பொருளடக்கத்திற்கு தாவுக

கல்வி

மார்ச் 1, 2025

கல்வி

தமிழ் ஆசிரியருக்கு உடம்பு சரியா இல்லையாம், ஆஸ்பத்திரியில இருக்கார். அதனால் தமிழ் வகுப்பு  சமயம் நாங்க விளையாடப் போயிடுவோம், என்று மகன் சொன்னதைக் கேட்டு பார்வதி தன் கணவனிடம் கேட்டாள். நான் அவர் வர வரைக்கும் தமிழ் சொல்லித் தரேன்னும் சொல்லட்டுமா ? வேகாத வெய்யில்ல இந்த குழந்தைகள் விளையாடி சட்டையெல்லாம் அழுக்கு,  -என்றாள்.  உனக்கு என்ன தெரியும்? ஸ்கூல் குழந்தைகளை சமாளிக்கத் தெரியுமா? என்று எதிர் கேள்வி கேட்டார்.   ஏழாவது தானே, நம்ம பையனுக்கு சொல்லித் தர மாதிரி சொல்லித் தரேன். பத்தோ பதினைந்தோ குழந்தைகள் தான், என்றாள்.

புதிதாக முளைத்த தொழில் நகரம்.  பெரும் பாலும் தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்கள் ஆனதால், அந்த அரசு பள்ளியில்  தமிழாசிரியர் இருந்தார். மொத்தமே முப்பத்தைந்து குடும்பத்தினர் தமிழ் பேசுபவர்கள்.  எந்த விசேஷம் ஆனாலும் குடும்பத்தினர் ஒன்று கூடியது போல இருக்கும். அதனால் தனிமை இல்லை.   எனக்குத் தெரிந்த வரை – திருக்குறள், இருக்கு, உரை நடை பாடங்கள், அவன் பாட புஸ்தகத்தைப் பார்த்தேன். என்னால் முடியும்.

அரை மனதாக ஒத்துக் கொண்டவர், மறு நாள் தானே பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசியிருக்கிறார். ஸார், எங்களுக்கு அதிகாரம் இல்லையே. இவருக்கு மற்றவர்களைப் போல ஊதியம் கொடுக்க முடியாதே.  ஆனால் உங்கள் உதவியை மறுக்கவும் முடியவில்லை என்றவரிடம் இவர் சொன்னாராம்.   அவசியம் இல்லை.  அவர் சீக்கிரம் உடம்பு தேறி வந்து விடுவார் என்று எதிர் பார்ப்போம்.  என் மனைவி ஊரில் ஆசிரியராக இருந்தவள் தான்.  சைன்ஸ் பாடம் எடுத்தவள். மாணவர்களை சமாளிக்கத் தெரியும்-

வீட்டுக்கு வெளியில் என்னை விட்டுக் கொடுக்காமல்  இருப்பவர் தான், ஆனால் நானும் உத்யோகத்தில் இருந்தேன், இப்படி வீட்டு வேலையே முழு நேரமா செய்கிறேனே என்று நான் அங்கலாய்த்தால், அது தான் சிறந்த தொழில், குடும்பத் தலைவி   – என்பவர், இந்த அளவு பேசியிருக்கிறாரே.

சந்தோஷமாக  மறுநாள் கிளம்பினேன். எதிர்ப்பு மகனிடம் இருந்து வந்தது.  என் ப்ரெண்ட்ஸ் கேலி பண்ணுவாங்க – எதுக்குடா?  நாங்க பண்ரோமே,  ஆங்கில ஆசிரியர் தப்பு தப்பா படிப்பார்.   அவர் உச்சரிப்பு இந்த ஊர்ல பேசற மாதிரி இழுத்து இழுத்து பேசுவார். அவரை ஒன்னும் சொல்ல முடியாது. பிரம்பு வைத்திருப்பார். அடிச்சதில்லை, இருந்தாலும் பயம். அவர் மகனை அதே போல பேசி கிண்டல் பண்ணுவோம்.  மகள் வந்தாள். எதுக்கும்மா, என்றாள். அவளுக்கு காரணம் சொல்லத் தெரியவில்லை. ஆனால் காலையில்  சீக்கிரம் எழுப்பி விடுவேன்.  போட்டது போட்டபடி போக முடியாது.   சின்னவன் மகிழ்ந்தான்.

பள்ளி வளாகம் அந்த தொழிற்சாலை கட்டிக் கொடுத்தது.  விளையாட இடம்,  சுற்றிலும் மரங்கள், நிழலாக இருந்ததோடு, மாணவர்கள் அமர்ந்து படிக்க சிறு சிமெண்ட் மேடைகள்.  பாதி கம்பெனி, மீதி நாங்கள் பெற்றோர்கள் பங்கு தார்கள்.  எனவே சுத்தமாக பராமரிக்கப் பட்டது.

வகுப்பில் நுழைத்தவுடன் குழந்தைகள் வணக்கமோ, எழுந்து நிற்கவோ இல்லை.  ஏய், டண்டா பாணி அம்மா வந்திருக்காங்க  என்று ஒருவன் கத்தினான். என் மகன் தண்டபாணி தான் – குளிந்த நீராக – டண்டா பாணி என்று அழைக்கப் படுகிறான்.   உடன் வந்த தலைமை ஆசிரியர் என்னை அறிமுகப் படுத்தி விட்டு,  மாணவர்களை எழுந்து நின்று வணக்கம் சொல்லச் சொல்லி ஆணையிட்டார்.

ஆனாலும் குழந்தைகளுக்கு நம்பிக்கை வரவில்லை. நீங்க டீச்சரா? எங்க பெரியம்மா போல இருக்கீங்க.  எங்க சித்தி மாதிரி ன்னு இன்னொரு குரல்.  சரி அப்படித்தான் இருக்கட்டும். உங்கள் தமிழாசிரியருக்கு ரொம்ப உடம்பு முடியல்ல – ஆஸ்பத்திரியில் இருக்கிறார், தெரியும் தானே. அவரால் மூணு நாலு மாசம் எழுந்து நடமாட முடியாதாம். பெரிய ஆபரேஷன்.  பரீக்ஷை வரதே, அதனால் என்னை சொல்லிக் கொடுங்கோன்னு சொல்லியிருக்கிறார்.   சரி படிக்கலாமா?

ஒவ்வொருவரையும் அவர்கள் பெயரை கரும் பலகையில் எழுதச் சொன்னேன்.  தப்பும் தவறுமா எழுதியதை திருத்தினேன்.  பாஸ்கர்  எப்படி எழுதறது ன்னு ஒரு பையன் என்னையே கேட்டான்.  பாச்கர்  – ஆங்கிலம் போல முதல் எழுத்தை பெரிதாக எழுதியிருந்தான் –   அவனே எழுதியதை  அப்படியே படித்து  எல்லா மாணவர்களும் ஓ என்று சிரித்ததைக் கேட்டு தலைமை ஆசிரியர் எட்டிப் பார்த்தார்.    ஒரு வழியாக அன்று புதுப் பாடம் எதுவுமில்லாமல் அவர்களுடன் பேசியே கடந்தது.  

மறு நாள், கொஞ்சம் கெடு பிடியாக எடுத்த எடுப்பில் பாடம் ஆரம்பித்தேன்.  அந்த குழந்தைகள் ஏமாந்தது போல தோன்றியது.  அவர்களுக்கு சரியாக நான் பேசியதால் வந்த உரிமை.  சரி சொல்லுங்கள் ‘கற்க கசடற கற்க –’  திருவள்ளுவர் தெரியுமா?  தெரியும், தாடி வச்சுண்டு உட்கார்ந்து இருப்பார்.  படத்துல இருக்கார்.   

என்ன சொல்றார் தெரியுமா?  நன்னா படி, படிச்சதை புரிஞ்சுக்கோ, அப்புறம் அது போலவே நடக்கனும்.  ஏன் நடக்கனும்? எதிர் கேள்வி. அதற்கு விளக்கம் சொல்லி முடிக்கும் முன், ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு? படிக்கவே முடியல்ல என்றது ஒரு குரல்.   என்ன கஷ்டம்? தமிழ் தானே கசடற – தப்பு இல்லாம கத்துக்கனும்- கசடு தெரியுமா,  – தெரியும் என்றது ஒரு பெண் குரல் – நெய் காய்ச்சினா அடியில இருக்கும், அதுல சர்க்கரை., மாவு போட்டு  எங்களுக்கு எங்கம்மா குடுப்பா –  

சரி, சொல்லுங்கோ.  கவனமா படி, படிச்சதை நினைவு வச்சுக்கோ. அது போலவே நேர்மையாக, நல்லவனாக இரு – இதை உங்க வீட்டில் யாராவது சொன்னா எப்படி சொல்லுவா,

ஒரு பையன் எழுந்தான். எங்க தாத்தா மட்டும் தான் தமிழ் நியூஸ் படிப்பாங்க. அவர் எப்படி சொல்வார், ‘எலே!  நல்லா பாத்து படிச்சுக்க – பின்னால எனக்கு இந்த பத்திரிகையை படிச்சு காட்டனும், புரியுதா? எனக்கு  கண் மங்கலா ஆயிட்டுது, படிக்க முடியல்ல’

இன்னொரு பையன் எழுந்தான் – ‘அப்பா சொல்வாரு- அது என்னா?  திருவல்லுவர் தெரியாது, நாம போனோமே போன வருஷம் கன்யா குமாரி போயிட்டு போட்ல போய் பாக்கல்ல அவரு சொன்னது தான் ‘ அவ்வளவு தான் அவருக்குத் தெரியும்.

எங்க அப்பா இங்கிளீஷ்ல சொல்லிடுவாரு.  அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாது.

எனக்கு திக்கென்றது. இவ்வளவு தூரம் வந்து வேற்று மொழி பேசும் ஊரில், தாய் மொழி தெரிய வேண்டும் என்று நாங்கள் பெற்றோர் நினைத்தது.  இது வரை என்ன படிச்சீங்க, ஏழாவது வகுப்பு, ஐந்து ஆறு வகுப்புகளில் என்ன செய்தீர்கள்.  ஐந்தாவது தமிழ் டீச்சர் கைப் பை தான் மேசை மேல் இருக்கும்,  அவர் வகுப்பு வாசலில் நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருப்பாங்க.   சத்தம் போட்டால் வந்து அதட்டுவார். ஆறாவது இந்த ஸார் தான் –அதெப்படி முடியும்? வந்த உடனே போர்டுல் எழுதி விடுவார்.
க வரிசை. க, கா, கி இப்படி- நூறு தடவை எழுதச் சொல்லுவா அடுத்த நாள் ச வரிசை – அதனால் எல்லோரும் எழுதிக் கொண்டு இருப்போம்

சரி, விடுங்கள், இந்த பாடம் நான் படிக்கிறேன், திருப்பிச்  சொல்லனும், சரியா, படிக்கப் படிக்க அவர்கள் சொல்வதை கவனித்துக் கேட்டேன்.  அனேகமாக சரியாகச் சொன்னார்கள். முதலில் பார்த்து படிக்க கத்துக்கலாம்- நான் சொல்லாமல் நீங்களாக படியுங்கள் எனவும் போட்டி போட்டுக் கொண்டு நான்  நான் என்று கை தூக்கினார்கள்.  இளம் வயதில் உத்சாகத்தை ஏற்படுத்தி விட்டால் போதுமானது, தானே வளரும்.  அடுத்த சில நாட்களில் அவர்கள் என் வகுப்பை எதிர் நோக்கி காத்திருக்கலானார்கள்.  தமிழாசிரியர் நலமான பின்னும் அவரிடம் நானே  வேண்டிக் கொண்டேன்.   இந்த ஆண்டு முழு ஆண்டு தேர்வு வரை இவர்கள் என்னிடம் படிக்கட்டும்.  கொஞ்சம் பிடி பட்டு விட்டால், ஆர்வம் காரணமாக தாங்களே முயன்று படித்து விடுவார்கள்.

அவர் எளிதில் ஒத்துக் கொள்ளவில்லை. நான் போட்டியாக வந்து விட்டதாக நினைத்தாரோ.    வேறு வழியில்லை. தலையாசிரியரும். பெற்றோர்-ஆசிரியர் கமிட்டியில் என் கணவர் இருந்ததாலும் ஒத்துக் கொண்டார்.   அந்த ஆண்டு முடித்தபின் நான் விடை பெறும் பொழுது ஏழாம் வகுப்பு குழந்தைகள் கண் கலங்கினர். அவரவர் கை வேலை செய்த சிறிய கைகுட்டை, அவர்களுக்கு புதுமையாக  தெரிந்த ஏதோ ஒரு பொருள் அன்பளிப்பாக கொண்டு வந்து கொடுத்தனர். 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக