Rajatharangini-6
ராஜதரங்கினி – 6 வது அலை
அபர்ணா என்று தேவி பார்வதியின் பெயர். தவம் செய்பவர்கள், உணவை தவிர்த்தும், மூச்சை அடக்கி யோக முறையில் பயிற்சிகள் செய்தும் சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பது ஒரு செய்தி. கவி – அதில் என்ன அதிசயம் என்கிறார். அனைத்து உயிரினங்களும் பல் வகை உணவு உண்ணும் வழக்கம் உள்ளவை. இலை தழை மட்டுமே உண்ணும் பசுக்கள் உள்ளன. காற்றை உண்டு உயிர் வாழும் பாம்புகள் உள்ளன. அன்பு என்ற ஒன்றே ஆண்டவனிடம் சேர்க்கும். இதை சொல்ல வந்தது போலவே தேவ வதூ- மகா தேவன் எனும் பரமேஸ்வரனின் மனைவியாக வந்த அபர்ணா – இலை இல்லாமல் என்று சொல்லின் பொருள். ஒவ்வொன்றாக விலக்கி, இலைகளை கூட இல்லாமல் தவம் செய்தாள். அபர்ணா என்ற பெயருடன் விளங்கும் தேவி தானே வாழ்ந்து காட்டினாள் போலும். சராசரத்திற்கும் குருவான தக்ஷிணாமூர்த்தி, பரமேஸ்வரன். அவரை அடைய அவதாரம் எடுத்த அபர்ணாவான தேவி எங்களை காக்கட்டும். (கல்லால மரமாக சிவ பெருமான் தவம் செய்தபொழுது, தேவி அந்த மரத்தைச் சுற்றிய இலை இல்லாத கொடியாக உடன் இருந்தாள் – அதனால் அபர்ணா. தமிழ் நாட்டில் சில கோவில்களில் இப்படி சிற்பங்கள் உள்ளன.)
யசஸ்கரன் முதல் வேலையாக அனாவசியமாக தன்னைச் சுற்றி கூட்டம் போடுவதை நிறுத்த ஆணையிட்டான். யாரானாலும், தேவையின்றி அரண்மனை வளாகத்திற்குள் வர வேண்டாம். இதில் யாரும் விதி விலக்கல்ல. ஆலோசனைகள் சொல்ல வரும் அந்தணர்கள் அறிஞர்கள் முதல் ஆயுதம் ஏந்திய காவலாளிகள், அனைவருக்கும் இதே கட்டளை தான். காவலாளிகளே, எவரையும் தடுக்க வேண்டாம். பல ராஜ்ய காரியங்கள், பல விதமான அரச செயல்கள் அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டிய உதவிகளை செய்பவர்கள் இவர்கள் அனைவரும்அரசுக்கு வணக்கத்துக்கு உரியவர்களே. அதற்கு மேலும் உரிமைகள் என்று கோருவதோ, தானாக முடிவெடுப்பதோ அனுமதிக்கப் பட மாட்டாது. இந்த அரியணையை எனக்கு தானமாக கொடுத்ததாக நினைக்க வேண்டாம். மற்றபடி அலுவலக வேலையாக தாராளமாக என்னிடம் வரலாம்.
இதைக் கேட்ட அரண்மனை ஊழியர்கள் அருகில் இருப்பதால் தங்களுக்கு இலவசமாக கிடைத்த சலுகைகள் இனி கிடைக்காது என புரிந்து கொண்டனர்.
புதிதாக ஒருவர் எழுதிய கவிதையின் தவறுகளை திருத்தும் தேர்ந்த கவி போல, ராஜ்யத்தில் இது வரை இருந்த நடை முறைகள், அதிகாரங்கள், அனைத்தையும் முறைப் படுத்தி தன் அறிவின் திறத்தால் மேம்படுத்தினான். தேவையற்ற மரபுகள், பேச்சுக்கள் குறைந்தன.
அது வரை இருந்த திருடர்கள் காணாமல் போயினர். இரவிலும் வாணிபம் பயமின்றி நடைபெற்றது. பாதைகள் சீராக அமைக்கப் பட்டன. வழி நடைகளும் சீராயின. நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் என்று பலவிதமான போக்கு வரத்தும் மேம்படுத்தப் பட்டது. அபகரிப்போர் இல்லாத நிலையில் கண் காணிப்பவர்களும் அதிகமாக இல்லை. விவசாயிகள் தங்கள் விவசாயத்தை மட்டுமே கவனமாக செய்தால் போதுமானதாக இருந்தது. அவர்கள் தேவைகளை அரசனே முன்னின்றி செய்து கொடுத்து விடுவான். தங்கள் விண்ணப்பங்களை தூக்கிக் கொண்டு அரண்மனைக்கு வருவது அவசியம் இல்லாமல் போனது. அரண்மனையை அவர்கள் கண்ணால் கூட காணவில்லை என்று வர்ணிக்கிறார். அதே போல சாஸ்திரங்கள் அறிந்த வித்வான்கள், ஸ்வாத்யாயம் என்ற தங்கள் வேத சாஸ்திர கல்விகளைக் கற்பதிலேயே முனைந்து இருந்தனர். அவர்கள் எந்த நிலையிலும் தாங்களும் பாதுக்கப்புக்காக ஆயுதம் தரிக்கும் அவசியம் இருக்கவில்லை. (ஸாஸ்திரம் -கல்வி, சஸ்திரம்- ஆயுதம்) சாம கானம் செய்பவர், அதன் நியமங்களை அனுசரித்தும், தவம் செய்வோர் அதற்கான கட்டுப் பாடுகளுடனும், யாக நியமங்களை செய்பவர்கள் அதன் கட்டுபாடுகளை விடாமலும் இருந்தனர். தர்க்கம் செய்ய வருபவர் தங்கள் நூல்களில் அதை எழுதி வெளியிட்டனர். (பொது இடங்களில் கார சாரமாக விவாதம் செய்வது நின்றது) இல்லத்தரசிகள் வீடுகளில் கணவனின் சீலம், செல்வம் இவைகளுக்கு எதிரான எந்த செயலையும் செய்யாமல் இருந்தனர். அதனால் இல்லறம் அமைதியாக இருந்தது. பிக்ஷுக்கள் நாகரீகம் அறிந்தவர்களாக, மந்திரியாக புரோஹிதராக, குரு இருந்தார். தூதனாக வருபவன் , எழுத்தர்களோ, தங்கள் துறையில் பாண்டித்த்யம் உள்ளவர்களே அமர்த்தப் பட்டனர். ப்ராயோபவேசம் என்ற வழக்கம் – செய்வதாக வாக்களித்து விட்டு செய்யா விட்டால தாங்களாக உண்ணாவிரதம் இருந்தோ வேறு வழியில் உயிர் தியாகம் செய்யும் முறை- இவற்றை கவனிக்க ஒரு தனி நிர்வாகத் துறையே ஏற்படுத்தி விட்டான். அது தற்கொலைக்கு ஒப்பானது என்பதால்.
வழக்குகளும் நீதி வழங்குதலும் பற்றி விவரமாக சொல்லப் படுகிறது. முதலில் கிராமத்து அல்லது அருகில் இருக்கும் சிறு நியாயாதிபதிகள் விசாரிப்பர். பின் அரசனிடம் வரும். அரசனின் தீர்ப்பே முடிவானது. அரசன் தானே விசாரித்து நீதி வழங்குவான். அதற்கு ஒரு சில ஆலோசகர்கள் இருப்பர். இதே முறை தான் சாணக்யாவின் அர்த்த சாஸ்திரத்திலும் சொல்லப் படுவது. அரசியல் நிர்வாகமும், நிதி நிர்வாகமும் அவ்வாறே அரசன் தலைமையில் ஒரு சில ஆலோசகர்களின் உதவியோடு நடை பெறும் என்பது இந்த தேசத்தின் தொன்று தொட்டு வந்த நியமம். அதே போல கணக்கு வழக்குகளும் முறையாக எழுதியும் சரி பார்க்கவும் ஒரு துறையும் அதற்கான அறிவுடையவர்களின் குழு இருந்த தும் அந்த முறை இன்னமும் பின் பற்றப் படுவதாகவும் கவியின் கருத்து.
ஒரு வழக்கு அரசன் யசஸ்கரன் முன் வந்தது. ‘ மஹீபதே! நான் சொல்வது உண்மையே. செல்வந்தனான வணிகனாக இருந்தேன். என் செலவினம் அதிகமாக ஆக ஆக, முன் பணம் கொடுத்தவர்களின் பணத்தை காலத்தில் திருப்பி கொடுக்க இயலவில்லை. தற்சமயம் அனைத்தும் இழந்தவன். யாரை நோவேன். தெய்வ சங்கல்பம் தான். என் வீட்டை விற்று கடன்களை அடைத்தேன். அதன் பின் ஊரை விட்டு வெளியேறி தேசாந்திரம் போவதாக எண்ணியிருந்தேன். என் மனைவிக்காக ஒரு கிணறு அதை மட்டும் விட்டு வைத்தேன். வாங்கியவரும் என்னைப் போலவே செல்வந்தனான வணிகன். படிகளுடன் அமைந்த அழகிய கிணறு. அவளுக்கும் என் கடமை ஒன்று உள்ளதே. வேணிற் காலத்தில் தோட்டம் போடுபவர் மலர் செடிகளுக்கு நீர் விட, நீர் எடுத்துச் செல்வர். வெற்றிலை விற்கும் சிறு வியாபாரிகள் கிணற்றைச் சுற்றி நிழலில் காற்றாட அமர்ந்து வியாபாரம் செய்வர். அதற்கான கிரயம் என்ற முறையில் கொடுக்கும் தனம், அதைக் கொண்டு என் மனைவி தன் வாழ்வை சிரமம் இன்றி வாழ்வாள் என்பது தான் என் எண்ணம்.
இருபது ஆண்டுகள் பல இடங்களுக்கும் சென்று பொருள் சேர்த்துக் கொண்டு சொந்த ஊர் திரும்பியவன் என் மனைவியைத் தேடினேன். உடல் வாடி, முகம் கறுத்து அவள் வேற்று மனிதர் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணாக இருப்பதை அறிந்து திகைத்தேன். ஏன் இந்த வேலை செய்கிறாய். நான் தான் உனக்கு சுயமாக வாழ வகை செய்து கொடுத்தேனே. அவள் சொல்கிறாள். நீங்கள் அகன்றதும் அந்த வீட்டை வாங்கியவன் கிணற்றின் அருகில் நான் போக விடாமல் தடுத்தான். மீறி சென்றால் அடித்தான். வேறு என்ன செய்வேன் என்றாள். உள்ளூர் நியாய ஆலயங்களில் வழக்கு தொடுத்தேன். அந்த வணிகனோ செல்வந்தன். தீர்ப்பு அவன் பக்கமே சென்றது. நான் வணிகன், வழக்கும், எது நியாயம்? அரசாங்க சட்டங்கள் என்ன எதுவும் தெரியாது. நான் கிணற்றை என் மனைவிக்காக, அவள் தன் வரையில் சிரமப்படாமல் வாழ வகை செய்து கொடுத்திருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் படிகளுடன் அமைந்த கிணறு தான் எனக்கு வாழ்வாதாரம். நீங்களும் என்னை குற்றவாளியாக கருதினால் ப்ராயோபவேசம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அரசர் தீர்ப்பு எதுவானாலும் ஏற்கிறேன்.
அரசனுடைய ஆலோசகர்கள் சொன்னார்கள். வீட்டை விற்கும் பொழுது கிணற்றைப் பற்றி பேசவில்லை. அதனால் வீட்டோடு கிணறும் வாங்கியவனுக்கே என்று ஆகும். எழுத்தில் இல்லாமல் இவன் வாய்ச் சொல்லே பிரமாணமாக கீழ் நிலை நியாயாதிபர்கள் இவன் சொல்வது தவறு என்று தீர்மானித்து விட்டனர். இவன் தான் குற்றவாளி, தண்டனைக்குரியவன் என்றனர்.
ஆலோசகர்கள் விளக்கியதை கேட்பது போல இருந்தாலும் அரசன் தனக்குள் யோசித்தான். உள் மனதில் இவன் பொய் சொல்லவில்லை என்று தோன்றியதால் உடனே எதுவும் சொல்லவில்லை.
தர்மாசனம் என்ற நீதி வழங்கும் ஆசனத்தில் சென்று அமர்ந்தான். ஏதோ நினைத்தவன் போல் ஒரு பணியாளிடம் சபையில் இருந்தவர்களிடம் அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களை சேகரிக்கச் சொல்லி விட்டு உள் அறைக்கு சென்று விட்டான்.
வாதியின் மோதிரத்தை மட்டும் அந்த பணியாள் அரசன் சொன்னபடியே அவரிடம் கொண்டு வந்து கொடுத்தான். அந்த பணியாளிடமே அதைக் கொடுத்து அந்த வணிகனின் வீட்டுக்குச் சென்று அந்த மோதிரம் பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொண்டு வாய் மொழியாக சில உத்தரவுகளும் இட்டான்.
அதன் படியே அவன் வீட்டை வாங்கிய வணிகனின் அலுவலகம் சென்று, அங்கு இருந்த முக்கிய கணக்கரிடம் அந்த மோதிரத்தை அடையாளம் காட்டி, அந்த வீடு கை மாறிய சமயம் எழுதிய பத்திரங்களை அரசன் கேட்பதாகச் சொன்னான். அவர் உடனே பத்திரத்தை தேடி எடுத்து தர, அதை வாங்கி வந்தான். அந்த பத்திரத்தில் அரசன், ஆயிரம் டினார்கள் அந்த எழுத்தருக்கு அளித்ததாக படித்தான். அரசன் புரிந்து கொண்டான். அந்த எழுத்தருக்கு தேவைக்கு மேல் பணம் கொடுத்த காரணம் – ர என்ற இடத்தில் ச என்ற எழுத்தை மாற்றவே. வணிகன் எழுத்தருக்கு அதிக பணம் ஊதியமாக கொடுத்து பத்திரத்தை மாற்றியிருக்கிறான். (ஸ- உடன், ர -அது தவிர என்று பொருள் படும். ர என்ற எழுத்தை ஸ என்று ஆக்கினால் கிணறு தவிர என்ற இடம் கிணற்றுடன் என்று பொருள் தரும். கூப சஹிதம்- கிணற்றுடன், கூப ரஹிதம் கிணறு தவிர )
அரசன் சபைக்கு வந்தான். வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்வதாக வாதியான வணிகனிடம் சமாதானமாக சொல்லி விட்டு, சபையினரிடம் இந்த பத்திரத்தில் செய்வித்த மாறுதலை சுட்டிக் காட்டினான். அதன் படி வீடு அதன் சொந்தக் காரனுக்கே என்றும், பத்திரத்தில் மாறுதல் செய்த குற்றத்திற்காக மற்றவனுக்கு தண்டனையும் அளித்தான். 41
ஒரு நாள், அரச சபையிலிருந்து வேலைகளை முடித்த பின் உணவருந்த கிளம்பியவனை, மெய்க்காப்பாளன் வந்து விண்ணப்பித்தான். ‘அரசே! வாசலில் ஒருவன் உங்களைக் காண விரும்பி காத்திருக்கிறான். சொல்லிப் பார்த்தேன். அரசன் உணவருந்தும் நேரம். நாளை வா’ என்றால் அவன் அழுது விடுவான் போல இருந்தது. ஏதோ துக்கம். ப்ராயோபவேசம் தான் வழி, அதற்கும் இந்த அரசனின் காவலர்கள் விடவில்லை என்றான். ‘
அரசன் அவனை அழைத்து வா என்று சொல்லி விட்டு அமர்ந்தவன், ஒரு அந்தணன் பரிதாபமாக தோற்றத்துடன் நுழைந்தான். ‘அரசே! வெளி தேசங்கள் சென்று உழைத்து நூறு பொற்காசுகள் சேர்த்தேன். அதை ஒரு முடிப்பாக கட்டி பத்திரமாக இந்த தேசம் அரசனின் ஆட்சியில் நலமாக இருப்பதைக் கேள்விப் பட்டு என் சொந்த தேசம் இது என்பதால் திரும்பி வந்தேன். அரசனே! உங்கள் ராஜ்யத்தில் திருடர்கள் அறவே ஒழிக்கப் பட்டு விட்டார்கள் என்றனர். வழியில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் ஊர் வந்து சேர்ந்தேன். லவனோத்சம் என்ற இடத்தில் அந்தி வேலையில் சற்று ஓய்வெடுக்க நினத்து இங்கு தான் பயம் இல்லையே என்ற தைரியத்துடன் ஒரு பெரிய மரத்தின் அடியில் தூங்கி விட்டேன். மூன்றாவது யாமம், விடியும் முன் எழுந்தேன். என் பண முட்டையை எடுத்தவன் கை தவறி கீழே விழுந்தது. சுற்று முற்றும் தரையில் தேடி கிடைக்கவில்லை. என் போதாத வேளை தொலைத்து விட்டேன் என்பதால் ஊர் வந்து என்ன செய்வது என்று உயிரை விட துணிந்தேன். அரசு காவலர்கள் வந்து தடுத்தனர். இந்த நாட்டில் தற் கொலை செய்து கொள்ள கூடாது என்று அரசரது ஆணை என்றனர். கூட்டம் வேடிக்கை பார்க்க வந்தது. அதில் ஒருவன் நான் எடுத்து தருகிறேன். இந்த பள்ளத்து நீரில் விழுந்திருந்தால், இலைகள் மண்டி கிடப்பதால் அடியில் நீர் தெரியவில்லை, எனக்கு என்ன தருவாய் ? என்றான். விரக்தியின் எல்லையில் இருந்தவன் நான் சொன்னேன், என் கையை விட்டு போன தனம் உன் கையில் அகப்பட்டால் கொடுப்பதைக் கொடு என்றேன். அவன் தைரியமாக அந்த பள்ளத்தில் குதித்து என் பண மூட்டையை எடுத்து வந்தான். என் கையில் இரண்டு நாணயங்களை வைத்து விட்டு மீதியை அவன் எடுத்துக் கொண்டான். நீ சொன்னபடியே நான் எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டேன். அரசனே! வார்த்தை மீறக் கூடாது என்பதை அறிவேன். ஆனால் அதைச் சொன்ன சமயம் மிகுந்த வேதனையோடு இருந்தேன். கூடியிருந்தவர்களும் அவன் பக்கமே நியாயம் என்றனர். எனக்கு வேறு வழியில்லை. அதனால் தானே உயிரை விட முயற்சித்தேன். அதற்கும் உங்கள் அரச சேவகர்கள் விடவில்லை. இந்த அரண்மனை வாசலில் கிடக்கிறேன். உயிர் போகும் பொழுது போகட்டும். இங்குள்ளோர் முழு விவரங்களையும் கேட்டு விட்டு, நீ கொடுத்த வாக்கு நீயே தான் அனுபவிக்க வேண்டும் என்றனர்.
நாளை கண்டிப்பாக விசாரிக்கிறேன். இப்பொழுது வா, என்னுடன் சாப்பிட்டு விட்டு தூங்கு என்ற அரசன் தன்னுடனேயே வலுக் கட்டாயமாக அமர்த்தி உணவருந்தச் செய்தான். அவன் பெயர் என்ன? என் ஆட்கள் அழைத்து வருவார்கள். முகம் தான் அறிவேன். பெயர் மற்ற விவரங்களை நான் எதுவும் விசாரிக்க வில்லையே என்றான். மறு நாள் லவனோத்சௌகம் என்ற இடத்துக்கு சேவகர்களை அனுப்பி அந்த மனிதனை அழைத்து வரச் செய்தான். அரசன் முன் அவனை கொண்டு வந்து நிறுத்தினர். அவனும் அந்தணன் சொன்னதையே சொன்னான். இதில் என் தவறு எதுவும் இல்லை. இவர் கொடுத்த வாக்கு, அதன் படி நான் பாகம் பிரித்தேன். அரசவையில் முதலில் விசாரித்தவர்களும் அதையே ஏற்றனர். வாதியும் நான் சொல்லவில்லை என்று மறுக்கவில்லை. அதனால் இந்த வழக்கு இப்படித்தான் முடியும்.
அரசன், தன் ஆசனத்தில் வந்து அமர்ந்த உடன், நீ சொல்வது சரியே. ஆனால் யோசித்துப் பார். வாக்கு சத்யமாவதும், கால தேசங்களை அனுசரித்து நிலைமையை வைத்து நியாயம் எது என்பதிலும் ஒரு இடைவெளி உள்ளது. ஒரு சத்யத்தை காப்பாற்ற சொல்லும் நியாயம், விபரீதமான விளைவைத் தரும் என்றால், அரசன் தன் மனச் சாட்சிபடி தீர்ப்பு அளிக்கலாம். ஒரு விதத்தில் இந்த வழக்கில் ஒருவனது அழிவின் மேல் மற்றவனின் பேராசை அனுமதிக்கப் படுகிறது. பொதுவாக சரி என்று தோன்றினாலும் பின் விளைவை நினைத்தும், இந்த மனிதனின் நிதி நிலைமையை யோசித்தும் இந்த தீர்ப்பை அளிக்கிறேன். நீ நீரில் இறங்கி எடுத்துக் கொடுத்த செயல் அதற்கான பலன் உனக்கு கிடைக்கத்தான் வேண்டும். இங்கு அந்த பேராசை என்ற குணம் உன்னை சமமாக பிரித்துக் கொள்ள விடவில்லை. அதற்கான தண்டனையை அடைவாய். இவரிடம் தொன்னூற்று எட்டு நாணயங்களை கொடு. மீதி உனக்கு.
சபையினரின் சந்தேகம் தோய்ந்த முகங்களைப் பார்த்து அரசன் சொன்னான். எது சரி? ஒருவனின் வாக்கு காப்பற்றப் படும். அதோடு அவனிடம் தன் பணத்தை இழந்தவன், வெறுத்து போய் தானே தன்னை மாய்த்துக் கொள்ள அது வழி வகுக்கிறது. இந்த தீர்ப்பு அதற்கு சம்மதிப்பது போல ஆகும். இதில் பலன் அடைபவன் தன் தகுதிக்கு மேல் ஆசைப் பட்டதால் ஒரு மனிதனின் வாழ்க்கை பாழாவது அவனுடைய பேராசையால் மட்டுமே. இருவருக்கும் இடையில் பூசல் இல்லை, கொடுக்கல் வாங்கல் இல்லை. சொல்லப் போனால் இந்த பிரதி வாதியும் தன் மனசாட்சிபடி நடந்து கொண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இருவரும் நட்பாக பிரிந்திருப்பார்கள். எது சரி? இப்பொழுது சொல்லுங்கள். ஒரு தீமையை விலக்க மற்றொரு பெரிய தீமைக்கு இடம் கொடுப்பது சரியல்ல- இது நியாய சாஸ்திரத்தின் நுட்பமான ஒரு விதி.
தினமும் மாலை நேரத்தில் அஸ்தமித்த பின்னும் உலகில் ஒளியை அக்னியிடமும் நிலவின் பொறுப்பிலும் நிலை நிறுத்தி விட்டு பகலவன் மறைகிறான். விளக்குகளும், நிலவும் இருளை விலக்க உதவும். இது ஒரு நீதி. இதை ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும் நியாயம்- அநியாயம் இவைகளுக்கு இடையில் மிக சிறிய இடைவெளியே உள்ளது. அதுவே பின்னால் வேகமாக தாக்கும். மரத்தின் உள்ளேயே உறையும் நெருப்பு மரத்தையே எரிப்பது போல.
கொடுப்பதை கொடுங்கள், உங்கள் விருப்பம் எனும் பொழுது, அவனது விருப்பம் – பேராசையால் அந்த மனிதனை தொன்னூற்று எட்டு நாணயங்களை எடுத்துக் கொள்வதை தவறாக நினைக்கவில்லை. தன் கையில் இருந்து கொடுப்பது போல போல இரண்டு நாணயங்கள் கொடுத்தான். அவன் உழைத்து வருடக் கணக்காக சேமித்த காசானால் வலித்திருக்கும். நுணுக்கமாக இந்த வழக்கை எண்ணிப் பார்த்தால், நீங்களே உணர்வீர்கள். க்ருத யுகத்து நீதி என்றாலும் இது தான் நீதி. யசஸ்கரனின் நீதி. மனித நேயம் என்ற உயர்ந்த நீதி.
ஆனால் யசஸ்கரனின் இத்தகைய கொள்கைகள் சபை அங்கத்தினர்களுக்கு ரசிக்கவில்லை. வைத்யர் நோயாளிக்கு பத்திய உணவு சொல்லி விட்டு, தான் விருந்து உண்பது போல – அவனுக்கு வியாதி இல்லை, விருந்து சாப்பிட முடிகிறது என்ற உண்மை கூட மறந்து விடுகிறது போல.
அரசனிடம் மதிப்பு குறைந்த காரணம் அரண்மனை வேலையாட்களை தேர்வு செய்வதிலும் கவனமாக இல்லை. குலம் இல்லாத சேவகர்கள் சமையல் வேலை செய்வதை அனுமதிக்கிறான். வேதம் படித்தவன் மண்ணாலும் நீராலும் தன்னை சுத்தி செய்து கொள்வதில்லை. இப்படி பல குறைகள் கண்டனர்.
அரசனின் மூத்த சகோதரன், ரணேஸ்வர சன்னிதியில் வாளை வைத்து சத்ய பிரமாணம் செய்தவன், போரில் மரனம் அடைந்த பொழுது அரசன் வருந்தவில்லை. சபையில் இருந்த மற்றவர்கள் இதை பலவிதமாக தங்கள் அனுமானங்களால் எப்படி வருந்தாமல் இருக்கிறான். இவனே ஏற்பாடு செய்து போரில் மரணமடைய செய்து விட்டானோ என்று வதந்தியை பரப்பினர்.
மண்டலேசன் என்ற பதவிக்கு வேலாவித்தன் என்பவன் நியமிக்கப் பட்டான். அவனோ அந்த:புரத்தில் தன் விளையாடல்களை ஆரம்பித்து விட்டான். ராணிகளை அவன் தன் வசம் ஆக்கிக் கொண்ட பொழுது கூட யானை கண் மூடிக் கொள்வது போல கண்டும் காணாமல் இருந்து விட்டான். இது என்ன குணம்? இந்த வேலாவித்தன் கொடுத்த தைரியம் லல்லா என்ற விலை மாது அந்த:புரத்துக்கே வந்தாள். அவளை அந்த:புரத்துக்கு அதிகாரியாக இந்த வேலாவித்தன் நியமித்தான். அரசனே அவளிடம் பிரியமாக இருந்தான். ஆயினும் அவள் வெளியில் தனக்கு பிரியமான ஒரு சண்டாளனோடு சுற்றினாள். எதற்குத் தான் படைப்பவன் வெளியில் பரிசுத்தம் போலவும் , உள்ளுக்குள் பல கெட்ட எண்ணங்களுடனும் ஒரு பிறவியை படைத்து அதற்கு பெண் என்று பெயர் கொடுத்தானோ என்று பாதிக்கப் பட்டவர் அங்கலாய்த்தனர். இந்த லல்லா வே சண்டாள குலத்தில் பிறந்தவளோ என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்தது. ரகசியமாக அவளை உளவு பார்த்தனர். அவள் மாற்றானுடன் இருப்பதை கண்ட ஒரு அரச சேவகன் வந்து சொன்னான். அவளை தண்டிக்கவோ , சாதரணமாக எவரும் செய்வதை எதையும் செய்யாமல் அரசன் தான் க்ருஷ்ணாஜினம் தரித்து பிராயச் சித்தம் செய்தான். அவளை தண்டிப்பான் என்று எதிர் பார்த்த அரண்மனை வாசிகள் இந்த செயலால் பெரிதும் கோபம் அடைந்தனர். தவிர அரண்மனையின் சுத்தம் பற்றி சொல்லியும் கேட்காமல் சமையல் செய்வோர் சுத்தமாக பொருட்களை வைத்துக் கொள்வதும் இல்லை, தாங்களும் சுத்தமாக இல்லை என்ற குற்றச்சாட்டையும் அலட்சியம் செய்தான். அதன் பலன் அவனே ரோகியானான். தாங்க முடியாத வயிற்று வலி. குஷ்ட ரோகியை தொடுவதால் அந்த வியாதி பரவுவது போல.
கொடைகள் நிறைய அளித்தான். ஆர்யதேச என்ற இடத்தில் தன் முன்னோர்கள் மூலம் வந்த பரம்பரைச் சொத்தில் இருந்து மாணவர்கள் படிக்கவும் தங்கவும் விடுதியைக் கட்டினான். மடாதிபதிக்கு அரசனுக்குரிய சத்ர சாமரங்கள் அளித்தான். அந்த: புரம் என்பதைத் தவிர ராஜ மரியாதைகள் அனைத்தும் அவருக்கும் கிடைக்கச் செய்தான். விதஸ்தாவின் மணல் வெளியில் அந்தணர்களுக்கான பலவித வசதிகளுடன் அக்ரஹாரம் என்ற குடியிருப்புகளை கட்டுவித்தான். அதை ஐம்பத்தைந்து அந்தணர்களுக்கு அளித்தான்.
இதற்குள் வியாதி முற்றி விட்டது. அவனுடைய மகன் சங்க்ராம தேவன், தனக்கு பிறந்தவன் இல்லை என்ற உண்மை தெரிந்ததால், ராம தேவன் என்ற தன் மாமன் மகனை அரசனாக்கி விட்டான். மெய்க்காப்பாளர்களையும், வர்னாடா என்ற பொறுப்பையும், மந்திரிகளின் பொறுப்பில் விட்டான்.
அரண்மனை பெண்டிர் மத்தியில் ஏமாற்றம் கோபமாக வெடித்தது. பர்வகுப்தா என்பவன் பின்னாளில் செய்த சீர் திருத்தம் அன்று அந்த அரசாட்சியில் தான் உதித்தது என்பர்.
பதவிகளை பெற்றுக் கொண்ட மந்திரிகள் அரசனின் நலனையும் கவனிக்கவில்லை. உடல் நலம் இன்றி இருந்த பொழுது விசாரிக்க கூட வரவில்லை. அவர்களின் இடை விடாத நச்சரிப்பால், சங்க்ராம தேவன் பட்டத்துக்கு வர அரசன் சம்மதித்தான். வர்னாடா வை கைது செய்து ஒரு நாள் சிறையில் வைத்திருந்து வெளி வரச் செய்தனர். அரண்மனை வளாகம் குப்பை கூளம், தவிர பணியாளர்களின் அலட்சியம், அரசனிடம் பயம் இன்மை என்பதால், பிராகாரங்கள் அசுத்தமாக தாங்க முடியாத துர் நாற்றம் உடையதாக மாறியது. உண்மையான ராஜ சேவகன் தேவப்ரசாத என்பவன் தன் வாளை விஜயேஸ்வர சன்னிதியில் வைத்து விட்டு பதவி விலகி விட்டான்.
யசஸ்கரனும் வியாதியின் வலி தாங்காமல், கவனிப்பாரும் இன்றி அரண்மனையை விட்டு வெளியே தான் கட்டிய மடத்தில் தங்கலானான். அரசன் ஆன சமயம் உண்மையாக உழைப்பதாக சத்ய பிரமாணம் செய்த ஊழியர்கள், தங்கள் தலையை கொடுப்போம் என்று சொன்னவர்கள், அவருக்கு ஏதாவது துன்பம் என்றால், தலையை மழித்துக் கொண்டு விரதம் இருப்போம், தலைப்பாகை அணிய மாட்டோம் என்று வாக்கு கொடுத்தவர்கள், எவரும் நெருங்கவே இல்லை. தனி ஆளாக அரசன் தன் வழி சென்றான்.
இரண்டாயிரத்து ஐநூறு தங்க நாணயங்களை மடியில் கட்டிக் கொண்டு சென்ற அரசனிடம் இருந்து பர்வ குப்தா மற்றும் ஐவருமாக மந்திரிகளே திருடிக் கொண்டனர். அது அரசுடமை அல்ல. யசஸ்கரனின் சொந்த பணம். இது தெரிந்தும் அதை திருடி தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். தனியாக ஒரு மடத்து அறையில் இருந்தவனை வேலாவித்தா போன்றவர்கள் என்ன அவசரமோ, விஷம் கொடுத்து கொன்று விட்டனர். அந்த:புரத்து பெண்களில் த்ரைலோக்ய தேவி என்பவள் மட்டுமே அரசனை தொடர்ந்து சென்றவள்.
பலர் எதிரியாக ஆக அரசனின் சீர்திருத்தங்களே காரணமாயின. ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று பாடு பட்டான். சக்ரபானு என்ற ஒரு அந்தணன் வழிபாடுகளிலும் சில சட்டங்களிலும் தன்னை எல்லாம் அறிந்தவனாக காட்டிக் கொண்டு சக்ரமேலக என்ற இடத்தில் சாஸன விதிகளை மாற்றியதை கண்டித்தான். அதற்கு தண்டனையாக நாயின் காலை அவன் முன் நெற்றியில் அடையாளமிட்டு விட்டான். உறவின் பெயரால் இந்த உரிமை எடுத்துக் கொண்டவன். மாமன் முறையில் இருந்த வீரநாதன் என்பவன் யோக முறைகளில் விற்பன்னன், இதனால் ஆத்திரமடைந்தார். யசஸ்கரனை பழி வாங்கப் போவதாக சபதம் செய்தான். சபையில் முன்னால் குருவாக அரசனுக்கு உதவ இருந்த பழம் புள்ளிகள், தங்களுடைய தேவையும் மதிப்பும் குறைவதைக் கண்டு ரகசியமாக திட்டம் தீட்டினர். அவன் இறந்து ஏழு நாட்களுக்குப் பின் தான் செய்தியை வெளியிட்டனர். இப்படி நாலா புறமும் சதிகாரர்கள் சதிகளே செய்து கொண்டிருந்தால், சீர் திருத்தம் எப்படி முடியும்.
ஆனால் பொது மக்களிடையே நன் மதிப்பு பெற்றிருந்தவன் ஆனதால் அவர்கள் நம்பவில்லை. வர்நாட முதலானோர் வியாதியினால் தவித்த அரசனை கொன்று விட்டதாகவே நம்பினர். அப்படித்தான் சரித்திர நூல்களிலும் காணப்படுகிறது.
ஒன்பது ஆண்டுகளே ஆண்டான். இருபத்து நாலாம் ஆண்டு பாத்ர பத மாதம் – புரட்டாசி- தேய் பிறை மூன்றாம் நாள் பரம பதம் அடைந்தான். 948 A.C.
யசஸ்கரன் பொறுக்கி எடுத்து இவர்கள் நேர்மையாக இருப்பார்கள் என்று நியமித்த மந்திரிகளும் அதிகாரிகளுமே அவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்தனர். தற்சமயம் அரச வம்சம் என்ற ஒரே தகுதியுடைய அந்த சிறுவன் அரசனாக விடுவார்களா ? சரியான சந்தர்பத்தை எதிர் நோக்கி இருந்தனர்.120
சங்க்ராம தேவன் என்று பெயரிடப்பட்ட பிறந்த குழந்தையை பாதுகாத்து வளர்த்த பாட்டியையே அரசு கட்டிலில் அமர்த்தி விட்டு, போபடன், பர்வகுப்தன் முதலான ஐவரும் அரசாட்சியை செய்தனர். நாளடைவில் அந்த பாட்டியுடன் அரச குடும்பத்தினரை ஒழித்துக் கட்டி விட்டு பர்வகுப்தன் அரசாட்சி செய்பவனாகவும், மந்திரியாகவும், உரிமையுள்ள அரசனின் சிறுவனுக்கு தானே உணவு கொடுப்பதில் இருந்து அனைத்து தேவைகளை பூர்த்தி செய்பவனாகவும் அரண்மனையின் ஏக போக நாயகன் ஆனான்.
தன்னை நேர்மையாக காட்டிக் கொண்டு சுய ரூபத்தை மறைத்தே வாழ்ந்தான். நீண்ட தாடியும், திலகமும் முன் இருந்த அரசன் போலவே வெளி வேடமும் தரித்தான்.
உடனடியாக குழந்தையை கொன்றால் போராட்டம் வெடிக்கும். அரசனின் மெய்க்காப்பாளர்கள் இன்னமும் அரசனிடம் விஸ்வாசம் உடையவர்களே. அவர்களுக்கு அரச வம்சத்தை பாதுகாப்பதே கடமை என்று இருப்பவர்கள். எனவே அபிசாரம் என்ற மறைமுகமான சூழ்ச்சியை செய்யலானான்.
சித்திரை மாதம் முதல் தேதி வரை உனக்கு அனுகூலமான காலம். அதற்குப் பின் ஏதாவது செய்தால் அகப்பட்டுக் கொள்வாய், குடும்பத்தோடு அழிவாய் என்று அந்த ஏவல் என்ற சூழ்ச்சியை செய்பவன் அறிவுறுத்தினான்.
உள்ளுணர்வால் உந்தப் பட்டவர்களாக மெய்க் காப்பாளர்கள் அவனிடம் கவனமாக இருந்தனர். சிறுவனிடம் அவன் இருக்கும் பொழுதும் உடன் இருந்தனர். இதுவே கவலையாக பர்வகுப்தன் உடல் நிலை பாதிக்கப் பட்டது. பொறுக்க மாட்டாமல் பனி மழை பெய்த ஒரு இரவில் திடுமென தன் படையினருடன் அரண்மனையை முற்றுகையிட்டான். உண்மையான மந்திரி ராமவர்தனையும் அவன் மகன் புத்தா என்பவனையும் சிறை பிடித்த பின் இது வேலாவிட்டன் அளித்தது என்று சொல்லி அரச குமாரனின் கழுத்தில் ஒரு மாலையை போட்டு சங்க்ராம தேவன் என்ற சிறுவனை இழுத்துச் சென்றான். மற்றொரு இடத்தில் அவனைக் கொன்று கல்லுடன் கட்டி விதஸ்தாவில் வீசி விட்டான். இது நடந்தது, 24ம் ஆண்டு, தேய் பிறை பத்தாம் நாள், பால்குண மாதம். அதன் பின் அந்த பாவி, தானே வாளும் கையுமாக அரியாசனத்தில் அமர்ந்தான். சங்க்ராம குப்தனின் வம்சத்தில் வந்தவன், அரண்மனை ஊழியனின் மகனாக பிறந்தவன், அரசனாக அமர்ந்தான்.
அதுவரை எதிர்த்தவர்கள், அரச கட்டிலில் அமர்ந்த பின் பயத்தால் அடங்கியிருந்தனர் மறுநாள் காலையிலேயே வந்து வணங்கினர். முந்தைய அரசில் ஆளுமையில் பங்கு கொண்ட முக்யஸ்தர்கள், மெய்க் காப்பாளர்கள், அரச ஊழியர்கள், தந்திரிகள் இவர்களில் சிலரும் இந்த துரோகத்தில் ஒத்துழைத்தனர். காரணம் பர்வகுப்தன் எந்த அளவுக்கு தண்டிப்பான் என்று அறிந்ததால் வந்த பயம்.
ஒரு மெய்க்காப்பாளன், மதனாதித்யா என்ற சுய்யாவின் வழி வந்தவன், அரச சபையில் அடக்க மாட்டாமல் குத வாயுவை வெளி விட்டான். அரசனுக்கு அது அவமானமாக பட்டது. மதனாதித்யனை ஆடையின்றி நிற்க வைத்தான். அரச சபையை விட்டு வெளியேறியவன்,
த்ரிபுரேஸ்வரா என்ற இடத்தில் துறவியாக ஆனான். மனைவி மக்களும் உடன் சென்றனர். அந்த குடும்பத்தினர் அதன் பின் திரும்பி வரவேயில்லை.
பர்வகுப்தன் நிதி வசூலித்து பொக்கிஷத்தை நிரப்புவதே குறியாக இருந்தான். மக்களின் பொதுவான ஆதரவும், அவர்களின் செய் நன்றியை மறக்கும் தன்மையை காட்டியது. பழையபடி வாழ்க்கை முறைகள் திரும்பின. ஸ்கந்த பவன விஹாரத்தின் அருகிலேயே, பர்வகுப்தேஸ்வர் என்ற கோவிலை தான் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டே கட்டினான். துரோகமே உருவானவன் அந்த:புரத்து யசஸ்கரனின் மனைவியை நாடினான். தேவி பார்வதியே , தன் நிறத்தை மாற்றிக் கொண்டு வெண்ணிறமாக வந்து விட்டாளோ என்ற அளவு கணவனான யசஸ்கரனிடம் அன்புடையவள். முதலில் இந்த கோவில் யசஸ்கரஸ்வாமின் என்று ஆரம்பித்த கோவிலை முடி, அது பாதியில் நிற்கிறது என்றாள். அவள் புருவமே அழகு என்று வியந்தபடியே பர்வகுப்தன் ஒத்துக் கொண்டான். அதே எண்ணமாக வெகு சீக்கிரத்தில் அந்த கோவில் நிர்மாணம் நிறைவுற்றது. அதன் நிறைவை ஒட்டி
யாகங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது, அவள் விஷத்தை குடித்து விட்டு அந்த யாகத் தீயில் பூர்ணாஹுதியாக விழுந்து விட்டாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
அதற்கு காரணமான பர்வகுப்தன் அனைவரின் நிந்தைக்கும் ஆளானான். மனம் வெறுத்து, உன்மத்தனாக வீதிகளில் திரிந்தான். கடைசியில் சுரேஸ்வரி என்ற தேவஸ்தானத்தில் உயிர் விட்டான்.
மூடன், செல்வத்தை அபகரிப்பதே குறியாக செய்த அக்கிரமங்கள், தீய செயல்கள் அதன் பலன் விபரீதமாக அனுபவிக்க நேரிடும் என்பதை அறியாமல் போனான்.
இருபத்தாறாம் ஆண்டு, ஆஷாட மாதம், வளர் பிறை த்ரயோதசி திதியில் துரோகத்தால் பெற்ற ராஜ்யமும் இன்றி நோயாளியாக உறவினரோ, மற்றவரோ எவரும் அருகில் இல்லாத பிறவியாக மடிந்தான்.
‘பரலோகம் எப்படி இருக்குமோ, தீய செயல்களையே செய்பவன் உலகில் அதன் பலனை அனுபவிப்பதை கண் கூடாக பார்த்த பின்னும் தன்னை திருத்திக் கொள்ளாதவர்கள் இன்னமும் அறிவில்லாமல் அதே போல தீய செயல்கள், துரோகம் முதலியவைகளை செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்.’
அவன் மகன் க்ஷேமகுப்தன் அரசன் ஆனான். இளம் வயது, சக நண்பர்களுடன் மதுவை குடித்தே பொழுதை கழித்தான். சுற்றியிருந்த நண்பர்களால் கெட்ட நடவடிக்கைகள் என்னவெல்லாம் உண்டோ, அனைத்தும் இயல்பாகவே வந்து சேர்ந்தன. தேய் பிறை மேகம் முடிய இரவு அதில் குருடன் எதைக் காண்பான். பயங்கரமானவன் ஆனான். பால்குணன் என்ற முகஸ்துதி செய்பவன் , அவனையொத்த பல துஷ்டர்கள் அவனுக்கு அருகில் வளைய வந்தனர். செல்வம் முழுவதும் கரையும் வரை இவர்கள் ஸூதாட்டம் முதல், மது மங்கை என்ற சகவாசங்களுடன் உடன் இருந்தனர்.
- க்ஷேமகுப்தா துர்குணங்களுக்கு இருப்பிடமாக இருந்தான். உடன் இருந்தவர்கள் அவனை மேலும் மேலும் தூண்டினர். வெட்கமில்லாமல் தங்கள் மனைவிகளையே அவனிடம் விட்டனர். சாது ஜனங்களை பரிகசித்து சிரிப்பதிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு அடி கீழேயே போய் கொண்டிருந்தான். தாமர சங்க்ராமா என்பவன் ஓடி ஒளிந்து கொண்டிருந்த ஜயேந்திர விஹார என்பதை அவனை கொல்லவே கொளுத்தி விட்டான். பித்தளையால் ஆன புத்தர் சிலை உருகி விட்டது. அதை திருப்பி கட்டுவதாக நினைத்து அங்கிருந்த கற்கள், உடைந்த விக்ரஹங்களைக் கொண்டு ஸ்ரீநகரத்தில் க்ஷேம கௌரீஸ்வர என்ற கோவிலை கட்டினான். செல்வந்தனான ஒருவன் இறந்தால் அவன் சேமித்து வைத்தது யார் கைக்கோ போகிறது. இதை அறியாதவர் யார்? இருந்தாலும் இருந்தாலும் தானும் அனுபவிக்காமல் சேர்த்து வைப்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் அறிவில்லாத ஒருவன் கையில் கிடைத்தால் பயனில்லை என்பது மட்டுமல்ல அந்த செல்வத்தால் வரும் திமிரும், கர்வமும் அரக்கத்தனமன விளைவுகள் வரவும் காரணமாகின்றன. உதாரணம் சொல்வர். இயல்பான சபல புத்தியுள்ள குரங்கு, அதன் கையில் ஒரு பூமாலை அதுவும் மதுவைக் குடித்து மயங்கி கிடக்கிறது, ஒரு கொசு வேறு கடித்து விட்டது (स्वयमेव मर्कढक: मदेन मत्त: मशकेन च दष्ठ्: -இது ஒரு பிரபலமான சொற்றொடர்) செலவாளியான க்ஷேம குப்தன் Khasas என்ற தேசத்து அரசனுக்கு விஹாரத்துக்கு சொந்தமான கிராமங்களை விற்று விட்டான்.
லோஹார என்ற இடத்தில் கோட்டை கொத்தளங்களுடன் இந்திரனுக்கு சமமாக எண்ணப்பட்டசிம்ஹராஜா என்பவன் தன் மகளை அரசகுமாரன் என்ற ஒரே காரணத்தால் மணமுடித்துக் கொடுத்தார். அவனோ சாஹி என்ற அவள் மாமா, அவருடைய மகளின் மகள், diddaa-தித்தா என்பவளை விரும்பினான். அது முறையல்ல என்பதால் சல சலப்பு கிளம்பியது. இருந்தும் அசட்டு ராஜ குமாரன் என் பெயர் தித்தா க்ஷேமன் என்று சொல்லி சிரித்துக் கொண்டான். (பொதுவாக தீதி என்று சகோதரிக்கு சொல்வதை காஸ்மீரத்தில் தித்தா என்பராம்)
இது போன்ற பல மட்டமான நடவடிக்கைகள். பணமும், பதவியும் தூண்டி விடும் சகவாசமும் இருந்தால் ஓருவன் எந்த அளவு இறங்குவான் என்பதற்கு உதாரணம்.
(கவி விவரமாக எழுதியிருக்கிறார். இருந்தாலும் அறிவிலியான அரசகுமாரனின் அளவுக்கு மேல் சுதந்திரமும் செல்வமும் உடன் இருந்து கெடுத்த கயவர்களும் பற்றிய சரித்திரம் அதனால் விட்டு விட்டு மேலே போகலாம். )
ஒரு தேய்பிறை சதுர்தசி திதியில் தாமோதராரண்யம் என்ற காட்டில் ஓனாய் வேட்டையாடப் போனவன் ஒரு பெண் ஓனாயின் முகத்தில் தீ ஜுவாலையாக இருந்ததைக் கண்டு பயந்தவன் கடும் ஜுரமும் உடல் முழுவதும் முழு பருப்பு அளவு கொப்புளங்களும் வந்து மடிந்தான்.
முப்பத்து நாலாம் ஆண்டு புஷ்ய- தை மாதம் நவமி திதி யில் இறந்தான். 958 AC.
ஹுஸ்க புரம் அருகில் ஸ்ரீகண்ட, க்ஷேம மடம் என்பவை அவன் நினைவாக உள்ளன.
க்ஷேமகுப்தனின் மகன் அபிமன்யு என்பவன் அரசனானான். இரக்கம் என்பதே இல்லாதவள் என்று அறியப் படும் தித்தா தேவி அவனை வளர்த்தாள். சந்தி விக்ரஹ – போரும் அமைதியும் என்ற நிர்வாகத் துறையையும், அந்த:புர தேவைகளையும் கவனித்துக் கொண்டிருந்த மந்திரிகள் அரசன் இல்லாத குறையை நிரப்பினர். காரணமின்றி துங்கேஸ்வரா கோவிலில் பிடித்த தீ, அருகில் இருந்த கடை வீதியை அழித்தது. வர்தமான ஸ்வாமி கோவில் வளாகம், வரை அது பரவியது. அங்கு இருந்த பலர் டொம்பா, சண்டாள என்ற குலத்தினர் அதில் அகப்பட்டுக் கொண்டனர். நிலத்தையே சுத்தமாக்கி விட்டு விட்டு தீ அணைந்தது. அங்கு இருந்த பல அழகிய கட்டிடங்கள் தரை மட்டமாகின. பிக்ஷுகா என்ற மடத்தின் பிராகாரங்கள் வரை முன்பு வேதாளம் போட்டுக் கொடுத்த வரை படங்கள் முதல் பெரும் பான்மையான பெரிய வீடுகள் அனைத்தும் பஸ்மமாகின
அதிக அறிவில்லாத பெண். சரியா தவறா என்று யோசிக்கும் திறன் இல்லாதவள். தன் மகளையும், அதிலும் அவள் கணவன் உயிருடன் இருக்கையில் ஏற்கவனே மணமான க்ஷேம குப்தனுக்கு கொடுத்த பால்குணனை வெறுத்தாள். முக்ய மந்திரியாக இருந்த பால்குணன் அரசனின் பல தீய செயல்களுக்கு உடந்தையாக இருந்தவன். அரசனின் பத்னிகள் உடன் மரிக்க தன் தம்பத்தால் தடுக்காமல் இருந்தான். நரவாஹன் என்ற மந்திரி சிதையின் அருகில் நெருப்பில் விழத் தயாராக இருந்த பெண்களை தடுத்தான். ரக்கா என்பவன் இயல்பாகவே துஷ்டன், பால்குணனுக்கு எதிராக அவள் மனதில் வெறுப்பை தூண்டி விட்டான். அதற்கு கரணம், பால்குணன் செயல் திறன் உடையவனாக இருந்ததே. அரச நிர்வாகம், அவன் பொறுப்பில் சீராக இருந்ததோடு, வீரன், போர் கலையும் அறிந்தவன் என்பதால் மற்ற மந்திரிகள் அனைவருமே பொறாமை கொண்டிருந்தனர். தித்தா, உள்பட அனைவரையும் பால்குணனும் சந்தேக கண்களுடனேயே பார்த்தான்.
அரச அதிகாரிகளால் தனக்கு தீங்கு நேரலாம் என்று நினைத்தவன் போல பால்குணன், அவன் மகன் கர்தமன் என்பவன் , க்ஷேம குப்தனின் அஸ்தியை கங்கையில் கரைக்க எடுத்துச் சென்ற சமயம், பொறுக்கி எடுத்த தனது ஆதரவாளர்களுடன், பர்னோத்சா என்ற இடத்தில் அவன் திரும்பும் வரை வசிக்கச் சென்றான்.
அவன் தன் படை வீரர்கள் பொக்கிஷங்களுடன் புறப்பட்டு ஊர் எல்லையில் காட்டுப் பிரதேசம் அடையும் முன் ரக்கா முதலானோர் தித்தாவை தூண்டி விட்டு சில ஆயுதம் தாங்கிய வீர்களை அனுப்பினாள். இது சரியல்ல என்று மற்றவர்கள் தடுத்தும் கேளாமல் பின் தொடர்ந்து சென்று பால்குண பரிவாரங்களை அழிக்கும்படி ஆணையிட்டு அனுப்பினாள்.
பால்குணன் உள்ளுணர்வால் இதை அறிந்து திரும்பி வராஹ க்ஷேத்ரம் வந்து அங்குள்ள வீரர்களுடன், அரண்மனை திரும்பி வர விருப்பம் இன்றி. வராஹ க்ஷேத்திரத்தில் தங்கி விட்டான். வெகு காலமாக அரச நிர்வாகத்திலேயே தன் கவனம் முழுவதும் செலுத்தி வந்தவன் , அனைத்தும் பயனற்றவையே என உணர்ந்தவன் போல தன் வாளை வராஹ தேவனின் பாதத்தில் வைத்து ஓய்வு பெற்றான்.
துரோகம் செய்பவர்கள் மத்தியில் தன் ஆயுதத்தை தியாகம் செய்த முக்யமந்திரி தன்னளவில் நிம்மதியடைந்தார். ராஜ மாதாவின் அனாவசிய சந்தேகமும் தீர்ந்தது.
மனத்தளவில் மாசிலான் என்று தமிழில் சொல்வது போல தன் வரை தன் செயலில் உண்மையாக அரச சேவகமே செய்து வந்தவர், நல்லது தீயது என்று பாகு படுத்த தெரிந்தவர் ஒரு நிலையில் விரக்தி அடைவது நடப்பது தான். அவர் மட்டும் எதிர்த்து இருந்தால் , உண்மையில் நடந்த அனைத்து உட் பூசல்களும், சூழ்ச்சிகளும் வெளி வந்திருக்கும். அறிவும், கையிள் வாள் (திறமையும்) கூர்மையானவை. இரண்டுமே சரியான சமயத்தில் சரியான முறையில் பயன் படாவிட்டால், அதற்குரிய மதிப்பையும், மரியாதையும் பெறாவிட்டால் நல்ல மனிதன் வருந்துவானே தவிர அதை தவறாக பயன்படுத்த மாட்டான். தியாகம் தான் சிறந்த வழி. அதைத்தான் அந்த முக்ய மந்திரி செய்தார். (शास्त्राय शस्त्राय वा)
அறிவில்லாத அரண்மனை வாசிகள் மகிழ்ந்தனர். மாணவர்கள் வகுப்பு ஆசிரியர் வராவிட்டால் மகிழ்வது போல என்று உவமானம்.
க்ஷேமகுப்தனின் மனைவியும் நிலைமையை உணர்ந்தாள். தானே அரசு நிர்வாகத்தை ஏற்றுக் கோண்டு முட்களாக இருந்த தடைகளை நீக்க முயன்றாள்.
பர்வகுப்தன் ராஜ்யத்தை அபகரிக்க திட்டமிட்ட பொழுதே தன் இரு புதல்விகளை சோஜ, பூபடா என்ற இரு மந்திரிகளுக்கும் மணம் செய்து விட்டிருந்தார். அவர்கள் புதல்வர்கள், மஹிமான், பாடல என்ற இருவரும் அரண்மனையில் ராஜ குமாரர்கள் போலவே வளர்ந்தனர். அவர்களும் அரியணையில் அமரவே ஆசைப் பட்டனர். ஹிம்மகா என்ற ஒருவனும் மற்றும் சிலரும் அதற்கு தூபம் போட்டனர். ராணி, இந்த இருவரையும் முதலில் அரண்மனை வளாகத்தை விட்டு வெளியேற்றினாள். இதனால் வெகுண்டாலும் இருவரும் அரண்மனைக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். மஹிமான் பேரில் சந்தேகம் கொண்ட ராணி அவனைத் தொடர்ந்து கண்காணிக்க ஒற்றர்களை நியமித்தாள். அதையறித்த இருவரும் மஹிமானின் மாமனார் சக்தி சேனா என்பவரை அடைக்கலம் புகுந்தனர். சக்தி சேனா இந்த ஒற்றர்களை சமாதானப் படுத்தி இருவரையும் தொடர்ந்து கண்காணிப்பதை நிறுத்தச் சொன்னார். பிடிவாதமாக அவர்கள் பின் தொடருவதை நிறுத்தாவிட்டால், தானே தன் மருமகனை காக்க செய்ய செய்ய வேண்டியதைச் செய்வேன் என்று மிரட்டி அனுப்பினார்.
மஹிமானுக்கு அவன் மாமனார் ஆதரவு கிடைத்தவுடன், ஹிம்மகனும், முகுளனும் அங்கு வந்து சேர்ந்தனர். மற்றொருவன் ஏரமத்தகன் என்பவனும் பரிகாச புரத்தில் இருந்து வந்து சேர்ந்து கொண்டான். மேலும் சில அனுதாபிகள் கூட்டாக சேர்ந்தனர். உதய குப்தன், அம்ருதகரன் என்பவனின் மகன், மற்றவன், யசோதர என்பவன் லலிதாதிய புரவாசிகளையும் அழைத்துக் கோண்டு வந்தான். சிறியதே ஆனாலும் ஒவ்வொருவரும் தங்கள் படைகளை கொண்டு வரவும் கணிசமான அளவு படையெடுக்கத் தேவையான பெரும் படை தயாரானது. உள் நாட்டு கலஹம் செய்ய மஹிமான் தலைமையில் கிளம்பினர்.
ஒரே ஒரு நியாயமான மந்திரி நரவாஹனன் இந்த கூட்டத்தில் சேரவில்லை. தித்தாவின் பக்கமே இருந்தார். ஆரவாரமாக இந்த படை பத்மஸ்வாமின் என்ற இடத்தை அடைந்தது.
தித்தா முதலில் அரச குமாரனை ஸூர மடம் என்ற இடத்தில் பாதுகாப்பாக இருக்கச் செய்து விட்டு, இந்த ஆபத்தை சமாளிக்க ஆலோசனைகள் நடத்தினாள். லலிதாதிய மக்கள் பிரதிநிதிகளை நிறைய பொற்காசுகள் கொடுத்து, எதிரிகள் படையில் பிளவு ஏற்படச் செய்தாள். என்ன ஆனாலும் ஒற்றுமையாக போராடுவோம் என்று வந்தவர்களில் ஒரு பகுதி விலகியது. யாருமே எதிர் பார்க்கவில்லை, தித்தா இந்த அளவு போர்த் திறமை உடையவள் என்பதை. லங்கையைத் தாண்டிய வாயு புத்திரன் போல அவள் இந்த படையை பசுவின் குளம்புகளுக்கு இடையில் உள்ள தூரம் போல – (இது ஒரு அளவு – ஒரு பசு மாடு நிற்கும் தூரம், பத்து பசுமாட்டுத் தூரம், நூறு பசுக்கள் நிற்கும் தூரம் என்று ஒரு நீட்டல் அளவை) கடந்து விடுவாள் என்று.
விலையுயர்ந்த்த ஆபரணங்கள், உயர் மணிகள், மற்றும் விலையுயர்ந்த்த பொருட்களை சேமித்து வைப்பது, அதை தியாகம் செய்தாலும் இது போன்ற இடுக்கண்களை களைய உதவக் கூடும் என்பதை யார் தான் எதிர் பார்த்தனர். செல்வத்துக்கான அமோக வலிமை இது. அதற்கு ஒரு வணக்கம் தெரிவிப்போம்.
அதைவிட பதவிகளைக் கொடுத்தால் எதிரிகளை சுலபமாக வளைக்கலாம் என்று எண்ணியவள் போல, யசோதரா போன்றவர்களுக்கு தன் சேனையில் உயர் பதவிகளைக் கொடுத்தாள். மஹிமானும் சில நாட்களில் ஏதோ ஒரு வகையில் கொல்லப் பட்டான். தித்தா தன் அரச நிர்வாகத்தை எந்த தடையும் இன்றி செய்ய முடிந்தது.
ஒரு சமயம், தக்கன் என்ற சாஹி தலைவனை எதிர்த்து, ஒரு சேனைப் பிரிவின் தலைவனாக இருந்தவன், கோபத்துடன் தன் வம்சத்தினரை கூட்டு சேர்த்துக் கோண்டு போர்க் கொடியை தூக்கினான். அந்த தேசமோ மலைகள் அடர்ந்தது. பாறைகளும் குகைகளுமாக கடந்து செல்லவே பெரும் கடினமான செயலாக ஆயிற்று. சிரமப்பட்டாலும் தக்கன அரசை கைப் பற்றி வெற்றி முழக்கம் செய்தான்.
ரக்காவும் ஒரு சிலரும் இந்த அசட்டு ராணிக்கு வந்த யோகத்தைப் பார் என்று மனத் தாங்கல் கொண்டனர். அவர்கள் கூட்டாக அவளுக்கு துர் போதனை செய்தனர். முக்ய சேனாபதியாக இருந்தவரைப் பற்றி தவறாக எண்ணும்படி செய்து விட்டனர்.
‘ அரசனோ, ஸ்படிக மணியோ, சாதாரண குணவதியான பெண்ணோ, தங்கள் நிலையான தன்மையை, மனக் கட்டுப்பாட்டை இழந்தால், சுற்றுபுறத்தின் – ஸ்படிக மணி போல, உடன் இருப்பவர்களின் உபதேசம் அரசனானால், வேற்று மனித சகவாசம் பெண்ணுக்கு என்று ஏதோ ஒன்று திசை மாற்றி அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும்.‘
தன்னலமே குறியாக எதிராளியின் சபலம் அல்லது அறியாமையை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள், இனிமையாக பேசி, நெருங்கிய நண்பர்களாக, அவர்களின் நலம் விரும்பிகளாகவே காட்டிக் கொண்டு தீய எண்ணங்களை அவர்கள் மனதில் புகுத்த வல்லவர்கள். இவர்களை அடையாளம் கண்டு கொண்டு நெருங்க விடாமல் செய்து கொள்ள திடமான மனதும், கொள்கையும், அரசனுக்கும், பெண்களுக்கும் மிக மிக அவசியம். குடிப் பிறப்பும், சுய அறிவும் ஓரளவு இந்த தற்காப்பு உணர்வை அளித்து விடும். எளிதில் மயங்கும் குணமுடையவர்களைப் பற்ரி என்ன சொல்ல?
தக்கனத்தை வென்றவனையே இவ்வாறு இழித்து பேசி, அவளிடம் தவறான எண்ணத்தை தோற்றுவித்து விட்டனர். வெற்றி களிப்புடன் ஊர் வந்து சேர்ந்தவருக்கு அதிர்ச்சி தரும் விதமாக பணி நீக்கம் செய்த செய்தியே முக்ய சேனாபதியை வரவேற்றது.
நரவாஹனன் மட்டுமே அரசியின் மன மாற்றத்துக்கு காரணம் சிலரின் துர் போதனையே என்று உணர்ந்தார். மற்றவர்கள், ஹிம்மக், எர மண்டகா முதலானோர், முக்ய சேனாபதிக்கு செய்த அவமானம் என்று கருதினர். அதனால் சேனையில் பிளவுகள் தோன்றின.
அடுத்து சுபதரா என்ற அரசன் முற்றுகையிட்ட பொழுத்து, தித்தா, மகனை பட்டாரக மடம் என்ற இடத்திற்கு பாதுகாப்புக்காக அனுப்பி விட்டாள். அவளை பதவி இறக்குவது என்று புறப்பட்டவர்களும் சந்தர்பத்தை சரியாக பயன் படுத்திக் கொள்ளவில்லை. அதனால் ராணி தப்பினாள். ஒரு சில நம்பகமான காவலர்களும், அரச ஊழியர்களும் பக்க பலமாக இருந்ததால், ராணி தித்தா மறு நாளே தன் பலத்தை நிரூபித்தாள்.
அவளுக்கு சாதகமாக, ஒரு எதிரிகளின் படை ஜய பட்டாரிகா என்ற இடத்தில் இருந்து ஸுர பாடசாலை வரையில் முகாம் இட்டது. வெளி எதிரியை முறியடிக்க அனைவரும் ஒன்று சேர்ந்தனர். ஒரு நிலையில் அவர்கள் புற முதுகிட்டு வந்த பொழுதும் மெய்க் காப்பாளர்கள் திடமாக எதிர்த்து நின்று எதிரி படையை தடுத்து விட்டனர். வந்த வழியே அந்த படை திரும்பியது. ராஜகுல பட்டா என்பவரும் தன் சேனையுடன் வந்தார். அவருடைய துரீய கோஷம், போர் முரசம் கேட்டே அனைவரும் உத்சாகம் பெற்றனர். தங்கள் இடையே முளைத்த வேற்றுமை, துவேஷம் இவைகளை மறந்து ஒரு முகமாக எதிரிகளை விரட்டினர். வெற்றி தேவதை என்றுமே துவேஷம் , உட் பூசல்களை அனுமதித்ததில்லை. ராஜ குல வீரர்களூக்கு முன் ஹிம்மகா வின் வீரமோ, அவன் வாள் வீச்சோ எடுபடாது என்று அறிந்தவர்கள், மற்றவர்கள் ஏன் தலை தூக்குகிறார்கள். அந்த உட் பூசல் தானே அடங்கியது. போரில் ஹிம்மகா மடிந்தான். யசோதரா சிறைப்பட்டான். எரமன்டகன் வீரத்துடன் போர்க் களத்தில் இருந்த பொழுது, அவன் வாள் முறிந்தது. கீழே விழுந்தான். அதோடு அவனும் சிறைப் பிடிக்கப் பட்டான். உதய குப்த முதலியவர், அரசனின் அந்தரங்க படை வீர்கள் உயிர் தப்பிக்கவே விரும்பினர். யாருமறியாமல் வெகு தூரம் சென்று விட்டனர்.
ஏரமன்டக வெகு தூரத்தில் காசி, கயாவில் இருந்த காஸ்மீரிகளுக்கு வரி விதிப்பதை நிறுத்தி இருந்தான். பரிகாச புரத்தில் வசித்த அவனையும் விதஸ்தா ஏரியில் மிதக்கச் செய்தாள். யசோதர, முகுல, சுபதரா என்ற மூவரும் குடும்பத்தோடு அழிக்கப் பட்டனர்.
எழுபத்து ஏழு ஆண்டுகளாக கோபால வர்மா முதல் அபிமன்யு வரையிலான பதினாறு அரசர்களுக்கு அரசர்களுக்கு உண்மையாக உழைத்தவர்களும், அரச அபிமானிகளுமாக இருந்தவர்களும், இந்த சமயம் தங்கள் துரோக புத்தியால், அல்ப ஆசைகளால் அரண்மனைக்குள்ளேயே பூசலை கிளப்பி எதிர்த்து நின்றதால் ஒட்டு மொத்தமாக அழிந்தனர். தித்தாவின் கோபத்துக்கு ஆளானார்கள்.
901-2 AC
அதன் பின் ராக்கா தலைமையில் புது அதிகாரிகள், மந்திரிகள் வந்தனர்.
நரவாஹனா பொறுப்புள்ள மந்திரியாக, ஆலோசகனாக இருந்து, விவரம் அறியாத பெண்ணான தித்தாவை கணவனை இழந்த பின் மகனுக்காக அரச பொறுப்பை ஏற்ற பின் சரியானபடி வழி நடத்தி அரசாட்சி தடங்கலின்றி நடக்க வழி செய்தார். அதனால் ராஜ்யமும் சிதறுண்டு போகாமல் காக்கப் பட்டது. அவளும் அவரிடம் மரியாதையாக இருந்து ராஜானக என்ற பட்டம் அளித்து கௌரவித்தாள். அவருடைய அனுமதியின்றி எதையும் செய்வதில்லை.
குய்யா என்ற அரண்மனை ஊழியருக்கு இரு புதல்வர்கள் சிந்து என்றும் புய்யா என்றும். மூத்தவனான சிந்து, பர்வகுப்தனுடைய வீட்டில் இருந்தான். அவருடன் இருந்து பல விஷயங்களை அறிந்து கொண்டவன் ஆனதால் பொக்கிஷ அதிகாரியாக நியமிக்கப் பட்டான். நாளடைவில் உயரதிகாரியாக பதவி உயர்வு பெற்றான். வரி விதிக்கவும், பொக்கிஷத்தை நிர்வகிக்கவும் உரிமை பெற்றான். சிந்துகஞ்சா sindhuganjaa- என அவனுடைய அலுவலகம் பெயர் பெற்றது.
நரவாஹணன் அதிக உரிமை எடுத்துக் கொண்டு அவரே திட்டங்களும் தீர்மானங்களும் செய்கிறார். அதனால் நீங்கள் சுயமாக முடிவு எடுக்க இயலாமல் அவரை சார்ந்தே இருக்கிறீர்கள் என்று சொல்லி சொல்லி, அவளை நரவாகனாவிடமிருந்து தள்ளி இருக்கச் செய்தான். அவனுடைய துர் போதனை, தன்னலமான உள் நோக்கு புரியாமல் அவளும் தலையாட்டினாள்.
அந்த சமயம் அவரும் எதேச்சையாக தன் வீட்டில் உணவருந்த அழைத்தார். சிந்து கிண்டலாக அங்கு வரவழைத்து உங்களை சிறைபிடிக்கப் போகிறார் என்றான். அதை நம்பாவிட்டாலும், அவனிடமிருந்து விலகி அரண்மனைக்குள் போய் விட்டாள். ஏதோ காரணம் சொல்லி அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அதன் பின் பழைய ஒட்டுணர்வும் மரியாதையும், அவர் சொன்னால் தட்டாமல் ஏற்றுக் கொள்வதும் குறையலாயிற்று. எண்ணெய் எடுத்தபின் பிண்ணாக்கும் அந்த எண்ணெயும் பழையபடி எள்ளாகுமா என்ன? அனைத்து ஆயுதங்களும் கனிமங்களால் செய்யப் படுகின்றன. வஜ்ரத்தால் ஆன குலிசமாகுமா? உடைக்க முடியாது. அது போல ஓடும் நதிக்கு மேல் கட்டிய கல் அணை. நீரை தடுத்து நிறுத்தும். கல்லணை நீரால் மென்மைஉயாகுமா? அது போல சுய அறிவற்ற அறிவிலிகளின் அறியாமையை அகற்ற முடியாது. சிறு பாலகன் அளவே அறிவுள்ளவர்கள் உண்டு. அதே போல நிறைந்த அறிவு உடைய ஞானிகளும் உண்டு. கடவுளுக்கு சமானமாக மதிக்கப் படும் ஞானிகள். அனைவருமே பரமாணுக்களால் ஆனவர்களே. எந்த பரமாணு யாரிடம் அதிகம் அல்லது குறைவு என்பதை யார் அறிவார்.
காகம் மற்ற பறவையையும் தன் கூட்டில் வைத்து போஷிக்கிறது. அன்னம் பாலையும் நீரையும் பிரிக்கத் தெரிந்த பறவை சிறு இடிக்கு அஞ்சுகிறது. சரளமாக பேசத் தெரிந்த அரசனும், கூர்மையான அறிவுடையவன், கண்ணால் பார்த்தே ஒருவன் திறமையை அளந்து விடுவான் என புகழ் பெற்றவன், ஏதோ ஒரு விடலையின் சொல்லில் ஏமாறுகிறான். படைப்பவன் படைத்த பொழுதே அறிவையும், அறியாமையையும் கலந்து படைத்து விட்டான் போலும். எந்த சமயம் எது அதிகமாக இருக்கிறதோ அது வெளிப்படுகிறது.
எந்த விதமான ஒழுக்கமான நடவடிக்கைகளும் இல்லாதவள், காதில் விழுந்ததை ஆலோசியாமல் நம்புபவள், நாளடைவில் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்தாள். தூற்றப் பட்டாள்.
நரவாகனா இந்த அலட்சியத்தை உணர்ந்தார். அதிக நாள் உயிருடனும் இல்லை. செய் நன்றி மறந்தவர்களை பெருந்தன்மையுடையவர்கள் மறப்பதோ மன்னிப்பதோ இல்லை. இயற்கையான மரணம் அவர்களுக்கு விடுதலை போலத்தான். அடக்கிய கோபம் செய் நன்றி மறந்தவனுக்கு புரியுமா? நிலவு இல்லாத வானம், உண்மையில்லாத சொல், நர வாகனன் இன்றி வெறுமையாக ஆயிற்று.
அனாவசியமாக சந்தேகம் -யாரை பார்த்தாலும் தன் பொருளை அபகரிக்கவே வந்தவனோ என்ற பயம். தாமர, சங்க்ராம என்ற நெடு நாளைய அதிகாரிகள் அவர்கள் புதல்வர்களை கொல்ல திட்டம் வகுத்தாள். அவர்கள் அரண்மனை வளாகத்துள் இருந்தனர். இதை எப்படியோ அறிந்து உத்தர கோச என்ற தங்கள் ஊர் வந்து சேர்ந்தனர். இந்த வேலையை முடிக்க நியமிக்கப் பட்டிருந்த கய்யகா என்ற படைத் தலைவனையும் கொன்று விட்டனர் ராணியை சிலர் முன் எச்சரிக்கை செய்தனர். இதன் காரணமாக போராட்டம் வெடிக்கலாம் என்ற பயம். அவர்களை சமாதானப் படுத்தி திரும்பி வரவழைக்க ஆள் அனுப்பினாள். ஆனால் அவள் உள் நோக்கம் வேறாக இருக்கும் என்பதால் அவர்கள் ஸ்தானேஸ்வரா என்ற Damara- தாமர தலைவனுடன் தங்கள் நாட்டிற்கே சென்று விட்டனர். இதற்குள் ரக்காவின் காலமும் முடிந்து விட்டது. யாருமே தனக்கு உதவியாக இல்லை என்று பால்குண என்ற பழைய சேனாபதியை வரவழைத்தார். இனி அரச சேவகம் வேண்டாம் என்று இருந்தவர் பழைய விஸ்வாசம் காரணமாக திரும்பி வந்தார். ராஜபுரியை வென்றவர் என்பதால் புகழ் பெற்ற சேனாபதி, அவரை அனைவரும் மதித்தனர். அரச நிர்வாகம் சீர் குலைந்து இருந்ததை சரி செய்தார். இரண்டு உதவியாளர்கள் ஆகாசபாடலா என்ற அவரது அலுவலகத்தில் இருந்தனர். ஒருவன் உதயராஜா, ராணியின் சகோதரன், மற்றவன் ஜய குப்தன் என்ற துஷ்டன். அவனுடைய அடியாட்களே சுற்றிலும் இருந்தனர். காஸ்மீரத்தை சின்னா பின்னமாக்கி விட்டுத் தான் ஓய்வோம் என்பது போல அவர்களின் நடவடிக்கைகள் இருந்தன.
இதற்குள் அழகான வாலிபனாக வளர்ந்து விட்ட அபிமன்யு, தாயின் நியாயமோ, மனதில் ஈரமோ இல்லாத கொடும் குணத்தை வெறுத்தான். வேத சாஸ்திரங்களைக் கற்று தேர்ந்தவன், அந்த வயதிற்கான துடிப்பும் அறிவு தாகமும் உடையவனாக இருந்தான். ராணியின் அருகில் இருந்த வெற்று வேடமிட்ட சுயனலமிகளை அடையாளம் கண்டு கொண்டவன், சீர்ஷ புஷ்பம் வெய்யிலில் வாடுவது போல வாடினான். ஏனோ க்ஷய ரோகத்தால் பாதிக்கப் பட்டான். நாற்பத்து எட்டாவது ஆண்டு கார்த்திகை மாதம், வளர் பிறை மூன்றாம் நாள், இயற்கை எய்தினான். 972 AC
அவன் மகன் நந்தி குப்தன், சிசுவாக இருந்த நிலையில் அரியணையில் அமர்த்தப் பட்டான். தித்தா தன் இழப்பை தாங்க மாட்டாமல் வருந்தினாள். சற்றே அவள் கோடூர குணம் குறைந்தது.
தர்ம வழியில் அவள் நாட்டம் சென்றது. எதிலும் தீவிரமாக முனைபவள், இது வரை சேமித்த செல்வம் இவைகளையும் நல் வழியில் செலவழிக்கலானாள். சிந்துவின் சகோதரன் புய்யா என்பவன் நகர தலைவன் ஆனான். இயல்பான நற்குணவான் – தன் பொறுப்பை உணர்ந்தவனாக நாட்டின் நலனுக்கான செயல்களைச் செய்தான். ராணியின் மன மாற்றத்திற்கு அவனுடைய நல் உபதேசங்களும் காரணமாயின. தன் பிரஜைகளை அன்புடன் பரிபாலிக்கவும், தன் குணக் கேடுகளையும், செய்த குற்றங்களையும் களைய அந்த உபதேசங்கள் உதவின. எளிய மக்கள், இந்த மாற்றத்தினால் கவரப் பட்டனர். தேவி என அழைக்கலாயினர். அனைவருக்கும் சம்மதமான தலைவியாக உருவானாள்.
இது போன்ற தலைவர்கள் ஹேமந்த ருது – முன் பனிக்காலம் போன்றவர்கள். சுகமான பருவம். மனிதர்கள் விரும்பும் பருவம். நல்ல அதிகாரிகள் இதைப் போல சுற்றி உள்ளவர்களுக்கு நன்மையே செய்பவர்களாக அமைவது கடினம். அவள் கவனத்தை திருப்பி தித்தபுரம், தித்தஸ்வாமின் என்ற இடங்களையும், Lata, sauraashtra என்ற மத்ய தேசங்களின் வளர்ச்சிக்கும் மாணவர்களுக்கான பாடசாலைகளும் உயர் கல்வி கற்க வசதிகளையும் செய்வித்தார். தன்னிடம் இருந்த பொற்காசுகளை தாராளமாக செலவழித்து கனக புரா என்ற நகரைத்தை நிர்மாணித்தாள். வெண் கற்களால் அன மற்றொரு கோவிலும் கங்கை கரையில் கட்டினாள். அந்த கட்டிடமே கங்கையின் நீர் ஸூழ இருப்பதை ரசித்ததாம்.
(லாட – நர்மதா-தபதிக்கு இடைப்பட்ட இடம். சௌராஷ்ட்ரா- கத்தியவாட் என்ற ப்ரதேசம் ப்ரவரசேனா என்ற அரசனால் பிரசித்தி பெற்றது. இந்த மத்ய தேசங்களில் இருந்து பல அறிஞர்கள், கவிகள் காஸ்மீரம் வந்து புகழ் பெற்றனர் என்பது வரலாறு)
காஸ்மீர தேச வாசிகள் யாத்திரை சென்றால் தங்க சத்திரங்கள், உயரமான விஹாரங்கள் அவளது சேமிப்பில் எழுந்தன. தந்தையின் பெயரில் ஸ்ரீ சிம்ஹ ஸ்வாமி என்ற ஆலயமும், வேத விற்பன்னர்கள் தங்கள் மாணவர்களுடன் வசிக்கவும், சாஸ்திரங்களை கற்பிக்கவும் விசாலமான பாடசாலைகள் அமைந்தன. வைகுண்ட மடம் விதஸ்தா சிந்து சமாகமம் ஆகும் இடத்தில் அழகாக அமைந்தது. இப்படி மடங்கள் பொது ஜன பயன் பாட்டிற்காக ஏற்படுத்தியது அவளிடம் மதிப்பை உயர்த்தியது. அறுபத்து நாலு புண்ய ஸ்தலங்களில் இப்படி மடங்கள் அவள் காலத்தில் கட்டப் பட்டன என்று கேள்வி. (தேசிக என்ற உள் நாட்டு சமவெளியில் வசித்தவர்களைக் குறிப்பிடுவது. குமாவூன் என்ற மலைப் பிரதேச வாசிகள் பஹாடி என்றும் வழக்கில் இருந்த பொதுப் பெயர்கள்)
எந்த இடத்தில் எந்த கோவிலோ மடமோ, காலத்தினால் இடிந்தோ, இயற்கை சீற்றத்தால் அழிந்தோ கிடந்ததாக தெரிய வந்தால், அதன் பராமரிப்பை ஏற்று சுற்றுச் சுவர்களுடன் சீர் செய்து கொடுத்தாள்.
ராணியின் அருகில் விசிறியால் விசிறும் ஒரு சேவகி, வல்கா என்பவளும் தன் வருமானத்தில் வல்கா மடம் என்பதை கட்டினாளாம்.
சுத்தமான நீரில் வசிக்கும் திமிங்கிலம் மௌனமாக இருக்குமாம். அருகில் வரும் தன் ஜாதி மீன்களையே உண்ணும். அது அதன் அடக்கமாட்டாத ஆசை. மயில்கள் நேரடியாக மழை நீரை அதன் சுத்தமான தன்மைக்காக குடிக்கும், பின்னால் பாம்பையே விழுங்கும். எதிரெதிரான குணங்கள், ஒரு பக்கம் மிகவும் அடக்கமும் பண்பும் உள்ளதாக தோன்றுவதே மறுபக்கம் கொடூரமான கொலை குணம். அது இயற்கையின் வினோதம். இந்த ராணியும் அதே போல தன் சோகத்தால் குணவதியாக மாறியவள், மீண்டும் பழைய கொடிய செயல்களுக்கு இடம் கொடுத்து விட்டாள். அரியணையில் அமர்த்திய சிசுவை சூனியம் வைத்தல் என்ற தவறான செயலால் கெடுத்தாள். என்ன குணமோ, அந்த குழந்தையை வாழவே விடவில்லை. 973AC
நாற்பத்து ஒன்பதாவது ஆண்டு,மார்கழி மாதம் வளர் பிறை பன்னிரண்டாம் நாள் அது உயிரிழந்தது.
அடுத்து ஐம்பத்து ஒன்றாம் ஆண்டு மற்றொரு பேரன் திரிபுவனா என்பவன் பட்டத்துக்கு வந்தான்.
மார்கழி மாத வளர் பிறை ஐந்தாம் நாள் அவனையும் இதே போல மடியச் செய்து விட்டாள். 973-975
அவள் மதித்து மரியாதையாக இருந்த ஒரே நபர் -, பால்குண என்பவரும் காலகதியடையவும், பழைய கொடூர குணங்கள் தலை விரித்தாடின. பீம குப்தன் என்ற பேரன் பட்டத்துக்கு வந்தான்.
நீரின் குணம் பள்ளத்தை நோக்கி ஓடுவது. புண்ய நதிகளின் சங்கமத்தில் தான் தேவி திருமகள் பிறந்தாள். தேங்கி நிற்கும் குள ஜலத்தில் தாமரைகள் பூக்கின்றன. சில நற்குடியில் பிறந்தவர்கள் மட்டமான குணமுடையவர்களாக ஆவதை என்னவென்று சொல்வது?
பத்தவாசம் என்ற சாக்ய பர்ணோத்ஸ என்ற கிராமத்து, பாணன் என்பவனுடைய துங்கன் என்ற பெயருடைய இடையர் குலத்தவன், ஐந்து சகோதர்களுடன் காஸ்மீர தேசம் வந்தவன், அரச அலுவலகர்களாக ஆனார்கள். துங்கன் எழுத்தராக ஆனான். மற்றவர்கள் சுகந்திஸ்தன், ப்ரகடன்,நாகன், அட்டயிகா, ஷண்முகன் என்ற ஐவர். சேனைத் தலைவருடன் வேலையாக இருந்தவனை ராணி கண்டாள். அவளுடைய அந்தரங்க பணிப் பெண்ணை அனுப்பி அவனை கவர்ச்சிகரமாக இருந்த வாலிபனை தன் அறைக்கு வரவழைத்து விட்டாள். பலரை அனுபவித்த்வள். ஆனாலும் இந்த இளைஞன் அவன் மனதை கவர்ந்து விட்டான். மனசாட்சியே இல்லாத பாதகி, அது வரை அந்தரங்க உதவியாளனாக இருந்த புய்யா என்பவன், அதை விரும்பாமல் விலகவும், ரகசியமாக அவனை விஷம் கொடுத்து கொல்ல ஏற்பாடு செய்து விட்டாள்.
வேளாவித்தன் ரக்கனின் மகன் தேவகலசன் அந்த இடத்தில் பதவிக்கு அமர்த்தப் பட்டான். அவனும் அவள் வலையில் வீழ்ந்தான். கர்தம ராஜன் போன்ற வீரர்களே, அவளுக்கு அடி பணிந்த பொழுது இவன் எம்மாத்திரம்.
பீமகுப்தன் என்ற அபிமன்யு மகன் வளர்ந்து விட்டான். ராஜ்ய நிர்வாகமோ, அடுத்த பொறுப்பு ஏற்கும் ஒருவரோ இல்லாமல் தித்தா மனம் போனபடி தன் வாழ்க்கையையும், அரசையும் அழிப்பதில் முனைந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான். அவன் ஏதோ தன் வரையில் சீர் திருத்த நினைக்கிறான் என்பதை அறிந்து கொண்ட தித்தா அவனையும் பலவகையிலும் துன்புறுத்தி மடியச் செய்து விட்டாள்.
துங்கா தன் சகோதர்களுடன் அரண்மனைக்குள் செல்வாக்கு மிக்கவனாக ஆனான். முன் இருந்த மந்திரிகள் சேர்ந்து ஆலோசித்து, விக்ரஹராஜா என்ற தித்தாவின் சகோதரன மகனை காஸ்மீரத்துக்கு வரவழைத்தனர். நிலைமையை கூர்ந்து பார்த்து விட்டு அவன் ஒரு திட்டத்தோடு அந்தணர்களை கிளர்ச்சி செய்ய தூண்டி விட்டான். அவர்கள் உண்ணா விரதம் மேற்கொள்ளச் செய்தான். அவர்களும் கூட்டாக சேர்ந்து உண்ணா விரதம் இருந்தனர். துங்காவில் இருந்து ஆரம்பிக்க நினைத்து அவனைத் தேடினர். அவனை பாதுகாப்பாக ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டு அந்தணர்களில் சிலரை நிறைய பொற்காசுகள் கொடுத்து தன் பக்கம் ஆக்கிக் கொண்டாள். உண்ணாவிரதம் கைவிடப் பட்டது.
துங்கன் முதலானோர் கை ஓங்கவும் முக்கிய ராணுவ வீரர்கள் ரகசியமாக கொல்லப் பட்டனர். ரக்காவின் மகன் சுலக்கணன் மற்றும் பலர் நாட்டை விட்டு துரத்தப் பட்டனர். மறுமுறை அந்தணர்கள் உண்ணாவிரதம் என்று ஆரம்பித்தனர். இந்த முறை துங்கன் அவர்களை தாக்கி ஓட ஓட விரட்டி விட்டான். அவர்களுடன் விக்ரஹராஜாவின் உடன் வந்த ஆதித்ய ராஜாவும் தாக்கப் பட்டு மடிந்தான். முன் பொற்காசு கொடுத்த அனதணர்களையும் தேடிக் கொண்டு வந்து சிறையில் அடைத்தான் துங்கன்.
அந்த சமயம் ராஜகிரியில் பால்குணன் கால கதி அடையவும், அந்த ராஜய்த்தில் படையெடுத்துச் செல்ல மந்திரிகள் தீர்மானித்தனர். ராஜபுரி அரசனாக பதவி ஏற்ற ப்ருதுவிபாலன் காஸ்மீர படையை எதிர்த்து ஒடுக்கி விட்டான். சிபாடகன் ஹம்ச ராஜன் என்ற இரு மந்திரிகள் மடிந்தனர். தன் சகோதர்களுடன் துங்கா யாருமறியாமல் நகருக்குள் பிரவேசித்து ராஜ புரியை தீக்கு இரையாக்கி விட்டான். இதற்குள் அதிக தைரியம் பெற்று விட்ட துங்கன் சேனாபதியை பதவி இறக்கி, டாமர்களை அவமானப் படுத்தினான். தித்தா தன் சகோதரன் மகன் உதய ராஜாவின் மகனை அரசனாக அறிவித்தாள்.
மரம் ஒன்றே போதும் வானரங்களுக்கு. வெளிக் காற்றோ, பனியோ தங்களை காத்துக் கொள்ள போதும். கொம்புடைய மான் ஜாதி விலங்குகள் தங்களை காத்துக் கொள்ள நீரும், காற்றுமே போதும் என்று உள்ளன. பிறவிகள் தாங்களே தங்களுக்கு தேவையானதை இயற்கையிலேயே பெற்றுக் கொள்கின்றன. அது போலத் தான் உதயராஜாவின் மகன், உடன் இருந்த மற்ற ராஜ குமாரர்கள் தங்களுக்குள் போட்டி இட்டபொழுது தன் காரியமே கவனமாக இருந்து அரச பதவியைப் பெற்று விட்டான். வீரமோ, அறிவோ அளிக்காத நன்மையை சில சமயம் உள்ளூணர்வால் உணர்ந்து அறியவும் முடியும் என்பதற்கு இந்த விலங்குகள் தங்களை காத்துக் கொள்வதை வைத்து விளக்குகிறார் கவி.
எழுபத்து ஒன்பதாம் ஆண்டு, பாத்ரபத மாதம், வளர்பிறை எட்டாம் நாள் அந்த ராணி இயற்கை எய்தவும், உதயராஜாவின் மகன் சங்க்ரஹ ராஜா அரச பதவியில் திடமாக ஊன்றிக் கொண்டான். 1003AC
இது அரச பரம்பரையில் வந்த மூன்றாவது மாறுதல். நில வளமும், நீர் வளமும் நிறைந்த அழகிய பூமி, பொன் விளையும் எனும் படியான செல்வ செழிப்பு கொண்ட பகுதி, சதவாகனன் குலம் இந்த பூமியை அடைந்து வளர்த்தது. காட்டுதீ பொசுக்கிய இடத்தில், மழையின் துளி விழவும் எப்பொழுதோ விழுந்த மாமர விதை துளிர்த்து வருவது போல காஸ்மீர ராஜ்யம் பல ஆண்டுகளாக பட்ட துன்பம் விலகியது.
சங்க்ரஹ ராஜா வின் காலத்தில் காஸ்மீர ராஜ்யம் புத்துயிர் பெற்றது. இந்த அரசன் தன் தீர்மானமான கொள்கைகளும் செயல்களுமாக அரச பொறுப்பை தன் தோள்களில் தாங்கினான். எங்கும் தாமரைக் குளங்களும் மற்ற மலர்களும் நிறைந்த பிரதேசம் தன் பொலிவை திரும்பப் பெற்றது. தங்கள் சக்தியை மறைத்துக் கொண்டு பூமிக்கு அடியில் மறைந்து இருக்கும் நாகங்கள் போல, தன் ஆற்றலை முழுவதும் வெளிக் காட்டமல் அமைதியாக மென்மையாக பேசியே ராஜ்யத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டான்.
(இது வரை ஸ்ரீ காஸ்மீர தேசத்து மகா மந்திரியான சம்பக ப்ரபுவின் மகன் கல்ஹணன் எழுதிய ராஜ தரங்கினீ என்ற நூலின் ஆறாம் பாகம்- ஆறாம் அலை நிறைவுறுகிறது
அறுபத்து நான்கு ஆண்டுகள், எட்டு மாதங்கள், ஒருநாள் மட்டுமே நீடித்த காலத்தில் பத்து அரசர்கள், பூமியை ஆண்டனர்.
.