நட்பும், தயையும், கொடையும் …
சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம் நடையும் நடைப்பழக்கம்
நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம் – ஔவையார் தனிப்பாடல்கள்
பள்ளி ஆண்டு விடுமுறை ஆரம்பித்தாயிற்று.
அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் இளம் ( வருங்கால) கிரிக்கெட் வீரர்கள் கிளம்பினர். பாவை நோன்புக்கு அழைக்கும் பெண்கள் போல ஒவ்வொரு வீட்டில் இருந்தும் நண்பர்களை அழைத்தபடி மாடிப்படிகளில் இறங்கினார்கள். கீழே இறங்கியதும் பத்து பேர் தானே இருக்கோம். மீதி பேரும் வரட்டும் என்றான் ஒருவன். சுரேஷ் வீட்டில அவன் அம்மா வந்து கதவை திறந்தாங்க – அவன் வர மாட்டான் ஒன்பதாம் வகுப்பு வந்தாச்சு இல்ல – அவன் படிக்கனும் – அதனால் இனிமே விளையாட வர மாட்டான்னு சொல்லிட்டாங்க. அதைக் கேட்டே என்னவோ, கீழ் ப்ளாட் வீட்டு மாதவன் வீட்டுலேயும் அப்படியே அவன் வர மாட்டான்னு சொல்லி கதவை சாத்திட்டாங்க. அவனும் இந்த வருஷம் ஒன்பதாம் வகுப்பு தானே.
ரொம்பத்தான் – என்றவன், சரி நாம மட்டும் போய் விளையாடலாம் என்று சொல்லவும், அவர்கள் கிளம்பினார்கள். மட்டை, பந்து இத்யாதி சாதனங்கள் ஆளுக்கு ஒருவராக தூக்கிக் கொண்டனர். மாது வீட்டில போய் பந்தை வாங்கிட்டு வாடா என்று ஒருவனை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனே வந்தான். எங்கம்மா போக க்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. பந்தை மட்டும் குடுத்துட்டு வரேன் ன்னு சொல்லிட்டு வந்தேன் எனவும் கூடியிருந்தவர்கள் பாவம் டா என்றனர். கிரியும் தான் ஒன்பதாம் வகுப்பு அவன் வரானே –
வழக்கமாக விளையாடும் இடத்தில் ஏதோ மீட்டிங். பந்தல் போட்டு சேர் அடுக்கி வைத்திருந்தது.
கிரிக்கெட் வீரர்கள் வேறு இடம் தேடி நகர்ந்தார்கள். நடந்து நடந்து இடம் தேடி விசாலமான வெற்றிடம் வா வா என்று அழைப்பது போல இருக்கவும், ஸ்டம்பை நட்டு வெளி வட்டம் குச்சியால் வரையும் போது தான் கவனித்தார்கள் , அது ஏரிக் கரை. புதர் மறைத்தது. ஏரியில் அதிசயமாக தண்ணீர் நிறைந்து இருந்தது. கரை ஓரம் சேறாக இருக்கலாம். சிக்ஸர் அடிக்க முடியாது.
ஜாக்கிரதை, ரொம்ப வேகமா அடிக்க வேண்டாம் . இந்த கோட்டுக்கு வந்தாலே சிக்ஸ் ன்னு வச்சுப்போம் . புதருக்குள்ள விழுந்துட்டா தெரியாது. கீழே இறங்கி தேடவும் முடியாது, பூமி ஈரமாக இருந்தது, போன வார மழையில் நனைஞ்சு இருக்கும்.
ஏய் கிரி பேட்டிங் சிக்ஸ் அடிப்பான். பாத்து என்று கத்திக் கொண்டே பார்த்தா பந்தும் கையுமாக ஓடிக் கொண்டே – அவன் தான் கேப்டன் – எச்சரித்தான். நினைவாக மெள்ள பந்தை வீசினான். கிரி யோசியாமல் வழக்கம் போல தூக்கி பலமாக அடிக்க அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்ணுக்கு பந்து புலப்படவேயில்லை. எங்க போய் இருக்கும். .
அனைவரும் சேர்ந்து தான் இந்த தீர்மானம் போட்டது. கிரியும் தான் இருந்தான். இப்ப வேகமா பந்தை அடிக்கவும், அதுவும் கன காரியமாக வானத்தை அளப்பது போல போனது தான் கண்ணில் பட்டது – எங்க போச்சு?
ஏழு எட்டு வகுப்பில் படிக்கும் மாணவர்கள். இந்த கூட்டத்தில் கிரி மட்டும் தான் உயரம். மற்றவர்கள் அவன் தோளுக்குத் தான் வருவார்கள். பார்த்தா திட்ட வந்தவன் பேசாமல் இருந்தான். கிரியை பாக்க பாவமாக இருந்தது. அவனே வருத்தப் படுகிறான். சொல்லி வேற காட்டுவானேன்.
சுற்றி சுற்றி தேடினர். நடந்து கொண்டே புதருக்குள் எட்டி எட்டி பார்த்தபடி – சற்று நேரத்தில் தேடுவது அலுக்கவும், நீள நடந்து கொண்டே இருந்தனர். வெய்யில் ஒரு பக்கம் சுட்டாலும், ஏரியிலிருந்து குளிர்ந்த காற்று அதை ஈடு செய்து விட்டது. பன்னண்டு பேர் இருந்தாலே ஒருவன் அம்பயராக இருப்பான். அடுத்த பாலில் விக்கெட் கீப்பர். இப்ப பத்து பேர்ல எப்படி வராத இருவரின் இடத்தை நிரப்புவது? பெரிய கேள்விக் குறி அது தான்.
பேசியபடியே ஏரிக் கரையின் மேல் அமைந்திருந்த பாதை வழியாகச் சென்றனர். மறுபுறம் பெரிய வாழைத் தோட்டம். வரிசையாக வாழை மரங்கள், வாழைக் காய்களை குலைகளாக அவர்கள் கண்டதேயில்லை. அந்த பசுமை மனதை தொட்டது. ஒரு சிறுவன் கம்பி வேலியில் ஏறி நின்று வெகு தூரம் வரை தெரிந்த மரங்களைப் பார்த்து பிரமித்தான். யாருமேயில்லையே? எதுக்கு? என்றான் மற்றவன். இது தான் கடையில் வர வாழைப் பழமாக ஆகுமான்னு கேட்கனும் என்றான்.
அடுக்கு மாடி வீடுகளில் அரளி போன்ற குட்டை மரங்கள், புதராக வளரும் சில செடிகள் உண்டு. சில இடங்களில் வண்ண மயமான போகன் வில்லா கொடிகள் பல வண்ணங்களில் இருக்கும். வேப்ப மரம் தெரியும். கோவிலுக்குப் போனால் அரச மரம் பார்த்திருக்கோம். தென்னை மரமும் தான் எங்கோ பார்த்த நினைவு. ஆனால் கவனித்ததே இல்லையே. இது போல கவனத்தை இழுத்த தோட்டம் போல – முழு வாழை மரமும் கூட தென் பட்டதேயில்லை. வியப்பு நீங்காமலே நடந்தனர். அடுத்து வந்த வாழைத் தோட்டத்து மரங்களில் இலைகள் மட்டுமே. நீண்ட குறுத்துகள் – அதன் இளம் பச்சை நிறம் என்று ஒவ்வொன்றாக ரசித்தனர். மடித்து வச்சிருக்கா – இதில காய் இல்லடா என்று ஒருவன் சொல்லவும் மற்றவர்களும் கவனித்து ஆமா..ம் என்றனர். அந்த தோட்டத்தில் சிலர் உலர்ந்த இலைகளை அகற்றிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் அருகில் வந்தார். என்ன தம்பிகளா- என்ன பாக்கறீங்க என்றார். இதுல ஏன் காய் இல்லை? இதெல்லாம் இலைக்காக வளக்கறது. கல்யாண வீட்டில் இலைல சாப்பிட்டிருப்பீங்களே – கல்யாணங்களுக்கு எப்பவோ போனது- என்ன சாப்பிட்டோம், எதுல சாப்பிட்டோம் எதுவும் நினைவு இல்லை. மேலும் பேசிக் கொண்டே நடந்தனர். தோட்டத்தின் வேலியோரமாக நடந்தவர்கள் அது முடிந்து ஏரி நீர் கண்ணில் படவும் சுற்று முற்றும் பார்த்தனர். அந்த இடத்தில் நீரோட்டம் வளைந்து திசை மாறி ஓடிக் கொண்டிருந்தது. குறுக்கே ஒரு பாலம் எதிர் பக்கம் போக வசதியாக. பாலத்தின் நடுவில் நின்று நீரை, சள சளவென்ற அதன் ஓசையை ரசித்தனர். திரும்ப அதே போல தாங்களும் சொல்லிப் பார்த்து மகிழ்ந்தனர்.
அதுவும் அலுக்கவும், பாலத்தைக் கடந்து மறு புறம் பெரிய வீதியை அடைந்தனர்.
வெகு தூரம் வந்த பின் திரும்பி பார்த்தால்..
எங்கயோ வந்துட்டோம்டா – இங்க எல்லாம் பெரிய பெரிய பங்களாவா இருக்கே..
வீடு – பள்ளிக்கூடம் வழி தான் காலுக்கே தெரியும். கிளம்பினால் நேர கொண்டு விட்டு விடும். இது என்ன இடம்? திடுமென பசி வந்தது.
அந்த இடமே மாயா ஜாலம் போல இருந்தது. இது வரையில் கண்டதேயில்லை- சினிமால தான் அது போல பங்களா- வாசல்ல கேட்டு, கதா நாயகன் ஏறி குதிச்சு உள்ள வந்துடுவான். அப்ப மட்டும் இந்த காவல் காப்பவன் இருக்க மாட்டான். இவர்களைப் பார்த்து ஏதோ திருட வந்தவர்களைப் போல நினைத்தானோ வேகமாக விரட்ட வந்தான். அவன் கண்ணில் படாமல் நகர்ந்த பின் ஆளாளுக்கு அவனை திட்டினர். அடுத்த வீடு அதை விட பெரிசு- பெரிய ஆளுயர நாய் வேற. ஒவ்வொரு வீடும் பாக்க அழகா – தோட்டம், ஊஞ்சல் தவிர வட்ட மேஜை நாற்காலிகள் என்று இருந்தன, இரண்டு கால் பிராணி மனுஷன் தான் இல்லடா என்றான் ஒருவன். இது வரை நடந்த தூரம் அந்த ஒரு தெருவை கடக்கவே நடந்து விட்டிருந்தனர்.
தெரு மூலையில் இருந்த வீட்டுத் தோட்டமே வீட்டை விட பெரியதாக இருந்தது. சுற்றுச் சுவர் உயரமாக தோட்டத்தை மறைத்துக் கொண்டு. அதனடியில் பூனைக் குட்டிகள் போல இருக்கோம் ன்னு தாங்களே சிரித்துக் கொண்டனர். அதைச் சுற்றிக் கொண்டு மெயின் ரோடு வந்தனர். பசி, வீடு இருக்கும் திக்கும் தெரியவில்லை.
நடந்தனர். யார் கிட்டயும் காலணா கூட இல்ல. எங்க போய் கேட்போம். ஒரு கல்யாண சத்திரம் தென்பட்டது. தட தடவென ஒரு டிரக் வந்து அவர்களை தாண்டிக் கொண்டு அதன் வாசலில் நின்றது. நாளை மறு நாள் யாருக்கோ கல்யாணம். சமையல் செய்பவர்கள் சாமான்களை இறக்கிக் கொண்டிருந்தனர். ஏக்கத்துடன் பார்த்தபடி தயங்கி நின்றனர். சாமான்களை இறக்கிக் கொண்டிருந்தவர்கள் வேகமாக செயல் பட்டுக் கொண்டிருந்தனர். அடுத்து ஒரு சின்ன டெம்போ, அதிலிருந்து வாயில் வெற்றிலையை குதப்பிக் கொண்டு ஒருவர் இறங்கினார். டெம்போவில் மூட்டைகள்.
சற்றும் எதிர்பாராமல் இவர்கள் அருகில் வந்தார். வாயில் வெற்றிலையால் பேச முடியவில்லையோ, பார்த்தவர், எதுவும் பேசாமல் உள்ளே மறைந்தார். நிராசையுடன் உட்கார கூட இடம் இல்லாத மெயின் ரோடு, திடுமென அவர் விசாரிக்கவும் நிமிர்ந்தனர். என்னடா பசங்களா, வேகாத வெய்யில்ல சுத்தனுமா என்றபடி அருகில் வந்தார். பார்த்தா முன்னால் போய் யார் என்ன என்று சொன்னான். ஒருவன் அவன் கேக்காம விட்டுட போறானே என்பது போல, பசிக்கிறது என்றான். அடடா – அசட்டு பசங்களா, வீடு எங்கே என்றார். அந்த அடுக்கு மாடி கட்டிடம் விலாசம் சொன்னதும் ரொம்ப தூரம் – சரி சரி உள்ள வாங்க – -யாரோ ஒருவரை பெயர் சொல்லி அழைத்து ஏதோ சொன்னார். கல்யாண சத்திரம் – உள்ளே போய் கை கால் சுத்தம் செய்து கொண்டு வந்தவர்களுக்கு முதலில் தண்ணீர் குடிக்க கிடைத்ததே பெரும் நிம்மதியாக இருந்தது. இனிமேல் தான் சுத்தம் பண்ணி லைட் போட்டு பண்ணுவா போல இருக்கு என்றான் ஒருவன். அதற்குள் வாங்கடா கிரிக்கெட் வீரர்களா என்ற குரல் கேட்டது. தூக்கி கட்டிய வேஷ்டியும் பனியனுமாக அந்த பெரியவர் தான் அழைத்தார். தரையில் இருந்த பாயை காட்டினார். அமர்ந்தனர். அவசர விருந்து- பூரி, கேசரி கொதிக்க கொதிக்க – அமுதமாக இருக்க அவர்கள் பசி தீர்ந்த பின் கண்களில் ஜலம் வழிய கேப்டன் பார்த்தா மாமா! தாங்க்ஸ் என்றான்.
அவர் எதுவும் சொல்லவில்லை. முதுகில் தட்டிக் கொடுத்தார். ஒரு வேலையாள் அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு டெம்போவை கிளப்பினான். ஜாக்கிரதையா கொண்டு விட்டுட்டு சீக்கிரம் வா. பாத்து போங்கடா, வீட்டுக்கு போய் தூங்குங்கோ என்று சொல்லி வழியனுப்பினார்.
இப்படித்தான் பாகவத காலத்தில இடையர் சிறுவர்கள் மாடுகளை மேய்த்தபடியே, வெகு தூரம் சென்று விட்டனர். வழியில் யாரோ சிலர் யாகம் செய்து கொண்டிருந்தனர். பெரியவர்கள் பலர் இருந்தனர். மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. க்ருஷ்ணன் ஒரு பையன அனுப்பினான். நானும் பலராமனும் வந்திருக்கோம்னு சொல்லு, வழி தவறி வந்துட்டோம், பசிக்கிறது ன்னு சொல்லு. யாகம் தானே பண்றா, முடிஞ்ச உடன அதுல கலந்துக்க வந்தவாளுக்கு சாப்பாடுன்னு நிறைய பேருக்கு ஏற்பாடு பண்ணியிருப்பா என்றான். அந்த பையன் போய் சொன்னான். மாடு கன்றை விரட்ட பயன்படும் கம்பை தோளில் குறுக்கே வைத்து ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்ற கையை ஒரு இடைச் சிறுவன் தோளில் வைத்தபடி நின்று கொண்டிருந்த கிருஷ்ணனைப் பார்த்தனர். அந்த யாகம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு நிர்பந்தம், நடுவில் வேறு பேச்சு பேசக் கூடாது.இருந்தாலும் ஏதாவது பதில் சொல்லி இருக்கலாம். திரும்பி வந்தனர். க்ருஷ்ணன் விட வில்லை. இந்த வழியா சமையலறை கிட்ட போய் அந்த வீட்டுப் பெண்களைக் கேள் என்று சொல்லி அனுப்பினான். மாடு கன்னுகளை ஓட்டிக் கோண்டு ரொம்ப தூரம் வந்துட்டோம், க்ருஷ்ணனும் பலராமனும் கூட வந்திருக்கா – ன்னு சொல்லி முடிக்கல்ல – ஆ அப்படியா என்றவர்கள் ஆளுக்கு ஒரு பெரிய பாத்திரம் நிறைய அன்னமும், பாயசம், காய்கறிகள் கூட்டும், பக்ஷணமுமாக வந்தனர். உடனே ஏற்றுக் கொள்ளாமல், பூஜை முடிஞ்சாச்சா என்று க்ருஷ்ணன் கேட்கவும், அது இருக்கட்டும், நீங்க சாப்பிடுங்கோ, திரும்ப பண்ணிக்கிறோம்- என்று அன்புடன் பரிமாறினர். அது தான் பிறவிக் குணம்னு ஔவையார் சொன்னது.