அத்தியாயம் 93 (630) வால்மீகி சந்தேஸ: (வால்மீகியின் செய்தி)
வெகு சிறப்பாக யாகம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, வால்மீகி முனிவர் தன் சிஷ்யர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். பரம பாவனமாக யாகத்தின் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதைப் பார்த்து வியந்தார். தனியாக ரிஷி ஜனங்கள் மத்தியில் தனக்கும் இருப்பிடம் அமைத்துக் கொண்டார். அரசனும் வந்து அவர் தங்கும் இடத்தில் வசதிகள் சரிவர இருக்கின்றனவா, உணவுக்கான பழங்கள், காய் கிழங்குகள் கிடைக்கிறதா என்றும், என்று விசாரித்து தெரிந்து கொண்டு, முனிவரை வணங்கி ஆசிகள் பெற்றுச் சென்றான். வால்மீகி தன் பிரதான சிஷ்யர்கள் இருவரிடம், நீங்கள் சென்று ராமாயண கதை முழுவதும் ஆனந்தமாக பாடுங்கள். சேர்ந்து பாடுங்கள். எங்கெல்லாம் ஜனங்கள் நடமாட்டம் உள்ளதோ, கடை வீதிகளிலும், ராஜ வீதிகளிலும், ரிஷிகள் வசிக்கும் இடங்களிலும், ராஜ பவன வாசலிலும், குறிப்பாக வேதம் அறிந்தவர்கள் கூடும் இடங்களிலும் பாடுங்கள். இதோ இந்த பழங்கள். இவைகளை எடுத்துச் செல்லுங்கள். மலைகளில் விளையும் ருசியான பழங்கள். கையோடு வைத்துக் கொள்ளுங்கள். பசித்த பொழுது சாப்பிட. யாரிடமும் எதையும் யாசிக்காதீர்கள். ராகத்தை கவனித்து பாடுங்கள். யாரும் குறை சொல்ல முடியாதபடி, கவனமாக பாடுங்கள். ஒரு வேளை மாகாராஜா, ராமர் கேட்க விரும்பி அழைத்தால், ரிஷிகளும் அமர்ந்திருக்கும் சபையில் பாடுங்கள். மதுரமான குரலில், ஒரு நாளில், இருபது அத்தியாயங்கள் பாடுங்கள். நான் சொல்லிக் கொடுத்துள்ளபடி, பிரமாணம், தாளக் கட்டுடன் பாடுங்கள். தனம், செல்வம் இவற்றில் சற்றும் மோகம் கொள்ளாதீர்கள். எதற்கும் ஆசைப் பட வேண்டாம். நமக்கு எதற்கு தனம், ஆசிரம வாசிகள் நாம். நமக்குத் தேவையானவை பழங்களும், காய் கிழங்குகளுமே. அவை தான் ஆசிரமத்தில் நிறைய கிடைக்கின்றனவே. காகுத்ஸன் ஒரு வேளை நீங்கள் யார் என்று கேட்டால், வால்மீகி முனிவரின் சிஷ்யர்கள் என்று மட்டும் சொல்லுங்கள். இதோ தந்தி வாத்யங்கள். நல்ல இடமாக பார்த்து அமர்ந்து கொண்டு சுருதி சேர்த்துக் கொண்டு லயத்துடன் பாடுங்கள். பயப்பட வேண்டாம். அரசனை அவமதித்ததாகவும் இல்லாமல், ஆரம்பத்திலிருந்த விஸ்தாரமாக பாடுங்கள். உலகில் உள்ள ஜீவன்களுக்கு, அரசன் தந்தைக்கு சமமானவனே. தார்மீகமான உறவு இது. அதனால் நீங்கள் இருவரும் நாளைக் காலை, மன மகிழ்ச்சியுடன், சுருதி, தாளம், இவற்றுடன் இணைந்து பாடுங்கள். இப்படி பல விதமாக அவர்களுக்கு உபதேசித்து, ப்ராசேதஸ் (நுண்ணிய அறிவுடையவர்) என்று பெயர் பெற்ற வால்மீகி முனிவர், சற்று நேரம் மௌனமாக இருந்தார். மைதிலியின் குமாரர்கள், குருவான வால்மீகி சொன்னதைக் கேட்டு அப்படியே செய்கிறோம், என்று சொல்லிக் கிளம்பினர். ரிஷி சொன்ன வார்த்தைகளை ஒன்று விடாமல் மனதில் ஏற்றுக் கொண்டவர்களாக, உற்சாகமாக பொழுது விடிவதை எதிர் நோக்கியபடி படுக்கச் சென்றனர். அஸ்வினி குமாரர்கள் இருவரும், பார்கவரிடம், நீதி ஸம்ஹிதை கேட்டு விட்டு வந்தது போல.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வால்மீகி சந்தேஸ: என்ற தொன்னூற்று மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 94 (631) ராமாயண கானம் (ராமாயணத்தைப் பாடுதல்)
விடிந்தது. இருவரும் ஸ்நான பானாதிகளை முடித்துக் கொண்ட பின், ரிஷி சொன்னபடியே தயாராக சென்று பாட ஆரம்பித்தார்கள். காகுத்ஸனும் இந்த இனிய கானத்தைக் கேட்டான். பல விதமான சஞ்சாரங்களும், தந்தி வாத்ய (சுருதி), தாள (லயம்) வாத்யங்களும் இணைந்து இழைந்து வந்த பாடலைக் கேட்டான். இரு சிறுவர்கள், சுஸ்வரமாக பாடிய பாடலைக் கேட்டு ராகவன் குதூகலம் அடைந்தான். அன்று வேலைகள் முடிந்ததும், மகானான முனிவர்களை அழைத்து, பல அரசர்களையும் வரவழைத்து, பண்டிதர்களையும் நிகமம் அறிந்தவர்களையும், பௌராணிகர்கள் (புராணம் சொல்பவர்கள்), சப்தங்களை அறிந்த (இலக்கண பண்டிதர்கள்), மற்றும் அறிஞர்கள், கலைஞர்கள், பலரையும் வரவழைத்தான். ஸ்வர ஞானம், லக்ஷணம் அறிந்தவர்களையும் பாட்டை ரஸிக்கும் ரசிகர்களையும், கந்தர்வ வித்தையான பாட்டு, நடனம் என்ற கலைகளை அறிந்தவர்களையும், பாத, அக்ஷர, சமாஸம், சந்தஸ் என்று (இலக்கியத்தின் பல துறைகளிலும்) தேர்ச்சி பெற்ற வித்வான்களையும், கலையே பிரதானம் என்று வாழ்ந்து வந்த பல கலைஞர்களையும், அதன் பல பிரிவுகளை அலசி ஆராய்ந்து வைத்திருந்த மூதறிஞர்களையும், ஜ்யோதிஷ சாஸ்திரம் அறிந்தவர்களையும், கவிகள், காவ்யத்தின் செய் முறைகளை அறிந்தவர்களையும், மொழியில் விற்பன்னர்களையும், இங்கிதம் தெரிந்த ரசிகர்களையும், நைகமத்தைக் கரை கண்ட அறிஞர்களையும், உபசாரங்களை அதன் இடத்தில் செயல்படுத்தத் தெரிந்த குசீலர்களையும் (ஆற்றல் மிகுந்தவர்கள்) தவிர, சொல் வளம் மிக்க பேச்சாளிகள், சந்தம் அறிந்தவர்கள், புராணம் அறிந்தவர்கள், வைதிகர்கள், உத்தமமான அந்தணர்கள், சித்ர கலைஞர்கள், வ்ருத்த, சூத்ரம், இவற்றைக் கற்றுத் தேர்ந்தவர்கள், (சமஸ்க்ருத இலக்கணம்), கீதம், நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள், சாஸ்திரங்களை அறிந்தவர்கள், நீதி நிபுணர்கள், வேதாந்த பொருளை தெளிவாக விளக்கத் தெரிந்தவர்கள், இவர்கள் அனைவரையும் அழைத்து, சபையைக் கூட்டினான். குழந்தைகளை உரிய ஆசனம் தந்து கௌரவித்து, பாடச் செய்தான். இப்படி சபையில் கலந்து கொண்டவர்கள், அரசனையும், குழந்தைகளையும் மாறி மாறிப் பார்த்து வியப்பெய்தினர். தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இருவரும் ராமரைப் போலவே இருக்கிறார்கள். பிம்பத்திலிருந்து வரும் பிரதி பிம்பம் போல காணப் படுகிறார்கள், ஜடா முடியும், வல்கலையும் இல்லாவிட்டால், பாடிக் கொண்டு வராதிருந்தால், நாம் இவர்களை ரகு குலத் தோன்றல்கள் என்றே நம்பியிருப்போம் என்று பேசிக் கொண்டனர். கேட்கும் ரசிகர்களுக்கு மேன் மேலும் ஆனந்தம் அளிக்கும் வண்ணம் அந்த முனி குமாரர்கள் இருவரும் பாட ஆரம்பித்தவுடன் சலசலப்பு, அடங்கியது. காந்தர்வமான, அதி மானுஷமான கானம் புறப்பட்டு அலை அலையாக பரவியது. கான சம்பத்தை, கேட்டு மகிழ்ந்த ரசிகர்கள், திருப்தியடைவதாக இல்லை. மேலும் மேலும் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். முதன் முதலில் நாரதரைக் கண்டதிலிருந்து கானம் ஆரம்பித்தது. இருபது அத்தியாயங்கள் பாடினர். நன்பகல் ஆன சமயம், ராகவன் தன் சகோதரன் லக்ஷ்மணனனிடம், லக்ஷ்மணா, பதினெட்டாயிரம் சுவர்ணங்களை இந்த கலைஞர்களுக்குக் கொடு, இன்னும் ஏதாவது வேண்டுமா என்றும் கேள் என்றார். உடனே லக்ஷ்மணனும் அந்த குழந்தைகளுக்கு சன்மானங்களை தனித் தனியாக கொண்டு வந்தான். பாடலில் தேர்ச்சி பெற்ற குசீலவர்கள் (குசீலவர்கள் -ஆற்றல் மிக்க பாடகர்கள்) அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வோம் என்று மறுத்து விட்டனர். எங்களிடம் உள்ளதில் நாங்கள் திருப்தியாக இருக்கிறோம் என்றனர். பற்றைத் துறந்த முனி குமாரர்கள், வனத்தில் தேவையான பழம், கிழங்குகள் கிடைக்கின்றன, தனத்தை, சுவர்ணமும், தங்கமும் வைத்துக் கொண்டு என்ன செய்வோம், இப்படி ஒரே குரலில் மறுத்ததைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் வியந்து பாராட்டினர். இப்படிக் கூட இருப்பார்களா? என்றனர். காவ்யத்தை தொடர்ந்து கேட்க ஆசைப் பட்ட ராமர், மகா தேஜஸுடன் நின்றிருந்த குமாரர்களைப் பார்த்து, இந்த காவ்யம் எவ்வளவு பெரியது? இதை இயற்றிய மகான் யார்? மகா கவியான அவர் எங்கு இருக்கிறார் என்று அடுக்கிக் கொண்டே போன ராமரைப் பார்த்து குழந்தைகள் பதில் சொன்னார்கள். இதை இயற்றியவர் வால்மீகி பகவான். இந்த யாகத்துக்கு வந்திருக்கிறார். இந்த சரித்திரம் முழுவதும் எழுதியிருக்கிறார். அவருக்கு நடந்தது நடந்தபடி கண் முன்னால் தெரிய வந்தது. ஸ்லோகங்களில், அழகாக சந்தஸ், எதுகை, மோனையோடு எழுதியிருக்கிறார். இருபத்து நாலாயிரம் ஸ்லோகங்கள். தபஸ்வியான முனிவர் அதை, நூறு உபாக்யானங்கள், முதலிலிருந்து ஐநூறு அத்தியாயங்கள், ஆறு காண்டங்கள், என்றும் மேலும் சற்று அதிகமாகவும் வரிசைப் படுத்தி எழுதியிருக்கிறார். அவர் தான் எங்கள் குரு. தான் இயற்றியதை எங்களுக்குப் பயிற்றுவித்தார். தங்கள் சரித்திரத்தை உலகில் ஜீவ ராசிகள் இருக்கும் வரை நிரந்தரமாக இருக்கச் செய்ய, இதை செய்திருக்கிறார், ராஜன், மேலும் கேட்க விரும்பினால், வேலை முடிந்தபின் சகோதரர்களுடன் கேளுங்கள் என்று சொல்லி விடை பெற்றனர். மகிழ்ச்சியுடன் முனி புங்கவர் இருந்த இடம் வந்து சேர்ந்தனர். ராமரும், அந்த இனிமையான கானம் மனதில் திரும்பத் திரும்ப ஒலிக்க அதை மனதினுள் அசை போட்டபடி மாளிகையினுள் சென்றார். சர்க்கங்களாக (அத்தியாயங்கள் என்ற பிரிவுகளாக) அமைக்கப் பெற்று, சுஸ்வரமாக, அழகான பதங்களுடன், தாளமும் சுருதியும் இணைந்து, வ்யஞ்ஜனம், யோகம் இவை இழைந்து வர, சிறந்த பாடகர்கள் பாடிய பாட்டை, வெகு நேரம் வரைஅவர் மனதில் ரசித்தபடி இருந்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராமாயண கானம் என்ற தொன்னூற்று நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 95 (632) வால்மீகி தூத ப்ரேஷணம் (வால்மீகி முனிவரை அழைக்க துர்தர்களை அனுப்புதல்)
இந்த கீதத்தினால் கவரப்பட்ட ராஜா ராமன், பலரையும் வரவழைத்து சிறுவர்களின் இசையைக் கேட்க வழி செய்தார். அரசர்களும், முனிவர்களும், வானரங்களும் கேட்டன. அவர்கள் இருவரும் சீதையின் மகன்கள் தானோ என்ற எண்ணமும் வலுப் பெற்றது. ராமர், ஆற்றலும், நன்னடத்தையும் உள்ள தூதர்களைப் பொறுக்கி எடுத்து, நான் சொன்னதாகச் சொல்லுங்கள். வால்மீகி முனிவரிடம், சீதை குற்றமற்றவளாக, அப்பழுக்கில்லாத நடத்தை உள்ளவளாக இருந்தால், இங்கு அழைத்து வரச் சொல். முனிவரின் விருப்பத்தையும், சீதையின் அபிப்பிராயத்தையும் தெரிந்து கொண்டு, அவள் என்ன சாக்ஷி சொல்கிறாள் என்பதையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்றார். நாளைக் காலை ஜனகாத்மஜாவான மைதிலி, இந்த சபையின் முன்னால் சபதம் செய்யட்டும். தன்னையும் என்னையும் இந்த சிக்கலிலிருந்து விடுவிக்கட்டும். இதைக் கேட்டு தூதர்கள், முனிவர் இருந்த இடத்தை நோக்கி விரைவாகச் சென்றார்கள். முனிவரை வணங்கி, ராம வாக்யத்தை மதுரமாக, ம்ருதுவாக சொன்னார்கள். அவர்கள் சொன்னதை வைத்து ராமரின் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட முனிவர்., சற்று யோசித்து, அப்படியே செய்வோம். பெண்களுக்கு கணவன் தான் தெய்வம் என்றார். கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல தன் தவ வலிமையால் பிரகாசித்துக் கொண்டிருந்த முனிவர் சொன்னதை அப்படியே தூதர்கள் ராமரிடம் வந்து தெரிவித்தனர். அதன் பின் ராமர், கூடியிருந்த ரிஷி, முனிவர்கள், அரசர்கள் இவர்களைப் பார்த்து, நாளை நீங்கள் அனைவரும், உங்கள், சிஷ்யர்கள், காவலர்களுடன் சீதை சபதம் செய்வதைக் காண வாருங்கள் என்றார். விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் வரலாம். இதைக் கேட்ட ரிஷி ஜனங்கள் சாது, என்று வாழ்த்தினர். அரசர்களும், நரஸ்ரேஷ்டா, இது உனக்கு ஏற்றதே. நீ தான் இப்படி நடந்து கொள்ளக் கூடியவன். வேறு யாராலும் இப்படி நினைக்கக் கூட முடியாது என்றனர். அவர்களை மறுநாள் வரச் சொல்லி ராஜ சிங்கமான ராமன் விடை கொடுத்து அனுப்பினார். மறுநாள் நடக்கப் போகும் சபதத்தை உறுதியாக நினைத்தபடி சென்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வால்மீகி தூத ப்ரேஷணம் என்ற தொன்னூற்று ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 96 (633) வால்மீகி ப்ரத்யாய தானம் (வால்மீகி உறுதி அளித்தல்)
அன்று இரவு நகர்ந்து பொழுது விடிந்தது. ரிஷிகள், மகா தேஜஸ்விகளான முனிவர்களை பெயர் சொல்லி அழைத்த ராமர், வசிஷ்டரே, வாம தேவ, ஜாபாலி மற்றும் காஸ்யபரே, தீர்கமான தவ வலிமை உடைய விஸ்வாமித்திரரே, துர்வாஸரே, புலஸ்தியரே, சக்தி மிகுந்த பார்கவரே, வாமனரே, தீர்காயுவான மார்க்கண்டேயரே, புகழ் வாய்ந்த மௌத்கல்யரே, கர்கரே, ஸ்யவனரே, தர்மம் அறிந்த சதானந்தரே, தேஜஸ்வியான பரத்வாஜரே, அக்னி புத்திரரே, சுப்ரப, நாரதரே, பர்வதன், கௌதமரே, காத்யாயன், சுயக்ஞரே, தவத்தின் நிதியாக விளங்கும், அகஸ்தியரே, மற்றும் ஆவலுடன் இங்கு கூடியிருக்கும் ஜனங்களே, வீரர்களான வானர, ராக்ஷஸர்களும், அரச குலத்தினர், வியாபாரம் செய்யும் வைஸ்யர்கள், சூத்ரர்கள், பல தேசங்களிலிருந்து வந்துள்ள பிராம்மணர்களே, ஆயிரக் கணக்கில் இங்கு வந்து கூடியிருக்கும், புகழ் வாய்ந்த செயல் வீரர்கள், ஞானத்தில் பெரியவர்கள், யோகத்தில் சிறந்தவர்கள் என்று பலரும் கேளுங்கள். சீதா சபதம் செய்வதைக் காண, இவர்கள் அனைவரும் வந்துள்ளனர். இவ்வாறு கூடியிருக்கும் ஜனங்களிடையே, கல்லான மலையைப் போல இறுகிய முகத்துடன், எந்த உணர்ச்சியையும் காட்டாது, கூட்டத்தை பிளந்து கொண்டு, வால்மீகி முனிவர் சீதையுடன் வந்து சேர்ந்தார். பின்னால், சீதையும் குனிந்த தலை நிமிராது நின்றாள். கணவனான ராமனைப் பார்த்து அஞ்ஜலி செய்தாள். பிராம்மணரைத் தொடர்ந்து வேதமே உருக் கொண்டு வந்து விட்டதோ எனும் படி இருந்தவளைப் பார்த்து ரிஷிகள் மத்தியில் சாது, சாது என்ற கோஷம் எழுந்தது. எங்கும் கல கலவென்ற சப்தம். எல்லோர் மனதிலும் வேதனையோடு கூடிய எதிர்பார்ப்பே இருந்தது. சிலர் சாது என்று ராமனை, சிலர் சாது என்று சீதையைப் போற்றினர். கூடியிருந்தவர்கள் வால்மீகி சொல்வதைக் கேட்கத் தயாரானார்கள். சீதைக்கு ஒரே சகாயமாக இருந்த முனிவர் சபை நடுவில் வந்து நின்றார். ராமனைப் பார்த்துச் சொன்னார். தாசரதே, இந்த சீதை தர்ம சாரிணி, நன்னடத்தை உள்ளவள். உன்னால், தனித்து விடபட்டவள். நீ ஏதோ அபவாதம் என்ற காரணம் சொல்லி என் ஆசிரமத்தின் அருகில் தியாகம் செய்து விட்டாய். லோகத்தில் யாரோ தவறாக பேசுகிறார்கள் என்று பயந்து விட்டாய். மகாவ்ரதனே, அனுமதி கொடு. சீதை தன் நடத்தைக்கு சாக்ஷி சொல்வாள். கேள். இந்த இரட்டையர்கள் ஜானகியின் குழந்தைகள். உன் வம்சத்தை விளங்கச் செய்ய வந்த உன் மகன்கள். நான் சொல்வது சத்யமே. ராகவ நந்தனா, நான் ப்ரசேதஸ முனிவரின் வம்சத்தில் வந்த பத்தாவது ப்ராசேதஸன் என்ற முனிவன். சத்யமல்லாததை நான் சொன்னதில்லை. இவர்கள் உன் குமாரர்கள். பல ஆயிர வருஷ காலம் நான் தவம் அனுசரித்து வந்திருக்கிறேன். இப்பொழுது நான் சொல்வதுக்கு மாறாக சீதை துஷ்ட சாரிணி என்று ஆனால், என் தவப் பலன்கள் அனைத்தும் நஷ்டமாகட்டும். என் மனதால், வாக்கால், சரீரத்தால், என் நடத்தையிலும், விரதங்களிலும், எந்த குறையும் வர விட்டதேயில்லை. இந்த மைதிலி, பாபமற்றவள், மாசற்றவள் என்றால் மட்டுமே நான் என் தவத்தின் பயனை அனுபவிப்பேனாக. நான் அறிந்து பஞ்ச பூதங்களும், ஆறாவது என் மனமும், இவளை பரிசுத்தமானவள் என்று நம்பியதால், என் ஆசிரமத்தில் தனித்து நின்றவளை அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்திருக்கிறேன். பதியே தெய்வம் என்று நம்பும் அபலைப் பெண் இவள். மாசற்றவள். எண்ணத்திலும், செயலிலும் பரிசுத்தமானவள். நீ தான் ஏதோ அபவாதம் என்ற காரணம் சொல்லி பயந்தாய். உனக்கு சரியான சாட்சியம் சொல்வாள். நரவரனே, தசரதன் மகனே, நீயே அறிந்திருந்தும், மனப்பூர்வமாக உணர்ந்திருந்தும், உலகில் யாரோ சொன்னார்கள் என்பதற்காக தியாகம் செய்தாயே, கேள் என்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வால்மீகி ப்ரத்யய தானம் என்ற தொன்னூற்று ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 97 (634) சீதா ரஸாதள ப்ரவேச: (சீதை பூமிக்குள் மறைதல்)
வால்மீகி இவ்வாறு சொல்லவும் ராமர் பதிலளித்தார். கூடியிருந்த ஏராளமான ஜனங்கள் மத்தியில், அஞ்ஜலி செய்தபடி, அழகிய நிறமுடைய சீதையைப் பார்த்தபடி, நீங்கள் சொல்வது எனக்கும் சம்மதமே. உங்கள் வாக்கே இவள் கல்மஷமற்றவள் என்று நிரூபிக்கப் போதுமானது. தேவர்கள் முன்னிலையில் ஒரு பரீஷை வைத்து இவள் சபதமும் செய்தபின் தான் வீட்டில் சேர்த்துக் கொண்டேன். ஆனாலும், லோகாபவாதம் பலமாக எழுந்தது. ப்ரும்மன், எனக்குத் தெரியும், இவள் பாபமற்றவள் என்று. ஊர் ஜனங்களுக்கு நம்பிக்கை வர, இவளைத் துறந்தேன். பகவானே, மன்னிக்க வேண்டுகிறேன். இவர்கள் இருவரும் எனக்குப் பிரியமானவர்கள் என்பதையும் இப்பொழுது தானே தெரிந்து கொள்கிறேன். இந்த உலகில், எனக்கு மைதிலியிடம் உள்ள ப்ரீதியும் அன்பும் நிரூபிக்கப்படட்டும். ராமருடைய மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட தேவர்களும், ப்ரும்மாவுடன் சாக்ஷியாக வந்து விட்டனர். ஆதித்யர்களும், வசுக்களும், ருத்ரனும், அஸ்வினி குமாரர்களும், மருத் கண்டகளும், கந்தர்வ, அப்ஸரஸ் கணங்களும், அனைவரும் கூடினர். உலகில் செயற்கரியன செய்தவர்களும், எல்லா தேவர்களும், பரம ரிஷிகளும், நாகர்கள், சுபர்ணர்கள், சித்தர்கள் எல்லோருமே மகிழ்ச்சி நிறைந்த மனதுடன், பரபரப்புடன், எதிர்பார்ப்புடன் சீதை சபதம் செய்வதைக் காண வந்து சேர்ந்தார்கள். தேவர்களும், மகரிஷிகளும், வந்து கூடி விட்டதைப் பார்த்து ராமர் சொன்னார். தேவர்களே, ரிஷி வாக்கினால், அவரது தூய்மையான வார்த்தைகளே போதும், சீதை தூய்மையானவள் என்பதை நிரூபிக்க. உங்கள் அனைவரின் மத்தியில் என் அன்பும் நிரூபிக்கப் படட்டும். (நான் அவளைத் திரும்ப பெறுவேனாக). அந்த சமயம், திடுமென மென்மையான காற்று, சுகந்தமாக அனைவரையும் தடவிக் கொடுப்பது போல வீசியது. கூடியிருந்தோர் அத்புதம் என்றனர். முன்பு க்ருத யுகத்தில் இருந்தது போல. அனைத்து தேசங்களிலிருந்தும் வந்திருந்த ஜனங்கள், காஷாய வஸ்திரம் தரித்திருந்திருந்த சீதையை நோக்கினர். சீதை அவர்கள் அனைவரும் வந்து விட்டதை தெரிந்து கொண்டு, தன் கண்களை பூமியை விட்டு அகற்றாமல், தலை குனிந்தபடி, மாதவீ தேவி, (பூமித் தாயே,) நான் ராகவனைத் தவிர வேறு யாரையும் நினைக்காமல் இருந்தது உண்மையானால், எனக்கு அடைக்கலம் கொடு. மனம், வாக்கு, காயம் செயலால் ராமனுக்கே என்று இருந்தது உண்மையானால், பூமித் தாயே எனக்கு அடைக்கலம் கொடு. நான் சொல்வது உண்மையானால், ராமனைத் தவிர வேறு தெய்வம் என் மனதில் இல்லை என்பது சத்யமானால், பூமித் தாயே எனக்கு அடைக்கலம் கொடு. இப்படி சீதை சபதம் செய்து கொண்டிருக்கும் பொழுதே அந்த அதிசயம் கண் முன்னால் நிகழ்ந்தது. பூமியிலிருந்து உத்தமமான சிம்மாசனத்தை தலையில் தாங்கிக் கொண்டு, நாகர்கள், திவ்யமான சரீரத்துடனும், திவ்யமான அலங்காரத்துடனும் வெளி வந்தன. அதில் அமர்ந்து வந்த தரணி தேவி, பூமித் தாய், மைதிலியை கைகளைப் பிடித்து ஸ்வாகதம் சொல்லி அழைத்து, தன்னுடன் அமர்த்திக் கொண்டாள். அந்த ஆசனத்தில் அமர்ந்து ரஸாதளம் செல்பவளை புஷ்ப வ்ருஷ்டி, இடைவிடாமல் வாழ்த்தி அனுப்பியது. தேவர்கள் இடை விடாமல் மலர் மாரி பொழிந்தனர். ஸாது, ஸாது என்ற வாழ்த்தொலி சபையை நிறைத்தது. அந்தரிக்ஷத்தில் இருந்து சீலம் மிகுந்தவளே சீதே, என்று அழைத்தது கேட்டது. சீதை ரஸாதளம் சென்று விட்டதை தேவர்கள் உடனே ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பது தொடர்ந்து வந்த மகிழ்ச்சி ஆரவாரத்தால் புரிந்தது. யாகசாலையில் கூடியிருந்த ஜனங்கள் திகைத்தனர். அந்தரிக்ஷத்திலும், பூமியிலும் இருந்த ஸ்தாவர, ஜங்கம, தானவர்கள், பெரும் சரீரம் உடைய பன்னகாதிபர்கள், பாதாளத்திலிருந்தும் யார், யாரோ மகிழ்ச்சி ஆரவாரம் செய்வது கேட்டது. சிலர் கண் மூடி தியானம் செய்தனர். சிலர் ராமனை கண் கொட்டாமல் பார்த்தனர். பலர் திகைப்பில், வாய் எழாமல் மௌனமாக நின்றனர். சிலர் பூமிக்குள் சீதை சென்ற இடத்தையே பார்த்தபடி நின்றனர். எதுவும் செய்ய இயலாத நிலையில் அந்த இடத்தை மௌனமே நிறைத்தது.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சீதா ரஸாதள ப்ரவேச: என்ற தொன்னூற்று ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 98 (635) ராம கோபோபசம: (ராமரின் கோபமும், சாந்தமடைதலும்)
சீதை ரஸாதளம் சென்றவுடன், வானரர்களும், முனி ஜனங்களும் சாது, சாது என்று கத்தினர். ராமர் தான் வாயடைத்து, மிகவும் சோர்ந்து போனவராக, துக்கத்துடன் நின்றிருந்தார். வெகு நேரம் வாய் விட்டே அழுத பின்னும் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. க்ரோதமும், சோகமும் வாட்டியது. இதுவரை கண்டிராத வேதனை என் மனதை வாட்டுகிறது. கூரிய ஆயுதம் கொண்டு மனதை கீறி கிழிப்பது போல தாக்குகிறது. என் சீதை கண் எதிரில் காணாமல் போவதை பார்த்துக் கொண்டு நின்றேனே, ஸ்ரீ போன்றவள், முன் லங்கையிலிருந்து மீட்டு வந்தது போல இப்பொழுது பாதாளத்திலிருந்து மீட்டு வரத் தெரியாதா என்ன? தேவி, வசுதே, என் சீதையைத் திருப்பிக் கொடு. என்னை அலட்சியம் செய்யாதே. நான் என் ரோஷத்தைக் காட்ட வேண்டி வரும். நீ எனக்கு மாமியார் அல்லவா? உன் மடியிலிருந்து தானே ஜனக ராஜா கலப்பையால் உழும் பொழுது கண்டெடுத்தார். அதனால் சீதையைத் திருப்பிக் கொடு. அல்லது உன்னுடன் பள்ளத்தில் நானும் வந்து வசிக்கிறேன். பாதாளத்திலோ, நாகங்களோடோ நானும் அவளுடன் வசிப்பேன். பூமித் தாயே, அவளை அதே ரூபத்துடன் திரும்ப ஒப்படைக்க முடியாவிட்டால், இந்த வனம், மலைகள், எல்லாவற்றையும் சேர்த்து உன்னை நாசம் செய்து விடுவேன். எங்கும் தண்ணீராக பெருகட்டும், பூமியே இல்லாது செய்கிறேன். கோபமும், வருத்தமுமாக, பரிதாபமாக ராமர் புலம்ப ஆரம்பிக்கவும் ப்ரும்மா சமாதானம் செய்ய தேவர்கள் சூழ வந்தார். ராம, ராமா, ரகு நந்தனா, இப்படி வருத்தப் படாதே. சமாளித்துக் கொள் உன் இயல்பான தன்மையை நினைவு கொள். வீரன் நீ. சத்ருக்களை நாசம் செய்ய வல்லவன். உனக்கு நான் நினைவு படுத்த வேண்டுமா என்ன? உன் வைஷ்ணவமான அவதாரத்தை நினைத்துப் பார். சீதா தூய்மையானவள். ஸாத்வீ. உன்னையே அனவரதமும் நினைத்து வாழ்ந்தவள். உன்னையே ஆசிரயித்து இருந்தவள். தற்சமயம், தன் தவ வலிமையால் பாதாள லோகம் சென்று விட்டாள். ஸ்வர்கத்தில் நிச்சயம் உன்னுடன் சேருவாள், கவலைப் படாதே. இந்த கூட்டத்தில் மத்தியில் நான் சொல்வதை கவனமாகக் கேள். இந்த காவியம் உத்தமமாக இருக்கப் போகிறது. ஒரு நிகழ்ச்சியையும் விடாமல், முனிவர் விவரித்து இருக்கிறார். பிறப்பிலிருந்து வாழ்க்கையில் நீ அனுபவித்த சுக, துக்கங்கள், வால்மீகி தன் காவியத்தில் திறம்பட எழுதி பிரபலபடுத்துவார். உன்னை நாயகனாக கொண்டு எழுதப் பட்ட இந்த காவியமே ஆதி காவியமாகும். ராகவனைத் தவிர வேறு யார் இது போன்ற காவிய நாயகனாக முடியும். முன்பே தேவர்கள் மூலம் கேள்விப் பட்டேன். சத்ய வாக்யமாக, தெளிவாக, திவ்யமாக, அத்புதமாக இந்த காவியம் எழுதப் பட்டிருப்பதாகச் சொன்னார்கள். புருஷ சார்துர்ல, நீயும் மனதை கட்டுப் படுத்திக் கொண்டு முழுவதுமாக கேள். மீதி நடக்க இருப்பதையும் இதைக் கேட்டுத் தெரிந்து கொள். ரிஷி எழுதியது உன் பொருட்டே. நீயன்றி வேறு யார் இதைக் கேட்டு விமரிசிக்க முடியும். இவ்வாறு சொல்லி விட்டு ப்ரும்மா, கூடியிருந்தவர்களிடம் விடை பெற்றுச் சென்று விட்டார். ராகவன் வாழ்க்கையில் மீதி கதையையும் கேட்க ராகவனும், வால்மீகியிடம் ப்ரும்மா சொன்னபடியே ராமாயணத்தை தொடர்ந்து கானம் செய்யும் படி கேட்டுக் கொண்டான். தான் பர்ண சாலைக்குள் சென்று விட்டான். சீதையின் நினைவாகவே இரவு கழிந்தது.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராம கோபோபசம: என்ற தொன்னூற்று எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 99 (636) கௌஸல்யாதி கால தர்ம: (கௌஸல்யை முதலானோர் காலகதி அடைதல்)
விடிந்தது, மகா முனிவரை அழைத்து, எந்த வித தடுமாற்றமும் இன்றி பாடிக் கொண்டிருந்த புத்திரர்களையும் அழைத்து வரச் செய்தான். உள்ளே வந்து காவியத்தின் மீதி பாகங்களையும் குழந்தைகள் பாடிக் காட்டினர். சீதை பூதலம் சென்றதும், உலகமே சூன்யமாக இருப்பதாக உணர்ந்தார். யாக காரியங்களை கவனித்து விட்டு, திரும்பியவரிடம் மன சாந்தி அருகில் கூட வர மறுத்தது. மிகவும் வேதனையை அனுபவித்தார். அரசர்களை திருப்பி அனுப்பி விட்டு, கரடிகள், வானரங்கள், ராக்ஷஸர்கள், மற்ற ஜனக் கூட்டம், எல்லோரையும் வழியனுப்பி வைத்தார். பிராம்மணர்களுக்கு வேண்டிய தக்ஷிணைகள் கொடுத்து யாக காரியத்தை முடித்து விட்டு சீதை நினைவாகவே அயோத்தி திரும்பினார். புத்திரர்கள் இருவருடனும் மேலும் மேலும் பல யாகங்களைச் செய்தார். தங்கத்தாலான சீதை உடன் இருந்தாள். பத்தாயிரம் ஆண்டுகள், அஸ்வமேத யாகங்கள் செய்து, வாஜபேய, வாஜிமேத என்ற யாகங்களை செய்வித்தவர்களுக்கு பத்து மடங்கு சுவர்ணங்கள் கொடுத்து, ஆதரித்து, இரவு பகல் அக்னி ஹோத்ரம் செய்பவர்களுக்கு கணக்கில்லாத பசுக்களையும் பெரும் தனம் கொடுத்து திருப்தி செய்தபடி, மற்றும் பலருக்கும் நிறைவாக தக்ஷிணைகள் கொடுத்த படி, பல யாகங்கள் செய்தார். மகானான ராமர், பல காலம் இவ்வாறு சிறப்பாக ராஜ்யத்தை ஆண்டார். அவருடைய ஆட்சியில் ருக்ஷ, வானர, ராக்ஷஸர்கள், ராமனின் அரசியல் சட்டத்தை அனுசரித்து நடந்தனர். காலத்தில் மழை பொழிந்தது. திசைகள் விமலமாக இருந்தன. நகரங்களும், கிராமங்களும், ஜனங்கள் ஆரோக்யமாக வளைய வர, சந்தோஷமாக இருந்தது. யாரும் அகால மரணம் அடையவில்லை. எந்த பிராணியும் வியாதியால் வாடவில்லை. ராமர் ராஜ்யத்தை ஆண்ட காலத்தில், எந்த வித அனர்த்தமும் நேரிடவில்லை. வெகு காலம் சென்ற பின் பல வித தான தர்மங்கள் செய்து வாழ்ந்தவளான ராம மாதா, கால கதியடைந்தாள். புத்ர பௌத்ரர்கள் சூழ இருந்து காலமானாள். அவளைத் தொடர்ந்து சுமித்ரையும், கைகேயியும் சென்றனர். தசரத ராஜாவின் மற்ற மனைவிகளும் ஒவ்வொருவராக அவரை ஸ்வர்கத்தில் காணச் சென்று விட்டனர். இவர்களுக்கான மகா தானம் முதலியவைகளை ராமர் அந்தந்த காலங்களில் செய்தார். தாய் மார்களுக்கான நீத்தார் கடன்களை பிராம்மணர்களைக் கொண்டு குறைவர செய்தார். பித்ருக்களையும், தேவர்களையும் திருப்தி செய்ய விதிக்கப் பட்டுள்ள கர்மாக்களை விடாமல் செய்தார். இவ்வாறாக பல வருஷ காலம் சென்றது.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், கௌஸல்யாதி கால தர்ம:என்ற தொன்னூற்று ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 100 (637) கந்தர்வ விஜய விஜய யாத்ரா (கந்தர்வனை வெற்றி கொள்ள விஜய யாத்திரை)
சில காலம் சென்ற பின் கேகய ராஜாவான யுதாஜித், தன் குருவை ராகவனிடத்தில் அனுப்பினார். மகா தேஜஸ்வியும், ஆங்கிரஸ புத்திரருமான, கார்க்யர் என்பவர் தான் அந்த குரு. அன்பளிப்பாக அவருடன் பத்தாயிரம் அஸ்வங்கள் வந்தன. கம்பளங்களும், ரத்னங்களும், சித்ர வஸ்திரங்களும், உயர் வகை மற்ற பொருட்களும், சுபமான ஆபரணங்களும், ராகவனுக்காக கொடுத்து அனுப்பியிருந்தார். ப்ரும்ம ரிஷியான கார்க்யர் வந்திருக்கிறார், மாமன் வீட்டிலிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறார் என்பதையறிந்து, தன் சகோதரர்களுடன் இரண்டு மைல் நடந்து எதிர்கொண்டு சென்று, மகா முனிவரை அழைத்து வந்தார் அரசரான ராமர். இந்திரன் ப்ருஹஸ்பதியை எதிர்கொண்டு அழைப்பது போல இருந்தது. அவர் கொண்டு வந்த அன்பளிப்புகளைப் பெற்றுக் கொண்டு, அவரை வணங்கி மரியாதைகள் செய்த பின், மாமன் வீட்டு குசலம் விசாரித்தார். அவர் வசதியாக அமர்ந்த பின், ராகவன், மாமன் என்ன சொன்னார்.? எதற்காக பகவானான தங்களை இங்கு அனுப்பியிருக்கிறார். சாக்ஷாத் ப்ருஹஸ்பதி வந்தது போல், தங்கள் வரவு எங்கள் பாக்கியம் என்றார். மகரிஷி விஸ்தாரமாக தான் வந்த காரியத்தை விவரித்தார். உன் மாமன் யுதாஜித், மிகவும் அன்புடன் சொல்லியனுப்பிய விஷயத்தை சொல்கிறேன், கேள். இங்கு அருகில் கந்தர்வ தேசம் உள்ளது. பழங்கள், காய் கறிகள் செழிப்பாக உள்ள இடம். சிந்துவின் இரு கரைகளிலும் இந்த தேசம் மிகவும் சோபனமானது. அழகானது. கந்தர்வர்கள் ரக்ஷிக்கிறார்கள். எப்பொழுதும், ஆயுத பாணிகளாக வீரர்கள், காவல் இருப்பர். சைலூஷன் மகள்கள், (சைலூஷன் என்பவரின் பெண்கள், அல்லது சைலூஷ-நடனமாடுபவர், நடன, நாட்டியம் ஆடும் பெண்கள்). மூன்று கோடி பேர். அவர்களை ஜயித்து, அந்த சுபமான, கந்தர்வ நாட்டை உன் ராஜ்யத்தோடு இணைத்துக் கொள். மிக அழகிய நகரம் இது. மாற்றான் கையில் இருக்கிறது. உனக்கு நன்மையைத் தான் சொல்கிறேன். இதைக் கேட்டு ராமர் மகிழ்ச்சியடைந்து, மாமனின் குருவான மகரிஷியைப் பாரத்து, அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, பரதனை நோக்கினார். மகரிஷியிடம், இந்த குமாரர்கள், பரதனின் புத்திரர்கள். தக்ஷ:, புஷ்கலன் என்ற பெயருடைய குமாரர்கள். பரதன் தலைமையில் இவ்விருவரும், மாமனுடன் சேர்ந்து, படை பலத்தோடு வருவார்கள். இவர்கள் கந்தர்வ நகரத்தை ஜயித்து, இரண்டு நகரமாக தங்களுக்குள் பிரித்துக் கொள்ளட்டும். அந்த உயர்ந்த நகரில் தன் புத்திரர்களை ஸ்தாபித்து விட்டு பரதன் திரும்பி வருவான். இவ்வாறு சொல்லி, படை பலங்களை ஏற்பாடு செய்து, பரதனுடன் கிளம்ப கட்டளையிட்டு, குமாரர்கள் இருவருக்கும் முடி சூட்டி ஆசிர்வாதங்கள் செய்து அனுப்பினார். ஆங்கிரஸரான (அங்கிரஸ் என்ற ஒருவரின் மகன் ஆங்கிரஸ்) கார்க்யர், நல்ல நேரம் பார்த்து, பரதன், அவன் புத்திரர்கள், மற்றும் பெரும் சேனையுடன் கிளம்பினார். ராகவன் வெகு தூரம் உடன் சென்று வழியனுப்பினான். மாமிசம் உண்ணும் மாமிசபக்ஷிணிகளான பல மிருகங்கள் பரதனுடன் அனுப்பப் பட்டன. ரத்தத்தைக் குடிக்கும் வகையைச் சேர்ந்தவைகள். சிங்க, வராஹ, வ்யாக்ர போன்ற மிருகங்கள், தவிர, ஆகாயத்தில் பறக்கும் பக்ஷிகள், ஆயிரக் கணக்காக சேனைக்கு முன் சென்றன. பாதி மாதம் பிரயாணத்தில் செல்ல, படை ஆரோக்யமான வீரர்களுடன் கேகய நாட்டில் நுழைந்தது.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், கந்தர்வ விஷய விஜய யாத்ரா என்ற நூறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 101 (638) தக்ஷ, புஷ்கல நிவேச: (தக்ஷன், புஷ்கலன் இவர்கள் பதவியேற்றல்)
பரதன் சேனையுடன் வந்து சேர்ந்து விட்டதை அறிந்ததும், கேகயாதிபன், அவர்களைக் காண வந்து சேர்ந்தான். சீக்கிரமே ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, தங்கள் படையும் கந்தர்வ நகரத்தை இணைத்து முற்றுகையிட்டனர். பரதனும், யுதாஜித்தும் சேர்ந்து கந்தர்வ நகரத்தை தாக்கினர். கந்தர்வ வீரர்களும் போருக்குத் தயாராக தங்கள் வாத்யங்களை முழங்கினர். அதன் பின் பெரும் யுத்தம் நடந்தது. ஏழு இரவுகள் பயங்கரமான யுத்தம். இரு தரப்பிலும் வெற்றியோ, தோல்வியோ நிர்ணயிக்க முடியாமல் தொடர்ந்தது. நதிகள் ரத்தமே நீராக பிரவகித்தன. கத்தியும், சக்தியும், வில் அம்புகளும் வெட்டி சாய்த்த உடல்கள் அந்த நதியில் அடித்துச் செல்லப் பட்டன. பின் ராமானுஜனான பரதன், கோபத்துடன், காலாஸ்திரம், சம்வர்த்தம் என்ற அஸ்திரத்தை கந்தர்வர்கள் மேல் பிரயோகித்தான். கால பாசம் தாக்கியதைப் போல மூன்று கோடி வீரர்களும் விழுந்தனர். இது போன்ற தாக்குதலை அவர்கள் கண்டதேயில்லை. நிமிஷ நேரத்தில் அவர்கள் அனைவரும் விழ, கைகேயி புத்திரன் பரதன், அந்த வளமான பிரதேசத்தில், தன் புத்திரர்களை அரசர்களாக நியமித்தான். தக்ஷசிலா என்ற இடத்தில், தக்ஷனையும், புஷ்கலாவதி என்ற நகரத்தில் புஷ்கலனையும் அரசனாக முடி சூட்டினான். கந்தர்வர்களின் ராஜ்யமே அழகிய நகரமாக இருந்தது. செல்வம் கொழித்த வளமான கானனங்கள் நிறைய இருந்தன. உத்யான, வன போக்குவரத்து வழிகள் செம்மையாக செய்யப்பட்டு இரு நகரங்களும் இணைக்கப் பட்டிருந்தன. கடைகளும், கடை வீதிகளும், பெரிய மாளிகைகளும், வீடுகளும், வாசஸ்தலங்களும், அவைகளின் விமானங்கள் (மேற் கூரைப் பகுதி) ஒரே வர்ணத்தில் அமைந்து அழகிய காட்சி தந்தது. தாள, தமால மரங்கள், திலக, வகுள மரங்கள், ஆங்காங்கு சோபையுடன் வளர்ந்து நிற்க, ஐந்து வருஷங்கள் பரதன் அவர்களுடன் இருந்து ராஜ்ய நிர்வாக விஷயங்களை சொல்லிக் கொடுத்து விட்டு, அயோத்தி திரும்பி வந்தான். ராமனை வணங்கி. கந்தர்வர்களுடன் செய்த யுத்தம், வெற்றியடைந்தது பற்றி விவரங்களைச் சொன்னான். ராகவனும் மகிழ்ச்சியடைந்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், தக்ஷ, புஷ்கல நிவேச: என்ற நுர்ற்று ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 102 (639) அங்கத, சந்திர கேது நிவேச: (அங்கதன், சந்திர கேது பதவியில் அமர்த்தப் படுதல்)
ஒரு சமயம், ராகவன் தன் சகோதரர்களுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தான். லக்ஷ்மணனைப் பார்த்து, சௌமித்ரே, உன் குமாரர்களும், கல்வி கற்று தேர்ந்து விட்டார்கள். தர்மம், நீதி முறைகளைத் தெரிந்து கொண்டு விட்டார்கள். அங்கதனும், சந்த்ர கேதுவும், தற்சமயம் ராஜ்யத்தை ஆளும் தகுதி பெற்று விட்டனர். இவர்களை ஒரு தேசத்தில் முடி சூட்டி அமர்த்த வேண்டும். தகுதியான தேசம் எது என்று தெரிந்து கொண்டு வா என்றார். இருவரும் வில்லா ளிகள். ரமணீயமான தேசத்தில், இடையூறு இன்றி இவர்களை ஸ்தாபனம் செய்வோம். அரசர்களால் தொந்தரவு இல்லாத, ஆசிரமங்கள் நலமாக இருக்கும் இடமாகப் பார்த்துச் சொல். நாம் யாருக்கும் தொல்லை தராமல், யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருக்க ஏற்ற இடமாக சொல். லக்ஷ்மணா. பரதன் பதில் சொன்னான். இங்கு காரூபதம் என்ற ஒரு அழகிய தேசம் ஆரோக்யமாக இருக்கிறது. அங்கு புத்திரன் அங்கதனை நியமிப்போம். சந்திர கேதுவுக்கு மற்றுமொரு ரமணீயமான தேசம், சந்திர காந்தம் என்ற பெயரில் உள்ளது. இதை ராமர் அப்படியே ஏற்றுக் கொண்டார். பரதன் சொன்னபடியே அந்த தேசத்தை தன் வசமாக்கிக் கொண்டு, அங்கதனை அரசனாக்கி முடி சூட்டிய பின், மல்லனான சந்திர கேதுவுக்கு, மல்லர்கள் நிரம்பிய சந்திர காந்தம் என்ற நகரில் முடி சூட்டி வைத்தார். அந்த நகரம் ஸ்வர்க புரி போல இருந்தது. ராமரும், பரத லக்ஷ்மணர்களும், மிகவும் திருப்தியுடன்., அந்த நகரம் சென்று யுத்தம் செய்தனர். வெற்றி வாகை சூடி இரு குமாரர்களையும் தனித் தனியாக ராஜ்ய பரிபாலனம் செய்ய வழி வகுத்தனர். அங்கதனுடன் லக்ஷ்மணனும், சந்திர கேதுவுடன் பரதனும் சென்று நிர்வாக விஷயங்களை அவர்களுக்கு பயிற்றுவித்தனர். ஒரு வருஷம் இவ்வாறு சென்றது. சகோதரர்கள் இருவரும், ராமனுக்கு சேவை செய்வதையே தங்கள் பாக்யமாக கருதி வாழ்ந்து வந்தனர். மூவரும் அரசு நிர்வாகத்தை ஒற்றுமையாக செய்து வந்தனர். பெரும் யாக குண்டத்தில் தோன்றும் மூன்று வித அக்னி போல ஒத்து வாழ்ந்தனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், அங்கத, சந்திர கேது நிவேச: என்ற நூற்று இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 103 (640) காலாகமனம் (காலன் வருதல்)
இவ்வாறு காலம் சென்றது. ஒரு சமயம், காலனே தாபஸ உருவம் தரித்து ராஜ மாளிகை வாசலில் வந்து நின்றான். லக்ஷ்மணனைப் பார்த்து, மிக முக்கியமான காரியம், ராமனைப் பார்க்க வேண்டும் என்றான். எனக்கு அனுமதி கொடு. மிகவும் பலசாலியான ஒருவரின் தூதன் நான். மிக அவசர காரியம் என்பதால் ராமனை நேரில் காண வந்துள்ளேன் என்றான். சௌமித்ரியும் உடனே அவசரமாக ராமனிடம் சென்று தபஸ்வி ஒருவர் வந்திருப்பதை தெரிவித்தான். ராமா, வெற்றி பெறுவாயாக. ஜயஸ்வ. யாரோ, ஒரு தேஜஸ்வியான தூதன், உன்னைக் காண வந்திருக்கிறார். இதைக் கேட்டு ராமர், அனுப்பி வை, யார் என்று பார்ப்போம் என்றார். சௌமித்ரியும் சரி என்று சொல்லி அந்த முனிவரை அனுப்பி வைத்தான். காணவே கூசும் தேஜஸுடன் இருந்த அந்த முனிவர் அரசனிடம் சென்று வாழ்க என்று வாழ்த்தி விட்டு, ராமர் அளித்த அர்க்யம் முதலிய மரியாதைகளை ஏற்றுக் கொண்ட பின், பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டனர். ஸ்வாகதம், மகா முனிவரே, கொண்டு வந்த செய்தியைச் சொல்லுங்கள் என்றார் ராமர். தங்க மயமான ஆசனத்தில் அமர்ந்து, மதுரமாக பேச ஆரம்பித்தார் வந்தவர். நான் சொல்லப் போவது இரண்டு விஷயம். இதில் நீ விரும்புவது எது என்று சொல். இடையில் நம்மை யாரும் பார்த்தாலோ, நாம் பேசுவதைக் கேட்டாலோ, நீ அவர்களை வதம் செய்து விட வேண்டும். என் தலைவரின் செய்தியை நமக்குள் மட்டுமே பகிர்ந்து கொள்ளச் சொல்லி எனக்கு கட்டளை என்றார். உடனே ராமர் லக்ஷ்மணனிடம் சென்று, லக்ஷ்மணா, வாசலில் நில். மற்ற காவல் காரர்களை அனுப்பி விடு. யார் கேட்டாலும் வதம் செய்யும்படி நேரிடும். எங்களுக்குள் நடக்கும் சம்பாஷனையை யாரும் கேட்கக் கூடாது. எங்கள் இருவரையும் சேர்த்து பார்த்தாலும் இதே தண்டனை தான். அதனால் சௌமித்ரே, ஜாக்கிரதை என்று லக்ஷ்மணனை காவலுக்கு நியமித்து விட்டு, திரும்பி வந்து, முனிவரிடம், சொல்லுங்கள், என்றார். யார் தங்களை அனுப்பியுள்ளது. எனக்கு என்ன செய்தி? சற்றும் கவலையின்றி நிதானமாக, விவரமாக சொல்லுங்கள். எனக்கும் கேட்க ஆவல் அதிகமாகிறது என்று சொல்லி எதிரில் அமர்ந்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், காலாகமனம் என்ற நூற்று மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 104 (641) பிதாமஹ வாக்ய கதனம் (பிதாமகரான ப்ரும்மாவின் செய்தியை தெரிவித்தல்)
ராஜன், நான் வந்த காரியம் என்ன என்பதைச் சொல்கிறேன், கேள். பிதாமகர், ப்ரும்மா தான் என்னை அனுப்பி வைத்தார். முன் ஜன்மத்தில் நான் தங்கள் புத்திரன். சகலத்தையும் தன்னுள் சம்ஹாரம் செய்யும் காலன். மாயையால் தோற்றுவிக்கப் பட்டவன். லோகபதியான பிரபு, பிதாமகர் என்று பெயர் தந்ததும் நீங்கள் தான். தாங்கள் தன் இருப்பிடம் திரும்பி வர காலம் வந்து விட்டது. தேவலோகத்தை ரக்ஷிக்க தாங்கள் திரும்ப வர வேண்டும், முன்பு ஒரு சமயம், உலகங்களை உங்கள் மாயையால் பிரளய ஜலத்தில் மூழ்கச் செய்து, அந்த பெரும் கடல் வெள்ளத்தில் தூங்குவது போல படுத்திருந்த தாங்கள், முதலில் என்னை ஸ்ருஷ்டித்தீர்கள். போகவந்தன் என்ற நாகத்தை, தண்ணீரில் வசிக்கும் நாகராஜாவான அனந்தனை, உங்கள் மாயையால் தோன்றச் செய்த பின், மது, கைடபன் என்ற இரு ஜீவன்களையும் பிறப்பித்தீர்கள். இவர்களது உடல், தசை, எலும்பு இவற்றால், மலைகளுடன் கூடிய இந்த மேதினி, பூமி உண்டாயிற்று. திவ்யமான தங்கள் நாபியிலிருந்து, சூரியனுக்கு சமமான பத்மத்தை வரவழைத்து, என்னையும் ஸ்ருஷ்டித்தீர்கள். ப்ராஜாபத்யம்- உலகில் ஸ்ருஷ்டி தொழிலை என்னிடம் ஒப்படைத்தீர்கள். அந்த பொறுப்பை நான் நிர்வகித்து வருகிறேன். ஜகத்பதே, உங்களையே நான் உபாசித்து வருகிறேன். இப்பொழுது உலகில் உள்ள ஜீவன்களை ரக்ஷிப்பதும் நீயே. எனக்கும் தேஜஸை, சக்தியைத் தருபவன் நீயே. அதனால் இப்படி நெருங்க முடியாமல் இருக்கும் நிலையிலிருந்து, விஷ்ணுவாக உலகை காப்பவனாக வா, என்று வேண்டிக் கொண்டேன். அதிதியிடம், வீர்யம் உள்ள மகனாக, உடன் பிறந்தவர்களுக்கு உள் உறையும் சக்தியாக, அவர்கள் சொல்லிலும் செயலிலும், உதவியாக என்றும் இருக்கிறாய். ஜகத்பிரபுவே, உலகில் ஆபத்து வரும் பொழுது, ஜனங்கள், பயந்து நடுங்கும் பொழுது, நீ தான் அடைக்கலம் தருகிறாய். இது போல, ராவணன் மனித இனத்துக்கு இடையூறு செய்ததை நீக்க, மனிதனாக பிறக்க திருவுள்ளம் கொண்டாய். நூறாயிரம் வருஷங்கள், மேலும் பல நூறு ஆண்டுகள், நீங்கள் இங்கு வாசம் செய்து விட்டீர்கள். மனிதர்கள் கணக்கில் பூர்ண ஆயுள். நீண்ட காலம் வாழ்ந்து விட்டீர்கள். நரஸ்ரேஷ்டா, இதோ தங்கள் காலமும் நெருங்கி விட்டது. திரும்பி வா. பிரஜைகள் உபாசிக்க விரும்பினால், தாங்கள் மேலும் வசிக்க விரும்பினாலும், இங்கு தங்கியிருங்கள். அல்லது வைஷ்ணவ லோகம் திரும்பி வாருங்கள். இவ்வாறு பிதாமகர் சொல்லி அனுப்பினார். ராகவா, சுரலோகத்தையும் ஜயிக்க மற்ற தேவர்களோடு, விஷ்ணுவாக தேவர்களையும் மகிழ்விக்க வா. பிதாமகர் சொன்னதை காலன் வந்து சொன்னதைக் கேட்டு ராமர் சிரித்தபடி, சர்வ சம்ஹாரகாரனான காலனிடம், தேவதேவனுடைய அத்புதமான செய்தியைக் கேட்டேன். தாங்கள் செய்தி கொண்டு வந்ததும் நல்லதாயிற்று. மூன்று உலகுக்கும் நன்மை செய்யத் தான் அவதாரம் செய்கிறேன். உனக்கு மங்களம். நான் வந்தபடியே கிளம்புகிறேன். நீ வந்ததில் எதுவும் யோசிக்கவும் தேவையில்லை. சர்வ சம்ஹாரனே, தேவர்களுக்கு உதவியாக ப்ரும்ம தேவர் சொன்ன செய்திக்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன் என்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், பிதாமஹ வாக்ய கதனம் நூற்று நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 105 (642) துர்வாசாகம: (துர்வாசர் வருகை)
இவர்கள் இருவரும் அறைக்குள் பேசிக் கொண்டிருந்த பொழுது, துர்வாச முனிவர் வந்து சேர்ந்தார். தவ வலிமை மிக்க அந்த ரிஷி, சீக்கிரம் ராமனைக் காண வேண்டும். எனக்கு ஒரு காரியம். அவனிடம் சொல்ல வேண்டும் என்று பரபரத்தார். லக்ஷ்மணன் இதைக் கேட்டு, பணிவாக வேண்டினான். எப்படிப்பட்ட வீரனானாலும், யுத்தத்தில், ஜயித்து விடக்கூடிய வலிமை மிக்கவன், அவரிடம் மரியாதையுடன் வரவேற்று, ப்ரும்மன், என் சகோதரன் மிக முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார். தற்சமயம் அந்த காரியத்தில் நான் குறுக்கிடுவதற்கில்லை. என்ன காரியம் சொல்லுங்கள். நான் செய்கிறேன். ஏதாவது வேண்டுமா? என்று கேட்டான். அல்லது, ஒரு முஹுர்த்தம் காத்திருங்கள். இதைக் கேட்டு முனிவர் கோபம் கொண்டார். ஆத்திரம் கண்களை மறைக்க கண்களாலேயே லக்ஷ்மணனை எரித்து விடுபவர் போல பார்த்தார். இந்த க்ஷணத்தில் ராமனிடம் நான் வந்திருப்பதைச் சொல். ராமனிடத்தில் இந்த க்ஷணமே நான் வந்திருப்பதை சொல். இல்லாவிடில், நீ, உன் ராஜ்யம், ராகவன், இந்த நகரம், எல்லாவற்றையும் சேர்த்து பொசுக்கி விடுவேன். பரதனையும் தான், சௌமித்ரே. உன் சந்ததிகளில் யார் யார் இருக்கிறார்களோ, அவர்களையும் பஸ்மமாக்கி விடுவேன். என் மனதில் கோபத்தை அடக்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. இவ்வாறு பயங்கரமாக ரிஷியின் வாயிலிருந்து வார்த்தைகள் வரவும், க்ஷண நேரம் லக்ஷ்மணன் யோசித்தான். என் ஒருவன் மரணம் சம்பவிக்கட்டும், பரவாயில்லை. மற்றவர்கள் அழிவும் சர்வ நாசமும் தடுக்கப்படும், இவ்வாறு தீர்மானம் செய்தவனாக ராமனிடத்தில் செய்தியைத் தெரிவித்தான். லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்டு, காலனை அனுப்பி விட்டு, வெளி வாசலுக்கு வந்து அத்ரி புத்திரரான துர்வாசரை வரவேற்க வந்தார். துர்வாசரை வணங்கி வரவேற்று, என்ன காரியம் சொல்லுங்கள் என்று வினவினார். தர்ம வத்ஸலா, கேள். இன்று நான் ஆயிர வருஷங்கள் தவம் செய்து முடிக்கிறேன். அதனால் நல்ல உணவு வேண்டும். மாசற்றவனே, உன்னால் முடிந்தவரை எனக்கு போஜனம் செய்து வைக்க ஏற்பாடு செய். இதைக் கேட்டு ராகவன் உடனே அவசரமாக, முனிவரின் போஜனத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான். அம்ருதத்திற்கு இணையான அந்த போஜனத்தை உண்டு முனிவர், திருப்தியானார். சாது, ராமா என்று வாழ்த்தி விட்டு தன் ஆசிரமம் சென்றார். முனிவர் தன் ஆசிரமம் சென்றபின் காலனின் எச்சரிக்கை ஞாபகம் வர, மிகவும் வேதனைக்குள்ளானார். வேதனையோடு, காலனின் கோர உருவமும் மனதில் தெரிய, தலை குனிந்தபடி, எதுவும் செய்யத் தோன்றாமல் வாயடைத்து நின்றார். காலன் சொல் திரும்பத் திரும்ப மனதில் வந்து அலைக்கழித்தது.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், துர்வாசாகம: நூற்று ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 106 (643) லக்ஷ்மண பரித்யாக: (லக்ஷ்மணனை தியாகம் செய்தல்)
தலை குனிந்தபடி நின்றிருந்த ராகவனைப் பார்த்து, லக்ஷ்மணன், மதுரமாக சொன்னான். என் பொருட்டு வருந்தாதே. காலனின் கதி முன்னாலேயே நிர்ணயிக்கப் பட்டு விடுகிறது. அப்படித்தான் மன வருத்தமாக இருக்கும். நீ உன் பிரதிக்ஞையை பாலனம் செய். காகுத்ஸா, தான் கொடுத்த வாக்கை நிறை வேற்றாத அரசர்கள் நரகம் தான் போவார்கள். எனக்குத் தண்டனை கொடு. மரண தண்டனை தான் என்றாலும் தயங்காதே. தர்மத்தை காப்பாற்று, ராகவா, வதம் செய்து விடு எனவும் ராமர் தர்மசங்கடத்துக்கு உள்ளானார். மந்திரி வர்கங்களை அழைத்து நடந்ததைச் சொன்னார். தாபஸராக வந்தவருக்கு (காலன் )தான் வாக்கு கொடுத்ததையும், துர்வாசர் வந்து அவசரப் படுத்தியதையும் விவரித்தார். இதைக் கேட்டு எல்லோருமாக யோசித்தனர். மகான் வசிஷ்டர் சொன்னார். லக்ஷ்மணனை இழக்க உன்னால் முடியாது. அவன் பிரிவை தாங்க முடியாது தான் என்றாலும், அவனை தியாகம் செய்து விடு. காலனுக்கு கொடுத்த வாக்கும் வீணாகாது. வாக்கு மீறுவது தர்மத்திற்கு புறம்பானது. அதை அரசன் பாலித்தே ஆகவேண்டும். தர்மம் நஷ்டமானால், மூவுலகமும், சராசரமும், தேவ, ரிஷி கணங்களுடன் நாசமாகும். சந்தேகம் இல்லை. புருஷ சார்துர்லா, நீ தர்ம பாலனம் செய்ய, லக்ஷ்மணனை தவிர்த்து உலகை க்ஷேமமாக இருக்கச் செய். எல்லோரும் ஒருமித்துச் சொன்ன ஆலோசனையைக் கேட்ட, ராமர் சபை மத்தியில் லக்ஷ்மணனைப் பார்த்துச் சொன்னார். லக்ஷ்மணா, நான் உன்னை விட்டேன். தர்மத்திற்கு மாறாக நான் செய்யக் கூடாது. த்யாகமும் வதமும் ஒன்றே. நல்ல மனிதர்களுக்கு இரண்டுமே வேதனை அளிக்கக் கூடியதே. ராமர் இப்படிச் சொல்லவும் கண்களில் நீர் நிரம்ப, மனம் வேதனையில் வாட, வெளியேறிய லக்ஷ்மணன் தன் வீட்டுப் பக்கம் செல்லாமல், நேராக சரயூ நதிக்கரை சென்றான். நீரில் மூழ்கி, தன் சுவாசத்தை வெளி விடாமல் அடக்கிக் கொண்டான். மூச்சை அடக்கி, நீரினுள் கிடந்தவனைப் பார்த்து, இந்திரனுடன் கூட வந்த அப்ஸர கணங்களும், தேவ, ரிஷி கணங்களும் பூமாரி பொழிந்தனர். மற்ற ஜனங்களுக்குத் தெரியாமல், இந்திரன், லக்ஷ்மணனைத் தூக்கி, தேவலோகத்தில் சேர்ப்பித்தான். விஷ்ணுவின் நான்கில் ஒரு பாகம் வந்து சேர்ந்து விட்டது என்று தேவர்கள் எல்லோரும் மகிழ்ந்து கொண்டாடினர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், லக்ஷ்மண பரித்யாக: என்ற நூற்று ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 107 (644) குசலவாபிஷேக: (குச லவர்க ளின் அபிஷேகம்)
லக்ஷ்மணனை அனுப்பி விட்டு ராமர், தாங்க முடியாத துக்கமும், வேதனையும் அனுபவித்தார். புரோஹிதரையும் மந்திரிகள், மற்றும், நீதி முறைகளை அறிந்த அறிஞர்களையும் பார்த்து, இன்று பரதனை அயோத்யா ராஜ்யத்தில் முடி சூட்டி அபிஷேகம் செய்து வைக்கிறேன். அயோத்யாபதியாக பரதன் இருப்பான். நான் வனம் செல்கிறேன். ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நானும் இன்றே லக்ஷ்மணனை தொடர்ந்து செல்கிறேன். பிரஜைகள் திகைத்து தலை வணங்கி நின்றனர். செய்வதறியாது, சிலையாக நின்றனர். பரதனும் திகைத்தான். ராஜ்யம் என்ற சொல்லையே கேட்கப் பிடிக்காதவன் போல, பதில் சொன்னான். சத்யமாக சொல்கிறேன். ராமா, ஸ்வர்கமே ஆனாலும், நீ இல்லாத இடத்தில் எனக்கு வாசமே வேண்டாம் என்றான். ராஜ்யத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன். எனக்கு ஆசையும் இல்லை. இதோ இந்த குச, லவர்கள் இருக்கிறார்கள். நராதிபனே, இவர்களை ராஜ்யத்தில் முடி சூட்டி வை. கோசல தேசத்தில் குசனையும், உத்தர பிரதேசத்தில் லவனையும் அரசனாக்கு. தூதர்கள் வேகமாக சென்று சத்ருக்னனை அழைத்து வரட்டும். நாங்கள் ஸ்வர்காரோஹணம் செய்யப் போவதை மட்டும் சொல்லாமல் அழைத்து வா. பரதன் சொன்னதையும், ஊர் ஜனங்கள் தலை குனிந்து நிற்பதையும் பார்த்து வசிஷ்டர் சொன்னார். வத்ஸ ராமா, இதோ இந்த பிரஜைகளைப் பார். இவர்கள் விருப்பம் என்ன என்று தெரிந்திருந்தும், மாறாக இவர்கள் விருப்பப் படாததைச் செய்யாதே. உடனே ராமன் அவர்களை உற்சாகப் படுத்தி, நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டான். எல்லோரும் ஏகோபித்த குரலில், நாங்கள் ராமனை பின் தொடர்ந்து செல்வோம். ராமன் இருக்கும் இடத்தில் நாங்களும் இருப்போம். அவன் செல்லும் இடம் தொடர்ந்து செல்வோம். ராமா, பிரஜைகளிடம் உனக்கு அன்பு உண்டு. ராமா, புத்திரர்கள், மனைவி மக்களோடு எங்களையும் அழைத்துச் செல். தபோ வனம் தான் போவாயோ, நுழைய முடியாத கோட்டையோ, காடோ, சமுத்திரமோ, எதுவானாலும் நாங்களும் உடன் வருகிறோம். எங்களைத் தியாகம் செய்து விடாதே என்று வேண்டினர். இது தான் எங்கள் விருப்பம். நாங்கள் வேண்டுவதும் இதைத்தான். அரசனே, உங்களுடன் கூடவே பயணம் செய்வது தான் எங்கள் ஆசை என்றனர். பிரஜைகள் உறுதியாகச் சொன்னதை ராமரும் ஆமோதித்தார். தன் முடிவையும் அன்றே நிச்சயித்து விட்ட ராமர், கோஸல தேசத்துக்கு குசனையும், உத்திர பிரதேசத்துக்கு லவனையும் அபிஷேகம் செய்வித்தார். நல்ல பாடகர்களான இருவரையும் மடியில் இருத்தி, அணைத்து உச்சி முகர்ந்து,ஆயிரக் கணக்கான ரதங்கள், இருபதாயிரம் யானைகள், அதே அளவு குதிரைகள், ஒவ்வொருவருக்கும் தேவையான தனம் இவற்றைக் கொடுத்தார். நிறைய தனம், நிறைய ரத்னம், ஆரோக்யமான மகிழ்ச்சி நிறைந்த மக்கள் என்று தன் நகரங்களுக்கு அவர்களை அனுப்பி வைத்தார். அதன் பின் சத்ருக்னனுக்கு தூதனை அனுப்பினார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், குசலவாபிஷேக: என்ற நூற்று ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 108 (645) விபீஷணாத்யாதேஸ: (விபீஷணன் முதலானோருக்கு செய்தி)
ராமரின் கட்டளையை ஏற்று தூதர்கள், வழியில் எங்கும் நிற்காமல் தொடர்ந்து பிரயாணம் செய்தனர். மதுராம் என்ற அந்த நகரை மூன்று இரவுகள் பிரயாணம் செய்து அடைந்தனர். சத்ருக்னனிடம் உள்ளது உள்ளபடி விவரித்தனர். லக்ஷ்மணனை தியாகம் செய்ததையும், ராகவ பிரதிக்ஞையையும் சத்ருக்னன் கேட்டான். புத்திரர்களுக்கு அபிஷேகம் செய்வித்ததையும் விரிவாகச் சொன்னார்கள். ஊர் ஜனங்கள் அனுகமனம் (உடன் நடத்தல்) செய்யப் போவதையும் தெரிவித்தார்கள். விந்த்ய மலைச் சாரலில், குசனுக்காக குசாவதி என்ற அழகிய நகரம் ஸ்தாபனம் செய்ததை, ஸ்ராவஸதி என்ற நகரம், லவனுக்காக நிரமாணித்ததை, சொன்னார்கள். வரும் நாட்களில் ராமனும் பரதனும் அயோத்தி நகரில் ஒருவர் மீதியில்லாமல் உடன் அழைத்துக் கொண்டு ஸ்வர்கம் செல்ல இருப்பதையும் சொன்னார்கள். மகாரதிகள் இருவரும், கிளம்பி விட்டனர், ராஜன், தாங்களும் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்றனர். இதைக் கேட்டு தன் குலம் முழுவதும் முடிவை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து, பிரஜைகளை வரவழைத்து, காஞ்சனர் என்ற புரோகிதரையும் வரவழைத்து, நானும் என் சகோதர்களுடன் செல்ல வேண்டும், அதனால் என் புத்திரர்களுக்கு அபிஷேகம் செய்து வைக்கிறேன் என்றான். சுபாஹு என்ற மகன், மதுரா நகரையும், சத்ரு காதி வைதிசம் என்ற நகரையும், மதுரா நகரை இரண்டாகப் பிரித்து இருவருக்குமாக அளித்து விட்டு, அவர்களை அரசர்களாக நியமித்தான். சேனை செல்வம் யாவும் இருவருக்கும் சமமாக பிரித்து அளித்தான். ஒரே ஒரு ரதத்தில் (ராகவன்-ரகு குலத் தோன்றல்) சத்ருக்னன் அயோத்தி நோக்கி புறப்பட்டான். கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல தவக் கோலத்தில் இருந்த அண்ணலைக் கண்டான். சூக்ஷ்மமான வெண் பட்டுடுத்தி, முனிவர்களுடன் அமர்ந்திருந்த ராமரைப் பார்த்து, என் புதல்வர்களுக்கு ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்து விட்டேன். நானும் அனுகமனம் செய்யவே வந்தேன். என்னைப் பிரித்து அன்னியமாக நினைக்க வேண்டாம் என்றான். ராமரும் தலையசைத்து அனுமதி கொடுத்தார். இதற்குள், சுக்ரீவனும் அவனைச் சார்ந்த வானரங்கள், கரடிகள், வந்து சேர்ந்தனர், தேவ, ரிஷி, கந்தர்வர்களிடம் வானர ரூபத்துடன் பிறந்து ராம கைங்கர்யமே பிறவிப் பயனாக வந்தவர்கள், ராமர் தன் முடிவை நிச்சயித்துக் கொண்டு விட்டதையறிந்து, பணிவாக தாங்களும் அனுகமனம் செய்ய விரும்புவதாகச் சொன்னார்கள். ராஜன், நாங்களும் அனுகமனம் செய்வதாக தீர்மானித்து தான் வந்தோம். எங்களை விட்டுப் போனால் தான் யம தண்டம் தாக்கியது போல தவிப்போம் என்றனர். ராமரும் சிரித்துக் கொண்டே – பா3டம்- அப்படியே ஆகட்டும் என்றார். சுக்ரீவனும், நரேஸ்வரா, நானும் அங்கதனை ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைத்து விட்டுத் தான் வந்தேன் என்றான். உங்களுடன் அனுகமனம் செய்யத் தான் வந்திருக்கிறேன் எனவும் ராமரும் சிரித்துக் கொண்டே சுக்ரீவா, நீ என் நண்பன். நீ வேறு நான் வேறல்ல. தேவலோகமானாலும், பரம பதமானாலும் சேர்ந்தே போவோம் என்றார். விபீஷணனைப் பார்த்து கட்டளையிடுவது போலச் சொன்னார். விபீஷணா, பிரஜைகள் உள்ள வரை லங்கையில் நீ இருப்பாய். சந்திர, சூரியன் உள்ளவரை, மேதினி இருக்கும் வரை, என் கதை உலகில் நிலவும் வரை உன் ராஜ்யத்தில் ஸ்திரமாக இருப்பாய். நீ தான் ராஜ்யம் ஆளுவாய். என் நட்பை நினைத்து இந்த கட்டளையை ஏற்றுக் கொள் என்றார். எதுவும் பதில் பேசாதே. பிரஜைகளை நீதி தவறாது பாலனம் செய். ராக்ஷஸ ராஜனே, நீ பெருந்தன்மையான மனம் உடையவன். இக்ஷ்வாகு குல தெய்வமான ஜகந்நாதனை எப்பொழுதும் ஆராதனை செய்து வா. (ஸ்ரீ ரங்கநாதன் என்பது வழக்கு) இந்த தெய்வம் எங்கள் குல தெய்வம். அப்படியே என்று ராமர் அளித்ததை ஏற்றுக் கொண்டு ராக்ஷஸ ராஜாவான விபீஷணன், ராகவனுடைய கட்டளையை சிரமேற் கொண்டவனாக அப்படியே செய்வதாக வாக்கு கொடுத்தான். இதன் பின் ராமர் ஹனுமானைப் பார்த்து, புவியில் ராம கதை நிலவும் வரை நீயும் இரு. நீயாகவே அப்படி ஒரு விருப்பம் தெரிவித்திருக்கிறாய். ஹரீஸ்வரா, என் வாக்யத்தை பரி பாலித்துக் கொண்டு, என் நாமம் உலகில் உள்ளவரை சந்தோஷமாக இரு. ஹனுமானும் தன் திருப்தியை தெரிவித்துக் கொண்டான். இந்த உலகில் தங்கள் சரித்திரம் நிலவும் வரை, உங்கள் கட்டளையை பரி பாலித்தபடி உலகில் இருக்கிறேன் என்றான். பின் ஜாம்பவானைப் பார்த்து, முதியவர் இவர். ப்ரும்மாவின் பிள்ளை. இவரும், மைந்த, த்விவதனோடு ஐந்து பேரை, கலி காலம் வரும் வரை உலகில் ஜீவிதர்களாக இருங்கள் என்று கட்டளை இட்டார். இவர்களுக்குத் தனித் தனியாக இப்படி கட்டளைகள் கொடுத்து விட்டு மற்ற ருக்ஷ, வானரங்களை அனுப்பி விட்டார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், விபீஷணாத்யாதேஸ: என்ற நூற்று எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 109 (646) ஸ்ரீ ராம மகா ப்ரஸ்தானம் (ஸ்ரீ ராமரின் மகா பரஸ்தானம்)
விடிந்தவுடன், விசாலமான மார்பும் கமல பத்ரம் போன்ற கண்களும் உடைய ராமர், புரோஹிதர்களை அழைத்து, முன்னால் அக்னி ஹோத்ரம் செல்லட்டும். பிராம்மணர்களுடன் அக்னி பிரகாசமாக வாஜபேய குடைகளுடன் பிரதான வீதிகளில் செல்லட்டும் என்று உத்தரவிட்டார். உடனே தேஜஸ்வியான வசிஷ்டர், மஹா ப்ராஸ்தானிகம் – என்ற செயலுக்குத் தேவையான ஏற்பாடுகளை குறைவற செய்தார். சூக்ஷ்மமான ஆடைகளைத் தரித்து, கையில் குசத்துடன், தயாராக கிளம்பினர். ராமரும் வழியில் தென்பட்ட எதுவானாலும், யாரானாலும், உணராமல், பாதிக்கப் படாமல், சூரிய, சந்திர கிரணம் போலச் சென்றார். அவருடைய வலது பக்கத்தில் லக்ஷ்மி தேவியும் வந்து நின்றாள். இடது பக்கத்தில் ஹ்ரீ என்ற மகாதேவியும், முன்னால் வ்யவஸாயம் என்ற தேவியும் சென்றனர். பல விதமான ஸரங்கள், வில், மற்ற ஆயுதங்கள் மனித உருவம் எடுத்து முன் சென்றன. வேதங்கள் பிராம்மணர்களாக, எல்லோரையும் ரக்ஷிக்கும் காயத்ரி, ஓங்காரமும், வஷட்காரமும் ராமரைத் தொடர்ந்தன. மகானான ரிஷிகளும், பல அரசர்களும், ஸ்வர்கம் நோக்கிச் செல்லும் ராமரை அனுகமனம் செய்தன. சென்று கொண்டிருந்த ராமரை அந்த:புர ஸ்திரீகள் பின் தொடர்ந்தனர். முதியவர்களும், பாலர்களும், வயதொத்த கிங்கரர்கள், கிளம்பினர். பரத, சத்ருக்னர்களும், தங்கள் அந்த:புர ஸ்திரீகளுடன், தங்கள் அக்னி ஹோத்ரம் இவைகளுடன் கிளம்பினர். ஊர் ஜனங்களும் அதே போல, தங்கள் அக்னி ஹோத்ரம், புதல்வர்கள், மனைவி, மக்கள் சகிதம் பின் தொடர்ந்தனர். இதன் பின் அனைத்து பிரஜைகளும், இது வரை மகிழ்ச்சியும் ஆரோக்யமுமாக வளைய வந்த ஜனங்கள், சென்று கொண்டிருந்த ராமனைத் தொடர்ந்து சென்றன. ராகவனின் குணங்கள் அவன் பால் ஈர்த்தது தான் காரணமாக இருக்க வேண்டும். பக்ஷிகளும், பசு, வாகனங்களை இழுக்கும் மிருகங்களும், ஸ்திரீ புருஷர்களுமாக, விகல்பமின்றி, ஆனந்தமாக ராமனுடன் சென்றனர். வானரங்களும் ஸ்நானம் செய்து, கில கில சப்தத்துடன், நடந்தனர். யாருமே இதற்காக வெட்கப் பட்டதாகவோ, தீனமாகவோ, துக்கத்துடனோ காணப் படவில்லை. பரமாத்புதமான காட்சியாக, ஆனந்த மயமாக இருந்தது. ஜனபத ஜனங்கள், ராகவனைப் பார்க்க வந்தவர்கள், பின்னால் பக்தியுடன் நடந்து வந்தனர். நகரத்தில் இருந்த ஜீவன்கள், அந்தர்தானமாக கண்ணுக்குத் தெரியாமல் இருந்தவை, ஸ்வர்கம் செல்ல கிளம்பி விட்ட ராகவனுடன், உடன் நடந்தனர். ஸ்தாவர, ஜங்கம, யார், எது ராமரைக் கண்டாலும், ராம கமனம் என்று தெரிந்தவுடன், அனுகமனம் செல்ல (உடன் செல்ல) தயாராக சேர்ந்து கொண்டனர். மூச்சு விடும் ஜீவன்களில் ஒன்று கூட அயோத்தியில் பாக்கியில்லை. சூக்ஷ்மமாகக் கூட காண முடியவில்லை. பறவைகளும் ராமரைத் தொடர்ந்தன.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஸ்ரீ ராம மகா ப்ரஸ்தானம் என்ற நூற்று ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 110 (647) ஸஹானுகம ஸ்ரீராம ஸ்வர்காரோஹனம் (உடன் வந்தவர்களுடன் ஸ்ரீ ராமர் சுவர்கம் செல்லுதல்)
நதியை நோக்கி அரை யோஜனை தூரம் சென்றபின், சரயூ நதியின் பாவனமான ஜலத்தை ரகுநந்தனன் கண்டார். நதியில் சுழல் சுழலாக தண்ணீர் பிரவகித்து கொண்டிருந்தது. நாலாபுறமும் நதியை பார்த்தபடி கரையில் வந்து பிரஜைகளுடன் நின்றார். அந்த முஹுர்த்தத்தில், பிதாமகர் ப்ரும்மா, தேவர்களும் ரிஷிகளும் சூழ, மற்றும் பல மகான்களோடு வந்து சேர்ந்தார். காகுத்ஸன் ஸ்வர்கம் செல்லத் தயாராக வந்து நின்ற இடத்தில், பல திவ்ய விமானங்கள், நூறு, கோடிக் கணக்காக வந்து இருந்தன. ஆகாயமே திவ்ய ஜோதி பரவி பிரகாசமாக இருந்தது. தாங்களே பிரபையுடன், தன் தேஜஸால் ஸ்வர்கம் செல்லும் புண்யாத்மாக்கள், புண்ய கார்யங்களை, நற்செயல்களைச் செய்தவர்கள், இவர்களால் அங்கு வீசிய காற்றே பாவனமாக ஆயிற்று. சுகமாக, வாசனையாக காற்று வீசியது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். ராமர் சரயூ நதியில் கால் வைத்தவுடன் நூற்றுக்கணக்கான கந்தர்வ, அப்ஸர கணங்கள் வாத்யங்களை முழங்கினர். அந்தரிக்ஷத்திலிருந்து பிதாமகர் விஷ்ணோ, வா, வா, உனக்கு மங்களம். ராகவா, எங்கள் பாக்கியம். சகோதரர்களுடன் வந்து சேர்ந்தாய். (சகோதர்களுடன் என்று பன்மையில் சொன்னதால், லக்ஷ்மணனும் அங்கு சேர்ந்தான் என்பது தீர்த்தருடைய உரை). மற்ற தேவர்களும் உடன் வர, உன் இருப்பிடமான ஸ்வர்கத்தில் காலடி எடுத்து வை. தன் இயல்பான சரீரத்தை ஏற்றுக் கொள், எந்த சரீரம் விருப்பமானதோ, பழமையான வைஷ்ணவீம்- விஷ்ணுத் தன்மை அல்லது, பரப்ரும்ம ஸ்வரூபத்தையோ ஏற்றுக் கொள். தேவா, தாங்கள் தான் உலகுக்கு கதி. யாரும் உங்களை உள்ளபடி அறிந்தவர்கள் என்பது இல்லை. விசாலாக்ஷியான மாயா தேவியைத் தவிர, உங்கள் முன் அவதாரங்களை யார் அறிவார். நினைத்து பார்க்க முடியாத உங்களை, (அசிந்த்யம்), வியாபித்து மகானாக இருப்பவரை (மஹத்பூதம்), அழிவில்லாதவரை (அக்ஷயம்), அனைத்தையும் தன்னுள் அடக்கியவரை (சர்வ சங்க்ரஹ) என்ற ரூபங்க ளில் தாங்கள் விரும்பும் ரூபம் எதுவோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். பிதாமகர் சொன்னதைக் கேட்டு, சற்று யோசித்து, சகோதரர்கள் சரீரத்துடன், தன் சரீரமும் சேர வைஷ்ணவமான தன் தேஜஸை ஏற்றுக் கொண்டார். தேவதைகள் உடனே விஷ்ணு மயமான தேவனை பூஜித்தார்கள். ஆதித்யர்கள், மருத்கணங்கள், இந்திரர்கள், அக்னி முதலானவர்கள், மற்றும் உள்ள திவ்யமான ரிஷி கணங்கள், கந்தரவ, அப்ஸர, நாக, யக்ஷர்கள், தைத்யர்கள், தானவ, ராக்ஷஸர்கள் அனைவரும், நினைத்ததை சாதித்து பூர்ணமாக ஆனவரை சாது, சாது என்று போற்றி புகழ்ந்தனர். இதன் பின் விஷ்ணு, பிதாமகரிடம், இதோ என்ணுடன் வந்துள்ள ஜனங்கள், இவர்களுக்கும் இடம் தர வேண்டும் என்றார். இவர்கள் அனைவரும் ஸ்னேகத்துடன் என்னைத் தொடர்ந்து வந்துள்ளனர். பக்தர்கள். இவர்களை நாமும் கவனித்து மதிப்புடன் நடத்த வேண்டும். ஆத்மாவைத் துறந்தவர்கள் (நான் எனும் எண்ணத்தை விட்டவர்கள்). என் பொருட்டு தியாகம் செய்தவர்கள். இதைக் கேட்டு பிதாமகர், இவர்கள் சாந்தானிகர்கள் என்ற உலகை அடையட்டும் என்று ஆசிர்வதித்தார். உன்னை நினைத்து உன்னுடன் வந்த பறவைகள், உட்பட அனைத்து ஜீவன்களும், மற்றொரு ப்ரும்ம லோகம் போன்ற இந்த உலகில் வசிக்கட்டும். வானரங்களும், கரடிகளும், எந்த தேவனின் அம்சமாக புவியில் தோன்றினவோ, அந்த தேவதைகளுடன் சேரட்டும். சுக்ரீவன் உடனே சூரிய மண்டலத்தில் பிரவேசித்தான். தேவர்கள் கண் முன்னே அவரவர் பித்ருக்களை சென்று அடைந்தனர். இவ்வாறு பிதாமகர் சொன்னவுடன் சரயூ நதியில் முழ்கி அச்சமயம் உயிரை விட்ட பிராணிகள் அனைத்தும், பூவுலகில் இருந்த சரீரத்தை விட்டு விமானத்தில் ஏறி, தேவலோகத்தின் பிரகாசமான சரீரங்களைப் பெற்றார்கள். திவ்யமான தேவ சரீரத்துடன் ஒளி மயமாகி நின்றார்கள். சரயூ நதி தீரம் சென்ற ஸ்தாவர ஜங்கமங்கள், அந்த நீர் மேலே பட்டவுடன் தேவ லோகம் சென்றனர். ருக்ஷ (கரடிகள்) வாநரங்கள், ராக்ஷஸர்களும் ஸ்வர்கம் சென்றனர். ஜலத்தில் தங்கள் சரீரத்தை விட்ட அனைவரையும் தேவ லோகத்தில் ப்ரும்மா, முப்பதாயிரம் பேருடன் வந்து, மகிழ்ச்சியோடு தேவ லோகத்தில் இடம் கொடுத்து அழைத்துச் சென்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஸஹானுகம ஸ்ரீராம ஸ்வர்காரோஹனம் என்ற நூற்று பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 111 (648) ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி: (ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி)
உத்தர சரித்திரத்தோடு, ராமாயணம் என்ற இந்த மகா காவ்யம் நிறைவு பெறுகிறது. இதை இயற்றிய வால்மீகி முனிவரை ப்ரும்மாவும் போற்றினார். எந்த பரப்ரும்மம் உலகம் முழுவதும் வியாபித்து நிற்கிறதோ, சராசரத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு விளங்குகிறதோ, அந்த விஷ்ணு பழையபடி ஸ்வர்க லோகத்தில் ஸ்திரமாக வாசம் செய்யலானார். தேவர்களும், சித்தர்களும், கந்தர்வர்களும் பரம ரிஷிகளும் நித்தியம் மகிழச்சியோடு ராமாயண கதையைக் கேட்கின்றனர். இந்த ஆக்யானம்-சரித்திரம், ஆயுளையும், சௌபாக்யத்தையும் தர வல்லது. பாப நாசனம். ராமாயணம் வேதத்திற்கு இணையானது. சிரார்த காலத்தில் அறிந்தவர்களைக் கொண்டு சொல்ல வைக்க வேண்டும்.
புத்ரன் இல்லாதவர்கள், புத்ரனை, தனம் இல்லாதவர்கள் தனம் அடைவார்கள். இதில் ஒரு பதமாவது படித்தவர்கள், பல நன்மைகளை அடைவர். மனிதர்கள், தினம் ஒரு ஸ்லோகமாவது படித்தாலே, அன்றாடம் செய்யும் பாபங்களிலிருந்து விடுபடலாம். இதை படிப்பவர்களுக்கு, வஸ்திரம், பசு, ஹிரண்யம் முதலியவை தாராளமாக கொடுக்க வேண்டும். இதை படித்து சொல்பவர்கள், திருப்தியாக, மகிழ்ச்சியாக இருந்தால், சர்வ தேவதைகளும் மகிழ்ச்சியடைவார்கள். ஆயுளைத் தரும் இந்த ராமாயணத்தை படிப்பவர்கள், புதல்வர்கள், மற்றும் உற்றார் உறவினரோடு மகிழ்ச்சியாக உலகில் வாழ்வர். பரலோகத்திலும் நன்மையடைவர். விடியற்காலையில், அல்லது பிற்பகலில், கட்டுப் பாட்டுடன், நியமத்துடன் ராமாயணத்தை படிக்க வேண்டும். அயோத்தி நகரம் பல வருஷங்கள் சூன்யமாகவே இருக்கும் பின் ரிஷபன் என்ற அரசன் ஆளுவான்.
இந்த கதை வருங்காலத்திற்கும், உத்தர காண்டத்தோடு சேர்த்து ஆயுளைத் தரக் கூடியது. ப்ரசேதஸின் பிள்ளையான வால்மீகி ப்ரும்மாவின் அனுமதியுடன் இயற்றினார். இதன் ஒரு அத்தியாயத்தைப் படிப்பவர்கள் நூறு அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். இருபதினாயிரம் வாஜபேய யாகம் செய்த பலனை அடைவார்கள். இதைக் கேட்பவர்களும் அதே பலனை அடைவார்கள். ப்ரயாகம் முதலிய தீர்த்தங்கள், கங்கை முதலிய நதிகள், நைமிசம் முதலிய அரண்யங்கள், குரு ஷேத்திரம் முதலிய க்ஷேத்திரங்களுக்கு செல்பவர்களும் பெறும் பலனை ராமாயணத்தைக் கேட்பதாலேயெ பெறுவார்கள். குரு க்ஷேத்திரத்தில், கிரஹண சமயத்தில் துலா பாரமாக தங்கம் தானம் செய்பவர்களும், ராமாயண ஸ்ரவணம்( கேட்பவர்கள்) செய்பவர்கள் பெறுவார்கள். எல்லா வித பாபங்களிலிருந்தும் விடுபடுவர். விஷ்ணு லோகம் செல்வார்கள். முன்பு வால்மீகியினால் இயற்றப் பட்ட இந்த காவியம், மகா கவி, மகானுடைய வாக்கு என்ற எண்ணத்துடன் படிப்பவர்களும், வைஷ்ணவ சரீரத்தை அடைவார்கள். மனைவி, மக்களுடன் இனிதே வாழ்வர். செல்வம் பெருகும், சந்ததி குறைவின்றி இருக்கும். இதை சத்யம் என்ற நம்பிக்கையோடு, தகுதி வாய்ந்த அறிஞர்களிடம் படிக்கச் சொல்லி கேளுங்கள். காயத்ரியுடைய ஸ்வரூபமே இந்த ராமாயணம். செல்வம் இல்லாதவன் செல்வம் பெறுவான். படிப்பவனோ, கேட்பவனோ, ராகவ சரித்திரத்தை எந்த வித கெட்ட எண்ணமும் இன்றி பக்தியுடன் நினைப்பவனோ, தீர்காயுள் பெறுவான். நன்மையை விரும்புபவன் எப்பொழுதும் ராமனை தியானிக்க வேண்டும். மற்றவர்களுக்கு படித்துக் காட்ட வேண்டும். ரகுநாத சரித்திரமான இதை முழுவதும் படிப்பவர்கள், ஆயுள் முடியும் தறுவாயில் விஷ்ணு லோகம் செல்வான். சந்தேகமேயில்லை. அவன் தந்தை, தந்தைக்குத் தந்தை, அவர் தந்தை என்ற வம்ச முன்னோர்களும் விஷ்ணு லோகத்தை அடைவார்கள். நான்கு வித சௌக்யங்களையும் தரக் கூடிய ராகவ சரித்திரம் இது அதனால் சற்று முயற்சி செய்தாவது தவறாமல் கேட்க வேண்டும். ராமாயணத்தை ஒரு பாதமோ, அரை பாதமோ கேட்பவன் கூட ப்ரும்ம லோகம் செல்வான். ப்ரும்மாவால் மரியாதையுடன் வரவேற்கப் படுவான். இது தான் புராண கதை. எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும். இதை விஸ்தாரமாக சொல்லுங்கள். விஷ்ணுவின் பலம் பெருகட்டும். விஷ்ணுவின் பலம் பெருகட்டும்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஸ்ரீமத் ராமாயண பல ஸ்ருதி: என்ற நூற்று பதினோராவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
ஸ்ரீமத் ராமாயணத்தின் உத்தர காண்டம் நிறைவுற்றது.
ஸ்ரீமத் ராமாயணம் நிறைவுற்றது.
அத்தியாயம் 78 (615) ஆபரணாகம: (ஆபரணங்கள் வந்து சேர்வது)
ராமா, அவன் பேச ஆரம்பித்த உடனேயே எனக்கு ஆச்சர்யம் உண்டாயிற்று. மதுரமாக பேசினான். கை கூப்பி நின்று பணிவாக பேசினான். அவன் சொன்னதை அப்படியே சொல்கிறேன் கேள் ப்ரும்மன், என் வாழ்வில் நடந்த சுக துக்கங்கள். தாங்கள் முனிவர், உங்கள் கட்டளையை மீற முடியாது என்பதால் சொல்கிறேன். வைதர்பகன் என்பவர் என் தந்தை. நல்ல புகழ் வாய்ந்தவர். சுதேவன் என்றும் அவரை அழைப்பர். வீர்யவான். இரண்டு மனைவியரிடம், இரு புத்திரர்கள் பிறந்தனர். என் பெயர் ஸ்வேதன். மற்றவன் சுரதன். தந்தை ஸ்வர்கம் சென்றபின், ஊர் ஜனங்கள் எனக்கு முடி சூட்டி அபிஷேகம் செய்து வைத்தனர். நானும் தர்மத்தை அனுசரித்து நல்ல முறையில் ராஜ்யத்தை ஆண்டு வந்தேன். பல வருஷங்கள் இனிமையாக கழிந்தன. ராஜ்யத்தை ஆண்ட படி, பிரஜைகளின் நன் மதிப்புக்கு பாத்திரமானவனாக, நாட்கள் சென்றன. என் காலம் முடியும் தறுவாய் வந்து விட்டதை உணர்ந்து கால தர்மத்தை அனுசரித்து வனம் சென்றேன். இந்த ஜன நடமாட்டமில்லாத விசாலமான வனம், இதில் இதே குளக்கரையில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினேன். என் சகோதரன் சுரதன் அரியணையில் அமர்ந்தான். நானே முடி சூட்டி வைத்துவிட்டுத் தான் வந்தேன். இந்த குளக்கரையில் பல காலம் தவம் செய்து உத்தமமான ஸ்வர்க பதவியை அடைந்தேன். ப்ரும்ம லோகம் போயும், பசி தாகங்கள் என்னை விடவில்லை. இதனால் பெரிதும் வருந்தினேன். நேராக ப்ரும்மாவிடம் சென்று வேண்டினேன். பகவன், இதுவோ, ப்ரும்ம லோகம். இங்கு பசி தாகங்கள், மற்ற இந்திரிய உபத்ரவங்கள் கிடையாது என்பது பிரஸித்தம். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? நான் என்ன பாவம் செய்தேன்? என்ன காரணத்தால் இவை என்னை இன்னமும் தொடர்ந்து வந்து பாதிக்கின்றன. என் ஆகாரம் என்ன என்று நான் கேட்கவும் அவர் சொன்னார். சுதேவன் மகனே, உனக்கு ஆகாரம் வேண்டுமா? உன் சரீர மாமிசத்தையே சாப்பிடு. தவம் செய்யும் பொழுது உன் உடல் கொழுத்துக் கிடந்தது. விதை விளைக்காமல் எதுவும் முளைக்காது ஸ்வேதா, நீ தவம் செய்யம் பொழுது, ஒரு யதி, தபஸ்வி, அந்த நிர்ஜனமான வனத்திற்கு வந்தார். சூக்ஷ்மமான திருப்தி கூட உனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் பிக்ஷைக்கு வந்திருக்கிறார். நீ அவருக்கு உபசாரமும் செய்யவில்லை. அதிதி வந்திருக்கிறார், அதுவும் நல்ல தபஸ்வி, நீ அவரை கண்டு கொள்ளாமல், வரவேற்று பேசாமல், தவத்தில் மூழ்கி இருப்பது போலக் காட்டிக் கொண்டாய். அதனால் தான் ஸ்வேதா, ஸ்வர்கம் வந்தும், உன்னை பசி தாகங்கள் வாட்டுகின்றன. புஷ்டியான ஆகாரங்களைக் கொண்டு உன் உடலை வளர்த்தாயே, அதையே சாப்பிடு. என்ன ருசி, என்ன திருப்தி என்று தெரிந்து கொள். அந்த வனத்திற்கு அகஸ்திய முனிவர் வருவார். அவர் மூலம் விமோசனம் பெறுவாய் என்றார். அந்த அகஸ்திய முனிவர் தான் என்னை கரையேற்ற வேண்டும். தேவ தேவனுடைய கட்டளை, இந்த அருவருக்கத் தக்க உணவை புசித்து வருகிறேன். பல வருஷங்கள் ஓடி விட்டன. ப்ரும்மன், இந்த என் சரீர மாமிசத்தையே உண்டு வருகிறேன். அருவருத்தாலும், வேறு வழியில்லை. பசி என்ற உனர்வு இன்னமும் என்னை விட்ட பாடில்லை. என்னை காப்பாற்றுங்கள். கரையேற்றுங்கள். கும்பயோனீ எனப்படும் அகஸ்தியரை அன்றி வேறு யாராலும் என்னை காப்பாற்ற முடியாது. இந்த ஆபரணம் என்னைக் காப்பாற்ற நான் தருவதாக இருக்கட்டும். பகவன், ஏற்றுக் கொள்ளுங்கள். என் மேல் தயை செய்யுங்கள். முனிவரே, என்னிடம் உள்ள அனைத்து தனம், வஸ்திரங்கள், பக்ஷ்யம் (உண்ணத் தக்கவை), போஜ்யம் (அனுபவிக்கத்தக்கவை) தருகிறேன். என்னிடம் உள்ள, காம, போகங்கள் அனைத்தையும் தருகிறேன். என்னை காப்பாற்றுங்கள் என கதறினான். அவனை கரையேற்ற இந்த ஆபரணத்தை நான் வாங்கிக் கொண்டேன். நான் இதை கையில் வாங்கிக் கொண்ட உடனேயே அந்த ராஜரிஷியின் முன் ஜன்மத்து மனித உடல் மறைந்தது. அவனும், சரீரம் மறைந்த உடனேயே திருப்தியடைந்தவனாக தேவலோகம் சென்றான். இந்திரனுக்கு சமமான தேஜஸைப் பெற்றான். கஷ்டம் விலகி சுகமாக இருந்தான். அவன் தந்த ஆபரணம் தான் இது என்று சொல்லி முடித்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஆபரணாகம: என்ற எழுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 79 (616) தண்ட ராஜ்ய நிவேச: (தண்ட ராஜ்யத்தில் நியமித்தல்)
அகஸ்தியர் சொன்னதைக் கேட்டு ராமர், ஆச்சர்யத்துடன், அவரை வினவினார். பகவன், அந்த கோரமான வனம், அவன் தவம் செய்து வந்த இடம் எது? வைதர்பகன் தவம் செய்த இடம், ஏன் அவன் தவம் செய்த இடம் நிர்ஜனமாக, மனித நடமாட்டமில்லாமல் போயிற்று.? மிருகங்கள், பக்ஷிகள் கூட இல்லாமல் சூன்யமாக ஆவானேன். எதனால் அவன் இப்படி ஒரு சூன்யமான இடத்தை தேர்ந்தெடுத்தான்? ஆவலுடன் ராமர் கேட்டவுடன் அகஸ்தியர், பதில் சொன்னார். குழந்தாய், முன்பு க்ருத யுகத்தில், மனு என்பவன், தண்டதரன் என்ற பெயரில் பிரபுவாக இருந்தான். இக்ஷ்வாகுவின் தந்தை தான் மனு. தன் மகனை கிழக்கு திசையில் ராஜ்யத்தில் நியமித்து விட்டு, உலகில் ராஜ வம்சத்தை வளர்த்து வா என்று கட்டளையிட்டார். தந்தைக்கு அப்படியே வாக்கு கொடுத்த இக்ஷ்வாகுவைப் பார்த்து, மனு, நீ கண்டிப்பாக அப்படியே செய்வாய், சந்தேகமேயில்லை. நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். தண்டமும் (தண்டனை) அரசன் கொடுத்தே ஆக வேண்டும். அதே சமயம், காரணமின்றி தண்டிக்கவும் கூடாது. அபராதியான மனிதனுக்கு அளிக்கப்படும் தண்டனைகளும், விதிகளை அனுசரித்து அளிக்கப்படும் பொழுது, அரசனுக்கு பெருமையே சேர்க்கும். அவனுக்கு ஸ்வர்கத்தையே அளிக்கும். ஆகவே, புத்திரனே, தண்டனை அளிப்பதிலும் உறுதியாக இரு. என்று சொன்னார். அப்பொழுது தான் உன் ராஜ்யத்தில் தர்மமும், நியாயமும் ஓங்கி நிற்கும் என்று சொன்னார். தன் மகனுக்கு நல்ல அறிவுரைகள் செய்த திருப்தியுடன் மனு ஸ்வர்கம் சென்றான். தந்தை சென்ற பின், தன் சந்ததி பற்றிய கவலை இக்ஷ்வாகுவை ஆட்கொண்டது. பல நற் காரியங்களைச் செய்து தேவ குமாரர்கள் போன்ற நூறு மகன்களைப் பெற்றான். இவர்களில் கடைசியாக பிறந்த மகன் மூடன். கல்வியும் ஏறவில்லை. பெரியவர்களை மதித்து நடந்து கொள்ளவும் தெரியவில்லை. அவனுக்கு தண்டன் என்று பெயர் சூட்டினார். இவன் உடலில் தண்டனையாக அடி விழத்தான் போகிறது என்றும் நம்பினார். தேடித்தேடி விந்திய மலைச் சரிவுகளில் ஒரு இடத்தை கண்டுபிடித்து அந்த இடத்திற்கு அரசனாக தண்டனை நியமித்தார். மகன் பெயரை மதுமந்தன் என்று மாற்றி, உசனஸ் என்ற சுக்ராசாரியரை, புரோகிதராக இருக்க வேண்டினான். அழகிய வனத்தில், மலைச்சாரலில் நகரை நிர்மானித்து, புரோகிதரையும் நியமித்து ராஜ்ய பாலனம் செய்ய வைத்தான். புரோகிதர் சுக்ராசாரியார் வழி காட்ட ராஜ்ய பாலனம் குறைவற நடக்கவும் ஜனங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். தேவலோகம் போல அந்த நகரம் இருந்தது. புத்தியில்லாத வனாக இருந்தும், இக்ஷ்வாகு மகன் ராஜ்யத்தை நன்றாகவே நிர்வகித்து வந்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், தண்ட ராஜ்ய நிவேச: என்ற எழுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (
அத்தியாயம் 80 (617) அரஜா சங்கம: (அரஜாவைக் காணல்)
அகஸ்தியர் சற்று நிறுத்தி, யோசிப்பது போல இருந்தது. பின் தொடர்ந்தார். கதையை தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். காகுத்ஸா, அந்த தண்டன் பல வருஷங்கள் ராஜ்யத்தை ஆண்டான். சாந்தமாக, இடையூறு இன்றி ராஜ்யத்தை ஆண்டான். ஒரு சமயம், சைத்ர மாஸம், பார்கவரின் அழகிய ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தான். மனத்தைக் கவரும் அழகிய அந்த வனப் பிரதேசங்களில் வளைய வந்து கொண்டிருந்த பார்கவரின் மகளைக் கண்டு மையல் கொண்டான். புத்தியற்றவன். அருகில் சென்று விசாரித்தான். பெண்ணே, நீ யார், யார் மகள் நீ, சுபமானவளே, என்னை காமன் வாட்டுகிறான், அதனால் தான் உன்னைக் கேட்கிறேன் என்றான். மோகத்தினால் உன்மத்தனாகி நின்றவனைப் பார்த்து பார்கவி மகள், நிதானமாக அறிவுறுத்துவது போல பதில் சொன்னாள். நான் பார்கவரின் (ப்ருகுவின் மகன்-பார்கவன, சுக்ராசாரியார்.) மகள். நேர்மையும் நன்னடத்தையும் உள்ள மகான் என் தந்தை. ராஜேந்திரா, என் பெயர் அரஜா. இந்த ஆசிரமத்தில் வசிக்கிறோம். என்னை பலாத்காரமாகத் தொடாதே. என் தந்தையின் பாதுகாப்பில் இருக்கும் கன்னிப் பெண் நான். அவர் சொல்வதைத் தான் கேட்பேன். அவர் தான் எனக்கு குரு. நீயும் அவர் சிஷ்யனே. அவர் கோபித்துக் கொண்டால் பெரும் ஆபத்து விளையும். அரசனே, நான் என் தந்தையின் விருப்பத்தை, அனுமதியை மீறி எதுவும் செய்ய முடியாது. நீ போய் என் தந்தையிடம் என்னை மணம் செய்து தரும்படி கேள். அதை விட்டு தகாத செயல் எதுவும் செய்தால், பலன் விபரீதமாக இருக்கும். ஜாக்கிரதை. என் தந்தை தவ வலிமை மிக்கவர். கோபத்தால் மூவுலகையும் எரிக்கக் கூடியவர். நீ யாசித்தால் ஒரு வேளை, சம்மதிக்கலாம். இப்படி அரஜா எச்சரித்தும், காம வசமாகிப் போன தண்டன், உன்மத்தனாக தான் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தான். தலையில் கை வைத்து அஞ்சலி செய்தான். வேண்டினான். அழகியே, தயை செய். காலதாமதம் செய்யாதே. வரானனே, உன்னைக் கண்டு என் உள்ளம் தகிக்கிறது. உன்னை அடைந்த பின், சாபமோ, வதமோ எதுவானாலும் சரி, நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றான். பயங்கரமான சாபத்தையும் உனக்காக ஏற்றுக் கொள்வேன் என்றான். நான் உன் பக்தன். என்னை ஏற்றுக் கொண்டு அருள் செய்வது உனக்கு உரிய கடமையே. பயப்படாதே. நான் தன் நிலையிழந்து தவிக்கிறேன். உன்னை நேசிக்கிறேன் என்று இவ்வாறு பிதற்றியபடி அவளை பலாத்காரமாக அடைய முயன்றான். அவள் மறுத்ததையும், தடுத்ததையும் சற்றும் லட்சியம் செய்யாமல், நடுங்கும் அவள் உடலை, மேலும் மேலும் தீவிரமாக அணைத்து தன் வெறியைத் தீர்த்துக் கொண்டான். இந்த கோரமான செயலை செய்து விட்டு மதுமந்தன் தன் நகரை அடைந்தான். ஆசிரமத்தின் அருகிலேயே நின்றபடி அரஜா அழலானாள். தேவர்களுக்கு இணையான தன் தந்தையை எதிர்பார்த்து பயத்துடன் காத்திருந்தாள்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், அரஜா சங்கம: என்ற எண்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 81 (618) தண்ட சாப: (தண்டனுக்கு கிடைத்த சாபம்.)
அளவில்லாத தவ வலிமை மிக்க முனிவர், தேவரிஷியான பார்கவர், முஹுர்த்த நேரம் காத்திருந்து விட்டு, பசி மிகுந்தமையால், மகளைத் தேடிக் கொண்டு வந்தார். உடலெல்லாம் புழுதி மண்டி கிடக்க தீனமாக அழுது கொண்டு இருந்த மகளைக் கண்டார். விடியற்காலை சூரிய ஒளி அருணனின் பிடியில் மலினமாக தெரிவது போல கிடந்தாள். ஏற்கனவே பசியால் துடித்துக் கொண்டிருந்தவர் மகளின் நிலையைக் கண்டு பெரும் ஆத்திரம் கொண்டார். மூவுலகையும் எரித்து விடும் ஆத்திரத்துடண் தன் சிஷ்யர்களைப் பார்த்து, தண்டனுடைய விபரீதமான செயலைப் பாருங்கள். அதனால் வந்துள்ள ஆபத்தையும் பாருங்கள், என்றார். கோபத்தில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல ஆனார். இந்த துராத்மா, தன் பந்துக்களுடன் அழியும் நேரம் நெருங்கி விட்டது. நெருப்பில் விரலை விட்டது போல அவனுடைய இந்த தீய செயலின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். f பயங்கரமான பாபத்தைச் செய்திருக்கிறான். பாபத்தின் பலன் விடாது. இன்றையிலிருந்து ஏழு நாட்களுக்குள், பாபம் செய்த அந்த ராஜா, தன் படை பலத்துடன் வதம் செய்யப் படுவான். இந்த மூடனின் ராஜ்யத்தில் நூறு யோஜனை தூரம் புழுதி மண்டி போகட்டும். தண்டனுடைய நிலத்தில் வரும் வாரம் முழுவதும் புழுதிப் பயல் அடிக்கப் போகிறது. மண்ணை வாரி அடிக்கும். எதுவுமே கண்ணுக்குப் புலனாகாது. அத்வானமாகும். ஆசிரமத்து ஜனங்களை எச்சரித்து தண்டன் ராஜ்ய எல்லைக்குள் நுழையாமல் இருக்கச் சொன்னார். இதைக் கேட்டு பார்கவரான சுக்ராசாரியரின் சிஷ்யர்கள், பலர் அந்த பிரதேச எல்லையை விட்டே வெளியேறினர். இப்படி தண்டனை சபித்து விட்டு அரஜாவைப் பார்த்து, துரதிருஷ்டம் பிடித்தவளே, நீ இங்கேயே இரு. உனக்காக இந்த குளம் கட்டித் தருகிறேன். உணவு வகைகளும் குறைவற கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். உன் விடிவு காலத்தை எதிர் நோக்கி காத்திரு என்று சொல்லி விட்டு, வெளியேறி விட்டார். தந்தையும் கை விட்டதையறிந்த அரஜா பெரிதும் வருந்தி அழுதாள். வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் அதை ஏற்றுக் கொண்டாள். பார்க்கவர் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார். ஏழு நாட்களில் தண்டனுடைய ராஜ்யம் பஸ்மமாக ஆயிற்று. ப்ரும்மவாதி சொன்னது பலித்தே விட்டது. தண்டன் இந்த விந்த்ய மலைச் சாரலில் ஆட்சி செய்தது கதையாகப் போயிற்று. தர்மத்தை மீறியவனை ரிஷி சபித்த இடம் தண்டகாரண்யம் என்றே பெயர் பெற்றது. அதற்கு முன் ரிஷிகள் ஸ்திரமாக தங்கி இருந்ததால், ஜனஸ்தானம் என்ற பெயரில் விளங்கியது. ராகவா, இது தான் நடந்த கதை. வா, ஸந்த்யா கால ஜபம் செய்யும் நேரம் வந்து விட்டது என்றார். பூர்ண கும்பத்துடன் ரிஷிகள் வந்து விட்டனர். தண்ணீரில் இறங்கி ஸ்நான பானங்களை முடித்துக் கொண்ட பின், அஸ்தமன சூரியனை வணங்கத் தாயாராயினர். வேதம் அறிந்த பெரியவர்களுடன் சூரியனும் அஸ்தமனம் ஆகத் தயாராக வந்து விட்டான். ராமா, நீயும் நீரில் இறங்கு என்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், தண்ட சாப: என்ற எண்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 82 (619) ராம நிவர்த்தனம் (ராமரை வழியனுப்புதல்)
சந்த்யா ஜப தபங்களைச் செய்ய ராமரும் அந்த குளத்தில் இறங்கினார். அப்ஸர, தேவ கணங்கள், சேவித்த குளத்தில் இறங்கி, தண்ணீரை கையில் எடுத்தார். மேற்கு நோக்கி நின்றபடி சந்த்யா ஜபங்களைச் செய்யத் துவங்கினார். சற்று பொறுத்து, முனிவரின் ஆசிரமம் வந்து சேர்ந்தார். முனிவருடன் பழம், காய் வகைகள், ஔஷதிகள் இவைகளை உணவாக விருந்தோம்பலை ரசித்து உன்டார். உயர்ந்த தான்ய வகைகளையும் முனிவர் தயார் செய்து வைத்திருந்தார். அம்ருதம் போல ருசி மிகுந்த அந்த உணவை சாப்பிட்டு நர ஸ்ரேஷ்டன் திருப்தியானான். சந்தோஷமாகவும், திருப்தியுடனும் அந்த இரவைக் கழித்தார். மறுநாள் விடியற்காலை எழுந்து விடைபெற்றுச் செல்ல தயாரானார். முனிவரிடம் வந்து போய் வருகிறேன், அனுமதி தாருங்கள் என்றார். மகாத்மாவான தங்களைத் தரிசித்தது என் பாக்யம். தன்யனானேன். அடிக்கடி தங்களை தரிசிக்க வருகிறேன். இப்பொழுது கிளம்புகிறேன் என்றார். தர்மமே கண்களாக உடைய அந்த முனிவர், ராமரைப் பார்த்து அரசனே, நீ பேசுவதும் நன்றாக இருக்கிறது. பொருத்தமான வார்த்தைகளை, பொருத்தமான இடத்தில் பயன் படுத்தி நீ அழகாக ரசிக்கும் படி பேசுகிறாய். ரகு நந்தனா, நீயே பாவனன். உத்தமமான பிறவி. ஓரு முஹுர்த்த நேரம் உன்னைப் பார்த்தவர்கள் மறக்க மாட்டார்கள். பிறவி பெற்றதன் பயனைப் பெற்றவர்கள் ஆவார்கள். உன் தரிசனம் கிடைக்கப் பெற்ற ஜீவன்களைப் பூஜிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. உன்னை தவறான கண்களோடு பாரப்பவர்கள் நிச்சயமாக நாசமடைவார்கள். தாங்களாக அழிவைத் தேடிக் கொண்டவர்களாக, யம தண்டத்தை வருவித்துக் கொண்டவர்களாக ஆவார்கள். அப்படிப் பட்ட பாவனமான உன் கதையைப் பேசும் யாரானாலும், சொல்பவரும், கேட்பவரும் நல்ல கதியை நிச்சயம் அடைவார்கள். உன் பிரயாணம் சௌகர்யமாக இருக்கட்டும். ராஜ்யத்தை நியாயமாக பாலனம் செய். ஜனங்களுக்கு நீ தான் வழி காட்டி. இவ்வாறு முனிவர் வாழ்த்தி விடை கொடுக்கவும், கை கூப்பி வணங்கி ராமரும் விடை பெற்றார். தன் புஷ்பக விமானத்தில் ஏறினார். அமரர் கூட்டம் சஹஸ்ராக்ஷனை வழியனுப்புவது போல இருந்தது. மற்ற முனிவர்களும் வாழ்த்தி வழியனுப்பினர். மேகங்களுக்கு இடையில் சந்திரன் தெரிவது போல ராமர் அந்த விமானத்தில் ஒளி மயமாக காட்சி தந்தார். முற்பகல் கடந்து விட்ட நிலையில் அயோத்தி வந்து சேர்ந்தார். மாளிகையின் மத்திய அறையில் இறங்கிக் கொண்டு, புஷ்பக விமானத்தை போய் வா, உனக்கு மங்களம், என்று சொல்லி அனுப்பி விட்டார். வாயில் காவலர்களை அழைத்து நான் வந்து விட்டதை பரத, லக்ஷ்மணர்கள் இருவருக்கு மட்டும் தெரிவி. அதிக அமர்க்களம் செய்யாமல் சொல் என்று சொல்லி விட்டு சீக்கிரமாக திரும்பி வா என்றும் சொன்னார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராம நிவர்த்தனம் என்ற எண்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 83 (620) ராஜ சூய ஜிஹீர்ஷா (ராஜ மூசூய யாகம் செய்ய விரும்புதல்)
ராமர் சொன்னபடியே வாசலில் நின்றிருந்த சிறுவர்கள் பரத, லக்ஷ்மணர்களிடம் செய்தி சொல்ல ஓடினர். இருவரும் வந்து ராமரை அணைத்து தங்கள் மகிழ்ச்சியையும், அன்பையும் தெரிவித்து விட்டு நடந்ததை விசாரித்தார்கள். அந்தணருடைய காரியம் நிறைவேறியது. மேலும் சில தர்ம காரியங்களைச் செய்ய விரும்புகிறேன். ராஜ ஸுய யாகம் செய்யலாம். நல்ல பிரவசனங்கள், தர்ம காரியங்கள், இவைகளை நிறைவாகச் செய்யலாம். என் ஆத்மா போன்றவர்கள் நீங்கள் இருவரும், உடன் இருக்க ராஜ ஸுய யாகம் செய்யலாம் என்று ஆசைப் படுகிறேன், இந்த யாகத்தில் தர்மம், பொது ஜன நலம் தான் பிரதானமாக இருக்கும். இந்த யாகத்தை மித்ரன் முறைப்படி செய்து வருணத்வம் பெற்றான். சோமனும் ராஜ ஸுய யாகம் செய்து மூவுலகிலும் நல்ல பெயர் அடைந்ததோடு, அழியாத ஸ்தானமும் கிடைக்கப் பெற்றான். இதைப் பற்றி யோசித்து எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யுங்கள். நன்மை தரும் வகையில் சிறப்பாக செய்ய வழிகளை எனக்குச் சொல்லுங்கள். பரதன் இதைக் கேட்டு வினயமாக, ராமா, தர்மம் உன்னிடத்தில் நிலைத்து இருக்கிறது.f பூமி உன்னை நம்பி இருக்கிறது. புகழ் உன்னை அண்டி வளர்கிறது. பூமியில் உள்ள அரசர்கள், ராஜ்யாதிபதிகள், யாவரும் உன்னை மற்றொரு பிரஜாபதி போல போற்றுகின்றனர். நாங்கள் மட்டுமல்ல, எங்களைப் போலவே, உலகத்தார் அனைவரும், உன்னை மதிப்பும் மரியாதையுனும் மகாத்மாவாக பார்க்கிறார்கள். பிரஜைகள் தங்கள் தந்தையைப் போல நினைக்கிறார்கள். பூமியின், அதிலுள்ள மற்ற ஜீவன்களுக்கும் கதி நீயே தான். அப்படி இருக்க இந்த யாகம் எதற்கு? இதில் ராஜ வம்சங்கள் அழியும். வீணாக கோபமும், அகங்காரமும் தலையெடுக்கும். தன்னை பௌருஷம் உள்ளவனாக காட்டிக் கொள்ள போட்டி வரும். பொறாமை, சண்டை தொடரும். அதனால் புருஷோத்தமா, இந்த யாகத்தைத் துவங்கி வீணாக கலவரம் ஏற்பட்டு மனிதர்கள் மடிவார்கள். நம்மிடம் ஏற்கனவே புகழும், அதிகாரமும் நிறைந்து இருக்கும் பொழுது, இது தேவையா? இதைக் கேட்ட ராமர், அப்படிச் சொல்கிறாயா, என்று பரதனிடம் மேலும் விவரமாக தன் எண்ணத்தை விவரித்தார்.
ஏ பரதா, நீ சொல்வதும் சரியே. இதனால் உன்னிடத்தில் எனக்கு மதிப்பும் கூடுகிறது. பூமியை பாலனம் செய்பவன் என்ற தகுதிக்கேற்ப, உன் கவலையைத் தெரியப் படுத்தினாய். நீ சொல்வதும் சரி. ஜனங்களுக்குத் துன்பம் தரும் செயலை நாம் செய்ய வேண்டாம். ராஜ ஸுய யாகம் வேண்டாம். தன்னை விட சிறியவர்களானாலும், நன்மையைச் சொல்லும் பொழுது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நீ சொல்வதை ஏற்கிறேன் என்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராஜ மூசூய ஜிஹீர்ஷா என்ற எண்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 84 (621) வ்ருத்ர தபோ வர்ணனம். (வ்ருத்ரனின் தவம்)
ராமரும், பரதனும் விவாதித்துக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மணன் தன் அபிப்பிராயத்தைச் சொல்ல வந்தான். அஸ்வமேத யாகம் பாவனமானது. யாராலும் அடக்க முடியாத பலமும், வீர்யமும் உள்ளவர்கள் செய்வது. ரகுநந்தனா. இதை யோசித்துப் பாருங்கள். முன்பு இந்திரனுக்கு வ்ருத்திரனை வதம் செய்ததால் ப்ரும்ம ஹத்தி தோஷம் வந்தது. தன் தோஷத்திலிருந்து விடு பட அவன் இந்த அஸ்வமேத யாகம் தான் செய்தான். தேவாசுரர்கள் ஒற்றுமையாக இருந்த பொழுது, இந்த வ்ருத்திரன், தைத்ய குலத்தில் பிறந்த மகான் என்பதாக அனைவருக்கும் சம்மதமாக இருந்து வந்தான். மூவுலகையும் பாசமும் நேசமுமாக பாலித்து வந்தான். நூறு யோஜனை தூரமே இருந்த ராஜ்யத்தை மூன்று மடங்காக்கினான். செய்நன்றி மறவாதவன், தர்மம் அறிந்தவன், நல்ல புத்தி சாலி என்ற புகழ் பெற்றான். விஸ்தீர்ணமான ராஜ்யத்தை கவனமாக, நீதி தவறாமல் ஆண்டு வந்தான். அவன் ராஜ்யத்தை ஆண்ட காலத்தில் பூமியில் பொன் விளைந்தது. பூக்களில் மணம், ரஸம் நிரம்பியிருந்தது. பழங்கள், காய்கறிகள் ருசியுடன் விளைந்தன. பூமியில் செழிப்பும் வளமும் நிறைந்தது. அதிக உழைப்பு இன்றியே விளைச்சல் மிகுந்தது. எங்கும் வளமாக ஜனங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். காணவே அத்புதமாக இருந்த ராஜ்யத்தில் அவன் திருப்தியோடு, மகிழ்ச்சியோடு இருந்து வந்தான். அவன் மனதில் தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. தவம் செய்வது மிகச் சிறந்தது. மற்ற சுகங்கள் மயக்கும் தன்மை வாய்ந்தவை. மதுரேஸ்வரன் என்ற தன் மகனை ராஜ்யத்தில் அமர்த்தி விட்டு, தான் உக்ரமான தவம் செய்யலானான். எல்லா தேவதைகளும் தவித்தன. இந்திரன் மிகவும் வருந்தினான். விஷ்ணுவிடம் போய் முறையிட்டான். வ்ருத்திரன் உக்ரமாக தவம் செய்கிறான். உலகங்களை ஜயித்து விட்டான். மிக பலசாலியாக ஆகி விட்டான். என் ஆளுமைக்குள் அவன் அடங்கவில்லை. இந்த அசுர ராஜன் இன்னும் தவம் செய்தால் மூவுலகும் இவன் வசத்தில் தான் இருக்கும். இவனை கவனியாது விட்டிருக்கிறீர்களே என்று முறையிட்டான். உங்கள் முன் தான் அவன் அடங்கி இருப்பான் என்பது நிச்சயம். வேறு யாராலும் அவனை அடக்க முடியாது. விஷ்ணுவே, உங்கள் அன்புக்கும் அவன் பாத்திரமாகி விட்டான். அதனால் தான் உலகில் இவன் தலைமை ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஆனால் தேவர்களுக்கு சற்று கருணை காட்டுங்கள். தேவலோக வாசிகளான நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம். உலகில் அமைதியை நிலை நிறுத்த உங்களையே நம்பி வந்திருக்கிறோம். கருணை காட்டு. வ்ருத்திரனை வதம் செய்து எங்களைக் காப்பாய். தேவர்களை எப்பொழுதும் காப்பவன் நீயே. இப்பொழுதும் எங்களைக் காக்க உன்னையே வேண்டுகிறோம்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வ்ருத்ர தபோ வர்ணனம் என்ற எண்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 85 (622) வ்ருத்திர வத: (வ்ருத்திரனை வதம் செய்தல்)
லக்ஷ்மணன் சொல்லிக் கொண்டிருந்த கதையைக் கேட்டுக் கொண்டிருந்த ராமர், வ்ருத்திர வதம் வரைச் சொல்லு என்றார். லக்ஷ்மணன் தொடர்ந்தான். சஹஸ்ராக்ஷன் என்ற இந்திரன், மற்ற தேவர்களுடன் விண்ணப்பித்துக் கொண்டதையடுத்து, விஷ்ணு தேவர்களைப் பார்த்துச் சொன்னார். எல்லா தேவர்களும் இந்திரனுடன் நின்றிருந்தனர். முதலில் நான் வ்ருத்திரனின் நண்பன். இது என் கையை கட்டிப் போடுகிறது. அதனால் உங்களுக்காக நான் வ்ருத்திரனைக் கொல்ல மாட்டேன். மகாசுரன்தான். உங்களுக்கும் நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும். அதனால் ஒரு உபாயம் சொல்கிறேன். அதன்படி நடந்து வ்ருத்திரனை வதம் செய்யுங்கள். நான் என்னையே மூன்றாகப் பிரித்துக் கொள்கிறேன். அப்பொழுது வாஸவன் வ்ருத்திர வதம் செய்ய முடியும். ஒரு அம்சம் வாஸவனிடம் லயிக்கட்டும். மற்றோரு அம்சம் வஜ்ரத்தில் இருக்கும். மூன்றாவது பூமியில் இருக்கும். அப்பொழுது இந்திரன் வ்ருத்திர வதம் செய்யட்டும். புரியாமல் விழித்த தேவர்கள் இது எப்படி ஸாத்யமாகும் என்ற கேள்வியை தங்களுக்குள் அடக்கிக் கொண்டு, அப்படியே ஆகட்டும் என்றனர். நீங்கள் சொன்னால் சரி, சத்ருக்களை அழித்து எங்களைக் காப்பவன் நீங்கள் தானே. உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும், நாங்கள் கிளம்புகிறோம் என்று விடை பெற்றனர். வாஸவனின் உடலில் உங்கள் தேஜஸை சேர்த்து என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் என்றனர். எல்லோருமாக வ்ருத்திரன் தவம் செய்து கொண்டிருந்த மகாரண்யத்தை அடைந்தனர். உத்தமமான தவக் கோலத்தில், உக்ரமாக தவம் செய்து கொண்டிருந்த வ்ருத்திரனைக் கண்டனர். மூவுலகையும் எரித்து விடுபவர் போலவும், ஆகாயத்தை விழுங்கி விடுபவர் போலவும் அசுர ஸ்ரேஷ்டன் தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தே அவர்கள் குலை நடுங்கியது. தோற்காமல் இருப்போமா, இந்த தபஸ்வியை ஜெயிக்க முடியுமா? என்று சந்தேகித்தனர். சஹஸ்ராக்ஷன் தன் சக்தி முழுவதும் பியோகித்து வ்ருத்திரனை அடித்தான். கீழே விழுந்த வேகத்தில், தலை காலாக்னி போல உக்ரமான தவ வலிமையுடன் கூடியதானதால், பூமியில் படவும் உலகமே நடுங்கியது. இவருடைய வதம் நடக்க முடியாதது, உலகமே அழியப் போகிறது என்ற முடிவுக்கு வந்தனர். வ்ருத்திரனை அடித்து விட்டுத் திரும்பிய வாஸவனை ப்ரும்ம ஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. தோஷத்தின் அடையாளம் தெரியவும் இந்திரன் நடுங்கினான். அக்னி முதலான தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். த்ரிபுவன நாதனான விஷ்ணுவை திரும்பத் திரும்ப பூசித்தனர். பிரபோ, நீதான் கதி. உலகில் முன் பிறந்தவன் நீ தானே. எங்கள் தந்தை நீ தானே. உலகை காப்பாற்ற விஷ்ணு என்ற தன்மையை ஏற்றுக் கொண்டாய். உன்னால் வ்ருத்திர வதம் சாத்யமாயிற்று. ஆனால், இந்திரனை ப்ரும்ம ஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டதே. இதிலிருந்து அவனை விடுவி. தேவர்கள் சொன்னதைக் கேட்டு விஷ்ணு சொன்னார். என்னை பூஜித்துக் கொண்டிருந்தால் போதும், நான் இந்திரனை பரிசுத்தமாக ஆக்குகிறேன். புண்யமான அஸ்வமேத யாகத்தைச் செய்யட்டும். அதன் பின் தேவர் தலைமை பதவியை அடைவான். இழந்த செல்வாக்கைப் பெறுவான் .இப்படிச் சொல்லி விஷ்ணு மறைந்தார். தேவர்கள் அவரை ஸ்தோத்திம் செய்து கொண்டே இருந்தனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வ்ருத்ர வத: என்ற எண்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 86 (623) ப்ரும்ம ஹத்யாஸ்தரணம் (ப்ரும்ம ஹத்தி தோஷத்திலிருந்து விடுவித்தல்.)
வ்ருத்திர வதம் பற்றி சொல்லி முடித்த லக்ஷ்மணன் மேலும் தொடர்ந்து நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான். வ்ருத்திரனை வதம் செய்த பின் இந்திரனுக்கு வ்ருத்திரஹா என்ற பெயர் உண்டாயிற்று. நினைவின்றி உடலைச் சுருக்கிக் கொண்டு படுத்துக் கிடக்கும் பாம்பு போல கிடந்தான். அவன் செயலின்றி கிடக்கவும் உலகமே உற்சாகம் இன்றி ஆயிற்று. உலகத்தில் ஈரம் வற்றியது. காடுகள் வறண்டன. பூமி ஒளியிழந்து வாடியது. நீர் வளமின்றி, அருவிகளும், குளங்களும், குட்டைகளும் பெயரளவுக்கு தெரிந்தன. வறட்சி வெளிப் படையாக தெரிந்தது. தேவர்களும் எதுவும் செய்யத் தோன்றாமல், பயமும் கவலையும் அடைந்தனர். அதன் பின் விஷ்ணு சொன்னதை ஏற்று யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். புரோகிதர்களையும்,உபாத்யாயர்களையும், மகரிஷிகளையும் அழைத்துக் கொண்டு தேவர்கள் இந்திரன் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த இடம் வந்து சேர்ந்தனர். ப்ரும்ம ஹத்தி தோஷத்தால், ஒளியிழந்து வாடிக் கடந்த இந்திரனைக் கண்டனர். அவனை முன் நிறுத்தி அஸ்வமேத யாகத்தைத் துவங்கினர். யாகம் மிகப் பெரிய அளவில் விரிவடைந்தது. அனைவரும் ஏக மனதாக யாகத்தில் ஈடு பட்டனர். யாக முடிவில் அந்த ப்ரும்ம ஹத்தி தோஷமே உருக் கொண்டு வந்து நின்றது. எனக்கு இடம் எங்கே என்று கேட்டது. தேவர்கள் கவலை நீங்கியவர்களாக, உன்னை நான்காக பிரித்துக் கொள் எனவும் அதுவும், தன்னை நான்காக பிரித்துக் கொண்டது. தனக்கு இருப்பிடமாக நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஒரு பாகத்தால், நதிகளில் மழைக்கால நீர் ஓடும் நான்கு மழைக்கால மாதங்களில் வசிப்பேன். பூமியின் ஒரு பாகத்தில் எப்பொழுதும் இருப்பேன். இளம் பெண்களிடம் ஒவ்வொரு மாதமும் மூன்று இரவுகள் வசிப்பேன். ப்ராம்மணர்களைக் கொல்பவர்கள் யாரானாலும், என் நான்காவது பாகம் அவர்களிடம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். தேவர்களும் மகிழ்ச்சியுடன் இந்த வரத்தை அளித்தனர். அவனுக்கு இந்த வரம் அளித்த மாத்திரத்தில், வாஸவன் தன் தோஷம் நீங்கப் பெற்றவனாக ஆனான். பழைய நிலைக்குத் திரும்பி பாவனமான யாகத்தை தானே முன்னின்று செய்து முடித்தான். அப்படிப்பட்ட அத்புதமான யாகம் இது. இதைச் செய்வோம். இந்திரனுக்கு சற்றும் குறைவில்லாத பலமும், வீரமும் உடைய ராமரும் சரி என்று ஏற்றுக் கொண்டார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ப்ரும்ம ஹத்யாஸ்தரணம் என்ற எண்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 87 (624) இலா ஸ்திரீத்வ ப்ராப்தி (இலா பெண் தன்மையடைதல்)
லக்ஷ்மணன் சொல்லி முடித்தவுடன் ராமர், அதை ஆமோதித்தவராக, அப்படியே செய்வோம். வ்ருத்திரவதம், தொடர்ந்து வந்த தோஷம், தோஷ நிவ்ருத்தி இவைகளைப் பற்றி விவரமாக சொன்னாய் என்று பாராட்டினார். முன்பு ஒரு சமயம் கர்தம பிரஜாபதி என்று ஒருவர் இருந்தார். அவர் மகன் பாஹ்வீஸ்வரன். அனிலன் என்றும் பெயர் உடையவன். நீதி தவறாமல் ராஜ்ய பரிபாலனம் செய்து புகழோடு வாழ்ந்து வந்தான். பிரஜைகளை தன் சொந்த மக்கள் போல கவனமாக பாலித்தான். அவனை சுரர்கள், தைத்யர்கள், ராக்ஷஸ, நாக, பன்னகர்கள் அனைவரும் போற்றினர். தர்மமும் வீர்யமும் ஒருங்கினைந்து அவனிடம் புகழை வளர்த்தது. ஒரு சமயம் வேட்டையாடச் சென்றான். தன் வேலையாட்கள், மந்திரிகளுடன் ஒரு சைத்ர மாத ரம்யமான வேளையில் அரண்யத்தில் பல மிருகங்களை வேட்டையாடிக் குவித்தபடி சென்றவன் மகாதேவர் பிறந்த இடம் வந்து சேர்ந்தான். அந்த இடத்தில், ஹரனான மகாதேவன், மனைவி பார்வதியுடன் இருந்தார். அவருடன் அவரைச் சார்ந்த அனைவரும் இருந்தனர். விளையாட்டாக ஹரன், ஸ்திரீ ருபம் எடுத்துக் கொண்டு, அந்த மலையின் அருவியில் இறங்கினார். உடனே அந்த வனத்தில் இருந்த ஜீவராசிகளில் ஆண் வர்கம் முழுவதும் பெண் உருக் கொண்டன. அந்த சமயம் பார்த்து, அரசனான, இலன்-கர்தமருடைய மகன் மிருகங்களை வேட்டையாடித் திருப்தியுறாமல் அங்கு வந்து சேர்ந்தான். காட்டு யானைகள், மான்கள், பக்ஷிகள் யாவையும் பெண் இனமாக இருக்கக் கண்டு, திகைத்தவன், தானும், தன்னுடன் வந்த காவலர் யாவரும் பெண் உருக் கொண்டு விட்டதையறிந்து உணர்ந்த பொழுது பெரிதும் வருந்தினான். பயமும் எழுந்தது. சிதிகண்டரான உமாபதியைத் துதித்தான். தன் படை வீரர்கள், அடியாட்களுடன் அவரைச் சரணடைந்தான். வரதனான அவரும், (எளிதில் மகிழ்ந்து வரம் தரும் இயல்பினர்) சிரித்து, தன் தேவியுடன் கர்தமர் மகனே, எழுந்திரு, எழுந்திரு. ஆணாக ஆக வேண்டும் என்பதைத் தவிர வேறு வரம் கேள் என்றார். மகானான அவர் சொல் மேலும் வருத்தத்தையே அளித்தது. வேறு வரம் கேட்கும் மனநிலையும் இல்லை. பின் சைலசுதாவான உமையை வணங்கி, தேவி, நீ உலகுக்கெல்லாம் அருள் பாலிப்பவள். ஈசன் மனைவியே கருணை காட்டு. அமோகமாக காட்சி தருபவளே, என்னை அருள் கண் கொண்டு பார், என்று வேண்டினான். ஹரனும் அருகில் இருக்கத் தன்னை வேண்டியதன் பொருளை புரிந்து கொண்ட உமா தேவி, ருத்ரனின் சம்மதத்துடன் பதில் சொன்னாள். அவரிடம், தேவனே, தாங்கள் எப்பொழுதும் வரம் தருவதில் ஈடு இணையற்றவர், நான் உங்கள் உடலில் பாதியல்லவா, இன்று நான் வரம் தருகிறேன் என்று சொல்லி அரசனிடம், பாதி ரூபம் ஸ்திரீயாகவோ, புருஷனாகவோ, நீ விரும்பும் வரை இருக்கும் என்றாள். அரசனும் மகிழ்ந்து, தேவி நீங்கள் அனுக்ரஹம் செய்வதானால், ஒருமாதம் ஸ்திரீ, ஒரு மாதம் புருஷன் என்று இருக்கட்டும் என்று வேண்டிக் கொண்டான். தேவியும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதித்தாள். ராஜன், நீ புருஷனாக இருக்கும் பொழுது ஸ்திரீயாக இருந்ததை நினைவில் கொள்ள மாட்டாய். அதே போல ஸ்திரீயாக இருக்கும் பொழுது, ஆண் உருவில் இருந்ததை நினைக்க மாட்டாய் என்றாள். இதன் பின் அந்த அரசன் இலா, ஒரு மாதம் ஆணாகவும், ஒரு மாதம் பெண்ணாகவும் வளைய வந்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், இலா ஸ்திரீத்வ ப்ராப்தி என்ற எண்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 88 (625) புத சமாகம: (புதன் வந்து சந்தித்தல்)
ராமர் இந்த கதையைச் சொல்லிக் கேட்ட பரதனும், லக்ஷ்மணனும் ஆச்சர்யம் அடைந்தனர். அடுத்து என்னவாயிற்று என்று தெரிந்து கொள்ள ஆவலாக ஆயினர். அந்த ராஜா பெண் சரீரம் கிடைத்த பொழுது எப்படி நடந்து கொண்டான்? திரும்ப பழையபடி ஆண் சரீரம் வந்ததும் எப்படி சமாளித்தான்? குதூகலத்துடன் அவர்கள் விசாரிக்கவும் ராமர் தொடர்ந்து சொன்னார். முதல் மாதம் ஸ்திரீயாக இருந்த பொழுது லோக சுந்தரியாக, தன் கீழ் வேலை செய்த ஸ்திரீ ஜனங்கள் சூழ்ந்து நிற்க மகிழ்ச்சியாக இருந்தான். அந்த காட்டில் அலைந்து திரிந்து மகழ்ந்தாள். வாகனங்கள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி விட்டு, மலை சாரல்களிலும, குகைகளிலும், வசித்தாள். அடர்ந்த மலையின் அருகில் ஒரு குளம் இருந்தது. குளக் கரையில் சோமன் மகனான புதனை சந்தித்தாள். அப்பொழுது தான் உதித்த இளம் சூரியனைப் போல இருந்த புதனைப் பார்த்து ஆச்சர்யமடைந்தாள். ஜல மத்தியில் நின்று புதன் கடும் தவம் செய்து கொண்டிருந்தான். தன் முன்னாள் புருஷத் துனைவர்களுடன் சேர்ந்து (அவர்களும் பெண்ணுருவை அடைந்திருந்தனர்) குளத்தை வற்றச் செய்தாள். அவளைக் கண்டதுமே, புதன் காமன் வசமாகி, நீருக்குள் நிற்க முடியாமல் தவித்தான். மூவுலகிலும் சிறந்த பேரழகி இவளே என்று நினைத்தவனாக யாராக இருக்கும், தேவர்களை விட அதிக கவர்ச்சியாகத் தெரிகிறாளே என்று யோசித்தான். தேவ ஸ்திரீகளில், நாக யக்ஷ, கந்தர்வ ஸ்திரீகளில் இது போல கண்டதேயில்லையே என்று யோசித்தான். இது போல ரூப லாவண்யம் மிக அரிதாகத்தான் கிடைக்கும். இவள் எனக்கு ஸமமானவளாக இருப்பாள், இது வரை வேறு யாரும் இவளை மணந்து கொண்டிருக்காவிடில், நான் முயற்சிப்பேன் என்று நினைத்தபடி அருகில் சென்றான். வந்த பெண்களின் பின்னால் தொடர்ந்து அவர்கள் ஆசிரமத்திற்குச் சென்று கூவியழைத்தான். அவர்களும் வந்து புதனை வணங்கி நின்றனர். உங்களில் லோக சுந்தரியாக காட்சி தரும் இவள் யார்? ஏன் இங்கு வந்திருக்கிறாள்? விவரமாகச் சொல்லுங்கள் எனவும் அவர்களும் உற்சாகமாக பதிலளித்தனர். எங்களுக்கு இவள் தான் தலைவி. இவளுக்கு கணவன் இல்லை. எங்களுடன் இந்த காட்டில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறாள். அவர்கள் சொன்னதில் நம்பிக்கை வராமல், தன் தவ வலிமையால் நடந்ததைத் தெரிந்து கொண்ட புதன், அந்த அரசனையும், உடன் இருந்த ஸ்திரீகளையும் கிம்புருஷிகள் என்ற ஸ்தானத்தை அடைவீர்களாக. இந்த மலைச் சரிவிலேயே உங்கள் வாசஸ்தலம் அமையட்டும். இங்கு கிடைக்கும் பழங்கள், காய் வகைகளே உங்கள் உணவாகும் என்றான். ஸ்திரீகளே, கிம்புருஷர்கள் என்பவர்களை கணவனாக அடைவீர்கள் என்றான். புதன் சொன்னபடியே, அந்த பெண்கள் கூட்டம், கிம்புருஷிகள் என்ற நிலையை அடைந்தனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், புத சமாகம: என்ற எண்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 89 (626) புரூரவ ஜனனம் (புரூ ரவன் பிறப்பு)
பரதனும், லக்ஷ்மணனும் இது வரை கிம்புருஷர்கள் பற்றி இப்பொழுது தான் கேள்விப் பட்டவர்ளாக அப்படியா, என்றனர். பிரஜாபதியின் கதையை ராமர் தொடர்ந்தார். தவம் செய்து கொண்டிருந்த புதன் அழகிய ரூபமுடைய அந்த பெண்ணைப் பார்த்து, சோமனுடைய மகன் நான். என்னை ஏற்றுக் கொள், அன்புடன் ஏறிட்டுப் பார் எனவும், தன் ஜனங்களும் தன்னை விட்டுப் போய் விட்ட நிலையில், சூன்யமான அரண்யத்தில் இலா, புதனைப் பார்த்துச் சொன்னாள். நான் இஷ்டம் போல சஞ்சரிக்கிறவள். தற்சமயம் உன் வசத்தில் இருக்கிறேன். நீ விரும்பியபடி செய்து கொள் என்று அனுமதித்தாள். அவள் சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் அவளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். சந்திரனின் புதல்வன் புதன். மாதவ மாதம் க்ஷண நேரம் போலச் சென்றது. அவளுடன் இன்பமாக ஒரு மாத காலம் ஓடி விட்டது. ஒரு மாதம் சென்றபின் சயனத்திலிருந்து எழுந்த ப்ரஜாபதி மகனான இலா, நீருக்குள் நின்று தவம் செய்யும் புதனைக் கண்டான். கைகளை உயரத் தூக்கி எந்த வித பிடிமானமும் இல்லாமல் நின்றபடி தவம் செய்து கொண்டிருந்த புதனைப் பார்த்து, பகவன், இந்த மலை குகைக்குள், என் காவலர்களுடன் வந்தேன். என் சைன்யம் எங்கு சென்றது தெரியவில்லை, என்னைச் சார்ந்தவர்களையும் காணவில்லை என்றான். தன் நிலை மறந்த அரசன் பேசியதைக் கேட்டு, புதன் சமாதானமாக பேசினான். கல் மழை பொழிந்ததில் உன் ஆட்கள் நாசமாயினர். நீயும் மழைக்கு ஒதுங்கியவன் ஆசிரமத்தில் தூங்கி விட்டாய், பயப்படாதே. இங்கு கிடைக்கும் பழங்கள், காய் கறிகளை சாப்பிட்டபடி நீ விரும்பும் வரை நிம்மதியாக இருக்கலாம் என்றான். அரசன் தன் வேலையாட்கள் நாசமானதைக் கேட்டு வருந்தினான். மிக தீனமாக விசாரித்தான். ராஜ்யத்தில் வேலையாட்கள் சூழ இருந்தவன், இப்பொழுது அவர்கள் இல்லாமல் நானும் ராஜ்யத்தை தியாகம் செய்கிறேன். என் மூத்த மகன் சசபிந்து என்பவன், அவன் ராஜ்யத்தை ஆளட்டும். உடன் வந்தவர்கள் காணாமல் போக நான் மட்டும் என் நகரம் எப்படித் திரும்பி போவேன். புதன் அவனை சமாதானப் படுத்தி இங்கேயே இருக்கலாம் என்று சொல்லி ஆறுதலாக பேசினான். ஒரு வருஷம் இங்கேயே இரு. கர்தம புதல்வனே நான் உனக்கு நன்மையே செய்வேன் என்றான். இதைக் கேட்டு இலாவும் சம்மதித்தான். மாத முடிவில் ஸ்திரீயானதும், புதன் அவளை அனுபவித்துக் கொண்டிருந்தான். அடுத்து புருஷனாக ஆனதும் புதனுடன் தவம் சார்ந்த தர்ம காரியங்களை கவனித்துக் கொண்டு பொழுதை செலவழித்தான். ஒன்பதாவது மாதத்தில், இலா புதனுடைய மகனை பெற்றெடுத்தாள். புரூரவஸன் என்ற பெயர் கொண்ட குழந்தையை பிறந்த உடனேயே தந்தையின் கையில் ஒப்படைத்தாள். புதனுக்கு சமமான வர்ணமும், தேஜஸும் உடைய அந்த குழந்தை, மகா பலசாலியாகவும் இருந்தது. மாத முடிவில் திரும்ப புருஷனாக ஆன இலாவை புதன் இனிமையாக பேசியபடி சந்தோஷமாக வைத்திருந்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், புரூரவ ஜனனம் என்ற எண்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 90 (627) இலா புருஷத்வ ப்ராப்தி: (இலா புருஷத் தன்மையை அடைதல்)
பரதனும், லக்ஷ்மணனும் பொறுமையை இழந்தவர்களாக ராமரிடம் வினவினர். ஒரு வருஷம், இலாவை தன் மனைவியாக அனுபவித்து வந்தானே, புதன், அதன் பின் அவள் என்ன ஆனாள்? ராமர் தொடர்ந்தார். புதன் புத்திசாலி, தைரியசாலியும் கூட. சம்வர்த்தர், ஸ்யவனர், ப்ருகு புத்ரன், அரிஷ்டநேமி, ப்ரமோதனர், மோதகரம், துர்வாசர் இவர்கள் அனைவரையும் அழைத்து, சபையில் தைரியமாக நடந்தவைகளை விவரித்தான். இதோ, இந்த இலா, கர்தமருடைய மகன், அரசனாக இருந்தான். உங்களுக்கே தெரியும் என்ன நடந்தது என்று. இப்பொழுது இவன் நன்மைக்காக நாம் என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, கர்தமரும் வந்து சேர்ந்தார். இவருடன், மற்றவர்கள் அழைத்ததின் பேரில், புலஸ்தியர், க்ரது, வஷட்காரம், ஓங்காரம் போன்ற மகா தேஜஸ்களும் உருக் கொண்டு வந்தன. கர்தமர் தன் மகனின் க்ஷேமத்திற்காக அவர்களிடம் பேசினார். கேளுங்கள். இந்த அரசன் நன்மை பெற நாம் செய்யக் கூடியது ஒன்று தான். நாம் அனைவருமாகச் சென்று வ்ருஷபத்வஜனான பரமசிவனிடம் சென்று வேண்டிக்கொள்வோம். அந்த தேவனுக்கு பிரியமான யாகம் அஸ்வமேத யாகம். அதைச்செய்வோம். இந்த அரசனைக் காக்க நாம் எல்லோருமாக என்ன செய்யவேண்டுமோ அதை நிச்சயமாக செய்வோம். உத்தமமான அந்தணர்கள் ஒத்துக் கெண்டனர். ருத்ரனைக் குறித்து பெரிய அளவில், யாகம் துவங்கியது. சம்வர்தரின் மகன் பரபுரஞ்ஜயன் மருத் என்று பெயர் பெற்றவன். அவனை யாகத்தை நடத்தி வைக்க நியமித்தனர். விதிப்படி யாகம் நடந்தது. ருத்ரனும் மகிழ்ச்சி அடைந்தார். யாக முடிவில், ருத்ரன் எல்லா முனிவர்களின் எதிரிலேயே, நான் மிகவும் திருப்தியடைந்தேன். இந்த அஸ்வமேத யாகத்தை சிரத்தையுடன் செய்தீர்கள். இந்த இலனுக்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். இதைக் கேட்டு ரிஷிகள் ஒரே குரலில் அவரை துதித்து, இவன் தன் இயல்பான புருஷத் தன்மையை அடைய வேண்டும் என்றனர். மகாதேவனும் அப்படியே என்று சொல்லி அவனை பழையபடி ஆணாக மாற்றினார். இந்த வரமளித்து விட்டு மறைந்து விட்டார். அஸ்வமேத யாகமும் நிறைவுற்றது. பிராம்மணர்களும் தங்கள் இருப்பிடம் சென்றனர். அரசன் பாஹ்வீகம் என்ற தன் பழைய நகரை விட்டு மத்ய தேசத்தில் புதியதாக ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டான். சசபிந்து தொடர்ந்து பாஹ்வீக ராஜாவாக நீதி தவறாது, ராஜ்ய பாலனம் செய்து வந்தான். அவன் காலம் முடிந்து அவன் மகன் ஏலன் என்பவன் அரசனானான். அஸ்வமேத யாகத்தின் பலன் உடனே தெரியும். பெண்ணாக உரு மாறிய இலா அரசன் தன் இயல்பை பெற்றது இந்த யாக பலன் தானே என்று முடித்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், இலா புருஷத்வ ப்ராப்தி: என்ற தொன்னூறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 91 (628) யக்ஞ சம்விதானம் (யாகசாலையை நிறுவுதல்)
இப்படி பேசிக் கொண்டிருந்து விட்டு ராமர், லக்ஷ்மணனிடம், வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஸ்யபர், மந்திரிகள், மற்றும் பிராம்மண ஸ்ரேஷ்டர்கள், முக்கியமான பிரமுகர்கள், கொண்ட சபையைக் கூட்டச் சொன்னார். இவர்களை கலந்தாலோசித்த பின் நல்ல லக்ஷணங்கள் கொண்ட அஸ்வத்தை (குதிரையை) விடுவோம். துரிதமாக செயல் படும் இயல்புடைய லக்ஷ்மணன் காலம் தாழ்த்தாது, அனைவரையும் வரவழைத்து சபையைக் கூட்டினான். தான் அஸ்வமேத யாகம் செய்ய விரும்புவதாக அவர்களிடம் பணிவாக கூறி வணங்கிய ராமரை அவர்கள் ஆசிர்வதித்தனர். ருத்ரனை வணங்கி பாவனமான யாகத்தை செய்ய உடனே ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கினர். யாக சம்பந்தமான விவரங்களை ராமர் அவர்களிடம் கேட்டு குறித்துக் கொண்டார். லக்ஷ்மணனுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். மகோத்ஸவம், இதைக் கொண்டாட சுக்ரீவனுக்கு தன் இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்து சேர தூதனை அனுப்பு. விபீஷணனுக்கு சொல்லி அனுப்பு. சுற்றத்தாருடன் வரச் சொல். நமக்கு நண்பர்களான, நம் நலம் விரும்பும் அரசர்கள் எல்லோரையும் அழை. தங்கள், உற்றார், சுற்றத்தினர் உடன் வேலையாட்களையும் அழைத்து வரச் சொல். தேசாந்திரம் போய் இருக்கும் அந்தணர்களையும் வரவழை. தபோதனர்களான ரிஷிகள் எங்கு இருந்தாலும் யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பி வரவழை. மனைவி மக்களோடு வந்து சேரச் சொல். நட நர்த்தகர்கள், தாள வாத்யம் வாசிப்பவர்கள், கலைஞர்கள் அனைவரையும் கோமதி நதிக் கரையில் பெரிய யாகசாலை கட்டி அதில் தங்கச் செய்ய ஏற்பாடுகளை துரிதமாக செய். சாந்தி காரியங்களைச் செய்து யாகத்தை ஆரம்பியுங்கள். முக்கியமான காரியம். ஈடு இணையில்லாதது. சிறப்பாக செய்ய வேண்டும். கோமதி நதிக் கரையின் நைமிச க்ஷேத்திரத்தில், வேலைகள் தொடங்கப் படட்டும். வந்தவர்கள் அனைவரும், நன்றாக கவனிக்கப் பட்டு திருப்தியாக, மரியாதைகள் செய்யப் பட்டவர்களாக, சந்தோஷம் அடைய வேண்டும். தேவையான ஆட்களை நியமித்துக் கொள், சீக்கிரமாக ஏற்பாடுகளைச் செய். பரதன் அஸ்வத்தின் முன்னால் போகட்டும். நூறாயிரம் பாத்திரங்களில், தானியங்களும், இருபதாயிரம் எள் கொண்டு செய்யப் பட்ட பதார்த்தங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். சணகம், கொத்துக் கடலை, குலித்த, மாஷாண (உளுந்து), லவணம் (உப்பு), தேவையான எண்ணேய், நெய் முதலானவை, வாசனைப் பொருட்கள், கோடிக் கணக்கில் சுவர்ணம், ஹிரண்யமும் தாராளமாக பரதன் கொண்டு செல்லட்டும். கடை வீதிகளுக்கு நடுவில் நட நர்த்தகர்கள், பாடுபவர்கள், ஆடுபவர்கள், மற்றும் இள வயதினர் கலைஞர்கள் செல்லட்டும். இவர்கள் பரதனின் சைன்யத்தின் முன்னால் செல்லட்டும். நிகமம் அறிந்தவர்கள், உடல் வளத்தை வளர்த்துக் கொண்ட பயில்வான்கள், பிராம்மணர்கள், கட்டுப் பாட்டுடன் வேலை செய்யத் தெரிந்த ஜனங்கள், கோசாத்யக்ஷர்கள் (பணத்தை பாதுகாத்து கொண்டு செல்பவர்கள்), வாழ்த்துப் பாடுபவர்கள், அந்த:புரத்து ஜனங்கள், தாய் மார்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள், காஞ்சனமயமான என் பத்னியும், யாக தீக்ஷையை செய்து வைக்கத் தெரிந்த அறிஞர்களும் பரதனுக்கு முன்னால் செல்லட்டும். தகுதி வாய்ந்த அரசர்கள் வரும்பொழுது அவர்களை வரவேற்று உபசரித்து, தங்கச் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து கொள். பொறுக்கி எடுத்த அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படை. அன்ன, பான, வஸ்திரங்கள், அந்த அரசர்களுடன் வரும் காவல்காரர்கள், வேலையாட்களுக்கும் குறைவில்லாமல் கொடு. சத்ருக்னனையும் அழைத்துக் கொள். சுக்ரீவன் தன் சுற்றத்தாருடன் முன் செல்ல, வேத வித்துக்கள், பிராம்மணர்கள் கூட்டமாக வட்டமாகச் சென்றனர். விபீஷணனும் தன் மனைவி மக்களுடன், மற்றும் சில ராக்ஷஸர்களுடன் வந்து சேர்ந்தான். தீவிரமாக தவம் செய்து வலிமை பெற்ற மகரிஷிகளுக்குத் தானும் தானங்கள் செய்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், யக்ஞ சம்விதானம்: என்ற தொன்னூற்று ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 92 (629) ஹய சர்ச்சா (குதிரையைப் பற்றிய விவாதம்)
எல்லா முன்னேற்பாடுகளையும் குறைவற செய்து விட்டு, பரதனின் தமையனான ராமர், க்ருஷ்ண ஸாரமான-கறுப்புக் குதிரையை விட்டார். ரித்விக்குகளும், லக்ஷ்மணனும் குதிரையை பாதுகாத்துக் கொண்டு உடன் சென்றனர். தான் சைன்யத்தோடு நைமிச க்ஷேத்ரம் சென்று யாகசாலையை பார்வையிட்டார். நல்ல முறையில் யாக சாலை தயாராக ஆவதைக் கண்டு திருப்தியடைந்தார். நைமிச க்ஷேத்திரத்தில் இருக்கும் பொழுது பல அரசர்களும் வந்து காணிக்கை சமர்ப்பித்தனர். ராமரும் அவர்களுக்கு பதில் மரியாதைகள் செய்தார். தகுதி வாய்ந்த உயர் குலத்து அரசர்கள், அவரவர் தகுதிக்கேற்ப அன்பளிப்புகள் கொடுத்தார். உடன் வந்த ஏவல், காவல் வேலை செய்பவர்களுக்கும் அன்ன, பானாதிகள், வஸ்திரங்கள் இவைகளை பரதன், சத்ருக்னனுமாக தந்தனர். வானரங்களும், சுக்ரீவனும், மற்றவர்கள் போலவே ஆடையலங்காரங்களை அணிந்து கொண்டனர். விபீஷணன், தன் உற்றாரான ராக்ஷஸர்களுடன் ஆபரணங்கள் அணிந்தவனாக, மகரிஷிகளுக்கு மரியாதைகள் செய்தான். அஸ்வமேத யாகம் நடந்து கொண்டிருக்கையிலேயே, லக்ஷ்மணன் நடத்திச் சென்ற குதிரையைப் பற்றியும் விமரிசனம் செய்து பேசிக் கொண்டனர். இப்படிப்பட்ட ராஜ சிங்கத்தின் யாகம், உத்தமம் என்பது தவிர வேறு பேச்சேயில்லை. யாசகர்கள் தேஹி என்று கேட்கும் முன் அவர்கள் திருப்தி அடையும் வரை கொடுக்கப் பட்டது. யாக மத்தியில் தான தர்மமும் நிறைய நடந்தது. பலவிதமான கௌடர்கள், காண்டவர்கள், (கௌடர்கள்- வங்காளப் பகுதியைச் சேர்ந்தவர்கள், காண்டர்கள், மேற்குப் பகுதியைச் சேர்ந்த குருக்ஷேத்திரம் அருகில் உள்ள ஊர்.). இவர்கள் வாயிலிருந்து இன்ன பொருள் வேண்டும் என்ற சொல் வெளி வரும் முன் வானர, ராக்ஷஸர்கள் அவர்கள் கையில் கொண்டு வந்து கொடுத்து விட்டதை உணர்ந்தார்கள். யாருமே அழுக்கு வஸ்திரங்களுடனோ, பசி தாகம் வருத்தவோ காணப்படவில்லை. எங்கும் ஜனங்கள் மகிழ்ச்சியுடன் ஆரோக்யமாகவே காணப்பட்டனர். சிரஞ்ஜீவிகளான சில மகான்கள்,இது போல யாகத்தைக் கண்டதுமில்லை, கேட்டதும் இல்லை என்று பாராட்டினார்கள். யாருக்கு என்னத் தேவையோ, கிடைத்தது. தங்கம் விரும்பியவன் தங்கம், ரத்னம் கேட்டவன் ரத்னம் என்று கிடைக்கப் பெற்றார்கள். வெள்ளியும், தங்கமும், வஸ்திரங்களும் கொடுக்க கொடுக்க குறையாமல் இருக்கக் கண்டனர். இந்திரன் செல்வமோ, குபேரன் செல்வமோ, யம, வருணன் இவர்களின் செல்வமோ, இங்குள்ள செல்வத்துக்கு ஈடாகாது என்று பேசிக் கொண்டனர். எங்கும் வானரங்கள், எங்கும் ராக்ஷஸர்கள், கை நிறைய அள்ளி, அள்ளிக் கொடுத்தனர். உணவும், ஆடைகளும் வேண்டிய அளவு தானம் செய்தபடி யாகம் ஒரு வருஷ காலம் வளர்ந்து கொண்டு சென்றது.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஹய சர்ச்சா என்ற தொன்னூற்று இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 65 (602) சௌதாஸன் கதை
ஒரு மாத காலம் இந்த ஏற்பாடுகள் செய்வதில் கழிந்தது. அதுவரை வழியில் கிடைத்த இடத்தில் தங்கியிருந்து, சத்ருக்னன் தான் தனியாகப் புறப்பட்டான். வால்மீகி ஆசிரமத்தில் இரண்டு இரவுகள் தங்கியிருந்து, அவரை வணங்கி ஆசிகள் பெற்றான். பணிவாக அவரிடம் வேண்டினான். ப4கவன், என் குருவான ராமனின் காரியமாக வந்தேன். நாளைக் காலை வருணனின் திசையான மேற்கு நோக்கி பிரயாணம் செய்ய நினைக்கிறேன். அது வரை இங்கு தங்க அனுமதி வேண்டும் என்றான். இதைக் கேட்டு சிரித்த முனிவர், அரச குமாரனே, உனக்கு ஸ்வாகதம், தாராளமாக இரு. இந்த ஆசிரமம், ரகு குலத்தில் வந்தவர்களுக்கு சொந்த வீடு போல. உரிமையோடு தங்கலாம். இதோ பாத்யம். ஆசனத்தில் அமர்ந்து கொள். அர்க்யம் எடுத்துக் கொள். பழங்கள், காய்கள் தான் உணவு. இவைகளை எடுத்துக் கொள் என்றார். காகுத்ஸனான சத்ருக்னனும், அந்த உணவை சாப்பிட்டு திருப்தி ஆனான். இது என்ன? கிழக்கு திசையில் இருக்கும் ஆசிரமம் யாருடையது? வால்மீகி சொன்னார். சத்ருக்னா, உன் முன்னோர்களில், சுதாஸன் என்ற ஒருவர் இருந்தார். அந்த அரசனின் மகன் வீர்யவானான வீரசஹன் என்பவன். குழந்தையாக இருந்த பொழுதே வேட்டையாட வந்தான். இரண்டு ராக்ஷஸர்கள், சார்தூலம் போல உருவம் எடுத்துக் கொண்டு வந்து ஜீவன்களைத் துன்புறுத்திக் கொண்டும், வனத்து மிருகங்களை ஏராளமாக கொன்று குவித்துக் கொண்டிருப்பதையும் கண்டான். அப்படியும் திருப்தியடையவில்லை போலும். வனத்து மிருகங்கள் ஒன்று கூட பாக்கியில்லை. இதையறிந்து ராக்ஷஸர்களுள் ஒருவனை அம்பினால் அடித்துக் கொன்றான். ராக்ஷஸன் அழிந்தான் என்று நினைத்தால், மற்றவன் கண்ணில் பட்டான். அவன் சௌதாஸனைப் பார்த்து, என் ஸகாவை ஒரு அபராதமும் செய்யாத போது கொன்றாயே, அதனால் உனக்கும் நான் அதே போல தண்டனை தருகிறேன் என்று சொல்லி மறைந்து விட்டது. காலம் சென்றது. ராஜாவான குமாரன் யாகம் செய்தான். ஆசிரமத்தில் யாக பசுவை வசிஷ்டர் பாதுகாத்து வந்தார். தேவ யக்ஞம் போல அந்த யாகம் பல ஆண்டுகள் விமரிசையாக நடந்தது. யாக முடிவில், இந்த ராக்ஷஸன், பழைய விரோதத்தை மனதில் வைத்தவனாக, வசிஷ்டர் போல உருவம் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். யாகம் தான் முடிந்து விட்டதே, உணவு வேண்டும் என்று அவன் சொன்னதை, சற்றும் சந்தேகம் இல்லாமல் அரசன் அனுமதித்து விட்டான். ஆனால் சமையல்காரர் கவலை கொண்டார். உடனே அந்த ராக்ஷஸன் தன் உருவை சமையல்காரரைப் போல ஆக்கிக் கொண்டான். அரசனிடம் மாமிசம் கலந்த உணவை பரிவோடு கொடுத்தான். ஹவிஸ் கலந்த உணவு என்று அதை எடுத்துக் கொண்டு, தானே பத்னியான மதயந்தியுடன் போய் வசிஷ்டருக்கும் அரசன் உபசரித்தான். அவரிடம் கொடுத்த உடனேயே வசிஷ்டர் தெரிந்து கொண்டு விட்டார். மிகக் கோபத்துடன் அரசனிடம், இது என்ன தைரியம்? நர மாமிசம் கலந்த உணவை எப்படி எனக்குத் தர எண்ணினாய். இன்றிலிருந்து இதுவே உன் உணவாகட்டும், என்று சபித்து விட்டார். இதைக் கேட்டு அரசனும், பதில் சாபம் கொடுக்க கையில் ஜலத்தை எடுத்தான். உடனிருந்த மனைவி, மதயந்தி தடுத்து, வசிஷ்டர் நமது குலகுரு, அவரை எப்படி நீங்கள் சபிக்கலாம், என்றாள். அரசனும் புரிந்து கொண்டு கையில் எடுத்த ஜலத்தை தன் காலில் விட்டுக் கொன்டான். அந்த சாப ஜலம் அவன் பாதங்களைச் சுருக்கி விட்டது. அதிலிருந்து கல்மாஷ பாதன் என்று அழைக்கப் பட்டான். பணிவுடன் வசிஷ்டரை வணங்கி நடந்ததைச் சொன்னான். ராக்ஷஸன் தானே வந்து அன்னம் கேட்டதையும், ஹவிஸ் கலந்த உணவு என்று சமையல்காரர் சொன்னதையும் சொன்னான். வசிஷ்டர் புரிந்து கொண்டார். இது அந்த ராக்ஷஸனின் வேலை. அரசனே, இதில் உன் குற்றம் எதுவும் இல்லை. நான் கோபம் கொண்டு உன்னை சபித்து விட்டேனே அதை மாற்ற முடியாது ஆனால் மற்றொரு வரம் தருகிறேன். பன்னிரண்டு ஆன்டு காலத்தில் சாபம் விலகும். கடந்த காலம் உன்னை வருத்தாமல் இருக்கவும் வரம் தருகிறேன். அந்த அரசன் சாபத்தை அனுபவித்து சாபம் தீர்ந்து திரும்ப ராஜ்யத்தை அடைந்து ஆண்டான். அந்த கல்மாஷ பாதர் ஆசிரமம் தான் அருகில் இருக்கிறது. ஏன் கேட்கிறாய்? என்றார். சத்ருக்னனும் கதையைக் கேட்டபின் அவருடன் பர்ணசாலையில் நுழைந்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சௌதாஸன் கதை என்ற அறுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 66 (603) குச லவ ஜனனம் (குச லவ பிறப்பு)
சத்ருக்னன் பர்ணசாலையில் வசித்த அன்று இரவு சீதையும் இரு புதல்வர்களைப் பெற்றெடுத்தாள். நடு இரவில், முனி குமாரர்கள் வந்து முனிவரிடம் இந்த விவரத்தைச் சொன்னார்கள். ப4கவன், ராமபத்னிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன. தாங்கள் வந்து குழந்தைகளுக்கு ரக்ஷைகள் செய்யுங்கள் என்றனர். பூ4த விநாசினீ என்ற ரக்ஷையைக் கட்டுங்கள் என்றனர். முனிவரும் விரைந்து சென்றார். இளம் சந்திரன் போல, பிரகாசமாக, தேவ குமாரர்கள் போல அழகாக இருந்த சிசுக்களைக் கண்டார். குச முஷ்டி, லவம் என்ற மூலிகைகளைக் கொண்டு காப்புகள் செய்தார். முதலில் பிறந்தவன் குசன் என்ற பெயருடன் மந்திர சம்ஸ்காரங்கள் செய்யப் பெற்றான். இளையவன் லவன் என்ற பெயருடன். வயது முதிர்ந்த மூதாட்டிகள் குழந்தைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்தனர். காப்பாக பயன்பட்ட மூலிகைகளே பெயராக அமைந்தது. குச லவர்கள் என்றே பிரசித்தி பெற்றனர். இந்த பெயருடன் அமோகமாக இருப்பார்கள் என்று முனிவர் வாழ்த்தினார். மூதாட்டிகள், காப்புக் கயிற்றை முனிவரிடமிருந்து வாங்கி குழந்தைகள் கையில் கட்டி விட்டனர். மேலும் கோத்ர பெயரைச் சொல்லி தாலாட்டு பாடினர். ராம, சீதா புதல்வர்கள் பிறப்பைக் கொண்டாடினர். அர்த்த ராத்திரியில், என்ன கோலாகலம் என்று சத்ருக்னன் வியந்தான். பர்ணசாலைக்குள் சென்று விசாரித்தான். யாரோ, ஒரு தாய்க்கு, அதிர்ஷ்ட வசமாக புத்திரர்கள் நலமாக பிறந்து இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். வெளியில் இருந்தபடியே வாழ்த்தினான். சிராவண மாதத்து, மழைக்கால இரவு. சத்ருக்னன் சந்தோஷமாக அங்கேயே அந்த இரவைக் கழித்தான். விடியற்காலையில், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு விடை பெற்றுச் சென்றான். ஏழு நாட்கள் நடந்து யமுனா தீரம் சென்றடைந்தான். பிரசித்தி பெற்ற முனிவர்களுடன் அவர்கள் ஆசிரமங்களில் வசிக்கலானான். தன்னைக் காட்டிக் கொள்ளாமல், அவர்களுள் ஒருவனாக சாமான்யனாக வசித்தான். காஞ்சனன் முதலான முனிவர்களுடன் நட்பு கொண்டான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், குச லவ ஜனனம் என்ற அறுபத்து மூஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 67 (604) மாந்தா4த்ரு வத4: (மாந்தாத்ருவின் வதம்)
மறுநாள் பா4ர்க்கவரிடம், லவணனின் பலம் என்ன என்று விசாரித்தான். மூசூலத்தின் பலம் பற்றிச் சொல்லுங்கள். யார் யார் இதனால் அடிபட்டு மாண்டனர் என்று கேட்டான். முனிவரும் சொல்ல ஆரம்பித்தார். ரகுநந்தனா, இவன் அடித்து நொறுக்கியது ஏராளம். இக்ஷ்வாகு வம்சத்திற்கு செய்த அநியாயம் பற்றி சொல்கிறேன், கேள். முன்பு அயோத்தியில் யுவனாஸ்வன் மகன் மாந்தா4தா என்று இருந்தான். நல்ல பலசாலி. உலகில் வீரர்கள் என்று புகழ் பெற்றவர்களுள் ஒருவனாக திகழ்ந்தான். அவனுக்கு தேவலோகத்தையும் ஆள ஆசை வந்தது. இந்திரனுக்கு பயம். மற்ற தேவர்களும் நடுங்கினர். மாந்தா4தா இந்திர பதவிக்கு முயற்சி செய்கிறான் என்ற செய்தி பரவியது. இந்திரனுக்கு சமமான ஆசனம், அர்தாஸனம் – பாதி ஆசனம், எனக்கு என்ற அவனது கோரிக்கையைக் கேட்டு தேவ கணங்கள் நடுங்கின. பாகசாஸனன் (இந்திரன்) சமாதானமாக மாந்தா4தாவிடம் பேச முனைந்தான். அரசனே, நீ பூமிக்கு அரசன். பூ4 லோகத்தையே இன்னும் முழுமையாக வென்ற பாடில்லை. பூமி முழுவதும் உன் வசத்தில் இருக்குமானால் தேவ லோகத்தில் படையெடுக்கலாம். உடனே மாந்தாதா கேட்டான். இந்திரனே, பூலோகத்தில் என்னை எதிர்க்க கூடியவர்கள் யார் இருக்கிறார்கள். என்று வினவினான். உடனே இந்திரன், லவணனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். லவணன் என்ற ராக்ஷஸன். மதுவனத்தில் இருக்கிறான். உன் ஆட்சியை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. தெரியுமா? என்றான். தனக்கு எதிரான இந்த விமரிசனத்தை சற்றும் எதிர்பார்க்காத மாந்தாதா, வெட்கத்துடன், பதில் சொல்ல முடியாமல், இந்திரனிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்ப வந்து விட்டான். ஏமாற்றம் கோபமாக உருவெடுத்தது. படையை திரட்டிக் கொண்டு லவணனை எதிர்த்து போர் செய்ய கிளம்பினான். மதுவின் மகனான லவணனை தனக்கு அடி பணியச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் போருக்கு அழைத்தான். முதலில் ஒரு தூதனை அனுப்பினான். தூதன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, அவன் பேச்சு தனக்கு சாதகமாக இல்லை என்று தெரிந்தவுடன் லவணன் அவனை விழுங்கி விட்டான். தூதன் திரும்பி வராததைக் கண்டு மாந்தா4தா தானே நேரில் வந்து அம்புகளைப் போட்டு சண்டையைத் துவக்கினான். ராக்ஷஸனோ பலமாக சிரித்து சூலத்தை கையில் எடுத்துக் கெண்டான். படை பலத்தோடு சேர்த்து அரசனை அழிக்க அந்த ஆயுதத்தை பிரயோகித்தான். அரசனை அது படையோடு சேர்த்து பஸ்மமாக்கி விட்டு திரும்ப அவனிடமே வந்து விட்டது. இது போல லவணன் பலரை பஸ்மமாக்கி இருக்கிறான். நாளைக் காலை நீ லவணனை வதம் செய்வாய். அவன் ஆயுதத்தை கையில் எடுக்கும் முன் வதம் செய்து விடு. உலகுக்கும் நன்மை உண்டாகட்டும். உன் காரியமும் நிறைவேறும் என்றார். ராஜகுமாரா, நாளைக் காலையில் மாந்தாதாவை அழித்த லவணன் உன் கையால் வதம் செய்யப் படட்டும். வேட்டையாடி திரும்பி வரும் சமயம், கையில் ஆயுதத்தை எடுக்கும் முன் தாக்கு, வெற்றியடைவாய் என்று வாழ்த்தினார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், மாந்தா4த்ரு வத4: என்ற அறுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 68 (605) லவண சத்ருக்ன விவாத: (லவணனும் சத்ருக்னனும் விவாதித்தல்)
இப்படி பழைய கதைகளைப் பேசிக் கொண்டும், வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையுடனும் அந்த இரவு கழிந்தது. விடியற்காலையில் ராக்ஷஸன் கோட்டைக்கு வெளியே வந்தான். வேட்டையாட கிளம்பினான். பாதி நாள் கடந்தது. பல மிருகங்களைக் கொன்று பாரமாக தூக்கிக் கொண்டு திரும்பி வரும் பொழுது, இடையில் யமுனையை நீந்தி கடந்து வந்து விட்ட சத்ருக்னனை எதிரில் கண்டு நின்றான். அவனையும் அவன் கையில் ஆயுதத்தையும் பார்த்து அலட்சியமாக, நராதமனே, இதைக் கொண்டு என்ன செய்வாய், என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறாய் என்று சிரித்தான். ஆயிரக் கணக்கானவர் ஆயுதங்களுடன் வந்து என்னுடன் மோதி இறந்திருக்கிறார்கள். பலரை நான் விழுங்கியிருக்கிறேன். உனக்கும் மரண ஆசை வந்து விட்டதா? இன்று எனக்கு ஆகாரமும் பூரணமாக ஆகி விட்டது. நீயாகவே வந்து என் வாயில் விழ காத்திருக்கிறாய், என்று சிரித்துக் கொண்டு சொல்ல சத்ருக்னன் ரோஷத்துடன் எழுந்தான். உடல் நடுங்கியது, கண்களில் நீர் மல்கியது. ரோஷத்தின் காரணமாக, அவன் உடலிலிருந்து கோபாக்னி கிரணங்களாக வெளிப் படுவது போல இருந்தது. நிசாசரனைப் பார்த்து மகா கோபத்துடன் சொன்னான். துர்புத்தியே, உன்னுடன் த்வந்த யுத்தம் செய்யத் தான் வந்திருக்கிறேன். நான் தசரதன் மகன். ராமனின் இளைய சகோதரன். நித்ய சத்ருக்னன் என்று புகழ் பெற்ற சத்ருக்னன். உன்னை வதம் செய்யவே வந்திருக்கிறேன். நான் போருக்கு அழைக்கும் பொழுது நீ மறுக்க முடியாது. த்வந்த யுத்தம் செய்ய வா. நீ என் சத்ரு. என்னிடமிருந்து உயிருடன் தப்ப முடியாது. என்றான். ராக்ஷஸன் சிரித்தான். அட, என் அதிர்ஷ்டம், நீயாகவே வந்து மாட்டிக் கொண்டாய். ராவணன் என் தாயின் சகோதரி மகன். ராக்ஷஸாதிபன். ஒரு பெண்ணின் காரணமாக அவனை குலத்தோடு அழித்தான் உன் சகோதரன். அது என் மனதை வருத்திக் கொண்டே இருந்தது. நானும் சரியான நேரத்தை தான் எதிர் பார்த்து காத்திருக்கிறேன். உன் குலத்தினரை, அடியோடு அழிக்க வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தேன். நீயாக வந்து சேர்ந்தாய். வரப் போகும் சந்ததிகளையும் சேர்த்து அழிக்கிறேன் வா, வா என்றான். யுத்தம் செய்வோம், நான் தயார். சற்று நில். நான் என் ஆயுதத்தை கொண்டு வருகிறேன் என்றான். உடனே சத்ருக்னன், என்னைத் தாண்டி நீ எப்படி உள்ளே போவாய். எதேச்சையாக எதிர் பட்ட சத்ருவை விடவே கூடாது. அப்படி யார் எதிரியை கை நழுவ விடுகிறானோ அவன் மந்த புத்தி உடையவனே. அவனால் எதையும் சாதிக்க முடியாது. அதனால் உன்னைக் கண்ட நேரம் எனக்கு நல்ல நேரமாக இருக்கட்டும். யமனுடைய வீடு தான் நீ போக வேண்டிய இடம். அம்புகளால் துளைத்த உன் உடலை உன் வீட்டில் சேர்க்கிறேன். ராமனுக்கு விரோதி மூவுலகுக்கும் விரோதியே என்றான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், லவண சத்ருக்ன விவாத: என்ற அறுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 69 (606) லவண வத: (லவணனை வதம் செய்தல்)
சத்ருக்னன் பேசியதைக் கேட்டு லவணன் ஆத்திரம் அடைந்தான். நில், நில் என்றபடி ஓடி வந்தான். கைகளை பிசைந்தபடி, பற்களை நற நற வென்று கடித்தபடி, அருகில் வந்தான். சத்ருக்னனை பெயர் சொல்லி அழைத்து, ஆத்திரத்துடன் வரும் ராக்ஷஸனை சத்ருக்னன் பார்த்தான். கோபத்தில் மேலும் பயங்கரமாக தோற்றமளித்த அரக்கனை தேவ சத்ருக்னன் (தேவர்களின் சத்ருக்களை வெல்பவன்) என்று பெயர் பெற்றவன், வா, வா, நீ நினைப்பது போல என்னை எளிதில் வெல்ல முடியாது, இதோ பார், என் பாணம் உன்னை யம லோகம் அனுப்பப் போகிறது, இன்று ரிஷிகளும், மற்றவர்களும் நீ மடிந்து விழுவதைப் பார்த்து மகிழப் போகிறார்கள். ராவணனை வதம் செய்தவுடன் முக்கோடி தேவர்களும் நிம்மதியடைந்தது போல. பிராம்மணர்கள் வருத்தம் தீரட்டும். ஜனங்கள் நலமாக வாழட்டும். வஜ்ரம் போன்ற பாணங்கள், என் கையிலிருந்து வெளிப்பட்டு உன் உயிரைக் குடிக்கட்டும். சூரியன் கிரணங்கள் தாமரை மலரைத் துளைத்துக் கொண்டு நுழைவது போல உன் இதயத்தினுள் நுழையும் பார் என்றான். இதற்குள் லவணன் ஒரு பெரிய மரத்தை தூக்கிக் கொண்டு வந்து அவன் மேல் போட்டான். அதை தன் பாணத்தால், சத்ருக்னன் நூறாக பிளக்கச் செய்தான். திரும்பவும் சளைக்காமல் வேரோடு மரங்களை ராக்ஷஸன் சத்ருக்னன் மேல் போடுவதும், சத்ருக்னின் பாணங்கள் அவைகளைச் சிதற அடிப்பதுமாக யுத்தம் தொடர்ந்தது. ஓரு சமயம், ஒரு பெரிய மரத்தால் சத்ருக்னன் தலையில் ஓங்கி போடவும், அவன் கிட்டத்தட்ட மயங்கிய நிலைக்கு வந்து விட்டான். ராக்ஷஸன் அவன் இறந்தான் என்று எண்ணி அட்டகாசமாக சிரித்தான். பார்த்துக் கொண்டிருந்த தேவர்களும், ரிஷிகளும், ஹா ஹா என்று துக்கத்துடன் அலறினர். இந்த இடை வெளி கிடைத்த நேரத்திலும், லவணன் தன் மாளிகைக்குள் செல்லவோ, சூலத்தை எடுத்து வரவோ செய்யாமல் தானே விழுங்கி விடலாம் என்று நினைத்தபடி அருகில் வந்தான். ரிஷிகள் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தனர். நினைவு திரும்பவும் சத்ருக்னன் தன் திவ்யாஸ்திரத்தை கையில் எடுத்தான். வஜ்ரம் போன்ற தோற்றம் உடைய அந்த அஸ்திரம், நான்கு திசைகளிலும் ஒளி பரப்பிக் கொண்டு சீறி பாய்ந்தது. மூவுலகமும் நடுங்கியது. நல்ல வேலைப்பாடும், வேகமும், யாராலும் இது வரை ஜயிக்கப் படாத பெருமையும், உடையது. பல காலமாக சந்தனம் கொண்டு பூஜை செய்யப் பெற்று, காலாக்னி போன்று குலை நடுக்கம் எழச் செய்யும் சக்தி வாய்ந்தது. தேவர்கள் பிதாமகரான ப்ரும்மாவிடம் சென்று, தேவ தேவா இது என்ன, உலகம் அழியப் போகிறதா என்று வினவினர். பிதாமகர் அந்த அஸ்திரத்தின் மகிமையை விவரித்தார். தேவர்களே, கேளுங்கள். சுத்ருக்னன், லவணனை வதைக்க இந்த அஸ்திரத்தை தொடுத்து இருக்கிறான். அதன் தேஜஸால் இங்கு தேவர்களும் கூட கண் கூச நிற்கிறோம். இந்த அஸ்திரம், சனாதனனான தேவனுடையது. பகவானின் ஆயுதம். மது கைடபர்களை வதைத்து உலகத்தை காக்க மகாத்மாவான விஷ்ணு பகவான் தானே தாயாரித்துக் கொண்டது. மது, கைடபர்கள் இருவரும் பயங்கர சக்தி வாய்ந்த ராக்ஷஸர்கள். அவர்களைக் கொல்ல இப்படி ஒரு ஆயுதம் தேவைப்பட்டது. ஏனெனில் இவர்களும் விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றியவர்களே. போய் பாருங்கள். ராம சகோதரன், சத்ருக்னன், லவணனைக் கொல்வதற்கு சாக்ஷியாக நில்லுங்கள். அவர்களும் இதைக் கேட்டு லவண வதத்தைக் கண்ணால் காண வந்து சேர்ந்தார்கள். கையில் திவ்யமான ஸரத்துடன் நின்றிருந்த சத்ருக்னனைக் கண்டனர். கொழுந்து விட்டெரியும் யுகாந்த நெருப்போ, எனும் படி கண் கூச வைத்த அந்த அஸ்திரத்தை கையில் எடுத்து, லவணனைத் திரும்ப போருக்கு அழைத்தான் சத்ருக்னன். பெரும் கோபத்துடன் லவணன் எதிர்த்து வந்தான். காது வரை வில்லை இழுத்து சத்ருக்னன் அந்த பாணம், லவணனின் மார்பில் பட எய்தான். ராக்ஷஸனின் மார்பை பிளந்து கொண்டு அது ரஸாதளம் சென்றது. அங்கு இருந்த ஞானிகள் அதை பூஜித்து ரகு நந்தனிடம் திரும்பச் செய்தனர். பெரிய மலை ஒன்று விழுந்தது போல லவண ராக்ஷஸன் தடாலென உயிரற்று விழுந்தான். அவன் இறந்ததும், ருத்ரன் தந்த சூலமும், தேவர்கள் கண் முன்னாலேயே ருத்ரனிடம் சென்று விட்டது. ரகு வீரன், சத்ருக்னன், ஒரே ஒரு பாணத்தால், உலகை ஆட்டி வைத்த அரக்கனைக் கொன்று பயம் நீங்கச் செய்து விட்டான். மா பெரும் இருட்டு, ஆயிரம் கிரணங்களுடன் சூரியோதயம் ஆனவுடன் விலகுவது போல மக்களின் துயரம் விலகியது. கொடிய நாகத்தை அடக்குவது போல ரகுநந்தனன், லவணாசுரனை அழித்து விட்டான் என்று தேவர்களும், ரிஷிகளும், பன்னக, அப்ஸரஸ்களும் பேசிக் கொண்டனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், லவண வத: என்ற அறுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 70 (607) மது4புரி நிவேச: (மதுவின் நகரத்தில் பிரவேசித்தல்)
லவண வதம் ஆனவுடன் இந்திரன், அக்னி, மற்ற தேவர்களும் வந்து சத்ருக்னனை பாராட்டினார்கள். வத்ஸ, குழந்தாய், நல்ல காலம் வெற்றியடைந்தாய். லவண ராக்ஷஸன் ஒழிந்தான். புருஷ சார்துர்லா, என்ன வரம் வேண்டுமோ, கேள் என்றனர். நாங்கள் அனைவரும் சேர்ந்து உனக்கு வரம் தரவே வந்திருக்கிறோம். உன் வெற்றிக்காக நாங்களும் பிரார்த்தனை செய்தோம் என்றனர். இதைக் கேட்டு சத்ருக்னன், நீங்கள் அனைவரும் சேர்ந்து வந்திருக்கிறீர்களே, உங்களை தரிசித்ததே பாக்யம். என் வெற்றிக்காக வேண்டிக்கொண்டதாக சொல்கிறீர்களே, அதுவே எனக்கு பெரிய வரம் கிடைத்தது போலத் தான் என்றான். இந்த மதுபுரி மிக ரம்யமாக இருக்கிறது. சீக்கிரமே நான் இதில் பிரவேசம் செய்ய வேண்டும். தேவர்களால் நிர்மாணிக்கப் பட்டது. இது தான் நான் வேண்டுவது என்றான். தேவர்களும் அப்படியே ஆகட்டும், என்று சொல்லி இந்த ஊர் என்றும், வீரர்கள் நிறைந்த ஊராக இருக்கும் என்று சொல்லி ஆசிர்வதித்து விட்டுச் சென்றனர். சத்ருக்னனும், தன் படை வீரர்களை அழைத்து விவரம் சொல்லி, சுபமான ஸ்ரவண நக்ஷத்திரம் கூடிய நல்ல நாளில், படை வீரர்கள் புடை சூழ நகர பிரவேசம் செய்தான். அடுத்த பன்னிரண்டு வருஷங்களில், அந்நகரம், பல விதத்திலும் மேன்மையடைந்து தேவலோகம் போலவே ஆயிற்று. மக்கள் சற்றும் கவலையின்றி வசித்தனர். காலத்தில் மழை பெய்து, விளைச்சல் அமோகமாக இருந்தது. வயல்களில் பசுமை நிறைந்து இருந்தது. ஆரோக்யம் மிகுந்தவர்களாக, வீரர்களாக பிரஜைகள் சத்ருக்னனால் பாலிக்கப் பட்டு மகிழ்ச்சியாக இருந்தனர். யமுனா தீரத்தில், பிறை சந்திரன் போல அமைந்திருந்த நகரம், சோபையுடன் விளங்கியது. பெரிய மாளிகைகளும், கடைவீதி, நாற்சந்திகள், என்று சிறப்பாக விளங்கியது. பல விதமான வியாபாரங்கள் பெருகி வளர்ந்தன. நால் வர்ணத்தாரும் சிறப்புடன் வாழ்ந்தனர். லவணன் முன் நிர்மாணித்திருந்த நகரை, சத்ருக்னன், பல விதத்திலும் சிறப்பாக ஆக்கி, உத்யான வனங்களும், பொழுது போக்கு ஸ்தலங்களும், விளையாடும் இடங்களுமாக அழகு பெறச் செய்து விட்டான். மனிதர்கள் தேவர்களுக்கு இணையாக இதில் வசதியுடன் வாழ்ந்தனர். பல தேசங்களிலும் இருந்து வியாபாரிகள் வந்து வாணிபத்தை பெருக்கினர். இதனால் செல்வம் பெருகியது. செல்வ செழிப்பு மிக்க இந்த நகரை பார்த்து சத்ருக்னன் பெரும் உவகை எய்தினான். தான் வளர்த்த நகரை ராமரை காணச் செய்ய வேண்டும் என்ற ஆவலும் வளர்ந்தது. பன்னிரண்டாவது ஆண்டும் முடிந்த நிலையில், தன் நகரத்து ஜனங்கள் பற்றியும், அமர புரி போல அதை தான் சிறப்பாக செய்து வைத்துள்ளதையும் ராமரிடம் சொல்லி அவரை அழைத்து வந்து காட்ட தீர்மானித்தான், பரதனின் தம்பியான சத்ருக்னன்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், மதுபுரி நிவேச: என்ற எழுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 71 (608) சத்ருக்ன பிரசம்ஸா (சத்ருக்னனை புகழ்தல்)
ஒரு சில வீர்ர்களே துணை வர. சத்ருக்னன், பன்னிரண்டாவது ஆண்டு முடிவில், அயோத்தி நோக்கி பயணமானான். நம்பிக்கைக்கு பாத்திரமான படைத்தலைவர்கள், மந்திரிகள் வசம், நாட்டின் பாதுகாப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றான். நூறு ரதங்கள், குதிரைகள் மட்டுமாக பின் தொடர பயணம் தொடங்கியது. ஏழெட்டு நாட்கள் பயணம் செய்து வால்மீகி ஆசிரமத்தை அடைந்தான். அங்கு சில நாட்கள் தங்கினான். வால்மீகியை வணங்கி அவர் தந்த அர்க்ய, பாத்யங்களை ஏற்றுக் கொண்டு நாட்டு நடப்புகளை விசாரித்தான். பலவிதமான நாட்டு நடப்புகளையும், கதைகளையும் பேசியபடி நாட்கள் நகர்ந்தன. லவண வதம் பற்றி சத்ருக்னன் சொல்ல, முனிவர் அதை பாராட்டினார். அரிய செயலை செய்திருக்கிறாய். லவணனை வதம் செய்வது எளிதல்ல. அவன் கையில் எவ்வளவு அரசர்கள், போர் வீரர்கள் மடிந்திருக்கிறார்கள் தெரியுமா? அவனைக் கொன்று நீ உலகுக்கே நன்மை செய்திருக்கிறாய். விளையாட்டாக மிகப் பெரிய எதிரியை அழித்து விட்டாய். ராவணனுடைய வதம், பலத்த ஏற்பாடுகளுடன் செய்யப் பட்டது. நீ அநாயாசமாக செய்து விட்டாய். தேவர்கள் இந்த லவணன் ஒழிந்தான் என்று மகிழ்ந்திருப்பார்கள். எல்லா ஜீவராசிகளுக்கும், பூத கணங்களுக்கும் இதனால் மிகவும் நன்மையே. ராகவா, நானும் வாஸவனுடைய சபையில் இருந்து அந்த காட்சியைக் கண்டேன். எனக்கும் அந்த வீரச் செயல் மிகவும் பிடித்தது. திருப்தியாக இருந்தது. அன்புடன் உன்னை அணைத்து, உச்சி முகர்ந்து ஆசிர்வதிக்க மனம் பரபரத்தது என்று சொல்லி முனிவர் அவனை அணைத்து உச்சி முகர்ந்து ஆசிர்வதித்தார். சத்ருக்னனுக்கு உடன் வந்த படை வீர்ரகளுடன் சேர்த்து விருந்து அளித்தார். நன்றாக சாப்பிட்டு, மதுரமான இசையைக் கேட்டு மகிழ்ந்து, முறையாக ராம சரிதம் பாடப் பட்டதையும் கேட்டான். தந்த்ரீ, லயம் இவை சேர, (தந்தி வாத்யங்களும், தாள வாத்யங்களும்) மூன்று ஸ்தாயிகளிலும், தவறில்லாத மொழியும், இலக்கண,இலக்கிய சுத்தமான உச்சரிப்புடனும், சமமான தாளங்களுடனும், சிறப்பாக பயிற்றுவிக்கப் பட்ட பாடகர்கள் போல பாடினார்கள். வால்மீகி முனிவர் சமீபத்தில் இயற்றிய காவியம் அந்த ராமசரித காவியம் என்பதையும் தெரிந்து கொண்டான். முன்பு நடந்தது நடந்தபடி, சத்யமான வார்த்தைகள், சத்ருக்னன் கண்களில் நீர் முட்டச் செய்தது. தன்னை மறந்து லயித்துக் கேட்டான். நேரடியாக கண் முன்னே அந்த காட்சிகளைக் காண்பது போலவும், தானும் நிகழ்சிகளில், பங்கு கொள்வது போலவும் உணர்ந்து மெய் சிலிர்த்தான். மற்றவர்கள் இசையின் இனிமையில் மூழ்கி திளைத்தனர். ஆச்சர்யம், ஆச்சர்யம் என்று பாராட்டினர். என்ன இது? நாம் எங்கு இருக்கிறோம்? கனவு காண்கிறோமா என்று தங்களுக்குள் படை வீரர்கள் பேசிக் கொண்டனர். நேரில் பார்ப்பது போல முன் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் காண்கிறோமே என்று வியந்து சத்ருக்னனிடம் சொன்னார்கள். நரஸ்ரேஷ்டனே, முனிபுங்கவரை விசாரியுங்கள், யார் பாடுவது? சத்ருக்னனும், எல்லோரும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள், நம் சைன்யத்து வீரர்கள் இது போன்ற அத்புதமான கானத்தை கேட்டதில்லை. இந்த ஆசிரமத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. ஆயினும் இதையெல்லாம் விசாரித்துக் கொண்டு இருக்க முடியாது என்று சொல்லி விட்டு முனிவரை வணங்கி, தன் இருப்பிடம் சென்று விட்டான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சத்ருக்ன பிரசம்ஸா என்ற எழுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 72 (609) சத்ருக்ன ராம சமாகம: (சத்ருக்னனும் ராமனும் சந்தித்தல்)
படுக்கையில் படுத்த சத்ருக்னனுக்குத் தூக்கம் வரவில்லை. காதில் விழுந்த ராம கீதம், மனதில் பலவித எண்ணங்களைத் தோற்றுவித்தது. உறக்கம் அண்டவிடாமல் செய்தது. இரவு முழுவதும், ஸ்வர சுத்தமாக, தாளக்கட்டுடன், இனிமையாக கேட்ட கீதத்தையே நினைத்தபடி கழித்தான். விடியற்காலை எழுந்ததும், தன் தினசரி, பர்வ கால காரியங்களை முடித்துக் கொண்டு, முனிவரிடம் சென்றான். கை கூப்பி அவரிடம் பகவன், ரகுநந்தனன் ராகவனைக் காண செல்கிறேன், விடை கொடுங்கள் என்று சொல்லி, மற்ற ரிஷிகளிடமும், விரதம் அனுஷ்டிப்பவர்களிடமும், அதே போல, எங்களுக்கு விடை கொடுங்கள் என்றான். முனிவரும், விடை பெற வந்த சத்ருக்னனை அணைத்து, ஆசிர்வதித்து அனுப்பினார். முனிவரை வணங்கித் தன் ரதத்தில் ஏறி, சீக்கிரமே அயோத்தி நகரம் போய் சேர்ந்தான். ராகவனைக் காணும் ஆவலுடன் விரைந்துச் சென்றான். அரண்மனையில், மந்திரிகள் மத்தியில், அமரர்கள் மத்தியில் இந்திரன் போல, பூரண சந்திரன் போன்ற முகமுடைய ராஜா ராமன் கம்பீரமாக அமர்ந்திருந்ததைக் கண்டான். சத்ய பராக்ரமனான ராமனை வணங்கி, பணிவாக, தாங்கள் சொன்னபடியே செய்து விட்டேன். லவணனை வதைத்து விட்டேன். நகரத்தை கைப் பற்றி, அதை நல்ல முறையில் செப்பனிட்டு வைத்திருக்கிறேன். நமது ராஜ்யம் அங்கு ஸ்தாபிதம் செய்யப் பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு வருஷங்களாக, இந்த வேலையில் மூழ்கியிருந்தாலும், உங்களைக் காணாது தவித்துப் போய் விட்டேன். இன்னமும் உங்களைப் பிரிந்து வாழ விரும்பவில்லை. அதனால் பல நாட்கள் இங்கு இருந்து விட்டுப் போக அனுமதிக்க வேண்டும். தாயை இழந்த குழந்தை போல நான் தங்கள் அண்மைக்காக ஏங்குகிறேன் என்றான். அவனை அணைத்து ஆறுதல் சொல்லி, வீரனே, கவலைப் படாதே, இது போல பிரிவுகளுக்கு வருந்துவது க்ஷத்திரியர்களுக்கு அழகு இல்லை. ராஜாக்களாக இருப்பவர்கள் சொந்த பந்தங்களை பெரிதாக மதித்து வருந்துவது கூடாது. பிரஜைகள் தான் நம் செல்வம், பந்துக்கள். அவர்களை முறையாக பாலனம் செய்வது தான் நம் கடமை. அவ்வப்பொழுது அயோத்தி வந்து என்னைப் பார். இப்பொழுது உன் நகரம் செல். எனக்கு நீ மிகவும் பிரியமானவன், சந்தேகமேயில்லை. ஆனால் அதை விட ராஜ காரியம், பிரஜா பாலனம் அதிக முக்கியமானது. அதனால் வத்ஸ, காகுத்ஸா, ஏழு ராத்திரி இங்கு இரு. அதன் பின் தன் வேலையாட்கள், படைகள், வாகனங்களுடன், உன் ஊர் போய் சேருவாய். சத்ருக்னன், ராமர் சொல்வதில், நியாயம் இருப்பதையறிந்து, தீனமாக அப்படியே ஆகட்டும் என்றான். ராமனுடைய ஆக்ஞை படி, ஏழு ராத்திரிகள் அங்கு வசித்தான். மறு நாள் காலை எழுந்து போய் வருகிறேன் என்று சொல்லி கிளம்பினான். ராம, லக்ஷ்மணர்களிடமும், பரதனிடமும் விடை பெற்றுக் கொண்டு ரதத்தில் ஏறினான். பரதனும், லக்ஷ்மணனும், வெகு தூரம் வரை உடன் வந்து, வழியனுப்ப, சத்ருக்னன் தன் ஊரை நோக்கிச் சென்றான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சத்ருக்னராம சமாகம: என்ற எழுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 73 (610) ப்ராம்மண பரிதேவனம் (பிராம்மணனின் வருத்தம்)
சத்ருக்னனை அனுப்பி விட்டு, ராமர், மற்ற சகோதரர்களுடன், பழையபடி, தன் ராஜ்ய காரியங்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். பல நாட்கள் சென்றன. ஒரு நாள் ஜன பதத்திலிருந்த ஒரு பிராம்மணன் இறந்த தன் குழந்தையைக் தூக்கிக் கொண்டு ராஜ மாளிகை வாசலில் வந்து நின்றார். பாசமும், துக்கமும் சேர, தேம்பித் தேம்பி அழுதபடி, அடிக்கடி புத்ரா என்றும், மகனே என்றும் அரற்றினார். முன் ஜன்மத்தில் என்ன பாபம் செய்தேனோ, ஒரே மகன் உன்னை பறி கொடுத்து விட்டு தவிக்கிறேனே, இன்னமும் பாலகன். இளமையையே எட்டவில்லை. ஐந்து வயது மகன், அகாலத்தில் இப்படி காலனிடம் சென்றாயா, மகனே, என்றும் அழுதார். நானும் சில நாட்களில் உன்னிடம் வந்து சேருகிறேன், மரணம் தான் எனக்கும் மாற்று. உன் தாயாரும் நானும், வேறு என்ன தான் செய்வோம், நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லையே. எந்த பிராணியையும் துன்புறுத்தியதும் இல்லை. நான் செய்த எந்த தகாத காரியத்தின் பலனோ இது, தெரியவில்லை. நீ பித்ரு காரியங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியவன், முன்னால் போய் சேர்ந்து விட்டாயே. இது போல கேட்டதே இல்லையே. ராம ராஜ்யத்தில் இப்படி அகால மரணம் எப்படி சம்பவிக்கலாம்.? ராமர் செய்த மிகப் பெரிய தவறு ஏதோ இருக்க வேண்டும். அதனால் தான் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இறந்தான். இல்லையெனில், சாதாரணமாக ஆசையுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்த சிறுவன் ஏன் மரணமடைகிறான்? ராமா, அரசனே, நீ உயிருடன் இருக்கும் பொழுது, இப்படி ஒரு குழந்தை ம்ருத்யு வசம் ஆனது நியாயமா? நானும், என் பத்னியும் இந்த மாளிகையின் வாசலிலேயே மரிப்போம். ப்ரும்மஹத்தி தோஷமும் உன்னை வந்தடைய ராமா, சுகமாக இரு. உன் சகோதரர்களுடன், ராமா, சிரஞ்ஜீவியாக இரு. இது வரை உன் ராஜ்யத்தில் சௌக்யமாக இருந்தோம். உன் பிரஜைகளான எங்களுக்கு வீழ்ச்சி காலம் ஆரம்பித்து விட்டது போலும். இனி சுகம் ஏது? அனாதைகள் போல தவிக்கப் போகிறோம். இக்ஷ்வாகு குலத்தின் அரசர்கள், தர்ம நியாயத்திற்கு பெயர் போன மகாத்மாக்கள். ராமர் அரசனாக வந்து அதை மாற்றி விட்டான் போலும். முதிர்ச்சியடையாதவனோ இவன்? பிரஜைகள் முறையாக பாலிக்கப் படாவிட்டால், ராஜ தோஷத்தினால் பாதிக்கப் படுகிறார்கள். அரசனின் நடத்தை சரியாக இல்லையெனில், பிரஜைகள் அகாலத்தில் மரணமடைவர். நகரத்திலும், வெளியிலும், சரியான பாதுகாப்புகள் செய்து, கவனமாக இல்லாத ராஜ்யத்தில் இப்படித்தான் அகால மரணம் நிகழும். இது நிச்சயமாக ராஜ தோஷம் தான். இது வரை அறிந்திராத, சிறுவனின் மரணம். இப்படித் திரும்ப திரும்ப பல விஷயங்களைச் சொல்லி அழுது அரற்றினார். தன் மகன் இறந்த துக்கத்தில் அரசனை தூஷித்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ப்ராம்மண பரிதேவனம் என்ற எழுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 74 (611) நாரத வசனம் (நாரதர் சொன்னது)
இப்படி வேதனை மிக்க பிராம்மணர் அரற்றவும், அதைக் கேட்ட ராமர், மந்திரிகளை அழைத்து விசாரித்தார். பிராம்மணரின் வேதனை அவரையும் வருந்தச் செய்தது. வசிஷ்டரையும், வாம தேவரையும், நிகமம் தெரிந்த அறிஞர்களையும், தன் சகோதரர்களையும் கூட்டி ஆலோசனை செய்தார். வசிஷ்டர் உள்பட, எட்டு மந்திரிகளும் வந்து சேர்ந்தனர். வாழ்க என்று அரசனை வாழ்த்தி விட்டு, மார்க்கண்டேயரும், மௌத்கல்யரும், வாமதேவரும், காஸ்யபரும், ஜாபாலி, கௌதமர், நாரதர் முதலிய பிராம்மணர்கள் எல்லோரும் வந்து தங்கள் ஆசனங்களில் அமர்ந்தபின், ராகவன், பிராம்மணரின் தூஷணையைச் சொல்லி, அவர்களின் பதிலுக்கு காத்திருந்த சமயம், நாரதர் எழுந்தார். ராமரது கவலை அவரது குரலிலேயே தெரிந்தது. எனவே, ஆறுதலாக பேசலானார். ராஜன், கேள், இந்த பாலனின் மரணம் சரியான காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறேன். முன்பு க்ருத யுகத்தில், தவம் செய்தவர்கள் பிராம்மணர்கள் மட்டுமே. மற்றவர் தவம் செய்ய முனைந்ததில்லை. அக்காலத்தில் தீர்க தரிசிகளாகவும், தவம் செய்து தேஜஸால், அக்னி போல ஜ்வலித்துக் கொண்டு, அவர்கள் இருந்த பொழுது மரணம் யாரையும் அண்டவில்லை. பின் த்ரேதாயுகத்தில், க்ஷத்திரியர்களும் அவர்களுடன் சேர்ந்து தவம் செய்ய சென்றார்கள். வீர்யமும், தவ வலிமையும் சேர்ந்து முன் ஜன்மங்களில், மனிதர்கள், சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள். த்ரேதாயுகத்தில் தான், ப்ரும்ம க்ஷத்ரம்- பிராம்மணத்வமும், க்ஷத்திரிய தர்மமும் இணைந்து செயல்படலாயின. இந்த இரண்டு யுகங்களிலும், நான்கு வர்ணங்களிலும், தனியாக விசேஷமோ, அதிக மதிப்போ தராமல், சமமாக பாவித்தனர். நான்கு வர்ணத்தாரும் சமமான அந்தஸ்தை அனுபவித்தனர். தர்மமே உருவானது போல அந்த த்ரேதாயுகம் நடந்து கொண்டிருந்த பொழுது, அதர்மம் தன் ஒரு காலை பூமியில் பதித்தது. அதர்மம் வந்தால், தேஜஸ் குறைவது கண்கூடு. பொய் என்ற சொல் பூமியில் காலுர்ன்றி விட்டது. அசத்யம் என்ற தன் காலை பூமியில் ஊன்றச் செய்த அதர்மம், இது வரை இல்லாத துஷ்க்ருத்யங்களுக்கும்-கெடுதலான செயல்களுக்கும், இடம் கொடுத்தது. ஆயுள் முன் போல தீர்கமாக இருப்பதும் சாத்யமில்லாமல் போயிற்று. இருந்தும் த்ரேதாயுகத்தில், சத்ய தர்ம பராயணர்களாக, சுபமான காரியங்களையே செய்து வந்த ஜனங்கள், பிராம்மணர்களும், க்ஷத்திரியர்களும், தவம் செய்த பொழுது, மற்றவர்கள் இவர்களுக்கு பணிவிடை செய்து வந்தனர். வைஸ்ய சூத்திரர்கள், இதை தங்கள் சிறந்த தர்மமாக ஏற்றுக் கொண்டனர். மற்ற வர்ணத்தினருக்கு சூத்திரர்கள் பணிவிடை செய்தனர். மதித்து மரியாதை செய்தனர். இந்த சமயம் தான் அதர்மம், அசத்யம் இரண்டும், நிரந்தரமாக வாசம் செய்ய வந்து சேர்ந்தன. இதன் பின் அதர்மம் தன் இரண்டாவது காலையும் பூமியில் அழுந்த ஊன்றி விட்டது. த்வாபர யுகம் ஆரம்பித்த சமயம் அது. துவாபர யுகம் முடியும் தறுவாயில், இந்த அசத்யமும், அதர்மமும் நன்றாக வளர்ந்து விட்டன. இப்பொழுது வைஸ்யர்களும், தவம் செய்ய முன் வந்தனர். மூன்று யுகங்களிலும், முறையாக மூன்று வர்ணத்தினரும், தவம் செய்வது வழக்கம் ஆயிற்று. இன்னமும் சூத்ரனுக்கு இந்த தகுதி கிடைக்கவில்லை. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களும், பெரும் தவம் செய்வது, வரும் கலி யுகத்தில் அதிகமாகும். துவாபர யுகத்திலேயே இச்செயல் அதிகரித்து விட்டது. அது போல ஒருவன் கடும் தவம் செய்து கொண்டிருக்கிறான். அதன் பலன் தான் இந்த சிறுவனின் மரணம். செய்யும் செயல், விஷய- உலக வழக்கை ஒட்டியிருந்தாலும், தர்ம காரியமானாலும், விபரீதமாக போகும் பொழுது, அரசனேயானாலும், நன்மை பயக்காது. கெடுதலுக்கு காரணமாக, இக பரத்திலும் நன்மை தராத படி ஆகும். இது போல அதர்மமான காரியத்தில் ஈடுபடும், துர்மதியால், அரசனும் நரகம் தான் அடைவான். தவமானாலும், நற்காரியங்கள் ஆனாலும், தர்மத்தை மீறிய செயலானாலும், ஆறில் ஒரு பங்கு அரசனை வந்தடையும். தர்மத்துடன் பிரஜைகளை பாலிக்கும் அரசன், ஆறில் ஒரு பங்கை தான் அனுபவித்துக் கொண்டு, பிரஜைகளின் நன்மையையும் சிந்திக்காமல் இருந்தால் என்ன நியாயம்? அரசனே, நீ உன்னையே சோதித்து எங்கு தவறு என்று யோசி. நீ என்ன தவறு செய்தாய் என்று கண்டு பிடி. முயற்சி செய். இப்படி செய்தால் தான் அரசர்களுக்கு தர்மமும் வளரும், ஆயுளும் வளரும். இந்த பாலகனுக்கும் உயிர் வரும்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், நாரத வசனம் என்ற எழுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 75 (612) சம்பூக நிசய: (சம்பூகனை தேடுதல்)
நாரதர் சொன்ன செய்தியைக் கேட்டு ராமர் மன நிம்மதி அடைந்தார். லக்ஷ்மணனைப் பாரத்து, சௌம்ய, போ. போய், இந்த பிராம்மணனுக்கு ஆறுதலாக இரண்டு வாரத்தைகள் பேசி, அவருடைய இறந்த குழந்தையை வாங்கி எண்ணெய் குடத்தில் வை. நல்ல வாசனைப் பொருட்களும், வாசனை மிகுந்த எண்ணெய்களும் விட்டு, குழந்தையை சற்றும் வாட்டம் காணாதபடி பாதுகாத்து வை. நன்னடத்தை உள்ள அந்தணன் மகன், மறைத்து பத்திரமாக வை. இதன் மேல் எதுவும் பட்டு எந்த வித ஆபத்தும், சேதமும் வரக் கூடாது. அவ்வாறு பார்த்துக் கொள். இவ்வாறு லக்ஷ்மணனுக்கு உத்தரவிட்டு, மனதால் புஷ்பகத்தை தியானித்தார். குறிப்பறிந்து புஷ்பகம், உடனே வந்து சேர்ந்தது. நராதிபா, இதோ, நான் வந்து விட்டேன் என்று பணிந்து நின்றது. அதைச் சார்ந்த கிங்கரர்களும் அதே போல நின்றனர். புஷ்பக விமானம் இவ்வாறு அழகாக பேசியதை ரசித்த ராமர், மற்ற மந்திரிகளிடம் விடை பெற்றுக் கொண்டு விமானத்தில் ஏறினார். தன் வில், அம்புறாத்தூணி, வாள் இவற்றை எடுத்துக் கொண்டு, பரதனையும், சௌமித்ரியையும் நகர காவலுக்கு நியமித்து விட்டு, மேற்கு திசை நோக்கி பயணமானார். பசுமையான அந்த பிரதேசங்களில், திரும்பத் திரும்ப தேடியபடி சென்றார். வடக்கு திசையில் ஹிமவான் பரந்து பரவியிருந்த திசையிலும் வந்து தேடினார். அங்கும் காணாமல், கிழக்குத் திசை சென்றார். எங்கும் தேடிப் பார்த்தபடி சென்றார். பூமி தெரியாதபடி செழிப்பாக இருந்த பிரதேசம். அதை புஷ்பகத்தில் இருந்தபடியே தரிசனம் செய்தார். இதன் பின், தென் திசை வந்தார். மலைச் சாரலின் மேல் அழகிய குளத்தைக் கண்டார். அந்த குளத்தில் அமர்ந்து, தவம் செய்து வந்த தாபஸனைக் கண்டார். அவனைப் பார்த்து, சுவ்ரத, தன்யனானாய். நீ பாக்யசாலி. நீ யார்? தவத்தில் முதிரந்தவனே, இவ்வளவு கடும் தவம் செய்யக் காரணம் என்ன? நான் தசரத குமாரன் ராமன். தெரிந்து கொள்ளும் ஆவலால் கேட்கிறேன். உன் விருப்பம் என்னவோ? ஸ்வர்கத்தை வேண்டி இந்த தவமா? அதற்கு மேலும் உயர்ந்த பதவியை அடையவா? வரம் பெற என்று தவம் செய்கிறாயா? இவ்வளவு கடுமையாக தவம் செய்யக் காரணம் என்ன? யாரைக் குறித்து தவம் செய்கிறாய். தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தாபஸ, நீ யார்? பிராம்மணனா? உனக்கு மங்களம். யாராலும் வெற்றி கொள்ள முடியாத பலம் மிகுந்த க்ஷத்திரியனா? மூன்றாவது வர்ணத்தினனான வைஸ்யனா? சூத்ரனா? உண்மையில் நீ யார், சொல். தலை கீழாகத் தொங்கிய அந்த தபஸ்வி, ராமனின் வார்த்தைகளைக் கேட்டு, அதே நிலையில் இருந்தபடியே, தான் யார் என்பதையும், என்ன காரணத்தினால் தவம் செய்கிறான் என்பதையும் விவரித்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சம்பூக நிசய: என்ற எழுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)
செயற்கரிய செய்த வீரனான ராமர், ம்ருதுவாக கேட்கவும், ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்ற சம்பூகன் மெதுவாக விவரித்தான். என் பெயர் சம்பூகன். பிறப்பால் சூத்ரன். இந்த சரீரத்தோடு தேவத்வம் பெற விரும்பி, தவம் செய்கிறேன். தேவலோக ஆசை தான். வேறு எதுவும் இல்லை. உக்ரமான தவத்தில் ஈடுபட்டேன். இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, தன் கூரிய வாளை எடுத்து ராமர் அவன் தலையைக் கொய்தார். அந்த தாபஸன் இறந்து விழுந்ததும், தேவர்கள் சாது, சாது என்று பூமாரி பொழிந்தனர். ராமன் சத்ய பராக்ரமன் என்று மகிழ்ந்து கொண்டாடினார்கள். இதுவும் ஒரு தேவகார்யமே, உன்னால் இன்று நிறைவேறியது என்றனர். என்ன வரம் வேண்டுமோ கேள், இந்த சூத்ரனுக்கு ஸ்வர்க பதவி அருகதை இல்லை, ஆனால், உன் கையால் வதம் செய்யப்பட்ட காரணமாக அவன் சுவர்கம் போவான் என்றனர். ராமர் உடனே, நீங்கள் திருப்தி அடைந்தது உண்மையானால், இறந்த குழந்தை உயிர் பிழைக்கட்டும் என்று வேண்டினார். அகால மரணம் என் ராஜ்யத்தில் தோன்றுவது, என் தவறே என்று உலகத்தார் குற்றம் சொல்வார்கள். நானும் குழந்தையை இழந்த அந்த தந்தைக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். தேவர்களும் இதைக் கேட்டு, கவலையை விடு, காகுத்ஸா, நீ இந்த தாபஸனை வதைத்த நிமிஷமே அச்சிறுவன் உயிர் பெற்று விட்டான். பந்துக்களுடன் சேர்ந்து விட்டான். உனக்கும் மங்களங்கள் உண்டாகட்டும், நாங்கள் கிளம்புகிறோம். அகஸ்தியர் ஆசிரமம் செல்கிறோம், பன்னிரண்டு வருஷமாக தீஷையில் இருந்து இப்பொழுது தான் விரதத்தை முடித்திருக்கிறார். நீயும் வா, அந்த முனிவரை தரிசனம் செய்து விட்டுப் போகலாம் என்று அழைத்தனர். ராமரும் சம்மதித்தார். தேவர்கள் பலவிதமாக தங்கள் வாகனங்களில் சென்றனர். பின் தொடர்ந்து வந்த ராமரும், தன் புஷ்பக விமானத்தில் சென்றார். வெகு விரைவில் கும்பயோனி என்று புகழ் பெற்ற அகஸ்தியரின் ஆசிரமத்தை அடைந்தனர். தபோதனரான அவரும் தேவர்களை மகிழ்ச்சியுடன், வரவேற்று உபசரித்தார். அவர்களும் சிறிது நேரத்தில் கிளம்பி தேவ லோகம் சென்றனர். நராதிபனான ராமர், தேவர்கள் சென்றபின் அகஸ்தியர் அருகில் வந்த பணிந்து வணங்கி அவர் கொடுத்த விருந்தையும் ஏற்றுக் கொண்டார். ராகவா, ஸ்வாகதம், நல்ல வேளை வந்து சேர்ந்தாய். என் மனதில் எப்பொழுதும் நல்ல மதிப்பைப் பெற்றவன், அதிதியாக வந்தது மிக்க மகிழ்ச்சி. தவம் செய்த சூத்ரனை வதைக்க நீ வந்திருப்பதாக சொன்னார்கள். இறந்த சிறுவனையும் உயிர்ப்பித்து விட்டாய். இன்று இரவு இங்கேயே இரு. நாளைக்காலை புஷ்பக விமானத்தில் உன் நகரம் செல்வாய். நீ தான் நாராயணன். உன்னிடம் தான் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. நீ தான் உலகனைத்துக்கும் தலைவன். எல்லா பூதங்களாகவும் இருப்பவனும் நீயே. அழிவற்ற சனாதனனாக இருப்பவனும் நீ தான். இதோ இந்த ஆபரணம் விஸ்வகர்மா செய்தது. இதை எடுத்துக் கொள். உன் அழகுக்கு அழகு சேர்க்கட்டும். அணிந்து கொள். எனக்குத் திருப்தியாக இருக்கும். தானம் பெற்ற பொருளை திரும்ப தானம் செய்வது விசேஷமாக சொல்லப் படுகிறது. இதை பாதுகாத்து வைத்துக் கொள்வதும் உன்னால் தான் முடியும். பிரகாஸமாக சூரிய கிரணம் போல விளங்கும் இந்த ஆபரணத்தை வாங்கிக் கொள் என்று கொடுத்தார். இக்ஷ்வாகு அரசனான ராமர், தன் க்ஷத்திரிய தர்மத்தை மனதில் கொண்டு, பதில் சொன்னார்.
இது போல தானம் வாங்கிக் கொள்வது பிராம்மணர்களுக்கு விதிக்கப் பட்டது. பெரியவரே, நான் க்ஷத்திரியனாக இருந்து இதை எப்படி வாங்கிக் கொள்வேன். விஷயம் அறிந்த பெரியவர் நீங்கள் தான் இது சரியா என்று சொல்ல வேண்டும் என்றார். அகஸ்தியர் சொன்னார். ராமா, முன்பு க்ருதயுகத்தில் எங்கும் பிராம்மணர்களே நிறைந்திருந்தனர். அரசன் என்று ஒரு சமூகமே கிடையாது. இந்திரன் ஓருவன்தான் தேவர்கள் தலைவனாக இருந்தான். பின் பிரஜைகள், அரசனை வேண்டினர். தேவர்கள் தலைவனாக சதக்ரது- நூறு யாகங்கள் செய்பவன் இந்த பதவிக்கு ஏற்றவன் என்று விதித்தாய். பின் பூவுலகத்திலும் இப்படி ஒரு தலைவன், அரசன் வேண்டும் என்ற வேண்டு கோள் எழுந்தது. பிரஜைகள் தீவிரமாக இருப்பதையறிந்து, ப்ரும்மாவும் லோக பாலர்கள், அந்தணர்கள், வாஸவன் முதலியவர்களையும் வரவழைத்தார். அவரவர் தேஜஸிலிருந்து ஒரு பாகம் தாருங்கள் என்று கேட்டு வாங்கி, காப்பாற்றும் சக்தி வாய்ந்தவன் ந்ருபன்-ராஜா, அரசன் என்று ஸ்ருஷ்டி செய்தார். லோக பாலர்களும், மற்றவர்களும் இதற்கு சம்மதித்தனர். பின் ப்ரும்மா, லோகபாலர்க ளின் விசேஷ சக்தியையும் அவர்களுக்கு கொடுத்து, அரசன் என்பவன் பிரஜைகளுக்கு ஈஸ்வரன், தலைவனாக இருப்பான் என்று நியமித்தார். அவன், இந்திரனுடைய சக்தியால், கட்டளையிடும் சக்தியைப் பெற்றான். வருணனுடைய பங்கால், தன் உடலை உறுதியாக வைத்திருக்கிறான். குபேரனுடைய பங்கினால், செல்வ செழிப்பைப் பெற்றான். அந்தந்த தேவதைகளின் தன்மை கைவரப் பெற்றான். அதனால் இந்திரன் பங்கான இதை ஏற்றுக் கொள். இதனால் எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் உண்டாகும் என்றார். ராமரும், முனிவரின் தர்மார்த்தமான வார்த்தைகளைக் கேட்டு சம்மதித்து, அவர் கொடுத்த ஆபரணத்தை ஏற்றுக் கொண்டார். அதன் பின், இந்த ஆபரணம் உங்கள் கைக்கு எப்படி வந்தது என்று வினவினார். அத்புதமாக இருக்கிறது இந்த ஆபரணம், உடலோடு ஒட்டி, அழகாக தெரிகிறது என்று வியந்தார். எப்படி, எங்கிருந்து என் கைக்கு வந்து சேர்ந்தது என்பதைச் சொல்கிறேன் கேள் என்று ஆரம்பித்தார். முன் த்ரேதாயுகத்தில் இதே ஆசிரமத்தில், என் கைக்கு வந்தது. எனக்கு தானமாக இது கிடைத்ததே ஒரு வியத்தகு சம்பவம் தான் என்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சம்பூக வத: என்ற எழுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 77 (614) ஸ்வர்கி பிரச்ன: (ஸ்வர்கியின் கேள்வி))
ராமா, முன்பு த்ரேதாயுகத்தில் ஒரு அரண்யம். விஸ்தீர்ணமாக பல யோஜனை தூரம் பரவியிருந்தது. மிருகங்களோ, பக்ஷிகளோ எதுவும் இன்றி, மனித நடமாட்டமும் இல்லாததால், இடையூறு இன்றி தவம் செய்யலாம் என்று நான் சென்றேன். அந்த அரண்யத்தின் அழகைச் சொல்லி முடியாது. ஏராளமான ருசியான பழங்களும், காய் வகைகளும், மரங்களும் தென் பட்டன. மத்தியில் பெரிய குளம். இதில் ஹம்ஸ பக்ஷிகளும், காரண்டவ, சக்ரவாக பக்ஷிகளும் நிறைந்திருந்தன. பத்மமும், உத்பலமும் போட்டி போட்டுக் கொண்டு மலர்ந்திருந்தன. புல் வெளியும் பசுமையாக காணப் பட்டது. மிகவும் ஆச்சர்யமாக இருந்ததோடு, சுகமான வாசனை மூக்கைத் துளைத்தது. புழுதியின்றி எங்கும் சுத்தமாக இருந்தது. அந்த குளத்தின் அருகில் ஒரு ஆசிரமம். எந்த தபஸ்வி விட்டுப் போனதோ நான் அதில் வசிக்கலானேன். அன்று இரவு அங்கு தூங்கி விடிந்தவுடன் குளத்தில் குளிக்கப் போனேன். அங்கு சற்றும் வாடாத நிலையில் ஒரு இறந்த சரீரத்தைக் கண்டேன். புஷ்டியாக இருந்திருக்க வேண்டும், நல்ல அங்கங்களுடன் காணப் பட்டது. குளத்தில் இறங்க வந்து மரணம் அடைந்திருக்கலாம். அந்த சவத்தின் அருகில் நின்று நான் யோசித்தேன். என்ன, ஏது, ஒன்றும் புரியாமல் அங்fகேயே அமர்ந்தேன். சற்று நேரத்தில், மனோ வேகத்தில் பறக்கும் ஒரு விமானம், ஹம்ஸங்களே வாகனமாக அழகிய அத்புதமான காட்சி அளித்தபடி வந்து சேர்ந்தது. அந்த திவ்ய விமானத்தில், சர்வாலங்கார பூஷிதைகளாக அழகிய அப்ஸர ஸத்ரீகள் ஆயிரக் கணக்காக அமர்ந்திருப்பதைக் கண்டேன். ஸ்வர்கத்தைச் சேர்ந்த ஒருவன் விமானத்தில் இருந்தான். பாடுபவரும், வாத்யம் வாசிப்பவருமாக, சிலர் பாட, சிலர் தாளம் போட, சிலர் சந்திர கிரணம் போன்ற சாமரங்களை வீசிக் கொண்டிருந்தனர். சிலர் அவன் முகத்தில் துளிர்த்த வியர்வையைத் துடைத்தனர். அவன் கண்கள் தாமரை இதழை ஒத்திருந்தன. மேரு மலை போன்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவன் என்னைக் கண்டதும் இறங்கி வந்தான். எதுவும் பேசாமல், குளத்தில் இறங்கி, கீழே கிடந்த சவத்தை சாப்பிட ஆரம்பித்தான். ஸ்வர்க வாசம் செய்பவன், அந்த பெரிய சரீரத்தை விழுங்கி விட்டு நீரில் சற்று நேரம் அளைந்து விட்டு திரும்பிச் சென்று விட்டான். தானும் தேவன் போல இருக்கிறான், உத்தமமான விமானத்தில் வந்து இறங்கியவன், எதுவும் பேசாமல் போகப் பார்த்தவனைத் தடுத்து நான் விசாரித்தேன். யார் நீ, தேவன் போல தெரிகிறாய், ஆனால் இவ்வளவு மட்டமான ஆகாரத்தை ஏன் புசிக்க வேண்டும், அருவருக்கத் தகுந்த இந்த சவத்தை ஏன் சாப்பிட வேண்டும், பண்புடைய மனிதர்களே சாப்பிடாத மனித உடல், மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இப்படி இறந்த மனித உடலைத் தின்பது எனக்கு ஸாதாரணமான விஷயமாகத் தெரியவில்லை என்றேன். இதைக் கேட்ட ஸ்வர்கி-ஸ்வர்க வாசம் செய்பவன், பதில் சொன்னான். நடந்தது நடந்தபடி விவரமாகச் சொன்னான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஸ்வர்கி பிரார்த்தனா என்ற எழுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 46 (583) சீதா கங்காதீராநயனம் (சீதையை கங்கை கரைக்கு அழைத்துச் செல்லுதல்.)
அந்த இரவு சகோதரர்கள் அனைவருக்கும் மன நிம்மதியின்றி கழிந்தது. விடிந்ததும், லக்ஷ்மணன் சுமந்திரரை அழைத்து, வாடிய முகத்துடன் உத்தரவிட்டான். ஸாரதே, சீக்கிரம் ரதத்தில் குதிரைகளைப் பூட்டி தயார் செய். சீதை அமர வசதியாக விரிப்புகளுடன், ஆசனம் தயார் செய். புண்ய கர்மாக்களைச் செய்யும் மகரிஷிகள் வசிக்கும் ஆசிரமங்களைக் காண சீதையை அழைத்துச் செல்ல ராஜாவின் உத்தரவு. என்னை இந்த பணியைச் செய்யச் சொல்லியிருக்கிறார். சீக்கிரம் ரதத்தை கொண்டு வா. சுமந்திரரும் அவ்வாறே உயர் ஜாதி குதிரைகள் பூட்டிய ரதத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார். எப்பொழுதுமே நன்கு அலங்கரிக்கப்பட்டு, சுகமான ஆசனங்களும், அதில் வசதியாக விரிப்புகளும் போடப் பெற்று, தயாராகவே வைக்கப் படும் ரதம் தானே. சுமந்திரர் தயாராக வந்ததும், லக்ஷ்மணன் அரண்மனைக்குள் சென்று, சீதையைப் பார்த்து, தேவி, நீங்கள் அரசனிடம் உங்கள் விருப்பத்தைச் சொன்னீர்களாமே. அரசன் சம்மதித்து, ஆசிரமம் அழைத்துச் செல்ல எனக்கு கட்டளை இட்டிருக்கிறார். கங்கா தீரத்தில் உள்ள ரிஷிகளின் ஆசிரமங்களைக் காண உங்களை அழைத்துச் செல்ல வந்தேன் எனவும், சீதையும் அரசனது கட்டளை என்பதால் உடனே தயாராக கிளம்பி விட்டாள். தன் வஸ்திரங்கள், ஆபரணங்கள் இவைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். இந்த ஆபரணங்களை முனி பத்னிகளுக்கு கொடுப்பேன். த4னமும், வித விதமான வஸ்திரங்களும் அவர்களுக்கு கொடுப்பேன் என்றாள். சௌமித்ரியும், அப்படியே ஆகட்டும் என்று சொல்லி அவைகளை ரதத்தில் வைத்தான். மைதிலியும் ஏறிக் கொண்ட பின் ரதம் புறப்பட்டது. குதிரைகள் வேகமாக செல்லலாயின. அந்த சமயம், சீதை லக்ஷ்மணனைப் பார்த்து, ரகு நந்தனா, அசுபமான நிமித்தங்களைக் காண்கிறேன். என் கண் துடிக்கிறது. இதயம் ஏனோ நடுங்குகிறது. உற்சாகம் வடிந்து, கவலை தோன்றுகிறது. திடுமென பூமியே சூன்யமாகி விட்டதா? உன் சகோதரனுக்கு மங்களம் உண்டாகட்டும். நீ சகோதர வாத்ஸல்யம் மிக்கவன். நீயும் வேண்டிக் கொள். என் மாமியார்களும் சௌக்யமாக இருக்க வேண்டுகிறேன். ஜன பதத்தில் உள்ள அனைவரும், மனிதர்கள், மற்ற பிராணிகள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டுகிறேன். இப்படி சொல்லியபடி சீதை தேவதைகளை அஞ்சலி செய்து வணங்கி வேண்டினாள். லக்ஷ்மணன் இதைக் கேட்டு, செய்வதறியாது எல்லோரும் நலமே என்றான். மனம் துணுக்குற்றாலும் காட்டிக் கொள்ளவில்லை. பின், கோமதி தீரத்தில் ஆசிரமங்கள் தென் படவும், லக்ஷ்மணன் இறங்கி, சாரதியிடம், சுமந்திரா, நிறுத்து, கங்கை கரை தெரிகிறது பார், நான் பாகீரதி ஜலத்தை தலையில் தெளித்துக் கொள்கிறேன் என்றான். சிவ பெருமானே தலையில் தாங்கினாரே என்றான். குதிரைகளை இழுத்துப் பிடித்து நிறுத்தி, சீதை வசதியாக இறங்க வழி செய்து கொடுத்தார் சுமந்திரர். சுமந்திரரும், சௌமித்ரியும் கை லாகு கொடுத்து இறக்கி விட, பாபங்களை தீர்க்கும், கங்கைக் கரையை சீதை அடைந்தாள். நதிக் கரையில், பாதி நாள் கழிந்தது. திடுமென லக்ஷ்மணன் தன் கட்டுப் பாட்டை இழந்து அழ ஆரம்பித்தான். சீதை திகைத்து, எதுவும் புரியாமல், என்ன இது? ஏன் அழுகிறாய் என்று கேட்டாள். வெகு நாட்களாக நான் விரும்பிய இடம் இது. கங்கை கரை. இங்கு வந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சமயம் ஏன் அழுகிறாய்? நீ எப்பொழுதும் ராமன் அருகிலேயே இருப்பவன். இரண்டு நாள் பிரிந்து இருக்க வேண்டுமே என்று அழுகிறாயா? லக்ஷ்மணா, எனக்கும் ராமனிடத்தில் பற்றுதல் உண்டு. என் உயிரை விட அதிகமாக நேசிக்கிறேன். நானே சமாளித்துக் கொண்டு இருக்கிறேன்.சிறு பிள்ளை போல அழுகிறாயே. விவரம் அறியாதவனா நீ. இந்த கங்கையைக் கடந்து அக்கரையில் சேர்த்து விடு. முனிஜனங்களை தரிசிக்க ஏற்பாடு செய். இந்த ஆடை ஆபரணங்களை நான் அவர்களுக்கு கொடுக்கிறேன். மகரிஷிகளை உரிய முறையில் வணங்கி ஆசீரவாதம் பெற வேண்டும். ஒரு இரவு அவர்களுடன் வசித்து விட்டு நகரம் திரும்புவோம். எனக்கும், பத்ம பத்ரம் போன்ற கண்களும், சிம்மம் போன்ற மார்பும், சிறுத்த இடையும் உடைய ராமனைக் காண ஆவல் அதிகமாகிறது. மனம் பறக்கிறது. ராமன் மற்றவர்களை ஆனந்தம் அடையச் செய்வதில் வல்லவன். சீதை சொன்னதைக் கேட்டு, லக்ஷ்மணன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, படகோட்டிகளைக் கூப்பிட்டு, கங்கையைக் கடக்க ஏற்பாடு செய்தான். அவர்களும் உடனே தயாராக வந்து சேர்ந்தனர். தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு, சீதையை படகில் ஏறச் செய்து கங்கையைக் கடந்து அழைத்துச் சென்றான் லக்ஷ்மணன்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சீதா கங்காதீராநயனம் என்ற நாற்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 47 (584) ராம சாஸன கத2னம் (ராமருடைய கட்டளையைத் தெரிவித்தல்)
விசாலமான அந்த படகில், மைதிலியை முதலில் ஏறச் செய்து விட்டு, லக்ஷ்மணன் தானும் ஏறிக் கொண்டான். சுமந்திரரை ரதத்துடன் கரையில் இருங்கள் என்று தடுத்து விட்டு, படகை செலுத்தச் சொன்னான். படகோட்டியும் வேகமாக செலுத்த, பாகீரதியின் அக்கரை வந்து சேர்ந்ததும், மைதிலியிடம், லக்ஷ்மணன் பணிவாக சொல்ல ஆரம்பித்தான். கண்கள் குளமாக, தன் நிலையை சொல்ல ஆரம்பித்தான். தேவி, என் மனதில் ஒரு பெரும் பாரத்தை சுமந்து வருகிறேனே, அது உங்களுக்குத் தெரியாது. எதனால், மதிப்புக்குரிய என் தமையன் இந்த செயலில் என்னை பணித்தார் என்பதும் தெரியவில்லை. தேவி, இந்த செய்தியை தங்களிடம் சொல்லும் முன் என் உயிர் பிரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். என்னை இந்த செய்தியை தங்களிடம் சொல்லச் சொல்லி பணித்து விட்டார். அதை விட எனக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம். உலகமே நிந்திக்கப் போகும் இந்த செயலைச் செய்ய ஏன் தான் என்னைத் தேர்ந்தெடுத்தாரோ. சோபனே, என்னை மன்னித்து விடு. இதில் என் தவறு எதுவும் இல்லை என்று சொல்லியபடி லக்ஷ்மணன் அவள் பாதங்களில் விழுந்தான். தனக்கு மரணம் வந்தால் நல்லது என்று சொல்லியதும், பின்னால் பாதங்களில் விழுந்ததும், மைதிலியை துணுக்குறச் செய்தது. கவலையால் துடித்துப் போனவளாக, லக்ஷ்மணா, விவரமாகச் சொல். எனக்கு எதுவுமே புரியவில்லை. மஹீபதி- அரசன் க்ஷேமமாக இருக்கிறானா? நீ உடல் ஆரோக்யத்துடன் இருக்கிறாயா? லக்ஷ்மணா, நரேந்திரனான ராமன் பேரில் ஆணை, என்ன விஷயம், என்ன கஷ்டம், எதுவானாலும் உள்ளபடி சொல்லு. இதோ நான் கட்டளையிடுகிறேன். இதைக் கேட்டு லக்ஷ்மணன் தலை குனிந்தபடி, சபையில் எல்லோருக்கும் மத்தியில், உன் சம்பந்தப்பட்ட ஒரு அபவாதம், அரசன் காதில் எட்டியது. ஜனபதம் முழுவதும் உன்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதாகச் சொன்னார்கள். ஜனகாத்மஜே, ராமன் மனம் வருந்தி என்னிடம் சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்று விட்டான். அதை என் வாயால் நான் சொல்ல மாட்டேன். தேவி, எனக்கு மகா கோபம் வந்தாலும், ராஜாவின் மனதில் புதைந்துள்ள விஷயங்களை நான் அறியேன். என் முன்னால், மாசற்ற உன்னை அரசன் தியாகம் செய்து விட்டான். புர ஜனங்களின் மத்தியில் பரவிய அவதூறு காரணமாக, உன்னை தியாகம் செய்கிறான். வேறு எந்த வித குறையோ, குற்றமோ உன்னிடம் இல்லை. தேவி, இந்த ஆசிரமங்களில் உன்னை விட்டு வரும்படி எனக்கு உத்தரவு. நீயும் இந்த கங்கா தீரத்தைக் காண விரும்பினாய். உன் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள். இந்த மகரிஷிகளின் ஆசிரமத்தில் இரு. வருந்தாதே தேவி. சமாளித்துக் கொண்டு சந்தோஷமாக இரு. எங்கள் தந்தைக்குப் பிரியமான முனி புங்கவர், வால்மீகி இங்கு தான் இருக்கிறார். எங்கள் தந்தையின் நண்பர். அவரது பாதச் சாயையில் உங்களை விட்டுச் செல்கிறேன். ஜனகாத்மஜே, உபவாசங்கள், விரதங்களில் மனதைச் செலுத்தி அமைதியாக இரு. ராமனை மனதில் இருத்தி, பதிவிரதா தர்மத்தையும் பாலனம் செய்து வாருங்கள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும், தேவி, வேறு வழியில்லை.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராம சாஸன கதனம் என்ற நாற்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 48 (585) சீதா பரித்யாக: (சீதையை தியாகம் செய்து விடல்)
இடி விழுந்தது போன்ற இந்த பயங்கரமான செய்தியைக் கேட்டு ஜனகாத்மஜா, முஹீர்த்த காலம் நினைவின்றி கிடந்தாள். காதில் விழுந்த செய்தியை மனதில் கிரஹித்துக் கொள்ள முடியாமல் தவித்தாள். கண்க ளில் நீர் மல்கியது. மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. லக்ஷ்மணா, என் சரீரம் துக்கத்தை அனுபவிக்கவே படைக்கப் பட்டது போலும். பூமியில் ப்ரும்மா என்னை ஸ்ருஷ்டி செய்ததே இப்படி சித்ரவதை செய்யவே தானோ. முன் பிறவியில் என்ன பாவம் செய்தேனோ. யார், யாரை, கணவன் மனைவிகளை பிரித்து வைத்தேனோ. அரசன் என்னை கை விடுவதா? என்னிடத்தில் என்ன குறை.? அப்பழுக்கு இல்லாத என் நடத்தை அவர் அறியாததா? முன்பும் ஆசிரமத்தில் வசித்தேன். ஆனால், ராமன் பாத அடிகளைத் தொடர்ந்துச் சென்றேன். ராமனுடன் இருந்ததால், மகிழ்ச்சியாக நிம்மதியாக இருந்தேன். என்னை தடுத்ததையும் மீறி, வன வாசத்தில் ராமனுடன் இருப்பதையே பெரிதாக எண்ணி வன வாசத்தில் துன்பத்தையும் இன்பமாக உணர்ந்தேன். இப்பொழுது எப்படி ஆசிரமத்தில் இருப்பேன். ஜன நடமாட்டம் இல்லாத இடத்தில், என் கஷ்டங்களை யாரிடம் சொல்லி அழுவேன். முனிவர்க ளிடம் என்ன சொல்வேன்? நான் தவறு செய்தேன், அரசன் தண்டனை கொடுத்தான் என்றா சொல்வேன். என்ன காரணத்திற்காக ராஜா என்னை தள்ளி வைத்தார்? சௌமித்ரே, இன்றே ஜாஹ்னவியில் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொள்வேன். அப்படி நான் உயிரை விட்டால் ராஜ வம்சம் பரிகாசத்துக்கு ஆளாகும். நீ உன் கடமையை செய் சௌமித்ரே, துக்கத்தை அனுபவிக்கவே பிறந்தவள் நான். என்னை இந்த நிர்ஜனமான காட்டுப் பிரதேசத்தில் விட்டு விட்டு திரும்பி போ. ராஜாவிடம் நான் சொன்னதாகச் சொல்லு. என் மாமியார்களிடம் என் வணக்கத்தைச் சொல். அரசனை குசலம் விசாரித்ததாகச் சொல். இந்த செய்தியை, லக்ஷ்மணா, இதே போல சொல்லு. தர்மமே பாராயணம் தர்மம்தான் எனக்குப் பெரியது என்று சொல்லிக் கொள்ளும் அரசனிடம் சொல். ராகவா, சீதை மாசற்றவள் என்பது உனக்குத் தெரியும். உன்னிடத்தில் நிறைந்த பக்தியுடையவள். உன் நன்மையில் அக்கறையுள்ளவள். ஏதோ உன் கீர்த்தியை மறைக்கும் அபவாதம் என்ற பெயரில், என்னைத் தியாகம் செய்கிறாய். உன்னையே நம்பி இருந்த என்னை விலக்கி விடும் அளவு பயமா? தர்ம வழியில் செல்லும் அரசன் சொல்லும் சொல் இதுதான் போலும். ஊர் ஜனங்களுக்கு கொடுத்த மதிப்பை உன் சகோதர்களுக்கும் கொடு. நல்ல தர்மம் உன்னுடையது. உன் கீர்த்தியும் இந்த செயலால் வெகுவாகப் பரவும். நான் என் சரீரத்தைப் பற்றி கவலைப் படவில்லை. ஊர் ஜனங்களின், பிரஜைகளின் நலனை நீ கவனித்துக் கொள். என்னைப் பொறுத்த வரையில் பெண்களுக்கு பதி தான் தெய்வம். பதி தான் உறவு, குரு எல்லாம். அதனால், கணவனது காரியம் என்றால் பெண்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது செய்ய வேண்டியது தான் முறை. இதைச் சொல் லக்ஷ்மணா, இன்னொரு விஷயம். என்னை நன்றாகப் பார்த்து விட்டுப் போ. ருது காலம் தாண்டி நான் ராமனது கர்ப்பத்தை தாங்கி இருக்கிறேன். இதையும் சொல். இதைக் கேட்டு லக்ஷ்மணன் தவித்தான். தலையை தரையில் மோதிக் கொண்டு அழுதான். அவளை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விட்டு, என்ன சொல்கிறாய் தேவி, நான் உன் ரூபத்தை இதற்கு முன் கண்டதேயில்லை. உன் பாதங்களைத் தான் கண்டிருக்கிறேன். ராமனும் அருகில் இல்லாத இந்த நிர்ஜனமான வனத்தில் உன்னை நிமிர்ந்து எப்படி பார்ப்பேன். என்று சொல்லியபடி அவளை நமஸ்கரித்து விட்டு வேகமாக நடந்து சென்று படகில் ஏறிக் கொண்டான். கண்களால் எதையும் காண சக்தியற்றவனாக அதே நிலையில் ரதத்திலும் ஏறிக் கொண்டான். திரும்பத் திரும்ப அனாதையாக நின்ற சீதையை கண்ணுக்கு தெரிந்த வரை பார்த்த படியே சென்றான். வெகு தூரம் வரை ரதத்தை பார்த்துக் கொண்டிருந்த சீதையை, ரதம் கண்ணுக்கு மறைந்ததும் நிலைமையின் தீவிரம் தாக்கியது. தாங்க மாட்டாத துக்கம் அவளை ஆட் கொண்டது. மயில் கூட்டங்கள் அவளை வினோதமாகப் பார்த்தன. தனக்கு புகலிடம் எதுவுமே இல்லை என்ற உண்மை சுட்டது. பாரமாக மனதை அழுத்தியது. செய்வதறியாது ஓவென அழலானாள்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சீதா பரித்யாக: என்ற நாற்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 49 (586) வால்மீகி ஆசிரம பிரவேச: (வால்மீகியின் ஆசிரமத்தில் நுழைதல்).
அழுதபடி நிற்கும் சீதையைக் கண்ட சில சிறுவர்கள், வால்மீகி முனிவரிடம் ஓடிப் போய் தெரிவித்தனர். முனிவரை வணங்கி பரபரப்புடன், வனத்தில் அழுதபடி நிற்கும் ஸ்திரீயைப் பற்றிச் சொன்னார்கள். இது வரை நாங்கள் அவளைக் கண்டதில்லை பகவன், நீங்கள் வந்து பாருங்களேன். நதிக்கரையில் ஒரு அழகிய பெண், யாரோ, மிகவும் துக்கத்துடன் காணப்படுகிறாள். ஏதோ பெரிய துக்கம், ஓவென்று அழுது கொண்டிருப்பதைக் கண்டோம். பார்த்தால் அனாதையாகவோ, வசதியற்றவளாகவோ தெரியவில்லை. மனித குலத்து ஸ்திரீ தானோ, அதுவே எங்களுக்கு சந்தேகம். இந்த ஆசிரமத்திற்கு அதிக தூரத்தில் இல்லை. யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று தேடுவது போல நிற்கிறாள். பாவம். அவளை அழைத்து வாருவோமா, சாதுவாகத் தெரிகிறாள், மரியாதையாக அழைத்து வந்து உபசரிப்போம். பகவன், நீங்கள் அவளைக் காப்பாற்றுங்கள். உங்களை சரணம் அடைந்தவளாகத் தான் தெரிகிறது. இவர்கள் சொல்வதைக் கேட்டும், தானும் தன் புத்தியால் உணர்ந்தும், தவத்தினால் பெற்ற ஞானக் கண்களால் நடந்ததை அறிந்தும், ஓட்டமும், நடையுமாக அந்து ரிஷி, மைதிலி இருக்கும் இடம் வந்தார். சீடர்கள், அவர் வேகமாக செல்வதைப் பார்த்து உடன் ஓடினர். அர்க்யத்தை கையில் எடுத்துக் கொண்டு, அவள் இருந்த இடத்திற்கு சற்று தூரத்திலிருந்தே நடந்து அவள் அருகில் சென்றார். ராகவனின் பிரியமான பத்னி, சீதை அனாதை போல நிற்பதைக் கண்டார். தன் தேஜஸால் அவளுக்கு இதமாக, மதுரமாக பேச ஆரம்பித்தார். நீ ராம மகிஷி, தசரதன் மருமகள் அல்லவா? ஜனக ராஜாவின் மகள். உன் வரவு நல் வரவாகுக. உனக்கு ஸ்வாகதம். மகளே, என் தவ வலிமையால், உன்னைக் கண்டதும், நடந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டு விட்டேன். காரணமும் தெரிந்து கொண்டேன். உன்னையும் நான் அறிவேன். பதிவிரதாவான உன்னையும் அறிவேன். தவம் செய்து சமாதியில் இருந்த பொழுது, நீ வருவது போல உணர்ந்தேன். மூவுலகிலும் நடப்பதை நான் உடனுக்குடன் தெரிந்து கொள்வேன். மாசற்றவளாக உன்னை நான் அறிவேன். என் தவப்பயனாக பெற்ற ஞானக் கண்கள் சொல்வது பொய்யாகாது. கவலையின்றி நீ என்னுடன் இரு. நான் இருக்கும் வரை உனக்கு ஒரு குறையும் வராது. ஆசிரமத்தில், தவம் செய்யும் தாபஸிகள், ஸ்திரீகள் இருக்கிறார்கள். உன்னை மகளாக பாவித்து கவனித்துக் கொள்வார்கள். மகளே, இதோ அர்க்யம். ஏற்றுக் கொள். கவலையின்றி, பயமின்றி இந்த ஆசிரமத்தில் வசிப்பாய். உன் வீடு போல எண்ணிக் கொள். தன் வீட்டில் உரிமையுடன் இருப்பது போல இரு. இதைக் கேட்டு சீதா கை கூப்பி வணங்கி, முனிவரின் அத்புதமான உபசாரத்தை ஏற்றுக் கொண்டு அவருடன் நடந்தாள். முன்னால் முனிவர் செல்ல, வினயமாக பின் தொடர்ந்தாள். வால்மீகி முனிவருடன் வரும் அவளைப் பார்த்து, முனி பத்னிகள் குதூகலமாக அவளை எதிர் கொண்டு வரவேற்க வந்தனர். ஸ்வாகதம், வா. முனி ஸ்ரேஷ்டரே, தாங்களும் வெகு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வணங்குகிறோம். சொல்லுங்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும்,? வால்மீகி, இவள் ராம பத்னி. ஜனகன் மகள். என் நண்பர் தசரதன் மருமகள். மாசற்றவள். ஏனோ கணவனால் கை விடப் பட்டாள். இவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இவளிடம் அன்புடன் ஸ்னேகமாக நடந்து கொள்ளுங்கள். என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்ததாகவும் இருக்கும், தவிர சுயமாகவே இவள் போற்றத் தகுந்த பெருமையுடையவளே. திரும்ப திரும்ப சீதையை சமாதானப் படுத்தி, அன்புடன் பேசி அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, முனிவர், தன் குழாம் சூழ தன் ஆசிரமம் வந்து சேர்ந்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வால்மீகி ஆசிரம பிரவேச:: என்ற நாற்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 50 (587) சுமந்திர ரஹஸ்ய கதனம் (சுமந்திரர் சொன்ன ரகசியம்)
சீதை ஆசிரமத்தினுள் நுழைவதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மணனை வருத்தம் சூழ்ந்தது. தாங்க மாட்டாமல் சாரதியிடம், சாரதே, இதோ பாருங்கள். சீதையின் பிரிவைத் தாங்க எனக்கே முடியவில்லை. ராமன் என்ன பாடு படப் போகிறானோ. இதை விட வேறு என்ன துக்கம் வேண்டும். தன் மனைவியான, அப்பழுக்கற்ற ஜனகாத்மஜாவை, பிரியமானவளை இப்படி தள்ளி வைத்து விட்டானே. இது ராமன் தானாக செய்த செயலே அல்ல. ராகவனை சித்ரவதை செய்ய தெய்வம் முடிவு எடுத்துக் கொண்டது போலத் தெரிகிறது. விதியை மீற யாராலும் முடியாது. தான் கோபம் கொண்ட மாத்திரத்தில், எதிர்த்து நிற்கும், ராக்ஷஸர்களையும், அசுரர்களையும் அடித்து அழிக்கக் கூடியவனான ராமனே விதி வழி செல்கிறான். முன்பு தண்டகா வனத்தில், ஜன சஞ்சாரமற்ற காட்டில், தந்தையின் கட்டளை என்பதால் ஒன்பது வருஷங்கள், மேலும் ஐந்து என்று பதினான்கு வருஷங்கள் வசித்தானே, அது துக்கம் என்றால், இப்பொழுது, சீதையை பிரிவது என்பது அதை விட அதிக துக்ககரமானது. ஏதோ ஊர் ஜனங்கள், பேசினார்கள் என்று இப்படி முடிவு செய்தது மிகக் கொடுமையாக எனக்குப் படுகிறது. இந்த செயலில், என்ன தர்மம், என்ன கீர்த்தி இருக்கிறது? அல்ப ஜனங்கள் பேசியதை வைத்து மைதிலியை குற்றம் சொல்கிறானே. லக்ஷ்மணன் வேதனை தாங்காமல் புலம்பியதைக் கேட்ட சுமந்திரர், சௌமித்ரே, வருந்தாதே. மைதிலியைப் பற்றியும் கவலைப் படாதே. வேதனையை விலக்கி சமாதானப் படுத்திக் கொள். முன் ஒரு சமயம் உன் தந்தையிடம் ப்ராம்மணர்கள் ராமன் எந்த சிரமமானாலும், கடுமையான சோதனை வந்தாலும், தன் வசம் இழக்காமல் நிதானமாக இருப்பான் என்றும், அவன் ஜாதகப்படி மனைவியை பிரிந்து வாழ நேரிடும் என்றும் சொன்னார்கள். பிரிய ஜனங்கள் எல்லோரையும் பிரிந்து வாழ நேரலாம் என்றும் சொன்னார்கள். லக்ஷ்மணா, உன்னையும், பரத, ஸத்ருக்னர்களையும் கூட பிரிவான். காலம் செல்லச் செல்ல ஒரு நிலையில் உங்களையும் தியாகம் செய்வான். இதை யாரிடமும் சொல்லாதே. லக்ஷ்மணா, இந்த ரகசியம் உன்னுடன் இருக்கட்டும். பரத, சத்ருக்னர்களுக்கு தெரிய வேண்டாம். துர்வாச முனிவர் ஒரு முறை அரசனிடம் சொன்ன ரகசியம் இது. வசிஷ்டரும் இருந்தார். இன்னும் மகா ஜனங்கள் என்று அழைக்கப்படும் சில பிரமுகர்களும் இருந்தனர். நானும் இருந்தேன். ரிஷி சொன்னதைக் கேட்டவுடன், அரசர் என்னிடம் ஸாரதே, இதை யாரிடமும் சொல்லாதே என்று கேட்டுக் கொண்டார். லோகபாலரான அவரது கட்டளை என்பதால், நானும், இந்த விஷயத்தை என் மனதினுள் வைத்துக் கொண்டு விட்டேன். உன்னிடமும் சொல்லக் கூடாது தான். ஆனால் சத்யமல்லாத சொல்லை நான் பேச மாட்டேன். லக்ஷ்மணா, நீ கேட்க விரும்பினால், இன்னும் சில விஷயங்களைச் சொல்கிறேன். நரேந்திரன் இவைகளை ரகசியமாக காப்பாற்று என்று சொல்லி இருந்தாலும், இப்பொழுது காலம் வந்து விட்டது. விதியை மாற்ற முடியாது. இப்படி ஒரு துக்கம் வந்திருக்கிறதே, இதை பரதனிடமோ, சத்ருக்னனிடம் கூட சொல்லாதே. பலத்த பீடிகையுடன் ஆரம்பித்த ஸாரதியிடம், லக்ஷ்மணன் சொல்லுங்கள் என்று கேட்கத் தயாரானான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சுமந்திர ரஹஸ்ய கதனம் என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 51 ( 588) துர்வாச வாக்ய கதனம் (துர்வாசர் சொன்ன சொல்)
லக்ஷ்மணன் வேண்டிக் கொண்டதன் பேரில், சுமந்திரர் விவரமாகாச் சொல்ல ஆரம்பித்தார். அத்ரி புத்திரன், இந்த துர்வாச முனி. ஓரு வருஷ காலம், வசிஷ்டருடன் அவரது ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஓரு சமயம், உன் தந்தை அந்த ஆசிரமத்திற்குச் சென்றார். தங்கள் குல புரோஹிதரான வசிஷ்டருடன் இந்த முனிவரும் அமர்ந்திருப்பதைக் கண்டார். சூரியனுக்கு இணையான தேஜஸJடன் இருந்த அந்த இரு முனிவர்களையும் வணங்கினார். வசிஷ்டர் வழக்கம் போல ஆசிர்வாதம் செய்து, ஆசனம் அ ளித்த பின், குசலம் விசாரித்தார். பாத்யம், பழங்கள் கொடுத்து உபசரித்தார். பலவிதமான கதைகள் பேசிக் கொண்டு சிறிது நேரம் இருந்தார். மத்யான்ன வேளை நெருங்கியதும், விடை பெற எழுந்தார். அத்ரி புத்திரரான துர்வாசரைப் பார்த்து என் மகன், என் வம்சம் எப்படி இருக்கும் என்று வினவினார். என் மகன் ஆயுள் பலம் எப்படி? மற்றவர்கள் வருங்காலம் எப்படி இருக்கும் என்றும் வினவினார். என் வம்சத்தினரின் வருங்காலத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்று தசரதர் கேட்டதும் துர்வாசர் பதில் சொன்னார். ராஜன், முன்பு தேவாசுர யுத்தத்தில் நடந்ததைச் சொல்கிறேன் கேள். தைத்யர்கள், தேவர்களின் தாக்குதலைத் தாங்க முடியாமல், ப்ருகு பத்னியை சரணடைந்தார்கள். அவள் அவர்களுக்கு அபயம் அளித்து தன் வீட்டில் இருக்கச் செய்தாள். இவர்களுக்கு அபயம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்ததைக் கண்ட இந்திரன் கோபம் கொண்டான். தன் கூர்மையான நுனிகளுடைய சக்ரத்தால் ப்ருகு பத்னியின் தலையைக் கொய்து விட்டான். தன் மனைவி கொல்லப் பட்டதையறிந்த முனிவர், சட்டென்று விஷ்ணுவை சபித்து விட்டார். எதிரிகளைத் தானே நாசம் செய்வார் விஷ்ணு. இருந்தும், படபடப்பில் அவர் வாயிலிருந்து இந்த சாபம் வெளி வந்து விட்டது. ஜனார்தனா, என் மனைவியை ஏன் வதைத்தாய்? நீ மனிதனாகப் பிறப்பாய். அப்பொழுது பல வருஷங்கள் மனைவியைப் பிரிந்து வாழ்வாய். வாடுவாய். அப்பொழுது தான் இந்த துக்கம் என்ன என்பதை அறிவாய். இப்படி சாபம் கொடுத்தபின் ப்ருகு முனிவர் பச்சாதாபம் அடைந்தார். தேவனைப் பூஜித்தார். தவம் செய்து நான் ஆராதிக்கும் தெய்வமே நீ தான், உன்னை சபித்து விட்டேனே என்று வருந்தினார். பக்த வத்ஸலான பகவான், உலக நன்மைக்காக இந்த சாபத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இப்படி முன் ஜன்மத்தில் சாபம் பெற்றவர்தான் தங்கள் புதல்வனாக அவதரித்திக்கிறார். மகாராஜாவே, ராமன் என்ற பெயர் மூவுலகிலும் பரவி, வெகு காலம் சுகமாக இருந்தாலும், சாபத்தின் பலனை அனுபவித்தே ஆவான். இவனைப் பின் பற்றிச் செல்பவர்கள், சுகமாகவும், நிறைந்த செல்வச் செழிப்போடும் இருப்பார்கள். பத்தாயிரம், பத்து நூறு ஆண்டுகள் ராமன் ராஜ்யத்தை ஆண்டு விட்டு, ப்ரும்ம லோகம் போவான். நிறைய அஸ்வமேத யாகங்கள் செய்வான். பல ராஜ வம்சங்களை நிலை நிறுத்துவான். யாராலும் ஜயிக்க முடியாத படி இருப்பான். சீதையிடம் இரண்டு புத்திரர்கள் பிறப்பார்கள். அயோத்தியில் இல்லாமல், வேறு ஏதோ இடத்தில் பிறப்பார்கள். இதில் சந்தேகமேயில்லை. சத்யம். பின் ராகவன் சீதையின் புத்திரர்களுக்கு முடி சூட்டுவான். இப்படி வம்சாவளியை விளக்கிச் சொல்லி விட்டு மௌனமாகி விட்டார். அரசரும், முனிவர் மௌன விரதம் மேற் கொண்டவுடன், விடை பெற்று தன் நகரம் வந்து சேர்ந்தான். நான் கேட்டு, இதுவரை என் மனதினுள் புதைத்து வைத்திருந்த கதை இது தான். நரோத்தமா? நாம் என்ன செய்ய முடியும்? நம் கையில் என்ன இருக்கிறது. சீதையைப் பற்றி வருந்த பயனில்லை. மனதை தேற்றிக் கொள். பேசிக் கொண்டே இருவரும், சூரியன் மறையும் வரை கேசினீ நதிக் கரையில் வாசம் செய்ய தீர்மானித்தனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், துர்வாச வாக்ய கதனம் என்ற ஐம்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 52 (589) ராம சமாதானம்(ராமன் சமாதானமடைதல்)
அந்த இரவு கேசினீ நதிக் கரையில் கழிந்தது. விடிந்தவுடன் லக்ஷ்மணன் புறப்பட்டான். பாதி நாள் பிரயாணத்தில் சென்றபின், நகரத்தினுள் பிரவேசித்தனர். அயோத்தி மா நகரில், ஜனங்கள், புஷ்டியாக மகிழ்ச்சியுடன், ரத்னங்களும், மணிகளுமாக அணிந்து, செல்வச் செழிப்புடன் காணப் பட்டார்கள். இதைக் கண்டு லக்ஷ்மணன் மேலும் வாட்டம் அடைந்தான். ஊர் ஜனங்கள் மகிழ்ச்சியாக வளைய வரும் பொழுது, தன் குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு மட்டும், ஏன் கஷ்டம் தர வேண்டும். ராமனைப் பார்த்தவுடன் கேட்க வேன்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான். இதற்குள், சந்திர பவனம் போல குளுமையாக இருந்த அரண்மனை வந்து சேர்ந்து விட்டிருந்தனர். ராஜ பவனத்தில் இறங்கி, தலை குனிந்தபடி உள்ளே நுழைந்தான். நேருக்கு நேர் ராமனை பார்க்க முடியாதபடி கண்களை நீர் மறைத்தது. அவர் பாதங்களில் வணங்கி, வினயத்துடனும், மன வருத்தம் வெளிப்பட, மிக தீனமாக, தங்கள் கட்டளை என்பதால், ஜனகாத்மஜாவை, நீங்கள் சொன்னபடி, கங்கா தீரத்தில் விட்டு விட்டு வந்தேன், என்றான். எனக்கு நன்றாக தெரிந்திருந்தும், மாசற்றவளான சீதையை, ஜன சஞ்சாரமில்லாத காட்டில் தனியாக விட்டு விட்டு வந்து விட்டேன். புருஷ வ்யாக்ரனே, நீயும் வருந்தாதே. இது காலத்தின் கட்டாயம். தன்னம்பிக்கை மிகுந்த உன் போன்ற வீர்ர்கள் இப்படி வருந்தக் கூடாது. உலகில் எல்லாமே அழிவை நோக்கித்தான் செல்கின்றன. அருவிகள் விழத்தான் பெருகி வருகின்றன. நட்பு, சேர்க்கைகள், பிரிவில் தான் முடிகின்றன. வாழ்க்கை மரணத்தில் தான் முடிகிறது. அதனால், புத்திரர்களிடம், மனைவி மக்களிடம், தன் செல்வத்தில் அதிக ஈடுபாடு கொள்ளக் கூடாது. பிரிவு நிச்சயம் தோன்றும். அப்பொழுது, இந்த ஈடுபாட்டின் காரணமாகவே துன்பமும் அதிகமாகத் தெரியும். ராஜன், நீ உன்னை கட்டுப்படுத்திக் கொள்ள சாமர்த்தியம் உள்ளவனே. உலகம் முழவதையும், ஒரு கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கவும் உனக்கு ஆற்றல் இருக்கிறது. அப்படியிருக்க நீ சாதாரண பாமரன் போல உன் உணர்ச்சிகளை வெளிக் காட்டிக் கொள்ளாதே. உன் போல சிறந்த புருஷர்கள், தன்னை மீறி மோகம் வெளிப்பட விட மாட்டார்கள். என்ன காரணத்திற்காக மைதிலியை தியாகம் செய்தாயோ, அதே போல உனக்கும் ஒரு அபவாதம் வந்து சேரும். அதனால், மனதை தளர விடாதே. கவனத்தை சிதற அடிக்கும் வல்லமை பெற்ற துயரம் உன் திட சித்தத்தை பாதிக்காமல் பார்த்துக் கொள். இவ்வாறு சமயோசிதமாக லக்ஷ்மணன் பேசவும் ராமரும் அமைதியடைந்தார். அப்படியா, என் கட்டளையை நிறை வேற்றியது சந்தோஷம். என் மன சங்கடம் விலகியது. நிம்மதியும் தோன்றுகிறது. லக்ஷ்மணா, உன் சொல் வளம் என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது என்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராம சமாதானம் என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 53 (590) ந்ருக சாப கதனம். (ந்ருகன் பெற்ற சாபம்)
லக்ஷ்மணனைப் பார்த்து ராமர், லக்ஷ்மணா, உன்னைப் போல ப3ந்து4க்கள் அமைவது அரிது. உன் வார்த்தைகள் என்னைத் தூக்கி நிறுத்தி விட்டன. என் மன சஞ்சலங்கள் விலக, என் மனதிற்குகந்ததைச் சொன்னாய். நான் செய்தது தவறல்ல என்ற எண்ணமே எனக்குத் தெம்பைக் கொடுக்கும். எனக்குத் தோன்றுவதை சொல்கிறேன் கேள். நான்கு நாட்களாக ஊர் வேலைகளை கவனிக்கவில்லை. நமது கடமை, அதைச் செய்யாமல் விடுவது தவறு. அதுவும் உறுத்துகிறது. மந்திரிகளையும், பிரஜைகளையும் பிரமுகர்களையும் அழைத்து சபையைக் கூட்ட ஏற்பாடு செய். என்ன வேலை நடக்க வேண்டும் என்பதை யார் சொன்னாலும், ஆணோ. பெண்ணோ, பிரஜைகள் சொல்லும் பொழுது, அதை மதித்து கேட்க வேண்டியது நம் கடமை. தினம் தினம், அன்றைய ஊர்க் காரியங்களை கவனித்துச் செய்யாத அரசன் நரகத்துக்குத் தான் போவான். முன்னொரு காலத்தில், ந்ருக என்றொரு அரசன் இருந்தான். நல்ல அரசன். ப்ரும்ம வழியில் நிற்பவன். சத்யவான், நன்னடத்தை மிக்கவன். ஒரு சமயம், கோடிக் கணக்கான பசுக்களை ஸ்வர்ணத்தால் அலங்கரித்து, கன்றுகளோடு சேர்த்து புஷ்கர க்ஷேத்திரத்தில், பூமி தேவர்கள் எனப்படும் தன் பிரஜைகளுக்கு தானமாக கொடுத்தான். ஒரு பசுவும், கன்றுமாக அரசன் கை தவறுதலாக பட்ட மாத்திரத்தில், தானம் செய்த மாடுகளுடன் சேர்த்து அழைத்துச் செல்லப் பட்டு விட்டது. உண்மையில் அந்த பசு அக்னி ஹோத்ரம் செய்யும் ஒரு பிராம்மணனுடையது. தன் பசுவைக் காணாமல் அவர் தேடிக் கொண்டு வந்தார். அந்த பசு தான் அவருடைய ஒரே சொத்து போலும். வறுமையில் வாடி, ராஜ்யம் முழுவதும் தேடி அலைந்தார். ஓரு சமயம், கனகலாம் என்ற இடத்தில் தேடிய பொழுது, கன்றை இழந்து, தான் மட்டும் ஆரோக்யமாக இருந்ததை ஒரு பிராம்மணர் வீட்டில் கண்டு பிடித்தார். அதன் பெயரைச் சொல்லி அழைத்ததும், தன் எஜமானர் குரலை தெரிந்து கொண்ட பசு, அவருடன் வாத்ஸல்யத்துடன் சென்று விட்டது. அந்த பசுவை தானமாகப் பெற்று, இது வரை அதை வளர்த்த பிராம்மணரும், உடன் சென்றார். உரிமையாளரான பிராம்மணரிடம், இந்த பசு, ந்ருக ராஜாவினால், எனக்கு தானமாக தரப் பட்டது. அரசன் கையினால் தொட்டு எனக்கு கொடுத்தார். அதனால் என்னுடையது என்று வாதம் செய்தான். இருவர் தரப்பிலும் வாத, பிரதிவாதங்கள் தொடர்ந்தன. முடிவில் அரசனிடமே கேட்டு விடுவது என்று சென்றனர். ராஜ தரிசனம் கிடைக்க தாமதமாயிற்று. பல வருஷ காலம் காத்திருக்க வேண்யிருந்தது. இருவருக்குமிடையில் பகையும், கோபமும் வளர்ந்து கொண்டே போயிற்று. இருவரும் அரசனைக் கடிந்து கொண்டனர். மிகவும் அவசரமாக உங்களைக் காண வந்த எங்களுக்கு தரிசனம் தராது நாளைக் கடத்துகிறாயே, ந்ருக ராஜனே, எந்த ஜீவன் கண்ணுக்கும் படாமல் பல்லியாக போவாயாக என்று சபித்து விட்டனர். பல வருஷங்கள், பல நூறு வருஷங்கள் இப்படிக் கிடப்பாய். யது வம்சத்தின் புகழைப் பரப்ப ஒருவன் பிறப்பான். வாசுதேவன் என்ற பெயருடன் உலகில் பெரும் புகழோடு வருவான். அவன் தான் உனக்கு சாப விமோசனம் அளிப்பான். அந்த இடைப் பட்ட காலத்தில், நீயும் தவற்றை உனர்ந்து, பிராயச்சித்தம் செய்து கொள். பூ4 பா4ரத்தை தீர்க்க நர நாராயணர்களாக தோன்றுவார். கலியுகம் தோன்றும் முன், இவர்கள் வந்து உன்னை சாபத்திலிருந்து விடுவிப்பார்கள். இப்படி சாபம் கொடுத்து விட்டு, பிராம்மணர்கள் தங்கள் சண்டையில் வீணாக கழித்த நேரத்தில், வயது முதிர்ந்து, துர்பலமாக ஆன பசுவை, அதன் உரிமையாளரான பிராம்மணருக்கே கொடுத்து விட்டு, தங்கள் சண்டையைத் தீர்த்துக் கொண்டனர். இவ்வாறு ஒரு அரசன் தன் பிரஜைகளின் குறையை உடனே தீர்த்து வைக்காததால், சாபம் அடைந்தான். அதனால் சீக்கிரமாக தங்கள் பிரச்னைகளை என்னிடம் சொல்ல வந்துள்ள பிரஜைகளை என்னிடம் அனுப்பி வை. அரசன் தன் பிரஜைகளின் குறைகளைக் கேட்க கடமைப் பட்டவன். அதனால், சௌமித்ரே, யார் யார் என்ன காரியமாக வந்து நிற்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு வா என்று அனுப்பி வைத்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ந்ருக3 சாப கதனம் என்ற ஐம்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 54 (591) ந்ருக ஸ்வப்ர பிரவேச: (ந்ருக ராஜா பள்ளத்தில் நுழைதல்)
ராமர் சொன்னதைக் கேட்டு லக்ஷ்மணன் வினயத்துடன், இப்படி ஒரு அல்ப தவறு, இதற்காகவா, கடுமையான பிராம்மண சாபம்? தேவையா, சரிதானா? யமதண்டம் மேலே வந்து விழுந்தது போல ந்ருக ராஜா வருந்தி இருக்கிறான். சாபம் பற்றி தெரிந்ததும், ராஜா பிராம்மணர்களிடம் என்ன சொன்னார். மகா கோபத்துடன் சாபம் கொடுத்த அவர்கள் சாந்தமானார்களா? ராமர் பதில் சொல்ல ஆரம்பித்தார். கேள், முன் நடந்ததை. சாபத்தைப் பற்றி அறிந்ததும், மந்திரிகளை அனுப்பி அவர்களைத் தேடச் செய்தான். இருவரும் சென்ற இடம் தெரியவில்லை. மந்திரிகள், பிரஜைகள், புரோகிதர்களைக் கூட்டி எனக்கு மிகப் பெரிய ஆபத்தை அறிவித்து விட்டு இருவரும் கண் காணாமல் சென்று விட்டனர். என் மகன் வசுவுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வையுங்கள். பள்ளம் ஒன்றை தயார் செய்யுங்கள். சில்பிகளைக் கொண்டு அதை வசிக்க ஏற்றதாக சுகமான தளங்களுடன் கட்டச் செய்யுங்கள். என் சாப காலத்தை நான் அதில் இருந்தபடி கழிப்பேன். ஒரு பள்ளம், மழையில் பாதிக்கப் படாமல், மற்றொன்று பனியில் பாதிக்கப்படாமல் இருக்கும்படி கட்டுங்கள். அதே போல வெயிற்காலத்தில் சூடு பாதிக்காமல் வசதியாக கட்டுங்கள். பழ மரங்களும், பூக்களைச் சொரியும் மரங்களும், புதர்களும் நிறைய நட்டு வையுங்கள். நல்ல வாசனை உள்ள மலர்ச் செடிகளையும், இந்த பள்ளங்களைச் சுற்றி நட்டு வையுங்கள். அரை யோஜனை தூரம் இந்த செடிகளும், மரங்களும், நிழல் தருபவையாக இருக்கட்டும். என் சாப காலத்தை எப்படியும் அனுபவித்து தான் ஆக வேண்டும். தன் மகன் வசுவை அழைத்து, மகனே, க்ஷத்திரிய தர்மம் தவறாமல் ஆட்சி செய்வாய். தர்மம் அறிந்தவர்கள் பிரஜைகள். என்னை பிராம்மணர்கள் சபித்ததைக் கண்டாய். இது பாடமாக இருக்கட்டும். இவர்களையும் தண்டிக்காதே. மகனே, விதியின் விளையாட்டு. எனக்கு இந்த துன்பம் அனுபவிக்க வந்து சேர்ந்திருக்கிறது. நமக்கு கிடைக்க வேண்டியது தான் கிடைக்கும். நமக்கு போக வேண்டிய இடங்கள் என்று விதித்துள்ள இடங்களுக்கு மட்டும் தான் போவோம். சுகமோ, துக்கமோ, நமக்கு விதிக்கப் பட்டுள்ளதை மட்டும் தான் நாம் அனுபவிக்கிறோம். ஏதோ பெரிய பாபம் செய்திருக்கிறேன் போலும். அதன் பலன் தான் அனுபவிக்கிறேன். இதை எண்ணி நீ வருந்தாதே என்று மகனிடம் சொல்லி விட்டு அந்த பள்ளத்தினுள் சென்று வசிக்க ஆரம்பித்தான். அந்த அழகிய வேலைப்பாடமைந்த பள்ளத்தினுள் நுழைந்ததுமே பிராம்மணர்களின் சாபம் அவனை வந்தடைந்தது.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ந்ருக ஸ்வப்ர பிரவேச: என்ற ஐம்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 55 (592) நிமி வசிஷ்ட சாப: (நிமி, வசிஷ்ட சாபங்கள்).
ந்ருக ராஜா பெற்ற சாபம் பற்றி தெரிந்து கொண்டாயா. மற்றொரு கதை சொல்கிறேன் கேள் என்ற ராமர், லக்ஷ்மணன் உற்சாகமாக கேட்கத் தயாராக ஆனதும், சொல்ல ஆரம்பித்தார். இக்ஷ்வாகு குலத்தில், நிமி என்ற அரசன், பெற்றோருக்கு பன்னிரண்டாவது பிள்ளை. நல்ல வீரமும், தர்மத்தில் மனமும் உள்ளவன். வைஜயந்தம் என்ற அழகிய நகரை நிர்மாணித்து, கௌதமர் என்ற குருவுடன் நகர பிரவேசம் செய்தான். தன் தந்தையை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், நீண்ட நாள் யாகம் செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டான். மனுவின் மகனான இக்ஷ்வாகுவிடம் அனுமதி பெற்று, வசிஷ்டரை யாக காரியங்களுக்கு குருவாக வரித்து, அதோடு நிற்காமல், ஆங்கிரசையும், அத்ரி முனிவரையும், ப்ருகு முனிவரையும் இதே யாகத்துக்கு அழைத்தான். வசிஷ்டர், இந்திரன் என்னை அழைக்கிறான், நான் வரும் வரை காத்திரு என்றார். காத்திருக்க விரும்பாத அரசன் கௌதமரை வரவழைத்தான். வசிஷ்டரும், இந்திரனின் யாகத்தை செய்து வைக்க கிளம்பினார். அரசனான நிமி, தன் ஊரின் அருகில், இமய மலைச் சாரலில், தீக்ஷை எடுத்துக் கொண்டு, ஐயாயிரம் ஆண்டுகள் யாகங்கள் செய்தான். இந்திர யக்ஞம் முடிந்து வசிஷ்டர் திரும்பினார். ராஜாவின் அழைப்பை நினைவில் கொண்டு யாக சாலையில், பிரதானமான தன் இடத்தை நிரப்ப வந்த பொழுது, கௌதமர் யாக வேலைகளைச் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். கோபத்தை அடக்கிக் கொண்டு அரசனை பார்த்து விட்டுப் போக அங்கேயே காத்திருந்தார். அன்று பார்த்து ராஜா நிமிக்கு ஒரே துர்க்கம். கண்களை சுழட்டிக் கொண்டு வர தூங்கி விட்டான். காத்திருந்த வசிஷ்டர் தன்னை அவமதித்ததாக எண்ணி விட்டார். காத்திருந்ததாலும், கோபமும், எரிச்சலும் தோன்ற அரசனே, நீ முதலில் செய்த தவறு, என்னை புறக்கணித்தது, இரண்டாவது தவறு என்னை காத்திருக்க வைத்தது, அசேதனமாக-உணர்வில்லாமல் போவாய் என்று சபித்து விட்டார். துர்ங்கி எழுந்த அரசன் இந்த சாபத்தைக் கேட்டு பரபரப்புடன், கோபமும் தலைக்கேற, நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் வந்ததையும், காத்திருந்ததையும் அறியாமல் இருந்த பொழுது, கோபம் கொண்டு இவ்வளவு கடுமையான சாபம் கொடுத்து விட்டீர்கள், யமதண்டம் மேலே விழுந்தது போல பயங்கரமான சாபம். ப்ரும்ம ரிஷியே, நீங்களும் என்னைப் போலவே அசேதனனாக திரியுங்கள். நான் சாபம் கொடுக்கிறேன் என்றான். இருவரும் சமமான பலம் உடையவர்கள். அதனால் இருவரது சாபமும் பலித்தது.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், நிமி வசிஷ்ட சாப: என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம். )
அத்தியாயம் 56 (593) மைத்ராவருணித்வ ப்ராப்தி (மைத்ரா வருணன் என்ற நிலையை அடைதல்)
லக்ஷ்மணன் இதைக் கேட்டு தன் சந்தேகத்தை வெளிப் படுத்தினான். அசேதனர்கள் ஆனார்கள் என்றால், சரீரத்தை விட்டு எங்கே சென்றார்கள்? அதன் பின் சரீரம் எப்பொழுது கிடைத்தது.? ராமர் சொன்னார். இருவரும் தார்மிகர்களே. பரஸ்பரம் சாபம் கொடுத்து சரீரத்தை விட்டவர்கள். வாயு ரூபமாக ஆனார்கள். இருவரும் தவ வலிமை மிக்கவர்கள். சரீரத்தை இழந்த வசிஷ்டர், தன் தந்தையான ப்ரும்மாவிடம் சென்றார். தேவதேவனான ப்ரும்மாவை வணங்கி, பகவன், நிமி என்னை சபித்து விட்டான். அதனால் தேகம் இன்றி இருக்கிறேன். பத்மத்தில் தோன்றிய தேவா, மகா தேவா, நான் வாயுபூதனாக நிற்கிறேன். தேகம் இல்லாமல் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறேன். யாரானாலும், சரீரம் இல்லையென்றால் துன்பம் தானே. என் காரியங்கள் எல்லாம் சரீரம் இல்லாததால் தடை பட்டுக் கிடக்கின்றன. என்னிடம் கருணை காட்டுங்கள். பிதாமகரும், இதைக் கேட்டு, மித்ராவருண ரூபத்தை எடுத்துக் கொள். அயோனிஜனாக (சரீரத்திலிருந்து பிறக்காமல் தானாக உண்டாவது). என்றும் இருப்பாய். உன் தர்ம காரியங்களைச் செய்து வா. பிறகு என்னிடம் வருவாய் என்றார். வசிஷ்டரும், ப்ரும்மாவை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விடை பெற்று, வருணாலயம் சென்றார். அதே சமயம், மித்ரனும், காலனுக்கு வருணத்வம் அளித்தான். க்ஷிராப்தி-பாற்கடலில் உடன் தோன்றியவன் என்பதால். அதே பாற்கடலில் உதித்த ஊர்வசி என்ற அப்ஸர ஸ்திரீயும் தன் சகிகளுடன் அந்த இடம் வந்து சேர்ந்தாள். அழகிய வடிவம் கொண்ட அவளைக் கண்டு வருணன் மோகம் கொண்டான். தன்னுடன் வரும்படி அழைத்தான். அவளோ, கை கூப்பி அஞ்சலி செய்தவளாக, வினயத்துடன், சுரேஸ்வரா, உனக்கு முன் மித்ரன் என்னை வரித்து விட்டான். காமன் வசத்தில் இருந்த வருணனோ, வற்புறுத்தி அவளை பணிய வைத்தான். இதன் பின் ஊர்வசி மித்ரனிடம் சென்றாள். நான் முன்னால் அழைத்திருக்கும் பொழுது, நீ இன்னொருவனிடம் கூடி குலாவி விட்டு வருகிறாய், துஷ்ட சாரிணீ, என் கோபத்துக்கு ஆளானாய். பூலோகம் சென்று பிறப்பாய் என்றான். இதனிடையில், புதனுடைய மகன், காசிராஜன், ராஜரிஷியாக இருந்தவன், தன் தேஜஸை ஒரு கும்பத்தில் சேர்த்து வைத்தான். அவன் உனக்கு கணவனாக ஆவான்.இதன் பின் அவள் சாபத்தின் காரணமாக புரூரவஸின் மனைவியாக ஆனாள். அவனிடம் நகுஷனைப் பெற்றாள். இந்திரனை வஜ்ரத்தால் வதைத்து விட்டு, நூறு வருஷங்கள், மறைந்து வாழ்ந்த பொழுது இந்த நகுஷன், இந்திர பதவியை வகித்தான். ஊர்வசியும் தன் சாப காலம் முடியும் வரை பூலோகத்தில் வசித்து விட்டு இந்திர லோகம் சென்றாள்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், மைத்ராவருணித்வ ப்ராப்தி என்ற ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 57 (594) நிமி நிமிஷீகரணம் (நிமியை கண் இமையில் இருக்கச் செய்தல்)
அந்த அரசனும், ரிஷியும் சரீரத்தை விட்டார்களே, அவர்கள் என்ன ஆனார்கள் என்று லக்ஷ்மணன் கேட்டான். கும்பத்தில் சேர்த்து வைக்கப் பட்டிருந்த தேஜஸிலிருந்து சிறந்த பிராம்மணர்கள் தோன்றினர். முதலில் அகஸ்தியர் வந்தார். நான் உன் மகன் அல்ல என்று சொல்லி, மித்ரனை விட்டு விலகி வந்தார். வருணன், மித்ரன் இருவரின் மகனாக அதே கும்பத்திலிருந்து வசிஷ்டர் தோன்றினார். பிறந்த உடனேயே வளர்ந்து பெரியவரானார். இக்ஷ்வாகு வம்சத்தின் புரோகிதராக ஆனார். இந்த குலத்தின் நன்மைக்காக இன்றளவும் இருந்து வருகிறார். இது இப்படியிருக்க, நிமியின் கதையைக் கேள். தங்கள் அரசன் சரீரம் இன்றி ஆனதைக் கண்ட மற்ற ரிஷிகள், யாக தீக்ஷை எடுத்துக் கொண்டவரைக் காப்பாற்ற, அவர் சரீரத்தை பத்திரமாக வைத்து விட்டு, பெயரளவில் இருந்த அவரைக் கொண்டே யாகத்தை முடித்தனர். சரீரத்தை வாசனைப் பொருட்கள் கொண்டு பாதுகாத்தனர். யாகம் முடிந்ததும், ப்ருகு முனிவர், அரசனே, நான் திருப்தி அடைந்தேன். தேவர்களும் மகிழ்ந்தனர். உனக்கு சேதனம் கிடைக்கச் செய்கிறேன். அரசனே, என்ன வரம் வேண்டும் சொல். உன் சேதஸ்- உணர்வு எதில் சேர்த்து வைக்க விரும்புகிறாய், எனவும், நிமி, ஜீவன்களின் கண்களில் வசிக்க விரும்புகிறேன் என்றான். அப்படியே ஆகட்டும் என்று ரிஷிகள் ஆசிர்வதித்தனர். எல்லா ஜீவன்களின் கண்களுக்கு மேலும், வாயு உருவத்தில் நீ சஞ்சரிப்பாய். கண்களை சிமிட்ட நீ உதவுவாய். உன் காரணமாக ஜீவன்கள் கண்களின் மேல் பகுதியை அடிக்கடி முடித் திறக்க முடியும். இதன் பின் ரிஷிகள், நிமியின் தேகத்தை அரணிக் கட்டையைக் கொண்டு கடைந்தனர். நிமியின் புத்திரனை வெளிக் கொணர்ந்தனர். கடைந்து -மதனம், கடைதல், வெளிப் பட்டதால், மிதி என்றும், இயற்கையாக பிறக்காமல், பிறப்பிக்கப் பட்டதால், ஜனகன் என்றும் அழைத்தனர். இப்படி தேகம் இல்லாத அரூபமான நிமியிடம் தோன்றியதால், விதேஹன் என்றும் பெயர் பெற்றார். இந்த வம்வத்தில் பின்னால் வந்தவர்கள், மிதியின் மக்கள் என்பதால், மைதிலர்கள் என்றும், விதேஹ மக்கள் என்பதால், வைதேஹ என்றும் அழைக்கப் பட்டனர். இப்படியாக ரிஷி சாபத்திலிருந்து அரசனும், அரசரின் சாபத்திலிருந்து ரிஷியும் விடுபட்டனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், நிமி நிமிஷீகரணம் என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 58 (595) யயாதி சாப: (யயாதியின் சாபம்)
இதைக் கேட்டு லக்ஷ்மணன், ராஜ சார்துர்லா, நிமி, வசிஷ்டரின் கதையை இன்று தான் தெரிந்து கொன்டேன். நிமி க்ஷத்திரியன். சூரன் தவிர, தீக்ஷையில் இருந்தவன். இதன் பின் இருவரும் எப்படி இருந்தனர்? பழையபடி நன்பர்களாக ஆனார்களா? சர்வ சாஸ்திரங்களையும் அறிந்தவன் உனக்குத் தெரியாததா என்பது போல அவனைப் பார்த்த ராமர் தொடர்ந்தார். மனிதர்களிடம் பொறுமை எப்பொழுதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. ரோஷம் பொறுக்க முடியாதது. அதையும் யயாதி எப்படி பொறுத்தான் என்பதைக் கேள். நகுஷனுடைய மகன் யயாதி அரசனானான். தன் ராஜ்யத்தை நன்றாக பரி பாலித்து வந்தான். அவனுக்கு இரண்டு மனைவியர். ஓரு மனைவி, நகுஷனே தேர்ந்தெடுத்த வ்ருஷபர்வனின் மகள், ஸர்மிஷ்டா. மற்றவள், அசுரகுல புரோகிதரான உஸனஸ், என்ற சுக்ராச்சாரியார் மகள் தேவயானை. தேவயானை யயாதிக்கு அனுசரணையாக இருக்கவில்லை. அவளிடம் யயாதிக்கு அன்போ, நேசமோ தோன்றவில்லை. அவளிடம், யது என்ற மகனும், ஸர்மிஷ்டாவிடம், புரு என்ற மகனும் பிறந்தனர். தாயைப் போல குணங்களுடைய புரு அரசனுக்கு பிரியமானவனாக வளர்ந்தான். இதனால் வருத்தமடைந்த யது தாயிடம் முறையிட்டான். அரிய செயல்களைச் செய்த ப்ருகு முனிவரின், பார்க்கவ குலத்தில் வந்தவள் நீ. மனதினுள் இந்த அவமானத்தை சகித்துக் கொண்டு வேதனையில் வாடுகிறாய். நாம் இருவரும் நெருப்பில் குதிப்போம், அந்த தைத்ய (அசுரராஜ) குமாரியுடன், அரசன் வெகு காலம் ரமித்துக் கொண்டு இருக்கட்டும். அம்மா, நீ பொறுத்துக் கொண்டு இப்படியே வாழ்வாய். ஆனால் எனக்கு அனுமதி கொடு. உன் போல் பொறுமையாக இருக்க என்னால் முடியாது. மகனின் முகம் வாட காண சகியாத தேவயானி தன் தந்தையை மனதில் நினைத்தாள். மகள் நினைத்த மாத்திரத்தில், பார்க்கவ வம்சத்தினரான சுக்ராச்சாரியார், வந்து சேர்ந்தார். மண வாழ்க்கையில் சந்தோஷமின்றி, தனக்குரிய ஸ்தானத்தை இழந்தவளாக கோபமும், தாபமுமாக இருந்த தேவயானியை விசாரித்தார். என்ன இது? என்ற தந்தையிடம் திரும்பத் திரும்ப முறையிட்டாள். அவர் சமாதானம் செய்தது எதுவும் அவள் காதில் விழவேயில்லை. முனி சத்தமா, சிறந்த முனிவரே, நான் அக்னியில் குதித்தோ, நீரில் மூழ்கியோ உயிரை விடுவேன். இனியும் உயிர் வாழ மாட்டேன். தந்தையே, நான் எப்படி உதாசீனப் படுத்தப் படுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. இதனால் நான் படும் வேதனையும் சொல்லி முடியாது. மரத்தை அலட்சியம் செய்தால், அதை அண்டி வாழும் ஜீவன்களும் கஷ்டப்படும். ராஜரிஷி யயாதி என்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. பல விதத்திலும் அலட்சியம் செய்கிறார். அவள் சொல்லச் சொல்ல முனிவர் கோபம் எல்லை கடந்தது. யயாதியைக் காணச் சென்றார். என்னை அலட்சியம் செய்கிறாயா. முதுமை அடைந்து, உடல் தளர்ந்து சிதிலமாகப் போவாய் என்று சபித்து விட்டார். தன் மகளை சமாதானம் செய்து விட்டு, மருமகனுக்கு சாபமும் கொடுத்து விட்டு தன் இருப்பிடம் சென்று விட்டார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், யயாதி சாப: என்ற ஐம்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 59 (596) புரூ ராஜ்யாபிஷேக: (புருவின் ராஜ்யாபிஷேகம். )
உசனஸ் என்ற சுக்ராச்சாரியார், மகா கோபத்துடன் இருப்பதை அறிந்த அதே சமயம், தன் உடல் முதுமை வந்து தளர்ந்து போவதை யயாதி உணர்ந்தான். யதுவிடம் சொன்னான். யதோ, நீ தர்மம் அறிந்தவன் தானே, என் முதுமையை வாங்கிக் கொள். நான் இன்னமும் போகங்களை அனுபவிக்கவே ஆசைப் படுகிறேன். எனக்கு திருப்தியாகும் வரை விஷய சுகங்களை அனுபவித்து விட்டு, இந்த முதுமையை திரும்ப வாங்கிக் கொள்கிறேன். யது பதில் சொன்னான். உன் பிரியமான பிள்ளை புரு தானே. அவன் வாங்கிக் கொள்ளட்டும் இந்த கிழட்டுத் தன்மையை. அரசனே என்னை உன் அருகிலும் இருக்க விடவில்லை. பொருள் விஷயத்திலும் தள்ளியே வைத்திருந்தாய். உன்னுடன் அமர்ந்து போஜனம் செய்தானே, அவனே இந்த முதுமையை வாங்கிக் கொள்ளட்டும். அரசனும் புருவிடம் சொன்னான். மகனே. இந்த முதுமையை வாங்கிக் கொள். நான் இன்னமும் உலகில் பல சுகங்களை அனுபவிக்கவேயில்லை எனவும், கை கூப்பி தன்யனானேன், நான் பாக்யம் செய்தவனானேன். தங்கள் அனுக்ரஹம் கிடைக்கப் பெற்றேன். தங்கள் கட்டளைப் படி நடக்க கடமைப் பட்டவன் நான். இதைக் கேட்டு மகிழ்ந்து யயாதி தன் முதுமையை புருவுக்கு கொடுத்து விட்டான். அந்த அரசன் திரும்ப இளமையைப் பெற்று, பல ஆயிரக் கணக்கான யாகங்கள் செய்து பூமியை ஆண்டான். வெகு காலம் சென்ற பின் ராஜா புருவிடம் சொன்னான். மகனே உன்னிடம் அடகு வைத்திருந்த என் முதுமையை திரும்பக் கொடு. உன் கஷ்டம் தீரட்டும். நரையும், திரையுமான முதுமையை நான் வாங்கிக் கொள்கிறேன். என் வேண்டுகோளை கட்டளையாக ஏற்று நிறைவேற்றியதால், நான் மிகத் திருப்தியடைந்தேன். உனக்கே ராஜ்யாபிஷேகம் செய்து வைக்கிறேன் என்றவர், தேவயானியின் மகனைப் பார்த்து, ராக்ஷஸன் நீ. புத்ர ரூபத்தில் வந்த சத்ரு. பிரஜைகளிடம் உனக்கு எந்த செல்வாக்கும் இல்லாமல் போகட்டும். தந்தையான என்னை அவமதித்து விட்டாய். யாதுதானர்கள் என்ற பெயருடன் இரவில் சஞ்சரிக்கும் கூட்டத்தை மக்களாக பெறுவாய். சோம வம்சத்தில் நீயோ உன் வம்சத்தில் வருபவர்களோ இருக்கப் போவதில்லை. உன்னைப் போலவே உன் மக்களும் வினயமின்றி இருப்பார்கள். ராஜா யயாதி, புருவை ராஜ்யாபிஷேகம் செய்து வைத்து விட்டு, தான் வனம் சென்றான். காலம் வரவும், உடலைத் தியாகம் செய்து ஸ்வர்க்கம் சென்றான். காசி ராஜ்யத்தை புரு நல்ல முறையில் பாலித்து வந்தான். யது யாதுதானான் என்ற பெயருடன் இரவில் திரியும் மக்களைப் பெற்றான். ராஜ வம்சமே அவனை புறக்கணிக்க க்ரௌஞ்ச வனத்தின் ஒரு குகையில் வசித்தான். இது தான், யயாதி சுக்ராச்சாரியாரின் சாபத்திலிருந்து விடு பட்டதும், நிமி இமையில் அமர்ந்து சாப விமோசனம் பெற்றதும், ந்ருக ராஜன் தன் தோஷத்திலிருந்து விடு பட்டதுமான கதை. பேசிக் கொண்டிருக்கையிலேயே, கீழ் வானம் வெளுக்கவும், அருண கிரணங்கள், சிவந்து தெரியவும் ஆரம்பித்தது. சிவப்பு ஆடை அணிந்தது போல வானம் பிரகாஸமாகத் தெரிந்தது.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், புரூ ராஜ்யாபிஷேக: என்ற ஐம்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 60 (597) பா4ர்க்கவ ச்யவனாத்3யாக3மனம் (பார்க்கவ, ச்யவன முனிவர்கள் வருகை)
ராம,லக்ஷ்மணர்கள் இப்படி பேசிக் கொண்டே இரவைக் கழித்தனர். வஸந்த கால இரவு, அதிக வெப்பமும் இல்லை, குளிர்ச்சியும் இல்லாமல் சுகமாக இருந்தது. தினசரி செய்ய வேண்டிய தன் காரியங்களை முடித்துக் கொண்டு ராமர் சபைக்குச் சென்றார். சுமந்திரர் வந்து, ராஜன், பல தபஸ்விகள் வந்திருக்கிறார்கள். ஏதோ அடி பட்டவர்கள் போலத் தெரிகிறார்கள், பா4ர்க்கவரும், ச்யவனரும் அவர்களை அழைத்து வந்திருக்கின்றனர். உடனே உங்களை பார்க்க வேண்டும் என்று அவசரப் படுத்துகிறார்கள். யமுனா நதிக் கரையில் வசிப்பவர்களாம் என்றான். ராமர் அனுமதி கொடுக்கவும் நூற்றுக்கும் மேலான அந்த தபஸ்விகளை அழைத்து வர சுமந்திரார் சென்றார். பூர்ண கும்பம் வைத்து வரவேற்று, தவம் செய்து தேஜஸ் நிரம்பிய அவர்களை மரியாதையுடன், உள்ளே அழைத்து வந்து, தீர்த்தம் கொடுத்து, பழங்கள், காய் வகைகள் கொடுத்து, உபசரித்து, ராமரிடம் தரிசனம் செய்ய அழைத்து வந்தார். ராமரும், அவர்களுக்கு உண்ணவும், பருகவும் கொடுத்தாயிற்றா என்று விசாரித்துக் கொண்டு, அவர்களிடம் ஆசனங்க ளில் அமரச் சொன்னார். என்ன காரியம்? எதற்காக இவ்வளவு துர்ரம் வந்தீர்கள் என்று வினவினார். ஆக்ஞையிடுங்கள், மகரிஷிகள் தேவையை பூர்த்தி செய்வது என் கடமை. எதுவானாலும் கேளுங்கள் என்று பவ்யமாக சொன்னார். இதைக் கேட்டு சாது, சாது என்று சொன்ன முனிவர்கள், நாங்கள் யமுனா நதிக்கரையில் உக்ரமாக தவம் செய்பவர்கள். நரஸ்ரேஷ்டனே, நீ இப்பொழுது சொன்னது உன் குலப் பெருமைக்கும் உனக்கும் தகுதியானதே. சாதாரணமாக அரசர்கள், முதலில் காரியத்தைக் கேட்டு விட்டுத் தான் பதில் சொல்வார்கள். நீயோ, எங்களிடம் செய்வதாக முதலில் வாக்களித்து விட்டு பின் என்ன காரியம் என்று வினவுகிறாய். அதனால், நீதான் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மகத்தான ஆபத்திலிருந்து காப்பாற்றக் கூடியவன் என்ற நம்பிக்கை வந்து விட்டது என்றனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், பா4ர்க்கவ ச்யவனாத்3யாக3மனம் என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 61 (598) லவணத்ராண ப்ரார்த்தனா (லவணனிடமிருந்து காப்பாற்ற வேண்டுதல்)
ரிஷிகள் பதட்டத்துடன் சொன்னதைக் கேட்டு காகுத்ஸன் பதில் சொன்னான். முனிவர்களே, என்ன காரணம்? ஏன் பயப்படுகிறீர்கள்? பார்க்கவர் பதில் சொன்னார். நரேஸ்வரா, இந்த தேசத்துக்கும் எங்களுக்கும் வந்துள்ள ஆபத்து பற்றிச் சொல்கிறோம் கேள். முன்பு க்ருத யுகத்தில், லோலன் என்பவன் மகன், மது என்ற மகாசுரன் இருந்தான். அவன் தானும் வேத சாஸ்திரங்கள் கற்றுத் தேர்ந்தான், கற்றறிந்த மற்றவர்களுக்கு அடைக்கலமும் தந்தான். நல்ல புத்திசாலி. சிறந்த நடத்தையும், தன் கொள்கையில் பிடிப்பும் உள்ளவன். தேவர்களும் அவனிடம் பிரியமாக இருந்தனர். பல ஆயிர வருஷங்கள் ருத்ரனைக் குறித்து தவம் செய்தான். ருத்ரனும் மகிழ்ந்து வரம் தந்தார். அவன் தவத்தை மெச்சி உயர்ந்த வரங்களைத் தந்தார். தன் சூலத்தை கொடுத்தார். என்னை மகிழ்விக்க பெரும் தவம் செய்தாய். அதனால் தான் இந்த ஆயதம் தருகிறேன். இது உன் கையில் உள்ளவரை யாரும் உன்னை எதிர்த்து நிற்க முடியாது. சுரர்களோ, அசுரர்களோ உனக்கு அழிவைத் தர முடியாது. அப்படி யார் எதிர்த்தாலும், இந்த ஆயுதம், அவர்களை பஸ்மமாக்கி விட்டு உன் கையில் வந்து விடும். இந்த வரம் ருத்ரன் கொடுத்த பின்பும் மது பணிவாக வேண்டினான். பகவன், இந்த சூலம் என் குலத்தில் பரம்பரையாக இருந்து வர வேண்டும். மது சொன்னதைக் கேட்டு, ருத்ரன், அது எப்படி முடியும், ஆனாலும் உன் மகன் ஒருவனுக்கு இது கிடைக்கச் செய்கிறேன். உன் மகன் கையில் இந்த சூலம் இருக்கும் வரை அவனை யாரும் கொல்ல முடியாது. இது போல வரம் பெற்ற மது, தேவ தேவனின் கையிலிருந்து சூலத்தை வாங்கிக் கொண்டான். தன் வீடு சென்றான். அவன் மனைவி கும்பீனஸி என்பவள், விஸ்வவசு-அனலா என்ற தம்பதிக்குப் பிறந்தவள். அவளிடம் பிறந்த மகன் லவணன் கொடியவன். பிறந்ததிலிருந்து துஷ்டன். அவன் துர்குணத்தைப் பார்த்து மது வருந்தினாலும் எதுவும் சொல்லவில்லை. உலகைத் துறந்து வருணாலயம் சென்றான். சூலத்தை லவணனிடம் கொடுத்து அதன் மகிமையையும் சொன்னான். சூலத்தின் விசேஷம் தெரிந்தவுடன் துர்புத்தியாதலால் உலகில் மற்றவரைத் துன்புறுத்த தொடங்கினான். அதுவும் தபஸ்விகளை அதிகமாக வாட்டுகிறான். இவன் கையில் சூலம் கிடைத்தது எங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தாக ஆகி விட்டது. காகுத்ஸா, நீ பல ரிஷிகளுக்கு அபயம் அளித்து காப்பாற்றி இருக்கிறாய். அதனால் உன்னைத் தேடி வந்தோம். காப்பாற்று, உன்னால் தான் லவணனிடமிருந்து எங்களை விடுவிக்க முடியும்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், லவணத்ரண ப்ரார்த்தனா என்ற அறுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 62 (599) சத்ருக்ன பிரார்த்தனா. (சத்ருக்னனின் வேண்டுதல்)
இப்படி ரிஷிகள் சொன்னதைக் கேட்டு ராமர் வினவினார். அந்த லவணன் எப்படி இருப்பான். எங்கு இருக்கிறான்? அவன் ஆகாரம் என்ன? நடவடிக்கைகள் என்ன? எல்லா ரிஷிகளும் ஒரே குரலில் லவணன், குழந்தையாயிருந்தது முதல், வளர்ந்து பெரியவனான வரை விவரித்தனர். ஆகாரமா? உயிருள்ள ஜீவன் எல்லாமே அவனுக்கு ஆகாரம் தான். தவம் செய்யும் முனிவர்கள் தான் பிடித்தமான பக்ஷணம். கொடுங்கோலன். துஷ்டன். மது வனத்தில் வசிக்கிறான். சிங்கம், புலி போன்ற மிருகங்களோடு பிராம்மணர்களையும் கொன்று குவிப்பான். இது தான் பொழுது போக்கு. மனிதர்களையே தினசரி போஜனமாக வைத்துக் கொண்டு விட்டான். கொல்லுவது என்று ஆரம்பித்து விட்டால், இடை விடாது கை சளைக்கும் வரை கொன்று குவிப்பான். காலனே தான். உடனே ராமர், கவலைப் படாதீர்கள், நான் கவனித்துக் கொள்ளுகிறேன், வதம் செய்கிறேன் என்றார். ரிஷிகளுக்கு அபயம் அளித்து விட்டு தன் சகோதரர்களுடன் ஆலோசனை நடத்தினார். யார் லவணனைக் கொல்ல தயாராக இருக்கிறீர்கள். யாரை இந்த செயலில் ஈடுபடச் செய்யலாம்? பரதா, சத்ருக்னா, என்று கேட்டார். பரதனும் முன் வந்தான். சத்ருக்னனும் வந்தான். பரதனைப் பார்த்து, நீங்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டீர்கள். நந்தி கிராமத்தில், அண்ணலின் வரவை எதிர்பார்த்தபடி, வசதியில்லாத படுக்கையில் படுத்து, ராமரைப் போலவே ஜடா முடி தரித்து, பழம் காய் கறிகளையே உண்டு விரதம் காத்தீர்கள். தாங்கள் திரும்பவும் கஷ்டப்பட வேண்டாம். என்னை அனுப்புவதில் என்ன சிரமம்? இதைக் கேட்டு காகுத்ஸன், சரி அப்படியே ஆகட்டும், மதுவின் சுபமான நகரத்தில் உன்னை அபிஷேகம் செய்து வைக்கிறேன் என்றார். தேவையானால், பரதனையும் கூட்டிக் கொள். நீயே கற்றுத் தேர்ந்தவன். சூரன். ஆற்றல் மிகுந்தவன். அரச குலத்தில் பிறந்தவன். சத்ருவை நாசம் செய்து குலப் பெருமையை நிலை நிறுத்து. அரச குலத்தில் பிறந்தவன் இப்படிச் செய்து தன் கடமையை செய்யாதவன் நரகத்துக்குத் தான் போவான். பாப புத்தியுள்ள லவணனை வதம் செய்ய நீ ஏற்றவனே. இனி எதுவும் யோசிக்க வேண்டாம். என் கட்டளை என்று கிளம்பு. லவணாசுரனை வதைத்து அவன் ராஜ்யத்திற்கு நீ அதிபதியாவாய் என்றார். வெற்றியோடு திரும்பி வா. வந்த பின் வசிஷ்டர் முதலான பெரியவர்களைக் கொண்டு முறைப்படி அபிஷேகம் செய்து வைக்கிறேன்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சத்ருக்ன பிரார்த்தனா. என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 63 (600) லவண வதோபாய கதனம். (லவணனை வதம் செய்ய வழி சொல்லுதல்)
இதைக் கேட்டு சத்ருக்னன் வெட்கம் அடைந்தான். காகுத்ஸா, நான் ராஜ்யத்தை விரும்பியதாக பொருள் கொள்ள வேண்டாம். நான், அதர்மமாக, பெரியவர்கள் இருக்கும் பொழுது ராஜ்யத்தை ஏற்றுக் கொள்வேனா? உன் கட்டளையை மேற்கொண்டு கண்டிப்பாக செய்வேன். யாராக இருந்தாலும், ராஜ சாஸனம் நிறைவேற்ற வேண்டிய ஒன்று என்பதை அறிவேன். இளையவன் சபையில் பேசக் கூடாது என்பதை வேத சாஸ்திரங்களில் படித்து தெரிந்து கொண்டிருக்கிறேன். பலரும் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். தாங்களே சொல்லி பல முறை கேட்டிருக்கிறேன். நான் பேசியது தவறு தான். நிச்சயம் அந்த லவணனால் கொல்லப் படுவேன். என் தவற்றுக்கு அது தான் தண்டனை. மூத்தவன் இருக்கையில் சபையில் பேசிய தவறு – அதற்கு தண்டனை நீங்களே கொடுங்கள். வேறு யாரும் எனக்கு தண்டனை கொடுப்பதை நான் பெற மாட்டேன். இவ்வாறு சத்ருக்னன் சொல்லவும் ராமர், பரதன், லக்ஷ்மணனைப் பார்த்து சொன்னார். அபிஷேக சாமான்களை கொண்டு வாருங்கள். இந்த ராகவனை, புருஷ வ்யாக்ரனை முடி மூசூட்டி அபிஷேகம் செய்து வைக்கிறேன். புரோகிதர்களையும், நிகமம் அறிந்த ரிஷிகளையும், மந்திரிகளையும் என் கட்டளை என்று சொல்லி அழைத்து வாருங்கள். அப்படியே என்று சொல்லி அபிஷேகத்திற்கான பொருட்களை சேகரித்துக் கொண்டு, மந்திரி வர்க்கங்களையும் அழைத்துக் கொண்டு அவ்விருவரும் வந்து சேர்ந்தனர். இதன் பின் சத்ருக்னனுக்கு முடி சூட்டும் வைபவம் நடந்தது. முடி சூட்டப் பெற்ற சத்ருக்னன் ஆதித்யன் போல பிரகாசித்தான். மருத் கணங்கள் சூழ, முன்பு இந்திரன், ஸ்கந்தனுக்கு அபிஷேகம் செய்து வைத்தது போல இருந்தது. ஊர் ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தனர். வேதம் அறிந்த பலரும் மகிழ்ந்து வாழ்த்தினர். கௌசல்யை, சுமித்ரா, கைகேயி மூவரும் மங்களாசாஸனம் செய்தனர். ராஜ பவனத்தில் இருந்த மற்றவர்களும் கலந்து கொண்டனர். யமுனா தீரத்திலிருந்து வந்திருந்த ரிஷிகளும், கலந்து கொண்டனர். லவணன் இறந்தான் என்று நம்பிக்கை கொண்டனர். முடி சூட்டப் பெற்ற சத்ருக்னனை அணைத்து ராமர் மதுரமாகச் சொன்னார். இதோ விசேஷ சக்தியடைய சரங்கள். திவ்யமானவை. எதிரிகளை அழிக்க வல்லவை. இதைக் கொண்டு லவணனை வதைப்பாய். இதை ஸ்வயம்பூவான ப்ரும்மா, பகவான் பாற்கடலில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஸ்ருஷ்டி செய்தார். யாரும் கவனிக்கவில்லை. யார் கண்ணுக்கும் இது புலப்படாது. அதனாலேயே அமோகம் எனப்படும். துராத்மாக்களான மது கைடபர்களை வதைக்க கோபத்துடன் தயார் செய்யப் பட்டது. இந்த அரக்கர்கள் மூவுலகையும் தாங்களே ஸ்ருஷ்டி செய்வதாக கிளம்பினர். உலகை ஆட்டி வைத்தனர். இந்த ஆயுதத்தால் தான் அவர்களை வதைத்து பின் உலகங்களை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்தார். இது உலகில் உள்ள ஜீவன்களுக்கு பெரும் பயத்தைக் கொடுக்கும் என்பதால் நான் ராவண வதத்தில் இதை உபயோகிக்கவில்லை. மதுவின் கையில் த்ரயம்பகன் கொடுத்த உயர்ந்த சூலம் இருப்பதால் அதற்கு சமமான ஆயுதம் உனக்கும் வேண்டும் என்பதால் இதை உனக்குத் தருகிறேன். சூலத்தை வீட்டில் வைத்து பூஜை செய்தபடி மூவுலகையும் பயமுறுத்தி வருகிறான். நினைத்தபடி கொன்று குவித்து வருகிறான். யாராவது யுத்தம் செய்ய வந்தால் தான், எதிரியை பஸ்மமாக ஆக்கக் கூடிய இந்த ஆயுதத்தை எடுப்பான். அதனால் அவன் கோட்டை வாயிலில் நில். அவன் கையில் ஆயுதம் இல்லாமல் வரும் பொழுது, ஊருக்குள் நுழையும் முன் யுத்தத்துக்கு அழை. இப்படிச் செய்தால் தான் அவனை வெல்ல முடியும். மற்றபடி அவனை கொல்ல முடியாது. சிதிகண்டனான சிவபெருமான் சூலம் சக்தி வாய்ந்தது. தவிர அவரே தந்துள்ள வரம். அதையும் மீற முடியாது.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், லவண வதோபாய கத2னம் என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 64 (601) சத்ருக்ன ப்ரஸ்தானம். (சத்ருக்னன் கிளம்புதல்)
இவ்வளவும் சொல்லி, அவனுக்கு தைரியம் ஊட்டி, உயர்வாக பேசி அவன் மனோ பலத்தைக் கூட்டி, மேலும் சொன்னார். இதோ ஆயிரம் உயர் ஜாதி குதிரைகள். இரண்டாயிரம் ரதங்கள். நூற்றுக் கணக்கான யானைகள். நமது கடை வீதிகளையும் ராஜ மார்க்கங்களையும் அலங்கரிக்கப் பயன் பட்டவை, சத்ருக்னனுடன் செல்லட்டும். நட நர்த்தகர்களும் உடன் செல்லுங்கள். போதுமான அளவு தங்கம் வெள்ளி எடுத்துக் கொண்டு போ. இந்த பெரிய படையை, உன் பேச்சினாலும் பொருள் தந்தும், ரஞ்சகமாக வைத்திரு. அவர்கள் உன்னிடம் பிரியமாக இருக்கும்படி நடந்து கொள். தங்கள் மனைவி மக்களை பிரிந்து வந்த துக்கத்தை கூட உணராதபடி வைத்துக் கொள். தன் கீழ் உள்ளவர்களிடம் அன்புடன் நடந்து கொள்பவன் தான் அவர்களிடம் வேலை வாங்க முடியும். அதனால் உன் பெரும் படையைச் சார்ந்த வீரர்களை உற்சாகமாக வைத்திரு. நீ ஒருவன் மட்டுமே வில்லை ஏந்தி மதுவனம் செல். நீ யுத்தம் செய்ய வந்திருப்பதாக சந்தேகமே வராது. லவணன் அறியாதபடி கோட்டை முற்றுகையை செய். அவன் ஆகாரம் தேடி வெளியில் சென்று திரும்பும் பொழுது தாக்கு. வேறு வழியில்லை சத்ருக்னா. எதிரில் நின்று போர் புரிபவர்கள் அழிவது உறுதி. வெய்யில் காலம் முடிந்து மழைக் காலம் ஆரம்பிக்கும் சமயம் துர்மதியான லவணனை வதம் செய். அதுதான் அவனுக்கு சரியான நேரம். உன் படை வீரர்கள் முன்னால் மகரிஷிகளை வைத்துக் கொண்டு முன்னேறட்டும். வேணில் காலத்தில் நீர் குறைந்து கங்கைக் கரையில் மணல் நிறைந்து இருக்கும். அங்கு உன் சேனையை நிறுத்தி வை. சாதாரண போர் வீரன் போல நீ மட்டும் முன்னால் வில்லை ஏந்தியவனாகச் செல். யாரும் சந்தேகிக்க முடியாதபடி. இவ்வாறு ராமர் உபதேசித்ததைக் கேட்டு புரிந்து கொண்ட சத்ருக்னன், தன் படையின் முக்கிய தலைவர்களை அழைத்து விவரங்கள் சொல்லி, யாருக்கும் எந்த தொந்தரவும் தராதபடி, தங்கி இருந்து நீங்கள் செயல் பட வேண்டும். அந்த பெரிய படையை பகுதிகளாக பிரித்து தனித் தனியே தங்க ஏற்பாடுகள் செய்து, தேவையான வசதிகளும் செய்து கொடுத்து விட்டு, தாய் மார்கள் மூவரையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டான். ராமரை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விடை பெற்றான். பரத, லக்ஷ்மணர்களை கை கூப்பி வணங்கி விடை பெற்றான். புரோகிதரான வசிஷ்டரையும் வணங்கி ஆசி பெற்றான். பின் தன் படையுடன் போருக்குப் புறப்பட்டான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சத்ருக்ன ப்ரஸ்தானம். என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 31 (568) ராவண நர்மதாவகாஹ: (ராவணன் நர்மதையில் இறங்குதல்)
அகஸ்தியர் சொன்னதைக் கேட்ட ராமர் மேலும் வினவினார். பகவன், ராக்ஷஸன் பூமியில் வந்ததிலிருந்து உலகில் சுற்றி வந்தானே, அப்பொழுது உலகம் சூன்யமாகவா இருந்தது? ராஜாவோ, ராஜ மாதாக்களோ இல்லையா? இவனைக் கண்டிக்க கூடிய பெரியவர்கள் யாருமே இல்லையா? ராஜ்யம் ஆண்டவர்கள் பலம் இன்றி அடங்கித் தான் இருந்தார்களா? நல்ல அஸ்திரங்கள் யாரிடமும் இல்லையா? எப்படி எல்லோரையும் ஜயித்தான்? அகஸ்தியர் மெல்ல சிரித்தபடி பதில் சொன்னார். ராவணன் மற்றவர்களைத் துன்புறுத்தி வருத்திய போதும், அரசர்கள் இருந்தனர். அப்படி ஒரு சமயம், ராவணன் எதிர்ப் பட்டவர்களை துன்புறுத்தியபடி, மாஹிஷ்மதி என்ற ஊரைஅடைந்தான். அந்த ஊர் ஸ்வர்க புரி போல இருந்தது. வசுரேதஸ் என்ற அரசன் அதை ஆண்டு வந்தான். அர்ஜூனன் என்ற பெயரும் உடையவன். அவன் யாக சாலையில் எப்பொழுதும், அக்னீ சர குண்டேசயம் – எதிரிகளை தாக்கத் தயாராக ஆயுதங்கள் எப்பொழுதும் இருக்கும்படி, இருக்கும். அந்த அரசன் ஒரு சமயம், தன் பத்னிகளுடன், நர்மதையில் ஸ்னானம் செய்யச் சென்றான். ஹைஹயாதிபதி என்றும் பெயர் பெற்ற இவன் நல்ல பலசாலி. அதே தினம், ராவணனும் அங்கு வந்து சேர்ந்தான். ராவணன், தான் ராக்ஷஸேந்திரன் என்ற ஹோதாவோடு, மந்திரிகளை விசாரித்தான். எங்கே அர்ஜூன ராஜா? ராவணன் நான் வந்திருக்கிறேன், சீக்கிரம் சொல்லுங்கள் என்று அதட்டினான். யுத்தம் செய்ய அழைத்தபடி நான் வந்திருக்கிறேன் என்பதை உங்கள் அரசனிடம் சொல்லுங்கள் என்றான். விவரம் அறிந்த மந்திரிகள் அரசன் அச்சமயம், நகரில் இல்லையே என்பதை விளக்கிச் சொன்னார்கள். விஸ்ரவஸ் மகனான ராவணன் அதோடு விடாமல், ஊர் ஜனங்களிடம், அரசன் இருக்கும் இடம் விசாரித்து தெரிந்து கொண்டு, விந்த்ய மலைச் சாரல் வந்து சேர்ந்தான். விந்த்ய மலையைப் பார்த்து அதிசயித்தான். இமய மலைக்கு ஈடாக இருப்பதை ரஸித்தான். பூமியில் வேரூன்றி, ஆகாயத்தை தொடுவது போல நின்ற மலை வேந்தனைக் கண்டான். ஆயிரக் கணக்கான சிங்கங்களும், அவை வசித்த குகைகளும், கணக்கில்லாத சிகரங்களுமாக, வேகமாக விழும் நதி ஜலமும், அட்டகாசமாக் பெருகி வரும் நீர் வீழ்ச்சிகளுமாக அழகிய காட்சிகளைக் கண்டான். தேவ, தானவ, கந்தரவர்கள், அப்ஸர கணங்கள், கின்னரர்கள், பெண்களுடன் விளையாடி மகிழும் இடமாக இருந்ததைக் கண்டான். ஸ்வர்க லோகம் போல இருந்தது. நதிகளில் தண்ணீர் ஸ்படிகம் போல தெளிவாக இருந்தது. மலையின் அமைப்பே, படம் எடுத்து ஆடும் அனந்த நாகம் அமர்ந்த நிலையில் இருப்பதாக நினைத்தான். மலை ஹிமய மலையைப் போலவே ஆங்காங்கு சம வெளிகளுடன் காணப்பட்டது. இப்படி மலையை ரஸித்துக் கொண்டே ராவணன் நர்மதா நதியை அடைந்தான். கற்களை அளைந்தபடி மேற்கு கடலை நோக்கி ஓடும் நர்மதா நதியின் அழகைக் கண்டு மனம் மகிழ்ந்தான். அங்கிருந்த குளங்களில், சிங்கங்களும், ஸார்துர்லங்களும், கரடிகள், யானைகள் யாவும் வெப்பம் தாங்காமல், தவித்து தாகத்தை தணித்துக் கொள்ள, வந்து தண்ணீரைக் குடித்து குளத்தையே வற்றச் செய்து விடுமோ என்பது போல நிறைந்து இருப்பதைக் கண்டான். சக்ரவாக பக்ஷிகள், காரண்டவ, ஹம்ஸங்கள், தவிர, நீரில் வாழும் சேவல்கள், ஸாரஸங்கள் எப்பொழுதும் மதம் பிடித்தது போல கூவும் பறவை இனங்கள் நிறைந்து இருப்பதைக் கண்டான். மலர்ந்து கிடந்த பூக்களுடன் மரங்கள், ஜோடி ஜோடியாக, சக்ர வாகங்கள், பரவிக் கிடந்த விசாலமான மணல்கரை, கூட்டம் கூட்டமாக ஹம்ஸங்கள் மேகலை அணிவித்தது போலத் தெரிவதைக் கண்டான். புஷ்பங்களின் மகரந்தத்தை உடல் முழுவதும் பூசி விட்டது போல, தண்ணீரில் நுரை வெண்மையாக பரவிக் கிடந்தது. தண்ணீரில் மூழ்கி குளித்தால், உத்பல புஷ்பங்கள், மெள்ள மெள்ள தொடுவது போல உடலில் படும். உத்பல பூக்களே காண அரும் காட்சியாக, சுகமாக இருந்தது. தன் புஷ்பக விமானத்திலிருந்த இறங்கி, நதிகளில் சிறந்த நர்மதா நதியை, தன் மனதிற்குப் பிடித்த பெண்ணை ஆவலுடன் தழுவுவது போல, ஆசையுடன் நர்மதா நதி நீரில் மூழ்கினான் தஸானனன். அந்த நதிக் கரையில் மணல் கரையில், பல விதமான முனி ஜனங்களிடையே இருந்த மந்திரிகளிடம் விசாரித்தான். இது என்ன கங்கையா? நர்மதாவா? முதல் முறை நர்மதாவின் அழகைக் கண்ட பரவசத்தில் ஆனந்தக் கடலில் மூழ்கியவன் போல உற்சாகமாக தன் மந்திரிகளை அழைத்தான். ப்ரஹஸ்த, சுக, சாரணன் முதலிய மந்திரிகளை அழைத்து, விளையாட்டாக சிரித்தபடி, இதோ பாருங்கள். ஆயிரக் கணக்கான கிரணங்களுடன் உலகையே காஞ்சனமாக ஆக்குவது போல, தீக்ஷ்ணமான தாபத்தை தரும், சூரியன் ஆகாயத்தில் பாதியை அடைத்துக் கொண்டிருக்கிறான். நான் இங்கு இருப்பதையறிந்து தான் போலும், சூரியன் சந்திரன் போல குளிர்ச்சியாக ஆகி விட்டான். நர்மதா ஜலமும் குளிர்ச்சியாக, சிரம பரிகாரம் செய்வது போல இருக்கிறது. நல்ல வாசனையுடன் பெருகி ஓடுகிறது. என்னிடம் பயந்து காற்றும் மந்தமாக வீசுகிறது. இந்த நர்மதா நதி மிக உயர்ந்த நதி. நர்ம வர்தினி. உடலுக்கு இதமானவள். முதலைகள், மீன்கள், பறவைகள், அலைகள், இவற்றுடன் பயந்து நிற்கும் பெண் போல இருக்கிறாள். அதனால் நீங்களும், களைத்து இருப்பீர்கள். பல அரசர்களுடன் போரிட்டு, ரத்தத்தையே சந்தனம் போல பூசிக் கொண்டு அலுத்து சலித்திருப்பீர்கள். உடல் களைப்புத் தீர நீங்களும், இந்த நதியில் மூழ்கி குளியுங்கள். சுபமான ஜலம். நர்மதா, சர்மதா. பெரிய தாமரை மலர்களே முகமாக, பெரிய யானைகள் கங்கையில் இறங்குவது போல, இந்த நதியில் இறங்கி பாபங்களை போக்கிக் கொள்ளுங்கள். நானும் சிவ பூஜை செய்கிறேன். ராவணன் இவ்வாறு அனுமதி அளித்ததும், பிரஹஸ்த, சுக, சாரணர்கள், மகோதர, துர்ம்ராக்ஷன், நர்மதையில் இறங்கி குளிக்கலாயினர். ராக்ஷஸர்கள், மகா யானைகள் போன்ற உருவம் உடையவர்கள், நதியில் இறங்கி கலக்கிய கலக்கலில், நதியே வற்றி விடும் போலாயிற்று. குளித்து முடித்த ராக்ஷஸர்கள், ராவணனுக்கு பூக்களை கொண்டு வந்து கொடுத்தனர். மலையளவு பூக்களை க்ஷண நேரத்தில் கொண்டு வந்து குவித்து விட்டனர். திரும்பவும் நர்மதா நதியில் இறங்கி ஸ்நானம் செய்து, ஜப தபங்களை முடித்துக் கொண்டு, பழைய ஆடைகளை களைந்து புதிய வெண் பட்டு ஆடைகளை தரித்துக் கொண்டு நடந்த ராவணனை மந்திரிகள் பின் தொடர்ந்தனர். ராவணன் போகும் இடமெல்லாம், மலைக் குன்றுகள் உடன் செல்வது போல பெருத்த உடலுடைய ராக்ஷஸ மந்திரிகள் சென்றனர். பொன்னாலான சிவ லிங்கத்தையும் தூக்கிக் கொண்டு சென்றனர். மணலில் அந்த லிங்கத்தை ஸ்தாபனம் செய்து ராவணன் ஆங்காங்கு புஷ்பங்களாலும், கந்தம் முதலியவற்றாலும் அர்ச்சனை செய்தான். சந்திரனை தலையில் ஆபரணமாக தரித்தவரும், வரங்களைத் தருபவரும், நல்லவர்களின் துன்பத்தை துடைப்பவருமான சிவ பெருமானை துதித்து பாடி, கைகளை விரித்து வேண்டியபடி, ஆடவும் ஆரம்பித்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராவண நர்மதாவகாஹ: என்ற முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.
அத்தியாயம் 32 (569) ராவண கிரஹணம் (ராவணனைப் பிடித்தல்)
பயங்கரமான ராக்ஷஸன், நர்மதா நதிக் கரையில், அட்டகாசமாக பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்து கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்த சமயம், சற்று தூரத்தில், மாஹிஷ்மதியின் அரசனான அர்ஜூனன், நர்மதா நதியில் பெண்களோடு விளையாடிக் கொண்டிருந்தான். ஆயிரம் பெண் யானைகள் நடுவில், குஞ்சரம் போல நின்றிருந்தான். தன் புஜ பலத்தை பரீக்ஷிப்பது போல திடுமென தன் ஆயிரம் கைகளால், நதியைத் தடுத்து நிறுத்தினான். கார்த்த வீர்யனுடைய கைகளே அணையாக தடுக்க, தடைபட்ட ஜலம், கரைகளை அரித்துக் கொண்டு சுழல்களாக எதிர்த்துக் கொண்டு ஓடலாயிற்று. மீன்களும், முதலைகளும், ஆமைகளும், புல் தரையும், புஷ்பங்களும், அந்த வேகத்தோடு போட்டியிடுவது போல, மழைக்கால வெள்ளம் போல சுழித்துக் கொண்டு ஓடியது. கார்த்த வீர்யார்ஜூனன் அனுப்பியதைப் போல பெருகி வந்த ஜலம் ராவணனுடைய புஷ்பார்ச்சனையை அடித்துச் சென்று விட்டது. தன் பூஜையை பாதியில் நிறுத்தி விட்டு ராவணன், கோபத்துடன் பிரிந்து செல்லும், பிரிய மனைவியைப் போல நர்மதை எதிர் திசையில் பெருகி ஓடுவதைக் கண்டான். மேற்கு திசையில் சாகரத்தை நோக்கி ஓடிய நதி திடுமென கிழக்கில் திரும்பி வேகமாக செல்வதைக் கண்டான். ராவணன் கண்களுக்கு அந்த நதி பெண்ணாகத் தெரிந்தாள். கரையிலிருந்த மந்திரிகளை அழைத்து, திடுமென நதியில் வேகம் வந்த காரணத்தை கண்டு பிடிக்கச் சொன்னான். சுக, சாரண என்ற சகோதரர்கள் இருவரும், உடனே ஆகாய மார்கமாக சென்றனர். மேற்கு நோக்கி பாதி யோனை தூரம் சென்றவர்கள், பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்த புருஷனைக் கண்டனர். பெரிய சால மரம் போன்ற உருவமும், தண்ணீரில் கலைந்த கேசமும், மதுவின் மயக்கம் தெரிய இருந்த கண்களும், மதுவின் பிடியில் உடல் தளர இருந்தவன் தன் கைகளால், நீரின் வேகத்தை தடுத்துப் பிடித்துக் கொண்டு இருப்பதைக் கண்டனர். மலை போன்ற ஆயிரம் பாதங்கள். பூமியில் ஊன்றிக் கொண்டு நின்றன. பல இளம் பெண்கள் அவனுடன் காணப் பட்டனர். மதம் பிடித்த பல ஆயிரம் பெண் யானைகளுக்கு இடையில் ஆண் யானை போலத் தெரிந்தான். இது வரை கண்டிராத இந்த காட்சியைக் கண்டவர்கள், ராவணனிடம் ஓடி வந்து தெரிவித்தனர். பெரிய சால மரம் போல சரீரம் உடையவன், யாரோ ஒருவன், ராக்ஷஸா, நர்மதையை அணை போட்டுத் தடுப்பது போல தன் கைகளாலேயே தடுத்து, பெண்களை ஸ்நானம் செய்வித்து, விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறான். அவன் ஆயிரம் கைகளுக்குள், நிறுத்தப் பட்ட நதி ஜலம், சாகரம் போல சேர்ந்து அலை அடித்துக் கொண்டு திரும்பி பிரவகிக்கிறது. இதைக் கேட்டு ராவணன், அர்ஜூனன் தான் என்று சொல்லியபடி தான் தேடி வந்த அர்ஜூனனுடன் போர் புரியும் உத்தேசத்துடன் கிளம்பி விட்டான். திடுமென காற்று பலமாக வீசி, புழுதியை வாரி இறைத்தது. இரைச்சலுடன் சுழன்று வீசியது. தன் மந்திரிகளுடன் அர்ஜூனன் இருக்கும் இடம் வந்த ராவணன், தேக்கி வைத்த ஜலத்தில் பெண்களுடன் குலாவிக் கொண்டிருந்த அர்ஜூனனைப் பார்த்து, கோபத்தில் சிவந்த விழிகளோடு, அர்ஜூன ராஜாவின் மந்திரிகளைப் பார்த்து கத்தினான். அமாத்யர்களே, சீக்கிரம், உங்கள் அரசனிடம் சொல்லுங்கள். ராவணன் என்ற ராக்ஷஸன், யுத்தம் செய்ய அழைக்கிறான் என்று சொல்லுங்கள். உடனே அந்த மந்திரிகளே, தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வந்து, யுத்தம் செய்ய இதுவா நேரம்? நல்லது ராவண ராஜா, உன் வீரம் நல்லது. பெண்களுடன் இருக்கும் அரசனிடம் உன் பலத்தைக் காட்டப் போகிறாயா? இப்பொழுது அரசனிடம் எப்படி யுத்தம் செய்வாய், பொறு ராவணா, இன்று இரவு கழியட்டும், நாளைக் காலை வந்து போருக்கு அழைத்து, உன் போர் ஆசையைத் தீர்த்துக் கொள். போர் புரிய தினவு எடுக்கும் உன் புஜங்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். நாங்கள் அனைவரும் இருப்போம். எங்களுடன் போர் புரிந்து உன் திறமையை காட்டுவாய். பிறகு அர்ஜூன ராஜாவிடம் செல்வாய் என்றனர். இவர்கள் சொல்லி முடிக்கும் முன்பே ராவணனின் மந்திரிகள் அவர்களை பிடித்து விழுங்க ஆரம்பித்தனர். அச்சமயம் நர்மதா தீரத்தில், கல கலவென்ற சப்தம் உண்டாயிற்று. அர்ஜூன ராஜாவின் காவல் வீர்ர்கள், ஆயுதங்களோடு வந்து சேர்ந்தனர். பெரும் யுத்தமே துவங்கியது. கம்பு, கத்தி, தோமரம், சூலம், த்ரிசூலம், என்று பல வகை ஆயுதங்களும் வந்தன. ஹைஹயாதிபதியின் ஆட்கள் வேகமாக செயல் பட்டனர். சமுத்திரம் ஆரவாரிப்பது போல, யுத்த கோஷம் முழங்கியது. மீன்களும், ஆமைகளும், முதலைகளும் கொண்ட சமுத்திரம் போலவே, ஹைஹயாதிபதியின் வீரர்கள் ஆரவாரித்தனர். ப்ரஹஸ்தன், சுக, சாரண என்ற ராவன மந்திரிகள், கார்த்த வீர்யனுடைய படையை தாக்கினர். விளையாடிக் கொண்டிருந்த அரசனிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டது. வாயில் காப்போன் வந்து சொன்னதும், அர்ஜூனன் சாவகாசமாக, பயப்பட வேண்டாம் என்று பெண்களிடம் சொல்லி விட்டு, நீரை விட்டு வெளியில் வந்தான். கருநீல மலை ஒன்று கங்கையிலிருந்து வெளி வருவது போல வந்தான். கண்களில் க்ரோதம் கொப்பளித்தது. உயர்ந்த பொன் ஆபரணங்களை அணிந்ததே, நெருப்பாக ஜொலிக்க, கதையை சுழற்றியபடி வந்து சேர்ந்தான். சூரியனைக் கண்ட இருட்டு போல ராவணனின் வீர்ர்களை ஓடச் செய்தது. பெரிய கதை, கைகளையே முறித்து விடும் போல., அதை அலட்சியமாக தூக்கிக் கொண்டு கருட வேகத்தில் வந்தவன், வழி மறித்து நின்ற ப்ரஹஸ்தனைக் கண்டான். கையில் முஸலம் என்ற ஆயுதத்துடன் ப்ரஹஸ்தன், சூரியனை விந்திய மலை மறிப்பது போல நின்றான். இரும்பு பூண் போட்ட அந்த ஆயுதத்தை, கார்த்த வீர்யார்ஜூனனை நோக்கி வீசினான். தன்னை நோக்கி வந்த முஸலத்தை, அர்ஜூனன் தன் கதையால் தடுத்து நிறுத்தினான். இதன் பின் ப்ரஹஸ்தனை துரத்திக் கொண்டு ஓடினான். பாதி கைகளால் கதையை சுழற்றியபடி, ப்ரஹஸ்தனை தன் கதையால் ஓங்கி அடித்தான். ப்ரஹஸ்தன் விழுந்தான். அவன் விழுந்ததைக் கண்ட ராக்ஷஸ வீரர்கள், மாரீச, சுக, சாரணர்கள், மகோதர, தூம்ராக்ஷர்கள், ரண பூமியிலிருந்து வெளியேறி சென்று விட்டனர். ராவணன் தானே, அர்ஜூனனைத் தாக்க வந்தான். ஆயிரம் கைகளுடையவனும், இருபது கைகளுடையவனும் மோதிக் கொண்டனர். அரசனுக்கும், ராக்ஷஸனுக்கும் இடையில் கோரமான யுத்தம் நடந்தது. நகரும் மலை போன்ற இருவரும், சாகரம் போன்ற கொந்தளிப்புடன், ஆதித்யன் போன்ற தேஜஸும், நெருப்பே போல தகிக்கும், பலம் மிகுந்த இரு நாகங்கள் போலவும், பெண் யானையை காளைகள் துரத்துவது போலவும், சிங்கம் போல தங்கள் பலத்தில் கர்வமும் உடையவர்களாக, மேகம் போல கத்திக் கொண்டு, ருத்ரனும், காலனும் போல, ராக்ஷஸனும், அரசனும், கோபத்துடன் ஒருவரை ஒருவர் கதையால் அடித்துக் கொண்டனர். வஜ்ரத்தால் அடிபட்ட மலைகள் சிதறுவது போல அடித்துக் கொண்டனர். கதையால் அடிக்கும் பொழுது, கற்கள் மோதிக் கொள்வது போல, நெருப்பும் சப்தமும் எழுந்தது. அர்ஜூனனுடைய கதை ஆகாயத்தில் மின்னல் தெறித்தது போல ஒளி வீசியது. அதே போல ராவணன் அரசனின் மார்பில் அடித்த பொழுது, மின் மினி கூட்டம் பறந்தது. இருவரும் சளைக்கவில்லை. வாட்டமடையவில்லை. பலியும், இந்திரனும் சண்டையிட்டது போல இருந்தது. விருஷபங்கள், இரண்டு கொம்புகளால் மோதிக் கொள்வது போலவும், தந்த நுனிகளால் இரண்டு ஆண் யானைகள் மோதிக் கொள்வது போலவும், பரஸ்பரம் அடித்துக் கொண்டனர். இதன் பின் அர்ஜூனன் தன் சக்தி முழுவதும் பிரயோகித்து, ராவணனை அடிக்கவும், மார்பில் பட்ட அந்த அடி, ஒரு வில் வைக்கும் தூரம், ராவணனை பின் வாங்கச் செய்தது. நிலை குலைந்து நின்ற ராவணனை வேகமாகச் சென்று, கருடன் பாம்பைப் பிடிப்பது போல அர்ஜூன ராஜா பிடித்துக் கொண்டான். ஆயிரம் கைகளாலும் தூக்கி பிடித்து கட்டி வைத்து விட்டான். பலியை நாராயணன் கட்டியது போல ராவணன் கட்டுப் பட்டதையறிந்து, சித்த, சாரண, தேவதைகள், சாது, சாது என்று கோஷித்து அர்ஜூனன் மேல் பூமாரி பொழிந்தனர். புலி தான் அடித்த மிருகத்தை தூக்கிச் செல்வது போலவும், மிருக ராஜா, யானையை இழுத்துச் செல்வது போலவும், ஹைஹய ராஜா உரத்த குரலில் அறிவித்தபடி சென்றான். இதனிடையில் மூர்ச்சை தெளிந்த ப்ரஹஸ்தன் ராவணன் பிடி பட்டதையும் இழுத்துச் செல்லப் படுவதையும் உணர்ந்தான். மற்ற மந்திரிகளும் உடன் வர, பின்னாலேயே சென்றனர். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்கள், விடு, விடு, நில், நில் என்று அலறியபடி, மேலே வீசிய முஸலங்களையும், சூலங்களையும் சற்றும் லட்சியம் செய்யாமல், அர்ஜூன ராஜா சென்று கொண்டேயிருந்தான். தேவ விரோதிகளின் ஆயுதங்களை மட்டும், பத்திரமாக பிடித்து வைத்துக் கொண்டான். பின் அதே ஆயுதங்களை அவர்கள் மேல் படும் படி வீசி ஓடச் செய்தான். பின் தொடர்ந்த ராக்ஷஸர்களை இவ்வாறாக ஆட்டி வைத்தபடி அர்ஜூன ராஜா தன் நகரம் சென்றான். நண்பர்களுடன் வெற்றி வீரனாக வரும் அவனை ஊர் ஜனங்கள் வரவேற்றனர். புரோஹிதர்கள் மந்த்ராக்ஷதைகள் தெளித்து வாழ்த்தினர். பலியை அடக்கி, சஹஸ்ராக்ஷன் இந்திரன் நுழைந்தது போல தன் நகரத்தினுள் பிரவேசித்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராவண கிரஹணம் என்ற முப்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 33 (570) ராவண விமோக்ஷ: (ராவணனை விடுவித்தல்)
வாயுவை பிடிப்பது போல அரிய செயல், ஹைஹய ராஜா ராவணனை சிறை பிடித்து விட்டான் என்றும், தேவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டதை புலஸ்திய முனிவர் கேட்டார். (ராவணன் தந்தை). மகன் மேல் கொண்ட பாசத்தால், மாஹிஷ்மதி அரசனை கண்டு பேச வந்தார். வாயு மார்கமாக, வாயு வேகத்தில் மாஹிஷ்மதி நகரை அடைந்தார். அமராவதி போல மகிழச்சியுடன் புஷ்டியாக ஜனங்கள் நடமாடிக் கொண்டிருந்த நகரில், ப்ரும்மா, அமராவதியில் நுழைவது போல நுழைந்தார். ஆதித்யனே இறங்கி நடந்து வருகிறானோ என்று ஐயம் தோன்றும்படி, தன் தேஜஸால் அனைவரையும் கவர்ந்தார். இன்னார் என்று தெரிந்து கொண்டு வாயில் காப்பவர்கள், அரசனிடம் தெரிவித்தனர். புலஸ்தியர் வந்திருக்கிறார் என்று கேள்விப் பட்டவுடன், ஹைஹயபதி, கூப்பிய கரங்களுடன் எதிர் கொண்டு அழைக்க வந்து விட்டான். அரசனின் புரோஹிதர் அர்க்யம், பாத்யம், இவைகளுடன் அரசனுக்கு முன்னால் சென்றார். இந்திரனுக்கு முன்னால் ப்ருஹஸ்பதி செல்வது போல. பரபரப்புடன் முனிவரை நமஸ்கரித்து, உதய சூரியன் போல தேஜஸJடன் இருந்த அந்த முனிவர் வந்ததே பெரும் பாக்கியம் என்று கருதி வரவேற்றான். அவருக்கு மதுபர்க்கம், பால், பாத்யம், அர்க்யம் இவற்றைக் கொடுத்து, வரவேற்றபடி, முன்னால் சென்றான். நாத் தழ தழக்க அவரிடம், இன்று என் மாஹிஷ்மதி நகரம் பாக்கியம் செய்தது. அமராவதி நகருக்கு இணையாக ஆயிற்று. யாருக்கும் எளிதில் கிடைக்காத தங்கள் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். இன்று என் பிறவி பயன் பெற்றது. நான் செய்த விரதங்கள் அதன் பலனைப் பெற்றன. என் தவம் பலித்தது. தேவர்கள் கூட வணங்க முடியாத தங்கள் பாதங்களில் விழுந்து வணங்கும் பேறு பெற்றேன். இந்த ராஜ்யம், இந்த என் குழந்தைகள், என் மனைவிகள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். என்ன காரியம்,? எங்களுக்கு கட்டளையிடுங்கள். இவ்வாறு பணிவுடன் சொன்ன அரசனைப் பார்த்து, முனிவரும் பரிவுடன் குசலம் விசாரித்தார். அதன் பின் ஹைஹய ராஜனைப் பார்த்து நரேந்திரனே, உன் பலம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று அறிகிறேன். தசக்ரீவனையே கட்டி வைத்து விட்டாயே. எவனிடம், பயந்து, சாகரமும், காற்றும் ஸ்தம்பித்து நிற்குமோ, அந்த ராவணனையே ஜயித்து விட்டாய். என் பேரன் அவன். ரண முடிவில் உன்னிடம் தோற்று சிறைபட்டு இருக்கிறான். என் பேரனின் புகழ் உலகெங்கும் பரவியது. நீயும் கேள்விப் பட்டு இருப்பாய். நான் இன்று யாசிக்கிறேன். என் வார்த்தையை மதித்து தசானனை விடுதலை செய், என்றார். அர்ஜூனன் எந்த வித மறுப்பும் சொல்லாமல், ராக்ஷஸேந்திரனை விடுவித்து விட்டான். அதோடு நிற்காமல், தேவ விரோதி என்றும் பாராட்டாமல், ஆடை ஆபரணங்களும் கொடுத்து, கௌரவித்து, அக்னி முன் இருவரும், ஒருவரையொருவர் இனி துன்புறுத்துவதில்லை என்று ஒப்பந்தத்தோடு நட்பும் செய்து கொண்டனர். ப்ரும்ம புத்திரரான புலஸ்தியரை வணங்கி, வழியனுப்பி விட்டு தன் வீடு சென்றான். புலஸ்தியரும் தன் வழி சென்று விட்டார். அவரும் விட்டுச் சென்றபின், பிரதாபம் நிறைந்த ராவணன், பெரும் வெட்கம் அடைந்தான். புலஸ்தியரும் வந்த காரியம் இவ்வளவே என்பது போல ப்ரும்ம லோகம் சென்று விட்டார். தனித்து விடப்பட்ட ராவணன், கார்த்த வீர்யார்ஜூனனிடம் கட்டுப் பட்டதை எண்ணி எண்ணி மறுகினான். புலஸ்தியர் வந்து விடுவித்தது அவன் தன் மானத்தை பாதித்தது.. ஆயினும் ராவணனை எதிர்க்க யாரும் துணியவில்லை. அவனை அலட்சியம் செய்யவும் துணிவில்லை சில காலம் சென்றபின், கார்த்த வீரயார்ஜூனனுடைய நட்பு கிடைத்து விட்டதே ராவணன் இறுமாப்பை அதிகரித்தது. மறுபடியும் அரசர்களை வாட்ட ஆரம்பித்தான். அகங்காரத்துடன் பூமியை வலம் வந்தான்.
(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராவண விமோக்ஷ: என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.
அத்தியாயம் 34 (571) வாலி ராவண சக்2யம் (வாலியும் ராவணனும் நட்பு கொள்ளுதல்)
அர்ஜூனனிடமிருந்து விடுபட்ட பின் ராவணன் திரும்பவும் உலகைச் சுற்ற ஆரம்பித்தான். இந்த சம்பவத்தால் தோன்றிய வெட்கம் அதிக நாள் நீடிக்கவில்லை. பழையபடி, ராக்ஷஸனோ, மனிதனோ, தன்னை விட பலவானாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன், யாரானாலும், கர்வத்துடன் யுத்தம் செய்ய அழைத்தான். ஒரு சமயம், வாலி ஆண்டு வந்த கிஷ்கிந்தை வந்து சேர்ந்தான். பொன் மாலையணிந்த வாலியை யுத்தத்திற்கு அழைத்தான். வானர மந்திரிகள், தாரன், அவன் தந்தை இருவரும், அவனைப் பார்த்து, ராக்ஷஸேந்திரா, வாலி இதோ வந்து விடுவான். நான்கு சமுத்திரங்க ளிலும் சந்த்யா கால ஜப தபங்களை முடித்துக் கொண்டு, வருவான். தினசரி வழக்கம் இது. அவனையன்றி வேறு யார் உன்னுடன் போர் செய்ய முடியும்? ஒரு முஹுர்த்தம் நில். இதோ இருக்கும் எலும்புக் குவியலைப் பார். சங்கு போல் வெளுத்துக் கிடக்கின்றன. தானாக வந்து போருக்கு அழைத்து வானர ராஜாவின் கையால் மாண்டவர்கள் இவர்கள். வெறும் எலும்புக் கூடுகளாக கிடக்கிறார்கள். நீ அம்ருதம் உண்டிருந்தால், வானர ராஜனோடு மோத தயாராகிக் கொள். இல்லையென்றால், அவ்வளவு தான் ஆயுள், வானர ராஜன் கையால் மரணம் விதித்திருக்கிறது என்று ஒத்துக் கொள். விஸ்ரவஸின் மகனே, உலகில் ஒரு அதிசயம் பார். வானர ராஜனைக் காணும் வரை உன் உயிர் உன் உடலில் இருக்கும். அல்லது சீக்கிரமே மரணத்தை தழுவ ஆசையானால் தெற்கு சமுத்திரம் போய் பார். வாலி அங்கு இருப்பான். பூமியிலிருந்து வெளி வரும் அக்னி ஜ்வாலை போல நிற்பான். தாரன் இவ்வாறு எச்சரித்ததை அலட்சியப் படுத்தி விட்டு ராவணன், தக்ஷிண சாகரம் நோக்கித் தன் புஷ்பகத்தில் சென்றான். பொன் மலை ஒன்று நிமிர்ந்து நிற்பது போலவும், இளம் சூரியன் போன்ற முகமும், சந்தயா கால ஜப தபங்களில் மூழ்கி இருப்பதையும் கண்டான் கரு மேக நிறத்தினன் ராவணன். வாலியை பிடித்து விடும் எண்ணத்துடன், புஷ்பகத்திலிருந்து இறங்கி, சத்தமில்லாமல் வாலியை நெருங்கினான். யதேச்சையாகத் திரும்பிய வாலியின் கண்களில் ராவணன் பட்டான். அவனுடைய கெட்ட எண்ணத்தை தெரிந்து கொண்டாலும், சற்றும் பதட்டம் அடையவில்லை. குறு முயலை நோக்கி சிங்கம், போலவும், பாம்பை பார்த்து கருடன் போலவும், ராவணனை ஒரு பொருட்டாகவே வாலி நினைக்கவில்லை. பாப புத்தியுடன் நெருங்கிய ராவணனை தன் கட்கத்தில் இடுக்கிக் கொண்டு, அதே நிலையில் மூன்று சமுத்திரங்களிலும், சலனமில்லாமல் ஜப தபங்களை முடித்துக் கொண்டு, திரும்பினான். கை கால்களை உதைத்துக் கொண்டு, கருடன் வாயிலிருந்த தொங்கும் நாகம் போல, ராவணனை பலரும் கண்டனர். அப்படி காண்பார்கள் என்பதை வாலியும் உறுதி செய்து கொண்டான். மௌனமாக, முறையாக எதையும் விடாமல் தன் ஜபங்களை, மந்திரங்களை சொல்லி முடித்துக் கொண்டு கிளம்பினான். இருவரும் தங்கள் புஜ பலத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். ஓருவரையொருவர் எப்படி வீழ்த்துவது என்று மனதினுள் திட்டமிட்டுக் கொண்டு சரியான நேரத்திற்காக காத்திருந்தனர். அதனால் தான், தன் பின்னால் மெதுவாக அடியெடுத்து வைத்து ராவணன் வருகிறான் என்பதை உணர்ந்து கொண்ட வாலி, வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருப்பவனைப் போல நின்று கொண்டு அருகில் வந்தவனை கோழியை அமுக்குவது போல அமுக்கிப் பிடித்து விட்டான். ராவணனின் மந்திரிகள், ஆகாயத்தில் மேகத்தை தள்ளிக் கொண்டு போவதைப் போல வாலி, ராவணனை தள்ளிக் கொண்டு போவதைப் பார்த்து பின் தொடர்ந்தனர். அவர்கள் துரத்தவும் வாலி மேலும் உற்சாகமாக வானத்தில் சுற்றலானான். மேகங்களுக்கிடையில் சந்திரன் போல விளையாட்டாகச் சென்றான். ராக்ஷஸனின் மந்திரிகள் தவித்தனர். அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஒதுங்கி நின்றனர். உயிர் வாழ விரும்புபவர் யாரானாலும் வாலியின் வழியில் நிற்கக் கூடாது என்பதைப் புரிந்து கொண்டு விட்டவர்கள் போல. வாலியோ, இன்னும் அதிக உற்சாகத்தோடு, ஒவ்வொரு சமுத்திரத்திலும் ஸ்நானம், ஜபம் இவைகளை விரிவாக செய்து கொண்டு, கட்கத்தில் இடுக்கியபடியே வெகு தூரம் சமுத்திரத்தின் மேல் பறந்து சென்று கிஷ்கிந்தை திரும்பினான். களைத்துப் போனவனாக, கிஷ்கிந்தையின் உபவனத்தில் அமர்ந்தான். கட்கத்திலிருந்து ராவணனை விடுவித்தான். எங்கே இருக்கிறாய் என்று சிரித்துக் கொண்டே விசாரித்தான். ராவணன் வியப்போடு, சிரமப்பட்டு கண்களைத் திறந்தவன், வாலியைப் பார்த்து, வானரேந்திரா, உன்னுடன் யுத்தம் செய்யத் தான் வந்தேன். அதையும் நீ செயலிலேயே காட்டி விட்டாய். அஹோ பலம், அஹோ வீர்யம். உன் காம்பீர்யம் தான் என்ன? என்னை ஒரு பசு போல கட்டிப் போட்டு உலகெல்லாம் சுற்றி, நான்கு சமுத்திரத்தையும் வலம் வந்து விட்டாய். சற்றும் சளைக்காமல், என்னையும் தூக்கிக் கொண்டு, வேறு யார் தான் இது போல சாதிக்க முடியும்? மூன்று உலகங்களிலும் இது போன்ற கதி மூன்று பேருக்குத் தான் உண்டு. மனம், காற்று, சுபர்ணன் என்ற கருடன். இப்பொழுது உனக்கும் அந்த வேகம் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன். அதனால் ஹரி புங்கவா, உன்னுடன் அக்னி சாக்ஷியாக நட்பு கொள்ள விரும்புகிறேன். என் மனைவிகள், மக்கள், நகரம், ராஜ்யம், போகங்கள், ஆடை ஆபரணங்கள், எல்லாமே நம் இருவருக்குள்ளும் பிரிவு இல்லாமல் ஒன்றாக இருக்கும். ஹரி ராஜனே, நாம் இனி நண்பர்களாக இருப்போம் என்று சொல்லி, அக்னியை மூட்டி, ஹரி ராக்ஷஸர்கள், சகோதரர்கள் போல அணைத்துக் கொண்டு, கைகளை நீட்டிப் பிடித்துக் கொண்டு, நட்புடன் கிஷ்கிந்தையில் சந்தோஷமாக சுற்றினர். மகிழச்சியுடன் இரண்டு சிங்கங்கள் போல உலவினர். சுக்ரீவன் போல சகோதரனாக ஒரு மாதம் வசித்த ராவணன், மந்திரிகள் வந்து அழைக்கவும், அவர்களுடன் தன் நகரம் சென்றான். இது தான் வாலியும் ராவணனும் நண்பர்களான கதை. அந்த வாலியைத் தான், நீ நெருப்பில் விழும் விட்டில் பூச்சியைப் போல வதைத்தாய்.
(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில்,வாலி ராவண சக்2யம் என்ற முப்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.
அத்தியாயம் 35 (572).. ஹனுமதுத்பத்தி (ஹனுமான் பிறப்பு)
தென் திசையில் தங்கி விட்ட அகஸ்திய முனிவரைப் பார்த்து ராமன் மேலும் வினவினான். வாலி, ராவணன் இருவருமே நல்ல பலசாலிகள் தான். இருந்தாலும் ஹனுமானுக்கு சமமாக மாட்டார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. சௌர்யம், தாக்ஷிண்யம், பலம், தைரியம், அறிவு, நியாய உணர்வு, தீர்ப்பு, விக்ரமம், பிரபாவம் இவையனைத்தும் ஹனுமானிடத்தில் குடி கொண்டுள்ளன. சாகரத்தைக் கண்டவுடனேயே வாடி வருந்திய வானர வீரர்களை சமாதானப் படுத்தி, நூறு யோசனை தூரம் சமுத்திரத்தைத் தாண்டிச் சென்றவன். ராவணன் ஊரான லங்கையை தாக்கி, ராவணன் அந்த::புரத்தில் நுழைந்து, சீதையைக் கண்டதோடு அவளோடு பேசி, ஆறுதலும் சொல்லி இருக்கிறான். சேனைத் தலைவர்கள், மந்திரி குமாரர்கள், கிங்கரர்கள், ராவணன் குமாரர்கள் என்று வந்த அனைவரையும் ஒருவனாக எதிர்த்து போரிட்டு ஜயித்திருக்கிறான். பந்தத்திலிருந்து விடுபட்டு, தசானனை பயமுறுத்தி, லங்கையை கொளுத்தி விட்டான். காலனோ, இந்திரனோ, விஷ்ணுவோ, குபேரனோ இது போல யுத்தம் செய்து, வேகமாக செயல் பட்டதாக கேட்டதேயில்லை. இந்த ஹனுமானுடைய புஜ பலத்தால், லங்கையும், சீதையும், லக்ஷ்மணனும், யுத்தத்தில் வெற்றியும், எனக்கு கிடைத்தது. ராஜ்யமும், பந்துக்களும், ஹனுமானின் உதவியால் நான் பெற்றேன். வானர ராஜாவான சுக்ரீவனுக்கு ஹனுமான் சகாவாக, மந்திரியாக இல்லாது போயிருந்தால், வேறு யார் தான், ஜானகியின் நிலைமையைக் கண்டு பிடித்திருக்க முடியும்? ஏன், சுக்ரீவனுடன் வாலி விரோதம் பாராட்டிய போது, நண்பனாக, வாலியை அடக்கி சுக்ரீவனுக்கு உதவவில்லை? அந்த நேரத்தில் தன் பலம் அவனுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில், வானர ராஜன், தன் உயிரைக் காத்துக் கொள்ள ஓடி ஒளிந்து கொண்டிருந்தான். கூடவே இருந்தும், ஹனுமான் அவன் கஷ்டத்தை நீக்க வாலியை வதைக்கவில்லை? அமரர் பூஜிக்கும் பெருமை பெற்ற மகாமுனியே, ஹனுமானின் இந்த செயலுக்கு காரணம் என்ன? விஸ்தாரமாக சொல்லுங்கள். இவ்வாறு ராமர் வேண்டிக் கொண்டதும், காரண காரியங்களை அறிந்த முனிவர், ஹனுமான் முன்னிலையிலேயே விவரமாக சொல்ல ஆரம்பித்தார். ரகுஸ்ரேஷ்டனே, நீ சொல்வது சரியே. ஹனுமான் விஷயத்தில், அவனுக்கு சமமான பலசாலியோ, அறிவாளியோ யாரும் இல்லை. முன் ஒரு சமயம், இவனுக்கு ஒரு முனிவர் சாபம் இட்டார். தவிர்க்க முடியாதபடி அந்த சாபம் அமைந்து விட்டது. அதன் காரணமாகத் தான் தன் பலத்தை தானே உணராதவனாக ஆனான். மகா பலவானே, ராமா, குழந்தை பருவத்திலேயே இவன் ஒரு காரியம் செய்தான். அதை வர்ணிக்க இயலாது. கேள். சூரியனிடம் வரம் பெற்று சுவர்ணமாக விளங்கும், சுமேரு என்ற மலை. அங்கு ராஜ்ய பாலனம் செய்து கொண்டிருந்த கேஸரி இவன் தந்தை. அஞ்சனா அவன் தாய். அவளிடம் வாயு தன் மகனை பிறக்கச் செய்திருந்தான். அவள் ஒரு நாள், பழங்கள் சேகரிக்க வெளியில் சென்றிருந்த சமயம், தாயாரைக் காணாமல், பசியும் வாட்ட, பெரிதாக அழுதான்.சரவண பொய்கையில், சரவணன் அழுதது போல இருந்தது. பழம் வேண்டும் என்ற எண்ணத்துடன் அண்ணாந்து பார்த்த சிசுவிற்கு சூரியனே பழம் போல காட்சியளித்தான். தானே இளம் சூரியன் உருவெடுத்து வந்தது போலிருந்த குழந்தை, ஆகாய சூரியனைப் பார்த்து, அதை பிடிக்க ஆகாய மார்கமாக தாவினான். இளம் கன்று பயமறியாது என்பதற்கிணங்க ஆகாயத்தில் தாவிய குழந்தையை தேவதானவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தபடி நின்றனர். யார் இது? வாயுவா? கருடனா? மனமே தானா? என்று அதிசயித்தனர். வாயுபுத்திரன், ஆகாயத்தில் சஞ்சரிக்கிறான். சிசுவாக இருக்கும் இந்த சமயத்திலேயே இவனுடைய விக்கிரமம் இப்படி இருக்குமானால், வளர்ந்து பெரியவன் ஆகும் போது எவ்வளவு பலவானாக ஆவான் என்று அதிசயித்து பேசிக்கொண்டனர். மகனை அணைத்தபடி வாயு குளுமையாக வீசிக் கொண்டே சென்றான். பல யோஜனை தூரம் ஆகாயத்தில் இப்படி சென்ற பின்னும், அந்த சிசுவுக்கு திருப்தி ஏற்படவில்லை. குழந்தைத்தனமான குதூகலம், தந்தையின் உதவியும் சேர, ஆகாயத்தில் வெகு நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்தான். குழந்தை என்று சூரியனும் தகிக்காமல் விட்டான். அதே தினம், ராகுவும் சூரியனைப் பிடிக்க துரத்திக் கொண்டு வந்தான். வழியில் எதிர்பட்ட குழந்தை மேல் இடிக்கவும், பயந்தான். நேரே இந்திர பவனம் போய் தேவேந்திரனைப் பார்த்து எரிச்சலோடு இரைந்தான். தேவேந்திரா, உனக்குப் பசித்தால், சூரிய, சந்திரர்களை விழுங்கு என்று வரம் தந்து விட்டு, இப்பொழுது மற்றவர்க்கு எப்படி கொடுப்பாய். விருத்திரனைக் கொன்றவன் என்று புகழ் பெற்றவன் வாக்குத் தவறலாமா? இன்று எனக்கு விதிக்கப் பட்ட பருவ காலம். சூரியனைப் பிடிக்க வந்தேன். இன்னொரு ராகு வந்து சூரியனை பிடித்துக் கொண்டு விட்டது. இதைக் கேட்டு பரபரப்படைந்த வாஸவன், தன் ஆசனத்தை விட்டு துள்ளி குதித்து எழுந்தான். தன் பொன் மாலையை அணிந்து கொண்டு ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்டு, ராகு முன் செல்ல, நான்கு தந்தங்களும், கைலாஸ சிகரம் போல பெருத்ததுமான அந்த யானை மதஜலம் பெருக ஓட்டம் பிடித்தது. சுவர்ண மணிகள் அட்டகாசமாக ஒலித்தன. சூரியனும் ஹனுமானும் இருந்த இடம் வந்து சேர்ந்தனர். முன்னால் வந்த ராகுவைக் கண்டதும், என்ன நினைத்தோ, ஹனுமான், ராகுவைத் துரத்த ஆரம்பித்தான். சிம்ஹிகா மகனான ராகு, முகம் மட்டுமே உடையவன், வேறு திக்கில் பார்த்து பரபரப்புடன் இந்திரா, இந்திரா, என்று அழைத்தான். ஏற்கனவே தெளிவில்லாத குரல், பயந்து அலறும் பொழுது, இன்னும் குழப்பமாக ஒலிக்க, இந்திரன் ராகுவிடம், பயப்படாதே, நான் இந்த குழந்தையை கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லி திரும்பினான். குழந்தையின் கவனம், இப்பொழுது, ஐராவதத்தின் மேல் சென்றது. குதாகலத்துடன், அதை நோக்கி விரைந்து சென்றது., ஐராவதத்தை துரத்திக் கொண்டு சென்ற சமயம், இந்திரனும், அக்னியும், சேர்ந்து நின்றது போல பிரகாசமாக இருந்தது. இவனை தடுத்தே ஆக வேண்டுமே என்ற கவலையுடன், கோபத்தை அடக்கி, தன் கை குலிசத்தால், (ஆயுதத்தால்) மெதுவாக தட்டினான். இந்திர வஜ்ரத்தால் அடி பட்டதால், தடால் என்று கீழே விழுந்தான் ஹனுமான். விழுந்த இடம், ஒரு பெரிய மலை. அதனால், தாடை முறிந்தது. இந்திரன் வஜ்ரத்தால் அடித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த வாயு கோபத்துடன் எச்சரித்தான். நிலை குலைந்து விழுந்த தன் குழந்தையை எடுத்துக் கொண்டு, மலை குகைக்குள் சென்று விட்டான். வாயுவின் இயக்கம் இன்றி உலகமே ஸ்தம்பித்து நின்றது. உயிரினங்கள் அனைத்தும் தவித்தன. மூச்சு விடக் கூட முடியாமல் அலறினர். மூட்டுகளைத் திருப்ப முடியாமல் கட்டைகளாக ஆயினர். வாயுவின் கோபத்தால், மூவுலகும், அழிவின் எல்லையில் நின்றது. ஸ்வாத்யாயமோ, வஷட்காரமோ, தர்மமோ, எதுவும் இல்லை. தேவ, அசுர, கந்தர்வர்கள், பிரஜைகள், மனிதர்கள், எல்லோருமாக ப்ரும்மாவிடம் ஓடினர். இந்த கஷ்டத்திலிருந்து விடு பட வேண்டுமே. வயிறு ஊதி ஒவ்வொருவரும், படாத பாடு பட்டனர். பகவானே, நீங்கள் தானே நான்கு விதமாக ஸ்ருஷ்டி செய்தீர்கள். உங்கள் ஆக்ஞையால் வாயு எங்களுக்கு பிராணனைத் தந்திருக்கிறான். எங்கள் உயிருக்கு உத்திரவாதமாக இருந்தவன், இப்பொழுது துன்புறுத்துகிறானே, அந்த:புரத்தில், ஸ்திரீகளை அடைப்பது போல அடைத்து வைத்திருக்கிறானே. உங்களை சரணடைகிறோம், எங்கள் கஷ்டம் உங்களுக்குத் தெரியவில்லையா, இதைக் கேட்டு பிரஜைகளின் தலைவனான ப்ரும்மா – காரணம் என்னவென்றால் – என்று ஆரம்பித்தார். என்ன காரணத்திற்காக வாயு கோபம் கொண்டு கத்துகிறான், வருந்துகிறான் கேளுங்கள். இவனுடைய அம்சமாக பிறந்த பிள்ளையை இன்று இந்திரன் அடித்து விட்டான். ராகுவின் முறையீட்டைக் கேட்டு அவனுக்கு உதவி செய்வதாக எண்ணி குழந்தையை அடித்து விட்டான். அதனால் தான் வாயுவுக்கு கோபம். அசரீரியாக நின்று, சரீரங்களில் பிராணனை நிலை நிறுத்துபவன் இவன். வாயு இல்லையெனில், சரீரம் மரக்கட்டை தான். வாயு தான் பிராணன். வாயு தான் சுகம். வாயுவினால் தான் இந்த உலகம் இயங்குகிறது. வாயு நம்மை உதறி விட்டால், நமக்கு வாழ்வே இல்லை. இன்று நாம் வாயுவின் சக்தியை ப்ரத்யக்ஷமாக கண்டு கொண்டோம். வாருங்கள், நாம் எல்லோருமாக வாயு கோபித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் இடம் செல்வோம். தேவர்களே, கவலை வேண்டாம். நாம் நாசம் அடைய மாட்டோம். இதன் பின் தேவ, கந்தர்வ, மற்றும் பிரஜைகளுடன், ப்ரும்மா, மாருதன் இருந்த இடம் வந்து சேர்ந்தார். அடிபட்ட மகனை மடியில் போட்டு சமாதானம் செய்து கொண்டிருந்த வாயுவைக் கண்டனர். சூரியனோ, உருக்கி எடுத்த தங்கமோ எனும்படி பிரகாசமாக இருந்த வாயு புத்திரனைக் கண்டு ப்ரும்மா, கருணையுடன் பார்த்தார். பிரஜைகளின் நன்மைக்கானதை செய்யலானார்
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஹனுமதுத்பத்தி என்ற முப்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.
அத்தியாயம் 36 (573) ஹனுமத்வரப்ராப்தியாதி (ஹனுமான் பெற்ற வரங்கள்).
தன் புத்திரன் அடி பட்டதால் மிகவும் வருத்தத்துடன் இருந்த வாயு பகவான், தன் குழந்தையை ப்ரும்மாவின் எதிரில் கொண்டு வந்து போட்டான். குன்டலங்கள் அசைய, தலையில் சூடிய பூமாலையுடன், துவண்டு கிடந்த குழந்தையை ப்ரும்மா தொட்டார். அவர் கரம் பட்ட மாத்திரத்தில், வாடிய பயிர் நீர் கிடைக்கப் பெற்றதும் நிமிர்ந்து நிற்பது போல வாயு புத்திரன் எழுந்து விளையாட ஆரம்பித்து விட்டான். ஸ்தம்பித்துக் கிடந்த உயிரினங்கள் பிராணனைப் பெற்று நடமாட ஆரம்பித்து விட்டன. பழைய படி இயக்கம் பெற்ற பிரஜைகள், மகிழ்ச்சியுடன் சஞ்சரித்தனர். தாமரைக் குளங்களில் பனியின் தாக்கத்தால் வாடிக் கிடந்தவை, பனி நீங்கியபின் மலர்ந்து காட்சி தருவது போல ஆயினர். ப்ரும்மாவும், வாயுவுக்கு சாதகமாக மற்ற தேவர்களுடன் பேசினார். ஹே, மகேந்திரா, ஈச, வருண, ப்ரஜேஸ்வர, தனேஸ்வரன் முதலானவர்களே, நான் சொல்லப் போவதைக் கேளுங்கள். இதில் உங்கள் நன்மையும் அடங்கியுள்ளது. இந்த சிசு உலகில் பல காரியங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதனால், உங்களால் முடிந்தவரை, வரங்கள் தந்து இவனது சக்தியை பெருக்குங்கள். உடனே மகேந்திரன், தன் கழுத்து மாலையை எடுத்து அணிவித்து, என் கையால் அடி பட்டதால், தாடை நீண்டது. அதனால், நீண்ட தாடையுடையவன் என்று பொருள்பட ஹனுமான் என்றே அழைக்கப்படுவான். நான் இவனுக்கு ஒரு அத்புதமான வரம் தருகிறேன். இன்றிலிருந்து, எந்த ஆயுதத்தாலும், என் வஜ்ரத்தாலும் கூட அடிபட்டு துன்புற மாட்டான். சூரிய பகவான் இவனுக்கு மார்க்கண்டன், மரணம் இல்லாத சிரஞ்சீவியாக வரம் அளித்தார். என் தேஜஸில், நூற்றில் ஒரு பங்கு தேஜஸை இவனுக்குத் தருகிறேன். இதனால் இவன் சாஸ்திரங்களைக் கற்கும் சக்தியைப் பெறுவான். எல்லா சாஸ்திர ஞானமும் இவனுக்கு கிடைக்க அருள் செய்கிறேன். அதனால், நல்ல வாக்கு வன்மை உடையவனாக ஆவான். சாஸ்திர ஞானத்தில், இவனுக்கு இணையாக யாரும் ஆக மாட்டார்கள். வருணன் தன் பங்குக்கு வரம் தந்தான். இவனுக்கு மழையினால், வெள்ளத்தினால் மரணம் வராது என்று உறுதியாக கூறினான். இருபதினாயிரம் வருஷம் ஆனாலும், என் பாசத்தாலோ, நீராலோ, தண்டத்தாலோ மரணம் வராது. யமனும், ஆரோக்யத்தை வரமாக அளித்தான். இதோ என் க3தை4, இதை மனமுவந்து தருகிறேன். யுத்தத்தில், இவன் சிரமப்படாமல் இருக்க வரம் தருகிறேன் என்று ஒரு கண் மஞ்சளாக உடைய குபேரன் வரம் தந்தான். சங்கர பகவான், என் ஆயுதங்களால், ஒரு பொழுதும் இவனுக்கு மரணம் வராது என்று வரம் அளித்தார். ப்ரும்மா, ப்ரும்மதண்டத்தாலோ, ப்ரும்மாஸ்திரத்தாலோ இவனுக்கு எந்த பயமும் இருக்காது என்று வரம் தந்தார். பால சூரியன் போல நின்ற சிசுவைப் பார்த்து விஸ்வகர்மாவும், என்னால் ஸ்ருஷ்டிக்கப் பட்ட எந்த அஸ்திரமும், இவனை எதுவும் செய்யாது. சிரஞ்சீவியாக இரு என்று ஆசிர்வதித்தார். தேவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில், வரங்கள் தந்த பின், ப்ரும்மா வாயுதேவனைப் பாரத்து, மாருதா, உன் மகன், தன்னை எதிர்ப்பவர்களுக்கு பயங்கரமாகவும், நம்பியவர்களுக்கு அபயம் தருபவனாகவும் சிரஞ்சீவியாக இருப்பான், யாராலும் ஜயிக்க முடியாத அபரிமிதமான பலம் உடையவனாகவும் இருப்பான் என்றார். விருப்பம் போல உருவம் எடுத்துக் கொள்ளவும், விரும்பிய இடம் செல்லவும், சஞ்சரிக்கவும், இவனால் முடியும். இவன் போகும் வழியில், யாரும் தடை செய்ய முடியாது. அத்புதமான செயல்களை செய்து, நல்ல கீர்த்தியை அடைவான். ராவணனை அழிக்க கருவியாக இருப்பான். ராமனுக்கு உதவியாக பல காரியங்களை சாதிப்பான். இவ்வாறு சொல்லி விட்டு ப்ரும்மா, மற்ற தேவர்கள் புடை சூழ திரும்பிச் சென்றார். கந்தவாகனன் ( மணத்தை கொண்டு செல்பவன்) என்று பெயர் பெற்ற வாயுவும், மகனுடன் தன் இருப்பிடம் சென்றான். அஞ்சனையிடம் விவரங்களைச் சொல்லி குழந்தையை ஒப்படைத்து விட்டுச் சென்றான். சமுத்திரம் நிரப்பப் பட்டது போல வரங்கள் இவனை மூழ்கடித்தாலும், இவன் தன் எல்லையை மீறவில்லை. குருவிடம், ஆசிரமத்து ரிஷிகளிடம், பயமின்றி கல்வி கற்றான். கரண்டிகள், பாத்திரங்கள், வல்கலை, மான் தோல், மற்றும் கைக்குக் கிடைத்ததை வீசி உடைத்து உருத் தெரியாமல் செய்வான். எந்த விதமான் ஆயுதத்தாலும் இவனுக்கு பயம் இல்லை என்று பகவான் சம்பு வரம் தந்திருக்கிறாரே என்று ரிஷிகள் பொறுத்துக் கொண்டார்கள். ஓரு சமயம், கேஸரி அதட்டியும், கேட்காமல் துஷ்டத்தனம் செய்த இந்த குழந்தையை ப்ருகு, ஆங்கிரஸ் இருவரும், கோபத்தை வெளிக் காட்டாமல், சற்று அடங்கி இருக்க சபித்து விட்டனர். எங்களுக்கு இடையூறு செய்யாதே. வெகு நாள் நீ உன் பலத்தை அறிந்து கொள்ளாமல் போவாய் என்றனர். உன் கீர்த்தியை உனக்கு மற்றவர் நினைவு படுத்தினால் தான் தெரிந்து கொள்வாய் உன் சக்தியை உணருவாய் என்றனர். தேஜஸ் நிறைந்த மகரிஷிகளின் வாக்கு இவனது தேஜஸை மட்டுப் படுத்தியது. இதன் பின் ஹனுமான், சாதுவாக. அடக்கம் மிகுந்தவனாக சஞ்சரித்தான். அந்த சமயம், வாலி சுக்ரீவர்களின் தந்தை ருக்ஷரஜஸ், வானர அரசனாக இருந்தான். நல்ல தேஜஸோடு நீண்ட காலம் அரசனாக இருந்த பின் கால கதியடைந்தான். மந்திரங்கள் அறிந்த மந்திரிகள், வாலியை அரசனாகவும், சுக்ரீவனை வாலி ஸ்தானத்தில், யுவராஜாவாகவும் நியமித்தனர். ஹனுமானுக்கு பால்யத்திலிருந்தே, சுக்ரீவனுடன் பிரிக்க முடியாத நட்பு தோன்றி வளர்ந்தது. காற்றும் நெருப்பும் போல இருவரும் இணை பிரியாது இருந்தனர். தன் அதீதமான சக்தியை உணராமல் சுக்ரீவனுக்கு சமமாகவே இருந்தான். வாலி. சுக்ரீவர்களிடையே விரோதம் முற்றி, வாலி விரட்டி சுக்ரீவன் கலங்கிய போது கூட தன் அமானுஷ்யமான சக்தியை வெளியிடவில்லை. ரிஷிகளின் சாபத்தால், தன் இயல்பான சக்தியையும், பலத்தையும் உணராதவனாக நடமாடிக் கொண்டிருந்ததால், சுக்ரீவனுடன் கூடவே இருந்தானே தவிர, உதவி எதுவும் செய்யத் தெரியவில்லை. கூண்டிலடைப்பட்ட சிங்கம் போல இவன் ஆற்றல் வெளிப் படாமலே மறைந்து கிடந்தது. பார்க்கப் போனால், இந்த ஹனுமானைப் போல காம்பீர்யம், சாதுர்யம், வீர்யம், தைர்யம், பராக்ரமம், உத்ஸாகம், அதி பிரதாபம், சௌசீல்யம், மாதுர்யம், நியாய அநியாயங்கள் இவற்றை அறிந்தவர்கள் உலகில், வேறு யார் உண்டு? சூரியனிடமிருந்து இலக்கணம் கற்றவன். அதற்காக, பெரிய கிரந்தத்தை கையில் வைத்தபடி, சூரியன் உதயம் ஆனதிலிருந்து, அஸ்தமனம் வரை, பின் தொடர்ந்து சென்று அவர் சொன்னதை கிரகித்துக் கொண்டான். சூத்திரங்களையும், வ்ருத்தி, அர்த்த பதம், மகா அர்த்தம், சங்க்ரஹம் (இலக்கண பரிபாஷைகள்) இவைகளை சந்தேகம் இன்றி கற்றுத் தேர்ந்தான். சாஸ்திர ஞானத்தில் இவனுக்கு சமமானவர்கள் யாருமே இல்லை. பொது அறிவிலும், வேத பாராயணம் செய்வதிலும், இவனுக்கு சமமானவர்கள் யாரும் இல்லை. நவ வ்யாகரன பண்டிதன் என்று புகழப் பெற்றான். தவம் செய்து, குருவை வணங்கி மரியாதைகள் செய்தும், பல சாதனைகள் கைவரப் பெற்றான். சமுத்திரத்தின் ஆழத்தை அளந்து சொல்வான், நெருப்பில் நுழைந்து அதன் வெப்பத்தை கண்டு சொல்வான் என்று ப்ரும்மா வாழ்த்தினார். யுக முடிவில் அந்தகன் போல செயல் படுவான், அச்சமயம், இவன் எதிரில் யாராலும் நிற்கக் கூட முடியாது. இவனைப் போலவே மற்றும் பலர் தோன்றுவார்கள். பெருத்த உடலுடைய வானரங்கள். சுக்ரீவன், மைந்தன், த்விவிதன், நீலன், தாரன், அநிலன் முதலானவர்கள். ராமா, உனக்கு சகாயம் செய்யவே ஸ்ருஷ்டிக்கப் பட்டார்கள். நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி விட்டேன். ஹானுமானின் பால லீலைகள் இவை. இவ்வளவு நேரம், அகஸ்தியர் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்த ராமனும், சௌமித்திரியும், மற்ற வானரங்களும், ராஷஸர்களும் ஆச்சர்யம் அடைந்தனர். பின் அகஸ்தியர், ராமா, இது வரை உங்களுடன் பேசியதும், பார்த்ததும் திருப்தியாக இருந்தது. நாங்கள் கிளம்புகிறோம் என்று எழுந்தார். உக்ரமான தேஜஸ் உடைய முனிவரை வணங்கி, ராமர் இன்று என் வாழ்வின் பலன் கிடைத்தது. தேவதைகளும், பித்ருக்களும் எனக்கு அனுக்ரஹம் செய்துள்ளனர். உங்கள் தரிசனம் கிடைத்ததே என் பாக்கியம். என் உற்றார், சுற்றத்தார், தங்கள் வருகையால், பலன் அடைந்தனர். சந்தோஷமாக இருக்கிறார்கள். ஓரு விண்ணப்பம். ராஜ்ய காரியமாக வந்தவன் உங்களை தரிசித்தேன். கிராமங்களில், சுற்று வட்டாரங்க ளில் வசதிகள் செய்ய வந்தேன். இப்பொழுது உங்கள் உதவியோடு யாக காரியங்களை செய்ய விரும்புகிறேன். சிஷ்யர்கள் மற்றும் உங்களுடன் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு, வந்து, தங்கள் தலைமையில் யாகம் செய்ய எனக்கு அருள வேண்டும். இந்த அனுக்ரஹம் செய்யுங்கள். என் குறைகள் தீர நான் இந்த யாகத்தை பூரணமாக செய்து முடிக்க வேண்டும். என் மூதாதையர்களும் மகிழ்வார்கள். எனவே அடிக்கடி சிஷ்யர்கள் புடை சூழ வாருங்கள். அகஸ்தியரும், மற்ற முனிவர்களும், அப்படியே ஆகட்டும், என்று சொல்லி கிளம்பினார்கள். ரிஷிகள் அனைவரும் சென்ற பின், ராகவனும், சூரியாஸ்தமனம் ஆகவே, கரடிகளையும், வானரங்களையும் அனுப்பி விட்டு, சந்த்யா கால ஜப தபங்களை முடித்துக் கொண்டு, இரவு வரவும், அந்த::புரம் சென்றான்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஹனுமத் வர ப்ராப்த்தி என்ற முப்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.
அத்தியாயம் 37 (574) பௌரோபஸ்தானம் (பிரஜைகளை சந்திப்பது)
காகுஸ்தன் முடிசூட்டப்பட்ட பின். ஜனங்கள், அளவில்லா மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும், அந்த இரவைக் கழித்தனர். விடிந்தது. காலையில் அரசனை துயிலெழுப்ப வரும் பாடகர்கள், இனிமையாக காலை வணக்கம் பாடியபடி அரச மாளிகை வந்து சேர்ந்தனர். நல்ல பயிற்சியும் வளமான குரலும் உடையவர்கள். அரசனை மகிழ்விக்க வேண்டும் என்று உண்மையான ஆவலுடன் பாடினர். வீரனே, சௌம்யனே, துயிலெழுவாய், நீ உறங்கும் பொழுது, உலகமே உறங்குகிறது. நராதிபனே, உன் விக்ரமம் விஷ்ணுவிற்கு சமமானது. அஸ்வினீ குமாரர்கள் போல அழகிய ரூபம் உடையவன் நீ. புத்தியில் ப்ருஹஸ்பதிக்கு சமமானவன். ப்ரஜாபதிக்கு சமமான தேஜஸ் உடையவன். பொறுமையில் பூமிக்கு சமமானவன். பாஸ்கரனுக்கு இணையானவன். வாயு பகவானுக்கு சமமான வேகம் உடையவன். சமுத்திரம் போன்று கம்பீரமானவன். அசைக்க முடியாத ஸ்தா2னு (சிவ பெருமான்), போல திட சித்தம் உடையவன் நீ. சௌம்யமான குணத்தில், சந்திரன் போல விளங்குகிறாய். இது போன்ற அரசர்கள் இதற்கு முன் தோன்றியதில்லை, இனியும் தோன்றப் போவதில்லை. தர்மமே கொள்கையாக, பிரஜைகளின் நன்மையே கவனமாக, நியாயத்தில் உறுதியாக, நீ இருப்பது போல கண்டதில்லை. ஸ்ரீயும் கீர்த்தியும் உன்னிடம் என்றும் இணை பிரியாது இருக்கும். சதா காலமும் நிலை பெற்று இருக்கும். இவ்வாறு மதுரமாக மேலும், துதி பாடல்களை இனிமையாக பாடி, அரசனை துயிலெழுப்ப முணைந்தனர். பாடல்களை கேட்டபடி, ராமர் உறக்கம் கலைந்து எழுந்தார். வெண்மையான விரிப்புகளுடன் அழகாக இருந்த படுக்கையிலிருந்து எழுந்தார். நாக சயனத்திலிருந்து ஹரி நாராயணன் எழுந்து வருவது போல இருந்தது. துயிலெழுந்து வரும் ராமனை கை கூப்பியபடி, அறிஞர்கள் பலரும் வாழ்த்தினர். சுத்தமான ஜலம் நிறைந்த பாத்திரங்களுடன் சிலர் அருகில் சென்றனர். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, உரிய நேரத்தில், அக்னி காரியங்களை செய்து விட்டு தேவாகாரம் எனும் பூஜையறைக்குச் சென்று பரம்பரையாக இஷ்வாகு வம்சத்தினர் பூஜித்து வந்த தெய்வங்களுக்கு பூஜைகளைச் செய்தார். வரிசை கிரமமாக தேவர்கள், பித்ருக்கள், பிராம்மணர்கள் – இவர்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளை செய்த பின், ஜனங்கள் பின் தொடர வெளியறைக்கு வந்து சேர்ந்தார். புரோகிதரும், மந்திரி வர்கங்களும் உடன் வந்தனர். தேஜஸ் மிகுந்த முனிவர்கள், குல குரு வசிஷ்டருடன் வந்து சேர்ந்தனர். ஜனபதங்களை ஆண்ட சிற்றரசர்கள், மற்றும் பல அரச வம்சத்தினரும் வந்து சேர்ந்தனர். இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் ராமர் அமர்ந்த பின், பக்கங்களில், பரதரனும், லஷ்மணனும், சத்ருக்னனும் அமர்ந்தனர். அதைக் காண, மூன்று வேதங்களும், யாகம் செய்யும் அறிஞரை சூழ்ந்து நிற்பது போல இருந்தது. அனைவரும், அவரவர்களுக்கு உரிய ஆசனத்தில் அமர்ந்தனர். சிலர் நின்றபடி இருக்க, சிலர் அருகிலும் எதிரிலும் கிடைத்த இடத்தில் ஆனந்தமாக அமர்ந்தனர். சுக்ரீவன், இருபது வானரங்கள் தொடர வந்து வணங்கினான். நான்கு ராஷஸர்கள் தொடர வந்த விபீஷணனும் வந்து குபேரனை வணங்குவது போல வணங்கினான். வேத வித்துக்களும், நற்குடியில் பிறந்த பிரமுகர்களும் வந்து தலை வணங்கி வணக்கம் தெரிவித்த பின் தங்களுக்கான ஆசனங்களில் அமர்ந்தனர். ஸ்ரீமான்களான பல ரிஷிகள், அரசர்கள், வானரங்கள், ராக்ஷஸர்கள், சிற்றரசர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் நிறைந்த அந்த சபையில், சஹஸ்ராக்ஷன் இந்திரன், தன் சபையில் இருந்ததை விட அதிக பொலிவுடன் ராமன் இருந்தான். இதன் பின், புராணம் அறிந்தவர்களும், தர்ம நியாயம் அறிந்தவர்களும், மதுரமாக உரையாடினர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், பௌரோபஸ்தானம் என்ற முப்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.
அத்தியாயம் 38 (575) ஜனகாதி பிரதி பிரயாணம். (ஜனகர் முதலானோர் திரும்பிச் செல்லுதல்)
இவ்வாறே தினம் தினம், ராகவனது ராஜ சபை கூடியது. ராஜ்ய காரியங்களை இந்த சபையில் விவாதித்து, ராஜ்ய பரி பாலனம் செய்து வந்தார். சில நாட்கள் சென்ற பின், மிதிலாதிபதியான ஜனகரை வணங்கி கேட்டுக் கொண்டார். தாங்கள் தான் எங்களுக்கு வழிகாட்டி. உங்கள் கருணையால் பாலிக்கப்பட்டோம். தங்களுடைய உக்ரமான தேஜஸ் பலமும் சேர்ந்து தான், நான் ராவணனை வெற்றி கொண்டேன். மிதிலா வம்சமும், இக்ஷ்வாகு வம்சமும் சம்பந்தம் செய்து கொண்ட பின், பரஸ்பரம் அன்பு வளர்ந்தே வந்திருக்கிறது. ஆகவே, அரசனே தாங்கள் தங்கள் ஊர் செல்லுங்கள். இதோ ரத்னங்கள். இவைகளை எடுத்துக் கொண்டு பரதன் உங்களை ஊரில் கொண்டு சேர்ப்பான். இதைக் கேட்டு அவரும் சந்தோஷமாக, அரசனே மிக்க மகிழ்ச்சி. உங்கள் அன்பும், நியாய உணர்வும், என்னை பரவசப்படுத்துகின்றன. எனக்காக எடுத்து வைத்திருக்கும், இந்த ரத்னங்களை நான் என் மகளுக்கே கொடுக்கிறேன். இவ்வாறு சொல்லி மன நிறைவுடன், மிதிலாதிபர் ஜனகர், கிளம்பிச் சென்றார். அவர் கிளம்பிச் சென்றவுடன், கேகய நாட்டிலிருந்து வந்திருந்த தன் மாமனை வணங்கி ராமர் வேண்டிக்கொண்டார். இந்த ராஜ்யம், நான், பரதன், லக்ஷ்மணன் எல்லோரும் தங்கள் அதீனத்தில் உள்ளவர்களே. எங்களுக்கு நல்வழி காட்டி வந்துள்ளீர்கள். முதியவரான தங்கள் தந்தை உங்களை எதிர் பார்த்து காத்திருப்பார். அதனால் தாங்கள் இன்றே புறப்படுவது நல்லது என்று தோன்றுகிறது. லக்ஷ்மணன் தங்களுடன் வருவான். ஏராளமான தனம், ரத்னம் இவைகளை எடுத்துக் கொண்டு உங்களை ஊர் வரை கொண்டு சேர்ப்பான். யுதாஜித்தும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிக் கிளம்பினார். ரத்னங்களும், தனமும் குறைவின்றி உங்களிடமே இருக்கட்டும் என்று சொல்லி கொடுத்து விட்டுச் சென்றார். ராமர் முன்னாலேயே பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விட்டார். கேகய வர்தனனும், (யுதாஜித்தும்), அதே போல பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விட்டு கிளம்பினார். தன் நண்பன் போன்ற யுதாஜித்தை வழியனுப்பி விட்டு, ராமர் காசி ராஜனான பிரதர்தனன் என்ற அரசனைப் பார்த்து, வேண்டிக் கொண்டார். தாங்கள் இங்கு வந்து தங்கள் நட்பையும், அன்பையும் காட்டி விட்டீர்கள். பரதனுடன் சரீரத்தாலும் நிறைய செய்து விட்டீர்கள். காசேய-எனும் அழகான உங்கள் ஊர், வாரணாசி என்றும் பெயர் பெற்றது. பாதுகாப்பானது. தோரணங்களுடன் பிரகாசமாக இருக்கும். ஆகவே, கிளம்புங்கள். இவ்வாறு சொல்லி தன் பத்ராசனத்திலிருந்து இறங்கி வந்து, மார்புடன் அணைத்து வாழ்த்தி அனுப்பினார். ராமரிடம் அனுமதி பெற்ற காசி ராஜனும் புறப்பட்டுச் சென்றான். அதன் பின் மற்ற முந்நூறு அரசர்களுக்கும், இதே போல விடை கொடுத்து அனுப்பினார், ராமர். தாங்கள் இங்கு வந்து தங்கள் அன்பையும், நட்பையும் காட்டி எங்களை பெருமைப் பட வைத்தீர்கள். உங்களுடைய தர்மம், நியாயம், சத்யம் இவைகளை பாராட்டுகிறேன். உங்கள் அனுக்ரஹத்தாலும், பெரியவர்களுடைய ஆசீர்வாதத்தாலும், ராவணனை அழிக்க முடிந்தது. ராக்ஷஸேஸ்வரனாக இருந்தவன் துராத்மாவாக இருந்ததால் அழிந்தான். நான் காரணமாக மட்டுமே இருந்தேன். உங்கள் அனைவருடைய ஆசீர்வாதமும், நல்லெண்ணமும் தான் இதை சாதிக்க வழி செய்தது. ராவணன், தன் புத்ர பௌத்ரர்களுடனும், மந்திரி வர்கங்களுடனும் யுத்தத்தில் வீழ்ந்தான். பரதன் உங்கள் அனைவரையும் வரவழைத்து தயாராக இருந்திருக்கிறான். நீங்கள் உங்கள் ஊரை விட்டு வந்து வெகு காலமாகிறது. நீங்கள் உங்கள் ஊரை கவனிக்கச் செல்லுங்கள். இதைக் கேட்ட அந்த அரசர்களும் சந்தோஷமாக பதில் சொன்னார்கள். ராமா, அதிர்ஷ்ட வசமாக நீ சத்ருக்களை அழித்து விஜயனாக ராஜ்யத்தில் அமர்த்தப்பட்டாய். வைதேஹியையும் மீட்டு வந்து விட்டாய். எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. வெற்றி வீரனாக உன்னைக் காண்கிறோமே, இது எங்கள் பாக்கியம். எங்களை புகழ்ந்து பாராட்டுகிறாயே, அது உன் சிறப்பு இயல்பேயன்றி, நாங்கள் எதுவும் சொல்லும்படியாக செய்து விடவில்லை. விடை பெறுகிறோம், சென்று வருகிறோம். எப்பொழுதும் எங்கள் மனதில் இருப்பாய், இதே போல என்றும் நட்புடன், அன்புடன் இருப்போம் என்று சொல்லி சென்றனர். ராமரும், அப்படியே ஆகட்டும் என்று சொல்லி விடை கொடுத்தார். ராமர் தந்த மரியாதைகளை ஏற்றுக் கொண்டு, தங்கள் இருப்பிடம் சென்றனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஜனகாதி பிரதி பிரயாணம் என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.
அத்தியாயம் 39 (576)வானர ப்ரீணனம் (வானரங்களை திருப்தி படுத்துதல்)
இப்படி அரசர்களை மனம் மகிழ பேசி வழியனுப்பி வைத்தபின், ராமர் திரும்பினார். ஒரே சமயத்தில் யானைகளும், குதிரைகளும் கிளம்பிச் சென்றதில் பூமி அதிர்ந்தது. ராகவனுக்கு ஒருவேளை தேவைப்பட்டால் உதவ என்றே பல அக்ஷௌஹிணீ சேனைகள் வந்து இறங்கியிருந்தன. பரதன் கட்டளையை ஏற்றுக் கொண்டு, படையுடன் வந்திருந்த அரசர்களும், அவர்கள் வீரர்களும், தங்கள் ஏமாற்றத்தை வெளிப் படுத்தியபடி சென்றனர். திரும்ப ராம ராவண யுத்தத்தைக் காணவா போகிறோம். பரதன் நம்மை அழைத்து நிறுத்தி வைத்தது வீணாயிற்று. நாம் அணைவரும் போய் ராவணனை அழித்திருக்கலாம். ராமர், தலைமை தாங்கி, லக்ஷ்மணனும் உடன் காவலாக வந்திருந்தால், நாமும் பயமின்றி கடலைத் தாண்டி லங்கையை அடைந்து ராக்ஷஸ ராஜனுடன் யுத்தம் செய்திருப்போம். நமது பராக்ரமத்தை காட்ட நல்ல வாய்ப்பு இருந்திருக்கும், பயன் படாமல் போயிற்று. இவ்வாறு கதைகள் பேசியபடி அரசர்கள் படையுடன் திரும்பிச் சென்றனர். அவர்கள் ராஜ்யமும் பரந்து விரிந்தவையே, செல்வ செழிப்பு மிக்கவையே, மக்கள் மகிழ்ச்சியாகவே இருந்தனர். தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் சென்று நடந்த விஷயங்களை தெரிவித்தனர். திரும்பி வந்த லக்ஷ்மணன், பரதன், ஸத்ருக்னன், இவர்கள் அளித்த பல விதமான அன்பளிப்புகளை ராமரிடம் சமர்ப்பித்தனர். குதிரைகள், வாகனங்கள், யானைகள், ரத்னங்கள், உயர்ந்த சந்தனங்கள், பலவிதமான ரதங்கள் – இவைகளை ராமர் சுக்ரீவனிடமும், விபீஷணனிடமும் தனது அன்பளிப்பாக கொடுத்து விட்டார். வெற்றி பெற உதவியாக இருந்த வானர வீரர்களுக்கும், ராக்ஷஸர்களுக்கும் நிறைய கொடுத்தார். அவர்களும், ராமர் கொடுத்த ரத்னங்களை, தலையில், புஜங்களில் அணிந்தபடி மகிழ்ச்சியாக இருந்தனர். ஹனுமானையும், அங்கதனையும், அருகில் அழைத்து அணைத்தபடி, ராமர், சுக்ரீவனிடம் சொன்னார். சுக்ரீவா, உனக்கு அங்கதன் ஒரு சுபுத்திரன், அனுமான் ஒரு நல்ல மந்திரி – இவர்கள் இருவருமே உனக்கு நேர்மையே உபதேசம் செய்வார்கள். இதனால் எனக்கும் நன்மையே. இவ்விருவரும், சன்மானம் பெற தகுதியுடையவர்கள், என்று சொல்லி தான் அணிந்திருந்த ஆபரணங்களை கழட்டி அங்கதன், அனுமன், இருவருக்கும், அணிவித்தார். நீலன், நலன், கேஸரி, குமுதன், கந்தமாதனன், சுஷேணன், பனஸன், மைந்த த்விவிதர்கள், ஜாம்பவான், கவாக்ஷன், தவிர, தும்ரன், வலீமுகன், பரஜங்கன், ஸந்நாதன், ததிமுகன், இந்திரஜானு போன்ற மற்ற படைத் தலைவர்களையும், அருகில் அழைத்து, கண்களால் பருகுவது போல அன்பு ததும்ப பார்த்து, மதுரமாக சொன்னார். நீங்கள் அனைவரும் என் நண்பர்கள். உடன் பிறந்த சகோதரர்கள் போன்றவர்கள். காட்டில் வசிக்கும் நீங்fகள், நல்ல சமயத்தில் . பெரும் சங்கடத்திலிருந்து என்னைக் காப்பாற்றி, எனக்கு பெரும் உதவி செய்தீர்கள். உங்களை பிரஜைகளாக உடைய சுக்ரீவ ராஜா பாக்யசாலி. இவ்வாறு சொல்லியபடி அவர்களுக்கு வஸ்திரங்கள், ஆபரணங்கள் முதலியவைகளை தாராளமாக கொடுத்தார். அவர்களும், வயிராற உண்டு, மதுவைக் குடித்தபடி மகிழ்ச்சியாக இருந்தனர். இரண்டாவது மாதமும் இப்படியே சுகமாக கழித்தனர். குளிர் காலம் வந்தது. ராமனுடைய அன்புக்கு பாத்திரமானவர்கள், மேலும், சில காலம் இக்ஷ்வாகு ராஜதானியில் வசித்தனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வானர ப்ரீணனம் என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 40 (577) ஹனுமத் பிரார்த்தனா (அனுமனின் வேண்டுகோள்)
வானரங்களும், கரடி (ருக்ஷ), ராக்ஷஸர்களும் மகிழ்ச்சியும், நிம்மதியுமாக காலத்தை கழித்துக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ராமர் சுக்ரீவனை அழைத்துச் சொன்னார். நண்பனே, கிஷ்கிந்தைக்குப் போய் வா. உன் ராஜ்யத்தை இடையூறு இன்றி நன்றாக பாலித்து வா. அங்கதனுடன் பிரியமாக இரு. ஹனுமான், நளன் முதலானோர், மற்றும் பல வீரர்கள், மாமனார் சுஷேணன், பலசாலிகளுக்குள் குறிப்பிடத்தக்க தாரன், குமுதன், நீலன் எல்லோரையும் மதிப்புக் கொடுத்து அரவணைத்து நடந்து கொள். மற்றும், சதபலி, மைந்தன், த்விவிதன், கஜன், கவாக்ஷன், கவயன், ஸரபன் எல்லோருக்கும், ஊர் திரும்ப வேண்டும். அன்புடன் அவர்களை அழைத்துக் கொண்டு கந்த மாதன பர்வதம் செல்வாயாக. ஜாம்பவான், ருஷபன் போன்றவர்கள், எனக்காக உயிரைக் கொடுக்க முன் வந்தவர்கள். இவர்கள் விரும்புவதைச் செய். ஊர் போய் சேர ஆவலுடன் இருப்பார்கள். இவ்வாறு சொல்லி, சுக்ரீவனை அணைத்து, பிரியமாக விடை கொடுத்தார். இதன் பின், விபீஷணனைப் பார்த்து, தர்மம் அறிந்தவனே, லங்கைக்குக் கிளம்பு. உன் ராஜ்ய நிர்வாகம் தடை படக் கூடாது. போய் வா. ராக்ஷஸர்களுக்கும், சகோதரன் வைஸ்ரவனுக்கும், நீ செய்ய வேண்டிய கடமைகளைச் செய். ராஷஸா, நீ அதர்ம வழியில் ஒரு போதும் மனதை செலுத்தாதே. புத்திமானான அரசர்கள், வெகு காலம் பூமியை ஆள்வார்கள். நானும், சுக்ரீவனும் எப்பொழுதும், உடன் இருப்பதாக நினைத்துக் கொள். கவலையின்றி போய் வா. ராக்ஷஸ, ருக்ஷ, வானரங்கள், சாது, சாது என்று பாராட்டி, மதுரமாக பேசுவதில் நீ வல்லவன் ராமா, இனிமையாக பேசினாய். இப்படி இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, ஹனுமான் வந்து வணங்கி, தனது வேண்டுகோளை வெளியிட்டான். ராஜன், எனக்கு உங்களிடத்தில் உள்ள சினேகமும், பக்தியும், இப்படியே இருக்க வேண்டும். என் மனம் வேறு எதிலும் நாட்டம் கொள்ளக் கூடாது. உலகில் ராம கதை உள்ள வரை, என் உயிரில் பிராணன் இருக்கும் வரை, இந்த உன் திவ்ய சரித்திரத்தை, யார் சொன்னாலும், என் காதுகளால் கேட்ட வண்ணம் இருக்க வேண்டும். உன் கதாம்ருதத்தைக் கேட்டு நான் மனதை சமாதானப் படுத்திக்கொள்வேன். ஹனுமான் சொன்னதைக் கேட்டு ராமர், தன் வராஸனத்திலிருந்து இறங்கி வந்து, அவனை மார்புறத் தழுவிக் கொண்டார். கவி ஸ்ரேஷ்டனே, அப்படியே ஆகட்டும். (கவி-வானரம்). என் கதை உலகில் உள்ள வரை உன் விருப்பமும் நிறைவேறும். நீ செய்த ஒவ்வொரு உபகாரத்திற்கும், நான் உயிரையே கொடுப்பேன். ஹனுமந்தா, (எல்லா உபகாரத்திற்கும், பிரதி உபகாரம் செய்ய முடியாதபடி நாங்கள் கடனாளியாகவே இருக்கும்படி நேர்ந்து விட்டது … சில பிரதிகளில் இல்லை.) பிரதி உபகாரம் செய்வதும் மனிதனின் கடமையே. அதனால் இந்த சந்திர ஹாரத்தை தருகிறேன் என்று சொல்லி, தன் கழுத்திலிருந்து மாலையைக் கழற்றி ஹனுமானுக்கு அணிவித்தார். அந்த மாலையுடன் ஹனுமான் பிரகாசமாகத் தெரிந்தான். ராகவனைப் பிரிய மனமின்றி சுக்ரீவனும், விபீஷணனும், மற்ற வானரங்களும், திரும்பத் திரும்ப ராமரை வணங்கி விடைபெற்றன. கண்களில் நீர் மல்க அவர் தந்த வெகுமதிகளையும், உபசாரங்களையும் ஏற்றுக் கொண்டனர். தேஹி (தேஹத்துக்குச் சொந்தமான ஆத்மா) தேஹம் உடலைப் பிரிந்து செல்வது போலச் சென்றனர். ரகுவம்சத்தை விளங்கச் செய்ய வந்த ராமரை நினைத்தபடி விருந்தாளிகள், அதே நினைவாக திரும்பிச் சென்றனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ஹனுமத் பிரார்த்தனா என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 41 புஷ்பக புனரப்4யனுக்ஞா (புஷ்பக விமானத்தை திருப்பி அனுப்புதல்)
விருந்தினர்களை வழியனுப்பி விட்டு, தன் சகோதரர்களுடன் ராமர் சுகமாக இருந்தார். ஒருநாள், மத்யான்ன வேளையில் சகோதரர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அஸரீரி கேட்டது. சௌம்ய ராமா, என்னை கொஞ்சம் கவனி. குபேர பவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புஷ்பகம் நான். குபேர பவனம் திரும்பிச் செல்ல விரும்புகிறேன். குபேரனோ நீ இப்பொழுது ராமனுடைய வசத்தில் இருக்கிறாய். ராவணனை குலத்தோடு, மந்திரி வர்க்கங்களோடு அழித்து வெற்றி கொண்டவன் ராமன். ராகவனுக்கு வாகனமாக அங்கேயே இரு. எனக்கும் சம்மதமே என்று சொல்லி விட்டான். அதனால் நான் உங்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன். உங்கள் உத்தரவின்படி உலகங்களை சுற்றி வர அழைத்துச் செல்வேன் என்றது. இதைக் கேட்ட ராமர் அப்படியா? குபேரன் சம்மதித்து அனுப்பியிருப்பதால், இதில் தோஷம் எதுவும் இல்லை. இப்பொழுது போய் வா, நான் நினைக்கும் சமயம் வந்தால் போதும் என்று சொல்லி, வாசனை மிகுந்த தூபங்கள், மலர்கள், பொரி முதலியவைகளைக் கொண்டு உபசாரங்கள் செய்து அனுப்பி வைத்தார். சித்தர்கள் செல்லும் பாதை உனக்கு வசதியாக இருக்கட்டும், தடங்கல் எதுவும் இன்றி நிம்மதியாக போய் வா என்றார். இவ்வாறு ராமரால் வாழ்த்தி வழி அனுப்பி வைக்கப் பட்ட புஷ்பக விமானம் மகிழ்ச்சியுடன் தன் வழி சென்றது. புஷ்பகம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்த பின் பரதன் ராமரிடம், வீரனே, நீ ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டதிலிருந்து, ராஜ்யத்தில் பல நன்மைகள் வந்துள்ளதைக் காண்கிறோம். மனிதர் மட்டுமல்ல, மற்ற ஜீவன்களும் கூட, நோய் நொடியின்றி, இந்த ஒரு வருஷமும், மாதமும் நலமாக இருந்துள்ளதைக் காண்கிறோம். வயது முதிர்ந்த ஜீவன்களுக்கு கூட மரணம் வரவில்லை. பெண்கள் சிரமமின்றி பிரஸவிக்கிறார்கள். நல்ல சரீர சம்பத்துடன், ஊர் ஜனங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அம்ருதம் போல நீரை வர்ஷிக்கும் மேகங்கள், காலத்தில் பொழிகின்றன. காற்றும் சுகமாக இதமாக வீசுகிறது. இது போல அரசன் அமைந்தது நம் பாக்கியம் என்று பேசிக் கொள்கிறார்கள் என்றான். இதைக் கேட்டு ராமரும் மகிழ்ந்தார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், புஷ்பக புனரப்4யனுக்ஞா என்ற நாற்fபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) (ஸ்லோகங்கள் – 22 )
அத்தியாயம் 42 (579) ராம சீதா விஹார: (ராமர் சீதை மகிழ்ச்சியுடன் இருத்தல்)
பொன் விமானத்தை அனுப்பி விட்டு ராமர், அரண்மனையின் அசோக வனம் என்ற சிறு தோட்டத்திற்குச் சென்றார். அந்த உத்யான வனம், சந்தன, அக3ரு, மாமரங்கள், உயர்ந்த கா3லேயகம் என்ற மரங்கள், தே3வதா3ரு மரங்கள் நிறைந்து அலங்காரமாக இருந்தது. சம்பக, அசோக, புன்னாக3, மதூக, பனஸம் இவைகளும், பாரிஜாத மரங்களும் மேலும் அழகூட்டின. லோத்ர, நீப, அர்ஜுன, நாக3, சப்த பர்ண, அதிமுக்தகம் என்ற வகைகளும், மந்தா3ர, கத3லி, குல்ம (புதர்), கொடி வகைகளும், நிறைந்து சூழ்ந்து இருந்தன. பிரியங்குகள், கத3ம்ப, வகுலம் போன்றவைகளும், ஜம்பூ4 (நாவல்), தா3டிமீ (மாதுளை), கோவிதா3ரம் என்ற செடிகளும், மரங்களும், எப்பொழுதும் ரம்யமான மலர்கள், பழங்கள் தரும் மரங்கள், திவ்யமான வாசனையுடன், இயல்பான இளம் துளிர்களும், தழைகளும், இவை தவிர, இத்துறையில் வல்லுனர்கள், சில்பிகள் அமைத்து வைத்த அழகிய தாவிர வகைகளுமாக, காட்சி தந்தது. அழகிய புஷ்பங்களால் கவரப்பட்டு வந்த வண்டுகளின் ரீங்காரம் சூழலை ரமணீயமாக்கின. இவை தவிர, கோகிலங்களும், ப்4ருங்க3ராஜ என்ற பக்ஷிகளின் கூவல்களும் சேர்ந்து ஒலித்தன. பல வர்ணங்களில் பக்ஷிகள். சித்ர விசித்ரமான பறவைகள், மாமரங்களிலும், மற்ற மரங்களிலும், வாசம் செய்தன. அக்னியை ஒத்த பொன் நிற பக்ஷிகள், நீல மேகம் போன்ற வண்ண பக்ஷிகளுடன் சேர்ந்து பறந்தது கண்களைக் கவர்ந்தன. இவைகளால் மரங்களே பிரகாசமாக விளங்கின. நல்ல மணம் வீசும் மலர்கள் இரைந்து கிடந்தன. நீர் நிறைந்த தடாகங்கள், பல விதமான உருவங்களிலும், வடிவங்களிலும், மாணிக்கம் பதித்த படிகளுடன், தாமரைகளும், உத்பலங்களும், காடாக மண்டி கிடக்க, சக்ரவாக பக்ஷிகள் கூக்குரலிட்டு, அந்த பிரதேசத்தை மேலும் ரம்யமாக்கின. அதற்கு பதிலளிப்பது போல, தா3த்யூகம், சுக (கிளி), ஹம்ஸங்களும், ஸாரஸ பக்ஷிகளும் கூக்குரலிட்டன. கரைகளில் செழித்து வளர்ந்திருந்த மரங்களும், பூத்துக் குலுங்கின. கற் பலகைகள் கொண்டு அழகிய பாதைகளும், பிராகாரங்களும் அமைக்கப் பட்டிருந்தன. வைடுரியமோ, மணியோ என்பது போல பரிசுத்தமாக பாதுகாக்கப் பட்டிருந்தன. இளம் துளிர்களும், மலர்களும், மரங்கள் காற்றில் அசையும் பொழுது, கீழே விழுந்து பூமியை மறைத்தன. தாரா கணங்களுடன் கூடிய ஆகாயம் போல விளங்கியது. இந்திரனுடைய நந்தன வனம் போலவும், ப்ரும்மாவின் சைத்ர வனம் போலவும், ராமனுடைய வனமும் அமைந்திருந்தது. அமர அழகிய ஆசனங்கள் போடப் பட்டிருந்தன. இடை இடையே கொடி வீடுகள் குளிர்ச்சியாகத் தெரிந்தன. விசாலமான இந்த அசோக வனத்தில் ரகுநந்தனன் பிரவேசித்தார். அழகிய விரிப்புகள் போடப் பெற்று தயாராக இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். சீதையை கையை பிடித்து அருகில் அழைத்துக் கொண்டார். சசியும், புரந்திரனும் போல இருவரும், பலவித மாமிசங்கள், பழங்கள், ஆகாரங்கள் இவற்றை அனுபவித்து மகிழ்ந்தனர். அரசன் மனம் நிறைந்து உல்லாசமாக இருக்க, அரண்மனை சிப்பந்திகள் விரைவில் ஏற்பாடுகளைச் செய்தனர். நடனமாடுபவர்களும், பாடுபவர்களும் வந்து சேர்ந்தனர். அழகிய இளம் பெண்கள், பானங்களை ஏந்தியாபடி வந்தனர். காகுத்ஸன் எதிரில் அவர்கள் நடனமாடினர். ராமனே ரமயதாம் வர: – மகிழ்ச்சியூட்டுவதில் வல்லவன். அவனை ரம்யமாக உற்சாகப் படுத்த ராமா: – பெண்கள், கூடினர். சீதையுடன் அழகிய ஆசனத்தில் அமர்ந்து இந்த கேளிக்கைகளை ரசித்து மகிழ்ந்தார். சில நாட்களில், அருந்ததியுடன் வசிஷ்டர் போலவும் காட்சி தந்தார். தேவ லோக பெண் போல இருந்த சீதையை மகிழ்விக்க தானும் தினமும் அந்த தோட்டத்துக்கு வந்து பொழுதைக் கழித்தார். இப்படி இவர்கள், உல்லாசமாக மன நிறைவோடு இருக்க, பல நாட்கள் கடந்தன. ஸிசிரம் எனும் பனிக்காலமும் வந்து மறைந்தது. நாளின் முன் பகுதியில் தர்ம காரியங்களைச் செய்து விட்டு, மீதி நேரத்தை அந்த:புரத்தில் கழிப்பது வழக்கமாயிற்று. சீதையும் காலை நேரங்களை தெய்வ காரியங்களுக்கு, பர்வ காலங்களுக்கான விசேஷ காரியங்கள், மற்றும் தினசரி வேலைகளை கவனித்து செய்ய, மற்றும் மாமியார்களுக்கு பணிவிடை செய்வதுமான வேலைகளுக்கு ஒதுக்கி விட்டு, கடமைகள் முடிந்த பின் சர்வாலங்கார பூஷிதையாக ராமனிடம் வந்து சேருவாள். தேவ லோகத்தில் அமர்ந்திருக்கும் சஹஸ்ராக்ஷனை சசி அணுகியது போல. இப்படி அருகில் வரும் மனைவியை ராமர் வெகுவாக ரசித்ததோடு, ஸாது, ஸாது என்று அவள் அலங்காரங்களை பாராட்டவும் செய்தார். ஒரு நாள், வைதேஹி, உன்னிடத்தில், நம் வம்சம் வளர சந்ததியைப் பெற விரும்புகிறேன். உன் விருப்பம் என்ன சொல், உடனே பூர்த்தி செய்வேன் என்றார். சீதை சிரித்தபடி, புண்யமான தபோ வனங்களைப் பார்க்க வேண்டும் ராமா, கங்கா தீரத்தில் உக்ரமாக தவம் செய்யும் ரிஷிகளைப் பார்க்க வேண்டும். தேஜஸ் நிறைந்த முனிவர்கள், பழம், கிழங்குகளைச் சாப்பிட்டபடி, மர நிழல்களில் வாழ்வதைக் காண வேண்டும். ஒர இரவு ஒரு பகல், ஏதோ ஒரு தப வனத்தில், முனிவர்களுடன் சேர்ந்து இருந்து விட்டு வர வேண்டும். அப்படியே ஆகட்டும் என்று ராமரும் வாக்களித்தார். கவலையின்றி இரு வைதேஹி, நாளை நிச்சயம் அழத்துப் போகிறேன் என்று வாக்களித்தார். இதன் பின் நண்பர்களும் வந்து சேர, எல்லோருமாக பவனத்துக்குள் நுழைந்தனர். தன் வீட்டின் மைய பாகம் வரை சீதையை அழைத்துக் கொண்டு ராமர் உள்ளே சென்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ராம சீதா விஹார:: என்ற நாற்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 43 (580) ப4த்3ர வாக்ய ஸ்ரவணம் (ஒற்றன் சொல்லைக் கேட்டல்)
ஆசனத்தில் அமர்ந்திருந்த ராமரைச் சுற்றி பலரும் அமர்ந்திருந்தனர். பல விதமான கதைகளைச் சொல்பவர்களும், ஹாஸ்யமாக பேசுபவர்களும் அருகில் இருந்தனர். விஜயன், மது4மத்தன், காஸ்யப:, பிங்க3ளன், சூடன், சுராஜன், காளீயன், ப4த்3ரன், த3ந்த வக்த்ரன், சுமாக3தன் முதலானோர். இவர்கள், வேடிக்கையும், விளையாட்டுமாக பல கதைகளையும், சம்பவங்களையும் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தனர். பாதி சம்பாஷனையில் ராமர் வினவினார். ப4த்3ரம், நகரத்தில் என்ன பேசிக் கொள்கிறார்கள்.? ஜனங்களின் மன நிலை என்ன? என்னைப் பற்றி என்ன அபிப்பிராயம் நிலவுகிறது. சீதையைப் பற்றியும், பரதன், லக்ஷ்மணனைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்? சத்ருக்னன், தாயார் கைகேயியைப் பற்றி என்ன எண்ணம் ஊர் ஜனங்கள் மத்தியில் நிலவுகிறது? இரவில் ஊருக்குள் சஞ்சரிக்கும் ஒற்றர்கள் என்ன சொல்கிறார்கள். இதைக் கேட்டு ஒற்றன் வணக்கத்துடன் பதிலளித்தான். ராஜன், ஊர் ஜனங்கள், நல்ல விதமாகத்தான் பேசிக் கொள்கிறார்கள். ராவண விஜயத்தைப் பாராட்டி பேசுகிறார்கள். இந்த யுத்தமும், ஜயமும் பற்றி பல கதைகள் பரவியுள்ளன. ப4த்ரன் இவ்வளவு சொன்ன பின் ராமர் மேலும் வினவினார். எதையும் மறைக்காதே, மேலும் சொல்லு என்றார். சுபமானாலும், அசுபமானாலும், ஊர் ஜனங்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை மறைக்காமல் சொல்லு என்றார். தெரிந்து கொண்டால், சுபமானால் தொடர்ந்து செய்வோம். அசுபமானால் மாற்றிக் கொள்வோம், பயப்படாதே, கவலையின்றி விவரமாகச் சொல் என்றார். ராமர், இவ்வாறு துருவி துருவிக்கேட்கவும், பத்ரம் மிக கவனமாக பொறுக்கி எடுத்த சொற்களுடன் விவரமாகச் சொல்ல அரம்பித்தான். ராஜன், கேள். ஊர் ஜனங்கள், நாற் சந்திகளிலும், கடை வீதிகளிலும், வனங்கள், உபவனங்கள் இவற்றிலும், என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்கிறேன். ராமர் செய்தது அரிய செயல். சமுத்திரத்தின் மேல் சேதுவைக் கட்டி விட்டார். இது போல கேட்டதேயில்லை. தேவ தானவர்கள் கூட இப்படி ஸமுத்திரத்தின் மேல் சேது கட்டியதாக கேட்டதே இல்லை. நெருங்கவே முடியாதவன் என்று பெயர் பெற்ற ராவணன், தன் படை பலங்கள், கோட்டை கொத்தளங்களோடு அழிக்கப் பட்டான். வானர வீரர்கள், கரடிகள், மட்டுமா, ராக்ஷஸர்கள் கூட ராமர் வசம் ஆகி விட்டனர். ராவணனை வதம் செய்ததோடு தன் கோப தாபங்களை விட்டு விட்டு ஊர் வந்து சேர்ந்து விட்டார். சீதையுடன் சேர்ந்ததில் தான் அவருக்கு எவ்வளவு ஆனந்தம். முன்பு ராவணன் அவளை மடியில் இருத்தி, அபகரித்துக் கொண்டு போனான். லங்கைக்கு கொண்டு போய் அசோக வனத்தில் வைத்தான். அரக்கர்களின் வீட்டில் இருந்தவளை, எப்படி ராமர் குறை சொல்லாமல் ஏற்றுக் கொண்டார்? நாமும் நம் மனைவிமார்களிடம் இந்த பொறுமையைக் காட்டியாக வேண்டும். ராஜா செய்வதைத் தான் பிரஜைகள், அனுசரித்து நடப்பார்கள். இப்படி பலவும் பேசுகிறார்கள். ராஜன், ஜனபதங்களிலும் இப்படி ஒரு பேச்சு நிலவி வருகிறது. இதைக் கேட்டு ராமரின் முகம் வருத்தத்தில் வாடியது. கூடியிருந்த நண்பர்களைப் பார்த்து இது என்ன குழப்பம் என்று கேட்டார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். அவர்களும் தலை குனிந்தபடி, ராமரை வணங்கி, இப்படித்தான் நாங்களும் கேள்விப் பட்டோம், இவன் சொல்வது சரிதான் என்றனர். அவர்கள் சொன்னதை மனதில் வாங்கிக் கொண்ட ராமர், அவர்களை அனுப்பி விட்டு யோசிக்கலானார்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ப4த்3ர வாக்ய ஸ்ரவணம் என்ற நாற்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 44 (581) லக்ஷ்மணாத்யானயனம். (லக்ஷ்மணன் முதலியோரை அழைத்து வரச் செய்தல்)
நண்பர்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு தனியாக யோசனையில் ஆழ்ந்தார். அருகில் இருந்த வாயில் காப்போனைக் கூப்பிட்டு, சீக்கிரம் லக்ஷ்மணனை அழைத்து வா. பரதனையும், சத்ருக்னனையும் அழைத்து வா. (சுப லக்ஷணனான லக்ஷ்மணன், மகா பாக்யசாலியான பரதன், ஜயிக்க முடியாத சத்ருக்னன்) இதைக் கேட்டு, வாயில் காப்போன், தலை வணங்கி, வேகமாகச் சென்று லக்ஷ்மணனை அழைத்து வர அவன் வீடு சென்றான். ஜய கோஷம் செய்து வாழ்த்தி விட்டு, ராஜா உங்களை அழைக்கிறார். தாமதமின்றி உடனே கிளம்புங்கள் என்றான். அரசனான ராமனின் கட்டளை எனவே லக்ஷ்மணன் மறு பேச்சின்றி உடனே கிளம்பி ரதத்தில் புறப்பட்டு விட்டான். வேகமாக ராம பவனம் சென்றான். லக்ஷ்மணன் புறப்பட்டுச் செல்லும் வரை உடன் இருந்து விட்டு, வாயில் காப்போன், பரதனிடம் சென்றான். பரதனை வாழ்த்தி வணங்கி விட்டு, ராஜா உங்களைக் காண விரும்புகிறார் என்று தெரிவித்தான். ராமனுடைய மாளிகையிலிருந்து வாயில் காப்போன் செய்தி கொண்டு வந்திருக்கிறான் என்று கேட்டதுமே பரதன் புறப்பட்டு விட்டான். தன் அசனத்திலிருந்து குதித்து எழுந்து காலால் நடந்தே சென்றான். பரதன் புறப்பட்டுப் போகும் வரை காத்திருந்த வாயில் காப்போன், சத்ருக்ன பவனம் சென்றான். ரகுஸ்ரேஷ்டனே, வா, வா, கிளம்பு, ராஜா, உங்களைக் காண விரும்புகிறார் என்று தெரிவித்தான். லக்ஷ்மணனும், பரதனும் ஏற்கனவே கிளம்பிச் சென்று விட்டனர் என்றும் சொன்னான். உடனே சத்ருக்னனும் புறப்பட்டான். இவர்களுக்கு முன் வந்து வாயில் காப்போன் அரசனிடம் மூவரும் வந்து சேர்ந்து விட்டதை தெரியப் படுத்தினான். சிந்தனையில் மூழ்கி வாட்டமாக இருந்தவர், சீக்கிரம் அழைத்து வர உத்தரவிட்டார். தேஜஸ் வாய்ந்த ராஜகுமாரர்கள், மூன்று இந்திரர்கள் இணைந்து வந்ததைப் போல கம்பீரமாக நுழைந்தனர். கை கூப்பி அஞ்சலி செய்தபடி, தலை தாழ்த்தி வணங்கியபடி வந்தவர்கள், அரசனின் முகத்தைப் பார்த்து ஏதோ குழப்பம் என்று ஊகித்துக கொண்டனர். ராகு பிடித்த சந்திரன் போலவும், ஸந்த்யா காலத்து அஸ்தமன சூரியன் போலவும், ஒளியிழந்து கிடந்த ராமனது முகத்தைப் பார்த்து திடுக்கிட்டனர். கண்களில் நீரும், சோபையிழந்த தாமரை போலவும் முகம் வாட இருந்த ராமரை வணங்கி செய்வதறியாமல் பேசாமல் நின்றனர். அவர்களை அணைத்துக் கொண்ட ராமர், உட்காருங்கள் என்று சொல்லவும் அவர்கள் ஆசனங்களில் அமர்ந்தனர். நீங்கள் மூவரும் தான் எனக்கு உயிர், நீங்கள் மூவரும் தான் எனக்கு எல்லாம். உங்கள் உதவியோடு தான் நான் ராஜ்ய பாலனம் செய்கிறேன். சாஸ்திரங்களை அறிந்தவர்கள் நீங்கள். நல்ல புத்தி உடையவர்கள். நான் சொல்வதைக் கேட்டு யோசித்து, ஆராய்ந்து பதில் சொல்லுங்கள் எனவும், என்ன சொல்லப் போகிறாரோ, என்று மனம் கலங்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போன்ற குழப்பங்கள் மனதில் தோன்ற, வாய் பேசாது அவர் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், லக்ஷ்மணாத்யானயனம் என்ற நாற்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம். )
அத்தியாயம் 45 (582) சீதா ஸமுத்ஸர்கா3தேஸ: (சீதையை வெளியேற்ற கட்டளை)
குழப்பத்துடன் மூவரும் அமர்ந்தபின், முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு பேசலானார். கவனமாக கேளுங்கள். யாரும் குறுக்கே பேச வேண்டாம். ஊர் ஜனங்கள் மத்தியில் என்னையும் சீதையையும் குறித்து எந்த விதமான பேச்சு நடமாடுகிறது என்று தெரிந்து கொண்டேன். ஊர் ஜனங்கள், ஜனபத மக்கள் மத்தியில், பெரும் அபவாதமாக ஒரு பேச்சு எங்களைச் சுற்றி நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு அது மிகவும் அருவருக்கத்தக்கதாக, என் மர்ம ஸ்தானத்தில் குத்தி வாட்டுகிறது. நான் பெயர் பெற்ற இக்ஷ்வாகு குலத்தில் வந்தவன். சீதையும் ஜனகர்களின் உத்தமமான குலத்தில் தோன்றியவள். உங்களுக்குத் தெரியும், ஜன நடமாட்டமில்லாத தண்டகா வனத்தில், ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு சென்றான். நான் அவனை வதம் செய்து அழித்து விட்டேன். இந்த சமயம், அந்த ராஷஸன் ஊரில் வசித்தவளை, அயோத்யா நகருக்கு அழைத்து வந்தது சரிதானா என்ற பிரச்னை எழுந்துள்ளது. அக்னி பிரவேசம் செய்ய சொன்னதும், பொது மக்களிடம் நம்பிக்கை வரத்தானே. சௌமித்ரி பார்த்தான். நேரிடையாக கண்டவன் இதோ இருக்கிறான். ப்ரத்யக்ஷமாக அக்னி தேவன் அவளை பரிசுத்தமானவளாக என்னிடம் ஒப்படைத்தான். தேவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டனர். மாசற்ற வைதேஹியை வாயு தேவனும் புகழ்ந்தான். சந்திர ஆதித்யர்கள் வாழ்த்தினர். இவையனைத்தும், தேவர்கள் முன்னிலையில் நடந்தது. எல்லோருக்கும் தெரியும். மைதிலியை மாசற்றவளாக ஒத்துக்கொண்டு ரிஷிகள் மத்தியில் என்னிடம் ஒப்படைத்தனர். அவ்வளவு ஜனங்கள் மத்தியில், லங்கையில், பாபம் இல்லாதவளாக, சுத்தமானவளாக, ஏற்றுக் கொண்டேன். என் அந்தராத்மாவுக்குத் தெரியும். மைதிலி மாசற்றவள் என்பது. பின் அவளையும் அழைத்துக் கொண்டு அயோத்தி வந்தேன். இப்பொழுது என் மனதை வருத்தும் பெரும் அபவாதத்தை கேள்விப்படுகிறேன். ஊர் ஜனங்கள் மத்தியில், ஒருவிதமான சந்தேகமும், தவறான எண்ணமும் நிலவி வருகிறது. இதை அறிந்து என் மனம் மிகவும் வருந்துகிறது. எப்படியோ ஒரு பழிச் சொல், அபகீர்த்தி வந்து விட்டது. இது போன்ற பழிச் சொல் கீழே தள்ளி விடும். உலகில் கீர்த்தி உடையவனின் கீர்த்தி தான் போற்றப் படுகிறது. பழிச் சொல்லுக்கு இடம் கொடுத்தால் அவ்வளவு தான். நிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். தன் புகழை, பெயரை காப்பாற்றிக் கொள்ளத்தான் பாடு படுகிறோம். நான் உயிரை விடுவோமா என்று யோசிக்கிறேன். அபவாத பயத்தால் நான் நடுங்குகிறேன். இது ஜானகியின் காதில் விழுந்தால் அவள் எப்படி துடிப்பாள். அதனால் நீங்கள் தான் இந்த சோக ஸாகரத்தில் மூழ்கி தத்தளிக்கும் எனக்கு கை கொடுக்க வேண்டும். இதை விட அதிக துக்கம் இருக்கும் என்று தோன்றவில்லை. நாளைக் காலை, சௌமித்ரே, சுமந்திரரை ரதத்தை பூட்டச் சொல். சீதையை அழைத்துக் கொண்டு போய் நகரத்தின் எல்லையில் விட்டு விடு. கங்கைக் கரையைத் தாண்டி வால்மீகி முனிவரின் ஆசிரமம் இருக்கிறது. தமலா நதிக் கரையில் அழகிய ஆசிரமம். அங்கு விட்டு விடு. ஜன நடமாட்டமில்லாத அந்த சூன்யமான இடத்தில் அவளை விட்டு விட்டு சீக்கிரம் திரும்பி வந்து விடு. நான் சொன்னதைச் செய். சீதையைப் பற்றி யாரும், எதுவும் பேச வேண்டாம். சௌமித்ரே, கிளம்பு, யோசிக்காதே. இதில் ஆக்ஷேபனை ஸமாதானங்களுக்கு இடமேயில்லை. இதைத் தடுத்தால், எனக்கு உன்னிடம் கோபம் தான் வரும். என் புஜங்களின் பேரில் ஆணை. என் உயிரின் பேரில் ஆணை. இந்த செயலை உடனே நிறைவேற்று. யாரும் எனக்கு ஆலோசனை சொல்லி என் முடிவை மாற்றிக் கொள்ளச் சொல்ல முயற்சி செய்ய வேண்டாம். என்சாஸனத்தில் நம்பிக்கை இருந்தால், இப்பொழுது நான் சொல்வதைச் செய்யுங்கள். முன்னாலேயே அவள் தன் ஆசையை ஒரு முறை வெளியிட்டிருக்கிறாள். கங்கைக் கரையில், ஆசிரமங்களில் வசிக்க வேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னாள். தன் கண்களில் நீர் வடிய மன வருத்தத்தை மறைக்க முடியாமல் முகம் காட்ட, ராமர் தன் சகோதரர்கள் உடன் வர, மாளிகையின் உள்ளே சென்றார். பெரிய யானை மூச்சு விடுவது போல அவர் பெருமூச்சு வெளிப்பட்டது.
(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சீதா ஸமுத்ஸர்கா3தேஸ: என்ற நாற்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 14 (551) யக்ஷ ராக்ஷஸ யுத்தம் (யக்ஷர்களும், ராக்ஷஸர்களும் போரிடுதல்
இதன் பின், மகோதரன், ப்ரஹஸ்தன், மாரீச, சுக, சாரண, தூம்ராக்ஷன் என்ற ஆறு மந்திரிகளுடன் புறப்பட்டான். இவர்கள் எப்பொழுதுமே யுத்தம் செய்ய ஆவலுடன் இருப்பவர்கள், தங்கள் பலத்தில் எல்லையில்லா கர்வம் உடையவர்கள். உலகையே தன் ஆத்திரத்தால் எரித்து விடுபவன் போல நகரங்களையும், நதிகள், மலைகள், வனங்கள், உப வனங்கள் இவைகளை தாண்டி முஹுர்த்த நேரத்தில் கைலாஸ மலையை சென்றடைந்தான். யுத்தம் செய்யத் தயாராக வந்து நின்ற அவனை யக்ஷர்களால் தடுக்க முடியவில்லை. அரசன் சகோதரன், என்பதால் தயங்கி தனேஸ்வரனிடம் சென்று முறையிட்டனர். அவன் யுத்தம் செய்ய வந்திருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்ட தனாதிபன், யுத்தம் செய்ய இவர்களுக்கும் அனுமதி கொடுத்தான். பெரும் யுத்தம் நடந்தது, மலையையே ஆட்டி வைப்பது போல கோரமான யுத்தம் தொடர்ந்தது. ராக்ஷஸனின் மந்திரிகள் களைத்து விட்டனர். யக்ஷ ராக்ஷஸ மோதல் கடுமையாக இருந்தது. தன் சைன்யத்தின் நிலையைக் கண்டு தசக்ரீவன் உற்சாகப்படுத்த கோஷம் செய்து கொண்டு கோபத்துடன் ஓடினான். இதன் பின் அவன் படையைச் சேர்ந்த ராக்ஷஸர்களை ஆயிரக் கணக்கான யக்ஷர்கள் கொன்று குவித்தனர். கதைகளும், முஸலங்களும், சக்தி தோமரங்களும் வீசப் பட்டன. தசக்ரீவன் அந்த சைன்யத்தை எதிர்த்து நிற்க முடியாமல் திணறினான். மூச்சு முட்டுவது போல உணர்ந்தான். மழை பொழிவது போல அம்புகள் அவனை தடுத்தன. யக்ஷ சஸ்திரங்கள் பட்டு பெரிதும் உடல் காயமும் அவனை வருத்தியது. பெரிய மலையின் மேல் மழைச் சாரல் விழுவது போல அவன் மேல் சஸ்திரங்கள் சரமாரியாக வந்து விழுந்தன. இதிலிருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டு க3தை4யை எடுத்துக் கொண்டு யக்ஷ சைன்யத்தை தாக்கினான். உலர்ந்த கட்டைகளை அடுக்கி இருக்கும் அறையில் அக்னியை காற்றும் துணை செய்து எரிப்பது போல க்ஷண நேரத்தில் யக்ஷர்கள் சைன்யத்தை நிர்மூலமாக்கினான். மந்திரிகள் மகோதரன், சுகன் முதலானோரும் போரில் யக்ஷர்களை பெருமளவில் உயிரிழக்கச் செய்தனர். ரண முடிவில் யக்ஷர்கள் மிகவும் களைத்துப் போனார்கள். சஸ்திரங்கள் கைகளிலிருந்து நழுவின. வெள்ளத்தில் கரைகள் அரிக்கப் படுவதைப் போல ராக்ஷஸ சைன்யத்தின் முன் நிற்க இயலாமல் விழுந்தனர். யுத்த பூமியில் அடிபட்டு இறந்தவர்கள் சுவர்கம் செல்ல அதைக் காண ரிஷிகள் ஆகாயத்தில் கூடினர். தனாதிபன் மேலும் யக்ஷர்களை அனுப்பி வைத்தான், இதனிடையில் பெரும் சேனையோடு சம்யோத கண்டகன் என்ற யக்ஷன் தசக்ரீவனை எதிர்த்து வந்தான். விஷ்ணுவைப் போல தன் சக்கிரத்தால் மாரீசனை வீழ்த்தினான். புண்யம் தீர்ந்தவுடன் ஸ்வர்க லோகத்திலிருந்து பூமிக்கு வந்து விழும் மனிதர்களைப் போல அவன் வீழ்ந்தான். ஒரு முஹுர்த்த நேரம் நினைவிழந்து கிடந்தவன் பின் எழுந்து கொண்டான். தன்னை அடித்த யக்ஷனை துரத்தலானான். காவல் காக்கும் வீரர்களைத் தாண்டி மாளிகையினுள் நுழைந்து விட்டான். தொடர்ந்து வந்த தசக்ரீவனை சூர்யபானு என்ற ப்ரஸித்தி பெற்ற துவார பாலகன் தடுத்தான். தன்னை தடுத்தவனை அலட்சியமாக புறக்கணித்து விட்டு தசக்ரீவன் உள்ளே சென்றான். தடுத்தும் கேட்காமல் உள்ளே நுழையும் தசக்ரீவனை யக்ஷ வீரர்கள் சரமாரியாக அடித்தனர். ரத்தம் பெருகி காயம் அடைந்தாலும் ப்ரும்மாவின் வர பலத்தால் அவன் உடலுக்கு எதுவும் நேரவில்லை. யக்ஷன் கையிலிருந்த பெரிய தோரண கம்பை பிடுங்கி அவனையே திருப்பி அடித்தான். யக்ஷன் தூள் தூளாகிப் போனான். அவன் இருந்த இடமே தெரியவில்லை. இதைக் கண்ட மற்ற யக்ஷர்கள் நடுங்கினர். நதிகளிலும் குகைகளிலும் ஒளிந்து கொண்டனர். ஆயுதங்களை போட்டபடி போட்டு விட்டு உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 15 (552) புஷ்பக ஹரணம் (புஷ்பக விமானத்தை அபகரித்தல்)
ஆயிரக் கணக்கான யக்ஷர்களை அடித்து நொறுக்கி விட்டு தசக்ரீவன் முன்னேறி வருவதைக் கண்டு தனாதிபதியான குபேரன் தன் படைத்தலைவனான மணி பத்ரன் என்பவனை அழைத்து உத்தரவிட்டான். ராவணனை வதம் செய். மணி பத்திரனே, அவனை இனியும் விட்டு வைக்கலாகாது. அவன் எண்ணமும் பாபம், செயலும் பாபமே. யுத்தம் செய்வதில் சிறந்த நம் வீரர்களுக்கு சரணம் அளிக்க வேண்டும். நீ தான் அதை செய்ய முடியும். உடனே மணி பத்ரன் என்ற அந்த யக்ஷ ராஜா, நாலாயிரம் யக்ஷ வீரர்களுடன் போருக்குச் சென்றான். பல விதமான ஆயுதங்களைக் கொண்டு ராக்ஷஸர்களை அடித்து வீழ்த்தினர். நன்றாக கொடு, அடி, உதை என்று சொல்லிக் கொண்டே யுத்தம் செய்தனர். இரு பக்கமும் சமமான பலசாலிகள். யுத்தமும் கோரமாக தொடர்ந்தது. ஆகாயத்தில் தேவ, ரிஷி கந்தர்வர்களும் வேடிக்கை பார்க்க கூடினர். ப்ரஹஸ்தன் ஆயிரம் யக்ஷர்களை, மகோதரன் மற்றொரு கூட்டத்தை என்று அழித்தார்கள். கோபம் கொண்ட மாரீசனும் தன் பங்குக்கு இரண்டாயிரம் யக்ஷ வீரர்களை நாசம் செய்தான். நேர்மையான யக்ஷர்களின் யுத்த நெறி எங்கே? மாயா பலத்தில் மறைந்து நின்று போரிடும் ராக்ஷஸர்கள் எங்கே? எண்ணிக்கையிலும் அவர்கள் அதிகமாக இருந்தனர். தூம்ராக்ஷன் தன் முஸலத்தால் மணி பத்ரனின் மார்பில் கோபத்துடன் ஓங்கி அடித்தான். மணி பத்ரனும் தன் க3தையால் அவன் தலையில் ஓங்கி அடிக்க அவன் நினைவிழந்து தரையில் விழுந்தான். ரத்தம் பெருக தூம்ராக்ஷன் கீழே விழுந்ததைக் கண்டு தசானனன் ஓடி வந்தான். ஓடி வரும் தசானனைப் பார்த்து மணி பத்ரன் தன் சக்தியை எடுத்து மூன்று பாணங்களை அவன் மேல் போட்டான். இதனால் மணிபத்ரனின் மகுடம் கீழே விழுந்தது. ஆயினும் அவன் கலங்கவில்லை. பக்கத்தில் மகுடம் விழுந்ததால் அவனே பின்னால் பார்ஸ்வ மௌலி என்று அழைக்கப் பட்டான். மணி பத்ரன் பின் வாங்கியதைக் கண்டு பெரும் கோலாகல சப்தம் எழுந்தது. இதனிடையில் குபேரனும் அங்கு வந்து சேர்ந்தான். சங்கம், பத்மம் இவைகளுடன் சுக்ர சாபத்தால் பீடிக்கப் பட்ட பாதங்களுடன், சாபத்தின் பலனாக தன் கௌரவத்தை இழந்தவனைப் பார்த்துச் சொன்னான். துர்மதியே, நான் தடுத்தும் கேளாமல் தவறு செய்து கொண்டே போகிறாயே, இதன் பலன் உனக்குத் தெரிய வரும் பொழுது நீ முற்றிலும் அழிந்திருப்பாய். தெரியாமல் விஷத்தை அருந்தி விட்டு, தெரியாமல் செய்த தவறு தானே என்றால், முடிவு வேறு விதமாக ஆகி விடுமா? இது போன்ற நடத்தைகளால் தேவர்கள் சந்தோஷம் அடைவதும் இல்லை. இன்னமும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே. தாய், தந்தையரையும், குருவையும் யார் அவமதிக்கிறானோ, அதன் பலனை அவன் அனுபவித்தே ஆக வேண்டும். யம லோகம் செல்லும் பொழுது இதை அறிவர். நிலையில்லாத இந்த சரீரத்தில் தவம் செய்து தன்னை செம்மை படுத்திக் கொள்ளாதவன், முடிவு காலம் வரும் பொழுது மிகவும் சிரமப் படுவான். தர்மத்தினால், ராஜ்யம் தனம், சௌக்யம் இவற்றை அடைகிறான். அவனே அதர்மத்தினால் துக்கத்தை அனுபவிக்கிறான். சுகத்தை தேடுபவன், தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதர்மம் பாபத்தை சேர்க்கும். பாபத்தின் பலன் துன்பமே. அதையும் அனுபவித்தே தீர வேண்டும். அப்படியிருக்க, ஒருவன் பாப காரியம் செய்வானேயானால், அவன் மூடனே அன்றி வேறு என்ன சொல்ல? துர்புத்தியுடையவன் மனதில் நல்ல எண்ணமே உதிக்காது. எந்த விதமான கர்மாவை செய்கிறானோ, அதற்கேற்ற பலனை அடைகிறான். புத்தியோ, ரூபமோ, பலமோ, புத்திரர்கள், செல்வமோ, தைரியமோ, புண்ய கர்மாக்களின் பலனாகத் தான் ஒருவன் பெறுகிறான். உன் புத்தி இப்படி இருக்கிறது. நீ உன் அழிவைத் தான் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாய். உனக்கு சமமாக நான் நின்று பேசக் கூட கூடாது. அசத்தான காரியங்களை செய்பவர்களுக்கு இது தான் விதிக்கப் பட்டுள்ள நியதி. இவ்வாறு சொல்லி கொண்டிருக்கையிலேயே ராவணனின் மந்திரிகள் மாரீசன் முதலானோர் ஓடி மறைந்தனர். தசக்ரீவன் யக்ஷ ராஜனால் தலையில் அடிபட்டு துன்புற்ற போதிலும் தன் இடத்தை விட்டு அசையவில்லை. நம்பிக்கையை இழக்கவும் இல்லை. திரும்பவும் யுத்தம். இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து காயப் படுத்தினர். த3னதன் ஆக்னேய அஸ்திரத்தை உபயோகித்தான் எனில், ராக்ஷஸேந்திரன் வருணாஸ்திரத்தை பிரயோகித்தான். உடனே தன் மாயா ரூபத்தை எடுத்துக் கொண்டு ராக்ஷஸ ராஜன், மறைந்து நின்று வித விதமான ரூபங்களை எடுத்துக் கொண்டான். புலி, வராகம், மேகம், மலை, சாகரம், மரம், யக்ஷன், தைத்யன் இப்படி பல விதமாக தசானனன் காட்ய ளித்தான். இப்படி த4னத3னை அலைக்கழித்து, கடைசியில், அவன் பெரிய க3தை4யால் ஓங்கி அடித்தான். ரத்தம் ஆறாக பெருக, தனதன் விழுந்தான். வேரோடு பிடுங்கி எறியப் பட்ட அசோக மரம் போல தரையில் கிடந்தான். பத்மம் போன்ற நிதிகள் அவனை சூழ்ந்திருந்தன. நந்தன வனத்துக்கு கொண்டு வந்து அவை குபேரனை உயிர்ப்பித்தன. ராக்ஷஸேந்திரன் குபேரனை ஜயித்து விட்டோம் என்று மகிழ்ந்தான். தன்னுடைய வெற்றியைக் கொண்டாட குபேரனுடைய புஷ்பகம் என்ற விமானத்தை அபகரித்துக் கொண்டான். அதன் தூண்கள் தங்கத்தால் ஆனவை. தோரணங்கள் வைடூரியம் இழைத்து கட்டப் பட்டு இருந்தது. முத்துக்களால் வலைகள் பின்னப் பட்ட ஜன்னல்கள் உடையது. மனோ வேகத்தில் செல்லக் கூடியது. நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை உடையது. ஆகாயத்தில் பறக்கும் அது விரும்பிய ரூபத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதியுடன் இருந்தது. அதன் படிகள் மணிகள் இழைத்து பொன்னால் செய்யப் பட்டிருந்தன. புடமிட்ட பொன்னால் ஆன வேதியை உடையது. தேவர்களை ஏற்றிச் செல்லும் வாகனம். குறைவில்லாதது. எப்பொழுதும் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. மனதுக்கு நிம்மதியை, சுகத்தை தரக் கூடியது. பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியது. ப்ரும்மாவால் நிர்மாணிக்கப் பட்டது. எல்லா வித காமங்களும் நிறைவேறும் வண்ணம் திட்டமிட்டு கட்டப் பெற்றது. உத்தமமானது. மனோகரமானது. குளிரோ, உஷ்ணமோ, எந்த பருவ நிலையிலும் சுகம் தரும் வண்ணம் சுபமாக அமைக்கப் பட்டிருந்தது. இதில் அந்த ராக்ஷஸ ராஜன் ஏறி, மூன்று உலகையும் வெற்றி கொண்ட இறுமாப்புடன், கைலாஸ மலையிருந்து கீழே இறங்கினான். தன் ஆற்றலால் வெற்றி பெற்றதாக மகிழ்ந்து கொண்டாடினான். காற்று வேகத்தில் இந்த விமானத்தில் ஏறி தன் நகரை அடைந்து சபையில் நுழைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 16 (553) ராவண நாம ப்ராப்தி: (ராவணன் என்ற பெயரைப் பெறுதல்)
ராமா, இந்த ராக்ஷஸாதிபன் குபேரனை ஜயித்த பின், மகேஸ்வரன் ஸ்ருஷ்டித்த சரவணம் என்ற உயர்ந்த மலை ப்ரதேசத்திற்கு சென்றான். பாஸ்கரனின் கிரணங்கள் பட்டு தங்கம் போல ஜொலித்துக் கொண்டிருந்த மலையே மற்றொரு பாஸ்கரன் போல இருந்தது. அழகிய வனங்களைக் கொண்ட அந்த மலையில் ஏறுகையில் புஷ்பக விமானம் நின்று விட்டது. ஏன் நின்று விட்டது என்று மந்திரிகளுடன் கலந்தாலோசித்தான். ஏன் நான் நினத்தபடி செல்லவில்லை, பர்வதத்தில் யாரோ தடுக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். சற்று புத்திசாலியான மாரீசன் பதில் சொன்னான். காரணம் இல்லாமல் இந்த புஷ்பகம் நிற்கவில்லை ராஜன், ஒன்று இது குபேரனைத் தவிர மற்றவர்களுக்கு வாகனமாக பயன் படுவதில்லை என்று விதி முறை ஏதாவது இருக்கலாம், தனாத்யக்ஷன் இல்லாததால் நிச்சலனமாக நிற்கிறது போலும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, சிவபெருமானுடைய வாகனமான நந்தி பகவான், பயங்கரமாக, கருப்பும், மஞ்சளும் ஆன நிறமும், வாமன உருவமும், தடுக்க முடியாத விரிந்த புஜ பலமும், முண்டித தலையும், வித்தியாசமான உருவமுமாக அருகில் வந்து நின்று இவர்களைப் பார்த்து, ப4வனுடைய (ப4வ-சிவன்) சிவனுடைய கிங்கரன் நான். நந்திகேஸ்வரன். தசக்ரீவா, திரும்பி போ. இந்த மலை சங்கரன் விளையாடும் இடம். யாரும் இங்கு நெருங்க முடியாது. சுபர்ணனோ, நாக, யக்ஷ, கந்தர்வர்களோ, ராக்ஷஸர்களோ, எந்த ஜீவனும் இங்கு நுழைய முடியாது என்பது நடைமுறை விதி. அதனால் துர்புத்தியே, திரும்பி போ, இல்லையெனில் நாசமடைவாய் என்று எச்சரிக்கை செய்தார். இதைக் கேட்ட ராக்ஷஸ ராஜன் அளவில்லா கோபம் கொண்டான். அவன் குண்டலங்கள் ஆடின. ரோஷத்தால் சிவந்த கண்களுடன் புஷ்பகத்திலிருந்து இறங்கி யாரது சங்கரன்? என்று கத்தியபடி மலையடிவாரம் சென்றான். சற்று தூரத்தில் நந்தி பகவான் அருகில் நிற்பதையும் கண்டான். ஜ்வலிக்கும் சூலத்தை கையிலேந்தி, மற்றொரு சங்கரன் போல் நின்று கொண்டிருந்தவரை அலட்சியமாக பார்த்து இடி இடிப்பது போல சிரித்தான். வானர முகம் என்று ஏசினான். பகவான் நந்தியும் கோபம் கொண்டார். கடுமையான குரலில், ஏ, தசானனா, வானர முகம் என்று என்னை எப்பொழுது ஏசினாயோ, கற்களை கொட்டியது போல உபகாசமாக சிரிக்கிறாயோ, அதனாலேயே என் போன்ற உருவத்துடன், என் வீர்யமும், தேஜஸும் கூடிய வானரங்கள், உன் குலத்தை நாசம் செய்ய வரப் போகிறார்கள். நகமும், பற்களுமே ஆயுதங்களாக, மனோ வேகத்தில் சஞ்சாரம் செய்பவர்களாக க்ரூரமாக யுத்தம் செய்யும் ஆவலுடன், வெறி கொண்டு போர் புரிபவர்களாக, பெரிய மலை நடமாடுவது போன்ற உருவத்துடன் பிறப்பார்கள். அவர்கள் உன் கர்வம், அகங்காரம் இவற்றை ஒரேயடியாக படை பலத்துடன் சேர்த்து அடக்கி விடுவார்கள். மந்திரிகள், புத்திரர்கள், உற்றார், உறவினரோடு நாசம் அடைவாய். இதோ, இப்பொழுதே, நான் உன்னை வதம் செய்து விடுவேன் தான். என்னால் முடியும், ஆனால் மாட்டேன். ஏனெனின் உன் பாப கர்மாக்களின் பலனாக நீ ஏற்கனவே ஹதம் செய்யப் பட்டு விட்டாய். நந்தி பகவான் இப்படிச் சொன்னதும், தேவ துந்துபிகள் முழங்கின. புஷ்ப வ்ருஷ்டியும் உண்டாயிற்று. தசானனனோ, சற்றும் யோசியாமல், நந்தி பகவானின் பெருமையையும் உணராமல், மலை மேல் ஏறி புஷ்பகத்தின் வேகத்தை தடுத்து நிறுத்தி என்னை அவமதித்து விட்டாய். இதோ பார், இந்த மலையையே அடியோடு நாசம் செய்து விடுகிறேன். எந்த பலத்தில் ப4வன் என்ற மகேஸ்வரன் இங்கு அரசன் போல விளையாடுகிறான், பார்க்கலாம். பயப்பட வேண்டிய இடத்தில் எதுவும் அறியாமல் பிதற்றுகிறாய். நான் யார் தெரியுமா? என்று சொல்லிக் கொண்டே தன் புஜங்களை விரித்து மலையின் அடியில் கொடுத்து மலையை அசைக்க முயன்றான். மலை அசைந்து ஆடியது. தேவ கணங்கள் நடுங்கினர். பார்வதியும் பயந்து மகேஸ்வரனை அணைத்துக் கொண்டாள். உமா, அப்பொழுது மகாதேவன், தேவர்களுள் சிறந்த ஹரன், தன் கால் கட்டை விரலால் மலையை விளையாட்டாக அழுத்தினார். மலையின் அடியில் அகப்பட்டுக் கொண்ட தசக்ரீவனது புஜங்கள் நசுக்கப் பட்டன. அந்த ராக்ஷஸ ராஜனின் மந்திரிகள் செய்வதறியாது விழித்தனர். இவர்கள் இப்படி நின்றதைக் கண்டு மேலும் கோபமும், கைகள் நசுங்குவதால் ஏற்பட்ட உடல் வருத்தமும் சேர, ராவணன் மூவுலகும் நடுங்கும்படி உரத்த குரலில் அலறினான். அமாத்யர்கள், யுக முடிவு நெருங்கியதோ, வஜ்ரத்தால் அடி பட்டோமோ, என்று குலை நடுங்கினர். சமுத்திரங்கள் கூட அலைகளின் ஆட்டம் அடங்கி நின்றன. மலைகள் அசைந்து கொடுத்தன. யக்ஷர்களும் வித்யாதரர்களும் சித்தர்களும் இது என்ன? என்று மலைத்து நின்றனர். ராக்ஷஸ ராஜனின் பரிதாபமான கதறல் தான் இது என்று அறிந்த மந்திரிகள், ராஜன், மகா தேவனை, உமாபதியை துதி செய். வேறு வழி இல்லை. அவரை தோத்திரம் செய்து வணங்கு. நீலகண்டனை, மகா தேவனை உன் ஸ்தோத்திரங்களால் பிரார்த்தனையால் மகிழ்விப்பாய். அவரையன்றி வேறு யாரும் இன்னிலையில் உன்னை காப்பாற்ற இயலாது. சங்கரன் க்ருபாளு. கருணை நிரம்பியவர். உன் பிரார்த்தனையை கேட்டு நிச்சயம் அருள் புரிவார் என்று அறிவுரை செய்தனர். இதைக் கேட்டு தசானனனும், வ்ருஷபத்வஜனான மகா தேவனை, சங்கரனை துதி செய்து வழி பட்டான். சாம கானம் செய்தும், மற்றும் பல துதிகளை பாடியும் வணங்கி பிரார்த்தனை செய்தான். இப்படி வருந்தி புலம்பியபடி, ராக்ஷஸ ராஜன் ஆயிரம் ஆண்டுகள் தவித்தான். பிறகு, கைலாய மலையின் மேல் உறைந்திருந்த சங்கர பகவான் அவன் கைகளை விடுவித்து தசானனா, உன் வீர்யமும், தன்னம்பிக்கையும் என்னை மகிழ்விக்கின்றன. சைலம் (மலை) கையில் விழுந்தவுடன் நீ போட்ட கூக்குரலால் மூவுலகமும் நடுங்கியது. அதை நினைவில் கொண்டு உன்னை உலகத்தார் ராவணன் என்று அழைப்பார்கள் என்றார். (ராவ-சரய, ஸசரக்ஷெர்ம ராவண- கதறுதல், ஸசரக்ஷெர்மிநங). தேவர்களும், யக்ஷர்களும், மற்றும் உலகில் உள்ளோர் யாவரும் ராவணன், லோக ராவணன் (ராவணன் என்பவன் உலகையே கதறச் செய்தவன்) என்றே அழைப்பர். புலஸ்தியனே போய் வா. எங்கு வேண்டுமானாலும் போ என்றார். தசக்ரீவன் அவரிடம் மகா தேவனே, என்னிடம் தாங்கள் மகிழ்ச்சியடைந்தது உண்மையானால் எனக்கு ஒரு வரம் தாருங்கள். ப்ரும்மா எனக்கு தீர்காயுளையும், யக்ஷ, கந்தர்வ, தேவர்களால் எனக்கு மரணம் இல்லையென்று வரம் அளித்திருக்கிறார். உங்கள் கையால் எனக்கு ஒரு சஸ்திரம், ஆயுதம் தாருங்கள். இப்படி ராவணன் கேட்டதும், சங்கரன், சந்திர ஹாஸம் என்ற தன் வாளைக் கொடுத்தார். மீதி ஆயுளையும் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட ராவணனிடம் எச்சரிக்கையும் செய்தார். இதை அலட்சியமாக எண்ணாதே. நீ சற்று மதிப்பு குறைவாக நடந்து கொண்டாலும் இந்த ஆயுதம் என்னிடம் திரும்பி வந்து விடும். என்றார். இப்படி மகேஸ்வரனே, ராவணன் என்று பெயரிட்டு அழைக்க, அவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு புஷ்பகத்தில் ஏறினான். இதன் பின் பூமி முழுவதும் சுற்றினான். ஆங்காங்கு தென்பட்ட க்ஷத்திரிய அரசர்களை துன்புறுத்திய வண்ணம், பரிவாரங்களோடு பலரை அழித்தான். பலரை தொல்லை பொறுக்காமல் ஓடச் செய்தான். மீதியிருந்தவர்கள், இவனுடைய கர்வத்தையும், அட்டகாசத்தையும் தெரிந்து கொண்டு, இவனைக் காணும் முன்னே தோற்றோம் என்று ஒப்புக் கொண்டார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 17 (554) வேத3வதீ சாப: (வேதவதி என்பவள் கொடுத்த சாபம்)
உலகை சுற்றி வந்த ராவணன் ஒரு முறை இமய மலைச் சாரலுக்கு வந்து சேர்ந்தான். அங்கு மான் தோல் உடுத்தி ஜடை தரித்து தவம் செய்யும் ஒரு கன்யா ஸ்த்ரீயைக் கண்டான். இயல்பாகவே அழகான அந்த ஸ்த்ரீ, தவம், விரதம், நியமங்களின் தேஜஸும் சேர, பிரகாசமாக விளங்கினாள். அவளைக் கண்டு மோகித்து சிரித்துக்கொண்டே அவளை விசாரித்தான். ஏ, அழகிய பெண்ணே, இது என்ன? உன் இளமைக்கு சற்றும் பொருத்தமில்லாத தவ வாழ்க்கை. உன் அழகுக்கும், இள வயதிற்கும் தவம் செய்யும் செயல் ஏற்றது அல்ல. அரசர்களையும் மோகத்தில் ஆழ்த்தக் கூடிய அதி சுகுமாரமான உடல் அழகு உன்னுடையது. இதை தவம் செய்து வருத்துவது முறையல்ல. ஏன் இந்த கஷ்டமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறாய்? என்று இவ்வாறு விசாரித்துக் கொண்டிருக்கையிலேயே, அந்த பெண், அதிதி மரியாதைகளை குறைவற செய்ய ஏற்பாடுகளை செய்தாள். பின் பதில் சொன்னாள். என் தந்தை குசத்வஜன், என்ற ப்ரும்ம ரிஷி. அளவில்லா மகிமை, பெருமை கொண்டவர். ப்ருஹஸ்பதி பிள்ளை, குணத்திலும், தகுதியிலும் ப்ருஹஸ்பதிக்கு சமமாக இருந்தவர் அவர். நித்ய வேத பாராயணம் செய்பவர், அவரது வாக்கிலிருந்து உதித்தவள் நான். என் பெயர் வேதவதி. இதன் பின் தேவ கந்தர்வ, யக்ஷ, பன்னகர்கள், யாவரும் என் தந்தையிடம் என்னை யாசித்து வந்தனர். ராக்ஷஸ ராஜனே: என் தந்தை அவர்களில் யாருக்குமே என்னைத் தர விரும்பவில்லை. என்ன காரணம் என்று கேட்டாயே, ராக்ஷஸேஸ்வரா, சொல்கிறேன் கேள். என் தந்தை விஷ்ணுவைத் தான் தன் மாப்பிள்ளையாக தகுதியுள்ள வரனாக நினைத்து இருக்கிறார். மூவுலக நாயகனான விஷ்ணுவைத் தவிர மற்றவர்களுக்கு என்னைத் தர மறுத்து வந்த சமயம், தன் பலத்தில் கர்வம் கொண்ட தம்பு என்ற தைத்ய அரசன், தூங்கும் பொழுது என் தந்தையைக் கொன்று விட்டான். திடுக்கிட்டுப் போன என் தாய், தந்தையை அணைத்தபடியே நெருப்பில் விழுந்து விட்டாள். நான் மனதில் வரித்த நாராயணனை நினைத்துக் கொண்டு அவனை அடைய தவம் செய்து வருகிறேன். வேறு யாரும் என்னை அடைய முடியாது. நாராயணன் தான் என் பதி என்று சங்கல்பம் செய்து கொண்டு நான் தவ வாழ்வை மேற் கொண்டுள்ளேன். புலஸ்திய நந்தனா, நீ யார் என்பது எனக்குத் தெரியும். நலமாக போய் வா. மூவுலகிலும் நடப்பதை என் தவ வலிமையால் அறிந்து கொண்டு விடுகிறேன். இதைக் கேட்ட பின்பும், காம வசமாகி இருந்த ராவணன் புஷ்பக விமானத்திலிருந்து இறங்கினான். அழகிய பெண்ணே, ஏமாந்து போகிறாய். இப்படி ஒரு எண்ணம் உனக்கு ஏன் வந்தது? இது போன்ற தவ வாழ்க்கையும், பேச்சும் வயதான முதியவர்கள் புண்யத்தை சேர்த்துக் கொள்ள செய்வார்கள். எல்லா வித நல்ல குணங்களையும் கொண்ட நீ இப்படி பேசுவது பொருத்தமாக இல்லையே. மூவுலகும் போற்றத் தகுந்த அழகியே, உன் இளமையை வீணாக்காதே. நான் லங்காதிபதி. தசக்ரீவன் என்று பெயர் பெற்றவன். எனக்கு மனைவியாக வந்து எல்லா போகங்களையும் நன்றாக அனுபவி. அது யார்? விஷ்ணு என்று சொல்கிறாயே? யாரவன்? வீர்யத்திலும், தவத்திலும், போகத்திலும், பலத்தாலும் எனக்கு சமமாக நிற்க முடியுமா அவனால்? அவனைப் போய் நீ விரும்புவதாகச் சொல்கிறாய். உடனே அந்த பெண் வெகுண்டு, நீ சொல்வது சரியல்ல. நீ தான் மூவுலக நாயகனான விஷ்ணுவை அவமதிக்கிறாய். ராக்ஷஸேந்திரா, உன்னைத் தவிர வேறு யாரும் அவரை அவதூறாக பேசியதில்லை. இப்படி வேதவதி நிராகரித்தவுடன் அவள் தலைக் கேசத்தை பிடித்து தூக்கினான். ரோஷத்துடன் தன் தலை கேசத்தை வேகமாக விடுவித்துக் கொண்டவள், நெருப்பு போல ஜ்வலித்தாள். அவள் கைகளே கத்தியாக ராவணன் பற்றியிருந்த கேசத்தை அறுத்து வீழ்த்தியது. அக்னியில் தன் மரணத்தை தீர்மானித்துக் கொண்டு விட்டவளாக, ராவணனைப் பார்த்து பதில் உரைத்தாள். பண்பற்றவனே, நீ அனாவசியமாக என்னைத் தொட்டு பலாத்காரம் செய்த பின், இந்த சரீரத்துடன் இருக்க மாட்டேன். இதை தியாகம் செய்கிறேன். நில், ராவணா, நான் நெருப்பில் விழப் போகிறேன். வனத்தில் தனித்து நிற்கும் என்னிடம் நீ முறை தவறி நடந்ததற்காக நான் திரும்பி வந்து பிறப்பேன். சாதாரணமாக பெண்களால் புருஷர்களை வதம் செய்ய முடியாது. உனக்கு சாபம் கொடுக்கலாம். அது என் தவ வலிமையைக் குறைக்கும். நான் இது வரை யாகம் செய்ததும், தவம் செய்ததும் சிறிதளவாவது இருக்குமானால், நான் அயோனிஜாவாக ஏதோ ஒரு தர்மவானின் குலத்தில் பிறப்பேன், இவ்வாறு சொல்லிக் கொண்டே அவள் அக்னியில் குதித்து விட்டாள். புஷ்பமாரி பொழிந்தது. அவள் தான் ஜனகர் மகளாக வந்தாள். உனக்கு மனைவியாக வாய்த்தாள். நீ தான் சனாதனனான விஷ்ணு. முன் கொண்ட கோபமே அவள் மனதில் வேரூன்றி போய் இருந்தது. ராவணன் வதத்துக்கும் அவளே காரணமானாள். பூமியில், வயலில் கலப்பையின் நுனியில் அகப்பட்டாள். வேதியில், யாக குண்டத்தில் அக்னி பிழம்பு போல ஜ்வலிப்பவள், க்ருத யுகத்தில் இருந்தவள் இந்த வேதவதி. அந்த ராக்ஷஸனை வதம் செய்ய என்றே த்ரேதாயுகத்தில் மிதிலா குலத்தில் தோன்றினாள். ஜனகன் மகளாக வளர்ந்தாள். கலப்பையில் (சீத) உண்டானவள் என்பதால் சீதை என்று பெயர் பெற்றாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 18 (555) மருத்த விஜய: (மருத் கணங்களை ஜயித்தல்)
வேதவதி நெருப்பில் குதித்தது ராவணனிடத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பழைய படி உலகை சுற்ற ஆரம்பித்தான். யாகம் செய்து கொண்டிருந்த மருத்தன் என்ற அரசனைக் கண்டான். உசீர (வாசனையான வேரை உடைய செடி) விதையின் உள் மறைந்து தேவர்களுடன் யாகம் செய்தவன். சம்வர்த்தன் என்ற ப்ரும்ம ரிஷி ப்ரகஸ்பதியின் சகோதரர். மற்ற தேவ கணங்கள் புடை சூழ யாக காரியத்தை செய்து கொண்டிருந்தார். இந்த தேவர்கள் ராவணனின் வர பலத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தனர். எனவே, நேரில் அவனைக் கண்டதும், பயந்து (திர்யக்-குறுக்காக சஞ்சரிப்பவை, பறவை, மிருகங்கள்) உருவை எடுத்துக் கொண்டனர். இந்திரன் மயிலானான். தர்மராஜன் காகமானான். குபேரன் பல்லியானான். வருணன் ஹம்சமானான். மற்ற தேவதைகளும் இப்படி தங்களை மறைத்துக் கொள்ள, ராவணன் அசுத்தமான நாய் போல யாக சாலையினுள் நுழைந்தான். யாகம் செய்து கொண்டிருந்த அரசனிடம், வா யுத்தத்துக்கு, அல்லது தோற்றேன் என்று ஒப்புக் கொள் என்று அதட்டினான். மருத் என்ற அந்த அரசன், யார் நீ என்று வினவ, அட்டகாசமாக சிரித்து, அலட்சியமாக, தன் பெருமை பேசலானான். பார்த்திவனே, என்னைக் கண்டு பரபரப்படையாமல் நிற்கிறாயே. அதைக் கண்டு நான் சந்தோஷப் படுகிறேன். குபேரன் சகோதரன் என்று என்னை தெரிந்து கொண்டாலும் சரி. இந்த உலகில் என் பலத்தை அறியாதவர்கள் கூட இருக்கிறார்களா? என் சகோதரனை ஜயித்து அவன் விமானத்தை அபகரித்துக் கொண்டவன் நான். மருத் என்ற அந்த அரசன், நீ த4ன்யன் – பாக்கியம் செய்தவன் தான், சந்தேகமில்லை. உடன் பிறந்தவனையே ஜயித்திருக்கிறாயே. நிச்சயமாக உனக்கு சமமாக யாரும் இருக்க முடியாது தான். தர்ம வழியில் தவம் செய்து வரங்களைப் பெற்றதாக நான் கேள்விப் பட்டதில்லை, நீ சொல்வது தான். தானாக தற்பெருமை பேசிக் கொள்கிறாய். துர்மதே, நில், இதோ வருகிறேன். இங்கிருந்து நீ உயிருடன் தப்ப முடியாது. என் உயிருள்ளவரை உன்னை விட மாட்டேன். கூர்மையான என் பாணங்களால் உன்னை யம லோகத்துக்கே அனுப்புகிறேன். என்று சொல்லிக் கொண்டே, தன் வில், அம்பு முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போர் புரிய தயாரானான். கோபத்துடன் கிளம்பிய அரசனை வழி மறித்து சம்வர்த்தன் என்ற யாக குருவான மகரிஷி அறிவுரை சொன்னார். ராஜன்: நான் சொல்வதைக் கேள். இந்த சமயம் நீ போர் புரிவதும், அழிப்பதும் சரியல்ல. மாகேஸ்வர யாகம் ஆரம்பித்து விட்டு அதை முடிக்காமல் விடுவது குல நாசனமாகும். யாக தீ ஏற்றியவன் எப்படி கோபத்துக்கு இடம் கொடுக்கலாம். யுத்தம் செய்வது எப்படி சரியாகும்? இந்த ராக்ஷஸனுடன் யுத்தம் செய்து வெற்றி பெற வாய்ப்புகள் பாதி பாதி என்றே வைத்துக் கொள்வோம். சந்தேகத்துக் கிடமான இந்த செயலில் இறங்கும் முன் யோசி, இந்த ராக்ஷஸனும் எளிதில் ஜயிக்க முடியாதவனே. குருவின் இந்த சொல்லைக் கேட்டு அரசன் திரும்பி விட்டான். ஆயுதங்களை வைத்து விட்டு நிதானமாக யாகத்தில் அமர்ந்தான். உடனே ராவணனைச் சேர்ந்தவர்கள் ஆரவாரம் செய்து ஆர்ப்பரித்தனர். சுகன், ராவணன் ஜயித்து விட்டான். அரசன் சரணடைந்து விட்டான் என்று முழங்கினான். அங்கு இருந்த மகரிஷிகளை தின்று தீர்த்து ரத்தம் ஆறாக பெருக ஓட விட்டு, ராவணன் கூட்டம் திரும்பிச் சென்றது. அவன் அகன்றதும், தேவர்கள் தங்கள் சுய ரூபத்துடன் கூடி யோசித்தார்கள். இந்திரன் தனக்கு அடைக்கலம் கொடுத்த நீலத் தோகையுடைய மயிலுக்கு நன்றி தெரிவித்தான். இனி உனக்கு பாம்புகளிடம் பயம் இல்லாது போகட்டும். இந்த ஆயிரம் கண்கள், உன் தோகையில் உள்ளவை நான் மழை பொழியச் செய்யும் பொழுது சந்தோஷமாக ஆடி என்னை மகிழ்விக்கட்டும். அதுவரை மயிலுக்கு நீல வண்ணம் மட்டுமே. தேவேந்திரன் வரம் பெற்று நீண்ட தோகையைப் பெற்றன. காகத்தைப் பார்த்து தர்மராஜன், உன்னிடம் நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். மற்ற ஜீவன்களுக்கு வரும் வியாதிகள் உன்னை அண்டாது. உனக்கு மரண பயம் கிடையாது. மனிதர்கள் அடித்து கொன்றாலன்றி உனக்கு மரணம் கிடையாது. இந்த மனிதர்கள் என்னிடம் பயப்படுபவர்கள். பசி தாகம் இவற்றால் வாடி இருப்பவர்கள், உனக்கு ஆகாரம் கொடுத்து வந்தால் தன் சுற்றத்தாரோடு திருப்தியாக இருப்பார்கள். மனம் நிறைந்து நான் உனக்கு அளிக்கும் வரம் இது. வருணனும் ஹம்ச பக்ஷிக்கு ஒரு வரம் கொடுத்தான். கங்கை நீரில் விளையாடிக் கொண்டிருக்கும் நீ, இறக்கைகளே ரதமாக பறந்து செல்லும் ஹம்ஸமே, உனக்கு மிக அழகிய வர்ணம் அமையும். சந்திர மண்டலம் போல குளுமையான வெண்மை நிறத்தில் வளைய வருவாய். சுத்தமான கடல் நுரை போன்ற காந்தியுடன் என் சரீரமான ஜலத்தில் சஞ்சரிப்பாய். ஜலத்தில் நீ அளவற்ற மகிழ்ச்சியடைவாய் என்றான். ராமா, முன் காலத்தில் நீல நிறமும், வெண் திட்டுகளாகவும் நீளமான இறக்கைகளும், அலகு வெண்மையாகவும் இருந்த இப்பக்ஷிகள், இதன் பின் தூய வெண் நிறம் பெற்றன. அதுவே அவைகளுக்கு சிறப்பாயிற்று. பல்லிகளைப் பார்த்து வைஸ்ரவணன் சொன்னான். மலையில் வசித்த இந்த இனத்தவருக்கு பொன் நிறம் அளித்தான். தலையும் உடலும் பொன் நிறம் பெற்றன. இவ்வாறு வரங்கள் அளித்து அரசனுடன் அவரவர் இருப்பிடம் சென்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 19 (556) அனரண்ய சாப: (அனரண்யன் கொடுத்த சாபம்)
ராக்ஷஸாதிபன் மருத் என்ற அரசனை வென்ற திருப்தியோடு சென்றான். எங்கு யுத்தம் கிடைக்கும் என்று ஊர் ஊராக சென்று அரசர்களுடன் மோதிப் பார்த்தான். மகேந்திரன் வருணன் இவர்களுக்கு சமமாக நியாயமாக ஆண்டு வந்த ராஜாக்களிடம் யுத்தம் செய்ய அழைத்தான். அல்லது என்னிடம் தோற்றதாக ஒத்துக் கொள்ளுங்கள் என்று வம்புக்கு இழுத்தான். இது என் கொள்கை இரண்டில் ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இல்லையெனில் நல்ல கதியை அடைய மாட்டீர்கள். க்ஷத்திரியர்களின் லக்ஷணம் இது. அறிவிற் சிறந்த சில அரசர்கள் ஒன்று கூடி தங்களுக்குள் பேசிக் கொண்டு, அப்படியே இருக்கட்டும், உன்னால் நாங்கள் ஜயிக்கப் பட்டதாக நினைத்துக் கொள் என்று சொல்லி விட்டனர். துஷ்யந்தன், கா3தி4, சுரதன், க3யை அரசன் புரூரவன் இவர்கள் ஒன்று சேர்ந்து, தாங்கள் தோற்றதாக ஒப்புக் கொண்டனர். ராவணன் அயோத்தி வந்து சேர்ந்தான். அமராவதி என்ற நகரை இந்திரன் பரிபாலித்து வைத்து இருப்பதை போல, தன் நாட்டை மிகவும் நல்ல முறையில் பாலித்த அனரண்யன் அரசனாக இருந்தான். அவனிடம் போய் ராவணன் யுத்தத்திற்கு அழைத்தான். அல்லது தோற்றதாக ஏற்றுக் கொள். இது தான் என் கொள்கை, சாஸனம் என்றான். அனரண்யன் வெகுண்டான். வா, வா, த்வந்த யுத்தம் செய்வோம். ராக்ஷஸேந்திரனே, உன் பாப காரியங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஒரு நிமிஷம் நின்று தயார் செய்து கொள், நானும் ஆயத்தமாக வருகிறேன். இதற்குள் விஷயம் அறிந்த அரசனின் படைகளும் ராக்ஷஸேந்திரனுடன் போர் செய்ய தயாராக வந்து விட்டனர். பத்தாயிரம் யானைகள், அதைப் போல இரு மடங்கு குதிரைகளும், கணக்கில்லாத ரதங்கள், கால் நடை வீரர்கள் பூமியை மறைத்தபடி ஏராளமான போர் வீரர்கள் பெரும் போருக்கு தயாராக வந்து விட்டனர். யுத்தம் செய்யும் கலையை அறிந்து தேர்ந்தவனே ஸ்ரீ ராமா, அனரண்யன் படை பலம் மிக அற்புதமாக இருந்தது. ராவணன் வீரர்கள் இருக்கும் இடம் வந்த படை வீரர்கள், கடுமையாக போர் செய்தும், யாகாக்னியில் விடப் பட்ட ஹவ்யம் போல அந்த பெரும் படை நொடிப் பொழுதில் மறைந்தது. வெகு நாட்கள் தொடர்ந்து தேடித் தேடி ராவணனின் வீரர்களை போரில் வென்றனர். மீதி இருந்தவர்கள் விட்டில் பூச்சி நெருப்பில் விழுந்து மடிவது போல மடிந்தனர். தன் வீரர்கள் மடிந்ததைக் கண்டு அனரண்யன் தானே ராவணனுடன் நேரடியாக மோதினான். மாரீசன், சுகன், சாரண, ப்ரஹஸ்தன் என்ற ராவணன் மந்திரிகள் தோற்று ஓடினர். ராக்ஷஸ ராஜாவின் மேல் அனரண்யன் தொடுத்த பாணங்கள் எதுவும் செய்ய முடியவில்லை. பல விதமான அஸ்திர, சஸ்திரங்களை பிரயோகித்தும் அனரண்யனால் ராவணனை எதுவும் செய்ய முடியவில்லை. ராவணன் ஓங்கி தன் கைத்தலத்தால் அடித்ததை தாங்க மாட்டாமல் ரதத்திலிருந்து கீழே விழுந்தான். ரதத்திலிருந்து விழுந்து கை கால்கள் முறிய, நிலை குலைந்து சால மரம் வேரோடு சாய்ந்தது போல கிடந்தான். ராவணன் பலமாக சிரித்து, பரிகாசமாக இக்ஷ்வாகு ராஜாவைப் பார்த்து ராஜன், என்னுடன் மோதி என்ன பலன் தெரிந்து கொண்டாயா? போகத்தில் மூழ்கி கிடந்திருக்கிறாய். உலக நடப்பு தெரியவில்லை. மூவுலகிலும் எனக்கு சமமாக த்வந்த யுத்தம் யாரும் செய்ய முடியாது. தெரிந்து கொள். ராஜா அனரண்யன் எதுவும் செய்ய முடியாமல், என்ன செய்வது.? போதாத காலம். என்னை ஜயித்ததாக மார் தட்டிக் கொள்ளாதே. ராக்ஷஸா, என் போதாத காலம் நான் உன்னிடம் இன்று தோற்றேன். நான் புற முதுகு காட்டி ஓட வில்லை. நேருக்கு நேர் யுத்தம் செய்து உன்னால் தோற்கடிக்கப் பெற்றேன். என் உயிரை காப்பாற்றிக் கொள்ள இப்பவும் முடியும். ஆனால் என் இக்ஷ்வாகு குலப் பெருமையை நிலை நிறுத்த நான் தான தர்மங்கள் செய்தது ஏதேனும் இருந்தால், யாக யக்ஞங்கள் செய்ததும், அதன் பலனும் உண்டானால், என் பிரஜைகளை நல்ல முறையில் பாதுகாத்து வந்ததும் உண்மையானால், என் குலத்தில் உன்னை வதைப்பவன் வந்து பிறப்பான். தசரதன் மகனாக, ராமனாக உன்னுடன் போராடி உன்னைக் கொல்ல வருவான். அந்த சமயம் இடி இடிப்பது போல தேவ துந்துபி முழங்கியது. புஷ்ப வ்ருஷ்டியும் உண்டாயிற்று. ராஜா ஸ்வர்கம் சென்றான். ராக்ஷஸேந்திரனும் திரும்பிச் சென்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 20 (557) ராவணன் சந்துக்ஷணம் (ராவணன் போர் முழக்கம் செய்தல்)
பூமியில் இருந்த அரசர்கள் யாவரையும் துன்புறுத்தி வந்த ராக்ஷஸேந்திரன் முனி ஸ்ரேஷ்டரான நாரதரை சந்தித்தான். அவரை வணங்கி தசக்ரீவன் குசல ப்ரச்னம் செய்தான். அதன் பின் மேகத்தின் இடையில் நின்றபடி நாரதன் புஷ்பகத்தில் இருந்த ராவணனுடன் பேச்சு கொடுத்தார். விஸ்ரவஸ் மகனா? ராக்ஷஸ ராஜனே, நில், நில். உன் விக்கிரமம் பற்றி கேள்விப் பட்டேன். நிறைய ஜயித்து உன் சுற்றத்தாரையும், உற்றாரையும் நல்ல நிலைமையில் காத்து வருவதாக அறிந்தேன். சந்தோஷம். இருந்தும் நான் சொல்ல வந்த விஷயம் ஒன்று உண்டு. கேட்பதானால் கேள். கவனமாக கேள். குழந்தாய், திரும்பத் திரும்ப இந்த தேவர்களை ஏன் வதைக்கிறாய். துன்புறுத்துகிறாய். மரணத்தின் பிடியில் இருப்பது போல இங்குள்ளோர் பாதி உயிர் இழந்த நிலையில் இருப்பது போல இருக்கிறார்கள். தேவ, தானவ, தைத்யர்கள், யக்ஷ, கந்தர்வ, ராக்ஷஸர்கள், இவர்கள் கையால் மரணம் அடையாமல் இருக்க (அவத்யத்வம்) என்று வரம் பெற்றிருக்கிறாய். திரும்ப இவர்களை வருத்துவது சரி. ஆனால் மனிதர்கள் அப்படி அல்ல. எப்பொழுதும் செல்வத்தில் அறிவிழந்து, பல கஷ்டங்களை தாங்களே அனுபவித்து வருகிறார்கள். தவிர, முதுமை, பல வியாதிகள் இவர்களை அரித்தெடுக்கின்றன. இது போன்ற விரும்பத்தகாத பல கஷ்டங்களுக்கு இடையில், ஆங்காங்கு யாரோ ஒருவர் இருவர் புத்திசாலிகளாக இருந்து விட்டால், யுத்தம் செய்து அடக்கி விடலாம். ஏற்கனவே தெய்வத்தால் தண்டிக்கப் பட்டவர்களாக, அழிந்து கொண்டே வரும் மனித குலம், பசி, தாகம் இவை வேறு. அவர்களை வருத்த, தன் செயல்களால் சிந்தனையும், துக்கமும் வேறு அலைக்கழிக்க, பல விதமாக வருந்தும் இந்த மனிதர்களை மேலும் ஏன் துன்புறுத்துகிறாய்? ராக்ஷஸேஸ்வரா, உன் புஜ பலம் எப்படிப் பட்டது. மனிதனை இப்படிப் பார். மூடன், விசித்ரமானபொருள், செய்ய வேண்டியது எது செய்யக் கூடாது எது என்ற அறிவும் இல்லாதவர்கள். சிலசமயம் சந்தோஷம் அதிகமாகி விட்டால் வாத்யங்கள் வாசித்தும், நடனமாடியும் பொழுதைக் கழிப்பர். மற்றவர்கள் ஏதோ காரணம் சொல்லி கண்ணீர் விட்டபடி வருந்தியபடி அழுத முகமாகவே காணப்படுகிறார்கள். தாய், தந்தை மகன் என்று பற்று வைத்து, தன் மனைவி, பந்துக்கள் என்று மோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். இப்படி ஏற்கனவே தாங்க முடியாத சோக பாரத்தை சுமப்பவர்களை நீ மேலும் வருத்தாதே. இதற்கு மேல் தாங்கள் அனுபவிப்பது வெறும் துக்கமே என்பதைக் கூட அறிய மாட்டார்கள். இந்த உலகை துன்புறுத்துவது போதும். தாங்களாகவே நிறைய அனுபவிக்கிறார்கள். மனித உலகை நீ ஜயித்ததாகவே வைத்துக் கொள். நீ எதுவும் செய்யாவிட்டால் கூட இவர்கள் ஒரு நாள் யமலோகம் போக வேண்டியவர்களே. அதனால் புலஸ்திய வீரனே, யமனை அடக்கு. யமனை ஜெயித்து விட்டால், மற்ற அனைத்தும் அதனுள் அடக்கம். இதைக் கேட்டு லங்கேசன், தன் தேஜஸால் கர்வம் மேலிட, பெரிதாக சிரித்து, நாரதரை வணங்கி வினவினான். மகரிஷியே சண்டை உங்களுக்கு பிரியம் என்று அறிவேன். தேவ கந்தர்வர்கள் இடையில் சஞ்சரிக்கும் தாங்கள் சொல்வது சரியே. இதோ நான் கிளம்புகிறேன். ரஸாதலம் சென்று வெற்றியோடு வருவேன். மூவுலகையும் ஜயித்து நாகர்களையும், தேவர்களையும் என் வசத்தில் கொண்டு சமுத்திரத்தைக் கடைந்து அமுதம் எடுப்பேன். ரிஷி நாரதர் இதன் பின் தசக்ரீவனைப் பார்த்து சொன்னார். இந்த வழியில் ஏன் போகிறாய்? மற்றொரு வழி இருக்கிறது. யம லோகம் போவது மிக கடினம். யமலோகம் செல்ல மார்கம் இருக்கிறது. யமபுரி தகர்க்க முடியாத பாதுகாப்புடையது. நினைவிருக்கட்டும். இதைக் கேட்டு சரத் கால மேகம் இடி இடிப்பது போல சிரித்த தசானனன் யம புரியை ஜயித்ததாகக் கொள்ளுங்கள். ப்ரும்மன், இதோ நான் வைவஸ்வதனை (யமனை) ஜயிக்க தென் திசை நோக்கி செல்கிறேன். சூரிய குமாரன் அங்கு தானே இருக்கிறான். யுத்தம் செய்யும் ஆவலுடன் எங்கு யுத்தம் கிடைக்கும் என்று அலைந்த பொழுது நான் ஒரு பிரதிக்ஞை செய்தேன். நான்கு லோக பாலர்களையும் என் ஆளுகைக்குள் கொண்டு வருவேன் என்று சபதமிட்டேன். இதோ அதையும் நிறைவேற்றுகிறேன். யமபுரி செல்லுகிறேன். ஜீவன்களை தன் பாசத்தால் கட்டி இழுக்கும் யமனுக்கும் யமனாகிறேன். இப்படி முழக்கமிட்டு, நாரத முனிவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, தன் மந்திரிகளுடன் மகிழ்ச்சியாக தென் திசை நோக்கிச் சென்றான். நாரதரும் முஹுர்த்த நேரம் த்யானத்தில் ஆழ்ந்து இருந்தவர், யோசிக்கலானார். புகையில்லாத நெருப்பு போன்றவர், மனதில் சிந்தனை ஓடியது. எவன் இந்திரன் உள்ளிட்ட மூவுலகையும் காக்கிறானோ, சராசரங்களை ஆட்டி படைக்கிறானோ, அவன் ஆயுள் முடிவை நெருங்கி வரும் பொழுது எப்படி வெற்றியடைவான். தன் செயலே, தான் கொடுத்ததே சாக்ஷியாக, இரண்டாவது நெருப்பு போன்றவன், எந்த மகாத்மாவிடம் பூரண ஞானம் பெற்றவர்கள் கூட செயலற்று போகிறார்களோ, பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாக எவரைக் கண்டு மூவுலகையும் சுற்றி ஓடுகிறார்களோ, அந்த யமராஜனிடம் இந்த ராக்ஷஸேந்திரன் எப்படி தானே போவதாக கிளம்பி இருக்கிறான். எந்த யம ராஜா தானே ப்ரும்மாவாகவும், நற்காரியங்களுக்கும், கெட்ட காரியங்களுக்கும் பயன் தரும் நீதிபதியாக இருக்கிறானோ, மூவுலகும் எவனிடம் சரணடைந்து உள்ளதோ, அந்த யம ராஜனிடம் இவன் எப்படி போய் ஜயிக்கப் போவதாக வேறு சொல்கிறான். தானே தெரிந்து கொள்வான். போய் பார்க்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்க ஆவல் உந்தி தள்ளுகிறது. யம, ராக்ஷஸர்கள் போர் புரிவதை நேரில் பார்க்க வேண்டும்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 21 (558) யம, ராவண யுத்தம். (யமனும் ராவணனும் சண்டையிடுதல்)
ப்ராம்மண ஸ்ரேஷ்டர் நாரதர். யமனுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. நடந்ததை நடந்தபடி அவரிடம் சொல்ல நினைத்து யம புரி சென்றார். அக்னி காரியங்களை செய்து கொண்டிருந்த யமதேவனைப் பார்த்தார். பிராணிகளுக்கு யாருக்கு என்ன பலன் தர வேண்டும் என்று நிர்ணயிக்கும் அதிகாரம் இவருக்கே உரியது. நாரதர் வந்திருப்பதை அறிந்து அவருக்கு அர்க்யம், பாத்யம் முதலானவை கொடுத்து உபசரித்த பின் குசலம் விசாரித்தார், எங்கும் நலம் தானே மகரிஷியே. தர்மம் தழைத்து ஓங்குகிறதா? தர்மத்திற்கு கெடுதல் எதுவும் வந்து விடவில்லையே. இவ்வளவு தூரம் தாங்கள் வரக் காரணம் என்னவோ? தேவ, கந்தர்வர்கள் சதா சேவித்து வரும் தாங்கள் இங்கு வந்தது எனக்கு மிகவும் சந்தோஷம். எனவும் நாரதர் பதிலளித்தார். கேள், சொல்கிறேன். என்ன செய்யவேண்டுமோ தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள். தசக்ரீவன் என்ற ராக்ஷஸன் உன் நகரை ஆக்ரமித்துக் கொள்ள வந்து கொண்டிருக்கிறான். இதைச் சொல்லத்தான் நான் ஓடி வந்தேன். அடி தடியால் இப்பொழுது உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது. என்று சொல்லி முடிக்கும் முன், உதய சூரியன் போல பிரகாசமாக ராக்ஷஸனின் விமானம் தென்பட்டது. புஷ்பகத்தின் பிரபையால் அந்த தேசமே இருள் நீங்கி பிரகாசமாயிற்று. அவன் அருகில் நெருங்கிக் கொண்டிருந்தான். வரும் வழியிலேயே பிராணிகள் தங்கள் நற் கதியையும், மற்றவர் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். தண்டனை அனுபவிக்கும் ஜீவன்கள் அலறுவதையும் கண்டான். புழுக்கள் அரித்துக் கொண்டிருந்த நிலையில் சிலர், நாய்கள் துரத்த சிலர், காது கொண்டு கேட்க முடியாத பயங்கரமான புலம்பல்களும், கதறலும் திடுக்கிடச் செய்தது. வைதரணீம் என்ற நதியைக் கடந்து போகும் ஜீவன்கள். ரத்தம் பெருக நிற்பவர்கள். சுடு மணலில் கால் புதைய நடந்து செல்லும் சிலர். தர்மத்திற்கு விரோதமாக செயல்களைச் செய்த அதர்மிகள் வாள் முனையில் நடந்துச் செல்வதைக் கண்டான். ரௌரவம் என்னும் உப்பு நதியில் கூர்மையான ஆயுதங்கள் முனை கூர்மையாக நீட்டிக் கொண்டிருக்க அதில் பிரயாணம் செய்பவர், தாகம் என்று குடிக்க ஏதாவது வேண்டும் என்று யாசிப்பவர்கள். தாகத்தால் தவிப்போர், பசியினால் வாடுவோர், உயிரிழந்த சவங்களாக ஆன தீனர்கள், இளைத்து துரும்பாகி, நிறமிழந்து, கேசம் அவிழ்ந்து தொங்க, உடல் பூரா அழுக்கு மண்டி கிடக்க, கொடூரமானவர்களாக ஓடும் பலர், நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்கான ஜீவன்களை ராவணன் வழியில் கண்டான். ஒரு சிலர் மட்டும் நல்ல வீடுகளில் பாட்டும், வாத்ய இசையும் கேட்க மகிழ்ச்சியுடன், ஆனந்தமாக இருப்பதை ராவணன் கண்டான். தங்களின் நற்செயல்க ளின் பலனாக இந்த உயர்வை இவர்கள் அடைந்ததாக தெரிந்து கொண்டான். பசுவின் பால், பசுக்களை தானம் செய்தவர்கள், அன்ன தானம் செய்தவர்கள், வீடுகளை தானமாக கொடுத்தவர்கள், இவர்கள் தங்கள் நல்ல செயலின் பலனை அனுபவிக்கின்றனர். சுவர்ணம், மணி, முத்து இவைகளால் அலங்கரிக்கப் பட்ட ஸ்த்ரீகள், இவர்களை உபசரித்தனர். தார்மீகர்களான மற்றும் பலர், தங்கள் தேஜஸால் ஒளி வீசிக் கொண்டிருந்த மற்றும் பலர், இவர்களை ராவணன் கண்டான். தங்கள் தீய செயல்களின் பலனாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ஜீவன்களை ராவணன் தன் விக்ரமத்தால் விடுவித்து விட்டான். தசக்ரீவ ராக்ஷஸனால் விடுவிக்கப் பட்ட பிராணிகள், தாங்கள் சற்றும் எதிர்பாராத, நினைத்து கூட பாராத சுகத்தை முஹுர்த்த நேரம் அனுபவித்தனர். ராக்ஷஸன் பலாத்காரமாக இவர்களை விடுவித்தவுடன், யம தூதர்கள் ராக்ஷஸனை துரத்தினர். எல்லா திசைகளிலிருந்தும் கல கலவென்ற ஓசை அதிகரித்தது. தர்ம ராஜனின் சூரர்களான காவல் வீரர்களும், ப்ராஸ, பரிக, சூலம், சக்தி, தோமர என்ற ஆயுதங்களால் புஷ்பகத்தின் மேல் மழையாக பொழிந்து, ராக்ஷஸ வீரர்களை அடித்தனர். அதன் ஆசனங்கள், வேதி தோரணங்கள் இவை முறிந்து விழுந்தன. புஷ்பகத்தை தேனீக்கள் மொய்ப்பது போல மொய்த்து சீக்கிரமே நாசமாக்கினர். கணக்கில்லாத அந்த சேனை வீரர்கள் தாக்கியும், புஷ்பகம் அதிக சேதமில்லாமல் பிழைத்தது. தசானனான ராஜாவின் வீரர்களும் பதிலுக்கு மரங்களையும், கற்களையும் ப்ரஸாதம் எனும் ஆயுதத்தாலும் தங்கள் சக்திக்கு ஏற்ப, எடுத்துக் கொண்டு தாக்குதலைத் தொடர்ந்தனர். யமனுடைய வீரர்களும், ராவணன் மந்திரிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி, அடித்து வீழ்த்தினர். ராக்ஷஸாதிபன் மாற்றி மாற்றி அடி வாங்கி ரத்தம் பெருக, மலர்ந்த அசோக புஷ்பம் போல காணப் பட்டான். இருந்தும் யம சைன்யத்தின் மேல் பயங்கரமான சஸ்திரங்களையும், மரம், கல் இவற்றையும் கொண்டு சர மாரியாக போட்டபடி இருந்தான். சல்லடையாக துளைக்கப் பட்ட நிலையிலும், தசானனன் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. நூறு யம படர்கள் ஒன்று சேர்ந்து ராக்ஷஸ ராஜனை சூழ்ந்து கொண்டனர். மேகம் மலையை சூழ்ந்து கொள்வது போல நாலாபுறமும் யமனின் வீரர்கள் சூலமும், பிண்டி பாலமும் கொண்டு அடிக்கவும், மூச்சு விட முடியாமல் திணறிய தசானனன், புஷ்பகத்தை விட்டு இறங்கி தரையில் நின்றான். கையில் வில்லும் அம்பும், அவனே அந்தகன் போல நின்றான். கோபத்துடன் பாசுபதாஸ்த்ரம் என்ற உயர்ந்த அஸ்திரத்தை வில்லில் பூட்டி, நில், நில் என்று அவர்களைப் பார்த்து கத்தியபடி, பிரயோகம் செய்தான். கோபத்துடன் சங்கரன் திரிபுரத்தை எரித்த காட்சியை நினைவூட்டியது. புகையில்லாத ஜ்வாலையுடன் அந்த அஸ்திரம், கோடை காலத்தில் வனத்தை அழிக்கும் காட்டுத்தீ போல பரவிச் சென்றது. ஜ்வாலை மாலையாக அதிலிருந்து வெளிப்பட அந்த அஸ்திரம் மரங்களையும் புதர்களையும் எரித்தபடி சென்றது. வைவஸ்வதனின் சேனை வீரர்கள், இந்த அஸ்திரத்தின் தேஜஸால் எரிந்து சாம்பலானார்கள். காட்டுத் தீயில் மடிந்து விழுந்த யானைகள் போல கீழே சரிந்தனர். இதைக் கண்டு ராக்ஷஸ ராஜேந்திரன் தன் மந்திரிகளுடன் சேர்ந்து அட்டகாசமாக சிரித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 22 (559) யம ஜய: (யமனை ஜயித்தல்)
ராவணனின் வெற்றி முழக்கத்தைக் கேட்டு, பிரபுவான வைவஸ்வதன், தன் சைன்யம் அழிந்ததையும், சத்ரு ஜயித்து விட்டான் என்றும் புரிந்து கொண்டான். தன் வீரர்கள் வதம் செய்யப் பட்ட செய்தி அறிந்து, கண்கள் கோபத்தால் சிவக்க, ரதத்தைக் கொண்டு வர பணித்தான். உடனே சாரதியும் திவ்யமான ரதத்தை கொண்டு வந்து நிறுத்தினான். யமனும் ரதத்தில் ஏறினான். கையில் பாசத்துடன் ம்ருத்யு ராவணன் முன் நின்றான். மூவுலகத்தையும் தன் பாசத்தால் கட்டி இழுத்துச் செல்பவன், கால தண்டமும் அருகில் இருக்க யம ப்ரஹரணம், தேஜஸால் ஜ்வலிக்கும் அக்னி போன்றது. அவனுடன் இருந்த முத்கரம் என்ற ஆயுதமும் நெருப்பே உருக் கொண்டு வந்தது போல இருந்தது. பெரும் கோஷத்துடன் ரதத்தை ராவணன் இருக்கும் இடம் நோக்கி செலுத்தினான். ராக்ஷஸ மந்திரிகள் ஓட்டம் பிடித்தனர். அல்பமான பலம் உள்ளவர்கள் அவர்கள். யமனின் முன் நிற்பது எப்படி சாத்தியம்? நம்மால் முடியாது என்று அலறிக் கொண்டு ஓடி மறைந்தனர். தசக்ரீவனுக்கு பயமும் தோன்றவில்லை. வாட்டமும் அடையவில்லை. யமராஜன் அருகில் சென்று ஆயுதங்களால் அடித்த போதிலும் அசையாமல் மலை போல நின்றான். ஏழு இரவுகள் இப்படி யுத்தம் நடந்தது. ராவணன் விழவும் இல்லை, ஜயிக்கவும் இல்லை. இருவருமே நல்ல பலசாலிகள். இருவருமே வெற்றி பெறத் துடித்தனர். இதனிடையில் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், பிரஜாபதியை முன்னிட்டுக் கொண்டு அந்த ரண பூமியை வந்தடைந்தனர். ஒரு யுகமே முடிந்து விட்டது போல இருந்தது. இருவரும் யுத்தம் செய்ய சளைக்கவுமில்லை. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கவும் முடியாத நிலை. ராக்ஷஸேந்திரன் தன் வில்லின் நாணை விரலால் சுண்டி விட்டு இடைவிடாது பிரயோகம் செய்த பாணங்கள் ஆகாயத்தையே மறைத்தன. ம்ருத்யுவை, அவன் சாரதியை என்று மாற்றி மாற்றித் தாக்கினான். யமனும் பதிலுக்கு ஆயிரக்கணக்கான பாணங்களைக் கொண்டு ராவணன் மர்மத்தில் அடித்தான். கோபம் கொண்ட யமனின் வாயிலிருந்து ஜ்வாலா மாலி கோபத்துடன் பெருமூச்சு விட அக்னியாக புகையுடன் வெளிஸ்ரீ வந்தது. தேவ தானவர்கள் ஆரவாரத்துடன் யமனை சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். ம்ருத்யு வைவஸ்வதனைப் பார்த்து விடுங்கள், இந்த ராக்ஷஸர்களைக் கொல்லாமல் விட மாட்டேன், இந்த ராக்ஷஸன் இனியும் இருக்க கூடாது, தன் எல்லையை மீறி துள்ளுகிறான், ஹிரண்யகசிபு, ஸ்ரீமான் நமுசி, சம்பரன், போலவும், விசந்தி தூமகேது போலவும், பலி, வைரோசனன் போலவும், தம்பு என்ற தைத்ய ராஜன், வ்ருத்திரன், பாணன், மற்றும் பல ராஜ ரிஷிகள் சாஸ்திரம் அறிந்தவர்கள், கந்தர்வர்கள், மகோரர்கள், ரிஷிகள், பாம்புகள், தைத்யர்கள், யக்ஷர்கள், அப்ஸரோ கணங்கள், யுக முடிவில் பூமி தலைகீழாக புரட்டி எடுக்கப் படும் பொழுது அழிவை அடைந்தார்கள். மலைகளும், நதிகளும், மரங்களும் நிறைந்த பூமி நாசம் அடைந்ததையும் நான் கண்டிருக்கிறேன். என்ன தான் பலசாலியானாலும் என் கை பாசத்துக்கு தப்ப முடியாது என்பது தான் இயற்கையின் நியதி. இந்த நிசாசரன் எம்மாத்திரம்? என்னை விடுங்கள், இவனை கொன்று விட்டு வருகிறேன். என் கண்ணில் பட்டவன் என்ன பலவானானாலும் உயிருடன் இருக்க மாட்டான். இது என் பலம் மட்டும் அல்ல. முஹுர்த்த காலம் கூட என் கண்ணில் பட்ட பின் உயிருடன் இருக்கக் கூடாது என்பது இயற்கையின் நியதி. இதைக் கேட்டு தர்ம ராஜன் ம்ருத்யுவைப் பார்த்து நீ இங்கேயே நில், நான் அவனை வதைக்கிறேன் என்று கால தண்டத்தை கையில் எடுத்துக் கொண்டு மகா ரோஷத்துடன் கிளம்பினார். கால பாசங்கள் அனைத்தும் அவர் அருகில் கொண்டு வந்து வைக்கப் பட்டன. பாவக, அசனி இவை போன்ற முத்கரம் என்றம் ஆயுதமும் கொண்டு வந்து வைக்கப் பட்டது. இதைக் கண்ணால் கண்டாலே பிராணிகள் உயிரை விடும் என்பது உறுதி. தொட்டாலும், மேலே விழுந்தாலும் என்ன ஆகும்? ராக்ஷஸனை தகிப்பது போல அவன் மேல் விழுந்த சமயம், மற்ற அனைவரும் அந்த இடத்தை விட்டே பயந்து அலறிக் கொண்டு ஓடி விட்டனர். யம தண்டம் உயர்த்தப் பட்டதைக் கண்டு தேவர்களும் நடுங்கினர். ராவணன் அந்த தண்டம் விழப் போகிறது என்று திகிலோடு காத்திருக்கையில் ப்ரும்மா வந்து தடுத்தார். வைவஸ்வத மகா பா3ஹோ: இந்த நிசாசரனை உன் தண்டத்தால் அடிக்காதே. நான் இவனுக்கு வரம் கொடுத்திருக்கிறேன். அதை நீ பொய்யாக்கி விடாதே. என் வாக்கை காப்பாற்று என்றார். என் வாக்கு பொய்யானாலும், என்னை மீறி யார் என்ன செய்தாலும், அது மூவுலகையும் பாதிக்கும். உலகில் சத்யமே இல்லை என்றாகும். இந்த கால தண்டமும் முன் ஒரு சமயம் என்னால் உண்டாக்கப் பட்டது. ம்ருத்யுவுக்கு கொடுத்தேன். தனக்கு பிடித்தவனோ, பிடிக்காதவனோ, நல்லவனோ, கெட்டவனோ, யாரானாலும் ரௌத்ரனாக பிராணிகளை ஸம்ஹாரம் செய்ய, மூவுலகிலும் பயத்தை தரும் இந்த அமோகமான கால தண்டத்தை நான் ஸ்ருஷ்டி செய்தேன். இதைக் கொண்டு இந்த ராக்ஷஸனை தற்சமயம் கொல்லாதே. (ந, ந என்று இரண்டு தடவை, கொல்லாதே, கொல்லாதே என்று இரண்டு தடவை சொன்னதாக திலகருடைய உரை). இது ராவணன் மேல் விழுந்தால் அவன் முஹுர்த்த நேரம் கூட உயிருடன் இருக்க மாட்டான். இது ராவணன் மேல் விழுந்து அவன் அழிந்தாலும் ஆபத்து, அழியா விட்டாலும் ஆபத்து. இரண்டுமே அசத்யமாகும். (ராவணன் அழிந்தால், ப்ரும்மா கொடுத்த வரம் பொய்யாகும். அழியா விட்டால், காலதண்டம் பாரபக்ஷம் இல்லாமல் உயிரை பறிக்கும் என்பது பொய்யாகும். இரண்டு விதத்திலும் சத்யத்திற்கு சோதனையே.) இந்த தண்டத்தை லங்கேசன் மேல் பிரயோகிக்க எண்ணி உயர்த்தியதை தாழ்த்து. அடிக்காதே. என்னை சத்யவானாக செய். உலகம் முழுவதும் நீ பார்த்து நடப்புகளை அறிந்தவன். என்று இவ்வாறு ப்ரும்மா சொல்லவும் தர்ம ராஜன், இதோ என் தண்டத்தை தாழ்த்திக் கொள்கிறேன். எனக்கு உங்கள் சொல் மதிக்கத் தகுந்ததே. என் மரியாதைக் குரியவர்கள் தாங்கள். ரண பூமியில் வந்து நின்ற பின், நான் வேறு என்ன செய்ய? வரத்தை சொல்லி நான் இவனை அடிக்கக் கூடாது என்று தடுத்து விட்டீர்கள். இந்த ராக்ஷஸன் கண்ணுக்குத் தெரியாமல் நான் மறைகிறேன் என்று சொல்லி அந்த க்ஷணமே அந்தர்த்யானமானான். குதிரைகளும், ரதங்களும் கூட மறைந்தன. தசக்ரீவன் உடனே தான் ஜயித்ததாக உரத்த குரலில் அறிவித்தான். கோஷம் இட்டான். புஷ்பகத்தில் ஏறி யமபுரத்தை விட்டு வெளியேறினான். வைவஸ்வதனும், மற்ற தேவர்களும், ப்ரும்மாவும், மகிழ்ச்சியுடன் தேவ லோகம் சென்றனர். நாரத மகா முனிவரும் திருப்தியுடன் அகன்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 23 (560) வருண ஜய: (வருணனை ஜயித்தல்)
மூன்று உலகிலும் புகழ் பெற்ற யமராஜனை வென்ற களிப்புடன் கிளம்பிய ராவணன், மேலும் யுத்தம் செய்யும் ஆவலுடன் தன் சகாக்களைப் பார்த்துச் சொன்னான். உடல் பூரா காயம், வழிந்தோடும் ரத்தக் கறை கூட இன்னமும் மறையவில்லை. இந்த நிலையிலும் யுத்தம் செய்ய விழையும், ராவணனைப் பார்த்து, உடன் இருந்தோர் ஆச்சர்யம் அடைந்தனர். இது என்ன வெறி என்பது போல அவனை பார்த்தனர். மாரீசன் முதலான மந்திரிகள், ஜய கோஷம் செய்து வாழ்த்தி தயங்கி நிற்க, ராவணன் அவர்களை உற்சாகப் படுத்தி, புஷ்பக விமானத்தில் ஏறச் செய்தான். இதன் பின் ரஸாதலம் சென்று, பாற்கடலை அடைந்தனர். தைத்ய உரக கணங்கள் நிறைந்ததும், வருணன் கவனமாக பாதுகாத்து வைத்திருந்ததுமான அந்த பாற்கடலுள், வாசுகியின் ஆதிக்கத்தில் இருந்த போகவதியை அடைந்தான். நாகர்களை தன் வசம் செய்து கொண்டபின், மணிமயீ என்ற நகரை அடைந்தான். காற்று கூட புக முடியாத கவசங்களுடன் தைத்யர்கள், வசித்தனர். வரங்கள் பெற்று, கவலையின்றி இருந்தனர். ராக்ஷஸர்கள் அவர்களை சூழ்ந்து நின்று கொண்டு போருக்கு அழைத்தனர். அந்த தைத்யர்கள் நல்ல பலசாலிகள். தவிர, பலவிதமான ஆயுதங்களையும் உபயோகிக்க அறிந்தவர்கள், தாங்களும் யுத்த தினவு எடுத்த தோள்களுடன், தயாராக இருந்தவர்கள் உடனே சம்மதித்தனர். இருவரும் சூலங்களாலும், த்ரிசூலங்களாலும், குலிசங்கள், பட்டஸ, கத்தி பரஸ்வதம் இவைகளால் ஒருவரையொருவர் குத்தியும், அடித்தும் தள்ளியும் பெரும் போர் நடந்தது. ராக்ஷஸர்களும் தானவர்களும் சளைக்காது தொடர்ந்து யுத்தம் செய்தனர். இப்படி பல வருஷங்கள் கடந்தன. வெற்றி தோல்வி, எதுவும் இன்றி, இரு தரப்பாரும் யுத்தம் செய்வதில் முனைந்து இருந்தனர். அச்சமயம் மூன்று உலக நடப்புகளையும் கவனித்துக் கொண்டிருந்த பிதாமகர் அங்கு வந்து சேர்ந்தார். காற்று புகாத கவசங்களையுடைய தைத்யர்களைத் தடுத்து அவர்களிடம் இந்த ராவணனை தேவ, அசுரர்கள் யாருமே வெல்ல முடியாது. மேலும் யுத்தம் செய்து ஏன் வீணாக நாசமாகிறீர்கள், அவனுடன் நட்பு கொள்வது தான் உங்களுக்கு நன்மை என்றார். எல்லாவித செல்வங்களையும் பிரிக்காமல் சேர்த்து அனுபவியுங்கள். நட்பின் இலக்கணம் இது தான். இதன் பின் ராவணன், அக்னியை சாக்ஷியாக வைத்து அவர்களுடன் நட்பு கொண்டான். நிவாத கவசா: – காற்று (கூட) புகாத கவசங்களை அணிந்தவர்கள், அவர்களுடன் மகிழ்ச்சியாக, திருப்தியாக இருந்தான். அங்கு அவர்களுடன், அவர்கள் செய்த உபசாரங்களை ஏற்றுக் கொண்டு ஒரு வருஷம் வசித்தான். பின் தன் நகர் திரும்பினான். தன் நகரில், பிரஜைகளும், மற்றவர்களும் அன்புடன், மதிப்புடன் அவனை கொண்டாடினர். ராவணன் இனிது வாழ்ந்தான். மாயா பலத்தையும் பற்றித் தெரிந்து கொண்டான். நூறு விதமான மாயா யுத்த முறைகளை கற்றான். வருணன் ஊரைத் தேடி ரஸாதலம் பூராவும் தேடினான். கால கேயர்கள் வாழ்ந்த அச்ம நகரம் (கல்லால் ஆன ஊர்) என்ற இடத்தை அடைந்தான். அங்கு சென்று மிகுந்த உடல் பலமும், அதனால் வரும் கர்வமுமாக இருந்த காலகேயர்களை கொன்றான். அச்சமயம் அதிக பலமில்லாதவன் என்று தெரிந்திருந்தும், சூர்ப்பணகையின் கணவனை கொன்று விட்டான். வித்யுத்ஜிஹ்வன், நாக்கினால் நக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயம் அடித்து விட்டான். ஒரு முஹுர்த்த நேரத்தில் நாலாயிரம் தைத்யர்களை வெட்டி சாய்த்து விட்டு கைலாஸ மலை போல வெண் நிறமான வருணன் மாளிகையை ஆக்ரமித்துக் கொண்டு ஆண்டான். பாலை பெருக்கிக் கொண்டிருந்த சுரபி என்ற காமதேனுவைக் கண்டான். இந்த சுரபியின் பால் பெருகி பெருகி தான் பாற்கடல் தோன்றியதாக வரலாறு. ருஷப ராஜனையும், பசுவையும், மகாதேவனுடைய வாகனமான நந்திகேஸ்வரருடைய தாயாரையும் கண்டான். வராரணி என்ற சூரியனைக் கண்டான். இவர் அருளால் தான் சந்திரன் குளுமையான கிரணங்களுடன் பிரகாசிக்கிறான், இரவை ஆட்சி செய்கிறான் என்பதும் வரலாறு. இந்த சந்திரனை அண்டி, நுரையை உண்டு ஜீவிக்கும் மகரிஷிகள் பலர் வாழ்ந்து வந்தனர். அம்ருதம் உற்பத்தியான இடம் இது. பித்ருக்கள் தங்களுக்கு அளிக்கப் படும் ஸ்வதா எனும் உணவை பெறுவதும் இங்குதான். சுரபியை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து ராவணன் வருணன் மாளிகையினுள் நுழைந்தான். பலமான காவல் வீரர்களையும் தாண்டி, பாதுகாப்பாக பாலிக்கப் பட்டு வந்த நகரினுள் நுழைந்தான். நீர் அருவிகள் நூற்றுக் கணக்காக இருந்ததும், சரத் கால ஆகாயம் போல நிர்மலமாக இருந்ததுமான மாளிகையைக் கண்டு வியந்தான். வருணன் நகரில் பிரஜைகள் மகிழ்ச்சியுடன் நிம்மதியாக இருப்பதையும் கண்டான், படை வீரர்களை அடித்தும், தானும் அடி வாங்கியும், சற்று நேரம் சென்றது. பின் ராக்ஷஸ ராஜா அவர்களைப் பார்த்து, உங்கள் அரசனிடம் தெரிவியுங்கள். யுத்தம் செய்ய, ராவணன் வந்திருக்கிறான். யுத்தம் செய் அல்லது என்னிடம் தோற்றேன் என்று சொல்லச் சொல். அஞ்சலி செய்தபடி, உனக்கு இங்கு ஒரு பயமும் இல்லை என்று சொல்லச் சொல் என்றான். இதற்குள் கோபம் கொண்ட வருணனின் ஆட்கள், படை சூழ வந்து சேர்ந்தனர். புத்ர, பௌத்ரர்கள், படை வீரர்கள், நல்ல வீர்யமுடைய கேன, புஷ்கரன் என்ற வீரர்களும் திரண்டு வந்து சேர்ந்தனர். நினைத்த இடம் செல்லும் ரதங்களில், இளம் சூரியனின் பிரகாசத்துடன் போருக்குத் தயாராக வந்தனர். பயங்கரமான யுத்தம் தொடர்ந்தது. தசக்ரீவ ராக்ஷஸனும், அமாத்யர்களும் சேர்ந்து அடித்த அடியில், க்ஷண நேரத்தில் விழுந்தனர். வருணனின் புத்திரர்கள் தங்கள் படை நாசம் அடைந்ததைக் கண்டு, ராவண பாணங்கள் துரத்த, புஷ்பகத்தில், வீற்றிருந்த ராவணனை பார்த்த படியே ரதத்தில் ஏறி, ஆகாயத்தை அடைந்தனர். அங்கிருந்தபடியே பயங்கரமாக யுத்தம் செய்தனர். தேவ தானவர்க ளிடையில் நடக்கும் யுத்தம் போல வெகு தீவிரமான யுத்தம் நடந்தது. மகோதரன் முதலானோர், தங்கள் தலைவன் யுத்த பூமியில் செய்த சாகஸங்களால் உற்சாகம் பெற்றனர். ம்ருத்யு பயமோ, தோற்போம் என்ற கவலையோ இல்லை. வருண புத்திரர்கள், குதிரைகள் ரதங்களோடு துவண்டு விழுந்தனர். அதைக் கண்டு பெருத்த குரலில் அட்டகாசமாக ஆரவாரம் செய்தனர். வருண புத்திரர்கள் விடவில்லை. ரதங்களை விட்டு வில்லை எடுத்துக் கொண்டனர். எல்லோருமாக ராவணனை அடிக்கலாயினர். மேகம் மகா கிரியை பிளந்தது போல இரு பக்கமும் பாணங்கள் மழையாக பொழியலாயின. சற்று நேரத்தில், வருண புத்திரர்கள், கணக்கில்லாமல் மேலே வந்து வீழ்ந்த பாணங்களால் சேற்றில் அகப்பட்டுக் கொண்ட யானைகள் போல தவித்தனர். இதைக் கண்ட ராவணன் அட்டகாசம் செய்தான். ராக்ஷஸ படையினர் கொன்று குவித்ததைத் தவிர மீதி இருந்தவர் ஓடி ஒளியலாயினர். அவர்களைப் பார்த்து ராவணன் கத்தினான். வருணனிடம் போய் சொல்லுங்கள். எங்கே அவன்? எனவும், வருணனின் மந்திரி வினயமாக அவர் ப்ரும்ம லோகம் போய் இருப்பதை தெரிவித்தான். நீ அறை கூவி அழைக்கும் கந்தர்வனான அரசன் தற்சமயம் இங்கு இல்லை. ஏன் வீணாக அலறுகிறாய். இங்கு இந்த குழந்தைகளைக் கொன்று விட்டதாக மார் தட்டிக் கொள்கிறாய். இதனால் சற்றும் பாதிக்கப் படாமல், ராவணன் தன் பெயர் சொல்லி, தான் வென்று விட்டதாக அறிவித்தான். அதே அட்டகாச சிரிப்புடன் வருணாலயம் விட்டு விலகி ஊர் திரும்பினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 24 (561) க2ர, சூர்ப்பணகா2 த3ண்டகா வாஸாதே3ச: (கரனையும், சூர்பணகையையும் தண்டக வனத்தில் வசிக்க கட்டளையிடுதல்).
மன நிறைவோடு திரும்பிய ராவணன் வரும் வழியில் ராஜ குமாரிகள், ரிஷி, தேவ கந்தர்வ பெண்களைக் கவர்ந்து கொண்டு வந்தான். எந்த பெண் லக்ஷணமாக இருந்தாலும், தன் கண்ணில் பட்ட எந்த ஸ்த்ரீயானாலும், தன் இஷ்டப்படி, ராக்ஷஸன், அவள் உறவினர்களை, பந்து ஜனங்களைக் கொன்று தள்ளி விட்டு, விமானத்தில் ஏற்றிக் கொண்டு, வந்து விடுவான். இது போல யக்ஷ, பன்னக கன்னிகள், ராக்ஷஸ, அசுர, மனித ஸ்த்ரீகளை யக்ஷ, தானவ, கன்னிகளை, விமானத்தில் ஏற்றி நிரப்பிக் கொண்டான். அவர்கள் எல்லோருமே வருந்திக் கண்ணீர் விட்டனர். அவர்கள் துக்கமும் நெருப்பாக ஜ்வாலை வீசியதோ எனும் படி இருந்தது. இந்த கொடி போன்ற உடலழகுடைய பெண்களைக் கொண்டு, நதிகளால் சாகரம் நிரம்புவது போல, அந்த விமானம் நிரம்பியது. ஒவ்வொருவரும், பயம் சோகம், இவற்றுடன் அமங்கலமான கண்ணீருடன் இருந்தனர். நாக கந்தர்வ கன்னிகளும், மகரிஷிகளின் மகள்கள், தைத்ய தானவ கன்னிகள், விமானத்தில் நூற்றுக் கணக்காக அழுதபடி இருந்தனர். நீளமான கேசமும், அழகிய உடல் அமைப்பும் கொண்டவர்கள். பூர்ண சந்திரன் போன்ற முகம் உடையவர்கள், பெருத்த ஸ்தனங்களும், வஜ்ரத்தின் வேதிக்கு சமமான அழகுடையவர்கள், புடமிட்ட பொன் நிறத்தினர். பயமும் வருத்தமும் அலைக்கழிக்க, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அபலைப் பெண்கள், அவர்கள் வெளியிட்ட உஷ்ண மூச்சுக் காற்றினால், சூழ்நிலையே வெப்பம் கூடியதாக ஆயிற்று. அக்னி ஹோத்ரம் செய்யும் பாத்திரம் போல அந்த விமானம் இருந்தது. தசக்ரீவன் பலவந்தமாக வசப்படுத்திக் கொண்ட அந்த பெண்கள், கரும் புள்ளி மான் சிங்கத்திடம் அகப்பட்டுக் கொண்டது போல, கண்களிலேயே தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியபடி வாடிய முகத்தோடு இருந்தனர். சிலர் நம்மை விழுங்கி விடுவானோ என்று பயந்தனர், சிலர், கொன்று விடுவானோ என்று பயந்தனர், தாய் தந்தையரை, கணவன் மாரை நினைத்து சிலர் ஏங்கினர். சகோதரர்களை நினைத்து சிலர் கதறினர். நான் இல்லாமல் என் குழந்தை என்ன செய்வானோ, என் கணவன் என்ன செய்வான், என் தாய் என்ன செய்வாளோ என்ற ஓலம் நிறைந்தது. முன் ஜன்மத்தில் என்ன பாபம் செய்தேனோ, மரணமே என்னை ஏற்றுக் கொள் என்ற குரல்கள் கேட்டன. இந்த துக்கத்திற்கு முடிவே கிடையாதா என்று கதறும் சத்தம் சேர்ந்து கொண்டது. அஹோ: தி4க். இந்த மனித உலகம் போல மட்டமானது வேறு எதுவும் இருக்க முடியாது. அபலைகளான நம்மைக் காக்க வந்த நம் பந்துக்களையும் இந்த ராவணன் கொன்று விட்டானே. சூரிய உதயம் ஆனவுடன் நக்ஷத்திரங்கள் காணாமல் போவது போல நம்மை ரக்ஷித்து வந்த பந்துக்கள் இருக்கும் இடம் தெரியாமல் போனார்கள். இந்த ராக்ஷஸன், பல விதமான உபாயங்களை பயன் படுத்தி, வதம் செய்து தானே ரசித்து மகிழுகிறான். தவறான செயல், தவறான இடத்தில் விக்ரமம், யார் எடுத்துச் சொல்வார்கள்? பிறன் மனையை தொடுதல் பாபம் என்று கூட இவனுக்குத் தெரியாதா? சொல்வாரும் இல்லையே. இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறானே, இவன் ஒரு பெண்ணின் காரணமாகவே வதம் செய்யப் படட்டும். சதியான, உத்தம ஸ்திரீகள் பலரும் ராவணனை இப்படி சபித்தனர். இவர்கள் சாபமிட்ட பொழுது ஆகாயத்தில் துந்துபி முழங்கியது. பூ மாரி பொழிந்தது. பதிவிரதைகளான ஸ்திரீகளால் சபிக்கப் பட்டோமே என்ற கவலை சிறிதும் இன்றி ராவணன் தன் நகரமான லங்கையினுள் நுழைந்தான். அவனைச் சார்ந்த ராக்ஷஸர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனிடையில் ராவணன் சகோதரி தடாலென்று பூமியில் வந்து விழுந்தாள். தன் சகோதரியை தூக்கி நிறுத்தி ராவணன் சமாதானப் படுத்தினான். சொல், என்ன சொல்ல வந்தாயோ, பயமில்லாமல் சொல்லு. என்றான். கண்கள் சிவக்க அழுது புலம்பியவள், ராஜன், என் கணவனை ஏன் கொன்றாய்? உன் பலத்தைக் காட்டி என்னை விதவையாக்கி விட்டாய். இந்த யுத்தத்தில் நீ நூற்றுக் கணக்காக கொன்ற தைத்யர்களில் என் கணவனும் ஒருவன். பந்துவான உன்னால் நான் தீங்கிழைக்கப் பட்டேன். யுத்தம் என்றாலும், மாப்பிள்ளை என்று நீ காப்பாற்றியிருக்க வேண்டாமா? சகோதரியின் கணவன் உனக்கு உறவினன் இல்லையா? உனக்கே இது வெட்கமாக இல்லையா? உடன் பிறந்தவள் வாழ்க்கையை நாசம் செய்து விட்டோமே என்று வருத்தம் இல்லையா? இவ்வாறு சகோதரி தூற்றியதைக் கேட்டு ராவணன் பதில் சொன்னான். சமாதானமாக பேசி அவளுக்கு ஆறுதல் சொல்ல முனைந்தான். சகோதரியே, பயப்படாதே. அழாதே. எதற்கும் வருந்தாதே. நான் உன்னை கௌரவமாக சந்தோஷமாக வைத்துக் கொள்வேன். எப்பொழுதும் நீ வேண்டியதை என்னிடம் பெறலாம். வெற்றி பெற வேண்டும் என்ற குறியாக, யுத்தத்தில் மூழ்கி இருக்கும் பொழுது தன்னைச் சார்ந்தவனா, மாற்றானா என்று தெரிவதில்லை. பாணங்களை மழையாக பொழிவதிலேயே கவனமாக இருந்தபொழுது, விழுந்தவர்கள் யார் என்றா தெரியும்? அடிபட்டது மாப்பிள்ளை என்று எனக்குத் தெரியவில்லை. உன் கணவனை, என் சகோதரி கணவனை நான் வேண்டுமென்று கொல்லவில்லை. தற்சமயம் நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல். செய்கிறேன். இதோ கரன் இருக்கிறான். இந்த சகோதரனுடன் வசி. ஆயிரமாயிரம் ராக்ஷஸ பலம் கொண்டவன். பதினாலாயிரம் ராக்ஷஸர்கள் கொண்ட படை இவனுடையது. இவன் தானம் கொடுப்பதில், பராமரிப்பதில் வல்லவன். நம் தாயின் சகோதரி மகன், நமக்கும் சகோதரனே. உன் கட்டளைப் படி நடப்பான். சீக்கிரம் இவனுடன் தண்டகா வனம் போ. இவனை நான் தண்டகா வனத்தை பரிபாலிக்க அனுப்புகிறேன். நீயும் போ. தூஷணன் இவன் படைத் தலைவனாக பதவி வகிப்பான். நீ சொல்வதை கண்டிப்பாக கேட்டு நடப்பான். விரும்பியபடி உருவம் எடுத்துக் கொண்டு இவன் கீழ் சேவகம் செய்யும் ராக்ஷஸர்கள் பலர் இருப்பர். இதன் பின் தன் சைன்யத்துக்கு கட்டளை பிறப்பித்தான். நாலாயிரம் வீரர்களை தேர்ந்தெடுத்து, க2ரனுடன் தண்டகா வனம் செல்ல அனுப்பி வைத்தான். கரனும் தண்டகா வனம் வந்து இடையூறு எதுவுமின்றி அரசனாக ராஜ்ய பாலனம் செய்ய ஆரம்பித்தான், அவனுடன் சூர்ப்பணகையும் தண்டகா வனம் வந்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 25 (562) மது வத வாரணம் (மது என்ற அரக்கனை கொல்லாமல் தடுத்தல்)
அடர்ந்த தண்டகா வனத்தை கரனுக்கு கொடுத்து விட்டு, சகோதரியையும் சமாதானப் படுத்தி அவனுப்பி விட்டு, தன் பொறுப்பை செய்து விட்டதாக மகிழ்ந்தான். பின், தன் அடியாட்கள் புடை சூழ, நிகும்பிளா எனும் உபவனத்துள் நுழைந்தான். இது லங்கையின் அருகில் இருந்த, யாகம் செய்யும் இடம். நூற்றுக்கணக்கான யூப ஸ்தம்பங்கள் (யாகத்தில் பலி கொடுக்கும் இடம்) அழகிய நாற்கால் மண்டபங்கள் இவைகளுடன் யாகம் நடந்து கொண்டிருந்தது. ஜ்வலித்துக் கொண்டிருந்த யாக குண்டத்தையும், அதில் யாகம் செய்து கொண்டிருந்த தன் மகன் மேக நாதனையும் ராவணன் கண்டான். கருப்பு மான் தோல் உடுத்தி, கமண்டலுவும், ஜடா முடியுமாக தன் மகனைப் பார்த்து வியந்தான். அருகில் சென்று அணைத்துக் கொண்டு, மகனே, இது என்ன? ஏன் இந்த வேஷம் என்று வினவினான். உடனே அசுர குருவான சுக்ராச்சாரியார், யாகம் நடந்து முடிந்தால் தானே சம்பத்தும், சம்ருத்தியும் வரும், நான் சொல்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்தார். மிக விஸ்தாரமான ஏழு யாகங்களை உன் மகன் செய்து விட்டான். அக்னிஷ்டோமோ, அஸ்வமேதம், பஹு சுவர்ணக:, ராஜ- சூயம், கோமேதோ, வைஷ்ணவம் என்றவை. மிக அரிதான மகேஸ்வர யாகம் செய்யும் பொழுது, மகேஸ்வரனே ப்ரத்யக்ஷமாகி, ப்ரஸன்னமாக உன் மகனுக்கு வரங்களைக் கொடுத்தார். ராக்ஷஸேஸ்வரா, காமக3ம் – இஷ்டப்படி செல்லக் கூடிய ரதம், அந்த ரிக்ஷத்தில் சஞ்சரிக்க கூடியது, தாமஸம் எனும் மாயா சக்தி, இதன் மூலம் இருட்டை வரவழைத்துக் கொள்ளலாம். சுராசுரர்கள் புரிந்து கொள்ள முடியாத இந்த மாயா ஜாலங்களால் தான் யுத்தத்தில் வெற்றி அடைவது சுலபமாக இருக்கும். அக்ஷயமான- குறைவில்லாத அம்புகளை கொண்ட தூணியுடன், சுதுர்ஜயம் எனும் வில்லையும், அஸ்திரங்கள் பலவும் நிறைந்ததும், எதிரிகளை உடனடியாக நாசம் செய்ய வல்லவை- இவை அணைத்தையும் வரமாக பெற்று, தசானனநா, உன் மகன், இன்று யாக முடிவில் இருக்கிறான். நீயும் வந்து சேர்ந்தாய். அதனால் நிறுத்தி இருக்கிறேன். என்றார். உடனே தசக்ரீவன், இது எதற்கு? தேவை தானா? என் சத்ருக்களான இந்திரன் முதலானவர்களை யாகம் என்ற பெயரில் பூஜித்து இருக்கிறீர்கள். த்ரவ்யங்கள் கொடுத்து மகிழ்ச்சியுற செய்திருக்கிறீர்கள். போதும் வா. நல்ல காரியம் தான் சந்தேகமில்லை. ஆயினும், நாம் மாளிகைக்குப் போவோம், வா மகனே. பின், தசானனன் விபீஷணனுடனும், தன் மகனுடனும் மாளிகை திரும்பினான். உடல் அழகும், உயர்ந்த ஆபரணங்களும் அணிந்த பெண்கள், கண்ணீரும் கம்பலையுமாக பலவந்தமாக உடன் அழைத்து வரப் பட்டதைப் பார்த்து விபீஷணன் வருந்தினான். ராவணனைப் பார்த்துச் சொன்னான். இது என்ன காரியம்? புகழையும், பொருளையும், குலத்தையும் நாசம் செய்யும் இது போன்ற செயல்களை ஏன் செய்கிறாய்? தெரிந்தும் உன் மனம் போன போக்கில் போகிறாயே. நம் சுற்றத்தார் அணைவரும் எதிர்க்கிறார்களே. உறவினர்களையே அடித்து வீழ்த்தி, அவர்களின் அழகிய பெண்களைக் கவர்ந்து கொண்டு வந்திருக்கிறாய். உன்னை மீறி மது என்பவனால் கும்பீனஸி என்ற ஸ்திரீ அபகரிக்கப் பட்டிருக்கிறாள், தெரியுமா, என்றான். உடனே ராவணன், தெரியாதே, யார் அவன்? என்ன பெயர் சொன்னாய்? எனவும் விபீஷணனும் கோபம் கொண்டான். தெரியாதா, பாப காரியத்தின் பலன் கை மேல் கிடைத்தது. நம் தாய் வழி பட்டனார் சுமாலியின் மகன், மால்யவான் வயது முதிர்ந்தவர். நல்ல அறிவாளி. ராக்ஷஸ குலத்தைச் சேர்ந்தவர். நம் தாயின் பெரிய தந்தை. நமக்கும் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர். அவர் மகளின் மகள் கும்பீனஸி என்பவள், இவள் நமக்கு தாயின் சகோதரி முறை. அனல எனும் அக்னியில் உண்டானவள். நம் அணைவருக்கும் சகோதரியே. இவளை மது எனும் ராக்ஷஸன் பலாத்காரமாக தூக்கிச் சென்று விட்டான். உன் மகன் யாகத்தில் முணைந்திருந்தான், நான் நீரில் மூழ்கி தவத்தில் இருந்தேன், கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்து இருந்தான், நீயும் இல்லை. அமாத்யர்களை தோற்கடித்து, அந்த:புரத்தில் பாதுகாப்பாக இருந்தவளை காவலை மீறி, எதிர்த்தவர்களை அடித்து வீழ்த்தி வீட்டு, தூக்கிச் சென்று விட்டான். அவனை கொல்வதில் பயனில்லை. பெண்கள் எப்படியும் மணம் செய்து கொடுக்கப் பட வேண்டியவர்களே, சகோதரர்கள் கடமை இது. அதனால் நாங்கள் மதுவை எதுவும் செய்யவில்லை. இது உன் பாப காரியங்களின் பலனே. இதைக் கேட்டு, துர்புத்தியான ராவணன், தன்னை குற்றம் சொல்வதை பொறுக்க மாட்டாதவனாக, பொங்கி எழுந்தான். துஷ்டனாதலால் கண்கள் சிவக்க கத்தினான். சமுத்திர ஜலம் போல அவன் மனம் கொதிக்கலாயிற்று. என் ரதத்தை ஏற்பாடு செய்யுங்கள். சீக்கிரம், வீரர்கள் தயாராகுங்கள். கும்பகர்ணன், மற்றும் முக்யமான படைத்தலைவர்கள் உடனே வாருங்கள். அவரவர் வாகனங்க ளில் ஏறிக் கொள்ளுங்கள். பலவிதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். ராவணனிடம் பயமின்றி ஒருவன் இருப்பதாவது. அந்த மதுவை இன்றே நாசம் செய்வேன். தேவ லோகம் போவேன். என் நண்பர்கள் உடன் வாருங்கள். யுத்தம் செய்ய தினவு எடுக்கும் என் தோள்களுக்கு யுத்தம் தருவேன். ஆயிரம் அக்ஷௌஹிணி, நான்கு ஆக்ரணீ போர் வீரர்கள், பலவிதமான ஆயுதங்கள் தாங்fகிய வீரர்கள் உடனே கிளம்பினர். இந்திரஜித் தலைமை தாங்கிச் செல்ல, ராவணன் மத்தியிலும், கும்பகர்ணன் பின்னாலும் அணிவகுத்துச் சென்றனர். விபீஷணன் லங்கையைக் காக்க, ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றுக் கொண்டான். மது புரத்தை நோக்கி படைகள் புறப்பட்டன. கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், குதிரைகள், சிம்சுமாரங்கள், மகோரகங்கள் இவற்றுடன் ராக்ஷஸர்கள் முன்னேறிச் சென்றனர். நூற்றுக் கணக்கான தைத்யர்கள், தேவர்களுடன் விரோதம் பாராட்டும் மற்றவரும் சேர்ந்து கொண்டனர். தசானனன், மது புரத்தில் பிரவேசித்து, தன் சகோதரியையும், மதுவையும் கண்டான். அவள் கை கூப்பி வணங்கியபடி அவன் பாதங்களில் விழுந்தாள். பயத்தால் நடுங்கினாள். பயப்படாதே என்று அவளைத் தூக்கி நிறுத்திய ராவண அரசன், என்ன செய்ய வேண்டும் சொல், என்றான். கும்பீனஸீ என்ற அந்த சகோதரி, மகாராஜா, என் கணவனைக் கொல்லாதே. குல ஸ்திரீகளுக்கு இது போன்ற பயம் வரக் கூடாது. எல்லா விதமான பாபங்களிலும், துக்கத்திலும், வைதவ்ய பயம் மிகக் கொடியது. யாசிக்கும் என்னைப் பார். சத்யம் செய்து கொடு மகாராஜா, என்று வேண்டினாள். அவனோ, திமிருடன் விசாரித்தான் யாரது உன் கணவன்? காட்டு என்றான். அவனுடன் சேர்ந்தே தேவலோகம் போகிறேன், தேவலோகத்தை ஜயிக்கிறேன், என்றான். உன்னிடம் உள்ள பாசம், கருணையால் மதுவை வதம் செய்யாமல் விடுகிறேன். அவளும் உறங்கிக் கொண்டிருந்த ராக்ஷஸனை எழுப்பினாள். மனதில் மகிழ்ச்சியோடு பதியிடம் சொன்னாள். இதோ என் சகோதரன் தசக்ரீவன் வந்திருக்கிறான். மகா பலசாலி. தேவ லோகத்தை ஜயிக்கும் எண்ணத்துடன் வந்திருக்கிறான். உதவிக்கு உன்னையும் அழைக்கிறான். பந்துக்களோடு அவனுடைய உதவிக்குப் போய் வா. என் சகோதரன், யாவரும் போற்றும் நிலையில் இருக்கிறான். நம்மிடம் ஸ்னேகமாக இருக்கிறான். அவனுக்கு உதவி செய்வதும் நமது கடமையில்லையா? என்று கும்பீனஸி சொல்ல, அதைக் கேட்டு மதுவும் சரியென்று ஏற்றுக் கொண்டு, ராக்ஷஸேந்திரனை சந்திக்க வந்தான். முறைப்படி ராவண அரசனை மரியாதைகள் செய்து உபசரித்தான். தசக்ரீவனும், இரவு அங்கு தங்கி இந்த உபசாரங்களை எற்றுக் கொண்டு கிளம்பினான். பின் கைலாஸ மலையை அடைந்து வைஸ்ரவணன் இருந்த மலையில் தன் சேனையுடன் தங்கினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 26 (563) நள கூபர சாப: (நள, கூபரனுடைய ) சாபம்.
சைன்யத்தோடு தசக்ரீவன், சூரியன் அஸ்தமனம் ஆன பின் தாங்கள் தங்கும் இடத்தை தேர்ந்தெடுத்தான். சந்திரோதயம் ஆகியது. மலையின் சாரல்களில், அழகாக அதன் கிரணங்கள் பிரதிபலித்தன. துல்யமாக இருந்த அந்த இரவு வேளையில், படை வீரர்கள் பெரும்பாலும் தூக்கத்தில் ஆழ்ந்தனர். மகா வீர்யவானான ராவணன் மலையுச்சியில் அமர்ந்து, சந்திரனின் ஒளியில் பள பளத்த மலைப் பிரதேசத்தின் உயர்வை ரசித்து மகிழ்ந்தான். கர்ணிகார வனங்கள் சிவந்த புஷ்பங்களுடன் பிரகாசமாக தெரிந்தன. கதம்ப புஷ்பம் காடாக மண்டிக் கிடந்தது. மந்தாகினி ஜலமும், அதில் பத்மங்களும், சம்பக, அசோக, புன்னாக, மந்தார மரங்கள். சூத, பாடல, லோத்ர, ப்ரியங்கு, அர்ஜூன, கேதக புஷ்பங்கள். தகர, நாரிகேல, ப்ரியாலாபனம் முதலியவை. ஆரக்வதம், தமாலம், ப்ரியால பகுலம் முதலியவையும், இன்னமும் பல மரங்கள் அடர்ந்து அழகு பெற விளங்கிய வனாந்தரத்தில், கின்னரர்கள், மதுரமான குரல் வளம் உடையவர்களின் கீதமும் கேட்டது. அந்த கீதத்தின் இனிமையில் மனம் நிறைந்தது. வித்யாதரர்கள் மதுவுண்ட மயக்கத்துடன் பெண்களுடன் விளையாடிக் கொண்டும், பாடிக் கொண்டும் இருந்தனர். மணி அடிப்பது போல நாதம் இனிமையாக பரவிக் கிடந்தது. தனதன் (குபேரன்) வீட்டில் அப்ஸர ஸ்த்ரீகள், பாடிக் கொண்டிருந்தனர். காற்று வீசும் பொழுது ஆடும் மலர்கள், கொத்தாக பூக்களை சிதற விட்டன. அந்த மலைப் பிரதேசம் பூராவும் வாசனை மிகச் செய்யத் தீர்மானித்தது போல புஷ்பங்கள் சிதறின. மதுவும், மாதவ புஷ்பமும், மணம் வீசியது. இந்த வாசனைகளை ஒன்றாக ஏந்திக் கொண்டு, மந்தமாக வீசிய காற்றும் இதமாக இருந்தது. இந்த சூழ்லை ராவணன் மனதில் கிளர்ச்சியை உண்டு பண்ணியதில் ஆச்சர்யம் இல்லை. கானமும் புஷ்பங்கள் நிறைந்து மனதை மயக்கியதாலும், கு ளிர்ந்த இதமான காற்றாலும், மலையின் அழகாலும், ரம்யமான இரவும், சந்திரனின் குளுமையான பிரகாசமும் சேர, மகா வீர்யவானான ராவணன் காம வசம் ஆணான். சந்திரனை நோக்கியபடி, பெருமூச்சு விட்டான். இந்த சமயம் அங்கு திவ்யமான ஆபரணங்கள் அணிந்த ரம்பா என்ற அப்ஸரஸ்திரீ, கண்களுக்கு விருந்தாக வந்து சேர்ந்தாள். பூரண சந்திரன் போன்ற முகமும், மேகலா, மாலைகள் இவை அலங்கரிக்க, ஆறு ருதுக்களிலும் கிடைக்கும் புஷ்பங்களின் ரசத்தைக் கொண்டு தயாரித்தது போன்ற வாசனை திரவியத்தை பூசிக் கொண்டு, மற்றொரு லக்ஷ்மி தேவியே வந்தது போல, காந்தி, ஒளி, கீர்த்தீ இவை ஒன்று சேர்ந்து உருவெடுத்தது போலவும், மேக நிற, நீல வஸ்திரத்தை அணிந்து கொண்டவளாக வந்தாள். அவளுடைய முகம் சந்திரன் போலவும், புருவங்கள் வில் போலவும், கால்கள் யானை தும்பிக்கை போலவும், கைகளோ இளம் துளிர் போன்ற கோமளமானவையாகவும் காணப் பட்டன. சைன்யத்தின் நடுவில் புகுந்து சென்றவள், ராவணன் கண்களில் பட்டாள். வேகமாக செல்பவளை, காம வசமான ராக்ஷஸ ராஜன், கைகளைப் பிடித்து, பேச்சுக் கொடுத்தான். அழகியே, எங்கு போகிறாய்? யாரைத் தேடி நீ போகிறாயோ, அவனுக்கு நல்ல காலம் என்று தான் அர்த்தம். பத்மமும், உத்பலமும் சேர்ந்தது போன்ற, உன் முக ரஸத்தைப் பருக, தேவ லோக அம்ருதம் போல இன்பத்தை அனுபவிக்க இன்று யார் கொடுத்து வைத்திருக்கிறார்களோ, சுவர்ண கும்பங்கள் போன்ற உன் ஸ்தனங்கள் யாருடைய மார்பில் படிய போகின்றனவோ, பொன் மாலையணிந்த உன் இடுப்பும், ப்ருஷ்டமும், யாருக்கு விருந்தாகப் போகின்றனவோ, சுவர்க லோகமே இது தானோ எனும்படி மயக்குகிறது. எனக்கு மேலான புருஷன் வேறு யார் இருக்கிறார்கள். இந்திரனா? விஷ்ணுவா, அஸ்வினி குமாரர்களா? என்னைத் தாண்டி நீ யாரைத் தேடி செல்கிறாய். அழகியே இது பொருத்தமாக இல்லையே. சற்று உட்காரு, இந்த கல் பலகையில் அமர்வாய். மூவுலகிலும், எனக்கு மிஞ்சிய தகுதியுடையவன் வேறு யாருமே கிடைக்க மாட்டார்கள். இதோ, உன் முன்னால் யாசிப்பவன் த3சானனன். மூவுலகிற்கும் அரசனுக்கும் அரசன். என்னை ஏற்றுக் கொள். இதைக் கேட்டு ரம்பா நடுங்கினாள். கை கூப்பியபடி, தயை செய். இது சரியல்ல. நீ பெரியவன். இது போல என்னிடம் பேசுவது தகாது. வேறு யாராவது என்னைத் தடுத்து நிறுத்தியிருந்தால் கூட நீ என்னை ரக்ஷிக்க வேண்டியவன். உன் மருமகள் ஸ்தானத்தில் உள்ளவள் நான். சத்யமாக சொல்லுகிறேன். இதைக் கேட்டு தசக்ரீவன், தலை குனித்து நிற்பவளைப் பார்த்து, உடல் மயிர் கூச்செரிய நடுங்கியபடி நின்றவளை பார்த்த மாத்திரத்தில், என் மகனுக்கு நீ மனைவியானால் மருமகள் தான் என்றான். ஆமாம் என்ற ரம்பா, உன் சகோதரன் வைஸ்ரவனுடைய பிரிய புத்திரன் நளகூபரன் மனைவி நான். என் கணவன் நளகூபரன், தர்மத்தை ஆச்ரயிக்கும் பொழுது, ப்ராம்மணனோ எனும் படி சிறப்பாகச் செய்வான். வீர்யத்தில் க்ஷத்திரியன். கோபத்தில் அக்னி. பொறுமையில் பூமிக்கு சமமானவன். லோக பாலனுடைய மகனான அவனுக்கு என்னைக் கொடுப்பதாக நிச்சயித்துள்ளனர். அதை உத்தேசித்து தான், நகைகளால் அலங்கரித்துக் கொண்டு கிளம்பி வந்தேன். அவனையன்றி வேறு யாரையும் மனதால் கூட நினைத்து பார்க்க மாட்டேன். அதனால் ராஜன், என் கையை விடு. என்னை எதிர் நோக்கி ஆவலோடு காத்திருப்பான் உன் மகன் அவனுக்கு இடையுறு செய்தபடி நடுவில் தடுப்பது தவறு. என்னை விடு. ராக்ஷஸ புங்கவனே, நல்லோர் செல்லும் வழியில் செல்வாயாக. எனக்கு நீங்கள் கௌரவிக்கத் தகுந்த பெரியவர். அதே போல, உங்களுக்கும் நான் காப்பாற்றப் பட வேண்டிய மருமகள். தசக்ரீவன் இதைக் கேட்டு வினயமாக சொல்வது போல, நீ சொன்னாயே, நான் உனக்கு மருமகள் என்று, ஒரு பதியுடைய ஸ்திரீகளுக்கு அது சரி. ஒருவனுக்கு ஒருவன் என்று இருக்கும் குல ஸ்திரீகளுக்கு சரி. அப்சர ஸ்த்ரீகளுக்கு பதி என்று கிடையாது. தேவர்களில் ஒரு ஸ்திரீ தான் ஒருவனுக்கு என்ற நியதியும் கிடையாது. அதனால் நான் விரும்புவதில் தவறில்லை என்பது போல அவளை இழுத்து தான் இருந்த கல் பலகையில் அமரச் செய்து பலாத்காரமாக அவளை அடைய முயற்சி செய்தான். மாலைகளும், ஆபரணங்களும் நிலை குலைய ரம்பா, யானை புகுந்து கலக்கிய நதி போல ஆனாள். தலை கேசம் அவிழ்ந்து புரள, கை நடுங்க, பூக்கள் நிறைந்த கொடி பெரும் காற்றில் தடுமாறுவது போல தடுமாறினாள். வெட்கமும் அழுகையுமாக நளகூபரனையடைந்து அவன் காலில் விழுந்தாள். அவளை எதிர் நோக்கி காத்திருந்த நளகூபரன், காலில் விழுந்தவளை தூக்கி நிறுத்தி, இது என்ன ப4த்3ரே, என்று வினவ, அவளும் நடந்ததைச் சொன்னாள். இதோ, இந்த த3சக்ரீவன், தேவலோகம் செல்ல கிளம்பியவன், வழியில் சைன்யத்தோடு இந்த மலையில் தங்கியிருக்கிறான். உன்னைக் காண நான் வரும் வழியில் என்னைப் பார்த்து விட்டான். யார் என்று கேட்டான்? ராக்ஷஸனுக்கு நான் உண்மையான விவரங்களையே சொன்னேன். காமமும் மோஹமும் அவன் கண்களை மறைத்து இருக்கும் பொழுது நான் சொன்னது எதுவுமே அவன் காதுகளில் விழவில்லை. நான் உனக்கு மருமகளாவேன், என்னை விட்டு விடு என்று கெஞ்சினேன். என் வேண்டுகோள் எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு, என்னை பலாத்காரம் செய்ய ஆரம்பித்து விட்டான். என்னை மன்னித்து விடு. ஸ்திரீகளுக்கும், புருஷர்களுக்கான சமமான பலம் இல்லை. அவளை, ராவணன் மிக மோசமான முறையில் பலாத்காரம் செய்ததைக் கேட்டு, முஹுர்த்த காலம் தியானம் செய்து விட்டு, கையில் ஜலத்தை எடுத்து ராக்ஷஸேந்திரனுக்கு கடுமையான சாபம் கொடுத்தான். விரும்பாதவளை நீ பலாத்காரம் செய்ததன் பலனை அனுபவிப்பாய். இனி எந்த பெண்ணையும் அவள் இஷ்டம் இல்லாமல் நெருங்கினால் உன் தலை ஏழாக சிதறும். அவன் இப்படி ஜ்வலிக்கும் அக்னி போன்று சாபம் கொடுத்தபொழுது தேவ துந்துபிகள் முழங்கின. புஷ்ப வ்ருஷ்டியும் ஆகாயத்திலிருந்து விழுந்தது. பிதாமகர் முதல் எல்லா தேவர்களும் மகிழ்ந்தனர். இந்த பயங்கர சாபத்தைக் கேட்டு ராவணன், இனி தன் ஸ்திரீகளிடம் கூட நெருங்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டான். ராவணனால் அபகரிக்கப் பட்டு சிறை வைக்கப் பெற்றிருந்த பெண்களும் நிம்மதியடைந்தனர். நளகூபரன் கொடுத்த சாபம் அவர்களுக்கு விடுதலை அளிப்பதாக அமைந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 27 (564) சுமாலி வத: (சுமாலியை வதம் செய்தல்)
ராவணன் கைலாஸத்தை தாண்டி இந்திர லோகம் வந்து சேர்ந்தான். அவனுடைய சைன்யம் தேவலோகத்தில் இறங்கிய பொழுது கடலை கடைவது போன்ற பெரும் சப்தம் உண்டாயிற்று. இந்திரன் ராவணன் வந்திருக்கிறான் என்பதைக் கேட்டே தன் ஆசனத்தில் நடுங்கினான். நழுவி விழுந்து விடுவான் போல கூடியிருந்த தேவர்களைப் பார்த்துச் சொன்னான். ஆதித்யர்கள், வசுக்கள், ருத்திரர்கள், விஸ்வர்கள், சாத்யர்கள், மருத்கணங்கள் எல்லோரும் தயாராகுங்கள். யுத்தம் செய்ய வேண்டியிருக்கும். ராவணன் வந்து விட்டானே என்று பதறினான். அவர்களும் நல்ல வீரர்கள். விஷய ஞானம் உடையவர்கள். எனவே, கவனமாக யுத்த ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றனர். இந்திரன் தான் தீனனாக ராவணனிடம் பயந்து, விஷ்ணுவிடம் ஓடிச் சென்று விஷயத்தைச் சொன்னான். விஷ்ணோ, நான் என்ன செய்வேன்? எப்படி சமாளிப்பேன். பலவான் இவன். யுத்தம் செய்ய வந்து நிற்கிறான். வேறு காரணம் எதுவும் இல்லை. வர பலத்தால் நிமிர்ந்து நிற்கிறான். ப்ரும்மா, இவனுக்கு கொடுத்த வரங்களும் மாற்ற முடியாதவை. அவையும் சத்யமாகும். நமுசியையும், வ்ருத்திரனையும், பலியையும் நரக, சம்பரர்களையும் உன் பலத்தை ஏற்றுக் கொண்டு நான் அழித்தேனே அது போல செய் மதுசூதனனே, உன்னையன்றி வேறு எந்த தெய்வத்தையும் நாடி பலனில்லை. மூவுலகத்திலும் சராசரத்திலும் வேறு யாரை சரணடைவேன். நீ தான் சனாதனான நாராயணன், ஸ்ரீமான். பத்மநாபன். நீ தான் இந்த உலகங்களை ஸ்தாபித்து பாலித்து வருகிறாய். என்னையும் இந்திரனாக, தேவலோக தலைவனாக நியமித்தாய். இந்த சராசரம் உன்னால் ஸ்ருஷ்டி செய்யப் பட்டது. யாக முடிவில் இவை உன்னிடமே லயம் அடைகின்றன. அதனால் தேவ தேவனே: இப்பொழுது சொல். நீயே வந்து எனக்கு உதவி செய்கிறாயா? சங்க சக்ர தாரியாக வந்து ராவணனுடன் போர் புரிய வருகிறாயா? இந்திரனின் முறையீட்டைக் கேட்டு பகவான் நாராயண ப்ரபு யோசித்தார். பயப்படாதே: நான் சொல்வதைக் கேள். இந்த துஷ்டாத்மாவை அவ்வளவு சுலபமாக அழிக்க முடியாது. வர தானம் இவனுக்கு அபரிமிதமான சக்தியைக் கொடுத்திருக்கிறது. இவனை வெல்வது முடியாது. புத்திரனுடன் வந்திருக்கிறான். இதுவரை கேட்டிராத அரிய செயல்களைச் செய்யத் தான் போகிறான். இவன் மகன் பிறப்பிலேயே பலவான். நல்ல வீரன். நீ யுத்தம் செய். நான் அவனுடன் மோத இன்னும் சரியான நேரம் வரவில்லை. சத்ருவைக் கொல்லாமல் விஷ்ணு திரும்பி வந்தான் என்று பெயர் வரக் கூடாது. வர பலன் ராவணனை பாதுகாத்து நிற்கிறது. ப்ரும்மாவின் வாக்கு பொய்யாகாது. ஆனால், இந்திரா, நான் உனக்கு வாக்குத் தருகிறேன். இந்த ராக்ஷஸனுக்கு நான் தான் ம்ருத்யு காரணமாக இருப்பேன். ராவணனை உற்றார்., சுற்றத்தாருடன், ராஜ்யம், நகரங்களுடன் நாசம் செய்வேன். சரியான காலம் வரட்டும். இந்த செயலை செய்து தேவர்களை மகிழ்ச்சியடையச் செய்வேன், சந்தேகமே இல்லை. சசீபதியான தேவராஜனே: இப்பொழுது நீ உன் படை முழுவதையும் திரட்டி, யுத்தம் செய். என்றார். இதன் பின் வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், மருத்கணங்கள், அஸ்வினி குமாரர்கள், எல்லோருமாக சேர்ந்து கிளம்பினர். ராக்ஷஸனை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டனர். இரவு முடியும் தறுவாயில், பெரும் ஓசை கேட்டது. ராவண சைன்யம், பெரும் யுத்தத்திற்கு ஆயத்தமாக கோஷமிட்டனர். அவர்களுக்குத் தேவையே பயங்கரமான போர் தான் என்பது போல முன்னேறி வந்தனர். சீக்கிரமே தேவ சைன்யம் பலம் இழந்தது. யுத்த பூமியை நிறைத்த ராவண சைன்யத்தைப் பார்த்தே, தேவர்கள் நம்பிக்கை இழந்தனர். தேவ,தானவ,ராக்ஷஸர்களுக்கிடையில், பெரும் யுத்தம் நடந்தது. இருபுறமும் பலவிதமான ஆயுதங்கள் பிரயோகிப்பதால் உண்டான சத்தம் சமமாக இருந்தது. கோரமான உருவுடைய ராக்ஷஸர்கள், ராவணனுடைய மந்திரிகள் மாரீசனும், ப்ரஹஸ்தனும், மகா பார்ஸ்வ, மகோதரர்கள், அகம்பனனும், கும்பனனும், சுக, சாரண சம்ஹ்ராதனும், தூம கேதுவும், மகா தம்ஷ்டிரனும், கடோதரனும், ஜம்பு மாலி, மஹோதரனும், விரூபாக்ஷனும், சுப்தக்னன, யக்ஞ கோபன், துர்முகன், துர்ஷணன், கரன், த்ரிசிரஸ், கரவீராக்ஷ:, சூர்ய சத்ரு என்ற ராக்ஷஸன், மகா காயன், அதி காயன், தேவாந்தக, நராந்தகர்கள். இவர்கள் எல்லோருடனும் சேர்ந்து ராவணனின் முன்னோர்களில் ஒருவனான சுமாலியும் வந்து சேர்ந்தான். தேவ கணங்களை பலவிதமாக கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அடித்து துன்புறுத்தினர். காற்று, ஜலத்தில் வசிக்கும் ஜீவன்களை வாட்டுவது போல வாட்டினர். நிசாசரர்கள் தேவ சைன்யத்தை நாசம் செய்வதைக் கண்டு, சிங்கத்தைக் கண்டு மான் கூட்டம் சிதறி ஓடுவது போல தேவர்கள் ஓடி மறையலாயினர். இதனிடையில் வசுக்களில் எட்டாவது வசுவான, சாவித்ர என்ற பெயர் பெற்றவன், ரண பூமியில் நுழைந்தான். பலவிதமான ஆயுதம் ஏந்திய வீரர்களுடன் தைரியமாக போரிட்டபடி முன்னேறினான். சிங்கம் சிறு மிருகங்களை வெருட்டுவது போல விரட்டிக் கொண்டு சென்றான். ஆதித்யர்களான த்வஷ்டா, பூஷா இவர்களும் உதவியாக வந்து சேர்ந்தனர். இதன் பின் ராக்ஷஸ தேவ சைன்யங்களுக்கிடையில் பயங்கரமான யுத்தம் நடந்தது. யுத்தத்தில் புற முதுகு காட்ட மாட்டார்கள் என்று புகழ் பெற்ற ராக்ஷஸர்கள் நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக கொன்று குவித்தனர். இந்த சமயத்தில், சுமாலி சைன்யத்தின் முன்னால் நின்றபடி போரிடும் முறை வந்தது. மேகத்தை வாயு விரட்டுவது போல தேவ சைன்யத்தை அலறி ஓடச் செய்தான் சுமாலி. சூலமும், ப்ராஸங்களும் பயங்கர வேகத்தில் வந்து தாக்கின. தேவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அஷ்டம வசுவான சாவித்ரன், மகா கோபத்துடன் தன் சைன்யத்தை உற்சாகப் படுத்தி சரமாரியாக அடிக்கும் நிசாசரனான சுமாலியை வளைத்துக் கொண்டான். இருவருக்கும் இடையில் பயங்கர போர் நடந்தது. இருவருமே தோற்று ஓடத் தயாராக இல்லை. கடுமையான போர். சுமாலியின் பன்னக ரதம் உடைந்தது. ரதம் உடைந்தவுடன் கதையை எடுத்துக் கொண்டு போர் தொடர்ந்தது. சாவித்ரன் சுமாலியின் தலையில் ஓங்கி அடித்தான். கால தண்டம் போல அந்த க3தை4 இந்திரனின் வஜ்ரம் போல வந்து தாக்கியதில் மலைகள் அசனி என்ற இந்திர ஆயுதத்தால் பொடிப் பொடியானது போல சுமாலி தலையோ, எலும்புகளோ, மாமிசமோ எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. அப்படி உருக் குலைந்து போனான். க3தை4யினால் பஸ்மமாக ஆனான். இதைக் கண்டு ராக்ஷஸர்கள் ஒன்று கூடி பெருங்கூச்சலுடன் அலறிக் கொண்டு ஓடினர். வசுக்கள் தொடர்ந்து அவர்களைத் துரத்தியடித்தனர்.
இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 28 (565) ஜயந்தாபவாகனம் (ஜயந்தனை தூக்கிச் செல்லுதல்)
வசுவால் பஸ்மமாக ஆக்கப் பட்டான் சுமாலி என்ற செய்தியைக் கேட்டதும், தன் சைன்யம் ரண பூமியிலிருந்து ஓடுவதையும் அறிந்து, ராவண குமாரன் பெரும் கோபம் கொண்டான். மேக நாதன் என்ற அந்த வீரன், சிதறி ஓடிய ராக்ஷஸ வீரர்களை ஒன்று சேர்த்து, ஒழுங்கு படுத்தினான். அக்னி வனத்தில் இருந்த நல்ல ரதத்தில் ஏறி, அவன் போர் முனைக்கு வந்ததும் தேவர்கள் சைன்யம் நடுங்கியது. இந்திரன் அவர்களுக்கு தைரியம் ஊட்டி, அணி வகுத்து நிறுத்தி போர் செய்யத் தூண்டினான். பயப்படாதீர்கள், ஓடாதீர்கள் திரும்பி வாருங்கள், இதோ பாருங்கள் என் மகன் தலைமை தாங்கி நடத்த வருகிறான், நீங்கள் எல்லோரும் அவனுக்கு சகாயமாக போர் செய்ய வாருங்கள் என்று அழைத்து வந்தான். தேவர்களும் இந்திரன் மகனான ஜயந்தனை சூழ்ந்து நின்று கொண்டு, அவனுக்கு உதவி செய்பவர்களாக, ராவண குமாரனான மேக நாதனை எதிர்த்து போராட கிளம்பினர். மாதலி புத்திரனான கோமுகனின் ரதத்தையும், சாரதியையும் மேகனாதன் அடித்து வீழ்த்தினான். சசிகுமாரனான ஜயந்தன், அவன் சாரதி பேரிலும் பாணங்களைப் போட்டபடி, மகா கோபத்துடன் அவன் எதிரில் வந்து நின்றான். தேவ சைன்யத்தின் பேரிலும் பல கூர்மையான பாணங்களை இடை விடாது பிரயோகித்தான். ஒரே இருள் சூழ்ந்தது போல இருந்தது. ராவணசுதன், மேக நாதன், சத்ரு சைன்யத்தை அழிப்பது என்று தீவிரமாக முனைந்து அடிக்கவும், இந்திர குமாரன் ஜயந்தன் கண் முன்னாலேயே தேவ சைன்யத்து வீரர்களும், அதே போல திருப்பி அடிக்க, தேவர்களா, ராக்ஷஸர்களா என்று பரஸ்பரம் தெரிந்து கொள்ள முடியாதபடி, ஒரே குழப்பமாக ஆகி விட, இரு தரப்பினரும் ஆயுதங்களை அப்படி அப்படியே போட்டு விட்டு, ஓடலாயினர். ஒரு சமயம், தேவர்கள் தேவர்களையே அடித்துக் கொண்டனர். ராக்ஷஸர்கள் ராக்ஷஸர்களையே அடித்தனர். இருட்டு மூடியதில் எதுவும் புரியாமல் சிலர் வெளியேறினர். இதற்கிடையில் புலோம என்ற வீரன், ஜயந்தனைக் கடத்திச் சென்று விட்டான். மகள் வயிற்றுப் பேரனான ஜயுந்தனை சசி குமாரனை எடுத்துக் கொண்டு சாகரத்தினுள் ஒளிந்து கொண்டான். புலோம சசி (இந்திரன் மனைவி)யின் தந்தை வழி பாட்டனார். ஜயந்தன் காணாமல் போனதும் தேவதைகள், மன மகிழ்ச்சியும் உற்சாகமும் வடிந்து போக, அடி படும் துன்பம் தாங்க மாட்டாமல் ஓடி விட்டனர். ராவணனுக்கு மகா கோபம். தன் படை வீரர்களுடன் சேர்ந்து கொண்டு, தேவர்களை துரத்தி அடித்தான். பெரும் ஆரவாரம் எழுந்தது. தன் மகனைக் காணாததாலும், தேவர்கள் ஓடி மறைவதையும் கண்டு இந்திரன் மாதலி என்ற தன் சாரதியைப் பார்த்து, ரதத்தை கொண்டு வர பணித்தான். மிகப் பெரிய அந்த ரதம் தயாரகவே இருந்தது. வேகமாக ஓடும் குதிரைகளை பூட்டி ரதத்தைக் கொண்டு வந்தான். மின்னலுடன் கூடிய மேகங்கள், அந்த ரதத்தின் முன்னால் இடி முழக்கம் செய்தபடி, கட்டியம் கூறுவது போல சென்றன. கந்தர்வர்கள் பலவிதமான வாத்யங்களை வாசித்தபடி சேர்ந்து கொண்டனர். அப்ஸர கூட்டங்கள் நடனமாடின. தேவலோக நாயகனான இந்திரன் புறப்பட்டதில், ருத்ர, வசு, ஆதித்ய, சாத்ய, மருத்கணங்கள் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியவர்களாக இந்திரனைத் தொடர்ந்து போர் முனை செல்லத் தயாராக வந்து சேர்ந்தனர். இந்திரன் போருக்கு கிளம்பியதும் காற்று மகா கடுமையாக வீசியது. சூரியன் ஒளியின்றி ஆனான். பெரிய மின்மினி பூச்சி போன்று காட்சியளித்தான். இதற்கிடையில் விஸ்வகர்மா செய்து கொடுத்த ரதத்தில் ஏறி தசக்ரீவனும் கிளம்பினான். பலவிதமான நாகங்கள் சூழ, அவைகளின் உஷ்ணமான காற்றே அந்த இடம் முழுவதும் பரவி விஷத்தைப் பரப்பின. தைத்யர்களும், நிசாசரர்களும் ரதத்துடன் வந்து சேர்ந்தனர். மகேந்திரனை எதிர்கொண்டு ராக்ஷஸ ராஜன் முன்னேறிச் சென்றான். தன் மகனை தள்ளிவிட்டு தானே முன் வந்தான். ராவணியும் விலகி தந்தைக்கு வழி விட்டான். இதன் பின் பெரும் யுத்தம் நடந்தது. ராக்ஷஸர்களுக்கும் தேவர்களுக்கும் இடையில், பயங்கரமான யுத்தம். இரு புறத்திலிருந்தும் சஸ்திரங்கள் மழையாக பெருகலாயிற்று. கும்பகர்ணனும் எல்லா விதமான ஆயுதங்களையும் கையாள ஆரம்பித்தான். யார் யாருடன் சண்டை செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. பற்களால், புஜங்களால், கால்களால், சக்தி தோமரம் என்ற ஆயுதங்களால், கைக்கு கிடைத்ததை வைத்துக் கொண்டு அடிக்க ஆரம்பித்தனர். ருத்ரர்கள் பலர் வந்து ராக்ஷஸனை அடித்து வீழ்த்தினார்கள். கும்பகர்ணன் எதிர்த்து நிற்க இயலாமல் விழுந்தான். உடலிலிருந்து ரத்தம் நீராக பெருகி ஓடியது. மருத் கணங்களுடன் போரிட்ட சைன்யமும் தோற்று ஓடியது. சிலர் அடிபட்டு உடல் அங்க ஹீனமாகி கிடந்தனர். சிலர் ரதம் அழிய தரையில் நின்றனர். ரதங்களிலிருந்து நாகங்களும், கர, ஒட்டகங்களும், குதிரைகள், சிம்சுமாரம், பன்றிகள், பிசாச வதனம் உடையவை இவை யாவும் தேவர்களால் கொல்லப் பட்டது. ராக்ஷஸர்கள், அடிபட்டு கீழே விழுந்து கிடந்தவர்கள் உடலிலிருந்தும், ரத்தமும், மாமிசமும் பெருகி சேறாகி கிடந்தது. நதியாக ஓடியது. அதில் மிதந்த சஸ்திரங்கள் முதலைகளோ எனும் படி கிடந்தன. தேவர்களால் தன் சைன்யம் சின்னா பின்னமானதைக் கண்டு தசக்ரீவன் பெரும் கோபம் கொண்டான். அவனும் தன் பராக்ரமத்தால் பல தேவர்களை அடித்து நொறுக்கியபடி இந்திரனை நோக்கியே வந்தான். தன் பெரும் வில்லில் நாணை சுண்டி பெரும் ஓசையை எழுப்பிக் கொண்டு இந்திரனும் வந்தான். இந்த ஓசையில் திக்குகள் எதிரொலித்தன. ராவணனை இந்திரன் தன் பாணங்களால் கீழே தள்ளினான். ராவணன் சமாளித்துக் கொண்டு அதே போல் இந்திரன் பேரில் பாணங்களை மழையாக பொழிந்தான். இருவரும் இப்படி ஒருவரோடொருவர் போரிட்ட சமயம், இருள் சூழ்ந்ததால் யார் வில், யாருடைய அம்பு, அடிபட்டது யார் என்பது கூட தெளிவாக தெரிந்து கொள்ள முடியவில்லை.
இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இருபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 29 (566) வாசவ க்ரஹணம். (வாசவனைப்பிடித்தல்)
இருள் மண்டியதும், தேவர்களும், ராக்ஷஸர்களும் திகைத்தாலும், ஒருவரை ஒருவர் அடிப்பதை நிமூறுத்தவில்லை. தேவர்கள் படை ராக்ஷஸ படையை பத்தில் ஒன்றாக குறைத்து விட்டது. யம லோகம் சென்ற வீரர்கள் யார் யார் என்பதே தெரியாதபடி யுத்தம் தொடர்ந்தது. இந்திரனும் ராவணனும், ராவணியும் (மேகநாதன்) மூவர் மட்டும், இப்படி இருள் சூழ்ந்து பரவிய போதிலும், தங்கள் கவனம் சிதறாமல் தைரியமாக இருந்தனர். தன் படை பெரும்பாலும் நாசமடைந்ததைக் கண்டு, ராக்ஷசேந்திரன் கடும் கோபம் கொண்டான். ரதம் ஓட்டிய சாரதியை கடுப்புடன் நோக்கி, எதிரிகள் மத்தியில் என்னைக் கொண்டு விடு என்றான். இன்று இந்த தேவ சமூகத்தை என் விக்கிரமத்தால், அஸ்திரங்களால அழித்து விட்டுதான் மறு வேலை. நான் இந்திர பதவியை கைப் பற்றுவேன். இந்திரனை அழிப்பேன். குபேரனை, யமனை மற்றும் அனைவரையும் கொன்று யம லோகம் அனுப்புவேன். அவர்கள் எல்லோருக்கும் அதிபதியாக ஆவேன். யோசிக்காதே. சீக்கிரம் ரதத்தைக் கொண்டு வா. இரண்டாவது தடவையாக சொல்கிறேன். இன்று இரண்டில் ஒன்று பார்த்து விட்டுத் தான் ஓய்வேன். முடிவு வரை யுத்தம் செய்வேன் என்றான். இதோ, இந்த நந்தனம் எனும் தேவலோக தோட்டத்தில் வசிப்போம். என்னை அந்த உதய மலை இருக்கும் இடம் அழைத்துச் செல். இதைக்கேட்டு சாரதி, மனோ வேகத்தில் செல்லும் குதிரைகளைப் பூட்டி, சத்ருக்கள் மத்தியில், ரதத்தை ஓட்டிச் சென்றான். அவன் உத்தேசம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு விட்ட இந்திரன், தன் ரதத்தில் இருந்தபடியே, யுத்த பூமியில் இருந்த மற்ற தேவர்களைப் பார்த்துச் சொன்னான். தேவர்களே, கேளுங்கள். எனக்கு சரி என்று தோன்றும் வழி இது. தசக்ரீவனை உயிருடன் பிடித்து விடுங்கள். மிகவும் பலசாலி. காற்றை விட வேகமாக பறக்கும் ரதத்தில் வருகிறான். பர்வ காலங்களில், சமுத்திரத்தில் அலை அதிகரிப்பது போல இவன் பன் மடங்கு சக்தியோடு நம்மைத் தாக்க வருவான். வரபலம் இவனுக்கு சாதகமாக இருப்பதால் நம்மால் இவனை அழிக்க முடியாது. இவனுடைய துணிச்சலுக்கு அது தான் காரணம். அதனால் இவனை உயிருடன் பிடிப்போம். இவனையும் அடக்கி, நம் வசம் உள்ள படை பலங்களோடு, நம் அதிகாரத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். மூவுலகும் நம் ஆட்சிக்குள் இருப்பது போல இவனும் நமக்கு அடங்கி இருக்கச் செய்ய வேண்டும். இதன் பின் இந்திரன் ராவணனை விட்டு மற்ற ராக்ஷஸர்களை பயமுறுத்தி விரட்டலானான். வடக்குத் திசையிலிருந்து தசக்ரீவன் திரும்புவதில்லை என்ற சபதத்தோடு வந்து கொண்டிருந்தான். தென் திசையிலிருந்த இந்திரன் எதிர்பட்டான். நூறு யோசனை தூரம் தசக்ரீவன் முன்னேறிய பின், தேவர்கள் கூட்டம், அவன் பேரில் சரங்களை வர்ஷித்தது. தன் படை வீர்ர்கள் நாசம் அடைவதைக் கண்டு இந்திரன் ராவணனை நெருங்கினான். திடுமென பெரும் கூச்சல் எழுந்தது. ஆ.. செத்தோம் என்று தானவ வீரர்கள் பக்கத்திலிருந்து, அலறல் கேட்டது. இந்திரன் ராவணனை சிறை பிடித்து விட்டிருந்தான். இதைக் கண்டு ராவணீ- ராவணன் மகன், தன் ரதத்தை எடுத்துக் கொண்டு வேகமாக வந்தான். மகாமாயா யுத்த முறைகளை பின்பற்றலானான். இந்த அறிவை அவன் பசுபதியிடமிருந்து கற்றிருந்தான். பரபரப்பும் குழப்பமுமாக இருந்த சேனை வீரர்களைக் கடந்து இந்திரனையே குறி வைத்தபடி, முன்னேறினான். மகேந்திரன் தன் பின்னால், எதிரியின் மகன் ரூபத்தில் வந்த ஆபத்தை அறியவில்லை. மற்ற தேவர்கள் அவன் கவசத்தை வீழ்த்தினர். பல விதமாக தாக்கினர். ராவணன் மகன் அவர்களை லட்சியம் கூட செய்யாமல், பதிலடி கூட கொடுக்காமல், தன் குறியே கவனமாக நேராக இந்திரன் அருகில் சென்று மாதலியை அடித்தான். மகேந்திரன் பேரில் பாணங்களை மழையாக பொழிந்தான். சாரதியை விலக்கி விட்டு இந்திரனும், ஐராவதத்தில் ஏறி ராவணன் மகனைத் தாக்கினான். மாயாபலம் கொண்ட ராவணீ திடுமென அந்தரிக்ஷத்தில் மறைந்தான். இந்திரனை திகைக்கச் செய்து மறைவில் நின்று அம்புகளை எய்து, இந்திரனை களைக்கச் செய்தான். களைத்து விட்டான் என்று தெரிந்ததும், மாயையால் அவனைக் கட்டி, தன் சைன்யத்தின் நடுவில் கொண்டு சென்றான். உருவம் இன்றி ஏதோ மாயா சக்தி இந்திரனை கட்டியிழுத்துக் கொண்டு போவது போல நடத்திச் செல்வதைப் பார்த்த தேவ வீரர்கள் இது என்ன?என்று திகைத்தனர். யார் என்பது கண்ணுக்குத் தெரியவில்லை. யாரோ மாயாவி யுத்தக் கலையை நன்கு அறிந்த இந்திரனையே கட்டி இழுத்துக் கொண்டு தன்னையும் காட்டிக் கொள்ளாமல் செல்வது யார்? இதற்கிடையில் கோபம் கொண்ட சில தேவ வீரர்கள், ராவணன் கட்டுகளை அவிழ்த்து, அவன் மேல் சரமாரியாக அஸ்திரங்களை பொழிந்தனர். ராவணன், இப்படி போரிட்ட ஆதித்யர்களையும், வசுக்களையும் எதிர்த்து போரிட முடியாமல் திண்டாடினான். இப்படி சல்லடையாக துளைக்கப்பட்ட தந்தையை தன் மறைவான நிலையிலேயே மகன் மேகநாதன் கண்டான். தந்தையே வாருங்கள், நாம் யுத்த பூமியிலிருந்து வெளியேறுவோம். நாம் ஜயித்து விட்டோம். கவலையை விடுங்கள். இந்த தேவ சைன்ய தலைவன் யாரோ அவனை நான் பிடித்து விட்டேன். இந்த வீரர்களின் நம்பிக்கை, கர்வம், இவை தலைமையில்லாததால் பயனற்றவையே. தந்தையே,மூவுலகையும் உங்கள் இஷ்டம் போல் ஆட்டுவிக்கலாம். இனி யுத்தம் எதற்கு? மகன் சொன்னதைக் கேட்டு ராவணன் மகிழ்ந்தான். இனி யுத்தம் தேவையில்லை. தேவ சேனை வீரர்கள், குழப்பத்துடன் திரும்பினர். ரண பயம் விலகி, தன் பிரபுத்வத்தை ராவணன் திரும்பப் பெற்றான். தன் பக்கமே விஜயம் என்று அறிவித்து விட்டு நிசாசரபதி- இரவில் நடமாடுபவர் தலைவன், வீடு திரும்பினான். மகனை அருகில் அழைத்து பாராட்டினான். உன் அதி வீரமான பராக்ரமத்தால், என் குல கௌரவம் நிலை நிறுத்தப் பட்டது. நமக்கு சற்றும் குறையாத படை பலம் உள்ள தேவேந்திரனையே ஜயித்து விட்டாய். ஓருவனாக வாஸவனை ரதத்தில் ஏற்றிக் கொண்டு நீ முன்னால் போ. சேனை பின் தொடரட்டும். நானும் பின்னால் வருகிறேன். அப்படியே இந்திரனை பிடித்தபடி, ராவணீ முன் செல்ல சேனையும், ராவணனும் தொடர்ந்தனர். யுத்தம் முடிந்தது என்று போர் வீரர்களை அனுப்பி விட்டான் ராவண ராஜா.
(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், வாஸவ க்ரஹணம் என்ற இருபத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.
அத்தியாயம் 30 (567) இந்திர பராஜய காரண கதனம் (இந்திரன் தோல்வியுறக் காரணம்).
அதி பலசாலியான இந்திரனை வெற்றி கொண்ட பின், தேவர்கள் ப்ரும்மாவிடம் சென்றனர். (ப்ரக்ஷிப்தம்-இடைச்செருகல்- துக்கத்துடன் முறையிட்டனர். பகவன், இந்திரன் சிறைப் பட்டான். நீங்கள் கொடுத்த வரம் தான் காரணம். ராக்ஷஸேந்திரனை நாங்கள் யாரும் வதம் செய்ய முடியாதபடி வரம் கொடுத்து விட்டீர்கள். அவன் மகனுக்கு மகேஸ்வரன் வரங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார். மாயா பலத்தால், பலவந்தமாக இழுத்துக் கொண்டு போய் இருக்கிறான். தேவர்கள் ஒரு சக்தியுமின்றி, கட்டுப் பட்டுக் கிடக்கிறோம். அதனால் நீங்களே தான் இந்திரனை விடுவித்து தர வேண்டும் என்று வேண்டினர்) இதன் பின் ப்ரும்மா ராவணன் இருப்பிடம் சென்றார். ஆகாயத்தில் இருந்தபடி அவனை அழைத்து பேசினார். ராவணன் தன், மகன் மற்றும் உறவினர்களுடன், கர்வத்துடன் தன் ஆசனத்தில் வீற்றிருந்தான். மகனே, ராவணா, நீயும் உன் மகனும், போரில் காட்டிய திறமையைக் கண்டு திருப்தியடைந்தேன். ஆஹா, உன் மகனின் ஆற்றல் உனக்கு சமமாக, ஏன் இன்னும் பல மடங்கு உயர்வாக இருக்கிறது. உங்கள் ஆற்றலால் மூவுலகையும் ஜயித்தவனாக ஆனாய். உன் பிரதிக்ஞையும் பூர்த்தியடைந்தது. இதோ, உன் மகன், ராவணீ, இணையற்ற பலவான் என்று சொல்லக் கேட்டு எனக்கும் மிகவும் சந்தோஷமே. இன்று முதல் அவனை இந்திரஜித்- இந்திரனை வென்றவன் என்று அழைப்போம். ராக்ஷஸ குமாரன் பலவானாக, யாராலும் எளிதில் வெல்ல முடியாதவனாக இருப்பான். மூவுலகும் அவன் செயலால், ராக்ஷஸ ராஜனே, உன் ஆட்சியின் கீழ் வந்து விட்டது. அதனால் இந்திரனை விட்டு விடு. மகேந்திரன், பாக சாஸனன், அவனை விடுவிக்க என்ன விரும்புகிறாய் என்று கேட்க, மேகநாதன், எனக்கு அமரத்வம் தந்தால், இவனை விடுவிக்கிறேன் என்றான். நான்கு கால்களுடைய மிருகங்கள், பறவைகள் தவிர, மரம், புதர், கொடி, புல், கல், மலை இவைகளிடம் கூட ஜந்துக்கள், சமயங்க ளில் பயப்படுகின்றன. அதனால் உலகில் எந்த பொருளிலும், எப்பொழுதும் பயம்-ஆபத்து, இருக்கிறது இவ்வாறு இந்திரஜித் சொல்லவும், ப்ரும்மா சொன்னார். அப்படி அமரத்வம் என்பது உயிரினங்களுக்கு கிடையாது. ஏதோ ஒரு விதத்தில், மரணம் தவிர்க்க முடியாததே. கால் நடைகள், பக்ஷிகள், அல்லது ஆற்றல் மிகுந்த பிராணியிடம் உன் மரணத்தை ஏற்றுக் கொள் என்றார். உடனே இந்திரஜித் என்ற அந்த ராவணன் மகன் தன் நிபந்தனைகளை வெளியிட்டான். கேளுங்கள். இந்திரனை விடுவிக்க வேண்டுமானால், இவை தான் என் நிபந்தனைகள். எனக்கு இஷ்டமான பொழுது, அக்னியில் ஹவ்யம் அளித்து, மந்திரங்கள் சொல்லி பூஜை செய்து யுத்தத்தில் இறங்குவேன். எந்த சத்ருவானாலும் வெற்றி எனக்கே கிடைக்கும் படி, குதிரையுடன் கூடிய ரதம் அக்னியிலிருந்து வெளி வர வேண்டும், அதில் இருக்கும் வரை எனக்கு அமரத்வம் தர வேண்டும். இந்த வரம் தந்தால் இந்திரனை விடுவிக்கிறோம் என்றான். அந்த யாகத்தை நான் செய்து முடிக்கும் முன் தேவர்கள் குறுக்கிட்டு வெற்றி பெற்றால், எனக்கு விமோசனம், முடிவு வரட்டும், மற்ற எல்லோரும் தவம் செய்து அமரத்வம் வேண்டுவார்கள். நான் என் புஜ பலத்தால் அமரத்வத்தை வேண்டுகிறேன் என்றான். ப்ரும்மா அப்படியே ஆகட்டும் என்று ஒப்புக் கொண்டார். இந்திரனையும் விடுவித்தனர். எல்லோரும் தேவ லோகம் சென்றனர். ராமா, இந்திரன் தன் மதிப்பை இழந்ததால் வாய் பேசாது இருந்தான். பிரஜாபதியான ப்ரும்மா அவன் மன நிலையை உணர்ந்து, சமாதானம் செய்வது போல பேசினார். சதக்ரதோ, நூறு யாகங்களைச் செய்தவனே, முன் நீ செய்தது நினைவு இல்லையா, அமரேந்திரனே, முன்பு நான் பல விதமாக பிரஜைகளை ஸ்ருஷ்டி செய்து கொண்டிருந்தேன். ஒரே வர்ணம், ஒரே அளவு ஒரே வித அமைப்பு. ஓரே அச்சில் வார்த்து எடுத்தது போல. இவர்களை பிரித்து அடையாளம் காட்ட கூட முடியாது. மனதை ஒரு முகப் படுத்தி, வித்தியாசமாக ஸ்ருஷ்டி செய்ய நினைத்து, பெண்களை உருவாக்கினேன். அதுவரை ஸ்ருஷ்டி செய்த பிரஜைகளில் எதெது உயர்வோ, அவைகளைச் சேர்த்து மிகுந்த பிரயாஸையுடன் அஹல்யா என்ற பெண்ணை ஸ்ருஷ்டி செய்தேன். ஹலம் என்ற சொல்லின் விளைவு ஹல்யம், இதன் பொருள்- அழகின்மை. இந்த ஹல்யம், அழகின்மை அருகில் நெருங்க கூட முடியாதபடி அஹல்யா என்ற ஸ்திரீ ரத்னத்தை ஸ்ருஷ்டி செய்தேன். ஹல்யம் இல்லாததால் அஹல்யா. இதே பெயரில் இவள் பிரசித்தமானாள். இப்படி ஒரு ஸ்திரீயை ஸ்ருஷ்டி செய்து விட்டோமே, இவளுக்கு ஏற்ற வரன் கிடைக்க வேண்டுமே என்ற கவலை தோன்றியது. இந்திரா, நீ நினைத்தாய், உயர் பதவியில் இருப்பதால், உனக்குத்தான் அவள் மனைவியாவாள் என்று மனக் கோட்டை கட்டினாய். நீயாக நினைத்துக் கொண்டாய். நான் மகாத்மா கௌதமரிடம் அடைக்கலப் பொருளாக விட்டு வைத்திருந்தேன். பல வருஷ காலம் அவரிடமே இருந்தாள். தன்னுடன் அழைத்துச் சென்ற முனிவர், பல வருஷ காலம், அவளை பெரும் மதிப்பும் மரியாதையுமாக நடத்தி வந்தார். மகா முனிவரின் வைராக்யம், திட சித்தம், தவ வலிமை இவற்றைக் கண்டு பத்னியாக அவளைத் தொட அனுமதித்தேன். அவளுடன் மகா முனி சந்தோஷமாக இருந்தார். தேவர்கள் அனைவரும் நான் அவளை கௌதமருக்கு கொடுத்ததில் மனத்தாங்கல் அடைந்தனர். இந்திரா, நீயும் மிகுந்த கோபத்துடன் முனிவர் ஆசிரமம் சென்றாய். கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல நின்றவளைக் கண்டாய். கோபமும், காமமும் உன் அறிவை மறைத்தது. அவளை பலாத்காரம் செய்தாய். மகரிஷியிடம் வசமாக அகப்பட்டுக் கொண்டாய். மகா தேஜஸ் உடைய அவரால் சபிக்கப் பட்டாய். என்ன தைரியம்? எந்த தைரியத்தில் நீ இப்படி ஒரு அக்கிரமத்தை செய்தாயோ, எந்த தைரியத்தில் என் மனைவியை கெடுத்தாயோ, எந்த தைரியத்தில் பயமின்றி சுற்றுகிறாயோ, அந்த தைரியம் உனக்கு இல்லாமல் போகட்டும். யுத்தத்தில் சத்ருக்க ளிடம் வசமாக மாட்டிக் கொள்வாய். நீ ஆரம்பித்து வைத்த இந்த துஷ்க்ருத்யம், கெட்ட காரியம், மனிதர்களிடமும் தோன்றும் சந்தேகமேயில்லை. அப்படி மனிதன் செய்யும் தவற்றால் அவனுக்கு ஏற்படக் கூடிய பாப சுமையில் பாதி உன்னை வந்து சேரும். செய்பவன் பாதி தண்டனையை அனுபவிப்பான். உனக்கு ஸ்திரமான இடமும் (பதவி) இனி கிடையாது. யார் யார் தேவர்கள் தலைவனாக வந்தாலும், நிரந்தரமாக இருக்க மாட்டான். இது என் சாபம். தன் மனைவியையும் மிகவும் கடிந்து கொண்டார். துர்விநீதே, கெட்ட நடத்தையுடையவளே, என் ஆசிரம எல்லைக்குள் இனி நுழையாதே. அழகும், இளமையும் உன்னிடம் தான் இருப்பதாக இறுமாந்திருந்தாயே. இனி நீ ஒருவள் தான் ரூபவதி என்ற தகுதியை இழப்பாய். உலகில் பிரஜைகள் அனைவருமே ரூபவதிகளாக பிறப்பர். தன்னைப் போல வேறு யாரும் இல்லை என்று தானே கர்வப்பட்டாய். இதன் பின் பலர் அதே போல அழகுடையவர்களாக பிறந்தனர். அவள் முனிவரை வேண்டிக் கொண்டு மிக மெதுவான குரலில் தன்னை மன்னிக்கும் படி கேட்டாள். நாதா, அறியாமையால் நடந்து விட்ட தவறு இது. அவன் உங்கள் உருவத்தில் வந்தான். அதனால் தான் சம்மதித்தேன் என்றாள். மகா முனியே காமாந்தகனான அவன் என்னை ஏமாற்றி விட்டான். நீங்கள் என்னை பொறுத்தருள வேண்டும் என்றாள். அஹல்யை இவ்வாறு சொல்லவும் கௌதம முனிவர், இக்ஷ்வாகு வம்சத்தில் ஒரு மகான் பிறக்கப் போகிறான். ராமன் என்ற பெயருடன். வனம் வருவான். விஷ்ணுவே மனித உருக் கொண்டு வருவார். உலக நன்மைக்காக. அவரை தரிசனம் செய்தால் நீ பாவனமாவாய். அவருக்கு அதிதி சத்காரங்கள் செய்து விட்டு, என்னை அடைவாய். அதன் பின் என்னுடன் வாழ்வாய். என்று சொல்லி முனிவர் தன் ஆசிரமம் சென்று விட்டார். அவர் மனைவி கடுமையான தவம் செய்தாள். சாப விமோசனத்திற்காக காத்திருக்கிறாள். இந்திரா, நீ நினைத்துப் பார். நீ செய்த துஷ்ட காரியத்தின் பலன் தான் இப்பொழுது சத்ரு வசம் பிடி பட்டாய். வேறு யாரும் காரணம் இல்லை. மனதை ஒருமுகப் படுத்தி சீக்கிரம் வைஷ்ணவ யாகம் செய். அந்த யாகத்தின் பலனாக, நீ பவித்ரமாகி தேவ லோகம் செல்வாய். உன் மகனும் இந்த யுத்தத்தில் அழியவில்லை. அவனை அவன் பாட்டன் கடலுக்கடியில் அழைத்துச் சென்று விட்டான். இதைக் கேட்டு தேவேந்திரன், வைஷ்ணவ யாகம் செய்தான். திரும்பவும் தேவ லோகத்தைப் பெற்று தேவராஜாவாக ஆனான். இது தான் இந்திரஜித்தின் பலம். தேவேந்திரனை ஜயித்ததால், இந்திரஜித் என்று புகழ் பெற்றான். மற்ற பிராணிகள் அவனுக்கு ஒரு பொருட்டா என்ன? கேட்டுக் கொண்டிருந்த ராமனும், லக்ஷ்மணனும், மற்ற வானர, ராக்ஷஸர்களும், வியந்தனர். விபீஷணன், முன் நடந்தது, கேட்டது நினைவு வரப் பெற்றேன் என்றான். ராமரும் கேட்டதாக நினைவு வருகிறது என்றார். உலகில், ராவணன் துன்பம் இழைப்பவனாக ஆனது இப்படித்தான் என்றார்.
(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், இந்திர பராஜய காரண கத2னம் என்ற முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.
ஸ்ரீமத் ராமாயணம்
உத்தர காண்டம்
அத்தியாயம் 1 (538) ராம ப்ரச்ன: (ராமனின் கேள்வி) 5
அத்தியாயம் 2 (539) பௌலஸ்த்ய குலோத்பத்தி (புலஸ்திய குலம் தோன்றுதல்) 7
அத்தியாயம் 3 (540) வைஸ்ரவன லோக பால பத3 ப்ராப்தி, லங்காதி3 ப்ராப்தி ச (வைஸ்ரவனன் லோக பாலன் என்ற பதவி அடைதலும், லங்கையை பெறுதலும்) 9
அத்தியாயம் 4 (541) ராவணாதி பூர்வ ராக்ஷஸ உத்பத்தி கதனம்(ராவணனுக்கு முந்தைய ராக்ஷஸர்கள் தோன்றிய கதை) 11
அத்தியாயம் 5 (542) மால்யவதா3த்3யபத்யோத்பத்தி : (மால்யவான் மற்றும் வாரிசுகள் தோன்றுதல்) 12
அத்தியாயம் 6 (543) விஷ்ணு மால்யவதா3தி3 யுத்தம் (மால்யவான் முதல்வரோடு விஷ்ணு யுத்தம் செய்தது) 14
அத்தியாயம் 7 (544) மாலி வத:: (மாலியை வதம் செய்தது) 17
அத்தியாயம் 8 (545) சுமால்யாதி நிக்3ரஹ: (சுமாலி முதலானவர்கள் வதம்) 19
அத்தியாயம் 9 (546) ராவணாத்யுத்பத்தி (ராவணன் முதலானோர் பிறந்தது) 21
அத்தியாயம் 10 (547) ராவணாதி வர தானம் (ராவணன் முதலானோருக்கு வரம் தருதல்) 23
அத்தியாயம் 11 (548) ராவண லங்கா ப்ராப்தி: (ராவணனுக்கு லங்கை கிடைத்தல்) 25
அத்தியாயம் 12 (549) ராவணாதி விவாக: (ராவணன் முதலானோர் திருமணம்) 28
அத்தியாயம் 13 (550) த4னத3 தூ3த ஹனனம் (குபேரனுடைய தூதனை வதம் செய்தல்) 29
அத்தியாயம் 14 (551) யக்ஷ ராக்ஷஸ யுத்தம் (யக்ஷர்களும், ராக்ஷஸர்களும் போரிடுதல் 32
அத்தியாயம் 15 (552) புஷ்பக ஹரணம் (புஷ்பக விமானத்தை அபகரித்தல்) 33
அத்தியாயம் 16 (553) ராவண நாம ப்ராப்தி: (ராவணன் என்ற பெயரைப் பெறுதல்) 35
அத்தியாயம் 17 (554) வேத3வதீ சாப: (வேதவதி என்பவள் கொடுத்த சாபம்) 37
அத்தியாயம் 18 (555) மருத்த விஜய: (மருத் கணங்களை ஜயித்தல்) 39
அத்தியாயம் 19 (556) அனரண்ய சாப: (அனரண்யன் கொடுத்த சாபம்) 41
அத்தியாயம் 20 (557) ராவணன் சந்துக்ஷணம் (ராவணன் போர் முழக்கம் செய்தல்) 43
அத்தியாயம் 21 (558) யம, ராவண யுத்தம். (யமனும் ராவணனும் சண்டையிடுதல்) 44
அத்தியாயம் 22 (559) யம ஜய: (யமனை ஜயித்தல்) 46
அத்தியாயம் 23 (560) வருண ஜய: (வருணனை ஜயித்தல்) 49
அத்தியாயம் 24 (561) க2ர, சூர்ப்பணகா2 த3ண்டகா வாஸாதே3ச: (கரனையும், சூர்பணகையையும் தண்டக வனத்தில் வசிக்க கட்டளையிடுதல்). 51
அத்தியாயம் 25 (562) மது வத வாரணம் (மது என்ற அரக்கனை கொல்லாமல் தடுத்தல்) 53
அத்தியாயம் 26 (563) நள கூபர சாப: (நள, கூபரனுடைய ) சாபம். 55
அத்தியாயம் 27 (564) சுமாலி வத: (சுமாலியை வதம் செய்தல்) 58
அத்தியாயம் 28 (565) ஜயந்தாபவாகனம் (ஜயந்தனை தூக்கிச் செல்லுதல்) 60
அத்தியாயம் 29 (566) வாசவ க்ரஹணம். (வாசவனைப்பிடித்தல்) 62
அத்தியாயம் 30 (567) இந்திர பராஜய காரண கதனம் (இந்திரன் தோல்வியுறக் காரணம்). 64
அத்தியாயம் 31 (568) ராவண நர்மதாவகாஹ: (ராவணன் நர்மதையில் இறங்குதல்) 67
அத்தியாயம் 32 (569) ராவண கிரஹணம் (ராவணனைப் பிடித்தல்) 69
அத்தியாயம் 33 (570) ராவண விமோக்ஷ: (ராவணனை விடுவித்தல்) 72
அத்தியாயம் 34 (571) வாலி ராவண சக்2யம் (வாலியும் ராவணனும் நட்பு கொள்ளுதல்) 74
அத்தியாயம் 35 (572).. ஹனுமதுத்பத்தி (ஹனுமான் பிறப்பு) 76
அத்தியாயம் 36 (573) ஹனுமத்வரப்ராப்தியாதி (ஹனுமான் பெற்ற வரங்கள்). 79
அத்தியாயம் 37 (574) பௌரோபஸ்தானம் (பிரஜைகளை சந்திப்பது) 82
அத்தியாயம் 38 (575) ஜனகாதி பிரதி பிரயாணம். (ஜனகர் முதலானோர் திரும்பிச் செல்லுதல்) 83
அத்தியாயம் 39 (576)வானர ப்ரீணனம் (வானரங்களை திருப்தி படுத்துதல்) 84
அத்தியாயம் 40 (577) ஹனுமத் பிரார்த்தனா (அனுமனின் வேண்டுகோள்) 86
அத்தியாயம் 41 புஷ்பக புனரப்4யனுக்ஞா (புஷ்பக விமானத்தை திருப்பி அனுப்புதல்) 87
அத்தியாயம் 42 (579) ராம சீதா விஹார: (ராமர் சீதை மகிழ்ச்சியுடன் இருத்தல்) 88
அத்தியாயம் 43 (580) ப4த்3ர வாக்ய ஸ்ரவணம் (ஒற்றன் சொல்லைக் கேட்டல்) 90
அத்தியாயம் 44 (581) லக்ஷ்மணாத்யானயனம். (லக்ஷ்மணன் முதலியோரை அழைத்து வரச் செய்தல்) 91
அத்தியாயம் 45 (582) சீதா ஸமுத்ஸர்கா3தேஸ: (சீதையை வெளியேற்ற கட்டளை) 92
அத்தியாயம் 46 (583) சீதா கங்காதீராநயனம் (சீதையை கங்கை கரைக்கு அழைத்துச் செல்லுதல்.) 93
அத்தியாயம் 47 (584) ராம சாஸன கத2னம் (ராமருடைய கட்டளையைத் தெரிவித்தல்) 95
அத்தியாயம் 48 (585) சீதா பரித்யாக: (சீதையை தியாகம் செய்து விடல்) 96
அத்தியாயம் 49 (586) வால்மீகி ஆசிரம பிரவேச: (வால்மீகியின் ஆசிரமத்தில் நுழைதல்). 98
அத்தியாயம் 50 (587) சுமந்திர ரஹஸ்ய கதனம் (சுமந்திரர் சொன்ன ரகசியம்) 99
அத்தியாயம் 51 ( 588) துர்வாச வாக்ய கதனம் (துர்வாசர் சொன்ன சொல்) 100
அத்தியாயம் 52 (589) ராம சமாதானம்(ராமன் சமாதானமடைதல்) 101
அத்தியாயம் 53 (590) ந்ருக சாப கதனம். (ந்ருகன் பெற்ற சாபம்) 102
அத்தியாயம் 54 (591) ந்ருக ஸ்வப்ர பிரவேச: (ந்ருக ராஜா பள்ளத்தில் நுழைதல்) 104
அத்தியாயம் 55 (592) நிமி வசிஷ்ட சாப: (நிமி, வசிஷ்ட சாபங்கள்). 105
அத்தியாயம் 56 (593) மைத்ராவருணித்வ ப்ராப்தி (மைத்ரா வருணன் என்ற நிலையை அடைதல்) 106
அத்தியாயம் 57 (594) நிமி நிமிஷீகரணம் (நிமியை கண் இமையில் இருக்கச் செய்தல்) 107
அத்தியாயம் 58 (595) யயாதி சாப: (யயாதியின் சாபம்) 108
அத்தியாயம் 59 (596) புரூ ராஜ்யாபிஷேக: (புருவின் ராஜ்யாபிஷேகம். ) 109
அத்தியாயம் 60 (597) பா4ர்க்கவ ச்யவனாத்3யாக3மனம் (பார்க்கவ, ச்யவன முனிவர்கள் வருகை) 110
அத்தியாயம் 61 (598) லவணத்ராண ப்ரார்த்தனா (லவணனிடமிருந்து காப்பாற்ற வேண்டுதல்) 111
அத்தியாயம் 62 (599) சத்ருக்ன பிரார்த்தனா. (சத்ருக்னனின் வேண்டுதல்) 112
அத்தியாயம் 63 (600) லவண வதோபாய கதனம். (லவணனை வதம் செய்ய வழி சொல்லுதல்) 113
அத்தியாயம் 64 (601) சத்ருக்ன ப்ரஸ்தானம். (சத்ருக்னன் கிளம்புதல்) 114
அத்தியாயம் 66 (603) குச லவ ஜனனம் (குச லவ பிறப்பு) 116
அத்தியாயம் 67 (604) மாந்தா4த்ரு வத4: (மாந்தாத்ருவின் வதம்) 117
அத்தியாயம் 68 (605) லவண சத்ருக்ன விவாத: (லவணனும் சத்ருக்னனும் விவாதித்தல்) 118
அத்தியாயம் 69 (606) லவண வத: (லவணனை வதம் செய்தல்) 119
அத்தியாயம் 70 (607) மது4புரி நிவேச: (மதுவின் நகரத்தில் பிரவேசித்தல்) 121
அத்தியாயம் 71 (608) சத்ருக்ன பிரசம்ஸா (சத்ருக்னனை புகழ்தல்) 122
அத்தியாயம் 72 (609) சத்ருக்ன ராம சமாகம: (சத்ருக்னனும் ராமனும் சந்தித்தல்) 123
அத்தியாயம் 73 (610) ப்ராம்மண பரிதேவனம் (பிராம்மணனின் வருத்தம்) 124
அத்தியாயம் 74 (611) நாரத வசனம் (நாரதர் சொன்னது) 125
அத்தியாயம் 75 (612) சம்பூக நிசய: (சம்பூகனை தேடுதல்) 127
அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்) 128
அத்தியாயம் 77 (614) ஸ்வர்கி பிரச்ன: (ஸ்வர்கியின் கேள்வி)) 130
அத்தியாயம் 78 (615) ஆபரணாகம: (ஆபரணங்கள் வந்து சேர்வது) 131
அத்தியாயம் 79 (616) தண்ட ராஜ்ய நிவேச: (தண்ட ராஜ்யத்தில் நியமித்தல்).. 132
அத்தியாயம் 80 (617) அரஜா சங்கம: (அரஜாவைக் காணல்) 133
அத்தியாயம் 81 (618) தண்ட சாப: (தண்டனுக்கு கிடைத்த சாபம்.) 134
அத்தியாயம் 82 (619) ராம நிவர்த்தனம் (ராமரை வழியனுப்புதல்) 135
அத்தியாயம் 83 (620) ராஜ சூய ஜிஹீர்ஷா (ராஜ மூசூய யாகம் செய்ய விரும்புதல்) 136
அத்தியாயம் 84 (621) வ்ருத்ர தபோ வர்ணனம். (வ்ருத்ரனின் தவம்) 138
அத்தியாயம் 85 (622) வ்ருத்திர வத: (வ்ருத்திரனை வதம் செய்தல்) 139
அத்தியாயம் 86 (623) ப்ரும்ம ஹத்யாஸ்தரணம் (ப்ரும்ம ஹத்தி தோஷத்திலிருந்து விடுவித்தல்.) 140
அத்தியாயம் 87 (624) இலா ஸ்திரீத்வ ப்ராப்தி (இலா பெண் தன்மையடைதல்) 141
அத்தியாயம் 88 (625) புத சமாகம: (புதன் வந்து சந்தித்தல்) 142
அத்தியாயம் 89 (626) புரூரவ ஜனனம் (புரூ ரவன் பிறப்பு) 143
அத்தியாயம் 90 (627) இலா புருஷத்வ ப்ராப்தி: (இலா புருஷத் தன்மையை அடைதல்) 144
அத்தியாயம் 91 (628) யக்ஞ சம்விதானம் (யாகசாலையை நிறுவுதல்) 145
அத்தியாயம் 92 (629) ஹய சர்ச்சா (குதிரையைப் பற்றிய விவாதம்) 147
அத்தியாயம் 93 (630) வால்மீகி சந்தேஸ: (வால்மீகியின் செய்தி) 148
அத்தியாயம் 94 (631) ராமாயண கானம் (ராமாயணத்தைப் பாடுதல்) 149
அத்தியாயம் 95 (632) வால்மீகி தூத ப்ரேஷணம் (வால்மீகி முனிவரை அழைக்க துர்தர்களை அனுப்புதல்) 151
அத்தியாயம் 96 (633) வால்மீகி ப்ரத்யாய தானம் (வால்மீகி உறுதி அளித்தல்) 152
அத்தியாயம் 97 (634) சீதா ரஸாதள ப்ரவேச: (சீதை பூமிக்குள் மறைதல்) 153
அத்தியாயம் 98 (635) ராம கோபோபசம: (ராமரின் கோபமும், சாந்தமடைதலும்) 154
அத்தியாயம் 99 (636) கௌஸல்யாதி கால தர்ம: (கௌஸல்யை முதலானோர் காலகதி அடைதல்) 156
அத்தியாயம் 100 (637) கந்தர்வ விஜய விஜய யாத்ரா (கந்தர்வனை வெற்றி கொள்ள விஜய யாத்திரை) 157
அத்தியாயம் 101 (638) தக்ஷ, புஷ்கல நிவேச: (தக்ஷன், புஷ்கலன் இவர்கள் பதவியேற்றல்) 158
அத்தியாயம் 102 (639) அங்கத, சந்திர கேது நிவேச: (அங்கதன், சந்திர கேது பதவியில் அமர்த்தப் படுதல்) 159
அத்தியாயம் 103 (640) காலாகமனம் (காலன் வருதல்) 160
அத்தியாயம் 104 (641) பிதாமஹ வாக்ய கதனம் (பிதாமகரான ப்ரும்மாவின் செய்தியை தெரிவித்தல்) 160
அத்தியாயம் 105 (642) துர்வாசாகம: (துர்வாசர் வருகை) 162
அத்தியாயம் 106 (643) லக்ஷ்மண பரித்யாக: (லக்ஷ்மணனை தியாகம் செய்தல்) 163
அத்தியாயம் 107 (644) குசலவாபிஷேக: (குச லவர்க ளின் அபிஷேகம்) 164
அத்தியாயம் 108 (645) விபீஷணாத்யாதேஸ: (விபீஷணன் முதலானோருக்கு செய்தி) 165
அத்தியாயம் 109 (646) ஸ்ரீ ராம மகா ப்ரஸ்தானம் (ஸ்ரீ ராமரின் மகா பரஸ்தானம்) 166
அத்தியாயம் 110 (647) ஸஹானுகம ஸ்ரீராம ஸ்வர்காரோஹனம் (உடன் வந்தவர்களுடன் ஸ்ரீ ராமர் சுவர்கம் செல்லுதல்) 167
அத்தியாயம் 111 (648) ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி: (ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி) 169
அத்தியாயம் 1 (538) ராம ப்ரச்ன: (ராமனின் கேள்வி)
ராக்ஷஸர்களை வதம் செய்து, ராஜ்யத்தை அடைந்து ராமர் அயோத்தியில் இருந்த பொழுது, முனிவர்கள் வாழ்த்துச் சொல்ல வந்தார்கள். கௌசிகர், யவக்ரீதன், கா3ர்க்யன், காலவர், கண்வர், மேதா4தி புத்ரன், இவர்கள் கிழக்கு திசையிலிருந்து வந்தார்கள். ஸ்வஸ்தி வாசகம் சொல்லியபடி ஆத்ரேயர், ப4கவான் நமுசி, ப்ரமுசி, அகஸ்தியர், அத்ரி பகவான், சுமுக, விமுகர் இவர்கள் அகஸ்தியருடன் தென் திசையிலிருந்து வந்தார்கள். ந்ருஷத்3ரு, க3வஷன், தௌ3ம்யன், ரௌத்3ரேயன் என்ற மகான் ரிஷி, இவர்களும் தங்கள் சிஷ்யர்களுடன் மேற்குத் திக்கிலிருந்து வந்து சேர்ந்தார்கள். வசிஷ்டர், காஸ்யபர், அதாத்ரி, விஸ்வாமித்திரர், கௌதமருடன் ஜமத3க்3னி, ப4ரத்3வாஜர், சப்த ரிஷிகள், எப்பொழுதுமே வடக்கில் இருப்பவர்கள், இவர்களும் வந்து சேர்ந்தார்கள். அனைவரும் மகாத்மாவான ராமரைக் கண்டு ஆசீர்வதிக்க வந்தார்கள். வேத வேதாந்தங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள், எல்லா வித சாஸ்திரங்களையும் அறிந்தவர்கள், தங்கள் தேஜஸால் அக்னிக்கு சமமாக இருந்தவர்கள், வாசலில் இருந்த காவல்காரனைப் பார்த்து அகஸ்தியர் சொன்னார் தாசரதியிடம் போய் சொல். ரிஷிகள் நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொல் என்றார். அகஸ்தியரை யார் என்று தெரிந்து கொண்ட காவல்காரன் உடனே ஓடிப் போய் ராமரிடம் செய்தியைத் தெரிவிக்கச் சென்றான். வாயில் காப்போன் ஆனாலும், நயம் அறிந்தவன், இங்கிதம் அறிந்தவன், சாமர்த்யசாலி. தைரியமும், சமயோசித புத்தியும் உடையவன். தருணம் அறிந்து ராமரிடம் அகஸ்தியர் முதலானோர் வந்திருப்பதை தெரிவித்தான். பூர்ண சந்திரன் போன்ற ஒளியுடன் அமர்ந்திருந்த ராகவன், இவர்கள் வந்து காத்திருக்கிறார்கள் என்று கேட்ட மாத்திரத்தில் அவர்களை சௌக்யமாக உள்ளே அழைத்து வா என்று உத்தரவிட்டு, தானும் கை கூப்பியபடி அவர்களை வரவேற்கத் தயாராக வந்து சேர்ந்தார். பாத்3யம் அர்க்4யம் இவைகளைக் கொடுத்து பூஜித்து, அரண்மனைக்குள் மரியாதையாக அழைத்து வந்து தகுந்த ஆசனங்க ளில் அமரச் செய்தார். பொன் வேலைப்பாடமைந்த விரிப்புக ளில் சிலர், குசம் என்ற புல்லைப் பரப்பி சிலர், மான் தோல் விரித்து சிலர் என்று தங்கள் சௌகர்யம் போல அமர்ந்தனர். ராமர் குசலம் விசாரித்தார். வந்திருந்த மகரிஷிகள், வேதம் அறிந்த பண்டிதர்களும் ராமரைக் குசலம் விசாரித்தனர். ரகு நந்தனா, நாங்கள் நலமே. எங்கும் யாவரும் நலமே. நல்ல வேளையாக உன்னையும் நலமாகக் காண்கிறோம். சத்ருக்களை அழித்து விட்டு வந்திருக்கிறாய். உலகை துன்புறுத்திக் கொண்டு இருந்த ராவணனை அழித்தாய். புத்ர பௌத்ரர்களோடு ராவணன் அழிந்தான். ராமா, உனக்கு இது ஒரு பொருட்டல்ல. வில்லைக் கையில் எடுத்தால் நீ மூவுலகையும் வெற்றிக் கொள்ளக் கூடியவனே. உன் கையால் ராக்ஷஸ ராஜா, அவர்கள் தலைவன் ராவணன் மடிந்தான். மிகப் பெரிய வீரனை வென்று வெற்றி வாகை சூடியவனாக உன்னைக் காண்கிறோம். சகோதரன் லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் சௌக்யமாக திரும்பி வந்தாயே, அதுவே நல்ல காலம் தான். சந்தோஷம். சகோதரர்கள் ஒன்று சேர்ந்தது சந்தோஷம். சொல்லப் போனால், ப்ரஹஸ்தன், விகடன், விரூபாக்ஷன், மகோதரன், அகம்பனன், துர்தர்ஷோ போன்ற ராக்ஷஸர்கள் அரிய உடலமைப்பு கொண்டவர்கள். பெரும் தேகமும் ப3லமும் கொண்டவர்கள். இவர்களே உன்னிடம் தோற்று வீழ்ந்தார்கள் என்பது போற்றக்கூடியதே. கும்பகர்ணனும், த்ரிசிரஸும், அதிகாயனும், நராந்தக, தேவாந்தகர்களும் போரில் மடிந்தார்கள். கும்பனும், நிகும்பனும் கூட நல்ல வீரர்கள். பார்க்கவே பயங்கரமான சரீரம் கொண்டவர்கள். கும்பகர்ணன் பிள்ளைகளான இவர்களும் மடிந்தார்கள். யுத்தம் என்றாலே மதம் கொண்டு வரும் காலாந்தக, யமாந்தகர்கள், யக்ஞ கோபன், தூம்ராக்ஷன் – இவர்கள் சாஸ்திரமும் நன்றாக அறிந்தவர்கள். காலனுக்கு சமமான பாணங்களால் இவர்களை அடித்து வீழ்த்தினாய். நல்லது. தேவர்களால் ஜயிக்க முடியாத ராக்ஷஸ ராஜனோடு த்வந்த யுத்தம் செய்தாயா? வரங்கள் பெற்றவன், அவனையே ஜயித்து விட்டாய். சந்தோஷம். ராவணியை (இந்திரஜித்) முன்னாலேயே வதம் செய்தது நல்லதாயிற்று. காலம் ஓடுவது போல ஓடி மறையக் கூடியவன். விஜயனாக வந்து நிற்கும் உன்னை நாங்கள் பாராட்டுகிறோம். இந்திரஜித் வதம் கேள்விப் பட்டவுடனேயே, இனிக் கவலையில்லை என்று நிம்மதியடைந்தோம். மகா மாயாவி. யாராலும் ஜயிக்க முடியாத படி வர தானம் பெற்றவன், சுயமாகவே பலசாலி. ரகு குல நந்தனா, இந்த ராக்ஷஸர்களை அழித்து விபீஷணனுக்கு அபயம் கொடுத்து நல்லதே செய்தாய். மேலும் மேலும் வெற்றிகளைப் பெற்று அமோகமாக இருப்பாய். இப்படி உள்ளன்போடு ரிஷிகள் சொல்லி வாழ்த்தி, பாராட்டியதைக் கேட்டு ராமர், பணிவோடு வினவினார். எனக்கு ஒரு விஷயம் ஆச்சர்யமாக இருக்கிறது. கும்பகர்ணனையும், ராவணனையும் விட்டு, நீங்கள் ராவணியை ஏன் இப்படி புகழ்ந்து பேசுகிறீர்கள்? மகோதரன், ப்ரஹஸ்தன், விரூபாக்ஷன் போன்ற ராக்ஷஸர்கள், போரில் மதம் பிடித்தவர்களாக செயல் படும், தேவாந்தக, நராந்தகர்களை விட்டு, நீங்கள் குறிப்பாக இந்திரஜித்தை, ராவணியை புகழ்ந்து பேசுவது ஏன்? அவனுக்கு என்ன விசேஷ தன்மை, பிரபாவம் இருந்தது? அரசனாக நான் கட்டளையிட்டுக் கேட்கவில்லை. சொல்லக் கூடுமானால் சொல்லுங்கள். இதில் ரகஸியம் எதுவுமில்லையே? என்றார். இந்திரனையும் அவன் ஜயித்ததாக கேள்விப் பட்டேன். யாரிடம் என்ன வரம் பெற்றான். தந்தையை விட பலசாலியாக எப்படி வளர்ந்தான். ராக்ஷஸனாக பிறந்தவன் ஏன் இந்திரனுடன் மோதினான்? வெற்றி பெற்றதும் பெரிய விஷயமே. விவரமாக சொல்லுங்கள், முனிவர்களே, என்று கேட்டுக் கொண்டார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான மத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 2 (539) பௌலஸ்த்ய குலோத்பத்தி (புலஸ்திய குலம் தோன்றுதல்)
ராமனின் கேள்விக்கு மகா தேஜஸ்வியான கும்பமுனி என்ற அகஸ்தியர் பதில் சொன்னார். இதைக் கேள். அவன் யாராலும் வெல்ல முடியாத பலம் பெற்றதையும், தேஜஸும் பலமும் அவனுக்கு எப்படி வளர்ந்தது என்பதையும் நான் சொல்கிறேன், என்று ஆரம்பித்தார். அதற்கு முன் ராவணன் குலம், அவன் பிறப்பு, வரம் பெற்றது யாரிடம் என்பதை சொல்கிறேன். முன்பு க்ருத யுகத்தில் ப்ரஜாபதியின் மகன் புலஸ்தியன் என்ற ப்ரும்ம ரிஷி இருந்தார். பிதாமகர் போலவே மகானாக இருந்தார். ப்ரஜாபதியின் புத்ரன் என்பதே போதும், அவன் குணம் தர்மம், சீலம் இவைகளை தனியாக சொல்ல வேண்டியதில்லை. மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் இவன் அதிக பலசாலியாக இருந்தான். தன் குணங்களால் எல்லோருக்கும் பிரியமானவன் ஆனான். இமய மலைச் சாரலில் த்ருண பி3ந்து4 என்ற மகானின் ஆசிரமத்திற்கு ஒருமுறை சென்றான். யதேச்சையாக சென்றது தான், எதையும் நினைத்து செல்லவில்லை. அங்கு வசிக்கும் பொழுதும் தன் தவத்தை விடாமலும், ஸ்வாத்யாயம் என்ற படித்ததை மனனம் செய்யும் முறையையும் கவனமாக செய்து வந்தான். அச்சமயம் சில ஸ்த்ரீகள் அந்த ஆசிரமத்திற்கு வந்து இடையூறு செய்தனர். அவர்களும் அந்த இடத்தின் ரம்யத்தினால் கவரப் பட்டு வந்தவர்களே. ஆடவும் பாடவும் ஏற்ற இடம். தவிர பூக்களும், பழங்களும் பருவ காலம் இன்றியும் கிடைக்கும் இடம். நித்யமான வளமும் அழகும் உடைய இடம் ஆதலால் உல்லாசமாக பொழுது போக்க வந்த தேவ, பன்னக கன்னிகள். அதிலும் புலஸ்திய ரிஷி இருந்த இடம் தான் அவர்கள் ஆடவும் பாடவும் ஏற்றதாக இருந்தது போலும். தவம் செய்யும் முனிவருக்கு இது இடையூறாக இருந்தது. இது அவர்கள் அறியவும் இல்லை. முனிவரோ கோபம் கொண்டார். சபித்தார். இந்த பெண்க ளில் யார் என் முன் வந்தாலும் அவள் கர்பிணி ஆவாள். இதைக் கேட்ட பெண்கள் ப்ரும்ம சாபம் என்பதால் பயந்து ஓடி ஒளிந்தனர். இதை அறியாத த்ருண பிந்துவின் மகள் மட்டும் மற்றவர்கள் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தாள். ராஜ ரிஷியின் மகள், சற்றும் பயமின்றி நடமாடிக் கொண்டிருந்தாள். அதே சமயம் ப்ரும்ம ரிஷி, ஸ்வாத்யாயம் செய்ய அந்த இடம் வந்தார். தவ வலிமையுடன் கூட வேத கோஷம் கேட்டவள், திடுமென தன் உடல் வெளுக்க, தெளிவாக தெரிந்த கர்பத்துடன் உடல் மாற்றம் அடைந்தாள். தன் தோஷம் என்ன, எதனால் இந்த உரு மாற்றம் என்பதும் புரியாமல் நடுங்கி விட்டாள். தந்தையின் ஆசிரமத்தை அடைந்து அவரிடம் அழுகையினூடே எனக்கு என்னவோ ஆகி விட்டது என்றாள். த்ருண பிந்து மகளைப் பார்த்து திகைத்தார். இது என்ன ஏடாகூடமாக ஆகி விட்டதே, என்ன நடந்தது என்று வினவ, அவள். தெரியவில்லை அப்பா. நான் புலஸ்திய முனிவரின் ஆசிரமம் போனபொழுது சகிகள் யாரையும் காணவில்லை. அங்கேயே சற்று நேரம் தேடிக் கொண்டு நின்றேன். திடுமென இது போல ஆகி விட்டது என்று அழுதாள். என் உடல் மாற்றத்தைக் கண்டு பயந்து ஓடி வந்தேன் என்றாள். தன் தவ வலிமையால், தியானம் செய்து நடந்ததை அறிந்து கொண்ட முனிவர், தன் மகளை கையை பிடித்து அழைத்துக் கொண்டு புலஸ்தியர் தவம் செய்யும் இடம் சென்றார். புலஸ்தியரைப் பார்த்து, மகரிஷியே, இவள் என் மகள். நல்ல குணங்களுடன் சீலமாக வளர்க்கப் பட்டவள். இவளை தானமாக தருகிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு பணிவிடை செய்வாள். தவத்துக்கு உதவியாக இருப்பாள். இவள் கவனமாக இவைகளை செய்வாள், சந்தேகமே இல்லை என்று சொல்லவும், புலஸ்திய முனிவரும் ஏற்றுக் கொண்டார். அவளுடைய சீலமும், நடத்தையும் முனிவரைக் கவர்ந்தது. மிகவும் மகிழ்ச்சியோடு அவளிடம் சொன்னார். அழகிய பெண்ணே, உன் பணிவிடைகளால் நல்ல குணத்தால் நான் மிகவும் மகிழ்ந்தேன். அதனால் உனக்கு எனக்கு சமமான புத்திரனைத் தருகிறேன். நம் இருவரின் வம்சத்தையும் விளங்கச் செய்பவனாக, பௌலஸ்தியன் என்ற பெயருடன் புகழ் பெற்று விளங்குவான். நான் வேதம் சொல்லி நீ கேட்டதால்., அவன் விஸ்ரவா என்ற பெயரும் பெறுவான். இதைக் கேட்டு அந்த பெண்ணும் மன நிம்மதியடைந்து, நாளடைவில் விஸ்ரவஸ் என்ற மகனைப் பெற்றாள். இவன் மூவுலகிலும் பெரும் புகழ் பெற்றான். தர்மம், யஸஸ்-புகழ் இவனிடம் நிறைந்தன. காட்சிக்கு எளியவனாக, நியாயம் அறிந்தவனாக, கல்வி கற்றவனாக, எல்லா ஜீவன்களையும் சமமாக காணும் மனப் பான்மையும், விரத ஆசாரங்களுடன் தன் தந்தையைப் போலவே தவம் செய்வதில் ஈடுபாட்டுடன், மகன் விஸ்ரவஸ் வளர்ந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 3 (540) வைஸ்ரவன லோக பால பத3 ப்ராப்தி, லங்காதி3 ப்ராப்தி ச (வைஸ்ரவனன் லோக பாலன் என்ற பதவி அடைதலும், லங்கையை பெறுதலும்)
புலஸ்திய புத்திரனான விஸ்ரவஸ், வெகு சீக்கிரத்திலேயே, தந்தையைப் போலவே தவம் செய்து, சத்யவானாக, சீலவானாக, சாந்த குணத்துடன், ஸ்வாத்யாயம் இவற்றில் கவனமாக, நித்யம் தர்ம பரனாக, சீலமும், அடக்கமுமாக, ஆடம்பர போகங்களை வெறுத்தவனாக இருந்து வந்தான், இதையறிந்த ப4ரத்3வாஜர் தன் மகள் தேவ வர்ணினி என்பவளை மணம் செய்து கொடுத்தார். பரத்வாஜர் மகளிடம் தங்கள் வம்சம் விளங்க ஒரு மகனைப் பெற்றான் விஸ்ரவஸ். எல்லாவிதமான ப்ரும்ம குணங்களும் நிறைந்த குழந்தையைக் கண்டு, குழந்தையின் பாட்டனார், (தந்தையின் தந்தை) மிகவும் மகிழ்ந்தார். ஸ்ரேயஸ்- நன்மை தரும் விதமான புத்தி இயல்பாகவே உடையவன், அதனால் இவன் த4னாத்யக்ஷன் ஆவான் என்று ஆசிர்வதித்தார். செல்வத்துக்கு அதிபதி. பெயர் வைக்க தேவ ரிஷிகளுடன் கலந்து ஆலோசித்தார். விஸ்ரவஸ் புத்திரன் ஆனதால், வைஸ்ரவனன் என்ற பெயர் வந்தது. இவனும் தந்தையைப் போலவே இருப்பான் என்று ஆசிர்வதித்தார். வைஸ்ரவனனும் தபோவனம் சென்றான். ஆஹுதி செய்து வளர்க்கப் படும் யாகாக்னி போல வளர்ந்தான். ஆசிரமத்தில் இருக்கும் பொழுது ஏதாவது விசேஷமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. உயர்ந்த தர்மம் எதுவோ அதை அனுஷ்டிக்க வேண்டும் என்று தீர்மானித்து, தவம் செய்து வந்தான். ஆயிரம் வருஷம் தவம் செய்தபடி வனத்தில் இருந்தான். உக்ரமான விரதங்களை சங்கல்பம் செய்து கொண்டு, ஆயிரம் வருஷங்கள் அவைகளை செய்து முடித்தான். ஜலம் மட்டுமே உணவாக, பின், மாருதம்-காற்றே உணவாக, பின் அதுவும் இல்லாமல் ஆகாரமே இல்லாமல் என்று இப்படி ஒரு வருஷம் போல தோன்றியது, ஆயிரம் வருஷங்கள் ஓடி விட்டன. மிகவும் மகிழ்ந்த ப்ரும்மா, மற்ற ரிஷி கணங்களுடன் ஆசிரமம் வந்து குழந்தாய், மிகவும் சந்தோஷம், உன் தவச் சிறப்பை மெச்சுகிறேன். என்ன வரம் வேண்டுமோ, கேள் என்றார். ப்ரும்மாவை எதிரில் கண்ட வைஸ்ரவணன், ப4கவன், நானும் லோக பாலனாக ஆக வேண்டும், செல்வத்தைக் காப்பாற்றுபவனாக, உயர்ந்த பதவி வேண்டும் என்றான். ப்ரும்மாவும் அப்படியே ஆகட்டும் என்று மகிழ்ச்சியுடன் ஆசிர்வதித்து, நானே நாலாவது லோக பாலனை நியமிக்க எண்ணியிருந்தேன். இந்திரன், வருணன், யமன் இவர்களுக்கு சமமான அந்தஸ்தை பெறுவாய். அதனால் த4னாதிபதி (செல்வத்துக்கு அதிபதி என்ற பதவியை ஏற்றுக் கொள். சக்ர-இந்திரன், அம்பு – வருணன், யமன், த4னதன்- குபேரன் என்ற நால்வரும் லோக பாலர்களாக விளங்குவீர்கள் என்றார். இதோ, புஷ்பக விமானம். சூரியன் போல பிரகாசமானது. இது உனக்கு வாகனமாக இருக்கும்., தேவர்களுக்கு சமமாக சஞ்சரிப்பாய். ஸ்வஸ்தி உண்டாகட்டும். கிளம்புகிறோம், என்று சொல்லி விடை பெற்றுச் சென்றார். ப்ரும்மாவும் உடன் வந்த தேவர்களும் சென்ற பின் வைஸ்ரவனன் தந்தையிடம் வந்து வணங்கி, தேவலோகத்தில் வாசம் செய்ய என்னை அனுமதிக்கவில்லை. ஆயினும், எனக்கு தேவையான, பிடித்த வரங்களை ப்ரும்மாவிடம் கேட்டு வாங்கிக் கொண்டு விட்டேன். த4னாதிபதி ஆகி விட்டேன். அதனால் அப்பா, நான் வசிக்க தகுந்த இடமாக தேடுங்கள் என்றான். எந்த பிராணிக்கும் எந்த விதமான கஷ்டமும் ஏற்படக் கூடாது. அப்படி ஒரு இடம் தேடுங்கள், எனவும், தந்தையும் சற்று யோசித்து விட்டு, ஒரு இடத்தை விவரித்தார். தென் சமுத்திரக் கரையில், த்ரிகூடம் என்று ஒரு பர்வதம். அதன் மேல் விசாலமாக மகேந்திரனின் நகரம் போலவே, லங்கா என்ற நகரம் ரம்யமாக அமைந்துள்ளது. விஸ்வகர்மா, இந்திரனுக்கு அமராவதி போல இது ராக்ஷஸர்களுக்கு என்று கட்டியிருக்கிறார். இந்த லங்கை தான் நீ வசிக்க ஏற்றது. உனக்கு மங்களங்கள் உண்டாகட்டும். லங்கை மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டது. தங்கத்தால் தூண்கள், பிரகாரம். யந்திரங்களும், சஸ்திரங்களும் நிரப்பப் பட்டுள்ளன. தோரணங்களும், செம்பொன்னில், வைடூரியம் இழைத்து செய்யப் பட்டவை. விஷ்ணுவிடம் பயந்து ராக்ஷஸர்கள் இந்த நகரை விட்டு ஓடி விட்டார்கள். எல்லோரும் ரஸாதளம் சென்று விட்டதால் நகரம் சூன்யமாக இருக்கிறது. தற்சமயம் லங்கையின் நாயகன், தலைவன் என்று யாரும் இல்லை. புத்ரா, அந்த இடத்தில் நீ சௌக்யமாக வசிக்கலாம். போய் வா என்று சொல்லி அனுப்பினார். அங்கு எந்த இடையூறும் இருக்காது. உன் வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும். இதைக் கேட்டு வைஸ்ரவணன் லங்கையை தன்னுடையதாகக் கொண்டு, மலையின் உச்சியில் தன் இஷ்ட மித்ர பந்துக்கள் ஆயிரக் கணக்காக உடன் வர, சந்தோஷமாக ஆட்சியை ஆரம்பித்தான். அவனுடைய ஆட்சியின் கீழ், யாவரும் மன நிறைவோடு இருக்கலாயினர். நைருதந் -வடமேற்கு பகுதியின் தலைவன், என்ற பெயரோடு, சமுத்திரம் சூழ்ந்த அந்த பகுதியில் இருந்து கொண்டு, அவ்வப்பொழுது புஷ்பகம் என்ற தன் விமானத்தில், தாய் தந்தையரைக் காண வந்து கொண்டிருந்தான். தேவ, கந்தர்வர்கள், இவனுடைய குணத்தாலும், ஆற்றலாலும் சந்தோஷமாக வாழ்த்தினர். அப்ஸரஸ் கணங்கள் வந்து நாட்டியமாடி மகிழ்வித்தனர். சூரியன் தன் கிரணங்களால் பிரகாசமாக விளங்குவது போல இருந்தான். அடிக்கடி தந்தையிடம் வந்து அவருடன் காலம் கழித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 4 (541) ராவணாதி பூர்வ ராக்ஷஸ உத்பத்தி கதனம்(ராவணனுக்கு முந்தைய ராக்ஷஸர்கள் தோன்றிய கதை)
கதை சொல்லிக் கொண்டிருந்த அகஸ்தியரை இடை மறித்து, ராமர் வினவினார். ராக்ஷஸர்கள் லங்கைக்கு எப்பொழுது வந்தார்கள்? தலை சாய்த்து கேட்ட ராமனை திரும்பி பார்த்த அகஸ்தியர் கண்களுக்கு, மூன்று விதமான அக்னிகளும் சேர்ந்து உருவெடுத்து வந்தது போல தென் பட்டான். ராக்ஷஸ ராஜா வருமுன்னே லங்கை இருந்தது என்பது இப்பொழுது தான் தெரியும். புலஸ்திய வம்சத்தில் தான் ராக்ஷஸர்கள் தோன்றினார்கள் என்பது கேள்விப்பட்டிருக்கிறோம். ராவணன், கும்பகர்ணன், ப்ரஹ்லாதன், விகடன் இவர்களை விட, ராவண புத்திரர்களை விட பலசாலிகளாக இருந்தார்களா? இவர்களுக்கு முன்னோர் யாவர்? விஷ்ணுவிடம் என்ன அபராதம் செய்து லங்கையை விட்டு ஓடினார்கள். விவரமாக சொல்லுங்கள். அகஸ்தியர் தொடர்ந்தார். ப்ரஜாபதி முன்பு ஒரு சமயம் ஜலத்தை உற்பத்தி செய்தார். அப என்ற நீரில் தோன்றும் இனத்தையும், அதற்கு அனுசரணையாக மற்ற ஜீவராசிகளையும் சிருஷ்டி செய்தார். இந்த ஜீவ ராசிகள் தங்களை சிருஷ்டி செய்தவனை வணங்கி நின்றன. பசி, தாகம் என்றால் என்ன செய்வோம், என்று கேட்டன. ப்ரஜாபதியும் யோசித்து, சிரித்துக் கொண்டே, உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றவர் தொடர்ந்து என்ன செய்வீர்கள் என்றும் வினவினார். ரம-காப்பாற்றிக் கொள்கிறோம் என்று சிலர், யம-யாகம் செய்கிறோம் என்று சிலர், பதில் சொல்லவும், ரம-ரமிக்கிறோம் என்று சொன்னவர்கள் ராக்ஷஸர்களாகவும், யம-யாகம் செய்கிறோம் என்று சொன்னவர்கள் யக்ஷர்கள் ஆகட்டும் என்றார். இதன் பின் ஹேதி, ப்ரஹேதி என்ற இருவர் ராக்ஷஸ தலைவர்கள் ஆனார்கள். மது, கைடபன் போல எதிரிகளை ஜயித்து வீரர்களாக இருந்தனர். ப்ரஹேதி வனம் சென்று தவம் செய்தான், ஹேதி மணந்து கொள்ள ஒரு பெண்ணைத் தேடி அலைந்தான். தேடித் தேடி காலனின் சகோதரி, அவள் தோற்றம் பயங்கரமாக இருந்த பொழுதிலும், மணந்து கொண்டு வந்தான். பயா என்ற அவளிடம் வித்யுத்கேசன் என்ற மகனைப் பெற்றான். அவனும் பெரும் பெயரும் புகழும் பெற்று வளர்ந்தான். நல்ல தேஜஸோடு, கொளுத்தும் பகல் நேர வேய்யில் போல இருந்தான். வயது வந்தவுடன் மணம் செய்து வைக்க தந்தை முனைந்தார். சந்த்யாவின் மகள் பௌலோமி என்பவளை மணந்தான். சிறிது காலம் சென்றது. பௌலோமி கர்ப்பமுற்றாள். சமுத்திரத்திலிருந்து மேகம் தோன்றுவது போல இருந்தது அவள் கர்ப்பமுற்றது. அந்த ராக்ஷஸி, மந்தரம் சென்று கங்கை கார்த்திகேயனைப் பெற்றது போல பெற்றாள். குழந்தையின் குரல் மேகம் இடிப்பது போல இருந்தது. ஒரு சமயம் அழும் குழந்தையை கவனிக்காமல் அந்த ராக்ஷஸி, தன் கணவனுடன் ரமித்துக் கொண்டிருந்தாள். சரத் கால சூரியன் போன்ற ஓலியுடன் அந்த குழந்தை விரலை வாயில் வைத்து அழுவதை, அவ்வழியே விருஷப வாகனத்தில் சென்று கொண்டிருந்த பார்வதி, பரமேஸ்வரர்கள் கேட்டனர். பார்வதி கருணையுடன் நோக்கவும் அவன் வளர்ந்து தன் தாய் வயது வளர்ந்தவனாக ஆகி விட்டான். பார்வதியின் வேண்டுகொளுக்கு இணங்கி ப4வன் என்ற ஈஸ்வரன், அவனை அமரனாக்கி (மரண பயமின்றி ஆக்கி) அந்த ராக்ஷஸனுக்கு ஒரு ஊரையும் கொடுத்தார். அக்ஷரன், அவ்யயன் என்று போற்றப் படும் ப4வ – ஈஸ்வரனின் அருளைப் பெற்ற அந்த குழந்தைக்கு, உமையும் ஒரு வரம் தந்தாள். ராக்ஷஸ குலத்தினர் கர்ப்பம் உற்ற உடனேயே பிரஸவம், பிரஸவித்த சிறிது காலத்திலேயே வளர்ந்து வயதுக்கு வருதல் இயல்பாயிற்று. சுகேசன் என்ற அந்த ராக்ஷஸன் வர தானத்தால் கர்வம் அடைந்தான். தன் இஷ்டம் போல சுற்றினான். செல்வமும் சேர இந்திரனை போல சுற்றினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 5 (542) மால்யவதா3த்3யபத்யோத்பத்தி : (மால்யவான் மற்றும் வாரிசுகள் தோன்றுதல்)
சுகேசன் என்ற ராக்ஷஸன் வரங்கள் கிடைக்கப் பெற்று தார்மிகனாகவும் இருந்ததைக் கண்டு க்ராமணீ என்ற கந்தர்வன், தனது இரண்டாவது மகளான தேவ வதியை மணம் செய்து கொடுக்க முன் வந்தான். அந்த பெண், ரூபத்தில் மற்றொரு லக்ஷ்மி போல இருந்தாள். அவளை விதி முறைப்படி மணம் செய்து கொடுத்தான். சுகேசன் வர தானம் பெற்று மூவுலகிலும் அதிக மதிப்புடன் இருந்ததால், இந்த பெண்ணும் அவனுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். தேவ வதியிடம் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். மால்யவான், சுமாலி, மாலி என்ற மூவரும் பலசாலிகளாக வளர்ந்தனர். மூவரையும் கண்களை இமை காப்பது போல காத்து வந்தனர், அந்த தம்பதி. அவர்களும் அக்னி போல தேஜஸ்விகளாக வளர்ந்தனர். தந்தையைப் போலவே வரதானம் பெறவும், ஐஸ்வர்யம் கிடைக்கப் பெறவும் தவம் செய்யக் கிளம்பினார்கள். கடினமான நியமங்களை ஏற்று தவம் செய்தனர். சத்யம், நேர்மை, பொறுமை இவைகளுடன் இவர்கள் புலனடக்கி தவம் செய்தது, மூவுலகையும் தகிக்கச் செய்தது. தேவ, அசுர, மனிதர்கள் யாவரும் பாதிக்கப் பட்டனர். சதுர்முக ப்ரும்மா, தன் விமானத்தில் ஏறி வந்து, சுகேசி புத்திரர்களைப் பார்த்து வரம் தர வந்திருக்கிறேன், என்ன வரம் வேண்டும், கேளுங்கள் எனவும், கை கூப்பியபடி, காற்றில் ஆடும் மரங்கள் போல உடல் ஆட்டம் காண, தேவா, சிரஞ்சீவியாக இருக்க வரம் வேண்டும் என்று பிரார்த்தித்தனர். நெடுநாள் வாழ வேண்டும். சத்ருக்களை எப்பொழுதும் ஜயிக்க வேண்டும். யாரும் எங்களை ஜயிக்கக் கூடாது, ப்ரபவிஷ்ணுவாக, எதையும் சாதிக்கும் வல்லமையுடையவர்களாக ஆவோம் என்று கேட்க, ப்ரும்மாவும் சம்மதித்து வரமளித்துச் சென்றார். ராமா இரவில் சஞ்சரிப்பவர்கள் என்று இவர்களுக்கு ஒரு பெயர் உண்டு. அதற்கேற்ப, வரம் கிடைக்கப் பெற்றதும், இவர்கள் இரவு பகல் இன்றி தேவர்களையும் அசுரர்களையும் வாட்ட ஆரம்பித்தனர். ரிஷிகளும், சாரணர்களும், தேவ லோக வாசிகளும் பயந்து, நடுங்கினர். தங்களைக் காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்று தவித்தனர். அதே சமயம், யதேச்சையாக வந்த விஸ்வகர்மாவை ராக்ஷஸர்கள் சில்பிகளுள் சிறந்தவர் தாங்கள். நீங்கள் தான் எங்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும். தற்சமயம் பலத்துடன், செல்வாக்குடன் இருப்பதால், எங்களுக்கு தகுதியாக வீடு, நகரம் அமைத்துத் தர வேண்டும் என்று வேண்டினர். தேவர்களுக்கு மனதில் நினைத்த படி கட்டிக் கொடுத்ததாக கேள்விப் பட்டிருக்கிறோம். ஹிமவான் மேலோ, மேரு மந்தரத்திலோ, மகேஸ்வரனுடைய வீடு இருப்பது போல எங்களுக்கும் கட்டிக் கொடுங்கள். விஸ்வகர்மாவும், தக்ஷிண சமுத்திரக் கரையில், இந்திரனுடைய அமராவதிக்கு இணையாக, த்ரிகூட மலையின் சிகரத்தையடுத்த சுஷேண மலையின் மேல் நகரம் அமைத்துக் கொடுத்தார். மலை மேல், சமுத்திரம் நாலா புறமும் சூழ்ந்திருக்க, (சகுனம்) ஆந்தைகள் கூட நுழையாதபடி பாதுகாப்பாக கட்டிக் கொடுத்தார். நாலாபுறம் அகழிகள், கோட்டைகள் இவற்றுடன், முன்னூறு யோஜனை விஸ்தீர்ணமும், நூறு யோஜனை தூரம் நீண்டதுமான நகரை நிர்மாணித்தார். அதில் நீளமான ப்ராகாரங்கள் ஸ்வர்ணத்தால் ஆனவை, நாலாபுறமும் அழகிய தோரணங்களுடன் விளங்கின. இந்திரன் கட்டளையிட்டு, லங்கா என்ற நகரை நிர்மாணித்தேன், இதில் நீங்கள் வசிக்கலாம். இதுவும் இந்திரனின் அமராவதிக்கு இணையானதே. ராக்ஷஸர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். லங்கையின் கோட்டையைக் கண்டு மலைத்தனர். அதை தங்கள் வாசஸ்தலமாக கொண்டு இஷ்ட மித்திர பந்துக்களுடன் வசிக்கலாயினர். வெளியார் யாரும் நெருங்க முடியாத லங்கைக்குள் சேவகர்கள், பரிசாரகர்கள் இவர்களுடன், லங்கையை தலை நகராக கொண்டு வசிக்கலாயினர். நூற்றுக் கணக்கான மாளிகைகள், உறுதியாக அமைக்க பட்டு கம்பீரமாக நின்றன. இந்த சமயம் தான் நர்மதா என்ற கந்தர்வ பெண் தோன்றினாள். ராகவா அவளுக்கு மூன்று பெண்கள். ஹ்ரீ, ஸ்ரீ, கீர்த்தி என்ற மூவரையும் ஒத்த அழகும், தேஜஸும் உடையவர்கள். இவர்களை இந்த மூன்று ராக்ஷஸர்களுக்கும் மணம் செய்து கொடுத்தாள். சுகேசனின் புத்திரர்கள் இப்பொழுது மனைவியும் கிடைக்கப் பெற்று சுகமாக இருந்தனர். மால்யவானின் மனைவி சுந்தரிக்கு, வஜ்ர முஷ்டி, விரூபாக்ஷன், துர்முகன், சப்தகர்னோ, யக்ஞ கோபன், மதோன்மத்தன் என்ற பிள்ளைகளும், அனலா என்ற ஒரு பெண்ணும், பிறந்தனர். சுமாலிக்கு, கேதுமதீ என்ற மனைவி, பிரஹஸ்தன், அகம்பனன், விகடன், கால கார்முகன், துர்ம்ராக்ஷன், தண்டன், சுபார்ஸ்வன், ஸம்ஹ்ராதி, பிரகஸன், பாஸ கர்ணன் என்று மகன்கள், ராகா, புஷ்போத்கடா, கைகயி என்றும், கும்பீனஸீ என்றும் பெண்கள். மாலிக்கு வசுதா என்ற பெண் மனைவியானாள். இவளுக்கு அனிலன், அனலன் என்றும், ஹரன், ஸம்பாதி என்ற புத்திரர்களும். இவர்கள் விபீஷணின் மந்திரியாக இருந்தனர். இப்பொழுது புத்திரர்களும் உதவி செய்ய ராக்ஷஸர்கள், இந்திரனையும், ரிஷி, நாக, யக்ஷர்களையும் துன்புறுத்துவதை விளையாட்டாகக் கொண்டனர். பலமும், வீர்யமும், அவர்கள் கண்களை மறைத்தன. காற்றைப் போல உலகை சுற்றி வந்து, யுத்தம் என்று வந்தால், காலனே வந்து நின்றது போல யுத்தம் செய்பவர்களாக, முக்கியமாக யாக காரியங்களைத் தடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைந்தவர்களாக திரிந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 6 (543) விஷ்ணு மால்யவதா3தி3 யுத்தம் (மால்யவான் முதல்வரோடு விஷ்ணு யுத்தம் செய்தது)
தேவர்களும், ரிஷிகளும், தபோதனர்களும் இவர்களால் வதைக்கப் பட்டு வருந்தினர். பயந்து நடுங்கியவர்களாக தேவ தேவனான மகேஸ்வரனை சரணம் அடைந்தனர். ஜகத் ஸ்ருஷ்டியை அழிக்கும் தொழிலை ஏற்று நடத்துபவரும், பிறப்பு, இறப்பு இல்லாத முழு முதற்கடவுளும், கண்களுக்கு புலப்படாத உருவம் உடையவருமான ஈ.ஸ்வரனை, உலகுக்கு ஆதாரமாக நின்ற, எல்லோராலும் ஆராதிக்கப் பட்ட பரம குருவுமானவரும், காமாரி, த்ரிபுராரி, த்ரிலோசனன் என்றும் போற்ற படும் மகா தேவனை நாத்தழு தழுக்க வேண்டினர். பிதாமகர் கொடுத்த வரத்தினால் கர்வம் தலைக்கேறி, சுகேசி புத்திரர்கள் எங்களைத் துன்புறுத்துகிறார்கள். யார் என்று இல்லை, எல்லோரையும் வம்புக்கு இழுத்து அடித்துக் கொல்கிறார்கள். யார் வந்தாலும் அடைக்கலம் தரும் எங்கள் ஆசிரமங்கள், இப்பொழுது யாரையும் காப்பாற்ற இயலாத இடமாக ஆகி விட்டது., ஸ்வர்கத்தையும் விடவில்லை. தாங்கள் தான் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டு விளையாடுகிறார்கள். நான் தான் விஷ்ணு, நான் தான் ருத்ரன், நான் ப்ரும்மா, தேவராஜன் நான் தான், நான் யமன், வருணன், சந்திரன், சூரியனும் நானே என்று சொல்லிக் கொண்டு மாலி, சுமாலி, மால்யவான் மூவரும் அட்டகாசம் செய்கிறார்கள். அவர்கள் எதிரில் யார் வந்தாலும் உடனே சண்டை தான். அதனால் தேவனே, பயத்தில் வாடும் எங்களுக்கு அபயம் தர வேண்டும். தேவர்களுக்கு எதிரிகளான இவர்களை நாசம் செய்ய தகுந்த உருவம் எடுத்துக் கொண்டு வர வேண்டும், என்று வேண்டினர். நீல கண்டனான சிவன் சற்று யோசித்து, என்னால் நேரடியாக அவர்களை வதம் செய்ய முடியாது. வர தானம் பெற்றவர்கள். ஆனாலும் ஒரு வழி சொல்லித் தருகிறேன். நீங்கள் நேராக விஷ்ணுவிடம் போங்கள். அவர் தான் இந்த ராக்ஷஸர்களைக் கொல்ல சக்தி வாய்ந்தவர். ஏதாவது செய்து உங்கள் கஷ்டத்தை நீக்குவார், என்று சொல்லி அனுப்பி வைத்தார். ஜய கோஷம் செய்து மகேஸ்வரனை வாழ்த்தி, தேவர்கள் கூட்டம், விஷ்ணு இருந்த இடம் வந்து சேர்ந்தனர். சங்க சக்ர தரனான பிரபுவை வணங்கி, துதி செய்து, சுகேசி தனயர்களான ராக்ஷஸர்களிடம் தாங்கள் படும் கஷ்டங்களை விவரித்தனர். மூவரும் மூன்று அக்னி போல. எங்கள் நகரை ஆக்ரமித்துக் கொண்டு, எங்களை துரத்தி விட்டார்கள். இருக்க இடம் இல்லை. துன்புறுத்தும் வகைக்கு அளவே இல்லை. மதுசூதனா, நீ எங்கள் நன்மைக்காக அவர்களை வதம் செய். என்று வேண்டினர். உன்னை சரணடைகிறோம். சுரேஸ்வரா, எங்களுக்கு அபயம் அளிப்பாய் என்றும் வேண்டினர். யுத்தத்தில் வல்ல இந்த ராக்ஷஸர்களை வதம் செய்து எங்களை காப்பாற்று. துஷ்டர்கள், மதம் கொண்டு அலைகிறார்கள். இவர்களை கூட்டத்தோடு அழித்து விடு. உன் சக்ரத்தால் தலைகளை துண்டித்து யமனுக்கு நிவேதனம் செய் என்றனர். உன்னையன்றி எங்களைக் காப்பாற்ற வேறு யார் இருக்கிறார்கள். பனித்துளிகள் பாஸ்கரனைக் கண்டவுடன் விலகுவது போல, உன்னைக் கண்டு, எங்கள் கஷ்டங்கள் விலகட்டும். இதைக் கேட்டு ஜனார்தனன் அபயம் அளித்தார். அண்டி வந்த தேவ தேவர்களுக்கு அபயம் அளித்தார். எதிரிகளுக்கு பயத்தை தரும் தேவ தேவன், மேலும் சொன்னார். எனக்கும் தெரியும், சுகேசன் வர தானம் பெற்றதும், அட்டகாசம் செய்வதையும் நான் அறிவேன். அவனையும் அவன் புத்திரர்களையும் அறிவேன். மால்யவான் மூத்தவன். எல்லையை மீறும் இவர்கள் கர்வத்தை அடக்குவேன். தேவர்களே, கவலையின்றி போய் வாருங்கள். என்று சொல்லி அனுப்பினார். அவர்களும், ஜனார்தனனை புகழ்ந்தபடி, திரும்பிச் சென்றனர். மால்யவான் நடந்ததை அறிந்து கொண்டு விட்டான். மற்ற இருவரையும் பார்த்து அமரர்களும், ரிஷிகளும் போய் மகேஸ்வரனான சங்கரனிடம் முறையிட்டிருக்கிறார்கள். சுகேசி தனயர்கள் எங்களைத் துன்புறுத்துகிறார்கள், என்று சொல்லி அழுதிருக்கிறார்கள். நம்மை வதம் செய்ய சொல்லி வேண்டியிருக்கிறார்கள். வரம் பெற்ற கர்வத்தால் அடக்க மட்டாத பலத்துடன் எங்களைத் தாக்குகிறான். எங்கள் வீடுகளில் நாங்கள் வசிக்கக் கூட விடுவதில்லை. பயமுறுத்தி துரத்துகிறார்கள். இந்த ராக்ஷஸர்களை உன் ஹுங்காரத்தால் வதம் செய்து எங்களைக் காப்பாற்று என்று கேட்டிருக்கின்றனர். இதைக் கேட்டு காலனை உதைத்த தலையையும், கையையும் ஆட்டி இது என்னால் ஆகாது, வரதானம் என்னையும் கட்டுப் படுத்துகிறது. ஒரு வழி சொல்கிறேன், இதோ இந்த சங்க சக்ர கதா பாணியாக, பீதாம்பரனான இருக்கிறானே, அந்த ஜனார்தனனை சரணடையுங்கள்., அவன் தான் ஹரி, நாராயணன், அவனை சரணடையுங்கள். என்று சொல்லியிருக்கிறார். இவர்களும் நாராயணனை சரணடைந்து அழவும், அவரும் அபயம் அளித்திருக்கிறார். தேவர்கள் விரோதியை நான் அழிக்கிறேன். சுகேசி புத்திரர்களை நான் வதம் செய்து விடுகிறேன், கவலையின்றி திரும்பி போங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். இப்படி இந்த தேவர்கள் வேண்டிக் கொண்டதால் நம்மை வதம் செய்வதாக நாராயணன் பிரதிக்ஞை செய்திருக்கிறார். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்போம், ஹிரண்ய கசிபுவை இந்த நாராயணன் வதம் செய்து கேட்டிருக்கிறோம். இவனை நம்மாலும் எதிர்க்க முடியாது. அஸ்வினி குமாரர்கள், இந்திரனுக்கு மந்திராலோசனை சொல்வது போல, மாலியும் சுமாலியும் மால்யவானுக்கு மந்த்ராலோசனை சொன்னார்கள். நமக்கு இஷ்டம் போல ஐஸ்வர்யம் கிடைக்கப் பெற்றோம். அதைக் காப்பாற்றி வருகிறோம். வியாதியில்லாத ஆரோக்யமான வாழ்வும் பெற்றோம். தேவர்கள் என்ற சமுத்திரத்தை அடக்கி நமது சஸ்திரங்களால் மூழ்கி எழுந்து வெற்றி கொண்டோம். அதனால் நமக்கு ம்ருத்யு பயம் கிடையாது. நாராயணன் என்ன, ருத்ரனோ, இந்திரனோ, யமனோ, யாரானாலும் நம் முன்னால் யுத்த பூமியில் நிற்க கூட அஞ்சுவார்கள். விஷ்ணுவுக்கு நம்மிடம் துவேஷம் கிடையாது. இந்த தேவர்கள் துவேஷம் கொண்டு அவர் மனதை கலைத்திருக்கின்றனர். அதனால் நாம் உடனே அந்த தேவர்களையே அடிப்போம். உடனே எல்லா வீரர்களையும் திரட்டி பெரும் சேனையோடு, கோஷம் செய்தபடி ஜம்பன், விருத்திரன் இவர்களைப் போல தேவர்களை முற்றுகை இட்டனர். ஒவ்வொருவரும் மலை போல சரீரம் உடையவர்கள், ரதங்களும், யானைகளும், குதிரைகளும் கூட்டம் கூட்டமாக தொடர, கோவேறு கழுதைகளும், ஒட்டகங்களும் சிம்சுமார பாம்புகள், மகர, கச்சபங்கள், மீன் போல நீர் வாழ் ஜந்துக்கள், ஆகாயத்தில் பறக்கும் பறவைகள், கருடனுக்கு சமமான பக்ஷிகள், சிங்கம், வ்யாக்ரம் (புலி) வராகம், ஸ்ருமரம், சமரம் எனும் வன விலங்குகள், இவர்களுடன் லங்கையை விட்டு தங்கள் பலத்தால் கர்வத்துடன் போர் செய்ய கிளம்பினார்கள். தேவ லோகத்தை நோக்கி படை முன்னேறியது. லங்கைக்கு ஏதோ ஆபத்து என்று அறிந்து லங்கையில் வசித்த ஜீவ ராசிகள் வெளிப் படையாக பயம் முகத்தில் தெரிய, வாடிய மனத்துடன் உடன் கிளம்பினர். நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள். வழியிலேயே தேவர்களை எதிர் கொண்டனர். பயங்கரமான பல ஜீவராசிகள், பூதங்கள், இவையும் எப்பொழுதும் தன் கடமையை செய்யும் பூமியை சார்ந்தவர்கள், அந்தரிக்ஷத்தில் திரண்டு வந்தனர். ராக்ஷஸர்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே நோக்கமாக காலன் கட்டளையிட, போர் தொடர்ந்தது. மேகங்கள் எலும்புத் துண்டுகளாக வர்ஷித்தன. உஷ்ணமாக ரத்தக் கறையுடன் இவை வந்து விழுந்தன. சமுத்திரத்தின் அலைகள் ஓங்கி அடித்தன. பூ4த4ரா: என்ற மலைகள் அசைந்து ஆடின. மேகம் இடி இடிப்பது போல முழக்கம் செய்து கொண்டு, அட்டகாசமாக சப்தம் செய்து கொண்டு ஆட்டம் போட்டன. பயங்கரமான தோற்றத்துடன் குள்ள நரிகள் ஊளையிட்டன. நெருப்பை உமிழும் முகத்தோடு கழுகுகள் வட்டமிட்டன. மின்மினி பூச்சிகள் வட்டமாக சக்கரம் போல ராக்ஷஸர்களின் தலை மேல் ஆகாயத்தில் கூடின. புறாக்களின் கால்கள் ரத்தத்தில் தோய்த்து எடுத்தது போல இருந்தன. சாரிகா என்ற பக்ஷிகள், துரத்தப் பட்டவை போல பறந்தன. காகங்கள் கரைந்தன. பூனைகள் இரண்டு கால்களால் நடந்தன. இவையனைத்தும் துர்நிமித்தங்கள். இவைகளை அலட்சியம் செய்து ராக்ஷஸர்கள் மேலும் மேலும் முன்னேறிச் சென்றனர். தங்கள் பலம், கர்வம் இவை அவர்களுக்கு அளவற்ற தன்னம்பிக்கையுடன் செல்ல வைத்தது. திரும்பி பார்க்காமல் சென்றனர். ம்ருத்யு பாசம் தான் அவர்களை இழுத்துச் செல்கிறதோ எனும்படி சென்று கொண்டே இருந்தனர். மாலியும், சுமாலியும், மால்யவானும் படைக்குத் தலைமை தாங்கி முன்னால் சென்றனர். யாகங்களில் அக்னி முன் நிற்பது போல நின்றார்கள். தேவதைகள் ப்ரும்மாவை அண்டி இருப்பது போல ராக்ஷஸ படை மால்யவானை தலைவனாகக் கொண்டு அவன் சொல்படி நடந்தன. ஜய கோஷம் செய்து கொண்டு, வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு மால்யவானை முன்னிட்டுக் கொண்டு ராக்ஷஸ வீரர்கள் தேவலோகத்தை சென்றடைந்தனர். இப்படி இவர்கள் கோலாகலமாக வருவதை தேவ தூதர்கள் பார்த்து ஓடிச் சென்று ஸ்ரீமன் நாராயணனிடம் தெரிவித்தனர். அவரும் தயாராக, ஆயுதங்களுடன், ஆயிரம் சூரியன் போன்று ஒளி வீசிய கவசத்தை அணிந்து கொண்டு, தன் தூணியில் அம்புகளை நிரப்பி முதுகில் சேர்த்து கட்டிக் கொண்டு, வில்லின் நாண் வாள் இவற்றையும் சேகரித்துக் கொண்டு, சங்க சக்ர, கதா சார்ங்க, கட்க என்ற உயர்ந்த ஆயுதங்களுடன், மலை போன்ற சுபர்ணன் எனப்படும் கருடனான வைனதேயன் மேல் ஏறி ராக்ஷஸர்களை வதம் செய்யப் புறப்பட்டார். சுபர்ணனின் முதுகில் பீதாம்பரனான ஹரி, நீலமேக ஸ்யாமளனாக, பொன்மலையின் சிகரத்தில், மின்னலுடன் கூடிய மேகம் வந்து அமர்ந்தாற்போல அமர்ந்திருந்தார். சித்த, தேவரிஷி, மகோரகங்கள் இவர்கள் துதி செய்து பாட, கந்தர்வ, யக்ஷர்களும் சேர்ந்து கொள்ள, வந்து சேர்ந்தார். சுபர்ணனின் இறக்கைகள் அடியில் உள்ள காற்றின் அழுத்தத்தால் மேலே எழும்பி நின்ற பதாகங்களோடு ராக்ஷஸ சைன்யத்தை ஒரு கை பார்த்தார். நீல மலையிலிருந்து கற்கள் உருண்டு கீழே விழுவது போல இருந்தது, அந்த காட்சி. இதன் பின் ராக்ஷஸர்களும் சளைக்காமல் பதில் அடி கொடுத்தனர். தங்களுடைய பாணங்களால் அடித்து பழகியவர்கள். நெருப்பு பரவுவது போல தாக்கும் அஸ்திரங்களை பிரயோகித்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 7 (544) மாலி வத:: (மாலியை வதம் செய்தது)
ராக்ஷஸர்கள் ஆரவாரமாக கோஷம் செய்து கொண்டு நாராயண கிரியை அடைந்தனர். நீல மலை மழையில் நனைவது போல, நீல மேக ஸ்யாமளனான விஷ்ணு அவர்கள் வர்ஷித்த பாணங்களின் நடுவே நின்றார். வெட்டுக் கிளிகள், நீர் நிரம்பிய பாத்திகளில் வந்து விழுவது போலவும், ஈ. முதலிய பூச்சிகள் நெருப்பில் விழுவது போலவும், அமுதம் நிரம்பிய கலசத்தை விஷ ஜந்துக்கள் மொய்ப்பது போலவும்,முதலைகள் சமுத்திரத்தை ஆக்ரமிப்பது போலவும்,விபத்து காலங்களில் ஜனங்கள் விபரீதமாக நடந்து கொள்வது போலவும் ராக்ஷஸர்களின் வில்லில் இருந்து வெளிப்பட்ட பாணங்கள் வஜ்ரம் போன்றும், காற்று மற்றும் மனோ வேகம் போல வேகமாகவும் ஹரியை தாக்கின. வெகு இயல்பாக அவருள் ஐக்கியமாயின. ரதங்களில் வந்தவர்கள் அதே ரதங்களுடனும், யானைகளின் மேல் வந்தவர்கள் யானையுடன், குதிரையுடன் வந்தவர்கள் குதிரையுடன், கால் நடையாக வந்தவர்கள், வானில் வெட்ட வெளியில் நின்றும், மலை போன்ற சரீரம் உடைய ராக்ஷஸர்கள் ஹரியை தாக்கினர். சக்தி, இஷ்டி, தோமரம், அம்புகள் இவைகள் ஹரியை மூச்சு விட முடியாமல் நிறைத்தன. ப்ராம்மணனை ப்ராணாயாமம் மூச்சு விட முடியாதபடி செய்வது போல செய்தது. புருஷோத்தமன், தன் பாஞ்ச ஜன்யத்தை எடுத்து ஊதி ஒலி எழுப்பினார். ஹரியோ, ராக்ஷஸர்களின் அடி தன் மேல் பட்ட பொழுது, சமுத்திரத்தில் அலைகளால் மீன்கள் அடிக்கப் படுவது போலவே உணர்ந்தார். சார்ங்கம் எனும் வில்லை எடுத்து பதிலடி கொடுத்தார். சங்கத் த்வனியைக் கேட்டு சமுத்திர ராஜா பொங்கி எழுந்தார். சங்க ராஜா என்று சமுத்திரத்தை அழைப்பர். பெரும் ஓசையுடன் காட்டில் சிங்க ராஜா மற்ற மிருகங்களை பயமுறுத்துவது போல இருந்தது அந்த ஓசை. சங்க சப்தம் கேட்டே குதிரைகள் ஸ்தம்பித்து நின்றன. யானைகள் அமைதியாயின. ரதங்களிலிருந்து வீரர்கள் நழுவி கீழே விழுந்தனர். சார்ங்கம் என்ற அந்த வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள், ராக்ஷஸ வீரர்களை துளைத்துக் கொண்டு பூமியில் நெட்டுக் குத்தாக நின்றன. மலை போன்ற சரீரம் உடைய ராக்ஷஸர்கள், அந்த மலைகள் வஜ்ரத்தால் அடிபட்டு விழுந்ததைப் போலவே அடுத்தடுத்து விழுந்தனர். அருவி நீர் போல ரத்தம் பெருக்கெடுத்து ஓடலாயிற்று. சங்கத்தின் நாதமா, சார்ங்கத்தின் நாண் எழுப்பும் ஓசையா, ராக்ஷஸர்களின் ஓலமா இவைகளுக்கு மேல் விஷ்ணுவின் கோபமா எது என்று சொல்ல முடியாதபடி குழப்பமான சப்தங்கள் கேட்டன. விஷ்ணுவின் கை பாணங்கள், ராக்ஷஸர்களின் தலை. கை வில், ரதம், கொடி இவற்றுடன் சேர்ந்து துண்டித்து விழச் செய்தன. சூரியனின் கிரணங்கள் போலவும், சமுத்திர அலைகள் போலவும், மலை மேல் ஊர்ந்து செல்லும் நாக ராஜாக்கள் போலவும், மேகத்திலிருந்து இடை விடாது பொழியும் மழை தாரை போலவும், சார்ங்கத்திலிருந்து விடுபட்டு வந்த நாராயண சரங்கள், நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக வெளிப்பட்டன. சரபத்தைக் கண்டு சிங்கம் பயப்படுவது போலவும், சிங்கம் யானைகளையும், யானைகள் புலிகளையும், புலிகள் சிறுத்தையையும், சிறுத்தைகள் நாய்களையும், நாய்கள் பூனைகளையும், பூனைகள் சர்ப்பங்களையும், சர்ப்பங்கள் வெட்டுக் கிளியையும் எப்படி ஓட ஓட விரட்டுமோ, அது போல ப்ரபவிஷ்ணுவான விஷ்ணு செலுத்திய பாணங்கள் ராக்ஷஸர்களை விரட்டி அடித்தது. (ஸாராறாஈ ர் fர்றஉலஒஉஸ ர்நிமால ஸாiட தஒ ஹாவக்ஷெ 8 லஙெஸ ர்நட ஸதரஒநஙரெ தஹாந தஹக்ஷெ லிஒந ) ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் மடிந்து விழவும், சுமாலி தானே போரில் முன் நின்று ஹரியை அடிக்க ஆரம்பித்தான். சூரியனை பனி மூடுவது போல அவன் சரங்கள் நாராயணனை மறைக்கும்படி செய்தான். இதைக் கண்டு ஆற்றல் மிகுந்த சில ராக்ஷஸர்கள், இழந்த தைரியத்தை திரும்பப் பெற்றனர். யானை தும்பிக்கையை ஆட்டுவது போல தன் கரங்களை இடதும் வலதுமாக ஆட்டிக் கொண்டு, உற்சாகத்துடன் ஆட்டம் போட்டான். மேகம் மின்னலுடன் வந்து விட்டதோ எனும்படி கூச்சலிட்டான். வெறி பிடித்தவன் போல ஆடிய சுமாலியின் காது குண்டலங்கள் பள பளக்க, அவற்றுடன் சேர்த்து அவன் தலையை கொய்து எறிந்தபின், அவனுடைய ரதம், குதிரைகள், இவற்றையும் அடித்து நொறுக்கினார், விஷ்ணு. இதனால் ராக்ஷஸ வீரர்கள் திகைத்தனர். குதிரைகள் இலக்கின்றி சுற்றின. அவர்கள் எஜமானர்கள் இலக்கின்றி இந்திரியங்கள் போன வழியில் திரிந்தது, போல இருந்தது. சுமாலி விழுந்த பின், மாலி வந்தான். க்ரௌஞ்ச பக்ஷிகள் போல அலங்கரிக்கப் பட்ட அவனது பாணங்கள் சரமாரியாக விஷ்ணுவைத் தாக்கின. ஜிதேந்திரியன், அதாவது புலனடக்கியவனை மன வியாதி எதுவும் செய்ய முடியாதது போல, இந்த சரங்கள் விஷ்ணுவை பாதிக்கவில்லை. வில்லின் நாண் ஒலியைக் கேட்டு திரும்பி பார்த்தவர், மாலியைக் கண்டு தன் வில்லை எடுத்து அம்புகளால் அவனை வதம் செய்தார். அவன் குதிரை, ரதம், த்வஜம் இவற்றையும் அடித்து தள்ளிய பின், மாலி கதையை எடுத்துக் கொண்டு வந்தான். மலை குகையிலிருந்து சிங்கம் புறப்பட்டு வருவது போல வந்தான். கதையினால் கருடன் மேல் அமர்ந்திருந்த, அந்தகனே உருவெடுத்து வந்தானோ எனும்படி போர் செய்த விஷ்ணுவின் நெற்றியில் அடித்தான். கருடன் மேல் விழுந்தது அந்த அடி. வேதனையால் கருடன் சற்றுத் தள்ளி சென்றது. கருடன் திரும்பவும், விஷ்ணு பகவான் தான் அடிபட்டு, திரும்புவதாக நினைத்து ராக்ஷஸ சைன்யத்தில் கோலாகலம் எழுந்தது. இதைக் கேட்டு கருடன் பழைய படி திரும்பி நின்று கொள்ளவும், பகவான் சக்கரத்தை எறிந்தார். சூரிய மண்டலம் போல பிரகாசித்த அந்த சக்கரம் மாலியின் தலையை துண்டித்து விழச் செய்யும் கால சக்கரமாயிற்று. முன்பு ஒரு சமயம் ராகுவின் தலை துண்டித்து விழுந்தது போல இந்த தலையும் ரத்தம் தோய்ந்து கீழே விழுந்தது. மாலி இறந்ததை அறிந்து சுமாலியும், மால்யவானும் லங்கையை சென்றடைந்தனர். சைன்யங்களை திருப்பி அழைத்துக் கொண்டு வருத்தத்துடன் நகரின் உள்ளே சென்றனர். தன் பக்ஷங்களை அடித்துக் கோபத்தை காட்டியபடி கருடன், எஞ்சியிருந்த ராக்ஷஸர்களை விரட்டி விட்டான். அங்கஹீனம் ஆன ராக்ஷஸர்கள் கடலில் விழுந்தனர். சிலர் கத்தியின் வீச்சில் காயம் அடைந்தனர்., சிலர், அஸ்திரங்கள் தாக்கி விழுந்தனர். நாராயணன் தன் பாணங்களால் இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களை தாக்கி விழச் செய்தார். குடைகள் இறைந்து கிடந்தன. ஆயுதங்கள் உடைந்து விழுந்தன. உடல் நடுங்கியது. கண்களில் பயம் வெளிப்படையாகத் தெரிய, யானைக் கூட்டம், சிங்கம் துரத்த ஓடியது போல ஓடி, குட்டி யானைகளும், பெரிய யானைகளும் போகும் இடம் எல்லாம் சேதம் விளைவித்துக் கொண்டு செல்வது போல சென்றனர். காற்றினால் அலைக்கழிக்கப் படும் மேகங்கள் போல விரைந்தனர். சக்கரம் அடித்தும், கதையினால் அடிக்கப் பெற்றும், மலைகள் இரண்டாக பிளந்து விழுவது போல விழுந்தனர். எங்கும் நீல நிற மலையோ எனும்படி மணி ஹார குண்டலங்களோடு பெருத்த சரீரம் உடைய ராக்ஷஸர்களின் கறுத்த உடல் கிடந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 8 (545) சுமால்யாதி நிக்3ரஹ: (சுமாலி முதலானவர்கள் வதம்)
தன் சைன்யம் பத்மனாபனான விஷ்ணுவால் தாக்கப் பட்டு அழிந்த வருத்தத்துடன் தன் இருப்பிடம் சென்ற மால்யவான், கரையைத் தொட்டு திரும்பும் கடல் அலை போல திரும்பவும் போர்க்களமே வந்து சேர்ந்தான். நாராயணா, நீ யுத்த தர்மத்தை மீறி விட்டாய். யுத்தம் செய்ய விருப்பம் இன்றி பயந்து நின்ற என் வீரர்களை அடித்தாய். பராமுகமாக யுத்தம் செய்பவன், அதாவது எதிரி தயாராக நில்லாத சமயம் அடிப்பவன், பாபம் அடைவான். வீர சுவர்கம் போக மாட்டான். சங்க, சக்ர, க3தா4 த4ரனாக நிற்கிறாயே, இதோ நான் தயார் . என் மேல் உன் பாண பிரயோகத்தைக் காட்டு. இந்திர சகோதரனான விஷ்ணு பதிலளித்தார். தேவர்களுக்கு நான் அபயம் அளித்திருக்கிறேன். அவர்கள் உங்களிடம் பயந்து நடுங்குகிறார்கள். ராக்ஷஸர்களை வதைத்து அவர்களை காப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். அதனால் நீங்கள் பாதாளத்தில் ஒளிந்து கொண்டால் கூட நான் வதைப்பேன். சிவந்த தாமரை போன்ற கண்களையுடைய தேவ தேவன் சொன்னதைக் கேட்டு மேலும் ஆத்திரம் கொண்டு, தன் சக்தியினால் அவரது புஜத்தில் அடித்தான். மால்யவானின் கையால், மணியோசையுடன் வீசப் பட்ட சக்தி ஆயுதம் ஹரியின் மார்பில் உரசியது, மேகத்தில் மின்னல் தோன்றியது போல இருந்தது. அந்த சக்தி ஆயுதத்தையே, பிடுங்கி மால்யவானின் மேல் வீசினார். கோவிந்தனின் கையிலிருந்து வெளிப்பட்ட அந்த ஆயுதம் ஸ்கந்தனின் கையிலிருந்து புறப்பட்டு மலையை பிளந்தது போல ராக்ஷஸனைத் தாக்கியது. ஹாரங்கள் அலங்கரித்த அந்த விசாலமான மார்பில் கிரியின் மேல் வஜ்ரம் பட்டது போல விழுந்தது. இந்த சக்தியினால் பிளக்கப் பட்ட உடல் கீழே விழாமல் முட்கள் நிறைந்த பயங்கரமான சூலம் ஒன்றை எடுத்து எதிர்த்து நின்ற ஹரியின் மார்பை குறி வைத்து வீசினான். தன் முஷ்டியினாலும் அவரை பலமாக குத்தி வில் நழுவி விழச் செய்தான். விஷ்ணுவை அடித்தபின், கருடனையும் தாக்கினான். வைனதேயனான கருடன் மகா கோபம் கொண்டு, இறக்கைகளை அடித்துக் கொண்டு வேகமாக வந்தான். இதில் கிளம்பிய காற்று, பெரும் புயல் காற்றில் உலர்ந்த இலைகள் பறப்பது போல ராக்ஷஸனைத் தூக்கி அடித்தது. மால்யவான் கருடனின் இறைக்கைகள் அடித்து உண்டாக்கிய பெரும் காற்றில் வீசியெறியப் பட்டு லங்கையை வந்தடைந்தான். வெட்கம் அவனைப் பிடுங்கித் தின்றது. இவ்வாறு அந்த ராக்ஷஸர்கள் ஹரியினால் பந்தாடப் பட்டனர். லங்கையில் இருக்கவே முடியாது என்ற நிலையில், பத்னிகள் குழந்தைகளுடன் பாதாளம் சென்று விட்டனர். நீ வதம் செய்த ராவணனை விடவும் இவர்கள் பலம் மிகுந்தவர்கள். சுமாலி, மால்யவான், மாலி இவர்கள் ராவணனின் முன்னோர்கள். சங்க, சக்ர, க3தா4 தா4ரியான நாராயணன் தான், சதுர்புஜனாக வந்து இவர்களை வதம் செய்ய முடிந்தது. அண்டியவர்களை காக்கவே என்று அவ்வப்பொழுது அவதரிக்கிறான். சரணாகத வத்ஸலனான அஜேயன், அவ்யயன் என்று போற்றப் படும் பிரபு வந்து தோன்றுகிறான். இது தான் ராமா, ராக்ஷஸர்கள் வளர்ந்த கதை. ராவணன் பிறந்தது பற்றிச் சொல்கிறேன், கேள். அவன் மகன் சிறப்பையும் கேள். வெகு காலம் ரஸாதளத்தில் ஒளிந்து வாழ்ந்த சுமாலி, விஷ்ணுவிடம் கொண்ட பயத்தால் அங்கேயே இருந்ததால், தன் புத்ர பௌத்ரர்களுடன் குபேரன், லங்கையில் வசிக்கலானான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 9 (546) ராவணாத்யுத்பத்தி (ராவணன் முதலானோர் பிறந்தது)
சில காலம் சென்றது. பின் சுமாலி என்ற ராக்ஷஸன் மெதுவாக மர்த்ய லோகம் எனும் இந்த பூலோகத்தில் சஞ்சரிக்க வந்தான். லக்ஷ்மிக்கு இணையான அழகுடைய மகளுடன், நீல மலை ஒன்று, குண்டலங்கள் தரித்து உலாவுவது போல பூலோகத்தில் சஞ்சரித்த பொழுது, புஷ்பகத்தில் குபேரன் செல்வதைக் கண்டான். புலஸ்தியர் மகனும், தன் தந்தையுமான அவரைக் கண்டு, ஆச்சர்யத்துடன் மேலும் கவனமாக நோக்கினான். அமரர்களுக்கு இணையான தேஜசுடன், சுதந்திரமாக, அந்தஸ்து தந்த பெருமை வெளிப்பட, இருந்த குபரனை நினைத்தபடியே ரஸாதலம் சென்றான். நாம் எப்படி இந்த கஷ்டத்திலிருந்து மீண்டு நல்ல கதியை அடைவோம் என்று யோசிக்கலானான். தன் மகள் கைகயியை பார்த்து புத்ரி, உனக்கு மணம் செய்து கொடுக்கும் வசதி எனக்கு இல்லை. யௌவனம் வீணாக நீ தனியாக நிற்கிறாய். என்னிடம் பயந்து கொண்டு யாருமே உன்னை வரன் கேட்டு வரவில்லை. சாக்ஷாத் லக்ஷ்மி தேவி போல குணமும் அழகும் இருந்தும் மகளே, உன்னை தகுந்த இடத்தில் மணம் முடித்துக் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன். பெண் மகவைப் பெற்ற எல்லோருக்கும் உள்ள கவலை தான் இது. தாய் வீடு, புகுந்த வீடு, தந்தை வழி குலம் மூன்றையும் ஒரு பெண் தன் குணத்தால் நிலை நிறுத்துகிறாள். அதனால் மகளே, நீ பௌலஸ்தியன், ப்ரஜாபதி குலத்தில் உதித்தவனும், விஸ்ரவஸ் எனப்படும் புலஸ்தியனை நீயாக வரிந்து மணம் செய்து கொள். உனக்கு பிறக்கும் குழந்தைகள் மகா தேஜஃஸ்விகளாக பாஸ்கரனுக்கு இணையான கம்பீரத்துடன் இருப்பார்கள். இந்த தனாதிபதி குபேரனுக்கு சற்றும் குறைவில்லாமல் புகழுடன் விளங்குவார்கள். இதைக் கேட்டு, தந்தையிடம் உள்ள மரியாதை காரணமாக, தானே விஸ்ரவஸ் இருக்கும் இடம் நாடிச் சென்றாள். தவம் செய்து கொண்டிருந்த விஸ்ரவஸை அணுகினாள். இச்சமயம் புலஸ்திய குமரனான பிராம்மணன், அக்னி ஹோத்ரம் செய்து கொண்டு, மூன்று அக்னிகளுக்கு மேலாக நான்காவது அக்னி போல விளங்குவதைக் கண்டாள். நேரம், காலம் எதுவும் யோசியாமல், பயங்கரமான அந்த வேளையில், தந்தை சொன்னது ஒன்றே மனதில் மேலோங்கி இருக்க, அவன் காலடியில் சென்று நின்றாள். (ஒரே நாளில் நல்ல வேளை, நல்ல நேரம் என்று குறிப்பிடுவது போல தவிர்க்கப் பட வேண்டிய சில நேரமும் சொல்லப் படுகிறது. அதை தாருணா:: பயங்கரம் என்று சொன்னதாக கொள்ளலாம்). கால் கட்டை விரலால் பூமியில் கோலம் போட்டபடி நின்றவளைப் பார்த்து வியந்த விஸ்ரவஸ் விசாரிக்கலானார். பூர்ண சந்திரன் போன்ற அழகிய முகம் உடைய பெண் திடுமென எதிரில் வந்து நிற்கவும் அவர் திடுக்கிட்டார். பத்ரே, நீ யாருடைய மகள்? இங்கு ஏன் வந்தாய்? என்ன காரியம்? விவரமாக சொல்வாய் என்று கேட்டான். கை கூப்பியபடி அவள் பதில் சொன்னாள். ப்ரும்ம ரிஷியே, நான் தந்தையின் கட்டளைப் படி இங்கு வந்தேன். உன் தவ வலிமையால் மற்றவைகளை உணர்ந்து கொள். என் பெயர் கைகயி என்றாள். முனியும் சற்று நேரம் தியானம் செய்து விஷயங்களைத் தெரிந்து கொண்டபின். பத்ரே, உன் உள்ளக் கிடக்கை என்ன என்று புரிந்து கொண்டேன். மகவை விரும்பி வந்திருக்கிறாய். இந்த நேரம் இங்கு வந்ததால், கேள், எப்படிப்பட்ட புத்திரர்களை பெறப் போகிறாய் என்பதைச் சொல்கிறேன். தாருணா: பயங்கரமான வடிவமும், பயங்கர குணமும், செயலும் உள்ள ராக்ஷஸர்களை பிரஸவிக்கப் போகிறாய். அவள் உடனே, ப்ரபோ, இது போன்ற புத்திரர்கள் எனக்கு வேண்டாம். உன் போன்ற ப்ரும்ம வாதியான புத்திரர்களை அனுக்ரஹிக்க வேண்டும் என்று வேண்டினாள். இதைக் கேட்டு முனியும், கடைசி மகன் என் குலம் விளங்கச் செய்யும் தர்மாத்மாவாக இருப்பான் என்று அருளினார். நாட்கள் கடந்தன. உரிய காலத்தில் அவளும் த3சக்3ரீவனைப் பெற்றெடுத்தாள். பெரிய பற்களும், நீல மலை போன்ற உருவமும் உடையவனாக ராக்ஷஸன் பிறந்தான். தாமிர நிறம் உடைய உதடுகளும், இருபது புஜங்களும், பெரிய வாயும், தலை மயிர் நெருப்பு போல பிரகாசிக்க, மகன் பிறந்தான். அவன் பிறந்த சமயம் நெருப்பை உமிழும் குள்ள நரிகள் திரிந்தன. மாமிச பக்ஷிணியான பறவைகள் இடது புறமாக அப்ரதக்ஷிணமாக பறந்தன. தேவர்கள் ரத்த மழை பொழிந்தனர். சூரியன் பிரகாசம் இன்றி காணப்பட்டது. மேகம் இடித்தது கூட கர்ண கடூரமாக இருந்தது. பெரிய பெரிய மின்மினி பூச்சிகள் பூமியில் விழுந்தன. (உல்கா::-நக்ஷத்திர துண்டுகள்) பூமி ஆடியது. பெரும் சுழற் காற்று வீசியது. வற்றாத சமுத்திரமும் வற்றியதோ எனும்படி இருந்தது. இந்த குழந்தைக்கு தந்தை பெயர் வைத்தார். தகுதியில் ப்ரும்மாவுக்கு இணையான முனிவர், தசக்ரீவன்- பத்து தலைகளுடன் பிறந்தவன் தசக்ரீவன் என்றே அழைக்கப் படட்டும். இவனுக்கு அடுத்து பிறந்தவன் கும்பகர்ணன். மகா பலசாலியாக இருந்தான். ஏதோ காரணம் தெரியவில்லை. கும்பகர்ணன் என்று பெயர் வைத்தார். இதன் பின் விகாரமான முகத்துடன் சூர்ப்பணகா பிறந்தாள். கடைசியில் கைகயிக்கு, தர்மாத்மாவான விபீஷணன் பிறந்தான். இவன் பிறந்த பொழுது, புஷ்ப வர்ஷம் உண்டாயிற்று. ஆகாயத்தில் தேவர்கள் துந்துபி முழங்கி கொண்டாடினார்கள். சாது, சாது என்று கோஷமும் ஆகாயத்தை நிறைத்தது. இருவரும் அரண்யத்தில் வளர்ந்தனர். இருவரில் தசக்ரீவன் சுபாவமாகவே க்ரூரனாக இருந்தான். கும்பகர்ணன் மதம் பிடித்தவன் போல உலவினான். தர்ம வழியில் சென்ற மகரிஷிகளை தின்று தீர்த்தான். மூவுலகிலும் தேடித் தேடி மகரிஷிகளை தின்றும் திருப்தியின்றி அலைந்தான், இதில் விபீஷணன் தர்மாத்மாவாக தினமும் தர்மத்தை அனுசரிப்பவனாக, ஜிதேந்திரியனாக, தன் அத்யயனம், முதலியவற்றில் ஈ.டுபாட்டுடன் வசித்து வந்தான். சில காலம் சென்றது. ஒரு சமயம் வைஸ்ரவனன் (குபேரன்) தன் புஷ்பகத்தில் ஏறி தந்தையைக் காண வந்தான். தனாதிகாரியான அவன் தேஜஸைப் பார்த்து கைகயி தசக்ரீவனிடம் வந்து முறையிட்டாள். புத்திரனே, வைஸ்ரவனை பார். அவன் தேஜஸ் எப்படி இருக்கிறது. தன் தேக காந்தியாலேயே ஒளிச் சுடராக இருக்கிறான், பார். இருவரும் சகோதரர்கள். சமமானவர்கள், இருந்தும் உன் நிலையைப் பார். தசக்ரீவா, நீயும் அவனைப் போல மேன்மையடைய வேண்டும். முயற்சி செய். அளவில்லாத பலம் உடையவன் நீ. உன்னால் முடியாததா? நீ என் மகன். வைஸ்ரவனனுக்கு சமமானவன் என்று நாம் பெருமைப் படும் படி இருக்கக் கூடாதா? தாயின் இந்த வார்த்தையைக் கேட்டு தசக்ரீவன், கடும் கோபம் கொண்டான். பிரதிக்ஞை செய்தான். தாயே, நான் உனக்கு சத்யம் செய்து தருகிறேன். என் சகோதரன் குபேரனுக்கு சமமாகவோ, அதிகமாகவோ ஆவேன். என் ஆற்றலில் அவனை மிஞ்சுவேன். இந்த மகா வருத்தம் வேண்டாம். கவலையை விடு. இதே கோபத்துடன் தன் உடன் பிறந்த கும்பகர்ணனுடன், தவத்தில் மனதை செலுத்தி கடுமையாக தவம் செய்தான். தவம் செய்து, நான் விரும்பிய வரங்களைப் பெறுவேன் என்று கடும் விரதங்களோடு கோகர்ண ஆசிரமத்தை வந்து சேர்ந்தான். ராக்ஷஸன், தன் உடன் பிறந்த சகோதரனுடன் தவம் செய்தான். தன்னிகர் இல்லாத பலசாலி, ஆற்றல் மிகுந்தவன் தவம் செய்ததும் மிகவும் உக்ரமாக செய்தான். பிதாமகரான ப்ரும்மாவை சந்தோஷம் அடையச் செய்தான். அவரும் மகிழ்ந்து வெற்றியைத் தரும் பல வரங்களைத் தந்தார்.
(இதுவரை வஎல்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 10 (547) ராவணாதி வர தானம் (ராவணன் முதலானோருக்கு வரம் தருதல்)
ராமர் ஆச்சர்யத்துடன் முனிவரை வினவினார். இது எப்படி சாத்தியம்? மகா பலசாலிகள், எப்படி காட்டில் இருந்து தவம் செய்ய முடிந்தது? அகஸ்தியரும் ராமனது ஆர்வத்தை புரிந்து கொண்டு மேலும் உற்சாகமாக சொன்னார். தர்ம மார்கத்தை நன்றாக தெரிந்து கொண்டு தான் ஆரம்பித்தார்கள். கும்பகர்ணன் விதி முறைகளை கேட்டறிந்து கொண்டான். அதன் படி வெய்யில் காலத்தில் பஞ்சாக்னி மத்தியிலும், மழை நாட்களில் வீராசனம் போட்டு அமர்ந்து கொட்டும் மழையில் அசையாது நின்றான். குளிர் காலத்தில் நீருக்குள் நின்று தவம் செய்தான். இது போல பல வருஷங்கள் தவம் செய்தனர். தர்மாத்மாவான விபீஷணன் ஐயாயிரம் ஆண்டுகள் ஒரு காலில் நின்று, தவம் செய்தான். இவன் விரதம் முடியும் காலத்தில் அப்சரப் பெண்கள் நடனமாடினர். தேவர்கள் மகிழ்ந்து பூமாரி பொழிந்தனர். இதன் பின் ஐயாயிரம் வருஷங்கள் சூரியனை உபாசித்தான். தலைக்கு மேல் கைகளைத் தூக்கியபடி, நின்று தன் கொள்கையில் திடமாக இருந்து தவம் செய்தான். இவ்வாறு விபீஷணன் தவம் செய்து ஸ்வர்கத்தில் இருந்த தேவர்களை மகிழ்வித்தான், பத்தாயிரம் வருஷங்கள் ஓடி விட்டன. இந்த பத்தாயிரம் வருஷங்களும் ஆகாரம் இன்றி, தசானனன் தவம் செய்து, பத்தாயிர வருஷ முடிவில், தன் தலையையே அக்னியில் ஹோமம் செய்து விட்டான். இப்படி ஒன்பதாயிரம் வருஷங்களில் அவனது ஒன்பது தலைகள் அக்னியில் சேர்ந்து விட்டன. பத்தாவது முறை, மீதியிருந்த ஒரு தலையையும் வெட்டி அக்னியில் ஹோமம் செய்ய முற்பட்ட பொழுது, ப்ரும்மா அங்கு வந்து சேர்ந்தார். பிதாமகர் மிகவும் திருப்தியுடன் மற்ற தேவர்கள் கூட்டத்தோடு, அங்கு தோன்றினார். தசக்ரீவா, உன் தவத்தால் மகிழ்ந்தேன். சீக்கிரமாக வேண்டும் வரங்களைக் கேள். தர்மம் அறிந்தவனே, நீ பட்ட சிரமம் வீணாகக் கூடாது. வேண்டும் என்பதைக் கேள். இதைக் கேட்டு தசக்ரீவன் மனதுள் மிகவும் மகிழ்ந்தான், மகிழ்ச்சியால் நாத்தழ தழக்க, ப்ரும்மாவை வேண்டினான். ப்ரும்மாவே, பிராணிகளுக்கு மரணத்தையன்றி வேறு யாரிடம் பயம்? அதனால் அமரத் தன்மையை வேண்டுகிறேன். எனக்கு மரணமே வரக் கூடாது. இதைக் கேட்டு ப்ரும்மா அமரத்வம் அதாவது மரணமின்றி இருத்தல் என்பது நடக்க சாத்யமே இல்லை. அதனால் வேறு ஏதாவது கேள், என்றார். ராமா, இப்படி ப்ரும்மா பதில் சொன்னவுடன் தசக்ரீவன் அஞ்சலி செய்தவனாக வினயத்துடன் வேண்டினான். சுபர்ண, நாக யக்ஷர்களோ, தைத்ய, தானவ, ராக்ஷஸர்களோ, தேவதைகளோ என்னைக் கொல்லக் கூடாது. மற்ற பிராணிகளில் எனக்கு பயம் கவலை இல்லை. மற்ற மனிதர்கள் எனக்கு அற்ப பதருக்கு சமமானவர்கள். அவர்களைப் போன்ற மற்ற அல்ப பிராணிகளிடம் எனக்கு பயம் இல்லை, எனவும் ப்ரும்மாவும் அப்படியே என்று வரம் அளித்தார். இதைத் தவிர, ப்ரும்மா தானாகவும் ஒரு வரம் அளித்தார். நீ அக்னியில் ஹோமம் செய்த உன் தலைகள் வந்து சேரும் என்றும், விரும்பியபடி உருவம் எடுத்துக் கொள்ளும் சக்தியையும் கொடுத்தார். மகிழ்ச்சியுடன் இரு என்று சொல்லி வாழ்த்தினார். இதன் பின் ராவணன் தன் தலைகளையும் திரும்பப் பெற்றான், எளிதில் பெற முடியாத மற்ற வரங்களையும் பெற்றதால் மகிழ்ந்தான். இதன் பின் விபீஷணனைப் பார்த்து ப்ரும்மா, விபீஷணா, நீ என்ன வரம் பெற விரும்புகிறாய்? குழந்தாய், தர்மத்தின் வழி நிற்பவன் நீ, உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். வேண்டும் வரங்களைக் கேள், தவ நெறிகளை சற்றும் தவறாது செய்து உடல் வலிமை கூடியவனாக ஆகி விட்டாய் என்று, சொல்லவும், விபீஷணன், வணக்கத்துடன் கை கூப்பியபடி வேண்டினான். ப4கவன், நான் த4ன்யனானேன். சந்திரன் ஒளிக் கிரணங்களுடன் கூடி இருப்பது போல சத்குணங்கள் சூழ்ந்து நிற்க, சுவ்ரதனாக, நல்ல தவ வலிமையடைய தாங்களே முன் வந்து வரம் தருவதாக சொன்னதே என் பாக்கியம். ஐயனே, நான் கேட்பது இது தான். என்ன கடுமையான ஆபத்து வந்தாலும், என் மனம், புத்தி, தர்மத்தை விட்டு விலகக் கூடாது. நான் இதுவரை கற்றுக் கொள்ளாத ப்ரும்மாஸ்திரம் எனக்கு கிடைக்க வேண்டும். என் மனம் செல்லும் இடமெல்லாம் எந்த எந்த ஆசிரமம் ஆனாலும் அங்கு தர்மம் நிலவட்டும். அந்த திக்கில் உள்ளவர்கள் தர்மத்தில் ஈ.டுபாடு உள்ளவர்களாக திகழட்டும். இது தான் நான் வேண்டும் வரம், தர்மத்திற்கு ஜயம் உண்டாகட்டும் என்றான். ப்ரும்மா இதைக் கேட்டு அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குழந்தாய், உன் விருப்பப்படியே ஆகட்டும். உன் நல்ல குணம் எனக்கு மகிழ்ச்சிய ளிக்கிறது. ராக்ஷஸ குலத்தில் பிறந்தும், உன் புத்தி அதர்மத்தில் செல்லவில்லை. உனக்கு அமரத்வம் தருகிறேன் என்று வரம் அளித்து விட்டு, கும்பகர்ணன் பக்கம் திரும்பினார். உடனே தேவர்கள் அவரிடம் வந்து, கும்பகர்ணனுக்கு வரம் எதுவும் தராதீர்கள். துஷ்டன், இவன் இப்பொழுதே மூவுலகையும் துன்புறுத்தி வருகிறான். பலரை இவன் தின்றே தீர்த்து விட்டான். ஒரு சமயம் நந்தவனத்தில் பத்து அப்ஸர ஸ்திரீகளை, மகேந்திரனை பூஜைசெய்து கொண்டிருந்த பத்து ரிஷிகளை, மற்றும் கணக்கில்லாத மனிதர்களை இவன் விழுங்கி விட்டான். எந்த வித வர பலமோ, உதவியோ இன்றியே இவன் இப்படி செய்து வருகிறான். வரமும் கிடைத்து விட்டால் மூவுலகையும் இவன் அழித்து விடுவான். வரம் தருவதாக தந்து இவனை மோகத்தில் ஆழ்த்தி விடுங்கள். வினயமோ, வணங்கும் வழக்கமோ இவனுக்கு கிடையாது. உலக நன்மைக்காக இவனை சற்றுத் தட்டி அடக்கி வையுங்கள் என்று வேண்டினர். ப்ரும்மா இதைக் கேட்டு சற்று சிந்தனை வயப் பட்டார். அருகில் தேவி சரஸ்வதி நின்றிருந்தாள். அவள் சொன்னாள். தேவா, என்ன சிந்தனை. நான் ஏதாவது செய்ய முடியுமானால் சொல்லுங்கள் என்றாள். சரஸ்வதியைக் கண்டதும் ப்ரும்மாவின் முகம் மலர்ந்தது. ஒரு தீர்வு கண்ட மகிழ்ச்சியில், வாணீ, நீ ராக்ஷஸனான கும்பகர்ணனின் வாக்கில் இரு. தேவர்களுக்கு உதவி செய் என்றார். கும்பகர்ணனும், தேவ, தேவ, பல வருஷங்கள் தூங்க விரும்புகிறேன் என்றான். உடனே அப்படியே ஆகட்டும் என்று சொல்லி ப்ரும்மா மறைந்து விட்டார். தேவி சரஸ்வதியும் உடன் சென்று விட்டாள். அனைவரும் சென்ற பின் ராக்ஷஸனுக்கு சுய புத்தி உறைத்தது. மிகவும் துக்கமடைந்தான். துஷ்டனானாலும், புத்திசாலியானதால் உடனே புரிந்து கொண்டான். இது என்ன? என் வாயிலிருந்து இப்படி ஒரு சொல் வெளி வந்தது எப்படி சாத்தியம்? தேவர்கள் தான் ஏதோ செய்து என்னை மோகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள். என் சகோதரர்கள் நல்ல வரங்கள் பெற்று தேஜஸுடன் விளங்கும் பொழுது என்னை இப்படி வீழ்த்தி விட்டார்கள் என்று உணர்ந்தான். இதன் பின் ஸ்லேஷ்மாதக வனம் என்ற இடம் சென்று சுகமாக வசித்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 11 (548) ராவண லங்கா ப்ராப்தி: (ராவணனுக்கு லங்கை கிடைத்தல்)
இந்த ராக்ஷஸர்கள் வரங்கள் பெற்று ஆற்றல் மிகுந்தவர்களாக ஆனதைக் கேள்விப் பட்ட சுமாலியின் பயம் விலகியது. ரஸாதலத்திலிருந்து பரிவாரங்கள் சூழ வெளி வந்தான். மாரீசனும், ப்ரஹ்லாதனும், விரூபாக்ஷனும், மகோதரனும் இந்த ராக்ஷஸனுக்கு மந்திரிகளாக வந்து அமர்ந்தனர். சுமாலி இந்த மந்திரிகளோடு தசக்ரீவனை அணைத்துக் கொண்டு ஆசிர்வதித்துக் கொண்டாடினான். குழந்தாய், அதிர்ஷ்டவசமாக உன்னால் என் மனோரதம் பூர்த்தியாயிற்று. நீ த்ரிபுவன ஸ்ரேஷ்டன் என்று போற்றப் படும் ப்ரும்மாவிடமிருந்து வரங்கள் பெற்றிருக்கிறாய். என்ன காரணத்தினால் நாங்கள் லங்கையை விட்டு ரஸாதலம் சென்றோமோ அந்த பயம் நீங்கியது. விஷ்ணுவிடம் எங்களுக்கு இருந்த பெரும் பயம் விலகியது. அடிக்கடி இவரிடம் பயந்து தங்கள் வீடுகளை விட்டு நாங்கள் ரஸாதலம் ஓடியிருக்கிறோம். எல்லோருமாக ஓடுவோம். இந்த லங்கை நமதே. ராக்ஷஸர்களுக்கு வசிக்க ஏற்றது. உன் சகோதரன் மதியினால் நாங்கள் இங்கு குடியேற்றப்பட்டோம். சாம, தான, பேத, தண்டம் என்ற உபாயங்களால் இதை திரும்பி பெறவும் முயற்சிக்கலாம். குழந்தாய், நீ தான் சந்தேகம் இல்லாமல் லங்கேஸ்வரன். மூழ்கி கிடந்த ராக்ஷஸ குலம் உன்னால் தூக்கி நிறுத்தப் பட்டது. மகாபலசாலியே, எங்கள் யாவருக்கும் நீயே தலைவனாக இருப்பாய். இப்படிச் சொல்லும் தாய் வழி பாட்டனாரைப் பார்த்து தசக்ரீவன் தனாதிபதியான குபேரனை நமக்கு முன்னோடியாக நீங்கள் சொல்வது சரியல்ல. என்று ஆரம்பித்தான். எதிரில் நின்று பேசும் தசக்ரீவனைப் பார்த்து அவன் உள்ளக் கிடக்கையை புரிந்து கொண்ட பெரியவர் உடனே எதுவும் மறு மொழி சொல்லவில்லை. ஆனால், பின் ஒரு சமயம், வஸந்த காலத்தில் இதே வாக்கியத்தை ப்ரஹஸ்தனிடம் சொன்னவுடன், ப்ரஹஸ்தன் காரணங்களோடு விவரமாக பதில் சொன்னார். தசக்ரீவா, நீ இப்படி சொல்வது சரியல்ல. சூரர்களாக இருப்பவர்கள் உடன் பிறந்தவர்கள் என்று பார்ப்பது இல்லை தான். இருந்தும் நான் சொல்வதை முழுவதுமாகக் கேள். திதி அதிதி இருவரும் சகோதரிகள். இருவரும் கஸ்யபர் என்ற ப்ரஜாபதியின் மனைவிகளாக ஆனார்கள். அதிதி தேவர்களைப் பெற்றாள். திதியும் அவரைப் போலவே தேஜஸுடன் பிள்ளைகளைப் பெற்றாள். இவர்கள் தைத்யர்கள்-திதி புத்திரர்கள்- இவர்களுக்கு பூ லோகம், சமுத்திரத்தை எல்லையாகக் கொண்ட பூமி அதன் மலைகள், வனங்கள் உட்பட உரிமையாயிற்று. இவர்களும் மிகுந்த ஆற்றலுடனும், சக்தியுடனும் இந்த பூமியில் வசித்து வந்தனர். ஒரு சமயம் விஷ்ணு, இவர்களைப் போரில் தோற்கடித்து இந்த தேசம் முழுவதும் தேவர்கள் வசமாக்கினார். தனி ஒருவனாக நீ இதை மாற்றியமைக்க முடியாது. நான் சொல்வதைக் கேள் என்றார். சற்று யோசித்து விட்டு ராவணனும் அந்த யோஜனையை ஏற்றுக் கொண்டான். சில ராக்ஷஸர்களுடன் த்ரிகூட மலையில் நின்று கொண்டு, ப்ரஹஸ்தனை தூதனாக அனுப்பி வைத்தான். ப்ரஹஸ்தன், அழகாக பேசக் கூடியவர், சரிவர காரியத்தை முடித்துக் கொண்டு வரக் கூடியவர் என்ற நம்பிக்கை தோன்றி இருந்தது. ப்ரஹஸ்தா, சீக்கிரம் போ. லங்கா ராஜனிடம் சொல். நான் சொன்னதாக சமாதானமாகவே இதைச் சொல். இந்த லங்கா புரி ராக்ஷஸர்கள் வசிக்க என்று கட்டப்பட்டது. இதில் நீ நுழைந்து கொண்டு இருக்கிறாய். தவறு என்று சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது எங்கள் லங்கையை நீயாக திருப்பித் தருகிறாயா? அது தான் தர்மமும் உசிதமும் ஆன செயல். அப்படித் தந்தால் எங்களுக்கு திருப்தியாக இருக்கும். தர்மத்தை எண்ணி எங்களிடம் ஒப்படைத்து விடு இந்த செய்தியை குபேரனிடம் சொல்ல ப்ரஹஸ்தன், அந்த லங்கா நகரினுள் நுழைந்தார். வித்த பாலன்- செல்வத்தை பாதுகாக்கும் அதிகாரியான குபேரனைப் பார்த்து சொல்ல ஆரம்பித்தார். மஹாபா3ஹோ, உன் சகோதரன் த3சக்3ரீவன் என்னை அனுப்பியிருக்கிறான். சஸ்திரங்களை எடுத்து போர் புரியும் வீரர்களுள் சிறந்தவனே, நீ சாஸ்திரமும் அறிந்தவன். தசானனன் சொன்னதை அப்படியே நான் சொல்கிறேன். கேட்டு விட்டு உன் முடிவைச் சொல். இந்த அழகிய நகரம் முன் காலத்தில் சுமாலி முதலானவர்கள் ஆண்டு அனுபவித்த இடம். அதனால் விஸ்ரவஸ் மகனே, இப்பொழுது வினயமாக உன்னைக் வேண்டிக் கொள்கின்றனர். அவர்களுடைய நகரை திருப்பிக் கொடுத்து விடு. குழந்தாய், அவர்கள் யாசிக்கும் பொழுது கொடுத்து விடுவது தான் விவேகமாகும். இவ்வாறு ப்ரஹஸ்தன் சொல்லவும், குபேரன் பெரியவரே, இந்த நகரம் சூன்யமாக, ராக்ஷஸர்களோ, வேறு யாருமே இன்றி எனக்குத் தரப் பட்டது. இங்கு யக்ஷர்களையும், தானவர்களையும் குடியேற்றி, இந்த நகரை செம்மைப் படுத்தி வைத்திருக்கிறேன். தசக்ரீவனிடம் போய் சொல்யுங்கள். என்னுடைய ராஜ்யமும், நகரமும் எனக்கு உள்ளதைப் போலவே உனக்கும் உரிமை உண்டு. அனுபவித்து, ஆண்டு மகிழ்ந்திரு. எந்த வித இடையூறும் இன்றி ராஜ்யத்தை பிரிக்காமல் முழுவதுமாக சேர்ந்தே இருப்போம். இஷ்டம் போல் இந்த நகரத்தில் வந்து வசி. என்று சொல்லி விட்டு குபேரன் தன் தந்தையிடம் சென்று, ராவணன் ப்ரஹஸ்தன் மூலம் சொல்லியனுப்பிய செய்தியைச் சொன்னான். தந்தையே, இந்த ராவணன் ஒரு தூதனை அனுப்பியிருக்கிறான். இந்த நகரம் முன்பு ராக்ஷஸர்களின் வாசஸ்தலமாக இருந்தது இப்பொழுது திருப்பி கொடுத்து விடு என்கிறான். நான் செய்ய வேண்டியது என்ன நீங்களே சொல்லுங்கள், என்றான். விஸ்ரவஸ் என்ற அந்த ப்ரும்ம ரிஷி, வணங்கி நின்ற மகனைப் பார்த்து, தசக்ரீவனுக்கு நானும் நிறைய சொல்லி பார்த்து விட்டேன். பயமுறுத்தியும் பயனில்லை. பலசாலி. துர்மதி. யார் சொல்லியும் கேட்க மாட்டான். இவனுடன் மோதி பயனில்லை. கைலாஸ மலைக்கு நீ சென்று விடு. உன் பரிவாரங்களை, வேலையாட்களுடன் அங்கு குடியேற்றி வை. அங்கு அழகிய மந்தாகினி நதி இருக்கிறது. நதிகளுள் சிறந்த நதி. சூரிய ஒளிக்கு இணையான பொன் நிற தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் நீர் நிலைகளுடையது. வாசனை மிகுந்த குமுத மலர்களும், உத்பல மலர்களும் நிறைந்தது. அங்கு தேவர்களும் கந்தர்வர்களும், அப்ஸர, உரக, கின்னரர்களும் விளையாட என்றே வருவார்கள். எப்பொழுதும் சந்தோஷமாக பொழுதை கழிக்க இந்த இடத்தை தான் எடுத்துக் கொள்வர். இந்த ராக்ஷஸனான ராவணனுடன் விரோதம் பாராட்டி, உனக்கு வீண் சிரமம் தான் மிஞ்சும். இவனுடன் மோதாதே. இவனுக்கு கிடைத்துள்ள வரங்களைப் பற்றி உனக்குத் தெரியும். வரங்கள் கிடைக்கப் பெற்றதால், கர்வம் தலைக்கேற துர்மதி, யாரை மதிக்க வேண்டும், யாரை வணங்க வேண்டும் என்ற சாதாரண புத்தி கூட மழுங்கி போனவனாக, தூர்த்தனாக இருக்கிறான். என்னிடம் சாபம் பெற்று, பயங்கரமான உருவை அடைந்தும், அவன் கர்வம் குறையவில்லை. இவ்வாறு தந்தை சொன்னதைக் கேட்டு குபேரன், அவரிடம், உள்ள கௌரவத்தால், உடனே தன் மனைவி, மக்கள், மந்திரிகள், வாகனங்கள் இவற்றுடன் நகரை விட்டு வெளியேறி விட்டான். லங்கா நகரை சூன்யமாக விட்டுச் சென்று விட்டான். ப்ரஹஸ்தன் திரும்பி வந்து தசக்ரீவனைப் பார்த்து விஷயத்தை சொன்னார். குபேரன் லங்கா நகரை விட்டு விலகி விட்டான். நீ உன் மந்திரிகள், சகோதரர்களுடன் லங்கையை ஏற்றுக் கொண்டு எங்கள் யாவரையும் பரிபாலித்து வரலாம். எந்த வித தடையுமில்லை. லங்கா நகரம் சூன்யமாக கிடக்கிறது. த4னதன் பயந்து ஓடி விட்டான் என்றார். அழகிய வீதிகளையும், நன்கு பரிபாலிக்கப் பட்டு சிறந்து விளங்கிய லங்கா நகரம் எந்த வித எதிர்ப்புமின்றி கைக்கு எட்டவும், தசக்ரீவன், உடனே தன் சகோதர்களுடனும், சேனை, குற்றேவல் செய்யும் வேலைக்காரர்களுடனும் அதை ஆக்ரமித்துக் கொண்டான். சுவர்கத்தை இந்திரன் அடைந்தது போல, தானும் இந்த அழகிய நகரை கைப்பற்றிய பெருமையோடு அரியாசனத்தில் அமர்ந்தான். மற்ற ராக்ஷஸர்கள் அவனுக்கு முடி சூட்டி மகிழ்ந்தனர். நீல மேகம் போன்ற உடலுடைய பல ராக்ஷஸர்களை அங்கு குடியமர்த்தினான். தனாதிபதியான குபேரன் தந்தை சொன்னதை ஏற்று, சந்திரனுக்கு சமமாக விமலமான கைலாச மலையில் தன் வாசஸ்தலத்தை நிறுவிக் கொண்டான். புரந்தரன் அமராவதியில் இருப்பது போலவே, தன் நகரையும் அழகிய வேலைப்பாடமைந்த பவனங்கள் நிறைய கட்டி வைத்து மகிழ்ச்சியுடன் இருந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 12 (549) ராவணாதி விவாக: (ராவணன் முதலானோர் திருமணம்)
சகோதரர்கள் சேர்ந்து, ராவணனை ராக்ஷஸேந்திரனாக அபிஷேகம் செய்து வைத்தனர். அடுத்ததாக, தசக்ரீவன், தன் சகோதரியின் திருமணம் குறித்து ஏற்பாடுகள் செய்ய முனைந்தான். வித்யுத்ஜிஹ்வன் என்ற காலக குலத்தில் வந்த தானவ ராஜனுக்கு தன் சகோதரி சூர்ப்பணகையை மணம் செய்து கொடுத்தான். ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்ற பொழுது மயன் என்பவரைச் சந்தித்தான். திதி புத்திரன் இவர். ஒரு கன்னிப் பெண்னுடன், தனியாக காட்டில் இருந்தவரைப் பார்த்து விசாரித்தான். இந்த பெண் தவிர யாரும் உங்களுக்கு ஆதரவு இல்லையா? ஏன் காட்டில் தனியாக இருக்கிறீர்கள் என்று வினவினான். மயனும் விவரமாக சொன்னார். ஹேமா என்ற அப்சர ஸ்திரீ பற்றி கேள்வி பட்டிருப்பாய். இந்திரனுக்கு பௌலோமி என்ற சசி போல எனக்கு இவள் மனைவியாக வாய்த்தாள். பத்தாயிர வருஷம் அவளுடன் இனிமையாக காலம் கழித்தேன். ஏதோ தேவ காரியம் என்று போனவள் பதினான்கு வருஷம் ஓடி விட்டது. அவளுக்காக தங்க மயமாக, ஹேம மயமாக ஊரை அலங்கரித்து வைத்திருக்கிறேன். மாயையால் அமைத்த ஊர். மனைவியின் பிரிவால், தனிமையில் தவித்த நான், மன ஆறுதலுக்காக மகளையும் அழைத்துக் கொண்டு வனம் வந்தேன். இவள் எங்கள் மகள். பெண்ணைப் பெற்றவன் கவலை, இவளுக்கு சரியான வரன் தேட வேண்டுமே என்று அலைந்து கொண்டிருக்கிறேன். நீ தான் இவளுக்கு சரியான வரன் – நீ கிடைத்து விட்டாய். பெண் மகவை பெற்றவருக்கு கவலையும் உடன் வந்து விடுகிறது. பெண் இரண்டு குடும்பத்தையும் சந்தேகத்தில் ஆழ்த்தி வைத்து விளையாடுகிறாள். எனக்கு என் மனைவியிடம் இரண்டு மகன்களும் உண்டு. ஒருவன் மாயாவி. துந்துபி இரண்டாமவன். என் கதையை சொல்லி விட்டேன். நான் இப்பொழுது தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? பணிவுடன் தசக்ரீவனும் பதில் உரைத்தான். நான் பௌலஸ்த்யனுடைய மகன். (புலஸ்தியனுடைய மகன் பௌலஸ்தியன், அவன் மகன், புலஸ்தியன் பேரன்). தசக்ரீவன் என்று பெயர். விஸ்ரவஸ முனிவருக்கு மூன்றாவது மகன் ப்ராம்மணனாக இருந்தான். அவர் மகன் நான். எனவும் மயன் மகிழ்ந்தான். மகரிஷி புத்திரன் என்பதால் எல்லையற்ற ஆனந்தத்துடன் தன் மகளை மணம் செய்து கொடுக்க இசைந்தான். தசக்ரீவன் கையில் தன் மகள் கையை வைத்து, தைத்ய அரசனான மயன், ராக்ஷஸ ராஜனிடம் இதோ, என் மகள், எனக்கும் ஹேமா என்ற அப்ஸர ஸ்த்ரீக்கும் பிறந்தவள், மந்தோதரி என்ற பெயருடைய என் மகளான கன்னிகையை பத்னியாக ஏற்றுக் கொள். தசக்ரீவனும் உடனே சரி என்று ஏற்றுக் கொண்டான். அக்னியை மூட்டி அந்த இடத்திலேயே மந்தோதரியை பாணிக்ரஹணம் செய்து கொண்டான். அவன் தான் பெற்ற சாபத்தை சொல்லாமல் விட்டான். பாட்டனார் குலப் பெருமையை எண்ணி மயன் மகிழ்ச்சியுடன் மகளை தாரை வார்த்துக் கொடுத்தான். அளவிட முடியாத பெருமை வாய்ந்த சக்தி என்ற ஆயுதத்தையும் கொடுத்தான். இந்த சக்தியை, கடுமையான தவ விரதங்கள் அனுசரித்து கிடைக்கப் பெற்றிருந்தான், இதைக் கொண்டு தான் இராவணன் லக்ஷ்மணனை அடித்தான், நினைவு இருக்கிறதா? இப்படியாக மனைவியுடன் லங்கைக்கு வந்த தசக்ரீவன், அதோடு நிற்கவில்லை. தன் சகோதரர்களுக்கும் பத்னிகளைத் தேடி, விரோசனனுடைய மகள் வயிற்று பேத்தியான வஜ்ர ஜ்வாலா என்ற பெயருடைய பெண்ணை தன் சகோதரன் கும்பகர்ணனுக்கு மணமுடித்தான். சைலூஷன் என்ற கந்தர்வனின் மகளை, சரமா என்பவளை விபீஷணன் மணந்தான். (குளத்தின் கரையில் உண்டான மானஸ புத்ரி. ஜலம் வரும் காலத்தில் அந்த குளம் நிறைந்து பெருகலாயிற்று. தாய் மகளைப் பார்த்து ஸ்னேகத்துடன் சரோ மா வர்தஸ்வ- குளத்தில் நீர் அதிகம் பெருகும்படி செய்யாதே என்று கடிந்து கொண்டதால், சர மா – என்று பெயர் பெற்றாள்.) இப்படி மணம் செய்து கொண்ட பத்னிகளுடன் ராக்ஷஸர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். தங்கள் தங்கள் பத்னிகளிடம் கந்தர்வர்கள் போல உல்லாசமாக நாட்களைக் கழித்தனர். காலம் செல்லவும், மந்தோதரி மேகனாதன் என்ற மகனைப் பெற்றாள். அவனைத் தான் நீங்கள் இந்திரஜித் என்று அழைக்கிறீர்கள். பிறந்த உடனே இந்த ராவணன் மகன், மேகம் இடி இடிப்பது போல உரத்த குரலில் அழுதான். அந்த ஓசையில் லங்கா நகரமே ஸ்தம்பித்து விட்டது. அதனால் தந்தை மேக நாதன் என்று பெயரிட்டான். இவன் ராவண க்ருஹத்தில் உயர்ந்த ஸ்திரீகளால் போற்றி வளர்க்கப் பட்டான். கட்டையில் மறைந்து நிற்கும் அக்னியை வளர்ப்பது போல வளர்த்தனர். தாய் தந்தையருக்கு எல்லையில்லாத ஆனந்தத்தை தருபவனாக வளர்ந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 13 (550) த4னத3 தூ3த ஹனனம் (குபேரனுடைய தூதனை வதம் செய்தல்)
இதன் பின், ப்ரும்மாவின் வரம் காரணமாக கும்பகர்ணனுக்கு அளவில்லாத தூக்கம் வரலாயிற்று. அரசனான சகோதரனைப் பார்த்து, ராஜன், உறக்கம் என்னை வாட்டுகிறது. எனக்கு தகுந்தாற்போல் வீட்டை நிர்மாணித்து தா என்று வேண்டினான். உடனே அரசனும், விஸ்வகர்மாவுக்கு இணையான சில்பிகளை நியமித்து கைலாசம் போல ஒரு மாளிகையை கும்பகர்ணனுக்காக கட்டுவித்தான். ஒரு யோஜனை தூரம் விஸ்தீர்ணம்- நீளமும் இரண்டு மடங்கு அகலமுமாக மாளிகை உருவாகியது. எந்த வித இடையூறும் இன்றி தூங்க வசதியாகவும், அழகாகவும் கும்பகர்ணனுக்காக மாளிகையை கட்டுவித்தான். ஸ்படிகம், பொன் இவைகளைக் கொண்டு ஸ்தம்பங்கள் பல இடங்களிலும் அழகுற அமைக்கப் பெற்றன. வைடூரியத்தால் இழைத்து கட்டப் பெற்ற மாடிப்படிகள், ஜன்னல்களில் மணிகள் கட்டப் பெற்றன. அழகிய தோரணங்கள், வஜ்ரத்தாலும், ஸ்படிகத்தாலும், வேதிகள் மனோகரமாகவும் எல்லா வித வசதிகளும் நிறைந்ததுமாக அமைக்கப் பட்டன. மேரு மலையின் குகை போல எல்லா விதத்திலும் சுகத்தை தரும் வண்ணம் அமைந்திருந்தது. அங்கு கும்பகர்ணன் என்ற மகா பலசாலி, உறக்கத்தில் ஆழ்ந்தான். பல வருஷங்கள் தூங்கியபடி இருந்தான். எழுந்திருக்கவே இல்லை. கும்பகர்ணன் இவ்வாறு உறங்கி கழித்த பொழுது, ராவணன், தேவ, ரிஷி, யக்ஷ, கந்தர்வர்களை போரில் வென்றான். உத்யானங்கள், அழகிய நந்தவனங்கள், தேவலோகத்து நந்தனம் போன்ற இடங்களை குறி வைத்து, அழிப்பதில் ராவணன் முனைந்து நின்றான். நந்தவனம் என்றாலே கோபம் மேலிட அழித்தான். நதிகளில் யானைகள் புகுந்து கலக்குவது போல கலக்குவான். மரங்களை உலுக்கி சித்ரவதை செய்வான். வஜ்ரத்தால் மலைகள் அடிபட்டதை நினைவுறுத்துவதைப் போல த்வம்சம் செய்வான். இப்படி அழிப்பதையே காரியமாகக் கொண்ட தசானனனை திருத்த எண்ணி குபேரன் ஒரு தூதனை அனுப்பினான். தன் குலத்தில் பிறந்தவன், தகாத செயலை செய்வதை தடுக்க வேண்டும் என்று நினைத்து, தான் முன்னோடியாக நடந்து கொண்டதை (அவன் கேட்டதும் லங்கையை திருப்பிக் கொடுத்ததை) சுட்டிக் காட்டி, அறிவுரை சொல்லி அனுப்பினான். அந்த தூதன் முதலில் விபீஷண க்ருஹம் சென்றான். அவனை நன்றாக உபசரித்து, விபீஷணன் வந்த காரணத்தை வினவினான். தாயாதிகள், உறவினர்கள் நலம் விசாரித்த பின் விபீஷணன் தூதனை சபைக்கு அழைத்துச் சென்று ஆசனத்தில் அமர்ந்திருந்த அரசனுக்கு அறிமுகப் படுத்தினான். உத்தமமான ஆசனத்தில், அழகிய விரிப்புகள் போடப் பெற்று அலங்காரமாக விளங்கிய ஆசனத்தில், தன் தேக காந்தியால் பிரகாசமாகத் தெரிந்த அரசனை ஜய கோஷம் செய்து வாழ்த்திய பின், தூதன் தான் சொல்ல வந்த செய்தியை சொன்னான். ராஜன், உன் சகோதரன் சொன்ன விஷயங்களை அப்படியே தெரிவிக்கிறேன். உங்கள் இருவருக்குமே சமமான குலம், செல்வங்கள் உள்ளன. இதுவரை நடந்த விஷயங்களை பரிசீலித்து பார்த்தபின் ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன். நீ தர்மத்தில், நியாயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நந்தன வனத்தை அழித்ததாகவும், ரிஷிகளை வதைத்ததாகவும் கேள்விப் பட்டோம். தேவதைகளை நீ துரத்தி அடித்த செய்தியையும் கேள்விப் பட்டேன். ராஜன், பலரை அழித்து நாசமாக்கியதாகத் தெரிகிறது. ராஜனே, குற்றமே புரிந்தவன் ஆனாலும், தன் குலத்தை சேர்ந்த சிறுவர்களை, பெரியவர்கள் உறவினர் காப்பாற்றத் தான் வேண்டும். நான் ஹிமய மலையின் அடிவாரம் சென்று தர்ம காரியங்களைச் செய்து வருகிறேன். தேவியான உமையை, ருத்ரனோடு தரிசித்தேன். கடுமையான தவங்கள் செய்து இந்த பெருமையை அடைந்தேன். என் இடது கண் பார்வையை தேவிக்கு சமர்ப்பித்தேன். யாராக இருக்கும் என்று அறிந்து கொள்ள ருத்ராணி வந்தாள். தேவியின் தேவ ப்ரபாவத்தால் என் இடது கண் பொசுங்கி போயிற்று. தீபத்தின் மேல் புழுதி படிந்தது போல என் கண் மஞ்சள் (பழுப்பு) நிறமாயிற்று. இதன் பின் அதே மலையில் வேறு இடம் சென்று கடினமான நியமங்களுடன் தவத்தை தொடர்ந்தேன். என் தவம் முடியும் நேரம், மகேஸ்வரனான பிரபு, மிகவும் மகிழ்ச்சியடைந்து என்னிடம் சொன்னார். தேவியின் ரூபத்தை பார்த்ததால் கண் பார்வை மஞ்சள் நிறம் பெற்றது. உன் தவத்தால் மகிழ்ந்தேன். நானும் இதே போல தவம் செய்திருக்கிறேன். தற்சமயம், நம் இருவரைத் தவிர மூன்றாவது நபர் யாருமில்லை. இவ்வளவு கடினமான தவத்தை செய்த நீ எனக்குத் தோழனாவாய். தனாதிபா, என் தோழனாக இரு. உன் தவத்தினால் நான் ஜயிக்கப் பட்டேன். தேவியினால் தகிக்கப் பட்ட உன் இடது கண் பிங்கள, மஞ்சள் நிறமாக அப்படியே இருக்கட்டும். உன் பெயர் ஒரு கண் மஞ்சளாக உள்ளவன் என்றே நிலைத்து நிற்கும். நிரந்தரமாக நீடூழி வாழ்வாய் என்றார். இவ்வாறு சங்கரனின் நட்பையும் நண்பன் என்ற தகுதியையும் அடைந்து இங்கு வந்து பார்த்தால், உன் செயல்கள் தலை குனிய வைக்கின்றன. உன் பாப காரியங்கள் விரும்பத் தக்கவையாக இல்லை. குலத்தின் பெருமையை கெடுக்கும் அதர்ம செயல்களை பற்றி நிறைய கேள்விப் பட்டேன். மேலும் இப்படி அதர்மமான செயல்களை செய்யாதே. யோசித்து திட்டம் வகுத்து நீ ரிஷி கணங்களை அடித்தது போலவே, அவர்களும் உன்னை வதம் செய்ய என்ன வழி என்று யோசித்து வருகிறார்கள். என்று தூதன் சொல்லிக் கேட்ட, ராவணனின் கோபம் கட்டுக் கடங்காது போயிற்று. கைகளை முறித்து, பற்களை கடித்து தூதனே, எனக்கு தெரிந்து விட்டது. நீ யாருக்கு தூதனாக வந்திருக்கிறாய் என்பது. என் சகோதரன் அனுப்பி நீ வரவில்லை. இது எனக்கு நன்மை தருவதும் இல்லை. தனாதிபன் இப்படி ஒரு உபதேசம் சொல்லி இருந்தால், ருத்ரனிடம் நட்பு கொண்டதை பெரிய விஷயமாக எனக்குச் சொல்ல வந்து விட்டாய். இதை இன்னும் என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இது வரை அவனை எதுவும் செய்யாமல் விட்டு வைத்தேன். எனக்கு மூத்தவன், குரு என்பதால் பொறுத்தேன். இப்பொழுது எனக்கு உபதேசம் சொல்லி அனுப்பும் வரை வந்து விட்டானா? என் புஜ பலத்தால் மூவுலகையும் ஜயிப்பேன். இவன் ஒருவனுக்காக நான்கு லோக பாலர்களையும் யம லோகம் அனுப்புகிறேன், பார். என்று சொல்லிக் கொண்டே, தசக்ரீவன் தூதனை தன் வாளால் தலை துண்டித்து விழச் செய்தான். துராத்மாக்களான ராக்ஷஸர்களுக்கு உணவாக கொடுத்து விட்டான். இதன் பின் துதி பாடும் தன் ஜனங்கள் ஸ்வஸ்தி மங்களங்கள் சொல்லி வாழ்த்த, மூன்று உலகையும் வெற்றி கொள்ள நிச்சயித்தான். முதலில் தனாதிபன் இருக்கும் இடம் சென்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதின்மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 131 (538) ராம பட்டாபிஷேக|| ( ராம பட்டாபிஷேகம்)
தலை மேல் கை குவித்து கைகேயியின் மகன் பரதன், சத்ய பராக்ரமனான அண்ணன் ராமனைப் பார்த்துச் சொன்னான். என் தாய் சொல்லை மதித்து நடந்தாயிற்று. எனக்குக் கொடுக்கப் பட்ட ராஜ்யம் இது. இதை திரும்ப உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ கொடுத்தது போலவே அப்படியே தந்து விட்டேன். ஒரே ஒரு பலசாலியான ரிஷபம் தாங்கி வந்த பாரத்தை, கன்றுக்குட்டியின் தலையில் நுகத்தடியோடு வைத்தது போல இந்த ராஜ்ய பாரம் என் தலையில் சுமத்தப்பட்டது. என்னால் இந்த பாரத்தை தாங்க முடியவில்லை. வேகமாக ஓடி வரும் நீரின் வேகத்தில், கரை அரித்துச் செல்லப் படுவதைப் போல, இந்த ராஜ்யத்தில் ஏற்படும் குறை குற்றங்களை இட்டு நிரப்புவது மிகவும் கடினமான வேலை என்று நினைக்கிறேன். சேதுவில் தோன்றும் துவாரத்தை, அந்த துவாரத்தின் வழியே வெளிப்படும் நீரின் வேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு அடைப்பது போலத் தான் இந்த ராஜ்ய நிர்வாகமும் என்று புரிந்து கொண்டேன். அஸ்வத்தின் நடையை கோவேறு கழுதை நடந்து பழகுவது போலவும், ஹம்ஸத்தின் நடையை காகம் பார்த்து தானும் அதே போல நடக்க முயற்சி செய்வது போலவும், நான் உன் மார்கத்தில் நடந்து பழக முயற்சி செய்தாலும், தொடர்ந்து செய்ய சக்தியற்றவனே. ராமா, மரத்தை நட்டு வளர்ந்து வருவதைப் பார்த்துக் கொண்டே இருந்தவன், ஏற முடியாத உயரத்துக்கு அது வளர்ந்து பெரிதாகி, கப்பும் கிளையுமாக பரவி நிற்கும் பொழுது, ஏகமாக பூத்துக் குலுங்கி பழங்களையே தரவில்லையென்றால், மரம் நட்டவன் எதை விரும்பி நட்டானோ, நீர் விட்டு வளர்த்தானோ, அந்த பலன் கிடைத்ததாகச் சொல்ல முடியுமா? உன் விஷயத்தில் இது தான் சரியான உவமானம். பக்தர்களாக, சேவகர்களாக இருக்கும் எங்களை நீ சரியாக வழிகாட்டி, சாஸனம் செய்யவில்லையென்றால், சரியான பலன் கிடைத்ததாக ஆகாது. இன்று உலகம் முடி சூட்டிக் கொண்ட ராமனை பார்க்கட்டும். எப்பொழுதும் பிரகாசிக்கும் ஆதித்யன், நன் பகலில் அதிக வெப்பத்தைக் கொடுப்பது போல காண்பார்கள். ராகவா| இனி காலையில் தூர்ய, சங்கு இவைகளின் ஓசையுடன், காஞ்சி நூபுரம் என்ற நகைகள் உராயும் ஓசையும் சேர்ந்து மதுரமான கீத சப்தங்கள் கேட்டு நீ துயிலெழுவாய். பூ சக்கரம் சுழலும் வரை வசுந்தரா நிலைத்து நிற்கும் வரை நீ இந்த உலகில் அனைத்து ஜீவன்களுக்கும் ஸ்வாமியாக தலைவனாக இருந்து வருவாய். எதிரி நகரை வென்று வெற்றி வாகை சூடி வந்தவனான ராமன், பரதன் சொன்னதை ஏற்றுக் கொண்டு சுபமான வராஸனத்தில் அமர்ந்தான்.
இதன் பின் சத்ருக்னன் ஏற்பாடு செய்திருந்தபடி, நிபுணர்களான நாவிதர்கள், கை ராசியுள்ளவர்கள், வேகமாக செய்யக் கூடியவர்கள் வந்து ராகவனை தயார் செய்தனர். முதலில் பரதன் ஸ்னானம் செய்து, லக்ஷ்மணனும் ஸ்னானம் செய்த பின் சுக்ரீவ வானரேந்திரனும், ராக்ஷஸ ராஜன் விபீஷணனும் ஸ்னானம் செய்து வந்த பின், ஜடையைத் தவிர்த்து ஸ்னானம் செய்து விசித்ரமான அங்க ராகங்களை பூசிக் கொண்டு, உயர்ந்த ஆடைகளை தரித்து, லக்ஷ்மீகரமான பொலிவுடன் வந்தான். இந்த ஆடை ஆபரணங்கள் அவனுக்கு உரியதே அன்றோ. ராமனுக்கு அலங்காரங்கள் செய்வித்தனர். இக்ஷ்வாகு குலத் தோன்றலான, லஷ்மி சம்பன்னனான லக்ஷ்மணனுக்கும் அணிகலன்கள் , ஆடைகள் என்று அலங்காரம் செய்விக்கப் பட்டது. தசரதன் மனைவிகள், மனப்பூர்வமான அன்புடன், கருத்துடன் சீதைக்கு அலங்காரம் செய்தனர். கௌசல்யை பெரு முயற்சியோடு வானர பத்னிகள் அனைவருக்கும் அலங்காரம் செய்து விட்டாள். தன் புத்ரன் மேல் கொண்ட வாஞ்சையால் சிரமத்தை பார்க்காமல் , கூடியவரை அழகாக இருக்கச் செய்தாள். சத்ருக்னன் சுமந்திரன் என்ற ராஜ சாரதியை அழைத்து வந்தான். சாரதி ரதத்தை அழகாக தயார் செய்து, உடனேயே கிளம்பத் தயாராக, கொண்டு வந்து நிறுத்தினான். சூரிய மண்டலம் போல ஒளி வீசிய அந்த ரதத்தில் ராமர் ஏறி அமர்ந்தார். சுக்ரீவனும் ஹனுமானும் கூட ஸ்னானம் செய்தபின், சுபமான வஸ்திரங்கள், காதில் குண்டலங்கள் என்று அலங்கரித்துக் கொண்டு கிளம்பினர். அதே போல சுக்ரீவ பத்னிகளும் ஆடை ஆபரணங்களுடன், உற்சாகமாக நகரை வேடிக்கைப் பார்க்க கிளம்பினர். அயோத்தியில் இருந்த மந்திரிகள், தசரத ராஜாவின் காலத்திலிருந்து இருந்த பலர், புரோஹிதருடன் கலந்து ஆலோசனைகள் செய்ய அழைக்கப்பட்டிருந்தனர். அசோகன், விஜயன், சுமந்திரன் மூவரும், கூடிப் பேசி, ராம வ்ருத்திக்காகவும், நகரத்தின் வளர்ச்சிக்காகவும் மங்கள பூர்வமாக எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து புரோஹிதருக்குச் சொன்னார்கள். எதையும் விடாமல் குறைவற செய்ய திட்டமிட்டனர். வெற்றி வீரனாக திரும்பி இருந்த ராமனின் ராஜ்யாபிஷேகம், அனைவருக்கும் மன நிறைவைத் தந்தது. அதையே பேசி பேசி மகிழ்ந்தனர். நகரத்தை விட்டு வெளியே வந்து ராமனைக் காண காத்திருந்தார்கள். சகஸ்ராக்ஷணான இந்திரன் போல ராமன் ரதத்தில் ஏறி நகரை நோக்கி வந்தான். பரதன் ரதக் கயிற்றை பிடித்துக் கொள்ள, சத்ருக்னன் குடையை ஏந்தி வந்தான். லக்ஷ்மணன் சாமரத்தை எடுத்து தலைக்கு மேல் வீசினான். ராக்ஷஸேந்திரனான விபீஷணன் மற்றொரு வெண் சாமரத்தை எடுத்துக் கொண்டு முன்னால் நின்றான். சந்திரனே புது உருவம் எடுத்து வந்தது போன்ற வெண் நிற சாமரம். ஆகாயத்தில் ரிஷிகளின் கூட்டமும், மருத் கணங்களும், தேவர்களும் துதி பாடியது மதுரமாக கேட்டது. சத்ருஞ்சயம் என்ற யானை மலை போல பெரிய யானை, இதன் மீது சுக்ரீவன் ஏறி அமர்ந்தான். வானரங்கள் புது வஸ்திரங்கள், ஆபரணங்களுக்கு ஏற்ப மனித உருவம் எடுத்துக் கொண்டு ஆயிரம் யானைகளில் ஏறி வந்தன. சங்க வாத்யமும், தூர்ய கோஷமும், துந்துபிகள் முழங்க, புருஷ வ்யாக்ரனான ராமன் வரிசையாக வீடுகள் மாலையாக அமைந்திருந்த வீதிகளில் வலம் வந்தான். எதிரில் ராகவன் வருவதை ஜனங்கள் கண்டனர். ரதத்தில் அதி ரதியாக தன் தேக காந்தியால் பிரகாசித்தபடி வருவதைக் கண்டனர். வாழ்த்துக்கள் சொல்லி ராமன் அவர்களுக்கு திரும்ப வாழ்த்து அல்லது நன்றி சொல்ல, சகோதரர்கள் சூழ, மகாத்மாவான ராமனை பின் தொடர்ந்து சென்றனர். மந்திரிகளும், ப்ராம்மணர்களும் மற்றும் ஊர் ஜனங்களும் தொடர, லக்ஷ்மீகரமாக, நக்ஷத்திரங்களுடன் சந்திரன் பிரகாசிப்பது போல பிரகாசித்தான். முன்னால் சென்ற வாத்யக்காரர்கள், துர்யம், லயம் என்றவை, ஸ்வஸ்திகம் இவற்றை ஏந்திச் சென்றவர்கள், சந்தோஷமாக வாசித்துக் கொண்டு செல்ல, மங்களகரமாக வந்தான். ராமனுக்கு சுக்ரீவனுடன் ஏற்பட்ட சக்யத்தையும், அனிலாத்மஜனான ஹனுமானிடம் ராமனுடைய ப்ரபாவத்தையும், வானரங்களின் அரிய செயல்களையும், ராக்ஷஸர்களின் பலத்தையும், விபீஷணனின் சம்யோகம்- (நன்மை பயக்கும் சந்திப்பு) , இவற்றை விவரித்தபடி சென்றனர். அக்ஷதை, ஜாதரூபம் என்ற பொன், பசுக்கள், கன்னிப் பெண்கள், ப்ராம்மணர்கள், கையில் மோதகம் வைத்துக் கொண்டு ஜனங்கள், ராமனின் முன்னால் நடந்தனர். ராம கதைகளை பேசியபடி ஆச்சர்யத்துடன் கேட்டபடி ஜனங்கள் நடந்தனர். ராமர் வாயாலேயே இவைகளைக் கேட்டபடி, வானரங்கள் புடை சூழ, மகிழ்ச்சி ஆரவாரம் செய்த ஜனங்களோடு ராமரும் நகருக்குள் பிரவேசித்தார். ஊர் ஜனங்கள் வீடுகள் தோறும் கொடி ஏற்றி வரவேற்றனர். இக்ஷ்வாகு வம்சத்தினர் வசித்து வந்த தன் தந்தையின் க்ருஹம் வந்து சேர்ந்தார்.
ராஜ குமாரன் ராமன், தர்மம் நிறைந்த பரதனைப் பார்த்துச் சொன்னார். தந்தையின் மாளிகைக்குள் வந்து விட்டோம். கௌசல்யா, சுமித்ரை இவர்களுடன் கைகேயியையும் வணங்கு, என்றார். இந்த சொல்லில் பொதிந்திருந்த பொருளை உணர்ந்து கொண்டான் பரதன். ராமர் மேலும் சொன்னார். ஸ்ரேஷ்டமான பவனம் எதுவோ, அசோக வனத்துடன் கூடியது, முத்துக்களும், வைடூரியங்களும் இழைத்துக் கட்டப் பட்டது, அதை சுக்ரீவனுக்கு கொடு. உடனே பரதன், சுக்ரீவனை கைகளைப் பிடித்து அழைத்துப் போய் அந்த பவனத்தில் இருக்கச் செய்தான். உடனே சத்ருக்னனின் கட்டளைப் படி, எண்ணெய் தடவி பள பளத்த கட்டில்களையும், உயர்ந்த விரிப்புகளையும் கொண்டு வந்து ஆட்கள் அதன் அறைகளில் நிரப்பினர். பரதன் சுக்ரீவனைப் பார்த்து, ராமனின் அபிஷேகத்திற்காக உன் தூதுவர்களை அனுப்பு. நான்கு சுவர்ண கலசங்களில் வானரேந்திரர்கள் சாகர ஜலத்தைக் கொண்டு வரச் சொல், என்றான். உடனே சுக்ரீவனும் ரத்ன மயமான குடங்களைக் கொடுத்து நான்கு சாகரத்திலிருந்தும் விடியுமுன் பூர்ண கும்பங்களோடு வந்து சேரும்படி சொல்லி அனுப்பினான். யானை போன்ற பெருத்த உடலுடைய சில வானரங்கள் ஆகாயத்தில் தாவி குதித்து கருடனுக்கு சமமான வேகத்தில் சென்றனர். ஜாம்பவானும், சுசேஷனும், வேக தர்சீ என்ற வானரமும், ருஷபனும் கலசங்களில் நீர் நிரப்பிக் கொண்டு வந்தனர். நூற்று ஐந்து (105) நதிகளின் ஜலத்தை குடங்களில் நிரப்பிக் கொண்டு வந்தன. கிழக்கு சமுத்திரத்திலிருந்து, ரத்ன மயமான குடத்தில் சுஷேணன் நீரை நிரப்பிக் கொண்டு வந்தான். ரிஷபன் தக்ஷிண திசையிலிருந்து வேகமாக சமுத்திர ஜலத்தைக் கொண்டு வந்தான். சிவப்பு சந்தன கிளைகளால் மறைத்து தங்க குடத்தில் கவயன், மேற்கு திசையிலிருந்து சமுத்திர ஜலத்தைக் கொண்டு வந்தான். இவனும் மாருதனுக்கு சமமான வேகம் உடையவனே. ரத்ன கும்பத்திலும் நீரைக் கொண்டு வந்தான். வடக்கு திசையிலிருந்து நளன், கருடன், வாயு இவர்களுக்கு போட்டியாக வேகம் எடுத்து சென்றது போல வேகமாக, சமுத்திர ஜலத்தைக் கொண்டு வந்தான். இவன் தர்மாத்மா, பல நல்லியல்புகள் உள்ளவன். இப்படி கொண்டு வந்து சேர்த்த ஜலத்தை பார்த்து சுக்ரீவன் மந்திரிகளுடன் இருந்த புரோஹிதரிடம் தெரிவித்தான்.
இதன் பின், வயது முதிர்ந்த பெரியவரான வசிஷ்டர் தலைமையில், ப்ராம்மணர்கள் ராமரை ரத்ன மயமான பீடத்தில், சீதையுடன் அமரச் செய்தனர். வசிஷ்டரும், வாம தேவரும், ஜாபாலியும், காஸ்யபரும், காத்யாயனரும், சுயக்ஞனும், கௌதமரும், விஜயனும், நரவ்யாக்ரமான ராமரை ப்ரஸன்னமான சுகந்தம் வீசும் நல்ல ஜலத்தால் அபிஷேகம் செய்து வைத்தார்கள். வசுக்கள் வாஸவனான இந்திரனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்தது போல செய்து வைத்தனர். ரித்விக்குகள், ப்ராம்மணர்கள், பின் கன்னிப் பெண்களும், மந்திரிகளும், அதன் பின் போர் வீரர்களும் அபிஷேகம் செய்வித்தனர். வேத மந்த்ரங்களோடு அபிஷேகம் செய்தனர். மகிழ்ச்சியுடன் செய்தனர். எல்லா விதமான ஔஷதி ரஸங்களும், திவ்யமானதுமான ஜலத்தால், தேவ லோகத்திலும், ஆகாயத்திலுமாக நின்ற படி, நான்கு லோக பாலர்கள் மற்ற தேவதைகளுடன் வந்து அபிஷேகம் செய்தனர். ப்ரும்மாவால் நிர்மாணிக்கப் பட்ட, ரத்னம் சோபையுடன் தெரிய இருந்த கிரீடம், முன்பு எதைக் கொண்டு மனு என்ற அரசனுக்கு குடி சூட்டினார்களோ, அதைக் கொண்டு, அதன் பின், அந்த வம்சத்தில் வரிசையாக முடி சூட்டிக்,கொண்டார்களோ அந்த அரசர்களின் கிரீடங்களைக் கொண்டு, அதன் பின், இந்த வைபவத்திற்காக ப்ரத்யேகமாக தயார் செய்யப் பட்டிருந்த, தங்கத்தால் செய்யப் பட்டு, மகா ரத்னங்கள் அலங்காரமாக செதுக்கப் பெற்று, ஒளி வீசிய ரத்ன மயமான பீடத்தில், முறைப்படி தயார் செய்து வைத்த கிரீடத்தையும் வசிஷ்டர் அணிவித்தார். ரித்விக்குகளைக் கொண்டு ஆபரணங்களை இதற்கு மேலும் அணிவித்தார். சுபமான வெண் கொற்றக் குடையை சத்ருக்னன் எடுத்துக் கொண்டான். வானர ராஜன் வெண்மையான வாலவ்யஜனம் எனும் சாமரத்தை எடுத்துக் கொண்டான். சந்திர சங்காசமான (சமமான) மற்றொரு சாமரத்தை விபீஷணன் ஏந்தி வீசினான். வாஸவனான இந்திரன் அனுப்பி வைத்த ஜ்வலிக்கும் மாலையை, நூறு தங்க புஷ்பங்களால் அலங்காரமாக கோக்கப் பட்டிருந்ததை, வாயுதேவன் கொண்டு வந்து ராகவனுக்கு கொடுத்தான். எல்லா ரத்னங்களும் இழைத்து, விசேஷமான மணிரத்னம் கோத்து செய்யப் பட்டிருந்த முக்தா ஹாரத்தையும் இந்திரன் சார்பில் நரேந்திரனுக்கு அணிவித்தான். தேவ கந்தர்வர்கள் பாடினார்கள். அப்ஸரகணங்கள் நடனமாடினர்.
தகுதி வாய்ந்த ராமனுக்கு அபிஷேகம் நடந்த பொழுது பூமித் தாய் தான்யம் நிரம்பி இருந்தாள். கனி மரங்கள் கனிகள் நிறைந்து விளங்கின. புஷ்பங்கள் வாசனை நிறைந்து காணப்பட்டன. ராகவனின் முடி சூட்டு வைபவத்தை ஒட்டி, ஆயிரம், நூறாயிரம் குதிரைகளும், பசுக்களும், கன்றுகளும் மேலும் நூற்றுக் கணக்கான காளைகளையும் ப்ராம்மணர்களுக்கு தானமாக கொடுத்தனர். முன்னூறு கோடி தங்க நாணயங்களும் தானமாக கொடுத்தார். பலவிதமான ஆபரணங்கள், வஸ்திரங்கள், விலையுயர்ந்த, சூரியனின் ஒளிக்கு சமமான மணிகள் கோத்து தங்கத்தில் செய்த மாலையை சுக்ரீவனுக்கு அணிவித்தார். மனிதருள் மானிக்கமாக போற்றப் பட்ட ராகவன், வைடூரிய மணிகளால் சித்தரிக்கப் பட்டு, சந்திர கிரணங்கள் போல பிரகாசித்த இரண்டு அங்கதங்களை வாலி புத்ரனான அங்கதனுக்கு கொடுத்தார். மணிகள் கோத்து உத்தமமாக இருந்த ஒரு முத்து மாலையை சீதையிடம் ராமர் கொடுத்தார். சந்திரனின் கிரணம் போல ஒளி வீசும் இதை மாசற்ற அழகிய வஸ்திரங்கள், சுபமான ஆபரணங்கள் இவற்றை வாயு புத்திரனுக்காக காத்திருந்து அவனிடம் கொடுத்தாள், சீதா. தன் கழுத்திலிருந்து ஹாரத்தை கழற்றி வானர வீரர்களையும், தன் கணவனையும் மாறி மாறி பார்த்தவள், யோஜனையுடன் நிற்பதைப் பார்த்து ஜனகாத்மஜாவிடம் ராமன் சொன்னார். சுப4கே3, ஹாரத்தை யாருக்குத் தர விரும்புகிறாயோ, கொடு. பா4மினீ, நீ யாரிடம் அதிக திருப்தியுடன் இருக்கிறாயோ, அவருக்கே கொடு என்று சொல்ல, தேஜஸ், தன்னம்பிக்கை, புகழ், தாக்ஷண்யம், சாமர்த்யம், வினயம், நியாயம், பௌருஷம், விக்ரமம், புத்தி இவை யாரிடம் நித்யம் விளங்குகிறதோ அந்த வாயு புத்திரனுக்கு முத்து மாலையை கரு விழியாளான வைதேஹி கொடுத்தாள். அந்த மாலையணிந்து ஹனுமான், விசேஷமாகத் தெரிந்தான். மலை மீது சந்திரனின் கிரணங்கள் வெண்மையாகப் படிந்து இருப்பது போல சோபித்தான். இதன் பின் த்விவித, மைந்தர்களுக்கும், நீலனுக்கும் பரந்தபனான ராமர், அவர்களின் எல்லா விதமான நல்ல குணங்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கினார். வானர முதியவர்கள் யாவரும், எல்லா வானர அரசர்களும், வஸ்திரங்களாலும், பூஷணங்களாலும் முறைப்படி பூஜிக்கப் பட்டனர், கௌரவிக்கப்பட்டனர். விபீஷணனும், சுக்ரீவனும், ஹனுமான், ஜாம்பவானும், மற்ற முக்கியமான வானர வீரர்களும் ராமனுடைய குறைவற்ற தெளிவான செயலால், முறைப்படி கௌரவிக்கப் பட்டனர். அவரவர்கள் விரும்பியபடி ரத்னங்களோ, மற்ற பொருட்களோ, கிடைக்கப் பெற்று மகிச்சியுடன் நிறைந்த செல்வந்தர்களாகவே அனைவரும் திரும்பிச் சென்றனர். மகாத்மாவான ராஜா ராமனை வணங்கி விடை பெற்று கிஷ்கிந்தை சென்றனர். வானரஸ்ரேஷ்டனான சுக்ரீவனும், ராமனின் அபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டு, முறைபடி கௌரவிக்கப் பட்டவனாக விடை பெற்று கிஷ்கிந்தை சென்றான். விபீஷணனும் தன்னுடன் வந்த ராக்ஷஸ வீரர்களுடன் விடை பெற வந்தான். அவனுக்கு குலதனம் கிடைத்தது. குலதனம்-பூஜா விக்ரஹம். (ரங்கநாதர் என்பது வழக்கு) அதைப் பெற்றுக் கொண்டு லங்கையை நோக்கி விபீஷணன் புறப்பட்டான். ராஜ்யம் முழுவதுமாக பரிபாலித்துக் கொண்டு, பெரும் புகழுடன், எதிரிகள் யாரும் இன்றி மிகவும் சந்தோஷமாக இருந்து வந்தான் ராகவன். லக்ஷ்மணனை அழைத்து தன்னுடன் சேர்ந்து ராஜ்ய நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ள பணித்தார். தர்மம் அறிந்தவன் நீ, நம் முன்னோர்கள் ஆண்ட ராஜ்யம் இது, நீயும் எனக்கு சமமாக தந்தையால் வளர்க்கப் பட்டவன், யுவ ராஜாவாக முடி சூட்டிக் கொண்டு எனக்குத் துணையாக துரம் (துரம்-நுகத்தடி-ராஜ்ய பாரம்) -இதை தாங்க வா என்றார். பலவிதமாக வேண்டியும் லக்ஷ்மணன் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து விடவே, பரதனை யுவ ராஜாவாக நியமித்தார்.
பௌண்டரீக அஸ்வமேத யாகங்கள் செய்து வாஜபேயம் எனும் யாகத்தையும் அடிக்கடி செய்து பார்த்திவ குமாரன் இன்னும் பல யாகங்களையும் செய்தான். ராஜ்யத்தை அடைந்து பத்தாயிரம் வருஷங்கள் நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்து புகழ் பெற்றான். முழங்கால் வரை நீண்ட கைகளும் (நீள் தடக் கைகளும்) உயர்ந்த தோளும், ப்ரதாபமும் உடையவனாக, பலவிதமான யாகங்களை, தாயாதிகள், பந்துக்கள், நண்பர்களுடன் சேர்ந்து நடத்தினார். ராமராஜ்யத்தில் யாரும், கணவனை இழந்து விதவை கோலம் பூண நேரவில்லை. பாம்பு கடிக்குமே என்ற பயமோ, வியாதி வருத்துமே என்ற கவலையோ இருக்கவில்லை. ராமன் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் நிம்மதியாக கஷ்டங்கள் எதுவும் இன்றி வாழ்ந்தனர். திருடர்கள் இல்லாமல் உலகம் கவலையின்றி இருந்தது. மற்றவர்கள் பொருளை யாரும் தொடக் கூட மாட்டார்கள். முதியவர், பாலர்களுக்கு அந்திம சம்ஸ்காரங்களை செய்ய நேரவே இல்லை. எங்கும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. எங்கும் தர்மமே தலை தூக்கி நின்றது. ராமனையே அனுசரித்து இருந்தனர். யாரும், தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. அடித்துக் கொள்வதில்லை. ஆயிரம் வருஷங்கள் ஆயிரக் கணக்கான புத்திரர்களோடு வாழ்ந்தனர். வியாதியின்றி, வருத்தம் இன்றி, ராமன் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் சுகமாக இருந்தனர். ராமா, ராம, ராம என்றே ப்ரஜைகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், கதைகள் ராமனைச் சுற்றியே, ராமனைப் பற்றியே பேசினர். ராம மயமாகவே உலகம் விளங்கியது. ராமன் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்களின் மனதில் ராமரே நிறைந்திருந்தார். மரங்கள் நித்யம் பூத்துக் குலுங்கின. பழங்கள் பழுத்துத் தொங்கின. கிளைகள் படர்ந்து விஸ்தாரமாக நின்றன. பருவ காலங்களில் விடாது மழை பெய்தது. காற்று இதமாக வீசியது. ப்ராம்மணர்களோ, க்ஷத்திரியர்களோ, வைஸ்யர்களோ, சூத்ரர்களோ, யாரானாலும் லோபம் எனும் கெட்ட குணம் இன்றி இருந்தனர். தங்கள் தங்கள் கடமைகளை ஈ.டுபாட்டுடன் செய்தனர். தங்கள் செயல்களிலேயே திருப்தியுடன் இருந்தனர். ப்ரஜைகள் தர்மத்தில் நம்பிக்கையுடன் அனுசரித்தும் வந்தனர். ராமன் ராஜ்ய பாலனம் செய்த பொழுது, ப்ரஜைகள் பொய் பேச மாட்டார்கள். எங்கும் சத்யமே வழக்கில் இருந்தது. எல்லோருமே லக்ஷணம், அழகு பரி பூர்ணமாக விளங்க, தர்ம பராயணர்களாக இருந்தனர். பத்தாயிரம் வருஷங்கள், மேலும் பத்து நூறு வருஷங்கள், சகோதரர்களுடன் ஸ்ரீமானான ராமன் ராஜ்யத்தை பரிபாலித்து வந்தார்.
ஆதி காவ்யமான இது மகானான வால்மீகியினால் இயற்றப் பட்டது. ஆர்ஷம் எனப்படும் – (பெரியோரின், ஆன்றோரின் வாக்கு என்பது பொருள்.) த4ன்யமானது, பாவனமானது, புகழைத் தரக் கூடியது. ஆயுளை வளர்க்கும். அரசர்களுக்கு வெற்றியைத் தரும். இதை யார் படிக்கிறார்களோ, உலகில் கேட்கிறார்களோ, அந்த மனிதன் தன் பாபங்களிலிருந்து விடுபடுவான். புத்ர காமனாக இருப்பவன் புத்திரனை அடைவான். செல்வத்தை விரும்புபவன் செல்வங்களை அடைவான். ராமாபிஷேக வைபவத்தை கேட்பவர்கள் பெரும் நற்பயனை அடைவார்கள். ராஜாவாக இருப்பவன் பூமியை ஜயிப்பான். எதிரிகள் தொல்லையின்றி ஆளுவான். ராகவனால் மாதா கௌசல்யா, சுமித்ரா லக்ஷ்மண, சத்ருக்னனோடு, பரதனுடன் கைகேயி இருந்தது போல தாய்மார்கள் ஜீவ புத்திரர்களாக விளங்குவர். புத்ர பௌத்ரர்களுடன் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பர். ராமாயணம் கேட்டு தீர்கமான ஆயுளைப் பெறுவர். ராமனுடைய விஜயத்தையும், அவனுடைய தெளிவான மற்ற செயல்களையும் யார் கேட்கிறார்களோ, வால்மீகி முனிவரால் இயற்றப் பட்ட இந்த காவ்யத்தை கேட்கிறார்களோ, அவர்கள் காரியத்தில் கருத்துடையவர்களாக, கோபத்தை வென்றவர்களாக, கோட்டைகளை கடந்து செல்லும் மா வீரர்களாக இருப்பர். வெகு தூரம் பயணம் செய்பவர்கள் பிரிவின் முடிவில் இதனைக் கேட்டு, பந்துக்களோடு இணைவர். ராகவனிடம் பிரார்த்திக்கும், வேண்டும் வரங்கள் அனைத்தையும் கிடைக்கப் பெறுவர். இதைக் கேட்பதால், தேவர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள். இடையூறுகள் நீங்கும். வீடுகளில் தோன்றும் கஷ்டங்கள் விலகும். பூமியை அரசன் வென்று விஜயனாக இருப்பான். வெளி நாடு சென்றவன் சௌக்யமாக திரும்பி வருவான். இளம் பெண்கள் கேட்டு உத்தமமான புத்திரர்களைப் பெறுவார்கள். இந்த புராதனமான இதிகாசத்தை படித்தும், பூஜித்தும் வழி படுபவர்கள் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுவர். தீர்கமான ஆயுளைப் பெறுவார்கள். தலை வணங்கி வினயத்துடன் ப்ராம்மணர்கள் படிக்க, க்ஷத்திரியர்கள் கேட்கலாம். ஐஸ்வர்யமும், புத்ர லாபமும் உண்டாகும், சந்தேகமேயில்லை. ராமாயணம் முழுவதுமாக கேட்பவர்களும், சதா படிப்பவர்களும் எல்லா நன்மைகளையும் அடைவர் என்பதில் சந்தேகமேயில்லை. அது தவிர, ராமரும் இதனால் ப்ரீதியடைகிறார். அவர் தான் சனாதனமான விஷ்ணு பகவான். ஆதி தேவன். மஹாபாஹுவான ஹரி நாராயணன் என்ற பிரபு. ரகு ஸ்ரேஷ்டனாக வந்த ராமன் தான் சாக்ஷாத் நாராயணன். சேஷன் எனும் ஆதி சேஷன் தான் லக்ஷ்மணன் என்று அழைக்கப் படுகிறார்.
குடும்ப வ்ருத்தி, தன தான்ய வ்ருத்தி, உத்தமமான ஸ்த்ரீகள், உயர்ந்த சுகம், இவை சுபமான இந்த காவ்யத்தைக் கேட்பதன் மூலம் பெறுவதோடு, பெரும் செல்வத்தையும் அடைகிறார்கள். உலகில் பொருள் நிறைந்து, ஆரோக்யம் பெற்று வாழ்வர். இந்த ராமனுடைய காவ்யம், ஆயுளைத் தரக் கூடியது, ஆரோக்யமான வாழ்வைத் தரும். புகழைத் தரும்.. சகோதரனைக் கொடுக்கும். நல்ல சகோதரர்கள் அமைவார்கள். சுபமானது, புத்தியை தரக் கூடியது. இதை நியமமாக நல்லவர்கள் சொல்லக் கேட்க வேண்டும். சொல் வன்மையும், நாவளமும் அளிக்க வல்லது. மேன் மேலும் மேன்மையடைய விரும்புபவர்கள் இதன் மூலம் தங்கள் எண்ணம் நிறைவேறப் பெறுவார்கள்.
இது தான் முன் நடந்த கதை.. உங்கள் அனைவருக்கும் நன்மையுண்டாகட்டும். பத்ரமஸ்து. விஸ்தாரமாக இதை விளக்கிச் சொல்லுங்கள். விஷ்ணுவின் பலம் பெருகட்டும். தேவர்களும் இதை ஏற்றுக் கொள்வதாலும், கேட்பதாலும் திருப்தியடைகிறார்கள். ராமாயண ஸ்ரவனத்தால், பித்ருக்கள் திருப்தியடைகின்றனர். ரிஷி தானே இணைத்து செய்த இந்த மகா காவ்யத்தை பக்தியுடன் ராம கதையை யார் எழுதுகிறார்களோ, அவர்களும் நற்கதியடைவார்கள். அவர்களும் த்ரிவிஷ்டபம் எனும் தேவலோகத்தில் வாசம் செய்யும் பெருமையை அடைவார்கள்.
(இது வரை வால்மீகி முனிவர் எழுதிய ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடம் தொகுப்பில், யுத்த காண்டத்தில், ராமபட்டாபிஷேகோ என்ற நூற்று முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
(இத்துடன் வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டம் நிறைவுற்றது.)
ஸ்ரீ ராம் ஜய ராம், ஜய ஜய ராம் – ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்
ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் – ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்
ஆஞ்சனேய ஸ்வாமிக்கு ஜெய்
அத்தியாயம் 118 (525) சீதா ப்ரத்யாதே3ச: (சீதையை ஏற்க மறுத்து திருப்பி அனுப்புதல்)
அருகில் வந்து நின்ற சீதையை, லஜ்ஜையினால் உடல் குறுக நின்றவளைக் கூர்ந்து பார்த்து விட்டு, ராமர் தன் மனதில் உள்ளதைச் சொல்ல ஆரம்பித்தார். ப4த்3ரே இதோ இருக்கும் நீ, என் வீர்யத்தால், பலத்தால் ஜயிக்கப் பட்டாய். சத்ருவை போர் முனையில் சந்தித்து, வெற்றி கண்ட பின், நீ விடுவிக்கப் பட்டிருக்கிறாய். என் பௌருஷத்தால் சாதிக்க வேண்டியதை நான் சாதித்தேன். கோபத்தில் எல்லையில் இருந்தேன். இதனால் எனக்கு உண்டான அவமானம் துடைக்கப் பட்டு விட்டது. என் சத்ருவையும், எனக்கு ஏற்பட்ட அவமானம் இரண்டையும் ஒரே சமயத்தில் நான் பிடுங்கித் தூர எறிந்து விட்டேன். இன்று என் பௌருஷத்தை உலகுக்கு காட்டி நிமிர்ந்து நிற்கிறேன். என் சிரமங்களுக்கு பலனும் கிடைத்து விட்டது. என் பிரதிக்ஞையை நிறைவேற்றி என் மனதுள் பெருமிதம் பொங்குகிறது. சஞ்சல புத்தியுள்ள ராக்ஷஸன், என்னை விட்டுப் பிரித்து உன்னை அழைத்துச் சென்றானே, இது விதியின் விளையாட்டே. இந்த விதியையும், மனிதனாக நான் ஜயித்துக் காட்டி விட்டேன். என் தேஜஸால் அழிக்க முடியாத அவமானம் இது. சாதாரணமான அவமானமா? யார் தான் இதை சாதித்திருக்க முடியும்? அல்ப தேஜஸ் உடையவனாக இருந்தால் என்ன செய்திருப்பான்? இந்த அளவு புருஷார்த்தம் வேறு யாரிடம் இருக்கிறது? சமுத்திரத்தைக் கடந்து வந்ததோ, லங்கையை முற்றுகையிட்டதோ, என்னைத் தவிர வேறு யாரால் செய்திருக்க முடியும்? ஹனுமானுடைய அரிய சாகஸமும் பலனுடையதாக ஆயிற்று. சுக்ரீவனும், சைன்யத்தோடு வந்து, யுத்தத்தில் தங்கள் விக்ரமத்தைக் காட்டியும், எது நன்மை தரும் என்று யோசித்து முடிவு செய்து, செயல் படுத்தி, அவனும், அவன் கூட்டதினரும் இயன்ற வரை பாடு பட்டது நல்ல பலன் அளித்தது. அவன் எடுத்துக் கொண்ட சிரமம் வீண் போகவில்லை, இவ்வாறாக பேசிக் கொண்டே போகும் ராமனைப் பார்த்து செய்வதறியாது, குட்டி மான் போல கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருந்த சீதையைப் பார்த்து ராமனின் கோபம் அதிகமாயிற்று. நெய் திடுமென நிறைய வார்க்கப் பட்டவுடன், யாகத்தீ குபீரென்று கொழுந்து விட்டெரிவது போல சினத்தின் ஜ்வாலை வீசியது. குறுக்காக பார்த்துக் கொண்டு, புருவத்தை நெரித்தவாறு, வானர, ராக்ஷஸர்கள் மத்தியில் சீதையைப் பார்த்து கடுமையாக பேசலானார். மனிதன் தன் கடமையை புறக்கணிக்க முடியாது. தாங்க முடியாத அவமானத்தை துடைத்து எறிய வேண்டியது என் கடமையாயிற்று. என் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, சத்ருவை ஜயித்து உன்னை மீட்டேன். அகஸ்திய ரிஷி,எதிர்த்து நிற்க முடியாத தக்ஷிண திசையை தவத்தாலும், நிரந்தரமான முயற்சியாலும் வெற்றி கொண்டதைப் போல, உன்னை நான் ஜயித்தேன். இதையும் தெரிந்து கொள். இந்த ரண பரிஸ்ரமம் என் நண்பர்களின் உதவியால் செய்து முடிக்க முடிந்தது. உனக்காக அல்ல. என் கௌரவத்தை, சரித்திரத்தை காப்பாற்றிக் கொள்ள என் மேல் வந்து விழுந்த அபவாதத்தை நீக்க நான் எடுத்துக் கொண்ட முயற்சி தான் இது. புகழ் பெற்ற என் வம்சத்தில் விழுந்த களங்கம் துடைக்கப் பட்டது. உன் சரித்திரத்தில் இப்பொழுது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நீ என் முன் நிற்கிறாயே, கண் வலி உடையவனுக்கு தீபம் போல எனக்கு உன்னைக் காணவே பிடிக்கவில்லை. எனக்கு பிரதிகூலமாக இருக்கிறாய். அதனால் போ. நான் அனுமதி அளிக்கிறேன். ஜனகன் மகளே, உன் இஷ்டம் போல போ. இதோ பத்து திக்குகளில் எங்கு வேண்டுமானாலும் போ. உன்னால் எனக்கு ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லை. உத்தமமான குலத்தில் பிறந்த எந்த புருஷன், பிறர் வீட்டில் வசித்த ஸ்த்ரீயை ஏற்றுக் கொள்வான்? தேஜஸ் உடையவனாக இருந்தால். கோபம் நிறைந்த ராவணன் மடியில் இருந்து விழுந்தவள் நீ, அந்த துஷ்டனால் கெட்ட எண்ணத்தோடு பார்க்கப் பட்டவள் நீ, உன்னை எப்படி ஏற்றுக் கொள்வான்? நான் நல்ல குலத்தில் பிறந்தவன். உன்னை எப்படி ஏற்றுக் கொள்வேன்? என் புகழைக் காத்துக் கொள்ளவே உன்னை மீட்டேன். எனக்கு இப்பொழுது உன்னிடத்தில் எந்த வித ஈ.டுபாடும் இல்லை. நீ போகலாம். இங்கிருந்து உன் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாம். நான் யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்தேன். ப4த்3fரே, அபலையான ஸ்த்ரீ என்பதால் அடைக்கலம் தேடி, நீ லக்ஷ்மணனிடமோ, பரதனிடமோ, யாரிடம் வேண்டுமோ போய் இரு. சுகமாக இரு. சுக்ரீவன் வானரேந்திரன் இதோ நிற்கிறான். ராக்ஷஸ ராஜன் விபீஷணனிடம் சௌகர்யமாக இருக்கலாம். யாரிடம் வேண்டுமானாலும் உன் மனதை செலுத்தி எப்படி சௌகர்யமோ செய்து கொள். மனோரம்யமான உன் திவ்ய ரூபத்தைப் பார்த்தும், தன் க்ருஹத்தில் கொண்டு வந்து வைத்த பின்னும் ராவணன் தான் எவ்வளவு நாள் பொறுத்திருப்பான்.
மைதிலிஸ்ரீ தன் கணவன் பிரியமாக பேசப் போகிறான் என்று நினைத்து வந்தவள், இப்படி ஒரு கடுமையான சொல்லைக் கேட்டு கண்களில் நீர் ஆறாக பெருக, க3ஜேந்திரன் கையில் அகப்பட்ட கொடி போல நடுங்கினாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சீதா ப்ரத்யாதே3சோ என்ற நூற்று பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 119 (526) ஹுதாசன ப்ரவேச: (அக்னி பிரவேசம்)
மயிர்கூச்செரியும் வண்ணம் கொடுமையான இந்த வார்த்தைகளைக் கேட்ட மைதிலி, ராகவனின் முகத்திலிருந்து வெளிப்பட்ட ஆத்திரத்தையும் கண்டு மிகவும் வேதனையை அடைந்தாள். கூட்டத்தின் நடுவில் நின்ற மைதிலி, கணவனின் கடும் சொல்லால், வெட்கம் பிடுங்கித் தின்ன, வாட்டமடைந்தாள். தன் உடலுக்குள்ளேயே நுழைந்து விடுவது போல அவமானம் அவளை வருத்த, ஜனகாத்மஜா, வாக்கு அம்புகளால் மிக அதிகமாக அடிபட்டவளாக, பெரிதும் வருந்தி அழுதாள். பின் தன் கைகளால் கண்ணீரைத் துடைத்தபடி, மெதுவாக குரல் தழ தழக்க பதில் கொடுத்தாள்.
ஏன் என்னிடம் இப்படி தகாத வார்த்தைகளை, செவிக்கு பயங்கரமான கடும் சொற்களை சொல்லி வதைக்கிறாய். வீரனே, ப்ராக்ருதமான கிராமத்து ஆண் மகன், ப்ராக்ருத, கிராமத்து ஸ்த்ரீயிடம் பேசுவது போல பேசினாய். நீ நினைப்பது போல அல்ல நான், தெரிந்து கொள். நீ சொல்லும் சரித்திரத்தில், என் நடத்தையின் பேரில் ஆணையாக சொல்கிறேன். ஏதோ தனிப்பட்ட சில ஸ்திரீகளின் துர்நடத்தையை மனதில் கொண்டு ஸ்திரீ ஜாதியையே தூஷிக்கிறாயே. நீ என்னை முற்றிலும் அறிந்தவனாக இருக்கும் பொழுது இந்த சந்தேகம் எப்படி வரும்? அதை இப்பொழுதாவது விடு. ப்ரபோ4 (ராவண) உடல் ஸ்பரிசம் என் மேல் பட்டது என்றால் அச்சமயம் நான் என் வசத்தில் இல்லை. வேண்டும் என்று விரும்பிச் செய்த செயலா அது? விதி தான் இதற்கு காரணம். காலத்தின் குற்றம். என் அதீனத்தில் உள்ள என் மனம் உன்னையே நாடுகிறது. உன்னையே நினைத்து வந்திருக்கிறது. பராதீனமான என் சரீரத்தில் எனக்கு என்ன அதிகாரம் இருந்தது. நீயும் இல்லாமல் தனியாக இருந்தேன். மானத, (எனக்கு சம்மானமும் கௌரவமும் தந்தவனே) கூடவே வளர்ந்து உணர்ந்து கொண்ட பாவங்களாலும் (உணர்வுகளாலும்), இணைந்தே இருந்ததாலும் என்னை புரிந்து கொண்டது இவ்வளவு தான் என்றால், நான் சாஸ்வதமாக அழிந்ததாகவே கொள்ளலாம். ஹனுமான் என்ற வீரன் என்னைத் தேடி உன்னால் அனுப்பட்டு வந்த பொழுதே, லங்கையில் இருந்த என்னை ஏன் கை கழுவி விட வில்லை. வானர வீரனின் முன்னால் இந்த வாக்யத்தை கேட்டவுடனே நானே உயிரை விட்டிருப்பேன். இந்த நாள் வரை நான் சந்தேகமும் பயமும் அலைக்கழிக்க வாழ்ந்திருக்கவே மாட்டேன். நண்பர்கள் எல்லோருமாக சேர்ந்து உனக்கு உதவி செய்தது பலனளிக்காமல் போகாது. நரசார்தூலா| கோபத்தை மட்டும் மனதில் கொண்டு, சாதாரண மனிதனாக, ஸ்திரீத்வம் என்பதையே அவமதித்து இருக்கிறாய். ஜனகன் என்ற அரசனை மையமாகக் கொண்டு, வசுதா தலத்திலிருந்து உதித்தவள் நான். என் நடத்தையைப் பற்றி நீ நன்றாக அறிந்திருந்தும், அவமதித்திருக்கிறாய். பாலனாக என்னை கைப் பற்றி மணந்து கொண்டது உனக்கு பொருட்டாக இல்லை. நான் உன்னிடம் கொண்டிருந்த பக்தியும், என் சீலமும் அனைத்தையும் பின் தள்ளி விட்டாய். என்று சொல்லியபடி, கண்களில் நீர் பார்வையை மறைக்க, லக்ஷ்மணனைப் பார்த்து சொன்னாள். சௌமித்ரே| எனக்கு சிதையை தயார் செய். இந்த கஷ்டத்துக்கு அது தான் மருந்து. பொய்யாக அபவாதத்தை சுமந்து கொண்டு நான் உயிர் வாழ மாட்டேன். ஜன கூட்டத்தின் மத்தியில் என்னிடம் அப்ரியமாக பேசும் இந்த கணவனுடன், இவனால் கை விடப்பட்டு வாழ, எனக்கு பொறுமை இல்லை. அக்னி பிரவேசம் செய்து வாழ்வை முடித்துக் கொள்வேன். இவ்வாறு வைதேஹி சொல்லவும், வெகுண்டெழுந்தவன், ராகவன் முகத்தை ஏறிட்டு நோக்கினான். ராமருடைய நிலையிலிருந்து அவனுக்கு இது சம்மதமே என்று அறிந்து கொண்டு சௌமித்ரி, சீதைக்கு சிதையை தயார் செய்தான். ராமருக்கும் இது உகந்ததாகவே இருந்தது. தலை குனிந்தபடி ராமரை பிரதக்ஷிணம் செய்து வைதேஹி கொழுந்து விட்டெரியும் அக்னியை நோக்கி வந்தாள். தேவதைகளை வணங்கி, மைதிலி ப்ராம்மணர்களையும் வணங்கி, கை கூப்பி வணங்கியபடி அக்னியின் அருகில் நின்றபடி சபதமிடுவது போல சொன்னாள். என் மனம் எப்பொழுதும் ராகவனை விட்டு விலகாது இருந்திருந்தால், உலகுக்கெல்லாம் சாக்ஷியான பாவகனான அக்னி என்னை காக்கட்டும். என்னை சுத்தமான நடத்தையுள்ளவளாக ராமன் உணர்ந்தால், உலகுக்கெல்லாம் சாக்ஷியான பாவகனான அக்னி என்னை காக்கட்டும். செயலால், மனதால், சொல்லால் நான் என் கடமையிலிருந்து மீறி, ராகவனைத் தவிர, சர்வ தர்மங்களை அறிந்தவனான ராகவனைத் தவிர நான் நினைக்காமல் இருந்தது உண்மையானால், சர்வ லோக ரக்ஷகனான பாவகன், அக்னி என்னை பாதுகாக்கட்டும். என்னை நன்னடத்தையுள்ளவளாக, ஆதித்யனும், பகவான் வாயுவும், திசைகளும், சந்திரனும், தினமும், சந்த்யா காலமும், இரவும், பூமியும், மற்றும் உள்ள பலரும் அறிந்திருந்தால், உலக ரக்ஷகனான பாவகன், அக்னி என்னைக் காக்கட்டும். இவ்வாறு சொல்லியபடி, வைதேஹி அக்னியை வலம் வந்து கொழுந்து விட்டெரியும் அக்னியில் சற்றும் தன் உள்ளத்தில் களங்கம் இல்லாதவளாக நுழைந்தாள். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, புடமிட்ட புது தங்கம் போன்று, புடமிட்ட தங்க ஆபரணங்களை அணிந்தவள் ஜ்வாலையினுள் குதித்து விட்டாள்.
அக்னியில் விழும் அவளை புண்யமான ஆஜ்யம், ஆஹுதியாக யாகாக்னியில் விழுவது போல மூவுலகத்தவரும் கண்டனர். ஸ்திரீகள் கூச்சலிட்டனர். அவளை ஹவ்யத்தை ஏந்திச் செல்வதால் ஹவ்ய வாஹனன் என்று பெயர் பெற்ற அக்னி விழுங்குவதைக் கண்டனர். மந்திரங்களால் சம்ஸ்காரங்கள் செய்யப் பெற்று வஸோர்தாரா, என்று யாக முடிவில் செய்யப் படும் இடைவிடாது தாரையாக வர்ஷிக்கப் படும் ஆஹுதி போல, யாகாக்னியில் விழுவதைப் போல கந்தர்வ தானவர்களும், மூன்று உலகத்தாரும் கண்டனர். ஸ்வர்கத்திலிருந்து ஏதோ தேவதை சாப வசத்தால் விழுவது போல அக்னியில் பிரவேசித்தவளைக் கண்டு ஹா ஹா என்று பெரும் சப்தம் உண்டாயிற்று. ராக்ஷஸர்களும், வானரங்களும், அத்புதமான இந்த காட்சியைக் கண்டு திகைத்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஹுதாசன ப்ரவேசோ என்ற நூற்று பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 120 (527) ப்ரும்ம க்ருத ராம ஸ்தவ| (ப்ரும்மா செய்த ராம துதி)
கண் முன்னால் நடந்ததைக் கண்டும், சீதையின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டும் இருந்த ராமரின் மனம் வருந்தியது. முஹுர்த்த நேரம் கண்களில் நீர் மல்க, பேசாது நின்றான். பிறகு வைஸ்ரவனனான ராஜா, யமன், எதிரிகளை அடக்க வல்ல சஹஸ்ராக்ஷன், மகேந்திரன், வருணன், மூன்று நயனங்களைக் கொண்ட பரமேஸ்வரன், ஸ்ரீமான் மகா தேவன், வ்ருஷத்வஜன் என்று புகழ் பெற்ற சாக்ஷாத் பரமேஸ்வரன், சர்வ லோகத்தையும் ஸ்ருஷ்டி செய்யும் ப்ரும்ம ஞானத்தில் சிறந்த ப்ரும்மா, இவர்கள் எல்லோருமாக சூரியனைப் போல பிரகாசிக்கும் தங்கள் விமானங்களில் ஏறி லங்கா நகரம் வந்து ராமரை சந்தித்தனர். ராகவனின் கூப்பிய கரத்தை பிடித்தபடி சொன்னார்கள். ஸ்ரேஷ்டமான ஞானிகளிலும் சிறந்த ஞானி, உலகையே ஸ்ருஷ்டி செய்ய வல்லவன், ஏன் இப்படி அக்னியில் விழும் சீதையைத் தடுக்காமல் வாளா இருக்கிறாய்? தேவ கணங்களுக்குள் ஸ்ரேஷ்டமான தன் ஆத்மாவை ஏன் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறாய். முன் வசுக்களுள் பிரஜாபதியாக இருந்தாய். மூன்று உலகுக்கும் ஆதி கர்த்தாவான ஸ்வயம் பிரபுவானவன். எட்டு விதமாக விளங்கும் ருத்ரன். சாத்யர்களுக்குள் பஞ்சமன் (ஐந்தாவது). அஸ்வினி குமாரர்கள் உன் காதுகள். சந்த்ர சூர்யர்கள் கண்கள், உலகில் ஆதியிலும் அந்தத்திலும் நீ தான் இருக்கிறாய். பரந்தபனே, சாதாரண மனிதன் போல, வைதேஹியை அலட்சியப் படுத்துகிறாயே. இவ்வாறு லோக பாலர்கள் சொல்லவும், உலகுக்கு நாயகனான ராகவன், மூவுலக ஸ்ரேஷ்டர்களையும் பார்த்து ராமர் சொன்னார். ஆத்மானம் மானுஷம் மன்யே, ராமம் தசரதாத்மஜம். – நான் என்னை தசரதன் மகனாக, ராமனாக, மனிதனாகத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? பகவன் | சொல்லுங்கள் என்று கேட்கும் காகுத்ஸனைப் பார்த்து ப்ரும்மா விவரிக்கலானார். சத்ய பராக்ரமனே| கேள். நான் சொல்கிறேன். தாங்கள் தான் நாராயணன் என்ற தேவ தேவன். ஸ்ரீமான். சக்ரத்தை ஆயுதமாக கொண்டு விபு: என்ற ப்ரபு. ஒரு கொம்புடன் வராகமாக வந்தீர்கள். நடந்ததையும் நடக்கப் போவதையும் அறிந்தவர்கள். பங்காளிகளை ஜயித்தவன். அக்ஷரமான-அழிவில்லாத ப்ரும்ம லோகம், சத்ய லோகம், அதன் ஆதியிலும், மத்தியிலும், முடிவிலும் நீங்களே. அழிவில்லாத ப்ரும்ம ஸ்வரூபம்
நீங்களே. உலகுக்கெல்லாம் அப்பாற்பட்ட பரம் பொருள் நீங்களே தான். விஷ்வக்சேனராக, சதுர்முகமாக வந்ததும் நீங்களே. சார்ங்கதன்வீ, ஹ்ருஷீகேசன் என்ற பெயர்களும் உடையவன். புருஷோத்தமனான புருஷன். எப்பொழுதும் வெற்றியே என்று வாளை ஏந்திய, தோல்வியே அறியாத விஷ்ணு, க்ருஷ்ணனும் நீங்களே. ஏராளமான பலம் உடைய சேனானியும் நீங்களே. க்ராமணியும் நீங்களே. நீங்களே புத்தி, சத்வம், க்ஷமா, த3மம், ப்ரபாவம், அவ்யயம் எனும் குணங்களாக விளங்குபவன். உபேந்திரனும் நீங்களே. மதுசூதனனும் நீங்களே. இந்திரனின் கர்மாவை செய்யும் மகேந்திரனும், நீங்களே. பத்மனாபனும் நீங்களே. யுத்த முடிவை நிர்ணயிப்பவனும் நீங்களே. சரணமடைந்தவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதில் உங்களுக்கு இணை இல்லை என்று மகரிஷிகள் சொல்வர். ஆயிரம் கொம்புகளையுடைய வேதத்தின் ஆத்மா. நூறு நாக்குகளையுடைய பெரிய ரிஷபம். நீங்கள் தான் மூவுலகுக்கும் ஆதி கர்த்தா. ஸ்வயம்ப்ரபு நீங்களே. சித்தர்களுக்கும் தபஸ்விகளுக்கும் ஆசிரயம் அளிப்பவன் நீங்களே. முன் தோன்றியவன் நீங்களே. நீங்கள் தான் யக்ஞம். நீங்கள் வஷட்காரனானவன். ஓங்காரன் நீங்களே. பரந்தபன் என்றும் சொல்லப்படுபவன் நீங்களே. உங்களுடைய ப்ரபாவத்தையோ, நீங்கள் தோன்றுவதையும், மறைவதையும் யாராலும் நிர்ணயிக்க முடியாது. நீங்கள் யார் என்பதையும் யாரும் அறிந்திலர். எல்லா ஜீவ ராசிகளிலும், ப்ராம்மணர்களில், பசுக்களில், எல்லா திக்குகளிலும், ஆகாயத்தில், பர்வதங்களில், பசுக்களில், வனங்களில் அந்தர்யாமியாக இருக்கும் ஆயிரம் சரணங்களுடைய ஸ்ரீமான். ஆயிரம் தலையுடையவன். ஆயிரம் கண்களுடையவன் நீயே. நீ தான் ஜீவராசிகளும், மலைகளும் உடைய பூமியைத் தாங்குகிறாய். பூமியின் அடியில் ஜலத்தில் பெரும் நாகமாக காணப்படுகிறாய். மூன்று உலகுகளையும் தாங்கிக் கொண்டு, தேவ, கந்தர்வ, தானவர்களையும் ஆள்பவன் நீயே. நான் தான் (ப்ரும்மா) உன் ஹ்ருதயம். உன் நாக்கில் தேவி சரஸ்வதி இருக்கிறாள். உன் உடல் ரோமங்களில் தேவர்கள் வசிக்கிறார்கள். ப்ரபோ இவைகளை ப்ரும்மா நிர்மாணித்தார். நீ கண்களை மூடினால் அது இரவு. கண் திறந்தால் பகல். உன் ஸம்ஸ்காரத்தினால் வேதங்கள் தோன்றின. நீயில்லாமல் எதுவுமே இல்லை. இந்த உலகம் முழுவதும் உன் சரீரம். உன் ஸ்திரமான தன்மை பூமி, வசுதாதலம், அக்னி தான் உன் கோபம். ப்ரஸன்னமாக இருக்கும் நிலை தான் சந்திரன். ஸ்ரீ வத்ஸம் என்ற அடையாளம் கொண்டவன் நீ. மூவுலகையும் கடந்து நின்ற வாமனன் நீயே. முன்பொரு சமயம் மூவடிகளில் உன் விக்ரமத்தால் பூமியை அளந்தாய். பலி என்ற மகாசுரனை அடக்கி, மகேந்திரனை ராஜாவாக செய்தாய். சீதை தான் லக்ஷ்மி. தாங்கள் விஷ்ணு என்ற தேவன். க்ருஷ்ணன், பிரஜாபதி. ராவண வதம் காரணமாக மனித சரீரத்தில் வந்தீர்கள். தர்மம் அறிந்தவர்களுக்குள் முதல்வனாக சொல்லப்படுபவனே, ராவண வதம் செய்து முடித்தாயிற்று. மகிழ்ச்சியுடன் தேவலோகம் செல்லலாம், வாருங்கள். அளவில்லாத பலமும், வீர்யமும், பராக்ரமமும், அமோகமானவை. உன்னைக் காண்பதும் அமோகமே. ராமா| இந்த துதியும் அமோகமானதே, விசேஷமானதே. உன்னை பக்தி செய்யும் மனிதர்களும் அமோகமாக இருப்பார்கள். யார் உன்னை புராணமான புருஷோத்தமனாக, அழிவில்லாத தேவனாக எண்ணி பக்தி செய்கிறார்களோ, அவர்கள் இக பர சுகங்களை நிச்சயம் அடைவார்கள்.
இது மகானான ப்ரும்மா செய்த ஸ்தோத்திரம். நித்யமான இதிகாசம். புராணமானது. இதைப் பாடும் மனிதர்கள் அவமானம் என்பதையே அறிய மாட்டார்கள். தோல்வியே காண மாட்டார்கள். என்றும், எதிலும் ஜயமே காண்பார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப்ரும்ம க்ருத ராமஸ்தவம் என்ற நூற்று இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 121 (528) சீதா ப்ரதிக்3ரஹ|| (சீதையை ஏற்றுக் கொள்ளுதல்)
பிதாமகர் சொன்ன இந்த விவரங்களைக் கேட்ட பின், விபா4வசு எனும் அக்னி தேவன், தோன்றினான். சிதையிலிருந்து வைதேஹியை விலக்கி, அக்னி தேவனான ஹவ்யவாஹனன், தன் நிஜ உருவத்துடன், ஜனகாத்மஜாவை கை பிடித்து அழைத்து வந்தான். இளம் சூரியன் போன்று பிரகாசிப்பவளும், புடமிட்ட தங்க ஆபரணங்களை அணிந்தவளாகவும், சிவந்த வஸ்திரம் தரித்து, சற்றும் வாடாத மாலைகளுடன், அடர்ந்த கருங்கூந்தலுடன், ஆபரணங்கள் இவற்றுடன், மனஸ்வினியானவள், எப்படி அக்னியில் நுழைந்தாளோ அதே போல ராமனிடம் திருப்பிக் கொடுத்தான். விபா4வசு என்ற லோக சாக்ஷியான அக்னி தேவன் ராமனைப் பார்த்து, இதோ இந்த வைதேஹி, ராமா, இவளை ஏற்றுக் கொள். இவள் மாசற்றவள். மனதாலும், சொல்லாலும், தியானத்திலும் கூட கண்களாலும், இவள் உன்னையன்றி யாரையும் நெருங்கியதில்லை. நடத்தையில் கவனமாக இருப்பவள். இவளும் உனக்கு சற்றும் குறைந்தவள் அல்ல. மிக நேர்மையான நடத்தை யுடையவளே. தன் வீர்யத்தில் கர்வம் கொண்ட ராக்ஷஸ ராஜா ராவணனால் கடத்திச் செல்லப் பட்டாள். ஜன சஞ்சாரமற்ற வனத்தில், நீயும் அருகில் இல்லாத பொழுது, தன் வசம் இழந்த நிலையில் ராவணன் அவளை ஏமாற்றித் தூக்கிச் சென்றான். அந்த:புரத்தில் காவலுடன் வைக்கப் பட்டிருந்தாள். உன்னையே நினைத்து, உன் த்யானமாகவே காலம் கழித்தாள். ராக்ஷஸிகள் கூட்டம் இவளை ரக்ஷித்து வந்தது. விரூபமாக கோரமாக காட்சியளித்த ராக்ஷஸிகளின் மத்தியில் அவர்கள் வித விதமாக ஆசை காட்டி, பய முறுத்தி ராவணனை எற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்திய போதிலும், சற்றும் அசையாமல் இருந்தவள். உன்னிடம் அந்தராத்மா பூர்வமாக மனதை செலுத்தி த்ருடமாக இருந்தாள். ராகவா, மாசற்றவளான இவளை மனதாலும், சுத்தமானவளை ஏற்றுக் கொள். வேறு எதுவும் யோசிக்காதே. மறுத்து பேசாதே. நான் கட்டளையிடுகிறேன். ராமன் இதைக் கேட்டு மனம் மகிழ்ந்து, கண்களில் நீர் பெருக, சற்று நேரம் பேசாமலேயே இருந்தார். தேவர்கள் தலைவனான ப்ரும்மாவைப் பார்த்து, அவஸ்யம். நிச்சயமாக மூன்று உலகிலும் சீதையை பயம் அண்ட முடியாது. இவள் சுபமானவளே. வெகு காலம் ராவண க்ருஹத்தில் வசித்திருக்கிறாள். தசரதன் மகன் ராமன் அறிவில்லாதவன். காமாத்மா என்று உலகம் சொல்லும். ஜானகியைப் பற்றி விமரிசிக்கும். அவளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அவதூறு சொல்லும். என்னையன்றி வேறு யாரையும் மனதால் கூட சீதை நினைக்க மாட்டாள் என்பது எனக்கும் தெரிந்ததே. என்னிடம் அவளுக்கு உள்ள பக்தியையும் நான் அறிவேன். என்னை எல்லா விதத்திலும் அனுசரித்து நடப்பவள் என்பது நான் அறிந்ததே. மூன்று உலகிலும் அவளை நம்பச் செய்யும் விதமாக இந்த பரீக்ஷையை செய்தேன். அக்னியில் பிரவேசித்த சீதையை அலட்சியம் செய்தேன். இந்த விசாலா, தன் தேஜஸால், தன்னைக் காத்துக் கொண்டு விட்டாள். ராவணன், கரையை மீறாத கடல் அலைபோல தன் எல்லை மீற மாட்டான். துஷ்டாத்மாவான அவன் மைதிலியை மனதால் கூட நெருங்க முடியாது என்பதும், அவளை பலாத்காரம் செய்ய நினைக்க கூட அவனால் முடியாது, கொழுந்து விட்டெரியும் அக்னி ஜ்வாலை போன்றவள் இவள் என்பதும் நான் அறிந்ததே. ராவணாந்த:புர ஐஸ்வர்யத்தைப் பார்த்து மைதிலி மயங்க மாட்டாள். பாஸ்கரனுக்கு ப்ரபா போல எனக்கு மட்டுமே தான் சீதா. ஜனகன் மகளான இந்த மைதிலி மூவுலகங்களிலும் விசேஷமாக மாசற்றவள். தன்னம்பிக்கை உள்ளவன் கீர்த்தியை விட முடியாதது போல என்னால் இவளை விட முடியாது. என்னிடம் அன்பு கொண்ட உங்கள் சொல்லை நான் கேட்டே ஆக வேண்டும். உலகில் கௌரவம் மிக்க, எல்லோரும் மதிக்கத் தகுந்த உங்கள் சொல்லை ஏற்கிறேன். என் ஹிதத்திற்காகத் தான் சொல்கிறீர்கள் என்று ஒப்புக் கொள்கிறேன். இவ்வாறு சொல்லி எல்லோரும் வாழ்த்த, ராமன் சீதையுடன் சேர்ந்து சுகமாக இருந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சீதா ப்ரதிக்3ரஹோ என்ற நூற்று இருபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 122 (529) தசரத ப்ரதிசயாதேச: (தசரதன் வந்து பரிந்துரை செய்தல்)
ராகவனின் பதிலைக் கேட்டு மகேஸ்வரன் மேலும் மங்களகரமான விஷயத்தைச் சொன்னார். புஷ்கராக்ஷனே| நல்ல வேளையாக இந்த அரிய செயலை நீ செய்து விட்டாய். உலகம் முழுவதும் பரவியிருந்த பெரும் இருட்டு உன்னால் விலக்கப் பட்டு விட்டது. ராவணன் மூலம் உண்டான பயம் நீங்கி விட்டது. தீனனாக இருக்கும் பரதனை ஆஸ்வாசம் செய்து, கௌசல்யை, கைகேயி, சுமித்ரா இவர்களையும், லக்ஷ்மண மாதாவான சுமித்திரையையும் பார்த்து விட்டு, அயோத்யா ராஜ்யத்தை அடைந்து, இக்ஷ்வாகு குலத்தை வம்சத்தை ஸ்தாபித்து, உற்றார், உறவினர், நண்பர்களை நலமாக இருக்கச் செய்து விட்டு, அஸ்வமேத யாகம் செய்து, குறைவில்லா கீர்த்தியையும் அடைவாய். ப்ராம்மணர்களுக்கு ஏராளமான தானம் கொடுத்து, நல்ல காரியங்களை செய்து விட்டு தேவலோகம் செல்வாய். இதோ தசரத ராஜா, விமானத்தில் வந்து நிற்கிறார். காகுத்ஸா, நீ மனிதனாக உலகில் நடமாடிய பொழுது உன் குரு, தந்தை இந்திரலோகம் சென்றவர், புத்ரனான உன்னால் நல்ல கதி அடைந்துள்ளார். லக்ஷ்மணனோடு கூட இவரை வணங்கு. மகாதேவர் சொன்னதைக் கேட்டு, லக்ஷ்மணனுடன் விமான சிகரத்தில் நின்றிருந்த தசரதனைக் கண்டனர். வணங்கினர். சுத்தமான வஸ்திரத்தை அணிந்தவராக, தன் காந்தியால் பிரகாசமாக இருந்தவர், உயிருக்குயிரான மகனைக் கண்டார். அவர்களை அணைத்துக் கொண்டு சொன்னார். ஸ்வர்க வாசம் கூட நீ இல்லாமல் எனக்கு உவப்பாக இல்லை. ராமா. சத்யமாக சொல்கிறேன். கைகேயியின் வார்த்தைகள் இன்னமும் என்னை வாட்டிக் கொண்டிருக்கின்றன. உன்னை நாடு கடத்தச் சொன்னதைக் கேட்டு நீயும் வனம் போனாய். உங்கள் இருவரையும் சௌக்யமாக இப்பொழுது பார்த்து நான் திருப்தியடைகிறேன். பனி விலகியவுடன் சூரியன் தெளிவாக இருப்பது போல நான் உணருகிறேன். சுபுத்ரனான நான் என் வாழ்வில் நல்ல கதி அடைந்து விட்டேன். (சுபுத்ரன்-நல்ல மகனைப்பெற்றவன்) கஹோலா என்ற ப்ராம்மணனை அவன் மகன் அஷ்டாவக்ரன் கடையேற்றி விட்டது போல நீயும் எனக்கு நல்ல கதி கிடைக்கச் செய்து விட்டாய். இப்பொழுது தான் எனக்கும் தெரிகிறது. ராவணனை வதம் செய்ய தேவர்கள் செய்த வேலை இது. கௌசல்யா பாக்யம் செய்தவள். வனத்திலிருந்து திரும்பும் உன்னைக் காண்பாள். ஊர் திரும்பி வந்த மகனை கண் குளிரக் காணப் போகிறாள். ஊர் ஜனங்கள் பாக்யசாலிகள். திரும்பி வந்து சேர்ந்த தங்கள் அரசனை, காண்பார்கள். அபிஷேகம் செய்து நனைந்து நிற்பவனை, பரதனோடு சேர்ந்து இருக்கப் போகும் உன்னைக் காண நானும் ஆசைப் படுகிறேன். பதினான்கு வருஷங்கள், ராமா, இப்படி காட்டில் வாழ்ந்து தீர்த்து விட்டாய். சீதையும் உன்னுடன் வசித்தாள், லக்ஷ்மணனும் உடன் இருந்தான். வன வாசம் முறையாக முடித்து விட்டாய். என் பிரதிக்ஞையும் பலனுடையதாயிற்று. பூர்த்தியாயிற்று. ராவணனையும் யுத்தத்தில் வதம் செய்து தேவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சத்ருசூதனா, நல்ல காரியம் செய்தாய். நல்ல கீர்த்தியையும் அடைந்து விட்டாய். சகோதரர்களுடன் ராஜ்யத்தை நிர்வகித்து, தீர்காயுளுடன் இரு. என்று ஆசிர்வதித்த, தந்தையான அரசனை, ராமனும் கை கூப்பி வணங்கி நின்றான். வேண்டினான். தர்மம் அறிந்தவனே, இதே போல கைகேயியையும் பரதனையும் ஆசிர்வதியுங்கள். புத்ரனோடு உன்னை விட்டேன் என்று கைகேயியிடம் சொன்னீர்களே, அந்த சாபம், மகனோடு சேர்த்து கைகேயியை வாட்டக் கூடாது. மகா ராஜாவும் அப்படியே என்று சொல்ல, ராம லக்ஷ்மணர்களை ஆலிங்கனம் செய்து மேலும் சொன்னார். ராமனுக்கு பக்தியுடன் சுஸ்ரூஷைகள் செய்து வந்த சீதையும் எனக்கு பெரும் பிரியமான செயலை செய்து வந்திருக்கிறாள். தர்ம பலம் கிடைத்து விட்டது. நீயும் நிறைந்த தர்ம பலனையும், புகழையும் அடைவாய். ராமன் ப்ரஸன்னமாக இருந்தால், ஸ்வர்கமும் அடைவது எளிது. பெயரும், புகழும் ராம பிரஸாதத்தால் கிடைக்கும். சுமித்ரானந்த வர்தனா, லக்ஷ்மணா, நீயும் ராமனுக்கு பணிவிடைகள் செய்து சௌக்யமாக வைத்துக் கொள். ராமன் மூன்று உலகுக்கும் சௌக்யத்தை தரக் கூடியவன். இந்திராதி தேவர்கள், மூன்று உலகிலும் உள்ள சித்தர்கள், மகரிஷிகள் வந்து இந்த மகாத்மாவை பூஜிக்கின்றனர். இவன் புருஷோத்தமன் , அவ்யக்தம், அக்ஷரம், ப்ரும்மாவுக்கு சம்மதமானது. தேவர்களின் மனதில் உள்ள ரசசியம் இது தான். இந்த பரந்தாமனான ராம நாமம் தான் உனக்கு நல்ல சரணம், தர்ம சரணம் கிடைத்துள்ளது. அளவில்லா கீர்த்தியை அடைவாய். வைதேஹியும் செய்வாள். நீயும் அவளுடன் சேர்ந்து ராமனுக்கு பணிவிடைகள் செய். வணங்கி நின்ற லக்ஷ்மணனை, இவ்வாறு சொல்லி ஆசிர்வதித்து விட்டு, சீதையிடம் வந்தார். வைதேஹி கோபம் கொள்ளாதே. இவன் உன்னைத் தியாகம் செய்வதாகச் சொன்ன வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு மனத் தாங்கல், வருத்தம் அடையாதே. உனக்கு நன்மைக்காகத் தான் செய்தான் என்று நினைத்துக் கொள். மாசற்ற உன்னை உலகுக்கு தெரியப் படுத்த என்று எடுத்துக் கொள். இதனால் நீ உன் பதிக்கு பணிவிடைகள் செய்வதில் அலட்சியம் காட்டாதே. நான் கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்.. இந்த ராமன் தான் உனக்கு உயர்ந்த தெய்வம். இவ்வாறு புத்ரர்களை சமாதானம் செய்து, மருமகளான சீதையையும் கண்டு பேசி ஆசிர்வதித்து விட்டு, தான் வந்த விமானத்திலேயே தசரத ராஜா இந்திரலோகம் சென்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் தசரத ப்ரதிசயாதேசோ என்ற நூற்று இருபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 123 (530) இந்திர வர தானம் (இந்திரன் வரம் அளித்தல்)
ககுத்ஸ குலத்து தசரத ராஜா திரும்பிச் சென்றவுடன், மகேந்திரன், கை கூப்பி தந்தைக்கு விடை கொடுத்த ராகவனைப் பார்த்து ராமா| உன் அமோகமான தரிசனம் கிடைத்தது. இதனால் மிகவும் மகிழ்ந்தோம். நீ மனதில் என்ன விரும்புகிறாயோ, சொல். லக்ஷ்மணனும், சீதையும் அருகில் இருக்க, ராமர் சகல தேவர்களுக்கும் ஈஸ்வரனே, என்னிடத்தில் அன்பு கொண்டு ஏதாவது செய்ய விரும்பினால், சொல்கிறேன். என் பொருட்டு உயிர் இழந்து யம லோகம் சென்ற வானரங்கள் உயிர் பெற்றுத் திரும்பி வர வேண்டும். இதைச் செய்யுங்கள் என்றார். என் காரணமாக தன் மகன், கணவன் தந்தை இவர்களைப் பிரிந்த வானர ஸ்த்ரீகள் தங்கள் பிரிய ஜனங்களுடன் சேர்ந்து வாழட்டும். வானரங்கள் உடலில் காயங்கள் எதுவும் இன்றி, உடல் ஊனம் இன்றி பலம், பௌருஷங்கள் நிறைந்தவர்களாக, கோலாங்கூலங்களும், கரடிகளும் எப்பொழுதும் போல இருக்க நான் காண வேண்டும். பருவ காலமோ, இல்லையோ, இவர்கள் இருக்கும், வசிக்கும் இடங்களில் புஷ்பங்கள், பழங்கள், காய்கறி வகைகள், நிறைந்து இருக்க வேண்டும். ராகவன் சொன்னதைக் கேட்டு இந்திரன் பதில் சொன்னான். ரகு நந்தனா, நீ கேட்ட வரம் மிகவும் உயர்ந்தது. நான் ஒன்று சொன்ன பின் மாற்றியதே இல்லை. நீ கேட்டபடியே நடக்கும். யுத்தத்தில் ராக்ஷஸர்களால் கொல்லப் பட்ட வானரங்கள் உயிர் பெற்று வருவார்கள். கரடிகளும், கோலாங்கூலங்களும் திரும்ப உயிருடன், கை, கால்கள் காயங்கள் ஆறி, நல்ல திட காத்திரமான சரீரத்துடன் வந்து சேருவார்கள். தங்கள் இஷ்ட மித்திர பந்துக்களுடன் இணைந்து வாழ்வார்கள். பருவ காலம் இல்லாத போதும் மரங்கள் புஷ்பங்கள் நிறைந்து பழங்கள் குலுங்க மரங்கள் இந்த வானரங்கள் வசிக்கும் இடம் தோறும் விளங்கும். நதிகள் நீர் நிறைந்து விளங்கும். காயம் பட்டுக் கிடந்த வானரங்கள் அனைத்தும், காயங்கள் நீங்கப் பெற்று, நல்ல புஷ்டியான உடல் வாகுடன் தூங்கி எழுந்தது போல எழுந்து வந்து விட்டனர். மற்ற வானரங்கள் என்ன இது என்று ஆச்சர்யமடைந்தனர். எல்லோருமாக வந்து ராகவனை வணங்கி நின்றனர். தேவர்களும் காகுத்ஸன் விரும்பியதை அடைந்ததைக் கண்டு முதலில் ஸ்தோத்திரம் செய்தனர். துதிக்கு உரியவன் அவனே. லக்ஷ்மணனோடு இப்பொழுதே அயோத்தி செல்வாய். வீரனே, வானரங்கள் அவர்கள் இருப்பிடம் செல்லச் சொல். மைதிலியை சமாதானப் படுத்து. தவம் செய்து இளைத்து, உன்னையே நினைத்து, உன்னிடம் ஈடுபாடு, பற்று கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறாள். சத்ருக்னனையும், தாய்மார்களையும் பார்க்க வேண்டும். சகோதரனான பரதனை சந்திக்கச் செல். இன்னமும் விரதம் அனுஷ்டித்து வருகிறான். நீ விலகி வந்த சோகமே இன்னமும் அவனை விட்டபாடில்லை. ஊர் திரும்பிச் சென்று முடி சூட்டிக் கொள். ஊர் ஜனங்களை சந்தோஷமாக வைத்திரு. இவ்வாறு சொல்லி அவனிடம் விடை பெற்று, சௌமித்ரியுடன் கூட ராமனை வணங்கி, தங்கள் விமானங்களில் ஏறி தேவர்கள் மன நிறைவோடு தேவலோகம் சென்றனர். தேவர்களை வழியனுப்பி விட்டு, ராமனும், லக்ஷ்மணனும் தங்கள் தங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தனர். சகோதரர்கள் இருவருமாக பரிபாலித்த பெரும் சேனை, இப்பொழுது வெற்றிக் களிப்பில் லக்ஷ்மீகரமாக விளங்கியது. குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திர ஒளியில் நிசா என்ற இரவே மகிழ்ந்து இருப்பது போல இருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் இந்திர வர தானம் என்ற நூற்று இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 124 (531) புஷ்பகோபஸ்தாபனம் (புஷ்பக விமானத்தை வரவழைத்தல்)
இரவு நன்றாகத் தூங்கி, விடியற்காலையில் எழுந்து, சுகமாக இருந்த ராமரை அணுகி, ஜய கோஷம் செய்து வாழ்த்தி, விபீஷணன் விசாரித்தான். ராகவா| ஸ்நானம் செய்யத் தேவையான அங்க ராகங்கள், வஸ்திரங்கள் ஆபரணங்கள், திவ்யமான சந்தனங்கள், பலவிதமான மாலைகள் இவற்றை எடுத்துக் கொண்டு, அலங்கரிக்கப் பெண்கள் வந்து விட்டார்கள். உன்னை முறைப்படி ஸ்நானம் செய்விப்பார்கள். இவற்றை ஏற்றுக் கொண்டு என்னை அனுக்ரஹிக்க வேண்டும். இவ்வாறு சொன்ன விபீஷணனைப் பார்த்து ராகவன் பதில் சொன்னான். இந்த வானர வீரர்களை, சுக்ரீவன் முதலானவர்களுக்கு இந்த ஸ்நானம் முதலியவைகளை செய்வித்து உபசாரம் செய். என் காரணமாக, சுகமாக வாழ வேண்டிய பரதன் தவித்துக் கொண்டிருக்கிறான். சுகுமாரனான சிறுவன், சத்யமே பெரிதாக நினைப்பவன். அந்த கைகேயி புத்திரனான பரதனை விட்டு எனக்கு ஸ்நான பானாதிகள் முக்கியமல்ல. வஸ்த்ரங்களோ, ஆபரணங்களோ, பரதனை சந்தித்த பிறகு தான். சீக்கிரம் இந்த வழியிலேயே, அயோத்தி நகரம் போய் சேருகிறேன். இந்த வழியில் தான் அயோத்தியிலிருந்து வந்தோம். கஷ்டமான வழி இது. கடந்து சென்றாக வேண்டும் எனவும், விபீஷணன் ஒரே நாளில் உங்களைக் கொண்டு சேர்க்கிறேன். ராஜ குமாரனே, புஷ்பகம் என்ற விமானம் இங்கு இருக்கிறது. சூரியனைப் போல தேஜஸுடன் விளங்கும். என் சகோதரன் குபேரனுடையது. பலாத்காரமாக ராவணன் அபகரித்துக் கொண்டு வந்தான். இது திவ்யமானது. உத்தமமானது, விரும்பிய வண்ணம் செலுத்திக் கொள்ள முடியும். யுத்தத்தில் குபேரனை ஜயித்து ராவணன் கைப் பற்றிக் கொண்டான். மேகம் போன்று விசாலமான விமானம் இது. இதோ நிற்கிறதே, உனக்காகத் தான் இன்னமும் இங்கு வைத்து காப்பாற்றி வருகிறேன். இந்த வாகனத்தில் ஏறிக் கொள்வாய். கவலையின்றி அயோத்தி மா நகரம் போய் சேருவாய். என்னிடம் தயை செய்து என்னை அனுக்ரஹிக்க மனம் இருந்தால், என் குணங்கள் உன் மனதில் இடம் பெற்றிருந்தால், இன்று இங்கு வசிப்பாயாக. அறிவுள்ளவனே, என்னிடம் உள்ள நட்பின் பெயரால் கேட்கிறேன். சகோதரன் லக்ஷ்மணனுடனும், மனைவி வைதேஹியுடனும், இன்று என் க்ருஹத்தில் உபசாரம் செய்து உபசரிக்க விரும்புகிறேன். அதன் பின் அயோத்தி கிளம்பலாம். இந்த சைன்யம், நண்பர்கள் எல்லோருடன் நான் அன்புடன் செய்யும் உபசரிப்பை ஏற்றுக் கொள். அன்பினாலும், நட்பின் நெருக்கத்தாலும் உன்னை வற்புறுத்திச் சொல்கிறேன். இல்லையெனில், நீ கட்டளையிட்டு நான் பணிய வேண்டியவன் தான். இது கட்டளையல்ல, வேண்டுகோளே என்றான். ராமர் விபீஷணனைப் பார்த்து, ராக்ஷஸர்கள், வானரங்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்த சபையிலேயே வீரனே, உன் மந்த்ராலோசனைகள் மூலம், சரியான சமயத்தில் ஏற்ற அறிவுரைகள் சொல்லி, நீ எனக்கு நிறைய உதவிகள் செய்து விட்டாய். உன் வார்த்தையை நான் அவசியம் கேட்டே ஆக வேண்டும். ஆனால் பார், என் சகோதரன் பரதனைக் காண என் மனம் துடிக்கிறது. என்னைத் தேடி சித்ரகூடம் வந்தவன், திரும்பி அழைத்துப் போகும் எண்ணத்துடன் தலை வணங்கி என்னை யாசித்தான். அவன் விருப்பத்தை நான் நிறைவேற்றவில்லை. கௌசல்யை, சுமித்ரை, கைகேயி இவர்களையும், மற்ற குரு ஜனங்களையும் நண்பர்களையும், ஊர் ஜனங்களையும், புத்திரர்களுடன் காணத் துடிக்கிறேன். சீக்கிரம் விமானத்தை ஏற்பாடு செய். விபீஷணா, வந்த காரியம் முடிந்து விட்டது. இனியும் தாமதம் செய்யக் கூடாது. எனக்கு நீ நல்ல உபசாரங்கள் நிறைய செய்து விட்டாய். என் மனம் நிறைந்துள்ளது. விடை கொடு. கோபம் கொள்ள வேண்டாம். என் அவசரம், அதனால் தான் சொல்கிறேன். இதைக் கேட்டு ராக்ஷஸேந்திரன், விமானத்தைக் கொண்டு வந்து திரும்பி அவர்கள் அயோத்தி செல்ல தயாராக்கினான். வெண்மையான கொடிகள் கட்டி அலங்கரித்தான். பொன்னாலான பத்மங்கள் பதிக்கப் பெற்று, காஞ்சன மாளிகை போல அழகான விஸ்தீர்ணமான இடங்கள், மணிகள் கட்டி, முத்துக்கள் கொண்டு ஜன்னல்கள் தயார் செய்யப் பெற்றன. மணி ஓசை கேட்க நாலாபுறமும் கட்டப் பெற்ற கண்டாமணிகள், இனிய நாதம் எழுப்ப, விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்ட, மேருவின் சிகரம் போல அமைந்த விமானம், முத்தும், வெள்ளியும், தங்கமும் இழைத்து செய்யப் பெற்றிருந்த விதானங்கள். தரையோ, ஸ்படிகம், விசித்ரமான வேலைப்பாடுகளுடன், வைமூடுரியம் பதித்து செய்யப் பட்டிருந்தது. அழகிய ஆசனங்கள், உயர்ந்த தரை விரிப்புகள், பெரும் செல்வ செழிப்போடு மனோ வேகத்தில் செல்லக் கூடிய விமானம் தயாராக வந்து நின்றது. ராமனிடம் சொல்லி விட்டு விபீஷணன் கிளம்பினான். சௌமித்ரியுடன் அந்த விமானத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து விருப்பப்படி செல்லக் கூடிய, பெரும் மலை போல இருந்த விமானத்தைப் பற்றி விவரங்கள் அறிந்து கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் புஷ்பகோபஸ்தாபனம் என்ற நூற்று இருபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 125 (532) புஷ்பகோத்பதனம் (புஷ்பக விமானம் கிளம்புதல்)
புஷ்பக விமானத்தை புஷ்பங்களாலும் அலங்கரித்துக் கொண்டு வந்து நிறுத்தினர். சற்று தூரத்தில் இருந்த ராமரைப் பார்த்து விபீஷணன், பரபரப்புடன் அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தான். எதுவானாலும் சீக்கிரம் செய்ய அவன் மனம் விழைந்தது. லக்ஷ்மணனிடம் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த சமயம், ராமரும் அருகில் வந்து விபீஷணா, இந்த வானரங்கள் நமக்கு செய்த உதவிகள் அனந்தம். உற்சாகமாக தங்களால் இயன்றவரை, செய்திருக்கின்றனர். இவைகளுக்கு ரத்னங்களும், பொருளும், வித விதமான ஆபரணங்களும் கொடுத்து உபசாரம் செய். இவர்கள் உதவியால் தானே யாராலும் நெருங்கக் கூட முடியாத லங்கையை ஜயித்தோம். மகிழ்ச்சியோடு, உயிரைத் திருணமாக மதித்து, இந்த வானரங்கள் போரில் புற முதுகு காட்டாமல் நமக்காக போர் புரிந்தன. இவர்களுக்கு தாராளமாக தனம், ரத்னம் இவற்றை கொடுத்து சன்மானம் செய் என்றார். இந்த உபசரிப்பையும், சன்மானத்தையும் ஏற்றுக் கொண்டு இவர்கள் திரும்பிச் செல்ல ஏற்பாடு செய். உன்னை அனுசரனையுடன், கருத்துடன் கவனிக்கும் தலைவனாக நினைப்பார்கள். தியாகம் செய்யவும் தயங்காதவன் என்று மதிப்பார்கள். ஏன் சொல்கிறேன் என்றால், இந்த நல்ல குணங்கள் இல்லாத அரசனை படை வீரர்கள் பின்னால் விட்டுச் சென்று விடுவார்கள். இதைக் கேட்ட விபீஷணனும், வானர வீரர்களுக்கு, ரத்னங்களும், பொருளையும் பிரித்துக் கொடுத்து உபசரித்தான். இவர்கள் தக்கபடி சன்மானம் பெற்றதையும், உபசரிப்பும் குறைவின்றி பெற்று மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்த பின், ராமர் விமானத்தில் ஏறினார். மைதிலியை இழுத்து மடியில் இருத்திக் கொண்டு, லஜ்ஜையினால் அவள் முகம் சிவக்க, அருகில் சகோதரன் லக்ஷ்மணன், வில்லுடன் மற்ற ஆயுதங்களையும் பாதுகாத்து வைத்துக் கொண்டு, வெற்றி வீரனாக அமர்ந்திருக்க, எல்லா வானரங்களிடமும் விடை பெற்றுக் கொண்டு சுக்ரீவனிடமும், விபீஷணனிடமும் ப்ரத்யேகமாக சொல்லிக் கொண்டு, வானரோத்தமர்களே, நட்பின் அடையாளமாக இந்த அரிய செயலை முடித்துக் கொடுத்தீர்கள். அனுமதி தருகிறேன். நீங்கள் அனைவரும் பத்திரமாக உங்கள் இருப்பிடம் திரும்பிச் செல்லுங்கள் என்று சொல்லி விடை கொடுத்தார். சுக்ரீவா, எந்த காரியம் நெருங்கிய நண்பன், சினேகிதன் என்ற முறையில், அதர்மம் எதுவும் நேர்ந்து விடக் கூடாது என்று நீ கவனமாக செய்தாயோ, அவை நல்ல முறையில் பலன் தரும். கிஷ்கிந்தை போய், உன் சேனையுடனும், ராஜ்ய காரியத்தை பாலித்து வா. விபீஷணா நீயும் நான் கொடுத்த லங்கா ராஜ்யத்தை நல்ல முறையில் பரிபாலித்து வா. இனி உன்னை இந்திரனோ, தேவர்கள் கூட்டத்தோடு வந்தாலும் எதிர்த்து நின்று ஜயிப்பாய். உன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. என் தந்தையின் ராஜ தானியான அயோத்தி மா நகரம் செல்கிறேன். உங்கள் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொள்கிறேன். வருகிறேன் என்று சொன்ன ராமனைப் பார்த்து வானரங்கள் கை கூப்பி வணங்கியபடி, விபீஷணனை முன்னிட்டுக்கொண்டு ஏதோ சொல்ல விரும்பியது போல இருந்தது. நாங்களும் அயோத்தியைக் காண விரும்புகிறோம். எங்களையும் அழைத்துச் செல்லுங்கள். வனங்களையும், நகரங்களையும் சுற்றிப் பார்ப்போம். அபிஷேகம் செய்து நனைந்து நிற்கும் உங்களையும் பார்த்து விட்டு, கௌசல்யையை வணங்கி விட்டு சீக்கிரம் எங்கள் ஊர் திரும்பி விடுவோம். ராஜ குமாரா, எங்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு சொன்ன வானரங்களையும், விபீஷணனையும் பார்த்து நல்லதாக போயிற்று. அதிகமான நண்பர்களுடனும், என் நலம் விரும்பும் ஸ்னேகிதர்களுடன் நான் என் ஊர் திரும்புவதும் இன்னும் அதிக விசேஷமே. சுக்ரீவா, சீக்கிரம் ஏறிக் கொள். உன் சேனையையும் ஏறச் செய். விபீஷணா, உன் மந்திரிகள் எல்லோருடனும் நீயும் ஏறிக் கொள். குபேரனுடைய அந்த விசேஷமான வாகனம் ராகவன் எல்லோரும் ஏறிக் கொண்ட பின், உத்தரவிட, ஆகாயத்தில் ஏறியது. ஹம்ஸம் போல பறக்கும் அந்த விமானத்தில் எல்லோருமாக செல்லும் பொழுது, ராமனும், குபேரனைப் போலவே சந்தோஷமாக, மன நிறைவோடு இருந்தான். ராக்ஷஸர்களும், வானரங்களும் சற்றும் சிரமம் இன்றி, அந்த விமானத்தில் வசதியாக அமர்ந்து கொள்ளவும் முடிந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் புஷ்பகோத்பதனம் என்ற நூற்று இருபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 126 (533) ப்ரத்யாவ்ருத்தி பத2 வர்ணனம்.(திரும்பி சென்ற வழியை விவரித்தல்)
ராமரின் அனுமதியுடன் விமானம் ஆகாயத்தில் பறக்கலாயிற்று. ஒரு பெரிய மேகத்தை மூச்சுக் காற்றால் தூக்கி நிறுத்தியதைப் போல அனாயாசமாக கிளம்பியது. வியத்தகு வேகத்தில் செல்லலாயிற்று.. ரகு நந்தனன் கீழே பார்வையை செலுத்தி, சந்திரன் போன்ற முகத்தினளான மைதிலியைப் பார்த்து சொன்னான். வைதேஹி, விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பட்ட லங்கா நகரைப் பார். கைலாச சிகரம் போன்ற த்ரிகூட சிகரத்தில் இருப்பதை நன்றாகப் பார். இதோ பார், மாமிசமும், நிணமும், சதையுமாக இரைந்து கிடக்கிறதே, இது தான் ரண பூமி. இங்கு தான் வானர ராக்ஷஸர்கள் பெரும் போர் புரிந்தனர். ராக்ஷஸேஸ்வரன், வரங்கள் பெற்று உலகை ஆட்டி வைத்தவன், தூங்குகிறான். மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான். உன் காரணமாக, விசாலா, ராவணனை நான் வதம் செய்தேன். இதோ பார், இங்கு தான் கும்பகர்ணன் கொல்லப் பட்டான். ப்ரஹஸ்தன் என்ற நிசாசரனும் மாண்டான். தூம்ராக்ஷனும், ஹனுமானால் கொல்லப் பட்டான். சுஷேணன் இங்கு வித்யுன்மாலியை கொன்றான். லக்ஷ்மணன் இந்திரஜித்தை மாய்த்தான். இந்திரஜித் ராவணனின் மகன். அங்கதன் இந்த இடத்தில் விகடன் என்ற ராக்ஷஸனை அடித்தான். மகா பார்ஸ்வ, மகோதரர்கள் நல்ல பலசாலிகள். விரூபாக்ஷன் மற்றும் பல பலசாலிகளான ராக்ஷஸர்கள் வதம் செய்யப் பட்டனர். இங்கு தான் மந்தோதரி என்ற ராக்ஷஸ பத்னி, மிகவும் வருந்தி அழுதாள். ஆயிரக் கணக்கான சபத்னிகள் அவளுக்கு. எல்லோரும் கண்களில் நீர் பெருக அவனைச் சார்ந்து நின்றனர். சமுத்திர தீர்த்தம் தெரிகிறது பார். இந்த இடத்தில் தான் சமுத்திரத்தைக் கடந்து வந்த இரவு நாங்கள் தங்கினோம். இதோ, பார். நாங்கள் கட்டிய சேது. உப்பு சமுத்திரத்தில் குறுக்கே பாலம் கட்டினோம். விசாலாக்ஷி, மிகவும் கஷ்டமான செயலான இந்த சேதுவை, நளன் கட்டி முடித்தான். இதோ பார், பொங்கி எழும் சமுத்திரத்தைப் பார். சங்கமும், சிப்பிகளும் நிறைந்து எல்லையில்லாமல் எப்பொழுதும் கர்ஜித்துக் கொண்டிருக்கும் சமுத்திரத்தைப் பார். ஹிரண்ய நாபன் என்ற மலையரசன். காஞ்சனமயமாக தெரிகிறான் பார். மைதிலி, இது சாகரத்தின் அடியில் இருந்தது. உன்னைத் தேடி வந்த ஹனுமானின் பலத்தை சோதித்து, நம்பிக்கை வரச் செய்ய , ஹனுமானை தடுக்கச் சொல்லி சமுத்ர ராஜனால் அனுப்பப்பட்டது. இதோ பார். சாகர தீர்த்தம். இது சேது பந்தம் என்றே புகழ் பெறப் போகிறது. மூவுலகத்திலும் பூஜிக்கப் போகிறார்கள். இது மிகவும் பவித்ரமானது. மகா பாதகத்தையும் நாசம் செய்யக் கூடியது. இதில் முன்பு மகா தேவன் இருந்து அனுக்ரஹம் செய்தார். இங்கு தான் ராக்ஷஸ ராஜாவான விபீஷணன் வந்து சேர்ந்தான். இதோ பார், அழகிய காடுகளுடன் உள்ள இடம், இது தான் கிஷ்கிந்தா. இது சுக்ரீவனுடைய நகரம். இங்கு தான் நான் வாலியைக் கொன்றேன். கிஷ்கிந்தா நகரைப் பார்த்து சீதா, வாலி பாலித்து வந்த நகரம், இங்கு விமானத்தை நிறுத்தி, சுக்ரீவ பத்னிகள், தாரா முதலானோர், மற்றும் வானரங்களின் ஸ்திரீகளும் வரட்டும். எல்லோருமாக அயோத்தி செல்வோம், என்றாள். அப்படியே ஆகட்டும் என்று விமானத்தை நிறுத்தி ராமர், வானர ராஜனே, உன் வானர வீரர்களுக்கு கட்டளையிடு. தங்கள் தங்கள் மனைவிமார்களுடன், எல்லோரும் சீதையுடன் அயோத்தி வரட்டும். நீயும் உன் ஸ்த்ரீ ஜனங்களை அழைத்துக் கொண்டு சீக்கிரம் வா, என்றார். இதைக் கேட்டு வானராதிபன், வானரங்களிடம் விவரமாக சொல்லியனுப்பினான். தானும் அந்த: புரம் வந்து தாரையிடம் ப்ரியே, நீ மற்ற வானர ஸ்த்ரீகளுடன் சீக்கிரம் கிளம்பு. மைதிலி சொன்னாள் என்று, அவள் இஷ்டத்தை பூர்த்தி செய்ய, ராமன் நம் அனைவரையும் வரச் சொல்லி அழைத்திருக்கிறான். அயோத்தி சென்று நாம் தசரத ராஜாவின் மனைவிகளையும் ராஜ ஸ்த்ரீகளையும் காண்போம். அயோத்தியை நம் பெண்களுக்கு சுற்றிக் காட்டுவோம். இதைக் கேட்டு தாரையும், எல்லா வானர ஸ்த்ரீகளையும் அழைத்து சுக்ரீவன் அனுமதி அளித்திருக்கிறான். நாம் எல்லோரும் உடன் செல்வோம். எனக்கும் அயோத்யா நகரை காண ஆவல் தான். ஊர் ஜனங்களுடன் நாமும் நகரத்துள் பிரவேசிப்போம். தசரத ராஜாவின் அரண்மனையையும், செல்வ செழிப்பையும் அந்த ஊர் ஸ்த்ரீகளையும் பார்த்து விட்டு வருவோம். கிளம்புங்கள் என்றான். துரிதப் படுத்தி அவர்களை முறையாக அலங்காரம் செய்து கொள்ளச் செய்து அழைத்து வந்தான். சீதையைக் காணும் ஆவலுடன் எல்லா வானர ஸ்த்ரீகளும் விமானத்தில் ஏறின. எல்லோரும் ஏறிக் கொண்ட பின், விமானம் புறப்பட்டது. ருஸ்ய மூக சமீபம் வந்தது. வைதேஹியிடம் ராமர், சீதே, இதோ பார். மின்னலுடன் கூடிய மேகம் போல தெரிகிறதே, இது தான் ருஸ்ய மூகம் என்ற மலையரசன். பொன் மயமான தாதுக்கள் நிறைந்தது. இங்கு தான் நான் வானர ராஜாவான சுக்ரீவனோடு சக்யம் செய்து கொண்டேன். வாலி வதம் செய்யவும் நேரம் குறித்துக் கொண்டேன். இதோ பார், பம்பா நதி. தாமரை மலர் பொய்கைகளும், அழகிய கானனமும் தெரிகிறது, பார். இங்கு தான் நீ இல்லாமல் நான் தனியே வருந்தி புலம்பி அழுதேன். இந்த நதிக் கரையில் தான் சபரி என்ற தவச் செல்வியைக் கண்டேன். இங்கு தான் யோஜனை தூரம் நீண்ட கைகளுடன் கப3ந்த4னைக் கண்டேன். சீதே, இதோ பார். ஜனஸ்தானத்து மரங்கள் காண்கின்றன. இங்கும் உன் காரணமாக பெரும் யுத்தம் நடந்தது. கொடியவனான ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் பெரும் யுத்தம் நடந்தது. க2ரனை இங்கு தான் மாய்த்தேன். தூஷணனையும் வதம் செய்தேன். த்ரிசிரஸ் என்று ஒருவனும் வந்தான். என் பலம் மிக்க பாணங்களால் அடித்து அவர்களை வெற்றி கொண்டேன். வரவர்ணினீ, இதோ பார். இது தான் நாம் வசித்த ஆசிரமபதம். நம் பர்ண சாலா இதோ இருக்கிறது. இன்னமும் அதே போல அழகாக விளங்குகிறது. சுபமான இடம். இதோ இந்த இடத்திலிருந்து தான் உன்னை ராக்ஷஸேந்திரன் பலாத்காரமாக கவர்ந்து சென்றான். இதோ பார், கோதாவரி நதி. ப்ரஸன்னமான ஜலம் பெருகி ஓட, ரம்யமாக, மங்களகரமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். இதோ, பார். மைதிலி, அகஸ்திய ஆஸ்ரமம். சுதீக்ஷ்ணருடைய ஆசிரமம். பிரகாசமாக தெரிகிறது, பார். இதோ பார். வைதேஹி, சரபங்காஸ்ரமம் தெரிகிறது, பார். இதோ, பார் வைதேஹி, இங்கு தான் சஹஸ்ராக்ஷன் என்ற இந்திரன் , புரந்தரன் வந்தான். இந்த தேசத்தில் தான் பெருத்த உருவம் கொண்ட விராதனை நான் கொன்றேன். இங்கு பார், மற்ற தபஸ்விகளின் இருப்பிடங்களும் தெரிகின்றன. சூரிய, வைஸ்வானரர்களுக்கு இணையான தவ வலிமை மிக்க அத்ரியையும் இங்கு தான் சந்தித்தோம். இங்கு தான் சீதே, நீ தபஸ்வினியான அத்ரி முனிவரின் பத்னியைக் கண்டாய். இதோ, பார். சித்ரகூட மலை. தெளிவாக தெரிகிறது பார். அதன் மலைச் சாரல்களே அழகு. இங்கு தான் பரதன் என்னை திருப்பி அழைத்துச் செல்ல வந்தான். இதோ பார், யமுனை நதி. கரையில் அழகிய காடுகளுடன், பரத்வாஜாஸ்ரமமும் இங்கு தான் இருந்தது. அவரும் இங்கு தான் இருப்பார். இதோ பார், யமுனை நதியும், அதன் கரையில் அடர்ந்த காடுகளும் தெரிகின்றன. பரத்வாஜாஸ்ரமம் இங்கு இருப்பதால் எங்கும் வளமாகத் தெரிகின்றன. த்ரிபத2கா3 எனும் கங்கை நதியைப் பார். பக்ஷிகள் பலவிதமாக வந்து விளையாட, புஷ்பங்களும் நிறைந்து வனங்களுடன் தெரிகிறது. இது தான் ஸ்ருங்கிபேர புரம். குகன் வந்து நம்மைக் கண்டது இந்த இடத்தில் தான். சரயூ நதி செல்கிறது. பார்த்தாயா. இங்கும் பல விதமாக மரங்கள், பூத்துக் குலுங்கும் மலர்களுடன் காணப்படுகின்றன. இதோ என் தந்தையின் ராஜதானியான அயோத்தியை நெருங்கி விட்டோம். இதோ பார், இந்த அயோத்தியை வணங்கு. வைதேஹி, நல்லபடியாக திரும்பி வந்து இதைக் காண்கிறோமே, இதன் பின் வானரங்களும், விபீஷண ராக்ஷஸனும் எட்டி எட்டி பார்த்து அயோத்தியை கண்டு மகிழ்ந்தனர். சுபமாக காட்சி தந்த அயோத்தி மா நகரம் வரிசையாக வெண் நிற மாளிகைகளைக் கொண்டதும், அதுவே மாலை போல விளங்க, விசாலமான அறைகளில் யானைகளும், குதிரைகளும் நிறைந்து சப்தமாக இருக்க, மகேந்திரனுடைய அமராவதி போன்ற அயோத்யா நகரை வானரங்கள் கண்டனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப்ரத்யாவ்ருத்தி பத2 வர்ணனம் என்ற நூற்று இருபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)s
அத்தியாயம் 127 (534) ப4ரத்3வாஜாமந்த்ரணம் (பரத்வாஜர் விருந்துண்ண அழைத்தல்)
பதினான்கு ஆண்டுகள் பூர்த்தியான பின், ஒரு பஞ்சமியில், லக்ஷ்மணன் தமையனான ராமன், பரத்வாஜாஸ்ரமம் வந்து முனிவரை நியமத்துடன் வணங்கி நின்றான். தவ ஸ்ரேஷ்டிரரை, தவமே தனமாக உடைய பரத்வாஜ முனிவரை வணங்கி குசலம் விசாரித்தான். பகவானே, இங்கு சுபிக்ஷமாக இருக்கிறதா? ஊரில் எல்லோரும் நலமா? கேள்விப்பட்டீர்களா? என்று வினவினான். பரதன் நல்ல விதமாக இருக்கிறானா? தாய்மார்கள் உயிருடன் இருக்கிறார்களா? ராமன் இவ்வாறு கேட்கவும், பரத்வாஜ முனிவர் பதில் சொன்னார். ரகு ஸ்ரேஷ்டனான ராமனைப் பார்த்து சிரித்துக் கொண்டே பரதனா, ஜடா முடியோடு, மாசடைந்த வஸ்திரத்துடன், உன்னை எதிர் நோக்கி காத்திருக்கிறான். உன் பாதுகையை அரியணையில் வைத்து ராஜ்ய பாலனம் செய்கிறான். மற்றபடி எல்லோரும் நலமே. முன்னால் வல்கலை, மரவுரி தரித்து வனத்திற்கு கிளம்பிய உன்னைப் பார்த்து வருத்தமாக இருந்தது. லக்ஷ்மணன், சீதையுடன் ராஜ்யத்தை விட்டு, தர்ம காரியமாக கிளம்பி விட்டாய். தந்தை சொல்லைக் காப்பாற்ற, எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டு கால் நடையாக புறப்பட்டாய். ஸ்வர்கத்திலிருந்து இறங்கி வந்த அமரன் போல இருந்தாய். எல்லா சுகங்களையும் நொடியில் தியாகம் செய்து விட்டு கிளம்பினாய். வீரனே, அதைக் கண்டு என் மனதில் கருணை நிறைந்தது. கைகேயி சொன்னதற்காக, காட்டு கிழங்கு காய்களை புசித்துக் கொண்டு இருக்கப் போகிறாயே, எப்படி சமாளிப்பாய் என்று கவலையாக இருந்தது. இப்பொழுது செயல் வீரனாக, மித்ர கணங்களும் உடன் வர, எதிரிகளை ஜயித்து, பந்து ஜனங்கள் கொண்டாட திரும்பி வந்திருப்பதைக் காண சந்தோஷமாக இருக்கிறது. ராகவா, உன் சுக துக்கங்களை நான் அவ்வப்பொழுது விசாரித்து தெரிந்து கொண்டேன். ஜனஸ்தான வதம் இவைகளையும் தெரிந்து கொண்டேன். தர்ம வழியில் நின்ற ப்ராம்மணர்கள், தபஸ்விகளுக்கு பாதுகாப்பாக இருந்தாய் என்று கேள்விப் பட்டேன். ராவணன், உன் மனைவியை கவர்ந்து சென்றதும், பாவம், இவள் மாசற்றவள், கஷ்டப் பட்டதும் அறிந்தேன். சீதையை மயங்கச் செய்ய மாரீசன் வந்தானாமே. கபந்தனை சந்தித்ததையும் கேள்விப் பட்டேன். பம்பா நதியை நோக்கிச் சென்றதும், சுக்ரீவனுடன் சக்யம் செய்து கொண்டதும், வாலி வதம் செய்யப் பட்டதும், வைதேஹியைத் தேடிச் சென்றதும், வாதாத்மஜனின் அரிய செயலும், வைதேஹியை கண்டு கொண்டு வந்து சொன்னதும், சமுத்திரத்தில் நளன் சேதுவைக் கட்டியதையும், லங்கையை எரித்ததையும், வானர சைன்யம் சந்தோஷமாக இந்த போரில் ஈ.டுபட்டதாகவும் அறிந்தேன். ராவணன் தேவர்களுக்கு உறுத்தலாக இருந்தான். அவன் புத்ர, பந்துக்கள், மந்திரிகள் படை வீரர்களுடன் வாகனங்களோடு யுத்தத்தில் வதம் செய்யப் பட்டதாகவும் அறிந்தேன். தேவர்கள் வந்து உன்னைக் கண்டதும், வரங்கள் தந்ததும், எனக்குத் தெரிய வந்தது. என் தவ வலிமையால் எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டேன். நானும் உனக்கு ஒரு வரம் தருகிறேன். சஸ்திரங்களை பூர்ணமாக அறிந்தவனே, இன்று இங்கு தங்கி என் ஆசிரமத்தில் விருந்தை ஏற்றுக் கொள். நாளை அயோத்யா போகலாம். என்றார். அரச குமாரனும் அவருடைய சொல்லைத் தலை வணங்கி ஏற்றுக் கொண்டான். அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, வரம் தருவதாக சொன்னீர்களே, என்று வினவினான். தனக்கு வேண்டியதை யாசித்தான். பருவ காலம் இல்லாத சமயத்திலும், அயோத்தி செல்பவர்களுக்கு வழியெல்லாம் மரங்கள் பழங்கள் நிறைந்தும், தேன் போல ருசியுடைய பழங்கள் எல்லா காலங்களிலும் கிடைக்க வேண்டும். அம்ருதம் போன்ற பல விதமான பழங்கள் எப்பொழுதும் கிடைக்க வேண்டும். அயோத்தி செல்லும் யாத்ரிகர்கள் இவற்றை எப்பொழுதும் பெற வேண்டும் என்று வேண்டினான். முனிவரும் அப்படியே ஆகட்டும் என்று வாக்களித்தார். உடனே அங்கு ஸ்வர்க லோகத்துக்கு சமமான மரங்கள் தோன்றின. பழம் இல்லாத மரங்களும் பழங்கள் நிறைந்து விளங்கின. புஷ்பமே இல்லாத மரங்கள் பூத்துக் குலுங்கின. வாடி உலர்ந்து இருந்த மரங்கள் பசுமை நிறைந்து காணப்பட்டன. மலைகளில் சரிவுகளில் மதுவைச் சொரியும் பல மரங்கள் நிறைந்தன. மூன்று யோஜனை தூரம் அயோத்தி செல்லும் வழி பூராவும் வளம் நிறைந்து காணப்பட்டது. வானரங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. திவ்யமான பல விதமான பழங்கள் உண்ண கிடைத்தன. இஷ்டம் போல சாப்பிட்டு மகிழ்ந்தன. ஆயிரக் கணக்கான வானரங்கள் மனம் நிறைந்து மகிழ்ச்சியோடு ஸ்வர்கமே சென்றது போல மகிழ்ந்தன .
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப4ரத்3வாஜாமந்த்ரணம் என்ற நூற்று இருபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 128 (535) ப4ரத ப்ரியாக்2யானம் (பரதனுக்கு பிரியமானதை தெரிவித்தல்)
அயோத்தி இருக்கும் இடம் நோக்கி யோசித்தபடி நின்று கொண்டிருந்த ராமர், ஹனுமானை அழைத்து ஒரு விஷயம் சொன்னார். ஹனுமானே, நீ போய் அரசன் மாளிகையில் யாவரும் நலமா என்று அறிந்து வா. முதலில் ச்ருங்கிபேர புரம் போ. குஹனைப் பார். அடர்ந்த காட்டின் நடுவில் இருப்பான். வேடர்கள் தலைவன். அவனை பார்த்து நான் குசலம் விசாரித்ததாகச் சொல்லு. அவனும் குசலமா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, உடல் நலம் எல்லாம் விசாரி. எனக்கு ஆத்ம சமமான சகா. என் விஷயமாக தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பான். அவன் அயோத்தி போகும் வழியையும், பரதனின் நிலையையும் அறிந்திருப்பான். விவரமாக கேட்டுத் தெரிந்து கொள். பரதனிடம், நான் சகோதரனுடனும், மனைவியுடனும் எடுத்த காரியத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்திருப்பதையும் சொல். பலசாலியான ராவணன், வைதேஹியை கவர்ந்து சென்றதையும், சுக்ரீவனை சந்தித்ததையும், யுத்தத்தில் வாலி வதம் ஆனதையும், மைதிலியைத் தேடி அலைந்ததையும், நீ போய் கண்டு கொண்டதையும், பெரும் கடலைத் தாண்டியதையும், சமுத்திரத்தின் உதவியையும், சமுத்திரத்தின் மேல் ஸேதுவைக் கட்டியதையும், ராவணன் எப்படி வதம் செய்யப் பட்டான் என்பதையும் மகேந்திரன் கொடுத்த வர தானமும், ப்ரும்மா, வருணன் முதலானோர் வந்து வரம் கொடுத்துச் சென்றதையும், மகாதேவ பிரஸாதத்தையும், என் தந்தையை சந்தித்ததும், திரும்பி வந்து இங்கு இருப்பதையும் பரதனிடம் தெரிவி. ராக்ஷஸ ராஜா விபீஷணனும், வானர ராஜா சுக்ரீவனும் வந்திருப்பதையும் இவர்கள் உதவியுடன் ராவணனை ஜயித்து அளவில்லா கீர்த்தியடைந்துள்ளதையும் தெரிவி. அவன் என்னிடம் எந்த விதமான எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறான் என்பதை, குறிப்பறிந்து செயல் படும் நீ தெரிந்து கொள். பரதனுடைய நடவடிக்கைகளும், இருக்கும் நிலையையும் உன்னித்துப் பார். பேச்சில், முகக் குறிப்பில், வர்ணத்தில், பார்வையில், சம்பாஷனையில், எல்லா செல்வமும் நிறைந்து, யானை, குதிரை, ரதங்கள் ஏராளமாக இருக்க, தந்தை, பாட்டன் வழி வந்த ராஜ்யம் அவன் மனதை மாற்றியிருக்கிறதா என்று கவனித்துப் பார். இவ்வளவு நாள் அனுபவித்து ஆண்ட காரணத்தால் ராஜ்யத்தில் அவனுக்கு ஈ.டுபாடு இருக்குமானால், உலகம் பூராவையும், அவனும் ரகு நந்தனனே, ஆளட்டும். அவன் மனதையும் தெரிந்து கொண்டு, செயலையும் தெரிந்து கொண்டு நாங்கள் நெருங்கி வெகு சமீபத்தில் வரும் முன் வந்து சொல். இவ்வாறு கட்டளையிடப் பட்ட ஹனுமான் மனித ரூபத்தை எடுத்துக் கொண்டு, அயோத்தி சென்றான். வேகமாக நாலெட்டாக கால் வைத்து, கருடன் போல, நல்ல பாம்பைக் கண்டதும் பாய்ந்து வந்து எடுப்பதைப் போன்ற வேகத்துடன் நடந்தான். பித்ரு பதத்தை தாண்டி, புஜகேந்திராலயம் எனும் பாம்புகள் வாழும் இடத்தையும் தாண்டிச் சென்றான். (விஹகேந்திராலயம் என்றும் பாடம். அந்த முறையில் விஹக-பறவை, பறவை ராஜனான கருடனின் வீட்டையும் தாண்டி என்பது திலகர் உரை). கங்கா, யமுனையின் சங்கமத்தை தாண்டி, ச்ருங்கிபேர புரம் சென்றான். குகனைக் கண்டு அவனுடன் பேசியதில் மகிழ்ச்சியோடு ஹனுமான் சொன்னான். நீ காகுத்ஸனின் சகா. சத்ய பராக்ரமனான ராமனின் தோழன். சௌமித்ரியுடனும், சீதையுடனும் உன்னை குசலம் விசாரித்தான். இன்று பஞ்சமி. இன்று இரவு முனிவர் வார்த்தைக்கு கட்டுப் பட்டு அங்கு வசித்து விட்டு பரத்வாஜ முனிவர் அனுமதி கொடுத்தால், இன்றே ராமனைக் காண்பாய். இதைக் கேட்டு உடல் புல்லரிக்க, குகன் சந்தோஷம் அடைந்தான். அவனிடம் விடை பெற்று, துள்ளி குதித்து, ராம தீர்த்தம் என்பதையும், வாலுகினீம் என்ற நதியையும், கோமதி நதியையும், பயங்கரமான சால வனம் என்ற வனத்தையும் கடந்து சென்றான். ஆயிரக் கணக்கான ஜனங்கள், இருண்டு கிடந்த பெரும் வீதிகள், இவற்றையும் கடந்து வேகமாக வெகு தூரம் சென்று நந்திக்ராமம் அருகில் வந்து விட்டதற்கு அறிகுறியாக, மலர்ந்து கிடந்த மரங்கள், அடர்ந்த தோப்பு ஒன்றை அடைந்தான். ஸ்த்ரீகள் கைகளில் குழந்தைகளுடனும், வயதானவர்களும், பலரும் மகிழ்ச்சியுடன் வளைய வந்து கொண்டிருந்தனர். சைத்ர ரதம் எனும் தேவ லோக தோட்டத்தில் இருப்பது போல மரங்கள் தெரிந்தன. அயோத்தியின் இரண்டு மைல் தூரத்தில், ஆசிரமத்தில் இளைத்து, மரவுரி அணிந்தவனாக, மான் தோலை போர்த்திக் கொண்டு நின்ற பரதனைப் பார்த்தான். உடல் பூரா புழுதி மண்டிக் கிடக்க, வயது முதிர்ந்தவன் போல நடுங்கும் உடல், சகோதரனுக்கு ஏற்பட்ட கஷ்டத்தால் தானும் வருந்தி, பழங்களையும், காய் கிழங்குகளையுமே உணவாகக் கொண்டு, தர்ம வழியில் தவம் செய்பவனாக, மேல் தூக்கி கட்டப் பட்ட ஜடையுடன், மரவுரி தரித்து, ப்ரும்ம ரிஷி போல தேஜஸுடன், தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு வாழ்ந்த பரதனைக் கண்டான். பாதுகையின் பேரில், நாட்டை ஆண்டு வந்தவனைக் கண்டான். நான்கு வர்ணத்தாரும் பயமின்றி வாழ வகை செய்து கொடுத்தவனாக, மந்திரிகள் புடை சூழ, புரோஹிதர்கள் சுத்தமாக வந்து நிற்பதையும், படை வீரர்களின் தலைவர்கள் வந்து விவரங்கள் சொல்வதையும், காஷாய வஸ்திரம் அணிந்த ஊர் ஜனங்களையும் கண்டான். அவர்கள் (வல்கலையும்) மரவுரியும், மான் தோலும் அணிந்திருக்கும் பொழுது, புர ஜனங்களும் உயர்ந்த ஆடையணிகளை ஒதுக்கியவர்களாக, தர்ம வத்ஸலனான அரசனின் வழியே தாங்களும் காஷாய வஸ்திரம் தரித்து நடமாடியதும், தர்மமே உருவெடுத்து வந்தவன் போலவும், தர்மஞானியே உருவெடுத்து வந்து விட்டவன் போலவும் இருந்த பரதனைக் கண்டு மாருதாத்மஜன், கை கூப்பி வணங்கி, தான் வந்த விஷயத்தை தெரிவித்தான். தண்டகாரண்யத்தில் மரவுரி, மான் தோல் தரித்து கஷ்ட ஜீவனம் செய்கிறான் என்று எந்த ராமனை நினைத்து நீ வருந்துகிறாயோ, அந்த காகுத்ஸனான ராமன் உன்னை குசலம் விசாரித்தான். தேவனே, இந்த ஆழ்ந்த சோகத்தையும் வேதனையும் தீரும் காலம் வந்து விட்டது. இந்த முஹுர்த்தத்திலேயே நீ சகோதரனான ராமனுடன் இணைவாய். கவலையை விடு. ராவணனை வதம் செய்து, மைதிலியை திரும்பப் பெற்று, மகா பலசாலியான நண்பர்களைப் பெற்று, அவர்களுடன் வந்து கொண்டே இருக்கிறான். லக்ஷ்மணனும் உடன் வருகிறான். புகழ் வாய்ந்த வைதேஹியும் உடன் வருகிறாள். மகேந்திரனுடன் சசி சேர்ந்ததைப் போல சீதை ராகவனை, ராமனை அடைந்தாள். சகோதரன் மேல் பாசம் மிகுந்த பரதன் இந்த செய்திகளைக் கேட்டு மகிழ்ந்தான். ஆனந்த மிகுதியில் மூர்ச்சையாகி விழுந்தான். முஹுர்த்த நேரத்தில் எழுந்து ஆஸ்வாஸம் செய்து கொண்டு பிரியமாக பேசும் ஹனுமானைப் பார்த்து மேலும் விவரங்கள் கேட்டான். பரபரப்புடன் தன் ஆனந்த கண்ணீர் அவன் மார்பை நனைக்க இறுக அணைத்துக் கொண்டான். தேவனோ, மனிதனோ நீ யார் என்று தெரியவில்லை. ஏதோ என்னிடம் உள்ள கருணையால் இங்கு வந்து நல்ல செய்தி சொன்னாய். பிரியமானதைச் சொன்னவனே, உனக்கு நான் என்ன தருவேன்? நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக பசுக்கள் தரவா? நூறு கிராமங்கள் தரவா? நல்ல குண்டலங்கள் அணிந்த நல்ல நடத்தையுள்ள பதினாறு கன்னிகளை மனைவியாகத் தரட்டுமா? இந்த பெண்கள் பொன் வர்ணமும், எடுப்பான நாசியும், இடையும், சந்திரன் போன்ற சௌம்யமான முகமும் கொண்ட எல்லா விதமான ஆபரணங்களும் பூண்டவர்களாக, நல்ல குலத்தில் பிறந்தவர்கள். ராமன் வருகிறான் என்று ஹனுமான் சொல்லக் கேட்ட அரச குமாரனான பரதன், ராமர் வரும் திசையை ஆவலுடன் பார்த்தபடி, மேலும் விசாரித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப4ரத ப்ரியாக்2யானம் என்ற நூற்று இருபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 129 (536) ஹனுமத் பரத சம்பாஷணம் (ஹனுமானும் பரதனும் சம்பாஷித்தல்)
வனம் சென்று பல வருஷங்களுக்குப் பிறகு ராமன் விஷயமாக கேள்விப் படுகிறேன். உலக வழக்கு ஒன்று உண்டு. மங்கள கரமான பாடல். உலகில் நூறு வருஷமானாலும் ஜீவித்திருப்பவனைத் தான் மங்களங்கள் வந்தடையும், என்பதாக. ராகவனுக்கும், வானரத்துக்கும் எப்படி தோழமை நட்பு ஏற்பட்டது. எந்த தேசத்தில் சந்தித்தார்கள்? எப்படி? என்ன காரணம் கொண்டு இருவரும் நட்பு பூண்டார்கள்? விவரமாகச் சொல்லு என்று கேட்க, ஹனுமான் புல்லில் அமர்ந்து கொண்டு உற்சாகமாக ஆரம்பித்தான். வனத்தில் நடந்த ராம சரிதம் அனைத்தையும் சொல்லத் தயாரானான். உன் தாய் வரதானத்தை காரணமாகச் சொல்லி நாட்டை விட்டு காட்டுக்கு போகச் சொன்ன நாளிலிருந்து, ராஜா தசரதன் புத்ர சோகத்தால் மறைந்தது, தூதர்கள் உங்களை வேகமாக அழைத்து வந்தது, அயோத்தி வந்து ராஜ்யம் உனக்கே என்ற பொழுது, ஏற்றுக் கொள்ள விரும்பாமல் தாங்கள் சித்ரகூட மலை சென்று சகோதரனை திரும்பி வரச் சொல்லி அழைத்ததும், தர்ம வழியில் நின்ற ராமன் தந்தை சொல் மீற மாட்டேன் என்று உங்களை திருப்பியனுப்பியதும், ராம பாதுகையை எடுத்துக் கொண்டு நீங்கள் திரும்பி வந்ததும், நீங்கள் அறிந்ததே. அதற்குப் பின் நடந்ததைச் சொல்கிறேன். தாங்கள் திரும்பிச் சென்றவுடன், மிருகங்களும், பறவைகளும் அந்த வனத்தில் இயல்பாக இல்லாமல் தவிப்பது போல இருந்தது. யானைகள் நிறைந்தது, சிங்கமும், புலியும், சஞ்சரிப்பதுமான காட்டில், ஜன நடமாட்டம் இல்லாத தண்டகா வனம் என்ற பெரும் காட்டில் மூவரும் பிரவேசித்தனர். அடர்ந்த காட்டில், போய்க் கொண்டிருக்கும் பொழுது, திடுமென விராத4ன் என்ற ராக்ஷஸன் உரத்த குரலில் அதட்டிக் கொண்டு எதிரில் வந்து நின்றான். கைகளைத் தூக்கியபடி, பிளிறும் யானைப் போல, தலை குனிந்து வந்தவனை, சகோதரர்கள் இருவருமாக, பள்ளத்தில் தள்ளி விட்டனர். மிகவும் சிரமமான இந்த காரியத்தை செய்து விட்டு, இருவரும் மாலை நேரம் சரபங்காஸ்ரமம் சென்றனர். சரபங்கர் தேவ லோகம் சென்றதும், ராமர் முனிவர்களை வணங்கி விசாரித்துக் கொண்டு தண்டகாரண்யம் வந்தார். ஜனஸ்தானம் வந்து சேர்ந்தார். சில நாட்களுக்குப் பின், (துஷ்டையான) சூர்ப்பணகா அவர் அருகில் வந்து சேர்ந்தாள். ராமன் கட்டளையிடவும், லக்ஷ்மணன் வேகமாக வந்து வாளை எடுத்து அவள் காதுகளையும், மூக்கையும் அறுத்து விட்டான். உடனே பயங்கரமான பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்கள் எதிர்த்து வந்து நின்றனர். ராகவன் அங்கு வசித்த காலத்தில் அவர்கள் எல்லோரையும் வதம் செய்து விட்டார். ராமன் ஒருவனாக அந்த கூட்டத்தை அழித்து விட்டான். நாளின் நாலில் ஒரு பாகத்தில், ராக்ஷஸர்கள் ஒருவர் மீதியில்லாமல் அழிந்தார்கள். இவர்கள் எல்லோருமே பலசாலிகள். யாகத்தை விக்னம் செய்வதே இவர்கள் பொழுது போக்கு. தண்டகாரண்ய வாசிகள் என்று பிரஸித்தமான அந்த ராக்ஷஸர்கள் ஒரே நாளில் அழிந்தார்கள். ராக்ஷஸர்கள் வாட்டி எடுக்கப் பட்டனர். க2ரனும் யுத்தத்தில் மாண்டான். இதைக் கண்டு அந்த ஸ்த்ரீ சூர்ப்பணகா, ராவணனிடம் சென்று முறையிட்டாள். ராவணனின் உறவினன் ஒருவன், மாரீசன் என்று பெயருடையவன். அவன் ரத்ன மயமான மான் உருவம் எடுத்துக் கொண்டு மைதிலிக்கு எதிரில் நடமாடினான். அதைக் கண்டு மோகித்து, பிடித்து தரும்படி மைதிலி ராகவனிடம் கேட்டாள். அஹோ, காந்தா, மனோகரமாக இருக்கிறது. இது நம் ஆசிரமத்தில் அழகாக இருக்கும் என்றாள். இதைக் கேட்டு ராமரும், வில்லை எடுத்துக் கொண்டு, ஓடும் பெண் மானை துரத்திக் கொண்டு போனார். வெகு தூரம் சென்ற பின் தன் பாணத்தால் அதைக் கொன்றார். சௌம்ய, இதன் பின் ராவணன் தசக்ரீவன், மிருகமான மான் ராமனை வெகு தூரம் இழுத்துச் சென்ற பின், லக்ஷ்மணனும் கவலையுடன் ராமனைத் தேடிச் சென்ற பின், ஆசிரமத்துள் நுழைந்தான். தனியாக இருந்த வைதேஹியை அபகரித்தான். ஆகாயத்தில் ரோஹிணியை க்ரஹம் பிடித்தது போல இருந்தது. அவளைக் காப்பாற்ற ஜடாயு ராவணனுடன் போரிட்டான். அவனை அடித்து வீழ்த்தி விட்டு ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு வேகமாக சென்றான். மலை உச்சியில் நின்றிருந்த நாங்கள் வானரங்கள், சீதையை கவர்ந்து செல்லும் ராவணனையும், பர்வதம் போன்ற அவன் சரீரத்தையும் பார்த்து ஆச்சர்யம் அடைந்தவர்களாக பார்த்துக் கொண்டு நின்றோம். ராவணன் லங்கை சென்று சீதையை சிறை வைத்தான். லோக ராவணன். உலகை துன்புறுத்தியவன் அவன். சுபமான தன் வீட்டில் எங்கும் தங்க மயமாக செல்வ செழிப்பை பறை சாற்றிக் கொண்டிருக்கும் தன் மாளிகையில் வைத்து சீதையை சமாதானம் செய்ய ஆரம்பித்தான். அவனை லட்சியம் செய்யாமல் சீதா அவனை ஒரு புல்லாக கூட மதிக்கவில்லை. அசோக வனத்தில் சிறைப் படுத்தப் பட்ட போதிலும், அவன் பால் சற்றும் கவனம் இல்லாதவளாக, ராமனையே நினைத்தபடி இருந்தாள். இங்கு பொய் மானை அடித்து விட்டு திரும்பிய ராமர், அடிபட்டு உயிருக்கு மன்றாடும் ஜடாயுவைக் கண்டார். தன் தந்தையின் சகாவான ஜடாயு சொன்னதைக் கேட்டு, இறந்து போன அதற்கு ஸ்ம்ஸ்காரங்கள் செய்து விட்டு, ராம லக்ஷ்மணர்கள், வைதேஹியை தேடிக் கொண்டு வந்தனர். கோதாவரி கரையோரமாக வனங்களில் தேடிக் கொண்டே வந்தனர். பெரிய அரண்யத்தில் கபந்தன் என்ற ராக்ஷஸனைக் கண்டனர். சத்ய பராக்ரமனான ராமர், கபந்தன் சொன்ன விஷயத்தை நம்பி, ருஸ்ய மூக மலைக்குச் சென்று சுக்ரீவனோடு சக்யம் செய்து கொண்டார். இவர்களின் சந்திப்பு, நட்புடன், ஒருவருக்கொருவர் அன்புடன் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதாக இருந்தது. சுக்ரீவனும் கோபம் கொண்ட வாலியினால் துரத்தப் பட்டவன். சம்பாஷனையில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, சமமான துக்கத்தை அனுபவிப்பவர்களாக, இருக்கவும், ஆழமான நட்பு இவர்களிடையில் தோன்றி வேரூன்றியது. ராமனுடைய புஜ பலத்தால் சுக்ரீவன் தனக்கு ராஜ்யம் கிடைக்கப் பெற்றான். வாலி மகா பலசாலி. பெரிய உருவம் உடையவன். அவனை போரில் வதம் செய்து சுக்ரீவன் ராஜ்யத்தில் நியமிக்கப் பட்டான். உடன் இருந்த வானரங்களும் மகிழ்ந்தன. ராஜ குமாரியான சீதையைத் தேட, ராமனுக்கு வாக்களித்தான். சுக்ரீவ ராஜா கட்டளையை ஏற்று, பத்து கோடி வானரங்கள் நாலா திசைகளிலும் தேடச் சென்றன. வழி தவறி, திண்டாடிய ஒரு கூட்டம் விந்த்ய மலையில் தடுமாறி நின்ற பொழுது கால கெடுவும் தாண்டி விட்டது. திரும்பி வரவும் முடியாத நிலை. வருந்தி புலம்பிக் கொண்டு இவர்கள் நின்றதை கழுகரசன் சம்பாதி கேட்டான். அவன் ஜடாயுவின் சகோதரன். தன் கூர்மையான கண்களால் பார்த்து சீதை ராவணன் க்ருஹத்தில் இருப்பதைச் சொன்னான். நானும், என்னுடன் வந்தவர்களின் கஷ்டத்தை உணர்ந்து, என் வீர்யத்தால் நூறு யோஜனை தூரம் சமுத்திரத்தை தாண்டிச் சென்றேன். அங்கு அசோக வனத்தில் தனித்து இருந்த சீதையைக் கண்டேன். மாசடைந்த வெண் பட்டாடை அணிந்து, கடுமையான நியமங்களுடன், சற்றும் மனதில் நிம்மதியின்றி இருந்தாள். அவளை நெருங்கி, மெதுவாக என்னைப் பற்றி தெரிவித்துக் கொண்டு, ராமன் கொடுத்த அடையாளத்தைக் காட்டினேன். அந்த கனையாழியை தெரிந்து கொண்டு வாங்கிக் கொண்டவள், தன் தலையில் சூடும் சூடாமணியை ராமனுக்கு அடையாளமாக தரச் சொல்லிக் கொடுத்தாள். வந்த காரியம் ஆயிற்று என்று நானும் திரும்பி வந்து ராமனிடம் மைதிலி உயிருடன் இருக்கிறாள் என்பதையும், நடந்த விவரங்களையும் தெரிவித்தேன். மரணத் தறுவாயில் இருப்பவன் அம்ருதம் கிடைக்கப் பெற்றது போல ராமர் மகிழ்ந்தார். மேற்கொண்டு செய்ய வேண்டியதை யோசித்து, ராவண வதம் தான் வழி என்று தீர்மானித்து செயல்பட ஆரம்பித்தார். உலக முடிவில் எல்லா லோகத்தையும் விபாவசு என்ற அக்னி அழிக்க நினைப்பது போல, ராமரும் ராவணனுடன் ராக்ஷஸ கூட்டத்தையே வதம் செய்ய தீர்மானித்தார். சமுத்திர கரையை அடைந்தோம். நளன் சேதுவைக் கட்டினான். அந்த சேதுவின் மூலமாக வானர சைன்யம் நடந்து அக்கரை சென்றது. பிரஹஸ்தனை நீலன் கொன்றான். கும்பகர்ணனை ராகவன், ராவண குமாரனை லக்ஷ்மணன் வதைத்தான். ராமர் தானே ராவணனை நேரடியாக போராடி ஜயித்தார். வதைத்தார். ராவண வதம் ஆன பின், இந்திரனும், யமனும், வருணனும், மகேஸ்வரனும், ப்ரும்மாவும் வந்து சேர்ந்தனர். வாழ்த்தி வரங்கள் தந்தனர். தசரதரும் வந்தார். இவர்கள் தந்த வரங்களுடன், ரிஷி கணங்களும் சேர்ந்து கொள்ள, சுரர்களும் ரிஷிகளும் கூட காகுத்ஸனுக்கு வரங்கள் தந்தனர். வானரங்களுடன் மகா பிரியத்துடன் புஷ்பக விமானத்தில் ஏறி கிஷ்கிந்தை வந்தார்கள். கங்கை கரையை அடைந்து முனிகளின் ஆசிரமத்தில் தங்கி இருக்கின்றனர். நாளை எந்த இடையூறுமின்றி ராமனை தரிசிப்பாய். ஹனுமானின் சத்ய வசனத்தைக் கேட்டு பரதன் ஆனந்த கடலில் மூழ்கினான். கை கூப்பியபடி, வெகு நாளைக்குப் பின் என் மனோரதம் நிறைவேறியது என்றும் சொன்னான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஹனுமத் பரத சம்பாஷணம் என்ற நூற்று இருபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 130 (537) ப4ரத சமாக3ம: (பரதனை சந்தித்தல்)
நடந்த விவரங்களைக் கேட்டு பரமானந்தம் அடைந்த பரதன், சத்ருக்னனுக்கு கட்டளையிட்டான். தேவாலயங்களும், நாற்கால் மண்டபங்களும், ஊரில் உள்ள எல்லா மாளிகைகளும், வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரிக்கப் படட்டும், ஊர் முழுவதும் சுத்தம் செய்து, ஜனங்களும் ஸ்நானம் செய்து சுத்தமாக இருக்கச் செய். பாடகர்களும், துதி பாடும் மாகதர்களும், வைதானிகர்கள், வாத்யம் வாசிப்பதில் தேர்ந்தவர்கள், கணிகா ஸ்த்ரீகள் கூட்டமாக ராமனை எதிர் கொண்டழைக்கச் செல்லட்டும். சந்திரன் போன்ற அவன் முகத்தைக் கண்டு வாழ்த்தி வரவேற்கட்டும். பரதன் கட்டளையை ஏற்று சத்ருக்னன், ஆயிரக் கணக்கான சேவகர்களை இந்த வேலைகளைச் செய்ய நியமித்தான். நந்தி கிராமத்திலிருந்து அயோத்தி வரையிலான பாதை பள்ளங்களை நிரப்பி, சமமாக்குங்கள். வளைந்து செல்லும் பாதையை நேராக ஆக்குங்கள். பாதையை ஸ்திரமாகச் செய்யுங்கள். குளிர்ந்த ஜலம் தெளித்து வழி முழுவதும்f, சீதளமாக இருக்கச் செய்யுங்கள். மற்றும் சிலர், பொரி, புஷ்பங்கள், இவைகளை சேகரித்து வழியில் மங்களகரமாக இரைத்து வையுங்கள். பதாகங்கள் தூக்கி உயரே கட்டப் படட்டும். நகரின் வழிகளில் ஆங்காங்கு கொடிகள் உயரே பறக்கட்டும். சூரியோதய சமயம் வீடுகள் பிரகாசமாக அலங்கரிக்கப் பட்டு இருக்கச் செய்யுங்கள். பூ மாலைகள், உதிரி புஷ்பங்கள், ஐந்து வர்ணங்கள் கொண்டு வாசனை மிகுந்த மலர்களை வழி முழுவதும், ராஜ மார்கம் நிறைய ஜனங்கள் வீசியபடி செல்லட்டும். ராஜ தாரா: – அரசனின் ராணிகள், மந்திரிகள், சைன்யம், சேனையைச் சேர்ந்த பெண்கள், ப்ராம்மணர்கள், அக்கம் பக்க அரச குடும்பத்தினர், சேனையில் முக்கிய பதவி வகிப்பவர்கள், எல்லோரும் வரவேற்க கூடுங்கள். இதைக் கேட்டு த்ருஷ்டி, ஜயந்தன், விஜயன், சித்தார்த்தன், அர்த்த சாதகன், அசோகன், மந்த்ர பாலன், சுமந்திரன் யாவரும் வெளி வந்தனர். மதம் கொண்ட ஆயிரம் யானைகள் தயாராயின. இவைகளுக்கு பொன்னாலான முகப் படம் போட்டு அலங்கரித்தனர். மற்றும் சிலர் தங்க சாலையில் இருந்து குட்டிகளுடன் பெண் யானைகளை அழைத்து வந்தனர். சிலர் குதிரைகளில் ஏறி வேகமாக வந்தனர். மற்றும் சிலர் ரதங்களை தயார் செய்து கொண்டு வந்தனர். சக்தி, இஷ்டி, ப்ராஸ எனும் ஆயுதங்களை ஏந்திய வீரர்கள் குதிரைகளின் மேல் பவனி வந்தனர். உயரத் தூக்கி பிடித்த கொடிகளுடன் ஆயிரக் கணக்கான பிரமுகர்கள் இதில் ஏறி வந்தனர். கால் நடையாகவும் பலர் வந்தனர். தசரதனின் மனைவிகள் தகுந்த வாகனங்களில் ஏறி நந்தி கிராமம் வந்து சேர்ந்தனர். கௌசல்யாவை முன்னால் நிறுத்தி, சுமித்ரையையும் சூழ்ந்து வந்தனர். கைகேயியையும் உடன் அழைத்துக் கொண்டு எல்லோருமாக நந்தி கிராமத்தை வந்தடைந்தனர். ஊர் கொள்ளாமல் நந்தி கிராம நகரம் கல கலப்பாகியது. ரதத்தின் ஓடும் சப்தமும், குதிரைகளின் கணைக்கும் சத்தமும், சங்க, துந்துபி கோஷங்களும் மேதினியே ஆட்டம் கண்டது போல கோலாகலமாக விளங்கியது. ப்ராம்மணர்களில் முக்கியமானவர்களும், வேத கோஷம் செய்யும் வேத விற்பன்னர்களும், மாலை, மோதகம் இவைகளை கையில் ஏந்திய மந்திரிகளும் பரதனை சூழ்ந்து நின்றனர். வந்திகள் எனும் துதி பாடகர்கள் வாழ்த்த, சங்க, பேரி, இவை வாசிக்கப் பெற்று வரவேற்க, ஆர்ய பாதௌ- ராமனின் பாதுகையை எடுத்துக் கொண்டு தலையில் வைத்தபடி, வெண் சாமரம், வெண்ணிற மாலை, இவைகளையும், வெண்மையான கொற்றக் கொடி, வால வ்யஜனம் எனும் சாமரங்கள், அரசனுக்குரியதாக, பொன்னால் வேலைப் பாடு செய்யப் பெற்றதாக, இவைகளுடன் உபவாசத்தால் இளைத்து துரும்பாகி இருந்தாலும், மரவுரியும், மான் தோலையும் தரித்து சகோதரன் வருகையை எதிர்பார்த்து அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி முகத்தில் தெரிய, பரதன் முன்னால் நின்றான். மந்திரிகள் தொடர்ந்தனர். பவனாத்மஜனைப் பார்த்து பரதன், வானர இயல்பான குறும்பு எதுவும் செய்யவில்லையே. ராமனை இன்னமும் கானவில்லையே. வானரங்கள் இஷ்டம் போல உருவம் எடுக்க வல்லவர்கள் என்று சொன்னாயே, யாரையும் காணோமே என்று கவலையுடன் கேட்டான். ஹனுமான் இதைக் கேட்டு சமாதானம் செய்யும் விதமாக பொருள் பொதிந்த வார்த்தைகளைச் சொன்னான். பரத்வாஜ ஆசிரமத்தில், பழம் நிறைந்த மரங்கள், தேன் சொரியும் புஷ்பங்களுடன் உள்ள மரங்களும் நிறைய இருந்திருக்கும். பரத்வாஜரின் அனுமதியுடன் இங்கு குதித்து கும்மளமிட்டுக் கொண்டு வானரங்கள் தாமதம் செய்கின்றன போலும். இந்திரனும் வரம் கொடுத்திருக்கிறான். சைன்யத்துடன் பரத்வாஜர் முன்பு ஆதித்யம்-விருந்தோம்பலை செய்தவர் தானே. இதோ கேளுங்கள். மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் வானரங்களின் கூச்சல் கேட்கிறது. வானர சேனை கோமதி நதியைக் கடக்கிறது என்று நினைக்கிறேன். வாலகினி நதியை நோக்கி புழுதி படலமாக எழுந்து நிற்பதைப் பாருங்கள். இதோ சால வனம். ரம்யமாக இருந்தது. வானரங்கள் அந்த வனத்தில் அட்டகாசம் செய்கின்றன போலும். இதோ, தூரத்தில் சந்திரன் உதித்தது போல, புஷ்பக விமானம் தெரிகிறது. ப்ரும்மா தன் மனதில் கற்பனையில் நிர்மாணித்தது. ராவணனை பந்துக்களோடு அழித்து மகாத்மாவான விபீஷணன் கைக்கு வந்துள்ளது. இளம் சூரியன் போன்ற வாகனம். ராம வாகனம் தான். குபேரனுடைய கருணையால், மனோ வேகத்தில் செல்லும் இந்த திவ்யமான விமானம் கிடைத்தது. இதில் தான் ராகவர்கள், ராம லக்ஷ்மணர்கள் சீதையுடன் வருகிறார்கள். மகா தேஜஸ்வியான சுக்ரீவனும், ராக்ஷஸ ராஜா விபீஷணனும் வருகிறார்கள். உடனே பெரும் ஆரவாரம் எழுந்தது. வானளாவ எழுந்த பெரும் சப்தம், இதோ ராமன் என்று சொன்னதும், வரவேற்கும் விதமாக எழுந்தது. ரதங்களிலும், யானைகளிலும், குதிரைகளிலும் இருந்தவர்கள் இறங்கி பூமியில் நின்றனர். ஆகாயத்தில் சந்திரனைக் காண்பது போல விமானத்தில் இருந்த ராமரைக் கண்டனர். பரதன் கை கூப்பிய வாறு ராமரை எதிர் கொண்டு சென்றான். ஸ்வாகதம் கூறி வரவேற்றான். ப்ரும்மா தன் மனதால் ஸ்ருஷ்டி செய்த விமானத்தில் பரதன் முன் பிறந்தோன், நீண்ட கண்களுடன் மற்றொரு இந்திரன் போல விளங்கினார். விமானத்தின் முன் சென்ற பரதன், சகோதரனை வணங்கினான். மேருவில் நின்ற பாஸ்கரனை வணங்குவது போல வணங்கினான். ராமனின் அனுமதியுடன் விமானம் பூமியில் இறங்கி நின்றது. விமானத்தில் பரதனை ஏற்றினார்கள். ராமன் அருகில் சென்று மகிழ்ச்சியுடன் திரும்பவும் அபிவாதனம் செய்தான். வெகு நாட்களுக்குப் பின் கண்களில் தென்பட்ட பரதனை மடியில் இருத்திக் கொண்டு ராமர் இறுக அணைத்துக் கொண்டார். பின் லக்ஷ்மணன் அருகில் சென்று அவனையும், வைதேஹியையும் பரதன் வணங்கினான். தன் பெயர் சொல்லி சுக்ரீவனையும், ஜாம்பவானையும் வணங்கினான். பின் அங்கதனையும் மைந்தன், த்விவிதன், நீலன், ரிஷபன் இவர்களையும் அணைத்து வரவேற்றான். சுஷேணனையும், நளன்., க3வாக்ஷன் இவர்களையும் அப்படியே வரவேற்றான். இவர்களும் மனித உருவம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் குசலம் விசாரித்தனர். இதன் பின் அரச குமாரன் சுக்ரீவனிடம், நாங்கள் நால்வர் சகோதரர்களாக இருந்தோம். உன்னுடன் ஐவரானோம். என்றான். சினேகம் அன்பினால் வளருகிறது. துரோகம் செய்வது எதிரிகளின் லக்ஷணம் என்றான். விபீஷணனையும் பார்த்து, அதிர்ஷ்ட வசமாக தங்கள் உதவியும் கிடைத்தது. அதனால் தான் இந்த அரிய செயலை எளிதாக செய்ய முடிந்தது என்றான். சத்ருக்னனும் அதே போல ராமரை வணங்கி லக்ஷ்மணனையும் வணங்கி, சீதையின் சரணங்களைப் பற்றி, வினயத்தோடு வணங்கினான். ராமரும், வெகு காலமாக பிரிந்திருந்த தாயை சென்று வணங்கினார். தாய் உள்ளம் உவகையால் பூரிக்க, சுமித்ரையையும். கேகய ராஜ குமாரியான கைகேயியையும் வணங்கினார். தாய் மார்களை விட்டு புரோகிதரை அணுகியதும், அவர்கள் ஸ்வாகதம் சொன்னார்கள். கௌசல்யானந்த வர்தனா, உனக்கு நல் வரவு என்று வரவேற்றனர். நகரத்து ஜனங்களும் அவ்வாறே கை கூப்பியவர்களாக ஸ்வாகதம் சொன்னார்கள். ஆயிரக் கணக்கான நகர ஜனங்களின் கூப்பிய கைகள், பல ஆயிரம் தாமரை மொட்டுகளாக ராமன் கண்களுக்குத் தெரிந்தன. ராம பாதுகையை பரதன் தானே கொண்டு வந்து நரேந்திரனான ராமனின் கால்களில் அணிவித்தான். ராமனைப் பார்த்து ராஜன்| இதோ இந்த பாதுகைகளை காப்பாற்றி ராஜ்யத்தோடு திருப்பிக் கொடுத்து விட்டேன். இன்று என் ஜன்மம் க்ருதார்த்தமாயிற்று. என் கஷ்டங்கள் தீர்ந்தன என்றான். என் மனோரதம் பூர்த்தியாயிற்று என்றான். திரும்பி வந்து நீ அயோத்யாவின் அரசனாக பதவி ஏற்று, காண்போமா என்று இருந்தது. இப்பொழுது இதோ பொக்கிஷம், செல்வம், ஊர், படை உங்கள் ஆசிர்வாதத்தால் பத்து மடங்காக உயர்த்தி வைத்திருக்கிறேன். இவைகளை பார்த்து ஏற்றுக் கொள்ளுங்கள். சகோதர பாசத்தின் எடுத்துக் காட்டாக பரதன் சொன்னதைக் கேட்டு, வானரங்கள் ஆனந்த பாஷ்பம் சொரிந்தன. இதன் பின், பரதனை அருகில் இருத்தி அணைத்துக் கொண்டு அந்த விமானத்திலேயே பரதாஸ்ரமம் சென்றனர். பரதாஸ்ரமம் அடைந்து சேனைகளோடு விமானத்திலிருந்து இறங்கி பூமியில் நின்றார். விமானத்தைப் பார்த்து நீ போய் வைஸ்ரவனை ஏற்றிச் செல்பவனாக திரும்பி போ. நான் அனுமதி தருகிறேன், என்று அனுப்பி விட்டார். ராமர் அனுமதி அளித்ததும், அந்த விமானம் வடக்கு நோக்கிச் சென்று, தனதன் எனும் குபேரனுடைய இருப்பிடத்தைச் சென்றடைந்தது. புரோஹிதர் பாதங்களை வணங்கி, தனக்கு சமமாக இருந்தவரை, அமராதிபனான இந்திரன் ப்ருஹஸ்பதியை வணங்குவது போல வணங்கி, அவரை மற்றொரு ஆசனத்தில் அமர்த்தி, பாதங்களை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு, தன் சுபமான ஆசனத்தில் அமர்ந்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப4ரத சமாக3ம – என்ற நூற்று முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 107 (514) ஆதித்ய ஹ்ருதயம்
ராவணன் யுத்தம் செய்யத் தயாராக எதிரில் வந்து நிற்கவும், ராமன் யோஜனையுடன், யுத்தம் செய்த களைப்புடன் இருந்ததையும், தேவர்களுடன் யுத்தத்தைக் காண வந்த பகவான் அகஸ்திய ரிஷி கண்டார். அவர் உடனே ராமன் அருகில் சென்று ராம, ராமா | மஹா பாஹோ | நான் சொல்வதைக் கேள். பழமையான ரகஸியம் இது. குழந்தாய்| எதிரிகள் அனைவரையும் ஜயிக்க உதவும் சக்தி வாய்ந்த மந்திரம் இது. ஆதித்ய ஹ்ருதயம் என்ற பெயருடையது. பாவனமானது. சத்ருக்களை ஒட்டு மொத்தமாக அழிக்க வல்லது. மிகவும் நன்மை தரக் கூடிய, அழிவில்லாத, ஜயத்தை தரும் இதை நித்யம் ஜபம் செய்ய வேண்டும். எல்லா மங்களங்களுக்கும் மேலான மங்களகரமானது. எல்லா பாபங்களையும் தீர்க்கக்கூடியது. சிந்தனை, சோகம் இவற்றை மாற்றி, சமாதானம் செய்யக் கூடியது. ஆயுளை வளர்க்கும் உத்தமமான மந்திரம். நான் சொல்கிறேன், கேள். ஓளிக் கிரணங்களைப் பரப்பி ஒளியை அளிக்கும் பாஸ்கரன், விவஸ்வான் என்று போற்றப்படும், புவனேஸ்வரனான இந்த சூரியனை, உதய காலத்திலேயே நமஸ்கரிக்க தேவர்கள் கூடி நிற்கின்றனர். இந்த சூரியனை பூஜை செய். வழி படு. இந்த சூரிய தேவன், எல்லா தேவதைகளுக்கும் உள் நின்று ஆத்மாவாக விளங்குபவன். தேஜஸ் நிரம்பியவன். ஒளியைத் தருபவன். தன் ஒளிக்கற்றைகளால் தேவாசுர கணங்களை, உலகங்களை காப்பாற்றுகிறான். இவரே தான் ப்ரும்மாவாக, விஷ்ணுவாக, சிவனாக, ஸ்கந்தனாக, பிரஜாபதியாக, மகேந்திரனாக, குபேரனாக, பித்ருக்களாக, வசுக்களாக, சாத்யர்களாக, அஸ்வினி குமாரர்களாக, மருத் கணங்களாக, மனுவாக, வாயுவாக, நெருப்பாக, ப்ரஜைகளின் ப்ராணனாக, ருதுக்களை நிர்வகிக்கும் இயற்கையாக, ஒளியைத் தருபவனாக, விளங்குகிறார். இவரே ஆதித்யன், சவிதா, சூரியன் என்றும் அழைக்கப்படுகிறார். ஆகாயத்தில் சஞ்சரிப்பவன், பூஷா என்றும், கிரணங்களையுடையவன் என்று பொருள் பட க3பஸ்திமான் என்றும், சுவர்ணம் போன்ற இளம் சூரியன் பானு என்றும், பொன் போன்ற ஒளிக்கற்றைகளுடன் திவாகரன், தினத்தை செய்பவன் என்றும் (பகல் நேரத்தை செய்பவன், பகல் வரக் காரணமாக இருப்பவன்) என்றும் அழைக்கப் படுகிறார். பசு மஞ்சள் நிறமான குதிரைகள், ஆயிரம் கிரணங்கள், வேகமாக செல்லும் ஏழு குதிரைகள், ஒளிக் கற்றைகள், இவைகளை உடையவர். இருட்டை வேரோடு களைபவர். சம்பூ, த்வஷ்டா, மார்த்தாண்டன், அம்சுமான் என்றும் அழைக்கப்படுபவர். ஹிரண்ய கர்பன், சிசிரன் (குளுமைக்கு காரணமானவன்) எரிக்கவும் கூடியவன், ரவி, அக்னி கர்பன், அதிதியின் புத்திரன், சங்கன், குளிரை விரட்டுபவன். ஆகாயத்தில் சஞ்சரிப்பவன், தாமஸமான இருட்டை முறியடிப்பவன், ருக், யஜுர், சாம வேதங்களில் போற்றப்படுபவன். பெருத்த மழைக்கும் காரணமானவன். நீருக்கும் நண்பன், விந்த்ய வீதீ- விந்த்ய மலைச் சாரல்களில் துள்ளி குதிப்பவன். (ப்ளவங்கமா -துள்ளி குதித்து ஓடும் இயல்புடைய வானரங்களுக்கும் பெயர்). தகிக்கக் கூடியவன். மண்டலமாக விளங்குபவன். ம்ருத்யுவும் இவனே. மஞ்சள் நிறமானவன். எதையும் பொசுக்கும் உஷ்ணமுடையவன். கவி, விஸ்வன், மகா தேஜஸ்வி, சிவந்த நிறமாகவும் காணப்படுபவன். எல்லா ஜீவ ராசிகளுக்குள்ளும் அந்தராத்மாவாக விளங்குபவன். நக்ஷத்திரங்கள், க்ரஹங்கள், தாரா இவைகளுக்குத் தலைவன். உலகை பிரகாசிக்கச் செய்பவன். தேஜஸ் என்று சொல்லக் கூடிய அனைத்திலும் அதிக தேஜஸ் உடையவன். பன்னிரண்டு விதமான (ஆத்மா) ரூபங்களை உடையவன், ஆன சூரிய தேவனே, உனக்கு வணக்கம், நமஸ்காரம். ஜயமாக, வெற்றியாக விளங்கும் உனக்கு நமஸ்காரம். வெற்றி வாய்ப்பைத் தரும் உனக்கு நமஸ்காரம். இளம் பசுமை கலந்த மஞ்சள் நிறக் குதிரைகளை உடைய உனக்கு நமஸ்காரம். அனேக நமஸ்காரம். ஆயிரம் கிரணங்கள் உடைய உனக்கு அனேக நமஸ்காரம். ஆதித்யனாக விளங்குபவனே | உனக்கு அனேக நமஸ்காரம். உக்ரனாக,. வீரனாக விளங்கும் உனக்கு நமஸ்காரம். சாரங்கனாக நிற்கும் (மழை) உனக்கு அனேக கோடி நமஸ்காரங்கள். பத்மத்தை மலரச் செய்யும் உனக்கு அனேக கோடி நமஸ்காரங்கள். மார்த்தாண்டனாக தகிக்கும் உனக்கு அனேக கோடி நமஸ்காரங்கள். ப்ரும்மா, ஈ.சான, அச்யுதன் இவர்களுக்கும் தலைவனாக நிற்கும் சூரிய தேவனுக்கு, ஆதித்யன் எனும் ஒளி மிகுந்தவனுக்கு நமஸ்காரம். தன் ஒளியால் பிரகாசமாக தெரியும், எல்லாவற்றையும் விழுங்கி விடும் ரௌத்ரமான ரூபம் உடையவனுக்கு நமஸ்காரம். இருட்டை விரட்டியடிக்கும், பனியை துரத்தும், சத்ருக்களை நாசம் செய்யும், ஒப்பில்லாத, எல்லையில்லாத பெருமைகள் உடையவனே | உனக்கு நமஸ்காரம். செய் நன்றி மறந்தவனை நாசம் செய்யும் தேவனே, ஜோதிகளுக்குத் தலைவனாக இருப்பவனே, உனக்கு நமஸ்காரம். புடமிட்டத் தங்கம் போன்று ஒளி வீசும், அக்னியாக நிற்பவனே, விஸ்வ கர்மாவே, உலகை செயல் பட வைப்பவனே, உனக்கு நமஸ்காரம். இருட்டை இல்லாமல் செய்பவனே, உனக்கு நமஸ்காரம். உனக்கு நமஸ்காரம். ரவியாக இருப்பவன், உலகில் சாக்ஷியாக நிற்பவன், (உலகின் நடப்புகளைக் கண்கூடாக காண்பவன்), பிரபுவான இவன் தான் நாசமும் செய்கிறான். ஜீவ ராசிகளை, பின் இவனே ஸ்ருஷ்டியும் செய்கிறான். இவனே வளர்க்கிறான். அவர்களை தண்டிக்கவும் செய்கிறான். தகித்து வருத்துகிறான். மழையாக பொழிந்து குளிர்விக்கிறான். இவன் கிரணங்களே இந்த காரியங்களைச் செய்கின்றன. தூங்கும் ஜீவன்களின் உள்ளும் இவன் விழித்திருக்கிறான். கவனமாக காவல் நிற்கிறான். இவனே அக்னி ஹோத்ரம். அக்னி ஹோத்ரம் செய்பவர்களுக்கு பலனாகவும் இவனே ஆகிறான். வேதங்களும், யாகங்களும், யாகங்களின் பலனும் இவனே. உலகில் நடைபெறும் செயல்கள் யாவும் இவன் ஆட்டுவிப்பதன் காரணமாகவே ஆடுகின்றன. செயல் படுகின்றன. இவன் தான் ரவி என்றும் அழைக்கப்படும் பிரபுவாகிறான். ஆபத்து காலங்களில், கஷ்டமான சமயங்களில், அடர்ந்த வனங்களில், பயத்துடன் தடுமாறும் பொழுதும், தன்னை நினைத்து போற்றும் அன்பர்களை கை விட மாட்டான். நிச்சயமாக காப்பாற்றுவான். ராகவா| இவனை வணங்கும் அன்பர்கள் ஒரு பொழுதும் வருந்த மாட்டார்கள். இவனை பூஜை செய். ஏகாக்ர சிந்தையோடு போற்று. ஜகத்பதியான தேவ தேவனாக எண்ணி வணங்கு. இந்த துதியை மூன்று முறை ஜபித்து நீ வெற்றியடைவாய். யுத்தத்தில் ஜயம் உனக்கே. இந்த க்ஷணத்திலேயே நீ ராவணனை வதம் செய்வாய். என்று இவ்வாறு வாழ்த்தி அகஸ்தியர் தன் வழியே சென்று விட்டார். இதைக் கேட்டு ராகவனும் தன் வருத்தம் கவலை தீர்ந்து அமைதி அடைந்தான். மிகவும் மகிழ்ச்சியுடன் தன் இயல்பான நிலைக்குத் திரும்பினான். கம்பீரமும், தன்னம்பிக்கையும் திரும்பப் பெற்றான். மூன்று முறை ஆசமனம் செய்து, சுத்தமாக ஆகி, ஆதித்யனைப் பார்த்து ஜபம் செய்தான். ஜபம் செய்த பின், மிகுந்த மகிழ்ச்சியும், மன நிறைவும் பெற்றான். தன் வில்லை எடுத்துக் கொண்டு, வீர்யம் நிறைந்தவனாக, ராவணனை நேருக்கு நேர் பார்த்து யுத்தம் செய்ய ஆயத்தமாக நெருங்கினான். என்ன ஆனாலும், இன்று இவனை வதம் செய்தே தீருவது என்று உறுதி பூண்டான். இதைக் கண்டு ரவியான சூரியனும் மகிழ்ந்து ராமனைப் பார்த்து, நிசிசரபதியான ராவணனின் அழிவு காலம் நெருங்கி விட்டதையறிந்து, -த்வர -வேகமாக செயல் படு என்று சொன்னான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஆதித்ய ஹ்ருதயம் என்ற நூற்று ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 108 (515) சுபா4 சுப4 நிமித்த தரிசனம் (சுப அசுப நிமித்தங்களைக் காணுதல்)
கந்தர்வ நகரமோ எனும் படி விசாலமாக இருந்த பெரிய ரதம், அதன் கொடிகளைத் தூக்கிக் கட்டி, மாதலி தயார் செய்தான். எதிரி சைன்யத்தை நாசம் செய்ய வல்லதான ரதம். துடிப்பாக இருந்த குதிரைகளை மாலை அணிவித்து அந்த ரதத்தில் பூட்டினான். யுத்தம் செய்யத் தேவையான சாமான்களை நிரப்பினான். இதனிடையில், பதாகம், த்வஜம் இவைகளை அதனதன் இடத்தில் பொருத்தி, ஆகாயத்தைத் தொடுவது போலவும், பூமியை நடுங்கி அலறச் செய்வது போலவும், தன் சைன்யத்துக்கு மகிழ்ச்சியும், எதிரி தரப்பினருக்கு நாசத்தையும் விளைவிக்கும் வண்ணம், வேகமாக ஓசையுடன் வரும் ராவணனுடைய ரதத்தை, ராக்ஷஸ ராஜனுடைய ரதத்தை, நர ராஜனான ராமர் கண்டார். கரு நிற குதிரைகள் பூட்டப் பெற்று, ரௌத்ரமாக காணப் பட்டது. மின்னலுடன் கூடிய மேகம் நிறைந்த வானமோ, எனும் படி காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த இந்திர ஆயுதங்கள் போல, சரங்களை மழையாக பொழியும் வண்ணம் அமைக்கப் பட்டிருந்ததையும், மழை மேகம் போல, அம்புகளை மேலே இருந்து பொழியவும் வசதிகள் உடையதுமான ராக்ஷஸ ராஜாவின் உயர்ந்த ரதத்தை ராமர் கண்டார். வஜ்ரம் மலைகளை பிளந்தபொழுது, தோன்றிய சப்தத்துக்கு இணையாக ஓசை எழுப்பியபடி ஓடி வந்தது. அந்த வேகத்தில் இளம் (சந்திரன்) பிறை போல இருந்த வில் மீட்டப் பெற்று நாதம் எழ வரும் ரதத்தைப் பார்த்து, ராமர், சஹஸ்ராக்ஷனின் சாரதியான மாதலியை நோக்கி மாதலியே | பார். எதிரியின் ரதம் வேகமாக மேலே வந்து விழுவது போல ஓடி வருகிறது. பரபரப்புடன் இடது பக்கம் சாய்ந்து கொண்டு வருகிறது. இதை நான் அழிக்க விரும்புகிறேன். மேலெழும்பி வரும் மேகத்தை வாயு கலைப்பது போல இதை நான் கலைத்து, நாசமாக்குவேன். கண்ணுக்கு ரம்யமாக காட்சியளிக்கிறது. சற்றும் குறையின்றி பரபரப்புடன் காணப் படுகிறது. நம் ரதத்தையும் தயாராக்கு. வேகமாக கிளம்புவோம். புரந்தரன் ரதத்தை ஓட்டுபவன் நீ. எதையும் மறக்க மாட்டாய். இருந்தும் நினைவு படுத்துகிறேன். கட்டளையாகச் சொல்லவில்லை. ராமன் சொன்னதைக் கேட்டு மாதலி சந்தோஷமடைந்தான். தேவ ராஜனின் சிறந்த சாரதியான மாதலி ரதத்தை அவ்விதமே தயார் செய்தான். ராவணனின் ரதத்தை இடது புறமாக கடந்து சென்று ரதம் கிளப்பிய புழுதி ராவணன் முகத்தில் படுமாறு செய்தான். இதனால் கண்கள் தாமிரம் போல சிவக்க கோபத்துடன் தசக்ரீவன் தன் வில்லை எடுத்து எதிரில் வந்து நின்ற ராமனின் பேரில் தன் அம்புகளை பிரயோகம் செய்ய ஆரம்பித்தான். தன் மேல் தாக்குதலை ஆரம்பித்த ராவணனுக்கு பதிலடி கொடுக்க, தன் தைரியத்தையும், ரோஷத்தையும் ஒன்று சேர்த்து, ராமர் இந்திரனுடைய வில், அம்புகள் இவற்றை கையால் பற்றினார். சூரிய கிரணங்கள் போல ஒளி வீசும் பல அஸ்திரங்களும் அந்த ரதத்தில் வந்து சேர்ந்தன. இதற்குப் பின் நடந்த யுத்தம் விவரிக்க இயலாதது. இருவரும் ஒருவரையொருவர் வதம் செய்வதில் முனைந்து நின்றனர். இருவரும் எதிரெதிரில் நின்றதே, கர்வம் கொண்ட இரு சிங்கங்கள் நிற்பது போல இருந்தது. அச்சமயம் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், வந்து சேர்ந்தனர். இரண்டு ரதங்களில் எதிர் எதிராக நின்று யுத்தம் செய்வதைக் காண கூடினர். ராவணனின் வதத்தை விரும்பிய தேவர்கள், ராவணன் அழியவும், ராகவனின் ஜயத்துக்காகவும் கோஷம் இட்டனர். காற்று மண்டலமாக , தீவிரமாக, அந்தரிக்ஷத்தில் வீசியது. பெரும் கழுகுகளின் கூட்டம் ஆகாயத்தில் வட்டமிடத் தொடங்கின. ராவண ரதம் எங்கெங்கு செல்கிறதோ, கழுகு கூட்டம் தொடர்ந்து சென்றது. செம்பருத்திப் பூவின் வண்ணத்தில் சந்த்யா காலம் லங்கையின் மேல் படர்ந்தது. பட்ட பகலில், விளக்கு எரிவது போல பூமியில் பிரகாசமாகத் தெரிந்தது. கூட்டம் கூட்டமாக மின் மினி பூச்சிகளும், வண்டுகளும் ரீங்காரம் செய்து கொண்டு ராவண ராக்ஷஸ வீரர்களை துன்புறுத்தியவாறு இருந்தன. ராவணன் நின்ற இடத்தில் வசுந்தரா என்ற பூமியும் நடுங்கியது. ராவண வீரர்கள் வீசி அடிக்க முற்படும் பொழுது யாரோ கையைப் பற்றி தடுப்பது போல தடைகள் தோன்றின. சூரியனின் கிரணங்கள் சில சமயம் தாம்ர வர்ணத்திலும், மஞ்சளாகவும், வெண்மையாகவும் , பழுப்பு நிறத்திலும் விழுந்தன. ராவணன் சரீரத்தில் இந்த வகையில் கிரணங்கள் பல வர்ணங்களில் படும் பொழுது பெரும் மலையில் தாதுக்கள் மின்னுவது போல இருந்தது. குள்ள நரிகள், ஊளையிட்டதும் அப சகுனமாக இருந்தது. (சிவா|| குள்ள நரிகள். சிவம்-நன்மை) புழுதியை வாரியிறைத்துக் கொண்டு எதிர் காற்று சுழன்று அடித்தது. ராக்ஷஸ ராஜன் பார்வை மறைக்க திணறினான். அதே சமயத்தில் இந்திரனுடைய வில்லிலிருந்து பாணங்கள் அவன் படை மேல் வந்து விழுந்தன. ராவணன் கண் முன்னாலேயே மழை மேகமே இன்றி இடி ஓசை கேட்டது போல, இந்த பாணங்கள் வந்து விழுந்த ஓசை பயங்கரமாக கேட்டது. திசைகளும், மற்ற இடங்களும் கடும் இருட்டினால் சூழப் பெற்றதாக, ஆயிற்று. புழுதி படிந்து ஆகாயமும் கண்ணுக்கு புலப்படவில்லை. சாரிகா என்ற பறவைகள் ஏதோ கலஹம் செய்ய வருவது போல அந்த ரதத்தின் மேல் வந்து விழுந்தன. நூற்றுக் கணக்காக வந்து விழுந்த அந்த பறவைகளே பயத்தை கிளப்பின. குதிரைகளின் முட்டிகள் உரசி நெருப்புப் பொறி பறந்தன. இதனால் எப்பொழுதும் கண்களில் நீர் முட்டி நின்றது. ஒரே சமயத்தில் அந்த குதிரைகள் அக்னியையும், நீரையும் சொரிந்தன. இது போன்ற பல பயங்கரமான துர்நிமித்தங்கள் ராவணனின் நாசத்தைச் சொல்வது போல அடுத்தடுத்து தோன்றின. ராமனிடத்தில் நிமித்தங்கள்., சௌம்யமாக, சுபமாகத் தோன்றின. ஜயத்தை சொல்பவைகளாக, எங்கும் மங்களகரமான சகுனங்களே தென்பட்டன. இந்த சுபமான நிமித்தங்கள், தனக்கு வெற்றியைத் தரும் சூசகங்கள் என்று தெரிந்து கொண்ட ராமரும், மிகவும் மன நிறைவுடன், ராவணன் அழிந்தான் என்றே எண்ணிக் கொண்டார். தன்னிடத்தில் தோன்றிய சில நிமித்தங்களை, அதன் பொருளை உணர வல்லவரானதால், நல்ல சகுனங்கள், நமக்கு வெற்றி உறுதி என்ற நம்பிக்கையும் வலுப்பட, மகிழ்ச்சியுடன் நிம்மதியும் அடைந்தார். யுத்தத்தில் மேலும் பராக்ரமத்தைக் காட்டத் தயாரானார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சுபா4சுப4 நிமித்த தரிசனம் என்ற நூற்று எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 109 (516) ராவண த்4வஜோன்மத2னம் (ராவணன் கொடியை விழச் செய்தல்)
இதன் பின் நடந்த யுத்தம் மகா பயங்கரமானது. காணக் கிடைக்காத அரிய யுத்தம். ஸர்வ லோகத்தையும், பயத்தில் ஆழ்த்தி, இரு ரதங்களில் இரு வீரர்களும் ஏறி நின்று, மகா பயங்கரமாக யுத்தம் செய்த காட்சி. ராக்ஷஸ சைன்யமும், வானரங்களின் பெரும் படையும், கையில் ஆயுதங்களுடன் செயலற்று நின்றன. ப3லவான்களான நர, ராக்ஷஸர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் பொழுது, மற்றவர்களுக்கு என்ன வேலை? ஆச்சர்யத்தோடு, உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடப்பதை கவனிக்கலாயினர். ஒருவரையொருவர் தாங்கள் அடித்துக் கொள்வதை நிறுத்தி விட்டு, பல விதமான ஆயுதங்களுடன், தோள் உயர்த்தி துடிப்பாக நின்ற இருவரையும், அவர்களின் பல பரீக்ஷையாக நடக்கப் போகும் யுத்தத்தையும் காண ஆவலுடன், அதிசயமுமாக நின்றனர். ராவணனை வானரங்களும், ராமனை ராக்ஷஸர்களும் கண்களில் ஆச்சர்யம் ததும்ப பார்த்துக் கொண்டு நின்றதே ஒரு அத்புதமான சித்ரம் போல காட்சியளித்தது. இருவரும் நிமித்தங்களையும் பார்த்து புரிந்து கொண்டு, வெகு காலமாக அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வெளிப்பட யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். ஜயிக்க வேண்டும் என்று காகுத்ஸனும், மடிய வேண்டும் என்று ராவணனும் போர்க் களத்தில் இறங்கியது போல இருந்தது. தங்களுடைய வீர்யம் அனைத்தையும் இந்த யுத்தத்தில் காட்டி விட துடிப்பவர்கள் போல இருந்தனர். இதன் பின் தசக்ரீவன் தன் சரங்களைக் கோர்த்து, வில்லிலிருந்து எய்தான். ராகவனுடைய ரதத்தின் உச்சியில் கட்டப் பெற்றிருந்த த்வஜத்தை குறி வைத்து அடித்தான். அந்த அம்புகள், புரந்தரனின் த்வஜத்துக்கு சமமானவை ஆனதால், த்வஜம் வரை எட்டாமலே விழுந்து நாசமாயின. ரதத்தை தொட்டு விட்டு கீழே பூமியில் விழுந்து மறைந்தன. ராமரும் தன் வில்லை இழுத்து இதற்கு பதில் சொல்வது போல மனதால் நினைத்து, ராவணனுடைய த்வஜத்தை நோக்கி கூர்மையான சரத்தை விட்டார். கொடிய நாகம் போன்று தாங்க முடியாத சக்தியோடு, தன் சக்தியால் தானே பிரகாசமாகத் தெரிந்த அந்த சரம் தசக்ரீவனின் த்வஜத்தை அடித்து தள்ளியது. ராவணனுடைய ரணத்வஜம், வேரறுந்த மரம் போல அடியோடு பெயர்க்கப் பட்டதையறிந்து தசக்ரீவ மகா ராஜா, கோபத்தால் தகித்துக் கொண்டிருக்கும் நிலையை அடைந்தான். ஆத்திரம் அவனை சுட்டெரிப்பது போல இருந்தது. மேலும் கோபத்தின் வசத்தில் சரங்களை மழையாக பொழியலானான். ராமனுடைய குதிரைகளை தன் கூரிய பாணங்களால் துளைத்து எடுத்தான். இந்த பாணங்கள் தைத்த பின்னும் குதிரைகள் தடுமாறவும் இல்லை, பரபரப்பும் அடையவில்லை. பத்ம நாளத்தால் அடி பட்டது போல சுகமாக, தன்னிலை தவறாது நின்றன. குதிரைகள் சற்றும் பதட்டமடையாமல் நிற்பதைக் கண்டு தசக்ரீவன் மேலும் ஆத்திரத்துடன் இடைவிடாது அம்புகளை பொழிந்தான். க3தை4களும், பரிகங்களும், சக்ரங்களும், முஸலங்களும், மலை சிகரங்களும், மரங்களும், மேலும் சூலங்களும், பரஸ்வதங்களும் இந்த சஸ்திரங்களோடு, மாயா ஜாலம் போல வந்து விழுந்தன. பயத்தை உண்டாக்கியபடி பயங்கரமாக எதிரொலிக்கும் மகா கோரமான சப்தத்துடன் வந்து விழுந்தன. இந்த அம்பு மழையால் உலகமே சரங்கள் மயமாக ஆயிற்று. ராவணன், எதிரில் இருந்த ராகவ ரதத்தின் பேரில் சஸ்திரங்களை பிரயோகம் செய்து விட்டு, அதே வேகத்தில் வானர சைன்யத்தின் மேலும் அந்தரிக்ஷத்திலும் தன் வில்லின் வன்மையால் அம்புகளால் நிரப்பி விட்டான். சற்றும் களைப்படையாத மனதுடன், ஆயிரக் கணக்கான சஸ்திரங்களை இடை விடாது எய்த வண்ணம் இருந்தான். சற்றும் தயக்கமோ, சந்தேகமோ இன்றி, தசக்ரீவனின் கைகள் சரங்களைப் பொழிந்த வண்ணம் இருந்தன. யுத்தத்திலேயே தத்பரனாக, தன் ஒரே குறிக்கோளாக யுத்தம் செய்து கொண்டு நிற்கும் ராவணனைப் பார்த்து ராகவனும் சிரித்துக் கொண்டே, இதோ பார் என்று சொல்லி பதிலடி கொடுப்பது போல தன் வில்லிலும் கூர்மையான பாணங்களைப் பூட்டி, நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக எய்யலானார். இதைக் கண்டு ராவணன் தன் அம்புகளால் நிரந்தரமாக நிற்கும் சர ஜாலத்தைக் கட்டினான். ஆகாயத்தை மறைத்தபடி அவை நின்றன. இருவருடைய அம்புகளாலும் ஒளி மயமாகிப் போன ஆகாயம், இரண்டாவது சூரியனைக் கொண்ட ஆகாயமாகவே விளங்கியது. எந்த ஒரு பாணமும், நிமித்தம் இல்லாமல் எய்யப் படவில்லை. எதுவும் பலனின்றியும் போகவில்லை. எதுவும் அளவுக்கதிகமான சேதம் விளைவிப்பதுமாகவும் இல்லை. ஒன்றையொன்று தாக்கி அவை பூமியை சரணடைந்தன. இவ்வாறாக யுத்தத்தில், ராம, ராவணர்கள் ரண பூமியில் நின்றபடி அம்புகளை விடும் பொழுது, இடை விடாது இடது, வலது மாறி மாறி அடிக்கும் சமயம், சரங்களின் பெரும் எண்ணிக்கையால் ஆகாயம் மூச்சு விடத் திணருவது போல திணறச் செய்தனர். ராவணனுடைய குதிரைகளை ராமனும், ராமனுடைய குதிரைகளை ராவணனும் அடித்து வீழ்த்தினர். செய்த செயலுக்கு பிரதியாக, அடிக்கு பதிலடியாக இருவரும் தளராது போர் செய்தனர். இந்த யுத்தம் அத்புதமாக நடந்தது. ஒப்பிட முடியாத இந்த யுத்தம் முஹுர்த்த காலம் நீடித்தது. ராவணனும், லக்ஷ்மணாக்ரஜனும் கூர்மையான பாணங்களைக் கொண்டு சமமாக போர் செய்து கொண்டிருந்தாலும், ராவணன் மனதில் ராமன் த்வஜத்தை அடித்து தள்ளியது பெரும் ஆத்திரத்தை கிளப்பி விட்டபடி இருந்தது. மனதினுள் ஆத்திரம் புகைந்து கொண்டேயிருந்தது. இதை பெரும் அவமானமாக எண்ணி, ரகு குலோத்தமனான ராமனிடத்தில் மேலும் அதிக விரோதம் கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண த்4வஜோன்மத2னம் என்ற நூற்று ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 110 (517) ராவணைக சத சிரச் சே2த3னம் (ராவணனின் நூற்றியொரு தலையை கொய்தல்)
இவ்வாறு இருவரும் ஒரே கவனமாக யுத்தத்தை ஒரே சீராக நடத்திக் கொண்டிருந்த சமயம், மிகுந்த ஆவலுடன் உலகில் சகல ஜீவ ராசிகளும் யுத்தத்தைக் கண்டபடி திகைத்து நின்றிருந்தனர். அவர்களிடையே சமமாக இருந்த பல விஷயங்களை ஆச்சர்யத்துடன் கவனித்தனர். இருவரது ரதங்களும் உத்தமமானவை. ஒன்றையொன்று தாக்கின. பரஸ்பரம் கோபம் மிகுந்தவர்களாக, பரஸ்பரம் துரத்திக் கொள்பவர்களாக, பரஸ்பரம் வதம் செய்வதே குறிக்கோளாக, காணவே அச்சுறுத்தும் உருவைக் கொண்டவர்களாக இருந்தனர். மண்டலங்களாகவும், (வட்டமிட்டும்), நேர் வழியாகவும், போக வர இருந்த பாதைகளிலும், சாரதிகளின் பல விதமான சாமர்த்யங்களை காட்டுவது போல இருவரது ரதமும் முன்னும் பின்னுமாக ஓடின. ராவணனை ராமர் அடித்தார் எனில்., ராவணனும் ராமனை அடித்தான். முன் சென்று அடிப்பதிலும், பின் வாங்குவதிலும் இருவரும் சளைக்காது, தாக்குவதில் கவனமாக இருந்தனர். இருவருடைய ரதங்களும் நல்ல வேகமுடையவை. அதில் இருந்தபடி அம்புகளை இடை விடாது ஜாலங்களாக ஒருவர் மேல் ஒருவர் பிரயோகித்துக் கொண்டனர். மழை மேகம் போல இருவரும் சக்தியை உள்ளடக்கியவர்களாக, பல விதமாக தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டு, யுத்தம் செய்தனர். ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் நின்று தாக்கினர். ரதத்தின் முன் பக்கம் குதிரைகளை இழுத்து பிடிக்கும் துரம்-(அச்சு) எனும் பகுதிகள் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டன. குதிரைகள் முகத்தோடு முகம் மோதின. நின்று கொண்டிருக்கும் பொழுது பதாகங்கள் இடித்துக் கொண்டன. ராமன், நான்கு கூர்மையான அம்புகளை எய்து, குதிரைகளை விரட்டினான். தன் குதிரைகளை இடம் பெயரச் செய்ததைக் கண்டு ஆத்திரத்துடன் ராவணனும் அதே போன்ற கூர்மையான பாணங்களை ராமன் மேல் பிரயோகித்தான். நல்ல அடி. உடலைத் துளைத்து காயங்கள் உண்டானாலும் ராமன் அசையவில்லை. வருந்தவும் இல்லை. திரும்பவும் வஜ்ரத்தின் அடி போன்று பலமாக தாக்கும் ஆயுதங்களை பிரயோகம் செய்தார். ராவணனும் அதே போல ஆயுதங்களை எடுத்து மாதலியை குறி வைத்து அடித்தான். மாதலியின் உடலில் ஆழமாக பதிந்த அம்புகளால் அவனுக்கு எந்த விதமான தீங்கும் இழைக்க முடியவில்லை. தன்னை அடித்தால் கூட பொறுத்துக் கொள்பவன், மாதலியின் மேல் பட்ட அம்பினால் ராகவன் கோபம் கொண்டு எதிரியின் முகம் தெரியாதபடி சரங்களை சேர்த்து அடிக்கலானார். இருபது, முப்பது, அறுபது , நூறு என்று அம்புகள் வில்லிலிருந்து புறப்பட்டன. நுற்றுக் கணக்காக, ஆயிரக்கணக்காக பாணங்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன. எதிரியின் ரதத்தின் மேல் ராகவன் ஏராளமான பாணங்களை எய்து சேதப்படுத்தினார். ராவணனும் ரதத்தில் நின்றபடி க3தைகளையும், முஸலங்கள் (உலக்கைகள்) இவற்றை மழையாக பொழிந்தான். இதன் பின் நடந்த யுத்தம் மயிர் கூச்செரியச் செய்தது. இரு தரப்பிலும் சமமான பலமும், சேதமும் ஒன்றாகவே இருந்தன. க3தை4கள், முஸலங்கள் வீசப் படும் ஓசையாலும், சரங்கள் நேர் முகமாக வந்து தாக்கியதாலும், சமுத்திரம் வற்றலாயிற்று. ஏழு சாகரங்களும் உலர்ந்தன. சாகரங்கள் வற்றவும், பாதாள தளத்தில் வசிக்கும் பலரும், நாகங்களும், தானவர்களும், ராக்ஷஸர்களும் ஆயிரக்கணக்கானவர்கள் வருந்தினர். மலைகளும், கானனங்களும் உள்ளிட்ட மேதினி, பூமி நடுங்கியது. சூரியனின் ஒளி குன்றியது. காற்று அசையவில்லை. இதன் பின் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், பெரும் சிந்தனை வயப்பட்டனர். கின்னரர்களும், மகோரர்களும், இவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். கோ, ப்ராம்மணர்களுக்கு மங்களம் உண்டாகட்டும். உலகங்கள் சாஸ்வதமாக நிலைத்து நிற்கட்டும். ராகவன் யுத்தத்தில் ராக்ஷஸேஸ்வரனான ராவணனை ஜெயிக்கட்டும். என்று ஜபம் செய்தனர். இந்த ரிஷிகணங்களும், தேவர்களும் ராம ராவண யுத்தத்தையும் பார்த்தபடி இருந்தனர். மிகவும் பயங்கரமான யுத்தம். உடலில் ரோமங்கள் பயத்தால் குத்திட்டு நிற்க, கந்தர்வ, அப்ஸரஸ கூட்டங்களும், அத்புதமான யுத்தத்தைக் காண கூடி விட்டனர். வானத்திற்கு இணை வானமே. கடலுக்கு உவமை கடலே தான். அது போல ராம ராவண யுத்தம் ராம ராவண யுத்தமே. இது போல என்று உவமை சொல்ல முடியாதது என்று சொல்லிக் கொண்டே வேடிக்கைப் பார்த்தனர். ரகு குலத்தின் புகழை வளர்க்க என்றே உதித்தவன், நீண்ட கைகளையுடைய ராமன், இனியும் தாமதம் செய்யலாகாது என்று க்ஷுரம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார். ஆலகால விஷம் போன்ற அந்த ஆயுதத்தை வீசி, மணி குண்டலங்களை அணிந்திருந்த ராவணனின் தலையை துண்டித்து கீழே விழச் செய்தார். லக்ஷ்மீகரமான ராவணன் தலை பூமியில் விழுந்ததை மூன்று உலகத்தினரும் கண்டனர். திரும்பி பார்த்தால் அதே போல மற்றொரு தலை முளைக்க ராவணன் தலையுடன் முழுமையாக நின்றான். வேகமாக செயல் படும் வீரரான ராமர், திரும்பவும் அதே வேகத்தில் இந்த தலையை துண்டிக்க, துண்டித்த மாத்திரத்தில் ராவணன் புது தலை, முகம் பெற்று நின்றான். திரும்பவும் ராமன் ராவணன் தலையைத் தன் கை ஆயுதத்தால் வெட்டி சாய்க்கவும், புது தலை முளைத்து ராவணன் விகாரமின்றி நிற்கவுமாக, நூற்றி ஒரு தலைகள் ஒரே விதமாக காட்சியளித்து, ராமன் கையால் துண்டிக்கப் பெற்று விழுந்தன. ராவணனின் முடிவு என்பது இன்னமும் கைக்கெட்டாத தொலைவிலேயெ இருப்பதாகத் தோன்றியது. எல்லா விதமான அஸ்திரங்களையும், அவைகளை பிரயோகிக்கும் விதி முறைகளையும் கற்று அறிந்திருந்த ராமர், கவலையுடன் யோசித்தார். மாரீசன் எந்த ஆயுதத்தைக் கொண்டு வீழ்த்தப் பட்டானோ, கரனை அழித்த ஆயுதம் எதுவோ, தூஷணனை வதைத்த ஆயுதம் எதுவோ, க்ரௌஞ்சாரண்யத்தில் விராதனையும், தண்டகா வனத்தில் கபந்தனையும் வதம் செய்ய பயன் பட்ட ஆயுதம் எதுவோ, மலை மேல் ஏழு சால மரங்களையும் ஒன்றாக சாய்க்க பயன் பட்ட ஆயுதம் எதுவோ, வாலியை வதம் செய்ததும், சமுத்திரத்தை வற்றச் செய்ததுமான தன் பாணங்கள், ராவணனிடத்தில் பலம் குன்றி, தேஜஸ் இழந்து போவது ஏன் ? என்று யோசித்தார். குழம்பிய மனதுடனேயே ராவணன் பேரில் ஆயிரக் கணக்கான அம்புகளை விட்டார். ராவணனும் ரதத்தில் நின்றபடி பதிலடி கொடுத்தான். க3தை3களும், முஸலங்களுமாக ராமன் பேரில் வந்து விழுந்து திக்கு முக்காடச் செய்தன. திரும்பவும் அதே போல பயங்கரமான யுத்தம். சமமான பலம், சமமான தேஜஸ், அஸ்திரங்கள். மயிர் கூச்செரியச் செய்யும் பயங்கரமான யுத்தம். அந்தரிக்ஷத்திலும் பூமியிலும், திரும்பவும் மலை உச்சியிலும் தேவ, தானவ யக்ஷர்களின், பிசாசங்கள், உரக , பன்னகங்கள், ராக்ஷஸர்கள் இவர்கள் பார்த்துக் கொண்டு நிற்கையிலேயே, இரவு முழுவதும் யுத்தம் நடந்தது. பகலா, இரவா, முஹுர்த்தமா, க்ஷணமா, ராம ராவண யுத்தம் இடைவெளியே காணவில்லை. தசரதன் மகனும், ராக்ஷஸ ராஜனும் இடை விடாது போர் புரியும் பொழுது, யாருக்கு ஜயம் என்பதும் தெளிவாக சொல்ல முடியாத நிலையில் ராகவன் தான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பிய சாரதியான மாதலி ராமனுக்கு ஒரு விஷயம் தெரியப் படுத்தினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணைக சத சிரச் சே2த3னம் என்ற நூற்று பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 111 (518) பௌலஸ்த்ய வத|| (புலஸ்திய குலத்தினனான ராவணனின் வதம்)
மாதலி, ராகவனுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்தினான். வீரனே | தெரியாதவன் போல ஏன் இவனுக்கு பதிலடி கொடுத்தபடி இருக்கிறாய்? இவனை வதம் செய்ய பிதாமகரின் அஸ்திரத்தை பிரயோகம் செய். விநாச காலம் என்று தேவர்கள் சொல்லும் காலம் சமீபித்து விட்டது. எனவும், பெரும் நாகம் ஒன்று சீறிப் பாய்வது போல இருந்த ப்ரும்மாஸ்திரத்தை கையில் எடுத்தார். பகவான் அகஸ்திய ரிஷி கொடுத்தது. ப்ரும்மாவினால் அவருக்கு கொடுக்கப் பட்டது. ஈ.டு இணையில்லாதது. அளவற்ற பராக்ரமம் உடைய மகாஸ்திரம். ப்ரும்மா தானே ஒரு சமயம் இந்திரனுக்காக தயாரித்தது. அதன் பராக்ரமம் அளவிட முடியாதது. மூன்று உலகையும் ஜயிக்க சுரபதியான இந்திரன் கிளம்பிய பொழுது அவனுக்கு ப்ரும்மா வரமாக தந்தது. இதன் உடலில் பவன எனும் வாயுவும், பாவகன் – நெருப்பும், சூரியனும், உடலே ஆகாச மயமாகவும், மேரு மந்தரம் உருவமாகவும், பிரகாசமாக பொன்னால் காப்பிடப் பெற்று, தன் தேஜஸால் உலகத்தில் திடுமென சூரிய ஒளி பரவியது போல காட்டக் கூடிய ப்ரும்மாஸ்திரம். புகையுடன் கூடிய காலாக்னி போலவும், ஆலகால விஷம் போல ஒளி மிகுந்ததும், பெரும் நாகம் (யானை), குதிரை படைகளை பிளந்து விடக் கூடியதுமான, வேகமான செயல் திறனுடையது. கோட்டைகளை, மலைகளை பிளந்து தள்ளக் கூடியதும், ரத்தத்தை உறிஞ்சக் கூடியதும், பயங்கரமாக காட்சியளித்ததும், வஜ்ரம் போன்றதும், பெரும் ஓசையுடையதுமான எல்லோரையும் பயந்து அலற வைக்கும், பயங்கரமாக சீறிப் பாயும் பாம்பு போன்றதுமான திவ்யாஸ்திரம். யமனே ரூபம் எடுத்து வந்தது போல ரண களத்தில் , கண்டவர்களை பயத்தில் உறையச் செய்யும் அஸ்திரம். கழுகு, கருடன், கொக்குகள் போன்ற மாமிச பக்ஷிணிகளான பறவைகளுக்கும், கோமாயு எனப்படும் மிருகங்களுக்கும், மாமிசம் உண்ணும் ராக்ஷஸர்களுக்கும், இடைவிடாது தீனி அளிக்க வல்லது எனும்படி யுத்தத்தில் கொன்று குவிக்கும் தன்மை வாய்ந்த ப்ரும்மாஸ்திரம். இக்ஷ்வாகு குலத்திற்கு நன்மையும், எதிரி குலத்திற்கு பயத்தையும் தரும் உத்தமமான அஸ்திரம். ராமன், இதன் மந்திரத்தை ஜபித்து, வேதங்களில் சொல்லப் பட்ட முறையில் தன் வில்லில் பொறுத்தி, த்யானம் செய்த காலத்தில், உலகமே நடுங்கியது. பூமி நடுங்கியது. ராவணனின் மர்மஸ்தானத்தை குறி வைத்து ஏகாக்ர சித்தனாக ராமன் அஸ்திரத்தை ராவணன் பேரில் எய்தார். வஜ்ரம் போன்று எதிர்க்க இயலாததாக, அதை விட வலிமையான கரங்களால் விடப் பெற்றதான அஸ்திரம், ராவணனின் ஹ்ருதயத்தில் பட்டு அதை பிளந்தது. ரத்தம் தோய்ந்து, உயிரைக் குடித்தபின், பூமியில் நுழைந்தது. அந்த அம்பு ராவணனின் உயிரை மாய்த்து விட்டு, தன் கடமை தீர்ந்ததாக ராமனின் தூணியில் திரும்ப வந்து சேர்ந்தது. ராவணன் கையிலிருந்த வில்லும் அம்பும், மிக வேகமாக செயல் படும் ராவணன் உயிர் அவனை விட்டுப் பிரிந்த சமயம் தாங்களும் கைகளிலிருந்து நழுவி பூமியில் விழுந்தன. க்ஷண நேரத்தில் உயிர் பிரிந்து விட்டதால், தன் தேஜஸ் சற்றும் குறையாமல் ராவணன் தன் ரதத்திலிருந்து கீழே விழுந்தான். விருத்திரனை வஜ்ராயுதத்தால் இந்திரன் அடித்தபொழுது அவன் விழுந்தது போல இருந்தது. ராவணனே உயிர் இழந்து பூமியில் விழவும், மற்ற ராக்ஷஸ வீரர்கள், நாதனை இழந்தவர்கள், பயத்துடன் நாலா திக்குகளிலும் ஓடி மறையலாயினர். மரங்களைக் கொண்டே யுத்தம் செய்த வானரங்கள் அவர்களைத் தடுத்து மேலே விழுந்து நடனமாடின. ராகவனுடைய விஜயத்தில் மகிழ்ந்தன. இந்த வானரங்கள் மகிழ்ச்சியுடன் மேலும் துன்புறுத்த, லங்கா நகரில் போய் விழுந்த ராக்ஷஸர்கள், தாங்கள் அண்டியிருந்த ராக்ஷஸ ராஜனே விழுந்ததை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், அவன் யுத்த களத்தில் மடிந்ததைக் கண்ட பின்பும், நம்ப முடியாமல், கண்களில் நீர் மல்க புலம்பினர். செய்வதறியாது திகைத்தனர். வானரங்கள் வெற்றிக் களிப்பில் மிதந்தன. ராகவனுக்கு ஜய கோஷம் செய்த படி, ராவண வதத்தை பறை சாற்றியபடி வலம் வந்தன. அந்தரிக்ஷத்தில் சுபமான துந்துபி நாதம் எழுந்தது. முப்பது துந்துபிகள் ஏக காலத்தில் ஒலித்தன. காற்று சுகமாக வீசியது. ஆகாயத்திலிருந்து புஷ்ப மாரி பொழிந்தது., ராகவ ரதம் அருகில் நெருங்க முடியாதபடி கூட்டம் சேர்ந்தது. சாது, சாது என்று தேவதைகள் ஆகாயத்தில் நின்றபடி வாழ்த்தினர். தேவர்களுக்கும் சாரணர்களுக்கும் மகா சந்தோஷம். மனதில் நிம்மதி நிறைந்தது. சர்வ லோக பயங்கரனாக உலவி வந்த ராக்ஷஸன், ராவணன் இறந்து போனதில், ரௌத்ரனான ராக்ஷஸ ராஜன் மாண்டு விழுந்ததில், தேவர்கள் மன நிறைவு பெற்றனர். சுக்ரீவனும், அங்கதனும் தாங்கள் எடுத்த காரியத்தை நிறைவேற்றிய திருப்தியோடு வளைய வந்தனர். ராக்ஷஸ ராஜனை ராமன் வதம் செய்ததில் இவர்களுக்கும் மகிழ்ச்சியே. மருத் கணங்கள் இழந்த ஒளியைப் பெற்றன. திசைகள் தெளிவாக ஆயிற்று. ஆகாயம் நிர்மலமாக காட்சி அளித்தது. பூமியின் ஆட்டம் நின்றது. காற்று சாதகமாக வீசியது. திவாகரனும் ஸ்திரமான ஒளியுடையவனாக உதித்தான். இதன் பின் சுக்ரீவ, விபீஷணன் முதலிய முக்கியமான நண்பர்கள், லக்ஷ்மணனோடு ராமனை வந்தடைந்து, யுத்தத்தில் வெற்றி பெற்றதை பாராட்டி, வாழ்த்தினர். ஸ்திரமான பிரதிக்ஞையை உடையவனாக, தன் சபதத்தை நிறைவேற்றி, எதிரியை அழித்து, தன் ஜனங்களுக்கு நன்மை செய்து அவர்கள் சூழ நின்று, புகழ் பெற்றவனாக விளங்கினான். ரகு குல ராஜாக்களின் வம்சத்தில் கொண்டாடப் பெற்ற நந்தனனாக, மகா தேஜஸுடன், மூவுலகும் பாராட்ட, இந்திரன் நின்றது போல நின்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் பௌலஸ்திய வதம் என்ற நூற்று பதினொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 112 (519) விபீ4ஷண விலாப : (விபீஷணன் வருந்தி புலம்புதல்)
ராமனால் வதம் செய்யப் பட்டு பூமியில் கிடந்த சகோதரனைப் பார்த்து விபீஷணன் மனம் வருந்தினான். தன் வேதனையை அடக்க மாட்டாமல் புலம்பினான். வீரனே, விக்ரமம் உடையவனே, கீர்த்தி வாய்ந்தவனே, நியாயம் அறிந்தவனாக, வினயமாகத் தானே இருந்தாய். உயர் தர படுக்கைகளில் சுகமாக உறங்கியவன், இப்பொழுது தரையில் விழுந்து கிடக்கிறாயே, ராமனால் ஜயிக்கப் பட்டு, உயிரை இழந்து கிடக்கிறாயே. அங்கதம் என்ற ஆபரணங்கள் பூட்டப் பெற்று அலங்காரமாக விளங்கும் கைகள் இரண்டும் விரிந்து கிடக்க, பாஸ்கரனுக்கு சமமான ஓளி பொருந்திய மகுடமும் இல்லாமல் கிடக்கிறாயே. வீரனே, நான் இந்த நிலை வரக் கூடும் என்று முன்பே எச்சரித்தேன். காமமும், மோகமும் உன் கண்களை மறைத்தன. நான் சொன்னதை நீ ஏற்கவில்லை. கர்வமும், தன்னம்பிக்கையும் அளவுக்கு அதிகமாக, மார் தட்டி பேசிய ப்ரஹஸ்தனோ, இந்திரஜித்தோ, மற்ற ஜனங்களோ, கும்பகர்ணனோ, அதி ரதனோ, அதி காயனோ, நராந்தகனோ, யார் யார் உனக்கு உகந்த முறையில் பேசினார்களோ, நீயும் அவர்கள் பரிந்து சொன்ன சொல்லை மதித்து ஏற்றுக் கொண்டாயோ, அவர்கள் யாருமே இன்று இல்லை. அவர்களும் இறுதிக் கடன் பெறும் நிலையில் விழுந்து கிடக்கிறார்கள். வீரனே, சஸ்திரங்களை ஏந்தியவர்களுள் சிறந்தவனே, நல்ல நீதி முறைகளுக்கு சேதுவாக இருந்தவன், தர்மமே உருவாக விளங்கியவன், சத்வ குணங்களுக்கு இருப்பிடமாக திகழ்ந்தவன், எந்த விதமான பிரச்னையானாலும் தீர்வு காண்பவன் எவனோ, ஆதித்யன் போன்ற அந்த எங்கள் அரசன் பூமியில் விழுந்தான். சந்திர கிரணங்கள் இருட்டில் மூழ்கி விட்டன. சித்ர பானு அடங்கி விட்டது. முயற்சிகள் இன்றியே வேலைகள் தடை படுகின்றன. இந்த வீரன் தோல்வியுற்று மாண்டதால் உலகில் இயக்கமே (சேஷ்டைகளே), இல்லையென்றாகி விட்டது. இந்த உலகில் மீதி என்ன தான் இருக்கும்? ராக்ஷஸ சார்தூலனாக வாழ்ந்தவன், ரண பூமியில் புழுதியில் புரளும் பொழுது, எது தான் இயங்கும் நிலையில் இருக்கக் கூடும். ராகவன் என்ற புயற் காற்று வந்து, இந்த பெரிய ராக்ஷஸ வ்ருக்ஷத்தை, மரத்தை, தன்னம்பிக்கை என்ற நாற்றுகள் முளைத்து, தவ வலிமையே பூக்களாக, தன் சௌர்யத்தால் வேரூன்றி நின்று, உயர்ந்து வளர்ந்து நின்ற ராவண மரத்தை அசைத்து தள்ளி விட்டது. ராவணன் என்ற இந்த பட்டத்து யானை, இக்ஷ்வாகு குலத்து சிங்கம் பிடித்துக் கொண்ட தேகத்தினனாக, தேஜஸே கொம்பாக, தந்தமாக, குல வம்சமே வம்சமாக, கோபமும் பிடிவாதமுமே தும்பிக்கையாக, நின்ற பெரிய யானையாக இருந்த ராவணன் ராகவ சிம்மத்தால் த்வம்சம் செய்யப் பட்டான். ராமன் எனும் மேகத்தால் அதன் மழை பொழிய, ராக்ஷஸாக்னியாக இருந்த ராவணன் அடக்கப் பட்டான். அணைக்கப் பட்டான். ப்ராக்ரமமும், உத்சாகமும் ஜ்வலிக்கும் அக்னி ஜ்வாலையாக பிரகாசிக்க, அவன் மூச்சுக் காற்றே புகையாக தன் பலமும் பிரதாபமும் ஒளியாக நின்ற ராவணாக்னி இன்று ராமன் என்ற மழை மேகத்தினால் அடங்கி விட்டான். வ்யாக்ரம் போல, உயர் ஜாதி புலி போன்று இருந்தவன் இன்று அடிபட்டு விழுந்து கிடக்கிறான். இவ்வாறு புலம்பும் விபீஷணனைப் பார்த்து ராகவன் சமாதானப் படுத்தினார். விபீஷணா, இவன் அழியவில்லை. செயலற்று கிடக்கிறான். சண்ட ப்ரசண்டமாக யுத்த பூமியில் வளைய வந்த வீரன், அதி உன்னதமான மகா உத்சாகம் உடையவன், நிச்சயம் தோற்று விழுந்தான் தான். ஆயினும், க்ஷத்திரிய தர்மத்தை அனுசரித்து போரில் மாண்டவர்களைக் கண்டு வருந்துவது இல்லை. மேலும் மேலும் விருத்தி, மேன்மையடைய வேண்டும், ராஜ்யத்தை விஸ்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் க்ஷத்திரியர்கள் போரில் உயிர் துறப்பதை பெருமையாக எடுத்துக் கொள்கின்றனர். எந்த ராவணனால், இந்திரனோடு சேர்த்து மூவுலகமும் பயந்து நடுங்கும்படி வைக்கப் பட்டிருந்ததோ, புத்திமானான அவன் தானே எப்பொழுது யுத்தத்தை தேர்ந்தெடுத்து, போரிட்டு யுத்த பூமியில் உயிரைத் துறந்தானோ, அவனுக்காக வருந்தி புலம்புவது அழகல்ல.. அவசியமும் அல்ல. இது வருந்தும் நேரமல்ல. எப்பொழுதும் விஜயனாக, வெற்றியே தான் என்பது யுத்த களத்தில் இதுவரை கண்டதும் இல்லை. இனிக் காணப் போவதும் இல்லை. வீரனாக இருப்பவன், தான் மற்றவர்களைக் கொல்லுவான் அல்லது தான் மற்றவர்களால் கொல்லப் படுவான். இதுதான் இதுவரை நம் முன்னோர்கள் கண்ட வழி. க்ஷத்திரியர்களுக்கு ஏற்ற தர்மம் இது. க்ஷத்திரியனின் மரணம் ரண பூமியில் நிகழுமானால் அவனுக்காக வருந்தக் கூடாது என்பது தான் மரபு. அதனால் எழுந்திரு. மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி யோசி. ராமர் சொன்னதில் நியாயம் இருப்பதை உணர்ந்த விபீஷணன், தன்னை சமாளித்துக் கொண்டு, சகோதரனின் நல்ல குணங்களை நினைத்து பச்சாதாபப் பட்டான். இதோ இந்த ராவணன், எந்த போரிலும், தோல்வியுற்று, தலை குனிந்து திரும்பியதில்லை. தேவர்கள் கூட்டத்தோடு வாஸவன் வந்த பொழுது, நிமிர்ந்து நின்று போரிட்டு வென்றான், சமுத்திரம் தன் அலைகளால் கரையைத் தொட்டு அடங்குவது போல , தாங்கள் வந்து நிற்கவும் உங்கள் முன்னால் உடைந்து விட்டான். இவன் தானம் அளித்ததும் கணக்கிலடங்கா. செய்த பூஜைகளும் ஏராளம். அனுபவித்த போகங்களும் கணக்கிலடங்கா. இவன் கீழ் வேலை செய்த அதிகாரிகளும், அடியாட்களும் நல்ல ஊதியம் பெற்று, நல்ல நிலைமையில் வாழ்ந்தார்கள். நண்பர்களுக்கு செல்வங்களை வாரி வழங்கினான். நண்பர்கள் அல்லாதவர்களோடு அதே போல த்வேஷமும் பாராட்டினான். இவன் வளர்த்த ஆஹிதாக்னியும், மகா தவங்களும், வேதத்தில் சொல்லப்பட்டவையே. அதில் கரை கண்டவன். கர்ம மார்கத்தில் சிறந்த நம்பிக்கையுடைய வீரன். இப்படிப் பட்டவனுடைய இறுதி கடன்களைச் செய்ய எனக்கு அனுமதி தர வேண்டும். இவ்வாறு கேட்ட விபீஷணனைப் பார்த்து கருணையால் இளகிய மனத்தினான ராமன், சாது என்று சொல்லி, உரிய இறுதிக் கடன்களை, ஸ்வர்கத்தை அளிக்க வல்ல சிரார்த்த காரியங்களை செய்ய, கட்டளையிட்டான். மரணம் வரை தான் வைரம், விரோதம். நம் காரியம் ஆகி விட்டது. இவனுக்கு சம்ஸ்காரங்கள் செய். உனக்கு எப்படி சகோதரனோ, அதே போலத் தான் எனக்கும், என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீஷண விலாபோ என்ற நூற்று பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 113 (520) ராவணாந்த:புர பரிதே3வனம் (ராவணனின், உற்றார், உறவினர்கள் வருந்துதல்)
ராவணனின் மரணச் செய்தி அந்த:புரத்தையெட்டியது. ராமனால் ராவண ராஜா வதம் செய்யப் பட்டான். இந்த செய்தி பரவியதும், ராக்ஷஸிகள் மிகுந்த வேதனையடைந்தனர். கன்றை இழந்த பசு போல, தடுத்தும் கேளாமல் கதறியபடி, தலை கேசம் அவிழ்ந்து தொங்க, பூமியில் விழுந்து புரண்டு அழுதனர். ராக்ஷஸர்களுடன் வடக்கு வாசல் வழியே வெளி வந்து மரணமடைந்து கிடக்கும் பதியைக் கண்டனர். ஆர்யபுத்ர, என்று சொல்லியபடி, சிலரும், ஹா நாதா என்று சிலரும் கப3ந்த4மாக (உடல் வேறு தலை வேறாக) கிடந்த உடலை ரத்த வெள்ளத்தில் மிதந்த சரீரத்தை கட்டியணைத்தபடி அழுது அரற்றினர். படைத் தலைவன் வீழ்ந்தபின், யானைப் படை சிதறியது போலவும், பெண் யானைகள் போலவும் இங்கும் அங்குமாக அலை பாய்ந்து கணவன் இறந்த துக்கத்தால் வாடி, கண்களில் நீர் வடிய நின்றனர். மகா வீரனான ராவணனை, பெருத்த சரீரம் உடையவனை தேஜஸ் நிரம்பியவனை, நீல மலை போல விழுந்து கிடந்தவனை அடிபட்டு பூமியில் கிடந்தவனைக் கண்டனர். ரண பூமியில் புழுதியில் படுத்துக் கிடப்பவனைக் கண்டு துணுக்குற்றவர்களாக வேரோடு பிடுங்கி எறியப்பட்ட காட்டுக் கொடி போல துவண்டார்கள். சிலர் தங்கள் அபிமானத்தால் உடலை கட்டி அணைத்து அழுதனர். சிலர் பாதங்களை பிடித்துக் கொண்டு புலம்பினர். சிலர் புஜத்தை தூக்கி தங்கள் மடியில் இருத்திக் கொண்டு வருந்தினர். உயிர் பிரிந்த முகத்தைப் பார்த்து சிலர் மூர்ச்சையடைந்தனர். மடியில் தலை வைத்து முகத்தைப் பார்த்து ஒருவள் அழுதாள். பனித்துளிகள் பத்மத்தை மறைப்பது போல இவர்கள் கண்ணீர் முகத்தை மறைத்தது. இவ்வாறு ரண பூமியில் வதம் செய்யப் பட்ட கணவனது உடலைக் கண்டு பெரும் குரலில் உரக்க அரற்றினர். எவன் இந்திரனையே நடுங்கச் செய்தானோ, எவனைக் கண்டு யமனே நடுங்கினானோ, வைஸ்ரவன ராஜா தன் புஷ்பகத்தை எடுத்துக் கொள்ள சம்மதித்தானோ, கந்தர்வர்களுக்கும், ரிஷிகளுக்கும், மகாத்மாவான பலருக்கும், தேவர்களுக்கும் எவன் பெரும் பயத்தை அளித்து வந்தானோ, அந்த ராவணனும் யுத்தத்தில் அடிபட்டு மாண்டு கிடக்கிறான். அசுரர்களிடமும், தேவர்களிடமும், பன்னகம் எனும் பாம்புகளிடமும் எவனுக்கு பயமோ, ஆபத்தோ இல்லையோ, இவர்களிடம் அறியாத பயத்தை இவன் மனிதர்களிடம் கொண்டான். தானவ, ராக்ஷஸர்களால் தேவர்களால், கொல்லப் படக் கூடாது என்று வரம் பெற்றவன், கால் நடையாக வந்த ஒரு மனிதனால் கொல்லப் பட்டான். தேவர்களால் எதுவும் செய்ய முடியாத வீரனாக யக்ஷர்களோ, அசுரர்களோ நெருங்க முடியாத பலசாலியாக இருந்தவன், இப்பொழுது எதுவுமில்லாதவன் போல் மனிதனால் தாக்கப் பட்டு ம்ருத்யுவை தழுவி விட்டான். இவ்வாறு சொல்லி பலவாக அழுத பெண்கள், தங்கள் துக்கத்தை அடக்க மாட்டாமல் வெகு நேரம் புலம்பியபடி இருந்தனர். நன்மையைச் சொல்லும் ஹித வாதிகளான நல்லவர்களின் சொல்லைக் கேட்காமல் சீதையை தன் மரணத்திற்காகத்தான் அபகரித்து வந்திருக்கிறான் போலும். கூடவே ராக்ஷஸர்களும் அழியக் காரணமாக இருந்திருக்கிறான். இவர்களுடன் கூட நாமும் அழிந்தோம். பிரியமான சகோதரனாக இருந்தும் விபீஷணன் நல்லதைச் சொன்ன பொழுது ஏற்கவில்லை. கர்வத்துடன் அவனை கடுமையாக விமரிசித்தீர்கள். அப்பொழுதே வலிய தன் வதத்தை தீர்மானித்துக் கொண்டு விட்டதைப் போல அவனை ஏளனம் செய்து விரட்டி விட்டீர்கள். அப்பொழுது விபீஷணன் சொல்லைக் கேட்டு, மைதிலியை ராமனிடம் திருப்பி அனுப்பியிருந்தால், நமக்கு இப்படி ஒரு துக்கம் வந்திராது. வேரையே ஆட்டி விட்டது போல மூல வ்ருக்ஷம் சரிந்திருக்காது. தன் இஷ்டம் நிறைவேறிய திருப்தியுடன் ராமன் நமக்கு மித்திரனாக இருந்திருப்பான். நாமும் இப்படி கணவனை இழந்தவர்களாக புலம்ப வேண்டி இருந்திருக்காது. சத்ருக்கள் ஜயிக்கவும் வழி இருந்திருக்காது. சீதையை பலவந்தமாக சிறை வைத்து கொடுமையான அந்த துர்குணத்தால், நாங்கள், தாங்கள், மற்ற ராக்ஷஸர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் வீழ்த்தப் பட்டோம். ராக்ஷஸ ராஜனே, உங்கள் காமமும் பூர்த்தியாகவில்லையே. விதி ஆட்டுவிக்கிறது. ஆட்டம் போடுபவனை விதி தண்டிக்கிறது. வானரங்கள், மனிதர்கள் மூலம் உங்கள் முடிவு- இதை விதி இந்த விதமாக நிர்ணயித்து வைத்திருக்கிறது. அர்த்தமோ, காமமோ, விக்ரமமோ, உங்கள் ஆணையோ, எதுவுமே, விதியின் விளையாட்டை மாற்றியமைக்க முடியாது. என்ன தான் முயற்சி செய்தாலும், நடப்பவை நடந்தே தீரும். ராக்ஷஸ ராஜனின் மனைவிகள் இவ்வாறு புலம்பினர். கண்களில் நீர் நிரம்பி கசிய குரரீ என்ற பக்ஷி போல ஓலமிட்டனர். கதறினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணாந்த:புர பரிதே3வனம் என்ற நூற்று பதின் மூமூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 114 (521) மந்தோ3த3ரீ விலாப|| (மந்தோதரி அழுது புலம்புதல்)
இவ்வாறு புலம்பும் ராக்ஷஸ ஸ்திரீகளில் மூமூத்தவளான தர்ம பத்னி, ராவணனுக்கு பிரியமான மந்தோதரி பதியை தீனமாக பார்த்து, தசக்ரீவனான தன் கணவனை, கற்பனைக்கெட்டாத தன் பராக்ரமத்தால் ராமன் கொன்று விட்டான் என்பதை நம்பவும் முடியாதவளாக, இறந்து விட்ட தசக்ரீவன் முன்னால் வந்து நின்றாள். வருத்தத்துடன், வைஸ்ரவனன் தம்பியே, மகா பாக்யசாலி என்று புகழோடு வலம் வந்தாயே, நீ கோபத்துடன் இருந்தால், புரந்தரன் என்ற இந்திரன் கூட எதிரில் நிற்க பயப்படுவான். ரிஷிகளும், பூமியை ஆளும் அரசர்களும், கந்தர்வர்களும், சாரணர்களும் உன் தொல்லை தாங்காமல் திசைகள் தோறும் ஓடி ஒளியவில்லையா? மனிதனாக வந்த ராமனிடம் உன் சக்தி எடுபடவில்லையே. இதில் உனக்கு வெட்கமாக இல்லையா? ராக்ஷஸ ராஜனே, எப்படி மூன்று உலகையும் ஆக்ரமித்து, செல்வமும், வீரமும் வெளிப்பட வாழ்ந்த உன்னை, விஷம் கூட உன்னை எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் மனிதன், அதுவும் காட்டில் திரிபவன் வீழ்த்தினான்? மனிதர்கள் எதிரில் விரும்பிய வண்ணம் உருவம் எடுக்க வல்ல உனக்கு, யுத்தத்தில் ராமனால் மரணம் என்பது பொருத்தமாகவே இல்லையே. இந்த செயல் போர் முனையில் ராமன் செய்தானா? மனிதன் தானா இந்த ராமன்? எல்லா விதங்களிலும் நிறைந்து நிற்கும் உன்னை ராமன் தாக்கி வதம் செய்தானா? ஜனஸ்தானத்து ராக்ஷஸ கூட்டத்தோடு கரன் என்ற உன் சகோதரனை மாய்த்ததையும் வைத்து பார்க்கும் பொழுது, இவன் சாதாரண மனிதன் அல்ல. எப்பொழுது யாரும் எளிதில் நுழைய முடியாத லங்கையின் உள்ளே, தன் பலத்தால் ஹனுமான் நுழைந்தானோ, அப்பொழுதே நாம் அழிந்தோம். வானரங்களைக் கொண்டு சமுத்திரத்தை கடக்க சேது கட்டினான் என்று கேள்விப்பட்டோமே, அப்பொழுதே நான் இந்த ராமன் சாதாரண மனிதன் இல்லை என்று சந்தேகப் பட்டேன். அல்லது ராம ரூபத்தில் க்ருதாந்தன் தானே வந்து நின்றிருக்கிறான். உன் விநாசத்திற்காக மாயையாக, வேறு உருவம் எடுத்துக் கொண்டு எதிரில் வந்து நின்றிருக்கிறான். இல்லையெனில் இந்திரனையும், வீரனே, நீ தாக்கியிருக்கிறாய். இந்திரனுக்கே உன்னை நிமிர்ந்து பார்க்க கூட சக்தி இருந்ததில்லையே. இந்த ராமன் மகா யோகி, சனாதனனான பரமாத்மா என்பது இதனால் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆதியும், மத்தியும் அந்தமும் இல்லாத மகத்திலும் மகத்தான, (பெரியதிலும் பெரியதான), தாமஸத்திற்கு அப்பாற்பட்ட ப்ரும்மா. சங்க, சக்ர, க3தை4 இவற்றை தரித்தவன். ஸ்ரீ வத்ஸம் அலங்கரிக்கும் மார்புடையவன். நித்யமான, வெல்ல முடியாத, சாஸ்வதமான அழிவற்ற பரம் பொருளே இவன். மனித உருக் கொண்ட சாக்ஷாத் மஹா விஷ்ணுவே. சத்ய பராக்ரமன். வானர ரூபத்தை எடுத்துக் கொண்டு தேவர்கள் இவனை சூழ்ந்து வந்திருக்கின்றனர். சர்வ லோகேஸ்வரன், தானே, உலகின் நன்மைக்காக, ராக்ஷஸ பரிவாரங்களோடு உன்னை வதம் செய்திருக்கிறான். இந்திரியங்களை ஜயித்து தவம் செய்து முன்பு உன்னால் மூன்று உலகமும் ஜெயிக்கப் பட்டது. அந்த வைரத்தை மனதில் கொண்டு அந்த இந்திரியங்களே உன்னை பழி வாங்கி விட்டன போலும். நானும் சொன்னேன். ராகவனோடு விரோதம் வேண்டாம், சமாதானமாக போகலாம் என்று எவ்வளவோ சொன்னேன். உனக்கு ஏற்கவில்லை. அதனால் தான் இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறோம். திடுமென, யதேச்சையாக கண்ணில் பட்ட சீதையிடம் ஏனோ இவ்வளவு ஆசை வைத்தாய். மோகம் கொண்டாய். ராக்ஷஸ ராஜனே, ஐஸ்வர்யம் அழியவும், தன் ஜனங்களின் நாசமும் உன் தேக வியோகமும் அதன் பலன்களே. அருந்ததிக்கு ஒப்பான, ரோஹிணியை விட சிறந்தவளான, கௌரவம் மிகுந்த சீதையை அபகரித்து, நீ செய்த செயல் மிகவும் கீழ்த்தரமானது. பூமியை விடச் சிறந்த பூதேவி, லக்ஷ்மிக்கும் லக்ஷ்மியான, கணவனுக்கு பிரியமான பத்னியான சீதையை, அழகிய வடிவம் உடையவளை, சுபமான லக்ஷணங்கள் பொருந்திய சீதையை காட்டில் தனியாக இருக்கும்பொழுது பலவந்தமாக அழைத்து வந்து, நீ மறைமுகமாக உனக்கே தீங்கு இழைத்துக் கொண்டதைத் தவிர என்ன சுகத்தை அடைந்தாய். அவள் சரீரத்தை அனுபவிக்க நீ விரும்பியது கூட நடக்கவில்லை. ப்ரபோ, அந்த பதிவிரதையின் தவத்தால் தான் நீ எரிந்து சாம்பலானாய். நிச்சயம் அவளைத் தொட்டு தூக்கிய பொழுதே தகிக்கப்படாமல் இருந்தது தான் அதிசயம். அக்னி முதலான தேவர்கள் உன்னிடம் நடுங்கி வணங்கி இருந்தனர். யாரிடமும் பயம் இல்லாமல் இருந்த நீ, உன் பாபத்தின் பலனைத் தான் அடைந்திருக்கிறாய். ஒருவன் செய்யும் பாப கர்மா, சரியான சமயம் வரும் பொழுது தண்டிக்கும் என்பது உண்மையே. சுப காரியம் செய்தவன் சௌக்யமாக இருப்பான், பாபத்தை செய்பவன் அதன் பலனை அடைவான் என்பதும் சரியே. விபீஷணன் நல்ல நிலைமைக்கு வந்து விட்டான். நீ உன் பாப பலனை அனுபவிக்கிறாய். ரூபத்திலும், அழகிலும், இன்னும் அதிக மேன்மை வாய்ந்த பெண்கள் உன்னிடம், உன்னை அண்டி இருக்கும் பொழுது, எல்லோரையும் விட்டு அனங்கன் வசமானாய். மோகம் கண்களை மறைக்க, தவறு செய்தாய். குலத்திலும், ரூபத்திலும், தாக்ஷிண்யத்திலும் மைதிலி, என்னை விட எந்த விதத்திலும் உயர்ந்தவளும் அல்ல, எனக்கு சமமானவளும் இல்லை. இந்த ஒப்பிடலைக் கூட நீ செய்து பார்க்கவில்லை. மோகம் தான் கண்களை மறைத்ததே. தன் அறியாமையால் வீழ்ந்தாய். எல்லா ஜீவராசிகளுக்கும் ம்ருத்யு வர ஒரு காரணம் இருக்கும். உன்னை யமனிடம் சேர்க்க இந்த மைதிலி வந்து சேர்ந்தாள். வெகு தூரத்திலிருந்த உன் மரணத்தை, சீதா ரூபத்தில் நீயே அழைத்துக் கொண்டு வந்து அருகில் வைத்துக் கொண்டாய். இப்பொழுது என்ன? மைதிலி ராமனுடன் சௌக்யமாக இருந்து அனுபவிப்பாள், அவள் துக்கம் எல்லாம் மறைந்து விட்டது. அவள் பாக்யசாலி. நான் தான் முடிவில்லா சோக சாகரத்தில் மூழ்கி கிடக்கப் போகிறேன். உன்னோடு கைலாசத்தில், மேரு மலையில், சித்ர ரதம் என்ற தேவ லோக உத்யான வனத்தில், எல்லா உத்யானங்களிலும் உன்னுடன் உல்லாசமாக சுற்றி வந்த நான், தகுதியான விமானத்தில் அல்லது உன் செல்வத்துக்கு அனுரூபமான வழியில் பல தேசங்களைக் கண்டு களித்தும், ஆங்காங்கு கிடைத்த விசித்திரமான மாலைகளையும் வஸ்திரங்களையும் அணிந்து மகிழ்ந்தவளாக சுகமாக இருந்தேன். இந்த போகங்கள் எதுவும் இனி எனக்கு இல்லை என்று தள்ளப் பட்டு விட்டேன். உன் முடிவினால் நான் எதுவும் இல்லாத அபாக்யவதியாகி விட்டேன். தி4க், அரசர்கள் செல்வங்கள் இவ்வளவு சஞ்சலமானவையா? ஹா ராஜன், ஹே ராஜனே, உன் சுகுமாரமான புருவங்கள், அழகிய உடல் நிறம், உயர்ந்த நாசி, உடலின் காந்தியும், லக்ஷ்மியும் (தேஜஸ்), சந்திரன் பத்மம், திவாகரனுடன் ஒப்பிடக் கூடியவை. கிரீடம் அலங்கரிக்கும் தாமிர நிற முகம் குண்டலங்கள் ஒளி வீச, மதுவருந்தி அரை மயக்கத்திலிருக்கும் சிவந்த கண்கள், பான பூமிகளில் பல விதமான மாலைகளணிந்து அழகாக மென்னகை புரியும் வதனம், இன்று அதன் இயல்பான ஒளியுடன் இல்லையே. ப்ரபோ, ராம ஸாயக- ராமன் வில்லிலிருந்து வந்த அம்புகள் ரத்தம் பெருகச் செய்து சேறாகிப் போன மண் உடலில் அப்பிக்கொள்ள, ரதம் ஓடி, கிளப்பி விட்ட புழுதியும் சேர்ந்து முகத்தை மறைக்கின்றன. ஹா, கடைசி காலம் என்னை விதவையாக்கியபடி வந்து சேர்ந்ததே. நான் சற்றும் எதிர் பாராத சமயம், என் மந்த புத்தி தான் காரணம். என் தந்தை தானவ ராஜன், கணவன் ராக்ஷஸேஸ்வரன், என் மகன் சக்ரனை இந்திரனை வெற்றி கொண்டு இந்திரஜித் என்று பெயர் பெற்றவன் என்று இதனால் கர்வமும், என் நாதன் இருக்க எனக்கு எங்கும் யாரிடமும் பயம் இல்லை என்று த்ருடமாக நம்பி, என்னைச் சுற்றி சூரர்கள், எதிரிகளை அடக்கி ஆளும் வீரர்களே நிறைந்துள்ளனர் என்றும் நம்பியிருந்தேன். இப்படி ஒரு மனிதனிடம் இப்படி ஒரு ஆபத்து வந்து சேர்ந்ததே. சாதாரணமாக விஹார சமயங்களில் இருப்பதை விட சங்க்ராம பூமியில் என் காந்தன் அதிக பிரகாசமாக, கம்பீரமாக நிற்பான். தானே நீல மலை போல கம்பீரமான பெருத்த சரீரம் உடையவன், கேயூர, அங்கத, வைமூடுரிய, முக்தா மணிகளால் ஆன ஆபரணங்கள் அணிந்து அதன் மேல் ஜ்வலிக்கும் மாலையும் அணிந்திருப்பான். மின்னல் கரு மேகத்தினிடையில் மின்னுவது போல இந்த ஆபரணங்கள் அவன் மேனியில் எடுப்பாக இருக்கும். அந்த சரீரம், ஒன்றா, இரண்டா, பல தீக்ஷ்ணமான, கூரான அம்புகள் தைக்கப் பெற்று விழுந்து கிடக்கிறது. தொடக் கூட முடியவில்லையே. எப்படி அணைத்துக் கொள்வேன். முள்ளம் பன்றி முதுகில் குத்திட்டு நிற்கும் ரோமங்கள் போல உடல் முழுவதும் அம்புகள் . வஜ்ர அடியினால் சிதறி விழுந்த மலையின் பாகங்கள் போல கீழே விழுந்து கிடக்கும் ராக்ஷஸ சரீரம். இது சத்யமாக ஸ்வப்னமே, கனவே. நீ எப்படி ராமனால் கொல்லப் பட முடியும்? யமனுக்கும் யமனாக இருந்தவன். நீ எப்படி அவன் வசம் ஆவாய்? மூவுலகங்களிலும் செல்வத்தை அனுபவிக்கவே பிறந்தவன். மூவுலகையும் நீ தூண்டி செயல் படக் கூடியவன். லோக பாலர்களையும் ஜெயித்தவன். சங்கரனையே ஆட்டி வைத்தாய். கர்வம் கொண்டு அலைபவர்களை பிடித்து அடக்குபவன். உன் பராக்ரமத்தால் மற்றவர்களை பணிய வைத்து பழகியவன். உலகையே வற்றிச் சுருங்கச் செய்பவன். உன் குரல் காதில் விழ, பூதங்கள் கூட அலறும் படி சத்ருக்களின் எதிரில் நீ கம்பீரமாக சொல்லும் சொல்லை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியாதபடி பேசுபவன். தன் படை வீரர்கள், வேலையாட்கள் இவர்களை பாதுகாப்பாக ரக்ஷிப்பவன். அவர்களை அரவணைத்துச் செல்லத் தக்க பயங்கரமான விக்ரமம் உடையவன். தானவேந்திரர்களை கொன்றவன். ஆயிரக்கணக்கான யக்ஷர்களை கவசம் அணிந்து வந்தவர்களை பிடித்துக் கொண்டு வந்த ஈ.ஸ்வரன் நீ. யாகங்கள் ஒன்றா, இரண்டா, தன் ஜனங்களை எப்பொழுதும் காப்பாற்றும் நல்ல அரசன். தர்மம் என்று பழமையிலே உழலாமல், யுத்தம் என்று வந்தால் மாயையால் ஸ்ருஷ்டி செய்து வென்றவன். அவ்வப்பொழுது, தேவ, அசுர, மனித கன்னிகளை அபகரித்துக் கொண்டு வந்திருக்கிறாய். சத்ருக்களின் ஸத்ரீகள் தான் சோகம், துக்கம் அனுபவிப்பார்கள். தன் ஜனங்களை எப்பொழுதும் பரிபாலித்து வந்ததால் உன் பக்ஷத்து ஸ்த்ரீகள் துன்பம் அடைந்ததேயில்லை. லங்கை எனும் தீவை கவனமாக பாதுகாத்து வந்தாய். பெரும் பயங்கரமான அரிய செயல்களை செய்தவன் நீ. ரதம் ஓட்டுபவர்களில் சிறந்தவன் நீ. எங்களுக்கு காம போகங்களைத் தருபவன் நீயே. இப்படி பெருமை வாய்ந்த என் கணவன் ராமனின் அம்புகளால் கொல்லப் பட்டு கீழே விழுந்து கிடப்பதைக் கண்டும் என் மனம் சிதறவில்லையே. உடலைத் தாங்கியபடி ஸ்திரமாக நிற்கிறேனே. உயர்தர படுக்கைகளில் படுத்து அனுபவித்த ராக்ஷஸேஸ்வரன், இந்த புழுதியில் ஏன் கிடந்து உறங்குகிறாய்? உன் மகன் இந்திரஜித் லக்ஷ்மணன் கையால் வதம் செய்யப் பட்ட பொழுதே நான் பாதி அடிபட்டு நம்பிக்கையிழந்து விட்டேன். இப்பொழுது முழுவதுமாக விழுந்து விட்டேன். எனக்கு பந்து ஜனங்களுக்கு குறைவில்லை. நாதா, நாதனான நீ தான் இல்லை. நீ இல்லாமல் நான் என்ன சுகத்தைக் காண்பேன். காலம் முழுவதும் எனக்கு சிந்தனைதான் மீதியாகும். அத்வானமாக நீண்ட வழி செல்லும் நீ என்னையும் அழைத்துச் செல். நான் இங்கு உயிர் வாழ மாட்டேன். என்னை அனாதரவாக விட்டு நீதான் எப்படி தனியாக செல்ல முடிந்தது. தீனமாக கதறுகிறேனே, என்னுடன் பேச மாட்டாயா? நகரத்தை விட்டு கால் நடையாக வெளியே வந்து, முகத்திரை எதுவும் இல்லாமல் வெட்ட வெளியில் கதறுவது பிடிக்கவில்லையா. இதோ பார், உன் மற்ற மனைவிகளும் வெட்கத்தை விட்டு ஓடி வந்து கதறுகிறார்களே, முகத்திரையின்றி வெளியே வந்து நிற்கும் இவர்கள் எல்லோருமே, உன் விளையாட்டுகளுக்கு சகாயமாக இருந்தவர்கள், இப்பொழுது அனாதைகளாக புலம்புகிறார்கள். என்ன பிரமாதம் என்று அலட்சியம் செய்கிறாயா? இவர்கள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையா? இவர்கள் அனைவரும் குலஸ்த்ரீகள். உன்னைச் சார்ந்தே வாழ்ந்தவர்கள். நீயின்றி விதவையாக தவிக்கிறார்கள். பதிவிரதைகளாக தர்மபரர்களாக, குரு சுஸ்ரூஷையில் கவனமாக இருந்து இவர்கள் தன் வசமின்றி சபித்தார்கள். நீ இவர்களுக்கு துரோகம் செய்தாய் அரசனே. உலகில் சொல்வதுண்டு. பதிவிரதை ஸ்திரீகள் கண்ணீர் பூமியில் விழக் கூடாது. அது நிச்சயம் தண்டித்து விடும் என்று. உன் விஷயத்தில் சரியாகி விட்டது. ராஜன், நீ உலகங்களை ஆக்ரமித்து, ஜயித்து, உன் வீர்யத்தை காட்டுவதாக எண்ணி இந்த பெண்களை அபகரித்துக் கொண்டு வந்து சேர்த்தாய். திருட்டுத்தனமாக மாயா மான் என்று ஏமாற்றி அவன் நாதனை அகலச் செய்து, தனித்து இருந்தவளை, ராமபத்னியை கொண்டு வந்தாயே, இது என்ன கோழைத்தனம்? இதில் உன் வீரம் எங்கே இருக்கிறது? யுத்தத்தில் நீ என்றும் கோழையாக பின் வாங்கி நான் கண்டதில்லை. பாக்யம் விபரீதமாக இருக்கும் பொழுது, நல்ல அறிவுரையும் பயனின்றி போகும் போலும். சாதாரணமாக நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்று யோசித்து தெரிந்து கொண்டு, கால் வைக்கும் வழக்கமுடைய என் மைத்துனன், மைதிலியை அபகரித்துக் கொண்டு வந்தாயே, அப்பொழுதே உனக்கு நன்மையைச் சொன்னான். இந்த செயலைக் கண்டு யோசித்து, ஆழ சிந்தித்து உனக்கு நன்மையைச் சொன்னான். அவன் வாக்கு சத்யமானதே. அதை நீ கேட்கவில்லையே. அதனால் தான் ராக்ஷஸர்களின் விநாச காலம் முன் வந்து நின்று கொண்டது. காமமும், க்ரோதமும் சேர்ந்து கஷ்டங்களை கொண்டு சேர்த்திருக்கிறது. வேரோடு அழிக்கும் மகா துக்கம் வந்து, ராக்ஷஸ குலத்தை அனாதையாக ஆக்கியுள்ளது. அரசனே, இந்த நாசத்திற்கு நீயே தான் காரணம், இப்படி நான் உன் புகழ் பெற்ற பராக்ரமத்தை மறந்து பேசுவது கூட சரியல்ல. பெண் மனம், கருணையால் பேச வைக்கிறது. சுக்ருதமோ, துஷ்க்ருதமோ, நீ உன் வழியில் சென்று விட்டாய். இனி நான் என்ன செய்வேன்? என்னால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை. நன்மையைச் சொன்ன ஹிதகாரிகளான நண்பர்கள் சொல்லை நீ கேட்கவில்லை. சகோதரன் என்று கூட ஏற்றுக் கொள்ளவில்லை. காரண காரியங்களோடு சொன்னான். முறைப்படி சொன்னான். ஸ்ரேயஸ்கரமான சொல்லைத் தான் சொன்னான். அந்த விபீஷணன் சொன்னது எதுவுமே உன் காதில் ஏறவில்லையே. மாரீசன், கும்பகர்ணன், என் தந்தை இவர்களும் சொன்னார்கள். வீர்ய மதத்தில் (கர்வத்தில்) இருந்த உனக்கு இவை ரசிக்கவில்லையே. அதன் பலன் தான் இது. நீல மேகம் போன்றவனே, மஞ்சள் பட்டாடை அணிந்தவனே, சுபமான அங்கதம் அணிந்து ஏன் ரத்தச் சேறாகி இருக்கும் பூமியில் கிடக்கிறாய்? தூங்குவது போல கிடக்கிறாயே, என்னுடன் பேச மாட்டாயா? மகா வீர்யவானான தக்ஷன், யுத்தத்தில் என்றும் புற முதுகு காட்டி அறியாதவன், யாதுதான-ராக்ஷஸ ராஜாவின் மகன் வழி பேரனாக வந்தவன், நீ இப்படி கிடக்கலாமா? எழுந்திரு, எழுந்திரு, ஏன் படுத்து உறங்குவது போல கிடக்கிறாய்? புதிய அவமானம் தலை குனிவு வந்து சேர்ந்ததே என்று லஜ்ஜையா? இதோ பார், இன்று பயமின்றி சூரியனின் கிரணங்கள் லங்கையில் பிரவேசிக்கின்றன. சூரியன் போன்ற தேஜஸுடன் யுத்தத்தில் எதிரிகளை வாட்டி வதைத்தாயே, வஜ்ரத்தை வஜ்ரதரன் எப்பொழுதும் பூசிப்பது போல நீயும் சூரியனை பூசித்து வந்தாய். பொன்னால் இழைத்து அலங்கரிக்கப் பட்ட உன் பரிகம் இதோ சின்னா பின்னமாகி கிடக்கிறது. இதையும் பிரியமான பத்னியை அணைப்பது போல அணைத்தபடி சமர பூமியில் கிடக்கிறாயே. நான் பிரியமில்லாதவளாக ஆகி விட்டேனா? என்னுடன் பேச ஏன் இந்த தயக்கம். தி4க், என் ஹ்ருதயம் ஏன் நூறாக சிதறி விழவில்லை. நீயும் ஐந்தாவது கதியை(பால்யம்,-சிசு பருவம், கௌமாரம்-குமாரனான பருவம், யௌவனம்- இளமை, வார்த்தக்யம்-முதுமை), பஞ்சத்வம் இவைகளுக்கு அடுத்த நிலை, மரணம்) அடைந்தபின் எனக்கு இந்த வாழ்வில் என்ன பாக்கியிருக்கிறது என்று இவ்வாறு புலம்பி வருந்தும் மந்தோதரி, தன் துக்கத்தைத் தாங்க மாட்டாமல் மூர்ச்சையானாள். அழுக்கு மண்டி கிடந்த ராவணன் மார்பில் முகம் பதித்து மூர்ச்சையாகி விழுந்தவள், சந்த்யா கால சிவந்த கிரணங்கள் பரவிய மேகத்தில், ஒளியின்றி மின்னல் தெரிவது போல கிடந்தாள். அவளை, சபத்னிகள், தங்கள் துயரை அடக்கிக் கொண்டு சமாதானம் செய்தனர். தேவி, உனக்குத் தெரியாததல்ல. உலகில் ஸ்திரமற்ற இந்த நிலையைப் பற்றி நீ அறிவாய். காலம் மாறும் பொழுது, அரசர்களின், சஞ்சலமான செல்வ நிலையும் மாறும். இதைக் கேட்டு மேலும் உரக்க சப்தமிட்டு அழுதாள். கண்ணீர் பெருகி அவள் உடலை நனைத்தது. இது இப்படி இருக்க, இங்கு ராமன் விபீஷணனைப் பார்த்து சொன்னான். விபீஷணா, உன் சகோதரனுக்கு சம்ஸ்காரங்களை முறைப்படி செய். இந்த ஸ்த்ரீகளை சமாதானம் செய்து அனுப்பு. இதைக் கேட்டு விபீஷணன் சற்று யோசித்து பதில் சொன்னான். தர்ம விரதத்தை கை விட்டவன், என் சகோதரன் தான். ஆனாலும் க்ரூரன், கருணையற்றவன், நேர்மையில்லாதவன். பிறன் மனைவியை தொட்டவனான இவனுக்கு நான் ஸம்ஸ்காரம் செய்ய தகுதியற்றவன். ப்ராத்ரு (சகோதர) ரூபத்தில் இருந்த சத்ரு இவன். எல்லோருக்கும் துன்பத்தையே இழைத்தான். எனக்கு மூத்தவன், குரு என்ற கௌரவத்தால் நான் பூஜிக்கத் தகுந்தவனே. ஆனால், ராவணன் இந்த கௌரவத்திற்கு தகுதியுள்ளவனே அல்ல. என்னையும் கொடியவன் என்றே உலகம் அழைக்கும். முதலில் அவன் செய்த கெட்ட காரியங்களை சொல்லி விட்டுத் தான் ஏதாவது நன்மை செய்ததையும் சொல்வார்கள். இதைக் கேட்டு, அர்த்தம் செறிந்த, அழகிய வாக்யங்களையே பேசும் ராமர், தர்மத்தின் வழி நின்று பதில் சொன்னார். உன் பிரபாவத்தால் தான் நான் ஜயிக்க முடிந்தது. அதனால் நீ விரும்புவதையும் நான் செய்தே ஆக வேண்டும். நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள். இந்த நிசாசரன் அதர்மம், நேர்மையின்மை இவைகளுக்கு இருப்பிடமாக இருந்ததாகவே வைத்துக் கொள்வோம். தேஜஸ்வி, பலவான், யுத்த பூமியில் சூரனாக திகழ்ந்தவன். தேவர்கள், இந்திரன் உள்ளிட்ட யாரிடமும் தோற்றதில்லை என்று கேட்டு இருக்கிறோம். மகாத்மா, நல்ல பலம் உடையவன், உலகத்தையே வருத்தும் ராவணன், இவையணைத்தும் இருந்தாலும்., மரணம் வரை தான் விரோதம். நம் காரியம் ஆகி விட்டது. இவனுக்கு ஸம்ஸ்காரங்கள் செய். உனக்கு எப்படியோ அதே போலத்தான் எனக்கும்., உன் கையால் தசக்ரீவன், விதி முறைபடி ஸ்ம்ஸ்காரங்கள் செய்யப்பட தகுதியுடையவனே. தர்மம் அறிந்தவனே, இதை செய்து நீ தான் புகழை அடைவாய். இதைக் கேட்டு விபீஷணன் மனம் தெளிந்து, வேகமாக செயல் பட ஆரம்பித்தான். ராவணனுக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை செய்தான். சந்தன கட்டைகளைக் கொண்டு சிதை அமைத்து, பத்மத்தின் மகரந்தங்களைத் தூவி, ப்ராம்ம விதிபபடி, மான் தோலை விரித்து ஆசனம் அமைத்து அதன் மேல் கிடத்தினான். வேதங்கள் அறிந்த அரசனுக்கு இது கடைசி யாகம் என்றே சொல்லப்படுகிறது. தென் திசை நோக்கி வேதியை அமைத்து, அக்னியை அதன் இடத்தில் வைத்து, பாலுடன் நெய்யை சேர்த்து ஸ்ருவங்களில் (கரண்டிகளில்) நிரப்பி விட்டான். கால்களில் சக்கரம், தொடைகளில் உலுகலம் என்ற உரல், எல்லா விதமான தாரு பாத்திரங்கள், உத்தரணி, உலக்கை இவற்றைக் கொடுத்து, அந்தந்த இடத்தில் வைத்து, விதி முறைகளை அறிந்த அறிஞர்கள் சொன்னபடி, சாஸ்திரங்களில் கண்டுள்ளபடி, மகரிஷிகள் விதித்தபடியும் பசுவை பலி கொடுத்து (மேத்யம் எனும் பசு) நெய்யில் தோய்த்து பரத்தினர். கந்த மால்யங்களால் ராவணனை அலங்கரித்து, பல விதமான வஸ்திரங்கள் அணிவித்து விபீஷணன் உதவியோடு பொரிகளை வாரியிறைத்து, கண்களில் நீர் ததும்ப அபர காரியங்களை செய்தனர். விபீஷணன் சிதைக்கு தீ மூமூட்டினான். பின் ஸ்நானம் செய்து ஈ.ர வஸ்திரங்களோடு, திலாஞ்சலி செய்தான். தண்ணீர், எள், தூர்வா இவற்றைக் கொண்டு நீர்க் கடன்களை செய்து, தலை வணங்கி நின்றான். ஸ்த்ரீ ஜனங்களை சமாதானப்படுத்தி, நகரத்தினுள் போகலாம் என்று அழைத்துக் கொண்டு சென்றான். விபீஷணன், ஸ்திரீ ஜனங்கள் நகரத்தினுள் நுழைந்ததும், திரும்பி வந்து ராமன் அருகில் வந்து நின்றான். ராமரும், சைன்யத்தோடு, சுக்ரீவனும், லக்ஷ்மணனும் உடன் வர, வ்ருத்திரனை வென்ற சதக்ரது எனும் இந்திரன் மன நிறைவு பெற்றது போல மன நிறைவையடைந்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மந்தோ3த3ரீ விலாப: என்ற நூற்று பதி நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 115 (522) விபீ4ஷணாபி4ஷேக: (விபீஷணனுக்கு முடி சூட்டுதல்)
ராவண வதத்தை பார்த்துக் கொண்டிருந்த தேவ, தானவ கந்தர்வர்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டே தங்கள் இருப்பிடம் சென்றனர். கோரமான ராவண வதமும், ராகவனின் பராக்ரமமும், வானரங்களின் யுத்தமும், சுக்ரீவனின் அணி வகுப்பும், யுத்தம் செய்த முறைகளும் அலசப் பட்டன. லக்ஷ்மணனின், மாருதனின் பற்றுதலும், வீர்யமும் பாராட்டப் பட்டன. இவ்வாறு பல விதமாக தங்களுக்குள் பேசிக் கொண்டே அவரவர் இருப்பிடம் சென்றனர். இந்திரன் தந்த ரதத்தை, திருப்பி அனுப்பி மாதலிக்கு மரியாதைகள் செய்து அனுப்பினான். ராகவனிடம் விடை பெற்றுக் கொண்டு இந்திர சாரதியான மாதலி திரும்பவும் தேவலோகமே சென்று விட்டான். தேவ லோக சாரதி இந்திர லோகம் சென்றபின், ராகவன் மிகவும் மகிழ்ச்சியோடு சுக்ரீவனை ஆலிங்கனம் செய்து கொண்டார். லக்ஷ்மணன் வந்து நினைவூட்டவும், எல்லா வானர வீரர்களும் வந்து வணங்க, தங்கள் சேனை இறங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தார். அருகில் இருந்த சௌமித்ரியைப் பார்த்து, சௌம்ய, இந்த விபீஷணனை லங்கா ராஜாவாக அபிஷேகம் செய்து வை. இவன் என் பக்தன். என்னிடம் மிகுந்த பற்றுதல் உடையவன். எனக்கு உபகாரம் செய்தவன். இது எனக்கு மிக முக்கியமான காரியம். ராவணன் தம்பியை லங்கையில் அரசனாக அபிஷேகம் செய்யப் பெற்று, விபீஷண ராஜாவாக காண வேண்டும். இவ்வாறு ராமர் சொன்னவுடன் சௌமித்ரி, அப்படியே என்று சொல்லி தங்க மயமான ஒரு குடத்தை எடுத்துக் கொண்டான். வானர ராஜனின் கையில் கொடுத்து சமுத்ர ஜலத்தை கொண்டு வரச் சொல்லி கட்டளையிட்டான். வேகமாகச் சென்ற வானரங்கள், சமுத்திர ஜலத்தை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர். வாராசனத்தில் விபீஷணனை அமரச் செய்து ஒரு குடம் ஜலம் எடுத்து லக்ஷ்மணன் அபிஷேகம் செய்து வைத்தான். லங்கையின் ராக்ஷஸர்கள் மத்தியில் ராமனின் ஆணைப்படி, ராஜாவாக அபிஷேகம் செய்து வைத்தான். மந்திரங்கள் சொல்லி முறைபடி நண்பர்கள் கூட்டம் சூழ, முடிசூட்டு விழாவை நடத்தினான். சுத்த ஆத்மாவான, நல்ல மனம் கொண்ட, விபீஷணனுக்கு முடி சூட்டி வைத்து அவன் மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்தது. சுற்றியிருந்தோர், விபீஷணனின் நெருங்கிய நண்பர்களும், சுற்றத்தாரும் மகிழ்ந்தனர். ராமன் கொடுத்த அந்த பெரும் ராஜ்யத்தை அடைந்த விபீஷணன், லங்காதிபதியாக முடி சூட்டப் பெற்று பொறுப்பு ஏற்றான். இயற்கையும் தன் நிலையான இயல்புக்கு ஏற்ப அமைதியாகியது. ராக்ஷஸ ஜனங்களை கண்டு பேசி விட்டு ராமரிடமே திரும்பி வந்தான். அக்ஷதைகள், மோதகங்கள், பொரி, திவ்யமான புஷ்பங்கள் இவற்றை ஊர் ஜனங்கள் , ராக்ஷஸர்கள் கொண்டு வந்தனர். அவைகளை வாங்கி விபீஷணன் ராமருக்கே சமர்ப்பித்தான். மங்களகரமான பல மங்கள வஸ்துக்களை லக்ஷ்மணனுக்கு கொடுத்தான். க்ருத கார்யம், தன் விருப்பம் நிறைவேறியவனாக, விபீஷணன் மகிழ்ச்சியுடன் இருப்பதை ராமர் பார்த்து தெரிந்து கொண்டார். அவனிடமே எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்தார். சைலம் (மலை) போல அருகில் நின்ற வீரனான ஹனுமானைப் பார்த்து சௌம்ய, இந்த விபீஷணனிடம் அனுமதி பெற்று லங்கா புரியினுள் செல். ராவண க்ருஹத்தில் உள்ளே செல்லவும் முறைப்படி அனுமதி பெற்றுக் கொள். வைதேஹியை வாழ்த்தி நான் குசலமாக இருப்பதையும், சுக்ரீவனும், லக்ஷ்மணனும் உடன் இருப்பதையும் சொல். வெற்றி வீரனே, ராவணன் என்னால் வதம் செய்யப் பட்டதையும் சொல். இந்த பிரியமான விஷயத்தை மைதிலிக்கு சொல்லி விட்டு அவள் சொல்லும் செய்தியையும் எனக்கு வந்து தெரிவிப்பாயாக.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீ4ஷணாபி4ஷேக: என்ற நூற்று பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 116 (523) மைதிலி பிரிய நிவேத3னம் (மைதிலிக்கு பிரியமானதைச் சொல்லுதல்)
இவ்வாறு உத்தரவு இடப்பெற்ற மாருதாத்மஜனான ஹனுமான் லங்கா நகரில் நுழைந்தான். எதிர்ப்பட்ட நிசாசரர்கள் வணக்கம் தெரிவித்தனர். ராவண க்ருஹத்தினுள் நுழைந்து கவலையுடன் இருக்கும் ரோஹிணியைப் போல தனித்திருந்த சீதையைக் கண்டான். ராக்ஷஸிகள் சூழ மரத்தினடியில் சற்றும் உற்சாகம் இல்லாமல் அமர்ந்து இருந்தவளைக் கண்டான். மிகவும் வினயமாக வணங்கி, பவ்யமாக அருகில் சென்று, அபிவாதனம் சொல்லவும், நிமிர்ந்து பார்த்த தேவி, மகா பலவானான ஹனுமான் வந்து நிற்பதையறிந்து மகிழ்ச்சியடைந்தாள். வாய் பேசாது நின்றவனை பார்த்து யார் என்று அடையாளம் கண்டு கொண்டவளாக சந்தோஷமாக விசாரித்தாள். அவள் முகக் குறிப்பிலிருந்து தான் யார் என்பதை தெரிந்து கொண்டு விட்டாள் என்பதை அறிந்து ஹனுமான் ராமரின் கட்டளையைத் தெரிவித்தான். வைதேஹி, ராமர் குசலமாக இருக்கிறார். சுக்ரீவ லக்ஷ்மணர்களும் உடன் இருக்கிறார்கள். விபீஷணன் சகாயமாக இருக்கிறான். வானர வீரர்களின் பலத்தாலும், சத்ருவை வதம் செய்து, வெற்றி வீரனாக குசலமாக இருப்பதாகச் சொல்லச் சொன்னான். விபீஷணன் சகாயத்தாலும், லக்ஷ்மணனின் கூர்மையான அறிவினாலும் வானர வீரர்களுடன் சேர்ந்து ராவணனை யுத்தத்தில் மாய்த்து, ரகு நந்தனன், உங்களிடம் குசலம் விசாரித்து வருமாறு என்னை அனுப்பினான். தேவி, மனதுள் பொங்கும் மகிழ்ச்சியோடு உனக்கு பிரியமானதை சொல்ல வந்து விட்டேன். தேவி நல்ல காலம், உயிருடன் வாழ்கிறாய். தர்மம் அறிந்தவளே, போரில் எனக்கு வெற்றியும் கிடைத்து விட்டது. சீதே, கவலையின்றி சௌக்யமாக இரு. ராவணனை யுத்தம் செய்து வதம் செய்து விட்டேன். லங்கையும் இப்பொழுது நம் வசத்தில். தூக்கத்தை துறந்து, த்ருடமாக ஒரே நினைவாக, உன்னை மீட்க பாடு பட்டது பிரதிக்ஞை செய்தது நிறைவேறி விட்டது. பெரும் சமுத்திரத்தில் சேதுவைக் கட்டி, தாண்டி வந்தோம். ராவண க்ருஹத்தில் வசிப்பதில் பதட்டமடைய வேண்டாம். இப்பொழுது இது விபீஷண ராஜ்யம்.. லங்கைஸ்வர்யம் இப்பொழுது விபீஷணனுக்குத் தரப் பட்டுள்ளது. அதனால் ஆஸ்வாஸப்படுத்திக் கொள். இந்த இடம் ஸ்வக்ருஹமாக மாறி விட்டது. உன்னைக் காணும் ஆவலுடன் இந்த ஹனுமான் மகிழ்ச்சியுடன் அங்கு வருவான் என்று ராமரின் செய்தியை ஹனுமான் சொல்லவும், முழு நிலவு போன்ற முகம் மலர, சீதை கீழே இறங்கி வந்தவள், எதுவும் சொல்லவில்லை. சீதை எதுவும் சொல்லாது இருப்பதைக் கண்டு வானர வீரன் ஹனுமான் கேட்டான். என்ன யோஜனை, தேவி, ஏன் என்னுடன் பேசவில்லை. இவ்வாறு ஹனுமான் விசாரிக்கவும், தர்மவழியிலேயே நிற்பவளான சீதை பதில் சொன்னாள். மனம் நிறைந்திருப்பது தழ தழத்த குரலில் வெளிப்பட, ப்லவங்கமா, (குதித்து, தாவிச் செல்லும் வானரமே) என் கணவனின் வெற்றி வாகை சூடிய செய்தி அறிந்து மகிழ்ந்தேன். திக்கு முக்காடிப் போனேன். எதுவும் பேச நா எழும்பவில்லை. வானர வீரனே, உனக்கு இணையாக வேறு யாரையும் சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்தவரை, எனக்கு பிரியமான விஷயத்தை சொல்ல வந்த உன்னைப் போல் இனி ஒருவர் இருக்க முடியுமா? உனக்கு எப்படி வாழ்த்து சொல்வேன்? உனக்கு சமமான பரிசு எதுவாக இருக்கக் கூடும் என்று எனக்கு புரியவில்லை, என் நன்றியை எப்படி தெரிவித்துக் கொள்வேன். ஹிரண்யமோ, சுவர்ணமோ, பலவிதமான ரத்னங்களோ, பூமி முழுவதுமோ, மூவுலக ராஜ்யமா எதுவுமே உனக்கு கொடுப்பது இந்த செயலுக்கு ஈ.டாகாது. பதில் சொல்ல முடியாமல் திணறுகிறேன். என்று சொன்ன வைதேஹியைப் பார்த்து வானர ஸ்ரேஷ்டன் பதில் சொன்னான். சீதையின் எதிரில் நின்று அஞ்சலி செய்தபடி, கணவனது பிரியத்தில், அவனது ஹிதத்திலேயே உங்கள் நினைவு எல்லாம் அர்ப்பணித்து இருந்தீர்கள். வெற்றி பெற பிரார்த்தித்துக் கொண்டு இருந்தீர்கள். இவ்வளவு அன்புடன் பாசத்துடன் என்னிடம் சொன்ன சொல்லை தாங்கள் தான் சொல்லக் கூடியவர்கள். உங்களால் தான் இப்படி பேச முடியும். பொருள் பொதிந்த சொற்கள், அன்புடன் சொல்லப் பட்டன. ரத்னங்கள் நிறைந்த பல தேவ ராஜ்யங்களை விட உயர்ந்தது இந்த சொற்களே. இதைத் தாங்கள் சொன்ன மாத்திரத்திலேயே, தேவ ராஜ்யம் வரையிலான பல நன்மைகளை நான் அடைந்து விட்டேன். சத்ருக்களை ஜயித்து விஜயனாக நிற்கும் ராமனை இனி எந்த விதமான இடறும் இன்றி நிலைத்து நிற்பவனாக காண்கிறேன். என்று ஹனுமான் சொல்லவும், ஜனகாத்மஜாவான மைதிலி, பவனாத்மஜனைப் பார்த்து, சுபமான வாக்யங்களைச் சொன்னாள். வானரனே, லக்ஷணங்கள் பூரணமாக நிறைந்ததும், மதுரமான குணம் உள்ளதும், எட்டு விதமான புத்தி பூர்வமான வாக்யத்தைச் சொல்ல நீ தான் தகுதியுடையவன். ஸ்லாகனீயன்- போற்றத் தகுந்தவன், பாராட்டத் தகுந்தவன் நீயே. வாயுவின் மகனாக வந்து பரம தார்மிகனாக பலம், சௌர்யம், கேள்வி, ஞானம், விக்ரமம், தாக்ஷிண்யம், உத்தமமான தேஜஸ், பொறுமை, தன்னம்பிக்கை, தைரியம், வினயம், இவ்வளவும் உன்னிடம் உள்ளன. சந்தேகமே இல்லை. இதைக் கேட்டும் பரபரப்போ, பதட்டமோ இல்லாமல் ஹனுமான், அதே போல வினயமாக, கை கூப்பியவாறு சீதையிடம் சொன்னான். தேவி, இந்த ராக்ஷஸிகளை, நீங்கள் அனுமதி கொடுத்தால், கொல்ல விரும்புகிறேன். யார், யார் உங்களை முன்பு துன்புறுத்தியிருக்கிறார்களோ, பயமுறுத்தி ஆட்டி வைத்தார்களோ, அவர்கள் எல்லோரையும் கொல்வேன். வருத்தத்துடன் அசோக வன மரத்தடியில் அமர்ந்து இருந்த சமயம் இந்த ராக்ஷஸிகள் உங்களை மேலும் துன்புறுத்தின. ரூபமும் கோரம், அதைவிட கோரமான கண்கள், பயங்கரமான சரித்திரம் உடைய இந்த ராக்ஷஸிகள், இவர்களைக் கொல்ல அனுமதி கொடுங்கள். இது தான் நான் கேட்கும் வரம் என்றான். முஷ்டிகளாலும், கால்களாலும் கைகளாலும், இவர்களை பயங்கரமாக குத்தி அடித்துக் கொல்வேன். முழங்கால்களால் முட்டி, மோதி, குத்தி, மேலும் மேலும் அடித்து, பற்களால் கடித்து, கர்ண நாசங்களை சாப்பிட்டு, கேசத்தை பிடித்து ஆட்டி வைத்து, இந்த ராக்ஷஸிகளின் கூட்டத்தை இன்னும் பல விதமாக உபத்ரவம் செய்து கொல்வேன். ஹனுமான் இவ்விதம் சொல்வதைக் கேட்டு யஸஸ்வினியான ஜனகாத்மஜா, சீதா, மெல்லச் சிரித்தபடி தடுத்து வானரோத்தமா, இவர்களை ஏன் கோபிக்கிறாய்? ராஜாவை ஆசிரயித்து வாழும் தாசிகள். மற்றவனின் ஆணையை தலை மேல் கொண்டு செயல்படுத்தும் நிலையில் தன் விருப்பப்படியா என்னை வாட்டினார்கள்? ஏதோ என் பாக்யம் விபரீதமாக இருந்தது. எப்பொழுதோ செய்த துஷ்க்ருத்யம் காரணமாக, இந்த விதமாக அதட்டல்களையும், விரட்டல்களையும் கேட்க நேர்ந்தது. தன் செயலின் பலனையே தான் ஒருவன் அனுபவிக்கிறான். என் ஜாதக கோளாறு. தசா புக்திகளின் விஷமமான நிலை,. இதை அனுபவிக்க வேண்டி வந்தது. இது நிச்சயம். பலமற்ற ராவண தாஸிகள் இவர்கள். இவர்களை நான் மன்னிக்கிறேன். எதுவும் தவறாக செய்ததாக நான் நினக்கவில்லை. ராவண ஆக்ஞையால் என்னை பயமுறுத்தி, அதட்டினார்கள். ராவணனே இல்லை என்றான பின், இவர்கள் ஏன் வாய் திறக்கப் போகிறார்கள்? முன்பு ஒரு கதை சொல்வார்கள். தெரியுமா? கேள். புலியின் முன்னே நின்றபடி கரடி சொல்லிற்றாம். மற்றவர்களின் பாப கர்மத்தின் பலனை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. காலம் அறிந்து, நல்லவர்கள் ரக்ஷிப்பதைத் தான் கொள்கையாக கொள்ள வேண்டும். தங்கள் நடத்தை அப்பழுக்கற்றதாக இருக்க நினைப்பவர்கள், பாபம் செய்தவர்களோ, சுபமான காரியம் செய்தவர்களோ, வதம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தால் கூட, கருணையைத் தான் முதலில் காட்ட வேண்டும். நல்ல குடி பிறப்பு உடைய குணவான்களான, பெரியவர்கள், இதைத் தான் செய்வார்கள் . யார் தான் அபராதம், தவறு செய்யாதவன். (ந கச்சின்னா பராத்யதி) எப்பொழுதும் தவறே செய்யாதவன் என்று யாரையுமே சொல்ல முடியாது. அதனால் வானரோத்தமா, உலக ஹிம்சையையே விளையாட்டாக செய்து வந்த ராக்ஷஸர்கள், விரும்பிய வண்ணம் வடிவம் எடுக்க வல்ல சக்தியினால் கர்வம் கொண்டு, பாபமே செய்த போதிலும், நாமும் அதே போல தண்டித்து அவர்களை துன்புறுத்துவதில் என்ன பெருமை இருக்க முடியும்? என்றாள். ராமபத்னியான சீதை இவ்வாறு சொன்னதைக் கேட்டு, சொல்லின் செல்வனான ஹனுமானே திகைத்து விட்டான். தேவி, ராமனுடைய மனைவியாக நீங்கள் பேசுவது ரொம்பவும் சரியே. அந்த ராமனின் தர்மபத்னி வேறு எவ்விதம் பேசுவாள்? எனக்கு அனுமதி கொடுங்கள். ராகவன் இருக்கும் இடம் திரும்பச் செல்கிறேன் எனவும், வைதேஹி பதில் சொன்னாள். வானரோத்தமா, என் கணவனைப் பார்க்க விரும்புகிறேன். இதைக் கேட்டு ஹனுமான் அவளை உற்சாகமூட்டும் விதமாக, கண்டிப்பாக பார்க்கத் தான் போகிறாய், தேவி. பூர்ண சந்திரன் போன்ற முகமுடைய ராமனைக் காண்பாய். உடன் லக்ஷ்மணனும் இருக்கக் காண்பாய். ஸ்திரமான மித்திரன், சுக்ரீவனுடன், மூவுலக நாயகனான இந்திரன், சத்ருக்களை ஜயித்து விட்டு திரும்பியதை, சசி தேவி கண்டது போல காண்பாய். சாக்ஷாத் லக்ஷ்மி தேவியே தன் பத்மத்திலிருந்து இறங்கி நின்றாற் போல இருந்த சீதையிடம் இவ்வாறு சொல்லி நம்பிக்கை அளித்து விட்டு, ராமனிடம் வந்து சேர்ந்தான், ஹனுமான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மைதிலி ப்ரிய நிவேத3னம் என்ற நூற்று பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 117 (524) சீதா பர்த்ரு முகோத்வீக்ஷணம் (சீதை கணவனின் முகத்தைப் பார்த்தல்)
வானர வீரனான ஹனுமான் திரும்பி வந்து மகா ப்ராக்ஞனான ராமரைப் பார்த்து, சொன்னான். வில்லாளிகளுள் சிறந்த ராமனிடம், சொல்லின் செல்வனான ஹனுமான் சொன்னான். எதைக் காரணமாகக் கொண்டு இந்த யுத்த காரியத்தை ஆரம்பித்தோமோ, இந்த செயலின் பலனாக விளங்கும் தேவியை, இன்னமும் துக்கத்தில் வாடிக் கொண்டிருக்கும் சீதையை தாங்கள் காண வேண்டும். கண்களில் நீர் நிரம்ப, வெற்றிச் செய்தியைக் கேட்டு மகிழ்ந்தாள். முன்பு என்னைக் கண்டு பரிச்சயம் ஆனவள், நம்பிக்கைக்கு பாத்திரமானவன் தான் நான் என்பதை புரிந்து கொண்டு என்னிடம் பேசினாள். எடுத்த செயலை முடித்த வீரனாக, லக்ஷ்மணனுடன் இருக்கும் என் நாதனைப் பார்க்க விரும்புகிறேன். இதைக் கேட்டு எதுவும் பேசாமல், ஏதோ யோசிப்பது போல பேசாமல் நின்றார். முகம் வருத்தம் அடைந்து, கண்களில் நீர் மல்கியது. பெருமூச்சு விட்டு, உஷ்ணமான மூச்சுக் காற்றில் தன் வேதனையை மறைத்தவராக, பூமியை நோக்கியபடி, அருகில் நின்றிருந்த விபீஷணனைப் கூப்பிட்டுச் சொன்னார். திவ்யமான அங்கராகங்கள் பூசி, திவ்யமான ஆபரணங்களை அணிவித்து, தலை ஸ்னானம் செய்தவளாக, சீதையை இங்கு கொண்டு வந்து நிறுத்து என்றார். தாமதம் செய்யாதே. இதைக் கேட்ட விபீஷணன் வேகமாகச் சென்று, அந்த:புரம் சென்று தன் ஸ்த்ரீ ஜனங்களை அழைத்துக் கொண்டு, சீதை இருக்கும் இடம் சென்றான். அவர்களை சீதைக்கு ஸ்நானம் செய்வித்து, மங்களாபரணங்களை பூட்டி, அழைத்து வர கட்டளையிட்டான். உனக்கு பத்ரம்-நன்மை உண்டாகட்டும், தேவி, உன் கணவன் உன்னைக் காண விரும்புகிறான் என்று தெரிவித்தான். வைதேஹி பதில் சொன்னாள். ராக்ஷஸாதிபனே, நான் ஸ்நானம் செய்யும் முன் கணவனைக் காண விரும்புகிறேன் எனவும் விபீஷணன் உன் கணவன் தான் அரசன். அவன் சொல்லை கேட்கத் தான் வேண்டும் என்றான். சீதையும் சம்மதித்து, கணவன் சொல்லியபடியே, ஸ்நானங்களை செய்ய தீர்மானித்தாள். பெண்கள் அவளை தலை ஸ்நானம் செய்வித்து, அலங்காரம் செய்து, மிக உயர்ந்த ஆபரணங்களும், உயர்ந்த வஸ்திரங்களும் அணிவித்து, அழகிய சிவிகையில் ஏற்றி, நாலாபுறமும் திரைகள் தொங்க, பலர் காவல் வர, விபீஷணன் அழைத்துச் சென்றான். இதையறிந்தும் த்யானத்தில் மூழ்கியிருந்த ராமனை நெருங்கி வணங்கி, மகிழ்ச்சியோடு சீதையை அழைத்து வந்து விட்டதைத் தெரிவித்தான். ராக்ஷஸன் க்ருஹத்தில் வெகு நாளாக வசித்தவள் வந்து விட்டதையறிந்து, ஹர்ஷம்-மகிழ்ச்சி, தைன்யம்-கையாலாகாத தன்மை, ரோஷம்-ஆத்திரம் மூமூன்றும் ஏக காலத்தில் ராமனை வாட்டின. அருகில் வந்து நின்ற விபீஷணனைப் பார்த்து, ராக்ஷஸாதிபனே, எப்பொழுதும் என் வெற்றிக்கு பாடுபடுபவனே, வைதேஹியை சீக்கிரம் என்னருகில் வரச் சொல் என்றான். உடனே விபீஷணன், கூட்டத்தை அதட்டி விலக்கி, சிவிகை சீக்கிரம் ராம சமீபம் வர ஏற்பாடு செய்யலானான். கைகளில் கம்பும் தடுப்பும் வைத்துக் கொண்டிருந்த காவல் வீரர்கள், கூட்டத்தை விரட்ட முனைந்தனர். கரடிகளும், வானரங்களும், ராக்ஷஸர்களும் நிறைந்த கூட்டம். விரட்டியடிக்கப் பட்டு, நகர்ந்து சற்று தூரம் விலகிச் சென்றன. இப்படி விரட்டியடிக்கப் படும் பொழுது மறுத்து பேசி, அல்லது எதிர்த்து கோஷம் இட்ட சத்தமே, சமுத்திரத்தின் அலை ஓசை மெதுவாக ஆரம்பித்து பலமாக ஆகி பெரும் ஓசையாக கேட்பது போல கேட்டது. இப்படி விரட்டப் படுபவர்களைப் பார்த்து தாக்ஷண்யத்துடனும், சற்று கோபத்துடனும் ராமன் தடுத்தார். விபீஷணனை எச்சரிப்பது போல, கண்களில் அனல் பறக்க, பதட்டத்துடன் சொன்னார். எதற்காக, நான் இங்கு நிற்கும் பொழுதே, லட்சியம் செய்யாமல் என் ஜனங்களை வருத்துகிறாய்? உடனே நிறுத்து. இவர்கள் என் ஜனங்கள். வீடுகளோ, வஸ்திரங்களோ, பிராகாரங்களோ, இது போன்ற ராஜ சத்காரங்களோ, பெண்களுக்கு பாதுகாப்பு அல்ல. சரித்திரம், நடத்தை தான் அவர்களுக்கு பாதுகாவல். கஷ்ட காலங்களில், சங்கடமான சமயங்களில், யுத்தங்களில், ஸ்வயம்வர சமயத்தில், யாக சாலையில், விவாக பந்தலில், ஸ்த்ரீகளைப் பார்ப்பது குற்றமாகாது. இதோ இவள் யுத்த பூமியில் வந்து நிற்கிறாள். பெரும் சங்கடத்தில் இருக்கிறாள். இவளைக் காண்பதால் எந்த தோஷமும் இல்லை. அதுவும் நான் அருகில் இருக்கும் பொழுது, மற்றவர்கள் காண்பதில் தவறில்லை. அதனால், விபீஷணா, சீக்கிரம் அவளை அழைத்து வா. சீதா, என் நண்பர்களுடன் நிற்பதை பார்க்கட்டும். இதைக் கேட்டு, மனம் ஒப்பாவிடினும், சற்று யோசித்து, விபீஷணன், தலை குனிந்தபடி, சீதையை அழைத்து வந்தான். அச்சமயம் லக்ஷ்மண, சுக்ரீவர்கள், ஹனுமான், ராமரின் வார்த்தையைக் கேட்டு கவலை கொண்டனர். சற்றும் அன்போ, பரிவோ இல்லாமல், சீதையைப் பற்றி, பேசுவதாக தோன்றியது. தன் மனைவி என்ற கௌரவம் அளிக்காது, அவனுடைய செயலும், முகக் குறிப்புகளும், ஏதோ சீதையிடன் மனஸ்தாபம் என்று தங்களுக்குள் ஊகித்துக் கொண்டனர். லஜ்ஜையினால் உடல் குறுக, தன்னுள்ளேயே நுழைந்து விடுபவள் போல, விபீஷணன் பின் தொடர, கணவனை நோக்கி நெருங்கி வந்தாள். வஸ்திரத்தினால் முகத்தை மூடியபடி, ஜனக் கூட்டத்தில், கணவன் அருகில் வந்து ஆர்யபுத்ர, என்று அழைத்தவள், மேற் கொண்டு பேச முடியாமல் அழுதாள். ஆச்சர்யம், மகிழ்ச்சி, ஸ்னேகம் இவை நிரம்பிய விழிகளால், இதுவரை பதியை தேவதையாக எண்ணி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்தவள், சௌம்யமான கணவனை, அதை விட சௌம்யமான முகத்தினளான சீதை, நிமிர்ந்து பார்த்தாள். வெகு காலமாக காணாத கணவன் முகத்தை ஆவலுடன் பார்த்தாள். அப்பொழுது தான் உதயமான பூர்ண சந்திரன் போன்ற காந்தனை, விமலமான சசாங்கனான சந்திரன் போன்ற முகத்தினளான சீதை ஏறிட்டாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சீதா பர்த்ரு முகோத்வீக்ஷணம் என்ற நூற்று பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)