக்கறது மேலே வந்துடும் னு பெரியவா சொல்லுவா. என் வாழ்க்கையில் நான் எதுவுமே குறையா நினைசசதில்லை. ஆனா வயசானப்பறம் சில சமயம் தோணும். எதுக்கு இருக்கோம். இப்ப உங்களை எல்லாம் பாக்கத்தான் ன்னு இப்ப தெரியறது. உங்க கொள்ளு தாத்தாவையே பாத்த மாதிரி இருக்கு. இது தான் ஆனந்தம் , எனக்கு ப்ரும்மானந்தம் , என்றாள். ஒவ்வொருவரையும் அணைத்து உசசி முகர்ந்து ஆசீர்வதித்தாள். எங்கள் எல்லோர் கண்ணிலும் ஜலம். என்ன சொல்றது தெரியல்ல, பேசாம நின்னோம்.