அத்தியாயம் 6 (344) ராவண க்ருஹாவேக்ஷணம் (ராவணனின் வீட்டைக் காணுதல்)
வெகு நேரம் அந்த விமானத்தில் அமர்ந்தபடி யோசித்தான். பின் லாகவமாக கீழே குதித்து இறங்கி தன் தேடலைத் தொடர்ந்தான். லக்ஷ்மீவான் (இங்கு ஹனுமான்), இதன் பின் சுற்றித் திரிந்து ராக்ஷஸேந்திரனின் வீட்டையடைந்தான். சூரியனுடைய நிறத்தில் பிரகாசமான ப்ராகாரங்கள், நான்கு திசைகளிலும் இருந்தன. மகத்தான வனத்தை சிங்கங்கள் காவல் காப்பதைப் போல தேர்ந்த ராக்ஷஸர்கள் காவல் வேலையை பொறுப்பாக செய்து வந்தனர். நன்றாக ஊன்றி கவனித்தபடி ஹனுமான் கவனமாக முன்னேறிச் சென்றான். வெள்ளியினால் சித்திரங்கள் வரையப் பெற்று, பொன்னால் அலங்கரிக்கப் பட்டத் தோரணங்கள் தென்பட்டன. அழகிய நுழை வாயில். அதில் பலவிதமான அறைகள். கஜங்கள் வாசலில் சிரம பரிகாரம் செய்து கொண்டிருந்தன. ஏற்கனவே சிரம பரிகாரம் செய்தவர்கள் போல காவலர்கள் துடிப்புடன் நின்றனர். சற்றும் களைப்பேயறியாத குதிரைகள், ரதங்களை ஒட்டத் தயாராக நின்றன. சிங்கம், புலி, முதலியவைகளிலிருந்து காப்பாற்றும், பல் போன்ற அமைப்பும், தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப் பட்டிருந்தது. கோஷமிட்டுக் கொண்டு, ரதத்தில் சென்ற வண்ணம் ராக்ஷஸர்கள், ஊர்க் காவல் வேலையை செய்தனர். ஏராளமான ரத்னங்கள் காணப் பட்டன. விலையுயர்ந்த பாத்திரங்கள், ரதங்கள், ஆசனங்கள் எல்லாமே, மகாரதியான ராவணனுக்கு ஏற்ப இருந்தன. வளர்ப்பு மிருகங்களும், பக்ஷிகளும் கணக்கிலடங்காமல் இருந்தன. இவை கண்ணுக்கு விருந்தாக இருந்தன. வினயத்துடன் ஏவல் வேலை செய்யும் வேலைக் காரர்களும், காவல் வீரர்களான ராக்ஷஸர்களும் கருத்துடன் பாதுகாக்கும் வேலையை செய்தனர். அழகிய ஸ்த்ரீகள், பல முக்கியமான வேலைகளில் நியமிக்கப் பட்டு நிறைய தென்பட்டனர். யாவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். பெண்களின் கலகலப்பான பேச்சும், சிரிப்பும் சமுத்திரத்தின் ஓசையை நினைவு படுத்தியது. ராஜ க்ருஹம் என்பதற்கான எல்லா வித காட்சிகளும் நிறைந்து இருந்த அந்த அரண்மனை, பல விதமான அறிஞர்கள், பல துறைகளிலும் முன் நிற்பவர்களுக்கு இருப்பிடமாக விளங்கியது. சிங்கங்கள் பெரிய வனத்தில் நிறைந்து இருப்பது போல, பேரி, ம்ருதங்கம் இவைகளின் நாதமும், சங்கம் ஒலிக்கும் ஒலியும், தினமும் பூஜை விரதங்களை செய்து வரும் ராக்ஷஸர்களும் ராவணன் பாலித்த லங்கா நகரில் நிறைய இருந்தனர். நித்ய பூஜை, பர்வ காலங்களில் விசேஷ பூஜைகள் என்று செய்தனர். கடல் போன்ற பெரிய மாளிகை. கடல் போன்ற அமைதியுடனும், கம்பீரத்துடனும், ராவணனின் மாளிகை, கடலைப் போன்றே உயர்ந்த ரத்னங்களை தன்னுள் கொண்டு அவன் மகான் தான் என்று சொல்வது போல இருந்தது. க3ஜ, அஸ்வ, ரதம்-யானை, குதிரை பூட்டிய ரதம், இவை பெருமளவில் காணப்பட்டன. இவை கூட லங்கைக்கு ஆபரணமே என்று ஹனுமான் எண்ணினான். ராவணன் அருகில் அவர் அறியாமல் தேடிக் கொண்டு சென்றான். வீட்டுக்கு வீடு உத்யானங்கள், மாளிகைகள் என்று சற்றும் பயப்படாமல் தாவி குதித்து தேடிச் சென்றான். ப்ரஹஸ்தனுடைய மாளிகை என்பதை தெரிந்து கொண்டு வீட்டினுள் இறங்கிச் சென்றான். அங்கிருந்து அடுத்த மாளிகை மஹா பார்ஸ்வ னுடையது. பெரிய மேகம் போன்ற விசாலமான மாளிகை கும்ப4கர்ணனுடையது. அடுத்து விபீ4ஷணன் மாளிகையை நோக்கித் தாவி குதித்துச் சென்றான். அடுத்து மகோத3ரன் வீடு. விரூபாக்ஷன் வீடு. அதையும் அடுத்து வித்4யுத்ஜிஹ்வன், வித்4யுன்மாலி என்ற ராக்ஷஸர்களின் வீடுகள். அடுத்து இறங்கிய இடம் வஜ்ரதம்ஷ்டிரன் என்ற ராக்ஷஸன் வீடு. சுக, சாரணர்களின் மாளிகைகளைக் கடந்து இந்திரஜித்தின் வீட்டை அடைந்தான். அடுத்து ஜம்பு3மாலி, சுமாலி வீடுகள். ரஸ்மிகேது சூர்யகேது என்றவர்களின் ப4வனங்களைத் தாண்டி வஜ்ரகாயன் வீட்டில் குதித்தான். தூ3ம்ராக்ஷன் வீடு வந்து சேர்ந்தான், ஹனுமான், வித்4யுத்ரூபன், கனன், விகனன் என்ற ராக்ஷஸர்களின் வீடுகளைத் தாண்டி, சுகனாசன், வக்ரன், சடன், விகடன், ஹ்ரஸ்வ கர்ணன், தம்ஷ்டிரன், ரோமசன் என்ற ராக்ஷஸர்களின் வீடுகளில் தேடினான். யுத்தம் என்றால் மதம் கொள்ளும் யுத்3தோ4ன்மத்தன், த்4வஜக்3ரீவன், வித்4யுத்ஜிஹ்வேந்திரன், ஜிஹ்வா என்ற ராக்ஷஸர்கள், ஹஸ்திகன், கராளன், பிசாசன், சோணிதாக்ஷன், இவர்கள் வீடுகள் வரிசையாக இருந்தன. மாருதாத்மஜன், இந்த வீடுகளையும் அதன் செல்வ செழிப்பையும் பார்த்து வியந்து பாராட்டியபடி ஒவ்வொரு வீடாக கடந்து சென்று ராக்ஷஸ ராஜனின் மாளிகை சென்றடைந்தான். ராவணனின் வீட்டு வாசலில் ஏராளமான ராக்ஷஸிகள், கோணல் மாணலுமான உருவங்களில், ஆகிருதிகளில் சூழ்ந்து இருக்கக் கண்டான். இவர்களும் கையில் ஆயுதம் ஏந்தியவர்களாக இருக்கக் கண்டான். சூலம், உத்3க3ரம், சக்தி, தோமரம், குல்மங்கள் என்ற ஆயுதங்கள் தாங்கிய வீராங்கனைகள். ராஸாதிபனின் மாளிகையில் இருந்த ராக்ஷஸர்கள், பெருத்த உருவமும், நானா விதமான ஆயுதங்களை எந்த க்ஷணமும் எய்யக் கூடியவர்களாக, இருந்தனர். சிவந்த, வெண்மையான, வெளிர் நிற, பசுமையான வேகமாக செல்லக் கூடிய, நல்ல குலத்தில் தோன்றிய, ரூப லாவண்யம் உடைய யானைகள், ஐராவதம் போன்ற ஆகிருதியுடன், இவைகளை சிலர் பயிற்றுவித்துக் கொண்டிருந்ததையும் கண்டான். எதிரி சைன்யத்தை அடியோடு நாசம் செய்யக் கூடிய பலம் மிகுந்த யானைகள். மேகம் போல சஞ்சரிக்கும், மலைகளின் மேல் மழை பொழிவது போலவே மதஜலம் பெருக்கும், மேகம் இடி இடிப்பது போலவே கர்ஜிக்கும், யுத்தம் என்று வந்தால் எதிரில் யாராலும் தாக்கு பிடிக்க முடியாத அளவு பலம் மிகுந்தவை. இது போல ஆயிரம் யானைப்படை, யானைகள் முகத்தில் தங்க முகப் படாம் மாட்டி அலங்கரித்திருந்தனர். அந்த ராக்ஷஸ ராஜனின் வீட்டில் பல்லக்குகள் பலவிதமாக இருக்கக் கண்டான். மாருதி புதல்வனான மகா கபி, மேலும் உள்ளே சென்று, இளம் சூரியனின் வண்ணத்தில் பொன்னால் வலை யமைத்து செய்யப்பட்ட சாளரங்களும், லதாக்ருஹம், சித்ர க்ருஹம், சித்ரசாலா க்ருஹம் என்ற இடங்களையும் தாண்டி க்ரீடாக்ருஹம் என்ற விளையாடும் இடம், தாரு- கள் குடிக்கும் இடம், காமனின் க்ருஹகம், தேவர்களின் க்ருஹகம் -சிறிய வீடு, இவைகளையும் பார்த்துக் கொண்டே ராக்ஷஸேந்திரனின் மாளிகையைக் கண்டான். அந்த உத்தமமான ப4வனம், மந்தர கிரி போலவும் இருந்தது. மயூரங்கள் வசிக்கும் இடமாகவும் இருந்தது. கொடிக்கம்பும், உச்சியில் கொடியுமாக நின்றிருந்தது. இந்த மாளிகையில் பலவிதமான ரத்னங்கள் நிறைந்திருந்தன. செல்வத்தின் பல அங்கங்களும் தாராளமாக நிறைந்து காணப்பட்டன.
பூ4த பதியான மகா தேவன் போல தீரனாக தன் கர்மாக்களின் அந்தத்தை, எல்லையை தொட்டுவிட்டவன் போல இருந்தான், ராவணன். ரத்னங்கள் பாதுகாத்து சேமித்து வைக்கப் பட்டு, பரிபாலித்தும் வைக்கப் பட்டிருந்தது. ராவணன் தேஜஸ் நகரம் முழுவதும் பரவியிருந்தது. அதனாலேயே செல்வங்கள் மேலும் பெருமை பெற்றுத் திகழ்ந்தது. தன் கிரணங்களால் பிரகாசத்தைப் பெற்று ரஸ்மிமான் என்று பெயர் பெற்ற சூர்ய தேவன் போல, கட்டில்களோ, ஆசனங்களோ எல்லாமே பொன்னால் ஆனவையே. வீட்டு உபயோகத்துக்கான பாத்திரங்கள், பண்டங்கள் கூட பெரும்பாலும், வெள்ளியும் தங்கமுமே. குபேர பவனம் போலவே மணிகளால் ஆன பாத்திரங்களும், மது அருந்தும் பொருட்களும் காணப்பட்டன. மனோ ரம்யமாக, எந்த வித இடையூறும் இன்றி குபேரன் பவனம் போலவே ராவணன் வீடு இருந்தது. நூபுரங்களும், காஞ்சி (இடையில் அணியும் ஒட்டியானம்) இவைகள் உராய்வதால் ஏற்படும் ஓசை, ம்ருதங்க தாள, கோஷங்களோடு கலந்து காதில் விழுந்தன. ஆயிரக் கணக்கான வீடுகள் அவரவர் ஸ்த்ரீ ஜனங்கள் நிரம்பி (நூறு பெண்கள்) கல கலவென பேச, நல்ல முறையில் கட்டப் பட்டிருந்த அறைகளுடன் கூடிய மாளிகையில் ஹனுமான் நுழைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ராவண க்ருஹாவேக்ஷணம் என்ற ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 7 (345) புஷ்பக தரிசனம் (புஷ்பக விமானத்தைக் காணுதல்)
(இந்த அத்தியாயமும் பல பொருள் படும் வார்த்தைகளும், எதுகை, மோனை அழகும், காவிய லக்ஷணங்களான பல விசேஷங்களையும் கொண்டது.)
வைடூரியமும், சுவர்ணமும் ஜாலமாக (வலையாக) விரிந்து கிடந்த வீடுகளின் ஜாலத்தை (கூட்டத்தைக்) கண்டான் ஹனுமான். மழைக் காலத்தில் மேகங்கள் மின்னலால் கட்டப்பட்டு ஜாலமாக தெரிவது போலவும், விஹங்க ஜாலம், பறவைகளின் கூட்டங்கள் (மேகங்களின் கூட்டம் இரண்டும் ஆகாயத்தில் திரிவன) இருந்த வீடுகள். வீடுகளில் பலவிதமான சாலா: கொட்டகைகள். அவைகளில் பிரதானமானவை சங்கம், வாள் முதலியவை வைக்கும் ஆயுத சாலை. மனோஹரமாக இருந்ததோடு, விசாலமானது. உடன் மலை போல் நின்றிருந்த வீடுகளில் சந்திரனின் கிரணங்கள் படிவதையும் கண்டான். (சந்த்ரசாலா:) வீடுகளில் பலவிதமான செல்வங்கள் நிரம்பி இருந்தன. தேவாசுரர்கள் கூட பிரமித்து நிற்கும் படியான செல்வ செழிப்பு. கவனமாக தோஷங்களைத் தவிர்த்து கட்டப் பட்டவை மிகுந்த முயற்சியோடு ஒன்று சேர்த்து, மயன் சாக்ஷாத் தானே நின்று நிர்மாணித்தது. பூ உலகில் வேறெங்கும் காண முடியாத அரிய பல சிறப்புகளை உடையது அந்த லங்காபதியின் வீடுகள். விமானத்தின் முன் நின்றவன் அதை, மேகம் தானோ என்று சந்தேகித்தான். ஆனால் மனோகரமாக, காஞ்சன வர்ணத்தில் இருந்ததால், கவனித்துப் பார்த்ததில் ராக்ஷஸ ராஜனின் புஷ்பக விமானம் என்று தெரிந்தது. அவனுக்கு தகுந்த அவன் பலத்துக்கு ஏற்ற க்ருஹோத்தமம். சொல்லி முடியாத அழகான வீடு. பூ உலகில் இறங்கி வந்த சுவர்கம் போல விரிந்து படர்ந்து கிடந்தது. பலவிதமான ரத்னங்களுடன் லக்ஷ்மி தேவியே வந்து நிரம்பியது போல லக்ஷ்மீ கடாக்ஷம், லக்ஷ்மீ விலாசம் நிறைந்தது. பலவிதமான மரங்களின் புஷ்பங்கள் குவியலாக அதன்மேல் தூவப் பட்டிருந்தது. (இயற்கையாகவே) மலையுச்சியில், காற்றில் வரும் தூசி படர்ந்து இருப்பதைப் போல விமானத்தின் மேல் பாகத்தை மறைத்தது. வீட்டின் மேல் மாடியில் விமானம். ஆகாயத்தில் லக்ஷ்மி தேவியுடன் கை கோத்துக் கொண்டது போல தனிச் சிறப்புடன் விளங்கியது. மேகங்களுக்கு இடையில் மின்னல் தோன்றி மறைவது போல, அர்ச்சித்து விட்டு செல்வது போல, பெண்களின் கூட்டம் கோலாகலமாகத் தெரிய, ஹம்ஸங்களின் கூட்டம் மனதை கவர்ந்து இழுத்துச் செல்வது போலவும் இருந்தது. மலையின் உச்சி பலவிதமான தாதுப் பொருட்கள் மண்டிக் கிடப்பது போலவும், வானம் கிரகங்களும், சந்திரனுமாக காட்சி தருவது போலவும், அந்த விமானம் பல ரத்னங்கள் இழைக்கப் பட்டு இருந்ததைக் காண, மேகத்துடன் ஒப்பிடுவது சரியே என்று எண்ண வைத்தது. பூமியில் பர்வத பாறைகள் நிரம்பிக் காணப்படுகின்றன. இந்த பாறைகள் மரங்களின் அடர்த்தியில் மறைகின்றன. மரங்களோ, புஷ்பங்களின் அடியில் தங்களை மறைத்துக் கொள்கின்றன. புஷ்பங்களில் மண்டிக் கிடக்கும் மகரந்தத் தூள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு பிரதானமாகத் தெரிந்தன. வீடுகள், தூய்மையான வெண் நிற பூச்சுகள் பூசப் பெற்றிருந்தன. புஷ்கரங்கள் நல்ல பத்மங்கள் அடர்ந்து தெரிந்தன. அந்த பத்மங்கள் மகரந்ததூள் நிரம்பிக் கிடந்தன. இதே போல வனம் முழுவதும் விசித்திரமான காட்சிகள் பல கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தன. இந்த புஷ்பங்கள் நிறைந்த புஷ்கரங்கள் அழகு என்றால், ரத்னங்க ளின் பிரபையில் பள பளக்கும் வீடுகள் அதைவிட அழகு, அதையும் புஷ்பக விமானம் தூக்கி அடித்தது. விஹாரங்கள்-ஆகாயத்தில் பறக்கும் அந்த விமானம் வைடூரிய மயமாக இருந்தது. வெள்ளி, பவழம் இவைகளுக்கு இடையில், பறக்கும் விஹங்கா: பறவைகள் போல, எல்லா வித செல்வங்களும் (வசு-செல்வம், ரத்னம்) நிறைந்த புஜங்க-பாம்புகள், சித்ர விசித்ரமாக இருப்பது போலவும், ஜாதிக்கு ஏற்ப குதிரைகள் சுபமான அங்கங்களுடன் இருப்பது போலவும், விஹங்கமான-ஆகாயத்தில் சஞ்சரிக்கும் புஷ்பக விமானம் காணப்பட்டது. பக்ஷங்களில் பவழமும், தங்கமும் கொண்டு வரைய பெற்றிருந்த சித்திரங்கள், விளையாட்டாக விரித்து வைத்த பெரிய இறக்கைகள், சாக்ஷாத் காமனுடைய பக்ஷங்கள் போல பிரகாசமாகத் தெரிந்தன. இதன் காரணமாக மற்ற சாதாரண பறவைகள், சுமுகமாக, சுபக்ஷமாக இருந்தன. சுஹஸ்தா:- சுபமான கைகளையுடைய யானைகள், நீரில் இறங்கி, உத்பல, பத்ம புஷ்பங்களை வேரோடு பிடுங்கி வைத்துக் கொண்டு நின்றன. லக்ஷ்மி தேவியே சுஹஸ்தாவாக ஆக்கப் பட்டாள். பத்மங்களை கையில் வைத்துக் கொண்டு நிற்பதால் (யானைகள் பத்மங்களை பறித்து வைத்துக் கொண்டு நிற்பது போல நின்றதால்- யானைக்கு சுஹஸ்தா என்று ஒரு பெயர், லக்ஷ்மிக்கும் பொருந்தும்-சுபமான கைகளையுடையவள் என்றும் கொள்ளலாம்) இப்படி அந்த வீட்டைப் பார்த்து பிரமிப்பும் ஆச்சர்யமுமாக,. சோபனம்-அழகு என்று நினைத்தவனாக, ஹிமய மலையின் சாரலில் உள்ள மலைச் சாரல் போன்று நெடிதுயர்ந்து இருந்த மாளிகையை, மலையின் அழகிய குகைகள் போல உட்புறம் அறைகளை உடையதாய் இருந்ததை திரும்பி பார்த்தபடி நடந்தான். இவ்வளவு இருந்தும் மனதில் துக்கம் பொங்கியது. ஜனகாத்மஜாவை காணவில்லை. தன் எஜமானன் சொல்லியனுப்பியபடி வேகமாக செயல் பட முடியவில்லையே என்ற ஆதங்கமும் நிறைந்தது. கண்ணும் கருத்துமாக தான் போகும் இடங்களிலெல்லாம், ஜனக சுதா-சீதையைத் தேடி அலைந்தவன், அவளைக் காணாததால், மனம் சோர்ந்து நின்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், புஷ்பக தரிசனம் என்ற ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 8 (346) புஷ்பகானு வர்ணனம் (மேலும் புஷ்பக விமானத்தை வர்ணித்தல்)
மாளிகையின் நடுவில் அலங்காரமாக நிறுத்தப் பட்டிருந்த புஷ்பக விமானத்தை பவனாத்மஜன் திரும்பவும் பார்த்தான். புடமிட்ட தங்கத்தால் வலைகள் அமைக்கப் பெற்ற சாளரங்களுடன் இருந்த புஷ்பக விமானம் ஒப்புவமை சொல்ல முடியாத அழகுடன் விளங்கியது. செய் நேர்த்தியும், தானே அதை செய்து முடித்து விட்டு விஸ்வகர்மா சாது, சாது என்று தன்னையே பாராட்டிக் கொண்டிருப்பார் போலும். ஆதித்ய மார்கத்தில் ஒரு தடை, அல்லது களங்கம் போல, ஆகாய மார்கத்தில் செல்லக் கூடியது. அந்த விமானத்தைச் செலுத்த எந்த விதமான பிரயத்னமும் செய்ய வேண்டாம். அதில் இருந்த ரத்னங்கள் அனைத்தும் விலை மதிக்க முடியாத உயர்ந்த மணிகளே. தேவர்களும் அதைப் போன்ற விசேஷ விமானத்தை தங்களிடம் வைத்திருக்கவில்லை. மகா விசேஷமாக அல்லாமல் அதன் எந்த பாகமும் சாதாரணமானது அல்ல. தவம் செய்து வலிமை பெற்று சம்பாதித்தது, மனதில் நினத்த மாத்திரத்தில் கொண்டு செல்லக் கூடியது. பல இடங்களிலிருந்தும் பொறுக்கி எடுத்த உயர்ந்த பொருட்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டது. அந்தந்த இடங்களுக்கு இணையான விசேஷமான காட்சிகளைத் தன்னுள் கொண்டது. மாருதனுக்கு இணையாக வேகமாகச் செல்லக் கூடியது. மகாத்மாக்கள், புண்ய கர்மாக்களைச் செய்தவர்கள், யஸஸ்வியான செல்வந்தர்களும், முதலில் வணங்கத் தக்கது. விசேஷமாக அமைந்தது. விசித்ரமான அமைப்பும், உள்ளே பல அறைகளைக் கொண்டது. மனதைக் கவரும் சரத் கால சந்திரன் போல நிர்மலமானது. மலை சிகரம் போல தனித்து தெரிவது. இதை குண்டலங்கள் அணிந்து சோபையுடன் கூடிய முகத்தினராக ராக்ஷஸர்கள் செலுத்தினர். ஆகாய மார்கமாக செல்லும் சக்தி வாய்ந்த நிசாசரர்கள் தாங்கினர். நல்ல வேகம் உடைய பூத கணங்கள் ஆயிரக் கணக்கில் இதன் சேவைக்கு தயாராக நின்றனர். வசந்த மாத புஷ்பங்களை மலரச் செய்யும் சந்திரன் போல அழகிய காட்சி தரும், வசந்த மாதத்தை விட அதிகமாக மனதில் ஆவலைத் தூண்ட வல்லது, இப்படிப்பட்ட புஷ்பக விமானத்தை, வானரோத்தமனான ஹனுமான் கண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், புஷ்பகானு வர்ணனம் என்ற எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 9 (347) ஸங்குலாந்த:புரம் (அலங்கோலமான அந்த:புரம்)
நீண்ட கண்களையுடைய சீதையைத் தேடிச் சென்ற ஹனுமான், நீண்ட கூடங்களை தன்னுள் அடக்கிய ராவண மகாராஜாவின் மாளிகையின் உள்ளே நாலாபுறமும் சுற்றித் திரிந்தான். லங்கையின் அழகிய மாளிகைகளுக்குள் இது முதன்மையானது என்று சொல்லும் படியான கம்பீரமும், அரை யோஜனை விஸ்தீர்ணமும், யோஜனை தூரம் நீளம் கொண்டதுமான அது ராக்ஷஸேந்திரனுடைய ப்ரத்யேகமான உத்தமமான மாளிகை. இங்கு சீதையைத் தேடிச் சென்ற ஹனுமானும் லக்ஷ்மீவான். நான்கு தந்தங்கள் கொண்ட யானைகள். இரண்டு பற்களைக் கொண்டவை, மூன்று பற்களையுடையவை, அல்லது கொம்புகள் உடையவை என்று பலவிதமாக இடைவெளி விடாமல் காவலுக்கு நின்றன. ராக்ஷஸிகள், ராவணனுடைய பத்னிகள், அபகரித்துக் கொண்டு வரப் பட்டவர்கள், ராஜ குமாரிகள் என்று பலரும் நிரம்பி இருந்தனர். நக்ரம், முதலை, மகர- நண்டுகள், மீன்கள் என்று கடல் வாழ் பிராணிகள் நிறைந்து வாயு வேகத்தில் சஞ்சரிக்கும் பன்னகங்கள், இவைகளுடன் அமைதியாக இருக்கும் சாகரம் போல இருந்தது. வைஸ்ரவனத்தில் எந்த லக்ஷ்மீ வாஸம் செய்கிறாளோ, எந்த லக்ஷ்மீ ஹரி வாகனமான கருடனிடத்தில் காணப்படுவாளோ, அவள் ராவண க்ருஹத்தில் நிரந்தரமாக வாஸம் செய்கிறாள். குபேர ராஜாவிடமும், யமனுடைய, வருணனுடைய வீடுகளில் எந்த லக்ஷ்மீ கடாக்ஷம் நிறைந்து இருக்குமோ, அதற்கு சமமாக அல்லது அதைவிட அதிகமாகவே ராவண க்ருஹத்தில் லக்ஷ்மீ கடாக்ஷத்தை (செல்வ செழிப்பை) காண முடிந்தது. இந்த மாளிகையின் நடுவில் மற்றொரு கட்டிடம் மிகவும் நேர்த்தியாக விளங்கியது. இதுவும் கற்பனைக்கெட்டாத வனப்புடன் காணப்பட்டது. ப்ரும்மாவுக்காக விஸ்வகர்மா தயாரித்து கொடுத்த புஷ்பக விமானம். மிக உயர்ந்த ரத்னங்களும், மணிகளும் இழைத்துச் செய்யப் பட்டது. இதை பெரும் தவம் செய்து குபேரன் பிதாமகரிடமிருந்து கிடைக்கப் பெற்றான். குபேரனை தன் பலத்தால் வெற்றி கொண்டு இந்த விமானத்தை ராவணன் கவர்ந்து வந்து விட்டான். தனதாக்கிக் கொண்டு விட்டான். கல்வெட்டுகளில் மிருக, பக்ஷிகளின் உருவங்கள் கார்த்தஸ்வர, ஹிரண்யம் (இரண்டுமே தங்கத்தின் மறு பெயர்களே) இவைகளால் அழகாக, சிறப்பாக அமைக்கப் பட்ட தூண்கள். இவைகள் தங்கள் அமைப்பின் விசேஷத்தால் பள பளவென மின்னின. பிரகாசமாகத் தெரிந்தன. மேரு மந்தர மலைகளுக்கு இணையாக,ஆகாயத்தை தொடும் உயரம். சுபமான அறைகள் பல இருந்தன. அக்னியோ, சூரிய ஒளியோ எனும்படி பிரகாசமாக விஸ்வகர்மா தயாரித்து கொடுத்த அழகிய யாகசாலை. அதன் படிக்கட்டுகளும் பொன்னாலானவையே. சாளரங்கள் வலைகள் பொன்னால் போடப்பட்டு, ஸ்படிகங்களும் பயன் படுத்தப் பட்டிருந்தன. நீல கற்கள், இந்திர நீலம், மகா நீலம் போன்ற உயர்ந்த மணிகள் அந்த யாக சாலையை அலங்கரிக்க பயன் பட்டிருந்தன. விசித்திரமான முத்துக்கள், விலையுயர்ந்த மணிகள், விலை மதிக்க முடியாத முக்தா-முத்துக்கள் போல தரை பள பளத்தது. சிவந்த சந்தனம் அக்னியின் ஜ்வாலை போல மிக உயர்ந்த ரகம் ஆனதால் வாசனை கமகமத்தது. இளம் சூரியன் போல காணப்பட்டது. இந்த திவ்யமான புஷ்பக விமானத்தில் ஹனுமான் ஏறினான். அங்கு இருந்தபடி பய (பால்), அன்னம், பானங்கள் இவற்றின் திவ்யமான வாசனையை நுகர்ந்தான். ரூபம் எடுத்து வந்த வாயுவைப் போலவே நின்று ஆழ்ந்து மூச்சு விட்டு அந்த மணத்தை அனுபவித்தான். க3ந்த4ம்- பரிச்சயமான அந்த மணத்திலிருந்து நெருங்கிய பந்துவை கண்டு கொண்டாற் பொல மகிழ்ந்து ரசித்தான். இங்கு வா என்று அழைப்பது போல இருந்தது. ராவணன் இங்கு தான் இருக்கிறான் வா, என்று அழைப்பது போல அந்த திக்கை நோக்கிச் சென்றான். ராவணனுக்கு பிடித்தமான அந்த கூடத்தைக் கண்டான். உத்தமமான ஸ்த்ரீயை மனைவியாகக் கொண்டவன் ராவணன். இந்த இடத்தையும் காந்தாவுக்கு இணையாக விருப்பத்துடன் பாதுகாத்து வைத்திருந்தான். படிக்கட்டுகள் மணிகள் இழைத்து கட்டப்பட்டிருந்தது. சாளரங்க ளில் பொன்னால் வலை வேய பட்டிருந்தது . தரை ஸ்படிகத்தால் ஆனது. அதில் பல சிற்பங்கள் தெரியும்படி, ஸ்படிக பரப்பின் அடியில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முத்துக்களும், பவழங்களும் வெள்ளி, தங்கம் இவை கொண்டு செய்யப்பட்ட சித்ர வேலைகள் கொண்ட மணிஸ்தம்பங்களூம் நிறைய காணப்பட்டன. சமமாக, நேராக, மிக உயரமாக, பார்த்தவுடன் எதிரில், அலங்கரிக்கப் பட்டு நின்றன. ஸ்தம்பங்களும் பக்ஷங்களுடன் இதோ, வானத்தை தொட்டு விடுவோம் என்பது போல உயரமாக காணப்பட்டன. அகன்ற அடிப்பாகம், பூமியில் அதை நிலை நிறுத்திக் கொண்டு, நிற்பது போல தோன்றியது. ராஷ்டிரங்களும், க்ருஹங்களும் வரிசையாக இருந்தாலும் தாங்கும் பூமியின் குணம், பறந்து விடாமல், அந்த தூண்களை அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தது போலும். குதூகலமாக பறவைகள் நாதம் செய்தன. அகரு முதலிய தூபங்களின் நறுமணம் அந்த இடம் முழுவதும் வியாபித்து இருந்தது ஹம்ஸம் போன்ற வெண்மையான, புஷ்பங்கள் சித்தரிக்கப் பட்டு, மனதுக்கு இதமான வர்ணங்களில், மகிழ்ச்சியை வளர்க்கும் விதமாகவும், நல்ல பிரபையுடன் கூடியதுமான விரிப்புகள், சிறப்பாக விரிக்கப் பட்டு, ராக்ஷஸாதிபதி வசிக்கத் தகுந்ததாக செய்யப்பட்டிருந்தது. இந்த இடமே சோகத்தை நாசம் செய்து புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது. சாக்ஷாத் ஸ்ரீயே, லக்ஷ்மி தேவியே ஜீவனுடன் வசிப்பதாக தோன்றியது. ஐந்து இந்திரியங்களுக்கும் விருந்தாக, ஐந்து விதமான உத்தமமான பொருட்கள் சேகரித்து, தாய் போல பரிவுடன் உபசரிக்கத் தயாராக இருந்தன. இப்படி ராவணனால் பாலிக்கப் பட்ட நகரம், ஸ்வர்கம் இது தானோ, தேவலோகமோ, இந்திரனுடைய புரி-நகரமோ, என்று எண்ணினான் ஹனுமான், இவ்வளவு சாதனைகள் செய்துள்ள ராவணனும் நிறைய சித்திகள் பெற்றிருக்க வேண்டும் என்றும் நினைத்தான். ஆழ்ந்த சிந்தனையுடன் அக்னியின் ஜ்வாலை போன்று பள பளத்த காஞ்சனங்களை பார்த்தபடி இருந்தான். தூர்த்தர்களை மஹா தூர்த்தர்கள் தோற்கடித்தது போல என்று எண்ணிக் கொண்டான். ராவணனுடைய தேஜஸாலும், ஆபரணங்களின் ஒளியாலும், இவைகள் கொழுந்து விட்டெரிவது போல தோற்றம் அளிக்கின்றன போலும். இதன் பின் பலவிதமான வர்ணங்களில் உயர்ந்த ஆபரணங்களை அணிந்து, (அமரும்) ஆசனங்களில் வந்தமர்ந்த அரண்மனை ஸ்த்ரீகளைக் கண்டான். அந்த ஸ்த்ரீகளின் வேஷ பூஷணங்களும் ரசிக்கத் தகுந்ததாக இருந்தது. அர்த்த ராத்திரியில், பானம், நித்ரா இவைகளில் தன்னை மறந்தவர்களாக இருந்தனர். ஆயிரக் கணக்கான உத்தம ஸ்த்ரீ லக்ஷணங்களை -யுடைய பெண்கள், சிலர் விளையாடி களைத்து, பலவந்தமாக தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இதனால் இவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களும் சத்தமிடாது உறங்குவதுபோல கிடந்தன. பத்மவனம் அருகில் இருந்ததாலும், ஹம்ஸங்களும் ப்ரமரங்களும் கூட சத்தமிடாது இருந்தன. இவர்களுடைய மூடிய கண்களையும், சற்றே வெளியில் தெரிந்த பற்களையும் பார்த்து ஹனுமான், இந்த பெண்களின் முகங்களும் பத்மங்கள் போலவே இருப்பதாக எண்ணினான். நல்ல குல பெண்கள். இரவு நேரத்தில் பத்மங்கள் எப்படி மலர்ந்து இருக்க முடியும், இவை அனவரதமும் மலர்ந்து கிடக்கும் ஜாதி போலும், அதனால் ப்ரமரங்கள் ஆறுகால்களுடையவை, எப்பொழுதும் மதம் கொண்டவைகளாகவே இருக்கும் என்று சிந்தனையை ஓட விட்டான். குணத்தாலும் இவர்கள் நீரில் தோன்றி மலரும் பத்மங்களைப் போன்றே இருக்க வேண்டும், அந்த கூடமே இந்த பத்மங்களின் மணத்தால் நிறைந்தது. சரத் கால இரவில் வானம் நிர்மலமாக இருப்பது போல தாரா கணங்கள் ஒளி வீச இருக்கும் சந்திரனைப் போல, இந்த ராக்ஷஸ ராஜனும், இப்படி அழகிய ஸ்த்ரீகளுடன் தனித்து பிரகாசமாக தெரிகிறான் என்று ஹனுமான் எண்ணினான். ஆகாயத்திலிருந்து புண்யம் தீர்ந்தவுடன் விழும் தாரகைகள் போல இந்த பெண்களும் ஒரு சமயம் ராவணனுடன் இருந்திருப்பார்கள். சுபமான லக்ஷணங்களுடைய இந்த ஸ்த்ரீ கணங்களும், ப்ரபை, வர்ணம், சாயல் இவற்றால், தெளிவாகத் தெரிந்த அழகுடன் காணப்பட்டனர். அங்கங்களில் அனிந்திருந்த ஆபரணங்கள் நழுவி விழ, மது பானத்தால் மயங்கி தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். சிலரின் திலகம் கலைந்து கிடந்தது. சிலரின் நூபுரம் கழண்டு கிடந்தது. பக்கத்தில் நழுவி விழுந்த ஹாரம், முக்தாஹாரம் கவனிப்பாரின்றி கிடந்தது. கலைந்த ஆடையும், கேசங்களுமாக சிலர் வாயை பிளந்து கொண்டு தூங்கும் சமயம் பற்கள் பளீரென்று தெரிந்தன. சிலர் குழந்தை போல சுருண்டு கிடந்தனர். குண்டலங்கள் இன்றி சிலர், பூ மாலை நடுவில் அறுந்து தொங்கிக் கொண்டிருக்க, யானை மிதித்த கொடி போல பெரும் வனத்தில் இரைந்து கிடக்கும் மலர்கள் போல கிடந்தனர். சந்திர கிரணம் போன்ற விலையுயர்ந்த மணி மாலைகளை அணிந்தவர்கள் சிலர் படுத்துக் கிடக்கும் பொழுது இந்த மாலை அவர்கள் மார்பில் ஒரு ஹம்ஸம் ஏறி அமர்ந்து தானும் தூங்குவது போல காட்சியளித்தது. வைடூரிய மாலை அணிந்தவர்கள் மார்பில் இருந்தது காதம்ப பக்ஷிகளாக இருக்கலாம். தங்கத்தால் ஆன சூத்ரம், சிலரது மார்பில் சக்ரவாகமாக இருக்கலாம். இதனால் ஹம்ஸ, காரண்டவ, சக்ரவாக பக்ஷிகள் நடமாடும் பெருகி ஓடும் நதியைப் போல இவர்கள் இருப்பதாகக் கொண்டால், இவர்கள் உடலின் அங்கங்கள், நதிக்கடியில் தெரியும் மணலாகும். கின்கிணி ஜாலம் எழுப்பும் நாதமும் சேர, ஹேம வர்ணத்தில் பெரிய தாமரை பூத்தது போன்ற முகமும், பா4வமே முதலைகளாக, புகழே கரையாக, நதி தூங்குவது போல அந்த ஸ்த்ரீ கணங்கள் கூட்டத்தைப் பார்த்து ஹனுமான் கற்பனையை ஓட விட்டு ரசித்தான். மிருதுவான ஸ்தனங்களில் பூஷணங்கள் ப்4ரமரங்களாக தோன்றின. மூச்சுக் காற்றில் நடுங்கிய இந்த ப்ரமரங்கள் மேலும் முயற்சி செய்து முகத்தைச் சுற்றி பறந்தன. காதில் குண்டலங்கள் ஆடி ஓசை படுத்த, இயல்பாகவே நல்ல மணமுடைய வதனத்தினர், சுவாசக் காற்றில் இந்த மணம் வெளி வந்து பரவி, ராவணனை தட்டி எழுப்பி, அவனை கிறங்கச் செய்வது போல ஹனுமான் கற்பனை செய்து கொண்டான். (குண்டல ஓசை கட்டியம் கூற சுவாச காற்று மணத்தை எடுத்துச் செல்கிறது) அருகில் இருந்த சபத்னி முகத்தையே சில பெண்கள் முகர்ந்தும், முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியதையும் பார்க்க, இவர்கள் ராவணனிடத்தில் மிகுந்த ஈ.டுபாடு உள்ளவர்களே என்று ஹனுமான் எண்ணினான். தங்கள் அளவில் ஸ்வதந்திரம் இல்லாததால் சபத்னிகளிடம் பிரியமாகவே நடந்து கொண்டனர். ஒருவரையொருவர் கைகளை கோத்தபடி, படுத்துக் கிடந்தனர். அடுத்தவர் மார்பில், தலை வைத்து படுத்துக் கொண்டிருந்தாள் ஒருவள். மற்றவள் புஜங்களில் , மடியில் என்று தோன்றியபடி தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். ஸ்த்ரீகளின் மாலை போலவே அந்த கூடத்தில் உள்ள பெண்கள் வரிசையாக கோர்த்து வைத்த மலர் மாலை போல தெரிந்தது. மாலை போல இருந்த அந்த பெண்களின் புஜங்கள், தலையில் சூடியிருந்த மலர்களின் மணம் காற்றில் இசைந்து வர, முகத்தில் தாக்கியது. ராவணனுடைய ஸ்த்ரீ வனம் இது. நல்ல குலத்தில் பிறந்தவர்களும், ஆபரணங்கள் அணிந்து சோபையுடன் காணப்பட்டவர்களுமான இந்த ஸ்த்ரீகள் ராஜ ரிஷி, பித்ரு, தை3த்ய, க3ந்த4ர்வ குலங்களில் பிறந்தவர்கள். ராக்ஷஸ ஸ்த்ரீகளூம் சிலர். ராவணன் பார்வையில் பட்டவர்கள், காமத்துடன் வந்து சேர்ந்தவர்கள், யுத்தம் செய்யும் வெறியுடன் போர் புரியச் சென்று வென்று வரும் பொழுது கைப்பற்றிக் கொண்டு வந்தவர்கள், அப்படி இருந்தும் இந்த பெண்கள் -குணத்தினால் கவரப்பட்டு வரவில்லையெனினும்- பர புருஷனிடம் மனதை செலுத்துபவர்களாக இல்லை. ராவணனை பதியாக எண்ணி, அவனிடமே தங்களை அர்ப்பணித்த -வர்களாகவே தெரிந்தார்கள். ஜனகாத்மஜாவைத் தவிர. நல்ல குலம் இன்றியோ, அழகின்றியோ, தாக்ஷிண்யம் இல்லாமலோ, பெருந்தன்மையில்லாமலோ, உபசாரம் செய்வதும், தகுந்த இடத்தில் உபசாரம் பெறுவதுமான குணங்கள் இல்லாமலோ யாரும் அந்த ராவணனுக்கு மனைவியாக இல்லை. தவிர, யாருமே, செல்வத்தாலும், வீரத்தாலோ, ஆற்றலிலோ குறைந்தவர்களும் இல்லை. இவை அனைத்துக்கும் மேலாக, பர்த்தாவான ராவணனிடம் அன்பு கொண்டவர்களாகவும் இருந்தனர். இப்படி ஒரு கூட்டமே ராவணனின் தர்ம பத்னியாக, அவன் மனைவியாக இருக்குமானால், இந்த ராக்ஷஸன் பாக்கியசாலிதான் என்று வானர வீரனான ஹனுமான் எண்ணினான். மேலும் இவர்கள் அனைவரையும் விட்டு ராவணனின் மனம் சீதையை நாட வேண்டும் என்றால், நிச்சயம் சீதை குணத்தால் மேம்பட்டவளே. அதனால் தான் இவ்வளவு கஷ்டமான, கீழ்த்தரமான செயலை செய்தாவது அவளை அடைய நினைத்திருக்கிறான் இந்த ராவணன் என்றும் எண்ணினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ஸங்குலாந்த:புரம் என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 10 (348) மந்தோ3த3ரி தரிசனம் (மந்தோதரியைக் காணுதல்)
இதன் பின் ஸ்படிகத்தால் செய்யப் பெற்று, ரத்னங்கள் இழைத்து அலங்கரிக்கப் பட்டிருந்த திவ்யமான சயனாஸனம்- படுக்கையை ஹனுமான் கண்டான். பெரும் செல்வ செழிப்போடு, மகா ராஜாவுக்கு ஏற்ற, உயர்ந்த பொன், வைமூடுரியம் இவற்றால் சித்ர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு அழகிய ஆசனங்களுடன், விரிப்புகளுடன் கூடிய அந்த அறையில் முகப்பு வாயிலில் வெண் கொற்றக் குடை இருந்தது. சித்திரபா4னுவுக்கு சமமான ஒளியுடன் அசோக மாலை அணிவிக்கப் பட்டு, பரமாஸனம்- சிம்மாசனம், அமர வாகாக இருந்தது, கையில் வால, வ்யஜனம் இவற்றை வீசிக் கொண்டிருந்தனர். தூபமும், மணம் வீசும் வாசனை திரவியங்களும் அறையை சூழ்ந்திருந்தன. உயர் ரக மான் தோல்கள் தரை விரிப்புகளாக பயன் படுத்தப் பட்டிருந்தன. வர மாலைகளின் ஒளியால் அந்த சூழ்நிலையே பிரகாசமாகத் தெரிந்தது. அதில் மிகப் பெரிய குண்டலங்கள், சிவந்த கண்களும், நீண்ட கைகளும், வெண் பட்டாடையும், சிவந்த சந்தனம் பூசப் பெற்ற சரீரமும், சாயங்கால நேரத்தில், அந்தி வானில் தெரியும் மகா மேகம், மின்னலுடன் இருப்பது போல ஆபரணங்கள் அந்த கார் மேகம் போன்ற பெருத்த உடலில் ஒளி வீச, நல்ல ரூபமும், கண்டவர் விரும்பும் அழகிய தோற்றமும், மரங்களும் கொடிகளும் அடர்ந்து கிடக்க தூங்கும் மந்தர மலை போலவும், இரவு கேளிக்கைகளில் ஈ.டுபட்டு களைத்து, ராக்ஷஸ ஸ்த்ரீகளின் மணாளனாக, ராக்ஷஸர்கள் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்து வணங்கும் அரசனாக, மதுவுண்டு மயங்கி, உறங்கி கிடப்பதைக் கண்டான். அழகிய படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ராக்ஷஸ ராஜன், நாகராஜன் போல பெருமூச்சு விடுவதைக் கண்டு பயந்தது போல சற்று ஒதுங்கி நின்றான். சற்று தள்ளி இருந்த யாகசாலையில் ஏறி நின்று வசதியாக ராக்ஷஸ ராஜனை கவனித்துப் பார்த்த ஹனுமான், பெண் யானை நுழைந்த ப்ரஸ்ரவன மலை போல, ராக்ஷஸன் உறங்கும் படுக்கையும் சோபை பெற்றது போல இருந்ததாக நினைத்தான். பக்கங்களில் கிடந்த ராவணனின் புஜங்கள் இந்திரனின் த்வஜம் போல இருந்தன. ஐராவதத்தின் தந்தத்தால் உரசி காயம் பட்டதும், வஜ்ராயுதம் தாக்கி அதன் முனையால் அடையாளம் இட்டதுமான அகன்ற மார்பில், விஷ்ணு சக்கிரத்தால் அடிபட்ட அடையாளமும் தெரிந்தன. பெருத்த, பலம் கொண்ட, சமமான இரு புஜங்கள், நல்ல லக்ஷணங்களுடன் நகங்களும், கட்டை விரலும், விரல்கள் லக்ஷண சாஸ்திரத்துக் கேற்ப இணைந்தும், இரண்டு பரிகம் போன்று நீண்ட யானையின் தும்பிக்கைக்கு இணையாக உறுதியான கைகள், சயனத்தின் பக்கங்களில் தொங்கும் கை, ஐந்து தலை நாகம் போல தொங்கியது. முயல் ரத்தம் போல சிவப்பான சந்தனம் பூசப் பெற்று, மணம் வீசியது. உத்தம ஸ்த்ரீகள் விரும்பி மோகம் கொள்ளத்தக்க உடல் வாகு. உத்தமமான வாசனைப் பொருட்கள் உபயோகித்திருப்பது தெரிந்தது. யக்ஷ, பன்னக, கந்தர்வ, தேவ தானவர்களை வருத்தி எடுத்தவன். அந்த ராவணனுடைய (இரு) கைகளையும் தூங்கும் சமயம் படுக்கையில் கிடந்ததைக் கண்டு ஹனுமான், மந்தர மலையில் உள்ளே தூங்கும் பெரிய நாகம் ரோஷத்துடன், தன்னை அடக்கிக் கொண்டிருப்பது போல என்று நினைத்தான். புஜங்களின் முழு நீளமும் தெரிய, மந்தர மலையின் உயர்ந்த சிகரமோ என்று ஹனுமான் எண்ணினான். சூத, புன்னாக, சுரபி. வகுல இவைகள் ஒன்று சேர்ந்து ம்ருஷ்டான்ன ரஸ மணமும் கலந்து வர, பானங்களின் கந்தமும் சேர, அந்த ராக்ஷஸ சிம்மத்தின் மூச்சுக் காற்றில், இவை அந்த வீட்டையே நிரப்புவது போல பரவி இருந்தது. விசேஷமான முத்துக்கள் இழைத்து பொன்னில் செய்யப் பட்ட குண்டலங்கள் முகத்தில் பட்டு ஒளியைச் சிதறியது. மகுடத்தின் பிரகாசமும் முகத்தில் தெறித்தது. அகன்ற மார்பில் சந்தனமும், ஹாரங்களும் விளங்கின. வெண் பட்டாடையில் சிவப்பு கரையுடன் அரையில் வஸ்திரமும் மஞ்சள் நிற மேல் வஸ்திரமும், முழு உளுந்தின் வண்ண உடலில் பளீரென்று தெரிய, பு4ஜங்கம் போல மூச்சு விடும், கங்கை கரையில் தூங்கும் குஞ்சரம் போல இருந்தவனைக் கண்டான். நான்கு தங்கத்தாலான விளக்குகள் நால் திசையையும் ஒளி மயமாக ஆக்கின. அந்த தீப ஒளி, மின்னல் மேகத்தின் இடையில் தெரிவது போல ராக்ஷஸ ராஜனின் உடலில் பட்டு விலகியது. மற்றும் சில ராக்ஷஸ ராஜனின் மகிஷிகள் பாதத்தின் அருகில் இருந்தன. அவர்கள் ராவணனின் ப்ரத்யேக அன்புக்கு பாத்திரமானவர்கள் போலும். சசி-சந்திரன், போன்ற முகமும், அழகிய குண்டலமும், வாடாத மலர் மாலைகளும் தரித்து இருந்ததை ஹனுமான் கண்டான். இந்த பெண் மணிகளும் நாட்யம், வாத்யம், கீதம் இவற்றில் தேர்ந்தவர்கள். இவர்கள் படுக்காமல் அமர்ந்து இருப்பதைக் கண்டான். வைர, வைடூரியங்கள் மின்ன நகைகள் அணிந்து குண்டலங்களும், அங்கதங்களும், சந்திரனுக்கு நிகரான முகத்தில் சுபமான லலித குண்டலங்களின் ஒளி பட்டுச் சிதற, தாரா கணம் சூழ்ந்த ஆகாயம் போல இருந்தது. மதுவும், கேளிக்கை விளையாட்டுகளாலும் களைத்து, அந்த பெண்கள், ராஜமகிஷிகள் கிடைத்த இடத்தில் படுத்துறங்கினர். அங்கராகத்தைக் கூட அழிக்காமல் ஒரு நாட்டியம் ஆடும் பெண், உடல் சோர தூங்கிக் கொண்டிருந்தாள். வீணையை அணைத்தபடியே ஒருவள் நதி வேகத்தில் அடித்துச் செல்லப்படும் பொழுது தாமரைத் தண்டை பற்றிக் கொண்டு தப்ப முயலுவது போல, மற்றவள், இடுப்பில் இடுக்கிக் கொண்டிருந்த மட்டுகம் என்ற தாள வாத்யத்துடனேயே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். இளம் குழந்தையை அணைத்துக் கொண்டிருப்பதைப் போல வாத்ஸல்யத்துடன் காணப்பட்டாள். மற்றும் ஒருவள், குழலை அணைத்துக் கொண்டு, வெகு நாட்களுக்குப் பிறகு கணவனை அடைந்தது போல மகிழ்ச்சி முகத்தில் தெரிய தூங்கினாள். விபஞ்சீ என்ற வீணையை அணைத்துக் கொண்டு உறங்குபவளைப் பார்த்தால், விபஞ்சியை தன் பர்த்தாவாக காந்தனாக எண்ணிக் கொண்டு விட்டவள் போல இருந்தது. மற்றொருவருடைய மிருதங்கம் ம்ருதுவாகப் பெரியதாக இருந்தது. அதை மதுவுண்ட மயக்கத்தில் என்ன நினைத்துக் கொண்டாளோ, அன்புடன் அணைத்தபடி உறங்கினாள். அதே போல மற்றொருவள், அருகில் இருந்த பணவம் என்ற வாத்யத்தை தன் கைகளால் இடுக்கிக் கொண்டிருந்தாள், டிண்டிமம் என்ற வாத்யத்தை தன் மகன் என்று நினைத்தோ, ஆடம்பரம் என்ற வாத்யத்தின் பகுதி, மனிதனுடைய புஜம் என்று சொல்லும்படி இருந்ததை, அணைத்துக் கொண்டு மதுவுண்ட மயக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவள், என்ன நினைத்தாளோ, காசி என்ற வாத்யம் புஷ்ப மாலை போல இருந்தது, இதை தன் மார்பில் வைத்துக் கொண்டவள், என்ன நினைத்து இருந்தாளோ, தன்னைப் போலவே மற்றொருவளை அணைத்துக் கொண்டிருந்தவள் என்று பலரும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இப்படி சித்ர, விசித்ரமாக தெரிந்த பெண்களின் மத்தியில் தனித்து தெரிந்த ஒருவள், ஹனுமானின் கவனத்தைக் கவர்ந்தாள். படுக்கையில் படுத்தபடி இருந்த அவள் ரூப சம்பன்னமாக, மிக அழகியாகத் தெரிந்தாள். ஆபரணங்கள் அவளுக்கு அழகூட்டின. முத்தும் மணியும் கொண்ட அவள் பூஷணங்கள், அந்த மாளிகையையே பிரகாசமாக்கியது. கௌரீ, பொன் நிறத்தாள், ராவணனுக்கு பிரியமான மனைவி, அந்த:புரத்தின் தலைவி, அழகிய உடலமைப்பு கொண்டவள். இவளைப் பார்த்து வானரம் சீதை என்றே தீர்மானித்து விட்டது. ரூப, யௌவன சம்பத்து ஒத்து போனதால், சந்தேகமே கொள்ளவில்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் தன் தோளைத் தட்டிக் கொண்டான். தன் வாலை எடுத்து முத்தமிட்டான். மகிழ்ந்தான். மெதுவான குரலில் சீட்டியடித்தான். நடந்து சென்று திரும்பி வந்தான். தூண்களில் ஏறி தடாலென்று குதித்தான். தன் இயல்பான வானர குணத்தை வெளிப்படுத்தினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், மந்தோ3த3ரி தரிசனம் என்ற பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 11 (349) பான பூமி விசய: (பான பூமியில் தேடுதல்)
திடுமென ஏதோ நினைவு வர, ஹனுமான் சற்று நிதானமாக யோசிக்கலானான். சீதை என்று நினைத்தோமே என்று தன்னையே கடிந்து கொண்டான். ராமனை விட்டுப் பிரிந்த சீதை இப்படி தூங்குவாளா? சாப்பிடவும், அலங்காரம் செய்து கொள்ளவும், பான வகைகளை அருந்தவும், இப்படி உறக்கம் கொள்ளவும் அவள் எப்படி ஒப்புவாள்? தேவ ராஜனேயானாலும், அன்ய புருஷனோடு எப்படி கட்டிலில் படுப்பாள். ராமனுக்கு சமமாக வேறு யார் இருக்க முடியும்? மூவுலகிலும் காணக் கிடைக்காது என்பது நிச்சயம். இது வேறு யாரோ என்று நிச்சயித்து பான பூமியை விட்டு இறங்கி நடந்தான். விளையாடிக் களைத்தவர்கள், பாடி ஆடி களைத்தவர்கள், மதுவினால் மயக்கம் அடைந்தவர்கள், முரஜம், ம்ருதங்கம், இவைகளுடன், தரையில், படிகளில் என்று அமர்ந்திருந்தவர்கள், விரிப்புகளின்மேல் அமர்ந்திருந்தவர்கள் இப்படி ஆயிரக் கணக்கான பெண்கள், சர்வாலங்கார பூஷிதைகளாக விளங்கக் கண்டான். ரூபம், சாமர்த்யமான பேச்சு வார்த்தைகள், கீதங்களை முறையாக பாடுதல், தேச காலம் அறிந்து தெளிவாக எதிரில் உள்ளவர் புரிந்து கொள்ளும்படியான சம்பாஷனைகள், இவற்றை ஹனுமான் கண்டான். ரத, உப ரத எனும் பான வகைகள் இருந்தன. மற்ற இடத்திலும் இதே போல அழகிய பெண்கள் பலர் ஆயிரக் கணக்காக உறங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டான். இவர்கள் மத்தியில் ராக்ஷஸேஸ்வரன், பசுக்களின் மந்தையில், பசுக்களுக்கிடையில் காளை போல நிற்பதைக் கண்டான். பெரிய ஆண் யானை, பெண் யானைகள் சூழ, அரண்யத்தில் சஞ்சரிப்பது போல இருக்கக் கண்டான். ராவணனுடைய பான பூமியில் எல்லா விதமான சுக சௌக்யங்களும் இருந்தன என்பதையும் குறித்துக் கொண்டான். மிருகங்களுக்கு, மகிஷங்களுக்கு வராகங்களுக்கு என்று மாமிச ஆகாரம் வைக்கப் பட்டிருந்தது. பெரிய பெரிய இரும்பு பாத்திரங்களில் பாதி சாப்பிட்ட மயூரங்களையும், கோழிகளையும் கண்டான். க்ரகரம் எனும் பக்ஷிகள், சித்து எனும் பக்ஷிகள், சகோரங்கள் இவைகளும் பாதி உண்ட அன்னத்துடன் கிடந்தன. லேஹ்யம், உச்சாவம்-ஊறுகாய்கள்- பானங்கள்-குடி நீர், முதலியன, வித விதமான ஆகாரங்கள், நெல்லிக்காய், உப்பு, இன்னும் ஆறு விதமான ருசிகளுடன் உண்டும், குடித்தும் களித்து இறைத்த உணவு வகைகளும், பழங்களும், பூமியில் சிதறி கிடந்தது கூட அழகாகவே இருந்தது. ஆங்காங்கு விரிக்கப் பட்டிருந்த படுக்கைகளில், பான பூமி நெருப்பின்றி எரிவது போல தோற்றமளித்தது. மாமிசங்கள் பலவிதமாக தயார் செய்யப் பட்டு ப்ரஸன்னமாக பலவித குடி நீர், பழ ரஸங்கள், தேவர்களோ, தேவர்களுக்கு இணையானவர்களோ பரிமாற, சர்க்கரைப் பாகு, தேனின் பாகு, புஷ்பத்தின் ரஸம், பழங்களின் ரஸம் இவைகளில் வாசனைக்காக சேர்க்கப் பட்ட பொடிகள் இவற்றுடன் தனித் தனியாக இருப்பதைக் கண்டான். அந்த இடத்தின் சோபை சொல்லத் தரமன்று. ஹிரண்மயமான பாத்திரங்கள், ஸ்படிகத்தால் ஆனவை தங்கத்தால் ஆன பாத்திரங்கள், கரண்டிகள் இவற்றுடன் கூட, வெள்ளியினாலான கும்பங்களில், பொன் மயமான கும்பங்களில் உயர்தர மது வகைகள் சேகரித்து வைக்கப் பட்டிருந்ததைக் கண்டான். பாத்திரங்களும், பண்டங்களும் கூட மணிகள் பதித்த தங்கத்தால் ஆனவையே. சிலவற்றில் குடிக்கப் படாமல் மீதி வைக்கப் பட்டிருந்தன. சிலவற்றில் பாதி குடிக்கப் பெற்று, சில முழுவதுமாக குடித்து தீர்க்கப்பட்டிருந்தன. இதே போல அன்னம் மீதி வைக்கப் பட்டும், கரண்டிகளில் மீதமிருந்தவை, பாத்திரங்களில் பாதி என்று இரைந்து கிடந்தன. சில இடங்களில் பழங்கள், காய்கறி வகைகள் கிடந்தன. இந்த பெண்கள் படுக்கும் இடத்தில் வெண்மையான விரிப்புகளே பெரும்பாலும் தென்பட்டன. ஆழ்ந்த உறக்கத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அடுத்து உறங்கும் பெண்ணின் வஸ்திரத்தை எடுத்து போர்த்திக் கொண்டு கூட தூங்கினர். இவர்களின் மூமூச்சுக் காற்று பட்டே, மாலைகளும், வஸ்திரங்களும் மெதுவாக, மெதுவான காற்றில் அசைந்தாடுவது போல ஆடின. க3ந்த4 வாஹனன் என்ற மாருதனுக்கு (மணத்தை எடுத்துச் செல்பவன், பரப்புபவன்) சந்தனத்தின் குளுமையான மணம், மது ரஸம், மாலைகள், வித விதமான தூபங்கள் இவற்றின் மணங்களை எடுத்துச் செல்ல வேண்டியதாயிற்று. இந்த மணங்களின் கலவை மூச்சையடைத்தது. பலவிதமான பெண்களை ராவணனின் அந்த:புரத்தில் கண்டும், ஜானகியை மட்டும் காணவில்லை. திரும்பவும் அந்த பெண்கள் இருந்த திசையில் நோக்கிய ஹனுமான், பெரும் கவலைக் குள்ளானான். இது தர்மம் அல்லவே. பர தா3ர தரிசனம், அதுவும் தூங்கும் சமயம் அவர்கள் அறியாமல் கவனிப்பது தவறாயிற்றே. இது எனக்கு மிக அதிகமான தர்ம சங்கடத்தை உண்டு பண்ணுகிறதே. என் மனதில் வேறு எந்த விதமான எண்ணமும் இல்லாமல் தான் பார்க்கிறேன். என் கடமையை செய்ய வந்த இடத்தில் மன தூய்மையோடு தான் பார்க்கிறேன். ராவணனின் ஸ்த்ரீகள் சலனமின்றி உறங்கும் பொழுது, மனதில் களங்கம் இன்றி காரியமே கவனமாகத் தான் தேடுகிறேன். இந்திரியங்கள் தறி கெட்டு ஓடவும் மனமே காரணம். அதை அடக்கி நேர் வழியில் செலுத்துவதும் மனமே. இந்த வரையில் நான் பரி சுத்தமான மனதோடு என் தேடல் என்ற செயலைத் தான் குறைவற செய்கிறேன். வைதேஹியை வேறு எங்கே தேடுவேன்? ஸ்த்ரீயை ஸ்த்ரீகள் இருக்கும் இடத்தில் தான் தேட முடியும். எந்த விதமான ஜீவனோ, அது அந்த ஜீவன்களின் கூட்டத்தோடு தான் இருக்கும். பெண்ணை காணோம் என்றால் மான்கள் கூட்டத்தில் தேட முடியுமா? அதனால் நான் சுத்தமான மனதோடு தேடியது சரியே. ராவணனின் அந்த:புரம் முழுவதும் தேடி விட்டேன். ஜானகியை காணவில்லையே. தேவ கந்தர்வ கன்னிகள், நாக கன்னிகள் இவர்களை கண்ட வீரனான, ஹனுமான், ஜானகியை மட்டும் காணாமல் தவித்தான். மற்ற ஸ்த்ரீகளும் நல்ல குலத்தில் பிறந்த உயர் குணங்கள் நிரம்பியவர்களாகவே தோற்றமளித்தனர். திரும்பிச் செல்ல தீர்மானித்து ஹனுமான் யோசித்தான். திரும்பவும் பான பூமியையே தேடுவோமா, அதைத் தாண்டி வெளியில் செல்வோமா என்று யோசித்தபடி அந்த இடத்தை விட்டகன்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், பான பூமி விசயோ என்ற பதினோறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 2 (340) நிசாக3ம ப்ரதீக்ஷா (இரவு வர காத்திருத்தல்)
கடக்க முடியாது என்று நினைத்த கடலையே கடந்து வந்து விட்ட ஹனுமான், த்ரிகூட மலையில் அமைந்திருந்த லங்கா நகரை நிதானமாக ஊன்றி கவனித்தான். கால்களில் ஒட்டியிருந்த புஷ்பங்களை உதற, அது குவியலாக அவனுக்கே புஷ்பங்களால் அபிஷேகம் செய்து வைத்தது போல மறைத்தது. நூறு யோஜனை தூரத்தை அனாயாசமாக கடந்து வந்த பின்னும், வானர வீரன் களைப்பாகத் தெரியவில்லை. நூறு யோஜனை தூரம் தாண்டி விட்டேன். இன்னும் எல்லையில்லாமல் பரந்து இருந்தாலும் தாண்டுவேன், இது நிச்சயிக்கப் பட்ட நூறு யோஜனை தூரம் தானே என்று மனதில் எண்ணிக் கொண்டான். வீரர்களுள் சிறந்த வீரன். தாண்டி குதிக்கும் வானர இனத்திலும் முதன்மையானவன். அவன் ஒருவனால் தான் சமுத்திரத்தை கடந்து லங்கையை அடைய முடிந்தது என்பதில் சந்தேகமில்லை. அந்த மலையில் நின்றபடி வனங்களையும், உப வனங்களையும் கண்டான். பசும் புற்தரை, கரு நீல வர்ணத்தில், மணம் வீசும் புஷ்பங்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்து தெரிந்தன. மலை என்பதே தெரியாதபடி நெருங்கி வளர்ந்திருந்த மரங்கள், இவைகளைப் பார்த்தபடி ஹனுமான் மேலும் நடந்தான். மலையின் உச்சியில், லங்கா நகரம் தெரிந்தது, மரங்களில் பல பரிச்சயமானவை. சால, கர்ணிகார, கர்ஜூர, மரங்கள் புஷ்பித்திருந்தன. ப்ரியாவான், முசுலிந்தான் என்பவையும், குடஜம், கேதகம், ப்ரயங்கா4ன் என்பவையும் மணம் நிறைந்தவை. நீப, சப்தச்சத, அஸன, கோவிதா3ர, கரவீர எனும் மரங்களும் பூத்துக் குலுங்கின. புஷ்ப பாரத்தினால் இவை வளைந்து தொங்கின. சில மரங்களில் இப்பொழுது தான் மொட்டு கட்ட ஆரம்பித்திருந்தன. காற்றில் அசைந்தாடும் கிளைகளும், கிளைக்கு கிளை பறவை கூடுகளுமாக, காண ரம்யமாகத் தெரிந்தன. ஆங்காங்கு இருந்த கிணறுகளில், குளங்களில், பத்ம, உத்பலங்கள் மலர்ந்து காணப் பட்டன. இவைகளில் ஹம்ஸங்களும், காரண்டவ பக்ஷிகளும் விளையாடின. பலவிதமான நீர் நிலைகள், விளையாட்டு மைதானங்கள் காணப்பட்டன. ராவணன் பாலித்து வந்த லங்கா நகரத்தில் எந்த பருவமானாலும் பழுக்கக் கூடிய பழ மரங்கள், சந்ததம் எனும் இனம், பலவித மரங்களூம் அடர்த்தியாக இருக்க, உத்யான வனங்கள் மனதைக் கவரும் வண்ணம் இருந்ததை மாருதாத்மஜன் கவனித்து மனதில் வியந்து கொண்டான். சீதையை கவர்ந்து கொண்டு வந்த பின் காவல் மேலும் பலப் படுத்தப் பட்டிருப்பதை ஊகித்துக் கொண்டான். ஊரெங்கும் ராக்ஷஸர்கள், காவல் வீரர்கள் நடமாடுவதைக் கண்டான். மிக அதிகமான எண்ணிக்கையில் இந்த வீரர்கள், பெரிய வில்லும் ஆயுதங்களும் தாங்கி சுறு சுறுப்பாக நடை போட்டனர். மகாபுரி-பெரிய நகரமாக லங்கா நகரம் இருந்தது. பிரகாரங்கள் பொன்னால் இழைத்து செய்யப் பட்ட வேலைப் பாடுகளுடன் காணப்பட்டன. மலை போல் நிமிர்ந்து நின்றன. சரத் கால சந்திரன் போல பிரகாசமாக விளங்கின. வெண் நிற பூச்சுகளுடன், உயர்ந்த மாளிகைகள், பால்கனிகள் இருந்தன. நூற்றுக் கணக்கான மாடங்கள், கொடிகளும் கம்பங்களும் காஞ்சனமயமான தோரணங்களும் செல்வ செழிப்பை பறை சாற்ற, தேவ லோகத்து நகரம் போல, பலவிதமான அலங்காரங்களுடன் அந்த நகரை ஹனுமான் கண்டான். வெண் நிற மாளிகைகள், வரிசையாக அந்த மலை உச்சியில் வரிசையாகத் தெரிந்தன. ஆகாயத்தில் நிர்மாணிக்கப்பட்டது போல அந்த பவனங்கள் தனித்து தெரிந்தன. விஸ்வகர்மாவினால் கட்டப் பட்டு, ராவணன் பரி பாலித்து வந்த நகரம். ஆகாயத்தில் தாவிச் செல்வது போல, ஊஞ்சல் ஆடுவது போல அந்த நகரம் மிகச் சிறப்பாக விளங்கியது. அந்த நகரமே ஒரு பெண் போல, உருண்டு திரண்ட ஜகனங்களும், (பிரகாரங்கள்), ஏராளமான காடுகளும், நீர் நிலைகளூம் அம்பரமாக (ஆடையாக), நூற்றுக் கணக்கான சூலங்கள் கேசங்களாக (கேசமாக), அட்டாலிகா – மாட மாளிகைகள், மனதில் உருவகப்படுத்திக் கொண்டு உடனுக்குடன் விஸ்வகர்மா கட்டியது போல இருந்தது. வடக்கு வாயிலை அடைந்து ஹனுமான் யோஜித்தான். (பெண்ணாக பாவித்து மிகவும் சிரத்தையுடன் கட்டியதாக) கைலாஸ நிலயம் போலவும், வானத்தை தொட்டு விடுவது போலவும், உத்தமமான பவனங்கள். போ4கவதி நகரம் முழுவதும் நாகங்கள் மண்டிக் கிடப்பது போல, ராக்ஷஸர்கள் கோரமான முகத்துடன் கணக்கில்லாமல் இருந்தனர். ஆலகால விஷம் உள்ள குகையைப் போல ராக்ஷஸர்கள், நீண்ட பற்களும், சூலம், பட்டிசம் இவைகளை கையில் ஏந்தியும், பொறுக்கி எடுத்த வீரர்களாக காவலுக்கு நியமிக்கப் பட்டிருந்தவர்களைத் தவிரவும் நிறைய காணப்பட்டனர். இந்த லங்கா நகரையும், சமுத்திரத்தையும் பார்த்து, ஹனுமான் நமது எதிரி சாதாரணமானவன் அல்ல என்று நினைத்தான். இங்கு வந்தால் கூட நமது வானரப் படையினர் எதையும் சாதிக்க முடியப் போவதில்லை. எந்த தேவர்கள் வந்தாலும் யுத்தம் செய்து இந்த லங்கா நகரை ஜயிப்பது கடினம். முடியாது எனலாம். இந்த லங்கையின் கோட்டைகள் கூட அசாதாரணமானவையே. ராவணன் ரக்ஷித்து வரும் இந்த நகரம் வந்தும் ராகவன் தான் என்ன செய்யப் போகிறான்? இந்த ராக்ஷஸர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையும் எடுபடாது. தா3னமோ, பே4த3மோ பலனளிக்கப் போவதில்லை. யுத்தம் செய்வதோ, கேட்கவே வேண்டாம். இந்த நான்கு முறைகள் தான் நமக்குத் தெரிந்தது. வாலி புத்திரனுக்கும், நீலனுக்கும், எங்கள் அரசனான சுக்ரீவனுக்கும் தெரிந்த ராஜ தந்திரம் இது தான். சாம, தான பேத, தண்டம் என்ற நான்கு வழிகள், இது இருக்கட்டும், நாம் வந்த காரியத்தை கவனிப்போம். வைதேஹி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். ஜனகாத்மஜாவை எங்கு, எப்படிக் காண்போம். ராமனுடைய காரிய சித்திக்காக மனதினுள் தியானம் செய்தவனாக, மலையின் மேல் முஹுர்த்த நேரம் ஹனுமான் நின்றான். இந்த ரூபத்தோடு என்னால் லங்கா நகரினுள் போக முடியாது. க்ரூரமான, பலசாலிகளான காவல் வீரர்கள் போகும் இடமெல்லாம் எதிர்ப்படுவார்கள். உக்ரமாக தண்டிக்கக் கூடியவர்கள். கண்டால் விட மாட்டார்கள். இவர்கள் கண்ணில் படாமல், ஜானகியைத் தேடியாக வேண்டும். தெரிந்தும் தெரியாமலுமான ஒரு உருவம் எடுத்துக் கொண்டு லங்கையில் இரவில் நுழைந்தால், என் காரியத்தை ஒழுங்காக செய்ய முடியலாம். திரும்ப திரும்ப லங்கையின் காவல் ஏற்பாடுகளையும், தேவர்கள் கூட எளிதில் நுழைய முடியாதபடி லாகவமாக பாதுகாப்பாக கட்டப் பட்டிருந்த லங்கா நகரையும் காண நிராசையே நிறைந்தது. என்ன உபாயம் செய்வேன்? எப்படி ஜனகாத்மஜாவை காண்பேன்? என்ற கவலை சூழ்ந்தது. ராக்ஷஸேந்திரன் கண்ணில் படாமல், ராம காரியத்தை செய்ய வேண்டுமே. துராத்மாவான ராவணன் கண்டால், ராம காரியமே நாசமாகிப் போகும். நான் ஒருவனாக ஜனகாத்மஜா என்ற ஒருவளைத் தேடி , நான் மட்டுமாக அவளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். அருகில் யாரும் இல்லாத சமயம் யாரும் காணாதவாறு அவளிடம் நான் வந்திருப்பதையும் தெரிவிக்க வேண்டும். யார் யாரையோ பார்க்கிறேனே, இதில் நான் தேடி வந்தவள் எங்கு இருக்கிறாள்? தேச காலங்கள் விரோதமாக இருந்தால், சாமர்த்தியம் இல்லாத தூதன் காரியத்தையே கெடுத்து விடுவான். சூரியோதயம் ஆனவுடன் இருட்டு மறைவது போல, வந்த காரியமே மறந்து விடும். அல்லது கெட்டு விடும். தன்னை பண்டிதனாக நினைக்கும் தூதன் தாங்கள் வந்த காரியத்தையே கெடுத்து விடுவர். எதை எதையோ சம்பந்தமில்லாமல் யோஜித்து செயல் படுவதும் சரியல்ல. சிரமப்பட்டு கடலைக் கடந்து வந்ததும் வீணாகக் கூடாது. காரியமும் கெடாமல் நானும் பத்திரமாக திரும்பச் செல்ல வேண்டும். என்னை இந்த ராக்ஷஸர்கள் கண்டு கொண்டால், அவ்வளவு தான், ராமனுடைய உத்தேசமும் நிறைவேறாது. நாம் எண்ணியிருப்பது ராவணனின் முடிவு. இந்த ராக்ஷஸர்கள் அறியாமல் எங்கும் தங்குவது கூட சாத்தியமில்லை என்று தோன்றுகிறதே. ராக்ஷஸ ரூபமே எடுத்துக் கொள்வோமா? அல்லது வேறு எந்த ரூபம் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க உதவும்? காற்று கூட இங்கு தன்னிச்சையாக வீசுவதில்லை என்று தோன்றுகிறதே. பலசாலிகளான இந்த ராக்ஷஸர்கள் கூர்மையான அறிவும் கொண்டவர்களாகத் தெரிகிறது. நான் இந்த சுய ரூபத்தில் நின்றால், பிடிபடுவது நிச்சயம். என் எஜமானனின் காரியமும் அதோ கதி தான், இருட்டிய பின் என் உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு வானரமாகவே, லங்கையின் உள்ளே பிரவேசிப்பேன். எல்லா வீடுகளிலும் தேடி ஜனகாத்மஜாவை கண்டு பிடிப்பேன். சூரியன் அஸ்தமனம் ஆவதை எதிர் நோக்கி ஹனுமான் காத்திருந்தான். வைதேஹியை காணும் ஆவலுடன் காத்திருந்தான். மிகவும் சிறிய வானரமாக சூரியன் அஸ்தமிக்கும் பிரதோஷ காலத்தில், வேகமாக தாவி குதித்து, மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்த பெரிய வீதிகளையுடைய லங்கா நகரினுள் பிரவேசித்தான். அந்த நேரத்தில் லங்கா ரம்யமாக இருந்தது. மாளிகைகள் தொடுத்து வைத்தாற்போல வரிசையாகத் தெரிந்தன. கந்தர்வ நகரம் போல இருந்தது. ஜன்னல்களும், வலைகள் பொருத்தப் பட்டதும் தங்கமே போலும். ஏழு மாடி, எட்டு மாடி கட்டிடங்களாக இருக்க, ஹனுமான் எண்ணி பார்த்துக் கொண்டான். தரை ஸ்படிகத்தால் அல்லது மணிகளால் (கார்த்தஸ்வர) அலங்கரிக்கப் பட்டிருந்தது. வைடூரியமும், முத்துக்களும் வீடுகளுக்கு அலங்காரமாக வேலைப் பாடுகள் செய்ய பயன் படுத்தப் பட்டிருந்தன. தரைகள் மிக அழகாகத் தெரிந்தன. தோரணங்கள் விசித்ரமாக இருந்தன. ராக்ஷஸர்களின் வீடுகள் இப்படி பலவிதமாக செல்வ செழிப்பை பறை சாற்றும் விதமாக லங்கையின் அழகையே தூக்கி காட்டின. நினைத்துக் கூட பார்க்க முடியாத அத்புதமான காட்சி. ஒரே சமயத்தில் சந்தோஷமும், நிராசையும் மனதில் குடி கொண்டன. வைதேஹியைக் காண வேண்டுமே என்ற தாபமும் அதிகரித்தது. வெண் நிற பூச்சுகளுடன், விமானங்களும் வரிசையாக அதன் மேல் பொன் நிறத் தோரணங்கள், விலை மதிக்க முடியாத பொன்னாலான வலை பொருத்தப் பட்ட ஜன்னல்கள், ராவணனின் ஆளுமையில், தானே கவனமாக ரக்ஷித்து வந்த இலங்கை நகரை, இலங்கை எனும் ஸ்திரீயை, கண்டான். சந்திரனும் தன் பங்குக்கு உதவி செய்ய எண்ணியது போல ஒளி வீசிக் கொண்டு தாரா கணங்கள் புடை சூழ வந்து சேர்ந்தான். அவன் கிரணங்கள் ஆயிரக் கணக்காக ஒளியைச் சிதறியபடி தெரிந்தன. அந்த ஒளியில் சங்கு போல, பால் போல, தாமரைத் தண்டு போல குளுமையும், பிரகாசமும் பூமியில் நிறைந்தன. பெரிய குளத்தில் நிதானமாகச் செல்லும் ஹம்ஸம் போல நீல வானில் சந்திரன் பவனி வருவதை ஹனுமான் கண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், நிசாக3ம ப்ரதீக்ஷா என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 3 (341) லங்காதி4 தே3வதா விஜய: (லங்கையின் காவல் தேவதையை ஜயித்தல்)
உயரமான சிகரங்களை உடைய அந்த மலை மேல், தொங்கும் பெரிய கார் மேகம் போல இருந்த மாருதாத்மஜனான ஹனுமான், தன் உருவை தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டு, இரவில் அந்நகரில் பிரவேசித்தான். அழகிய கானனங்களும் நீர் நிலைகளும் இருந்த ராவணனின் நகரம். மாளிகைகள் ஒவ்வொன்றும் சரத் கால சந்திரன் போல பிரகாசமாக இருந்தன. கடல் காற்று சுகமாக வீச, ஊரின் உள்ளே ஜனங்கள் ஆரவாரமாக இருப்பதும், கடலின் கோஷம் போலவே கேட்டது. நல்ல வீரர்கள் காவலில், அமரர் தலை நகரமான அமராவதி போலவே பாதுகாப்பாக இருந்த நகரம். வாயிலில் அழகிய வெண்ணிற தோரணங்கள் தொங்க, ரஸிக்கத் தகுந்த முறையில் அலங்கரிக்கப் பட்டிருந்த மாளிகைகள். சுபமான போ4கவதீ நகரம், (புஜகம்) நாகங்கள் நிறைந்து இருப்பது போல ஒரு க்ஷணம் தோன்றியது. எங்கும் பளீரென்ற வெளிச்சம் தரும் விளக்குகள். இதமாக வீசிய காற்றில் அமராவதியில் இருப்பது போன்ற பிரமையைத் தரும் ராவணனின் ராஜதாணி. உயர்ந்த பத்தரை மாற்றுத் தங்கம் எங்கும் சாதாரணமாக காணப்பட்டது. பிராகாரங்கள், கிண்கிணி மணி கட்டிய சாளரங்கள், இது காற்றில் அசைய ஏற்படும் இனிமையான ஒலி, கொடிகள் கட்டப் பட்டு அலங்காரமாக இருந்த பிரதான சாலையில் வந்து நின்ற ஹனுமான் தன்னையுமறியாமல் மகிழ்ச்சியை அடைந்தான். ஆச்சர்யம் மனதில் நிறைந்தது. அந்த நகரை திரும்பி பார்த்த இடமெல்லாம் செல்வ செழிப்பே கண்களை நிறைத்தது. ஜாம்பூனதம் எனும் உயர்ந்த பொன்னும், வைடூரியம் முதலிய மணிகளும் கொண்டு யாக சாலைகள் நிறுவப் பட்டிருந்தன. வஜ்ரமும் ஸ்படிகமும் இழைத்து புடமிட்ட தங்கத்தாலும், நிர்மலமான வெள்ளியினாலும் (வெண்மை நிறத்தில்) அலங்கரிக்கப் பட்டு, வைடூரியம் பதித்த தளமும், படிக்கட்டுகளும், ஸ்படிக துகள்கள் இடை இடையே தூவப் பெற்று, ஆகாயத்தை தொடும் உயரத்துடன், ஆங்காங்கு இருந்த நீர் நிலைகளில் க்ரௌஞ்ச, ப3ர்ஹிண பக்ஷிகள் குதூகலமாக இரைச்சலிட தூர்ய வாத்யங்கள் இசைக்கப் பட அதன் நாதமும் இசைந்து வர, எங்கும் எதிரொலித்த இனிய கோஷமுமாக லங்கையை ஹனுமான் கண்டான். நகரின் அழகைக் கண்டு மெய் மறந்து ஹனுமான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். வேறு யாரும் இந்த நகரத்தை தாக்கவோ, ஆக்ரமித்து தனதாக்கிக் கொள்வதோ முடியாது. குமுத, அங்கதன் முதலானோர், சுஷேணன் போன்ற மகா வீரர்களான கபி (வானரம்), மைந்த த்விவிதர்கள், விவஸ்வதன் மகன், குச பர்வண வானரத்திற்கும், ருக்ஷன், கேது மாலன், நான் இவ்வளவு பேரும் சேர்ந்து பாடு பட வேண்டும். ராகவனுடைய பராக்ரமும், லக்ஷ்மணன் விக்ரமும், ஹனுமான் ஒருமுறை மனதினுள் நினைத்து பாராட்டிக் கொண்டான். அழகிய ஸ்த்ரீ போல அலங்கரிக்கப் பட்டிருப்பதாக அந்த நகர் தோற்றமளித்தத்து. ரத்னங்கள் ஆடையாக, கோஷ்டாகாரங்கள், யந்த்ராகாரங்கள், ஸ்தனங்கள் போல பருத்து இருப்பதாக நினைத்துக் கொண்டான். விளக்குகள் இருட்டை விரட்டியடித்தன. ஒவ்வொரு வீடும் ஒளி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது, ராக்ஷஸேந்திரனுடைய நகரீ- மிக அழகு என்று சிலாகித்தான். இப்படி யோசித்துக் கொண்டே தன் சுய ரூபத்தில் நகரின் உள்ளே நுழைவதை, லங்கா நகரை காத்து வந்த லங்கா நகரீ என்ற ஸ்த்ரீ கண்டு கொண்டாள். உடனே எழுந்து வந்தாள். அவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். யார் நீ? என்ன காரியமாக இங்கு வந்தாய்? வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ? உயிருடன் இருக்க ஆசையில்லையா? உடனே சொல், என்றாள். வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது. ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள், காவல் காக்கிறார்கள். எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். என்னை கேள்வி கேட்கும் நீ யார் ? ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே? கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார்? லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள். நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். இன்று உன் முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். ஸ்த்ரீ ரூபம், ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான் எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். இந்த லங்கா நகரீ பிராகாரங்களுடன், தோரணங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. அதனால் இதை பார்க்க வந்தேன். குதூகலத்துடன் இந்த நகரை சுற்றி பார்க்க வந்தேன். வனங்களும், உப வனங்களும், லங்கையின் கானனங்களும், பெரிய மாளிகைகளும், என்னுள் ஆவலை தூண்டி விட்டன என்றான். இதை நம்பாமல் லங்கா நகரீ என்ற அந்த ராக்ஷஸி அதட்டினாள். வானரமே, என் அனுமதியின்றி நீ எதையும் பார்க்க முடியாது. ஹனுமான் சற்றும் தயங்காமல், பத்ரே, இந்த நகரை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி போய் விடுகிறேன். அனுமதி கொடு என்று பணிவாக வேண்டினான். உடனே ராக்ஷஸி, தன் கைதலத்தால் ஓங்கி ஒரு அறை விட்டாள். எதிர்பாராத இந்த அடியால் ஹனுமான் திகைத்து வாய் விட்டு அலறி விட்டான். தாங்க முடியாத கோபத்துடன், இடது கை விரல்களை மடக்கி முஷ்டியால், அவளை திருப்பி அடித்தான். ஸ்த்ரீ என்பது மனதில் தயக்கத்தை உண்டாக்கியது. அதிக கோபம் வராமல் அடக்கிக் கொண்டான். அந்த நிசாசரீ, இந்த அடியையே தங்க முடியாமல், உடல் சோர விழுந்தாள். கீழே விழுந்தவளைப் பார்த்து ஹனுமான், பாவம், ஸ்த்ரீ தானே என்று தயவுடன் அருகில் சென்றான். மிகவும் வேதனையோடு குரல் தழ தழக்க, அந்த லங்கா நகர காவல் தேவதை, தன் கர்வம் அழிந்தவளாக, வானர வீரனைப் பார்த்து, ஹரி சத்தமா, தயவு செய். காப்பாற்று. சுமஹா பா3ஹோ- பெரிய கைகளுடன், ஆற்றல் மிகுந்தவனாக தெரிகிறாய். காலத்தை அனுசரித்து ஜீவராசிகள் நடமாடுகின்றன. நான் லங்கா நகரீ. நீ என்னை ஜயித்து விட்டாய். இதன் பலனை சொல்கிறேன், கேள். முன்பு ஒரு சமயம், ஸ்வயம்பூ தானாக எனக்கு ஒரு வரம் கொடுத்தார்., எப்பொழுது ஒரு வானரம், தன் பலத்தால், உன்னை வெற்றி கொள்கிறானோ, அப்பொழுது இந்த ராக்ஷஸர்களுக்கு ஆபத்து என்று நினைத்துக் கொள். அந்த சமயம் வந்து விட்டதாக அறிகிறேன். வானரமே, உன்னை நான் கண்ட இந்த நிமிஷம், ராக்ஷஸர்களின் விநாசம் ஆரம்பம். ஸ்வயம்பூ சொன்னது தவறாது. ஆபத்து காலம் தான் நெருங்கி விட்டது. சீதை காரணமாக, ராவண ராஜா தவறு இழைத்து விட்டான். எல்லா ராக்ஷஸர்களையும் ஆபத்து சூழ்ந்து கொண்டு விட்டது. சரி, போய் வா, வானரோத்தமா, ராவணன் கவனமாக பாலித்து வரும் நகரத்தினுள் நுழைந்து சுற்றிப் பார்த்து விட்டு வா, என்ன செய்ய வேண்டுமோ, செய். ஜனகாத்மஜாவை தேடி வந்திருக்கிறாயா? உள்ளே போய் நன்றாக தேடிப் பார். இந்த லங்கா நகரியும் சாபத்துக்கு ஆளானவளே. ஹரீஸ்வரா, போ. போய் உன் காரியத்தைப் பார். சௌகரியம் போல போ, என்று அனுமதித்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், லங்காதி4 தே3வதா விஜயோ என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 4 (342) லங்கா புரி பிரவேச: (லங்கா நகரில் நுழைதல்)
இரவின் முன் பகுதியில், கபி குஞ்சரன், குறுக்கு வழியில் லங்கா நகரத்தினுள் நுழைந்தான். தன் பலத்தால் லங்கா நகரீ என்ற க்ஷேத்ர தேவதையை (ஊர்க் காவல் தேவதை) வீழ்த்தி விட்டு நகரத்தின் பிராகாரத்தை அடைந்தான். இடது பாதத்தை, சத்ருக்களின் தலையில் வைப்பதாக எண்ணிக் கொண்டு, முன் வைத்தபடி நுழைந்தான். பூக்கள் உதிர்ந்து கிடக்க, பிரதான (தெருவை,) வீதியை அந்த இரவில் பார்வையால் அளந்தான். தூர்ய வாத்ய கோஷங்களும், ஜனங்க ளின் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக பேசும் சப்தங்களும், கலந்து அந்த வீதியை நிறைத்திருந்ததைக் கண்டான். மாளிகைகள் அழகாக காட்சியளித்தன. வீடுகளுக்கு நுழை வாசல் கதவுகளும், வஜ்ராங்குசம் போல பலமாக போடப் பட்டிருந்தன. மேகக் கூட்டங்கள் வானத்தை நிறைத்திருப்பதைப் போல தெரிந்தன. வெண்மையான வான வெளியில், சித்திரங்கள் வரைந்தது போல வெண் நிற பூச்சுகளில், பத்மம், ஸ்வஸ்திகம் என்று வேலைப் பாடுகள் செய்யப் பட்டிருந்தன. கபி ராஜனான சுக்ரீவனின் நலனை விரும்பும், வானர வீரனான ஹனுமான், நெடிதுயர்ந்த மாளிகைகளுக்கு இடையில் நின்றபடி இந்த காட்சிகளை ரசித்து மகிழ்ந்தான். அடிக்கடி, மனதினுள் தான் வந்திருப்பது ராம காரியத்திற்காக என்றும் நினைவு படுத்திக் கொண்டான். வீட்டுக்கு வீடு தாவி குதித்து தேடினான். பலவிதமான அமைப்புகளுடன் வீடுகள். மூன்று ஸ்தாயியிலும் சுஸ்வரமாக ஸங்கீதம் கேட்டது. தேவ லோகத்து அப்ஸர ஸ்த்ரீகள் போல இங்கும் பல பெண்கள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர். கால் கொலுசுகள் அசைவதாலும், இடுப்பு ஒட்டியாண மணிகள் அசைந்தும் எழுப்பிய ஒலிகளைக் கேட்டான். மாடிப்படிகளில் ஏறுவதும் இறங்குவதும் துல்லியமாக கேட்டது. ஆங்காங்கு தோள் தட்டி போட்டிக்கு அழைக்கும் குரலும், வெற்றி பெற்றவர்கள் எக்காளம் இடுவதும் கேட்டது. ராக்ஷஸர்களின் வீடுகளில் மந்திர கோஷமும், ஜபம் செய்வதும் கேட்டது. ஸ்வாத்யாயம் எனும் வேத பாராயணம் செய்வதில் ஈ.டுபட்ட ராக்ஷஸர்கள் பலரையும் ஹனுமான் கண்டான். சில ராக்ஷஸர்கள் உரத்த குரலில் ராவணனை ஸ்தோத்திரம் செய்து கொண்டிருந்தனர். இடையிடையே காவல் வீரர்களையும் கண்டான். குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த அவர்களில் பலர், ராஜ வீதியை அடைத்துக் கொண்டு இருந்தனர். இடையிடையில் ராக்ஷஸர்களில் துப்பறியும், வேவு பார்க்கும் படையினரும் கலந்து நடமாடுவதை ஊகித்தான். சிலர் ஜடா முடியுடன், சிலர் தலையை மழித்துக் கொண்டவர்களாக, பசு, மான் தோல் ஆடைகளை அணிந்தவர்களாக. கையில் தர்ப்பை கட்டாக ஏந்தி அக்னி குண்டலங்களுடன், நித்ய கர்மானுஷ்டானங்களை செய்பவர்களாக கண்டான். கூடம், உத்3க3ரம் என்ற ஆயுதங்களும், த3ண்டாயுதமும் வைத்துக் கொண்டு, ஏகாக்ஷ- ஒரு கண்ணுடையவர்கள், ஒரு காது உடையவர்கள், பெருத்த வயிறு உடையவர்கள், ஸ்தனங்கள் நீண்டு தொங்கும் சிலர், பெரிய கட்டை (கதவு தாழ்ப்பாள்) போன்ற கைகளுடையவர்கள். விசித்ரமான பள பளக்கும் கவசங்களை அணிந்தவர், இப்படி சிலர். பெரும்பாலோர், அதிக ஸ்தூலமும் இல்லாமல், அதிக க்ருசம் (மெலிந்த சரீரமும்) இல்லாமல் இருந்தனர். காண கொடூரமாக, வாயும் முகமும் வெந்தது போன்ற தோற்றத்துடன் குள்ளர்கள், சமமில்லாத உடல் அமைப்பு கொண்டவர்கள், சிலர். வில்லேந்தியவர்கள், வாளேந்தியவர்கள், சதக்4னீ, முஸலம் இவற்றை ஆயுதமாக ஏந்தியவர்கள், அதிக ஸ்தூலமோ, அதிக க்ருசமோ- மிக அதிக உயரமோ, மிகச் சிறிய உருவமோ, மிகவும் வெளுத்த சரீரமோ, அதிக கறுப்போ, முதுகு கூணல் உடையவர்களோ, வாமனர்களோ, ரூபம் இன்றி இருந்தவர்களும் மிகக் குறைவே. அழகிய சரீரமும், கட்டான தேகம் உடையவர்களுமே கொடிகளையும், த்வஜ ஸ்தம்பங்களையும் கையில் வைத்திருந்தனர். சக்தி, வ்ருஷ என்ற ஆயுதங்களையும், பட்டிச, அசனி இவைகளையும், க்ஷேபணி, பாசம் இவைகளையும், கையில் ஏந்தி தனித் தனி கூட்டமாக நடந்து செல்பவர்களையும் கண்டான். உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவர்களாக, மாலைகளும் ஹாரங்களும் அணிந்து, அங்க ராகம் பூசிக் கொண்டும், பலவித வேஷங்கள் கலந்து தெரிய வேகமாக நடைபோடும் காவல் வீரர்கள். தீக்ஷ்ணமான சூலங்கள் ஏந்தியவர்கள், வஜ்ரத்தையும் ஏந்திய நூறாயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் மத்தியில் வானரம் தன்னை மறைத்துக் கொண்டு நடப்பதே சிரமமாக, மறைந்து மறைந்து ராவணனின் அந்த:புரம் இருந்த மாளிகையை வந்தடைந்தான். அந்த க்ருஹத்தை சற்று நேரம் பார்த்தபடி நின்றான். மகா ஹாடகம் விலையுயர்ந்த பத்தரை மாற்றுத் தங்கம், இதில் தோரணங்கள் கட்டப் பட்டிருந்தன. மலையின் உச்சியில், ராக்ஷஸேந்திரனின் புகழை பரப்பிக் கொண்டு, அரண்மணை கம்பீரமாகத் தெரிந்தது தாமரைத் தண்டு போன்ற குளுமையும், வெண்மையுமான சுவர்கள், நாலா புறமும் ஓடிய ப்ராகாரங்களுடன், தேவலோகம். போன்ற திவ்யமான அமைப்புடன், இனிய நாதம் கேட்க, குதிரைகள் கனைக்கும் சத்தமும் ஊடே கேட்க, ஆபரணங்கள் உராய்வதால் உண்டான சப்தமும் இடையிடையே கேட்டது. ரதங்கள், மற்ற வாகனங்கள், விமானங்கள், யானை, குதிரைகள், சுபமான நான்கு தந்தங்கள் உடைய பட்டத்து யானைகள், இந்த யானைகளே வெண் மேகம் போல காட்சிய ளித்தன. நுழை வாயில் மிக நேர்த்தியாக ரசனையுடன் அலங்கரிக்கப் பட்டிருந்தது. மதம் கொண்டு உல்லாசமாகத் தெரிந்த வளர்ப்பு மிருகங்களும், பக்ஷிகளும் வாசலில் காணப் பட்டன. இவை உட்பட காவல் வீரர்கள் பத்திரமாக பாது காத்தனர். ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் வந்து போய் கொண்டிருந்தனர். இந்த கோலாகலத்துக்கு இடையிலும், வானரம் ராவணன் மாளிகையில் யாரும் அறியாமல் நுழைந்து விட்டது. பொன்னாலான தூண்களுடன் நடு முற்றமும், விலையுயர்ந்த முத்துக்களும், மணிகளும் பதித்த உட்பகுதி, பரார்க்4ய, கால, அகரு, சந்தனம் இவை மணம் பரப்ப, ராவணனின் அந்த:புரத்தில் பிரவேசித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், லங்கா புரி ப்ரவேச: என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 5 (343) ப4வன விசய: (வீடுகளில் தேடுதல்)
தீ4மாந்- புத்திசாலியான ஹனுமான் சுற்று முற்றும் பார்த்து, தான் தேட வேண்டிய இடங்களை மனதில் குறித்துக் கொள்ள தானும் உதவி செய்ய விழைந்தது போல, சந்திரன் உதயம் ஆனான். ஒளியை உமிழ்ந்து கொண்டு சந்திரன் வானில் மத்தியில், பசுக்களின் கூட்டத்தில், மதம் பிடித்த ரிஷபம் தன்னிச்சையாக நடப்பது போல மிதந்துகொண்டு செல்வதைக் கண்டான். குளிர்ந்த கிரணங்களைக் கொண்டவன். உலகில் உள்ளவர்களின் பாபங்களை போக்குபவன், பெருங்கடலையும் ஆட்டுவிப்பவன், எல்லா ஜீவ ராசிகளையும் பிரகாசிக்கச் செய்பவன், வானத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தான். எந்த லக்ஷ்மி உலகில் (மந்தரஸ்தா) மந்தர மலையில் இருக்கிறாளோ, ப்ரதோஷ காலங்களில் சாகரஸ்தா- சாகரங்களில் இருக்கிறாளோ, நீர் நிலை என்றால் புஷ்கரத்தில் விளங்குகிறாளோ, அவள் அந்த நிசாகரன் எனும் சந்திரனிடத்தில் குடி கொண்டாள். ஹம்ஸம் ஒன்று வெள்ளியினாலான கூண்டில் இருப்பது போலவும், சிங்கம் ஒன்று மந்தர மலையின் குகையில் இருப்பது போலவும், வீரன் ஒருவன் பெருமிதத்துடன் யானை மேல் அமர்ந்திருப்பது போலவும், சந்திரன் அந்த வானத்தில் இருந்தபடி பிரகாசித்தான். (ககுத்- காளையின் முதுகில் இருக்கும் திமில், ககுத்மான், திமில் உடைய காளை) கூர்மையான கொம்புகளையுடைய காளை போலவும், ஸ்வேத மகா மலை, உயர்ந்த சிகரத்துடன் இருப்பது போலவும், யானை தந்தத்துக்கு தங்க முலாம் பூசியது போலவும், சந்திரனும் பரிபூர்ண கலைகளோடு பிரகாசித்தான். குளிர்ந்த நீரின் பனித்துளிகள் சேறாக (ஒன்று சேர), கடலில் பெரும் முதலைகள் அசைந்து நீரைக் கலக்குவதால் சேறு படியாமல் நீர் தெளிவாகத் தெரிவது போலவும், பிரகாசமான லக்ஷ்மி ஆசிரயித்ததால், நிர்மலமான சரீரத்துடன் (அங்கங்களுடன்) பகவான் சசாங்கன் (விராஜ) பரிசுத்தமாகத் தெரிந்தான். ம்ருகேந்திரன் எனும் சிங்கம் சிலாதலம் பாறையை அடைந்து சுகமாக படுப்பது போலவும், பெரும் அரண்யத்தை அடைந்த மகா க3ஜம் மன நிறைவு கொள்வது போலவும், நரேந்திரன் ராஜ்யத்தையடைந்து திருப்தியடைவது போலவும், சந்திரன் தன் பிரகாசத்தை வீசிக் கொண்டு சந்தோஷமாக உலவுவது போல் பவனி வந்தான். பிரகாசமான சந்த்ரோதயத்தால் தோஷங்கள் நீங்கப் பெற்று, வளர்ந்து வரும் ராக்ஷஸர்களின் பலம் மட்டுமே தோஷமாக, பெண்களின் மனதில் தோன்றும் சித்ர தோஷ:-ஆசைகள், நப்பாசைகள் (பெண்கள் என்றால்) மட்டுமே இருக்க, ஸ்வர்க பிரகாசமாக பகவான் ப்ரதோஷன் காட்சி தந்தான். தந்தி வாத்யங்கள் காதுக்கு இனிமையாக கேட்டன. தங்கள் கணவன்மார்களை அணைத்துக் கொண்டு ஸ்த்ரீகள் படுத்துறங்கினர். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களும், தங்கள் க்ரூர கர்மாக்களை செய்ய வெளிப்பட்டனர். அதுவே அவர்களின் அத்புதமான விளையாட்டு போலும். கபியின் கண்களுக்கு வீர லக்ஷ்மி தாண்டவமாடுவதாக தெரிந்தது. மதம் கொண்டு கர்வத்துடன் ஏராளமாக கலந்து கிடந்த யானை குதிரைகள், ரதங்கள், பத்ராஸனங்கள், வீடு தோறும் காணப்பட்டன. ஒருவருக்கொருவர் சவால் விட்டு அறை கூவி போருக்கு (போட்டிக்கு) அழைத்தனர். நீண்ட கைகளால் குஸ்தி மல்யுத்தம் செய்தனர். வாயால் சுய பிரதாபங்களைப் பேசிக் கொண்டனர். விளையாட்டாக ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டனர். ராக்ஷஸர்கள் மோதிக் கொண்டும், தங்கள் பத்னிகளிடம் உறவாடிக் கொண்டும், அழகிய சித்ரங்களை வரைந்து கொண்டும், வாள் முதலியவைகளை வீசிக் கொண்டும் திரிந்தனர். சிலர் மனைவிகளுடன் பேசி பொழுதைக் கழித்தனர். மற்றும் சிலர் தூங்கினர். சிலர் சிரித்தனர். கோபம் கொண்டு சிலர் பெருமூச்சு விட்டனர். பெரும் யானைகள் பிளிறுவது போலவும், நல்லவர்கள், சத்தான ஜனங்களை மதித்து போற்றுவது போலவும், வீரர்கள் பெருமூச்சு விடுவது போலவும், குளத்து நீரில் நாகங்கள் சீறுவது போலவும், புத்தியே பிரதானமாக உடையவர்களையும், ரசித்து மகிழும் ரசிகர்களையும், (ரஸனையே – ரசிப்பதே பிரதானமாக) சிரத்தையுடன் செயல் படுபவர்களையும், உலகில் மேன்மையாக வாழ ஆசை கொண்டவர்களும் பலவிதமாக ராக்ஷஸர்களைக் கண்டான். இப்படி இவர்களைப் பார்த்து ஹனுமான் மகிழ்ச்சியடைந்தான். நல்ல ரூபம் உடையவர்கள், குணம் நிறைந்தவர்கள், தன்னைப் போலவே உயர்ந்த கொள்கையுடையவர்களும், பலர் இருக்க, ஒரு சிலர் இதற்கு நேர் எதிராக, எதிரான குணங்களுடன் இருப்பதையும் கண்டான். சுவிசுத்3த4 பாவம்- மிக உயர்ந்த மனோபாவம்- மிக உயர்ந்த மன நிலை கொண்டவர்கள், அவர்களுக்கு இணையான பத்னிகள் கிடைக்கப் பெற்ற பாக்கியசாலிகள், தங்கள் பிரியமான மனைவியிடமும், பானங்களிலும் ஈ.டுபாடு கொண்டவர்கள், தாரா கணங்கள் போல நல்ல பிரபாவம் உடையவர்கள் இவர்களைக் கண்டான். செல்வ செழிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. இரவு நேரமானதால், லஜ்ஜையுடன் தங்கள் ரமணனுடன் மறைந்து தெரிந்த ஸ்த்ரீகள். சிலர் பெண்களிடம் தங்களை மறந்து ஈ.டுபட்டு இருந்தனர். பறவைகள் புஷ்பங்களில் மறைந்து கிடந்தன. (வார்த்தைகள் அழகுக்காக கோர்த்து எடுக்கப் பட்ட ஸ்லோகங்கள்-அதன் மூலத்தில் உள்ள அழகு படித்து தான் புரிந்து கொள்ள வேண்டும்). இரவில் மதனனின் ஆதிக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது. சிலர் மாளிகையின் வெளி வாசலில் அமர்ந்திருந்தனர். தங்கள் பிரியமான கணவன்/ மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டு, நெருங்கி அமர்ந்து சரசமாக இருந்தனர். தர்ம பத்னி, பர்த்தாவின் அணைப்பில், நியாயமாக இயல்பாக மதனனின் வசமாக இன்பமாக இருப்பதைக் கண்டான். அந்த ஸ்த்ரீகளில் பல வர்ணத்தினரும் இருந்தனர். பொன் நிறத்தில், எரியும் ஜ்வாலை போல, சிலர் சந்திரனின் களங்கம் போன்ற நிறத்தினர், எந்த நிறமானாலும், தங்கள் காந்தனுக்கு பிரியமான, ரசிக்கத் தகுந்த வர்ணமே எனும்படி இருந்தனர். பொதுவாக, பெண்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைவும் பெற்றவர்களாகவே, கொண்டவனிடம் அன்பும், ஆதரவும் உடையவர்களாகவும் இருக்கக் கண்டான். அவர்கள் முகங்களோ, சந்திரனுடைய பிரகாசமாகவும், கண்களின் இமை, இவையே நேத்ர மாலாவாக, ஆபரணங்களின் மாலையாக கூட்டமாகத் தெரிந்தன. அந்த இடத்தில் ராஜ குலத்தில் தோன்றியவளும், கொடி மலர்ந்தது போல சரீரத்தை உடையவளுமாக தான் அறிந்திருந்த, ப்ரும்மா மனதில் நினைத்து உருவம் கொடுத்தது போன்றவளுமான பெண்மணியை மட்டும் காணவில்லை. சனாதனமான தர்ம வழியில் நிற்பவளை, ராமனின் மனதில் வசிப்பவளை, அவனையே காம வசமாகி துன்புறச் செய்தவளை, உயர்ந்த ஸ்த்ரீகளிலும் உயர்ந்த ஸ்த்ரீயானவளை, கணவனின் மனதுக்கினியாளை மட்டும் காணவில்லை. வனத்தில் தோகை விரித்தாடும் மயில் போன்றாளை, வரிசையாக, நீண்டு வளர்ந்திருந்த இமைகள் பட படக்க சிவந்து போகும் மென்மையான இயல்புடையவளை மட்டும் காணவில்லை. தெளிவாகத் தெரியாத சந்திரனின் கிரணங்களோ, தங்கத்தால் ஆன எழுத்துக்கள் (சித்திரம்) புழுதி படிந்து கிடக்கிறதோ, அம்புகள் ஓயாமல் பயன் படுத்தி நுனி மழுங்கிப் போயினவோ, மேகங்களின் வரிசை காற்றில் அலைக்கழிக்கப்பட்டதோ, எனும்படி இருந்த சீதையைக் காணவில்லை. சொல்லின் செல்வனான ராமனுடைய பத்னியை, சீதையைக் காணாமல், துக்கம் மேலிட, வெகு நேரம் ஹனுமான் மந்தமாக செய்வதறியாது நின்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ப4வன விசயோ என்ற ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 1 (339) சாகர லங்க4ணம் (கடலை கடத்தல்)
தத:-இதன் பின், சாரணர்கள் புழங்கும் பாதையில், சத்ருக்களை ஒடுக்கும் வீரனான ஹனுமான், சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, ராவணன் அவளை அழைத்துச் சென்றதாக அறிந்த தென் திசையில் செல்லத் தயாரானான். மிகவும் கடினமான காரியம். ஒப்பில்லாத சாகஸம். இந்த செயலை செய்யத் துணிந்த வானரன் தலையைத் தூக்கி, கழுத்தை சாய்த்து, பசுக்களின் தலைவனான காளை போல நின்றான். வைமூடுரியம் போல ஜ்வலித்த பசும் புற் தரைகளுக்கிடையில் நீர் பள பளக்க இருந்த பூமியில் தீரனும் மகா பலசாலியுமான ஹனுமான் நடந்தான். பறவைகள் பயந்து சிறகடித்து பறக்கலாயின. மரங்கள் ஆடின. பல மிருகங்கள் கீழே விழுந்தன. பெரிய கேசரி (சிங்கம்) நெடிதுயர்ந்து நிற்பது போல நின்றான். வெண்மையும் கருப்பும், நீலமும் சிவப்பும், மஞ்சளுமாக இலைகள் பல வர்ணங்க ளில் தென்பட்டன. இயல்பான நிறங்களில் தா4து பொருட்கள் அலங்காரமாகத் தெரிந்தன. யக்ஷ கின்னர, தேவர்களுக்கு இணையான க3ந்த4ர்வர்கள், பன்னகர்கள் தங்கள் விருப்பம் போல உருவம் எடுக்க வல்லவர்கள், சூழ்ந்து நிற்க, அவர்கள் பரிவாரமும் உடன் நின்றனர். நாகங்கள் நிறைந்த அந்த சிறப்பான மலையின் உச்சியில், நீர் நிலையில் யானை நிற்பது போல தனித்து தெரிந்தான். இதன் பின் அவன், சூரியனுக்கு, மகேந்திரனுக்கு, வாயுவுக்கு, ப்ரும்மாவுக்கு, மற்றும் பஞ்ச பூதங்கள், இவர்களுக்கு அஞ்சலி செய்து வணங்கி விட்டு தன் யாத்திரையைத் தொடர தீர்மானித்தான். கிழக்கு நோக்கி நின்று, தன்னை ஈ.ன்ற வாயுவுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, தென் திசையில் செல்லத் தயாராக வளர ஆரம்பித்தான். மற்ற வானரங்கள் கீழே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தன. இதற்குள் தன் பிரயாணத்தை மனதினுள் ஒருவிதமாக திட்டமிட்டுக் கொண்டு விட்ட வகையில், ராம காரியம் நிறைவேறும் பொருட்டு, மலையின் மேல் சமுத்திரம் பொங்கி எழுவது போல எழுந்தான். அளவிட முடியாத, ஒப்பிட முடியாத பெரிய சரீரம். கடலைக் கடந்து செல்லவும் துணிந்த உயரிய எண்ணம். அரிய செயலைச் செய்யத் துணிந்தவன் தன் புஜங்களால் மலையை தடவிக் கொடுத்தும், கால்களால் உதைத்தும் அந்த மலையை ஒரு ஆட்டு ஆட்டி விட்டது போலவும், தானே அசைந்து கொடுத்ததோ எனும் படி அந்த மரங்கள், தங்கள் நுனியிலிருந்து புஷ்பங்களை உதிர்த்தன. கைகளாலும், கால்களாலும் ஹனுமான் மலையின் திடத்தை சோதனை செய்வது போல தட்டிப் பார்த்தது போலவும், மலையும் தன் ஒப்புதலை தந்தது போலவும் அந்த காட்சி அமைந்தது. மலை முழுவதும் அந்த புஷ்பங்களின் சிதறல் அர்ச்சனை செய்யப் பட்டது போல கண் கொள்ளா காட்சியாக இருந்தது. மலர்களின் மணம் பரவியது. மதம் கொண்ட மத்த கஜத்தின் முகத்தில் துளிர்க்கும் வியர்வைபோல மலையின் மேலிருந்து நீர் வடிந்தது. ஹனுமானின் கால்கள் அழுந்த பிடித்ததால், பலமாக யானைப் பாகன் மிதிப்பதால் துன்புறுவது போல மகேந்திர பர்வதம் துன்புற்றது. பித்தளை, பொன், வெள்ளி, கரும் பொன் (இரும்பு) இவை மலையிலிருந்து சிதறின. விசாலமான சுமன:சிலம் எனும் பாறையும் கீழே விழுந்து சிதறியது. கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நடுவில் புகைந்து எழும் புகை மூட்டம் போல தெரிந்தது. மலையே, ஹனுமானின் பாதத்தால் உதைக்கப் பட்ட சமயம், மலை குகையிலிருந்த மிருகங்களும் பாதிக்கப் பெற்றன. வித விதமான குரலில் கூக்குரலிட்டன. இந்த பெரும் மலையில் வசித்த ஏராளமான ஜீவ ஜந்துக்கள் ஏக காலத்தில் எழுப்பிய ஒலி, அலை அலையாக பரவி உலகம் முழுவதும் எல்லா திசைகளிலும், உப வனங்களிலும் எதிரொலித்தன. பளீரென்று நிமிர்ந்த தலையுடன், நாகங்கள், ஒளி வீசும் தங்கள் படங்களுடன் நிமிர்ந்து நின்றன. விஷத்தைக் கக்கின. அகப்பட்ட பாறைகளை பல்லால் கடித்து உமிழ்ந்தன. இப்படி கடிபட்ட பாறைகள் சில உடைந்து சிதறின. சில பள பளவென மின்னின. கோபம் கொண்டு விஷமுடைய பற்களால் கடிக்கப் பெற்ற பாறைகள், நெருப்பு பற்றிக் கொண்டது போல தோற்றமளித்தன. அந்த மலையில் உற்பத்தியாகும் ஆயிரக் கணக்கான மூலிகைகள், அவற்றில் பல பாம்பு விஷத்தை அடக்கும் சக்தியுடையவை, இருந்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. பயனற்றுப் போயின. தபஸ்வி ஜனங்கள், ஏதோ பூத கணங்கள் வந்து மலையை பிளக்கின்றனவோ என்று ஐயுற்றனர். வித்யாதர கணங்கள் தங்கள் ஸ்திரீகளுடன் பயந்து அலறியபடி மலையை விட்டு வெளியேற முயற்சி செய்யலாயினர். பான பூமியில் (கள் குடிக்கும் இடம்) வண்ண மயமான பாத்திரங்களில் மதுவை அருந்திக் கொண்டு இருந்தவர்கள், விலையுயர்ந்த அந்த பாத்திரங்களை, கரண்டிகளை, லேகியங்கள், ஊருகாய்கள், பக்ஷணங்கள், மாமிசங்கள் இன்னும் பல உணவு வகைகளையும், பழமை வாய்ந்த தோல் வாள், பொன்னாலான கரண்டிகள், இவைகளை கையில் வைத்தபடி, கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த வஸ்திரங்களுடன், சிவந்த மாலைகளையும் அணிந்து, அங்க ராகங்களை பூசி மகிழும் இயல்புடையவர்கள், சிவந்த மஞ்சள் நிற கண்கள் உடையவர்கள், என்ன நடக்கிறது என்று பார்க்க ஆகாயத்தில் வந்து நின்றார்கள். ஹாரங்கள், நூபுரங்கள், இடுப்பு ஒட்டியாணம் என்று பலவிதமான ஆபரணங்களுடனும் வளைய வந்த ஸ்த்ரீகள், ஆச்சர்யத்துடன், தங்கள் கணவன்மாரோடு சேர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க வந்து நின்றனர். மகா வித்யையை அறிந்து கொண்டு கடை பிடித்து வந்த வித்யாதர மகரிஷிகள், தங்கள் மனைவிமாருடன், ஆகாயத்தில் வந்து நின்று, மலையை நோக்கினர். தவ வலிமை மிக்க ரிஷிகள், சாரணர்கள், சித்தர்கள் என்று ஆகாயத்தில் குழுமியிருந்தோர் பேசும் பேச்சுக்களைக் கேட்டனர். விமலமான ஆகாயத்தில் முனிவர்களின் பேச்சுக் குரல் ஓங்கி ஒலித்தது. இதோ இந்த ஹனுமான் தானே பர்வதாகாரமாக நிற்கிறான். மகா வேகத்துடன் கடலைத் தாண்டத் தயாராக நிற்கிறான். மகரங்கள் நிறைந்த இந்த கடலைத் தாண்ட ஆயத்தம் செய்வது தான் இவ்வளவு பர பரப்புக்கு காரணம். இந்த அரிய செயலை ராமனுக்காகவும், தன் தலைவனான வானர ராஜனின் பொருட்டும் செய்யத் துணிந்திருக்கிறான். எளிதில் கடக்க முடியாத இந்த கடலின் அக்கரையைத் தொட்டுவிட துடிக்கிறான், என்றிவ்வாறு ரிஷிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதை வித்யாதரர்கள் கேட்டனர். ஒப்புவமை இல்லாத வானர வீரன் மலையின் மேல் நிற்பதைக் கண்டனர். அந்த மலையின் மேல் மற்றொரு மலை குலுங்கி ஆடியது போல ஒரு உலுக்கலில் தன் பெரிய உடலின் ரோமங்கள் சிதறி விழச் செய்தான், ஹனுமான். மகா மேகம் போல கர்ஜித்து, திக்குகளை அதிரச் செய்தான். சாட்டையை விசிறி அடித்தது போல சுழற்றவும், சுருட்டி வைக்கப் பட்டிருந்த ரோமங்கள் அடர்ந்த வால், பக்ஷி ராஜனான கருடனின் கால்களில் சிக்கிய பெரு நாகம் போல நீண்டது. நாகத்தை கவ்விக் கொண்டு வேகமாக செல்லும் பக்ஷிராஜனின் வாயிலிருந்து தொங்கும் நாகம் போல அந்த வால் நீண்டு தொங்கியது. புஜங்கள் இரண்டையும் விரித்து, பரிக4ம் என்ற ஆயுதத்தைப் போல நீண்ட கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டான். (பரிக4ம்-கதவுக்கு தடுப்பாக உபயோகிக்கும் மரக் கட்டை). கால்களைக் குறுக்கிக் கொண்டான். தன் புஜங்களையும் கழுத்தையும் சுருக்கிக் கொண்டு, தலையை நிமிர்த்தி, தன் உடலில் தேஜஸ், ஆற்றல் இவற்றை நிரப்பிக் கொள்வது போல நிமிஷ நேரம் நின்றான். கண்களை இடுக்கி வெகு தூரம் வரை தான் செல்ல வேண்டிய பாதையை நோட்டம் விட்டு கணித்துக் கொண்டவனாக, தன் ஹ்ருதயத்தில் பிராணனை நிலை நிறுத்தி, மூச்சை அடக்கி, யோக சாதனையை செய்தான். ஆகாயத்தை பார்த்தபடி, கால்களை திடமாக ஊன்றி அந்த கபிகுஞ்சரன், காதுகளை மடக்கியபடி வேகமாகத் தாவி, ஆகாய மார்கத்தில் நுழைந்தான். கீழே நின்ற வானரங்களைப் பார்த்து, எப்படி ராகவன் கையிலிருந்து, பாணங்கள் சீறிக் கொண்டு பாயுமோ, அதே போல வேகத்துடன் நானும் போகிறேன். ராவணன் பாலித்து வரும் லங்கா நகரை நோக்கிச் செல்கிறேன். ஜனகாத்மஜாவை அந்த லங்கா நகரில் நான் காணவில்லையெனில், இதே வேகத்தோடு தேவர்கள் வசிக்கும் தேவ லோகம் செல்வேன். த்ரிதிவம் எனும் தேவலோகத்திலும் சீதையைக் காணவில்லையெனில், என் சிரமம் வீணாகாமல், ராக்ஷஸ ராஜனான ராவணனை கட்டி இழுத்துக் கொண்டு வருவேன். நிச்சயமாக என் காரியம் வெற்றியாகி, சீதையோடுதான் வருவேன். ராவணனையும் சேர்த்து, லங்கா நகரையே பெயர்த்து கொண்டு வந்தாலும் வருவேன். இவ்வாறு வானரோத்தமனான ஹனுமான் மற்ற வானரங்களைப் பார்த்து சூளுரைத்து விட்டு, மேலும் தாமதியாமல் சட்டென்று தாவி, ஆகாயத்தில் குதித்தான். தானே சுபர்ணம் எனும் கருடன் என்று நினைத்துக் கொண்டான். வேகமாக அந்த வானர வீரன் தாவி குதித்த பொழுது, மலையிலிருந்த மரங்கள், வேரோடு சாய்ந்து எதிரில் விழுந்தன. பூக்கள் நிறைந்து, வண்டுகள் மதுவை குடித்து மயங்கி ரீங்காரம் செய்தபடி இருந்த அந்த மரங்களைத் தன் கால்களின் வேகத்தில் தள்ளிக் கொண்டே சென்றான். கால் (துடை) வேகத்துக்கு ஈ.டு கொடுக்க முடியாமல் மரங்கள் சற்று தூரம் தொடர்ந்து சென்றபின் விழுந்தன.வெகு தூரம் செல்லக் கிளம்பிய நெருங்கிய உறவினர்களை, வழியனுப்பச் செல்பவர் போல உடன் சென்று வழியனுப்பியதோ, பெரிய சால மரங்கள், கால்களை உதைத்து ஹனுமான் கிளம்பிய வேகத்தில், அரசனை எப்பொழுதும் பின் தொடர்ந்து செல்லும் பாதுகாவலர்கள் போல சென்றனவோ, எனும்படி இருந்தது. நுனியில் புஷ்பங்களுடன் கூடிய மரங்களின் கிளைகள், ஹனுமானை பின் தொடர்ந்து செல்வதைப் பார்க்க, பர்வதாகாரமான பெரிய உருவமும், இந்த புஷ்பங்களும் வித்யாசமாக மகா அத்புதமாக தெரிந்தன ஈ.ரப்பசையுடன், ஜீவனுடன் இருந்த மரங்களே உப்பு நீரில் விழுந்தனவே, என்ன காரணம்? மகேந்திர மலையிடம் பயமா? மலையை விட்டு நகர்ந்ததால் கோபிக்கக் கூடும் என்ற எண்ணமா? அதை விட சமுத்திரத்தில் விழுவது மேல் என்று விழுந்தனவா. இளம் தளிர்களும், மொட்டுகளும், மலர்களுமாக ஹனுமானின் மேலும் விழுந்து, மகேந்திர மலையில் மின் மினி பூச்சிகள் வட்டமிடுவது போல, பர்வதாகாரமான சரீரத்தை மறைத்தன. கை கால்களை உதறியதும் அந்த புஷ்பங்கள் கீழே விழுவதைக் காண, நண்பர்கள் வழியனுப்பி விட்டுத் திரும்பியதைப் போல இருந்தது. வாயு உடனே துணை போவது போல இப்படிச் சிதறிய புஷ்பங்களை கீழே நீரில் கொண்டு சேர்த்தது. மேகத்தின் இடையில் மின்னல் தெறித்தாற்போல இந்த புஷ்பங்கள் பல வண்ணங்களில் வானர வீரனின் உடலில் கிடந்தன. இப்பொழுது திடுமென சமுத்திரத்தில் விழுந்து, நக்ஷத்திரக் கூட்டங்களுடன் ஆகாயமே தெரிவது போல சமுத்திரத்தின் மேற்பரப்பில் பரவித் தெரிந்தன. வீசி எறிவது போல தன் புஜங்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி, நின்ற பொழுது இரு பெரும் நாகங்கள் திடுமென சீறி நின்றது போல இருந்தன. தாகம் எடுத்தவன் நீரைக் கண்டது போல, கடல் நீரை விழுங்குவது போல பார்த்தான். அதே போல நிமிர்ந்து ஆகாயத்தையும் கண்களால் அளந்தான். வாயு மார்கத்தில் மின்னல் பரவுவது போல நின்ற ஹனுமானின் கண்கள், மலையின் மேல் கொழுந்து விட்டெரியும் நெருப்பு ஜ்வாலையை ஒத்திருந்தது. நீள் வட்டமான மஞ்சள் நிறக் கண்கள், அணுவிலும், ப்ருஹத்திலும் பிரகாசமாகத் தெரியும் சந்திர சூரியர்களை ஒத்திருந்தது. மூக்கின் நிறம் மட்டும் தனித்து தாமிர வர்ணமாகத் தெரிந்தது, சந்த்யா கால சூரிய மண்டலம் போல. வேகமாக கிளம்பிய சமயம் சுருண்டு கிடந்த வால் மேல் நோக்கி எழும்பியது இந்திரன் தன் த்வஜத்தை உயர்த்தி பிடித்துக் கொண்டு போவதைப் போல இருந்தது. வெண்மையான பற்களையுடைய ஹனுமான், உடலைச் சுற்றி வாலுடன், பாஸ்கரனைச் சுற்றி ஒளி வட்டம் அமைந்தது போல இருந்தான். மலைப் பிளவுகளில் தாமிர தாது தெரிவது போல முதுகுத் தண்டின் கீழ் சிவந்து காணப்பட்டது. வானர சிம்மத்தின் கட்கத்தில் அமுக்கப் பட்ட காற்று, அதன் வேகத்தில் மேகம் போல கர்ஜித்தது. நெருப்புப் பொரி பறப்பது போல ஆகாயத்தில் திடுமென ஒரு தோற்றம் எழவும், யாரோ மத்தாப்பு கொளுத்துவது போல இருந்தது. பறக்கும் பட்டம் போல வானரம் ஆகாயத்தில் அந்தரத்தில் நின்றான். வளர்ந்து பெரிதாகிக் கொண்டு போகும் யானை ஒன்று கயிற்றின் பலத்தில் நிற்பது போல இருந்தது. மேலே பறந்த வானரத்தின் நிழல் கீழே சாகர ஜலத்தில் விழ, படகு போவது போல நிழலின் தோற்றம் சமுத்திரத்தின் மேல் மட்டத்தில் தெரிந்தது. எந்த எந்த திசையில் மாருதன் வேகமாக போகிறானோ, அந்த அந்த இடத்தில் ஜலம் கலக்கப் பட்டு கொந்த ளித்தது. மலைச் சிகரம் போன்ற தன் மார்பு பிரதேசத்தால் சாகரத்தின் அலைகளை முட்டித் தள்ளிக் கொண்டும், கைகளால் அலைகளை அடித்துக் கொண்டும் ஹனுமான் முன்னேறினான். மேலே மேகத்திலிருந்து வந்த காற்றும், கபி கிளப்பிய காற்றும் சேர்ந்து சமுத்திரத்தின் அலகளை கொந்தளிக்கச் செய்தது. சாகரமே நடுங்குவது போல இருந்தது. பெரிய பெரிய அலைகளை கைகளால் தள்ளிக் கொண்டே சென்றான். ஒரு சமயம் ஹனுமான் குனிந்த தலையுடன், அலைகளை எண்ணிக் கொண்டே செல்வது போல இருந்தது. சரத் கால ஆகாயம் போல கடல் காட்சியளித்தது. ஹனுமனால் கிளப்பப் பட்ட நீர்த்திவலைகள் மேகமாக திரண்டு நிற்க, கீழே சமுத்திரத்தின் பரப்பு ஆகாயமோ எனும்படி இருந்தது. திமிங்கிலங்கள், மீன்கள், கூர்மங்கள், நக்ரம், முதலைகள், முதலியவை பரபரப்புடன் இங்கும் அங்குமாக அலைந்தன. சரீரம் உடைய மனிதர்கள், திடுமென வஸ்திரத்தை யாரோ பறித்தால் பரபரப்படைவது போல, திடுமென ஆகாயத்தில் தோன்றி கடலைத் தாண்டும் பெரிய உருவத்தை இதுவரை கண்டறியாத கடல் வாழ் ஜந்துக்கள், பதறின. நாகங்கள், சுபர்ணன், கருடன் என்று ஹனுமானை பார்த்து நடுங்கின. வானர சிம்மத்தின் நிழலே, பத்து யோஜனை விஸ்தீர்ணமும், முப்பது யோஜனை நீளமும், அதுவே கண்டறியாத புதுமையாக இருந்தது. வெண்மையான மேகங்களை கரு மேகம் தொடர்வது போல, வானரத்தை அதன் நிழல் தொடர்ந்து ஜல பரப்பில் விரிந்து தெரிந்தது. எந்த விதமான பிடிமானமோ, ஆதாரமோ இல்லாமல், வாயு மார்கத்தில், தானே ஏற்றுக் கொண்ட ப்ரும்மாண்டமான சரீரத்துடன் வாயு புத்திரன், மகா தேஜஸுடன், கவர்ச்சியுடன் இருந்தான். மலைக்கு இறக்கை முளைத்து விட்டது போல், வேகம் எடுத்துச் சென்ற திசைகளில் பெரும் கடல் த்3ரோணஎ அளவு, (படி என்பதுபோல அளக்கும் அளவு), ஆயிற்று. கூட்டம் கூட்டமாக பறக்கும் பறவைகளின் நடுவில் பக்ஷிராஜனாகத் தெரிந்தான். மாருதன் போலவே அவன் மகனும் மேகங்களை வருத்திக் கொண்டே சென்றான். ஆகாயத்தை துளைத்துக் கொண்டு செல்வது போல மேல் நோக்கி ஒரு சமயம், திரும்ப கீழே விழுந்து விடுவது போல மறு நிமிடம் என்று, தெரிவதும் மறைவதுமாக சந்திரமா போல இருந்தான். வெண்மை, அருண நிறம், நீலம், மஞ்சள் என்று பல வர்ணங்களிலும் விளங்கும் ஆகாயம், கபி இழுக்க, இழுக்க, உடன் வருவது போல வளைந்து கொடுத்ததோ. தேவ, கந்தர்வ, சாரணர்கள், இதற்குள், ஹனுமான் லங்கையை அடைய பெரும் கடலைத் தாவித் தாண்டி கடக்க ஆரம்பித்திருக்கிறான் என்று தெரிந்து, புஷ்பமாரி பொழிந்தனர். வேகமாக செல்பவனை வாழ்த்தினர். சூரியன் அவனை சுடவில்லை. வாயு அவனை நகர்த்தி அலைக்கழிக்கவில்லை. ராம காரியம் நல்ல விதமாக நிறைவேற, வாழ்த்தி அனுப்பினார்கள். ஆகாய மார்கமாக துணிந்து புறப்பட்ட அனுமனை, ரிஷிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வழியனுப்பினர். தேவ, கந்தர்வர்கள், புகழ் பாடினர். நாகர்கள், மகிழ்ந்தனர். யக்ஷ, ராக்ஷஸர்கள், பலவிதமான பறவைகள், ஆகாயத்தில் நிமிர்ந்து பார்த்து, கடலைத் தாண்டும் பெரிய வானரம் களைப்பின்றி செல்வதைக் கண்டனர். இப்படி வானர வீரன் ஆகாயத்தை மறைத்துக் கொண்டு செல்லும் பொழுது, சாகர ராஜன், இக்ஷ்வாகு குலத்திற்கு பந்தம் உடையவன், யோசிக்கலானான். ஹனுமானுக்கு நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமே, எதுவும் செய்யாமல் விட்டால், எல்லோரிடமும் பொல்லாப்பு வரும். நான் இக்ஷ்வாகு குல அரசனால் சகரனால் வளர்க்கப் பட்டவன். இவன் இக்ஷ்வாகு குல மந்திரி. இவன் வருந்தாமலிருக்க வேண்டும். இவன் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு, செல்ல நான் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும். சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, பயணத்தை தொடர்ந்தால், புத்துணர்ச்சி பெற்றவனாக, ஆவான். இப்படி எண்ணி, சமுத்திர ஜலத்தில் மறைந்து இருந்த மைனாகம் என்றும், ஹிரண்ய நாப4 என்றும் அழைக்கப் பட்ட மலையை அழைத்தான். இந்திரனால் விரட்டப் பட்டு கடலில் மூமூழ்கி இருந்த மலை. நக3 சத்தமா, (மலைகளுள் சிறந்தவனே,) பாதாளத்தின் வாயிலை மறைத்துக் கொண்டு நிற்கிறாய். மேலும், கீழும், பக்க வாட்டிலும் நகர உனக்கு சக்தியுள்ளது. அதனால் உனக்கு ஒரு வேலை தருகிறேன். எழுந்திரு. இதோ பார். இந்த வானர வீரன் ஹனுமான், ராம காரியமாக கிளம்பி இருக்கிறான். ஆகாய மார்கமாக வந்து கொண்டிருக்கிறான். இதோ அருகில் வந்து விடுவான். எனக்கு இக்ஷ்வாகு குலத்தின் அரசர்களிடம் நன்றிக் கடன் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் உனக்கும் இக்ஷ்வாகு குலத்தினர் மரியாதைக் குரியவர்கள். உனக்கு நன்மை செய்தவர்கள். அதனால் ஒரு காரியம் செய். செய்ய வேண்டிய கடமையை செய்யாது விட்டால், நல்லவர்கள் கூட கோபம் கொள்வார்கள். இந்த நீருக்கு வெளியில் தெரியும்படி நின்று கொள். உன் மேல் முஹுர்த்த நேரம் இந்த வானர வீரன் நின்று சிரம பரிகாரம் செய்து கொள்ளட்டும். காகுத்ஸனுடைய நல்ல குணம், அவனுடைய தயை, அவனுக்கு நேர்ந்த கஷ்டம், சீதை காணாமல் போனது. இந்த வானரம் ராம காரியமாக கிளம்பியிருக்கிறான், பயணத்தின் சிரமம் இவற்றை நினைத்து, நீ எழுந்திரு. இதைக் கேட்டு, ஹிரண்யனாபனான மைனாகம் நீருக்குள்ளிருந்து புறப்பட்டு மேலே வந்து, ஹனுமானை வரவேற்க தயாராகியது. மலையின் மேல் இருந்த மலை நிறைந்த மரங்களும், பழ மரங்களும் வெளியே தெரியலாயிற்று. சமுத்திர ஜலத்தை கிழித்துக் கொண்டு மேல் எழும்பிய மைனாக மலை மேகங்களை பிளந்து கொண்டு, கடுமையான கிரணங்களுடன் தி3வாகரன் (பகலவன்) உதித்தது போல இருந்தான். சாகரத்தின் கட்டளைப்படி, நாலா புறமும் ஜலம் சூழ்ந்த அந்த பிரதேசத்தில், கால் ஊன்ற தன் தலையையே கொடுக்கத் தயாராக இருப்பது போல, தன் சிகரத்தை மட்டும் வெளியே தெரியும் படி வைத்து நின்று கொண்டான். கின்னரர்களும், மகா உரகங்களும் (நாகங்கள்) வசிப்பதும், உதய சூரியன் போன்ற பிரகாசத்துடன், மேகத்தை தொட்டு விடும் உயரத்துடன், காஞ்சன மயமான சிகரங்கள் திடுமெனெ நீர்ப் பரப்பில், தெரியலாயின. ஹிரண்யனாபன் என்ற பெயருக்கு ஏற்ப, பொன் நிறமான அந்த சிகரங்கள் ஆகாயத்தையே பொன் நிறமாக்கின. நூறு ஆதித்யர்கள் ஒரே சமயத்தில் உதித்த பிரமையை உண்டு பண்ணியது. எதிர்பாராமல் தன் எதிரில் வந்து நின்ற, இந்த மலையை ஹனுமான் ஏதோ இது ஒரு தடை என்றே எண்ணினான். விக்னம், இதை கடந்து செல்ல வேண்டும் என்று மகா வேகமாக தன் மார்பினால் அதை தள்ளிக் கொண்டு சென்றான். தந்தையான மாருதி, மேகங்களை நெட்டித் தள்ளுவது போல. தன்னைத் தள்ளியதிலிருந்தே மகா கபியின் வேகத்தை புரிந்து கொண்ட மைனாகம், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான். ஆகாயத்தில் நின்ற வீரனைப் பார்த்து, மலையுச்சியில் தானும் மனித உருவம் எடுத்துக் கொண்டு நின்றபடி வானரோத்தமா, அரிய செயலைச் செய்கிறாய். சற்று என் சிகரத்தில் தங்கி சிரம பரிகாரம் செய்து கொள். ராகவனுடைய குலத்தில் பிறந்தவர்களால் தான் இந்த சமுத்திரம் உண்டானது. அதனால் சாகரன், ராம காரியத்திற்காக செல்லும் உனக்கு உபசாரம் செய்ய விரும்புகிறான். ஒருவன் செய்த உதவிக்கு பிரதி உதவி செய்தே ஆக வேண்டும். இது பழமையான தர்மம். அதனால் சாகர ராஜன் உனக்கு சேவை செய்து, ராகவ குலத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விழைகிறான். என்னை அனுப்பியிருக்கிறான். மிகவும் மரியாதையுடனும் சிரத்தையுடனும், என்னை உனக்கு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்து கொள்ள இடம் தரும்படி சொல்லியனுப்பினான். நூறு யோஜனை தூரம் கடலைத் தாண்டும் முயற்சியில், வானர ராஜன் இறங்கியிருக்கிறான். உன் சாரலில் தங்கி இளைப்பாறிச் செல்லட்டும் என்றான். அதனால் ஹரிசார்தூ3லா, சற்று நில். இதோ, காய்கறி பழ வகைகள். இவைகளைப் புசித்து, சிரம பரிகாரம் செய்து கொண்டு நாளை செல்வாய். வானரனே, எங்களுக்கும் உன்னுடன் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. மூன்று உலகிலும் தேடினாலும் உன்னைப் போல வானரங்களை காண்பது அரிது. மாருதாத்மஜா, நீ பூஜிக்கத் தகுந்த அதிதி. சாதாரணமாகவே, அதிதி என்று யார் வந்தாலும் உபசரிக்க வேண்டியது சாதாரண தர்மம். அதிலும், உன் போன்றவர்களை அதிதியாக பெறுவதே பாக்கியம். கபிகுஞ்சரா, நீயோ மாருதனின் புதல்வன். அவனைப் போலவே ஆற்றலும், வேகமும் உடையவன். உன்னை நான் உபசரித்தால் உன் தந்தையை உபசரித்தது போலாகும். இப்படி நான் உன்னை உபசரிக்க விரும்புவதன் காரணம் சொல்கிறேன் கேள். முன்பு க்ருத யுகத்தில் மலைகள் இறக்கைகளுடன் இருந்தன. நாலா திசைகளிலும் அவை சென்றன. கருடனோ, காற்றோ, எனும்படி வேகமாக சென்றன. இப்படி இவர்கள் செல்லும் பொழுது தேவர்களும், ரிஷிகளும், மற்ற ஜீவராசிகளும் பயந்து நடுங்கின. எந்த நிமிடமும் விழலாம் என்ற சந்தேகம். இதனால் சஹஸ்ராக்ஷன் கோபம் கொண்டான். தன் வஜ்ராயுதத்தை எடுத்து கிடைத்த இடத்தில் பர்வதங்களின் இறக்கையை வெட்டி எறிந்தான். என்னை நோக்கி வஜ்ராயுதத்தை தூக்கிக் கொண்டு வந்த சமயம், உன் தந்தையான வாயுவினால் தள்ளப்பட்டு இந்த உப்புக் கடலினுள் போடப் பட்டேன். என் இறக்கைகளோடு உன் தந்தையினால் ரக்ஷிக்கப் பெற்றேன். அதனால் உன்னை உபசரிக்கிறேன். நீ என்னால் உபசரிக்கப் பட வேண்டியவனே. நமக்குள் உள்ள இந்த சம்பந்தமும் குறிப்பிடத் தக்கதே. ஆகையால், சாகரத்தில், என்னுடைய இந்த விருந்தோம்பலை, உபசாரத்தை ஏற்று, இந்த சிகரத்தில் சிரம பரிகாரம் செய்து கொள். உன்னைக் கண்டதில் மிக மகிழ்ச்சியடைகிறேன். என்று இவ்வாறு மைனாக பர்வதம் சொல்வதைக் கேட்ட ஹனுமான், பர்வதமே, நீ பேசியதிலேயே ஆதித்யம் (விருந்தோம்பல்) ஆகி விட்டது. நானும் மகிழ்ச்சியடைந்தேன். தவறாக எண்ண வேண்டாம். வீணாக கவலைப் படாதே. என் காரியம் அவசரமானது. இதோ, பொழுதும் சாய்ந்து கொண்டிருக்கிறது. நான் பிரதிக்ஞை செய்து இருக்கிறேன். வழியில் எங்கும் தங்கக் கூடாது என்பது என் விரதம், என்று சொல்லி கைகளால் மலையைத் தள்ளி விட்டு, சிரித்துக் கொண்டே ஆகாயத்தில் ஏறி தன் பயணத்தைத் தொடர்ந்தான். பர்வதமும், சாகரமும், மதிப்பும் மரியாதையுமாக ஏறிட்டு நோக்கி, ஆசிகளும் வழங்க, இன்னும் வேகமாக மேல் நோக்கிச் சென்று, தன் தந்தையின் மார்கத்தில், விமலமான வானத்தில் பயணித்தான். மேலே இருந்தபடி மலையைக் கண்டு, தன் போக்கில் வேகமாக செல்லலானான். இது ஹனுமானின் இரண்டாவது அரிய செயல். இதை சுரர்களும், சித்தர்களும் வியந்து பாராட்டினர். தேவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். மற்றும் அங்கு இருந்த அனைவரும் இந்த செயலால் வியப்பு எய்தினர். சஹஸ்ராக்ஷன், தானே குரல் தழ தழக்க, ஹிரண்யனாபன் எனும் மைனாக மலையை பாராட்டினான். உன் உபசாரம் செய்யும் இந்த உயரிய நோக்கமே பாராட்டுக்குரியதே. நான் உனக்கு அபயம் அளிக்கிறேன். இப்படியே இரு சௌம்யனே,. ஹனுமானுக்கு நீ உதவி செய்தாய். அரிய செயலைச் செய்யத் துணிந்த வீரனுக்கு இதுவும் ஒரு உதவியே. பயப்பட வேண்டிய இந்த நூறு யோஜனை தூரத்தை அனாயாசமாக கடக்கத் துணிந்திருக்கிறான். ராமனுடைய நன்மைக்காக, தசரத மகனின் காரியமாக இந்த வானரம் இந்த பெரும் செயலைச் செய்யக் கிளம்பியிருக்கும்பொழுது, நாமும் நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டியது அவசியமே. உன் செயலால் நான் உன்னிடமும் திருப்தியடைந்தேன். இப்படி சஹஸ்ராக்ஷனும் பாராட்ட, மைனாக பர்வதம் பெரும் சந்தோஷம் அடைந்தது. உபரியாக பெற்ற வரதானம், இதனால் மலை திரும்ப கடலினுள் மூழ்காமல், அப்படியே நின்றது. ஒரு முஹுர்த்த நேரம், எந்த வித தடங்கலும் இன்றி, ஹனுமான் தன் பயணத்தை தொடர்ந்தான். அச்சமயம் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், சுரஸா என்ற நாக மாதாவை அணுகி, ஒரு திட்டத்தை செயல் படுத்த அவள் உதவியைக் கோரினர். இந்த வாதாத்மஜன், ஸ்ரீமான், சாகரத்துக்கு மேல் பறக்கிறான். ஹனுமான் என்ற பெயருடைய வானரம். நீ முஹுர்த்த நேரம் அவனுக்கு தடை உண்டு பண்ணுவாய். பர்வதம் போன்ற உருவமும், கோரமான ராக்ஷஸ ரூபத்தை எடுத்துக் கொண்டு, கூர்மையான பற்களும், மஞ்சள் நிறக் கண்களும், அகலமாக திறந்த வாயுடன் அவன் முன் நின்று தடுக்கப் பார். அவன் பலத்தை எடை போட விரும்புகிறோம். பராக்ரமம் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம் என்றனர். உன்னை உபாயத்தால் வெற்றி கொள்வான் அல்லது வாட்டமடைவான் என்றனர். அவளும் சம்மதித்து, தேவர்களின் விருப்பத்துக்கு இணங்க சமுத்திர மத்தியில் பயங்கரமான ராக்ஷஸ உருவத்தை எடுத்துக் கொண்டு, கண்டவர் நடுங்கும்படியான தோற்றத்துடன், தாவித் தாண்டிச் செல்லும் ஹனுமானை நாலாபுறமும், சுற்றி வளைத்தபடி கொக்கரித்தாள். வானரர்ஷப4, எனக்கு ஆகாரமாக வந்து சேர்ந்தாய். விதி தான் உன்னை எனக்கு கொண்டு வந்து தந்திருக்கிறது. நான் உன்னை சாப்பிடப் போகிறேன். என் வாயில் நுழை எனவும், பணிவுடன் ஹனுமான் சொன்னான். ராமன் என்ற ராஜகுமாரன், தசரத ராஜாவின் மைந்தன், தண்டகாவனம் வந்தான். சகோதரன் லக்ஷ்மணனுடனும், மனைவி சீதையுடனும் வசித்து வந்தான். வேறு ஏதோ காரணமாக ராக்ஷஸர்களுடன் விரோதம். அதை வைத்து அவன் மனைவி சீதையை ராவணன் அபகரித்தான். அவளிடம் நான் ராமனின் ஆணைப்படி தூது செல்கிறேன். விஷயவாஸினி, நீயும் ராமகாரியத்திற்கு சகாயம் செய். அல்லது நான் போய் சீதையைக் கண்டு ராமனிடம் சொல்லி, என் கடமையை முடித்தவுடன் நானே உன் வாயில் வந்து விழுகிறேன். இது சத்யம். நான் பிரதிக்ஞை செய்கிறேன். வார்த்தை மீற மாட்டேன். இதைக் கேட்டு நாகமாதா, வானரத்தின் பலத்தை எடை போடும் உத்தேசத்துடன் என் வாயில் விழுந்து புறப்பட்டுச் செல்வாய். வானரமே, இன்றே, இப்பொழுதே. எனக்கு இப்படி ஒரு வரம் ப்ரும்மா கொடுத்திருக்கிறார். என்று சொல்லியபடி வேகமாக வளர்ந்து தன் வாயை பூதாகாரமாக விரித்து அவன் முன் நின்றாள். ஹனுமானும் ஆத்திரத்துடன், சரி, என்னை தாங்கும் அளவு உன் வாயை அகலமாக விரித்துக் கொள், என்றான். சுரஸா பத்து யோஜனை தூரம் விஸ்தாரமாக தன் வாயை திறக்கவும், ஹனுமான் தானும் அதே அளவு பெரிதாக வளர்ந்தான். மேகம் போல எதிரில் நின்றவனைப் பார்த்து சுரஸா மேலும் வளர்ந்து இருபது யோஜனை தூரம் பெரிதாக வாயைத் திறந்தாள். வாயு புத்திரன் அவள் மேலும் மேலும் வளருவதை பார்த்துக் கொண்டே இருந்தவன், சட்டென்று தன் உருவத்தை குறுக்கி, மகா மேகம் போல இருந்தவன், கட்டை விரல் மாத்திரமாகத் ஆகி, அவள் வாயில் புகுந்து, கிழித்துக்கொண்டு வெளியே வந்து அந்தரிக்ஷத்தில் நின்றவன் தா3க்ஷாயணி, நமஸ்காரம். உன் வாயில் புகுந்து வெளி வந்து விட்டேன். நான் வைதேஹியைத் தேடி போகிறேன். உன் வரமும் சத்யமாயிற்று. ராகு முகத்திலிருந்து விடுபட்ட சந்திரன் போல வெளியே வந்து நின்ற ஹனுமானை, தன் சுய உருவில் சுரஸா வாழ்த்தினாள். ஹரிஸ்ரேஷ்ட, சௌம்யனே, சௌகர்யமாக போய் வா. வைதேஹியை அழைத்துக் கொண்டு வந்து ராகவனோடு சேர்த்து வை. இந்த மூன்றாவது அரிய செயலைப் பார்த்து உலகமே வியந்தது. சாது, சாது என்று ஜீவ ஜந்துக்கள் அனைத்தும் புகழ்ந்தன. கருடன் போன்ற வேகத்துடன் ஹனுமான் வான வெளியில் திரும்பவும் பறக்கலானான். பக்ஷிகளும், நீர்த் திவலைகளும் ஒன்றாக பறந்தன. சந்திர சூரியர்கள் பாதையில் ஹனுமான் கண்ட காட்சிகள் புதுமையானவை. நடந்து செல்லும் ஐராவதம் சிம்மம், யானை, சார்தூலம், பறவைகள், பாம்புகள் இவற்றின் உருவ அமைப்பில் வாகனங்களில் செல்பவர், விமானங்களில் செல்பவர், வஜ்ரம் அடித்தது போல வெப்பம் தாக்கும் முக்யமான பாதை, ஸ்வர்கம் செல்லும் அளவு புண்யம் செய்த மகாத்மாக்கள் வசிக்கும் அல்லது நடமாடும் பாதை, சித்ரபானு வணங்கும், (ஹவ்யவாஹண-ஹவ்யம் எனும் தேவர்களின் உணவை எடுத்துச் செல்லும் அக்னியின் பாதை,) க்3ரஹ, நக்ஷத்திர, சந்திர, சூரிய, தாரகைகள் நிறைந்ததும், மகரிஷிகள், கந்தர்வ, நாக, யக்ஷர்கள் சூழ்ந்திருப்பதும், விஸ்வாவசு வசிக்கும் விசாலமான, விமலமான இடம், தேவராஜனின் யானை கம்பீரமாக நடக்கும் சுபமான சந்திர, சூரிய பாதை (மார்கம்) இதைத் தாண்டி ப்ரும்மாவால் நிர்மாணிக்கப்பட்ட மங்களமான வாயு மார்கத்தில் ஹனுமான் நுழைந்தான். வித்யாதர கணங்கள் சிறப்பாக பூஜைகள் செய்து கொண்டிருந்தனர். கருடன் போல பறந்தான். தன் தந்தையைப் போல மேகங்களை கிழித்து சீறிக் கொண்டு சென்றான். வானத்தில் வண்ணங்கள் மாறி மாறி காட்சியளித்தன. சில சமயம் அக3ருவின் புகை போன்ற நிறத்திலும், சிவப்பு, மஞ்சள், வெண்மை என்றும் மாறி, மாறி கபியின் வேகத்தில் மேகம் நகர, வானத்தின் நிறம் தெரிந்தது. மேலே ஏறியும், இறங்கியும் சென்ற ஹனுமான், மழைக்கால சந்திரன் போல சில சமயம் மறைந்தும், சில சமயம் வெளிப்பட்டும், கீழேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த கண்களுக்குத் தெரிந்தான். எங்கும் மாருதாத்மஜனே நிறைந்து இருந்தான். பார்க்கும் இடம் எல்லாம், இதோ, இதோ எனும்படி நீளமான இறக்கையுடன் ஒரு பர்வத ராஜன் ஏறி இறங்கி வானத்தில் விளையாடுவது போல தோற்றமளித்தான். இப்படி நிச்சைந்தையாக பறந்து கொண்டிருந்த ஹனுமானைப் பார்த்து சிம்ஹிகா என்ற ராக்ஷஸி, தன் மனதில் நினைத்தாள். இஷ்டம் போல வளரக் கூடியவள், பெரிதாக வளர்ந்து வெகு நாட்களுக்குப் பின் இன்று நான் திருப்தியாக சாப்பிடப் போகிறேன் என்று எண்ணிக் கொண்டாள். ஏதோ ஒரு மிகப் பெரிய ஜீவன் வேகமாக வருகிறது. என் பசியைத் தீர்க்கத்தான் வருகிறது போலும் என்று நினைத்தாள். இப்படி எண்ணிக் கொண்டே ஹனுமானின் நிழலை இறுக்கிப் பிடித்தாள். தன் நிழல் பிடிக்கப் பட்டு கதியில் தடை உண்டாவதைக் கண்டு வானரம் யோசித்தது. என் பராக்ரமத்தில் திடீரென இது என்ன தடை? எதிர்க் காற்றினால் தாக்கப் பட்டு அலை பாயும் கப்பல் போல என் வேகத்தை ஏதோ சக்தி எதிர்த்து தடுக்கிறதே. குறுக்காக, மேலே கீழே என்று எல்லா திசைகளிலும் பார்வையை ஓட விட்ட வானர வீரன், ஏதோ ஒரு பெரிய ஜீவன் உப்புக் கடலின் பரப்பில் தெரிவதைக் கண்டான். கோரமாக, காணத்தகாத உருவமும், அதன் இருப்பிடமும், வானர ராஜன் சுக்ரீவன் சொன்னது சரிதான். நிழலைப் பிடித்து இழுக்கும் ராக்ஷஸ ஜாதியைச் சார்ந்தது தான் இது. சிம்ஹிகா என்று சுக்ரீவன் சொன்னது இவளைத்தான் என்று நொடியில் புரிந்து கொண்டவன், மழைக் கால மேகம் போல தன் உருவத்தை மேலும் பெருக்கிக் கொண்டான். கீழேயிருந்து ராக்ஷஸியும், அந்த வளர்ச்சிக்கு ஏற்ப. தன் வாயையும் அகல பிளந்து கொண்டாள். பாதாளம் வரை ஆக்ரமித்துக் கொண்டாற் போல நின்றாள். இடி இடிப்பது போல சிரித்தாள். வானரத்தை நெருங்கி வந்தாள். அவளது பெரிய உருவத்தையும், பிளந்த வாயையும் வைத்து அவள் உடலின் மற்ற பாகங்களை ஊகித்துக் கொண்ட ஹனுமான், திடுமென தன் உடலை குறுக்கிக் கொண்டு அவள் வாயினுள் நுழைந்தவன், தன் நகத்தால் அவள் மர்மஸ்தானத்தை கிழித்து அவளை வீழ்த்தி விட்டு மனோ வேகத்தில் வெளியே வந்தான். சித்த சாரணர்கள், அவள் வாயில் நுழைந்தவனைக் கண்டு கவலையுடன் காத்திருந்தனர். தீர்மானமாக, அதே சமயத்தில் தாக்ஷிண்யத்தோடு உதறி தள்ளி விட்டு, வான வெளியில் திரும்பவும் தன் பெரிய சரீரத்துடன் பயணத்தைத் தொடங்கினான். அவள் தடாலென்று உப்புக் கடலில் விழுந்தாள். ஸ்வயம்பூவான ப்ரும்மாவே, அவள் முடிவுக்கு ஹனுமானை பயன் படுத்திக் கொண்டிருந்தார் போலும். ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஜீவ ராசிகள், அனுமனின் கையால் கிழிபட்டு கீழே விழுந்த அவளைப் பார்த்து வானரேந்திரனை வாழ்த்தினர். சாது சாது என்றனர். இன்று நீ மிகப் பெரிய காரியம் சாதித்திருக்கிறாய். இந்த பெரிய ஜீவன் உன் கையால் வதம் செய்யப்பட்டு மடிந்தது அரிய செயல். மேலும் எதுவும் தடையின்றி நீ உன் காரியத்தை முடிக்க வாழ்த்துகிறோம். ஸ்ம்ருதி, த்ருதி, மதி, தா3க்ஷ்யம்- நல்ல ஞாபக சக்தி, திடமான கொள்கை, புத்தி, சாமர்த்யம் இந்த நான்கு குணங்களும் உன்னிடம் பொருந்தியிருப்பது தான் இப்படி நீ வெற்றி வீரனாக செயல்படக் காரணம், இந்த நான்கு குணங்கள் கொண்டவன் யாரும் தான் எடுத்துக் கொண்ட காரியத்தில் பின் வாங்குவதில்லை. இவர்கள் இவ்வாறு மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ்த்தி வழியனுப்பவும், தன்னம்பிக்கையுடன், பன்னகம் எனும் பாம்பைத் தின்னும் கருடன் போல வான வெளியில் தாவிக் கிளம்பினான். வெகு தூரம் பிரயாணம் செய்து நூறு யோஜனை தூரத்தில் முடிவில் அடர்ந்து இருந்த வனத்தைக் கண்டான். தன் வேகத்தை குறைக்காமலேயே, மரங்களும், பலவிதமான தாவரங்களும் நிறைந்து இருந்த அந்த அழகிய வளமான பிரதேசத்தை கண்ணுற்றான். சாகா ம்ருகம், மரக் கிளைகளில் வாழும் விலங்கு இனம் எனும் வானர ஜாதியைச் சேர்ந்த ஹனுமான் அந்த அழகிய தீவைக் கண்டான். மலய மலை, உபவனங்கள் இவற்றைக் கண்டான். சாகரத்தை, சாகரத்தின் கரையை, கரையில் வளரும் விசேஷமான மரங்களை சாகரத்தின் பத்னிகள் எனும் நதிகளின் முகத்வாரத்தையும் கண்டபடி இறங்கினான். தன் உருவை, மகா மேகம் போல வானத்தின் பரவியிருந்த பெரும் உருவத்தை ராக்ஷஸர்கள் பார்த்தால் சந்தேகம் கொள்வர். அல்லது ஆவலுடன் என்னை கூர்ந்து கவனிப்பர். குதூகலத்துடன் யார் இது என்று விவரம் அறிய முயலுவர். தேவையில்லாமல் சங்கடங்கள் வரலாம். என்று எண்ணி. உடனே தன் உருவத்தை குறுக்கிக் கொண்டு, மேலும் சிறியதாக ஆக்கிக் கொண்டு, பலி சக்ரவர்த்தியின் வீர்யத்தை அடக்க வந்த ஹரி மூன்று அடிக்குள் உலகத்தை அளந்தது போல, வாமனனாக நின்றான். பலவிதமான ரூபங்களை எடுத்தும் அழகு குன்றாமல் நின்றவன், சமுத்திர தீரத்தில் வேறு யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத கார்யாகாரியம் அதன் பலன்கள் இவற்றை ஆராய்ந்து தன் உருவை நிர்ணயித்துக் கொண்டான். அதன் பின் அந்த பெரிய மலையில் சிகரத்தில் இருந்து குதித்து கீழே இறங்கினான். கேதக, உத்துங்க, நாரிகேள என்று பலவிதமான மரங்களைக் கண்டான். இந்த மரங்களின் வளர்ச்சியே அசாதாரணமாக இருந்தது. இலங்கையை அடைந்து மலையுச்சியில் இருந்து சமுத்திரத்தை நோக்கினான். அருகில் தென்பட்ட பக்ஷிகளையும், மிருகங்களையும் பயமுறுத்தியபடி, மலையின் மேல் சஞ்சரித்தான். தானவர்களும், பன்னகர்களும், நிரம்பிய அந்த சாகரத்தை தன் பலத்தால் தாண்டி, தாவி குதித்து, மீன்களும் மகரங்களும் நிரம்பிய கடலைக் கடந்து பெருங்கடலின் கரையில் நின்று, அமராவதி போல இருந்த இலங்கை நகரை ஏறிட்டு நோக்கினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், சாகர லங்க4ணம் என்ற முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
த்யானம்
(பாட முதலில் சொல்ல வேண்டியவை)
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோபசாந்தயே.
வாகீசாத்யா: சுமனஸ: சர்வார்தானாம் உபக்ரமே
யம் நத்வா க்ருத க்ருத்யா: ஸ்யு: தம் நமாமி கஜானனம்.
தோபிர் யுக்தா சதுர்பி: ஸ்படிகமணிமயீம் அக்ஷ மாலாம் ததானா
ஹஸ்தேனைகேன பத்மம் சிதமபி சுகம் புஸ்தகம் சாபரேன,
பாஸா குந்தேந்து சங்கஸ் ஸ்படிக மணி நிபா பாசமானாஸ மானா
ஸா மே வாக் தேவதேயம், நிவஸது வதனே சர்வதா சுப்ரசன்னா.
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்
வால்மீகேர் முனி சிம்ஹச்ய கவிதா வன சாரிண:
ஸ்ருன்வன் ராம கதா நாதம் கோ ந யாதி பாராம் கதிம்.
ய: பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம்
அத்ருப்த்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸமகல்மஷம்.
கோஷ்பதீக்ருத வாராசிம், மசகீ க்ருத சாகரம்
ராமாயண மஹா மாலா ரத்னம் வந்தே அனிலாத்மஜம்
அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீ சோக நாசனம்
கபீசம் அக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்
உல்லங்ய சிந்தோ: சலிலம் சலீலம் ய: சோக வஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராராஞ்ஜலிர் ஆஞ்ஜனேயம்
ஆஞ்சனேயம் அதி பாடலானனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தரு மூல வாசினம் பாவயாமி பவமான நந்தனம்
யத்ர யத்ர ரகு நாத கீர்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலிம்,
பாஷ்பவாரி பரிபூரண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானர யூத முக்யம் ராம தூதம் சிரஸா நமாமி
ய: கர்ணாஞ்சலி சம்புடைர் அஹரஹ: சம்யக் பிபத்யாதராத்
வால்மீகேர் வதனாரவிந்த கலிதம் ராமாயணாக்யம் மது
ஜன்ம வ்யாதி ஜரா விபத்தி மரணை: அத்யந்த: சோபத்ரவம்
சம்சாரம் ஸ் விஹாய கச்சதி புமான் விஷ்னோ: பதம் சாஸ்வதம்
ததுபகத சமாஸ சந்தி யோகம் சம மதுரோபனதார்த வாக்ய பத்தம்
ரகுவர சரிதம் முனிப்ரணீதம் தஸ சிரஸஸ்ய வதம் நிசாமயத்வம்
வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ராசேதஸாதாஸீத் சாத் ராமாயணாத்மனா
வால்மீகிர் கிரி சம்பூதா ராம சாகர காமினி
புனாதி புவனம் புண்யா ராமாயண மஹா நதி.
வைதேஹீ ஸஹிதம் சுரத்ரும தலே ஹைமே மஹா மண்டபே,
மத்யே புஷ்பகமாஸனே மணி மயே வீராஸனே சுஸ்திதம்,
அக்ரே வாசயதி ப்ரபஞ்சன சுதே தத்வம் முனிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபிர் பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம
வாமே பூமி சுத புரச்ச ஹனுமான் பச்சாத் சுமித்ரா சுத:
சத்ருக்னச்ச பரதச்ச பார்ச்வ தலயோ:வாய்வாதி கோனேஷH ச,
சுக்ரீவச்ச விபீஷணச்ச யுவராட் தாரா சுதோ ஜம்பவான்,
மத்யே நீல சரோஜ கோமல ருசிம், ராமம் பஜே ச்யாமளம்
நமோஸ்து ராமாய ஸலமணாய, தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை,
நமோஸ்து ருத்ரேந்திர யமானிலேப்ய: நமோஸ்து சந்த்ரார்க மருத் கணேப்ய:
யோ தண்டகாரண்ய நிசாசரேந்த்ரான் கோதண்ட லீலா விஷயே சகார,
வேதண்ட சுண்டாயத பாஹH தண்ட: கோதண்ட பாணிர் குல தைவதம் ந:
குல தைவதம் அஸ்மாகம் கோதண்ட சர மண்டிதம்,
இஷ்ட தைவதம் அஸ்மாகம் இக்ஷ்வாகு குல நந்தனம்
க்யாத: ராம தூத: பவன தனு பவ: பிங்கலக்ஷ: சிகா வான்,
சீதா சோகாபஹாரி தசமுக விஜயீ, லக்ஷ்மனண: ப்ராண தாதா,
ஆனேதா பேஷஜாத்ரே: லவண ஜலனிதே: லங்கனே தீக்ஷிதோ ய:
வீர ஸ்ரீமான் ஹனூமான் மம மனசி வஸன் கார்ய சித்திம் தனோது.
புத்திர்பலம் யஸோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா,
அஜாட்யம் வாக் படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே, திண்மையும் தீமையும் சிதைந்து தேயுமே,
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே, இம்மையே இராம எனும் இரண்டெழுத்தினால்.
சுருதி ஸ்ம்ருதி புராணாணாம் ஆலயம் கருணாலய்ம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்.
— : —
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
த்யானம்
(பாட முதலில் சொல்ல வேண்டியவை)
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோபசாந்தயே.
வாகீசாத்யா: சுமனஸ: சர்வார்தானாம் உபக்ரமே
யம் நத்வா க்ருத க்ருத்யா: ஸ்யு: தம் நமாமி கஜானனம்.
தோபிர் யுக்தா சதுர்பி: ஸ்படிகமணிமயீம் அக்ஷ மாலாம் ததானா
ஹஸ்தேனைகேன பத்மம் சிதமபி சுகம் புஸ்தகம் சாபரேன,
பாஸா குந்தேந்து சங்கஸ் ஸ்படிக மணி நிபா பாசமானாஸ மானா
ஸா மே வாக் தேவதேயம், நிவஸது வதனே சர்வதா சுப்ரசன்னா.
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்
வால்மீகேர் முனி சிம்ஹச்ய கவிதா வன சாரிண:
ஸ்ருன்வன் ராம கதா நாதம் கோ ந யாதி பாராம் கதிம்.
ய: பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம்
அத்ருப்த்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸமகல்மஷம்.
கோஷ்பதீக்ருத வாராசிம், மசகீ க்ருத சாகரம்
ராமாயண மஹா மாலா ரத்னம் வந்தே அனிலாத்மஜம்
அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீ சோக நாசனம்
கபீசம் அக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்
உல்லங்ய சிந்தோ: சலிலம் சலீலம் ய: சோக வஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராராஞ்ஜலிர் ஆஞ்ஜனேயம்
ஆஞ்சனேயம் அதி பாடலானனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தரு மூல வாசினம் பாவயாமி பவமான நந்தனம்
யத்ர யத்ர ரகு நாத கீர்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலிம்,
பாஷ்பவாரி பரிபூரண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானர யூத முக்யம் ராம தூதம் சிரஸா நமாமி
ய: கர்ணாஞ்சலி சம்புடைர் அஹரஹ: சம்யக் பிபத்யாதராத்
வால்மீகேர் வதனாரவிந்த கலிதம் ராமாயணாக்யம் மது
ஜன்ம வ்யாதி ஜரா விபத்தி மரணை: அத்யந்த: சோபத்ரவம்
சம்சாரம் ஸ் விஹாய கச்சதி புமான் விஷ்னோ: பதம் சாஸ்வதம்
ததுபகத சமாஸ சந்தி யோகம் சம மதுரோபனதார்த வாக்ய பத்தம்
ரகுவர சரிதம் முனிப்ரணீதம் தஸ சிரஸஸ்ய வதம் நிசாமயத்வம்
வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ராசேதஸாதாஸீத் சாத் ராமாயணாத்மனா
வால்மீகிர் கிரி சம்பூதா ராம சாகர காமினி
புனாதி புவனம் புண்யா ராமாயண மஹா நதி.
வைதேஹீ ஸஹிதம் சுரத்ரும தலே ஹைமே மஹா மண்டபே,
மத்யே புஷ்பகமாஸனே மணி மயே வீராஸனே சுஸ்திதம்,
அக்ரே வாசயதி ப்ரபஞ்சன சுதே தத்வம் முனிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபிர் பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம
வாமே பூமி சுத புரச்ச ஹனுமான் பச்சாத் சுமித்ரா சுத:
சத்ருக்னச்ச பரதச்ச பார்ச்வ தலயோ:வாய்வாதி கோனேஷH ச,
சுக்ரீவச்ச விபீஷணச்ச யுவராட் தாரா சுதோ ஜம்பவான்,
மத்யே நீல சரோஜ கோமல ருசிம், ராமம் பஜே ச்யாமளம்
நமோஸ்து ராமாய ஸலமணாய, தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை,
நமோஸ்து ருத்ரேந்திர யமானிலேப்ய: நமோஸ்து சந்த்ரார்க மருத் கணேப்ய:
யோ தண்டகாரண்ய நிசாசரேந்த்ரான் கோதண்ட லீலா விஷயே சகார,
வேதண்ட சுண்டாயத பாஹH தண்ட: கோதண்ட பாணிர் குல தைவதம் ந:
குல தைவதம் அஸ்மாகம் கோதண்ட சர மண்டிதம்,
இஷ்ட தைவதம் அஸ்மாகம் இக்ஷ்வாகு குல நந்தனம்
க்யாத: ராம தூத: பவன தனு பவ: பிங்கலக்ஷ: சிகா வான்,
சீதா சோகாபஹாரி தசமுக விஜயீ, லக்ஷ்மனண: ப்ராண தாதா,
ஆனேதா பேஷஜாத்ரே: லவண ஜலனிதே: லங்கனே தீக்ஷிதோ ய:
வீர ஸ்ரீமான் ஹனூமான் மம மனசி வஸன் கார்ய சித்திம் தனோது.
புத்திர்பலம் யஸோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா,
அஜாட்யம் வாக் படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே, திண்மையும் தீமையும் சிதைந்து தேயுமே,
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே, இம்மையே இராம எனும் இரண்டெழுத்தினால்.
சுருதி ஸ்ம்ருதி புராணாணாம் ஆலயம் கருணாலய்ம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்.
— : —
முன்னுரை
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் மூழ்கி எழுந்து முத்துக் குளளத்தவர்கள் பலர் இருக்க, இது என்ன ஆசை என்று தோன்றலாம். விரிபோணி வர்ணம் எம்.எஸ். பாடுவதைக் கேட்ட பின்னும் மற்றவர் பாடி கேட்க வேண்டாம் தான். அதனால் விடுகிறோமா. நம் வீட்டு குழந்தை ஆ…அ..அ என்று ஆரம்பித்தால் நாம் ரசிப்பது தனி தான். பல நாட்களாக ரசித்த பல விஷயங்கள் மொழி காரணமாக புரியாமல் ரசிக்க முடியாமல் போனவர்களுடன் என் ரசனையை பகிர்ந்து கொள்வது தான் இந்த முயற்சியின் பயன், காரணம் எல்லாமே. முடிந்த வரை, வார்த்தைக்கு வார்த்தை, தமிழாக்கியிருக்கிறேன். பல இடங்களளல் சம்ஸ்க்ருத மொழிக்கு சிறப்பான சொற்றொடர்கள், உதாரணமாக, மைதிலீம் ஜனகாத்மஜாம், லக்ஷ்மிசம்பன்னோ லக்ஷ்மண, வாக்ய கோவிதஈ ஹனுமான், என்று அவர்கள் குணங்களை சேர்த்தே சொல்லும் வழக்கு, தமிழில் மிகையாக படலாம். வரவர்ணினி, அனவத்யாங்கா-நல்ல நிறமுடையவள், கொடி போன்ற உடலுடையவள், சிற்றிடையாள் என்ற சொற்கள் திரும்பத் திரும்ப எதற்கு என்றும் தோன்றலாம். படிக்க உறுத்தல் இல்லாத வகையில் இந்த பெயர் உரிச்சொற்கள், வரும்படி முயற்சி செய்திருக்கிறேன். இயற்கையை வர்ணிக்கும் பொழுது முனிவர், தனி ஆவர்த்தனமே வாசித்திருக்கிறார். வனத்தை (வனம்-நீர், காடு என்று இரு பொருள்). கண்ட உடனேயே, கவிக்கு உற்சாகம் கரை புரண்டோடும் போலும். வர்ணனை தான். இந்த வர்ணனைகளைப் படித்து விட்டு, நீர் நிலைகளுக்குச் செல்லலாம்.
பகீரதன் கங்கையை அழைத்துச் செல்லும் பொழுது, நினைத்த காரியத்தை சாதித்த பகீரதன், முன்னால் யானை மேல், நிச்சிந்தையாக போக, தாரை தம்பட்டங்களோடு பின்னால் வரும் மற்ற ஜனங்களையும் நம்மால் கண்ணெதிரில் உருவகப் படுத்தி காண முடியும்.
அகல்யா சரித்திரத்தில் விஸ்வாமித்திரர், அபலையான ஒரு பெண்ணிற்காக இரங்குவதும், தன் உணர்வை சிறுவனான ராமனிடம் பிரதிபலிக்கச் செய்வதும், பெரியவரான, அனுபவம் மிக்க ஒருவரின் இயல்பை மிக அழகாக வௌவௌப்படுத்தும். அந்த பாத்திரம் இப்படித் தான் இருக்க முடியும் என்று நம்மிடம் அவர் பேரில் மரியாதையை தோற்றுவிக்கிறது.
பரதன், ஊராரையும் அழைத்துக் கொண்டு ராமனை திரும்ப அழைத்து வருகிறேன் என்று கிளம்பும் பொழுது, ராஜா பரதன் செல்ல சாலைகள் போடுவதும், வழிகளளல் கிணறுகள் வெட்டுவதும், இருந்த மரங்களை அப்புறப்படுத்துவதும், புது மரங்களை நடுவதும், இந்த ஏற்பாடுகள் ரசிக்கத் தகுந்தனவை என்பதோடு, என்ன ஒரு முன் யோசனை, முன் ஏற்பாடுகள் என்று வியக்கவே தோன்றுகிறது.
சித்ர கூட மலையில் வாஸ்து சாஸ்திரப்படி குடிசையை அமைத்துக் கொண்டு, ராமர் தானே மகிழ்ந்து வனவாசம் வந்ததும் நல்லதாயிற்று, உன்னுடன் இந்த இடங்களை காண்பதே மகிழ்ச்சி தருகிறது, என்று சீதையிடம் சொன்னவர், கூட்டமாக பரதன் வந்து யானை குதிரைகள் நடமாடி, சாணமும், அழுக்கும் அந்த இடத்தையே நாசமாக்கிவிட்டதையும் சீதையிடம் சொல்கிறார். இந்த இடத்தை விட்டு போகலாம் என்று முடிவு செய்வதை ரசிக்கலாம்.
மாரீசன் அலறியவுடன், பயந்து திரும்பி வரும் அந்த அவசரத்திலும், குடும்பத் தலைவன் அடுத்த வேளைக்கான உணவு பிரச்னையை நினைப்பது போல, ராமர், சிறிய மிருகங்கள் இரண்டு மூன்று என்று பிடித்துக் கொண்டு திரும்புவதை மறக்காமல் எழுதிய கவியை பாராட்டலாம்.
சிறை இருந்த காலத்திலும், உடன் காவல் இருந்த ராக்ஷஸிகளையே தன் உற்ற தோழிகளாகிக் கொண்டு விட்டாள் ஜனகன் மகள். அப்படித் தோழியான த்ரிஜடையின் மகள், சரமா, அப்பொழுது தான் தன் வாசஸ்தலமான தாமரை மலரை விட்டு இறங்கிய ஸ்ரீ – லக்ஷ்மி தேவி போல நின்ற சீதையை எதிரில் கண்டு மலைப்பதை உணர்ந்து ரசிக்கலாம்.
இதைப் போன்ற பல சிறிய விஷயங்கள், கவியின் எழுத்தில் சித்ரமாக தீட்டப்பட்டிருப்பதை நீங்களும் கண்டு பிடிக்கலாம்.
இந்த நிகழ்ச்சிகள் இந்த எழுத்தில் மனதை தொடவில்லையெனில், மூல பாடத்தை அதன் மூலமான சம்ஸ்க்ருத மொழியையே கற்றுக் கொண்டு என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம். அந்த அளவில் தூண்டுதல் ஏற்படுமானால், அதுவே பெரும் பலனே.
– ஜானகி கிருஷ்ணன் -.
ஒரே தெருவுக்குள் அல்லது அடுக்கு மாடி வீடானால் அடுத்த வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பர். பழகியபின் நமக்கு சொந்தம் என்று மனதில் நெருக்கம் தோன்றும். இதுவே சென்னை வந்தால் தன் சொந்த கிராமத்து மக்கள் யாரையாவது பார்த்தால் இந்த சொந்தம் தொற்றிக் கொள்ளும். டில்லி வரை போனால் தமிழ் நாட்டுக்காரர் நமக்கு சொந்தமாக ஆவர். நாட்டை விட்டு வந்த இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த யாரானாலும் உடனே ‘தேசி’ என்று நெருக்கம் வரும். புது வீடு வாங்கி குடி வந்தவுடன் அக்கம் பக்கம் யார் என்று பார்த்தால் , சீனா, வியட்னாம், தாய்வான், ஜப்பான் என்று வரிசையாக அறிமுகம் ஆனார்கள். இவர்கள் மொழி நம்மால் அனுமானிக்கவே முடியாது. ஆனாலும் ஏதோ ஒரு நெருக்கம். அடுத்த வீட்டுக் காரர் வியட்னாமைச் சேர்ந்தவர். எங்களை கண்டு மகிழ்ச்சியுடன் சொன்னார் – இந்த தெரு முழுவதும் நாம் தான் – அதாவது இந்தியா, சீனா , ஜப்பான் என்று உலகத்தின் தென் கிழக்கு தேசத்தவர் தான். எங்களுக்கு வீட்டை விற்றவரும் அதே நாட்டைச் சேர்ந்தவர் தான். அவர்கள் வணங்கும் புத்த பிரான் பிறந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலா? ஜயதேவரின் அஷ்டபதிக்கு பிறகு தான் பகவானின் ஒன்பதாவது அவதாரமாக புத்தரைச் சொல்வதாக அறிகிறோம். இந்த புத்தர் அவர்களது பரம்பரையில் 21 வது தலைமுறையாவார் என்றும், ராமாயணத்து ஜாபாலி முனிவர் தான் முதல் என்றும் ஒரு நம்பிக்கை இருப்பதாக (தெய்வத்தின் குரல் – ரா.கணபதி எழுதியது) மகா ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார்கள். தாபம் அதிகமானால் மழை வந்தே தீரும் என்ற இயற்கை நியதிக்கு ஏற்ப, மக்களிடையே குழப்பமும், கஷ்டங்களும் அதிகமாகி தாங்க முடியாத அளவு இருந்த சமயம் மென்மையான குணமும், கொள்கைகளுமாக புத்தர் பிரான் வந்தார். அரச போகத்தை துறந்து வெளியேறிய அவரிடம் மக்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவரை பின் பற்றினால் நமக்கு நன்மை கிடைக்கும் என்று பொது மக்கள் நினைத்தனர். ஆனாலும் கீழை நாடுகளில் பரவியது போல நமது நாட்டில் புத்த மதம் வேறூன்றவில்லை என்பது தெளிவு.
நமக்கு புத்த பிரான் என்று ஒட்டுதலும் இல்லை மறுப்பும் இல்லை – இருந்தாலும் கோவில் கட்டி வணங்கும் அளவு தெய்வமாக நினைக்கும் ஈடுபாடும் இல்லையே. நம் நாட்டு நவராத்திரி சமயம் மண் கோபுரம் கட்டி பொம்மைகள் வைத்து அலங்கரிப்பது போல ஒரு அமைப்பு வீட்டுத் தோட்டத்தின் ஒரு மூலையில் வைத்துள்ளனர். அதில் புத்தர் அமர்ந்து தியானம் செய்யும் கோலத்தில், நடந்து மலையில் ஏறுவது போல மற்றும் சில பொம்மைகள்- ஒரு மெர்மைட் எனும் – பாதி பெண் பாதி மீன் உருவமாக ஒன்று-அதில் நீர் அருவியாக கொட்டுவது போல ஒரு அமைப்பு – மாதக் கணக்கில் பூட்டி இருந்த வீடு – பராமரிப்பு இல்லாததால் அழுக்காக கிடந்தது. ஒரு நாள் ஆங்காங்கு கிடந்த ஒயர்களைத் திரட்டி தெரிந்தவரை இணைத்து பார்த்ததில் மலையருவியும், விளக்குகளும் கண்களைக் கவர்ந்தன – ஆனால் அதற்கான மின்சார செலவும், தண்ணீர் செலவும் நமக்கு கட்டுபடியாகுமா என்று நினைக்க வைத்தது. முன் இருந்தவர்களுக்கும் இதே தானே – அப்படியும் பயன் படுத்தி வந்தார்கள் என்றால் புத்த பிரானிடம் அவர்களுக்கு இருந்திருக்க கூடிய நம்பிக்கை அல்லது பக்தி என்று தானே ஆகிறது. இதே மலையுச்சியில் கேதார்நாத்தில் உள்ளது போன்ற அமைப்பை வைத்து விட்டால் ( பீமன் தேடி வந்த சமயம் சிவ பெருமான் மலை வடிவில் மறைந்திருந்ததாகவும், பீமன் கைக்கு கிடைத்த பகுதியை வெடுக்கென்று பெயர்த்து எடுத்ததில் முக்கோண வடிவில் பாறையாக வந்த பாறையையே பிரதிஷ்டை செய்ததாகவும் தல வரலாறு) நமக்கும் செலவாகத் தெரியாது. மற்ற சிலைகள் நமது ரிஷிகளாவர். மற்ற யானை, சிங்கம், மான் போன்றவை எல்லா காடுகளிலும் உள்ளது போல – “மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் சுக துக்கயோ: ‘ இத்துடன் நம்பிக்கையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
விபத்து
உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து இங்கு குடியேறி வசிக்கும் மக்களுக்கு
அமெரிக்க நாட்டின் பல ஈர்ப்புகளில் ஒன்று அதன் அகலமான வசதியான சாலைகள்.
கார் ஓட்டுவது ஒரு கலை – ரோடு நன்றாக இருந்து, கூட்டமும் இல்லாவிட்டால் பறக்கத் தோன்றும். வேகம் எடுக்கலாம். இந்த ஊரில் சிக்னல் சட்டங்களை மதிக்காமல் போக முடியாது. கைகேயி திரும்பத் திரும்ப ராஜா தசரதனிடம் சொல்வாள் – சமுத்திரம் சத்யத்திற்கு கட்டுப் பட்டு கரையை தாண்டி வராமல் இருக்கிறதே – என்று. அது போல ராஜாவும் சத்யத்திற்கு கட்டுப் பட்டு அவள் இஷ்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது அவள் உத்தேசமாக இருந்தது. ( கடல் திடுமென ஊருக்குள் போய் பார்க்கலாமே என்று ஆசைப் பட்டால் என்ன ஆகும்? நடு நாடான அயோத்தியில் இருந்தவள்- சுனாமி பார்த்திருக்க மாட்டாள் ) இங்கே கார் ஓட்டுபவர்களும் அது போல சத்யத்திற்கு – சட்ட விதிகளுக்கு கட்டுப் பட்டு தாங்களாகவே ஒழுங்காக நின்று கவனித்து ஓட்டுவதாக நான் நினைப்பேன். ஏனெனில் வழியில் போலீஸ் அதிகாரியோ, வழி காட்டி நடு ரோடில் நிற்கும் கான்ஸ்டபிள்களோ காண முடியவில்லை. ரெட் சிக்னல் தாண்டிப் போனால் என்னாகும்? ரேடர் கண்காணிப்பதை வைத்து வீட்டுக்கே டிராபிக் போலீஸ் டிக்கெட் என்கிறார்கள் – ஒரு பெரும் தொகை அபராதம் கட்டச் சொல்லி கடிதம் – வருமாம். வாரக் கடைசி, அதிலும் டிவியில் புட் பால் அல்லது ஏதோ ஒரு பால் மாட்ச் வந்து கொண்டிருந்தால் தெருவெல்லாம் காலி. ஆறு, எட்டு சக்கரங்களுடன் நீளமாக ட்ரக் வண்டிகள் ஊர்ந்து கொண்டிருக்கும். அப்படி ஒரு சனிக்கிழமையன்று நாங்கள் வந்து கொண்டிருந்த பொழுது, சற்றுத் தொலைவிலிருந்தே என் மருமகள் ஏதோ ஆக்ஸிடெண்ட் என்றாள். எப்படித் தெரியும் என்று கேட்டேன். தூரத்தில் ஒரு போலீஸ் வண்டியில் சுழல் விளக்கு நீலமும் சிவப்புமாக பளீரென்று ஒளியை வாரியிறைத்துக் கொண்டிருந்தது. அருகில் சென்ற பின் தான் தெரிந்தது – நான்கு கார்கள் – முதல் வண்டியின் டயர்கள் புஸ் – மற்றது பக்க கண்ணாடிகள் உடைந்து, அடுத்த காரின் முன் கண்ணாடிகள், நாலாவது மேல் பகுதி நசுங்கி – ஒரு வாகன ஓட்டியின் தவறு மூன்று கார்கள் பின்னால் வந்தவை ஒன்றோடொன்று முட்டிக் கொண்டு விட்டன போலும். யார் என்ன என்று தெரியவில்லை. நாங்கள் வந்து விட்டோம். ஒரே சீராக ஓடும் வண்டிகளிடையே ஓட்டுவது சுலபம் என்று நினைத்திருந்தேன்.
நெடு நாட்களுக்கு முன் இந்தியாவில் ஒரு சாதாரண நகரம் – ஔரங்காபாத் – தொழிற்சாலைகள் அங்கு அதிகமாக இருப்பதால் நாட்டின் பல பகுதியிலிருந்தும் மக்கள் உள்ள வளர்ந்து வரும் நகரம். ஒரு பகுதியில் நவீன வீடுகளும் மற்றொரு பகுதியில் பழைய சந்துகள் போன்ற நெருக்கமான தெருக்களும். இவை ஊரின் நடுவில் ஒன்றையொன்று இணைப்பது போல இருக்கும். ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு போக வேண்டுமானால் இந்த குறுகிய சந்தில் நுழையாமல் போக முடியாது. கார் ஓட்டுபவருக்கு சவால் விடுவது போல குறுக்கே மனிதர்கள், மாடுகள், சைக்கிளை வளைத்து வளைத்து ஓட்டும் சிறுவர்கள், ரேடா என்ற கை வண்டி- இதன் அகலம் தெருவில் பாதியை அடைக்கும் – தவிர நாய் பூனைகள்-தெருவின் அகலமும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது – நடுவில் ஒரு வீட்டின் காம்பௌண்டு சுவர் நீட்டிக் கொண்டிருக்கும் – அல்லது ஒரு மரத்தின் வேர் தடுக்கும் – அதன் வழியே காரை ஓட்டிக் கொண்டிருந்த சமயம் – ஓட்டக் கூட இல்லை – மெதுவாக நகர்த்திக் கொண்டிருந்த சமயம் – அவ்வளவு தான் அந்த தெருவில் முடியும் – ஒரு கை வண்டி நிறைய சாமான்களுடன் ஒரு வியாபாரி எதிர்ப் பட்டான்- காரின் கதவை இறக்கி அவனிடம் – ஹிந்தியில் – நான் போகட்டுமா என்று கேட்டதும் – சிரித்துக் கொண்டே- ஹாங் மாய்ஜி என்று வண்டியை நகர்த்திக் கொண்டு வழி விட்டான் – யாருடைய போதாத காலமோ, அவன் வண்டியை நிறுத்திய வீட்டிற்குள்ளிருந்து ஸ்கூட்டரில் ஒருவர் வேகமாக வந்தார் – க்ஷண நேரம் – கை வண்டி நிறைய சாமான் – அவனால் அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து திருப்ப முடியவில்லை- இந்த பக்கம் அவன் சம்மதித்து நகர்ந்ததால் கிளப்பிய கார்- மூன்று வாகன ஓட்டிகளும் முயன்றும் அவன் வண்டியை காப்பாற்ற முடியாமல் – சாமான்கள் சிதற – கிளப்பிய கார் சற்று தூரம் சென்ற பிறகே பிரேக் பிடிக்க, அதற்குள் கூடி விட்ட மக்கள் ஆளாளுக்கு ஒன்று சொல்ல – கார் ஓட்டியவரின் பெயரில் தான் அத்தனைத் தப்பும் என்பது போல பேச- அடி படவில்லை- சாமான் தான் நஷ்டம் என்று தெரிந்ததும் –
இறங்கி வந்தால் அடி தடியே ஆனாலும் ஆகும் என்பதால் – வருத்தமாக இருந்தாலும் – வண்டிக்காரனின் நஷ்டம் மனதை உறுத்தினாலும் நிறுத்தாமல் காரை செலுத்த வேண்டி வந்தது. அடுத்த முறை அதே தெருவில் தானே வர வேண்டும் – இதே கை வண்டிக் காரன் இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்ளவோ- நஷ்ட ஈடு கொடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டோம். சிரித்துக் கொண்டே வழி விட்டவனின் முகம் கண் முன்னால் நின்றது.
இந்த கஷ்டங்கள் எதுவும் இல்லாமல் ஓட்டும் பொழுது ஏன் விபத்து நேர வேண்டும். இதை தூக்கியடித்தது இன்று செய்தித் தாளில் வந்த செய்தி. ஓரு வசதியான பெரிய வண்டி. 9 பயணிகள் செல்லக் கூடிய சொகுசு வண்டி. 9 பயணிகள், ஒரு டிரைவர். நடுவில் கண்ணாடி தடுப்பு பயணிகளுக்கும் டிரைவருக்கும் இடையே- பொதுவாக உல்லாச பிரயாணிகள் அல்லது குடும்பமாக – நண்பர்களுடன் போகும் பொழுது பேசிக் கொண்டே போகலாம் – என்பதால் – வண்டிக்குள் அலறும் பாட்டுச் சத்தம் – இதில் 9 பெண்கள் அனைவரும் ஒரே இடத்தில் பணி புரியும் சினேகிதிகள் – ஒருவருக்கொருவர் சகோதரிகளுக்கு மேல் பழகியவர்கள் – அவர்களில் ஒருவளுக்கு சமீபத்தில் திருமணம் ஆயிற்றாம் – அதைக் கொண்டாட ஏற்பாடு செய்து, நல்ல உடைகளுடனும் பரிசுப் பொருட்களுடனும் பயணித்துக் கொண்டிருந்தனராம். தோழி கள், பேச்சும் விளையாட்டுமாக அதுவும் தங்களுக்குள் ஒருத்தியின் மண நாளைக் கொண்டாடப் போகும் பொழுது உற்சாகத்திற்கு கேட்பானேன். திடுமென வண்டிக்குள் புகை தெரியவும் கண்ணாடித் தடுப்பை.தட்டி ஸ்மோக் ஸ்மோக் என்று ஒரு பெண் அலறியிருக்கிறாள். ஸ்மோக் என்றதும் அவள் வண்டிக்குள் சிகெரெட் பிடிக்கலாமா என்று கேட்கிறாள் என்று டிரைவர் நினைத்து இன்னும் இரண்டு நிமிஷ தூரம் தான் – போய்ச் சேர்ந்து பிடிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். ஒருவருக் கொருவர் பேசுவது புரியாமல் அலறும் பாட்டு சத்தம். அதற்குள் தீ அதிகமாக கண்ணாடித் தடுப்பைத் தாண்டி ஒரு பெண் வெளியேற முயன்ற பின் தான் டிரைவருக்குத் தெரிந்ததாம். அடுத்தடுத்து நான்கு பெண்கள் வெளியேறுவதற்குள் வண்டிக்குள் தீ வேகமாக பரவி விட்டதாம். டிரைவர் கதவை திறந்து வெளியே வந்து அவர்களுக்கு உதவி செய்யவும், உதவிக்கு 911 கூப்பிட போன் எடுத்து கை உதற – பதை பதைத்து – நின்ற நேரத்தில் கார் முழுவதும் கருகி விட்டதாம் – சாலையில் பயணித்த பலரும் ஓடி வந்து உதவிய பின்னும் 5 பெண்கள் அகாலமாக வண்டிக்குள்ளேயே கருகியதை தடுக்க முடியவில்லையாம். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
இதைப் படித்த பின் வெகு நேரம் மனம் வருந்தியது.
கார் கதவை திறந்து கொண்டு இறங்க முடியவில்லையா, ஏன் முன் பக்கமாக வெளியே வர முயன்றனர் என்பது தெரியவில்லை. லிமௌசின் எனும் இத்தகைய காரில் எளிதில் தீ விபத்தை உண்டாக்கும் விதத்தில் உள்ள சில பொருட்கள்: அதிகப் படியான போ:ம் பதித்த சீட்டுகள், அதிகமான வினைல், மரம் பயன் படுத்தப் பட்டிருப்பது, என்று சொல்கிறார்கள். மேலும் மேலும் பத்திரிகையாளர்கள் விசாரிக்கவும் மிகுந்த மன வருத்தத்துடன் பதில் அளித்த டிரைவர், தன்னைச் சேர்த்து ஐந்து பேர் பிழைக்கவும் மற்ற ஐந்து பேர் உயிரிழக்கவும் நேர்ந்ததை சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார். வண்டி சாம்பலாக போனது போனது தான்.
நான் கண்ட ஊர்
-வாங்குவர் -கானடா
அழகான ஊர். மலையின் சாரலில் கவனமாக உருவாக்கப் பட்டது. மூன்று புறம் மலைத் தொடர் – குதிரைக்கு அடிக்கும் லாடம் போல – இவை இணையும் இடத்தில் கடல் – தூரத்தில் தெரியும். காலை உதய சூரியன் பட்டு தக தகக்கும் கட்டிடங்கள். அதே போல மறையும் மாலை வெய்யில் வர்ண ஜாலங்களை இறைக்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். .
பசுமை போர்த்தியது போல மலைச் சாரல் கண்ணுக்கு குளிச்சியாக காணப்படுவதும் மழையில் நணைந்து சுத்தமாக நீல வண்ண பெருமானாக காட்சி தருவதும் பச்சை மா மலை மேனி என்று பாடத் தூண்டினால்,
அடுக்கடுக்காக சிகரங்கள் மேல் பகுதி மட்டும் வெண்மையாக பனிப் பொழிவில் உறைந்த பனியுடன் பாரதியின் வெள்ளிப் பனி மலையை நினைவுறுத்தும். மாலை நான்கு மணிக்கே மறையத் துவங்கும் சூரியன். அடுத்த அரை மணி நேரத்தில் ஊர் முழுவதும் வண்ண விளக்குகள் ஜகஜ் ஜோதியாக பிரகாசிக்கும். தூரத்து மலையில் வரிசையாக வண்ண விளக்குகள் – திருவண்ணாமலை தீபத்தை நினைவுறுத்தும். அண்ணா மலையானை நினைத்து கன்னத்தில் போட்டுக்கொள்ளத் தோன்றும். ஒன்றன் பின் ஒன்றாக இருக்கும் மலை சிகரங்களில் மின் விளக்குகள் பனி முடிய நிலையில் குளிர் நிலவாகத் தோன்றும். இந்த அழகுகளை வர்ணிக்க கவியாகவோ, திரையில் வடித்தெடுக்க ஓவியனாகவோ இல்லையே என்று மிகவும் குறையாக இருக்கும்.
ஊருக்குள் மரங்கள் உண்டு. தென்னை, மா, வாழை என்று கண்களுக்கு பழகியவை இல்லை. கூம்பு கூம்பாக நெடிய, உயரமான மரங்கள். பைன் எனப்படும் ஊசியிலை மரங்கள். ஒரே சீராக யாருக்கும் இடையூறு இல்லாமல் – சாலையோரங்களில், வீடுகளைச் சுற்றி மட்டுமே காணப்படும். கிளைகள் இல்லை – அதனால் பறவைகள் கூடு கட்டுவதும் இல்லை. பழ மரங்கள் ஊருக்குள் இல்லை போலும். பனிக் கால ஆரம்பம் – அதனால் இலைகள் பழுத்த இலைகள் தங்க நிறமாக உதிரத் தயாராக உள்ளன. நடு நடுவில் உயர்ந்த பல மாடிக் கட்டிடங்கள் – 30 க்கும் மேல் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் 17 வது மாடி எங்கள் வீடு. ஜன்னலில் இருந்து வீடுகளின் கூரைகளே தெரியும். உள்ளே யார் வசிக்கிறார்கள் ? தெரிந்து கொள்ள நேரமும் இல்லை அவர்களுக்கும் நம்மைத் தெரிந்து கொள்ள ஆவல் இல்லை. தொலை தூரத்திலிருந்து சம்பாதிக்க என்றே வந்தவர்கள், நாளடைவில் இங்கேயே ஸ்திரமாக தங்கி விட்டவர்களும் தங்களுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு இருக்கிறார்கள். சென்னையிலேயே அடுத்த வீட்டுக்காரரைத் தெரியாதவர்கள் எவ்வளவு பேர்? ஒரு பக்கம் உலகம் சுருங்கி விட்டது என்பவர்கள் அடுத்த வீட்டை தொலை தூரமாக காண்பதை என்ன சொல்ல.
டிஸம்பர் மாதம் கொள்ளை அழகாக காட்சியளித்த இளம் சூரியன் திடுமென ஒளி குறைந்து பனிப் போர்வைக்குள் மறைந்து கொண்டது போல இருந்தது. சிறு தூறலாக கொட்டிய பனி, வலுத்து கட்டிகளாக வீசியடிக்கவும் கண் முன்னே வீடுகள் மறைந்தன. குவியல் குவியலாக பனிக் கட்டி மலைகள் – வெள்ளை வெளேரென்று வீட்டுக் கூரைகள் – கார்களின் மேல் பாகம் முழுவதும் பனி நிறைந்து கண்களை கூச வைத்தது. நேரம் என்ன என்று அனுமானம் செய்ய முடியவில்லை. விடியற்காலை போலவும் இருந்தது. ஒரு ஆள் துரட்டியுடன் வந்து நடை பாதைகளை மட்டும் நடக்க வசதியாக பனியை சுரண்டி எடுத்து வழியமைத்தான். யார் வெளியே வரப் போகிறார்கள் என்று நினைத்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது – அவரவர் வேலை நிமித்தமோ, அன்றாட தேவைகளுக்கு கடை கண்ணிகளுக்கு செல்பவரும் நீள் கோட்டும், தலைக் குல்லாயும், கையில் குடையுமாக கிளம்பி விட்டனர். ஒரு சிவப்பு வண்டி வந்து தெருக்களை ஓரளவு சுத்தம் செய்து கொண்டிருந்தது. வண்டி பனியில் சிக்கிக் கொண்டால் உதவி செய்வது அவர்கள் கடமையாம். அன்றைய தினமும் மற்ற நாட்களைப் போலவே கடமையில் கண்ணாயிருப்பவர்கள் செய்து கொண்டிருக்க, இந்த பனிக் குவியலும், குளிரும் பழக்கம் இல்லாதவர்கள் வீட்டோடு இருந்திருப்பர் எங்களைப் போல. பனிமழை நின்றது. திறந்த வெளியனைத்திலும் வெண்மையான தளம் போட்டது போல இருந்தாலும் காலை வைத்தால் வழுக்கும் என்று அதற்கான முள் வைத்த ஷூ அணிந்து கொண்டு ஜனங்கள் ஐஸ் விளையாட்டு விளையாடவும் அரம்பித்தனர். ஐஸ் கட்டிகளை ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொண்டும் அதில் பொம்மைகள் செய்யவும் முனைந்தனர். குழந்தைகள் கூட இந்த விளையாட்டில் ஈடு பட்டிருப்பதைக் காண நமக்குத் தான் அடடா என்று இருந்தது. கடற்கரையில் நம் ஊரில் கோபுரம் கட்டுவது போல. எங்கள் வீட்டு இரண்டு வயது குழந்தைக்கு ஒருவர் சிறு பிளாஸ்டிக் வாளியும் ஷொவெல் எனப்படும் .மண் அள்ளும் கரண்டியும் பரிசாக கொடுத்திருந்தார். எதற்கு என்று புரியவில்லை பொருத்தம் இல்லாதது போலத் தோன்றியது இந்த குழந்தைகள் ஷவல் என்ற கரண்டியால் ஐஸ் – பனி மண் போல இருந்ததை வாளியில் நிரப்பி கெட்டித்து அப்படியே கவிழ்த்துக் கொட்டியதும் கோபுரத்தில் பாதி உருவாகியது – அதன் மேல் இரண்டு குச்சிகள், அதற்கும் மேல் உருண்டையாக பனிக்கட்டித் தூளை கெட்டித்து வைத்தால் ஸ்னோ மனிதன் உருவாகி விட்டான். குச்சிகள் கைகள். மீதியை கற்பனைக்கு ஏற்றபடி நிரப்பி மற்ற அலங்காரங்கள் செய்து முடித்தனர். இந்த விளையாட்டுக்காகத் தான் வாளி பரிசு
போலும்.
மறு நாள் காலையில் வீடுகளின் மேல், மரங்களில் எங்கும் வெண்மை –பனி முடிய கூரைகள். மரங்களின் இலைகளே தெரியாமல் பனி அப்பியிருந்தது. பகல் ஏற ஏற வெய்யிலில் பிரதிபலித்த அந்த காட்சியை விவரித்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை. முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒளிச் சிதறுவது போல என்று வேண்டுமானால் சொன்னால் புரியுமோ என்னவோ. அருகில் இருந்த பார்க்கில் குழந்தைகள் ஸ்னோ மனிதனுக்கு கழுத்தில் ஸ்கார்ப் – தலைக் குல்லாய்- குச்சி கைகளுக்கு கையுறை அணிவித்திருந்தனர். திடுமென காட்சி மாறியது – சிறு தூறலாய் ஆரம்பித்தது பெரு மழையாக வலுத்தது. அடடா வெளியில் போனவர்கள் குடை எடுத்துக் கொண்டு போனார்களோ என்ற சந்தேகம் வந்தது. எந்த உத்தேசமும் இல்லாமல் ஜன்னல் வழியே பார்வையைத் திருப்பினால் ஸ்னோ மனிதன் கரைந்து வழிந்து கொண்டிருந்தான். குவியலாக சேர்த்து வைத்திருந்த பனித் துகள்கள் மழை நீரோடு கலந்து மறைந்தே போயின. சற்று தூரத்தில் ஒரு சின்னஞ்சிறு ரோஸ் குடையும், நீல நிற பெரிய குடையும் நகர்ந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட தரையோடு தெரிந்த ரோஸ் குடை. ஒரு குழந்தை தன் தாயாருடன் நடந்து போய்க் கொண்டிருந்தான் போலும். இருவர் கைகளிலும் குடை. சிறுவன் கையில் ரோஸ் கலர் சின்ன குடை. அவனைத் தூக்கிக் கொள்ள முடியாமல் அந்த தாயின் கையில் சுமை. நாலடி எடுத்து வைப்பதும் திரும்ப குழந்தையுடன் பேச்சுக் கொடுப்பதுமாக நடந்து கொண்டிருந்தாள். இந்த மழையில் ஏன் இந்த குழந்தையுடன் நடக்கிறாள் என்ற எண்ணிய நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ரோஸ் கலர் குடை பின்னாலேயே என் பார்வையும். பத்து நிமிஷங்கள் நடந்திருப்பார்கள். அடுத்த திருப்பத்தில் அவர்கள் தலை மறையும் வரை பார்த்தவள், நம் ஊரானால் மழைக்கு ஒதுங்கி நின்று விட்டு போவோம் என்று நினைத்தபடி நிமிர்ந்து பார்த்தால், குட்டி ரோஸ் குடையும், பெரிய நீலக் குடையும் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. குளிர், வெய்யில், மழை என்று எந்த வேலை நிற்கும். இறங்கி நடந்து பார் , பழகி விடும் என்று எங்கேயோ கேட்ட ஞாபகம்.
வீட்டுக்குள் வளைய வந்து அலுத்த நாங்கள் இருவரும் சற்று காலார நடக்க கிளம்பினோம். முகத்தில் கண் மட்டுமே தெரியும்படி குல்லாவும் கோட்டும் – அருகில் நெருங்கும் வரை அனைவரும் ஒன்றே. உலக நாடுகளின் அனைத்து மொழிகளும் பேசுபவர்கள். வாய் பேசாமல் வியாபாரம் முடித்து வெளியில் வரலாம். எதிர் பட்ட முகங்களில் இந்திய முகத்தை தேடினோம். முதல் கேள்வி இந்தியாவா? அடுத்தது எந்த ஊர் அல்லது மானிலம். வட மானிலத்தார் எனில் ஓரளவு ஹிந்தி உதவும். ஓரளவு தான். ஒரு ஓரியா தம்பதி எங்களைப் போலவே வெளியில் நடை பழக வந்தர்கள் போலும். அவர்களுடன் சம்பாஷிக்க மொழி தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்த ஹிந்தி கூட அவர்களுக்குத் தெரியாதாம், இங்கலீஷ் புரியும். பேச வராது. ஐம்பதைக் கடந்தவர்களுக்கு இந்த பிரச்னை .சாதாரணம். இதுவே தெலுங்கு கன்னட மலையாளமானால் ஒற்றை வார்த்தைகள் மற்றும் கை ஜாடை தான்.
பல இடங்களிலும் புலம் பெயர்ந்து வந்தவர்களே பெரும்பாலானவர். பொதுவான குல வழக்கமோ, மத நம்பிக்கைகளோ இணக்காத நிலையில் அடிப்படைத் தேவைகள் தான் பொதுவானவை. காய்கறிகளும், அரிசி பருப்பு, கோதுமை என்ற சமையலுக்குத் தேவையான பொருட்களும், பால் பழங்கள் – இவைகளை வாங்கும் கடைகள் தான் புது முகங்களை காணும் இடம். அழகான பூங்காக்கள் – அகலமான சாலைகள், போக்குவரத்து வசதிகள், கண்ணை பறிக்கும் சுத்தம் இவை தான் உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்களை ஈர்க்கின்றன. தொழில் அல்லது ஏதோ ஸ்தாபனத்தில் வேலை என்று உள்ளவர்கள் அனுபவம் வேறாக இருக்கலாம். சுற்றுலா வந்தவர்களின் அனுபவமும் வேறாக இருக்கும். அவர்களைக் கவரவே பல விதமான ஏற்பாடுகள் உள்ளனவே. இவை இரண்டிலும் சேராமல் ஓரு சில மாதங்கள் மகனுடன் இருக்கலாம் என்று வந்த எங்களைப் போன்றவர்கள் அனுபவம் வேறு. வீட்டு வேலைகளுக்கு உதவி கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் மணிக் கணக்கு – ஒரு மணி நேரம் வேலை செய்தால் இவ்வளவு என்று சம்பளம் கொடுத்து கட்டுபடியாகாது. வாசலில் கூவி விற்கும் காய்காரனோ, விடியு முன் பால் சப்ளை பண்ணும் பால்காரரோ, பேப்பர் போடுபவரோ ஒரு முகமும் கண்ணில் படாதது வந்த புதிதில் வியப்பாக இருந்தது. தாங்களே முன் யோசனையுடன் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளா விட்டால் எழுந்தவுடன் காப்பி கிடைக்காது.
நெடு நாட்களுக்கு முன் ஒரு செல்வந்தர் இருந்தார். . அவருக்கு நான்கு குமாரர்கள். படிப்பு முடிந்து அவரவர்கள் தன் காலில் நிற்கும் நிலை வந்தது. தந்தையின் நிழலில் சுகமாக வாழ்க்கை அமைந்திருக்கும். ஆனால் அவர்கள் விருப்பம் வேறாக இருந்தது. குலத் தொழிலில் மனம் செல்லவில்லை. தாங்கள் அரசனாக வேண்டும் என்ற விருப்பத்தை தந்தையிடம் சொன்னார்கள். அவரும் தயங்கினாலும் பின் சம்மதித்து வெறும் கட்டந்தரையான இடங்களைத் தேர்ந்தெடுத்து இந்த நிலங்களை வளப் படுத்தி அரசாளுங்கள் என்று சொல்லி சில உபதேசங்களும், செய்து ஆசிர்வதித்தார். இது நம் ராமாயணத்தில் வரும் விஸ்வாமித்திரர் அரசரான கதை. இதே போல பல நாடுகளில் இருந்தும் புது இடத்தில் அரசாள நினைத்து வந்து ஜன நடமாட்டமில்லாத இடங்களில் குடியிருப்புகளை அமைத்தார்களோ – அவர்கள் அனைவருக்கும் பின் அவர்களின் சந்ததியர் ஸ்வாதீனமாக இங்கு குடியேற வந்தார்களோ எனும்படி உலகின் பல பாகத்தில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.
Vancouver ‘வாங்கோவர்’ என்று உலகில் பிரசித்தி பெற்ற அழகிய நகரத்தின் புறநகர் பகுதியான பர்னபி எனும் இடம் இது. வளர்ந்து வரும் நகரம். சென்னையும் செங்கல்பட்டும் போல என்று சொல்லலாம். பிரிட்டிஷ் கொலம்பியா என்றும் அழைக்கப் படும் வாங்கோவரில் இந்திய மக்கள் நிறைய வசிப்பதாக அறிந்தோம்.
வந்தவர்களை வாழ வைக்கும் இடம் தான் இது. தகுதியான வேலை கிடைத்ததோ
இல்லையோ யாரும் திரும்பி போவதில்லை. ஒரு நாள் மின் இணைப்புகளை சரி பார்க்க வந்தவர் ஒரு டாக்டர். ஈரான் நாட்டை சேர்ந்தவர். உடனடியாக மருத்துவராக வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற் படிப்பு அல்லது ஏதோ ஒரு தகுதியை பெறும் வரை இந்த வேலை செய்கிறாராம். மற்றொரு பெண்மணி பொறி இயல் படித்தவர்.. பிறந்து வளர்ந்து, படித்து முடித்த பின் இரு பெண் குழந்தகளுடன் குடும்பத்தோடு எந்த தைரியத்தில் வந்தார்? வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை – படித்தது தாய் மொழியில் – ஆங்கிலம் தெரியாது- முதல் காரியமாக மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம். அது வரை – ஏதோ ஒரு பிடிமானம் குடும்பம் நடத்த தேவை – நல்ல நிறமும் வாட்ட சாட்டமாகவும் இருந்த அந்த பெண்ணை வேறு சந்தர்பத்தில் பார்த்திருந்தால் ஏதோ உயர் அதிகாரியாக எண்ணி இருப்போம். டாக்ஸி ஓட்டுபவர் இந்தியர் கணிசமாக உள்ளனர். பெரும்பாலும் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்தவர்கள். முகத்திலேயே தென் இந்தியர் என்று எழுதி இருப்பது போல நாங்கள் ஏறிய உடனேயே பேச்சுக் கொடுப்பார்கள். ஒரு சிலருக்கு பிடித்து வசதியாக இருப்பர்.
இந்திய ராணுவத்தில் பணி புரிந்து 20 ஆண்டுகள் சேவை செய்த பின் ஓய்வு பெற்று வெளி நாடு என்ற ஒரே காரணத்துக்காக வந்தவராம் – தகுந்த வேலை கிடைக்கும் வரை செய்வது வாடகை கார் ஓட்டுவது என்றார் ஒருவர். வட இந்தியரான அவருக்கு தமிழும் தெரிந்திருந்தது. ராணுவத்தில் தமிழர்களுடன் இருந்தாராம்.
தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் கிடைத்த வசதிகளோடு வாழ்வது ஏன் இவர்களுக்கு உவப்பாக இல்லை என்று புரியத்தான் இல்லை. நல்ல வேலை, சம்பாத்தியம் என்று வந்திருந்தாலும் – என்றோ ஒரு நாள் நிறைய சம்பாதித்து தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்பி போவார்கள். மண் வளமும் நீர் வளமும் உலகின் முற்போக்கான அறிவியல் சாதனங்கள், படிக்க வசதி, பல விதத்திலும் வாழ்வின் முன்னேற்றங்களுக்கு வசதியும், மின்சாரம் உற்பத்தியும், உள்ள இந்நாட்டில் சுய வளர்ச்சிக்கு வாய்ப்புகள் அதிகம். ஜனத்தொகை குறைவு. எனவே வாழ்க்கை வசதிகள் அதிகம். பொறுத்திருந்தால் நல்ல காலம் வரும் என்று நம்பலாம்.
உள்ளூர் வாசிகள் யார் என்பது? அனைவருமே இந்த கண்டத்திற்கு வாழ்க்கை வளம் தேடி வந்தவர்களே – முன்னால் வந்தவர்கள், அடுத்து வந்தவர்கள் என்பது தான்
பாகு பாடு – நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தவர் பல தலை முறைகளைக் கண்டவர்கள் உள்ளனர். கேரளா, இலங்கை தமிழர் சேர்ந்து கோவில் கட்டியுள்ளனர். அதில் தமிழ் நாட்டு அர்ச்சகரும் உள்ளார். பாரத நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்தவர்கள் தங்கள் வழக்கப் படி கோவில்கள் கட்டியுள்ளதாக சொன்னார்கள். புடவை அணிந்தவர்கள் குஜராத்தி என்று பொதுவாக பிரசித்தம். இந்த இரண்டு மாநிலத்தவர்கள் தான் முதலில் வந்த இந்தியர் போலும்.
32 தளங்களோடு நவீன வசதிகளுடன் சமீபத்தில் கட்டப் பட்ட அடுக்கு மாடி- இதில் உடன் வாழும் மற்ற ஐந்து வீட்டார்களைக் கண்ணால் கூட காண முடியவில்லை.
அதற்கும் ஒரு வாய்ப்பு தருவது போல ஒரு நாள் தீ எச்சரிக்கை மணி ஒலித்தது. இந்த எச்சரிக்கை மணி ஒலித்தால் உடனே அனைவரும் கீழிறங்கி கட்டிடத்திற்கு வெளியே போய் விட வேண்டும் என்பது ரூல். நாங்களும் தயார் ஆனோம். இரவு, குளிர் வேறு எனவே உல்லன் சட்டைகள், கோட்டு தொப்பி சகிதம் வெளியேறினோம். லிஃப்ட் வேலை செய்யவில்லை. செய்யாது. தீ விபத்து போன்ற சமயங்களில் மாடிப் படிகளில் செல்லவும் என்று அறிவிப்பு லிஃப்டின் வெளியில் எழுதியிருக்கும். படிகளில் தான் இறங்க வேண்டும். நிமிஷ நேரத்தில் அனைவரும் கட்டிடத்தின் வெளியே நின்றோம். பக்கத்து வீட்டுக்காரர் வலிய வந்து பேசினார். அதற்கு அடுத்த சீன தேசத்து தாயும் மகளும் விசாரித்தனர். மற்றொரு சிறு பெண் – சமீபத்தில் மணமாகி வந்திருக்க வேண்டும் – உலகின் தென் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் என்று தோன்றியது. பேச வில்லை – மொழி பிரச்னையோ என்னவோ- முகத்தில் பயம் அப்பியிருந்தது. சரி, இங்கிலீஷ் தான் புரியாதே, தமிழிலேயே, பிரச்னையை சொன்னேன் – ஒன்றிரண்டு வார்த்தைகள், ஃபயர், நோ லிஃப்ட் மற்றும் சைகையை புரிந்து கொண்டாள் – கூடவே இருந்தாள். சற்று நேரத்தில் எச்சரிக்கை மணி நின்று விட்டது – ஏதோ சிறிய கோளாறு சரி செய்து விட்டனர் போலும். இதற்கே மூன்று ஃபயர் எஞ்சின்கள் – சுழல் விளக்குகள் கண்களைப் பறிக்க, அபாய மணி ஒளிர
விவரம் தெரியும் வரை உள்ளூற பயம். அதிலும் ஒரு நன்மை. ஃபயர் இஞ்சின்கள் அக்கம் பக்கத்து மனிதர்களைக் காட்டி கொடுத்து விட்டு நகர்ந்தது.
கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வசிக்கும் அடுக்கு மாடி கட்டிடத்தில் தனியாக வாழ நேரிட்டால் எப்படி இருக்கும்? இதோ கடல் பரந்து விரிந்து அலைகளுடன் நீரின் ஓசை ஓ வென்று கேட்கிறது – குடிக்க முடியுமா? எங்கள் வீட்டின் நேர் எதிர் அடுக்கு மாடி கட்டிடத்தில் இதே போல 17 அல்லது 18 வது மாடியில் – இடையில் சற்றே அகலமான பார்க் – இரு கட்டிடங்களுக்கும் பொதுவானது – வசித்தவரை தினம் பார்க்க நேரும் போது என் மனதில் அனுதாபம் தோன்றும். காரணம் அவர் மட்டுமே அந்த வீட்டில். துணைக்கு டி வி ஓடிக் கொண்டிருக்கும். காலையில் நான் எழும் நேரத்திலேயே அந்த வீட்டிலும் விளக்கு எரியும். டிவி ஓடிக் கொண்டிருக்கும். அந்த மனிதரின் முகம் கூட நான் பார்த்ததில்லை. கோட்டு அணிந்த உயரமான நடு வயது மனிதர் என்ற வரை தான் தெரியும். ஒரு நாள் போல அவர் மாடி பால்கனியில் வந்து நிற்பார், உள்ளே போவதும் வருவதுமாக காலை நேரத்தில் சற்று நேரம் கண்ணில் படுவார். அதற்கு மேல் நான் வேடிக்கை பார்க்க முடியாது. மாலையில் திரும்ப அதே போல டிவி பிண்ணனியில் ஓடிக் கொண்டிருக்க இவர் பால்கனியில் நிற்பார். இருட்டும் வரை. இவர் மட்டும் என் கண்ணில் படக் காரணம் மற்ற வீடுகளின் நடமாட்டமே தெரியாத படி கதவுகள் – அனைத்தும் கண்ணாடி சுவர்களே-திரைச் சீலைகள் மறைத்திருக்கும். இவர் தென்படுவதால் மனிதர்கள் வசிக்கும் இடம் தான் என்று உணர்த்துவது போல என்று நினைப்பேன். பாவம், தனிமை மிக கொடுமை. ஒரு நாள் ஒரு பஞ்சாபி பெண்மணியை வழியில் சந்தித்தோம். கணவர் குழந்தைகளுடன் வசித்தவர், மகளும், மகனும் மணமாகி அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று போனபின், கணவனும் மனைவியுமாக இருந்தனர். கணவர் ஒரு விபத்தில் மறைந்த பின் தனியாக இருக்கிறார். இந்தியாவிலிருந்து வெளி வந்த பின் அங்கும் ஒட்டு உறவு இல்லாமல் போய் விட்டது. நம் நாட்டிலும் தனியாக வாழும் முதியவர்கள் இருக்கிறார்களே. எங்களைக் கண்டதும் அருகில் வந்தார். அவரும் எங்களைக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். நான் அனுதாப்பட்டது இந்த பெண்மணியைப் பார்த்து தான் என்பது தெரிய வந்த பொழுது ஆச்சர்யமாக இருந்தது. கடல் கடந்து வந்தாலும் பிறந்த வீட்டு உறவு இது தான் போலும். ஓரளவு உடல் நலம் உள்ளவரை, அவர்களுக்கு அக்கம் பக்கம் பேச முடியும். கடைகளுக்கு போனால் நாலு பேரை பார்த்து பேசலாம். அதன் பின் என்ன செய்வார்?
தாய் நாட்டிற்கும் இந்த ஊருக்கும் நேரம் வித்தியாசம் 13 மணி 40 நிமிஷங்கள். கையில் கட்டியிருந்த கை கடிகாரத்தில் அதே நேரம் காலை மாலை என்ற வித்தியாசத்தில் புரிந்து கொள்வோம். 12 மணி நேரம் சுலபமாக இருக்க, மீதி ஒரு மணி நாற்பது நிமிஷம் சற்று குழப்பும். என்ன பிரமாதம் என்று தோன்றும். வீட்டில் ஒரு கடிகாரத்தை நேரம் மாற்றி வைத்து அவ்வப் பொழுது கழித்தோ, கூட்டியோ தெரிந்து கொள் என்று சொன்னால் எப்படி இருக்கும்?
கடிகாரம் என்று ஒன்று வீட்டில் பக்கம் பக்கமாக இருந்தது ஒரு காலம். இப்பொழுது அவரவர்கள் கைகளில் உள்ள செல் போன், ஐ பாட் இவை தான் நேரத்தை காட்டும் கடிகாரம், தேதி காட்டும் காலண்டர் எல்லாமே. அதில் ஒரு சௌகரியம் – சூரியன் உதிப்பதும், மறைவதும் இரவு பகலை அறிய மட்டுமே – அலுவலகங்கள், பள்ளிகள் வேலை நேரம் கடிகாரத்தை அனுசரித்தே. விடியும் நேரம் ஏழரை மணி என்றால் மாலை நாலரைக்கே இருட்டி விடும். காலை எட்டரைக்கு போய் சேர வேண்டும் என்றால், இருட்டிலேயே கிளம்ப வேண்டியது தான். வருவதும் அதே போல் நன்றாக இருட்டிய பின் தான் – இந்த வித்தியாசம் பழக சற்று சிரமமாக இருந்தது. இருட்டி சற்று நேரத்தில் மனதில் வெகு நேரமாகி விட்டது போல தோன்றும். காலை பழக்கம் காரணமாக 5 மணிக்கு விழிப்பு வந்து, வெளியில் எட்டிப் பார்த்தால் நடு இரவு போல இருக்கும். ஆயினும் அதற்கு மேல் படுக்கையில் படுக்க மனம் வராமல் எழுந்து விடுவோம்.
வசந்த காலம் வந்தால் ஊரே மலர்களால் அலங்கரித்தது போல இருக்குமாம். பகல்
பொழுது நீண்டு மாலை வெய்யில் நீண்டு 9 மணி வரை வெளிச்சமாக இருக்குமாம். பார்க்குகளிலும், வீதிகளிலும் ஜனங்கள் நடமாட்டமும், கோலாகலமாக இருக்குமாம். -அதையெல்லாம் பார்க்க அடுத்த விசிட் அடிக்கலாம். (இப்போதைக்கு கிளம்புகிறோம் தாய் மண்ணைப் பார்க்க.)
அறுபதுகளில் ~நடந்த போராட்டங்கள் அனேகமாக மறந்த நிலையில் திரும்ப கிளறப் படுகிறது. அந்த சமயம் ஏராளமான தென்னிந்தியர்கள் மத்ய அரசில் வேலை கிடைத்து டில்லி சென்றனர். சுதந்திர இந்தியாவின் அரசில் வேலை செய்வதை பெருமையாக எண்ணி சென்றவர்கள் முதலில் எதிர் கொண்டது மொழி பிரச்னையே. தமிழ் தவிர ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் எளிதாக இந்த பரீக்ஷைகளில் தேறி 36 முதல் 38 மணி நேரம் ரயில் பிரயாணம் செய்த களைப்போடு அலுவலகத்தில் நுழைந்தால் ‘நீட்டோலை வாசியா நின்றான் நன்மரம்’ என்ற ஔவையாரின் வாக்குப் படி நன் மரமாகவே நின்றார்கள். இது பாதிக்கப் பட்ட பல இளைஞர்களின் கதை. ஒரு சில ஆண்டுகளில் இந்த இளைஞர்கள் ஓரளவு மொழியைத் தெரிந்து கொண்டாலும் அதை பேசும் இடங்களில் பரிகசிக்கப்பட்டனர். ஏனெனில் புத்தகத்தில் படித்த இந்தி கை கொடுக்கவில்லை. பேசும் மொழி வேறு. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்தவர்கள் இலக்கணம் அல்லது பிராந்திய முறைகளை அறிந்து பேசாததில் வியப்பில்லை.
64 ல் நான் டில்லி சென்றதும் அக்கம் பக்கம் பேச முடியாமல் திணறியதும் நினைவு வருகிறது விருப்பப் பாடமாக இருந்த இந்தியை விரும்பாமல் படித்து ஏதோ பாஸ் ஆனால் போதும் என்று இருந்ததில் இந்தி பேச வரவில்லை. அதிலும் இந்தியின் ஆண் பால், பெண் பால் பிரயோகம் ரொம்பவே உதைத்தது. வரிசையாக எழுதி வைத்துக் கொண்டு மனப் பாடம் செய்வது தான் வழி. எழுத்து தான் தெரியுமே, புஸ்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு நாமே படிக்கலாம் என்றால் வருகிறதா?
பால் வாங்கி வரும் பையன் பையை ஆட்டிக் கொண்டே வந்தான் கூட அவன் தோஸ்த் – அவன் கையில் ஒரு பால் பாட்டில். ( அந்த நாட்களில் பால் பாட்டிலைக் கொடுத்து புது பால் நிரம்பிய பாட்டிலை வாங்க வேண்டும் ) தூத் நஹி மிலா – என்றான் எங்கள் வீட்டு வேலைக்காரன் – அடுத்தவன் தன் பாட்டிலைக் காட்டி – தனக்கு கிடைத்ததை – முஜே ஏக் பௌதல் மிலீ – என்றான். தூத் ஆண் பால். அது வரும் பாட்டில் பெண் பால். இதை நான் கற்றுக் கொண்டதும் இந்த சிறுவர்களிடம் தான்.
பக்கத்து வீட்டு ஏழு வயது சிறுமியிடம் கற்றுக் கொண்டது. உன் அண்ணாவின் ஃப்ரண்டு – இதை இந்தியில் ‘ முன்னா – (சிறுவனைக் குறிக்கும் வழக்குச் சொல்) கா ப்ரண்ட் ஆயா – என்றேன். யார் என்று கேட்டுக் கொண்டவள், ஓ உஸ்கி ஃப்ரண்ட்- ஆயி தீ – கேள் ஃப்ரண்ட் – அண்ணாவின் ஃப்ரண்ட் – உடைய என்ற ஆறாம் வேற்றுமை விகுதி ‘வின்’ என்பது அண்ணாவுடன் தானே சேரும் – அவனுடைய பெண் சினேகிதி என்பதால் ‘கி’ அண்ணாவுடனேயே சொல்லி விட வேண்டும் போலும். – தமிழிலும் சரி, சம்ஸ்க்ருதத்திலும் சரி ஆறாவது வேற்றுமை உருபு – ராமஸ்ய – ராமனுடைய – பின்னால் வருவது சினேகிதனோ, சினேகிதியோ இதன் பொறுப்பு அல்ல – இந்த கா கே கி – வேற்றுமை உருபுகளால் பட்ட பாடு.- சமயத்துக்கு நினைவு வராது –
காடி (பஸ்) நஹி ஆயி ? கப் ஆயகி – இதை தெரிந்து கொள்ளவே பல நாட்கள் பிடித்தன. இது கூட பரவாயில்லை – பசி –பூக்- வருவானா வருவாளா? பயம் – டர், தூக்கம் – நீந்த் இவைகளுக்கெல்லாம் கூட இந்த பிரச்னை உண்டு.
பின்னால் என் மகனுக்கு கதை சொல்லும் பொழுது ஒரு முறை ராஜ குமாரி தூங்கிய பொழுது … என்ற இடத்தில் நிறுத்தி விட்டு வாசல் கதவை யாரோ தட்டுகிறார்கள் என்று போனேன். திரும்பி வந்து தொடர்ந்து சொல்ல – எங்க விட்டேன் என்று கேட்டேன் – ராஜ குமாரிக்கு ஆங்க் லக் கயி – அப்புறம் என்ன ஆச்சு? இந்த ஆங்க் லக் கயி – கண்கள் செருகி தூக்கம் வந்து விட்டது – எந்த புஸ்தகத்திலும் இருக்காது – நடைமுறையில் இது போன்ற வழக்கச் சொற்களை இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களால் மட்டுமே பேச முடியும்.