மரமும் மனிதனும்
மாதுள மரத்தில் ஒரே ஒரு பழம் மட்டும் உச்சாணிக் கிளையில் இருக்கிறது. மற்ற பழங்கள் பறிக்கப் பட்டோ, தானே விழுந்தோ மறைந்த நிலையில் பருவ மாறுதலால் இலைகள் உலர்ந்து விழுந்து அடுத்து துளிர்களும் வந்த நிலையில் இந்த பழம் மட்டும் ஏதோ சத்யத்துக்கு கட்டுப் பட்டது போல இன்னமும் மரத்தில் தங்கி இருக்கிறது. பல நாட்கள் நாங்கள் யாரும் கவனிக்கவில்லை. பசுமையான இலைகளுக்கு நடுவில் இது மட்டும் ஏன் தனித்து நிற்கிறது. ஆன படி ஆகட்டும். அதை யாரும் பறிக்க வேண்டாம் என்று தீர்மானித்தோம். ஒரு மாதம் ஆன பின்னும் அப்படியே இருக்கவும் எங்கள் கவனத்தை இழுத்தது.
மனிதன் மாதிரி தான் போலும். ஒரு சிலர் நூறு வயது வரை இருப்பார்களே, அது போல இதுவும் record break பண்ணப் போகிறது போலும். அசையும் அசையா பொருட்கள் யாவும் ஒரே விதமான பரமாணுக்களால் ஆனவையே என்று நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஒரு சமஸ்க்ருத கவி தனது கதா நாயகியை வர்ணிக்கிறார். உலகை படைத்தவன் சௌந்தர்யம், லாவண்யம் என்பவைகளுக்கான பரமாணுக்களை ஏராளமாக பயன் படுத்தி இந்த பெண்ணை படைத்து விட்டார் போலும் என்று வர்ணிக்கிறார்.
மரங்களுக்கும் உற்றார், பகைவர் என்று உண்டு என்று சுபாஷ் பாலேகர் என்ற புகழ் பெற்ற இயற்கை விவசாய விக்ஞானி. அவர் மாமரங்களை ஆராய்ந்து ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். மாமரத்துடன் நட்புடன் வளரக் கூடிய தாவரங்கள், நெல்லி, கொய்யா, இலந்தை , சீதா பழம், மாதுளை கருவேப்பிலை, வாழை, பாப்பாளி, இவை தவிர ஆமணக்கு, மிளகாய், இஞ்சி, சாமந்தி பூ, கொடியில் காய்க்கும் காற்கறிகள். துளசி, வெந்தயக் கீரை, புதினா போன்றவை. மாமரம் நடும் பொழுது மற்ற மரங்களை அதனுடன் நடுவது இல்லை. இந்த நட்பு வகை மரங்கள் சக ஜீவிகள். இவைகளின் பழுக்கும் காலங்களும் வெவ்வேறாக இருக்கும். இயற்கை சீற்றங்களை தாங்கும் சக்தி இவைகளுக்கு இருக்கும். இடைப் பயிராக இவைகளை நட்டால் சக ஜீவன், சமயத்தில் உதவியாக இருக்கும். தவிர ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு மரமோ, செடியோ விளைச்சல் கொடுக்கும். கட்டைகள் தேவையான சமயம் கிடைக்கும். மரத்தின் நிழலும் பயனுள்ளதாக இருப்பதோடு, இவைகளில் உள்ள சில மித்ர பூச்சிகள், மாமரத்தில் வரும் பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையவை. எனவே இயல்பாக பூச்சி ஒழிப்பு செயலை இவை செய்து விடும்.
அந்த அளவு மனிதனால் செய்ய முடியுமா? நட்பாக இருக்கலாம். சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளலாம். உடல் நிலை கெட்டால் என்ன செய்ய முடியும். வருத்தப் படுவதைத் தவிர வைத்யர் தான் துணை. ஆதரவாக பேசி, உடன் இருந்து கவனித்துக் கொள்ளலாம். இந்த ஒற்றை மாதுளம் பழத்திற்கும் தற்சமயம் நலம் விரும்பிகள் எவரும் அருகில் இல்லை போலும்.
குடும்ப நண்பர் ஒருவர் சில காலமாக நடக்க முடியாமல் வீல் சேரில் இருக்கிறார். மற்றபடி பேசுகிறார், செய்தி அனுப்புகிறார், ஊர் விஷயங்களை டிவியில் பார்த்து தெரிந்து கொள்கிறார். இந்த ஒரு குறை தான். தொண்ணூறு வயது வரை தானே கார் ஓட்டினார். யோகா பயிற்சி செய்வார். நன்றாக உடை உடுத்து, கோவில் உத்சவங்களுக்குச் செல்வார். இப்படி கால் பயன் இல்லாமல் போனதால் மனம் உடைந்து போய் விட்டார். இரு குடும்பத்துக்கும் இந்திய நாட்டினர் என்ற ஒற்றுமை தான். மொழி வேறு, செல்வ நிலை வேறு. வயது ஒரு காரணம் நட்பு வளர.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பத் தலைவர் இவரை விட இரண்டு வயதே இளையவர், இயற்கை எய்தினார். அந்த இழப்பு அவரை அதிகம் பாதித்து விட்டது. என்ன சமாதானம் நம்மால் சொல்ல முடியும். இறைவனை வேண்டுவதைத் தவிர.