இதன் பின் உபநிஷத்தில் உள்ள ஸ்ரீ அதர்வ சீர்fஷம்.
தேவியின் தோற்றத்தைப் பார்த்து வியந்த தேவர்கள், யார் நீ என்று கேட்பதாகவும், தேவி அதற்கு பதில் சொல்லும் விதமாக, தானே ப்ரும்ம ஸ்வரூபமாகவும், ப்ரக்ருதியாகவும், ஆனந்தமாகவும், விக்ஞானமாகவும், பஞ்சபூதங்களாகவும் இருப்பதாக சொல்கிறாள். அதேசமயம் , இவைகளுக்கு எதிர்மறையாக உள்ள அப்ரும்மம், அவிக்ஞானம், அபஞ்ச பூதமாக இருப்பதும் நானே என்று சொல்கிறாள். ருத்ர, வசுக்கள், ஆதித்ய, விஸ்வதேவர்களiன் தேஜஸ், மித்ர வருண, அக்னீ, அஸ்வினிகள் (இருவர்) – அதாவது தேவர்கள் அனைவரின் சக்தியும் நானே என்று சொல்லவும் தேவர்கள் அவளை வணங்கி
நமோ தேவ்யை, மகா தேவ்யை, சிவாயை ஸததம் நம : ||
நம: ப்ரக்ருத்யை பத்ராயை நியதா: ப்ரணதா : ஸ்ம தாம் ||
என்று துதிக்கிறார்கள்.
அக்னிவர்ணமான அந்த தேவியை, தவ வலிமையுடன் பிரகாசமாகத் தெரியும் வைரோசனியை, கர்ம பலனாக இருப்பவளை, சரணம் அடைகிறோம். அசுரர்களை நாசம் செய்யும் தேவிக்கு நமஸ்காரம்.
தேவீம் வாசமஜனயன்த தேவா: தாம் விஸ்வரூபா: பஸவோ வதந்தி
ஸா நோ மந்த்ரேஷமூர்ஜம் துஹானா தேனுர்வாகஸ்மானுப சுஷ்டுதைது
காளராத்ரியானவள், ப்ரும்மாவினால் வணங்கப்பட்டவள், வைஷ்ணவியானவள், ஸ்கந்த மாதா என்று அழைக்கப்படுபவள், ஸரஸ்வதியை, அதிதிம், தக்ஷன் மகளானவளை பாவனமான சிவா எனப்படுபவளை, வணங்குகிறோம்.
மகாலக்ஷம்யை ச வித்மஹே ஸர்வ சக்த்யை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
அதிதிர்ஹுfயஜனிஷ்ட தக்ஷ யா துஹிதா தவ தாம் தேவா அன்வஜாயந்த பத்ரா அம்ருத பந்தவ: ||
காமோ யோனீ: கமலா வஜ்ர பாணிர் குஹா ஹாஸ மாதரிஸ்வாய்ரமின்த்ர: ||
புனர்குஹா ஸகலா மாயயா ச புரூச்யைஷா விஸ்வமாதாதிவித்யோம்
இவளே ஆத்ம சக்தி. இவளே விஸ்வ மோகினி. பாச அங்குசங்களை தரித்திருப்பவள். இவளே மகா வித்யா – இதை அறிபவன் சகல விதமான சோகங்களையும் தாண்டி விடுகிறான்.
பகவதி, உனக்கு நமஸ்காரம். தாயே, எங்களை எப்பொழுதும் காப்பாற்றுவாயாக.
இவளே எட்டு வசுக்கள், இவளே பதினொரு ருத்ரர்கள். இவளே பன்னிரண்டு ஆதித்யர்கள். விஸ்வே தேவா|| என்று சொல்லப் படுபவர்களiல், ஸோமபா, அஸோமபா (சந்திரனின் நிலைகள்) , இவளே யாதுதானர்கள், அசுர, ராக்ஷஸ, பிசாச, யக்ஷர்கள், சித்தர்கள் எனப்படும் பல ஜாதியினர்.
சத்வ ரஜஸ் தமஸ் எனப்படும் மூன்று குணங்கள். இவளே ப்ரும்ம, விஷ்ணு, ருத்ர ரூபங்களாக விளங்குகிறாள். ப்ராபதி, இந்திரன், மனு – என்ற தேவர்களும் இவளே. க்ரஹு, நக்ஷத்ர, ஜ்யோதிகள் அனைத்தும் இவளே. கலா. காஷ்டா என்ற காலத்தின் அளவைகளும் இவளே. இவளை நாங்கள் எப்பொழுதும் வணங்கி துதிக்கிறோம்.
இந்த தேவியே தான் நமது பாபங்களை விலக்குபவள், புக்தி, முக்தி தருபவள், இவளுக்கு பல பெயர்கள் – அனந்தா, விஜயா, சுத்தா, சரண்யா. சிவதா, சிவா -இந்த பெயர்களுடன் இவளைத் துதிக்கிறோம்.
இந்த தேவியின் பீஜ மந்திரம் மிகவும் சிறப்பானது. எல்லா நன்மைகளையும் தரக் கூடியது. வானளாவியது, வீதி ஹோத்ர ஸமன்விதம் (?) பிறை சந்திரன் அலங்கரிக்க அமைந்துள்ளது.
இவ்வாறாக மூல மந்திரமாக, ஒரே அக்ஷரமாக, நிர்மலமான மனத்தினரான யதிகள், நித்யம் துதிக்கின்றனர். இவர்களோ ஞானம் என்ற சமுத்திரத்தில் மூழ்கி தௌiந்தவர்கள், பரமானந்த மயமாக இருப்பவர்கள், த்யானமே இவர்களது செல்வம் என்ற பெருமை உடையவர்கள்.
இவர்கள் (இந்த ஞானிகள்) வாக்கு வன்மை – அதுவே ஸ்வரூபமாக இருப்பவர்கள், ப்ரும்ம சூத்தரமாக, ஆறு முகங்களுடன் கூடிய, சூர்யன், அவாம, ஸ்ரோத்ர, பிந்துவுடன் அஷ்டா|| – எட்டு, மற்றும் ஒர் மூன்றுடன் நாராயணனுடன் கலந்து, வாயு அதரத்திலுமாக, விச்சே என்ற நவார்ண மந்திரம், அதை எப்பொழுதும் ஜபித்து வருபவர்கள். மகத்தான ஆனந்தம் என்ற நிலையை எட்டியவர்கள்.
ஹ்ருதயம் என்ற புண்டரீக மத்தியில் இருப்பவளாகவும், இளம் சூரியனைப் போன்ற பிரகாசமுடையவளாகவும், பாச, அங்குச, என்ற ஆயுதங்களும், வரத, அபயம் என்ற முத்ரைகளும், உடைய கைகள், முக்கண்ணாள், ரத்தச் சிவப்பான வஸ்திரம், இவைகளுடன் பக்தர்களுக்கு விரும்பிய பலன்களைத் தருபவளாக உள்ளவளை பஜிக்கிறேன்.
மகா தேவி, உன்னை வணங்குகிறேன். மகாபயம் என்பதை போக்குபவள் நீ. தகர்க்க முடியாத கோட்டையையும் தகர்த்து விடும் சக்தி நீயே, மகா கருணையே உருக் கொண்டவளான உன்னை பஜிக்கிறேன்.
எந்த தேவியுடைய ஸ்வரூபத்தை ப்ரம்மா முதலானவர்களே அறிய முடியாதோ, அவள் அக்ஞேயா – (அறிய முடியாதவள்).
எந்த தேவியுடைய முடிவு எது என்று யாராலும் சொல்ல முடியாதோ, அவள், அனந்தா. (முடிவில்லாதவள்)
எந்த தேவியுடைய லட்சியம் இது தான் என்று வரையறுக்க முடியாதோ, அவள், அலக்ஷயா. (குறிப்பிட்டுச் சொல்ல முடியாதவள்)
எந்த தேவியுடைய பிறப்பு இதுதான் என்று தெரியாதோ, அவள், அஜா –(பிறக்காதவள் )
எந்த தேவி எப்பொழுதும் ஒருவளாக எங்கும் நிறைந்திருக்கிறாளோ, அவள் ஏகா என்ற பெயருடையவள்.
எந்த தேவி ஒருவளாக இருந்து, உலகம் முழுவதும் வியாபித்து விஸ்வசூபிணியாகவும் விளங்குகிறாளோ, அவள், நைகா- ஒருவளல்ல என்றும் பொருள்பட அவளுக்கு நைகா என்றும் பெயர்.
ஆகவே, இவளை அக்ஞேயா, அனந்தா, அலக்ஷ்யா, அஜா, ஏகா, நைகா என்ற பெயர்களால் அழைக்கிறோம்.
மந்திரங்களுக்குள் இவள் மாத்ருகா என்ற மந்திரம்.
சப்தங்களில் இவள் ஞானரூபிணி.
ஞானங்களiல் இவள் சின்மயாதீதா. (சின்மயாநந்தா என்று ஒரு பாடம்)
சூன்யங்களiல் சூன்ய சாக்ஷி.
எவளை மிஞ்சி வேறு எதுவுமே இல்லையோ, அந்த தேவியை துர்கா என்கிறோம்.
அந்த துர்கையை, மிகுந்த சிரமப்பட்டு நெருங்க வேண்டியவளான தேவியை, துராசாரங்களை அழிப்பவளை, பவ – இந்த சம்ஸாரம் என்ற சுழலில் அகப்பட்டுத் தவிக்கும் நான், இவள் தான் கரையேற்றக் கூடியவள் என்று நம்பி துதிக்கிறேன்.
இது அதர்வ சீர்ஷம் என்ற பெயருடைய உபநிஷத் மந்திரம். இதை முறையாக கற்றுக் கொள்பவன், ஐந்து அதர்வசீர்ஷ மந்திரங்களை ஜபித்த பலனை அடைவான். இந்த அதர்வ சீர்ஷ மந்திரத்தை தெரிந்து கொள்ளாமல் அர்ச்சனை செய்ய முனைபவர்கள், அதனுடைய முழு பலனை அடைவதில்லை. நுaறு லக்ஷ ஜப பலனை தரக்கூடிய மந்திரம் இது. இது தவிர, நூற்றெட்டு விதி முறைகளும் கூட சொல்லப் படுகின்றன. பத்து முறை படிப்பவன் உடனடியாக பாபங்களiலிருந்து விடுபடுகிறான்.
மகா தேவியின் பிரஸாதத்தால், மகா துர்கம் எனும் கடினமான கோட்டைகளையும் கடந்து விடுவான்.
இதை மாலையில் படிப்பவன் நாள் பொழுதில் செய்த பாபங்களிலிருந்து விடுபடுகிறான். விடியலில் படிப்பவன், ராத்திரியில் செய்த பாபங்களிலிருந்து விடுபடுகிறான். காலையும் மாலையும் படிப்பவர்கள் பாபமே இல்லாதவனாக ஆகிறார்கள். இரவின் கடைசி யாமத்தில் படிப்பதால் வாக்கு வன்மை கிடைக்கும். புதிய பிரதிமையில் ஜபித்து பூஜா விதிகளை செய்வதால், அதில் தேவதா ஸான்னித்யம் வரும். ப்ராண பிரதிஷ்டை சமயம் படித்தால் ப்ராண பிரதிஷ்டை ஏற்படும். பௌம, ஆஸ்வின மாதங்களiல் மகா தேவியின் சந்நிதியில் ஜபித்தால், மகா ம்ருத்யு என்பதை கடக்கிறான். அந்த சாதகன் மகா ம்ருத்யுவை கடந்து விடுகிறான் என்பது வேத வாக்கு. இவ்வாறு உபநிஷத் சொல்கிறது.
கீலகம் – சண்டிகாயை நம||
மார்கண்டேயர் சொன்னார்.
1. ஓம். விசுத்த – மிகத் தௌiவான ஞானமே உருவானவரும், மூன்று வேதங்களiல் திவ்ய சக்ஷJஸ் (கண்களாக) விளங்குபவரும், பிறை சந்திரனை சிரஸில் தரித்தவருமான (சிவபெருமானை) ஸ்ரேயஸ் எனப்படும் செல்வங்களை அடைய விரும்பி வணங்குகிறேன்.
2. இந்த ஜபத்தை ஈடுபாட்டுடன் செய்ய விரும்பும் அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கீலக மந்திரம் இது. இதை தெரிந்து கொள்பவர்கள் Eக்ஷமத்தை அடைவது நிச்சயம்.
3. உச்சாடனம் முதலியவை தானாகவே சித்திக்கச் செய்யும். மற்ற சகல வஸ்துக்களும் இந்த ஸ்தோத்ரத்தை படித்த மாத்திரத்தில் சித்திக்கும்.
4. ஜபிக்காமல் எந்த மந்த்ரமும், ஒளஷதமும் பலன் தராது. உச்சாடனம் முதலியவை தப்பு தவறுகள் இல்லாமல் செய்தால் தானே சித்தியாகும் என்ற பொதுவான சந்தேகம், ஜனங்களiடையில் உள்ளதை அறிந்த ஹுரன் எல்லோரையும் அழைத்தார். சண்டிகா ஸ்தோத்திரத்தை முறைபடுத்தி ரஹுஸ்யமாக செய்து வைத்தார். இfந்த முறையை அறிந்து செய்வதால் பெறும் புண்யங்களுக்கு அளவேயில்லை. சந்தேகமில்லாமல் எல்லா Eக்ஷமங்களையும் அடைவார்கள். அமாவாஸ்யை, சதுர்தசி, அஷ்டமி போன்ற நாட்களiல், நியமமாக, தானம் செய்தும், தான் தானம் பெற்றும் உரிய கடமைகளை செய்வதால் தேவி பெரிதும் மகிழ்ச்சியடைகிறாள். மகாதேவர் தானே அருளiய இந்த கீலகம், இதையும் படித்து மேற்கொண்டு சண்டிகா துதியை முழுவதுமாக படிப்பவர்கள் தான் சித்தர்கள். அவர்கள் தான் கணங்கள், கந்தர்வர்களாக ஆகிறார்கள். அவர்கள் எந்த இடத்தில் சுற்றி அலைந்தாலும் பயம் என்பதே இருக்காது. அபம்ருத்யு – அகால மரணம், வராது. காலத்தில் மரணமடைந்து மோக்ஷம் செல்வான். விவரமாக தெரிந்து கொண்டு முறைப்படி பூஜிப்பவன், சௌபாக்யம் முதலானவைகள், தங்கள் குடும்பங்களiல் விரும்பும் அனுசரனை முதலியவைகளையும் அடைகிறான். எனவே, சுபமான இந்த துதியை படியுங்கள். மெதுவாக, ஆரம்பித்து, மௌfள மௌfள விரிவாக படிக்கலாம். அந்த தேவியின் பிரஸாதத்தால், சௌபாக்ய, ஆரோக்ய, சம்பத்துக்கள், சத்ரு ஹானீ, பரமான மோக்ஷம் முதலியவை கிடைக்கும் எனும் பொழுது ஜனங்கள் ஏன் ஈடுபாட்டுடன் படிக்க கூடாது.
கீலக ஸ்தோத்ரம் நிறைவுற்றது.
இதன் பின் தந்த்ரம் எனும் முறையில் ராத்ரி சூக்தம்.
இவள் விஸ்வேஸ்வரி. உலகை காப்பவள் இவள் தான். இவளே ஸ்திதி ஸம்ஹார காரிணி. பகவான் விஷ்ணுவின் நித்திரை – இவளே நித்திரா தேவி. பகவானுடைய அளவில்லா தேஜஸால் இவள் பலம் பெற்றாள்.
ப்ரும்மா சொல்கிறார் (72)
தேவி, நீதான் ஸ்வாஹா, நீயே ஸ்வதா4, வஷட்காரமும் நீயே, வேதத்தின் ஸ்வரமாக இருப்பவளும் நீயே. சுதா4 என்ற அம்ருதமும் நீயே. 51 அக்ஷரங்களும் நீயே. மூன்று விதமாக அக்ஷரங்களுள் நீ விளங்குகிறாய். அந்த அக்ஷரத்தின் அரை மாத்திரையிலும் நீ நித்யாவாக விளங்குகிறாய் என்று விசேஷமாக உன்னைச் சொல்வார்கள். நீ தான் ஸந்த்3யா, ஸாவித்திரி, நீ தான் ஜனனீ – தாயாக இருப்பவள். இந்த உலகம் நிலை பெற்று இருப்பது உன்னால் தான். உன்னால் தான் உலகில், பிறப்பும், படைத்தலும் நடக்கின்றன. உலகை காப்பவள் நீயே. இதன் முடிவும் நீயே. நீ ஸ்ருஷ்டி ரூபமாக இருக்கும் பொழுது, உலகம் தோன்றியது. ஸ்திதி ரூபமாக இருக்கும் பொழுது உலகம் பாலிக்கப் படுகிறது. முடிவில் ஸம்ஹுfருதி ரூபமாக விளங்குகிறாய். இந்த உலகமே உன் ஸ்வரூபம் தான் தாயே, நீயே மகா வித்3யா, மகாமாயா, மகா மேதா4 (அறிவு) , மகா ஸ்ம்ருதி (நினைவாற்றல்), மகா மோகா, மகா தேவி, மகாசுரி. உலகின் இயல்பே நீதான். முக்குணங்களாக விளங்குகிறாய் தாயே. கால ராத்திரி, மகா ராத்திரி, மோக ராத்திரி என்று பயங்கரமாகவும் காட்சி தருகிறாய். நீ தான் ஸ்ரீ என்ற லக்ஷfமி, ஈஸ்வரி நீயே, ஹுfரீ எனும் புத்தியும் நீயே. அறிவைத் தருவதும் உன் அடையாளமே. லஜ்ஜை, புஷ்டி, துஷ்டி, சாந்தி, க்ஷaந்தி என்றும் உன்னை குறிப்பிடுவர். சௌம்யமாக இருக்கும் பொழுது நீ பரமேஸ்வரி. அதே சமயம், கோரமான ஒரு உருவமும் உனக்கு உண்டு. அந்நிலையில், கையில் வாள், சூலம், ஏந்தி பயங்கரமாகத் தெரிவாய். க3தை4. சக்ரம்,. சங்கம், அம்பு , வில், பு4சுண்டி, பரிக4ம் என்ற மரக்கட்டை இவைகளும் உன் ஆயுதமே. உலகில் உள்ள நல்லதோ, பொல்லாதோ, எந்த பொருளiல் எந்த சக்தி உள்ளதோ, அந்த சக்தி நீ தான். இப்படித்தான் உன்னைத் துதிக்கிறார்கள். உன்னை யாரால் துதிக்க முடியும் ? விஷ்ணுவோ உறங்கிக் கொண்டிருக்கிறார். என்னையும், ஈசனையும் தோற்றுவித்து, கடமைகளை கொடுத்த அவரே தான், உன்னை ஏவ முடியும். அவரையன்றி நாங்கள் துதி செய்யக் கூட தயங்கி, உன் பிரபாவம், சக்தியை அறிந்ததால் வேண்டிக் கொள்கிறோம்.
தேவி, தயை செய். இந்த அசுரர்களை மோகத்தில் ஆழ்த்து. மது4, கைடப4ர்கள், அளவில்லாத பலம் உடையவர்கள். இவர்களை வதைக்க ஜகன்னாதனான பகவானை எழுப்பு, சீக்கிரம். அவரால் தான் முடியும் இவர்களை நிக்ரஹும் செய்யச் சொல்.
அர்களா ஸ்தோத்திரம் – சண்டிகாயை நம||
மார்கண்டேயர் சொன்னார் –
1. ஓம் ஜயந்தி மங்களா, காளi, பத்ரகாளi கபாலினீ, துர்கா,க்ஷமா,சிவா, தாத்ரி, ஸ்வாஹா, ஸ்வதா – உனக்கு நமஸ்காரம்.
2. காளராத்ரியான தேவி, எங்கும் நிறைந்தவள், உலகில் துன்பத்தை துடைப்பவள், என்று போற்றப்படும், சாமுண்டே ஜய, ஜய போற்றி போற்றி
3. மது கைடபர்களை அடக்கி, விதாதாவான ப்ரும்மாவுக்கு வரம் அளiத்தவளே, உனக்கு நமஸ்காரம். எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
4. மகிஷாசுரனை வதைத்து, பக்தர்களுக்கு சுகத்தை தந்தவள் நீ. உனக்கு நமஸ்காரம். எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
5. ரக்தபீஜன் என்பவனை வதைத்தவளே, சண்டன், முண்டன் என்றவர்களையும் நாசம் செய்தவள், (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
6. சும்பன், நிசம்பன், துaம்ராக்ஷன் இவர்களை மர்தனம் செய்தவள். (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
7. அனவரதமும் மற்றவர்கள் தொழும் பாதங்கள், அவை சர்வ சௌபாக்ய தாயினி – எல்லாவித நன்மைகளையும் தரும் என்பது நாம் அறிந்ததே –
அப்படிப்பட்ட (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
8. கற்பனைக்கு எட்டாத ரூபமும், சத்ருக்களை ஒடுக்கும் பராக்ரமும் உடையவளே, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
9. பக்தியுடன் வணங்குபவர்களுக்கு வரும் துன்பத்தை நீக்குபவளே,
(உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
10. பக்தியோடு உன்னை வணங்குபவர்களுக்கு வியாதி அண்டாமல் காப்பவளே, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
11. சண்டிகே, இதோ இவர்கள் எப்பொழுதும் பக்தியுடன் உன்னை
அர்ச்சனை செய்யும் இவர்fகளுக்கு,
12. சகல சௌபாக்யங்களையும், பரமான சுகத்தையும் தருவாயாக. (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
13. எங்கள் விரோதிகளால் துன்பம் இல்லாமல் செய். நல்ல பலம் தந்து என்றும் காப்பாய். (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
14. தேவி, எங்களுக்கு என்றும் மங்களங்களை அருள்வாய். சிறந்த செல்வத்தை அருள்வாய். (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
15. சுரர்களும், அசுரர்களும் இடைவிடாது தொழும் பாதங்களை உடையவளே, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
16. என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் வித்யா சம்பன்னர்களாக, லக்ஷfமி சம்பன்னர்களாக இருக்கச் செய். (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
17. மிகக் கொடிய தைத்யனின் கர்வத்தை அடக்கிய தேவி, உன்னை வணங்கும் எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
18. நான்கு புஜங்களுடன், நான்கு முகங்களோடு இருக்கும் பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
19. எப்போழுதும் பக்தியோடு, க்ருஷ்ணனால் துதிக்கப்பட்டவளே, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
20. ஹிமாசல நாதனுடைய மகள், அவள் நாதனான (சதாசிவனால்) துதிக்கப்பட்டவளே, பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
21. இந்த்ராணீ பதியினால் ஸத்பாவத்துடன் துதிக்கப்பட்டவளே, பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
22. தேவி, மிக பலசாலி என்று தோள் தட்டிய, தைத்யனையும் கர்வம் ஒழிந்து அடங்கச் செய்தவள் நீ. பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
23. பக்த ஜனங்களுக்கு உயர்வையும் ஆனந்தத்தையும் அளiப்பவளே, தேவி, பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.
24. எனக்கு மனைவியை கொடு. மனோரமாவாக, என் மனதை அனுசரித்து நடப்பவளாக, இந்த ஸம்ஸார சாகரத்தைக் கடக்க என்னுடன் நடப்பவளாக, நல்ல குலத்தில் தோன்றியவளாக இருக்கும் படி கொடு.
இந்த ஸ்தோத்திரத்தை படித்து விட்டு, மகா ஸ்தோத்திரத்தை படிக்க வேண்டும். அப்படி படிக்கும் மனிதர்கள், சப்தசதீ என்ற இந்த துதியின் பலனை அடைகிறார்கள்f. அளவில்லா செல்வங்களை அடைகிறார்கள்f.
(தேவியின் அர்களா ஸ்தோத்திரம் நிறைவுற்றது)
தேவி மாஹாத்ம்யம் – தேவியின் மகிமை
தேவி மாகாத்ம்யம், துர்கா சப்த சதி என்றும் அழைக்கப்படும் இந்த ஸ்தோத்திரம் ஆறு அங்கங்கள் கொண்டது. கவசம், அர்களா, கீலகம், ரஹுஸ்யத்ரயம் என்ற மூன்று. சங்கல்பம் செய்யும் பொழுது மற்ற மந்திரங்களுக்கு உள்ளது போலவே, கவசம் – இதுவே பீஜம் , அர்களம் – சக்தி, கீலகம் – கீலகம். கவசம் அல்லது பீஜம், நமது உலகை ரக்ஷiக்கும்.
மார்கண்டேயர் சொன்னார். பரம்மாவை பார்த்து, பிதாமஹு (பாட்டனாரே) எது உலகில் ரஹுஸ்யமானதோ, அரசர்களையும், மற்றவர்களையும் காப்பாற்றக் கூடியதோ, இது வரை யாரும் அறியாததோ, அதை எனக்குச் சொல்லுங்கள்.
ப்ரும்மா சொன்னார். அப்படி ஒரு பரம ரகசியமான மந்திரம் இருக்கிறது. எல்லா ஜீவன்களுக்கும் உபயோகமானது. அது தான் தேவியின் கவசம். சொல்கிறேன் கேள். முதலாவது, சைலபுத்ரி, (2) ப்ரும்மசாரிணீ (3) சந்த்ர கண்டா, (4) கூஷ்மாண்டா (5) ஸ்கந்த மாதா (6) காத்யாயனி, (7) காளராத்ரி, (8) மகா கௌரி, (9) சித்தி தாத்ரி – என்று நவதுர்கா என்ப்படுவர்.
ப்ரும்மா சொன்ன இந்த பெயர்களே மந்திர சக்தி வாய்ந்தவை. எனவே இவைகளை, தீ விபத்தில் அகப்பட்டுக் கொண்டாலோ, சத்ருக்கள் மத்தியில் செய்வதறியாது நிற்க நேர்ந்தாலோ, மிக கடினமான பாதை, வழி தவறி விட்டது என்றாலும், வேறு எந்த கஷ்டம் என்று சரணடைந்தாலும் பக்தியுடன் இந்த தேவியை, இந்த பெயர்களை நினைப்பவர்களுக்கு எந்த தீங்கும் நேராது. அவர்களுக்கு மேன் மேலும் ஸம்ருத்தி – எல்லா விதமான செல்வங்களை, நிறைவை தேவி அளiக்கிறாள்.
தேவர்களுக்கும் தலைவியானவளே, உன்னை நினைந்து வேண்டுபவர்களுக்கு நீ, நிச்சயம் காப்பாற்றுவாய் அல்லவா.
1. ப்ரேத ஸம்ஸ்தா – உயிர் பிரிந்த உடலை வாகனமாக கொண்டவள் – சாமுண்டா
2. மகிஷத்தை ஆஸனமாக கொண்டவள் – வாராஹி
2. கஜத்தின்(யானை) மேல் ஏறி வருபவள் – ஐந்த்ரி
3. கருடனை ஆஸனமாக உடையவள் – வைஷ்ணவி
4. ரிஷபத்தின் மேல் ஆரோஹித்து பவனி வருபவள், மாகேஸ்வரி
5. சிகி (மயில்) வாகனாவாக வருபவள், கௌமாரி
6. பத்மஸனாவாக லக்ஷfமி, பத்மங்களை கையில் வைத்திருப்பவள், (அல்லது) பத்மம் போன்ற கைகளை உடையவளான லக்ஷfமி- ஹுரிப்ரியா
7. ரிஷப வாகனாவான தேவி ஈஸ்வரி, வெண்ணிறத்தவள்.
8. ஹும்ஸ வாகனா என்பவள் – ப்ராஹுfம்மி
எல்லா விதமான ஆபரணங்களுடன் விளங்கும் இவர்களை மாதர|| – தாய் மார்கள் என்று சொல்வார்கள்.
எல்லோருமே எல்லா வித யோக சாதனைகளும் நிரம்பியவர்கள். பலவிதமான ஆபரணங்கள், ரத்னங்கள் உள்ளவர்கள். போர் என்றதும், ரதங்களiல் ஏறி, வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் வந்து சேர்ந்தனர். சங்கம், சக்ரம், கதா, சக்தி, முஸலம், கேடகம், தோமரம், பரசு, பாசம், குந்தாலம், த்ரிYசூலம், சார்ங்கம் என்ற உத்தமமான ஆயுதம், இவைகளை பக்தர்களுக்கு அபயமளiத்து, காக்கவும், எதிரிகளான தைத்யர்களை அழிக்கவும் தேவி இவ்வளவு ஆயுதங்களைத் தாங்கி வருகிறாள். அதில் தான் தேவர்களiன் நன்மையும் அடங்கியிருக்கிறது.
அந்த மகாரௌத்ரே உனக்கு நமஸ்காரம். மகா பயங்கரமான பராக்ரமம் உடையவளே, மகா மாயே, மகோத்ஸாEஹு, மகா பய விநாசினி
பயம் எங்களை நெருங்காமல் காப்பாற்று. மகா பலசாலிகளான சத்ருக்களுக்குத் தான் நீ பய வர்தினீ-பயத்தை வளர்ப்பவள். பக்தர்களுக்கு வரம் அளiப்பவள் நீ.
1. ஐந்த்ரி- இந்திரனுடைய சக்தி – கிழக்கு திசையில் எங்களை காக்கட்டும் 2. அக்னீ தேவதா – ஆக்னேயம் (தென் கிழக்கு)
திசையில் எங்களை காக்கட்டும்
3. வாராஹி – தெற்கு திசையில் எங்களை காக்கட்டும்
4. கட்க தாரிணி – நிர்ருதி (தென் மேற்கு) திசையில் எங்களை காக்கட்டும்
5. வாருணீ – மேற்கு திசையில் எங்களை காக்கட்டும்
6. ம்ருக வாஹிணீ (சிங்க வாகனம்) – வாயவ்யம் (வட மேற்கு) திசையில் எங்களை காக்கட்டும்
7. கௌமாரி – வடக்கு திசையில் எங்களை காக்கட்டும்
8. Yசூலதாரிணீ – ஈசானம் (வட கிழக்கு) திசையில் எங்களை காக்கட்டும்.
9. மேல் நோக்கி – (ஆகாயம் ஒரு திசை) ப்ரும்மாணீ
9. கீழ் நோக்கி – (பூமி ஒரு திசை) வைஷ்ணவி
இப்படி பத்து திசைகளiலும் சாமுண்டா காக்கட்டும். அவளோ சவ வாகனா என்று பெயர் பெற்றவள். உயிர் பிரிந்த சரீரத்தை தன் வாகனமாக கொண்டவள். ஜயா என் முன்னால் காக்கட்டும். விஜயா – பின்னால், அஜிதா – இடது பாகம், தெற்கில் அபராஜிதா காக்கட்டும்.
என் கேசத்தை உத்யோதினி ரக்ஷiக்கட்டும். உமா உச்சம் தலையில் இருந்து காக்கட்டும். நெற்றியில் மாலா தரியும், புருவங்களை யஸஸ்வினியும், புருவ மத்தியில் த்ரி நேத்ராவும், மூக்கை யம கண்டாவும், காக்கட்டும்.
கண்களுக்கு மத்தியில் சங்கிணீ, காதுகளை துவார வாஸினீ, கபாலத்தை காளiகா, காதின் உள் பாகத்தை, சாங்கரி, மூக்கினுள் சுகந்தா என்பவளும், மேல் உதடுகளை சர்ச்சிகா என்பவளும், அதரத்தில் அம்ருத கலா, நாக்கில் சரஸ்வதி, பற்களை கௌமாரி காக்கட்டும்.
கழுத்து பிரதேசத்தை சண்டிகா ரக்ஷiக்கட்டும். சித்ர கண்டிகா என்பவள் கண்டிகாவில் இருக்கட்டும். மகா மாயா வாயினுள் அண்ணத்திலும், முகவாயை காமாக்ஷi காக்கட்டும்.
என் வார்த்தைகளை சர்வ மங்களா காக்கட்டும். கழுத்தில் பத்ரகாளi வாசம் செய்யட்டும். பின் புறம் தனுர்தரி, நீலக்ரீவா என்பவள் வெளi கழுத்தை, நளகூபரி என்பவள் கழுத்து நாளம், புஜங்களiல் கட்கிணீ காப்பாற்றட்டும். என் கைகளை வஜ்ர தாரிணியும், கை, கால் சந்திகளை கட்கிணியும், முன் கையை வஜ்ர தாரிணியும், கைகளை தண்டிணியும், விரல்களை அம்பிகாவும் காக்கட்டும். Yசூலேஸ்வரி நகங்களை காக்கட்டும். வயிற்றுப் பகுதியை குலேஸ்வரியும், ஸ்தனங்களை மகா தேவியும் ரக்ஷiக்கட்டும். மனதை சோக வினாசினி, ஹுfருதயத்தில் லலிதாவாக, உதரத்தில் (வயிற்றில்) Yசூலதாரிணியும், மேட்ரம் என்ற பகுதியை பூதனா,
குதத்தை மகிஷ வாஹினியும், இடுப்பில் பகவதியும், முழங்கால்களை விந்த்ய வாசினியும், மகா பலா துடைகளையும், குல்பங்களை நாரசிம்ஹியும், பாதத்தின் பின் பகுதியை, தேஜஸியும், காக்கட்டும். பாத விரல்களiல் ஸ்ரீ வஸிக்கட்டும், தம்ஷ்ட்ராகராளi நகங்களை ரக்ஷiக்கட்டும். ஊர்த்வ கேசினியாக எங்கள் கேசத்தை ரக்ஷiக்கட்டும். ரோம கால்களiல், கௌபேரி என்பவளாக, தோல் பகுதியை வாகீஸ்வரியும், தக்தம், மஜ்ஜ, மாம்ஸ,அஸ்தி (எலும்பு) மேதஸ் இவைகளை, பார்வதி ரக்ஷiக்கட்டும். அந்த்ரங்களை காள ராத்ரியும், பித்தம் என்பதை முகுடேஸ்வரியும், பத்மகோசத்தில் பத்மாவதியும், கபத்தில், Yசூடாமணியும், ஜ்வாலாமுகீ நகங்களiன் ஒளiயாகவும், அபேத்யா என்பவள், கை கால் சந்திகளiலும், சுக்ரம் ப்ரும்மாணீ ரக்ஷiக்கட்டும், சாயா (நிழலை) சத்ரேஸ்வரி என்பவள், தர்ம தாரிணியாக, அஹுங்காரம், என் மனம், புத்தி இவைகளை காக்கட்டும். ப்ராண.அபான, வ்யான, உதான, ஸமானகம் இவைகளை, வஜ்ர ஹுஸ்தா காக்கட்டும். கல்யாண சோபனா என்பவளாக என் ப்ராணனை காக்கட்டும்.
ரஸம், ரூபம், கந்தம், சப்தம், ஸ்பர்ஸம் என்ற குணங்களை யோகினீயாக, நாராயணியாக, சத்வ, ரஜஸ், தமஸ் என்ற குணங்களையும், காக்கட்டும். என் ஆயுளை, வாராஹியும், வைஷ்ணவி என் தர்மத்தையும், சக்ரிணியாக, என் புகழ், கீர்த்தி, லக்ஷfமி, தனம், வித்யா முதலியவைகளை காக்கட்டும். இந்த்ராணீ கோத்ரத்தைக் காக்கட்டும். சண்டிகா என் பசுக்களை ரக்ஷiக்கட்டும். மகாலக்ஷfமி புத்ரர்களையும், பைரவி, மனைவியையும் காக்கட்டும். நான் போகும் வழிகளை சுபதாவாக, (சுபத்தை தருவதாக) மார்கங்களை Eக்ஷமகரியும், ராஜத்வாரங்களiல் நிற்க நேரிடும் பொழுது, மகாலக்ஷfமியும், விஜயா எல்லா இடங்களiலும் நின்றும் காக்கட்டும். கவசம் இல்லாமலோ, வேறு பாதுகாப்பு இல்லாமலோ, நான் இருக்க நேர்ந்தால், அங்கெல்லாம், ஜயந்தி, பாபநாசினியாக இருந்து ரக்ஷiக்க வேண்டும் தாயே. தனக்கு சுபமானது நடக்க வேண்டும் என்று விரும்பினால், ஓரடி கூட கவசம் இல்லாமல் போகக் கூடாது. (இந்த ) கவசத்துடன் போகும் இடமெல்லாம் அர்த்தம் (பொருள்) லாபம், விஜயம் (வெற்றி) மற்றும் விருப்பங்கள் அனைத்தும் நிச்சயமாக அடைவான். பரமைஸ்வர்யம் என்பதை பூலோகத்திலேயே அடைவான். யுத்தம் என்றால் பயமின்றி எதிர்த்தவர்களை வெல்வான். இந்த கவசம் பாதுகாப்பாக இருக்கும் பொழுது, உலகில் பெரிதும் மதிக்கப்படுவான். இந்த தேவி கவசம் தேவர்களுக்கு கூட எளiதில் கிடைக்காது. பக்தி ஸ்ரத்தையுடன் மூன்று வேளையும் யார் படிக்கிறார்களோ, அவர்கள் தெய்வீகமான அருளை பெறுவார்கள். தோல்வி என்பதே இல்லாமல் வாழ்வார்கள். நுaறு ஆன்டுகள் வாழ்நாளும், அபம்ருத்யு என்ற அல்பாயுள் அண்டாமல் திருப்தியாக வாழ்வார்கள். வியாதிகள் போகும், வெடி, திருட்டு முதலானவைகளiல் செல்வத்தை பறி கொடுக்க நேரிடாது. ஸ்தாவரம், (அசையாத) ஜங்கம (அசையும்), செயற்கையான விஷம், எல்லாவிதமான அபிசாரம் (ஏவல், வினை), மந்த்ர, யந்த்ரங்கள் (கெடுதலை விளைவிக்க பயன்படுபவை, – இவை பூலோகத்திலும், ஆகாயத்திலும், (தேவ லோகத்திலும்), நீர் வாழ்வன, மற்ற தேசங்களiல் வாழ்பவர்கள், இவர்கள் மூலம் பயமோ, ஆபத்தோ வராது. ஸஹுஜா, குலஜா, மாலா, டாகினீ, சாகினீ, அந்தரிக்ஷத்தில் சஞ்சரிப்பவர்கள், கோரமான டாகினிகள், மகா பலம் பொருந்திய ப்ரும்ம ராக்ஷஸ, வேதாளங்கள், கூஷ்மாண்டா, பைரவர்கள், இந்த தேவி கவசத்தை மனதில் ஸ்மரித்துக் கொண்டிருக்கும் பக்தர்களை தரிசித்த மாத்திரத்தில் நாசம் அடைவார்கள். அரசர்கள் மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள், மேன் மேலும் தேஜஸ் வளரும். புகழ் பரவும். உலகில் புகழோடு வாழ்வார்கள்.
கவசத்தை படித்தபின், சப்த சண்டி என்ற துதியை படியுங்கள். மலைகளும், மரங்களும், வனங்களுமாக இந்த பூமி உள்ள வரை உங்கள், புத்ர, பௌத்ர என்று சந்ததி நிலைத்து நிற்கும். தேகத்தை விட்ட பின்னும், பரம்-உயர்ந்த ஸ்தானம் கிடைக்கும். தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய ஸ்தானம் இது. இதை மகா மாயாவின் அருளiனால் பெறுவதோடு, சாக்ஷaத் சிவபெருமானுக்கு சமமான ஆனந்தமான ரூபத்தையும் பெறுவார்கள்.
அத்தியாயம் 60 (399) அங்கத3 ஜாம்ப3வத் சம்வாத3: (அங்கதனும் ஜாம்பவானும் உரையாடுதல்)
ஹனுமான் சொன்னதை முழுவதையும் கேட்டபின், வாலி புத்திரன் அங்கதன் சொன்னான். தேவியைக் கண்டு கொண்ட பின், வானரர்களான நாம், அவள் இல்லாமல் ராம லக்ஷ்மணர்களை சந்திப்பது சரியாகாது என்று நான் நினைக்கிறேன். தேவியைக் கண்டோம், அழைத்து வரவில்லை என்று சொல்வோமா. இவ்வளவு பலசாலிகள் என்று பெருமை பேசிக் கொள்கிறோம். வெறும் வாய் வார்த்தையாக ராமனிடம் போய் சீதையைக் கண்டோம், என்று மட்டும் சொல்லி விட்டு வருவோமா. எனக்கு யுக்தமாக படவில்லை. நமக்கு பராக்ரமத்திலும், தாவிச் செல்வதிலும் இணையாக வேறு யார் உளர் ? அமரர்களும், தைத்யர்களும் கூட ஹரி சத்தமா, நமக்கு சமமாக யாரும் இல்லை. தற்சமயம் ஹனுமான் அவர்கள் கர்வத்தை அடக்கி விட்டு வந்ததிலிருந்தே நமது ஆற்றல் தெரியவில்லையா? யோசிப்பானேன். ஜானகியை அழைத்துக் கொண்டே ராமனிடம் செல்வோம். ராம லக்ஷ்மணர்களுக்கு மத்தியில் சீதையை வைப்போம். மற்ற வானரங்களை இதில் ஈ.டு படுத்த வேண்டாம். அனாவசியம். நாமே போவோம். ராக்ஷஸ வீரர்களை வதைப்போம். நமது சங்கல்பம் பூர்த்தியாகி ராம லக்ஷ்மணர்களையும் சுக்ரீவனையும் காணச் செல்வோம். இப்படி அங்கதன் சூளுரைக்கவும், முதியவரான ஜாம்ப3வான், பொருள் பொதிந்த ஒரு வார்த்தை சொன்னார். மகா கபே, நீ சொல்வது சரியல்ல. நமக்கு இடப்பட்ட கட்டளை அவளைத் தேடிக் கொண்டு வரும் வரை தான். எங்கு இருக்கிறாள்? உயிருடன் இருக்கிறாளா என்று கண்டு பிடிப்பது தான் நமக்கு தரப் பட்ட வேலை. கபி ராஜனான சுக்ரீவனும் அழைத்து வரச் சொல்லவில்லை, ராமனும் சொல்லவில்லை. ஏதோ ஒரு விதத்தில் சீதையை ராவணனிடமிருந்து கைப்பற்றிக் கொண்டு வந்து சேர்ப்பதை ராகவனும் விரும்ப மாட்டான். ராகவன் தன் குலப் பெருமையை நிலை நாட்ட தானே தான் தன் சத்ருவை எதிர் கொள்வான். சுக்ரீவ ராஜா ப்ரதிக்ஞை செய்திருக்கிறான். வானரர்கள் மத்தியில் அவர்கள் செய்த ப்ரதிக்ஞையை மீறக் கூடாது. வீண் முயற்சியே. யாருக்குமே இதில் மன நிறைவு உண்டாகாது. நாம் அனாவசியமாக நமது வீரத்தை காட்டியதாக ஆகும். அதனால் நாம் கிளம்புவோம். ராம லக்ஷ்மணர்களும், சுக்ரீவனும் இருக்கும் இடம் செல்வோம். நாம் இதுவரை சாதித்ததைச் சொல்வோம். ராஜ புத்ரா, நீ சொல்லும் வழி எனக்கு சரியாகப் படவில்லை. நாம் நமது எண்ணத்தை ஏன் இதில் புகுத்த வேண்டும் ? ராமனிடம் சொல்வோம். அவன் சொல்வதைச் செய்வோம். அதில் தான் நமது காரிய சித்தி அடங்கி இருக்கிறது.
(இதுவரை வஎல்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் அங்கத ஜாம்பவத் ஸம்வாதோ என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 61 (400) மது4வன ப்ரவேச: (மது வனத்தில் நுழைதல்)
ஜாம்பவான் சொன்னதை வானரங்கள் ஏற்றுக் கொண்டன. அங்கதன் முதலானோரும் ஹனுமானும் சந்தோஷமாக புறப்பட்டனர். ஹனுமானை முன்னிட்டுக் கொண்டு மகேந்திர மலையை விட்டு வானரங்கள் தாவிக் குதித்து இறங்கின. ஒவ்வொருவரும் மதம் கொண்ட யானை போவது போல பெருத்த சரீரமும், பெரும் பலமும் கொண்டவர்கள். பெரிய மேகம் ஆகாயத்தை மறைப்பதைப் போல மறைத்துக் கொண்டு சென்றனர். கண்களாலேயே அடிக்கடி ஹனுமானைப் பார்த்தபடி நடந்தனர். கண் பார்வையில் அவனை தூக்கிச் செல்வதாக இருந்தது. ராகவனின் காரியத்தை முடித்துக் கொடுத்து நல்ல பெயரை சம்பாதிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தாண்டவமாடியது. ராமனிடம் பிரியமான செய்தியைச் சொல்லப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தாண்டவமாடியது. அதுவும் தவிர, பின்னாலேயே யுத்தம் வரும், யுத்தம் செய்ய ஆவலுடையவர்களாக, குதித்து, குதித்து வழி நடந்தனர். இந்திரனின் நந்தன வனத்துக்குச் சமமான ஒரு வனம். மரங்களும் கொடிகளும் அடர்ந்து காணப்பட்டது. மது வனம் என்று சுக்ரீவனால் பாலிக்கப் பட்டது. எல்லா ஜீவன்களுக்கும் பிடித்தமானது. கடந்து செல்லக் கூட தயக்கம் தரக் கூடிய மது வனம். அதை ததி முகன் என்ற வானர வீரன், சதா ரக்ஷித்துக் கொண்டிருந்தான். சுக்ரீவனுடைய மாமா. இந்த வனம் வந்து சேர்ந்த வானரங்கள் அடக்க முடியாத ஆவலுடன், அங்கதனை யாசிக்க ஆரம்பித்தனர். வானர ராஜனுக்கு மிகவும் பிடித்தமான வனம் என்பதனாலேயே மற்றவர்கள் நெருங்காமல் இருந்த வனம். அங்கதன் அவர்கள் விருப்பத்துக்கு இணங்கி பெரியவர்களான ஜாம்பவான் முதலியவர்களை மதுவை அருந்த அனுமதித்தான். நாட்டியமாடியபடி, வானரங்கள் துள்ளிக் குதித்து வனத்தில் விருப்பம் போல் சாப்பிடத் துவங்கினர். ஆரவாரத்துடன் தங்கள் விருப்பம் போல குதித்தனர். சில பாடின. சில வணக்கம் தெரிவித்து ஆடின. சில உரக்க சிரித்தன. சில கீழே குதித்து மகிழ்ந்தன. தாவிக் குதித்து புலம்பின. தங்களுக்குள் ஒருவரையொருவர் குசலம் விசாரித்தபடி சென்றன. ரகசியம் பேசுவது போல சில பேசிக் கொண்டன. ஏதோ சொல்லி மகிழ்ந்து சிரித்தன. மரத்துக்கு மரம் சில தாவின. மரத்தின் நுனியிலிருந்து பூமியில் குதித்து விளையாடின. மற்றும் சில பூமியிலிருந்து வேகமாக எழும்பி மரத்தின் கிளையை அடைந்தன. பாடிக் கொண்டிருந்த சில வானரங்களை சில வானரங்கள் சிரித்துக் கொண்டே நெருங்கின. சிரிக்கும் வானரங்களை பொய்யான அழுகையுடன் சில எதிர் கொண்டன. அழும் சிலரை கை கூப்பி வணங்கி காரணம் கேட்பது போல சில நாடகம் ஆடின இவர்களை ஓவென்று அலறிக் கொண்டு சிலர் நெருங்கினர். ஒரே குழப்பம். கபி சைன்யம் இன்னது தான் செய்வது என்று இல்லாமல், தங்கள் இஷ்டப் படி மனதில் தோன்றியபடி நடந்து கொண்டன. மதுவைக் குடித்துக் கொண்டாடின. யாருமே அங்கு மதம் பிடித்து கர்வம் இன்றி இருக்கவில்லை. திருப்தியடையாதவர்களும் இல்லை. மரங்களை உடைத்து, புஷ்பங்களும் இளம் துளிர்களுமாக கீழே விழுந்து கிடந்த கிளைகளையும், வனத்தில் மிச்சமில்லாமல் மதுவைக் குடித்து தீர்ப்பதையும் பார்த்து காவல் காத்த ததி4 முகன் ஓடி வந்தான். கோபத்துடன் அவர்களைத் தடுத்தான். பெரிய உருவம் கொண்ட சில அவனை திரும்பிப் பார்த்து மிரட்டின. வனத்தைக் காக்கும் தன் கடமையை எண்ணி பதறிய ததி4 முகன் அவர்களை மேலும் நாசம் செய்யாமல் தடுக்க முனைந்தான். சிலரைத் திட்டினான். கடுமையான வார்த்தை சொன்னான். சிலரை கைகளால் அடித்துத் தடுத்தான். எதுவும் பலனில்லை. மகிழ்ச்சியுடன் ஆட்டம் போட்ட வானரங்கள் ஒன்று சேர்ந்து ததிமுகனை எதுவும் செய்ய விடாமல் தடுத்து விட்டன. பயம் விட்டுப் போன நிலையில் வானரங்கள் எதையும் காது கொண்டு கேட்பதாக இல்லை. மேலும் கலஹம் செய்ததைக் கண்டு ததி முகன் திகைத்தான். அருமையாக பாதுகாக்கப் பட்ட மது வனம், அவர்கள் நகத்தால் கீறி, பற்களால் கடித்து, கால்களால் மிதித்து, உண்டு இல்லையென்று ஆக்கினார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் மது4வன ப்ரவேசோ என்ற அறுபத்து ஓராவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 62 (401) ததி4 முக கிலீகார: (ததி முகனை வம்பு செய்தல்)
இவர்களைப் பார்த்து ஹனுமான், வானரர்களே, தயக்கம் இன்றி நீங்கள் மதுவை அருந்துங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன். வழி நடையில் களைத்த உங்களை நான் பாதுகாக்கிறேன் . இதைக் கேட்டு அங்கதனும் ஆமோதிக்க, வானரங்கள் ஓவென்ற இரைச்சலுடன் துள்ளி குதித்தன. அங்கதன் சொன்னான். ஹனுமான் சொல்வதை நான் கேட்டே ஆக வேண்டும். நம் வேலையை செய்து முடித்துக் கொண்டு வந்து நம்மை காப்பாற்றியிருக்கிறான். செய்யக் கூடாதது ஏதாவது அவன் கேட்டால் கூட நாம் செய்யக் கடமை பட்டிருக்கிறோம். அப்படியிருக்க, இது என்ன பெரிய காரியம். சாது, சாது என்று வானரங்கள், அங்கதனை கொண்டாடி, நதி வேகத்தில் வேகமாக ஓடி மது வனத்தினுள் புகுந்தனர். காவல் வீரர்கள் தடுத்ததை சற்றும் பொருட்படுத்தாமல், உள்ளே நுழைந்தனர். மைதிலியின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து விட்டோம் என்று மகிழ்ச்சியுடன் மதுவைக் குடித்தன. எதிரில் வந்த வன பாலர்களை சாமர்த்யமாக தடுத்து இடையில் புகுந்து உள்ளே சென்றனர். த்3ரோணம் (படி போல ஒரு அளவு) அளவு மதுவை கைகளால் ஏந்தி குடித்தனர். சிலர் சேர்ந்து குடித்தனர். ஒரு சிலர் அதிகமாக குடித்து துப்பினர். கையில் இருந்த மதுவை சிலர் மற்றவர் மேல் வீசினர். ஒரு சிலர் மிக அதிகமாக மதுவைக் குடித்து மயங்கி மரத்தினடியில் தரையில் படுத்தனர். சிலர் உறங்கினர். உன்மத்தம் பிடித்தவர்களாக, மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டு ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளிக் கொண்டும், கால் தடுக்கி விழுந்து கொண்டும், சிலர் சீட்டியடிக்க, சிலர் ஆனந்த கூத்தாடின. பல வானரங்கள் பூமியில் விழுந்து தூங்கி வழிந்தனர். ஒருவரையொருவர் சீண்டி மகிழ்ந்தனர். அர்த்தமில்லாமல் பிதற்றி, ஹோவென்று சிரித்து மகிழ்ந்தனர். ததி4 முகன் அனுப்பிய காவல் வீரர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மதுவனத்தின் அருகிலேயே அவர்கள் நெருங்காமல் தடுத்து நிறுத்தப் பட்டிருந்தனர். சிலரை முழங்கால்களால் தட்டி விட்டனர். சிலரை தள்ளி விட்டனர். தப்பியது புண்ணியம் என்று ஓடி, காவல் வீரர்கள் ததி4 முகனிடம் தெரிவித்தனர். அவர்களை சமாதானப் படுத்தி ததி முகன், அவர்களையும் அழைத்துக் கொண்டு தானே மதுவனம் சென்றான். ததிமுகன் தானே வருவதைக் கண்டு மதுவனத்தின் காவலர்கள் தைரியம் வரப் பெற்று வேகமாக ஓடின. சில பாறைகளை எடுத்தி வீசின. வேகமாக வந்து மரக் கிளைகளை கையில் வைத்துக் கொண்டு அடித்தன. மதுவனத்தை அழிப்பதை தடுத்தேயாக வேண்டும் என்று தங்கள் எஜமானனின் கட்டளையை உறுதியாக கொண்டு தங்கள் சக்தியைக் காட்டலாயினர். மரக் கிளைகளையும், பாறைகளையும் கையில் வைத்துக் கொண்டு, மரங்களில் ஏறி நின்றும், பூமியில் நின்றும், தடுக்கப் பார்த்தன. இப்படி ததிமுகன் ஆயிரக் கணக்கான தன் வீரர்களுடன் தங்களை தடுக்க வருவதையறிந்து அங்கதனும், ஹனுமானும் நேருக்கு நேர் ததிமுகனை எதிர் கொள்ள வந்தனர். அங்கதன் பெரியவர் என்றும் பாராமல் ததிமுகனை ஓங்கி அடித்து விட்டான். மதாந்தமாக இருந்ததும் ஒரு காரணம். மதிப்புக்குரிய பெரியவர், உறவினன் என்பது உறைக்கவில்லை. கிழே தள்ளி கை கால்களில் காயம் படச் செய்து, மூர்ச்சையாக்கினான். சற்றுப் பொறுத்து தானே சமாளித்துக் கொண்டு எழுந்த ராஜ மாதுலன் (அரசனின் மாமா) கையில் தண்டத்தை வைத்துக் கொண்டு மதுவனத்தை நாசம் செய்த வானரங்களைத் தடுத்தான். எதுவும் பயனில்லை. எப்படியோ எந்த கூட்டதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வெளி வந்து தன் காவல் வீரர்களை தனியாக அழைத்துச் சென்று ஆலோசனை செய்தான். இவர்கள் இங்கு இப்படியே இருக்கட்டும். நாம் செல்வோம். நமது தலைவன் சுக்ரீவனிடம் செல்வோம். ராமனுடன் அவன் தங்கியிருக்கும் இடம் செல்வோம். அரசனான சுக்ரீவனிடம் அங்கதன் செய்த அட்மூடுழியத்தைச் சொல்வோம். அவன் எளிதில் கோபம் கொள்ளக் கூடியவன். இதைக்கேட்டு உடனே தகுந்த நடவடிக்கைகள் எடுப்பான். சுக்ரீவனுக்கு இது மிகவும் பிரியமான மது வனம். தந்தை பாட்டனார் வழி வந்தது. தேவர்கள் கூட இதனுள் நுழைய முடியாது. இந்த வானரங்கள் தங்கள் வாழ்வின் முடிவை நெருங்கி விட்டார்கள் போலும். மதுவை குடிக்க சபலம் கொண்டு வனத்தினுள் நுழைந்து விட்டனர். நிச்சயம் இதைக் கேட்டால் சுக்ரீவன், இவர்களை அடித்து நொறுக்கி விடுவான். அரசன் கட்டளையை மீறும் இவர்கள் தண்டனைக் குரியவர்களே. கோபம் கொண்ட சுக்ரீவன், நம் காரியத்தை செய்து விடுவான். என்று சொன்ன ததிமுகன், அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு வானத்தில் எழும்பி, நிமிஷ நேரத்தில் சூரியப் புத்திரனான சுக்ரீவன், ராம லக்ஷ்மணர்களுடன் தங்கியிருந்த இடத்தை அடைந்து விட்டான். சமவெளியான ஒரு இடத்தில் ஆகாயத்திலிருந்து குதித்தனர். குதித்து, தன் வீரர்கள் புடை சூழ வாடிய முகத்துடன், கூப்பிய கரங்களுடன் சுக்ரீவன் கால்களில் விழுந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ததி4 முக கிலீகார: என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 63 (402) சுக்3ரீவ ஹர்ஷ: (சுக்ரீவன் மகிழ்ச்சி)
தலை கீழாக வந்து விழுந்த ததிமுகனைப் பார்த்து, என்னவோ, ஏதோ என்று பயந்த சுக்ரீவன், அவனை நெருங்கி எழுந்திரு, எழுந்திரு, ஏன் என் கால்களில் விழுகிறாய்? உனக்கு அபயம் அளிக்கிறேன். எதுவானாலும் சொல், என்றான். சுக்ரீவன் இப்படி நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசவும், ததிமுகன் எழுந்திருந்து நடந்ததை விவரித்தான். ராஜன், ருக்ஷராஜன் இருந்த பொழுதும் சரி, வாலி அரசனாக இருந்த பொழுதும் சரி, தற்சமயம் தாங்கள் அரசனாக இருக்கும் பொழுதும் மதுவனத்தில் இது போல ஒரு அட்மூடுழியம் நடந்ததில்லை. இந்த வானரங்கள் வந்து வனத்தை நாசம் செய்து விட்டன. மது முழுவதையும் குடித்து தீர்த்து விட்டன. வனத்தின் காவல் வீரர்களையும் தாக்கி கீழே தள்ளி விட்டனர். மீதி வைக்காமல் மதுவை குடித்தும், கொட்டியும் தீர்த்து விட்டன. காவல் காப்பவர் அதட்டினால், சற்று தள்ளி நின்று குடிக்கின்றன. தடுத்தால் முகத்தை சுழித்து அழகு காட்டுகின்றன. கும்மாளம் போடுகின்றன. குடித்து, கண் சிவந்து என் வீரர்களை விரட்டியடிக்கின்றன. கைகளால் சிலரை அடித்து, சிலரை முழங்கால்களால் இடித்து தள்ளி, சிலருக்கு தேவமார்கம் (மரணம்-யம லோகம்) காட்டுகிறோம் என்று சொல்லி செம்மையாக உதைத்து விட்டன. சுக்ரீவா, நீ அரசனாக இருக்கும்பொழுது இப்படி நடக்கலாமா? மது4வனம் ஒரு இடம் விடாமல் பாழாகி விட்டது. மது4 முழுவதும் ஒரு துளி விடாமல் தீர்க்கப் பட்டு விட்டது. சுக்ரீவனிடம் ததிமுகன் இவ்விவரங்களை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே லக்ஷ்மணனும் அருகில் வந்து விசாரித்தான். என்ன விஷயம் ராஜன், ஏன் இந்த வனத்தின் காவலர்கள் இங்கு வந்து முறையிடுகின்றனர்? துக்கத்துடன் பேசுகின்றனர்? சுக்ரீவன் லக்ஷ்மணனிடம் நடந்ததை தெரிவித்தான். ஆர்ய லக்ஷ்மணா, இந்த ததி4முகன் மது வனத்தைக் காப்பவன். அங்கதன் முதலான வானரங்கள் வந்து மதுவை குடித்து தீர்த்து விட்டனராம். தென் திசையில் தேடி விட்டு திரும்பி வந்தவர்கள். தங்கள் கடமையை செய்து முடிக்காமல் இப்படி அட்டகாசமாக ஒரு செயலை செய்ய முடியாது. திரும்பி வந்தவுடனேயே மது வனத்தை த்வம்சம் செய்திருக்கிறார்கள். வனம் முழுவதும் மிதிக்கப் பட்டு நாசமாகி விட்டதாம். மீதியில்லாமல் மதுவை குடித்து விட்டன என்று ததிமுகன் புலம்புகிறான். இதைப் பார்க்க இந்த வானரங்கள் தாங்கள் சென்ற காரியத்தில் வெற்றியுடன் திரும்பியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. தேவியை கண்டு கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது. வேறு யார் இதை செய்திருக்க முடியும்? ஹனுமான் தான் கண்டு பிடித்திருப்பான், ஹனுமானைத் தவிர வேறு யாராலும் இந்த அரிய செயலை செய்திருக்க முடியாது. ஹனுமானிடம் தான் இப்படி ஒரு இடை விடாத முயற்சி, வீர்யம் நாம் அறிந்திருக்கிறோம். ஜாம்பவான் வழிகாட்டி, அங்கதன் தலைமையில் சென்ற வானரங்களில் ஹனுமானும் பிரதானமாக இருந்தான். இவர்களின் முயற்சி வேறு விதமாக எப்படி இருக்க முடியும்? நிச்சயம் காரியத்தை சாதித்துக் கொண்டு தான் வந்திருக்கிறார்கள். ததி முகா? அங்கதன் முதலானோர் மதுவனத்தை த்வம்சம் செய்து விட்டார்கள் என்று சொன்னாய் அல்லவா? மதுரமான இந்த செய்தி சொல்ல இதோ ததி முகன் வந்திருக்கிறான். வனத்தைக் காப்பவன். இவர்கள் ஆட்களையும் சேர்த்து இடித்து தள்ளி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். லக்ஷ்மணா, இந்த அடாவடி செயலுக்குப் பின் உள்ள தத்துவத்தை ஊகித்துப் பார். கண்டுகொள்ளப் பட்டவள் சீதை. இது தான் உண்மை. சௌமித்ரே, புரிகிறதா? ததிமுகா, வானரங்கள் இஷ்டம் போல் மதுவை அருந்தட்டும். வீரனே, அவர்கள் சென்ற காரியத்தை வெற்றிகரமாக முடித்து விட்டிருப்பார்கள். தோல்வியுற்றவர்களால் கொண்டாட முடியாது. அதனால் ததி முகா, அது அவர்களுக்கு பரிசாகத் தந்தேன். கவலைப் படாதே, வா. விவரம் அறிந்த ராம லக்ஷ்மணர்களும் இதை ஊகித்துக் கொண்டதால், பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். சுக்ரீவனும் ததிமுகனும் மாறி மாறி நடந்ததைச் சொன்னார்கள். சுக்ரீவன் திரும்பவும் ததிமுகனைப் பார்த்து ததிமுகா நான் மகிழ்ச்சியடைகிறேன். பெரிய அரிய செயலை செய்து முடித்துக் கொண்டு வந்தவர்களின் இந்த சிறிய அத்து மீறலை நாம் பொறுப்போம். சீக்கிரமே ஹனுமான் முதலிய வானர சிங்கங்களைக் காண விரும்புகிறேன். ராகவர்களும் ஆவலாக சீதையைக் கண்டு கொள்ள என்ன ப்ரயத்னங்களை எப்படி செய்தார்கள் என்ற விவரங்களைக் கேட்க விரும்புகிறார்கள். ராஜ குமாரர்களும் சுக்ரீவனும் மிகவும் மகிழ்ச்சியோடு ஹனுமானை எதிர் நோக்கி இருந்தார்கள். ராகவன் தன் கைகளில் சீதையைக் கொண்டு வந்து சேர்த்து விட்டதாகவே எண்ணி புளகாங்கிதம் அடைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சுக்ரீவ ஹர்ஷோ என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 64 (403) ஹனுமதா3த்யாக3மனம் (ஹனுமான் முதலானோர் வந்து சேருதல்)
சுக்ரீவன் சொன்னதைக் கேட்டு சமாதானம் அடைந்த ததிமுகன் தன் ஆட்களோடு, வந்தது போலவே ஆகாய மார்கமாக கிளம்பினான். ராம லக்ஷ்மணர்களையும், சுக்ரீவனையும் வணங்கி விடைபெற்றுக் கொண்டான். வந்தது போலவே வேகமாக சென்றான். மதுவனத்தில் நுழைந்து மதுவை குடித்து மயங்கி, சோர்வுற்று இருந்த வானரங்களில் சில, குடலை புரட்டி எடுக்க உண்டதை உமிழ்ந்து கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்தபடி அங்கதனிடம் சென்று மகிழ்ச்சியுடன் சௌம்யனே, கோபம் கொள்ளாதே. நாங்கள் அறியாமல் தடுத்தோம். என்னுடன் காவல் வேலையில் ஈ.டு பட்டவர்களும் உங்களை மதுவைக் குடிக்க விடாமல் தடுத்தனர். அது அவர்கள் கடமை. தாங்கள் யுவராஜா. வானர தலைவன். இந்த வனமும் தங்களுடையதே. நாங்கள் அறியாமல் தடுத்ததை மன்னிக்க வேண்டுகிறேன். எப்படி உங்கள் தந்தை வானரங்களின் தலைவனாக இருந்தானோ அதே போலத்தான் சுக்ரீவனும், தாங்களும். வேறு விதமாக எப்படி இருக்க முடியும்? நான் போய் சுக்ரீவனிடம் விவரங்களைச் சொன்னேன். மாசற்றவனே, நீங்கள் அனைவரும் இங்கு வந்ததும், மதுவைக் குடிப்பதையும் கேட்டவன், கோபம் கொள்ளவில்லை. மிகவும் மகிழ்ந்தான். வனம் அழிந்தது என்று கேட்க மகிழ்ச்சியா? ஆச்சர்யம் தான். மேலும் சுக்ரீவன் அவர்களைச் சீக்கிரம் அனுப்பு என்றும் சொன்னான். இதைக் கேட்டு அங்கதன்,ராம லக்ஷ்மணர்களும் இங்கு நடந்தவைகளைக் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நாம் இனியும் தாமதிக்கக் கூடாது. வேண்டிய அளவு மதுவைக் குடித்து சிரம பரிகாரமும் செய்து கொண்டாயிற்று. வானரங்களே, புறப்படுங்கள். சுக்ரீவனிடம் செல்வோம். சொல்லுங்கள். நீங்கள் எல்லோரும் என்ன சொல்கிறீர்களோ அதைத் தான் நான் செய்யப் போகிறேன். உங்களிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டேன். நீங்கள் சொல்வதைச் செய்வேன் என்றான். நான் யுவராஜா தான். ஆனாலும் உங்களை அதிகாரம் செய்ய எனக்கு அருகதை இல்லை. கடமையை முடித்து கொடுத்த உங்களை அதட்டி அதிகாரம் செய்ய எனக்கு மனம் வரவில்லை. அது தகாது. அங்கதன் சொன்னதைக் கேட்டு அவனது உயர்ந்த எண்ணமும், பரந்த மனப் பான்மையும் புரிந்து கொண்ட வானரங்கள் ஆரவாரம் செய்தனர். ராஜன், யார் இப்படிச் சொல்வார்கள்? ராஜாவாக இருப்பவன் பணிவாக பேசுவது அரிது. செல்வத்தால் மதம் கொண்டு, நானே எல்லாம் என்று தான் நினைப்பார்கள். பேசுவார்கள். உனக்கு இந்தப் பேச்சு தகுதியானதே, உன்னால் தான் இப்படி பேசமுடியும். உன் குலம், பணிவு, நீ நன்றாக மேலும் மேலும் உயர்வடைவாய் என்பதைக் காட்டுகிறது. இதோ க்ஷண நேரத்தில் நாமும் அங்கு செல்வோம். சுக்ரீவனைக் கண்டு விவரங்களைத் தெரிவிப்போம். ஹரிஸ்ரேஷ்டனே, கட்டளையிடு. உன் தலைமையில் தான் அடிக்கு அடி நாம் முன்னேறி, காரியத்தை சாதித்திருக்கிறோம். இது சத்யம் என்றன. இதைக் கேட்டு அங்கதனும் சரி, கிளம்புவோம் என்று சொல்லி பூமியிலிருந்து தாவி எழும்பினான். அவனைத் தொடர்ந்து மற்ற வானரங்களும் தாவி குதித்து கிளம்பினர். ஆகாயத்தை மறைத்தபடி, ஏதோ யந்திரத்தின் உதவியோடு பெரியமலையை தூக்கி ஆகாயத்தில் நிறுத்தியது போல இருந்தது அந்த காட்சி. பெரும் ஆரவாரத்தோடு வானவெளியை தங்கள் கூச்சலால் நிரப்பின. காற்றில் அலைக்கழிக்கப் பட்ட மேகங்கள் மோதிக் கொண்டது போல இருந்தது. சுக்ரீவனோ, இன்னமும் அங்கதன் வரவில்லையே என்று தவிப்புடன் காத்திருந்தான். ராமனை ஆஸ்வாசப் படுத்தினான். ஆறுதல் கொள்வாய் ராமா. சீதையை கண்டு கொண்டார்கள், சந்தேகமேயில்லை. அவர்களுக்கு நான் கொடுத்த கால கெடு முடிந்த பிறகு இங்கு வரவே தயங்குவார்கள். போன காரியம் பலித்து விட்டது என்ற தைரியம் தான் அவர்களை இங்கு வரச் செய்திருக்கிறது. காரியமும் நடக்காமல், காலமும் கடந்து என் முன் வர அவர்களுக்கு துணிவு இல்லை. யுவராஜன் அங்கதன் நல்ல புத்திசாலி. வானர வீரர்களை நன்றாக நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தவன். அப்படி வேறு வழியின்றி காரியமும் நடக்காமல் திரும்பியிருந்தால், முகம் வாடி, தீனனாக வந்திருப்பான். பயத்தால் மிரளும் கண்களும், துவண்ட மனமுமாக வந்து நிற்பான். என் தந்தை, பாட்டனார் வழி வந்த மது வனம். மிகவும் கவனமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. இதில் நுழைந்து அட்டகாசம் செய்ய துணிவு எப்படி வரும்? கௌசல்யை பெற்ற மகனே, கௌசல்யையின் செல்வனே, ஆறுதல் கொள்வாய். தேவியைக் கண்டு கொண்டு விட்டார்கள். அதுவும் ஹனுமான் தான் கண்டிருப்பான். மற்ற யாராலும் சாதிக்க முடியாததை அனுமன் சாதிக்க வல்லவன். சந்தேகமேயில்லை. ஹனுமானிடத்தில் தான் புத்தியும், ஆற்றலும், செய்து முடிக்கும் திடமும் உண்டு. உற்சாகமும், உழைப்பும், சூரியனைப் போன்ற தேஜஸும் அவனிடம் உள்ளது. ஜாம்பவான் அறிவுரை சொல்ல, அங்கதன் நடத்திச் சென்ற சைன்யத்தில், ஹனுமான் பிரதானமாக இருந்தான். அவர்களின் முயற்சி வீணாகாது. கவலையை விடு. அமித விக்ரமா, தற்சமயம் நன்மை நம்மை எதிர் நோக்கி வர இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, கிளு கிளுவென்று சத்தம் கேட்டது. ஹனுமானின் வெற்றியை தங்கள் வெற்றியாக பாவித்து, அங்கதன் முதலான அனைத்து வானரங்களும் வான வெளியை நிரப்பிய வெற்றி ஆரவாரம் ஜய கோஷம் கேட்டது. கிஷ்கிந்தைக்கு அவர்கள் வந்ததே காரிய சித்தியை சொன்னது போலத்தான். நீண்ட வால்களை ஆட்டியபடி வந்த வானரங்கள், கைகளை கூப்பி அஞ்சலி செய்தபடி ராமனைக் காண முண்டியடித்துக் கொண்டு வந்தன. அங்கதனையும் ஹனுமானையும் முன்னால் செலுத்தியபடி மகிழ்ச்சி நிறைந்த முகங்களோடு வந்து சுக்ரீவனையும், ராமனையும் காலில் விழுந்து வணங்கின. பவனாத்மஜன் தான் இந்த செயலை செய்திருப்பான் என்ற சுக்ரீவனின் நம்பிக்கை பலித்தது. லக்ஷ்மணனும் பெருமிதம் அடைந்தான். ராகவனும் மன ஆறுதலை தன் கண்களாலேயே தெரிவிப்பவர் போல ஹனுமானை நோக்கினார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமதா3த்யாக3மனம் என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 65 (404) சூடாமணி ப்ரதா3னம் (சூடாமணியைத் தருதல்)
ப்ரஸ்ரவன மலையில் ராம லக்ஷ்மணர்களையும், சுக்ரீவனையும் வணங்கி யுவராஜாவான அங்கதன் தலைமையில் வானரங்கள் அடக்கமாக நின்றன. பின் ஒரே குரலில் சீதையைப் பற்றி சொல்லலானார்கள். ராவணனின் அந்த:புரத்தில் சிறை இருப்பதையும், ராக்ஷஸிகளின் அதட்டல், மிரட்டல்களையும், ராமனிடத்தில் அவள் அன்பையும் இதுவரை தெரிந்தவரை சொன்னார்கள். ராமர் இதைக் கேட்டு, வைதேஹி நலமாக இருப்பதை தெரிந்து கொண்டார். சீதை எங்கிருக்கிறாள்? என்னைப் பற்றி என்ன நினைக்கிறாள். வானரமே, இன்னமும் வைதேஹியைப் பற்றி நிறையச் சொல்லு. இதைக் கேட்டு வானரங்கள் ஹனுமானைத் தூண்டின. முன்னால் வா என்று சொல்ல, ஹனுமான் முன் வந்து சீதை இருந்த திசையை நோக்கி வணங்கி விட்டு ஆரம்பித்தான். நூறு யோஜனை தூரம் சமுத்திரத்தை தாண்டி, நான் லங்கையை அடைந்தேன். ஜானகியைத் தேடிக் கொண்டு லங்கையில் சுற்றித் திரிந்தேன். தென் திசையில் சமுத்திரத்தின் தென் கரையில் இருக்கும் நகரம் லங்கை. ராவணனின் ராஜ தானி. அவனது அந்தபுரத்தில் சதியான சீதையைக் கண்டேன். தன்னையே உங்களிடம் அர்ப்பணித்தவளாக, ராமா, தன் மனோரதம் யாவுமே ராமனாக இருப்பவளைக் கண்டேன். ராக்ஷஸிகள் மத்தியில் அடிக்கடி அவர்கள் மிரட்டுவதையும், அதட்டுவதையும் பொறுத்துக் கொண்டு இருந்தாள். அந்த ப்ரமதா3 வனம் கோரமான ராக்ஷஸிகளால் ரக்ஷிக்கப் படுகிறது. மிகவும் வேதனையோடு வாழ்கிறாள். தங்கள் துக்கத்தையும் ஊகித்துக் கொண்டு மேலும் வருந்துகிறாள். சிறை வைக்கப் பட்டிருக்கிறாள். ராக்ஷஸிகளின் மத்தியில், தானாக எதுவும் செய்ய இயலாத நிலையில், உயிரை தரித்துக் கொண்டிருப்பதே, பெரிய விஷயம். ஒற்றைப் பின்னலுடன், உங்களையே நினைத்து வாடுகிறாள். பனியில் அடிபட்ட தாமரை போல நிறம் வெளுத்து, தரையில் உறங்குகிறாள். ராவணனை மனதாலும் நினைக்க விரும்பாமல், தன் முடிவைத் தேடிக் கொள்ள தீர்மானித்து விட்டாள். தேவியை எப்படியோ கண்டு பிடித்து விட்டேன். உன் நினைவாகவே இருப்பவளைக் கண்டு கொண்டேன். மெதுவாக இக்ஷ்வாகு வம்ச கீர்த்தியை நான் பாடவும், கேட்டவள் மனதில் நம்பிக்கை துளிர் விட்டது. இதன் பின் அவளுடன் பேச்சுக் கொடுத்தேன். எல்லா விஷயங்களும் சொன்னேன். ராம சுக்ரீவ சக்யம் பற்றி கேட்டு மிகவும் மகிழ்ந்தாள். தன் நியமங்களை விடாது அனுஷ்டிக்கிறாள். உங்களிடம் பக்தியும் அளவிட முடியாது. இப்படி ஜனக நந்தினியை (மகா பாகா) பாக்யவசமாக நான் கண்டு கொண்டேன். உக்ரமான தவத்தில் ஈ.டுபட்டவளை, தங்களிடம் கொண்ட பக்தியால் தான் உயிருடன் இருக்கிறாள். அடையாளம் கொடுத்தாள். சித்ரகூடத்தில் இருக்கும் சமயம் நடந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தச் சொன்னாள். அதை முழுவதும் சொல், என்றாள். மிகவும் ப்ரயத்னத்தோடு காப்பாற்றி வந்திருக்கிறேன், இதைக் கொடு என்று தன் மடியில் முடிந்து வைத்திருந்த சூடாமணியைக் கொடுத்தாள். சுக்ரீவன் கேட்டுக் கொண்டு அருகில் நின்றிருந்தான். இதோ இந்த சூடாமணியை கொடுத்தாள். மேலும், மன:சிலா என்று ஒரு கல். அதிலிருந்து திலகத்தை எடுத்து என் கன்னங்களில் இட்டு விட்டீர்கள். என் திலகம் கலைந்து கிடந்த சமயம், நீங்கள் விளையாட்டும், கேளிக்கையுமாக செய்ததை நினைவு படுத்திக் கொள்ளுங்கள் என்றாள். இந்த வாரிசம்பவன்- நீரில் தோன்றும் மணியை எடுத்து பார்க்கும் போதெல்லாம், உங்களையே நேரில் காணுவது போல மகிழ்ச்சியடைகிறேன். ஒரு மாதம் தான், உயிருடன் இருப்பேன். தசரதாத்மஜா, அதற்கு மேல் இந்த ராக்ஷஸ கூட்டத்தின் நடுவில் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று சொல்லச் சொன்னாள். மான் விழியாளான சீதா உடல் இளைத்து நிறம் வெளிறி, ராவணனின் அந்த:புரத்தில் சிறை வைக்கப் பட்டு இருக்கிறாள், ராகவா, நடந்ததைச் சொல்லி விட்டேன். உடனே சாகர ஜலத்தைத் தாண்டிச் செல்ல ஏற்பாடுகள் செய்யுங்கள். ராஜ குமாரர்கள் இருவரும் இதைக் கேட்டு ஆறுதல் அடைந்தனர். அபிக்ஞானம்- அடையாளமாகத் தந்த சூடாமணியை ராகவனிடம் கொடுத்து நடந்தது அனைத்தையும் முதலிலிருந்து கடைசி வரை விவரமாக ஹனுமான் அவர்களுக்குச் சொன்னான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சூடாமணி ப்ரதா3னம் என்ற அறுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 66 (405) சீதா பா4ஷித ப்ரச்ன: (சீதை சொன்னதைச் சொல் என்று கேட்டல்)
மணியை மார்போடணைத்து ராமர் கண் கலங்கினார். லக்ஷ்மணனும் அந்த அடையாளத்தைத் தெரிந்து கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டான். ராகவனுக்கு இதன் மூலம் நினைவுகள் பின் நோக்கிச் சென்று வேதனையால் முகம் வாடியது. கண்க ளில் கண்ணீர் நிரம்பியது அதனூடே சுக்ரீவனைப் பார்த்து சுக்ரீவா, பசு மாடு தன் கன்றைக் கண்டதும் தானாகவே பால் சுரக்கும். வாத்ஸல்யம் பொங்க பாலூட்டும். அதைப் போல இந்த மணியைக் கண்டதும் என் மனதில் வாத்ஸல்யம் பெருகுகிறது. வைதேஹிக்கு அவள் (அல்லது என்) மாமனார் கொடுத்தது. மண மேடையில் இதை தலையில் அணிந்திருந்தது மிகவும் அழகாக இருந்தது. இது நீரில் தோன்றியது. நல்ல ஜனங்கள் பூஜிக்கக் கூடியது. இந்திரன் யாக முடிவில் மனம் மகிழ்ந்து கொடுத்தது. இதைக் கண்டு என் தந்தையை நேரில் கண்டது போல உணருகிறேன். வைதேஹியின் தந்தை விதேஹ ராஜாவையும் நினைத்து பார்க்கிறேன். இன்று போல இருக்கிறது. இது என் பிரியாவான சீதையின் தலையில் அழகு சேர்க்கும். இன்று இதைக் கண்டு அவளையே கிடைக்கப் பெற்றவன் போல மகிழ்ச்சியடைகிறேன். என்ன சொன்னாள்? சீதா, வைதேஹி திரும்பத் திரும்பச் சொல். தாகம் எடுத்தவனுக்கு நீர் வார்ப்பது போல உன் வார்த்தைகள் என்ற அமுதத்தை இடை விடாது என் தாகம் தணியக் கொடு. இதை விட வேறு துக்கம் என்ன இருக்க முடியும்? நீரில் தோன்றிய இந்த மணியை கையில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறேன். சௌமித்ரே, வைதேஹி வரவில்லையே. வைதேஹிஸ்ரீ நீ வெகு நாட்கள் உயிருடன் இருப்பாய். ஒரு மாத காலம் உயிருடன் இருப்பேன் என்று சொல்லியனுப்பியிருக்கிறாயே. நான் ஒரு க்ஷணம் கூட இருக்க மாட்டேன் போலத் தவிக்கிறேனே. கருவிழியாளை விட்டுப் பிரிந்த துக்கம் மேலும் அதிகமாக என்னை வாட்டுகிறது. சௌமித்ரே, என்னையும் அந்த இடத்துக்கு அழைத்துக் கொண்டு போ. என் பிரியமான மனைவி இருக்கும் இடம் இந்த க்ஷணமே செல்வோம். அவள் இருப்பிடம் தெரிந்தபின், எனக்கு நிலை கொள்ளவில்லையே. என் ப்ரியா பயந்த சுபாவம் கொண்டவள். ராக்ஷஸிகளின் மத்தியில் எப்படி இருக்கிறாள்? சாதாரண ஜனங்கள் கண்டாலே அச்சுறுத்தும் தோற்றம் கொண்டவர்கள் ராக்ஷஸ இனத்தினர். சரத் காலத்தில் இருட்டிலிருந்து வெளி வந்தால் கூட சந்திரன், மேகம் மறைத்தால் மங்கித் தெரிவது போல அவள் முகமும் ராக்ஷஸர்கள் மறைக்க சோபையின்றித் தெரியுமோ. ஹனுமன், என் சீதா என்ன சொன்னாள்? முழுவதும் சொல். வியாதிக்காரனுக்கு ஔஷதம் போல உன் சொல் தான் எனக்கு தற்சமயம் மருந்து. மது4ரா, மது4ரமாக பேசுபவள் என் பா4மினி, அழகிய பெண், என்னை விட்டுப் பிரிந்து அவள் எப்படி இருக்கிறாள்? என்ன சொன்னாள்? ஹனுமன், எனக்கு விவரமாகச் சொல் என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சீதா பா4ஷித ப்ரச்னோ என்ற அறுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 67 (406) சீதா பா4ஷிதானுவசனம் (சீதை சொன்னதை விடாமல் அப்படியே சொல்லுதல்)
ராகவன் இவ்வாறு சொல்லவும், சீதையுடன் தான் செய்த சம்பாஷனையை அப்படியே ராமனிடம் விவரித்தான், ஹனுமான். புருஷர்ஷபா4 இது தான் ஜானகி சொன்னது, கேளுங்கள். ஒரு அடையாளம் சொன்னாள். முன்பு சித்ர கூடத்தில் நடந்த ஒரு சம்பவம். தங்களுடன் சீதையும் சுகமான நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், ஜானகி முதலில் கண் விழித்தாள். திடுமென ஒரு காகம் எங்கிருந்தோ வந்து அவளை ஸ்தனங்களுக்கு மத்தியில் கொத்தி துன்புறுத்தியது. ஜானகியின் மடியில் தலை வைத்து நீங்கள் தூங்கும் பொழுது திரும்பவும் இந்த காகம் வந்து துன்புறுத்தியது, திரும்பத் திரும்ப வந்து உடலில் கொத்தி புண்ணாக்கியது. ரத்தம் பெருகி, உங்கள் மேல் விழவும், உறக்கம் கலைந்து எழுந்து விட்டீர்கள். தேவி, வாயவ்யமான காகம், விரட்ட விட்ட திரும்ப வந்து கொத்துவதை உங்களிடம் சொன்னாள். அவள் உடலில் ரத்தம் வர, துன்புறுத்தியதைக் கண்டு மகா கோபம் கொண்டீர்கள். ஆலகால விஷம் பெருகுவது போல கோபம் பெருகியது. பெருமூமூச்சு விட்டபடி நீங்கள் சொன்னீர்கள். ஏஇது யார்? உன் ஸ்தனங்களின் மத்தியில் நகத்தால் கீறி ரத்தம் வர துன்புறுத்தியது? யாரது? ஐந்து தலை நாகத்தோடு, அதன் ரோஷத்தோடு விளையாடுவது? சுற்று முற்றும் பார்த்த உங்கள் கண்க ளில் காகம் பட்டது. அவளையே உறுத்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தது. அதன் நகங்களில் இப்பொழுது தான் கொத்தி புண்ணாக்கிய இடத்திலிருந்து பெருகிய ரத்தமும் காணப்பட்டது. இந்திரனின் புத்ரன் இல்லையா அவன்? காகம் பறவை இனம். உடனே காற்று வேகத்தில் பறந்து விட்டான். உலகம் சுற்றுபவன். உங்கள் கோபம் கட்டுக் கடங்காமல் போயிற்று. கண்களாலேயே அவனை எரிப்பது போல பார்த்து, கோபத்துடன் தண்டிக்க நினைத்தீர்கள். படுக்கையிலிருந்து தர்ப்பை புல் ஒன்றை எடுத்து, ப்ரும்மாஸ்திர மந்த்ரம் சொல்லி காகத்தை அடிக்க பிரயோகித்து விட்டீர்கள். காலாக்னி போல அது எரிந்து கொண்டு காகத்தைச் சென்ற இடமெல்லாம் துரத்தியது. தந்தையிடம் அடைக்கலம் கேட்டு போனவனை, தந்தையான இந்திரன் கை விட்டான். சுரர்களிடம், மகரிஷிகள் என்று எல்லோரிடமும் சென்று காப்பாற்றச் சொல்லி வேண்டினான். யாருமே ராம பாணம் துரத்தும் நிலையில் அவனைக் காப்பாற்ற முன்வரவில்லை. மூவுலகிலும் யாரும் தன்னை காப்பாற்ற இல்லை என்று தெரிந்தவுடன் தங்களிடமே திரும்பி வந்தான். பயந்து நடுங்கியபடி தங்கள் சரணங்களில் வந்து வீழ்ந்தான். சரணம் என்று காலில் விழுந்தவனை, மேலும் தண்டிக்க மனமின்றி, அவனுக்கு அடைக்கலம் கொடுத்தீர்கள். வதம் செய்யப் பட வேண்டியவன் தான், இருந்தும் காப்பாற்றினீர்கள். அஸ்திரம் பயனின்றி போக முடியாது என்பதால் அவனது வலது கண்ணை மட்டும் அழித்தீர்கள். ராமா, அந்த காகம் உங்களை வணங்கி ராஜா தசரதனுக்கும் வணக்கம் சொல்லி விடை பெற்றுச் சென்றது. அதை தன் இருப்பிடம் செல்ல அனுமதித்தீர்கள். இப்படி அஸ்திரம் அறிந்தவன், சீலமும் ஆற்றலும் உடையவனாக இருந்தும், இந்த ராக்ஷஸர்களின் பேரில் உங்கள் அஸ்திரத்தை ஏன் இன்னமும் பிரயோகிக்காமல் இருக்கிறீர்கள். நாகர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, மருத் கணங்களோ, இவர்கள் அனைவரும் சேர்ந்து நின்றாலும் கூட ரண களத்தில் ராமனை எதிர்த்து நின்று ஜயிக்க முடியாது. அப்படிப் பட்ட வீரன், அவன் மனதில் எனக்காக சிறிதளவாவது பாதிப்பு, தயவு இருக்குமானால், சீக்கிரமே, கூர்மையான பாணங்களால் யுத்தத்தில் ராவணனை வதம் செய்யட்டும். அவனது சகோதரனிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பரந்தபனான லக்ஷ்மணன் தான் வந்து யுத்தம் செய்து ராவணனை வீழ்த்தி என்னை மீட்கட்டும். ஏன் தான் நரவரன், மனிதருள் மாணிக்கம் என்று போற்றப் படும் ராமன் என்னை காப்பாற்ற வரவில்லையோ. இருவரும் நல்ல சக்தி வாய்ந்த வீரர்களே. வாயுவும் அக்னியும் போல தேஜஸ் உடையவர்கள். ஏனோ என்னை புறக்கணித்து இருக்கிறார்கள். நான் செய்த விணைப்பயன் தானோ. ஏதோ ஒரு பாவத்தை நிறைய செய்திருக்கிறேனோ. சந்தேகமேயில்லை. என் வினைதான் என்னை இப்பொழுது வாட்டுகிறது. இல்லாவிடில் சுரர்கள் கூட எதிர் நிற்க முடியாது என்ற அந்த பலசாலிகள், என்னிடம் ஏன் பாராமுகமாக இருக்க வேண்டும்? கண்களில் நீர் பெருக, வைதேஹி இவ்வாறு சொல்லவும் நான் தேவியிடம் ஆறுதலாக பதில் சொன்னேன். தேவி, உங்களைப் பிரிந்து ராகவன் மிகவும் வருந்துகிறான். தங்கள் பேரில் சத்யம், பராமுகமாக இல்லை. முகம் வாடி உங்கள் நினைவில் தவித்துக் கொண்டு தான் இருக்கிறான். அவனுடைய துன்பத்தைப் பார்த்து லக்ஷ்மணனும் தவிக்கிறான். எப்படியோ, இதோ தங்களைக் கண்டு கொண்டேன். இனி கவலைப் பட ஏதுமில்லை. நான் போய் சேர்ந்து விவரங்கள் சொல்ல ஆகும் நேரம் தான். தேவி, பொறுத்துக் கொள். இந்த முஹுர்த்தத்தில் இருந்து நீங்கள் இதுவரை அனுபவித்த வேதனை, துக்கங்களிலிரூந்து விடுபடுவீர்கள். அந்த ராஜ புத்திரர்கள் இருவரும் நர சார்தூலர்கள். அவர்களும் இதே போல வேதனையோடு தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. தங்களைக் காண ஆவலுடன் பரபரப்போடு இருக்கிறார்கள். விவரம் தெரிந்தவுடன், லங்கையையே கொளுத்தி விடுவார்கள். ரௌத்ரமான யுத்தம் வரப் போகிறது. உற்றார், உறவினரோடு சேர்த்து ராவணனை அழித்து தங்களை அழைத்துக் கொண்டு ராகவன் தன் ஊர் செல்வான். இது சத்யமாக நடக்கத்தான் போகிறது. மாசற்றவளே, எந்த அடையாளத்தைக் காட்டினால் ராமன் உடனே புரிந்து கொள்வானோ, அதைக் கொடு. எதைக் கண்டால், அவன் மனதில் அன்பும், ஆனந்தமும் தோன்றுமோ, அதைக் கொடு. நாலாபுறமும் பார்த்து விட்டு மணியை தன் கேசத்தில் அணியும் உத்தமமான இந்த மணியை, தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்திருந்ததை எடுத்துக் கொடுத்தாள். ரகு வீரனே, தங்களிடம் காட்டுவதற்காக அந்த மணி ரத்னத்தை பெற்றுக் கொண்டு அவளை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, திரும்ப வரத்தான் கிளம்பினேன். நான் திரும்பிச் செல்ல தயாராக ஆவதை பார்த்துக் கொண்டே இருந்த தேவி, கண்களில், நீர் வடிய, வளர்ந்து பெருகிய என் உருவத்தைக் கண்டு மேலும் சொன்னாள். என்னுடைய பயணம் நலமாக இருக்க வாழ்த்தியபின், மேலும் சொன்னாள். ஹனுமன், அந்த இருவரும், ராம லக்ஷ்மணர்கள் சிங்கங்கள் போன்றவர்கள். சுக்ரீவனையும், அவன் மந்திரிகளையும் சேர்த்து எல்லோரிடமும் நான் நலம் விசாரித்ததாகச் சொல். இதன் பின் என்னைப் பார்த்து, மகா கபே, நீ அதிர்ஷ்டம் செய்தவன். ஏன் தெரியுமா? கமல லோசனான ராமனை நீ காணப் போகிறாய். என் மைத்துனனான லக்ஷ்மணனை, இளையவனையும் காணப் போகிறாய். மகா பாக்யசாலி நீ. யஸஸ்வியான நீண்ட கைகளையுடைய லக்ஷ்மணனையும் நேரில் காணப் போகிறாய். இப்படி சீதை சொல்லவும், நான் பதில் சொன்னேன். தேவி, என் முதுகில் ஏறிக் கொள். ஜனக நந்தினி, சீக்கிரம். நான் அவர்களிடம் உங்களை கொண்டு சேர்க்கிறேன். சுக்ரீவனுடனும் லக்ஷ்மணனுடம் இருக்கும் ராமனைக் காட்டுகிறேன். கருவிழியாளே, உன் கணவரை உனக்கு காட்டுகிறேன். தேவி சொன்னாள். மகா கபியே, வானரமே, இது தர்மம் அல்ல. நான் என் வசத்தில் இருக்கும் பொழுது உன் முதுகில் ஏறி வந்தால் அது தர்மம் அல்ல. ஹரி புங்கவா, முன்பு ராவணன் என்னைத் தூக்கியபொழுது உடலால் அவனைத் தொடும்படி ஆயிற்று என்றால், அது என் வசத்தில் இல்லை. என்ன செய்வேன்? என் போதாத காலம், விதி என்னை ஆட்டுவித்தது. நீ போய் வா, ஹரி சார்தூலா, அந்த ராஜ குமாரர்கள் இருக்கும் இடத்துக்கு சீக்கிரம் போ. இப்படி விடை கொடுத்தவள். திரும்பவும் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். ஹனுமன், என்ன செய்தால் அந்த ராமன், என்னை இந்த துன்பக் கடலில் இருந்து மீட்பானோ, அது போல செய், பேசு. இங்கு நான் படும் வேதனையின் தீவிரம் ராமனுக்கு புரியும்படி சொல். இந்த ராக்ஷஸிகள் என்னை அதட்டி மிரட்டுவதை, அவன் உணரும்படி சொல். ராமனுடைய சமீபம் சீக்கிரம் போய் சேருவாய். உன் வழிப் பிரயாணம் நலமாக இருக்கட்டும். சௌகர்யமாக போய் வா. ஆர்ய, இது தான் சீதா தேவி என்னிடம் பேசிய வார்த்தைகள். துக்கம் தொண்டையை அடைக்க, நாத்தழ தழக்க, என்னிடம் சொல்லி அனுப்பிய செய்தி இவை. சீதை நலமாக இருக்கிறாள். என்ன செய்ய வேண்டுமோ, தீர்மானித்துக் கொள்ளுங்கள், என்றான் ஹனுமான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சீதா பா4ஷிதானுவசனம் என்ற அறுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 68 (407) ஹனுமத் சமாஸ்வாஸ வசனானுவாத3: (ஹனுமான், திரும்ப தேவிக்கு கூறிய சமாதானம்)
தேவி மிகவும் வருத்தத்துடன் என்னிடம் சொன்னதைக் கேட்டு நான் பரபரப்பு அடைந்தேன். தங்களிடம் உள்ள ஸ்னேகத்தாலும், நரவ்யாக்ர, நட்பினாலும் நான் தேவியை சமாதானம் செய்வது மிகவும் அவசியம் என்று நினைத்தேன் இது போல விவரமாக தாசரதியிடம் சொல், என்ன சொன்னால் ராமன், இந்த ராவணனை நாசம் செய்து என்னை மீட்பானோ, அது போல கவனமாக பேசு. முடிந்தால், வீரனே, இங்கு ஒரு நாள் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து விட்டு நாளைக் கிளம்பு. நீ அருகில் இருக்கிறாய் என்பதே எனக்கு ஆறுதலாக இருக்கும். சற்று நேரம் இந்த சூழ் நிலையின் இறுக்கத்தை மறந்து நிம்மதியாக இருப்பேன் என்றாள். நீ இப்பொழுது கிளம்பி திரும்பி வரும் வரை கூட நான் உயிருடன் இருப்பேனா, அதுவே சந்தேகம் என்றாள். இப்பொழுது உங்களைக் காணாமலும் நான் தவிப்பேன். இப்படி எதை எடுத்தாலும் சந்தேகம் உருக்கொண்டு என் முன்னால் நிற்பது போல இருக்கிறது. எதிர் பாராமல் அடுத்தடுத்து வந்த தீமைகள் என் மன உறுதியைக் குலைத்து விட்டன. போலும். எதிலும் நான் ஆபத்தையே பார்க்கிறேன். ஹரீஸ்வரா, உங்களுக்கு உதவி செய்ய நிறைய வார சேனை, கரடி சேனை இருப்பதாக சொன்னாய். இந்த கடக்க முடியாத சமுத்திரத்தைக் கடந்து எப்படி வருவார்கள்? ராம லக்ஷ்மணர்களுடன், வானர சைன்யமும் கடந்து வந்தாக வேண்டுமே, இந்த உலகிலேயே மூன்று பேருக்குத் தான் அந்த சக்தி உண்டு. வைனதேயனுக்கு, வாயுவுக்கு, இப்பொழுது உனக்கு. அதனால் இந்த கடினமான காரியத்தை நிறைவேற்ற என்ன செய்வாய்? உனக்குத் தெரிந்திருக்கும். நீ செயல் வீரன். இருந்தும் கேட்கிறேன். இந்த செயலை செய்து முடிக்க நீ ஒருவனே போதும் தான். உன் புகழும் பலமும் வளரட்டும். இப்படி ஒரு படையுடன் வந்து ராவணனை வதம் செய்து ராமன் வெற்றி வீரனான என்னை மீட்டு தன் ஊருக்கு அழைத்துச் செல்வானேயானால், அது தான் புகழைத் தரும். அவனுக்கு பெருமை சேர்க்கும். எப்படி என்னை, ராமனிடம் கொண்ட பயத்தால், உபாயம் செய்து ராவணன் கவர்ந்து வந்தானோ, அதே போல ராகவனும் செய்யக் கூடாது. படையுடன் வந்து லங்கையை ஒரு கலக்கு கலக்கி, என்னை மீட்டு அழைத்துச் செல்வானேயானால் அது அவனுக்கு பெருமை சேர்க்கும். அவன் தகுதிக்கு ஈ.டாகும். அதனால் ஹனுமன், அந்த மகாத்மாவின் வீரம் எடுபட, தகுதியான அனுரூபமான வார்த்தைகளைச் சொல்லி அவனை ஊக்குவிப்பாய், யுத்தம் என்று வந்தால் அவன் சூரனே. அவன் சூரத்தனம் வெளிப்படும் வகையில் நீ பேசு. அவனை உற்சாகம் கொள்ளச் செய். வீறு கொண்டு எழுந்து போருக்கு கிளம்பச் செய். நான் தேவியின் உட்கிடக்கையை புரிந்து கொண்டேன். அவளுக்கு ஆறுதல் கிடைக்கும் விதமாகவே பதில் சொன்னேன். தேவி, வானர, ருக்ஷ சைன்யத்தில் தலைவன் சுக்ரீவன். வானர வீரன். நல்ல ஆற்றலுடையவன். உன் விஷயமாக தீர்மானமாக இருக்கிறான். அவனிடம் மகா பலம் பொருந்திய செயல் திறனும் ஆற்றலும் உடைய வீரர்களே பலர் இருக்கின்றனர். ஹரி ராஜன் (வானர அரசன்) அவன் முகக் குறிப்பிலிருந்தே, அவன் ஆணையை புரிந்து கொண்டு செயல் படுத்த வீரர்கள் சித்தமாக இருக்கிறார்கள். இவர்கள் எப்படி வேண்டுமானாலும் சஞ்சரிப்பார்கள். மேல் நோக்கி, கீழ் நோக்கி, பக்க வாட்டில் என்று அவர்கள் கதி செல்லும். என்ன கடினமான காரியமானாலும் சோர்வடைய மாட்டார்கள். உடலும், உள்ளமும் உறுதியாக உள்ளவர்கள். எல்லையற்ற பலம் கொண்டவர்கள். தங்கள் பலத்தை காட்டுவதற்காகவே, இந்த வானர வீரர்கள் பல முறை பூமியைச் சுற்றி பிரதக்ஷிணம் செய்து வந்திருக்கிறார்கள். வாயு மார்கத்தில் உலகைச் சுற்றியிருக்கிறார்கள். எனக்கு சமமாகவோ, என்னை விட அதிக பலசாலிகளாகவோ தான் சுக்ரீவ சைன்யத்தில் உண்டு. என்னை விடத் தாழ்ந்தவன் சுக்ரீவனின் சேனையில் கிடையாது. நானே வந்து விட்டேன். மற்றவர்கள் வர என்ன தடை. சிறந்த வீரர்களை தூதுவனாக அனுப்ப மாட்டார்கள். சற்று அடுத்த நிலையில் உள்ளவர்களைத் தான் அனுப்புவார்கள். அதனால் தேவி, இந்த கவலை வேண்டாம். ஒரு தாவலில் வானர வீரர்கள் லங்கை வந்து சேர்ந்து விடுவார்கள். அப்பொழுது தான் உதயமான சந்திர சூரியர்கள் போன்ற ராஜ குமாரர்கள் இருவரும் என் முதுகில் ஏறி உன் அருகில் வந்து சேர்ந்து விடுவார்கள். இருவருமே நர சிங்கங்கள். தேவி, எதிரியைக் கொல்லும் சக்தி வாய்ந்த சிங்கம் போன்றவர்கள். சீக்கிரமே அந்த ராகவ சிம்மத்தைக் காணத் தான் போகிறாய். கையில் வில்லுடன் லக்ஷ்மணன், லங்கா வாயிலில் வந்து நிற்பதையும் காணத்தான் போகிறாய். எங்கள் வானர வீரர்கள், சிம்மமும், சார்தூலமும் போன்ற வீரர்கள், நகங்களும், பற்களுமே ஆவர்கள் ஆயுதம். கஜராஜன் போல ஒவ்வொருவரும் உருவத்திலும், பலத்திலும் சிறந்தவர்கள். சீக்கிரமே இவர்கள் கூட்டமாக வந்து சேருவதைக் காணத்தான் போகிறீர்கள். லங்கையின் மலைச் சாரல்கள் இந்த வீரர்களால் நிறையப் போகிறது. இந்த வானரங்கள் போடும் கூச்சலைக் கேட்கத் தான் போகிறீர்கள். வனவாசம் முடிந்து, வெற்றி வீரனாக ராமனுடன் அயோத்தி சென்று ராகவனை ராஜ்யாபிஷேகத்தில், முடி சூட்டிக் கொண்டவனாகக் காண்பீர்கள். இப்படி நான் சொல்லி சோர்வடையாமல், உற்சாகமாக பேசி, அவளுக்கு பிடித்த வகையில் சுபமான, நல் வார்த்தைகளைச் சொல்லி விடை பெற்றேன். அவளும் உற்சாகம் அடைந்தாள். தாங்கள் வருந்துவதாக சொன்ன பொழுது அவளும் வருத்தம் அடைந்தாள். என்னால் முடிந்தவரை உற்சாகமாகவே பேசி அவள் மனதுக்கு சாந்தி கிடைக்கச் செய்தேன். என்றான் ஹனுமான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனூமத் சமாஸ்வாச வசனானுவாத3: என்ற அறுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டம் நிறைவுற்றது.)
அத்தியாயம் 51 (390) ஹனுமது3பதேச: (ஹனுமானின் அறிவுரை)
ஆற்றல் மிகுந்த ஹனுமான், தன் ஆற்றல் வெளிப்பட, கவனமாக பொருள் பொதிந்த சொற்களால் ராவணனைப் பார்த்து தன் பேச்சைத் தொடர்ந்தான். தசானனா, நான் சுக்ரீவன் கட்டளைப் படி இங்கு வந்தேன். ராக்ஷஸேந்திரா, உன் சகோதரன் வானர ராஜன் சுக்ரீவன், உங்களை குசலம் விசாரித்தான். சுக்ரீவனுடைய, உன் சகோதரனின் சந்தேசம்- செய்தியைக் கேள். மகாத்மாவான சுக்ரீவனுடைய அறிவுரை, தர்மம் அர்த்தம் நிறைந்தது. இந்த உலகிலும், பரலோகத்திலும் உனக்கு பயன் தரக்கூடிய செய்தியைக் கேள். ராஜா தசரதன் என்று, ரத, குஞ்சர, வாஜிமாந்- குதிரைகள், யானைகள் பூட்டிய ரதங்கள் உடையவர். ஒரு தந்தையைப் போல, பந்துவைப் போல நினைத்து, தன் பிரஜைகளைப் பாலித்து வந்தான். தேவலோகத்து இந்திரன் போல பூவுலகில் மேன்மை பெற்று விளங்கினான். அவனுடைய மூத்த மகன், அரசனுக்கு பிரியமான புத்திரன், தந்தை சொல்லை மந்திரமாக மதிப்பவன், தன் தந்தையின் கட்டளைப் படி ராஜ்யத்தை துறந்து, தண்டகாவனம் வந்தான். லக்ஷ்மணன் என்ற சகோதரனுடனும், சீதை என்ற மனையாளுடனும் வந்தான். அவன் தான் ராமன் என்ற பெயருடைய மகா தேஜஸ்வி. தர்ம வழியில் செல்பவன். அவனுடைய மனைவி வனத்தில் காணாமல் போனாள். பதியையே சார்ந்து இருப்பவள் ஆனதால், பதியைத் தொடர்ந்து வனம் வந்தாள். உத்தமமான ஜனக ராஜவுடைய மகள், விதேஹ தேசத்து அரசனான ஜனகன் தான் அவள் தந்தை. சகோதரனுடன் அவளைத் தேடிக் கொண்டே ருஸ்ய மூகம் வந்து சேர்ந்தான் ராமன். சுக்ரீவனுடன் நட்பு கொண்டான். சுக்ரீவன் ராமனுக்கு உறுதி அளித்தான். சீதையைக் கண்டு பிடிக்க உதவுவதாக வாக்களித்தான். சுக்ரீவனுக்கும் ராமர், வானர ராஜ்யத்தை மீட்டுத் தருவதாக வாக்கு அளித்தார். அதனால் யுத்தம் செய்து வாலியை கொன்று விட்டு, சுக்ரீவன் ராஜாவாக நியமிக்கப் பட்டான். உனக்கு வாலியைத் தெரியும். அந்த வீரனை ராமர் ஒரே ஒரு அம்பினால் தாக்கி மாய்த்து விட்டார். தற்சமயம் சுக்ரீவன், சீதையைத் தேடுவதில் முனைந்திருக்கிறான். சத்ய சங்கரன், சொன்ன சொல்லை நிறைவேற்ற விழைகிறான். எல்லா திக்குகளிலும், பலம் கொண்ட வானர வீரர்களைத் தேட அனுப்பியிருக்கிறான். ஆயிரக் கணக்கான, நூற்றுக் கணக்கான வானர வீரர்கள், நியமிக்கப் பட்டுள்ளனர். எல்லா திசைகளிலும், பாதாளத்திலும், ஆகாயத்திலும், மேலுலகத்திலும் கூட தேட அனுப்பட்டுள்ளனர். சிலர் வைனதேயனுக்கு சமமான தேஜஸ்விகள். எந்த திக்கிலும், தடையின்றி பிரயாணம் செய்யக் கூடிய ஹரி வீரர்கள், வேகமாக செல்லக் கூடியவர்கள். நான் ஹனுமான் என்ற பெயருடைய மாருத புத்திரன். சீதையின் பொருட்டு, நூறு யோஜனை தூரம் நீண்ட, கடக்க முடியாத சமுத்திரத்தைக் கடந்து வந்தேன். அவளைத் தேடியே இங்கு வந்தேன். சுற்றி அலைந்து நான் ஜனகாத்மஜாவைக் கண்டு கொண்டேன். அதனால், தாங்கள், தர்மார்த்தங்களை அறிந்தவர். தவம் செய்து வலிமையைக் கூட்டிக் கொண்டவர். மகா ப்ராக்ஞர்- பெரும் அறிஞர். அதனால் தாங்கள் பர தாரா- மாற்றான் மனைவியை இது போல வற்புறுத்தி, காவல் வைத்திருப்பது என்ன நியாயம்? உங்கள் பெருமைக்கு உகந்தது அல்ல. தங்களைப் போன்ற புத்திசாலிகள், இது போன்ற வேரோடு நாசம் செய்யக் கூடிய, ஆபத்து மிகுந்த, அதர்மமான விஷயங்க ளில் ஈ.டுபடுவதில்லையே. ராம கோபமே வழிகாட்டி முன் செல்வது போல, லக்ஷ்மணனின் பாணங்கள் தொடர்ந்து வரும். இந்த பாணங்களை யார் தான் எதிர் கொள்ள முடியும்? தேவாசுரர்க ளில் கூட அப்படி ஒரு வீரன், தீரன் யார் இருக்கிறார்கள்? ராகவனுக்கு துன்பம் இழைத்து விட்டு யாரானாலும், ராஜேந்திரா, மூவுலகிலும் எங்கிருந்தாலும் சுகமாக இருக்க முடியாது. அதனால் முக்காலத்திலும் நன்மை தரக் கூடியதும், தர்ம, அர்த்தங்கள் நிறைந்ததுமான சுக்ரீவனின் அறிவுரையைக் கேள். நரேந்திரனான ராகவனிடம் அவர் மனைவி ஜானகியை திருப்பிக் கொடுத்து விடு. நான் இந்த தேவியைக் கண்டு கொண்டேன். மிகவும் துர்லபமான கடினமான காரியம் இது தான். இனி மேற் கொண்டு செய்ய வேண்டியது ராகவனின் பொறுப்பு. சோகத்தில் மூழ்கி வாடிக் கிடக்கும் சீதையை நான் தெரிந்து கொண்டு விட்டேன். உனக்குத் தெரியாது. நீ கவர்ந்து கொண்டு வந்தது வெறும் மானிடப் பெண்ணல்ல. ஐந்து தலை நாகம் என்று தெரிந்து கொள். இவளை நீ தேவர்கள், அமரர்கள், துணையுடன் முயன்றால் கூட மாற்ற முடியாது. நல்ல தேக வாகு, ஆரோக்யம் உடையவன் கூட, விஷம் நிரம்பிய அன்னத்தை உண்டு உயிர் வாழ முடியாதது போல. நீ சீதையைக் கவர்ந்து வந்ததும் உன் அழிவுக்கே காரணமாக ஆகும். இந்த சக்தியும் ப்ரபாவமும் உனக்கு தவம் செய்து கிடைக்கப் பெற்றவை. தர்ம வழியில் சென்று நீ இவற்றைப் பெற்றாய். இதை வீணாக்குவது நியாயமா? ஆத்ம ப்ரணம்- உங்களையே பணயம் வைத்து இந்த அதர்ம காரியத்தில் இறங்கி இருக்கிறாய். எந்த உன் உயிரை, வாழ்வை யாராலும் வதம் செய்ய முடியாது என்று நம்பிக்கையோடு இறுமாந்திருக்கிறாயோ, எந்த உங்களை தேவர்களாலும் எதுவும் செய்ய முடியாது என்று வரம் பெற்றிருக்கிறாயோ, அதிலும் நீ கவலைப் படும்படியான ஒரு இடை வெளி, இருக்கிறது. இந்த சுக்ரீவன் தேவனல்ல. அசுரனும் அல்ல. ராக்ஷஸனும் அல்ல. தானவனோ, கந்தர்வனோ, யக்ஷனோ, பன்னகனோ அல்ல. அதனால் ராஜன், இவனிடமிருந்து உன் உயிரை எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போகிறாய்? இதுவும் நீ அறிந்ததே. தர்மத்தை அழிக்கக் கூடியதும், அதர்மத்தின் முடிவும் சேர்ந்து செய்த செயல், அதன் பலனும் அதற்கேற்பத் தானே இருக்க முடியும். தர்மம் தான் அதர்மத்தை வென்று வெளி வரச் செய்யக் கூடியது. தர்ம காரியத்தின் பலனை நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். ராஜன், அதில் சந்தேகமேயில்லை. அதர்மத்தின் பலன் என்ன என்பதையும் சீக்கிரமே காணப் போகிறாய். ஜனஸ்தான வதம் பற்றி தெரிந்து கொண்ட பின், வாலி வதம் ஆனதை தெரிந்து கொண்ட பின், ராம சுக்ரீவர்கள் நட்பு கொண்டதையும் தெரிந்து கொண்ட பின், யோசித்து பார். எந்த வழியில் சென்றால் தனக்கு நன்மை என்பதை தெரிந்து கொள். நான் ஒருவனே போதுமே. குதிரை யானைப் படைகளுடன் ரதங்களில் வரும் போர் வீரர்களை நாசம் செய்து லங்கையை அழிக்க எனக்கு சக்தி இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ராமன், ஹரி, ருக்ஷ (வானரங்கள்-) கூட்டத்தின் முன்னால் ப்ரதிக்ஞை செய்திருக்கிறான். தனக்கு நண்பர்கள் அல்லாத சத்ருக்களை, சீதையை தூக்கிச் சென்றவர்களை, தான் அழிப்பதாக சபதம் செய்திருக்கிறான். சாக்ஷாத் புரந்தரனேயானாலும், ராமருக்கு விரும்பத் தகாத ஒரு செயலை செய்து விட்டு, சுகமாக இருக்க முடியாது. அதிலும், உன் போன்றோரை ஏன் விட்டு வைக்கிறான்? எந்த ஸ்த்ரீயை சீதை என்று நினைக்கிறாயோ, எவள் உன் வசம் சிறை வைக்கப் பட்டு கிடக்கிறாளோ, அவளை சாதாரணமாக நினைக்காதே. கால ராத்ரி அவள். லங்கையை முழுவதுமாக அழிக்க வல்லவள். சீதை என்ற உருவில் வந்துள்ள கால பாசத்திலிருந்து மீளும் வழியைப் பார். தானாக தோளில் ஏறி அமர்ந்து கொள்ளும் கால பாசம், இதை உன்னால் தாங்க முடியுமா? என்று யோசித்து பார். சீதையின் தேஜஸால் தகிக்கப் பட்ட, ராம கோபத்தால் பீடிக்கப் பட்ட இந்த நகரமே அதன் மாட மாளிகைகள், கூட கோபுரங்களோடு சீக்கிரமே எரியப் போகிறது, பார். உன்னைச் சார்ந்தவர்கள், மந்திரிகள், நண்பர்கள், தாயாதிகள், சகோதரர்கள், உன் சந்ததியினர், உன் நலம் விரும்பும் உற்றார், சுற்றத்தார், மனைவிகள், போகங்கள், இந்த லங்கா நகரம் அனைத்தும் அழிய காரணமாக இருக்காதே. ராக்ஷஸ ராஜேந்திரா, நான் சொல்வது சத்யம். இதைக் கேள். நான் ராம தாஸன், தூதன். மேலும் ஜாதியால் வானரம். ராமனை நீ முழுவதுமாக தெரிந்து கொள்ளவில்லை. உலகம் முழுவதையும் , அதிலுள்ள ஜீவன்கள், சரா சரங்களோடு, நசுக்கி நாசம் செய்யவும் அவனால் முடியும். பின், அதை, அதே போல ஸ்ருஷ்டி செய்யவும் அவனால் முடியும். தேவாசுரர்கள், நரேந்திரர்கள், யக்ஷ, ராக்ஷஸ கணங்கள், வித்யா தரர்கள், இவர்கள் எல்லோரிலும், கந்தர்வர்கள், நாகர்கள், சித்தர்கள், கின்னரர்கள், பறவைகள் மற்றும் எல்லா உயிருள்ள பிராணிகளிடத்தும், எக்காலத்திலும், எங்கும் நிறைந்து இவனைப் போல வேறொருவர் கிடையாது. விஷ்ணுவுக்கு சமமான பராக்ரமம் உடைய ராமனுடன் எதிர்த்து போரிட முயலுபவன், சர்வ லோகேஸ்வரனான ராமனுக்கு விரோதமாக, அவனுக்கு துன்பம் விளைவிக்க நினைப்பவன், ராஜ சிம்மமான ராமனை விரோதித்துக் கொண்டால் நீ உயிருடன் இருப்பதே கடினம், துர்லபமாகி விடும். தேவர்களும், தைத்யர்களும், நிசாசரேந்திர, கந்தர்வ, நாக, யக்ஷர்கள், லோக த்ரய நாயகனான ராமனுக்கு எதிரில் நின்று போரிட சக்தியற்றவர்களே. ப்ரும்மா, ஸ்வயம்பூ, சதுரானன என்று பெயர் பெற்றவரான ப்ரும்மாவோ, த்ரிநேத்திரன், த்ரிபுராந்தகன் என்ற ருத்ரனோ, சுர நாயகன், மகேந்திரன் என்று புகழ் பெற்ற இந்திரனோ, போரில் ராமனுக்கு எதிரில் நின்று தோற்பவனை, அதாவது ராமனால் வதம் செய்யப் பட இருக்கும் ஜீவனை காக்கத் திறமையற்றவர்களே. தனக்கு நிகர் இல்லாதவன், என்றும் தீனமாக பணிந்தறியாதவன், கௌரவத்தோடு நிமிர்ந்து நின்றே பழகியவன், என்று இப்படி அந்த வானரம் பேசியதைக் கேட்டு தனக்கு பிடிக்காத, அனிஷ்டமான சொற்களால் சினந்தவனாக, தசானனன், ஆத்திரத்துடன் கண்களை இடுக்கிக் கொண்டு அந்த மகா கபியை வதம் செய்ய உத்தரவிட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமது3பதேச: என்ற ஐம்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 52 (391) தூத வத4 நிவாரணம் (தூது வந்தவனை வதம் செய்யக் கூடாது என்று தடுத்தல்)
அந்த வானரம் தைரியமாக, தெளிவாக சொன்ன அறிவுரைகள் ராவணனுக்கு ஏற்கவில்லை. ஆத்திரத்துடன் வதம் செய்ய உத்திரவு இட்டு விட்டான். ராவணன் யோசியாமல் உத்தரவிட்டதை அவன் சகோதரன் விபீஷணன் அனுமதிக்கவில்லை. தூதனாக வந்தவன் தான் சொல்ல வந்த செய்தியைச் சொன்னான். இதில் அவன் தவறு எதுவுமில்லை. இந்த உண்மையையும், ராவணன் அந்த சமயத்தில் இட்ட கட்டளையையும், மறுத்து செய்ய வேண்டியதையும் மனதில் நினைத்து பார்த்துக் கொண்டான் விபீஷணன். மிகவும் கவனமாக வார்த்தைகளை யோசித்து, தவறு எதுவும் நேர்ந்து விடாமல், கவனமாக தமையனின் எதிரில் நின்று ராஜ தர்மத்தை நினைவூட்டினான். ராக்ஷஸேந்திரா, க்ஷமஸ்வ. பொறு. தயவு செய்து நான் சொல்வதைக் கேள். பூமியை ஆளும் சக்ரவர்த்திகள், தூதனாக வந்தவனை வதம் செய்வதில்லை. இது ராஜ தர்ம விருத்தமானது, ராஜ தர்மத்துக்கு ஒவ்வாதது. சாதாரண உலக வழக்கிலும் நிந்திக்கப் பெறுவது. வீரனே, உன் தகுதிக்கு ஏற்றதுமல்ல. சாதாரண வானரம், இதைக் கொல்வதில் உனக்கு என்ன பெருமை இருக்கிறது. நீ தர்மம் அறிந்தவன். க்ருதக்ஞன்- செய் நன்றி மறவாதவன். ராஜ தர்மத்தை நன்றாக உணர்ந்தவன். உலகில் மற்றவர்களுக்கு நீயே முன்னோடியாக இருக்கும் தகுதி பெற்றவன். உன் போன்றவர்கள் கூட ஆத்திரத்தில் அறிவிழந்து செயல் படுவார்களேயானால், சாஸ்திரங்களை முறையாக கற்றுத் தேறுதல் எந்த அளவு பயனளிக்கும் என்பது கேள்விக் குறியாகும். வெறும் சிரமம் மட்டும் தானா, கல்வி, கேள்வி அறிவுகள்? கற்றலும் கேட்டலும் பயனற்றவையா? அதனால் சத்ருக்களை அடக்கும் சக்தி வாய்ந்த ராக்ஷஸனே, பொறு. சற்று கவனமாக கேள். நீ யுத்தம் என்று வந்தால் எளிதில் வெல்ல முடியாத பலசாலிதான். சந்தேகமே இல்லை. தற்சமயம் செய்ய வேண்டியது என்ன என்பதை யோசித்து செய். தூதனுக்கு தண்டனை கொடு. ராக்ஷஸேஸ்வரன் ராவணன் விபீஷணன் சொன்னதைக் கேட்டான். விபீஷணா, பாபம் செய்தவனிடம், நாமும் பாபத்தையே செய்வதால் பெரிய அனர்த்தம் எதுவுமில்லை. அதனால், இந்த வானரத்தை வதம் செய்கிறேன். இவன் செய்ததும் பெரிய அக்கிரமம். இப்படி ராவணன் அதர்மமாகப் பேசியதைக் கேட்டு, விபீஷணன் மேலும் சொன்னான் கோபத்தில், தன் நிலை மறந்து பண்பில்லாமல் பேசுபவனை திருத்தியாக வேண்டும். லங்கேஸ்வரா, ப்ரசீத3, தயவு செய். யுத்த தர்மத்தை நினைத்து பார். தூதர்களைக் கொல்லக் கூடாது என்று தான் பெரியவர்கள், அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். சந்தேகமில்லாமல் இவன் சத்ரு பக்ஷத்தவன். இவன் செய்ததும் நியாயமல்ல. ஆனாலும் தூதனுக்கு பலவிதமாக தண்டனைகள் விதிப்பதுண்டு. வதம் செய்வதில்லை. உடலில் அங்கங்களை சிதைக்கலாம். சாட்டையால் அடிக்கலாம். தலை கேசத்தை மழிக்கலாம். அதே போல அடையாளத்தை அழிக்கலாம். இவையெல்லாம் தூதனுக்கு தரக் கூடிய தண்டனைகள். இவை தவிர, வதம் செய்வது என்பது நாங்கள் கேட்டதில்லை. உன்னைப் போன்றவர்கள், எந்த விதமான தூண்டுதலிலும் கோபத்தை வெளிக் காட்ட மாட்டார்கள். தனக்குள் அடக்கிக் கொண்டு செய்ய வேண்டியதை கவனமாக செய்ய வேண்டும். கோபத்தின் வழியே போவது உன் போன்ற ஆற்றல் மிகுந்த வீரர்களுக்கு அழகல்ல. எல்லா சுராசுரர்களிலும் உத்தமமான சக்தி படைத்தவன். தர்மத்தை விவாதிப்பதிலும் லௌகீகத்தை கடை பிடிப்பதிலும், சாஸ்திரங்களை அலசி ஆராய்வதிலும், சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ள நன்மைகளை ஏற்றுக் கொள்வதிலும், உனக்கு சமமாக யாரும் இல்லை. சூரனும், வீரனுமான உன்னால் ராக்ஷஸ குலமே பெருமை அடைந்திருக்கிறது. அடிக்கடி போரில் மற்ற சிற்றரசர்களை வென்று வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறோம். யாரிடமும் தோல்வியறியாத வீரன், அமர சத்ரு, உன்னிடம் தவறாக நடந்து கொண்ட பலர், அதன் பலனை அனுபவித்திருக்கிறார்கள். அப்படியிருக்க, இந்த கபியை வதம் செய்வதில் எதுவும் பெருமை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எவர்கள் இந்த வானரத்தை தூதாக அனுப்பியிருக்கிறார்களோ, அவர்களை கொல்வாய், தண்டனை அவர்களுக்கு கொடு. அவர்களோடு விரோதம் பாராட்டுவதும் நியாயம். சாதுவோ, இல்லையோ, யாரோ மற்றவர்களால் அனுப்பப்பட்டவன். நல்லதோ, பொல்லாதோ, மற்றவர்களுக்காக, அவர்கள் சொன்ன சொல்லை திருப்பி சொல்லியிருக்கிறான். தூதனின் வேலை அது. அதனாலேயே தூதனை கொல்வது கூடாது. தவிர, இவனைக் கொன்று விட்டால், மற்றொருவன் இவனைப் போலவே சக்தி வாய்ந்தவன், ஆகாய மார்கமாக வரக் கூடியவன் இருப்பானா என்பது சந்தேகமே. இங்கு வேறு யார் வரப் போகிறார்கள். அதனால் பரபுரஞ்ஜய, இந்த வானரத்தை வதம் செய்ய வேண்டாம். இந்திரன் உள்ளிட்ட தேவர்களிடம் உங்கள் பலத்தைக் காட்டலாம். இளைய சகோதரன் கூற்றில் நியாயம் இருப்பதை ராக்ஷஸ ராஜன் ஏற்றுக் கொண்டான். அந்த சொல்லின் நியாயத்தை உணர்ந்து, கோபத்தை தன்னுள் அடக்கிக் கொண்டு இயல்பான குரலில் விபீஷணனோடு பேசலானான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் தூத வத4 நிவாரணம்: என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 53 (392) பாவக சைத்யம் (நெருப்பு குளுமையாதல்)
ராவணன் சமயோசிதமாக பேசத் தெரிந்தவன். விபீஷணனுக்கு மறு மொழி சொன்னான். விபீஷணா, நீ சொல்வதும் சரியே. தூதனை வதம் செய்வது நிந்திக்கத் தக்கதே. வதம் செய்யாமல். இவனுக்கு வேறு ஏதாவது தண்டனை கொடுக்கலாம். கபிகளுக்கு வால் மிகவும் இஷ்டமானது. வால் தானே வானரங்களுக்கு பூஷணம். அதனால் அந்த வாலை தகித்து விடுங்கள். சீக்கிரம். வால் எரிந்த வானரமாகத் திரும்பிச் செல்லட்டும். அதன் பின் தன் பிரதானமான அங்கம் இழந்து வருந்தும் இவனே மற்றவர்களுக்கு பாடமாக இருப்பான். உற்றார், சுற்றார், பந்து மித்திரர்கள் பார்த்து சிரிக்கட்டும். ராக்ஷஸேந்திரன் மேலும் ஆணையிட்டான். இந்த வானரத்தின் வாலில் தீ வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்லுங்கள் என்றான். இதைக் கேட்டு ராக்ஷஸர்கள், கிழிந்து போன பழைய துணிகள், உலர்ந்த பருத்தி துணைகளைக் கொண்டு வாலில் கட்டினர். இப்படி கட்டியபொழுது வானரன் தன் வாலை மேலும் நீளமாக ஆக்கிக் கொண்டான். காய்ந்து போன மரக் கட்டைகளில் பட்டதால் வளரும் ஹுதாஸனனை போல, வளர்ந்தான், ஹனுமான். எண்ணெய் விட்டு நனைத்து, பின் நெருப்பை வைத்தனர். எரியும் வாலுடன் ராக்ஷஸர்கள் அவனை கீழே தள்ளினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஹனுமானையும் எரியும் வாலையும் கண்டு ராக்ஷஸர்கள், ஸ்த்ரீகள், பா3ல, வ்ருத்3த4ர்கள் எல்லோருமே மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மேலும் மேலும் பலர் வந்து அங்கு கூட்டம் கூடியது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று ஹனுமான் யோசித்து, கட்டப் பட்டிருந்த போதிலும், இந்த ராக்ஷஸர்களை என்னால் கொல்ல முடியும். என் எஜமானனின் கட்டளைப் படி நான் வந்து, என் கடமையை செய்யும் சமயம், இவர்கள் என்னைக் கட்டி வைத்து, வாலில் தீ வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். வேறு வழியில்லை. நானும் என் ஆற்றலைக் காட்டுகிறேன். இந்த ராக்ஷஸர்கள் அனைவருக்கும் நான் ஒருவன் போதும். ஆயினும், ராமனுக்கு பிரியமானதை செய்ய நான் பொறுமையை கடை பிடிக்கிறேன். திரும்பவும் லங்கையைச் சுற்றி வர வேண்டியது தான். இரவில் நன்றாக பார்க்க முடியவில்லை. மறு முறை லங்கையை நன்றாக அதன் கோட்டை கொத்தளங்களோடு பார்க்கிறேன். கட்டுக்குள் இருக்கும் என்னை, வாலை எரித்தது போதாது என்று இந்த ராக்ஷஸர்கள் மேலும் துன்புறுத்தக் கூடும். அதனாலும் நான் ஓரிடத்தில் இல்லாமல் சுற்றுவது தான் தப்பிக்கும் வழியாகும். ஹனுமானை சுற்றி நின்று கொண்டு ராக்ஷஸர்கள் குதூகலமாக கிளம்பினர். சங்கம், பே4ரி, முதலிய வாத்ய கோஷங்களுடன், கோஷம் இட்டுக் கொண்டு, ஊரைச் சுற்றி அழைத்துச் சென்றனர். ராக்ஷஸர்கள் அழைத்துச் செல்கிறார்கள் என்று ஹனுமான் சுகமாக, போகும் இடங்களை ரசித்துக் கொண்டே சென்றான். விசித்ரமான விமானங்களைக் கண்டான். பூமியின் பல இடங்க ளில் வளைவாக இருந்ததை, அழகாக கட்டப் பட்டிருந்த நாற்சந்திகள், அகலமான வீதிகள், வரிசையாக வீடுகள், அழகிய மாட மாளிகைகள், ரதம் ஓடும் வீதிகள், இதற்கு இடையில் சிறிய ரத வீதிகள், வீடுகள் அதே போல ஒன்றுக்குள் ஒன்றாகவும், தனித் தனியாகவும், மேகம் போன்று பெரிய வீடுகள், நான்கு வீதிகள் கூடும் இடங்களிலும், ராஜ மார்கத்திலும் அதே போல பல இடங்களைக் கண்டான். ஒற்றன் இவன் என்று ராக்ஷஸர்கள் உரத்த குரலில் அறிவித்துக் கொண்டே சென்றனர். ஸ்த்ரீ, பால, வ்ருத்தர்களும், குதூகலமாக உடன் சென்றனர். அந்த ஹனுமானை எரியும் வாலுடன் கண்டவர்கள், வாலின் நுனியில் கொழுந்து விட்டெரியும் அக்னி ஜ்வாலையைக் கண்டனர். ராக்ஷஸிகளில் சிலர் இதை தேவியிடம் தெரிவித்தனர். தேவிக்கு இதனால் மன வருத்தம் ஏற்படும் என்று வேண்டுமென்றே தெரிவித்தார்கள். சீதே, உன்னுடன் பேசிக் கொண்டிருந்தானே, தாம்ர முகத்துடன் ஒரு கபி, அவன் வாலில் தீ வைத்து எரியச் செய்து, இதோ ஊர்வலமாக அழைத்துச் செல்கிறார்கள்.
இந்த கொடிய செய்தியைக் கேட்டு சீதை பதறினாள். வேதனையால் முகம் வாடியது. அக்னியை உபாசித்தாள். மகா கபியின் க்ஷேமத்திற்காக மனம் உருகி வேண்டினாள். ஹவ்ய வாஹனன் என்று பெயர் பெற்ற அக்னியிடம் பிரார்த்தனை செய்தாள். அக்னி தேவனே, என்னிடத்தில் பதிவிரதா தர்மத்தை அனுஷ்டித்து, நன்னடத்தை சிறிதேனும் இருக்குமானால், ஹனுமானிடம் குளிர்ந்து இரு. ஏக பத்னியாக நான் இருப்பது உண்மையானால், அக்னி தேவனே, அனுமானிடம் குளிர்ச்சியாக இரு. என் பதியான ராமனுக்கு சிறிதளவாவது என்னிடம் தயை இருக்குமானால், ஹனுமானிடம் குளிர்ச்சியாக இரு. என் பாக்யம் ஏதாவது மீதி இருக்குமானால், அனுமானிடம் குளிர்ச்சியாக இரு. நான் நன்னடத்தை உள்ளவள் தான், அவனுடன் திரும்பவும் கூடி வாழவே ஆசைப் படுகிறேன் என்பதை தர்மாத்மாவான (ராமன்) உணருவானேயானால், அனுமானிடம் குளிர்ச்சியாக இரு. ஆர்ய: சுக்ரீவன் என்னை இந்த சிறையிலிருந்து மீட்பது சாத்யமானால், ஹனுமானிடம் குளிர்ச்சியாக இரு. சத்ய சங்கரன் சுக்ரீவன் என்று அறிந்தேன். அவன் இந்த துக்கம் என்ற சாகரத்திலிருந்து என்னை மீட்பது உண்டானால், ஹனுமானிடம் குளிர்ச்சியாக இரு. அச்சமயம், ப்ரதக்ஷிணமாக தன் நாக்குகளுடன் அக்னி வலம் வந்து நன்மை தான் நடக்கும் என்று சொல்வது போல அவள் முன் தோன்றியது. ஹனுமானின் ஜனகனான வாயுவும், வாலின் நுனியில் இருந்த அக்னியுடன் சேர்ந்து நன்மை செய்யும் விதமாக காலை நேர இளம் காற்று குளுமையாக வீசுவது போல வீசினான். லாங்கூலம்- வால், எரிவது போல தோற்றம் தெரிகிறது, சுடவில்லையே என்று வானரன் யோசித்தான். மகா ஜ்வாலை தெரிகிறது. எனக்கு வெந்த ரணம் ஏற்படவில்லையே. குளிர் காலத்தில் தோன்றும் நடுக்கம் தான் என் வாலின் நுனியில் தெரிகிறது. ஆனால், இது நான் சாகரத்தைக் கடக்க தாவி குதித்து வந்த சமயம் அறிந்து அனுபவித்தது தான். ராம ப்ரபாவத்தால் ஆச்சர்யம், மலை ஒன்று சாகரத்திலிருந்து எழுந்து வந்து உபசரித்தது. மைனாக மலைக்கும், சமுத்திர ராஜனுக்கும் ராமன் விஷயமாக இவ்வளவு பர பரப்பு இருக்குமானால், அக்னி ஏன் செய்யாது. சீதையின் கருணையாலும், ராமனின் தேஜஸாலும், அக்னி என்னைச் சுடவில்லை. என் தந்தையின் சகா. அதுவும் ஒரு காரணம். திரும்பவும் யோசித்தான். வேகமாக தாவிக் குதித்து வானத்தில் நின்றபடி, ஜய கோஷம் செய்தான். சைலத்தின் சிகரம் போல இருந்த நகரத்தின் கோட்டை வாயிலில் நின்று கொண்டான். தன்னையும் அந்த கோட்டைக்கு இணையாக வளர்த்துக் கொண்டான். திடுமென சிறு உருவம் எடுத்து, கட்டுகளைத் தெறித்து விழச் செய்தான். தான் விடுபட்டவுடன், திரும்பவும் பர்வதம் போல ஆனான். கருப்பு, இரும்பாலான பரிகம், (குறுக்கு கட்டை) அதை கையில் எடுத்துக் கொண்டான். கோட்டையில் காவலுக்கு இருந்த காவலர்களை அடிக்க ஆரம்பித்தான். அவர்களை அடித்து, ரண சண்டனாக, லங்கையை திரும்பவும் பார்த்தான். வாலின் நுனியில் எரியும் அக்னியின் ஜ்வாலைகளுடன், ஆதித்யன் தன் கிரணங்களோடு பிரகாசிப்பது போல பிரகாசித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் பாவக சைத்யம் என்ற ஐம்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 54 (393) லங்கா தா3ஹ: (லங்கை எரிதல்)
தன் மனோரதம் பூர்த்தியான திருப்தியுடன் லங்கையைப் பார்த்த ஹனுமான், குதூகலம் மேலும் பெருக, அடுத்த காரியத்தைப் பற்றி சிந்தித்தான். தற்சமயம் நான் செய்ய வேண்டியது என்ன? மீதி இருப்பது எது? இந்த ராக்ஷஸர்களை திரும்பவும் சற்று வாட்டி எடுக்கும்படி என்ன செய்யலாம்? வனத்தை அழித்தாயிற்று. நிறைய ராக்ஷஸர்களை வதம் செய்தாகி விட்டது. மீதி இருப்பது இந்த கோட்டையை அழிப்பது தான். படை பலத்தில் ஒரு பகுதியை அழித்தாயிற்று. இந்த கோட்டையை தகர்த்து விட்டால், பெரும் பகுதி காரியம் ஆனது போலத் தான். மிகச் சுலபமாக என் சக்தியை உபயோகித்து இந்த செயலைச் செய்து விட்டால், பின்னால் மிகவும் உபயோகமாகும். என் வாலின் நுனியில் எரிந்து கொண்டிருக்கும் ஹவ்ய வாகனனை, இதற்குத் தகுந்த ஆகாராதிகள் கொடுத்து உபசரிப்பது நியாயமே. அது இந்த உத்தமமான க்ருஹங்களாக, வீடுகளாக இருக்கட்டுமே. உடனே, மின்னலுடன் கூடிய மேகம் போல, வீட்டுக்கு வீடு, உத்யான வனங்களிலிருந்து மற்றொரு உத்யான வனம் என்று சஞ்சரித்தான். சற்றும் பயமின்றி மாளிகைகளின் மேல் நடந்தான். ப்ரஹஸ்தனுடைய மாளிகையில் இறங்கி அங்கு அக்னியை விழச்செய்து விட்டு, மற்றொரு மாளிகைக்கு தாவி குதித்து ஏறினான். மகா பார்ஸ்வன் வீடு. காலானல- ப்ரளய கால அக்னி ஜ்வாலை போல அங்கும் தீயை வைத்து விட்டு, வஜ்ரதம்ஷ்டிரன் வீட்டில் இறங்கினான். சுகன் வீடு, சாரணன் வீடு, முதலியோர்களின் வீட்டில் இறங்கினான். அங்கும் தன் வாலின் தீயைத் தட்டி விட்டான். இந்திரஜித் வீடு வந்தது. அதையும் இதே போல அக்னியில் மூழ்கச் செய்தான். ஜம்புமாலி, சுமாலி இவர்கள் வீடுகளும் தீக்கு இரையாகின. ரஸ்மி கேதுவின் ப4வனம், சூர்ய சத்ருவின் ப4வனம், ஹ்ரஸ்வ கர்ணனின், தம்ஷ்டிரனின் ரோமசன், யுத்தோன்மத்தன், மத்தன், த்வஜக்ரீவன், என்ற ராக்ஷஸன், கோரமான வித்யுத்ஜிஹ்வன், (நாக்கு மின்னலைப் போல உள்ளவன்), ஹஸ்தி முகன், கராளன், விசாலன், சோணிதாக்ஷன்,- இவர்கள் வீடுகள், அடுத்து கும்பகர்ணன் மாளிகை, மகராக்ஷன் வீடு, யக்ஞ சத்ருவின் ப4வனம், ப்ரும்ம சத்ருவின் ப4வனம், நராந்தகனுடைய, கும்ப, நிகும்பர்களின் ப4வனம், விபீஷண க்ருஹத்தை மட்டும் விட்டு வைத்தவனாக, மற்ற எல்லா க்ருஹங்களிலும் தன் வாலின் நெருப்பை உதிர்த்தான். வரிசையாக வீடுகளை தீக்கு இரையாக்கி, செல்வந்தர்களான அவர்களின் செல்வ செழிப்பையும் தீக்கு இரையாக்கினான். எல்லா வீடுகளையும் கடந்து வந்து, ராவணன் இருந்த மாளிகையை அடைந்தான், சர்வ மங்களமும் சோபித்த அந்த மையமான மாளிகையில், ரத்னங்களும், உயர்ந்த தங்கத்தால் இழைக்கப் பட்ட வேலைப் பாடுகளுடன் கூடிய அரண்மனையிலும் தன் வாலின் தீயை உதிர்த்து விட்டு எரியச் செய்தான். மேரு மலை போன்ற அந்த மா ளிகையிலும் அக்னி ஜ்வாலை விட்டெரியலாயிற்று. யுக முடிவில் இடி இடிப்பது போல வானர வீரன் உரக்க கோஷமிட்டான். வாயுவின் உதவியால் வெகு வேகமாக, காலக்னி போல ஹுதாஸனன் (ஹோமம் செய்வதை உண்பவன்)- அக்னி வளர்ந்தது. வாலிலிருந்து உதிர்ந்த அக்னியை, வாயு தேவன் மேலும் வளர உதவி செய்து வீடுகளில் பரவச் செய்தான். அக்னி தேவன் மேலும் வளர்ந்தான். காஞ்சன மயமான வலைகளுடன் கூடிய சாளரங்கள், ரத்னங்கள் பதிக்கப் பட்ட பெரிய விமானங்கள், உடைந்து பூமியில் விழுந்தன. புண்யம் தீர்ந்தவுடன் ஆகாயத்திலிருந்து விழும் சித்தர்கள் போல விழுந்தன. ராக்ஷஸர்கள் இங்கும் அங்குமாக ஓடும் சத்தம் பெரும் அளவில் கேட்டது. தங்கள் வீடுகளைக் காப்பாற்றிக் கொள்ள அலறும் அலறல் கேட்டது. ஹா, இந்த வானர ரூபத்தில் வந்தது அக்னி தேவனே தானோ? என்ற பேச்சுக் குரல் கேட்டது. கையில் குழந்தைகளுடன் ஹா என்று வீரிட்டு அலறியபடி பெண்கள் ஓடினர். தலை கேசம் அவிழ்ந்து புரள, வீடுகளிலிருந்து வெளியேறினர். சௌதாமினிகள், வானத்திலிருந்து விழுவது போல வீடுகளிலிருந்து வெளிவர, அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்க ளின் ஒளி,, விசித்ரமான கலவையாக, வைர, வைமூடுரிய, வஜ்ர, முத்து, வெள்ளி இவைகள் ப்ரதானமாகத் தெரியக் கண்டான். அக்னியின் பசிக்கு அளவேது? எவ்வளவு கட்டைகளும், புல்லும் இருந்தாலும் திருப்தியடைவதில்லை. ஹனுமானும் இந்த விளையாட்டில் இன்னமும் திருப்தியடையவில்லை. அக்னியின் ஜ்வாலை சில இடங்களில் சிம்சுபம் போல காணப்பட்டது. சில இடங்களில் சால்மலி போல, சில இடங்களில் குங்கும சிவப்பாக காணப்பட்டது. ருத்ரன், த்ரிபுரத்தை எரித்தது போல, ஹனுமான் என்ற வானரத்தால் லங்காநகரம் எரிக்கப் பட்டது. இதன்பின் லங்கா நகரத்தின் மலை மேல் நின்றபடி, வளையல் போல வாலில் சுற்றப் பட்டிருந்த துணிகளான தீ பந்தத்தை வீசியெறிந்தான். யுக முடிவோ, அக்னியும் வாயுவும் சேர்ந்து உலகையே அழிக்க வந்து விட்டார்களா, என்று தோன்றியது. சற்றும் புகையின்றி, வீடுக ளிலிருந்து ப்ரகாசம் மட்டுமே தெரிய, ராக்ஷஸர்க ளின் சரீரத்திலும் அக்னி பொறிகள் சமர்பிக்கப் பட்டிருந்ததைப் போல இருந்தது. கோடி ஆதித்யர்கள் ஒன்றாக எழுந்து வந்தது போலவும், லங்கா நகரம் முழுவதையும் அடைத்துக் கொண்டு நிற்பது போலவும், பலவிதமான சப்தங்கள், கற்கள் விழுவது போல உலகையே உடைப்பது போல, ஆரவாரம் செய்து கொண்டு, அக்னி வளர்ந்து பரவியது. ஆகாயத்தில் இதன் பிரதி பிம்பம் நீலோத்பலம் போல காணப் பட்டது. ஜனங்கள், வஜ்ராயுதத்துடன் இந்திரனோ? முப்பது கோடி தேவர்களின் தலைவன் தானோ? சந்திரனோ, எதுவானாலும் இந்த வானரம், காலனே உருவெடுத்து வந்தவன் தான். ப்ரும்மாவின் கோபம் தான் வானர ரூபம் எடுத்து வந்து விட்டதோ, சர்வ பிதாமகர், எல்லா ஜீவ ராசிகளையும் ஸ்ருஷ்டி செய்பவர், சதுரானனன், கோபம் கொண்டாரோ? அல்லது வைஷ்ணவமான சக்தி தான் கபி ரூபம் எடுத்து வந்ததோ? ராக்ஷஸர்களை அழிக்க, நல்ல தேஜஸுடன் வந்து நிற்கிறதோ, அனந்தன், அவ்யக்தன், அசிந்த்யன், என்ற ஒன்று (பர ப்ரும்மம் தான்) தன் மாயையால், தற்சமயம் வானர ரூபத்தில் வந்துள்ளதோ, இப்படி பல விதமாக பேசிக் கொண்டார்கள். கூடிக் கூடி, தங்களுக்குள் அங்கலாய்த்தனர். பிராணிகள் கூட்டம், வீடுகள், மரங்கள், எல்லாமாகச் சேர்ந்து திடுமென எரிந்து சாம்பலானதைக் கண்டும் எதுவும் செய்ய இலயாமையால் தவித்தனர். அஸ்வங்கள், யானைகள், ராக்ஷஸர்கள், பக்ஷி கூட்டங்கள், மிருகங்கள், மரங்கள் எல்லாமாக, எந்த வித பாகு பாடும் இன்றி அக்னிக்கு இரையாக, இதனால் எழுந்த ஓலம் மிகவும் அதிகமாக இருந்தது. ஹா தாத, ஹா புத்ரக, காந்த, மித்ர, ஹா என் புண்யமான போகமயமான வாழ்க்கையே, என்ன ஆனாய்? என்று ராக்ஷஸர்களின் அழுகுரல் லங்கையை நிறைத்தது. சாபத்தால் பீடிக்கப் பட்டது போல லங்கா நகரம் அக்னியில் வாயில் விழுந்தவள், தன் வீரர்களும், போர் வீரர்களும், மடிவதைக் கண்டவள், ஹனுமானின் கோபம் என்ற பலம் தன்னைக் கட்டி வதைப்பது போல உணர்ந்தாள். ஸ்வயம்பு கோபத்தால் தகிக்கப் பட்டது போல பூமியைக் கண்டான், ஹனுமான். சிறந்த மரங்கள் இருந்த வனத்தை உடைத்து பல ராக்ஷஸர்களை போரில் அழித்து, சிறந்த வீடுகள் இருந்த ஊரையும் எரித்து, பவனாத்மஜனான கபி ஹனுமான் கிளம்பினான். த்ரிகூட மலையின் சிகரத்தில், நின்றபடி, வாலில் பிரகாசமாக தெரிந்த அக்னியின் ஜ்வாலையுடன் கிரணங்களுடன் ப்ரகாசிக்கும் ஆதித்யன் போல ப்ரகாசித்தான். ராக்ஷஸர்களை பெருமளவில் அடித்து வீழ்த்தி, நிறைந்த மரங்களுடன் இருந்த வனத்தை சின்னா பின்னமாக்கி, ராக்ஷஸ வீடுகளில் அக்னியை வைத்து எரிய விட்டு, தன் மனதால் ராமனை சென்றடைந்தான். தேவ கணங்கள் வந்து அந்த மாருதனை துதித்தனர். வானர வீர முக்யன், மகா பலவான், மாருத துல்ய வேகன், மகா மதி, வாயு சுதன் என்று தோத்திரம் செய்தனர். மகா கபியின் சாதனைகளாக, யுத்தம், செய்து ராக்ஷஸர்களை அழித்ததை, வனத்தை அழித்ததை, லங்கா புரியை எரித்ததை சொன்னார்கள். எரியும் லங்கா நகரை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். வானர ஸ்ரேஷ்டனான மகா கபியைக் கண்டு, காலாக்னியோ என்று உயிரினங்கள் பயந்தன. எல்லா தேவர்களும் முனி புங்கவர்களும், கந்தர்வ, வித்யாதர, கின்னரர்களும் எல்லா உயிரினங்களும், சொல்ல முடியாத மகிழ்ச்சியும் அடைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் லங்கா தா3ஹோ என்ற ஐம்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 55 (394) ஹனுமத் விப்4ரம: (ஹனுமானின் பதட்டம்)
வால் நுனியில் இருந்த அக்னியை லங்கை முழுவதும் பரவச் செய்து விட்டு, வானர வீரன், சமுத்திர ஜலத்தில் தன் வாலை நனைத்து. அக்னியை அனைத்தான். எரிந்து கொண்டிருந்த லங்கையை நோக்கியவன், ராக்ஷஸர்கள் அலறுவதை கேட்டுக்கொண்டிருந்தவன், திடுமென ஒரு சந்தேகம் தோன்ற பயந்தான். தன்னைத் தானே நொந்து கொண்டான். ஆஹா, லங்கையை எரித்து நான் என்ன காரியம் செய்து விட்டேன். கோபத்தை, தன் புத்தியால் அடக்கும் புருஷ ஸ்ரேஷ்டர்கள் த$ன்யர்கள். அக்னி ஜ்வாலையை நீர் விட்டு அனைப்பது போல இவர்கள் தங்களிடம் எழும் கோபத்தை அடக்கி விடுவார்கள். ஆத்திரத்தில் சுய புத்தியை இழந்தவன் என்னதான் செய்ய மாட்டான்? குருவை கூட அடிப்பான். ஆத்திரம் கொண்டவன் கடும் சொற்களால் நல்லவர்களையும் வீணாக பழி சுமத்தி வருத்துவான். சொல்லக் கூடியது, சொல்லக் கூடாதது என்ற பாகு பாடு அவனுக்குத் தெரியாமல் போய் விடும். செய்யக் கூடாது என்பது ஆத்திரம் கொண்ட சமயம் புத்தியில் உறைக்காது. சொல்லக் கூடாது என்றும் எதுவும் இருப்பதில்லை. எவன் தன்னுள் எழும் கோபத்தை பொறுமையோடு அடக்கிக் கொள்கிறானோ, நல்ல பாம்பு தன் சட்டையை உரிப்பது போல உதறி விட்டுப் போகிறானோ, அவன் தான் புருஷ சத்தமன். திக், என் புத்தி, துர்புத்தி வெட்கம் அறியாதது. பாபத்தை செய்ய துணிந்து விட்டது. இந்த லங்கையை அக்னிக்கு இரையாக்கி, நான் என் எஜமானரின் காரியத்தையே கெடுத்து விட்டேனே. சிறிதளவே மீதியிருந்த காரியம். இதில் ஆத்திரத்தில் நான் வேரையே அழித்து விட்டேன். எரியும் லங்கையில் ஜானகியும் அழிந்து போய் இருப்பாள். எதுவுமே மீதியில்லை போலத் தெரிகிறது. லங்காபுரம் முழுவதும் சாம்பலாகி கிடக்கிறது. நான் செய்த இந்த அவசரக் காரியம், இதே போல ஜானகியையும் அழித்து விட்டிருந்தால், நான் இங்கேயே உயிரை விடுவேன். நானும் இந்த அக்னியில் விழுந்து விடவா, அல்லது இதை விட பெரிய வடவா முக அக்னி தேவையா? என் உடலை இந்த கடல் வாழ் ஜந்துக்களுக்கு இரையாக்கி விடுவது நல்லது. திரும்பிப் போய் நான் சுக்ரீவன் முகத்தில் எப்படி விழிப்பேன்? அந்த ராஜ குமாரர்களை எப்படிக் காண்பேன்? வந்த வேலையை விபரீதமாக கெடுத்து விட்ட நான் உயிருடன் திரும்பி போய்த் தான் என்ன பயன்? என் ஆத்திரத்தால், மூவுலகிலும் என் வானர இயல்பை பிரகடனப் படுத்தி விட்டேன். ஹா, என்ன ராஜஸமான குணம்? திக், என்னுள் எழுந்த ராஜஸ பாவத்தின் பாதிப்பால் (பழி வாங்கும் எண்ணம், போர் புரிதல், தண்டனை கொடுத்தல்- இவை ராஜஸ குணம்) நான் சீதையை ரக்ஷிக்கத் தவறி விட்டேனே. இந்த அக்னி தேவியையும் தாக்கியிருந்தால், உயிர் பிரிந்திருந்தால், அந்த ராஜகுமாரர்களும் உயிர் தரித்து இருக்க மாட்டார்கள். அவர்கள் நாசம் அடைந்தால், சுக்ரீவனும் உயிரை விடுவான். உற்றார் உறவினரோடு அழிவான். இது போல இவர்கள் மாண்டதைக் கேட்டால் பரதனும் இருக்க மாட்டான். அவன் சகோதர பாசம் மிகுந்தவன். தர்மாத்மா அவன். அவனும் சத்ருக்னனும் எப்படி உயிருடன் இருப்பார்கள். இக்ஷ்வாகு வம்சமே அழியும். பிரஜைகளும் இதே வேதனையில் வாடுவார்கள். நான் தான் அதிர்ஷ்டக் கட்டை. என் ஆத்திரத்தால் அறிவிழந்து செய்த செயலால் இப்படி அழிவுக்கு காரணமானேன். இப்படி எண்ணி வருந்திய சமயம் சில நற் சகுனங்கள் தோன்றின. முன்னமே இந்த சகுனங்கள் நன்மையை குறித்தன. நன்மையை உண்டாக்கியதும் நினைவுக்கு வந்தது. உடன் ஹனுமானின் சிந்தனையும் திசை திரும்பியது. அந்த அழகிய உடல் அமைப்பு கொண்ட ராஜ குமாரி, தன் தேஜஸால் தன்னை காத்துக் கொண்டிருப்பாள். அவளை இந்த அக்னி ஒன்றும் செய்திருக்காது. அக்னி அக்னியை என்ன செய்யும்? அந்த தர்மாத்மாவின் பா4ர்யையை, தன் நன்னடத்தையையே தனக்கு காவலாக கொண்டுள்ளவளை, அக்னி தொடக் கூட முடியாது. பரதன் முதலான மூவருக்கும் தேவதையாக இருப்பவள், ராமனுடைய மனதுக்கு இனியவளான காந்தா, அவள் எப்படி அழிவாள்? இந்த தகன காரியத்தில் பிரபுவான அக்னி தேவன் என்னையே சுட வில்லையே. எப்படி தேவியைத் தாக்கியிருப்பான்? இருக்காது. திரும்பவும் யோசித்த ஹனுமான், சமுத்திர ஜலத்தில் நடுவில் எழுந்த ஹிரண்ய நாபன் என்ற மைனாக மலை எனக்கு உதவ முன் வந்ததே, அதுவே தேவியின் தவ வலிமையாலும், மனதாலும் மாற்றானை தொடாத பதிவிரதா தர்மத்தாலும் தான் சாத்யமாகியிருக்க வேண்டும். அந்த தேவியே அக்னியை எரித்தாலும் எரிக்கலாமேயன்றி அவளை அக்னி எதுவும் செய்யாது என்பது நிச்சயம். இப்படி சிந்தனை மனதில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே வானில் சிலர் பேசிக் கொண்டு போவது கேட்டது. அடடா, ஹனுமான் செய்தது மிக அரிய செயல். அக்னியை ராக்ஷஸர்கள் நகரில் வீசி அவர்களை ஓட ஓட விரட்டி விட்டான். ஜனக் கூட்டம், ஸ்த்ரீ, பால , வ்ருத்தர்கள், மலையடிவாரத்தில் அழுது கொண்டு நிற்கிறார்கள். மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் எரிந்து விழச் செய்தவன், ஜானகியை மட்டும் காத்து விட்டான். ஜானகி எதுவும் ஆகாமல் தப்பியது நம் புண்ணியமே. அம்ருத தாரை போல இந்த சொற்கள், ஹனுமானின் காதில் விழுந்தன. மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் உண்டாயிற்று. ரிஷி கணங்கள், தங்களுக்குள் பேசிக் கொண்டதை கேட்டதாலும், மற்ற நிமித்தங்களாலும் ஜானகி பத்ரமாக இருப்பதை தெரிந்து கொண்டவன் திரும்பவும் அவளைப் பார்த்து விடை பெற்றுச் செல்லத் தீர்மானித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமத் விப்4ரமோ என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 56 (395) பிரதி பிரயாண உத்பாதனம் (திரும்பிச் செல்ல குதித்துக் கொண்டு செல்லுதல்)
இதன் பின் சிம்சுபா மரத்தடியில் இருந்த தேவியை வந்து பார்த்து வணங்கி, நல்ல வேளை, அதிர்ஷ்ட வசமாக திரும்பவும் தங்களை நலமாக காண்கிறேன் தேவி, என்றான். தன் கணவனிடம் கொண்ட அன்பால் அவனைத் திரும்பத் திரும்ப பார்த்தாள், ஜானகி. ஹனுமானை பெயர் சொல்லி அழைத்து, ஹனுமன், நீ தான் இந்த மகத்தான செயலை செய்து முடிக்க வல்லவன். உன் பலமும், புகழும் வளரட்டும். தன் அம்புகளால் லங்கையை நிரப்பி, தன் சக்தியை நிரூபித்து விட்டு, ராமன் அழைத்துச் சென்றால், நான் மனம் மகிழ்வேன். அது தான் அவன் குலப் பெருமைக்கு ஏற்றது. அதனால் என்ன செய்தால், சொன்னால், அவன் வீறு கொண்டு எழுவானோ, போர் முனையில் தன் ஆற்றலைக் காட்டத் தயாராக ஆவானோ, அது போல சொல். ராகவனைத் தட்டி எழுப்பி, உற்சாகப் படுத்தும் செயலைச் செய். ஹனுமான் இச்சொல்லின் உட்பொருளை உணர்ந்து கொண்டான். சீதையின் எதிர்பார்ப்பையும் (ராமனே வந்து தன்னை மீட்கும் செயலை செய்ய விரும்புகிறாள் என்பதை) புரிந்து கொண்டான். அவ்விதமே செய்வதாக பதில் உரைத்தான். தேவி, சீக்கிரமே அவ்விருவரும் வந்து விடுவார்கள். இந்த நகரை ஜயித்து உன் வேதனையைத் தீர்ப்பார்கள். இப்படி சமாதானம் செய்து விட்டு ஹனுமான் தான் கிளம்ப ஆயத்தமாக கிரியின் மேல் ஆறி நின்றான். உயர்ந்து நின்ற சிகரம், பத்மங்கள் நிறைந்த குளங்கள், நீலமாகத் தெரிந்த வனத்தின் தாவரங்கள், நடுவில் உத்தரீயம் அணிந்தது போல மலைசாரலில் படர்ந்த திவாகரனின் கிரணங்கள் ஆதரவாக வருடிக் கொடுத்தன. தா4துப் பொருட்கள் கண் சிமிட்டுவது போல வெளியில் தெறித்தன. மேகங்கள் ஒன்றையொன்று முட்டி, தங்கள் இடியோசையால் பாடிக் காட்டுவது போல முழங்கியது. நெடிது வளர்ந்து காற்றில் ஆடிய தேவதாரு மரங்கள், தங்கள் கைகளை ஆட்டி விடை கொடுத்தன. வேகமாக ஓடி கீழே விழும் அருவிகளின் ஓசை ரம்யமாக செவிகளை நிரப்பியது. அந்த இடமே க3ந்த4ர்வ கானம் இசைப்பது போல இன்னிசையால் நிறைந்தது. சரத் கால மரங்கள் காற்றில் அசைந்து அந்த இசைக்கு உடன் பாடுவது போல ஒலியெழுப்பின. மூங்கில் காடுகளில் மரங்களில் நுழைந்து வெளிப் புகும் காற்று வேணு கானமாக, பறவைகளின் இரைச்சல் இதற்கு இசைய பக்க வாத்யம் வாசித்தன. ஆலகால விஷம் வெளிப்பட, கோபத்துடன் பெருமூச்சு விடும் நாகங்கள் கம்பீரமாக த்யானம் செய்வது போல அந்த குகைகளின் தோற்றம் தெரிய, அந்த மலைச் சிகரம், வானத்தை தொட முயலுவது போல உயர்ந்து நின்றது. பலவிதமான குகைகள், கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் அந்த மலைச் சாரலில் இருந்தன. சால, தால, அஸ்வ கர்ண. வம்சம் போன்ற முதிர்ந்த மரங்கள் அதிக அளவில் காணப்பட்டன. பூத்துக் குலுங்கும் மலர்களுடன் பலவிதமான கொடிகள் அலங்காரமாக தெரிந்தன. பலவிதமான மிருகங்கள் வளைய வந்தன. அடுக்கி வைத்தது போன்ற பாறைகளின் இடையில் தாதுப் பொருட்கள் விழுந்து வர்ண மயமாகக் காணப்பட்டது. இடையிடையே ஓடும் அருவி நீர், பெருகுவதும் வடிவதுமாக ரம்யமாக இருந்தது. இங்கும் மகரிஷிகள், யக்ஷ, கந்தர்வ, கின்னர, உரக வர்கத்தினர் இருந்தனர். மலைகளின் குகைகளில் சிங்கம் முதலியவை வசித்தன. வ்யாக்ரம் என்ற புலிகள் கூட்டம் கூட்டமாகத் திரிந்தன. பழங்களும், காய் கறிகளும் மிகவும் ருசியுடன் இருந்தன. அந்த பர்வதத்தின் மேல் ஹனுமான் ஏறினான். மனதுள் உற்சாகம் பிரவகித்தது. ராமனைக் காணப் போகிறோம் என்ற ஆவல் மேலிட மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. கால் பட்டு உடைந்த மலை பாறைகள் உருண்டு விழும் சத்தமும் சேர்ந்து கொண்டது. மலையின் உச்சியில் ஏறிய பின் ஹனுமான் வளர ஆரம்பித்தான். கடலின் தென் கரையிலிருந்து வடக்கு கரை சேர, உப்பு நீர் கொண்ட கடலை வேண்டிக் கொண்டான். மீன்களும், நீர் பாம்புகளும், ஏராளமாக இருந்த சமுத்திரத்தை மலை மேலிருந்து கூர்ந்து நோக்கினான். மாருதனுடைய மகன், மாருதன் ஆகாயத்தில் இயல்பாக சஞ்சரிப்பது போல, தானும் சஞ்சரிக்கலானான். வடக்கு நோக்கிச் செல்ல மலையை உதைத்துக் கொண்டு கிளம்பினான். மரங்கள் விழ, நடுங்கும் சாகரமும், ஜீவன்கள் பயந்து ரஸாதலம் செல்வது போல விரைய, சற்று முன் பூத்துக் குலுங்கிய மரங்கள், சக்ராயுதத்தால் அடிபட்டது போல சாய்ந்தன. குகைகளில் அமைதியாக இருந்த சிங்கங்கள், இந்த நடுக்கத்தால் பாதிக்கப் பட்டவைகளாக, கர்ஜனை செய்தன. ஆகாயத்தை ஊடுருவிக் கொண்டு போவது போல அந்த கர்ஜனைகள் சென்று, திக்குகளில் பரவின. அந்த மலையின் ஒரு புறத்தில் நடமாடிக் கொண்டிருந்த வித்யாதரர்கள், செய்வதறியாது ஓடினர். ஆடை அணிகலன்களை சரி செய்து கொள்ளும் வரை கூட பொறுமையின்றி ஓடினர். தலையில் அடிபட்டது போல, நீண்ட நாக்குகளுடன் கூடிய விஷப் பாம்புகள், சீறிப் பாய்ந்தன. இந்த மலைக்குத் தான் ஏதோ ஆபத்து என்று எண்ணி கின்னரர்களும், கந்தர்வர்களும் யக்ஷ, வித்யாதர்களும், மலையைத் துறந்து ஆகாயத்தில் நின்றனர். அந்த மலையே தன்னைக் காத்துக் கொள்ள, தன்னை ஆச்ரயித்திருந்த மரங்களுடனும், மிருக, மற்ற ஜீவ ராசிகளுடனும் ரஸாதலம் சென்று விடுவது போல கீழ் நோக்கி அழுந்தியது. பத்து யோஜனை தூரம் விஸ்தாரமும், முப்பது யோஜனை தூரம் உயரமும் கொண்ட மலை பூமியோடு பூமியாய் ஆனது. ஹனுமான் சமுத்திரத்தைத் தாண்டுவதே கவனமாக எழும்பிக் குதித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ப்ரதிப்ரயாணாயோத்பதனம் என்ற ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 57 (396) ஹனுமத் ப்ரத்யாக3மனம் (ஹனுமான் தென் கரை திரும்பி வருதல்)
ஆகாயத்தில் மலர்ந்த குமுதம் போல சந்திரன் பிரகாசமாகத் தெரிந்தான். சுபமான அர்க்க, காரண்டவ, போன்ற வெண் நிற புஷ்பங்கள், திவ்யமான சரவண நக்ஷத்திரங்களாகத் தெரிந்தன. மேகங்கள், மாலைகளாக திரண்டு வந்தன. ஆகாயமா, நதிக் கரையா? புனர்வசு நக்ஷத்திரமா, மகா மீனமாகவும், சிவந்த அங்கங்களுடன் மகாக்ரஹமும் (அங்காரகன்), ஐராவதம் என்ற யாணை மணல் திட்டு போலவும் தெரிய, ஸ்வாதி (நக்ஷத்திரம்) ஹம்ஸம் போல மிதந்து வர, காற்றில் அலையும் அலைகள் போல சந்திரனின் கிரணங்கள் குளுமையை வாரி இறைக்க, புஜங்க, யக்ஷ, கந்தர்வர்கள், மலர்ந்து கிடக்கும் கமலமும், உத்பலமும் போலத் தெரிய, காற்றுடன் போட்டி போடுவது போல விரைந்து சென்ற ஹனுமான், விரைந்து செல்லும் பெரிய படகு போல சற்றும் களைப்போ, தயக்கமோ இன்றி ஆகாயமான சமுத்திரத்தைக் கடந்து சென்றான். வானத்தைத் தொட்டு விடுவது போல, தாரகைகளின் நாயகனான சந்திரனை நோக்கியபடி, அந்த தாரா கணங்களுடன் சேர்த்து சந்திரனையும் கைகளால் பற்றி விடுபவன் போல, சூரியனின் பாதையான வான மார்கத்தில் விரைந்தான். ஸ்ரீமானான, மாருதாத்மஜன், என்று போற்றப் படும் ஹனுமான், மேகக் கூட்டங்களை பிளந்து கொண்டு பறந்தான். வானம் சில இடங்களில் வெண்மையும், இளம் சிவப்பாகவும், நீலமும், மஞ்சளும், பச்சையும், சிவப்பும், சிவப்பும் பசும் நிறமும் கலந்த கலவையாக தெரிந்தது. எல்லையில்லா அண்டவெளியில் ஹனுமான் சஞ்சரித்தான். மேலும் கீழுமாக ஏறி இறங்கி, தெரிந்தும் தெரியாமலும், சந்திரன் மேகத்தில் மறைவதும், வெளி வருவதுமாக இருப்பது போல இருந்தான். மேகங்களுடன் தெரிந்த வானம் வெண் துகிலுடுத்தியது போல, சந்திரனின் ஒளி பரவிக்கிடந்த வானத்தில் ஒற்றையாக சஞ்சரித்தான். திரும்ப திரும்ப துள்ளி குதித்து, மேககூட்டங்களோடு கூடவே, அதை பிளந்து கொண்டு செல்வது போல, அலைந்தான். ஓங்கிய குரலில் எக்காளமிட்டான். தன் பெயரைச் சொல்லி கோஷமிட்டபடி, ராக்ஷஸ பிரமுகர்களை கொன்று தள்ளியதையும், சொல்லிக் கொண்டான். லங்கையை ஒரு கலக்கு கலக்கி, ராவணன் திகைக்க அவன் படை பலத்தை நொறுக்கித் தள்ளி பெரும் சேதம் விளைவித்து, வைதேஹியை வணங்கி கிளம்பியவன், பாதி சமுத்திரம் கடந்து விட்டான். பர்வத ராஜனான சுனாபனை (மைனாக மலை) கையால் தட்டிக் கொடுத்து வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல வேகமாகச் சென்றான். மகேந்திர மலையை வந்தடைந்தவுடன் உரத்த குரலில் ஜய கோஷம் செய்தான். பத்து திக்குகளிலும் அது எதிரொலித்தது. மேகத்தின் இடியோசை போல ஹனுமானின் கோஷம், நாலா திக்குகளிலும் பரவியது. தன் நண்பர்களைக் காணும் ஆவலுடன் வாலை வேகமாக ஆட்டியபடி, சுபர்ணன் என்ற கருடனின் பாதையில் வந்தான். சூரிய மண்டலத்துடன் ஆகாயத்தையே ஆட்டம் காண வைத்த ஜய கோஷம், முன்னதாகவே அங்கு கூடியிருந்த வாயுசுதனின் நண்பர்கள், ஆவலை தூண்டியது. சமுத்திரத்தின் வட கரையில் மேகங்கள் திரண்டு இடி இடிப்பது போன்ற கோஷத்தைக் கேட்டு, ஹனுமான் தான் என்று தீர்மானித்தனர். அவன் கால்களின் உராய்வினால், வெளிப்பட்ட காற்றின் ஓசை அதை ஆமோதித்தது. வனவாசிகளான அந்த வானரங்கள் இதைக் கேட்டு, முகம் மலர விரைந்து அருகில் வந்தனர். ஜாம்பவான் மிகவும் மகிழ்ச்சியுடன் எல்லா வீரர்களையும் அழைத்து, நிச்சயம் இந்த ஹனுமான் தான் சென்ற காரியத்தை முடித்துக் கொண்டு வந்திருக்கிறான். அதனால் தான் ஜய கோஷம் இவ்வளவு உரத்து, உறுதியாக செய்கிறான். போன காரியம் ஜயம் ஆகாமல் இப்படி உரத்து கோஷமிட மாட்டான். வெகு தூரத்திலிருந்தே, கைகளும் கால்களும் உராயும் ஓசையும், வேகமாக வருவதும், ஜய கோஷமும் வானரங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கச் செய்தது. இங்கும் அங்குமாக அலைவதும், ஓடுவதும், ஆரவாரிப்பதுமாக இருந்தன. மரத்திற்கு மரம், பாறைக்கு பாறைத் தாவி, விளையாடினர். ஹனுமானைக் காண மகா ஆவலுடன் துடித்தனர். புஷ்பங்கள் நிறைந்த கிளைகளை பறித்துக் கொண்டு, கிடைத்த இடத்தில் அமர்ந்த படி ஹனுமானை எதிர் நோக்கி காத்திருந்தனர். மலைக் குகைகளில் நுழைந்து புறப்படும் காற்றுச் சத்தம் கர்ஜனையாக கேட்பது போல ஹனுமானின் கர்ஜனை கேட்டது. வானத்திலிருந்து இறங்கி வரும் மேகம் போல பெரிய உருவத்துடன் இறங்கிய ஹனுமானைக் கண்டதும், வானரங்கள் கூப்பிய கரங்களுடன் விரைந்து அருகில் சென்றன. மகேந்திர மலையின் உச்சியில் குதித்து இறங்கினான், ஹனுமான். ஏராளமான மரங்கள் நிறைந்த அந்த மலையும் மகிழ்ந்து வரவேற்பது போலக் காணப்பட்டது. அந்த மலையின் அருவியில் இறக்கைகளை இழந்த மலைகள் முன் ஒரு சமயம் விழுந்தது போல ஹனுமான் இறங்கினான். வானரங்கள் தங்கள் மன மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போல ஹனுமானைச் சுற்றி அமர்ந்தன. முகம் மலர, காய்களும், பழங்களும், மற்றும் கிடைத்த பொருளை அன்பளிப்பாக கைகளில் வைத்துக் கொண்டு அருகில் சூழ்ந்து அமர்ந்தன. நலமாக திரும்பி வந்து விட்ட ஹனுமானே அவர்களின் மன நிறைவுக்கு போதுமாக இருந்தது. உபசரித்தனர். ஹனுமான் ஜாம்பவான் முதலிய பெரியவர்களை, வயதில் மூத்தோரை, குமாரனான அங்கதனை வணங்கி நலம் விசாரித்தான். அவர்களும் ஹனுமானிடம் நலம் விசாரித்த பின், (த்ருஷ்டா சீதா) கண்டேன் சீதையை என்று பதிலுரைத்தான். சுருக்கமாக தன் அனுபவங்களை விவரித்தான். வாலி புத்திரனை கைப் பற்றி அருகில் அமர்த்திக் கொண்டு தானும் அமர்ந்தான். மகேந்திர மலையில் ரமணீயமான அந்த சாரலில், தன்னம்பிக்கையுடன் ஹனுமான் அந்த வானரங்களிடம் அசோக வனத்தின் மத்தியில், ஜனகாத்மஜாவைக் கண்டேன். ஒற்றைப் பின்னலுடன், தரையில் அமர்ந்து, ராமனைக் காணும் ஆவலுடன் உபவாசம் இருப்பதால் களைத்து, இளைத்து, ஜடிலமாக, மலினமாக இருப்பவளைக் கண்டேன். கண்டேன் என்ற வார்த்தை அம்ருத தாரையாக காதில் விழ, வானரங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. சில கிளு கிளுவென சத்தமிட்டன. சில ஆடின, சில பாடின, சில கர்ஜித்தன. ஒருவர் கர்ஜிக்க, பதில் கர்ஜனை செய்தன. சில வாலைத் தூக்கி ஆடின. நீண்ட வால்களை ஒன்றோடொன்று வளைத்து தூக்கி நிறுத்தி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடின. மற்றும் சில ஹனுமானை தூக்கிக் கொண்டு கூத்தாடின. ஒரே ஒரு வார்த்தை கண்டேன் என்று சொன்னதோடு சரி. வானரங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்தி கொண்டாட அனுமதித்த பின், அங்கதன் மேலும் விசாரித்தான். வானரா, ஆற்றலிலும், வீரத்திலும், உனக்கு இணை வேறு யாரும் இல்லை. சமுத்திரத்தைக் கடந்து சென்று மீண்டு வந்ததிலிருந்தே அது தெரிகிறது. எங்கள் அனைவருக்கும் உயிர் கொடுத்தவன் நீ ஒருவனே தான். வானரோத்தமா, உன் தயவால், ராமனை நாம் தலை நிமிர்ந்து நின்று சந்திக்க முடியும். ராகவ காரியத்தைச் செய்தவர்களாக சித்தார்த்தர்களாக செல்வோம். அஹோ, எஜமானனிடம் உனக்கு உள்ள பக்தி போற்றத் தகுந்தது. உன் வீர்யம் போற்றத் தகுந்தது. கலங்காமல் நினைத்த செயலை செய்து முடிக்கும் உறுதி போற்றத் தகுந்தது. நல்ல காலம், தேவியைக் கண்டாய். அதுவே நமது பாக்யம். ராமபத்னியான அவளும் கவலை நீங்கி மகிழ்ந்திருப்பாள். அதிர்ஷ்டவசமாக ராமனும், அவளைப் பிரிந்த துக்கத்தை மறப்பான். அங்கதனையும், ஹனுமானையும், ஜாம்பவானையும் சுற்றி நின்ற வானரங்கள் ஆனந்தமாக பெரும் பாறைகளைக் கொண்டு வந்து போட்டு அமர்ந்து கொண்டு விஸ்தாரமாக ஹனுமான் சமுத்திர லங்க4ணம் செய்ததை கேட்கத் தயாராயின. லங்கையைக் கண்டதும், சீதையைக் கண்டு கொண்டதும், ராவணனைப் பற்றியும், விவரங்கள் அறிந்து கொள்ள ஹனுமானின் முகத்தையே நோக்கியபடி அமர்ந்தன. அங்கதனும், தேவ லோகத்தில் தேவர்கள் சூழ இந்திரன் வருவது போல வந்து அமர்ந்தான். அங்கதம் என்ற ஆபரணத்தை புஜத்தில் அணிந்த அங்கதன், கீர்த்தி வாய்ந்த ஹனுமான் தன் அரிய செயலை விவரிக்க அமர்ந்ததைக் கண்டு மகேந்திர மலையும் தன் முகத்தை உயர்த்தி வெற்றி பெற்ற பாவனைத் தெரிய ஜயலக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கப் பெற்றதாக ஆயிற்று.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமத் ப்ரத்யாக3மனம் என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 58 (397) ஹனுமத் விருத்தானுகத2னம் (ஹனுமான் விவரித்தல்)
குதூகலமாக மலையின் உச்சியில் கூடியிருந்த வானரர்களுடன் அமர்ந்திருந்த ஜாம்பவான் அன்புடன் விசாரித்தார். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று விவரமாகச் சொல். தேவியை எப்படிக் கண்டாய்? அவள் நிலை எப்படி இருக்கிறது? க்ரூர கர்மாவான தசானனன் அவளை எப்படி நடத்துகிறான்? மகா கபே, இவையனைத்தையும் ஒன்று விடாமல் எங்களூக்குச் சொல். எங்கே தேடினாய்? தேவியைக் காண என்னவெல்லாம் சிரமப் பட்டாய் என்றும் சொல், என்றான். கண்ட பின் அவள் என்ன சொன்னாள், இதையெல்லாம் தெரிந்துகொண்டு நாம் மேற் கொண்டு செய்ய வேண்டியது பற்றி யோசிப்போம், என்றான். நாம் எல்லோருமாக ராமனிடம் போய் எந்த விதமாக பேச வேண்டும், என்ன சொல்ல வேண்டும், எதைச் சொல்லாமல் விட வேண்டும் என்பதையும் தீர்மானிப்போம். ஜாம்பவான் அன்புடன் இவ்வாறு கேட்டதும், ஹனுமான் உடல் புல்லரிக்க, பேசலானான். உங்களுக்கு எதிரில் நான் மகேந்திர மலையிலிருந்து புறப்பட்டு வான வெளியை அடைந்தேன். கடலின் தென் கரையைத் தொட்டு விட என் மனதை ஒருமைப் படுத்திக்கொண்டு, வேகமாக போகும் பொழுதே ஏதோ விக்னம் போல எதிரில் முளைத்தது. அழகிய பொன் மயமான மலையின் சிகரம். என் வழியை மறித்துக்கொண்டு நின்ற மலையின் சிகரம். வழி மறித்துக் கொண்டு இடையூறு செய்வதாகத் தான் எண்ணினேன். உடனே அருகில் சென்று அந்த மலையை பிளந்து விட வேண்டும் என்று நினைத்தேன். என் வாலை சுழற்றி மலையை அடித்தேன். அதன் ஒரு சிகரம் சூரியன் போல பிரகாசித்துக் கொண்டு ஆயிரம் சுக்கல்களாகச் சிதறியது. என் எண்ணத்தை புரிந்து கொண்ட அந்த மலையரசன் புத்ரா என்று மதுரமாக அழைத்தான். என்னை உன் தந்தை வழி உறவினன் என்று தெரிந்து கொள். நான் உன் தந்தையான மாதரிஸ்வனனின்(வாயு) உறவினன். என் பெயர் மைனாகம். இந்த பெரும் கடலில் வசிக்கிறேன். பர்வதங்கள் முன்பு இறக்கைகள் உடையனவாக இருந்தன. இஷ்டம் போல உலகைச் சுற்றி வந்தன. கிடைத்ததை உடைத்து நொறுக்கித் தள்ளிக் கொண்டு பூமியில் இறங்கின. இவை இப்படி செய்வதை கேள்விப்பட்டு, பாக சாஸனான இந்திரன் வஜ்ரத்தால் இவைகளின் இறக்கைகளை வெட்டித் தள்ளினான். உன் தந்தை தான் என்னை காப்பாற்றினார். மாருதன் தான் என்னை இந்த சமுத்திரத்தில் கொண்டு தள்ளினான். ராமனுக்கும் நான் ஒரு உதவி செய்தாக வேண்டும். ராமன் தர்மம் அறிந்தவர்களில் ஸ்ரேஷ்டன். மகேந்திரனுக்கு சமமான விக்ரமம் உடையவன். இப்படி மைனாகம் சொல்லவும், நான் அவன் எதற்கு வந்தான் என்பதையும் புரிந்து கொண்டு விட்டேன். இதற்குள் மனித உருவம் எடுத்துக் கொண்டு மலை மேல் நின்ற மைனாகமும், சமுத்திர ராஜனும் என்னை வாழ்த்தி அனுப்ப, வேகம் எடுத்து திரும்பவும் ஆகாய மார்கத்தில் நுழைந்தேன்.
சற்று நேரம் எந்த விதமான தடங்கலும் இன்றி, வாயு மார்கத்தில் சஞ்சரித்தேன். அச்சமயம் சுரஸா என்ற நாக மாதாவைக் கண்டேன். சமுத்திர மத்தியிலிருந்து அந்த தேவி, என்னிடம் சொன்னாள். ஹரி சத்தமா, தேவர்கள் உன்னை எனக்கு உணவாக அனுப்பி இருக்கிறார்கள். அதனால் உன்னை சாப்பிடப் போகிறேன். வெகு காலமாக உன்னை எனக்காக என்றே விட்டு வைத்திருக்கிறார்கள். என்றாள். இதைக் கேட்டு இது என்ன சோதனை, என்று குழப்பத்துடன் கை கூப்பி வணங்கி அவளிடம் விவரமாகச் சொன்னேன். ராமன் என்று தசரத ராஜாவின் மகன். தண்டகா வனம் வந்தான். லக்ஷ்மணன் என்ற சகோதரனுடனும், சீதை என்ற மனைவியுடனும் வசிக்கும் பொழுது, ராவணன் அவன் மனைவியை அபகரித்துச் சென்றான். அவளிடம், ராமனின் கட்டளைப் படி நான் தூதனாகச் செல்கிறேன். ராமனுக்கு சகாயம் செய். சற்று பொறு, சீதையைக் கண்டு கொண்டு ராமனையும் பார்த்து விவரம் சொல்லி விட்டு, உன் வாயில் வந்து விழுகிறேன். இது சத்யம். நான் பிரதிக்ஞை செய்கிறேன். நான் இவ்வாறு சொல்லவும் அவள் பதில் சொன்னாள். எனக்கு ஒரு வரம் இருக்கிறது. என்னைத் தாண்டி யாரும் செல்ல முடியாது. சொல்லிக் கொண்டே அவள் பத்து யோஜனை தூரம் தன் வாயைப் பிளந்தாள். நானும் க்ஷண நேரத்தில் அதே அளவு வளர்ந்தேன். அவளோ அந்த என் பெரிய உருவத்தையும் விழுங்கும் அளவு தன் வாயை பிளந்தாள். உடனே நான் என் உருவை மிகச் சிறியதாக ஆக்கிக் கொண்டு, அங்குஷ்ட, கட்டைவிரல் அளவு ஆகி அவள் வாயினுள் புகுந்து வெளி வந்து விட்டேன். சுரஸாவும் தன் பழைய உருவை எடுத்துக் கொண்டு என்னை வாழ்த்தினாள். ஹரி ஸ்ரேஷ்ட, சௌக்யமாக போய் வா. உன் காரியம் சித்3தி4யாகட்டும். வைதேஹியை அழைத்து வந்து ராமனுடன் சேர்த்து வை. சுகமாக இரு. வானரமே, நான் உன் செயலால் மகிழ்ந்தேன். கவலையில்லாமல் போய் வா என்று வாழ்த்தினாள். இதை பார்த்து எல்லோரும் சாது சாது என்று புகழ்ந்தனர். கருடன் போல நான் அந்தரிக்ஷத்தில் மிதந்தேன். யாரோ என் நிழலை பிடித்து இழுப்பது போல இருந்தது. நாலா திக்குகளிலும் திரும்பி யாராக இருக்கும், க3க3ன மார்கத்தில் என்னைத் தடுப்பது யார்? உருவம் எதுவும் தெரியவில்லை. உபத்ரவம் மட்டும் செய்வது யார்? கீழ் நோக்கி என் பார்வை சென்றது. அந்த சமயம் மிகப் பெரிய பயங்கரமான ஒரு உருவம், நீர் மட்டத்தில் என் கண்களில் பட்டது. பெருங்குரலில் சிரித்தபடியே அவள் சற்றும் பரபரப்போ, பயமோ இன்றி, நின்று கொண்டு, பெரிய உருவம் கொண்டவனே, எங்கு போகிறாய்? என் பசிக்கு நீ உணவாக இருப்பாய். என்னைத் தாண்டி போக முயலுகிறாய். அது சுலபமல்ல. தெரியுமா. வெகு காலமாக ஆகாரமின்றி தவிக்கிறேன். என்னை மீறி எப்படி போவாய்? வாயைப் பிளந்து கொண்டு என்னை சாப்பிட வந்தாள். என்னை விழுங்கும்படி வாயும் பெரிதாகிக் கொண்டே வந்தது. நானும் என் உருவத்தை பெரிதாக்கிக் கொண்டேன். அவள் விடுவதாக இல்லை. மேலும் வளர்ந்தாள். நான் திடுமென என் உருவத்தை பெரிதாக்கிக் கொண்டேன். அவள் விடுவதாக இல்லை. மேலும் வளர்ந்தாள். நான் திடுமென என் உருவைக் குறுக்கிக் கொண்டு அவள் வாயில் நுழைந்து ஹ்ருதயத்தை, மர்ம ஸ்தானத்தை பிடுங்கி எறிந்து விட்டு, வான வெளியில் திரும்பவும் சென்றேன். கை கால்களை பரத்திக் கொண்டு அவள் உயிரற்ற உடல் கடலில் விழுந்தது. மேலும் சற்று தூரம் சென்ற பின், மரங்கள் அடர்ந்த தக்ஷிணக் கரையில் லங்கா நகரம் இருப்பதைக் கண்டேன். ராக்ஷஸர்கள் யாரும் கண்டு விடாதபடி, சூரியன் அஸ்தமனம் ஆனபின் லங்கா நகரில் நுழைந்தேன். ஒரே இருட்டு. நான் யாருமறியாமல் நுழைய வேண்டும் என்று கவனமாகச் சென்று கொண்டிருந்த பொழுதே, அட்டகாசமாக ஒரு பெண் என்னைத் தடுத்தாள். அவளை முஷ்டியால் அடித்து தோற்கடித்து விட்டு கிளம்பினேன். செக்கச் சிவந்த கேசம் தலையில் பள பளத்தது. ப்ரதோஷ காலத்தில் நான் உள்ளே நுழைந்தேன். நான் லங்கா புரி, இதன் காவல் தேவதை. என்னை ஜெயித்து விட்டாய். அதனால் இந்த லங்கா நகரின் ராக்ஷஸர்கள் அனைவரையும் ஜெயித்தவன் ஆனாய் என்றாள். இரவு முழுவதும் ஜனகாத்மஜாவைத் தேடித் தேடி அலைந்தேன். எங்குமே அவளைக் காணாமல அலைந்தேன். ராவண க்ருஹமென்பது தெரிந்தது. சீதையைக் காண முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. ப்ரகாரத்தில் திரும்பவும் சுற்றிய சமயம், மரங்கள் அடர்ந்த அசோக வனம் தென்பட்டது. அதன் நடுவில் சிம்சுபா மரம். அருகில் கதலி- வாழைத் தோட்டம். சிம்சுபா மரத்தின் அருகில் வரவர்ணினீம்- நல்ல நிறமுடைய சீதையைக் கண்டேன். கமல பத்ரம் போன்ற கண்கள், ஸ்யாமா. உபவாசத்தால் இளைத்த உடல். புழுதி படிந்த கேசமும், ஒற்றை வஸ்திரமுமாக, சோகம் வாட்டி எடுக்க, தீனமான உடலும் உள்ளமுமாக, பர்த்தாவான ராமனின் நலனே த்யானமாக, இருந்தவளைக் கண்டேன். ராக்ஷஸிகள் பலர் சூழ்ந்து கொண்டு அதட்டி மிரட்டியபடி இருந்தனர். க்ரூரமாக, விரூபமாக இருந்த ராக்ஷஸிகளைக் காணவே பயங்கரமாக இருந்தது. ஒற்றைகுழல் தொங்க, முகம் வேதனையால் வாட, கணவனின் நினைவிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள் போலும். பூமியில் படுத்து உறங்கியவளை, நிறம் வெளுத்து, பனியில் அடிபட்ட தாமரை மலராக, ராவணனை ஒரு பொருட்டாக மதிக்காமல், அவனை தவிர்க்க தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்து விட்டவளைக் கண்டேன். எப்படியோ அந்த மான் விழியாளை நான் கண்டு கொண்டேன். ராமபத்னி என்ற அந்த புகழ் வாய்ந்த ஸ்த்ரீயைக் கண்டு கொண்ட பின், அதே சிம்சுபா விருக்ஷத்தின் மேல் நான் அமர்ந்து கொண்டேன்.
திடுமென, நூபுரங்களும், மேகலைகளும் உராயும் சத்தம் கல கலவென கேட்டது. ராவணன் க்ருஹத்தில் கேட்டதை விட கம்பீரமாக கேட்டது. நான் என்னை மறைத்துக் கொண்டு ஒரு பக்ஷி போல உடலை குறுக்கி, இலை தழைகளால் என் உடலை மூடிக் கொண்டேன். ராவணன் மனைவிமாரும், ராவணனும் சீதா இருந்த இடம் வந்து சேர்ந்தனர். ரக்ஷோ கண தலைவனான ராவணனைப் பார்த்து, தன் கைகளால் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் பூமியில் அமர்ந்திருந்தாள். அங்கும் இங்கும் பயத்துடன் கண்களை ஓட விட்டவள், யாரும் உதவிக்கு வரத் தயாராக இல்லை என்பதையறிந்து உடல் குலுங்க இருந்தவளைப் பார்த்து ராவணன் பேசினான். தலை குப்புற விழுந்தவன் போல என்னை பார். என்னை உயர்வாக நினைத்துப் பார். கர்வத்தால் என்னை நிமிர்ந்து பார்க்கக் கூட மறுக்கிறாய். ஆனால், உனக்கு இரண்டு மாத அவகாசம் தருகிறேன். அதன் பின்னும் நீ என்னை அங்கீகரிக்க மறுத்தால், உன் ரத்தத்தைக் குடிப்பேன். துராத்மாவான ராவணன் பேசியதைக் கேட்டு, ராக்ஷஸாதமா, நான் ராமனின் பா4ர்யை. ஒப்பில்லாத தேஜஸ் உடைய ராகவனின் பத்னி. இக்ஷ்வாகு குல நாதனான தசரத ராஜாவின் மருமகள். என்னைப் பார்த்து இப்படி சொல்லத் தகாத வார்த்தைகளை சொல்கிறாய். அப்படியும் உன் நாக்கு அறுந்து விழவில்லையே. என்ன வீர்யம் உன் வீர்யம்? என் கணவன் அருகில் இல்லாத பொழுது அபகரித்துக் கொண்டு வந்தாய். பாவி, என் கணவன் மகான். அவன் கண்ணில் படக் கூடாது என்று ஒளிந்து கொண்டு வந்தவன் நீ. ராமனுக்கு இணையாக மாட்டாய். அவனுக்கு தாஸனாக இருக்கக் கூட நீ தகுதியுடையவன் அல்ல. ராகவன் சத்யவாதி. அவனை யாராலும் வெல்ல முடியாது என்பது மட்டுமல்ல, ரணத்தில் எதிர் நிற்பவனே அவனை சிலாகிக்கும் படியான ஆற்றல் உடையவன். ஜானகி, தசானனைப் பார்த்து இவ்வளவு கடுமையாக பேசவும், ராவணனுக்கு கோபம் மூண்டது. சிதையில் மூட்டிய நெருப்பு திகு திகுவென எரிந்து பரவுவது போல, ராவணனின் அந்த கோபம் வளர்ந்தது. தன் வலது கை முஷ்டியை உயர்த்தி பிடித்து, கண்களை உருட்டியபடி, சீதையைக் கொல்ல முன்னேறினான். உடன் வந்த ஸ்த்ரீகள், ஹா, ஹா வென்று அலறினர். அவர்கள் மத்தியிலிருந்து மண்டோதரி என்பவள், வந்து தடுத்தாள். (முன்பு தான்யமாலினி என்றதும், இப்பொழுது மண்டோதரி என்பதும், இருவருமே தடுத்தனர் என்பது கருத்து). மதுரமாக பேசி, மதனனின் வசத்தில் இருந்தவனை இச்செயலைச் செய்ய விடாமல் தடுத்து அழைத்துச் சென்றனர். சீதையுடன் உங்களுக்கு என்ன வேலை? மகேந்திரனுக்கு சமமான விக்ரமம் உடைய தாங்கள், யக்ஷ, கன்னிகள், தேவ கந்தர்வ கன்னிகள் இவர்களுடன் ரமித்துக் கொண்டிருங்கள். சீதையுடன் ஏன் இந்த விவாதம்? என்று பலவாறாக நயமாகச் சொல்லி அந்த இடத்தை விட்டு அழைத்துச் சென்றாள். தன்னைச் சார்ந்த பெண்களுடன் ராவணன், மாளிகைக்கு திரும்பச் சென்றவுடன், அங்கிருந்த ராக்ஷஸிகள், சீதையை அதட்டி மிரட்ட ஆரம்பித்தனர். அவர்கள் பேசியது எதையும் ஜானகி ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. சீதையை முடிந்தவரை பயமுறுத்தியும், நயமாக வேண்டியும் அவள், எதுவும் மசிந்து கொடுக்காததால் ராக்ஷஸிகள் ராவணனிடம் தெரியப்படுத்தினர். இதன் பின் அனைவரும் களைத்து தூக்கத்தில் ஆழ்ந்தனர். இவர்கள் தூங்கியபின், நிச்சப்தமான இரவின் பின் பகுதியில் சீதை மிகவும் வேதனையோடு அழுவதைப் பார்த்து, அவர்கள் நடுவில் இருந்து த்ரிஜடா என்பவள் எழுந்து வந்தாள். உங்களையே தின்று கொள்ளுங்கள், சீதை உங்கள் கையால் நாசமாக வேண்டியவள் அல்ல, என்று மிரட்டினாள். இவள் யார் என்று அறியாமல் வாய்க்கு வந்ததை பேசுகிறீர்கள். ஜனகன் மகள் இவள். தசரத ராஜாவின் மருமகள். நான் இன்று ஒரு கனவு கண்டேன். மகா பயங்கரமானது. ரோமங்கள் குத்திட்டு நிற்க நான் நடுங்கினேன். ராக்ஷஸர்கள் நாசமடைவது போலவும், இவள் கணவன் வெற்றி பெற்றது போலவும், இவளை பயமுறுத்தியது போதும். ராகவனிடத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற இவள் தான் வரப் போகிறாள். வைதேஹியை நாம் வேண்டிக் கொள்வோம். அது தான் சரி என்று நான் நினைக்கிறேன். யாரைப் பற்றி இப்படி ஸ்வப்னத்தில் காண்கிறோமோ, அவர்கள் துக்கத்திலிருந்து விடுபட்டவர்களாக, சுகத்தையடைவர். இதைக் கேட்டு சீதை த்ரிஜடையைப் பார்த்து நீங்கள் சொன்னது பலித்தால், நான் உங்களை சரணடைகிறேன் என்றாள். சீதையின் இந்த வருந்தத்தக்க நிலையைப் பார்த்து நான் யோசித்தேன். மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. ஜானகியுடன் எப்படி சம்பாஷனையை ஆரம்பிப்பது என்று யோசித்தேன். இக்ஷ்வாகு வம்சக் கதை தான் கை கொடுத்தது. ராஜரிஷி கணங்கள் பூஜித்த ராம கதையைக் கேட்டு கண்கள் குளமாக கண்ணீர் பெருக்கியபடி, வைதேஹி என்னிடம் பேசினாள். யார் நீ? எப்படி இங்கு வந்து சேர்ந்தாய்? வானர புங்க3, எப்படி நீ ராமனை சந்தித்தாய்? ராமனிடம் எப்படி நட்பு கொண்டாய்? எல்லாமே விவரமாகச் சொல் என்றாள். நானும் பதில் சொன்னேன். தேவி, உன் பர்த்தாவான ராமனின் சகா, நல்ல பலசாலி, பீம விக்ரமன் சுக்ரீவன் என்ற வானர அரசன். நான் அவனுடைய வேலைக்காரன். என் பெயர் ஹனுமான். எஜமானனின் கட்டளைப் படி இங்கு வந்தவன். உன் கணவனால் அனுப்பப் பட்டேன். தானாகவே, புருஷ வ்யாக்ரனான ராமன் இந்த அங்குலீயத்தை, தங்களிடம் அடையாளமாக காட்டச் சொல்லி என்னிடம் கொடுத்திருக்கிறார். தேவி, இதைப் பாருங்கள், எனக்கு என்ன கட்டளை? நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள். என்றேன். ராம லக்ஷ்மணர்களிடம் உங்களை அழைத்து செல்லட்டுமா, பதில் சொல்லுங்கள் எனவும், ஜனக நந்தினி சொன்னாள். ராவணனை அடக்கி விட்டு ராமன் என்னை அழைத்துச் செல்லட்டும். என்றாள். நான் அவளை வணங்கி விட்டு மாசற்ற அந்த தேவியிடம், ராகவன் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு அடையாளம் தரச் சொல்லிக் கேட்டேன். உடனே சீதை, இதை எடுத்துக் கொள் என்று சொல்லி இந்த மணியை கொடுத்தாள். இதை கண்டால், இதை கொண்டு வந்த உன்னிடம் ராமனின் நம்பிக்கை அதிகமாகும். அத்புதமான அந்த சிரோ மணியையும் கொடுத்தவள், வாய் வார்த்தையாகவும் ஒரு செய்தி சொன்னாள். அவளை வணங்கி, பிரதக்ஷிணம் செய்து விடை பெற்fற சமயம் திரும்பவும் நினைவு வந்தவள் போல, ஹனுமன், ராகவனிடம் என் நிலையை எடுத்துச் சொல். கேட்டவுடனேயே அவ்விருவரும் வேகமாக வீறு கொண்டு எழுந்து போருக்கு வரும்படி சொல். சுக்ரீவன் மற்றும் உடன் இருக்கும் அனைவரிடமும் சொல். அப்படி உடனே செயல் படாவிட்டால், இதோ இரண்டு மாதம் ஓடி விடும். அனாதை போல நான் உயிரை விட நேரிடும் என்றாள். கருணையும் வேதனையும் தோய்ந்த இந்த வார்த்தைகள் என் மனதில் கோபத்தை வளர்த்தன. மேற் கொண்டு என்ன செய்வது என்று யோசித்தேன். என் சரீரத்தை பர்வதாகாரமாக ஆக்கிக் கொண்டேன். யுத்தம் செய்யும் ஆவலுடன் அந்த வனத்தை நாசமாக்க ஆரம்பித்தேன். அடர்ந்த வனத்தில் இருந்த மிருகங்களும், பக்ஷிகளும் மிரண்டு இங்கும் அங்குமாக ஓடின. கோர ரூபம் கொண்ட ராக்ஷஸிகள், என்னைக் கண்டு, ராவணனிடம் விஷயம் தெரிவிக்க ஓடினர். துராத்மாவான ஒரு வானரம் வந்து தங்கள் வனத்தை அழிக்கிறது. ராஜன், தங்கள் வீர்யம் அவனுக்குத் தெரியாது போலும். சீக்கிரம் அந்த துஷ்டனுக்கு வதம்- மரண தண்டனை கொடுங்கள். இல்லாவிடில் வனம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்- என்றனர். இதைக் கேட்டு ராக்ஷஸேந்திரன் பெரும் படையை அனுப்பினான். கிங்கரர்கள் என்ற ராக்ஷஸர்கள், ராவணன் நினைத்ததை செய்து முடிக்கக் கூடியவர்கள், சூலமும் உத்3கரமும் தூக்கிக் கொண்டு ஆயிரக் கணக்காக வந்து சேர்ந்தனர். நான் அந்த வனத்தில் கிடைத்த ஒரு பரிக4ம் (குறுக்கு கட்டை)யை வைத்துக் கொண்டு அவர்களை அடித்தேன். அந்த யுத்தத்தில் மிஞ்சிய சில ராக்ஷஸர்கள் ஓடி ராவணனிடம் சைன்யம் அழிந்ததை தெரிவித்தார்கள். திடுமென எனக்கு சைத்யப்ராஸாதம் என்ற அருகில் இருந்த மண்டபத்தில் மேல் கவனம் சென்றது. நூறு ஸ்தம்பங்கள் கொண்ட அதையும், அதிலிருந்த காவலாளிகளையும் அடித்து நொறுக்கினேன். இது லங்கைக்கு பெருமை சேர்க்கும் அழகிய மண்டபம். இதன் பின் ப்ரஹஸ்த புத்திரன் ஜம்புமாலி வந்தான். ராவணன் அனுப்பி, பல ராக்ஷஸர்களுடன் வந்து சேர்ந்தான். ரண கோவிதனான அவனையும், பயங்கரமான என் கட்டையைக் கொண்டு அடித்தேன். இதைக் கேள்விப் பட்டு ராக்ஷஸேந்திரன் மந்திரி புத்திரர்களை அனுப்பினான். படையுடன் இவர்களும், தங்கள் பலத்தைக் காட்ட வந்தனர். என் கையில் இருந்த பரிக4த்தால், இவர்களையும் அடித்து வீழ்த்தினேன். மந்திரி புத்திரர்களும் மடிந்ததைக் கேட்டு ராவணன் சேனாபதிகள் ஐவரை அனுப்பி வைத்தான். இவர்களையும் சைன்யத்துடன் யம லோகம் அனுப்பிவைத்தேன். இதன் பின் தசக்ரீவன் புத்ரனான அக்ஷனை அனுப்பினான். பல ராக்ஷஸர்கள் உடன் வந்தனர். மந்தோதரி குமாரனான அவனை ஆகாயத்தில் நின்று, மாயா யுத்தம் செய்ய முயன்ற பொழுது, கால்களை பிடித்து இழுத்து தரையில் ஓங்கி அடித்து விட்டேன். கூட வந்த சைன்யம் இதைக் கண்டு பயந்து அலறிக் கொண்டு ஓடி விட்டன. இதன் பின் மற்றொரு குமாரனான இந்திரஜித் என்பவனை அனுப்பினான். இவனும் யுத்த கலை அறிந்தவன். இவனையும் ராவணன் சைன்யத்துடன் அனுப்பி வைத்தான். இவன் வந்தவுடன் என் பலத்தை எடை போட்டான். சைன்யம் அழிந்ததையும் வைத்து, எளிதில் என்னை மாய்க்க முடியாது என்று புரிந்து கொண்டவனாக ப்ரும்மாஸ்திர பிரயோகம் செய்தான். என்னை அஸ்திரத்தால் கட்டியதை அறியாமல் மற்ற ராக்ஷஸ வீரர்கள், மகிழ்ச்சியுடன் என்னை கயிற்றாலும் கட்டினர். ராவணனிடம் இழுத்துக் கொண்டு சென்றனர். ராவணனைக் கண்டு அவனுடன் பேச்சு கொடுத்தேன். எதற்கு வந்தாய்? ராக்ஷஸர்களை ஏன் வதம் செய்தாய்? என்று கேட்டான். எல்லாமே சீதை காரணமாகத்தான் என்று சொல்லி விட்டேன். தங்களைக் காண தங்கள் ப4வனம் வந்தேன். விபோ4 (செல்வந்தனே) மாருதனுடைய சொந்த மகன், ஹனுமான் என்று என் பெயர். ராம தூதன். சுக்ரீவனின் மந்திரி. ராமன் தான் என்னை இங்கு செய்தி சொல்ல அனுப்பினான். மகா தேஜஸ்வியான சுக்ரீவன் குசலம் விசாரித்தான், தர்மார்த்த காமம் அறிந்தவன். ஹிதமாக உங்களிடம் செய்தி சொல்லச் சொன்னான். மரங்களடர்ந்த ருஸ்ய மூக மலையில் வசிக்கும் சமயம், ரண விக்ரமனான ராமனுடன் அவனுக்கு நட்பு உண்டாயிற்று. ராமன் என் மனைவியை தேடிக் கண்டு பிடிக்க உதவி செய் எனவும், சுக்ரீவனும் வாலி வதம் செய்யச் சொல்லி வேண்டினான். சீதையைக் கண்டு பிடிக்க சற்று அவகாசம் கொடு என்று சுக்ரீவன் கேட்டுக் கொண்டான். இருவருமாக அக்னி சாக்ஷியாக சங்கல்பம் செய்து கொண்டனர். இதன் பின் சுக்ரீவன் எல்லா வானர சைன்யத்துக்கும் தலைவனாக மகா ராஜாவாக ஆக்கி விட்டான். என்ன ஆனாலும் ராம காரியத்தை நாம் செய்து தந்தேயாக வேண்டும், என்று சுக்ரீவன் தீவிரமாக இருக்கிறான். அதனால் எங்களை இங்கு அனுப்பினான். சீதையைக் கண்டு பிடித்து ராகவனிடம் தர வேண்டும் என்பது தான் எங்களுக்கு தரப்பட்ட வேலை. வானரங்களின் பலம் யாருக்குத் தெரியும்? அதை தங்களுக்கு சிறிதளவாவது காட்டவே வனத்தை நாசம் செய்து ராக்ஷஸர்களை அடித்தேன். எங்களுக்கு கட்டளையிட்டு அனுப்பினால், தேவர்களிடம் கூட போர் புரிவோம் இதையெல்லாம் தங்களிடம் தெரிவிக்கச் சொன்னான் எங்கள் ராஜா சுக்ரீவன் என்றேன். என்னை கண்களாலேயே எரித்து விடுபவன் போல பார்த்த ராவணன் இவனை வதம் செய்யுங்கள் என்று ஆணையிட்டு விட்டான். துராத்மா ராவணனுக்கு என் சக்தி என்ன என்பது தெரிந்திருக்கவில்லை. இதன் பின் விபீ4ஷணன் என்ற ராவணன் தம்பி, நல்ல புத்திசாலி. ராக்ஷஸேந்திரா, இது ராஜதர்மம் அல்ல, தூதனை வதம் செய்வது கேட்டதும் இல்லை, நியாயமும் இல்லை. ஹிதமாக பேசி அவனிடம் விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும். கடும் அபராதம் செய்தவனாக இருந்தால் கூட, தூதனிடம் விரூபம் செய்து திருப்பி அனுப்புவதைக் கண்டிருக்கிறோம். வதம் செய்வதில்லை. விபீஷணன் சொன்னதைக் கேட்டு, அந்த வீரர்களிடம் ராவணன் இந்த வானரத்தின் வாலில் நெருப்பை வைத்து பொசுக்குங்கள் என்றான். உடனே என் வாலில் நெருப்பு வைக்கப் பட்டது. கயிறும் சணலும் கொண்டு கட்டி பழைய பருத்தி துணிகளைக் கொண்டும் சுற்றி, ராக்ஷஸர்கள் குதூகலமாக கட்டைகளை அடுக்கி நெருப்பை வைத்தனர். ராக்ஷஸர்கள் சூழ்ந்து கொண்டு, பல விதமாக கட்டி துன்புறுத்திய போதிலும், தீ வைத்த போதும் எனக்கு சிறிதும் உடல் வருத்தம் தோன்றவில்லை. நானும் பகலில் ஊரைச் சுற்றி பார்க்கத் தயாரானேன். ராக்ஷஸர்கள் கட்டுண்ட என்னை, தீயும் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். என் பெயரை சொல்லி பெரிதாக கோஷம் இட்டுக் கொண்டு நடந்தனர். திடுமென நான் என் உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு அந்த கட்டிலிருந்து விடுபட்டேன். பழையபடி இரும்பு கட்டையை எடுத்துக் கொண்டு அவர்களை அடித்தேன். வேகமாகத் தாவிக் குதித்து நகர வாயிலை அடைந்தேன். என் வாலைச் சுழற்றி, அந்த நகரத்தின் மாட மாளிகைகளில், அதில் இருந்த தீயை உதறியபடியே வந்தேன். திடுமென, யுக முடிவில் காலாக்னி தோன்றுவது போல ஊர் முழுவதும் பற்றி எரிந்தது. ஜனங்கள் அலறினர். ஊர் முழுவதும் எரிந்து விட்டதே, ஜானகி என்ன ஆகியிருப்பாள் என்ற கவலை தோன்றியது, தவிர ராமனுடைய முக்யமான காரியமும் வீணாகி விட்டதே என்று என் மனம் வருந்தியது. சொல்லொணா சோகம் அழுத்தியது. அச்சமயம் சாரணர்கள், ஆகாய வீதியில் தங்களுக்குள் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. ஆச்சர்யத்துடன் நல்ல வேளையாக ஜானகி இந்த நெருப்பால் பாதிக்கப் படவில்லை. ஆச்சர்யம் என்றனர். இதைக் கேட்டு நிமித்தங்களைக் கொண்டும் ஜானகி இந்த நெருப்பில் ஒருவிதமான பாதிப்பும் இன்றி தப்பினாள் என்று அறிந்து நிம்மதியடைந்தேன். எனக்குள் யோசித்தேன். வாலில் தீ மூண்டெழுந்த பொழுதே நான் எதுவும் உணரவில்லை. நெருப்பு என்னை சுடவில்லை. காற்று சுகமாக, வாசனையுடன் வீசியது. எனக்கு ஆறுதல் சொல்வது போல இருந்தது. இது போன்ற பல நிமித்தங்களாலும், மகரிஷிகளும் சித்தர்களும், தங்களுக்குள் பேசிக் கொண்டு செல்வதைக் கேட்டதாலும் மன நிம்மதியடைந்தேன். திரும்பவும் வைதேஹியைக் கண்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன். அங்கு இருந்த மலையின் உச்சியில் ஏறி நின்று, திரும்பி வர ஆயத்தமானேன். உங்கள் அனைவரையும் கண்டு விஷயம் சொல்ல பர பரத்தது இதன் பின் பவன, சந்த்ரார்க, சித்த கந்தர்வர்கள் சஞ்சரிக்கும் மார்கங்களில். திரும்பி வந்து, இதோ உங்களைக் காண்கிறேன். ராகவனுடைய ப்ரபாவம், உங்கள் அனைவருடைய வாழ்த்துக்கள், சுக்ரீவனின் கட்டளை, காரிய சித்திக்காக இவ்வளவும் நான் செய்தேன். நடந்தது நடந்தபடி சொல்லி விட்டேன். இனி செய்ய வேண்டியது என்ன, எப்படி என்று நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமத் வ்ருத்தானுகத2னம் என்ற ஐம்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 59 (398) அனந்தர கார்ய ப்ரரோசனம் (மேற்கொண்டு செய்வதைப் பற்றி விவாதித்தல்)
ஹனுமான் இவ்வளவும் சொல்லி முடித்த பின், திருப்தியுடன் சொல்லிக் கொண்டான். ராகவனுக்காக செய்த இந்த முயற்சி வெற்றியடைந்தது. சுக்ரீவனின் கவலையும் தீர்ந்தது. சீதையின் சீலம் தான் இந்த வெற்றிக்கு காரணம். என் மனமும் நிறைவுற்றது. தவ வலிமையால் உலகையே வெல்லலாம் அல்லது கோபம் கொண்டு உலகையே தகிக்கலாம். இந்த ராவண ராஜா, எல்லா விதத்திலும் அளவுக்கு மீறி வளர்ந்து விட்டான். அவன் தவ வலிமைதான் அவனை சீதையின் உடலைத் தொட்டு தூக்கிய பொழுது அவன் நாசமடையாமல் காத்தது. கையினால் தொட்டு அக்னி நாசம் செய்யாமல் இருக்குமா? அக்னியே செய்ய முடியாது திகைத்தாலும், ஜனகாத்மஜா கோபம் கொண்டால் தகித்து விடுவாள் என்பது நிச்சயம். ஜாம்பவான் முதலிய பெரியவர்களை வணங்கி அனுமதி கேட்டு, இது வரை நடந்ததை உங்களிடம் சொல்லி விட்டேன். நியாயமாக, நாம் வைதேஹியுடன் தான் ராமனைக் காண செல்ல வேண்டும். நான் ஒருவனே போதும். ராக்ஷஸ கூட்டத்தோடு லங்கா நகரை அழிக்க. லங்கா வாசிகளை அழித்து மகா பலசாலிகளாக இருந்தால் என்ன? ராவணனையும் நாசம் செய்து விடுவேன். உங்களைப் போன்ற வீரர்கள் உடன் இருக்கும் பொழுது இதில் என்ன கஷ்டம். நீங்கள் செயல் வீரர்கள். சாகஸங்கள் பலவும் செய்து வெற்றிக் கொடி நாட்டும் ஆர்வம் உடையவர்கள். நான் ஒருவனே, ராவணனை குடும்பத்துடன், புத்ர, சகோதர்களுடன், நாடு நகரத்துடன் சேர்த்து அழிப்பேன். ப்ரும்மாஸ்திரம், ஐந்திரம், ரௌத்3ரம், வாயவ்யம், வாருணம், இவை இந்திரனை ஜயிக்க பயன் பட்டிருக்குமானால், கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் கூட இந்த அஸ்திரங்களை நான் சின்னா பின்னமாக்குவேன். ராக்ஷஸர்களை அடித்து நொறுக்குவேன். உங்கள் அனுமதியுடன் யுத்தம் செய்வேன். வெற்றி வாகை சூடி வருவேன். இடை விடாது நான் பாறைகளை மழையாக பொழிந்தால் தேவர்களே நிற்க முடியாது. இந்த நிசாசரர்கள் எம்மாத்திரம்? சாக3ரம் தன் கரையை மீறி வந்தாலும் வரலாம், மந்தர மலை ஆடினாலும் ஆடலாம், ராக்ஷஸர்கள், ஒரு ஜாம்பவானுக்கு ஈ.டு கொடுக்க முடியாது. இந்த வாலி சுதன் அங்கதன் மட்டும் என்ன? சளைத்தவனா? ராக்ஷஸர்களை அவர்கள் முன்னோர்களையும் சேர்த்து நாசம் செய்து விடுவான். பனஸனும் நீலனும் சேர்ந்தால், மந்தர மலையையே தூள் தூளாக்கி விடுவார்கள். ராக்ஷஸ சைன்யம் எந்த மூலை? தேவாசுரர்களிலும், க3ந்த4ர்வ, உரக3, பக்ஷிகளிலும் மைந்த3னுக்கு எதிரில் நின்று போர் புரிய யாருக்கு சக்தி, தைரியம் உண்டு? இந்த இரு அஸ்வினி குமாரர்கள் புத்திரர்களும் அப்படியே. எதிரிகள் இவர்களைக் கண்ட மாத்திரத்தில் ஓடி ஒளிவார்கள். இவ்விருவரும் அமுதம் அருந்தியவர்கள். நம் சைன்யத்தில் முக்கியமானவர்கள். அஸ்வினி குமாரர்கள் வேண்டிக் கொண்ட படி, பிதாமகரான ப்ரும்மா, யாராலும் வதம் செய்ய முடியாத தன்மையும், ஒப்பில்லாத உவமை சொல்ல முடியாத ஆற்றலையும் இவர்களுக்குத் தந்தார். இந்த வரத்தால் கர்வம் கொண்டு பெரும் சைன்யத்தை நாசம் செய்து, தேவர்களின் அம்ருதத்தை இவ்விருவரும் குடித்து விட்டனர். இவ்விருவரும் சேர்ந்து குதிரைகள் படை, யானைப் படைகளும், லங்கையை நாசம் செய்ய சமர்த்தர்களே. மற்ற வானரர்கள் இருக்கட்டும். நானே லங்கையில் தீ வைத்து நாசம் செய்து விட்டு வந்தேன். ராஜ மார்கம் முழுவதும் சுற்றி வந்து என் பெயரைச் சொல்லி கோஷமிட்டேன். அதி பலவானான ராமனுக்கு ஜெயம், ராகவன் காப்பாற்றி பாதுகாத்து வரும் எங்கள் அரசன் சுக்ரீவனுக்கு ஜெயம், நான் பவன சம்பவன், ஹனுமான். கோஸல ராஜனுடைய தாஸன் என்று வீதிக்கு வீதி உரத்து கூவி என்னைப் பறை சாற்றிக் கொண்டேன். துராத்மாவான ராவணன் க்ருஹத்தில், அசோக வனத்தின் மத்தியில் சிம்சுபா வ்ருக்ஷத்தின் அடியில், வேதனையோடு உடல் இளைத்து, மேகங்கள் மறைத்த சந்திரலேகா போல பிரபையின்றி, ஒளியின்றி, ராவணனை சற்றும் மதியாமல், பதி விரதையாக, ஜானகியைக் கண்டேன். சர்வாத்மாவும் ராமனிடமே என்று இருக்கிறாள். அவனிடம் அளவில்லா அன்பும், பற்றும் உடையவள். புரந்தரனான இந்திரனிடத்தில் பௌலோமி இருப்பது போல ராகவனிடத்தில் சீதை, ஒரே நினைவாக இருக்கிறாள். புழுதி படிந்த கேசமும், ஒற்றை வஸ்திரமுமாக தன் கணவனின் நலத்திலேயே கவனமாக, வேதனையால் வருந்துபவளாக, ராக்ஷஸிகளின் மத்தியில் திரும்பத் திரும்ப பயமுறுத்தப்பட்டு, நடுங்கிக் கொண்டிருக்கக் கண்டேன். ப்ரமதாவனம், (முற்றிலும் பெண்களே உள்ள இடம்) என்ற அந்த அசோக வனத்தில், ஒற்றைக் குழலுடன், கணவன் நினைவே துணையாக, பூமியில் படுத்துறங்குகிறாள். இதனால் பனியில் அடிபட்ட தாமரை மலர் போல நிறம் இழந்து காணப் படுகிறாள். ராவணனிடம் உள்ள வெறுப்பில், தன்னை மாய்த்துக் கொள்ளவும் துணிந்து விட்டாள். எப்படியோ அந்த மான் விழியாளுக்கு என்னிடம் நம்பிக்கை வரச் செய்தேன். அவளுடன் சம்பாஷித்து, நடந்த விவரங்களையும் சொன்னேன். ராம, சுக்ரீவ சக்யம் பற்றி கேட்டு மகிழ்ந்தாள். சமுதாசாரத்தில் பற்றுள்ளவள். பர்த்தாவிடம் எல்லையற்ற அன்பும், பக்தியும் உடையவள். அந்த மகாத்மாவான தேவி, தானே ஏன் தசானனான ராவணனை வதம் செய்யவில்லை தெரியுமா? ராவண வதம் ராமனைக் கொண்டே நடைபெற வேண்டும் என்று விரும்புகிறாள். நிமித்தமாக இருப்பது ராமனே தான் (நிமித்த மாத்ரம் ராமஸ்து, வதே4 தஸ்ய ப4விஷ்யதி). சுபாவமாகவே கொடி போன்ற மெலிந்த சரீரம். மேலும் சோகத்தால் இளைத்திருக்கிறாள். ப்ரதமையில் ஆரம்பித்த கல்வி போல வளராமல் இருக்கிறாள். மெலிந்து இருந்தாலும் தன்னைக் காத்துக் கொண்டு, சோக சாகரத்திலேயே மூழ்கி இருக்கிறாள். நாம் என்ன செய்யலாம் என்பதை இப்பொழுது தீர்மானிப்போம்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் அனந்தர கார்ய ப்ரரோசனம் என்ற ஐம்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 41 (380) ப்ரமத3 வன பஞ்ஜனம் (ப்ரமதா வனத்தை அழித்தல்)
சீதையின் வாழ்த்துக்களுடன், ஹனுமான் அந்த இடத்தை விட்டு அகன்றான். சற்றுத் தள்ளி வந்து நின்றபடி, அடுத்து தான் செய்ய வேண்டியதைப் பற்றி யோசிக்கலானான். கரு விழியாளான இந்த தேவியைக் கண்டு கொண்டேன். இனி மீதி காரியங்கள் மிகச் சுலபமே. முதல் மூன்று உபாயங்களை விட்டு நான்காவது உபாயம் தான் இங்கு செல்லுபடியாகும். ராக்ஷஸர்களிடம் சமாதானம் பயன் தராது. செல்வத்தில் மூழ்கியிருப்பவர்கள்- இங்கு தானமும் பயன் படாது. தங்கள் பலத்தில் கர்வம் கொண்டவர்கள். இவர்களிடம் நம்மால் பேதம் செய்ய முடியாது. இங்கு என்னுடைய பராக்ரமம் தான் பயன் தரும். இந்த செயலில் என் பராக்ரமத்தைத் தவிர வேறு எதுவும் பலன் தராது. பல யுத்தங்களைக் கண்டு சிறந்த வீரர்களான ராக்ஷஸர்கள், இவர்களிடம் ம்ருதுவாக பேசுவதோ, செய்வதோ எடுபடாது. ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லி நியமித்தவுடன், அதைச் சார்ந்த பல காரியங்களையும் முடித்துக் கொண்டு வருபவன் தான் சிறந்த நிர்வாகி. அப்படிச் செய்யும் பொழுது, தான் ஏற்றுக் கொண்ட காரியமும் பாதிக்கப் படாமல் செய்பவன் தான் புத்திசாலி. ஒரே ஒருவன் சாதகனாக இருந்தால் மட்டும் போதாது. மிகச் சிறிய இந்த செயலையும், இதன் பலாபலன்களையும் நன்றாக அறிந்து செயல் படுபவன் எவனோ, அவன் தான் பொருளாதாரத்தை நிர்வகிக்க ஏற்றவன். இங்கேயே இருந்து நான் செய்ய வேண்டியதை தீர்மானித்துக் கொள்கிறேன். நேராக சுக்ரீவன் முதலியோர் தங்கியிருக்கும் இடம் போகட்டுமா? அல்லது எதிரியின் போர் புரியும் திறமையை ஒரு நோட்டம் விடுவது போல, அவர்கள் தராதரத்தை தெரிந்து கொண்டு போவது தான் சரி. என் எஜமானனின் கட்டளையை சரிவர நிறைவேற்றியவனாக ஆவேன். எப்படி இன்று ராக்ஷஸர்களுடன் போரிட வாய்ப்பு கிடைக்கும்.? தானாக வருமா? அத்துடன், என் திறமையையும் நல்ல முறையில் காட்ட வேண்டும். அதனால் பத்து தலை ராவணன் என் மேல் மதிப்பு வைத்து, நாளை வரும் யுத்தத்திலும் என்னை வீரனாக பாவிப்பான். அதனால் நானாக சண்டைக்கிழுத்து பத்து தலை ராவணனையும், அவன் சகாக்களையும் வரவழைத்து, அவர்களுடன் மோதி, அவர்களின் உடல் பலம், உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள், உள்ளக்கிடக்கை, உத்தேசங்கள் இவற்றையும் தெரிந்து கொள்வதில் தான் சாமர்த்யம் இருக்கிறது. அதன் பின், இங்கிருந்து புறப்படுவோம். இது அந்த கொடியவனுடைய உத்தமமான நந்தவனம். கண்களைக் கவரும் அழகிய உபவனம். பலவிதமான மரங்கள் கொடிகள் நேர்த்தியாக வளர்க்கப்பட்டுள்ளன. இதை நாசம் செய்கிறேன். உலர்ந்து கிடக்கும் மரக்கட்டையை நெருப்பு எரித்து அழிப்பது போல அழிக்கிறேன். இந்த வனம் தாக்கப் பட்டால் ராக்ஷஸாதிபன் கோபம் கொள்வான். த்ரிசூல, சால, இரும்பு பட்டைகள், இவைகளை ஆயுதமாக கொண்டு ராக்ஷஸர்கள் என்னைத் தடுக்க வந்தால், பெரும் யுத்தம் சம்பவிக்கும் என்று தோன்றுகிறது. என் சக்தியை முழுவதுமாக காட்டி, என்னை அவர்கள் சமாளிக்க முடியாதபடி செய்வேன். அவர்கள் அனைவருடனும் கடுமையாக போராடுவேன். ராவணன் அனுப்பும் சேனா வீரர்களை வதம் செய்து விட்டு கபீஸ்வரன் இருப்பிடத்திற்கு சுகமாக திரும்பிப் போவேன். இதன் பின் தன் எண்ணத்தை செயல் படுத்த மாருதாத்மஜன், மாருதன் போலவே வேகமும், பலமும் கொண்டு வளர்ந்து பயங்கர உருவத்தினனாக நின்றான். அவன் கால்களுக்கு இடையிலிருந்து வெளிப்பட்ட காற்றின் வேகத்திலேயே, பல மரங்கள் விழுந்து நாசமாயின. தவிர, ஹனுமான், பெண்களாலேயே ரக்ஷிக்கப் பட்டு, பெண்களுக்காகவே இருந்த அந்த ப்ரமதா வனத்தில், மரக் கிளைகளை உடைத்து எறிந்தான். மதம் கொண்டு பாடும் பறவைகள் நிறைய இருந்தன. இவைகள் அங்கு இருந்த பல மரங்களிலும் கொடிகளிலும் தங்கள் கூடுகளைக் கட்டிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. ஹனுமனால் அந்த மரங்கள் மிதித்து துவைக்கப் பட்டன, நீர் நிலைகள் கலக்கப் பட்டன. மலை பாறைகள் பொடியாகி சிதறியது. சற்று முன் அழகிய வனமாக இருந்தது, அலங்கோலமாகியது. மரங்கள் விழுந்ததால் மரத்தின் உச்சியில் இருந்த பறவைகள் பயந்து அலறின. நீர் நிலைகள் கலக்கப் பட்டதால், அதில் வாழ்ந்த நீர் வாழ் ஜந்துக்கள் தங்கள் இடம் பெயர்ந்து மேலும் கீழுமாக அலைந்து தவித்தன. இளம் சிவப்பு நிற துளிர்கள் துண்டிக்கப் பட்டு கீழே விழுந்தன. மரங்களும் கொடிகளும் சிதைந்து கிடக்க, ஏதோ பெரும் காட்டுத் தீ வந்து தாக்கியது போல அந்த வனம் மிகச் சிறிய கால அளவிலேயே மிகப் பெரும் சேதம் அடைந்தது. ஆடைகள் குலைந்து, தத்தளிக்கும் பெண்கள் போல கொடிகள் தங்கள் ஆதரவை, பற்றிக் கொண்ட மரக் கிளைகள் முறிந்து விழுந்ததால், தவித்தன. லதா க்ருஹமும், சித்ர க்ருஹமும், நாசமானதில், பெரும் பாம்புகள், விஷமுடைய பாம்புகள், இவையும் அழகிய, சிலாக்ருஹங்கள், தாக்கப் பட்டதில் பல சிலைகள் நாசமாக, அந்த பெரிய நந்தவனம், சற்று நேரத்தில் பரிதாபமாக காட்சியளித்தது. அரசனின் அந்த வனத்தை வேண்டிய அளவு சேதமாக்கிய பின், ஹனுமான், அரசரின் நிம்மதியை போதுமான அளவு போக்கிய திருப்தியுடன் மேலும் சென்றான். பலரும் வருவார்கள், அவர்களுடன் போரிட வசதியாக, தோரணம் கட்டப் பட்டிருந்த ஒரு மாளிகையின் பல காவலர்களை பார்த்துக் கொண்டே வந்து நின்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ப்ரமதா3 வன பஞ்சனம் என்ற நாற்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 42 (381) கிங்கர நிஷூதனம் (கிங்கரர்களை தாக்குதல்)
திடுமென பக்ஷிகளின் ஓலமும், மரங்கள் சட சடவெனெ முறியும் சத்தமும் கேட்க, லங்கா வாசிகள் திடுக்கிட்டு எழுந்தனர். மிருகங்கள் பயந்து அலறின. இங்கும் அங்குமாக ஓடின. ராக்ஷஸர்களும் பல பயங்கர நிமித்தங்களைக் கண்டனர். இரவு முடியும் நேரம். இதோ விடியப் போகிறது என்ற காலை நேரம். ராக்ஷஸிகள் விழித்துக் கொண்டனர். வனம் அலங்கோலமாக, பலவிதமாக கிளைகள் உடைந்து சிதறி கிடப்பதையும், பயங்கரமான பெரிய உருவத்துடன் கபி (வானரம்) நிற்பதையும் கண்டனர். அவர்களைப் பார்த்து மகத்தான ஆற்றலும், பலமும் பொருந்திய ஹனுமான், அவர்களை மேலும் பயந்து அலறச் செய்தபடி, தன் உருவத்தை பெரிதாக்கிக் கொண்டான். பெரியமலை ஒன்று எதிரில் வந்து நிற்பது போன்ற அந்த ப்ரும்மாண்டமான உருவத்தைக் கண்டு ராக்ஷஸிகள் திகைத்தனர். அவர்கள் வானர உருவத்தை வைத்து ஜனகாத்மஜாவை விசாரித்தனர். யார் இவன்? யாருடைய ஆள்? எங்கிருந்து வந்திருக்கிறான்? எதற்காக வந்திருக்கிறான்? எப்படி நீ இவனுடன் பேச்சுக் கொடுத்தாய்? எங்களிடம் சொல், விசாலாக்ஷி. பயப்படாதே. உன்னுடன் இவன் என்ன பேசினான்? சாத்வியான சீதா, பதில் சொன்னாள். ராக்ஷஸர்கள் தான் பெரிய உருவம் உடையவர்கள். அவர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு என்ன தெரியும். பாம்பின் கால் பாம்பறியும். நீங்கள் தான் அதிக சாமர்த்தியம் உடையவர்கள். நானும் இந்த உருவத்தைப் பார்த்து பயந்து போய் இருக்கிறேன். இதுவும் ஒரு ராக்ஷஸன் என்றே நினைக்கிறேன், உங்களைப் போலவே உருவத்தை மாற்றிக் கொள்ள வல்ல ராக்ஷஸனே. வைதேஹி சொன்னதைக் கேட்டு, ராக்ஷஸிகள் நாலா புறமும் ஓடினர். சிலர் ஸ்தம்பித்து நின்றனர். சிலர் ராவணனிடம் சொல்ல வெளியே சென்றனர். ராவணனிடம் போய் ராக்ஷஸிகள், விரூபமாக ஒரு வானரம் வந்துள்ளதை விவரிக்கலானார்கள். ராஜன், அசோக வனத்தின் மத்தியில் மிகப் பெரிய உருவம் உடைய ஒரு வானரம் சீதையுடன் பேசி முடித்து விட்டு நிற்கிறது. பெரிய உருவம் மட்டுமல்ல. ப்ராக்ரமமும் உடையது போல தெரிகிறது. நாங்கள் பல விதமாக கேட்டும், மான் விழியாளான சீதை யார் அந்த வானரம் என்பதை சொல்ல மறுக்கிறாள். வாஸவனுடைய தூதனோ, வைஸ்ரவனுடைய தூதனோ, ராமன் தான் சீதையைத் தேட அனுப்பியிருக்கிறானோ, அத்புதமான ரூபம். அந்த வானரம், உங்களுடைய மனோகரமான ப்ரமதா வனத்தை நாசமாக்கி விட்டது. பலவிதமான மிருகங்களும் கூட்டம் கூட்டமாக ஓடுகின்றன. ஏதோ உத்தேசத்தோடு ஜானகி எங்கு அமர்ந்திருக்கிறாளோ அந்த மரத்தை, இடத்தை மட்டும் எதுவும் செய்யவில்லை. ஜானகியை காப்பாற்றவா, சிரமமா தெரியவில்லை. ஆனால், அதற்கு என்ன சிரமம். அவளைக் காக்கத் தான் அந்த இடத்தில் எதுவும் செய்யாமல் விட்டிருக்கிறான். சிம்சுபா விருக்ஷம், துளிர்களுடன், அழகான புஷ்பங்களுடன் மலர்ந்து காட்சியளிக்கிறது. அது மட்டும் அப்படியே இருக்கிறது. உக்ர ரூபமுடைய அந்த வானரத்துக்கு உக்ரமான தண்டனை அளிக்க வேண்டும். சீதையுடன் பேசிய வனத்தைக் கூட அழித்து விட்டான். ராக்ஷஸ ராஜனே, தங்கள் மனதை கவர்ந்தவள் சீதை. அவளுடன் பேச்சுக் கொடுத்தவன் உயிருடன் மீளக் கூடாது. ராக்ஷஸிகள் விவரித்ததைக் கேட்ட ராக்ஷஸேந்திரன், ஹோமம் செய்த அக்னி போல குபீரென்று கோபம் பொங்க நின்றான். கண்கள் சிவக்க, விளக்கின் திரியிலிருந்து தீப்பொறிகள் தானாக கீழே விழுவதைப் போல கோபாக்னி கண்களிலிருந்து தானாக தெறித்து விழுந்தது. தனக்கு சமமான வீரர்களை, பலசாலியான கிங்கரனை அழைத்தான். கிங்கரன் என்ற அந்த ராக்ஷஸ வீரனை ஹனுமனை அடக்க அனுப்பி வைத்தான். அதே போல் சாகஸம் மிகுந்த கிங்கரனின் வேலையாட்கள், ஆயிரம் பேரை, சூரர்களாக பொறுக்கி எடுத்து உடன் அனுப்பினான். கூடம், உத்கரம் என்ற ஆயுதங்களுடன் ஆயத்தமாக அவர்கள் வந்து சேர்ந்தனர். பெரும் வயிறு படைத்த மகோதரன், நீண்ட பற்கள் (மகா தம்ஷ்டிரா:) கோரம் ரூபம் கொண்ட மகா பலசாலிகள், யுத்தம் செய்யும் உத்தேசத்துடன் ஹனுமானை உயிருடன் பிடிக்க எண்ணி அருகில் வந்தார்கள். தோரண வாயிலில் இருந்த வானரத்தைக் கண்டு, அவன் மேல் படையெடுத்தனர். தானாக நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைப் போல ஆனார்கள். பல விதமான விசித்ரமான க3தை3கள், பரிக4ங்கள், பொன் வேலைப்பாடமைந்த ஆயுதங்கள் இவற்றைக் கொண்டு ஹனுமானை அடித்தனர். ஆதித்யன் போன்ற சரங்களாலும் அடித்தனர். முத்3க3ரங்கள், பட்டசங்கள், சூலங்கள், ப்ராஸ, தோமரங்கள், இவற்றைக் கொண்டு ஹனுமானை தடுத்து நிறுத்தி, முன்னேறினர். பர்வதம் போன்று வளர்ந்து நின்ற மான், ஹனுமானும் தன் வால் பூமியைத் தொட நின்று கொண்டு, பெரும் கோஷம் செய்தான். லங்கையில், தன் சப்தமே எதிரொலிக்கும்படி பெருங்குரலில், தோள் தட்டியபடி, அறை கூவல் விட்டான். அந்த சப்தத்தில் பறந்து கொண்டிருந்த பறவைகள் கீழே விழுந்தன. ஜயதி ராஜா சுக்ரீவ:- சுக்ரீவ அரசனுக்கு வெற்றி. ராகவனால் பாலிக்கப் பட்ட சுக்ரீவனுக்கு ஜெயம் உண்டாகட்டும். கோஸலேந்திரன் தாஸன் நான். தெளிவான சிந்தனையும் செயலும் உடைய ராமனின் தாஸன் நான். ஹனுமான் என்ற பெயருடைய வாயு புத்திரன். சத்ரு சைன்யத்தை வேரோடு அழிப்பேன். ராவணன் போல பலம் கொண்ட ஆயிரம் ராக்ஷஸர்களை நான் போரில் எதிர் கொள்வேன். என் கையில் பாறைகளே ஆயுதங்களாகும். மரக்கிளைகளைக் கொண்டு அடிப்பேன். ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் இவைதான் என்னிடம் உள்ளவை. லங்கையை தாக்கி, மைதிலியை வணங்கி என் காரியம் நிறைவேறிய திருப்தியோடு திரும்பிச் செல்வேன். ராக்ஷஸர்கள் நீங்கள் அனைவரும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நிற்கையிலேயே, இவைகளைச் செய்வேன். இப்படி உரத்த குரலில் முழக்கமிடும் ஹனுமானின் முன் வந்த ராக்ஷஸர்கள் பயத்தால் திகைத்து நின்றனர். சந்தியா கால மேகம் போல ஓங்கி வளர்ந்து நின்ற ஹனுமானை கண் கொட்டாமல் பார்த்தனர். தங்கள் எஜமானனின் கட்டளையை நினைவு படுத்திக் கொண்டு, பலவிதமான ஆயுதங்கள் கொண்டு தாக்கலாயினர். நாலாபுறமும் இப்படி ராக்ஷஸர்கள் சூழ்ந்து நிற்கவும், ஹனுமான் இரும்பு கட்டையை, தோரண வாயிலில் முகப்பில் இருந்ததை, கையில் எடுத்துக் கொண்டான். (தாழ்ப்பாள் போல தடுப்புக்கு உபயோகிக்கும் கட்டை) அதைக் கொண்டு நிசாசரர்களை அடிக்க ஆரம்பித்தான். வினதா சுதன் (கருடன்) பன்னகம் எனும் நாகத்தை கவ்விக் கொண்டு நிற்பதைப் போல அந்த பரிகத்தை கையில் வைத்துக் கொண்டு நின்றான். அந்த உயரத்தில் நடமாடியபடி தன்னை தாக்க வந்தவர்களை வீழ்த்தினான். கிங்கர வீரர்களும் சளைக்கவிலை. அவர்களும் போர் புரிய ஆவலுடையவர்கள். கிங்கர வீரர்களை அடித்து தள்ளி விட்டு திரும்ப தோரண வாயிலில் வந்து அமர்ந்தான். ஒரு சில கிங்கர வீரர்கள், பயத்தால் அவனுடன் மோதுவதைத் தவிர்த்து, ராவணனனிடம் விவரம் சொல்லச் சென்றார்கள். ராக்ஷஸர்க ளின் பெரும் படையில் பெரும்பாலோர் பின் வாங்கி விட்டனர். பலர் காயம் அடைந்தனர் என்று கேள்விப் பட்டு, தோல்வியே அறியாத ராவணன், ப்ரஹஸ்த புத்திரனை அனுப்பினான். பராக்ரமத்தில் தனக்கு நிகர் இல்லாதவன், நேர் நின்று யுத்தம் புரிய கடினமானவன் இந்த ப்ரஹஸ்த புத்திரன்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் கிங்கர நிஷூதனம் என்ற நாற்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 43 (382) சைத்ய ப்ராஸாத3 தா3ஹ: (சைத்ய ப்ரஸாதம் என்ற மாளிகையை எரித்தல்)
கிங்கரர்களை அடித்து வீழ்த்திய பின், ஹனுமான் சற்று யோசிக்கலானான். வனத்தை அழித்தாகி விட்டது. சைத்ய ப்ராஸாதம், இன்னமும் முழுமையாக நிற்கிறது. இதையும் சேதப் படுத்துகிறேன். இப்படி மனதில் தீர்மானித்துக் கொண்டு, தாவி குதித்து மடத்தின் மேல் ஏறினான். உயர்ந்த அந்த கட்டிடத்தின் மேல் ஏறினான். அந்த உயரமான மண்டபத்தின் மேல், உதய சூரியன் போல நின்ற ஹனுமான் அதை கால்களால் மிதித்து சேதப் படுத்தி விட்டு உரக்க கோஷம் இட்டான். அந்த கோஷம் லங்கா நகரம் முழுவதும் எதிரொலித்தது. காதை பிளக்கும் அவனது தோள் தட்டி கூவிய கூவலில், அந்த ஒலியின் வேகம் தாங்காமல், மண்டபத்தை காவல் காத்து நின்ற வீரர்களே கீழே விழுந்தனர். பறவைகள் பறந்து கொண்டிருந்த நிலையில் இந்த ஓசையைக் கேட்டு, நடுங்கி விழுந்தன. அஸ்திரங்களை அறிந்த ராமனுக்கு ஜயம். மகா பலசாலியான லக்ஷ்மணனுக்கு ஜயம். சுக்ரீவ ராஜாவுக்கு ஜயம். ராகவனால் பாலிக்கப் பட்ட சுக்ரீவனுக்கு வெற்றி உண்டாகட்டும். நான் கோஸலேந்திரனான ராமனின் தூதன், ராமதாஸன். சொல்லும், செயலும் தெளிவாக உள்ள ராமனின் தாஸன். மாருதாத்மஜனான ஹனுமான். சத்ரு சைன்யங்களை அடியோடு அழிப்பவன். ஆயிரக் கணக்கான ராவணர்கள் எனக்கு எதிரில் நிற்க முடியாது. பாறைகளூம், மரக் கிளைகளுமே என் ஆயுதம். இவற்றை வைத்துக் கொண்டே நான் பகைவர்களை வீழ்த்துவேன். லங்கையை நாசம் செய்வேன். மைதிலியை வணங்கி விட்டு வந்த காரியம் நிறைவேறியவனாக நான் திரும்பிச் செல்வேன். உங்கள் கண் முன்னாலேயே இதோ நான் செய்து காட்டுவேன். என்று இவ்வாறு பெரும் குரலில் கோஷமிட்டதைக் கேட்டு அந்த சைத்ய ப்ராஸாதம் என்ற அந்த மண்டபத்தைச் சுற்றி இருந்த காவல் வீரர்கள் நூறு பேர் ஓடி வந்தார்கள். பல விதமான அஸ்திரங்கள், ப்ராஸங்கள் வாட்கள், பரஸ்வதம் என்ற ஆயுதம் இவற்றுடன் பெரிய உருவத்தினர், மாருதியைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். க3தை4 முதலிய மற்ற ஆயுதங்களையும் கொண்டு மாருதியை தாக்கலாயினர். பாணங்களும் ஆதித்யனுக்கு சமமாக வந்து விழுந்தன. கங்கை நதியில் நடு நடுவே தோன்றும் சுழிகள் போல ஆயுதங்கள் ஹனுமனை வளைத்துக் கொண்டன. வானர வீரனை மறைத்து பாணங்களும் ஆயுதங்களும் அவன் மேல் விழுந்தன. இதன் பின் வாதாத்மஜன் தன் உடலை பெருக்கிக் கொள்ள முனைந்தான். பீம ரூபம், பயங்கரமான பெரிய உருவமாக வெளி வந்தான். பாணங்களும் ஆயுதங்களும் கீழே விழுந்தன. அந்த மண்டபத்தின் பெரிய ஸ்தம்பத்தை உடைத்துக் கொண்டு ஹனுமான் வெளி வந்தான். பொன்னாலான அந்த தூணையே கையில் சுழற்றி நூறு விதமாக அடித்தான். இதில் அக்னி தோன்றி, அந்த மண்டபத்தையே எரிக்கலாயிற்று. வானர வீரன், திடுமென தான் நிற்கும் மண்டபமே எரிவதைக் கண்டு, நூற்றுக் கணக்காக சூழ்ந்து நின்ற ராக்ஷஸ வீரர்களை அடித்து தள்ளிக் கொண்டு அந்தரிக்ஷத்தில் நின்றபடி அவர்களைப் பார்த்து எக்காளமிட்டுச் சொன்னான். என்னைப் போலவே பல ஆயிரம் பேர்கள் இந்த வேலையில் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். சுக்ரீவனின் வசம் உள்ள பலசாலிகளான வானரர்கள், பூமி முழுவதும் அலசி தேடும் முயற்சியில் அலைகிறார்கள். சிலர் பத்து யானை பலம் கொண்டவர்கள். சிலர் பத்து மடங்கு அதை விட பலம் உடையவர்கள். சிலர் ஆயிரம் யானை பலம், அதற்கு சமமான விக்ரமமும் உடையவர்கள். சிலர் வாயுவுக்கு சமமான வேகமும் பலமும் கொண்டவர்கள். சிலர் அமானுஷ்யமான பலம் கொண்டவர்கள். தங்கள் பற்களும், நகமுமே ஆயுதமாக இவர்கள் சுக்ரீவ ராஜாவைச் சுற்றி நிற்கின்றனர். கோடிக் கணக்காக, அதற்கும் மேலாக, பத்து கோடி, இருபது கோடி வானர வீரர்கள் வருவார்கள். இந்த லங்கையும் இருக்க போவதில்லை, நீங்களும் இருக்கப் போவதில்லை. உங்கள் அரசன் ராவணனும் இருக்கப் போவதில்லை. அப்படி ஒரு வைரம், இக்ஷ்வாகு நந்தனன் ராவணனிடம் கொண்டிருக்கிறான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சைத்ய ப்ராஸாத3 தா3ஹோ என்ற நாற்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 44 (383) ஜம்பு3 மாலி வத4: (ஜம்பு மாலியின் வதம்)
ப்ரஹஸ்த புத்திரனான ஜம்பு மாலியும் நல்ல வீரன். ராக்ஷஸேந்திரனின் கட்டளைப்படி கையில் வில்லேந்தி புறப்பட்டான். பெரிய பற்களை உடையவன். சிவந்த ஆடையணிந்து, மாலைகளையும் அணிந்து, அழகிய குண்டலங்கள் இவற்றுடன் புறப்பட்டான். அகன்ற கண்களும், சண்டன், சமர துர்ஜயன்- போரில் எளிதில் தோல்வி அடையாதவன் என்றும் புகழ் பெற்றவன். இந்திரனுடைய வில்லுக்கு சமமான தன் வில்லையும், சக்தி வாய்ந்த அம்புகளையும் எடுத்துக் கொண்டான். அவைகளை வேகமாக சுழற்றிக் கொண்டு வஜ்ரம், அசனி போல சக்தியுடைய ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு வந்தான். வில்லின் நாணை நிமிண்டி ஓசையெழுப்பி, தானும் தோள் தட்டியபடி போருக்கு அழைத்தான். அந்த அறை கூவல் நாலா திசைகளிலும் கேட்டது. கோவேறு கழுதைகள் பூட்டிய ரதத்தில் வந்த அவனை வாயு புத்திரன் கூர்ந்து கவனித்தான். தானும் அதே போல பெருங்குரலில் ஓங்கி உரத்து கோஷம் இட்டான். தோரணக் கட்டையில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து ராக்ஷஸன், பல விதமாக சரங்களை அடுத்தடுத்து பிரயோகித்து காயம் அடையச் செய்தான். முகத்தில் அர்த்த சந்திரன், தலையில் ஒன்று, கர்ணி என்ற ஆயுதத்தால் புஜங்களில் காயம் அடையச் செய்தான். பத்து நாராசங்களால் கபீஸ்வரனை அடித்து காயப் படுத்தினான். சரங்களால் அடிபட்டு முகம் தாம்ர வர்ணமாக ஹனுமான் சரத் காலத்தில் மலர்ந்த தாமரை, பாஸ்கரனின் கிரணங்களால் அடி பட்டது போல காணப்பட்டான். ஆகாயத்தில் மகா பத்மம், சந்தன அபிஷேகம் செய்விக்கப் பட்டது போல இருந்தான். ராக்ஷஸனின் பா3ணம் மேலே பட்டதால் அதிக கோபம் கொண்டான். அருகில் இருந்த மிகப் பெரிய பாறையை கையில் எடுத்துக் கொண்டான். அதை வேகமாக எடுத்து வீசினான். அதை தன் மேல் படாதவாறு பத்து சரங்களால் தடுத்து விட்டான். தன் இலக்கு பயன் அளிக்காததைக் கண்டு ஹனுமான் ஒரு பெரிய சால மரக் கிளையை எடுத்து சுழற்றினான். சுழலும் அந்த மரக் கிளையை நோக்கி ஜம்புமாலி பல பாணங்களை பிரயோகித்தான். சால மரம் நான்காக சிதறியது. ஐந்து பாணங்கள் புஜத்திலும், தலையில் ஒன்றும் பத்து ஸ்தனங்களிலும், ஹனுமான் உடலிலும் பட்டன. உடல் முழுவதும் சரங்கள் கோத்து நிற்க, ஹனுமான் திரும்பவும் பழைய பரிக4த்தையே எடுத்துக் கொண்டு சுழற்றி வீசினான். மகா வேகத்துடன் வீசப் பட்ட அந்த இரும்பு கட்டை ஜம்பு மாலியின் அகன்ற மார்பில் விழுந்தது. அந்த வேகத்தில் அவன் தலை எங்கே? புஜங்கள் எங்கே? முழங்கால்கள் எங்கு போயின? கையிலிருந்த தனுஷ் என்னவாயிற்று? ரதம் எங்கே? குதிரைகள் , அம்புகள், மற்ற ஆயுதங்கள் எங்கே போயின? எதுவுமே தெரியவில்லை. அந்த வேகத்தில் ஜம்பு3மாலி சிதறி சுக்கு நூறானான். பூமியில் விழுந்தவை அவனது பூஷணங்களும், துண்டு துண்டான உடல் பாகங்களுமே. ஜம்பு3மாலியும் மாண்டான். மகா பலசாலிகள் என்று பெயர் பெற்ற கிங்கரர்களும் மாண்டனர். என்ற செய்தி கேட்டு ராவணனனின் கோபம் பன் மடங்காயிற்று. ஆத்திரம் அடங்கவில்லை. அந்த ஆத்திரம் கண்களை மறைக்க, ப்ரஹஸ்த புத்திரன் மாண்ட செய்தியைக் கேட்ட பின்னும், அமாத்ய புத்திரர்களை அனுப்பத் துணிந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஜம்பு3 மாலி வதம் என்ற நாற்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 45 (384) அமாத்ய புத்ர வத4: (மந்திரி புத்திரர்கள் வதம்)
மந்திரிகளின் புத்திரர்கள், ராக்ஷஸேந்திரனின் கட்டளைப் படி, அந்த பவனத்திலிருந்து வெளியேறினர். ஏழு பேர் ஏழு கிரணங்கள் போல தேஜஸுடன் கிளம்பினர். தங்கத்தால் இழைத்துச் செய்யப் பட்ட கொடிகள், கொடிக் கம்புகள், இவற்றுடன் மேகம் இடி இடிப்பது போல கர்ஜித்துக் கொண்டு, குதிரைகள் பூட்டிய மகா ரதங்களில் சென்றனர். அவர்களுடைய வில், புடமிட்ட தங்கத்தால் அலங்காரமாக வேலைப் பாடுகள் செய்யப் பட்டு பள பளத்தது. நீருண்ட மேகம் போல களிப்புடன் புஜங்களைத் தட்டி ஆரவாரித்துக் கொண்டு கிளம்பினர். இவர்களின் தாய்மார்கள், கிங்கரர்கள் இறந்த செய்தியை அறிந்து இருந்ததால், வேதனையில் மூழ்கினார்கள். அவர்களின் நெருங்கிய பந்துக்களும், நண்பர்களும் கூட கவலைப் பட்டனர். இந்த அமாத்ய புத்திரர்கள் தங்கள் ஆபரணங்களை போட்டி போட்டுக் கொண்டு அணிந்து கொண்டு, தோரண வாயிலில் அமர்ந்திருந்த ஹனுமானை வந்தடைந்தனர். ரதத்தின் ஓசையும் சேர, பல பாணங்களை இடை விடாது வர்ஷித்தனர். மழையை பொழியும் மேகங்களைப் போலவே, அந்த அமாத்ய குமாரர்கள் விளங்கினர். அந்த சர மழையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஹனுமான், மலையின் சிகரம், மேகம் சூழ நிற்பது போல நின்றான். வேகமாக செல்லக் கூடிய ஹனுமான், அந்த பாண மழையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ரத வேகத்தையும் அனுமானம் செய்து கொண்டு, ஆகாயத்தில் தாவி ஏறினான். இந்த வில் வீரர்களிடம் சற்று நேரம் விளையாடியபடி, பொழுதைக் கழித்தவன், மாருதனான தேவன் ஆகாயத்தில் மேகக் கூட்டங்களோடு விளையாடுவது போல விளையாடினான். அந்த பெரும் படையை பயமுறுத்துவது போல ஹனுமான் பெரும் குரலில் கோஷமிட்டு வேகமாக சஞ்சரித்தான். கைத் தலத்தால் சிலரை அடித்தான். கால்களால் சிலரை உதைத்தான். முஷ்டியால் சிலரை அறைந்தான். சிலரை நகத்தால் கீறி துன்புறுத்தினான். உடலோடு உரசி, மார்போடு மார்பாக, சிலரை முட்டித் தள் ளினான். தன் கால் துடைகளால் சிலரை முட்டினான். அவனின் உரத்த கூச்சலைக் கேட்டே பலர் விழுந்தனர். சிலர், இப்படி அடி படாமல் தப்பி ஓடினால் போதும் என்று ஓடினர். யானைகள் பரிதாபமாக அலறின. குதிரைகள் தரையில் விழுந்தன. த்வஜ ஸ்தம்பங்கள், உடைந்து விழுந்து குடைகளும், சாமரங்களும் இரைந்து கிடந்தன. ரதம் உடைந்த துண்டுகளும், சிதறிக் கிடந்தன. பெருகும் ரத்தத்துடன் வழியில் பல ராக்ஷஸர்கள் கிடந்தனர். இவர்களின் பரிதாபமான அழுகைக் குரல் லங்கையில் நிறைந்தது. இவ்வாறு தன்னைத் தாக்க வந்த பெரும் வீரர்களான ராக்ஷஸர்களை அடித்து வீழ்த்தி விட்டு அதே தோரண வாயிலில் அமர்ந்தான், வாயு சுதன்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் அமாத்யபுத்ர வதோ என்ற நாற்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 46 (385) சேனாபதி பஞ்சக வத4: (சேனாபதியை வதைத்தல்)
மந்திரி குமாரர்கள் மாண்ட செய்தி ராவணனுக்கு எட்டியது. சற்று யோசித்து விரூபாக்ஷ, யூபாக்ஷ, துர்த4ரன், ப்ரக4ஸன், பா4ஸ கர்ணன் என்று ஐந்து முக்யமான படைதலைவர்களை அழைத்து, சேனாதிபதிகளே, நீங்கள் செல்லுங்கள். குதிரைகள் பூட்டிய ரதங்கள், யானைப் படை, இவற்றுடன் சென்று அந்த வானரத்தை (கபியை) அடக்குங்கள் என்றான். நியாயம் அறிந்தவர்கள், அஸ்திர சஸ்திரங்களையும் அறிந்தவர்கள், இவர்கள். ஹனுமானை பிடிக்க இவர்களும் சற்று கவலையுடன் ஆவலாகவே இருந்தனர். எந்த விதமாக செயல் பட்டால் காரியம் நிறைவேறுமோ, அந்த விதமாக யோசித்து வனாலயம் (அசோகவனம்) சென்று தேச காலங்களை அனுசரித்து காரியத்தை முடித்துக் கொண்டு வாருங்கள். இந்த கபி (வானரம்) சாமான்யமான வானரம் அல்ல என்று நினைக்கிறேன். அதன் செயல்கள் அப்படி இருக்கின்றன. எப்படியும் அந்த பூதாகாரமான வானரத்தை ஏராளமாக பலம் கொண்ட ஜந்துவை பிடித்து தான் ஆக வேண்டும். இந்திரன் தான் நம்மை அழிக்க தவ வலிமையால் ஸ்ருஷ்டி செய்திருக்கிறானோ. நாகர்கள், யக்ஷ, கந்தர்வர்கள், தேவ, அசுர, மகரிஷிகள் இவர்களை, உங்கள் உதவியுடன் நான் போர் தொடுத்து மடியச் செய்திருக்கிறேன். அவர்கள் நமக்கு ஏதாவது இடையூறு செய்யவே விழைவார்கள். அதனால் யோசிக்கவே வேண்டாம். எப்படியாவது, அமுக்கி பிடித்து உயிருடன் பிடித்து விடுங்கள். சாதாரண கபி தானே என்று நீங்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். இதற்கு முன்னும் நான் பலசாலிகளான வானர வீரர்களைக் கண்டிருக்கிறேன். வாலி, சுக்3ரீவன், ஜாம்ப3வான் இவர்களை அறிவேன். இவர்களும் மகா பலசாலிகளே. நீலன், சேனாபதி, த்3விவிதன் போன்ற வானர வீரர்களை அறிவேன். ஆனால் இவர்களுக்கு இவ்வளவு வேகமும், ஆற்றலும் கிடையாது. இது போல புத்தியோ, பலமோ, உற்சாகமோ, ரூபமோ கிடையாது. ஏதோ ஒரு பெரிய ஜீவன், வானர ரூபத்தில் இங்கு வந்திருக்கிறது. தேவையானால் மிகுந்த பிரயாசையுடன் இதை அடக்குங்கள். நிச்சயம் மூவுலகும், இந்திரனோ, தேவர்கள், அசுரர்களோ, மனிதர்களோ, உங்கள் எதிரில் நின்று போரிட சக்தியற்றவர்களே. ஆனாலும் தற்சமயம் நிலைமையை அனுசரித்து, நமக்கு ஜெயம் வேண்டும் என்பதால், நயமாக யோசித்து செயல் படுங்கள். எப்படியும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். போரில் வெற்றி என்பது சஞ்சலமானதே. நல்ல தேஜஸும் செயல் வீரர்களுமான அவர்கள், தங்கள் எஜமானனின் கட்டளையை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். அக்னியின் ஜ்வாலை போன்ற வேகத்துடன் எழுந்து கொண்டார்கள். ரதங்களிலும், மதம் கொண்ட யானைகள் படையும், வேகமாக செல்லும் குதிரைகளிலும், பலவித சஸ்திரங்களாலும், பலவிதமாக பயிற்சி செய்து தயாராக இருந்த படை வீரர்களுடன் சென்று மகா கபியான ஹனுமானைக் கண்டனர். கிரணங்களுடன் கூடிய சூரியன் உதிக்கத் தயாராக இருப்பது போல தன் தேஜஸே ஒளிக் கிரணங்களாக தன்னை சூழ்ந்திருக்க, தோரண வாயிலில் அமர்ந்தவனை, மகா உத்சாகத்துடன், யுத்தம் செய்யத் தயாராக பலமும், வேகமும் கூடியிருக்க, நல்ல மதியும், பெரிய உருவமும், அகன்ற புஜங்களுமாக இருக்கக் கண்டனர். அவனைக் கண்டதுமே, வந்தவர்கள் எல்லா திக்குகளிலும், நின்று கொண்டனர். தங்கள் தங்கள் ஆயுதங்களை கையில் எடுத்துக் கொண்டு மெதுவாக முன்னேறினர். து3ர்த4ரன் வீசிய அம்புகள் வானரத்தின் தலையில் விழுந்தன. ஐந்து இரும்பாலான, கூர்மையான ஆயுதங்கள் ஏக காலத்தில் வந்து விழுந்தன. வலி தாங்க முடியாமல் அலறிக் கொண்டு வானரன் எகிறி குதித்தான். அந்த அலறல் பத்து திக்குகளிலும் எதிரொலித்தது. இதன் பின் து3ர்த4ரன் ரதத்தில் இருந்தபடி தயாராக இருந்த வில், அம்புகளுடன், ஹனுமானின் பேரில் நூற்றுக் கணக்கான அம்புகளை வர்ஷிக்க ஆரம்பித்தான். ஆகாயத்தில் நின்றபடி அவை தன் பேல் படாதவாறு ஹனுமான் தடுத்து நிறுத்தி, மழைக் கால முடிவில் மேகத்தை காற்று தடுத்து நிறுத்துவது போல நிறுத்தினாலும், அம்புகள் மேலே பட்டதால் வலியால் துடித்தான். தன் உருவத்தை மேலும் வளர்த்திக் கொண்டு கோஷம் இட்டான். வெகு தூரத்திலிருந்து தாவி துர்தரனுடைய ரதத்திலேயே குதித்தான். மின்னல் கூட்டமாக மலையுச்சியில் இறங்கியது போல இருந்தது. எட்டு குதிரைகள் பூட்டிய அந்த ரதத்தை கால்களால் மிதித்து துவைத்து, அச்சு முறிந்து ரதம் உடைந்து விழ, துர்தரனும் உயிரின்றி பூமியில் விழுந்தான். கீழே விழுந்தவனை, விரூபாக்ஷ, யூபாக்ஷர்கள், கண்டனர். இதனால் உண்டான ரோஷத்துடன், தாங்க முடியாத பலத்தை காட்டியபடி சண்டைக்கு வந்தனர். அவர்கள் இருவரையுமே அலாக்காக தூக்கியபடி ஆகாயத்தில் எகிறி நின்று, அந்த நிலையிலும் கையில் இருந்த முத்கரத்தால் இருவரும் தன் மார்பில் அடித்ததையும் பொருட்படுத்தாமல், திரும்ப வேகமாக அடித்தபடி, பூமியில் தானும் விழுந்தான். பின், ஒரு சால விருக்ஷத்தை எடுத்து இருவரையும் விடாமல் அடித்துக் கொன்றான். மூவரும் இறந்து பட்டதை அறிந்து ப்ரகஸன், வானரத்தை நெருங்கி வந்தான். பாஸ கர்ணனும் சூலத்தை எடுத்துக் கொண்டு அருகில் வந்தான். தனியாக இருந்த வானர வீரனை கூர்மையான நுனியுடைய பட்டஸம் என்ற ஆயுதத்தால் ப்ரகஸன் குத்தினான். மறு பக்கம் பாஸ கர்ணனும் சூலத்தால் அடித்தான், இரு பக்கமும் குத்தியதால் ரத்தம் பெருகலாயிற்று. மயிர்க் கால்கள் நனைந்து விட்டது. பால சூரியன் போல, மலையின் சிகரம் ஒன்றை பிடுங்கி கையில் எடுத்துக் கொண்டு, அதில் இருந்த மிருகங்கள், மரங்கள் உட்பட, ஓங்கி இருவரையும் அடித்தான். ஐந்து சேனாபதிகளும் மாண்டனர். அவர்களுடன் வந்த படை வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. அதையும் ஒருவர் மீதியில்லாமல் அழித்தான். குதிரைகளோடு குதிரை படை வீரர்கள், யானைகளுடன் யானைப் படை வீரர்கள், படை வீரர்களோடு படை வீரர்கள் ரதங்களோடு அதில் இருந்தவர்கள் என்று அந்த கபி நாசம் செய்தான். ஸஹஸ்ராக்ஷன் அசுரர்களை நாசம் செய்தது போல வழியை அடைத்துக் கொண்டு ராக்ஷஸர்களின் உடல்களூம், யானை குதிரைகளும், உடைந்த ரதங்களுமாக ரண பூமி பயங்கரமாக காட்சிய ளித்தது. தன்னை தாக்க வந்தவர்களை அடித்து விரட்டி விட்டு, அந்த வானர வீரன், திரும்பவும் தோரண வாயிலில் சென்று அமர்ந்து கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர எண்டத்தில் சேனாபதி பஞ்சக வதோ4 என்ற நாற்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 47 (386) அக்ஷ குமார வத4: (அக்ஷ குமாரனை வதம் செய்தல்)
ஐந்து சேனாபதிகளையும் ஹனுமான், உடன் வந்த வீரர்களுடன், வாகனங்களுடன் சேர்த்து அழித்து விட்டான் என்ற செய்தி ராவணனுக்கு தெரிவிக்கப் பட்டது. அதே சமயம் தானும் யுத்த களம் போகும் ஆவலுடன் அக்ஷ குமாரன் எதிரில் வந்தான். அவனைக் கண்டதும் ராவணன் மனதில் அவனையே அனுப்பும் எண்ணம் வந்தது. அக்ஷகுமாரனும் தந்தையின் கண்களில் இந்த குறிப்பை படித்து விட்டவன் போல குதித்து எழுந்தான். ப்ராம்மணர்கள் அக்னியில் ஹவிஸை போட்டவுடன் அக்னி ஜ்வாலை பொங்கி எழுவது போல எழுந்தான். அழகிய ரதம் ஏற்பாடாயிற்று. இளம் சூரியன் போலவும், புடமிட்ட தங்கம் போலவும் இருந்த அந்த ரதத்தில் ஏறி வானர வீரன் இருக்கும் இடத்தை நோக்கிச் செலுத்தினான். பலகாலம் தவம் செய்து தானே சுயமாக சம்பாதித்து சேர்த்தது, ரத்னங்கள் இழைத்து பொன்னால் செய்யப்பட்ட த்வஜ ஸ்தம்பமும், கொடியும் உடையதுமான மனோ வேகத்தில் செல்லக் கூடிய எட்டு குதிரைகள் பூட்டியதும், சுராசுரர்களும் பெருமை கொள்ளும்படியானதும், தனியாகவே செல்லக் கூடியதும், ரவிக்கு (சூரியனுக்கு) இணையான பிரகாசமும், ஆகாயத்தில் செல்லும் சிறப்புடையதுமான, கச்சிதமாக அமைக்கப் பட்டிருந்ததும், தூணம், அஷ்டாசி இவைகள் வசதியான இடத்தில் பொருத்தப் பட்டதும், நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்த சக்திகளும், தோமரங்களூம், (ஆயுதங்கள்), நிறைவான பொருட்கள் பொருத்தமான இடங்களில் அமைந்திருக்க, பொன் வர்ணத்தில் சந்திர சூரியர்கள் பிரகாசத்தை தந்தது போலவும், திவாகரன் போலவும் இருந்த ரதத்தில் ஏறி, அமரர்களுக்கு இணையான விக்ரமத்துடன் குமாரன் கிளம்பினான். குதிரை, யானை, மகா ரதம் இவைகளின் ஒளியால் ஆகாயத்தையும், மலைகள் நிறைந்த பூமியையும் அதிரச் செய்த படி வந்தான். உடன் வந்த படை வீரர்களும் அதிக பக்ஷ ஆயுதபாணிகளாக வர, தோரண வாயிலில் அமர்ந்திருந்த கபியை (ஹனுமானை) சந்தித்தான். சமர்த்தனான ஹனுமானை யுக முடிவில் காலாக்னி போல, ப்ரஜைகளின் எண்ணிக்கை குறையவே வந்திருக்கிறானோ, என்பது போல ஆச்சர்யத்துடன் நோக்கினான். அமர்ந்த நிலையில் கண்டதிலேயே பர பரப்பு அடைந்தான். கௌரவமாக, அவனும் வீரனே என்று ஏற்றுக் கொண்டது போல இருந்தது குமாரனின் முக பாவம். ராவணன் மகன் இதுவரை ஒற்றர்கள் மூலம் கேட்டது உண்மையாக இருக்கக் கண்டான். ஹனுமானை ஒற்றர்கள் நல்ல வீரன், பராக்ரமம் உடையவன் என்று கணித்திருந்தனர். தற்சமயம் நேருக்கு நேர் நிற்கையில், தங்கள் இருவருடைய பலம், வேகம் இவற்றை மனதினுள் ஒப்பிட்டுக் கொண்டான், அக்ஷ குமாரன். தானும், தன் உருவத்தை அதிகரித்துக் கொண்டான், கூடவே பலமும் அதிகமாயிற்று. யுக முடிவில் சூரியன் போல நின்றான். யுத்தம் செய்வதில் விருப்பம் உள்ளவனேயானாலும், தன்னை அடக்கிக் கொண்டு, தீர்மானமாக திட்டமிட்டுக் கொண்டு, ஹனுமானை யுத்தம் செய்ய அழைக்கும் விதமாக மூன்று கூர்மையான பாணங்களை தொடுத்து விட்டான். ஹனுமானும் அவனை கூர்ந்து கவனித்தான். கர்வம் முகத்தில் தெரிந்தது. சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டிருக்கிறான். சத்ருவை அடக்கியே ஆக வேண்டும் என்ற உறுதி தெரிந்தது. கையில் வில்லும், வில்லின் நாணில் பூட்டிய அம்புமாக தயாராக நின்ற அக்ஷ குமாரன், திடமான மனதுடன், குண்டலங்கள் அசைய, பொன்னும் மணிகளும் ஆபரணங்களும் பளிச்சிட, ஹனுமானைத் தாக்க முன்னேறினான். அவ்விருவருக்கும் இடையில் நடந்த போர் அத்புதமாக இருந்தது. சுராசுரர்களும் பர பரப்புடன் கவனிக்கலாயினர். பூமி ஸ்தம்பித்து நின்றது. சூரியன் தகிக்கவில்லை. வாயு சஞ்சரிக்கவில்லை. மலைகள் அசைந்து நடுங்குவது போல இருந்தன. கபியும், அக்ஷ குமாரனும் போரிட்ட சமயம் ஆகாயமே எதிரொலித்தது. சமுத்திரம் அடங்கி அமைதியாக இருந்தது. விஷம் கொண்ட பற்களையுடைய நாகம் போன்ற அம்புகள், கூர்மையாக இலை வடிவத்தில் அமைந்தவை, பொன் வேலைப்பாடமைந்த ஆயுதங்கள், இப்படி மூன்று சரங்களை கபியின் தலையில் படுவது போல அடித்தான். மூன்றும் சம காலத்தில் தாக்கியதால், ரத்தம் பெருக, வேதனையுடன் கண்களில் பட்டதால் வேதனை அதிகமாக, சிவந்த நிறமும், அப்பொழுது தான் உதித்த சூரியனின் நிறத்தில் ஹனுமான் காணப்பட்டான். சுக்ரீவனின் மந்திரியான ஹனுமான், ராவண ராஜாவின் மகனான அக்ஷ குமாரனை போரில் நேருக்கு நேர் சந்தித்து, அவனுக்கு சமமான எதிரியாக தன்னை நிரூபித்துக் கொண்டான். ஒளிக் கிரணங்களுடன் மந்தர மலையில் இறங்கி விட்ட சூரியன் போல, தன் சிவந்த கண்களாலேயே குமாரனான அக்ஷனை அவன் படை பலம், வாகனம் இவற்றோடு, எரித்து விடுபவன் போல பார்த்தான். குமாரனோ, யுத்தத்தில் ராக்ஷஸ மேகம் வர்ஷிப்பது போல தன் விசித்ரமான வில் அம்புகளுடன் சர மழை பொழிந்தான். உயர்ந்த மலையின் மேல் மேகம் நீரை பொழிவது போல அவை ஹனுமானின் மேல் விழுந்தன. பா3லன், குழந்தைத் தனமாக தன் வீர்யத்தில் கர்வம் கொண்டு, நிமிர்ந்து நிற்கிறான். வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் ரத்தச் சிவப்பான கண்களுடன் யானை, புல் மூடிய பெரிய கிணற்றில் காலை வைப்பது போல, ஹனுமானுடன் மோத வந்திருக்கிறான். ஹனுமானும் இதை தெரிந்து கொண்டவனாக, ரண சண்டனாக போர் புரிய ஆவலுடன் வந்து நின்றபவனை ஊன்றி கவனித்து தன்னம்பிக்கையுடன் கோஷமிட்டான். அவன் பாணங்கள் மேலே வந்து விழுந்த பொழுதும் எதுவும் பதில் கொடுக்காமல், தான் வாயால் கோஷமிட்டுக் கொண்டு, இடி இடிப்பது போல எக்காளமிட்ட படி இருந்தான். தன் புஜங்களையும், கால்களையும் அகல பரப்பியபடி பயமுறுத்தும் தோற்றத்துடன் ஆகாயத்தில் எம்பி குதித்து, கீழ் நோக்கி அக்ஷ குமாரனைப் பார்த்து இளம் வயதில் துடிப்பாக இருந்த வாலிபனை மதிப்புடன் பார்த்து தனக்குள் யோசிக்கலானான். வானில் நின்ற வானரத்தை ரதத்தில் இருந்தபடி நோக்கிய ராக்ஷஸ குமாரன் மலை மேல் மேகம் பொழிவது போல சரமாரியாக பொழிந்தான். வாயு மார்கத்தில் நின்ற ஹனுமான் அவை தன் மேல் படாதபடி விலக்கியபடி குமாரனிடம் தோன்றிய பச்சாதாபத்தால், பதிலடி கொடுக்க தாமதித்தான். புஜங்களில் அம்பு தைத்த இடத்திலிருந்து ரத்தம் பெருகியது. இளம் சூரியன் போல பிரகாசமாக இருக்கிறான் இந்த சிறுவன். அரிய செயலைச் செய்கிறான். இவனை அழிக்கவும் என் மனம் ஒப்பவில்லை. மா வீரன் இவன், மகாத்மா. தன்னடக்கமும், பொறுமையும், யுத்த அறிவும் உள்ளவன். நிச்சயம் இவன் தன் செயல் திறனாலேயே நாக, யக்ஷர்கள், முனிவர்கள் இவர்களின் நன் மதிப்பை பெற்று விளங்குவான். உத்சாகமும், தன் பலத்தில் நம்பிக்கையும் மேலிட இவன் எனக்கு நேர் போர் புரிய வந்து நிற்கிறான். இவன் மன உறுதி பாராட்டப் பட வேண்டியதே. சுராசுரர்களும் இவனிடம் நடுங்க வேண்டும். இவனை அலட்சியம் செய்யவும் முடியாது. மேன் மேலும் ஆர்வத்துடன் முன்னேறுகிறான். இவனை கொல்ல மனம் வரவில்லைதான். ஆனால் வளர்ந்து வரும் அக்னியை அலட்சியம் செய்வது ஆபத்தில் முடியும். இவ்வாறு யோசித்து வதம் செய்வது என்ற முடிவுக்கு வந்தான். வாயு மார்கத்தில் இருந்தபடியே ரதத்தில் எட்டு குதிரைகளையும், குறி வைத்தான். அவை உயர் ஜாதி குதிரைகள். பாரத்தை சுமந்து கொண்டே வெகு வேகமாக செல்லக் கூடியவை. நெருங்கி ஒன்றுக்கொன்று அனுசரணையாக சென்றன. அந்த குதிரைகளை தன் கைத் தலத்தாலேயே அடித்து வீழ்த்தினான். ரதம் அச்சு முறிந்து விழ, ரதத்துடன் அக்ஷ குமாரனும் பூமியில் விழுந்தான். துள்ளிக் குதித்து ரதத்திலிருந்து வெளி வந்து கையில் வாளுடன் அக்ஷகுமாரன் போரைத் தொடர்ந்தான். யோகம் அறிந்தவன். ரிஷி, உக்ரமான வீர்யம் உடையவன், அக்ஷ குமாரன். தன் தேகத்தை துறந்து சூக்ஷ்ம சரீரத்துடன் வாயு மார்கத்தில் நின்று மாயா யுத்தம் செய்யலானான். அவனை ஆகாயத்தில் தேடி வாயு சுதன், கருடனும் சித்தர்களும் சஞ்சரிக்கும் ஆகாய வழியில் கண்டு பிடித்து, கால்களை பிடித்து இழுத்து, திடமாக ஆயிரம் துகள்களாக சிதறும்படி வீசினான். பறவைகளின் அரசனான கருடன் பெரும் நாகத்தை கவ்விக் கொண்டு பறப்பது போல, தன் தந்தையின் வேகத்தையும் வாங்கிக் கொண்டு விட்டவன் போன்ற வேகத்துடன் வாதாத்மஜன் பூமியில் ஓங்கி வீசினான். கை கால்கள் முறிந்து இடுப்பிலும் கழுத்திலும் நல்ல அடிபட்டு, ரத்தம் பெருக, எலும்புகள் துருத்திக் கொண்டு நிற்க, மூட்டுகள் கிழிந்து தசைகள் தொங்க, பூமியில் விழுந்தவுடன் மாண்டான். ராக்ஷஸ குமாரனின் நிலையைக் கண்ட மற்ற ராக்ஷஸர்கள் அலறினர். மகரிஷிகளும், யக்ஷ, பன்னக, இந்திராதி தேவர்களும், ஆச்சர்யத்துடன் வானர வீரனை நோக்கினர். அக்ஷ குமாரனை வீழ்த்தி விட்டு ஹனுமான் திரும்பவும் தன் தோரண வாயிலில் வந்தமர்ந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் அக்ஷ குமார வதோ4 என்ற நாற்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 48 (387) இந்திரஜித3பி4யோக: (இந்திரஜித் தாக்குதலை தொடருதல்)
இதன் பின் ராக்ஷஸேந்திரன், அக்ஷ குமாரனையும் ஹனுமான் வதம் செய்து விட்டான் என்று அறிந்து வேதனை அடைந்தான். மனதை சமாதானம் செய்து கொண்டு இந்திரஜித்தை அழைத்தான். மகனே, நீ அஸ்திர சஸ்திரங்களை அறிந்தவன். சாமர்த்யசாலி. ஆற்றல் மிகுந்தவன். சுராசுரர்களுக்கும் உன்னைக் கண்டால் பயம். தேவர்களிடமும், இந்திரனிடமும் போர் செய்து பழக்கம் உடையவன். பிதாமகரை ஆராதித்து அஸ்திரங்கள் சேகரித்து வைத்துக் கொண்டவன். உன் அஸ்திர பலத்தை தெரிந்து கொண்டுள்ள, அசுரர்களும், மருத் கணங்களும் யுத்தத்தில் உன்னை எதிர்க்க சக்தியற்று தயங்கினார்கள். மூவுலகிலும் உன்னுடன் போரிட வந்து அடிபட்டு, தோற்று ஓடியவர்களே ஏராளம். புஜ வீர்யமும், தவ வலிமையும் உன்னிடம் சேர்ந்து இருக்கிறது. இவை உன்னை காக்கின்றன. புத்திசாலியான நீ தேச காலங்களை அறிந்தவன். அறிவால் சாதிக்க வேண்டியவைகளை, உன் அறிவால் சாதித்திருக்கிறாய். உன்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்பதை நான் அறிவேன். மூவுலகிலும் இப்படி ஒரு போர் வீரன் இருந்ததேயில்லை எனும் படி உன் அஸ்த்ர பலமும், உடல் பலமும் யாவருக்கும் தெரிந்ததே. எனக்கு சமமான தவமும், பலமும், ப்ராக்ரமமும் அஸ்த்ர பலமும் உன்னிடம் உள்ளன. உன்னை யுத்தத்துக்கு அனுப்பினால் எனக்கு எந்த விதமான கவலையோ, சிந்தனையோ இருந்ததில்லை. இப்பொழுது பார். கிங்கரர்களை அழித்து விட்டான். ஜம்புமாலி ராக்ஷஸனும் மாண்டான். வீரர்களான அமாத்ய புத்திரர்களும் மடிந்தனர். பெரும் படையும் சேதமாயிற்று. குதிரைகள், யானைகள், ரதங்கள் இவற்றுடன் சென்ற உன் சகோதரன் அக்ஷனும் தோல்வியைத் தழுவினான் கொல்லப் பட்டான். அவர்கள் அனைவருக்கும் இல்லாத சக்தி உன்னிடம் இருக்கிறது. உனக்கு விவரம் தெரிந்திருக்கும். இந்த கபி சாமான்யமான வானரம் அல்ல. இதுவரை கண்டதிலிருந்து அது மதியுடையது, மகத்தான பலம், பராக்ரமம் உடையது, ப்ரபாவம் உடையது என்று தெரிந்து விட்டது. உன்னையும் காத்துக் கொண்டு, படையுடன் சென்று பலத்தாலும், புத்தியாலும் இந்த வானரத்தை வெல்வாய். அருகில் சென்று யார், என்ன, என்ன பலம், பின் பலம் என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்படுவாய். (வரிஷ்ட-தஹக்ஷெ றஸெத) வீரனே, சேனையின் எண்ணிக்கை பற்றி கவலை வேண்டாம். இந்த மாருதனும் சாமான்யமானவன் அல்ல. அக்னிகல்ப:- அக்னி போன்றவன் (அணைக்காது விட்டால் வளர்ந்து பெருகும் தன்மை) அதனால் கவனமாக இரு. நன்றாக யோசித்து செய்ய வேண்டிய செயல்களை முறைப் படுத்தி வகைப் படுத்திக்கொள். உன் செயல்களிலேயே கவனமாக இரு. திவ்யமான அஸ்திரங்களையும், த4னுஷையும் நினைவில் வைத்துக் கொள். கிளம்பி போ. குறைவில்லாத, அழிவில்லாத உன் காரியத்தை ஆரம்பி. உன்னை அனுப்புவதில் எனக்கு சம்மதம் இல்லைதான். இது தான் ராஜதர்மம், க்ஷத்திரிய தர்மம் என்று எனக்குப் படுகிறது. யுத்தம் என்று வந்தால் பலவிதமான சஸ்திரங்களையும், விசேஷமாக அறிந்திருக்க வேண்டும். எதிரிகளை ஒடுக்க வல்லவனே, ரணத்தில் விஜயம் தான் நமது லட்சியம். இந்த லட்சியத்தை அடைய உயர்ந்த அஸ்திரங்களையும், ஆயுதங்களையும், அறிவையும் சேர்த்து பயன் படுத்த வேண்டும். இவ்வாறு தந்தை சொன்னதைக் கேட்டு ப்ரதக்ஷிணம் செய்து, தந்தையை நமஸ்கரித்து அப்படியே செய்வதாக உறுதியளித்து கிளம்பினான். (தக்ஷ சுத ப்ரபாவ:-?) தானே யோசித்து, என்ன செய்வது என்று தீர்மானித்துக் கொண்டான். குறைவில்லாத ஆற்றல் உடையவன் இந்திரஜித். இதன் பின் பந்துக்களும், இஷ்ட ஜனங்களும் வந்து வாழ்த்தினர். பெரும் ஸங்க்ராமத்தை (பெரும் போரை) எதிர் நோக்கி கிளம்பினான். மான், பத்ம, பலாசம்-இவை போன்ற கண்களையுடையவன். ராக்ஷஸாதிபதியின் மகன், பருவ காலத்தில் சமுத்திரம் பொங்கி எழுவது போல, தன் படை வீரர்களுடன் ஆரவாரித்துக் கொண்டு கிளம்பினான். பக்ஷிராஜன்(கருடன்), அனிலன்-வாயு, இவற்றுக்கு சமமான வேகத்துடன் சீறிப் பாயும் நான்கு விஷப் பாம்புகள் இணைக்கப் பட்டிருந்த ரதத்தில், இந்திரன் போலவே ஏறினான். அந்த ரதி (ரதத்தை உடையவன்), வில்லாளிகளுள் சிறந்தவன். சஸ்திரம் அறிந்தவன். அஸ்திரத்தை பிரயோகிக்க தெரிந்தவர்களுள் ஸ்ரேஷ்டன். ரதத்தில் ஏறி வேகமாக ஹனுமான் இருக்கும் இடம் சென்றான். அந்த ரதத்தின் ஒலி, வில்லின் நாண் எழுப்பிய ஒலி, அம்புகளின் சத்தம் இவைகளைக் கேட்டு மேலும் மனம் மகிழ்ந்தான். ரண பண்டிதனான இந்திரஜித், பெரிய வில்லை எடுத்து, அம்புகளை பொறுத்தி. ஹனுமானை குறி வைத்தபடி வேகமாகச் சென்றான். போர் புரியும் ஆவலுடன் முன்னேறிச் சென்ற இந்திரஜித்தைக் கண்டு திசைகள் கறுத்தன. விரைந்து சென்றவனின் கைகளில் அம்பும் வில்லும் லாகவமாக இருப்பதைக் கண்டவர் அதிசயித்தனர். ரௌத்ரமான மிருகங்களும் வீறிட்டு அலறின. நாகர்களும், யக்ஷர்களும் வந்து சேர்ந்தனர். மகரிஷிகள், சக்ரத்தில் சஞ்சரிக்கும் சித்தர்கள், ஆகாயத்தில் பக்ஷிகளோடு தாங்களும் நின்று ஆரவாரம் புரிந்தனர். ரதத்தில் வெகு வேகமாக வரும் இந்திரஜித்தைக் கண்டு வானர வீரன் ஹனுமான் எதிர்த்து போர் புரிய தயாராக நின்று போர் முழக்கம் செய்தான். இந்திரஜித் சித்ர வேலைபாடுகள் கொண்ட தன் வில்லை வளைத்து, விரோதத்துடன் ஹனுமானை நோக்கினான். இடி இடிப்பது போன்ற ஒலி கேட்டது. இந்திரஜித்தின் நாணின் ஒலியே தான் அது. இருவரும் அதி வேகமும், மகா பலமும் கொண்டவர்கள். ரண வித்தை அறிந்தவர்கள். கபியும், ராக்ஷஸ ராஜனின் புத்திரனும், பிறவியிலேயே வைரிகளான இந்திரனும் அசுரர்களும் போன்று ஒருவரையொருவர் க்ரோதத்துடன் பார்த்துக் கொண்டனர். போரில் தனக்கு சமமாக நின்ற வில்லாளியை, மகாரதியான மா வீரனை, எதிர்கொள்ள ஹனுமான் தன் உருவத்தை வளர்த்துக் கொண்டான். ப்ரும்ம மார்கத்தில் சஞ்சரிக்கலானான். இந்திரஜித் பிரயோகித்த அம்புகள் வேகமாக வந்து தாக்கும் பொழுது தடுத்து நிறுத்தினான். இந்திரஜித் சளைக்காமல் கூர்மையான அம்புகளையும், இலை வடிவத்தில் அமைந்த ஆயுதங்களையும் வஜ்ரம் விழுவது போல வேகமாக ஹனுமான் பேரில் விழச் செய்தான். இந்திரஜித்தின் ரத கோஷம் ம்ருதங்க, பே4ரி, படஹம் இவைகள் வாசித்து எழுந்த நாதம், அடுத்தடுத்து இழுத்து அம்புகளை தொடுக்கும்பொழுது எழும் ஓசை இவைகளைக் கேட்டு மேலும் ஆகாயத்தில் குதித்தான், ஹனுமான். மேல் நோக்கி அம்புகள் வந்து விழும் இடைவெளியில் தான் வேக வேகமாக இருப்பிடத்தை மாற்றிக் கொண்டான். இதனால் அவனை குறி பார்த்து எய்வது கடினமாயிற்று. ஒரு சமயம் எதிரில் வந்து நிற்பான். கைகளை விரித்து ஹனுமான் திரும்பவும் மறைவான். இருவரும் நல்ல வேகமும், ரண பூமியில் போரிட பயிற்சியும் பெற்றவர்கள். எல்லோரும் ரசிக்கும்படியாக, உத்தமமான யுத்தம் செய்தனர். ஹனுமானின் உள் எண்ணத்தை ராக்ஷஸன் அறிந்து கொள்ள முயலவில்லை. அதே போல மாருதிக்கும் இந்திரஜித்தின் உத்தேசம் என்ன என்பது தெரியவில்லை. இருவரும் தேவர்களுக்கு சமமான பராக்ரமம் உடையவர்கள். ஒருவருக்கொருவர் சளைக்காமல் போரைத் தொடர்ந்தனர். தன் அம்புகள் வீண் ஆவதைக் கண்டு சமாதி4, சம்யோக3, சம்ஹிதம் (சமாதி-யோகத்தில் உயர் நிலை, தன்னடக்கம் முதலியவை) இவைகளை உடைய இந்திரஜித் யோசித்தான். தன் போக்கை மாற்றிக் கொண்டான். ஹரி வீரனை வதம் செய்யாமல், உயிருடன் பிடிக்க தீர்மானித்தான். உடனே ப்ரும்மாஸ்திரம் நினைவுக்கு வர, அதை த்யானித்து தன் வில்லில் தொடுத்த அம்பின் மூலம் வானரத்தின் மேல் பிரயோகித்தான். இவனை கொல்ல முடியாது என்பதை உணர்ந்து இந்திரஜித், மாருதாத்மஜனை அஸ்திரத்தால் கட்டி விட்டான். இப்படி ராக்ஷஸனால் கட்டப் பட்ட வானர வீரன் செயலிழந்து விழுந்தான். தான் கட்டப் பட்டிருப்பது மிகவும் சக்தி வாய்ந்த ப்ருமாஸ்திரத்தால் என்பதை வானர வீரன் உணர்ந்து கொண்டான். ப்ரபு4வான ப்ரும்மாவின் ப்ரபாவம் கொண்ட ப்ரும்மாஸ்திரத்தின் மகிமையால் கட்டுண்டான். அதே சமயம் தனக்கு அவருடைய அனுக்ரஹம் இருப்பதும் நினவுக்கு வந்தது. இந்திரஜித் ஸ்வாயம்புவ மந்திரத்தை உச்சரிக்கும் பொழுதே, ஹனுமான் தனக்கு அவருடைய வர தானம் இருப்பதை மனதில் நினைத்துக் கொண்டு விட்டான். லோக குருவின் ப்ரபாவத்தால் நான் சீக்கிரமே விடுபடுவேன். மற்றவர்களைப் போல் நான் இந்த அஸ்திரத்தால் அதிக கஷ்டம் அனுபவிக்கவும் மாட்டேன். ஆயினும் ஸ்வயம்புவான ப்ரும்மாவுக்கு மதிப்பு கொடுத்து தான் ஆக வேண்டும். அதனால் இந்த அஸ்திரத்தை எதிர்த்து எதுவும் செய்ய மாட்டேன் என்று தீர்மானம் செய்து கொண்டான். தன்மேல் பிரயோகம் செய்யப் பட்ட ப்ரும்மாஸ்திரத்தை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டு மூர்ச்சையாகி விழுந்தான். இப்படி கட்டுண்ட போதிலும் எனக்கு பயம் எதுவும் இல்லை. பிதாமகரும், இந்திரனும் என்னை காப்பாற்ற இருக்கிறார்கள். அனில-வாயு பகவான் சதா என்னைக் காக்கத் தயாராக இருக்கிறான். இந்த ராக்ஷஸர்கள் என்னைக் கட்டி இழுத்துக் கொண்டு போவதிலும் ஒரு நன்மை இருக்கிறது. ராக்ஷஸ ராஜனை சந்திக்கவும் அவனுடன் பேசவும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் இவர்கள் இஷ்டம் போல் இழுத்துச் செல்ல அனுமதிக்கிறேன் என்று மனதுள் தீர்மானித்துக் கொண்டு, செயலிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கட்டுண்டபடியே கிடந்தான். அவர்கள் தைரியம் வந்து பயம் காட்டிய போதிலும், அதட்டி மிரட்டிய போதிலும், பதில் சத்தம் கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டான். செயலற்று நிற்கிறான் என்று நினைத்து ராக்ஷஸர்கள் மரத்தின் நார்களைக் கொண்டும், சணல் கயிற்றாலும் கட்டினர். விரும்பி ஏற்றுக் கொண்ட பந்தனம், அந்த எதிரிகளின் அவமதிப்புகள், இதன் முடிவு ராக்ஷஸேந்திரனைக் காண்பதாக இருக்கும் என்பதால் பொறுத்துக் கொண்டான். இப்படி கயிற்றாலும், நாராலும் கட்டப் பட்டவுடன் சூக்ஷ்மமான அஸ்திர பந்தனம் விடுபட்டு விட்டதை உணர்ந்தான். அஸ்திரத்தால் கட்டப் பட்டிருக்கும் பொழுது இதர பொருட்களால் கட்டுதல் கூடாது. இதனால் சூக்ஷ்மமான அஸ்திரம் மறைந்து விடும். இப்படி மரத்தின் நாராலும், கயிறுகளாலும் கட்டப் பட்டிருந்த ஹனுமானை இந்திர ஜித் பார்த்தான். அடடா இவ்வளவு பெரிய காரியம். விஷயம் தெரியாமல் இந்த ராக்ஷஸர்கள் அர்த்தமில்லாமல் போகச் செய்து விட்டார்களே. மந்திர கதி தெரியாமல் இப்படி செய்து விட்டார்களே. மற்றொன்று எய்தாலும் உடனே பலனளிக்காது இடைப் பட்ட நேரத்தில் நம் கதி அதோ கதி தான். நல்ல வேளையாக ஹனுமான் தான் விடு பட்டதை தெரிந்து கொள்ளவில்லை. இந்த கட்டுக்குள் இருந்து கொண்டு ராக்ஷஸர்கள் இழுத்த இழுப்புக்கு போய்க் கொண்டிருக்கிறான். கட்டைகளாலும், முஷ்டிகளாலும் இவர்கள் அடிப்பதைத் தாங்கிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணினான். மற்ற ராக்ஷஸர்கள் ஹனுமானை இழுத்துக் கொண்டு அரசனிடம் வந்தனர். தன் மந்திரி வர்கங்களுடன் அமர்ந்திருந்த அரசனிடம் ஹநுமானைச் சுட்டிக்காட்டி மகா பலசாலி இவன் என்றான். மற்ற ராக்ஷஸர்களும் மதம் பிடித்த யானையை இழுத்து வருவது போல பெருமையுடன் அரசன் முன் ஒப்படைத்தனர். அந்த ராக்ஷஸர்களிடையில், யார் இவன்? யாருடைய தூதன்? எப்படி வந்தான்? என்ன காரியமாக வந்திருக்கிறான்? இவன் தொழில் என்ன? என்பது பற்றி பல வதந்திகள் பரவி, பல கதைகள் எழுந்தன. கொல்லுங்கள், எரித்து விடுங்கள், சாப்பிடுங்கள் என்று சிலர் கூச்சல் போட்டனர். எல்லா ராக்ஷஸர்களுமே கோபத்துடன் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். பெரிய ராஜ வீதியை கடந்து ராக்ஷஸாதிபனின் வீடு வரை வந்து சேரும் வரை ஊரின் அழகை, செல்வ செழிப்பை, விலையுயர்ந்த ரத்னங்கள் அலங்காரமாக அமைக்கப்பட்டிருந்ததையும், உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும், ராக்ஷஸ ராஜனின் ராஜ்யத்தில் ஹனுமான் கவனித்தான். ராவணனும் கபி சத்தமம்- வானரங்களுள் சிறந்த வானரத்தைக் கண்டான். ராக்ஷஸர்கள் இப்படியும் அப்படியுமாக இழுத்துக் கொண்டு வந்திருந்தாலும் வீரன் என்பது தெரிந்தது. ஹனுமானும் ராக்ஷஸ ராஜனைக் கண்டான். தேஜஸும் பலமும் ஒருங்கிணைந்து தகிக்கும் சூரியனைப் போல காட்சி தந்தவனைக் கண்டான். ஆத்திரத்துடன் கண்களைச் சுழற்றி, தன் சபையில் அமர்ந்திருந்த மந்திரிகள், மற்றும் பிரமுகர்களுக்கு கட்டளையிட்டான். அவர்களும் முறைப் படி வானர வீரனை விசாரித்தனர். எதற்காக வந்தான்? யார் அனுப்பி வந்தான்? என்ன காரியம்? இதன் பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கு ஹனுமான் பதிலளித்தான். நான் வானர ராஜனான சுக்ரீவனின் தூதன் என்று ஹனுமான் தெரிவித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் இந்திரஜித3பி4யோகோ என்ற நாற்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 49 (388) ராவண பிரபா4வ த3ரிசனம் (ராவணனை நேரில் காணல்)
ஹனுமான் ஆச்சர்யத்துடன் ராவணனைக் கவனித்தான். தன் மந்திரிகளைக் கொண்டு விசாரிக்கச் செய்தது ராஜ தோரணையைக் காட்டியது. மிக உயர்ந்த சிம்மாசனம். அதில் அமர்ந்திருந்ததே கம்பீரமாக பயத்தையும், மரியாதையையும் பார்ப்பவர் மனதில் தோற்றுவிக்கும் விதமாக இருந்தது. தலையில் கிரீடம், அதில் முத்துக்கள் வரிசையாக கட்டப் பட்டிருந்தது, மிகப் பிரகாசமாக இருந்தது. வஜ்ரத்தையும் (வஜ்ர அடியையும்) தாங்கிய புஜங்கள். மணிகளாலும், பொன் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தன. மனதால் கற்பனை செய்து உருவாக்கியதைப் போன்ற விசித்ரமான ஆபரணங்கள். கண்கள் சிவந்து பயங்கரமாக காட்சியளித்தன. பளீரென்று கூர்மையான நீண்ட பற்கள். பத்து தலைகள் இவற்றுடன் பல விதமான விஷப் பாம்புகள் வளைய வரும் மலையைப் போல காட்சி தந்தவனைக் கண்டான். கரு நீல நிற மலை போன்றவன். மார்பில் ஹாரம், பூர்ண சந்திரன் இடையில் வந்த சமயம் கரு மேகம் இருப்பது போல இருந்தது. கேயூரங்கள் அணிந்த புஜங்கள் சந்தனம் பூசப் பெற்றிருந்தன. ஐந்து தலை நாகங்கள் போல, அங்க3தம் என்ற ஆபரணம் மிகப் பெரிய அளவில் இருந்தது. ஸ்படிகத்தால் ஆன அழகிய வேலைப் பாடமைந்த தரை. அதில் அழகிய விலையுயர்ந்த விரிப்புகள் விரிக்கப் பட்டிருந்தன. அதிலும் உயர்ந்த ஆசனம் ஒன்றில் வீற்றிருந்தான் அரசன். பெண்கள் அலங்காரமாக வளைய வந்தனர். கைகளில் சத்ர சாமரங்களையும், மற்ற பொருட்களையும் ஏந்திய படி வந்தனர். மகா சக்திமான் என்று பெயர் பெற்ற ப்ரஹஸ்தன், துர்தரன், மகா பார்ஸ்வன், என்ற மந்திரிகள், நிகும்பன் முதலானோர் சபையை அலங்கரித்தனர். நான்கு ராக்ஷஸ வீரர்கள் தங்கள் பலத்தில் நம்பிக்கை முகத்தில் தெரிய அருகில் அமர்ந்திருந்தனர். உலகை நாலாபுறமும் சாகரம் சூழ்ந்திருப்பதை ஒத்திருந்தது. தேவ ராஜனை தேவர்கள் நாலாபுறமும் நெருங்கி அமர்ந்திருப்பதைப் போல நல்ல அறிஞர்கள் நிறைந்த சபையாக இருந்தது. ராவணனின் ராஜ தர்பார், நல்ல தேஜஸ்வி என்று ஹனுமான் ராவணனைப் பற்றி நினைத்துக் கொண்டான். மேரு சிகரத்தில் மேகம் அமர்ந்திருப்பதைப் போல ராவணன் தன் வராசனத்தில் அமர்ந்திருப்பதாக நினைத்தான். மற்ற ராக்ஷஸர்கள் துன்புறுத்துவதை இன்னமும் நிறுத்தவில்லை. ராவணனைக் கண்ட பிரமிப்பில் ஹனுமான் அதைக் கண்டு கொள்ளவில்லை. மனதினுள் அந்த ரூபத்தை எடை போட்டான். அஹோ ரூபம், அஹோ தைர்யம், அஹோ சத்வம், (ஆற்றல்) அஹோ த்யுதி:, பிரகாசம், செல்வ செழிப்பு, அஹோ ராக்ஷஸ ராஜன், எல்லா லக்ஷணங்களும் பொருந்தியவனாக, ராஜ கம்பீரம் தெரிய இருக்கிறானே. அதர்மம் பலமாக இவன் செயல்களில் குறுக்கிடாமல் இருந்திருந்தால், இந்த ராக்ஷஸேஸ்வரன், தேவ லோகத்தையும் ஆளத் தகுதியுடையவனே. சக்ரன்- இந்திரனையும் இவன் காக்கக் கூடியவன். கொடியவன் தாக்ஷிண்யம் இல்லாதவன். இரக்கம் என்று ஒன்று இல்லாத அரக்கன் என்பதாலேயே அமரர்களும், தானவர்களும் கூட நடுங்குகின்றனர். இவன் கோபம் கொண்டால் உலகையே ஒரே சமுத்திரமாக ஆக்க வல்லவன். இவ்வாறாக ராவணனின் ராஜ சபையைக் கண்டு அதிசயித்து மனதினுள் அவனைப் பாராட்டினான், ஹனுமான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ராவண பிரபா4வ தரிசனம் என்ற நாற்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 50 (389) ப்ரஹஸ்த ப்ரச்ன: (ப்ரஹஸ்தன் விசாரித்தல்)
உலகையே தன் அதிகாரத்தால் ஆட்டி படைத்து வந்த ராவண ராஜன், தன் எதிரில் பழுப்பு நிற கண்களுடன் நின்ற வானரத்தைப் பார்த்து கலங்கினான். சந்தேகமும் சிந்தனையும் அவனை ஆட்கொண்டன. இது யாராக இருக்கும்? பகவான் நந்திகேஸ்வரர் சாக்ஷாத்தாக வந்திருக்கிறாரா? நான் கைலாஸ மலையைத் தூக்க முயற்சித்த பொழுது என்னை சபித்தாரே. அவர் தானோ? வானர மூர்த்தி தான் அவரோ? அல்லது பா3ணாசுரனோ? என்று மனதில் நினைத்த படி ப்ரஹஸ்தனை அழைத்து, அந்த வானரத்தை விசாரனை செய்ய உத்தரவிட்டான். அந்த நேரத்துக்கு ஏற்ற, பொருள் பொதிந்த அரசியல் செயல். துராத்மா இவன். இவனை விசாரியுங்கள். எங்கிருந்து வந்தான்? என்ன காரணமாக வந்திருக்கிறான்? வனத்தை அழிப்பதில் இவனுக்கு என்ன லாபம்? ராக்ஷஸிகளை ஏன் பயமுறுத்தினான்? என் நகரம். யாராலும் நுழைய முடியாது என்று பெயர் பெற்றது. இதில் ஏன் நுழைந்தான்? எப்படி? ராக்ஷஸ வீரர்களுடன் ஏன் போர் தொடுத்தான்? கேளுங்கள் எனவும், ராக்ஷஸனின் மந்திரி ப்ரஹஸ்தன் ஹனுமானைப் பார்த்து கபியே,-வானரமே, பயப்படாதே. சமாதானமாக, ஆஸ்வாசப்படுத்திக் கொள். உனக்கு நன்மை உண்டாகட்டும். நீ இந்திரன் அனுப்பி ராவணன் இருப்பிடம் வந்திருந்தாலும், அஞ்சாதே. சொல். வானரமே, உனக்கு எதுவும் கெடுதல் நேராது. விடுபடுவாய். வைஸ்ரவனன அனுப்பி வந்திருக்கிறாயா? யமன், வருணன் அனுப்பி வந்திருந்தாலும், சொல். அழகிய வானர ரூபம் எடுத்துக் கொண்டு எங்கள் நகரத்தினுள் பிரவேசித்திருக்கிறாய். விஜயம்-வெற்றி பெற விரும்பி விஷ்ணுவே அனுப்பியிருந்தாலும், சொல். உன் ரூபம் மட்டும் தான் வானரம். உன் தேஜஸ் வானரமாகத் தெரியவில்லை. உண்மையைச் சொன்னால் விடுபடுவாய். பொய் சொல்லாதே. பொய் சொன்னால் உயிருடன் மீள முடியாது. நினைவில் வைத்துக் கொள். அல்லது என்ன காரணமாக ராவண ராஜாவின் மாளிகையில் நுழைந்தாய்? இதைக் கேட்டு ஹனுமான் பதில் சொன்னான். நான் இந்திரனுடைய தூதனும் அல்ல, யமன், வருணன் முதலானோர் அனுப்பியும் வரவில்லை. த4னத3ன் (குபேரன்) கூட எனக்கு பழக்கமுமில்லை, நட்பும் இல்லை. விஷ்ணுவும் என்னை தூதனாக அனுப்பவில்லை. என் ஜாதியே இது தான். வானரம் தான் பிறவியிலேயே. ராக்ஷஸ ராஜனைக் காணவே வந்தேன். ஒரு வாய்ப்பு கிடைக்க, ராக்ஷஸ ராஜனின் வனத்தை உடைத்து அழித்தேன். உடனே பலசாலிகளான ராக்ஷஸர்கள் வந்து என்னுடன் போர் புரிந்தனர். என் தேகத்தைக் காத்துக் கொள்ள பதிலடி கொடுத்தேன். அஸ்திர பாசங்களால் என்னை கட்ட முடியாது. தேவாசுரர்கள் கூட என்னை கட்ட முடியாது. பிதாமகரே, ப்ரும்மாவே எனக்கு அப்படி ஒரு வரம் கொடுத்திருக்கிறார். ராஜாவைக் காணவே, நான் ப்ரும்மாஸ்திரத்திற்கு கட்டுப் பட்டு அடங்கி உடன் வந்தேன். ராக்ஷஸர்கள் என்னை கயிற்றால் கட்டி துன்புறுத்திய பொழுதே, நான் அஸ்திர பந்தத்திலிருந்து விடுபட்டு விட்டேன். ஏதோ ஒரு ராஜ காரியமாக தங்கள் ராஜ சபைக்கு வந்துள்ளேன். ராகவனுடைய தூதன் நான். ப்ரபோ, நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் நன்மைக்காக கேளுங்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ப்ரஹஸ்த ப்ரஸ்ன: என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 31 (369) ராம வ்ருத்த ஸம்ஸ்ரய: (ராம கதையைக் கேட்கச் செய்தல்)
இவ்வாறு தீர்மானித்து, வைதேஹியின் காதில் படும்படி, மெதுவாக, மதுரமாக, ராம கதையை சொல்ல ஆரம்பித்தான், ஹனுமான். த3சரத2ன் என்று ஒரு ராஜா. ரதங்களும், யானைகளும், குதிரைகளும் கணக்கில்லாமல் அவரிடம் இருந்தன. நல்ல சீலமும், நேர்மையும் உடையவன். அதனால் மகத்தான கீர்த்தியையும், புகழ் வாய்ந்த பெருமைகளும் அவனை நாடி வந்தன. அரச வம்சத்தினரில் ராஜரிஷிகள் என்று சொல்லப் பட்டவர்களிலும் இவன் ஸ்ரேஷ்டன் எனலாம். அரசர்களிலும் ராஜ ரிஷிகள் என்று இருந்த ஒரு சிலரில் இவன் குண ஸ்ரேஷ்டன். ரிஷிகளுக்கு சமமானவன். சக்ரவர்த்தி குலத்தில் பிறந்தவன். இந்திரனுக்கு சமமான பலம் உடையவன். அஹிம்சையில் நம்பிக்கையும், தாராள குணமும், சத்ய ப்ராக்ரமனாகவும் இருந்தான். இக்ஷ்வாகு வம்சத்தில் இவன் குறிப்பிடத் தக்கவன். நல்ல செல்வமும், செல்வாக்கும் உடையவன். இவனிடம் செல்வம், லக்ஷ்மி வளர்ந்தாள். அரசர்க்குரிய லக்ஷணங்கள் நிரம்பப் பெற்றவன். ராஜ்ய லக்ஷ்மி இவனை ஆச்ரயித்து இருந்தது. ரிஷபம் போல பார்த்திபர்களுள் தனித்து விளங்கினான். நான்கு திக்குகளிலும் இவன் பெருமை பேசப் பட்டது. மற்றவர்களுக்கும் சுகத்தை அளிப்பவன், தானும் சுகமாகவே வாழ்ந்தான். இவனுடைய மூத்த மகன் தாரா நாயகனான சந்திரனுக்கு சமமான முகத்தையுடையவன். ராமன் என்று பெயர் கொண்டவன். வில்லேந்திய வீரர்களுள் முதன்மையானவன். தன் நடத்தையையும் காப்பாற்றிக் கொண்டு, தன்னைச் சார்ந்தவர்களையும் ரக்ஷிக்கும் குணம் உள்ளவன். ஜீவ லோகத்துக்கே இவன் ரக்ஷகனாக இருப்பவன். தர்மத்தை காப்பதில் விரதம் எடுத்துக் கொண்டவன் போல செயல் படுபவன். பரந்தப: நல்ல தவ வலிமையுடையவன். முதியவரான தந்தையின் சொல்லைக் காக்க, தன் மனைவியுடனும், சகோதரனுடனும் காட்டுக்கு வந்தான் (தந்தையால் அனுப்ப பட்டான்). வனத்தில் வசிக்கும் சமயம் பல ராக்ஷஸர்களை வதம் செய்தான். இஷ்டம் போல உருவம் எடுக்க வல்ல மாயாவிகள், பலர் ஜனஸ்தானத்தில் இருந்தனர். ஜனஸ்தானத்தில் சூரர்களான கர தூஷணர்கள் இவனால் வீழ்த்தப் பட்டு இறந்த செய்தியை அறிந்த ராவணன், ராமன் மனைவி ஜானகியை கவர திட்டமிட்டான். மிருக ரூபத்தில் ராமனை வஞ்சித்து விட்டான். அந்த மாய மிருகத்தை தொடர்ந்து அவன் அதை பிடிக்கச் சென்ற சமயம், தனித்து இருந்த ஜானகியை அபகரித்து விட்டான். மாசற்ற தன் மனைவியைத் தேடி அலைந்து கொண்டிருந்த ராமன், வனத்தில் சுக்ரீவன் என்ற வானரத்துடன் நட்பு கொண்டான். இதன் பின் வீரனான ராமன் வாலியை வதம் செய்து, கபி (வானர) ராஜ்யத்தை சுக்ரீவனுக்கு கொடுத்தான். சுக்ரீவன் ஏராளமான வானரங்களைத் திரட்டி எல்லா திக்குகளிலும் அந்த தேவியைத் தேட அனுப்பினான். ஆயிரக் கணக்கான வானர வீரர்கள் இவ்வாறு கிளம்பினர். அதில், நான் சம்பாதி சொன்னதை வைத்து, நூறு யோஜனை தூரம் நீண்ட சாகரத்தைத் தாண்டி வேகமாக, இந்த தேவியைத் தேடி வந்தேன். விசாலாக்ஷியான தேவியை, ராகவன் வர்ணித்தபடியே, அதே ரூபம், அதே வர்ணம், லக்ஷ்மீகரமான தோற்றம், நான் கண்டு கொண்டேன். இது வரை சொல்லி வானர வீரன் நிறுத்திக் கொண்டான். இதைக்கேட்டு, ஜானகி ஆச்சர்யம் அடைந்தாள். சுருண்ட முடியை, நீளமான கூந்தலை கிளையிலிருந்து விடுவித்துக் கொண்டு, சிம்சுபா வ்ருக்ஷத்தின் மேல் நோக்கினாள். கபி வாக்யம்- வானரம் சொன்ன சொற்கள் இன்னமும் காதுகளில் எதிரொலிக்க, நாலா திசைகளிலும் பார்வையை செலுத்தி யார் என்று தேடினாள். சர்வாத்மாவும் ராமனையே நினைத்திருக்க, பெரும் மகிழ்ச்சியடைந்தாள். யார் சொன்னது என்று தெரிந்து கொள்ள, மேலும், கீழும், பக்கவாட்டிலும் பார்த்தவள், உதயகால சூரியனைப் போல, மரத்தின் கிளைகளில் அமர்ந்து இருந்த வாயு புத்திரனைக் கண்டாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ராம வ்ருத்த ஸம்ஸ்ரயோ என்ற முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 32 (370) சீதா விதர்க்க: (சீதை ஆலோசித்தல் )
கிளைகளுக்கிடையில் தன்னை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த வானரத்தைக் கண்டு சீதையின் உற்சாகம் சற்று வடிந்தது. அர்ஜுன (இளம் சிவப்பு) வஸ்திரம் அணிந்து, மின்னலைப் போல பளீரென்று தெரிந்த உருவம் மஞ்சள் நிறக் கண்களுடன் வினோதமாகப் பட்டது. ஆனால் பிரியமாக பேசுவதைக் கேட்டதால் வானரத்திடம் ஒரு ஈ.ர்ப்பும் தோன்றியது. சிவந்த அசோக புஷ்பம் மலர்ந்தது போல, புடமிட்ட தங்கம் போல கண்களை கவரும் வர்ணம். பெரும் ஆச்சர்யத்துடன் மைதிலி யோசிக்க ஆரம்பித்தாள். ஆஹா, இது என்ன வானரம்? இதன் ரூபம் பயங்கரமாக இருக்கிறது. வானரம் தானா? காலையில் வானரத்தைக் காண்பது நல்லதல்ல என்ற எண்ணம் அவளைத் தயங்கச் செய்தது. இந்த எண்ணம் சற்று முன் தோன்றிய மகிழ்ச்சியை அடக்கி விட, பயம் மேலிட அழ ஆரம்பித்தாள். ராம, ராம என்று வேதனையோடு அரற்றினாள். லக்ஷ்மணா என்றும் அழைத்தாள். அடங்கிய குரலில் சத்தம் வெளி வராமல் விசும்பினாள். ஆனால், பணிவாக அமர்ந்திருந்த வானரத்தை திரும்பவும் ஏறிட்டபொழுது, இது ஸ்வப்னமோ, கனவோ என்று நினைத்தாள். சீதையின் இப்படி மாறி மாறி வெளிப்பட்ட உணர்ச்சிகளால் வேதனையால் நொந்து போனது போல வானரத்தின் முக பாவம் தோன்றியது. (தன்னை நம்பவில்லையே என்று வருந்துவது போல அவளுக்குத் தோன்றியது). பிங்கா3தி4பதேரமாத்யம்- வானர ராஜனின் மந்திரி. பு3த்3தி4மதாம் வரிஷ்டம்- புத்திமான்களில் சிறந்தவன் (இந்த வார்த்தைகள் முதன்முதலில் ஹனுமனைக் கண்ட சமயம் லக்ஷ்மணனிடம் ராமர் சொன்னது). வாதாத்மஜம்- வாயு புத்திரனை திரும்பவும் ஏறிட்டாள். வானரம் தான் என்று உறுதியாகத் தெரிகிறது. ஆனால் மன சமாதானம் ஏற்படவில்லை. வெகு நேரம் இப்படி யோசித்தபின், சுய நினைவுக்கு வந்தவள் போல கண்கள் அகல, நான் கனவு காண்பதே இல்லையே. கனவில் (சாகா2 மிருகம்- மரக் கிளைகளில் தாவும், வாழும் விலங்குகள், வானரம், கரடி முதலியவை) சாகா2 மிருகத்தைக் காண்பது நல்லதல்ல என்று சொல்வார்கள். இன்று இதை விடியற்காலையில் காண்கிறேனே. என் ராமனுக்கு மங்களம் உண்டாகட்டும். எனக்கு கனவு கூட எதிரியாக அல்லவா ஆகி விட்டது. எனக்கு தூக்கமே வருவதில்லையே, சோகமும், துக்கமும் தான் மனதில் நிறைந்து தூக்கம் வரவொட்டாமல் செய்கின்றனவே. தூங்கினால் தானே. கனவு காண. சந்திரன் போன்ற முகம் உடைய என் நாதனை பிரிந்த பின், சுகம் என்பதே என் வாழ்க்கையில் இல்லாமல் போய் விட்டது. ராம, ராம என்று விடாமல் சொல்லிக் கொண்டு மனதாலும், ராமனையே சார்ந்து இருப்பதால், எதைப் பார்த்தாலும் ராமனாக காண்கிறேன். காதில் விழுவதெல்லாம் ராம கதையாக இருக்கிறது போலும். இது என் மன பிரமைதான். அப்படித்தான் இருக்க வேண்டும். என் ஊகம் சரியானது தான். ஆனால், என்ன காரணம்? மனோ ரதம், மன ப்ரமை என்றால் உருவம் இருக்காதே. இதோ என் எதிரில் உருவத்துடன் இருந்து சொல்வது தெளிவாகத் தெரிகிறதே. வாசஸ்பதே, நமஸ்காரம். வஜ்ரமுடைய இந்திரனே, நமஸ்காரம். ஸ்வயம்புவே, ப்ரும்மாவே நமஸ்காரம். இந்த காட்டில் வாழும் விலங்கு, என் முன் இப்பொழுது சொன்ன வார்த்தைகள் சத்யமாக இருக்கட்டும். வேறு விதமாக ஆகாமல் காப்பாற்றுங்கள்
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான மத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சீதா விதர்க்கோ: என்ற முப்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 33 (371) ஹனுமத் ஜானகி ஸ்ம்வாதோ3பக்ரம: (ஹனுமானும், ஜானகியும் சம்பாஷிக்க ஆரம்பித்தல்)
இதன் பின் ஹனுமான் மரத்திலிருந்தபடியே கீழ் நோக்கி வினயத்துடன், தலை மேல் கை கூப்பி அஞ்சலி செய்தவனாக, சீதையைப் பார்த்து மதுரமான சொற்களால் பேச்சுக் கொடுத்தான். அவள் அருகில் மெள்ளச் சென்றான். பத்3மபலாசாக்ஷி, பத்ம தளம் போன்ற கண்களையுடையவளே, யார் நீ? கசங்கிய பட்டாடை உடுத்தி, மரத்தின் அடியில் நிற்கிறாய்? ஆனாலும் நீ மாசற்ற உயர்ந்த குல பெண் என்பது தோற்றத்தில் தெரிகிறது. ஏன் உன் கண்களில் நீர் பெருகுகிறது? புண்ட4ரீகம், பலாசம் இவைகளின் இடையிலிருந்து நீர் வடிவது போல வடிகிறது. சுரர்கள், அசுரர்கள், நாக3 க3ந்த4ர்வர்கள், ராக்ஷஸர்கள், யக்ஷ கின்னரர்கள், இவர்க ளில் நீ யார் ? சோபனே, இவர்களுள் நீ யார் ? ருத்3ர, மருத் க3ணங்களைச் சேர்ந்தவளா? வசுக்களின் குலத்தைச் சேர்ந்தவளா? வராரோஹே, நீ தேவ குலத்தைச் சேர்ந்தவள் என்று எனக்குப் படுகிறது. சந்திரனுடன் கோபித்து கீழே இறங்கி வந்து விட்ட ரோஹிணி நக்ஷத்திரமா? ஜ்யோதிஷம் அறிந்தவர்களூள் ஸ்ரேஷ்டா- சிறந்தவள், இந்த ரோஹிணி. எல்லா குணங்களும் நிரம்பிய உத்தமமான நக்ஷத்திரம். உன் கண்களின் பிரகாசம் தனித்து தெரிகிறது. நீ யார் கல்யாணி? கோபத்தாலோ, மோகத்தாலோ, ப4ர்த்தாவான வசிஷ்டரை விட்டு விலகி வந்த அருந்த3தி4யோ? இருக்க முடியாது. யார் உன் தந்தை? யார் உன் புத்திரன்? யார் உன் சகோதரன்? சுமத்4யமே, உன் கணவன் யார்? உன் கணவன் எங்கே? ஏன் அவனை நினைத்து வருந்துகிறாய்? உன் அழுகையைக் கொண்டும், பெருமூச்சு விடுவதிலிருந்தும், தரையில் கால் படுவதாலும், நீ தேவலோகத்தைச் சேர்ந்தவள் அல்ல என்று ஊகிக்கிறேன். ராஜ குலத்து லக்ஷணங்கள் தெரிவதாலும், உன் தோற்றத்தாலும், ஏதோ பூமியை ஆளும் அரசனின் மகள், அரசனின் பட்ட மகிஷி என்று ஊகிக்கிறேன். ராவணன், ஜனஸ்தானத்திலிருந்து பலவந்தமாக தூக்கி வந்தவள் நீ தான் என்றால், நீ சீதை தான்- உனக்கு மங்களம் உண்டாகட்டும். நான் கேட்பதற்கு பதில் சொல். உன் தீனமான நிலையும், மனிதர்களில் அரிதான ரூபமும், தவ வேஷமும், நீ நிச்சயம் ராம மகிஷி தான் என்று எனக்குச் சொல்கின்றன. இவ்வாறு ஹனுமான் சொல்லவும், ராம நாமம் கேட்டே சீதை மகிழ்ந்தாள். மரத்தில் இருந்த வானரத்தைப் பார்த்து உலகில் ராஜ சிம்மமாக இருந்த அரசர்களை அறிந்தவன் இவன் என்று தெரிந்து உற்சாகம் அடைந்தாள். நான் தசரத ராஜாவின் மருமகள். சத்ரு சைன்யத்தை கலக்கக் கூடிய வீரன் என் மாமனார். புத்திசாலியான ராமனின் மனைவி. ராகவனின் வீட்டில் கிட்டத்தட்ட பன்னிரண்டு வருஷ காலம் எல்லா செல்வ சம்பத்தும், போகமும் நிறைந்த இடத்தில், மனித உலகின் இயல்பான சுக வாழ்க்கை வாழ்ந்தேன். பதின் மூன்றாவது வருஷம் இக்ஷ்வாகு நந்தனனை ராஜ்யத்தில் அபிஷேகம் செய்விப்பதாக, உபாத்யாயர்களுடன் சேர்ந்து என் மாமனார் தீர்மானித்தார். ராகவனுக்கு முடி சூட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, கைகேயி என்ற என் இளைய மாமியார், அரசனிடம் சொன்னாள். நான் சாப்பிட மாட்டேன், பானம் எதுவும் கூட குடிக்க மாட்டேன், ராமனுக்கு முடி சூட்டுவது தான் என் வாழ்க்கையின் முடிவாக இருக்கும். ராஜ சத்தமா, எனக்கு நீங்கள் ஒருமுறை நல்ல எண்ணத்துடன் கொடுத்த வாக்கு சத்யமானால், ராமன் வனம் செல்லட்டும். அந்த அரசனும் தான் கொடுத்த வரத்தை நினைவில் கொண்டாலும், க்ரூரமான இந்த செயலை செய்யச் சொல்லும் அவள் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டார். மனதில் சற்றும் ஈ.வு, இரக்கமோ, அன்போ இல்லாமல் எழுந்த இந்த வேண்டுகோள், அவரை வேதனைக்குள்ளாக்கியது. ஆயினும், திடமான கொள்கைகள் உடையவர், வயதும் முதிர்ந்த நிலையில் தட்ட முடியாமல் தன் வாக்கை காப்பாற்றத் துணிந்து விட்டார். புகழ் வாய்ந்த தன் மூத்த மகனை அழுது கொண்டே, ராஜ்யத்தை யாசித்தார். தனக்கு முடி சூட்டுவதை விட, தந்தை தன் சொல்லைக் காக்க வேண்டியது மேலானது என்று எண்ணி, வாய் வார்த்தைகளாலும் பிரதிக்ஞை செய்து, அவருக்கு உறுதி அளித்தான், ராமன். தானம் செய்ய வேண்டும், நிறைய கொடுக்க வேண்டும், எதையும் பிரதி உபகாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. அப்ரியமான, வார்த்தைகளை எந்த நிலையிலும் சொல்லக் கூடாது. உயிரே போனாலும் சரி இது தான் ராமனுடைய கொள்கை. அந்த க்ஷணமே உத்தரீயங்களை கழற்றி, உயர்ந்த ஆபரணங்களைத் துறந்து, தபஸ்வியாகி விட்டான். மனதால் அனைத்தையும் துறந்து விட்டான். என்னை தன் தாயாரிடம் ஒப்படைத்தான். நானோ, அவனுக்கு முன்னாலேயே கிளம்பி விட்டேன். வனம் செல்ல நான் முடிவு செய்தாயிற்று. ராமன் இல்லாமல் ஸ்வர்கமே ஆனாலும் எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை. எனக்கும் முன்பாக சௌமித்ரி, தமையனுடன் செல்ல மரவுரிகளை அணிந்து தயாராக வந்து விட்டான். நாங்கள் மூவரும் எங்கள் அரசனின் கட்டளையை மிக்க மரியாதையுடன் சிரமேற்கொண்டு, அடர்ந்த காட்டினுள், முன் கண்டறியாத வனத்தினுள் நுழைந்தோம். தண்டகாரண்யத்தில் வசிக்கும் பொழுது அந்த மகானின் மனைவியாக இருந்தும் ராக்ஷஸ ராஜன், ராவணனால் அபகரிக்கப் பட்டேன். இரண்டு மாத காலம் தான் அவன் நான் உயிருடன் வாழ அனுமதி தந்திருக்கிறான். இந்த இரண்டு மாதங்களுக்குப் பின் என் உயிர் பிரிந்து விடும் என்பது நிச்சயம்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனூமத் ஜானகி ஸ்ம்வாதோ3 என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 34 (372) ராவண சங்கா நிவாரணம் (ராவணனோ என்ற ஐயத்தைப் போக்குதல்)
இதைக் கேட்டு ஹனுமான் மனக்லேசம் அடைந்தான். அவள் துயரை நீக்கும் விதமாக பேச ஆரம்பித்தான். தேவி, நான் ராமனிடமிருந்து செய்தி கொண்டு வந்துள்ள தூதன். உங்களைக் கண்டு கொண்ட பின் மற்ற காரியங்கள் இனி எளிதே. சுலபமாக நடக்கும். வைதேஹி, ராமர் குசலமாக இருக்கிறார். உங்களையும் குசலம் விசாரித்தார். எந்த ராமன் ப்ராம்மம் அஸ்திரம்- ப்ரும்மாஸ்திரத்தை பிரயோகிக்கத் தெரிந்தவனோ, வேதங்களில் அறிஞனோ, வேத வித்துக்களுக்குள் முதல் ஸ்தானத்தில் நிற்பவனோ, அந்த தாசரதி ராமர் உங்களை குசலம் விசாரித்தார். சகோதரன் லக்ஷ்மணனும் தன் தலையால் வணங்கி தங்களை குசலம் விசாரித்தான். உங்கள் கணவரின் பிரிய சகோதரன், எப்பொழுதும் இணை பிரியாமல் இருப்பவர், எனவும், நர சிம்மம் போன்ற அவ்விருவரின் நலனை அறிந்து அவள் மகிழ்ச்சி அடைந்தாள். உள்ளத்தின் மகிழ்ச்சி உடலிலேயே தெரிவது போல முகம் மலர, ஹனுமானிடம் சொன்னாள். உலகில் ஒரு பாடல் உண்டு. வருஷங்கள் பல ஆனாலும், ஜீவித்திருப்பவனைத் தான் நன்மைகள் சென்றடையும் என்பதாக. லௌகீகமான இந்த கீதம் உண்மையே, இப்பொழுது இருவரும் ஒருவரிடம் ஒருவர் நம்பிக்கையோடு சம்பாஷனையைத் தொடர்ந்தனர். சற்றே நம்பிக்கை வர, ஹனுமான் சீதையின் அருகில் செல்ல மேலும் ஒரு அடி வைத்தான். அருகில் ஹனுமான் வர வர, அவனை ராவணனாகவே எண்ணி சீதை சந்தேகத்துடன் அலறினாள். அஹோ, என்ன கஷ்டம். ரூபத்தை மாற்றிக் கொண்டு வந்து நிற்கும் ராவணனே இவனோ, என்னை மேலும் வருத்தவே வந்து நிற்கிறானோ, என்றபடி, கிளையைப் பற்றியிருந்த கைகளை விட்டு, தரையில் அமர்ந்து விட்டாள். இப்படி பயத்துடன் நடுங்கும் அவளைப் பார்த்து ஹனுமானும் செயலற்று பரிதாபமாக பார்த்துக் கொண்டே நின்றான். ஜனகாத்மஜாவை நெருங்கி வணங்கினான். அவளோ ஏறிட்டும் பார்க்கவில்லை. பயத்தால் நடுங்கியவள் நிமிர்ந்த பொழுது கை கூப்பி வணங்கியபடி நிற்பவனைக் கண்டாள். தன்னை சமா ளித்துக் கொண்டு, நெடு மூச்சு வாங்க, மாயா ரூபத்தை எடுத்துக் கொண்டு வந்துள்ள மாயாவி ராவணனாக இருந்தால், இது உனக்கு அழகா? தன் ரூபத்தை விட்டு பரிவ்ராஜகனாக (பிக்ஷை வாங்குபவன்) வந்து ஜனஸ்தானத்தில் நான் பார்த்தேனே. அதே ராவணன் தான் நீ. நிசாசரனே, உபவாசம் இருந்து இளைத்து களைத்து கிடக்கும் என்னை மேலும் வருத்தாதே. நானே நொந்து போய் இருக்கிறேன். மேலும் கஷ்டம் தராதே. ஆனால் நான் நினைப்பது போல இவன் மாயாவியோ, ஏமாற்றுபவனோ அல்ல. இவனைக் கண்டதிலிருந்து என் மனதில் இவன் பால் அன்பே பெருகுகிறது. வானரமே, நீ நிஜமாகவே ராமனிடத்திலிருந்து செய்தி கொண்டு வந்துள்ள தூதனானால், உனக்கு நன்மை உண்டாகட்டும். திரும்பவும் கேட்கிறேன். ராமகதை எனக்கு மிகவும் பிரியமானது. ராமனுடைய குணங்களைச் சொல்லு. என் பிரியமான ராமனைப் பற்றி மேலும் நீ அறிந்ததைச் சொல்லு என்றாள். சௌம்யனே, என் மனம் அதைக் கேட்டு, நதிக்கரை வெள்ளத்தால் அரித்துக் கொண்டு வரும் கரைகளைப் போல உருகுகிறது என்றாள். ஆஹா, கனவு தான் என்ன சுகமான அனுபவம். இந்த சுகானுபவம் கூட என்னை விட்டு விலகி விட்டதே. ராகவன் தான் உன்னை அனுப்பியதாகச் சொன்னாய். கனவானாலும் கூட நான் ராம லக்ஷ்மணர்களைக் காணவே விழைகிறேன். வீரனான ராகவனை, லக்ஷ்மணனும் உடன் இருக்க காண்பேனா? அப்படி கனவில் ராம லக்ஷ்மணர்களைக் கண்டால் கூட நான் நிம்மதியடைவேன். அது கூட எனக்கு சத்ருவாக அல்லவா ஆகி விட்டது. இது கனவல்ல. கனவில் வானரத்தைக் கண்டால் மனதில் நிறைவு தோன்றாது. ஆனால் என் மனம் அமைதியை கண்டுள்ளது. இது என் மனதில் தோன்றிய மோகமோ அல்லது வாயு கோளாறோ. உன்மாதத்தில்- பித்து பிடித்த நிலையில்- தோன்றும் கானல் நீரா? இல்லை. இது பித்து இல்லை. பித்து பிடித்தவன் என்றால் நினைவுகள் தொடர்ந்து சரியாக தோன்றாது. நான் நல்ல நினைவுடன் இருக்கிறேன். என்னை நான் உணர்கிறேன். இதோ இந்த காட்டில் வாழும் விலங்கினமான வானரத்தையும் நன்றாக பார்த்து புரிந்து கொள்கிறேன். இப்படி நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து பார்த்த பின்பும், ராக்ஷஸர்கள் தங்கள் விருப்பம் போல ரூபம் எடுக்க வல்லவர்கள் என்ற எண்ணம் மனதில் வேரூன்றி இருந்ததால் வாஸ்தவமான விலங்கை கூட ராவணனாகவே கண்டாள். பதில் பேசாமல் இருந்தாள். அவள் மனதில் ஓடும் எண்ணங்களை படித்தவன் போல ஹனுமானும் உடனே பதில் சொன்னான். அவள் கேட்க விரும்பும் கதைகளையே திரும்பவும் மதுரமாக சொன்னான். இதனால் அவள் முகம் மலர்ந்தது. ஆதித்யனைப் போல தேஜஸ் உடையவன். உலகை கவர்ந்திழுக்கும் சசி, சந்திரன் போன்று குளுமையான முக காந்தி உடையவன். எல்லா உலகுக்கும் ராஜா. வைஸ்ரவனன் போல, தேவன். விக்ரமம் நிறைந்தவன். விஷ்ணு போன்று மகா கீர்த்தி உடையவன். சத்ய வாதி. மதுரமாக பேசுபவன். வாசஸ்பதியான ப்ரும்ம தேவன் போல வாக்கு வன்மையுடையவன். நல்ல ரூபம் உள்ளவன். கட்டான உடலமைப்பு உடையவன். பாக்யசாலி, கந்தர்ப்பன், சாக்ஷாத் மன்மதனே வந்தது போல அழகன். கோபம் கொள்ள வேண்டிய இடத்தில் கோபம் கொள்வான். அப்படி கோபம் வந்து அடித்தாலும் நன்றாக அடிப்பவன். மகா ரதிகள் என்பவர்களுக்குள் ஸ்ரேஷ்டன். எந்த மகானின் புஜங்களை ஆஸ்ரயித்து அவன் புஜ நிழலில் அண்டி வாழ்கிறார்களோ, அவர்களை கண்டிப்பாக காப்பான். மிருக ரூபம் எடுத்து வந்து ராகவனை வெகு தூரம் ஏமாற்றி அழைத்துச் சென்ற பின், சூன்யமான ஜனஸ்தான ஆசிரமத்திலிருந்து தங்களை அபகரித்து வந்தானே, ராவணன், அதன் விளைவை அவன் சீக்கிரமே அனுபவிக்கப் போகிறான், பாருங்கள். ராமன் கையால் அந்த ராக்ஷஸன் வதைப் பட போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. ராமனது பாணம் அவனது கோபத்தை பிரதி பலிப்பது போல ஜ்வலித்துக் கொண்டு வந்து விழும். அந்த ராமனால் அனுப்பப் பட்ட தூதன் நான். உங்களைக் கண்டு செய்தி சொல் என்றதால் வந்தேன். தங்கள் பிரிவால் வாடுபவர் தங்கள் நலம் விசாரித்தார். மகா தேஜஸ்வியான லக்ஷ்மணனும் சுமித்ரானந்த வர்தனன், சௌமித்ரியும் தங்களை வணங்கி நலம் விசாரித்தான். ராமனுடைய சகா2, சுக்ரீவன் என்ற பெயருடைய வானர ராஜா, அவனும் உங்களை நலம் விசாரித்தான். ராமன் உங்களை எப்பொழுதும் நினைக்கிறான். சுக்ரீவனுடனும், லக்ஷ்மணனுடனும் இருந்தாலும் உள்ளத்தில் தாங்களே நிறைந்திருக்கிறீர்கள், தேவி. நல்ல வேளையாக, இந்த ராக்ஷஸிகளின் மத்தியிலும், உயிரை காத்துக் கொண்டு ஜீவித்திருக்கிறீர்கள். வைதேஹி, ராம, லக்ஷ்மணர்களைக் காணத்தான் போகிறீர்கள். கோடிக் கணக்கான வானர வீரர்களுடன் வரும் சுக்ரீவனையும் காண்பீர்கள். நான் இந்த ஆற்றல் மிகுந்த சுக்ரீவனுடைய மந்திரி. ஹனுமான் என்ற பெயர் கொண்டவன். வானர இனத்தவன். பெரும் கடலைத் தாவி குதித்து கடந்து வந்து இந்த லங்கா நகரத்தினுள் நுழைந்தேன். துராத்மாவான ராவணன் தலையில் கால் வைப்பது போல இந்த நகரத்தில் அடியெடுத்து வைத்து வந்தேன். என் சக்தியனைத்தையும் ஒன்று கூட்டி, தங்களைத் தேடி, தங்களைக் காணவே வந்தேன். தேவி, தாங்கள் நினைப்பது போல நான் ராவணன் அல்ல. இந்த சந்தேகத்தை விடுங்கள். என் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ராவண சங்கா நிவாரணம்: என்ற முப்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 35 (374) விஸ்வாஸோத்பாதனம் (நம்பிக்கை வளரச் செய்தல்)
வானர வீரனின் வாயிலாக ராம கதையைக் கேட்டு, வைதேஹி சற்றே சாந்தமாக, மதுரமாக பதில் சொன்னாள். எப்படி நீ ராமனை சந்தித்தாய்? லக்ஷ்மணனை எப்படி அறிவாய்? வானரர்களுக்கும் நரர்களுக்கும் இடையில் நட்பு எப்படி சாத்தியமாயிற்று ? ராமனுடைய லக்ஷணங்கள் என்ன என்ன? லக்ஷ்மணன் எப்படி இருப்பான்? அதைத் திரும்பவும் சொல்லு. திரும்பவும் என் மனதில் சந்தேகம் வராமல் இருக்கும் படி சொல். அவனுடைய ஸம்ஸ்தானம், ரூபம் எப்படிப் பட்டது. கால்கள் எப்படி இருக்கும்? கைகள் எப்படி இருக்கும்? லக்ஷ்மணன் உடல் அமைப்பு எப்படி இருக்கும்? இதையும் விவரமாக சொல். இதைக் கேட்டு ஹனுமான் ராமனை உள்ளபடி விவரமாக வர்ணிக்க ஆரம்பித்தான். ஜானகி தெரிந்து கொண்டே என்னை ஆழம் பார்க்கிறாள். சொல்கிறேன். கமல பத்ராக்ஷி, உங்கள் கணவனின், லக்ஷ்மணனின் அங்க லக்ஷணங்ளை விவரமாகச் சொல்கிறேன். கேளுங்கள். ராமர், கமல பத்ராக்ஷன். ஜீவ ஜந்துக்கள் அனைத்திலும் மனோகரமானவர். ரூபமும், தாக்ஷிண்யமும் உடையவன். நல்ல குடியில் பிறந்தவன். ஜனகாத்மஜே, ஜனகன் மகளே, கேள். தேஜஸால் ஆதித்யனுக்கு இணையானவர். பொறுமையில் பூமிக்கு சமமானவர். புத்தியில் ப்ருஹஸ்பதி, புகழில் வாஸவனுடன் ஒப்பிடத் தகுந்தவர். ஜீவ லோகத்தையே ரக்ஷிப்பவர், தன் பந்து ஜனங்கள், உற்றார், என்றால் மேலும் கவனமாக ரக்ஷிப்பவர். தன் நடத்தையில் மிக கவனமாக இருப்பவர். தர்மத்தைக் காப்பதில் மகா விரதம் உடையவர். நல்ல தபஸ்வி. பாமினி, ராமன் இந்த உலகத்தில் நான்கு வர்ணத்தாரையும் ரக்ஷிக்க வந்தவர். மரியாதா புருஷோத்தமன் என்று அழைக்கப்படுபவர். பண்பு மிக்கவர். உலகின் கர்த்தாவும் காரயிதாவும் அவரே- செய்பவனும், செய்விப்பவனும் அவனே. நல்லவர்கள் பூஜிக்கத் தகுந்தவன். (நல்லவர்களால் பூஜிக்கப் படுவது சிறப்பு). தனுர் வேதத்தில், வேதத்தில், வேதத்தின் அங்கங்களில், நல்ல நம்பிக்கையும், ஈ.டுபாடும் உள்ளவர். நீண்ட புஜங்களும், பரந்த மார்பும் உடையவர். அழகிய சங்கு போன்ற கழுத்தும், சுபமான முகமும் உடையவர். அழகிய தாமிர வர்ணம் உடையவர் என்று தேவி, ராமனைப் பற்றி ஜனங்கள் அறிந்துள்ளார்கள். துந்துபி போன்று நல்ல குரலுடையவர். அழகிய வர்ணம் உடையவர். பிரதாபம் உடையவர். இவன் உடலின் அங்கங்கள் சமமாக அளந்து செதுக்கி வைத்தது போல இருக்கும். ஸ்யாமள வர்ணத்தினன். மூன்று ஸ்திரமாக, மூன்று நீளமாக, மூன்று சமமாக, மூன்றில் உயர்ந்தவன். மூன்று தாமிர நிறத்திலும், மூன்று மென்மையாக, மூன்றில் கோடு, மடிப்புகளை உடையவன். மூன்று அவனதமாக- கீழ் நோக்கி இருக்கும். நான்கு தெளிவாகத் தெரிய, மூன்று முனைப்புடையவன். நான்கு கலைகளும், நான்கு எழுத்துக்களும், நான்கு முழம் (1 1/2 அடி-ஒரு முழம்) நான்கு சமமாகவும் உள்ளவன். பதினான்கு சமமான இரட்டைகள், நான்கு பற்கள், நான்கு கதிகள், உயர்ந்த உதடு (ஹனு-தாடை), மூக்கு இவையும், ஐந்து வெண்மையாகவும், எட்டு வம்சவான். பத்து பத்மங்கள், பத்து பெரியவை, மூன்று வியாபித்தவை, இரண்டு வெண் நிறமானவை, ஆறு உன்னதமானவை, ஒன்பது சரீரம், மூன்று பரவி இருக்கும், ராகவனுக்கு. சத்ய தர்ம பராக்ரமவானான ஸ்ரீமான். சங்க்ரஹம்-தன் ஆயுதங்களை சுருக்குவதிலும், அனுக்ரஹம் செய்வதிலும் வல்லவர். தேச கால பாகுபாடுகளை நன்கு அறிந்தவர். ஸர்வ லோகமும் விரும்பும் வண்ணம் பேசக் கூடியவர். அவன் சகோதரன், இளைய தாயார் மகன், சௌமித்ரி, தோல்வி என்பதே அறியாதவன். அனுராகம், ரூபம், குணம் இவற்றில் ராமன் போலவே தான். இருவருமே நர சார்தூலர்கள்., மனிதருள் சார்தூலம்-சிறுத்தை போன்று பலசாலிகள். உங்களைக் காண்பதில் ஆவலாக இருக்கிறார்கள். பூமி முழுவதையும் அலசித் தேடுகிறார்கள். அப்படித் தேடி வந்த சமயம் எங்களுடன் சந்திப்பும், அதன் பின் நட்பும் உருவாயிற்று. உங்களையே தேடி வசுந்தரா என்ற இந்த பூமியில் அலைந்து திரிந்தார்கள். எங்கள் தலைவன் சுக்ரீவன், தமையனால் துரத்தப் பட்டு ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த ருஸ்யமூக மலையை வந்தடைந்தார்கள். மரங்கள் அடர்ந்த இடத்தில், அந்த ருஸ்யுமூக மலையில் தமையனிடம் பயந்து ஒளிந்து கொண்டிருந்தான், சுக்ரீவன். மற்றபடி பிரிய த3ரிசனன் தான், நட்புடன் பழகுபவனே. நாங்கள் சுக்ரீவனுடன் ஓடி வந்தோம். தமையனால் அடித்து துரத்தப் பட்ட பொழுது எங்களில் சிலர் சுக்ரீவனின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து அவனுடன் வந்தோம். அந்த சமயம், இவ்விருவரும் மரவுரி தரித்தவர்களாய், கையில் வில்லேந்தியவர்களாய், ருஸ்யமூக மலையின் ரம்யமான சாரலில் வந்து நின்றார்கள். இந்த இரு வீரர்களையும் அவர்கள் வேஷ பூஷணங்களையும் கண்டு பயந்த எங்கள் அரசன், மலை உச்சியிலிருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தான். பயம் அவனை ஆட்டுவித்தது. அதனால் தான் இருந்த இடத்திலேயே மறைந்து நின்றவன், அவர்களுடன் பேசி விசாரிக்க என்னையே அனுப்பினான். சுக்ரீவன் சொல்படி நான் அவர்களை நெருங்கி கை கூப்பி அஞ்சலி செய்தபடி நின்றேன். அவ்விருவரும் புருஷ வ்யாக்ரர்களாக ரூப, லக்ஷணங்கள் நிறைந்தவர்களாக இருப்பதைக் கண்டேன். நான் வந்த காரியத்தைச் சொன்னவுடன், என்னிடம் ப்ரியமாக பேசினார்கள். என் முதுகில் அவர்களை ஏற்றிக் கொண்டு சுக்ரீவன் இருந்த இடம் அழைத்துவந்தேன். சுக்ரீவனிடம் இவர்கள் யார் என்ன என்பதை நான் விசாரித்து அறிந்தபடி விவரித்தேன். இருவரும் பரஸ்பரம் பேசி சீக்கிரமே நண்பர்களானார்கள். நரேஸ்வரனும், கபீஸ்வரனும் தங்கள் பழைய கதைகளைப் பேசி, ஒருவரிடம் ஒருவர் அனுதாபமும், அன்பும் கொண்டவர்களாயினர். லக்ஷ்மணாக்ரஜன், ராமன், சுக்ரீவனை சமாதானம் செய்தான். ஸ்த்ரீ காரணமாக, தமையனான வாலியினால், தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து விரட்டப் பட்டவன். அவன் கஷ்டம் ஒன்றுமேயில்லை என்பது போல லக்ஷ்மணன் ராமனுக்கு நேர்ந்த கஷ்டத்தையும், வேதனையையும் எடுத்துச் சொன்னான். சுக்ரீவன் இதைக் கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தான். சந்திரனைக் கிரஹம் பிடித்தது போல முகம் வெளிறி, சப்தமின்றி நின்றான். இதன் பின் தங்கள் உடலில் அணிந்திருந்த நகைகளை, ராவணன் அபகரித்துக் கொண்டு போன பொழுது, பூமியில் வீசியெறிந்தீர்களே அதை அனைத்தையும் ராமனிடம் காட்ட சுக்ரீவன் கொண்டு வந்தான். உங்களை, ராவணன் எங்கு அழைத்துச் சென்றான் என்பது தெரியவில்லை. நான் தான் அவைகளை சேகரித்து வைத்திருந்தேன். ராவணன் கவனம் வேறு இடத்தில் இருந்த பொழுது தாங்கள் வீசியெறிந்த ஆபரணங்கள் கல கலவென்று சத்தமிட்டுக் கொண்டு பூமியில் விழுந்தன. இந்த நகைகளைக் கண்டதும், தேவனான (தலைவனான) ராமன் மனம் வாடியது. முகத்திலேயே தெரிந்தது. உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்த வேதனை ஜ்வாலையோடு வெளியில் தாமிர வர்ணமாக தெரிவது போல தோன்றியது. சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்த ராமனை நாங்கள் உற்சாகமான பேச்சு வார்த்தைகளால் சமாதானப் படுத்தி சுய நிலைக்கு கொண்டு வந்தோம். ராமன் இவைகளை லக்ஷ்மணனுக்கும் காட்டி பலவாறாக பேசிக் கொண்டிருந்த பின், சுக்ரீவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். தேவி, தங்களைக் காணாமல் அவர் மிகவும் தவிக்கிறார். மலையில் காட்டுத்தீ வளர்ந்து பெரும் தீயாக வெகு நாளாக அணையாமல் இருந்தால், மலை தவிப்பது போல தவிக்கிறார். தங்கள் காரணமாக தூக்கம் இன்மையும், சோகமும், வேதனையும், கவலையும் அவரை அலைக்கழிக்கின்றன. நெருப்பு குண்டத்தில் அமர்ந்திருப்பது போல உணர்கிறார். பெரும் பூகம்பம், அசையாத மலைகளையும் அசைத்து விடுவதைப் போல, இந்த பிரிவு, அவரை வாட்டுகிறது. ராஜகுமாரி, தங்களைக் காணாத கண்களுக்கு கானனங்களோ, அழகிய நதிக் கரைகளோ, மலைச் சாரல்களோ எதுவுமே கவனத்தை ஈ.ர்ப்பதாக இல்லை. அந்த ராகவன் சீக்கிரமே உங்களை அடைவார். மனுஜ சார்தூலன், உற்றார் உறவினரோடு சேர்த்து ராவணனை தோல்வியுறச் செய்து விடுவார். ராமனும், சுக்ரீவனும் தலைமை தாங்கி படைகளை நடத்திச் செல்லும் பொழுது ராவண வதம் நிச்சயம். வாலியை வதம் செய்யவும், தாங்கள் இருக்கும் இடம் தேடிக் கண்டு பிடிக்கவும் தான் நேரம் கடந்து விட்டது. சுக்ரீவன் தன் கதையைச் சொல்லி நட்பும் கொண்ட பின், குமாரர்கள் இருவரும் அவனுடன் கிஷ்கிந்தை சென்றனர். வாலியை யுத்தம் செய்து வதம் செய்தனர். வேகமாக வாலியை சண்டையில் தோற்கடித்து, எல்லா வானர, கரடிகளூக்கும் அரசனாக சுக்ரீவனை நியமனம் செய்து, முடி சூட்டி வைத்தனர். தேவி, ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் இடையே இவ்வகையில் தான் நட்பு மலர்ந்தது. நான் ஹனுமான். அவர்கள் அனுப்பி தூதனாக இங்கு வந்திருக்கிறேன் தன் ராஜ்யம் கைக்கு வந்தபின், சுக்ரீவ ராஜா, எல்லா வானரங்களையும் அழைத்தான். பத்து திக்குகளிலும் தேட, மகா பலசாலிகள் தலைமையில் வீரர்களை அனுப்பினான். வானர ராஜன் வழி சொல்லி அனுப்பியபடி அவர்களும் திக்குகளில் தேடச் சென்றனர். நாங்களும் அதே போல, என்னுடன் இன்னும் பல வானரங்கள் அங்கதன் என்ற வாலி புத்திரனின் தலைமையில் தென் திசை நோக்கிச் சென்றோம். வழி தவறி தடுமாறியபொழுது, என்ன செய்வது என்று தெரியாமல், பல இரவுகள் கடந்தன. எங்களுக்கு சுக்ரீவன் கொடுத்த கால கெடுவும் தாண்டியாயிற்று. வந்த காரியமும் நிறைவேறவில்லை. சுக்ரீவ ராஜாவிடம் பயம். கடுமையாக தண்டிப்பான் என்பதால். அதனால், உயிரை விடத் துணிந்தோம். வனத்தில் பள்ளம், மேடுகள், அடர்ந்த காடுகள், மலையின் சாரல்கள் எல்லா இடங்களிலும் தேடி அலைந்து, அலுத்து, தேவியை காண்பது இயலாத காரியமாக பட, உயிரை விடத் துணிந்தோம். ஒரு மலை அடிவாரத்தில், உயிரை விடத் துணிந்து ப்ராயோபவேசம் செய்யத் தயாராக அங்கதனும் மற்றவர்களும் இருந்த பொழுது, அங்கதன் வருத்தத்தோடு தேவி, தாங்கள் காணாமல் போனது, வாலி வதம், நாங்கள் உயிரை விடப் போவது, ஜடாயுவின் மரணம் என்று வரிசையாக பல நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்டு பலவாறாக பேசிக் கொண்டிருந்தோம். எஜமானனின் கட்டளையை (ப்ராயோபவேசம்) நிறைவேற்ற உடன் பாடுமில்லை. வேறு வழியுமில்லை என்ற நிலையில் செய்வதறியாது திகைத்த எங்களுக்கு வழி காட்டவே வந்தது போல, கழுகரசன் சம்பாதி தென்பட்டான். ஜடாயுவின் சகோதரன் சம்பாதி என்று அவர் சொல்லி தெரிந்து கொண்டோம். சகோதரன் இறந்தான் என்ற செய்தி கேட்டு கொதித்தெழுந்தான். என் சகோதரனை யார் கொன்றது? ஏன்? எங்கே? எப்படி யார் கொன்றார்கள்? என்று கேட்க, அங்கதன் விவரமாக சொன்னான். ஜனஸ்தானத்தில் ஜடாயுவின் மரணம், உங்களை கவர்ந்து சென்ற ராவணனைத் தடுக்க ஜடாயு யுத்தம் செய்ததும், வீர மரணம் அடைந்ததையும் கேட்டபின், அருணனின் குமாரனான சம்பாதி மிகவும் மன வருத்தம் அடைந்தான். தன் பங்குக்கு ஒரு உதவி செய்தான். இங்கு ராவண க்ருஹத்தில் தாங்கள் சிறை வைக்கப் பட்டுள்ளதை, தன் கூர்மையான கண்களால் கண்டு சொன்னான். இதைக் கேட்டு அங்கதன் தலைமையில் நாங்கள் அனைவரும் புறப்பட்டோம். விந்த்ய மலையிலிருந்து கிளம்பி, இறங்கி சாகரத்தை நோக்கிச் சென்றோம். இப்பொழுது தேவி இருக்கும் இடம் தெரிந்து விட்டது. நேரில் காண்போம் என்று உற்சாகத்துடன் வானரங்கள் சந்தோஷமாக சமுத்திர கரை வந்து சேர்ந்தோம். கடலைக் கண்டு தயங்கி நின்று விட்டோம். இவர்கள் பயத்தை போக்கி நான் நூறு யோஜனை தூரம் கடலைத் தாவி குதித்து தாண்டி வந்து, லங்கையில் நுழைந்து விட்டேன். இரவில் லங்கையில் நன்றாக சுற்றிப் பார்த்து தேடி விட்டேன். எங்கும் ராக்ஷஸ வீரர்கள் காவல் நிற்கிறார்கள். ராவண ராஜாவையும் கண்டு விட்டேன். தங்களையும் கண்டு கொண்டேன். தேவி, நான் ராம தூதன் தான். இப்படி தங்களைக் காணவே, பல முயற்சிகள் செய்து வந்து நிற்கும் என்னை சுக்ரீவன் மந்திரி, பவனாத்மஜன் என்று தெரிந்து கொள்ளுங்கள். தங்களுடைய காகுத்ஸன் குசலமாக இருக்கிறார். அனைத்து வில்லாளிகளிலும் சிறந்த வீரனான தாசரதி ராமன் நலமாக இருக்கிறார். அவனை குருவாக ஏற்று பணிவிடை செய்து வரும் லக்ஷ்மணனும் நலமே. நாங்கள் எல்லோருமே தங்கள் நலத்தை விரும்பும் பந்துக்களே. நான் ஒருவன் தான் சுக்ரீவன் கட்டளைப் படி கடலைத் தாண்டி வந்தேன். தென் திசை நோக்கி வந்த வானர வீரர்கள், திசை தடுமாறி தவித்த பொழுதும், தேவியைக் காண வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு தேவி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று தெரிந்து கொண்டு வரும்படி ராமனின் கட்டளை, இந்த செய்தியைச் சொல்லி அவர்கள் தாபத்தை போக்குவேன். கண்டேன் சீதையை என்று தெரிவித்து அவர்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக ஆவேன். தேவி, நல்ல வேளையாக நான் கடலைக் கடந்து வந்தது வீண் போகவில்லை. முதலில் கண்டவன் நான் என்பதால் நான் பெரும் புகழும் அடைவேன். ராகவனும் சீக்கிரமே வந்து உங்களுடன் சேர்ந்து விடுவான். அது இப்பொழுது நிச்சயமாகி விட்டது. உற்றார் உறவினர், நண்பர்களுடன் ராவணனை அழித்து யுத்தத்தில் வெற்றி பெற்று வருவான். மால்யவான் என்று ஒரு உத்தமமான மலை. அங்கிருந்து கேஸரி என்ற வானர வீரன் கோகர்ண க்ஷேத்திரம் அடைந்தான். தேவ ரிஷிகளின் கட்டளைப் படி என் தகப்பனாரான அந்த கேஸரி, சாகரத்தின் கரையில் சம்பசாதனன் என்பவனை ஜயித்து வானரங்களின் க்ஷேத்திரமாக செய்தார். அந்த வானர ராஜனின் மகன் நான். வாயுவினால் உண்டாக்கப் பட்டேன். என் செயலால் ஹனுமான் என்று உலகில் க்2யாதி பெற்றேன். என்னிடம் நம்பிக்கை தோன்றச் செய்ய என் தந்தையின் பெருமைகளைச் சொன்னேன். சீக்கிரமே ராகவன் இங்கு வந்து தங்களை அழைத்துச் செல்வான். தேவி, இதோ வந்து விடுவார் என்று பலவாறாக பேசி சீதையின் மனதில் நம்பிக்கை வளரச் செய்தான், ஹனுமான். மேலும் பல சாதகமான அடையாளங்களையும் கண்டு, அவன் ராம தூதன் தான் என்று சீதை நம்பிக்கை கொண்டாள். ஜானகி பெரும் மகிழ்ச்சியும் அடைந்தாள். அவள் கண்களிலிருந்து ஆனந்த ஜலம் பெருகியது. சிவப்பும், வெளுப்பும் கலந்த கண்கள், விசாலாக்ஷியின் கண்கள். ராகுவின் பிடியிலிருந்து விடுபட்ட, சந்திரன் போல கஷ்டம் நீங்கி பிரகாசித்தது. கபியான ஹனுமான் நம்மைச் சார்ந்தவனே என்பதில் சந்தேகம் விலகி, நம்பிக்கை வளர்ந்தது. மேலும் ஹனுமான் தேவி, சமாதானம் அடைவாய். என்னை உற்றானாக நினைத்து என்ன செய்ய வேண்டும் என்று உத்திரவிடுங்கள் என்றான். சம்பசாதனன் என்ற அசுரனை அழித்தபின், மகரிஷி சொன்னதன் பேரில், வாயுவின் பிரபாவத்தால் தோன்றிய வானரமான நான், அந்த வாயுவுக்கு சமமான பலமும் வேகமும் உடையவன். ஹனுமான், நான் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் விஸ்வாசோத்பாதனம் என்ற முப்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 36 (375) அங்கு3லீயக ப்ரதா3னம் (அடையாள மோதிரத்தைத் தருதல்)
மாருதாத்மஜனான ஹனுமான் மேலும் சீதையின் மனதில் நம்பிக்கை வளரும் விதமாக, பேசலானான். மஹா பா4கே3 (பாக்யமுடையவளே) நான் வானரன். ராமனுடைய தூதன். ராம நாமம் பொறிக்கப் பட்டுள்ள இந்த மோதிரத்தை பாருங்கள். மகாத்மாவான ராமன் கொடுத்தான். என்னிடம் நம்பிக்கை ஏற்பட, தானாக என் கையில் தந்தான். ப4த்3ரம் தே- உனக்கு மங்களம் உண்டாகட்டும். உன் கஷ்டங்களுக்கு விடிவு காலம் வந்தாயிற்று. சமாதானம் அடைவாய் என்றான். அதை தன் கையில் எடுத்து உற்றுப் பார்த்த ஜானகி, தன் கணவனையே அடைந்து விட்டது போல மகிழ்ந்தாள்.
தன் கணவனின் கைகளில் அலங்காரமாக இருந்த மோதிரம் தான் அது என்று உணர்ந்து அவளுடைய அழகிய முகம் சிவந்தும் வெளுத்ததுமான கண்கள் மகிழ்ச்சியில் மலர்ந்தன. ராகுவிடமிருந்து விடுபட்ட சந்திரன் போலாயிற்று. இதன் பின் சற்றே வெட்கத்துடன் இளம் பெண் போல கணவனையே பற்றி நினைத்து, அவன் அனுப்பிய அடையாளத்தை கொண்டு வந்து தந்த வானரத்தை பாராட்டினாள். வானரோத்தமா, நீ நல்ல ஆற்றல் உடையவனே. சமர்த்தன், அறிவாளி.. அதனால் தான் இந்த ராக்ஷஸர்களின் இருப்பிடத்தில் கால் வைத்திருக்கிறாய். மகரங்கள் நிரம்பிய சாகரம் நூறு யோஜனை தூரம் பரவியது. அதை கோ3ஷ்பதீ3க்ருத:- பசு மாட்டின் குளம்புகளுக்கு இடையில் உள்ள தூரம் போல எளிதாக கடந்து விட்டாய். சிறந்த உன் ஆற்றல் சிலாகிக்கத் தகுந்ததே. வானரர்ஷபா4, நீ சாமான்யமான வானரன் அல்ல. உனக்கு பயம் என்பதே இல்லை. ராவணனிடத்தில் தயக்கமோ, நடுக்கமோ இல்லை. பதட்டப் படாமல் காரியம் செய்திருக்கிறாய். என்னுடன் பேச நீ தகுதி உள்ளவனே. ராமன் பார்த்து ஒருவரை என்னிடம் அனுப்பியிருக்கிறான் என்றால் தகுதியுடையவனைத் தான் அனுப்புவான். பரீக்ஷை செய்யாமல் ராகவன் ஒருவரை தூது போக அனுப்ப மாட்டான். அதுவும் என்னிடம் வந்து பேசவும், இந்த ராக்ஷஸர்களுக்கிடையில் சமா ளித்துக் கொண்டு செல்ல சாமர்த்தியமும் உள்ளவனைத் தான் ராமன் தேர்ந்தெடுத்திருக்கிறான். நல்ல வேளை, அந்த ராமன் குசலமாக இருக்கிறான். தர்மாத்மா. சத்யமே உருவானவன். சுமித்ரானந்த வர்த4னனான லக்ஷ்மணனும் நல்ல தேஜஸ்வி. ராகவன் குசலமாக இருந்தால், சாகரத்தை ஒட்டியாணமாக (மேகலையாக) கொண்ட பூமியில், யுகா3ந்தாக்3னி போல ஏன் பொங்கி எழவில்லை? கோபத்தில் ஏன் தகிக்கவில்லை. இருவரும் சக்தி வாய்ந்தவர்கள். சுரர்களையும் அடக்கி விடும் வலிமை உள்ளவர்கள். ஏன் இன்னமும் வரவில்லை. என் துக்கங்களுக்குத் தான் முடிவே இல்லையா. என் ராமன் மிகவும் வாட்டமுறாமல் தைரியமாக இருக்கிறானா? மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களில் கவனமாக செய்து கொண்டிருக்கிறானா? தன் காரியங்களில்,(மோகம்) கவனக் குறைவின்றி சரியாக செய்கிறானா? தளர்வின்றி, மனதாலும், உடலாலும் புருஷ கார்யம் எனும் நித்ய, நைமித்திக காரியங்களைத் தொடர்ந்து செய்கிறானா? ராஜகுமாரன், த்ரிவிதம், த்விவிதம், உபாயம் எனும் முறைகளை மறக்காமல் அனுஷ்டிக்கிறானா? எப்பொழுதும் வெற்றி பெறவே விழைபவன், அவன் நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? இவனை நாடி மித்திரர்கள் வருகிறார்களா? பரஸ்பரம் நட்பை பலப்படுத்திக் கொள்ள விழைகிறார்களா? இவனுடைய மித்திரர்கள் கல்யாண மித்திரர்களாக, நலம் விரும்பிகளாக இருக்கிறார்களா? தேவ காரியங்களை விடாமல் செய்கிறானா? தன் முயற்சியும், தெய்வ பலமும் இணைந்தால் தான் நன்மை உண்டாகும் என்பதை அறிந்தவனே. என்னை பிரிந்ததால் என்னிடம் அன்பு குறையாமல் இருக்கிறானா? இந்த கஷ்டத்திலிருந்து ராகவன் என்னை விடுவிப்பானா? சௌக்யமாகவே வளர்ந்தவன், சுகமாகவே வளர்க்கப் பட்டவன். அதற்கு தகுதியும் உடையவனே. துக்கம் என்பதே அறியாமல் வளர்ந்தவன், இந்த மகத்தான துக்கத்தை தாங்கிக் கொள்கிறானா? கௌசல்யை, சுமித்ரை இவர்களிடமிருந்தும் பரதனிடமிருந்தும் குசல சமாசாரங்கள் வருகின்றனவா? என் காரணமாக ராகவன், சுய கௌரவம் மிக்கவன், தன்னை நொந்து கொள்ளாமல் என்னைத் தேடி காப்பாற்றும் முயற்சியில் இருக்கிறானா? அல்லது வேறு விதமாக எண்ணுகிறானா? பரதன், எனக்காக அக்ஷௌஹிணி சேனைகளை அனுப்புவானா? ப்4ராத்ரு வத்ஸலன். சகோதர வாத்ஸயம் மிக்கவன், மந்திரிகள், ஒற்றர்களுடன் த்வஜங்களுடைய ரதங்களில் படை வீரர்களை அனுப்பி வைப்பானா? வானராதிபன் சுக்ரீவன் வருவானா? வானர வீரர்கள், நகங்களும், பற்களுமே ஆயுதமாக வருவார்களா? லக்ஷ்மணன் சூரன். சுமித்ரானந்தனன், அவன் ஒருவனே போதுமே. அஸ்திர சஸ்திரங்களை அறிந்தவன், ராக்ஷஸர்களை ஒழித்து விட முடியாதா? ராமன் கோபம் கொண்டு தன் பாணங்களால் ராவணனை, உற்றார் சுற்றாரோடு வதம் செய்து அழிப்பதை சீக்கிரம் காணத் தான் போகிறேன். ராமன் முகம் ஹேம சமானமானது. பத்மம் போன்ற மனம். ஜலம் இன்றி குளம் வற்றிய நிலையில், அதிலுள்ள பத்மம் சூரிய ஒளியில் வாடுவது போல என் பிரிவால் வாடாமல் இருக்கிறானா? தர்மம் என்ற பெயரில் ராஜ்யத்தை த்யாகம் செய்த பொழுதும், கால் நடையாக என்னை வனத்துக்கு அழைத்து வந்த பொழுதும் எவனுக்கு மனதில் பயமோ, சோகமோ, கவலையோ தோன்றவில்லையோ, அவன் தற்சமயம் மனதில் தைரியத்தை வளர்த்துக் கொன்டிருக்கிறானா? அவனுக்கு தாயோ, தந்தையோ, வேறு யாரோ, எனக்கு சமமாகவோ, என்னை விட அதிகமாகவோ, ஸ்னேகமாகவும் பிரியமாகவும் இருந்ததில்லையே. அதனால் தூதனே, நான் உயிர் வாழ விரும்புகிறேன். என் பிரிய ராமனுடைய மேன்மையை , அவன் வெற்றி பெறுவதை கேட்க விரும்புகிறேன். இவ்வாறு பொருள் பொருந்திய வார்த்தைகளை மதுரமாக ஹனுமானிடம் சொல்லி விட்டு, மேலும் ராமன் விஷயமாக ஹனுமான் சொல்வதைக் கேட்க ஆவலுடன் நிறுத்தினாள். சீதையின் வார்த்தைகளைக் கேட்டு ஹனுமான், சிரஸில் கை கூப்பி அஞ்சலி செய்தபடி மேலும் விவரித்தான். ராமன், நான் இங்கு வந்து சேர்ந்து விட்டதை இன்னமும் அறியான். அதனால் தான் புரந்தரன் சசியை தேடிச் சென்று அழைத்து வந்தது போல உன்னை அழைத்துச் செல்ல வரவில்லை. நான் போய் சொன்னவுடன் வந்து விடுவான். வானரங்களும், கரடிகளும் நிறைந்த பெரும் படையைத் திரட்டிக் கொண்டு ஆயத்தமாக வருவான். வருணாலயம் எனும் கடலைத் தன் பாணங்களால் அசையாது நிற்கச் செய்து விட்டு, லங்காபுரியை நோக்கி வருவான். சாகரத்தைக் கடப்பது சுலபமான காரியமும் அல்ல. இந்த லங்கா நகரில் சாந்தமான ராக்ஷஸர்கள் மட்டுமே இருக்கும்படி செய்து விடுவான். தேவர்கள், அசுரர்கள் கூடி வழியில் ராகவனைத் தடுத்தால் அவர்களையும் வதம் செய்து விடுவான். தங்களைக் காணாத வேதனைதான் அவனை வாட்டுகிறது. சிங்கம் தாக்கிய பெரிய யானை போல, தன் வேதனையை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான். மலய மலை, விந்த்4ய மலை, மேரு மலைகள், மந்த3ர மலை, து3ர்த4ர மலை இவைகளின்மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். கிழங்குகள், பழங்கள் போன்ற எங்கள் உணவின் பேரில் ஆணை. பிம்போஷ்டமும் குண்டலமும் அழகூட்டும் ராம வதனத்தை சீக்கிரமே காணத்தான் போகிறாய். தேவ லோகத்து நாக ப்ருஷ்டத்தின் மேல் தேவராஜன் வீற்றிருப்பது போல ப்ரஸ்ரவன மலையில் அமர்ந்து இருக்கும் ராமனைக் காண்பாய். ராகவன், மாமிசம் சாப்பிடுவதில்லை. மது அருந்துவதில்லை. காடுகளில் சுலபமாக கிடைக்கும் உணவு வகைகள் தான் ஆகாரம். தன்னை கடிக்கும் கொசு, பூச்சிகள், புழுக்கள் இவற்றைக் கூட தன் சரீரத்திலிருந்து அகற்றுவதில்லை. மனம் உன் நினைவில் மூழ்கி இருப்பதால், தியானத்தில் அதிக நேரம் செலவழிக்கிறான். எப்பொழுதும், வேதனையை தன்னுள் அடக்கிக் கொண்டு வளைய வருகிறான். தூங்குவதேயில்லை. தூங்கினாலும் சீதா என்று மதுரமாக அழைத்தபடி எழுந்திருக்கிறான். காம வசமாகி ஹா ப்ரியே, என்று சில சமயம் சொல்வான். அழகிய பொருட்களை, பழமோ, பூவோ, கண்டால் தங்கள் நினைவு தான் வரும். ராஜ குமாரன், திடமான உறுதி படைத்த மனத்தினன் தான். ஆனாலும் சில சமயம் வாய் விட்டு சீதே என்று அரற்றி விடுவான். தங்களை எப்படியும் கண்டு பிடிக்கவே பெரு முயற்சி செய்து வருகிறான். இதைக் கேட்டு ராமனை பற்றியது என்றதால் மன அமைதியும், அவன் வருந்துகிறான் என்பதால் சோகமும் ஒரே சமயத்தில் அனுபவித்தாள். சரத் கால இரவில், மீதியிருக்கும் மேகங்களின் இடையில் சந்திரன் போல ஆனாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் அங்கு3லீயக ப்ரதா3னம் என்ற முப்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 37 (376) சீதா ப்ரத்யானனௌசித்யம் (சீதையை திரும்ப அழைத்துச் செல்வது உசிதமல்ல)
சீதை ஹனுமானிடம் தர்மார்த்தங்களைச் சொன்னாள். ஹனுமன், அம்ருத மயமான (ராம) கதையை விஷத்தில் தோய்த்தது போல சொல்லி விட்டாய். என் ராமன் என்னையே நினைத்து உருகுகிறான் என்பது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையும் தந்தால், அவன் வேதனைப் படுகிறான் என்பது எனக்கும் வேதனையளிப்பதாக இருக்கிறது. செல்வ செழிப்பிலோ, விபத்து வரும் சமயங்களிலோ, பயப்படும்படியான கஷ்டங்களிலோ, கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வதைப் போல க்ருதாந்தன் என்ற விதி மனிதனை ஆட்டிப் படைக்கிறது. ப்ளவகோ3த்தமா, தாவிக் குதித்து ஓடும் வானரங்களில் சிறந்தவனே, விதியை யாராலும் வெல்ல முடியாது. சௌமித்ரியை, ராமனை, என்னை இந்த விதி எப்படி ஆட்டி வைக்கிறது பார். இந்த வேதனை எப்பொழுது முடியும்? இந்த சோக சாகரத்தை கடந்து ராமன், எப்பொழுது மீண்டு வருவான். சாகரத்தில் செல்லும் சமயம் படகு உடைந்து, நீரில் மூழ்கியவன் நீந்திக் கொண்டே கரை சேருவது எவ்வளவு கடினம், அது போன்ற நிலையில் இருக்கிறான். ராக்ஷஸர்களை வதம் செய்து, லங்கையை அடியோடு நாசம் செய்து விட்டு என்னை எப்பொழுது காண்பான்? ப்ளவங்கமா, அவனிடம் என் சார்பாக வேகமாக செயல் படு என்று சொல். இந்த வருஷம் முடியும் வரை தான் என் ஆயுள். பத்தாவது மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு மாதம் தான் மீதி. ராவணன் விதித்துள்ள சமயம், கெடு முடிந்து விடும். இரக்கம் என்பதே இல்லாதவன், சகோதரன் விபீ4ஷணன் வெகுவாக மன்றாடிச் சொன்னான் என்னை விட்டு விடும்படி. அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை திருப்பித் தருவது என்பதே ராவணனுக்கு ஏற்க முடியாத விஷயமாக இருக்கிறது. காலம் முடிந்த நிலையில், ஜீவனை ம்ருத்யு தேடத் துவங்கும் முன் கணக்கிட்டுப் பார்க்கும் என்பார்கள். அது போல ராவணனின் நாட்கள் எண்ணப் படத் துவங்கி விட்டன போலும். அல்லது ம்ருத்யு ராவணனின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது போலும். அனலா என்ற விபீஷணனின் மூத்த மகள், அவள் தாயார் அனுப்பி என்னிடம் வந்தாள். அவள் சொல்லித் தான் இந்த விஷயம் எனக்குத் தெரியும். ஹரி ஸ்ரேஷ்டா, எனக்கு புது உற்சாகம் தோன்றுகிறது. நான் நிச்சயம் என் பதியை அடைவேன். என் அந்தராத்மா மிகவும் சுத்தமானது. அதில் பல குணங்கள் உள்ளன. ராகவனிடத்தில் உற்சாகம். பௌருஷம், ஆற்றல் , இரக்கம் என்று பல குணங்கள் உள்ளன. வானரா, விக்ரமும், பிரபாவமும் அவனுக்கு உண்டு. ஜனஸ்தானத்தில் பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்களை ஒருவனாக போரிட்டு மாய்த்தவன். எதிரி என்று அவன் எதிரில் நிற்பவன் எவன் தான் சிரமப் படாமல் இருப்பான். இந்த சங்கடமான நாட்களில் அவனை நீங்கள் முழுவதுமாக புரிந்து கொண்டிருக்க முடியாது. எனக்குத் தெரியும். புலோமஜா என்ற சசி இந்திரனை அறிந்திருந்தது போல, உள்ளும் புறமும் நான் அறிவேன். மகா கபேஸ்ரீ வானரமே, ராமன் திவாகரன் போன்றவன். சர ஜாலங்களே, அம்புகளே அவனது தீக்ஷ்ணமான கிரணங்கள். சூரன். குறைவில்லாத ஜலம் போல் தோன்றும் சத்ருக்கள் எனும் குளத்தை தன் பாணங்களால் வற்றச் செய்து விடுவான் என்று இவ்வாறாக, ராமனை எண்ணி தனக்குள் பேசிக் கொள்வது போல ஹனுமானிடம் ஜானகி சொல்லிக் கொண்டே போக, அவள் கண்களில் பெருகும் கண்ணீரையும் கண்டு ஹனுமான் அவளுக்கு ஆறுதலாக சொன்னான். தேவி, நான் போய் கண்டேன், சீதையை என்று விவரங்களைச் சொல்ல வேண்டியது தான் தாமதம். ராமன் படை திரட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவான். அல்லது வரானனே, இன்றே உன்னை நான் விடுவிக்கிறேன். என் முதுகில் ஏற்றிக் கொண்டு உன் வேதனை எனும் இந்த கடலையும் கடந்து விடுகிறேன். லங்கையை ராவணனோடு சேர்த்து, அடியோடு தூக்கக் கூடிய சக்தி எனக்கு இருக்கிறது. மைதிலி, இன்றே ப்ரஸ்ரவன மலையில் இருக்கும் ராமனிடம் உன்னைக் கொண்டு சேர்த்து விடுவேன், அனலன், நெருப்பு, ஹோமத் தீயில் இட்ட ஹவிஸை, இந்திரனுக்கு கொண்டு சேர்ப்பது போல உன்னை ராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன். இன்றே ராமனை, லக்ஷ்மணனுடன் சேர்த்து காண்பாய். விஷ்ணுவை தைத்ய வதம் ஆன பின், (லக்ஷ்மி தேவி) கண்டது போல காண்பாய். மகா பலசாலியான ராமன், உன்னைக் காண துடித்துக் கொண்டு ஆசிரம வாழ்க்கையை மேற் கொண்டு ப்ரஸ்ரவன மலையில் இருக்கிறான். நாக ராஜன், (யானைத் தலைவன்) மலையரசன் தலையில்- மலையுச்சியில் இருப்பது போல அமர்ந்திருப்பவனைக் காண்பாய். யோசிக்காதே. சோபனே, என் முதுகில் ஏறிக் கொள். பெரும் சமுத்திரத்தை ஆகாய மார்கமாக கடந்து செல்வோம். உன்னை அழைத்துக் கொண்டு நான் புறப்பட்டுச் செல்லும் பொழுது லங்கா வாசிகள் யாரும் பின் தொடர்ந்து வரவும் முடியாது. என்னைத் தடுக்கவும். யாருக்கும் சக்தியில்லை. நான் எப்படி இங்கு வந்து சேர்ந்தேனோ, அதே போல உங்களை அழைத்துக் கொண்டு யாரும் அறியாமல் திரும்பியும் சென்று விடுவேன் என்று இவ்வாறு ஹனுமான் உற்சாகமாக சொல்லிக் கொண்டே போகவும், மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் பொங்க பதில் சொன்னாள். ஹனுமன், வெகு தூரம் அத்வானமான இடத்தில் என்னையும் தாங்கி தூக்கிக் கொண்டு போவதாக சொல்கிறாய். எப்படி முடியும்? இதிலேயே உன் கபித்வம் வானர இயல்பு தெரிகிறது. அல்ப சரீரம் உடைய நீ என்னை எப்படித் தூக்குவாய்? மானவேந்திரனான என் பர்த்தாவின் அருகில் கொண்டு சேர்ப்பதாக சொல்கிறாய். சீதை சொன்னதைக் கேட்டு வானர வீரன் திகைத்தான். இதுவரை கண்டோ, கேட்டோ அறியாத அவமானம். லக்ஷ்மீவானான ஹனுமான் யோசித்தான். இவள் என் சக்தியையோ, செயல் திறமையையோ, பிரபாவம் எதுவும் அறியாள். அதனால் வைதேஹி, பார். என் ரூபத்தைப் பார். நான் விரும்பியபடி வளரவும், குறுகவும் என்னால் முடியும். இதோ பார் என்று சொல்லி தன் பெரிய உருவத்தை வைதேஹி காண வளர்ந்தான். அந்த மரத்திலிருந்து கீழே இறங்கி வளர ஆரம்பித்தான். சீதைக்கு நம்பிக்கை ஏற்பட, வளர்ந்தான். மேரு, மந்தர மலைகள் போல எரியும் நெருப்பின் ஜ்வாலை போல சீதையின் எதிரில் நின்றான். ஹரி- வானரம் மலை அளவு பெரியவனாக, தாம்ர வர்ண முகத்தினனாக, மகா பலசாலியாக, வஜ்ர த்ம்ஷ்டிரனாக- வஜ்ரம் போன்ற பல்லும், பீமனாக- மிகப் பெரிய உருவமுமாக, கண்ணால் காணவே பயம் தரும் படி, நின்று வைதேஹியிடம் சொன்னான். பர்வதங்கள், வனங்கள் உட்பட, தோரணங்கள் கட்டப் பட்ட இதன் மாட மாளிகைகள், அசையாது இந்த லங்கை முழுவதையும், இதன் நாதனோடும் அல்லது நாதன் இன்றியும் தூக்கிச் செல்ல என்னால் முடியும். அதனால் இப்பொழுது நம்பி என்னுடன் கிளம்புவாயாக. ராகவனையும், லக்ஷ்மணனையும் துக்கம் தீர்ந்து நிம்மதியடையச் செய்யலாம். எதிரில் மலை போல நின்றவனைப் பார்த்து ஜனகன் மகள், பத்ம பத்ரம் போன்ற கண்கள் அகல, மாருதனுடைய மகனான ஹனுமனைப் பார்த்து உன் ஆற்றல், பலம் இவற்றை அறிந்து கொண்டேன், மகா கபேஸ்ரீ. பெரும் வானரமே, சாக்ஷாத் வாயு பகவான் போலவே உன் வேகமும் கதியும் என்றும் தெரிந்து கொண்டேன். சாமான்யமான எவன் தான் இந்த பூமி வரை வளர முடியும்? அளவிட முடியாத ஆழமான கடலைக் கடந்து இக்கரை வந்துள்ளாய். உனக்கு என்னை அழைத்துச் செல்ல சக்தி இருக்கிறது. மகாத்மாவான ராமனின் கார்ய சித்3தி4 வெகு சீக்கிரமே ஆக வேண்டும் தான். ஆனால், குற்றமற்றவனே (அனகா) நான் உன்னுடன் வர முடியாது. வாயு வேகத்தில் நீ செல்வாய். அந்த வேகமே எனக்கு மயக்கம் வரவழைக்கும். சாகரத்தின் மேல், உயர உயர பறக்கும் சமயம், ஆகாயத்தில் இருந்து வேகம் தாங்காமல் நான் விழுந்தாலும் விழுவேன். உன் முதுகிலிருந்து கிழே சாகரத்தைப் பார்த்தால் எனக்கு பயத்தில் தலைசுற்றலாம். அதனாலும் விழ ஏதுவுண்டு. திமிங்கிலமும் மற்ற மீன் வகைகளும் நிரம்பிய கடலில் விழுந்தால் என்ன செய்வேன்? அந்த நீர் வாழ் பிராணிகளுக்கு விருந்தாக ஆவேன். நீ சத்ரு வினாசனன் தான். ஆனாலும் உன்னுடன் நான் பயணம் செய்ய முடியாது. உன்னுடன் வந்தாலும் களத்ரம் என்ற சந்தேகம் வரத்தான் செய்யும். ராக்ஷஸர்கள் யாரோ என்னை தூக்கிச் செல்கிறார்கள் என்று தெரிந்தால் போதும், துரத்துவார்கள். ராவணனே கட்டளையிட்டு கூட்டம் கூட்டமாக அனுப்புவான். சூலமும், உத்3க3ரமும் ஏந்தி வரும் அந்த சூரர்கள் வீரர்கள் சூழ்ந்து கொண்டு உன்னுடன் சேர்த்து என்னையும் பார்த்தால் விடுவார்களா? உனக்கு பாரமாக நான். ஆயுதங்களுடன் ராக்ஷஸர்கள், நியாயுதபாணியாக நீ அவர்களை எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியும்? என்னையும் காப்பாற்ற வேண்டும். அவர்கள் என்னைக் கண்டு கொண்டால் பயங்கரமான அவர்கள் தோற்றத்தைக் கண்டே நான் சாகரத்தில் விழுந்து விடுவேன். கபி சத்தமா, ஆற்றல் மிகுந்த வானரமே, அவர்கள் கூட்டமாக வந்தால், எப்படியாவது உன்னை தோற்கடித்து விடுவார்கள். அல்லது நீ மும்முரமாக அவர்களுடன் போர் புரியும் பொழுது நான் சமாளிக்க முடியாமல் விழுந்தாலும் விழுவேன். கீழே விழுந்த என்னை திரும்பவும் சிறை பிடித்து லங்கைக்கே கொண்டு செல்வார்கள். அல்லது பலவந்தமாக என்னை பிடுங்கிக் கொண்டு உன்னைத் தனியாக விட்டுச் சென்றாலும் செல்லலாம். யுத்தம் என்று வந்தால் வெற்றி, தோல்வி நிச்சயம் அல்லவே. நான் இந்த ராக்ஷஸர்களின் தாக்குதலை தாங்காமல் வீழ்ந்து விட்டால். உன் பிரயத்தினங்கள் பயனின்றி போகுமே. ஹரி ஸ்ரேஷ்டனேஸ்ரீ நீ ஒருவனே போதும், எல்லா ராக்ஷஸர்களையும் வதம் செய்து விடுவாய். ஆனால் உன் கையால் ராக்ஷஸர்கள் அனைவரும் வீழ்ந்து விட்டால், ராமனுக்கு என்ன பெருமை? ராகவன் பெருமை குறையும். அல்லது ராக்ஷஸர்கள் உன்னைப் பிடித்து சிறை வைத்து விட்டால், ராகவர்கள் விஷயம் தெரியாமல் தவிப்பார்கள். ஹரி ராஜனும், போனவன் வரவில்லையே என்று கவலைப் படுவான். எனக்காக நீ எடுத்துக் கொண்டுள்ள பெரு முயற்சிகள் வீணாகும். நீ ராகவனுடன் சேர்ந்து செயல் படுவதில் பல நன்மைகள் விளையக் கூடும். என்னுடைய ஜீவிதம் நிச்சயமாகும். ராகவர்களுடைய, அவர்கள் சகோதரர்களுடைய (பரத, சத்ருக்னர்களுடைய), உன் ராஜ குலத்தினரின், ஜீவிதமும் பிழைத்திருக்கும். என் காரணமாக, ஏற்கனவே நிராசையுடன் இளைத்து இருப்பவர்கள், கூடியுள்ள ஹரி கணங்கள், ருக்ஷ கணங்கள் இவற்றுடன் கூடவே மடிந்து போவார்கள். வானர, மகா பா3ஹோ, என் பர்த்தாவிடம் எனக்கு உள்ள பக்தியை முன்னிட்டு, பிற புருஷனுடைய சரீரத்தை தொட மாட்டேன். ராவணன் பலவந்தமாக தூக்கியபொழுது அவன் சரீரத்தை தொடும்படி நேர்ந்தது என்றால், அது என் வசத்தில் இல்லை. என் நாதனும் அருகில் இல்லை. எனக்கும் தன்னைக் காத்துக் கொள்ளும் சக்தியில்லை. ராமன் இங்கு வந்து, உற்றார் உறவினரோடு ராவணனை வதம் செய்து என்னை இங்கிருந்து அழைத்துச் செல்வானேயானால், அது அவனுக்கு பெருமை சேர்க்கும். பலர் யுத்தத்தில் வீரர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன், கண்டும் இருக்கிறேன். ஆனால், அவர்கள் பராக்ரமம் ராமனுக்கு சமமாக ஆக முடியாது. தேவ கந்தர்வர்களோ, புஜங்க ராக்ஷஸர்களோ. யாரானாலும் யுத்தத்தில் ராமனுக்கு சமமான விக்ரமும், அதே பலமும் கொண்ட லக்ஷ்மணனும் அருகில் இருக்கும் பொழுது யார் தான் போரிடத் துணிவார்கள். நெருப்பு கொழுந்து விட்டெரியும் பொழுது, காற்றும் சகாயமாக வீசினால், அதன் ஜ்வாலையின் உஷ்ணத்தை யார் தான் பொறுக்க முடியும்? லக்ஷ்மணனுடன் கூடிய ராகவன், மதம் பிடித்த திக்கஜம் நிற்பது போல நிற்பான். யார் எதிரில் வரத் துணிவார்கள்? வானரனே, யுக முடிவில் சூரியன் தன் கிரணங்களே கூரிய பாணங்களாக தாங்கி வருவது போல நிற்பவனை யாரால் எதிர்க்க முடியும் ? அதனால், ஹரி ஸ்ரேஷ்ட, லக்ஷ்மணனுடன் என் பதியை படை பலங்களோடு சீக்கிரமாக இங்கு அழைத்து வா. ராமனை எண்ணி வெகு காலமாக நான் வாடியது போதும். என் நாதனை நேரில் கண்டு நான் மகிழும்படி செய்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சீதா ப்ரத்யானனௌசித்யம் என்ற முப்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 38 (377) வாயஸ வ்ருத்தாந்தக் கத2னம் (காகத்தின் கதையைச் சொல்லுதல்)
ஹனுமான் சீதையின் உசிதமான பதிலால் சமாதானம் அடைந்தான். பதில் சொன்னான். தேவி, தங்கள் தகுதிக்கேற்ப பேசினீர்கள். சுப4 த3ர்சனே, ஸ்த்ரீ சுபாவத்துக்கு ஏற்ப, சாத்4வி எனும் பதிவிரதா ஸ்த்ரீகளின் குணமும், உங்கள் விசேஷ குணமான வினயமும் இந்த பதிலில் வெளிப் பட்டது. ஸ்த்ரீ என்பதால் சாகரத்தைக் கடந்து செல்வது சிரமமான காரியமே. தங்களையும் சுமந்து கொண்டு நூறு யோஜனை தூரம் நீண்ட சமுத்திரத்தை தாண்டுவது ஆபத்து என்று சொன்னீர்கள். மற்றொரு காரணம் சொன்னீர்களே, ராமனையன்றி மற்றொரு புருஷனைத் தொட மாட்டேன் என்பதாக, ஜானகி இது உங்களால் தான் சொல்ல முடியும். தேவி, அந்த மகானின் பத்னி என்ற நிலை உங்களுக்குத் தான் பொருத்தமாகும். வேறு யார் உங்களைத் தவிர இப்படி பேசுவார்கள். காகுத்ஸன் ஒன்று விடாமல் எல்லா விவரங்களையும் சொல்லச் சொல்லிக் கேட்பான். நீங்கள் என்ன செய்தீர்கள், என்ன சொன்னீர்கள், நமது இந்த சந்திப்பில், நான் கண்டது அனைத்தையும், கேட்டதையும் வரிசையாக சொல்லச் சொல்வான். பல காரணங்களை முன்னிட்டும், ராமனுக்கு பிரியமானதை சீக்கிரம் செய்ய வேண்டும் என்ற ஆவலாலும் நான் இப்படி ஒரு யோஜனை சொன்னேன். லங்கையில் நுழைவது கடினம், சமுத்திரத்தை தாண்டுவது கடினம், என் சாமர்த்தியத்தில் எனக்குள்ள நம்பிக்கை இவைகளை வைத்து நான் யோஜனை சொன்னேன். இன்றே தங்களை அழைத்துச் சென்று ராகவனிடம் சமர்ப்பிக்க விரும்பினேன். என் குருவான சுக்ரீவனிடம் உள்ள ஸ்னேகத்தாலும், பக்தியாலும், எல்லோரும் மெச்சும்படி செய்ய விரும்பினேன். தேவி, என்னுடன் புறப்பட்டு வர சம்மதம் இல்லையெனில், ஏதாவது ஒரு அடையாளம் கொடுங்கள். ராகவன் புரிந்து கொள்ளும்படி ஏதாவது சொல்லுங்கள். ஜானகி மெதுவாக, குரல் தழ தழக்க சொல்ல ஆரம்பித்தாள். இது ஒரு நல்ல அடையாளம், இதைச் சொல். சித்ரகூட மலையில் வட கிழக்கு பகுதியில், முன்பு ஒரு சமயம், தபஸ்விகள் நிறைந்த ஆசிரம பகுதியில், பழங்களும், காய் கிழங்குகளும் சேகரித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தோம். சித்தர்கள் நிறைந்த தேசம். மந்தா3கினி நதிக்கு அதிக தூரம் இல்லை. உபவனம் அடர்ந்து வளர்ந்திருந்தது. புஷ்பங்கள் பலவிதமாக மலர்ந்து காணப் பட்டது. நீரில் அலைந்து விளையாடிக் களைத்து ஓரிடத்தில் அமர்ந்தோம். உன் மடியில் தலை வைத்து நான் படுத்தேன். அப்பொழுது ஒரு காகம் என்னை கொத்தி துன்புறுத்தியது. ஒரு கல்லை எடுத்து (ஓட்டாஞ்சில்) துரத்தினேன். கலங்காமல் அந்த காகம் என்னையே உறுத்துப் பார்த்தபடி நகராமல் இருந்தது. ப3லி போ4ஜனன் எனும் பெயர் கொண்ட காகங்கள் மாமிச பக்ஷிணிகள். நான் உதட்டை சுழித்து கோபத்துடன் அதை விரட்டினேன். ஓடி ஓடி அதை விரட்ட முனைந்த பொழுது என் ஆடை தான் விலகியது. நீ பார்த்து சிரித்தாய். ஏற்கனவே கோபம், நீ பார்த்து சிரித்ததால் வெட்கமும் சேர்ந்து கொண்டது. திரும்பவும் அந்த காகம் என்னை கொத்தவும், உன்னிடம் வந்து சொன்னேன். களைப்புடன் உன் முதுகில் சாய்ந்து அமர்ந்தேன். என் கோபத்தை ரசித்து சிரித்தாய். என்னை சமாதானம் செய்தாய். கண்ணீரால் ஈ.ரமான முகத்தைத் துடைத்துக் கொண்டு நான் நிற்பதைக் கண்டு மேலும் மகிழ்ச்சியுடன் என் கோபத்தை ரசித்து சீண்டினாய். சமாதானம் செய்தாய். இந்த சம்பவத்திற்குப் பிறகு, உன் மடியில் நான் உறங்கினேன். சற்று நேரம் சென்ற பின், நான் விழிக்க, என் மடியில் ராகவன் படுத்தான். திடுமென அந்த காகம் அங்கு வந்தது. வேகமாக வந்து திரும்பவும் என்னைக் கொத்தியது. தூங்கி விழித்தவள், என்ன என்று திரும்பி பார்க்கும் முன், என் ஸ்தனங்களின் மத்தியில் ரத்தம் வரும் படி கொத்தி விட்டு பறந்தது. திரும்ப வந்து கொத்தவும் பெருகிய ரத்தம் ராகவன் மேல் படவும், உடனே எழுந்து விட்டான். அப்பொழுது தான் அந்த காகம் பலவந்தமாக என்னைத் துன்புறுத்துகிறது, வேண்டுமென்றே செய்யும் விஷமம் என்று தெரிந்து கொண்டான். பயங்கரமாக கோபம் கொண்டான். ஆலகால விஷம் போல அந்த கோபம் பெருகிறது. யாரது? ஐந்து முகம் கொண்ட விஷ நாகத்துடன் விளையாடுவது? யார் உங்களை இப்படி ரத்தம் வர அடித்தது என்று கேட்டுக் கொண்டே எழுந்தவன் கண்களில் காகம் பட்டது. இப்பவும் அது தன் நகங்களில் ரத்தக் கறையுடன் என்னையே உறுத்து பார்த்தபடி நின்றது. இந்திரனின் புத்ரனாம். வாயுவுக்கு சமமான வேகத்துடன் பறக்கக் கூடியது. இதை என்ன செய்வது? உடனே ராமன் விரிப்பில் இருந்த ஒரு புல்லை, தர்பத்தை எடுத்து, ப்ரும்மாஸ்திர மந்திரம் சொல்லி அதை காகத்தின் மேல் பிரயோகித்தான். அந்த புல், ப்ரும்மாஸ்திர தகுதியை பெற்றவுடன் அக்னி போல ஜ்வலித்தது. ஆகாயத்தில் காகத்தைத் துரத்திக் கொண்டு சென்றது. காகம் பல இடங்களுக்குச் சென்று தப்ப முயன்றது. தன்னைக் காப்பாற்ற யாராவது இருக்கிறார்களா என்று மூவுலகிலும் தேடிச் சென்றது. தந்தையான இந்திரன் கை விட்டு விட்டான். எல்லா தேவர்க ளிடமும் அடைக்கலம் வேண்டியது. மகரிஷிகளிடம் சென்றது. யாருமே அடைக்கலம் தர தயாராக இல்லை. சுற்றி சுற்றித் திரிந்து திரும்பவும் ராமன் காலடியிலேயே வந்து விழுந்தது. வதம் செய்யப் பட வேண்டிய துஷ்ட ஜந்து. ஆயினும் காலடியில் வந்து விழுந்ததால் காகுத்ஸன் அதையும் அன்புடன் பரிபாலித்தான். தன் தவற்றை உணர்ந்து வருந்திய காகத்திடம் கேட்டான். இந்த ப்ரும்மாஸ்திரம் வீணாகாது. என்னசெய்வது? நீயே சொல், எனவும், என் வலது கண்ணை எடுத்துக் கொள்ளுங்கள் என்றது. ராகவனும், அந்த அஸ்திரத்திற்கு இலக்காக காகத்தின் வலது கண்ணை அழித்து விட்டு, உயிருடன் விட்டு விட்டான். ராமனை வணங்கி, தசரத ராஜாவுக்கும் வணக்கம் சொல்லி வீரனான ராமனிடம் மன்னிப்பு பெற்று தன் இருப்பிடம் சென்றது. என் காரணமாக ஒரு காகத்திடம் ப்ரும்மாஸ்திரத்தை பிரயோகித்தீர்கள். இப்பொழுது ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள். மஹீபதே, என்னை உங்களிடம் இருந்து பிரித்த இந்த ராவணனிடம் ஏன் தாமதம் செய்கிறீர்கள்? மகா உற்சாகத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் கருணை காட்டுங்கள். நரர்ஷபா, தங்களை நாதனாக கொண்டவள் நான். அனாதை போல தவிக்கிறேனே. கருணை தான் மிகப் பெரிய தர்மம். இதை நான் தாங்கள் சொல்லித் தான் தெரிந்து கொண்டிருக்கிறேன். மகா பலசாலியாக, மகா வீர்யவானாக, மகா உத்ஸாகம் மிகுந்தவனாகத் தான் நான் அறிந்திருக்கிறேன். எல்லையில்லாத, குறைவில்லாத, யாராலும் வற்றச் செய்ய முடியாத சமுத்திரம் போன்ற காம்பீர்யம் உடையவன். அந்த சமுத்திரத்தை எல்லையாக கொண்ட பூமியின் நாயகன். இந்திரனுக்கு சமமானவன். பலவான் என்று இவ்வளவு இருந்தும் இந்த ராக்ஷஸார்களிடத்தில் உங்கள் அஸ்திரங்களை ஏன் பிரயோகம் செய்யாமல் இருக்கிறீர்கள். நாக3ர்களா, கந்தர்வர்களா, அசுரர்களா, மருத் கணங்களா, ராமனுடன் நேரில் போர் முணையில் நிற்க தகுதியுடையவர்கள் அல்ல. திரும்ப அஸ்திரங்களை பிரயோகிக்க யாருக்குமே சக்தியில்லை. இப்படிப் பட்ட வீரனின் மனதில் என் பொருட்டு சிறிதளவாவது கவலை இருக்குமானால், ஏன் கூர்மையான ஆயுதங்களால் இந்த ராக்ஷஸ கூட்டம் இன்னமும் அழிக்கப் படாமல் இருக்கிறது. லக்ஷ்மணன் தான் பரந்தப: தபஸ்வி, சகோதரன் அனுமதி பெற்று வந்து என்னை காப்பாற்றக் கூடாதா? வாயுவும், அக்னியும் போல தேஜஸ் உடையவர்கள் இருவரும் புருஷ வ்யாக்4ரர்கள். சுரர்களாலும் எதிர்த்து வெற்றி பெற முடியாதவர்கள். ஏன் என்னை அலட்சியம் செய்கிறார்கள். நான் செய்த ஏதோ ஒரு தீவினை தான் மிகப் பெரிதாக வளர்ந்து நிற்கிறது. சந்தேகமேயில்லை. அதனால் பெரும் தவப்பயன் உடையவர்கள் இருவரும், சமர்த்தர்களாக இருந்தும் என்னை காப்பாற்ற ஏனோ வந்து சேரவில்லை. வைதேஹி இவ்வாறு வேதனையும், சுய பச்சாதாபமும் மேலிட சொன்னதைக் கேட்டு, ஹனுமான் பதில் சொன்னான். என் மேல் ஆணை, தேவி, உங்கள் வேதனையை ராமன் அறிவான். ராமன் தன் வேதனையைக் காட்டிக் கொண்டால் லக்ஷ்மணனும் மனம் வாடுவான். எப்படியோ தங்களைக் கண்டு கொண்டேன். தேவி, இனி எதற்கும் கவலைப் பட வேண்டாம். இந்த க்ஷணத்தில் துக்கத்தின் முடிவைக் காண்பீர்கள். ராஜ குமாரர்கள் இருவரும் மகா பலசாலிகள். புருஷ வ்யாக்4ரர்கள். உங்களைக் காணவே துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ வந்து லங்கையை பஸ்மமாகச் செய்து, வீரனான ராவணனை வதம் செய்து விட்டு, விசாலாக்ஷி, ராவணன் பந்துக்கள் மற்றும் அவனை ஆதரிக்கும் அனைவரையும் இல்லாமல் செய்து விட்டு, இதோ உங்களைத் தன்னுடன் தன் ஊருக்கு அழைத்துச் செல்லத்தான் போகிறான். தேவ லோக பெண்மணி போல இருந்த சீதை இதைக் கேட்டு ஆறுதல் அடைந்தவளாக மேலும் சொன்னாள். கௌசல்யா எந்த வீரனான புத்திரனை, லோக பர்த்தாவாக பெற்றாளோ. அவனை என் சார்பில் நலம் விசாரி. தலை தாழ்த்தி வணங்கியதாக சொல். விலை உயர்ந்த ரத்ன மாலைகளையும், பிரியமான பெண் ரத்னங்களையும், உலகிலேயே துர்லபமான ஐஸ்வர்யத்தையும், விசாலமான ராஜ்யத்தில் வாசத்தையும், விட்டு, தாய் தந்தையரை வணங்கி மரியாதையுடன் கௌரவித்து ராமனுடன் வனத்துக்கு வந்தவன், எவனைப் பெற்றதால் சுமித்ரா சுப்ரஜா- நல்ல மகனைப் பெற்ற பெருமையை அடைந்தாளோ, உத்தமமான சுகங்களைத் தியாகம் செய்து விட்டு, சகோதரன் தமையனுக்கு அனுசரணையாக காகுத்ஸனை வனத்திலும் பணிவிடை செய்து கொண்டு பின் தொடர்ந்து வந்தவன், சிம்மம் போன்ற தோள்களும், நீண்ட கைகளும் மனஸ்வினியான- மானஸ்தனான குணமும், (சுய கௌரவம் மிக்கவன்) காணவும் பிரியமானவன், ராமனிடம் தந்தையாக பாவித்து நடந்து கொள்பவன், என்னிடம் தாயைக் கண்டவன் என்னை ராவணன் அபகரித்துச் சென்றதை அந்த சமயம் அறிந்திருக்கவில்லை, அந்த லக்ஷ்மணன் முதியோருக்கு உபசாரம் செய்து பணிவிடை செய்பவன், லக்ஷ்மீவான், நல்ல சக்தி, ஆற்றல் உடையவன், அதிகமாக பேச மாட்டான், ராஜ புத்திரன், அனைவருக்கும் பிரியமானவன், ஸ்ரேஷ்டன், என் மாமனார் போன்றவன், என்னை விட இந்த சகோதரன் தான் ராமனுக்கு அதிக பிரியமானவன், எந்த பொறுப்பை எங்கு எப்படி கொடுத்தாலும் நிர்வகிக்க கூடியவன், எவனைக் கண்டு ராமன் தன் தந்தை உலகிலிருந்து மறைந்ததைக் கூட உணரவில்லையோ, அந்த லக்ஷ்மணனிடம் என் சார்பாக நலம் விசாரி. நான் சொன்னதாகச் சொல். ராமனுக்கு லக்ஷ்மணன் எப்பொழுதும் மிகவும் பிரியமானவன். ம்ருதுவான சுபாவம் கொண்டவன். எப்பொழுதும் சுத்தமாக, ஒழுங்காக காரியங்களைச் செய்பவன். தாக்ஷண்யம் மிக்கவன். ஹரி சத்தமா, நீ இந்த காரியத்தில் பிரமாணம், உன்னிடம் முழு பொறுப்பையும் ஒப்படைக்கிறேன். இந்த வேதனை தீர்ந்து நான் பழையபடி ஆக, என்ன செய்வாயோ, முழு மூச்சுடன் செய். உன் முயற்சியால் ராமன் என்னைக் கண்டு, என்னிடம் அக்கறை கொள்ளட்டும். செயல் பட ஆரம்பிக்கட்டும். இதை திரும்ப திரும்ப என் நாதனிடம் சொல். தசரதாத்மஜா, ஒரு மாதம் நான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருப்பேன். அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது. என் மேல் சத்தியமாக சொல்கிறேன். பாதாளத்திலிருந்து கௌசிகியை மீட்டது போல, என்னை சிறை வைத்திருக்கும் ராவணனனிடமிருந்து மீட்க வா என்று சொல்லி, தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்திருந்த திவ்யமான சூடாமணியை ராகவனிடம் கொடு என்று சொல்லி ஹனுமானிடம் கொடுத்தாள். அத்புதமான அந்த மணி ரத்னத்தை வாங்கி தன் விரலில் போட்டுக் கொண்டான், ஹனுமான். மணியை வாங்கிக் கொண்டு தேவியை நமஸ்கரித்து விடை பெற்றுக் கொண்டு பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து அருகில் நின்றபடி, தன் மனதில் வந்த காரியம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் மனதால் ராமனிடம் சென்று விட்டான். ஹனுமனின் உடல்தான் அங்கு நின்றது. அந்த விசேஷமான சூடாமணியை கவனமாக பாதுகாத்து வைத்திருந்து சீதை தன்னிடம் கொடுத்ததை, வாங்கிக் கொண்டவன், பெரிய மலையில் புயல் அடித்து ஓய்ந்தது போல மன நிம்மதியுடன் திரும்பச் செல்வதை பற்றி யோசிக்கலானான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான மத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் வாயஸ வ்ருத்தாந்தக் கத2னம் என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 39 (378) ஹனுமத் சந்தேச: (ஹனுமானிடம் செய்தி சொல்லி அனுப்புதல்)
சூடாமணியைக் கொடுத்து சீதை ஹனுமானிடம் சொன்னாள். இந்த மணி ஒரு நல்ல அடையாளம். ராமன் இதை உடனே புரிந்து கொள்வான். இதைக் கண்டதும் ராமன் மூவரையும் நினைப்பான். தன் தாய், நான், தந்தை தசரதன் – எங்கள் மூமூவர் நினைவும் வரும். ஹரிசத்தமா, மேலும் என்ன சொன்னால் உடனே கிளம்பி உற்சாகத்துடன் போரிட வருவானோ, அது போல சொல். நீ தான் இந்த காரியத்தை செய்து முடிக்கக் கூடியவன். அதனால் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக் கொள். அப்படியே ஆகட்டும் என்று சொல்லி ஹனுமானும், அவளை தலை தாழ்த்தி வணங்கி, புறப்பட ஆயத்த மானான். வானரன், மாருதாத்மஜன், கிளம்பி விட்டதையறிந்து குரல் தழ தழக்க சீதா மேலும் சில வார்த்தைகளைச் சொன்னாள். ஹனுமன், ராம லக்ஷ்மணர்களை, இருவரையும் சேர்த்து குசலம் விசாரித்ததாகச் சொல். சுக்ரீவனையும் மற்ற மந்திரிகளையும்., முதியவர்களான வானரங்களையும் யாவரையும் விசாரித்ததாகச் சொல். நலம் விசாரிக்கும் முறைப் படி விசாரி. என்னை இந்த துன்பத்திலிருந்து எப்படி விடுவிக்க முடியுமோ, அதை சீக்கிரம் செய்யச் சொல். நான் உயிருடன் இருப்பதை ராமன் எப்படிச் சொன்னால், கௌரவமாக, தன்னுடையவளாக நினைப்பானோ, மதிப்பும் மரியாதையும் தருவானோ, அந்த விதமாக கவனமாக சொல். கீர்த்திமான், தன் மனைவியை பிறர் தவறாக பேசினால் பொறுக்க மாட்டான். உன் (சரியான) சொல்லால் தர்மம் கிடைக்கப் பெறுவாய் (வாசா தர்மம் அவாப்னுஹி). உன் சொல்லைக் கேட்டு அவர்களின் சக்தியும் உற்சாகமும் பெருக வேண்டும். தாசரதிகள் இருவரும் என்னை மீட்க தாமதம் செய்யாமல் கிளம்பும்படி பேசு. என் அடையாளங்களையும், உன் சொல்லையும் கேட்டு ராகவன், முறைபடி செய்ய வேண்டியதை தன் பராக்ரமம் வெளிப்பட செய்ய முனைவான். சீதையின் கவலையை புரிந்து கொண்ட ஹனுமான், தலைக்கு மேல் கைகளை கூப்பி அஞ்சலி செய்தவனாக, ஜனக நந்தினி, வெகு விரைவில் காகுத்ஸன் வருவான். ஹரி, ருக்ஷ சைன்யங்களோடு வந்து விடுவான். யுத்தம் பெரிதாக நடக்கும். வெற்றி பெற்று உன் துயரைத் துடைப்பான். சந்தேகமேயில்லை. மனிதர்களில், அமரர்களில், அசுரர்களில், ராமனுக்கு இணையான வீரனை நான் கண்டதில்லை. அவன் பிரயோகிக்கும் பாணங்கள் கீழே விழும் பொழுது அதை தாங்கும் சக்தி யாருக்குமே இருக்காது. எதிரில் நின்று போரிடுவது எப்படி சாத்தியமாகும். சூரியனோ, பர்ஜன்யன் என்ற வருணனோ, வைவஸ்வதனான யமனோ, யுத்தத்தில் ராமனை எதிர்த்து போரிட முடியாது. அதுவும், உங்கள் விஷயமாக ராமன் கவனமாக போரிடும் சமயம், நிச்சயம் முடியாது. அவன் தான் சாகரத்தை எல்லையாகக் கொண்ட பரந்த இந்த பூமியை ஆளத் தகுந்தவன். ராகவனின் வெற்றிக்கு நீங்களே தான் காரணமாக ஆவீர்கள் என்று சத்யமான இந்த விஷயங்களை நல்ல முறையில் சொன்னான். இதைக் கேட்டு ஜானகி ஆறுதல் அடைந்தாள். கிளம்பத் தயாராக நின்ற ஹனுமனை பார்த்து, தன் கணவன் அனுப்பி வந்தவன் என்ற பாசம் வெளிப்பட, முடிந்தால் இன்று ஒரு நாள் இருந்து விட்டுப் போ என்றாள். எங்காவது மறைந்து இருந்து விட்டு நாளை கிளம்பலாமே என்றாள். உன்னைக் கண்டதால் என் மனம் லேசாகியது. ஆறுதலாக இருக்கும். நீ கிளம்பி போய் திரும்பி வரும் வரை நான் உயிருடன் இருப்பேனா? உன்னைக் காணாமலும் இனி எனக்கு வருத்தமாகவே இருக்கும். கடந்த பல நாட்களாக நம்மைச் சேர்ந்தவர்கள் யாரையும் காணாத துக்கம் அதிகமாகும். உனக்கு உதவி செய்ய மற்ற வானரங்கள் சாகரத்தை எப்படி கடக்கப் போகிறார்கள். அந்த வானர, கரடி சைன்யங்கள், ராஜ குமாரர்கள் எல்லோரும் இந்த கடலைக் கடந்து வந்தாக வேண்டும். உலகிலேயே உங்கள் மூவருக்குத் தான் அந்த சக்தி உண்டு என்று நினைக்கிறேன். உனக்கு, உன் தந்தை வாயு. வைனதேயனுக்கு. அதனால் இந்த காரியத்தை எப்படி செய்து முடிப்பாய். உனக்குத் தான் தெரியும். இதை செய்து முடிக்கும் ஆற்றலும் உனக்குத் தான் உண்டு. உன் பலம் வளரட்டும். புகழும் ஏராளமாக பெருகட்டும். படை பலத்தோடு வந்து யுத்தம் செய்து ஜெயித்து விஜயனாக, வெற்றி வீரனாக ராகவன் என்னை தன் ஊருக்கு அழைத்துச செல்வானேயானால் அது தான் அவனுக்கு பெருமை சேர்க்கும். தன் அம்புகளால் லங்கையை ஒரு கலக்கு கலக்கி, எதிரிகளின் படையையும் நாசம் செய்யக் கூடியவன், காகுத்ஸன். என்னை அழைத்துச் செல்வானேயானால் அது தான் அவன் தகுதிக்கும் பெருமைக்கும் ஏற்ற செயலாகும். அதனால் போரில் சூரனான அவன் விக்ரமம் முழுவதுமாக வெளிப்பட, அனுரூபமாக என்ன செய்ய வேண்டுமோ, அது போல செய்வாய் என்றாள். காரணத்துடன், பொருள் பொதிந்த இந்த செய்தியையும் ஹனுமான் தன் மனதில் குறித்துக் கொண்டான். தேவி, வானரங்கள் கரடிகள் தலைவனான சுக்ரீவனும் நல்ல பராக்ரமம் உடையவனே. அவனுக்கு நல்ல செல்வாக்கும், படை பலமும் உண்டு. தங்களை மீட்பதில் உறுதியாக இருக்கிறான். கோடிக்கணக்கான வானர வீரர்களுடன், சீக்கிரமே வந்து சேருவான். ராக்ஷஸர்களை ஒரு கை பார்த்து விடுவான். அவன் முக குறிப்பறிந்து செயல்படும் வீரர்கள் அவன் வசம் உள்ளனர். இவர்கள் மேலும் கீழும் குறுக்குமாக செல்லக் கூடியவர்கள். நல்ல தேஜஸ் உடையவர்கள். எவ்வளவு பெரிய காரியம் ஆனாலும் தயங்க மாட்டார்கள். இவர்களில் பலர் சாகரத்தையும் சேர்த்து, பூமி முழுவதும் பிரதக்ஷிணம் செய்து வந்திருக்கிறார்கள். வாயு மார்கத்தில் சஞ்சரிக்க வல்லமை உடையவர்கள். எனக்கு சமமாகவோ, என்னை விட அதிக பலசாலியாகவோ தான் வானர வீரர்கள் சுக்ரீவனின் சைன்யத்தில் உள்ளனர். என்னை விட பலம் குறைந்தவர்கள் அவனிடம் இல்லை. நானே வந்து சேர்ந்து விட்டேன். மற்றவர்கள் வருவதற்கு என்ன? மிகுந்த பலசாலிகளை தூது அனுப்ப மாட்டார்கள். மற்றவர்களைத் தான் அனுப்புவார்கள். அதனால் வருந்தாதே. இந்த வேதனைகள் சீக்கிரமே தீரும். ஒரு தாவல் தாவி, ஹரி சைன்ய வீரர்கள், லங்கையை வந்தடைவார்கள். என் முதுகில் ஏற்றிக் கொண்டு சந்திர, சூரியர்களைத் தூக்கி வருவது போல ராஜ குமாரர்களை அழைத்து வந்து விடுவேன். அவர்கள் கூர்மையான பாணங்களால் லங்கா நகரத்தையே நிரப்பப் போகிறார்கள். ராகவன், ரகு நந்தனன், அவனது படை பலத்தோடு வந்து, ராவணனை அழித்து விடுவான். உங்களை அழைத்துக் கொண்டு தன் ஊருக்குச் செல்வான். அதனால் சமாதானம் அடைவாய். உனக்கு மங்களம் உண்டாகட்டும். காலத்தை எதிர் நோக்கி இரு. ராமனைக் காணும் நாள் அதிக தூரத்தில் இல்லை. கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல தேஜஸ் வாய்ந்தவன், ராக்ஷஸனை அழித்து விட, நீ ராமனுடன் சேரப் போகிறாய். சசாங்கனுடன் ரோஹிணி இணைந்தது போல. ராகவன் ராவணனை உற்றார், உறவினரோடு சேர்த்து வதம் செய்யத் தான் போகிறான் என்று நம்பு. அதனால் நான் கிளம்புகிறேன். விடை கொடுங்கள் என்றவன், திரும்பவும் ஏதோ நினைவு வந்தவன் போல ஆறுதல் சொல்ல ஆரம்பித்தான். தேவி, ராமன் க்ருதாத்மா. சத்ருக்களை வேரோடு அழிப்பவன். சீக்கிரமே அவனை சந்திப்பாய். கையில் வில்லேந்தி லக்ஷ்மணன் வாசலில் நிற்கக் காண்பாய். சிம்மம் போலவும், சார்தூலம் போலவும், பலம் கொண்ட வானர வீரர்கள் தங்கள் நகமும் பற்களுமே ஆயுதங்களாக வந்து நிற்பார்கள். ஒவ்வொருவரும் கைலாச மலையோ எனும்படி வளர்ந்த வானரங்கள், லங்கையின் மலைச் சாரல்களில் த்வம்சம் செய்வதை சீக்கிரமே காண்பாய். இவர்களின் கூச்சல் காதைப் பிளக்கப் போகிறது. ராமனும், வெகுவாக மனக் க்லேசம் அனுபவித்து விட்டான். இனி ஓய மாட்டான். இனி எந்த விதமான துக்கமும் வாட்டக் கூடாது. இந்திரனும் சசியும் போல, ராமனுடன் , ஸநாதனாக- நாதனுடன் சேர்ந்து விளங்கப் போகிறீர்கள். ராமனை விட உயர்ந்தவர் என்று வேறு யார் இருக்கிறார்கள். சௌமித்ரிக்கு சமமான வீரன் வேறு யார் உண்டு? அக்னியும், மாருதனும் போல இருவரும் உங்களைக் காக்க முனைந்துள்ள பொழுது இங்கு அதிக நாள் வாட வேண்டியிருக்காது. தேவி, ராக்ஷஸ கணங்களுக்கு இடையில் இந்த தேசத்தில் சீக்கிரமே உங்கள் நாதனின் வருகையை எதிர் பார்த்து காத்திருங்கள். நான் போய் சொல்ல வேண்டியது தான் தாமதம் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமத் சந்தேஸ: என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 40 (379) ஹனுமத் ப்ரேஷணம் (ஹனுமானை வழியனுப்புதல்)
ஹனுமானின் ஆறுதலான வார்த்தைகளால் சீதை சமாதானம் அடைந்தாள். அவனைப் பார்த்து வானர, உன்னைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். பிரியமாகப் பேசுகிறாய். பாதி வளர்ந்த பயிர் மழையைக் கண்டது போல குதூகலம் என் மனதில் தோன்றுகிறது. (பாதி வளர்ந்த பயிருடன் வசுந்தரா- பூமி) ( உன் செயலால், சொல்லால்,) எந்த விதமாக, அந்த புருஷவ்யாக்ரன், என் கணவனை காமத்துடன் அணைப்பேனோ அது போல செய்வாய். தயை செய். ஹரிக3ணோத்தமா, அபிஞானம்-அடையாளம், அதைக் கொடு. காகத்தின் ஒரு கண்ணை பிளந்ததைச் சொல். மன:சிலா என்ற பாறையில், திலகத்தை என் கன்னத்தில் இட்டு விட்டாய். என் திலகம் கலைந்த பொழுது நீ செய்த இதை நீ நினைவு கொள். வீர்யவானான நீ, உன் சீதையை மற்றவன் கவர்ந்து போக எப்படி வாளாவிருக்கிறாய். மகேந்திர, வருணனுக்கு ஒப்பான நீ, உன் மனைவி ராக்ஷஸிகள் மத்தியில் கஷ்டப் பட, பேசாமல் இருக்கலாமா? இந்த சூடாமணியை நான் கவனமாக ரக்ஷித்து வைத்திருக்கிறேன். இதைக் கண்டு, உன்னையே நேரில் கண்டது போல என் வேதனையை மறந்து வந்தேன். இதைக் கொடுத்தனுப்புகிறேன். நீரில் தோன்றிய மணி இது. அதிக நாள் நான் உயிருடன் இருக்க மாட்டேன். இருக்க விருப்பமும் இல்லை. இவர்கள் பேச்சும், நடத்தையும் பொறுக்கவே முடியவில்லை. இந்த கோரமான ராக்ஷஸிகளையும் உன் பொருட்டு நான் பொறுத்துக் கொள்கிறேன். ஒரு மாதம் தான் உயிருடன் இருப்பேன். அதன் பின் என் உயிர் இந்த உடலில் தரிப்பது சந்தேகமே. இந்த ராக்ஷஸ ராஜனும் கோரமானவன். அவன் பார்வையும் எனக்கு கஷ்டமே தருகிறது. அத்துடன் நீயும் வருந்துகிறாய் என்பது, உயிர் வாழ்வதில் எனக்கு உள்ள ஆசையைக் குறைக்கிறது. என்றாள். உடனே ஹனுமான், தேவி, தாங்கள் படும் கஷ்டங்களை ராமன் அறியான். அவன் தன் வேதனையை வெளிக் காட்டிக் கொண்டால், லக்ஷ்மணனும் அதே போல வேதனைப் படுவான். எப்படியோ தங்களைக் கண்டுகொண்டேன். இனி நல்ல காலம் தான். கவலைப் பட இது நேரம் அல்ல. இந்த முஹுர்த்தத்தில் தங்கள் கஷ்டங்களின் முடிவைக் காண்பீர்கள். பாமினி, ராஜ புத்திரர்கள் இருவரும், புருஷ வ்யாக்ரர்கள். அரிந்தம:- எதிரிகளைத் தாங்க முடியாமல் கதற அடிப்பவர்கள். தங்களைக் காண துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ வந்து லங்கையை பஸ்மமாக ஆக்கப் போகிறார்கள். ராவணனையே யுத்தம் செய்து வதம் செய்து தங்களை அழைத்துக் கொண்டு தன் ஊர் செல்வார்கள். எதை கண்டால் ராமன் உடனே புரிந்து கொள்வானோ அது போல அடையாளம் இன்னும் இருந்தால் கொடுங்கள். ராமனுக்கு மேலும் ப்ரீதியை வளர்க்கும் படி ஏதாவது தாருங்கள் எனவும், அவள், ஏகொடுத்து விட்டேனே, அந்த சூடாமணிதான். இது என் கேச பூஷணம். ஹனுமன், உன் சொல்லே போதும். நம்பிக்கை அளிக்க என்றாள். அவளை வணங்கி விட்டு கிளம்பிய ஹனுமான், தாவி குதித்து தயாரானவனிடம் திரும்பவும் வைதேஹி குரல் தழ தழக்க, ஹனுமன், சிம்மம் போன்ற வீரர்களான ராம லக்ஷ்மணர்கள், சுக்ரீவனையும், அவன் மந்திரி வர்கங்களையும் எல்லோரையும் நலம் விசாரித்ததாகச் சொல். அந்த மகா பாஹு ராமன் என்னை உள்ளபடி உணர்ந்து இந்த துக்க சாகரத்திலிருந்து மீட்கும்படி நீ அவனிடம் பேசு. என் தீவிரமான வேதனையையும், இந்த ராக்ஷஸிக ளின் மிரட்டல்களையும் ராமனுக்குச் சொல்லு. உன் பிரயாணம் சௌகர்யமாக இருக்கட்டும். இவ்வாறு ராஜ புத்திரி வழியனுப்பி வைக்க, தன் மனதில் நிம்மதியும், நிறைவும் கூட, ஹனுமான் மனதால் வடக்கு நோக்கிச் சென்றான். செல்லும் வழியை மனதினுள் திட்டமிட்டுக் கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமத் ப்ரேஷணம் என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 21 (359) ராவண த்ருணீகரணம் (ராவணனை துச்சமாக எண்ணுதல்)
ரௌத்ரன் எனப்படும் ராக்ஷஸன் வாயிலிருந்து வந்த சொற்களைக் கேட்டு சீதா, மெதுவாக தீன ஸ்வரத்துடன் பதில் சொன்னாள். ஏற்கனவே உடலும் உள்ளமும் நொந்து போய் வாடி இருந்தவள், நடுங்கும் குரலில் அழுகையை அடக்கியபடி பேசினாள். சதா தன் கணவனையே எண்ணி உருகியவள், தனக்கும் ராவணனுக்கும் இடையில் ஒரு புல்லை கிள்ளிப் போட்டு, மெதுவாக சிரித்து பதில் சொன்னாள். நிவர்த்தய மனோ மத்த:- என்னிடமிருந்து உன் புத்தியை மாற்றிக் கொள். அல்லது என்னிடம் செலுத்தும் இந்த கவனத்தை மாற்றி உன் உற்றாரிடம் வைத்துக் கொள். என்னை நீ இப்படி வேண்டுவதே சரியல்ல. நல்ல சித்திகளை, பாப கர்மாக்களையே செய்பவன் விரும்பினால் எப்படி கிடைக்கும்? செய்யக் கூடாததை நான் செய்ய மாட்டேன். ஏக பத்னி நான். நல்லவர்கள் தூற்றும் எதையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். மகத்தான புண்ய குலத்தில் பிறந்தேன். அதைவிட மகத்தான குலத்தில் வந்து சேர்ந்தவள் நான். இதை சொல்லி விட்டு வைதேஹி, ராவணனை அலட்சியம் செய்யும் விதமாக திரும்பி நின்று கொண்டு மேலும் சொன்னாள். நான் பர பார்யா, அதாவது பிறன் மனைவி. உனக்கு பட்ட மகிஷி ஆக முடியாது. தவிர நான் சதி, என் கணவனையே எக்காலும் பின் பற்றுபவள். சாது தர்மம், தர்மத்தில் எது சிறந்தது என்று எண்ணிப் பார். நல்லவர்கள் சொல்வதைக் கேள். உனக்கு உன் மனைவிகள் எப்படி உயர்வோ, அதே போல மாற்றான் மனைவியையும் மதிக்கக் கற்றுக் கொள். நிசாசரனே, உன்னையே உவமானமாக எடுத்துக் கொள். உன் மனைவிகளிடம் சந்தோஷமாக இரு. தன் பத்னிகளிடம் திருப்தியுறாமல் சபலமாக பிறன் மனைவியை நாடுபவனை, புத்தியில்லாதவன், செய்முறை அறியாதவன் என்று உலகம் தூற்றும். சென்ற இடத்தும் அவமானமே மிஞ்சும். இங்கு நல்லவர்களோ அறிஞர்களோ இல்லையா? அல்லது நல்லவர்களை நீ மதிப்பதில்லையா? அதனால் தான் உனக்கு இந்த விபரீத புத்தி, ஆசாரம் எதுவும் இல்லாமல், அதர்மம் மனதில் தோன்றியிருக்கிறது. விஷயம் அறிந்த அறிஞர்கள் பத்2யமாக சொல்வதை, நீ கவனமாக கேட்பது போல கேட்டு விட்டு செய்யாமல் விடுகிறாய் போலும். அல்லது ராக்ஷஸர்களை ஒருவர் மீதியில்லாமல் அழிக்கத் துணிந்து விட்டாயா? செழிப்பாக நிறைவாக இருந்த ராஜ்யங்களும், நகரங்களும், அரசன் அநியாயத்தில் மனதை செலுத்துபவனாக, தன் ஆத்மாவை உணராதவனாக இருந்தால், முழுவதுமாக நசித்து விடுவதைக் கண் கூடாக கண்டிருக்கிறோம். ரத்னங்களின் சமூமூகமே இங்குதான் உள்ளதோ எனும்படி செல்வ செழிப்பைக் கொண்டுள்ள லங்கா நகரமும் இதே கதியைத் தான் அடையப் போகிறது. உன்னை அரசனாகப் பெற்றதால் தான் இந்த துர்கதியை அடைந்தது என்று தீர்க்க தரிசிகள் சொல்லப் போகிறார்கள். நீ ஒருவனே தான் காரணமாக, உன் செயலால் நாசம் அடைவதைக் காணப் போகிறாய். பாப கர்மாவைச் செய்தவன் நாசம் அடைந்தால், ஜீவ ராசிகள் கொண்டாடும். லங்கையின் நாசத்தால், தங்கள் சுக வாழ்க்கையை இழந்த ஜனங்கள் உன்னைத் தான் ஏசப் போகிறார்கள். நல்ல வேளை ரௌத்திரன் அழிந்தான் என்பார்கள். உன் வீழ்ச்சியை மகிழ்ந்து கொண்டாடுவார்கள். என்னை செல்வத்தைக் காட்டியோ, ராஜ்யத்தை காட்டியோ, மயங்கச் செய்ய முடியாது. பாஸ்கரனுடன் செல்லும் ஒளிப் பிரபையைப் போல நான் ராமனிடமிருந்து பிரிக்க முடியாதவள். லோக நாதனான ராமனின் தோள்களைச் சார்ந்தவள். வேறு யாரையும் மனதாலும் நினையேன். அந்த வசுதாதிபதியின் பட்ட மகிஷி. விரத ஸ்நானம் செய்த விப்ரன், தன்னை உணர்ந்த ப்ராம்மணனுக்கு அவன் கற்ற வித்தை உடன் வருவது போல. சாது ராவணா, ராமனுடன் என்னை சேர்த்து வை. என் துக்கத்தை உணர்ந்து கொள். க3ஜாதிபனை பெண் யானை தொடருவது போல ராமனைத் தொடர்ந்து வனம் வந்தேன். அந்த ராமனை நண்பனாகச் செய்து கொள். தகுதி வாய்ந்த நீங்கள் இருவரும் மித்திரர்களாக இருப்பது தான் உசிதம். வதம் செய்வதை ராமன் எப்பொழுதுமே விரும்பியதில்லை. நீ மித்திரன் ஆனால், சரணாகத வத்ஸலன், உன்னை தண்டிக்க மாட்டான். தர்மம் அறிந்தவன், புருஷ ரிஷபன், அவனுடன் உனக்கு நட்பு மலரட்டும். நீ உயிருடன் வாழ விரும்பினால், இதைச் செய். சரணாகத வத்ஸலனான, அவனை நீயும் மனம் மகிழும்படி செய். என்னையும் அவனிடம் ஒப்படைத்து விடு. இப்படி செய்தால் தான் உனக்கு மங்களம் உண்டாகும். ராவணா, இப்படி செய்யாமல் இருந்தால் நீ ராமன் கையால் வதம் செய்யப் படுவாய், நிச்சயம். கொடுமையான வஜ்ரத்தையும் தடுத்து விடலாம். அந்தகனையும் வெகு நேரம் அருகில் வராமல் தடுத்து விடலாம். ஆனால் உன்னைப் போன்ற கொடூரமானவனை, ராமன் கோபத்துடன் எதிர்த்து வந்து நின்றால், விடவே மாட்டான். ராமனுடைய வில்லின் பெரும் சப்தத்தை வெகு சீக்கிரத்தில் கேட்கப் போகிறாய். சதக்ரதுவான இந்திரன் எய்த அசனி என்ற ஆயுதம் போன்று கோஷம் செய்யும். வாயைப் பிளந்து கொண்டு நெருப்பை உமிழும் நாகங்கள் போன்ற ஆயுதங்கள், பா3ணங்கள் சுபர்ணன் என்ற கருடனின் வேகத்தில் வந்து விழப் போகின்றன. இவைகளில் ராம, லக்ஷ்மண அடையாளங்கள் பொறிக்கப் பட்டிருக்கும். இந்த ஊரில் ராக்ஷஸர்கள் ஒருவர் விடாமல் நாசம் செய்வது போல வந்து விழும். கற்கள் விழுவது போல இடைவிடாது, மழையாக பொழியும். அந்த ராம கருடன், ராக்ஷஸேந்திர மகா சர்ப்பங்களை க்ஷண நேரத்தில் அழித்து விடுவான். அவன் வில்லிலிருந்து வெளிப்படும் அம்புகள், பாம்புகள் போல சீறிக் கொண்டு என்னை உன்னிடமிருந்து விடுவித்து விடும். கருடன் சர்ப்பங்களை பாய்ந்து வந்து தூக்கிச் செல்வது போல ராக்ஷஸர்களை இனம் கண்டு அழித்து விடும். சந்தேகமே இல்லை. என் கணவன் சீக்கிரமே என்னை உன்னிடமிருந்து விடுவித்து விடுவான். எதிரிகளை தகிக்க வல்ல பராக்ரமம் உடையவன். அசுரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு கிடந்த செல்வத்தை, த்ரிவிக்ரமனாக வந்து விஷ்ணு காப்பாற்றியது போல, என்னை காத்து விடுவான். அந்த ஜனஸ்தானத்தில், ராக்ஷஸர்கள் போரில் அழிந்தபின், சக்தியில்லாத நீ, இந்த அநாகரீகமான செயலை செய்திருக்கிறாய். ராக்ஷஸனே, அந்த நரசிம்மம் போன்ற இருவரும் இல்லாத சமயம் ஆசிரமத்தினுள் வந்து திருட்டுத் தனமாக இந்த செயலை செய்தாய். இருவரும் உன் கண்ணில் படாமல் விலகியிருந்த சமயம் என்னை கவர்ந்து வந்தாய். அவர்கள் இருந்து நிழல் உன் மேல் பட்டிருந்தால் கூட, அவர்கள் நெடி உன் மேல் பட்டிருந்தால் கூட, அவர்கள் முன் நிற்க முடியாமல் ஓடியிருப்பாய். நாய்க் கூட்டம் சிறுத்தையை கண்டால் ஓடுவது போல அவர்கள் இருவரும் கண் முன் எதிரில் இருந்தால், விருத்திரன் இந்திரன் மூலம் ஒரு கையை இழந்தது போல, நிச்சயம் என் நாதன் லக்ஷ்மணன் உதவியோடு, சூரியன் சிறிய குட்டையில் நீரை வற்றச செய்வது போல உன் உயிரை வற்றச் செய்திருப்பான். அவன் சரங்கள் நீ குபேரனுடைய மலையில் சென்று மறைந்தாலும், அல்லது அவன் வீட்டில் மறைந்திருந்தாலும், தொடர்ந்து வரும். வருண ராஜனுடைய சபையில் அடைக்கலம் கேட்டு ஒளிந்திருந்தாலும், ராம பாணங்களுக்கு தப்ப முடியாது. முற்றிய பெரிய மரம், அசனி என்ற இந்திரனின் ஆயுதத்தால் அடிபட்டு விழுவதைப் போல வீழ்வாய்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பஎடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ராவண த்ருணீகரணம் என்ற இருபத்தோராவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 22 (360) மாசத்3வயாவதி4கரணம் (இரண்டு மாதங்களே என்று கெடு வைத்தல்)
சீதையின் கடுமையான வார்த்தைகளைக் கேட்டு, ராக்ஷஸாதிபன் கொதித்தெழுந்தான். பிரியமாக காட்சி தருகிறாய், அப்ரியமாக பேசுகிறாய். சாந்தமாக பேசி எவ்வளவுக்கெவ்வளவு பெண்களை வசம் செய்ய முடியுமோ, அவ்வளவு பிரியமாக பேசியும் அவமானப் படுவதும் உண்டு. உன்னிடத்தில் எனக்கு ஏற்பட்டுள்ள காமம் என் கோபத்தை அடக்கி வைத்திருக்கிறது. நல்ல சாரதி, தவறான வழியில் செல்லும் குதிரைகளை அடக்குவது போல. காமமும் மனுஷ்யனுக்கு வாமமாகவே இருக்கிறது. (வாமம்-விபரீதம்). யாரிடம் ஒருவன் அல்லது ஒருவளுக்கு காமம் அன்பு தோன்றுகிறதோ, அந்த நபரிடத்தில் தான் அனுக்ரோசம், ஸ்னேகம் இவை உண்டாகின்றன. (அனுக்ரோசம்-தாக்ஷண்யம், பரிவு) அதனால் தான், வரானனே, உன்னை வதம் செய்யாமல் விட்டிருக்கிறேன். அனாவசியமாக, நாட்டை விட்டு துரத்தப்பட்டவனிடம் அன்பு வைத்திருக்கிறாய். அவனை மனதில் எண்ணியபடி நீ என்னை ஏசினாயே, அதற்காகவே உன்னை வதம் செய்ய வேண்டும். கடுமையாக என்னிடம் நீ பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் வதம் தான் தண்டனையாக இருந்திருக்கும். மைதிலி, மிகவும் துணிச்சலுடன் பயங்கரமான வார்த்தைகளை சொன்னாய், என்று சொல்லியவன், கோபத்தால் சிவந்த கண்களுடன் சற்று நிறுத்தியவன், திரும்பவும் அவளைப் பார்த்து வரவர்ணினி, உனக்கு இரண்டு மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் என் மனைவியாக என் படுக்கையறை வருவாய். அதன் பின்னும் என்னை ப4ர்த்தாவாக ஏற்கா விட்டால், உன்னை என் காலை உணவாக கொள்வேன். துண்டு துண்டாக வெட்டி விடுவார்கள். ராக்ஷஸேந்திரன் இப்படி கடுமையாக அதட்டி ஜானகியை பயமுறுத்துவதை அருகில் இருந்து பார்த்த, உடன் வந்த கன்யா ஸ்த்ரீகள், தேவ, கந்தர்வ ஸ்த்ரீகள், வருந்தினர். தங்கள் பெரிய கண்களால் ஜாடை காட்டி சிலர், உதடுகளை சுழித்து சிலர், முடிந்தவரை முகத்தாலும், கண்களாலும் அவளை சமாதானப் படுத்த முயன்றனர். இதனால் கிடைத்த ஆறுதலால் தான் போலும், பயத்தை உதறித் தள்ளி சீதா தைரியமாக ராவணனைப் பார்த்து பதில் சொன்னாள். தன் குல பெருமை விளங்கும் படியும், தன் நடத்தையை நிலை நிறுத்தவும், தன் நன்மைக்காகவும், பேசினாள். உன்னைச் சார்ந்தவர்கள் யாருமே நீ அனாவசியமாக அழிவதை விரும்பவில்லை. ஆயினும் உன்னை தடுக்காமல் இருந்தார்களே. அது ஏன்? நல்லவர்கள் தூற்றும் இச்செயலை செய்யவிடாமல் அறிவுறுத்தி இருக்கலாமே. இந்திரனுடைய மனைவி சசி போல நான் தர்மாத்மாவான ராமனுடைய தர்ம பத்னி. உன்னைத் தவிர வேறு யாரும் என்னை மனதால் கூட தவறாக நினைத்ததில்லை. ராக்ஷஸாத4மனே, அளவில்லா தேஜஸுடைய ராமபத்னி நான். என்னிடம் நீ பிதற்றிய கடுமையான சொற்களுக்கு பரிகாரம் எங்கு போய் தேடுவாய். தலை நிமிர்ந்து நடக்கும் மாதங்கமும், (பெரிய ஆண் யானையும்) முயல் குட்டியும் ஒன்றாக காட்டில் இருக்கலாம், ஆனால் இரண்டும் ஒன்றாகுமா? அந்த யானை போன்றவன் என் ராமன். நீ முயல் குட்டி. நீசனே, இக்ஷ்வாகு நாதனை குறை சொல்ல நீ வெட்கப் படவில்லையே. அவன் எதிரில் நீ நின்றதே இல்லையே. என்னை தவறாக பார்க்கும் இந்த க்ரூரமான இரு கண்களும், விரூபமாக க்ருஷ்ண பிங்களமாக (கருமையும் மஞ்சளுமாக) இருக்கும் இந்த கண்கள் தெறித்து விழவில்லையே. தசரத ராஜாவுடைய மருமகள், தர்மாத்மாவான ராமனுடைய பத்னி, என்னைப் பார்த்து இப்படி அநாகரீகமாகப் பேசும் உன் நாக்கு ஏன் துண்டித்து விழவில்லை. ராமனிடமிருந்து எனக்கு அனுமதி கிடைக்காததாலும், தவ விரதத்தை நான் மேற்கொண்டிருப்பதாலும் தஸக்ரீவா, உன்னை பஸ்மமாக்காமல் விடுகிறேன். என் தேஜஸால், உன்னை தகித்திருக்க முடியும். ராமனிடமிருந்து பிரித்து என்னை தூக்கி வர உன்னால் முடிந்திருக்காது. விதி தான் உன் நாசத்திற்கு உன் செயல் மூலமாகவே வழி வகுத்திருக்கிறது. சந்தேகமே இல்லை. சூரன், த4னத3 சகோதரன், ஏராளமான படை பலங்கள் உடையவன் நீ ஏன் இப்படி ராமனை ஏமாற்றி அவன் தா3ரத்தை திருட துணிந்தாய். சீதை பேசப் பேச ராவணன் பொறுமையிழந்தான். மேலும் கொதித்தெழுந்தான். கண்களை சுழட்டி கோபத்துடன், ஜானகியைப் பார்த்து விழித்தான். க்ரூரமான கண்களும், கரு மேகம் போன்ற உடலும், மகா புஜங்களும், தலைகளும், சிங்கங்கள் போல நடை போடும் மான், நாக்கு நுனி சிவக்க, அம்ருத மத2னத்தின் போது மந்த3ர மலையைச் சுற்றி கயிறாக கட்டப்பட்ட பாம்பு சீறியது போல இரண்டு புஜங்களும் துடிக்க, மந்தர மலையே சிகரங்களோடு எதிரில் நிற்பது போல நின்றான். இளம் சூரியனின் நிறத்தில் இருந்த குண்டலங்கள் ஆடின. சிவந்த அசோக புஷ்பங்கள் மலை மேல் மரங்கள் ஆடும் பொழுது தெரிவது போல இருந்தன. வசந்தனே உருவம் எடுத்து வந்தாற் போல வந்தவன், கல்ப விருக்ஷம் போல உருவமும், மயான பூமியில் இருக்கும் பொம்மைக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரங்களே, அதன் தோற்றத்தை மேலும் பயங்கரமாக காட்டுவது போல எதிரில் நின்றவன், கண்கள் சிவக்க தகித்துவிடுபவன் போல மைதிலியைப் பார்த்தான். அவன் மூச்சுக் காற்று நாகங்கள் சீறுவது போல வேகமாக வந்தது. அர்த்தஹீனன் (செல்வமில்லாதவன்), நியாயமே இல்லாதவன், அவனை அனுசரித்து அவனுடன் வாழ விரும்புகிறாயே. உன்னை இன்றே நான் நாசம் செய்வேன். சந்த்யா காலத்தை சூரியன் தன் ஒளியால் இல்லாமல் போகச் செய்வது போல, என்றவன், மற்ற ஜனங்களைப் பார்த்து கட்டளையிட்டான். ராக்ஷஸிகளே, என்ன செய்வீர்களோ, ஜானகியை என்னை ஏற்றுக் கொள்ளும்படி செய்யுங்கள். சீக்கிரம், அவள் தானாக மசிய மாட்டாள். சாம, தா3ன, பே4த3ம் முதலியவற்றாலும், பிரதிலோம, அனுலோம என்ற முறைகளிலும், தேவையானால் த3ண்டமும் உபயோகியுங்கள், அவளை திசை திருப்புங்கள். அவள் மனதில் என்னை ஏற்றுக் கொள்ளும்படி செய்யுங்கள். இப்படி திரும்ப திரும்பச் சொல்லி காமத்தோடு இப்பொழுது கோபமும் சேர்ந்து கொள்ள நின்றவனை, தா4ன்யமாலினி என்ற அவன் மகிஷி, அணைத்து சமாதானம் செய்து எங்களுடன் இன்பத்தை அனுபவி, மகாராஜா. சீதையிடம் என்ன வைத்திருக்கிறது. வர்ணமும் இல்லை, உருவமும் இல்லை, மனித பெண். ராக்ஷஸேஸ்வரா, இவளுக்கு திவ்யமான போக போக்யங்கள் கொடுப்பினை இல்லை போலும். தங்கள் புஜ பலத்தால் பெற்ற பல போக போக்யங்களை இந்திரன் தானே மனமுவந்து அளித்தவை, இவற்றை, தங்களை விரும்பாதவளுடன் பூர்ணமாக அனுபவிக்க முடியாது. சரீரம் தகிக்கும். விரும்பி உங்களுடன் இன்பங்களை பகிர்ந்து கொள்ள விழையும் ஸ்த்ரீகளே உங்களுக்கு உத்தமமான மன நிறைவை சந்தோஷத்தைக் கொடுப்பாள். அன்பும் இது போன்ற உறவில் தான் பெருகும். அந்த பலசாலியான அரசன், இப்படி ராக்ஷஸ ராஜ மகிஷிகள் சொல்லி கவனத்தை திருப்பி அழைத்துச் செல்ல, உடன் சென்றான். சிரித்துக் கொண்டு அவர்களுடன் சென்றான். தேவ கந்தர்வ பெண்களும், நாகர்களும் அவனை நாலா புறமும் சூழ்ந்தபடி மாளிகைக்குள் பிரவேசித்தனர். தர்ம சிந்தனை மிக்க சீதையை அழ விட்டு, பயமுறுத்தி நடுங்கச் செய்து துன்புறுத்தியதோடு தன் எண்ணம் நிறைவேறாத போதிலும், காமனின் ஆதிக்கத்தில் தன் க்ருஹம் வந்து சேர்ந்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், மாஸத்3வயாதி4கரணம் என்ற இருபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 23 (361) ராக்ஷஸி ப்ரரோசனம் (ராக்ஷஸிகள் பயமுறுத்துதல்)
மைதிலியிடம் இவ்வாறு கடுமையாக பேசி விட்டு ராக்ஷஸ ராஜன் மற்ற பெண்டிருடன் அந்த இடத்தை விட்டு அகன்றான். ராவணன் அந்த:புரம் திரும்பி சென்ற பின், பயங்கர உருவம் கொண்ட ராக்ஷஸிகள் மைதிலியை வார்த்தைகளால் துன்புறுத்த ஆரம்பித்தனர். கோபத்துடன் இரைந்தனர். புலஸ்திய குலத் தோன்றல் எங்கள் மன்னன். த3சக்3ரீவன் என்று பெயர் பெற்றவன். அவனுக்கு மனைவியாவதை சீதே, நீ பெருமையாக அல்லவா எண்ண வேண்டும். ஏன் மறுக்கிறாய்? என்றனர். ஏகஜடா என்ற ராக்ஷஸி கண்களை உருட்டியபடி சீதையை பெயர் சொல்லி அழைத்து, ஆறு பிரஜாபதிகளில் நான்காவது ப்ரஜாபதி ப்ரும்மாவின் மானஸ புத்திரன், புலஸ்தியர் என்று பெயர் பெற்றார். புலஸ்தியருடைய மகன் விஸ்ரவஸ் என்ற பெயருடன் பிரஜாபதிக்கு சமமான தேஜஸுடன் இருந்தான். விசாலாக்ஷி, அவன் மகன் இந்த ராவணன். சத்ரு ராவணன் (எதிரிகளை கலங்கடிக்க வல்லவன்). ராக்ஷஸேந்திரன். இவனுக்கு மனைவியாவதில் உனக்கு என்ன தயக்கம். நான் சொல்வதைக் கேள். யோசிக்காதே. இதன் பின் ஹரி ஜடா என்ற ராக்ஷஸி, பூனை போன்ற தன் கண்களை உருட்டி விழித்தபடி, புத்தி சொல்ல வந்தாள். எந்த ராவணன் முப்பத்து மூன்று தேவர்களையும் ஜயித்து, தேவராஜனையும் ஜயித்து, வெற்றி வீரனாக இருக்கிறானோ, அவனுக்கு நீ தகுதியான மனைவியாக இருப்பாய். ஏன் மறுக்கிறாய்? இதன் பின் ப்ரக4ஸா என்ற ராக்ஷஸி, பெரும் கோபம் கொண்டவள் போல சீதையை கடும் சொற்களால் நிந்தித்தபடி வந்தாள். வீரத்தில் சிறந்தவன், சூரன். புறமுதுகு காட்டாதவன், பலசாலி, இவனுக்கு மனைவியாவதில் உனக்கு என்ன கஷ்டம்? பிரியமான பல ராக்ஷஸிகளை விட்டு பலவானான எங்கள் அரசன் உன்னை நாடுகிறான். மற்ற ராணிகள் அனைவருமே நல்ல பாக்யசாலிகள். அவர்களை விட உன்னை உயர்வாக எண்ணுகிறான். அப்படியிருக்க, நீ ஏன் மறுக்கிறாய்? பலவிதமான ரத்னங்களுடன் ஸ்திரீ ரத்னமாக ராவணன் அந்த:புரத்து ஸ்திரீகள் இருக்கிறார்கள். விகடா என்ற ராக்ஷஸி, வந்தாள். அடிக்கடி நாக, கந்தர்வ, தானவர்களுடன் போரிட்டு, வென்று, வாகை சூடி வந்தவன் ராவணன். அவனாக உன் அருகில் வந்து வேண்டுகிறான். சர்வசம்ருத்3த4னான நிறைந்த செல்வ செழிப்பையுடைய மகாத்மாவான ராவணனுக்கு பார்யா ஆவதில் உனக்கு என்ன கஷ்டம்? அத4மே மட்டமானவள் நீ. உடனே துன்முகீ என்ற ராக்ஷஸி வந்தாள். மரியாதை காரணமாக எந்த ராவணனிடம் சூரியன் தகிப்பதில்லையோ, மாருதன் பயந்து கோபமாக வீசுவதில்லையோ, கருவிழியாளே, அந்த ராவணனுக்கு இணங்க நீ ஏன் மறுக்கிறாய்? எவனிடத்தில் பயந்து மரங்கள் அவன் அருகில் சென்றால், புஷ்பங்களை உதிரச் செய்யுமோ, மலைகள் குடி நீரையும், மேகங்கள் அவன் மனம் கோணாமல் மழையையும் பொழியுமோ, அந்த ராக்ஷஸ ராஜன், ராஜ ராஜன், பாமினி, ஏன் அவனுக்கு மனைவியாவதில் விருப்பம் இல்லாமல் இருக்கிறாய்? நீ சொன்னவைகளும் சரியே. தத்துவங்களைச் சொன்னாய். இருந்தாலும் தற்சமயம் நாங்கள் சொல்வதைக் கேள். இல்லையெனில் உயிருடன் இருக்க மாட்டாய்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ராக்ஷஸி ப்ரரோசனம் என்ற இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 24 (362 ) ராக்ஷஸீ நிர்ப4ர்த்ஸனம் (ராக்ஷஸிகள் பயமுறுத்துதல்.)
இதன் பின் ராக்ஷஸிகள் ஒன்று சேர்ந்து சீதையை அதட்ட ஆரம்பித்து விட்டனர். சீதே, நீ ஏன் அந்த:புரத்தில் வசிக்க விரும்பவில்லை. மனோகரமாக இருக்கும். விலை உயர்ந்த சயனங்கள் அலங்கரிக்கும். எந்த ஜீவனானாலும் இதில் வசிக்கவே விரும்புவர். உனக்கு ஏன் மனம் ஒப்பவில்லை. மானுஷி, மனிதனையே பர்த்தாவாக உயர்வாக எண்ணுகிறாய். ராமனிடத்திலிருந்து உன் மனதை திருப்பிக் கொள். இனி அவனிடம் நீ செல்வது என்பது நடக்கவே முடியாது. மூவுலக செல்வத்தை அனுபவிக்கும் ராவணன், ராக்ஷஸேஸ்வரன், இவனை மணந்து கொள். எல்லா சுகங்களையும் அனுபவிப்பாய். மனிதனான ராமனையே நினைத்து உருகுவதன் காரணம் நீ மனித பெண்ணாக இருப்பதால் தான். சோபனே, ராஜ்யத்திலிருந்து நீக்கப் பட்டவன், தன் செயலில் வெற்றி பெறாதவன், விக்லவம்- மனம் கலங்கி இருப்பவன், மாசற்றவளே, நீ அவனிடம் இன்னமும் என்ன எதிர் பார்த்து காத்திருக்கிறாய்? எனவும், பத்மம் போன்ற கண்கள் குளமாக, கண்ணீருடன் பதில் சொன்னாள். நீங்கள் அனைவரும் கூடி இவ்வளவு சொல்கிறீர்களே, அது தவறு என்று தான் எனக்கு படுகிறது. மனித ஸ்திரீ ராக்ஷஸனுக்கு மனைவியாக முடியாது. நீங்கள் எல்லோரும், சேர்ந்து என்னை சாப்பிட்டு விடுங்கள். நான் உங்கள் அறிவுரையை ஏற்க மாட்டேன். தீனனோ, ராஜ்ய ஹீனனோ, என் பர்த்தா எனக்கு குரு, உயர்வு. அவனை நான் நித்யம் அனுசரித்து வந்திருக்கிறேன். சுவர்ச்சலா சூரியன் பின் செல்வது போல, இந்திரனை தொடர்ந்து சசி எப்பொழுதும் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருப்பது போல, வசிஷ்டரை அருந்ததி போலவும், ரோஹிணி சந்திரனை சார்ந்து இருப்பது போலவும், அகஸ்தியரை லோபா முத்திரை போலவும், ஸ்யவனரை சுகன்யா போலவும், சத்யவானை சாவித்திரி தொடர்ந்து சென்றது போலவும், மதி கபிலனை, சௌதா3ஸனை மத3யந்தி போலவும், சக3ரனை கேசினி போலவும், த3மயந்தி நைஷத4னைப் போலவும் நான் என் பதியை சார்ந்தே இருப்பவள். இந்த பதி விரதைகளின் வரிசையில் நானும் ஒருவள். அதனால் இக்ஷ்வாகு வம்ச நாதனான ராமனை பதியாக அடைந்தவள், அவனையே அனுசரித்து நடப்பவள். சீதையின் விளக்கத்தைக் கேட்ட பின் ராக்ஷஸிகளின் கோபம் பன் மடங்காகியது. ராவணன் கட்டளையை செயல் படுத்த வேண்டிய கட்டாயமும் இருந்தது. எதுவும் செய்ய முடியாமல் ஹனுமான் சிம்சுபா மரத்தில் மறைந்து இருந்தபடி, சீதையை இவர்கள் ஆளுக்கு ஆள் அதட்டி உருட்டி பயமுறுத்துவதை கேட்டுக் கொண்டு வாளா இருந்தான். ராக்ஷஸிகள் அழும் சீதையைச் சுற்றி அமர்ந்தனர். கூரான ப்ரலம்ப3ம் எனும் ஆயுதம், நாக்கை அறுத்து விடக் கூடியது, ப்ரஹஸ்தங்கள் இவற்றை கையில் வைத்துக் கொண்டு அவளை என்ன செய்யலாம் என்று தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். இவள் ராவண ராஜாவுக்கு மனைவியாகத் தகுதியானவள் இல்லை. இவ்வாறு ஒருவள் சொல்ல மற்றவர்களும் மேலும் அவளை கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். கண்களை துடைத்தபடி, ஹனுமான் இருந்த சிம்சுபா மரத்தடிக்கே வந்து சேர்ந்தாள். அந்த மரத்தடியிலேயே நின்றாள். சுற்றி நின்ற ராக்ஷஸிகள் தங்கள் கடமையைச் செய்தனர். வினதா என்ற ராக்ஷஸி, சீதே, போதும். இதுவரை உன் கணவனிடம் விஸ்வாஸமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாய். நிறுத்திக் கொள். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் துன்பம் தான். மனித இயல்பு, அவர்கள் தர்மம் இது என்று சொன்னாய். சந்தோஷம். மைதிலி, இப்பொழுது நான் சொல்வதும் உன் நன்மைக்கே என்று ஏற்றுக் கொள். ராவணனை பர்த்தாவாக ஏற்றுக் கொள். உலகில் எல்லா ராக்ஷஸர்களுக்கும் தலைவன். இந்திரனுக்கு சமமான வீரமும், ஆற்றலும் உள்ளவன். நல்ல ரூபமும், தாக்ஷிண்யமும் உள்ளவன். த்யாக சீலன். காணவும் இனிய தோற்றம் உடையவன். மனிதன், க்ருபணன் (கஞ்சன்) செல்வம் எதுவும் இல்லாதவன், அந்த ராமனை விட்டு விட்டு, இந்த ராவணனை மணந்து கொள். வைதேஹி, திவ்யமான அங்க ராகங்களை பூசிக் கொண்டு, ஆபரணங்களை அணிந்து, இன்றிலிருந்து எல்லா உலகுக்கும் அரசியாக, தலைவியாக, ஈ.ஸ்வரியாக இரு. அக்னிக்கு ஸ்வாஹா எப்படியோ, இந்திரனுக்கு சசி எப்படியோ, அது போல பெருமைகளைப் பெறுவாய். ராமனுடன் என்ன வைத்திருக்கிறது. இதோ, அவன் ஆயுள் முடியப் போகிறது. நான் சொல்வதைக் கேள். முஹுர்த்த நேரத்துக்குள், நீ ஏற்றுக் கொண்டு வழிக்கு வராவிட்டால், நாங்கள் எல்லோருமாக உன்னை உடனே சாப்பிட்டு விடுவோம். இதன் பின் விகடா என்ற ராக்ஷஸி, தன் அளவுக்கு மிஞ்சிய பெரிய ஸ்தனங்களுடன் அருகில் வந்தாள். முஷ்டியை உயர்த்தி கர்ஜித்தாள். மைதிலி, நீ எவ்வளவு கடுமையாக ராவணனை விமர்சித்தாய். அவனுக்கு பிடிக்காத வார்த்தைகளைச் சொன்னாய். அணைத்தையும் ராவணன் உன்னிடம் உள்ள அன்பால் பொறுத்துக் கொண்டான். தாக்ஷிண்யம் மிக்கவன். துர்மதி நீ. அவன் உன்னிடம் இவ்வளவு ம்ருதுவாக கருணையோடு வேண்டும் பொழுது உதாசீனப் படுத்துகிறாய். எங்கள் வார்த்தையை கேட்கவா போகிறாய். விதி உன்னை ஆட்டுவிக்கிறது. மற்றவர்கள் நினைத்து பார்க்க முடியாத பெரும் சாகரத்தை கடந்து உன்னை அழைத்து வந்திருக்கிறான். எந்த அன்னியனும் கால் வைக்க முடியாத காவல் மிகுந்த ராவணனின் அந்த:புரத்தில், உனக்கு இடம் அளித்திருக்கிறான். ராக்ஷஸர்கள் சுற்றிலும் காவல் காக்கிறார்கள். நாங்களும் உன்னை பாதுகாக்கவே இங்கு இருக்கிறோம். இங்கிருந்து சாக்ஷாத் புரந்தரனான இந்திரனே வந்தாலும், உன்னை விடுவித்து அழைத்துச் செல்ல முடியாது. மைதிலி, நாங்கள் உன் நன்மைக்குத் தான் சொல்கிறோம். நாங்கள் சொல்வதைக் கேள். போதும் கண்ணீர் பெருக்கியது. அனர்த்தத்தைத் தரும் இந்த துயரை விடு. இப்படி தினமும் இளைத்து துரும்பாவதை நிறுத்து. ராமனையே எண்ணி உருகாதே. மனதில் மகிழ்ச்சியையும், அன்பையும் நிரப்பிக் கொள். சீதே, ராக்ஷஸ ராஜன், அவனை மணந்து கொண்டு ஆனந்தமாக இரு. பயந்த சுபாவம் உடையவளே, உனக்கே தெரியும். ஸ்த்ரீகளுக்கு யௌவனம் நிலையானது அல்ல. இதோ, திரும்பி பார்க்கும் முன் மாறி விடும். இந்த இளமை உன்னை விட்டு போகும் முன், நல்ல சுகங்களை அனுபவிப்பாய். உத்யானங்கள், அழகிய நந்த வனங்கள், மலைகள், மலைசாரல்களில் அமைந்த உத்யான வனங்கள் இவற்றில் ராக்ஷஸ ராஜனுடன் சந்தோஷமாக சஞ்சரித்து அனுபவிப்பாய். மதி3ரேக்ஷணே ஸ்ரீ (மயக்கும் விழியாளே) ஏழாயிரம் ஸ்த்ரீகள் உனக்கு ஏவல் செய்ய தயாராக இருக்கிறார்கள். ராவணனை ப4ர்த்தாவாக ஏற்றுக் கொள். ராவணன் ராக்ஷஸ குலத்துக்கே ப4ர்த்தா-தலைவன். நீ மறுத்தால், மைதிலி, உன் ஹ்ருதயத்தை பெயர்த்து எடுத்து விழுங்கி விடுவேன். நான் சொன்னபடி செய்யாவிட்டால், இது தான் வழி. இதன் பின் சண்டோதரி என்ற ராக்ஷஸி வந்தாள். கையில் இருந்த பெரிய சூலத்தை விளையாட்டாக சுழற்றிக் கொண்டே வந்தாள். இந்த மான் விழியாளை, சற்று பயந்தாலே நடுங்கும் மார்பகங்களை உடையவளை, ராவணன் கவர்ந்து கொண்டு வந்த பொழுதே என் மசக்கை (சாப்பிடும் ஆசை-சாதாரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுவது) அதிகமாகியது. இவள் முதுகு தண்டோடு சேர்த்து ஹ்ருதயத்தையும் தலையையும் சாப்பிட வேண்டும் என்று எனக்கு அடக்க முடியாத ஆசை, என்றாள். ப்ரக4ஸா என்பவள், ஏன் யோசிக்க வேண்டும், இவள் கழுத்தை நெறித்து விடுவோம். ராவணனிடம் அந்த மானுட பெண் மரித்து விட்டாள் என்று சொல்வோம். அரசன், சரி சாப்பிடுங்கள் என்றுதான் சொல்லப் போகிறான். ஏன் தயங்குகிறோம். எனவும், அஜா முகி என்பவள், இவளை சமமாக துண்டம் போட்டு எல்லோருமாக விழுங்கி விடுவோம். விவாதமே எனக்கு பிடிக்கவில்லை. இவளுடன் பருக பானங்கள் கொண்டு வாருங்கள், லேகியங்கள், ஊறுகாய்கள் நிறைய வந்து சேரட்டும். சூர்ப்பணகா என்பவள், இதை ஆமோதித்தாள். அஜாமுகி சொல்வது போல செய்வோம். மது, கள் வகையறாக்களும் நிறைய வரவழைப்போம். எல்லா துக்கத்தையும் அது போக்கும். மானுஷ மாமிசத்தை சாப்பிட்டு கள்ளுண்டு, நிகும்பிளா என்ற நடனம் ஆடுவோம். இப்படி ஆளுக்கு ஆள் பேசவும், தைரியம் இழந்த சீதா, தேவ லோக பெண் போன்றவள், அழுதாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ரா:க்ஷஸி நிர்ப4ர்த்ஸனம் என்ற இருபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 25 (363) சீதா நிர்வேத3: (சீதையின் துக்கம்)
இப்படி இவர்கள், தலைக்குத் தலை கடுமையாக பேசவும், ஜனகாத்மஜா, பொறுக்க முடியாமல் அழுதாள். பயத்துடன், குரல் தழ தழக்க வேண்டினாள். மனித பெண், ராக்ஷஸனுக்கு மனைவியாக முடியாது. என்னை உங்கள் விருப்பம் போல விழுங்கி விடுங்கள். ஆனால், நீங்கள் சொல்வதை நான் கேட்க மாட்டேன். அந்த ராக்ஷஸிகளின் மத்தியில், ராவணன் அதட்டி நிர்பந்தித்ததைவிட அதிகமாக வேதனைப் பட்டாள். நடுக்கத்தில் தன் உடலின் உள்ளேயே புகுந்து விடுபவள் போல, உடலை குறுக்கி கொண்டாள். வனத்தில், தன் இனத்தை விட்டுப் பிரிந்த மான் குட்டி, ஓனாய்கள் துரத்த நடுங்குவது போல நடுங்கினாள். அந்த சிம்சுபா விருக்ஷத்தின் பெரிய மரக் கிளையை பிடித்தபடி, மனதில் துயரோடு, தன் பர்த்தாவை எண்ணினாள். கண்களிலிருந்து நீர் பெருகி மார்பை நனைத்தது. இந்த சோகத்துக்கு முடிவே இல்லையா என்று எண்ணினாள். தன் கேசமே வளைந்து சர்ப்பம் போல இருப்பதைக் கண்டாள். பெருமூச்சு விட்டபடி, ஹா ராம, ஹா லக்ஷ்மணா, என்று துக்கத்துடன் அரற்றினாள். என் மாமியார் கௌசல்யே, ஹா சுமித்ரே, என்றும் அழுதாள். உலகில் சொல்வார்கள்- அகாலத்தில் ம்ருத்யு வராது என்று. ஸ்த்ரீயோ, புருஷனோ, ஜீவித காலம் நம் கையில் இல்லை என்று சொல்வார்கள். அது உண்மை தான். நான் ராமனை விட்டுப் பிரிந்து, இந்த ராக்ஷஸிகளின் இடையில் இவர்களின் அதட்டலையும் உருட்டலையும் கேட்டுக் கொண்டு இன்னமும் உயிர் தரித்து இருக்கிறேனே, இதுவே பிரமாணம் என்று எண்ணிக் கொண்டாள். அல்ப புண்யா நான். நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். அனாதை போல சாகப் போகிறேன். சமுத்திர மத்தியில், நிரம்பிய படகு, வேகமாக வீசும் காற்றில் அலை பாய்ந்து தள்ளாடுவது போல என் வாழ்க்கையும் ஊன்று கோல் இல்லாமல் போய் விட்டது. கணவனை கண்ணாலும் காணாமல், இப்படி இந்த ராக்ஷஸிகளின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேனே. இதை விட துக்கம் வேறு என்ன வேண்டும்? ஆற்றின் நீர் கரையை அரித்துக் கொண்டு போவது போல திடுமென வெள்ளமாக வந்த இந்த சம்பவங்கள் என் வாழ்க்கையை நாசம் செய்து விட்டனவே. பத்ம பலாசம் போன்ற கண்களையுடையவனை, சிம்மம் போல வீர நடை போடுபவனை, பிரியமாக பேசுபவனை, செய் நன்றி மறவாதவனை, என் நாதனை கண்ணால் காண்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். கடுமையான விஷத்தை அருந்தியவன் முடிவு நிச்சயம் ஆவது போல, ராமனை விட்டுப் பிரிந்த என் முடிவும் இதோ நெருங்கி விட்டது போலும். ஜன்மாந்திரத்தில் நான் என்ன பாபம் செய்தேனோ, இப்படி தாங்க முடியாத கோரமான துக்கம் வந்து வாய்த்திருக்கிறது. உயிரை விடத்தான் நினைக்கிறேன். இந்த ராக்ஷஸிகளின் காவலை விட மரணம் மேலானது. ராமனைப் பற்றி எதுவுமே தெரியவும் இல்லை. இந்த மனித பிறவியே தி4க்-கஷ்டம். பரவஸ்யதாம்- அடிமையாக இருப்பது, மற்றவர்களை அண்டி இருப்பது, அதைவிட தி4க்-கஷ்டம். தன் இஷ்டம் போல உயிர் விடக் கூட முடியாத ஒரு நிலை என்று சொல்லிக் கொண்டாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சீதா நிர்வேத3: என்ற இருபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 26 (364) ப்ராணத்யாக3 சம்ப்ரதாரணம் (உயிரை விடத் துணிதல்)
தரையை பார்த்தபடி உன்மத்தம் பிடித்தவள் போல, மதுவுண்டு மயங்கியது போல, ப்4ராந்த- எதையோ கண்டு பயந்தவள் போல புலம்பினாள். கண்ணீர் பெருகி ஓடியது. பூமியில் அமர்ந்து விட்டாள். சிறு குழந்தை போல தேம்பினாள். ராகவனிடமிருந்து, ராக்ஷஸன் பலாத்காரமாக நான் அழ அழ அழைத்து வந்தான். இந்த ராக்ஷஸிகளின் மத்தியில், இவர்களின் பயமுறுத்தலை கேட்டுக் கொண்டு நான் எத்தனை நாள் உயிர் வாழ முடியும்? என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. பூஷணங்களோ. செல்வமோ எனக்கு எதற்கு? மகாரதியான ராமனை விட்டுப் பிரிந்து இந்த ராக்ஷஸிகளின் மத்தியில் இப்படி உயிர் வாழ்கின்றேனே. என் மனம் (ஹ்ருதயம்) கல்லால் ஆனதோ? அல்லது நரை திரை இல்லாத அமரத் தன்மையை அடைந்து விட்டேனா. எந்த வித உணர்ச்சியும் பாதிக்காத ஜடமாக ஆகி விட்டேனா? என் ஹ்ருதயம் இந்த துக்கத்தில் சிதறி போகவில்லையே. தி4க். கஷ்டம். நான் ஒரு பண்பில்லாத கோழை. ராமனைப் போன்ற ஒரு மகானைப் பிரிந்தும் ஒரு முஹுர்த்த நேரம் கூட உயிர் வாழ்வது முடியாது என்று இல்லாமல் பாப ஜீவிதா- என் வாழ்க்கையே வீண்- பாபமானது. இன்னமும் உயிருடன் இருக்கிறேன். எனக்கு உயிர் வாழ்வதில் சிரத்தையும் என்ன இருக்கிறது? சுகங்கள் தான், எனக்கு எதற்கு? என் பிரியமான ப4ர்த்தா, சாகரத்தை எல்லையாக கொண்ட பூமியின் நாயகன், எப்பொழுதும் பிரியமாகவே பேசுபவன். நீங்கள் என்னை துண்டாடி, புசித்து மகிழுங்கள். இதோ என் சரீரத்தை நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். இந்த துக்கத்தை தாங்கிக் கொண்டு வெகு நாட்கள் நான் வாழவும் விரும்பவில்லை. இருக்கவும் மாட்டேன். என்னதான் நீங்கள் சொன்னாலும், என் இடது காலால் கூட எந்த நிசாசரனையும் தொட மாட்டேன். ராவணன் இப்படி நீசத் தனமான செயலை செய்தவன், அவனை ஏன் நான் மனதால் வரிக்கப் போகிறேன். என் குலப் பெருமையை அவன் அறியான். தன் குலத்தையும் பற்றி அறியான். அதனால் தான் தன் கொடூரமான குணத்தால், என்னை யாசிப்பதே தவறு என்று உணராமல் யாசிக்கிறான். என்னை நீங்கள் துண்டு துண்டாக சீவினாலும் கை கால்களை உடைத்து போட்டாலும், நெருப்பில் பொசுக்கினாலும், ராவணனுக்கு இணங்க மாட்டேன். அனாவசியமாக புலம்புவானேன். ராமன் தான் என் பர்த்தா. புகழ் பெற்ற அறிஞன், செய்நன்றி மறவாதவன், தயவு தாக்ஷண்யம் உடையவன். ராகவன், நன்னடத்தை உடையவன், என் பாக்ய குறைவால் இப்பொழுது ஏனோ வரவில்லை. ஜனஸ்தான போரில் பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்களை ஒருவனாக அழித்தவன். ஏன் என்னிடம் பராமுகமாக இருக்கிறான். இந்த அல்ப வீர்யனான ராக்ஷஸன் வந்து என்னை தடுத்து விட்டான். யுத்தம் என்று வந்தால், இந்த ராக்ஷஸன் என் ராமனுக்கு தூசுக்கு சமானம். எதிர்த்து நின்றால், இவன் அழிவான். விராதனை அரண்யத்தில் அழித்தானே அது போல. அவன் ஏன் என்னிடம் பராமுகமாக இருக்கிறான்? ஒரு வேளை சமுத்திரம் இடையில் லங்கையை எளிதில் நெருங்க முடியாதபடி, சூழ்ந்து நிற்பதால் தான் வரவில்லையோ. இல்லையெனில், ராகவ பாணங்களுக்கு தடையாக அதன் வேகத்தை தாங்கும் சக்தி உள்ள வஸ்துவும் உலகில் உண்டா? என்ன காரணமோ, ராக்ஷஸன் தன் பிரிய பத்னியை கவர்ந்து கொண்டு போனான் என்று அறிந்தும், த்ருட பராக்ரமனான ராமன் எந்த வித முயற்சியும் எடுக்காமல், தேடாமல் இருக்கிறான். ஒரு வேளை, நான் இங்கு இருப்பதே அவர்களுக்குத் தெரியாதோ. அது தான் சந்தேகமாகவே இருக்கிறது. லக்ஷ்மணன் தமையன் என் கணவன். இதைப் பொறுப்பானா? என்னை ராவணன் கடத்திச் சென்றான் என்ற விஷயம் அறிந்த ஜடாயுவும் போரில் வீழ்ந்தான். ராவணனுடன் எனக்காக அந்த ஜடாயு வீராவேசத்துடன் போரிட்டதும், இந்த ராவணன் அந்த முதிய ஜடாயுவை அடித்து நொறுக்கி விட்டானே. வேறு யார் ராம, லக்ஷ்மணர்களுக்கு நான் இங்கிருப்பதை தெரிவிக்க முடியும் ? ஆஹா, வயது முதிர்ந்த நிலையிலும், ஜடாயு ராவணனுடன் சரிக்கு சரியாக சண்டையிட்டாரே. என்னை காப்பாற்ற, பெரும் முயற்சி செய்தார். எனக்காக இந்த அல்பனுடன் போரிட்டு விழுந்தார். ராகவனுக்கு மட்டும் நான் இங்கு இருப்பது தெரிய வந்தால், உலகில் ராக்ஷஸர்களே இல்லாமல் செய்து விடுவான். அராக்ஷஸ உலகமாக செய்து விடுவான். இந்த லங்கா புரியை த்வம்சம் செய்து விடுவான். பெரும் சாகரத்தை வற்றச் செய்து விடுவான். ராவணனுக்கு கீர்த்தீ என்று ஒரு பொருள் இருந்தால், அதையும் தரை மட்டமாக ஆக்கி விடுவான். அதன் பின் வீட்டுக்கு வீடு, ராக்ஷஸிகள் நான் இப்பொழுது அழுவது போலவே அழுது கொண்டிருப்பார்கள். சந்தேகமே இல்லை. லக்ஷ்மணனுடன் ராமன், ராவணனின் லங்கையை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறானோ? அவர்கள் கண்ணில் பட்ட பின் சத்ரு பக்ஷத்தில் இருப்பவன், முஹுர்த்த நேரம் கூட உயிர் தரித்து இருக்க மாட்டார்கள். சிதைகளிலிருந்து எழும் புகை வழியை மறைக்க, ஆகாயத்தை கழுகு வட்டமிட, சீக்கிரமே லங்கா ஸ்மசானம் போல ஆகப் போகிறது. என் மனோ ரதம்- ராமனை சென்றடைவது சீக்கிரமே நிறைவேறும் என்று தோன்றுகிறது. உங்கள் அனைவருக்கும் கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது போலும். தற்சமயம் லங்கையில் காணப் படும் அசுபமான சகுனங்கள், கூடிய சீக்கிரமே லங்காவின் தேஜஸ் அழியும் என்று தெரிவிக்கின்றன. ராக்ஷஸாத4மனான ராவணன், தன் பாப கர்மாவின் பலனாக நாசம் அடையும் பொழுது, இதுவரை யாராலும் எளிதில் நுழைய முடியாத பாதுகாவலுடன் இருக்கும் இந்த லங்கா நகரமும் தன் ஸ்திர தன்மையை இழந்து விடும். நல்ல நிலைமையில் இருக்கும் ஸ்த்ரீ எதிர்பாராமல் கணவனை இழந்து கைம்பெண்ணாக தவிப்பது போல தவிக்கும். புண்யோத்ஸவங்கள் இன்றி, கணவனை இழந்த பெண் போலவே உற்சாகம் இன்றி இருக்கப் போகிறாள். நிச்சயம், சீக்கிரமே ராக்ஷஸ பெண்கள் வீடுகள் தோறும் கதறி அழுவதை கேட்கத் தான் போகிறேன். ஒரே இருட்டு சூழ, ராக்ஷஸ வீரர்கள் போரில் விழுந்து மாள, ராம பாணங்கள் சரமாரியாக விழுந்து லங்கையை பொசுக்கப் போகிறது. இவ்வளவும், என் நாதன் ராமன், சூரன், நான் லங்கையில் இருப்பதை அறிந்து வந்தால் தானே நடக்கும். இந்த துஷ்டன் ராவணன் என் வாழ்க்கைக்கும் கெடு வைத்திருக்கிறானே. அந்த காலமும் இதோ முடிந்து விடும். அதன் பின் என் மரணம் தான் நிச்சயம். இந்த நிசாசரர்கள் எது வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள். செய்யக் கூடாதது இது, இதை செய்யலாம் என்ற பாகு பாடெல்லாம் இவர்களுக்கு இல்லையே. தோன்றியபடி செயல் படுவார்கள். அதர்மம் தலை தூக்கி நின்றால், வினாசம் தான். அதுவும் உடனே விளையும் என்பது இந்த ராக்ஷஸர்களுக்கு தெரியவில்லையே. கண்டதை சாப்பிடுபவர்கள், பிணம் தின்னிகள், இவர்கள் தர்மத்தை எங்கே கண்டார்கள். காலை உணவாக என்னை ஒரு நாள் விழுங்கி விடுவார்கள். நான் என்ன செய்வேன்? என் ப்ராண நாதனை அன்றி வேறு எதுவும் தெரிந்து கொள்ளவில்லையே. ரக்தாந்த நயனம், கண் நுனியில் சிவந்து காணும் ராமனின் விழிகள் இடும் கட்டளைதான் எனக்கு வழிகாட்டி. அது இல்லாமல் என்ன செய்வேன்? யாராவது எனக்கு துளி விஷம் தர மாட்டார்களா? அப்படி தரக் கூடியவர்கள் இங்கு இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. சீக்கிரம் தனியாக, என் பதி உடன் இல்லாமல் நான் வைவஸ்வத தேவனை (யமனை) காணப் போகிறேன். நான் என்ன ஆனேன் என்பதே லக்ஷ்மணன் தமையனான என் பதிக்கு தெரியாமலே போகப் போகிறது. யார் சொல்வார்கள்? அப்படித் தெரிந்தால் உலகில் என்னை தேடாமலாவது இருப்பார்கள். அந்த வீரனும் என் காரணமாக துக்கத்துடன் உயிரை விடுவான். இந்த உலகில் உடலை தியாகம் செய்து விட்டு தேவலோகம் போவான். தேவர்கள் த4ன்யர்கள். ஸக3ந்த4ர்வர்கள், சித்3த4ர்கள், பரம ரிஷிகள் இவர்களும் பாக்கிய சாலிகள். இவர்கள் என் நாதனை காணப் போகிறார்கள். ராஜீவ லோசனான என் பதியைக் காண்பார்கள். என்னால் ராமனுக்குத் தான் என்ன உபயோகம்? நான் பார்யையாக இருந்து தர்மமோ, அர்த்த காமமோ எதுவுமே ராமனுக்கு கிடைக்கவில்லை. கண் எதிரில் இருக்கும் வரை தான் ப்ரீதி, அன்பு பெருகும். கண் மறைவானால் அன்பும் குறையத் தான் செய்யும். ஆனால், நன்றி மறந்தவர்கள் மறப்பார்கள். என் ராமன் அப்படியல்ல. என்னிடம் குணம் என்று எதுவுமே இல்லையா? இந்த நிலை வரக் காரணம் என் பாக்யம் (விணைப் பயன்) தானா ? எதனால் நான் என் பதியை விட்டுப் பிரிந்து இப்படி ஒரு துக்கத்தை அனுபவிக்கிறேன்? தெரியவில்லையே? இந்த கஷ்டத்தை விட என் உயிர் போவதே மேல். மாசற்ற நடத்தையுடையவன், சூரன், சத்ருக்களை கண்ட மாத்திரத்தில் ஓடச் செய்பவன் என்று இவ்வளவு பெருமைகள் உடையவனான என் நாதனை விட்டு விலகியபின் என் வாழ்க்கையில் என்ன இருக்கிறது? அல்லது சகோதரர்கள் இருவரும் சஸ்திரங்களையும் துறந்து, பழம் காய் கறிகளை உண்டு கொண்டு, வன வாசிகளாக, தபஸ்விகளாக மாறி விட்டார்களா? அல்லது, இந்த ராக்ஷஸ ராஜன் தந்திரமாக அவர்களையும் கொன்று விட்டானா? சகோதரர்கள், ராம லக்ஷ்மணர்கள் இருவரையுமே அவன் அழித்து விட்டானா? அப்படியிருந்தால் நான் உயிர் வாழ்ந்து தான் என்ன சாதிக்கப் போகிறேன்? என் உயிரை மாய்த்துக் கொள்வது தான் சரி. ம்ருத்யுவும் உடனே வந்து விடுகிறதா? இப்படி என் மனம் தத்தளித்து வாடும் பொழுதும் ம்ருத்யு அருகில் வருவதாக இல்லையே. ஜிதாத்மா- தங்களையே வெற்றி கொண்ட மனப் பக்குவம் மிக்க அறிவாளிகள், எவர்களுக்கு பிரியம், அப்ரியம் என்று எதுவும் இல்லையோ, அப்படிப் பட்ட புலனடக்கிய ஞானிகளே த4ன்யர்கள். பாக்யம் செய்தவர்கள். பிரியத்தினாலேயே துக்கம் வருகிறது. பிரியம் இல்லாமல் போனாலும் அதிக பயம். இந்த இரண்டிலும் இருந்து விடுபட்ட ஞானிகளுக்கு நமஸ்காரம். அவர்களே மகான்கள். அன்பையே தந்த ராமனை விட்டுப் பிரிந்த எனக்கு, மரணத்தை விட வேறு புகலிடம் ஏது? இந்த பாபி ராவணன் வசம் மாட்டிக் கொண்ட நான் என் உயிரை விடுகிறேன். அது தான் சரி.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ப்ராணத்யாக சம்ப்ரதாரணம் என்ற இருபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 27 (365) த்ரிஜடா ஸ்வப்ன: (திரிஜடையின் கனவு)
இதைக் கேட்ட ராக்ஷஸிகள் ஆத்திரம் மிகுந்து, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர். சிலர் ராவணனிடம் செய்தி சொல்ல விரைந்தனர். சிலர் அவள் அருகில் வந்து மேலும் கடுமையாக பேசலானார்கள். அனர்த்தமான உபதேசங்களைத் தொடர்ந்தனர். சீதே, அனார்யே, பாபி, நீயே உன் நாசத்தை தேடிக் கொண்டு விட்டாய். அழிந்து போக தீர்மானித்து விட்டாய். நாங்கள் ராக்ஷஸிகள். மனித மாமிசத்தை விரும்பி உண்போம் என்றனர். மேலும் அதட்டி அவளை பயமுறுத்திக் கொண்டிருந்தவர்களை, அப்பொழுது தான் எழுந்து வந்த வயதான மூதாட்டியான த்ரிஜடை தடுத்தாள். அறிவிலிகளே, உங்களுக்குள் ஒருவரையொருவர் கடித்து தின்று கொள்ளுங்கள். இந்த சீதையை விட்டு விடுங்கள். இவளை யார் என்று நினைத்து வாய்க்கு வந்தபடி ஏசுகிறீர்கள்? ஜனகருடைய பிரியமான புத்ரி. தசரத ராஜாவின் மருமகள். இன்று நான் ஒரு கனவு கண்டேன். மகா பயங்கரம். மயிர்க் கூச்செரியும் வண்ணம், நிஜமாக நடப்பது போல. இவள் கணவன் வெற்றி பெறுவது போலவும், நம் ராக்ஷஸ குலமே இல்லையென்று ஆனது போலவும் கனவு. த்ரிஜடா இவ்வாறு சொல்லவும், அந்த ராக்ஷஸிகள், தங்கள் ஆத்திரம் சற்று குறைய, பயந்த குரலில் என்ன கனவு? என்ன பயங்கரமாக கண்டாய்? இரவில் கண்ட ஸ்வப்னம் இன்னமும் நினைவு இருக்கிறதா? என்றனர். த்ரிஜடா சொல்ல ஆரம்பித்தாள். யானையின் தந்தத்தால் ஆன ஒரு பல்லக்கு. அதில் இவள் கணவர் ஆகாயத்தில், ஆயிரம் ஹம்சங்கள் தூக்கி வர பவனி வந்தார். வெண் பட்டாடைகளும், மாலைகளும் அணிந்து, லக்ஷ்மணன் தொடர, வந்து கொண்டிருந்தார். அதே கனவில் சீதையும் வெண் பட்டுடுத்தி வருவதைக் கண்டேன். ஒரு வெள்ளி மலை, சமுத்திரம் சூழ நின்றிருந்தது. பாஸ்கரனுடன் பிரபா இசைந்து நடப்பது போல ராமனுடன் இணைந்து நடந்து வந்தாள். நான்கு தந்தங்கள் கொண்ட பெரிய யானை, மலை அசைந்து வருவது போல வர, ராகவன், லக்ஷ்மணனுடன் அதில் ஏறி வருவது போலக் கண்டேன். அந்த இரு மனிதர்களும் சார்தூலம் போன்ற நடையுடன், தங்கள் தேக காந்தி நாலா புறமும் பரவ, வெண் பட்டாடைகளும் மாலைகளும் பிரகாசமாகத் தெரிய, ஜானகியை நோக்கி வந்தனர். ஆகாயத்தில் தெரிந்த யானை முன் இந்த ஜானகி கணவன் கை கொடுக்க அதைப் பற்றிக் கொண்டு ஏறி யானையின் மேல் கணவன் தோள் மீது சாய்ந்தவளாக இருக்கக் கண்டேன். இதன் பின் கமல லோசனையான இவள் தன் கணவன் மடியிலிருந்து இறங்கி, சந்திர சூரியர்களை கைகளால் துடைப்பது போலக் கண்டேன். குமாரர்கள் யானை மேல் வீற்றிருக்க, அந்த யானை லங்கையின் மேல் அந்தரிக்ஷத்தில் நின்றது. திடுமென உயர்ந்த ரிஷப வாகனம் வந்தது. எட்டு வெண் நிற ரிஷபங்கள் பூட்டிய வாகனத்தில் காகுத்ஸன் சீதையுடன் வந்தான். சற்று நேரம் சென்றபின், லக்ஷ்மணனும் வந்து சேர, மூவரும் புஷ்பக விமானத்தில் ஏறினர். சூரியனுக்கு இணையான காந்தியுடைய புஷ்பக விமானத்தில் இரு சகோதரர்களும் வெண் பட்டாடையுடுத்தி வடக்கு திசை நோக்கி பிரயாணம் செய்யலாயினர். சராசரங்களும், பூமியும் உடன் சென்றன. இப்படி ஒரு கனவு. இதில் நான் ராமனை பகவான் விஷ்ணுவுக்கு சமமான பராக்ரமத்துடன் விளங்கக் கண்டேன். சகோதரன் லக்ஷ்மணனுடனும், மனைவி சீதையுடனும் நின்றான். ராகவன் சாமான்யமான மனிதன் அல்ல. சராசரங்களுக்கும் நாதன். அசுரர்களோ, சுரர்களோ யாராலும் ஜெயிக்க முடியாத சக்தி படைத்தவன். பாப ஜனங்களுக்கு ஸ்வர்கம் கிடைப்பது அரிது, என்பது போல ராக்ஷஸர்களோ, மற்றவர்களோ ராமனுடன் போரிட்டு வெற்றி பெறுவது இயலாத காரியமே. அதே சமயத்தில் ராவணனையும் கண்டேன். பூமியில் எண்ணெயில் மூழ்கி இருந்தான். சிவப்பு வஸ்திரமும், கரவீர புஷ்பங்களால் ஆன மாலையும், மதுவை குடித்து மயங்கிய நிலையில் இருந்தான். புஷ்பக விமானத்திலிருந்து ராவணன் கீழே விழுந்து விட்டான். ஸ்த்ரீ ஜனங்கள் அவனைத் தூக்கிச் செல்ல முடியாமல் இழுத்துச் செல்வது கண்டேன். அவன் உடையும் கரு நீலமாக இருந்தது. தலை மழிக்கப் பட்டு காட்சி தந்தது. சிவந்த மாலையும், அங்க ராகமும் உடலை சிவப்பாக காட்ட, கோவேறு கழுதைகள் பூட்டிய ரதத்தில் போவது போல கனவு கண்டேன். உன்மத்தம் பிடித்தவன் போல சிரித்துக் கொண்டும், நடனம் ஆடிக் கொண்டும் ஏதோ தைலத்தை குடித்துக் கொண்டிருந்தான். கழுதை மேல் ஏறி தென் திசை நோக்கிச் சென்றான். திடுமென பயந்தவனாக கழுதையிலிருந்து பூமியில் விழுந்தான். சடாரென எழுந்து பித்து பிடித்தவன் போல புலம்பினான். பயத்தில் உளறிக் கொட்டினான். தான் தோன்றியாக நடந்து, அழுக்கும் சேறும் மண்டிய இடத்தில், தாங்க முடியாத துர்க3ந்த4மும், அருவருப்பாக அழுக்கும் நிரம்பிய இடத்தில் போய் நின்றான். ஒரு ஸ்த்ரீ அவளும் சிவந்த ஆடைகளை அணிந்து வந்தாள். அவனை கழுத்தில் கட்டி, யமபுரி உள்ள திசையில் இழுத்துச் சென்றாள். அவளைப் பார்த்தாலும் கருத்த சரீரமும், கசங்கிய ஆடையும், அருவருப்பாக இருந்தது. இதன் பின் கும்ப4கர்ணனைக் கண்டேன். ராவணனுடைய புத்திரர்கள் அனைவரும் தலையில் கேசம் இன்றி, தைலத்தை பூசிக் கொண்டு நின்றனர். வராகத்தில் த3சக்3ரீவன், சிசுமாரத்தில் இந்திரஜித், ஒட்டகத்தில் கும்ப4கர்ணன், தென் திசை நோக்கிச் சென்றனர். ஒரே ஒருவன் மட்டும் வெண் கொற்றக் குடையோடு நின்றான். விபீ4ஷணன் தான் அது. வெண்ணிற மாலைகளும், ஆடைகளும் அணிந்தவனாக, சுகந்தமான வாசனை திரவியங்களைப் பூசிக் கொண்டு சங்க2, து3ந்து3பி4 கோஷங்களும், நாட்டியம், கீதம் இவற்றின் ஒலியும் சேர, அலங்கரித்துக் கொண்டவனாக, ஒரு மலை போல உயர்ந்த மேகம் போல கறுத்த, நான்கு தந்தங்கள் உடைய யானை மேல் ஏறி பவனி வந்தான். விபீஷணன் கூட அவனது மந்திரிகள் நால்வர், வந்தனர். ஊர் ஜனங்களும் சந்தோஷமாக கீத வாத்யங்களை முழங்கி ஆரவாரிக்க கண்டேன். இந்த லங்கா நகரமும், குதிரைகளும், ரதங்களும், யானைகளும் நிறைந்து அழகாக ரம்யமாக காட்சியளித்தது. ராவணன் பாலித்த லங்கா நகரம் கோபுரங்கள் இடிந்து விழ, தோரணங்கள் சிதற, சாகரத்தில் விழுவதையும் கண்டேன். ஏதோ ஒரு ராம தூதனால் எரிக்கப் பட்டதாக லங்கா நகரம் தென்பட்டது. ராக்ஷஸ ஸ்த்ரீகள் குடித்து விட்டு ஆடிக் கொண்டு பலமாக சிரித்துக் கொண்டும், லங்கை எரிந்து பஸ்மமாக கிடந்த இடத்தில் காணப் பட்டனர். கும்ப4கர்ணன் முதலானோர் கால் வைத்த இடத்தில் சாணி குளமாக இருந்தது. சீக்கிரம் நகர்ந்து போங்கள். சீதையைக் கண்டு பிடித்து விட்ட ராகவன், அவளைச் சூழ்ந்து துன்புறுத்திய உங்களை சும்மா விட மாட்டான். வனவாசத்தில் உடன் அனுகூலமாக வந்த தன் பிரிய மனைவியை இம்சித்தீர்கள் என்று தெரிந்தால் பெரும் கோபம் கொள்வான். அதனால் சமாதானமாக பேசுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து வைதேஹியிடம் வேண்டிக் கொள்வோம். அது தான் சரி என்று எனக்குத் தோன்றுகிறது. இது போல ஒரு கனவு, துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நபரைப் பற்றி வந்தால், அந்த நபர் எல்லா கஷ்டங்க ளிலிருந்தும் சீக்கிரமே விடுபட்டு மேன்மையடைவர் என்பது கண்கூடு. இதுவரை நீங்கள் அதட்டி இம்சித்திருந்தால் கூட இப்பொழுது பணிவாக வேண்டிக் கொள்ளுங்கள். ஏன் யோசிக்கிறீர்கள், ராக்ஷஸர்களுக்கு ராமனிடம் தான் பெரும் பயம். ஆபத்து காத்திருக்கிறது. இந்த மைதிலி, ஜனகாத்மஜா, வணங்கியவர்களுக்கு உடனே அனுக்ரஹம் செய்பவள். இவள் ஒருவளே போதும். நம் ராக்ஷஸ குலத்தையே காப்பாற்ற. இந்த விசாலாக்ஷியான தேவிக்கு நாம் சிறிதளவும் தீங்கு செய்யக் கூடாது. உடலில் காயப் படுத்துவதோ, மிக சூக்ஷ்மமாக கூட செய்வது நமக்கு நல்லதல்ல. இவள் நிழலை தீங்கு செய்தால் கூட நமக்கு பெரும் ஆபத்தே விளையும். இந்த தேவியை எந்த விதமாகவும் துன்புறுத்தி பணிய செய்ய முடியாது. இவள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவள். இந்த வைதேஹி மூலம் அர்த்த சித்தி அடைவோம். நம் ராக்ஷஸேந்திரனின் விநாசமும், ராகவனின் வெற்றியும் இவள் நிமித்தமாக நிகழப் போகின்றன. இதைக் கேட்டு மகிழ்ந்து, இவளுடைய பத்ம பத்ரம் போன்ற கண்கள் துடிக்கின்றன பாருங்கள். இதைக் கேட்டு சற்றே ஆறுதல் அடைந்த வைதேஹியின் இடது புஜம் துடித்தது. அகஸ்மாத்தாக, பெண் யானையின் துதிக்கை போன்ற இடது துடையும் துடித்தது. உடலில் நடுக்கம் தோன்றி, ராகவன் எதிரில் நிற்பது போன்ற தோற்றத்தை, உணர்வை ஏற்படுத்தியது. மரத்தின் கிளைக ளில் இருந்த பக்ஷிகள் உல்லாசமாக நன்மை வருகிறது என்று சொல்வது போல கூவின. அவளை சமாதானப் படுத்தவே வந்தது போல, திரும்ப திரும்ப நல்ல சகுனங்கள் சுபமாகவே வந்தன. இதை முழுவதும் கேட்டபின், தன் பர்த்தா விஜயனாக, வெற்றி பெற்றவனாக வருவான் என்ற நம்பிக்கை மனதில் துளிர் விட, அவள் சற்றே வெட்கமும், மகிழ்ச்சியும் சேர, அப்படியே நடக்கட்டும். அப்படி நடந்தால் நான் உங்களை வணங்குகிறேன், என்றாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் த்ரிஜடா ஸ்வப்னோ என்ற இருபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 28 (366) உத்3ப3ந்த4ன வ்யவஸாய: (தானே கழுத்தில் சுறுக்கை மாட்டிக் கொள்ள முயற்சி செய்தல்)
திரும்பவும் ராக்ஷஸேந்திரனுடன் நடந்த சம்பாஷனைகளை நினைத்து பார்த்த சீதா, நடுங்கினாள். வனத்தில் க3ஜராஜனின் சிறு பெண் யானை, சிங்கம் ஒன்று தாக்க தயாராக எதிர் நிற்பது கண்டு நடுங்குவது போல நடுங்கினாள். ராக்ஷஸிகளின் நடுவில் சுபாவமாகவே பயந்த சுபாவமுடையவள், ராவணனின் சொற்களால் மிகவும் பாதிக்கப் பட்டவளாக மேலும் பயம் அதிகமாக உடல் உதற, நடுக் காட்டில் ஜன நடமாட்டமே இல்லாத இடத்தில் தனியாக விடப்பட்ட சிறு பெண் போல அழுதாள். உலகத்தில் ஒரு வழக்கு உண்டு. காலம் கனியாமல் மரணம் கூட சம்பவிப்பது இல்லை என்று. அது மிகவும் சத்யமே. நல்லவர்களின் வாக்கு பொய்யாகாது. உதாரணம் நானே. இந்த ராக்ஷஸிகளின் அதட்டல்களையும், பயமுறுத்துதல்களையும் சகித்துக் கொண்டு இன்னமும் உயிர் வாழ்கிறேனே, அதுவே பிரமாணம். என் ஹ்ருதயம் மிகவும் ஸ்திரமானது போலும். சுக சம்பத்துகளை விட்டு விலகி, நினைத்து பார்க்க முடியாத இந்த துன்ப சூழ்நிலையிலும் என் ஹ்ருதயம் ஆயிரம் துகள்களாக வெடித்துச் சிதறவில்லையே. மலையின் சிகரத்தை வஜ்ரம் தாக்கினால் துண்டு துண்டாகிப் போவது போல ஆகியிருக்க வேண்டாமா? இதில் என் தோஷம் எதுவும் இல்லை தான். இந்த விரும்பத் தகாத காட்சிகளைக் கண்டு சகித்துக் கொண்டு இருப்பதாலேயே, வதம் செய்யப் பட வேண்டியவள் தான் நான். த்3விஜன்- ப்ராம்மணன், த்3விஜன் அல்லாதவனுக்கு மந்த்ரோபதேசம் செய்ய மறுப்பது போல, நான் இவனுடைய விருப்பத்திற்கு சற்றும் இணங்கேன். மனதால் கூட நினைக்க மாட்டேன். இந்த கொடியவனான ராக்ஷஸன், சீக்கிரமே ஆயுதங்கள் கொண்டு என் சரீரத்தை துண்டாடப் போகிறான். லோக நாதனான என் நாதன் வந்து சேரா விட்டால் இது தான் நடக்கும். க3ர்ப்ப4த்தில் உள்ள ஜந்துவை அறுவை சிகித்ஸை மூலம் அழிப்பது போல, நான் செயலற்று, வருவதை எதிர் கொள்ளத்தான் வேண்டும். ஹா,
கஷ்டம். இரண்டு மாதங்கள் இதோ ஓடி விடப் போகின்றன. வதம் என்று தீர்ப்பு அளித்த பின், சிறையில் அடைக்கப் பட்ட திருடன், தண்டனை அளிக்கப் படும் நாள் நெருங்க, நெருங்க இதோ இன்று இரவின் முடிவில் தண்டனை நிறைவேற்றப்படும் என்ற நிலையில் எப்படி இருப்பான், அதே நிலையில் தான் நானும் இருக்கின்றேன். ஹா ராமா, ஹா சுமித்ரே, ஹா ராம மாதா, என் ஜனனீ (தாய்) இதோ நான் இப்படி ஒரு ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறேனே, அல்ப பா4க்3யாவாக, நடுக்கடலில் மூமூழ்கும் படகில் இருப்பவள் போல தத்தளிக்கிறேனே, என் வாழ்க்கை படகு மூழ்கும் நிலையில் காற்றும் தள்ளி அலைக்கழிக்க தவிக்கிறேனே, என்ன செய்வேன்? புள்ளி மான், மிருகம் போல வேஷம் போட்டுக் கொண்டு வந்த ஏதோ ஒரு ஜீவன், வேகமாக வந்து மனுஜேந்திர புத்திரர்களான என் பந்துக்களை இழுத்துச் சென்று விட்டது. என் காரணமாக இருவரும் அந்த முகம் அறியாத ஜீவனின் கையில் என்ன பாடு பட்டார்களோ? சிங்கமும் ரிஷபமும் இடி தாக்கி வருந்தியது போல வருந்தினார்களோ? நிச்சயமாக என் போதாத காலம் தான் மிருக ரூபத்தை எடுத்து வந்து என்னை ஆசை காட்டியிருக்கிறது. அதே சமயம் என் பாக்யம் மிகவும் மோசமாக இருந்ததோ, முட்டாள் தனமாக, அறிவிலியாக அதனால் தான் என் கணவனை நான் வற்புறுத்தி விரட்டினேனோ. அதோடு நில்லாது, சகோதரனான ராமானுஜன் (லக்ஷ்மணனையும்) துரத்தினேனோ?. ஹா ராமா, சத்ய விரதனே, தீர்க்க பா3ஹோ, ஹா பூர்ண சந்திரன் போன்ற முகம் உடையவனே, ஹா ஜீவ லோகத்திற்கே ஹிதமானவன், பிரியமானவன், இன்னும் நான் இங்கு வதம் செய்யப் படப் போகிறேன் என்பதை தெரிந்து கொள்ள -வில்லையா?. வேறு யாரையும் தெய்வமாக எண்ணாமல், பதியே தெய்வம் என்று உன்னையே எண்ணி, பொறுமையாக விரதங்கள் அனுஷ்டித்து, பூமியில் படுத்து உறங்கி தர்மத்தையே எண்ணி வாழ்ந்து வரும் என் பதிவிரதா தர்மம் எனக்கு ஒரு வித பயனையும் தரவில்லையே. நன்றி மறந்த மனிதனுக்கு செய்த உதவிகள் அவனால் உடனே மறக்கப்பட்டு விடுவது போல. தர்மம் என்று நாம் நம்புவது எல்லாம் வெறும் மோகம் தானா? ஏக பத்னி என்பதற்கு அர்த்தமே இல்லையா? உன்னைக் காணாமல் வருந்தி நான் வாடுவது உடல் இளைத்து தவிப்பது வீண் தானா? உன்னைத் திரும்ப அடையும் நம்பிக்கையே நான் இழந்து கொண்டிருக்கிறேன். தந்தையின் கட்டளையை நியமத்துடன் முடித்து விட்டு வனத்திலிருந்து திரும்பிப் போய் உன் விரதங்கள் உயர்வாக பேசப் பட, எந்த விதமான பயமோ, தயக்கமோ இன்றி க்ருதார்த்தனாக பல ஸ்த்ரீகளை மணந்து கொண்டு சந்தோஷமாக இருப்பாய். ராமா, நான் தான் உன்னிடம் வைத்த அன்பினால், தவம், விரதம் என்று பொய்யான மோகங்களை நம்பி, என் விநாசம் நிச்சயம் என்று அறிந்தும், இவைகளையே தொடர்ந்து செய்து கொண்டு, இதோ உயிரை விடப் போகிறேன். என் பாக்யம் அவ்வளவு அல்பமாக போய் விட்டது. அந்த நான், என் வாழ்க்கையைத் தியாகம் செய்யப் போகிறேன். விஷம் குடித்தோ, கூர்மையான ஆயுதத்தாலோ, நான் உயிர்த் தியாகம் செய்ய முனைந்து விட்டேன். ஆனால், இங்கு எனக்கு விஷம் தருவார் யாருமில்லையே. ராக்ஷஸர்களின் வீட்டில் ஆயுதங்கள் எங்கு இருக்கின்றன, தெரியவில்லையே. என்று இவ்வாறு தேவி பெரிதும் புலம்பி அழுதாள். ராமனையே தன் உடல், பொருள், ஆவி என்று சர்வாத்மாவாலும் நினைத்து உருகி, கண்கள் நீரை பெருக்க, உடல் நடுங்க, பூத்துக் குலுங்கும் அந்த உத்தமமான மரத்தடிக்கே வந்தாள். வெகு நேரம் யோசித்து, தன் கூந்தலையே எடுத்து இதனால் நான் என் கழுத்தில் சுருக்கை மாட்டிக் கொண்டு சீக்கிரமே யமன் உலகை அடைவேன் என்று தீர்மானித்தாள். இப்படிச் சொல்லி, மரத்தின் ஒரு கிளையைப் பற்றி அருகில் கொண்டு வந்து தன் கூந்தலையே அதில் மாட்டலானாள். ராமனையும், லக்ஷ்மணனையும், தன் குலத்தையும் நினைத்து பார்த்தவள், தன் உடலில் பல சுப நிமித்தங்கள் தோன்றுவதை உணர்ந்தாள். முன்பும் இதே போன்று சுப நிமித்தங்கள் நன்மையைச் செய்தன என்றும் மனதில் நினைவுக்கு வர, அவை அவளுக்கு தைரியம் அளிப்பதாக இருந்தன.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் உத்3ப3ந்த4ன வ்யவஸாயோ என்ற இருபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 29 (367) சுப4 நிமித்தானி (சுப நிமித்தங்கள்)
மனம் நொந்து, வேதனையில் உடலும் உள்ளமும் களைத்து போய் வருந்தும், தீனமாக புலம்பும் சீதையை சுப நிமித்தங்கள் வந்து தைரியம் தரலாயின. செல்வத்திற்கு அதிபதியான, லக்ஷ்மி தேவி, தானே ஒரு ஏழையை, அண்டி பிழைப்பவனை உயர்த்துவது என்று தீர்மானித்து அவன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது போல தாங்களாகவே வந்தன. அராள பக்ஷ்மம்- இடது கண் இமைகள், சுபமானதும், கறுத்து விசாலமானதுமான இமைகள் துடித்தன. மீன் தட்டி விட்டுப் போன சிவந்த தாமரை மலரைப் போல ஆடியது. அகன்ற புஜமும், வெகு நாட்களாக சந்தன பூச்சு போன்ற உபசாரங்கள் ஏதுமின்றி, உத்தமமான மனிதனான ராமனால் அணைக்கப் பட்டவை, அவனுடைய ஸ்பரிசத்திற்காக காத்துக் கொண்டு இருக்கும் இடது புஜம், துடித்தது. யானை துதிக்கை போன்றதும், இரட்டையாக சேர்ந்து நடந்து வருவது போல தோற்றம் தரும் இரு துடைகளிலும் இடது துடை துடித்தது. இதோ ராமன் எதிரில் நிற்கிறான் என்பது போல மன ஆறுதலை அளித்தது. ஹேமம் போன்ற வர்ணமும் சிறிதளவு ரஜஸ், சிவப்பும் கலந்த கண்களும், வரிசையாக தெரிந்த பற்களும் கொண்ட அவள் உடல் லேசாக நடுங்கியது. இது போன்று இன்னும் சில நிமித்தங்கள் முன்பு பலமுறை பெரியவர்கள் நன்மை தரும் என்று சொல்லிக் கேட்டிருந்த நிமித்தங்களைக் கண்டு, காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, ஏதோ ஒரு இடத்தில் விழுந்து கவனிப்பாரற்று கிடந்த பீஜம், விதை, மழை வந்து உயிர் கொடுக்க, உற்சாகத்துடன் முளைப்பது போல, நம்பிக்கை அவள் மனதில் துளிர் விட்டது. ராகுவின் பிடியிலிருந்து விடுபட்ட சந்திரன் போல முகத்தில் பிரகாசம் தெரிந்தது. பி3ம்ப பழம் போன்ற உதடுகளும், அராள பக்ஷங்கள்- இமைகளும், அடர்ந்த இமை மயிர்களும், புன்னகையுடன் வெண்மையான பற்கள், வெளியில் தெரிய தன் வேதனையை மறந்தவள் போல இருந்தாள். ஜ்வரம் விட்டவள் போலவும், தன் உடல் ஆயாசம் நீங்கியவள் போலவும் மகிழ்ச்சி தோன்றி முகத்தின் நிறம் தெளிவு அடைய சோபையுடன் விளங்கினாள். இரவில் சீதாம்சு எனும் சந்திரன் உதித்தவுடன், பிரகாசம் பரவுவது போல இருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சுப4 நிமித்தானி என்ற இருபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 30 (368) ஹனுமத் க்ருத்யா க்ருத்ய விசிந்தனம்(என்ன செய்வது என்று ஹனுமான் யோசித்தல்
இவையனைத்தையும் ஒன்று விடாமல் தான் இருந்த இடத்தில் வசதியாக அமர்ந்தபடியே ஹனுமன் கேட்டான். சீதையின், த்ரிஜடையின் வார்த்தைகள், ராக்ஷஸிகளின் அதட்டல், எல்லாமே தெளிவாக அவன் காதில் விழுந்தன. நந்தன வனத்தில் தேவதையைப் போல தனித்து இருந்த தேவியைப் பார்த்து, மனதில் பலவித கவலைகள் சூழ்ந்தன. எந்த தேவியை ஆயிரக் கணக்காக, இருபதாயிரம் குழுக்களாக உலகம் முழுவதும் பல திக்குகளிலும் வானரங்கள் தேடுகின்றனவோ, அந்த தேவியை நான் அடைந்து விட்டேன். சத்ருவின் சக்தியை ஆழம் காணச் செல்லும் ஒற்றனான நான் மறைந்து ஒளிந்து சஞ்சரித்துக் கொண்டு, நான் காண வந்த தேவியைக் கண்டு கொண்டேன். இந்த ராக்ஷஸர்களின் விசேஷமான நகரமும் என்னால் காணப் பட்டது. சுற்றிப் பார்க்கப் பட்டது. ராக்ஷஸாதிபனின் பிரபாவமும் அறிந்து கொண்டேன். இப்பொழுது பதியைக்காணத் தவிக்கும் இந்த தேவியை, அப்ரமேயனான (ஒப்பிட முடியாத ப்ராக்ரமம் உடைய) ராமனின் மனைவியை சமாதானம் செய்வதும் மிக அவசியம். இவள் பதி, எந்த ஜீவனானலும் தயையே காட்டுபவன். பூர்ண சந்திரன் போன்ற முகமுடைய இவளை நான் சமாதானப் படுத்துகிறேன். இது வரை கண்டறியாத சோகமும், மனக் கஷ்டமும் இவளை வாட்டுகின்றன. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள். இவளை சமதானம் செய்யாமல் நான் திரும்பி விட்டால் அதுவே பெரிய தவறாகும். நான் சென்ற பின் எந்த விதமான சகாயமும் இல்லாத நிலையில், உயிரை விட்டு விடக் கூடும். ராஜகுமாரி ஜானகியைப் பற்றி ராமன் விசாரித்தால் அவளைப் பற்றி என்ன சொல்வேன்? மனைவியைக் காணத் துடித்துக் கொண்டிருக்கும் கணவனிடம் ஏதாவது விஷயமாக சொல்ல வேண்டாமா? இந்த ராக்ஷஸிகளின் எதிரில் என்னால் வெளிப்படையாக எதுவும் பேசவும் முடியாது. என்ன செய்வேன்? தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறேனே? இன்று இரவு முடியும் முன் ஏதாவது செய்து இவளை சமாதானப் படுத்தி தைரியம் அளித்து, உயிர் விடும் எண்ணத்தை மாற்றியாக வேண்டும். ராமனும், என் சீதா என்ன சொன்னாள் என்று கேட்டால் பதில் சொல்ல வேண்டுமே. இவளிடம் பேச்சுக் கொடுக்காமல் திரும்பி போய் என்ன பதில் சொல்வேன்? நான் இங்கிருந்து அவசரமாக திரும்பிப் போய், கண்டேன் சீதையை, ஆனால் அவளிடம் எதுவும் பேசவில்லை என்று சொன்னால், கண்களாலேயே என்னை தகித்து விடுவான். என் எஜமானன் சுக்ரீவனையும், ராமன் கோபம் காரணமாக ஆத்திரம் கொள்ளச் செய்தவனாக ஆவேன். சைன்யத்துடன் இங்கு வருவதும் வ்யர்த்தமாக ஆகும். இங்குள்ள ராக்ஷஸிகளிடையில் ஏதாவது இடைவெளி, கிடைத்தால் நுழைந்து கொண்டு என் காரியத்தை சாதிக்கத் தான் வேண்டும். இவள் தாபம் மிக அதிகம். பொறுமையாக நான் மெதுவாகத் தான் சமாதானம் செய்ய வேண்டும். சிறிய உருவத்தில் இருக்கும் வானரம் நான். மனிதன் போல சம்ஸ்க்ருதமான பாஷையில் பேசுகிறேன். த்3விஜாதிகளைப் போல ஸம்ஸ்க்ருதத்தில் பேசினால் ராவணன் என்று எண்ணி என்னிடம் பேச பயப்படுவாள். அதுவும் வானரம் எப்படி இவ்வளவு தெளிவாக, தவறின்றி பேசுகிறது என்று சந்தேகம் கொள்வாள். மனித மொழியில் தான் பேசியாக வேண்டும். பொருள் பொதிந்த வார்த்தைகளை நுட்பமாக புரிந்து கொள்ளும்படி பேசியாக வேண்டும். வேறு எந்த வழியிலும் இவளை சமாதானம் செய்ய முடியாது. என் ரூபத்தையும், பேச்சையும் கேட்டு, ராக்ஷஸர்களின் ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்று என்று தள்ளிவிடக் கூடும். பயந்து கூச்சல் இட்டால் வேறு வினையே வேண்டாம். ராவணன் தான் இஷ்டம் போல் உருவம் எடுக்க வல்லவன். இந்த வானர ரூபத்தில் வந்திருக்கிறான் என்று தான் நினைப்பான். அவளுக்கு என்னைத் தெரியாதே. பலமாக சத்தம் போட்டு அழைத்தால் ராக்ஷஸிகள், பலவிதமான ஆயுதங்களோடு வந்து கூடி விடுவார்கள். யமனே வந்தது போல ஆகும். எல்லோருமாக என்னை கீழே தள்ளி வதம் செய்யலாமா, உயிருடன் பிடிப்போமா என்று யோசிப்பார்கள். நான் கிளைக்கு கிளை தாவி ஓடினால் துரத்துவார்கள். பெரும் கிளைகளை நான் அனாயாசமாக தாண்டினாலே பயந்து, ராக்ஷஸர்களையும் உதவிக்கு கூப்பிட்டுக் கொள்வார்கள். ராக்ஷஸேந்திரனுடைய மாளிகையில் நியமிக்கப் பட்டுள்ள காவல் வீரர்களான ராக்ஷஸர்கள் கையில், சூலம் சக்தி, ந்ருஸிம்ஸம், என்று வித விதமான ஆயுதங்கள் இருக்கும். இவர்கள் அலறுவதைக் கேட்டு அவர்களும் வேகமாக பாய்ந்து வந்து என்னை பிடிக்க என் மேல் வந்து விழுவார்கள். இவர்கள் கூட்டமாக வழியை மறித்துக் கொண்டு நிற்கும் பொழுது நான் கடலை கடந்து செல்வதும் முடியாத காரியம். அப்படி நான் கிளம்பினாலும் தொடர்ந்து வந்து அவர்கள் பிடித்தாலும் பிடித்து விடுவார்கள். அவர்களில் வேகமாக தாண்டக் கூடியவர்கள் இருக்கலாம். என்னை பிடித்துக் கொண்டு போனால் என்னை இம்சிப்பார்கள். என் காரணமாக ஜனகாத்மஜாவை இம்சித்தாலும், சொல்வதற்கில்லை. என் காரியமே கெட்டுப் போகும். ராம, சுக்ரீவர்களிடம் நான் வாக்கு கொடுத்து விட்டு வந்ததெல்லாம் வியர்த்தமேயாகும். என் உத்தேசமே நஷ்டமாகி, ராக்ஷஸர்கள் நடுவில் நானும் அகப்பட்டுக் கொண்டாலோ, தப்பித்து சாகரத்தில் விழுந்தாலோ, ரகசியமாக காவல் வைக்கப் பட்டுள்ள ஜானகியை, ராமனுக்கு தெரிவிக்கக் கூடியவர் வேறு யாருமே இங்கு இல்லையே. என்னால் எதுவுமே தீர்மானிக்க முடியவில்லையே. வானரம் தான் என்றாலும், என்னைக் கொன்று விட்டால், இந்த தூரத்தை கடந்து வரக் கூடிய வேறு எவரும் சுக்ரீவனின் சேனையில் இல்லை என்பது நிச்சயம். நூறு யோஜனை தூரம் தாண்டி வரக் கூடியவர்கள் வேறு யார்? ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்களை கொல்ல எனக்கு சக்தியிருக்கிறது. ஆனால் அப்படி யுத்தம் செய்தபடி சமுத்திரத்தின் அக்கரைக்குச் செல்வது சரியாகாது. யுத்தம் என்று வந்தால், வெற்றி தோல்வி எதுவானாலும், வரலாம். இப்படி ஒரு இக்கட்டான, சந்தேகத்துக் கிடமான விஷயத்தில் நாமாக சென்று மாட்டிக் கொள்வானேன். அறிவுள்ளவன் எவன் தான் இப்படி சந்தேகமான காரியத்தில் பிரவேசிப்பான். நிச்சயமாக வெற்றி தரும் மற்ற வழிகள் இருக்கத் தான் வேண்டும். அந்த வழியில் சிந்திக்கிறேன். நான் இந்த வைதேஹியிடம் பேசாமல் சென்றால், இவள் பிராணத்யாகம் செய்வதும் நிச்சயம். அது மிகப் பெரிய தோஷம், தவறாக முடியும். அதனால் பேசித் தான் ஆக வேண்டும். தேச காலங்களை அனுசரித்து நடக்காத தூதன், தான் வந்த காரியத்தையே கெடுத்தவன் ஆவான். சூரியோதயத்தில் இருட்டு கண்ணுக்கு தெரியாமல் போவது போல, அல்லது இருட்டு தொலைந்து போவது போல, (மறைந்து) தன் காரியத்தையே தொலைத்து விட்டு குழப்பமான மன நிலையில் தூதன் தவிப்பான். வேறு விதமாக யோசனையும் தோன்றவில்லை. ஒன்றை விட்டு மற்றொரு காரியத்தில் கவனம் செலுத்துவது எப்படி முறையாகும்? எனக்கு இடப்பட்ட கட்டளையை மீறி, நான் புது யுக்தியை செயல் படுத்த நினைப்பது சரிதானா? தன்னை அறிஞனாக நினைத்துக் கொண்டு, தன் இஷ்டம் போல நடக்கும் தூதன், காரியத்தை கெடுக்கிறான். நான் செய்ய வேண்டியது, நான் வந்த காரியமும் கெடக் கூடாது, இதனால் புது இடையூறும் எதுவும் தோன்றக் கூடாது. நான் சமுத்திரத்தைக் கடந்து வந்ததும் வீணாகக் கூடாது. என்ன விதமாக பேசினால், அவள் கேட்பாள்? கேட்டு பதறாமல் இருப்பாள் என்று பலவிதமாக யோசித்து ஹனுமான், புத்திமான் என்று சொல்லப் படும் ஹனுமான் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டான். தன் ப3ந்து4வான ராமனைப் பற்றிச் சொன்னால், இவள் காது கொடுத்துக் கேட்பாள். நேரடியாக ராமனைப் பற்றிச் சொன்னால் ஒரு வேளை பதறலாம். அதனால் இக்ஷ்வாகு வம்சத்திலிருந்து ஆரம்பித்து அந்த குலத்தில் சிறந்தவனான ராமனைப் பற்றிச் சொல்கிறேன். சுபமான வார்த்தைகளை தர்ம பரமான கதைகளைச் சொல்லி மதுரமான குரலில் இவள் கேட்கும் படி சொல்கிறேன். இவள் காதில் யதேச்சையாக விழுவது போல பேசுகிறேன். பூமியின் நாயகனான ராமனின் மனைவி, அவளை எந்த விதத்தில் தன் பக்கம் கவனத்தை திருப்பச் செய்ய முடியும் என்று யோசித்து, ஹனுமான் மரத்தின்கிளைக ளில் தன்னை மறைத்துக் கொண்டு மதுரமாக பாடலானான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமத் க்ருத்யாக்ருத்ய விசிந்தனம் என்ற முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 12 (350) ஹனுமத் விஷாத: (ஹனுமானின் கவலை)
அந்த பவனத்தின் மத்தியில், லதா க்ருஹங்கள், சித்ர க்ருஹங்கள், நிசா க்ருஹங்கள் என்று மற்ற இடங்களிலும் சீதையைக் காணும் ஆவலுடன் அலைந்தான். ரகு நந்தனனின் பிரியமான மனைவியைத் தேட என்று வந்தவன், அவளைக் காணாமல் ஒருவேளை சீதை உயிர் தரித்து இல்லையோ, இவ்வளவு தேடியும் என் கண்ணில் படவில்லையே என்று எண்ணினான். ராக்ஷஸ ராஜாவான ராவணன் துஷ்டன். நற்குடியில் பிறந்தவள், தன் சீலத்தை ரக்ஷித்துக் கொள்ளத் தான் நினைத்திருப்பாள். அவனுக்கு இணங்கி இருக்க மாட்டாள். அதனால் அவனே கொன்று போட்டிருக்கலாம். ராவணன் அரண்மனையில் ஏராளமான ராக்ஷஸிகள், ரூபமில்லாமல், பெரிய முகமும், கோணலான அங்கங்களும், குணம் என்பதும் ராக்ஷஸ இயல்பாகவே இருக்கக் கண்டு பயந்து ஜனகாத்மஜா உயிரை விட்டு விட்டாளோ. சீதையைக் காணாமல் திரும்பப் போய், காலமும் கடந்து தாமதமாக சுக்ரீவன் முன்னால் போய் எப்படி நிற்பது ? அவனும் கோபத்துடன், கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். அந்த:புரம் முழுவதும் தேடியாயிற்றே. ராவணன் மனைவிகளையும் தேடிப் பார்த்தாயிற்று. சீதையை மட்டும் காணவில்லை. என் சிரமம் முழுவதும் வீணாயிற்று. திரும்பிப் போனால் வானரங்கள் என்னைப் பார்த்து என்ன சொல்வார்கள்? வீரனே, அங்கு போய் என்ன செய்தாய்? அதை எங்களுக்குச் சொல்லு என்று கேட்பார்கள். சீதையைக் காணாமல் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்? நிச்சயம், அனைவரும் ப்ராயோபவேசம் தான் செய்வார்கள். சுக்ரீவன் கொடுத்த கால கெடு, தாண்டியாயிற்று. முதியவரான ஜாம்ப3வான், யுவராஜா அங்கதன் இருவரும் என்னை உற்சாகப் படுத்தி அனுப்பி வைத்தார்களே. இப்பொழுது என்ன சொல்வார்களோ. வானரங்கள் நான் சமுத்திரத்தைக் கடந்து வந்து, வந்த காரியம் ஆகாமல் திரும்பிப் போனால், என்ன நினைப்பார்கள்? நம்பிக்கை இழக்காமல் இருப்பது ஒரு பெரிய செல்வம். நம்பிக்கைதான் சுகத்தைத் தரும் (அனிர்வேதம்-நம்பிக்கையிழக்காமல் இருத்தல்) நம்பிக்கைதான் மனிதர்களை காரியங்களில் செலுத்துகிறது. உயிருள்ள எல்லா ஜந்துக்களும், அவரவர் செய்யும் காரியங்களில் சாதனை புரிய இந்த நம்பிக்கைதான் உறுதுணையாக இருக்கிறது. அதனால் நான் நம்பிக்கையை இழக்காமல் தேடுகிறேன். இது வரை தேடாத இடங்க ளில் தேடுகிறேன். ராவணனின் இந்த பரந்த தேசத்தில், நான் இதுவரை காணாத இடங்கள் பல இருக்கின்றன. அங்கு தேடுவேன். பான சாலா எனும் மது அருந்தும் இடங்களில் தேடி விட்டேன். புஷ்ப க்ருஹங்களிலும் தேடி விட்டேன். சித்ர சாலா, க்ரீடா க்ருஹம் (விளையாடும் இடம்) இவற்றை நன்றாகப் பார்த்து விட்டேன். விமானங்களில் (மேல் மாடிகளில்) வழிகளில், என்று பல இடங்களிலும் தேடி விட்டேன் என்று மனதில் சொல்லிக் கொண்டே தொடர்ந்து தன் தேடலைத் துவங்கினான். தாவி ஏறியும், குதித்தும், ஓடியும், சைத்ய க்ருஹம் (பெரிய மடம்) பூமி க்ருஹம், க்ருஹாதிக்ருஹகம் என்னும் கட்டிடங்களில் நின்று கவனித்து தேடி விட்டு மேலும் நடந்து சென்றான். கதவுகளை திறந்தும், தாழ்ப்பாள்களை விலக்கியும், உள்ளே நுழைந்தும், கீழே குதித்தும், தாவி ஏறியும் ஒரு இடம் விடாமல் தேடினான். நான்கு அங்குல இடம் கூட விடவில்லை. ராவணனின் அந்த:புரத்தில் ஹனுமான் பாதம் படாத இடமே இல்லை எனும்படி சுற்றித் தேடியாயிற்று. பிராகாரங்கள், இடைப்பட்ட வீதிகள், யாக சாலைகள், மடங்கள் என்று தேடினான். வெட்ட வெளிகள், புஷ்கரிணிகள், எல்லா இடமும் தேடியாயிற்று. வித விதமான ராக்ஷஸிகளை விரூபமாக, கோணலான அங்கங்களோடு பார்த்து விட்டான். ஹனுமான் அந்த இடத்தில் ஒப்புவமை இல்லாத அழகுடைய வித்யாதர ஸ்த்ரீகளைக் கண்டான், ஜனகாத்மஜாவை மட்டும் காணவில்லை. அழகிய நாக கன்னிகளை, பூர்ண சந்திரன் போன்ற முகம் உடையவர்களைக் கண்டான். ராகவ நந்தினியை மட்டும் காணவில்லை. நாக கன்னிகளை பலவந்தமாக ராக்ஷஸ ராஜன் கவர்ந்து கொண்டு வந்து சேர்த்திருந்ததைக் கண்டான். சிறுத்த இடையுடைய சீதையைக் காணவில்லை, மற்ற ஸ்த்ரீகள், உத்தமமான அங்க லக்ஷணங்களுடன் இருந்தவர்களைக் கண்டான். ஜனக நந்தினியை மட்டும் காணவில்லை. மாருதாத்மஜன் திரும்பவும் கவலைக் குள்ளானான். இந்த வானரங்கள் பெரு முயற்சியோடு கடற்கரை வந்து சேர்ந்ததும், தான் தாவிக் குதித்து கடலைத் தாண்டியதும் வீண் தானா? அந்த விமானத்திலிருந்து மெதுவாக யோஜனையுடன் இறங்கியவன் மிகுந்த மன வருத்தத்துடன் தளர்ந்து போனான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ஹனுமத் விஷாதோ என்ற பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 13 (351) ஹனுமன்னிர்வேத: (ஹனுமானின் நிராசை)
விமானத்திலிருந்து கிழே இறங்கி பிராகாரத்தை அடைந்த ஹனுமான், வேகமாக மற்றொரு முறை மேகத்தில் மின்னல் தோன்றுவது போல க்ஷண நேரத்தில் ராவணனின் அந்த:புரத்தை நோட்டம் விட்டு விட்டு, ஜானகியைக் காணாமல் தனக்குள் சொல்லிக் கொண்டான். நன்றாக லங்கையை அலசி தேடியாயிற்று. ராமனுடைய பிரிய மனைவியைக் காணவில்லை. சர்வாங்க சோபனா-உடல் வாகு-இவளுடைய ஒவ்வொரு அங்கமும் அழகு என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். வைதேஹி, சீதை என்று அழைக்கப்படுபவளை எல்லா இடங்களிலும் தேடியாயிற்று. நதிகள், சமவெளிகள், நதிக்கரைகள், மலைகள், வனாந்தரங்கள் என்று சுற்றித் திரிந்து தேடியாயிற்று. பூமி முழுவதும் அலசி விட்டேன். ஜானகியைக் காணவில்லை. சம்பாதி சொன்னபடி சீதை ராவணன் இருப்பிடத்தில் தான் இருக்க வேண்டும். சீதா, வைதேஹி, மைதிலி, ஜனகாத்மஜா -இந்த ராவணனுடைய கடுமையான நடவடிக்கைகளைத் தாங்குவாளா? தன்னால் சமாளிக்க முடியாமல், ராக்ஷஸன் அபகரித்துச் செல்லும் பொழுதே சாகரத்தில் விழுந்து விட்டாளோ அல்லது ராக்ஷஸன் ராம பாணத்தை எண்ணி பயந்து அவளை கீழே தள்ளி விட்டானோ. சித்தர்களின் வழி எனும் ஆகாய மார்கத்தில் செல்லும் சமயம் ஆழமான சாகரத்தைப் பார்த்து மயங்கி விழுந்து விட்டாளோ? வேகமாக செல்லும் ராவணன் பிடி அழுத்தியதை தாங்க முடியாமல் உயிரை விட்டு விட்டாளோ? மேலே மேலே ரதம் செல்லும் பொழுது மூச்சு முட்டி சாகரத்தில் விழுந்து விட்டிருப்பாள் அல்லது ராவணனுக்குத்தான் அகோர பசியாயிற்றே. தன் சீலத்தை காத்துக் கொள்பவள், அவன் விருப்பத்துக்கு இணங்காததால், விழுங்கி விட்டானோ? அடடா, பந்துக்கள் யாரும் அருகில் இல்லாமல் தபஸ்வினி, ராவணனுக்கு இரையாகி இருப்பாளோ, அல்லது ராவணன் பத்னிகள் இவளையே தவறாக எண்ணி விழுங்கி விட்டார்களா? சம்பூர்ணமான சந்திரன் போன்றவனும், பத்ம பத்ரம் போன்ற கண்கள் உடையவனுமான ராமனையே எண்ணியிருப்பவள் இவ்வளவு மோசமான முடிவையா அடைவாள்? ஹா லக்ஷ்மணா, ஹா ராமா, ஹா அயோத்யே, என்று மைதிலி அலறினாளே, அவள் தானாகவே தான் உயிரை விட்டிருப்பாள். அல்லது ராவணன் க்ருஹத்தில் கூண்டில் அடைபட்ட கிளி போல அடைத்து வைக்கப் பட்டிருப்பாள். ஜனகனுடைய மகள், ராமபத்னி, புகழ் வாய்ந்த சீதா, இவள் இடையழகு பிரஸித்தம். உத்பல பத்ரா இவள், எந்த காரணம் கொண்டும் ராவணனுக்கு இணங்கி இருக்க மாட்டாள். தானாக மறைந்தாளா, மறைக்கப் பட்டாளா, உயிரை இழந்தாளா? ஜனகாத்மஜாவைக் காணவில்லை -யென்று ராமனிடம் சொல்வதும் எளிதல்ல. சொன்னாலும் தவறு, சொல்லாமல் மறைத்தாலும் தவறு. இப்பொழுது என்ன செய்வது? மிகவும் தர்ம சங்கடமான நிலையில் இருக்கிறேன். இப்படி வந்த காரியம் முடியாமல், அடுத்து என்ன செய்வது? என்று ஹனுமான் குழம்பினான். ராக்ஷஸ ராஜனின் இருப்பிடம் வரை வந்து விட்டு, ஜானகியைக் காணாமல் திரும்பிப் போனால் என் ஆற்றல் என்ன ஆவது? (புருஷார்த்தம்) எனக்கு என்ன மதிப்பு இருக்கும் ? நான் சாகரத்தை கடந்து வந்ததும் வீண் என்று ஆகும். லங்கையில் நுழைந்து இந்த ராக்ஷஸர்களைக் கண்டு திரும்பிப் போய் சீதையைக் காணவில்லை என்று சொன்னால் சுக்ரீவன் என்ன சொல்வான் ? மற்ற வானரங்கள் என்ன நினைப்பார்கள் ? கிஷ்கிந்தை வந்த ராம லக்ஷ்மணர்கள், தசரத குமாரர்கள், நான் திரும்பிப் போய் சீதையைக் காணவில்லை என்று இந்த செய்தியைச் சொன்னால் காகுத்ஸன் உயிரை விட்டு விடுவான். இந்த செய்தி அவ்வளவு கடுமையானது. பயங்கரமானது. அவன் இந்திரியங்களை தகிக்கச் செய்து விடும். சீதாவின் காரணமாக உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருப்பவன் இறந்தால், சகோதரனிடம் உயிரையே வைத்திருக்கும் லக்ஷ்மணனும் உடனே மடிவான். இந்த இரு சகோதரர்களும் இறந்து விட்டனர் என்று தெரிந்தால், பரதனும் உயிருடன் இருக்க மாட்டான். பரதன் மடிந்தால், சத்ருக்னனும் இருக்க மாட்டான். புத்திரர்கள் இறந்தார்கள் என்று கேட்டால் தாயார்மார் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். கௌசல்யா, சுமித்ரா, கைகேயி- மூவருமே நிச்சயமாக பிழைத்து இருக்க மாட்டார்கள். சுக்ரீவன், வானர ராஜன், செய் நன்றி மறவாதவன், சொன்ன சொல்லை காப்பாற்றுபவன், ராமன் இப்படி அகால மரணம் அடைந்தால், தானும் மரிப்பான். ருமாவும் இந்த செய்தி கேட்டால், மனம் வாடி, பதியை இழந்த துக்கத்தில் மடிவாள். ஏற்கனவே வாலி இறந்ததால் துக்கத்துடன் வாழும் தாரை, அரசனான சுக்ரீவன் மடிந்தான் என்று கேட்டால் தானும் உயிர் வாழ மாட்டாள். மாதா, பிதா இன்றி, சுக்ரீவனும் அகால மரணம் அடைந்தால் குமாரன் அங்கதன் எப்படித் தாங்குவான் ? தலைவர்களின் இந்த முடிவைக் கண்டால் வானரங்கள் சாதாரண பிரஜைகள் என்ன செய்வார்கள்? கூட்டம் கூட்டமாக பாறைகளில் மோதிக் கொண்டும், முஷ்டியால் அடித்துக் கொண்டும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வர். வானர ராஜன், சில சமயம் சாந்தமாக, சில சமயம் தானம் நிறைய கொடுத்து, சில சமயம் தட்டிக் கொடுத்து பாராட்டி, என்று பிரஜைகளை நன்றாக கவனித்துக் கொள்பவன். இப்படி அவன் ஆட்சியில் கவலையற்று இருந்தவர்கள், உயிரை விடுவதையே விரும்புவார்கள். வனங்களிலும், மலைகளிலும், மலைச்ரல்களிலும் இனி பழையபடி விளையாட்டும், குதூகலமுமாக வானரங்களைக் காண முடியாது. மனைவி மக்களுடன், மந்திரிகள் தலைவனின் கஷ்டத்தால், தாங்களும் மனம் ஒடிந்து போனவர்களாக மலையுச்சியில் இருந்து கீழே விழுந்தோ, விஷமோ, சுருக்கு கயிறோ, ஏதோ ஒன்று இவர்கள் தங்களை முடித்துக் கொள்ள சாதனமாக பயன் படுத்திக் கொள்வர். உபவாசம் இருந்தோ, சஸ்திரங்களை பயன் படுத்தியோ வானரங்கள் அழியும். நான் திரும்பிச் சென்று விஷயத்தைச் சொன்னால், இதன் விளைவு மிகவும் கோரமாக இருக்கும் என்று நம்புகிறேன். இக்ஷ்வாகு குலமும் நாசமாகும். வானரர்களின் குலமும் நாசமாகும். நான் இங்கிருந்து கிஷ்கிந்தைக்கு திரும்பப் போவதில்லை. மைதிலி இல்லாமல் சுக்ரீவனை எதிர்கொள்ள எனக்கு தைரியமில்லை. நான் போகாதவரை, அவ்விரு ராஜ குமாரர்களும் என் வரவை எதிர் பார்த்து நம்பிக்கையுடன் உயிர் தரித்தாவது இருப்பர். வானரங்களும் என் வரவை எதிர்பார்த்து காத்திருப்பர். நியமத்துடன், கையளவு, வாய் கொண்ட அளவு என்று உண்டு, நான் மரத்தடியில், வான ப்ரஸ்தனாக வாழ்வேன். ஜனகாத்மஜாவை காணும் வரை இந்த கடற்கரையில், பலவிதமான பழங்களும், காய்கறிகளும் நிறைந்த இடத்திலும், அரணியைக் கடைந்து நெருப்பு மூட்டிக் கொள்வேன். அதில் பிரவேசித்து அல்லது உட்கார்ந்தபடியே யோக சாதனையில் உயிரை விடுவேன். காகங்களும், நாய்களும் என் உடலை சாப்பிடுவார்கள். இது தான் மகரிஷிகள் தங்கள் அந்திம பயணத்தை மேற்கொள்ளும் வழியாகும். அதை விட மேல், தண்ணீரில் பிரவேசிப்பது. ஜானகியைக் காணவில்லையெனில் இது தான் என் செயலாகும். இந்த முடிவு தான் நற்குடியில் பிறந்தோன் மேற்கொள்ள வேண்டியதாகும். சுப4கா3– பா4க்யத்தைத் தருவது. கீர்த்தியைத் தரும் மாலை, புகழையுடையது. வெகு நாட்கள் நான் சீதையைக் காணாமல் தபஸ்வியாக திரிந்தாலும் திரிவேன். மரங்களின் அடியில் நியமத்துடன் வாழ்ந்தாலும் வாழ்வேன். சீதையைக் காணாமல் திரும்பி போக மாட்டேன். நான் போய் சீதையைக் காணவில்லை என்று சொன்னால் தான் அனர்த்தம் சம்பவிக்கும். அங்கதன் முதலானோர் உயிரை விட காரணமாவேன். ஆனால், வினாசத்தில் தோஷங்கள் தான் அதிகம். அழிவில் நன்மை ஏது? உயிருடன் இருந்தால் நன்மையைக் காண வாய்ப்புண்டு. அதனால் நான் உயிரை விடப் போவதில்லை. இருந்து ஏதாவது செய்ய முடியுமா என்பதில் கவனம் செலுத்தப் போகிறேன். இவ்வாறு பலவிதமாக நினைத்து மனதுக்குள் தன் துக்கத்தை அடக்கிக் கொண்டான். திரும்பவும் தைரியத்தை சேகரித்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு நிச்சயம் நல்ல செய்தியோடு தான் திரும்ப வேண்டும் என்ற உறுதியுடன், ராவணனை வத4ம் செய்தாவது என் ஆற்றலை காட்டத்தான் வேண்டும். மகா பலசாலி, தசக்ரீவன், இவனை வதம் செய்தால், சீதையை அபகரித்தானே அதற்கு பழி வாங்கியதாக ஒரு சமாதானமாவது கிடைக்கும். அல்லது இவனையும் அலாக்காக தூக்கிக் கொண்டு, சமுத்திரத்திற்கு மேல் உயர உயர பறந்து ராமரிடம் உபகாரமாக (அன்பளிப்பாக) கொடுத்து விடுகிறேன். பசுபதியிடம் பசுக்களை ஒப்படைப்பது போல, இப்படி ஒரு முடிவுக்கு வந்தவன், மேற்கொண்டு என்ன செய்வது என்று திட்டமிடலானான். இந்த லங்கையில் திரும்ப திரும்ப சுற்றி வந்து, ஜனகாத்மஜாவை காணும் வரை ஓய மாட்டேன். சம்பாதி சொன்னதிலிருந்து, இங்கு தான் இருக்க வேண்டும். இங்கு ஆசார நியமங்களோடு வசிப்பேன். ராமரிடம் சென்று சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொன்னால், தன் மனைவியைக் காணாத துக்கம் அதிகமாக எல்லா வானரங்களையும் ஒட்டு மொத்தமாக தகித்து விடுவார். என் காரணமாக மற்ற வானரங்கள் அழியாமல் காப்பேன். இந்த அசோக வனம், பெரிய மரங்களோடு அடர்ந்து காணப்படுகிறதே, இதை இன்னும் நான் தேடவில்லை. உள்ளே சென்று பார்க்கிறேன். வசுக்கள், ருத்ர, ஆதித்யர்கள், அஸ்வினி குமாரர்கள், மருத் இவர்களை வணங்கி விட்டு செல்கிறேன். நான் இங்கு நுழைவது ராக்ஷஸர்களுக்கு துன்பத்தை வளர்ப்பதாக இருக்கட்டும். இந்த ராக்ஷஸர்கள் அனைவரையும் வென்று, இக்ஷ்வாகு குல நந்தினியான சீதையை ராமருக்கு கொடுப்பேன். தபஸ்வி ஜனங்களுக்கு சித்தியை தருவது போல தன் புலன்களையடக்கி த்யானத்தில் ஆழ்ந்தான். முஹுர்த்த நேரம் ஆழ்ந்து தியானம் செய்து விட்டு எழுந்தான். ராமருக்கு என் வணக்கங்கள், அல்லது லக்ஷ்மணனையும் சேர்த்து ராமருக்கு என் வணக்கங்கள். ஜனகாத்மஜாவான தேவிக்கும் என் நமஸ்காரம். ருத்ர, இந்திர, யம, அனில மற்றும் சூரிய சந்திரர்கள், மருத் கணங்களுக்கு, என் நமஸ்காரம். என்று இவ்வாறு தேவதைகள் எல்லோருக்கும் தன் வணக்கத்தை தெரிவித்து சுக்ரீவனையும் நினைத்து வனங்கினான். நான்கு திசைகளிலும் பார்த்து கைகூப்பி வணங்கி விட்டு, அசோக வனம் இருந்த திக்கில் தன் மனதால் முதலில் போனான். அடுத்து யோசிக்கலானான், என்ன செய்யலாம்? நிச்சயம் இந்த வனமும் ராக்ஷஸர்கள் காவலில், எண்ணற்ற காவல் வீரர்களுடன் தான் இருக்கப் போகிறது. அசோக வனிகா, எல்லா விதமான ஸம்ஸ்காரமும் (செப்பனிடுதல், மேன்மை படுத்துதல்) செய்யப் பட்டு விளங்கும். இங்குள்ள காவலர் மரங்களைக் கூட கண் காணிப்பர். சர்வாத்மாவான பகவான் வாயுவே, இங்கு அழித்து விடும் தன் சக்தியைக் காட்டுவதில்லை. மந்தமாக வீசுகிறான். அவரும் (வாயு பகவானும்) நானும் எங்களை அடக்கிக் கொண்டிருக்கிறோம். ராம காரியத்திற்காக நான் ஆத்மார்த்தமாக இறங்கி இருக்கிறேன். வாயுவோ, ராவணனுக்காக. எனக்கு சித்தர்கள், ரிஷி கணங்கள் காரிய சித்தியைத் தரட்டும். ஸ்வயம்பூவான ப்ரும்மாவும், தேவர்களும் என் காரியத்தில் உதவி செய்யட்டும். அக்னியும் வாயுவும், புரூஹுதனும் வஜ்ரத்தை தரிக்கும் இந்திரனும் சித்தியைத் தரட்டும். பாசஹஸ்தனான வருணனும், சோம, ஆதித்யர்களும் , அஸ்வினி குமாரர்களும், மருதனும் மற்ற தேவதைகள் அனைவரும் எனக்கு சித்தியை, காரியம் நிறைவேற அருள் செய்யுங்கள். ஜீவ ஜந்துக்களுக்கெல்லாம் பிரபுவான பரமாத்மாவும் என் காரியத்தில் எனக்கு துணையாக இருங்கள், கண்ணுக்கு தெரியாமல் வழியில் நிற்கும் தேவதைகள் யாவரும் எனக்கு இந்த சமயத்தில் உதவியாக இருங்கள். (ஆர்யா ) மதிப்புக்குரிய சீதா தேவி ப்ரஸன்ன தாராதிபன் (சந்திரன்) போன்று இருப்பாளாம். வெண்மையான பற்களும், மென்னகையோடு, பத்ம பலாசம் போன்ற கண்கள் உடையவளாம். அவளை நான் காண வேண்டும். நீசமான செயலை செய்து இந்த ராவணன் அலங்காரமாக வேஷம் தரித்து, அபலையாக தனித்து இருந்தவளை கவர்ந்து கொண்டு வந்து விட்டான். அவள் எப்பொழுது என் கண்ணில் படுவாளோ? என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ஹனுமன்னிர்வேதோ என்ற பதிமூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 14 (352) அசோக வனிகா விசய: (அசோக வனத்தில் தேடுதல்)
முஹுர்த்த நேரம் தியானத்தில் ஆழ்ந்து, சீதையை மனதில் நினைத்தபடி, அந்த ப்ராகாரத்தில் இறங்கி, மாளிகையிலிருந்து வெளியேற குதித்து இறங்கினான். வசந்த கால ஆரம்பம். மரங்களின் நுனியில் புஷ்பங்கள் தெரிந்தன. பல விதமான மரங்களைக் கண்டான். சால, அசோக, ப4வ்ய, சம்பக, புஷ்பங்கள் மலர்ந்து இருந்தன. உத்தாலக, நாக வ்ருக்ஷங்கள், சூத, கபிமுக இவைகளும், மாமரங்கள் வனமாக அடர்ந்து, நூற்றுக் கணக்கான கொடிகள் சூழ இருக்கக் கண்டான். வில்லிருந்து புறப்பட்ட நாராசம் போல மரங்கள் அடர்ந்த அந்த தோட்டத்தை நோக்கிச் சென்றான். விசித்ரமான அந்த தோட்டத்தில் பறவைகள் கூக்குரலிட, வெள்ளியும், தங்கமும் போல உயர் ரக மரங்கள் நிறைந்து இருந்த அந்த தோட்டத்தைக் கண்டான். மிருகங்களும் கூட்டமாக வளைய வந்தன. பறவைகளும் நிறைய, முன் கண்டறியாத விசித்ரமான இனங்களாக இருக்கக் கண்டான். மரங்கள் பூத்து குலுங்குபவையாக, பழ வகைகள் நிறைந்தனவாக இருக்கக் கண்டான். கோகிலங்கள், ப்4ருங்க3ராஜ எனும் பக்ஷிகள், இவை மதுவுண்டு நித்ய வாசம் செய்யும் பழ, பூ மரங்கள். தோகை விரித்தாடும் மயில் கூட்டங்களும், மற்றும் பல மிருகங்கள், பக்ஷிகள் இவைகளை ரசித்தபடி சென்றான். கண்கள் மட்டும் ராஜபுத்ரியை, மாசற்ற மாணிக்கம் போன்றவளை, தேடியபடி இருந்தன. சுகமாக தூங்கிக் கொண்டிருந்த பக்ஷிகளை தன் நடமாட்டத்தால் எழுப்பி விட்ட வானரம், தூக்கம் கலைந்து சால மரத்திலிருந்து குபீரென்று பறக்கும் பறவைகளை, பல வர்ணங்களில் இருக்கக் கண்டு குதூகலித்தான். இந்த பறவைகள் ஏக காலத்தில் அமர்ந்தும், பறந்தும் மரங்களை உலுக்கியதன் பலனாக குவியலாக புஷ்பங்கள் கீழே விழுந்தன. மாருதன் மேலும் நிறைய புஷ்பங்கள் விழுந்து அவனை மூடியது. அந்த பூமியே அழகிய பெண் அலங்காரம் செய்து கொண்டாற்போல தோன்றியது. அசோக வனத்தின் மத்தியில் திடுமென ஒரு மலை புஷ்ப மயமாக விளங்கியது. அந்த மரங்களை உலுக்கியபடி வேகமாக ஹனுமான் தாவி குதித்த பொழுது மரங்கள் மேலும் புஷ்பங்களை உதிர்த்தன. பத்ரங்களும், புஷ்பங்களும் இல்லாத மரங்கள், ஆடையின்றி நிற்கும் தூர்த்தர்கள் போல விளங்கின. தோல்வியுற்றவன் ஆபரணங்களையும், வஸ்திரங்களையும் இழந்து நிற்பது போல நின்றன. நாலா திக்குகளிலும் தாவி குதிக்கும், அந்த கபியை பார்த்து லங்கா வாசிகள், அடர்ந்து இருக்கும் வனம் வானரங்களுக்கு பிடித்தமானது, வஸந்த காலத்தின் இயல்பு என்று எண்ணினர். வேகமாக தாவும் ஹனுமான் மரங்களை உலுக்கினான். அந்த வேகத்தில் இலைகளும் பூக்களும் உதிர வெறும் கிளைகளாக மட்டும் நின்ற மரங்களை விட்டு பறவைகள் வேகமாக பறந்தன. நகர முடியாத காரணத்தால் மாருதனிடம் பட்ட அடிக்கு திருப்பி கொடுக்க முடியாமல் மரம் நிற்பதாக தோன்றியது. தலை கேசம் திடுமென குறைந்ததால் யுவதிகளின் முகம் வாடுவது போல நிறம் வெளிறி, போவது போல அந்த மரங்களைப் பார்த்த ஹனுமான் எண்ணிக் கொண்டான். வால், கை கால்களால் மிதிக்கப் பட்ட மரங்கள். அசோக வனிகா என்ற அந்த பெண்ணின் கதி, உடைந்த மரங்களுடன் காணும் பொழுது, வாலை சுழற்றி அடித்ததாலும், கால் கைகளால் மிதித்து த்வம்சம் செய்ததாலும், நகங்களால் கீரியும், பற்களால் கடித்தும் உதடுகளை குதறியது போல ஆயிற்று. கொடிகள் வானரத்தின் கைக ளில் சின்னா பின்னமாயின. மழைகாலத்தில் மேகங்களை மாருதன் தள்ளிக் கொண்டு போய் அலைக்கழிப்பது போல இருந்தது. பல ஆகிருதிகளில் வடிவங்களில் இருந்த கிணறுகள், நீர் நிறைந்து காணப்பட்டவை, படிக்கட்டுகள், அழகாக அமைக்கப் பெற்று முத்தும் பவழமும் போல மணல் படிந்து ஸ்படிக மணிகள் இடையில் பதித்தது போல கரையில் இருந்த மாமரங்களாலும் அழகு பெற்று காட்சி தந்தன. மலர்ந்த தாமரைகள், உத்பலங்கள், சக்ரவாக பறவைகள் இவையும் கண்ணுக்கு விருந்தாக காட்சி அளித்தன. ஹம்ஸ, சாரஸ பக்ஷிகளும் நாதம் செய்ய நத்யூக எனும் பக்ஷிகள் நிறைய காணப்பட்டன. இவைகளின் கூக்குரல் வித்தியாசமாக கேட்டது. ஹனுமானும் தீர்கமான மரங்கள் அடர்ந்த வனத்தினுள் நதிகள் பிரவகித்ததால் அம்ருதம் போன்று தண்ணீர் சுவை மிகுந்து இருப்பதைக் கண்டான். அந்த நதியும் கரைகளுக்கு தேவையான பாதுகாப்புச் சுவர்களுடன் இருக்கக் கண்டான். நதியின் கரைகள் செப்பனிடப்பட்டு நேர்த்தியாக காணப்பட்டன. நூற்றுக் கணக்கான கொடிகள், சந்தான புஷ்பங்கள், பலவிதமான புதர்கள், இவைகளின் நடு நடுவில் கரவீரம், இதையடுத்து பெரிய மேகம் போல் நின்ற பெரிய மலை. பல குகைகளும் பாறைகளும் நிறைந்து காணப்பட்டது. அந்த பர்வதமும் ரம்யமாக இருப்பதைக் கண்டான். பிரியமான கணவரின் மடியிலிருந்து இறங்கும் மனைவியைப் போன்று அதன் மடியிலிருந்து இறங்கும் நதியைக் கண்டான். ஜலத்தின் பரப்பில் விழுந்து ஆடிய மரங்களின் நுனிகள், கோபம் கொண்டு வெளியேறும் ஸ்த்ரீயை பிரிய பந்துக்கள் தடுப்பது போல இருந்தது. இதனால் சமாதானமாகி திரும்பும் பெண்ணைப் போல தண்ணீர் எதிர்த்து வருவதைக் கண்டான். காந்தனிடம் கோபம் தீர்ந்து ப்ரஸன்னமாக திரும்பி வந்து விட்ட மனைவியைப் போல இருந்தது. அருகிலேயே பத்3மங்கள், பலவிதமான பறவைகள் சூழ இருந்ததை மாருதாத்மஜன் கண்டான். செயற்கையான குளம். நீண்ட தூரம் பரவியிருந்தது. நீர் நிரம்பி குளுமையாக இருந்தது. மணியாக பள பளத்த படிக்கட்டும், அடிமணல் முத்தும் பழமும் போலவும் காணப்பட்டது. அதே போல விஸ்வகர்மா முனைந்து ஏற்படுத்திய சித்ர கானனம். அதில் பலவித மிருகங்களும், வீடுகளும் அலங்காரமாக அமைக்கப் பட்டிருந்தன. அதில் இருந்த சில மரங்கள் வானரத்துக்கு பரிச்சயமானவை. புன்னாகம், சப்தபர்ணம், சம்பக, உத்தாலக மரங்கள். இடையில் யாகசாலை. வீடுகள். குடைகள். மேற்கூரையோடு அமைக்கப் பட்ட சிறு வீடுகள். பலவிதமான கொடிகள் வளர்ந்து அலங்காரமாக இலைகளால் கூரையை மறைக்க இதனிடையில் சிம்சுபா மரத்தைக் கண்டான். சிம்சுபா (குங்கும பூ என்பர் சிலர்) மரத்தைச் சுற்றி வேதிகா அமைக்கப் பட்டிருந்தது. (மேடை போடப்பட்டிருந்தது). பூமியும் இடையில் பள்ளங்கள் அமைத்து பாறைகளை வைத்தும், சிவந்த நிற இலைகளை கொண்ட மரங்களும், தீ நாக்கு போல ஜ்வலித்தபடி இருக்க கண்டான். இந்த மரங்களின் நடுவில் நானும், திவாகரன் மேருவை பிரபையால் அலங்கரிப்பது போல, இந்த மரங்களின் காந்தியில் காஞ்சனமாக காட்சியளிக்கிறேனோ என்றும் எண்ணினான். காற்று இதமாக வீச, இந்த காஞ்சனமான இலைகள் அசைவது அருமையான காட்சியாக இருந்தது. இந்த மரங்களில் கட்டப்பட்டிருந்த கின்கிணி மணிகள் ஓசை செய்வதும் புதுமையாக இருந்தது. இதை ரசித்து விட்டு, இளம் துளிர்களும் மொட்டுக்களுமாக இருந்த சிம்சுபா மரத்தில் ஏறினான். இதோ வைதேஹியைக் காண்பேன். அவளும் ராமனைக் காண ஆவலுடன் இருப்பாள். இங்குதான் ஏதாவது ஒரு இடத்தில் யதேச்சையாகத் தென்படுவாள். துக்கத்தால் வாடியிருப்பாளாக இருக்கும். இந்த அசோக வனிகா, மிகவும் ரம்யமாக காண்கிறது. சம்பக, சந்தன, வகுள மரங்கள் அலங்கரிக்கின்றன. இதோ இந்த தாமரை குளமும் ரம்யமாக இருக்கிறது. இதிலும் பறவைகள் இருக்கின்றன. இந்த குளத்திற்கு நிச்சயம் வருவாள். ராம மகிஷி ராகவனுக்கு பிரியமான சதி, வனத்தில் சஞ்சாரம் செய்வதில் ஆசையுள்ளவள், நிச்சயம் வருவாள். இந்த வனத்தில் நிம்மதியைத் தேடி ராமணை எண்ணி எண்ணி இளைத்த உடலோடு இந்த வனத்தில் நடந்து ஆறுதல் பெறுவாள். மான் விழியாள், வனத்தைப் பற்றிய விவரங்களை அறிந்தவள், வனவாசத்தில் ராமனுடன் மகிழ்ச்சியாக இருந்தவள். அதனால் பரிச்சயமான இடமாக நினைத்து வருவாள். நித்யம் இங்கு வந்து சஞ்சரிப்பாளாக இருக்கும். வனத்தில் இருக்கும் மிருக பக்ஷிகளை முன் ராமனுடன் இருந்த போது மிகவும் ரசித்து, உடன் வைத்துக் கொண்டு வளர்த்தவள் ஜனகர் மகள். ராமனுடைய மனதுக்குகந்த மனைவி, சதி. சந்த்யா கால ஜபங்களை செய்ய என்றாவது நிச்சயம் வருவாள். இந்த நதியின் தெளிவான ஜலத்தில் சந்த்யா கால ஜபம் செய்ய இந்த நதிக்கரைக்கு வருவாள். சுபமாகத் தெரியும் நதிக்கரை அவளை கண்டிப்பாக ஈ.ர்க்கும். இந்த அசோக வனிகா (சிறிய தோட்டம்) அவள் வசிக்க ஏற்றதாகவே உள்ளது. ராமன் மனைவி, பார்த்திபனின் மனைவி, உயிருடன் இருந்தால், சந்திரனைப் போன்ற முகமுடையவள், அவசியம் சுபமான ஜலத்துடன் கூடிய இந்த இடத்துக்கு வருவாள். இப்படி எண்ணிய ஹனுமான், ராஜகுமாரியான சீதையை எதிர்பார்த்து காத்திருந்தான். இலைகளின் நடுவில் தன்னை மறைத்துக் கொண்டு நாலா திக்குகளிலும் பார்வையை ஓட விட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், அசோக வனிகா விசயோ என்ற பதினான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 15 (353) சீதோபலம்ப4: (சீதையை காணுதல்)
தான் இருந்த இடத்திலிருந்து சுற்றும் முற்றும் ஊன்றி கவனித்தான் ஹனுமான். சந்தான கலா எனும் மரங்கள் சூழ்ந்திருந்தன. எங்கும் அலங்காரமும் திவ்யமான வாசனையும் வீசியபடி இருந்தது. இந்திரனுடைய நந்தன வனத்துக்கு இணையாக இருந்தது. மிருக, பக்ஷிகளுக்கு இடையில் அழகான வீடுகளும், கோகிலம் கூவும் இனிமையான குரலுமாக, பொன்னிற தாமரை, உத்பலங்கள் மலர்ந்த கிணறுகள், குளங்களுமாக, ஆங்காங்கு அமருவதற்கு ஆசனங்கள் போடப்பெற்று, பூமி க்ருஹம் (சிறிய கூரை வேய்ந்த இடங்கள்) இவைகளுடன் எல்லா பருவ காலங்களிலும் பழுக்கும் மரங்களும், செடிகளுமாக மிக அழகாக காட்சி அளித்தது. அசோக புஷ்பங்கள் மலர்ந்து சூரியோதயம் ஆகி விட்டதோ என்று பிரமிக்க வைத்தது. இலையே தெரியாதபடி புஷ்பங்கள். பறவைகள் அந்த மரங்களைச் சுற்றி சுற்றி வந்தன. அசோக புஷ்பங்கள் சோகத்தை நீக்கும், துக்கத்தை நாசம் செய்யும். இவை குவியலாக தரையில் பரவி இருந்தன. கிளைகளில் பாரமாக பூத்துக் குலுங்கிய புஷ்பங்களால் பூமியை தொடுவது போல வளைந்த கிளைகளுடன் கர்ணிகார மரங்களும் கிம்சுக மரங்களும் காணப்பட்டன. இந்த புஷ்பங்களே போதும், இந்த இடத்துக்கு ஒளி கூட்ட என்று ஹனுமான் நினைத்தான். புன்னாக மரங்களூம், சப்தபர்ண மரங்களும், சம்பக, உத்தாலக மரங்களும், அடிபாகம் அகன்று பெரிய மரங்கள், நிறைய இருந்தன. இவைகளிலும் புஷ்பங்கள். சில பொன் நிறமானவை. சில அக்னி நாக்கு போல சிவந்தவை. நீலாஞ்சனம் போல சில என்று ஆயிரக்கணக்கான அசோக மரங்கள், புஷ்பங்கள். நந்தனம், சைத்ர ரதம் இவைகளுக்கு சமமாக (இந்திரனுடையவனம் நந்தனம்.) சித்ரமான சைத்ர ரதம் எனும் வனம். இதுவும் தேவ லோகத்து வனமே. மிகவும் பெரிய தோட்டம். நினைத்து பார்க்க முடியாதபடி அழகாக லக்ஷ்மீகரமாக விளங்கியது. புஷ்ப ஜ்யோதி, தாரா கணங்களுடன் தெரியும் ஆகாசம் போல இருந்தது. இது இரண்டாவது ஆகாசம் என்று சொல்வது போல. நூற்றுக் கணக்கான வித விதமான சித்ர புஷ்ப ரத்னங்களும் ரத்னாகரம் என்று அழைக்கப் படும் ஐந்தாவது சாகரம் போல இருந்தது. எல்லா வித ருது-பருவ காலங்களிலும் பூக்கும் மலர்களுடன் அந்த மரங்களே மணம் வீச, மிருகங்களும், பக்ஷிகளும் பல விதமாக சப்தம் இட, மனோரமமான புண்ய கந்தம், பலவிதமாக நாசியைத் தாக்க, வாசனைக்கு பெயர் போன மலையான கந்த மாதன மலையின், மற்றொரு பிரதி பிம்பமோ, இரண்டாவது கந்தமாதன பர்வதமோ எனும் படி விளங்கியது. இந்த அசோக வனத்தில் தாவரங்களைப் பார்த்து ரசித்து வந்த ஹனுமான் சற்று தூரத்தில் தூண்களுடன் கூடிய ஒரு மடம் இருப்பதைக் கண்டான். ஆயிரக்கணக்கான தூண்களுடன் கைலாஸ மலை போல வெண்மையாக, வனத்தின் மத்தியில் இருக்கக் கண்டான். பவழத்தின் நிறத்தில் அதன் படிக்கட்டுகள், மேடை புடமிட்ட தங்கம் போல ஜ்வலித்தது. கண்களை கூசச் செய்தது. அதன் செல்வ செழிப்பு கண்டவுடன் மனதில் உரைத்தது. உயர்ந்து வானத்தை தொடுவது போன்ற மேல் மாடியும், அந்நேரத்தில் விமலமாக இருந்தது, சுற்றியிருந்த ராக்ஷஸிகளால் மாசு படிந்தது போல காணப்பட்டது. சுக்ல பக்ஷ ஆரம்பத்தில், சந்திர ரேகாவை காண்பது போல உபவாசம் இருந்து இளைத்த தேகத்தோடு, பெருமூச்சு விடும் ஒரு ஸ்த்ரீயைக் கண்டான். மெதுவாக கவனிக்க, கவனிக்க தெரிந்த அழகிய உருவம். கவர்ந்திழுக்கும் பிரபையுடன் இருந்தவளை, அக்னியின் ஜ்வாலை புகையினால் மறைக்கப்பட்டது போல மங்கலாக தெரிந்தவளை, கசங்கி இருந்த உத்தமமான மஞ்சள் நிற வஸ்திரத்துடன், அலங்காரம் ஏதுமின்றி, சேற்றில் செந்தாமரை போன்றவளை, வெட்கத்துடன், துக்கமும் சேர வாட்டமாகத் தெரிந்தவளை, தபஸ்வினியான ஒரு ஸ்த்ரீயை, மங்கிய சோபையுடன், அங்கார க்ரஹம் பீடித்த ரோஹிணி நக்ஷத்திரம் போல இருந்தவளை, சாப்பிடாததால் இளைத்தவளை, கண்களில் நீர் பெருக நின்றவளை, கண்ணீர் நிறைந்த கண்களுடன், த்யானத்தில் ஆழ்ந்திருந்தவளை, வேதனையே முகத்தில் பிரதானமாகத் தெரிய பல நாட்களாக வருந்தியவளை, தனக்கு பிரியமான பந்துக்கள் யாரும் அருகில் இல்லாமல் ராக்ஷஸி கூட்டம் சூழ இருந்தவளை, தன் இனத்தாரை விட்டுப் பிரிந்த மான் குட்டி, நாய்களின் இடையில் அகப்பட்டுக் கொண்டதைப் போல, துடை வரை நீண்டிருந்த கேசத்தை ஒற்றை பின்னலாக தொங்க விட்டவளாக, கறுத்த மேகம் பொழியும் பொழுது, வன ராணியான பெரிய மரத்திலிருந்து பூமியைத் தொடும் நீர் தாரை போல, (பின்னல் தொங்க) சுகமாக இருக்க வேண்டியவள், இப்படி துக்கத்தில் தகிக்கப் படுகிறாள், கஷ்டங்களை அறிந்திராதவள், விசாலா, மாசு படிந்த ஆடைகளுடன், மங்கலாக காட்சிய ளித்தவளைக் கண்டு ஹனுமான் சீதையாகத் தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தான். சூழ்நிலையும் மற்ற காரணங்களைக் கொண்டும், ராக்ஷஸனால் வேடம் தரித்து ஏமாற்றி கவர்ந்து கொண்டு வரப்பட்டவள் இவள் தான் என்று தீர்மானித்தான். அந்த சமயம் நாங்கள் பார்த்த பொழுது இருந்தது போலவே இருக்கிறாள். பூர்ண சந்திரன் போன்ற முகமும், பெருத்த ஸ்தனங்களும், திசைகளை தன் பிரபையால் இருள் நீங்கச் செய்தவளுமான கறுத்த கேசமும், பிம்ப பழம் போன்ற உதடுகளும், சிறுத்த இடையும், நேர்த்தியான உடல் வாகும், பத்ம பலாசம் போன்ற கண்களும் உடைய, மன்மதனுக்கு ரதி போல ராகவனுக்கு தர்ம பத்னியாக இருந்தவளை, பூர்ண சந்திரனின் ஒளி போல உலகத்தாருக்கு விருப்பமானவளை, தபஸ்வினியாக, விரதங்களை அனுஷ்டித்து வருபவளாக, தரையில் அமர்ந்து இருந்தவளை, பயந்து நடுங்குவது மூச்சு விடுவதிலேயே தெரிய பெருமூச்சு விடுபவளை, புஜகேந்திரனான (நாக ராஜனின்) மனைவி போன்ற நீண்ட கேசம் உடையவளை, சோகத்தில் மூழ்கியதால் வெளிப்படையாகத் தெரியாத சோபையோடு இருந்தவளை, அக்னியின் நாக்கு, புகை மூடிக் கிடப்பது போல இருந்த அவளை, ஸ்மிருதி (வேதம்) மறைந்து கிடப்பது போலவும், நிறைவு, செல்வ செழிப்பு தாழ்வையடைந்தது போலவும், சிரத்தை (கவனம்) சிதறியது போலவும், நம்பிக்கை பொய்த்தது போலவும், சித்திகள் கூடவே நிபந்தனைகளோடு வந்தது போலவும், கலுஷமான புத்தி போலவும், எதிர்பாராத அபவாதம் வந்து இது வரை சேமித்த புகழை அடித்துச் சென்றது போல, ராமரை விட்டுப் பிரிந்ததால் வேதனை படுபவளை, ராவணனின் வற்புறுத்துதலால் உடல் வாடியவளை, அபலையானவளை, மான் குட்டி போன்றவளை, இங்கும் அங்கும் மருட்சியுடன் நோக்குபவளை, கண்ணீர் நிறைந்து கிடப்பதால் கறுத்த இமைகளுடன், பிரஸன்னமில்லாத முகமும், அடிக்கடி பெருமூச்சு விடுபவளை, நல்ல அலங்காரம் செய்து கொள்ள வசதியுள்ளவள், அலங்காரங்களை தவிர்த்தவளாக, சேறு பூசிய செந்தாமரை போன்றவளை, நக்ஷத்திர ராஜனான சந்திரனை கார் மேகங்கள் மறைத்தது போல, தன் ஒளி குன்றித் தெரிந்தவளை, ஹனுமான் திரும்பத் திரும்ப பார்த்து சீதை தானா என்ற யோஜனையும், அவளே தான் என்ற முடிவும் மாறி மாறி வரக் கண்டான். திரும்ப திரும்ப பயிற்சி இல்லாத வித்தை சிதிலமாகிப் போவது போல, அலங்காரம் இல்லாத சீதையை அறிந்து கொண்டு துக்கமே அடைந்தான். சரியானபடி (இலக்கணம், வழக்கு தவறிய) சொல்லப்படாத வார்த்தையின் அர்த்தமே மாறிப் போவது போல அவளைப் பார்த்து மாசற்ற ராஜ குமாரி, இவளாகத்தான் இருக்கும் என்று மற்ற காரணங்களைக் கொண்டு தானே தர்க்கம் செய்து கொண்டு தீர்மானித்தான். ராமன் சொன்ன அடையாளங்கள், வைதேஹியைப் பற்றிச் சொன்ன சொற்கள், இந்த பெண்ணின் உடலமைப்புடன் பொருந்துவதைக் கண்டான். உடலில் அணிந்திருந்து கீழே வீசிய ஆபரணங்கள் அவளுடையதாகத் தான் இருக்க வேண்டும் என்றும் ஊகித்துக் கொண்டான். காதுகளில் குண்டலம் அணிந்த அடையாளமும், நாய் பல் என்ற ஆபரணமும், கைகளில் மணி முத்து இவை பதித்த கங்கணங்களும், வெகு நாட்களாக கவனிக்கப் படாததால் ஒளி மங்கிக் கிடந்தன. இவைகளைத் தான் ராமன் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறான் என்று நினைத்தான். அவள் ஆபரணங்களை களைந்து வஸ்திரத்தில் கட்டி வீசிய பின், மீதியிருந்த ஆபரணங்கள் இவையாகத் தான் இருக்க வேண்டும். மஞ்சள் நிற ஆடை இது தான். பொன் நிற கரையுடன் கூடியது. நழுவி விழுந்த உத்தரீயம், ஆகாயத்தில் பறந்ததை வானரங்கள் கண்டனர். பூஷணங்கள் பூமியில் சிதறியதையும் கண்டனர். இவள் தான் அவைகளை சப்தமிட பலம் கொண்ட மட்டும் வீசி எறிந்தாள். வெகு நாட்களாக அணிந்திருப்பதால் இந்த வஸ்திரம் கசங்கிப் போய் இருக்கிறது. ஆயினும் வர்ணம் மாறவில்லை. இவள் தான் ராமனுடைய பிரியமான மகிஷி. இவள் காணாமல் போனாலும் அந்த ராமன் மனதை விட்டு அகலாமல் இருந்து வருகிறாள். இவளை எண்ணித் தான் ராமன் நான்கு விதமாக தவிக்கிறான். காருண்யம், ஆன்ருசம்ஸம், சோகம், மதனந்- கருணை, பரிவு, சோகம், மதனன் – ஆசை. சாதாரணமாக ஏதோ ஒரு ஸ்த்ரீ பலவந்தமாக கவர்ந்து செல்லப் பட்டாள் என்று கேட்டால் தோன்றும் கருணை, பொதுவானது. நம்மை அண்டி இருப்பவள், நாம் காப்பாற்ற கடமைப் பட்டிருக்கிறோம் என்பதால் தோன்றும் பரிவு, தன் பத்னி என்பதால் பிரிய ஜன விரகத்தால் தோன்றும் வருத்தம், பிரியா என்பதால், தன் மனதுக்கிசைந்த காதலி என்பதால் துயரம், தவிப்பு இவைகளை ராமன் ஒன்று சேர அனுபவிக்கிறான். இந்த தேவியின் உருவம், அங்க லாவண்யங்கள் ராமனுடைய உடலமைப்பு, இவற்றுடன் சரியாக பொருந்தும். இந்த தேவியின் மனம் ராமனிடத்திலும், ராமனுடைய மனம் இவளிடத்திலும் இருக்கிறது. அதனால் தான் இவளும், தர்மாத்வான ராமனும் முஹுர்த்த நேரம் கூட தாங்க முடியாத இந்த துக்கத்திலும் உயிருடன் இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் ராமன் நிலை தான் கொடியது. அவன் தான் அதிகமாக பாதிக்கப் பட்டவன். இந்த தேவியைப் பிரிவது சாதாரண கஷ்டமா? தன் துயரத்தையும் வெளிக் காட்டாது இருக்க முடிகிறதே, அதுவே பெரிய காரியம். சிரம சாத்யமான காரியம். இவ்வாறு சீதையைக் கண்டு கொண்ட மகிழ்ச்சியில், ஹனுமான் தனக்குள் சொல்லிக் கொண்டான். ராமனை பாராட்டி பேசியவன், மனதால் ராமனிடம் சென்று விட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், சீதோபாலம்போ4 என்ற பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 16 (354) ஹனுமத் பரிதாப: (ஹனுமான் பரிதாபப் படுதல்)
பாராட்டுக்குரிய அவ்விருவரையும், ராமனையும், சீதையையும் மனதினுள் பாராட்டி விட்டு ஹனுமான் திரும்பவும் கவலைக்குள்ளானான். ஹனுமானின் கண்கள் கலங்கின. தன்னை அடக்க மாட்டாமல் வாய் விட்டு அரற்றினான். தேஜஸ்வியான ஹனுமான் மூஹுர்த்த நேரம் தியானத்தில் ஆழ்ந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான். ராமனின் மதிப்புக்குரியவள், லக்ஷ்மணனும் பெரும் மதிப்பு வைத்து மரியாதையாக போற்றி பாதுகாக்க இருந்தவள், அந்த சீதை இப்பொழுது துக்கத்தை அடைந்தாள் என்றால் காலம் தான் கொடுமையானது, விதி தான் வல்லது. அதை எதிர்த்து யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பது தெளிவாகிறது. ராமனுடைய கஷ்டங்களை உணர்ந்தவள், லக்ஷ்மணனுக்கும் அனுசரணையாக நடப்பவள், இப்பொழுதும் தன் பிரச்னையை பெரிதாக நினைக்கவில்லையோ என்று தோன்றுகிறது. பெரும் ஜலம் வந்தாலும் கங்கை கலங்காது இருப்பது போல கலங்காமல் இருக்கிறாள். சமமான வயது, நடவடிக்கை, சமமான குல பிறப்பு, வளர்ந்த விதம், ராமனுக்கு இவள் தான் ஏற்ற பத்னி. அதே போல இவளுக்கும் ராமன் தான் ஏற்ற பதி. புத்தம் புது சொக்கத் தங்கம் போல இருந்தவளை, உலகத்தாருக்கு பிடித்த லக்ஷ்மிதேவி போன்று இருந்தவளைப் பார்த்து ஹனுமான் ராமனையே அதிகமாக நினைத்தான். தன் மனதால் அவனை சென்றடைந்தான். அஹோ, இந்த விசாலாக்ஷியின் காரணமாக மகா பலசாலியான வாலி வதம் செய்யப் பட்டான். ராவணனுக்கு இனையான வீரனான கப3ந்த4னும் கொல்லப் பட்டான். விராத4 ராக்ஷஸனும், பயங்கரமான பலம் கொண்ட ராக்ஷஸனே. அவனையும் யுத்தத்தில் வெற்றி கொண்டான். சப4ரன் என்ற அசுரனை இந்திரன் மாய்த்தது போல, ராமன் வனத்தில் சஞ்சரிக்கும் சமயம் இந்த விராதனை போரில் மாய்த்தான். ஜனஸ்தானத்தில் பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்களின் சேனை சின்னா பின்னமாக்கப் பட்டது. ராமனுடைய சரங்கள் அக்னியின் நாக்குகள் போல பாய்ந்து சென்றன. போரில் க2ரன், மடிந்தான். த்ரிசிரஸை தோல்வியை தழுவச் செய்து வீழ்த்தினான். மகா தேஜஸ் வாய்ந்தவன் என்று புகழ் பெற்ற தூஷணனும் மடிந்தான். ராமன் லாகவமாக தன்னை உணர்ந்து, தனியனாக இம்முவரையும் வதைத்தான். வாலியினால் பாலிக்கப் பட்ட ராஜ்யம் சுக்ரீவனுக்கு எட்டாத, கிடைக்க முடியாத சொத்து. இந்த ராமனால், சுக்ரீவனுக்கு கிடைத்தது. அதுவும் இந்த தேவி நிமித்தமாகத் தான். ஸ்ரீமானான நத3 நதீ3பதி எனும் சாகரத்தை நான் கடந்து வந்தேன். இந்த விசாலாக்ஷியின் பொருட்டு இந்த நகரத்தையும் நான் அலசி ஆராய்ந்து பார்த்து விட்டேன். இந்த ராமன் சமுத்திரத்தை எல்லையாகக் கொண்ட இந்த நிலத்தையே இவள் பொருட்டு அடியோடு மாற்றிக் காட்டினாலும் கூட, சரியே என்று சொல்வேன் மூவுலக ராஜ்யமா, சீதையா என்று கேட்டால், மூவுலக ராஜ்யம் சீதையின் ஒரு கலைக்கு ஈ.டாகாது என்று சொல்வேன். இவள் தர்ம சீலனான ஜனக ராஜாவின் மகள். பர்த்தாவிடம் திடமாக அன்பு கொண்டவள். ஹல (கலப்பை) நுனியில் பூமியைத் தோண்டும் பொழுது பூமியிலிருந்து தோன்றியவள். பத்மங்களின் மகரந்த துகள் போல, வயல் மண் மூடிக் கிடந்தாள். சீலம் மிக்க ஆர்யனான யுக யுகமாக மாறாத உயர்ந்த குணங்களுடைய விக்ராந்தனான தசரத ராஜாவின் மருமகள். தர்மம் அறிந்தவன், செய் நன்றி மறவாதவன் என்று ராமன் புகழ் பெற்றவன். அவனுக்கு இவள் பிரியமான மனைவி. இப்பொழுது இந்த ராக்ஷஸிகளின் வசமாகி இருக்கிறாள். எல்லா போகங்களையும் விட்டு கணவனிடம் உள்ள அன்பு காரணமாக கஷ்டங்களைப் பற்றி நினைக்காமல், வனம் வந்தாள். கிடைத்த பழம், காய் கறிகளிலேயே மனம் மகிழ்ந்து கணவனுக்கு பணிவிடை செய்வதிலேயே மன நிறைவு பெற்றாள். வனமோ, ராஜ பவனமோ, சமமாக பாவித்து, அன்புடன் இருந்தாள். கனகம் போன்ற நிறத்தினாள், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் மென்னகையுடன் விளங்குபவள், இந்த யாதனையை- பெரும் கஷ்டம், பொறுத்துக் கொண்டிருக்கிறாள், அனர்த்தங்களை சகித்துக் கொண்டிருக்கிறாள். விதி இவளுக்கு அனுகூலமாக இல்லாதது காரணமாக இருக்கலாம், மன உறுதியுடன் அதை பொருட்டாக மதிக்காமல் இருப்பது தான் இவள் சிறப்போ. சீலம் நிறைந்த இவளைக் காணத்தான் ராகவன் துடித்துக் கொண்டிருக்கிறான். ராவணன் இடையில் வந்து கவர்ந்து கொண்டு போய் விட்டான். தாகம் கொண்டவன் நீர் நிலையைத் தேடி அலைவது போல அவன் அலைந்து கொண்டிருக்கிறான். இந்த தேவியைத் திரும்ப பெற துடித்துக் கொண்டிருக்கிறான். ராஜ்யத்தை இழந்த அரசன் திரும்ப ராஜ்யத்தைப் பெற்றது போல இவளைத் திரும்ப பெற்றால் நிச்சயம் பெரு மகிழ்ச்சி அடைவான். இந்த தேவியும், உலகியல் சௌக்யங்களை தியாகம் செய்து விட்டு, பந்து ஜனங்களும் அருகில் இல்லாத நிலையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, ராமனோடு இணையலாம் என்ற ஒரே ஆசையில் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள். இவள் இந்த ராக்ஷஸிகள் கூட்டத்தையும் கண்களால் காணவில்லை, மலர்ந்து கிடக்கும் இந்த மரங்களையும், வனத்தையும் காணவில்லை. மனதை ஒருமைப் படுத்தி ஒரே தியானமாக ராமனையே கண்டு கொண்டிருக்கிறாள். ப4ர்த்தா என்பவன் ஸ்த்ரீகளுக்கு மற்ற ஆபரணங்களை விட மேலான ஆபரணம். அவனை விட்டுப் பிரிந்த நிலையில், எந்த ஆபரணங்களையும் அணியத் தகுதி இருந்தும், அணிவதில்லை. ராமன் செய்வது தான் இதனினும் கடுமயான தவம். இவளைப் பிரிந்து இன்னமும் உயிர் வாழ்கிறானே. இந்த துக்கத்தில் தான் கரைந்து போகாமல் இருக்கிறானே. கறுத்த குழலுடைய இவளை, சதபத்ரம் போன்ற கண்களை, சுகமாக இருக்க வேண்டியவள், இப்படி துக்கத்தைத் தாங்கிக் கொண்டு இருக்கிறாளே என்று என் மனமே வருந்துகிறது. பூமியைப் போன்று பொறுமையுடையவள், புஷ்கரம் எனும் தாமரை மலரைப் போன்ற கண்களையுடையவள், ராம, லக்ஷ்மணர்கள், கண்களை இமை காப்பது போல காத்து வந்தனர். அவளை, தற்சமயம், கோணலான கண்களுடன் ராக்ஷஸிகள் மரத்தடியில் சிறை வைத்து காவல் காக்கின்றனர். பனி பெய்த தாமரை மலர் போல சோபை குன்றித் தெரிகிறாள். அடுத்தடுத்து வந்த கஷ்டங்களால் நொந்து போய் இருக்கிறாள். தன் துணையை விட்டுப் பிரிந்த சக்ரவாக பக்ஷி போல இருக்கிறாள். ஜனக சுதா எப்படிப் பட்ட கஷ்டமான நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறாள். இவளுடைய வேதனையில் தானும் பங்கேற்பது போல அசோக மரங்கள் புஷ்பங்களின் பாரத்தால் வளைந்து நிற்கின்றன. அதுவே இவள் வேதனையைக் கிளறுகிறது. பனி விலகி சந்திரனும் மறையத் தொடங்கி விட்டான். இதோ சற்று நேரத்தில் ஆயிரம் கிரணங்களுடன் சூரியன் உதயமாகி விடும். இப்படி பலவும் எண்ணி, இவள் சீதை தான் என்ற நம்பிக்கையுடன், மரத்தின் மேலேயே அமர்ந்து காத்திருந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ஹனுமத் பரிதாபோ என்ற பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 17 (355) ராக்ஷஸி பரிவார: (ராக்ஷஸிகளின் காவலில் இருத்தல்)
ஸ்வயம் (தன் இயல்பிலேயே) நிர்மலமான ஹம்ஸம், குமுத மலை மண்டிக் கிடந்த நீலமான ஜலத்தில் மிதப்பது போல சந்திரனும் நிர்மலமான ஆகாயத்தில் மிதந்து கொண்டு செல்வது போல இருந்தது. ஹனுமான் லங்கையில் ப்ரவேசித்த சமயம் சந்த்ரோத3யம் ஆனது (ப்ரஜகா3ம நப4ச்சந்த்ரோ). (சந்த்ரோபி சாசிவ்யம் இவ அஸ்ய குர்வன், தாராகணைர் விராஜ மான:) சந்திரனும் உதவி செய்வது போல தன் தாரா கணங்களுடன் தோன்றினான். ராவண க்ருஹத்தில் தேடிய பொழுது பாதி ராத்திரி. (மத்யம் க3தமம்சுமந்தம்) நடு வானில் சந்திரன் இருந்த சமயம். தற்சமயம் இரவின் அந்திம நேரத்தில் இருந்த பொழுது அசோக வனத்தில் பிரவேசித்தான் என்பது. திலகரின் உரை, மாறுபட்டது. முதல் நாள் இரவின் முடிவில் அசோக வனத்தில் ப்ரவேசித்தவன் நாள் முழுதும் ராக்ஷஸிக ளின் கண்ணில் படாமல் மறைந்திருந்து, மறு நாள், சந்த்ரோதயம் ஆகும் வரை ஹனுமான் சந்திரன் வரவை எதிர் நோக்கி இருந்ததாக)
ஹனுமானுக்கு உதவி செய்யவே வந்தது போல நிர்மலமான பிரபையுடன், குளுமையான தன் கிரணங்களால் பவனாத்மஜனை வருடிக் கொடுப்பது போல இருந்தது. இதன் பின் ஹனுமான் பூர்ண சந்திரன் போன்ற முகமுடைய சீதையைக் கண்டான், அதிகமான பாரத்தை வைத்தவுடன், படகு தள்ளாடுவது போல தாங்க முடியாத துயரத்தை தாங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டான். வைதேஹியையே பார்த்துக் கொண்டிருந்த ஹனுமானின் பார்வை சற்று தள்ளி இருந்த ராக்ஷஸிகளின் மேல் விழுந்தது. கோரமான காட்சி அது. ஒரு கண், ஒற்றைக் காது என்று சிலர், பெரிய காது உடையவள், காதே இல்லாதவள், சங்கு போன்ற காதுடையவள், தலை மேல் மூமூக்குடையவள், பெருத்த சரீரம், உடல் பெரியது, தலை சிறியது என்று இருப்பவள், தலை கேசம் குச்சி குச்சியாக நிற்க ஒருவள், மற்றவள் கேசமே கம்பளமாக, நீளமான காது, நீளமான நெற்றி, நீளமான வயிறு, நீண்ட ஸ்தனங்கள் என்றும், நீண்ட உதடுகள், சுருங்கிய உதடுகள், வாய்நீளமாக, முழங்கால் நீண்டதாக என்றும், குள்ளம் உயரம், கூனல், அங்க ஹீனம், வாமனம், கறுத்த சரீரம், வெந்து போன முகம், மஞ்சள் நிற கண்கள், கோணலான முகம் என்றும் குரூபிகளாக, மஞ்சள் நிறத்தவர்களாக, கறுத்த, முகமே கடு கடுவென, கலஹம் செய்யும் குணத்தினராக, என்றும், இருந்த ராக்ஷஸிகளின் உருவங்களைக் கண்டான். இவர்கள் கையில் கருப்பு இரும்பாலான ஆயுதங்கள், மகா சூலம், கூடம், உத்3கரம் இவைகள் வேறு. வராக, மிருக, சார்தூல, மகிஷ, அஜ, குள்ள நரி- இவைகளைப் போன்ற முகம், க3ஜம் ஒட்டகம் போன்ற பாதங்கள். மற்றும் சிலருக்கு தலையின் அமைப்பே வித்தியாசமாக, ஒரு கை, ஒரு பாதம் என்றும், கர கர்ணம், அஸ்வ கர்ணம், கோ கர்ணம், யானை கர்ணம் வானரத்தின் கர்ணம் என்று சிலர், மூக்கே இல்லாமல் சிலர், பெரிய மூக்குடன் குறுக்காக வளர்ந்த மூக்கு, விக்ருதமான மூக்கு என்று சிலர், நெற்றியில் அமைந்த மூக்கு சிலருக்கு, யானை கால், பெருத்த கால், பசு மாடு போன்ற கால்கள், நீண்ட கழுத்தும், சிறுத்த வயிறுமாக சிலர், வாயும் கண்ணும் மட்டும் பிரதானமாக தெரிய சிலர், நீண்ட நாக்கும், நகமுமாக தெரிய சிலர், ஆட்டின் முகமும், யானை முகம், பசு முகம், பன்றி முகம், குதிரை ஒட்டகம், கோவேறு கழுதையின் முகம், சூலமும், உத்கரமும் கைக ளில் ஏந்தியவர்கள், க்ரோதமும், கலஹம் செய்யும் குணமும் அருவருப்பான முகமும், கேசம் எங்கோ பறக்க, ராக்ஷஸிகள்- எப்பொழுதும் மதுவும் மாமிசமுமாக, அருந்திக் கொண்டு, எதையாவது புசித்துக் கொண்டும், மாமிசத்திலிருந்து வடியும் ரத்தம், இவர்கள் உடலிலும் கறையாக இருப்பதையும் பொருட்படுத்தாமல், காண அருவருப்பில், உடல் கூச, ஹனுமான் கண்டான். மாசற்ற தேவியான சீதை அமர்ந்திருந்த மரத்தைச் சுற்றி இவர்களும் அமர்ந்திருந்தனர். இவர்களுக்கு இடையில் தன் உடலை, கேசத்தைப் பற்றி எந்த விதமான அக்கறையும் இல்லாமல் தூசு படிய இருந்தவளைக் கண்டான். புண்யம் தீர்ந்தவுடன், பூமியில் வந்து விழுந்த நக்ஷத்திரமோ என தன் சரித்திரமே துணையாக, பர்த்தாவைக் கண்டே பல நாட்களாகி விட்ட நிலையில், அந்த துக்கத்தில், உத்தமமான பூஷணங்களை அணிந்திருந்தவள், இப்பொழுது எதுவும் இல்லாமல், பர்த்தாவின் வாத்ஸல்யம் அன்பே பரி பூர்ணமாக, பந்துக்கள் யாரும் அருகில் இல்லாமல் ராக்ஷஸாதிபதியின் ஆதிக்கத்தில் உள்ளவர்களே சூழ்ந்திருக்க, தன் கூட்டத்திலிருந்து பிரித்து அழைத்து வந்து சிங்கங்களோடு கட்டி வைக்கப் பட்ட பசு கன்று போல, மேகத்தின் நுனியில் தெரியும் சந்திர ரேகா போல சரத் கால வனத்தில் மேகம் சூழ இருந்தவளை, ஒடிந்து விழுந்து விடுவது போன்ற தேகத்துடன், தொடாமலே இருந்ததால் கொடி போன்றவள், இன்னமும் தன் பர்த்தாவையே எண்ணி, ராக்ஷஸனுக்கு ஏவல் செய்த இந்த ராக்ஷஸிகளுடன் ஒட்டாமலே இருந்தவளை அசோக வனத்தில் சோகமே உருவாக, சோக சாகரத்தில் மூழ்கியவளாக, க்ரஹங்களுடன் விளங்கும் ரோஹிணி நக்ஷத்திரம் போன்று, மலர்கள் இல்லாத கொடி போன்றவளைக் கண்டான். ஹனுமான் உடலில் தூசு படிந்ததைக் கூட அகற்றாமல், எந்த வித செயற்கை அலங்காரமும் இன்றியே, சேற்றில் இருக்கும் செந்தாமரைத் தண்டு போல தெரிந்தும் தெரியாமலும் இருப்பது போல சோபை குன்றி இருந்தாள். மலினமான வஸ்திரத்தில் இருந்த பாமினியான சீதை, மான் குட்டியை துஷ்ட மிருகங்கள் சூழ்ந்து கொண்டு இருந்ததைப் போல இருந்தவளைக் கண்டான். அந்த தேவி இப்பொழுது தீனமான முகத்தோடு இருக்கிறாள். கணவனுடன் இருந்த பொழுது அவன் தேஜஸால் தீனம் என்பதையே அறியாமல் இருந்தவள், தற்சமயம் தன் சீலமே தன்னை காக்க, கரு விழிகளையுடைய சீதையை ஹனுமான் கண்டான். மான் குட்டி போன்ற மருண்ட விழிகளையுடையவள் என்று அலங்காரமாக பேசப்பட்டவள், இப்பொழுது பெண் மான் போலவே பயந்து நடுங்கியபடி மருண்ட விழிகளுடன் இருப்பதைக் கண்டான். எதிரில் வெறுமையாக பார்த்த படி இருந்தாள். இளம் துளிர்களுடன் கூடிய மரம் அவள் விட்ட உஷ்ணமான பெருமூச்சில் எரிந்து விடுமோ என்று தோன்றியது. சோகமே கடலாக, இவள் துக்கமே அலைகளாக எழுந்து அடங்குவதும் திரும்ப எழுவதுமாக இருந்ததாக கற்பனை செய்து கொண்டான் ஹனுமான். தன் இயற்கையான அங்க அவயவங்களின் சீரான அமைப்பால், எந்த வித ஆபரணமும் இன்றியே அழகுடன் தெரிந்தவளை பொறுமையே உருவெடுத்து வந்தவளைக் கண்டு, மைதிலியைக் கண்டு கொண்டோம் என்று பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைந்தான். கண்களில் ஆனந்த கண்ணீர் மல்கியது. ராகவனுக்கு நமஸ்காரம் செய்தான். ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் வணக்கம் செலுத்திய ஹனுமான், சீதையைக் கண்ட சந்தோஷத்தில் ஒரு சுற்று பருத்தவனாக ஆனான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ராக்ஷஸீ பரிதாபோ என்ற பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 18 (356) ராவணாக3மனம் (ராவணன் வருகை)
வைதேஹியைப் பற்றி மனதில் எண்ணியபடி பூவும் பழமுமாக இருந்த மரங்களையும், வனத்தையும் சுற்றிப் பார்த்த ஹனுமான், இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என்று, காத்திருந்தான். ஆறு அங்கங்களுடன் வேதங்களை அறிந்தவர்கள், யாக யக்ஞங்கள் செய்பவர்கள், அந்த விடியற்காலையில், வேத கோஷங்கள் செய்வதைக் கேட்டான். ப்ரும்ம ராக்ஷஸர்கள் அந்த இளம் காலை நேரத்தில் அனுஷ்டானங்களை செய்யவும் ஆரம்பித்து விட்டிருந்தனர். செவிக்கு இனிமையாக மங்கள வாத்யங்கள் ஒலிக்க, தசக்ரீவன் விழித்துக் கொண்டான். வழக்கம் போல விடியற்காலை உறக்கம் கலைந்து எழுந்தவன், உடனே வைதேஹியை நினைத்துக் கொண்டவனாக மாலைகளும் ஆபரணங்களும் நிலை குலைய எழுந்தான். பிரதாபம் உடைய ராஜா, ராக்ஷஸேந்திரன் அவளிடம் மிகுந்த ஈ.டுபாடு கொண்டவனாக, காம வசம் ஆனான். அவளிடம் தனக்கு ஏற்பட்ட காமத்தை மறைத்துக் கொள்ள அவன் முயலவும் இல்லை, முடியவும் இல்லை. உத்தமமான ஆபரணங்கள் அணிந்து தன் செல்வ செழிப்பை பறை சாற்றியபடி இருந்தவன், பல மரங்கள் பூத்து குலுங்கியபடி இருந்த, ஏராளமான புஷ்கரிணிகளும், பலவிதமான புஷ்பங்கள் மலர்ந்து அழகுற அமைந்து இருக்க, எப்பொழுதும் மதம் கொண்ட பறவைகள், அத்புதமான விசித்ரமான, ஈ.ஹாம்ருகம் (வளர்ப்பு மான்கள்) பலவிதமாக சூழ்ந்திருக்க, கண்களுக்கு விருந்தாக, வீதிகளில் மணியும் காஞ்சனமும் கொண்டு தோரணங்கள் தொங்க, அதன் வழியே நடந்து, அசோக வனிகா (சிறிய தோட்டம்) வந்து சேர்ந்தான். பல விதமான வளர்ப்பு மிருகங்கள் நிறைந்த வனம். பழங்கள் கீழே விழுந்து கிடந்தன. நூறு பேர் மட்டும் ஸ்த்ரீகள் அவனைத் தொடர்ந்து வந்தனர். தேவ கந்தர்வ பெண்மணிகள் மகேந்திரனைத் தொடர்ந்து செல்வது போல, புலஸ்திய வம்சத்தினனான ராவணனைத் தொடர்ந்து சென்றனர். ஒரு சிலர் தங்கத்தினாலான விளக்குகளை ஏந்தி வந்தனர். வால வ்யஜனங்களை(தாம்பூலம்) ஒரு சிலர், தால மரத்தின் விசிறிகளை (பனை) ஒரு சிலர் வீசிக் கோண்டு வந்தனர். தங்க பாத்திரங்களில் ஜலம், குடி நீர் இவற்றுடன் சிலர். இவர்கள் முன்னால் சென்றனர். அலங்காரமாக மயில் முதலிய பறவைகளின் தோகைகளை சிலர் ஏந்திக் கொண்டு பின்னால் சென்றனர். ராவணனின் மனைவிகள், உத்தமமான ஸ்த்ரீகள். இவர்களும் தூக்கமும், மதுவுண்ட மயக்கமும் கண்களில் தெரிய நடந்தனர். மது வகைகள் கொண்ட பாத்திரத்தை சிலர் அக்கறையுடன் தூக்கிக் கொண்டு வந்தனர். கார் மேகத்தை மின்னல் தொடருவது போல, இந்த பத்னிகள் கணவனைத் தொடர்ந்து வந்தனர். தூக்கத்திலிருந்து எழுந்து வந்ததால், கேசம் கலைந்து நகைகள் முன்னும் பின்னுமாக விலகி இருக்க, ஆடைகளை சரி செய்தபடி அவன் நடைக்கு ஈ.டு கொடுத்து நடந்தனர். வியர்வை வடியும் முகத்தோடு, ராஜ ஹம்ஸம் போன்ற வெண் கொற்றக் குடையை உயர்த்தி பிடித்தபடி பின்னால் சிலர் வந்தனர். மதுவும் தூக்கமும் உடலை தள்ளாடச் செய்ததையும் பொருட்படுத்தாமல் நடந்தனர். ராவணன் கிட்டத் தட்ட ஓடிக் கொண்டிருந்தான். அவனிடம் உள்ள அன்பினாலும், காமத்தாலும், பிரியமான அந்த மனைவிகள், உடன் நடந்தனர். இந்த பெண்களின் கணவன், மகா பலசாலி என்று பெயர் பெற்றவன், காமம் கண்களை மறைக்க, சீதையிடமே மனதை லயிக்க விட்டவனாக, மெதுவாக மதுவின் ஆதிக்கத்தில் நடையின் வேகம் குறைய தள்ளாடியபடி சென்றான். பிறகு, இடையில் அணியும் ஆபரணங்கள் (காஞ்சி, மேகலை) நூபுரங்கள் இவைகள் உராய்வதால் எழுந்த ஒலி இவைகளை மரத்தின் மேல் இருந்த வானரம் கேட்டான். செயற்கரியன செய்து புகழ் பெற்ற அந்த வீரனை நினைத்துக் கூட பார்க்க முடியாத பலமும் பௌருஷமும் உடைய ராக்ஷஸ ராஜனை, வாயில் கதவின் அருகில் வந்து நிற்பதைக் கண்டான், மாருதாத்மஜன். அனேக சிறிய தீபங்கள் ஒரே சமயத்தில் எரிந்ததாலும், க3ந்த4, தைலம் இவைகளைக் கொண்டு ஏற்றிய தீபங்களை ஏந்தி வந்தவர் முன்னால் சென்றதாலும் தெளிவாகத் தெரிந்த ராவணனைக் கண்டான். காமமும் (தர்ப்பம்-கர்வம் அல்லது திமிர்) தர்ப்பமும் உருக் கொண்டது போல, தாமிரம் போல சிவந்த கண்களுடன், எதிரில் கரும்பு வில்லை கீழே வைத்து விட்டு வந்து நிற்கும் கந்த3ர்ப்பனை-மன்மதனை போல நின்றவனைக் கண்டான். கடலைக் கடைந்ததால் வரும் நுரை போன்ற தூய்மையான வெண் பட்டாடை, உயர்ந்த மேல் வஸ்திரம், நழுவியதை கைகளால் சரி செய்து கொண்டு வருபவனைக் கண்டான். மரத்தின் இலைகளால் தன்னை மேலும் மறைத்துக் கொண்டு அருகில் வந்தவனை கூர்ந்து கவனிக்கலானான். அப்படி கவனித்த பொழுது கபிகுஞ்சரனான ஹனுமான், ராவணனின் பத்னிகளையும் கவனித்தான். ரூப யௌவன சம்பன்னர்களாக, நற்குடியில் பிறந்த உத்தமமான ஸ்த்ரீகள் சூழ வந்த ராஜா, மிருகங்களையும், பறவைகளையும் தவிர, முழுவதும் பெண்களே நிறைந்த அந்த வனத்தில் நுழைந்தான். சங்கு போன்ற கழுத்துடையவன், மகா பலசாலி, விசித்திரமான ஆபரணங்களை அணிந்தவன், விஸ்ரவஸின் புத்திரன், ராக்ஷஸாதிபன், ராவணன் அவன் தான் என்று ஊகித்துக் கொண்டான். தாரா கணங்களோடு சந்திரன் தெரிவது போல, உத்தம ஸ்த்ரீகளோடு வந்து கொண்டிருந்தான். தேஜஸே உருவானவனைக் கண்டான் மகா கபியான ஹனுமான். இவனைத் தான் முன்பு மாளிகையில் உறங்கும் சமயம் பார்த்தோம் என்று நினைவு படுத்திக் கொண்டான். ஹனுமான் தன் ஆவலையும் அடக்கிக் கொண்டு, மேலும் இலை கிளைகளில் நன்றாக மறைத்துக் கொண்டு, மூச்சு விடக் கூட தயங்கியபடி நின்றான். அந்த ராவணனோ, கறுத்த குழலும், அழகிய வடிவும், நெருங்கிய ஸ்தனங்களுமாக கருவிழிகளோடு இருந்த சீதையை நெருங்கினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ராவணாக3மனம் என்ற பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 19 (357) க்ருஸ்ர க3த சீதோபமா (இளைத்த சீதைக்கு சில உவமைகள்)
அதே சமயத்தில் ராஜபுத்ரியான சீதா, ரூப யௌவன சம்பன்னனாக சர்வாலங்கார பூஷிதனாக வந்து நின்ற ராவணனைக் கண்டாள். ராக்ஷஸாதிபனைப் பார்த்து நடுங்கினாள். பெரும் காற்றில் வாழை மரம் நடுங்குவது போல நடுங்கினாள். தன் கைகளாலும் புஜங்களாலும் உடலை மூடியபடி முழங்கால்களில் முகத்தை பதித்து அழ ஆரம்பித்தாள். ராக்ஷஸிகளின் கூட்டம் காவல் காத்து வந்த வைதேஹியை, தான் பயணம் செய்த படகு நீரில் மூழ்கி விட்டது போல வருந்தி அழுபவளாகக் கண்டான் ராவணன். எந்த வித விரிப்பும் இன்றி பூமியில் அமர்ந்திருந்தவளைக் கண்டான், விரதம் அனுஷ்டிபவர்கள் போல. மரத்திலிருந்து ஒடிந்து விழுந்த கிளை போன்று இருந்தவளை, மாசு படிந்த உடலும், கேசமும் எல்லா விதமான அலங்காரங்களும் செய்து கொள்ள வசதியும் தகுதியும் இருந்தும், அக்கறை இல்லாமல், தாமரைத் தண்டு சேற்றில் தெரிந்தும், தெரியாமலும் இருப்பது போல அவள் சோபையும் முழுவதுமாக தெரியாமல் தூசு படிந்து கிடப்பதைக் கண்டான். தன் மனோ ரதத்தில் ராஜ ஹம்ஸம் போன்ற ராகவனின் அருகில் செல்ல, சங்கல்பமே குதிரைகள் பூட்டிய ரதமாக (மனோ ரதமாக) கொண்டு ராமன் அருகில் செல்பவள் போல இருந்தாள். த்யானமும், சோகமுமாக, தன் உடலை வருத்திக் கொண்டு இருந்தவளை, இந்த துயரின் முடிவு எது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவளை ராமனிடமே அனுராகம் மிகுந்தவளாக, பன்னகேந்திர(பாம்புக ளின் அரசன்) வது4 (மனைவி) போல தன்னைச் சுற்றி சுழற்றிக் கொண்டு அமர்ந்திருந்தவளை தூ3ம்ரகேது க்3ரஹம் வந்து சூழ்ந்து ரோஹிணி நக்ஷத்திரத்தை மறைத்துக் கொண்டு நிற்பது போல, தார்மீகமான நல்ல குலத்தில் பிறந்தவள், ஆசாரமும், நன்னடத்தையுமே உயர்வாக போற்றும் குடி பிறப்புடையவளை, துஷ்டர்கள் குலத்தில் பிறந்து திரும்பவும் ஸம்ஸ்காரங்கள் செய்யப் பெற்று மேன்மையடைந்த ஜீவன் போன்றவளை, எதிர்பாராத அபவாதம் வந்து இதுவரை சேமித்த கீர்த்தியை தள்ளி விடுவது போல, திரும்ப திரும்ப பயிற்சி இல்லாததால், கற்ற வித்தை சிதிலமாகிப் போவது போல,பெரும் புகழ் மாசு படிந்தாற்போல, கௌரவத்துடன் காப்பாற்றாத ஸ்ரத்3தா4 போல, (ஒருமைப்பாடு) நல்ல அறிவு, குறைந்து கொண்டே போய் அழியும் தறுவாயில் இருப்பது போல, நம்பிக்கை பொய்த்தது போல, நம்பியிருந்தவனை ஏமாற்றியது போல, கட்டளையை மீறியது மட்டுமல்லாது விபரீதமாக செய்தது போல, காலத்தில் திசைகள் ஒளிமயமாக தெரிவது போல பூஜையை நடுவில் தடுத்தது போல, மலர்ந்த தாமரை மலரை மிதித்தது போல, சூரர்கள் அனைவரும் மடிந்து விட்ட சேனை போல, இருள் மண்டிக் கிடந்த இடத்தில் ஏற்றிய விளக்கு அனைந்தது போல, நதியின் நீர் வற்றியது போல, யாக சாலை பராமரிக்காமல் விட்டது போல, நீறு பூத்து கிடக்கும் நெருப்பின் ஜ்வாலை போல, பௌர்ணமி இரவு, ராகு பிடித்த சந்திர மண்டலத்தோடு காணப்படுவது போல, இலைகளுடன் பறிக்கப் பட்ட தாமரை மலரோ, பயமுறுத்தி பறக்கச் செய்த பறவைக் கூட்டமோ, யானை இறங்கி தன் துதிக்கையால் கலக்கி விட்ட தாமரைக் குளமோ எனவும், பதியைப் பிரிந்த சோகத்தால் வற்றிய நீரோடை போல, உயர்ந்ததான அங்க சுத்தி இல்லாத பெண் போல, க்ருஷ்ண பக்ஷத்து நிசா, இரவு போல, சுகுமாரியும், வடிவமைப்பு கொண்ட அங்கங்களுடன் ரத்னக்கள் இழைத்த க்ருஹத்தில் வசிக்கத் தகுதி வாய்ந்தவளும், வெய்யிலில் வீசியெறியப் பட்ட தாமரைத்தண்டு போல க3ஜராஜனின் வதூ4 (பத்னி) ஒன்றை பிடித்து வந்து கம்பத்தில் கட்டி வைத்து விட்டு, மாவுத்தன் க3ஜ ராஜாவை அழைத்து சென்று விட்டாற்போல அல்லது க3ஜ ராஜாவை விட்டு பிரித்து அழைத்து வந்து கம்பத்தில் கட்டி வைத்த பெண் யானை போல, ஒற்றைப் பின்னலே அழகாகத் தொங்க, இயல்பான அழகுடன் மழை நாளில் அடர்ந்து வளர்ந்த மரத்தின் கறுத்த இலைகளில் இருந்து பூமியைத் தொடும் நீர் தாரை போல இருந்த கேசம், உபவாச த்தாலும், சோகத்தாலும், த்யானம் செய்வதாலும், பயத்தாலும், மாறி மாறி அலைக்கழிக்கப் பட்டு, இளைத்து, தீனமாக, மிகக் குறைவான ஆகாரம் உட்கொண்டு தவமே, த4னமாக எதையும் யாசிக்காமல் துக்கத்தால் வருந்தி, தேவதையைப் போல, த3சக்3ரீவனின் (பராபவம்-தோல்வி) அடக்குவதை ராமனிடம் அஞ்சலி செய்தவர்களாக தேவர்கள் வேண்டிய சமயம் இருந்தது போல, மாசற்றவள், இங்கும் அங்குமாக நோக்கியபடி அழுது சிவந்த கண்களை இமைகள் மறைக்க, ராமனையே நினத்து மைதிலி வருந்தியபடி இருந்த சமயம் ,ராவணன் ஆசை காட்டலானான். தன் வதத்தை தானே எதிர் கொண்டழைப்பான் போல.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், க்ருஸ்ர கத சீதோபமா என்ற பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 20 (358) ப்ரணய பிரார்த்த2னா (தனக்கு இணங்கச் சொல்லி வற்புறுத்துதல்)
தபஸ்வினியாக, ஆனந்தமே இன்றி, தீனமாக அமர்ந்திருந்தவளை பதிவிரதையான ஸ்த்ரீ என்று அறிந்திருந்தும், சாமர்த்யமாக பேசி, மதுரமான வார்த்தைகளால் தன் வசம் ஆகச் செய்ய ராவணன் முனைந்தான். யானையின் தும்பிக்கை போன்ற துடைகளை உடையவளே, என்னைப் பார்த்து ஸ்தனங்களை மூடிக் கொள்கிறாயே. உன்னை நான் பார்த்து விடுவேனோ என்று பயப்படுகிறாயா? நீ ஏன் என்னை ஒதுக்குகிறாய்? விசாலாக்ஷி, நான் உன்னை விரும்புகிறேன். பிரியே, என்னை உயர்வாக எண்ணுவாய். என்னிடத்தில் பயமா? அது தேவையில்லையே. மனதில் தோன்றும் பயத்தை விலக்கி என்னைப் பார். சர்வாங்க சுந்தரியே, சர்வ லோக மனோகரியே, இப்படி எந்த மனித பிறவியும் இருந்ததில்லை. தன்னிஷ்டம் போல உருவம் எடுக்க வல்ல ராக்ஷஸர்களிடமும் இருந்ததில்லை. என்னிடத்தில் பயப்படாதே. இது எங்கள் ராக்ஷஸ குலத்திற்கு ஸ்வதர்மம் தான். பர ஸ்த்ரீயிடம் உறவு கொள்வதோ, பலவந்தமாக அபகரித்துக் கொண்டு வருவதோ, எப்பொழுதும் எங்கள் இனத்தில் சம்மதமே. சந்தேகமே இல்லை. நீ விரும்பாதவரை உன்னை நான் தொடமாட்டேன். மைதிலி, நீயும் என்னிடம் காமத்துடன் என்னிடம் அன்பு கொண்டு மகிழ்ச்சியாக இரு. தேவி, பயமே வேண்டாம். என்னிடம் நம்பிக்கை கொள், பிரியே, இது போல சோகத்தில் மூழ்கி அலட்டிக் கொள்ளாதே. உடலை வாட்டிக் கொள்ளாதே. என்னுடன் ப்ரணயமாக, உல்லாசமாக இரு. நீயும் சம்மதித்து மனப் பூர்வமாக என்னுடன் இருந்து அனுபவிப்பாய். ஒற்றை பின்னலுடன் தரையில் படுத்து, த்யானமும், மலினமான வஸ்திரமும், உபவாசமும் தேவையில்லாத இடத்தில் பிரயோகிக்கிறாய். இவை உனக்கு ஏற்றவை இல்லை தேவி, விசித்திரமான மாலைகள், சந்தனமும் அகருவும் மணக்க, வித விதமான ஆடைகள், அணிகலன்களுடன் உயர் வகை பானங்கள், சயனங்கள், படுக்கைகள், அமரும் ஆசனங்கள், இவற்றுடன் கீதமும், நாட்யமும், வாத்யமும், இவை அனைத்தையும் என்னுடன் இருந்து நீயும் அடைவாய். மைதிலி, இப்படி ஒரு உயர்ந்த வாழ்க்கை இன்பம் உனக்காக காத்திருக்கிறது. நீ ஸ்த்ரீ ரத்னம். இப்படி உடலை வாட்டாதே. உடலில் பூஷணங்களை அணிந்து கொள். கட்டான உடலமைப்பு உள்ள நீ, என்னை அடைந்து எப்படி எந்த வித அலங்கார சாதனமும் இன்றி இருக்கலாம். இதோ பார். யௌவனம் பூர்ணமாக உன்னிடத்தில் மலர்ந்து இருக்கும் நேரம் இது. இதை ஏன் வீணாக்குகிறாய். இந்த யௌவனம் கடந்து விட்டால், திரும்ப வராது. வேகமாக செல்லும் நதி ஜலம் போல வடிந்து விடும். உன்னை படைத்து விட்டு, விஸ்வ ஸ்ருஷ்டிகாரனான ப்ரும்மா, ஜீவன்களுக்கு ரூபத்தை கொடுப்பவன், ஓய்ந்து விட்டான் போலும். (உன்னைப் போல மற்றொன்றை செய்யவில்லை அல்லது கவனமாக உன்னை வடிவமைத்ததில் களைத்து விட்டான்). உனக்கு சமமாக மற்றொரு பிறவி இந்த உலகிலேயே இல்லை. சுப4 த3ர்சனே, உன்னை எதிரில் கண்டவன் ப்ரும்மாவே சாக்ஷாத்தாக ஆனாலும், வியந்து திரும்பி பார்க்காமல் எப்படி போவான்? உன் ரூபம் எவரையும் கவர்ந்து இழுக்க வல்லது என்பதில் சந்தேகமேயில்லை. சீதாம் (குளிர்ந்த நிலா) போன்ற முகத்தவளே, உன் சரீரத்தின் அங்கங்கள் எதைக் கண்டாலும் அதிலேயே என் கண்கள் நிலை குத்தி நின்று விடுகின்றன. மைதிலி, என் மனைவியாக ஆவாய். என் பார்யாவாக இருந்து என் மோகத்தைத் தணிப்பாய். பல உத்தம ஸ்த்ரீகள் என் அந்த:புரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நீ தலைவியாக இருப்பாய். என் பிரதான ராணியாக இருப்பாய். உலகங்களில் பல இடங்களிலிருந்து எந்த ரத்னங்களை பலவந்தமாக கவர்ந்து கொண்டு வந்தேனோ, அவையனைத்தையும், மற்றும் என்னிடம் உள்ள யாவையும், நானுமே உனக்குத்தான். பல நகரங்கள் மாலை போல அமைந்துள்ள பல ராஜ்யங்களை ஜெயித்தேன். அவைகளை உன் பொருட்டு ஜனகருக்கு கொடுக்கிறேன். விலாஸினீ, இந்த உலகில் எனக்கு சமமாக அல்லது என்னை எதிர்க்கக் கூடிய பலசாலியாக, மற்றொரு வீரனை நான் கண்டதில்லை. யுத்தம் என்று வந்தால் என் அப்பழுக்கற்ற வீர விளையாட்டுகளைக் காண்பாய். அடிக்கடி போர் செய்து எதிரி அரசர்களின் த்வஜங்களை அடித்து நொறுக்கி -யிருக்கிறேன். என் எதிரில் நிற்க சுராசுரர்களும் திராணியற்று ஓடியிருக்கிறார்கள். இன்று நீ மனம் ஒப்பி உத்தமமான அலங்காரங்களைச் செய்து கொள். நன்றாக அலங்கரித்துக் கொண்டு மனதில் மகிழ்ச்சியோடு இங்குள்ள போகங்களை மனதார அனுபவி. நன்றாக சாப்பிடு. பானங்களை பருகு. ரமித்துக் கொண்டு இரு. யாருக்கு என்ன கொடுக்க விரும்புகிறாயோ, தாராளமாக கொடு. பூமியோ, தனங்களோ, எது வேண்டுமானாலும் கொடு. என்னிடத்தில் நம்பிக்கையோடு, ரமித்துக் கொண்டு, ஆசையுடன் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இரு. தைரியமாக, மற்றவர்களை அதட்டி அதிகாரம் செய்து கொண்டு இருப்பாய். என்னுடைய பிரபாவத்தால், என்னுடன் நீ வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு உல்லாசமாக வாழ்ந்து உன் பந்துக்களையும் உல்லாசமாக இருக்கச் செய். என் செல்வ செழிப்பை நன்றாகப் பார். ப4த்ரே, என் புகழ் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள். மரவுரி அணிந்து வனத்தில் அலையும் ராமனிடத்தில் என்ன இன்பத்தைக் காண்பாய். வனகோ3சரம்-காட்டில் திரிபவன், வெற்றி வாய்ப்பை இழந்தவன், விரதம் அனுஷ்டிப்பவன், பூமியில் புல்லை விரித்து படுக்கையாக அதில் உறங்குபவன், உயிருடன் இருக்கிறானோ இல்லையோ தெரியவில்லை, அதுவே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. வைதேஹி, உன்னைக் காணக் கூட ராமன் வரப்போவதில்லை. உன்னால் ராமனைக் கண்ணால் கூட காண முடியப் போவதில்லை. கருத்த மேகங்கள் அடர்ந்து சந்திர கிரணங்களை மறைத்து வைப்பது போல நீயும் மறைந்து இருக்கிறாய். என் கையிலிருந்து ராமன் உன்னை மீட்கவே முடியாது. ஹிரண்யகசிபு, இந்திரன் வசமாகி விட்ட கீர்த்தியை திரும்ப பெற முடியாதது போல. சாருஸ்மிதே, (அழகாக சிரிப்பவளே) சாருததி, அழகிய பற்களையுடையவளே, சாரு நேத்ரே, அழகிய கண்களையுடையவளே, விலாஸினி, உல்லாசமாக வளைய வரும் தகுதி பெற்றவளே. என் மனதை கவருகிறாய். சுபர்ணன் நாகத்தை கவருவதைப் போல. இளம் பெண் நீ, இப்படி கசங்கிய ஆடையும், அலங்காரம் எதுவும் இன்றி இருந்தாலும், உன்னைப் பார்த்த என் கண்களுக்கு என் மனைவிகள் யாருமே ஏற்கவில்லை. அவர்களிடம் தாம்பத்யமும் எனக்கு ருசிக்கவில்லை. அந்த:புரத்தில் வசிக்கும் என் பத்னிகள், நல்ல அழகும் குடி பிறப்பும் வாய்ந்த உத்தம ஸ்த்ரீகள், இவர்கள் அனைவரிடமும் நீ ஆளுமையோடு, அதிகாரம் செய்து அருள்வாய். கறுத்த குழலுடையவளே, என்னிடம் உள்ளவர்கள், மூவுலகிலும் சிறப்பு வாய்ந்த பெண்கள். ஸ்ரீ- லக்ஷ்மியை, அப்ஸர ஸ்த்ரீகள் பணிவிடை செய்வது போல உனக்கு பணிவிடை செய்து குற்றேவல் செய்வார்கள். அழகிய புருவம் உடையவளே, வைஸ்ரவனிடத்தில் என்ன ரத்னங்கள் செல்வங்கள் உள்ளனவோ, அவைகளையும் அவனுக்கு அதீனமான உலகங்களையும் என்னையும் உன் இஷ்டம் போல அனுபவித்து மகிழ்வாய். உன் சௌகர்யம் போல சுகமாக இரு. தேவி, ராமன் தவத்திலும், பலத்திலும், விக்ரமத்திலும், செல்வத்திலும் எனக்கு சமமானவன் அல்ல. தேஜஸும், யஸசும் (புகழும்) எனக்கு உள்ளது போல அவனிடம் கிடையாது. லலனே, என்னுடன் உல்லாசமாக இருப்பாய். என்னுடன் சேர்ந்து பானங்களை அருந்து, விளையாடு. ரம்யமான விஷயங்களை அனுபவி. போகங்களை இந்த செல்வ செழிப்பை உனதாக்கிக் கொண்டு அனுபவி. இந்த மேதினியையே உனக்குத் தருகிறேன். உன் இஷ்டம் போல சந்தோஷமாக இரு. உன்னுடன் சேர்ந்து உன் பந்துக்களும் சந்தோஷமாக இந்த செல்வங்களை அனுபவிக்கட்டும். இங்குள்ள கானனங்கள், மலர்ந்து மணம் வீசும் மரங்கள் அடர்ந்தவை. ப்ரமரங்கள் பாடும். சமுத்திரக் கரைகளில் இந்த கானனங்களில், விமலமான கனக ஹாரங்களை அணிந்து அழகு செய்து கொண்டு என்னுடன் விளையாடி மகிழ்வாய், பயப்படாதே.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ப்ரணய ப்ரார்த்த2னா என்ற இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)