ராஜ தரங்கிணி
ராஜ தரங்கினி என்ற பெயரின் பொருள்- கடற் கரையில் நின்று அலைகளைக் கண்டு ரசித்திருக்கிறோம். நடுக் கடலில் இருந்து ப்ரும்மாண்டமாக, ஓவென்ற இரைச்சலுடன் வரும் பெரிய அலைகள், மெள்ள மெள்ள கரை தட்டும் வரை வந்து,வேகம் குறைந்து கடைசியில் காணாமல் போவதை அலுக்காமல் நெடு நேரம் நின்று ரசித்திருக்கிறோம். வந்த அலை என்ன ஆனது? திரும்ப வந்த இடத்திற்கு போகவில்லை. கரை தட்டியபின் திரும்புவது போல தோற்றம். ஆனால் அத்துடன் அதன் இருப்பே இருப்பதில்லை. அதே போல பெரிய சாம்ராஜ்ஜியங்கள், அரச குலங்கள், பெயரும் புகழும் வாய்ந்தவை, சில நன்மையெ செய்தன, சில அக்கிரமமாக ஆட்சி செய்து தன் பிரஜைகளை துன்புறுத்தின. ஒரு சில தன் பிரஜைகளுக்கு நன்மையும் எதிரிகளுக்கு துன்பமும் விளைவித்தன. – அனைத்தும் காலமாகிய கரையில் ஒதுங்கிய பின் அதன் நிலை என்ன? சிறிய பெரிய ராஜ்யங்கள் எதுவானாலும் தங்கள் காலம் வரையே நினைக்கப்பட்டன. அவ்வாறே பிரவஹிக்கும் நதியின் அலையை ஒத்த அரசர்களின் வரிசை. நதி தன் மூல உத்பத்தி ஸ்தானத்திலிருந்து விலகி பல இடங்களையும் கடந்து செல்லும். வழியில் பலவிதமான நிலங்கள், மலைகள், சமவெளிகள், ஒவ்வொரு இடத்திலும் பெயர் வேறு பட்டாலும் , பொதுவான அந்த நதியின் பெயர் நிலைத்து நிற்கும். காவிரியின் கிளை நதி, அல்லது கங்கையின் கிளை நதி என்று பெயர் வருவது போல ஒவ்வொரு கால கட்டத்திலும் புதிதாக தோன்றும் ஒரு ராஜ வம்சம் ஒரு அலை மாத்திரமே. மனித சமூகத்தில் ஆளும் வர்கம் ராஜ என்ற அடைமொழியுடன் சொல்லப் படுவதால் வந்த பெயர். மனித வரலாற்றில் நிலைத்து நின்ற சில அரசர்கள் ஏதோ ஒரு சிறப்பான செயலைச் செய்து பொது மக்களுக்கு நினைவில் நிற்பவர்கள். அவர்களை வரிசைப் படுத்தி எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க காவியம் ராஜ தரங்கிணி. .
முதல் தரங்கம்: முதல் அலை
கல்பம் என்பது ஒரு கால அளவு. மிக அதிகமான காலம் அல்லது பொதுவாக நிரந்தரம் என்பதைக் குறிக்கும். கல்ப தரு – வேண்டியதைக் கொடுக்கும் ஒரு மரம். கல்ப தரு போல வழங்கக் கூடிய குணம் படைத்த ஸ்ரீ ஹரனுக்கு வணக்கம் தெரிவிக்கிறார் கவி. போகி என்ற பாம்புகளே அவருக்கு பூஷணம் அலங்காரம். அதன் தலையில் உள்ள மணிகளே விளக்குகள். முக்தி அளிக்கும் அந்த ஸ்ரீ ஹரனுக்கு நமஸ்காரம்.
அக்னியால் சூழப் பட்ட விரிசடை, . காதுகளில் குண்டலங்கள் ஒளி வீசி இருக்க, சமுத்திரத்தில் தோன்றிய -விஷம்- கழுத்தில் நிழல் போல தெரிய, அர்த்த நாரீஸ்வரனாக, மான் தோல் உடுத்து உள்ள தேவனின் புகழை வளர்க்கும் விதமாக தக்ஷிணா- வலது பக்கமும், வாம இடது பாகத்தில் தேவியுமாக எங்களுக்கு அருள் புரியட்டும். மற்றொரு பொருள்- வாம- இடது பாகத்தில் உறைபவள் , அவளே தக்ஷிணா- கருணையுள்ளவளாக இருக்கிறாள். .
யாரானாலும் வணங்கத் தக்கவர்களே. நல்ல கவியின் படைப்பு அமுத துளிகள் போல குணம் உடையதாக அமைய வேண்டும். அதன் மூலம் கவி பெறுவது புகழுடம்பு – தனக்கும் மற்றவர்களுக்கும் இடையே நிரந்தரமான பிணைப்பு. வேறு எவர் தான் காலத்தை வென்றவர்? கவி தனது படைப்பினால் காலத்தை வென்று விடுகிறான். நடந்ததைக் கண் முன் காட்டுவது போல அவன் காவியத்தை படிப்பவர் உணர்ந்து ரசிக்கிறார்கள் என்பதே அவன் பெரும் பயன்.
பிரஜாபதி என்ற ப்ரும்மாவுக்கு சமமானவன் கவி. ஏனெனில் அவனும் அழகிய படைத்தல் தொழிலைச் செய்கிறான். உலகில் உள்ள அனைத்து அனுபவங்களையும், உணர்வுகளையும் தன் எழுத்தில் கொண்டு வந்து விடுகிறான் அல்லவா? அவன் தானே இவைகளை உணர்ந்து அனுபவித்திராவிட்டால், எப்படி எழுதுவான். அது தான் அவனுக்கு திவ்ய த்ருஷ்டி- தெய்வீகமான கண் பார்வை உள்ளது என்பர். அவனுக்கு மனதில் ஒரு கண், அறிவுக் கண் திறந்து கொள்கிறதோ.
நீளமான கதை, அதை ரசிக்கும் படியாகவும் செய்ய வேண்டும். படிப்பவர்கள் விரும்பி படிக்கும் படி அழகிய சொற்களும், செய்திகளும் தர வேண்டும். ரசிக பெரு மக்கள் விரும்பியபடி என் எழுத்திலும் வஸ்து- கதா வஸ்து அமைய அருள் புரிய வேண்டும். கதா வஸ்து- ரசிக்கும் படியான ஒரு கருத்து.
எதை ரசிப்பார்கள்? குணவானான நாயகன். ராக துவேஷம் என்ற சபலங்கள் இல்லாதவன். அப்படி ஒரு கதா நாயகனை சொல்ல ஆரம்பித்துள்ள எனக்கு தேவி சரஸ்வதி சதா வழி காட்டி யாக விளங்க வேண்டும்.
இந்த கதை புதிதல்ல. எனக்கு முன் சிலர் எழுதியோ சொல்லியோ பிரபலமானவையே. எதற்காக அதையே மறுபடியும் சொல்ல வேணும் என்றால், எந்த பலனையும் உத்தேசித்து அல்ல – இதை மட்டும் வைத்து அறிவுடையோர் இதை மறுக்க கூடாது. அரசர்களின் அருகில் இருந்து கண்டவர்கள் பலர். ஒரு சில அரசர்கள் தங்கள் ஆட்சியில் செய்த நன்மைகள் பல காலமாக அவரை நினைவு படுத்துவதாக அமைந்து விடுவது உண்டு. காவியம் எழுதுபவர்களுக்கு அவை விஷய தானம் செய்கின்றன. அதனால் ஏதோ பழம் கதை என்று தள்ள வேண்டாம். கடந்த காலத்தில் நடந்த செயல்களின் வர்ணனை என்றாலும் என் முயற்சி காவியத்தின் அமைப்பிலும் அழகிலுமே ஈடுபட்டுள்ளது. விட்டுப் போன விவரங்களை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்..
முதல் பகுதியில் நான் சுருக்கமாக எனக்கு முன்னோடிகளான கவிகளை குறிப்பிடுகிறேன். சுவிரதன் என்பவரின் காவியம் இன்றளவும் வாய் மொழியாகவே பரவியுள்ளது. அவர் தான் அரசர்களின் கதை என்பதை முதன் முதலில் வெளிப்படுத்தினார். அவருடைய பாடல்களில் நாளடைவில் கலப்படங்கள், பிற்சேர்க்கைகள் வந்து விட்டன. அடுத்து க்ஷேமேந்திரன் என்பவரின் அரசர்களின் வம்சங்கள் பற்றிய குறிப்புகள். இது பிரபலமானாலும் தோஷம் இல்லை என உறுதியாக சொல்ல முடியவில்லை. புர்வசூரி என்பவரின் நூல் நேரில் கண்டதைச் சொல்வதாக உள்ளது. ராஜ கதை என்ற முன் சொன்ன சுவ்ரதன் என்பவரை அனுசரித்து எழுதப் பட்டுள்ளது.
நீலமுனி என்பவரின் நூல், எனக்கு அனுகூலமாக தெரிகிறது. இவர் நேரில் கண்டதையும், முன் இருந்த அரச சாஸனங்களில் இருந்தும், ஆங்காங்கு கிடைத்த பட்டயங்கள் – அரச ஆவணங்கள் – இவைகளில் இருந்தும், சாஸ்திரங்களை அனுசரித்தும், சாந்தமான உபதேசங்களுடனும் தங்கு தடையின்றி ஒரே பிரவாகமாக தன் கருத்தை சொல்லி இருக்கிறார். இது பதினொன்றாவது அலை வரை.
பன்னிரண்டாவது வேத சாஸ்திரங்களை மதிக்காமல் அல்லது அதிலிருந்து விலகி வந்த நமது பாரத தேசத்து அரசர்கள், அவர்களுக்குப் பின் நீல முனியின் மதத்தை அனுசரித்து கோ நந்தன் முதலான நால்வர் வந்தனர். . அவர்கள் இயற்றிய ஆயிரக் கணக்கான நூல்கள், அரச வம்சாவளி- அரச குலத் தோன்றல்கள், ப்ராங்க் மஹா வ்ரதி என்ற நூல் ஹேலா ராஜன் என்ற அந்தணரால் எழுதப் பட்டது. அவருடைய கருத்தை பத்ம மிஹரோ என்பவர் பார்த்து அசோகர் என்ற அரசரின் முந்தைய எட்டு லவன் முதலிய அரசர்களின் சரித்திரத்தை தன் நூலில் விளக்கி இருக்கிறார். 11/398.
பாண்டவர்களின் அபிமன்யுவிலிருந்து அசோகர் வரை ஐந்து சக்ரவர்த்திகள் இருந்திருக்கிறார்கள் என்பர். அவர்களில் ஐம்பத்திரண்டாவது தலை முறையில் இருந்து தான் நமக்கு விவரங்கள் கிடைத்துள்ளன. அதுவும் அரசர்களின் உல்லாசமான வாழ்வு, அவர்களின் தாழ்வுகள் இவைகளை சம்பாஷனைகளாக – நாடகங்களாக , சிறு கதைகளாக நாட்டு பாடல்களாக கிடைக்கின்றன. இவைகளின் நம்பகத் தன்மையை , உறுதியாக எப்படி சொல்வது? பலர் தங்கள் அனுபவம், கேள்விகளால் மாற்றியிருக்கலாம், சந்தர்பங்கள், கால கணக்குகள் கவிகளின் மனதுக்கு ஏற்பதாக இல்லை. நிரந்தரமில்லாத மனித வாழ்வில், தாங்களே யோசித்து உணர முடிந்தவர்கள் சாந்த ரஸம் மேலோங்கி இருப்பதையே சிறப்பாக சொல்வர். அதனால் இந்த என் முயற்சி, என் காவியத்தை சாந்த ரஸமே பிரதானமாக இருப்பதை ரசித்து மகிழுங்கள். சிறந்த அமுதம் போன்ற இதை பருகியும், காதுகளால் கேட்டும், ராஜதரங்கிணி என்ற இந்த நூலின் செய்தியை தெளிவாக உணருவீர்கள்.
முன்னொரு காலத்தில் கல்ப ஆரம்பத்தில் இருந்து சதீ என்ற பார்வதி தேவிக்கு சொந்தமான ஒரு சரஸ் இருந்தது. அதிலிருந்து கல்பங்கள் – பூ பாகம் தோன்றி ஹிமயமலையில் குக்ஷி- வயிற்றில் ஆறு மன்வந்தரங்கள் நீருடன் இருந்தது. ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒருவராக ஆறு மனு என்ற தலைவர்கள் இருந்தனர். அதன் பின் வைவஸ்வத மன்வந்தரம் வந்தது. அந்த சமயம் பிரஜா பதி- மனு வாக இருந்தவர் காஸ்யபர். படைப்புத் தொழிலைச் செய்ய தீர்மானித்த காஸ்யபர் த்ருஹினன், மரங்கள், உபேந்திரன், ருத்ரன் முதலானவர்களை படைத்து பூ உலகில் பிறப்பு என்ற செயலை துவக்கி வைத்தார். அந்த இடத்தில் இருந்த ஜலோத்பவா என்பவனை அழித்து, அந்த ஏரியின் மேலேயே காஶ்மீரம் என்ற ராஜ்யத்தை தோற்றுவித்தார். அதை நீல நாகா என்ற நாகர்களின் தலைவன் தன் வசம் வைத்திருந்தான். கடும் வெய்யிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள பயன் படுத்திக் கொண்டிருந்தான். நீல குண்டம் என்ற நீர் ஊற்று – அதில் பெருகி வந்த நீர் அவனுடைய பிரஜைகளுக்கு பயன்பட்டு வந்தது. நீருக்குள் இருந்த பூ பாகத்தை வெளிக் கொணர்ந்து நிர்மலமாக இருந்த அந்த சரஸ்- ஏரி அல்லது பரந்த பொய்கையில்– அதில் கஸ்மீரா -कश्मीरा -என்ற பூமி மண்டலத்தை கண்டனர். அதை வசிக்க ஏற்ற இடமாக நிறுவினார். விதஸ்தா என்று அழைக்கப் பட்ட அந்த நீர் ஊற்று பின்னால் ஜெலெம் என மாற்றப் பட்டது. அந்த இடம் சர்வ நாக என்ற அதிபதியான நீலன் என்பவனால் ஆளப் பட்டது என்ற காரணத்தால், அந்த இடத்தை விட்டு விலக சங்கன், பத்மன் என்ற நாக தலைவர்கள் சம்மதிக்கவில்லை. குகையை நோக்கி ஏராளமான நாகங்கள் வந்தன, அந்த ருசியான நீரை குடித்து மகிழ்ந்தன. ஏராளமான ரத்தினங்கள் பொக்கிஷமாக வைக்கப் பட்டிருந்த பூமி, எனவே அதை காவல் காத்தன. அது செல்வத்துக்கு அதிபதியான தனதனுடைய பிரதேசம் ஆனதால் தனம்- செல்வம் நிறைந்த இடம். அதைப் போலவே அந்த பூமியும் செல்வ செழிப்போடு விளங்கியது. கருடனிடம் பயந்து ஒளிந்து வாழ வந்த நாகங்கள். அவைகளின் பாதுகாப்புக்காக மறைவிடம் போல அமைந்த மலை, பின்னால் கட்டிய கைகளுடன் நிற்பது போல மலையின் பிராகாரங்கள் மலையைச் சுற்றி சுற்றி இருக்கும். அவைகள் பாதுகாப்பாக இருந்தன. அங்கு, புக்தி முக்தி என்ற பலன்களை அளிக்க கூடிய பகவான் உமாபதி காஷ்டம்- கட்டையாக (அஸ்வத்த மரமாக) ரூபத்தை எடுத்துக் கொண்டு தவ கோலத்தில் இருந்தார். தொட்டாலே பாபங்களை தீர்க்கும் புண்ய தீர்த்தங்கள் நிறைந்து இருந்த அந்த இடத்தில், சந்த்யா தேவி நீர் வற்றாமல் இருக்க மலையில் நீரை வர்ஷித்தாள்.
கண்களால் கண்டாலே, தரிசனமே, புண்ய பாபங்கள் என்ற முரண் பாடுகளைத் தீர்த்து விடும். அந்த இடத்தில் ஸ்வயம்பூ ஈசனுடைய கர்பத்தில் அக்னியாக வந்து அங்கு யாகம் செய்யும் முனிவர்களிடம் இருந்து ஹவிஸ் என்ற யாகத்தில் அளிக்கப் படும் பொருளை ஏற்றுக் கொள்வார். அந்த இடம் ஜ்வாலாபுஜ வனம் என்றே அழைக்கப் பட்டது. (ஜ்வால தீ ஜுவாலை அதுவே புஜங்களாக – கைகளாக உள்ள வனம்) பேடகிரி -भेड गिरि- யின் சிகரத்தில், கங்கை உத்பவம்- வெளிப்படும் வரை தேவி சரஸ்வதி தானே ஹம்ஸ ரூபமாக அந்த சரஸ்- பெரிய குளத்தில் தென் பட்டாளாம்.
ஸ்ரீ ஹரன்- பரமேஸ்வரன் வசிக்கும் இடத்தில் நந்தி தேவர் வெளி பிராகாரத்தில் வசிக்கலானார். வான வெளியில் சஞ்சரிக்கும் கந்தர்வர்கள் ஈசனுக்கு பூஜை செய்து அளிக்கும் சந்தனங்களும் , மற்ற வாசனை பொருட்களும், மலர்களும் அவர் மேலும் விழுந்து தரையில் இரையும். இன்றளவும் அந்த இடத்தில் சந்தனம் மணக்கும் என்று கவி சொல்கிறார்.
தேவி சரஸ்வதியைப் பார்த்து, தரங்கிணீ, மதுமதீ, வாணீ என்ற கவிகளால் வணங்கப் படும் உப தேவதைகள் அங்கு கூடவே வந்து விட்டன. சக்ரப்ருத்- மகா விஷ்ணு விஜயேசன், ஆதி கேசவன், ஈசான என அனைவரும் அந்த இடத்தின் அழகில் மயங்கி குடியேறவும் இட பற்றாக்குறை தோன்றி விட்டது என்று சொல்கிறார் கவி. ( பகவான் விஷ்ணுவின் புகழ் பெற்ற ஆலயம் Tsakdar- சக்ரதர, விஜயேச என்ற இடத்தில் பகவான் சங்கரரின் ஆலயம் உள்ளது. காஸ்மீர தேச வாசிகள் அதை விஜ்ப்ரோர் அல்லது பிஜ்பிஹர என்ற பெயரில் அழைக்கின்றனர்.
அங்கு சஸ்திரங்களுக்கு தேவையில்லை. மலர்கள் அளித்து செய்யப் படும் வணக்கமே சிறப்பு. மன அடக்கமும், தவமும் போதுமானது. அந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் பரலோகம் பற்றி கவலைப் படுவதில்லை. பரலோக பயம் என்பது அவர்கள் அறியாததே. அங்கு சூடான நீருடன் நீராடும் இடங்களும் உண்டு. பனிக் காலத்தில் அதன் அடியில் முதலைகளும் இராது. இடரின்றி அமிழ்ந்து குளிக்க வசதியாக இருக்கும். கடும் கோடையிலும் தந்தையிடம் (காஸ்யபர்) உள்ள கௌரவத்தால், ஸுரியனின் கிரணங்கள் அதிக வெப்பத்தை அடக்கிக் கொண்டு அங்குள்ளோரை சிரமப் படுத்தாமல் அதிக வெப்பமின்றி ஒளியை மட்டும் தருமாம். நீரில் பனித் துகள்கள் இருக்கும். குங்குமப்பூ ஒரு சிறப்பு. அது அழகிய வண்ணத்தில் தெரியும். அங்கு வித்யா- கல்வி, அறிவு உண்டு. உயர்ந்த மாளிகைகள், தேவ லோகத்திலும் துர்லபமான- கிடைக்காத திராக்ஷை என்ற பழ வகை ஏராளமாக விளையும்.
மூவுலகத்திலும் சிறப்பான ரத்தினங்கள் விளையும் மலை என்பதால் அதன் தலைவனான குபேரன் செல்வ செழிப்பு என்பதன் மறு பெயராக விளங்குகிறான். கௌரீ குரு- ஸ்ரீ ஹரனின் பெயருடன் ஒரு சிகரம், அதில் ஒரு பூ பிரதேசம். அங்கு கலி யுகம் வந்த பின் கௌரவ, கௌந்தேய என்ற அரச வம்சங்கள் சம காலத்தில் தோன்றின. 14/398
கோ நந்தன் முதல் ஐம்பத்து இரண்டு அரசர்களைப் பற்றி எதுவும் தெரியவில்லை. நிச்சயம் அந்த இடைப் பட்ட காலத்தில் அரசா0ண்டவர்களின் தவறுதலான நடவடிக்கைகளால், காஸ்யபீ பூமியில் எந்த அரசரும் அறிவு மிக்க கவிகளின் பார்வையில் சொல்லத் தகுந்த எந்த நற்செயலையும் செய்யவில்லை எனலாம். அரசர்கள் தங்கள் பராக்ரமத்தால் ஆட்சி செய்திருந்தால், பிரஜைகள் பயமின்றி இருந்திருப்பர். நினைவில் வைத்திருக்கும் படியான நற்செயல்கள் இல்லை. தவிரவும் கவிகளுக்கு அரச ஆதரவும் இல்லை. ஆதரவு இல்லாததால் கவிகள் எதுவும் எழுதவும் இல்லை. (46 ஸ்லோகம்)
யுதிஷ்டிரர் காலத்தில் (இது ஒரு வழக்கம். யாவரும் அறிந்த ஒரு செய்தியைச் சொல்லி மேலும் சொல்வது ஒரு மரபு) காஷ்மீரேந்திரனாக கோநந்தன் கங்கை ஒரு பக்கம் பெருகி வளமாக்க, கைலாசம் ஒரு திசையில் பாதுகாப்பாக இருக்க, அவைகளின் அருளால் தான் அடைந்த பதவி அந்த பிரதேசத்தின் அரசாட்சி, என உணர்ந்தான். தன் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிப்பது போல, ப்ரதாபியாக, திறமையாக ஆண்டான் . சேஷ என்ற நாக விஷத்தால் தாக்கப் பட்ட பூதேவி, கோநந்தன் என்ற இந்த அரசனிடம் பாதுகாப்பாக இருந்தாள் என்று கவிகளின் வர்ணனை.
ஜராசந்தன் உதவிக்கு அழைத்ததால், இந்த கோநந்தன், கம்சாரி- கம்சனின் எதிரி – ஸ்ரீ கிருஷ்ணனின் மதுரா நகரை முற்றுகையிட்டான். பெரும் படையுடன் சென்றான். காலிந்தி நதியின் கரையில் தன் சேனைகளை முகாமிட்டு வைத்து விட்டு சென்றான். ஆனால் தோற்று யாதவர்கள் சிரிக்கும் படியாயிற்று. சிறந்த வீரர்கள் என்ற அவர் படை வீரர்களும் பரிகசிக்கப் பட்டனர். அப்படியும் தன் சேனை வீரர்களை காப்பாற்ற நினைத்து கொடியில் கலப்பையை உடைய வீரனான பலராமனுடன் மோதினான். விடாமல் போரிட்டாலும், கடைசியில் விழுந்தான். யாதவர்கள் ஜய கோஷம் செய்தனர். காஸ்மீர ராஜா மண்ணை கவ்வினான். ஆயினும் வீரனுக்குரிய மரணம். யுத்த பூமியில் மரணம் சிறப்பாக சொல்லப் படுகிறது. நல்ல க்ஷத்திரியன்- அரச குலத்தவன் – வீர்களுக்கான தேவ லோகத்தை அடைந்து விட்டான் என்று பாராட்டு பெற்றான்.
ஸ்ரீமான் தாமோதரன் என்ற அவன் மகன் அந்த தேசத்தின் அரசனானான். வளமான நாடு கைக்கு வந்தும் தந்தையின் வதம் காரணமாக மனம் உடைந்து போனவனாக நிம்மதியின்றி இருந்தான். தன் மானம் உடைய வீரன். சிந்து தேசம் அதன் அருகில் காந்தார தேசத்தினர் கன்யா ஸ்வயம் வரத்தில் கலந்து கொள்ளச் சென்றவன், தானே யாதவர்களை வம்புக்கு இழுத்து, தன் கர்வத்தை காட்டினான். அந்த அடாவடிச் செயலால் சற்று பொறுத்தனர். வெகு தூரத்தில் இருந்து வந்தவன் என மதிப்பு கொடுத்தனர். பெரும் கூட்டமாக யாத்திரை சென்றது. கொடிகளுடன் குதிரை வீரர்களும், மற்றவர்களும் செல்ல வானமே புழுதியால் நிறைந்தது போல ஆயிற்று.
அங்கு சக்ரதர என்ற இடத்தில் தன் கர்வத்தால் உயிரிழந்தான். அவன் மனைவி கருவுற்றிருந்ததை அறிந்த யது குல பதி, ஸ்ரீ க்ருஷ்ணன், யசோவதி என்ற அந்த பெண்ணை அரசியாக முடி சூட்டி வைத்தார், இதனால் மனத் தாங்கல் அடைந்த மந்திரி வர்கங்கள், மற்றும் அரச அலுவலர்களிடம் ஸ்ரீக்ருஷ்ணன் சொன்னார். காஸ்மீரா தேவி பார்வதியின் தேசம். அங்கு அரசனாக வருபவன் சிவ பெருமானின் அருள் பெற்றவனாகவே இருக்க முடியும். துஷ்டனே ஆனாலும் அங்கு அரசனாக வருபவனை அலட்சியம் செய்யலாகாது. பெண் அரசியாவதா என்று நினைக்க வேண்டாம். அவளை பிரஜைகளுக்கு தாயாக பாருங்கள். அதன் பின் பிரசவ காலம் வந்ததும் குல கொழுந்தாக ஒரு மகனை யசோவதி பெற்றாள். அரச புரோஹிதர்கள் குழந்தைக்கு செய்ய வேண்டிய ஜாத கர்மாக்களைச் செய்து முப்பாட்டனார் கோநந்தன் பெயரை வைத்தனர், பிறவியிலேயே அந்த குழந்தை ஒருவள் பாலூட்டி வளர்க்கும் பெற்ற தாய், மற்றவள் அரச லக்ஷ்மி என்பவள் இருவரையும் அடைந்து விட்டான் என்று மகிழ்ந்தனர். எதிர்த்த மந்திரிகள் போட்டி போட்டுக் கொண்டு குழந்தையை காண வந்தவர்களுக்கு தானங்கள் செய்தனர். செயற்கையாக அதனிடம் அன்புடையவர்களாக காட்டிக் கொள்வதில் முனைந்தனர். பாலன் என்பதால் குரு பாண்டவர்கள் அவனை தங்கள் உதவிக்கு அழைக்கவில்லை.
அடுத்து லவன் என்பவன் அரசனாக வரும் வரை அரச பரம்பரை பற்றிய செய்திகள் மறதி என்ற மகா சமுத்திரத்தில் மூழ்கி விட்டன போலும். ஐம்பத்திரண்டு அரசர்கள் இடையில் இருந்ததாக ஊகிக்கிறார்கள்.
இந்த லவன் என்ற அரசன் பெரும் படையை வைத்திருந்தான். அந்த படையின் ஆரவாரமே பொது மக்களை அலறி ஓட வைத்ததாம். லோலோர் என்ற நகரை நிர்மாணித்தான். எட்டு கோடி கல்லால் ஆன வீடுகளை அதில் கட்டினான் என்பர். அந்தணர்கள் அறிஞர்களுக்கு அக்ரஹாரங்கள் என்ற வாழ்விடங்கள் அமைத்துக் கொடுத்தான். குசேசயன் என்ற அவன் மகன், அதன்பின் அவன் மகன் ப்ரதாப குசலன் என்பவன் முறையே அரச பதவியை வகித்தனர். காகேந்திரியன் என்ற அவன் மகன் நாக குலத்துக்கு யமனாக இருந்தான். எண்ணற்ற நாகங்களை அழித்தான். காகிகுன khagikhuna, Musa மூசா என்ற நகரங்களை நிர்மாணித்தான். அதன் பின் மிகச்சிறந்த வீரனும், நல்ல குணங்களும் உடைய அவன் மகன் சுரேந்திரன் என்பவன் பட்டத்துக்கு வந்தான். மென்மையாக பேசுவான் என்பதால் பிரஜைகளால் விரும்பப்பட்டான். Darat என்ற நகரத்துக்கு அருகில் Saura என்ற இடத்தில் தன் மாளிகையை கட்டிக் கொண்டான். அதற்கு நரேந்திர பவனம் என்று பெயரிட்டான். சந்ததி இன்றி இறந்தான்.
அவனுக்கு பின் அரச குலத்தவன் அல்லாத கோதாரா Godhara –என்பவனை, தானே தனக்கு பின் அரசனாக நியமித்து ராஜ்யத்தில் முடி ஸூட்டி விட்டிருந்தான். அவன் ஹஸ்திசாலா – என்ற நகரத்தை நிர்மாணித்தான் – அதில் அந்தணர்களை குடியேற்றினான். அதன் பின் அவன் மகன் சுவர்ணன் என்பவன், செல்வந்தனாக இருந்தான். சுவர்ணம்- தங்கம் தானமாக கொடுத்தான் என்பர். கேரள தேசத்தில் சுவர்ண மணி என்ற கால்வாயை வெட்டி நீர் பெருகச் செய்தான். அவன் மகன் ஜனகன் என்பவன். முதல் ஜனகன் போலவே பிரஜைகளுக்கு பல நன்மைகள் செய்தான். அந்தணர்களுக்கான விஹாரம் , ஜாலோரம் என்ற அக்ரஹாரங்களை நிர்மாணித்தான். சசீநரன் என்ற அவன் மகன் ச சீபதி எனப்படும் இந்திரனாகவே மதிக்கப் பட்டான். ஸ்ரீமான் – செல்வந்தனாகவும், குறையின்றி நல்லாட்சியை அளித்தான் . சசினாரனுடன் அந்த வம்சமும் முடிந்தது.
அதன் பின் சகுனியின் சகோதரியின் மகன் சில தலைமுறைகளுக்குப் பின் வந்த ஒரு அரசன், அசோகன் என்ற பெயருடன் சத்ய சந்தனாக, வளம் மிகுந்த பூமியை நியாயமாக ஆண்டான். புத்த/ஜைன (இரண்டுமே ஜின என்று குறிப்பிடப்படுகிறது) மதத்தை தழுவியவன். சாந்தனாக ஸுஸ்கலேத்ர, விதஸ்தார என்ற இடங்களில் ஸ்தூபங்களை கட்டுவித்தான். விதஸ்தாரத்தில் காட்டிய தர்மாரண்ய விஹாரம் என்ற சைத்ய மண்டபம், மிக உயரமாக இருந்ததால் பொது மக்கள் அண்ணாந்து பார்த்தால் கூட அதன் மேல் பாகம் காண முடியவில்லை என்பார்களாம். ஸ்ரீநகரீ என்ற பெரிய பிரசித்தமான அழகிய நகரை கட்டியவனும் அவனே. 104- 19/398
விஜயேச என்ற சிவன் கோவிலில் ப்ராகாரங்கள் இடிந்து போனதை செப்பனிட்டு, அழகுற அமைத்தான். கோவிலையும் கற்கோவிலாக கட்டினான். அருகிலேயே இரண்டு புது கோவில்களையும் எழுப்பி, அசோகேஸ்வரா என்ற பெயரில் பகவான் ஸ்ரீ ஹரனை பிரதிஷ்டை செய்தான். மிலேச்சர்கள் என்ற வெளி நாட்டினர் வந்து அழித்து சின்னா பின்னமாக்கிய நகரை புதுப்பித்தான். தானும் தவம் செய்து பகவான் பூதேசனை வணங்கி அவர் அருளால் நன் மகனைப் பெற்றான். அவன் அரசனானான். ஜலௌகன் என்ற பெயரில் பூலோகத்தில் இந்திரனாக மதிக்கப் பட்டான்.
குணவான் ஆனதால் புகழ் பெற்றான். அதுவே அமுதம், அதனால் ப்ரும்மாண்ட மண்டலமே சுத்தமாயிற்று என்று கொண்டாடப் பட்டான். எங்கும் பாடலாக அவன் பெயர் பரவியது. தேவலோகத்தினரும் ஆச்சர்யம் ஆச்சர்யம் என்றனர். பொன்னாக்கும் வித்தை அல்லது அதற்கான மூல பொருள் அவனிடம் இருந்தது. அதை தனக்காக மட்டும் இல்லாமல், பொதுவான பிரஜைகளின் நன்மைக்காகவே பயன் படுத்தினான்.
நாக சரோவரம்- என்ற நீரூற்று, அதை ஸ்தம்பிக்கச் செய்து உள் நுழைந்து நாகர்களின் குறைகளைக் கேட்டான். அவர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து விட்டு வெளியில் வந்தான். அந்த காலத்தில் புத்த மதம் பரவ ஆரம்பித்திருந்தது. அரச சபையில் சிறந்த வேதாந்த சித்தந்தாங்களில் நிபுணர்கள் இருந்தனர். அவர்களைக் கொண்டு புத்த மத பிரசாரகர்களை வாதம் செய்து வென்றதோடு, அந்த அறிஞர்கள் அவர்களுக்கு நல்ல உபதேசங்கள் செய்தனர். தேவையின்றி அவர்கள் ஏளனமாக பேசியதைக் கண்டிக்கவே இந்த வாத பிரதிவாதங்கள என்றனர். அரசன் எப்பொழுதும் போல விஜயேஸ்வரனையும், ஜ்யேஷ்டேசா , நந்திகேஸ்வரேசன் என்ற தன் தேசத்து பரமேஸ்வர ரூபங்களையே வணங்கி வந்தான். வாக்கு தவறாதவன் என்பதால் பொது மக்களின் நம்பிக்கையை பெற்றான். கிராமங்கள் தோறும் வேகமாக ஓடும் குதிரைகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. அவசர தேவைகள், செய்திகள் சொல்ல அவை பயன்பட்டன. அந்த ஓட்டம் தரையில் ஊர்ந்து செல்லும் நாகங்களுக்கு இடையூறாக இருந்தது. நாகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அந்த குதிரைகளுக்கு தடை விதித்தான். அதனால் மகிழ்ந்த ஒரு நாகன் அரசனை தன் தோளில் தூக்கிக் கொண்டு செல்லவும் தயாரானான். 20/398
மிலேச்சர்கள் என்ற நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்து வந்த படையை தடுத்து அவர்களை வென்றதால் புகழ் பெற்றான். பாரத தேசம் முழுவதும் திக்விஜயம் செய்தான். கடல் சூழ்ந்த (பெரும் கடலே சூழ்ந்து உள்ள பூமி அதன் இடையில் அணியும் மேகலா என்ற ஆபரணமாக பெரும் கடலே இருப்பதாக வர்ணனை) இவைகளுக்கிடையில் வாணிபம், செல்வத்தை பெருக்க தேவையான செயல்களை கவனிக்காமல் விட்டதால் அவனது அரசாட்சி மிக சாதாரணமான ஒன்றாக கணிக்கப் பட்டது. இத்தனைக்கும் அரசபையில் ஒரு உயர் நீதிபதி இருந்தார். பொருளாதாரம் அந்த துறையில் சிறந்தவர் பொறுப்பில் இருந்தது. ஒருவர் பொக்கிஷத்தை கவனிக்க இருந்தார். படைகளை மேற்பார்வையிட்டு பயிற்சிகள் அளிக்க வீரர்கள் இருந்தனர். வெளி நாட்டுக்கு தூதுவர்களாக செல்பவர், ஆலோசனை சொல்லும் புரோஹிதர், ஜோதிடம் அறிந்தவர்கள் என்று பலரும் தேர்ந்த திறமையுள்ளவர்களே. அனைவரும் அரசனிடம் பெரு மதிப்பும் வைத்திருந்தனர். அவர்களுடன் பதினெட்டு துறைகளை ஏற்படுத்தி அதன் நிர்வாக ஏற்பாடுகளை கவனிக்கச் செய்தான். பொது மக்களும் தங்கள் குலத் தொழில்களை அதைச் சார்ந்த செயல்களை செய்துகொண்டு வசதியாக வாழ்ந்தனர். நிலம், தொழில் சம்பந்தமான வழக்குகள் விசாரிக்கப் பட்டு உடனடியாக தீர்ப்புகள் பெற்றனர். தர்மாத்யக்ஷன், தனாத்யக்ஷன், கோசாத்யக்ஷன் – தர்மத்தை- நியாயம் , செல்வ நிலை, பொக்கிஷம் என்ற மூன்று துறைகளுக்கும் அரசனே தலைமை வகித்தான். யாக காரியங்களைச் செய்வதை அறிந்த ஏழு பேர் அந்த துறையை நிர்வகித்தனர்.
வாரபால, அக்ரஹார என்ற குடியிருப்புகளுக்கு நிறைய செலவிட்டான். ஈசான தேவி என்ற மனைவியின் பொறுப்பில், சப்த மாத்ருக்கள்- தேவியின் ஏழு ரூபங்கள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டன. வியாசருடைய மாணவரான ஒருவர் நந்தி புராணம் என்பதை விவரித்துச் சொன்னார். அதன் படி அந்த இடங்களில் பூஜைகள் நடந்தன. ஸ்ரீ நகரில் ஜ்யேஷ்ட ருத்ரன், என்ற பெயரில் மகா தேவனான ஈசன் கோவில் கட்டப் பட்டது. திடுமென நினைவு வந்து. ஸொதர என்ற நீரூற்றில் நீராடி செய்து வந்த தன் பழைய நியமங்களை விட்டு வெகு தூரம் வந்து விட்டதாக வருந்தினான். வழக்கமான தன் நந்தீஸ்வர என்ற பரமேஸ்வரனுக்கு செய்து வந்த வழிபாடுகளைத் தொடர தீர்மானித்தான். அந்த சமயம் நீர் வற்றியிருந்த ஒரு குளம் அல்லது ஏரியில் ஊற்றுக் கண் திறந்தது போல தெளிந்த நீர் பெருகி குளம் நிரம்பியது. மகேசனே அவன் குறையைத் தீர்த்து விட்டான் என பெரிதும் மகிழ்ந்தான். நந்தீசனே தான் இங்கும் ஜ்யேஷ்ட ருத்ரன் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார் என்று அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இது போன்ற அதிசயங்கள் மனித யத்தினத்தில் முடியுமா?
ஒரு நாள், வெளியில் சென்று கொண்டிருக்கும் பொழுது, வழியில் எதிர்பட்ட ஒரு முதியவள் உணவை யாசித்தாள். அரசன் கொடுத்த சாத்வீகமான உணவை மறுத்து விட்டு மாமிசாகாரம் வேண்டினாள். அரசனோ மாமிச ஆகாரத்தை அறவே தவிர்த்து விட்டவன் . அரசனை அனுசரித்து மக்களும் சாகாஹாரிகளே. அதனால் இந்த நாட்டில் மாமிசம் கிடைக்காது, தேவையானால் என் உடலில் இருந்து எடுத்துக் கொள் என்று சொன்னான். அந்த முதியவள் தன் வேடத்தை களைந்து விட்டு அரசனை பாராட்டினாள், ‘அரசனே, நீ போதி சத்வனே என்றாள். அரசன் பதில் அளித்தான். தாயே, நான் சிவ பக்தன், சைவ சித்தாந்தங்களின் படி வாழ்பவன். யார் போதி சத்வன் எனவும், அந்த முதியவள் சொன்னாள். என்னை புத்த மதத்தினர் அனுப்பினர். உன் சபையில் தோற்ற பௌத்தர்கள் கோபித்துக் கொண்டு க்ருத்திகா என்ற என்னை அனுப்பினர். அந்த தேசத்தில் நாங்கள் போதி சத்வரை கடவுளாக நம்பி வாழ்பவர்கள். உலகில் சரா சரங்களும், உயிரினங்களும் போதி சத்வரால் தோற்றுவிக்கப்பட்டன என்று அறிந்து கொள். உலகில் துன்பங்கள் இல்லாமல் வாழ போதி சத்வரை சரண் அடைவது தான் வழி. குற்றம் செய்தவர்களையும் மன்னிக்கும் குணம் அவருடையது. சில துஷ்டர்கள் முன் நீ அளித்த எங்கள் விஹாரங்களை சிதைத்து விட்டனர். மஹா சாக்யன் என்ற அரசன் தான் காரணம் என்றாள்.
அரசன் சொன்னான். அந்த அரசனே மஹாசாக்யன் – அறிவாளி தான். உங்கள் துன்பங்கள் அவனைக் கண்டதும் நீங்கி விடும்., கவலைப் படாமல் போ. மீதியை நான் கவனிக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தான். அரசனும் வாக்கு கொடுத்த படி விஹாரம் அமைத்துக் கொடுத்தான்.
நந்தி க்ஷேத்ரம் என்ற இடத்தில் கல்லால் ஆன மிகப் பெரிய ஆலயம் கட்டுவித்தான். பூதேசன் என்ற சிவபெருமானை பிரதிஷ்டை செய்வித்து, பூஜைகள் நல்ல படியாக நடக்க வேண்டிய பொருளுதவியும் செய்தான். பல ஆபரணங்களையும் அளித்தான். கர்ப்ப க்ருஹம்- பகவான் உள்ள இடம்- அதிலேயே அமர்ந்து, புலனடக்கி ப்ரும்மாசனம் என்பதில் அமர்ந்து யோக முறையில் பல நாட்கள் தவம் செய்வதில் இருந்தான். பின், கனக வாஹிணி என்ற நதியில் ஸ்னானம் செய்து விரதத்தை முடித்தான். மனம் மகிழ்ந்த அரசன் ஜ்யேஷ்ட ருத்ரன்- ஆடலரசன் என்பதால் பல நாட்டிய நங்கைகளை கோவிலுக்கு பூஜா காலங்களில் பாடியும் ஆடியும் சேவை செய்ய அனுப்பினான். இந்த விதமாக தானும் மனைவியுமாக அந்த ஈஸ்வர தியானத்திலேயே இருந்து முக்தி அடைந்தனர். கிரிஜாபதியின் சரணங்களை அடைந்தனர்.
அசோகனுக்குப் பிறகு தாமோதரன் என்பவன் ஆட்சிக்கு வந்தான். இவனும் சிவ பக்தனாகவே இருந்தான். செல்வம் அவனிடம் தானே வந்து நிறைந்தது. ஸ்ரீ ஹரனின் பக்தன் என்பதால் குபேரன்- தனதன்- செல்வத்துக்கு அதிபதி தானே வந்து நட்புடன் இருந்து அவனுக்குத் தேவையான செல்வ செழிப்பை பெறச் செய்து விட்டான் என பின்னால் மக்களிடையே பாடலாக பரவியது. குஹ்யகர்கள் என்ற அவனது சேவகர்களும் அரசனுக்கு ஆதரவாக இருந்தனராம். தன் பெயரில் ஒரு நகரை கட்ட முனைந்தான். பாதி கட்டிய சமயம் பெரும் வெள்ளம் வந்து அதை மூழ்கடித்தது. பின்னாலும் இப்படி தண்ணீரால் துன்பம் வராமல் இருக்க யக்ஷர்களின் உதவியுடன் குத்தா Gudda- என்ற இடத்தில் கற்களைக் கொண்டு ஒரு பெரிய அணையை கட்டினான். அதிலிருந்து நீர் வசதி செய்து கொடுத்து ஸூத என்ற இடத்தில் தன் பெயரில் தாமோதர ஸூத என்ற பெரிய நகரை நிர்மாணித்தான். அதனால் பிரஜைகள் பல நன்மைகளை பெற்றனர்.
முன் ஒரு முறை நீத்தார் கடனைச் செய்யும் முன் நதிக் கரைக்கு சென்று கொண்டிருந்தவனை பார்த்து ஒரு சிலர் உணவை யாசித்தனர். தன் மூத்தாருக்கான நீர்க் கடனை செய்து விட்டு வரும் வரை அவர்களை காத்திருக்கச் சொன்னான். அவர்களோ, தங்கள் யோக சக்தியால், இதோ நதியைக் கொண்டு வந்து விட்டோம், நீராடி, உன் மூத்தோருக்கான நீர் கடனை செய்து விட்டு வா என்றனர். அதை ஏதோ மாயா ஜாலம் என்று எண்ணி அரசன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சற்றுப் பொறுங்கள், என்று சொல்லி விட்டு தன் செயலில் மூழ்கி இருந்தான். அவர்களும் சபித்து விட்டு சென்று விட்டனர். அதன் பின் பிராயச் சித்தமாக ஒரே நாளில் முழுவதுமாக ராமாயண பாராயணத்தைக் கேட்டு சாப விமோசனம் பெறுவாய் என்றனராம். அவனும் அவ்வாறே செய்து சாப விமோசனம் பெற்றான். அது வரை சர்பமாக நதிக்குள் கிடந்தானாம். இன்றளவும் அந்த நதியில் நீராடுவோர், சர்பத்தின் உஷ்ணமான சுவாசம் நீருக்குள் தெரிவதாக சொல்கிறார்களாம்.
அதன் பின் ஹஸ்கன், ஜுஸ்கன், கனிஷ்கன் என்ற பெயர்களில் அரசர்கள் அந்த தேசத்தை ஆண்டனர். அவர்களும் தங்கள் பெயர்களில் நகரங்களை நிர்மாணித்தனர். ஜுஷ்கனுடைய தலை நகரம் ஜுஷ்க புரம். ஜயஸ்வாமி புரம் என்ற இடத்தையும் கட்டினான். துருஷ்க வம்சத்தினர் என்றாலும் நியாயமாக இருந்தனர். ஜுஷ்கன் ஆரம்பித்த மடங்கள், சைத்ய க்ருஹங்கள் இவைகளை முழுதுமாக கட்டி முடித்தனர். அதற்கும் முந்தைய ராஜ்யங்கள் அழிந்து காஸ்மீர மண்டலம் கை மாறியது. பெரும்பாலும் பௌத்தர்களே வசித்தனர். நூற்று ஐம்பது ஆண்டுகள் வரை சாக்ய சித்தர் என்ற பௌத்த பிக்ஷு தலைமையில் அவர்கள் செல்வாக்குடன் இருந்தனர். அவர் மறைவுக்கு பிறகு அந்த மதம் மெள்ள மெள்ள தன் பெரும்பான்மையை இழந்தது.
போதி சத்வருடைய தேசம் என்றே சொல்லப் பட்ட இந்த பிரதேசத்தில் ஒரு அரசன் நாகார்ஜுனன் என்பவன் ஸ்ரீமானாக, நல்ல முறையில் ஆண்டான். அதன் பின் கண்டகோட்ச என்பவன் அரசனான். அவன் காலத்தில் அக்ரஹாரம் என்ற வாசஸ்தலங்களை நிறுவினான். அவன் ஆட்சி அமைதியாக இருந்தது. அதன் பின் அபிமன்யு என்பவன் அரசனானான். அவன் சிறந்த வீரனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருந்ததால் மற்றொரு இந்திரன் என அழைக்கப் பட்டான். அபிமன்யுபுரம் என்ற நகரத்தை நிர்மாணித்து அழகிய சிவன் கோவிலையும் ஏராளமான செல்வமும், அசையா சொத்துக்களும் அளித்து சிறப்பாக பூஜை ஏற்பாடுகளை செய்வித்தான்.
சந்த்ராசார்யர் முதலியவர்களுடன் பதஞ்சலி என்ற மதிப்புக்குரிய பெரியவர், அந்த தேசம் வந்து மகாபாஷ்யம் என்ற நூலை இலக்கண விவரங்களை தெளிவுபடுத்தி அங்கு இருந்தபடி எழுதினார்.
( பதஞ்சலி என்பவருடைய பிரசித்தமான நூல், பாணிணீ என்பவர் எழுதிய சமஸ்க்ருத இலக்கண நூலுக்கு விரிவுரை. இவர் தான் யோகம், வைத்யம் இவைகளை முதன் முதல் பல ஆராய்ச்சிகள் செய்து வகைப் படுத்தினார். உடல் ஆரோக்யம், மொழி, யோகம் என்ற பல வகைகளிலும் இவர் முன்னோடியாக பல நூல்களை எழுதி உள்ளார் என்பது பிரசித்தமான வரலாறு. )
பௌத்தர்கள் பிரபலமாக இருந்த நாகார்ஜுனரின் ஆட்சி காலம் அது. நாகார்ஜுனன் போதி சத்வரின் நெருங்கிய சிஷ்யர். பல வித வாதங்கள், அந்நாட்களில் இருந்த ஆன்மீக கொள்கைகளில் சிறந்த வித்வான்களோடு வாதம் செய்து புத்த மத பிரசாரம் செய்தார். நீலபுராணம் என்ற நூலை எழுதி அது வரை வழக்கத்தில் இருந்த நாக மத வழக்கங்களை கண்டித்து எழுதினார். அவர்கள் செய்து வந்த யாகங்கள் அனைத்தையும் குறை கூறி, எழுதினார். அந்த சமயம் காஸ்மீர தேசம் பெரும் பனிப் புயலுக்கு ஆளாகியது, ஆண்டு தோறும் அது அதிகரித்து எவரும் வாழ முடியாத நிலை உண்டாயிற்று. விளைச்சல் இல்லை. உணவின்றி பலர் மடிந்தனர். பௌத்தர்கள், முன் இருந்த நாக வம்சத்தினர் அனைவரும் வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்றனர். யாகங்கள் செய்து வந்த நாகர்கள் தங்கள் சாதனைகளின் பலத்தால் பிழைத்தனர்.
காஸ்யபருடைய வம்சத்தில் வந்த சந்திர தேவன் என்பவன் க்ஷேத்ர தேவதை – குல தெய்வம் – நீலா என்ற தேவதையை அந்த பிரதேசத்தை காப்பாற்ற வேண்டும் என வேண்டிக் கொண்டு கடும் தவம் செய்தான். தவத்தை மெச்சி நீல லோஹிதன் எனும் பகவான் பரமேஸ்வரன், ப்ரத்யக்ஷமாகி – நேரில் தோன்றி பனிக்கட்டிகளால் வந்த பாதிப்பை விலக்கி விட்டார். அதன் பின் அந்த தேசத்து பூர்வீகர்கள் வழக்கம் போல சாஸ்திர சம்பிரதாயங்களுடன் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர்.
முதலில் வந்த யக்ஷர்களின் படையெடுப்பை முதல் சந்திர தேவன் முறியடித்தான். தற்சமயம் இரண்டாவது சந்திர தேவன் பௌத்தர்கள் தலையீட்டை சமாளித்தான் என்று சொல்லி மகிழ்ந்தனர். அதன் பின் மூன்றாவது கோநந்தன் பட்டத்துக்கு வந்தான். முன் போலவே தீர்த்த யாத்திரைகள், யாகங்கள், மற்ற வைதீக செயல்களை முன் போலவே தொடர்ந்து செய்தனர். அரச உதவியுடன் இவைகள் மறு மலர்ச்சி பெற்றதால், பிக்ஷுக்களும் விலகி விட்டனர். தவிர, பனிப் புயல் அவர்களை மிகவும் வதைத்து விட்டிருந்தது.
நாம் நினைப்பது போலவா நம் பிறப்பும் வாழ்வும் அமைகிறது? பிரஜைகளின் நல்வினைப் பயனாக அவர்களுக்கு சாதகமான அரசும், வாழ்க்கை வசதிகளும், வழக்கங்களும் அமைகின்றன. யார் எங்கிருந்து ஆணையிடுகிறார்கள் என்று யாரால் சொல்ல முடியும்? தன் பிரஜைகளை துன்புறுத்துபவன் தானே வம்சத்தோடு அழிகிறான். அழிந்ததை திரும்பவும் பழையபடி நிலை நிறுத்துபவன் வம்சம் வளருகிறது. அவனை ராஜ்ய லக்ஷ்மியும் கை விடுவதில்லை. இந்த பிரதேசத்தின் வரலாறு ராஜ குலத்தினருக்கு பாடமாக விளங்கும். பின் வந்த காலத்து அரசியல் வாதிகளும் அறிவுடையவர்களாக இருந்து, சிந்திக்கத் தெரிந்தவர்களாக நல்லது, தீயது என்று பகுத்து அறிந்து கொண்டு, தங்கள் காலத்தை அனுசரித்து புதியனவைகளை சேர்த்தும் ஆண்டதால் இந்த வம்சம் தழைத்தது. பூமியும் மகிழ்ந்து வளமாக ஆக்கி ஆசீர்வதித்தாள். சித்தர்களின் ஆலோசனைகளை மதித்து ஏற்றுக் கொண்டனர். சேனைத் தலைவர்கள் உண்மையாக இருந்தனர். ரகு வம்சம் ஆதியில் இருந்தது போலவே கோநந்தன் வம்சமும் சிறந்து விளங்கலாயிற்று. காஸ்மீர தேசத்தை இந்த வம்சத்து அரசர்கள் பல ஆண்டுகள் ஆண்டனர். (5 முன்னூறு வருஷங்கள் 15 நூற்றாண்டுகள்))ஆண்டனர்.
கோநந்த வம்சத்தின் ஒரு அரசன் பெயர் விபீஷணன். அவன் ஐம்பத்து நாலு ஆண்டுகள் ஆண்டான்.
அடுத்து தந்தையும் தனயனுமாக ராவண, இந்திரஜித் என்ற பெயரிலேயே முப்பதைந்து வருஷம், ஆறு மாதங்கள் தந்தையும், அடுத்த முப்பது வருஷம் தனயனுமாக ஆண்டனர்.
ஆதி ராவணன் பூஜித்த சிவலிங்கம், வடேஸ்வரன் -वटेश्वर- வட விருக்ஷம் – தான் தவம் செய்ய ஆல மரமாகவே உருவம் எடுத்துக் கொண்டு இருந்த இடம் பின்னால் வடேஸ்வரர் என்ற லிங்கமாக ஆயிற்று என்றும் அதை ஆதி ராவணன் பூஜித்தான் என்பதும் வரலாறு. அதில் இளம் பிறையின் ஒளிக் கீற்று இன்னமும் புலப்படுவதாக தெரிகிறது. அதை இந்த வம்சத்தினர் பக்தியுடன் பூஜித்தனர். அதில் தெரியும் புள்ளிகளும் கோடுகளும் வரும் காலத்தின் நிகழ்ச்சிகளை கோடியிட்டு காட்டுவதாக நம்பப் படுகிறது. நாற் கோணமாக அமைக்கப் பட்ட ஒரு மடம், அதில் இந்த சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அரச குலத்தினரின் தனிப்பட்ட குடும்பச் சொத்து (தாயாத-ancestry) என்று எழுதி வைத்துள்ளனர்.
இரண்டாவது விபீஷணன் என்று அழைக்கப் பட்ட காஸ்மீர ராவணனின் மகன் முப்பத்தைந்து ஆண்டுகளும் ஆறு மாதங்களும் பதவியில் இருந்தான். அவன் மகன் கின்னரன் எனப் பட்டான். அவன் பதவிக்கு வந்தான். அவனை பொறுத்தவரையில் ஒழுக்கமும், நற்குணங்களும் நிறைந்த சீலவான் என்றே புகழப் பட்டிருந்தான். ஆனால் பிரஜைகளின் வினப்பயன் என்று தான் சொல்ல வேண்டும் பல விபரீதமான நிகழ்ச்சிகள் நடந்தேறி அவன் பெயரை கெடுத்தன. ராஜ்யத்தில் கின்னர கிராம விஹாரம் என்பதில் வசித்த ஒரு புத்த மத துறவி அரசனின் ஆசை நாயகியை தன் யோக பலத்தால் அபகரித்துச் சென்று விட்டான்.
அந்த கோபத்தால், பல விஹாரங்களை தரை மட்டமாக்க ஆணையிட்டான். மடத்தின் அடுத்த நிலையில் இருந்த மத்யம மடம் என்பதன் அலுவலகர்கள், அந்தணர்களுக்கு அந்த கிராமத்தை அளித்து குடியேறச் செய்து விட்டான். நகரை பலவிதமாக அழகுற அமைத்தான். மலர் நிறைந்த உப வனங்கள், ஊர் நடுவில் கால்வாய் அமைத்து உல்லாசமாக படகுகளும் என உல்லாச பயணிகளை கவர பல ஏற்பாடுகளைச் செய்தான். அதன் பலனாக பலர் வந்து போகவும், அவன் பொக்கிஷம் நிறைந்தது. வியாபாரம் செழித்தது. சுவர்க லோகம் போல என்று வர்ணித்தனர். குபேரனுக்கு சமமான தனவானாக ஆனான். விதஸ்தாவின் மணல் வெளியை அழகுறச் செய்தான்.
அந்த இடத்தில் சுத்தமான நீர், இயற்கையாக அமைந்த அமைதியான இடம், எனவே வெகு காலமாக சுஸ்ரவன் என்ற நாகம் வசித்து வந்த து. அதன் தன் சொந்த குளமாக எண்ணி இருந்த து. ஒரு சமயம் விசாகன் என்ற அந்தணன் வெகு தூரம் நடந்து வந்த களைப்பினால், அந்த குளத்தில் சிரம பரிகாரம் செய்து கொள்ள இறங்கினான். நீரை கையால் எடுத்து குடித்து விட்டு அருகில் இருந்த மரத்தின் அடியில் சிரம பரிகாரம் செய்து கொண்டான். உண்ணும் முன் செய்யும் சில வழக்கமான பிரார்த்தனைகள் இவற்றை செய்து விட்டு, தான் கொண்டுவந்திருந்த உணவை கையில் எடுத்துக் கொண்டு மரத்தடியில் அமர்ந்தான். குளத்து நீரில் இருந்த ஹம்சங்கள் கூக்குரலிட்டது பெண்களின் கால் நூபுரங்கள் ஒலித்தது போல கேட்கவும், திடுக்கிட்டு எதிரில் யார் என பார்த்தான். இரு பெண்கள் அழகிய நீல நிற கண்களுடன் ஒருவள், மற்றவள் வேறு விதமான அழகுடைய கண்களும், கர்ணிகார, பத்ம ராக இவைகளின் வாசனை பொருட்களால் அலங்கரித்துக் கொண்டவர்களாக. அழகிய உடல் வண்ணமும் வாளிப்பும் கண்களைக் கவர நின்றிருந்தனர். இருவரும் நீல நிற மேலாடை (shawl)அணிந்திருந்தனர். 28/398
வந்தவர்களுக்கு விருந்தினர்கள் வந்தால் செய்யும் உபசாரங்களைச் செய்தான். இலைகளை குவித்து குளத்திலிருந்து சுத்தமான நீரை கொண்டு வந்து பருக கொடுத்தான். அவர்கள் அமர்ந்த பிறகு விசிறிக் கொள்ள பனை ஓலையாலான விசிறியைக் கொடுத்த பின் விசாரித்தான். வெட்கத்துடன் அவர்கள் எதிரில் அமரவும் தயங்கியவனாக, உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. இந்த இடத்தில் வசதியற்ற புல்லில் அமரச் சொல்வதில் எனக்கு தயக்கம் உண்டாகிறது. இந்த எளிய உணவை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தன் உணவையும் கொடுத்தான். உங்கள் தகுதிக்கும் மென்மையான உடல் வருந்த இந்த எளியவன் இருக்கும் இடம் வந்தது எதற்கோ என்று தெரிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது. இது அந்தணர்களின் இயல்பான குணம். தவறாக நினைக்க வேண்டாம். சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். இது என்ன உணவா, இது என்ன ஆசனமா என நினைக்க வேண்டாம். இந்த சத்து மாவு- வழி போக்கர்கள் கொண்டு செல்லும் மாவால் ஆன பண்டம்- அவர்களும் அதை விரும்பி உண்டு நீரையும் குடித்தனர்.ஆஹா, என்ன சுத்தமான குளிர்ந்த நீர் என்று பாராட்டவும் செய்தனர். தானே விசிறியால் வீசி அவர்களுக்கு களைப்பு நீங்க செய்த பின், என் நல்வினைப் பயனே, இன்று உங்கள் அறிமுகம் கிடைத்தது. கல்யாணிகள்,உங்களை பெற எந்த ஜாதி புண்யம் செய்துள்ளது? இப்படி களைத்து போகும் வரை நடந்து வர என்ன காரணம் ? ருசியாக இருக்காது, இருந்தாலும் விரும்பி சாப்பிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.
அவர்கள் சொன்னார்கள். சுவர்சனுடைய புத்ரிகள். எங்கள் தந்தையால் வித்யாதர தலைவனுக்கு வாக்களிக்கப் பட்டவர்கள் நாங்கள் இருவரும். என் பெயர் இராவதி, இவள் சந்திர லேகா என் இளையவள். அதற்கு மேல் எங்களுக்கு தெரியாது. தந்தை அறிவார். ஜேஷ்டா ( ஆனி மாதம்) க்ருஷ்ண பக்ஷ துவாதசியன்று தக்ஷகன் யாத்திரை என்ற காரணத்துடன் வருவான். அவனை நீங்கள் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். அவன் தான் வித்யாத்ரேந்திரன். நாங்கள் இருவரும் அவன் இரு பக்கங்களிலும் இருப்பதைக் காண்பீர்கள். சொல்லி முடித்தவர்கள் கண் முன்னாலேயே மறைந்தார்கள்.
சில நாட்களில் யாத்திரை என்ற பெயரில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அந்த பெண்கள் சொன்ன அடையாளங்களை வைத்து- சுருள் சுருளான ஆன கேசம், தலையில் நீர் வழிந்து கொண்டிருக்கும் என சொல்லியிருந்தனர்- அந்த நாகனைக் கண்டு கொண்டான். 28/396
அவனும், அந்த பெண்கள் சொல்லியிருந்தார்கள் போலும், அவனை அடையாளம் கண்டு கொண்டு அருகில் வந்து பேசினான். நல் வரவு என்று சொல்லி சற்று நேரம் பேசிக் கோண்டிருந்தான். நடுவில் ஏதோ தோன்றியது போல, அந்தணனிடம் தன் குறையைச் சொன்னான். (அவனோ காற்றை புசிப்பவன், ஸ்வஸன- மூச்சுக் காற்று அதுவே அவன் உணவு.) நெருங்கிய நண்பன் போல, ‘ ப்ரும்மன்! ஒரு சில தன் மானம் மிக்கவர்கள், செய்யும் செயலை ஆராய்ந்து நல்லது பொல்லாது அறிந்து செய்பவர்கள். அளவறிந்து உண்பவர்கள், அல்லது அனுபவிப்பவர்கள், தங்கள் துக்கத்தை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. நல்ல மனம் கொண்டவர்களும் கூட உதவி செய்ய வசதியோ, ஆற்றலோ இல்லாமல் போனால் வருத்தம் தெரிவிப்பார்கள். உண்மையாகவே வருந்தினாலும் தான் இவன் துன்பம் குறையுமா? அவர்களையும் மன வருத்தம் அடைய செய்தது தான் பலன். அதுவே பலசாலியாக, வசதியாக உள்ளவன் கேட்டால் அவனையே திருப்பி குறை சொல்வான். உனக்கு புத்தியில்லை, திறமையில்லை என்பான். மந்த மதி தற் பெருமை பேசுவான். பரிகாரமாக சில மட்டமான உபாயங்களைச் சொல்வான். சற்று நேரம் அவனுக்கு பொழுது போக்கு. எளியவன் ஒருவன் அகப்பட்டான், அவனைச் சீண்டி வேடிக்கை பார்ப்பது ஒரு ரகம். அல்லது கதை கேட்பது போல எப்படி இந்த துன்பம் வந்தது என்று ஆதி முதல் விசாரிப்பான். தன்னால் முடிந்த ஆறுதல் சொல்வான், அல்லது பரிதாபம் தெரிவித்து விட்டு நகர்ந்து விடுவான். அவனைப் பொறுத்தவரையில் மற்றவர்களிடம் பேச ஒரு விஷயம் கிடைத்தது அவ்வளவே. எனவே மனதில் உயிருள்ளவரை, அல்லது முடிந்தவரை தன் துக்கத்தை வைத்துக் கொள்வதே நன்று. மனம் வருந்தி தகிப்பது போல இருக்கும். அதனால் என்ன, ஒரு நாள் சிதையுடன் அதுவும் மறையும். எவன் தான் தன் மகன், மனைவி, பணியாள் இவர்களின் முகத்தைப் பார்த்தே மனதில் என்ன இருக்கிறது என்று யோசிப்பான். வாய் விட்டு சொன்னால் அன்றி வெளிப் பார்வைக்கு தெரியுமா?
பயிரை பாதுக்காக்கும் நாகங்கள் தாங்கள் அதன் பலனை அனுபவிப்பது இல்லை. ஒரு சில துறவிகள் அதை காவல் காக்கின்றனர். சிலர் சிகையுடன், சிலர் மழித்த தலையுடன் இருப்பர். புதிதாக அறுவடையாகும் வரை அவர்கள் விரதம் என்றும், முதல் தானியம் அவர்களுக்கே என்பது போலவும் ஒரு வழக்கத்தை அனுசரிக்கிறார்கள். அவர்கள் நாகங்களால் பயிர் அழியும் என்பது போல அவைகளை வதைக்கிறார்கள். இந்த ஒரு முறை அவர்கள் விரதம் முடியும் முன் புதிய தானியம் எங்களுக்கு கிடைக்கச் செய். எதற்கு என்பது புரியாமலே அந்தணன் சம்மதித்து பயிரை காவல் காவல் காத்துக் கொண்டிருந்த துறவிகளின் கவனத்தை தன் பால் இழுத்துக் கொண்டு அவர்கள் விரதம் பங்கமடையச் செய்தான். நாகராஜனோ, புயல் வரச் செய்து நிலத்தில் பயிர்கள் எதுவும் மீதமில்லாம் அடித்துச் செல்ல செய்து விட்டான். உண்மையில் பயிர்களை காப்பது யார் என்று தெரிவிக்கவே. உள்ளபடி நாகங்களுக்கான பங்கை தர மறுக்கும் நிலத்தின் உரிமையாளர்களும் அதன் பின் மனம் திருந்தி நாகர்களுக்கு உரிய பாகத்தை தரலாயினர். 30/398
நாகர் தலைவன் அந்த அந்தணருக்கு நன்றி தெரிவிக்க தன் இருப்பிடமான குளத்தின் அடியில் இருந்த பாதாள மாளிகைக்கு அழைத்துச் சென்றான். அங்கு பலவிதமான போஜனங்கள், மற்ற வசதிகளுடன் மகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டான். நாக கன்னிகைகள் இருவரும் அன்புடன் உபசரித்தனர். தினமும் ஒரு புது அனுஒபவம். தினமும் புதிதாக ஒரு விஷயம் அவர்களிடம் அறிந்தான். சில காலம் இருந்த பின் தன் இருப்பிடம் செல்ல அனுமதி பெற்று கிளம்பினான். நாக ராஜன் ஏதாவதி பிரதி பலனாக தருகிறேன் எனவும், சந்திர லேகா என்ற இளையவளை யாசித்தான். அது எப்படி சரி வரும் என்ற சந்தேகம் இருந்தாலும், தருவதாக சொன்னதால் அவளையும், ஏராளமான தனம், ரத்தினங்களுடன் அளித்தான்.
அந்த செல்வத்துடன் அந்த நாக பெண்ணுடன் தன் ஊரான மஹா நரபுரம் வந்து சேர்ந்தான். அந்தந்த உத்சவ காலங்களில் சிறப்பாக உத்ஸவங்கள் செய்து மகிழ்ச்சியுடன் இருந்தான். புஜகேந்திரனின் மகளும் அனுசரணையாக இருந்தாள். தன் நற்குணங்களாலும், அன்பினாலும் அவனுக்கு தகுந்த மனைவியாக வாழ்ந்தாள். ஒரு சமயம், வீட்டின் உப்பரிகையில் நின்றிருந்தாள். கட்டவிழ்த்துக் கொண்டு ஓடி வந்த ஒரு குதிரை கீழே முற்றத்தில் உலரப் போட்டிருந்த தானியத்தை கண்டு உண்ணலாயிற்று. வேகமாக வந்தவள் தலையில் அணிந்திருந்த முகத்திரை நழுவியதை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மற கையால் அந்த குதிரையை அடித்தாள். அதுவும் பாதி உணவை கவ்விய வாயுடன் அகன்றது. ஆனால் நாக ராஜனின் மகள் கை பட்ட இடம் சுவர்ணமாக ஒரு கறை அதன் முதுகில் தென்பட்டது. யதேச்சையாக நகர் வலம் வந்து கொண்டிருந்த நர தேசத்து என்ற அரசன், யார் அந்த பெண் என்று தன் ஒற்றர்கள் மூலம் விசாரித்தான். அந்தணருடைய மனைவி என்று அறிந்த பின்னும் அவன் மனம் அவளிடம் ஈடுபாடு கொண்டது. காமனின் வசம் ஆனவனுக்கு மனதில் காமம் உன்மத்தமான வாரணம்- யானையே அலைக்கழிப்பது போல வாட்டியது. அபவாத பயம் அங்குசமாக தடுத்து நிறுத்தியது போல சில காலம் சென்றது. அதே கவனம், அதே சிந்தனை, மேன் மேலும் வளர்ந்த ஆசை, அவளைப் பற்றியே விசாரனைகள். அந்த குதிரை வந்ததும், அதன் மேல் பட்ட சுவர்ண கறையும் அவனுக்கு தெரிவித்தனர். அரசனுக்கு அனுகூலமான செய்திகளைச் சொல்லியே தன் காலத்தை ஓட்டுபவர் எவ்வளவு மனிதர்கள் உள்ளனர். மெள்ள மெள்ள தயக்கமும் நீங்கியது. சில அரண்மனை பெண்களை தூது அனுப்பினான். அதுவும் பலன் இல்லை. தானே வந்து அவள் கணவனான அந்தணனை வேண்டினான். அந்த அளவுக்கு ஆசை வெட்கமறியாதது.
அவனும் மறுக்கவே, நாக கன்னியை அபகரிக்க ஆணையிட்டு சேவகர்களை அனுப்பினான். வாசலில் காவலர்கள் முற்றுகை இட்ட சமயம், பின் வழியாக அவளையும் அழைத்துக் கொண்டு நாக லோகமே சென்று விட்டான். நாக ராஜன் அளவில்லா கோபத்துடன் தன் இருப்பிடத்திலிருந்து வெளி வந்து இடியும் மின்னலுமாக மழையுடன் அந்த நகரமே இருண்டு போகச் செய்தான். பயங்கரமான காற்று வீச, எங்கிருந்தோ கற்கள் வந்து விழ, அந்த நகரமே ஒட்டு மொத்தமாக அழித்தது. 32/398
எரிந்து பொசுங்கிய பிராணிகளின், மனிதர்களின் உடல்கள், ஆடைகளும், கொடிகளும் மயிலின் இறகு போல வண்ண மயமாகத் தெரிய, விதஸ்தா என்ற அந்த நகரம் அலங்கோலமாக காட்சி அளித்தது. முன் ஒரு சமயம் சக்ரதரன்- சக்கரத்தை கையில் வைத்துள்ள பகவான் மகா விஷ்ணு, தன்னை சரணடைந்தவர்களை காக்க, தன் கை சக்கிரத்தால் பூமியை அழிக்க வந்த மது கைடபர்களுடன் செய்த யுத்தத்தை நினைவுறுத்தியது.
பயங்கரமான இந்த அழிவைக் கண்ட நாகர் தலைவன் மிகுந்த வேதனைக் குள்ளானான். அந்த இடத்தை விட்டே விலகினான். வெகு தூரம் சென்ற பின் ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு பெரிய ஏரியை கட்டுவித்தான். அதில் பால் போல வெண்ணிற நீரை நிறைத்தான். அமர்நாத் யாத்திரை செல்பவர்கள் இன்றளவும் அந்த ஏரியை தரிசித்து விட்டுச் செல்கிறார்கள்.
மாமனாரின் அருளால் தானும் நாகனாக மாறி விட்ட அந்தணன் பெயரில், மருமகனுக்கான ஏரி என்றே அழைக்கின்றனர். பிரஜைகளை காப்பதாக சபதம் செய்து பதவி ஏற்கும் அரசர்கள் விதி வசத்தால், அல்லது தங்கள் புத்தியின் விபரீதத்தால், இத்தகைய அழிவையும் கொண்டு வந்து விடுகிறார்கள். ஒரு காரணமும் இன்றி, தாங்களே எமனாக ஒட்டு மொத்தமான ஒரு நகரம் அழியச் செய்வோம் என்று மனதால் கூட நினைத்து இருப்பார்களா? இன்றளவும் அந்த நகரம் வற்றி உலர்ந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறது. ஏரி மட்டும் இந்த வரலாற்றை நினைவுறுத்துவது போல இன்றும் நிலைத்திருக்கிறது. அருகில் உப சக்கரதரம் என்று அருகில் ஒரு ஊர் அமைந்துள்ளது.
அரசனின் தவறான ஆசை மட்டும் தானா இந்த அளவு அழிவுக்கு காரணம்? மற்றான் மனைவியை ஏன் நாடவேண்டும், அது தவறு என்று தானே ராவணன் சரித்திரமும் கேட்டிருக்கிறோம். அங்கும் இதே போலத் தான் மொத்தமாக அழிந்தனர். பிரஜைகள் என்ன தவறு செய்தனர்? அது தான் இன்றளவும் விடை தெரியாத புதிர்.
நாற்பது ஆண்டுகள் முடிய சில மாதங்களே இருந்த நிலையில் அந்த அரசனின் ஆட்சி முடிந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் அந்த கின்னரபுரம் பழையபடி தனது வளமான நிலையை திரும்பப் பெற்று கந்தவர்களின் நகரம் போல பெருமை பெற்றது.
யார் செய்த நல் வினையோ, அரசனின் ஒரே மகனை அவனை வளர்க்கும் பொறுப்பில் இருந்த தாத்ரி, தன்னுடன் விஜயக்ஷேத்ரம் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றிருந்தாள். அதனால் அவன் பிழைத்தான். சித்தன் என்ற பெயருடன் அரசாட்சியை ஏற்றான். வேணிற் காலத்தில் வறண்ட நிலங்களை மழை வர்ஷித்து மேகங்கள் காப்பது போல அந்த பூமியை சீராக்கி வளமுறச் செய்தான். தந்தையில் அருகில் இருந்தவன் ஆனதால் ஆட்சி முறைகள் அறிந்திருந்தான். அவனுடைய முடிவும் ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்திருந்தது. தன்னளவில் ஒழுக்கமும், நேர்மையான குணங்களுடனும் வாழ்ந்தான். உடல் நலம் பேணுவதிலும் கவனம் செலுத்தினான். ஆபரணங்களையும் தவிர்த்தான். பிறை ஸூடி பெருமானுக்கு மட்டுமே ஆபரணங்களும், அலங்காரமும். தந்தையிடம் பல நல்ல குணங்கள் இருந்தனவே. அவைகளை மட்டும் ஏற்றுக் கொண்டான். சம்சாரம் அசாரம் என்று உபதேசங்களை அறிவான். மத்திய வயது போக விலாசங்களுக்கு என்பர், ஆயினும் அவன் தன் கட்டுப்பாட்டை இழக்காமல் இருந்தான். சேற்றில் இந்துவின் பிரதி பிம்பம் மாசடைந்தால் வானத்து நிலவில் தொற்றிக் கொள்ளுமா என்ன? 33/398
ராஜ குலத்தினருக்கு இது ஒரு வர பிரசாதம். நேர்மையாக, பிரஜைகளின் நலனே கவனமாக ஆண்டால், பரலோகம் பற்றி அவனுக்கு கவலையே வேண்டாம், தானாக நல்ல கதி அடைவான் என்பது நியதி. அதனால் தர்ம வழியிலேயே தன் அரசாட்சியை செய்தான். அறுபது ஆண்டுகள் நலமாக இருந்து நல்லாட்சியைக் கொடுத்தவன் இயற்கை எய்தினான். தேகத்துடனே சிவலோக பிராப்தி அடைந்தான் என்பர்.
அவன் தந்தையிடம் சேவகர்களாக இருந்தவர்களும் நல்ல கதியை அடைந்தனர். ஒரு செடி அதன் மேல் வைத்த பாரத்தால் மேல் நோக்கி வளர முடியாமல் கவிழ்ந்தே இருந்தை யாரும் கவனிக்கவில்லை. பருவம் வந்ததும் மலர்கள் வரவும் அனைவரின் கவனத்தையும் இழுத்து விடும் என்பது நாம் நேரில் காணும் உண்மை. அது போல அரச அல்லது அலுவலக சேவகர்கள் தங்கள் மேலதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள். அதைச் செய்வதில் தங்கள் விருப்ப வெறுப்புகளைச் சொல்லவா முடியும். ஆனாலும் காலம் அவர்களை கை விடுவதில்லை. செய்யும் தொழிலே தெய்வம் என இருப்பவர்கள் தங்கள் கடமையைச் செய்தவர்களாவர். அதனால் அவர்கள் நன்மையே அடைந்தனர் என்று கவி சொல்கிறார். தேவலோகத்தில் அரசனை படஹம் என்ற வாத்தியங்களை வாசித்து வரவேற்றனராம். அவனுக்கு உத்பலாக்ஷ- உத்பலம் – நிலவின் வருகையுடன் மலரும் மலர்- அது போன்ற கண்களுடையவன் என்று புகழ்ந்தனராம்.
அவன் மகன் ஹிரண்யாக்ஷன் என்பவன். தன் பெயரில் ஒரு நகரத்தை கட்டினான் அல்லது அந்த நகருக்கே தன் பெயரைச் சூட்டினான். அவனும் முப்பதேழு ஆண்டுகள், ஏழு மாதங்கள் ஆண்ட பின் அவன் மகன் ஹிரண்ய குல என்பவன் பட்டத்துக்கு வந்தான். ஹிரண்யோத்சன், வசு குலன் என்று இருவர் சந்ததியர்.
அறுபது ஆண்டுகள் இவர்களின் ஆட்சி நீடித்தது. அதன் பின் மிலேச்சர்கள் என்ற பாரத தேசத்து எல்லை தாண்டி வாழ்ந்த குலத்தினர், படையெடுத்து வந்தனர். பெரும் போர் மூண்டது. மிஹிரகுலன் என்ற அடுத்த தலைமுறை அரசனாக வந்தவன் கடுமையாக போரிட வேண்டி இருந்தது. தென் திசை தான் யமனுக்கு. ஆனால் வட திசையில் இருந்த வந்த எதிரிகளுக்கு இவனே தென் திசையாக- யமனாக இருந்து விட்டான் என்று பாடினர். கழுகு போலவும், காகம் போலவும் குறி தவறாது இரையைக் கண்டவுடன் வந்து பிடிப்பது போல, இவன் எதிரி படையின் நடுவிலும் முக்கியமான வீரர்கள் தலைவனை கண்டு கொள்வான் என்பராம். ராஜகுலத்து வேதாளம் என்றும் பெயர் பெற்றான். நல்லன செய்வதிலும் சிறந்தவன். சிறுவர்கள், குழந்தைகளை தயவுடன் பார்த்தான். பெண்களை மதிப்புடன் நடத்தினான். முதியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொண்டான். அந்த அளவு எதிரி சைன்யத்தை அழித்தவன் என்பது இன்னொரு முகம். போரில் தயங்காமல் வீரத்தைக் காட்டுவதும் அரசனுக்குரிய ஒரு குணமே.
இன்னது தான் செய்வான் என்ற கணிக்க முடியாத குணம். ஒரு சமயம் தன் அந்த:புரத்தில் மனைவி அணிந்திருந்த மேல் ஆடையில் மார்பகங்களின் பகுதியில் பொன்னால் வேலைபாடு செய்திருந்தைக் கண்டு பெரும் கோபம் கொண்டான். அது இலங்கையில் தயாரித்த ஆடை என்று பணிவிடை செய்யும் பெண் சொன்னாள். அந்த ஆடையில் பொன்னால் அந்த நாட்டு அரசனின் பாதம் பொன் இழைகளால் வரைய பட்டிருந்த து. என் மனவியின் மார்பில் அந்த பாதங்கள் இருப்பதா என்று ஆத்திரம். அது தான் அந்த கோபத்துக்கு காரணம். உடனே படைகளுக்கு உத்தரவிட்டான். இலங்கையை முற்றுகையிடுவோம் என்று முழங்கினான். பெரும் படை யானைகள் மத ஜலம் பெருக ஓடி வந்தன. .
சிங்கள தேசத்தில் ஆடைகள் நரேந்திரன் எனும் அட்சியில் உள்ள அரசனின் பாதங்கள் வரைவது வழக்கமாம். பணிப் பெண் சொன்னாள். யமுனைக் கரையில் நடப்பது போல சுலபமாக மகா சமுத்திர கரையை அடைந்து விட்டன.
தன் மனைவியின் ஆடையில் அவன் பாதச் சுவர்டுகளைக் கண்ட ரோஷம் அவனை நடத்திச் சென்றது.
தூரத்தில் இருந்தே பெரும் படையைக் கண்ட இலங்கா வாசிகள், இது என்ன திரும்பவும் ராம ராவண யுத்தமா எனக் கலங்கினர். தோற்ற அரசனை விலக்கி புது அரசனை நியமித்தான். அந்த நகரத்து மக்களும் ஸூரியனின் கிரணங்களுடன் இருப்பது போன்ற கை வேலை செய்த ஆடைகளை, துணிகளை கொண்டு வந்து கொடுத்தனர். திரும்பும் வழியில் சோழ, கர்ணாட, நர்மதைக் கரையில் குஜராத்தை அடையும் முன் லாட என்ற பிரதேசம் என்று அங்கு இருந்த அரசர்கள் இந்த மாபெரும் படையின் அளவைக் கண்டே எதிர்த்து போரிட வரவில்லை. அதை வைத்தே திரும்பி ஊர் வந்த பின் அவர்கள் எதிர்க்காதாலேயே தோற்றார்கள் என்று அறிவித்து விட்டான்.
காஸ்மீர தேசத்து நுழை வாயிலில் விழுந்த ஒரு யானையின் பிளிறலால் முதலில் மகிழ்ந்தான். பின் என்ன தோன்றியதோ, நூறு பலசாலிகளான யானைகளை வீழ்த்தி விட்டான். தான் தோன்றித் தனமாக நடந்த இந்த நிகழ்ச்சி அவனுடைய நிலையற்ற குண குறைவு என்று கவி சொல்கிறார். இது போல பல அசட்டுத் தனமான செய்கைகளை சொல்லாமல் விடுகிறேன், பல நற்குணங்களுக்கு இடையில் ஒரு சில துஷ்டத்தனம், அதை வர்ணிப்பானேன். சுண்டு விரலில் பட்ட காயம் போல பாபிகளைப் பற்றி பேசுவது கூட அனாவசியம் என்ற தன் எண்ணம் என்று சொல்கிறார்.
எதனால் அப்படி ஒரு களங்கம் போல ஒரு துர்குணம் வாய்த்தது என்பதை யாரால் அனுமானிக்க முடியும்? அவனே ஸ்ரீநகரத்தில் மிஹிரேஸ்வர் என்ற சிவ பெருமானுக்கு பெரிய கோவிலைக் கட்டுவித்தான். ஹொலாட என்ற இடத்தில் மிஹிரபுரம் என்ற நகரத்தை கட்டுவித்தான். காந்தார தேசத்து சில வறிய அந்தணர்கள் அவனிடம் அக்ரஹாரம் எனும் தாங்கள் வாழ வீடுகளை தானமாக பெற்றனர். வறுமை காரணமாக இருக்கலாம் அல்லது அவர்களுடைய அறிவும் அந்த அளவே இருந்திருக்கலாம்.
கரு மேகம் வானத்தை மூடினால் மயில்கள் மகிழ்ந்து ஆடும். அதே சமயம் தூய வெண்ணிறம் கொண்ட ஹம்ஸங்கள் வசந்த காலத்து நிர்மலமான வானத்தில் நிலவைக் கண்டு மகிழும். தானம் கொடுப்பவனுக்கும், கை நீட்டி வாங்குபவனுக்கும் இடையே இப்படி ஒரு ஒற்றுமை இருப்பது இயல்பே.
அந்த அரசனை பூமியில் பிறந்த பைரவன் என அழைத்தனர். கடைசி காலத்தில் தன் வினைகளின் பயனாக பல நோய்கள் கண்டு வருந்தி மறைந்தான். மறைந்தவனைக் குற்றம் சொல்லக் கூடாது என்று ஒரு சிலர் அவன் செய்த நற்செயல்களைச் சொல்லி, துஷ்டனாக இருந்தாலும் நிறைய தானம் செய்தான் என்பதை பெரிதாகச் சொல்லி தான் செய்த பாப செயல்களின் பலனையே அனுபவித்து மறைந்தான் என்றனர்.
கொள்கையில்லாத DARDS-दारद- BHATTA-भाट्ट – பாட்ட, மிலேச்சர்கள் என்ற பலர் விடாது காஸ்மீர தேசத்தை ஆக்ரமித்து அதன் இயல்பான ஆன்மீக வாழ்வை சிதைத்தனர். அவர்களுடன் உக்ரமாக போராடி விரட்டினான். காந்தார தேசத்து அந்தணர்களுக்கு விஜயேஸ்வர என்ற இடத்தில் வீடுகள் கொடுத்தான். தன் உயிரையே நாட்டுக்காக தியாகம் செய்தான் என்று போற்றுவோரும் இருந்தனர். அரசனுக்குரிய மரியாதைகளுடன், தகனம் செய்தனர். சிங்கத்தின் கம்பீரம் தான் போற்றத் தக்கது. அதன் கொல்லும் குணம் அல்ல என்பது இவர்கள் வாதம். நாக ராஜனின் கோபன் தகித்து விட்டது என்றும் சொல்வர். இப்படி நாட்டு பாடல்களில் இடம் பெற்றான்.
சந்திர குல்யா நதியின் போக்கை மாற்றிய பொழுது நடுவில் ஒரு பாறை தடுத்தது. அரசன் அதை அகற்ற தேவதைகளை வேண்டி தவம் செய்தான். அவன் கனவில் ஒரு செய்தி வந்தது. பரி சுத்தமான ஒரு பெண் தொட்டால் நகரும் என்பதாக. உடனே ஊரில் உள்ள அனைத்து பெண்களையும் அழைத்து தொடச் செய்தான். கடைசியில் ஒரு ஏழை குயவன் குலத்துப் பெண் தொட்டு அது நகர்ந்து வழி விட்டது. குல மகளிர் யாரும் இந்த செயலில் தேறவில்லை என்பதால் ஏராளமான பெண்களை அவர்கள் கணவன் மார்கள், சகோதர்கள், பெற்ற குழந்தைகளுடன் வெட்டிச் சாய்த்தான். – இப்படி ஒரு பாடல்.
இந்த கதை எப்படியோ, ஆனால் அவன் காரணமின்றி பல பிரஜைகளை வெட்டி சாய்த்தான் என்பது வரை நிஜம் என்று சொல்வர். இந்த அளவு குணமில்லாதவன் என்று தெரிந்தும் மக்கள் ஏன் அவனை விட்டு வைத்தனர். அவன் வணங்கி வழி பட்ட கடவுளர்கள் அவனுக்கு இந்த அனுமதியை அளித்திருக்கின்றன என்று பேசப்பட்டது.
அவன் மகன் BAKA- பகன் என்பவன் அரசனான். பிரஹ்லாதன் போல இவனும் நியாயமான குணவான். இவனும் எந்த சமயம் மாறுவானோ என்ற பயத்துடனே பிரஜைகள் வாழ்ந்தனர். ஆனால் வேணிற்காலத்து கடும் தாக்கத்துக்குப் பின் பெரு மழை வந்தது போல இவனால் பெரிதும் ஆறுதல் அடைந்தனர். தர்மம் தழைத்தது என்று மகிழ்ந்தனர். இருண்ட குகையிலிருந்து வெளி வந்தால் தூரத்தில் வெளிச்சம் தென் படும் என்பது (இது ஒரு மறைச் சொல்) என்றனர்.
இந்த அரசன் நியாயமாக ஆண்டான். பகவதி என்ற கால்வாயை நிர்மாணித்தான். அதன் கரையில், பகஸ்வப்ரா -भकश्वभ्रा -என்ற இடத்தில் உள்ள சிவன் கோவிலில் சிவ பெருமானை பகேச-भकेश- என அழைத்தான். லவனோத்சவம் என்ற நகரை நிர்மாணித்தான். அறுபத்து மூன்று ஆண்டுகள், பதின் மூன்று நாட்கள் ஆண்டான். தன் மகன் கள், அவர்களின் சந்ததியர் என்று அனைவரும் அருகில் இருக்க விடியற்காலையில் மறைந்தான். மழை பெய்து அவன் மறைவை வானமும் கொண்டாடியதாம்.
க்ஷிதிநந்தன் என்ற அவன் மகன் பட்டத்துக்கு வந்தான். முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அதன் பின் வசுநந்தன் என்ற அவன் மகன் அடுத்த ஐம்பத்திரண்டு ஆண்டுகளும் இரண்டு மாதங்களும் ஆண்டான். அவன் ஸ்மர சாஸ்திரம் என்ற நூலை எழுதி புகழ் பெற்றான். அவன் மகன் நர, அக்ஷ என்ற அவன் பின் வந்த அரசர்கள், சில காலம் தொடர்ந்து அறுபது ஆண்டுகள் ஆண்டனர். அதன் பின் Gopadhidhyan – கோபாதித்யன் வந்தான். அவன் காலத்தை பொற்காலம் என்பர். தனது நாட்டை அதைச் சுற்றி இருந்த தீவுகளுடன் சிறப்பாக பாலித்தான். நல்ல ஆளுமையும் செயல் திறமையும் உடையவனாக இருந்ததால் அவன் காலத்தில் பிரஜைகள் தங்கள் தொழில்களைச் செய்து கொண்டு செழிப்பாக வாழ்ந்தனர்.
அக்ரஹாரங்கள் என்ற வாழ்விடங்கள், பலருக்கும் கட்டிக் கொடுத்தான். ஸாமங்காச, கோல, காகிகா , ஹடிக்ரமா , ஸ்கந்தபுரம், ( Samangasa, khOla, Khagika, Hadigramaa, skandhapura) என்பவை முக்கியமானவை. Gopa hill- கோபா மலை என்ற இடத்தில் ஜியேஷ்டேஸ்வரா என்ற சிவன் கோவிலும், ஆதியிலிருந்து அங்கு வசித்த அந்தணர்களுக்கு அதுவரை தானம் வாங்க மறுத்தவர்கள் என்பதால் வற்புறுத்தி கோப அக்ரஹாரம் என்ற வாழ்விடங்கள் அமைத்துக் கொடுத்தான்.
அங்கும் வர்ணாசிரம நியமங்களை அனுசரிக்காத பலருக்கு, புக்ஷீரவாடிகா என்ற இடத்தில் வீடுகள் கட்டிக் கொடுத்தான். பூண்டு முதலிய மறுக்கப்பட்ட பொருட்களை உண்ட அந்தணர்கள் உட்பட பயனடைந்தனர்.
மற்ற இடங்களில் இருந்தும் சாஸ்திரங்கள் அறிந்தோடு, அதன் நியமங்களுடன் வாழ்ந்த அந்தணர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றியும், அக்ரஹாரங்கள் கொடுத்தும் காஸ்மீர தேசத்தில் நிம்மதியாக வாழச் செய்தான். உத்தமனான லோக பாலன் என்று புகழப் பட்டான். பிராணி வதம் செய்யாமல் யாகங்களை செய்வித்தான். அறுபது ஆண்டுகள் முடிந்து ஆறு நாட்களே ஆன நிலையில் தன் நற்செயலகளின் பலனாக தேவ லோகம் சென்றான் என்பர்.
அவன் மகன் கோகர்ணன் என்பவன் அரசனானான்.
கோகர்னேஸ்வர என்ற பெயரில் கோவிலை கட்டி புகழ் பெற்றான். ஐம்பத்து எட்டு ஆண்டுகளும் முப்பது நட்களும் அவன் ஆட்சி நீடித்தது.
அவன் மகன் நரேந்திராதித்யன் கிங்கிலான் என்று அழைக்கப் பட்டான். அவனும் பூதேஸ்வரர் ஆலயம் கட்டி மேலும் குருவின் அருளால் உக்ரேஸ்வரர் என்ற கோவிலும் தேவியின் ஸ்ரீ சக்ரம் உடைய கோவில்களையும் கட்டினான். முப்பத்தாறு ஆண்டுகளும் நூறு நாட்களும் வாழ்ந்தான். அந்த வயதிலேயே நல்லாட்சியை கொடுத்து மக்களின் நன்மதிப்பை பெற்றான்.
அவன் மகன் யுதிஷ்டிரன் என்ற பெயரில் பட்டத்துக்கு வந்தான். மிக சிறிய கண்கள் காரணமாக கண் தெரியாதவன் என்ற பொருளில் அந்த अन्ध- குருடன் யுதிஷ்டிரர் எனப்பட்டான். தந்தை வழி வந்த சுலபமான ராஜ்யம், அதை நிதானமாக ஆண்டான். முன் இருந்த அரசர்களின் செயல்களை அருகில் இருந்து அறிந்தவன் ஆனதால் விவரம் தெரிந்து அரசாட்சியை சிறப்பாக செய்தான். அரச பதவியும், செல்வமும் அவன் புத்தியை மாற்றி விட்டன போலும். மதிக்க வேண்டியவர்களை மதிக்காமலும், அருகில் வித்வான்களாக இருந்தவர்களை கண்டு கொள்ளாமலும் வெறும் துதி பாடும் வீணர்களின் சொல்லை பெரிதாக விரும்பினான். அனுபவம் மிக்க ஆலோசகர்கள் வேறு வழியின்றி அந்த அரசை விட்டு விலகினர். யோகிகள் அனைவரையும் சமமாக பார்க்கலாம். ஆனல் அரசு பொறுப்பில் இருப்பவன் அவ்வாறு அனைவரையும் அருகில் வர விடக் கூடாது. அரசின் நலம் விரும்பிகளா, இல்லையா என்பதை அவர்கள் தன்னை நெருங்கும் முன் தெரிந்து கொண்டு நல்லவர்களை அருகில் சேர்த்தும், மற்றவனை அவனறியாமல் விலக்கியும் வைக்கத் தெரிய வேண்டும் என்பது அரச நீதி.
துதி பாடுபவர்கள் கூட்டம் அவன் அறிவின்றி செய்த செயல்களையும் புகழ்ந்தனர், அந்த புகழ்ச்சியில் நியாயமாக செய்ய வேண்டியதை மறந்தான். பெண்களிடம் அதிக ஈடுபாடு கொண்டு மயங்கி தன் நிலை மறக்கும் சாதாரண குடி மகனாக ஆனான். எதிரில் ஒருவனை பாராட்டுவதும், பின்னால் தவறாக பேசி சிரிப்பதும் போன்ற தன் அறியாமை வெளிப்பட பேசிய பேச்சாலும், தவறான கொள்கைகளாலும் அரசன் என்ற சொல்லுக்கு தகுதியில்லாதவனாக ஆனான். சந்தர்ப வாதிகளான அந்த வீணர்கள் அரசன் பெயரில் தாங்கள் அதிகாரம் செய்தனர். அரண்மணை நடை பாதைகளில் அவர்களே நிரம்பியிருந்தனர். ராஜ்யம் பல நூறாக பிளந்து வீழ்ந்தது.
அரசன் விழித்துக் கொண்ட பொழுது காலம் கடந்து விட்டிருந்தது. கோபுரத்தின் உச்சியிலிருந்து தலை குப்புற விழுந்தவன் போல ஆனான். திரும்ப வந்து சீராக்க முன் இருந்த ஆலோசகர்கள் யாரும் முன் வரவில்லை. பிரஜைகள் போர் கொடியுடன் வீதிக்கு வந்தனர். அரசன் துரத்தி அடிக்கப் பட்டான். ஊருக்கு வெளியில் வந்து தன் தேசத்தின் நிலையை பார்த்தவன் திகைத்தான். தானிய கிடங்குகள் இருந்த இடங்கள் வெறிச்சோடின. எங்கும் குப்பையும் அராஜகமும். இந்த போராட்டத்தில் அரண்மனையின் உள்ளேயே இருந்த பெண்டிர் அலங்கோலமாக ஓடி வந்து அவனைச் சுற்றி நின்று வசை பாடினர். நெல்லிக்காய் மூட்டை விழுந்து சிதறியது போல அவனைச் சுற்றி இருந்தவர்கள் விலகி பல திக்குகளிலும் மறைந்தனர். அவனுடைய பொக்கிஷம் துரோகிகளான நண்பர்களாலேயே ஸூரையாடப்பட்டன. இவ்வாறு சிறப்பாக ஆரம்பித்த அவனது அரசாட்சி, பெரும் பள்ளத்தில் விழுந்து மறைந்தது.
செய்வதறியாது நடந்தான். அனுசரணையான பட்ட மகிஷி என்ற ராணி மற்றும் சில மனைவிகள் உடன் வந்தனர். அடர்ந்த காட்டுக்குள் கால் போன படி நடந்தனர். ஆரம்பத்தில் இருந்த பயமும் களைப்பும் இப்பொழுது இல்லை. ஒரு வகையில் காட்டின் பசுமையையும், பல விதமான மணமிக்க பச்சிலைகள், மலர்கள், இலை துளிர்களையும் கவனித்து பார்த்து உடல் நலமும் மன நலனும் அடைந்தனர். கழுகுகள், ராஜ்யத்தைக் கவரவே சுற்றி வந்திருக்கிறார்கள் அந்த கொடிய வேட தாரிகள் என்பது புரிந்தது. இது வரை கவனியாது இருந்த, அல்லது ஒரு பொருட்டாகவே நினைக்காத வன விலங்குகள் அருகில் வந்து ஆறுதல் சொல்வது போல அமர்ந்தன. பறவைகள் கூட்டமாக வந்து தங்கள் குரலில் ஏதோ சொல்லி சமாதானம் செய்வது போல சுற்றி வந்தன. அரசனும் அவன் மனைவிகளும் சற்று தெளிவு பெற்றவர்களாக இவைகளை அரண்மனை வாசல் வரை கூட வர விட்டதில்லையே, பேரி என்ற பெரிய தாள வாத்தியம் அதன் ஓசைக் கேட்டே பறவைகள் பயந்து விலகும். மதம் கொண்ட யானைகள் மீது பவனி வரும் பொழுதும் அதன் மேல் கொடி அசைந்து நிழல் தர நகரில் உலா வந்த அரசிளம் குமரிகள். வீட்டின் உள்ளேயே இருந்து பகலா இரவா என்பது கூடத் தெரியாமல் வாழ்ந்தவர்கள்.
ராஜ்யம் கை விட்டுப் போன பின் தான் அரசன் சிந்திக்க ஆரம்பித்தான் போலும். ஆன்மிக சிந்தனைகள் வந்தன. கண்களில் நீருடன் மலர்களும் அட்சதையும் தெளித்து வழி அனுப்பிய நகரத்து சாதாரண பிரஜைகளின் அன்பு மெய் சிலிர்க்க வைத்தது. முடிந்தவரை அனுபவித்து விட்டு கிடைத்ததை சுருட்டிக் கொண்டு போன வேட தாரிகளை அருகில் வைத்து போஷித்தோமே என்று வருந்தினான்.
சிரம பரிகாரமாக ஒரு மரத்தடியில் அமர்ந்து கிளைகளில் ஓடிக் கொண்டும் ஏறி இறங்கிக் கொண்டும் இருந்த வானரங்களின் செய்கை தனக்கு ஏதோ உபதேசம் செய்வது போல உணர்ந்தான். மலையின் சிகரங்களில் தேவையான பழங்களும், கொடிகளில் காய்களும் தங்களுக்கு இருப்பதை இவை தெரிவித்தனவோ. மலையில் வழி அமைத்துக் கொண்டு நடந்து சென்ற பொழுது பழைய வாழ்வை நினைத்து அரண்மனைப் பெண்கள் அலைந்து களைத்து விட்ட சமயம் பூமி பாலர்கள் என்ற அந்த பிரதேசத்து தலைவர்கள், முக்யஸ்தர்கள் அன்புடன் நல் வரவு சொல்லி, உபசாரமாக பேசி, உணவும் நீரும் அளித்து அவர்கள் ராஜ்யத்தை விட்டு வெளியேறியதையே மறக்கச் செய்து விட்டனர். சுஜனா: மிக நல்ல மக்கள், தன் ராஜ்யத்தின் ஒரு பகுதியில் இப்படியும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் போனோமே என நினைக்கும் அளவு அவர்கள் விருந்தோம்பல் இருந்தது.
இதுவரை, காஸ்மீரக மகாமாத்ய சம்பக பிரபு என்பவரின் மகனான கல்ஹணன் (கவியின் பெயர்) ராஜதரங்கினீ என்ற அவரது காவியத்தின் முதல் தரங்கம் நிறைவுறுகிறது.
நற்பதாயிரம் ஆண்டுகளும், ஒன்பது திங்களுக்கும் சற்று அதிகமான காலம் இந்த முப்பத்தெட்டு அரசர்களின் அரசாட்சி பற்றிய செய்திகள் இவை.