சுதர்சன சக்கரம்
சுதர்சன சக்கரம்
வெளி நாட்டில் ஒரு சினேகிதன், அவன் பரம்பரை வீடு ஒரு கிராமத்தில் இருக்காம். அவனுடைய உடன் பிறந்தவர்கள் எவரும் அங்கு போகவும் இல்லை. பெற்றோரை இங்கு கூட்டி வந்து விட்டேன். எங்கள் உறவினர் அங்கு வசிக்கிறார். ஏதோ தகராறாம். கிராமத்தை விட்டு நான் வந்து நிறைய வருடங்கள் ஆகி விட்டன. நீ போய் பார்க்கிறாயா என்று ஒரு பழைய நண்பன் எழுதியிருந்தான். அவனைப் பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டன. யார் என்று எப்படி அறிமுகப் படுத்திக் கொள்வேன்? வக்கீலாக இதே தொழில், என்பதால் தான் அவனுக்கும் என் நினைவு வந்திருக்கிறது. போய் பார்க்கலாம் என்று தோன்றியது. வழி விசாரித்துக் கொண்டு வந்து இறங்கினேன்.
அழகான கிராமம். வீடுகள் தோளோடு தோளாக கை கோர்த்தாற் போன்ற வரிசை வீடுகள். வீதியின் ஒரு புறம் ஒரு கோவில், மறு புரம் ஏரியோ குளமோ என்று நினைவு. பாதை போடுவதற்காக நடுவில் ஒரு வீட்டை இடித்து வழி செய்து கொண்டிருந்தனர். நிறைய மாறுதல்கள். விசாரித்துக் கொண்டு அந்த வீட்டின் வாசலில் நின்றேன்.
பரம்பரை வீடு, பல வருடங்கள் ஆனது போல இல்லை. கல் கட்டிடமோ ? வாசலில் மூன்று அடுக்கு திண்ணை. எட்டு படிகளுக்கு மேல் பெரிய கதவு. யாரோ வசிப்பது வாசலின் கோலத்தில் தெரிந்தது.
கதவைத் தட்டினேன். வயதான ஒரு மாது திறந்தாள். யார் என்ற விவரங்கள் சொன்ன பின், உள்ளே அழைத்தாள். அந்த நாளைய வீடுகள் என்ற வர்ணனைக்கு ஏற்ற வீடு. நடுவில் திறந்த வெளியும் பச்சை வர்ணம் அடித்த தூண்களும். தகராறு என்றானே, என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அந்த அம்மாள் அவர் கணவரிடம் சொன்னாள். அவர் வந்து தன்னை காசிராஜன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். பின், அவரே சொன்னார். என் மனைவி நாணாவுக்கு தூரத்து உறவுக்காரி, இவளுக்கு சகோதர உறவு ஆனவன்,வீட்டை பாத்துக்கோ ன்னு சொல்லி, சொல்லிட்டு போனான். இதே போல எங்கள் வீடும் இருந்தது எங்கள் அப்பா காலத்தில. வித்துட்டு சென்னை போனோம். பதவி ஓய்வு பெற்றபின் நான் வந்து சில மாறுதல்கள் செய்து கொண்டேன். தரையை மாத்தி, சுண்ணாம்பு பூசி ன்னு அவசியமானது மட்டும். பின்னால் பெரிய தோட்டமும், மாடு கட்ட இடமும் இருக்கு. மாடு இல்ல -ஆனா தோட்டம் குப்பையாக கிடந்ததை இந்த ஆறு வருடத்தில் முடிந்தவரை சரியாக்கி இருக்கிறேன். இந்த வரிசை பூரா இருபது வீடுகள். இரண்டு ஒன்று தான் பழையபடி திண்ணை யோட இருக்கு. மத்தவா அவாவா சௌகர்யத்துக்கு மாத்தி இருக்கா.
அவருடன் வீட்டைச் சுற்றி பார்த்தேன். மாடிப் படி ஏறல்ல. அங்கும் இரண்டு அறைகள் இருப்பதாகச் சொன்னார். ஏதோ பிரச்னை ன்னு, என் சினேகிதன் சொன்னான். நாங்கள் இருவரும் ஒன்றாக இங்கேயே படித்தவர்கள். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தனித் தனியாக அவரவர் படிப்பும் வாழ்க்கையும் அமைந்தது. பல நாட்களாக தொடர்பே இல்லை. இங்க ஏதோ பிரச்னை போய் பார் என்றான்.
சரியாகத்தான் போய் கொண்டிருந்தது. ரோடு போட வந்த பொழுது வெளியூர் காரா உள்ளே வந்தா. யார் கண் பட்டதோ, போட்டி போட்டுக் கொண்டு வாங்க வரா- என்னால் என்ன முடியும்? தினமும் வந்தவா கிட்ட என்ன சொல்ல. பிடுங்கல் தாங்க முடியல்ல. அடி மட்ட விலைக்கு கேட்கிறான். பயமுறுத்தல் வேற. இருக்கற வரைக்கும் இருப்போம் ன்னு – அமைதியா, திருப்தியா இருந்தோம். அக்கம் பக்கமும் பழகிடுத்து. இந்த பெரிய வீட்டை பெருக்கி துடைத்து வைக்கவே சரியா இருக்கு. அதான் அவனுக்கு எழுதினேன். நாங்களும் இந்த கிராமத்துக்காரா தானே. அரசு வேலையில் இருந்து சர்வீஸ் முடிந்த பின் வயசான காலத்தை கிராமத்தில் இருக்கலாம் என்று வந்தவர்கள் தான். நாணா வந்து சும்மா கொடுத்தாலும் குடுக்கலாம், நான் அந்த பொறுப்பை ஏத்துக்க முடியுமா? அது தான் உங்க கிட்ட சொல்லிட்டான் போல. நீங்க யாரு?
வீட்டப் பார்த்த பின் எனக்கே ஆசையாகத் தான் இருக்கு. மனதில் என்றோ இந்த தெருவில் இருந்த சமயத்து நினைவுகள் மெள்ள எட்டிப் பார்த்தன. இந்த வீட்டில் ஒரு dressing table இருந்தது. நவராத்திரி சமயம் அதைப் பாக்கவே வருவோம். விலை உயர்ந்த கண்ணாடி ன்னு அதுக்கு வலை போட்டுருப்பா. கிராமபோன் பெட்டி மேலே ஸ்பீக்கரோட இருக்கும். வடு மாங்காய் மரம் இருக்குன்னு என் பாட்டி சொல்லித் தெரியும். அதெல்லாம் எங்க போச்சோ – மனிதனுக்குத் தான் என்ன என்ன ஆசை, வசதி இருந்தா சாமானா வாங்கி குவிக்கிறான்- இது போல யாரோ வந்து பிடிங்கிண்டு போகவா? வாங்கனும்னு ஆசையா இருந்தா, விக்கறதானா எனக்கு குடுன்னு சொன்னா சரி. பயமுறுத்துவது என்ன நியாயம்?
என்னைப் பற்றிச் சொன்னேன். அவரும் உயர் அதிகாரியாக இருந்தவர். அவரே திணறுகிறார் என்றால் என்னால் என்ன முடியும்? அவரிடமே கேட்டேன். ரிடையர்டு ன்னு சொன்ன உடனே,கை குலுக்க நீட்டிய கையை இழுத்துக்கறா. அவ்வளவு தான் மதிப்பு. என்னால் முடிந்ததை இந்த கிராமத்து ஜனங்களுக்கு செய்கிறேன். அவர்கள் மரியாதையாக இருக்கிறார்கள். வெளி ஆட்களுக்கு இந்த பெரிய வீடு மட்டும் தான் தெரிகிறது. இதில் உள்ள உயிரோட்டம் தெரியுமா? எந்த இடத்து தண்ணிய குடிக்கனும்னு பகவானே எழுதி தான் அனுப்புகிறான்- ஆசைப் பட்டு வந்தோம். என் குழந்தைகளும் நகரத்தில் இருக்கிறார்கள், அங்கு போய் விடுவோம். நகர வாழ்க்கை வேண்டாம், முன் காலத்தில் தவம் செய்ய வனத்துக்கு போவார்களாம் என்று படித்திருக்கிறோமே, நாம் கிராமத்துக்கு போவோம் என்று வந்தோம். அவ்வளவு தான் எங்களுக்கு இந்த நீலா நதியின் தண்ணீர் போலும்.
ஊரைச் சுற்றி அந்த ஆறு ஓடும் என்றும் சொன்னார். அருகில் சென்று பார்த்த பொழுது தான் அது ஒருநாள் இரு கரைகளையும் தொட்டு ஓடிக் கொண்டிருந்த நதி, தற்சமயம் நடுவில் ஓடையாக மட்டுமே தெரிந்தது, முடிந்தவரை ஆக்கிரமித்து இருந்தார்கள். கம்பு நட்டு சின்னச் சின்ன கடைகள். கிடைத்த இடத்தில் சிலர் கீரை, வெள்ளிரி பயிரிட்டிருந்தனர். அவரவருக்கும் வாழ்க்கை பிரச்னை. சில சிறுவர்கள் பாறையிருந்து நீரில் குதித்து நீந்திச் சென்று கரையை அடைந்து பின் திரும்ப பாறைக்கே வந்தனர். அவர்கள் இதில் முழு மனதுடன் ஈடுபட்டிருந்தனர் என்பதை முக மலர்ச்சியே காட்டியது.
இது ஒரு அழகு. பெரு நகரங்களில் வசிப்பவர்கள் இங்கு வந்தால் எவ்வளவு ரசிப்பார்கள். இரண்டு நாள், பின் நகர வாழ்க்கையின் ஓட்டம் பழகியவர்களுக்கு அலுத்து விடும். எதனால் இந்த போட்டி, பயமுறுத்தல் ? ஏதோ பின்னால் காரணம் இருக்கும்.
யாரோ புதியவன் என்பதால் ஒருவர் வந்து விசாரித்தார். நான் யார் என்பதையும், காசிராஜன் பெயரைச் சொல்லி அவரை பார்க்க வந்ததாகச் சொன்னேன். அவர்கள் அவரை அறிந்திருந்தனர். பல நாட்களுக்கு முன் இந்த நதி முழுமையாக இருந்ததாக என் அப்பா சொன்னார். அவர் பார்த்தவர். தற்சமயம் ஏன் இப்படி இருக்கிறது என்றும் கேட்டேன். அவன் பதில் சொன்னான். ‘நான் இங்கு வந்ததில் இருந்து இப்படித் தாங்க இருக்கு. வெள்ளம் வரும், அல்லாத்தையும் அடிச்சித் தள்ளும். அப்ப பாக்கனும் – கல கலன்னு ஓடற தண்ணிய பாக்கறதே சந்தோஷம். கொஞ்ச நாளில் வத்திடும். அது வரை காட்டுக்குள்ள இருப்போம். துணி மணி, கடைச் சாமான்களை மட்டும் கொண்டு போவோம். பின்னால் திரும்பி வந்து உடைஞ்சதை, அடிச்சிட்டு போனதை சரி செஞ்சுக்குவோம். பளகிடுச்சுங்க. ‘ என்றான். ஆனா உங்க சொந்தக் கார பெரியவர் வந்த பொறவு எங்களை ஊருக்குள்ள பள்ளிக் கூட கட்டிடத்தில இருக்க வசதி பண்ணிட்டாரு. பத்து நா இல்ல பதினஞ்சு நா, தண்ணி வத்திடும். இப்படியே நடந்தீங்கன்னா பூமி சரிஞ்சு கொஞ்சம் பள்ளம் போல இருக்கும். இந்த இடம் மேடு, அதனால் தண்ணி பள்ளத்துல விழுந்து அந்த ஏரில ரொம்பிடும்.
வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு உதவி செய்யறதாக சொல்வாங்களே. இதற்குள் அவர்களைச் சுற்றி குளித்து கொண்டிருந்த பையன்கள், தவிர மேலும் சிலர் வந்து கூடினர். நமுட்டுச் சிரிப்புடன் அவர்கள் தங்களுக்குள் எதோ சொல்லிக் கொள்வது போல தெரிந்தது. “நீங்க யாருங்க? ‘ என்றார் ஒருவர். ரிபோர்டரா? கட்சிக்காரனா?
ஏன்? என்றேன். கட்சிக் காரன் – ஓட்டு போடுன்னுவான். ரிபோர்டர்னா எப்ப குடுத்தாங்க, எத்தின கொடுத்தாங்க ன்னு கேப்பாங்க. அது தான். வேற ஒன்னும் இல்ல
பெரியவர் இந்த ஊருக்கு வந்தது எங்க நல்ல காலம் தான். புள்ளங்கள பள்ளிக் கூடம் போக வச்சாரு. மதிய சாப்பாடு ஆனதும் ஓடி வந்துடுங்க. அதனால பள்ளிக்கூடத்தில் விளையாட சாமான்கள் நிறைய வாங்கி குடுத்தாரு. பெல் அடித்த பிறகு தான் விளையாட முடியும். அதனால் முழுக்க எல்லா வகுப்பும் முடிந்து விளையாடி விட்டு வருவாங்க. அதுக்கு ஏத்தாப்பல நல்ல உடற்பயிற்சி டீச்சரும் வந்தாரு. யோகா கூட கத்து தராங்க.
அவங்க தோட்டத்துல விளையற கறிகாய்கள் ஸ்கூலுக்கு குடுத்துடுவார். அதனால் மதிய உணவும் பசங்களுக்கு நல்லா கிடைக்கும். நான் கேட்டேன். வெள்ளம் வந்தா? அதென்ன பத்து பதினைஞ்சு நாள். இங்க நிறைய பேர் குயவர்கள், மண் பாண்டம் செய்பவர்கள், கயிறு செய்வோம், பாய் முடைவோம். முன்னாடியே கண்டுக்குவோம். எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்தில இருந்து அந்த விவரம் தெரியுங்க.
திரும்பி வந்து அவரிடம் இந்த சம்பாஷனையை சொன்னேன், அவர் சொன்னார் இது பற்றி பாகவதம் சொல்கிறது- வெகு நாட்களுக்குப் பின், கம்ச வதமும் ஆன பின், நந்த கோபனை சந்தித்த வசுதேவர், அவரிடம் தன் நன்றியை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறார். குழந்தையை மாற்றிக் கொண்டு வந்ததை, முன் யோசித்து, விரும்பி செய்தது அல்ல. அந்த காலத்தின் கட்டாயம், நான் நினைக்க கூட இல்லை. அதில் உங்க குழந்தையை காப்பாத்தி இருந்தால் என் மனம் அமைதியாக இருந்திருக்கும். வருத்தத்துடன் கண்களில் நீர் மல்க சொல்கிறார். அந்த சமயம் மாடு மேய்க்கும் இடையர் குலத்தையே உயர்வாக சொல்லிக் கொண்டு வரும் பொழுது ‘ யமுனையில் வெள்ளம் வரும் முன் அதன் நீரோட்டத்திலேயே கண்டு கொள்ளும் திறமை உள்ளவர்கள் நீங்கள். நதிக் கரைக்கு வளர்ப்பு மிருகங்களை போக விடாமல் பாதுகாப்பாக வைக்கத் தேவையான அந்த அறிவு உங்களிடம் மட்டும் தான் உள்ளது’ இன்னமும் பல விதமாக அவர்களுடைய பெருந்தன்மையை பாராட்டுகிறார்.‘
மதிய உணவை சேர்ந்து சாப்பிட்டோம். எப்படி சமாளிப்பது? அவரே பாகவத கதையைச் சொன்னார். துர்வாச முனிவர் க்ருத்தி என்று ஒரு துர்தேவதையை உருவாக்கி அம்பரீஷனை அழிக்க அனுப்பினார். பகவானின் சுதர்சன சக்கரமே யாரிவன், இந்த சாது அரசனை படுத்த வந்திருக்கான் ன்னு தானே அதை அந்த துர்தேவதையை அழித்து விட்டு அவரையே துரத்தியது. காப்பாத்து காப்பாத்துன்னு துர்வாசர் தான் ஓடினார். அப்படி எங்கிருந்தாவது உதவி வரும். அந்த சக்கரம் போல இப்ப நீங்க வந்திருக்கேள்.
மாமா, உங்க பையன் வயசு எனக்கு, எனக்கு ஏன் இந்த மரியாதை? உங்க மகனா நினச்சுக்கோங்கோ. நான் தான் நமஸ்காரம் பண்ணனும். நீங்களே வழி சொல்லுங்கோ. ஊருக்குள்ள உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கு. அதுதான் உங்களுக்கு பகவானுடைய சக்கரம். அனாவசியமா ஒருவன் பேராசையால் கேட்டால் கொடுத்துடனுமா? உங்க தோட்டம் தான் அவனுக்கு குறி. வரிசைக்கு ஒன்பதாக ஐந்து வரிசை தென்னை மரங்கள் இருக்காமே – நான் இன்னும் பாக்கல்ல. உங்க தோட்டக்காரன் சொன்னான். அவர்களுக்கு விவரம் சொல்லி விவசாயம் விஷயமா நிறைய உதவி உங்கள் மூலம் கிடைச்சிருக்காம். உங்களை பாக்க வந்த எனக்கே அந்த அளவு உபசாரம் பண்றா. நான் வந்த காரியம் பத்தி சொல்லவே இல்ல.
தோட்டத்தை பார்க்க போனோம். வரிசையாக தென்னை, இடை பயிராக வேறு சில மரங்கள். நடு நடுவில் சில கறிகாய் செடிகளின் பாத்திகள். கத்திரி, வெண்டை. தக்காளி என்று. அவரே சொன்னார். மரங்களுக்கும் நண்பன், விரோதி உண்டு. சாதகமான வாழை மரம் இருந்தா இரண்டுமா வளரும். ஒன்னு காய்ச்சு ஓயும் போது மத்தது காய்க்கும். இதுல நிறைய விவரங்கள் இருக்கு.
வாங்க வந்தவனுக்கு ஆசை காட்டியது தோட்டம் தான் என்பது தெரிந்தது. உயர் ரக தென்னை மரமும் பல காலம் நீடித்து பலன் தரும்.
இரவு. என் போனில் வந்த செய்திகளை படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு மகிழ்ச்சி அளித்த ஒரு செய்தி, எங்கள் பள்ளி மாணவர்கள் ஒன்றாக சந்திக்க இந்த ஊருக்கே வருவது பற்றிய ஒரு அறிவிப்பு. யாரெல்லாம் வருவார்கள் என்பதை பொறுத்து இடம் வசதிகள் செய்து கொள்ள வேண்டும் – எனக்கு பொறி தட்டியது போல ஒரு எண்ணம் வந்தது. எங்கேயோ படித்தது வீணாக கலகம் செய்பவனை அடக்க, அவனை விட உனக்கு பக்க பலம் அதிகம் என்று காட்டிக் கொள் என்ற அறிவுரை. உடனே செயல் பட்டேன், இன்னாளைய துரித செய்தி பரிமாற்ற வசதிகளுக்கு நன்றி சொல்லியபடியே, என் சம்மதத்துடன், நான் இங்கு வந்திருப்பதையும் தெரிவித்தேன். அடுத்த இருபத்து நாலு மணி நேரந்துக்குள் சுமார் முப்பது பேர் வர தயாராக இருப்பதாக தெரிய வந்தது. பெரியவரிடம் போய் முப்பது பேருக்கு இந்த ஊரில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றவுடன், அவர் முகம் மலர்ந்து ஆஹா, இந்த வீடு இருக்க, வேற இடம் தேடுவானேன் என்றார். இந்த வீட்டில் நிறைய கல்யாணங்கள் நடந்திருக்கின்றன, முப்பது பேர் தானே, நாணாவையும் கூப்பிடுங்கோ என்றார். சக்கரம் சுழல ஆரம்பித்து விட்டது, இனி பயமில்லை. இந்த மாத இறுதியில் அனைவரும் இந்த வீட்டில் கூடுவோம். அது போதும் – வெத்துவேட்டு ஆளை விரட்ட.