ராஜ தரங்கிணி -4
கார்கோடக வம்சம்
ராஜ தரங்கிணி – நாலாவது தரங்கம் – அலை
யாரும் எதிர்பாராத வகையில் அரச பதவியை அடைந்த அரசனின் மருமகன், தன் தலையில் முடி ஸூட்டுவிழாவில் விழுந்த புனிதமான நீரை விதியின் செயல் என்று ஏற்றுக் கொண்டான். தனக்கு அளிக்கப் பட்ட கடமை என்றாலும் நன்றி மறவாதவனாகவும் இருந்தான். கார்கோடக குலத்தில் பிறந்தவன். அபிஷேகத்தின் பொழுது தன் மேல் நீருடன் கலந்து விழுந்த முத்துக்கள் குல மூத்தோர்களின் முக படத்தில் இருக்கும் ரத்தினங்களாக அவன் கண்களுக்கு புலப்பட்டன. ஒரு பக்கம் தன் குல மூத்தோர்களின் லட்சியம் நிறைவேறியது என்ற நிம்மதி. மாபெரும் ராஜ்யம் அதை நிர்வகிக்க தன் நீண்ட கைகளால் உறுதி எடுத்துக் கொண்டான். பொற் தாமரைகளால் ஆன மாலை அணிந்தவனை சேஷ நாகம் முதல் அந்த குலத்தினர் அனைவரும் கண் மலர கண்டது போல இருந்தது.
கோநந்தன் வம்சம் அது வரை அனுபவித்த பூமி. அவர்கள் நலமாகவே ஆண்டார்கள். அதை விட நலமாக கார்கோடக குலத்தில் உதித்த நீயும் செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆசீர்வதித்தனர். பல காலமாக சுவர்கத்தில் இருந்தவள், அங்கிருந்து மூவுலக குருவான சிவ பெருமானின் தலையில் அடைக்கலம் ஆன கங்கையைப் போன்றே நாகர் குலமும் மேன்மை அடைந்தது.
மலை மகளுடன் இணைந்து ஸ்தாணு என்று புகழப் படும் ஈசன், எங்களுக்கு எந்த விதத்திலும் இடர்கள் வராமல் காக்கட்டும். ஈசனின் தலை சடையே போகி- நாகர் குல பெண்கள் போல சுருண்டு அதே ஸ்யாம, அடர் நீல -கருப்பு நிறத்தில் பள பளக்க, நாக மணியும் அணிந்து தயையே உருவான மூர்த்தி, எங்களை காக்க வேண்டுகிறோம்.
பூமியுடன் அவன் மனைவியும் அதே குலத்தில் வந்தவள் என்பதால், ரத்தினம் போன்ற பல தனயர்கள் காலப் போக்கில் பிறந்தனர். அரச வம்சம் அந்த திசையில் வளர்ந்தது. அங்கலேகா என்ற அந்த ராஜ குமாரி தன் தவற்றை உணர்ந்து பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்ட கணவனான துர்லபவர்தனுடன் முந்தைய அரசனின் மகள் என்ற பெருமையும் மதிப்புடனும் இருந்தாள். அரசனின் அன்பையும் பெற்றவளாக வாழ்ந்தாள். அங்கபவனம் என்ற விஹாரத்தை நிர்மாணித்தாள்.
பிறந்த உடனேயே, ஆரூடம் சொல்பவர்கள் இவன் அல்ப காலமே ஜீவித்திருப்பான் என்றனர். மல்ஹன் என்ற பெயருடைய அந்த மகன் மல்ஹணஸ்வாமின் என்ற பெயரில் ஒரு கோவிலை நிறுவினான். பாரேவிசோக என்ற மலைத்தொடரில் கோடாத்ரி என்ற இடத்தில் சந்திரகிராமம் என்ற இடம் தகுதியுள்ள அந்தணர்களுக்கு தானமாக வழங்கினான். ஸ்ரீநகரில் துர்லபஸ்வாமி என்ற ஸ்ரீ ஹரியின் மந்திரத்தை கட்டி முடித்தவன், இருபத்தேழு வயதில் மறைந்தான்.
அனங்கதேவியின் அடுத்த மகன் துர்லபகன் என்பவன் ஆட்சிக்கு வந்தான். இந்திரனுக்கு சமமாக அரசாட்சி செய்தான் எனப் புகழப் பட்டான். தாய் வழி பாட்டனார் நினைவில், அவன் தாய் அவனை ப்ரதாபாதித்யா என அழைத்தாள். அவளைப் பொறுத்தவரை அந்த வம்சத்தினள். எனவே மகள் வழியில் அந்த வம்சம் தொடர்ந்தது. உடா என்பவன் ஒரு மந்திரி ஹனுமத் என்பவரின் மகன். குபேரன் என்ற தனாதிகாரியை உபாசித்து பெரும் செல்வம் பெற்றான். அதைக் கொண்டு பல வாழ்விடங்கள் அமைத்தான்.
ப்ரதாபபுர என்ற நகரத்தை இந்திர புரிக்கு சமமாக ப்ரதாபாதித்யா நிர்மாணித்தான். அந்த சமயம் பல்வேறு திசைகளில் இருந்தும் வியாபாரிகள் வந்தனர். வணிக குலத்தைச் சேர்ந்த நோணா என்பவன் ரௌஹீதி (தற்கால ரோதக்-Rohtak)) என்ற பிரதேசத்திலிருந்து வந்து அங்கு வசிக்கலானான். நேர்மையானவன், நற்குணவான் என புகழ் பெற்றான். ரௌஹீதி தேசத்திற்கு சென்ற அந்தணர்கள் வசிக்க இருப்பிடங்கள் கட்டிக் கொடுத்தான். நோண மடம் என்ற பாடசாலைகள் கட்டிக் கொடுத்தான்.
ஒரு சமயம் அரசனுடைய விருந்தாளியாக அழைக்கப் பட்டு அரண்மனைக்குச் சென்றான். அரசர்களுக்கு செய்வது போல விருந்தோம்பலும் உபசாரங்களும் இருந்தன. ஒரு நாள் அங்கு வசித்தான், விடிந்து கிளம்பும் முன் அரசன் அனைத்தும் வசதியாக இருந்ததா? என அன்புடன் விசாரித்தான். அனைத்தும் நலமே. ஏராளமான தீபங்கள், அது தான் எனக்கு தலைவலியை உண்டாக்கி விட்டன என்று பதில் சொன்னான். பதிலுக்கு வணிகன் தானும் அரசனை தன் இருப்பிடத்துக்கு அழைத்தான். அரசன் அங்கு சென்ற பொழுது தான் முதன் முறையாக சுயமாக ஒளிரும் மணிகளே இரவில் விளக்காக பயன் பாட்டில் இருப்பதைக் கண்டான். அதை தவிர லக்ஷ்மீ கடாக்ஷம் செல்வத்துக்கு அதிபதியான திருமகளின் அருள் பல விதத்திலும் அந்த இருப்பிடம் முழுவதும் கண் கூடாக தெரியக் கண்டான். அதைக் கண்ட அரசன் பெரும் வியப்புக்குள்ளானான். ஸ்ரீ நரேந்திர ப்ரபா என்ற ஒரு பெண் அந்த மாளிகையில் மற்றொரு நிலவு உதித்தது போல இருந்தாள். அழகிய அங்கங்களுடன் செதுக்கி வைத்த சில்பம் போல கண் கவர் வனப்புடன் இருந்தவளைக் கண்டு அரசன் தடுமாறினான். மங்களமே மூர்த்தியாக- உருவெடுத்து வந்து விட்டதோ? அல்லது இதுவே மன்மதனின் வீடோ? பெரிய மாளிகை – தன் வீடு என்ற மன நிம்மதியாலும் தன் விருப்பம் போல உலவிக் கொண்டிருந்தாள்.
அவளைக் கண்டதுமே தன் மனம் அவள் பால் சென்று விட்டதை அறிந்த அரசன், ஒவ்வொரு அங்கமாக கண்களால் ரசித்து அனுபவித்தான். ஒரு வினாடியில் இன்னமும் தனக்கு கிடைக்கப் பெறாத அன்னியனின் பெண், சௌபாக்யம் என்ற அமுதமே அவள் என மனதினுள் வர்ணித்து மகிழ்ந்தான். தன் மனம் நிறைய அவளே இருக்கக் கண்டு, தன்னை அவள் ஏற்றுக் கொண்டு விட்டதாகவே மன மயக்கம் அடைந்தான். யதேச்சையாக அவள் திரும்பியதெல்லாம் தன்னை காணவே என தவறாக எண்ணி மகிழ்ந்தான். அதே நினைவாக அரண்மனை திரும்பினான்.
கண்களில் அவள் உருவமே நிலைத்து இருந்தது. உடல் இளைத்தது. முன் பிறவியில் நாங்கள் இணைந்திருந்தோமோ, இந்த பிறவியில் யாரோ, நினைப்பது கூட தவறு என்று தன்னை அடக்கவே முயன்றான். ராகம்- பெண் மோகம் என்ற விஷம் நிறைந்த மரம். அஹோ! தன்னை அடக்கிக் கொண்டு மோக வலையில் விழாதவர்கள் புண்ணியம் செய்தவர்கள். நட்பு கூட பின் வாங்கியது போல நினைவில் நிற்கவில்லை. நல்ல குடிப் பிறப்பு என்று நம்மை சொல்வார்கள். இது போன்ற நியாயம் அல்லாத விருப்பமே எனக்கு வந்திருக்கலாகாது என பூமியை ஆளும் அரசன் நான் இந்த அல்ப ஆசைகளுக்கு மேல் இருப்பவன் என்று சொல்லிக் கொண்டான்.
இது வரை கடை பிடித்த சதாசாரங்கள், நலம் தரும் நடவடிக்கைகள் இவைகளால் மக்கள் மனதில் ஒரு பிம்பம் உண்டாகியிருக்கும். இந்த நிலையில் பார்த்தால், யாரிவன், அல்பன் என்று தூற்றுவார்கள். அரசனே மாற்றான் மனைவியை அபகரிப்பானா? என்பர்.
மற்ற பிரஜைகளுக்கு முன்னோடியாக இருப்பவன் நான். நீதி தவறலாமா? இவ்வாறு தன்னையே சமாளித்துக் கொண்டாலும் மனதில் படிந்த அந்த பெண்ணுருவம் அலைக்கழித்தது. எதை விடுவான், நன் மக்கள் கொண்டாடும் நல் வழி, இது வரை பாலித்து வந்தது அதையா? அவளுடைய நீண்ட அழகிய கண்களையா? எந்த முடிவுக்கும் வர இயலாமல் தவித்தவன் உடல் நலம் கெட்டது. மிக மோசமாக மரணத் தறுவாய் வரை வந்து விட்டான்.
வணிகன் இதை அறிந்தான். அந்த நல்ல மனிதன் யாரும் அருகில் இல்லாத சமயம் அரசனிடம் பேசினான். இந்த நிலை வர விடலாமா? தர்மம் – நீதி இல்லை என்று பயப்படுகிறாயா? உயிருக்கு ஆபத்து என்ற சமயம் தர்மத்தை மீறலாம் என்பதும் ஒரு வழக்கு. ஜந்துக்கள் தன் உயிரைக் காத்துக் கொள்ள என்ன வழி அதைத் தான் செய்யும். தர்ம சங்கடம் என்பது இது தான், பல மதங்களும் இதைப் பற்றி பேசி அலசி விளக்கவே முயன்றுள்ளார்கள். இது போன்ற நிலையில் என்ன ஆறுதல் சொல்வார்கள்? மனச்சாட்சி சொல்வது போல செய் என்பார்கள். உடல் நலத்தை கவனியாமல் மரணம் அடைந்தால் அது புகழையும் தராது, அது உசிதமும் அல்ல எந்த பலனும் எவருக்கும் இல்லை. இறந்தவன் காதில் உன் நற் பெயரை நிலை நிறுத்திக் கொண்டு விட்டாய் என்று சொன்னால் என்ன பயன்?
அரசனே! நான் சொல்வதைக் கேள். இந்த ஆபத்தான நிலையில் நண்பனாக மட்டுமே சொல்கிறேன் என்பதை புரிந்து கொள். உனக்காக நான் உயிரையே கொடுப்பேன். மற்றவை என்ன உயர்வு? இன்னமும் உன் மனதில் தெளிவு வர வில்லையெனில், நானே அவளை நர்த்தகியாக உனக்குத் தருகி
றேன். அவள் நாட்டியம் அறிந்தவளே. நான் அனுமதித்து உனக்கு அளித்தால் அதில் நீயே பலவந்தமாக ஆக்ரமித்த தவறும் இராது. உடனே அரசன் அதற்கும் சம்மதிக்கவில்லை, லஜ்ஜையே அதிகமாகியது. பின் ஆசையே வென்றது. அவளை முறைப்படி மணந்தான்.
இயல்பான திறமையாலும் ஆற்றலாலும் ஆண்டான். சிவபெருமானுக்கான ஒரு கோவிலை ஸ்ரீ நரேந்திரேஸ்வரா என்ற பெயரில் கட்டுவித்தான்.
அவனுடைய பட்டமகிஷி மூலம் பிறந்த மகன் சந்திரபீடன் என்ற பெயருடன் பட்டத்துக்கு வந்தான். அவன் விரும்பி மணந்தவள் மூலம் தாராபீடன் என்ற மகன் பிறந்தான். அரச குலத்தவர் அவளை ஏற்றுக் கொண்டது போலவே அவளும் தனக்கு கிடைத்த அரச குல மரியாதையை காப்பவளாக இருந்தாள்.
கரடு முறடான பாறையாக மலையிலிருந்து வெட்டி எடுக்கப் படும் உயர் மணி, சாணையில் அடிபட்டு, வளைக்கப் பட்ட பின் உயர் மணியாக உருவாகி ஒளி விடுவது போல வாழ்க்கையில் அனுபவங்கள் மனிதர்களை பண்படுத்துகின்றன. அக்னியிலிருந்து புகையாக மலினமாக வானம் வரை சென்று மேகமாகும் – அவையே பின்னால் பரிசுத்தமான நீராக மாறி விடுகிறது. இரும்பு முதலான தாதுக்களால் நிரம்பிய மலை, கடினமான பாறைகளைக் கடந்து வந்த சமயம் வெறும் ஜடமாக இருந்த மேகங்கள், அதனிடையில் ஒளி மயமான த்வஜம் போல மின்னல் தோன்றுகிறது. பிறப்பு ஒரு வகையில் ஜீவன்களின் குண தோஷங்களை நிர்ணயிக்கிறது என்றாலும், தான் அண்டியிருக்கும் சமூகத்தில் இருந்தும் அவை நன்மையோ, தீமையோ பெறுகின்றன என்பது உண்மை. இயல்பான சுபாவம் எது என்பதும் அனுபவத்தால் பெறப்படுவதே.
தாராபீடனுக்கு பிறகு அவிமுக்தபீடன், முக்தாபீடன் என்ற தனயர்களும் பிறந்தனர். வஜ்ராதித்யன் வம்சம் உதயாதித்யன், லலிதாதித்யன் என வளர்ந்தது. துர்லப பூபதி, பல காலம் (500 ஆண்டுகள்) ஆண்டதாக வரலாறு. புண்யாத்மா என புகழப் பட்டு, அவர்கள் அடையும் நல்லுலகை அடைந்தான் என பாடல் பெற்றான்.
சந்திராபீடனும் ராஜ சூடாமணி என பிரசித்தமான அரசனாக மதிக்கப் பட்டான். பெயருக்கு ஏற்ப மக்களின் அன்புக்கு மாத்திரமானான். க்ஷமா- பொறுமை, விக்ரம-ஆற்றல், சுகம் மூன்று ஓரிடத்தில் எப்படி சேர்ந்து இருக்க இயலும். தர்மத்தை ஒரு பாதம் என்பர். மற்ற மூன்று பாதங்களும் இவை. இவைகளை தெளிவான அறிவால் பகுத்து செயல்களைச் செய்யத் தெரிந்தவனே வெற்றி பெறுவான். 108/398
செல்வத்தை அளிக்கும் திருமகளும் தேவையறிந்து கொடுப்பவள் போல எந்த இடத்தில் எது தேவையோ அதை அபரிமிதமாக அளித்தாள். வயலில் விடப் படும் நீர் ஆங்காங்கு பாய்ந்து வயலில் எல்லா பகுதிகளும் அடைவது போலவும், பயிர் மட்டுமல்ல இடையில் உள்ள, மரங்களும் சிறு செடி கொடிகளும் கூட அதன் பயனைப் பெறுவது போலவும் லக்ஷ்மி தேவியின் அருள் அனைவருக்கும்
வேண்டிய அளவுக்கும் மேல் கிடைத்ததாம்.
மலைகளில் இருந்து கீழ் நோக்கி பாய்ந்து நதிகள் வழியில் வண்டல் மண்ணையும், தாதுப் பொருட்களையும் நிலத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டு கடலை நோக்கிய தன் பிரயாணத்தை தொடருவது போலவும், நாட்டில் செல்வம் கொழித்தது.
தானே செயல் திறன் உடையவன். முன் யோசனையுடன் எதைச் செய்தால் நல்லது, எது முடிவில் நல்ல பயனைத் தராது என்பதை யோசித்து செயலில் இறங்குவான். அதனால் முடிவில் தவறுகள் வருவதும் அதனால் ஏற்படும் மன வாட்டமும் தவிர்க்கப் பட்டன. நல்லன செய்து அதற்காக மக்கள் பாராட்டினால் லஜ்ஜையே அடைவான். அமாத்யர்களுக்கு தானே செய்முறைகளைச் சொல்லி செய்யச் செய்வான். வஜ்ரம்- வைரம் தான் மற்ற பொருட்களை உடைக்கும் அல்லது சிதைக்கும். வஜ்ரத்தை சிதைக்க மற்றொரு வைரமே தான் பயன்படுத்தப் படுகிறது.
நியாயம் அல்ல என்று தயங்கினால், அல்லது தர்ம சங்கடமான விஷயங்களில் முடிவு எடுக்க தன் அறிவையே, அல்லது உள்ளுணர்வையே மதிப்பான். அதனால் தனக்கு நஷ்டமானாலும் கவலைப் பட மாட்டான். எப்படி கருடன் இந்திரனின் வஜ்ரத்தின் அடியிலிருந்து தப்ப தன் இறகை உதறி விட்டதோ, அது போல ஏதோ தனக்கு சிறிய இழப்பு ஆனாலும் அதனால் பாதிக்கப் படாமல் தர்மத்தின் பக்கமே நிற்பான். (கருடன் ஓரு சமயம் ஸூரியனை மறைத்தான் என்று இந்திரன் தன் வஜ்ராயுத த்தால் அடித்தான் என்று புராணம் )
நியமங்களை அனுசரிப்பதில் ஸுரிய தேவனே முன்னோடி. நாளின் பல செயல்களையும் வினாடி பிசகாமல் ஸூரியன் அனுசரிப்பது போல. மேலும் வர்ணிக்கவே நினைத்தாலும் அரசனின் குணக் குறைவு காரணமல்ல அதிக பிரசங்கம் என்ற குற்றம் – ஒரே விஷயத்தை மிகையாக சொல்வது கூட ரஸக் குறைவு என்ற காவிய நியமங்களின் படி குற்றமே.
திரிபுவனேஸ்வர் மந்திரம் என்ற பெயரில் கோவிலை கட்ட நிலத்தை ஆர்ஜிதம் செய்த பொழுது, ஒரு தோல் வியாபாரி அல்லது தோலை வைத்து பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளி தன் சிறிய நிலத்தின் நடுப் பகுதியில் இருந்த குடிசையைத் தர மறுத்தான். உயர் அதிகாரிகள் அந்த நிலத்திற்கு ஈடாக பெருமளவு பொருள் தருவதாக சொன்ன போதிலும் அது தனது முன்னோர்கள் வசித்த வீடு என்று சொல்லி பிடிவாதமாக இருந்தான். அரசனிடம் சொன்னால், அவன் இடம் அவன் விருப்பம், நீங்கள் அதிகமாக வற்புறுத்த வேண்டாம் என்றும் ஆரம்பத்திலேயே அந்த இடம் நடுவில் இருக்கையில் எப்படி கட்டிட வரை படம் தயாரித்தீர்கள் என்றும் கேட்டான். இதை நிறுத்தி விட்டு வேறு இடம் பாருங்கள். மிகச் சிறிய நிலம் என்றாலும் ஒரு பிரஜையின் நிலத்தை பலவந்தமாக பெறுவது தகாது. நீங்கள் அறிவாளிகள். முன் யோசனை உடையவர்கள். எங்கு எந்தவிதமான இடர் வரும் என்பதை முன் கூட்டியே எதிர்பார்த்து இருக்கலாம். எது நியாயம்? நம் மனதுக்கு சரி என்று தோன்றுவதை நியாயம் என்று நம்பி விடுகிறோம். அல்ப நிலம், நிறைய தனம் கொடுத்தால் போதும் என்று நினைக்க தூண்டியது எது? இவ்வாறு பேசிக் கொண்டு இருக்கையிலேயே காலணி செய்யும் தொழிலாளியின் செய்தியோடு வந்த ஒரு தூதுவன் அரசரைக் காண வந்தான்.
அரசனை நேரில் காண விரும்புகிறேன். அரச சபைக்குள் நான் வருவது உசிதமல்ல என்றால் வேறு ஏதாவது ஒரு இடம், எது சௌகரியமோ, அந்த இடத்தில் சந்திக்கிறேன். மறு நாள் அரச சபை அல்லாத ஒரு இடத்தில் சந்தித்த பொழுது அரசன் கேட்டான் – ஏன் மறுக்கிறாய் ? இதை ஒரு தெய்வீகமான செயலுக்காக கேட்கிறோம். உன் இருப்பிடம் அதைவிட உயர்ந்தது, அழகியது என்று எண்ணினால் வேண்டுமளவு தனமோ, நிலமோ பெற்றுக் கொண்டு புதிதாக கட்டிக் கொள்ளலாமே, என்றான்.
காலணி தயாரிப்பவன் யோசிப்பது போல இருந்தது. அரசன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். வெண்மையான பற்கள் பளிச்சிட அவன் வணக்கம் சொன்னான். அதன் பின், அரசே நான் சொல்லப் போவது முற்றிலும் உண்மை. இதை மனப் பூர்வமாக நம்பி மேற் கொண்டு உங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள். இந்த இடத்தில் நான் வாதி, நீங்கள் தான் நியாயதிபதி. தீர்ப்பு உங்கள் கையில்.
நான் நாயிலும் கேடு கெட்டவனும் இல்லை, ஸ்ரீ ராமசந்திரனோ, அல்லது ப்ருதுவோ போன்ற புகழ் பெற்ற நபரும் அல்ல. நாம் இருவரும் தனியாக பேசுவதையே கூட இந்த மந்திரிகள், உங்களுடைய ஆலோசகர்கள் பொறுக்க மாட்டாமல் செய்வதறியாது தவிக்கிறார்கள். நான் நேரடியாக உங்களைச் சந்திப்பதும் பேசுவதும் அவர்களுக்கு ஏன் இந்த அளவு பாதிப்பை உண்டாக்குகிறது.
பிறக்கும் சமயம் மனித பிறவிகள் கொண்டு வருவது என்ன? தன்னியல்பு என்ற நான் எனும் தன்மை, எனது என்ற எண்னம் இந்த இரண்டு நினைவுகளே. உங்கள் உடலில் விலை உயர்ந்த கங்கணங்கள், தோலில் அணியும் அங்கதங்கள், கழுத்தில் மாலைகள், இவை உங்களுக்கு பெருமை சேர்ப்பது போலவே எங்களுக்கு எங்கள் சரீரமே- உடலே அனைத்தும், வெளி ஆபரணம் இன்றியும் நாங்களும் இதை எண்ணி பெருமையே கொள்கிறோம்.
உங்களுடைய இந்த அழகிய மாளிகை, விசாலமான கூடங்கள் கோபுரங்களுடன், ஜன்னல்களுடன் உள்ளது போலவே என் குடிசையும், ஜன்னல் வைக்க வேண்டிய இடத்தில் ஒரு உடைந்த பானையின் மேல் பாகத்து வளையத்தை வைத்திருக்கிறோம். அது வழியே வரும் காற்றும் வெளிச்சமும் இருவருக்கும் பொதுவே. பிறந்த நாளில் இருந்து இதில் தான் எங்களுடைய நல்லதோ, மற்றதோ, அனுபவித்து வளர்ந்திருக்கிறோம். என் தாய் போல மதிக்கும் இந்த குடிசை மண்ணோடு மண்ணாக எனக்கு பொறுக்கவில்லை. இதை யார் அறிவார்கள்? எதிர் பாராத இயற்கையின் தாக்கம், வெள்ளமோ, பூ கம்பமோ, இருப்பிடத்தை இழந்த மனிதர்கள் அறிவார்கள். அல்லது எதிரி வசம் ஆன அரசன் தானே விலகி அதை இழந்தவன் அறிவான்.
ஆனாலும், பொறுப்புள்ள பெருந்தன்மையுடைய அரசன் வந்து கேட்கும் பொழுது சாதாரண பிரஜை, உங்கள் நாட்டில் வசிப்பவன் மறுப்பதும் நியாயமல்ல. உங்கள் தீர்ப்பை ஏற்கிறேன்.
அரசன் அந்த குடிசைக்கு சென்றான். தன் தேவையும் பிரஜையான அவனுடைய மறுப்பையும் எடை போட்டவன் போல பதில் சொன்னான். பொதுவான நீதி, மிகப் பெரிய லாபத்தை, நன்மைதரும் செயலை தடுக்குமானால், அந்த சிறிய இடரை தாண்டிச் செல்வது தான் நியாயம். உனக்குத் தேவையான தனமோ, இடமோ வாங்கிக்கொள். பலருக்கு பயன் படும் என்றால் ஒரு சிலரின் உரிமை பறிக்கப் படுவது அதர்மம் அல்ல.
காலணி செய்யும் தொழிலாளி மகிழ்ச்சியுன் கை கூப்பி வணங்கியபடி ஏற்றுக் கொண்டான். நீங்கள் செய்வது சரியே. மற்றவர் இடையில் வந்து தங்கள் எண்ணத்தை மாற்று
கருத்தைச் சொன்னாலும், அதை சீர் தூக்கி பார்த்து விட்டு தனது தீர்மானத்தையே நிறைவேற்றுபவன் தான் உயர்ந்த அரசன். முன்னொரு காலத்தில் நாய் ரூபத்தில் தர்மம் பாண்டு புத்திரன் யுதிஷ்டிரனை தொடர்ந்து சென்றது. அது போல நீயும் தர்மத்தை நிலை நாட்டி விட்டாய். பாண்டு புத்திரனைத் தொடர்ந்து சென்ற நாய் போல என்னால் நீயும் சோதிக்கப் பட்டாய். நானும் சமூக அளவில் தாழ்ந்தவனே, விலங்குகளில் நாய் போலவே. நீடூழி வாழ்க. இதே போல நீதியும், சட்டமும் சம அளவில் மதிக்கத் தெரிந்த அரசன் நீ. உன் முடிவுகள் உனதாகவே இருக்கட்டும். உடன் உள்ள ஆலோசகர்கள் சொல்வதை வைத்து தீர்ப்பு சொல்லாமல் உன் மனசாட்சிக்கு மதிப்பு கொடுத்து ஆள்வாய், வாழ்க உன் புகழ். வளர்க உன் சாம்ராஜ்யம். 77
அதன் பின் அரசன் தான் விரும்பியபடி ஸ்ரீ கேசவனுக்கான ஆலயம் த்ரிபுவன ஸ்வாமின் என்ற பெயரில் கட்டுவித்தான். பிரகாச தேவி என்ற அவன் மனைவி மிகவும் பிரபலமான பிரகாசிகா விஹாரம் என்பதை நிர்மாணித்தாள். குருவான மிஹிர தத்தர் என்பவர், சிறந்த அறிஞர். பல துறைகளிலும் தெளிவான அறிவும் செயல் திறமையும் உடையவர். விஸ்வம்பரர் எனப்படும் உலகை தாங்குபவர் அல்லது காப்பவர் என்ற கம்பீர ஸ்வாமின் என்ற பெயரில் ஒரு கோவிலில் பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீ நகரில் இருந்த சலிதகா என்ற நகர உயர் அதிகாரியான ஒருவர் சலித ஸ்வாமின் என்ற கோவிலை கட்டினார்.
ஒரு சமயம் சபை முக்கியமான விஷயங்களை கவனித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண் வந்து தன் குறையைச் சொன்னாள். அவள் கணவனை யாரோ கொன்று விட்டார்கள். அவரோ எளிய அந்தணன். யாரிடமும் பகையும் கிடையாது. அரசே! நீங்கள் அரசராக இருந்து நாட்டை பாலிக்கும் சமயம் இப்படி நடக்க விடலாமா? என் கணவர் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார், யார் எப்படி என்றே தெரியவில்லை அவரை கொன்று விட்டனர். சதாசாரம்- நன் நடத்தை உடையவரான உங்கள் ஆட்சியில் இப்படி நடக்கலாமா? அகால ம்ருத்யு வர காரணமே அரசனின் குற்றமாக சொல்லப் படும். கலி காலத்தின் செயல் என்றாலும் நல்ல மனிதர் என் கணவன், அவருக்கு ஏன் இந்த கொடுமை ? நானும் யோசித்து பார்க்கிறேன் எவருமே அவருக்கு விரோதி இல்லை. எந்த கெட்ட வழக்கமும் அவருக்கு கிடையாது. நால் திசையும் இருண்டு விட்டது போல உணருகிறேன். தன் கணவனை புகழ்ந்தாள். அஸூயை இல்லாதவன், பிரியமாக பேசுவான், யாரையும் அதட்டி பேசி கூட கேட்டதில்லை, குணவான், மற்ற நண்பர்களும் அவ்வாறே நற்குணம் உடையவர்களே. அவர் கூடவே இளம் வயது முதல் அத்யயனம்- வேத பாடங்களை படித்தவர் மாக்ஷிக ஸ்வாமின் என்பவரை நான் சந்தேகிக்கிறேன். அவருக்கு அபிசார வித்தை தெரியும். என் கணவருடன் கல்வியிலோ, மற்ற பெருமைகளை அவர் அடைந்த பொழுது தனக்கு அந்த பெருமைகள் கிடைக்கவில்லை என்று பொருமிக் கொண்டிருந்த அந்த அந்தண துரோகி தான் என்று எனக்கு சந்தேகம். மேலும் பலவாறாக திட்டினாள்.
அரசன் அவனை அழைத்து வர ஆணையிட்டான். அந்த பெண்ணோ அவன் ஏவல் முதலிய மாய மந்திரங்களை அறிந்தவன். தான் பிழைக்க என்ன வேண்டுமானாலும் செய்வான். நேரடியாக அவனை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றாள். வேறு என்ன செய்ய? அவன் தான் குற்றவாளியா என்று அறிந்தால் தானே தண்டனை கொடுக்க? எப்படி அறிவேன் என்று யோசித்தான். நிரபராதியாக இருந்து விட்டால் தவறு அரசனை பாதிக்குமே. 112/398
அந்த பெண்ணை பார்த்தாலும் வருத்தமாக இருந்தது. அவள் உயிருடன் இருப்பதே தன் கணவனுக்கு இழைத்த கொடுமைக்கு அந்த சக மாணவனை தண்டிக்கச் செய்வது தான் என்றாள். ஏதோ தோன்ற த்ரிபுவனேஸ்வர் ஆலயம் சென்றான். கலி காலம் குற்றங்கள் மலிந்து விட்டன என்று யாரோ இருவர் பேசிக் கொண்டிருந்தனர். மனமுருகி பிரார்த்தனை செய்தான். கனவில் ஒரு குரல் கேட்டது. கோவிலின் வெளி ப்ராகாரத்தில் அரிசி மாவை பரப்பி வை. அதன் மேல் யார் மேல் சந்தேகமோ இரவில் அவர்களை நடக்கச் சொல். தவறு இழைத்தவன் காலடியில் நிழல் தெரியும். என்ன இருந்தாலும் மன உளைச்சல் இருக்கும் அல்லவா? அதுவே காட்டிக் கொடுத்து விடும். அரசனும் அவ்வாறே செய்ய குற்றவாளி பிடிபட்டான். அந்தணன் என்பதால் தண்டனை அளிக்க தயங்கி தண்டிக்கப்பட வேண்டியவன் (அது ஒரு வித தண்டனையாம் ) என்று அறிவித்து விட்டு தன் மந்திரிகளிடம் எப்படி தண்டிப்பது என்பது பற்றி ஆலோசித்துக் கொண்டு இருக்கையிலேயே (அது ஒரு வித தண்டனையாம் ) ஆனால் அந்த பொல்லாத மனிதன் தாராபீடன் என்ற அரசனின் சகோதரனை தன் தந்திர முறையால் தன் வசமாக்கிக் கொண்டான். இளம் ஒட்டகங்கள் தாழம்பூவின் தண்டை முள் இருந்தாலும் உண்ண விரும்பி தாழைச் செடியை சிதைக்குமாம். அதற்கு தாழம்பூவின் பெருமை தெரியாதது போல இந்த மாயமந்திரம் அல்லது சூன்யம் வைப்பது போன்ற -witchcraft என்று சொல்லப் படும் முறைகளை பயன் படுத்தும் அறிவிலிகள் ஒட்டகம் தாழம்பூவின் அருமை தெரியாமல் அதை சிதைப்பதை போல என்று கவி சொல்கிறார். இந்த நிகழ்சிக்குப் பிறகு அரசர்கள் தங்கள் படையில் இது போன்ற தந்திரம் அறிந்தவர்களையும் ஒரு பிரிவாக சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தனராம். அதனால் மற்றொரு மந்திர வாதியைக் கொண்டு அவனுக்கு மரண தண்டனை அளித்து விட்டான். நேரடியாக அரசனாக தான் ஒரு அந்தணனை கொல்ல முடியாது என்பதால்.
நேர்மையாக ஆண்ட இந்த அரசனும் எட்டு ஆண்டுகள், எட்டு நாட்களே அரசனாக இருந்தான். தன்னடக்கம் மிக்கவனாக தன் பொறுப்பை நல்லபடியாக நிறைவேற்றிய திருப்தியுடன் பர லோகம் சென்றான். தாரா பீடன் பட்டத்துக்கு வந்தான். இவன் தான் ஸுனியம், மாயமந்திரம் செய்பவர்களை ஆதரித்தான். சகோதர துரோகி. இயல்பாக பயங்கரமானவன். சண்டன் என் அறியப் பட்டவன். அந்த பூமண்டலத்துக்கு நாயகனாக வந்தான். விதி என்று தான் அவனை ஏற்றுக் கொண்டனர். துர் குணமே உருவானவன். அறிவிலி. இவ்வளவு இருந்தும் அரச பதவியை அடைந்தான். மயானத் தீ போல என்று வர்ணிக்கிறார் கவி. அந்தண துவேஷம் உடையவன் அவர்களை கடுமையாக தண்டித்தான். மாய மந்திரம் சூன்யம் செய்யும் மனிதர்களை ஒழித்தான். தெய்வ நம்பிக்கையும் இல்லாமல் நம்பிக்கை உள்ளவர்களை தண்டித்தான். மற்றவர்களை அழிக்க தான் பயன்படித்திய முறைகளே அவனுக்கு எதிராக திரும்பின. நெருப்பு புகையை கிளப்பும். கண்களை மறைக்கும். அதுவே மேகமாகி மழையாக பொழியும் பொழுது அந்த நெருப்பையே அழிக்கும். அதனால் நாட்டில் சில காலம் நிம்மதியின்றி இருந்தனர். ஆனாலும் அவன் நல்ல கதி அடையும் படி நன்மையும் செய்யவில்லை. நான்கு ஆண்டுகளும் ஆறு நாட்களுமே அவன் ஆட்சி நீடித்தது.
அதன் பின் லலிதாதித்யா பட்டத்துக்கு வந்தான். நல்ல அரசன் என்று புகழ்ந்தனர். தன் படை வீரர்களுக்கு நல்ல பயிற்சி அளித்தான். ஜம்பு த்வீபம் என்பதே கஜ ராஜன் போல என்பர். அது அவன் ஆட்சியில் நலமாக செழித்து வளரச் செய்தான். பெரும் படையுடன் சென்ற இடமெல்லாம் சிற்றரசர்கள் தாங்களே வந்து அடி பணிந்தனர். படையின் வீரர்கள் ஆரவாரமாக தங்கள் முரசங்களை அடித்துக் கொண்டு வருவதைக் கேட்டதுமே நடுங்கி விடுவராம். சிவந்த கொடூரமான கண்களும் அவர்கள் எதிர்ப் பட்டாலே பெண்கள் தங்கள் கணவன் மார்கள், குழந்தைகளை எண்ணி கண் கலங்குவராம். ஸூரியன் தவறாமல் உதிப்பதும் உலகை சுற்றி வருவதும் போலவே அரசனும் பல நாடுகளை நோக்கி படையெடுத்துச் செல்வதும், எதிர்த்தவர்களை வெற்றி கொள்வதுமாக நாட்டில் இருப்பதை விட அதிகமாக இந்த வீரச் செயல்களுக்காக சுற்றிக் கொண்டிருந்தானாம்.
யமுனை – கங்கை யின் இடைப்பட்ட இடங்களுக்கும் படையெடுத்துச் சென்றான். சென்ற இடமெல்லாம், மகா ராஜா என்றழைத்தனர். யாத்திரையாக தேசத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்தான். ஆங்காங்கு இருந்த அரசர்கள், பெரும் செல்வந்தர்கள் வரவேற்று உபசரித்து, பரிசுகள் கொடுத்து அனுப்பினர்.
ஏன்? எதற்காக அவனிடம் பயம்? ( கல்ஹணர் முதலிய கவிகள், பாரத, பாகவத கதைகளை அனைவரும் அறிவர் என்பது போல சொல்லிக்கொண்டே செல்கிறார்கள். இது ஒரு விஸ்வாமித்திரின் முன்னோர்களில் ஒருவரான குசனாபன் என்ற அரசன் பற்றிய வரலாறு. ஒரு முறை ராஜகுமாரிகள் உபவனத்தில் இருந்த சமயம் வாயுதேவன் அவர்களை விரும்பினான். இளம் பெண்கள், நாங்கள் எங்கள் தந்தையின் பாதுகாப்பில் உள்ளவர்கள். அவரைக் கேள் என்று மறுத்து விட்டனர். வாயு தேவன் கோபத்துடன் அவர்கள் உடலை கோணலாக்கி விட்டு மறைந்து விட்டான். அவர்கள் அழுது கொண்டே தந்தையிடம் சொன்னார்கள். செய்வதறியாமல் திகைத்த அரசனிடம் ப்ரும்மதத்தர் என்ற முனிவர் வந்தார். அவர் தாயார் சோமதத்தா. ஸூலி என்ற முனிவரிடம் பிறந்தவர். அவர் தான் மணந்து கொள்வதாக வாக்களித்து அதே போல, மண மேடையிலேயே ஒவ்வொருவரையும் கை பற்றிய உடன் அவர்கள் உடல் நேராகி விட்டதாகவும் ஒரு புராண கதை. இதை ஏன் இங்கு சொல்ல வேண்டும் என்றால், அது போல தங்கள் குடும்பத்து பெண்களை பாழாக்கி விடுவானோ என்று பொது மக்கள் பயந்தனராம். அதற்கு ஏற்றாற் போல் போல கண்ட இடத்தில் அடித்து ஊனமாக்கி மகிழ்ந்தானாம். )
கன்யா குப்ஜம் (கூனல் விழுந்த பெண்கள் என்று பதப் பொருள் – தற்கால கன்னோஜ்) என்ற இடத்து அரசன் யசோவர்மன் என்பவன் அவனை எதிர்த்து போராடினான். அத்துடன் லலிதாதித்யாவின் அட்டூழியமும் முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்த்தனர்.. பதிலடி கொடுத்து எழ முடியாமல் தோற்றவன் லலிதாதித்யன் பிரளயாதித்யனாக மறையச் செய்து விட்டானாம். பெயரில் மட்டும் ஆதித்யனை வைத்திருக்கிறாய், நிஜ ஆதித்யன் எப்படி சுடுவான் தெரிந்து கொள் என்று எங்கள் அரசன் காட்டி விட்டான் என்று பாடல்களால் மக்கள் யசோ வர்மனை புகழ்ந்தனர்.
யசோ வர்மனுடைய அரச சபையில் இருந்தவர்களும் கண்ணியமும் நற் பண்புகளும் நிறைந்தவர்களாக இருந்தனர். சந்தன மரக் காட்டில் அருவியில் சந்தண மணம் வருவது போல.அவர்கள் நீதி முறை தவறாமல் போரிட்டனர். லலிதாதித்யன் எதையும் மதிப்பவன் அல்லவே. தோற்றதை காட்டிக் கொள்ளாமல் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டானாம்.
லலிதாதித்யன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டான் என்றவரை பதிவு செய்த அரச அலுவலர்கள் விவரங்களை முழுவதும் செய்யவில்லை என்று கவி சொல்கிறார். அந்த நாட்களில் விவரமாக எழுதி வைப்பதும் ஒரு அவசியமான செயலாக இல்லாத காரணத்தாலேயே பல சரித்திர சம்பவங்கள் உலகுக்கு தெரியாமல் போய் விட்டன. பொது மக்களின் வாய் மொழியும், நாட்டுப் பாடல்களும் தான் சான்றாக கிடைத்துள்ளன.
யசோ வர்மனின் சபையில் பவபூதி என்ற பிரசித்தமான வாக்பதி என்றே போற்றப் படுபவர் இருந்தார். அவனுடைய ஆட்சியும் மிகவும் நேர்மையாகவும் மக்கள் நலனைக் காப்பதாகவும் இருந்தது. லலிதாதித்யன் என்ற கொடுங்கோலன் வந்து அவனை ஏமாற்றி தரை மட்டமாக ஆக்கி விட்டான் என்று சரித்திரம். அதோடு நிற்காமல் நாட்டின் செல்வத்தை சுரண்டி எடுத்துக் கொண்டான். தன்னுடைய வீட்டின் முற்றம் போல உபயோகித்தான் என்பர். அழிவின் எல்லைக்கே கொண்டு சென்ற பின் தான் நகர்ந்தான்.
இதற்குள் லலிதாதித்யனின் சேனைத் தலைவர்களும், போர் வீரர்களும் சலிப்பு அடைந்து விட்டனர். அதையும் பொருட் படுத்தாமல், கிழக்கு கடல் வரை சென்றான். கலிங்கத்தின் யானைகள் பிரசித்தமானவை. ஒவ்வொன்றும் திருமகளின் அருகில் உள்ளவை போன்ற உடல் அமைப்பும் மங்களகரமானவை என்றும் மதிக்கப் பட்டவை. கலிங்க தேசம் கௌட மண்டலம் எனப்படும். அந்த தேசத்து யானைகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டவனாக தென்திசை நோக்கிச் சென்றான்.
கடலோரமாகவே அவன் படை சென்றது. வழியெல்லம் அடர்ந்த காடுகள். அங்கிருந்த மலை வாசிகள், பழங்குடிகள். தலையில் தாழை மடலை அலங்காரமாக அணிந்திருந்தனராம். கர்ணாட என்ற மக்கள். படையைக் கண்டவுடன் சரணடைந்து விட்டனராம். அவர்கள் அணிந்திருந்த தாழை மடல் தான் அவர்கள் கௌரவமாக எண்ணியிருந்தனர். பதவிக்கு அடையாளம் போல. அவை நழுவி விழவோ, மற்றவர்களால் விழச் செய்வதையோ பொதுவாக அனுமதிக்க மாட்டார்கள்.
விந்த்ய மலையிலிருந்து தென் திசையில் காவேரி நதிக்கரை வரை ஒரு பெண் ரட்டா என்பவள் துர்கையைப் போலவே மதிக்கப் பட்டாள். அவள் அந்த பிரதேசத்தின் அரசி. அளப்பரிய சக்தி வாய்ந்தவள் என்றனர். ( ராஷ்ட்டிர கூடர்கள் வம்சம்)அவளுடன் மோதாமல் கடந்து சென்றான்.
காவேரி தீரம் வந்தான். தென்னை, பனை மரங்களும் வளமான பூமியும் கண்களை கவர்ந்தன. இளனீர் பதனீர் என்று அனுபவித்தான். அவன் வீரர்கள் அந்த இடத்தில் தங்கி சிரமபரிகாரம் செய்து கொண்டனராம். பின் சந்தனக் காடுகளில் நுழைந்தால் மரத்தைச் சுற்றி பாம்புகள். அதையும் கடந்து வில்வமரங்கள் வனமாக நிறைந்திருந்த பகுதியில் சுற்றினர். வடக்கில் பெரும் பாறைகளே கண்டவன் சமுத்திரக் கரையில் சமுத்திரத்தையும் அதன் நடுவில் இருந்த தீவுகளையும் பார்த்து வியந்தபடி மேற்கு கரை சென்றான். கொங்கண தேசம் வழியாக சென்றவனை வழி நெடுக அரபிக் கடலின் குளிர்ந்த காற்று உத்சாகம் அளித்ததாம். மேற்கு திசை பச்சிம – பசுமையானது எனப்படும். கொங்கண தேசத்தில் ஏழு பிரதேசங்களையும் (கேரள, துலுங்க, கோவராஷ்டிர (கோவா) மத்ய கொங்கண, கேரடஹ, வரலட்டா, பெர்பெரா) பசுமை நீங்கும்படி தபிக்கச் செய்தவனாக தன் யாத்திரையை தொடர்ந்தான். களைப்போ தயக்கமோ இன்றி ஸூரியனின் குதிரைகள் போல இடை விடாமல் சென்றான் என்று வர்ணிக்கிறார்.
தாது நிறைந்த விந்த்யமலையின் நிறமே சிவந்து, கோபக்கனல் தெறிப்பது போல இருந்ததாம். அதை நெருங்காமலேயே அவன் படைகள் நகர்ந்தன.
மேற்கு கரையோரமாகவே வந்து துவாரகா வந்து சேர்ந்தான். படை வீரர்கள் துவாரகையை கண்டதும் பரவசமானார்கள். அவந்தி வந்து சேர்ந்தனர். மகா காலேஸ்வரர் உறையும் இடம். அங்கு யானைகள் பிளிறின.
தேசத்தின் பெரும்பாலான இடங்களை சுற்றி வந்து பலரை போரிட்டும், சிலரிடம் கப்பம் வசூலித்தும் தன் ஆளுமையை காட்டி வந்தவன், வடக்கு நோக்கி வந்தான். ராஜஸ்தான் என்ற இடம். இயல்பிலேயே வீரர்களான மக்கள். ஒவ்வொருவரும் பயிற்சி பெற்ற போர் வீரர்களே. பல இடங்களிலும் மலைக் குன்றுகள் – இந்திரன் பறக்கும் மலைகளின் இறக்கைகளை வெட்டிய பொழுது விழுந்தனவாம். காம்போஜ தேசத்து குதிரைகள் பிரசித்தம். அவைகளின் இடத்தை எருமைகள் எடுத்துக் கொண்டு விட்டன போல கறுத்த பெரும் எருமைகள் நிறைந்து இருந்தன. பிரதேச பழங்குடியினர், அந்த இடத்தை விட்டே வெளியேறி மலைகளீல் வசிக்கலானார்கள். குதிரை முகம் கொண்டவர்களை தவிர்க்க? –
(புத்த மதம் காந்தாரம் முதலிய தேசங்களில் பரவிய சமயம் தேசத்தின் எல்லை கடந்த இடங்களில் இருந்தும் மக்கள் அந்த பகுதிகளுக்கு வந்தனராம். அவர்களில் துக்காரா: – துருக்கியர்களை குதிரை முகத்தினர் என்று குறிப்பிடுவது வழக்குச் சொல்லாக இருந்ததாம். – ஆங்கில உடையாசிரியர்) .
மும்முனி என்ற அரசனை தோற்கடிக்க மூன்று முறை போர் புரிந்தான். தானே வென்றவனாக அறிவித்து விட்டான். பௌத்தர்களை எதிர் கொண்டான். அவர்களை முகத்தின் உணர்வுகளை அறிந்து கொள்ளவே முடியவில்லை. அந்த அளவு கட்டுப் பாட்டுடன் இருந்தனராம். லலிதாதித்யனோ அவர்களை காணவே விரும்பாமல் காட்டு ஜனங்கள், வெளுத்த நிறமும் வானரம் போன்ற முகமும் என்று தூற்றி விட்டு திரும்பி விட்டான்.
Darada தரதா என்ற பழங்குடியினர் சதா மதுவை குடித்துக் கொண்டிருந்ததை அவனால் பொறுக்க முடியவில்லை. அதை விட அதிகமாக மலைக் குகைகளின் அருகில் ஸூரியோதயம் ஆனதும் வானவில் போல பளிச்சிட்ட மூலிகைகளை வெறுத்தான். கஸ்தூரி மிருகத்தின் அருகாமையால், வெளுத்த கேஸர குங்கும வாசனைகளை சேனை வீரர்கள் ரசித்தனர்.
அடுத்து ப்ராக்யோதிஷபுரம், ஒரு காலத்தில் பிரபலமாக வளமாக இருந்த தேசம் ஸூன்யமாகி விட்டிருந்தது. இன்னமும் வனங்கள் தீயில் கருகிக் கொண்டிருந்தன. பாலைவனம் விசாலமாக இருந்தது. மணலே சமுத்திரம் போல பரவி இருந்த து. யானைகள் அதில் நடக்கத் திணறின. முதலை வாயில் அகப்பட்டவை போல தடுமாறின. அவைகள் தங்கள் மனைவிகளின் மார்பகங்களை நினைவூட்டின போலும். போர் வீரர்களின் மன நிலை முற்றிலும் மாறி விட்டது. வீடும், மனைவி மக்களுமே அவர்களை மனதை ஆக்ரமித்தனர்.
குருக்ஷேத்ரம் வந்து சேர்ந்தனர். பாரத போரில் பூமி அதிர, ஒடுங்கி இருந்த நாகங்கள் கருடனின் பயத்தால் இன்னமும் வெளி வராமல் பதுங்கி இருந்தனவாம். தன் விஜயப் யாத்திரையில் சேமித்த பெரும் செல்வத்தோடு தன் நாடு வந்து சேர்ந்தான். யானையை அதன் மஸ்தகத்தில் அடித்து விட்டு வரும் சிங்கம் போல இருந்தானாம்.
ஜாலந்தரம் என்ற இடம் இரும்புக் கோட்டையுடன் தென் பட்டது. மிக நீளமான அந்த கோட்டையில் தோற்ற அரசர்களை கொடுமையாக வதைத்தான். சிறை பிடித்து கொண்டு வந்தவர்களுக்கு தோள்களில் தன் அடியாட்களைக் கொண்டு அடையாளமிட்டானாம்.. துருக்கர்கள் தலையை பாதி மழித்து, விலங்குகளைப் போல நடத்தினான். அவனால் பாதிக்கப் படாத ஒரு நகரமோ, கிராமமோ, கடலின் தீவுகளோ, தன் கொடுமையை காட்டாத இடமே இல்லை எனும்படி கொடுங்கோலன்.
ஏராளமான செல்வம் இருந்ததால் பல நகரங்களை நிர்மாணித்தான். सुनिश्चित – சுனிச்சித புரம், தர்பித புரம், फलपुरम् -பலபுரம், பர்ணோட்சம் க்ரீடாராம விஹாரம் நரசிங்கபுரம் என்று ஒவ்வொன்றையும் அவன் அனுபவித்த தோல்விகளோ, அவமானங்களுக்கோ பிரதியாக அமைத்ததாக கவி சொல்கிறார். லலிதா என்ற புரத்தில் ஆதித்யனுக்கு ஒரு பெரிய கோவிலை கட்டினான். கிராமங்களுடன் கன்யகுப்ஜ பூமியை தன் அபிமானத்தை நினைவூட்டுவதைப் போல அந்த கோவிலுக்கு கொடுத்தான்.
ஹுஷ்க புரம் என்ற இடத்தில் முக்தஸ்வாமி என்ற பெயரில் பிரதிஷ்டை செய்தான்.
பெரிய விஹாரம் ஸ்தூபங்களோடு கட்டிக் கொடுத்தான். ஜ்யேஷ்ட ருத்ரன் என்ற இடத்தில் பிராகாரங்களுடன் கட்டி, அதை பராமரிக்க பூமி, நகைகள் என்று எழுதி வைத்தான். விதஸ்தா என்ற இடத்தில் சக்ரதரன் என்ற விஷ்ணு கோவிலும் அதற்கான கிராமங்களும் நிலங்களும் எழுதி வைத்தான்.
மார்த்தாண்ட – ஸூரியனுக்கான கோவிலை அத்புதமாக கட்டி அதன் அருகில் பெரிய அழகிய நகரையும் நிர்மாணித்தான். பல விதமான வசதிகளுடன் பல கிராமங்களை ஏற்படுத்தினான்.
பரிகாசமாக நான் பூலோக வாஸவன் – இந்திரன் என அறிவித்து, வாஸவாவாஸம் என பரிகாசபுரம் என பெயரிட்டு, அங்கு பகவான் கேசவனை- ஸ்ரீ பரிகாச கேசவன் என பெயரில் பிரதிஷ்டை செய்தான். முத்துக்களாலும், மணிகளாலும் அலங்கரித்து ஸ்ரீ முக்தா கேசவன் என ஒரு இடத்திலும், மகா வராஹம் என்ற உருவில் பொன்னாலான கவசத்துடன் ஒரு இடத்திலும், வாரகமாக பாதாளம் சென்றவருக்கு இருளில் ரவி கிரணம் போல ஒளி விச செய்தானாம், கோவர்தன தரன் என்ற தேவனுக்கு வெள்ளியால் ஆலயம்- கோகுலத்து பால் நிறத்தில் வெண்மையாக ஒளி விச விளங்கியதாம்.
இருபதாயிரம் கைகளுடன் பரம சிவனின் உருவம் செய்து த்வஜத்தின் மேல் தைத்யர்களின் எதிரியான கருடனை அதில் ஸ்தாபித்தான்.
பெரிய அளவில் நாற் கால் மண்டபங்கள், பெரிய பெரிய சைத்ய க்ருஹங்கள் -ஓய்வெடுக்கும் இடங்கள், இவற்றுடன் அரண்மனையை அலங்காரமாக கட்டிக் கொண்டான்.
பெரிய அளவில் ஸ்ரீமான் ப்ருஹத் புத்தர் என்ற விக்ரஹமும், பொன்னும் வெள்ளியும் ஏராளமாக செலவிட்டு கட்டினான். அமாத்யர்களும், சேவகர்களும், பல தேசத்து அரசர்களையும் வேலை வாங்கி உலகிலேயே இல்லாத அத்புதமான இடமாக ஆக்கினான்.
அவன் மனவி கமலவதி, வெள்ளியாலான கமலாகேசவன் என்ற கோவிலை கட்டினாள். அமாத்யன் மித்ர சர்மா மித்ரேஸ்வரம் என்ற சிவன் கோவிலையும்
லாட என்ற இடத்தில் ஸ்ரீகய்யாஸ்வாமி என்பதை கய்யா என்ற பெயருடைய அரசனும் கட்டினான். அத்துடன் அத்புதமான ஸ்ரீமான் கய்யவிஹாரம் என்பதையும் கட்டினான். பிக்ஷுவான சர்வக்ஞ மிஸ்ரன் மகான் ஜைனரைப் போன்றே இருந்தவர், சங்குண விஹாரங்கள் என்பதை பல இடங்களில் அரசனின் சின்னத்துடன் உயரமான ஸ்தூபத்துடன் நிர்மாணித்தார். அங்கு ஜைனருடைய பொற் சிலை அமைக்கப் பட்டது. ஈசான தேவி என்ற மற்றோரு மனைவி சுதா ரஸம் போன்ற தெளிவான நீருடன் குளம் வெட்டினாள். மற்றொருவள், சக்ரமர்திகா என்பவள், அரசனின் பிரிய மனைவி, ஆரோக்ய சாலைகளை ஏழு சக்ர புரங்களில் நிறுவினாள். பபடன் -भपट- ஆசாரியர், தன் பெயரில் படேஸ்வரன் என்ற பெயரில் ஒரு ஊரும், மேலும் பலரும் பலவிதமாக தங்கள் பெயர் பொறித்த இடங்களை ஸ்தாபித்தனர்.
சங்குண என்ற மந்திரியால் ( சிலர் சீன தேசத்து யாத்திரிகர் என்பர்) சைத்யங்கள் என்ற ஓய்வெடுக்கும் மண்டபங்களோடு விஹாரங்கள் கட்டப் பட்டன. சங்குண மந்திரியின் மனைவியின் சகோதரன் பிக்ஷுகீசான சந்திரன் என்பவன், தக்ஷகன் அனுக்ரஹத்தால் செல்வம் – தனம் பெற்று ஒரு விஹாரம் அமைத்தான். இவ்வாறு தன் நாட்டை பொன் மயமாக செய்த அரசன் அதன் பின் நற்குணவானாகவும் உதாரமான கொடையாளியாகவும் மகவான் என்ற இந்திரனையும் புறந்தள்ளி முன் உதாரணமாக சொல்லும் அளவு பிரசித்தி அடைந்தான்.
யதேச்சையாக சொன்ன சொற்கள் கூட ஆணையாக ஏற்றுக் கொள்ளப் பட்டனவாம். அவர் முகத்திலிருந்து வெளி வந்தாலே அந்த சொல்லுக்கு மதிப்பு தானே வந்து விடும், தேவர்களே கூட மறு சொல் சொல்ல முடியாது என்பதாக மக்களிடையே பேச்சு உலவியது. நாவல் பழங்கள் அதன் பருவ காலத்தில் மட்டுமே கிடைக்கக் கூடியது. திடுமென நினைத்துக் கொண்டு னாவல் பழங்கள் கொண்டு வா என்று ஆணையிட்டானாம். உடன் இருந்த மந்திரிகள், மற்றாவர்கள் திகைத்து என்ன செய்வது என்று யோசித்தனராம். எங்கிருந்தோ ஒருவன் அரசனை பார்க்க வந்தவன் வணங்கி தான் யார் என்பதைச் சொல்லி அந்த பழங்களை உபாயனமாக – பரிசு பொருளாக ( நாட்டின் அரசனயோ, குருவையோ, கடவுளர் சன்னிதிகளுக்கோ ஏதாவது கொண்டு செல்வது உபாயனம் எனப்படும்).
விட்டானாம். அரசனுக்கே வியப்பு. அவன் புருவ அசைப்பில் அதை புரிந்து கொண்ட சிறப்பு பாதுகாப்பு அதிகாரி, மரியாதையுடன் வந்தவனிடம் யார், எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டானாம். ‘அரசன் விரும்பி ஒரு பொருள் கிடைக்காமல் போவதாவது என்று தேவலோக இந்திரன் தன் நந்தன வனத்திலிருந்து இந்த பழங்களையும் ஒரு செய்தியையும் என்னிடம் கொடுத்து அனுப்பினார்.’
சுற்றியுள்ளவர்களை அனுப்பிவிட்டு அரசன் தானே செய்தியை கேட்க தயாரானான். இந்திரனின் தூது இது’ ஓ அரசனே! நண்பனாக நான் அனுப்பிய செய்தி இது. வேறு உட்பொருள் எதுவும் இல்லை. கேளுங்கள். முன் பிறவியில் ஒரு ஏழை குடியானவனாக இருந்தீர்கள். அந்த கிராமத்து பணக்கார நிலத்தின் சொந்தக்காரர் தன் நிலத்தில் வேலை செய்பவரை மிக் கடுமையாக வேலை வாங்குவார். வேணிற்காலத்தில் ஒருநாள், தாங்க முடியாத தாகம் வரட்ட, வெய்யிலின் கடுமையாலும் நீர் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றீர்களாம். எங்குமே தென்படாமல் போகவும் மயங்கி விழும் நிலையில் அந்த வீட்டின் உள்ளே இருந்து ஒருவர் வந்து குடிநீரும் உண்ண உணவும் கொடுத்தனராம். கை கால்களை கழுவிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்த சமயம் உங்களைப் போலவே வெய்யிலில் வாடி, களைத்த மற்றொருவர் அங்கு வந்தாராம். அவரும் அதே போல பசியும் தகமும் வாட்ட இருந்ததைக் கண்டு பாதி உணவையும் நீரையும் கொடுத்து உதவினீர்களாம். அந்த செய்கை தான் உங்களுக்கு தேவலோகத்தில் பல புண்யங்கள் செய்த பலனை கொடுத்து அரசனாக அடுத்த பிறவி அடைந்தீர்கள்.
காலத்தில் செய்யும் உதவி மிக சிறந்தது. பல அறிவில்லாத செயல்களை செய்தவர்கள் உலகில் இருப்பார்கள். மனப் பூர்வமாக அந்த ஏழைக்கு உயிர் கொடுத்த அந்த தண்ணீர் சகல பாபங்களையும் போக்கி விட்டது. விளை நிலத்தில் விதை விழுந்து சாதகமாக மழையும் பெய்து விட்டால் அந்த பயிர் வேகமாக வளரும். பல விதமான நற்செயல்கள் சொல்லலாம். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பது மிக சிறந்தது என்பர். பாலைவனமானாலும் கூட ருசியான நீர் ஊறும். அதிலிருந்து நதியாக பிரவகிக்கும். பிரியமான சொல் பாத்தியாக பயிரை வளர்க்கும். அதிலும் இரப்பவனும் சத்பாத்ரம்- தகுதியான யாசகனாக இருந்து விட்டால், அவன் மனம் குளிர்ந்து செய்யும் ஆசிகள் கண்டிப்பாக நன்மைகளைத் தரும். கொடை- தானம் என்பதும் மரம் போல வளரும். கல்பதரு- கேட்டதைக் கொடுக்கும் தேவலோக மரம் போன்றது.
காஸ்மீர தேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பத்தில் சில நாட்களே மேகம் கறுத்து மழை பெய்யும். பொழியும். அதன் பலன் மரங்கள் வளர்ந்துஆண்டின் முடிவில் பலன் தரும். திரும்பவும் பழங்கள் அடுத்த ஆண்டு மழை வர வேண்டும். இது ஒரு தொடர் நிகழ்ச்சி. அது போல இது வரை செய்த நல்வினைகளின் பலன் இந்த அரச போகமும், பதவியும். ஒரு நாள் முடிவுறும். வரும் காலத்துக்காக இன்னமும் செய்ய வேண்டியவை உள்ளன. இந்திரனுக்கு பருவ காலங்களை சரிவர அளித்து பூமியின் வளத்தை காக்கும் பொறுப்பு இறைவன் கொடுத்தது. காலம் விரைவாக சென்றுவிடும். மீதி வாழ் நாட்களையும் வீணாக்காமல் கவனமாக இரு. ஆயுளின் பிற்பகுதியில் இருக்கிறாய். அதை நினைவு படுத்த தேவேந்திரன் அனுப்பி வந்தவன் நான் ’ சொல்லி முடித்த விநாடியே தூதுவன் மறைந்து விட்டான்.
முற்பிறவியின் தான் பலன் அதுவரை அனுபவித்தாய். அது தீரும் சமயம் வந்து விட்டது. அடுத்த பிறவிக்கான நற்செயல்களைச் செய் என்று அறிவுறுத்தியதாக புரிந்து கொண்டான்.
பரிகாச புரத்தில் வழக்கமாக பருவ காலங்களில் செய்யும் சஹஸ்ர பக்த என்ற பெயரில் நடைபெறும் உத்சவங்களை விமரிசையாக செய்வித்தான். அந்த சமயம் லக்ஷத்துக்கும் மேல் ஓராயிரம் யாத்திரிகர்கள் வருவார்களாம். தூதுவன் சொன்னது போல தன் தகுதியை திரும்பப் பெறுவது பொது நலன்களுக்கான செயல்களில் தான் உள்ளது, ஆயிரக் கணக்கான பக்தர்கள் வரவும், அவர்கள் தேவைகளை கவனித்து உணவும் உடையும், மற்றும் வசதிகளையும் செய்து கொடுத்தான். சம்பாவனைகள் – அவர்களின் கல்வியையும், கலையையும் ஆதரித்து தகுந்த படி செல்வமும் கொடுத்தான். லக்ஷ கணக்கான பக்தர்கள் வந்தும் கோலாகலமாக உத்சவங்களில் பங்கு கொண்டும் மகிழ்ந்தனர். தனது நாட்டில் எந்த பிரஜையும், பசி என்றோ, இல்லாமை என்றோ வருந்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அந்தந்த பிரதேசத்து அதிகாரிகளுக்கு அதை விளக்கி உத்தரவுகள் சென்றன.
உடன் பிறந்த சகோதரன் சங்குணன் என்பவன், கங்கண வர்ஷம் என்ற ரஸவாதம் – ரசாயண சாஸ்திரம்- கற்றவன். இரும்பையும் பொன்னாக்கும் வித்தை அறிந்தவன். அவன் ஏராளமான தங்கம் கொண்டு வந்து சேர்த்தான். பொற்றாமரை குளம் போல அவனது பொக்கிஷம் நிரம்பியதாம்.
ஒரு சமயம் பஞ்ச நதம்- என்ற இடம்- ஐந்து நதிகள் சங்கமம் ஆகும் இடம்- அரசன் பரிவாரங்களோடு செல்லும் பொழுது வழியில் கண்டனர். பிரவாகமாக இருந்த நதியை கடக்க செய்வதறியாது அனைவரும் திகைத்தனர். சங்குணன் ஒரு ஸ்படிக கல்லை அதில் வீசியதும், நதி வழி விட்டதாம். கரையேறியதும் அதே போல மற்றொரு ஸ்படிக கல்லை வைத்து நதியின் பழைய நீர் பிரவாகத்தை வரச் செய்து விட்டானாம். அந்த அளவு தந்திரங்கள் அறிந்தவன். அந்த செயலால் பிரமித்த அரசன் சங்குணனிடம் அந்த மணிகளை யாசித்தான்.
அவனோ சிரித்தபடி. என் கையில் தான் அந்த சக்தி உள்ளது. வெறும் மணியால் என்ன செய்வாய் என்றான். உன் கையில் அவை வெறும் கற்களாகவே இருக்கும் என்றான்.
சாதாரண மக்கள், தங்கள் கல்வியாலும், பயிற்சியாலும் சில அதிசயமான திறமைகளை அடைகிறார்கள். நீ அரசன், இதை விட பெரிய உயர்ந்த பொருட்களை எளிதாக அடைந்தவன். அதனிடையில் இதற்கு என்ன மதிப்பு என்றான்.
இதை உயர்வாக எண்ணினால், சமுத்திரத்தின் மணல் வெளியில் காத்திருக்க வேண்டும். அலைகளுடன் சமுத்திர ராஜன் தன் அலைகளுடன் உயர் மணிகளையும் கரைக்கு கொண்டு வந்து சேர்ப்பான். பெருகி வரும் அலையில் கண்ணுக்கு தென்படவே புண்யம் செய்திருக்க வேண்டும். அப்படி பிரித்து அறியும் திறன் பெற்றவர்கள் கண்டு கொள்வார்கள். அதற்கான சாதனைகளும் உண்டு.
என்றான்.
அரசனோ, இதற்கு சமமாக என்னிடம் உள்ள நல்ல நகைகளை, உயர் மணிகளில் எதுவேண்டுமோ தருகிறேன் என்றான்.
மகத தேசத்தில் உள்ள சுகத பிம்பம்- அதை யானையின் மேல் வைத்து கொண்டு வந்து கொடு – அது தான் இதற்கு ஈடானது. சமுத்திரத்தில் இறங்க என்ன உபாயம் செய்வாயோ, அதன் பின் உயர் மணிகள் உனக்கு, சம்சார சாகரத்தை தாண்ட எனக்கு சுகத விக்ரஹம் என பேரம் பேசினான்.
(சுகத Sugatha statue of Magadha – போத் கயா என்ற இடத்தில் உள்ள பௌத்தர்களின் புண்ய க்ஷேத்ரம். திர்த்த யாத்திரையாக அவர்கள் செல்லும் இடம். இந்த சிலை மகத தேசத்தின் சிறப்பாக சொல்லப் படுவது. இதிலிருந்து ஒளி பரவும் என்பார்கள். 80 அடிக்கு மேல் உயரமான புத்த பகவானின் சிலை. தாமரை மலரில் தியானம் செய்யும் கோலத்தில் அருள் பாலிக்கும் உருவம். மஹா போதி mahabodhi temple- kOvil – புகழ் பெற்ற சுற்றுலா மற்றும் புத்த மதத்தை அனுசரிப்பவர்களின் புண்ய யாத்திரை ஸ்தலம். ஒளியை உமிழும் Tang Buddhist Art – (ARS Orientalis -Dorothy C Wong)
ஒரு புத்த விக்ரஹம் கொடுத்து மணிகளை பெற்றுக் கோண்டான் என்று கவி முடிக்கிறார். எந்த விக்ரஹம் என்பது தெளிவாக இல்லை. வாக்கு சதுர்யம் உடையவனுக்கு எது தான் முடியாது? என்று கவியில் சொல்.
அதை எடுத்துக் கொண்டு அரசன் தன் அரண்மனைக்கு வந்தான். அதன் பள பளப்பும் காந்தியும் இன்றளவும் காணலாம். கயிற்றினால் யானை மேல் கொண்டு வந்த சமயம் கட்டிய அடையாளமும் உள்ளது என்று கவி சொல்கிறார். 127/398
பூமியும் தன்னை ஆள்பவனுடைய தகுதியை வைத்து நில வளத்தை அளிக்கிறாள். போலும். பலசாலியான நியாயமான அரசர்கள் தங்கள் ராஜ்யத்தில் பூமி நில வளம், நீர் வளம் குறையாமல் பார்த்துக் கொள்வதும் ஒரு சான்று.
ஒரு நாள் அரசன் வனங்களைத் தாண்டி இருந்த பொட்டல் காட்டை நோக்கி தன் குதிரையில் சென்றிருந்தான். அந்த குதிரையும் புதிது பழக்கப்படுத்த படாத இளம் குதிரை, இடமும் புதிது. பலர் வந்து கூடினர். அரசன் அவர்களுடன் வந்த ஒரு பெண் தள்ளி நின்று பாடுவதும் மற்றொருவள் ஆடுவதுமாக இருந்ததைப் பார்த்தான். இளம் குதிரையை பயிற்சி கொடுத்து பழக்கப் படுத்திக் கொண்டிருந்த அரசன் அவர்கள் இருவரும் அருகில் வந்து வணங்கி விட்டு செல்வதைக் கண்டான்.
அடுத்து வந்த சில நாட்களும் குதிரையை பழக்கும் சாக்கில் அந்த இடம் வந்தான். அதே பெண்கள் அதே போல பாட்டும் ஆட்டமுமாக அவன் கவனத்தைக் கவர்ந்தனர். வியப்புடன் அவர்களை வினவினான். யார் நீங்கள்? அந்த பெண்கள் சொன்னார்கள்.’இந்த கிராமத்து கோவிலில் நாங்கள் இருவரும் ஆடலும் பாடலுமாக சேவை செய்கிறோம். இதே ஊர்க் கார்கள் தான். எங்கள் தாய் சொல்லி இந்த இடத்தில் தினசரி எங்கள் நடன பயிற்சிகளைச் செய்கிறோம் என்றனர். அந்த இடம் சுரவர்தமான என்ற ஸ்வாமியுடன் கூடிய கோவில் இருந்த இடம். என்ன நடந்தது ஏன் இப்படி மனித நடமாட்ட்மே இன்றி ஸூன்யமாக ஆனது என்பது எங்களுக்குத் தெரியாது. பரம்பரையாக இந்த கோவிலில் எங்கள் முன்னோர்கள் ஆடியும் பாடியும் சேவை செய்து வந்தனர் என்பதால் எங்களையும் எங்கள் பெற்றோரும் மற்றவர்களும் அதை விடக்கூடாது என்று கருதுகின்றனர்.
இதுவரை அரசன் அறியாத புது செய்தி. மறு நாள் தன் ஆட்களுடன் வந்து பரந்து விரிந்திருந்த நிலத்தை தோண்டச் செய்தான். அவர்கள் சொன்னபடியே இரு இடிந்த கோவில்கள் இருந்தன. அதன் வாயிற் கதவுகள் பூட்டப் பட்டிருந்தன. 127/398
அரசன் முன்னிலயில் கதவுகள் திறக்கப் பட்டன. உள்ளே, கேசவன் விக்ரஹம் ராம லக்ஷ்மணர்களால் நிறுவப்பட்டது என்ற வாசகங்கள் பீடத்தில் எழுதியிருந்தது. அரசன் அதன் அருகிலேயே ஒரு கற்கோவிலைக் கட்டி கேசவ ஸ்வாமியையும், அருகிலேயே ராமஸ்வாமி என்ற பெயரில் ஒரு சன்னிதியையும் கட்டுவித்தான். லக்ஷ்மண ஸ்வாமின் என்ற சன்னிதியும் அவன் மனைவி சக்ரமர்திகா என்பவள், தனி கோவிலாக சக்ரேஸ்வர என்ற சிவன் கோவில் அருகில் நிறுவினாள்.
அந்த சமயம், ஒரு மனிதன் வந்து அரசன் காலில் விழுந்தான். அவன் தன் விருப்பம் போல உலகை சுற்றி வருவதாக கிளம்பியவன். யாராலோ தண்டிக்கப் பட்டவன் போல இருந்தான். உடல் முழுவதும் காயம், ரத்தம் வடிய நின்றான். சிகதா சிந்து என்ற கடலோர பிரதேசத்து அரச சபையில் மந்திரியாக இருந்தவன். மணல் வெளியே கடலாக இருந்த இடத்தின் அரச சபையில் உண்மையாக உழைத்தவன். அரசனுக்கு ஆதரவாக இருந்தவன். ஒரு சமயம் லலிதாதித்யா என்ற அரசனுக்கு ஒரு சரியான வழி காட்டி உபகாரம் செய்தது பிடிக்காமல் தண்டித்தானாம். என் வணக்கத்தை அரசனிடம் தெரிவித்து அவரை சந்திக்க வழி செய்யுங்கள் என்று வேண்டினான்.
இதைக் கேட்ட அரசன் தன் சேவகர்களிடம் அவனுடைய காயங்களுக்கு சிகித்சை செய்யும் படி உத்தரவிட்டதுடன் தான் அந்த சிகத சிந்து (ஸிகத -மணல் சிந்து சமுத்திரம்) அரசனை தண்டிப்பதாகவும் வாக்களித்தான்.
அந்த மனிதனோ தனிமையில் கடவுளை துதித்தான். இந்த உடலை நான் தரித்திருப்பதே பழி வாங்கத்தான். எனக்கு தீங்கிழைத்தவனுக்கு பதில் கொடுத்த பின் நானே உடலை தியாகம் செய்து விடுவேன். என் கண்ணீரை பகவானுக்கு நிவேதனமாக சமர்ப்பிக்கிறேன். சுகமோ துக்கமோ அவன் அறியாமல் நடக்காது என்று அறிவேன். எதிரி செய்த தீங்கு ஒன்றானால் அதை பத்து மடங்காக திருப்பித் தர வேண்டும். மலையடிவாரத்தின் கூக்குரல் இடும் மனிதனுக்கு மலை எதிரொலியாக – பல மடங்காக திருப்பித் தருவது போல. எப்படி அந்த இடம் செல்வேன். மூன்று மாதங்களாவது ஆகும் போய் சேர. நான் போகும்வரை அவன் இருப்பானா? அதனால் அரசே, அங்கு செல்லத் தேவையான தண்ணீரை கொண்டு செல்லச் செய்யுங்கள். பொட்டல் காடு, தண்ணீரே இருக்காது.அந்த தேசத்தில் என்னுடன் பிறந்தவர்கள் எனக்கு ஆதரவான மற்றவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் உதவுவார்கள். அதனால் அரசன் யாரும் அறியாமல் அரண்மனைக்குள் செல்ல உதவுவர்.
அரசன் லலிதாதித்யன் தன் படையுடன் புறப்பட்டான். பதினைந்து நாட்கள் அந்த மணல் வெளியில் நடக்கும் முன் வீரர்கள் சோர்ந்து போனார்கள். மேலும் இரண்டு மூன்று நாட்கள் கடந்த பின் தாகத்தால் தவித்த தன் வீரர்களை காப்பாற்ற என்ன செய்வது என்று மந்திரிகளுடன் ஆலோசனை செய்தான். மந்திரியாக இருந்தேன் என்று சொல்லி சந்திக்க வந்தவனையே வினவினான். என்ன செய்யலாம், அந்த மனிதனோ பலமாக சிரித்தான். என்ன நினைத்தாய்? எவ்வளவு நாள் தாங்கும் என்றா? எந்த இலக்கை நினைத்து கேட்கிறாய் ? எதிரியின் நாட்டுக்கா? அல்லது யமனுடைய இடத்திற்கா? நான் என் அரசனுக்குத் தான் உண்மையான ஊழியன். அவன் நன்மைக்காக உங்களை இந்த கடுமையான மணல் வெளி வழியே அழைத்து வந்தேன். என் உயிர் பெரிதல்ல. என் கடமையைச் செய்கிறேன். இது பாலைவனம். தண்ணீர் எங்குமே கிடைகாது. அரசனே லலிதாதித்யா! உன்னை எப்படி காத்துக் கொள்வாய்? யார் உன்னை மீட்க வரப் போகிறார்கள், பார்க்கலாம்.
இதைக் கேட்டு அறுவடைக்குப் பின் வைக்கோல் மட்டுமே மிஞ்சிய வயலில் பெரும் காற்றும் வீசினால் அவை அலை பாய்வதைப் போல அந்த வீரரர்கள் உடலும் உள்ளமும் வலுவின்றி போக திகைத்தனர். அரசன் தன் கைகளை உயரத் தூக்கி அந்த மந்திரியிடம் சொன்னான். ‘அமாத்ய! உன் எஜமான விஸ்வாசத்தை பாராட்டுகிறேன். இந்த பாலை வனத்திலும் குளிர்ந்த நீரால் நீராட்டியது போல எங்கள் உடலில் மயிர் கூச்சல் உண்டாகிறது. இரும்பு கூட வஜ்ரத்தின் முன் செயலிழந்து போகும். ஏதோ ஒளி வீசும் மணி என நினைத்து அக்னியை விரலால் தொட்டவன் போல நீதான் தவிக்கப் போகிறாய். நீயாக உன் கால்களை சிதைத்துக் கொண்டதும் வீணாகும். உன் அவயவங்களை இழந்து தண்டனை பெறுவாய். நீதான் இந்த உன் ஏமாற்று செயலின் விளைவை அனுபவித்து வருந்துவாய், இது நிச்சயம்.
உன் கண் எதிரில் என் ஆணையை ஏற்று நீரை வரவழைக்கிறேன். உலகில் நீரை பாதுகாக்கும் தேவதையே எனக்கு உதவுவாள். நீ அறிவாயா? வைரம் நிறைந்த சுரங்கங்கள். இடி இடித்தால் பூமி நடுங்க தன் ரத்தினங்களை பூமிக்கு மேல் பகுதிக்கு கொண்டு வந்து விடும். இவ்வாறு சொல்லிக் கொண்டே, தன் ஸூலத்தால், பூமியை பிளந்த பகவான் ருத்ரனை நினைத்தபடி தோண்ட ஆரம்பித்தான். விதஸ்தாவின் பரந்த நீர் நிலையை வேண்டினான். சைன்யத்தின் வீரர்களும் அதே போல ஈடுபாட்டுடன் தோண்டினர். உயிர் மீதுள்ள பற்றுதல் எந்த கடினமான செயலையும் எளிதாக்கும். பூதேவியே மென் முறுவலுடன் வந்து அளித்தது போல நீரூற்று பெருகி வந்தது.
வீணாக தன் காலை தானே உடைத்துக் கொண்ட அந்த மந்திரி மட்டுமே தனிவழியில் சென்றான். அவன் ஸூளுரைத்தது உண்மையாகி மரணம் அவனைத் தொடர்ந்தது சென்றது.
அந்த நீர் ஊற்று அதன் பின் குல நிம்னகா என் அழைக்கப் படுகிறது கடுமையான பாலைவனத்திலும் அதன் வடக்கில் இந்த நீர் பெருகி அந்த பிரதேசத்துக்கு தவறி வந்தவர்களுக்கு வாழ்வளிக்கிறது. இந்த அரசன் செய்த பல நன்மைகள், அதிசயமான செயல்களை மக்கள் பாடலாக பாடுகின்றனர்.
பொதுவாக நதிகள் சம நிலத்தில் அமைதியாகச் செல்லும். அதுவே இடையில் பாறைகள் அகப்பட்டால் தடுக்கப் பட்டு இரைச்சலாக கடக்கும். இதேதான் பொதுவாக அமைதியாக உள்ள மனிதர்களைச் சீண்டினாலும் அவர்கள் கோபம் தாங்க முடியாமல் வெடிக்கும். இது கலி யுகத்தின் பிரபாவமா, அல்லது அந்த அரசனின் பதவி தரும் பொறுப்பா ? அமைதியான காலத்தில் நல்லாட்சி தரும் அரசன் இடர்கள் வந்தால் எவ்வாறு நடந்து கொள்வான் என்ற பாடமா? அல்லது ஒரு சமயம் பயங்கரமாக நடந்து கொண்ட அரசனின் நடத்தைகளுக்கு இயற்கை செய்த எதிர் வினையா?
ஒரு சமயம் பரிஹாச புரத்தில் தன் அந்த:புர பெண்களுடன் மதுவை குடித்து மதி மயங்கி இருந்த சமயம் ப்ரவர சேனன் கட்டிய ப்ரவரபுரத்தை அழியுங்கள் என்று தன் ஆட்களுக்கு கட்டளையிட்டான். அது என் நகரத்தை விட அழகாக இருப்பதாகச் சொல்கிறார்கள் என்றான். மந்திரிகள் திகைத்தனர். சற்று தூரம் சென்று குதிரைகளுக்காக சேமித்து வைத்திருந்த வைக்கோல் போராக இருந்த இடத்தில் தீ வைத்து அது எரிவதைக் காட்டி செய்து விட்டோம் என்று அரசனிடம் காட்டினர். அவன் முகமே அந்த நெருப்பின் ஜுவாலையில் ஆந்தை முகமாக மாறி, அரக்கன் போல அட்டகாசமாக சிரிப்பதைப் பார்த்து மந்திரிகளும் பொது மக்களும் நடுங்கினர். இது தான் இவனுடைய உண்மையான முகமோ.
இந்த என்ன மன நிலை? பொறாமை இந்த அளவு ஒரு மனிதனை நிலை இழக்கச் செய்யுமா? தானே பல நகரங்களைக் கட்டியவன், அழகாக பல காலமாக இருக்கும் ஒரு நகரத்தை எரிக்கச் சொல்ல வேண்டுமானால் அவன் மனதில் அடியில் இந்த அளவு க்ரூரமா இருந்தது. கண்ணின் கோளாறு நிலவை இரண்டாக காட்டுவது போல மனதின் மறுபக்கம் பயங்கரமாக அவன் தன் நிலையை இழக்கும் அளவு குடித்த மது வெளிக் கொணர்ந்து விட்டது போலும். 314 ஸ்லோகம்
மறு நாள், மதுவின் தாக்கம் குறைந்து சுய உணர்வு வந்தவுடன் தன் செயலுக்காக வருந்தினான். மனம் தன் புத்தியை இழந்து விட்டதா? பச்சாதாபம் என்ற தீ அவன் மனதில் நிறைந்து சுட்டது. அழகிய நகரை எரித்த தீ என் மனதை வாட்டுகிறது போலும் என வருந்தினான். மரத்தின் உள்ளேயே இருந்து வாய்ப்பு கிடைத்த உடன் மரத்தையே அக்னி எரிக்குமாம். அது போல என் மனதின் உள்ளேயே இருந்த களங்கம்- பொறாமை என்ற தீ என்னை அழிக்கவே வந்துள்ளது. தாங்க முடியாத வேதனையால் துடித்தான். சற்று பொறுத்து அரசன் செவி மடுக்கும் தெளிவைப் பெற்றபின் நகரை அழிக்கவில்லை என்பதைச் சொன்னார்கள். கனவில் இழந்த மகனை திரும்பப் பெற்றது போல அரசன் மகிழ்ந்தான். அமாத்யர்களைப் பாராட்டினான். நன்று செய்தீர்கள். அரசன் சுய நினைவின்றி பிதற்றலாக சொன்னாலும் அதை உடனே மறுக்காமலும், எது நன்மை என்று அறிந்து செய்து விட்டீர்கள் என்றான். உசிதமான செயல்களை செய்வது போலவே தலைவனாக இருப்பவன் தவறாக சொல்வதையும் அதன் விளைவுகளை தவிர்க்க முன் யோசனையுடன் உடன் இருப்பவர்கள் செய்வதும், பின்னால் ஒருவேள தலைவனின் கோபத்துக்கு ஆளாவோம் எனத் தெரிந்தாலும் பொது நன்மையை நினைத்து மாற்றியது மிக உயர்வு. நல்ல மந்திரிகள் அதைத் தான் செய்வார்கள். தன் சுகமே பெரிது என நினைப்பவர்களை என்ன சொல்ல. (திக் – வேதனை, தவறு, வருத்தம் என்ற பல உணர்வுகளை அந்தந்த சமயத்திற்கு ஏற்ப பொருள் கொள்ள வேண்டும்)
மகாத்மாக்கள் நீங்கள். உங்களால் இந்த பூமியே சிறப்பு பெறுகிறது. புலங்களை அடக்கத் தேரியாத என்னையும் மீட்டு அறிவு பெற செய்து விட்டீர்கள்.
தான் செய்த மற்றொரு தவற்றையும் நினைத்தான். கௌட தேசத்து அரசன், அவனை கொலையாளிகளை வைத்து கொன்றதை நினைத்தான். பரகாச புரம் என்றும் கேசவன் என்றும் தானே வழிபட்டு பல நற்காரியங்களைச் செய்தவனா என நினைக்கும் படியான சில துரோகங்கள். அந்த கௌட தேசத்து (த்ரிக்ராம என்ற சிறிய ராஜ்யம்- விதஸ்தாவும் சிந்து நதியும் சேரும் இடம்) அரசனின் பிரஜைகள், அரச சேவகர்கள் நலமாக இருந்தனர். அமைதியாக வாழ்ந்தனர். தேவி சாரதாவை தரிசிக்க காஸ்மீர தேசம் வந்தவர்கள் என்ற காரணத்துடன் பரிகாச புரம் வந்தனர். லலிதாதித்யன் ஊரில் இல்லாத சமயம். கோவிலுக்குள் நிழைய விடாமல் அரச சேவகர்கள் தடுத்தனர். ராமஸ்வாமி என்ற விக்ரகத்தை பரிகாச புர கேசவன் என தவறாக நினைத்து வெள்ளியால் ஆன அந்த சிலையை துண்டு துண்டாக உடைத்து வீசினர். வெளியேறும் சமயம் அரசனின் சைன்யத்தினரால் வழியெங்கும் தடுத்து நிறுத்தி கொல்லப் பட்டனர். அவர்கள் அதற்குத் தயாராகவே வந்திருந்தனர். தங்கள் அரசன் லலிதாதித்யனின் ஆணைப்படி மர்ம நபர்களால் கொலை செய்த செயலுக்கு பழி வாங்கிய திருப்தியுடன் மடிந்தனர்.
கறுத்த நிறத்தினர், ரத்த வெள்லத்தில் மிதந்தனர். பூமியில் அஞ்சனாத்ரி, மை போல கறுத்த மலை விழுந்த்து கிடப்பதைப் போல இருந்ததாம். மலையின் தாதுக்கள் பள பளக்க இருப்பது போல ரத்தம் தெரிந்ததாம். ஆகா, இந்த பூமி புண்யம் செய்த து. தங்கள் தலைவனுக்காக அரசனுக்காக, உயிரையும் தியாகம் செய்த பிரஜைகளை உடைய அரசன் பெயர் வாழ்க. அந்த அரசன் ஆண்ட இந்த நாடும் தன்யா- பெருமைகள் பல பேற்றவள், வாழ்க.
பயங்கரமான இடி )வஜ்ரம் )க்கு வஜ்ரம் என்ற வைரத்தை வெளிக் கொணர்வதால் வரவேற்கப் படுகிறது. நாகத்தின் தலையில் இருந்தாலும் மாணிக்கம் மதிப்பு உடையது. அரிதாக கிடைத்தாலும் மரகதன் அதன் பச்சை நிறத்தின் அழகுக்காக பாடு பட்டுத் தேடச் செய்கிறது. ஒவ்வொன்றுன் அதன் பெருமையை அடைவது அதன் இயல்பான குணமாகிறது. அதன் பின்புலம் ஆராயப் படுவதில்லை. அது போல மனிதர்களில் சிலர் ரத்திங்களாக மனிதருள் மாணிக்கம் என்பது போன்ற வசங்களால் வர்ணிக்கப் படுகின்றனர். அவர்களின் சாதனைகளும், செயற்கரியன செய்த செயல்களுமே சரித்திரமாக நிலைத்து நினைக்கப் படுகிறது. அவர்கள் நிஜ வாழ்வின் தவறுகள் மறைந்த்து விடுகின்றன. மாணிக்கம் நாகத்தின் விஷத்தை மறக்கச் செய்வது போல. அதைபோல இந்த கௌட தேசத்து பிரஜைகள் தங்கள் மன்னனுக்காக தங்களையே தியாகம் செய்ததும் வரலாறு ஆகிறது. அவர்களின் தியாகம் உலகிலேயே அரிதான எஜமான விஸ்வாசம். அது போல எங்குமே கண்டதில்லை. ப்ருத்ய ரத்னங்கள் – ரத்தினம் போன்ற உயர்ந்த மதிப்பை பெற்ற அரச ஊழியர்கள் எனப் புகழப் படுகின் றனர். 333 ஸ்லோகம்- 133/398
லலிதாதித்யன் புகழ் உள் நாட்டை விட அதிகமாக வெளி நாடுகளில் பரவியது. அதோடு நிற்காமல் மற்றவர்கள் நினைத்து கூட பார்க்காத செயல்களை தான் சாதிக்க நினைத்து இது வரை யாரும் செல்ல முடியாத வட பகுதியில் நுழைந்தான். தனதன் இருப்பிடம் எனும் யக்ஷ சாம்ராஜ்யம் எப்படி இருக்கிறது என்று பார்க்க விழைந்தான். நைருத என்ற இரவில் சஞ்சரிக்கும் இனத்தாரைக் கண்டான்.
அந்த இடங்களில் ஆதவனின் கிரணம் கூட நுழையாது என்பர். அந்த இடங்களில் அரசன் தன் இஷ்டப்படி சஞ்சரித்தான். மந்திரிகள் முன் சென்று இது வரை கேட்டறியாத இடங்களுக்கு தூதுவர்களை அனுப்பினார்கள். அவர்கள் வந்து சொன்னார்கள்: ‘எங்கள் தலைவன் தங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார். இது என்ன மோகம்? உங்களைப் போன்ற அரசர்கள், எதை எதிர் பார்த்து இங்கு வந்துள்ளீர்கள். தினம் ஒரு புது தேசம், புது வெற்றி பெறுவதால் என்ன லாபம். தங்கள் பிரதேசத்தில் நுழைந்தால் என்ன பலன் தெரியுமா? காரணமின்றி வெறும் ஆசையால் மட்டும் நதிகள் சமுத்திரத்தை நாடி ஓடி வருகின்றன. அதில் கலந்தவுடன் தனது என்ற தன்மையை இழப்பது தான் கண்ட பலன். அதனால் குற்றமற்ற தூய்மையான எண்ணத்துடன் உங்கள் தேசத்தை பாது காத்து ஆளுங்கள். அது தன் சாரமான நியதி. உங்கள் நாட்டில் குறைகள் எதுவும் இன்றி நிம்மதியாக மக்களை வாழ விடுங்கள். இங்குள்ளவர்கள் சதா காப்பாற்றப் பட வேண்டியவர்கள். இவர்களுக்கு சார்வாகர்கள் சொல்வது போல பர லோக பயம் இல்லை.
மலை வாசிகளின் வாழ்க்கையே கடினமானது. இதில் வசிப்பவர்கள் எந்த குற்றமும் செய்ய வேண்டாம். அவர்கள் வாழ்க்கையே இடர்கள் நிறைந்தது. மலையின் இயல்பினால் பல இன்னல்களை சந்தித்து சமாளித்து தான் வருகிறார்கள். செல்வத்தை சேர்த்து கோட்டைக்குள் அமைதியாக வாழ்வது போல இல்லை இங்குள்ளோரின் குகைகளில் வாழும் வாழ்க்கை. அவர்களை பகைத்துக் கொண்டு என்ன குற்றம் என்று தண்டிக்கப் போகிறீர்கள்? இவர்களிடம் சேமித்து வத்திருக்கும் செல்வம் இருந்தால், ஏன் இங்கு இருக்கப் போகிறார்கள், அவர்களும் உங்களைப் போல நாட்டில் கோட்டை கொத்தளங்களோடு வாழ மாட்டார்களா? இவர்களிடம் மிஞ்சி போனால் ஒரு ஆண்டுக்கான தானியங்கள் இருக்கும், பசு, காளைகளுக்கான உணவு இருக்கும். கிராம வாசிகள் அதிகமாக சேமித்து வைத்துக் கொள்வதும் இல்லை. டாமரா: -Damara:- என்பவர்கள் பலசாலிகள். அடிக்கத் தயங்க மாட்டார்கள். இவர்கள் உங்கள் நகரத்துக்குள் வந்தால், அரசன் ஆணையை மதிக்கவும் மாட்டார்கள்.’
‘இவர்களை உங்கள் நகரத்துக்கு கொண்டு சென்று ஆடைகள், பெண்கள், ஆயுதங்கள், போஜனம் , அலங்கார வஸ்துக்கள், குதிரைகள், வீடுகள் என்று நகரவாசிகளுக்கு இணையாக உங்களால் தர முடியுமா? அப்படிக் கொடுத்தாலும் அவர்கள் பிறவி குணத்தை மாற்றி அறிவுடையவர்களாக ஆக்க முடியுமா? அதன் பின்னும் உங்கள் ஊழியர்களிடம் உள்ள பொது அறிவு வரும்படி செய்ய வேண்டும். ஓரிடத்தில் நிலையாக வாழ்ந்தவர்கள், புலம் பெயற்வது கடினம். அவர்கள் பழகிய வாழ்க்கை, ஆயுதங்கள் இவைகளை விட வேண்டி இருக்கும். ஒருவருக்கொருவர் திருமண சம்பந்தங்கள் எப்படி இருக்கும்? இவர்களை தற்சமயம் உங்களிடம் உள்ள அலுவலர்கள் போலவே நடத்தினால் ஒரு வேளை இவர்களும் விரும்பி வாழ்வார்களாக இருக்கும். இருந்தாலும் பிறவிக் குணம், அரசு கட்டமைப்பையே கலைத்து கிராமமாக ஆக்கவும் செய்யலாம். ‘
இது எங்கள் தலைவனின் அறிவுரை. இங்குள்ள மக்களை அறிந்தவர், இந்த நிலத்தை பயன் படுத்த தெரிந்தவர் சொன்ன செய்தி. இதை மனதில் வைத்துக் கொண்டு மகா ராஜா செயல் படட்டும்.
யானை மதம் கொண்டுள்ளது என்பதை அதன் மத நீரின் மணத்தை வாயு கொண்டு வந்து சொல்லும். மழை மேகங்கள் கறுத்து அலைந்தால், இதோ மழை வரும், மின்னலும், இடியும் வரும் என்று ஊகிக்கலாம். மனிதனின் குணங்கள் அந்தந்த இனத்தினரின் இயல்பாக அமையும். அறிவுள்ளவர்கள் தங்கள் அறிவினாலும் அனுபவத்தாலும் ஜன்மாந்திர வாசனையாலும் கலங்காத மன திடம் உள்ளவர்களாக ஆவார்கள்.
அதன் பின் அரசனின் நிலை என்ன ஆயிற்று என்பது தெளிவாக சொல்லப் படவில்லை.
அவன் தனயர்கள் குவலயாதித்யனும், வஜ்ராதித்யனும் சம மாக அரசனின் அன்புக்கு ஆளானவர்கள். ஆனால் தாய்மார்கள் வேறானதால் அவர்களின் குணத்தில், செயல் திறமைகள் வேறு பட்டன. மூத்தவன் பலவானாக இருந்தால் தான் அரசனாக பட்டம் கட்ட வேண்டும். அதனால் நீங்கள் அவர்கள் இருவரையும் கவனமாக கண் காணித்துச் சொல்லுங்கள். ஒரு வேளை அரசன் தானே ராஜ்யத்தை துறக்கலாம் அல்லது அவன் வாழ்வே முடியலாம். இது இயற்கை யாராலும் மீற முடியாது. அரசனே இளையவனை ஏதோ காரணத்தால் அரசனாக்கினால், அவன் கட்டளையை மீற முடியாது. அடுத்த தலைமுறை பேரன் ஜயாபீடன் இன்னமும் சிறுவன். அவன் பாட்டனார் போல வருவான் என்பது பெரியவர்கள் கணிப்பு. சங்குணன் பிரஜைகளைக் கூட்டி இப்படி சில செய்தியை முன் அறிவிப்பாக அறிவித்த பின் அவர்களிடம் சொன்னான்.
முப்பத்தாறு ஆண்டுகள்,ஏழு மாதங்கள், பதினோரு நாட்கள் நமக்கு இதமான நிலவொளி போல இருந்து ஆண்ட அரசன் காலம் முடிந்து சுவர்கம் சென்று விட்டான். என்றென்றும் அவன் புகழ் நிலைத்திருக்கும். எனவே, குவலயாதித்யா பட்டத்துக்கு வருகிறான். முடி ஸுட்டும் வைபவங்கள் தொடங்கட்டும். அரசனுடனேயே எனக்கு இருந்த அதிசய சக்திகளும் மறைந்து விட்டன. இனி பழையபடி பொற்காசுகளால் பொக்கிஷத்தை நிரப்ப முடியாது.
அரசன் இப்பவும் இந்த நாட்டுக்கு நன்மையே செய்வான். கரு மேகம் தன்னை முழுவதுமாக மறைத்தபடி இருந்தாலும், இடையிடையே ஆதவன் தன் கிரணங்களால் குளத்து தாமரையை மலரச் செய்து விடுவான். இப்படி ஒரு சக்தி மகாத்மாக்களாக வாழ்ந்த ஜீவன்களுக்கும் உண்டு. அவர்கள் அருளால் கடினமான செயல்களைக் கூட அவனைச் சார்ந்தவர்கள் செய்ய முடிவது அதனால் தான்.
ஆனால் அரசன் முடிவு எப்படி வந்தது ? ஒருவருக்கும் தெரியவில்லை.
ஒரு சிலர் அரசன் பனி பொழிந்து இருண்ட ஆர்யாணகா என்ற தேசத்தில் விபத்தில் மறைந்தான் என்று சொல்வர். அரசு கை விட்டு போனதால், வெகு காலம் பாடு பட்டு வளர்த்த சாம்ராஜ்யம் காப்பாற்ற முடியாமல் தீயில் விழுந்தான் என்று சிலர்.
மற்றும் சிலர் உத்தராபதம்- வடக்கு நோக்கி சென்றவன், பொதுவாக மனிதர்கள் நடமாடாத இடம், என்ன நடந்ததோ, பூமிக்குள் பிரவேசித்து விட்டான் என்றனர். அல்லது வானத்தில் பவனி வரும் ஸூரிய தேவனே சமுத்திரத்தில் இறங்கியது போல தானே நேராக பரலோகம் செய்று விட்டான் போலும். அங்கும் இப்படி ஒரு பேச்சு உள்ளது என்றனர். அஹோ, பெருமை வாய்ந்தவர்கள், சிறந்த மனிதர்களின் செயல்களை நம்மால் ஊகிக்க முடியுமா? தனக்கு உவமை இல்லாதவன், ப்ரஸ்தானம் என்ற முறையில் இருந்த இருப்பில் மறைவார்கள் என்று கேட்டிருக்கிறோம். விபத்து என்றால், அதிசயமான குணாதிசயங்கள் உள்ளவர் எதை எப்படி செய்வார் என்று சாமான்ய மனிதர்கள் எப்படி அறிவர். பல அதிசய செயல்களைச் செய்தவன் என்பதால் மக்களிடையே பல விதமான வதந்திகள் பரவின.
கமல தேவியின் மகன் குவலயாதித்யன் அதிதியின் மகன் இந்திரன் போல ராஜ்யத்தை அடைந்தான். அவனும் நியாயமாக ஆண்டான். பாம்பு சட்டை உரிப்பது போல தேவையற்ற அரச போகங்களை தவிர்த்தான். தன்னளவில் தன்னடக்கம் உடையவனாக விளங்கினான். சகோதரனும் அவனைப் போலவே திறமையுடன் உதவினான். ஆனாலும் தீயின் ஜுவாலைக்கு அருகில் விளக்கின் சிறு ஒளி எடுபடாதது போல அவன் திறமையும் குணமும் வெளியில் தெரியவில்லை. இதை உடன் இருந்த மந்திரிகள், அலுவலர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இருவரிடமும் உண்மையாக இருப்பது போல காட்டி கொண்டே தங்கள் தேவைகளை மாற்றி மாற்றி இருவரிடமும் பெற்றனர். குவலயாதித்யன் பொக்கிஷம் குறைவதைக் கண்டு இளையவனை சந்தேகித்து அவனை அரச காரியங்களில் தவிர்த்து விட்டான். தன் கைக்கு முழுமையாக கொண்டுவந்த பின் தந்தையைப் போலவே படை வீரர்கள், ஆயுதங்கள் என்று சேமித்து படையெடுத்துச் செல்லவும், மற்ற ராஜ்யங்களைக் கைப்பற்றவும் தயாரானான். தந்தையிடம் பணி புரிந்த ஒரு ஆலோசகர் தானாக ஏதோ தீர்மானித்து செய்ததை அவனால் ஏற்க முடியவில்லை. திறமையான அதிகாரி தான், அதிகமான தன்னம்பிக்கையோ, அல்லது தந்தையிடம் அருகில் இருந்ததால் எடுத்துக் கொண்ட உரிமையோ, தன் கட்டளையை அவர் மீறிவிட்டதாக பொருமினான். கொன்று விட நினைத்தான், ஆனால் அரசவையில் செல்வாக்கு உள்ளவர், அவரைச் சார்ந்து பலர் இருந்தனர். அனைவரையுமா? என்ன செய்தால் இதற்கு தீர்வு என்று தூக்கமில்லாமல் அதே சிந்தனையாக இருந்தான். இந்த சந்தேகம் காலகூட விஷம் போல அவன் உள்ளத்தை தகித்தது என்று கவி சொல்கிறார். வெளியில் சொல்லாமல் தானாக யோசித்து யோசித்து அந்த எண்ணம் மேலெழாமல் தடுத்துக் கொண்டான். இதுவும் தெய்வச் செயலே. அதன் பின் என்ன லாபம் என்று இவ்வளவு பெரிய தவற்றை செய்ய இருந்தேன் என்று தன்னையே கடிந்து கொண்டான். 382 ஸ்லோகம்
தன் உடலை பாதுகாக்கவே உலகில் உயிரினங்கள் பாடு படுகின்றன. சமயங்களில் செய்யக் கூடாத செயல்களை செய்தாவது உடலை வளர்ப்பவர்களும் உண்டு. அவர்களைப் பார்த்து நாம் திகைக்கிறோம். இந்த உடல் நிரந்தரமல்ல என்று அவர்களுக்குத் தெரியாதா? அப்படி வளர்த்த உடல் பதிலுக்கு திடமாக இருந்து உதுவுகிறதா என்றால் , அதுவும் இல்லை. மறந்து விடுகிறது. (நமக்காக பாடு பட்டான் என்பதை நினைத்து வியாதி மூப்புக்கு இடம் கொடுக்காமல் இருக்கிறதா?) பசு வதை செய்தாவது உடலை வளர்க்க வேண்டுமா? அந்த ஜீவன்கள் யாருக்காகவோ உடம்பை வளர்த்தனவா? நாளையை நினைத்து நடக்கிறோம். காலடிகள் ஒவ்வொன்றாக பின்னோக்கிச் செல்கின்றன. வழியில் தேவைப்படும் என்று உணவையும் கையில் கொண்டு செல்லும் வழிப் போக்கர்கள் மனிதர்கள். கலத்தில் இட்ட உணவு தான் கண்ணுக்கும் மனதுக்கும் தெரிகிறது. அதன் ஆரம்ப நிலையை, பின்னால் அந்த பண்டங்கள் அடைந்த மாறுதல்களை சமைப்பவர் அறிவார். இளம் வயதில் அலங்காரமாக இருந்த உதட்டு வர்ணமும், அடர்ந்த கேசமும் கண் முன்னாலேயே மாறிய பின் தானே உணருகிறோம். நரைத்த கேசம், ஆடு போல தொங்கும் முகம், இவைகளே பரிகசிப்பது போல – இதைத்தான் ஞானிகள் அறிந்துள்ளனர். இந்த சிந்தனைகளால் அவன் மனம் மாறி ராஜ்யத்தைத் துறந்து வனம் ஏகினான். ப்லக்ஷ ப்ரஸ்ரவனம் என்ற இடம் சென்றான். யாரோ மெள்ள உபதேசிப்பது போல இருந்தது. ‘நல்லது மகனே! செல்வம் நிரந்தரமல்ல.” தன் ஆசனத்தில் ஒரு ஸ்லோகமாக எழுதி வைத்தான். ‘நராதிபனாக இருந்தவன் அடக்க முடியாத உணர்ச்சி வேகத்தில் தன்னை உணர்ந்து கொண்டான். ஸ்ரீ பர்வதம் சென்று அமைதியாக தவம் செய்து வாழும் மக்களுடன் வாழவே செல்கிறான்’ ஸ்ரீ பர்வதம் என்ற இடத்தில் Srisailam – ஸ்ரீ சைலம் என்று ஆந்திர பிரதேசத்தில் உள்ள சிவ ஸ்தலம். அங்கு இன்றளவும் இவ்வாறு உலக வாழ்க்கையைத் துறந்து தவம் செய்பவர் உள்ளனர் என்கிறார் கவி.
மித்ர சர்மா என்ற அந்த ஆலோசகர், பரம்பரையாக அரச சபையில் உண்மையாக பணி செய்தவர், மிக வருந்தினார். அவரும் பதவியை விட்டு விலகி தன் மனைவியுடன் விதஸ்தா-சிந்து நதிக்கரைக்கு சென்று தங்கி விட்டார். நல்லறிவையும், தூய்மையான உள்ளமும் கொண்டிருந்த அரசனும் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறவையே தொடர்ந்து சாதனைகள் செய்து சித்தி அடைந்தான்.
‘சக்ரமர்திகா’ என்ற ராணியின் மகன் வஜ்ராதித்யா லலிதாபீடன் என்ற பெயருடன் பட்டத்துக்கு வந்தான். அவனை பப்பியகன் என்றும் அழைப்பராம். (बप्पियको – )
இவன் தன் சகோதரனுக்கு நேர் எதிராக இருந்தான். க்ரூரன் என்பர். மக்களின் நன்மையே கவனமாக இருந்த குவலயாதித்யன் செய்த நற்செயல்களை அழிக்கவே வந்தவன் போல. புராண காலத்து துர்வாசரும் சந்திரனும் போல ( இருவரும் அத்ரி அனசூயாவின் புதல்வர்கள். சந்திரனின் அமைதியும், துர்வாசரின் பொறுமையற்ற கோபமும் உதாரணமாக சொல்லப் படுகிறது).
முதல் காரியமாக, பரிஹாச புர கோவிலுக்கும், இறைவனுக்கும் தந்தை லலிதாதித்யன் அளித்திருந்த கொடைகளை, சொத்து சுதந்திரங்களை பிடுங்கிக் கொண்டான். சிற்றின்பமே பெரிதாக அந்த:புர பெண்களை குதிரை மேய்வது போல மேய்ந்தான் என்கிறார். கூட்டம் கூட்டமாக அந்த நாட்டு மக்களை மிலேச்சர்கள் என்ற எல்லை கடந்த நாட்டினருக்கு அடிமைகளாக விற்றான். அது அந்த மிலேச்சர்கள் சுதந்திரமாக நாட்டிற்குள் வர வழி வகுத்தது. அளவுக்கதிகமாக போகங்களில் ஈடுபட்டதன் விளைவு. ஏழு வருஷங்களே வாழ்ந்தான். அவனுடன் அவன் செய்த பயங்கர ஆட்சியும் முடிவடைந்தது.
அதன் பின் மஞ்சரிகா தேவி என்ற அரசனின் மனவியின் மகன் ப்ரஜாந்தகன் என்பவன் பட்டத்துக்கு வந்தான். 398 ஸ்லொகம் 138/398
இவனும் தன் முன்னோடியாக வஜ்ராதித்யனையெ கொண்டவன் போல நாட்டு மக்களை துன்புறுத்தியபடி நான்கு ஆண்டுகள் ஆண்டான். அவனை இறக்கி விட்டு மற்றொரு வஜ்ராதித்யனின் (பப்பியா) வின் ஒரு மனவி மம்மா என்பவனின் மகன் சங்க்ராமபீடா என்பவன் ஏழு நாட்களே அரசு கட்டிலில் அமர்ந்திருந்தான். இந்த வம்சத்தினரின் ஆட்சி மக்களுக்கு பனிக்காலத்தின் குளுமைக்குப் பின் வரும் கடோரமான வேணிற்காலம் போல இருந்ததாம்.
பப்பியாவின் கடைசி மகன் ஜயாபீடன் அரசன் என்ற பதவிக்கு ஏற்றவனாக, பட்டத்துக்கு வந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டான். அவனை அரச அமாத்யர்கள், பாட்டனாரைப் போல இரு, அவரைப் போல நல்லாட்சியை அளித்து பெயரும் புகழும் பெறுவாய் என்று வாழ்த்தினர். அதை ஏற்றுக் கொண்டவன் போல ராஜ்ய பரிபாலனம் செய்தான். படை பலங்களை சேர்த்த பின் திக்விஜயம் என்று புறப்பட்டான். தன் ராஜ்யத்தில் வித்வான்களாக இருந்தவர்களை மதித்து மரியாதையாக நடத்தினான். அவர்களின் நல்ல அறிவுரைகளையும் கேட்டு , அதன்படி நடந்தான். முதிய அரசர்கள் பலரையும் இணைத்துக் கொண்டு காஸ்மீர நாட்டின் எல்லைகளுக்குள் சுற்றி ஆங்காங்கு இருந்தவர்களை தனக்கு நண்பர்களாக ஆக்கிக் கொண்டான். பெரும் படை, ஆனால் போரிட வரவில்லை என்பதே பெரிய ஆறுதல். அதை என் பாட்டனாரின் நினைவாக கொண்டு செல்கிறேன் என்று சொன்னான். சேனை வீரர்களே அவனிடம் சிரித்துக் கொண்டே,’ப்ரபோ! என்ன காரணம். எங்கள் வீரத்தில் குறைவா? எங்களை உடன் வைத்துக் கொண்டு வெற்றி வீரனாக திரும்பலாமே. ‘ வழியில் தென் பட்ட ஒரு முதியவரிடம் விசாரித்தான். நீங்கள் இப்படி ஒரு பெரிய சைன்யத்தை கண்டதுண்டா? பல காலம் ஆயிற்று. யார் என்பது நினைவில் இல்லை. அவருடைய சைன்யத்தில் குதிரைகள் பூட்டிய ரதங்கள் இருந்தன. பாத சாரிகளான லக்ஷக் கணக்கான வீரர்கள். இங்கு இருப்பது எண்பதாயிரம் வீரர்களே. அந்த தலைவர்கள் வெற்றியே இலக்காக இருந்தனர். அதைக் கேட்டு ஜயாபீடன் அதிசயப் பட்டாலும், காலம் வலிது. என்னதான் பூமியை விஸ்தரித்தாலும் புதிதாக எதுவும் இல்லை. அந்த முதியவர், லலிதாதியனை நன்றாக அறிந்தவராக இருந்தார். அந்த அளவு சைன்யங்களுடன் சென்று முற்றுகையிட்டு கைப்பற்றி ராஜ்யத்தை விஸ்தரித்தான். கடைசி காலத்தில் வெகு தூரம் சென்றவன் திரும்பவேயில்லை. அவன் துரோகியான மைத்துனன் ஜஜ்ஜா என்பவன் பட்டத்துக்கு வந்தான். ராஜ சைன்யம் நாளாக நாளாக போரும் முற்றுகையும் அலுத்து போக ஊர் திரும்பவே விரும்பினர். திரும்பி விட்டனர். ஸ்வாமி- தலைவனிடம் பக்தியா ஒன்றாவது? எதுவும் இல்லை.
ஜயாபீடன் யோசித்தான். அதன் பின் அந்தந்த சிற்றரசர்களின் தேசத்தை திருப்பிக் கொடுத்தான். படை வீரர்களில் விருப்பமில்லாதவர்களை திருப்பி அனுப்பினான். நெருக்கமான சில வீரர்களுடன் பிரயாகை சென்றான்.
அங்கிருந்த அறிஞர்கள், கலைஞர்களுக்கு வேண்டியதை வேண்டியபடி தானமாக கொடுத்தான். குதிரைகள், தராளமாக தக்ஷிணைகள், (ஓன்று குறைய லக்ஷம்) முத்ரைகள் என நாணயங்களை தன் பெயர் பொறித்து வெளியிட்டான். முழுவதுமாக லக்ஷம் கொடுப்பவர்கள் தான் இந்த முத்திரையை மாற்ற இயலும் என்ற வாசகத்துடன் அவை நாடெங்கும் பரவின. ஸ்ரீ ஜயாபீட தேவனுடையது – என்ற வாசகம் உள்ள இந்த முத்திரைகளை கங்கா ஜலத்துடன் கலந்து விட்டான். கங்கையின் பிரவாகத்துடன் அவை திசையெங்கும் சென்றன. பல தேசங்களிலும் இவைகளைக் கண்டு அபிமானிகளான அரசர்கள் பொருமினார்கள். சைன்ய வீரர்களையும் பொருளும் கொடுத்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தான். அவர்கள் தன்னிடங்களுக்குச் சென்றனர். ஸூரியனின் தாபம் ஏற ஏற நீருண்ட மேகங்கள் மறைவது போல போர் வீரர்கள் ஒவ்வொருவராக விலகிச் சென்றார்கள்.
சில நாட்களுக்குப் பின் கௌட வம்சத்து ஜயந்தன் என்ற அரசனின் வசத்தில் இருந்த
பௌண்டிர வர்தனம் என்ற நகரத்துக்குச் சென்றான். அழகான ஊர். பலவிதமான அலங்காரமான இடங்கள் செல்வ செழிப்பைக் காட்டின. ரம்யமான உத்யான வனங்கள். அந்த இடத்தில் கார்த்திகேயன் கோவில் இருந்த இடத்தில் நடன நிகழ்ச்சியான ‘லாஸ்யம்’ என்பதைக் காணச் சென்றான். அங்கு மேடையில் ஆடியவரும் பரதர் என்ற முனிவரின் நாட்டிய சாஸ்திரங்களை அறிந்து ஆடினார். கீதமும் லயமும் இணைந்து ஒலிக்க நியமம் தவறாமல் சுஸ்வரமான அனுபவமாக இருந்தது. தேவக்ருஹத்தின் வாயிலில் இருந்த சிலைகள் கண்களைக் கவர்ந்தன. ஒரு வினாடி கண்டதுமே, அதன் விசேஷமான தேஜஸ்- சிறப்பான அம்சம் வெளிப்பட- பார்த்து பரவசமானான். அங்கு வந்திருந்த அனைவருமே அந்த சிலைகளைக் காண்பதும், களிப்புடன் செல்வதையும் கண்டான். நடனம் ஆடிய கமலா என்பவள், அவனைக் கண்டதும் பொது ஜனக் கூட்டத்தில் ஒருவன் அல்ல. யாரும் சொல்லாமலே, தனித்து தெரிந்த இயல்பான பெருந்தன்மை உடைய குமாரன் என்று புரிந்து கொண்டாள். கவர்ச்சிகரமான அவன் உருவத்தை, நீண்ட கரங்களை, நிமிர்ந்த தோள்களை கண்டு வியந்தாள். ஏதோ அரச குமாரன் அல்லது நல்ல நிலைமையில் இருப்பவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உள் நோக்கத்துடன் உலவுகிறான் என்ற தீர்மானத்திர்கு வந்தாள். ஏன் அடிக்கடி கைகளை தூக்கி தோள்களில் வைக்கிறான் என்பது புதிராக இருந்தது. பின்னால் இருந்த அடியாள், இடைவெளி விட்டு தாம்பூலம் அளிக்கிறானோ என்று தோழி சொன்னாள். அதைக் கேட்டு சிரித்தாலும் மன நிம்மதி அடைந்தாள். யானைகள் காதுகளை ஆட்டுவது வண்டுகளோ, பூச்சிகளை விரட்டுவதற்காக என்று அறிவோம். அப்படி எதுவும் இல்லாத இடத்திலும் அவை தன்னிச்சையாக காதுகளை ஆட்டும். சிங்கங்கள், அருகில் யானைக் கூட்டம் இல்லாவிடினும் அடிக்கடி திரும்பி பார்த்துக் கொள்ளும். மேகத்தின் இடி முழக்கம் இல்லாத சமயமும், தாள வாத்யங்களைக் கேட்டு மயில்கள் நடனமாடும். அது போல பழக்கத்துக்கு அடிமையானவன் போலும். பின்னால் சேவகன் ஒருவன் இருக்கிறானோ, இல்லையோ, சங்கீதமும், நாட்டியமும் அவனை தன் வயப் படுத்தி விட்ட நிலையிலும் தாம்பூலத்துக்காக கையை நீட்டுகிறான்.
இவ்வாறு ஊகித்துக் கொண்டவள் தன் அருகிலிருந்த சகியை அவனிடம் தூது அனுப்பினாள். அவன் அருகில் சென்றவள், வழக்கம் போல அவனுடைய நீட்டிய கையில் தாம்பூலத்தை வைத்தாள். திடுக்கிட்டு ஜயாபீடன் திரும்பி அவளைப் பார்த்தான். யார் நீ? புருவ அசைவில் கட்டளையை அறிந்து கொள்ளும் நீ, யாருடையவள் ?” மேலும் தாம்பூல கட்டுகளை கொடுத்து தான் யார் என்பதைச் சொன்னாள். அது வரை நடந்த விவரங்களை அவள் விவரித்துச் சொன்னது ரசிக்கும் படியாக இருக்கவும், மதுரமாக அவள் பேசியதிலும் மகிழ்ந்த ஜயாபீடன் மெதுவாக கேட்ட பின், அவளுடன் சென்றான். அந்த பெண்ணும் அனாவசியமாக பேசவில்லை. தன் சகி சொன்னவைகளைத் தவிர கூட்டி குறைத்தும் சொல்லவில்லை என்பதை குறித்துக் கொண்டான்.
அவர்கள் இருவருமாக நாட்டிய கலை அறிந்த அவள் தலைவியும் அதற்கு சற்றும் குறையாத மரியாதையுடன் அவனை வரவேற்றாள். ஜயாபீடனுக்கு இந்த சந்திப்பும் இப்படி ஒரு விதமான கலையும் அதில் ஈடுபாடும் கொண்டவர்களைக் கண்டதும் புது அனுபவமாக இருந்தது. இது வேறு உலகம். அழகான பெருந்தன்மையான உரையாடல். சுருக்கமாக பேசியே விவரங்களை சொன்ன விதம். புது மனிதனிடம் விருந்தோம்பலைச் செய்வதிலும் ஒரு நளினம். அவன் பிரமித்தான். அன்று நிலவு உதிக்கும் நேரத்திற்குள், அவளுடன் சகஜமாக உரையாடும் துணிவை பெற்று விட்டான். தன் போர் கவசங்கங்கள், அரச உடையுடனேயே அவளுடைய இருப்பிடம் சென்றான்.
அவளும் பொறுத்து இருந்து தானே முன் வந்து படுக்கையறைக்கு அழைத்தாள். அவளுடைய அழகிய அறையை நோட்டம் விட்டபடி இருந்தவனை தானே அணைத்தாள். தன் நீண்ட கைகளால் அவளை அணைத்தவன், மெதுவாகச் சொன்னான். ‘பத்ம பலாசாக்ஷி! தாமரை இதழ்களைப் போன்ற அழகிய கண்களையுடையவளே, நீ அழகி தான். அனால் என் மனம் உன்னிடம் ஈடுபட வில்லை. என் அனுபவங்கள், எனக்கு அளித்த பாடம் இது. உன் குணங்களால் என்னை வசிகரித்துள்ளாய். உன் நடவடிக்கைகளில் போலித் தன்மை இல்லை. முழு விவரங்களும் அறியாமல் கண்டவுடன் என்னிடம் உன் அன்பைக் காட்டி விட்டாய். தயை மிகுந்தவள் – தன்னம்பிக்கை உள்ளவள் யோசியாமல் கண்டவுடன் எப்படி நம்புகிறாய். எனக்கு ஒரு கடமை இருக்கிறது. சில செயல்களைச் செய்து முடித்த பின் தான் தாம்பத்யமோ, போகமோ என்ற விரதம் ஏற்றவன். சொல்லியபடியே, அந்த ஆசனத்திலிருந்து எழுந்தவன், ‘தானாக எதையோ விரும்பி சாதனைகளை செய்பவன், பெண்களை மனதால் கூட நினைக்கூடாது என்பது முதல் பாடம். ஸுரியனைப் போல- பூ மண்டலம் முழுவதும் சஞ்சரித்து ஒளியும் உயிரும் அளிக்காமல் அஸ்தமனம் ஆவதில்லை அல்லவா. நாடாளும் அரசன் இந்த விதமாக சமாதானமாகச் சொல்லியதைக் கேட்ட பின் அந்த கலையரசி மிகுந்த வெகுமானத்தோடு அவனை நோக்கினாள். அவனும் கலைஞனே என் நினைத்தவள், அரசனா என்று வியந்தாள். அவனிடம் மதிப்பும் மரியாதையும் நிறைந்தது.
சில காலம் தங்கி விட்டு போ என்று அன்புடன் யாசித்தாள். அவளுடன் மாலை வேளைகளில் நதிக் கரையில் உலவினான். விசாலமான அவள் வீடு. சுற்றிலும் வேலி. எதற்கு என்றவனிடம் அவள் சொன்னாள், தினமும் ஒரு சிங்கம் வந்து விடுகிறது. மனிதனோ, யானையோ,குதிரையோ அதன் கண்ணில் பட்டால் அவ்வளவு தான். அதன் அடியில் சுருண்டு விழுந்து விடுகின்றன. அதனால் தான் அரசனே, நீ வர தாமதம் ஆனால் நான் கவலைப் படுகிறேன் என்றாள். சிலர் அதனிடம் அகப்பட்டு உயிரிழந்தனர். அதனால் இங்குள்ளோர் பயப்படுகின்றனர் என்றாள். ஸ்லோகம் 445 142/398
இந்த பிரதேச அரசனோ, அரச குமாரனோ பொறுப்பு ஏற்று அதை தடுக்க முயலவில்லை. அதனால் இருட்டும் முன் அனைவரும் கதவை சாத்தி விடுகிறோம். உலகம் அறியாத சிறு பெண், அவள் இதை ஒரு பெரிய விஷயமாக நாட்டியமாடுவது போலவே கை அசைப்பும், முகத்தில் பாவங்களுடனும் , சொல்வதைப் பார்த்து ஜயாபீடன் சிரித்தான்.
மறு நாளே கிளம்பி அந்த நகரத்தின் எல்லை வரை சென்றான். பெரிய வட விருக்ஷத்தின் அடியில் சிங்கத்தின் வரவை எதிர் நோக்கி காத்திருந்தான். வெகு தூரத்தில் வரும் பொழுதே, அட்டகாசமான கர்ஜனை கேட்டது. மிருக ராஜா தானே யமராஜா போல அத்வானமான அந்த இடத்தில் நடந்து குகைக்குள் நுழைவதை பார்த்தான். ராஜ சிங்கமான ஜயாபீடன், நிஜ சிங்கத்தை அழைப்பது போல ஓசையிட்டான். காதுகள் உயர்ந்து நிலைத்து நிற்க, வாயை பிளந்தபடி, அதன் பிடரிகள் சிலிர்க்க, கண்கள் நெருப்பை உமிழ்வது போல பிரகாசிக்க, முன் தள்ளியது போன்ற உடல் வேகமாக கர்ஜித்தபடி அருகில் வந்தது. தன் எதிரில் வந்தவுடன் கூர்மையான ஆயுதத்தால் அதன் மார்பில் குத்தினான். விழுந்த விலங்கின் திறந்த வாய் பள்ளம் போல இருக்க அதில் கையை விட்டு முகத்தை பிளந்து மிருக ராஜனை உயிரிழக்கச் செய்தான். ரத்தம் பெருக, தான் அடித்து பிளக்கும் யானையின் மஸ்தகத்திலிருந்து வெளி வரும் சிவந்த ரத்தம் போலவே இருந்ததை அறிந்ததோ, இல்லையோ, அந்த ஒரு அடியிலேயே உயிரை இழந்து விழுந்தது. அந்த போராட்டத்தில் தன் தோளில் பட்ட காயத்திற்கு ஒரு துணியால் கட்டு போட்டுக் கொண்டு தூங்கி விட்டான்.
மறுநாள் ஜயந்தன் என்ற அந்த நாட்டு அரசன் இதைக் கேள்விப் பட்டு மிகுந்த வியப்புடன் அதைக் காண வந்தான். பயங்கரமான வன விலங்கு, அதை ஒரே அடியில் வீழ்த்தியவன் சாதாரண மனிதன் அல்ல அதிசய பிறவி என்று நினைத்தான். விழுந்த விலங்கின் வாயில் பற்களுக்கிடையில் கேயூரம் என்ற ஆபரணம் இருந்தது. அதில் ஸ்ரீ ஜயாபீடன் என்ற பெயரை படித்து மேலும் வியந்தான். உடன் வந்தவர்களுடன் ஆலோசித்தான். யார் இந்த அரசன்? எங்கிருந்து வந்தான் என்பது போன்ற கேள்விகள் அனைவருக்கும் வந்தது. எதற்கோ அனைவரும் பயந்தனர். ஜயந்தன் அவர்களை அதட்டி, இது என்ன நம் பெரிய இடர் தீர்த்தவன், மகிழ வேண்டிய சமயத்தில் இது என்ன அறிவின்மை என்றான். ஜயாபீடன் என்ற அரசன் நல்ல வீரன். புஜ பலம் உடையவன் என கேட்டிருக்கிறேன். ஏதோ காரணமாக தனிமையில் சுற்றுபவனாக இங்கு வந்திருக்க வேண்டும். 144/398
அரசகுமாரன், கல்லடன் – (ஏதோ ஒரு பெயர்) – அவனை மகன் இல்லாத நான் என் மகள் கல்யாண தேவியை மணமுடித்துக் கொடுத்து என் வம்சம் விளங்கச் செய்வேன். என் மருமகனாக என் வம்சம் விளங்கச் செய்வேன் என்ற அறிவித்தான். அதனால் தேடுங்கள். நானே தேடிச் சென்ற ரத்னங்களின் புதையல் என் வீட்டு வாசலிலேயே கிடைத்து விட்டது போல மகிழ்கிறேன். புது மக்கள் அவன் சொல்லில் இருந்த பரிதவிப்பையும், நம் பொறுப்பு அந்த வன விலங்கை அடக்குவது, அதைச் செய்யாமல் விட்ட தவறு. எங்கிருந்தோ வந்தவன் தனியாக எதிர்த்து நின்றிருக்கிறான், நலமாக இருக்க வேண்டுமே என்ற கவலை என்ற அனைத்தும் இந்த அறிவிப்பில் இருந்ததை உணர்ந்தார்கள்.
கமலாவின் வீட்டில் இருக்கிறான் என்ற செய்தியை சில பெண்கள் சொன்னவுடன் அரசன் மந்திரிகளையும், அந்த:புரத்து பெண்களையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றான். தன் வரையில் நிச்சயித்து விட்ட மகளின் திருமணம், அதற்கு இணையான கோலாகலத்துடன் அந்த கூட்டம் புறப்பட்டது. தானே அரச வாழ்வை துறந்து உலகியலை அறிய யாத்திரை வந்தவன், அரசனின் விருப்பமும், மக்களின் ஆதரவுடன் அவர் அளித்த மகள் கல்யாண தேவியை ஏற்றுக் கொண்டான். தன் ஆயுதங்களோ, படை வீரர்களோ அருகில் இல்லாத போதும் ஐந்து கௌட ராஜகுமாரர்களை வென்று மாமனாரின் மதிப்பில் உயர்ந்தான்.
காஸ்மீர ராஜ்யத்தின் முக்ய மந்திரியான மித்ர சர்மா, தன் மகன் தேவ சர்மா என்பவனை பொறுக்கி எடுத்த வீரர்களுடன் ஜயாபீடனை ராஜ மரியாதைகளுடன் தன் ராஜ்யத்திற்கு அழைத்துவர யசோ வர்மன் பாலித்த கன்யாகுப்ஜத்தை வென்ற சமயம் அவனுடைய பாட்டனார் லலிதாதித்யா கைப்பற்றிய அரியாசனம் – தற்சமயம் அது காஸ்மீர அரச அடையாளமாக வெற்றிச் சின்னமாக அறியப்பட்டது. அதை அனுப்பி இருந்தார். அதில் அமர்ந்து தன் தேசத்தை பரி பாலிக்க கிளம்பினான். ஜய ஸ்ரீ – வெற்றி என்ற செல்வத்தை அடைந்தான், பின்னால் அரச குமாரியை, நாட்டிய கலையரசி என்ற இரு பெண்களுடன் ஜயா பீடனை கன்யாகுப்ஜ அரசன் ஜயந்தன் வழியனுப்பினான். வெற்றி வீரனாக திரும்பி வந்து தன் ராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொண்டான்.
ஜஜ்ஜன் -சுஷ்கலத்ரா என்ற ஒரு தேசத்து அரசன் ஜஜ்ஜா என்பவன் முற்றுகையிட்டு போருக்கு அழைத்தான். பல நாட்கள் தொடர்ந்து அந்த முற்றுகை நீடித்தது. ஜயாபீடன் தன் பிரஜைகளின் அன்புக்கு பாத்திரமானவன் ஆனதால் அவர்கள் ஜஜ்ஜாவை தோற்கடிக்க தாங்களும் உதவினர். கிராமத்து பலவானான ஒருவனை அழைத்து தந்திரமாக ஜஜ்ஜாவை விரட்ட ஒரு யோசனை செய்தனர். அட்டகாசமாக சப்தமிட்டபடி ஸ்ரீ தேவன் என்ற அந்த பயில்வான், யாரிங்கே ஜஜ்ஜன் என அழைத்தபடி முற்றுகையிட்டிருந்த சைன்யத்தின் நடுவில் வந்தான். பல நாட்களாக நடந்த முற்றுகை, களைத்து போய் இருந்த வீரர்கள் நடுவில் குதிரையில் அமர்ந்த்திருந்தவனை சுட்டிக் காட்டினர். அவனோ தாகம் தாங்காமல் தன் பொன் கலயத்தில் இருந்து நீரை குடித்துக் கொண்டிருந்தான். இவனா என்று கேட்டபடி பயில்வான் ஸ்ரீ தேவன் தான் இருந்த இடத்தில் இருந்தே ஒரு கல்லை குறி பார்த்து ஜஜ்ஜாவின் மேல் அடித்தான். அந்த அளவு தூரத்திலிருந்து வேகமாக வந்து மேலே விழுந்த சிறு கல்லே அவன் மடிந்து விழப் போதுமாக இருந்தது. ‘என் தாய் ஆசீர்வதித்து அனுப்பினாள். நான் நமது அரசனுக்காக போரில் பங்கு கொள்ளப் போகிறேன் – சீக்கிரம் உணவைக் கொடு என்று யாசித்தேன். அவள் சிரித்தாள். என்னால் முடியாது என்றா நினைக்கிறாய். இதோ பார், நான் எதிரி அரசனை அழித்து விட்டு வருகிறேன் என்று ஸுளுரைத்து விட்டு வந்தேன்.’ என்றான். .478
அடி பட்டு குதிரையில் இருந்து தரையில் கிடந்த ஜ ஜ்ஜனைப் பார்த்து பயந்த மற்ற போர் வீர்கள் அவனை அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டனர். ஜி ஜ்ஜா தான் கடந்த மூன்று ஆண்டுகளாக பலரை ஏமாற்றி ஜயித்த ராஜ்யம், அதனால் எப்பொழுதும் எந்த எதிரி தாக்குவானோ என்று கவலையுடனேயே இருந்தவன் அதன் பின் தலை எடுக்கவேயில்லை. ஜயாபீடன் தன் தேசத்தை திரும்பப் பெற்றவனாக, தன் வழியில் நேற்மையாகவும், தன் நாட்டு மக்கள் நன்மையே கருதி செயல் படுபவனாகவும் ராஜ்யத்தை நிர்வகித்தான். வியாபாரிகள் முன் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றினாலும், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரனையாக இல்லாவிட்டாலும், தன் பிரஜைகளை வருத்தி எடுத்து தனக்கு செல்வம் சேர்க்கும் அரசனும் இப்படித்தான் விழுவார்கள்.
கல்யாண தேவி என்ற மனைவியும் அனுசரனையாக இருந்தாள். அவள் வந்தபின் எங்கும் கல்யாணம் – நன்மையே என்று நினைத்தான். அவள் பெயரில் கல்யாணபுரம் என்ற நகரத்தை உருவாக்கினான். மல்ஹணபுரம் என்ற இடத்தில் விபுல கேசவன் என்ற பெயரில் என்ற பிரதிஷ்டை செய்து ஒரு கோவிலையும் கட்டினான். மற்றொரு மனைவி கமலா என்ற பெயரில் கமலபுரம் என்பதை உருவாக்கி அதன் பிரதான தேவியாக – கல்யாண தேவி என்று அழைத்தான். .
காஸ்யபர் காலத்தில் விதஸ்தா இருந்த து போலவே, காஸ்மீர தேசம் கல்விக்கு முக்யத்வம் பெற்றது. முந்தைய அரசர்கள் நாட்டை விஸ்தரிப்பதிலேயே இருந்ததால் இந்த கல்வித் துறை பெரிதும் மந்தமாகி இருந்தது. எவரும் கல்வியறிவு பெறாமல் இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் பல வசதிகள் மாணவர்களூக்கு செய்து கொடுத்தான். அந்த தேசத்தில் தான் மகரிஷி பதஞ்சலி மஹா பாஷ்யம் எழுதினார். அது மற்ற ராஜ்யங்களில் பிரபலமாகி பலர் பண்டிதர்களாக இருந்தனர். அதனால் தகுதியான வித்வான்களை எங்கிருந்தாலும் வரவழைத்து, மஹா பாஷ்யம் படிக்க வழி செய்து கொடுத்தான். தானும் இலக்கண நூல்களை கற்றான். தானும் க்ஷீர என்ற பெயருடைய சிறந்த வித்வானிடம் இலக்கணம் படித்தான். (க்ஷீரஸ்வாமின் என்று அழைப்பர். இலக்கணத்தில் புலமை இவருடைய தனிப்பட்ட சிறப்பு பாண்ணியின் இலக்கண சூத்திரங்களை தெளிவாக விளக்கி விவரித்து பல நூல்கள் எழுதியிருக்கிறார். அமரகோச என்ற நூல் சம்ஸ்க்ருத பதங்கள்-வார்த்தைகள் -அதன் பொருள் பற்றிய நூல்.- அதற்கு உரை எழுதியவர். அபிமன்யு என்ற காஸ்மீர அரசனிடம் இருந்து பள்ளி மாணவர்களுக்கான இலக்கண நூலை எளிமையாக்கி எழுதிய முதல் அறிஞர். அவர் எழுதியதில் ஒரு பகுதி மட்டுமே கிடைத்து அனந்த தத்தா என்பவர் உரையுடன் வெளியிட்டது மட்டுமே கிடைத்துள்ளது என்பர்) எந்த அரசனும் தன்னை விட அதிகமாக அறிவாளியாகவோ திறமைசாலியாகவோ இருக்க விடவில்லை. தெளிவான கொள்கையும், தூய்மையான எண்ணமும் அவனை சிறந்த அரசனாக, அறிவாளியாக, வீரனாக ஆக்கியது. ராஜா என்பதை விட பண்டிதன் என்பதற்கு அதிக மதிப்பு இருந்த காலம். அதனால் பண்டிதர்களுடன் அதிக நேறம், கற்பதிலும் அவர்களுடன் உரையாடுவதிலும் செலவழித்தான். அதனால் மற்ற எல்லா சிறப்புகளை விட சிறந்த கல்வி கற்ற பண்டிதன் என்பதாக பிற்காலத்தில் புகழப் பட்டான்.
அந்த அரண்மனையில் அரசு அதிகாரிகளும், மதி மந்திரிகளையும் விட அதிகமாக கற்றவர்கள், ஆசாரியர்கள், பல துறையிலும் முன் நின்ற பெரியவர்களே நிறைந்து இருந்தனர். அதனால் ஜயாபீடனைக் காண வந்த சிற்றரசர்கள், இவர்களால் கவரப் பட்டவர்களாக தாங்களும் அவர்களிடம் மாணவர்களாக சேர்ந்தனர். எந்த ஊரிலும் அறிவுடைய ஒருவர் இருப்பதாக தெரிய வந்தால் அவரை தேடிச் சென்று அழைத்து வந்தான். சுக்ர தந்தா என்பவர் நாட்டில் செல்வத்தையும், கொடை, போன்ற விஷயங்களையும் கவனித்து வந்தார். அந்த அமைப்புகளுக்கு பக்தசாலா என்ற பெயர். அந்த வித்வான் சபா பதியாக லக்ஷக்கணக்கில் ஊதியம் பெற்றார். அவர் பெயருடன், தகுதியை குறிக்கும் ‘தக்கியா ‘ என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தான். . உத்படா என்ற மற்றொருவர். அவரையும் கௌரவித்து, சபையின் தலைவனாக ஆக்கினான். இவரும் ஏராளமான தின்னர – அந்த அரசின் நாணயம்- ஊதியமாக பெற்றார்.
தாமோதர குப்தர் என்பவர் குட்டனி மதம் என்ற நூலை எழுதியவர். பலி மகா ராஜாவுக்கு கவி-சுக்ரன் ஆசிரியராக இருந்தது போல என்கிறார் கவி கல்ஹணன். (குட்டனி மதம்- the thoughts of procuress- கொள் முதல், வழக்குகளும் தீர்வுகளும் – இவை சம்பந்தமான விரிவான விளக்கங்கள்)
மனோரதன், சுக்லதத்தன், சடகன், சந்திமான், வாமன என்பவரும் மற்றும் பல கவிகள் மந்திரிகளாக இருந்தனர். (வாமன என்பவர் காவ்யாலங்கார விருத்தி என்பதை எழுதியவர். காவ்யங்களின் அமைப்பு பற்றிய நூல். மனோரதனின் சுபாஷிதாவலி என்பதை வல்லபதேவர் என்பவர் தன் நூலில் மேற்கோள் காட்டி குறிப்பிட்டிருக்கிறார். மற்ற மூவரையும் பற்றி தெரியவில்லை)
இவர்கள் அனைவரும் கவிகளே. அரச சபையில் இவ்வாறு பல அறிஞர்கள் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சாதனைகளால் புகழ் பெற்றவர்களே, அவர்கள் மூலம் அரசன் பல கலைகளை, பல வேத சாஸ்திரங்களை, நீதிகளை அறிந்து கொண்டான். இதில் அவன் மனமுவந்து ஈடுபட்டு ரசித்து மகிழ்ந்தான். வெறும் உணவும் ஆடம்பரம் மட்டுமா அரச வாழ்வு. காளை மாடு கண்ணும் தெரியாமல் கிடைத்ததை மேய்வது போல கணக்கில்லாத அரசர்கள் வாழ்கிறார்களே அவர்கள் அறிவார்களா இந்த அனுபவத்தின் உயர்வை. மயங்கி கிடப்பவனுக்கு கரும்பு ரஸத்தை ஊட்டினால் என்ன உணருவான்? இறந்த உடலில் வாசனை மிக்க மலர் மாலைகளால் அலங்கரித்து என்ன பயன்?
மேற்கு திசையில் ஸூரியோதயம் போல கனவு கண்டால், அந்த திசையில் யாரோ தர்மம் அறிந்த உயர்ந்த ஆசாரியர் இருக்கிறார் என்று நினைப்பானாம்.
கலா ரசனையும், கல்வி அறிவும் தரும் சுகானுபவம் கற்றவனுக்கே தெரியும். (கற்றோரை கற்றோரே காமுறுவர்) சபையில் எந்த வித்வான் வந்தாலும் மனமார வரவேற்று பாராட்டுவான்.
அரசனே மந்த்ராலோசனையிலும், விக்ரமத்திலும் சிறந்தவனாக இருந்ததால் இரண்டு முகம் பார்க்கும் கண்ணாடிகளுக்கு இடையில் நின்றால் அவை பலவாக காட்டுவது போல இருந்தானாம்.
(கோவில்களில் இப்படி கண்ணாடி அறை இருக்கும். அதில் நடுவில் உள்ள மூர்த்தி பலவாகத் தெரியும்.)
ஒரு சமயம் தன் சேவகர்களுக்கு ஆணையிட்டான். லங்கேஸ்வரனின் நாட்டில் இருந்து ஐந்து ராக்ஷஸர்களை அழைத்து வா என்றானாம். சம்பந்தப் பட்ட அதிகாரி நாட்டின் அமைதியையும், போர் முறைகளையும் கவனித்து வந்தவர். இது என்ன விபரீதம் என்று நினைத்தாலும் அரச ஆணை எனவே, கிளம்பினார். சமுத்திரத்தை கடக்க படகில் சென்ற பொழுது தவறி விழுந்து, ஒரு திமிங்கிலத்தின் வாயில் விழுந்தாராம். செய்வதறியாமல் உள்ளேயே இருந்தவர் யோசித்து அதன் வாய் வழியாகவே வெளி வந்து விட்டாராம். அவரும் ஸ்ரீ ராம பக்தர். யதேச்சையாக கரையேறிய இடம் இலங்கையாகவே இருக்க, விபீஷண ராஜாவின் சேவகர்கள் அவரை விசாரித்த பின், அரசனிடம் அழைத்துச் சென்றனர். மிக்க மகிழ்ச்சியுடன் காஸ்மீர அரசனின் தூதுவாக்கியம் இருந்த கடிதத்தை விபீஷண ராஜாவிடம் கொடுத்தார். விபீஷணனும் வழக்கமாக தூதுவர்களுக்கு செய்யும் உபசாரங்கள், தனம் இவைகளைக் கொடுத்து, அவர்கள் வேண்டிய ஐந்து ராக்ஷஸர்களையும் தூதுவனுடன் அனுப்பி வைத்தான்.
ஜயாபீடன் அவர்களுக்காக, கோட்டையுடன் கூடிய ஒரு ஜயபுர என்ற இடத்தில் தங்க வைத்து, அவர்கள் உதவியுடனேயே, நீர் வசதிக்காக ஏரிகள், மற்றும் தேவலோகத்துக்கு சமமான வசதிகளுடன் தனி நகரமாக ஆக்கி கொடுத்தான்.
மூன்று பெரிய புத்தர் சிலைகளுடன் விஹாரம் என்பதைக் கட்டிக் கொடுத்தான். ஸ்ரீ நகரத்தின் நடுவில் ஜயாதேவி என்ற தேவி ஆலயமும் நிர்மாணித்தான். புண்ணிய கர்மா – நற்காரியங்களைச் செய்பவன் என்ற பெயர் பெற்றான். அதே இடத்தில் சேஷ சாயி யாக – பாம்பணையில் துயிலும் மகா விஷ்ணுவாக கேசவ ஆலயமும் நிர்மாணித்தான். அந்த சன்னிதியைக் கண்ட பகவான் விஷ்ணு நிச்சயம் தன் இருப்பிடமான வைகுண்டத்தை விட்டு வந்து விடுவாரோ எனும்படி சிறப்பாக கட்டி முடித்தான். அந்த ராக்ஷஸர்களின் சக்தியை பயன் படுத்திக் கொண்டு மேலும் சில காரியங்களை செய்து கொண்டான் என்று சொல்வர்.
ஒரு நாள் கனவில், நீர் (சாம்பல் ஏரி) நிலையின் முடிவில் துவாரகா த்வாரவதீ – என்ற இடத்தை அதே போல கட்டு என்று கம்சாரியான பகவானே கட்டனையிட்டது போல் இருக்கவும், அதே போல அழகிய துவாரவதீ என்ற நகரத்தை கட்டினான்.
கோட்டையும் வெளி பிராகாரங்களும் துவாரவதியாகவும் உள் கட்டுமானகள் தேவி ஜாயா தேவியின் ஆலயமாகவும் இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
ஜய தத்தா என்ற மந்திரி ஐந்து விதமான பாட்டங்கள் பெற்று வித்வானாக இருந்தவர். அங்கு ஒரு பாடசாலையை நிறுவினார். அது ஜய த த்தா மடம் எனப்படுகிறது. அரண்மனையின் நிர்வாக அதிகாரியாக இருந்த ப்ரமோத என்பவர் மதுரா நகர அரசனாக இருந்தவர். அவர் மருமகன். அசன். அந்த மருமகன் சிவபெருமானுக்காக அசேஸ்வரன் என்ற பெயரில் ஒரு சிவன் கோவிலை கட்டினான்.
மறுமுறை, தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டு திக் விஜயம் என்று புறப்பட்டான். அலை வீசும் சமுத்திரம் போல படை வீரர்கள் தொடர்ந்தனர். யானைப் படை நீண்ட வரிசையாக உடன் சென்றது. கிழக்கு சமுத்திரக் கரையை அடைந்த பின்னும் இந்த வரிசை கிளம்பிய இடத்தில் ஒரு முனை இருந்ததாம். பகீரதனின் கங்கையை கொண்டு வந்த செயலுக்கு இணையாக ஹிமாசலத்திலிருந்து கங்கை பிரவாகமாக வெளி வந்து நிலத்தில் நதியாக ஓடி சமுத்திரத்தை அடைவது போலவே அந்த படை இருந்ததாம்.
தன் பெயரை மாற்றி விநயாதித்யா என்று சொல்லிக் கொண்டான். சிறப்பு பாதுகாவலர்கள், ஏவலர்கள், மற்றும் இரவு காவல் புரியும் வீரர்கள் ஸூழ, மும்முனியும் உடன் வர தங்குவதற்காக ஏற்படுத்திய தாற்காலிக கூடாரத்திலிருந்து வெளியில் வந்து சுற்றிப் பார்க்கலானான். அந்த கிழக்கு பிரதேசத்தை வினயாதித்ய புரம் என்றும் அறிவித்தான்.
சில சமயம், சக்தி வாய்ந்த பேரரசன், அனுபவம் மிக்க ஆளுமை உள்லவன், கற்றறிந்தும் கேட்டும் அறிவை வளர்த்துக் கொண்டவன், சாதாரண மக்களின் துணிச்சலான சாகசம் போல ஏதோ செய்யப் போய், அனாவசியமாக துன்பத்தில் மாட்டிக் கொள்வதும் உண்டு. அது தான் நடந்தது. அளவுக்கு அதிகமாக தன்னம்பிக்கையுடன், பீம சேனன் என்ற அந்த நாட்டு அரசனின் கோட்டைக்குள், முன் அறிவிப்பு இன்றி சில துறவிகளுடன், தானும் துறவியாக வேடமிட்டுக் கொண்டு நுழைந்து விட்டான். தேசத்தின் கிழக்கு பிரதேசத்தின் பிரசித்தமான மகா ராஜா பீமசேமனின் அரசு.
ஸ்ரீ- செல்வத்தின் அதிபதி என்பதில் தனம், ராஜ்யம் அல்லது பெரும் பதவி, நல்வாழ்வு, அமைதியான இல்லறம், மக்கட் பேறு இவையனைத்தும் அவள் அருளே. அவளுக்கு சந்தேகம் வந்து விட்டதாம் –தான் தேர்ந்தெடுத்து வாரி வழங்கியதால் உயர் நிலைக்கு வந்தவன் – அவனை சோதித்து பார்க்கலாம் என்று நினைத்தாளோ – அதனால் தான் நேர் வழியிலேயே செல்பவன் இப்படி தவறான தேவையில்லாத செயலை செய்வானேன் என்று கவி அங்கலாய்க்கிறார்.
ஓசையின்றி கோட்டையின் உள் பகுதியில் சென்று கொண்டிருந்தவர்களை ஜஜ்ஜன் என்ற கோட்டை காவலனின் சகோதரன், சித்தன் என்பவன் கண்டு கொண்டு அரசனிடம் தெரிவித்தான். பீம சேனன் தானே யதேச்சையாக வந்தது போல வந்து கைகளாலேயே அவர்களை சிறை பிடித்து விட்டான். பழமையான புராண காலத்து நாகராஜன் நகுஷன் மகா பாரத பீமனை பற்றியது போல எனும்படி பயங்கர பராக்கிரமம் உடையவன் அந்த அரசன் பீம சேனன். ஆற்றல் வாய்ந்த அரசர்களுக்கும் முன்னோடியாக இருந்த ஜயாபீடன் அந்த பிடியின் வலுவை உணர்ந்து கொண்டான். தெய்வச் செயல் தான் என் தலை தாழச் செய்து விட்டது என்றும் உணர்ந்தான். இயல்பான விவேகம் – எந்த சிக்கலிலும் தீர்வு காண அறிந்த ஜயாபீடன், அடுத்து என்ன செய்வது என்பதை தீர்மானித்துக் கொண்டு தலை நிமிர்ந்து நின்றான்.
அதேசமயம் அந்த நகரில் சிலந்தி ஊர்வதால் வரும் ஒரு தோல் வியாதியால் திடுமென மக்கள் பாதிக்கப் பட்டனர். அரசவையில் அந்த விஷயம் மிக முக்கியமான அறிவிப்பாக வெளி வந்தது. ( சில வகை சிலந்திகள் மனித உடலில் பட்டால் தோல் தடிக்கும், அரிப்பு உண்டாகும்.) அது தொற்று நோயாக பரவும் என்பதால் பேராபத்து என்று அனைவரும் திகைத்தார்கள். பீம சேன ராஜாவிடம் சொல்ல அரசு ஊழியர்கள் கூட்டமாக வந்து விட்டனர். அந்த தேசத்தின் இயற்கை சூழ்நிலையும் இப்படி காட்டுப் பூச்சிகளான சிலந்திகள் நிரம்பி இருக்க காரணம்.
ஜயா பீடன் யோசித்தான். தன்னுடன் வந்த ஒரு சிப்பந்தியிடம், சில பொருட்களையும், அது சம்பந்தமான விவரங்கள் உள்ள நூல்களையும் வாங்கி வர பணித்தான். பித்தம் அதிகரிக்கும் பொருட்களை உண்பதால் பித்தம் அதிகரித்து வரும் ஜுரம்- காய்ச்சல் வரும். பின் தோலில் கொப்புளங்கள் வரும். அதற்கான மருந்தையும் அறிந்து கொண்டான். வஜ்ர வ்ருக்ஷம் என்பதன் பால் உடலில் பட்டால் இந்த சிலந்தி கடி போலவே மேல் தோலில் தடிப்பு வரும். தானே அந்த பாலை உடலில் தடவிக் கோண்டு தடிப்புகளோடு காட்சி அளித்தான். அதைக் கண்ட அரச சிப்பந்திகள் அவனையும் அவன் உடன் வந்தவர்களையும் கோட்டையை விட்டு வெளியேறச் செய்து விட்டனர். தப்பித்தோம் என்று வெளியில் வந்த பின் அதற்கான முறிவு மருந்துகளால் தன்னை குணப்படுத்திக் கொண்டு விட்டான்.
‘வஜ்ர வ்ருக்ஷம் என்ற தாவரம் (மூன்று பட்டைகளும் முட்களும் நிறைந்த தண்டு மட்டுமே, அதன் அழகுக்காக வீடுகளில் அலங்காரமாக வைப்பர்.) வேரோ, துளிர்களோ மற்ற தாவரங்களைப் போல பூவோ இல்லாதது என்று மட்டும் அறிந்தவர்கள், அது திடுமென பழங்களைத் தருவதையும் அதன் குணங்களையும் அறிய மாட்டார்கள். அது போல , வெளீப் பார்வைக்கு அறிவிலி போலத் தோன்றும் ஒரு சிலர் மிகப் பெரிய செயல்களை அனாயாசமாக செய்து வெற்றி பெறுவதும் உண்டு. ‘
நேபாள தேசத்து அரசன் ஆராமுடி என்பவன், மந்திர தந்திரங்கள் அறிந்தவன், மாயா ஜாலம் எனும் வித்தையும் அறிந்தவன். ஜயாபீடன் அவனுடைய அரசவைக்குள் நுழைந்த பொழுத்து வணக்கம் கூட சொல்லாமல் அரசவையை விட்டு தன் பரிவாரங்கள் படையுடன் வெளியேறி விட்டான். போரிட்டு வெற்றி பெறுவதே நோக்கமாக வந்த ஜயா பீடனும் அதற்கு மேல் அங்கு தங்கவும் இல்லை. அடுத்த தேசம் சென்றான். 150/398
தனக்கு நேருக்கு நேர் எதிர்த்து நின்று போரிடும் வீரனைத் தேடிக் கொண்டே படையுடன் அருகில் இருந்த இடங்களில் சுற்றி அலைந்தான். விதி, கழுகு புறாவை வேட்டையாடுவது போன்ற மன நிலை வாய்த்து விட்டது போலும். ஓரிடத்தில் படஹ வாத்யங்களுடன் ஆராமுடி நின்றிருப்பதைக் கண்டான். உடனே சினத்துடன் இருவருக்கும் இடையில் இருந்த நதியில் இறங்கி நடந்து கடக்க முயன்றான். நதியின் முழங்கால் அளவு நீரில் நின்றவன் திடுமென நதியில் வெள்ளம் பெருகி வருவதை உணர்ந்தான். கழுத்தளவு நீர், அதன் பின் அடித்துச் செல்லப் பட்டான். போர் வீர்களும் யானைகளும் குதிரைகளுமாக இருந்த சைன்யத்தினர் செய்வதறியாது திகைத்தனர். கண் முன்னால் நீரில் நின்றவன் அடித்துச் செல்லப் படுவதைக் கண்டு அலறினர். ஒரு சிலர் நீரில் குதித்து துளாவி தேடினர். த்ருதி என்ற குலத்தினர் தோல் பதனிடும் தொழில்கள் செய்பவர்கள். அவர்களை அழைத்து வந்து தேடச் செய்தனர். அந்த பகுதிகளில் எருமைத் தோலுக்காக அவ்விதமாக நீரில் போட்டு ஊறவைத்து எடுப்பது வழக்கமாம்.
அவர்களின் கூக்குரலைக் அப்பொழுதுதான் கேட்டவன் போல அந்த எதிரி அரசன் அவசரமாக வந்தான். அவனுடைய ஆட்கள் மிருகங்களின் தோலால் ஆன உடையை அணிந்து கொண்டு வெள்ளத்தில் இறங்கி தேடி ஜயாபீடனின் உடலை எடுத்துக் கொண்டு வந்தனர். ஆராமுடி அந்த உடலை கயிறால் கட்டி எடுத்துக் கொண்டு வெற்றி ,முழக்கத்துடன் உத்சவமாக கொண்டு சென்றான். அந்த கூட்டம் ஆடிப் பாடி விருந்துகளுடன் வெற்றியைக் கொண்டாடினர்.
தெய்வத்திற்கும், நீர் நிறைந்த நதி, கடல் முதலியவைகளும் ஒன்றே. இவைகளுக்கு எந்த நியமமும் இருப்பதில்லை. எந்த சமயம் எப்படி செயல் படும், எது நடக்கும் என்பதை யாரால் சொல்ல முடியும்? க்ஷண நேரத்தில் விரும்பத் தகாத ஒரு விஷயம், கண் முன்னாலேயே நடந்து முடிந்து விட்டதே. தகிக்கும் வெய்யிலில் அலைந்து களைத்து மர நிழலில் ஒதுங்கியவன், திடுமென மரத்தின் மேல் விழுந்த இடியால் மரணமடைவதும் உண்டு. கல்லால் ஆன திடமான மாளிகையில் வாழ்ந்தவன், சுற்றிலும் அவனை பாதுகாக்கவே ஏராளமான நபர்கள் ஸூழ வாழ்ந்தவன், காஸ்மீர தேசத்தின் புகழ் பெற்ற ராஜா, இப்படி மூழ்கி இறப்பானா? உடன் வந்த பரிவாரங்கள் நம்ப முடியாமல் தவித்தனர்.
ஆராமுடி, காளகண்டிகா என்ற இடத்தில் அந்த உடலை வைத்து காவல் வீரர்களை நிறுத்தி வைத்திருந்தான்.
வாழ் நாளில், எண்ணற்ற கலைஞர்கள் அவனை வானத்து நிலவை விட சிறந்தவன் என்றனர். ஆற்றல் மிக்கவர்கள் ஆதவனை விட மேலான பராக்ரமம் உள்ளவன் இந்த அரசன் என்றனர். அவனுக்கு இப்படி ஒரு முடிவா? ஏற்க முடியாமல் தங்களுக்குள் யோசித்தனர். நதியைக் கண்டவுடனே ஜயாபீடன் மகிழ்ச்சியுடன் சில பாடல்களை பாடியதை நினவு படுத்திக் கொண்டனர். இதே இடத்தில் அரசன் ஜயாபீடன் இருந்தால் எப்படி யோசிப்பான், என்ன உபாயம் செய்வான் என நினைத்தபடி அந்த உடலையே பார்த்தபடி நின்றிருந்தனர். மந்திரிகளின் மத்தியில் இருந்து தேவசர்மா எழுந்தான். அவன் அரசனிடம் மிகுந்த விஸ்வாசம் வைத்திருந்தவன், அதனால் பொறுக்க மாட்டாமல் வருந்தினாலும் தன்னை சமாளித்துக் கொண்டு சமயோசிதமாக ஒரு திட்டம் வகுத்தான்.
அரமுடனுக்கு சில தூதுவர்களை அனுப்பினான். பிரியமாக பேசுங்கள், நம்பும்படி சொல்லுங்கள் என்றவன் விவரித்துச் சொன்னான். ஜயாபீடனின் செல்வம் காஸ்மீரத்தில் ஏராளமாக உள்ளது. அதிலிருந்து உனக்கு வேண்டியதைத் தருகிறேன் என்று ஆசைக் காட்டுங்கள். அராமுடனின் அந்தரங்க அதிகாரிகள் சிலரை இங்கு அழைத்து வாருங்கள் என்றான். நம்பகமான காவல் வீரர்கள் கால கண்டிகா வில் அரசனை பாதுகாக்க வைத்து விட்டு சிறு படையுடன் நேபாள தேசத்தை நோக்கி சென்ற தேவ சர்மாவை அராமுடியின் அந்தரங்க அதிகாரிகள் சிலர் அராமுடியின் சபைக்கு அழைத்துச் சென்றனர். தூதுவனின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய அராமுடியும் மரியாதையாக வரவேற்று, ஆசனம் அளித்தான். விருந்தோம்பலுக்குப் பின், மறு நாள் அவர்கள் இருவர் மட்டுமாக பேசி மேற்கொண்டு செய்ய வேண்டியதை திட்டமிடுவதாக முடிவு எடுத்தனர். அதன் பின் அரசன் தேவ சர்மாவுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு தன்னறைக்குச் சென்று விட்டான்.
அறைக்குள் சென்ற அரசனை பின் தொடர்ந்த தேவ சர்மா ஜாயாபீடன் ஏராளமான செல்வத்தை தன் நம்பகமான அதிகாரிகளிடம் பாதுகாப்பாக வைத்திருக்கிறான். அவர்களை நான் அறிவேன். மகாராஜா சம்மதித்தால், நான் அவனிடம் ‘ உன்னை விடுவிக்க என்னால் முடியும், அந்த செல்வத்தில் ஒரு பகுதியை எனக்கு கொடு’ என்று சொல்லி பொக்கிஷம் எங்கு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு வருகிறேன் என்றான். அதனால் தான் சிலரை மட்டுமே என்னுடன் அழைத்து வந்தேன். ஜயாபீட அரசனை சிறை வைத்துள்ள இடத்தில் தான் அவர்களும் இருக்கிறார்கள் என்றான்.
இப்படி அரசன் அருகில் செல்ல ஒரு ஏற்பாட்டைச் செய்து கொண்டு காலகண்டிகா வை நோக்கி வேகமாக வந்தான். மற்றவர்களை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு தான் மட்டுமாக அருகில் சென்றான்.
அரசனை பார்த்து. ‘மகாராஜா! நீங்கள் தான் சமயோசிதமாக தப்ப வழி அறிவீர்கள். சீக்கிரம். ஒரு வழி சொல்லுங்கள், என்றான். அரசனோ’மகா மந்திரி! என்ன இது? உங்கள் உயிரை பணயம் வைத்து இங்கு வந்துள்ளீர்கள். ஆயுதமும் இல்லாமல் திடுமென என்ன செய்வேன்? தேவசர்மா ‘உங்களால் தான் முடியும். இந்த ஜன்னலில் இருந்து குதித்து தப்பலாம், எது வானாலும் யோசியுங்கள்’
நீரில் ஊறி உப்பிப் போன உடல் ஜன்னல் வழியாக நதியில் குதிப்பதா? முடியுமா? இந்த உயரத்திலிருந்து விழுந்தால் பிழைக்க முடியுமா? என்ற வகையில் யோசித்தான். கோழையாக தப்புவதா? அராமுடிக்கு சரியான பதிலடி கொடுத்து விட்டு தான் மறு காரியம் என்று யோசித்தான். தேவ சர்மாவிடம் ஒரு நாழிகை வெளியில் இரு. திரும்பி வரும் முன் நதியை, அதன் ஆழத்தை, சுற்றுப் புறத்தை ஆராய்ந்து வைத்துக் கொள். எனவே தேவ சர்மாவும் வெளியில் நின்று பதட்டத்தை வெளிக் காட்டாமல் நின்றான். திரும்ப உள்ளே வந்தவன் திகைத்தான். ஒரு துணியால் ஜயாபீடனின் கழுத்தை சுற்றி இறுக்கி இருக்க, ஜயா பீடன் தன் உதிரத்தால் அந்த துணியில் எழுதியிருந்த வழிகாட்டி – எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை எழுதியிருப்பதைப் பார்த்தான். ‘மகா மந்திரி வெளியில் சென்று இறந்து விட்டான் என்று சொல்லி என்னை உன் முதுகில் வைத்துக் கொண்டு வெளியேறு. என் உடலை மிதக்கும் கட்டையாக உன் உடலுடன் சேர்த்து கட்டிக் கொள். வேகமாக சென்று நதியில் குதித்து விடு.’ புரிந்தும் புரியாமலும் தேவ சர்மா அதன்படியே நதியில் குதித்து நீரினுள் மூழ்கி நீந்தி அக்கரையை அடைந்தனர்.
அரசன் தேவ சர்மாவின் விஸ்வாசம் என்ற கடலில் மூழ்கி அதிசயித்தான். பின் நிஜமான நதியில் மூழ்கி நீந்தி அக்கரை அடைந்தான்.
படை வீரர்களும் அக்கரை வந்து சேர்ந்தனர். முற்றுகையிட்டு நேபாள அரசனையும், அவன் ராஜ குமாரனையும் சேர்த்து வெற்றி கொண்டு ஊரை விட்டு வெகு தூரம் சென்று விட்டிருந்தான். விடிந்த பின் தான் கைதி தப்பி விட்டதை காவல் வீர்கள் அறிந்தனர் . 580
அரசனுடன் வந்திருந்த படை வீரர்களும் வந்து மரண வாயிலிருந்து உயிருடன் மீண்டு வந்த தங்கள் அரசனை வாழ்த்தியும், வெற்றி கோஷமிட்டும் கொண்டாடினர். பன் முகமான இயற்கையின் வினோதங்கள் போலவே, கோடைக் காலம் வெய்யில் கொளுத்த தவிக்கும் சம நிலத்து மக்கள் ஒரு புறம், கடும் பனியால் முடங்கி கிடந்த இயல் வாழ்க்கை கோடை வெய்யிலில் பனி கரைந்து நீராக பெருகி வர இளம் காற்றும் வீச மலைப் பிரதேசங்களில் வாழ்வது சுகமான அனுபவமாக இருப்பது மறு புறம் என்பது நாம் அறிந்ததே. அதே போல ஜ ஜ்ஜா போன்ற அரச குலத்தினர் செய்த துரோகத்துக்கு முன் முக்ய மந்திரியின் மகன் தேவ சர்வாவின் தியாகம் மிகச் சிறந்தது என புகழ்ந்தனர். தன் உயிரையும் பணயம் வைத்து எதிரியின் கோட்டையிலிருந்து தங்கள் அரசனை சிறை மீட்டான் என்ற வரலாறு புகழ் பெற்றது. அவன் தந்தை மித்ர சர்மா பாக்யம் செய்தவர். அவரும் நாட்டின் நலனையே எண்ணினார், மகன் அதே கோட்டில் வந்து விட்டான் என்றனர். பானு என்ற ஸூரியனின் இருண்ட பக்கம் தான் சனைச்சரனுடையது. ரக்ஷா ரத்னம் என்று தேவ சர்மாவை கொண்டாடினர். அந்த மந்திரியின் பிரபலத்துக்கு முன் தான் அடைந்த செல்வமும் வெற்றியும் அதற்கான பெருமையை பெறவில்லை என்று அரசன் ஜயா பீடன் நினைத்தான். தோற்றோமோ என்ற ஐயமே மேலோங்கி நின்றது. புலன்களை வென்றவனாக தன்னை சொல்லிக் கொண்டான். நல்லாட்சியை அளித்தவன், வெற்றி வீரனாக வந்துள்ளான் என்பது இரண்டாம் பக்ஷமாயிறு. ( shrI -ஸ்த்ரீ ராஜ்யம் – 27 நக்ஷத்திரங்களும் மூன்று மூன்றாக பூமியுடன் சுற்றி வரும். ஆதவனின் பார்வைக்கு கீழ் வரும் பிரதேசங்களை ஆட்சி செய்யும் என ஜோதிட சாஸ்திரமாம். கிழக்கு இந்திய பகுதிகள், பூடான் முதலிய தேசங்கள், ஜோதிட சாஸ்திரத்தின் படி மூன்று, திருவோணம், அவிட்டம், சதயம், என்ற நக்ஷத்திரங்களின் ஆளுமையில் வருவதாகவும், அந்த நக்ஷத்திரங்களை பெண் பாலாக சொல்லப் படுவதால் அதன் அடிப்படையில், அந்த பிரதேசம் மக்கள் மத்தியில் ஸ்த்ரீ ராஜ்யமாக அழைக்கப் படலாயிற்று. மகா பாரத விராட் பர்வம்.) அந்த ராஜ்யத்தை வெற்றி கொண்டதால் தான் புலன்களை வென்று சாதனைகள் செய்யும் தபஸ்விகள் போல ஆனதாக அரசன் நினைத்து மகிழ்ந்தானாம். அந்த தேசத்தின் கொடி- கர்ணன் என்ற பாரத வீரன், அவன் உருவை பொறித்த கொடிகளுடன் அவன் ஸ்த்ரீ ராஜய்த்திலிருந்து வெளி வந்தான். வெற்றியடைந்தவன், தோற்ற நாட்டின் கொடியை கைப்பற்றி கொண்டு வருவது ஒரு வழக்கம். அதை தான் நிறுவிய கர்மஸ்தானம் – நியாயாலயம் என்ற கட்டிடத்தின் மேல் பறக்க விட்டான்.
தன்னுடைய திக்விஜயங்களின் செலவுக்காக கொண்டு சென்ற நிதியை, தனி பிரிவாக தனது பொக்கிஷ அறையில் வைத்தான். அது பிற்காலத்திலும் பிரயாணங்கள் , யாத்திரைகளுக்காகவே செலவழிக்கப் படும் என்று அறிவித்தான். நால் திசைகளிலும் கடல் சூழ்ந்த நாட்டையே தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தவனுக்கு தனியாக வேறு புகழ் மாலைகள் வேண்டுமா என்ன? (சமுத்திரங்களே அவன் நாட்டிற்கு முகம் பார்க்கும் அழகிய கண்ணாடிகளாக இருந்தனவாம்)
திரும்பவும் காஸ்மீர தேசத்திற்குள் நுழைந்தவன், முன் இருந்த சிற்றரசர்கள் வந்து வாழ்த்த வெகு காலம் சிறப்பாக தன் ராஜ்யத்தில் மன நிறைவோடு இருந்தான். தோற்ற நாடுகளில் இருந்து ஏராளமாக சேகரித்து கொண்டு வந்திருந்த நிதிகளை அனுபவித்தபடி வாழ்ந்தான்.
ஒரு நாள், கனவில் தன்னை சிறப்பாக அலங்கரித்துக் தேவன் போல காட்சியளித்த ஒரு உருவைக் கண்டான். நான் மஹா பத்மன் என்ற நாகேந்திரன். உங்கள் ராஜ்யத்தில் நானும் என் பரிவாரங்களும் சுகமாக வாழ்ந்து வருகிறோம். தென் தேசத்திலிருந்து வந்துள்ள ஒரு மந்திரவாதி, என்னை கொண்டு செல்ல விரும்புகிறான். அவன் தேசம் நீரின்றி வறண்டு விட்டதாம். என்னை அவனிடம் இருந்து காப்பாற்றுங்கள். பதிலுக்கு நான் இந்த உங்கள் ராஜ்யத்தில் சுவர்ண தாது நிறைந்த மலையை காட்டுகிறேன் என்றான்.
மறுநாள் வெளியில் புதிதாக ஒரு மனிதனைக் கண்ட அரச தூதர்கள் அந்த புது மனிதனை சந்தேகப்பட்டு அரசன் முன் கொண்டு வந்து நிறுத்தினர். அரசன் ஜயாபீடன் அவனை விசாரித்தான். ‘யார் நீ? எதற்கு இங்கு சுற்றுகிறாய்? என்ன தேவை? யாருடைய தூதன்? பயப்படாமல் சொல், உண்மையைச் சொன்னால் தப்புவாய், ‘
அவன் கனவில் நாகேந்திரன் மகா பத்மன் சொன்னதையே சொன்னான். வியந்த அரசன் மேலும் விவரமாக சொல்லச் சொன்னான். பல மைல்கள் தொலைவிலிருந்து வந்தவன், இங்குள்ள ஏரியில் வாழும் நாக ராஜனை எவ்வாறு கொண்டு போவாய்? அதுவும் சாதாரண நாகம் அல்ல. பல சிறப்பான சக்திகளைக் கொண்டது? தவிர நாகராஜன் எந்த விதத்தில் உங்கள் பிரதேசத்தை வளம் பெற செய்வான் என்று எதிர் பார்க்கிறாய்?
ராஜன்! என்னுடைய மந்திர சக்திகள் அமோகமானவை. ஆச்சர்யமாக இருக்கும். உங்கள் கண் முன்னால் செய்து காட்டுகிறேன் என்றவன், விதஸ்தா ஏரியை நோக்கி அரசன் முன் செல்ல பின் தொடர்ந்து சென்றான். சில மந்திரங்களை உச்சரித்தான். ஏரியின் நீர் வற்றி சேறாக தெரிந்தது. அதில் மனித முகம் கொண்ட சிறு நாகங்கள் நெளிந்து கொண்டிருக்கக் கண்டான். விதஸ்தா ஏரியில் நாங்கள் வசிப்பது தெரிந்த விஷயமே. அதில் ஏராளமான நாக குஞ்சுகள் இருப்பது புதிதல்ல. ராஜன்! இவைகளை நான் எடுத்துச் செல்லவா என்ற புதிய மனிதனின் குரல் கேட்டு தன் உணர்வு பெற்ற ஜயா பீடன், கூடாது என்று மறுத்து விட்டான். முன் போலவே விதஸ்தா நீர் நிரம்பி இருக்கும் படி செய் என்று ஆணையிட்டான். அவனை சமாதானமாக பேசி, நிறைய தனம் கொடுத்து அனுப்பி விட்டு யோசித்தான். மகா பத்ம நாகம் சொன்னபடி ஏன் இன்னும் சுவர்ண கிரி இருக்கும் இடம் காட்டவில்லை? அதே நினைவுடன் தூங்கியவனின் கனவில் அந்த நாக ராஜன் வந்தான். கோபத்துடன்’ என்ன உதவி செய்தாய் என்று சுவர்ண கிரியை காட்டுவேன். என் தேசம் இது பரதேசம் என்ற எண்ணமெல்லாம் உன் போன்ற மனிதர்களுக்குத் தான். அதே நினைவு அதே கொள்கை. காப்பாற்று என்று உன்னை சரணடைந்தேன். சமுத்திரம் எங்களுக்கு அடைக்கலம் கொடுக்கும், வெளியில் தெரியாமல் நாங்கள் வாழ்வோம். சமுத்திரத்தின் பெருந்தன்மை எங்கே, நீ எங்கே. . என்னைக் காட்டிக் கொடுத்து விட்டாய். எங்கள் பெண்களையும், சிறு குழந்தைகளையும் வெளிப்பட செய்து அவமானம் செய்து விட்டாய். எந்த முகத்தோடு என் மனைவியைப் பார்ப்பேன்? எங்களுக்கும் சுய கௌரவம் உண்டு. உன் விளையாட்டுப் பொருளாக எண்ணி விட்டாய். என்னைத் தான் சொல்ல வேண்டும். மகாராஜா, சாம்ராஜ்யதிபதி என்ற கர்வத்தில் திளைக்கும் அரசர்களும் மனிதர்களே. உயிர் உள்ள வரை தானே, மரணம் கூடவே வருவதை மறந்து தன் மனம் போன போக்கில் செல்லும் உன்னைப் போன்றவர்கள் சுய நலமிகள், தனக்கு செல்வம் வரும் என்றால் எதையும் செய்யத் துணிவார்கள்.
உன் போன்றவர்கள் செல்வ மதம் மித மிஞ்சி போன நிலையில் நியாயம், வாக்கு கொடுத்தால் அதை மீறக் கூடாது என்ற நற்குணங்களை கை விட்டவர்கள். உலகில் மற்ற உயிரினங்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. புது அனுபவம், இது வரை காணாத அதிசயம் என்று அதன்பின் போவதில் அதிக ஆவல் உடையவர்கள். நானும் அதே போல வாக்கு தவற மாட்டேன். ஆனால் சுவர்ணம் அல்ல, உன் தகுதிக்கு தாமிரம் போதும். அதன் பின் அந்த சுவர்ண கிரி இருந்த இடத்தை காட்டி விட்டு மறைந்தது. அரசன் விடிந்த பின் அந்த இடம் சென்று பார்த்தால் அது தாமிர மலை. கிரமார்ஜய என்ற இடத்தில் இருந்த தாமிர சுரங்கம்.இருந்த மலை.
ஜயாபீடன் அதிலிருந்து தாமிர நாணயங்களை பல கோடிக் கணக்காக தயாரித்தான். தன் உருவமும் பதவியும் அதில் முத்திரையாக பதித்தான். சவால் விடுத்தான். இதை விட அதிகமாக தன் ராஜ்ய நாணயங்கள் செய்தவர்கள் உண்டானால் வாருங்கள் என்றான். பாட்டானாரின் நல்லாட்சியை நினைவுறுத்தும் விதமாக ஆண்டவன் தந்தை வழி செல்ல நினைத்து விட்டவன் போல ஆனான். அதை பிரஜைகளின் போதாத காலம் என்று தான் பேசிக் கோண்டனர். அரசனின் குணமே மாறி விட்டது.620
அருகில் இருந்த ஒரு சிலர் போதனை செய்தனர். எதற்கு திக்விஜயம் செய்து படாத பாடு பட்டு செல்வத்தைக் கவர்ந்து வந்து நாட்டில் சேர்க்க வேண்டும். இங்குள்ளோரிடமே வரி வசூலிக்கலாம் என்று ஆலோசனை கூறினர். சிவதாசன் என்ற ஒரு லோபி மற்றும் சில பொக்கிஷ காவலில் இருந்த அதிகாரிகள் சேர்ந்து கொண்டு காயஸ்தர்கள் என்ற கணக்கர்கள் சொல்வதைக் கேட்டு மக்களை தண்டிப்பது போல வரி விதிக்கச் செய்தான்.
காஸ்மீரத்தில் அது வரை அரசன் பிரஜைகளுக்காகவே, அவர்கள் நன்மையை மட்டுமே செய்வான், அவன் கடமை அது என்பது போல இருந்த ராஜ்ய பரிபாலனம் அதன் பின் திசை மாறியது. அரசன் தன் செல்வாக்கை இழந்தான். அரசு அதிகாரிகளும், மந்திரிகளுமே நிதி நிர்வாகத்தை கவனிப்பதாக ஆயிற்று.
அவனுடைய பாண்டித்யம், முயன்று கற்ற கலைகளும், அறிந்த நல் நெறிகளும் என்ன ஆயின? மற்றவர்களுக்கு இந்த சிறப்புகள் மன அமைதியைக் கொடுக்கும். தெளிவான சிந்தனையைக் கொடுக்கும். ஜயா பீடனை பொறுத்த வரை பிரஜைகளை கசக்கி பிழிந்து தன் பொக்கிஷத்தை நிரப்புவதற்கு மட்டுமே பயன்பட்டதோ எனும் படி அவன் அறிவு செயல்பட்டது.
சௌதாசன் போல (பாரத கதை. சௌதாசன் வேட்டையாடும் சமயம் தவறுதலாக ஒருவனைக் கொன்றான். மன்னிப்பு கேட்டாலும், அவன் தம்பி மனதில் குரோதத்துடன் பழி வாங்க நினைத்தான் சௌதாசனிடமே சமையல் வேலைக்கு சேர்ந்தான். குரு வசிஷ்டரை விருந்துண்ண அழைத்த சமயம், இந்த சமையல் காரன் நர மாமிசத்தை கலந்து விட்டான். உண்ணும் முன் இலையை பார்த்தவர் புரிந்து கொண்டு அவனை ராக்ஷஸனாக சபித்தார். என் தவறு இல்லையே என்று அவனும் பதிலுக்கு சாபம் கொடுக்கத் துணிந்தான். மனைவி மதயந்தி குரு வசிஷ்டர், அவரை கொல்வதாவது என்று தடுத்தாள். அந்த நீர் காலில் விழுந்து கால் கருகியது. அதனால் கல்மாஷ பாதன் -கருகிய கால் உடையவன் எனப்பட்டான். இக்ஷ்வாகு வம்ச அரசன் . அதன் பின் பிராணிகளை கொல்வது அவனுக்கு இயல்பாக ஆகி விட்டது) இதைச் சொல்வானேன் என்றால், தவறு செய்யவே தயங்கியவன் இப்பொழுது ஒன்றின் மேல் ஒன்றாக கொடூரமான செயல்களையே செய்யலானான்.
தெரிந்து செய்யும் முதல் தவறு அது வரை செய்யாதவனுக்கு கடினமானதாக இருக்கும். பின் அதுவே பழக்கமாகி விடும். வெட்கம் விலகி தான் செய்வதை நியாயமாகவே எண்ணியும் அதை சரி என்று சாதிப்பர். தவறான வழியில் செல்லும் பெண்களும், கொடுங்கோலனான அரசனும் தன் பெற்றோரையே கொல்லத் துணிந்து விடுவர்.
லோபமும், குரோதமும் எல்லை கடந்தது. மூன்று ஆண்டுகள் இவ்வாறு சென்றது. விளைச்சலில் அரசனின் பங்கு என்று விவசாயிகள் வரியாக தருவதை முழுவதுமே அபகரிக்கும் படி அந்த கணக்கர்கள் போதித்தனர். அந்தணர்களுக்கான சலுகைகளை நிறுத்தினான். பெயருக்கு சிறிதளவு தனம் கொடுத்து அவர்களுக்கு அளித்திருந்த வீடுகளை அந்த அதிகாரிகள் விரட்டினர். அரசன் தானமாக கொடுத்தது தானே. இதுவே அதிகம்.
பாணினி என்ற இலக்கண நிபுணர் போல தானும் செய்ய வேண்டிய (க்ருத்ய என்ற வினைச் சொல்) அதன் குணம், விருத்தி என்ற பல பொருள் கொண்ட பதங்கள் என்று கவனமாக கற்றவன், ஏன் இப்படி செய்தான்? அரை மாத்திரை (அல்பமான) மாறுதல் கூட பதத்தின் பொருளை மாற்றி விடும் என்பதை பாணினி விவரிக்கும் பகுதி. ) தன் செயலின் விபரீதத்தை அறிய முடியாமல் போனது ஏன்? பின்னால் ஜயா பீடனின் மன மாறுதலும் அதனால் ஏற்பட்ட இழப்புகளும் பற்றி பலர் விமரிசித்துள்ளனர். இறந்த காலத்திற்கான விகுதிகளை பாணினி சொன்னதை விவரிக்க வந்த ஆசிரியர்கள், ஜயாபீடனின் அரசியல் வாழ்வு நிகழ் காலத்தில் இருந்ததற்கும் பின் இறந்த காலத்தை சேர்ந்ததாக ஆனதையும் சுட்டிக் காட்டி விளக்குவார்களாம்.
சௌதாசனை சொல்லக் காரணம் ஜயாபீடனும் பல அந்தணர்களை தேவையின்றி கொன்றான். அவனது உடன் இருந்து கெடுக்கும் சில நண்பர்களும், எதிர்த்து நின்று தோற்ற அரசர்களும் இது தான் சமயம் என்று தங்கள் போலியான நட்பு என்ற போர்வையில் அவனை பல தீய செயல்களில் ஈடுபடுத்தினர்.
கடலில் இருக்கும் திமிங்கிலங்களும் அரசர்களும் ஒன்றே. திமிங்கிலம் தான் வசிக்கும் சமுத்திர நீர் தானே மேகமாகி வர்ஷிக்கிறது. அதில் ஒரு சிறிதளவை மேகம் மழையாக வர்ஷிப்பதை, தன் உரிமையாக நினைக்குமாம். அது போல இந்த துர் புத்திகளான அரசு அதிகாரிகள் பேசினர்.
இதுவரை பயமின்றி வாழ்ந்த பிரஜைகள் திகைத்தனர். இந்த கூட்டம் சற்று விலகி வேறு தேசம் சென்று விட்ட இடைவெளியிலும் அரசனுக்கு தகுந்த அறிவுரை சொல்ல யாரும் அருகில் வரக் கூட முடியவில்லை. அந்த அளவு அரசன் மாறிப் போய் இருந்தான். மறுக்காமல் ஏன் செய்தான்? தங்கள் அளவில் தானம் என்பதையே செய்யாத மூடர்கள் அரசனுக்கு போதித்திருந்தனர். அவர்கள் உபதேசம் தான் காதில் விழுந்தது போலும். நாளொன்றுக்கு நூறு அந்தணர்களை கொல்லுங்கள் என்று ஆணை இட்டான். ஒன்று குறைந்தால் கூட என்னிடம் வந்து சொல்லுங்கள் என்றான். அந்த உண்மையான சேவகர்கள் பரிதாபப் பட்டார்கள்.
அந்த அந்தணர்கள் ஒரு செய்தியை ரகசியமாக பொது மக்களிடையே சிக்கலான பதங்களைக் கொண்டு பரப்பினர். இவனுக்கு போதித்தவர்களையே எதிர்க்க துணிந்தவன் என்ன வித்வான். பாணிணியும் அதைப் போலவே வி, ப்ர என்று விகுதிகளைச் சொல்லி இறந்த காலத்தை மாற்றி விட்டார்- என்று புரியாத விவரங்களாக சொன்னார்கள்.
துலமூல்ய என்ற இடத்தில் சந்திரபாகா நதிக்கரையில் அரசன் முகாம் இட்டிருந்த சமயம், அந்த நீரில் ஒன்று குறைய நூறு அந்தணர்கள் மூழ்கி இறந்து விட்டதாக அறிந்தான். அந்த துமூல்ய தேசத்து வாசிகள் அரசனிடம் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும்பொழுது வந்து இதை எதிர்த்து போராடினார்கள். மனு, மாந்தாதா ஸ்ரீ ராமன் போன்ற அரசர்கள் சக்தியில்லாதவர்களா. அவர்களைக் கூட அந்தணர்கள் சுலபமாக தரிசிக்க முடிந்தது. அந்தணர்கள் தங்கள் தவ பலத்தினால் இந்திரனை தன் பதவியிலிருந்து விலக செய்ய முடிந்தது. அவன் பதவியிழந்து நாக லோகம் செல்லும் படி சபித்தனர். இதைக் கேட்டு ஜயாபீடன் கோபத்தால் கொதித்தான். நீங்கள் என்ன ரிஷிகளா, சாபமா கொடுக்கப் போகிறீர்கள்? பயப்படாமல் அந்த கோபக் கனல் அவன் புருவங்களை நெரிப்பதையும் உடலே ஆடுவதையும் பார்த்தபடி இருந்த அந்தணர்களில் ஒருவரான இட்டிலா என்பவன் சொன்னான். ‘ ஓ ராஜா! இது தான் யுக தர்மம். நீ அரசனாக அரசனுக்குரிய குணங்களுடன் இல்லாமல் உள்ள நிலையில் நாங்கள் எப்படி ரிஷிகளாக இருக்க முடியும்?’ அரசன் ‘ நீங்கள் என்ன வசிஷ்டரா, விஸ்வாமித்திரா? அல்லது தவமே உருவான அகஸ்தியரா” என்ரு ஏளனமாக கேட்டான். அதைக் கேட்டபின் அந்த முனிவர் தன் நிஜ உருவை எடுத்துக் கொண்டார். பயங்கரமான நாக ராஜன், படம் விரித்து ஆடும் நிலையில், சிவந்த கண்களும், சீற்றம் தெரிய பெருமூச்சும், காணவே பயங்கரமாக இருந்தது. நீ யார்? ஹரிச்சந்திரனா? திரிசங்குவா? நஹுஷனா இவர்களில் ஒருவனாக நீ இருந்தால் நான் விஸ்வாமித்திரனாக இருக்கிறேன். அரசன் அதிரவில்லை சிரித்துக் கொண்டே சொன்னான். விஸ்வாமித்திர் என்ன செய்தார்? இந்த மூவரும் அழிந்தனர் – உங்களால் என்ன செய்ய முடியும்?
என்ன செய்ய முடியுமா? நான் சபித்து நீ விழ மாட்டாயா என்ன? அரசன் ‘அப்படியானால் இந்த தண்டம் விழட்டும்’ முனிவரோ,
இந்த தபஸ்வியின் சாபம் பலிக்கட்டும். ஏன் தாமதமாகிறது. இந்த வினாடியே இந்த அரசனின் உடல் விழட்டும். துஷ்ட அரசனே வீழ்வாய், நிச்சயம்.
அவர் சொல்லி முடிக்கவில்லை அரசன் தன் பொற்கொடி கட்டியிருந்த பொன்னாலான தண்டம் அதன் மேலேயே விழுந்தான். அதுவே குத்தி அவன் கால்களை கிழித்தது. திடுமென கடும் காய்ச்சல் வந்தவன் போல் உடல் சுட்டது. உடலில் இருந்து புழுக்கள் நெளிந்து விழுந்தன. தாங்க முடியாத சித்திரவதை. எதிரில் நின்றவர் யமனாகவே தெரிந்தார். முப்பத்தோரு ஆண்டுகள் ஆண்ட அரசன் தன் கால கதியை அடைந்தான்.
அரசர்களும், மீன்களும் ஒன்றே. மீன்கள் தாகத்தினால் தவித்து நீரின் மேல் பரப்பில் வருகின்றன, ஆபத்து என்பது தெரியாமல் உயிரிழக்கின்றன. அரசர்கள் செல்வம், அதிகார மமதை இவைகளால் தன் அதிகார போக்கால் தானே முடிவை தேடிக் கொள்கின்றனர்.
அவன் தாய் அம்ருத ப்ரபா வருந்தினாள். அம்ருத கேசவா என்ற வழிபாட்டு ஸ்தலத்தை உருவாக்கி தன் மகன் நற்கதியடைய பிரார்த்தித்தாள்.
அதன் பின் லலிதாபீடன் என்பவன் பட்டத்துக்கு வந்தான். துர்கா என்ற மனைவியிடம் ஜயாபீடனுக்கு பிறந்தவன். அவன் பெண்களுடனேயே காலம் கழித்தான். ராஜ்யத்தில் சட்ட்ம் ஒழுங்கு சீர் குலைந்தது. தந்தையின் ஆட்சியின் பிற்பகுதியில் குணம் கெட்டு சகவாச தோஷமும் சேர நாட்டில் அவனிடம் நல்லெண்ணமும் இருக்கவில்லை. இடைத் தரகர்கள் புகுந்து அரண்மனையை மட்டமான தொழில் முறை வேசியர்கள் இருப்பிடமாக ஆக்கி விட்டனர். வீரமோ. சாமர்த்தியமோ, அறிவோ அடியோடு ,மறைந்த இடமாக அரண்மனை மாறியது. இந்த தரகர்கள் பழைய அலுவலர்கள் மந்திரிகள் அனைவரையும் விரட்டி விட்டனர். கேலி கூத்தாக மாறி விட்ட நிர்வாகம். மந்திரி மனோரதா என்பவர் சற்று பொறுத்துப் பார்த்தார். பின் அவரும் விலகி விட்டார். பன்னிரண்டு ஆண்டு வாழ்ந்த்து மடிந்தான். ஜயாபீடன் ஸ்த்ரீ ராஜ்யம் ஜயித்தான் என்பதை ஜடன் அதனால் அங்கு இருந்து விரட்டப் பட்டவன் என்று சொல்லி பரிகசித்தனர். ஒரே ஒரு நல்ல காரியம் சுவர்ணபார்ஸ்வம், பலபுரம், லோசனோத்ஸம் என்ற இடங்களை அறிஞர்களுக்கு கொடுத்தான்,
அடுத்து கல்யாணி தேவியின் மகன் சங்க்ராமபீடா என்பவன் வந்தான். ப்ருதுவிபீடா என அழைக்கப் பட்டான். அவனும் ஏழு ஆண்டுகளே அரசனாக இருந்தான்.
அதன்பின் சிப்பட-ஜயபீடா ப்ருஹஸ்பதி என்ற மற்றொரு பெயர் – லலிதபீடாவின் மகன் – சிறு குழந்தையாக இருந்த பொழுதே அரசனாக அறிவிக்கப் பட்டான். அவன் தந்தையின் ஆசை நாயகியாக இருந்த ஜயதேவி என்ற பெண்ணிடம் பிறந்தவன். அவள் தந்தை உப்பா என்ற பெயருடைய ஆகூரா என்ற கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி. அவளைக் கண்டதும் அவள் அழகில் மயங்கி கவர்ந்து கொண்டு வந்திருந்தான். அந்த பெண்ணின் ஐந்து சகோதர்களில் மூத்தவரான ஊட்பலகா அரண்மணை நிர்வாகத்தை கவனித்துக் கொண்டான். ஜய தேவி நிர்வாகத் திறமை உடையவளாக இருந்தாள். அவள் சொல் எடுபட்டது. தன் சகோதர்களுடன் சீர் திருத்தங்களைச் செய்தாள். ஜயேஸ்வர என்ற இடத்தை நிர்மாணித்தாள்.
அரசர்கள் பொறுப்பின்றி நிதி நிர்வாகத்தை சீர் குலைத்திருந்தாலும், எதிர்பாராமல் வேறு ஒரு இடத்தில் இருந்து திறமையான நிர்வாகிகள் வந்து அதை சமன் செய்வது ஒரு கடினமான செயல் .ஜயாபீடன் சேமித்து வைத்த பொக்கிஷத்தையும், மற்ற உயர்ந்த பொருட்களையும் அவன் மகன் களே அழித்தனர். அந்த மூடனான மகனுக்கு வாய்த்த மனவியின் சகோதரன், அவன் மைத்துனன் – அனைத்தையும் இரும்பு கரம் கொண்டு முழு அழிவில் இருந்து மீட்டு விட்டான்.
ஆனால் அது சில நாட்களே நீடித்தது. அவர்களுக்குள் சண்டை மூண்டது. அனுபவிக்க தயாராக இருந்தவர்கள் பொறுப்பு ஏற்க தயங்கினர். குழந்தை பருவத்திலிருந்து எந்த வித கட்டுப் பாடும் இன்றி வளர்ந்தவர்கள். பேராசை, தாங்களே அரசனாக ஒவ்வொருவரும் ஆசை பட்டதன் விளைவு, சகோதரியின் மகன், என்று கூட நினைவு இன்றி, பன்னிரண்டு ஆண்டுகளாக அறிவிலியான அரசன் அருகில் இருந்து எந்த வித பொறுப்பும் இன்றி போகங்களை அனுபவித்தவர்களுடன் சேர்ந்து கொண்டு அந்த குடும்பத்தையே கொன்று விட்டனர். அதன் பின்னும் தங்களுக்குள் சண்டையிட்டு தங்களுக்குள் ஒருவனை பட்டத்துக்கு வர அனுமதிக்கும் அளவு கூட அறிவு இல்லாதவர்களாக இருந்தனர்.
பாப்பியா என்ற அரசனுக்கு மேகவல்லியிடம் பிறந்த திரிபுவனபீடா என்பவன் பட்டத்துக்கு வந்தான். மூத்தவனாக இருந்தும் திறமை இல்லாதவன் என்று ஒதுக்கி இருந்தனர். அவன் தான் ஜயாதேவியின் மகன் அஜிதபீடா என்பவனை அவள் சகோதரன் உத்பலகன் அரசனாக்குவதற்கு அனுகூலமாக இருந்தவன். அரசின் நிதி நிலைமை அதள பாதாளத்தில் இருந்தது. பெயருக்கு அரசனாக இருந்தவன், தினசரி உணவு முதலிய தேவைகளுக்கு நிதி அதிகாரிகளிடம் இருந்து வேண்டிய பொருளை பெற வேண்டியதாயிற்று. அந்த அளவு அரண்மனை செல்வம் சூறையாடப் பட்டிருந்தது.
தினமும் சண்டை. வாக்கு வாதம். அவனுக்கு மனம் கசந்தது. கோவில்களுக்கும், ஊர் பொது காரியங்களுக்கும் என்று வைத்திருந்த பொது நிதியில் கை வைத்தனர். இனியும் இந்த ஐவரும் தங்கள் குடும்பங்களோடு அரண்மனை செல்வத்தை அனுபவித்தனர். ஓனாய்கள் இறந்த எருமையை மொய்ப்பது போல தங்களுக்குள் கிடைத்தவரை பிடுங்கி கொண்டனர். சரியான தலைமை சரியாக இல்லாத அரசு.
உட்பலன் தன் பெயரில் உட்பல புரம் என்பதையும், உட்பல ஸ்வாமின் என்ற கோவிலையும் கட்டினான். பத்மா என்பவனின் மனைவி குணதேவி என்பவள் நற்குணங்கள் உடையவளாக இருந்தாள். இரண்டு மடங்களை கட்டுவித்தாள். தலை நகரில் ஒன்று, மற்றொன்று விஜயேஸ்வர என்ற இடத்தில். தர்மா என்பவன் நியாய சாஸ்திரம் அறிந்தவன். அவன் தர்மஸ்வாமின் என்ற கட்டித்தையும், கல்யான வர்மன் என்பவன் விஷ்னு கல்யானஸ்வனின் என்ற கோவிலையும் கட்டுவித்தனர். மம்மா என்பவன் செல்வ்ந்தனாக இருந்தான். அறிவும் தெய்வ நம்பிக்கையும் உள்ளவன் ஆனதால், மம்மஸ்வமின் என்ற வழி பாட்டு ஸ்தலம் அமைத்தான். (ஐந்து சகோதரர்கள் பெயர்கள்) ரஅத்துடன் பல பசுக்களை தானம் செய்தான். அவைகளை பராமரிக்க ஐயாயிரம் டினார்களும், நீர் எடுக்கும் குடங்களும் உடன் அளித்தான். இவன் ஒருவன் தன பொது நன்மைக்காக செலவழித்தான். அதனால் அவனிடம் இருந்த செல்வத்தின் அளவு ஓரளவு கணக்கிட முடிந்தது. மற்றவர்கள் அபகரித்த தனம் எவ்வளவோ, யாரால் சொல்ல முடியும்.
இப்படி அபகரித்த செல்வம் ஒரு ஆண்டியேயே கரைந்தது. உட்பலகன் என்ற மூத்தவனுக்கும் மம்மா என்ற இளையவனுக்கும் சண்டை மூண்டது. விதஸ்தா ஏரியின் கரையில் ரத்தம் ஆறாக பெருக இருவரும் போர் புரிந்தனர். சங்குக என்ற கவி, அறிவுடையவர்களின் ரசனை என்ற சமுத்திரத்திற்கு சசாங்க-நிலவு போன்றவன் என்று வர்ணிக்கப் படுபவர் இந்த நிகழ்ச்சியை வைத்து புவனாப்யுதயம் என்ற பெயரில் ஒரு காவியம் இயற்றி இருக்கிறார்.
இதற்குப் பின் காலம் பற்றிய குறிப்புகள் கிடைத்தாகச் சொல்கிறார்.
மம்மனின் மகன் யசோவர்மன் வீரனாக இருந்தான். நக்ஷத்திரங்கள் இடையில் ஸூரியன் போல. அஜிதபீடா என்பவனை அரச பதவியில் இருந்து விலக்கி, அவனும் மற்றவர்களுமாக அநங்கபீடா என்பவனை அரசனாக்கினர். இதற்கும் எதிர்ப்பு உத்பலனின் மகன் சுகவர்மன் அடிருப்தியுடன் இருந்தான். மூண்று ஆண்டுகளுக்குப் பின் அஜிதபிடாவின் மகனையே கொண்டு வந்தான். இந்த களேபரத்தில், சில அரசு அதிகாரிகள் செல்வந்தர்கள் ஆனார்கள். இப்படியும் சிலபாக்கிய சாலிகள், சம்பந்தம் இல்லாத வகையில் செல்வம் அவர்களிடம் சேருகிறது. சந்தி விக்ரஹம் -போரும், அமைதியும் – சேனாபதி போன்ற பதவி. அந்த பொறுப்பில் இருந்த ரத்னம் என்பவன் ரத்னஸ்வாமின் என்ற பெயரில் ஒரு கோவிலை கட்டுவித்தான். அந்த அளவு அவன் செல்வந்தனாக ஆகி இருந்தான்..
அரண்மனையில் குதிரைகளை பாதுக்காப்பவன் போன்ற அலுவலர்களும் முடிந்த அளவு அரண்மனை செல்வத்தை அபகரித்தனர். இவ்வாறாக கார்கோடக வம்சம் மெள்ள அழிந்தது. உட்பலனுடன் சகோதர்களின் வம்சமே வளர்ந்தது. சுகவர்மா என்பவன் ஓரளவு அறிவுடன் தானே அரசனாக வர இருந்தவனை உடன் இருந்தவர்களாலேயே கொல்லப் பட்டான். அவன் மகன் அவந்தி வர்மன் அரசனான்.
அவந்தி வர்மன் உட்பல குலத்தை விளங்கச் செய்தான். தன் திறமையால் நல்ல ஆட்சியை அளித்தான். தந்தை, பாட்டனார் பாடு பட்டு வளர்க்க செய்த செயல்களின் பலனை இந்த அவந்தி வர்மா அடைந்தான் என புகழப் பட்டான். முறையாக அரசனாக அபிஷேகம் செய்து, முடி ஸூட்டும் வைபவம் நடந்தது.
யாரோ பாடு பட்டு சேர்த்த தனம் யாரோ அனுபவிக்க கொடுத்து வைத்துள்ளனர். வினாடி நேரத்தில் ஒருவனது செல்வ நிலை ஏறுகிறது அல்லது தாழ்கிறது. ராஜ்யலக்ஷ்மியின் கடைக் கண் பார்வை யார் மேல் விழுகிறதோ, அவனே மகுடம் தாங்கி அரசன் ஆகிறான். பொற் குடங்களில் நீர் கொண்டு வந்து தன் தலையில் தாங்க அவந்தி வர்மா முன் பல பிறவிகளில் நல் வினை செய்திருக்க வேண்டும். பேரரசர்கள் அணியும் சந்திர ஸுரியன் போன்ற தாடங்கங்கள் அணிய அவன் செவிகள் புண்யம் செய்தவை போலும். திருமகளின் ஆசனம் போலவே உதய காலத்து தாமரைகள் மலர்ந்து இருப்பது போன்ற வெண் குடையின் கீழ் வராசனத்தில் அமர அவள் அருள் பெற்றவன்.
இதுவரை, காஸ்மீரக மகாமாத்ய சம்பக பிரபு என்பவரின் மகனான கல்ஹணன் (கவியின் பெயர்) ராஜதரங்கினீ என்ற அவரது காவியத்தின் நாலாவது தரங்கம் நிறைவுறுகிறது.
இரு நூற்றாண்டுகள் பன்னிரண்டு ஆண்டுகள், ஆறு மாதங்கள் ஆனகாலம் கார்கோடக வம்சம் பதினேழு அரசர்களின் அரசாட்சி பற்றிய செய்திகள் இவை. தமிழாக்கம் ஜானகி கிருஷ்ணன்.