பொருளடக்கத்திற்கு தாவுக

மூவுலகமும் தனதே

மார்ச் 5, 2025

இத பாருங்கோ உங்க அம்மாவை, காரேஜிலிருந்து நாம் வேண்டாம்னு போட்ட ஒவ்வொரு சாமானா தூக்கிண்டு வந்து கிச்சன்ல வைக்கிறா என்றாள் என் மனைவி ரமா.   அம்மா இரண்டு நாள் முன் தான் என்னுடன் அழைத்து வந்திருந்தேன்.  பிரயாண அலுப்பு எனக்கு இன்னும் தீரவில்லை. இவள் தூங்கவே இல்லை.  இவள் வயதில் எப்படி நடமாடுகிறாள்?  ரமாவுக்கு  அவசரம்.   குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் முனைந்து இருந்தவள் அதற்கு மேல் பேசக் கூட அவளுக்கு நேரமில்லை.  அடுத்த சில நிமிஷங்களில் அவளும் கிளம்பி விட்டாள்.  இருவருமாக காரில் போகும் பொழுது சொல்லிக் கொண்டே வந்தாள்.

நேத்து ஒரு பித்தளை பாத்திரம்- வெண்கலமாம் அதைக் கொண்டு வந்தாள். திருவனந்தபுரம் போன பொழுது வாங்கிண்டு வந்தோம். தேச்சு வைச்சா தங்கம் போல  இருக்கும். பாயசம் வைப்போம். இப்ப இந்த கனத்தை அடுப்பில் வைச்சு எப்ப அது சூடு பிடிச்சு அரிசி வேகறது.  நன்னா தேச்சுத் தரேன். முன் அறையில் அலங்காரமா தண்ணி விட்டு தோட்டத்து பூவை போட்டு வை என்றாள்.  நான் முன் அறைக்குச் சென்று பார்த்தேன். அதுக்கு ஒரு ஸ்டூலைத் தேடி, அதன் மேல் இந்த பித்தளை இல்லை வெண்கலம்-  அதில் ஜலம் விட்டு  தோட்டத்து செம்பருத்திப் பூ பல வண்ணங்களில்  நிரப்பி இருந்தாள்.  அழகாத் தான் இருக்கு- ஆனா இரண்டு நாளில் பல்லை இளிக்கும் – யார் செய்வா? ஒவ்வொருவரும் ஓடிக் கொண்டே இருக்கும் வாழ்க்கை.  

மறு  நாள் ஒரு இரும்பு தோசைக் கல்லைக் கொண்டு வந்தாள். இதை ஸ்ரீ ரங்கத்தில் வாங்கினோம். இரண்டு கல், ஒன்னு உங்க அக்காவுக்கு, ஒன்னு நம்ம கிட்ட இருந்தது. இதுல தோசை வாத்தா எப்படி இருக்கும் தெரியுமா?  நான் ஒரு தடவ போன பொழுது உங்க அக்கா அதுல மருதாணியை அரைச்சு கொட்டி வச்சிருந்தா.  என்ன இது ? தோசைக் கல்லில எதையோ போடறயே, அவ சொல்றா- அதுல தோசை வாக்க முடியல்ல, கனம் – இந்த மருதாணிய இரும்பு பாத்திரத்தில போட்டு கொஞ்ச நாழி  வச்சா தலை முடி டை (கறுப்பாக்கும் திரவம்)  நன்னா ஆகும்.  எப்படியானால் என்ன? இதுக்காக நான் தேடிப் போய் வாங்கித் தானே ஆகனும்.  நீங்க கொடுத்த சாமான் எனக்கு வேணுங்கற மாதிரி உபயோகப் படுத்தறேனே – அப்படின்னா. அவளுக்கு என்ன தெரியும், நான் ஸ்ரீ ரங்கத்தில இருந்து உங்கப்பா வேண்டாம், கனமா இருக்குன்னு சொன்னதையும் கேட்காம, டில்லி வரை தூக்கிண்டு வந்தேன்.  முதல் தடவ நான் வரச்ச இங்க கொண்டு வந்தேன்.

அப்பொழுது தான் நினைவு வந்தது.  நான் படிச்சு முடிச்சு கிராஜுவேஷன் ன்னு  அப்பாவுடன் வந்தாள்.  இதோ விசா முடியப் போறது. ஒரு நடை வந்துட்டு போ, அல்லது பிடிச்சா அங்கயே இருக்கலாம்னு  சொன்னதற்கு சம்மதிக்கல்ல. வந்து உங்கள் எல்லோரையும் பாத்துட்டு திரும்ப கொண்டு விட்டுடு என்ற நிபந்தனையோடு வந்திருக்கிறாள்.  அப்பாவும் இல்ல ஏன் தனியா இருக்கனும் – ஏதோ காரணம் சொல்லுவாள். மாத்திக்க மாட்டா.

தினம் ஒரு சாமான், ஒரு விளக்கம். என் மனவிக்கு சொல்லக் கூட பொறுமையில்லை. ஏதேதோ சாமான்கள்  பல இடங்களும் யாத்திரை போன சமயம்  அந்தந்த ஊர்ல பிடிச்சத வாங்கி கொண்டு வருவார்கள்.  அப்பம் என்ற பலகாரம், எப்பவோ பயன் படும். அது எப்படி இருக்கும் என்பது கூட மறந்து போச்சு. அதைச் செய்ய குழிகளுடன் ஒரு பாத்திரம்.   கும்பகோணத்து மணி,  குஜராத்தின் கண்ணடி வைத்த சோபா உறைகள்… முதல் தடவை வந்த பொழுது என் கண்ணில் படாமல் இருவருமாக கொண்டு வந்திருக்கிறார்கள்.  இந்த வீடுகளில் இருவரும் வெளியில் போகும் சமயம் எதை பத்திரமாக வைத்திருக்கிறோம். அந்தந்த சமயம் தேவையானால் வாங்கிக் கொண்டு வருவோம் உபயோகம் தீர்ந்ததும் டிஸ்போஸ் பண்ணுவது தான் வழக்கமாகி விட்டது.  இது என்ன சைகாலஜி- மனிதர்களையே, உறவுகளையே வெட்டி முறித்துக் கொண்டு போகும் காலம். இது போல பண்டங்களுக்கு என்ன மதிப்பு.

ஒரு வாரம்- அதற்குள் வீட்டில் எது எங்கே என்று தெரிந்து கொண்டு விட்டாள். பொருள் கள் அதனதன் இடத்தில் இருந்தன.  மைக்ரோ வேவ் அப்பவே தெரியும் அதனால் சமையல் அவள் கைக்கு மாறியது.  எனக்கும் ரமாவுக்கும் பழகிய நாக்கு ருசித்தது. அடுத்த தலைமுறை என் குழந்தைகள் இதற்கு பழகவில்லையே. முரண்டு பிடித்தனர். தினம் தோசையா? வேண்டாம்.  வெல்லம் போட்டா? வேண்டாம்.  இரண்டு மாதம் ஓடி விட்டது. அவளா விடுவாள். சீடை முறுக்கு என்று ஆரம்பித்தாள். கை முறுக்கில் அவன் பெயர் பொறித்து காட்டினாள்.   விரலை திருப்பி பார்த்தான் பையன். ஏதாவது கையில் மிக்ஷின் வச்சுண்டு இருக்கேளா, எப்படி ஒரே அளவா வட்டம் வரது.  இருவருக்கும் அதிசயம் தாங்கவில்லை. மெள்ள மெள்ள  அந்த ருசி பிடித்துப் போக தினமும் பள்ளியிலிருந்து திரும்பியதும் பாட்டி, இன்னிக்கு என்ன புதுசு என்று ஒட்டிக் கொண்டனர்.  நாளடைவில் அதிரசம், அப்பம் – இவைகளில் வெல்லம் இருப்பதே தெரியாமல் ஒரு கை பார்த்தனர். பொருள் விளங்கா உருண்டை வரை இப்பொழுது அவர்களுக்கு பக்ஷணங்களின் பெயரும் ருசியும் அத்துபடி.  இரண்டு மாதம் ஓடி விட்டது. இதோ கிளம்பி விட்டாள்.  எங்களுடன் சேர்ந்து அவர்களும், பாட்டி இங்கேயே இரு என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

அம்மா தன் சாமான்களை கட்டி வைத்து விட்டாள். எப்படிம்மா அங்க போய் சமாளிப்பாய்.  யார் இருக்கா ஏன்னு கேக்க?

இருக்காளே. அடுத்த தெருவில இருந்தா கூட உனக்கு விஷயம் தெரிந்து தானே வர முடியும். ரொம்ப நாளா ஊரை விட்டு டில்லியிலே இருந்துட்டோமா,  உங்களுக்கு நம்ம ஊர் கூட தெரியாது.   இப்ப அனேகமா குழந்தைகள் படித்து வெளியூர்களுக்கு போயாச்சு.  சில பேர் வெளி நாடு, சில பேர் சென்னை பெங்களூர் னு  கிளம்பிட்டா.  அப்பா ரிடையரும் ஆயாச்சு.  சரின்னு நம்ம ஊருக்கு வந்துட்டோம்.   இங்கயும் எழெட்டு பேர் உறவுக்காரா, ஒரே இடத்துல ஜாகை பாத்துண்டோம்.  கல்யாணம், ஏதோ விசேஷம்னா கூப்பிட்டா வர மாதிரி இப்ப நமக்குள்ள யார் உடம்பு முடியாம போனாலும் மத்தவா உடனே வந்து உதவி பண்ணனும் ஒரு ஏற்பாடு பண்ணிண்டுட்டோம்.  அதனால் இந்த  சின்ன வட்டத்துக்குள்ள யார் என்ன மருந்து சாப்பிடறா,  உடம்பு வலியா, கண் காது டாக்டர்  கிட்ட போகனுமா , ஒத்தொருக்கொத்தர் உதவி பண்ணிக்கிறோம். அதனால் தனியா இல்ல.  மனுஷா தான் கூட இருக்கா. நவகிரஹம் மாதிரி திக்குக்கு ஒன்னா பாக்காம தினமும் விசாரிச்சுக்கிறோம்.  ஒரே மாதிரியான வயசு, தனிமை.  குழந்தைகள் எங்கெங்கோ இருக்கா.  ஒரு நட்பு, அனுசரனையான விசாரிப்பு,  ஒரு புரிதல் இவ்வளவு தானே வேணும்.   அவாவா வீடு வாசல், சமையல் சாப்பாடு, அதுல தலையிடறது இல்ல.  கவலைப் படாதே. ஓடற வரைக்கும் ஓடும்.

கிளம்பி விட்டாள்.  கல்வி கற்றவனுக்குச் சொன்னா, எங்க போனாலும் அவனுக்கு உறவுகள் வந்து சேரும். அவாளுக்கு  ஸ்வதேசோ புவன த்ரயம் –  தன் தேசம் தான் மூன்று உலகமும்.  இது போல யோசிக்கத் தெரிந்தவனும். தன்னைப் போலவே தானே இவனும் என்று நினைக்கத் தெரிந்தால் போதும். உறவுகள், நட்பு வட்டம் தானே வந்து சேரும்.  இதைத் தானே நம்ம வேதாந்தமும்  சொல்றது. யார் உற்றார், யார் அயலார், மனதில் அன்புடன் பார்க்கத் தெரிந்தவனுக்கு அனைவரும் உற்றாரே.

ரமா சொன்னாள். இருக்கட்டும் உங்களால் முடிந்த வரை அங்கு இருங்கள்.  சற்று உடம்பு முடியவில்லை என்றாலும்  இங்கு வந்து விடுங்கள். . நாங்களும் உங்க மனுஷா தானே.  அதே அனுசரனை, நட்பு, புரிதல் இங்கயும் இருக்கும்.   நீங்கள்  தானே கதை சொன்னேள்.  எங்களையும் உன் உறவினனாக பார்- னு யாரோ  சொன்னான்னு.  எனக்கு சந்தோஷமாக இருந்தது.   நன்றாக  மடக்கி விட்டாள்.  அம்மா மறுபடியும் வருவாள்.

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக