ராஜதரங்கினி-2
ராஜதரங்கினி – இரண்டாவது அலை
கோநந்த வம்சம்
அன்னையும் தந்தையும் ஓருருவாக இருந்து அருள் புரியம் மகா தேவனின் மகன், ஒரு கையில் வில்லும், மனித உடல் பாதி, யானை உடல் பாதி என்று விளங்கும் ஐந்து கரத்தான், யானை முகத்தான் என்று பாடப் படும் பெருமையுடையவன், அன்பே உருவானவன், கண நாதன் , வாழ்க. தாயின் அன்பும், தந்தையின் வீரமும் ஆற்றலும் கொண்டிருப்பதாலேயே எல்லையற்ற சக்தி பெற்றவன் எனக்கு அருள் புரியட்டும். போற்றி போற்றி.
கண் தெரியாத யுதிஷ்டிரன் என்று அழைக்கப்பட்டவன் அரசனாக வாழ்ந்ததே கனவாகியது. திரும்ப அரசோ, அரண்மனை வாழ்வோ தேவையாக இருக்கவில்லை. தன்னை அடக்கி வாழும் முனிவர்களின் மனோ நிலையை அடைந்து விட்டவன் போகங்களை விரும்பாததில் அதிசயமில்லை. (நரை அவன் காதுகளில் வந்து சொல்லியது – என்று தமிழில் கம்ப ராமாயணம் எழுதிய கம்பர் தசரத அரசனுக்கு அவன் முதுமையை உணர்த்தி விட்டது என்பார்) அது போல தன் முதுமை நெருங்கி விட்டதை உணர்ந்தான் போலும்.
தன் காதுகளின் பக்கம் நரையைக் கண்டால் கேசம் வெளுக்கத் தொடங்கி விட்டது என்பதை அறியாதவர் யார்? வனத்தில் இருந்த தவ யோகிகள் அவனுக்கு உபதேசம் செய்தனர். இயல்பான நற்குணம் காரணமாக அந்த அறிவுரைகள் அவனுக்கு ஏற்புடையதாக இருந்தது. புலன்களை அடக்கி யோக மார்கத்தில் சுலபமாக தேர்ச்சி பெற்று விட்டான். உலகியல் விஷயங்களில் ருசியோ, அதற்கு காரணமான ஐந்து புலன்களோ, அரசாட்சியில் இருந்த ஆசையோ, மந்திரிகளுடன் செய்த பேச்சு வார்த்தைகளோ, செயல்களோ எதுவுமே அவன் நினைவில் வந்து சிரமப் படுத்தவில்லை.
அவன் மந்திரிகளே, அடுத்திருந்த ராஜ்யத்தின் பேரரசனான விக்ரமாதித்யன் என்பவரின் உறவினனான ப்ரதாபாதித்யன் என்பவனை ராஜ்யாபிஷேகம் செய்வித்து பட்டம் சூட்டி, ராஜ்ய நிர்வாகத்தை சீராக்கினர். கவி தன் சந்தேகத்தை சொல்கிறார். பெயர் ப்ரதாபாதித்யன் என்பது பிரபலமானது. சக शक – என்ற ஒரு அரச குலத்தினரை அடக்கிய விக்ரமாதித்யன் தானா என்பது சந்தேகமாக இருக்கிறது. பலருக்கும் இதே குழப்பம் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. அவர்கள் அறிந்தவரை கேள்வி பட்டதன் அடிப்படையில் எழுதியிருப்பதால் உறுதியாக சொல்ல முடியவில்லை என்கிறார். ஹர்ஷன் என்ற அரசனின் பெயரும் அவரது ஆட்சியில் இந்த தேசம் இருந்ததாகவும் கூட வதந்தியோ, உண்மையோ ஒரு செய்தி உண்டு. கிடைத்துள்ள பெரும்பாலான விவரங்கள் மூலம் காஸ்மீர தேசம் ஹர்ஷன் நியமித்து அனுப்பிய மாத்ருகுப்தன் என்பவன் தலைமையில் இருந்தது என்பது நம்பகமாக தெரிகிறது. இருந்தாலும் அது உஜ்ஜயினியை ஆண்ட ஹர்ஷனா என்பது தெளிவாக இல்லை. மற்றொரு விவரம், ஹர்ஷ வர்தனன், கான்னோஜ் என்ற இடத்தில் இருந்ததாக சீன யாத்ரிகர் ஹுவான்-சங்க் என்பவர் குறிப்பிட்டிருப்பது இந்த இருவரில் யார் என்பது கேள்விக்குரியதே. வலிமையான ஒரு அரசு காஸ்மீர தேசத்தில் அந்த சமயம் இருந்தது என்பது வரை உறுதியாக தெரிகிறது. மணமான புதிதில் தன் மனவியை விருப்பமுடன் நல்ல முறையில் நடத்தும் மணமகன் போல இந்த தேசத்தை கொண்டாடி ஆண்டான் என்றும், தேசம் பல அபிவிருத்திகளை அடைந்தது என்றும் அறிகிறோம். முப்பத்திரண்டு ஆண்டுகள் இந்த அரசு, அதன் பின் ஜலௌகா என்பவனும் அதன் பின் அவன் மகனும் ஆண்டனர். இதுவும் பொற்காலமாகவே கருதப் படுகிறது. தனயனும் தந்தை வழியில் பல வகையில் நன்மைகளை கொண்டு வந்தான். ஆரம்பத்தில் நிலவின் குளிர்ச்சியோடு இருந்தான். பின்னால் ஸூரியன் போல தேவைகளை அறிந்து நல்ல செயல்களை செய்தான் என்பர். அவனுக்கு வாய்த்த மனைவி வாக்புஷ்டா – நல்ல வாக்குடையவள்- நல்ல அறிவுடையவள். அவளை தேவமகள் என்று நாட்டு மக்கள் போற்றினர். அவர்கள் மகன் துஞ்சீனன் பட்டத்துக்கு வந்தான். அவன் மக்களின் அன்புக்கு பாத்திரமானான். அவன் பெற்றோர்களிடம் இருந்த மதிப்பு காரணமாக இருந்திருக்கலாம். அந்த சமயம் பூமி வளமாக இருந்து செல்வம் கொழித்ததும் காரணமாக இருந்திருக்கலாம். கங்கை ஒரு பக்கம், இளம் பிறை ஒரு பக்கம் என்று தரித்த தூர்ஜடீ என்ற சிவ பெருமானுடைய அருளால் நாட்டில் வர்ணாஸ்ரமம் முறையாக செயல் பட்டது, அவரவர் தங்கள் குலத் தொழிலை விருப்பத்துடன் முறையாகச் செய்தனர், பல வண்ணங்களுடன் இந்திரனின் வில் -வானவில் – தெரிவது போல அந்த ஆட்சி மனதிற்கு இதமாக இருந்தது என்பர். இந்த தம்பதி ஒத்த மனதினராக இருந்து ஸ்ரீ ஹரனுக்கான ஆலயம் துங்கேஸ்வர என்ற அழகிய ஆலயம் என்பதை கட்டினர். அந்த பூமிக்கே அது ஆபரணமாக திகழ்ந்தது. அதனுடன் கதிகா என்ற பட்டணம்- நகரம் என்பதையும் நிர்மாணித்தனர்.
(மத்வராஜ்யம்- என்ற பகுதியில், (காஸ்மீர் இரண்டு பகுதிகளாக வர்ணிக்கிறார். இன்றைய ஸ்ரீ நகருக்கு கீழ் உள்ள பகுதி கிரமராஜ்யம் Kanraz என்றும், விதட்சா என்பதன் தலை நகராக அதன் இரு பகுதிகளிலும் உள்ளது Maraz மத்வராஜ்யம் )
மத்வராஜ்யம் என்ற பகுதியில் நல்ல வெய்யில் உண்டு. அதன் பலனாக நிறைய பழ மரங்கள் செழித்து வளர்ந்து நல்ல பலனைக் கொடுத்தன. எனவே அந்த இடத்தில் பல வகை குறுகிய காலத்தில் பழுக்கும் பழ மரங்கள் நடச் செய்தான்.
மகாகவி எனப்பட்ட சந்த்ரகன் – த்வைபாயன முனி- வியாசருக்கு மறு உருவம் போல அழகிய காவியங்களை இயற்றினார். பொது மக்கள் விரும்பி பார்த்து ரசிக்கும் நாட்டிய நாடகங்கள், சுபசிதாவலி என்ற நூல், கல்ஹணன் சொற்படி மகாபாரதத்துக்கு இணையானதாக இருந்ததாம். இவரே தான் மகா கவி காளிதாஸன் புகழ்ந்த சந்த்ரகோமின் – அல்லது சண்டக என்று சீன யாத்ரீகர் சொன்னார். , இருவரும் அவரை சிறந்த கவி என்று விவரித்துள்ளனர். . அவர் கவிதைகள் காளி தாசனுக்கு சமமான காதல், மற்றும் வீர ரசம் நிறைந்த கவிதைகள் இன்றளவும் பிரசித்தமாக உள்ளன.
அவர்களின் பிரபாவம் மாஹாத்ம்யம் இவைகளை சோதனை செய்வது போல பொது மக்களால் தாங்க முடியாத பஞ்சம் வந்தது. பசுமையான வயல்கள், சரத் காலத்தில் பயிர்கள் நிறைந்த வயல் வெளிகள், மழைக்காக காத்திருந்த சமயம் பாத்ரபத மாதம்-புரட்டாசி – பனி மழை பெய்தது. காலத்தின் அட்டஹாசம், உலகையே அழிக்கத் துடித்த இயற்கையின் விபரீதம், விளையும், விளைந்த பயிர்கள் அழிந்தன- முக்கியமாக தானியங்கள் விளைந்த வயல்கள் நாசமாயின. அது தானே உணவு, மனிதனின் பசி தீர்க்கும் மருந்து. அதுவே இல்லையானால்..உயிர் தரிப்பதே கேள்வியானது. 44/398
பயங்கர பஞ்சம். பசி, தாகத்தால் வாடி உயிரினங்கள் அனைத்தும் மரணத் தறுவாயில் இருந்தன. பிராகாரங்கள், ஊருக்குள் சாலைகள் எங்கும் கோரமான வறட்சியே – பத்னி ப்ரீதியா, மகன் என்ற அன்பா, தந்தை தாயிடம் மதிப்பா, வயிறு நிரம்பினால் தானே இவையனைத்தும் – அனைத்து மக்களும் உணர்வு என்பதே அற்றவர்களாக பசி ஒன்றே நினைவாக மாறினர். பசி என்பது எந்த அளவு கொடுமையானது என்பது அப்பொழுது புரிந்தது. அதன் தாபத்தில் வெட்கம் பொசுங்கியது. அபிமானம் அகன்றது. தன் குலப் பெருமைக்கு என்ன மதிப்பு? உணவு உணவு இது ஒன்று தான் தேடல். அஹம்- தான் என்ற எண்ணம் அடிபட்டு விலகியது. அலக்ஷ்மீ- வறுமையின் கோர தாண்டவத்தில் உலகமே வெறும் தூசாகியது. உயிர் தொண்டை வரை வந்து நிற்கிறது, ஏதாவது கொடு என்று தந்தை மகனை யாசித்தால், மகன் என்ன செய்வான், தனக்கே இல்லை. தேடக் கிளம்பினான். எலும்பு கூடுகளாக ஆன மக்கள். உணவைக் கண்டால் அடிதடி வரை போட்டி. எங்கும் கண்கள் செருகி காணவே பயங்கரமான உடல்கள். பேச்சில் கடுமை சாதாரணமானது. இந்த நிலை மாறுமா என்ற கேள்வியே நிறைந்த சமயம், இனியும் தாங்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப் பட்ட உயிரினங்கள், லோக நாதன் கண்ணில் தென்பட்டதோ, அவருடைய கருணையின் ஈரம் கசியத் துவங்கியதோ, அரசன் நேரில் வந்தான். தன்னிடம் இருந்த அனைத்தையும் அவர்களுக்கு கொடுத்து உதவினான். கடவுளே வந்தது போல அவன் வரவு மக்களுக்கு ஆறுதல் அளித்தது. விலை மதிப்புள்ள ரத்தினங்களே கடல் போல நிரம்பியிருந்த பொக்கிஷத்தையே திறந்து வைத்து, தன் அரண்மனையில் உடன் இருந்த மனைவிகள் மற்றும் உறவினர்களின் நகைகள், மதிப்பு மிக்க பொருட்கள் அனைத்தையும் இந்த மக்களின் உணவை வாங்க செலவழித்தான். மந்திரிகளின் சேமிப்பையும் விடவில்லை. இரவும் பகலும் கிடைத்த உணவு பொருள் இருந்த இடத்திற்குச் சென்று தானியங்களோ, காய்களோ, பழங்களோ வாங்கி வந்து கொடுத்தான். காடுகளில், ஸ்மசானங்களில், வீதிகளில், கிடைத்த இடத்தில் வீழ்ந்து கிடந்த மக்கள், எவரையும் விடவில்லை. அந்த நேரத்தில் பசி என்ற பூதம் தான் அனைத்தையும் ஆக்ரமித்திருந்தது. அதன் பின்னும் கையில் தனம் அனேகமாக தீர்ந்தது எனும் சமயம் மிகவும் துக்கத்துடன் தேவியை துதி செய்தான்.
“தேவி! எங்களுடைய அபசாரம் தான் காரணம் என்றால், என்னை தண்டிப்பாய்,. நிரபராதிகளான இந்த ஜீவன்கள், என்ன செய்தன. இது போன்ற துக்கம் யாருக்கும் வரக் கூடாது. கேட்டதே இல்லையே. திங் மாம்- தன்னையே நொந்து கொள்ளும் சொல். அதன்யனா நான். செல்வத்துக்கு அருகதை இல்லாதவனா?, இந்த ஜனங்கள் என் ஆட்சியில் இந்த துக்கம் அனுபவிக்க என்ன காரணம்? கண்ணால் காண என்னால் பொறுக்க முடியவில்லை. யாரை சரணடைவேன், தாயே, தாங்க முடியாத துக்கம் என்ற கிணற்றில் வீழ்ந்து கிடக்கிறேன், காப்பாற்று, தயவு செய்.
பந்துக்கள் உதவ வழியில்லை. அவர்களும் இதே நிலையில் பரிதவித்துக் கொண்டு இருந்தால் எப்படி உதவ முடியும்? அனைவரும் எதற்காக வாழ வேண்டும் என்று நினைக்கத் துவங்கி விட்டார்கள். எப்படியோ இது வரை என்னால் முடிந்ததை செய்து விட்டேன். மேலும் எப்படி சமாளிப்பேன். காலத்தின் கோர முகம் என்றால் என் ஆட்சியில் ஏன் இப்படி ஆக வேண்டும்? பூமிக்கு இரக்கமே இல்லையா? ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டாளே. என் பிரஜைகள் இப்படி பயங்கரமான துன்பக் கடலில் மூழ்கி ஏன் மறைய அனுமதிக்க வேண்டும்? என்ன உபாயம் செய்வேன். ஸுரிய தேவனும் கண் திறக்க முடியாமல் இந்த பனிப் படலம் தடுக்கிறது. இது தான் கால ராத்திரியோ. விஸ்வமே அழியும் பிரளய காலமோ. கடக்க முடியாக இமய மலைச் சாரல்கள் பனி நிரம்பி வழியே மூடிக் கிடக்கின்றன. எந்த திசையும் புலனாகாமல் ஜனங்கள், என்ன செய்வார்கள்? என் பிரஜைகள் ஸூரர்கள், அறிவிற் சிறந்தவர்கள், உயர் கல்வி கற்றவர்கள், அவர்கள் பயிற்சிகள் செய்து பெற்ற தகுதிகள், அறிவு களஞ்சியங்களாக திகழ்ந்தவர்களை காலத்தின் தடுமாற்றத்தால் எந்த திறமையும் அற்றவர்கள் போல தவிக்கிறார்கள்.
எந்த பெண் தான் பொன்னும் மணியுமாக அலங்கரித்துக் கொள்ள ஆசைப் படாமல் இருப்பாள்? நட்புடன் பேசும் நண்பர்கள் குழாத்துடன் இருக்க விரும்பாத யுவ யுவதிகள் உண்டா? அவர்கள் தங்களிடையே அமுதம் வர்ஷிப்பது போல பேசிக் கொள்வார்கள். வழிப் போக்கர்கள் வழியில் கிடைக்கும் உபசாரங்களை நினைத்து வருவார்கள், என்றுமே அவர்கள் எதிர்பார்ப்பு பொய்யானதில்லையே. இந்த தேசத்தில் வசிப்பவர்கள் அனைவருமே சிறந்த குணவான்கள், அவர்களை இப்படி ஆட்டி படைப்பது எனக்கு பொறுக்கவில்லை. நான் என் தேகத்தை நெருப்பில் பொசுக்கிக் கொள்வது தான் வழி இனியும் எனக்கு என் பிரஜைகள் தவிப்பதைக் காண சக்தியில்லை. இரவில் நிம்மதியாக உறங்கும் பேறு பெற்ற அரசர்கள் தான் தன்யர்கள் – பாக்யம் செய்தவர்கள். என் பிரஜைகளை என் வயிற்றில் பிறந்தவர்களைப் போலவே பாலித்தேன். இப்படி அலறி வருந்தியவன், தன் முகத்தை ஆடையால் மறைத்துக் கொண்டு விசித்து விசித்து அழுதான். நியாயமான அரசன் அவன்.
வாக்புஷ்டா என்ற மனைவி அருகில் வந்து சமாதானம் செய்தாள். இது போல பெரும் துக்கம் வந்து இயல்பாக சக்தியுடைய அரசனை வருத்தினால் அது அவன் கையை மீறிய இயற்கையின் செயல். உங்களை ஏன் வருத்திக் கொள்கிறீர்கள். என்று சொல்லியவள் தானும், தன்னைப் போலவே இருந்த பல உயர் குலமும், பண்பும் உள்ள பெண்கள் அனைவருமாக பிரார்த்தனைகள் செய்யலானார்கள். சத்ய விரதனான உன்னைப் போன்ற அரசனுக்கு அவன் ஆட்சியை குறை கூறும்படி செய்ய எவனால் முடியும். இந்திரன் எவன்? படைத்தவன் எந்த அறிவில்லாதவன்? யம ராஜ என்பவன் என்ன தர்ம வான்? பதிவிரதையான பெண்கள் தவம் செய்கிறோம். நம்பிக்கைக்கு பாத்திரமான மந்திரிகள் பிரார்த்தனை செய்வார்கள். ப்ரஜா பாலனமே தன் கடமை, வேறு எதுவும் அறியாத நல்ல அரசன் உலகுக்கே ஒரு வரம். அரசனே, எழுந்திரு. நாங்கள் அனவரும் விரதம் மேற் கொள்கிறோம். ப்ரஜாபாலனே! உன்னை விட நம் மக்களுக்கு பசி பெரிதல்ல, எழுந்து வா, எங்களுக்கு தலைமை தாங்குபவனாக இரு. உன் முயற்சிகளை கை விடாதே. இப்படி உணர்ச்சி பொங்க ஆறுதல் சொன்ன வாக்புஷ்டாவின் சொற்கள் தேவதைகளின் காதில் விழுந்ததோ, ஒரு புறா கூட்டம் அங்கு வந்து விழுந்தது. ஏதோ உயிர் உள்ளது என்று அதிசயமாக பார்த்த ஜனங்களும் அவற்றை உணவாக கொண்டனர். பிரதி தினமும் அதே போல புறாக்கள் கூட்டம் வந்து விழுந்து அவர்கள் உயிர் உடலில் நிற்க உதவியது தெய்வ செயல் தான்.
.அது ஒரு நல்ல சூசகம் என்றனர். வானம் வெளுக்க ஆரம்பித்ததைக் காண மக்களும் அதுவரை தாவர உணவே ஏற்றவர்கள் ஆனதால் மாமிசத்தை உண்ணத் தயங்கியவர்கள் மன பலம் பெற்றார்கள். இதோ விடிந்து விடும் என்ற ஆறுதலை அந்த புறாக் கூட்டங்கள் கொடுத்தன. மெள்ள மெள்ள பனி விலகி, ஸுரியனின் வெப்பம் உடலில் படவும் உயிரினங்கள் பசியை மறந்தனர். அரசனும், அரசியும் செய்த பிரார்த்தனைகளும் விரதங்களும் அந்த கோரமான வறட்சியை முற்றிலும் அழித்து விட்டன.
அக்ரஹாரங்களில் அந்தணர்கள் தெளிவாக வேதம் ஓதினர். வீடுகளின் பத்னி பெண்கள் தங்கள் வேலைகளை மனக் குறைவின்றி செய்யலானர்கள். கடிமுஷா என்ற இடத்திலும் ராமுஷா என்ற இடத்திலும் அக்ரஹாரங்கள் கட்டி வேதம் ஓதும் அந்தணர்களுக்கு கொடுத்தாள். முப்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்த பதி மறைந்த பின் சோகத்தால் வாடியவள் கடுமையான ஜுரம் வந்து வாக்புஷ்டா மறைந்தாள். அந்த பிரதேசத்தை வாக்புஷ்டா வனம் என்றே அழைக்கின்றனர். சதிகளுள் சிறந்த சதி அவள் என்று போற்றினர். அவள் ஸ்தாபித்த தர்ம சாலையில் இன்றளவும் மக்கள் வந்து வயிறார உண்டு மகிழ்கிறார்கள்.
இந்த இருவருக்கும் சமமாக என்னால் ஒருவனை படைக்க முடியுமா என்று ஐயமுற்றவன் போல படைப்புக் கடவுள் அவர்களுக்கு சந்ததியைக் கொடுக்கவில்லை போலும். .
அறிவுடையவர்கள் கரும்பை உயர்வாகச் சொல்வார்கள். அதற்கான பாடுகள் பட்டாலும் அதன் ரஸம் நாக்கில் பட்டவுடன் அது வரை பட்ட சிரமங்கள் மறைந்து விடுமே. அது தான் அமுதம் என்பதற்கு இணையான ரசம். இதை கொடுத்த படைப்புக் கடவுளிடம் மேலும் என்ன வேண்டுவோம். ஸூரியனின் கிரணங்கள் எட்டாமல் போக, பனி மூடி, நெடுங்காலம் இருண்டே கிடக்க நேர்ந்து விட்ட பூமி. தன் பிரஜைகள் படும் சிரமத்தைக் காண பொறுக்காமல் தானே அக்னி பிரவேசம் செய்யத் துணிந்த அரசன்.
அது போல மற்றொரு அரசனும் காஸ்மீர தேசத்தை ஆள வந்தான். . விஜயா என்ற அந்த அரசன் எட்டு ஆண்டுகள் ஆண்டான். விஜயேஸ்வரம் என்ற இடத்தைச் சுற்றிலும் பல நகரங்களைக் கட்டுவித்தான். அவன் மஹீ மஹேந்திரன் – பூமியில் மகேந்திரன் போல இருந்தான். ஜயேந்திரன் என்ற அவன் மகன். நல்ல உடற்கட்டு உடையவனாக ஆஜானு பாஹு என்பார்கள், முழங்கால்களை எட்டும் கைகள் உடையவன் என்று பொருள். முன் ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற ப்ருது என்ற அரசன் இருந்தான். அவன் பூமியில் பல நன்மைகளைச் செய்தான் என்பர். இந்த அரசனும் அவ்வாறே அழைக்கப் பட்டான். அழகிய சொற்களால் கவி அவன் புகழைப் பாடுகிறார். ஆலோல கல்லோல கீர்தி கல்லோல துகூல வலனோஜ்வலாம் – – இப்படி வார்த்தைகளால் அலங்காரமாக வர்ணிக்கிறார். இதன் பொருள்: கம்பம் போன்ற புஜங்கள்- பலவான் என்பதைச் சொல்லும். அழகிய பட்டாடை காற்றில் பறக்க ஜயஸ்ரீ- வெற்றி என்ற தேவதையை அவன் புகழே சகாயமாக பாதுகாத்தான்.
அத்புதமான ஆற்றலுடைய ஒரு மந்திரி அந்த அரசனுக்கு உதவியாக இருந்தார். சாந்திமதி என்ற பெயருடன் புத்திசாலியான மந்திரி. ஆற்றலைப் போலவே பவன் என்ற சிவ பெருமானிடம் பக்தியை பூஷணமாக- ஆபரணமாக கொண்டவராக விளங்கினார். அவர் அறியாத அரச நீதிகள், உபாயங்கள் எங்குமே இல்லை எனலாம். அரசர்களை மதம் கொண்ட யானை போல என்பர். இங்கும் ஒரு சிலர் அந்த யானையை தன் விருப்பம் போல வளைக்க முயன்றனர்.
அதி புத்திசாலியான மந்திரி அதிகமாக அவனை நம்பக் கூடாது என்பது போல பேசி அரசனிடம் மந்திரி பற்றிய தவறான எண்ணம் தோன்றச் செய்தனர். அரசனும் அந்த வார்த்தைகளில் மயங்கி சாந்திமதி என்ற முக்கிய மந்திரியிடம் வெறுப்பை காட்டினான். அரச சபைக்குள் அந்த மந்திரியை வர விடாமல் தடுத்தான். காரணமின்றி கோபத்துடன் செய்த செயலின் பலன் சாந்திமதி என்ற அறிஞர் செல்வம் அழிந்து தரித்திரனானான். உயிருடன் இருந்தவரை அதிலிருந்து மீளவே இல்லை. ஆனால் அவரோ. தான் சுதந்திரமானவனாக ஆனதாக மகிழ்ந்தார். சிவ பூஜையில் மனதையும் நாட்களையும் செலவழித்தார். வீடுகளில் ஒரு குரல் ஒலித்தது. இந்த அரசு பின்னால் சாந்திமதியின் கைக்கு வரும் என்பதாக. தானே தான் இந்த வதந்தியை பரப்பியிருக்கிறான் என்று நினைத்து அரசன் அந்த மதி மந்திரியை சிறையில் அடைத்தான். அரசனின் மறைவு வரை விடுதலை கிடைக்கவில்லை. கோபக்கனலில் வெந்து கொண்டிருந்தவன், உண்மை நிலையை அறியவே இல்லை. பலவிதமான வியாதிகளால் அவதிப்பட்டு மறைந்தான். அந்த அரசன் மறந்தது தனக்கு மேல் விதி என்ற ஒன்று தன் வினைகளின் கணக்கை வைத்திருக்கிறான். அதன் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. யாரானாலும். அருகில் மண் குடத்தின் வெண்ணெய், சூட்டில் உருகி இருந்ததை நீராக நினைத்தவன் போல மதி மந்திரியின் அருமையை அறியாதவனாக அவரையும் அழித்தான், தானும் அழிந்தான்,
சாந்திமதி அனவசியமாக துன்புறுத்தப் பட்டதைக் கண்ட ஈசான என்ற குரு, தன்னடக்கம் மிக்கவர், எளிதில் உணர்ச்சி வசப் பட மாட்டார் என்றலும் வருந்தினார். காட்டுப் பூக்கள் மணமின்றி பயனின்றி இருந்தும் பல நாட்கள் இருக்கும். ஸீர்ஷ புஷ்பம் என்ற மணம் மிகுந்த பயனுள்ள மலர் ஒரே நாளில் வாடி விடும். மற்றவர்கள் ஒதுக்கினாலும் அந்த அறிவிற் சிறந்த மதி மந்திரியின் அந்திம கிரியைக்கு அவர் சென்றார். எலும்பு கூடாக வற்றி உலர்ந்து விட்ட அவரது சரீரத்தை பார்த்து அடக்கமாட்டாமல் அழுதார். மகனே! உன்னுடைய இந்த நிலையைக் காணவா நான் உயிருடன் இருக்கிறேன் என்றபடி சிதையை காட்டு ஓனாய்களிடம் இருந்து காப்பாற்ற ஒழுங்கு படுத்திய போது நெற்றியில் இருந்த ப்ரும்ம லிபியை படித்தார்.
‘பத்து ஆண்டுகள் சிறை வாசம், அடி பட்டு மரணம் அதன் பின் மறு பிறவியில்லாத ராஜாதி ராஜ பதவி’ – வாங்கி வந்த வரம் என்று பேச்சு மொழியில் பொது மக்கள் சொல்வது – அது தான் நடந்து விட்டிருக்கிறது. படித்து அதையே மனதில் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தார். வாழும் காலத்தில் யாருக்குத் தெரியும். அவர் யோகி, சாதனைகளை அறிந்தவர் ஆனதால் இந்த செய்தியை புரிந்து கொள்ள முடிந்தது. வாழ் நாளில் செய்வதை எந்த அளவு எண்ணிச் செய்ய முடிகிறது. அந்தந்த சமயத்தில் புத்தி அறிவது தான் சுகமோ துக்கமோ. நல் வினை பலன் உடையவனுக்கு சரியான வழி தென்படுகிறது. அவன் வெற்றியடைந்தான் என்று உலகில் சொல்வது. பல இடர்களை தாண்டி வந்தவன் என்பது யாருக்குத் தெரியும்.
மணிபுர அர்ஜுன என்பவன் ஒரு சமயம் கொல்லப் பட்டான். அவனை ஒரு நாக பெண் தன் அதிசயமான ஆற்றலால் பிழைக்கச் செய்தாள் என்று ஒரு செய்தி அனைவருக்கும் தெரியும். அதே போல, பரீக்ஷித் ராஜா, துரோண புத்திரனின் பயங்காரமான அஸ்திரம்- ஆயுதம்- அதால் தாக்கப் பட்டான், தாயின் வயிற்றிலேயே குற்றுயிரானவன். அவனை பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் காப்பாற்றினார்.
தைத்யர்களால் கசன் சாம்பலாக்கப் பட்டான். தார்க்ஷ்யன் என்ற நாக தலைவனால் உண்ணப்பட்டான். மறுமுறை பிழைத்து வந்தான். அதை மற்ற யாரால் செய்திருக்க முடியும். அது தெய்வ செயலே.
தானே இவ்வாறு பலவிதமாக யோசித்து ஆராய்ந்து கடைசி வரியான அரச பதவி அடைவான் என்பதை நேரில் காண விரும்பி அருகிலேயே தன் குடிலை அமைத்துக் கொண்டு தங்கினார். ஒரு நாள் நடு இரவில், நறு மணம் நாசியைத் துளைக்க விழித்துக் கொண்டார். எங்கிருந்து வருகிறது? தூபங்கள் மணம், வாத்யங்கள் இசைக்கப் படும் சப்தமும் காதில் விழ ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தார். டமரு நாதமும் ஓங்கி ஒலித்தது. அந்த மயானத்தின் இருட்டில் கண்கள் பழகி கண்ட காட்சி அவரை மெய் சிலிர்க்க வைத்தது. பிரகாசமான ஒளி வட்டத்தின் உள்ளே ஒரு யோகினி நின்றிருந்தாள். சிதையில் இருந்த சாந்திமதியின் உடலை அவளுடன் வந்திருந்த சிலர் தூக்கிக் கொண்டு போய் ஒரு மரத்தில் சாய்த்து வைத்தனர். யாரோ அரச சேவகர்கள் இன்னமும் துரத்துகிறார்கள் என்று எண்ணிய ஈசான குரு, கையில் வாளுடன் அங்கு சென்றார்.
யோகினியின் பரி ஜனங்கள் அந்த உடலின் அங்கங்களை சரியாக பொருத்தினர். மிக கவனமாக அங்கங்களை பொருத்தி, கிடைக்காத கால்களை வேறு எங்கிருந்தோ கொண்டு வந்தும் அந்த பெண்கள் மணமகனை அலங்கரிப்பது போல உத்சாகத்துடன் செய்தனர். ஒரு சிலர் சாந்திமதியின் ஆவி, வேறு சரீரம் கிடைக்காமல் அலைவதை அறிந்தவர்கள் போல அதைத் தேடிச் சென்றனர். அதை கொண்டு வந்து இந்த எலும்புக் கூட்டில் சேர்த்தனர். மேற் பூச்சுகள், மற்றும் ஏதோ வைத்யங்கள் செய்த பின் அது உயிர் பெற்றது. தூங்கி எழுந்தவன் போல மதிமந்திரி சாந்திமதி அவர்களை அன்புடன் பார்த்தபடி நின்றார்.
என்ன ஆகும் என்று சிறிது கூட நினத்து பார்க்க முடியாத நிலையில் தான் பாதுகாவலாக அங்கேயே இருப்பதே நன்று என்று நினைத்தவராக ஈசான குரு அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தார். இப்படி அன்புடன் செய்பவர்கள், அவரை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்களோ என்ற ஐயமே காரணம். கண் மூடி திறப்பதற்குள் யோகினி கூட்டம் மறைய,
அசரீரி குரல் கேட்டது. “ஓ ஈசான குருவே! பயப்பட வேண்டம். இந்த தேகம் பழைய படியே சீராக்கப் பட்டு விட்டது. வஞ்சனையாக இவனுக்கு இழைக்கப்பட்ட உடல் உபாதைகளைத் தவிர இவன் அதே போல பழைய சாந்தி மானே. எங்களுடைய அன்பும் இவனுக்கு காவலாக இருக்க, இவன் ஆர்யராஜா வாக இருப்பான். சாந்திமான் அதே போல உலகில் புகழ் பெற்று விளங்குவான்.’
சாந்திமானும் தன் உடலில் திவ்யமான மாலைகளை அணிந்தவனாக, திகைத்தாலும் குருவை அடையாளம் கண்டு கொண்டவனாக வந்து வணங்கினான். கனவில் கூட காண முடியாத நிகழ்ச்சிகளால் வாயடைத்து நின்ற ஈசான குருவும் தன் திகைப்பை உதறி தன் மாணாக்கனான சாந்திமானை அணைத்து ஆசீர்வதித்தார். இருவரும் தெய்வ செயல், யாரால் எது எப்படி என்பதை மனிதனால் அனுமானிக்கவா முடியும். இப்படி பேசிக் கொண்டிருக்கையிலேயே, நகரத்து மக்கள் விஷயமறிந்து ஓடி வந்தனர். குழந்தைகளும் பெரியவர்களும் அதிசயமான இந்த சம்பவத்தைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தனர். பழைய உருவம் இல்லையே என்ற சந்தேகத்துடன் சிலர் கேள்விகள் கேட்டனர்.
அவர்களே திருப்தி அடைந்து ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ள வேண்டினர். பழைய அரசனும் இல்லை, அவனுக்கு பின் ஆட்சியை ஏற்க மகனும் இல்லை என்பதால் ஒத்துக் கொண்டான். அவர்கள் முறையாக சாஸ்திரங்களில் சொல்லியபடி ராஜ்யத்தில் அபிஷேகம் செய்வித்தனர். புது அரசன் என்பதால் சில அறிவுரைகளை பெரியவர்கள், பழைய மந்திரிகள் வழங்குவர். அதற்கு அவசியம் இருக்கவில்லை.
ஊர் விழாக் கோலம் பூண்டு வரவேற்றது. சேனை வீரர்கள் முன்னும் பின்னும் வாத்தியங்களை இசைத்துக் கொண்டுச் செல்ல, உப்பரிகைகளீல் இருந்து மலர்கள் தூவி ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்க, அந்த ஊர்வலம் அரண்மனைக்குள் நுழைந்தது.
அசைகளை அடக்கியவன் அந்த உயர்ந்த ஆசனத்தில் தன் கடமை என்பதாகவே ஏற்றுக் கொண்டான். காடுகளில் தவம் செய்யும் முனிவர்களின் பக்குவத்தை அடைந்து விட்டவன், சாதாரண போகங்களை விரும்பாததில் அதிசயம் இல்லை. ஒரு துறவி தலையில் கை வைத்து ஆசீர்வதித்த பொழுது தன்னை காப்பற்றிய யோகிணியின் மணம் வர திகைத்து நோக்கினான். மகிழ்ச்சியாக இருந்தது. சிவ பெருமானின் கோவில் வாசல் படிகளை தான் கழுவி சுத்தம் செய்த பொழுது இந்த மணத்தை அறிந்தோம் என்பது நினைவுக்கு வந்தது.
அடுத்து வந்த நாட்களில் தன் இஷ்ட தெய்வ மூர்த்தியை அபிஷேகம் செய்யும் பொழுது அந்த துறவியின் சாயலைக் கண்டு கொண்டான். சாதாரண துறவி அல்ல, அது பகவான் விஜயேஸ்வரனே . அந்த பெண்கள் வனத்தில் வந்து தன்னை காப்பாற்றியதும் பெண்கள் அல்ல. இவரைப் போன்ற துறவிகள் அல்லது யோகசாதனைகள் செய்தவர்களே. காட்டு மலர்களில் புண்ய கந்தம் – மணம், தூப தீபங்களின் மணம் இவைகளை அந்த கரங்கள் தன் மேல் பட்ட பொழுது உணர்ந்தேனே என எண்ணினான். பூதேச, வர்தமானேஸ, விஜயேச என பல வித துதிகளால் வணங்கப் படும் தேவனே உடன் இருந்து கண்காணிப்பது போல அடக்கத்துடன் ராஜ்யத்தை நிர்வகித்தான்
சிவாலயங்களில் வழக்கம் போல தன் வழிபாடுகளையும் சேவைகளையும் குறைவறச் செய்து வந்தான். அவன் அரச சபையே ருத்ராக்ஷம் அணிந்த சிவ பக்தர்களால் நிரம்பியது. பிறை ஸூடி பெருமானை தியானம் செய்தே அரச செயல்கள் நடந்தன. ஆயிரம் சிவ லிங்கங்கள் நிறுவுவது என்ற தீர்மானம் சிறப்பாக நடந்தேறியது. விட்டுப் போன நாட்களில் கல் பலகைகளில் வரை படமாக வரைந்து வைத்தனர். அதை இன்றளவும் காணலாம். குளங்களில் மலர்ந்த தாமரைகளும் சிவலிங்கத்தை ஒத்திருந்தனவாம். நர்மதா நதியை ஒத்த பெரிய குளங்கள் வெட்டி தாமரை வனங்களாக செய்தான்.
நீல உத்பல மலர்கள் நிறைந்த குளங்களில் விடியும் முன் நீராடி சிவ பூஜைகளை செய்து முடித்த பின் அரச சபைக்கு வருவது வழக்கமாக ஆயிற்று. ஜாகரணம் என்ற இரவு முழுவதும் வழிபாடுகள் செய்வதும், தவசீலர்கள் இணைந்து செய்தனர். மாக -மாசி மாத த்து இரவு – சிவராத்திரி நாடு முழுவதும் அமோகமாக கொண்டாடப் பட்டது
கிராமங்களில் கோவில்களைச் சுற்றி இருந்த இடங்கள் வளமான வயல்களும் வீடுகளுமாக செழிப்பாக அமைத்துக் கொடுத்தான். பெரிய லிங்கங்கள், வாயிலில் நந்தி உருவங்கள்,சூலங்களும் அதே அளவு ப்ரும்மாண்டமாக என்று அமைந்தன. தன் உடல் கிடந்த தடTheda என்ற இடத்தில் ஈசானேஸ்வர என்ற பெயரில் ஒரு கோவிலை நிர்மானித்தான். அந்த இடமும் சாந்திவனம் என பெயர் பெற்றது.
Theda தட, பீமாதேவி மற்றும் பல இடங்களிலும் மாளிகைகள், அழகான உபவனங்கள், பாடசாலைகள், வழிப் போக்கர்கள் தங்கும் இடங்கள் என்று பலவகையாக வசதிகள் செய்து கொடுத்தான். சிவலிங்கங்கள் பல இடங்களில் கோவில்களில் அமைக்கப் பட்டன.
ஐம்பது மூன்று ஆண்டுகள் சிறப்பாக ஆண்டவன், ஒரு வேணிற்காலத்தில் பனியால் ஆன லிங்கங்களைக் கண்டு அதிசயித்தான். காஸ்மீரத்தில் அதுவரை காணக் கிடைக்காத அந்த தரிசனம் அவனுக்கு தன் கடமையை நிறைவேற்றி விட்ட திருப்தியை அளித்தது.
தனக்கு வாரிசாக ஒரு அரசனை நியமிக்க நினைத்து தகுதியான ஒருவனைத் தேடலானான். யுதிஷ்டிரன் என்ற பாரத காலத்து அரசனின் வாரிசாக வந்தவன், கோபாதித்யா என்பவன், காஸ்மீர தேசத்தை கைப்பற்ற நினைத்து முற்றுகையிட்டான்.
அவன் தந்தை அனுப்பி ப்ரக்ஜ்யோதிஷா என்பவன் மகளின் சுயம்வரத்திற்குச் சென்றான். ராஜ குமாரி அம்ருதலேகா அவனுக்கு மாலையிட்டாள். அந்த சமயம் கரு மேகங்களும் வானத்தில் நிரம்பி அமுதமாக வர்ஷித்தன. இது ஒரு நல்ல சகுனம் என்று மக்கள் நம்பினர். அவன் சக்ரவர்த்தியாக வருவான், வருணனின் அருள் பெற்றவன் என நம்பினர். நீர் வளம் தான் நில வளம் கொண்டு வரும் என்பது இயற்கையின் செயல். அவன் காஸ்மீர தேசத்துக்கு வந்த சமயம் ஊர் மக்கள் அன்புடன் வரவேற்றனர்.
அதற்குள் ஆர்யராஜாவான சாந்திமான் தன் காலமும் ஆனதை நினைவில் கொண்டு தானாக விலக தீர்மானித்தான். நான் மனமுவந்து பகவான் பூதபாவனனை வணங்கி வழி பட்டேன். அவர் அருளால் பல நன்மைகளை அனுபவித்து விட்டேன். ராஜ்ய நிர்வாகத்தில் மூழ்கி அத்யாத்மிகமான சாதனைகளை விட்டு விட்டேன் போலும். மழையில் நடக்கும் வழிப் போக்கன் போல தடுமாறினேன், தூக்கத்தால் தன்னை மறப்பது போல இல்லை என்பதை அறிவேன். இவ்வாறு நினைத்து தவம் செய்பவர்கள் நிறைந்த இடத்தில் இனி நாட்களை கழிக்க தீர்மானித்து மௌனியாக, நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்தான். மக்கள் சபையைக் கூட்டி தன் தீர்மானத்தை விளக்கிச் சொல்லி விட்டு வெளியேறினான். மக்கள் அமைதியாக கண்களின் நீருடன் வழி அனுப்பினர். கவ்யூதி என்ற இடத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து, ஒவ்வொருவராக பின் தொடந்து வந்தவரை அழைத்து ஆசிகள் செய்து திருப்பி அனுப்பி விட்டு நடந்து வடக்கு நோக்கிச் சென்றான். பின் தொடர்ந்து வந்த மக்களின் கடைசி மனிதன் வரை உபதேசித்து விட்டு தவசீலர்கள் நிறைந்த குகைக்குள் நுழைந்து விட்டான். நதியின் பிரவாகம் தன் வழியில் பிரவகித்துச் செல்லும். மெள்ள மெள்ள நீரோட்டம் குறைய ஓடையாக செல்லும். ஆனாலும் தன் பொறுப்பு தீர்ந்தது என்பது போல திருப்தியாக ஆகும். அது போல தன்பிறப்பிற்கான பொறுப்பு நிறைவேறிய திருப்தியை அடைந்தான் எங்கிறார் கவி.
பசுமையான தாவரங்கள் அடர்ந்த வனத்தின் நடுவில் ஒரு தெளிவான குளம். அதன் கரையில், இலைகளை மடித்து கிண்ணம் போல செய்துகொண்டு அதில் நீரை நிரப்பி அருகில் வைத்துக் கொண்டான். மாலை மயங்கி இரவு வரும் வரையில் அமர்ந்து இருந்தவன், மரத்தின் உதிர்ந்த இலைகளே படுக்கையாக அதில் உறங்கினான்.
மலைச் சிகரங்களின் நிழலில் வெய்யிலின் தாக்கமும் அதிகமாகத் தெரியவில்லை. இடையர் குல பெண்கள், மல்லிகை மலர்க் கொடிகளின் கீழ் அமர்ந்து கல கல வென பேசும் குரல் இனிமையாக கேட்டது. மலர்ந்த மல்லிகை மலர்களின் மணம் எங்கும் வீசியது. வன தேவதைகள் குழல் ஊதுவது போல இனிமையான நாதம் எங்கும் பரவி இருக்க, அருவிகளின் நீர் விழும் சத்தமும் தாலாட்டு போல அவனை உறங்கச் செய்தன.
திடுமென காட்டு யானைகளின் பிளிறல் தாள வாத்யம் ஓங்கி ஒலிப்பது போல கேட்டது. கொக்குகள் மற்றும் சில பறவைகள் இடையிடையே ஒத்து வாசித்தன போல கூவின. எங்கோ தவளைகள் அடிக் குரலில் ஓசையிட்டது கேட்டது. மூன்று யாமங்கள் கடந்து விட்டதையறிந்து மேற்கொண்டு பிரயாணம் செய்யவே நினைத்தான். மறு நாள் தொடங்கியதை அறிவிக்கும் உதய சூரியனை வணங்கி காலைக் கடன்களை முடித்து தன் வழக்கமான நியமங்களையும் செய்து முடித்து விட்டு தாமரை மலர்கள் மலர்ந்து சிரித்து காலை வணக்கம் சொன்னதை ஏற்றுக் கொண்டு, நடக்கலானான். முன் பரிச்சயமான சோதரா நீர் ஊற்று அருகே வந்து, அதையும் தாண்டி நந்திசா என்ற பூத நாதனின் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான்.
நந்தி க்ஷேத்ரம் அது. மூவுலக நாயகன் முன்னால் வந்து வணங்கிய சமயம் தான் விரும்பியது என்ன என்பது உறைத்தது. அங்கிருந்த துறவிகளும் பக்தர்களும், நெற்றியில் விபூதியும், கழுத்தில் ருத்ராக்ஷமும், ஜடையாக சேர்த்து கட்டிய கேசத்தையும் பார்த்து பரவசமானார்கள். சிவ பக்தன் ஸ்ரீ கண்டன் – கழுத்தில் அடையாளம் கொண்ட சிவ பெருமான் பெயர்- பாதங்களை வந்து அடைந்து விட்டேன் என்ற ஆறுதல் உண்டாயிற்று. மற்ற துறவிகளுடன் பிக்ஷைக்கு சென்று அவர்களுடன் கிடைத்ததை உண்டு வாழும் வாழ்க்கையே அமைந்து விட்டது. பிக்ஷைக்கு சென்றால், இல்லறத்து பெண்கள் நல்ல பழங்களும், மற்ற உணவுகளையும் தாராளமாக அவரது பிக்ஷா பாத்திரத்தில் இட்டனர். இதுவும் ஒரு பாக்யமே.
இதுவரை ஸ்ரீ காஸ்மீரக மகாமாத்யர் ஸ்ரீ சண்டகர் என்ற பிரபுவின் மகன் கல்ஹணன் எழுதிய ராஜ தரங்கிணியின் இரண்டாவது தரங்கம்-அலை நிறைவுற்றது.
இரு நூற்றாண்டுகள் எட்டு மாதங்கள், முடிந்த வரை இந்த இரண்டாவது தரங்கத்தில் விவரித்து உள்ளவர்கள் ஆறு புகழ் பெற்ற அரசர்களின் வரலாறு.
ராஜ தரங்கிணி- மூன்றாவது தரங்கம்-அலை
இது ஒரு விதமான கவிதை அழகு.நிந்தாஸ்துதி என்பர். கடவுள் வணக்கத்துடன் ஆரம்பிக்கிறார். அவரை நேரில் பார்த்து சொல்வது போல பாடல்.
இந்த யானைத் தோல் எதற்கு? அதை தூக்கி ஏறி. அதை விட அந்த யானையின் முகத்தில் தோன்றும் முத்துக்கள் மேலும் அழகானவை. உன் மார்பில் அழகிய அலங்காரமாக விளங்கும். நெற்றியில் எதற்கு இந்த ஜுவாலையுடன் தீ. அதிலிருந்து இலவசமாக உன் கண்களுக்கு அஞ்சனம் – மை கிடைக்கிறதா? அடுத்து எதற்கு இந்த பாம்புகள் ஆபரணமா? என்று கேட்கும் முன் சிவா – பார்வதி அழைக்கிறாள் என்று நகர்ந்து விடுவார். அதற்கு முன் உன் வணக்கத்தை சொல்லி விடு. மாதொரு பாகனான சிவபெருமான் உன்னை காக்கட்டும்.
அரசன் இன்றி இருக்கக் கூடாது என்பது ஒரு நியதி. அதனால் மந்திரிகள் விசாரித்து அறிந்து கொண்டு மக்களுக்கு தெரிவித்தனர். அதன் படி மேகவாஹனன் என்ற புகழ் பெற்ற சக்ரவர்த்தியாக விளங்கியவனை அந்த பிரதேசத்து மக்கள் அரசனாக ஏற்றுக் கொண்டனர். அவன் அப்பொழுது தான் தன் மந்திரிகளுடன் காந்தார தேசம் சென்றவன் திரும்பி வந்து கொண்டிருந்தான்.
ஆரம்பத்தில் அவன் பொது மக்களுக்கு தேவையானதைச் செய்து ரக்தன்- பிரியமானவனாக ஆனான். ஆனால் சில நாட்களிலேயே, அவனை முற்றிலும் அறியாத மக்கள் அவனிடம் வைத்த நம்பிக்கையை இழந்தனர். துவைத்த ரக்த- சிவந்த துணி, வெளுத்து விடுவது போல அவன் மேல் இருந்த நம்பிக்கையும் வெளுத்தது. (ரக்தன் – பற்றுள்ளவன், ரக்த சிவப்பு நிறம்)
போதி சத்வரிடமும் ஈடுபாடுடைய அரசன். தான் பதவியேற்ற நாளில் இருந்து, சாத்வீகமான கொள்கைகளும், உண்மையையும் அன்பையும் போதித்த போதி சத்வர் கொள்கைகளை அமலுக்கு கொண்டு வந்தான், உயர் பதவிகளில் இருந்தவர்கள் டமாரம் அடித்து அரசனின் ஆணையை தெரிவித்தனர். பிராணி வதம் கூடாது என்று இறைச்சி தயார் செய்யும் கூடங்களை அப்புறப் படுத்தி விட்டான். அதில் வேலை செய்தவர்களுக்கு அரண்மனை பொக்கிஷத்தில் இருந்து பொருளுதவி செய்து மறுவாழ்வு பெறச் செய்தான்.
ராஜ்யத்தில், ஜைனர்கள் – மார வித்வேஷிணர்கள் என்பர்- இவர்கள் மன்மதனுக்கு விரோதிகள்- பொது மக்களின் இயல்பான ஆண் பெண் உறவுகளை மறுப்பவர்களே பிரபுக்களாக ஆனார்கள். யாகங்களில் உயிருள்ள பசுக்கள்,ஆடுகளுக்கு பதிலாக வெண்ணெயில் தயார் செய்த பசு உருவங்கள் ஹோமங்களில் ஹவிஸாக பயன்படுத்தினர்.
மேகவன என்ற பெயரில் குடியிருப்புகளும், மயுஷ்ட கிராமம் என்பதில் பாடசாலைகள் ஏற்படுத்தினான். இந்த இடங்களில் வைதீக, புத்த மத போதனைகள் நடந்தன.
மனைவி அம்ருத பிரபா வின் பெயரில் புத்த பிக்ஷுக்கள் வசிக்கவும், உயரமான விஹாரங்கள் கட்டுவித்தான். அம்ருத பவனம் எனவே அழைக்கப் பட்டன. அவர் தந்தையின் குருவாக ஒரு வெளி நாட்டவர் லோ Lo என்பவர் அவருடைய தாய் மொழியில் ஸ்துன்பா என அழைக்கப் பட்டார். அதனால் அது போன்ற விஹாரங்கள் ஸ்தூபங்கள் என்றாயின. லோ ஸ்துன்பா என்பதை அவர் துவக்கி வைத்தார்.
அரசனின் மற்றொரு மனைவி யுகதேவி என்பவள், போட்டிக்கு அழகிய கலை, கணித அம்சங்களுடன் நடவன என்ற இடத்தில் ஸ்தூபங்கள் கட்டுவித்தாள். ஒரு பகுதியில் சிக்ஷாசார்யர்கள் என்ற பிக்ஷுக்கள் வசித்தனர். இவர்கள் நியமங்களுடன் மத போதனைகளை செய்பவர்கள். மற்றொரு பகுதியில் இல்லறத்தில் உள்ளவர்கள் தங்கள் மனைவி குழந்தைகள், வளர்ப்பு பசுக்கள் இவைகளுடன் வாழ்ந்தனர்.
மற்றொரு மனைவி இந்திர தேவி என்பவள் தன் பெயரில் இந்திர பவனம் என்பதை சதுரமான கட்டிடமும், அருகில் ஸ்தூபம் என்பதையும் கட்டுவித்தாள்.
மற்ற மனைவிகள், காதனா என்பவளும், சம்மா என்பவளும் அழகிய பல சிற்பங்களுடனும் கலை அம்சங்களுடனும் ப்ரும்மாண்டமான விஹாரங்கள், அவரவர்கள் பெயரில் கட்டுவித்தனர்.
ஒப்பிட்டு பார்க்கையில் இளையவனான இந்த அரசன் பல புதுமைகளை புகுத்தினான். விளையாட்டு அரங்கம் ஒன்றில் தானும் விளையாட்டை ரசித்துக் கோண்டிருக்கும் சமயம் கூட்டத்தில் சல சலப்பு உண்டாயிற்று. யாரோ சிலர் பயத்துடன் திருடன் திருடன் என்று கத்தினர்.
சேவகர்களைப் பார்த்து, யாரங்கே, திருடனை பிடியுங்கள் என்று ஆணையிட்டான். பயந்து அலறியது நின்றது. ஆனால் திருடன் என்று எவரும் பிடிபடவில்லை. சில நாட்களுக்குப் பின் தன் பாதுகாப்பு சேவகர்களுடன், சென்று கொண்டிருந்த பொழுது ஒரு சில அழகிய பெண்கள் அவன் முன் வந்தனர். பேரழகிகள். தயாளுவான அரசனும் தன் குதிரையை நிறுத்தி அதில் இருந்தபடியே அவர்கள் குறையைக் கேட்டான். அவர்களும் தலை மேல் கை வைத்து கை கூப்பி வணங்கி விட்டு சொன்னார்கள். கருணா நிதே! உங்கள் ராஜ்யத்தில் வெளியார் யாரிடமிருந்து என்ன துன்பம் வரப் போகிறது. அனைத்தும் நலமே.
எங்கள் கணவன்மார்கள் நாகர்கள். ஒரு சமயம் மேகங்களாக மாறி ஸூரியனை மறைத்தனர். விவசாயிகள் கவலைப் பட்டனர். திடுமென மழை வந்தால் கதிர் விளைந்து அறுவடைக்கு தயாரான சமயம், மறு பக்கம் நெல் வயல்கள் செழித்து தலை நிமிர்ந்து நின்றவை இதோ கதிர் விட்டு தலை சாய்க்கும் என்ற எதிர்ப் பார்ப்புடன் இருந்தவர்கள். அந்த மேகங்களை இந்த பிரதேசத்திற்கு விரட்டி விட்டார்கள். அன்றொரு நாள், கோபத்துடன் ஆணையிட்டீர்கள், அந்த நாகர்களை தண்டியுங்கள் என்று உங்கள் சேவகர்கள் உடனே செயல்படும் முன் உங்கள் கோபத்தைக் கண்டே அவர்களை பிடித்து சிறை வைத்தனர். அதனால் தயவு செய்து எங்கள் கணவன்மார்களை காப்பாற்றுங்கள். என்றனர். அரசன் அதைக் கேட்டு தன் சேவகர்களிடம் அவர்களை விடுவிக்க ஆணயிட்டான். நாகர்களும் கட்டு விடுபட்டு வந்து அரசனை வணங்கி அனைவருமாக விடைபெற்றனர். 60/398
பிராணி வதையை நிறுத்த வேண்டும் என்ற கொள்கையை பரப்ப அரசன் திக்விஜயம் செய்து வர கிளம்பினான். சென்ற இடங்களில் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தனர். ஆங்காங்கு மக்கள் அரசனை ஜய ஜய என்று சொல்லி வாழ்த்தினர். புத்த மத ஸ்தாபகரே பொறாமைப் படும் அளவு அவனுடைய விஜய யாத்திரை வெற்றிகரமாக இருந்தது. பல இடங்களுக்கும் சென்ற யாத்திரை நீர் ஊற்று உள்ள இடம் வந்து சேர்ந்தனர். அங்கு சேனை வீரர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அரசனும் அடுத்து சுற்றி இருந்த தீவுகளை கைப்பற்ற திட்டமிட்டுக் கொண்டிருந்தான். தாளி வனம் நிழலாக இருக்கவும் அனைவரும் சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்தனர். திடுமென ஒரு அழுகுரல் கேட்டது. இந்த தேசத்து அரசன் மேக வாகனன் ஜீவ ஹிம்சையே கூடாது என்று சொல்கிறான், நீங்கள் என்னை ஏன் கொல்லப் பார்க்கிறீர்கள் என்று ஒருவன் சொல்லிக் கொண்டிருந்தான்.
உலையில் இடப்பட்டு சூடான இரும்பு ஆயுதம் தன் மேல் பட்டது போல அரசன் துடித்தான். தன்பெயரைச் சொல்லி ஒருவன் அழைக்கிறான் என்பது மட்டுமே குறியாக, சத்தம் வந்த திசை நோக்கிச் சென்றான். அது தேவி சண்டிகையின் ஆலயம். ஒரு மனிதனை பலி கொடுக்க ஆயத்தங்கள் நடப்பதாக தெரிந்து அரசன் அருகில் சென்று விசாரித்தான்.
அருகில் சென்ற அரசன், அறிவில்லையா உனக்கு? ஏன் இவனை வதைக்கிறாய் என்று வினவினான். அந்த சபரன் – வேடன், அரசனைக் கண்டதும் மிக வருத்தத்துடன் தன் துக்கத்தைச் சொன்னான். என் மகன் உடல் நலம் இன்றி மரண வாயில் இருக்கிறான். இந்த பலியை (உயிர் தியாகத்தை) பாதியில் நிறுத்தினால் அனர்த்தமாகும். என் குலம், உறவினர் அனைவரும் பாதிக்கப் படுவர். இந்த அனாதை சிறுவனை நடுக் காட்டில் இருந்து கொண்டு வந்தேன். என் மகனுக்கு நாங்கள் உறவினர்கள் இருக்கிறோம், எங்கள் கடமை அவனைக் காப்பது. இவனுக்கு யாருமில்லை. இருவரில் யாரைக் காப்பது முக்கியம் சொல்லுங்கள். என்றான்.
அரசன் ‘ ஓ வேடனே! கவலைப் படாதே. அரசனாக எனக்கு உன் மகனை காக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சிறுவனுக்கு பதிலாக நான் வருகிறேன். என்னை பலி கொடு, இரு பக்கமும் உயிர் பிழைத்து நலமாக இருங்கள் என்று சொல்லியவனைப் பார்த்து அனைவரும் திகைத்தனர்.
சபரனும் திகைத்தவன் தன்னை சமாளித்துக் கொண்டு ‘அரசே! உணர்ச்சி வசப் பட்டு நீங்கள் சொல்வது நியாயமல்ல. மூவுலகிலும் பிறந்தவனின் முதல் கடமை தன்னை காத்துக் கொள்வது. அரசனுக்கு அது இன்னமும் அதிகமாக சொல்லப் படும். சரீரம் தானே தர்ம சாதனம். தன் பிரஜைகளைக் காக்க வேண்டியவன் இப்படி அவசரப் பட்டு ஒரு செயலை செய்வது தகாது’ என்றான். இந்த அனாதை சிறுவனை காத்து என் மகனை உயிரிழக்கச் செய்யவா? அதனால் அரசனே, இந்த சிறுவனுக்காக, என் மகன், என் குலம், உங்கள் ஆட்சியில் உள்ள பல உயிர்களை தியாகம் செய்வீர்களா ? இந்த செயலால் நீங்கள் பெறப் போவது என்ன? கௌரவமா? புகழா? செல்வமா? தாரம்- மனைவி மக்களா? உறவினர்கள் மகிழப் போகிறார்களா? தர்மத்தை காப்பதாக சொல்லி உங்கள் முதலாய கடமையான தேச பாலனம் அதை விடுவீர்களா? இவைகளை அரசன் செய்ய காரணம் அவன் தன் பிராணனை காத்துக் கொள்வதிலேயே அடக்கம். அதனால் பிரஜா நாத! தயவு செய்யுங்கள், இந்த க்ஷண நேர ஆவேசத்தை விட்டு யோசியுங்கள். உங்கள் ராஜ்யத்தில் பல குழந்தைகளும் பெரியவர்களும், உங்கள் அண்டியிருக்கும் அனைவரையும் நீங்கள் நீடூழி வாழ்ந்து காப்பாற்றுங்கள். . இந்த சிறுவனுக்காக உங்கள் உயிர் தியாகம் பலன் இன்றிப் போகும். இவனை விட்டு விடுங்கள். இந்த தியாகம் வெறும் வாய் சொல்லாக சில நாட்களில் மறக்கப் படும்.
அரசனோ, பிடிவாதமாக, உறுதியாக பதில் சொன்னான். ‘மூடனே! எனக்கே உபதேசம் செய்கிறாயா – என் உடல் மட்டும் அழியாமல் நிரந்தரமாக இருக்கப் போகிறதா? என்றோ போவது இன்று அழியட்டும். அதனால் ஒரு அனாதை சிறுவன் பிழைப்பான், உன் வேண்டுதலும் நிறைவேறும், உன் குலத்தாரும் உன் மகனோடு பிழைப்பர், வழி விடு, என் வாள் என் கையில் இருக்க அதிக நேரமாகாது நான் சொன்ன சொல்லைக் காப்பாற்ற. என்று தன் வாளை உறுவினான். சாமுண்டி இருந்த இடம் நோக்கி நின்றபடி கங்கையில் நீராடியவர்கள் அதை உயர்வாக சொல்வார்கள், பாலை வனத்தில் அதைப் பற்றி யாருக்கு என்ன தெரியும்? மேலும் ஒரு வார்த்தையும் பேசாதே.
வாளை தூக்கிய கை தூக்கியபடி இருக்க அனைவரும் அதிசயத்துடன் அரசன் தலை மேல் பூ மாரி பொழிந்ததையும் ஏதோ ஒரு தேவதையின் கை அவனுடைய வாள் பிடித்த கையை தடுப்பதையும் கண்டனர். திடுக்கிட்டு பார்த்தவன் எதிரில் தேவி சண்டிகாவோ, வேடனோ, அனாதை சிறுவனோ இல்லை. ஒரு தேவன் நின்றிருந்தான்.
நான் லோக பாலர்கள் என்ற இயற்கையின் பாதுகாவலர்களுல் ஒருவன். என்னை வருணன் என்பர் நீருக்கு அதிகாரி. நீ உண்மையான கருணை நிறைந்த மனிதன். வானத்து நிலவு போலவே மக்கள் மனதில் நிறையும் நற்குண அரசன். தற்சமயம் உன்னை அலங்கரிக்கும் குடையும் கொடியும் என்னுடையவை. (அரச பதவி) அதை பூமி அபகரித்தாள். அவளுக்கு பக்க பலமாக இருந்தவன் உன் அந்த நாளய மாமனாராவார். ரசாதளத்தில் இருப்பவர்கள் – நாகர்கள். அவர்கள் தான் எங்களுடைய தனித் தன்மை வாய்ந்த சில சக்திகளுக்கு அடிப்படையாக இருப்பவர்கள். அதனால் நாக குலத்தை மீட்க வந்தவன் உன் ஆற்றலை சோதிக்க இந்த தோற்றத்தைக் காட்டினேன். நீ கருணை மிக்கவன் என்பதில் சந்தேகமேயில்லை.
உன் முன்னோர்கள் வசுகுலம் என்பதில் இருந்தவர்கள் மானிட உலகுக்கு பல தீமைகளைச் செய்தனர். பலவித இடையூறுகள், சமயங்களில் பிராண பயம், என்று மக்கள் அவதியுற்றனர். அந்த பாபங்களுக்கு பரிகாரம் போல உன் குணங்களும் நடத்தையும் உள்ளன.
சேஷன் என்ற ஆதி நாகம் அதன் உடலில் இருந்து பயமும், ஆசையும், மகிழ்ச்சியும் உலகில் தாய் தந்தைகள் அனுபவிப்பது. அந்த சேஷனின் உடலில் ஒரு பக்கம் விஷம், ஒரு பக்கம் உயர் மணி என்று விபரீதமான இரு தத்துவங்கள் ஒன்றாக இருப்பது போலவே மனிதனுக்கும் இது போன்ற உணர்வுகள் எதிர் மறையாக இருந்தாலும் தேவையாக இருந்தன.
தீ யின் ஜுவாலை ஒளியும், வெப்பத்தையும் தரும் அது தானாக திசைகளில் ஊடுருவி பரவுவது போலவே மனித குலத்தின் புகழ் பரவி உலகை வியாபிக்கும். அதன் ஜுவாலையை மனித மனதின் ஆசையுடன் ஒப்பிடுவர். தீ கக்கும் புகையே அதிக ஆசை, பள பளப்பான ஜுவாலையே மனித உலகில் அனுபவிக்கும் இன்பங்கள் அல்லது சுகம். அது போலத் தான் உன் வம்சம் இருந்தது. சில அரசர்கள் தங்கள் செயல்களின் விளைவாக பல க்லேசங்கள்- துன்பங்கள் அடைந்தனர், மழை நாள் போல அலுப்புடன் இருந்தனர். மூன்று கோடி உயிர்களை உங்கள் வம்சத்தில் ஒருவன் கொன்று குவித்தான். அவன் வழியில் நீ அஹிம்சையை போதிப்பவனாக வந்தது அதிசயமே.
சக்ரவர்த்தியான மேகவாஹணன் அந்த தேலோக வாசியை வணங்கினான். கை கூப்பியவனாக துதி செய்தான். குடையை மரியாதையாக மதிப்புக்கு உரியவருக்கு தருவது ஒரு மரபு. தன்னிடம் உள்ள மிக மதிப்புள்ள பொருளை அர்ப்பணிப்பதாக பொருள். அப்படி கொடுத்ததை வருணன் ஏற்றுக் கொண்டான்.
கற்பக மரத்தையும், நல்லவர்களையும் ஒரே அளவு கோலால் மதிப்பிட முடியாது. கற்பக மரம் வேண்டினால் தான் கொடுக்கும், நல்லவர்கள் தாங்களே தேவையறிந்து கேட்கும் முன் கொடுப்பார்கள். பழ மரங்கள் போல, நிழலால் தன்னிடம் வந்தவர்களுக்கு ஆறுதல் அளிப்பதும், பசியாற பழங்களைக் கொடுப்பதும் இயல்பாக அவை செய்கின்றன, அது போல பெரியவர்கள் தாங்களே கண்டு கொண்டு தேவையானதைச் செய்வார்கள் என்று அறிவேன். இருந்தாலும் நான் தங்களிடம் ஒரு வரம் வேண்டுகிறேன். அனுக்ரஹம் செய்ய வேண்டும்.
இந்த பூமி என் கைக்கு வந்தபின் என்னால் முடிந்தவரை இதை நியாயமாக பாலித்து வருகிறேன். கடலைத் தாண்டி சில தீவுகள் உள்ளன. அவைகளை என் ராஜ்யத்திற்குள் கொண்டு வர விரும்புகிறேன். இந்த சமுத்திரத்தைக் கடக்க ஒரு வழி சொல்ல வேண்டும். வருணனும் நீ நீருக்குள் கால் வைத்தால் அந்த இடம் மண்ணாகி வழி கொடுக்கும் என்று வரம் அளித்தான்.
மறுநாள் முடியுமா என்ற ஐயத்துடனேயே அவனுடைய படை வீரர்கள் கடல் கரையோரமாகவே கடலைக் கடந்து லங்கை வரை சென்று விட்டனர். அரசனோ குணம் என்ற ரத்தினங்கள் நிறைந்தவன். சமுத்திரமோ ரத்னாகரம் என்றே பெயர் பெற்றது. (உயர்ந்த குணம்- உயர் மணிகள்) ரோஹணம் என்ற மலையை அடைந்தனர். இலங்கையின் அரசன் விபீஷணன் வந்து வரவேற்றான். அங்கு பனை மரங்கள் அடர்ந்த்த சோலைகளில் அவன் படையினர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சுகமான கடற் காற்றும், மணலும் அவர்களுக்கு புதிது. அரக்கர் குல தலைவன், விபீஷணன், மனித குல அரசன் மேக வாஹணன், இருவரும் அன்யோன்யமாக பேசிக் கொண்டனர். அரச சபையில் பாடும் வந்திகள் இருவர் பெருமையையும் பாடி மகிழ்வித்தனர். இலங்கையை பரிபாலித்து அரக்கர் குலத்துக்கே வழி காட்டியாக விளங்கிய விபீஷணனின் விருந்தோம்பலும் விமரிசையாகவே இருந்தது. விடை பெறும் சமயம் பல கொடிகள், அந்த நாட்டின் பெருமையையும், அந்த குல பெரியவர்களையும் சித்தரித்த பெரிய பதாகைகள் இவற்றை அன்பளிப்பாக அளித்தான். அவை தான் இன்றளவும் காஸ்மீர தேசத்தில் அரச யாத்திரைகளில் பயன் படுத்தப் படுகின்றன. அவர்களுக்கு பிராணி வதம் செய்யக் கூடாது, அஹிம்சையின் உயர்வையும் சொல்லி விட்டு அரசன் நாடு திரும்பினான்.
(கவியின் கற்பனையே இந்த இலங்கை விஜயமும் கடலைக் கடந்ததும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருத்து )
முப்பத்து நான்கு ஆண்டுகள் ஆண்ட திருப்தியுடன் அரசன் மேகவாஹணன் மறைந்தான். நீண்ட ஆயுள் இல்லாமல் போக, துர்கையின் பலியைத் தடுத்ததுதான் காரணம் என்று அந்த பிரதேச மக்கள் நம்பினர். ஆதித்யன் மறைந்தது போல சில காலம் மக்களிடையில் அவன் நினைவு இருந்தது.
அடுத்து ஸ்ரேஷ்டசேனன் என்ற அவன் மகன் அரசனானான். ப்ரவரசேனன், துஞ்சீன என்றும் அழைக்கப் பட்டான். பலசாலியாக இருந்ததால் மதிக்கப் பட்டான். பூமி வளமாக இருந்து ஆசிர்வதித்தாள். தேவியின் மாத்ரு சக்கரங்கள் என்பதுடன் ப்ரவரேஸ்வர் என்ற ஆலயத்தைக் கட்டுவித்தான். சாஸ்திரங்கள், புராணங்களில் சொல்லியபடி பல பொது மக்களின் நலனுக்கான செயல்களைச் செய்தான். முப்பது ஆண்டுகளே அவன் ஆட்சி. தான் கட்டிய பிரவேஸ்வர ஆலயத்திற்கு பல நிலங்களையும் பொருட்களையும் எழுதி வைத்தான்.
அதன் பின் ஹிரண்ய, தோர்மன என்பவர்கள் வந்தனர். அந்த அரசர்கள், விவசாயிகள், மற்றும் இல்லறத்தார்களான பொது மக்கள் முப்பது அரசர்கள் வரை அஹிம்சையை கொள்கையாக கொண்டு ஆண்டனர்.
சகோதர்களுக்குள் சச்சரவு வர காரணம் மூத்தவன் ஏராளமான நாணயங்களை தன் பெயரை பொறித்து வெளியிட்டான். தோர்மான் அதை எதிர்த்து தானும் தன் பெயர் பொறித்த நாணயங்களை வெளிடலானான். அதனால் வெகுண்ட ஹிரண்யன் அவனை சிறையில் அடைத்தான். பல காலம் சிறையில் இருந்தான். இதற்கிடையில் இக்ஷ்வாகு பரம்பரையில் வந்த ஒரு அரசனான வஜ்ரேந்திரனின் மகளான அவன் மனைவி அஞ்சனா என்பவள்,பேறு காலத்தை எதிர் நோக்கி இருந்தாள். ஹிரண்யனின் ஆட்களால் இடையூறு வரலாம் என்ற பயத்தால், தோர்மான் எச்சரித்து தன் இயலாமையால் வருந்தியவனாக அவளை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னான். அவளும் ஊருக்கு வெளியில் ஒரு குயவனின் வீட்டில் அடைக்கலம் புகுந்தாள், அங்கு ஒரு மகனை பெற்றாள். குயவனின் குடும்பத்தில் அவள் அவர்கள் மகளாகவே அன்புடன் நடத்தப் பட்டாள். குயில் குஞ்சுகளை காகம் பாதுகாப்பது போல. 67/398
அந்த குயவ மாதுவும், ராணியும் தாங்கள் மட்டும் அறிந்த உண்மையை வெகுகாலம் மறைக்க முடியாது என்றும் அறிந்திருந்தனர். பெண் நாகம் தன் குஞ்சை மறைத்தாலும் அதன் தலை மேல் வளரும் ரத்னம்- உயர் மணி காட்டிக் கொடுத்து விடும் அல்லவா. அது போல ப்ரவர சேனின் பேரன், பாட்டனார் பெயரையே கொண்டவன் தாயிடம் கேட்டு தெரிந்து கொண்டான் தான் யார் என்பதை. அரசகுமாரன் குயவ பெண்மணி அன்புடன் காப்பாற்றி வளர்த்தவள், என்ற விவரங்களைத் தெரிந்து கொண்டான். வளர வளர அவன் அந்த இடத்து சிறுவர்களுடன் இணைந்து வாழ முடியவில்லை. தேஜஸ்வியான அவனுக்கு அவர்கள் ஏற்ற தோழர்களாக எப்படி ஆக முடியும். குளத்தில் முளைத்த பத்மத்தின் இலைகளே குளத்தின் நீர் தன் மேல் ஒட்டாமல் தள்ளி விடுவது போல. அவர்களை தவிர்த்து மற்ற உயர் குலத்து சிறுவர்கள், வீரனாக, ஸூரனாக , கற்றவர்களாக இருப்பவர்களே அவனுக்கு உற்ற நண்பர்கள் ஆனார்கள். குயவனின் சமூகத்துச் சிறுவர்கள் அதிசயத்துடன் பார்த்தனர். விளையாடும் சமயம் அவனை அரசனாக பாவித்தனர். அவனிடம் மண் உருண்டையைக் கொடுத்து பானை செய்யச் சொன்னால் அவன் சிவ லிங்கங்களை தயாரித்தான். சிங்ககுட்டி வனத்தில் மற்ற சிறிய வன விலங்குகளின் இடையில் இருந்தாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லையா.
தன் பிறப்பை அறிந்தாலும் அவனைப் பற்றி எப்படி யாரிடம் தெரிவிப்பது என்பது தெரியாமல் அவன் தாயும், வளர்த்த மாதும், குழம்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் சிறுவனின் மாமன் ஜயேந்திரன் யதேச்சையாக அவனைக் கண்டான். ஏதோ வித்தியாசமாகத் தெரிய அந்த சூழலில் அவன் தனித்து தெரிந்ததால், விசாரித்தான். சிறுவர்கள் அவனைப் பற்றி தாங்கள் அறிந்த வரை சொன்னார்கள். சாயலை வைத்து தன் சகோதரி, அவள் கணவன் இருவரையும் ஒரு சேர காண்பது கண்டு ஜயேந்திரன், அவன் வசித்த வீட்டிற்குச் சென்றவன் தன் சகோதரியைக் கண்டான். பல நாட்களுக்குப் பின் அவர்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொண்டு கண்ணீர் பெருக உரையாடியதைக் கண்டு, ப்ரவர சேனன் என்ற அந்த சிறுவன் யார் இவர்கள் என கேட்க, குயவ மாது அவர்களை அறிமுகம் செய்வித்தாள்.
ப்ரவர சேனன் முழு விவரங்களையும் அறிந்த பின் திகைப்பும், தாங்க முடியாத வருத்தமும் அடைந்தான். சொந்த சகோதரன் இப்படியா செய்வான்? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்பி தானே யாத்திரிகனாகச் செல்வது என்று முடிவு செய்தான். அதற்குள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவன் தந்தை உயிரிழந்ததும், அதன் பின் மூத்தவனும் தன் முப்பத்து ஒன்றாம் வயதில் கால கதி அடைந்ததும் தெரிய வந்தன. தாயை சமாதானம் செய்து விட்டு, தான் கிளம்பினான். வாரிசு இல்லாமல் மன்னன் மாண்டதால் அரசு குழப்பத்தில் இருந்தது.
அந்த சமயம் உஜ்ஜயினியில் பல மாற்றங்கள் வந்தன. சக்ரவர்த்தியாக விக்ரமாதித்யன் என்பவன் வந்தான். ஹர்ஷன் என்ற புகழ் பெற்ற சக்ரவர்த்திக்குப் பின் அவருக்கு சமமாக சொல்லக் கூடிய ஆற்றலுடன் பதவி ஏற்றான். செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மி தேவி, பரி பூர்ணமான ஆசிர்வாதங்களை தன் நான்கு கைகளாலும் அன்புடன் தாராளமாக அளித்தது போல அவன் அரசு செழித்து விளங்கியது. ஸ்ரீ ஹரியின் அனுக்ரஹமும் சேர, நால்விதமான கடல் சூழ்ந்த பூமியை திறம்பட ஆண்டான்.
செல்வத்தை நல்ல வழியில் செலவழித்தான். அறிவுடையோர்களை ஆதரிக்கவும், நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவையானவைகளைச் செய்தும் இன்றளவும் அரசன் அல்லது செல்வந்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக, முன்னோடியாக விளங்கினான்.
சகர்கள் என்ற நாட்டின் எல்லை தாண்டிய இடங்களிலிருந்து வந்த எதிரி அரசர்களை வெற்றி கொண்டு, பகவான் விஷ்ணுவின் செயலை எளிதாக செய்து விட்டான் என்று மக்கள் புகழ்ந்தனர். எண் திசைகளிலும் அவன் பெயரும் புகழும் பரவி இருந்த பொழுதும் குணவானாக எந்த எளிய பிரஜையும் சுலபமாக அருகில் சென்று தன் தேவையைக் கேட்டு பெறுமளவுக்கு இருந்தான். கம்பீரமும், அனுசரணையுடன் நடந்து கொள்வதும் மக்கள் நலனே கவனமாக இருந்ததாலும் அத்புதமான அரசன் என்று போற்றப்பட்டான். மாத்ருகுப்தன் என்ற கவி அந்த அரச சபைக்கு வந்து பார்த்து மிகவும் அதிசயித்தான். பல அரச சபைகளில் வசித்தவன் ஆனதால் இந்த அளவு கல்வியும், அறிவும், செல்வமும் இருந்தும் எளியனாகவும் எல்லா நற் குணங்களும் அமையப் பெற்றவனாகவும் அரசன் அரிதாகவே பிறப்பான், பகவானே அவதரித்து வந்தவன் போல இருக்கிறான். என்பதை தன் கவிகளில் விளக்கி எழுதினான். 69/398
நம் நல்வினைப் பயனால் நமது தேசத்தை ஆள இப்படி ஒரு அரசன் கிடைக்கப் பெற்றோம். இந்த சபையில் அறிஞர்கள், ஆன்மீகம் அறிந்த பெரியவர்கள், கலைஞர்கள், எதோ ஒரு துறையில் வல்லுனர்கள் கரம் குவித்து வணங்கவே இல்லை என்பதை கவனித்தேன். அரசனே தகுதி அறிந்து மதிப்பை தருகிறான் – இது வரை நான் அறியாத ஒன்று.
அனாவசிய பேச்சுக்கள், நடைமுறைகளை அறவே தவிர்த்து விட்டான். அதனால் சபையில் பொருளின்றி பேசுபவரோ. செயல் இன்றி சுற்றுபவர்களோ இல்லை. அதனால் ராஜ்ய நிர்வாகம் வேகமாக நடக்கிறது.
உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் முழு சுதந்திரமாக செயல் பட முடிகிறது. யாருடையதும் எந்த விதமான குறுக்கீடுகளும் இருப்பதில்லை என்பதால் நேர்மையாக செயல் படுகிறார்கள். அவர்களுக்கு நியாயமான சம்மானமும் (ஊதியமும்) அவர்கள் தகுதிக்கு ஏற்ப கிடைத்து விடுகிறது. அதனால் திருப்தியாக இருக்கிறார்கள். தவிர அரசனும் தானே அவர்களுக்கு முன்னோடியாக எந்த விஷயமானாலும் உடனுக்குடன் செய்து விடுவதால், அவர்களும் அதே போல தங்கள் கடமைகளைச் செய்து விடுகிறார்கள்.
கடுமையான பேச்சே அந்த அரச சபையில் எழாது. தற்பெருமை பேசுபவர்களோ, தாங்கள் அதிகம் அறிந்தவர்களாக காட்டிக் கொள்ள விழைபவர்களோ, அவர் கண் முன் வரவே முடியாது. இடையில் தங்கள் அபிப்பிராயம் சொல்ல முனைபவர்கள் இருந்தாலும் அவர்கள் சொல் எடுபடாது.
அனுபவித்து அறிந்தவன் இந்த அரசன். சேவையின் கஷ்ட நஷ்டங்கள் அறிந்தவன். நிறை குடமாக இருக்கும் இந்த அரசனிடம் சேவை செய்ய எனக்கு வாய்த்ததை எண்ணி பெருமைப் படுகிறேன். என் லட்சியம் நிறைவேற வழி கிடைத்துள்ளது. பயமின்றி நான் இங்கு வாழ முடியும். இதுவரை என் ஆற்றலை மதிக்காமல் அல்லது குறைவாக எண்ணி இருந்த அரச சபைகளில் இருந்து விலகி வந்து விட்டேன். பொறுத்து இருந்து சரியான நேரத்தில் என்னை வெளிப் படுத்திக் கொள்கிறேன். நானாக விண்ணப்பிக்காமல் என்னை கண்டு கொண்டு அரசன் அழைத்தால் மிக பெருமையாக உணர்வேன். 70/398
அது தான் நடந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தாலும் அந்த கவியின் இயல்பான முதிர்ச்சியையும், கவித் திறமையையும் அரசன் விக்ரமாதித்யன் கண்டு கொண்டான். ஏன் தானாக வந்து அறிமுகப் படுத்திக் கொள்ளவில்லை என்றும் யோசித்தான். அரச சபையில் உள்ளவர்கள் திறமையை மதிப்பவர்கள். திறமை எங்கு இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விசாலமான . மனப் பாங்கு உடையவர்களே. பொறுத்து பார்க்கலாம்.
சபையில் உள்ளவர்கள், சிறு சிறு வேலைகளைச் செய்பவர்கள், வாயில் காப்போன் வரை மாத்ருகுப்தனின் கவித் திறமையை கண்டு கொண்டனர். அந்த கவிஞருடன் உரையாடுவதே மிக சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. மாத்ருகுப்தனை சுற்றி ஒரு ரசிகர்கள் கூட்டம் எப்பொழுதும் இருக்கலாயிற்று. வேடிக்கையும் வினோதமுமாக பேசுவது அவர் வழக்கம் ஆனதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த கூட்டத்தில் இருந்தனர். அரசன் இதை குறித்துக் கொண்டான். உயர் மணிக்கு வெளிச்சம் தேவையா என்ன? இந்த மனிதன் உண்மையிலேயே பெருந்தன்மையுள்ளவன். அரச சபையில் பெண்களிடம் மரியாதையாக இருக்கிறான். வெட்டி வம்பு பேசும் மனிதர்களுடன் சகவாசம் இல்லை. இவனைச் சுற்றி உள்ளவர்கள் அனைவருமே பல காலமாக அரசவையில் சேவை செய்பவர்கள். எவரிடம் எந்த உதவியும் பெறவில்லை. எங்கு தங்கி இருக்கிறான், என்ன உணவு, யாரிடம் பெறுகிறான் என்பது கூட அந்த கூட்டத்தினருக்குத் தெரியவில்லை. ஆனால் தினந்தோறும் அந்த ரசிகர் கூட்டம் அவனுடன் சற்று நேரம் பேசி விட்டு வந்தாலே உத்சாகமாக ஆகிறார்கள் என்பதையும் அரசன் குறித்துக் கொண்டான். சொல்லின் செல்வியான தேவி சரஸ்வதியின் அருள் பெற்றவன். விஷயம் அறிந்தவர்களிடம் உரையாடும் பொழுது அந்த இடத்திற்கு ஏற்ப பேசுகிறான். முகத்தை பார்த்தே தகுதியை தீர்மானிக்கும் சக்தி உடைய அரசன் இதை அறியாமலா இருப்பான்.
மாத்ரு குப்தனும் அரசனின் குணங்களை அறிந்து கொண்டான். இந்த அரசனிடம் தான், தன் வரும் காலம் உள்ளது என்று மனதினுள் தீர்மானித்துக் கொண்டான். திடமான புத்தி, நற்குணங்கள், நிறைந்தவன், கம்பீரமான அரசன் இவன். இனி அலைய வேண்டாம். இங்கேயே இருப்பது நல்லது என்று நம்பிக்கை வருகிறது. பல அரசர்களை பார்த்து விட்டேன். இந்த சபையே புத்துணர்ச்சி தருகிறது. என்று இவ்வாறு எண்ணினாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலும் அதே சமயம் குணவான்களான சபை அங்கத்தினர்களிடம் நெருங்கி பழகியும் வந்தான்.
அரசவை ஆலோசகர்களும் இதைக் கண்டு தாங்களும் மகிழ்ந்தார்கள். அரசனிடமும் தெரிவித்தனர். அரசனின் பெருந்தன்மையால் அந்த சபையில் பொறாமை போட்டி என்பவைகள் கூட வர வில்லை. நாளடைவில் உடைகள் கந்தலாகி இருப்பதையும், வெளி தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற உடைகளோ தேவைகளோ இல்லாமல் என்ன செய்வான் என்ற எண்ணம் தோன்றவும் மனம் வருந்தினான். அளவுக்கு அதிகமாக சோதித்து விட்டோமோ என்ற இரக்கம் வந்தது. என்ன செய்தால் இதற்கு ஈடாக, எந்த பதவியைக் கொடுக்கலாம் என்று எண்ணியபடியே அன்று இரவு உறங்கச் சென்றான். சாதாரணமான கல்வி கற்ற மனிதன் அல்ல. மிகச் சிறந்த யோகியாகவோ, சாதனைகள் செய்தவனாகவோ இருக்கலாம். சொற்களின் பொருள் செறிவு, தெளிவான கருத்துக்கள் என்று அரசவை அறிஞர்களும் சொன்னார்கள். அதுவே அரசனுக்கு கவலைக் கொடுத்தது. என்ன செய்தால் அவமதிப்பாக நினைக்காமல் ஏற்றுக் கொள்வான். மிக சிறந்த மரியாதைக்குரிய பதவியைத் தர வேண்டும். அதற்கு ஏற்றவனே.
பருவம் மாறி பனி பொழிந்து மக்களை நடுக்குகிறது. ஸுரியனின் கிரணங்கள் சக்தியற்று போனது போல வெளி உலகம் குளிரினால் அவதிப் பட்டது. ஸூரியனே குளிர் தாங்காமல் அவசரம் அவசரமாக மலை வாயில் விழுந்தது.- சீக்கிரமே அஸ்தமித்து- பகல் பொழுது குறைவாக ஆயிற்று.
நிறைய விளக்குகள் ஏற்றி வைத்து பிரகாசமாக இருந்த அரசனின் அறையில் விளக்குகளின் வெப்பம் பரவி அடக்கமாக இருந்தது, திடுமென விளக்குகள் அணையும் தறுவாயில் இருக்க, அதனால் வெப்பம் குறைந்து விடவும், நடு இரவில் எதேச்சையாக விழித்துக் கொண்ட அரசன் விக்ரமாதித்யன், மாத்ரு குப்தன் நினைவு வர, தானே அந்த பனியின் கடுமையான சீதளத்தை அனுபவிப்பது போல நடுங்கினான்.
தன் இருப்பிடத்தை விட்டு தேசாந்தரமாக வந்தவன். உற்றார் உறவினரோ, மனைவி மக்களோ அருகில் இல்லாமல் என்ன துன்பப்படுகிறானோ. பொறுமையை சோதிப்பதாக என்னுடைய எண்ணம் மிகப் பெரிய உடல் உபாதையைக் கொடுத்து விட்டதே. சீ, என்னுடைய அறிவீனம். வசந்த காலத்து சோபையானால் பரவாயில்லை. இந்த குளிர் காற்றும், அனைவரும் உடல் நடுங்கி தவிக்கிறோம். மரங்கள் கூட வாடி விட்டன. இவன் எந்த அளவு தாங்குவான். விபரீதமாக எதுவும் ஆகும் முன் காப்பாற்ற வேண்டும். சிந்தாமணியே கொடுத்தாலும், அம்ருதமே கொடுத்தாலும் காலம் கடந்து விட்டால் என்ன பயன்? மூடன் நான், இந்த அளவா ஒருவன் தகுதியை சோதித்து பார்க்க நினைப்பேன். இதற்கு தகுந்த பரிகாரமாக என்ன செய்வேன்? உடனே தன் சேவகனை அழைத்தான். யாரங்கே? என திரும்பவும் அழைத்தான். ஒருவரும் வரவில்லை. மெல்லிய குரல் ஒன்று கேட்டது ‘மகாராஜா! நான் மித்ரகுப்தன் தான் இருக்கிறேன், உள்ளே வா என்று அரசனே அழைக்கவும் மாத்ரு குப்தன் உள்ளே வந்தான்.
சாக்ஷாத் லக்ஷ்மி தேவியே பிரசன்னமாக இருப்பது போன்ற அந்த விசாலமான அறைக்குள் மாத்ருகுப்தன், நுழைந்தவுடன் ஒரு பிரகாசத்தை விக்ரமாதித்ய அரசன் உணர்ந்தான். விளக்குகளை ஏற்று என்ற அரசனின் கட்டளையை நிறைவேற்றி விட்டு வெளியில் செல்ல ஓசையெழாமல் மென்னடியாக அடியெடுத்து வைத்தவனை, ஒரு நிமிஷம், நில் என்ற அரசனின் குரல் தடுத்தது.
குளிரில் நடுங்கி கொண்டிருந்தவன், அரசனுக்கு முன் நிற்கிறோம் என்ற உணர்வினால் தயக்கம் இவைகளுடன் தள்ளி அமர்ந்தான். அரசன் விசாரித்தான். எப்படி இருக்கிறாய் ? எங்கு வசிக்கிறாய்? உணவிற்கு என்ன செய்கிறாய்? உடன் யார் யார் இருக்கிறார்கள் ? . நேரம் என்ன? விடிய எவ்வளவு நேரமாகும்? என்று சர மாரியாக கேட்கவும் தெளிவு வந்து பயம் தெளிந்தவனாக பதில் சொன்னான் தான் நினைத்தபடியே அரசனே அழைத்து விட்டதால் உத்சாகமடைந்து தீனமாக இருப்பதை விட்டு தன் சுய அறிவும், திறமையும் வெளிப்பட அழகிய ஸ்லோகமாக பதில் சொன்னான்.
குளிர் நடுக்குகிறது. உதடு உலர்ந்து தோலுரிந்த உளுந்து போல வெடித்து விட்டது. பசி ஒருபக்கம் வாட்ட, நான் என்ன வருந்தி அழைத்தாலும் நித்ரா தேவி அருகில் வர மறுக்கிறாள். என்ன செய்ய? நான் ஏதோ அவளை அழைத்ததே அவளுக்கு அவமானம் என நினத்தாளோ, முகத்தை திருப்பிக் கொண்டு வெகு தூரம் சென்று விட்டாள். பூமி எப்படி தான் பொருத்தமான நற்குண சீலனான ஒரு தலைவனை அடைந்து விட்டோம் என்று நிம்மதியாக இருக்கிறதோ, அது போல இரவும் திருப்தியாக உள்ளதே, நீடித்து நிற்கவே நினைக்கிறது போலும். இதுவரை கடந்த யாமங்கள் போக விடிவதற்கு ஒரு யாமமும் அரை யாமமும் இன்னும் உள்ளன. (விடிய நிறைய நேரம் இருக்கிறது) (யாமம் – கால அளவு – 2 மணி 24 நிமிடங்கள் கொண்டது ஒரு யாமம். தமிழில் சாமம். பேச்சு வழக்கில் ஒரு ஜாமம் என்பர். சாமக் கோழி – விடியற்காலை கோழி கூவும் நேரம், விடிய இரண்டரை மணி நேரம் இருக்கையில் கோழி கூவும் என்பது பொருள்.)
இதைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டிய அரசன் கேட்டான். இருட்டில் இருந்தவன் சரியான நேரத்தை எப்படி அறிந்தாய்?
याम्याम् – இரவுடன் உதித்து வானத்தில் பவனி வரும் நிலவு இது வரை கடந்து வந்து விட்ட தூரத்தை வைத்து – என்றான்.
பதிலைக் கேட்டு விட்டு, கவீந்திரனை பழைய இடத்துக்கே அனுப்பி விட்டான். சற்று பொறுத்து யோசித்தான்.
தன்னையே நொந்து கொண்டான். என்ன அறிவின்மை. குணவான், மிகவும் சிரமப் படுகிறான். கவி என்று அறிந்த பின்னும் வெறும் வார்த்தைகளால் நன்றி சொல்லி அனுப்பி விட்டேனே, என்ன நினைத்திருப்பான். என் மனதில் அவனிடம் ஏற்பட்டுள்ள ஒட்டுதலும் நம்பிக்கையையும் அவன் எப்படி அறிவான். பொருளற்ற பாராட்டுதல்கள், அவ்வளவு தானா இவனுடைய ரசிகத்தன்மை என்று நினைத்திருப்பான். திரும்பவும் அந்த குளிரில் அனுப்பி விட்டேனே. வெகு நேரம் தூங்கவும் முடியாமல், விடிந்ததும் சரியான உபகாரம் செய்ய தீன்மானித்தவனாக பொழுதைக் கழித்தான். அல்லது அவன் பாடலே சொல்லியதே. எனக்கு நினைவு வருகிறது. காஸ்மீர தேசம் அரசன் இன்றி இருக்கிறது. அந்த பூமியை இவனுக்கு கொடுக்கிறேன்- இவன் தான் சரியான பாத்திரம் – அதை நிர்வகிக்கத் தெரிந்த சரியான ஆள். – பல அரசர்கள் வெளிப்படையாக அந்த பிரதேசத்தை தங்களுக்கு தரும்படி கேட்டு வருகின்றனர். இனியும் ஏன் தாமதிக்க வேண்டும்.
இந்த தீர்மானம் தோன்றிய பின் அரசன் இரவோடு இரவாக தன் பணியாளர்களை அழைத்தான். ரகஸ்யமாக தன் ஒற்றர்களை அனுப்பினான். காஸ்மீர தேசத்து நிலையை அறிந்து வரச் செய்தான். 74/3984
அவர்களுக்கு நமது சாஸனம்- கட்டளை என்று சொல்லுங்கள். மாத்ரு குப்தன் என்பவனை உடனடியாக ராஜ்யாபிஷேகம் செய்து வையுங்கள். உடனே அதை எழுத்திலும் கட்டளையாக ஏழுதி மாத்ருகுப்தனிடம் கொடுக்கச் சொல்லி, வாய் வார்த்தையாக அந்த கடிதத்தை காஸ்மீரத்தின் அரசு அதிகாரிகளிடம் கொடுக்க அரசரின் ஆணை என்று சொல்லச் சொன்னான். இரவின் முடிவிலேயே தான் செய்ய வேண்டியதை செய்து விட்ட திருப்தியை அடைந்தான்.
மாத்ருகுப்தனோ. மிக்க மன வேதனையை அடைந்தான். அரசனை நேரில் கண்டும் பயனின்றி போயிற்றே. பாரம் இறங்கியது போலவும் இருந்தது. ஏதோ பெரிய நன்மையை எதிர்பார்த்து இருந்தோம். அதுவே நினைவாக மனதில் உருப் போட்டு வந்திருக்கிறோம். அது இல்லை என்றதும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. நமது வழக்கமான வாழ்க்கையைத் தொடருவோம். ஆசை தானே, கிடைத்தாலும் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம் என்பது தெரிந்தது தானே. அந்த மன உளைச்சல் தீர்ந்தது. ஆசை என்ற பிசாசு என்னை விட்டகன்றது இனி நிம்மதியாக யோசிக்கலாம். எப்படி இந்த பிரமை என் மனதில் தோன்றியது. அரசன் யார், நான் யாரோ – பொது மக்கள் பேச்சிலிருந்து இந்த மனிதனைப் பற்றி அறிந்தேன் அவனிடம் சேவகம் செய்தால் உயர் பதவிக்கு வருவேன் என்ற எண்ணத்தை என் மனதில் யார் விதைத்தார்கள். 75/398
மாத்ரு குப்தனுடைய கவி உள்ளம் கொந்தளித்தது. எப்படி நம்பினோம், யார் நமக்குச் சொன்னார்கள். உலகில் வெறும் காற்றை உண்டு வாழும் உயிர்கள் ஊர்வனவான பாம்புகள் அவைகளுக்கு போகின: சுகமாக அனுபவிப்பவர்கள் என்று பெயர். யார் கொடுத்தது?
ரீங்காரம் செய்யும் வண்டுகளை விரட்ட மட்டுமே தன் பெரிய காதுகளை ஆட்டும் யானைகளுக்கு நிறைய கேள்வி அறிவு உள்ளவர்களாக சித்தரிக்கும் விஸ்தீர்ண கர்ணா: என்று பெயர்.
சமீ शमी- என்ற மரம் எளிதில் தீ பிடிக்கக் கூடியது. அனைத்து மரங்களின் உள்ளும் தீ என்ற தத்வம் உள்ளது. என்றாலும் சமீ மரம் யாகங்களின் ஹோமத்திற்கு பயன்படுத்தப்படுவது அதன் குணம் காரணமாக. ஆனால் பெயரோ மிகுந்த அடக்கம் உடையவன் என்பதைக் குறிக்கும் சமீ.
தோன்றியபடி பேசும் பொது மக்கள், அவர்கள் வாக்கில் உண்மை உள்ளதோ இல்லையோ திரும்பத் திரும்ப பலர் சொல்வதால் வெற்று பொருளில்லாத பேச்சு என்பது மறைந்து லோகோக்தி- பழமொழி அல்லது உலக வழக்கு என்ற மதிப்பை பெற்று விடுகிறது.
இதிலும் ஒரு நடப்பு செய்தி, லக்ஷ்மி கடாக்ஷம்- செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மி தேவியின் அருள் பெற்றவர்களை அண்டி அவர்களுக்கு அருகிலேயே இருப்பவர்கள் நன்மை அடைகிறார்கள் என்பதும் கண் கூடு. பூமியை ஆளும் அரசன் அவன் எப்படி இருந்தால் என்ன, யார் கவனிக்கிறார்கள் அவனிடம் செல்வம் உள்ளது, அதில் ஒரு துளி நமக்கும் கிடைக்கலாம் என்ற அல்ப ஆசை மனிதனை அவர்களுக்கு நெருக்கமாக ஆக்கி விடுகிறது.
களங்கம் இல்லாதவன், தியாகி, என்றனர். அரசனிடம் என்ன தவறு. என் வினைப் பயன். என்றோ செய்த புண்ய பாபங்கள், அதன் பலன் அதைத் தான் குறை சொல்ல வேண்டும். அது தான் எனக்கு எந்த செல்வமும் கிடைக்க விட்டாமல் தடுக்கிற தடைக் கல்.
தன் அலைகளின் உயர் மணிகளை ஏந்திக் கொண்டு கரையை நோக்கி வரும் சமுத்திரம், காற்றினால் தள்ளப் பட்டு வேறு திக்கில் பிரவகித்தால் அதன் தவறு என்ன? தரையில் காத்திருந்தவனின் பாக்யம், அவன் கைக்கு எட்டாமல் விலகியது – இதில் சமுத்திரம் அல்லது தானம் கொடுக்க வந்தவன்- தராமல் விட்டு விட்டான் என்று புலம்புவது என்ன நியாயம்? அவனுடைய கொடைத் தன்மை – அதையா குற்றம் சொல்வோம். மனதால் கூட தர வேண்டாம் என்று நினைத்திருக்க மாட்டான், எதிர் பாராமல் வந்த நஷ்டம், இதில் யாரை குறை சொல்வோம்.
எந்த ஒரு நிறுவனத்திலும் உயர் அதிகாரிகளிடம் உண்மையோ பொய்யோ சொல்லி அவன் கவனத்தை தன் பால் இழுக்கச் செய்யும் சில சாமர்த்யசாலிகள் அவர்கள் தகுதியை விட அதிக லாபம் பெறுவர். மற்ற பலருடைய விதி, பல விதமான கடினமான சோதனைகளைத் தாண்டி வந்தும் அனத அளவு பயனைப் பெறுவது இல்லை. இதுவும் நடப்பது தான்.
சிவபெருமானின் சன்னிதியிலேயே காத்து நிற்கும் பக்தர்கள் விபூதி தவிர வேறு பிரசாதம் பெறுவதில்லை. அதுவே, அவருடைய வாகனமான விருஷபத்தை பூஜித்து பொன் முதலியவை பெற்று நன்மை அடைவர்கள்.
என்ன யோசித்தும் நான் செய்த தவறு என்ன என்று புரியவில்லை. இயல்பான நற்குணம், தெளிவான அறிவு உடைய இந்த அரசனே என்னை கவனிக்காமல் விட்டால் வேறு யார் ஆதரிக்கப் போகிறார்கள். முந்தைய இடங்களில் பெயர் பெற்றிருந்தால் அதை சொல்லி அரசர் அருகில் சென்றிருக்கலாம். அதுவும் இல்லை.
சமுத்திரத்தின் அலைகள் அடித்து தள்ளி உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டிருக்கும் நீர் திவலைகளை மேகம் எடுத்துச் செல்கிறது. சமுத்திரம் அதை கண்டு கொள்வதே இல்லை. அங்கிருந்து மழையாக பொழியும் பொழுது ஒவ்வொரு நீர் திவலையையும் ஆவலோடு கை நீட்டி வாங்கிக் கொள்வது போல ஆர்பரிக்கிறது. அலைகள் அணைத்து அழைத்துச் செல்வது போல புது வரவான மழைத் துளியை ஏந்திச் செல்கிறது. அந்த துளி மழை நீர் நேரடியாக சமுத்திரத்தின் அடியில் உள்ள சிப்பியிடம் அடைக்கலம் அடைந்து முத்தாக பரிணமிக்கிறது. அதனால் சமுத்திரத்திற்கு பெருமை சேருகிறது. பின்னால் ஏதோ பெரிய லாபம் என்றால் சின்னஞ்சிறிய பொருள் கூட வரவேற்கப் படுவதே உலகில் நடப்பது. ஆத்ம ஞானி, தத்துவங்களை மற்றவர்களுக்கு போதிக்கும் ஆசிரியர்கள் என்ற நிலையில் இருப்பவர்கள் கூட தனக்கு ஒரு அவமதிப்பு என்றால் மனம் கலங்குவது இயல்பே. 76/398
இப்படி யோசித்து தன்னிரக்கத்தில் மூழ்கி இருந்தவன் விடிந்து விட்டதைக் கூட அறிந்தானோ என்னவோ. மறு நாள் விடிந்தவுடன் அரசன் தன் பணியாளர்களுக்கு ஆணையிட்டான். மாத்ருகுப்தனை அழைத்து வா. அந்த பணியாளும் அவனுடன் இன்னம் சிலரும் ஓடி வந்து அவனை அரசனிடம் அழைத்துச் சென்றனர். அத்துடன் அவர்கள் பணி முடிந்தது என்று விலகி விட்டனர். தனி ஆளாக மாத்ரு குப்தன் உள்ளே நிழைந்தான். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, மனம் இலகுவாகி இருந்தது.
வணங்கி நின்றவனை அரசன் ஏறிட்டுப் பார்த்து விட்டு தன் புருவ அசைப்பினால் அருகில் நின்ற காரிய அதிகாரியிடம் ஏதோ ஆணையிட்டான்.
லேகாதிகாரி, எழுதும் வேலை செய்யும் அதிகாரி- அரசனின் அறிவிப்பு இருந்த கடிதத்தை அவனிடம் கொடுத்தான், தானும் அவனிடம்’ மாத்ருகுப்த! உங்களுக்கு காஸ்மீர தேசம் பற்றித் தெரியும் அல்லவா. அங்கு போய் அங்குள்ள உயரதிகாரிகளிடம் இது என் ஆணை என்று சொல்லிக் கொடுங்கள். வழியில் பிரித்து படிக்க வேண்டாம். அவர்களுக்கு அனாவசிய சந்தேகம் வரலாம். (என் உடல் பேரில் ஆணை வழியில் பிரித்து படிக்காதே – கவியின் சொற்கள்) அதற்காக என்ன காரணம் கொண்டும் இந்த பத்திரத்தை மறந்தோ, தொலைத்து விட்டோ போய் நிற்க வேண்டாம். ‘
பத்திரத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல், ஆணை என்று ஏற்றுக் கொண்டான். அடி மனதில் ஒரு உறுத்தல் தோன்றியது. அரச சேவை உண்மையில் தீயின் ஜுவாலையே, ரத்தினம் பதித்த அரச மோதிரத்தாலான முத்திரையின் ஒளியல்ல என்று தோன்றியது. . அப்படியே என்று ஏற்றுக் கொண்டு மாத்ரு குப்தன் வெளியேறினான்.
திரும்பி பார்த்தால், எதுவுமே நடக்காதது போல அடுத்து வந்த அதிகாரியுடன் அரசன் பேசிக் கொண்டிருந்தான். சிந்தனையும், கவலை தோய்ந்த முகமுமாக கையில் வழி நடைக்கான உணவோ, உடன் வரும் பந்துக்களோ இல்லாமல் நடந்து சென்று கொண்டு இருந்தவனை கண்டவர் வியந்தனர். இப்படி ஒரு தூதுவனை அரசன் ஏன் அனுப்ப வேண்டும். தனி மனிதனாக செல்பவனைப் பார்த்து பரிதாப் பட்டனர். இரவும் பகலும் அரச சபையில் வேலை செய்பவன் தான் என்றாலும் அறிவாளி, அரண்மனையில் எல்லோரிடமும் நல்ல மனிதன் என்று பெயர் பெற்றவன். பொறுப்புள்ள பதவி வகிக்க சக்தியுடையவனே. ஏதோ சாதாரண மனிதன் போல அனுப்பி இருக்கிறானே என்று அரசனின் செயலில் சந்தேகித்தனர். அரசனுக்கு இந்த மனிதனுடைய திறமைகள் தெரியாது போலும். அருகில் உள்ளவர்கள் தங்கள் அருகாமையால் அவர் கண்களில் திறமைகள் உடையவர்களாக தெரிகிறார்கள் போலும்.
இப்படித்தான் சேஷ நாகம் ஒரு சமயம் ஒரு அசுரனின் எதிரியான மகா விஷ்ணுவின் பாதங்களின் அடியில் சுருண்டு கிடந்தது. ஆஹா, சுமை தூக்க ஏற்ற நபர் கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்து மகாவிஷ்ணு பூமியை தூக்கி அதன் உடல் மேல் வைத்து விட்டார். சதா பூமியின் பாரம் அழுத்த சேஷ நாகம் வேறு வழியின்றி பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. சமயங்களில் அதிக திறமையின் வெளிப்பாடே கூட விபரீதமான பலனைக் கொடுத்து விடும்.
அரசன் அறிந்திருக்க வேண்டுமே. அனைவரும் இவருடைய நகைச் சுவையான பேச்சுக்களால், கவரப்பட்டு சுற்றி சுற்றி வந்தனர். அறியாதவர் யாருமே இல்லையெனும் அளவு பிரசித்தி பெற்று விட்ட கவி. வான வில்லைக் கண்டு நடனமாடும் மயில் நினைத்ததாம்? ஆஹா, நானும் அந்த வான வில்லைப் போலவே இருக்கிறேன் என்று மகிழ்ந்ததாம். இப்பொழுது இந்திரன் என்னைப் பார்த்தால் என்ன பரிசு தருவான் என்று யோசித்ததாம். இந்திரன் என்ன தருவான், மழை மேகங்களை அனுப்பி மழை பொழிய வைத்தான். துளி துளியாக நீர் மயிலின் மேல் பட்டது தான் அது கண்ட பரிசு. இதயத்தில் ஈரமில்லாதவனுக்கு குணம் எது என்றா தெரியும்? தன் காரியம் தான் பெரிது என்று இருப்பான்.
மாத்ரு குப்தன் தன் வழியில் நடக்கும் பொழுது சில நல்ல சகுனங்களைக் கண்டான். ஏனோ மனதில் பாரம் குறைந்து இயல்பான குதூகலம் உண்டாயிற்று. எதற்கு அந்த பிரயாணம், என்ன கிடைக்கப் போகிறது என்ற ஒரு விஷயமும் மனதில் வரவில்லை. நான் முந்தி, நீ முந்தி என்பது போல அடுத்தடுத்து வந்த சுபமான நிமித்தங்களே களைப்பை போக்கி விட்டன போலவும் ஏதோ ஒரு உதவிக் கரம் கிடைத்து விட்டது போலவும் சிரமங்கள் பாதிக்காமல் நடந்தான்.
அவன் அறிந்த சாஸ்திரங்களின் படி இந்த பயணத்தின் முடிவில் நல்லதே நடக்கும் என நம்பிக்கை வந்தது. சிறியதே ஆனாலும் இதன் பலன் காஸ்மீரத்தில் என் நல்வாழ்வு துவங்கும். அந்த தேசமே களங்கமில்லாத புண்ய பூமி. அதிசயங்கள் எங்கு எப்படி வரும் என்று சொல்லவா முடியும்? கடக்க முடியாத பாதைகள் போல இருந்தவை நடக்க நடக்க வழி விட்டது போல சுலபமாக ஆயின. ஆங்காங்கு குகைகள், அவைகளின் அடியில் குனிந்தபடி கடந்து சென்று மீண்டதும் அந்த பிரதேசத்து வாசிகள் தங்கள் இயல்பான விருந்தோம்பலைச் செய்தனர். வானளாவி நின்ற மரங்களின் ஊடே நடந்த பொழுது மனம் உல்லாசம் அடைந்தது. ஆஹா என்ற பிரமிப்பு. வனத்தின் அழகு கண்ணுக்கு விருந்தாக ஆயிற்று. கெட்டியான தயிரை கொட்டி வைத்தது போல மலையின் பரப்பில் வெண் பனி மூடியிருந்தைக் காண பரவசமானான். இமய மலை, மகாதேவனின் இருப்பிடம் வந்து விட்டோம் என்று மகிழ்ந்தான்.
மரங்களின் மணம் அதன் விரிசல்களில் இருந்து பெருகிய மெழுகு போன்ற பொருளின் பெருக்கு வனத்தையே நிரப்பியது. அவைகள் மாதா கங்கையின் நீரை குடித்து வளர்ந்தவை அல்லவா. காற்று இதமாக வீசி அந்த மணத்தை எங்கும் கொண்டு சென்றது. உலகமே போற்றும் மலையரசன் ஹிமவான். வா வா என்று வரவேற்பது போன்ற அழைப்பு அந்த இயற்கை ஸூழலில் கண்டு கொண்டான்.
தான் வந்து சேர்ந்த இடத்தின் பெயர் க்ரமவர்த்தா என்று தெரிந்து கொண்டான். அருகில் இருந்த காம்புவா என்ற இடம் தற்சமயம் ஸூரபுரம் என்று அழைக்கப் படுகிறது.
மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர். யாரையோ எதிபார்த்து அந்த பிரதேசத்து முக்யஸ்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் தான் அரசன் சொன்ன மந்திரிகள் போலும் என எண்ணிய மாத்ரு குப்தன் தன் கசங்கிய ஆடையை தவிர்த்து, வெண்ணிற ஆடைகளை அணிந்து கொண்டு, தான் கொண்டு வந்த அரசனின் ஆணை இருந்த பத்திரத்தை அவர்களிடம் கொடுக்க அருகில் சென்றான்.
வனத்தைக் கடந்து வந்த சமயம் மேலும் சிலர் உடன் வந்தனர். அவர்களும் சுப நிமித்தங்களைக் கண்டு மகிழ்ந்தவர்களாக என்ன நடக்கப் போகிறது என்பதையறிய ஆவலுடன் தொடர்ந்து வந்தனர். காவல் வீரர்களிடம் சென்று ‘விக்ரமாதித்யரின் தூதன் வந்து விட்டான்’ என்றனர். அவர்களும் உடனே மந்திரிகளிடம் தெரிவித்தனர்.
திடுமென, வருக வருக என்ற குரல்களும், உள்ளே வாருங்கள் என்ற அழைப்பும் பல இடங்களிலிருந்தும் ஏக காலத்தில் வந்தன. அனைத்து மந்திரிகளும் ஒவ்வொருவராக வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு வருக என்றும் நலமா என்றும் விசாரித்துச் சென்றனர். மத்தியில் உயர்ந்த ஒரு ஆசனம் கொண்டு வந்து போட்டனர். வழக்கமான அதிதி சத்காரங்கள் செய்த பின் மாத்ருகுப்தனை கேட்டனர். அரசனுடைய ஆணை இருந்த பத்திரத்தை தயக்கமும் வெட்கமும் சேர அவர்களிடம் எடுத்துக் கொடுத்தான்.
அந்த கடிதத்தை தலையில் ஒற்றிக் கொண்டு மரியாதையாக பிரித்தனர். அனைவரும் அதைக் காண முன் வந்து ஒருவர் அதன் வாசகத்தை பலமாக படிக்கக் கேட்டனர். கேட்கையிலேயே கை கூப்பி வணங்கினர்.
மாத்ருகுப்தன் என்ற மதிப்புரிய பெயர் தங்களுடையதா என்று ஒருவர் வினவினார். ஆமாம் என்று சொல்லவும் அவர் முகம் பிரகாசமாகியது.
அவர்களிடையில் பரபரப்பும், பல குரல்களில் விசாரிப்பும் பதில்களும் அந்த இடமே கல கல என்றாயிற்று. யார் மகுடாபிஷேகம் செய்யப் போகிறார். எந்த புரோஹிதர். தேவையான பொருட்கள் வந்து விட்டனவா என ஒருவரையொருவர் கேட்டுத் தெரிந்து கொண்டனர். சமுத்திரத்தின் அலை பாய்வது போல ஜன சமுகம் காண வந்து நிரம்பியது. மாத்ரு குப்தனை உயர்ந்த ஆசனத்தில் கிழக்கு நோக்கி அமரச் செய்தனர். அபிஷேக தீர்த்தத்தை மந்திரிகள் மற்ற பெரியவர்கள் தெளித்து அதனால் வந்த ஓசை நர்மதை நதியின் பிரவாகம் போல இனிமையாக கேட்டது. அபிஷேகம் முடிந்து, ஆடை ஆபரணங்கள் அணிவித்து பட்டத்து அரசனின் சிம்மாசனத்தில் அமர்த்திய பின் அவர்கள் ஒரு முகமாக சக்ரவர்த்தி விக்ரமாதித்யரிடம் எங்கள் அரசை பாதுகாக்கச் சொன்னோம். அவர் உங்களை அனுப்பி இருக்கிறார். இனி உங்கள் பொறுப்பு. நீடூழி வாழ்க, அரச நிர்வாகத்தை செம்மையாக செய்க என்று வாழ்த்தினர். அரசனுக்குரிய மரியாதைகளுடன் வணங்கி தள்ளி நின்றனர். 79/398
இந்த அரசு ப்ல அரசர்களை கண்டு விட்டது. இது உங்கள் ஆட்சி. உங்களை யாரும் கட்டுப் படுத்தவோ, குறிக்கிடவோ மாட்டார்கள். காஸ்மீர நாட்டை தலைமை தாங்கி நடத்த யாருடைய அனுமதியும் தேவையில்லை, பிறக்கும் பொழுது யார் தந்தை என்று தெரிந்து கொண்டா பிறக்கிறோம். அது போல உங்கள் நல் வினைப் பயன் அரசனாக ஆளும்படி வாய்ப்பு கிடைத்துள்ளது. யாருக்கும் தலை வணங்க வேண்டாம். உங்கள் சுய புத்தியை பயன்படுத்தி ராஜ்ய சாஸனம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் பலவிதமாக அரசனாக ஏற்றுக் கொண்டு உபதேசமாக அல்லாமல் நலம் விரும்பிகளாக சொன்ன சொற்கள் இதமாக இருந்தாலும், தனக்கு இந்த பெருமையை அளித்த தன் மதிப்புக்குரிய அரசன் விக்ரமாதித்யனை எண்ணி அவருடைய பெரும் கருணையை வியந்து மனதினுள் வணங்கினான்.
மாத்ருகுப்தன், மஹீபாலன்- மாத்ரு குப்தன் இனி பூமியை ஆளும் அரசன் என அறிவிப்பைக் கேட்டு தனக்குள் எண்ணி முறுவல் பூத்தான். அன்றிலிருந்து தன் வாழ்வில் இனி நன்மையே என நம்பிக்கை பிறந்தது.
மறு நாள் ஊருக்குள் பிரவேசம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். தனக்கு அத்புதமான பரிசாக ராஜ பதவியே கொடுத்த மதிப்புக்குரிய அரசன் விக்ரமாதித்யனுக்கு நன்றிகள் சொல்லி பல பரிசு பொருள்களுடன் அவர் அனுப்பிய தூதுவனை திருப்பி அனுப்பினான். ஊர்வலமாக சென்ற சமயம் இதன் செழிப்பையும் அழகையும் பார்த்து பேரரசர் யோசியாமல் கொடுத்து விட்டாரோ, அவருக்கே பொறாமை வரலாம் என ஒரு வினாடி நினைத்தவன் தன்னையே கடிந்து கொண்டான். அவருடைய பெருந்தன்மை எங்கே, நான் எங்கே.
மனம் கொள்ளாமல் மகிழ்ச்சியும் நன்றி உணர்ச்சியும் மேலிட மற்றொரு கவிதையை எழுதி மற்றொரு பணியாளன் மூலம் கொடுத்து பல உயர்ந்த பொருட்களையும் பரிசாகவும் அனுப்பினான்.
அல்ப அறிவும் சாமர்த்யமும் உள்ள உன் சேவகனான எனக்கு கூட இந்த அளவு பெரிய பரிசைக் கொடுத்த உங்கள் பெருந்தன்மையை பாராட்ட எனக்கு சொற்களே இல்லை. என் கண்களில் அதை எண்ணி எண்ணி நீர் வழிகிறது. சாதாரணமாக காணக் கிடைக்காத அரிய குணங்களை கொண்டுள்ள உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன்.
மகாராஜா! நான் எண்ணியே பார்த்திராத பெரும் பாக்யம். உங்கள் குகத்திலோ, செயலிலோ சிறிதளவு கூட உங்கள் மனதில் உள்ளதை வெளிப் படுத்திக் கொள்ளவும் இல்லை. அனாவசியாமான பேச்சுக்கள் அருகில் கூட வரவில்லை. ஓசையின்றி தூறலாக ஆரம்பித்து பெரு மழையாக பொழியும் மேகமாக உங்களை நினைக்கிறேன். இனிமையான கனிகளைக் கொடுக்கும் பெரு மரம் போல வாரி வழங்கும் வள்ளல். உங்கள் அருள் அவைகளை விட மேலானது.
ஸ்ரீ நகருக்குள் பரிவாரங்களோடு நுழைந்தவன் அது வரை இருந்த நிலப் பரப்பே மாறி விட்டதைக் கண்டான். அது முதல் நல்லரசனாக, அரச நீதிகளை அனுசரித்து, பரம்பரையாக வந்த அரசை இளம் அரச குமாரன் ஏற்று ஆள்வது போல ஆண்டான்.
இயல்பான திறமையும் அறிவும் உடையவன் ஆனதால் வெகு விரைவில் அரச பொறுப்புகளை உணர்ந்து கொண்டான். தன் ஆற்றலைக் காட்ட வேண்டிய இடத்தில் உறுதியாகவும், கொடைகளை அளிக்கும் சமயம் தேவையறிந்தும் கொடுத்தான். யாகங்கள் செய்வதை ஊக்குவித்தான். உயிர் பலியின்றி, மாவும் தயிரும் சேர்த்து karambakam-kichidi – என்றும் தமிழில் வெண் பொங்கல் என்றும் சொல்லப்படும் அரிசியும் பருப்பும் சேர்த்து செய்த அன்னத்தில் செய்த உருவங்களை ஹோமத்தில் சமர்ப்பிக்கச் செய்தான். அதை மக்களும் விரும்பி சாப்பிடலாயினர். தாராளமாக தக்ஷிணைகள் கொடுத்து அந்தணர்களை நலமாக வாழச் செய்தான். அரசன் பொது மக்களின் நலனின் அக்கறையுள்ளவனே, தானும் கஷ்டங்களை அனுபவித்தவன் ஆதலால் நமது தேவைகளை சொல்லும் முன் அறிந்து கொள்கிறான் என்று பாராட்டினர். அரசன் விக்ரமாதித்யர் பார்த்து அனுப்பியவர் என்பதால் அவரிடமும் மதிப்பு மிகுந்தது.
தன் நாட்டில் பசு வதையை அறவோடு அழிக்க முனைந்தவன் பொன் மணிகளையும் இந்த கரம்பகம் எனும் உணவையும் தானமாக கொடுத்தான். நல்ல அரசனின் செல்வமும் சுரபி என்ற காமதேனுவும் சமம். வேண்டியவர்கள் வேண்டியதை உடனே அளிக்கும் காமதேனுவும் அரசனிடம் உள்ள செல்வமும் மக்களுக்காகவே என நம்பிக்கை வளர்ந்தது.
मेण्ठ – மேண்ட என்ற கவி ஹய க்ரீவ வதம் என்ற நூலை எழுதிக் கொண்டு வந்து அரசனிடம் காட்டி பரிசு பெற விழைந்தார். அவர் முழுவதும் படித்துக் காட்டும் வரை பொறுமையாக இருந்த அரசன் எதுவும் விமரிசனமாக சொல்லவில்லை. அவருடைய புஸ்தகத்தின் அடியில் ஒரு தங்க தட்டை வைத்து கொடுத்தான். கவிதையின் வாவண்யம் பொங்கி வழிந்து அந்த தட்டில் விழட்டும் என்றான். அவரோ தன் கவிதை ஏற்றுக் கொள்ளப் பட்டது என்று மகிழ்ந்தார். தன் ஊர் திரும்பி வைஷ்ணவர் ஆனதால், பகவான் மதுசூதனன் கோவிலை மத்ருகுப்த ஸ்வாமி என்றழைத்து ஒரு கோவிலைக் கட்டினான். இவ்வாறு பலவிதமான செயல்களால் நாட்டு மக்களையும் பாலித்து வந்த அரசன் ஐந்து ஆண்டுகள் முடிய மூன்று மாதங்கள் ஐந்து நாட்கள் கடந்த சமயம்,
தீர்த்த யாத்திரை சென்றிருந்த அஞ்சனாவின் மகன் ப்ரவரசேனன் இதைக் கேள்விப்பட்டான். தனக்கு உரிய அரசு, தன் குலத்தினன் அல்லாத ஒருவன் கைக்கு சென்று விட்டது என்பதையறிந்தான். மரத்தின் உள் இருந்து சமயத்தில் அதையே எரிக்கும் அக்னி போல அவன் மனதில் தந்தையை இழந்த துக்கம் மிக அதிகமாக வருத்தியது. ஸ்ரீ பர்வதம் என்ற இடம் வந்து சேர்ந்தான். பாசுபத வேஷம் தரித்துக் கோண்டான். (பாசுபத – தீவிரமான சிவ பக்தர்கள், வேஷங்கள் தரித்து தனித் தன்மையுடன் இருப்பார்கள்- ஆடலும் பாடலுமாக சிவ பூஜை செய்வார்கள். நாட்டிய சாஸ்திரங்களின் படி முறையாக ஆடுபவர்கள். ) ஒரு சித்தர் அஸ்வபதன் என்பவர் பழங்கள் கொடுத்தார். அதை உண்டவனிடம், அவரே சொன்னார். உனக்கு உன் நல் வினைகளின் பயனாக நல்ல எதிர்காலம் உள்ளது. உன் ராஜ்ய அபிலாஷையும் கிடைக்கப் பெறுவாய். முயற்சி செய் என்றார். பகவான் பிறை சூடி பெருமானை குறித்து தவம் செய் என்று சொல்லிச் சென்றார்.
ஒரு ஆண்டு முழுவதும் அதே போல தவம் மேற்கொண்டவனை பிறை ஸூடி பெருமானான பகவான் மாகேஸ்வரனும் தானே வந்து தரிசனம் அளித்தார். அவரோ முன் வந்த சித்தர் போலவே இருந்தார். தவம் செய்து இக லோக சுகத்தை ஏன் கேட்கிறாய். ஆத்ம ஞானம் பெறவும், தன்னையறிவதையும் தானே ஞானிகள் வேண்டுவர் என்றார். குரலைக் கேட்டதுமே, அவன் அவர் யார் என்று அறிந்து கொண்டான். சித்தருடைய உருவத்தில் இருந்ததால் என் மனமும் அதே போல அரச போகத்தை விரும்பியது போலும். அவர் சொன்ன சொற்களே மனதில் இருந்திருக்கிறது. ஆனால், நீங்கள் சாக்ஷாத் பரமேஸ்வரனே. பாற்கடலின் கரையில் நின்று கையளவு பாலை யாசிப்பவன் போல தங்களிடம் என் விருப்பத்தைச் சொல்லி விட்டேன். மகானான தாங்கள் வேண்டியவனுக்கு அல்ப விஷயங்களையா அளிப்பீர்கள். என் பெற்றோர் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன். அதனால் என் மனம் ராஜ்யத்தை திரும்பிப் பெறுவதே என் கடமை என்று எண்னியதால் வேண்டி விட்டேன்.
மகாதேவன் அப்படியே ஆகட்டும். உன் ஆசை ராஜ்யத்தை பெறுவது தான் என்றால் அப்படியே ஆகட்டும். அஸ்வபாதர் வழி காட்டுவார். உன் விருப்பத்தை அடைவாய் -இதை சொல்லி கண் முன்னாலேயே மறைந்து விட்டார்.
அதன் பின் அஸ்வபாதர் என்ற சித்தரிடம் பயிற்சிகள் பெற்றவனாக தன் நாடு திரும்பினான். மந்திரிகளிடம் பேசி நிலைமையை தெரிந்து கொள்ள விழைந்தான். யாருக்குமே மாத்ருகுப்தனிடம் பகை இல்லை. தவிர விக்ரமாதித்ய மகா ராஜா பரிந்துரை செய்து அரசன் ஆனவர், அவரை எதிர்த்தால் மகாராஜா கோபிக்க கூடும். அவருடன் மோத யாரும் தயாராக இல்லை. தாமரை மலர்கள் சந்திரோதயத்தை வரவேற்பதில்லை என்பதால் சந்திரனை மற்றவர்களும் விரும்பாமல் இருப்பார்களா? தண்டுக்கு ஆசைப் பட்டு தாமரை செடிகளை நாசம் செய்யும் மதம் கொண்ட யானைகளை வதை என்றால் என்ன நியாயம் அது. தங்களுக்கு சமான பலம் இல்லாத இடத்தில்,
யார் தான் தன் பலத்தைக் காட்ட நினைப்பர், அவலை நினைத்து உரலை இடிப்பது போல என்று தமிழில் ஒரு வசனம் உண்டு அது போல சந்திரனிடம் மோத சக்தியில்லாதவன் தாமரை மலரை வெறுக்கவா? அல்லது யானையுடன் மோத சக்தியில்லாதவன் தாமரை தண்டை அழிப்பதா? எது சரி.
த்ரிகர்த்தர்கள் என்ற பூமியை வெற்றி கொண்டு திரும்பிய அரசன் மாத்ருகுப்தன், விக்ரமாதித்யரின் கால வசம் அடைந்த செய்தியை அறிந்தான். அன்று வெகுவாக பாதிக்கப் பட்டவனாக, உணவு உட்கொள்ளவோ, நீராடி உடை மாற்றிக் கொள்ளவோ கூட தோன்றாமல் குனிந்த தலை நிமிராமல் தன் துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். மறு நாள் மாத்ருகுப்தன் இருக்கும் இடத்திற்கு அருகில் ப்ரவரசேனன் வந்து சேர்ந்தான். அவன் காஸ்மீர தேசத்தை விட்டு விலகி கிளம்பியவன் சற்று தூரத்தில் தங்கியிருப்பதாக அறிந்து திடுக்கிட்டான். சந்தேகம் வந்தது மாத்ருகுப்தனுடைய எண்ணம் என்னவாக இருக்கும்? சில நாட்களாக தன் முயற்சியால் மந்திரிகளிடம் பேசியதன் பலனாக அவர்கள் சூழ்ச்சியால் வெளியேற்றி விட்டனரா. அல்லது என்னை பின் தொடருகிறானா? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மாத்ருகுப்தனை சந்திக்கச் சென்றான். பரஸ்பரம் அறிமுகப் படுத்திக் கொண்ட பின் மெள்ள விசாரித்தான். ராஜ்ய தியாகம் பற்றி விசாரித்தான்.
மாத்ருகுப்தனோ, ஒரு நிமிஷம் தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு, என்னை அரசனாக்கிய பேரரசன் மறைந்து விட்டார். புண்யம் செய்தவர் அவர். ஸூரியனுடைய கிரணங்கள் தலைக்கு மேல் இருந்தால் ஸ்படிக கல் தெளிவாகத் தெரியும். அதுவே இரவில் வெறும் கல்லே. அதற்கென்று தனி ஒளி இல்லை அல்லவா. ப்ரவரசேனன் ஏன், வேறு யாராவது பலசாலியான அரசன் உங்களை எதிர்க்கிறானா? மாத்ருகுப்தன் சொன்னான், அப்படி இல்லை, எங்களை யாரும் அசைக்க முடியாது. அந்த அளவு ஏராளமான பலம் உடையவன் எவருமில்லை. என்னை அவர் பதவி கொடுத்து இந்த அளவு உயர்வாக வைத்தவர். கண்ட உடனேயே எதிராளியின் தகுதியை எடை போட அவர் அறிவார். அவருடைய செயல் வெறும் உப்பு மண்ணில் விதைத்த தானிய விதையும் அல்ல, அவர் செய்த ஹோமமும் வெந்து தணிந்து சாம்பலான யாகத் தீயிலும் அல்ல.
ஆனால் அவரால் நன்மை பெற்று உயர் பதவிகளை அடைந்தவர்கள் அவருடைய காலடி தடத்தில் தொடர்ந்து செல்லவே விழைவர். அவருடைய குணங்களை பின்பற்றியே வாழ நினைப்பர். மிக குறைந்த அறிவுடையவன் கூட அவருடைய உதவியை மறக்க மாட்டான். அந்த நிழலில் வளர்ந்தவன் நான். ஸூரிய காந்தக் கல் அஸ்தமனம் ஆனதும் தன் ஒளியை இழப்பது போலவும், சந்திர காந்த கல் விடிந்து சூரியனின் ஒளி பரவும் சமயம் தன் குணமான நீரை பெருக்குவதை நிறுத்தியும் விடும் என்பது நாம் கண் எதிரே காண்பது தானே. அதனால் வாரணாசி சென்று தவ வாழ்க்கையைத் தொடரப் போகிறேன். தியாகம் தான் இனி என் வழி. அந்தணனாக என் கடமையும் அதுவே. வாழ்வின் இறுதியில் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு பகவானின் நினைவாகவே இரு என்பது தானே உபதேசம். என்னை வாழ வைத்த தெய்வமாக வந்தவர், அவர் இன்றி உலகமே எனக்கு இருண்டதாக தெரிகிறது. போக வாழ்வும், மன்னன் என மரியாதைகளையும் பெற்றது அவருடைய அருளால். என் மனம் இனியும் இந்த தேசத்து அரசனாக நீடிப்பதை ஏற்கவில்லை.
ப்ரவரசேனன் திகைத்தான். இப்படி கூட ஒரு மனிதன் செய் நன்றி மறவாதவனாக, உயர்ந்த கொள்கைகளுடன் இருக்க முடியுமா? கடல் பொங்குவது போல உன் மனதிலிருந்து வந்த சொற்கள். உண்மையான உணர்வுகள். ‘அரசனே பூதேவி பாக்யம் செய்தவள். உங்களைப் போன்ற நன் மகன் அவளுக்கு கிடைத்து விட்டிருக்கிறது. அவளை தன்னுள் அனைத்து செல்வங்களையும் உயர் மணிகளையும் கொண்டவள் என்பார்கள். உங்களைப் போன்ற உயர்ந்த மனிதனை பெற்றவளாக மேலும் அதிக பாக்கியம் செய்தவளாக பிரகாசமாக ஆகி விட்டாள். 300 ஸ்லொகம்
உங்களை நான் உயர்வாக மதிப்பதாகச் சொல்வது ஏதோ உபசார வார்த்தையல்ல. என் ஆழ் மனதில் நான் நினைப்பதை சொல்ல தகுந்த சொற்கள் கிடைக்காமல் திகைத்து நிற்கிறேன். நீங்கள் தீரன். உடலும் உள்ளமும் தூய்மையாக உள்ள உங்களைப் போல காண்பது அரிது. இந்த சந்திப்பு எனக்கு மிகப் பெரிய பாடத்தை போதித்து விட்டது.
பொதுவாக மக்கள் பெரும் பயனை பெற்று அனுபவிப்பவர். ஆனால் இந்த அளவு வெளிப்படையாக தங்கள் நன்றியறிதலை சொல்வார்களா, மாட்டார்கள். எனக்கு என் நல் வினைப் பயன் இருந்தது அரசனாக, யதேச்சையாக இவர் கொடுத்தார், என்னை தேர்ந்தெடுக்க ஏதோ காரணம் இருந்திருக்கும். அவரது உற்றார் உறவு முறைகளில் எவருக்காகிலும் இந்த பதவியைக் கொடுத்து இருக்கலாமே. என்னிடம் திறமை, ஆற்றல் இருக்கிறது அவர்களிடம் இல்லை போலும். அல்லது இன்னும் மேலே போய் அவருடைய ரகசியம் ஒன்று எனக்குத் தெரியும், வெளியில் சொல்லி விடாமல் அதை நான் பாதுக்காக்க இப்படி ஒரு பெரிய பதவியை கொடுத்து இருக்கிறார் – இப்படித்தான் அறிவிலிகளான மக்கள் சொல்லி சொல்லி தாங்களும் நம்ப ஆரம்பித்து விடுவர். அவர்கள் மனசாட்சி அறியும் இவைகள் உண்மையல்ல, கொடுத்தவர் உண்மையான நல்லெண்ணத்துடன் கொடுத்தார் என்பதை.
உங்களை வணங்கி வேண்டிக் கொள்கிறேன். நற்குணங்கள் உள்ளவர் எனப் பெயர் பெற்ற பலருக்கு முன்னோடியாக நிற்பவர். புடம் போட்ட பொன், தேர்ந்தெடுக்கப் பட்ட உயர் மணி, இவைகளுக்கு சமமாக எங்கிருந்தாலும் பிரகாசிக்கக் கூடியவரே. அதனால் இந்த ராஜ்யத்தை விட்டு போக வேண்டாம். அரச பதவியை துறக்க வேண்டாம். எனக்கும் இதனால் ஒரு பெருமை கிடைக்கட்டும். குணவானான ஒருவன் அருகில் இருப்பதே பெருமை. முன்னால் பெருந்தன்மை மிக்க சக்ரவர்த்தி உங்களுக்கு கொடுத்த அரச பதவி. தற்சமயம் இதன் பரம்பரையில் வந்தவன் என்ற உரிமையுடையவன் என்ற தகுதியில் என்னிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நற்செயல்கள் தொடரட்டும். அன்புடன் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள். அனுக்ரஹம் செய்யுங்கள்.
மாத்ருகுப்தன் மென் முறுவலோடு அதைக் கேட்டு, மெள்ள பேசலானான். ப்ரவரசேனனின் சொற்களில் கபடம் இல்லை, உண்மையாகச் சொல்கிறான் என்பதை உணர்ந்தான். சொற்கள் அவன் எண்ணத்தை தெரிவித்ததை விட ஆத்மார்த்தமான உண்மை அவன் முகத்திலும், பாவனைகளிலும் அதிகமாக தன் மனதை தொட்டு விட்டதாக உணர்ந்தான். பதில் சொன்னான்.
என் கடந்த காலம் நான் வளர்ந்த சூழ்நிலை உங்களுக்குத் தெரியும், அதே போல உங்களுடைய வாழ்வில் நீங்கள் கடந்து வந்த கடினமான பாதையை நானும் அறிவேன்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லை, உள்ளொன்று புறமொன்று என்று பேசவில்லை, பேசுபவன் தூயவனானால், அவன் உள் மனதின் சத்யமே சொற்களில் வெளிப்படுகிறது என்பதையும் அறிவேன்.எனவே இப்பொழுது நான் சொல்வது கடுமையாக தோன்றினாலும் தவறாக எண்ண வேண்டாம். உலகில் ஒருவனுடைய கடந்த கால நற்செயல்களை மக்கள் சுலபமாக மறந்து விடுவர். அவனுடைய சிறிய குற்றங்களையும், இயலாமையும் கூட நினைவில் வைத்திருப்பர். நிகழ் காலம் தான் ஒருவனின் தகுதியை அளக்கும் கருவி.
அரசனாக இருந்தவன், கை தாழ்ந்திருக்க கொடையாக எதையும் பெறுவேனா? பிரதிக்ரஹம்- தானம் பெறுவது – என்ற செயல். செல்வத்தை – அரச பதவியை உங்களிடமிருந்து பெறுவேனேயானால், ஒரே வீச்சில் என் பெருமை அனைத்தையும் இழந்தவன் ஆவேன். எனக்கு இதை அளித்தவர் சக்ரவர்த்தி- காணக் கிடைக்காத மகா பெருமைகள் உடையவர். நான் மறுக்க முடியாமல் பெரும் பதவியைக் கொடுத்தார். சுக வாழ்வு மட்டுமா வாழ்வின் பயன்? என் மனித தன்மை, செய் நன்றி உணர்வு இவைகள் தொலைந்து போக பேராசை என்பதாக அறியப் படும். மிக மிக சாதாரணமாக ஆவேன். இந்த அரச வாழ்வும், பதவி சுகமும் பெரிது என்று நான் விரும்பியிருந்தால் யார் என்னை தடுக்க? எனக்கு அளித்தவருக்கு நான் என்ன பதில் உபகாரம் செய்தேன்? என் உடலோடு என் நன்றி உணர்வும் அழியும். அதனால் இப்பொழுது ஒரு முடிவை எடுப்போம்.
அந்த மாமனிதரான சக்ரவர்த்தியின் செயலை நான் பின் பற்றுவதாக இருக்கட்டும். தகுதியான ஒருவனின் கையில் இந்த ராஜ்யத்தை, இதன் பொறுப்புகளை ஒப்படைக்கிறேன் என்று எடுத்துக் கொள்வோம். இதில் இரு தரப்பிலும் நன்மையே. நாம் செய்ய வேண்டியதும் இது தான். எனக்குப் பின் நல்ல கையில் பொறுப்பை கொடுத்து விட்டு நான் விலகினால், என் வாழ்வு வெறும் அரச போகம் மட்டுமாக வாழ்ந்ததாக ஆகாது. ஒரு நற்செயலை செய்த திருப்தியும், மன நிறைவும் கொள்வேன்.
இதுவரை நீ உரிமையுள்ளவன் உயிருடன் இருக்கிறாய் என்பதே உலகில் யாருக்கும் தெரியவில்லை. தெரிந்த பின்னும் உன் செல்வத்தை நான் தொடுவது கூட அபசாரம். அதனால் வாரணாசி சென்று துறிவியாக வாழ்கிறேன். அனைத்தையும் துறந்து மாத்ருகுப்தன் யதியானான். யதி -துறவி.
ப்ரவரசேனன் அரசனானான். இந்த தேசம் உங்கள் சொத்து. நான் அதை பாது காப்பவன். இதில் உரிமை கொண்டாடாமல் , அரசாட்சிக்கு மட்டும் பொறுப்பு ஏற்கிறேன். ஆண்டு தோறும் அவன் மாத்ருகுப்தன் யதிக்கு உரியது என்று செல்வத்தை அளித்து வந்தான். மாத்ருகுப்த யதியும் வாரணாசியில் தான தர்மங்களுக்கு செலவழித்தான். அடுத்த பத்து ஆண்டுகள் உயிருடன் இருந்தவரை இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்களாக இருந்தனர்.
மூவரும், சக்ரவர்த்தி விக்ரமாதித்யர், மாத்ருகுப்த யதி, ப்ரவர சேன அரசன் மூவருமே த்ரிபதகா – கங்கை போல காஸ்மீர தேசத்தின் வளர்ச்சிக்கு உதவினர்.
ப்ரவரசேனன் தன் ராஜ்யத்தை சிறப்பாக ஆண்டான். புஜ பலத்தால், படை பலமும் கொண்டு, எதிரிகளை முறியடித்தான். அவனுடைய பெரும் படை கடல் அளவு விஸ்தீர்ணமாகவும், மலையளவு திடமாகவும் இருந்ததாம். அகஸ்தியர் என்ற ரிஷி போல நாட்டில் அமைதியை நிலை நாட்டினான். சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றதோடு, பல நற்செயல்களையும் செய்தான்.
கிழக்கு திசையில் கங்கை கடலில் கலக்கும் இடத்தில், (வங்க தேசத்தில்), காளிந்தி – யமுனை பாயும் இடத்தில், மதம் கொண்ட யானைகள் போன்ற தன் சைன்ய வீரர்களுடன் சென்று அதன் செல்வத்தையும் சிறப்பையும் வளர்த்தான். மேற்கில் சௌராஷ்டிர தேசத்தை வென்றான். அவர்கள் தேசத்தையும் தன் அரசுடன் இணைத்தான்.
போரில் வீரத்தைக் காட்டுவது போலவே நாட்டில் நேர்மையாக ஆட்சி செய்தான். தன் வரையில் பற்று இல்லதவனாக துறவு மனப் பான்மையே கொண்டவனாக இருந்ததால் பயமின்றி நினைத்ததைச் செய்ய முடிந்தது. தர்ம விஜயன் எனப் பெயர் பெற்றான். பூமியின் வளம் பெருகியது. அதனால் பூமியில் இந்திரனாக உள்ளான் என்று வர்ணித்தனர்.
சகோதரனே வைரியாக தந்தைக்கு செய்த துரோகத்தை மறக்காமல், தனக்குப் பின் சக்ரவர்த்தி விக்ரமாதித்யனின் மகன் ப்ரதாபசிலா – அவனுடைய மற்றொரு பெயர் ஸிலாதித்யா என்பவனை அரசு கட்டிலில் அமர்த்தினான். காஸ்மிர ராஜ்யத்து சிங்காசனம் ஒரு சமயம் விக்ரமாதித்யரின் வசம் இருந்தது. அவன் மகன் மூலம் அதன் திரும்பக் கொண்டு வந்து தன் நாட்டில் ஸ்தாபித்தான்.
மும்முனி என்ற அரசன் ஏழு முறை படையெடுத்து வந்தான். எட்டாவது முறை அவன் படையுடன் வந்த பொழுது தீவிரமாக போரிட்டு எழ முடியாமல் தோற்கடித்த கதை பிரசித்தமாயிற்று. விலங்கை அடிப்பது போல இவனை அடியுங்கள் என்று ஆணையிட்டான். அவனோ, நான் வீரன், என்னை விலங்கு போல அடிக்க வேண்டாம் என்று வேண்டினான். சபை நடுவில் மயிலாட்டம் ஆடினான். குரலும் மயில் போலவே இருக்கவும், நடிகனாக அவன் திறமையை மெச்சி விடுவித்தான். தகுந்த பரிசுகள் கொடுத்து அனுப்பினான்.
பாட்டனாரின் நினைவாக, அவர் பெயரில் ப்ரவரசேன என்ற பெயரில் ஒரு நகரமே கட்டுவித்தான்.
ஒரு சமயம் இரவில் சரியான நக்ஷத்திரம், லக்னம் இவைகளை கவனிக்க, ஸ்ரீநகரின் நீரூற்றின் மறு புறமாக சென்றவன் ஏராளமான சிதைகள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். மரங்களில் அந்த தீயின் ஜுவாலை வினோதமாக தெரிந்தது. ஏதோ தவறு, என்று யோசித்தவன் எதிரில் சற்று தள்ளி மலையின் உச்சியில் பூதம் போன்ற பெருத்த உடலுடன் ஒருவன் நிற்பதைப் பார்த்தான். அவன் சிரித்தது மலைகளில் எதிரொலித்தது. என்னுடன் மோத விக்ரமாதித்யனும் இல்லை சூத்ரகனும் இல்லை, நீ தான் அவர்களுக்கு சமமாக உள்ளவன் அகப்பட்டாய், வா வா என்று கொக்கரித்தான். தன் ஒரு காலை நீட்டி இதை பாலமாக பயன் படுத்திக் கொண்டு என் அருகில் வா. நீட்டிய காலை பயன்படுத்தி மலை மேல் ஏறிய பின், அதன் முடிவில் இருந்த படிக்கட்டுகள் வழியே மேலும் ஏறிய பின் அந்த காலை வெட்டினான். இடம் தற்சமயம் க்ஷுரிகாவாலம் என அழைக்கப் படுகிறது.
அந்த பெரு உடல் கொண்டவன் அதை பொருட்படுத்தாமல் சரியான இடத்தையும், கட்டடம் கட்ட துவங்க வேண்டிய சரியான நேரத்தையும் அந்த உயரத்திலிருந்து கோடுகள் போட்டு காட்டிக் கொடுத்து விட்டு மறைந்து விட்டது. அவன் ஒரு யக்ஷன். சாரிகா என்ற ஊரைச் சேர்ந்தவன் என்பது பின்னால் தெரிந்தது. அட்ட என்ற பெயருடையவன். அந்த கிராமத்தில் யக்ஷன் வரைந்து கொடுத்த வரைபடம் அல்லது நூலால் அடையாளமிட்ட பூமி, அதில் முதல் காரியமாக, ப்ரவரேஸ்வரம் என்ற பகவானை பக்தியுடன் பிரதிஷ்டை செய்தான். ஜயஸ்வாமி என்ற புகழ் பெற்ற சிற்பி, தானே வந்து பீடத்தில் யந்திரம் என்பதை பிரதிஷ்டை செய்தார். வேதாளன்- யக்ஷனை குறிக்கும் சொல்- சொன்ன லக்னத்தில் பூபதியான ப்ரவரேசன், ஸ்தபதி – தலைமை சிற்பியான ஜய என்பவரின் பெயரில் அந்த கோவில் அழைக்கப் பட்டது. நகர பாலனாக வினாயகர் மேற்கு முகமாகவும், பீமஸ்வாமி கிழக்கிலும் அமைந்தனர். சத்பாவாஸ்ரயா -सद्भावाश्रया – என்ற பெயரில் தேவியும், ஸ்ரீ என்ற அடை மொழியுடன் ஐந்து ஐந்து தேவதைகள் ஸ்தாபிக்கப் பட்டனர்.
விதஸ்தாவின் மேல் ஒரு பாலம் கட்டுவித்தான். அதன் பின் தான் பாலங்கள், படகு வடிவில் கட்டப் படுவது அறிமுகம் ஆயிற்று. ஜயேந்திரன் என்ற அரசனின் மாமன், ஸ்ரீ ஜயேந்த்ர விஹாரம் என்பதையும், பெரிய புத்தர் உருவத்தையும் பிரதிஷ்டை செய்தான். மோரகா என்ற ஸ்ரீ லங்கையை சேர்ந்த அரசன் தன் பங்காக உலக புகழ் பெற்ற மொரகபவனம் என்பதை கட்டிக் கொடுத்தான்.
பல புகழ் வாய்ந்த (36 லக்ஷம் வீடுகள்) அந்த ஏரியைச் சுற்றி அமைந்தன. வர்தமான ஸ்வாமின் என்ற ஆலயத்திலிருந்து, விஸ்வகர்மன் என்ற ஆலயம் வரை அவை அமைந்தன. விதஸ்தாவின் தென் பகுதியில் ஒரு நகரம், அதன் கடைவீதிகள் முதலிய வசதிகளுடன் கட்டுவித்தான். ஸ்லோகம் -358
அந்த இடத்தில் வானளாவிய மாளிகைகள் கட்டப் பட்டன. பலவித வாகனங்கள் வந்தன. மழை காலத்தில் நல்ல மழையும் பெய்து கோடையின் முடிவில் சித்திரை மாதம் மலர்கள் நிறைந்து பூமியை மறைத்து அழகிய காட்சியாக காணப்பட்டன. அது போன்ற புண்ய பூமி உலகில் வேறு எங்கு காண முடியும்? அழகிய வசதியான சிந்து நதி தீரம், விளையாடும் இடங்கள், அகலமான வீதிகள். சில மக்கள் குன்றுகளில் விளையாடியும், ஊருக்குள் சில சமயமும் விளையாடி மகிழ்ந்தனர். செல்வத்தின் அதிபதியான ஸ்ரீதேவி மகிச்சியுடன் தேவலோகத்துக்கு இணையான அழகையும் வளத்தையும் இந்த பிரதேசத்துக்கு அளித்து விட்டாள்.
விதஸ்தா ஏரியின் நீர் பனித் துளிகளாலும் இயல்பான இனிப்புடன் கூடியதாக இருந்தது. அதுவும் கடும் கோடையிலும் வீட்டு வாசலில் வேறு எந்த இடத்தில் இது போன்ற இனிப்பு ருசியுடைய குளிர்ந்த குடி நீர் கிடைக்கும்? ஒவ்வொரு கோவிலும் இரண்டு மைல் தூரத்தில் இருந்தன. அங்கு வழிபாடுகள் செய்ய அரசு ஏற்பாடுகள் செய்திருந்தன. ஆயிரக் கணக்கான இடங்களில் விசாலமான மைதானகள் சாகரமோ, வானமோ எனும் அளவு பரந்து விரிந்திருந்தன.
அந்த நகரங்களில் வசித்தவர்கள் அரசன் தான் பெற்ற பிள்ளைகளைப் போல கவனமாக பரிபாலித்த பிரஜைகள் மன நிறைவோடு அறுபது ஆண்டுகள் சுகமாக பெரிய சாம்ராஜ்யத்தில் வாழ்வதே பெருமையாக வாழ்ந்தனர். தானே சிவபெருமானின் விபூதியும், நெற்றியில் ஸூல அடையாளமும் தரித்தவனாக அரசன் உண்மையில் பகவானே தானோ என்ற ஐயத்தை கிளப்பி விட்டான். அந்த சமயம் முன்னொரு சமயம் எதிர்ப்பட்ட அஸ்வபாதன் என்ற சித்தன், ஈசானன் சிவ பெருமானின் கட்டளை என்று சொல்லி ஜயந்தன் என்ற காஸ்மீர தேச வாசியான அந்தணனை அரசனைக் காண ஒரு கடிதத்துடன் அனுப்பியிருந்தான்,
வந்தவன் வழி நடையால் களைத்திருந்தான். ஊரின் செழிப்பை பாராட்டிய பின், வேறு எந்த தேசமும் இதைப் போல அழகாக இருக்காது. அரசன் ப்ரவர சேனனிடம் இந்த செய்தியை தாங்கிய கடிதத்தை கொடுக்கச் சொல்லி எனக்கு உத்தரவு என்று அதைக் கொடுத்தான். அதைக் கொடுத்த பின் மிகவும் களைத்து இருப்பதால் நான் உடனே திரும்ப முடியவில்லை என்றான். அதனால் என்ன, நான் காபாலிகன் சிவ பக்தன். குளத்தில் குளித்து விட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
வந்தவன் குளத்தில் இறங்கினான். குளத்தின் ஆழம் வரை அமிழ்ந்து சென்றவன் வெகு நேரம் நீராடினான். தான் தன் தேசத்திற்கே திரும்பி வந்து விட்டதில் மகிழ்ந்தான். அடடா, கடிதத்தைக் கொடுக்கவில்லையே என நினைத்தவன் ஒரு நீர் இறைக்க வைத்திருந்த குடத்தில் அந்த கடிதத்தை போட்டு விட்டான்.
ப்ரவரசேன ராஜா, தன் தினசரி வழிபாடுகளைச் செய்ய முனைந்தவனாக நீராடி ப்ரவரேஸ்வர ஆலயம் சென்றவன் பகவானுக்கு அபிஷேகம் செய்ய நீர் நிறைந்த குடத்தை எடுத்தவன், அதில் இருந்த கடிதத்தைக் கண்டான். ‘உன் கடமையை செவ்வனே செய்து விட்டாய். வாழ்க்கை வசதிகளையும் அனுபவித்து விட்டாய். இனி என்ன? சிவபெருமானின் சந்நிதிக்கு வா’ அரசன் மகிழ்ந்தான். தேகத்துடன் அவன் கைலாயம் செல்வதை வானத்தில் கண்ட மக்கள் இரண்டாவது சூரியோதயம் போல இருந்ததாக வர்ணித்தனர்.
ஜயந்தன் பெயரில் அக்ரஹாரங்கள் கட்டப்பட்டன. செல்வந்தனாகவும் ஆனான். மக்கள் பலகாலம் ப்ரவரேசவர அரசனின் நினைவில் பாடிக் கோண்டிருந்தனர். சிறந்த அரசன். பூதபதியின் பாதங்களை என்றடைந்து விட்டான்- மோக்ஷம் அடைந்து விட்டன் என்பது போன்ற பாடல்கள். அவன் சித்தியடைந்த ப்ரவரேஸ்வரர் கோவிலில் இன்றளவிலும் ஒரு வாசல் ஸ்வர்கத்வாரம் என்ற பெயரில் அவன் சென்ற வழியாக மதிக்கப் படுகிறது.
ப்ரவரசேன – ரத்னப்ரபா தம்பதிகளின் யுதிஷ்டிரன் என்ற மகன் பட்டத்துக்கு வந்தான். நாற்பது ஆண்டுகளுக்கு ஒன்பது மாதம் குறைவாக ஆண்டான். சர்வ ரத்னஜய, ஸ்கந்தகுப்த என்ற அரசர்கள் அதன் பின் வந்தனர். சிறந்த ஆலோசகர்களான மந்திரிகள் அமையவும் அவர்களும் பவச்சேத -भवच्द्छेद – என்ற கிராமத்தையும் தேவாலயங்கள், சைத்ய கிருஹங்கள் முதலியன அமைத்தனர். பல சித்திகள் பெற்ற ஜயந்தனுடைய மகன் வஜ்ரேந்திரன் என்பவன் மந்திரியாக இருந்தான். குமார ஸேனன் முதலிய மற்ற மந்திரிகளும் முதன்மை ஸ்தானத்தில் இருந்தனர்.
பத்மாவதி என்ற மற்றொரு மனைவியிடம் நரேந்த்ராதித்யன் என்பவன் லகானா என்றும் அழைக்கப் பட்டான். அவன் நரேந்திரஸ்வாமின் என்ற ஆலயத்தை நிறுவினான். அவன் பட்டத்து ராணி விமலப்ரபா. வஜ்ரேந்திரனின் இரு மகன் களும் வஜ்ரன் , கனகன் என்ற பெயரில் மந்திரிகளாக இருந்தனர். தன்னுடைய அரசின் செயல்களையும், விவரங்களையும் வரிசைக் கிரமாக எழுதி வைக்கும் வழக்கத்தை மேற்கோண்டான். அவைகள் பத்திரங்களாக records -பாதுகாக்கப் பட்டன. தன்னுடைய வாழ்நாள் பற்றியும் முன் கூட்டியே அறிந்தவனாக, இன்ன தேதியின் தன் முடிவு என்று எழுதி வைத்திருந்தான். அதன் படி அதே தினத்தில் வானுலகு எய்தினான். அவன் இளைய சகோதரன், ரணாதித்யன் அரசனான். அவனை மக்கள் துஞ்சீனன் என்றும் அழைத்தனர். அவன் தலையில் சங்கு அடையாளம் இருந்ததை வியப்புடன் பார்த்தனர். நிலவின் மேல் பானு- ஸூரியனின் கிரணங்கள் விழுந்தது போல இருந்ததாம். பல போர்களில் வென்றான். அவன் வாளுக்கு இரையானவர்கள் பலர். அபூர்வமான ப்ரதாபம் உடையவன். இவன் பூமிக்கு வந்ததே பூ பாரத்தை குறைக்கவோ என்று அஞ்சினர். அவன் கையால் மாண்டவர்களின் மனைவிகள் கண்ணீருடன் விஷ்ணு பகவானின் செயல் தானே இது. இது என்ன பயங்கரமான ரண- யுத்த ஆசை, எங்கள் கணவர்மாரை கபந்தங்களாக ஆக்குவதில் என்ன ஆசை என்று துக்கித்தனர். முன் பிறவியில் இவன் தான் அந்த சூதாட்டத்தில் தோற்றவனோ. அனைத்தையும் அதில் தொலைத்தவனோ. அதனால் தான் இந்த அளவு க்ருரமான குணத்துடன் பிறந்திருக்கிறான். அனைவரும் வெறுத்தாலும் பயந்து ஒதுங்கியே இருந்தனர்.
ஒரு சமயம் விந்த்யமலையின் தேவதையான ப்ரமரவாசினியை உபாசிக்கச் சென்றான். அந்த தேவி சுலபமாக தன்னை தரிசிக்க அனுமதிக்க மாட்டாள் என்பது பொதுவான பேச்சாக இருந்தது, அதை சோதிக்கவோ என்னவோ, விந்த்யமலை சென்றான். வழி முழுவதும் குளவிகளும் தேனீகளும் கொட்டி தீர்த்தன. ஒவ்வொன்றும் சங்கு புஷ்பம் அளவில் இருந்தன. இருந்தும் விடாமல் மலை மேல் ஏறினான். இன்னம் ஐந்து யோஜனை தூரமே என்ற நிலையில், இந்த குளவிகளின் தாக்குதலில் இருந்து தப்ப நினைத்தான். மனித யத்தினத்தில் முடியாது என்று உண்டா என்ன எண்ணியவனாக தன் உடலில் கவசமும் அதன் மேல் எருமைத் தோலையும் அணிந்து கொண்டு அதன் மேலும் பசுவின் சாணியை வைத்து அடர்த்தியாக பூசிக் கொண்டவனாக தொடர்ந்தான். நேரம் ஆக ஆக சாணியின் ஈரம் உலரவும், மேலும் பசும் சாணியைத் தேடி பூசிக் கொண்டான். அது போதாமல் களி மண் கலந்து அடுத்த பூச்சு என்று தொடர்ந்தான். இப்படி தன்னை நடமாடும் பூமி போல ஆக்கிக் கொண்டு தீர்மானமாக தன் லட்சியத்தை நோக்கிச் சென்றான். வழி தடுமாறி, இதுவரை வந்த வழி தெரியாமல் ஒரு குகைக்குள் நுழைந்து விட்டான். ஒரே இருட்டு. கண்களை கட்டி விட்டாற் போன்ற நிலை. அங்கும் குளவிகளின் ரீங்காரம், மரண ஓலம் போல கேட்டது. களிமண் பூச்சினால் அவைகள் நெடு நேரம் தாக்கு பிடிக்காமல் ஒரு கூட்டம் விழுந்தால் அடுத்த இளைய குளவிகள் வந்து இதற்குள் பாதி உலர்ந்த்திருந்த களிமண் பூச்சை சிதைத்து விட்டன.
அவைகளின் தாக்குதல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் சிரமப் பட்டு மூன்று யோஜனை தூரம் கடந்து விட்டிருந்தான். மண்ணும் சாணியும் உதிர்ந்து விழ, எருமைத் தோல் மேல் குளவிகள் கொட்டியதில் ரட் ரட் என்ற ஓசை வினோதமாக எழுந்தது. கரடு முரடான ஓசை. சற்று நேரம் சென்ற பின் அந்த ஓசை இரும்பைத் தட்டுவதால் வருகிறது என்பதை அறிந்தான். அதாவது, எருமைத் தோலும் வழி விட அவை அவனது இரும்பு கவசத்தை பதம் பார்க்கின்றன. தாக்கு பிடிக்க முடியாமல் வேகம்
வேகமாக ஓடினான். கவசமும் கழண்டு விழுந்து விட்டது. நாலரை யோஜனை தூரம் கடந்து விட்டிருந்தான். இன்னும் ஒரு பாதி யோஜனை தூரமே- அந்த திட சித்தம் உடைய மனிதன் வேகமாக ஓடினான், கைகளாலேயே, விடாமல் பின் தொடர்ந்து துன்புறுத்திய மிகச் சிறிய உருவமேயானாலும் மனிதனால் எதிர்க்க முடியாத பிறவிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்டு ஓடினான். கைகளால் கண்களை மட்டுமே பாதுகாக்க முடிந்தது. பயங்கர ஜந்துக்கள் குளவிகளும் மற்ற சிறு கொடுக்கு உடைய பூச்சிகளும் அவன் உடலை பதம் பார்த்தன. தோலுரிந்து எலும்பும் சதையுமாக தொங்க தேவியின் கோவிலை அடைந்தான். குளவி கூட்டத்தின் சத்தம் திடுமென மறையவும் அவன் கோவிலை நெருங்கி விட்டோம் என்பதை அறிந்தான். தேவியின் சந்நிதியில் தடாலென்று விழுந்தவன் மூர்ச்சையானான்.
தேவியின் கரங்கள் அவனை தடவிக் கொடுத்தன போல இருந்தது. தெய்வீகமான அந்த கை மேலே படவும் அதன் தண்மையில் மனமும் உடலும் குளிர்ந்தவனாக அமுதமே உண்டவன் போல தன் உடல் பழையபடி ஆரோக்யமாக ஆனதைக் கண்டு கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான். தான் நுழைந்தவுடன் பார்த்த தேவி சிங்க வாகனத்தில் அமர்ந்திருந்த கோலத்தில் கண்கள் சிவந்து கோபத்துடன் விழிப்பது போல பயங்கரமாக இருந்தது என்ற வரை சந்தேகமே இல்லை. நன்றாக நினைவு வந்தது. ஆனால் தற்சமயம் யாரும் இல்லை. தேவியைக் காணவே முடியவில்லை. 412
சற்று தூரத்தில் ஒரு பெண் அழகிய தாமரை மலர் போன்ற கண்களும், கொடி வீடு போல இருந்த ஒன்றின் அருகில் நின்றிருந்தாள். அருகில் தமரைக் குளம் அதில் நீரை மறைத்து பூக்கள் பூத்திருந்தன. கழுத்தில் ஒரு முத்து மாலை அலங்கரிக்க, கண் கவர் வனப்பும் மரியாதையுடன் வணங்கத் தோன்றும் கம்பீரமுமாக ஆக இருந்தாள். செந்தாமரை இதழ் போன்ற நிறத்தில் பாதங்கள், பிம்பாதரங்கள் – பிம்பம் என்ற மலரின் இளம் சிவப்பு நிறம்- கரு கருவென கேசம், முழு நிலவைப் போன்ற வட்டமான முகம், சிங்கத்தைப் போல சிறுத்த இடை, கடவுளர் அனைவரும் இணைந்து கவனமாக செதுக்கிய சிலை போல இருந்தாள்.
ரணாதித்யன் சற்று கவனமாகவே இருந்தான். ஆவலை அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்த இடத்திலேயே நின்றான். மனித பெண்ணா, தேவதையா? அப்சரஸ் என்ற வகை பெண்ணா?
கருணை மேலிட அவனை ஏறிட்டு பார்த்து, சௌம்ய! சகே! வண்டுகளும், குளவிகளும் கொட்டி வெகுவாக சிரமப்பட்டு விட்டாய் அல்லவா? சிரமபரிகாரம் செய்து கொள். பின் சொல். என்ன தேவை என்று பிரார்த்திக்க வந்தாய்?
உங்களைக் கண்டதுமே, என் உடல் சிரமங்கள் விலகி விட்டன. யார் நீங்கள்? அந்த ஆலயத்து தேவி இல்லை. வரம் தருவதாக சொல்ல உங்களுக்கு என்ன தகுதி?
தேவி சொன்னாள். பத்ர! ஏன் இந்த சந்தேகம்? நான் பகவதியான தேவியோ, இல்லையோ, அதனால் உனக்கு என்ன? நானும் வரமருள சக்தியுடையவளே. அவனோ, தன் கட்டுப்பாட்டை இழந்தவனாக, அவளையே விரும்புவதாகச் சொன்னான். அவளோ, துர்புத்தே! இது என்ன அத்து மீறல்? யார் நீ? என்ன தைரியத்தில் இப்படி பேசுகிறாய்? நீ தேடி வந்தாயே, வேண்டிக் கொள்ள அந்த ப்ரமர வாசினியே நான். மரியாதையாக பேசு.
ஆசை, வெட்கம் அறியாதது தான், ஆனாலும் சுட்டிக் காட்டிய பின்னும் தன்னை மாற்றிக் கொள்ளாத அசட்டு பிடிவாதம். முன் வினையின் தீய செயல்களின் தொடர்பை வாசனா என்பர். அதன் செயல் தான் ஒருவனின் குணத்தை நிர்ணயிக்கிறது. அதே பிடிவாதம், அதே முரட்டுத் தனமாக வெறியுடன், நீ தேவி ப்ரமர வாசினியானால், இது ஒன்றைத் தான் நான் யாசிக்கிறேன். வேறு எதுவும் தேவையில்லை. நீ தேவதையா, சாதாரண பெண்ணா எனக்கு பொருட்டல்ல. அழகிய பெண் என் கண்ணில் பட்டாய் அவ்வளவே நான் காண்பது. நீதான் வாக்கு கொடுத்தாய். அதை நிறைவேற்று. வேறு எதுவும் தேவையில்லை. உண்மையில் நீ அழகியா, அரக்கியா என்பதைக் கூட நான் தெரிந்து கொள்ள முயலவில்லை. என் கண் முன் தென்பட்ட உருவம், அதைத்தான் அடைவேன்.
அவனது தீர்மானமான பதிலைக் கேட்டு தேவி சொன்னாள், அப்படியானால் அது அடுத்த பிறவியில் தான் நிகழ முடியும். இயற்கை நியதிகள் ஒரு பக்கம், மனித தன்மையில்லாத செயல்களின் பலன் கள் ஒரு பக்கம் – உன்னை ஸூழ்ந்து நிற்கின்றன. முதலில் மனதை சாந்தப் படுத்திக் கொண்டு சத்யத்தை அறிவாய் என்றபடி அந்த உருவம் மறைந்து விட்டது.
என் பிறவி அதற்கு தகுந்ததாக இருக்கவேண்டுமே என்ற கவலையுடன், பிரயாகை சென்று அரச மரத்தின் கிளையில் இருந்து விழுந்து உயிரை விட்டான்.
ரணாதித்யன் அடுத்த பிறவியில் இந்த நிகழ்ச்சிகளை முற்றிலும் மறந்து விட்டிருந்தான். ரணரம்பாவாக வாக தேவியும் பூமிக்கு வந்தாள். ரதி சேனா என்ற சோழ தேச அரசன், சமுத்திர கரையில் சந்த்யாவந்தனம் செய்து கொண்டிருந்த பொழுது பள பளக்கும் ரத்தினம் போல ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு பொருளைக் கண்டான். அருகில் வரவும் அது ஒரு பெண் குழந்தை என்று அறிந்து அளவில்லா மகிச்சியுடன், வளர்க்கலானான். வளர வளர, அவள் சாதாரண பெண்ணல்ல என்று தெரிய வந்தது. அவளுக்கு ஏற்ற மணமகனை தேட முயன்றான். எந்த அரச குமாரனும் அவளுக்கு ஈடு இல்லை என்று ஒதுக்கி விட்டான்.
ரணாதித்யாவும் பெண் கேட்டு வந்தான். அரசன் மறுத்த போதிலும் ரண ரம்பா தானே அதை ஏற்பதாக தந்தையிடம் சொன்னாள். மேலும் தான் யார் என்பதையும், பிறந்த காரணத்தையும் சொல்லவும், அவளை தன் நண்பனான குலுதன் என்ற தேச அரசனிடம் அனுப்பி விட்டான். ரணாதித்யன் தானே அந்த தேசம் சென்றான். திருமணமும் நடந்தது. ஆனால் அவனால் சகஜமாக அவளை நெருங்க முடியவில்லை. அவளுடைய தெய்வீகத் தன்மையை உணர்ந்த பின்னும் சாதாரண மானிடனாக நடந்து கொள்ள தைரியம் வரவில்லை. பட்டத்து அரசியாக அமர்ந்தாள். ஆனால் மனதளவில் தள்ளியே இருந்தாள். இரவானால் ஒரு மாய உருவை வைத்து விட்டு வண்டாக மாறி பறந்து விடுவாள்.
சிவ பக்தனாக ஆன ரணாதித்யன் இரண்டு சிவன் கோவில்களைக் கட்டுவித்தான். பெரிய சிற்பங்களை சிற்பிகள் அமைத்துக் கொடுத்தனர். சிலைகளை முறையாக கோவிலில் நிறுவும் சமயம் வெளி நாட்டிலிருந்து வந்த ஒரு அறிஞர்- வரும் காலம் அறிந்து சொல்பவர், இரண்டு லிங்கமுமே குறையுடையது என்று மறுத்து விட்டார். கற்களின் இடையில் வாழும் தேரை – தவளை இன ஜந்து- சிலைகளின் உள்ளே உள்ளன என்றார்.
அவர் ஒரு புராண கதையைச் சொன்னார். படைப்புக் கடவுளான ப்ரும்மா ஒரு சமயம் பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்த மகாவிஷ்ணு, பரசிவன் விக்கிரஹங்களை ராவணன் அபகரித்துச் சென்று விட்டான். தான் உயிருடன் இருந்தவரை இலங்கையில் பூஜித்து வந்தான். அவனுக்குப் பின் அந்த உருவங்கள், வானரங்கள் கைக்கு சென்று விட்டன. அவைகளும் அந்த உருவங்களுடன் இமய மலைக்குச் சென்றனர். கைக்கு கிடைத்த சமயம் அதன் மேல் இருந்த பற்றுதல் குறையவும், அவைகளை உத்தர மானசா – என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு சென்று விட்டன. அந்த ஹரி- ஹர என்ற இருவரின் உருவங்களையும் கொண்டு வந்தால் தான் இங்கு இந்த கோவில் நிறைவு பெறும் எனவும், ரண ரம்பா சில சித்தர்களின் உதவியுடன் அந்த உருவங்களை உத்தர மானஸ என்ற இடத்திலிருந்து தருவித்து விட்டாள். கடல் நீரில் அவை இருப்பதாக அரசனிடம் சொல்லி தேடச் செய்தாள். அதன் பின் கடலில் இருந்து மீட்டு ஹர-ஹரி என்ற உருவங்கள் நிறுவப் பட்டு கோலாகலமாக பூஜைகள் செய்தனர். ரணேஸ்வர- ரணஸ்வாமின் என்ற பெயருடன் கோவிலின் உள் கர்ப்ப கிரஹத்தில் நிறுவப்பட்டன. 459
தேவி, தன்னிடம் ஈடுபாடு கொண்ட ரணாதித்யனுக்கு ஹாடகேஸ்வரம் என்ற மந்த்ர உபதேசம் செய்து பாதாள சித்தி என்பதை பெறச் செய்தாள். இனி என் மேல் இருந்த மோகம் அவனை பாதிக்காது என்றாள். பல ஆண்டுகள் திறமையாக ஆண்ட பின் நந்தி சிலா என்ற இத்தில் சாதனைகள் செய்து பல சித்திகளை அடைந்தவனாக சந்திர பாகா என்ற நதியின் பிரவாகத்தில் இருந்த நமுசி பிலம் – நமுசி என்பவனின் குகை – அதில் நுழைந்து விட்டான். இருபத்து ஒன்று தினங்கள் ஆன பின்னும் திரும்பாததால், ஊர் மக்கள் தேடிச் சென்றனர். அங்கு தைத்ய – அரக்கர் குல பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருந்தவனைக் கண்டனர். பாதாள ஐஸ்வர்யம் பெற்றவனாக பல காலம் வாழ்ந்து அந்த குலத்தில் மனம் ஒன்றி இருப்பதை அறிந்த பின் தேவி ப்ரமர வாசினி ஸ்வேத த்வீபம் என்ற இடம் சென்று விட்டாள்.
பல அரசரகளின் சரித்திரம் சொல்லப் பட்டாலும், இரு பரம்பரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. ஒன்று கோ நந்தன் வம்சத்து ரணாதித்யன், மற்றது ரகு வம்சத்து ஸ்ரீ ராமன். என்று கவி சொல்கிறார்.
உலகம் பராக்ரமத்தை போற்றுகிறது. விக்ரமேஸ்வரக்ருத் என்பவரின் மகன் விக்ரமாதித்யா என்ற மகன் மூவுலகிலும் போற்றப்படும் வீரனாக, தீரனாக மதிக்கப் பட்டான். அடுத்து அரசனாக ஆனபின் விக்ரமாதித்யா என்ற புகழ் பெற்றான். அந்த அரசன் பல கோவில்கள் கட்டுவித்தான். இரண்டு மந்திரிகள் இந்திரனுக்கு அமைந்தது போல அமைந்தனர். ப்ரஹ்மன் என்பவன் ஒரு சிறந்த பாடசாலையையும், (பிரும்ம மடம்) கலூனா गलून -என்பவன் இயல்பாகவே நற்குணங்கள் மிக்கவனாக இருந்தான். கொடியவர்களை அழித்து மனைவி ரத்னாவளியின் பெயரில் விஹாரங்களையும் அமைத்தனர். அதில் புத்தருடைய உருவங்கள் நிறுவப்பட்டன. ஆரோக்ய சாலா என்பவைகள் உடல் நலம் குன்றியவர்களுக்காக வைத்ய சேவைகளைச் செய்ய நிறுவப் பட்டன. சிம்ஹரோத்சிகா என்ற கிராமத்தில் மார்தாண்டம் – ஸுரியனுக்கான கோவிலை நிர்மாணித்தான். அம்ருத ப்ரபா என்ற அரசனின் மற்றொரு மனைவி அம்ருதேஸ்வர் என்ற பெயரில் தென் திசையில் ரணேஸ்வர கோவிலுக்கு அருகிலேயே கட்டுவித்தாள்.
அடுத்து அவன் இளைய சகோதரன் பாலாதித்யா என்பவன் பட்டத்துக்கு வந்தான். உப்பை தின்றவன் தாகம் வாட்ட, நீருக்கு அலைவது போல அவன் போர்க்களத்தை விரும்பினான். தன் உடல் பலத்தில் அசாத்ய நம்பிக்கை கொண்டவன். தானே தேடிச் சென்று பல அரசர்களை வென்றான். ஆங்காங்கு ஜயஸ்தம்பம் நட்டுவித்தான். அவை இன்றளவும் கிழக்கு கடற்கரை பிரதேசங்களில் காணப் படுகின்றன. வங்காளத்தை வெற்றி கொண்டு காஸ்மீரிகள் வாழ காலாம்பி என்ற வாழுமிடம், அது தவிர காஸ்மீர அந்தணர்களுக்காக தனோதக்ரம் धनोदग्रमग्रहारम्- என்ற அவர்கள் வசிக்க இடங்கள் கட்டுவித்தான்.
காஸ்மீரத்தின் மடவராஜ்யத்தில் அரசன் (मडव राज्यम्) என்ற இடத்தில் பேட- भेडरा – என்ற அந்த இடத்தைசெல்வம் கொழிக்கச் செய்தான். பல விதமான நிலையான வருமானம் தரும் திட்டங்களால் அங்கு செல்வம் குறையாமல் இருந்தது.
அவன் மனவி பிம்பா என்பவள், சிவந்த பிம்ப பழம் போன்றே உதடுகள் உடையவள்- பிம்பேஸ்வர் அரிஷ்டோசமன – பொது மக்களின் தீவினையை போக்கும் விதமான அமைப்பை உடையதாக இருந்ததாம். உடன் பிறந்த மூவர், கங்க,சத்ருக்ன, மாளவ என்பவர்களே மந்திரிகளாக இருந்தனர். இந்த மூவரும் முறையே, மடங்கள், ஆலயங்கள், பாலங்கள் இவைகளை பொறுப்புடன் கட்டுவித்தனர். அந்த அரசனுக்கு உலக அழகியாக எண்ணத் தகுந்த அழகிய பெண் மகவும் இருந்தாள். அங்கலேகா என்ற பெயருடன், கண்டவர் மயங்கும்படியான வனப்பும், மென்மையான அங்க லாவண்யமும் உடையவளாக இருந்தாள்.
ஒரு சமயம் தந்தையுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்து அரசவைக்கு வந்திருந்த ஒரு ஆரூடம் சொல்பவர், உன் மருமகன் உனக்குப் பின் அரசனாவான். கோ நந்த வம்சம் உன்னுடன் முடியும் என்றார். பெண் வழியில் ராஜ்யம் போவதாவது. தெய்வம் புருஷகாரேண – விதியை மதியால் வெல்வேன் என்றான். தெய்வம் அனுகூலமாக இல்லாவிட்டால் என்ன, என் புஜ பலத்தால் ஜயிப்பேன் என்று ஸூளுரைத்து, மகளுக்கு அரச பரம்பரையில் இருந்து பெண் கேட்டு வந்தவர்களை தவிர்த்தான். என் மகளின் அழகுக்கு சமமான உருவ அழகும், ஆரோக்யமும் உள்ள மனிதனாக தேடுகிறேன் என்றான். அவன் பார்வையில் குதிரைகளை பாலிக்கும் அரச சேவகன் ஏற்றவனாக தெரிந்தான். அரச சம்பந்தம் இருந்தால் கூட ஒருநாள், தனக்கு போட்டியாக வருவான் என நினைத்து, க்ஷத்திரிய குலமே இல்லாத, ஒருவனை மருமகனாக தேர்ந்தெடுத்தான். சிற்றரசனாக இருந்தால் கூட ஒரு நாள் ராஜ பதவிக்கு வருவான் என்பதால் காயஸ்தன் என்ற வைஸ்ய குலத்தில் கொடுத்தான். ஆனால், துர்லபவர்தனன் என்ற பெயருடைய அவனோ, தாய் வழியில் கார்கோடக நாகம் ஆசீர்வதித்து அவன் ராஜ பதவிக்கு வர வேண்டும் என்றே திட்டமிட்டு வளர்க்கப் பட்டவன் என்பது இந்த அரசனுக்கு தெரிந்திருக்கவில்லை. அரசனாக வர இவனுக்கு தகுதியில்லை என்ற ஒரே காரணத்தால் தேர்ந்தெடுக்கப் பட்டவனை உண்மையில் அரச பதவிக்கு வரச் செய்யவே தெய்வ சங்கல்பம் இருந்தது போலும்.
பொறாமையால் ஸூரியனுக்கு சமமாக இருக்க கூடாது என்று நினைத்து அக்னியை புகை மூட்டத்தில் இருக்கச் செய்த விதாதா – ப்ரும்மாவே, சிறு விளக்கில் விளங்கும் ஒளியை சாந்தமாக இருப்பதால் பூமியில் உள்ளவர்கள் அதிகமாக மதிப்பதைக் கண்டு திகைத்திருப்பார். அதனால் ப்ரும்மாவே அவமானத்துக்கும் பரிகாசத்துக்கும் ஆளானார் என்று ஒரு புராண கதை உண்டு. பின்னால் சிகீ – அதன் ஜுவாலை அதிகமாக நல்ல பெயர் பெற்றது. கோடையின் கடும் தாபத்திற்குப் பின் தீபமும் சாந்தமாக எரியும் தீபம் அதிகமாக விரும்பப்படுகிறது. இயல்பான குணத்தாலும், கூர்மையான அறிவினாலும் துர்லபவர்தனன் நியாயமாகவும், பணிவாகவும் இருந்ததால் மக்களின் கண்களில் அவன் ராஜ ராஜாவாக ஏற்றவனாகவே தெரிந்தான். அவனுடைய மேலான அறிவைக் கண்டு ப்ரக்ஞாதித்யன் என்றே பெயர் பெற்றான். (ப்ரக்ஞா- சுயமான அறிவு.) குபேரனுக்கு சம மான செல்வம் மாமனாரிடம் பெற்றான்.
ஆயினும், அளவுக்கு அதிகமாக பாராட்டி வளர்த்த மகள் அவனிடம் உண்மையாக இல்லை. கூடா நட்பு, அரண்மனையில் அண்டியிருந்த சில பெண்கள் தவறான வழியைக் காட்டினர். பல யுவ யுவதிகள் கூடும் இடங்களில் அவள் தன் கணவனை அவர்களுடன் ஒப்பிட்டு, வெறும் பகட்டில் மயங்கினாள். பேரழகியான இளம் அரச குமாரி, சாதாரண பிரஜையான தனக்கு கிடைக்கப் பெற்றவன், தன் திறமையைத் தவிர பின் பலமாக பொருள் பலமோ, பதவி பலமோ இல்லாதவன் அவளிடம் கடுமையாகவா இருப்பான். அந்த பணிவே அவளுக்கு பிடிக்காமல் போயிற்று. கங்க என்ற மந்திரி அதை பயன் படுத்திக் கொண்டான்.
அவள் எதிரிலேயே அதிகமாக இருந்தான். அவளுக்கு பிடித்த செயல்களையே செய்து தன்னை அவள் முற்றிலும் நம்பும் படி செய்து கொண்டான். மெள்ள மெள்ள தயக்கம் விலக, தன்னிலை மறந்து அவன் கைபாவையானாள். எதுவும் தவறாகவே தோண்றாத அளவு அவள் மனதை தன் பால் கொண்டு வந்து விட்ட கங்க மந்திரியின் துர்போதனைகளை மதித்தாள். அதற்கு ஏற்றார் போல அந்த:புர பணியாளர்களுக்கு கையூட்டு கொடுத்தும், தன் அதிகாரத்தால், தான் எந்த சமயமும் அந்த:புரத்தில் அவள் தனியறையில் இருக்கலானான்.
தன் வயதொத்த பெண்களிடம் சிரித்து பேசியும் தன் பண்பும் பெருந்தன்மையும் தெரிய பேசியவள் கணவனிடம் அலட்சியமாகவும், மரியாதையின்றியும் இருக்கலானாள். இந்த இரட்டை வேடம் புரியாமல், அல்லது புரிந்தும் எதுவும் செய்ய இயலாதவனாக, ப்ரக்ஞாதித்யா தவித்தான். தவறு செய்கிறாள், தன்னிடம் உண்மையாக இல்லை என்பதே கவலையாக அவனது உடல் நிலையை பாதித்தது. ஒரு நாள் நள்ளிரவில் அவளுடைய தனி அறைக்குச் சென்றான். மாற்றானுடன் கூடி களைத்திருந்தவளைக் கண்டு பொங்கி வந்த கோபத்தால் அவளைத் தண்டிக்கவே நினைத்தான். ஓங்கிய வாளை தாழ்த்தி, திரும்பவும் தூக்கி அழிக்கவே நினைத்தவனின் உள் மனது அறிவுறுத்தியது போலும். அவனுடைய இயல்பான நற்குணம் அவளை தண்டிக்காமல், கோபம் தணிய அவளை ஏன் குறை சொல்ல வேண்டும், செல்வத்திலேயே வளர்ந்து, உலகியலை அறியாமல் தான் தோன்றியாக இருக்கிறாள். அனைவருமா உலகில் மனக் கட்டுப்படும், நியாய உணர்வோடும் இருக்கிறார்கள். எளிய பெண், சிலருடைய அருகாமை அவளிடம் இந்த மாற்றத்தை கொடுத்து விட்டது என்று யோசித்தவன், வேகமாக வெளியேறினான்.
வணக்கத்துக்குரிய உயர்ந்த மனிதன். கண் எதிரில் கண்டபின்னும் அவனால் யோசிக்க முடிந்திருக்கிறது. அழகிய கண்களுடையவள் என் மனைவி என்ற பெருமை கொண்டவனை இதை விட அதிகமாகவா அவமானப் படுத்த முடியும்.
ப்ராக்ஞாதித்யா யோசித்தான். எனக்கு துரோகம் என்று ஏன் நினைக்கிறேன். அவ்வளவு தானா என அன்பும், இதை துரோகம் என்று அவளை கொல்வதால், எனக்கு என்ன நன்மை. அன்பு என்பதே ஒரு மரம் அதன் வேர்கள் ஆழமாக பூமியில் மட்டுமல்ல, பாதாளம் ஏழிலும் வேரூன்றியதாக இருக்க வேண்டும். காலத்தால் அழியக் கூடாத பேரன்பு அது. துவேஷம் -பொறாமையை விலக்காமல் அதை எப்படி பூரணமாக வெளிப்படுத்துவது? மரத்துக்கு மண் போல ஓரளவு பொறாமையும் அன்பை வளர்க்கவே தேவை. ஆயினும் இதை விடக் கூடாது. தண்டனை கொடுப்பதும் மிக அவசியம். கங்கனுடைய மேலாடையில் எழுதினான். “நினைவிருக்கட்டும். உன் செயலுக்கு உரிய மரண தண்டனை காத்திருக்கிறது”
யாருமறியாமல் வெளியேறி விட்டான். விழித்தவுடன் தன் மேலாடையில் இருந்த வாசகத்தை படித்த கங்கன் நடுங்கி விட்டான். அனங்கலேகா பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் நகர்ந்தான். உயிர் மேல் இருந்த பற்று, அத்துடன் இப்படி கூட ஒரு மனிதன் நல்ல குணவானாக இருக்கையில் நான் எங்கே. அதன் பின் தன் விபரீத செயல்களை நினைக்கவும் பயந்து விலகினான்.
பாலாதித்யா முப்பத்தேழு ஆண்டுகள் நல்லாட்சி செய்த பின் மறைந்தான். அவனுடன் கோ நந்த வம்சமும் முடிந்தது. கங்கன் அரசனுக்கு இறுதி மரியாதைகளைச் செய்தான். அதன் பின் மருமகன் தங்க குடங்களில் கொண்டு வரப் பட்ட பல தீர்த்தங்களாலும் பேரரசனாக முடி சூட்டப் பட்டான்.
அவன் பிறந்து வளர காரணமாக இருந்த கார்கோடகன் வம்சம், ஆதி சேஷனின் ஆசியுடன் கங்கை நதி ஆகாய கங்கையாக இருந்து, பூமிக்கு வந்து பல இடங்களிலும் பாய்ந்து ஓடி கடலில் கலந்து உயிரினங்கள் வாழ பூமியை செழிப்பாக்குவது போலவே அந்த பரம்பரை நெடு நாள் இருந்தது.
(இது வரை ஸ்ரீ காஸ்மீரம்தேசத்து மகா மந்திரியான சம்பக ப்ரபுவின் மகன் கல்ஹணன் எழுதிய ராஜ தரங்கினீ என்ற நூலின் மூன்றாம் பாகம்- மூன்றாவது அலை நிறைவுற்றது)