பொருளடக்கத்திற்கு தாவுக

 2)  பஞ்சவர்க்கு தூது நடந்தானை

ஓகஸ்ட் 18, 2025

பாடிக் கொண்டிருந்தவர் நிறுத்தினார்.  வாசலில் பள்ளியின் பேருந்து நிற்பதை ஜன்னல் வழியாக பார்த்து விட்டது தான் காரணம். இதோ பேத்தி சைலஜா வந்து விடுவாள்.  ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். 

ஏட்டீ

அவளைக் கூப்பிட்டார்.  இன்னமும் என்ன ஏட்டி, வளர்ந்து விட்டாள். பெயர் சொல்லி கூப்பிட்டால் என்ன என்று மருமகளின் குரல் வந்தது.  மாலை சிற்றுண்டியை சுவைத்துக் கொண்டிருந்த மகன் கூப்பிட்டால் என்ன? அவருக்கு தன் மனைவியை, என் அம்மாவை கூப்பிட்ட பழக்கம்.  என்றான். இது தினமும் நடக்கும் வாக்குவாதம்.

என்ன தாத்தா என்று அருகில் வந்த பேத்தி சைலஜா , தொலைக் காட்சியில் ஒரு காட்சியை நிறுத்தி வைத்திருந்த தைப் பார்த்தாள். தாத்தா, அப்பாவின் தாத்தா -தொண்ணூற்று ஆறு வயதாகிறது. காது தான் கேட்கவில்லை. மற்றபடி திடமாக இருந்தவர்  அருகில் வந்தாள். 

அந்த செய்தியை தெரிந்து கொள்ளாவிட்டால் அவருக்கு தூக்கம் வராது. காது கேட்பது இல்லை, கருவிகளும் ஓரளவு தான் உதவும் என்ற நிலையில் தெரிந்து கொள்ள ஆவல் மட்டுமே, சைலஜா தான் ஒரே நம்பிக்கை.  என்ன நடக்கிறது.  அவள் அவரிடம் இருந்த பத்திரிகையில் பார்த்து விட்டு, அதை விவரித்தாள்.  இரு அரசியல் தலைவர்கள் பேசிக் கொண்ட செய்தி உலகம் முழுவதும் பேசப் பட்டது.  என்ன ஆச்சு? என்றவருக்கு அவள் விவரித்தாள்.  அடுத்த முறை பேச ஒரு நாளைச் குறித்துக் கொண்டார்கள் அவ்வளவு தான்.  அவருக்கு புரியும்.  அரசாங்க அதிகாரியாக இருந்தவர். பலமுறை கண் துடைப்பாக நடக்கும் மீட்டிங்குகளில் பங்கு கொண்டவர்.   அந்த சமயத்தில் கூச்சல் போடுபவர்களை அடக்க ஒரு கூட்டம் நடக்கும். பல பேருக்கு பிரயாண சலுகை, இருப்பிட வசதிகளோடு நாட்டின் ஏதோ ஒரு ஊரில் கலந்துரையாடல் நடக்கும்.  முடிவு வராமல் ஏதோ ஒரு பிரச்னை, ஒரு பிரதி  நிதியின்  எதிர்ப்பு ஒலிக்கும்.  ஒரே வழி ஒத்திப் போடுவது தான்.

என்னவாம் என்றார். சைலஜா விவரித்தாள். எதிர்பார்த்த படி நடக்கவில்லை.  வெளி நாட்டில் இருந்து வந்தவர் அதிக தீர்மானமாக இருந்திருக்கிறார். சுலபமாக வளைக்கலாம் என்று உள்ளூருக்கு அழைத்தவர் முகம் வாடி விட்டது. அவர் சொல் எடுபடவில்லை.  அவர் முகம் வாடி விட்டது, சைலா எழுந்து தொலைபெட்டியின் திரையில் இருந்தவர்களை விரலால் தொட்டு விளக்கம் சொன்னாள்.  பாதி சைகை, அவளுக்குத் தான் தாத்தாவுடன் பேச பொறுமையும், திறமையும் உண்டு. விடாமல் அவரும் விளக்கம் கேட்க, திரையில் இருந்த மற்றவர்களைப் பற்றியும் காட்டி விளக்கினாள்.

அது தான், என்றார் தாத்தா.  கையில் சிற்றுண்டி தட்டுடன் அருகில் அமர்ந்தவள். என்ன அது தான் ? அன்னிலிருந்து நடக்கிறது தான்.  துரியோதனனை சந்தித்து போர் வேண்டாம், எங்களுக்கு சின்ன  ராஜ்யம் கொடு போதும், என்று சொல்லுங்கள் என்று தர்மராஜன் க்ருஷ்ண பகவானிடம் சொன்னான். மற்றவர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவன் க்ருஷ்ணனையே அடித்து விட்டால் என்றனர்.

வாயில் உணவோடு, சைலா சொன்னால். இங்கயும் அப்படித்தான்  – சிங்கத்தின் குகைக்குள் தலையை கொடுப்பது போல ,வெட்டி சாய்த்து விட்டால்? ன்னு  பயந்தாளாம்.   

பெரியவர் தொடர்ந்தார். க்ருஷ்ணனை எதுவும் செய்ய மாட்டார்கள். அங்கும் பெரியவர்கள் இருக்கிறார்களே  என்ற தர்ம புத்திரன், ராஜ்யம் தராவிட்டால் ஐந்து கிராமங்கள் தரச் சொல்லுங்கள், என்றான்.   என்ன செய்வா ஐந்து கிராமத்தை வச்சுண்டு என்றால் சைலா.  அவாளுக்கும் குடும்பம் பெருசாயிடுத்து, தனித் தனியா மீதி வாழ் நாளை ஓட்டலாம் ன்னு நினச்சு சொல்லியிருக்கலாம்.

அதுக்கு துரியோதனனை கெஞ்சுவானேன். தாங்களே பாத்துக்க வேண்டியது தானே. – சைலா.

அங்க தான் பாரதம் கதை. உரிமைன்னு சொன்னா.  ராஜாக்களுக்கு அது கடமையாம். வழி வழியா ராஜ்யம் அவாளுக்கு தங்கள் காலம் ஆனவுடன் அடுத்த தலை முறைக்கு கொடுத்துடனுமாம்.  தவிர ஒரே தாத்தாவின் பேரன்கள், பங்காளிகள்  எங்களுக்கும் பாத்யதை உண்டு என்றனர். விடு -இந்த கதை என்னாச்சு என்றார்.

இங்கயும் ஏதோ கேட்டிருக்கா, அதை கொடுப்பது இவர் கையில் இல்லை. சைலா திரையில் மனிதர்களை அடையாளம் காட்டினாள்.  அப்புறம் என்னாச்சு தாத்தா?  க்ருஷ்ணர் போனாரா?

போனார்.  அவருக்கும் இது முழுக்க சம்மதமா இல்லை.  எதுவும் உருப்படியாக நடக்காதுன்னு தெரியும். இருந்தும் மாட்டேன்னு சொல்லாம போனார். அவர் போட்ட கணக்கு வேற.  ரொம்ப கூட்டம் – பூமியால் தாங்க முடியல்ல- அதைக் குறைக்கனும்னு நினைச்சார்  போல – சண்டையை நிறுத்த போகல்ல – சொல்லுவோம்,  சந்தர்ப வசத்தால் அவன் கேட்டால் சரி – எப்படியும் தனக்கு ஆபத்து வராதுன்னு தைரியமா போனார்.

தாத்தா, தனியாவா ? என்றாள்.  ஆமாம்.

துரியோதனனோ  தீர்மானமா இருந்தான். முடியாதுன்னு போய் சொல்லுங்கோ. ஐந்து  கிராமம்  என்ன ஐந்து வீடு கூட குடுக்க மாட்டேன்னான்.  வந்த காரியம் ஆகனுமே, க்ருஷ்ணர் தன் கட்சியை சொல்ல வாயெடுத்தார். அவன் கத்தினான். ‘ஏய் என்ன மேல மேல் பேசற. நான் தான் சொல்லிட்டேனே, முடியாது. போய் சொல்லு சண்டை போட்டு ஜயிச்சாச எடுத்துக்கச் சொல்லு- அதோடு நிக்காம இவனை பிடிச்சு கட்டுங்கடா ந்னு உத்தரவு போட்டான். ஒத்தனும் நகரல்ல, தானே வந்தான்

துரியோதனன்  கத்தினான்.   அந்த காலம். இப்ப யாரானாலும் வாய் விட முடியுமா?  கோபத்தைக் காட்டாமல் சிரிச்சுண்டே தான் பேசனும், இந்த கையை அப்படியே திருக மாட்டோமா ன்னு கோபம் வந்தாலும் முகத்தில் காட்டாமல் கை குலுக்கனும்.  வெளியில் வந்து  பத்திரிகை காரா கிட்ட சுமுகமாக பேச்சு வார்த்தை நடந்தது.    அடுத்து எங்க ஊர்ல மந்திரிகளுடன் கலந்து பேசி விட்டு திரும்ப இந்த கூட்டத்தை   தொடருவோம் ந்னு சொல்லிட்டு நகர்ந்துடனும்.   தாத்தா படிச்சுட்டார். கேக்கல்ல ங்கறது தான் குறை.   அவன் கையில் அகப்படாம க்ருஷ்ணன் சட்டென்று தப்பிச்சுட்டார்.  . அதெல்லாம் பாரதம் விவரமா சொல்லும்.  எப்படியோ, தூது  போன மாதிரியும் ஆச்சு, அவனை கிளப்பி விட்ட மாதிரியும் ஆச்சு, நடக்கிற படி நடக்கட்டும் . சில சமயம் கிளறி விட்டுத் தான் அடக்கனும்.  செடியில் பூச்சி வந்து விட்டால், வேரோடு தான் பிடுங்கனும்.  தாத்தா பாட்டைத் தொடர்ந்தார்.  பஞ்சவர்க்கு தூது நடந்தானை  – தொண்டை கமறியது.  சைலா தண்ணி பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்.  

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக