அத்தியாயம் 96 (503) ராவணாபி4ஷேணனம் (ராவணன் போருக்குச் செல்லுதல்)
வீட்டுக்கு வீடு எழுந்த இந்த சத்தத்தை ராவணன் கேட்டான். ராக்ஷஸிகளின் பரிதாபமான ஓலம், அவர்கள் மன வேதனையையும், வருத்தத்தையும் காட்டியது. உற்றார், உறவினரை இழந்த லங்கையின் ராக்ஷஸ குல ஸ்த்ரீகள், இவர்களது பரிதாபமான நிலையை நினைத்து, ஒரு முஹுர்த்த நேரம் தியானத்தில் ஆழ்ந்தான். நினைக்க நினக்க ஆத்திரம் மிக அதிகமாக அவனை ஆட்கொண்டது. பற்களால் உதட்டைக் கடித்து, கோபத்தில் கண்கள் சிவக்க, ராக்ஷஸர்களே கண்டு நடுங்கும்படி, காலாக்னி போல ஆனான். அருகில் இருந்த ராக்ஷஸர்களை அதட்டினான். ஏற்கனவே பயந்து நடுங்கிக் கொண்டிருந்தவர்களை மேலும் நடுங்கச் செய்தான். கண்களாலேயே எரித்து விடுபவன் போல உறுத்துப் பார்த்து, மகோதரனையும், மகா பார்ஸ்வனையும், விரூபாக்ஷன் என்ற ராக்ஷஸனையும் அழைத்தான். சீக்கிரம் சைன்யத்தை தயார் செய்யுங்கள். என் ஆணை எனவும் அவர்களும் உடனே எஞ்சியிருந்த ராக்ஷஸ வீரர்களைத் திரட்டி, அரசன் கட்டளையைச் சொல்லி, போருக்கு ஆயத்தமாக்க முனைந்தனர். அரசனுக்கு மங்களா சாஸனம் முதலியவற்றைச் செய்து, அவர்களும் தயாரானார்கள். தலைவனின் விஜயத்தை விரும்பும் பிரஜைகளாக, கை கூப்பி வணங்கி விடை பெற்று வெளியேறினர். க்ரோதத்தில் தன்னை மறந்தவனாக, ராவணன் உரக்கச் சிரித்து, மகா பார்ஸ்வன், மகோதரன், விரூபாக்ஷன் இவர்களைப் பார்த்து, இன்று என் பாணங்களுக்கு இரையாக்கி, ராம லக்ஷ்மணர்களை பர லோகம் அனுப்புவேன். என் வில்லிலிருந்து புறப்படும் பாணங்கள், யுக முடிவில் ஆதித்யன் போல தேஜஸ் நிரம்பியவைகள். கரன், கும்பகர்ணன், ப்ரஹ்லாதன், இந்திரஜித் இவர்களின் வதத்துக்கு இன்று நான் பழிக்குப் பழி வாங்குவேன். சத்ரு வதம் தான் வழி. அந்தரிக்ஷமா, திசைகளா, நதிகளா, சாகரமா, எதுவும் தெரியாமல் என் பாணங்களைக் கொண்டு வலை பின்னுவேன். இன்று வானர வீரர்களை பகுதி பகுதியாக அணி வகுத்து நிற்கும் படையினரை, என் வில்லில் பூட்டிய அம்புகளால் கொன்று குவிப்பேன். வாயு வேகத்தில் செல்லும் இந்த என் ரதத்தில் வேகமாக சென்று, என் வில் என்ற சமுத்திரத்தில் அலைகள் போல கிளம்பும் அம்புகளைக் கொண்டு கடைந்து எடுக்கிறேன். இரண்டு மைல் தூரம் வரை பத்மங்கள் மலர்ந்து நிற்கும் தடாகம் போல, அதில் மகரந்தம் நிறைந்த பத்மங்கள் போல பரவிக் கிடக்கும் வானர தாமரைக் குளங்களை காட்டு யானைப் போல கலக்குகிறேன். நாளம்-தண்டோடு வீசியெறியப்பட்ட தாமரை மலர்களைப் போல கூட்டம் கூட்டமாக வானர வீரர்கள் வேரோடு சாய்ந்து, பூமியை நிரப்பப் போகிறார்கள். அது கூட பூமியில் அலங்காரமாகவே இருக்கும். மரக் கிளைகளை கையில் வைத்துக் கொண்டு போர் புரிவதாக பெயர் பண்ணிக் கொண்டுத் திரியும் இந்த வானரங்களை நூறு நூறாக ஒரே பாணத்தால் அடித்துக் கொல்கிறேன். என் கணவன் மாண்டான், சகோதரன், என் மகன் இறந்தான் என்று அலறும் இந்த ராக்ஷஸ ஸ்த்ரீகளின் கண்ணீர் பிரவாகத்தை இந்த எதிரிகளைக் கொன்று, அவர்களின் வதத்தால் துடைக்கிறேன். இன்று பூமியே தெரியாதபடி, என் பாணங்களால் அடிபட்டு வானர சடலங்களே நிறைந்திருக்கச் செய்கிறேன். ஓநாய்கள், கழுகுகள், மற்றும் மாமிச பக்ஷிகளான பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் எதிரிகளின் மாமிச உணவையே கொண்டு தர்ப்பணம் செய்கிறேன். இப்படிச் சொல்லிக் கொண்டே போகும் ராவணனைப் பார்த்து மகா பார்ஸ்வன், மகோதரன் இருவரும், அரசனை சுய நிலைக்கு கொண்டு வர, முயற்சித்தனர். இதோ சேனைகள் தயாராகி விட்டன. வாழ்த்தி அனுப்புங்கள் என்றனர். என் ரதத்தை தயார் செய்யுங்கள். சீக்கிரம் என் வில்லைக் கொண்டு வாருங்கள். எல்லோரும் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள் என்று சொல்லியபடி நடந்தான். படைத் தலைவர்கள் தவித்தனர். ராக்ஷஸர்களை வீட்டுக்கு வீடு சென்று சம்மதிக்கச் செய்து, இலங்கை நகரில் மிகச் சாதாரண நிலையில் உள்ள போர் வீரனைக் கூட விடாது அழைத்து வந்தனர். முஹுர்த்த நேரத்தில் படை கிளம்பியது. பல விதமான ஆயுதங்களைத் தோளில் ஏந்தி பயங்கரமான உருவம் உடைய பலரும் சேர்ந்து கொண்டனர். வாயால் உரத்து கோஷம் செய்தபடி, வாட்களையும் பட்டஸங்கள், சூலங்கள், க3தை4கள் முஸலங்கள், கலப்பை, சக்திகள், கூர்மையான நுனிகளையுடைய பல கூட முத்கரங்கள், கம்புகள், தடிகள், சக்ரங்கள், கூர்மையான பரஸ்வதங்கள், பிண்டி பாலங்கள், சதக்னீ எனும் ஆயுதம், மற்றும் பல விசேஷமான ஆயுதங்களுடன் ராவணன் ஆணை என்று சொல்லி அழைத்துக் கொண்டு வேக வேகமாக வந்தனர். பத்தாயிரம் யானைகள், இருபதாயிரம் ரதங்கள், மூன்று பங்கு குதிரைகள், கோடிக்கணக்கான கேவேறு கழுதைகள், ஒட்டகங்கள் இவை தயாராயின. கால் நடையாக வந்த வீரர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. படைத் தலைவர்கள் அணி வகுத்து நின்ற சேனைகளின் முன்னிலையில் நின்றார்கள். இதற்குள் ராவணன் ரதத்தை தயார் செய்து சாரதியும் வந்து சேர்ந்தான். அழகிய மாலைகள், வஸ்திரங்கள் நிறைந்து அலங்காரமாக அமைக்கப் பட்ட உயர் ஜாதி குதிரைகளுடன் அழகிய ரதம் பல விதமான ஆயுதங்கள் நிரம்பப்பெற்று, கிங்கிணி மணிகள் ஒலிக்க, ரத்ன ஸ்தம்பங்களும், ரத்னங்கள் இழைத்த ஆசனங்களுமாக, ஆயிரம் பொற் கலசங்கள் வைக்கப் பட்டு இருந்தது. இதைக் கண்டு ராக்ஷஸர்களே அதிசயித்தனர். ரதத்தை கண்டதும், அவசரமாக எழுந்து வந்த ராக்ஷஸேஸ்வரன், தானே தன் தேஜஸால் ஒளிச் சுடராய், கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல பிரகாசமாக இருந்தவன், சாரதி முதலானோர் தயாராக காத்திருந்த ரதத்தில் ஏறினான். எட்டு குதிரைகள் பூட்டப் பெற்றிருந்தன. ராக்ஷஸ வீரர்கள் நாலா புறமும் புடை சூழ, பூமியை தன் வசத்தில் வைத்திருந்த ராவண ராஜா கம்பீரமாக புறப்பட்டான். ராவணன் அனுமதி பெற்று, மகோதரனும் மகா பார்ஸ்வனும், விரூபாக்ஷனும் தங்கள், தங்கள் ரதங்களில் ஏறினர். ஜய கோஷம் செய்தவாறு கிளம்பினர். ஏக காலத்தில் எல்லோருமாக செய்த ஜய கோஷத்தின் ஓசையில் பூமி நடுங்கியது. பூமி அதிர அட்டகாசமாக படை புறப்பட்டது. காலாந்தகனோ, யமனோ எனும்படி மகா சக்திசாலியான ராவணன் வில்லைத் தூக்கி பிடித்தபடி, ராம லக்ஷ்மணர்கள் இருந்த திசை நோக்கி தங்கள் பிரயாணத்தை தொடர்ந்தான். சூரியன் மறைந்தது போல காணப்பட்டது. திசைகள் இருண்டன. பறவைகள் கோரமாக கூச்சலிட்டன. பூமி ஆடுவது போல தோன்றியது. ரத்த மழை பொழிவது போல தோன்றியது. குதிரைகள் கால் இடறின. த்வஜத்தின் மேல் கழுகுகள் வந்து விழுந்தன. குள்ள நரிகள் ஊளையிட்டன. தசக்ரீவ ராக்ஷஸனின் இடது கண் துடித்தது. இடது புஜம் நடுங்கியது. முகம் வெளிறியது. வாய் குழறி, குரல் தடுமாறியது. யுத்த களத்துக்குப் புறப்பட்ட ராவணன் முன் தோன்றிய இந்த துர் நிமித்தங்கள், நாசத்தை தெரிவிப்பனவாகவே இருந்தன ஆகாயத்திலிருந்து மின்மினி பூச்சிகள் விழுந்தன. காகமும் கழுகுமாக சேர்ந்து அபஸ்வரமாக சப்தமிட்டன. இந்த துர் நிமித்தங்களைக் கண்டு சிந்தனை வயப்பட்டவனாக இருந்தும், ராவணன் காலத்தின் வசமாகி யுத்தத்தில் தான் வதம் செய்யப் போவதாக மார் தட்டிக் கொண்டே அதே அகம்பாவத்துடன் மேலே சென்றான். ரத கோஷம் கேட்டு, வானரங்களும் போர் புரியும் முன்னெச்சரிக்கையோடு எதிரில் வந்தன. வானர, ராக்ஷஸர்களிடையில் பயங்கரமான யுத்தம் மூண்டது. ஒருவரையொருவர் ஏசிக் கொண்டும், தங்கள் கட்சிக்கு ஜய கோஷம் செய்து கொண்டும், போரைத் துவக்கினர். தசக்ரீவன், அலங்கரிக்கப் பட்ட தன் சரங்களால் வானரங்களை வேகமாக தாக்கினான். பெருமளவில் சேதமுறச் செய்தான். பல வானரங்கள் ராவணனின் அம்புகளால் தலை அறுபட்டு விழுந்தன. சிலருக்கு காதுகள் அறுபட்டன. அங்கஹீனமாக பலர் துடித்தனர். பக்கங்களில் கிழிக்கப் பட்ட உடலுடன் சிலர், மூச்சே நின்று போக விழுந்தவர்கள் பலர், கண்களில் அடிபட்டவர்கள், தலையில் காயம் என்று பலரும் தசானனன் கோபத்துக்கு ஆளான வானரங்கள் தவித்தனர். கண்களை இடுக்கியபடி, கோபத்துடன் ராவணன் எங்கு ரதத்தை ஓட்டியபடி சென்றானோ, அந்த இடத்தில் வானர வீரர்கள் அவனுடைய அம்புகளின் தாக்குதலைத் தாங்க முடியாமல் நிலை குலைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணாபி4ஷேணனம் என்ற தொன்னூற்று ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 97 (504) விரூபாக்ஷ வத4ம் (விரூபாக்ஷனின் வதம்)
துண்டிக்கப் பட்ட அங்கங்களுடன் கீழே விழுந்து கிடந்த வானரங்கள் பூமியை மறைத்தன. ஒரே சமயத்தில் வந்து மேலே பட்ட ராவண பாணங்களை எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் பெருமளவில் வானர சைன்யம் நாசம் அடைந்தது. நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிகளைப் போல ஒன்றாக மடிந்து விழுந்தன. அம்பு பட்ட வலியால் துடித்து அலறியபடி, ஓடினர். நெருப்பு (துணுக்குகள்) கனல் பட்டு துடித்து ஓடும் யானைகள் போல ஓடின. பெரும் மேகத்தை காற்று தள்ளிக் கொண்டு போவது போல வானர சைன்யம் ராவண பலத்தால் துரத்தப் பட்டு ஓடின. ராக்ஷஸேந்திரன், தன் பாணங்களால் மேலும் மேலும் நாசம் செய்து கொண்டே முன்னேறினான். ராகவன் எதிரில் வந்து நின்றான். அடி பட்டு, அங்கஹீனம் ஆகி, அலறி ஓடும் வானர வீரர்களைப் பார்த்து சுக்ரீவன் தன் கூடாரத்தில் சுஷேணனை நிறுத்தி விட்டு தானும் யுத்த களத்தில் இறங்கினான். தனக்கு சமமான வீரனை தன் சேனை காவலுக்கு நிறுத்தி விட்டு, உற்சாகமாக, எதிரியைத் தேடிக் கொண்டு சுக்ரீவன் கால் நடையாகவே சென்றான். கையில் ஆயுதங்களோடு அவன் முன்னும் பின்னும் வீரர்கள் தொடர்ந்தனர். பெரும் கற்களையும், பெரிய மரக் கிளைகளையும் எடுத்துக் கொண்டு போரை சந்திக்கச் சென்றனர். பல ராக்ஷஸ வீரர்களை அடித்து தள்ளிக் கொண்டே தானும் உரத்த குரலில் ஜய கோஷம் செய்து கொண்டு சுக்ரீவன் அட்டகாசமாக வேகமாக சென்றான். யுக முடிவில், வாயுதேவன், வளர்ந்த மரங்களையும், எதிர்ப்படும் மலைகளையும் விலக்கியபடி செல்வது போல, எதிரில் வந்த பல பெரும் ராக்ஷஸர்களையும், விலக்கிக் கொண்டே சென்றான். கற்களை மழையாக பொழிந்து ராக்ஷஸ சேனையைக் கலக்கினான். திடுமென சுக்ரீவனின் இந்த தாக்குதலால் ராக்ஷஸர்கள் கீழே விழுந்து அலறினர். விரூபாக்ஷன், தான் தனியாக, ராவணன் பெயரைச் சொல்லி வாழ்த்தியபடி, ரதத்திலிருந்து இறங்கி கஜஸ்கந்தன் என்ற யானையின் மேல் ஏறினான். மகா ரதியான விரூபாக்ஷன் யானை மேல் சவாரி செய்து கொண்டே, பெரும் குரலில் சிம்ம கர்ஜனை செய்து கொண்டே வானரங்களை துரத்தினான். சுக்ரீவன் பேரில் ஏராளமான சரங்களை மழையாக பொழிந்தான்,. அடிபட்ட ராக்ஷஸர்களை தூக்கி நிறுத்தி ஆசுவாசப் படுத்தி, யுத்தம் செய்ய தயாராக்கினார்கள். அந்த ராக்ஷஸனின் அம்புகளால் துளைக்கப் பட்டு காயமடைந்த சுக்ரீவன், இவனை வதம் செய்தே தீருவது என்று தீர்மானித்தான். இதன் பின் ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி, கையில் வைத்துக் கொண்டு, விரூபாக்ஷன் யானையுடன் வரும் வழியில் நின்றான். யானையை பலமாக அடிக்க, அடி தாங்காமல், யானை ஒரு வில் வைக்கும் தூரம் நகர்ந்து, அடி பட்ட வலியால் பிளிறினாலும், அதன் மேல் இருந்த ராக்ஷஸன் பாதிக்கப்படவில்லை. நேருக்கு நேர் எதிரியை தாக்க ராக்ஷஸன் வானர வீரன் முன் வந்து நின்றான். காலம் காலமாக பரம்பரையாக உபயோகித்து வந்த கவசம், வாள் இவைகளை எடுத்து சுக்ரீவனை பயமுறுத்துவது போல அருகில் வந்தான், சுக்ரீவன் மற்றொரு பெரும் கல்லை எடுத்து தடாலென அவன் மேல் வீசி விட்டான். அதைத் தன் வாளால் தடுத்து, திரும்ப சுக்ரீவன் பேரிலேயே விழச் செய்தான். இதை எதிர்பார்க்காத வானர ராஜன், முஹுர்த்த நேரம் மயங்கிக் கிடந்தான். சமாளித்து எழுந்து, முஷ்டியை மடக்கியபடி, ராக்ஷஸனைத் தாக்கக் கிளம்பினான். விரூபாக்ஷனின் மார்பில் முஷ்டியால் ஓங்கி குத்தினான், விரூபாக்ஷன் கதி கலங்கி நின்றான். சமாளித்துக் கொண்டு, சுக்ரீவனின் கவசத்தை தன் வாளால் பிளந்து கீழே விழச் செய்தான். தன் கால்களால் சுக்ரீவனை மிதித்தபடி நின்றான். வானர ராஜன் தன்னை விடுவித்துக் கொண்டு, கற்களை விட கடினமான தன் கைத்தலத்தாலேயே ஓங்கி அடித்தான். சுக்ரீவனின் இந்த கைத்தல அடியைத் தாங்க மாட்டாமல் ராக்ஷஸன் லாகவமாக தன்னை சமாளித்துக் கொண்டு, சுக்ரீவன் மார்பில் தன் முஷ்டியால் குத்தினான். சுக்ரீவனின் கோபம் கட்டுக் கடங்காததாயிற்று. தன்னை ராக்ஷஸனின் பிடியிலிருந்து எப்படியோ சமாளித்து விடுவித்துக் கொண்டு, விரூபாக்ஷணை அடிக்க சரியான தருணத்தை எதிர் நோக்கியிருந்தான். சரியான சமயத்தில், கழுத்தில், இந்திரனின் அசனி என்ற ஆயுதம் அடிப்பது போன்ற பலத்துடன் தன் தைத்தலத்தால் ஓங்கி அடித்து விரூபாக்ஷனை உயிரிழக்கச் செய்தான். ப்ரஸ்ரவனன் மலையில் அருவி பெருக்கெடுத்து ஓடுவது போல அவன் சரீரத்திலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே விரூபாக்ஷன் (கோணலான கண்களுடையவன்) அவனை மேலும் விரூபாக்ஷணாக ஆக்கியது கண்டு வானரங்கள் அருகில் வந்து பார்த்தன. துடித்து புரளும் விரூபாக்ஷன், ரத்தத்தில் தோய்ந்து கிடப்பதைக் கண்டனர். இரு பெரும் சமுத்திரங்கள் மோதிக் கொண்டால் உண்டாகும் அலை ஓசை போல பெரும் சத்தத்துடன், இரு பக்க சேனையும் மேலும் உக்ரமாக போரைத் தொடர்ந்தனர். விரூபாக்ஷனை தங்கள் தலைவன், மாய்த்ததை அறிந்த வானர வீரர்களின் மகிழ்ச்சி கங்கா பிரவாஹம் போல பொங்கி எழுந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விரூபாக்ஷ வத4ம் என்ற தொன்னூற்று ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 98 (505) மகோதர வத4| (மகோதரன் வதம் செய்யப்படுதல்)
இரு பக்கமும் தேர்ந்த வீரர்களைக் கொண்ட வானர ராக்ஷஸ சேனைகள், மிகப் பெரிதாக இருந்தவை, நேரம் செல்லச் செல்ல வெய்யில் காலத்து நதி போல வற்றி சிறுத்துக் கொண்டே போகலாயிற்று. இரு தரப்பிலும் நல்ல சேதம். தன் தரப்பில் வீரர்கள் அழிவதையும், விரூபாக்ஷனின் மரணத்தாலும், ராக்ஷஸாதிபனான ராவணனை இரட்டை மடங்கு கோபமும், தாபமும் ஆட்கொண்டது. வானர வீரர்கள் தங்கள் தரப்பு ராக்ஷஸர்களை கண்டபடி அடித்து மடியச் செய்வதையும் தன் படை பலம் குறைந்து கொண்டே வருவதையும் கவனித்தான். யுத்தத்தில் வெற்றியே கண்டு வந்த அவன் இதை விதியின் விபரீதமாகவே உணர்ந்தான். அருகில் இருந்த மகோதரனிடம் தன் ஆற்றாமையைத் தெரிவித்தான். மகாபாஹோ | உன்னிடம் தான் சற்று வெற்றியை எதிர்பார்க்கிறேன். நீ தான் வெற்றியை நிலை நாட்டக் கூடியவன். உன் பராக்ரமத்தைக் காட்டு. வீரனே | எதிரி கூட்டத்தை நிர்மூலமாக்கு. எஜமானனுக்கு விசுவாசமாக உன் செயல் திறனை காட்ட இது தான் சமயம். நன்றாக போர் செய் என்று வாழ்த்தி உற்சாகமூட்டி, அனுப்பினான். மகோதரனும் அப்படியே என்று சொல்லி கட்டளையை ஏற்றுக் கொண்டவனாக நெருப்பில் தானே விழும் விட்டில் பூச்சியைப் போல எதிரி சைன்யத்தில் தானே பாய்ந்து நுழைந்தான். வானர சைன்யத்தை ஒரு கலக்கு கலக்கி பெரும் சேதம் ஏற்படச் செய்தான். தானே வீரன். ராவணனின் உற்சாகமூட்டும் செயலால் மேலும் ஆக்ரோஷமாக போர் செய்தான். வானரங்களும் பெரிய பெரிய கற்களைக் கொண்டு தாக்கின. எதிரி கூட்டத்தில் உள்ளேயே நுழைந்து பெருமளவு நாசம் விளைவித்தன. மகோதரன் மகா கோபத்துடன், தன் பொன் மயமான சரங்களை மழையாக பொழிந்தான். வானரங்கள் கை, கால் துடை என்று முறிந்து விழச் செய்தான். வானரங்கள் திக்குக்கு ஒன்றாக பறந்து ஓடின. சில சுக்ரீவனை சரணடைந்தன. கண்டபடி அடிபட்டுக் கொண்டு வந்து நின்ற வானரங்களைப் பார்த்து, சுக்ரீவன் தானே சத்ருவான மகோதரனை எதிர் கொள்ள வந்தான். மகோதரனைக் கொல்ல, பெரும் மலையளவு இருந்த பெரிய கல்லை எடுத்து அவன் மேல் வீசினான். திடுமென தன் மேல் வந்து விழும் பெரிய கல்லைக் கண்டு மகோதரன், தன் பதட்டத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல், கை அம்பினால் அதை சுக்கு நூறாகச் செய்தான். ராக்ஷஸனால் பிளந்து தள்ளப் பட்ட அந்த பெரிய பாறாங்கல், நூறாக, ஆயிரம் துகளாக பூமி பூராவும் பரவியது. தான் வீசிய கல் பயனற்றுப் போய் தூளானதைக் கண்ட சுக்ரீவன், ஒரு சால மரத்தை வேரோடு பிடுங்கி அடித்தான். சூரனான ராக்ஷஸன் அதையும் தன் அம்புகளால் சிதறச் செய்தான். அதே சமயம் கீழே விழுந்து கிடந்த ஒரு பரிகத்தை எடுத்து அவன் முகத்தின் முன் காட்டியபடி சுக்ரீவன் அதன் நுனியால் குதிரைகளை அடித்து விழச் செய்தான். குதிரைகள் கீழே விழவும், மகோதரன் கீழே இறங்கி க3தை4யை கையில் எடுத்துக் கொண்டான். க3தை4யுடன் மகோதரனும், பரிக4த்தை கையில் வைத்தபடி சுக்ரீவனும், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பசுவும் எருதுவும் போல இருவரும் மேகமும், மின்னலும் கூடியது போல தேக காந்தியுடன் தொடர்ந்து போரிட்டனர். க3தை4யும் உடைந்து விழும்படி தன் பரிகத்தால் சுக்ரீவன் அடித்தான். பரிகமும் பூமியில் உடைந்து விழுந்தது. பூமியில் கிடந்த ஒரு இரும்பு உலக்கையை கண்ட சுக்ரீவன் அதை பாய்ந்து சென்று கையில் எடுத்துக் கொண்டு மகோதரனை தாக்கினான். மகோதரனும் உடனே புதிய க3தை4யை கையில் எடுத்துக் கொண்டான். சற்று நேரம் சென்ற பின், இருவர் கை ஆயுதங்களும் முறிந்து விழ, முஷ்டிகளால் யுத்தம் தொடங்கியது. இருவரும் சமமான தேஜஸ், பலம் உடையவர்கள். ஒருவருக்கொருவர் சளைக்காமல் தொடர்ந்து போரிட்டனர். அடிக்கு அடி, என்று கைகளால் அடித்துக் கொண்டனர். பூமியில் விழுந்து புரண்டு எழுந்தனர். பரஸ்பரம் திரும்பவும் நையப் புடைத்து புஜங்களால் ஒரு வரையொருவர் தள்ளி கீழே விழச் செய்தனர். உடல் களைத்து போகவும், கைக்கு எட்டிய வாளை எடுத்துச் கொண்டனர். மகோதரன் கவசத்துடன் வேகமாக வாளை வீசி வரவும், சுக்ரீவனும் தயங்காமல் தன் கை வாளை வீசியபடி எதிரில் சென்றான். இருவரும் ரோஷம் மிக்கவர்கள். சமமான பலம் உடையவர்கள். தொடர்ந்து சண்டையை அதே வேகத்தில் நடத்திக் கொண்டு இருந்தனர். யுத்தம் செய்வதே அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது. சஸ்திரங்களை அறிந்தவர்கள், ஜயத்தை விரும்பியே இருவரும் போர் செய்தனர். வீரத்தை மதிப்பவனான மகோதரன் வாளை வீசினான். சுக்ரீவன் பதிலுக்கு தன் வாளை வீசிய பொழுது, குண்டலம், தலையை பாதுகாக்கும் சிரத்ராணம்,(ஹெல்மெட்) இவற்றுடன் தலை துண்டித்து விழுந்தது. தலையறுந்த ராக்ஷஸன் கீழே விழுந்தாலும், சுக்ரீவன் அப்படியே விடாமல், மற்ற வானரங்களைக் கொண்டு முழுவதுமாக உயிர் இழக்கச் செய்தான். தசக்ரீவன் வாய் விட்டே அழுதுவிட்டான். ராகவன் தரப்பினர் மகிழ்ந்தனர். ராக்ஷஸர்கள் அனைவரின் முகங்களும் வாடிச் சுருங்கின. எல்லோருமே பயந்து நடுங்கியபடி, ரண களத்தை விட்டு ஓடினர். பெரிய மலையின் சிகரம் போன்ற மகோதரனை வதம் செய்து விட்டு சூரிய குமாரனான சுக்ரீவன் சாக்ஷாத் சூரியனே போல தன் தேஜஸாலும், காந்தியாலும் பிரகாசமாக விளங்கினான். விஜயனாக வெளி வந்த வானர ராஜனைப் பார்த்து தேவர்கள், யக்ஷ, கின்னரர்கள், பூமியில் இருந்த மற்றவர்களும் வாழ்த்தி பாராட்ட, சந்தோஷமாக இருந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மகோத3ர வத4ம் என்ற தொன்னூற்று எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 99 (506) மகா பார்ஸ்வ வத|| (மகா பார்ஸ்வனின் வதம்)
மகோதரன் மாண்டதும் மகா பார்ஸ்வன் சேனைத் தலைமையை ஏற்றுக் கொண்டான். சுக்ரீவனை உறுத்துப் பார்த்து, கோபத்தால் சிவந்த கண்களுடன் யுத்த பூமியில் இறங்கினான். அங்கதனுடைய சேனையை கணிசமாக குறைத்தான். வானரங்களின் சரீரத்தில் மேல் பாகங்கள் காற்றின் வேகத்தில் மரத்திலிருந்து பழங்கள் விழுவது போல தொப் தொப்பென்று விழலாயின. ஒரு சிலரது தோள்களில் அம்புகளை விட்டு புஜங்கள் துண்டித்து விழச் செய்தான். பக்கங்கள் அறுபட்டு சில வானரங்கள் தவித்தன. அவனுடைய பாண வர்ஷத்தை தாங்க மாட்டாமல் வானரங்கள் இங்கும் அங்குமாக ஓடின. வருத்தத்துடன் முகத்தை தொங்கப் போட்ட படி வானரங்கள் திகிலுடன் நின்ற தன் படை பலத்தைப் பார்த்து அங்கதன் செய்வதறியாது திகைத்தான். மகாபார்ஸ்வன் என்ற ராக்ஷஸ படைத் தலைவனிடம் அடி வாங்கி வீரர்கள் சோர்ந்து போய் இருந்தனர். உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, அங்கதன் பர்வ காலத்தில் சமுத்திரத்தில் தோன்றும் வேகத்துக்கு இணையாக இரும்பாலான பரிகம் என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான். சூரியனின் பிரகாசத்துக்கு இணையாக இருந்த அந்த பரிகம் என்ற ஆயுதத்தை மகா பார்ஸ்வன் பேரில் பிரயோகித்தான். அந்த அடி தாங்காமல் மகாபார்ஸ்வன் மூர்ச்சையானான். சாரதி, ரதம் இவற்றை விட்டு பூமியில் நினைவின்றி விழுந்தான். அந்த சமயம், கரடி ராஜனான ஜாம்பவான், தன் அணி வகுத்து நின்றிருந்த படையின் மத்தியில் இருந்து வந்து, கையிலிருந்த கல்லை அவன் பேரில் வீச, குதிரைகள் மேல் கல் பட்டு கீழே விழுந்தன. ரதமும் உடைந்தது. முஹுர்த்த நேரத்தில் நினைவு திரும்பி மகா பார்ஸ்வன் எழுந்த பொழுது, இதைக் கண்டு, அங்கதனின் மார்பை குறி வைத்து பல பாணங்களால் அடித்தான். ஜாம்பவானும், க3வாக்ஷனும் கூட இந்த தாக்குதலில் காயம் அடைந்தனர். இதைக் கண்டு ஆத்திரம் மேலிட அங்கதன் பரிகத்தை எடுத்துக் கொண்டான். இரண்டு கைகளாலும் பிடித்து சுழற்றி சற்று தூரத்தில் நின்றிருந்த ராக்ஷஸன் மேல் படும் படி வீசி எறிந்தான். இந்த அடியில் அவனை வதம் செய்து விட வேண்டும் என்று நினைப்பது போல இருந்தது. வேகமாக வந்த பரிகம், ராக்ஷஸனின் வில்லையும், சரங்களையும், தலையை காக்கும் பாதுகாப்பு கவசத்தையும் சேர்த்து அடித்து நொறுக்கியது. உடனே வாலி புத்திரனான அங்கதன், தன் கைத்தலத்தால் அடிக்க ஆரம்பித்தான். குண்டலம் அணிந்திருந்த காதுகளில் கைத்தலத்தால் ஓங்கி ஒரு அறை விட, மகா பார்ஸ்வன் ஆத்திரம் பன் மடங்காகியது. ஒரு கையால் மிகப் பெரிய பரஸ்வதம் என்ற ஆயுதத்தை வேகமாக எடுத்து, எண்ணெயில் மூழ்க வைத்து த்ருடமாக மலை போல அசையாத தன்மையுடன் செய்யப் பட்டிருந்த ஆயுதத்தை கோபத்துடன் வாலி புத்திரன் மேல் பிரயோகித்தான். இடது புஜத்தின் தசைப் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டன. அங்கதன் ரோஷத்துடன் அந்த பரஸ்வதம் என்ற ஆயுதத்தை தன் உடலில் பதிந்திருந்ததை பிடுங்கி எறிந்தான். வஜ்ரம் போன்ற தன் முஷ்டியை மடக்கிக் கொண்டு எதிரியைத் தாக்கத் தயாரானான். தன் தந்தைக்கு சமமான பராக்ரமம் உடைய அங்கதன், முஷ்டியில் தன் பலம் அனைத்தையும் சேர்த்து மகா பார்ஸ்வனின் மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டான். ஸ்தனங்களின் மத்தியில் வேகமாக வந்து விழுந்த முஷ்டியின் அடி, அந்த ராக்ஷஸனின் ஹ்ருதயத்தையே பிளந்து விட்டது போல ராக்ஷஸன் அந்த க்ஷணமே பூமியில் விழுந்தான். தலைவனான மகா பார்ஸ்வன் அடிபட்டு விழுந்ததும், அந்த படை வீரர்களின் உற்சாகம் வடிந்து போய், பயம் ஆட்கொண்டது. இதைக் கண்டு ராவணன் கோபம் மேலும் அதிகமாகியது. வானரங்கள் மகிழ்ச்சியுடன் சிம்ம கர்ஜனை செய்தன. அவர்கள் மனம் நிறைந்து பல முறை செய்த இந்த கர்ஜனைகளைக் கேட்டு ராவணன், லங்கையை இந்த சத்தத்தாலேயே கிடு கிடுக்க வைப்பது போல வானரங்கள் செய்த அட்டகாசத்தை கேட்டு பொறுக்க மாட்டாதவனாக தீவிரமான தாக்குதலுக்கு தயாரானான். மேலும் தீவிரமாக போர் செய்யவே நினைத்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மகா பார்ஸ்வ வத4ம் என்ற தொன்னூற்று ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 100 (507) ராம ராவணாஸ்த்ர பரம்பரா(ராம, ராவணர்களின் தொடர்ந்த அஸ்திரங்களின் தாக்குதல்)
ராக்ஷஸர்களான மகோதர, மகாபார்ஸ்வன் என்ற இரட்டையர்கள், யுத்த களத்தில் மாண்டதை அடுத்து, முன்பே விரூபாக்ஷனும் வதம் செய்யப் பட்ட செய்தியையும் அறிந்து ராவணன் தன் நிலை கொள்ளாமல் தவித்தான். தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கோபத்தால் நிறைந்தது. தன் சாரதியைப் பார்த்துச் சொன்னான். என் நகரத்தை முற்றுகையிட்டுள்ள ராம லக்ஷ்மணர்களை அழிப்பேன். அப்பொழுது தான் என் மந்திரிகளைக் கொன்ற எதிரிகளுக்கு புத்தி புகட்டியவனாக ஆவேன். இந்த ராம வ்ருக்ஷத்தை சாய்ப்பேன். (ராமன் எனும் இந்த மரத்தை). இந்த மரத்தில் தான் சீதா என்ற புஷ்பம் பலனைத் தரும். இந்த மரத்தின் பெரிய கிளைகள், ஜாம்பவான், சுக்ரீவன், குமுதன், நலன், மைந்தன், த்விவிதன், அங்கதன், கந்த மாதனன், ஹனுமான், சுஷேணன், மற்றும் பல வானர படைத் தலைவர்கள். கிளம்புவோம் என்று சொல்லி பத்து திசைகளும் அதிர, ரதத்தை ஓட்டிக்கொண்டு, ராகவன் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான். நதிகளிலும், காடுகளிலும், கானனங்களிலும் இந்த சப்தம் எதிரொலித்தது. வராகங்களும், மிருகங்களும், யானைகளும், நடமாடும் பூமி அசைந்து ஆடியது. பயங்கரமான இருட்டு பரவியது. அஸ்திர பிரயோகம் செய்ததில், வானரங்கள் தகிக்கப் பட்டு கருகி விழுந்தன. பயங்கரமான அந்த அஸ்திரம் ஏராளமான புழுதியை கிளப்பி விட்டது. ஓடும் வானரங்களும் அதை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தன. ப்ரும்மா தானே ஸ்ருஷ்டி செய்த அஸ்திரம் அது. அந்த சேனையின் படை வீரர்கள் பெருமளவு ராவணனின் அஸ்திரங்களின் தாக்குதலால் செயலிழந்து நூற்றுக் கணக்காக கீழே விழுவதைக் கண்டு ராகவன் யோசித்தான். (ஹரி) வானர வீரர்களை மூலைக்கொன்றாக ஓடச் செய்து விட்டு ராக்ஷஸ சார்தூலனான ராவணன், ராமன் இருக்கும் இடம் வந்தான். தோல்வியே அறியாதவன், நிமிர்ந்து நின்று கொண்டிருப்பதைக் கண்டான். விஷ்ணுவுடன், இந்திரன் நிற்பது போல, லக்ஷ்மணன் உடன் நிற்க, ராமன் நிற்பதைக் கண்டான். ஆகாயத்தைத் தொடுவது போல, நீண்ட வில்லையும், அதை ஏந்திய கைகளையும் கண்டான். பத்மபத்ரம் போன்ற விசாலமான கண்களையும், தீர்க்கமான கைகளையும், எதிரிகளை அடக்கும் சக்தி வாய்ந்த புஜங்களையும் கண்டான். இதன் பின் பலசாலியான ராகவன் (லக்ஷ்மணன்) சௌமித்ரியுடன் கூட, அங்கு வந்த ராவணனைக் கண்டார். வானரங்கள் நொறுங்கிப்போய் விழுவதையும், தன்னை எதிர்த்து போர் செய்ய வரும் ராவணனையும் பார்த்து, தன் வில்லை மைய பாகத்தில் கை வைத்து எடுத்து நிமிர்த்தினார். வில்லின் நாணை நிமிண்டி ஓசை எழும்பச் செய்தார். அந்த ஓசையே நாதமாக, நாலா திக்குகளிலும் பரவி, மேதினியை பிளப்பது போல ஒலித்து, எதிரொலித்தது. ராவணனின் பாணங்கள் செய்த அத்புத லீலையை அப்பொழுது தான் கண்ட ராக்ஷஸ, வானர வீரர்கள் ராமனின் வில் செய்த அத்புதமான நாதத்தையும் கேட்டனர். ராம, லக்ஷ்மணர்களின் இலக்கு, அம்புகளின் வழியில் நேருக்கு நேர் வந்த (ஸரபதம்-சரங்கள் செல்லும் மார்கம் ) ராவணன் சந்திர சூரியர்களின் மார்கத்தில் ராகு எதிர்ப்படுவதைப் போல இருந்தான். அவனுடன் தான் முதலில் யுத்தம் செய்ய விரும்பியவர்களாக லக்ஷ்மணன் கூர்மையான சரங்களை தன் வில்லில் பூட்டி விடலானான். அவை அக்னி சிகா(தீயின் நாக்கு) போல சீறிட்டு பாய்ந்தன. இவைகளை லக்ஷ்மணன் தன் வில்லில் தொடுத்து பிரயோகித்த மாத்திரத்தில், ராவணன் ஆகாயத்தில் தன் பாணங்களால் தடுத்து நிறுத்தி விட்டான். ஒரு பாணத்தை, ஒரு பாணத்தால், பத்து பாணங்களைத் தன் பத்து பாணங்களால் தடுத்து செயலிழக்கச் செய்து விட்டான். லக்ஷ்மணனை தன் கை லாகவத்தால் பிரமிக்கச் செய்து விட்டு, அவனை அலட்சியம் செய்தவனாக நேராக ராமனிடம் சென்றான். மலை போல அசையாது நின்ற ராமனை நெருங்கினான். கோபத்தால் சிவந்த கண்களுடன், ராகவன் பேரில் பாணங்களை மழையாக வர்ஷித்தான். ராவணனின் வில்லிலிருந்து புறப்பட்ட சரங்கள் தாரையாக, மழை போல பொழிவதைக் கண்டு, ராமர் வேகமாக தன் ஆயுதத்தை எடுத்துக் கொண்டார். க்ஷண நேரத்தில், தயாரானார். தன்னுடைய ப4ல்ல என்ற ஆயுதத்தால், ராவணனின் சர மழையை தடுத்து நிறுத்தினார். கோபத்துடன் எய்யப்பட்ட, ஆலகால விஷம் போலும், தீக்கனல் போலும், வந்து விழும் அம்புகளை ராமர் செயலிழக்கச் செய்தார். ராகவன் ராவணனை வேகமாக அடிக்க, ராவணன் ராகவனுக்கு அதே போல பதிலடி கொடுக்க, ஒருவருக்கொருவர் பல விதமான தீக்ஷ்ணமான பாணங்களால் சமமாக யுத்தம் செய்தனர். இரு தரப்பிலும் பாணங்கள் மழையாக பொழிந்தன. வலதும் இடமுமாக மாறி மாறி கைகள் விசித்திரமான வேலைப்பாடு செய்வது போல மண்டலங்களாக சரங்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. இருவருமே தோல்வியே அறியாதவர்கள். இருவரும் வேகமாக பாணங்களை எய்யக் கூடியவர்கள். இருவருமே களைப்பு, சலிப்பின்றி பாணங்களை எய்து கொண்டிருந்தனர். திடுமென எதிருக்கு எதிர் நின்று போர் செய்ய ஆரம்பித்தவுடன், உலகமே பயத்தால் ஸ்தம்பித்து நின்று நடப்பதை காணலாயிற்று.
ரௌத்ரமாக நின்ற இருவரும், கையில் வில்லுடன், யமனோ, அந்தகனோ என்று நினைக்கும் வண்ணம் போர் வெறியுடன் நின்றனர். புது புது விதமான பாணங்கள் ஆகாயத்தில் நிறைந்தன. சூரியன் இல்லாத பொழுது மேகத்தில் மின்னல் கோடு கிழிப்பது போல, பளீர், பளீரென இந்த பாணங்கள் தோன்றி மறைந்தன. ஆகாயம் ஜன்னல்களாக பிரிக்கப் பட்டது போல, பள பளத்த அம்புகள், ஜாலங்களாக பின்னலிட்டு கோலமிட்டன. வேகம் நிறைந்து, மிகவும் தீக்ஷ்ணமான நுனிகளுடன், க்ருத்ர பத்ரம் -செயற்கை இலைகள் என்று பெயருடைய, நுனியில் அமைந்த வேலைப்பாடுகள் விசிறிகளாக காற்றை வீச, சரங்களால் ஆகாயம் மூடப் பெற்ற சமயம், அந்தகாரம் மாயையாக சூழ்ந்தது. சூரியன் அஸ்தமனமான பின்பும், பெரும் மேக கூட்டங்கள் தங்கள் வழியில் அலைந்து கொண்டு இருப்பதைப் போல இருவரும் ஸ்திரமாக நின்றனர். ஒருவரையொருவர் வதம் செய்யும் நோக்கத்துடன் போர் செய்தனர். இருவரும் சமமான பலம், ஆற்றல் இவைகளுடன், விருத்திரனும், வாஸவனும் யுத்தம் செய்தது போல இருந்தது. நினைத்து பார்க்க முடியாத, செயலில் காட்ட முடியாத அத்புதமான வீர விளையாட்டு. இருவரும் உயர் குடியில் பிறந்தவர்கள். இருவரும் சஸ்திர ஞானம் முழுமையாக உடையவர்கள். அஸ்திரங்கள் என்று பார்க்கும் பொழுது, இருவருமே குறிப்பிடத் தக்க தேர்ச்சி உடையவர்கள். யுத்த களத்தில் இருவரும் இறங்கி இருக்கின்றனர். அவர்கள் இருவரும் எந்த வழியில் செல்கின்றனரோ, அந்த வழியில் சரங்களே அலைகளாக, அலைகள் காற்றினால் தள்ளப்பட்டு சமுத்திரத்தில் பாய்வது போல தெரிந்தது. தேர்ந்த கை லாகவத்துடன் பாணங்களை எய்து தன் வீரத்தை காட்டக்கூடிய ராவணன், லோக ராவணன் (உலகை இம்சிப்பவன்) நாராச மாலாம் என்ற அம்புகளைக் கொத்தாக ராமனின் நெற்றியில் அடித்தான். தன் தலையால் அதைத் தாங்கிய ராமர் சற்றும் பாதிக்கப்படவில்லை. ரௌத்ரனான ராவணன் வில்லிலிருந்து எய்யப் பட்ட அந்த பயங்கரமான அஸ்திரத்தை நீலோத்பல தளம் போல மென்மையாக ஏற்றுக் கொண்டார். இதன் பின் மந்திரங்களை உச்சரித்து, ரௌத்ரம் என்ற அஸ்திரத்தை தேர்ந்தெடுத்து, சரங்களை மறுபடியும் சேர்த்து வைத்துக் கொண்டு, அவைகளை கோபத்துடன் தன் வில்லில் பூட்டி எய்தார். அவை மகாமேகம் போன்ற கவசத்தில் பட்டுத் தெறித்து விழுந்தன. வதம் செய்ய முடியாத ராவணனுக்கு இந்த அம்புகளால் சிறிதளவும் வருத்தமோ, வலியோ தோன்றவில்லை. திரும்பவும் ரதத்தில் ஏறி வந்த ராக்ஷஸாதிபனை, தன்னை அடித்தது போலவே நெற்றியை குறி பார்த்து அடித்தார். அந்த பாணங்கள், தங்கள் பாண ரூபத்தை விட்டு, ஐந்து தலை பாம்புகளாக உருமாறி, பெருமூச்சு விட்டுக் கொண்டு சீறிப் பாய்ந்து ராவணனைத் தாக்கிய பின் பூமிக்குள் நுழைந்து கொண்டன. ராவணன் ஆசுரம் என்ற மிக பயங்கரமான அஸ்திரத்தை, அதன் மந்திரத்தைச் சொல்லி எய்யத் தயார் ஆனான். சரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனிச் சிறப்பு பெற்றவை. சில சிம்மம் போன்ற முகமுடையவை. புலி, சில கழுகு, காகம் போன்ற முகம் உடையவை, கருடன், கழுகு போன்ற முக அமைப்பு கொண்டவை சில. கலை மான் போன்ற முக அமைப்பு கொண்டவை, வாயை பிளந்து கொண்டு நிற்பது போல பெரும் வாயை உடையவை. கோரமானவை, ஐந்து முகங்கள் கொண்டவை, நாக்கை நீட்டி இருப்பது போன்ற உருவங்கள், இப்படி கூர்மையான பலவற்றை ராவணன் தன் வில்லிலிருந்து பிரயோகம் செய்தான். ஒரு சில சரங்கள் கர முகம் உடையவை. சில வராக முகம் உடையவை, நாய், சேவல் இவை போன்ற முகம் உடையவையும், மகரம் போன்ற முகமும், சில விஷ ஜந்துக்களின் உருவத்தை ஒத்தவைகளாகவும் காணப்பட்டன. இவை தவிர, பல பாணங்களை மாயாவியான ராவணன் எய்தான். இவை ராமனை நோக்கிச் சீறிப் பாய்ந்தபடி வந்தன. இந்த ஆசுரம் என்ற அஸ்திரம், மந்திர பலத்தால், ராமரை நாலு புறமும் சூழ்ந்து கொண்டன. இதிலிருந்து விடுபட ராமர், உற்சாகமாக அக்னிக்கு சமமான பாவகம் என்ற அஸ்திரத்தை விட்டார். அக்னி போல அக்னி தீப்த முகம், சூரிய முகம் என்ற அஸ்திரங்கள், அர்த்த சந்திர, சந்திர முகம், தூம கேதுமுகம், க்ரஹ, நக்ஷத்திர முகங்கள், மஹோல்கா முகம் என்ற அஸ்திரங்கள் வித்யுத் ஜிஹ்வோ என்றவை, இது போல பல சரங்களை பிரயோகம் செய்தார். ராவணாஸ்திரங்களுடன் மோதி, ராமரின் சரங்களும் ஆகாயத்தில் மறைந்தன. பல ஆயிரம் துகள்களாக சிதறின. ராவணனின் அஸ்திரங்கள் அனைத்தையும் ராம பாணங்கள் செயலிழக்கச் செய்வதைக் கண்டு வானரங்கள் களிப்பெய்தின. ராகவனைச் சுற்றி நின்று கொண்டு சுக்ரீவன் முதலான வானர வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. ராவணன் கை வண்ணத்தால் வெளிப்பட்ட சக்தி வாய்ந்த அஸ்திரங்களையும் முறியடித்த ராமர், அந்த பெரும் யுத்த பூமியில் மகிழ்ச்சியுடன் நின்றதைப் பார்த்து வானரங்கள் உரத்த குரலில் ஆரவாரம் செய்து, தங்கள் களிப்பை வெளிப்படுத்தின.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராம ராவணாஸ்திர பரம்பரா என்ற நூறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 101 (508) லக்ஷ்மண சக்தி ஷேப| (சக்தி ஆயுதத்தால் லக்ஷ்மணன் அடிபட்டு விழுதல்)
தன் அஸ்திரங்கள் அனைத்தையும் அதற்கு இணையான அஸ்திரங்களைக் கொண்டு ராமன் முறியடித்து விட்டதைக் கண்டு ராவணனின் ஆத்திரம் இரு மடங்காகியது. மேலும் சிந்தித்து புதிய ஒரூ அஸ்திரத்தை எடுத்தான். மயன் உண்டாக்கியது. பெரும் தேஜஸுடன் கூடிய மகா அஸ்திரம், ரௌத்ரம் எனப்படும் அதை ராமன் பேரில் எய்யத் தயாரானான். அதனுடன் சூலங்களும் தானாக வெளிப்பட்டன. க3தை4கள், முஸலங்கள், கார்முகம் எனும் வில், வஜ்ரம் போன்ற ஒளி மிகுந்த பல ஆயுதங்கள், முத்கரங்கள் கூட பாசங்கள், ஒளி மிகுந்த அசனிகள், வந்து விழுந்தன. யுக முடிவில் காற்று வீசி, சூறாவளியாக வெளிப்படுவது போல அடுத்தடுத்து அஸ்திரங்கள் வெளி வந்தன. ஏராளமாக வெளிப்பட்ட இந்த அஸ்திரங்களை முறியடிக்க ராமர் காந்தர்வ அஸ்திரத்தை தேர்ந்தெடுத்து பிரயோகம் செய்தார். ராவணனின் அஸ்திரத்தின் மூலம் வெளிப்பட்ட அனைத்து ஆயுதங்களும் செயலிழந்தன. ராவணனின் கோபம் கட்டுக்கடங்காது போயிற்று. தாமிரம் போல கண் சிவக்க, சௌரம் என்ற அஸ்திரத்தை விட்டான். அதிலிருந்து பள பளக்கும் சக்கரங்கள், வெளி வந்தன. பிரகாசமாக கண்களை கூச வைக்கும் சூரியனுடைய ஒளிக் கற்றைகள் போன்று, ராவணனின் வில்லில் இருந்து மகா வேகமாக வெளி வந்தன. இங்கும் அங்குமாக விழும் இந்த அயுதங்களால் ஆகாயமே ஒளி மயமாக ஆயிற்று. திசைகள் வெளிச்சம் போடப் பெற்று, பிரகாசமாகத் தெரிய, சந்திர, சூரிய கிரஹங்கள், ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் உதித்தது போல ஆயிற்று. அந்த சக்கரங்களை தன் பாணங்களால் ராமர் துளைத்தார். பல விசித்ரமான ஆயுதங்களை ராவணன் தன் வில்லில் பூட்டி வெளிப்பட செய்தும், பயனில்லாமல் போயிற்று. ராம பாணத்தின் முன் அவை நிற்க இயலாமல் மறைந்தன. இதுவும் பயனற்று போகவும், ராவணன் கோபத்துடன் பத்து பாணங்களை ஏக காலத்தில் எய்தான். ராவணனின் ப்ரும்மாண்டமான வில்லிலிருந்து வந்து தாக்கிய பாணங்களைக் கண்டு ராமர் கலங்கவில்லை. அசையாமல் நின்றார். உடல் முழுவதும் துளைத்து எடுக்கும்படி பல பாணங்களை ராமரும் கோபத்துடன் ராவணன் மேல் எய்தார். பல சரங்கள் அடுத்தடுத்து வந்து விழுந்தன. இதனிடையில் லக்ஷ்மணன் ஏழு சிறந்த அம்புகளைக் கொண்டு ராவணனின் த்வஜம், மனித தலை போன்று அமைக்கப் பெற்றிருந்ததை கிழே தள்ளினான். பளபளக்கும் குண்டலங்களோடு இருந்த சாரதியின் தலையைத் துண்டித்து கீழே விழச் செய்தான். யானையின் தும்பிக்கை போன்று நீண்டிருந்த வில்லையும் ஒரு பாணத்தால் அடித்து கீழே விழச் செய்தான். ஐந்து கூர்மையான சரங்கள் இதைச் செய்தன. விபீஷணன் இதனிடையில் தன் க3தை4யால் குதிரைகளை அடித்து வீழ்த்தினான். கார் மேகம் போல துடியாக நின்ற குதிரைகள் மடிந்து விழுந்தன. குதிரைகள் இல்லாத ரதத்திலிருந்து இறங்கிய ராவணன், தன் சகோதரன் மேல் தன் ஆத்திரத்தைக் காட்டலானான். விபீஷணனின் பேரில் சக்தி வாய்ந்த சக்தி ஆயுதத்தை எய்தான். அது விபீஷணனைத் தாக்கும் முன்பே, லக்ஷ்மணன் இடையிலேயே தாக்கி முறியச் செய்து விட்டான். மூன்று பாணங்களால் அது சிதறிப் போகவும், வானரங்கள் குதூகலத்துடன் கோஷமிட்டன. காஞ்சனத்தால் மாலை அணிவிக்கப் பட்டிருந்த அந்த சக்தி ஆயுதம் மூன்றாக சிதறியது. தீப்பொறிகள் பறந்தன. ஆகாயத்தில் மின் மினிப் பூச்சிகள் வட்டமிடுவது போல காட்சியளித்தன. இதன் பின் மிகவும் கௌரவமாக எண்ணப்பட்டு வந்த காலனுக்கும் எதிர்க்க முடியாத சக்தி வாய்ந்த, தன் தேஜஸால் பிரகாசமாக இருந்த சக்தி என்ற பெரிய ஆயுதத்தை ராவணன் எடுத்தான். ராவணன் அதை வேகத்துடன் வீசவும், மகா கோரமாக இந்திரனின் அசனி ஆயுதத்திற்கு சமமான ஒளியுடன் சீறிக் கொண்டு புறப்பட்டது. விபீஷணனை அது தாக்குமுன், லக்ஷ்மணன் பாய்ந்து வந்து அதைத் தடுக்கும் விதமாக தன் வில்லில் பாணங்களைப் பூட்டி தயார் செய்து கொண்டு ராவணனைத் தடுத்தான். சக்தி ஆயுதம் விபீஷணனின் மேல் பட்டு விபரீதமாக எதுவும் ஆகுமுன் அதைத் தடுக்க எண்ணி, தானே ராவணன் முன் நின்று பதிலடி கொடுக்கத் தீர்மானித்தான். தன் முயற்சியை புரிந்து கொண்டு தடுத்து விட்ட லக்ஷ்மணனைப் பார்த்து ராவணன் கோபத்துடன் கத்தினான். விபீஷணன் தன் இலக்கிலிருந்து தப்பி விட்டது வேறு கோபத்தை அதிகரித்தது. பல ஸ்லாகின்| (வீரத்தை மதிப்பவனே) போற்றப்பட வேண்டிய வீரனே| என் சகோதரனை காப்பாற்றி விட்டாய். அதே ராக்ஷஸ சக்தி உன் உயிரை பறிக்கப் போகிறது பார். இது உன் ஹ்ருதயத்தை பிளந்து, ரத்தம் பெருகச் செய்யும். என் கை பரிகத்தில் இருந்து வெளிப்பட்டு உன் உயிரை எடுத்துக் கொண்டு தான் போகப் போகிறது. இப்படிச் சொல்லிக் கொண்டே, எட்டு மணிகளைக் கொண்ட சக்தியை, மயனின் மாயையால் செய்யப் பட்ட சத்ருக்களை வதைக்கக் கூடிய சக்தி ஆயுதத்தை லக்ஷ்மணனைக் குறி வைத்து, ஒளி வீசும் அந்த பாணத்தை எய்து விட்டு, ராவணன் அட்டகாசமாக சிரித்தான். இந்திரனின் அசனி போலவே, பயங்கரமான வேகத்துடனும், ஒலியுடனும் வந்த அந்த பாணம் லக்ஷ்மணனின் மேல் வந்து விழுந்தது. லக்ஷ்மணனை இந்த சக்தி ஆயுதம் தாக்காமல் இருக்க, ராமன் மனதினுள், லக்ஷ்மணனுக்கு ஸ்வஸ்தி அஸ்து- மங்களம் உண்டாகட்டும், சக்தியின் சக்தி பயனற்றுப் போகட்டும் என்று வேண்டியபடி நிற்கையிலேயே, ராவணனனுடைய கோபத்துடன் வந்த சக்தி ஆயுதம் ஆல கால விஷம் போல லக்ஷ்மணனை மூழ்கடித்தது. மகா வேகத்துடன் மார்பில் வந்து விழுந்த ஆயுதம், நாகங்களின் அரசனின் நீண்ட நாக்குகள் போல தீக்ஷ்ணமாக, ராவணன் வெகு தூரம் வரை செல்லும்படி இழுத்து அடித்த வேகத்தால், அதிக கனமாக மேலே விழுந்ததால், லக்ஷ்மணன் மூமூர்ச்சையடைந்து பூமியில் விழுந்தான். அருகில் நின்ற லக்ஷ்மணனின் இந்த நிலையைக் கண்டு ராமர், தன் சகோதரனிடம் கொண்ட பாசத்தால் முகம் வாடி, மிகவும் வருந்தினார். கண்களில் நீர் நிரம்ப, முஹுர்த்த நேரம் என்ன செய்வது என்று யோசித்து, யுக முடிவில் அக்னி வளருவது போல தானும் தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். துக்கம் கொண்டாட இது சமயமல்ல என்று நினைத்து ராவணனின் வதமே குறிக் கோளாக பெரும் யுத்தம் செய்தார். இடையிடையில் சக்தியால் அடிபட்டுக் கிடக்கும் லக்ஷ்மணனையும் பார்த்துக் கொண்டே, யுத்தத்திலும் கவனமாக இருந்தார். லக்ஷ்மணன் ரத்தப் பெருக்கில் நனைந்து கிடந்தான். மலைப் பாம்புகளுடன் கிடப்பது போல அசையாது கிடந்தான். ராவணனின் சக்தி மகா பலம் வாய்ந்தது. வானர வீரர்கள் என்ன முயற்சி செய்தும் லக்ஷ்மணனை அதன் தாக்குதலிலிருந்து விடுவிக்க முடியவில்லை. வேகமான செயல் திறனுடைய ராக்ஷஸன் லாகவமாக எய்திய பாணங்கள் கத்தையாக வந்து விழ, சௌமித்ரியை துளைத்துக் கொண்டு அவை பூமிக்குள் மறைந்தன. அவற்றை ராமன் தன் கைகளால் பற்றி இழுத்து. செயலிழக்கச் செய்தார். லக்ஷ்மணன் உடல் பூராவும் மர்மத்தை நாசம் செய்யும் விதமாக பாணங்கள் குத்திட்டு நிற்க, ராமன் அவைகளை கைகளாலேயே பிடுங்கி எறிந்து, லக்ஷ்மணனை அணைத்தபடி, தன் மேல் அதன் பாதிப்பு ஏற்fபட்டதையும் பொருட்படுத்தாமல், சுக்ரீவன் ஹனுமான் இவர்களை அழைத்து கட்டளையிட்டார். லக்ஷ்மணனை சூழ்ந்து காவலாக நில்லுங்கள். வானரோத்தமர்களே| என் பராக்ரமத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது. நான் வெகு காலமாக விரும்பி எதிர் பார்த்திருந்த தருணம். இந்த பாபாத்மாவான ராவணனை வதம் செய்தே தீர வேண்டும். சக்ரவாக பக்ஷி மழைக்காக காத்திருந்து, வெய்யில் கால முடிவில் கார் மேகத்தைக் கண்டு மகிழ்வது போல இப்பொழுது சமயம் கை கூடி வந்திருக்கிறது. இந்த முஹுர்த்தத்தில் உங்களுக்கு சபதமிட்டுச் சொல்கிறேன். சத்யமாக இன்று உலகம் ராவணன் இன்றியோ (அராவணன்) ராமன் இன்றியோ (அராமம்) ஆகப் போகிறது. வானரங்களே| ராஜ்யம் நஷ்டமானதும், வனத்தில் வாசம் செய்ததும், தண்டகா வனத்தில் வேதனையுடன் நடந்து திரிந்து அலைந்ததும், வைதேஹியைத் தொலைத்ததும், ராக்ஷஸர்களுடன் மோதுவதும் என்று பல கஷ்டங்களை அனுபவித்தோம். யாவும் முடியும் நேரம் வந்து விட்டது. ராவணனை இன்று போரில் வதம் செய்து இந்த கஷ்டங்களுக்கு பரிகாரம் தேடுவேன். என்ன காரணம் கொண்டு வானர சைன்யத்தை இங்கு கொண்டு வந்து சேர்த்தேனோ, வாலியைக் கொன்று, சுக்ரீவனை ராஜ்யத்தில் அமர்த்தி, என்ன காரணத்திற்காக சமுத்திரத்தைக் கடந்து வந்தோமோ, சமுத்திரத்தில் சேதுவைக் கட்டினோமோ, அந்த ராவணன் இன்று போர் முனையில் என் கண்களுக்கு இரையாக எதிரில் நிற்கிறான். என் கண்ணில் பட்டபின் இனி இவன் உயிருடன் திரும்ப முடியாது. திருஷ்டி விஷம் உடையவன் கண்ணில் பட்டால் மீள முடியாதது போல. ராவணன் இப்பொழுது என் கண்களில் படும் தூரத்தில் இருக்கிறான். அமைதியாக, சௌக்யமாக நின்று இந்த பயங்கரமான யுத்தத்தைப் பாருங்கள். பர்வதங்களின் மேல் நானும் ராவணனும் யுத்தம் செய்வதை காணும் தூரத்தில் வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். இந்த யுத்தத்தில் ராமனுடைய ராமத்வம் என்ன என்பதை தெரிந்து கொள்வீர்கள். மூன்று உலகும், கந்தர்வர்களும், தேவர்களும், ரிஷி கணங்களும், சாரணர்களும் இன்று என் செயல் திறனை காணட்டும். இன்று என் செயல் திறத்தைக் கண்டு வியக்கட்டும். இன்று நான் காட்டப் போகும் என் வீர தீரத்தை பூமி உள்ளவரை உலகில், சராசரங்களில், தேவ லோகத்தில் க3தை4யாக பேசப் போகிறார்கள். எங்கு யுத்தம் என்று நடந்தாலும் அந்த இடத்தில் கூடி நின்று, இன்று நான் செய்யப் போகும் யுத்தத்தைப் பற்றித் தான் பேசுவார்கள் என்று சொல்லியபடி, தன் கவனம் முழுவதும் செலுத்தி கூர்மையான அம்புகளால் ராவணனை தாக்க ஆரம்பித்தார். ராவணனும் சளைக்காமல் ஒளி வீசும், கூர்மையான நாராசமான முஸலங்களால் மேகம் மழை பொழிவது போல ராமன் பேரில் வர்ஷித்தான். ராம, ராவணர்கள் எய்த பாணங்கள் ஒன்றையொன்று, தாக்கி முறியடித்து செய்த சப்தங்கள் மொத்தமாக கேட்டது. முறிந்தும், உடைந்தும், இரைந்தும் கிடந்த சரங்கள், ராம, ராவண பாணங்கள் அந்தரிக்ஷத்தில் இருந்து ஒளி வீசியபடி பூமியில் வந்து விழுந்தன. வில்லின் ஓசையும், பலமாக கேட்டது. அத்புதமான காட்சி. உலகம் பூராவும் நடுங்கியபடி பார்த்துக் கொண்டிருந்தனர். சர ஜாலம் மழையாக ராமனது ஒளி மிகுந்த வில்லிலிருந்து வரவும், சமாளிக்க முடியாமல் ராவணன் பின் வாங்கினான். காற்று வேகமாக வீசி கனமற்ற மேகத்தைத் தள்ளிச் செல்வது போல பயம் அவனை விரட்டியது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் லக்ஷ்மண சக்தி க்ஷேபம் என்ற நூற்று ஓராவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 102 (509) லக்ஷ்மண சஞ்ஜீவனம் (லக்ஷ்மணனை மூர்ச்சை தெளிவித்தல்)
ஒரு பக்கம் ராவணனுக்கு சமமாக பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தாலும், பலவானான ராவணனால் அடிக்கப் பட்டு நினைவிழந்து, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் லக்ஷ்மணனே ராமரது மனதில் வியாபித்து நின்றான். பாணங்களை எய்து கொண்டிருக்கும் பொழுதே இடையில் சுஷேணனைக் கூப்பிட்டு இதோ ராவணனின் வீர்யத்தால் அடிபட்டு, லக்ஷ்மணன் பூமியில் விழுந்து கிடக்கிறான். வலியால் துடித்து பாம்பு போல நெளிகிறான். கண் கொண்டு பார்க்க முடியவில்லை. என் மனதில் சோகத்தை நிறைக்கிறது. என் உயிருக்கும் மேலான உற்ற சகோதரன் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான். சுத்த வீரன் இவன். இந்த நிலையில் இவனைப் பார்த்துக் கொண்டு நான் எப்படி யுத்தத்தில் கவனம் செலுத்துவேன். என் சகோதரன், சமரம் யுத்தம் என்றால் கௌரவமாக நினைப்பவன். சுப லக்ஷணங்கள் உடைய லக்ஷ்மணன். இவன் மரணம் அடைந்தால் உயிர் வாழ எனக்கு என்ன இருக்கிறது? சுகங்கள் தான் எனக்கு எதற்கு? அதனால் எனக்கு என்ன பயன்? என் வீர்யம் தலை குனிகிறது, கையிலிருந்து வில் நழுவுகிறது. கண்களை நீர் மறைக்கிறது. என் அம்புகள் கூட இவனுக்காக வருந்துகின்றன. சரீரம் நடுங்குகிறது. ஸ்வப்னத்தில் விமானத்தில் செல்பவன் நடுங்குவது போல. எனக்கு கவலை அதிகமாகிறது. ராவணன் என் சகோதரனை அடித்து வீழ்த்தியிருக்கிறான். மர்மஸ்தானங்களில் பலமாக அடித்து நகர முடியாமல் செய்திருக்கிறான்.
பிரியமான சகோதரன், அவன் உயிரே வெளியில் நடமாடுகிறது என்று சொல்லும் அளவு ஒட்டுதலுடன் உடன் வரும் சகோதரன். அவனின் கவலைக் கிடமான உடல் நிலை ராகவனின் மனதை வாட்டியது. ஒரு நிலையில் பொறுக்க மாட்டாதவனாக வாய் விட்டே புலம்பி விட்டார். யுத்தம் செய்து நான் என்ன அடையப் போகிறேன். உயிர் தான் எதற்கு? சீதையால் தான் எனக்கு என்ன லாபம்? என் பிரிய சகோதரன் புழுதி படிய ரண பூமியில் விழுந்து கிடப்பதை பார்த்த பின்னும் நான் ராஜ்யத்தை விரும்புவேனா? ராஜ்யத்தால் எனக்கு என்ன ஆக வேண்டும்?? உயிர் வாழத்தான் என்ன பிடிப்பு இருக்கிறது. இந்த யுத்தம் செய்து தான் என்ன கிடைக்கப் போகிறது. இந்த ரண பூமியில் அடிபட்டு தூங்குவது போல கிடக்கிறானே, என் தம்பி உடன் பிறந்தவன். ஊருக்கு ஊர் மனைவிகள் கிடைப்பார்கள், ஊருக்கு ஊர் பந்துக்கள் வந்து சேருவார்கள். எந்த தேசத்தில் லக்ஷ்மணன் போல உடன் பிறந்த சகோதரன் கிடைப்பான். அது போல் ஒரு இடம் நான் அறிந்ததில்லையே. லக்ஷ்மணன் இல்லாமல் ராஜ்யத்தால் தான் எனக்கு என்ன பயன்? புத்ர வாத்ஸல்யம் மிக்க சுமித்ரா தாயிடம் திரும்பிப் போய் நான் என்ன சொல்வேன்.? சுமித்ரா என்னை கடுமையாக பார்த்து விட்டு, எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தால் கூட, என்னால் தாங்க முடியாது. தாயார் கௌசல்யையிடம் தான் என்ன பதில் சொல்வேன். கைகேயியிடம் தான் எப்படிப் போய் நிற்பேன்? எந்த முகத்தைக் கொண்டு பரதனையும், சத்ருக்னனையும் ஏறிட்டுப் பார்ப்பேன். அவனுடன் சேர்ந்து வனம் சென்றாய், அவன் இல்லாமல் திரும்பி வந்தாயா? என்று கோபமாக கேட்டால். இங்கேயே என் மரணம் சம்பவித்தால் நன்றாக இருக்கும். பந்துக்கள் எதிரில் போய் நின்று அவர்களின் நிந்தைக்கு ஆளாக வேண்டாம். முந்தைய ஜன்மங்களில் நான் என்ன தீவினை செய்தேனோ, அதன் பலன் தான் அனுபவிக்கிறேன். அது தான் தார்மிகனான என் சகோதரனை அடித்து வீழ்த்தியிருக்கிறது. என் கண்ணெதிரில் இவன் இப்படி கிடக்கிறானே, ஹா, லக்ஷ்மணா | என் உடன் பிறப்பே, மனித ஸ்ரேஷ்டன் என்றால் நீ தான். சூரன் நீ. உத்தமமான சுத்த வீரன் நீ தான். பிரபோ4, என்னை விட்டுத் தனியாக பரலோகம் செல்லத் துணிந்தாயா, புலம்புகிறேனே, என்னிடம் பேச மாட்டாயா? எழுந்திருப்பா. என்னிடம் பேசு. ஏன் படுத்துக் கிடக்கிறாய். தீனமாக அழுகிறேனே. என்னை கண்களைத் திறந்து பார். நீ தான் எப்பொழுதும் என்னை சமாதானப்படுத்துவாய். உற்சாகமாக பேசி என்னை தைரியம் ஊட்டுவாய். சோகத்தில் மூழ்கி வனம் வனமாக, மலைகளிலும், காடுகளிலும் அலைந்து நான் வாடிய பொழுது ஆறுதல் சொல்லித் தேற்றுவாய். நீயே விழுந்து கிடப்பாயோ என்று பலவிதமாக புலம்பும் ராமனை, சுஷேணன் ஆறுதல் செய்து மேலும் சொன்னான்.
மகாபா3ஹோ, இவன் இறக்கவில்லை. லக்ஷ்மணன் லக்ஷ்மி சம்பன்னன், லக்ஷ்மி வர்த4னன். லக்ஷ்மி கடாக்ஷம் நிரம்பியவன். இவன் முகத்தைப் பார். விகாரமாகவில்லை. முகத்தில் தேஜஸ் குறையவில்லை. பிரஸன்னமாக இருக்கிறான் பார். இவன் முகமே தேஜஸுடன் ஒளியுடன் இருப்பதைப் பார். பத்மம் போல கைகள், கைத்தலங்கள் சிவந்து காணப்படுகின்றன. கண்கள் ஒளியுடன் பிரஸன்னமாக இருக்கிறது. உயிர் போன உடலில் இந்த ஒளியும், பிரஸன்னமான நிலையும் இருக்காது. தலைவனே, தீர்காயுஸ் உடைய மனிதர்களுக்குத் தான் முகம் இப்படி இருக்கும். இவன் லக்ஷ்மி வர்தனான லக்ஷ்fமணன். இவன் ப்ரேதமாக ஆக மாட்டான். வருந்தாதே, வீரனே. இவன் உயிருடன் தான் இருக்கிறான். சற்று பொறு. பூமியில் விழுந்து உடல் நடுங்க தூங்குவது போல கிடக்கிறான். தெளிந்து எழுந்தவுடன் பேசுவான். மூச்சு விடுகிறான், பார். இழையாக நடுங்கிக் கொண்டு, திரும்பத் திரும்ப உள் மூச்சாக வாங்குகிறான். இவ்வாறு சொல் வளம் மிக்க சுஷேணன் ராமனை சமாதானம் செய்து விட்டு, அருகில் நின்றிருந்த ஹனுமானைப் பார்த்து துரிதப்படுத்தினான். சௌம்ய, சீக்கிரம் போ. ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வா. முன்னால் ஜாம்பவான் சொல்லியபடியே தென் சிகரத்தில் விளைந்திருக்கும் ஔஷதி மலையைக் கொண்டு வா. விசல்ய கரணீ என்று ஒன்று, சுபமானது. ஆயுதங்கள் துளைத்து காயப்படுத்தியதை குணமாக்கும். சவர்ண கரணீம், இதையும் கொண்டு வா. இது உடலுக்கு சீரான வர்ணத்தை அளிக்கும். கூடவே சஞ்சீவனியையும் கொண்டு வா. சந்தான கரணீம், இது உடைந்த பாகங்களை இணைத்து வைக்கும். இதையும் கொண்டு வா. சீக்கிரம் கொண்டு வா. இந்த லக்ஷ்மணனை உயிர்ப்பிக்க வேண்டியது நம் கடமை.
இதைக் கேட்டு உடனே ஹனுமான் பறந்தான். ஔஷதி பர்வதத்தை அடைந்தான். எந்த ஔஷதி என்பது தெளிவாக புரியவில்லை. இந்த மலை சிகரத்தையே எடுத்துச் செல்வேன். என்று உறுதியுடன், இந்த மலைச் சிகரத்தில் தான் ஔஷதிகள் விளைந்திருந்தன என்று நினைவு படுத்திக் கொண்டு, கூர்ந்து பார்த்தான்., இது தான் என்று ஊகிக்கிறேன். சுஷேணன் சொன்னதும், இந்த விதமாகத் தான் இருந்தது என்று தீர்மானித்தபடி, விசல்ய கரணி எது என்று தெரியாமல் விட்டுச் சென்றால், கால தாமதம் ஆகும், மலைச் சிகரத்தையே எடுத்துச் செல்வதே நல்லது என்று மலையை மூன்று முறை பிரதக்ஷிண நமஸ்காரம் செய்த பின், அதன் சிகரத்தை பெயர்த்து தூக்கிக் கொண்டு கிளம்பினான். மலைச் சாரலில் நன்கு வளர்ந்திருந்த மரங்கள் பூத்து குலுங்கின. அதை எடுத்து கைகளில் அதன் கனம் தாக்காமல் வசதியாக வைத்துக் கொண்டான். வேகமாக திரும்பி வந்து சுஷேணனிடம் தெரிவித்தான். பெரியவரே எது எந்த பச்சிலை என்பது சரியாகத் தெரியவில்லை. அதனால் மலையையே பெயர்த்துக் கொண்டு வந்து விட்டேன் என்றான். அவனை பாராட்டி சமயோசிதமாக செய்ததை புகழ்ந்து பேசி, சுஷேணன் தனக்கு வேண்டிய பச்சிலைகளைத் தேடி பறித்துக் கொண்டான். ஹனுமானின் செயலை ஆச்சர்யத்துடன் வானர, ராக்ஷஸர்கள் எல்லோருமே பாராட்டினர். தேவர்களால் கூட செய்ய முடியாத அரிய செயல் இது என்று போற்றினர். அந்த ஔஷதிகளை முறைப்படி தயாரித்து லக்ஷ்மணனுக்கு சுஷேணன் புகட்டினான். சரங்கள் குத்தி கிழிபட்டு கிடந்தவன், அந்த ஔஷதியின் வாசனை நாசி வழியே உள்ளே செல்லச் செல்ல காயங்கள் ஆறி எந்த புண்ணும் இன்றி, சீக்கிரமே எழுந்து நின்று விட்டான்.
தரையிலிருந்து எழுந்து நின்றவனைக் கண்டு வானரங்களும் மற்றவர்களும் சாது, சாது , நன்று, நன்று என்று சுஷேணனை பாராட்டினர். அவரை போற்றி கௌரவித்தனர். ஏஹி, ஏஹி, வா, வா என்று ராமர் லக்ஷ்மணனை அழைத்து கண்களில் நீர் மல்க அணைத்துக் கொண்டார். உடலோடு அணைத்து அவனை வாழ்த்தி நல்ல காலம் பிழைத்து வந்தாய். உன்னை உயிருடன் பார்க்கிறேன். மரண வாயில் வரை சென்று மீண்டு விட்டாய். லக்ஷ்மணா நீ இல்லாமல் எனக்கு சீதையாலும் ஒரு பயனுமில்லை. நான் உயிர் வாழ்ந்து இருப்பதிலும் பெருமையில்லை. நீ இன்றி நான் வெற்றி பெற்று தான் என்ன பயன்? இவ்வாறு சொல்லும் ராமனை, மிகவும் வருத்தத்துடன், உடைந்து போன குரலில் லக்ஷ்மணன் பதில் சொன்னான். சத்ய பராக்ரமா, முன்னால் பிரதிக்ஞை செய்து விட்டு, இப்பொழுது பாமரன் போல நீங்களும் புலம்பலாமா? உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் பிரதிக்ஞை செய்வது என்பது விளையாட்டல்ல. அனகா4, மாசற்றவனே, பிரதிக்ஞையை நிறைவேற்றுவது தான் மகான்களின் லக்ஷணம். நிராசை என்பது கூடவே கூடாது. என் பொருட்டு வருந்துவதும், நம்பிக்கை இழந்ததும் போதும். ராவண வதத்தை செய்து, உன் பிரதிக்ஞையைக் காப்பாற்று. உன் பாணம் செல்லும் வழியில் வந்தவன் கூட உயிருடன் திரும்பக் கூடாது. தீக்ஷ்ணமான பற்களைக் கடிக்கும் சிம்மத்தின் எதிரில் வந்த யானை, பெரிதாக இருந்தாலும் உயிருடன் திரும்புவதில்லை. என்னைக் கேட்டால், சீக்கிரமாக அந்த துராத்மாவை வதம் செய்வது தான் சரி என்று சொல்வேன். இன்று சூரியன் அஸ்தமனம் ஆகு முன் இன்றைய பொழுது முடியுமுன், செயலை முடிப்போம். இந்த யுத்தத்தில் ராவணனை வதம் செய்ய நீ தீர்மானித்தபடி, உன் பிரதிக்ஞையை நிறைவேற்ற, இன்றே, இப்பொழுதே முடி. ராஜ குமாரனான நீ கொண்ட அபிலாஷையை நிறைவேற்றிக் கொள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் லக்ஷ்மண சஞ்ஜீவனம் என்ற நூற்று இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)s
அத்தியாயம் 103 (510) ஐந்த்ர கேது பாதனம் (இந்திர கேது எனும் கொடியை விழச் செய்தல்)
லக்ஷ்மணனின் பேச்சைக் கேட்டு தெளிவு பெற்ற ராமர், தன் வில்லை கையில் எடுத்து அம்புகளை பூட்டி தயாராக ஆனார். எதிரிகளின் பராக்ரமத்தையும் நன்கு உணர்ந்து பாராட்டும் திறன் வாய்ந்தவர், ஆதலால் ராவணனுக்கு ஏற்ற கோரமான சரங்களை தன் வில்லிலிருந்து வெளிப்படச் செய்தார். ராக்ஷஸாதிபனோ, மற்றொரு ரதத்தில் ஏறி, காகுத்ஸனை நோக்கி ஓடி வந்தான். ஸ்வர்பானு எனும் ராகு சூரியனை நோக்கி ஓடி வருவது போல வந்தான். ரதத்தில் இருந்த தசக்ரீவன், வஜ்ரத்துக்கு சமமான தன் பாணங்களால், பயங்கரமாக ராமனை அடிக்கலானான். மழை மேகம் தன் தாரையால் பூமியில் வர்ஷிப்பது போல வர்ஷித்தான். கொழுந்து விட்டெரியும் நெருப்புக் கனல் போன்ற அலங்காரமாக தங்கத்தால் வேலைப்பாடு செய்யப் பெற்றிருந்த சரங்கள் இடைவிடாது பொழிந்த வண்ணம் இருந்தன. தன்னம்பிக்கையுடன் நிலைத்து நின்ற ராவணனை ராமர் எதிர் தாக்குதல் செய்து வீழ்த்த ஆரம்பித்தார். பூமியில் நின்று ராமரும், ரதத்தில் இருந்து ராவணனும் போரை கடுமையாக செய்யலானார்கள். இது சமமான யுத்தமல்ல என்று தேவ, கந்தர்வ, தானவர்கள் அபிப்பிராயம் சொன்னார்கள். இதைக் கேட்டு தேவேந்திரன், அவர்கள் சொல்லில் உண்மை இருப்பதையும் உணர்ந்து மாதலி என்ற தன் சாரதியை அழைத்தான். மாதலி | என் ரதத்தை எடுத்துக் கொண்டு சீக்கிரம் போ. ரகோத்தமனான ராமனுக்கு உதவி செய். மாதலியே இது மிகப் பெரிய உபகாரமாகும். தேவர்களுக்கு நன்மை தரக் கூடிய இந்த செயலை நாம் செய்தே ஆக வேண்டும். மாதலி என்ற அந்த தேவ சாரதியும், அப்படியே ஆகட்டும் என்று தலை வணங்கி உத்தரவை ஏற்றுக் கொண்டு பூமியை நோக்கிச் சென்றான். சாரத்யம்- ரதம் ஓட்டும் வேலையை, ராமனுக்காக செய்ய கிளம்பினான். உயர்ந்த அந்த ரதத்தை குதிரைகள் பூட்டி, அலங்காரமாக பொன்னால் சித்ர வேலைப்பாடுகள் செய்யப் பெற்றதும், பல நூற்றுக் கணக்கான மணிகள் பூட்டப் பட்டதுமான ரதத்தை, இளம் சூரியன் போன்ற பிரகாசமும், வைமூடுரியங்களால் இழைக்கப் பெற்றதுமான ரதத்தை, பொன் மயமான ஆசனங்களுடன், வெண் மேகம் போன்று விளங்கிய ரதத்தை, தங்கத்தாலான ஜாலங்கள் (ஜன்னல், கம்பிகள்) சாளரங்கள், வெள்ளியிலான தண்டம் அதன் உச்சியில் த்வஜம் என ஸ்ரீமானான, தேவ ராஜனின் உயர்ந்த ரதம் தயாராகியது. இந்திரனின் உத்தரவுப்படி, மாதலி அந்த ரதத்தை எடுத்துக் கொண்டு தேவலோகத்திலிருந்து இறங்கி, காகுத்ஸனை நோக்கி பயணம் செய்யலானான். காகுத்ஸனை நெருங்கி விட்டான். கையில் ரதக் கயிறுகளுடன் ரதத்தில் நின்றபடியே ராமனைப் பார்த்து வேண்டினான். சஹஸ்ராக்ஷனின் சாரதியான மாதலி, கை கூப்பி வணங்கியபடி, வேண்டுகோளை வினயத்துடன் விண்ணப்பித்தான். காகுத்ஸா, சஹஸ்ராக்ஷன் இந்த ரதத்தை அனுப்பியிருக்கிறான். உனக்கு வெற்றி உண்டாக வாழ்த்தி அனுப்பியிருக்கிறான். மகா சத்வ, நிறைந்த ஆற்றலுடையவனே, உனக்காக இது தரப்பட்டுள்ளது. ஸ்ரீமானே, நீயே சத்ருக்களை அழிக்கக் கூடியவனே. ஆனாலும் இது இந்திரனுடைய மிகப் பெரிய வில். கவசமும் அக்னி போன்றது. சரங்களும் ஆதித்யனுக்கு இணையானது. இதன் சக்தியும் விமலமானது, கூர்மையானது. இதில் ஏறிக் கொள். இந்த ரதத்தில் ஏறி ராக்ஷஸனை வதம் செய்வாய். ராஜ குமாரனே, என்னை சாரதியாக ஏற்றுக் கொள். தானவர்களை மகேந்திரன் எதிர்த்து போர் செய்ய செல்லும் பொழுது நான் உடன் சென்று பழக்கப் பட்டவன். என்று சொல்லியபடி வணங்கி, ரதத்தை சுற்றிக் கொண்டு வந்து நிறுத்தினான். உலகத்தையே தன் லக்ஷ்மீகரமான தேஜஸால் பிரகாசிக்க செய்யக் கூடியவரான ராமர் மாதலியின் வார்த்தையை மதித்து, ரதத்தில் ஏறினார். இதன் பின் நடந்த யுத்தம் அத்புதமாக இருந்தது. இருவருக்கும் இடையில் சமமாக, உடலை புல்லரிக்கச் செய்வதாக இருந்தது. ராமருக்கும், ராவணனுக்கும் இடையில், யுத்தம் நடந்தது. ராக்ஷஸனான ராவணனுக்கும், ஆற்றல் மிகுந்த ராமனுக்கும் இடையில் நடந்த போர். காந்தர்வாஸ்திரத்தை அதே போல காந்தர்வம் கொண்டும், தெய்வீகமான அஸ்திரத்தை தெய்வீகம் கொண்டும் ராக்ஷஸ ராஜனின் ஒவ்வொரு அஸ்திரத்தையும் ராகவன் முறியடித்தான். பயங்கரமான அஸ்திரங்களை ஆத்திரத்துடன் ராவண ராக்ஷஸனும், இடைவிடாது பிரயோகிக்கலானான். மகா விஷம் பொருந்திய பாம்புகளாக மாறி, ராவணன் கை வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் ராமனைத் தாக்கின. தங்கள் வாயிலிருந்து நெருப்பை உமிழும், நெருப்புத் துண்டங்களாக அவை வெளி வந்தன. வாயை பிளந்து கொண்டு, பயங்கரமாக ராமனை விழுங்குவது போல ராமனை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தன. வாசுகி போன்ற கூர்மையான நாக்கும், விஷம் நிறைந்ததுமான சரங்கள், திசைகளை நிரப்பிய வண்ணம், பரவி நின்றன. போரின் நடுவில், திடுமென வந்து விழுந்த பாம்புகளின் கூட்டத்தைப் பார்த்து ராகவன், காருடாஸ்திரம் என்ற உயரிய அஸ்திரத்தை பிரயோகித்தார். சர்ப்ப சத்ருக்களாக அந்த அஸ்திரங்கள் சிறகுகளால் அலங்கரிக்கப் பட்டு, பொன் போன்ற ஒளி மிகுந்த அந்த அஸ்திரங்கள், பாம்புகளை விரட்டிச் சென்றன. சர்ப்ப ரூபத்தில் மிக வேகமாக செல்லும் ராவண சரங்களை, இவை துரத்திச் சென்று அழித்தன. ஒவ்வொரு சரமும், சுபர்ணன் எனும் கருட ராஜனின் ரூபத்தில் துரத்தின. ராமருடைய பாணங்கள் கூர்மையானவை. தேவையான சமயத்தில், தேவையான ரூபம் எடுக்க வல்லவை. தன் அஸ்திரம் பயனற்று திரும்பியதும், ராவணன் மேலும் அதிக ஆத்திரம் அடைந்தான். செயற்கரியதை செய்யும் ராமர் பேரில் ஏராளமான பாணங்களை பிரயோகித்ததோடு, மாதலியையும் தாக்கலானான். ரதத்தின் நடுவில் இருந்த கம்பத்தை (கேதுவை) தாக்கி விழச் செய்தான். சரங்களை பின்னியது போல தொடர்ந்து வர்ஷித்து இந்திரனுடைய குதிரைகளை வசமிழக்கச் செய்தான். இந்த அரிய செயலை வியந்து பார்த்துக் கொண்டிருந்த தேவ, கந்தர்வர்கள் கவலை கொண்டனர்.. சாரணர்களும், தானவர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், ராமர், ராவணனின் தாக்குதல்களால் கஷ்டப் படுவதைக் கண்டு, தாங்களும் வருந்தினர். விபீஷணனும், வானர வீரர்களும் வேதனையடைந்தனர். ராமசந்திரனை, ராவண ராகு பிடித்து வருத்துவதைக் கண்டு செயலிழந்து நின்றனர். பிரஜாபதியின் நக்ஷத்திரமான ரோஹிணியை, சந்திரனுக்கு பிரியமான நக்ஷத்திரத்தை, ஆக்ரமித்த புதன் கடத்திச் சென்றது போல பிரஜைகளுக்கு மிகவும் அசுபமானதும், கஷ்டம் தருவதுமான செயலை செய்தது போல இருந்தது. புகை சூழ்ந்த அலைகளால் நிரம்பி அடித்துச் செல்லும் சமுத்திரம் போல, திடுமென அலைகள் நெருப்பாக மாறியது போல மேல் எழும்பி, திவாகரனைத் தொடுவது போல ஆக்ரோஷமாக நின்றன. சூரியனின் தேஜஸ் குறைந்து, மந்தமான ஒளியுடன் காணப்பட்டது. உடல் தனியாக கபந்தனாக எங்கும் காணப்பட்டன. தூம கேது அடித்து சூழ்ந்ததால், கோஸல ராஜாக்களின் சாதகமான நக்ஷத்திரம், இந்திரன், அக்னி, முதலான தேவதைகளின் தலைவனாக வெளிப்படையாகத் தெரிபவன், ஆகாயத்தில் விசாக நக்ஷத்திரத்தை அங்காரகன் ஆக்ரமித்தது போல, கிளம்பினான். இருபது புஜங்களும், பத்து தலைகளுமாக ராவணன், கையில் பிடித்த அம்புகளும், வில்லும் ஆயுதங்களூமாக எதிரில் நின்றான். மைனாக மலையே எதிரில் வந்து நிற்பது போல ராவணன் காட்சியளித்தான். தசக்ரீவ ராக்ஷஸனால் மேலும் மேலும் துன்புறுத்தப் பட்ட ராமர், தன் வில்லை எடுத்து அம்புகளை பூட்டக் கூட அவகாசம் இன்றி தவித்தார். சற்று யோசித்து, புருவங்களை நெரித்து, கோபத்தால் சிவந்த கண்களால் உறுத்து, கண்களாலேயே எரித்து விடுவது போல நோக்கினார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஐந்த்ர கேது பாதனம் என்ற நூற்று மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 104 (511) ராவண சூல ப4ங்க3|| (ராவணனின் சூலத்தை உடைத்தல்)
கோபத்தால் ஜ்வலித்துக் கொண்டிருந்த ராமனுடைய முகத்தைப் பார்த்து, உலகில் எல்லா ஜீவன்களும் நடுங்கின. பூமியும் ஆட்டம் கண்டது. சிங்கமும், சார்தூலமும் நடமாடும் காடுகளைக் கொண்ட மலைகளும், அசலம், நகராதவை என்று பெயர் பெற்ற மலைகளும் ஆட்டம் கண்டன. நதிகளின் தலைவனான சமுத்திரம் வற்றியது போல ஆயிற்று. கடுமையான குரலை உடைய பறவைகள் மட்டுமே ஆகாயத்தில் சஞ்சரிக்கலாயின. ஆகாயத்தில் மேகமும் கடுமையாக காணப்பட்டது. துர்நிமித்தங்கள் கண் முன்னால் நர்த்தனமாடின. ராமர் மிகக் கடுமையாக ஆத்திரம் அடைந்து இருப்பதையும், துர்நிமித்தங்களையும் கண்டு, உலகமே பயந்து நடுங்கியது. ராவணன் மனதிலும் பயம் தோன்றியது. விமானங்களில் ஏறி, தேவர்களும், கந்தர்வர்களும், மகோரர்களும், ரிஷிகளும் தானவ தைத்யர்களும் கருத்மான் என்று ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பறவை இனத்தாரும், உலகையே மாற்றி அமைக்கக் கூடிய அந்த யுத்தத்தை கண் கொட்டாமல் என்ன நடக்குமோ என்ற திகிலோடு காண வந்து சேர்ந்தனர். இரண்டு சூரர்கள் பல விதமான பயங்கரமான ஆயுதங்களுடன் பல பரீட்சை செய்வதை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். வந்து நின்ற அசுரர்கள், தசக்ரீவனை ஜய ஜய என்று வாழ்த்தி நின்றனர். தேவர்கள் ராமனைப் பார்த்து நீ தான் ஜயிப்பாய், என்று திரும்பத் திரும்ப வாழ்த்தினர். ராவணன், இதனிடையில் மகா கோபத்துடன் ராகவனை அடிக்க தன் சூலத்தை கையில் எடுத்துக் கொண்டான். மகா பயங்கரமான ஆயுதம் அது. வஜ்ரம் போன்றது. பெரும் ஓசையுடன் மேலே விழுந்து வீழ்த்தக் கூடியது. எதிரிகளை மீதியில்லாமல் நாசம் செய்ய வல்லது. காணவே பயங்கரமான தோற்றம் உடையது. குகைகளுடன் கூடிய மலை சிகரம் போன்று பெரியது. புகை பறக்க தீக்ஷ்ணமான நுனியை உடையது. யுகாந்தாக்னி போல கனல் பறக்கும் தன்மை உடையது. காலனே கூட நடுங்கும் வகையில் பயங்கரமான சக்தியுடையது. மிக ரௌத்ரமானது. எதிர்த்து நிற்க யாராலும் இயலாத தன்மை உடையது. எல்லா உலகையும் நடுங்கச் செய்யும் பயங்கரமான ஆயுதம். கிழித்து, உடைத்து நாசம் செய்யக் கூடிய அந்த ஆயுதத்தை. கோபத்தின் உச்சியில் இருந்த ராவணன் கையில் எடுத்துக் கொண்டான். சூலத்தின் மத்தியில் பிடித்து தூக்கினான். பல ராக்ஷஸ வீரர்கள் அவனுக்கு ஆதரவாக நாலா புறமும் சூழ்ந்து நின்றனர். பெருத்த சரீரத்துடன், துள்ளி குதித்து நின்று, பெரும் குரலில் ஓசையெழ ஜய கோஷம் செய்தான். கண்கள் ரோஷத்தால் சிவந்து, பயங்கரமான அந்த சிம்ம கர்ஜனையை கேட்டு அவன் தரப்பு வீரர்கள் மகிழ்ந்தனர். பூமியையும் அந்தரிக்ஷத்தையும், திசைகளையும் அதற்கு அப்பாலும், அவன் எழுப்பிய கோஷத்தில் நடுங்கச் செய்தான். மகா பயங்கரமான அந்த கர்ஜனையைக் கேட்டு, ஏற்கனவே பெருத்த குரலுடையவன் மேலும் உரக்கக் கத்தியதில், உலகமே பயந்து நடுங்கியது. சமுத்திரம் கலங்கியது. சூலத்தை ஏந்தியவனாக, அட்டகாசமாக ராமனைப் பார்த்து, கடுமையாக பேசலானான். ராமா | மிகுந்த ரோஷத்துடன் இந்த சூலத்தை நான் கையில் எடுத்திருக்கிறேன். உன் உதவிக்கு வந்திருக்கிற உன் சகோதரனையும் சேர்த்து, உன் உயிரைப் பறிக்க இது காத்திருக்கிறது.
(உன் ரோஷத்தைப் போலவே இந்த சூலமும், மூவுலகையும் நாசம் செய்யக் கூடியது. எங்கும் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை. அதனால் இது வரை சமமான எதிரி இல்லாமல் இதை பிரயோகிக்க வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. இப்பொழுது சகோதரனுடன் சேர்த்து உன்னை அழிக்க இதை பிரயோகிக்கப் போகிறேன் என்று அர்த்தம் தொனிப்பதாக உரையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.)
யுத்த பூமியில் இறந்த என் ராக்ஷஸ படை வீரர்களுக்கு, உன்னைக் கொன்று, இப்பொழுதே உசிதமான மரியாதையை செய்தவனாக ஆவேன். நில். இப்பொழுதே உன்னைக் கொல்கிறேன். ராகவா | இந்த சூலத்தால் உன்னை அழிப்பேன் என்று சொல்லியபடி சூலத்தை வீசினான். ஆகாயத்தில் அது வரும் பொழுது எட்டு மணிகள் ஒலிக்க, பெரும் சப்தத்துடன் மின்னலின் பிரகாசம் போல, ராவணன் கையிலிருந்து விடுபட்டு வந்த சூலம் பிரகாசமாக இருந்தது. கண்ணால் காணவே கோரமாக இருந்த அந்த சூலத்தைப் பார்த்து ராகவன், தன் வில்லைத் தூக்கி நிறுத்தி, கூர்மையான பல அம்புகளை அதை தடுக்கும் விதமாக விட்டான். யுக முடிவில் அக்னியை தடுக்க, இந்திரன் ஜலத்தை மழையாக வர்ஷிப்பது போல, சரங்களை வர்ஷித்தான். ராமனின் வில்லிலிருந்து வெளிப்பட்ட அம்புகளை, அந்த சூலம் தகிக்கச் செய்தது. நெருப்பு விட்டில் பூச்சிகளை நாசம் செய்வது போல. அந்தரிக்ஷத்திலேயே தன் பாணங்கள் பஸ்மமாகப் போனதைக் கண்டு ராமர் கவலைப் பட்டார். ஆத்திரத்துடன், வாஸவன், மாதலி மூலம் கொடுத்தனுப்பியிருந்த சக்தியை எடுத்துக் கொண்டு, ராகவன், வேகமாக வீசினார். அதிலும் கட்டியிருந்த மணிகள் அசைந்து ஒலியெழுப்பின. யுக முடிவில் மின்மினி பூச்சிகள் போல, நெருப்புக் கனல் தெறிக்க, ஆகாயத்தை நிரப்பிய சக்தி ஆயுதம், ராக்ஷஸ ராஜன் பிரயோகித்த சூலத்தின் மேல் விழுந்தது. சக்தியினால் தாக்கப் பட்ட சூலம் நூறாக உடைந்து சிதறி பூமியில் இறைந்தது. இதன் பின் பொருத்தமான பாணங்களைக் கொண்டு ராமர் குதிரைகளை அடித்து வீழ்த்தினார், வேகமாக ஓடக் கூடிய அந்த குதிரைகள், ராமனின் தீக்ஷ்ணமான, கூர்மையான பாணங்கள் பட்டு விழுந்தன. அதே சமயத்தில் ராவணன் மார்பிலும் சரங்களை இடை விடாது எய்தார். நெற்றியில் மூன்று பத்ரிகளை எய்யவும், மலர்ந்த அசோக புஷ்பம் போல, (பெருகிய ரத்தத்தினால்), சிவந்த சரீரம் உடையவனாக ஆகி விட்டான். ராம பாணம் தைத்து, ரத்தம் பெருக தான் நிற்பதை நினைத்து கூட பார்க்க முடியாதவனாக ராவணன், மிகவும் வேதனை அடைந்தான். வெட்கம் பெரும் கோபமாக மாறியது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண சூல ப4ங்கோ3 என்ற நூற்று நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 105 (512) தசக்ரீவ விசூர்ணனம் (தசக்ரீவ ராவணனை அலைக்கழித்தல்)
கோபம் கொண்ட காகுத்ஸனின் பாணங்களுக்கு ஈ.டு கொடுக்க முடியாமல் தவித்த ராவணன், மேலும் பல மடங்கு ஆத்திரமே அடைந்தான். கண்கள் நெருப்புத் துண்டங்களாக சிவந்தன. தன் வில்லை எடுத்துக் கொண்டு மேலும் கடுமையாக போர் புரிய ஆயத்தமானான். ஆயிரக் கணக்கான பாணங்களை, மேகம் மழை பொழிவது போல பொழியலானான். குளத்தில் நீர் நிரம்புவது போல அந்த ராவண பாணங்கள், ராகவனைச் சுற்றி நிரம்பின. இதனால் சற்றும் கலங்காமல் மகா மலை போல ராகவன் அசையாது நின்றார். தன்னை நோக்கி வந்த பாணங்களைத் தடுத்து நிறுத்தியபடி, தன் கிரணங்களை திரும்ப இழுத்துக் கொள்ளும் சூரியனை போல நின்றார். வேகமாக பாணங்களை பிரயோகிக்கத் தெரிந்த ராவணன், ராகவனின் மார்பை குறி வைத்து அடிக்கலானான். பல இடங்களிலும் அம்புகள் தைத்து ரத்தம் வெளிப்பட, மலர்ந்து நிற்கும் அசோக மரம் போல நின்றார். (அசோக புஷ்பம் ரத்தச் சிவப்பு). சற்றுப் பொறுத்து காகுத்ஸனும் தன் வில்லை எடுத்துக் கொண்டான். யுக முடிவில் சூரியனைப் போல தேஜஸுடன் பதில் கொடுக்க ஆரம்பித்தார். ஒருவருக்கொருவர் சளைக்காமல் தொடர்ந்து யுத்தம் செய்தனர். கோபத்துடன் ராவணனைப் பார்த்து ராகவன் கடுமையாகச் சொன்னான். ராக்ஷஸா| என் மனைவியை ஜனஸ்தானத்திலிருந்து அறியாமையால் அபகரித்துக் கொண்டு வந்தாயே. தன்னைக் காத்துக் கொள்ள முடியாத அபலையான ஸ்த்ரீயை கடத்திக் கொண்டு வந்த செயலே உன்னை வீர்யமற்றவனாக காட்டுகிறது. நான் இல்லாத சமயம், வனத்தில் தனியாக இருந்த வைதேஹியை, திடுமென வந்து அபகரித்துக் கொண்டு வந்து, நான் சூரன் என்று மார் தட்டி பேசுகிறாய். சூரனே, உன் வீர்யத்தை ஸ்த்ரீகளிடமா காட்டுவது. நாதன் அருகில் இல்லாத சமயம், பிறன் மனைவி என்றும் யோசியாமல், இது என்ன வீரம்? கோழையின் செயல் அல்லவா? இப்படி ஒரு செயலை செய்து விட்டு நான் சூரன் என்று மார் தட்டிக் கொள்கிறாய். மரியாதையை மறந்தவன், வெட்கம் இல்லாதவன், சரித்திரம் எதுவும் இல்லாதவன் நீ. உன் கர்வத்தால், தானே ம்ருயுவை எதிர் நோக்கி நிற்கிறாய். தான் சூரன் என்று சொல்லிக் கொள்கிறாய். ஒரு காலத்தில் நீ சூரனாக இருந்து , குபேரன் சகோதரனாக, பல அரிய செயல்களைச் செய்தவன் தான். இப்படி ஒரு தரக் குறைவான செயலை செய்து, அதன் பலனை இதோ அனுபவிக்க இருக்கிறாய். துர் புத்தியுடையவனே | நான் சூரன் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறாயே, வெட்கமாக இல்லை? திருடன் போல வந்து சீதையைக் கடத்திச் சென்றாயே, அதுவே என் எதிரில் நீ சீதையைச் சீண்டியிருந்தால் உன் சகோதரன் க2ரனை காண அந்த க்ஷணமே சென்றிருப்பாய். என் அம்புகள் உன்னை அவனிடம் சேர்த்திருக்கும். நல்ல வேளை, என் கண்ணெதிரில் வந்து நிற்கிறாய். இதோ என் கூர்மையான பாணங்களால் உன்னை யம லோகம் அனுப்புகிறேன். உன் குண்டலங்கள் ஜொலிக்கத் தலையை அம்புகள் துண்டித்து விழச் செய்தால், மாமிசம் தின்னும் பக்ஷிகளுக்கு. நல்ல உணவாகும். பூமியில் விழுந்து கிடக்கும் உன் உடலை கழுகுகள் மொய்க்கட்டும். பெருகி ஓடும் ரத்தத்தைக் குடிக்கட்டும். உயிர் பிரிந்து சடலமாகக் கிடக்கப் போகிறாய். கருடன் கையில் பாம்பு போல அவஸ்தைப் படப் போகிறாய். இவ்வாறு சொல்லிக் கொண்டே, ராமன் அருகில் வந்து விட்ட ராவணனை தன் அம்புகளால் அடிக்க ஆரம்பித்தார். பலமும், வீர்யமும், மகிழ்ச்சியும் இரண்டு மடங்காகி விட்டது போல இருந்தது. எதிரியை வதம் செய்து விடுவது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற முனைந்தது போல இருந்தது. நினைத்த மாத்திரத்தில் அவர் கைக்கு அஸ்திரங்கள் வந்து சேர்ந்தன. மகிழ்ச்சி காரணமாக, அவர் கை வேகமும் கூடியது. இந்த நிமித்தங்கள் சுபமானவை என்பதால் ராமர் தனக்குள் தீர்மானித்துக் கொண்டு இன்னமும் அதிக சாகஸத்தோடு எதிரியை தாக்க ஆரம்பித்தார். ஒரு பக்கம் வானரங்களின் கற்களின் தாக்குதலும், மறுபக்கம் ராமனின் அஸ்திரங்கள் தாக்கியும் ராவணன் நிறமிழந்து முகம் வெளிற தவித்தான். அவன் மனம் வாடியது. அந்தராத்மாவின் குழப்பம் அவன் கை வேகத்திலும் தெரிந்தது. சரியாக குறி வைத்து அம்புகளை எய்ய விடாமல் தடுத்தது. கையிலிருந்து சரங்கள், வழுவி விழுந்தன. பல விதமான அஸ்திரங்களும், ம்ருத்யு சமீபித்து விட்ட நிலையில் எந்த வகையிலும் உதவுவதாக இல்லை. இதைக் கண்ட சாரதி, தன் தலைவனின் குழம்பிய நிலையைக் கண்டு, மெதுவாக யுத்த பூமியிலிருந்து ரதத்தை வெளியில் கொண்டு வந்து விட்டான். ராம பாணங்கள் தைத்து நினைவு இல்லாத நிலையில் ராவணன் களைத்தவனாக ரதத்தில் விழுந்து கிடந்தான். மிகவும் துன்புற்ற நிலையில் ராவணனைக் கண்ட சாரதியும், பௌருஷத்தை இழந்தவனாக கிடந்த ராவணனுடன் ரதத்தை ரண பூமியிலிருந்து அப்புறப்படுத்தும் விதமாக ஓட்டிச் சென்று விட்டான். வேகமாக ஓட்டிச் சென்ற சாரதி, யுத்த பூமியில் களைத்து விழுந்து விட்ட தன் எஜமானனின் உயிரைக் காக்கும் பொருட்டு வெகு தூரம் அழைத்துச சென்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் தசக்ரீவ விசூர்ணனம் என்ற நூற்று ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 106 (513) சாரதி விஞேயம் (சாரதியின் விண்ணப்பம்)
காலன் பிடியில் இருந்ததாலோ என்னவோ, சாரதியின் இச்செயல் ராவணனுக்கு உவப்பாக இல்லை. கோபத்துடன் அவனைப் பார்த்து விழித்து கத்தினான். சக்தி இல்லாதவன் போலவும், வீரமற்ற கோழை போலவும், பௌருஷம் இல்லாதவன் போலவும் பயந்தவன், அல்பன் போல ஆற்றல் சற்றும் இல்லாதவன் போலவும், தேஜஸ் இல்லாதவன் போலவும், என்னைக் காட்டிக் கொடுத்து விட்டாயே. என் அஸ்திரங்கள் என்னை கை விட்டு விட்டனவா? என் மாயா யுத்த தந்திரங்கள் என்னை விட்டு விலகி போய் விட்டனவா? துர்புத்தியே | என்னை அவமதித்து விட்டாயே. உன் அல்ப புத்தியால் என்னை ரண பூமியிலிருந்து விலக்கி கொண்டு வந்து மாசு படுத்தி விட்டாய். எதற்காக என் கட்டளையை எதிர் பார்க்காமல் என்னை அவமானம் செய்வது போல எதிரிகள் முன்னிலையில் ரதத்தை திருப்பி ஓட்டிக் கொண்டு வந்தாய். பண்பற்றவனே| வெகு காலமாக நான் சேர்த்து வைத்திருந்த என் மதிப்பும், பெருமையும், என் வீர்யம் பற்றிய நம்பிக்கையும் ஒரே சமயத்தில் நாசமாக்கப் பட்டன. எதிரிகளாலேயே பாராட்டப் பெற்ற வீர்யம் என் வீர்யம். என்னுடன் போர் புரிவதையே ஒரு இனிய அனுபவமாக மாற்றான் நினைக்கும் படி போர் புரிபவன் நான். எல்லோரும் பார்க்க, கோழை, பேடியைப் போல ரண பூமியிலிருந்து என்னை விலக்கி, ஓட்டி வந்து விட்டாயே. உன் மோகத்தால் புத்தி இல்லாமல் இந்த செயலை நீ செய்திருக்கவில்லையென்றால், என் சந்தேகம், வேறு யாரோ, உனக்கு பரிசுகள் கொடுத்து தூண்டி விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது நண்பர்கள் செய்யும் காரியம் அல்ல. நலம் விரும்பும் பந்துக்கள் இப்படி செய்ய மாட்டார்கள். எதிரிகள் செய்யும் காரியம் தான் இது. என்னை தலை குனிய வைத்து விட்டாயே. சீக்கிரம் ரதத்தை திருப்பி ஓட்டு. என் சத்ருக்கள் நான் எங்கே என்று தேட ஆரம்பிக்கும் முன் என்னை ரண பூமியில் முன் வரிசையில் கொண்டு நிறுத்து. என்னுடன் நீ சேர்ந்து இருந்தது உண்மையானால், என் குணங்களை நினைவில் வைத்திருப்பாயானால் சீக்கிரம் ரதத்தை ரண பூமிக்கே கொண்டு செல் என்று மிக கடுமையாக வசை மாரி பொழியவும், அரசனின் எண்ணத்தை தெரிந்து கொள்ளாமல், தானாக நன்மையை விரும்பிச் செய்த செயல், ராவணனுக்கு இவ்வளவு ஆத்திரத்தை கிளப்பி விடும் என்று அறியாத சாரதி, மெதுவாக சமாதானம் செய்வது போல சொன்னான். அரசனே| நான் பயப்படவில்லை. நான் மூடனும் அல்ல. சத்ருக்கள் ஆசை காட்டி என்னை தூண்டி விடவும் இல்லை. எனக்கு உங்களிடம் உள்ள அன்பு குறையவும் இல்லை. மனம் மயங்கி புத்தி பேதலித்த நிலையிலும் நான் இல்லை. தாங்கள் செய்த உயர்ந்த நற்காரியங்களை நான் மறந்து போகவும் இலலை. உங்கள் நன்மைக்காக, போரில் தோல்வியை தழுவக் கூடாதே, அதனால் உங்கள் புகழுக்கு பங்கம் வரக் கூடாதே என்ற நல்லெண்ணம் மட்டுமே என் மனதில் இருந்தது. உங்களுக்கு நன்மை என்று நினைத்து செய்தேன். பிடிக்காமல் போகும் என்று நினைக்கவே இல்லை. ராஜன், என்னை தவறாக எண்ண வேண்டாம். என் விஸ்வாசத்தில் அவ நம்பிக்கை கொள்ள வேண்டாம். உங்கள் நலம் விரும்பும் உண்மையான ஊழியன் தான் நான். அறியாமல் செய்த தவற்றை, பெரிதாக்காமல் மன்னித்து விடுங்கள். இதோ திரும்ப ரண பூமியில் சேர்க்கிறேன். கேளுங்கள். நான் ஏன் ரதத்தை திருப்பி ஓட்டி வந்தேன் என்ற காரணம் சொல்கிறேன். நதி ஜலத்தில் சமுத்திர ஜலம் பெருகி எதிர்த்து வந்தது போல யுத்த பூமியிலிருந்து ரதத்தை திருப்பி ஓட்டி வந்தேன். (சமுத்திர ஜலம் பெருகி, எதிர்த்து நதியில் பிரவகித்தது போல என்று திலகர் உரை). பெரும் யுத்தம் செய்து தாங்கள் களைத்து இருந்தீர்கள். உங்கள் முகத்திலும் மகிழ்ச்சியோ, நிதானமோ காணப்படவில்லை. இந்த குதிரைகளும் களைத்து இருந்தன. வெய்யிலில் வாடி நிற்கும் பசு மாடுகள் போல இருந்தன. துர்நிமித்தங்களும் ஏராளமாக தெரிந்தன. நமக்கு விபரீதமான நிமித்தங்கள். அதனால் தான் அப்ரதக்ஷிணமாக ஓட்டி வந்தேன். தேச காலங்களை அனுசரித்து தான் நாம் நடக்க வேண்டும். லக்ஷணங்கள், இங்கிதங்கள், மறை முகமான சில குறிப்புகள் இவைகளையும் நாம் அவ்வப்பொழுது கண்டு நடக்கப் போவதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். தீனமாக இருப்பதையும், உடல் வருத்தத்தையும், ரதத்தில் இருப்பவனின் பலாபலத்தையும், பூமியில் பள்ளம், மேடு இவற்றையும் சமமாக இருப்பதோ, மேடும் பள்ளமுமாக நேர் பாதையின்றி இருப்பதையும், யுத்த காலத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எதிரியின் உள் நோக்கையும் ஊகித்துக் கொள்ள வேண்டும். நேராக எதிர்த்து நின்றும், சற்று விலகி நின்றும், தன்னிடத்தில் நிலைத்து நின்றும், பின்னடைந்தும் யுத்தம் செய்வது ரதத்தை ஓட்டும் சாரதிகள் கவனித்து செய்ய வேண்டிய செயல்களாகும். தங்கள் சிரம பரிகாரம் செய்து கொள்ளும் அவசியத்தாலும், குதிரைகளின் களைப்பையும் பார்த்து இதை நான் செய்தேன். கோபம் கொள்ளாமல் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் தன்னிச்சையாக இதை செய்து விட்டேன் என்று கோபம் கொள்ள வேண்டாம். எஜமான விசுவாசம் தான் என்னை இச்செயலை செய்யத் தூண்டியது. இப்பொழுது கட்டளையிடுங்கள். எதிரிகளை நாசம் செய்ய வல்ல தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உறுதியாக சொல்லுங்கள், வீரனே | நான் அப்படியே செய்கிறேன். தங்கள் மனதில் எள்ளிவும் சந்தேகமோ, மனத் தாங்கலோ இருக்கக் கூடாது. மகிழ்ச்சியோடு ஆணையிடுங்கள். ராவணனும் மன அமைதி அடைந்தவனாக சாரதியை புகழ்ந்து, மேலும் யுத்தம் செய்வதிலேயே குறியாக, சாரதியே | சீக்கிரம் என் ரதத்தை ராகவனின் எதிரில் கொண்டு போய் நிறுத்து என்றான். சத்ருக்களை வதம் செய்யாமல் ரண பூமியிலிருந்து புற முதுகு காட்டி ஓட மாட்டான், ராவணன் என்றான். தன் கை ஆபரணங்களில் ஒன்றை சாரதிக்கு பரிசாக கொடுத்து சமாதானம் செய்து ராவண ராஜா, மன நிறைவுடன் புறப்பட்டான், சாரதியும் அவ்வாறே ரதத்தை திருப்பி, குதிரைகளை தட்டிக் கொடுத்து, க்ஷண நேரத்தில் ராமன் முன்னால் ரதத்தை கொண்டு வந்து நிறுத்தி விட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சாரதி விஞேயம் என்ற நூற்று ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 86 (493) ராவணி ப3ல கத2னம் (ராவண குமாரனின் பலத்தை விவரித்தல்)
இருட்டு நுழைவது போல, யாருமறியாமல் ராவணி இருந்த இடம் வந்து சேர்ந்த உடன், ராவண சகோதரன், விபீஷணன், லக்ஷ்மணனிடம் ரகஸ்யமாகச் சொன்னான். இதோ, மேக ஸ்யாமளமாக, பெருத்த சரீரத்துடன், ராக்ஷஸர்கள் நிற்கிறார்களே, வானர வீரர்களை இவர்களுடன் போர் தொடுத்து கவனத்தை கலைத்து வைத்துக் கொள்ளச் சொல். மரங்களும், கிளைகளையும் ஆயுதங்களாக உடைய வானரங்கள் இந்த இடத்தில் பேதம் என்ற யுத்த முறையை அனுசரிக்கட்டும். இந்த பெரிய சேனை பிளவு படும்படி செய்ய வேண்டும். இந்த படையின் அணி வகுப்பு கலைந்தால் தான் ராக்ஷஸேந்திரனின் மகன் நம் கண்ணுக்கு புலனாவான். இந்த காரியம் முடியும் முன் நீ உன் கூர்மையான குறி தவறாத பாணங்களால் அடி. க்ரூர கர்மாவான இந்திரஜித்தை வதம் செய்து விடு. இவன் எல்லா உலகுக்கும் பயத்தை தான் தருகிறான். அல்லது உலகமே இவனைக் கண்டு நடுங்குகிறது. இதை ஆமோதித்த லக்ஷ்மணன் தன் வில்லை எடுத்து பிரயோகம் செய்தான். சரமாரியாக அம்புகள் சீறிக் கொண்டு பாய்ந்தன. வானர வீரர்களும், கரடி வீரர்களும் தங்கள் நகம், பல், மரக் கிளைகள், கற்கள் இவைகளையே ஆயுதமாகக் கொண்டு போர் செய்யலாயினர். வானர சைன்யத்தை மீதியில்லாமல் அழித்து விடுவோம் என்று சொல்லிக் கொண்டு ராக்ஷஸர்களும் அம்பு மழை பொழிந்தனர். வானர, ராக்ஷஸர்கள் அடித்துக் கொண்டதால் எழுந்த சப்தம் ஆகாயத்தை நிறைத்தது. லங்கையில் எதிரொலித்தது. வித விதமான சஸ்திரங்கள், ஆயுதங்கள், கூர்மையான பாணங்கள், ஒரு பக்கம். மரக் கிளைகளும், பாறாங்கற்களும் ஒரு புறம். யுத்தம் கோரமாகத் தொடர்ந்தது. அந்த ராக்ஷஸர்களும் தங்கள் விகாரமான உருவத்தாலேயே வானர வீரர்களிடம் பயத்தை உண்டு பண்ணினார்கள். அதே போல அவர்களும் தங்கள் கைக்கு கிடைத்த கல், மரங்கள் இவற்றாலேயே பல ராக்ஷஸர்களை அடித்து வீழ்த்தினார்கள். கரடிகளும், வானரங்களும் கூட சில மிகப் பெரிய உருவம் உடையனவாக இருந்தன. தன் சைன்யம் இப்படி அடிக்கப் பட்டு, சின்னா பின்னமாகிப் போவதை ராவணி கவனித்தான். அடர்ந்த மரங்களுக்கிடையில் மறைந்து இருந்து ஹோமம் செய்து கொண்டிருந்தவன் அதை முடிக்காமல் பாதியிலேயே எழுந்து வந்து விட்டான். ஏற்கனவே தயாராக இருந்த ரதத்தில் மகா கோபத்துடன் ஏறினான். மிகப் பெரிய வில்லை கையில் ஏந்தி, கால மேகம் போன்ற பிரகாசத்துடன் சிவந்த கண்களும், முகமுமாக, கோபத்தில் மற்றொரு அந்தகன் போல தோற்றமளித்தான். ரதத்தில் ஏறி, அவன் நின்றவுடனேயே அவன் வீரர்கள் அவன் கட்டளைக்காக அவனைச் சூழ்ந்து நின்று கொண்டனர். மகா பயங்கரமாக அவர்களுடன் லக்ஷ்மணன் போரிட்டுக் கொண் டிருந்தான். அந்த சமயம் ஹனுமான் மிகவும் பிரயாசையுடன், பெரிய மலை போன்று அடர்ந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தை அந்த ராக்ஷஸ சைன்யத்தின் மத்தியில் போட்டான். பல ராக்ஷஸர்கள் அதனடியில் நசுங்கி விழுந்தனர். காலாக்னி போல அதிலிருந்து நெருப்பும் எழுந்தது. பலர் இதனால் நினைவிழந்து விழுந்தனர். மேல் மூச்சு வாங்க நின்றிருந்த ஹனுமானைப் பார்த்து, பல ராக்ஷஸ வீரர்கள், இது தான் சமயம் என்று ஹனுமானைத் தாக்க தயாராக அருகில் வந்தனர். பெரும் யுத்தம் நடந்தது. அசையாது நின்ற ஹனுமானை இந்திரஜித் பார்த்தான். வாயு சுதன், தன் எதிரிகளை பயங்கரமாக வதைப்பதையும் கண்டான். சாரதியிடம்., அதோ அந்த வானரம் நிற்கும் இடம் செல் என்று உத்தரவிட்டான். இவனை அலட்சியம் செய்து விட்டால், இவன் நம் படைக்கு பெரும் சேதம் விளைவிப்பான் என்றான். சாரதியும் மாருதி இருந்த இடம் நோக்கி வந்தான். அளவிட முடியாத பலசாலியான இந்திரஜித்தை, ரதத்தில் தாங்கியபடி வந்தான். அவனும் நெருங்கி அம்புகளையும், வாளையும், பட்டஸங்களையும் மழையாகப் பொழிந்தான். வானர வீரனான ஹனுமானின் தலையிலேயே குறி வைத்து அடித்தான். அந்த கோரமான ஆயுதங்களை தன் கையால் பிடித்து ஹனுமான் மகா ஆத்திரத்துடன் இந்திரஜித்தைப் பார்த்துச் சொன்னான். சூரனாக இருந்தால் இந்த வாயு புத்திரனோடு தனியாக யுத்தம் செய். உயிருடன் திரும்ப மாட்டாய். என் கை வேகத்தை நீ தாங்குவாயா, பார்க்கலாம். இவ்வாறு அறை கூவி நிற்கும் ஹனுமானையும், சக்தி வாய்ந்த ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு நிற்கும் இந்திரஜித்தையும் பார்த்த விபீஷணன், லக்ஷ்மணனிடம் சென்று சௌமித்ரே| இந்த ராவணன் மகன், இந்திரனை ஜயித்தவன். ரதத்தில் ஏறி நின்று ஹனுமானை கொன்றாலும் கொல்லக் கூடியவனே. நீ உன் வில்லின் அம்புகளால் அவனை திசை திருப்பு. நீ தான் அவனைக் கொல்ல முடியும். விபீஷணன் சுட்டிக் காட்டிய பின் எதிரில் மலை போல நின்று, உரக்கக் கத்தி போருக்கு அறை கூவும் ராவணியை லக்ஷ்மணன் கண்டான்.
இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணி ப3ல கத2னம் என்ற எண்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 87 (494) விபீஷண, ராவணி பரஸ்பர நிந்தா3 (விபீஷணனும் ராவணன் மகன் இந்திரஜித்தும் பரஸ்பரம் ஏசிக் கொள்ளுதல்)
விபீஷணன் லக்ஷ்மணனிடம் விவரித்துச் சொல்லி விட்டு, வில்லை ஏந்திய நிலையில் அவனை கைப்பற்றி அழைத்துக் கொண்டு முன்னேறிச் சென்றான். சற்று தூரம் சென்றவுடனேயே, பெரிய வனத்தைக் கண்டு, அதனுள் நுழைந்தனர். லக்ஷ்மணனுக்கு அங்கு நடக்கும் யாக கார்யத்தைப் பற்றி விவரித்தான். பெரிய கருமேகம் போன்று அடர்ந்து வளர்ந்திருந்த ந்யக்ரோத மரத்தைக் கண்டனர். தேஜஸ்வியான ராவண சகோதரன் விபீஷணன், லக்ஷ்மணனுக்கு அதைச் சுட்டிக் காட்டினான், இங்கு தான் ராவணி (ராவணன் மகன்) அக்னியில் ஹோமம் செய்து, தானம் , ஹவிஸ் முதலியன அக்னியில் சமர்ப்பித்து விட்டு, யுத்தம் செய்யக் கிளம்புவான். இயல்பாகவே பலசாலி அவன். இதன் பின் யார் கண்ணுக்கும் புலனாகாத சக்தியைப் பெற்று விடுவான். உயர்தர அம்புகளால் கட்டிப் போட்டு சத்ருக்களை வதம் செய்யத் தகுதியைப் பெற்று விடுவான். ந்யக்ரோத மரத்தின் அடியில் யாக சாலையில் அவன் அமரும் முன், கூர்மையான பாணங்களால் அடித்துக் கொன்று விடு. அவன் ரதத்தையும், சாரதியையும் கூட வதம் செய்து நாசமாக்கு. இதைக் கேட்டு லக்ஷ்மணன் வில்லை எடுத்து நாண் பூட்டி தயாராக இருந்த அம்புகளை கோர்த்து பிரயோகம் செய்யலானான். அக்னி வர்ணத்தில் இருந்த அந்த ரதத்தில் மகா பலசாலியான ராவணன் மகன், இந்திரஜித், கவசம் அணிந்து, கையில் வில்லும், ரதத்தில் கொடியுடனும் காணப்பட்டான். இவனை போருக்கு அழை என்று விபீஷணன் சொல்ல, சௌமித்ரியும் அவ்வாறே போருக்கு அறை கூவல் விட்டான். அருகில் விபீஷணனைக் கண்டதும் இந்திரஜித் கடும் கோபம் கொண்டான்.
ராக்ஷஸா| நீ என் தந்தையின் உடன் பிறந்த சகோதரன். நெருங்கிய உறவினனான எனக்கு துரோகம் செய்ய எப்படி உனக்கு மனம் வருகிறது? துர்மதே| (துர்புத்தியுள்ளவனே) உனக்கு உற்றாரும் கிடையாது. உற்றார் என்று அன்பும் இல்லை. ஒரே ஜாதி என்ற ஈ.டுபாடும் இல்லை. நட்பு என்பது அறவே இல்லை. உடன் பிறந்தவன் மகன் என்ற உறவு தரும் பாசமோ, தர்மமோ எதுவுமே உன்னிடம் இல்லை. தர்மத்தை அவமதிக்கிறாயே. துர்புத்தியுடையவனே, உன்னைக் கண்டு யாரும் நம்பத் தயங்குவார்கள். சாதுக்கள் நிந்திப்பார்கள். சொந்த ஜனங்களிடம் கௌரவமாக இருப்பதை விட்டு, வேற்று மனிதர்களிடம் கை கட்டி சேவகம் செய்வதை உயர்வாக நினைக்கிறாய். உனக்கு புத்தியில்லை. இது இரண்டிலும் உள்ள வேறுபாடு உனக்கு உறைக்கவில்லை. தன் ஜனங்களிடம் சுகமாக இருப்பது எங்கே? மாற்றானிடம் மண்டியிட்டு அல்பமாக வாழ்வது எங்கே? தன் ஜனங்கள் நிர்குணமாக இருந்தால் கூட, குணவானான வெளியாட்களை விட சிறந்தவனே. மாற்றான், மாற்றான் தான். என்னதான் சொன்னாலும், தன் இனத்து ஜனங்கள் போல உதவிக்கு வருவார்களா ? தன் பக்ஷத்தை விட்டு எதிரிகளின் பக்ஷத்தை சென்றடைந்தவன், தன் கட்சியில் முதலில் தாழ்வை அடைகிறான். பின் எதிரிகள் பக்ஷத்திலும் அவமதிக்கப் பட்டு நாசமாகிறான். நீ செய்திருக்கும் காரியம் சற்றும் கருனையோ, பரிவோ இல்லாதது. ராக்ஷஸனே| ஏன் என்று கேட்பாயோ, உன் உடன் பிறந்தான், ராவணன், கடுமையாக சொன்னதை பொறுக்கும் குணம் கூட உன்னிடம் இல்லை பார். ராவணன் சகோதரனாக இருந்து என்ன பயன்? இதற்கு விபீஷணன் பதில் சொன்னான்.
ராக்ஷஸ ராஜ குமாரனே| என் சீலம் தெரியாதது போல பேசிக் கொண்டே போகிறாயே. கடுமையாக பேசுவதை விட்டு, சற்று நான் சொல்வதை பொறுமையாகக் கேள். எனக்கு சற்று மதிப்பு கொடுத்து என் தரப்பு வாதத்தையும் கேள். நானும் க்ரூர கர்மாக்களைச் செய்யும் ராக்ஷஸ குலத்தில் பிறந்தவன் தான். ஆயினும் ராக்ஷஸர்களுக்குப் பொருந்தாத சீலம் எனும் குணம் எனக்கு இயல்பாகவே அமைந்து விட்டது. எனக்கு கொடூரமான வீர தீர செயல்களிலும் நாட்டம் இல்லை. அதர்மமான வழியிலும் நாட்டம் இல்லை. பாபம் செய்வது என்று நிச்சயம் செய்து சங்கல்பம் செய்து கொண்டவன் போல பாப காரியமே செய்யும் சகோதரனிடம் எனக்கு மன ஒற்றுமையோ ஈ.டுபாடோ வரவில்லை. இது போன்ற உறவைத் துறப்பதில் தான் சுகமே. கையில் வந்து விழுந்து விட்ட ஆலகால விஷத்தை உடனே கீழே போடுவது போல. துன்புறுத்துதல், மற்றவர் பொருளை அபகரித்தல் பிறன் மனையை , மாற்றன் மனைவியை தொடுதல், இவைகளை துராசாரம், ஒழுக்கம் இல்லாதவை, விடத்தக்கது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். எரியும் வீட்டை துறந்து வருவது தான் உயிர் பிழைக்க வழி. பிறர் பொருளை அபகரித்தலும், பிறன் மனைவியை நெருங்குவதும், தன் நண்பர்கள், நலம் விரும்பும் உறவினர்களிடம் ஏகமாக சந்தேகம் கொள்ளுதல், இவை அழிவைத் தேடித் தரும் தோஷங்கள். மகரிஷிகளை வதம் செய்வதும், எல்லா தேவர்களிடமும் வெறுப்பு. சுய அபிமானமும், கோபமும், வைர பாவமும், எதையும் எதிர்த்து நேர் மாறாக செய்யும் தன்மை இவை என் சகோதரனிடம் உள்ள கெட்ட குணங்கள். அவன் ஐஸ்வர்யத்தையும் உயிரையும் பறிக்க வல்ல கொடிய குணங்கள். இந்த தோஷங்கள் அவனிடம் உள்ள நல்ல குணங்களை மறைத்து விட்டது. மேகங்கள் மலைகளை மறைப்பது போல. இந்த கெட்ட குணங்களுக்காகத் தான் நான் என் சகோதரனை விட்டு விலகி வந்தேன். உன் தந்தையோ, இந்த லங்கையோ, நீயோ, யாருமே இருக்கப் போவதில்லை. குழந்தைத் தனமான, அபிமானம், வினயமின்மை இவை தான் உன் பேச்சில் காண்கிறேன். என்ன சொல்ல வேண்டுமோ சொல்லிக் கொள். கால பாசத்தால் கட்டுண்டு இருக்கிறாய். இன்று உனக்கு காலம் முடியப் போகிறது. என்னைத் திட்டி என்ன நலன் பெற விழைகிறாயோ, அடைந்து கொள். ராக்ஷஸனே, ந்யக்ரோத மரம் வரை போகக் கூட உன்னால் முடியாது. காகுத்ஸனை மீறி, அவனை வெற்றி கொண்டு போக முடியுமானால் போ. உயிர் பிழைத்து இருப்பதே இயலாத காரியம். லக்ஷ்மணனோடு யுத்தம் செய். லக்ஷ்மணன் கையால் வதம் செய்யப் பெற்றால் தேவ காரியங்களைச் செய்வாய். காட்டு உன் பலத்தை. சர்வ ஆயுதங்களையும் உபயோகி. இவனும் தயாராக இருக்கிறான். இன்று லக்ஷ்மணன் விடும் பாணங்களுக்கு இரையாகி, உன் படை பலத்தோடு திரும்ப போக முடியுமா, பார். முடியாது.
இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீஷண ராவணி பரஸ்பர நிந்தா3 என்ற எண்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 88 (495)சௌமித்ரி ராவணி யுத்தம் (சௌமித்ரியும் ராவணன் மகனும் யுத்தம் செய்தல்)
விபீஷணனின் விளக்கத்தை கேட்டும் ஆத்திரம் அடங்காதவனாக ராவணி, இந்திரஜித், என்ன சொல்கிறோம் என்பது கூடத் தெரியாமல், மிக கடுமையான வார்த்தைகளால் பதில் கொடுத்தான். வேகமாக குதித்து ரதத்தில் ஏறி நின்றான். எல்லா விதமான ஆயுதங்களையும் சேர்த்து வைத்துக் கொண்டான். காலந்தகனோ, யமனோ என்று ஐயுறும்படி நின்றான். கறுப்பு நிற குதிரைகள் பூட்டப் பெற்று அலங்காரமாக ரதம் தயாராக நின்றது. அரிய பல அஸ்திரங்களை தன் வில்லில் பூட்டி பிரயோகம் செய்யத் தயாரானான். அவன் இப்படி அலங்கரித்த ஆயுதங்கள் நிரம்பிய ரதத்தில் நிற்பதைக் கண்டு, ராகவானுஜன், லக்ஷ்மணனை ஹனுமான் தன் முதுகில் ஏறிக் கொள்ளச் செய்தான். யுத்தம் செய்ய லக்ஷ்மணனும் தயார் என்பதை அறிந்து, விபீஷணனையும், லக்ஷ்மணனையும் ஒன்றாக அழைத்து, வானர வீரர்களையும் அழைத்து என் பராக்ரமத்தைப் பாருங்கள் என்று போருக்கு அறை கூவினான். என் வில்லிலிருந்து புறப்படும் சரமழை, உங்களால் தாங்க முடியாமல், ஆகாயத்திலிருந்து மேகம் பொழிவது போல, பொழியப் போகிறது. திணறப்போகிறீர்கள். வைக்கோல் போரை நெருப்பு அழிப்பது போல, என் பாணங்கள் உங்கள் சைன்யத்தை நிர்மூலமாக்கப் போகின்றன. தீக்ஷ்ணமான என் அம்புகள், சூலங்கள், சக்தி, உத்கரம், இஷ்டி, தோமரங்கள், உங்கள் உடலைக் குத்திக் கிழிக்கப் போகின்றன. உங்கள் எல்லோரையுமே இன்று யமனுலகம் அனுப்பி வைக்கிறேன். யுத்தத்தில் தளராத வேகம் உடைய என் கை வண்ணத்தை இன்று பாருங்கள். கார் மேகம் போல கர்ஜிக்கும் என் முன் யார் தான் நிலைத்து நிற்க முடியும். இரவு யுத்தம் செய்த பொழுது வஜ்ராசனி போன்ற என் பாணங்கள் தாக்கி இருவரும் (ராம, லக்ஷ்மணர்கள்) நினைவு இழந்து கிடந்தனரே, மறந்து விட்டதா? இன்னமும் அவர்களுக்கு முழு நினைவும் திரும்பியதாக எனக்குத் தோன்றவில்லை. யம சதனம், யமன் வீடு சென்று திரும்பியவர்களாக இன்னமும் மயக்க நிலையிலேயே இருக்கிறார்களா, என்ன என்னுடன் யுத்தம் செய்ய வந்து விட்டார்கள், நான் ஆலகால விஷம் போல கொடியவன் என்பதை அறியாமலே.
ராக்ஷஸ குமாரன் கர்ஜித்ததைக் கேட்டு, லக்ஷ்மணன் சற்றும் முகம் மாறாமல், பயம் இன்றி, பதில் சொன்னான். ராக்ஷஸா| போகாத ஊருக்கு வழி சொன்னாய். வாய் பேச்சில் வீரத்தைக் காட்டினாய். செயலில் செய்து காட்டுபவன் தான் புத்திசாலி, அவன் தான் சமர்த்தன். துர்மதியே, எப்படியோ அடைய முடியாததை அடைந்து விட மார் தட்டுகிறாயே. வெறும் வாய்ச் சொல்லில் தான் உன் வீரமா? மறைந்து கண்ணுக்கு புலனாகாமல் நின்று எங்களை மயக்கமடையச் செய்தாயே. இது திருடன் செய்யும் செயல் அல்லவா? வீரனாக இருப்பவன் இது போல செய்ய வெட்கமடைவான். இதோ நான் எதிரில் நிற்கிறேன். உன் பாணத்தில், உன் பராக்ரத்தைக் காட்டு. வெறும் வாய்ப் பேச்சு தேவையில்லை என்று சொல்லியவாறே, லக்ஷ்மணன் தன் பெரிய வில்லை எடுத்து வளைத்து, கூரான பயங்கரமான பாணங்களை இடை விடாது விட ஆரம்பித்தான். இந்திரஜித்தின் வில்லிலிருந்தும், விஷப் பாம்புகள் போன்ற பாணங்கள் மகா வேகத்துடன் வெளிப்பட்டு, லக்ஷ்மணன் மேல் பட்டுத் தெறித்து விழுந்தன. மகா வேகத்துடன் எய்யும் திறமை வாய்ந்த இந்திரஜித்தின் பாணங்கள், மேல் மூச்சு வாங்கத் திணறும் நாகங்கள் போலவே இருந்தன. சௌமித்ரியை பல இடங்களில் துளைத்து காயமுற செய்து விட்டான். காயத்திலிருந்து பெருகிய ரத்தம் உடலை நனைக்க, புகையில்லாத நெருப்பு ஜ்வாலை போல விளங்கினான் லக்ஷ்மணன். தன் செயலைக் கண்டு தானே மகிழ்ந்தவனாக இந்திரஜித் பெரும் குரலில் ஜய கோஷம் செய்தவாறு, சௌமித்ரே| என் வில்லிலிருந்து புறப்படும் அம்புகள் இன்று உன் உயிரைக் குடித்து விட்டுத் தான் நிற்கும். இன்று உனக்குத் துணையாக ஒனாய்களும், கழுகுகளும் தான் இருக்கப் போகின்றன. கருடன்கள் உன் உயிரற்ற உடல் மேல் விழுந்து கிடக்கப் போகின்றன. சௌமித்ரே| இன்று முதல் உன் பெயர் எங்கோ கேட்டதாக ஆகப் போகிறது. யமதூதர்களுடைய அதட்டல் காதில் விழவில்லை. க்ஷத்ரபந்து, மகா அயோக்யன், பரம துர்மதியான ராமன் தன் பக்தனும், சகோதரனுமான உன்னை என் கையால் வதம் செய்யப் பட்டு சடலமாகத் தான் காணப் போகிறான். கவசங்கள் துளைக்கப் பெற்று விழுந்து கிடக்க, பூமியில் உடல் பூரா அம்புகள் துளைத்து குத்திட்டு நிற்க, காணப் போகிறான். இன்று என்னால் கொல்லப்பட்ட உன் உத்தமமான சரீரத்தை தான் காண்பான் என்று இவ்வாறு ராவணன் மகன் தன் போக்கில் கர்வத்துடன் சொல்லிக் கொண்டே போகையில், பொருள் பொதிந்த வார்த்தையை, தகுந்த சமயத்தில் பிரயோகிக்கத் தெரிந்த வாக்கு வல்லமை பெற்ற சௌமித்ரி, இடை மறித்து வாய் ஜாலம் எதற்கு? துர்புத்தியே, ராக்ஷஸனுக்குரிய கொடுமையான செயல்கள் செய்யக் கூடியவன் தான் நீ. ஏன் இப்படி பேசிக் கொண்டே போகிறாய். இதைச் செயலில் செய்து காட்டு. எதையும் செய்யாமல் பிதற்றிக் கொண்டே போகிறாய். ராக்ஷஸனே, இதில் என்ன லாபம்? உன் புலம்பலை நான் நம்பும்படி ஏதாவது செய்து காட்டு. வெறும் வாய்ச் சொல்லில் கடுமையைக் காட்டித் திரிகிறாய். நான் உன்னைப் போல அவசியமில்லாத பேச்சை பேச மாட்டேன். இதோ பார், என்று சொல்லி ஐந்து நாராசமான, கூரான பாணங்களை, காதுவரை வில்லின் நாணை இழுத்து இந்திரஜித் மேல் விட்டான். ராக்ஷஸனின் மார்பில் பட்டன. ஜ்வலிக்கும் பாம்பு போன்ற கூரான பாணங்கள் வேகமாக வந்து சூரிய கிரணங்கள் போல வந்து மார்பைத் தாக்கவும், இந்திரஜித் கலங்கி விட்டான். சமாளித்துக் கொண்டு, ஆத்திரத்துடன் குறி வைத்து மூன்று அம்புகளை லக்ஷ்மணன் மேல் படும் படி விட்டான். ராக்ஷஸ, நர சிம்மம் போன்ற இருவரது வேகமும், திறமையும் அந்த போரில் வெளிப்பட்டது. ஜயிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருவருமே உக்ரமாக போர் புரியலானார்கள். இருவரும் பலசாலிகள். இருவரும் பல முறை தங்கள் ஆற்றலைக் காட்டி ஜயித்தவர்கள். இருவரும் எல்லா அஸ்திர, சஸ்திரங்களையும் அறிந்த அறிஞர்கள். அளவிட முடியாத பலமும், தேஜஸும் இருவரிடமும் சமமாகவே இருந்தன. ஆகாயத்தில் இரண்டு கிரஹங்கள் அடித்துக் கொள்வது போல இருவரும் அடித்துக் கொண்டனர். பல, வ்ருத்திரன் போல இருவரும் அச்சம் என்பதையே அறியாத வீரர்கள். இரண்டு கிரகங்கள் மோதிக் கொள்வது போல மோதிக் கொண்டனர். புது புது மார்கங்களையும், மற்ற யுத்த முறைகளையும் கண்டு பிடித்து, புது புது அஸ்திரங்களை தயார் செய்து போர் புரிந்தனர். இப்படி சமமான வீரர்கள் யுத்தம் செய்யும் பொழுது மகிழ்ச்சியே அடைந்தனர். நர, ராக்ஷஸ சிம்மங்கள் இரண்டும் ஒருவரை ஒருவர் வெற்றி கொள்வதையே குறியாகக் கொண்டு, வில்லும் அம்பும் கையில் வைத்து இருவருமே மற்றவரை அம்பு மழை பொழிந்து தாக்கினாலும், கலங்காமல், இடி இடிப்பது போலவும், மின்னல் போலவும், அம்புகளின் பரஸ்பர கதியில் தெரிய, யுத்த கலையில் வல்லவர்கள் மேலும் மேலும் முன்னேறினர். சம்பரனும், வாஸவனும் சண்டையிட்டது போல மும்முரமான போரில் தங்களையே மறந்தனர்.
இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சௌமித்ரி, ராவணி யுத்தம் என்ற எண்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 89 (496) சௌமித்ரி சந்துக்ஷணம் (லக்ஷ்மணனை போருக்கு புறப்பட தூண்டுதல்)
மேல் மூச்சு வாங்க, சர்ப்பம் போல சீறிக்கொண்டு சௌமித்ரி, ராக்ஷஸேந்திரனை குறி வைத்து, அம்புகளைத் தொடர்ந்து விட்டான். வில்லின் ஓசையைக் கேட்டே ராவணி சிந்தையில் ஆழ்ந்தான். அவன் முகத்தில் கவலையின் ரேகைகளைக் கண்டு கொண்ட விபீஷணன், லக்ஷ்மணனை உற்சாகப்படுத்தும் விதமாக, பேசலானான். சௌமித்ரே| இவனை கவலை வாட்டுகிறது. முக வாட்டம் இவன் தோற்றுக் கொண்டிருப்பதை தெரிவிக்கிறது. விடாது அடி. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றான். இதைக் கேட்டு லக்ஷ்மணனும், தகிக்கும் அக்னி ஜ்வாலை போன்ற பாணங்களை விடாது பிரயோகித்தான். விஷப் பாம்பு போன்ற அஸ்திரங்கள், இந்திரனின் வஜ்ராசனி போன்ற அஸ்திரங்கள் ஒரு முஹுர்த்த காலம் இடைவிடாது சர மழையாக பொழிந்து களைத்தான். ராவணியும் இந்த அடி தாங்காமல் சற்று நேரம் நினைவின்றி இருந்தான். பின் சமாளித்து எழுந்து வந்து பார்த்தால், சௌமித்ரி அப்பொழுதும் வில்லும் கையுமாக நின்று கொண்டிருந்தான். கண்கள் சிவக்க, சௌமித்ரியைப் பார்த்து, கடுமையாக தாக்கிப் பேசலானான். முதல் நாள் யுத்தத்தில் என் பராக்ரமத்தைப் பார்த்தவன் தானே, நினைவு இல்லையா. உங்கள் இருவரையும் மூர்ச்சையடைந்து பூமியில் விழச் செய்தேனே. அதுவும் நினைவு இல்லையா? அல்லது யமபுரம் செல்லத் தயாராகி விட்டாயா? என்னை எதிர்த்து நின்று போரிட வந்து விட்டாய். அன்றைய போரில் விழுந்தது நினைவு இல்லையெனில் இதோ பார்.. சற்று இங்கேயே நில். என்றான். இவ்வாறு சொல்லி, ஒரே சமயத்தில் ஏழு பாணங்களால் சௌமித்ரியை அடித்தான். பத்து பாணங்களால் ஹனுமானையும் அடித்துக் காயப் படுத்தினான். கூர்மையான பாணங்களால் குறி வைத்து இரண்டு மடங்கு ஆத்திரத்துடன், விபீஷணனை அடித்து வீழ்த்தினான். இந்திரஜித்தின் இந்த வீர விளையாட்டைப் பார்த்து லக்ஷ்மணன் சிரித்தபடி, யோசியாமல் இது என்ன பிரமாதம் என்பது போல பயங்கரமான அம்புகளை தன் வில்லில் இருந்து வெளிப்படச் செய்தான். முகத்தில் சற்றும் தயக்கமோ, பயமோ காட்டாமல், ராவணியைப் பார்த்து யுத்த பூமியில் நின்று யாரும் விளையாட மாட்டார்கள், வீரனே. உன் சரங்கள் அல்ப வீர்யமுடையவை. கனம் இல்லாதவை. மேலே பட்டால் கூட அதிக சேதம் விளைவிக்காதவை. வெற்றி பெற விரும்புவோர் இது போன்ற அல்பமான சரங்களைக் கொண்டு போரிட மாட்டார்கள். என் அம்புகளைப் பார். என்று சொல்லியபடி, சர மழை பொழிந்தான். இந்த ஆயுதங்களால் ராவணியின் கவசம் பிளந்து சிதறியது. ஆகாயத்திலிருந்து தாரா கணங்கள் விழுவது போல, ரதத்தில் இருந்து அந்தரிக்ஷத்தில் இருந்து கீழே விழுந்து பரவின. உடல் பூரா காயத்துடன் மேலும் மேலும் அதிக ஆத்திரத்துடன், ஆயிரக் கணக்கான பாணங்களை பிரயோகம் செய்து லக்ஷ்மணனை அடித்தான். மகா திவ்யமான லக்ஷ்மணனுடைய கவசத்தையும் பிளந்து சிதறி விழச் செய்தான். ஒருவருக்கொருவர் சளைக்காமல், அடிக்கு பதிலடி என்று விடாமல் போர் செய்தனர். இருவருக்கும் மேல் மூச்சு வாங்கியது. சமமான பலம், அஸ்திர ஞானம் உள்ளவர்கள் ஆதலால் சமமாக சண்டையும் வளர்ந்தது. இருவருக்கும் உடலில் பட்ட காயங்களில் ரத்தம் பெருகியது. வெகு நேரம் கூர்மையான பாணங்களால் தாக்கியபடி இருந்தனர். யுத்த கலையை அறிந்தவர்கள், இருவரும். பரஸ்பரம் அடித்து, காயம் பட்டனர். வெற்றியே குறியாக நின்றனர். பாணங்கள் தைக்கப் பெற்று, கவசங்கள் கிழிந்து, த்வஜம் கீழே விழ, ப்ரஸ்ரவன மலையில் அருவி கொட்டுவது போல, தங்கள் சரீரத்திலிருந்து ரத்தம் பெருக நின்றனர். இடைவிடாது வில்லின் நாணை இழுத்ததும், அம்பை விட்டதும், பெருத்த ஓசையைக் கிளப்பியது. ஆகாயத்தில், பருவ கால மேகம் கனத்து நிற்பது போல இருவரும் வெகு நேரம் போரில் முனைந்து நின்றனர். யுத்தத்தை நிறுத்தும் முயற்சியோ, சிரமம் என்றோ எண்ணவில்லை. திரும்பத் திரும்ப தங்களிடம் இருந்த தேர்ந்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் கவனமாக இருந்தனர். அந்தரிக்ஷம் பூராவும் இவர்களுடைய சர ஜாலத்தால மூடப் பெற்றது போலாயிற்று. தோஷம் இன்றி, லகுவாக, வித விதமான பிரயோகங்கள் முறையாக, அழகாக செய்யப்பட்ட அந்த யுத்தம், தேர்ந்த வீரர்களான நர, ராக்ஷஸர்களின் யுத்தமும் காண்பவர் மனதைக் கவர்ந்தது. பின் தனித் தனியாக தங்கள் திறமையைக் காட்டினர். சுற்றி இருந்த ஜனங்கள் பயத்தால் நடுங்கினர். பயங்கரமான சாட்டையடி போல சத்தம் எழுந்தது. ஆகாயத்தில் மேகங்கள் மோதிக் கொள்ளும் பொழுது தோன்றும் இடி முழக்கம் போல இவர்களது ஆயுதங்கள் மோதிக் கொண்ட பொழுது சப்தம் எழுந்தது. இருவர் உடலிலும் பட்டுத் தெறித்த அம்புகள் நுனி சிவந்து காணப்பட்டன. பாண மயமாக அந்த இடமே ஆயிற்று. வனத்தில் சால்மலி, கிம்சுக புஷ்பங்கள் பூத்திருப்பது போல இருவர் உடலிலும் காயங்கள் நிறைந்தன. இந்திரஜித் லக்ஷ்மண யுத்தம், பரஸ்பரம், வெற்றி கொள்ளும் முயற்சியில் இந்திரஜித் லக்ஷ்மணனையும், லக்ஷ்மணன் இந்திரஜித்தையும் சற்றும் சிரமத்தை உணராதவர்களாக அடித்தனர். வெகு நேரம் ஆன பின்னும், நிறுத்துபவர்களாகவோ, சிரம பரிகாரம் செய்து கொள்ளவோ இருவரும் நினைத்து பார்க்கவில்லை. இவர்கள் இருவரும் களைத்து இருப்பதையறிந்து சற்று நேரம் யுத்தத்தை நிறுத்தி வைக்கச் சொல்லி, அறிவுரை செய்தவாறு விபீஷணன் அங்கு வந்து சேர்ந்தான்.
இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சௌமித்ரி சந்துக்ஷணம் என்ற எண்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 90 (497) சௌமித்ரி ராவணி யுத்தம் (சௌமித்திரியும் ராவணியும் போரிடுதல்)
நரனான லஷ்மணனும், ராக்ஷஸனான இந்திரஜித்தும், மும்முரமாக போர் செய்து கொண்டு, அதே நினைவாக, அதே கவனமாக இருந்ததில், உடல் வருத்தம், பசி, தாகம் கூட அவர்களை வாட்டவில்லை. ராவண சகோதரன், யுத்த முனையில் நின்று, அவர்கள் கவனத்தை கலைக்க, தன் வில்லிலிருந்து பாணங்களை விட்டான். அருகிலிருந்த ராக்ஷஸ வீரர்களைத் தாக்கி கீழே விழுந்தன. அவர்கள் விபீஷணனைச் சூழ்ந்து கொண்டார்கள். பெண் யானைகள் நடுவில் யானைத் தலைவன் நிற்பது போல நின்றான் விபீஷணன். ராக்ஷஸ வீரர்கள், யுத்தம் செய்ய ஆயத்தமாக இருப்பதைப் பார்த்து வானர வீரர்களை உற்சாகப்படுத்தினான். இதோ இவன் ஒருவன் தான் ராக்ஷஸர்களின் கதி என்பது போல நிற்கிறான். இவனை விட்டால், ராவணனைத் தவிர, அந்த பக்ஷத்தில் வேறு வீரர்கள் யாரும் கிடையாது. இவன் அழிந்தால் ராவணனின் பலமும் அழிந்தது எனலாம். ஏன் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்? வானர வீரர்களே, முன் வாருங்கள். வீரனான ப்ரஹஸ்தன் மடிந்தான். நிகும்பனும் மகா பலசாலி. அவனும் வீழ்ந்தான். கும்பகர்ணனும், கும்பனும், தூம்ராக்ஷன் என்ற ராக்ஷஸர்கள் போரில் மடிந்தார்கள். ஜம்புமாலி, மகா மாலி, தீக்ஷ்ண வேகோ, அசனிப்ரப, சுப்தக்னன், யக்ஞ கோபன், ப்ரஜங்கோ, ஜங்கன் முதலானோரும், அக்னிகேது, ரஸ்மிகேது இவர்களும் நல்ல வீரர்கள். வித்யுத்ஜிஹ்வன், த்விஜிஹ்வன், சூர்யசத்ரு என்ற ராக்ஷஸன், அகம்பனன், சுபார்ஸ்வன், சக்ரமாலி, கம்பனன், தேவாந்தக, நராந்தகர்கள், இவர்களைப் போரில் மடியச் செய்து நாம் மிகவும் முன்னேறி இருக்கிறோம். கைகளால் சமுத்திரத்தை நீந்தி கடந்தது போன்ற செயல் இது. ஆயினும் இதே வேகத்தில் நாம் மீதிப் பேரையும் வென்றாக வேண்டும். தங்கள் பலத்தில் கர்வம் கொண்டு நிமிர்ந்து நின்று ராக்ஷஸர்கள் தாங்களாக வந்து போர் செய்து மடிந்தனர். நாம் வெற்றியை அணுகிக் கொண்டிருக்கிறோம். என் தந்தையின் மற்றொரு மகன், அவனை நான் கொல்வது யுக்தமும் அல்ல, நியாயமும் அல்ல. அதே போலத்தான் சகோதரன் மகனையும் எதிர்த்து நின்று போரிடுவது நியாயம் இல்லைதான். ராம காரியம் என்பதால் நான் தைரியமாக இறங்கி இருக்கிறேன். என் மனதில் தோன்றும் தயக்கத்தை உதறித் தள்ளி விட்டு செயலில் இறங்கி இருக்கிறேன். இவனைக் கொல்ல நினைத்தாலும், பாசம் காண்களில் நீரை நிரப்புகிறது. கண்ணீர் பெருகுகிறது. அதனால் லக்ஷ்மணன் தான் இந்த ராவணியை அடக்கப் போகிறான். இவர்கள் அருகில் வேறு யாரும் நெருங்க முடியாதபடி, வானரங்களே கவனமாக இருங்கள். யார் நெருங்கினாலும் அடித்து வீழ்த்துங்கள். வானரங்களும், விபீஷணனுடைய அறிவுரையை ஏற்றுக் கொண்டன. மகிழ்ச்சியோடு வாலை ஆட்டின. இதன் பின் வானரங்கள், கனைத்துக் கொண்டும், குதித்துக் கொண்டும், மேகத்தைக் கண்டு ஆடும் மயில்கள் ஆனந்தம் அடைவது போல, வித விதமான ஓசைகளை கிளப்பினர். ஜாம்பவானும் தன் படையுடன் வந்து சேர்ந்தார். சுற்றி காவல் இருந்த ராக்ஷஸர்களை நகங்களாலும், பற்களாலும் தாக்கினர். கற்களால் அடித்து வீழ்த்தினர். முதலில் கரடி ராஜனைக் கண்டு பயந்த ராக்ஷஸர்கள் பயம் தெளிந்து பட்டஸங்களையும், சூலங்களையும் கொண்டு தாக்க ஆரம்பித்தனர். ராக்ஷஸ சேனையை நாசம் செய்யும் ஜாம்பவானை கொல்லத் துணிந்தனர். தேவாசுரர்கள், பலம் மிகுந்த இரு பக்ஷமும் போரில் மோதிக் கொள்வது போல சப்தம் காதைத் துளைத்தது. ஹனுமானும் பெரிய சால மரத்தைச் சுழற்றிய படி குதித்துக் கொண்டு வந்து நின்றான். லக்ஷ்மணனை தன் தோளில் தூக்கிக் கொண்டான். முதுகில் லக்ஷ்மணன் இருந்த நிலையிலும் கைக்கு எட்டியவரை ராக்ஷஸர்களை அடித்து துன்புறுத்தினான். விபீஷணனை தன் யுத்த முறையால் அடித்து களைப்படையச் செய்து விட்டு, இந்திரஜித் திரும்ப லக்ஷ்மணனிடமே வந்து சேர்ந்தான். திரும்பவும், லக்ஷ்மணனும், இந்திரஜித்தும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து சர மழையாக பொழிந்து ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையைத் தொடர்ந்தனர். சந்திரனும், சூரியனும் போல, கோடைக்கால முடிவில் மேகங்கள் மோதிக் கொள்வது போல, வில்லில் நாணை இழுத்து, அம்பை பூட்டியதோ, விட்டதோ எதுவுமே கண்களுக்குத் தெரியவில்லை. வில்லிலிருந்து அம்பு புறப்பட்டது தெரியவில்லை. தன் மேல் படாமல் காத்துக் கொண்டதோ, எதுவுமே அவர்கள் கை லாகவத்தால் தெரியவில்லை. பாண வர்ஷங்களால் ஆகாயம் மூடிக் கிடந்தது. ஒரு சமயம் இந்திரஜித் லக்ஷ்மணனை நோக்கிப் போவது போல இருந்தது. மற்றொரு சமயம் லக்ஷ்மணன் இந்திரஜித்தை நெருங்கிக் கொண்டு இருப்பது போல காட்சியளித்தது. இரு தரப்பிலிருந்தும் கூரான பாணங்கள் சீறிப் பாய்வது மட்டுமே தெரிந்தது. திக்குகளில் இருள் சூழ்ந்தது. சூரியனும் மறைந்த பின் எங்கும் இருள் தான். மாமிசம் தின்னும் பக்ஷிகள் வட்டமிடத் தொடங்கின. அச்சமயம் காற்றும் அசையவில்லை. நெருப்பும் சுடவில்லை. மகரிஷிகள் உலகம் பிழைக்க ஜபம் செய்யலாயினர். கந்தர்வர்களும், சாரணர்களுமாக வந்து நின்றனர். ராக்ஷஸ சிம்மமான இந்திரஜித்தின் கரிய உடல், அவன் ஆபரணங்களால் அடையாளம் காண நேர்ந்தது. நான்கு கூரிய பாணங்களால் லக்ஷ்மணன் அவன் குதிரைகளைத் துளைத்தான். அதே போல மற்றொரு பாணத்தால் சாரதியை குறியாகக் கொண்டு, அசனி என்ற பாணத்தை விட்டான். ராகவனுடைய கை வண்ணத்தால், தலை தனியாக துண்டித்து விழுந்தது. சாரதி விழுந்தவுடன், மந்தோதரி சுதனான இந்திரஜித் தானே சாரத்யமும் செய்யலானான். பின் வில்லை எடுத்து போரில் ஈ.டுபட்டான். இந்த அத்புதமான செயலைக் கண்டவர் வியந்து நின்றனர். சாரத்யம் செய்யும் சமயம் குதிரையின் மேல் இருந்த கைகளில் அடித்தான். வில்லை எடுத்து முனைந்து நின்ற பொழுது குதிரைகளைத் தாக்கினான். லக்ஷ்மணனும் கவனமாக கிடைத்த இடைவெளிகளை விடாமல் பயன்படுத்தி அம்புகளைக் கொண்டு இந்திரஜித்தை ஏதோ ஒரு விதமாக தாக்கிக் கொண்டிருந்தான். சாரதி இறந்ததே, இந்திரஜித்தை வருத்தமடையச் செய்தது. முகம் வாடி நின்றவனைப் பார்த்து வானரங்கள் குதூகலத்துடன் லக்ஷ்மணனிடம் வந்து தெரிவித்தன. சரபன், ப்ரமாதி, ரபஸன், கந்த மாதனன் நால்வரும் வேகமாக சென்று இந்திரஜித்தின் விசேஷமான குதிரைகள் மேல் தாவி ஏறினர். மலை போன்ற சரீரம் உடைய இந்த வானரங்கள் எறி அமர்ந்ததும், குதிரைகள் திணறின. குதித்தும், மிதித்தும் அவை அட்டகாசம் செய்ததில் கடையப் பெற்றது போல வருந்தி பூமியில் விழுந்தன. ரதத்தையும் சின்னா பின்னமாக்கி விட்டு வானரங்கள் லக்ஷ்மணனிடம் சென்று நின்று கொண்டன. இதைக் கண்டு ராவணி, வேகமாக லக்ஷ்மணன் அருகில் வந்தான். கால் நடையாக வந்து பாணங்களை பொழியும் எதிரியை, லக்ஷ்மணன் நேருக்கு நேர் நின்று போரைத் தொடர்ந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சௌமித்ரி ராவணி யுத்தம் என்ற தொன்னூறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 91 (498) ராவணி வத| (ராவணன் மகன் இந்திரஜித்தை வதம் செய்தல்)
குதிரையும் மடிந்து விழுந்தபின், தரையில் நின்ற ராக்ஷஸ ராஜ குமாரனான இந்திரஜித், கடும் கோபத்துடன் தானே தன் தேஜஸால் நெருப்பாக ஜ்வலித்தான். இருவரும் வில்லேந்திய வீரர்கள். ஒருவரையொருவர் யுத்தத்தில் கொல்ல விரும்பியவர்களாக கையில் ஆயுதம் எடுத்தவர்கள், வெற்றி இருவருக்கும் எட்டாமல் போக, காட்டில் யானையும், ரிஷபமும் போல த்வந்த யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். படை வீரர்கள் ராக்ஷஸர்களும், வானரங்களும் இடை விடாது மோதிக் கொண்டனர். அது ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது. ராக்ஷஸ வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டியபடி, ஊக்குவித்துக் கொண்டு நடு நடுவில் இந்திரஜித் அவர்களைப் பார்த்துச் சொன்னான். ராக்ஷஸ வீரர்களே| நாலா திக்குகளிலும் இருள் பரவச் செய்யுங்கள். இன்றா நாளையா என்று இந்த வானரங்கள் அறிய முடியாதபடி செய்யுங்கள். நீங்கள் திடமாக ஊன்றி நில்லுங்கள். போரைத் தொடர்ந்து செய்து கொண்டு, வானர வீரர்களை மோகத்திலேயே இருக்கச் செய்யுங்கள். நான் ரதத்தை எடுத்துக் கொண்டு திரும்ப வந்து விடுகிறேன். நான் வரும் வரை இந்த காட்டு மிருகங்களை சமாளியுங்கள். நான் நகரம் போயிருப்பது தெரிந்தால் இவை யுத்தம் செய்யாமல் நிறுத்தி விடுவார்கள். என்று சொல்லி வானரங்களை ஏமாற்றி. அவர்கள் அறியாத வண்ணம் லங்கா நகரின் உள்ளே சென்றான்.
ரதத்தைக் கொண்டு வரும் எண்ணத்துடன், ஊருக்குள் சென்று, ரதத்தை பூஜித்து, ஆயுதங்கள் நிரப்பி, உயர் ஜாதி குதிரைகளைப் பூட்டி, குதிரையின் நடத்தும் முறைகளை அறிந்த சாரதியும், நல்ல முறையில் அவனுக்கு விளக்கிச் சொல்லி, தானும் ரதத்தில் ஏறினான். மந்தோதரி சுதனான இந்திரஜித் முக்யமான ராக்ஷஸ வீரர்களுடன் நகரத்தை விட்டு வெளியே வந்தான். க்ருதாந்தன் (யமன், விதி) அவனை உந்தித் தள்ளியது. எதிரிகளை அழிக்கும் ஆற்றல் மிகுந்த இந்திரஜித் ஊரிலிருந்து வெளிப்பட்டு, வேகமாக லக்ஷ்மணனும், விபீஷணனும் நிற்கும் இடம் வந்து சேர்ந்தான். ரதத்தில் ஏறி நின்ற ராவணாத்மஜனைப் பார்த்து லக்ஷ்மணன், வானர ராஜன், விபீஷணன் அனைவருமே ஆச்சர்யம் அடைந்தனர். அவனுடைய புத்தி கூர்மையையும், லாகவத்தையும் வியந்தனர். ராவணியும், ஆத்திரத்துடன் வானரங்களையும், மற்றவர்களையும் கைக்கு கிடைத்தபடி அடித்து வீழ்த்தலானான். வில்லை மண்டலமாக வைத்துக் கொண்டு நாலா திசைகளிலும் ஒரே சமயத்தில் பாண பிரயோகம் செய்தான். நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக வானரங்கள் அடி பட்டு விழுந்தன. மிகுந்த லாகவத்துடன் வானரங்களை அடித்து கீழே விழச் செய்தான். பொறுக்க மாட்டாமல் வானரங்கள் சௌமித்ரியை சரணம் அடைந்தன. ப்ரஜைகள் ப்ராஜாபதியை சரணமடைவது போல சரணம் அடைந்தன. யுத்தத்தில் காட்ட வேண்டிய இயல்பான கோபத்துடன் சௌமித்ரி, தன் கை வண்ணத்தால் அவன் வில்லை அடித்து தள்ளினான். இந்திரஜித் உடனே மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அதே வேகத்தில் தொடர்ந்தான். இதையும் லக்ஷ்மணன் குறி வைத்து மூன்று பாணங்களால் அடித்து வீழ்த்தினான். வில் முறிந்து கீழே விழுந்தவுடன், ஆலகால விஷம் போன்ற ஐந்து பாணங்களை ஒன்றாக இந்திரஜித்தின் மார்பை குறி வைத்து அடித்தான். பெரிய வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் அவன் பெருத்த உடலை துளைத்துக் கொண்டு கீழே விழுந்தன. ரத்தம் பெருக, அந்த நிலையிலும் மற்றொரு புது வில்லை எடுத்துக் கொண்டு ராவணி போர் செய்ய வந்து விட்டான். இந்திரன் போல இடைவிடாது பாணங்களைப் பொழிந்து லக்ஷ்மணனை அடித்தான். லக்ஷ்மணன் அவைகளைப் பொறுத்துக் கொண்டான். ராவணிக்கு தன் அத்புதமான சக்தியைக் காட்டுவது போல அவன் பாணங்களை தன் சரீரத்தில் வாங்கிக் கொண்டு நின்றான். மூன்று அம்புகளால் தனித் தனியாக தாக்கினான். ராக்ஷஸ ராஜகுமாரனுக்கு சுற்றிலும் வலை பின்னியது போல பாணங்களை தொடுத்தான். அப்பொழுதும் அவன் லக்ஷ்மணனை விடவில்லை. அம்பு மழையாக பொழிவதையும் நிறுத்தவில்லை. அவைகளைத் தன் முன் வரும் பொழுதே வழியிலேயே லக்ஷ்மணன் தடுத்துச் சிதறச் செய்து விட்டான். அவன் ரதத்தையும், சாரதியையும் குறி வைத்து அடித்ததில், சாரதி தலையில் பட விழுந்தான். சாரதி இல்லாமல் குதிரைகள் திகைத்தன. மண்டலமாக அவை ஓடின. இதுவும் அத்புதமான காட்சியாக இருந்தது. ஆத்திரத்துடன் அவனும் லக்ஷ்மணனுக்கு பதிலடி கொடுத்தான். பத்து பாணங்களால் லக்ஷ்மணனை அடித்தான். இதைப் பொறுக்க மாட்டாமல் லக்ஷ்மணனும் ராவணி உடலை கிழிக்கும்படி அடித்தான். ராவணி ஆத்திரம் தாங்காமல் வஜ்ரம் போன்ற பத்து பாணங்களால் திரும்ப அடித்தான். லக்ஷ்மணனின் கவசத்தில் பட்டு அவை திரும்பி வந்தன. கவசம் தான் பிளக்க முடியாதபடி உறுதியாக இருக்கிறது என்று எண்ணி லக்ஷ்மணனின் நெற்றியில் அடித்தான். தன் கை வண்ணத்தையும் ,வேகத்தையும் காட்டுவது போல ப்ருஷத்கம் என்ற ஆயுதத்தால் அடித்தான். நெற்றியில் இந்த ஆயுதம் தைத்தபடி நின்றது. மூன்று சிகரங்களுடன் நிற்கும் மலை போல இருந்தான். இதற்கும் ஐந்து சரங்களை பிரயோகித்து பதிலடி கொடுத்தான். மகா பலசாலியான இருவரும், இந்திரஜித்தும், லக்ஷ்மணனும், இருவரும் சளைப்பவர்களாக இல்லை. இந்திரஜித்தின் சுபமான குண்டலங்கள் மேல் பட்டு அவை அறுந்து விழுந்தன. இருவரும் பெருகும் ரத்தத்தை பொருட்படுத்தவே இல்லை. ஒருவரை ஒருவர் நெருங்குவதிலும், தாக்குவதுமாகவும் இருந்தனர். கிம்சுக புஷ்பம் மலர்ந்தது போல உடல் முழுவதும் காயம். இதன் பின் (சமர கோபேன) யுத்தத்தில் இயல்பாக வரும் கோபத்துடன் விபீஷணனை பல பாணங்களைக் கொண்டு முகத்திலேயே அடித்தான், அயோ முகம் எனும் பாணங்களைக் கொண்டு, மூன்று பாணங்களால் விபீஷணனைத் தாக்கி அதே வேகத்தில் வானர வீரர்களையும் அடித்தான். விபீஷணன் கோபத்துடன் அவன் குதிரைகளைத் தாக்கினான். தன் கை க3தை4யால் குதிரைகளை அடித்து ராவணன் மகன் ரதத்திலிருந்து கீழே இறங்கச் செய்தான். சாரதியும் இறந்து விட, ரத சக்தியை தன் தந்தை வழி உறவினனான விபீஷணன் மேல் பிரயோகித்தான். வேகமாக வரும் அந்த அஸ்திரத்தைக் கண்டு லக்ஷ்மணன், இடையிலேயே அதை தன் பாணங்களால் சிதறச் செய்தான். உடனே விபீஷணன் மார்கணம் எனும் ஆயுதத்தை ஐந்து ப்ரதேசத்தில் ஒரே சமயத்தில் அடிக்கும் படி பிரயோகித்தான். அவை ராவணியைத் துளைத்து அவன் ரத்தத்தை குடித்து நுனி சிவந்து பூமியில் விழுந்தன. இந்திரஜித்தின் கவனம் இப்பொழுது விபீஷணன் பேரிலேயே இருந்தது. யமன் கொடுத்த சக்தி வாய்ந்த ஒரு அஸ்திரத்தை எடுத்தான். அவன் கையில் அந்த அரிய உத்தமமான அஸ்திரத்தைக் கண்டு லக்ஷ்மணனும் அதற்கு சமமான, அதை முறியடிக்கக் கூடிய மற்றொரு பாணத்தை எடுத்தான். குபேரன் ஒரு முறை ஸ்வப்னத்தில் கொடுத்த ஒரு அஸ்திரம் இந்திரனாலும், மற்ற சுராசுரர்களாலும் எதிர்த்து நிற்க முடியாத அரிய ஆயுதம், இதை பிரயோகித்தான். இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகள் தங்களுக்குள் மோதிக் கொள்வது போல இந்த அஸ்திரங்கள் இரண்டும் வழியிலேயே மோதிக்கொண்டன. இரண்டு வீரர்களும் தங்கள் ஸ்ரேஷ்டமான வில்லிலிருந்து அதிசயமான, பலம் வாய்ந்த அஸ்திரங்களை பிரயோகிக்கவும் அந்த இடமே இந்த வீரர்களால் ஜாஜ்வல்யமாயிற்று. ஆகாயத்தையும் தங்கள் தேஜஸால் ஒளி பெற செய்தனர். முகத்தோடு முகம் அடித்துக் கொண்டு இருவரும் விழுந்தனர். இருவர் மார்பிலும் மற்றவரால் அடிக்கப் பெற்ற பாணங்கள் ஏற்படுத்திய காயங்கள் தென்பட்டன.
புகையும், நெருப்புக் கனலும், தீப்பொறியுமாக அஸ்திரங்களின் உரசலால் அந்த இடம் நிறைந்தது. மகா க்ரஹங்கள் போன்ற இருவரும் ஒருவரையொருவர் விழச் செய்து பல முறை மேதினியில் விழுந்து எழுந்தனர். தங்கள் சரம் நடுவில் தடுக்கப் பட்டால் ரோஷமும், வெட்கமும் இருவரும் அனுபவித்தனர். உடனே சமாளித்து வேறு அஸ்திரம் எய்வர். மிகவும் கவனமாக லக்ஷ்மணன் வாருணாஸ்திரத்தை விட்டான். மகேந்திரனை வென்றவனான இந்திரஜித் அதை ரௌத்ரம் என்ற அஸ்திரத்தால் முறியடித்தான். வாருணாஸ்திரம் முறிந்தது. இந்திரஜித் உடனே ஆக்னேயம் என்ற அஸ்திரத்தை தியானித்து தன் அம்பில் எய்தான். உலகத்தை வற்றச் செய்து விடும் நோக்கத்துடன் அதை பிரயோகம் செய்தான். அதை சௌரம் என்ற அஸ்திரத்தால் லக்ஷ்மணன் முறியடித்தான். தன் ஆக்னேயாஸ்திரம் முறியடிக்கப் பட்டவுடன் இந்திரஜித் கோபத்துடன் ஆசுரம் என்ற அஸ்திரத்தை தியானித்து எய்தான். சத்ருக்களை நாசம் செய்யக் கூடிய இந்த மகா கோரமான அஸ்திரம், ஒளி வீசும் கூடம், முத்கரம், சூலங்கள், புசுண்டி, க3தை4கள், வாள், பரஸ்வதம் போன்ற ஆயுதங்களை ஸ்ருஷ்டி செய்து அனுப்பியது. சர்வ சத்ருக்களை நாசம் செய்யும் இந்த ஆசுர அஸ்திரத்துக்கு எதிராக, சௌமித்ரி மாகேஸ்வராஸ்திரம் என்ற அஸ்திரத்தால் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டான். சமமான வீரர்களான இருவருக்கும் இடையில் போர் கடுமையாக இருந்தாலும், காண்போருக்கு அத்புதமாக இருந்தது. ஆகாயத்தில் இருந்த ஜீவர்கள், லக்ஷ்மணனை காப்பாற்ற முனைந்தன.
இதனிடையில் பைரவர்கள் போல வானர ராக்ஷஸ யுத்தமும் நடந்து கொண்டிருந்தது. தேவர்கள் நடப்பதை அறிய கூட்டம் கூட்டமாக ஆகாயத்தில் நின்றனர். ரிஷிகளும், பித்ருக்களும், தேவர்களும் கந்தர்வ, உரக, கந்தர்வர்கள் இந்திரனை முன்னிட்டுக் கொண்டு லக்ஷ்மணனை காத்தனர். ராகவானுஜன், மற்றொரு மார்கணம் என்ற ஆயுதத்தை எடுத்து எய்தான். நெருப்பு போன்று தொட முடியாதபடி தகித்துக் கொண்டு, ராவணன் மகன் உடலை பிளக்கும்படியான ஆயுதம், சுவர்ணம் போல பள பளத்துக் கொண்டு சரீரத்தின் உள்ளே செல்லக் கூடிய பயங்கரமான ஆலகால் விஷம் போன்ற ஆயுதம். ராக்ஷஸர்கள் இதைக் கண்டே நடுங்கினர். இந்த அஸ்திரத்தால் தான் ஒருசமயம் இந்திரன் மகா தேஜஸுடன் அசுரர்களை ஜயித்தான். முன்பொரு சமயம், தேவாசுர யுத்தம் நடந்த பொழுது இந்திரன் இதை பயன் படுத்தினான். யுத்தங்களில் பல முறை உபயோகித்து, தோல்வியே காணாதது என்று புகழ் பெற்ற அஸ்திரம் அது. ஸ்ரேஷ்டமான அந்த அஸ்திரத்தை, ஸ்ரேஷ்டமான தன் வில்லில் பொருத்தி, நர ஸ்ரேஷ்டனான லக்ஷ்மணன் குறி பார்த்து வில்லில் வைத்தபடி, காலன் உலகை அழிப்பது போல அழிக்கக் கூடிய திவ்யாஸ்திரத்தை தியானித்து, வில்லில் பொருத்தியபடியே, மனதினுள் தியானம் செய்தான். ராமன், தர்மாத்மா, சத்ய சந்தன் என்பது உண்மையானால், பௌருஷத்தில் அவனுக்கு இணையாக யாரும் இல்லை என்பது உண்மையானால், சரமே| இந்த ராவணியை கொல். என்று தியானித்து பிரயோகம் செய்தான். காது வரை வில்லின் நாணை இழுத்து, சௌமித்ரி யுத்தம் செய்வதில் வல்லவனான வீரன், இந்திரஜித்தின் மேல் படும்படி அடித்தான். அந்த ஐந்திராஸ்திரம், அவன் தலையை காக்கும் த்ராணம், (ஹெல்மெட்) ஒளி வீசும் குண்டலங்கள், லக்ஷ்மீகரமான முகம், அதை உடலிலிருந்து வேறு படுத்தி பூமியில் விழச் செய்தது. அந்த ராக்ஷஸனுடைய அறுபட்ட தலையுடன், மீதியிருந்த உடல், பூமியில் தடாலென்று விழுந்தது.
ராவணாத்மஜன் அடிபட்டு உயிர் துறந்தவனாக ரத்த வெள்ளத்தில் மிதந்தான். கவசம் அணிந்தவன், தலைக்கு பாதுகாப்பாக த்ராணம் அணிந்து, அடிபட்டு விழும் பொழுது அவன் தன் சரங்களை பாதுகாப்பாக வைக்கும் உறையும் விழ, வானரங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. தேவர்கள் வ்ருத்திர வதம் ஆனவுடன் மகிழ்ந்தது போல மகிழ்ந்தனர். அந்தரிக்ஷத்தில், தேவர்களும், மகரிஷிகளும், கந்தர்வ அப்ஸரஸ் ஜனங்களும், கோலாகலமாக ஆரவாரம் செய்தனர். தங்கள் தலைவன் விழுந்ததை அறிந்து ராக்ஷஸ சேனை, வானரங்கள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, துரத்த, நாலா திக்குகளிலும் ஓடி மறைந்தன. ஆயுதங்களைத் துறந்து லங்கையை நோக்கி எதையும் நினைத்து பார்க்க முடியாதவர்களாக ஓடினார்கள். மிகவும் பயந்தவர்களாக நூற்றுக் கணக்காக கிடைத்த வழியில் ஓடினர். பல விதமான ஆயுதங்களையும் கீழே போட்டு விட்டு ஓடினர். சிலர் வானரங்கள் துரத்த லங்கையில் நுழைந்தனர். சிலர் சமுத்திரத்தில் விழுந்தனர். சிலர் மலையில் ஏறி மறைந்து கொண்டனர். இந்திரஜித் வதம் செய்யப் பட்டானா என்று நம்ப முடியாதவர்களாக., ரண பூமியில் அவன் விழுந்து கிடப்பதைக் காண பொறுக்காதவர்களாக, ராக்ஷஸர்கள் ஆயிரக் கணக்கில் ஓடியவர்களில் யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை. சூரியன் அஸ்தமனம் ஆனவுடன் சூரிய கிரணங்கள் காண கிடைக்காதது போல உடன் மறைந்தனர். இந்திரஜித் என்ற மகா வீரன் போரில் மடிந்து விழுந்தவுடன், ஆதித்யன் தன் ஒளிக் கிரணங்களை உள் வாங்கிக் கொண்டது போலும், நெருப்பு ஜ்வாலையை அடக்கிக் கொண்டது போலவும், உயிரிழந்த அந்த மகா வீரன் பூமியில் கிடந்தான். உடல் முழுவதும் பட்ட காயங்களின் வேதனை தீர்ந்தது. எதிரிகள் தொந்தரவு எதுவும் இன்று தூங்குவது போல இருந்தான். இந்திரஜித் மடிந்தான் என்ற செய்தி தேவ லோகத்தில் இந்திராதி தேவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேவர்கள் கூட்டதோடு இந்திரனும் கலந்து கொண்டான். துந்துபி முழங்கியது. அப்ஸரஸ்த்ரீகள் நடனமாடினர். கந்தர்வர்கள் ஆடிப் பாடினர். ஆகாயத்திலிருந்து புஷ்ப மாரி பொழிந்தது. அத்புதமான காட்சியாக இருந்தது. க்ரூர கர்மாவான அந்த ராக்ஷஸன் வதம் செய்யப் பட்டதை பாராட்டினர். நீர் சுத்தமாக ஆயிற்று. திசைகள் சுத்தமாயின. தைத்ய தானவர்களும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். எல்லோரும் கூட்டமாக வந்து வாழ்த்தினர். சிந்தையின்றி மனக்லேசமின்றி, இனி தைரியமாக நீங்கள் சஞ்சரிக்கலாம் என்று ப்ராம்மணர்களைப் பார்த்துச் சொன்னார்கள். யுத்த பூமியில் சேனைத் தலைவர்களாக இருந்த வானர வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். அளவிட முடியாத எதிர்க்க முடியாத பலசாலி என்று உலகம் கொண்டாடிய இந்திரஜித், ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான வீரன், போரில் தோற்றான், என்றதும், விபீஷணன், ஹனுமான், ஜாம்பவான் மற்றும் முக்கியமான வீரர்கள், விஜயத்தின் காரண கர்த்தாவான லக்ஷ்மணனை வாழ்த்தினர். வானரங்கள் தங்கள் மகிழ்ச்சியை கூக்குரல் இட்டும், கர்ஜனை செய்தும், வெளிப்படுத்தின. லயத்தை அடைந்து விட்ட திருப்தியோடு ராகவனை சூழ்ந்து நின்றன. வாலை அடித்தும், தோள் தட்டியும், வானரங்கள் லக்ஷ்மணனுக்கு வெற்றி என்று முழக்கம் இட்டும், ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டும், மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். தங்களுக்குள் ராகவன் சம்பந்தமான க3தை4களைப் பேசிக் கொண்டனர். மிகக் கடினமான காரியம் இது. இதை செய்து விட்டான் லக்ஷ்மணன் என்று விஷயமறிந்தவர்கள் லக்ஷ்மணனை பாராட்டி பேசினர். தேவர்களும் இந்திரஜித் அழிந்தான் என்று மகா நிம்மதி அடைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணி வத4 என்ற தொன்னூற்று ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 92 (499) ராவணி சஸ்திர ஹத சிகித்ஸா (இந்திரஜித்தின் சரங்களால் பட்ட காயங்களுக்கு சிகித்சை செய்தல்)
சுப லக்ஷணனான லக்ஷ்மணன், உடல் முழுவதும் பெருக்கெடுத்து ஓடும் ரத்தமும், காயமுமாக இருந்தாலும், சக்ரஜேதா, இந்திரனை ஜயித்தவன் என்று புகழ் பெற்ற ராவணன் மகனை வென்றதில் மகிழ்ச்சியடைந்தான். ஜாம்பவானையும், ஹனுமானையும் பார்த்து மற்ற பெரிய வீரர்களையும் அழைத்துக் கொண்டு, சுக்ரீவனும், ராமரும் இருக்கும் இடம் வந்து சேர்ந்தான். ஒரு பக்கம் விபீஷணனும், மறு பக்கம் ஹனுமானுமாக தாங்கி வர, ராமரை அடைந்து வணங்கி நின்றான். அருகில் சென்று இந்திரஜித் வதம் செய்யப் பட்டதை தெரிவித்தான். ராவணியின் தலை லக்ஷ்மணனின் பாணத்தால் துண்டிக்கப் பட்டதை விபீஷணன் விவரித்தான். ராமரும் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்ததை அறிந்து அவனை பாராட்டினார். சாது லக்ஷ்மணா| சந்தோஷம். மிக அரிய வீரச் செயலை செய்து காட்டி விட்டாய். ராவணன் மகனை ஜயித்ததில் யுத்தமே நம் பக்கம் தான். ஜயம் நம் பக்கமே என்பது உறுதியாகி விட்டது. நாம் வெற்றி பெறுவோம் என்று சொல்லி லக்ஷ்மணனை உச்சி முகர்ந்து, லஜ்ஜையுடன் தயங்கி நின்றவனை பலவந்தமாக தன் பக்கம் இழுத்துக் கொண்டு மடியில் இறுத்தி, காயங்களை தடவிக் கொடுத்து, சகோதரனான லக்ஷ்மணனை பார்த்து திரும்பத் திரும்ப மகிழ்ந்தார். ஆயுதங்கள் தைத்து கிழிந்து போன பல இடங்களில் ரத்தம் பெருகுவதைக் கண்டதும், ராமர் மிகவும் வருந்தினார். ஆயினும் வெற்றியடைந்ததால் உண்டான நிம்மதியுடன், அவன் காயங்களுக்கு மருந்து போட்டு சிகித்ஸை செய்வதில் கவனத்தைத் திருப்பினார். புத்திரன் இறந்ததில் ராவணன் பாதிக்கப் பட்டிருப்பான். இனி அவனையும் சுலபமாக வெல்வோம். மிக கஷ்டமான காரியத்தை செய்து விட்டாய். லக்ஷ்மணா| மீதிக் காரியங்களை இனி சீக்கிரமே செய்து விடுவோம். ராவணனுக்கு வலது கரமாக இருந்த இந்திரஜித் அழிந்தான் என்பது அவனுக்கு பெரும் இழப்பே. விபீஷணனும், ஹனுமானும் பெரும் செயல்களை செய்திருக்கின்றனர். ரண பூமியில் அவர்கள் ஆற்றலைக் காட்டி போரிட்டு வந்திருக்கின்றனர். நீங்கள் மூவரும் இரவும் பகலும் போராடி வென்று வந்துள்ளீர்கள். ராவணனுக்கு பெரிய இடியாக இருக்கும் இந்த செய்தி. நிச்சயம் மிகவும் வருந்துவான். புத்திர வதம் அவனை சோகத்தில் ஆழ்த்தும். சீக்கிரமே அவனை படையுடன் சென்று அழிக்கிறேன். லக்ஷ்மணா| நீ தலைமை தாங்கி நடத்திச் செல்லும் பொழுது, சீதையோ, ராஜ்யமோ, எதுவுமே எனக்கு கைக் கெட்டிய தூரத்தில் தான் இருக்கிறது என்ற நம்பிக்கை வருகிறது. இனி அடைய முடியாதது என்று எதுவுமே இல்லை. இந்திரனை வென்றவனையே நீ வென்று விட்டாய். என்று பல விதமாக லக்ஷ்மணனை பாராட்டி மகிழ்ந்தார். சுஷேணனை அழைத்து ராமர், லக்ஷ்மணன் உடலில் அம்புகள் தைத்திருப்பதை நீக்கி, நலமாக ஆகும் வரை. உரிய சிகித்சைகளைச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். விபீஷணனனுக்கும், அதே போல சிகித்சை செய்யுங்கள். இந்த கரடிகள், வானரங்கள் அடங்கிய சேனையில் யாராக இருந்தாலும், காயத்துக்கு மருந்து போட்டு, குத்தி உடைந்து நிற்கும் அம்பு நுனிகளை நீக்கி, வைத்யம் செய்து நலமாக செய்யுங்கள் எனவும், சுஷேணன் கட்டளையை சிரமேற்கொண்டு லக்ஷ்மணனுக்கு சிகித்சையை உடனே தொடங்கினான். விசல்யம் என்ற மருந்தை மூக்கால் நுகர்ந்து பார்த்ததிலேயே பாதி உடல் நலம் பெற்று விட்டதாக லக்ஷ்மணன் உணர்ந்தான். காயங்கள் ஆறி, வேதனை அகல, லக்ஷ்மணன் சுகமாக ஆனான். ராமனின் கட்டளைப்படி, படை வீரர்கள் அனைவருக்கும் உரிய சிகித்ஸை தரப்பட்டது. உடல் உபாதை நீங்கப் பெற்ற வானர வீரர்கள் சுக்ரீவனை சூழ்ந்து கொண்டு, நின்றனர். இதன் பின் ராமன், வானர ராஜாவான சுக்ரீவன், விபீஷணன், ஜாம்பவான், முதலானோர், லக்ஷ்மணன் காயம் நீங்கி பழைய உடல் நிலையை அடைந்ததைக் கண்டு மகிழ்ந்தார்கள். மிக அரியச் செயலை செய்த லக்ஷ்மணனை பாராட்டி பேசி மேலும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணி சஸ்திர ஹத சிகித்ஸா என்ற தொன்னூற்று இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 93 (500) சீதா ஹனனோத்யம நிவ்ருத்தி (சீதையைக் கொல்ல முயன்றதை தடுத்தல்)
ராக்ஷஸ மந்திரிகள், இந்திரஜித் வதமானதை அறிந்து திகைத்தனர். மிக வருத்தத்துடன் ராவணனிடம் தெரிவித்தனர். மகா ராஜா| யுத்தத்தில் லக்ஷ்மணனால் தங்கள் மகன் கொல்லப் பட்டான். விபீஷணன் சகாயம் செய்திருக்கிறான். யுத்தத்தில் இவன் எதிரிகள் சார்பில் நமக்கு துரோகம் செய்திருக்கிறான். சூரன், எந்த யுத்தமானாலும் வெற்றியே அடைந்து வந்துள்ளவன் இந்திரஜித். இவனைச் சார்ந்தவர்களும் தேர்ந்தெடுத்த சூரர்களே. இருந்தும் லக்ஷ்மணனால் கொல்லப் பட்டான். உன் மகன் இந்திரஜித், என்று புகழ் பெற்றவன், பரலோகம் சென்று விட்டான். முடிந்தவரை லக்ஷ்மணனோடு போரிட்டு அவனை வாட்டி எடுத்தான்.
இதைக் கேட்டு ராவணன் பயங்கரமான செய்தியை, புத்திரனின் மரணத்தைக் கேட்டு சொல்லொணாத் துயரம் அடைந்தான். வெகு நேரம் நினைவு இன்றி மூர்ச்சித்துக் கிடந்தவன், சமாளித்துக் கொண்டு எழுந்து வந்தான். புத்ர சோகத்துடன், உடல் தளர, விசித்து விசித்து அழுதான். ஹா, ராக்ஷஸ வீரனே|, சேனையின் தலைவனே| என் குழந்தாய். மகா ரதி என்று புகழ் பெற்று வளைய வந்தாயே. இந்திரனையே ஜயித்து வந்தவன், இன்று லக்ஷ்மணன் கையில் மரணத்தை தழுவினாயோ? உன்னை காலாந்தகன் கூட தொட மாட்டானே. கோபம் கொண்டு நீ பாணங்களைப் பொழிய ஆரம்பித்தால், யாராயிருந்தாலும் நடுங்குவார்களே. மந்தர மலைச் சிகரம் கூட நடுங்கும். இந்த லக்ஷ்மணன் எப்படி ஜயித்தான்? இன்று வைவஸ்வத ராஜா, என் மதிப்புக்குரியவன், அவன் கூட நீ போய் சேர்ந்து விட்டாயா? கால தர்மம் இது. சுத்த வீரர்களுக்கு இது தான் வழி. சுர கணங்களேயானாலும், யாருக்காக போர் புரியச் சென்றார்களோ அவன் பொருட்டு மடிவதால் உத்தமமான கதியை அடைவார்கள். இன்று தேவர்களும், லோக பாலர்களும், ரிஷிகளும், இந்திரஜித் மடிந்தான் என்று கேட்டு நிம்மதியாக உறங்குவார்கள். இன்று மூன்று உலகும், பூமியும், அதன் காடுகளும், நதிகளும் கூட ஒரு இந்திரஜித் இல்லாததால் எனக்கு சூன்யமாகத் தெரிகிறது. ராக்ஷஸ ஸ்த்ரீகள் அந்த:புரத்தில் புலம்பும் சத்தம் கேட்கிறதே. பெண் யானைகள், மலை குகையில் ஓலமிடுவது போல ஒலிக்கிறது. யுவ ராஜ்யம், லங்கை, இந்த ராக்ஷஸ பரிவாரம், உன் தாய், தந்தையான நான், எங்கள் அனைவரையும் விட்டு, மகனே | எங்கு சென்றாய். வீரனே | நான் யம புரி சென்று நீ எனக்குச் செய்ய வேண்டிய அந்திம கிரியைகளை நான் உனக்குச் செய்ய நேர்ந்து விட்டதே. இது என்ன விபரீதம்? சுக்ரீவனும் லக்ஷ்மணனும், ராகவனும் உயிருடன் இருக்கும் பொழுது என் அம்புகளுக்கும் தப்பி பிழைத்து இவர்கள் நிற்கிறார்கள், நீ எங்கே போய் விட்டாய் மகனே. எங்களை பரிதவிக்க விட்டு எங்கு போனாய்? இன்று இவ்வாறு வருந்தி புலம்பும் ராஜா ராவணனை பெரும் கோபம் ஆட்கொண்டது. புத்திரனின் மரணத்தால், பன் மடங்காகிப் போன ஆத்திரம், இயல்பிலேயே கோபக்காரனான ராவணனை மேலும் அதிகமாக கொழுந்து விட்டெரியச் செய்தது. கோடைக் காலத்தில் அர்க்கம், (எருக்கம் செடி, சூரியன் இரண்டையும் குறிக்கும்) சூரிய கிரணத்தால் வாட்டுவது போல நெற்றியிலும், புருவத்திலும் சேர்ந்து அமர்ந்து விட்டது போல கோபம் கொப்பளித்தது. யுக முடிவில் முதலைகள், மற்றும் ஜலத்தில் வாழும் ஜந்துக்களுடன் சமுத்திரம், கொந்தளிப்பது போல தவித்தான். வாயிலிருந்து வெளிப்படையாக ஜ்வாலை வீசியது. விருத்திரனுடைய முகத்திலிருந்து புகையுடன் நெருப்பு வெளி வந்தது போல வந்தது. புத்ர வத சோகமும், தோல்வியின் ஆத்திரமும் சேர்ந்து அவனை ஆட்டிப் படைத்தன. செய்வதறியாது திடுமென வைதேஹியை நினைத்தவன், அவளை வதம் செய்ய தீர்மானித்தான்.
இயல்பாகவே சிவந்த கண்கள் மேலும் சிவந்து, கோபாக்னி கனல் வீச, கண்கள் இரண்டும் தீப பந்தங்கள் போல ஜ்வலித்தன. இயல்பிலேயே பயமுறுத்தும் உடல் வாகு. கோபமும் சேர்ந்து, சாக்ஷாத் ருத்ரனே வந்து நின்றது போல நின்றான். இந்த கோபத்துடன் விழித்த கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. எரியும் விளக்கிலிருந்து வடியும் எண்ணெய் துளிகள் போல கண்டன. பற்களைக் கடிக்கும் பொழுது ஏற்பட்ட சப்தம் நாராசமாக கேட்டது. பெரிய யந்திரத்தை தானவர்கள் சுழற்றுவது போல கேட்டது. காலாக்னி போல கோபத்துடன் அவன் பார்வை சென்ற இடங்களில் எல்லாம், ஆங்காங்கு இருந்த ராக்ஷஸர்கள் பயத்தால் நடு நடுங்கினர். சராசரங்களை ஒட்டு மொத்தமாக தகிப்பது போல கோபத்துடன் கொந்தளிக்கும் அவனைக் காணவே, அந்தகன் போல பார்க்கும் அவன், பார்வையை தவிர்த்து ராக்ஷஸர்கள் அசையாது நின்றனர். மகா கோபத்துடன் ராவணன், ராக்ஷஸர்கள் நடுவில் நின்றபடி சொன்னான். என்னால் மிகக் கடுமையான விரதங்கள் அனுஷ்டித்து ஆயிர வருஷங்கள் தவம் செய்யப் பட்டது. அந்தந்த சமயங்களில் ஸ்வயம்பூவான ப்ரும்மாவை மகிழ்ச்சியாக செய்திருக்கிறேன். இந்த தவ வலிமையாலும், ஸ்வயம்பூவின் அனுக்ரஹத்தாலும் இது வரை நான் தேவர்களிடமோ, அசுரர்களிடமோ பயம் என்ற சொல்லையே அறியாமல் இருந்து வந்திருக்கிறேன். ப்ரும்மா கொடுத்த கவசம் எனக்கு பாதுகாப்பாக இருக்கும். ஆதித்யன் போன்று ஒளி மிகுந்த கவசம் இது. தேவாசுர யுத்தங்களில் இந்திரன் வஜ்ரத்தாலும் பிளக்க முடியாத சக்தி வாய்ந்த கவசம். இன்று இதையணிந்து ரதத்தில் ஏறி போர் முனைக்குச் செல்வேன். இன்று என்னை யார் எதிர்த்து நிற்கிறார்கள் பார்க்கலாம். என் தவத்தால் மகிழ்ந்து ஸ்வயம்பூ, சரங்கள், வில்லுடன் சேர்த்து தேவாசுர யுத்த சமயத்தில் எனக்குக் கொடுத்தார். நூற்றுக் கணக்கான அம்புகளுடன் என் வில்லை தயார் செய்யுங்கள். ராம லக்ஷ்மணர்களை வதம் செய்யவே நான் போர்க்களத்தில் இறங்கப் போகிறேன். புத்ர வதம் மனதை வாட்ட, சுபாவமாகவே க்ரூரமான குணம் உடையவன். மேலும் கொதிப்புடன் பேசினான். சற்று யோசித்து ராவணன் சீதையை கொல்வது என்று முடிவு செய்தான். தாம்ர வர்ண கண்கள் மேலும் சிவக்க, பேசக் கூட தயங்கி தீன ஸ்வரத்தில் பதில் அளித்துக் கொண்டிருந்த ராக்ஷஸர்களைப் பார்த்து என் மகன் வானரங்களை ஏமாற்ற மாயையால் சீதா வதம் செய்தானே, அதை உண்மையாக ஆக்குகிறேன். அது தான் எனக்கு மன சாந்தியை அளிக்கக் கூடியது. க்ஷத்திர பந்துவை (வசைச் சொல்) மனதில் நினைத்து அவனையே நம்பிக் கொண்டிருக்கும் சீதையை நாசம் செய்வேன். இவ்வாறு மந்திரிகளிடம் சொல்லி விட்டு தன் வாளின் மேல் கையை வைத்தான். விமலமான உறையிலிருந்து அதை உருவி எடுத்துக் கொண்டு, மந்திரிகளும், மனைவியும் இருந்த அந்த சபையிலிருந்து, புத்ர சோகம் கண்களை மறைக்க, உருவிய வாளோடு சீதை இருக்கும் இடம் சென்றான்.
வேகமாக வெளியேறிய ராக்ஷஸ ராஜனைப் பார்த்து சில ராக்ஷஸர்கள் சிம்ம நாதம் செய்தனர். ஒருவரை ஒருவர் கலந்தாலோசித்து ராக்ஷஸன் கோபத்துடன் இருப்பதையறிந்து, இன்று இவனைக் கண்ட மாத்திரத்தில் மனித ராஜ குமாரர்கள் இருவரும் தவிக்கப் போகின்றனர் என்று பேசிக் கொண்டனர். நான்கு லோக பாலர்களையும் இதே போல கோபத்தால் தான் ஜயித்தான். பல சத்ருக்களை போர்களில் வென்று வந்தான். மூன்று உலகங்களிலும் இருந்த உயர்ந்த ரத்னங்களைக் கவர்ந்து வந்தான். விக்ரமத்திலும், பலத்திலும் பூவுலகில் இவனுக்கு சமமாக யாரும் இல்லை. இப்படி பேசிக் கொண்டே அசோக வனத்தைச் சென்றடைந்தனர். வைதேஹியை கொல்ல வேகமாக செல்லும் ராவணனை நண்பர்களும், ஹிதத்தைச் சொல்லும் உற்றாரும் தடுத்தனர். லட்சியம் செய்யாமல் கேது கிரகம், ரோஹிணியைத் துரத்துவது போல துரத்திச் சென்றான். ராக்ஷஸிகளின் பாதுகாவலில் இருந்த மைதிலி, கொடூரமாக, ஆயுத பாணியாக ஆத்திரத்துடன் வரும் ராக்ஷஸ ராஜனைக் கண்டாள். பலரும் தடுத்தும் கேளாமல் ஆவேசமாக வருபவனைப் பார்த்து மைதிலி வருந்தினாள். துக்கத்துடன் புலம்பியபடி சொன்னாள். இதோ, என்னைக் கொல்ல வருபவன், இதே ஆவேசத்தோடு என் நாதனையும் கொல்லப் போனான். என் நாதன் இருக்கும் பொழுதே அனாதை போல என்னைக் கொல்ல வந்திருக்கிறான். பலவிதமாக என்னை தூண்டிப் பார்த்தான். பதியை அனுசரித்துச் செல்லும் என்னை அதை விட்டு, என்னுடன் வா, என்னுடன் குலாவி மகிழ்ந்து இரு என்று போதனை செய்தான். நான் அதை ஏற்றுக் கொள்ளாததால் கொன்று போட்டு விட தீர்மானித்து விட்டான் போலும். நிராசை காரணமாக என்னை தீர்த்து கட்டி விட தீர்மானித்து விட்டான், க்ரோதமும், மோகமும் அவன் கண்களை மறைக்கிறது. அதனால் தான் இப்படி ஒரு முயற்சி. துர்புத்தி மட்டும் தானா. அல்லது நர வ்யாக்ரர்கள் என்று போற்றப் படும் ராஜ குமாரர்கள், என் காரணமாக யுத்தத்தில் தோல்வியை அடைந்து விட்டார்களா? ஆ என்ன கஷ்டம். என் பொருட்டு ராம லக்ஷ்மணர்கள் நாசம் அடைவதா? அல்லது புத்திர சோகத்தால் ராம லக்ஷ்மணர்களைக் கொல்லாமல் என்னை கொன்று விடுவதாக முனைந்து விட்டான் போலத் தோன்றுகிறது. பாபமே எண்ணம் கொண்டவன். ஹனுமான் சொல்லையும் நான் கேட்கவில்லை. என் கெட்ட காலம். அவன் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு ராமனிடம் சேர்ப்பதாகச் சொன்னான். அது எனக்கு சம்மதமாக இருக்கவில்லை. கணவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்திருப்பேனோ. இப்படி கவலைப் பட வேண்டி இருந்திருக்காது. கௌசல்யை எப்படி இந்த செய்தியை ஏற்பாள். அந்த தாய் உள்ளம் உடைந்து போகாதா? ஒரு மகனைப் பெற்றவள். அவனும் போரில் மடிந்தான் என்று கேட்டால், அவள் எப்படித் தாங்குவாள். இப்படி ஒரு நிலையில் அழுது கொண்டிருக்கும் போது மகன் பிறந்ததையோ, வளர்ந்து குழந்தை பருவத்தில் விளையாடியதோ, யௌவனமோ உடனே நினைவுக்கு வராது. நிராசையுடன் கொல்லப்பட்ட தன் மகனுக்கு சிரார்தம் எப்படி செய்வாள். நிச்சயம் அக்னியில் விழுவாள், அல்லது நீரில் மூழ்குவாள். இந்த குப்ஜை (கூனீ) வந்து அனைத்தையும் கெடுத்தாள். தி4க், அவள் நாசமாக போகட்டும். பாபத்தையே குறியாக கொண்ட மந்தரை எங்கிருந்தோ வந்து சேர்ந்தாள். அவள் பொருட்டு தான் கௌசல்யா இப்பொழுது இப்படி ஒரு துக்கத்தை அனுபவிக்கிறாள். இப்படி புலம்பி வருந்தும் சீதையைப் பார்த்து ரோஹிணி சந்திரன் இல்லாமல், கிரக வசம் தவிப்பது போல இருந்தவளை ராக்ஷஸ ராஜாவின் மந்திரிகளில் ஒருவர், சுபார்ஸ்வோ என்ற பெயருடைய அறிஞர், ராவணனுக்கு நல்ல புத்தியை சொன்னார். மற்ற மந்திரிகள் தடுத்தும் கேளாமல் அரசனுக்கு அறிவுரை சொல்ல முனைந்தார்.
த3சக்3ரீவா, சாக்ஷாத் வைஸ்ரவனுடைய சகோதரனே, உன் புத்தி ஏன் இவ்விதம் செல்கிறது. நீ செய்யக் கூடிய காரியமா இது. வைதேஹியைக் கொல்ல க்ரோதத்துடன் முடிவு எடுத்தாயா? இது என்ன தர்மம்? வேத வித்யைகளை கற்றுத் தேர்ந்தவன், தன் செயலில் எப்பொழுதும் முழு ஈ.டுபாட்டுடன் செய்து வருபவன் ஒரு ஸ்த்ரீயை வதம் செய்ய எப்படித் துணிந்தாய். ரூப சம்பன்னாம்- அழகிய உருவம் உடைய மைதிலியை சற்று கவனித்து பார். அரசனே | இந்த கோபத்தை எங்களுடன் சேர்ந்து ராமனிடத்தில் காட்டு. இன்றே கிருஷ்ண பக்ஷ சதுர்தசி. இன்று உடனே போருக்கு புறப்படு. சத்ரு சைன்யத்தை அழித்து வெற்றி வீரனாக வா. உன் படையினர் நல்ல வீரர்கள். சூரனாக, புத்தி மானாக, நல்ல ரதத்தில் ஏறி, வாள் ஏந்தி, உயர் ரக ரதத்தில் அமர்ந்தவனாக, தாசரதியை கொன்று விட்டு வா. மைதிலியை அடைவாய். என்ன காரணத்தாலோ, நட்புடன் இந்த மந்திரி சொன்னது ராவணனுக்கு சம்மதமாக இருந்தது. துராத்மா. இதன் பின் தன் மாளிகைக்கு திரும்பச் சென்று சபையைக் கூட்டினான்.
இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சீதா ஹனனோத்3யம நிர்விருத்தி என்ற தொன்னூற்று மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 94 (501) கா3ந்த4ர்வாஸ்திர மோகனம் காந்தர்வாஸ்திரத்தைக் கொண்டு மயங்கச் செய்தல்)
தன் அரண்மனையில் பிரவேசித்த ராவண ராஜா, துக்கத்தின் எல்லையில் இருந்தான். கோபம் கொண்ட சிங்கம் போல, பெரு மூச்சு விட்ட படி, ஆசனத்தில் அமர்ந்தான். கூடியிருந்த மகா பலசாலிகளான படைத் தலைவர்களைப் பார்த்து கை கூப்பி வணங்கினான். புத்ரனின் மரணத்தால் பாதிக்கப் பட்டிருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. தாங்கள் எல்லோரும், யானையோ, குதிரையோ எது சௌகர்யமோ, வாகனங்களில் பூட்டிக் கிளம்புங்கள். ரதங்களில் வருபவர்கள் வரட்டும். கால் நடையாக வரும் பதாதிகளும், வரட்டும். ஒரு ராமனை இந்த யுத்தத்தில் குறி வைத்து போரை நடத்துங்கள். மழைக்கால மேகம் நீரை வர்ஷிப்பது போல, பாண மழை பொழிந்து இவனை வதம் செய்யுங்கள். அல்லது நானே தீக்ஷ்ணமான என் பாணங்களால் இந்த ராமனது சரீரத்தை பிளந்து, உலகம் முழுவதும் காண, ராமனை நான் உங்கள் அனைவருடைய உதவியுடன் வதம் செய்கிறேன். இப்படி ராக்ஷஸ ராஜன் பேசி உத்தரவு கொடுத்தவுடன், மற்ற ராக்ஷஸ மந்திரிகள் வெளியேறி, வேகமாக தங்கள் ரதங்கள், குதிரை இவைகளில் ஏறி போர் முனைக்குச் செல்லத் தயாரானார்கள்.
பரிகங்களையும், பட்டஸங்களையும், அம்பு, வாள், பரஸ்வதங்கள், சரீரத்தை பிளந்து உயிரைக் குடிக்கும் பல ஆயுதங்களை வானரர்கள் மேல் விட்டனர். வானரங்களும் தங்கள் ஆயுதமான மரக் கிளைகளையும், கற்களையும் ராக்ஷஸர்கள் மேல் வீசி அடித்தனர். பெரும் போர் நடந்தது. சூரியோதயம் வரை ராக்ஷஸ வானரங்களின் சண்டை இடை விடாது தொடர்ந்தது. விசித்ரமான பல கதாயுதங்களையும், ப்ராஸங்களையும், வாட்களையும், பரஸ்வதங்களையும் உபயோகித்து வானரங்களை அடித்து நொறுக்கினார்கள். இந்த யுத்தம் இப்படி நடந்து கொண்டு இருக்கும் பொழுது பெரும் புழுதி படலம் எழுந்து கண்களை மறைத்தது.
ராக்ஷஸர்கள், வானரங்கள் எல்லோருமே சூடான காற்றின் வேகத்தில், கண்ணீரும் பெருக, நின்றனர். யானைகளும், ரதத்தில் பூட்டியிருந்த குதிரைகளும் கூட இந்த புழுதியால் பாதிக்கப் பட்டன. த்வஜம் கட்டியிருந்த மரம் இவையும் ஆட்டம் கண்டன. சரீரம் உடைய அனைவரும் உஷ்ணமான கண்ணீரைப் பெருக்கினர். கண்களை மறைத்த புழுதியின் ஊடே த்வஜங்கள் கட்டியிருந்த ரதங்கள், குதிரைகள், மற்றும் பல விதமான ரதங்கள், வாகனங்கள் இவற்றின் மேல் ஏறிக் குதித்தும், இறங்கியும், தாவித் தாவி குதித்தும் ஓடியும் அழித்து நாசமாக்கினார்கள். ராக்ஷஸர்களின் கேசத்தையும், காதுகளையும் நெற்றி, மூக்குகளில் தங்கள் கூர்மையான நகங்களாலும் பற்களாலும் குத்தியும், கடித்தும் கிழித்தனர். ஒவ்வொரு ராக்ஷஸனையும் சூழ்ந்து நூற்றுக் கணக்கான வானரங்கள் நின்றன. துரத்தின. பழம் நிறைந்த மரத்தை பறவைகள் மொய்ப்பது போல மொய்த்தனர். பர்வதம் போன்ற பெரிய உருவமுடைய ராக்ஷஸர்கள் இந்த தொல்லையை பொறுக்க முடியாமல் திணறினர். அவர்கள் வசம் இருந்த பெரும் க3தை4களையும், ப்ராஸங்களையும், வாள்களையும், பரஸ்வதங்களையும் பிரயோகிப்பது கூட சிரமமாக இருந்தது. முடிந்த வரை இந்த ஆயுதங்களால் அடித்தனர். ராக்ஷஸர்கள் கூட்டம் பெரும் சேனையாக வானரங்களை சரமாரியாக அடிக்கவும், அவை ஓடிச் சென்று ராமரை சரணடைந்தன. உடனே வில்லை எடுத்துக் கொண்டு, ராமர் வந்து ராக்ஷஸ சைன்யத்துடன் நேரடியாக மோதி, பாணங்களை மழையாக பொழிந்தார். ராமர் நுழைந்ததும், ஆகாயத்தில் மேகங்கள் சூரியனை நெருங்க முடியாதது போல, ராக்ஷஸர்களும் தவித்தனர். நெருங்க முடியாமல், அவன் கை லாகவத்தைக் கண்டு திகைத்தனர். வேகமாகவும், தெளிவாகவும் குறி வைத்து அடித்ததைக் கண்டு வியந்தனர். பெரும் படையை நடத்திச் சென்று கொண்டு, பெரிய பெரிய ரதங்களை கூட நாசமாக்கியபடி சென்ற ராமரைக் கண்டு, காட்டில் தன்னிச்சையாக செல்லும் வாயுவின் கதியோ என்று நினைத்தனர். சின்னா பின்னமாகி, அம்புகளால் எரிந்தும், உடைந்தும், ஆயுதங்கள் தாக்கி உடைந்தும், படை பலம் நாசமாவதைக் கண்டனர். ஆயினும் ராமர் தன் நிதானத்தை இழக்காமல் இருப்பதைக் கண்டனர். உடலில் அடிபட்ட பொழுது கூட எதிரில் ராமர் நின்று, அடித்ததாக நினைக்கவில்லை. இந்திரியங்களின் பொருட்டு நிற்கும் பூதாத்மாவைக் காணும் ப்ரஜைகளைப் போல இருந்தனர். இதோ இவன் யானைக் கூட்டத்தை அழித்து விட்டான். இதோ இவன் ரதத்தில் ஏறி வந்த பெரிய வீரனை வதம் செய்து விட்டான். இதோ இவனுடைய கூர்மையான பாணங்கள் கால் நடையாக வரும் போர் வீரர்களை அடித்து விழச் செய்து விட்டது. குதிரைகளின் மேல் பவனி வரும் வீரர்களுக்கும் அதே கதியே. இப்படி அருகில் நின்றவனை ராகவனாக கண்டு, தங்களைத் தாங்களே அடித்து மாய்த்துக் கொண்டனர். ராகவன் போலவே உருவம் கொண்டு விட்ட வீரர்கள், தங்களைப் பற்றி தெரியாததால் அருகில் இருந்தவனை ராகவனாக அடையாளம் கண்டு கொண்டு மாய்த்தனர். ராகவனுடைய விசேஷமான காந்தர்வாஸ்திரத்தால் மோகம் கண்களை மறைக்க, ராமர் எதிரி படையை கலக்கி, அழித்துக் கொண்டு வருவதை கண்டாரில்லை. அந்த ராக்ஷஸார்கள் ஆயிரக் கணக்கான ராமர்களை அந்த ரண பூமியில் கண்டனர். திரும்பிப் பார்த்தால் ஒருவன் தான் காகுத்ஸன், ராகவனாக ரண களத்தில் இறங்கி போரில் மூமூழ்கியிருப்பவனைக் கண்டனர். சுற்றும் சக்கரத்தில் ஆரங்கள் தெரியாதது போல, ராமரைக் கண்களால் காண முடியவில்லை. அந்த ராம சக்கரம், கால சக்கரம் போலவே சுழன்றது. ராக்ஷஸர்களைக் கொன்று குவிக்கும் திவ்யாஸ்திரங்கள் நிரம்பி இருந்த தூணியையும், தேஜஸ், புத்தி, இந்த குணங்கள் பிரகாசமாகத் தெரிய, வில்லிலிருந்து நாணை உதறிக் கொண்டு புறப்பட்டுச் செல்லும் அம்புகளின் ஓசை இடைவிடாது நாதமாகக் கேட்க, உயர்ந்த வில்லும், சரங்களை வைக்கும் தூணியுமாக சத்வ குணமே உருக் கொண்டு வந்தது போல ராமரைக் கண்டனர். நாளின் எட்டாவது பாகம் ராமர் ரண களத்தில் இறங்கி ஒருவனாக ராக்ஷஸர்களை வதம் செய்ததைக் கண்டனர். விருப்பம் போல உருவம் எடுக்க வல்ல ராக்ஷஸர்கள், இவர்களின் பத்தாயிரம் படைகள், காற்று வேகத்தில் பறக்கும் ரதங்கள், பதினெட்டு யானைப் படைகள், உயர் ஜாதி யானைகள் வேகமாக செல்லக் கூடியவை, பதினான்கு ஆயிரம் குதிரை மேல் ஏறி வந்த ராக்ஷஸ போர் வீரர்கள், இரண்டு நூறாயிரம் , இதுவரை கால் நடையாகவே வந்த பதாதீ எனும் படை வீரர்கள், நாளின் முடிவில் இறந்து பட்டனர். குதிரைகளை இழந்தவர்கள், ரதத்தை இழந்தவர், த்வஜம் கீழே விழுந்து தோல்வியைத் தழுவியவர்கள், அதனால் மன வருத்தம் அடைந்தவர்கள், இப்படி தங்கள் வேஷம் கலைந்தவர்களாக நிசா சரர்கள் லங்கையை நோக்கித் திரும்பிச் சென்றனர். திடுமென கோபம் கொண்டு ருத்ரன் விளையாடியது போல ருத்ர தாண்டவம் நடந்த இடம் போல, இறந்து கிடந்த யானையை, குதிரைகளை, உடைந்த ரதங்களுமாக அந்த ரண பூமி காட்சியளித்தது. இதன் பின் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், சாது,சாது என்று ராமனின் செயலைப் பாராட்டினர். சுக்ரீவன், ஹனுமான், தர்மாத்மாவான விபீஷணன், ஜாம்பவான், மைந்த, த்விவிதர்கள் இருந்த கூட்டத்தில் ராமர் சொன்னார். இந்த திவ்யமான அஸ்திர பலம், எனக்கும் த்ரயம்பகனுக்கும் மட்டுமே தெரிந்த வித்தை என்றார். அந்த பெரிய ராக்ஷஸ சைன்யத்தை வதம் செய்து விட்டு இந்திரனுக்கு சமமான மகாத்மாவாக ராமர், அஸ்திரங்களாலும் சஸ்திரங்களாலும் வெற்றி கொண்டு நின்றதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த தேவர்களால் துதிக்கப் பட்டார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கா3ந்த4ர்வாஸ்திர மோஹனம் என்ற தொன்னூற்று நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 95 (502) ராக்ஷஸி விலாப| (ராக்ஷஸிகளில் புலம்பல்)
இப்படி ஆயிரக் கணக்கான படை வீரர்கள், குதிரைகளில் ஆரோகித்துச் சென்றவர்கள், ரதங்களில் சென்றவர்கள், த்வஜங்களுடன் அக்னி வர்ணமாக ஜொலித்த ஆயிரக் கணக்கான ரதங்கள், க3தை, பரிகம் என்று ஆயுதங்களைச் சுமந்து சென்ற ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள், தீக்ஷ்ணமான பாணங்களால் அடிபட்டு, உயிர் துறந்தனர். அல்லது வாகனங்களையும் ரதங்களையும் விட்டு உயிர் தப்பி ஓடி மறந்தனர். இவை அனைத்தையும் ராமர் ஒருவராகச் செய்தார் என்று கேட்டவர்களும், கண்ணால் கண்டவர்களும், மிகவும் பரபரப்பும், பயமும் அடைந்தார்கள். ராக்ஷஸிகளும் கூட்டம் கூட்டமாக தீனர்களாக செய்வதறியாது கவலையுடன் நின்றனர். கணவனை இழந்தவர்கள், புத்ரனை, பந்துக்களை இழந்தவர்கள் என்று பரிதவிக்கும் ராக்ஷஸிகள் கூட்டமாக ஆங்காங்கு கூடி நின்று புலம்பினர். இந்த சூர்ப்பணகை புத்தி ஏன் இப்படி போயிற்று? வயது முதிர்ந்தவள். கோரமான முகம் உடையவள். பெருத்த வயிறும், இவளும், வனத்தில் கந்தர்ப்பனே (மன்மதனே) உருவம் எடுத்து வந்தது போல இருக்கும் ராமனைக் கண்டு மோகம் கொண்டாள். சுகுமாரன் நல்ல பண்புடையவன். உலகத்தில் ஜீவ ராசிகள் அனைத்துக்கும் நன்மையையே செய்ய நினைக்கும் உத்தமமான குணம் உடையவன். அவனைக் கண்டு இவள் மோகம் கொண்டாளாம். உலகமே இவளை வதம் செய்ய காத்து நிற்கிறது. ரூபம் சிதைந்து முதுமை எய்திய நிலையில் இவள் மனதில் காமம் நிறைந்து நிற்கிறதா? குணம் என்று எதுவுமே இல்லாதவள், குணக் குன்றான ராமனை விரும்பினாளே. ராமன் பேசினால், வார்த்தைக்கு வார்த்தை ஜனங்கள் அப்படியே கேட்பார்களே. (ஔஜஸ்-என்ற வார்த்தையின் பொருள் இந்த ஓஜஸ் உடையவன் சொல் எடுபடும். எந்த நிலையிலும் அழகான வார்த்தைகளைச் சொன்னாலும், ஏனோ தானோவென்று சொன்னாலும் இவன் சொல் கேட்பவர்களை உடனே பணியச் செய்யும். தேஜஸ் வேறு. ஓஜஸ்தேஜோ த்4fயுதி த4ர| -என்று சஹஸ்ர நாமத்தில் வரும். மஹொஜஸம் என்று ராமரை வர்ணிக்கிறார்கள்.) சுமுகமான ராமனை இந்த துர்முகி கண்டு காம வசம் அடைந்தாளாம். ராக்ஷஸி, நம் ஜனங்களின் அல்ப பாக்யம் . அது தான் இந்த நரைத்த தலை கொண்ட முதியவளை, செய்யக் கூடாத செயலை, நகைப்புக்கு இடமான செயலை செய்யத் தூண்டியிருக்கிறதோ. உலகத்தில் யார் தான் இதைக் கேட்டு அருவருத்து ஒதுக்க மாட்டார்கள்? ராக்ஷஸர்களின் விநாசத்திற்காக, தூ ஷணனும், க2ரனும், போரில் மடிய வேண்டும் என்ற தெய்வ சங்கல்பம் நிறைவேறத்தான் போலும். இந்த கோரமான ஸ்த்ரீ ரூபம் கொண்ட ராக்ஷஸி, ராகவனை போய் இம்சித்தாள் போலும். இந்த கஷ்டங்களுக்கு அது தான் மூல காரணம் இப்பொழுது நாம் அனுபவிக்கிறோம். அதன் காரணமாகத் தானே ராவணன் மனதில் விரோதம் வளர்ந்தது. தசக்ரீவன் சீதையைக் கொண்டு வந்தான். வதம் செய்ய நினைத்தான். என்ன ஆனாலும் இந்த ராவணன், ஜனகாத்மஜாவான சீதையை அடைய முடியப் போவதில்லை. இவள் காரணமாக பல சாலிகளான எதிரிகளுடன், அளவில்லாத வைர பாவம் விரோதம் ராவணன் மனதில் வளர்த்துக் கொண்டு, பொறாமையும் கோபமுமாக நிறைந்து நிற்கிறான். முன் விராதன், வைதேஹியைக் கடத்திச் சென்று, அவளை தனக்குத் தரும் படி ராமனிடம் கேட்டபொழுது என்ன நடந்தது என்பது தெரியாததா? ஒரே பாணத்தால் அவனை வீழ்த்தி வதம் செய்து விடவில்லையா. நிதர்சனமாக நாம் கண்ட உண்மை இது. அது தான் இப்பொழுதும் நடக்கப் போகிறது. பயங்கரமான ஆற்றல் படைத்த ராக்ஷஸர்களின் பதினாலாயிரம் வீரர்கள் ஜனஸ்தானத்தில் ராமனை எதிர்த்து நின்று நிமிஷ நேரத்தில் அவனுடைய கூரான, அக்னி சிகா,- தீயின் நாக்கு போன்ற அம்புகளால் அடிபட்டு மாண்டார்களே. கரனும் அழிக்கப் பட்டான். யுத்தத்தில் தூஷணனும், த்ரிசிரஸும் மாண்டார்கள். ராமனுடைய பாணங்கள் ஆதித்யன் தாக்கியது போல தாக்கியதைக் கண் கூடாகக் கண்டோமே. யோஜனை தூரம் நீண்ட கைகளையுடைய கபந்தனும், இந்த ராமனுடைய ஆற்றலால் மாண்டான். ரத்தத்தின் ருசி கண்ட கபந்தன், அலறிய அலறல், நாம் கண் கூடாக கண்டு கேட்டதே. அது போதாதா.? சஹஸ்ர நயனனான இந்திரன் குமாரன் வாலி, அவனை ராமன் வதம் செய்தான். மேரு மலை போல பெருத்த சரீரம் உடையவன் வாலி. இதையும் நாம் கண் கூடாகக் கண்டோம். ருஸ்ய மூக மலையில் ஒளிந்து, எந்த வித எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இன்றி, தீனனாக சுற்றிக் கொண்டிருந்தான் சுக்ரீவன். அவனை ராஜ்யத்தில் அமர்த்தி, அரசனாக அபிஷேகம் செய்வித்தான். இந்த நிதர்சனமான செயல் போதாதா? ராமனின் ஆற்றலை நாம் அறிந்து கொள்ள. ஒரே ஒரு வாயு புத்திரன் லங்கை வந்து சேர்ந்தான். ராக்ஷஸர்களுடன் போரிட்டு, இந்த லங்கை நகரையும் எரித்து விட்டு திரும்பி போய் விட்டான். இது போதாதா? ராமனின் ஆற்றலை நாம் தெரிந்து கொள்ள? வானரக் கூட்டத்தை வைத்துக் கொண்டு, சமுத்திரத்தை அடக்கி அதன் மேல் சேதுவைக் கட்டி, அதன் மேல் கால்களால் நடந்தே கடந்து வந்து விட்டானே. இந்த செயல் போதாதா? அவன் ஆற்றலை நாம் துல்லியமாக தெரிந்து கொள்ள. எல்லா ராக்ஷஸர்களுக்கும் ஹிதமானதும், தர்மார்த்தம் சகிதமான நல்ல வார்த்தையைத் தான் விபீஷணன் சொன்னான். அது மோகத்தில் மூழ்கிய நம் அரசனுக்கு ஏற்கவில்லை. த4னத3ன் எனும் குபேர சகோதரன் நம் ராஜா. விபீஷணனின் அறிவுரையை ஏற்று ராவணன் நடந்து கொண்டிருந்தால், இந்த லங்கை இப்பொழுது மயான பூமி போல வாடி வதங்கி கிடக்காது. துக்கத்தில் மூழ்கிக் கிடக்காது. மகா பலசாலியான, கும்பகர்ணன் வதம் செய்யப் பட்டான் என்று தெரிந்தவுடனேயே, நிறுத்தியிருக்கலாம். வீரனான அதிகாயனையும், லக்ஷ்மணன் கையால் மரணமடைய அனுமதிக்காமல் இருந்திருக்கலாம். பிரியமான புத்திரன் இந்திரஜித்தையும், இழந்த பின்னும் ராவணன் விழித்துக் கொள்ளவில்லையே. ராக்ஷஸிகளின் குலத்தில் என் மகன், என் சகோதரன், என் கணவன் யுத்தத்தில் மாண்டான் என்று ஒவ்வொருவரும் அழுது அரற்றிக் கொண்டிருக்கிறார்கள். நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக, ரதங்கள் அஸ்வங்கள், யானைகள் இந்த போரில் அழிந்தன. கால் நடையாக சென்ற போர் வீரர்களும் சூரனான ராம சைன்யத்தின் முன் நிற்க முடியாமல் தோற்று மாண்டனர். ருத்ரனோ, விஷ்ணுவோ, மகேந்திரனோ, நூறு யாகம் செய்த இந்திரனோ, இவர்களில் யாரோ தான் ராம ரூபத்தில் வந்து நம்மை வதைக்கிறார்கள். அல்லது காலன், (யமன்) தானே ராம ரூபம் எடுத்துக் கொண்டு வந்து ராக்ஷஸ குலத்தை நாசம் செய்யப் புறப்பட்டிருக்கிறானோ. வாழ்வில் நம்பிக்கையிழந்து நிராசையுடன் நாம் காலத்தை கழிக்கிறோமே, நாமும் பார்க்கப் போனால் வதம் ஆனவர்களே. அந்த நிலையில் தான் உயிரைப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த பயத்திற்கு முடிவு ஏது? விடிவு காலம் ஏது? அனாதைகளாக இப்படிப் புலம்புகிறோமே, நமக்கு யார் ஆதரவு தருவார்கள். ராவணன் சூரன் தான். நிறைய வரங்கள் கிடைக்கப் பெற்று ஆற்றல் மிகுந்தவன் தான். இப்படி ஒரு பயம் ராம ரூபத்தில் வந்து நிற்பதை ஏன் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறான் ? தேவர்களோ, கந்தர்வர்களோ, பிசாசங்களோ, ராக்ஷஸர்களோ, ராமனை எதிர்த்து நிற்கும் ஒருவனை, காப்பாற்றவோ, மீண்டும் உயிர்ப்பிக்கவோ முடியாது. ஒவ்வொரு நாள் யுத்தத்திலும், வெவ்வேறு துர் நிமித்தங்களைக் காண்கிறோம். இந்த நிமித்தங்களே ராவணன் ராமன் கையால் நாசமடைவான் என்று உறுதியாக கூறுவது போல இருக்கிறது. பிதாமகர் மகிழ்ச்சியுடன் ராவணனுக்கு வரம் அளித்த பொழுது தேவ, தானவ, ராக்ஷஸர்களால் இவன் வதம் இல்லை என்று அருளியபொழுது, மனிதர்களைப் பற்றி எதுவும் வாக்களிக்கவில்லை. ராவணனும் யாசிக்கவில்லை. அதனால் தான் இந்த மனித ரூபத்தில் நம் முன் பயமே மலை போல வந்து நிற்கிறது. நம் ராக்ஷஸ குலத்துக்கும், ராவணனுக்கும் வாழ்வின் முடிவே வாய்த்திருக்கிறது. பிதாமகரின் வரம் பெற்ற உடன், கர்வத்துடன் தனக்கு நிகர் இல்லை என்ற அகம்பாவத்துடன் ராவணன் தன் பலத்தை பறை சாற்ற தேவர்களை வாட்டி வதைத்தான். அவர்கள் பிதாமகரை (ப்ரும்மாவை) வேண்டிக் கொண்டிருப்பார்கள். இந்த தேவர்களின் நன்மைக்காக, மகாத்மாவான பிதாமகரை ஸ்தோத்திரம் செய்து பூஜித்து அவரை மகிழ்வித்த பின், அவரும் வரம் கொடுத்தார் போலும். இன்றிலிருந்து எல்லா தானவ ராக்ஷஸர்களும், மூன்று உலகிலும் பயத்தால் நடுங்கிக் கொண்டே சஞ்சரிப்பார்கள். இதன் பின் தேவர்கள், இந்திரனுடன் மகா தேவனைச் சென்று வணங்கி அவரையும் துதி செய்து மகிழ்வித்து இருப்பார்கள். அவரும் தேவர்களுக்கு வரம் அளித்திருப்பார். உங்கள் நன்மைக்காகவும், ராக்ஷஸர்களை ஒடுக்கவும் ஒரு பெண் தோன்றப் போகிறாள். சீதை என்ற பெயருடன் அவதரிப்பாள். துர்விநீதனான ராவணன் அவளை அபகரிப்பான். அவள் ராவணனையும், அவனுடன் எல்லா ராக்ஷஸர்களையும் சேர்த்து அழியக் காரணமாக இருப்பாள் என்று சொல்லியிருப்பாரோ? அது தான் நாம் தற்சமயம் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு காரணமோ? அதனால் தான் இப்பொழுது உலகில் யாருமே அடைக்கலம் தரக் கூடிய நிலையில் இல்லாமல் தவிக்கிறோம். யுக முடிவில் காலன் வருவது போல இந்த ராமன், புதிது புதிதாக அஸ்திரங்களை தயார் செய்து அடிக்கிறான். நமக்கு முன்னால் பயமே பெரிய சுவராக எழுந்து நிற்கிறது. நாம் என்ன செய்வோம்? வனத்தில் பெண் மான்கள் நாலாபுறமும் பரவி வரும் காட்டுத் தீயின் நடுவில் செய்வதறியாது திகைத்து நிற்பதைப் போல திகைத்து நிற்கிறோம். இந்த புலஸ்திய குலத்தில் வந்த ராக்ஷஸ ராஜா, நம்மை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டாரே. நாமும் எந்த ராவணன் இந்த ஆபத்துக்கு காரணமோ, அவனையே சார்ந்து நிற்கிறோம். இவ்வாறு பல விதமாக ராக்ஷஸ ஸ்த்ரீகள் ஒருவரையொருவர் கைகளால் பற்றிக் கொண்டு தோளோடு அணைத்துக் கொண்டும், வருந்தி புலம்பினர். பாரமாக பயம் மனதை அழுத்த, உரக்க வாய் விட்டு அழுதனர். அதை கேட்கவே பயங்கரமாக இருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராக்ஷஸிகளின் விலாபம் என்ற தொன்னூற்று ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 75 (482) லங்கா தா3ஹ: (லங்கையை எரித்தல்)
இதன் பின் சுக்ரீவன், தான் வானராதிபதியாக இருந்தும், மந்திரியான ஹனுமானைப் பார்த்து, தன் நன்றி கலந்த உணர்வைத் தெரிவித்துக் கொண்டு, மேலும் மேலும் பணிவாகவே பேசினான். குமாரர்கள் இறந்தார்கள். கும்பகர்ணன் மடிந்தான். இன்னமும் ராவணன் தன் பிடிவாதத்தை தளர்த்தாமல் நிமிர்ந்து நிற்கிறான். அவனுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். பலம் குறைந்தவர்களோ, பலசாலிகளோ எல்லா வானரங்களும் கையில் தீப்பந்தத்தை ஏந்தி லங்கைக்குச செல்லுங்கள். சூரியன் அஸ்தமனமாகி இரவு ஆரம்பிக்கும் நேரம் எல்லா வானர வீரர்களும் கைகளில் தீவட்டியை ஏந்தியபடி, லங்கையினுள் நுழைந்தார்கள். வாயில் காப்பவர்கள், கோணலான கண்களுடைய ராக்ஷஸர்கள், தீப்பந்தங்களோடு வரும் வானர சைன்யத்தைக் கண்டு பயந்து ஓடி விட்டனர். கோபுரங்களிலும், ப்ராகாரங்களிலும், மண்டபங்களிலும் பல வீடுகளிலும், இந்த வானரங்கள் ஆரவாரமாக கத்திக் கொண்டு நெருப்பை வைத்தனர். பல ஆயிரம் வீடுகளை இப்படி தீக்கு இரையாக்கினர். மலை போல உயர்ந்து நின்ற மாளிகைகள் தகர்ந்து விழுந்தன. ஆங்காங்கு அகரு வாசனை வீசியது. ஹரி சந்தனமும் எரிந்து நல்ல வாசனை பரவியது. முத்துக்கள், மணிகள், அழகிய வஜ்ரம், பவளம், பட்டு வஸ்திரங்கள், வெண் பட்டுக்களும் அக்னியில் சாம்பலாயின. கால் நடைகள் கருகின. பாத்திரங்கள், பாண்டங்கள் பொடிப் பொடியாகியது. குதிரைகள் கட்டும் இடங்களும் உருத் தெரியாமல் போயின. யானை கட்டும் இடங்களும், ரதங்களை நிறுத்தும் இடங்களும் ஸ்ம்ஸ்காரம் செய்யப் பெற்றன. புடமிடப்பட்டன. உடலைக் காக்க பயன்படும் கவசங்களும், படை வீரர்களில் குதிரை, யானைகளின் உடலைக் காக்கும் தோலாலான கவசங்களும், வாட்கள், வில்கள், வில்லின் நாண், பாணங்கள், தோமரங்கள் அங்குச சக்திகள், இன்னும் பல மாளிகைகளும், மற்றும் பல பொருட்களும் தீக்கிரையாயின. பல விதமான வீட்டுப் பொருள்களை, ஹுதவாஹணன் என்ற, அக்னி விழுங்கியது. ராக்ஷஸர்களின் வீடுகள், இருப்பிடங்கள், வீடு வாசல் உடையவர்களின் சொந்த உபயோக சாமான்களும், பொன்னால் அலங்காரமாக சித்ரங்கள் வரையப் பெற்றிருந்த கவசங்கள், மாலைகளையும், உயர்ந்த வஸ்திரங்களை அணியும் வசதி மிகுந்த ராக்ஷஸ குடும்பத்தினர், மதுவில் மயங்கி இருந்தவரும், நடக்க தள்ளாடிச் சென்றவரும், மனைவியை அணைத்து நின்றவரும், எதிரியிடம் தோன்றிய கோபத்தை அடக்கிக் கொண்டவர்களும், அதை வெளிப்படுத்தும் விதமாக க3தை4, சூலம் கத்தி இவைகளை ஏந்தியவர்களும், உணவு உண்ணும் சிலரும், பானங்களை பருகுபவர்களும். சயனங்களில் தூங்குபவர்களும், அழகிய கட்டில்களில் மனைவியுடன் உறவு கொண்டிருந்தவர்களும், பயந்து சிறு குழந்தைகளை மார்போடணைத்து பாதுகாப்பான இடம் தேடிச் செல்பவர்களும், இப்படி நூறு ஆயிரம் கோடி ஜனங்கள், லங்கா நிவாஸிகள், தீயில் மாட்டிக் கொண்டு திணறினர். மேலும் மேலும் வளர்ந்த தீயின் உக்ரத்தில் பல வீடுகள் கருகிப் போயின. மலை போல உயர்ந்த வீடுகள். க்ரௌஞ்ச, பர்ஹிண பக்ஷிகளின் நாதமும், வீணைகள் வாசிக்கப் படும் இசையும், பூஷணங்கள் உராயும் ஓசையும், நிறைந்த உயர்ந்த மாளிகைகளும், தீக்கிரையாயின. தீ பரவி தோரணங்களை பிரகாசமாகக் காட்டியது. அதைக் காண இடையிடையே மின்னலுடன் தோன்றும் கரு மேகக் கூட்டம் போல இருந்தது. மாளிகைகள் விழுந்தன. இந்திரனின் கை வஜ்ரத்தால் துண்டிக்கப் பட்டு விழுந்த மலைகள் போல விழுந்தன. வீடுகளில் மேல் தளத்தில் உறங்கிய அழகிய ஸ்த்ரீகளும், ஆபரணங்களை வீசி எறிந்து ஹா ஹா என்று அலறினர். வெகு தூரம் வரை இந்த எரியும் வீடுகள் பிரகாசமாகத் தெரிந்தன. ஔஷதி வனங்களுடன் ஹிமய மலை போல காட்சியளித்தன. வீடுகள், வாசல்கள் நெருப்பின் ஜ்வாலையோடு தாங்களும் சிவந்து மலர்ந்த கிம்சுக புஷ்பங்கள் போல காட்சியளித்தன. யானைகளும், குதிரைகளும், கொட்டில்களிலிருந்து அவிழ்த்து விடப் பட அவை தாறு மாறாக ஓடின. பெரிய பெரிய யானைகள், குதிரைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரிய, உயர் ஜாதி மிருகங்கள். சமுத்திரம் கொந்தளிக்கும் பொழுது, அதில் ஆமைகளும், முதலைகளும் போல அலைந்தன. ஓடி வந்த குதிரை, எதிரில் யானை விடுபட்டு வருவதைப் பார்த்து விலகி நிற்கிறது. சில இடங்களில் யானை பயந்து விலகி நிற்க குதிரை தன் வழி ஓடி செல்கிறது. சமுத்திரத்தில் எரியும் லங்கையின் நிழல் பூதாகாரமாகத் தெரிகிறது. முஹுர்த்த நேரத்தில் வானரங்கள் ஊரையே கொழுந்து விட்டெரியச் செய்து விட்டனர். பூமியின் க்ஷய காலமான இந்த சமயம், வசுந்தரா, வெளிச்சம் போட்டு காட்டப் பட்டது போல இருந்தது. புகையினால் அவஸ்தைப் பட்ட பெண்களின் ஓலம் வெகு தூரம் வரை கேட்டது. நெருப்பினால் ஏற்பட்ட காயங்களுடன் பலர் லங்கா நகரிலிருந்து வெளி வந்தனர். இவர்கள் மேல் வானரங்கள் எதிர்பாராத சமயம் தாவி குதிக்கின்றன. இந்த வானரங்களின் ராக்ஷஸர்களின் பரஸ்பர தாக்குதலாலும், கூச்சலும், திக்குகளிலும், சமுத்திரத்திலும் பரவியது. நெருப்பு காயங்களுடன் வெளியே வந்த ராக்ஷஸர்கள் மேல் குதித்து வானரங்கள் தொல்லை கொடுத்தன. இந்த வானரங்களின் கூச்சலும், ராக்ஷஸர்களின் அலறலும், சமுத்திரம், பூமி, அனைத்திலும் எதிரொலித்தது.
ராம, லக்ஷ்மணர்கள் இருவரும், உடல் காயம் இன்றி, அம்புகள் தைத்த அடையாளம் கூட இல்லாமல் நலம் ஆகி விட்டனர். இருவரும் சற்றும் பதட்டம் இல்லாமல் தங்கள் வில்லை கையில் எடுத்துக் கொண்டனர். வில்லில் நாணேற்றி, விரலால் மீட்டி நாதம் எழுப்பியதே, ராக்ஷஸர்கள் பயந்து அலற போதுமானதாக இருந்தது. அந்த வில்லுடனும், அதிலிருந்து கிளம்பிய நாதமும் ராமனை இன்னும் சோபையுடன் காட்டியது. பகவானான ப4வன் எனும் சிவன், வேத மயமான வில்லை எடுத்துக் கொண்டு புறப்பட்டது போல கோபத்துடன் வில்லை மீட்டி, நாதம் எழுப்பியது போல இருந்தது. இந்த வானர, ராக்ஷஸர்களின் கூச்சலையும், அலறலையும் மீறி ராஜ குமாரர்கள் இருவரும் வில்லை மீட்டிய நாதம் கேட்டது. ராமனுடைய வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள், மாளிகைகள், வீடுகள் மேலும் விழுந்தன. ராம பாணம் பட்டு, கைலாச சிகரமோ எனும்படி இருந்த வீட்டு விமானங்களும் சரிந்து விழுந்தன. தங்கள் வீடுகளிலும், வீட்டு விமானங்களிலும் ராம சரங்கள் வந்து விழுந்ததைப் பார்த்து ராக்ஷஸர்கள் சிம்ம நாதம் செய்தனர். அந்த இரவு அவர்களுக்கு ரௌத்ரமாகத் தெரிந்தது. சுக்ரீவன் கட்டளையை சிரமேற்கொண்டு, வானரங்கள் நுழை வாயிலில் நின்று கொண்டு, யுத்தம் செய்ய தாயாரானார்கள். சுக்ரீவனின் ஆணையை மீறியவர்கள் யாரானாலும் அங்கேயே தண்டிக்கப் படுவார்கள். இதைக் கேட்டு கைகளில் தீவட்டியை ஏந்திச் சென்ற வானரங்கள் கோட்டை வாயிலில் நின்ற பொழுது ராவணன் அளவில்லா ஆத்திரம் கொண்டான். ருத்ரனே ரூபம் எடுத்து வந்தது போல, உடல் பூரா கோபத்துடன் உரத்த குரலில் போர் முழக்கம் செய்தான்.
நிகும்ப4ன், கும்ப4ன் என்ற கும்பகர்ணனின் பிள்ளைகள் இருவரையும் பல ராக்ஷஸர்கள் துணையுடன் அனுப்பி வைத்தான். யூபாக்ஷன், சோணிதாக்ஷன், ப்ரஜங்க, கம்பனன், மேலும் பலர் கும்பகர்ணனின் புத்திரர்களோடு, ராவணனின் ஆணைபடி, சீக்கிரம் கிளம்புவோம். இங்கேயே இந்த வானரங்களை முறியடித்து ஜயிப்போம் என்று சொல்லியபடி கிளம்பினர். தாங்களும் திரும்பத் திரும்ப ஜய கோஷம் செய்தபடி லங்கையிலிருந்து கிளம்பினர். தங்கள் ஆபரணங்களின் ஒளியாலும், இயல்பான தங்கள் சரீர காந்தியாலும், வானரங்களின் தீவட்டிகளுக்கு சமமாக ஒளியை ஏற்படுத்திக் கொண்டனர். அந்த சமயம் அங்கு தாராதிபனான சந்திரனின் பிரகாசம், நக்ஷத்திரங்களின் பிரகாசம், ராக்ஷஸர்களின் ஆபரணங்களிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கற்றைகள், எரிந்து கொண்டிருந்த வீடுகளிலிருந்து அக்னியின் பிரகாசம் என்று வான மண்டலத்தையே சைன்யங்களுக்கு வழிகாட்டுவது போல ஒரே ஒளி மயமாக ஆக்கியது. இந்த வெளிச்சத்தில் அலை வீசும் கடல் மேலும் அழகுற விளங்கியது.
பதாகம் த்வஜம் இவைகளுடன் உத்தமமான கத்தி, பரஸ்வதம், பெரிய பெரிய ரதம், குதிரைகள், யானைகள், மற்றும் பல வாகனங்கள், பள பளக்கும் சூலம், க3தை4, கட்கம் (வாள்) ப்ராஸ, தோமர, கார்முகம், இவைகளுடன் அந்த ராக்ஷஸ படை, அளவிலும் ஆற்றலிலும் மிக அதிகமாகத் தெரியக் கண்ட வானரங்கள் திகைத்தன. கிங்கிணி நாதம் சேர, பரஸ்வதத்தை வீசிக் கொண்டு, பாதுகாப்பாக புஜங்களில் தங்க ஜாலம் போன்ற கவசம் அணிந்து, கந்தமால்யம், வாசனை மிகுந்த மாலைகள், மதுவை சிந்தும் புது மலர்கள் இவற்றுடன் மென்மையாக வீசிய காற்று, பெருங்கடலுக்கு உவமை சொல்லக் கூடிய அளவு பெரும் படை, சூரர்களாக நிறைந்திருந்ததைக் கண்டு வானரங்கள் நடுங்கின. பலமாக கத்தி தங்கள் பயத்தை உதற முயன்றன. வேகமாக தாவிக் குதித்து, தாங்களாகவே எதிரி சைன்யத்தில் மோதி கீழே விழுந்தன. விட்டில் பூச்சிகள் தங்களாகவே நெருப்பில் விழுவது போல இருந்தது. அவர்கள் பரிகம், அசனம் என்று ஆயுதங்களால் தாக்கினால், இந்த வானரங்கள் உன்மத்தம் பிடித்தவை போல மரங்களாலும், கற்களாலும் தங்கள் முஷ்டிகளாலும் இடை விடாது அடித்தன. இப்படி மேலே வந்து விழும் வானரங்களை உடனுக்குடன் ராக்ஷஸர்கள் தங்கள் வாட்களால், சிரச்சேதம் செய்தனர். பற்களால் கடி பட்டு, காதறுந்து, முஷ்டியினால் விகாரமாக்கப் பட்ட முகத்துடன் ராக்ஷஸர்கள் திரும்பிச் சென்றனர். கற்களால் முட்டி பெயர்ந்து பலர் நடக்க முடியாமல் திணறினர். பல வானர வீரர்கள் சேர்ந்து ராக்ஷஸர்களை வதம் செய்து அழித்தனர் என்றால் பல வானரங்கள் ராக்ஷஸர்களின் கத்திக்கு இரையாயின. கொன்றவனை மற்றவன் கொன்றான். தள்ளியவனை மற்றவன் தூஷித்தான். கடித்தவனை மற்றவனும் கடித்தான். தேஹி என்று அழைக்க மற்றவன், (ததாமி) தருகிறேன் என்று அடியைக் கொடுக்க, ஏன் கஷ்டப் படுகிறாய், நில்லு என்றும் குரல்கள் கேட்டன. வஸ்திரங்கள் நிலை குலைய, கவசங்களும், ஆயுதங்களும் விழ, கையில் எடுத்த மகா ப்ராஸம், கம்பு, சூலம், கத்தி என்று எங்கும் இரைந்து கிடக்க, வானர ராக்ஷஸர்களின் இடையில் பெரும் யுத்தம் நடந்தது. வானரங்களை பத்து, ஏழு, எட்டென்று கூட்டம் கூட்டமாக, ராக்ஷஸர்கள் அடித்து வீழ்த்தினர். ராக்ஷஸர்களையும் பத்து, ஏழு, எட்டென்று இவர்களும் அடித்தனர். தலை கேசம் ஒரு பக்கம் புரள, ஆடைகள் கிழிந்து தொங்க, கையில் இருந்த ஆயுதங்கள் மூலைக்கு ஒன்றாகச் சிதற, ராக்ஷஸர்களின் படையை வானரங்கள் சூழ்ந்து கொண்டன. மகா பயங்கரமான யுத்தம் தொடர்ந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் லங்கா தா3ஹ: என்ற எழுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 76 (483) கம்பனனாதி வத: (கம்பனன் முதலானோர் வதம்)
வீரர்களே மடிந்து விழும் அந்த யுத்த பூமியில், அங்கதன் கம்பனனை எதிர்கொண்டான். கம்பனன் தானே அங்கதனை அழைத்து தன் க3தை4யால் பலமாக முதல் அடியைக் கொடுத்தான். புரியாமல் திகைத்து நின்ற அங்கதன் சட்டென்று சமாளித்துக் கொண்டவனாக தன் கையில் இருந்த பாறாங்கல்லை அவன் பேரில் வீசி எறிந்தான். கம்பனன் அந்த அடி தாங்காமல் கீழே விழுந்தான். கம்பனன் விழுந்ததைக் கண்டு சோணிதாக்ஷன், தன் ரதத்தை ஓட்டிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். அவனும் கூரான, தன் கை ஆயுதங்களால் அங்கதனை அடித்தான். காலாக்னி போன்றதும், உடலைக் கிழிப்பதுமான கூரான அம்புகளை அங்கதன் மேல் விட்டான். நாராசமான, கூர்மையான நுனி உடையதுமான பல அம்புகளால், உடல் பூராவும் காயம் அடைந்தவனாக வாலி புத்திரன் அங்கதன், ஆயுதங்களை நிரப்பி வைத்திருந்த ரதத்தை ஓங்கி அடித்தான். சோணிதாக்ஷன் ஒரு பெரிய வாளை கையில் எடுத்துக் கொண்டான். யோசிக்க நேரமின்றி அங்கதன் ஆகாயத்தில் தாவிக் குதித்து, அவன் கை வாள் நழுவி விடும்படி செய்தான். அந்த வாளை எடுத்து அதாலேயே சோணிதாக்ஷன் பேரில் வீசினான். யக்ஞோபவீதம் போல அது அவன் உடலில் விழ, வெட்டி காயம் ஏற்படுத்தியது. அந்த வாளை கையால் சுழற்றியபடி அங்கதன் ரண பூமியில் வலம் வந்தான். வாளையும் க3தை4யையும் பிடுங்கிக் கொண்டு சோணிதாக்ஷனை, மேலும் தாக்கி, கீழே விழும்படி செய்தான்.
உடனே யூபாக்ஷன் ப்ரஜங்க3ன் என்ற ராக்ஷஸனுடன் ரதத்தில் வேகமாக அங்கதனை நோக்கி வந்தான். ஒரு பக்கம் சோணிதாக்ஷன், மற்றொரு புறம், ப்ரஜங்க3ன் இருவரிடமும் அகப்பட்டுக் கொண்ட அங்கதன் விசாக நக்ஷத்திரங்களிடையே பூர்ண சந்திரன் போல தோற்றமளித்தான். அங்கதனுக்கு காவலாக மைந்தனும், த்விவிதனும், முன்னேறி வந்தனர். இந்த மூன்று வானர வீரர்களுக்கும், மூன்று ராக்ஷஸ வீரர்களுக்கும் இடையில் கடும் போர் மூண்டது. வானரங்கள் மரங்களைக் கொண்டு வந்து வீசினால், தன் கத்தியினால் ப்ரஜங்க3ன் அவைகளை தடுத்து வெட்டி சாய்த்து விட்டான். ரதங்களையும் குதிரைகளையும் எதிர்க்க வானரங்கள் மரக்கிளைகளையே பெரும்பாலும் உபயோகிப்பது தெரிந்து, யூபாக்ஷன் என்ற ராக்ஷஸன் தன் சரங்களால் இவைகளை துண்டாடி விட்டான். த்விவித, மைந்தர்கள் சேகரித்து வைத்திருந்த மரக் கட்டைகளையும் இதே போல, சோணிதரன் தன் க3தை4யால் அழித்து விட்டான். ப்ரஜங்கன், எதிரியின் மர்மஸ்தானத்தை பிளக்கும்படியான பெரிய வாளைத் தூக்கிக் கொண்டு வந்து வாலி புத்திரனைத் துரத்தினான். எதிரி நெருங்கி வருமுன் ஒரு பெரிய அஸ்வகர்ண என்ற மரத்தை பிடுங்கி வைத்துக் கொண்டு அவன் அருகில் வரவும் ஓங்கி அடித்தான். புஜங்களை தன் முஷ்டியால் குத்தினான். வாலி புத்திரனின் முஷ்டியின் வேகம் தாங்காமல் அவன் பூமியில் விழுந்தான். கிழே கிடந்தவனின் அருகில் இருந்த வாளையும் பார்த்து அவன் மேல் முஷ்டியினால் முடிந்தவரை பலமாக குத்தினான். வஜ்ரம் போல விழுந்த அந்த அடிக்கு பதிலாக ராக்ஷஸனும் தன் முஷ்டியால் அவன் நெற்றியில் படும் படி அடித்தான். ஒரு முஹுர்த்த காலம் செய்வதறியாது திகைத்து நின்றான் அங்கதன். அதன் பின் தெளிந்து, அந்த வாளாலேயே ப்ரஜங்க3னைத் தாக்கி, தலை இற்று விழச் செய்தான்.
தன் தந்தை வழி உறவினன் இறந்து விழுந்ததைப் பார்த்து, யூபாக்ஷன், அங்கு பூர்ணாக்ஷன் (கண்களில் நீர் நிறைந்தவனாக) ஆனான். கை வில்லை விட்டு, ரதத்திலிருந்து இறங்கி, தானும் வில்லை கையில் எடுத்துக் கொண்டான். யூபாக்ஷன், உக்ரமாக வருவதைப் பார்த்து த்விவிதன் அங்கதன் உதவிக்கு வந்தான். யூபாக்ஷனின் மார்பில் கோபத்துடன் ஓங்கி ஒரு குத்து விட்டான். ஒரு கையால் அவனைப் பிடித்துக் கொண்டான். இதைக் கண்டு சகோதரனான சோணிதாக்ஷன், க3தையின் நுனியை மார்பில் அடித்து த்விவிதனை தடுத்தான். அடி பட்ட வேகத்தில் தடுமாறினாலும் சமாளித்துக் கொண்டு, அந்த க3தை4யையே பிடுங்கிக் கொண்டான். இதற்கிடையில் மைந்தனும் யூபாக்ஷனும் கடும் போர் புரிந்து கொண்டிருந்தனர். கைத்தலத்தால் ஓங்கி அடித்தான். சோணிதாக்ஷனும், யூபாக்ஷனும் வானர வீரர்களின் மத்தியில் சிக்கிக் கொண்டனர். ஆக்ரோஷத்துடன் இவை சண்டையிட்டன. சோணிதாக்ஷன் முகத்தில் நகத்தால் கீறினான் த்விவிதன். இதைத் தாங்க முடியாமல் அவன் பூமியில் விழுந்தான். ராக்ஷஸ சமூகம் தங்கள் தலைவனின் நிலையைக் கண்டு வருந்தியது. அவர்கள் மிகுந்த கவலையும் மனக் கலக்கமும் அடைந்தனர். கும்பகர்ணனின் மகனுக்கு உதவி செய்ய விரைந்தனர். தன் அருகில் வந்த போர் வீரர்களை சமாதானப் படுத்தி, உற்சாகம் அளித்து கும்பன் மகா பலத்துடன் போரில் ஈடுபட்டான். கையில் வில்லுடன் தீவிரமாக இறங்கியவன் ஆல கால விஷம் போன்ற பல சரங்களை தன் வில்லிலிருந்து புறப்படச் செய்தான். ஒவ்வொரு அம்பும் காணவே அரிய காட்சியாக இருந்தது. மின்னல், ஐராவதம் இவற்றுடன், தேவர்கள் கூட்டம், இவற்றுடன் இரண்டாவது இந்திரன் போல காட்சியளித்தான். காது வரை நாணை இழுத்து அவன் விட்ட அம்பு த்விவிதனைத் தாக்கியது. அழகிய பொன் வேலைப்பாடுகள் அமைந்த அம்புகள், மலையரசன் போன்ற பெரிய சரீரம் உடைய திவிவிதன், மலை சரிந்து விழுவதைப் போல விழுந்தான். இதைக் கண்ட மைந்தன் சகோதரனைக் காப்பாற்ற பெரிய கல்லை எடுத்துக் கொண்டு அவன் அருகில் ஓடினான். தன்னைத் தாக்க வந்த கல்லை கும்பன் லாகவமாக ஐந்து பாணங்களால் தடுத்து நிறுத்தி விட்டான். அடுத்த அம்பையும் தயாராக வைத்துக் கொண்டு, கூரான அந்த அம்பை மைந்தனின் மார்பில் படும் படி எய்து விட்டான். மர்மத்தில் பட்ட அந்த அடி மைந்தனை மயங்கி விழச் செய்து விட்டது. மாமன் மார் இருவரும் அடிபட்டு விழுந்து கிடப்பதைப் பார்த்து அங்கதன் அங்கு வந்தான். கும்பன் வில்லில் இருந்து சரங்கள் மழையாகப் பொழிவதைக் கண்டான். அங்கதனைக் கண்டதும் கும்பன் அவனை இலக்காக வைத்து அடிக்க ஆரம்பித்தான். ஐந்து கூரிய பாணங்கள் அங்கதனை தாக்கின. அந்த கூரிய பாணங்கள் மேலும் மேலும் தன் உடலைக் குத்தி கிழித்த பொழுதும் அங்கதன் கலங்காமல் நின்றான். கற்களையும், மரக்கிளைகளையும், கும்பன் மேல் வீசினான். கும்பன் அவைகளை அலட்சியமாக தடுத்து பொடியாகச் செய்தான். கும்பகர்ணன் மகன், வாலி புத்திரனை குறிவைத்து விடாமல் அடிக்கலானான். நெருப்பு பந்தங்களைக் கொண்டு யானைகளை விரட்டுவது போல அவன் குறி அங்கதன் பேரிலேயே இருந்தது. ஒரு கண்ணில் பட்டு, ரத்தம் வடியவும், ஒரு கையால் கண்களைப் பொத்திக் கொண்டே ஒரு சால விருக்ஷத்தை பிடுங்கி கும்பன் மேல் வீசினான். அவன் தோளில் தன் கைகளால் ஓங்கி அடித்தான். அவன் அசைந்து கொடுக்காமல், யானை மேல் இருந்தபடி, இந்திரகேது போல இருந்த சால விருக்ஷத்தை தன் கை அம்புகளைக் கொண்டு சிதறச் செய்து விட்டான். பார்த்துக் கொண்டிருந்த ராக்ஷஸர்கள் ஆரவாரம் செய்தனர். அங்கதன் தன் வலியை பொருட்படுத்தாமல் ஜய கோஷம் செய்தான். அங்கதன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதை, வானரங்கள் ஓடிப் போய் ராமனிடம் தெரிவித்தன. ராமரும், உடனே ஜாம்பவான் முதலிய பலரையும் அங்கதனைக் காப்பாற்ற அனுப்பி வைத்தார். எல்லோருமாக கோபத்துடன் வேகமாக வந்து கையில் வில்லை வைத்து குறி பார்த்துக் கொண்டிருந்த கும்பனின் மேல் விழுந்து, தங்கள் கையிலிருந்த கற்களையும், மரக்கிளைகளையும் கொண்டு அவனைத் தாக்கி, அங்கதனிடமிருந்து அவன் கவனத்தை திசை திருப்ப முயன்றார்கள். ஜாம்பவானும், சுஷேணனும், வேகதர்ஸி என்ற வானரமும் ஒரே சமயத்தில் தன் பேரில் விழுந்து தள்ளுவதைக் கண்டு கும்பன் பாணங்களால் தன்னைச் சுற்றி வேலி போட்டது போல தடுத்துக் கொண்டு விட்டான். ஜலம் நிறைந்த குளத்தை சுற்றிலும் உள்ள மலைகள் காப்பது போல அந்த வேலி அமைந்தது. இதைக் கடந்து வர முடியாமல் வானர வீரர்கள் திகைத்தனர். நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு விட்ட சுக்ரீவன், சகோதரன் மகனை காப்பாற்ற, நேரடியாக கும்பனுடன் மோதினான். மலைச் சாரலில் நடந்து செல்லும் யானையை சிங்கம் தாக்குவது போல தாக்கினான். பெரிய கற்களையும், அஸ்வகர்ணம், த4வம் எனும் மரங்களையும் பிடுங்கி எடுத்துக் கொண்டு, மற்றும் பல மரங்களையும் கொண்டு வேகமாக வீசி கும்பனை அடித்தான். ஆகாயத்தை மறைத்த அந்த மரங்களின் கூட்டத்தை இது வரை கண்டிராத வகையில் அந்த மரங்களை குறி வைத்து தீவிரமான அம்புகளை விட்டான். அந்த அடர்த்தியான மரங்களை தன் பாணங்களால் சின்னா பின்னமாக்கி விழச் செய்தான். தன் பேரில் விழுந்த பாணங்களையும் பொருட்படுத்தாமல், அந்த மரங்கள் பொடிபொடியானதையும் லட்சியம் செய்யாமல், சுக்ரீவன் கும்பனுடைய வில்லை வெடுக்கென்று பிடுங்கி உடைத்து விட்டான். ஒரே வேகத்தில் தாவி குதித்து, அவன் வில்லை முறித்தபின், தந்தத்தை இழந்த யானை போல திகைத்து நின்ற கும்பனைப் பார்த்துச் சொன்னான். நிகும்பனின் தமையனே, உன் வீர்யம் அத்புதமாக இருக்கிறது. உன் வில்லின் வேகமும் இணையற்றது. உன் பிரபாவமும், செயல் பாடும், ஆற்றலும் ராவணனுக்கு சற்றும் குறைந்ததல்ல. ப்ரஹ்லாதன், பலி, விருத்திரன், குபேரன், வருணன் இவர்களுடன் ஒப்பிடக் கூடிய அளவற்ற பலசாலிதான் நீ. சந்தேகமே இல்லை. பலத்தில் நீ உன் தந்தையையும் மிஞ்சி விட்டாய். கையில் வில்லுடன் உன் ஒருவனை, மூவுலகிலும் தேவர்கள் கூட ஜயிக்க முடியாது. புலன்களை அடக்கியவனை, வியாதிகள் அண்ட முடியாதது போல, மகா புத்திசாலியான வீரனே, உன் திறமையை என்னிடம் காட்டு. வர தானம் உள்ளதால் தான், தேவ தானவர்கள், உன் பெரிய தந்தையிடம் தோற்றார்கள். கும்பகர்ணனோ, தன் ஆற்றலால், புஜ பலத்தால் வெற்றி அடைந்தான். வில்லேந்திய இந்திரஜித்துக்கு சமமான பலமும், ஆற்றலும் உடைய நீ, இன்று ராக்ஷஸ வீரர்களுள் முதன்மையாக நிற்கிறாய். என்னுடன் சண்டையிட வா. தனியாக நாம் இருவரும் போர் செய்வதை, இந்திரனும் சம்பரனும் போரிட்டதைப் போல உலகங்கள் காணட்டும். உன் அஸ்திர ஞானத்தை காட்டினாய். மிகவும் பெருமைக்குரியது, உன் ஆற்றலும், அறிவும். பல வானரத் தலைவர்கள், பலசாலிகளாக இருந்தும் கீழே தள்ளப்பட்டார்கள். களைத்து நிற்கும் உன்னைக் கொன்றால் என்னைத் தூற்றுவார்கள். அந்த எண்ணத்தில் தான் கொல்லாமல் விட்டேன். சிரமப் பரிகாரம் செய்து கொண்டு வா. என் பலத்தைப் பார். இவ்வாறு சுக்ரீவனால் புகழ்ந்து பேசப்பட்டு, மதிக்கப் பட்டவுடன் அக்னியில் ஆகுதியை இட்டவுடன் அதன் ஜ்வாலை வளருவது போல அவன் தேஜஸ் மேலும் மேலும் வளர்ந்தது. பிறகு கும்பன் சுக்ரீவனை கைகளால் பிடித்து, த்வந்த யுத்தம் செய்ய ஆரம்பித்தான். இரண்டு யானைகள் மதம் தலைக்கேற மேல் மூச்சு வாங்க நிற்பது போல இருவரும் தயாராக நின்றனர். ஒருவரையொருவர், சரீரத்தால் கீழே தள்ளவும், ஒருவரையொருவர் கைகளை பிடித்து இழுத்தும் மல் யுத்தம் செய்தனர். யுத்தம் வேகம் எடுக்க, அவர்கள் வாயிலிருந்து புகையின்றி நெருப்பு ஜ்வாலை வெளி வந்தது. கால்கள் மிதித்து பூமி நசுங்க அலைகள் சுழன்று சுழன்று வீச, சமுத்திரம் கலங்கியது. கும்பனைத் தூக்கி சமுத்திரத்தில் போட்டு, அதன் அடித்தளத்தைக் காணச் செய்து விட்டான்,சுக்ரீவன். கும்பனின் பெரிய சரீரம் வேகமாக வந்து விழவும் ஜலத்தில் வசிக்கும் ஜீவ ஜந்துக்கள் தாறு மாறாக அலைந்தன. கும்பன் ஜலத்திலிருந்து வேகமாக வெளி வந்து வஜ்ரம் போன்ற தன் முஷ்டியால் சுக்ரீவனை அடித்தான். மார்பில் பட்ட அடி, தோல் உரிந்து ரத்தம் கொட்டியது. சுக்ரீவனும் திரும்ப அதே போல அஸ்தி மண்டலத்தில் ஒரு குத்து விட்டான். நேரம் ஆக, ஆக, இருவருக்கும் போர் வெறியும், வேகமும் வளர்ந்தது. மேரு மலையின் உச்சியில் இருந்து ஜ்வாலை புறப்படுவது போல இருவரும் மல் யுத்தத்தில் மும்முரமாக ஈடு பட்டனர். சுக்ரீவனும் தன் சக்தியை எல்லாம் திரட்டி கும்பனின் மார்பில் ஒரு குத்து விட்டான். அந்த அடியின் வேகத்தால் கலங்கி தீப்பொறிகள் பறக்க, திடுமென அடங்கி கிடக்கும் நெருப்பு போல பூமியில் விழுந்தான். சிவந்த சரீரம் உடையவனாக, ஆகாசத்திலிருந்து யதேச்சையாக விழும் பிரகாசம் போல விழுந்தான். மார்பில் அடிபட்டு விழும் கும்பனின் சரீரம், ரத்தம் பெருகி நணைந்த சரீரம், பசுக்களின் தலைவனான ரிஷபம் போலத் தோன்றியது. வானர ராஜனான சுக்ரீவனால் யுத்தத்தில் கும்பன் வதம் செய்யப் பட்டவுடன், ராக்ஷஸர்கள் மனதில் பயம் நிறைந்தது. மலைகள், வனங்கள் இவைகளும் ஆட, நில நடுக்கம் தோன்றியது. பூமியே ஆட்டம் கண்டது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கம்பனனாதி வதம் என்ற எழுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 77 (484) நிகும்ப4 வத4: (நிகும்பனின் வதம்)
தன் சகோதரனை சுக்ரீவன் வீழ்த்தி விட்டதை அறிந்த நிகும்பன் சுக்ரீவனை தன் கண்களாலேயே எரித்து விடுபவன் போல பார்த்தான். அவனுடைய பரிகம், ஐந்து விரல்கள் போன்ற அமைப்புடையது. அதற்கு மாலைகள் அணிவித்து அலங்கரித்திருந்தான். அந்த ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டான். அந்த ஆயுதத்துக்கு, தங்கத்தால் கவசமும், அதில் வைரங்கள் பதிக்கப் பெற்று வேலைப்பாடுகளும் செய்யப் பட்டிருந்தன. யம தண்டம் போல இருந்த அதைப் பார்த்து ராக்ஷஸர்களின் பயம் விலகியது. இந்திரனின் த்வஜம் போல இருந்த அந்த ஆயுதத்தை உயரத் தூக்கிப் பிடித்தவாறு, அகல வாயைப் பிளந்து போர் முழக்கம் செய்தான். புஜங்களில் அங்கதங்களும், காதில் குண்டலங்களும், மார்பில் அழகான மாலைகளுமாக நிகும்பன், சர்வாபரண பூஷிதனாக சோபையுடன் காணப்பட்டான். பரிகமும் ஒரு ஆபரணம் போல அவன் கையில் மின்னியது. இந்திர தனுஷ் வந்து மேகத்தை அலங்கரிப்பது போல, மின்னலுடன் கூடிய கார் மேகம் போல, பரிகத்தின் நுனியால், காற்றில் வீசி போருக்குத் தயாரானான். ஜய கோஷம் செய்து கொண்டே முன்னால் வந்தான், புகையின்றி அக்னி ஜ்வாலை போல கோபத்தால் ஜ்வலித்துக் கொண்டிருந்தான். விடபாவதீ என்ற கந்தர்வ நகரம், அதன் மகா உத்தமமான பவனங்கள், அமராவதியும் அதன் மாளிகைகளும், தாரா, க்ரஹ, நக்ஷத்திரங்கள், சந்திரன் மற்றும் மகா க்ரஹங்கள் யாவும் நிகும்பனின் இந்த பரிகத்தைச் சுழற்றியபோது சுழலுவது போல இருந்தது. பரிகத்தில் இருந்த வைரங்கள் கண்களைக் கூச செய்தது. வானரங்களுக்கோ, இது நிகும்பாக்னி, யுக முடிவில் தோன்றும் காலாக்னி என்பார்களே, அது தானோ என்று கலக்கம் தோன்றியது. வானரர்கள், ராக்ஷஸர்கள் யாவரும் கண் இமைக்கக் கூட மறந்தனர். ஹனுமான் தான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, அவன் முன்னால் வந்து நின்றான். அந்த பரிகத்துக்கு இணையாக ஹனுமானின் புஜங்களே ஆயுதமாக விளங்கியது. நிகும்பன் ஆத்திரத்தோடு வேகமாக அந்த பரிகத்தை மார்பில் வீச, அது ஹனுமானின் மார்பில் பட்டு தூள் தூளாகி சிதறியது. அதிலிருந்து நூற்றுக் கணக்கான தீப்பந்தங்கள் கிளம்பியது போல இருந்தது. இந்த அடி மகா வீரனாகிய ஹனுமானையே கதி கலங்கச் செய்து விட்டது. பூமியின் நடுக்கத்தில் மலை ஆட்டம் கண்டது போல ஹனுமானையும் அந்த பரிகத்தின் அடி ஆட்டம் காணச் செய்து விட்டது. ஹனுமான் தன் முஷ்டியை மடக்கி, பலத்தையெல்லாம் ஒன்று சேர்த்து, நிகும்பனின் மார்பில் ஓங்கி அடித்தான். வாயுவுக்கு சமமான வீர்யம் உடைய ஹனுமான் நிகும்பனை அடித்ததில், அவன் உடல் தோல் கிழிந்து ரத்தம் பெருகியது. பளீரென்ற மின்னல் வேகத்தில் பட்ட இந்த அடியால் நிகும்பன் நிலை குலைந்து போனான். சற்றுப் பொறுத்து தன்னை சமாளித்துக் கொண்டு, ஹனுமானை எட்டிப் பிடித்தான். லங்கா வாசிகள் இந்த வீரச் செயலை பாராட்டி பெரும் ஆரவாரம் செய்தனர். இறுக்கப் பிடித்திருந்த நிலையிலும், நிகும்பனின் முயற்சியை சிலாகித்தபடி, ஹனுமான் திரும்பவும் தன் முஷ்டியால் ஓங்கி குத்தி தன்னை விடுவித்துக் கொண்டு, சரமாரியாக நிகும்பனை குத்து விட்டு கீழே தள்ளி அவன் மார்பில் ஏறி நின்று கொண்டு அவன் இரு கைகளையும், தலையையும் பிடித்து தரையில் ஓங்கி அடித்து பயங்கரமாக கத்தினான். இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு ஆத்திரத்துடன் யுத்தம் செய்து, முடிவில் நிகும்பன் மடிந்ததும், வானர சைன்யத்தில் உற்சாக ஆரவாரம் திக்குகளில் எதிரொலிக்க, பூமியே நகர்ந்து விட்டது போலும், ஆகாயம் வெடித்துச் சிதறியது போலவும் இருக்க, ராக்ஷஸ வீரர்களை பயம் சூழ்ந்து கொண்டது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நிகும்ப4 வத4ம் என்ற எழுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 78 (485) மகராபி4ஷேணனம் (மகராக்ஷன் போருக்கு வருதல்)
நிகும்பனும் உயிரிழந்தான். கும்பனும் மாண்டான் என்ற செய்தி கேட்டு ராவணன் தன்னுள் குமைந்தான். அக்னி தானே வளருவது போல அவன் ஆத்திரம் வளர்ந்தது. சோகமும், க்ரோதமும், அந்த ராக்ஷஸ வீரனை அலைக்கழித்தன. க2ரனுடைய மகனான, விசாலமான கண்களையுடைய மகராக்ஷனை அழைத்தான். மகனே, போய் வா. என் கட்டளைப்படி பெரும் படையுடன், ராகவ, லக்ஷ்மணர்களையும் அந்த வானர கூட்டத்தையும் அழித்து விட்டு வா. கரன் மகன், இதைக் கேட்டு, வீரனானதால், உடனே சரி என்று சொல்லி போருக்கு கிளம்பினான். தசக்ரீவனை வணங்கி, பிரதக்ஷிண நமஸ்காரங்களை செய்து விட்டு, வெண் நிற மாளிகையான தன் வீட்டிலிருந்து, ராவணன் கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டான். நல்ல பலசாலியான அவன், தன் அருகில் இருந்த படைத் தலைவனைப் பார்த்துச் சொன்னான். ரதத்தை தயார் செய். போர் வீரர்களை அழைத்து வா. சீக்கிரம். இதைக் கேட்டு படைத் தலைவனும் ரதத்தை உடனே கொண்டு வந்து நிறுத்தி, வீரர்களையும் ஒன்று சேர்த்து போருக்கு ஆயத்தங்கள் செய்து விட்டான். ரதத்தில், பிரதக்ஷிணம் செய்து வணங்கி நின்ற மகராக்ஷன், சாரதிக்கு சீக்கிரம் செல்லப் பணித்தான். ராக்ஷஸர்களைப் பார்த்து மகராக்ஷன் தன் திட்டத்தை விவரித்தான். நீங்கள் அனைவரும் முன் நின்று யுத்தம் செய்யுங்கள். நான் பின்னால் நிற்கிறேன். ராவண ராஜா எனக்கு ராம, லக்ஷ்மணர்களை வதம் செய்ய உத்தரவிட்டிருக்கிறார். நான் இன்று ராமனை வதைப்பேன். லக்ஷ்மணனையும் வதைப்பேன். சாகாமிருகமான மரக் கிளைகளில் வசிக்கும் மிருகம் சுக்ரீவனை நாசம் செய்வேன். வானர சைன்யத்தை இல்லையென்று ஆக்குவேன். உலர்ந்த கட்டையை அக்னி எரிப்பது போல இன்று எதிரிகளை என் சூலத்தால் (அழிப்பேன்) எரிப்பேன். வீரர்கள், பலசாலிகள், பல விதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு வந்து கூடினர். விருப்பம் போல வடிவம் எடுக்கும் ஆற்றல் மிக்கவர்கள். கூர்மையான பற்களும், மஞ்சள் நிறக் கண்களும் உடையவர்கள். பெரிய யானை போல உருவமும், தலையை விரித்து போட்டபடி, யானையைப் போலவே பிளிறுவதுமாக, பயங்கரமாக காட்சியளித்தனர். மகராக்ஷனும் பெரிய சரீரம் உடையவனே. அவனை சூழ்ந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் போருக்கு புறப்பட்டனர். பூமி அதிர நடந்து, சங்கம், பேரீ இவைகள் ஆயிரக் கணக்காக முழங்க, தங்கள் வாயாலும், கோஷங்கள் செய்து, தோள் தட்டும் ஓசைகளாலும் பெரும் சப்தம் எழச் செய்து கிளம்பிய சமயம், எதிர்பாராது, சாரதியின் கையிலிருந்து சாட்டை கீழே விழுந்தது. த்வஜம் சரிந்தது. ரதத்தில் பூட்டப் பட்ட குதிரைகள் ஏனோ கண்களில் நீருடன், மெதுவாக நடந்தன. காற்று புழுதியை சுமந்து வந்தது. பலமாக வாரியிறைத்தது. மகராக்ஷன் போருக்கு கிளம்பும் சமயம் இவை கெட்ட நிமித்தங்களாக கருதப் படும், நிகழ்ச்சிகள் ராக்ஷஸர்களின் உற்சாகத்தை அடக்கி விட்டது. மௌனமாக மனதில் யோசனையோடு நடந்தார்கள். ராம லக்ஷ்மணர்கள் இருக்கும் இடம் வந்தனர். மேகமோ, யானையோ, எருமையோ, எனும்படி, கரிய நிறத்தினர். க3தை4 முதலிய ஆயுதங்களை சுழற்றிக் கொண்டு போர் முனையில் நின்றவர்கள், நான் நான் என்று முந்திக் கொண்டு யுத்தம் செய்ய ஆவல் நிறைந்த வீரர்கள் குழப்பத்துடன் நடந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மகராபிஷேணனம் என்ற எழுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 79 (486)மகராக்ஷ வத4: (மகராக்ஷனை வதம் செய்தல்)
மகராக்ஷன் கிளம்பி விட்டான் என்று அறிந்ததும், வீரர்கள் உற்சாகம் அடைந்தவர்களாக ஆனார்கள். இதன் பின் அந்த வானர சைன்யத்துடன் யுத்தம் ஆரம்பித்தது. வானர, ராக்ஷஸ யுத்தம் பயங்கரமாக நடந்தது. தேவ, தானவ யுத்தம் போல தொடர்ந்தது. ஒரு புறம், மரங்கள் கற்களே ஆயுதமாக வந்து விழ, மற்றொரு பக்கம் சூலமும், பரிகமும் வீசப் பட்டன. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ராக்ஷஸர்களிடம் ஆயுதங்கள் பலவும் இருந்தன. சக்தி,வாள், க3தை4 குந்த3, தோமரங்கள், பட்டஸங்கள், பிண்டி பாலங்கள், இவைகளைக் கொண்டு விடாமல் அடித்தனர். பாசத்தாலும், உத்கர தண்டங்களாலும் மற்றவர் அடித்தனர். வானர சேனையை ஒரு கலக்கு கலக்கி விட்டனர். கரனுடைய மகன் இடைவிடாது பொழிந்த பாணங்களால் வருந்திய வானர வீரர்கள், பயம் துரத்த ஓடினார்கள். ஓடும் வானர வீரர்களைப் பார்த்து ராக்ஷஸர்கள் உரக்கச் சிரித்தனர். சிங்க நாதம் செய்தனர். ஓடி வரும் வீரர்களை எதிர் கொண்ட ராமர், அவர்களைத் தடுத்து ராக்ஷஸர்களை தானே போரில் சந்திக்க வந்தார். அவருடைய பாணங்கள் ராக்ஷஸர்களின் ஆயுதங்களுக்கு தடையாக நின்றன. ராக்ஷஸர்களின் முன்னேற்றம் தடைப் பட்டதைக் கண்டு, மகராக்ஷன் ஆத்திரம் கொண்டான். யாரது ராமன்? என் தந்தையைக் கொன்றவன். அவன் எங்கே? ஜனஸ்தானம் வந்து என் தந்தையையும், அவனுடன் சென்றவர்கள் அனைவரையும் ஒன்றாக நாசம் செய்த துர்புத்தி எங்கே? இன்று அவனை நான் யமலோகம் அனுப்புகிறேன். அவன் ப3ந்து4க்கள் எல்லோரும் யுத்த பூமியில் மடிய அவனும் இன்று அழிவான். பாருங்கள் ராக்ஷஸர்களே, இன்று ராமனையும் அவன் சகோதரன் லக்ஷ்மணனையும் வதம் செய்து அவர்கள் படை பலத்தையும் நாசம் செய்து அந்த ரத்தம் கொண்டு என் தந்தைக்கு நீர்க்கடன்களைச் செய்வேன். என்றான். சொன்னபடி அந்த ராக்ஷஸ குமாரன், ராமனுக்கு காட்ட விரும்பியது போல, தன் பலம் அனைத்தையும் பிரயோகம் செய்தான். ராமனைத் தவிர வேறு யாரிடமும் நான் யுத்தம் செய்ய மாட்டேன். மற்ற வீரர்களே, தள்ளி நில்லுங்கள். என்று அறை கூவினான். மேக நாதம் போல சப்தம் செய்யும் ரதத்தை ஓட்டிக் கொண்டு, யுத்த பூமியில், ராமனைத் தேடினான். சற்றுத் தொலைவில் ராமனும் அருகில் லக்ஷ்மணனும் நிற்பதைக் கண்டு, கைகளை ஆட்டி அவர்களை அழைத்தான். ராமா, நில். என்னுடன் த்வந்த யுத்தம் செய்ய வா. என் கூர்மையான அம்புகள் வில்லிலிருந்து புறப்பட்டு உன் உயிரைக் குடிக்க காத்திருக்கின்றன. என் தந்தையை தண்டகா வனத்தில் நீ கொன்றது போல, இப்பொழுது நான் உன்னை மாய்க்க காத்திருக்கிறேன். உன் செயலையே நான் திருப்பப் போகிறேன். என்னுள் தோன்றும் ஆத்திரம் என் உடலை தகிக்கிறது. துராத்மாவே, ராகவா, அந்த யுத்தம் நடந்த சமயம் நான் இருக்கவில்லை. அதனால் என்னை நீ அறிய மாட்டாய். இன்று அதிர்ஷ்ட வசமாக என் கண்ணில் பட்டாய். வசமாக அகப்பட்டுக் கொண்டாய். பசித்து நிற்கும் சிங்கத்தின் முன் மற்ற மிருகங்கள் தானே வந்து நிற்பது போல நிற்கிறாய். இன்று என் பாணங்களுக்கு இரையாகப் போகிறாய். உன்னால் கொல்லப் பட்ட வீரர்களுடன் இன்று நீயும் போய் சேர்ந்து கொள். பேசிப் பயன் என்ன? நான் சொல்வதைக் கேள். இந்த உலகம் பூராவும் பார்த்து களிக்கட்டும். நீயும் நானும், யுத்த பூமியில் த்வந்த யுத்தம் செய்வோம். வா. ராமா, எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள். அஸ்திரங்களா, க3தை4யா, இல்லை கைகளே போதுமா? நீ சொல்வது போல நானும் தயாராக வந்து விடுவேன். மேலும் மேலும் பேசிக் கொண்டே போகும் மகராக்ஷன் வார்த்தைகளைக் கேட்டு ராமர் சிரித்துக் கொண்டே ராக்ஷஸ குமாரனே, ஏன் வீணாக பிதற்றுகிறாய். யுத்தத்தில் வாய் ஜாலத்தால் ஜயிக்க முடியாது. நேரடியாக களத்தில் இறங்கி யுத்தம் செய்து பார். பொருத்தம் இல்லாமல் பேசுகிறாயே. பதினாலாயிரம் ராக்ஷஸர்களுடன் உன் தந்தையை, த்ரிசிரஸ், தூ3ஷணன் இவர்களை நான் தனி ஒருவனாக வதம் செய்தேன். நீயும் என் கையால் வதம் செய்யப் பட்டு ஆகாயத்தில் சஞ்சரிக்கும் மாமிச பக்ஷிணிகளான பறவைகளுக்கு இரையாகப் போகிறாய். எனவும், மகராக்ஷன் தன் பாணங்களை ஒன்றன் பின் ஒன்றாக பிரயோகிக்க ஆரம்பித்தான். ஆயிரக்கணக்கான அந்த பாணங்களை, தன் அருகில் விழுமுன், ராமர் தடுத்து, சிதறி விழச் செய்தார். கரனுடைய மகனுக்கும், தசரத குமாரனுக்கும் இடையில் நடந்த இந்த யுத்தம் விசித்ரமாக இருந்தது. ஆகாயத்தில் மேகங்கள் கர்ஜிப்பது போல இருவரின் வில்லில் இருந்து பாணங்கள் வெளிப்படும் ஓசை அந்த ரண பூமியை நிறைத்தது. இந்த அத்புத காட்சியைக் காண, தே3வ, தா3னவ, க3ந்த4ர்வர்கள், கின்னர, மகோரர்கள், அந்தரிக்ஷத்தில் நின்று வேடிக்கை பார்க்கலாயினர். இருவரும், பாணங்களால் அடிக்க, உடலில் தைத்த அம்புகள் ஏற்படுத்திய காயங்களைப் பொருட்படுத்தாமல், யுத்தம் தொடர்ந்து நடந்தது. ராமரது வில்லிலிருந்து புறப்பட்ட பாணங்களை அந்த ராக்ஷஸ சிறுவன், தடுத்து விட்டான். அவனுடைய பாணங்களை ராமரும் பலமுறை தடுத்துச் சிதறச் செய்தார். ஆத்திரத்துடன் மகராக்ஷனும் சளைக்காமல் யுத்தம் செய்தான். ஆகாயமே இந்த இருவரின் பாணப் பிரயோகங்களால் மறைந்து விட்டது போல கண்ணுக்குத் தெரியாமல் ஆயிற்று. திசைகளும் தெரியவில்லை. எட்டு நாராசமான பாணங்களால் மகராக்ஷனின் சாரதியை விழச் செய்தார், ராமர். அடுத்து வந்த பாணங்களால் ரதம் உடைந்து விழுந்தது. குதிரைகள் ஓடின. தரையில் நின்ற மகராக்ஷன், சூலத்தை கையில் எடுத்துக் கொண்டான். யுகாந்தாக்னி போல இருந்த அந்த சூலம் உலகத்து ஜனங்களை பயமுறுத்தியது. அதை ராகவன் பேரில் மகராக்ஷன் எய்தான். கர புத்திரனின் அந்த சூலம் ஆகாயத்திலேயே துண்டு துண்டாக சிதறும் படி ராம பாணம் எதிர் கொண்டது. ஆகாயத்தில் யுத்தத்தைக் காண நின்றிருந்தவர்கள், சாது, சாது என்று பாராட்டினர். சூலமும் கை விட்டுப் போனபின், முஷ்டியை மடக்கிக் கொண்டு மகராக்ஷன் முன் வந்தான். காகுத்ஸனைப் பார்த்து, நில், நில் என்று அலறினான். இப்படி ஓடி வரும் மகராக்ஷனைப் பார்த்து ராமர் சிரித்தபடி, பாவகாஸ்திரத்தை தன் மனதில் தியானித்து, வில்லில் பிரயோகித்து எய்தார். அந்த அஸ்திரம் ராக்ஷஸனை யுத்த பூமியில் மடிந்து விழச் செய்தது. மகராக்ஷன் மடிந்ததைக் கண்டு ராக்ஷஸ சைன்யம் லங்கையை நோக்கி ஓடி விட்டது. தசரதன் மகனும், ராக்ஷஸனான கரனின் மகனும் செய்த யுத்தத்தையும், மகராக்ஷன் மடிந்து விழுந்ததையும் கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். முன் ஒரு சமயம் வஜ்ராயுதத்தால், மலைகள் நொறுங்கியது போல இந்த காட்சியை நினைத்து மகிழ்ந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மகராக்ஷ வத4: என்ற எழுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 80 (487) திரோஹித ராவணி யுத்தம் (ராவணன் குமாரன், மறைந்திருந்து போர் செய்தல்)
மகராக்ஷன் போரில் மாண்டதைக் கேட்டு, ராவணன் பற்களை நற நறவென்று கடித்தான். கோபம் தலைக்கேறியது. வெற்றியே கண்டு வந்த அவனால் இந்த தோல்வியைத் தாங்க முடியவில்லை. மேற் கொண்டு என்ன செய்வது என்று யோசித்தான். யுத்தம் செய்ய தன் மகன் இந்திரஜித்தை அழைத்து உத்தரவிட்டான். வீரனே, இந்த ராம, லக்ஷ்மணர்களை போரில் வதம் செய்து விட்டு வா. இரண்டு விதங்களிலும் நீ உன் பலத்தைக் காட்டி யுத்தம் செய். இந்திரனையே ஜயித்தவன் நீ. அரிய காரியங்களை செய்யக் கூடியவன். இந்த மனிதர்களை போரில் வெல்வது உனக்கு கடினமான காரியமே அல்ல. தந்தையின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொண்டான் ராவணி, ராவணன் மகன், இந்திரஜித். போருக்குப் புறப்பட்டான். யாக சாலையில் அக்னி வளர்த்து ஹோமம் செய்து முறைப்படி பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டான். அவன் ஹோமம் செய்து அக்னியை வளர்த்துக் கொண்டிருக்கும் பொழுது தலையில் முக்காடு தரித்த ஸ்த்ரீகளும், ராக்ஷஸிகளும் வந்து சேர்ந்தனர். சிவந்த வஸ்திரங்களும், எண்ணெய் பிசுக்கு, (நெய்யில் எப்பொழுதும் ஊறிக் கிடப்பதால்) பிடித்த கரண்டிகளும், சஸ்திரங்களும், இலை வடிவில் நுனியுடைய சரங்கள், சமித் இவைகளை அக்னியில் ஹோமம் செய்து, தோமரங்களும், சரங்களாலும் அக்னியை நாலா புறமும் அலங்கரித்து, யக்ஞ பசுவை, கறுப்பு ஆட்டை உயிருடன் கழுத்தை நெரித்து பலி கொடுத்து, புகையின்றி அக்னி கொழுந்து விட்டெரிய அதில் சர ஹோமம் முறைப்படி செய்து, வெற்றியைக் குறிக்கும் நல்ல சகுனங்கள் தோன்ற, இந்திரஜித் மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். அக்னி பிரதக்ஷிணமாக சுழன்றது. ஹாடக எனும் தங்க வர்ணத்தில் பிரகாசமாக இருந்தது. அக்னி தானே வந்து ஹவிஸை ஏற்றுக் கொண்டான். தேவ, தானவ ராக்ஷஸர்களுக்கு தானங்கள் செய்து, அக்னியை வணங்கி, சுபமான ரதத்தில் ஏறி அந்தர்தானம் ஆனான். (யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து நின்றான்). நான்கு குதிரைகள் பூட்டிய ரதம், கூர்மையான பாணங்கள் நிரப்பப் பெற்று, தயாராக நாண் ஏற்றி வைக்கப் பட்டிருந்த வில்லுடன் அந்த உத்தமமான ரதம், மிகவும் சோபையுடன் விளங்கியது. தன் சரீர காந்தியாலேயே ஒளி மயமாக இருந்த இந்திரஜித், ப்ரும்மாஸ்திரம் இவனுக்கு பாதுகாவலாக இருந்தது என்ற காரணத்தால், யாராலும் வெல்ல முடியாது என்ற நிலையில், சொல்ல முடியாத அளவு பலசாலியாக விளங்கினான். யுத்தத்தில் வெற்றியே கண்டு வந்த இந்திரஜித், நகரத்தை விட்டு வெளி வந்தான். அந்தர்தானத்தில் இருந்தபடியே, மந்திரி வர்கங்களுடன் பேசினான். இன்று காட்டில் திரியும் அந்த இரு போலி வீரர்களைக் கொன்று விட்டுதான் திரும்புவேன். என் தந்தை ராவணனுக்கு யுத்தத்தில் வெற்றியை பெற்றுத் தருவேன். இன்று ராமனைக் கொன்று. இந்த பூமியை வானரங்களே இல்லாது போகச் செய்வேன். லக்ஷ்மணனையும் கூடவே வதம் செய்து விடுவேன். அப்பொழுது தான் என் தந்தை முழுவதும் திருப்தியடைந்தவனாக ஆவார். என்று சொல்லி தீவிரமாக யுத்தத்தில் இறங்கினான். தந்தை சொல்லியிருந்தபடி, வெற்றி அல்லது வீர மரணம் என்று நாராசமாக, கூரிய பாணங்களை மழையாக பொழியலானான். ஆகாயத்திலிருந்து அந்த வீரர்கள் இருவரும் மூன்று தலை நாகங்களாகத் தெரியக் கண்டான். வானரங்களின் நடுவில் நின்று கொண்டு, புது புது அம்புகளை தயார் செய்து கொண்டிருக்கக் கண்டான். இவர்கள் தான் என்று நிச்சயம் செய்து கொண்டு, தன் வில்லை எடுத்து குறி பார்த்து, மழை பொழிவது போல பாணங்களை பொழிய ஆரம்பித்தான். ராம லக்ஷ்மணர்கள் கண்களுக்கு புலனாகாதபடி, அந்தரிக்ஷத்தில் நின்று கொண்டு, ரதத்தில் இருந்தபடி, கூர்மையான சரங்களால் ராம, லக்ஷ்மணர்களை அடிக்கலானான். நாலா புறமும் சரங்களாக அவர்களை சூழ்ந்து நிற்கவும், திவ்யமான அஸ்திரங்களை தங்கள் வில்லில் வைத்து பிரயோகம் செய்யலானார்கள். ஆகாயமே மறைந்து போகும்படி சரஜாலத்தை செய்து விட்டனர். சூரியனுக்கு இணையான அந்த வலை பின்னப்பட்டதால், இந்திரஜித்தின் சரங்கள் அவர்களை நெருங்க முடியவில்லை. திசைகள் மறைய அந்தகாரம் சூழ்ந்தது போல இருந்தது. புகையும், இருட்டும் ஆகாயத்தை மறைத்தன. வில்லின் நாணை இழுத்த சப்தமோ, அம்பு விர்ரென்று புறப்பட்ட சப்தமோ எதுவுமே கேட்கவில்லை. எய்பவனையும் தெளிவாக காண முடியவில்லை. கும்மென்ற இருட்டில் மலையிலிருந்து கல் மழை பொழிவது போல இருந்தது. அத்புதமாக, சரங்களை ராமர் இடைவிடாது எய்த வண்ணம் இருந்தார். வர பலத்தால் ராவணி, ராமரை தன் ஒளி மயமான கூர்மையான அம்புகளால் துளைத்தெடுத்தான். இருவரும் தங்கள் உடலில் பட்ட அம்புகளால் ஏற்படும் வேதனையை சற்றும் காட்டிக் கொள்ளாமல் பிரதி யுத்தம் செய்தனர். அந்தரிக்ஷத்திலும், ராவணியை அடைந்து அவனைத் தூக்கி ரத்தம் சொட்ட விழுந்தன அம்புகள். இடைவிடாது சரங்களால் அடிபட்டு களைத்த வீரர்களான ராம லக்ஷ்மணர்கள், இப்படி திரும்பி வரும் அம்புகளையும் சிதறி விழச் செய்ய வேண்டி இருந்தது. கூர்மையான அம்புகள் விழ, விழ, தசரத குமாரர்கள் இருவரும் புது புது அம்புகள், சஸ்திரங்களை தயார் செய்த வண்ணம் இருந்தனர். ராவணியோ, தன் ரதத்தில் மூலைக்கு மூலை தாவி ஆகாயத்தில் இருந்தபடி, சுலபமாக அஸ்திரங்களை கொண்டு ராகவர்களை தாக்கினான். கிம்சுக புஷ்பங்கள் உடல் பூரா மலர்ந்தது போல காயங்கள் சிவந்த ரத்த பெருக்குடன் காணப்பட்டது. இந்திரஜித்தின் இருப்பிடமும் தெரியவில்லை. அவன் வேகமும் பிடிபடவில்லை. உருவமும் கண்ணுக்கு புலப்படவில்லை. வில்லா, அம்பா, எப்பொழுது எப்படி எய்கிறான் என்பது எதுவுமே புரியவில்லை. சூரியன் மேகங்கள் நிறைந்த ஆகாயத்தில் தென்படாதது போல இருந்தது. வானரங்கள் நிலையோ கேட்கவே வேண்டாம். அனேகமாக எல்லா வானரங்களுமே அடிபட்டு, பூமியில் விழுந்து விட்டனர். லக்ஷ்மணன், சற்று கோபத்துடன், ராமரைப் பார்த்து, ப்ரும்மாஸ்திரம் விட்டு, ராவண குமாரனை வதம் செய்யப் போகிறேன் என்றான். ராமர் லக்ஷ்மணனைப் பார்த்து, பொறு, ஒருவனுக்காக ப்ரும்மாஸ்திரத்தை பிரயோகம் செய்து உலகத்தையே துன்பத்தில் ஆழ்த்தக் கூடாது. சண்டை செய்யாதவன், மறைந்து நிற்பவன், கை கூப்பி சரணடைந்தவன், ஓடிக் கொண்டிருப்பவன், புத்தி பேதலித்தவன், இவர்களைக் கொல்லக் கூடாது என்பது யுத்த தர்மம். இவனை வதம் செய்ய என்ன வழி என்று யோசிப்போம். நாம் நம் கையில் உள்ள மகா வேகமான அஸ்திரங்களை, ஆல கால விஷத்தைக் கக்குவது போல கூர்மையான சரங்களை எய்வோம். ரதத்துடன் ஒளிந்து கொண்டு, மாயா யுத்தம் செய்யும் இவனைக் கண்டு பிடிப்போம். கண்ணில் தென்பட்டால் நம் வானர வீரர்களே அவனைக் கொல்லக் கூடிய சக்தி உடையவர்களே. இவன் பூமியில் இறங்கட்டும். தேவ லோகமானாலும் சரி, பாதாளமானாலும் சரி, இப்படி ஒளிந்து கொண்டாலும் என் அம்புகள் கண்டு கொண்டு பூமியில் விழச் செய்து விடும். சுற்றிலும் வானர வீரர்கள் சூழ்ந்திருந்த சமயம், ராமர் பொதுவாக எல்லோருக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக பேசி விட்டு, க்ரூர கர்மா-கொடிய செயலைச் செய்பவனான இந்திரஜித்தை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி யோசிக்கலானார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் திரோஹித ராவணி யுத்தம் என்ற எண்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 81 (488) மாயா சீதா வத4: (மாயா சீதையை வதம் செய்தல்)
ராகவனுடைய எண்ணத்தை புரிந்து கொண்டு விட்ட இந்திரஜித் யுத்தத்தை நிறுத்தி விட்டு ஊருக்குள் வந்தான். தங்கள் சுற்றத்தாரையும், உற்றாரையும் ராம சைன்யம் வதம் செய்ததை நினைத்து மேலும் மேலும் ஆத்திரம் அடைந்தான். மேற்கு வாசல் வழியாக, சில ராக்ஷஸர்களுடன் வெளி வந்தான். தேவர்களுக்கு முள் போல உருத்திக் கொண்டு துன்பம் விளைவித்து வந்த இந்திரஜித் புலஸ்திய வம்சத்து வழியில் வந்த வீரனான இந்திரஜித், யுத்தம் செய்யத் தயாராக நின்ற ராம லக்ஷ்மணர்களைப் பார்த்து, பொருமினான். திரும்பவும் மாயா ஜாலத்தை செய்ய ஆரம்பித்தான். சீதையைப் போன்ற ஒரு மாயா தோற்றத்தை உருவாக்கி ரதத்தில் வைத்துக் கொண்டு பலவந்தமாக அவளை வதம் செய்வது போல செய்தான். பார்த்தவர்கள் மனம் கலங்கி நிற்கவும் அவர்கள் கவனத்தை திசை திருப்பும் விதமாகவும், கோணல் புத்தியூடன் வானர வீரர்கள் முன்னிலையில் ரதத்தை ஓட்டிக் கொண்டு சென்றான். ஊரை விட்டு வெளியேறும் இந்திரஜித்தைப் பார்த்து ஹனுமான் முதலான வானரங்கள் கற்களைத் தூக்கிக் கொண்டு பின் தொடர்ந்து சென்றன. அருகில் சென்று அடிக்க முயன்ற பொழுது ரதத்தில் முகம் வாடி சீதை இருப்பதைக் கண்டு திகைத்தன. ராகவ பத்னியான சீதை, ஒற்றைக் குழலுடன், உபவாசத்தால் இளைத்து போன உருவமும், கசங்கிய ஆடையுடன், நேர்மையே உருவானவள், உடல் புழுதி படந்து இருக்க, மைதிலி தானா என்று ஒரு நிமிஷம் கூர்ந்து பார்த்து தெரிந்து கொண்டு, நின்றன. மற்ற வானரங்கள் எப்பொழுதோ ஒரு முறை பார்த்தது தான். ஹனுமான் ஒருவனே சமீபத்தில் கண்டவன். கண்ணீரை பெருக்கிய ஹனுமான், களைத்து, இளைத்து கிடந்த சீதை ரதத்தில் இருப்பதைக் கண்டு பதறினான். சோகத்துடன், ராவண ராஜ புத்திரனின் ரதத்தில், தவமே உருக் கொண்டாற் போல சீதை நிற்பதைக் கண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தபடி மற்ற வானரங்களுடன், அந்த ரதத்தை தாக்கலாயினர். வானர சைன்யம் தாக்குவதைக் கண்டு, ஆத்திரத்துடன், இந்திரஜித் சீதையின் தலையில் ஒரு அடி அடித்தான். க்ரூரமாக அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பலமாக உடல் பூரா அடித்தான். ராம, ராம என்று அலறுவது போல, மாயையால் ஸ்ருஷ்டி செய்தான். தலை கேசத்தைப் பிடித்து மூர்கமாக, இந்திரஜித் அடிப்பதைப் பார்த்து ஹனுமான் செய்வதறியாது, கண்களில் நீர் பெருக நின்று விட்டான். ராக்ஷஸ ராஜ குமாரன் கையில் அவஸ்தைப் படும் சீதையைப் பார்த்து மிகுந்த ஆத்திரத்தோடு ராவணியைப் பார்த்து கத்தினான். துராத்மன், உனக்கு என்ன நேர்ந்தது? தன் விநாசத்திற்காக நீ இவள் கேசத்தை பற்றியிருக்கிறாய். தெரிந்து கொள். ப்ரும்ம ரிஷி குலத்தில் பிறந்தவன், ராக்ஷஸ வம்சத்தில் வந்தவன், நல்ல குலத்தில் பிறந்த நீ செய்யும் செயலா இது? தி4க் த்வாம் (இது ஒரு வசைச் சொல்) பாபத்தைச் செய்ய துணிந்தவனே, உன் புத்தி இவ்வளவு கீழ்த் தரமாக ஏன் போகிறது? க்ரூரனே, பண்பை இழந்தாயோ. இப்படி ஒரு தகாத செயலை செய்கிறாயே, அல்பனே. உனக்கு பராக்ரமம் என்று ஏதாவது இருக்கிறதா? பாபியே, இதை விட மட்டமாக எந்த ஒருவனாலும் நடந்து கொள்ள முடியாது. அல்பனே, வீட்டிலிருந்து, ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப் பட்டு வனம் வந்த ராமனுடன் வந்தவள், அவனிடமிருந்தும் அபகரித்துக் கொண்டு வரப்பட்டவள், கொல்லப் படுகிறாள். இவள் உனக்கு என்ன அபராதம் செய்தாள் என்று இவளைக் கொல்ல முயற்சிக்கிறாய். சீதையைக் கொன்று விட்டு நீ வெகு காலம் வாழ்ந்து விடுவாயோ, இதோ இந்த ஒரு செயலுக்காகவே, என் கைகளில் வந்து விழுந்து விட்டாய். இது போல ஸ்த்ரீகளை வதம் செய்பவர்கள், திருடர்களை விட அல்பமானவர்கள். பதினான்கு லோகங்களிலும், அவமதிக்கப் பட்டு வதம் செய்ய தகுந்தவர்கள். இங்கு இப்பொழுது உயிர் வாழ ஆசைப்பட்டு, பர லோகத்தில் இம்சைகளை சேர்த்து வைத்து அனுபவிக்கப் போகிறாய். இவ்வாறு சொல்லிக் கொண்டே ஹனுமான், ஆயுதம் தாங்கிய வானர வீரர்களோடு இந்திரஜித்தை கடுமையாகத் தாக்கினான், மேலே வந்து விழுந்த வானரத்தைக் கண்டு ராக்ஷஸ வீரர்களின் படை அவர்களைத் தடுத்தது. ஆயிரக் கணக்கான பாணங்களை வர்ஷித்து விட்டு வானர சைன்யத்தை கலக்கி விட்டு செயலற்று அவர்கள் நிற்கையிலேயே, ஹரி ஸ்ரேஷ்டனான (ஹரி-வானரம்) ஹனுமானைப் பார்த்து இந்திரஜித் பேசலானான். சுக்ரீவனும், நீயும், ராமனும் என்ன காரணத்திற்காக இங்கு வந்து கூடியுள்ளீர்களோ,அந்த வைதேஹியைக் கொன்று விடுகிறேன். இதோ நீ பார், உன் எதிரிலேயே கொல்கிறேன். இவளைக் கொன்ற பின், ராமனையும் லக்ஷ்மணனையும் உன்னையும் சுக்ரீவனையும் கொல்வேன். அந்த துரோகி விபீஷணனையும் கொல்வேன். வானரமே, ஸ்த்ரீயைக் கொல்லக் கூடாது என்று எனக்கு உபதேசம் செய்ய வந்தாயா, உபத்ரவம் செய்யும் எதுவானாலும், யாரானாலும் கொல்லத் தகுந்ததே. இப்படி சொல்லிக் கொண்டே, அழுது கொண்டு நிற்கும் சீதையை கூர்மையான வாளால் தானே கொன்றான். யக்ஞோபவீதம் போல குறுக்காக அவளை வெட்டி சாய்த்து விட்டான். மாயா சீதையான அந்த உருவம் பூமியில் விழுந்தது. தானே அவளைக் கொன்று விட்டு, ஹனுமானைப் பார்த்து இந்திரஜித், இதோ பார், ராமனுடைய பத்னியை நான் கொன்று விட்டேன். இனி உங்கள் சிரமங்கள் எல்லாம் வீணே. என்ன செய்வீர்கள்? என்று சொன்னபடி, ரத்தம் தோய்ந்த வாளுடன் ரதத்தில் ஏறி இந்திரஜித் கிளம்பி விட்டான். ரத சப்தம் தேய்ந்து, தொலை தூரம் சென்று விட்டதை சப்தத்தால் அறிந்து கொண்ட வானரங்கள், முகம் வாடி, ஓடலாயினர். இந்திரஜித்தோ, மிக்க மகிழ்ச்சியோடு இருப்பது போலக் காட்டிக் கொண்டு மறைந்து விட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மாயா சீதா வதோ4 என்ற எண்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 82 (489) ஹனுமதா3தி நிர்வேத3: (ஹனுமான் முதலானோர் வருந்துதல்)
திடுமென பெரும் ஓசை, சக்ரனான இந்திரனின் அசனி எனும் ஆயுதம் விழுந்தது போல கேட்கவும், வானர வீரர்கள் பயந்து நடுங்கி ஓடலாயினர். நாலா புறமும் பார்த்து எதுவுமே புலனாகாத நிலையில் திகைத்தனர். வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்த வானரங்களைப் பார்த்து, தாறு மாறாக அவைகள் ஓடுவதை நிறுத்தி, ஹனுமான் அவர்களிடம் எதற்காக ஓடுகிறீர்கள் என்று அதட்டினான். நல்ல வீரர்கள், யுத்தத்தை பாதியில் விட்டு ஓடுவது என்ன சூரத்தனம். என் பின்னால் வாருங்கள். நான் முன்னால் செல்கிறேன். சூரர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு, ரண பூமியிலிருந்து திரும்பி செல்லக் கூடாது. வாயு புத்திரன் இவ்வாறு உற்சாகமூட்டும் விதமாக பேசவும், கைக்கு கிடைத்த கற்கள், மரக் கிளைகள் இவற்றுடன் மகிழ்ச்சியாக போர் செய்ய தயாராக உற்சாகத்தை வருவித்துக் கொண்டு கிளம்பினார்கள். மீதியிருந்த ராக்ஷஸர்களைத் தாக்கி, நாலா புறமும் சூழ்ந்து கொண்டு யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். ஹனுமான் சொன்னபடி செய்ய வானரங்கள் காத்திருந்தன. இவர்களுடன் சென்ற ஹனுமான், உலர்ந்த கட்டையை அக்னி எரிப்பது போல, ராக்ஷஸ சைன்யத்தை தகிக்கலானான். காலாந்தகனோ, யமனோ எனும் படி, பயங்கரமாக போர் செய்து, ராக்ஷஸ சேனையை கலக்கி அழிக்க ஆரம்பித்தான். கோபமும், சோகமும் சேர்ந்து ஹனுமானை ஆட்டுவிக்க, பெரிய பாறாங்கல்லை எடுத்து இந்திரஜித்தின் ரதத்தின் மேல் வீசினான். கல் வருவதைப் பார்த்தே, சாரதி ரதத்தை வெகு தூரம் நகர்த்திச் சென்று விட்டான். இந்திரஜித்தை நெருங்காமலேயே அந்த கல் பூமியை பறித்துக் கொண்டு விழுந்தது. அந்த சமயம் அதன் அடியில் அகப்பட்டுக் கொண்ட ராக்ஷஸர்கள் நசுக்கப் பட்டார்கள். பலர் காயங்களோடு தப்பினர். வானரங்கள் கூட்டமாக மேலும் மேலும் கற்களை வீசியும் மரக்கிளைகளால் அடித்தும் ராக்ஷஸர்களை துன்புறுத்தினர். தன் வீரர்கள் அடிபட்டு வருந்துவதைக் கண்ட இந்திரஜித், ஆயுதத்தை எடுத்துக் கொண்டு எதிரில் வந்தான். தன் ராக்ஷஸ வீரர்களின் மத்தியில் நின்று கொண்டு சர மாரியாக வானரர்களைத் தாக்கி அடிக்க ஆரம்பித்தான். பல வானரங்கள் விழுந்தன. சூலங்களும் அசனி, வாள், பட்டஸங்கள் கூட முத்கரங்கள் இவைகளால் வானரங்களை அடித்து நொறுக்கினார்கள். ஹனுமானும் கைக்கு கிடைத்த சால மரங்கள், கற்கள் இவற்றைக் கொண்டு திரும்ப அடித்தான். ராக்ஷஸ வீரர்கள் இந்த தாக்குதலுக்கு திணறினார்கள். எதிரி சைன்யத்தை தடுத்து நிறுத்தி வானரங்களைப் பார்த்து ஹனுமான், திரும்பி போங்கள் இந்த படை பலத்தை நம்மால் எதிர்த்து நின்று போர் செய்ய முடியாது. ராமனுக்காக உயிரை கொடுக்க சித்தமாக போரில் இறங்கினோம். எந்த காரணமாக யுத்தம் செய்கிறோமோ அந்த ஜனகாத்மஜா சீதையே நஷ்டமாகப் போன பின் நாம் உயிரை விட்டுத் தான் என்ன பயன்? போய் ராமனிடமும், சுக்ரீவனிடமும் சொல்லுங்கள். என்ன செய்ய சொல்கிறார்களோ அதைச் செய்வோம். இவ்வாறு சொல்லி வானர வீரர்களை, மெதுவாக, திரும்பிச் செல்லச் செய்தான். ஹனுமான் போர் முனையிலிருந்து நகர்ந்து ராமரிடம் ஆலோசனை கேட்கச் சென்றவுடன், இந்திரஜித் தான் செய்யும் யாகத்தை முடிக்க நிகும்பிளா எனும் இடம் சென்று விட்டான். அங்கு அக்னி வளர்த்து முறைபடி யாகத்தை செய்தான். யாக குண்டத்தில் அக்னியை வளர்த்து ராக்ஷஸ விதிபடி மாமிசம் முதலியவற்றை அர்ப்பித்து ஹோமம் செய்யவும் அக்னி கொழுந்து விட்டெரிந்தது, சந்த்யா கால சூரியன் போல அக்னி ஜ்வாலை ரம்யமாக இருந்தது. ராக்ஷஸர்களின் நன்மைக்காகவும் வெற்றிக்காகவும், இந்திரஜித் சங்கல்பம் செய்து கொண்டு நெய்யை விட்டு (ஹவ்யம்), விதிப்படி ஹோமம் செய்ய, சுற்றிலும் ராக்ஷஸர்கள் காவல் நின்றனர். நியாய அநியாயங்களை அறிந்த பல ராக்ஷஸர்கள் சூழ்ந்து நின்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஹனுமதா3தி நிர்வேத3: என்ற எண்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 83 (490) ராமாஸ்வாஸனம் (ராமரை சமாதானப் படுத்துதல்)
ராக்ஷஸ, வானரங்களின் பெரும் போர் எழுப்பிய கூச்சலும் ஆரவாரமும் கேட்டு, ஜாம்பவானிடம் ராமர் சொன்னார். சௌம்ய, ஹனுமான் தன் பராக்ரமத்தைக் காட்டுகிறான் போலும். என்ன சத்தம். ஜாம்பவானே, நீயும் போ. உன் சகாயமும் அவர்களுக்குத் தேவையாக இருக்கும். இதைக் கேட்டு கரடி ராஜன், உடனே கிளம்பிச் சென்றான். ஹனுமான் நின்றிருந்த மேற்கு வாயிலை, தன் சைன்யத்தோடு சென்றடைந்தான். ஹனுமான் திரும்பி வருவதைப் பார்த்து திகைத்து நின்றான். வானரங்கள் யுத்தம் செய்து களைத்து மேல் மூச்சு வாங்க தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். ஹனுமான் சைன்யத்தோடு திரும்பி வருவதைக் கண்டு, தன் வீரர்களையும் தடுத்து, ராமர் இருக்கும் இடம் திரும்பினர். ஹனுமான் நாங்கள் யுத்தம் செய்து முன்னேறி நகர வாயிலை அடைந்த சமயம், அழுது கொண்டிருந்த சீதையை எங்கள் கண் முன்னாலேயே ராவணன் மகன் வெட்டி வீழ்த்தி விட்டான். எனக்கு அதைக் கண்ட பின் என்ன செய்வது என்றே தெரியவில்லை. உங்களிடம் விஷயம் தெரிவிக்க வந்தேன். இதைக் கேட்டு ராகவனும் துக்கத்தில் மூழ்கி, நினைவிழந்தான். வெட்டிச் சாய்த்த மரம் போல பூமியில் விழுந்தான். தேவ குமாரன் போன்ற ராமன், பூமியில் விழுந்ததைக் கண்ட வானர வீரர்கள் நெருங்கிச் சென்று சூழ்ந்து கொண்டனர். பத்மமும், உத்பலமும் வாசனை வீசும் சுகந்தமான நீரைத் தெளித்து மயக்கம் தெளியச் செய்தனர். திடுமென தோன்றிய தாங்க முடியாத அக்னி ஜ்வாலை தாக்கியது போல கிடந்தான்.
லக்ஷ்மணனும் விஷயம் அறிந்து திகைத்து நின்றான். தன் ஸகோதரனை அணைத்தவாறு சமாதானமாக பேசினான். எப்பொழுதும் நன்மையையே நினைத்து, நல்லதையே செய்யும் தாங்களை தங்கள் அனுஷ்டிக்கும் தர்மம் இது போன்ற அனர்த்தங்களில் இருந்து காப்பாற்றவில்லையானால், அந்த தர்மத்தால் என்ன பயன்? உபயோகமற்றது. ஆர்ய, தாங்கள் புலன்களை அடக்கி, தர்மம் தான் சிறந்தது என்று சொல்வீர்களே,. நமக்கு கிடத்தது என்ன? ஜீவன்களுக்கும், அசையாத தாவர, ஜங்கமங்களை கண்ணால் காண முடிவது போல, தர்மம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதனாலேயே தர்மம் என்ற ஒன்று இல்லவே இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த தாவரங்களும் மற்றவையும் உதவுவது போலக் கூட தர்மம் காப்பாற்றுவது இல்லை. உங்களைப் போன்றோர் இவ்வளவு கஷ்டத்தை ஏன் அடைய வேண்டும்? இந்த தர்மம் சக்தியுடையதாக இருந்தால், அதர்மத்தைச் செய்யும் ராவணன் இன்னேரம் நரகம் போய் இருக்க வேண்டும். உங்களைப் போல் தர்ம வழியில் நிற்பவர்கள் இது போல கஷ்டத்தை அனுபவிக்கவும் நேரக் கூடாது. ராவணன் துக்கம் கஷ்டம் எதுவுமின்றி இருக்க, உங்களுக்கு மேலும் மேலும் துன்பமே வந்து சேருகிறது. தர்மமும், அதர்மமும் பரஸ்பர விரோதிகள்,இல்லையா? தர்மத்தைச் செய்பவன் நல்ல தர்ம சிந்தனையும், வழியையும் பெறுவான். அதே போல அதர்மத்தை செய்பவன் தண்டனை பெறுவான். இப்படி அதர்மமே உருவானவர்களுடன் அதர்ம வழியில் போர் எய்தால் என்ன? இந்த ஜனங்களிடம் தர்மம் எடுபடாது. அதர்மத்தில் ருசி கண்டவர்கள். தகாத இடத்தில் தர்மத்தை சொல்வதால் என்ன பயன், விபரீதமாகத் தான் ஆகிறது. இப்பொழுது நடந்தது போல. இப்படி அதர்ம வழியில் நடப்பவர்களிடம் செல்வமும், பொருளும் நிலைத்து நிற்கிறது என்பதைப் பார்க்கும் பொழுது, தர்மமே பயனற்றது என்று ஆகவில்லையா? அதர்ம வழியில் ஒருவன் சுகத்தை பெறுவானேயானால், தர்மம் எதற்கு? அதர்ம வழியில் பல காரியங்களைச் செய்பவர்கள் வதம் செய்யப் படும் பொழுது வத கர்மம். வதம் செய்யும் செயல் இதனால் அதர்மமும் நசித்துப் போகிறது. இதன் பின் என்ன கெடுதலை செய்யப் போகிறது. விதி தான் காரணமாக இருக்கிறது. ஒருவன் அழிவதும், மற்றவர்களை அழிப்பதும், விதிப்படி நடக்கிறது. தர்மமோ, அதர்மமோ அதற்கு எந்த விதத்திலும் பொறுப்பாவதில்லை. பாப கர்ம பலன் என்று யாரும் கஷ்டப்படுவதில்லை. எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், அசத்தான- எந்த வித சக்தியும் இல்லாத ஒன்றை-எதுவும் செய்ய இயலாததால் தர்மத்தை நீங்கள் உறுதியோடு கடை பிடித்து வருகிறீர்கள். இதனால் என்ன லாபம்? எதிரிகளை அழிப்பதானாலும், தர்மத்தை முதலில் நிறுத்தி போரிடும் தாங்கள் பெறும் பயன் தான் என்ன? சத்-சத்யம் என்று ஒன்று உண்டானால், அதைக் கடை பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று வைத்துக் கொண்டால், இந்த சத்யத்தையே உயிராக கொண்டுள்ள தங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்திருப்பதைப் பார்க்க, சத்யம் காப்பாற்றும் என்று நம்ப முடியவில்லையே. அதனால் சத்யம் என்று ஒன்று இல்லவே இல்லை. அல்லது பலமில்லாதவன், அல்ப வீர்யன் இவர்களை தர்மம் ரக்ஷிக்குமோ என்னவோ. துர்பலனோ, மரியாதை இல்லாதவனையோ நாம் பின்பற்ற வேண்டியதும் இல்லை. என்னைப் பொறுத்த வரை பலமில்லாதவன், கோழை இவர்களை நம் முன்னோடியாக கொள்ளத் தேவையும் இல்லை. பராக்ரமம் உள்ளவன் தன் பலத்தை பிரயோகிப்பதே தர்மம். அதனால் உங்கள் பலத்தை நம்புங்கள். எப்படி தர்மம் உயர்வோ, அதே போல ஒருவனின் வீர்யமும், பலமும் உயர்வானதே. பரந்தபனே, சத்ய வசனம் தான் தர்மம் என்றால், அசத்யம், பொய், கருணையில்லாதது என்றால், நீங்கள் ஏன் தந்தையை கட்டிப் போடவில்லை. தர்மம், அதர்மம் என்பது சமயத்துக்கு தகுந்தபடி மாறுகிறது. இல்லையெனில் இந்திரன், முனிவரைக் கொன்று வஜ்ராயுதம் தயாரித்து, யாகம் செய்வானா? முனிவரைக் கொல்வது என்ன நியாயம்? (ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை எடுத்து இந்திரன் வஜ்ராயுதம் தயார் செய்து கொண்டு விருத்திராசுரனைக் கொல்லச் சென்றான் என்பது வரலாறு) ராகவா, சமயத்துக்கு தன்னிஷ்டப்படி அதர்மத்தையும் ஏற்றுக் கொண்டு, தர்மத்தோடு இணைத்தால் நாசம் தான் விளையும். தேவையானால் அதர்ம வழியிலும் போகலாம் என்று சம்மதம் கொடுத்தது போல ஆகிறது அல்லவா? கடைசியில் மனிதன் தன் இஷ்டப்படி சுய நலமாகத்தான் காரியங்களைச் செய்கிறான். தர்மமோ, அதர்மமோ எதில் அவனுக்கு உடனடியாக பலன் கிடைக்கிறதோ, அதுவே சிறந்தது என்று நம்புகிறான். ராஜ்யத்தை விட்டு வந்தபொழுதே, தர்மத்தை (ராஜ்ய பரிபாலனம் என்ற உங்கள் கடமையை) விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. என் எண்ணப்படி, இதை நீங்கள் தர்மமாக முதல் பொறுப்பாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். மலைகளில், மரங்கள் செழித்து வளருவதைப் போல செல்வம் நிறைந்து வளமாக இருப்பவனிடம் நண்பர்களும் மற்றவர்களும் சூழ்ந்து நிற்க, அரசனாக இருப்பவன் தான் செயல்களை செயல் படுத்த முடியும். உருப்படியாக ஏதாவது செய்ய முடியும். செல்வம் இழந்தவன், துர்பலனாகிறான். குட்டையில் தேங்கி நிற்கும் ஜலம், வெய்யில் காலத்தில் வற்றிப் போவது போல செல்வம் இன்றி கையாலாகாமல் நிற்பவனும், தன் கடமையை நிறைவேற்ற முடியாமல் போகிறான். இதுவும் ஒரு முக்யமான விஷயமே. செல்வமும், அதை தொடர்ந்து கடமையைச் செய்வதும் தேவையற்றது என்று விலகி போகும் பொழுது, அந்த சமயம் சுகமாகத் தோன்றினாலும், பின்னால் பாப காரியம் செய்யத் தூண்டுதலாக இந்த தியாகமே அமைகிறது. அது தோஷம் இல்லையா? எவனிடம் பொருளும், செல்வமும் நிறைந்து இருக்கிறதோ, அவனைச் சுற்றி நண்பர்கள், அவனைச் சுற்றி உற்றார்கள், இருப்பார்கள். செல்வம் உடையவன் தான் ஆண் மகன். அவன் தான் பண்டிதன். அவன் தான் விக்ரமம் உடைய வீரன். அவன் தான் புத்திசாலி. எவனிடம் செல்வம் இருக்கிறதோ, அவன் தான் மகா பலசாலி. அவனிடம் தான் குணங்கள் நிறைந்து நிற்கும். அவனே குணக்குன்று. இந்த செல்வத்தை (அரசை) துறந்து வந்து நாம் கஷ்டங்களையே அனுபவித்து வருகிறோம். ராஜ்யத்தைத் துறந்து வந்து, வீரனே, அந்த சமயம் ஏன் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தீர்களோ, நாம் கண்டது என்ன? எவனிடம் செல்வம் (அர்த்தம்) உள்ளதோ, தர்மமும், காமமும், ப்ரதக்ஷிணமாக அவனைச் சுற்றி வரும். செல்வம் இல்லாதவன், அர்த்தத்தை அனுஷ்டிக்க நினைத்தால், எதுவும் செய்ய முடியாது. மகிழ்ச்சியோ, காமமோ, தன் மானம் (கர்வம்), தர்மமோ, க்ரோதமோ, அடக்கமோ, ஆளுமையோ, செல்வம் உள்ளவனிடம் தான் எடுபடும். அவன் தான் இந்த குணங்களை செயல் படுத்த முடியும். தர்மமே குறி என்று நடப்பவர்களுக்கு இந்த உலகம் நஷ்டமாகத் தான் ஆகிறது. துர்தினங்களில் (மேக மூட்டமாக இருந்து சூரிய ஒளி தெரியாத நாட்களை துர்தினம் என்று சொல்வது வழக்கம்) க்ரஹங்கள் கண் பார்வைக்குப் புலனாகாதது போல இந்த அர்த்தம்-பொருள், உங்களிடம் இல்லாதபொழுது மற்ற குணங்கள் வெளிப்படவில்லை. குரு, பெரியவர் என்று, அவர் சொல்லைக் கேட்டு நீங்கள் நாட்டை விட்டு காட்டுக்கு வந்தீர்கள். உயிரினும் பிரியமான மனைவியை ராக்ஷஸன் அபகரித்துக் கொண்டு போனான். இன்று இந்திரஜித் மகா துக்ககரமான செயலை கண் முன்னே செய்து காட்டி விட்டான். இதை நாம் பிரதிகர்மா- சரியான பதிலடி கொடுத்து தான் ஆக வேண்டும். ராமா, எழுந்திரு. எழுந்திரு. நர சார்தூலா, உன் நீண்ட கைகளும், த்ருடமான விரதமும், பலனின்றி போகக் கூடாது. உன்னை உணர்ந்து கொள். மகாத்மா நீ, தெரிந்து கொள்ளாமல் ஏன் வருந்தி செயலிழந்து நிற்கிறாய். (கிம் ஆத்மானம் மகாத்மானம் நாவபுத்யஸே) இதோ பாருங்கள், ஹனுமான் உங்களிடம் ஈடுபாடுடையவன். ஜனகன் மகளை வதம் செய்ததைக் கண்ணால் கண்டதால் ஆத்திரம் கொண்டிருக்கிறான். இந்த செயலை கண்டிக்கும் விதமாக நான், என் அம்புகளால், லங்கையை, அதன் குதிரை படை, யானை, ரத, படைகளோடு, ராக்ஷஸேந்திரனையும் போரில் மடிந்து விழச் செய்வேன் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராமாஸ்வாஸனம் என்ற எண்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 84 (491) இந்திரஜித் மாயா விவரணம் (இந்திரஜித்தின் மாயா பற்றி சொல்லுதல்)
இவ்வாறு லக்ஷ்மணன் ராமனை சமாதானம் செய்து கொண்டிருந்த பொழுது, படை வீரர்களை ஒழுங்குபடுத்தி, அணி வகுத்து நிற்கச் செய்து விட்டு விபீஷணன் அங்கு வந்தான். கூடவே படைத்தலைவர்கள் சிலரும், அவன் மந்திரிகளும் வந்தனர். கண் மை போன்ற நிறமும், பெரிய யானையை போல உருவமும், பலமும் உடைய ஒரு படைத் தலைவனான விபீஷணன், நெருங்கி வந்தவன், கண்களில் நீருடன் வளைய வந்த வானரங்களையும், துக்கத்தில் மூழ்கி இருந்த ராகவனையும் பார்த்து திகைத்தான். லக்ஷ்மணன் மடியில் தலை வைத்து, சொல்லொணா வேதனையுடன் ராகவன் இருப்பதைக் கண்டான். இக்ஷ்வாகு குல நந்தனன், மகாத்மாவான ராமன் வருந்தும்படி என்ன நேர்ந்து விட்டது? தன் நினைவிழந்தவனாக, வேதனையும் வெட்கமுமாக நின்றிருந்த ராமரைப் பார்த்து விபீஷணன் என்ன இது என்று வினவினான். உடலும் உள்ளமும் தீனமாக, வேதனையோடு காட்சியளித்த ராமரைப் பார்த்து நம்ப முடியாமல் நின்றான். அதற்குள் அங்கு கூடிவிட்ட, சுக்ரீவன் முகத்தையும் பார்த்து, லக்ஷ்மணன் பதில் சொன்னான். இந்திரஜித் சீதையைக் கொன்று விட்டான். ஹனுமான் கண்டு வந்து சொன்ன இந்த செய்தியால் ராமன் வருந்துகிறான். சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, லக்ஷ்மணனை இடை மறித்து விபீஷணன், பொருள் பொதிந்த சில வார்த்தைகளைச் சொல்லி, நினைவிழந்து கிடந்த ராமரை தட்டி எழுப்பினான். மனுஜேந்திரா, ஹனுமான் சொன்னது நம்பக் கூடியதாக இல்லை. சமுத்திரம் வற்றி விட்டதாகச் சொல்வது போல இருக்கிறது. ராவணனுடைய எண்ணம் எனக்குத் தெரியும். துராத்மா. சீதையை கொல்ல மாட்டான். அவளிடம் அவனுக்கு உள்ள மோகமும் நான் அறிந்ததே. உனக்கு நன்மை உண்டாகட்டும். சீதையை விட்டு விடு, என்று நான் எவ்வளவு முறை யாசித்தேன். கேட்கவே இல்லையே. சாம எனும் சமாதானமோ, தானமோ, பேதமோ பலனளித்து விட்டால் யுத்தம் எதற்கு? அவளைக் காணவும் அவனால் முடியாது, மற்றவர்களையும் அனுமதிக்க மாட்டான். வானரங்களை ஏதோ வஞ்சனையால் ஏமாற்றி விட்டு ராக்ஷஸன் திரும்பிச் சென்று விட்டான் போலும். நிகும்பிளா எனும் இடத்தில் உள்ள மண்டபத்தில் ஹோமம் செய்வான். இந்த ஹோமம் முடிந்து திரும்பி வந்தால், இந்திரனோடு, தேவர்கள் அனைவரையும் ஜயித்து விடுவான். இதன் பின் ராவணன் மகனை எதிர்த்து நிற்பது மகா கஷ்டமாகி விடும். அதனால் இப்படி ஒரு மாயை செய்து வானரங்களை திசை திருப்பி இருக்கிறான். உக்ரமாக போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, வானர வீரர்களின் பராக்ரமத்தைக் குறைக்க இது ஒரு வழியாக உபயோகித்திருக்கிறான். இந்த ஹோமம் முடியும் முன், நாம் சைன்யத்தோடு அங்கு செல்வோம். தவறான செய்தியை நம்பி மன சஞ்சலம் கொண்டுள்ளாய். இதை உதறித் தள்ளி விட்டு நர சார்தூலா, வந்து படையினரை உற்சாகப் படுத்து. உன் முக வாட்டத்தைக் கண்டு எல்லோருமே கலங்கி போய் இருக்கின்றனர். நீ தைரியமாக இங்கேயே இரு. இங்குள்ள வீரர்களை தயார் செய். லக்ஷ்மணனை அனுப்பு. எங்கள் சைன்யத்துடன் அவன் தலைமை தாங்கி வரட்டும். இவன் தான் ராவணியை (ராவணன் மகன்) தன் கூரான அம்புகளால் அடித்து, அந்த ஹோமம் செய்வதை முடிக்க முடியாமல் தடுத்து, பாதியில் விட்டு யுத்தம் செய்ய வரவழைத்து, பின் வதமும் செய்வான். வேகம் நிறைந்த இவனுடைய பாணங்கள், தீக்ஷ்ணமாக கூராக உள்ளவை. அவன் ரத்தத்தைக் குடிக்க வல்லவை. அதனால் லக்ஷ்மணனுக்கு கட்டளையிட்டு அனுப்புங்கள். வஜ்ரதரனான இந்திரன் போல் இவன் ராக்ஷஸனை வதம் செய்து விட்டு வருவான். மனிதருள் மாணிக்கம் போன்றவனே, கால தாமதம் செய்ய வேண்டாம். நீ ராக்ஷஸ வதத்துக்கான ஆயுதத்தை உடனே தயார் செய்து கொடு. வாணியை இந்திரன் பயன் படுத்திக் கொண்டான் ஒரு சமயம், தேவர்களின் எதிரியைக் கொல்ல. அது போல உத்தமமான அஸ்திரத்தை லக்ஷ்மணனுக்கு கொடு. அவன் செய்து கொண்டிருக்கும் யாகம் முடிந்து விட்டால், ராக்ஷஸ ராஜ குமாரன் கண்ணுக்கு புலனாக மாட்டான். தேவ, அசுரர்கள் கூட அவனைக் கண்டு கொள்ள முடியாது. அதன் பின் அவன் சக்தியும் மிக அதிகமாகி விடும்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் இந்திரஜித் மாயா விவரணம் என்ற எண்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 85 (492) நிகும்பிளாபியானம் (நிகும்பிளை நோக்கி படையெடுத்தல்)
இதைக் கேட்டுக் கொண்டே எழுந்து வந்த ராமர் சரியாக கேட்டு, மனதில் வாங்கிக் கொள்ளவில்லை, என் மனமும், சரீரமும் என் வசத்தில் இருக்கவில்லை. விபீஷணா, நீ சொன்னதை மற்றுமொரு முறை சொல் என்றார். இழந்த தைரியத்தை திரும்பப் பெற்றவராக, வானரங்களுக்கிடையில் நிமிர்ந்து நின்று விபீஷணன் சொல்வதைக் கேட்கத் தயாராக ஆனார். விபீஷணனும் தான் சொன்னதை திரும்பவும் விளக்கிச் சொல்ல ஆரம்பித்தான். மகா பாக்யசாலியே, தங்கள் கட்டளைப் படியே நான் அணி வகுப்பை ஏற்பாடு செய்து விட்டு திரும்பினேன். நீங்கள் சொன்னபடியே, வார்த்தை பிசகாது, வீரர்களையும், படைத் தலைவர்களையும் அணி வகுத்து நிற்கச் செய்த பின், அவர்களுக்குத் தேவையான உத்தரவுகளையும் பிறப்பித்து விட்டு வந்தேன். அந்த படை வீரர்களும், சேனைகளும் தயாராக உள்ளனர். போர் முனைக்கு கிளம்பிச் சென்று விட்டனர். தலைவர்களும் நான் சொன்னதை புரிந்து கொண்டு, செயல் படுவார்கள். அந்த வேலை முடிந்து திரும்ப வந்தால், காரணமின்றி நீங்கள் வருந்தி தவித்துக் கொண்டிருப்பதையும், மற்றவர்களும் செய்வதறியாது வாடிய முகத்தோடு நிற்பதையும் கண்டேன். எல்லோருமே கலங்கி நின்றனர். நான் சொல்ல வேண்டிய வேண்டுகோள் ஒன்று உள்ளது. ராமா, கேள். இந்த வேதனையை விடு. இது ஆதாரமற்ற மோகம். உன்னை இந்த நிலையில் பார்க்கும் சத்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். முயற்சியைக் கை விடாதே. எடுத்த காரியத்தை நல்ல முறையில் முடிக்க வேண்டும். உற்சாகத்தை வரவழைத்துக் கொள். சீதையை திரும்ப அடைய வேண்டுமானால், இந்த ராக்ஷஸர்களை வதம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ரகுனந்தனா, நான் சொல்வதைக் கேள். உன் நன்மைக்காகத் தான் சொல்கிறேன். இந்த சௌமித்ரி, பெரும் படையுடன், பொறுக்கி எடுத்த வீரர்களுடன் கிளம்பட்டும். நிகும்பிளா போய் ராவணன் மகனை வதம் செய்யட்டும். இவனது வில்லிலிருந்து புறப்படும் ஆலகால விஷம் கக்கும் கூரிய பாணங்கள், ராக்ஷஸனை பதம் பார்க்கட்டும். இவன் தான் ராவணன் மகனை கொல்லக் கூடியவன். இயல்பாகவே வீரன். தவ வலிமையும், ஸ்வயம்பூ தந்த வரங்களும் அவனுக்கு மிக அதிகமான பலத்தை தந்திருக்கிறது. யாராலும் எதிர்த்து நிற்க முடியாது, இவன் தவம் செய்து ப்ரும்ம சிரஸ் என்ற அஸ்திரம் கிடைக்கப் பெற்றிருக்கிறான். இவன் மனதில் நினைத்தபடி இவன் குதிரைகள் ஓடும். இதைத் தவிர, பொறுக்கி எடுத்த வீரர்களுடன் பெரும் சைன்யமும் இவனுடன் நிகும்பிளா சென்றுள்ளது. இவன் ஹோமத்தை செய்து முடித்து விட்டு வந்தால், நாம் எல்லோரும் அழிந்தோம். சந்தேகமேயில்லை. நிகும்பிளை அடைந்து நீ செய்யும் யாகம் பூர்த்தியாகும் முன் எதிரிகள் யாரானாலும் போரிட்டு உன்னை வதம் செய்தால் தான் உனக்கு மரணம் என்று சர்வ லோகேஸ்வரனான ப்ரும்மா வரம் தந்திருக்கிறார். இது தான் அவனை வதம் செய்யும் வழி. நாங்கள் அவன் வாயிலாகவே அறிந்து கொண்ட உண்மை இது. அதனால் ராமா, கட்டளையிடு. இந்திரஜித்தை வதம் செய்து விட்டு வர அனுமதி கொடுத்து அனுப்பு. இவன் வீழ்ந்தால், ராவணனின் பலம் வீழ்ந்தது என்று கொள்ளலாம். பந்து மித்திரர்களோடு ராவணன் அழிவான். விபீஷணன் இவ்வளவு விவரமாக சொன்னதைக் கேட்டு, ராமர் பதிலளித்தார். தெரியும். அந்த மாயாவியின் பலத்தை நான் அறிவேன். சத்ய பராக்ரமனான விபீஷணா, அவன் ப்ரும்மாஸ்திரம் வைத்து பிரயோகிக்கத் தெரிந்தவன். நல்ல அறிவாளி. மாயாவி. மகா மாயங்களை அறிந்தவன். அதனாலேயே நல்ல பலசாலி. யுத்தம் என்று வந்தால், தேவர்கள், வருணன் உட்பட, ஜயித்து விடுவான். ரதத்தில் ஏறி, அந்தரிக்ஷத்தில், யார் கண்ணுக்கும் புலப்படாமல் சஞ்சரித்து, போர் செய்யும் பொழுது அவன் நடவடிக்கைகளை யாராலும் கணிக்க முடியாது. மேக மூட்டத்துக்குப் பின் சூரியனின் கதியை நிர்ணயிக்க முடியாமல் போவதில்லையா, அது போலத்தான். எதிரியின் மாயா பலத்தையும், பலத்தையும் அறிந்து கொண்ட ராமர், லக்ஷ்மணனைப் பார்த்து வானர ராஜனான சுக்ரீவனுடைய பிரதான சைன்யத்துடன், நீ போய் ராவண குமாரனை, மாயா யுத்தம் மறைந்து நின்று யுத்தம் செய்யும் கலையை அறிந்தவன் அவன், அவனை வதம் செய்து விட்டு வா என்று உத்தரவிட்டார். ஹனுமான் தலைமையில் வானரப் படையும், ஜாம்பவான் தலைமையில் கரடிகள் சைன்யமும், உனக்கு உதவியாக உடன் வருவார்கள். ராக்ஷஸனான இந்த விபீஷணன், தன் மந்திரிகளுடன் கூடவே வருவான். அந்த தேசத்தை அறிந்தவன் இவன். அதனால் வழி காட்டிச் செல்வான். மாயா ஜாலம் அறிந்த ராக்ஷஸ ராஜ குமாரனை வதம் செய்து விட்டு திரும்பி வா. இதைக் கேட்டு லக்ஷ்மணன், தானும் அத்புதமான பராக்ரமம் உடையவனே என்று நிரூபிப்பது போல, விபீஷணனுடன், உயர்ந்த வில்லை ஏந்தி, அதற்கு மேல் கவசம், கட்கம் (வாள்) சரங்கள், பொன்னாலான வில் இவைகளை எடுத்துக் கொண்டு தயாராக, ராம பாதத்தில் வணங்கி எழுந்து இன்று என் வில்லிலிருந்து புறப்படும் அம்புகள், ராவணன் மகன் உடலை கிழித்து லங்கையில் போய் விழப்போகிறது. ஹம்ஸ பக்ஷிகள், புஷ்கரிணியில் விழுவது போல இன்றே அந்த ரௌத்ரனுடைய சரீரத்தை என் சரங்கள், அவன் கை அம்புகளை, கிழே விழச் செய்து அவனையும் அழிக்கும்ஏ தமையன் முன் இவ்விதம் சூளுரைத்து விட்டு லக்ஷ்மணன், வேகமாக சென்றான். ராவணன் மகனை வதம் செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் தான் மனம் முழுவதும் வியாபித்திருந்தது. நிகும்பிளா செல்ல கிளம்பினவனை ராமன் மங்களா சாஸனம் , ஸ்வஸ்தி வசனங்கள் சொல்லி ஆசிர்வதித்து அனுப்பினார். லக்ஷ்மணன் முன்னே செல்ல, ஆயிரக் கணக்கான வானர வீரர்களுடன் ஹனுமான் பின் தொடர்ந்து சென்றான். விபிஷணன், அவன் மந்திரிகள் லக்ஷ்மணனுக்கு துணையாகச் சென்றனர். கரடி ராஜன் ஜாம்பவான் தன் சைன்யத்தையும் தயாராக வைத்திருந்து சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்தான். வெகு தூரம் சென்ற பின் அணி வகுத்து நின்ற சைன்யம் பெருமளவில் தென்படலாயினர். அந்த மாயாவியின் லோக மாயா என்ற நிலையை ஜயிக்க தானும் ப்ரும்ம விதானம் எனும் நிலையை அடைந்தான், ராஜ குமாரன் லக்ஷ்மணன். விபீஷணனோடு அங்கதனும், வாயு புத்திரனான ஹனுமானுடன் கலந்தாலோசித்தபடி, நடந்தான். பல விதமான நிர்மலமான சஸ்திரங்கள் ஒளி வீச, த்வஜங்கள் ஆபரணமாக ரதங்களை அலங்கரிக்க, எண்ணிக்கையில்லாத ரதங்கள் தயாராக நிற்க, அளவிட முடியாத வேகத்துடன் இருந்த பலசாலிகளான எதிரி சைன்யத்தினுள் நுழைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நிகும்பிளாபியானம் என்ற எண்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 66 (473) வானர பர்யவஸ்தாபனம்(வானரங்களின் தடுமாற்றமும், திரும்ப நிலை நிறுத்துதலும்)
லங்கையின் ப்ராகாரங்களைக் கடந்து, நகரத்தின் வெளி வாசலில் இருந்து வெளிப்பட்டான். வரும் பொழுதே, இடி போன்ற தன் குரலில் ஜய கோஷம் செய்து கொண்டே வந்தான். சமுத்திரத்தின் அலை ஓசையையும் மீறி அவன் குரல் கேட்டது. இந்திரனால் அவனை கொல்ல முடியாது. யமனும், வருணனும் அதே போல இவனை கொல்ல சக்தியற்றவர்களே. அவனுடைய பயங்கரமான கண்களைக் கண்டே ஓட்டம் பிடித்தன, வானரங்கள். ஓடும் வீரர்களைத் தடுத்து, கட்டுப் படுத்தி யுத்த பூமியில் நிற்க வைக்க, அங்கதன் அரும் பாடு பட்டான். நலன், நீலன், க3வாக்ஷன், குமுதன் இவர்களை பெயர் சொல்லி அழைத்து, உங்கள் வீர்யம் என்ன? மறந்துவிட்டதா? உங்களை நீங்களே மறந்தது போல ஓடுகிறீர்களே. உங்கள் அன்புக்கு பாத்திரமானவர்களை தனியே விட்டு ஓடலாமா? எங்கு போகிறீர்கள்? சாதாரண காட்டில் திரியும் வானரங்கள் தான் நாங்கள் என்று சொல்வது போல ஓடுகிறீர்களே. சௌம்ய, திரும்பி வாருங்கள். உயிரைக் காப்பாற்றி என்ன பயன்? திடுமென உயிர் ஆசை வந்து விட்டதா? இந்த ராக்ஷஸன் மிகப் பெரிய உருவத்துடன் வந்து நிற்கிறான். இவனுடன் யுத்தம் செய்ய நம்மால் முடியாது என்று பயப்படுகிறீர்களா? வேண்டாம். அந்த பயமே நமக்கு வேண்டாம். பயங்கரமான இந்த ராக்ஷஸ சைன்யத்துடன் போரிடத் தான் நாம் வந்தோம். நம் புஜ பலத்தால் இவனை வீழ்த்துவோம். வீரர்களே, திரும்பி வாருங்கள். ஆங்காங்கு சிதறிய படை வீரர்களை கஷ்டப்பட்டு ஒன்று சேர்த்து, சமாதானப் படுத்தி யுத்தத்தில் ஈடுபடச் செய்தான். அவர்களும் கைகளில் மரங்களை எடுத்துக் கொண்டு போர் முனைக்குத் திரும்பின. வந்து, மதம் பிடித்த யானைகள் போல எல்லாமாக சேர்ந்து கும்பகர்ணனை தாக்கின. மலைச் சிகரங்கள் போல இருந்த பெரிய பாறாங்கற்கள், நுனியில் பூக்களுடன் கூடிய மரக் கிளைகள், இவற்றால் அடித்தன. அசைக்க முடியவில்லை. அவன் சரீரத்தில் பட்ட பாறைகளே சிதறி சுக்கு நூறாக விழுந்தன. பெரிய பெரிய மரங்கள் என்று நினைத்தவை, துண்டு துண்டாக முறிந்து பூமியில் விழுந்தன. அவனும் இதனால் ஆத்திரமடைந்து வானர சைன்யத்தை அடிக்க ஆரம்பித்தான். காட்டுத் தீ வனத்தில் மரங்களை அழிப்பது போல வானர வீரர்களின் கூட்டத்தில் நுழைந்து ஒரு கலக்கு கலக்கினான். தங்கள் ரத்தத்திலேயே நனைந்தவர்களாக பல வானரங்கள் அடிபட்டு விழுந்தன. மரங்கள், தாம்ர நிறத்தில் புஷ்பங்களோடு பூமியில் சரிவது போல இருந்தது. தாண்டிக் குதிப்பவர்களும், ஓடுபவர்களும், எங்கும் பார்வையைச் செலுத்தாமல் ஓடிய ஓட்டத்தில், சில சமுத்திரத்தில் விழுந்தன. சில ஆகாயத்தை அடைந்தன. ராக்ஷஸனின் வலிமையான தாக்குதலை எதிர்த்து நிற்கத் திராணியற்று, சாகரத்தைக் கடந்து வந்த வழியே திரும்பிப் போனார்கள். பயத்தில் முகம் வெளிறி, பள்ளங்களில் சில மறைந்து கொண்டன. கரடிகள், மரங்களில் ஏறிக் கொண்டன. சில மலையுச்சியில், ஏறி நின்று கொண்டன. சில சமுத்திரத்தில் மூழ்கி தங்களை மறைத்துக் கொண்டன. குகைகளில் நுழைந்து கொண்டன. சில வானரங்கள் பொத்தென்று கீழே விழுந்தன. சில நிற்கவே முடியாமல் திணறின. ஒரு சில பூமியில் விழுந்து இறந்தது போல படுத்துக் கிடந்தன. இவைகளை ஒன்று சேர்க்க அங்கதன் மிகவும் பாடு பட வேண்டியிருந்தது. திரும்பத் திரும்ப அவர்களை ஒன்று கூட்ட சமாதானமாகவும், அறிவுரையாகவும், சொல்லிப் பார்த்தான். நில்லுங்கள். நாம் யுத்தம் செய்யத் தானே வந்தோம். யுத்தம் செய்வோம். வானரர்களே, திரும்பி வாருங்கள். உயிரைக் காப்பாற்றிக் கொண்டு எங்கே போவீர்கள்? திரும்ப நாம் ஓரிடத்தில் சந்திக்கத்தானே வேண்டும்? நாம் வந்த காரியம் இதுவே. திரும்ப வந்து அவரவர் இடத்தில் நில்லுங்கள். இப்படி ஆயுதம் இன்றி, நிராயுத பாணிகளாக பயத்துடன் ஓடுகிறீர்களே. உங்கள் மனைவிகள் பார்த்து சிரிக்கப் போகிறார்கள். உயிர் வாழும் ஜீவன்களுக்கு இது ஒரு பெரிய அவமானம் இல்லையா? நீங்கள் எல்லோரும் நல்ல குலத்தில் பிறந்து வளர்ந்த விதம் என்ன? இப்படி சாதாரண காட்டு வானரம் போல ஓடி ஒளிவது எங்கே? பயப்படுபவன் கோழை இல்லையா? தங்கள் வீரத்தைத் துறந்து ஓடுவது வீரனுக்கு அழகா? நாட்கள் கடந்து நாம் திரும்பிச் சென்ற பின், ஜனங்கள் கூடும் இடத்தில் என்ன பேசிக் கொள்வார்கள். ஓடி வந்து விட்டார்கள் இந்த வானரங்கள், வீரர்களாம் என்று இகழ்ச்சியாகப் பேசிக் கொள்வார்கள். கையில் ஜலத்தை எடுத்து, வீரம் பேசி விட்டு பெரிய பெரிய சபதங்கள் செய்து கொண்டு வந்தோமே, அவை என்ன ஆவது? கோழைகளாக, மற்றவர்கள் இகழ, உயிர் விடவா பிறந்தோம்? சத்புருஷர்கள் காட்டிக் கொடுத்த வழியில் போராடுவோம். இந்த பயத்தை விடுங்கள். அடிபட்டு பூமியில் விழுவோம். அல்ப ஜீவிதர்களாக பூமியில் படுத்துக் கிடப்போம். அடைய முடியாத ப்ரும்ம லோகத்தை யுத்த களத்தில் மடிந்து விழுபவர்கள் அடைவார்கள். இந்த சத்ருக்களை யுத்தத்தில் வெற்றி கொண்டால் நல்ல புகழை அடைவோம். இல்லையெனில் வீர சுவர்கம் புகுந்து பல போகங்களை அனுபவிப்போம். கும்பகர்ணன் காகுத்ஸனை நேரில் சந்தித்த பின் உயிருடன் திரும்ப மாட்டான். கொழுந்து விட்டெரியும் நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிகள் திரும்ப முடியாதது போல மடிவான். நாம், மகா வீரர்களின் வரிசையில் எண்ணப்படுகிறோம். ஓடிச் சென்று, நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமா? இந்த ஒருவன் பலரை அழித்து நம் புகழைக் கெடுக்கிறான். இப்படி சூரனான அங்கதன் சொல்லி, மிகப் பிரயாசையுடன் வானரங்களை திரும்ப ஒன்று சேர்க்க முயன்ற பொழுது, ஓடும் சில வானரங்கள் கோழையாக பதில் சொல்லின. நாங்கள் பயங்கரமான யுத்தம் செய்து விட்டோம். கும்பகர்ணன் எங்களை ஒரு கலக்கு கலக்கி விட்டான். நாங்கள் திரும்ப மாட்டோம். இப்பொழுது உயிர் எங்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது. இப்படிச் சொல்லிக் கொண்டே நாலா திசைகளிலும் ஓடின. பீமன், மிகப் பெரிய உருவம், பயங்கரமான கண்களுமாக வரும் கும்பகர்ணனைக் கண்டு ஓடும் வானரங்களை, தன் கைகளால் தடுத்து நிறுத்தியும், சமாதானமாக பேசியும் அங்கதன் அவர்களை திரும்பி வரச் செய்தான். வாலி புத்திரன் அங்கதன் தலைமையில் தாங்கள் செய்த பிரதிக்ஞை நினைவு வர, அவர்கள் திரும்பினார்கள். ரிஷபன், சரபன், மைந்தன், த்விவிதன், தூம்ரன், நீலன், குமுதன், சுஷேணன், கவாக்ஷன், ரம்பன், தாரன், பனஸன், வாயு புத்திரன் முதலானோர் வேகமாக ரண பூமியில் ஓடி யுத்தம் செய்யக் கிளம்பினார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் வானர பர்யவஸ்தாபனம் என்ற அறுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 67 (474) கும்பகர்ண வத4: (கும்பகர்ணனின் வதம்)
பெருத்த சரீரம் கொண்ட பல வானரங்கள், அங்கதன் சொன்னதைக் கேட்டு, திரும்பி வந்தன. இயல்பான புத்தியும், யுத்தம் செய்ய ஆசையும் அவர்களிடம் திரும்ப வந்து விட்டது போலத் தெரிந்தது. தாங்களே வீர வாக்யங்களைச் சொல்லி ஊக்குவித்துக் கொண்டவர்களாக, திரும்ப தங்கள் அணியில் தங்களுடைய இடங்களில் வந்து நின்று கொண்டனர். மரணம் வந்தால் தான் என்ன என்ற மனப் பக்குவம் அவர்களுக்கு வந்து விட்டது. தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டவர்களாக, கும்பகர்ணன் படை வீரர்களுக்கு சமமாக ஈடு கொடுக்கத் தயாராகி விட்டனர். கைக்கு அகப்பட்ட மரக்கிளைகளோ, பாறைகளோ எடுத்துக் கொண்டு விரைந்தனர். நேருக்கு நேர் கும்பகர்ணனுடன் கூட மோதத் தயாராக ஆனார்கள்.
ஆத்திரத்துடன் வந்த கும்பகர்ணன், கையில் க3தை4யுடன், எதிரிகள் படையின் உள்ளே நுழைந்து பலரைத் துன்புறுத்தி வீழ்த்தினான். எழுநூறு, எட்டாயிரம் வானரங்கள், கும்பகர்ணன் காலடியில் மிதி பட்டு மடிந்தன. பதினாறு, எட்டு, பத்து, இருபது, முப்பது என்று கைகளால் கொத்தாக பிடித்து வாயில் போட்டு விழுங்கியபடி, கும்பகர்ணன் நடந்தான். கருடன், பன்னகங்களைப் பார்த்த உடன் விழுங்குவது போல, மிகவும் கோபத்துடன், கண்ட மாத்திரத்தில் வானரங்களை வாயில் போட்டு மென்றான். வானரங்கள் மிகவும் சிரமப்பட்டு, தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பாடுபட்டன. மரக் கிளைகளே ஆயுதமாக, வானரங்கள் யுத்த முனையில் முன்னேறிச் சென்றனர். அச்சமயம், த்விவிதன் என்ற வானரப் படைத் தலைவன், ஒரு பெரிய மலையளவு பாறாங்கல்லை மிகச் சிரமத்துடன் தூக்கிக் கொண்டு வந்து, கும்பகர்ணன் மேல் வீசினான். அவன் வரை போய் சேராமல் அந்த கல் அவன் சைன்யத்தை தாக்கியது. சில குதிரைகள், யானைகள், ரதங்களை வீழ்த்தியது. மற்றும் சில ராக்ஷஸர்களும் இது போல கற்களால் தாக்கப் பட்டு குதிரையை, சாரதியை இழந்து, ரத்தம் பெருக நின்றனர். வானர ராஜன் கையிலிருந்து வீசப் பெற்ற சரங்கள் பல ரதங்களைத் தாக்க, அவர்களும், காலாந்தகனுக்கு சமமான பாணங்களால் அடிபட்டு வீழ்ந்தனர். கைக்கு கிடைத்த மரக் கிளைகளைக் கொண்டு, ரதங்களையும், குதிரைகளையும், ஒட்டகங்களை, ராக்ஷஸர்களை இடை விடாது அடித்தனர். ஹனுமானும், கற்களையும், பலவிதமான மரங்களையும் கும்ப கர்ணனின் தலையில் மழையாக பொழிந்தான். கும்பகர்ணனுடைய க3தை4 இவற்றை விளையாட்டாகத் தள்ளி விட்டு, பொடிப் பொடியாக்கியது. இதன் பின் கையில் தன் க3தை4யுடன் வானர சைன்யத்தினுள் நுழைந்த கும்பகர்ணன், கையில் மரக் கிளையுடன் நின்றிருந்த ஹனுமான் முன் சென்றான். பல வானரங்களை துரத்தியடித்தபடி, வந்தான். ஹனுமான் மிகப் பெரிய கல் ஒன்றை எடுத்து அடிக்க, அதனால் உடலில் ரத்தம் பெருகுவதையும் பொருட்படுத்தாமல், அந்த பெரிய கல் போன இடம் தெரியாமல், தன் க3தை4யால் அடித்து நொறுக்கி விட்டான். ஹனுமானின் புஜங்களுக்கிடையில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான். தன் உக்ரமான சக்தியால் குகன், க்ரௌஞ்ச மலையை அடித்தது போல அடித்தான். சூலத்தினால் அடிபட்ட வலி தாங்காமல், நிலை குலைந்து வாயால் ரத்தம் உமிழ்ந்தவனாக ஓவென்று அலறினான். யுகாந்த சமயம் மேகம் இடி முழக்கம் செய்வது போல இருந்தது அந்த அலறல் சத்தம். அவ்வாறு ஹனுமான் அடிபட்டு அலறியதை பார்த்த ராக்ஷஸர்கள் மகிழ்ச்சியுடன் சிரித்தார்கள். வானரங்கள் மேலும் பயந்து ஓடின.
திரும்பவும் நீலன் ஓடும் வானரங்களைத் தடுத்து நிறுத்தினான். தன் கையில் இருந்த பாறாங்கல்லால், கும்பகர்ணனை அடித்தான். தன் மேல் விழ இருந்த கல்லை கும்பகர்ணன் தன் முஷ்டியினாலேயே தடுத்து நிறுத்தி விட்டான். அதிலிருந்த நெருப்பு பொறி பறக்க, அந்த கல் பூமியில் விழுந்தது. ரிஷப4ன், சரப4ன், நீலன், க3வாக்ஷன், க3ந்த4 மாத3னன், என்ற ஐந்து வானர வீரர்களும் கும்பகர்ணனை நோக்கி ஓடி வந்தார்கள். கல், மரக் கிளைகள், தங்கள் உள்ளங்கை, கால்கள், முஷ்டி, இவைகள் தான் ஆயுதமாக கும்பகர்ணனை விடாது தாக்கினர். அவனை இடை விடாது துரத்தினர். இவர்கள் ஓங்கி அடித்ததெல்லாம், மலை போல நின்ற அவனது சரீரத்தில் எந்த வித பாதிப்பையும் உண்டாக்கவில்லை என்பது தெரிந்தது. ஏதோ கையால் ஸ்பரிசித்தது போல, எந்த மாறுதலும் இல்லாமல் நின்றான். ரிஷபன், வானரங்களுள் மிகப் பெரிய உருவம் உடையவன். அவனைக் கும்பகர்ணன் அணைத்துக் கொண்டான். கும்பகர்ணனுடைய புஜங்களுக்கிடையில் சிக்கித் தவித்தான், ரிஷபன். நசுங்கி, ரத்த விளாறாகி, தப்பி குதித்தான். சரபனை முஷ்டியால் அடித்து முழங்காலால் நீலனைத் தள்ளி விட்டான். இந்திர ரிபுவான கும்பகர்ணன், தன் கைத்தலத்தால் க3வாக்ஷனை ஒரு அறை விட்டான். க3ந்த4 மாத3னனை கால்களால் இடறி விட்டான். இந்த அடிகளை தாங்க மாட்டாமல், எல்லா வானர வீரர்களும் பூமியில் விழுந்தனர். அடியோடு வெட்டிச் சாய்த்த கிம்சுக மரம் போல, இந்த முக்யமான வீரர்களை செயலிழக்கச் செய்த பின், கும்பகர்ணன், வானர சைன்யத்தை த்வம்சம் செய்யலானான். ஆயிரக் கணக்கானவர் ஓடினர். பலர் முடிந்தவரை எதிர்த்து பற்களால் கடித்து, நகங்களாலும், முஷ்டிகளாலும், கால்களாலும் அடித்து எதிர்த்து நின்றன. கும்பகர்ணனின் மலை போன்ற சரீரத்தில், ரோமங்கள் போல இந்த வானரங்கள் ஆயிரக் கணக்காக ஏறி நின்றன. ஒரே சமயத்தில் தன் கைகளால் கிடைத்த வரை இவர்களைப் பிடித்து வாயில் போட்டு மென்றான் கும்பகர்ணன், கருடன் பாம்புகளை விழுங்குவது போல. கும்பகர்ணனது பாதாளம் போன்ற வாயில் விழுந்த வானரங்களில் சில நாசித் துவாரங்கள் வழியே வெளியே வந்து விட்டனர். காதுகளிலிருந்தும் சில வெளிப்பட்டன. ஆத்திரமடைந்த ராக்ஷஸன் அவர்களை ஓங்கி கைகளால் அடித்தான். பல வானரங்கள் உருத் தெரியாமல் நசுங்கி விழுந்தன. கீழே பூமி ரத்தச் சேறாக, கும்பகர்ணன் காலாக்னி போல அவர்களுக்கிடையில் அலைந்து திரிந்தான், கையில் வஜ்ரத்தை ஏந்தி இந்திரனும், பாசத்துடன் அந்தகனும், யுத்த பூமியில் சஞ்சரிப்பது போல, சூலம் கையில் ஏந்தி கும்பகர்ணன் பெரும் சேதத்தை விளைவித்தபடி அலைந்தான். உலர்ந்து கிடக்கும் காட்டு மரங்களை நெருப்பு அழிப்பது போலவும், வானரங்கள் கும்பகர்ணன் கையில் அழிந்தன. தங்கள் தலைவர்களும் வழி நடத்திச் செல்ல இயலாத நிலையில், பலமான சேதம் ஏற்பட, வானரங்கள் தலை தெறிக்க தப்பி ஓடவே முயன்றன. கூட்டம் கூட்டமாக கும்பகர்ணன் கையால் அடிபட்டு (கொத்து கொத்தாக பிடித்து வாயில் போட்டு மெல்லப்பட்டு) அலறியடித்துக் கொண்டு ராகவனை சரணம் அடைந்தனர்.
இப்படி வானரங்கள் நலிந்து போய் வந்ததைக் கண்டு வஜ்ர ஹஸ்தனான, இந்திரனின் மகனுக்கு மகனான, அங்கதன், தானே கும்பகர்ணனை எதிர் கொள்ள ஓடினான். தன் கையிலிருந்த பெரிய பாறாங்கல்லை அவன் தலையில் வீசினான். அந்த கல் நன்றாக பட்டு காயப்படுத்தவும், கும்பகர்ணன் ஆத்திரமடைந்தான். தாங்க முடியாத கோபத்துடன் வாலி புத்திரனை நோக்கி ஓடி வந்தான். தன் சூலத்தை எடுத்து வீசினான். தன்னை நோக்கி வரும் சூலத்தைக் கண்டு, யுத்த கலையை அறிந்தவனான அங்கதன் சட்டென்று நகர்ந்து தன் மேல் படாதவாறு தப்பித்துக் கொண்டான். அதே வேகத்தில் எழுந்து தன் கைகளால் பலமாக கும்பகர்ணனை மார்பில் அடித்தான். மலை போல நின்ற கும்பகர்ணன் இந்த அடி தன் மேல் படவும், ஆத்திரத்தோடு முஷ்டியினால் அங்கதனை ஒரு குத்து விட்டான். முஷ்டியினால் அடித்த அடி அங்கதனை பதம் பார்த்து விட, அவன் நினைவின்றி பூமியில் விழுந்தான். அவன் நினைவின்றி தரையில் விழுந்ததைக் கண்டபின் சூலத்தை சுக்ரீவனை நோக்கி வீசினான். தன்னை நோக்கி வேகமாக வரும் கும்பகர்ணனைப் பார்த்து சுக்ரீவன் தயாராக துள்ளி குதித்து அங்கும் இங்குமாக கும்பகர்ணனை அலைக்கழித்தான். கும்பகர்ணன் சுக்ரீவனைப் பிடிக்க வேகமாக ஓட வேண்டியதாயிற்று. கும்பகர்ணனை நோக்கி சுக்ரீவனும் வேகமாக ஒடி வந்தான். அவன் வருவதைப் பார்த்து கும்பகர்ணன் நின்றான். வானர வீரர்கள் உடலிலிருந்து பெருகிய ரத்தம் அவன் உடல் பூரா பரவிக் கிடக்க, நின்று கொண்டிருந்த கும்பகர்ணனைப் பார்த்து சுக்ரீவன் சொன்னான். ராக்ஷஸ, மிக கடினமான செயல்களை செய்திருக்கிறாய். வானர வீரர்களில் தலைவர்களை அடித்து எழுந்திருக்க முடியாமல் செய்து விட்டாய். நிறைய வானரங்களை தின்று தீர்த்து விட்டாய். வானர சேனையை விட்டு விடு. சாதாரண ஜனங்கள், அவர்களோடு உனக்கு என்ன? சமமான என்னுடன் போரிடு. இதோ நான் வீசி எறியப் போகும் மலைக்கு பதில் சொல், இதைக் கேட்டு, கும்பகர்ணன், சத்வ (நியாயம்) தைரியமும் நிறைந்த சொற்களைக் கேட்டு, சுக்ரீவா, நீ ப்ரஜாபதியின் பேரன். ருக்ஷ ராஜனின் மகன். உன் பௌருஷமும், நிறைந்த வீரமும் பிரஸித்தி பெற்றதே. அது தான் கர்ஜிக்கிறாய். கும்பகர்ணன் சொல்லி முடிக்கவும், சுக்ரீவன் அவன் சூலத்தை முறித்து தன் கையிலிருந்த கல்லையும் வீசினான். கும்பகர்ணனின் மார்பில் பட்டு, வஜ்ரம், அசனி போல வேகமாக தாக்கியும், அது கும்பகர்ணனின் விசாலமான மார்பில் பட்டுத் தெறித்து விழுந்தது. இதைக் கண்டு வானரங்கள் வருந்தின. ராக்ஷஸ கணங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. மின்னலைப் போல பள பளத்த தன் சூலத்தை, மிகுந்த ஆத்திரத்துடன், சுக்ரீவனை வதம் செய்யும் பொருட்டு வீசினான். கும்பகர்ணனின் சூலம், பொன்னால் ஆன வேலைப்பாடுகளுடன் காணப்பட்டது. அது சுக்ரீவனின் புஜத்தை துளைத்து வெளி வருவதை எங்கிருந்தோ தொலைவிலிருந்தே கண்டு கொண்ட மாருதி, ஒரு நிமிஷத்தில் ஓடி வந்து, தன் கைகளால் முறித்தான். மகா கனமாக இருந்த அந்த சூலத்தை தன் முழங்காலில் வைத்து இரு கைகளால் அந்த சூலத்தை முறித்ததைக் கண்ட வானரங்கள் குதூகலத்தில் ஆழ்ந்தன. ஆரவாரித்தன. மாருதியை புகழ்ந்து பேசும் வானர சைன்யத்தைப் பார்த்து கும்பகர்ணனின் முகமும் மாறியது. சிங்க நாதம் செய்யும் வானரங்களைப் பார்த்தபடியே உடைந்து கிடந்த தன் சூலத்தைக் கண்டு, தானும் லங்கையின் மலைய மலையின் சிகரத்தை பெயர்த்து எடுத்து சுக்ரீவனை அடித்தான். அந்த பெரிய பாறையால் அடிபட்ட சுக்ரீவன் நினவிழந்து விழுந்தான். இதைக் கண்டு ராக்ஷஸ சைன்யம் மிக்க மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தது. சுக்ரீவனைத் தூக்கி, காற்று மேகத்தை தாங்கியது போல, கையில் இடுக்கியபடியே, நடந்தான் கும்பகர்ணன். மேரு மலையே தன் சிகரங்களில் ஒன்றைத் தூக்கிக் கொண்டு நடப்பது போல நடந்தான். மற்ற ராக்ஷஸர்கள் புகழ்ந்து பாராட்ட வேகமாக நடந்து சென்றவன், தேவர்களும் இந்த வானரன் பிடிபட்டதால் வருந்தி, செய்வதறியாது நிற்பதையும், புலம்புவதையும் கேட்டு, இவன் ஒரு முக்கியமானத் தலைவன். இவனைப் பிடித்தால் எல்லாமே நம் வசத்தில் ஆனது போலத்தான். ராகவன் உட்பட, சைன்யம் ஜெயித்த மாதிரிதான் என்று எண்ணிக் கொண்டான், இந்திரனைப் போரில் வென்று வெற்றி வாகை சூடியவனான கும்பகர்ணன்.
வானர சைன்யம் நாலா புறமும் சிதறி ஓடுவதையும் சுக்ரீவனை அனாயாசமாக தூக்கிக் கொண்டு ராக்ஷஸன் நடந்து செல்வதையும் பார்த்து ஹனுமான் கவலையுடன் யோசிக்கலானான். சுக்ரீவன் பிடிபட்ட நிலையில் என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்? என்று புத்திசாலியான ஹனுமான் யோசித்தான். நியாயமாக நான் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்கிறேன். நான் பர்வதம் போல் என் உருவத்தை ஆக்கிக் கொண்டு கும்பகர்ணனை வழி மறிக்கிறேன். என் முஷ்டியால் காயப்பட்டு, கும்பகர்ணன் யுத்தத்தில் விழுவானேயானால், சுக்ரீவனை அவன் கையிலிருந்து விடுவித்து விடலாம். இந்த வானர வீரர்கள் அப்பொழுது தான் நம்பிக்கை கொள்வார்கள், மகிழ்ச்சி அடைவார்கள். அல்லது என் கையால் இந்த ராக்ஷஸன் மோக்ஷத்தை அடைந்தாலும், சரிதான். சுக்ரீவனே அதை செய்யக் கூடியவன் தான். அவனை தேவர்களோ, அசுரர்களோ, பிடித்திருந்தால் இன்னேரம் வானராதிபன் தன்னை சமாளித்துக் கொண்டிருப்பான். கும்பகர்ணன் இவனை பெரிய மலைச் சிகரத்தால் (பெரிய பாறையால்) அடித்ததில் நினவின்றி கிடக்கிறான். முஹுர்த்த நேரத்தில் நினைவு திரும்பி தனக்கும், மற்ற வானரங்களுக்கும் எது நல்லதோ, அதைச் செய்வான். நான் இடையில் புகுந்து சுக்ரீவனை விடுவித்தால், அவனுக்கு பிடிக்காமலும் போகலாம். அவன் கீர்த்தியும் குறையும். ஒரு முஹுர்த்த நேரம் காத்திருப்போம். வானர ராஜன் தெளிந்து தன் வீர்யத்தைக் காட்டட்டும். கலைந்து போன வானர சைன்யத்தை நான் ஒன்று சேர்க்கிறேன். சமாதானம் சொல்லி போரில் ஈடுபட வைக்கிறேன், என்ற முடிவுக்கு வந்த மாருதாத்மஜன், தன் படையை ஒழுங்கு படுத்துவதில் முனைந்தான். இதற்கிடையில் கும்பகர்ணன் சுக்ரீவனை தன் கட்கத்தில் இடுக்கியபடியே லங்கை சென்றடைந்தான். லங்கா வாசிகள் புஷ்ப மாரி பொழிந்தனர். வீடுகளிலும், மாளிகைகளிலும் நின்றிருந்த ராக்ஷஸர்கள், பொரி, வாசனைப் பொருட்கள் கலந்த நீர் இவற்றை மேலேயிருந்து வர்ஷித்தனர். ராஜ மார்கம் குளிர்ந்து இருந்ததால், சுக்ரீவன் தன் நினைவு வரப் பெற்றான். இதன் பின் அவன் தன் சுய நினைவுடன் சுற்றும் முற்றும் பார்வையைச் செலுத்தியவன், தன்னைத் தூக்கிச் செல்லும் கும்பகர்ணனை சற்று ஆயாசத்துடன் நோக்கினான். இப்படி, இறுக அணைத்துக் கொண்டு போகும் இவனிடம் நான் தப்பித்து வெளியேறுவது முடிகிற காரியமா? ஆனாலும், வானர வீரர்களுக்கு ஹிதமானதும், பிடித்ததுமான ஒரு காரியத்தைச் செய்கிறேன். திடுமென, தன் விரல்களால் ராக்ஷஸனின் காதுகளைப் பிடித்துக் கொண்டு பற்களால் மூக்கை கடித்து, பக்கங்களிலும் கிடைத்த இடங்களில் கடிக்கலானான். அந்த கும்பகர்ணன், கர்ணமும் (காதும்) நாச (மூக்கும்) கடி பட்டதில் வலி பொறுக்க முடியாமல், ஆத்திரத்துடன் சுக்ரீவனை கீழே போட்டு கால்களால் மிதித்தான். பூமியில் விழுந்து, பயங்கரமான பலம் கொண்ட கால்களால் தாக்கப் பட்ட சுக்ரீவன், மற்ற ராக்ஷஸர்களும் சேர்ந்து கொள்ள, திணறிய சுக்ரீவன், க்ஷண நேரம் கிடைத்த இடைவெளியில் ஆகாயத்தில் தாவி, ராமன் இருக்கும் இடம் வந்து சேர்ந்து விட்டான். காதும் மூக்கும் கடி பட்டு வலி வருத்திய போதிலும், கும்பகர்ணன் தன் நிதானத்தை இழக்கவில்லை. ப்ரஸ்ரவன மலையில் அருவிகள் பெருகி ஓடுவது போல அவனது பெருத்த சரீரத்திலிருந்து ரத்தம் ஆறாக பெருகி ஓடியது. அப்படியும் யுத்தம் செய்வதிலிருந்து பின் வாங்க விரும்பாதவனாக திரும்ப யுத்த பூமிக்கே வந்து சேர்ந்தான். சந்த்யா கால மேகம் போல, நீல மலை போன்ற தன் சரீரத்தில், சிவந்த ரத்தப் பெருக்கினால் நனைந்த நிலையிலும், இடையிடையே சிவந்து தென் படுவது போல காணப்பட்டான். சுக்ரீவனைத் துரத்திக் கொண்டு ஓடினான். கையில் ஆயுதம் இல்லையே என்று யோசித்து, ஒரு முத்கரத்தை கையில் எடுத்துக் கொண்டான். நகரத்திலிருந்து வேகமாக வெளிப்பட்டு, இன்னும் பெருகி வளர்ந்த தன் ஆற்றலுடன், பாதத்தாலும், முஷ்டிகளாலும், மிகவும் பயங்கரமாக தாக்கினான்.
யுகாந்த, யுக முடிவில், அக்னி போல கொழுந்து விட்டெரிந்த கோபத்துடன், வானர வீரர்களை வாயில் போட்டு மென்றான். சாதாரணமாகவே நிறைய சாப்பிடுபவன், பசியும் வந்து விட்டால், கேட்பானேன். வானர சைன்யத்தின் உள்ளே புகுந்து அவர்களை நசுக்கி விட்டான். எதிரில் வருவது யார் என்று கவனித்து பார்க்க கூட மோகம் கண்ணை மறைத்தது. ராக்ஷஸனோ, வானரமோ, பிசாச, கரடிகளோ எதுவானாலும், யுக முடிவில் அக்னி வேற்றுமை பாராது அழிப்பது போல வானர முக்யமான படைத் தலைவர்களை அழிக்கலானான். ஒன்று, இரண்டு, மூன்று, பல, கை நிறைய, அகப்பட்டவரை, என்று கோபத்துடன், உடன் வந்த ராக்ஷஸர்களோடு ஒரு கையில் சேர்த்து பிடித்து வாயில் போட்டுக் கொண்டான். தன் உடலைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாதவனாக, வானரங்களை துரத்தி துரத்தி பிடித்தான். ரத்தமும், மாமிசமும் உடலில் பட்ட காயங்களிலிருந்து வெளிப் பட்டன. இடை விடாது வானரங்கள், மரக் கிளைகளால் அடித்ததையும் உதறி விட்டு மேலும் முன்னேறினான். தப்பித்த சில வானரங்கள், ராமரிடம் ஓடின. கும்பகர்ணன் மகா கோபத்துடன் வானரங்களை விழுங்கியபடி வருகிறான், நூற்றுக் கணக்காக, ஏழு, எட்டு, இருபது, முப்பது வானரங்களை ஒன்றாக கட்டியணைத்து வாயில் போட்டு மென்றபடி வருகிறான். உடல் பூராவும் நிணமும், மாமிசமும் ரத்தமும், காயம் பட்ட இடங்களிலிருந்து கிழிந்து தொங்கும் சதையுமாக, மகா பயங்கரமாகத் தெரிகிறான். உயிரற்ற சடலங்களை மாலையாக கோத்தது போல, காதில் மாட்டிக் கொண்டிருக்கிறான். சூலங்களை, கூர்மையான நுனிகளுடன் வீசி வீசி எறிகிறான். சற்றும் வாட்டமின்றி, யுகாந்தாக்னி போல மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறான்.
இதைக் கேட்டு லக்ஷ்மணன், தானே போர் செய்யத் தயாராக வந்தவன், ஏழு கூரிய பாணங்களை கும்பகர்ணனின் உடலில் படும் படி விட்டான். ராக்ஷஸனின் சரீரத்தில் இதனால் எந்த பாதிப்பும் இல்லை. வெண்ணிற கவசத்தின் மேல் குத்திட்டு நின்ற பாணங்கள் தங்கத்தால் அலங்கரிக்கப் பட்டிருந்ததால் ஏற்பட்ட மஞ்சள் நிறமும், பிண்ணனியில் கும்பகர்ணனின் மேகம் போன்ற கரிய உடலும், ஆகாயம் (நீல) சூரியனின் (வெண்ணிற கவசம்) மறையும் சமயத்தில் பொன்னிற (அம்புகள்) கிரணங்களுடன் இருப்பது போல தோன்றியது. அலட்சியமாக லக்ஷ்மணனைப் பார்த்து ராக்ஷஸன் சொன்னான். இடி இடிப்பது போன்ற குரலில் நான் கோபமாக இருக்கும் பொழுது, அந்தகனுக்கு பயத்தைத் தருபவன். பயப்படாமல் எதிரில் வந்து நிற்கிறாயே, இதிலேயே உன் வீரம் தெரிகிறது. சாக்ஷாத் ம்ருத்யுவே வந்து நின்றது போல கையில் ஆயுதத்தோடு நான் நிற்கும் பொழுது, போரிட எதிரில் வந்து நின்றாலே, அவனை சிலாகிக்க வேண்டும். அப்படியிருக்க, பயமின்றி என்னுடன் யுத்தம் செய்யத் தயாராக இருப்பவனை (எனக்கு யுத்தம் செய்ய வாய்ப்பு கொடுப்பவனை) நான் பாராட்டத்தான் வேண்டும். ஐராவதத்தின் மேல் அலங்காரமாக பவனி வரும் இந்திரன் கூட, தன் தேவர்கள் கூட்டம் தொடர்ந்து வர வருபவன், அவன் கூட யுத்த பூமியில் எனக்கு நேருக்கு நேர் நின்று சண்டையிட தைரியம் இல்லாமல், ஒரு தடவை கூட என்னுடன் மோதவில்லை (ஸ்லாகனீயோ அஸி மே ரிபு:) எனக்குத் தகுந்த எதிரி தான் நீ. பாராட்டப் பட வேண்டிய எதிரி. வீரத்தில், என்னுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது நீ பாலனே யானாலும், உன் பராக்ரமம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சௌமித்ரே, உன் அனுமதியுடன், ராமனிடம் போக விரும்புகிறேன். உன்னுடைய சத்வ குணம், தைர்யம், பலம், உத்ஸாகம் இவற்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வீரனுக்கு வீரனை சந்திப்பதில் தான் ருசி. யுத்தகளத்தில் ராமனை மட்டும் தான் யுத்தம் செய்து கொல்ல விரும்புகிறேன். அவன் ஒருவன் வீழ்ந்தால் மற்ற எல்லோருமே தோற்று வீழ்ந்தது போலத்தான். ராமனை நான் கொன்ற பின்பும் மீதி யாராவது இருந்து என்னுடன் போரிட வந்தால், அவர்களுடன் போரிடுகிறேன்.
இவ்வாறு கர்வதுடன் பேசும், பார்க்கவே பயங்கரமாக இருந்த ராக்ஷஸனைப் பார்த்து சௌமித்ரி, சிரித்துக் கொண்டே பதில் சொன்னான். ராக்ஷஸனே, நீ சொல்லும் இந்திரன் முதலானோரை தன் பராக்ரமத்தால் தோற்கடித்து ஓடச் செய்த விஷயம், அவர்களால் தாங்க முடியாத உன் வீரம், அது சத்யமே. சந்தேகமேயில்லாமல் இன்று உன் பராக்ரமத்தை நான் நேரிலும் பார்த்து தெரிந்து கொண்டேன். ஆனால் இந்த தசரத குமாரனான ராமன், மற்றொரு மலை போல எதிரில் நிற்கிறானே, அசைக்க முடியாத பலசாலியாக எதிரில் நிற்கிறானே, அவனிடம் உன் போர் புரியும் ஆசை கண்டிப்பாக நிறைவேறும், என்று சௌமித்ரி பரிகாசமாக சொல்லவும், அவனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக அவனை புறக்கணித்து விட்டு, ராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடினான். அவன் ஓடும் பொழுது பூமி அதிர்ந்தது. இதைக் கண்டு தாசரதியான ராமன், ரௌத்ரம் என்ற அஸ்திரத்தை பிரயோகித்து, கும்பகர்ணனின் ஹ்ருதயத்தில், கூர்மையான சரங்களை விட்டார். ஓடி வரும் கும்பகர்ணனின் மார்பில் வேகமாக வந்து தைத்த அம்புகள், நெருப்புத் துண்டங்களாக அவனுடைய வாயிலிருந்து வெளியேறின. ராமனது அஸ்திரத்தால், அடி பட்டதால், மேலும் கோபம் கொண்ட கும்பகர்ணன், வழியில் இடைப் பட்ட வானரங்களை மிதித்து த்வம்சம் செய்து கொண்டு மேலும் முன்னேறினான். உடலில் தைத்த ராம பாணங்கள் குத்திட்டு நின்றன. கைகளில் பட்டுத் தெறித்து பாணங்கள் பூமியில் விழுந்தன. ஆயுதங்கள் யுத்த பூமியில் இரைந்தன. தான் நிராயுத பாணியாக நிற்பதை உணர்ந்தான், கும்பகர்ணன். தன் முஷ்டியாலும், பாதங்களாலும் சண்டையை அதே வேகத்தில் தொடர்ந்தான். சரீரத்தில் ஒவ்வொரு இடமும் பாணங்கள் குத்தி ரத்த விளாறாக்க, ப்ரஸ்ரவன மலை போல அருவியாக ரத்தம் கொட்ட, மேலும் மேலும் கோபம் கொண்டவனாக, வெறி பிடித்தவன் போல போரில் ஈடு பட்டான். எதிரில் வந்தது யாரானாலும், ராக்ஷஸர்களோ, வானரங்களோ, கரடிகளோ, எடுத்து வாயில் போட்டு மென்று, விழுங்கியபடி ஓடினான். மிகப் பெரிய மலை சிகரத்தை எடுத்து, ராமனை நோக்கி வீசினான். தன் அருகில் வரு முன் ராமர், இடையிலேயே ஏழு பாணங்களால் அதை தூள் தூளாக சிதறச் செய்தார். இருநூறு வானரங்கள் மேல் அதன் சிதறல்கள் பட்டு, வானரங்களை கீழே தள்ளியது.
அந்த சமயம் லக்ஷ்மணன், ராமனிடம் சொன்னான். கும்பகர்ணனை வதம் செய்வதே, சரி. அதற்கான காலமும் இதுவே. இவனுக்கு ராக்ஷஸர்கள், வானரங்கள் என்ற வித்தியாசம் கூடத் தெரியவில்லை. தன் ஆட்களையே கூட அடித்து விழுங்குகிறான். வானரங்கள் கும்பகர்ணன் மேல் ஏறி நிற்கட்டும். படைத் தலைவர்களும் எப்படி நின்றால் பாதுகாப்பாக இருக்குமோ, அப்படி எதிரில் தள்ளிஸ்ரீ நின்று கொள்ளட்டும். வானரங்கள் கூட்டமாக ஏறி நின்று பாரம் தாங்காமல் விழுந்தாலும் மற்றவர்களை கொல்ல மாட்டான். இவன் விழும்பொழுது சேதம் ஆவதை தடுக்கவே இந்த ஏற்பாடுகள் என்று சொன்ன லக்ஷ்மணன் அறிவுரையை ராமர் ஏற்றுக் கொண்டார். வானரங்கள் சந்தோஷமாக கும்பகர்ணனின் மேல் ஏறி நின்றார்கள். தன் மேல் ஏறி நின்ற வானரங்களை எதுவும் செய்ய முடியாமல் கும்பகர்ணன் ஆத்திரம் கொண்டான். துஷ்ட யானை, தன் மாவுத்தனை தள்ளுவது போல அவர்களை உதறித்தள்ள முயன்றான். அவர்கள் சிதறி விழுவதைப் பார்த்து ராமர், இவன் துஷ்டன், அடிக்கத்தான் வேண்டும் என்று தீர்மானித்து, வேகமாக, உத்தமமான தன் வில்லை எடுத்து கோபத்துடன் கண்கள் சிவக்க, பார்வையாலேயே எரிப்பது போல ராக்ஷஸனை நோக்கி வேகமாக சென்றார். படைத் தலைவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, இது வரை கும்பகர்ணனிடம் பயத்துடன் சஞ்சலத்துடன் இருந்த வானர வீரர்களை சமாதானப்படுத்தியவாறு, சென்றார்.
புஜங்கம் போன்ற தன் வில்லை எடுத்து த்ருடமான நாணில் அம்பை வைத்து வானரங்கள் நாலா புறமும் சூழ்ந்து வர பின்னால் லக்ஷ்மணன் தொடர்ந்து வர, புறப்பட்டார். கிரீடம் தரித்திருந்த எதிரியான கும்பகர்ணனைக் கண்டார். உடல் பூரா ரத்த விளாறாக இருந்தவனை, மகா பலசாலியான கும்பகர்ணனை, கோபம் கொண்ட திக்கஜம் போல, சுற்றிலும் நின்றவர்களை அச்சுறுத்தி ஓடச் செய்தபடி, வானரங்களைத் தேடி அலைந்தவனை, ராக்ஷஸர்கள் தடுத்துக் கொண்டிருப்பதையும், விந்த்ய மலைக்கு ஒப்பானவனை, தங்கத்தாலான அங்கதம் என்ற ஆபரணத்தை அணிந்தவனை, மழைக்கால மேகம் நீரை வர்ஷிப்பது போல், மேகம் போன்ற தன் கருத்த உடலில் ரத்தம் பெருகி வழிய நின்றவனை, வானர கூட்டத்தை கால்களால் மிதித்தே கொல்பவனை, காலாந்தகன், யமனுக்கு சமமானவனை ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான கும்பகர்ணன், அக்னிக்கு இணையான தேஜஸுடன் ஜொலிப்பதைக் கண்டு, வியந்தவராக, தன் வில்லின் நாணை இழுத்து நாதம் வரச் செய்தார். இந்த வில்லின் நாதத்தைக் கேட்டு மேலும் ஆத்திரமடைந்த ராக்ஷஸன், அதை சற்றும் பொறுக்க மாட்டாதவனாக, ராகவனை நோக்கி ஓடி வந்தான். ராகவனுக்கு முன்னால், கையில் க3தை4யுடன் நின்ற தன் சகோதரன் விபீஷணனைக் கண்டு தயங்கினான். விபீஷணனைப் பார்த்து, கும்பகர்ணன், ஏஅடி, அடி சீக்கிரம், க்ஷத்திரிய தர்மம். இதில் உறுதியாக நில். சகோதர பாசத்தை தூக்கியெறிந்து விட்டு, ராகவனுக்காக ஆயுதம் எடுத்தவன், அவனுக்கு நன்மை எதுவோ அதைச் செய். குழந்தாய், நமது காரியம் முடிந்து விட்டது. நீ செய்ததும் சரியே. ராமனை வந்து சரணடைந்தாய். நீ ஒருவன் தான் ராக்ஷஸ குலத்தில் தர்மத்தை அனுசரிப்பவன். சத்ய தர்மங்களை காப்பாற்றுபவன். தர்மத்தில் ஈடுபாடுடையவன் எப்பொழுதும் கஷ்டங்களை சந்திக்க நேராது. நமது குலம் தழைக்க நீ ஒருவன் தான் மீதியாக இருக்கப் போகிறாய். ராகவனுடைய கருணையால் நீ ராக்ஷஸ ராஜ்யத்தை அடைந்து சௌக்யமாக இருப்பாய். நான் சொல்வதைக் கேள். சகோதரனே, சீக்கிரம் வழியை விட்டு விலகி நில். குறுக்கே வராதே. எனது இயல்பு, எதிரில் வருவது யாராக இருந்தாலும் அடிப்பது. நகர்ந்து கொள். நிசாசரனே, யுத்தத்தில் எதிரில் நிற்பவன், தன்னைச் சார்ந்தவனா. எதிரியா என்று கூட பல சமயங்களில் எனக்குத் தெரிவதில்லை. உன்னை பாதுகாப்பதும் என் கடமையே. குழந்தாய், இது நான் சொல்வது வெறும் வார்த்தைக்காக அல்ல. உண்மையாக சொல்கிறேன். இவ்வாறு கும்பகர்ணன் சொன்னதைக் கேட்டு விபீஷணன் பதில் சொன்னான். நம் குலத்தை ரக்ஷிப்பதற்காக இந்த விஷயங்களை எல்லா ராக்ஷஸர்களிடமும் சொன்னேன். யாருமே கேட்கவில்லை. அதனால் தான் ராமனிடம் வந்து சேர்ந்தேன். கையில் க3தை4யும், கண்களில் கண்ணீருமாக விபீஷணன் இவ்வாறு சொல்லி கும்பகர்ணனை விட்டு விலகி, தனிமையில் மிகவும் வருத்ததோடு நின்று மனதில் யோசிக்கலானான்.
இதன் பின், காற்றினால் தள்ளப் பட்டு நகரும் கருமேகம் போன்ற உருவத்துடன், பு4ஜங்க3ராஜனான நாகம் போன்ற நீண்ட கைகளுடன், கிழே விழும் மலை போல இருந்த கும்பகர்ணனை நெருங்கி விட்ட ராமர், வா, வா ராக்ஷஸ ராஜனே, ஏன் வருந்துகிறாய். இதோ நான் கையில் வில்லுடன் எதிரில் நிற்கிறேன். சற்று நேரத்தில் நினைவின்றி விழப் போகிறாய். அதற்கு முன், நான் யாரென்று தெரிந்து கொள். இந்திரனுடைய (மாற்றந்தாய் மகனாக) சகோதரன் எனவும், ராமன் தான் இது என்று புரிந்து கொண்ட கும்பகர்ணன், பலமாக கோரமாக சிரித்தான். ஆத்திரத்துடன் ஓடினான். வானர படையினர் பயந்து அலறிக் கொண்டு திக்குக்கு ஒன்றாக ஓடின. அவர்கள் ஹ்ருதயமே, பயத்தில் கீழே விழுந்து விடும் போலத் தோன்றியது. இடி முழக்கம் போன்ற தன் குரலால் ராமனைப் பார்த்து சிரித்தபடி கும்பகர்ணன் ராமனைப் பார்த்து ஏஎன்னை விராத4ன் என்று என்ணாதே. நான் க2ரனும் அல்ல. கப3ந்த3னும் அல்ல. வாலியோ, மாரீசனோ அல்ல. உன் எதிரில் கும்பகர்ணன் நான் வந்திருக்கிறேன். என் முத்3கரம் என்ற இந்த இரும்பு ஆயுதத்தைப் பார். இதை வைத்துக் கொண்டு தான் தேவ, தானவர்களை முன்பு ஜயித்தேன். என் காது, மூக்கை அரிந்து விட்டதால் எனக்கு பலம் இல்லை என்று எண்ணாதே. இந்த இரண்டையும் இழந்ததால், எனக்கு மிகச் சிறிய அளவிலேயே இதன் பாதிப்பு தெரிகிறது. உன் இக்ஷ்வாகு குல வீரயத்தைக் காட்டு. அதன் பின் உன் வீர பராக்ரமங்களைத் தெரிந்து கொண்டு விழுங்குகிறேன். கும்பகர்ணன் இப்படிச் சொன்னதைக் கேட்டு ராமரும், கூரான பாணங்களை விட்டார்.
இதன் தாக்குதலால், தேவர்களுக்கு எதிரியான கும்பகர்ணன் சற்றும் பாதிக்கப் பட்டதாக தெரியவில்லை. எந்த பாணங்களால், சால மரங்கள் ஏழும் ஒன்றாக சாய்க்கப் பட்டனவோ, எந்த ஒரு பாணத்தால் வாலி மறைந்தானோ, அந்த வஜ்ரம் போன்ற பாணம் கும்பகர்ணனின் சரீரத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மழை போல வரிசையாக வந்து விழுந்த பாணங்களை தன் முத்கரத்தால் தடுத்து நிறுத்தியும், மீறி வந்தவைகளை விழுங்கியும் கும்பகர்ணன், தன்னைக் காத்துக் கொண்டான். தேவர்கள் படையை கலங்க அடித்த தன் ஆயுதமான முத்கரத்தை முழுவதுமாக சுழட்டி அடிக்க எஞ்சியிருந்த வானர படையினரும் அலறி ஓடி வெகு தூரம் சென்று விட்டன. இதன் பின் ராமர், வாயவ்யம் என்ற அஸ்திரத்தை எடுத்து பிரயோகிக்க, முத்கரம் ஏந்திய கை துண்டித்து விழுந்தது. அவன் பயங்கரமாக அலறிய அலறல், திக்கெல்லாம் எதிரொலித்தது. வானர வீரர்கள் எஞ்சியிருந்தோர் நின்றிருந்த இடத்தில், முத்கரம் என்ற அந்த ஆயுதத்தை ஏந்தியிருந்த கை விழவும், விழுந்த வேகத்தில் பெரிய மலை சரிந்தது போல வானரங்கள் அதன் அடியில் சிக்குண்டார்கள். இந்த வானரங்கள் இந்த அடி தாங்காமல் திணறி, உடல் நடுங்கி வேர்வை பெருக, வருத்தத்துடன், நரேந்திர ரக்ஷோபதி சண்டையை வேடிக்கை பார்க்கலானார்கள். ஒரு கை இழந்த நிலையில் மற்றொரு கையால் ஒரு பெரிய மரத்தை வேரோடு பிடுங்கி எடுத்துக் கொண்டு கும்பகர்ணன் சண்டையைத் தொடர்ந்தான். ஐந்த்ராஸ்திரம் என்ற அஸ்திரத்தைப் போட்டு பெரிய சால விருக்ஷத்தைத் தாங்கிய மற்றொரு கையையும் ராமர் துண்டித்தார். அந்த கை சால விருக்ஷத்தோடு சேர்ந்து கீழே விழவும், அதன் அடியில் பல மரங்களும், செடி, கொடிகளும் நசுங்கின. இப்பொழுதும் பல வானரங்களும், ராக்ஷஸர்களும் அடி பட்டனர். இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் பலமாக கத்தியபடி ஓடி வரும் ராக்ஷஸனை நோக்கி, ராமர் இரண்டு அர்த்த சந்த்ர ஹாரம் என்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு, ராக்ஷஸனின் இரண்டு பாதங்களையும் வெட்டித் தள்ளினார். அந்த பாதங்கள் முறிந்து விழுந்த சத்தம், திசைகள் தோறும், மலைகளின் மேல், குகைகளில், சமுத்திரத்தில், லங்கையில், வானர ராக்ஷஸ சேனைகளின் மேல் பட்டு எதிரொலித்தது. பயங்கரமாக கேட்டது. இப்பொழுதும் வடவாக்னி போன்ற தன் வாயைத் திறந்தபடி, ராகு சந்திரனை விழுங்க ஓடி வருவது போல கும்பகர்ணன் ராமனை நோக்கி ஓடி வந்தான். அவன் வாயில் கூர்மையான ஆயுதங்களைப் போட்டு நிரப்பினார், ராமர். வாயடைத்து போன கும்பகர்ணன் எதுவும் பேசவோ, கத்தவோ சக்தியற்றவனாக நின்ற நேரத்தில், சூரிய கிரணம் போலவும், ப்ரும்ம தண்டம் போலவும், அந்தகனின் கால கல்பம் போலவும், அரிஷ்டம் எனும் இந்திராஸ்திரத்தை, வாயு வேகத்தில் அவன் மேல் பிரயோகம் செய்தார். அந்த அஸ்திரம், உயர்ந்த வேலைப்பாடுகள் கொண்டதாய், தங்கத்தால் இழைத்து செய்யப்பட்டது போன்ற ஒளி வீசும் தன்மையதாய், வஜ்ரம் போன்ற உறுதியும், சூரியனின் உக்ரமமான தகிக்கும் கிரணங்கள் போன்றும், மகேந்திரனுடைய வஜ்ராசனிக்கு இணையான வேகம் கொண்டதுமான திவ்யாஸ்திரத்தை அந்த நிசாசரன் மேல் பிரயோகித்தார். அந்த அம்பு ராமர் கையிலிருந்து விடுபட்டு நாலா திக்குகளிலும் ஒளி மயமாக ஆக்கியபடி, புகையில்லாத வைஸ்வானர அக்னி எரிவது போல சென்றது. பற்களை இழந்து, வாய் பெரிய குகை போலத் தெரிய, அழகிய குண்டலங்கள் மட்டும் தொங்க, முன் ஒரு காலத்தில் இந்திரன் விருத்திரனை அடித்து வீழ்த்தியது போல ராம பாணம் கும்பகர்ணனின் தலையை கொய்து தள்ளியது.
கும்பகர்ணனுடைய தலை, குண்டலங்களின் ஒளியில் சூரியோதய சமயம், ஆகாயத்தில் தனித்து நிற்கும் சந்திரனைப் போல தெரிந்தது. பெரிய மாளிகைகளின் மேல் கோபுரங்கள், கும்பகர்ணனின் தலை விழுந்த வேகத்தில் ஆட்டம் கண்டன. சில கூடவே விழுந்தன. கும்பகர்ணன் விழுந்த பொழுது அவன் சரீரம் பட்டு பல வானரங்கள் நசுங்கின. இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்த வானரங்கள், தங்கள் அஜாக்கிரதையால் அடி பட்டு விழுந்தன. இமய மலையை ஒத்த கும்பகர்ணனின் சரீரம் சமுத்திரத்தில் விழுந்தது. முதலைகளும், மீன்களும், பாம்புகளும் கலங்கி பூமிக்கு வந்தன. இந்த தேவ சத்ரு இறந்தான் என்று தேவர்கள் உற்சாகமாக மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததில், பூமியும், பூமி தாங்கும் மலைகளும் கூட அதிர்ந்தன. இதன் பின் தேவ ரிஷி, மகரிஷி, பன்னக, சுரர்கள், மற்ற ஜந்துக்கள் சுபர்ண, குஹ்யகம் எனும் ஜீவ ராசிகள், யக்ஷ, கந்தர்வ கணங்கள், ராமர் பராக்ரமத்தால் மகிழ்ந்தவர்களாக, பயமின்றி வெளி வந்து ஆகாயத்தில் சஞ்சரித்தனர். ராக்ஷஸனின் பந்துக்கள் தன்மானம் நிறைந்த வீரர்கள், பலமாக கதறியழுதனர். ரகு குலோத்தமனான ஹரியைப் பார்த்து பார்த்து, முன் எப்படி தேவர்கள் வருந்தி புலம்பினரோ, அதே கதியை அடைந்தவர்களாக புலம்பினர். ராகுவின் பிடியிலிருந்து விடுபட்ட சூரியன் போல தேவ லோகத்து இருட்டை விலக்கியவனாக, பூமியில் வானர வீரர்கள் மத்தியில் கும்பகர்ணனை அழித்த ராமன் நின்றான். வானர வீரர்கள், மகிழ்ச்சிப் பெருக்கில், மலர்ந்த தாமரை மலர்கள் போல மலர்ந்த முகத்துடன் காணப் பட்டனர். சக்தி வாய்ந்த எதிரியை அடித்து வீழ்த்திய ராமரை, பாராட்டி, கொண்டாடினார்கள். பல யுத்தங்களில் கும்பகர்ணன் போரிட்டு வெற்றியே அடைந்த சிரமம் நீங்க, தேவர்களைத் துன்புறுத்தி விரட்டிய சிரமம் நீங்க கும்பகர்ணனை இந்த யுத்தத்தில் ஜயித்து, பரதன் முன் பிறந்தோனான ராமர், பெரும் போரில் விருத்திரனை வென்ற இந்திரன் போல விளங்கினார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கும்பகர்ண வதம் என்ற அறுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 68 (475) ராவணானுசோக: (ராவணன் வருந்துதல்)
ராவணன் கையால் கும்பகர்ணன் மாண்டான் என்ற செய்தி ராக்ஷஸர்கள் மூலம் ராவணன் செவிக்கு எட்டியது. ராஜாவே, காலனுக்கு சமமான கும்பகர்ணன் வானர சேனையை ஓட ஓட விரட்டியபடி, பல வானரங்களை விழுங்கி ஒரு முஹுர்த்த காலம் அவர்களை வாட்டி எடுத்து விட்டு, ராமனுடைய தேஜஸால் அமைதியடைந்து விட்டான். பாதி உடல் சமுத்திரத்தில் விழுந்து கிடக்கிறது. பயங்கரமான பெருத்த அவனது உடல் தலையும் இன்றி கை கால்களும் இன்றி, ரத்தம் பெருகக் கிடக்கின்றது. லங்கையின் வாசலை அடைத்தபடி, பர்வதம் போல அவன் சரீரம் விழுந்து கிடக்கிறது. உன் சகோதரன், கும்பகர்ணன், ராமனுடைய பாணங்களால் அடிபட்டு, கபந்தனாக (தலையில்லாத சரீரியாக) காட்டுத் தீயில் வெந்த பெரிய மரம் போல விழுந்து கிடக்கிறான். பெரும் யுத்தத்தில் சண்டையிட்டு மடிந்தான், கும்பகர்ணன் என்ற செய்தியறிந்து, ராவணன் கலங்கினான். வேதனை அடைந்தான். சற்று நேரம் செய்வதறியாது திகைத்து நின்றான். தங்கள் தந்தை வழி உறவினர் இறந்து போனதைக் கேட்டு, தேவாந்தக, நராந்தக, த்ரிசிரஸ், அதிகாயன் முதலானோரும் வருந்தி அழுதனர். சகோதரன், ராமனுடைய எல்லையற்ற பராக்ரமத்தால் அடி பட்டு இறந்தான் என்பதை அறிந்து மகா பார்ஸ்வன், மகோதரன் இருவரும் சோகக் கடலில் மூழ்கினர். பிரயாசையுடன் தங்களை சமாளித்துக் கொண்டு, ராக்ஷஸத் தலைவன் ராவணன், தன் சகோதரன் கும்பகர்ணன் வதம் செய்யப் பட்டான் என்று தாங்க மாட்டாத துக்கத்துடன் புலம்ப ஆரம்பித்தான். ஹா, வீரனே, சத்ருக்களை அழிப்பவனே, மகா பலசாலியான கும்பகர்ணா, விதி தான். என்னை விட்டு நீ யம லோகம் போய் சேர்ந்து விட்டாய். என் அஸ்திரங்கள் கூட வேண்டாம் நீ ஒருவன் இருந்தால் போதும், வேறு ப3ந்துக்களும் வேண்டாம், நீ ஒருவனே போதும். அப்படிப்பட்ட நீ என்னை விட்டு எங்கே போனாய்? எனக்கு வலது கையாக இருந்தாயே, இனி நீயின்றி நான் ஒன்றுமே இல்லை. உன் பலத்தால் தான் நான் சுராசுரர்களைக் கண்டு சற்றும் பயப்படாமல், அலட்சியமாக இருக்க முடிந்தது. தேவ, தானவர்கள் கர்வத்தை அடக்கியவனே, காலாக்னி, ருத்ரன் என்றெல்லாம் உன்னை வர்ணிப்பார்களே, ராம பாணத்தால் அடி பட்டு விழுந்தாயோ. இந்திரன் வஜ்ராயுதத்தால் அடித்ததே, உன்னை எதுவும் செய்யவில்லை. அப்படிப்பட்ட நீ எப்படி ராம பாணம் வருத்தியதா, இப்படி மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டாய். இதோ, தேவ கணங்கள், ரிஷிகள் ஆகாயத்தில் நிற்கிறார்கள். யுத்தத்தில் நீ மாண்டாய் என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். வானரங்கள் தங்கள் விருப்பம் ஈடேறியதாக இன்று ஆனந்தமாக குதிக்கிறார்கள். லங்கையின் மாளிகைகள், கோட்டைகள் எல்லா இடத்திலும் ஏறித் திரிகிறார்கள். ராஜ்யத்தால் எனக்கு என்ன லாபம்? சீதையை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? கும்பகர்ணனைப் பறி கொடுத்த பின், எனக்கு வாழ்வில் எதுவுமே பிடிக்கவில்லை. என் சகோதரனைக் கொன்றவனை நான் போரில் வதைக்காமல் விடுவேனா. அப்படி விட்டால் நான் மரணத்தை தழுவுவதே மேல். என் வாழ்க்கையே பயனற்றதாக ஆகி விட்டது. இன்றே அவனையும் என் சகோதரன் சென்ற இடத்திற்கே அனுப்புகிறேன். என் சகோதரன் இன்றி க்ஷணமும் உயிர் வாழ்வதில் எனக்கு விருப்பம் இல்லை தான். முன்னால் நான் செய்த கொடுமைகளை எண்ணி, தேவர்கள் இப்பொழுது எள்ளி நகையாடுவார்கள். கும்பகர்ணா, நான் இனி இந்திரனுடன் எப்படி போரிடுவேன். விபீஷணன் சொன்னதைக் கேட்காமல் போனேனே. அவன் சொன்ன சுபமான அறிவுரையை அலட்சியப் படுத்தியதன் விளைவு இந்த நிலைக்கு வந்து நிற்கிறேன். விபீஷணன் சொன்னதும் கும்பகர்ண, ப்ரஹஸ்தன் சொன்னதும் என் நன்மைக்கே. அதை அறியாமல் விநாசத்தை எதிர் கொண்டு நின்றவன் ஆனேன். அவமானம் என்னை வாட்டுகிறது. இந்த சோகம் என் செயல்களின் பலனே. தார்மீகனான விபீஷணனை விரட்டி துரத்தியடித்தேனே, அதன் பலன் தான் இது. இவ்வாறு பல விதமாக புலம்பி கும்பகர்ணனுக்காக அழுது தசானனன், இந்திர ரிபுவான தன் உடன் பிறந்தான் மாண்ட செய்தியை அறிந்ததிலிருந்து அரற்றலானான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணானுசோக: என்ற அறுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 69 (476) நராந்தக வத4: (நராந்தகனின் வதம்)
சோகக் கடலில் மூழ்கி, புலம்பி வருந்தும் ராவண ராஜாவை, த்ரிசிரஸ் சமாதானப் படுத்தினான். பெரும் வீரன், யுத்த பூமியில் வீர சுவர்கம் அடைந்தார் எங்கள் தந்தை, கும்பகர்ணன். அவரை நினைத்து அழுவது சரியல்ல. ராஜன், தாங்கள் அமைதி படுத்திக் கொள்ளுங்கள். ப்ரபோ, மூன்று உலகுக்கும் தாங்கள் ஒருவனே ஈடு கொடுக்க முடியும். சாதாரண பிரஜைகள் போல இப்படி தைர்யத்தை விட்டு கலங்காதீர்கள். இதோ, நான் யுத்த பூமி செல்கிறேன். உங்களிடம் ப்ரும்மா கொடுத்த சக்தி இருக்கிறது. கவசம், அம்புகள், வில் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான கோவேறு கழுதைகள் பூட்டிய ரதம், மேகம் இடி இடிப்பது போல பெரும் சப்தத்துடன் செல்லக் கூடியது. அதில் ஏறிச் சென்று பல சமயங்களில் ஆயுதம் கூட உபயோகிக்காமல் தேவ தானவர்களை தோற்று ஓடச் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது ஆயுதங்களோடு சென்று ராகவனை அழிக்க உங்களால் முடியும். அதைச் செய்யுங்கள். அல்லது சற்று நில்லுங்கள். நான் முதலில் போய் எதிரிகளை கருடன், நாகக் கூட்டத்தை அழிப்பது போல அழித்து விட்டு வருகிறேன். தேவராஜன், சம்பரனை ஜயித்தது போலவும், நரகனை விஷ்ணு ஜயித்தது போலவும், இன்று ராமனை நான் போரில் வெற்றி கொண்டு வருகிறேன்.
காலத்தின் (விதி) வசத்தில் இருந்த ராவணனுக்கு த்ரிசிரஸ் சொன்ன சொல்லிலும், நம்பிக்கை பிறந்தது. தான் திரும்ப உயிர் பெற்றதாக நினைத்தான். த்ரிசிரஸ் சொன்னவுடன், தேவாந்தக, நராந்தகர்களும், அதிகாயனும் சேர்ந்து கொண்டனர். மகிழ்ச்சியுடன் நான், நான் என்று போட்டியிடலாயினர். இவர்கள் ராவணனுடைய மகன்கள். நல்ல பராக்ரமசாலிகள். இந்திரனுக்கு சமமாக யுத்தம் செய்ய வல்லவர்கள். அந்தரிக்ஷத்தில் இருந்து கொண்டு மாயா யுத்தம் செய்வதும் அவர்களுக்கு கை வந்த கலையே. இவர்களும், தேவர்களுடன் சண்டையிட்டு, அவர்கள் கர்வத்தை ஒடுக்கியவர்கள். போரில் திறமையாக போரிட்டு, எதிரிகளைத் திணற அடிக்கும் ஆற்றல் உள்ளவர்களே. எந்த யுத்தத்திலும், இவர்கள் இது வரை தோல்வியையே தழுவியதில்லை என்று புகழ் பெற்றவர்கள். நல்ல அறிவாளிகள், வரங்கள் பெற்றவர்கள். தேவர்களுடனும், கந்தர்வ, கின்னர, மகோரகங்களுடன், யுத்தம் செய்த அனுபவமும், அஸ்திர ஞானமும், யுத்த கலையில் விசேஷ தேர்ச்சியும் பெற்றவர்களே. பாஸ்கரனுக்கு சமமான தன் புதல்வர்களுடன் இந்திரன் அமர கணங்கள் புடை சூழ அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தான் ராவணன். தன் புத்திரர்களை ஆலிங்கனம் செய்து கொண்டு அலங்காரமாக ஆபரணங்கள் பூட்டி, பல விதமாக ஆசிர்வாதங்கள் செய்து யுத்தம் செய்ய அனுப்பினான்.
யுத்தம் என்றாலே வெறி கொள்ளும் தன் சகோதரர்கள், மகா பார்ஸ்வன், ப்ரமத்தன், மகோதரன் இவர்களை தன் பிள்ளைகளை பாதுகாத்து ரக்ஷிக்க என்று உடன் அனுப்பினான். எதிரிகளைத் துன்புறுத்துவதில், ஈடு இணையற்ற வீரனான ராவணனை வணங்கி (ராவணம், ரிபு ராவணம்) இவர்கள் போர் முனைக்கு புறப்பட்டார்கள். இவர்களுக்கு பல விதமான ஔஷதிகள் (மருந்துகள்) கொண்டு காப்பு கட்டச் செய்தான் ராவண ராஜா. அவர்களும் ராவணனை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து வணங்கிய பின் கிளம்பினர். இந்த அறுவரும், தேவாந்தக, நராந்தக, த்ரிசிரஸ், அதிகாயன், மகா பார்ஸ்வ, மகோதரன் என்ற ஆறு பேரும் யுத்த பூமிக்கு புறப்பட்டனர். விதியின் வழி செல்லும் மதியினராக, காலத்தின் கட்டாயம் துரத்த, புறப்பட்டனர். சுதர்ஸனம் என்ற பெரிய யானை ஐராவத குலத்தில் வந்தது, கருமேகம் திரண்டு நிற்பது போல கம்பீரமாக வந்து நின்றது. அதன் மேல் மகோதரன் ஏறிக் கொண்டான். எல்லா ஆயுதங்களும், அம்புறாத் தூணியும், அலங்காரமாக எடுத்துக் கொண்டு யானை மீதிருந்த மகோதரன் மலை வாயில் விழ இருந்த சூரியன் போல இருந்தான்.
ராவணனின் மற்றொரு மகன் உத்தமமான குதிரைகள் பூட்டிய ரதத்தில் எல்லா விதமான ஆயுதங்களுடனும் ஏறினான். கையில் வில்லுடன் த்ரிசிரஸ் ரதத்தில் ஏறி நின்றதைக் காண, வான வில்லுடன் மேகம், மின்னலும், மின்மினிப் பூச்சிகளும் ஒளி கூட்ட நிற்கும் மேகம், மலையில் இறங்கியது போல இருந்தது. மூன்று தலைகளிலும் மூன்று கிரீடங்களோடு அழகாக விளங்கினான். ஹிமவான் மூன்று சிகரங்களில் பொன் கவசம் அணிந்து காட்சி தந்தது போல இருந்தது.
ராக்ஷஸேஸ்வரனின் மற்றொரு மகன், அதிகாயன் என்பவனும் நல்ல தேஜஸ் வாய்ந்தவன். அவனும் உயர்ந்த ரதத்தின் மீது ஏறினான். அந்த ரதமே ஸ்ரேஷ்டமானது. நல்ல சக்கரம், நன்றாக இணைத்து கட்டப் பெற்றிருந்தது. நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் தாராளமாக ஆயுதங்கள் வைக்கவும், அமரவும் இடங்கள் இருந்தன. தூணிகள், பா3ணங்கள், வாள், ப்ராஸம், பரிக4ம் முதலியவை நிரப்பப்பட்டு, இருந்தது. நுணுக்கமான பொன் வேலைப்பாடமைந்த கிரீடம் தலையில் பிரகாசமாக விளங்கியது. மேரு மலைக்கு அலங்காரம் செய்தது போல, சூரிய கிரணங்கள் மலை மீது பட்டுத் தெறித்தாற் போல அந்த மகா பலசாலியான ராஜ குமாரன், உற்சாகமாக ரதத்தின் மீது நின்றது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. நாலாபுறமும் தேர்ந்தெடுத்த ராக்ஷஸ வீரர்களுடன், அமரர்கள் சூழ நின்ற இந்திரனைப் போல இருந்தான்.
உயர் ரக உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை வழி வந்த வெண் குதிரை, அதுவும் தங்கத்தால் அலங்காரமாக அலங்கரிக்கப்பட்டு, வாயு வேகம், மனோ வேகம் என்று சொல்வதற்கிணங்க, வேகமாக செல்லும் குதிரைகள் பூட்டிய, ப்ரும்மாண்டமான பெரிய ரதத்தில் ஏறினான். கையில் பாசத்துடன், அதுவே ஆகாயத்தில் தெரியும் நெருப்புத் துண்டம் போல மின்ன, நராந்தகன் ஏறிக் கிளம்பினான். சக்தியை ஏந்தி, குகப் பெருமாள் மயில் வாகனத்தில் வந்தது போல, தேவாந்தகன் வஜ்ரம் போன்ற பரிகம் என்ற ஆயுதத்தை கையில் ஏந்தி விஷ்ணுவின் உருவத்துடன் போட்டியிடுவது போல அழகிய சரீரத்துடன், ஆயுதத்தை தூக்கிக் கொண்டு கிளம்பினான். பெரிய உருவமுடைய மகா பார்ஸ்வன், க3தை4யை எடுத்துக் கொண்டான். கையில் க3தை4யுடன், போர்க் களத்தில் குபேரன் வந்து நின்றது போல நின்றான்.
இவ்வளவு ஏற்பாடுகளுடன் அனைவரும் புறப்பட்டனர். அமராவதியில் தேவர்கள், படையுடன், ஈ.டு இணையில்லாத வீரர்களுடன் கிளம்பியது போல, யானைகளும், குதிரைகளும், ரதங்களும், ஆயுதம் ஏந்திய ராக்ஷஸ வீரர்களுமாக, போர்க் கோலம் பூண்டு, ராக்ஷஸ சேனை கிளம்பியது. ராவணன் பிள்ளைகள் நால்வரும், சூரியனுக்கு சமமான தேஜஸுடன், கிரீடம் அணிந்தவர்களாக, லக்ஷ்மீகரமாக, ஆகாயத்தில் பிரகாசமாகத் தெரியும் க்ரஹம் போல கிளம்பினர். அவர்களுடைய வெண் கொற்றக் குடைகள் வரிசையாக, சரத் கால வானில் ஹம்ஸங்கள் வரிசையாகச் செல்வது போலத் தெரிந்தன. சத்ருக்கள் தோல்வி அல்லது தங்கள் மரணம் என்று நிச்சயம் செய்து கொண்டது போல அந்த வீரர்கள் கிளம்பினர். தாங்களே விரும்பி ஏற்றுக் கொண்ட போர். கர்ஜனை செய்வதும், பெருங்குரலில் ஜய கோஷம் செய்வதும், அவ்வப்பொழுது அம்புகளை வீசிக் கொண்டும், பிடித்துக் கொண்டும், யுத்தம் ஒன்றே நினைவாக, அதுவே வெறியாக சென்றனர். அவர்களது தோள் தட்டும் ஒசையிலும், போர் முழக்கம் செய்யும் ஓசையிலும், வசுந்தரா (பூமி) நடுங்கினாள். ராக்ஷஸர்கள் சிங்க நாதம் செய்ததில், மேலே ஆகாயத்தை கிழிப்பது போல இருந்தது. மகா பலசாலியான அந்த ராக்ஷஸ வீரர்கள், இப்படி போர் செய்ய என்று வெளி வருவதில் மகிழ்ந்தவர்களாக காணப்பட்டார்கள். எதிரில் வானர சைன்யத்தைக் கண்டனர். ஒவ்வொன்றும் கைகளில் பாறாங்கல்லையோ, மரக் கிளையையோ வைத்துக் கொண்டு நின்றன. அவர்கள் ராக்ஷஸ சேனை ஆரவாரமாக வருவதைக் கண்டனர். யானைகளும், குதிரைகளும், ரதங்களும், நூற்றுக்கணக்கான மணிகள் ஓசையிட வருவதைக் கண்டனர். கார் மேகம் போலவும், உயர்ந்த வகை ஆயுதங்கள் ஏந்தியபடி, வருவதைக் கண்டனர். கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல நாலா புறமும் ராக்ஷஸ வீரர்கள் நிரம்பி வழிவதைக் கண்டனர். இவர்கள் வருவதைப் பார்த்து வானரங்கள் அவர்களுக்கு இணையாக தாங்களும் ஜய கோஷம் செய்தனர். ராக்ஷஸர்களும் இவர்களைப் பார்த்து, மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதை பொறுக்காத குணம் உடையவர்கள், தாங்களும் அதற்கு மேல் ஜய கோஷம் செய்தனர். அவர்களுக்கிடையில் புகுந்து வானரங்கள், கற்களாலும், மரக் கிளைகளாலும் அடித்து, போரைத் துவக்கினர். கற்களுக்கு இறக்கை முளைத்தது போல இருந்தது. சிலர் ஆகாயத்தில் நின்று, சிலர் பூமியில் நின்று, ராக்ஷஸ வீரர்களை எதிர்த்தனர். கிளைகளுடன் கூடிய பெரிய மரங்களையே வெட்டிக் கொண்டு வந்து வானரங்கள் மிக பயங்கரமாக போரிட்டன. ராக்ஷஸ, வானர வீரர்களின் இடையில் போர், பயங்கரமாக, சளைக்காமல் தொடர்ந்து நடந்தது.
தங்கள் மேல் வந்து விழும் மரங்களையும், கற்களையும் ராக்ஷஸ வீரர்கள், பாணங்களால் தடுத்து நிறுத்திஎ விட்டனர். இரு பக்கமும் சிம்ம நாதமாக கர்ஜிப்பது கேட்டது. ராக்ஷஸர்களை வானரங்கள் கற்களால் அடித்து, தூள் தூளாக்கினர். கவசம் ஆபரணம் இவற்றையும் மீறி ராக்ஷஸர்கள் படு காயமடைந்தனர். ரதங்களின் மேல் இருந்தவர்களையும், யானை குதிரைகள் மேல் இருந்தவர்களையும் கீழே தள்ளி கண் மண் தெரியாமல் அடித்தனர். கற்கள், தங்கள் முஷ்டி இவைகளே ஆயுதங்கள். ராக்ஷஸர்களும் கூர்மையான பாணங்களால் வானரங்களை அடித்து வீழ்த்தினர். கீழே விழுவதும், ஓடுவதும், அலறுவதுமாக யுத்த பூமி கலங்கியது. சூலம், முத்கரம், கட்கம், ப்ராஸம், சக்தி என்ற ஆயுதங்களை இடைவிடாது பிரயோகித்து ராக்ஷஸர்களும் சளைக்காது யுத்தம் செய்தனர். வெற்றியே குறிக்கோளாக, இரண்டு பக்கத்தினரும் ஒருவரையொருவர் வீழ்த்திக் கொண்டிருந்தனர். வானர, ராக்ஷஸ வீரர்கள் எல்லோரும் எதிரியின் கையில் கல்லாலோ, கத்தியாலோ காயம் அடைந்து ரத்தப் பெருக்கோடேயே காணப்பட்டனர். சற்று நேரம் கற்களும் கத்தியுமே அந்த யுத்த பூமியை நிறைத்து இருந்தது போல காட்சியளித்தது. மலை போன்ற பெருத்த சரீரம் உடைய ராக்ஷஸர்கள் இறைந்து கிடந்தனர். யுத்த வெறி கொண்டவர்களே பூமியில் நிறைந்து இருந்தனர். சிலர் கையில் இருந்த சூலத்தை பிரயோகிக்கும் நிலையிலும், சிலர் வெற்றி கரமாக சூலம் முதலிய ஆயுதங்களை உபயோகித்த நிலையிலும், ஒரு சிலர் கையில் ஆயுதம் எடுத்த உடனேயே வானரங்களால் உடைக்கப் பெற்ற ஆயுதங்களுடனும் காணப்பட்டனர். வானரங்களைக் கொண்டே வானரங்கள் அடிபடும்படி ராக்ஷஸர்கள் செய்தால், வானரங்களும், ராக்ஷஸர்களே தங்களுக்குள் அடித்துக் கொள்ளும்படி செய்தனர். அவர்கள் வீசிய கற்களைக் கொண்டே அவர்களை ராக்ஷஸர்கள் வீழ்த்தினர். அதே போல அவர்கள் பிரயோகித்த சஸ்திரங்களையே ராக்ஷஸர்களை வதைக்கப் பயன் படுத்திக் கொண்டனர். ஒருவருக்கொருவர் சளைக்காமல் சிம்ம நாதம் செய்வதும், பரஸ்பரம் ஆயுதங்களால் அடித்துக் கொள்வதும், பால் வடியும் மரங்களைப் போல, ரத்தம் பெருக, விடாது போர் புரிந்தனர்.
கை கால் உடைந்தவர்கள், காயம் அடைந்தவர்கள், இரு தரப்பிலும் சேதம் சமமாகவே இருந்தது. ரதத்தை, ரதத்தால், யானையோடு யானை, குதிரையோடு குதிரை என்று மடிந்து விழுந்தன. எல்லோரும் யுத்தம் செய்வதில் மகிழ்ச்சியுடனேயே இருந்தனர். வானரங்களுக்கு மரங்களே முக்யமான ஆயுதம்,. ராக்ஷஸர்கள் க்ஷிப்ரம், அர்த்த சந்திரம், பல்லம் போன்ற கூர்மையான ஆயுதங்களை உபயோகித்தனர். இவர்கள் வீசும் கற்களையும், மரங்களையும் தங்கள் மேல் விழு முன் அம்புகளால் தடுத்து தகர்த்து விட்டனர். இரு தரப்பிலும் அடிபட்டு விழுந்த வீரர்கள் பூமியை மறைத்தபடி கிடந்தனர். வானரர்கள், கர்வமும் மகிழ்ச்சியும் பொங்க, யுத்த பயம் சிறிதும் இன்றி, ராக்ஷஸர்களுடன் தயங்காமல் போர் புரிந்தனர். ராக்ஷஸர்கள் தோற்று, வானரங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் பொழுது, தேவ கணங்களும் மகரிஷிகளும் கூடவே ஆரவாரம் செய்தனர். வாயு வேகத்தில் செல்லும் குதிரைகளின் மீதேறி, கூர்மையான சக்தியையும் கையில் எடுத்துக் கொண்டு நராந்தகன், பெருங்கடலில் மீன் பாய்ந்து செல்வது போல, வானர சைன்யத்தினுள் நுழைந்தான். எழுநூறு வானர வீரர்களை ப்ராஸம் கொண்டு பிளந்து தள்ளினான். ஒரு க்ஷண நேரத்தில், இந்திரனின் எதிரியான ராக்ஷஸன், வானர வீரர்களை மூர்க்கமாக தாக்கி மடியச் செய்தான். வித்யாதர மகரிஷிகள், குதிரையில் அமர்ந்து மகா கோரமாக யுத்தம் செய்யும் நராந்தகனைப் பார்த்து கவலை கொண்டனர். அவன் சென்ற வழியெல்லாம் வானர வீரர்களின் தலைகள் உருண்டன. எதிர்த்து என்ன செய்யலாம் என்று வானரங்கள் யோசித்து முடிவு எடுக்கும் முன்பே சேதம் மிக அதிகமாக ஆயிற்று. காட்டுத் தீ வனங்களை விழுங்கி பரவுவது போல, நராந்தகன் வானர வீரர்களின் மத்தியில் அக்னி போல பரவி நின்றான். வஜ்ரத்தால் அடிபட்டு மலைகள் நொறுங்கி விழுந்தது போல இவன் கை ப்ராஸத்தால் அடிபட்ட வானரங்கள், தங்கள் பாதுகாப்புக்காக மரங்களை வேரோடு பிடுங்கி கொண்டு வரும் நேரத்திலும், கற்களை பொறுக்கிக் கொண்டு வர எடுத்துக் கொண்ட நேரத்திலும், சைன்யம் மிக அதிகமாக வலுவிழந்ததை உணர்ந்தார்கள். எந்த திக்கை நோக்கினாலும், நராந்தகனே நிற்பது போலத் தெரிந்தது. ப்ராவ்ருட் காலத்தில் (மழைக்காலத்தில்) காற்று சுழன்று சுழன்று வீசுவது போல இருந்தான். வானர வீரர்களால் ஓடவும் முடியவில்லை. நின்று எதிர்க்கவும் சக்தியில்லை. பயத்தால் ஸ்தம்பித்து நின்றனர். கீழே விழுபவர்களை, நிற்பவர்களை சென்று கொண்டிருப்பவர்களை என்று பார்த்த மாத்திரத்தில் நராந்தகன் அடித்து வீழ்த்தினான். ஆதித்யனுக்கு இணையான ஒரே ஒர் ப்ராஸம் என்ற ஆயுதம் கையில் ஏந்தி, நராந்தகன் அபாரமான துணிச்சலுடனும், வீரத்துடனும், சுழன்று சுழன்று அந்தகனாகவே காட்சி தந்தான். கை கால் பின்னமான வானரர்கள் கூட்டம் கூட்டமாக பூமியில் விழுந்தன. எதுவும் செய்ய முடியாத நிலையில் அழுது புலம்பின. அந்த அழுகையே பெரும் சத்தமாக ஆயிற்று. வஜ்ரத்தால் அடிக்கப் பெற்று, இறக்கைகள் கீழே விழ நின்ற மலைகள் போல இந்த வானரங்கள் கிடந்தன. முன்னால் கும்பகர்ணன், நினைவிழக்கச் செய்து கிடத்தியிருந்த தலைவர்களான வானரங்கள் இப்பொழுது சுய நினைவு திரும்பப் பெற்று, சுக்ரீவனிடம் சென்றார்கள். நராந்தகனிடம் நடுங்கியபடி வந்த தன் வானர சைன்ய படைத் தலைவர்களை சுக்ரீவன் கண்டவுடன் நிலைமையைப் புரிந்து கொண்டான். நாலா புறமும் சிதறி ஓடும் வானரங்களைப் பார்த்து, காரணன் நராந்தகன் தான் என்றும் தெரிந்து கொண்டான். குதிரையின் மேல் வசதியாக அமர்ந்தபடி, கையில் ப்ராஸத்துடன் உலவும் நராந்தகனை சுக்ரீவன் கண்டான். குமாரனான அங்கதனைப் பார்த்து இந்திரனுக்கு சமமான விக்ரமம் உடைய வீரனே, நீ கிளம்பு. இதோ இந்த குதிரையில் ஆரோஹணித்து யுத்தம் செய்யும் ராக்ஷஸனை எதிர் கொள். இவனால் நம் படை க்ஷீணமடைந்து விட்டது. இவனை உயிரோடு இருக்க விடாமல் அடித்து, நகர்த்து. உடனே அங்கதன் புறப்பட்டான். சந்திரன் தன் மேக கூட்டமே படை பலமாக புறப்பட்டது போல, மேகம் ஆகாயத்தில் சஞ்சரிப்பது போல சஞ்சரிக்கும் வீரர்களுடன் போர்க் களத்தில் குதித்தான். வானரோத்தமனான அங்கதன் தன் உடலில் அணிந்திருந்த அங்கதம் எனும் ஆபரணத்தோடு எந்த வித ஆயுதமுமின்றி தன் நகமும், பற்களுமே ஆயுதமாக, நராந்தகனை நெருங்கினான். நில், நில், சாதாரண அடி மட்ட போர் வீரர்களை ஏன் வதைக்கிறாய். வஜ்ரம் போன்ற உன் ப்ராஸத்தை என் மார்பில் பிரயோகித்துப் பார் என்று கத்தியதைக் கேட்டு, பற்களால் உதட்டைக் கடித்தபடி, புஜங்கம் போல் பெருமூச்சு விட்ட நராந்தகன், அங்கதன் அருகில் வந்தான். அங்கதனை அடிக்க ப்ராஸத்தை எடுத்து மார்பில் படும்படி ஓங்கி அடித்தான். அது அவன் மார்பில் பட்டு உடைந்து விழுந்தது. ப்ராஸம் உடைந்து விழுந்ததைக் கண்ட அங்கதன் முஷ்டியால் நராந்தகனின் குதிரையை தாக்கி விழச் செய்தான். தாடையில் பலமான அடி பட, துடிக்கும் உதடுகளும், நாக்கு வெளியில் துறுத்திக் கொண்டு நிற்க, கண்கள் மயங்க, அந்த உயர் ஜாதி குதிரை, மலை போன்று உயர்ந்து நின்ற குதிரை தடாலென்று பூமியில் விழுந்தது. தன் குதிரை அடிபட்டு விழவும், நராந்தகன் ஆத்திரத்தில் தன்னை மறந்தான். தானும் முஷ்டியை உயர்த்திக் கொண்டு அங்கதன் தலையில் ஓங்கி அடித்தான். அங்கதன் இந்த அடியைத் தாங்க மாட்டாமல் சற்று நேரம் கண்கள் மயங்க நின்றான். பின் சமாளித்துக் கொண்டு, தானும் முஷ்டியால் நராந்தகன் மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டான். இந்த அடி பலமாக விழுந்து நராந்தகன் செயலிழந்தவன் போல ஆனான். ரத்தம் பெருகியது. தடாலென பூமியில் விழுந்தான். வஜ்ரத்தால் பிளக்கப் பட்ட மலை ஒன்று கீழே விழுந்தது போல விழுந்தான். உடனே அந்தரிக்ஷத்தில் உத்தமமான தேவர்களும், பூமியில் வானரங்களும் எழுப்பிய மகிழ்ச்சி ஆரவாரம் அந்த பூமியை நிறைத்தது. அங்கதனால் நராந்தகன் அடி பட்டு விழுந்தான் என்ற செய்தி உடனே பரவியது. ராமர் மனம் மகிழ நாம் ஒரு வீரச் செயலை செய்து விட்டோம் என்று வாலிபுத்திரன் அங்கதனும் மன நிறைவோடு மேலும் உற்சாகமாக போர் செய்ய முனைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நராந்தக வத4: என்ற அறுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 70 (477) தேவாந்தகாதி வத: (தேவாந்தகன் முதலானோர் வதம்)
நராந்தகன் இறந்து விழுந்ததைப் பார்த்த ராக்ஷஸர்கள் அலறினார்கள். தேவாந்தகனும், த்ரிசிரஸHம், புலஸ்தியர் குமாரனான மகோதரனும், பெரிதும் வருந்தினர். மேகம் போன்ற பெரிய யானையில் ஏறி வந்த மகோதரன், வாலி புத்திரனை துரத்தினான். தன் சகோதரன் அடிபட்டதால் கலங்கிய தேவாந்தகனும் கூர்மையான பரிகம் எனும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு அங்கதனைத் துரத்தினான். சூரியனுக்கு சமமான அழகிய ரதத்தில் பவனி வந்த த்ரிசிரஸ், உத்தமமான குதிரைகள் பூட்டிய ரதத்தை அங்கதன் இருக்கும் இடம் திருப்பினான். மூன்று பேருமே தேவர்களின் கொட்டத்தை அடக்கியவர்கள். மூன்று பேருமே நல்ல வீரர்கள். மூவரும் ஒன்றாக துரத்தவும், வாலி புத்திரன் அங்கதன், ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி வைத்துக் கொண்டான். முதலில் கிளைகளுடன் கூடிய மரத்தை தேவாந்தகன் மேல் வீசினான். பார்த்துக் கொண்டிருந்த த்ரிசிரஸ் அதை தன் அம்புகளால் தூள் தூளாகச் சிதறச் செய்தான். மரம் தூளாவதைப் பார்த்து அங்கதன் தாவி குதித்து ஆகாயத்தில் நின்றபடி மரக்கிளைகளையும், கைக்கு கிடைத்த கற்களையும் வீசினான். த்ரிசிரஸ் அதையும் தன் அம்புகளால் தடுத்து யார் மேலும் படாதபடி தடுத்துக் கொண்டான். தேவாந்தகன் தன் பரிகத்தாலும், எந்த கல்லும் தங்கள் மேல் படாமல் தடுத்து நிறுத்தி விட்டான். பின், மூவரும் வாலி புத்திரனைத் துரத்தினர். தன் யானையின் மேல் வேகமாகச் சென்று, மகோதரன், அங்கதன் மார்பில் வஜ்ரம் போன்ற தோமரத்தால் அடித்தான். வேகமாக தொடர்ந்து வந்த தேவாந்தகனும் தன் பரிகத்தால் கோபத்துடன் ஒரு அடி அடித்தான். மூவரும் ஒரே சமயத்தில் தாக்கிய போதும் அங்கதன் கலங்கவில்லை. இன்னமும் வேகமாக ஓடினான். தன் கைத்தலத்தால் ஓங்கி யானையை அடித்தான். மகா பலத்துடன் வீசப் பட்ட அந்த அடி யானையின் கண்களைத் தெறித்து விழச் செய்தது. யானை பயங்கரமாக அலறியது. அதனுடைய தந்தத்தை திருகி எடுத்து அதைக் கொண்டே தேவாந்தகனைத் துரத்திச் சென்று அடித்தான். அவன் உடல் முழுவதும் வெல வெலக்க, காற்றினால் அலைக் கழிக்கப் பட்ட மரம் போல ஆனான். லாக்ஷா ரஸம் (அரக்கு குழம்பு) போன்ற வர்ணத்தில் முகத்திலிருந்து (வாயிலிருந்து) ரத்தம் கொட்ட நின்றான். இருந்தும் சமாளித்துக் கொண்டு தன் பரிகத்தால் அங்கதனை ஓங்கி அடித்தான். பரிகம் அவனை கீழே தள்ளிய போதிலும், முழங்கால் பலத்தில் விழுந்த அங்கதன், உடனே சமாளித்துக்கொண்டு எழுந்து நின்று கொண்டான். திரும்ப ஆகாயத்தில் தாவி குதித்து நின்றான். த்ரிசிரஸ் அதைக் கண்டு கூர்மையான பாணங்களை பிரயோகம் செய்து அங்கதனை வீழ்த்த முயன்றான். வானரத் தலைவனான வாலி புத்திரனின் நெற்றியில் ஒரு அடி செம்மையாக விழுந்தது. மூவருமாக அங்கதனை தாக்கிக் கொண்டிருப்பதையும் அங்கதன் ஒருவனாக சமாளிக்கத் திணறுவதையும் ஹனுமானும், நீலனும் கண்டு, உதவிக்கு விரைந்தனர்.
நீலன் கையிலிருந்து பாறாங்கல்லை திரிசிரஸ் மேல் போட்டான். ராவணனின் புத்திரன் அதை அம்புகளால் தூளாக்கினான். நூறு பாணங்களால் பொடியாகிப் போனது. அந்த மலைக் கல் பொடிப் பொடியாக உதிரும் பொழுது தீக்கனல்கள் தெறித்தன. ஹனுமான் செய்த ஹுங்காரத்தால் கவனம் திரும்பிய தேவாந்தகன், அங்கதனை விட்டு ஹனுமானைத் தொடர்ந்து சென்றான். அருகில் வரும் வரை காத்திருந்து ஹனுமான் அவனை முஷ்டியினால் ஓங்கி அடித்தான். அவன் தலையில் ஓங்கி அடித்ததோடு, பெரிய குரலில் ஜய கோஷம் செய்தது ராக்ஷஸர்களை நடுங்கச் செய்தது. முஷ்டியால் தாக்கிய வேகத்தில் பற்களும், கண்களும் தெறித்து விழ, நாக்கு வெளியே துறுத்திக் கொண்டு தலை சுற்றி கீழே விழுந்த தேவாந்தகனின் உயிர் பிரிந்தது. தடாலென பூமியில் விழுந்தான். முக்யமான ராக்ஷஸ வீரர்களுள் ஒருவனான தேவாந்தகன் மாண்டு விழுந்ததும், த்ரிசிரஸ் மிகவும் ஆத்திரத்தோடு நீலன் மேல் பாணங்களை பிரயோகம் செய்யலானான். அம்புகளை மழையாக பொழியலானான். மகோதரனும் மிகுந்த கோபத்துடன், மலை போன்ற தன் யானையின் மேல் திரும்ப ஏறிக் கொண்டு, சூரியன் மந்தர மலையில் ஏறுவது போல நீலனை தாக்க ஆரம்பித்தான். மின்னலே சக்ரமாகவும், வில்லாகவும் , மழை மேகம் மலையின் மேல் நீரை பொழிவது அம்புகள் போலவும், நீர் தாரை இடைவிடாது விழுவது போல அவனது அம்புகள் நீலன் மேல் விழுந்தது. நீலன் இந்த சர மழையைத் தாங்க முடியாமல் தவித்தான். ஸ்தம்பித்து நின்று விட்டான். சற்றுப் பொறுத்து நினைவு திரும்பியதும், தன் பலத்தையெல்லாம் ஒன்று கூட்டி, ஒரு கல்லை எடுத்து, மிக வேகமாக மகோதரனின் தலையில் அடித்தான். சரியான இடத்தில் இந்த கல் தாக்கவும், மகோதரன் அந்த க்ஷணமே உயிர் பிரிந்தவனாக, யானையின் மேலிருந்து கீழே விழுந்தான்.
தன் தந்தை வழி உறவினன் (தந்தையின் சகோதரன்) அடிபட்டு விழுவதைப் பார்த்து த்ரிசிரஸ் வில்லை கையில் எடுத்துக் கொண்டு ஹனுமானைத் துரத்தினான். ஹனுமானை குறி வைத்து பல விதமாக பாணங்களை சரமாரியாக பொழிந்தான். வாயு புத்திரன் கையில் இருந்த ஆயுதமோ, மலையில் பொறுக்கிக் கொண்டு வந்த பாறையே. இந்த பாறைக் கற்களை திரிசிரஸின் அம்புகள் பொடியாக்கின. அதனால் இந்த கற்கள் உபயோகமில்லை என்று எண்ணி ஹனுமான், மரக் கிளைகளை எடுத்து வந்து அடிக்கத் தயாராக ஆனான். இவைகளையும் த்ரிசிரஸ் தன் பாணங்களால் விலக்கி விட்டு ஜய கோஷம் செய்தான். இதன் பின் ஹனுமான், தன் நகங்களால், ரதத்தில் பூட்டியிருந்த குதிரைகளைத் தாக்கினான். சிங்கம், யானையை தாக்குவது போலத் தாக்கினான். ராவணாத்மஜன் த்ரிசிரஸ், காலந்தகன் போல சக்தியைப் பிரயோகித்தான். அதை எதிர் கொண்டு ஹனுமான், கைகளால் உடைத்து எறிந்தான். சக்தி வாய்ந்த சக்தி ஆயுதத்தை ஹனுமான் கைகளால் உடைத்து எறிந்ததைக் கண்டு வானர வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதைக் கண்டு ராக்ஷஸ ராஜ குமாரன், தன் வாளை எடுத்துக் கொண்டான். ஹனுமானின் மார்பில் அதைக் கொண்டு பலமாக குத்தி வீழ்த்த முயன்றான். தன் மேல் வாளால் குத்தும் த்ரிசிரஸை, கைத்தலத்தால் ஹனுமான் ஓங்கி அடித்தான். இந்த அடியை தாங்க மாட்டாமல் த்ரிசிரஸ், கைகளிலிருந்த ஆயுதங்கள் நழுவ, பொறி கலங்கி நினைவு இன்றி, பூமியில் சரிந்தான். விழும் அவன் கை வாளை பிடுங்கிக் கொண்டு ஹனுமான் உரத்த குரலில் சிம்ம நாதம் செய்தான். இந்த நாதத்தைக் கேட்கப் பொறுக்காமல், ராக்ஷஸ ராஜ குமாரன் சட்டென்று எழுந்து ஹனுமானின் பேரில் முஷ்டியால் பலமாகத் தாக்கினான். முஷ்டியினால் அடிக்கப் பெற்ற ஹனுமான் ஆத்திரத்துடன் ராக்ஷஸ ராஜ குமாரனை கிரீடத்தில் பிடித்து உலுக்கியபடி, கோபத்தில் சிவந்த கண்களோடு, கையிலிருந்த வாளால், குண்டலங்களுடன் அழகாக விளங்கிய தலையை கிரீடத்துடன் சேர்த்து வெட்டித் தள்ளினான். த்வஷ்டாவின் மகனை முன்னொரு சமயம் இந்திரன் ஆத்திரத்துடன் வெட்டிச் சாய்த்தது போல சாய்த்து விட்டான். நீண்ட கண்களும், ஒளி வீசும் வைஸ்வானர அக்னி போன்ற லோசனங்கள், தலையுடன் பூமியில் விழுந்தது.
சூரியனுடைய மார்கத்திலிருந்து ஒளி மிகுந்த பொறிகள் விழுவது போல விழுந்தன. ஹனுமான் த்ரிசிரஸை வதைத்து விட்டான் என்ற செய்தி பரவவும், ராக்ஷஸர்கள் ஓடலாயினர். உரத்த குரலில் வெற்றி முழக்கம் செய்த வானரங்கள் அவர்களைத் துரத்தி அடித்தனர். த்ரிசிரஸ் இறந்து பட்டான், மகோதரனும் யுத்த பூமியில் மாண்டான். தேவாந்தக நராந்தகர்களும் நல்ல வீரர்கள், அவர்களும் தோற்று உயிர் இழந்தனர் என்ற செய்தி கேட்டு, ராவணன் தம்பி மகா பார்ஸ்வன் பெரும் ஆத்திரம் கொண்டான். கையில் க3தை4யை எடுத்துக் கொண்டு, தன் உடலில் காயங்களையும், ரத்தப் பெருக்கையும் பொருட்படுத்தாமல், சிவந்த மாலை ஒளி வீச, நின்றிருந்த ஐராவத, மகா பத்ம யானைகளுக்கு சமமான தன் பட்டத்து யானையில் மேல் ஏறி யுத்த வெறியுடன், வேகமாக வானர வீரர்களை அழிக்க கிளம்பினான். யுக முடிவில், அக்னி போல ஜ்வலித்துக் கொண்டு ஓடினான். ராவணன் சகோதரன் மகா கோபத்துடன் வருவதையறிந்து ஹனுமான் அவனை எதிர் கொண்டு ஓடினான். எதிரில் பர்வதம் போல வந்து நின்ற ஹனுமானின் மார்பில் தன் க3தை4யால் ஓங்கி அடித்தான், மகா பார்ஸ்வன். வஜ்ரம் போன்ற அந்த க3தை4யை முழு பலத்துடன் தாக்கியதில் ஹனுமான் மார்பிலிருந்து ரத்தம் கொட்டியது. சற்று நேரம் நிலை தடுமாறிக் கலங்கிய ஹனுமான் சமாளித்துக் கொண்டு உதடுகள் துடிக்க, மகா பார்ஸ்வனைப் பார்த்தான். கைகளுக்கு இடையில் வேகமாகச் சென்று எதிர்பாராத சமயம், அவன் மேல் முஷ்டியால் ஓங்கி ஒரு குத்து விட்டான். வேரறுந்த மரம் போல அவன் அந்த அடி தாங்க மாட்டாமல் கீழே விழுந்தான். அவன் கையில் இருந்த யம தண்டம் போன்ற க3தை4யை எடுத்து ஹனுமான், மகிழ்ச்சியுடன் நின்றான். சற்று நேரத்தில் நினைவு தெளிந்து எழுந்த ராக்ஷஸன், திடுமென எழுத்து வருணனின் புத்திரனான நீலனைத் தாக்கினான். அவனுடைய க3தை4யாலேயே ஹனுமான், அந்த ராக்ஷஸ வீரனை பலமாக அடித்து நொறுக்கி, தன் க3தை4யாலேயே அடிபட்டு, பற்களும், கண்களும் விழ, பூமியில் விழச் செய்தான். மலைகளை இந்திரன் வஜ்ரத்தால் வெட்டி வீழ்த்திய பொழுது விழுந்த மலைகளுள் ஒன்று போல வீழ்ந்தான்.
இந்த ராக்ஷஸ வீரன் மாண்டு விழுந்ததும், ராக்ஷஸ சேனை மிகவும் கலக்கமுற்றது. கண் எதிரில் மாண்டு விழுந்த சகோதரனைப் பார்த்து, ராவணனின் மற்றொரு சகோதரன், அடக்க மாட்டாத கோபத்துடன் பாய்ந்து வானர சைன்யத்துள் புகுந்து நாசம் செய்யலானான். மேலே வந்து விழும், பெருத்த சரீரம் உடைய ராக்ஷஸனைப் பார்த்து, கவாக்ஷன், பாறாங்கல்லை தூக்கிக்கொண்டு அவனை அடிக்க ஓடினான். உன்மத்தம் பிடித்தவன் போல, பெரிய மலை நகருவது போல, ஓடி வரும் ராக்ஷஸனின் தாக்குதலைத் தாங்க முடியாமல், வானர சைன்யம் கலங்கியது. ராக்ஷஸனின் பாணத்தால் கையில் இருந்த கல் தூள் தூளாகிப் போனதைப் பார்த்து, கவாக்ஷன் திகைத்தான். திரும்பத் திரும்ப ஜய கோஷம் செய்தான். ராக்ஷஸன், கோபம் கொண்ட நிலையில் பயங்கரமாக தோற்றமளிப்பவன், இப்பொழுது வெறி பிடித்தவன் போல சுழன்று சுழன்று தாக்கினான். கையில் க3தை4யுடன் எதிர்ப்பட்ட வானரங்களின் மார்பில் அடித்தான், கவாக்ஷனும் அதன் அடி தாங்க மாட்டாமல் ரத்தம் பெருகி ஓட விழுந்தான். சற்று பொறுத்து நினைவு தெளிந்து எழுந்து அந்த ராக்ஷஸன், தலையில் தன் கைகளால் பலமாக மொத்தினான். கவாக்ஷனின் கைகளால் அடித்தது, ராக்ஷஸனை நினைவிழக்கச் செய்தது. அவன் விழுந்தான். ராவண சகோதரன் இவனும் உயிர் இழந்ததைக் கண்டு ராக்ஷஸ சைன்யம் தப்பினோம், பிழைத்தோம் என்று ஓட்டம் எடுத்தன.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் தேவாந்தகாதி வத4: என்ற எழுபதாவது அத்தியாயத்தின் அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 71 (478) அதிகாய வத4: (அதிகாயனின் வதம்)
தங்கள் சைன்யம் பயந்து சிதறி ஓடுவதையும், சகோதரர்கள், சிற்றப்பன்மார் இறந்து விழுந்ததையும் கண்டு யுத்த வெறியுடன் வீரர்களான இருவரும் கடைசி வரை போரிட்டு மடிந்ததையும், பார்த்த அதிகாயன், மிக்க மன வருத்தமும் ஆத்திரமும் அடைந்தான். இவனுக்கு ப்ரும்மா கொடுத்த வரம் இருந்தது. தேவ தானவர்களின் கர்வத்தை அடக்கக் கூடியவன். மலை போன்ற பெரிய சரீரம் உடையவன். சூரியனை பழிக்கும் பிரகாசமான ஒரு ரதத்தில் ஏறிக் கொண்டு இந்திரசத்ருவான அந்த ராக்ஷஸ குமாரன், போருக்குப் புறப்பட்டான். தன் பெரிய வில்லை எடுத்து நாணை விரல்களால் மீட்டி பெரும் சத்தம் வரச் செய்தான். குண்டலங்கள் பள பளக்க, கிரீடம் அணிந்தவனாக தன் பெயர் சொல்லி உரத்த குரலில் ஜயகோஷம் செய்தான். சிம்ம கர்ஜனை போன்ற அந்த முழக்கமும், தன் பெயர் சொல்லி போருக்கு அறை கூவி அழைத்ததும், உரத்த குரலில் செய்த ஜயகோஷமும், வானரங்களை நடு நடுங்கச் செய்தன. அவன் உடலைக் கண்டு, கும்பகர்ணன் திரும்ப வந்து விட்டானோ என்று குழப்பம் அடைந்தன. ஒருவரையொருவர் நெருங்கி நின்று கொண்டு பயத்துடன் நின்றன. வாமனாவதார சமயம், த்ரிவிக்ரமனாக, வானளாவி நின்ற விஷ்ணுவின் ரூபம், போன்ற இவனுடைய ரூபத்தைப் பார்த்து பயத்துடன் மூலைக்கு மூலை ஓடி ஒளிந்தன. லக்ஷ்மணாக்ரஜன், ராமனை சரணம் அடைந்தன. அதிகாயன் வந்திருக்கிறான், என்ன செய்வது? என்று கேட்டு பணிவாக நின்றன. காளமேகம் போல கர்ஜிக்கும் அதிகாயன், ரதத்தில் ஏறி, வருவதை வெகு தூரத்திலிருந்தே காகுத்ஸன் கண்டான். பர்வதம் போன்ற அவன் அதிகாயன் தான் என்று நிச்சயம் செய்து கொண்டு, ராகவனும் ஆச்சர்யத்துடன் விபீஷணனை வினவினார். யார், இது? மலை போல வளர்ந்து நிற்கிறான். கையில் வில்லும், சிறிய கண்களுமாக ஆயிரம் குதிரைகள் பூட்டிய விசாலமான ரதத்தில் வருகிறான். ப்ராஸ, தோமரங்கள், கூர்மையான பாணங்கள், இவற்றுடன், பிரகாசமாக விளங்கும் ஆயுதங்களுடன், பூத கணங்கள் சூழ, மகேசனே வந்தது போல வருகிறானே. காலனின் நாக்கு நீண்டு வந்தது போல இவன் ரதம், சக்தி ஆயுதம் இவைகளுடன் வருகிறான். மேகம் மின்னலுடன் கூடியுள்ளது போல காட்சி தருகிறான். இவனுடைய வில்லும், அம்பும் தயாராக இருக்கின்றன. எந்த நிமிஷமும் அடிப்பான். இவைகளும், இந்திர தனுஷ், ஆகாயத்தில் சோபையுடன் விளங்குவது போல இவன் ரதத்துக்கு சோபையைத் தருகின்றன. ராக்ஷஸ சார்தூலனான இவன் யார்? ரண பூமியே இவனால் பிரகாசமாகிறது. ரதி (ரதம் ஓட்டுபவன்) ஸ்ரேஷ்டனான இவன் ரதமும் ஆதித்யனைப் போல தேஜஸுடையது. த்வஜத்தில் ராகுவை பிரதிஷ்டை செய்து கொண்டிருக்கிறான். சூரிய கிரணங்கள் போன்ற இவன் பாணங்கள் பத்து திசைகளிலும் பாய்ந்து செல்லக் கூடியவை. மூன்று இடங்களில் வளைந்து, மேகம் இடி இடிப்பது போன்ற ஓசையெழுப்பக் கூடியதாக, பொன்னால் அலங்கரிக்கப் பட்டதாக, இவன் வில்லும், இந்திரனின் வில் போன்றே ஒளி வீசுகிறது. மகா ரதியான இவன், த்வஜம், பதாகம், அனுகர்ஷம் இவைகளுடன், நான்கு சாரதிகள் ஓட்ட மேகம் போல கர்ஜிக்கிறான். இவனுடைய ரதத்தில் இருப்பது, பத்து, எட்டு என்று தூணிகளும், அம்புகளும், புத்தம் புதியவைகள், அலங்கார வேலைப்பாடுகளுடன், நுனி கூர்மையாக செய்யப் பட்டுள்ளன. ரதத்தின் இருபுறமும், இரண்டு பெரிய வாள் தொங்குகின்றன. நான்கு முழம் அகலமும், பத்து முழம் நீளமும் உள்ளவை. கழுத்து பாகம் சிவந்து தெரிகிறது. பெரிய மலை போன்ற உருவம் உடையவை. காலனே மகா கால சமயம் மேகத்தில் வந்து நிற்பது போல வருகிறான். இரண்டு புஜங்களிலும், இவன் அணிந்துள்ள பொன்னாலான அங்கதங்கள் ஜ்வலிக்கின்றன. ஹிமய மலை தன் சிகரங்கள் பள பளக்க நிற்பது போல நிற்கிறான். இவன் முகத்துக்கு குண்டலங்கள் அழகூட்டுகின்றன. புனர்வசு நக்ஷத்திரத்துடன் கூடிய பூர்ண சந்திரனின் ஒளி போல இருக்கிறது. இது யார் சொல், விபீஷணா, ராக்ஷஸர்களில் சிறந்தவன் இவன் என்பதில் சந்தேகமில்லை. இவனைக் கண்டு வானரங்கள் நாலா புறமும் சிதறி ஓடுகின்றன. விபீஷணன் ராமனுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான்.
தசக்ரீவன் ராவணன் நல்ல தேஜஸ்வி. வைஸ்ரவனன் தம்பி. பயங்கரமான செயற்கரிய செயல்களைச் செய்வதில் விருப்பம் உள்ளவன். ராக்ஷஸர்களின் தலைவன். அவன் மகன் இவன். தான்யமாலினி என்ற மனைவியிடம் பிறந்தவன். அதிகாயன் என்ற பெயருடையவன். ராவணனுக்கு சமமான வீர்யம் உடையவன். யுத்தத்தில் இவனை அசைக்க முடியாது. பெரியவர்களை வணங்கி, சேவை செய்பவன். நல்ல கேள்வி ஞானம், வேத சாஸ்திர ஞானம் உள்ளவன். இவன் அறியாத விஷயமே இல்லை. குதிரையேற்றம், யானை, ரதம், எதுவானாலும் தன் வசத்தில் வைத்து பயன் படுத்தக் கூடியவன். வாளோ, வில்லோ, நன்கு பிரயோகிக்கத் தெரிந்தவன். சாம, தான, பேத, தண்டங்களையும், நியாயங்களையும், மந்த்ராலோசனையும் தெரிந்தவன். இவனுடைய ஆட்சியில் லங்கை நிர்பயமாக இருக்கக்கூடும். இவன் தோள் வலிமையில் லங்கா வாசிகள் நம்பிக்கை வைத்துள்ளனர். இவன் ப்ரும்மாவை ஆராதித்து, தவங்கள் செய்திருக்கிறான். நிறைய அஸ்திரங்களை பெற்றிருக்கிறான். அதைக் கொண்டு எதிரிகளை ஜயித்திருக்கிறான். ஸ்வயம்பூ இவனுக்கும் சுராசுரர்களால் கொல்ல முடியாதபடி வரங்கள் அளித்திருக்கிறார். இவன் அணிந்திருக்கும் திவ்யமான கவசமும், சூரியனுக்கு இணையான ரதமும், இவைகளைக் கொண்டு நூற்றுக் கணக்கான தேவர்களும், தானவர்களும் ஜயிக்கப் பட்டிருக்கிறார்கள். ராக்ஷஸர்களை ரக்ஷித்திருக்கிறான். யக்ஷர்களையும் வதைத்திருக்கிறான். இந்திரனுடைய வஜ்ர ஆயுதத்தையே தடுத்து நிறுத்தியிருக்கிறான். சமுத்திர ராஜனின் பாசத்தை யுத்தத்தில் எதிர்த்து போரிட்டு வென்றிருக்கிறான். ராக்ஷஸர்களுள் ரிஷபம் போன்றவன். இவன் தான் அதிகாயன், ராவணன் மகன். தேவ தானவர்களின் கர்வத்தை அடக்கியவன். இனி உங்கள் மனதில் பட்டபடி என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். இவன் அம்புகள் வானர சைன்யத்தில் பெரும் சேதத்தை விளைவிக்கும் முன், தாங்கள் சீக்கிரம் செயல்படுங்கள் என்றான்.
இதற்குள் அதிகாயன், வானர சைன்யத்துள் புகுந்து, தன் வில்லை பல முறை திரும்பத் திரும்ப மீட்டி பெரும் நாதம் வரச் செய்தபடி முன்னேறினான். முக்கியமாக முன்னணியில் நின்ற வானர வீரர்களே, இவனது ப்ரும்மாண்டமான சரீரத்தையும் ரதத்தையும் கண்டு பயந்து ஓடி விட்டன. குமுதனும், த்விவித மைந்தன், நீலன், சரபன் இவர்கள் ஒன்று கூடி மரக் கிளைகளையும், மலையிலிருந்து கொண்டு வந்த பாறாங்கற்களையும் வைத்துக் கொண்டு எதிர்த்தனர். அதிகாயன் தன் அம்புகளால் அந்த மரங்களையும், கற்களையும் தூள் தூளாக்கிவிட்டான். அந்த வானரங்கள் மேல் தான் பாண பிரயோகம் செய்யவும் ஆரம்பித்தான். பாணங்களின் தாக்குதலால் அடிபட்ட வானரங்கள் எதிர்க்கத் திராணி இன்றி, எதிரில் நிற்கவும் முடியாமல் சக்தியிழந்து நின்றன. இளம் சிங்கம் மான் கூட்டத்தை சிதற அடிப்பது போல, இளமையின் கர்வமும் சேர, அதிகாயன் வானர சைன்யத்தை சிதறி ஓடச்செய்தான். யுத்தம் செய்யாமலே நின்றிருந்த பல வானரங்களும் ஓடி ராமனிடம் தெரிவித்தன. அதிகாயனும் அவைகளைத் தொடர்ந்து வந்து ராமனுக்கு எதிரில் வந்து கர்வதோடு, தன் வில்லையும் அம்புகளையும் காட்டி, போருக்கு அழைத்தான். நான் ரதத்தில் நிற்கிறேன். கையில் உயர்ந்த வில்லும், அம்புகளும் உடையவன். சாதாரண அடி மட்டத்து வீரர்களோடு போரிட மாட்டேன். யாரிடம் எனக்கு சமமான சக்தியும், தகுதியும் இருக்கிறதோ, அவன் வந்து என்னுடன் போர் செய்து பார்க்கட்டும். இதைக் கேட்டு பொறுக்காத சௌமித்ரி, சிரித்துக் கொண்டே தன் வில்லை கையில் எடுத்தபடி முன் வந்தான். சௌமித்ரி அமித்ர ஹந்தா- மித்ரன் அல்லாதவனை அடிப்பவன் என்பது தெரிந்ததே. தன் வில்லில் அம்பை பூட்டி நேராக எதிரில் நின்ற அதிகாயனின் பெரிய வில்லை கீழே தள்ளினான். ராக்ஷஸ வீரர்கள் பயந்து அலறியது நாலா திசைகளிலும் எதிரொலித்தது. பூமி, மலைகள், சமுத்திரம்,ஆகாயம் இவைகளும் இந்த ஒலியால் நடுங்கும்படி உரத்த குரலில் ஜய கோஷம் செய்தான். தனக்கு இணையான பலவான், சக்தி வாய்ந்தவன் என்பதை, சௌமித்ரியின் ஜய கோஷத்திலிருந்தே புரிந்து கொண்ட அதிகாயன், தன் வில்லில் கூர்மையான பாணத்தை பூட்டி கோபத்துடன் லக்ஷ்மணனை அடிக்கலானான். சௌமித்ரே, நீ பாலன். விக்ரமம் என்றால் என்ன என்று தெரியாதவன். நீ போ. ஏன் வீணாக காலனாக வந்து நிற்கும் என்னுடன் மோதுகிறாய். என் பாணம் வில்லிலிருந்து புறப்படும் பொழுது அதை தாங்க ஹிமவானாலும் முடியாது. அந்தரிக்ஷமோ, பூமியோ எதுவும் தாங்காது. நிம்மதியாக உறங்கும், காலாக்னியை சீண்டி எழுப்பிவிடப் பார்க்கிறாய். என் கை பாணத்தால் உயிர் இழக்காதே. வில்லை கீழே போட்டு விட்டு ஓடு. உயிரைக் காப்பாற்றிக் கொள். ஒருவேளை, போருக்கு வந்து விட்டு, புற முதுகு காட்டி திரும்பி போக இஷ்டமில்லையென்றால், இதோ என் கையால் உயிரிழந்து சடலமாக ஆவாய். யம லோகம் தான் போவாய். ஈஸ்வரனுடைய கூர்மையான பாணங்களுக்கு சமமானவை என்னிடம் உள்ள அஸ்திர சஸ்திரங்கள். இவை பல யுத்தங்களில் எதிரிகளின் கர்வத்தை ஒடுக்கியிருக்கின்றன. அதனாலேயே பொன் இழைத்து அலங்கரிக்கப் பட்டுள்ளன. இதோ பார், சூரிய கிரணம் போல ஜ்வலிக்கும் இந்த ஒரு அம்பே உன் உயிரைக் குடிக்கப் போகிறது. கோபம் கொண்ட ம்ருக ராஜனான சிங்கம், யானைக் கூட்டத் தலைவனை அடிப்பது போல அடித்து விடுவேன். இவ்வாறு சொல்லிக் கொண்டே வில்லில் அம்பை பூட்டினான். குறி பார்க்கலானான். ரோஷத்துடனும், கர்வத்துடனும் யுத்த களத்தில், அதிகாயன் பேசியதைக் கேட்டு, ராஜ குமாரனான லக்ஷ்மணனும், அதே தொனியில் அதே விதமாக கோபத்துடன் பதில் அளித்தான். வெறும் வார்த்தைகளால் ஒருவன் பெரியவனாக முடியாது. தற் பெருமை பேசி மட்டுமே ஒருவன் வீரத்தை காட்டியதாக ஆகாது. சத்புருஷர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதோ நான் வருகிறேன், வில்லும் அம்புமாக நான் எதிரில் நிற்கும் பொழுது உன் பலத்தை, ஆற்றலைக் காட்டு. துராத்மாவே, உன் செயலில் வீரத்தைக் காட்டு. வெட்டிப் பேச்சு பேசாதே. பௌருஷம் உடையவன் தான் சூரன். ரதத்தில் நிற்கிறாய். எல்லா விதமான ஆயுதங்களும் நிரம்பப் பெற்றிருக்கிறாய். வில் வேறு. சரங்களாலோ, அஸ்திரங்களாலோ, உன் பராக்ரமத்தைக் காட்டு. அதன் பின் என் கூரிய பாணங்களால் உன் தலை கீழே விழச் செய்கிறேன். இயற்கையில் நன்கு கனிந்த விளாம்பழத்தை மரத்திலிருந்து காற்று வீசி விழச் செய்வது போல விழச் செய்கிறேன். இதோ பார், என் பாணங்களை. புடமிட்ட தங்கத்தால் அலங்கரிக்கப் பட்டவை. இவை ரத்தத்தைக் குடிக்கப் போகின்றன. என் பாணங்கள் உன் உடலை சல்லடையாக துளைக்கப் போகின்றன. இவன் சிறுவன் என்று எண்ணி, என்னை அலட்சியப் படுத்தாதே. பாலனோ, விருத்தனோ (முதியவனோ), யுத்தம் என்று வந்தால் நான் ம்ருத்யுவுக்கு சமமானவன். பாலனான விஷ்ணுவினால், மூன்று உலகும் மூன்றடியில் அளக்கப் பட்டது தெரிந்திருக்கும். இவ்வாறு கோபத்துடன் சொல்லிக் கொண்டே வில்லில் அம்பைப் பொருத்தி குறி பார்க்கலானான். லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்டு, அதில் நியாயம் இருப்பதையும் உணர்ந்து கொண்ட அதிகாயன், தானும் தன் வில்லும் அம்புமாக தயாரானான். இந்த யுத்தத்தைக் காண வித்யாதரர்களும், பூதங்களும், தேவர்களூம், தைத்யர்களும், மகரிஷிகளும், குஹ்யகர்களும் வந்து கூடினர்.
ஆகாயத்தை துளைப்பது போல கூர்மையான ஒரு பாணத்தை அதிகாயன் லக்ஷ்மணன் பேரில் எய்தான். ஆலகால விஷம் போல வந்து விழுந்த அந்த பாணத்தை லக்ஷ்மணன் அர்த்த சந்திர அஸ்திரத்தால் முறியடித்தான். தன் அம்பு முறிபட்டதைக் கண்டு அதிகாயன், ஐந்து பாணங்களைச் சேர்த்து பிரயோகித்தான். லக்ஷ்மணனைக் குறி பார்த்து இந்த பாணங்களை ராக்ஷஸன் பிரயோகம் செய்தான். இதை தன் அருகில் வருமுன்னே மற்றொரு பானத்தால் லக்ஷ்மணன் தடுத்து நிறுத்தி விட்டான். இதை தடுத்த அதே சமயம் தன் வில்லில் கூர்மையான மற்றொரு பாணத்தை பொருத்தி பிரயோகம் செய்யத் தயாரானான். தேஜஸால் நெருப்பு கங்கு போல இருந்த அந்த அஸ்திரம், இழுத்து விடப்பட்ட வேகத்தில் ராக்ஷஸனின் நெற்றியில் பட்டது. நெற்றியில் புதைந்து நின்ற அந்த பாணம் ஏற்படுத்திய காயத்திலிருந்து ரத்தம் பெருக, மலையின் மேல் பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடுவது போல இருந்தது. லக்ஷ்மணனின் அம்பு தைத்து உண்டான வலியால் ராக்ஷஸன், சிரமப்பட்டான். த்ரிபுர க்ஷேத்திரத்தின் மேல் ருத்ர பாணம் தைத்தது போல இருந்தது. சற்று நிதானித்து சமாளித்துக் கொண்டு லக்ஷ்மணனை புகழ்ந்தான். இந்த பாணத்தை நீ பிரயோகித்ததில் இருந்து நல்ல வில்லாளி என்பது தெரிகிறது. எனக்கு சமமான வீரன் தான் நீ என்று பாராட்டினான். இவ்வாறு சொல்லி, குனிந்து தன் புஜங்களை சரி செய்து கொண்டு, ரதத்தைச் செலுத்திக் கொண்டு முன்னேறினான். ஒன்று, மூன்று, ஐந்து ஏழு என்று கிரமமாக அம்புகளை இடைவிடாது எடுத்தான், தொடுத்தான், அடித்தான். காலனுக்கு இணையான அந்த அம்புகள், ராக்ஷஸன் வில்லிலிருந்து புறப்பட்டன, பள பளவென மின்னின. பொன்னால் அதில் செய்யப் பட்டிருந்த அலங்கார வேலைபாடுகள், ஆகாயத்தையே ஒளி மயமாக்கியது. ராக்ஷஸன் சரமாரியாக பொழிந்ததைக் கண்டும் லக்ஷ்மணன் கலங்கவில்லை. தானும் கூரிய பாணங்களை தன் வில்லில் பூட்டி பிரயோகித்தபடி இருந்தான். ஒரு சமயம், ராக்ஷஸன், லக்ஷ்மணனின் ஸ்தனங்களுக்கு மத்தியில் சக்தி வாய்ந்த ஒரு அஸ்திரத்தால் அடித்தான். நடு மார்பில் பட்டது அந்த அஸ்திரம். அதனால் உண்டான காயத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. மதம் பிடித்த யானை போல ஆனான். சட்டென்று அந்த அம்பை பிடுங்கி எறிந்து விட்டு, ஆக்னேய அஸ்திரத்தை எடுத்து தியானித்து வில்லில் பொருத்தினான், லக்ஷ்மணன். அதிகாயனும் அதைக் கண்டு சௌரம் (சூரியன் சம்பந்தப்பட்டது) என்ற அஸ்திரத்தை விட்டான். ஆக்னேய அஸ்திரம் லக்ஷ்மணனின் வில்லில் இருந்து புறப்படும் முன், அதிகாயன் சூர்யாஸ்திரத்தை விட்டு அதை அடக்கி விட்டான். இவை இரண்டும் ஆகாயத்தில் ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டன. இரண்டு பாம்புகள் கோபத்துடன் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டது போல இருந்தது. இரண்டும் அடிபட்டு பூமியில் விழுந்தன. இரண்டு பாணங்களும் ஒளியிழந்து, சக்தியிழந்து கிடந்தன. உடனே அதிகாயன் கோபத்துடன் ஐஷீகம் என்ற அஸ்திரத்தை பிரயோகித்தான். சௌமித்ரி அதை ஐந்த்ரம் என்ற அஸ்திரத்தால் தடுத்தான். ஐஷீகம் பயனற்றுப் போனதைக் கண்டு அதிகாயன், ராவணாத்மஜன், யாம்யம் என்ற அஸ்திரத்தை விட்டான். அதை வாயவ்யம் என்ற அஸ்திரத்தால் லக்ஷ்மணன் முறியடித்தான். மேகம் மழை பொழிவது போல அம்புகளை கணக்கின்றி வர்ஷித்து, லக்ஷ்மணன், ராவணன் மகனை திணறச் செய்தான். அதிகாயன் அருகில் சென்று கவசத்தில், வஜ்ரம் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்த உறுதியான கவசத்தில் பட்டு அவை கீழே விழுந்தன. இந்த நிலையைக் கண்டு லக்ஷ்மணன் ஆயிரக் கணக்கான பாணங்களை ஒரே சமயத்தில் விட்டான். தன்னை பாதுகாக்கும் கவசம், எந்த பாணத்தாலும் அழிக்க முடியாத சக்தி வாய்ந்தது என்பதால் ராக்ஷஸ ராஜகுமாரன் இந்த பாண மழைக்கு அஞ்சவில்லை. கலங்காது நின்றான். தன் பங்குக்கு ஆல கால விஷத்தைக் கக்கும் ஒரு பாணத்தை எடுத்து லக்ஷ்மணன் பேரில் பிரயோகித்தான். மர்ம தேசத்தில் தாக்கிய அந்த அம்பு, லக்ஷ்மணனை முஹுர்த்த காலம் நினைவின்றி இருக்கச் செய்தது. பின் நினைவு தெளிந்து எழுந்து நான்கு உத்தமமான அஸ்திரங்களால் குதிரைகளையும், சாரதியையும் அடித்து வீழ்த்தினான். த்வஜத்தை குறி வைத்து அடித்து அது சரிந்து விழச் செய்தான். சற்றும் பதட்டம் இல்லாமல் சௌமித்ரி, தன் மேல் வந்து விழும் அம்புகளையும், அஸ்திரங்களையும், பொருட்படுத்தாமல் ராக்ஷஸனை வதம் செய்யும் உத்தேசத்தோடு யுத்தம் செய்வதில் கவனமாக இருந்தான். லக்ஷ்மணனுடைய பாணங்கள் ராக்ஷஸனின் உடலில் காயத்தை கூட ஏற்படுத்த இயலாமல் விழுந்தன. வாயு பகவான், அவன் அருகில் வந்து மெதுவாக ஒரு விஷயத்தை தெளிவு படுத்தினார். இவனிடம் உள்ளது யாராலும் பிளக்க முடியாத கவசம். ப்ரும்மா வரம் தந்தது. இந்த கவசம் இவனைப் பாதுகாக்கும் வரை இவன் உயிருக்கு ஆபத்தில்லை. அதனால் ப்ரும்மாஸ்திரம் போட்டு, முதலில் கவசத்தை பிள. வேறு எந்த முறையிலும் இவனை வதம் செய்ய முடியாது. நல்ல பாதுகாப்பான கவசத்தோடு கூடிய பலசாலியான எதிரி இவன் என்று வாயு பகவான் சொன்னதைக் கேட்டு லக்ஷ்மணன், நொடியில் ப்ரும்மாஸ்திரத்தை தியானித்து, வில்லில் அம்புகளை பூட்டி எய்து விட்டான். சௌமித்ரி அந்த அஸ்திரம் பிரயோகம் செய்ய மந்த்ர ஜபம் செய்யும் பொழுது, திக்குகளில், சந்த்ர, சூரிய என்ற பெரிய க்ருஹங்கள், ஆகாயம், பூமி எல்லாமே நடுங்கின. யம தூதன் போன்ற கூரிய அம்பில் ப்ரும்மாஸ்திரத்தை ஆரோஹணம் செய்து, யுத்தத்தில் வேறு எந்த முறையிலும் வெற்றி கொள்ள முடியாத வீரனான ராக்ஷஸ ராஜ குமாரனை வதம் செய்யும் பொருட்டு அவன் மேல் பிரயோகித்தான். லக்ஷ்மணனின் வில்லிலிருந்து வரும், நெருப்பு ஜ்வாலை போல ப்ரகாசமானதும் சுவர்ணம் போலும், உத்தமமான வஜ்ரம் போலும் அழகிய வேலைப்பாடுகள் உடையதுமான அஸ்திரம் தன்னை நோக்கி வருவதைக் அதிகாயன் கண்டான். தன்னால் முடிந்தவரை ஏராளமான அம்புகளைப் பொழிந்து அதை தடுக்க முயன்றான். ஆனாலும் அந்த அஸ்திரம் அவன் அருகில் வந்து விட்டது. தன் சக்தி, இஷ்டி, குடாரம், க3தை4, சூலம், ஹலம், இந்த ஆயுதங்களால் அதைத் தடுப்பதில் கவனமாக இருந்தான். சற்றும் கலங்காமல் தன்னைக் காத்துக் கொள்ள போரிட்டான். அந்த ஆயுதங்களை தவிர்த்தும், அத்புதமான அந்த ஆயுதங்களை சக்தி இழக்கச் செய்தும், ப்ரும்மாஸ்திரம் அவனுடைய தலையை கிரீடத்துடன் அடித்தது. அந்த தலையும், தலைக்கு பாதுகாப்பாக இருந்த கிரீடமும் ஒரு நொடியில் பூமியில் விழுந்தது. மேரு மலையின் சிகரம் ஒன்று நழுவி விழுவது போல இருந்தது. தரையில் விழுந்த தலையிலிருந்து ஆபரணங்கள் சிதறின. இதைக் கண்டு மற்ற ராக்ஷஸர்கள் மிகவும் கலங்கி வருந்தினர். அடி பட்ட சிரமத்தாலும், மன வருத்தத்தாலும் வாடிய முகத்தினராக, பலவிதமாக, அபஸ்வரமாக, உரத்த குரலில் கத்தலானார்கள். தங்கள் நாயகன் இறந்து விட்டான் என்று தெரிந்ததும், ஊரை நோக்கி பயத்துடன் ஓட்டம் பிடித்தனர். வானரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மலர்ந்த தாமரை போல முகம் மலர, லக்ஷ்மணனைச் சூழ்ந்து நின்று அவனை பூஜித்தனர். எதிர்க்க முடியாத பலசாலியான எதிரி ஒழிந்தான் என்ற ஆறுதலுடன் வானளாவி நின்ற நெடிய சரீரம் உடைய அதிகாயனை வதம் செய்து போரில் மனம் நிறைந்தவனாக லக்ஷ்மணன் நின்றான். வானர வீரர்கள் புடை சூழ, ராமனிடம் விஷயம் தெரிவிப்பதற்காக எல்லோருமாகச் சென்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் அதிகாய வத4: என்ற எழுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 72 (479) ராவண மன்யு சல்யாவிஷ்கார: (ராவணனை மன்யு எனும் கோபம் துளைத்தெடுப்பது)
அதிகாயன் இறந்ததைக் கேட்டு, ராவணன் வருந்தினான். லக்ஷ்மணனின் பாணங்களால் அடிபட்டான் என்ற விவரங்களை அறிந்து ராவணன் மனம் கலங்கினான். புலம்பினான். தூ3ம்ராக்ஷன் எப்படிபட்ட வீரன். அவனைக் கண்ட எதிரிகள் நடுங்குவார்கள். வில்லாளி. ஆயுதங்களை பிரயோகம் செய்வதில் வல்லவன் என்று புகழ் பெற்றவன். அகம்பனனும், ப்ரஹஸ்தனும், கும்பகர்ணனும் கூட வீரர்களே. யுத்தம் என்றால் விரும்பிச் செய்வார்கள். எல்லோருமே மகா பலசாலிகள். எதிரி சைன்யத்தை வெற்றி கொள்ளாமல் வந்ததில்லை. இவர்களை ராமன் வீழ்த்தி விட்டான் என்றால் அவன் செயற்கரியன செய்யும் வீரன் தான். பெருத்த உருவமும், சாஸ்திர ஞானமும் உடைய என் ராக்ஷஸ வீரர்கள் மடிந்தார்கள். பல வீரர்கள், சூரர்கள் வதம் செய்யப் பட்டார்கள். புகழ் பெற்ற வீரனான என் மகன் இந்திரஜித் அந்த சகோதரர்களை அஸ்திரத்தால் கட்டினானே. வர பலத்தால் செய்த செயல் அது. இதிலிருந்து சுர, அசுரர்களானாலும் விடுபட முடியாது. பயங்கரமான பந்தனம், அதை யக்ஷ கின்னரர்களும் முறியடித்ததில்லை. என்ன காரணமோ, தெரியவில்லை, இவர்கள் பிரபாவமா? மோகமா? மாயையா?? இந்த சகோதரர்கள் ராம, லக்ஷ்மணர்கள் அந்த சர பந்தனத்தை விலக்கிக் கொண்டு, வெளி வந்து விட்டார்கள். என் கட்டளைப்படி, போருக்கு புறப்பட்ட என் சிறந்த போர் வீரர்கள் போர்க்களத்தில் மடிந்தனர். இனி, யார் என் பக்கம், ராம லக்ஷ்மணர்களோடு போரிடத் துணிவும், சக்தியும் உள்ளவர்கள், மீதம் இருக்கிறார்கள்? தேடிப் பார்க்க வேண்டும். படை பலத்தோடு, சுக்ரீவனையும், இவனும் நல்ல வீரனே, விபீஷணனும் அங்கு இருக்கிறான். ஆஹா, இந்த ராமன் மகா பலசாலி. அவனுக்கு அஸ்திர பலமும் நிறைய உள்ளது. இவனுடைய விக்ரமத்தின் சகாயத்தால் தான் ராக்ஷஸர்கள் கொல்லப் பட்டார்கள். இந்த ராமன் யாராக இருக்கும்? அவனை நர நாராயணனாக எண்ணுகிறேன். இவனிடம் கொண்ட பயத்தால் லங்கை நகரம் தோரணங்கள் இல்லாமல், வாசல்கள் மூடப் பெற்று, பொலிவிழந்து கிடக்கிறது. இந்த நகரத்தை சளைக்காமல் காவல் செய்யக் கூடியவர்களை நியமித்து ரகசியமாக பாதுகாக்க வேண்டும். சீதை இருக்கும் அசோக வனத்தையும் நன்றாக காவல் காக்க ஏற்பாடு செய்ய வேண்டும். யார் வெளியில் சென்றாலும், உள்ளே வந்தாலும் கவனித்துக் கொள்ள வேண்டும். எங்கெங்கு அடர்த்தியான புதர் இருக்கிறதோ, ஆங்காங்கு ஒளிந்து கொள்ளுங்கள். கையில் ஆயுதமும், உங்கள் வீரர்களைக் கூப்பிடு தூரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வானரங்களின் நடமாட்டத்தை கூர்ந்து கவனியுங்கள். மாலை மங்கும் ப்ரதோஷ வேளையிலும், பாதி ராத்திரியிலும் விடியற்காலையிலும், எப்பொழுதும் அலட்சியமாக இருக்க வேண்டாம். எப்பொழுதும் நிற்க வேண்டியிருந்ததா என்ன? இப்பொழுது எதிரியின் நடமாட்டமும், பலமும் தெரிந்து விட்டது. இவ்வாறு ராக்ஷஸ ராஜன் கட்டளையிடவும், அவன் சொன்னபடியே தங்கள் தங்கள் இடங்களைத் தேர்ந்தெடுத்து நின்று கொண்டனர். இவர்களுக்கு உத்தரவிட்டு விட்டு, ஆங்காரமும் கோபமும் தன்னை அம்பாக குத்திக் கிளற, தீனனாக தன் மாளிகையினுள் நுழைந்தான். இறந்து போன தன் மகனை நினைத்து வேதனையும், அதிலிருந்து கிளர்ந்தெழும் கோபமுமாக, ராவணன் நிலை கொள்ளாது தவித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண மன்யு சல்யாவிஷ்கார: என்ற எழுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 73 (480) இந்திரஜித் மாயா யுத்தம் (இந்திரஜித்தின் மாயா யுத்தம்)
தேவாந்தகன், நராந்தகன், த்ரிசிர, அதிகாயன் என்று சிறந்த ராக்ஷஸ போர்த் தலைவர்கள் போரில் மடியவும், ஓடி வந்து ராக்ஷஸ படையினர், ராவணனிடம் விவரம் சொன்னார்கள். இதைக் கேட்டு ராவணனின் கண்களில் நீர் மல்கியது. புத்திரர்கள் மடிந்ததையும், சகோதரர்கள் வதம் செய்யப் பட்டதையும் நினைத்து மிகவும் வருந்தினான். சோக சாகரத்தில் மூழ்கி தீனமாக நின்ற ராவணனைப் பார்த்து, ராஜ குமாரனான இந்திரஜித் உற்சாகமூட்டும் விதமாக பேசினான். தந்தையே, மோகம் கொள்ள வேண்டாம். இதோ உங்கள் மகன் இந்திரஜித் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறேன். நான் போய் யுத்தத்தில் அவர்களை கண்ட துண்டமாக விழும்படி செய்து விட்டு வருகிறேன். என் பாணங்களின் கூரிய சக்தி, வேகத்தோடு நான் பிரயோகிக்கும் பொழுது, எதிரில் யார் தான் நிற்க முடியும்? கவலைப் படாதீர்கள். உயிரைக் காத்துக் கொண்டு யார் யார் ஓடுகிறார்கள், பார்ப்போம். இன்று பாருங்கள், என் பாணங்கள் தைக்கப் பெற்று, காயம் அடைந்த உடலுடன் ராம, லக்ஷ்மணர்களை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன். பூமியில் தூங்குவது போல கிடக்கும் பல உடல்கள் உயிரற்ற சடலங்களாக இருப்பதைக் காணத் தான் போகிறீர்கள். இதோ, இந்திர சத்ருவான நான் பிரதிக்ஞை செய்கிறேன். இன்றே, ராம லக்ஷ்மணர்களை என் பாணங்களுக்கு இரையாக்குவேன். இன்று இந்திரன், வைவஸ்வதன், விஷ்ணு, மித்ரன், அஸ்வினி குமாரர்கள், வைஸ்வானர, சந்திர, சூரியர்கள் கண்ணால் காணட்டும். பலியின் யாக பூமியில், விஷ்ணு, தன் உக்ரமான பராக்ரமத்தைக் காட்டியது போல, இப்பொழுது நான் என் பராக்ரமத்தை வெளிப்படுத்தப் போகிறேன். இவ்வாறு சூளுரைத்து விட்டு, ராஜாவிடம் விடை பெற்றுக் கொண்டு சற்றும் தளராத மன உறுதியுடன், தன் வாயு வேகத்தில் செல்லும் உயர்ந்த ரதத்தில் ஏறினான். ஸ்ரேஷ்டமான குதிரைகள் பூட்டிய ரதம் புறப்பட்டது. ஹரியின் ரதம் போல மேன்மை பொருந்திய அந்த ரதத்தில் வேகமாக ஏறி இந்திரஜித் யுத்த பூமிக்குச் சென்றான்.
கிளம்பி விட்ட அவனைத் தொடர்ந்து மற்ற போர் வீரர்கள் ஓடினர். ஆரவாரம் செய்தபடி, கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சென்றனர். ஒரு சிலர் உயர் ஜாதி குதிரைகளில், வ்யாக்ர (புலி), வ்ருச்சிக(ஓனாய்), மார்ஜார (பூனைகள்) கர (கோவேறு கழுதை), உஷ்டிரம் (ஒட்டகம்) பாம்புகள், வராகங்கள், நாய்கள், சிம்மங்கள், குள்ள நரிகள், பெரிய மலைகள், முயல், ஹம்ஸம், மயூரம், இவைகளைக் கொடியில் அடையாளமாகக் கொண்டு வீரர்கள், கையில் ப்ராஸம், முத்3fகரம், கூரான பரஸ்வதம், க3தை4 முதலியவற்றுடன், சங்கம் ஒலிக்க, பே4ரீ நாதம் இவைகளுடன், இந்திரஜித்தைப் புகழ்ந்து செய்த ஜய கோஷமும் சேர, வாழ்த்தியபடி விரைந்து சென்றனர்.
சங்கமோ, முயல் குட்டியோ எனும்படி, வெண்மையான வெண் கொற்றக் குடையும், பூரண சந்திரன் ஆகாயத்தில் பிரகாசமாகத் தெரிவது போல (பௌர்ணமிக்கு அடுத்த நாள்) விளங்கினான். உடன் சென்ற வீரர்கள், தங்கத்தால் கைப்பிடி செய்து அலங்காரமாக விளங்கிய சாமரங்களை வீசியபடி சென்றனர். சிறந்த வில்லாளிகள் பலரும் ஒன்று கூடி விட்டனர். பெரும் படையுடன் இந்திரஜித் கிளம்பி விட்டான் என்று தெரிந்ததும், தாங்களாகவே வந்து சேர்ந்து கொண்டனர். ராக்ஷஸாதிபனான ராவணன், தன் மகனைப் பார்த்துச் சொன்னான். நீ ஒப்புவமை இல்லாத அரிய வீரன், அப்ரதிரதன்- யாராலும் எதிர்க்க முடியாத பலம் கொண்டவன், உன்னால் தான் இந்திரனை வெற்றி கொள்ள முடிந்தது. இந்த மனிதனான ராமனைக் கொல்ல என்ன கஷ்டம். இவ்வாறு சொல்லி, பலவிதமாக ஆசிகளையும் வழங்க, அவற்றை ஏற்றுக் கொண்டு இந்திரஜித், ஆகாயத்தில் பிரகாசிக்கும் சூரியன் பிரகாசமாக பவனி வருவது போல லங்கா நகரில் பவனி வந்தான். யுத்த பூமியை வந்தடைந்தான்.
ரதத்தின் முன்னால் ராக்ஷஸர்கள் ஹோம குண்டத்தை தயார் செய்து வைத்திருந்தனர். தானே அக்னி போல ஜ்வலித்துக் கொண்டிருந்த இந்திரஜித் அக்னியில் முறைப்படி, செய்ய வேண்டிய கிரமப்படி ஹோமம் செய்தான். நெய், பொரி முதலிய ஸம்ஸ்காரங்களுடன், மாலைகள் அணிவித்து, தூப தீபம் காட்டி, பூஜை செய்தான். சஸ்திரங்களையும், அம்புகளையும், சமித்துக்களையும், சிவந்த வஸ்திரங்களையும், கருப்பான கரண்டியையும் அக்னியில் சமர்ப்பித்து, சரபத்ரங்களுடனும், தோமரங்களுடனும் (ஆயுதங்கள்) ஒரு பெண் ஆட்டின் தலையை, உயிருடன் பலி கொடுத்து, ஹோமங்கள் செய்ய, உடனே புகையின்றி கொழுந்து விட்டெரிந்த அக்னி, பிரதக்ஷிணமாக சுழன்று எரிந்து, வெற்றியைக் குறிக்கும் நிமித்தங்கள் தெரிந்தன. ஆசிர்வதிக்கும் விதமாக, சொக்கத் தங்கமாக ஜ்வலித்த அக்னியின் ஜ்வாலைக்களுக்கிடையில், அக்னி பகவான் தானே வந்து ஹவிஸைப் பெற்றுக் கொண்டான். இந்திரனின் விரோதியான இந்திரஜித், ப்ரும்மாஸ்திரத்தை தன் ரதம், தன்னை, என்று சகலத்தையும் அக்னிக்கு சமர்ப்பித்தான். இவ்வாறு ஆத்ம சமர்ப்பனம் செய்து அக்னியில் ஹோமம் செய்த பொழுது சூரியன், க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள், சந்திரன் இவற்றுடன் ஆகாயம் நடுங்கியது. தானும் அக்னிக்கு சமமான தேஜஸ் உடையவன், அக்னியில் ஹோமம் செய்து, இந்திரனுக்கு சமமான பிரபாவத்துடன் தன் கை வில், பாணங்கள், கத்தி, ரத, அஸ்வ, சாரதி அனைத்துமாக ஆகாயத்தில் மறைந்து விட்டான்.
நினைத்து பார்க்க முடியாத பராக்ரமம் உடைய வீரனான இந்திரஜித் ஆகாயத்தில் தன்னை மறைத்து நின்று கொண்டான். இதன் பின் குதிரைகள், ரதங்கள் நிறைந்த ராக்ஷஸ சேனை, ஆட்டமும் பாட்டமுமாக உற்சாகத்துடன் முன்னேறியது. பல விதமான கூரான பாணங்களாலும், தோமரங்களாலும், அங்குசங்களாலும் யுத்தத்தில் வானரங்களை அடித்தனர். இந்திரஜித் அவர்களைப் பார்த்து நீங்கள் உங்கள் இஷ்டப்படி வானரங்களைக் கொன்று குவியுங்கள். உங்களை நான் பாதுகாக்கிறேன் என்று உறுதி அளித்திருந்தான். அந்த தைரியத்தில் விஜய கோஷம் செய்த படி ராக்ஷஸர்கள், வானர சைன்யத்தை கதி கலங்க அடித்தனர். சர மழையாக பொழிந்தார்கள். கையில் மரக்கிளைகளே ஆயுதமாகக் கொண்ட வானரங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல், ஓடி ஒளிந்தனர். இந்திரஜித்தும் ஒரு பாணத்தால் ஐந்து, ஏழு, என்று வானர வீரர்களை வீழ்த்தினான். இந்திரஜித் தந்த பலத்தில் ராக்ஷஸர்கள், முன் ஒரு சமயம் தேவர்களை வாட்டி எடுத்தது போல வானர சைன்யத்தை நாசம் செய்யலாயினர்.
பயங்கரமான, சூரிய கிரணங்களுக்கு இணையான உக்ரமான பாணங்களால் அடிக்கப் பட்ட வானரங்கள் உடல் முழுவதும் காயத்தோடு, சிதைந்த உடல் பாகங்களோடும் நினைவிழந்து விழுந்தன. பாறைகளைக் கொண்டும், கிளைகளுடன் பிடுங்கிக் கொண்டு வந்த மரங்களின் அடிப் பாகத்தாலும் முடிந்தவரை, எதிர்த்தனர். இதனால் அடிபட்டும் ராக்ஷஸ வீரர்கள் கணிசமாக மாண்டனர். ராவணன் மகன், தானே பதினெட்டு சரங்களை கந்தமாதனன் பேரிலும், ஒன்பது சரங்களை நலன் பேரிலும், ஏழு பாணங்களை மைந்தனின் மர்மஸ்தானத்திலும், ஐந்து கூரிய பாணங்களை கஜன் பேரிலும், பிரயோகித்து அவர்களை காயப்படுத்தினான். ஜாம்பவான் பேரில் பத்து பாணங்கள் நீலனின் மேல் பதிமூன்று, சுக்ரீவனையும், ரிஷபனையும், அங்கதனையும் த்விவிதனையும், வரத்தால் கிடைக்கப் பெற்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு உயிரிழக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டான். மற்ற வானரங்களையும், பல விதமாக சர மழையாக பொழிந்து பயந்து அலறி ஓடச் செய்தான். காலாக்னி தன்னை மறந்து தாண்டவம் ஆடுவது போல கோரமாக ஆத்திரத்துடன் வெறி கொண்டவன் போல வானரப் படையை நாசம், செய்தான். செய்வதறியாது மயங்கிய வானரங்கள், பலர் விழுந்தனர். பலர் காயமடைந்தனர். எஞ்சியிருந்தவர் கலங்கினர். அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் காயம் பட்டதோடு ரத்தம் கொட்ட நின்றதை ராவணாத்மஜன் மகிழ்ச்சியோடு பார்த்தான்.
மேலும் வேகமாக அஸ்திரங்களையும், சஸ்திரங்களையும் ஏகமாக வர்ஷித்து வானர கூட்டத்தை அடித்தான். மகா பலசாலியான இந்திரஜித்தின் முன் நிற்கத் திராணியில்லாமல் வானரங்கள் நடுங்கின. கார் மேகம் நீரை பொழிவது போல, யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஆகாயத்திலிருந்து பாண மழை பொழிந்தான். சக்ரஜித் (இந்திரனுடைய மற்றொரு பெயர் சக்ரன்- அவனை ஜயித்தவன்), எனும் ராவணன் மகன், பாணங்களால் பலத்த காயம் அடைந்த வானரங்கள் அழுது, அரற்றிக் கொண்டு நின்றனர். இந்திரன் கையில் வஜ்ராயுதத்தோடு, மலைகளின் இறக்கைகளை வெட்டிய பொழுது, பொத்து, பொத்தென்று அவை விழுந்தது போல நாலா புறமும் ராவணியின் பாணங்களே இடை விடாது விழுந்து கொண்டிருப்பதைக் கண்டனர். சுரேந்திர சத்ருவான, இந்திரஜித் இருக்கும் இடமே தெரியவில்லை. மாயையால் மறைந்து நின்று கொண்டான். வானரங்கள் திகைத்து நிற்கையிலேயே நெருப்புக் கனல் பறக்கும் கூரிய பாணங்களால் ஆகாயமே மறைந்து விடும்படி, வலை பின்னியது போல பின்னி விட்டான். சுக்ரீவனின் சைன்யம் அவனுடைய விசித்ரமான போர் முறைகளாலும், சூலம் பரஸ்வதம், இவைகளை இடைவிடாது பிரயோகித்ததாலும் தவித்தது. வானர வீரர்கள் வாட்டி எடுக்கப் பட்டனர். நெருப்பு போன்ற ஒளியுடன் கூடிய கூர்மையான பாணங்களால் அடிபட்ட வானரங்கள் கிம்சுக புஷ்பங்கள் மலர்ந்தது போல சிவந்து காணப்பட்டன. ஒருவரையொருவர் நெருங்கி நின்று கொண்டனர். சில ஆகாயத்தைப் பார்த்த படி நிற்க, பல அடிபட்டு விழுந்தன. சிலருக்கு கண்களில் அடி, ஓடி தப்பிக்க முயன்றாலும், எங்கிருந்தோ வந்த பாணங்கள் மேலே பட்டு காயப்படுத்தியது. மந்திரங்கள் சொல்லி, யாரென்று கூட பாராமல் இந்திரஜித் தன் சரங்களை எய்து கொண்டே யிருந்தான். ஹனுமான், சுக்ரீவன், அங்கதன், கந்தமாதனன், ஜாம்பவான் சுஷேணன், வேக3த3ர்ஸி, மைந்தன், த்விவிதன், நீலன், க3வாக்ஷன், க3ஜ, கோ3முகர்கள், கேஸரி, ஹரிலோமா, வித்யுத் தம்ஷ்டிரன், சூரியானனன். ஜ்யோதி முகன், ததி4 முகன், ஹரி, பாவகாக்ஷன், நலன், குமுதன் என்று எல்லோருமே இந்திரஜித்தின் முன் தடுமாறினர். இப்படி, பாணங்களின் வர்ஷத்தாலும், க3தை4யை இடை விடாமல் சுழற்றியதாலும், வானர வீரர்கள் பயந்து நடுங்கி ஓடி ஒளியலானார்கள். இதன் பின் இந்திரஜித் ராம, லக்ஷ்மணர்களைத் தாக்க ஆரம்பித்தான். எங்கிருந்தோ, நீர் தாரை போல விழும் அம்புகளைப் பார்த்து ராமர் லக்ஷ்மணனுடன் ஆலோசனை நடத்தினார். லக்ஷ்மணா, இந்த ராவணன் மகன், ப்ரும்மாஸ்திரத்தால் வானர வீரர்களை தாக்கி விழச் செய்து விட்டு, நம்மைத் தாக்க ஆரம்பித்திருக்கிறான். இவனுக்கு ஸ்வயம்பூ வரங்கள் கொடுத்திருக்கிறார். தன் பெரிய சரீரத்தையே அந்தரிக்ஷத்தில் மறைத்துக் கொண்டிருக்கிறான். இந்த யுத்தத்தில் இவனை எப்படி சமாளிப்பது? சரீரமாக எதிரில் இல்லாத பொழுது நாம் எந்த இடத்தில் குறி வைத்து அடிப்போம். அவன் கையிலும் அஸ்திரங்கள் உள்ளன. ஸ்வயம்பூ பகவான், இவனுக்கு நினைத்து பார்க்க முடியாத ப்ரபாவத்தையும், அஸ்திரங்களையும், கொடுத்திருக்கிறார். புத்திசாலித் தனமாக, லக்ஷ்மணா, இந்த பாண வர்ஷத்தை என்னுடன் கூட இருந்து பொறுத்துக் கொள். நாலா திசைகளிலும் இவன் தன் பாணங்களால் வலையாக பின்னி ஆகாயமே தெரியாதபடி மறைத்து வைத்திருக்கிறான். சூரனான எதிரி கையில் அடிபட்டு வானர வீரர்கள் விழுந்து கிடக்கின்றனர். நம் இருவரையும் நினைவிழந்து போகச் செய்து நிச்சயம் இவன் தேவலோகம் போவான். அங்கு இந்திரனையும் வீழ்த்தி லக்ஷ்மியை ஜயித்து, தன் பக்கம் ஆக்கிக் கொண்டவனாக, தானே இந்திர பதவியில் அமருவான். இப்படி பேசிக் கொண்டு மேற்கொண்டு செய்வதைப் பற்றி யோசித்துக் கொண்டு நிற்கையிலேயே, இந்திரஜித் அவர்கள் இருவரையும் தாக்கி மூர்ச்சையாகச் செய்து விட்டு, திடுமென, லங்கையினுள் நுழைந்து விட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் இந்திரஜித் மாயா யுத்தம்: என்ற எழுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 74 (481) ஔஷதி4 பர்வதானனம் (ஔஷதி மலையைக் கொண்டு வருதல்)
யுத்த பூமியில், ராம லக்ஷ்மணர்கள் இருவரும் நினைவிழந்து கிடப்பதைக் கண்ட வானரங்கள் செய்வதறியாது திகைத்தன. சுக்ரீவன், நீலன், அங்கத, ஜாம்பவன் முதலானோர் வேதனை நிறைந்த மனத்தோடு, இருந்ததை விபீஷணன் கண்டான். வானர ராஜனான சுக்ரீவனைப் பார்த்து சமாதானம் செய்து, நல்ல வார்த்தை சொல்லி தேற்றினான். பயப்படாதே. இது நாம் வருந்தி கை கட்டி செயலிழந்து நிற்கும் நேரம் அல்ல. ஆர்ய புத்திரர்கள் இருவரும் அடிபட்டு நினைவிழந்து கிடக்கின்றனர். ஸ்வயம்பூ தந்த வரம், அவன் சேமித்து வைத்துள்ள அஸ்திரங்கள், நல்ல சக்தி வாய்ந்தவை. தங்கள் வீர்யத்தைக் காட்டுகின்றன. அமோகமான இந்த ப்ரும்மாஸ்திரம் தான் அவனிடம் உள்ள மிகச் சிறந்த ஆயுதம். இந்த அஸ்திரத்திற்கு மரியாதை தரும் விதமாக ராஜ குமாரர்கள் அதன் வீர்யத்திற்கு கட்டுப்பட்டு விழுந்து கிடக்கின்றனர். இதில் நாம் கவலைப் பட என்ன இருக்கிறது. மாருதியும், ப்ரும்மாஸ்திரத்திற்கு தலை வணங்கியவனாக விபீஷணன் சொன்னதைக் கேட்டு, இந்த வானர சைன்யத்தில் அடிபட்டு வீழ்ந்தவை தவிர மற்ற உயிருடன் இருக்கும் வீரர்களைத் தேடி சமாதானம் சொல்வோம் என்று கிளம்பினான்.
இதன் பின் ஹனுமானும், ராக்ஷஸ உத்தமனான விபீஷணனும் சேர்ந்து, கையில் தீவட்டியை எடுத்துக் கொண்டு அந்த இரவில் யுத்த பூமியில் சஞ்சரித்தனர். வால் அறுபட்டு, கை கால்கள் இழந்தவர்களாக, விரல்கள், கேசம் இவைகளை இழந்தவர்களாக, உடலிலிருந்து பெருகும் ரத்த வெள்ளத்தில் மூழ்கி நனைந்தவர்களாக, வேதனையும் முனகலுமாக, பெரிய சரீரத்துடன், மலை போல் விழுந்து கிடந்தவர்களை, தேடித் தேடி சமாதானம் செய்தனர். சுக்3ரீவன், அங்க3த3ன், நீலன், சரப4ன், க3ந்த4 மாத3னன், க3வாக்ஷன், சுஷேணன் என்று பிரஸித்தி பெற்ற பல வானர வீரர்களைக் கண்டனர். அடிபட்டு கிடந்தவர்களில், மைந்த3ன், த்3விவிதன், நலன், ஜோதி முகன், பனஸன் முதலானோரும் இருக்கக் கண்டனர். அறுபத்து ஏழு கோடி வானரர்கள் இறந்து கிடந்தனர். ஒரு நாளில் ஐந்தில் ஒரு பாக நேரத்தில் ஸ்வயம்பூ வல்லபனான இந்திரஜித்தின் பாணத்தால் (ப்ரும்மாஸ்திரத்தால்) சமுத்திரம் போல பரந்து கிடந்த வானர வீரர்களின் அடிபட்ட உடல்கள் சிதறிக் கிடக்க, விபீஷணனும், ஹனுமானும் ஜாம்பவானைத் தேடி அலைந்தனர். இயல்பான, வயது முதிர்ந்த காரணத்தால் தோன்றிய நரை முடியும், நூறு பாணங்களால் தைக்கப் பெற்று, அணையும் தறுவாயிலிருந்த நெருப்பு போல கிடந்த ப்ரும்மாவின் புத்திரனான ஜாம்பவானை, விபீஷணன் கண்டான். புலஸ்திய வம்சத்தில் தோன்றிய விபீஷணன் அவர் அருகில் சென்று விசாரித்தான். ஆர்ய, இந்த பாணங்கள் தங்கள் உயிரைக் குடிக்கவில்லையே? விபீஷணன் குரலைக் கேட்டதும், ஜாம்பவான், மிகக் கஷ்டப்பட்டு, தலையை தூக்கிப் பார்த்து, குரலால் நீ விபீஷணன் என்று தெரிந்து கொண்டேன். விபீஷணா, என் கண்களால் உன்னை பார்க்க முடியவில்லை. இந்த கூரான அம்புகள் பட்டு, வேதனை தாங்க முடியவில்லை. அஞ்சனை மகன், அந்த ஹனுமான் உயிருடன் இருக்கிறானா? தெரியுமா? நைருத ( ராக்ஷஸனே,) அந்த வானர ஸ்ரேஷ்டன் எங்கே?
ஜாம்பவான் சொன்னதைக் கேட்டு, விபீஷணன் சற்று ஆச்சர்யத்தோடு வினவினான். ஆர்யபுத்ரா, மற்ற எல்லோரையும் விட்டு ஹனுமானை ஏன் விசாரிக்கிறீர்கள்? ராஜா சுக்ரீவனையோ, அங்கதனையோ, ராகவர்களையோ, இவர்களிடம் இந்த கவலையைக் காட்டவில்லையே. வாயு புத்திரன் எந்த விதத்தில் உயர்த்தி. அவன் இருக்கிறானா என்று அக்கறையுடன் கேட்கிறீர்களே, இதைக் கேட்டு ஜாம்பவான் பதில் அளித்தார். கேள் விபீஷணா, எதனால் ஹனுமானைத் தேடுகிறேன் சொல்கிறேன், கேள். அந்த வீரன் ஹனுமான் உயிருடன் இருந்தால் நம் படை வீரர்கள் அடிபட்டு விழுந்திருந்தாலும் கவலையில்லை. உயிர் பிழைக்கலாம் என்ற நம்பிக்கையும், வைஸ்வானரனுக்கு சமமான வீர்யம் உடைய ஆஞ்சனேயன் உயிருடன் இருந்தால் தான் நமக்கும் இருக்கும். உடனே ஹனுமான் முன் வந்து,. வயதான ஜாம்பவானின் பாதங்களை பிடித்துக் கொண்டு வணங்கி நின்றான். ஹனுமானின் குரலைக் கேட்டவுடன், அந்த இக்கட்டான உடல் உபாதையின் நடுவிலும், ஜாம்பவானின் முகம் மலர்ந்தது. தன் ஆத்மாவை திரும்பக் கண்டது போல மகிழ்ந்தார். மகா தேஜஸ்வியான ஹனுமானைப் பார்த்து ஜாம்பவான் வா, வா, ஹரி சார்தூலா,வா. வானரங்களைக் காப்பாற்ற வா. வேறு யாராலும் இந்த ஆற்றலைக் காட்ட முடியாது. நீ தான் இவர்களுக்கு உயிர் தோழன். இதை விட சிறந்த சமயம், சந்தர்பம், உன் ஆற்றலை வெளிப்படுத்த கிடைப்பதும் அரிது. கரடிகள், வானரங்கள் நிறைந்த இந்த சைன்யத்தை சந்தோஷப்படுத்து. சல்லடையாக துளைக்கப் பெற்ற இந்த ராம லக்ஷ்மணர்களின் உடலிலிருந்து இவைகளை நீக்கி, உடல் நலம் பெறச் செய். சாகரத்தின் மேல், அதற்கும் மேல் சென்று அத்வானமான இடங்களைக் கடந்து ஹிமயமலை செல். உத்தமமான அந்த மலைக்குச் சென்று, அதன் மிக உயரமான சிகரம் பொன் மயமாக காட்சித் தரும். ரிஷபம் என்ற இந்த சிகரத்தையும் கைலாஸ சிகரத்தையும் காண்பாய். இந்த இரண்டு சிகரங்களூக்கும் இடையில் ஒப்பில்லாத பிரபையுடன் கூடிய ஔஷதிகள் நிறைந்ததுமான ஔஷதி பர்வதத்தைக் காண்பாய். இதன் உச்சியில் நான்கு விதமான ஔஷதிகள் வளர்ந்திருக்கும். இந்த (ஔஷதி) மருந்துச் செடிகளை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். பள பளவென்று மின்னும் இந்த பச்சிலைகள், திசைகளையே பிரகாசமாக ஆக்குவது போல தெளிவாகத் தெரியும். ம்ருத சஞ்சீவினி (இறந்தவனை உயிர்பித்தல்) நிசல்யகரணிம் (சல்யம்-ஆயுதம் தாக்கியதை நீக்கி காயத்தை குணமாக்குவது) சாவர்ண்ய கரணீம் (நிறம் மாறாமல் செய்தல், பழையபடி உடல் நிறம் பெறச்செய்தல்) சந்தான கரணீம் (முறிந்து போன சரீர அவயவங்களை இணைத்தல்) இவைகளை எடுத்துக் கொண்டு வேகமாக வா. (கந்தவாஹன் என்று வாயுவுக்கு பெயர். மணம், அல்லது வாசனை இதை சுமந்து கொண்டு போகும் இயல்புடையவன்) அந்த வாயு புத்திரனே, இவைகளைக் கொண்டு வந்து இங்கு நம் வீரர்களின் உயிர் பிழைப்பிக்கச் செய். ஆறுதல் அளிப்பாய், ஹனுமானே.
ஜாம்பவான் சொன்னதைக் கேட்டு, ஹனுமான் சமுத்திரத்தின் ஜல வேகத்திற்கு இணையாக தன் உடல் பலத்தை விருத்தி செய்து கொண்டான். சமுத்திரக் கரையிலிருந்து பர்வதத்தை மிதித்து ஒரு எம்பு எம்பி, நின்ற பொழுது, மலைக்கு மேல் மற்றொரு மலை நிற்பது போல இருந்தது. இந்த வானரத்தின் பாதங்களால் மிதி பட்டு அந்த மலை வருந்தியது. மிகவும் கஷ்டப் பட்டு பொறுத்துக் கொள்வது போலத் தோன்றியது. அதன் மேல் இருந்த மரங்கள், தப தபவென்று விழுந்தன. சில விழும் வேகத்தில் உரசி பற்றிக் கொண்டு பிரகாசமாகத் தெரிந்தன. ஹனுமான் வேகமாக உதைத்து கிளம்பியதில் மலைச் சிகரமே ஆட்டம் கண்டது. மலையின் ஆட்டத்திலும், மரங்கள் கீழே விழும் வேகத்திலும், வானரங்கள் தவித்தன. மகாத்வாரம் எனும் நுழை வாயிலில் ஆட்டம் காண, வீடுகள், மாளிகைகள் நில நடுக்கத்தால் பீடிக்கப் பட்டது போல ஆட்டம் காண, லங்கா நகரமே பயந்து நாட்டியமாடுவது போல காட்சியளித்தது. தானே, (ப்ருத்வீ தரன்) மலை மேல் நின்று கொண்டு, (தரணீதரம்) தான் ஏறி நின்ற மலையை அழுந்த மிதித்துக் கொண்டு கிளம்பிய ஹனுமான் சமுத்திரத்தை உள்ளடக்கிய பூமியை வருந்தச் செய்தான். அந்த மலய மலையின் மேல், மேரு மலையில் நிற்பது போல, சுற்றிலும் அருவிகள் நிரம்பி வழிய, பல விதமான மரங்கள் பூக்கள் மலர்ந்து அழகாக காணப்பட, ஆங்காங்கு குளங்களில் கமலமும், உத்பலமும் சேர்ந்து காட்சியளிக்க, அறுபது யோஜனை உயரத்தில், தேவ கந்தர்வர்கள் வசிக்கும் இடமாக, வித்யாதரர்களும், முனி கணங்களும், அப்ஸரஸ்த்ரீகளூம் வாழும் இடமாகவும், யக்ஷ, கந்தர்வ, கின்னரர்களையும், பலவிதமான மான்கள், மிருகங்கள் நிறைந்ததும், குகைகளில் வசிக்கும் பல்வேறு விதமான ஜீவாராசிகளும் நிறைந்திருக்க, இவர்கள் அனைவரையும் கலங்கச் செய்த படி ஹனுமான் மேகம் போல வளர்ந்தான். வடவாக்னி போன்ற வாயைத் திறந்து, பெரும் குரலில் கோஷமிட்டுக் கொண்டு, ராக்ஷஸர்களை பயமுறுத்தியபடி, பாதங்களால் மலை மேல் உதைத்து எம்பி குதித்தபடி, ராமனை தியானித்து நமஸ்கரித்து, ராம காரியமாக கிளம்பினான். அவனுடைய உரத்த குரலின் ஆக்ரோஷத்தாலேயே குலை நடுக்கம் கொண்ட ராக்ஷஸர்கள் கண் இமைக்கவும் மறந்தனர். பெரிய நாகம் போன்ற தன் வாலை உயரத் தூக்கி, குனிந்து முதுகை வளைத்து, காதுகளை மூடிக் கொண்டு, வடவா முகம் போன்ற வாய், முகத்தை தூக்கி, நிமிர்ந்து சண்ட வேகத்தில் ஆகாயத்தில் தாவி குதித்து பறக்கலானான். கூட்டமாக அடர்ந்து வளர்ந்திருந்த பெரிய மரங்களும் ஆட்டம் கண்டன. மலையின் பெரும் கற்கள் நகர்ந்து இடம் பெயர்ந்து விழலாயின. அந்த இடத்தில் வாசம் செய்த வானரங்கள், தங்கள் கைகள் கால்களின் பலம் இழந்தவர்கள் போல நீரில் விழுந்தனர். உரகம், போகம் (இரு விதமான பாம்பு இனத்தின் பெயர்கள்) போன்ற தன் புஜங்களையும் தூக்கி, பு4ஜங்கா3ரி – பாம்புகளுடைய விரோதியான கருடன் போன்ற வேகத்துடன், மேருவை நோக்கி பிரயாணமானான். நகராஜன், மலையரசன், என்று வர்ணிக்கப்படும் மேரு மலையை, வடக்கு திசையை கலக்கி எடுப்பது போல வாயு புத்திரன் மகா வேகமாக சென்றான். சமுத்திரம், அலைகள் எழும்பி குதிக்க, அதன் ஜீவ ஜந்துக்கள் எல்லாம் பயந்து இங்கும் அங்குமாக நெளிந்து அலை பாய, பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, விஷ்ணுவின் கையிலிருந்து விடு பட்ட சக்கரம் போல நொடியில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தான். அவன் மலைகளை, மரங்களின் கூட்டத்தை குளங்களை, நதிகளை, தடாகங்களை, உத்தமமான நகரங்களை, பெரிய விசாலமான ஜனங்கள் நிறைந்த இடங்களையும் கண்டபடி, வேகமாக தன் தந்தையுடன் போட்டியிடுவது போல சென்றான். ஆதித்யனின் வழியை அடைந்து சிறிதும் சிரமமின்றிச் சென்றான். ஹரி சார்தூலன், ஹனுமான் சென்ற வழியெல்லாம், அவனுடைய ஜய கோஷம் நிறைத்தது. ஜாம்பவானின் சொல்லை மனதில் உருப் போட்டபடி, வேகமாக சென்ற வாயு புத்திரன், திடுமென எதிரில் ஹிமயமலை தெரியக் கண்டான். பல பெரிய குகைகளும், அருவிகளும், சிறு நீர் வீழ்ச்சிகளும், வெண்மையான மேகம் போன்ற சிகரங்கள் அழகாகத் தெரிய, கண்களுக்கு விருந்தாக நெடிதுயர்ந்து வளர்ந்திருந்த பல மரங்களைக் கண்டான். ரம்யமான இமயமலைச் சாரலை, மலையரசனைக் கண்டான். அந்த மலையை அடைந்ததும், சுற்றிலும் நோக்க, உத்தமமான ஹேம ச்ருங்கங்கள் (சிகரங்கள்) புண்யமான பல ஆசிரமங்களையும், சுர, ரிஷி கூட்டங்களையும் மகான்கள் சேவிக்கும் பல இடங்களையும் கண்டான். ப்ரும்ம கோசம், ரஜதாலயம், சக்ராலயம், ருத்ர சர ப்ரமோக்ஷம், ஹயானனம், ப்ரும்ம சிரஸ், இவைகள் பிரகாசமாக, வைவஸ்வத கிங்கரர்கள் சூழ இருந்த இடங்களைக் கண்டான். வஜ்ராலயம், வைஸ்வரனாலயம், சூர்ய ப்ரபம், சூர்ய நிபந்தனம், மற்றும் ப்ரும்மாஸனம், சங்கர கார்முகம், வசுந்தராவின் நாபி, எனப்படும் இடத்தையும், ரிஷபம், காஞ்சன சைலம், இவைகளையும், அதன் மேல் பிரகாசமாகத் தெரிந்த எல்லா ஔஷதிகளும் நிறைந்து பள பளத்த, சர்வௌஷதி பர்வதம் என்பதையும் கண்டான். தீயின் நாக்குகள் போலத் தெரிந்த அந்த மருந்து பச்சிலைகளை கண்ட வாயு புத்திரன், யோசித்து அந்த ஔஷதிகள் இருக்கும் இடத்தைச் சுற்றி வந்தான். பல யோஜனை தூரம் கடந்து, திவ்ய ஔஷதிகளை தாங்கிய சிகரத்தை அடைந்தவன் தேடினான். அந்த ஔஷதிகள் அனைத்தும், அந்த மலையில் இருந்த மருந்து பச்சிலைகள் அனைத்தும், தங்களைத் தேடி ஒருவன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததும்,கண்களுக்கு புலப்படாமல் மறைந்து கொண்டன. அவைகளை காணாமல் ஹனுமான் பெரும் கோபம் கொண்டான். கோபத்துடன் உரக்க அழைத்தான். திடுமென மறைந்த செய்கையை பொறுக்க முடியாமல் மலையரசனைப் பார்த்து இது என்ன? நம்ப முடியாதபடி செய்கிறாய்? ராகவனிடத்தில் உனக்கு அக்கறை யில்லையா? நகேந்திரனே இதோ என் புஜ பலத்தைப் பார். உன்னிடமிருந்து மருந்து பச்சிலைகள் உள்ள இடத்தை பிடுங்கிக் கொண்டு போகிறேன் பார், என்றான். இதன் பின் அந்த சிகரத்தை, அதன் மரங்களுடனும், அதில் வசித்த நாகங்கள், யானைகள், மற்ற மிருகங்களோடு, காஞ்சனம் மற்றும் பல விதமான தாதுப் பொருட்களோடு, ஆயிரக்கணக்கான தாதுக்கள் மண்டிய அந்த மலையை, உச்சியிலிருந்து பரவி, பிரகாசமாக விளங்கிய மலைச்சாரலை, வேகமாக பிடுங்கி எடுத்துக் கொண்டு, அதே வேகத்தில் கிளம்பினான். சுரர்கள், மற்ற தேவர்கள் பார்த்து பயந்தபடி நிற்கையிலேயே, அதை எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் தாவி பறக்கலானான். கருடனுக்கு இணையான வேகத்தோடு, ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பலரும் ஸ்தோத்திரம் செய்ய, திரும்பிச் சென்றான். வந்த படியே ஆதித்யனின் வழியை தேர்ந்தெடுத்து, பாஸ்கரனின் மார்கத்தில், பாஸ்கரன் போலவே ஒளி வீசிய மலைச் சிகரத்தை கையில் ஏந்தியபடி, சூரியனின் ஒளி பட்டு தானும் மற்றொரு பாஸ்கரனோ எனும் ஐயத்தைக் கிளப்பிய படி சென்றான். அந்த மலை அவனுக்கு சோபையைக் கொடுத்தது. மலையை உவமையாக சொல்லக் கூடிய சரீர அமைப்பைப் பெற்றவன், மற்றொரு மலையை கையில் தூக்கியபடி, சென்றது கண் கொள்ளா காட்சியாக விளங்கியது. ஆயிரம் ஆரங்களுடைய விஷ்ணுவின் கைச் சக்கரம், அதை விஷ்ணு பகவான் தானே விரல்களால் சுழற்ற, பற்றிக் கொண்டு எரிவது போல இருந்தது. தூரத்தில் வருவதைக் கண்டே வானரங்கள் மகிச்சி ஆரவாரம் செய்தன. இவர்களுடைய ஆரவாரத்தைக் கேட்டு லங்கா வாசிகள் ஏதோ ஆபத்து என்று எண்ணி திகைத்தனர். வானர சைன்யத்தின் மத்தியில் அந்த மலையை வைத்து அதன் மேல் தடாலென்று இறங்கி நின்றான் ஹனுமான். விபீஷணனைப் பார்த்து அணைத்துக் கொண்டு, மற்ற வானரத் தலைவர்களை வணங்கி நின்றான். அந்த இரு மனித ராஜகுமாரர்கள், அந்த மலையிலிருந்து ஔஷதிகளின் வாசனையை நுகர்ந்து தங்கள் உடலில் தைத்த அம்புகள் விலக, காயங்கள் குணமடைய, உற்சாகமாக எழுந்து நின்றனர். சுற்றியிருந்த வானர வீரர்கள் உரத்த குரலில் ஜய கோஷம் செய்தனர். காயம் அடைந்து விழுந்து கிடந்த மற்ற போர் வீரர்களும் உடல் குணமடையக் கண்டனர். எல்லோருமே, தங்கள் உடலில் குத்தியிருந்த ஆயுதங்கள் அகல, காயங்கள் குணமாகி அந்த ஔஷதி மலையின் வாசனையை நுகர்ந்த மாத்திரத்தில், உயிரிழந்த நிலையில் இருந்த பலரும் தூங்கி எழுந்தது போல எழுந்து கொண்டனர். கபிகளும் (வானரங்களும்) ராக்ஷஸர்களும், யுத்தம் செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து தன் கௌரவத்திற்காக, ராவணனின் கட்டளைப்படி, வானர வீரர்களால் கொல்லப் பட்ட ராக்ஷஸ வீரர்களின் உடல்களை, அவ்வப்பொழுது, விழ, விழ, சமுத்திரத்தில் தள்ளிக் கொண்டிருந்தனர் அதனால், இந்த ஔஷதி மலையின் பச்சிலை வாசனை வானர வீரர்களின் சடலங்களையும் உயிர் பெறச் செய்த பொழுது, அதன் பலன் அவர்களுக்கு கிட்டவில்லை. பிழைத்து எழுந்த வானரங்கள் மேலும் புத்துணர்ச்சியும், பலமும் பெற்றவர்களாக எழுந்த பின், அந்த மலையை திரும்பவும் ஹிமய மலையிடமே சேர்ப்பித்து விட்டு ஹனுமான் ராம லக்ஷ்மணர்களிடம் வந்து நின்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஔஷதி4 பர்வதானனம்: என்ற எழுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 57 (464) ப்ரஹஸ்த யுத்தம் (ப்ரஹஸ்தனுடன் யுத்தம் செய்தல்)
ராக்ஷஸேஸ்வரன் அகம்பனனின் வதத்தைக் கேட்டு மிகவும் கோபம் கொண்டான். வருத்தமும் தோன்ற முகம் வாடியது. மந்திரிகளைக் கலந்தாலோசித்தான். சற்று நேரம் யோசித்து, அவர்கள் எண்ணத்தையும் அறிந்து கொண்டு, காலையில் தன் படைகளின் நிலைமையை அறிந்து கொள்ளத் தானே சென்றான். லங்கா நகர பாதுகாவல் சரிவர இயங்குவதைக் கண்டான். த்வஜங்கள், பதாகங்கள் அலங்காரமாக பறந்து கொண்டிருந்தன. பல ராக்ஷஸ சேனைகள் ஆங்காங்கு முகாமிட்டு இருப்பதைக் கண்டான். வெளியே பகைவர்கள் முற்றுகையிட்டிருந்ததால், கோட்டைக்குள் உற்சாகம் குன்றி மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை என்பதைக் கவனித்தான். பொங்கி வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு, ப்ரஹஸ்தன் என்ற மந்திரியை, யத்த கலையில் வல்லவனை அழைத்து ஆலோசனை செய்தான். ஏஊர் முற்றுகையிடப் பட்டிருப்பதால் நாம் யுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. திடுமென இந்த தாக்குதல் ஆரம்பித்து விட்டதால், வேறு உபாயம் யோசிக்கக் கூட நேரம் இல்லை. நானோ, கும்பகர்ணனோ, தாங்களோ, இந்திரஜித், நிகும்பனோ இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தாங்கள் தான் என் சேனாபதி. அதனால் சேனாபதியே, உடனே தங்கள் சேனையை தயார் செய்யுங்கள். வெற்றியுடன் திரும்பி வர உடனே புறப்படுங்கள். இந்த வானர கூட்டம் உள்ள இடம் சென்று போர் புரியுங்கள். நீங்கள் வந்துள்ளதை அறிந்தாலே வானரங்கள் பயந்து, உங்கள் ராக்ஷஸ படை வீரர்களின் ஜய கோஷத்தையும் கேட்டாலே நடுங்கி ஓடி விடுவார்கள். இந்த வானரங்கள் சபலம் மிகுந்தவை. மரியாதையறியாதவைகள். அலை பாயும் மனம் உடையவைகள். யானைகள் சிங்க நாதத்தைக் கேட்டு மருளுவதைப் போல மருண்டு ஓடி விடுவார்கள். அவன் படை வீரர்கள் அனைவரும் சிதறி ஓடி விட்ட நிலையில், ராமனும், லக்ஷ்மணன் ஒருவனே அருகில் இருக்க, தன் வசம் இழந்து எவ்வித பாதுகாப்பும் இன்றி தனித்து விடப்பட்டவனாக, ப்ரஹஸ்தா, தங்களிடம் பிடி படுவான். எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஆபத்து இல்லை என்றும் இல்லை. பிரதிலோமமோ, அனுலோமமோ, ப்ரஹஸ்தா, தாங்கள் உசிதமாக நினைப்பது போல முடிவு எடுத்து செயல் படுங்கள். இதைக் கேட்டு படைத் தலைவனான ப்ரஹஸ்தன், ப்ருஹஸ்பதி ஒரு முறை அசுரேந்திரனிடம் சொன்னது போல, ராக்ஷஸேந்திரனிடம் பதில் சொன்னான். ராஜன், இந்த விஷயங்கள் நாம் ஏற்கனவே மந்திரி சபையில் விவாதித்தது தானே. ஒருவரை ஒருவர் பார்த்து நாம் விவாதித்தோம். நான் அப்பொழுதும் சொன்னேன். சீதையைத் திருப்பித் தருவதில் தான் நமக்கு நன்மை என்றேன். திருப்பித் தரா விட்டால் யுத்தம் வரும் என்றும் நாம் அறிந்ததே. அப்படிப்பட்ட நான், எப்பொழுதும் உன்னால் கௌரவிக்கப் பட்டு வந்தவன், உன் கையால் பொருளும் மற்றவையும் தானமாக நிறையப் பெற்றவன், சமாதானமாக நிறைய சொல்லி விட்டேன். உனக்குப் பிரியமானால் என்னதான் செய்ய மாட்டேன். என் புத்ர, தா3ர, த4னங்களோ, என் உயிரோ எதுவுமே பெரிதில்லை. உனக்காக யுத்தம் செய்து நான் வீர மரணம் அடைவதையும் காணத் தான் போகிறாய். இவ்வாறு தன் எஜமானனான ராவணனிடம் சொல்லி விட்டு சேனாபதியான ப்ரஹஸ்தன், படைகளை ஒன்று திரட்டி ஏற்பாடுகளைச் செய்ய விரைந்தான். ராக்ஷஸர்களே, பெரும் அளவில் படை வீரர்களாக திரண்டு வாருங்கள். என் கை பாணங்களால், அசனி (இந்திரனின் ஆயுதம்) போல மேலே வந்து விழும் கூரிய பாணங்களால் உயிர் இழக்கப் போகும் எதிரிகளின் உடல்களைத் தின்ன கழுகுகள் வட்டமிடப் போகின்றன. இதைக் கேட்டு ப்ரஹஸ்தனின் படைத் தலைவர்கள், விரைந்து சென்று தங்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட வீரர்களைக் கொண்டு வந்து அரச மாளிகை வாசலில் கூட்டமாக நிறுத்தினர். முஹுர்த்த நேரத்தில் அந்த மாளிகை வாசலில், ஆயுதங்களின் ஓசையும், ஜனங்களின் நடமாட்டமுமாக, யானைக் கூட்டம் கல கலவென்று சஞ்சரிப்பது போல ஆயிற்று. காலை நேரத்தில் அக்னி உபாசனம் செய்யும் ப்ராம்மணர்கள், அக்னியில் ஹோமம் செய்த நெய் வாசனையும் காற்றில் மிதந்து வந்தது. யுத்தம் செய்ய புறப்பட்ட வீரர்களுக்கு (மந்தரித்து) வாழ்த்தி, வித விதமாக மாலைகள் அணிவிக்கப் பட்டன. ராக்ஷஸர்களும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு உற்சாகத்துடன் கிளம்பினர். வில்லை ஏந்தி, கவசம் அணிந்து வேகமாக வந்த ராக்ஷஸ வீரர்கள், ப்ரஹஸ்தனுடன் அரசன் ராவணனும் நிற்பதைக் கண்டு, மரியாதையுடன் சூழ்ந்து நின்றனர். பேரியை முழக்கி, அரசனிடம் விடை பெற்றுக் கொண்டு, தயாராக இருந்த ரதத்தில் ப்ரஹஸ்தன் ஏறினார். உயர் ஜாதி குதிரைகள், பூட்டப் பெற்றன. திறமையான குதிரை ஓட்டுபவனும் தன் திறமையால் சிறந்த முறையில் பாதுகாப்பாக குதிரைகளை பழக்கி இருந்தான். சாக்ஷாத் சந்திரனும், சூரியனும் இறங்கி வந்தது போல ஒளி வீசும், பெரிய மேகம் இடி இடிப்பது போல கோஷம் எழுப்பும், உரக சின்னம் கொண்ட த்வஜம் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் பறக்க, லக்ஷ்மீகரமாக சிரிப்பது போல சுவர்ண ஜாலங்கள் நிறைந்ததும், தன் வசத்தில் உள்ள ரதத்தை ஓட்டும் கயிறுகளுமாக இருந்த ரதத்தில் ஏறினார். ரதத்தில் ஏறியவுடன் ப்ரஹஸ்தன், ராவணனுக்கு, அவனுடைய கட்டளைக்கு தன்னை முழுவதும் அர்ப்பித்துக் கொண்டவராக லங்கையிலிருந்து புறப்பட்டார். உடன் ஒரு பெரும் ராக்ஷஸ சேனையும் கிளம்பியது. துந்துபியின் கோஷமும், மழைக்கால இடியோசை போல முழங்கியது. வாத்தியங்களின் ஓசையும், சமுத்திரத்தை நிரப்புவது போல ஒலித்தன. இவற்றையெல்லாம் மீறி சங்க நாதமும் படை கிளம்பியவுடன், எழுந்தது. விசித்ரமாக ஒலி எழுப்பிக் கொண்டு, காதுக்கு நாராசமான ஸ்வரக் கோர்வையாக ஒலி எழுப்பிக் கொண்டு ராக்ஷஸர்கள் முன் சென்றனர். ப்ரஹஸ்தனுக்கு முன்னால் சென்ற வீரர்கள் பெருத்த உடலும், பயங்கரமான ரூபமும் உடையவர்களாக இருந்தனர். நராந்தகன், கும்பஹனு, மகா நாதன், சமுன்னதன் என்ற இவர்கள் ப்ரஹஸ்த மந்திரிகள். இவர்கள் சூழ்ந்து நின்றனர். இந்த அணி வகுப்புக்களுடன் கிழக்கு வாசலையடைந்தனர். யானைக் கூட்டம் போன்ற பலம் மிகுந்த பெரிய சேனையுடன், சமுத்திரம் போல அளவில்லாத வீரர்கள் சூழ, ப்ரஹஸ்தன் காலாந்தகன் போலவும், யமனைப் போலவும், போர்களத்தில் பிரவேசித்தார். இவர்கள் புறப்பட்டுச் செல்லும் ஓசையும், ராக்ஷஸர்கள் நடு நடுவில் செய்த ஜய கோஷமும், லங்கையின் பிரஜைகளையும், மற்ற ஜீவ ராசிகளையும் கவர்ந்தன. அவர்களும் தாங்கள் இருந்த இடத்திலேயே வினோதமான சப்தங்களைச் செய்தனர். மாமிசம், ரத்தம் இவற்றை உணவாகக் கொண்ட பக்ஷிகள் ஆகாயத்தில் தோன்றி, ரதத்தின் மேலாக அப்ரதிக்ஷணமாக சுற்றி வந்தன. வாயில் இருந்து நெருப்பை உமிழும், குள்ள நரிகள் ஊளையிட்டன. அந்தரிக்ஷத்திலிருந்து மின் மினிப் பூச்சிகள் விழுந்தன. காற்று கடுமையாக வீசியது. கிரகங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு, பிரகாசமாக வெளியில் தெரியவில்லை. மேக நாதமும் இனிமையாக இல்லை. ராக்ஷஸர்கள் ரதத்திலிருந்து செய்த ஜய கோஷமும் இணைந்து இல்லாமல் நாராசமாக இருந்தது. கேதுவின் (த்வஜஸ்தம்பம்) தலையில் கழுகு, தென் புறமாக சாய்ந்து நின்றது. இரு பக்கமும் தன் அலகால் கொத்தியபடி, அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்த ரதத்தின் சோபையைக் கெடுத்தது. சாரதியின் கையிலிருந்து குதிரைகளை இழுத்து பிடிக்கும் லகான் அடிக்கடி நழுவி விழுந்தது. புகழ் வாய்ந்த பலம், பௌருஷம் உடைய ப்ரஹஸ்தன், சேனையுடன் போர் முனைக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி வானர வீரர்களின் செவிக்கு எட்டியது. வானர வீரர்களும் பெருமளவில் கூச்சலிட்டு ராக்ஷஸ சேனயின் ஜய கோஷத்துக்கு இணையாக ஒலியெழுப்பினர். பெரிய மலைகளை பெயர்த்து தயார் செய்து வைத்துக் கொள்ளவும், மலையில் ஏறி பாறாங்கற்களை சேகரிக்கவும் முயன்றன. இரு பக்கமும் கூச்சலும் குழப்பமும் ஏறத்தாழ ஒரே அளவில் இருந்தன. ஒருவரையொருவர் வதம் செய்யும் நோக்கத்தில் இருவரும் ஒரே அளவு உற்சாகத்துடன் காணப்பட்டனர். ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளும் சத்தமும் கேட்டது. ப்ரஹஸ்தனும் வானர ராஜனின் சேனையை முற்றுகையிட்டான். தாங்களே தங்களை மாய்த்துக் கொள்ளும் விதமாக, தானாக நெருப்பில் வந்து விழும் விட்டில் பூச்சிகளைப் போல ராக்ஷஸ சேனை தானே எதிர் கொண்டு வந்து நின்றது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப்ரஹஸ்த யுத்தம் என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 58 (465) ப்ரஹஸ்த வதம் (ப்ரஹஸ்தனின் வதம்)
நல்ல பராக்ரம சாலியான ப்ரஹஸ்தன் படையுடன் முன்னேறி வருவதையறிந்து, ராமர் சற்று சிரித்தபடி, விபீஷணனிடம் விசாரித்தார். யார் இது? பெரிய உருவமும், நல்ல பலசாலியாகவும் தோற்றம் அளிக்கிறார். பெரும் படையுடன் வருகிறார். யார் இந்த வீர்யவானான நிசாசரன், சொல் என்றார். விபீஷணன் விவரித்தான். இவர் தான் சேனாபதி ப்ரஹஸ்தன், என்ற ராக்ஷஸன். லங்கையில் ராக்ஷஸ ராஜனுடைய முக்கால் பங்கு படைக்குத் தலைவர். நல்ல வீர்யம் உடையவர். அஸ்திர ஞானம் உடையவர். சூரர். புகழ் பெற்றவர். இதன் பின், பெரும் படையுடன், நல்ல வீரன் என்று பெயர் பெற்றவரும், பெருத்த சரீரம் உடையவரும், பெரும் படையின் சேனாபதியுமான, ப்ரஹஸ்தன் நெருங்க நெருங்க, ராக்ஷஸர்கள் கர்ஜிக்கும் சத்தமும் அதிகமாகியது. கைகளில் கத்தி, சக்தி, இஷ்டி, பாணங்கள், சூலங்கள், முஸலங்கள், க3தை4கள், பரிகங்கள், ப்ராஸங்கள், பரஸ்வதங்கள் என்று வித விதமான ஆயுதங்களுடன் விசித்ரமான வில் இவற்றுடன் ஜெயித்தே தீருவது என்ற சங்கல்பத்துடன் வந்த ராக்ஷஸ கூட்டத்தைப் பார்த்து முதலில் வானரங்கள் ஓடின. சற்று பொறுத்து, மரம், கிளைகளை எடுத்துக் கொண்டு, பூத்து குலுங்கும் மரங்களையும், பெரும் பாறாங்கற்களையும், எடுத்துக் கொண்டு யுத்தத்துக்குத் தயாராக வானர வீரர்களும் வந்து சேர்ந்தனர். இருவருக்கும் இடையில் பெரும் போர் மூண்டது. கல் மழை ஒரு புறம், அம்புகள், பாணங்கள் மழை ஒரு புறம். ஏராளமான ராக்ஷஸர்களும், வானரங்களும் இந்த போரில் மடிந்து விழுந்தனர். சூலத்தால் அடிபட்டவர்கள் பலர். உயர்ந்த ஆயுதங்கள் தாக்கி மடிந்து விழுந்தனர் சிலர். பரஸ்வதம் குத்தி கிழித்து சிலர் வீழ்ந்தனர். பேச்சு மூச்சு இன்றி பலர் தரையில் விழுந்து கிடந்தனர். அம்புகள் குறி தவறாது வந்து பட்டதில் ஹ்ருதயம் பிளந்து பலர் உடலை இழந்தனர். வாட்கள் நடுவில் இரண்டாக பிளக்க, தரையில் விழுந்த சில சடலங்கள் ராக்ஷஸர்கள் ஒரு புறம் விழ, வானரங்களுக்கும் நிறைய சேதம். கஷ்டங்கள் இருவருக்கும் பொதுவாகவே இருந்தன. ராக்ஷஸர்கள் சூலத்தாலும், பரஸ்வதத்தாலும் வானரர்களைக் குத்திக் கிழித்தனர் என்றால், வானரங்கள், மரக் கிளைகளாலும், மலையிலிருந்து கொண்டு வந்த பாறாங்கற்களாலும் பூமியோடு பூமியாக ராக்ஷஸர்களைத் தள்ளி நசுக்கி விட்டனர். வானரங்கள் கைத்தலத்தால் அடித்ததே வஜ்ரம் தாக்குவது போல இருந்தது. முஷ்டிகளாலும் கைகளாலும் பலரைக் கொன்று தள்ளினர். வாயிலிருந்து ரத்தத்தை உமிழ்ந்தவர்களாக பற்களை இழந்தவர்களாக, கண்கள் தெறித்து விழ, சற்று முன் சிம்ம நாதம் செய்த ராக்ஷஸர்களின் வேதனைக் குரல் எங்கும் ஒலித்தது. இரு தரப்பிலும் இதே நிலை தான். அடிப்பதும், வீழ்வதும், ஓலமிடுவதுமாக போர்க்களம், இரு சாராருக்கும் மிகுந்த சேதத்தை விளைவித்தது. வானரங்களும், ராக்ஷஸர்களும் ஆத்திரத்துடன், வீரனுக்குரிய வழியை ஏற்று, சற்றும் பயப்படாமல் கண்களைச் சுழற்றி, போரைத் தொடர்ந்து செய்தனர். நராந்தகனும், கும்பஹனுவும், மகா நாதனும், சமுன்னதனும் – இவர்கள் ப்ரஹஸ்தனின் மந்திரிகள். ஏராளமான வானரங்களை கொன்று குவித்தனர். இவர்களிடம் அடிபட்டு விழுந்து எழுந்து அடுத்த அடி படும் முன் ஓடிய வானரங்கள், ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு வந்து நராந்தகன் தலை மேல் போட்டு அவனை அழித்தன. துர்முகன் என்ற வானர வீரன் ஒரு பெரிய மரக்கிளையைக் கொண்டு வந்து, சமுன்னதனை ஓங்கி அடித்து விழச் செய்தான். ஜாம்பவான், மிகுந்த கோபத்துடன், தன் கையில் இருந்த கல்லால் மகா நாதனின் மார்பில் ஓங்கி வீசி விழச் செய்தான். தாரன் என்ற வானரம், கும்பஹனுவை தலையில் ஒரு மரக் கிளையால் அடித்து உயிரிழக்கச் செய்தான். இதைக் கவனித்த ப்ரஹஸ்தன், அடக்க மாட்டாத ஆத்திரத்துடன் தன் ரதத்தில் ஏறி, வில்லையும் அம்பையும் எடுத்து சரமாரியாக வானரங்களின் மேல் பொழிந்து பயங்கரமான யுத்தம் செய்தான். இரண்டு சேனைகளிலும், ஊழிகாலம் போல பெரும் போர் தொடர்ந்தது. நதியில் தோன்றும் சுழலோ, சமுத்திரத்தின் அலை ஓசைகளோ எனும் படி யுத்த கலையில் வல்லவனான ப்ரஹஸ்தன் கைகளிலிருந்து வெளிப்பட்ட அம்புகள் வானரங்களைக் குறி வைத்து அழித்தன. ராக்ஷஸ, வானர வீரர்களின் சடலங்கள் மலை போல குவியலாயிற்று. ரத்தமும் நிணமும் விழுந்து சேறாக, பூமியே கண்ணுக்குத் தெரியவில்லை, மாதவ மாதம், பலாச புஷ்பங்கள் பூமியை மறைத்தபடி விழுந்து கிடப்பது போலத் தோன்றியது. உடைந்த ஆயுதங்களும், மரக்கிளைகளும், உடல்களும், யம சாகரத்தை நோக்கி ஓடும் நதியைப் போல ரத்தம் பெருக ஓடுவதும், சேறாகி கிடந்த நிணமும், பாசி படர்ந்தது போன்ற தோற்றத்தைத் தர, உடல் தனியாக, தலை தனியாக போன சரீரங்களே மீன்களாக, யுத்த பூமி என்ற நதி, மேகம் கறுத்து நிறைந்திருக்கும் நாட்களில் சுழித்துக் கொண்டு ஓடும் நீரோடு, ஹம்ஸங்களும், ஸாரஸ பக்ஷிகளும் சஞ்சரிக்கும் இடத்தில், கழுகுகளும், கங்க பக்ஷிகள் மேலே வட்டமிட (யுத்த பூமி என்ற நதி) ஓடியது.
இந்த நதியைக் கடந்து வெளி வர, ராக்ஷஸர்களும், வானரங்களும் முயன்றன. புழுதி படிந்த பத்மத்தை, தண்டுடன் யானைக் கூட்டம் எப்படி அழிக்குமோ, அது போல ரதத்தில் இருந்த ப்ரஹஸ்தன் தன் பாணங்கள் என்ற மழையால் வானர வீரர்களை அடியோடு அழிப்பதை வெகு தூரத்திலிருந்து நீலன் கண்டான். வாயு வேகமாக வீசுவது போல ஆகாய மார்கமாக வேகமாக அந்த இடம் வந்து சேர்ந்தான். இதைக் கண்ட சேனாபதி ப்ரஹஸ்தன், நீலனை நோக்கி தன் ஆதித்யனின் வர்ணத்தில் பள பளத்த ரதத்தை செலுத்தினார். வில்லாளிகளுள் சிறந்தவரான அவர் தன் வில்லை எடுத்து, நீலனைக் குறி வைத்து அடிக்கலானார். கோபம் கொண்ட பாம்புகள் போல வேகமாக வந்த கூர்மையான பாணங்கள் நீலனின் உடலில் பட்டு தெறித்து விழுந்தன. நெருப்பு போல சுடும் அந்த பாணங்களின் தாக்குதலால் பாதிக்கப் பட்டாலும், சமாளித்துக் கொண்டு ஒரு பெரிய மரக் கிளையால் ப்ரஹஸ்தனை ஓங்கி அடித்தான். இந்த அடி வாங்கிய ராக்ஷஸ வீரனான ப்ரஹஸ்தன் மேலும் பெரும் குரலில் ஜய கோஷம் செய்தபடி, தன் கை வில்லில் அம்புகளை பூட்டி வானரங்களை அடித்த வண்ணம் இருந்தார். அகாலத்தில் வந்த சரத்கால மழையை தாங்க மாட்டாமல் பசு மாட்டுக் கூட்டம் திணறுவது போல வானரங்கள் திணறினார்கள். கண்கள் மூடி நினைவின்றி கிடந்த நீலன் சட்டென்று மூர்ச்சை தெளிய கண் விழித்து, ஒரு சால விருக்ஷத்தைக் கொண்டு ப்ரஹஸ்தனின் குதிரைகளை உயிரிழக்கச் செய்தான். மனோ வேகத்தில் ஓடக் கூடிய குதிரைகள் மடிந்து விழுந்தன. ப்ரஹஸ்தனின் வில்லை எடுத்து, நிமிஷ நேரத்தில் உடைத்து எறிந்தான் நீலன். தன் கையில் இருந்த வில் பறி போனதை உணர்ந்த ப்ரஹஸ்தன் முஸலம் என்ற பயங்கரமான ஆயுதத்தை கையில் எடுத்து ரதத்திலிருந்து இறங்கி நின்றபடி நேருக்கு நேர் இரண்டு, சேனாபதிகளும் தயாராயினர். இருவர் உடலும் ரத்தப் பெருக்கினால் குளித்தது போல கிடந்தது. சிங்கமும் சார்தூலமும் மோதிக் கொள்வது போல சிம்ம, சார்தூலம் போன்ற தங்கள் சேஷ்டையால், தங்கள் கூர்மையான பற்களால் ஒருவரையொருவர் காயப்படுத்தினர். இருவரும் விஜயத்தை நோக்கி வீரத்துடன் போரிடும் வீர்யவான்கள். போரில் புற முதுகு காட்டியறியாதவர்கள். வ்ருத்திரனும், வாஸவனும் போல புகழை விரும்பி போரிட்டவர்கள். சமமான பலம், வீரம் உடைய இருவரும் சளைக்காமல் போரிட்டனர். முஸலத்தால் நீலனின் நெற்றியில் ஓங்கி அடித்த ப்ரஹஸ்தன். ரத்தம் பெருக அவன் அலறியதை கேட்டார். அதே க்ஷணத்தில் ஒரு பெரிய மரத்தை எடுத்து, ப்ரஹஸ்தனின் மார்பில் அடித்து விட்டான் நீலன். எதிர் பாராத இந்த தாக்குதலால் நிலை குலைந்தாலும், முஸலத்தை எடுத்துக் கொண்டு நீலனை துரத்திக் கொண்டு ஓடினார். வெகு வேகமாக ஓடி வந்து தன் மேல் விழுந்த ப்ரஹஸ்தனை ஒரு பெரிய கல்லால் தாக்கினான். வானர வீரனின் கையிலிருந்து வேகமாக வந்து விழுந்த பெரிய பாறாங்கல், ப்ரஹஸ்தனின் தலையை சிதற அடித்து விட்டது. தன் சக்தியை இழந்து, கீழே விழுந்த அந்த க்ஷண பொழுதிலேயே உயிரும் பிரிந்தது. தடாலென உயிரற்ற சரீரம் விழுந்தது. வேரோடு பிடுங்கிய மரம் சாய்வது போல சாய்ந்தான். ப்ரஸ்ரவன மலையில் சிறு அருவிகளில் நீர் பெருகி ஓடுவது போல சரீரத்தின் பல பாகங்களிலிருந்தும் ரத்தம் பெருக்கெடுத்தது. அசைக்க முடியாத ப்ரஹஸ்தனே விழுந்தவுடன், ராக்ஷஸ சேனை வேறு வழியின்றி லங்கைக்கு திரும்பிச் சென்றது. சேதுவினால் தடைபட்ட நதி ஜலம் திரும்பி வருவது போல திரும்பிச் சென்றது, ராக்ஷஸ சேனை. அரசனின் மாளிகைக்குள் சென்று திடுமென ஊமைகள் ஆனது போல எதுவும் சொல்ல முடியாத சோகத்தில் மூழ்கியவர்களாக நின்றனர். நீலன் வெற்றி வீரனாக தன் பக்கத்து வீரர்களால் கொண்டாடப் பட்டான். ராமரையும் லக்ஷ்மணனையும் தேடிச் சென்று அவர்களுடன் மகிழ்ச்சியோடு நின்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப்ரஹஸ்த வத4ம் என்ற ஐம்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 59 (466) ராவணாபி4ஷேணனம் (ராவணன் போருக்கு புறப்படுதல்)
ராக்ஷஸ சைன்யத்தின் தலைவன் யுத்தத்தில் வீழ்ந்தபின், அவருடன் கடல் போல் பெருகி வந்திருந்த ராக்ஷஸ படை வீரர்கள் திரும்பிச் சென்று அரசனிடம் விவரம் சொன்னார்கள். வானர வீரனான நீலனால் மகா வீரரான ப்ரஹஸ்தன் வதம் செய்யப்பட்டதைச் சொன்னார்கள். பாவக (அக்னி) குமாரன் நீலன் என்ற அந்த வானர வீரன் என்பதையும் ராவண ராஜாவுக்குத் தெரிவித்தனர். இந்த செய்திகளைக் கேட்டு, ராக்ஷஸாதிபன் அளவில்லா ஆத்திரம் அடைந்தான். ப்ரஹஸ்தன் உயிர் துறந்த சோகமும் அவனை வாட்ட, ராக்ஷஸ படை வீரர்களைப் பார்த்து மேற்கொண்டு செய்ய வேண்டியதை ஆணையிட ஆரம்பித்தான். இந்திரன், தன் கீழ் இருந்த சாமரர்கள் எனும் போர் வீரர்களைப் பார்த்து உத்தரவிட்டது போல இருந்தது. எதிரிகளிடம் அலட்சியமாக இருக்கக் கூடாது. என் சேனாபதி, இந்திரன் படையையே கலக்கியவர். யானைகளும், படை வீரர்களும் சூழ இருந்தவரை, இவர்கள் வதம் செய்து விட்டார்களே. இந்த எதிரிகளை ஒழித்துக் கட்ட இன்று நானே போகிறேன். இன்று படைக்கு தலைமை தாங்கி நான் செல்வேன். இன்று அந்த வானர சைன்யமும், ராமனும் லக்ஷ்மணனும் வனத்தை அக்னி அழிப்பது போல என் பாணங்களால் அடிபட்டு மாயப் போகிறார்கள். இன்று பூமிக்கு, வானர ரத்தத்தினால் தர்ப்பணம் செய்கிறேன். இவ்வாறு சொல்லிக் கொண்டே, அக்னிக்கு சமமான பிரகாசமுடைய உத்தமமான குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமரராஜ சத்ருவான, ராவணன் ஏறினான். சங்கம், பே4ரீ, பணவம் எனும் வாத்யங்களின் நாதத்தோடு, தோள் தட்டி போருக்கு அழைத்தல், கனைத்தல், சிம்ம கர்ஜனை செய்தல் போன்ற போர் வீரர்களின் சேஷ்டைகளால் எழுந்த சப்தமும் சேர்ந்து கொள்ள, புண்யமான ஸ்தோத்திரங்களால் சிலர் வாழ்த்து சொல்ல, அந்த ஒலியும் ஓங்கி ஒலிக்க, ராக்ஷஸ ராஜன் கிளம்பினான். அந்த ராக்ஷஸ ராஜனை சூழ்ந்து, மலை போல, கரு மேகம் போல, பெருத்த சரீரம் உடைய போர் வீரர்கள், காவல் படையினர் சென்றனர். சிவந்து, நெருப்பை உமிழும் கண்களை உடையவர்களாக, இந்த போர் வீரர்களுடன் புறப்பட்ட, ராக்ஷஸ ராஜனான ராவணன், அமரர்கள் தலைவனான ருத்ரன் தன் பூத கணங்களுடன் புறப்பட்டது போல காணப்பட்டான்.
வழியனுப்ப வந்த நகர வாசிகள், திடுமென பெரும் உற்சாகத்துடன் தோன்றிய வானர சைன்யத்தைக் கண்டனர். உக்ரமான பெருங்கடல் போல, ஆகாயத்தில் இடி முழக்கம் ஏற்பட்டது போல கூச்சலுடன், கைகளில் மரங்களையும், பாறாங்கற்களையும் ஏந்தியபடி நிற்பதைக் கண்டனர். ராக்ஷஸ சேனை மிகவும் உக்ரமான ஆவேசத்தோடு வருவதைக் கண்ட ராமர், சஸ்திரங்களை அறிந்த வீரர்களுள் சிறந்தவனான விபீஷணனை அழைத்து விசாரிக்கலானார். பலவிதமான கொடிகள், த்வஜங்கள், சஸ்திரங்கள் இவைகளை நிரப்பிக் கொண்டு ப்ராஸ, கத்தி, சூலாயுதம் என்ற சஸ்திரம் இவைகளையும் ஏராளமாக சேகரித்துக் கொண்டு, கஜேந்திரன், நாகம் இவைகளுடன், குறைவற்ற பயமில்லாத வீரர்கள் சூழ வரும் சைன்யம் யாருடையது? ராமர் விசாரித்த விவரங்களை விபீஷணன் தெளிவாக சொல்லலானான். தானும் இந்திரனுக்கு சமமான பலம் கொண்ட வீரனே ஆனதால், படை வீரர்களை, அவர்களின் சிறப்புகளை, உடல் பலத்தை விவரித்தான். ராஜன், இதோ வருகிறானே, யானையைப் போன்ற கம்பீரமான நடையும், இளம் சூரியன் போன்ற தாம்ர நிற சரீர காந்தியுடன், யானையின் மேல் அமர்ந்தபடி, தலையை ஆட்டியபடி வருகிறானே, இவன் தான் அகம்பனன். இவன் கொடியில் மிருக ராஜனான சிம்மத்தை உடையவன். இந்திரனுடைய வில்லுக்கு சமமான தன் வில்லை தூக்கியபடி, இளம் யானைக்குட்டி இப்பொழுது தாம் முளைத்த பற்கள் நக நக வென, எதையேனும் கடிக்க விரும்புவது போல பரபரப்பாகத் தெரிகிறானே, இவன் தான் இந்திரஜித். நிறைய வரங்கள் பெற்றவன். விந்த்ய மலையோ, மகேந்திர மலையோ எனும்படி, பெருத்த சரீரமும், கையில் வில்லுடன், ரதத்தில் அமர்ந்து, அதிரதனாக அதி வீரனாக காண்கிறானே, தன் வில்லின் நாணை, சுண்டி ஓசை எழுப்பிக் கொண்டு வருகிறானே, இவன் தான் அதிகாயன். வளர்ந்து நிற்கும் பெரிய சரிரம் உடையவன். இதோ இளம் சூரியன் போல சிவந்த கண்களுடன், மணியோசை நாதமாக ஆடி வரும் யானை மேல் அமர்ந்தபடி, கொடூரமாக கர்ஜனை செய்கிறானே, இவன் தான் மகோதரன்., என்ற வீரன். இதோ இருக்கிறானே, இவன் தான் குதிரையில் காஞ்சனத்தால் விசித்ரமான வேலப்பாடுகள் அமைந்த ஆசனத்தில் அமர்ந்து சந்த்யா கிரி போலத் தெரிகிறானே, கையில் பிராஸத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு, மரீசியுடன் கூடிய பிசாசம் என்ற இனத்தைச் சேர்ந்தவன் வஜ்ரத்துக்கு சமமாக அடிக்கக் கூடியவன். இதோ கூர்மையான சூலத்தை ஏந்தியபடி, மின்னலைப் போலவும், வஜ்ரம் போலவும் வேகமாக வீசக் கூடிய த்ரிசிரஸ். எருதின் மேல் ஏறி, தன் உருவத்தால், தானும் மற்றொரு கிரி, மலை போல வருகிறானே, இவன் பெரும் புகழ் வாய்ந்தவன். அகன்ற மார்புடன், தன்னம்பிக்கையுடன், நாக ராஜனை கொடியில் உடையவன். தன் தோள்களைத் தட்டியபடி, வில்லை ஆட்டிக் கொண்டு வருகிறானே இவன் தான் கும்பன். இதோ வருபவன் தங்கத்தாலான வஜ்ரம் இழைத்து செய்யப் பட்ட பரிகத்தை (ஆயுதம்) புகை வரும்படி வேகமாக ஆட்டியபடி, இந்த ராக்ஷஸ சேனைக்கு நடு ஸ்தம்பம் போன்றவன், நிகும்பன். மிக பயங்கரமாக போர் செய்யக் கூடியவன். மேலும், வில், வாள், சரங்கள், அவற்றுடன் அக்னிக்கு சமமான பிரகாசமான சரீரமும் கொடியுடன் கூடிய ரதத்தில் ஏறி பார்வைக்கே உக்ரமாகத் தெரிபவன் நராந்தகன் என்பவன். இவனுக்கு சமயத்தில் மலைப் பாறைகளே போர் செய்ய சாதனங்களாக பயன் படும். இதோ, பலவிதமான கோரமான ரூபங்கள், புலி, ஒட்டக, யானைக் கூட்டதின் தலைவனான யானை, மான், குதிரை இவைகளின் முகங்களை தன் ரதத்தில் அலங்காரமாக பொறித்துக் கொண்டவனாக, கண்களை உருட்டியபடி வருகிறானே, அவன் தேவர்களை அடக்கியவன். இவன் குடை சந்திரனுக்கு சமமான காந்தியுடன் விளங்குகிறது. வெண் கொற்றக் குடை, சூக்ஷ்மமான கம்பிகளுடன், பூத கணங்களுடன் கூடிய ருத்ரன் போல விளங்கும் இந்த ராக்ஷஸாதிபதி கிரீடம் தரித்தவனாக, குண்டலங்கள் ஆட, மலையரசன், விந்த்ய மலை போன்ற பெரிய சரீரத்துடன், மகேந்திரன், வைவஸ்வதன் இவர்களின் கர்வத்தை அடக்கியவன். சூரியன் போல ஒளி மயமாக வருபவன் தான் ராக்ஷஸாதிபதி, ராவணன்.
அப்படியா என்று விபீஷணன் சொன்னதை காதில் வாங்கிக் கொண்ட ராமர், ராவணனைப் பார்த்து அஹோ, என்ன பிரகாசமான தேஜஸ். இந்த ராக்ஷஸ ராஜனான ராவணன் கண்களைக் கூச வைக்கும் கிரணங்களுடன் ஆதித்யனே நேரில் வந்தது போல நிற்கிறான். இவன் சரீரத்தை சூழ்ந்துள்ள தேஜஸால் தெளிவாக காண்கிறேன். தேவ, தானவ வீரர்களுக்கு இது போல சரீரம் அமையாது. இந்த ராக்ஷஸேந்திரனின் சரீரம், பிரகாசமாகக் காணப்படுவது போல இருக்காது. இந்த பெரும் செல்வந்தனான, பலசாலியான ராவணனின் படைத் தலைவர்களும், எல்லோருமே மலை போன்ற சரீரமும், மலை போல கலங்காது நின்று யுத்தம் செய்யும் வீரர்களே. நெருப்புச் சுடர் போன்ற ஆயுதங்களைத் தாங்கியவர்கள். நல்ல போர் புரியும் திறனுடைய வீரர்கள். இந்த போர் வீரர்கள், சரீரம் எடுத்து வந்துள்ள அந்தகனோ எனும் படி காட்சியளிக்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக இந்த பாபாத்மா இன்று என் கண்ணெதிரே வந்து நிற்கிறான். சீதையை அபகரித்ததால் என் மனதில் பொங்கி எழும் கோபத்தை இன்று வெளிப்படுத்துகிறேன், என்று சொல்லியபடி, லக்ஷ்மணன் பின் தொடர, வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
இங்கு, ராவணன் தன் படை வீரர்களுக்கு ஆணைகள் பிறப்பித்தான். வாசல்களிலும், வீட்டு மாளிகைகளிலும், பரவி கவனமாக நின்று கொள்ளுங்கள்.அவரவர் தங்கள் இருப்பிடத்தில், ஸ்திரமாக நிற்கும்படி, சந்தேகத்துக்கு இடமில்லாமல் பாதுகாவலாக நின்று கொள்ளுங்கள். உங்களுடன் நானும் இங்கு வந்து விட்டது தெரிந்தால், இந்த வானரங்கள் தங்களுக்கு இடையூறு ஏதுவும் இருக்காது என்று நம்பிக்கை கொள்ள ஏதுவாகும். திடுமென எல்லாமாக சேர்ந்து சூன்யமான லங்கா நகருக்குள் சென்று அட்டகாசம் செய்யக் கூடும். இவ்வாறு சொல்லி அவர்களுக்கு உரிய இடங்களில் எதிரி கண்களுக்குத் தெரியாமல், தாங்கள் அடிக்க வசதியாக இருக்கச் செய்து விட்டு, தான் சமுத்திரம் கரை புரண்டு வருவது போல மோதிக் கொண்டு வரும் வானர சைன்யத்தின் மேல் தன் பாணங்களை பிரயோகிக்க ஆரம்பித்தான். பள பளக்கும் வில்லும் அம்பும் கொண்டு, திடுமென யுத்த களத்தில் குதித்து நின்ற ராக்ஷஸேந்திரனான, ராவணனை, வானர ராஜனான சுக்ரீவன் ஒரு பாறாங்கல்லை கையில் வைத்துக் கொண்டு துரத்தினான். அவன் கையில் மலையிலிருந்து பெயர்த்துக் கொன்டு வந்த பாறையில், மரக்கிளைகளும், செடி கொடிகளும் அப்படியே இருந்தன. அதை வீசி ராவணனுடன் போரை ஆரம்பித்தான். ராவணன் அது தன் பேரில் விழாதபடி, பாணங்களாலேயே தடுத்து நிறுத்தினான். பெரிய மரத்துடன் கூடிய அந்த மலையின் பாகம் போல இருந்த பாறாங்கல், பூமியில் விழவும், ராவணன் பதில் கொடுத்தான். பெரிய நாகம் போலவும், அந்தகன் போலவும் தோற்றமளித்த ஒரு சரத்தை ராவணன் தன் வில்லில் பூட்டி, பிரயோகம் செய்ய ஆயத்தமானான். காற்றின் வேகத்தில் செல்லும் அந்த அம்பு, நெருப்பு பொறி பறக்க, பெரும் கல் அல்லது அசனி என்ற இந்திரனுடைய ஆயுதம் போன்று சுக்ரீவனைத் தாக்கி அழிக்க வல்லதாக இருந்தது. கூர்மையான நுனி உடையதான அந்த அம்பு ராவணன் கைகளிலிருந்து விடுபட்டு, சுக்ரீவனை மகா வேகமாகத் தாக்கியது. குகன் கைகளிலிருந்து விடுபட்ட உக்ர சக்தியுடைய அம்பு க்ரௌஞ்ச மலையைத் தாக்கியது போல சுக்ரீவனை வீழ்த்தியது. பெருங்குரலில் ஓலமிட்டபடி, சுக்ரீவன் பூமியில் விழுந்தான். நினைவிழந்து தரையில் விழுந்து கிடந்த சுக்ரீவனைப் பார்த்து ராக்ஷஸ வீரர்கள் கேலியாக சிரித்தனர். இதைக் கண்ட க3வயன், க3வாக்ஷன், சுத3ம்ஷ்டிரன், ரிஷப4ன், ஜ்யோதிமுகன், நப4ன் என்ற வானர படைத் தலைவர்கள் ஆளுக்கொரு சிறிய மலையளவு இருந்த கற்களைத் ராவணன் படை வீரர்கள் மேல் வீசி பலரை விழச் செய்தனர். இந்த கற்களை ராவணன் தன் பாணங்களால் சிதறச் செய்தான். மேலும் வேலப்பாடமைந்த தங்க கவசம் கொண்ட தன் கூர்மையான பாணங்களால் சரமாரியாக வானரங்களைத் தாக்கி கலங்கச் செய்தான். பெரிய உருவம் கொண்ட வானர வீரர்கள் பலர், ராவணனின் அம்பு மழையைத் தாங்க சக்தியின்றி, பூமியில் விழுந்தனர். இந்த அம்புகள் துளைத்தது ஒரு புறம் இருக்க, ராவணனை நேருக்கு நேர் கண்ட பயமும் அவர்களை வாட்டி எடுத்தது. மூச்சு விடக் கூட மறந்தவர்களாக, இது வரை கோஷம் செய்து கொண்டிருந்தவர்கள், சரணாகத பரிபாலனான ராமனையே சரணடைந்தார்கள்.
ராமரும் உடனே, பரபரப்புடன் தன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார். லக்ஷ்மணன் பின்னாலேயே வந்து வணக்கத்துடன் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான். பொருள் பொதிந்த அந்த வாக்யத்தை லக்ஷ்மணன் வினயமாக சொல்லலானான். ஆர்ய, நீங்கள் இவனை எதிர்த்து போரிடுவது தங்கள் தகுதிக்கு அதிகமே. இந்த நீசனை வதம் செய்ய எனக்கு ஆணையிடுங்கள் ப்ரபோ, எனவும் ராமரும் சரி போய் வா. உன் திறமையைக் காட்டி போர் செய். ராவணன் யுத்தத்தில் மிகுந்த பராக்ரசாலி. மூவுலகிலும் இவனை எதிர்த்து நின்று ஜயித்தவர் யாருமில்லை. அவனுடைய பலம் குறைந்த இடங்களை(ஞக்ஷெர்க பஒiநத) மர்மஸ்தானங்களைத் தெரிந்து கொள். உன் பலா பலங்களை வெளிக் காட்டாதே. கண்கள், வில், முயற்சிகள் இவை யாவையும் உன்னை ரக்ஷித்துக் கொள்ளவும் பயன் படுத்து. கவனமாக போர் செய் என்று சொல்லி அவனை ஆலிங்கனம் செய்து ஆசிர்வதித்து, அனுப்பினார். லக்ஷ்மணனும் ராமரை வணங்கி யுத்த களம் நோக்கி புறப்பட்டான். யானையின் தும்பிக்கை போன்ற நீண்ட புஜங்களையுடைய ராவணனைக் கண்டான். அவன் கையில் இருந்த வில் பள பளவென்று, பயங்கரமாகத் தெரிந்தது. அந்த வில்லிலிருந்து எய்யப் பட்ட பாணங்கள் வானர சைன்யத்தை இருக்கும் இடம் தெரியாமல் மறைத்துக் கொண்டு மழையாக பொழிவதைக் கண்டான். ஹனுமான் இந்த சர ஜாலத்தை விலக்கி. ராவணனை நோக்கி ஓடுவதையும் கண்டான். அவனுடைய ரதத்தை ஒரு கையால் பிடித்து தடுத்து நிறுத்தி, வலது கையை ஓங்கி, ராவணனை நோக்கி அவன் பயப்படும்படியான ஒரு விஷயத்தைச் சொன்னான். ராவணா, தேவ, தானவ, கந்தர்வ, யக்ஷர்கள், சக ராக்ஷஸர்கள் இவர்கள் கையால் என் வதம் ஆகக் கூடாது என்று நீ ப்ரும்மாவிடம் வரம் பெற்றாய். வானரர்களை நீ விட்டு விட்டாய். அவர்களை நீ ஒரு பொருட்டாக நினைக்காததாலும், இருக்கலாம். இதோ பார். என் வலது கை முஷ்டி. ஐந்து விரல்கள் ஐந்து மரக்கிளைகள் போல இவை வெகுகாலமாக இந்த உன் உடலில் தங்கியிருக்கும் உயிருக்கு விடுதலை அளிக்க வல்லவை. ஹனுமானின் இந்த வார்த்தைகளைக் கேட்டு ராவணன் கண்கள் சிவக்க, மிகுந்த கோபத்துடன் பதில் அளித்தான். ஆஹா, சீக்கிரம் உன் ஆயுதத்தை பிரயோகம் செய். அழிவில்லாத கீர்த்தியை அடைவாய். வானர, உன் பலம் என்ன என்பது எனக்குத் தெரியும். முதல் அடியை நீ செய். பின் நான் உன்னை ஒன்றுமில்லாதவனாக செய்து விடுகிறேன். ராவணன் இவ்வாறு சொல்லவும், வாயு புத்திரன், ராக்ஷஸ ராஜனே, உன் மகன் அக்ஷனை நான் முன்னால் அடித்து வீழ்த்தியிருக்கிறேன். ஞாபகம் இருக்கட்டும். இதைக் கேட்டு, பொறுக்க மாட்டாத ராவணன் புறங்கையால் ஓங்கி வானர வீரன் வாயுபுத்திரனின் மார்பில் அடித்தான். அந்த அடி வாயு புத்திரனை ஒரு கலக்கு கலக்கி விட்டது. சமாளித்து தன்னை நிலைப் படுத்திக் கொள்ள ஒரு முஹுர்த்த நேரம் ஆயிற்று. அதே போல திரும்பத் தன் கைத்தலத்தால், உள்ளங்கையால் அமர த்வேஷியான ராவணனை ஓங்கி ஒரு குத்து விட்டான். பூமி திடுமென அசைந்து விட்டதோ எனும்படி பலமாக வந்த இந்த அடியினால் நிலை குலைந்து போன ராவண ராக்ஷஸனைப் பார்த்து, யுத்த களத்தில் இப்படி உள்ளங்கை அடி வாங்கியே திகைத்து நிற்பதைப் பார்த்து, வானரங்களும், ரிஷிகளும், சித்தர்களும், தேவர்கள், அசுரர்களும், ஹோ வென்று எக்காளம் இட்டு சிரித்தனர். தன்னைச் சற்று ஆசுவாசம் செய்து கொண்ட ராவணன் சொன்னான். வானர, சாது. பலத்தால் எனக்கு சமமான எதிரிதான் நீ. உன்னை சிலாகிக்கிறேன். எனவும் மாருதி பதில் சொன்னான். என் வீரமா? திக். என்ன பயன்? நீ இன்னமும் ஜீவித்து இருக்கிறாயே. ராவணா, என் கையினால் அடிபட்டு நீ மாண்டு விழவில்லையே. ராவணா, யுத்தத்தை தொடருவேன். அனாவசியமாக பேச்சை ஏன் வளர்க்கிறாய்? அதன் பின் என் முஷ்டி உன்னை யம லோகத்துக்கே அழைத்துச் செல்லும் பார். இதைக் கேட்ட ராவணன், ஆத்திரத்துடன் வலது கை முஷ்டியை ஓங்கி பலமாக வாயு புத்திரனை அடித்தான். ஹனுமான் அந்த அடியைத் தாங்க மாட்டாமல், கலங்கி நிற்பதைக் கண்ட நீலன், தன் ரதத்தில் வேகமாக அங்கு வந்து சேர்ந்தான். ராவணனும் தன் ரதத்தை அதி ரதியான நீலனை நோக்கிச் செலுத்தி, போரிட தயாரானான். பாம்புகள் போன்று சீறிப் பாயும் அம்புகளை, பயங்கரமான ஆயுதங்களை எதிரியின் மர்மத்தில் அடிக்கக் கூடிய வானர படைத் தலைவனான நீலனை பலமாக தாக்கினான். இந்த அம்புகள் மேலே விழ, ஒரு கையால் அதை விலக்கியபடி, மற்றொரு கையால் ஒரு பாறாங்கல்லை ராவணன் மேல் வீசினான். இதற்கிடையில் ஹனுமானும் தன்னை சமாளித்துக் கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தவனாக சண்டையைத் தொடரும் எண்ணத்துடன், நீலனுடன் போர் செய்து கொண்டிருந்த ராவணனை நோக்கி, ஆத்திரத்துடன் கத்தினான். மற்றவருடன் போர் செய்யும் பொழுது குறுக்கே போவது சரியல்ல. ராவணனனோ, தன்னை நோக்கி வந்த பெரிய மலைச் சிகரம் போன்ற பாறாங்கல்லை ஏழு பாணங்களால் அடித்து சிதறச் செய்வதில் கவனமாக இருந்தான். அந்த கல் உடைந்து பொடிப் பொடியாக ஆனதைக் கண்ட, வானரப் படைத் தலைவன் நீலன், காலாக்னி மூண்டது போன்ற கோபத்துடன், அஸ்வகர்ணம் என்ற மரத்தையும், த4வ, சால விருக்ஷங்களையும், பூத்து குலுங்கிய மாமரக் கிளைகளையும் கொண்டு வந்து ராவணன் மேல் போட்டான். இன்னும் மரக் கிளைகளையும் அடுக்கி வைத்துக் கொண்டான். அக்னி போன்ற சில அஸ்திரங்களை அடுத்தடுத்து பிரயோகம் செய்து, ராவணன் இந்த மரக் கிளைகளால் அடிபடுவதிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டான். இந்த அம்புகள் கூடாக தன்னை மறைப்பதையறிந்த அக்னி குமாரன் தன்னை மிகச் சிறியவனாக ஆக்கிக் கொண்டு வெளி வந்து விட்டான். தன் த்வஜத்தின் மேல் நின்ற அக்னி சுதனான நீலனைப் பார்த்து ராவணன் திடுக்கிட, நீலன் அட்டகாசமாக சிரித்தான். த்வஜத்தின் மேல், வில்லின் நுனியில், கிரீடத்தின் மேல் என்று மாறி மாறித் தெரிந்த அந்த வானரத்தைப் பார்த்து, லக்ஷ்மணன், ஹனுமான், ராமரும் கூட ஆச்சர்யமடைந்தனர். இந்த வானரத்தின் லாகவத்தைக் கண்டு, ராவணனும் அதிசயித்தான். ஆக்னேயம் என்ற சக்தி வாய்ந்த அஸ்திரத்தை எடுத்தான். வானரங்கள் தங்கள் இனத்து வீரன் ராவணனை ஆட்டுவிப்பதைக் கண்டு பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த மகிழ்ச்சிக் கூக்குரல் ராவணனனுக்கு மேலும் எரிச்சலை ஊட்டியது. எதுவும் சொல்லக் கூட தோன்றாதவனாக, த்வஜத்தின் மேல் நின்ற நீலனை நோக்கி பாணங்களை பிரயோகம் செய்யலானான். கையிலிருந்த வில்லில் பூட்டிய அம்புடன், நீலனைப் பார்த்து கபியே, நல்ல லாகவத்துடன் ஏறி நிற்கிறாய். மாயை அறிந்தவன் தான் நீ. உன் உயிரைக் காத்துக் கொள்ள முடியுமானால், காத்துக் கொள். வித விதமாக உன்னைக் காட்டிக் கொள்கிறாய். எப்படி ஒளிந்து கொன்டாலும் என் வில்லிருந்து புறப்படும் அம்புகள் உன்னைக் கண்டு கொண்டு அடிக்கும். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீ என்னதான் முயன்றாலும், இந்த அம்புகள் தொடர்ந்து வரும். என்று சொல்லிக் கொண்டே ராவணன், ராக்ஷஸ ராஜன், வானர படைத் தலைவனான நீலனைத் தாக்கினான். அஸ்திரம்-மந்திரம் சொல்லி விடப்பட்ட பாணம் தன் மார்பில் பட எரிச்சல் தாங்க மாட்டாதவனாக நீலன் பூமியில் விழுந்தான். தந்தையின் மகிமையால், தன் வீர்யத்தால், முழங்கால்களை ஊன்றிக் கொண்டு பூமியில் நின்றான், உயிர் விடவில்லை. நினைவு இன்றி பூமியில் நின்ற வானரத்தைப் பார்த்து, மேலும் மேலும் போர் செய்ய ஆவலுடன் ராவணன் அவனை அப்படியே விட்டு விட்டு, சௌமித்ரியை நோக்கித் தன் ரதத்தைத் திருப்பினான்.
மேகம் முழங்குவது போல முழங்கும் அந்த உயர்ந்த ரதம், ரண மத்தியில் வந்து நின்றது. தன் வில்லை விரல்களால் நிமிண்டி பெரும் நாதம் எழச் செய்தான், ராவணன். அந்த நாதமே மூவுலகையும் கலக்கியது. ஒப்பில்லாத அந்த வில்லையும், அதிலிருந்து கிளம்பிய நாதத்தையும் கேட்டும், ராவணனைப் பார்த்தும் சற்றும் கலங்காத சௌமித்ரி, நிசாசரேந்திரா, என்னிடம் வா. வானரர்களோடு போர் செய்வது உன் தகுதிக்கு ஏற்றதல்லவே என்று அழைத்தான். ராக்ஷஸ ராஜனும், உக்ரமான சௌமித்ரியின் வில்லின் ஓசையயும், தன் வில்லின் நாதத்தையும் மீறி ஒலித்த சௌமித்ரியின் குரலையும், ஜய கோஷத்தையும் கேட்டு, வேகமாக தன் ரதத்தை ஓட்டிக் கொண்டு, ஆத்திரத்துடன், சௌமித்ரியின் எதிரில் வந்து நின்றான். உன் அதிர்ஷ்டம், இன்று என் எதிரில் உயிருடன் நிற்கிறாய். ராகவா, வாழ்வின் முடிவை நெருங்கியவனுக்கு புத்தி விபரீதமாகப் போகும் என்பது சரியே. இந்த க்ஷணமே, நீ யமனுலகம் செல்லப் போகிறாய். என் பாணங்களே, வாகனமாக உன்னைக் கொண்டு செல்லும் என்றான். சௌமித்ரி அலட்சியமாக சிரித்து, கூர்மையான முன் பல் தெரிய பெருங்குரலில் கர்ஜனை செய்யும் ராவணனைப் பார்த்து, ராஜன், பிரபாவம் உடைய வீரர்கள் வீணாக வாய்ச் சொல்லில் நேரத்தை வீணாக்க மாட்டார்கள். புலம்புகிறாய். வெறும் பேத்தல். பாப காரியங்களைச் செய்பவர்களுள் நீ முதலிடம் பெற்றவனாக இருக்கலாம். உன் வீர்யத்தை அறிவேன். ராக்ஷஸேந்திரா, பலம், பிரதாபம், பராக்ரமம் இவையும் நான் அறிந்ததே. இதோ, கையில் வில்லுடன் நான் காத்து நிற்கிறேன். வீண் பேச்சு பேசிக் கொண்டு ஏன் நிற்கிறாய்? சௌமித்ரி சொன்னதைக் கேட்டு, ரோஷம் மேலிட, ராவண ராஜா, ஏழு கூர்மையான பாணங்களை ஒரே சமயத்தில் எய்தான். லக்ஷ்மணன் அதே போல தானும் கூர்மையான தன் பாணங்களால் அவைகளை தடுத்து நிறுத்தினான். நாகராஜா போன்ற தன் பாணங்கள் பயனற்று போனதைக் கண்டு ராக்ஷஸன், மேலும் சக்தி வாய்ந்த பாணங்களை பிரயோகம் செய்யலானான். ராமானுஜனின் வில்லிலிருந்து அதற்கு சற்றும் குறையாத சக்தி வாய்ந்த பாணங்கள், வெளிப்பட்டன. க்ஷுர, அர்த்த சந்திர, உத்தம கர்ணி, பல்ல சரங்கள், இவற்றை மேலும் மேலும் லக்ஷ்மணனும் எய்தான். அந்த சர ஜாலங்களையும், அதனதன் சக்தியையும் அறிந்து கொண்ட ராவணன், லக்ஷ்மணனின் கை லாகவத்தைக் கண்டு, அதிசயித்தான். திரும்பவும் தன் வில்லில், மேலும் சக்தி வாய்ந்த பாணங்களை பிரயோகம் செய்யலானான். லக்ஷ்மணனும் சளைக்காமல் இடைவிடாமல் அடித்தான். லக்ஷ்மணனின் பாணங்களும், கூர்மையானவை, மகேந்திரனின் வஜ்ரம் போன்ற, அசனிக்கு ஈடான, நெருப்பை உமிழும் மகா சக்தி வாய்ந்த பாணங்களே. இதற்கு மேலும் பொறுக்க மாட்டாத ராவணன், ஸ்வயம்பூ தந்த அரியதான ஒரு அஸ்திரத்தை, லக்ஷ்மணனின் நெற்றியில் படும் படி விட்டான். காலாக்னி போன்று தன் மேல் வந்து விழுந்த பாணத்தால் நிலை தடுமாறிய லக்ஷ்மணன், மிக கஷ்டப்பட்டு தன்னை சாமாளித்துக் கொண்டு, தன் பாணத்தால் தேவர்களின் விரோதியான ராவணனின் வில்லை உடைத்து எறிந்தான். கை வில்லை இழந்து நின்ற ராவணன் மேல் மேலும் மூன்று பாணங்களை விட்டான். இதை சற்றும் எதிர்பார்க்காத ராவணன், சற்று நிலை குலைந்தாலும், உடனே சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து நின்றான். உடல் பூராவும் காயம், ரத்தம் பெருக்கெடுத்து ஓட, கை வில்லையும் இழந்தவனாக, தேவ சத்ருவான ராவணன், ப்ரும்மாவிடம் வரமாகப் பெற்ற சக்தி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தான். புகையின்றி விளங்கும் நெருப்பு போல அலை மோதிக்கொண்டு நின்ற வானர சேனையை நோக்கியபடி, திடுமென சக்தியை சௌமித்ரியின் மேல் பிரயோகித்து விட்டான். லக்ஷ்மணன் அதைத் தடுக்க சரமாரியாக பாணங்களை விட்ட பொழுதும், சக்தி அவன் கைகளைத் தாக்கி விட்டது. சக்தி வாய்ந்த ஆயுதம் அந்த சக்தி என்ற ஆயுதம். அதனால் அடிபட்டதால் நிலை குலைந்து தடுமாறிய ரகு வீரன், அப்பொழுதும் மனம் கலங்காமல் நின்றான். வேகமாக வந்த ராவணன் அவனை தோள்களைப் பற்றித் தூக்கிச் செல்ல முயன்றான். ஹிமவான், மந்தர, மேரு மலை, தேவர்கள் உள்ளிட்ட மூவுலகையும் கூட ராவணன் தூக்கி நிறுத்தியிருக்கலாம். ஆனால், பரதனின் சகோதரனை அசைக்க முடியவில்லை. தன் மார்பில் சக்தி ஆயுதத்தால் தாக்கப் பட்டிருந்த நிலையிலும், விஷ்ணுவின் அம்சமான தன் இயல்பையும், எண்ணி பார்க்க முடியாத தன் பலத்தையும் நினைவு கொண்டு, அசையாது நின்றான். தானவனின் கர்வத்தை அடக்கும் சக்தி வாய்ந்த லக்ஷ்மணன்., அசைக்க முடியாதபடி நின்றவனை, தன் கைகளால் அடித்தும் அசைத்தும் தூக்க முயன்றான், ராவணன். இதை கவனித்து விட்ட வாயு புத்திரன், எங்கிருந்தோ ஓடி வந்தான். வஜ்ரம் போன்ற தன் முஷ்டியினால், ராவணனின் மார்பில் ஓங்கி குத்து விட்டான். அதைத் தாங்க முடியாமல் ராக்ஷஸ ராஜா, முழங்கால் பலத்தில் பூமியில் சரிந்தான். (முட்டி போட்ட நிலையில் நின்றான்) ஹனுமானின் முஷ்டியால் பட்ட அடி காரணமாக, காதுகள், கண்கள் பாதிக்கப்பட, வாய் மூலமாக ரத்தத்தை உமிழ்ந்தான். தலை சுற்ற ரதத்தின் மேலேறி உட்கார்ந்து கொண்டான். நினைவு தவறி, மூர்ச்சை போடும் நிலையில், எப்படியோ சமாளித்தபடி இருந்தான். அவ்வளவு பீம பராக்ரமன் என்று பெயர் பெற்ற மூவுலகையும் கலக்கும் ராவண ராஜா, நினைவிழந்து கிடக்கிறார் என்பதையறிந்து வானரங்கள் உற்சாகமாக கூக்குரல் இட்டனர். இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், ரிஷிகள் இவர்களும் அந்த ஆரவாரத்தில் கலந்து கொண்டு ஜய கோஷம் செய்தனர். ஹனுமான், லக்ஷ்மணனின் நிலை கவலைக் கிடமாக இருப்பதையறிந்து அருகில் சென்று தடவிக் கொடுத்து, உபசாரம் செய்தான். ஹனுமானின் நட்பையும், பக்தியையும் மனதில் கொண்டு, சற்று முன் சத்ருவால் அசைக்க முடியாமல் போன தன் சரீரத்தை லகுவாக்கிக் கொண்டு, லக்ஷ்மணன் ஒத்துழைத்தான். யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியாத வீரனை தாக்கி கீழே தள்ளியதோடு, ராவணனனின் சக்தி ஆயுதம் திரும்ப தன் எஜமானனிடம் சென்று விட்டது. ஹனுமானால் பணிவிடை செய்யப் பட்ட லக்ஷ்மணன், ஆஸ்வாசம் அடைந்து, அதே சமயம் தன்னைத் தாக்கிய சக்தி ஆயுதமும் திரும்பிச் சென்று விட்டதாலும், லக்ஷ்மணன் தன் நிலை அடைந்து எழுந்து நின்றான். சர்ச்சைக்கு அப்பாற்பட்ட, தன் இயல்பான, விஷ்ணுவின் அம்சமான அவதார ரகஸ்யத்தை திரும்பவும் நினைத்துக் கொண்டான். ராவணனும், சற்று நேரத்தில் நினைவு பெற்று தன் பழைய நிலைக்குத் திரும்பி விட்டான். தன் பெரிய வில்லை கையில் எடுத்து கூர்மையான பாணங்களைத் தொடுக்க ஆரம்பித்தான். வானர சைன்யத்தின் பெரிய, முக்யமான வீரர்கள் எனப்பட்டவர்களே ஓட்டம் எடுத்தனர். இதைக் கண்டு ராகவன், தானே ராவணனுடன் போர் செய்ய வந்தான்.
போருக்குப் புறப்பட்ட ராகவன் அருகில் சென்று ஹனுமான் ஒரு விண்ணப்பம் செய்தான். என் முதுகில் ஏறிக் கொண்டு இந்த ராக்ஷஸனை அடியுங்கள். பகவானான கருடன் மேல் ஏறி விஷ்ணு போருக்கு புறப்பட்டது போல என் மேல் ஏறிக் கொள்ளுங்கள். இதைக் கேட்டு ராகவன், வாயு புத்திரனின் மேல் ஏறிக் கொண்டார். ரதத்தில் இருந்த ராவணனை மனிதர்களின் அரசனான ராகவன், யுத்த களத்தில் நேருக்கு நேர் சந்தித்தார். விரோசனன் மகனை, வைரோசனியை, கோபத்துடன் விஷ்ணு தாக்க முயன்றது போல, கையில் ஆயுதங்களோடு, வஜ்ரம் விழுந்தது போன்ற பெரிய குரலில் ஜய கோஷமிட்டபடி, முன்னேறினார். கம்பீரமாக, பொறுக்கி எடுத்த வார்த்தைகளைக் கொண்டு ராவணனைப் பார்த்து எச்சரித்தார்.
நில், நில், ராக்ஷஸ சார்தூலா, எனக்கு இப்படிப் பட்ட ஒரு அபசாரத்தைச் செய்து விட்டு, நீ எங்கு போய் தப்பிக்கலாம் என்று நினைக்கிறாய்? பத்து திக்குகளிலும் ஓடிப் போனாலும், இந்திரன், வைவஸ்வதன், பாஸ்கரன் இவர்களிடம் அடைக்கலம் கேட்டு ஓடினாலும், ஸ்வயம்பூ, வைஸ்வானர, சங்கரன் இவர்களிடம் சரணம் கேட்டு ஓடினாலும், இன்று என் கையிலிருந்து நீ தப்பிக்கவே முடியாது. உன் சக்தியால் அடித்து எந்த ம்ருத்யு வரும் என்று எதிர் பார்த்தாயோ, அதே ம்ருத்யு இன்றைய யுத்தத்தில், ரக்ஷோகண ராஜாவே, புத்திரர்களுடன், மனைவி மக்களுடன், சேர்த்து உன்னை வந்து சேரப் போகிறது. இதோ பார், என் அத்புதமான சரங்கள். இவை தான் ஜனஸ்தானத்தில் பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்கள் உயிரைக் குடித்தன. ராகவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, அதை கேட்டுக் கொண்டிருந்த ராவணன், ராகவனை தோளில் சுமந்து வந்து கொண்டிருந்த ஹனுமானைப் பார்த்து முன் வைரத்தை நினைவு படுத்திக் கொண்டு, கூர்மையான, காலாக்னிக்கு சமமான பாணங்களால் அடிக்க ஆரம்பித்தான். ஹனுமானுடைய தேஜஸ் மேலும் வளர்ந்தது. சுபாவமாக உள்ள ஹனுமானின் தேஜஸ் யுத்தத்தில், ராக்ஷஸ பாணங்கள் தைத்த பொழுதும் இயல்பான தேஜஸ் மேலும் வளர்ந்தது. வானர வீரன் காயம் பட்டதைக் கண்டு ராமரும் ஆத்திரமடைந்தார். தன் பாணங்களை சரமாரியாக பொழிந்து ரதத்தை, சக்ரம் கழன்று விழ, குதிரைகள் விலகி ஓட, சத்ரமும் சாமரமும், த்வஜமும், பதாகமும் கீழே விழ, சாரதியும் அடிபட்டு, அதில் இருந்த அசனி, சூலம், வாள் இவையணைத்தும் நாசமாகும் படி செய்தார். தனித்து நின்ற இந்திர சத்ருவை, எதிர் பாராத நேரத்தில் புஜங்களுக்கு மத்தியில், இந்திரன் ஒருமுறை மேரு மலையை வஜ்ரத்தால் அடித்தது போல அடித்தார். வஜ்ரம் போல மேலே விழுந்த இந்த அடியாலும் கலங்காமல் நின்றான், ராஜா ராவணன். தானும் பதிலுக்கு வில்லை எடுத்து அம்புகளை பிரயோகம் செய்தான். அடி பட்டு கலங்கியிருக்கிறான், சமாளித்துக்கொண்டு போருக்கு வருகிறான் என்பதை உணர்ந்து கொண்ட ராமர் அர்த்த சந்திரம் என்ற ஆயுதத்தை பிரயோகித்து அவன் கிரீடம் தரையில் உருளும்படி செய்தார். விஷம் நீங்கப் பெற்ற ஆசீவிஷம் (கொடியதொரு விஷம்) கொண்ட ஆலகால நாகம் போலவும், தன் கிரணங்களின் ஒளி அடங்கிய சூரியன் போல பிரகாசம் இல்லாதவனாகவும், கிரீடம் இழந்து, தன் கம்பீரம் குறைய நின்றவனைப் பார்த்து யுத்தத்தில் எதிரில் நின்ற ராக்ஷஸேந்திரனைப் பார்த்து ராமர் சொன்னார். நிறைய போராடி விட்டாய். உன் வீரர்களை அழித்து விட்டேன். களைத்து நிற்கும் உன்னை என் பாணங்களால் யம லோகம் அனுப்ப மாட்டேன். போ, நான் அனுமதி தருகிறேன். ராக்ஷஸ ராஜனே லங்கை சென்று, ஓய்வு எடுத்துக் கொண்டு நாளை வா. ரதம் தனுஷ் இவற்றுடன் வா. அப்பொழுது தான் நானும் ரதத்தில் நின்று சரிக்கு சரி போரிடும் பொழுது என் பலத்தை தெரிந்து கொள்வாய். இவ்வாறு ராமர் சொல்லவும், தன் கர்வமும், மகிழ்ச்சியும் தன்னை விட்டு விலக, தன் வில், வாள், குதிரைகள், சாரதி இவை எதுவும் உதவிக்கு வர இயலாத நிலையில், ராமர் பாணம் தைத்த இடம் ரணமாகி வலிக்க, மகா கிரீடத்தை இழந்தவனாக திடுமென திரும்பி லங்கையில் நுழைந்தான்.
ராவணன் திரும்பிச் சென்ற பின், அடிபட்ட வானரங்களையும், லக்ஷ்மணனையும் கவனித்து, தைத்திருந்த அம்புகளை எடுத்து, வைத்யம் செய்து குணப்படுத்துவதில் ராமர் ஈடுபட்டார். மூவுலகுக்கும் இந்திரனுக்கும் சத்ருவான ராவணன் போர் முனையில் தோற்றுத் திரும்பியதைக் கண்டு சுராசுரர்கள், பூத கணங்கள் திசைகள், சாகரங்கள் உள்ளிட்ட நில பகுதிகளில் வசித்தவர் அனைவரும், ரிஷிகள், மகோரர்கள், அதே போல பூமியில், நீரில் சஞ்சரிக்கும் ஜீவராசிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணாபி4ஷேணனம் என்ற ஐம்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 60 (467) கும்பகர்ண ப்ரபோத4: (கும்பகர்ணனை எழுப்புதல்)
ராம பாணம் எனும் பயத்தால் துரத்தப்பட்டவன் போல, தன் நகருக்குள் நுழைந்த ராவணன், தன் கர்வம் அழிந்தவனாக, மிகுந்த வேதனையுடன் இருந்தான். பெரிய யானை சிங்கத்திடன் தோற்றது போலவும், பன்னகம் கருடனால் வீழ்த்தப்பட்டது போலவும், மகாத்மாவான ராகவனால் வீழ்த்தப் பட்டான். தனக்கு இது மிகப் பெரிய அவமானம் என்று ராவண ராஜா நினைத்தான். ராக்ஷஸேஸ்வரன் திரும்பத் திரும்ப, ப்ரும்ம தண்டம் போல பிரகாசமானதும், மின்னல் போல ஓளியுடனும் இருந்த ராகவ பா3ணங்களை எண்ணி, எண்ணி கலங்கினான். காஞ்சனமயமான தன் திவ்யாஸனத்தை அடைந்து, எதிரில் நின்ற ராக்ஷஸர்களைப் பார்த்து கத்தினான். நான் செய்த தவம் என்ன? என் ப3லம் என்ன? மகேந்திரனுக்கு சமமாக இருந்தவன் இன்று ஒரு மனிதனிடத்தில் தோற்றுப் போனேன். அந்த ப்ரும்மா அப்பொழுதே சொன்னார். இப்பொழுது தான் அந்த எச்சரிக்கையின் மகத்வம் தெரிகிறது. மனிதர்களிடத்தில் உனக்கு ஆபத்து என்று நினைவு வைத்துக் கொள் என்றார். அது தான் எதிரில் மனிதனாக வந்து நிற்கிறது. தேவ, தானவ, கந்தர்வ, யக்ஷர்கள், ராக்ஷஸா, பன்னகர்கள், மூலமாக எனக்கு அழிவு கூடாது என்று வேண்டியபொழுது, நான் மனிதர்களிடம் பயம் கூடாது என்று வேண்டவில்லை. அனரண்யன் என்ற இக்ஷ்வாகு குல அரசன் ஒரு முறை சொன்னான். உன்னை, புத்திரர்கள், மந்திரிகள் கூட, படை பலத்தோடும், அஸ்வ, ரதங்கள் இவைகளுடனும் சேர்த்து அழிக்கப் போகிறான், பார்த்துக்கொண்டே இரு, என்றான். அந்த மனிதன் தான் தசரதன் மகனாக, ராமனாக பிறந்துள்ளான் போலும். வேதவதீ சபித்தாளே. அவளை நான் தாக்கியபொழுது கோபத்துடன் சபித்தாள். அவள் தான் சீதையாக, ஜனக நந்தினியாக, பிறந்துள்ளாள் போலும். பாக்யசாலி. உமையும், நந்திகேஸ்வரனும், ரம்பையும், வருணன் மகளும் என்னை சபித்தனர். ரிஷிகள் சொன்னது எதுவுமே பொய்ப்பதில்லை. அந்த சாபங்களின் பலனைத் தான் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இதையெல்லாம் மனதில் நினைவு வைத்துக் கொண்டு பாதுகாவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள். வீடுகள், மாளிகைகளின் மேல் ராக்ஷஸர்கள் காவலுக்கு நிற்கட்டும். தேவ, தானவர்களின் கர்வத்தை அடக்கிய ஒப்பில்லா பலசாலியான கும்பகர்ணனை எழுப்புங்கள். தான் தோற்றதும், ப்ரஹஸ்தன் மாண்டதையும் எண்ணி, ராக்ஷஸ பலம் மிகப் பெரியது, அதை தர வாரியாக யுத்தம் செய்யவும், பாதுகாக்கவும் ஏற்பாடுகள் செய்தான். வாசல்களில் கவனம் வையுங்கள். பிராகாரங்களில் சுவர்களின் மேல் நில்லுங்கள். தூங்கிக் கொண்டிருக்கும் கும்பகர்ணனை எழுப்புங்கள். காலத்தால் நினைவு மயங்கி நடப்பது அறியாமல் நிச்சிந்தையாக தூங்குகிறான். ஒன்பது, ஆறு, ஏழு, எட்டு மாதங்கள் தொடர்ந்து தூங்குகிறான். யுத்தம் என்று வந்தால் ராக்ஷஸ கூட்டத்தின் மத்தியில், எருதின் முதுகில் உள்ள ககுபம்- போன்று தனித்து தெரிவான். வானரங்களையும், ராஜ குமாரர்களையும் சீக்கிரமே வதம் செய்து அழித்து விடுவான். ராக்ஷஸ வீரர்களுக்குள் இவன் முக்கியமானவன். நடு நாயகமாக நிற்பவன். இப்பொழுது தான் மந்த்ராலோசனைகளில் கலந்து கொண்டு விட்டு ஒன்பது நாள் முன்பு தூங்கப் போனான். மகா பலசாலியான அந்த கும்பகர்ணனை எழுப்புங்கள். க்ராம்ய சுகத்தில், (பாமரமான ) ஈடுபட்டு, சாதாரண பிரஜை போல இந்த மூடன் கும்பகர்ணன் எப்பொழுதும் தூங்கிக் கொண்டு வீணாக்குகிறான். இந்த ராமனோடு அவன் நியாயமாக போர் புரிந்தாலே போதும். ராமன் முதலானவர்களை அழித்து விடுவான். எனக்கு பக்க பலமாக இருப்பான். நான் கவலையின்றி போரில் முழுவதும் கவனம் செலுத்த முடியும். இந்திரனுக்கு சமமான பலம் உடைய இவனை எந்த விதமாக நான் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று யோசியுங்கள். இது போன்ற கஷ்டமான காலத்தில், பலசாலியான கும்பகர்ணனின் உதவி எனக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ராக்ஷஸேந்திரன் இவ்வாறு கட்டளையிடவும், சில ராக்ஷஸர்கள் சென்று கும்பகர்ணனை எழுப்ப முயன்றனர். ராவணன் கட்டளையை ஏற்றுக் கொண்டு, மாமிசம் முதலிய உணவு வகைகளை வாசனை திரவியங்கள், மாலைகள் மற்றும் சிற்றுண்டி வகைகளை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்றனர். கும்பகர்ணனின் பெரிய மாளிகைக்குச் சென்று, நீளமும், அகலமுமாக விஸ்தாரமான அந்த கூடத்தில் கும்பகர்ணன் உறங்கும் இடம் சென்றனர். கும்பகர்ணன் மூச்சுக் காற்றாலேயே பலர் விரட்டியடிக்கப்பட்டனர். கஷ்டப்பட்டு சமாளித்துக் கொண்டு, ஒரு சிலர் மாளிகையினுள் நுழைந்தனர். அழகிய குகை போன்ற அந்த இடம், பொன் வேய்ந்து அலங்காரமாக அமைக்கப் பட்டிருந்தது. மிகப் பெரிய உருவமாக, ராக்ஷஸ ராஜன் தூங்குவதைக் கண்டனர். மலை ஒன்று குறுக்காக விழுந்து கிடப்பதைப் போல கிடந்த கும்பகர்ணனைக் கண்டனர். எல்லோருமாக சேர்ந்து அவனை எழுப்பினர். மயிர்க் கால்கள் குத்திட்டு நிற்க, பாம்பு சீறுவது போல மூச்சு விட்டுக் கொண்டு, தன் மூச்சாலேயே அருகில் வருபவர்களை, பயமுறுத்தி, விரட்டியடித்தபடி, தூங்குபவனைக் காணவே பயமாக இருந்தது. பெரிய நாசித் துவாரமும், பாதாளம் போன்று அகன்ற வாயும், படுக்கையில் கிடந்த முழு சரீரமும், அங்கதம் கிரீடம் போன்ற ஆபரணங்களை அணிந்தவனாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு உறங்கும் கும்பகர்ணனை, மகா பலசாலியான புலி ஒன்று உறங்குவது போல கண்டு எழுப்ப முயன்றனர். மிருகங்கள், மகிஷங்கள் பன்றிகள் இவற்றின் மாமிசங்களைக் கொண்டு சமைத்த உணவு இவைகளுடன் அன்னமும் பெரும் அளவில் வைத்துக் கொண்டு காத்திருந்தனர். வித விதமாக மது வகைகளும் குடம் குடமாக நிரப்பி வைத்துக் கொண்டு காத்திருந்தனர். உயர் வகை சந்தனங்களை உடலில் பூசினர். வாசனை மிகுந்த மலர் மாலைகளால் உடலை மறைக்கும் விதமாக அணிவித்தனர். எழுந்தவுடன் மகிழ்ச்சியுடன் இருக்கும்படி எல்லாவித பொருட்களையும் வைத்துக் கொண்டு காத்திருந்தனர். சங்கங்கள் முழங்கின. ஒவ்வொரு சங்கும் முயல் குட்டியளவு பெரியதாக இருந்தது. பெரிய மேகங்கள் இடி இடிப்பது போல அந்த ராக்ஷஸர்கள் முழக்கம் இட்டனர். சத்தம் போட்டுக் கூவினர். தோள் தட்டி, கோஷம் இட்டனர். கும்பகர்ணனை துயிலெழுப்ப, முடிந்தவரை ஆரவாரம் செய்தனர். சங்கம், பேரீ, பணவ, நாதங்கள், தோள் தட்டும், சிங்க நாதம் செய்யும் கோஷங்கள், ராக்ஷஸ குரல்கள் மூவுலகும் கேட்டன. திசைகள் நடுங்கின. பறவைகள் இந்த சத்தம் கேட்டு அலறி விழுந்தன. வெகு நேரம் இவ்வாறு பல வித சப்தங்கள் செய்தும், கும்பகர்ணன் எழாததால், ராக்ஷஸர்கள் புஸHண்டி, முஸலம், க3தை4கள் இவற்றை கையில் எடுத்துக் கொண்டனர். கற்கள், மரக் கிளைகள் இவற்றையும் கொண்டு அடித்து எழுப்பும் முயற்சியில் இறங்கினர். பலசாலியான ராக்ஷஸர்களும், கும்பகர்ணனின் மூச்சுக் காற்று வெளிப்படும் பொழுது எதிரில் நின்று எதையும் செய்ய முடியாதபடி, காற்றில் அலைக்கழிக்கப் பட்டனர். ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் ஒரே சமயத்தில் இந்த சங்கம், பணவம் போன்ற வாத்யங்களை முழங்கினர். அப்படியும் அவனை எழுப்ப முடியாமல், அடித்தும் மேலே ஏறி குதித்தும் எதுவும் பலனில்லை. அதனால் பயங்கரமாக ஒரு செயலைச் செய்தனர். குதிரைகளையும், ஒட்டகங்களையும் கோவேறு கழுதைகள், நாகங்கள் இவற்றை, தண்டம், கசை அங்குசம் இவைகளைக் கொண்டு அடித்து அவன் மேல் விரட்டினர். பேரீ, சங்க வாத்யங்களை அடி வயிற்றிலிருந்து, முழு மூச்சையும் உபயோகித்து இசைத்து, பெரும் நாதம் எழச் செய்தனர். கட்டைகளையும், குச்சிகளையும் கொண்டு, கும்பகர்ணனின் உடலை நெம்பிப் பார்த்தனர். லங்கை முழுவதும் இந்த சப்தங்கள் எதிரொலித்தன. பர்வதங்கள், வனங்கள் எங்கும் இதே கூச்சலும், ஆரவாரமும் நிறைந்தது. ஆனால், கும்பகர்ணன் அசையவில்லை. திரும்பவும் ஆயிரம் பேரிகளை ஒரே சமயத்தில் அடித்து காதை பிளக்கும்படி சத்தம் எழச் செய்தனர். அப்படியும் அவன் எப்பொழுது நித்திரையிலிருந்து விடுபட்டு எழுந்திருக்கவில்லையோ, அவன் பெற்ற சாபத்தின் வசத்தில் தான் இப்படி இருக்கிறான் என்று புரிந்து கொண்டும், பொறுமையிழந்த ராக்ஷஸர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஒரே சமயத்தில் சிலர் பேரியை முழங்க, சிலர் கத்த, சிலர் கேசத்தை பிடித்திழுக்க, சிலர் காதைக் கடித்தும், தண்ணீர் நிறைந்த கும்பங்களைக் கொண்டு வந்து காதில் நிரப்பி, இவ்வளவு செய்தும், கும்பகர்ணன் துயில் கலையவில்லை. மற்றும் சில பலசாலிகள், கூடம், உத்கரம் இவற்றை கையில் எடுத்து, தலையில் மார்பில், உடலில் என்று அடித்து கயிறுகள் கொண்டு கட்டி இழுத்தும், சதக்னீ என்ற ஆயுதத்தைக் கொண்டு தாக்கியும், கும்பகர்ணன் அசையவில்லை. ஆயிரம் யானைகள் வந்து அவன் உடலைத் தூக்க முயன்றன. யானைகள் ஸ்பரிசம் பட்டதும், மெதுவாக கும்பகர்ணன் அசைந்தான். தன் மேல் இருந்த கணக்கற்ற கற்களையும் மரக் கிளைகளையும், பெரும் ஆயுதங்களால் அடிபட்ட உணர்வு சிறிதும் இன்றி, கீழே தள்ளி விட்டு, தாங்க முடியாத பசியுடன், எப்பொழுதும் தூங்கி எழும் பொழுது செய்யும் ஆரவாரம் கூச்சலுடன் பட்டென்று எழுந்தான். தன்னுடைய பெரிய கைகளை, நாகங்களோ, போகாசல மலைச் சிகரமோ எனும்படி இருந்த கைகளை நீட்டியும், வடவா முகம் போன்ற வாயைத் திறந்து கொட்டாவி விட்டபடி, மகா பயங்கரமாக அதிர முழக்கம் செய்தான். அவன் வாயைத் திறந்து கொட்டாவி விடும் பொழுது, பாதாளம் போல தெரிந்தது. மேரு மலையில் திவாகரன் உதித்தது போல, அதி பலசாலியான நிசாசரன், உறக்கம் தெளிந்து எழுந்து நின்றான். மலையில் இருந்து வீசும் காற்று போல அவனுடைய உள் மூச்சும், வெளி மூச்சும் அந்த சூழலையே கலக்கியது. எழுந்து நின்ற கும்பகர்ணனின் சரீரம் முழுவதுமாக காண, வெய்யில் கால முடிவில், மேகம், மின்னல்களோடு, மழை பொழிந்து கொண்டு இருப்பது போல இருந்தது. கண்கள் எரியும் நெருப்புத் துண்டம் போலவும், எரியும் கிரகங்கள் பூமியில் விழுந்து கொண்டிருப்பது போலவும், தக தகவென்றிருந்தன. எல்லோரையும் ஒரு முறை பார்த்து, எதிரில் இருந்த ஆகார வகைகளையும் நோட்டம் விட்டவன், அனைத்தையும், மிருகங்களையும், வராகங்களையும் அப்படி அப்படியே விழுங்க ஆரம்பித்தான். பசி அடங்கும் வரை மாமிசங்களைச் சாப்பிட்டு தாகம் தீரும் வரை மது வகைகளைக் குடித்து, இந்திர சத்ருவான கும்பகர்ணன் திருப்தியாகி விட்டான் என்று உணர்ந்த ராக்ஷஸ வீரர்கள், அருகில் சென்றனர். தலை குனிந்து வணங்கி, நாலாபுறமும் சூழ்ந்து நின்றன. நித்திரை கலைந்து எழுந்ததால் கண்கள் இன்னமும் தெளிவடையாமல் எல்லோரையும் ஒரு முறை பார்த்த கும்பகர்ணன், அவர்கள் பதட்டமாக இருப்பது கண்டு, சமாதானப் படுத்தினான்.
தன்னை எழுப்பியதால் ஆச்சர்யமும் வெளிப்பட, ராக்ஷஸர்களைப் பார்த்து விசாரித்தான். எதற்காக என்னை பலவந்தமாக எழுப்பினீர்கள்? ராஜா குசலமாக இருக்கிறானா? இங்கு ஆபத்து எதுவும் இல்லையே? அல்லது வெளி ஆட்களிடமிருந்து ஏதோ ஆபத்து வந்திருக்க வேண்டும். அதனால் தான் நீங்கள் இவ்வாறு அவசரமாக என்னை எழுப்பி இருக்கிறீர்கள். கவலை வேண்டாம். இன்று ராக்ஷஸ ராஜனுடைய பயத்தை கிள்ளி எறிகிறேன். மகேந்திரனேயானாலும், தள்ளி விடுவேன். நெருப்பேயானாலும் அணைத்து விடுவேன். ஏதோ அல்ப காரணத்துக்காக என் தமையன் என்னை எழுப்பச் சொல்லியிருக்க மாட்டான். அதனால் சொல்லுங்கள்? என்ன காரணம்? ஏன் என்னை கஷ்டப்பட்டு எழுப்பினீர்கள்? கும்பகர்ணன் இவ்வாறு வினவியதும், தைரியம் அடைந்த யூபாக்ஷன் என்ற மந்திரி கை கூப்பி வணங்கியபடி, விவரித்தான். நமக்கு தெய்வங்கள் மூலம் எந்த பயமும் இல்லை. வரவும் வராது. மனிதர்களிடம் தான் நமக்கு பயம். அது தான் மிகவும் வருத்துகிறது. தைத்ய தானவர்களிடமும் நமக்கு பயம் கிடையாது. இந்த மனிதர்களுக்கு முன்னால் நாம் நடுங்குவது போல வேறு எங்கும் நாம் பயத்தை உணரவேயில்லை. மலை போன்ற பெருத்த சரீரம் உடைய வானரங்கள், இந்த லங்கையை சூழ்ந்து நிற்கின்றன. சீதையை அபகரித்து வந்ததால், ராமனிடத்தில் நமக்கு பயம், ஆபத்து வந்து சேர்ந்துள்ளது. ஒரே ஒரு வானரம் வந்து இந்த லங்கை முழுவதையும் எரித்து விட்டது, குமாரன் அக்ஷன், அவனுடன் சென்ற வீரர்கள், யானைகளுடன் சேர்த்து அடித்து வீழ்த்தப்பட்டான். ராக்ஷஸராஜா, புலஸ்திய குல வீரன், தேவர்களை இது வரை ஆட்டிப் படைத்தவன், அவனையே, ஆதித்யன் போன்ற தேஜஸுடைய ராமன், போர் முனையில் போய் வா என்று அனுப்பி விட்டான். இது போல எந்த தேவர்களிடமும், தானவர்களிடமும் தைத்யர்களிடமும் இப்படி ஒரு அவமானம் நேர்ந்ததில்லை. உயிர் போகும் நிலையில், ராமன் விடுவித்து அனுப்பி விட்டான். யூபாக்ஷன் இதை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, தன் சகோதரனின் தோல்வியை கேட்கப் பொறாத கும்பகர்ணன், யூபாக்ஷனைப் பார்த்து கண்களை உருட்டி விழித்தான். யூபா எல்லா வானர சைன்யங்களையும் இன்றே ஒழித்து, ராம, லக்ஷ்மணர்களையும் இல்லையென்று ஆக்கி விட்டு வந்து நான் ராவண ராஜாவை சந்திக்கிறேன். இந்த வானர ரத்தம் கொண்டு இறந்து போன நம் ராக்ஷஸ வீரர்களுக்கு தர்ப்பணம் செய்கிறேன். ராம, லக்ஷ்மணர்களின் ரத்தத்தை நானே குடிக்கிறேன். ஆத்திரத்துடன், ரோஷத்துடன் அவன் சொன்னதைக் கேட்ட மகோதரன் என்ற படைத் தலைவன், வணக்கத்துடன் ஒரு விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.
ராவணனைப் பார்த்து, குண தோஷங்களை அலசி ஆராய்ந்த பின் கூட தாங்கள் யுத்த களத்தில் எதிரிகளை நாசம் செய்யலாம். அதுவும் சரியே என்று கும்பகர்ணன் ஏற்றுக் கொண்டு கிளம்பினான். அவனை எழுப்புவது என்ற பெரிய காரியத்தை செய்த திருப்தியோடு, ராக்ஷஸ வீரர்கள் தொடர்ந்து சென்றனர். வேகமாக நடந்து ராக்ஷஸேஸ்வரன் இருப்பிடத்தை அடைந்தனர். தசக்ரீவன், உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு, கை கூப்பி வணங்கியபடி, விஷயத்தைத் தெரிவித்தனர். ராக்ஷஸ ராஜனே, உன் சகோதரன் கும்பகர்ணனை எழுப்பி விட்டோம். இதோ இங்கு வந்து கொண்டிருக்கிறான். அவனை இங்கேயே சந்திக்க ஏற்பாடு செய்யவா? என்றும் வினவினர். அப்படியே செய்யுங்கள் என்று அனுமதி அளிக்கவும், ராக்ஷஸர்கள் ஓடி வந்து கும்பகர்ணனிடம் தெரிவித்தனர். அரசன் தங்களைக் காணத் தயாராக இருக்கிறார். உடனே சென்று அவரைக் காணலாம் என்று சொல்லி அழைத்து வந்தனர். கும்பகர்ணனும், தன் படுக்கையை விட்டு கீழே இறங்கி, முகம் கழுவி, ஸ்நானம் செய்து, ஆபரணங்கள் அணிந்து தாகத்துடன் பல விதமான பாணங்களை வரவழைத்து இரண்டாயிரம் குடங்கள் நிரம்ப குடித்து விட்டு கிளம்பினான். காலாந்தகன், யமன் போல மதம் பிடித்தவன் போல, மகிழ்ச்சியுடன் சகோதரனின் இருப்பிடம் சென்றான். கூடவே ராக்ஷஸ வீரர்கள் தொடர்ந்து வந்தனர். அவன் காலடி வைத்த இடத்தில் பூமி நடுங்கியது. ராஜ மார்கம் முழுவதும் கும்பகர்ணனின் சரீரத்தால் பிரகாசமாகியது போல இருந்தது. ஆயிரம் கிரணங்கள் கொண்ட சூரியன் தன் கிரணங்களால் பூமியை ஒளி பெறச் செய்வதைப் போல இருந்தது. அஞ்சலி செய்தபடி, ராவணன் மாளிகையில் நுழைந்தான். இந்திரன் மாளிகையில் ஸ்வயம்பூ நுழைவது போல நுழைந்தான். ராஜ மார்கத்தில் நின்ற அவனை, எதிரிகளை அழிக்கும் சக்தி வாய்ந்தவனின் பெரிய சரீரத்தைக் கண்டு வானர வீரர்கள், வெளியில் வந்து ஆச்சர்யத்துடன் பார்த்தன. பெரிய மலையையொத்த அவன் சரீரத்தைக் கண்டே நடுங்கின. சில பயந்து கீழே விழுந்தன. சில ஓடி ராமனை சரணடைந்தன. சில கிடைத்த திசையில் ஓடின. சில பூமியில் தரையோடு தரையாக படுத்தன. கிரீடம் அணிந்து, பெரிய மலையையொத்த சரீரத்துடன், தன் தேஜஸால் ஆகாயத்தை, ஆதித்யனை தொடுவது போல வானத்துக்கும், பூமிக்குமாக நின்றவனைக் கண்டு, வானரவீரர்கள், காட்டில் வசித்து பலவித ஜந்துக்களைப் பர்த்து பழகியிருந்தவர்களே, பயத்தால் நடுங்கி, இங்கும் அங்குமாக அலைந்து திரிந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கும்ப4கர்ண ப்ரபோ3தோ4 என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 61 (468) கும்ப4கர்ண வ்ருத்த கத2னம் (கும்பகர்ணனிடம் நடந்ததைச் சொல்லுதல்)
ராமரும், கிரீடம் அணிந்து, கையில் வில்லையும் ஏந்தி மகா தேஜஸுடன், பெரிய உருவமாக வந்த கும்பகர்ணனைக் கண்டார். முன்னொரு சமயம் வானத்தை அளாவி நின்ற விஷ்ணுவின் உருவம் போலத் தெரிந்த அந்த உருவத்தைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார். நீருண்ட மேகம் போலவும், பொன்னாலான அங்கதம் போன்ற ஆபரணங்கள் அணிந்தவனும், வளர்ந்து நின்ற ராக்ஷஸனுமான கும்பகர்ணனைப் பார்த்து வானரங்கள் திரும்பவும் ஓடின. ராமர் விபீஷணனைப் பார்த்து ஆச்சர்யத்துடன் வினவினார். இது யார்? பர்வதம் போன்று வந்து நிற்கிறான். வானரம் போன்ற கண்களுடையவன். மின்னலுடன் மேகத்தைக் காண்பது போல லங்கையில் தெரிகிறது. இவன் நேர்மையானவன். பூமியில் எழுப்பி வைத்த பெரிய கேது தண்டம், த்வஜ ஸ்தம்பம் போல நிற்கிறான். இவனைக் கண்டே வானரங்கள் செய்வதறியாது கலங்கி இங்கும் அங்குமாக ஓடுகின்றன. இவன் யார்? ராக்ஷஸ இனம் தானா? அல்லது அசுரனா? இது போன்ற உருவத்தை நான் இது வரை கண்டதில்லை. விபீஷணன் பதில் சொன்னான். இவன் தான் விஸ்ரவஸின் பிள்ளை கும்பகர்ணன். முன்னொரு சமயம் இந்திரனை ஜெயித்தான். இவனுக்கு இணையான சரீரமோ, பலமோ வேறு எந்த ராக்ஷஸனுக்கும் இல்லை. யுத்தத்தில் இவன் எதிரில் நின்று கணக்கில்லாத தே3வர்கள், தா3னவர்கள், யக்ஷர்கள், பு4ஜங்க3ங்கள், ராக்ஷஸர்கள், க3ந்த4ர்வ, வித்3யாதர , கின்னரர்கள், தோற்று ஆயிரக் கணக்கில் அழிந்திருக்கின்றனர். சூலம் ஏந்தியவனாக, விரூபாக்ஷனாக, இந்த கும்பகர்ணனின் பலத்தைப் பர்ர்த்து இவன் காலனே தான் என்று மோகம் அடைந்த மூவுலகத்து வீரர்களும், இவனைக் கொல்ல முடியாமல் தோற்று ஓடினர். இயற்கையிலேயே வீரன். மற்ற ராக்ஷஸ ராஜாக்களுக்கு பலம் வரதானம் மூலம் கிடைத்தது. பிறந்த உடனேயே பசியால் வருந்தியவனாக ஆயிரக் கணக்கான ஜீவ ஜந்துக்களை விழுங்கி விட்டான். இப்படி இவன் கிடைத்ததையெல்லாம் வாயில் போட ஆரம்பித்ததும், ஜனங்கள் நடுங்கினர். இந்திரனை சரணடைந்தார்கள். வஜ்ரத்தை ஆயுதமாக உடைய இந்திரன் தன் வஜ்ரத்தால் கும்பகர்ணனை அடித்து விட்டான். வஜ்ரத்தின் அடியைத் தாங்க மாட்டாமல், கும்பகர்ணன் பலமாக அலறி விட்டான். அந்த அலறலில் பூமி ஆடியது. தன்னை அடித்த வாஸவனை கும்பகர்ணன், கோபத்துடன் ஐராவதத்தின் தந்தத்தையே பிடுங்கி ஒரு குத்து விட்டான். இந்த அடியைத் தாங்க மாட்டாமல் இந்திரன் வெல வெலத்துப் போனான். இதன் பின் தேவ, ப்ரும்ம, ரிஷி, தானவர்கள் இவனால் பெரிதும் துன்புறுத்தப் பட்டனர். தன் பிரஜைகளுடன் இந்திரன் ஸ்வயம்பூவைச் சரணடைந்தான். கும்பகர்ணன். துன்புறுத்துவதை அவரிடம் தெரிவித்தார்கள். பிரஜைகளை விழுங்குவதையும், தேவர்களை ஒடுக்குவதையும் சொன்னார்கள். ஆசிரமங்களை இடையூறு செய்து அழிப்பதையும், பிறன் மனைவிகளை அபகரிப்பதையும் விவரித்தனர். இப்படி இவன் பிரஜைகளை விழுங்குவதை தொடர்ந்து செய்தால். சில நாட்களில் உலகில் எதுவுமே இல்லாமல் பூமியே சூன்யமாகி விடும். சர்வ லோக பிதாமகரான ப்ரும்மா ராக்ஷஸர்களை வரவழைத்து கும்பகர்ணனை கண்டார். கும்ப கர்ணனைக் கண்ட ப்ரும்மா ப்ரஜாபதியும் ஆடிப் போய் விட்டார். சமாளித்துக் கொண்டு, புலஸ்திய குலத்தில் பிறந்தவனேஸ்ரீ நீ உலகை அழிக்கவே பிறந்தவன் என்று தோன்றுகிறது. நிச்சயம் அது தான் நடக்கப் போகிறது. அதனால் இன்று முதல் நீ இறந்தவன் போல தூங்குவாய். ப்ரும்ம சாபத்தால் அந்த நிமிஷமே அவர் முன் வேரருந்த மரமாகச் சாய்ந்தான்.
(கும்பகர்ணனுக்கு ப்ரஜாபதி வரம் கொடுக்கும் முன், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, சரஸ்வதி தேவி, அவன் நாக்கில் இருந்து தேவ தேவனேஸ்ரீ பல வருஷ காலம் தூங்க விரும்புகிறேன். என்று வேண்டியதாகவும், அப்படியே ஆகட்டும் என்று ப்ரும்மா வரம் தந்ததாகவும், உத்தர காண்டத்தின் பத்தாவது அத்தியாயத்தில் சொல்லப் பட்டுள்ளது).
இதனால் பரபரப்படைந்த ராவணன் ப்ரும்மாவிடம் சென்றான். பொன் விளையும் மரத்தை வளர்த்து, விளைந்து பலன் தரும் காலத்தில் வெட்டிச் சாய்த்தது போல இருக்கிறது. ப்ரஜாபதே தன் பேரனை இவ்வாறு சபித்தது என்ன நியாயம்? உங்கள் வாக்கும் பொய்யாகாது. இவன் கண்டிப்பாக தூங்கத்தான் போகிறான். ஒரு கால வரையறை கொடுங்கள். இவன் தூங்கவும், விழித்திருக்கவும் கால அளவு கொடுங்கள். ராவணன் சொன்னதைக் கேட்டு ஸ்வயம்பூ ப்ரும்மா சொன்னார். இவன் ஆறு மாதம் தூங்கி, ஒரு நாள் விழித்திருப்பான். அந்த ஒரு நாளில் பூமியில் சஞ்சரித்து பசியுடன், வாய் திறந்தபடி, நெருப்பு விழுங்குவது போல உலகில் உள்ள ஜீவ ஜந்துக்களை விழுங்குவான். அக்னி கோபம் கொண்டது போல தகிப்பான். ராவண ராஜா, தற்சமயம் சங்கடத்தில் இருப்பதால், கும்பகர்ணனை எழுப்பி இருக்கிறான். ராமா, உங்கள் பராக்ரமத்தையறிந்து ராவணன் பயந்து விட்டான். இதோ, பாருங்கள், வீரர்கள் தங்கும் பாசறையிலிருந்து வந்தவன், வானரங்களை மிகுந்த கோபத்துடன் விரட்டிக் கொண்டு, கையில் அகப்பட்டதை விழுங்கிக் கொண்டு ஓடி வருகிறான். இவனை எதிரில் கண்டே வானரங்கள் அலறுகின்றன. எதிரில் நின்று போர் செய்வதாவது. அவர்களைப் பார்த்து, இது ஒரு யந்திரம் போலத் தான், பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள். விபீஷணன் விவரித்ததைக் கேட்டு ராமரும், சேனாபதியான நீலனை அழைத்து, சைன்யங்களை அழைத்து வியூஹம் அமைத்து நின்று கொள்ளுங்கள். வாசல்களில், மாளிகைகளில் முற்றுகையை தொடர்ந்து கற்களையும், மரக் கிளைகளையும், பாறைகளையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா வானரங்களும் ஆயுத பாணிகளாகவே நிற்கட்டும். ராமரின் கட்டளையை ஏற்று, நீலன் அதை அப்படியே நிறைவேற்றச் சென்றான். பின் க3வாக்ஷன், சரப4ன், ஹனுமான், அங்க3த3ன் முதலானோர், தங்கள் மலை போன்ற சரீரத்துக்கு சமமான பெரிய மலையில் கிடந்த கற்களைத் தூக்கிக் கொண்டு கோட்டை வாசலை நெருங்கினர். ராமரின் வார்த்தையால், மனோ பலம் பெற்றவர்களாக, கால்களால் பூமி அதிர நடந்து கூட்டமாகச் சென்றனர். இந்த வானரங்களின் சேனை, உக்ரமாக முன்னேறி சமுத்திரம் போல லங்கையை நோக்கிச் சென்றது. அனைவரும் கைகளில், பாறையோ, மரக்கிளையோ தற்காப்புக்காக வைத்துக் கொண்டிருந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கும்ப4கர்ண வ்ருத்த கத2னம் என்ற அறுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 62 (469) ராவணாப்4யர்த்தனா (ராவணனின் வேண்டுகோள்)
ராஜ சார்தூலம் போன்ற கம்பீரமான கும்பகர்ணனும், தூக்கம் கலையாமலேயே, லக்ஷ்மீகரமாக விளங்கிய ராஜ மார்கத்தில், தன் கம்பீரமும் விக்ரமும் வெளிப்பட நின்றான். பல ராக்ஷஸர்கள் அவனைச் சூழ்ந்து உடன் வந்தனர். வீடுகளிலிருந்து புஷ்பமாரி பொழிந்து பிரஜைகள் வாழ்த்து தெரிவிக்க, நடந்து சென்றான். ராக்ஷஸேந்திரனின் மாளிகை, பொன் வேய்ந்த ஜன்னல்களும், சூரியனின் ஒளி போல பிரகாசமாக உயர்ந்து நின்ற அழகிய கட்டிடம், வானத்தில் சூரியனுடன் முட்டுவது போல நின்ற அந்த ராக்ஷஸாதிபதியின் மாளிகையின் உள்ளே நுழைந்தான். வெகு தூரத்திலிருந்தே தன் தமையன் ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டான். ஸ்வயம்பூ, இந்திரனுடைய சபையில் நுழைவது போல அந்த மாளிகையின் உள்ளே நுழைந்தான். பூமி அதிர தன் கால்களால் வேகமாக நடந்து வந்த கும்பகர்ணன், ராக்ஷஸ கணங்கள் சூழ தமையனின் மாளிகையில் நுழைந்தான். ஒவ்வொரு அறையாக கடந்து சென்று தமையனின் வீட்டில் புஷ்பக விமானத்தில் மனம் வாடி அமர்ந்திருக்கும் குருவான (பெரியவனான) சகோதரனைக் கண்டான். கும்பகர்ணன் வந்து விட்டதைக் கண்டு மகிழ்ச்சியுடன் ராவணன் எழுந்து வந்து சகோதரனை வரவேற்று, அருகில் அமர்த்திக் கொண்டான். கும்பகர்ணன், தமையனின் காலில் விழுந்து வணங்கி விட்டு என்ன நடந்தது என்றும் வினவினான். ராவணன், வணங்கிய கும்பகர்ணனை தூக்கி அணைத்துக் கொண்டான். சகோதரன் அணைத்து தன்னிடம் காட்டிய அன்பை உணர்ந்து, கும்பகர்ணன், ஆசனத்தில் அவனருகில் அமர்ந்தான். பின், கண்கள் சிவக்க ராஜன், என்னை ஏன் கட்டாயமாக எழுப்பினீர்கள்? சொல்லுங்கள். யாரிடம் உங்களுக்கு பயம்? யார் இன்று உயிரிழந்து சடலமாக ஆகப் போகிறான். இப்படி கோபத்துடன் பேசும் சகோதரனைப் பார்த்து ராவணன் சற்று கண்கள் விரிய பதில் சொன்னான். மகா பலசாலியே, இன்று உன் வாழ்வில் முக்யமான நாள். தூங்கிக் கொண்டு சுகமாகவே இருந்து விட்ட நீ, ராமனால் எனக்கு எற்பட்டுள்ள ஆபத்தை அறிய மாட்டாய். இதோ இந்த தசரத ராமன், சுக்ரீவனுடன் சேர்ந்து கொண்டு, தன் படையுடன் சமுத்திரத்தைக் கடந்து வந்து, நம் படையை நெருக்குகிறான். கஷ்டகாலம். இந்த லங்கையின் வனங்களையும், உப வனங்களையும் பார். ஸேதுவின் மூலம் சுலபமாக வந்து இந்த வானரங்கள், மற்றொரு சமுத்திரம் போல லங்கையை சூழ்ந்து கொண்டு விட்டனர். ராக்ஷஸர்களில் முக்யமாக சொல்லக் கூடிய பலரை அழித்து விட்டனர். இவ்வளவு யுத்தம் நடந்து வானர சைன்யத்தில் சற்று கூட குறைந்ததாகவே தெரியவில்லை. இதற்கு முன்பும் நாம் வாரனர்களை வெற்றி கொண்டதில்லை. மகா பலசாலியே, இப்படி ஒரு ஆபத்து சூழ்ந்து நிற்கிறது. காப்பாற்று. இவர்களை இன்று ஒழித்துக் கட்டு. அது தான் காரணம் இன்று உன்னை எழுப்பச் செய்தேன். இதனால் பொக்கிஷமும் பெருமளவு குறைந்து விட்டது. இந்த லங்கையை காப்பாற்று. இதில் இப்பொழுது இருப்பதெல்லாம் பாலர்களும், வயது முதிர்ந்தவர்களுமே. உன் சகோதரனுக்காக, மகா பாஹோ, மிகக் கடினமான இந்த செயலை செய். இது வரை நான் இது போல எதுவுமே உன்னிடம் பேசியதில்லை. உன்னிடத்தில் எனக்கு நல்ல மதிப்பும், அன்பும் உண்டு. தேவாசுர யுத்தங்களில், பலமுறை ராக்ஷஸ வீரனேஸ்ரீ அணி வகுத்து நின்று, படையுடன் தேவர்களை ஜயித்திருக்கிறாய். அசுரர்களும் ஜயிக்கப் பட்டுள்ளனர். பீம பராக்ரமனே (பயங்கரமான ஆற்றல் படைத்தவனே) இவையனைத்தையும் திரும்ப செய். எல்லா ஜீவ ஜந்துக்களிடமும் உனக்கு சமமாக எவருமே இருந்ததில்லை. எனக்கு பிரியமானதும், ஹிதமானதுமான இந்த காரியத்தைச் செய். உத்தமமான செயல் இது. ரணத்தில் பிரியமானவனே, போரை விரும்புவனே, பந்துக்களிடம் பாசம் உடையவன் நீ. உன் தேஜஸால் கூட்டத்தோடு இந்த எதிரிகள் படையை த்வம்சம் செய். சரத் காலத்தில் காற்று உபவனத்தில் நாசம் விளைவிப்பது போல இந்த எதிரிகளின் படையில் நாசம் ஏற்படச் செய்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவணாப்யர்த்தனா என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 63 (470) கும்பகர்ணானுசோக: (கும்பகர்ணனின் வருத்தம்)
ராக்ஷஸ ராஜா, அவன் இயல்புக்கு சற்றும் பொருத்தமில்லாமல், வருந்தி புலம்புவதைக் கேட்டு, கும்பகர்ணன் பலமாக சிரித்தான். பதில் சொன்னான். முன்பு நாம் மந்த்ராலோசனை செய்த பொழுது, எதை குற்றம், தோஷம் என்று விவாதித்தோமோ, அது தான் இப்பொழுது உன் முன் வந்து நிற்கிறது. உன் ஹிதத்தில் நாட்டம் உள்ள எல்லோரும் சொன்னோம். உன் பாப காரியத்தின் பலன் சீக்கிரமே வந்து விட்டது போலும். தவறான செயலை செய்பவர்கள், மலைச் சரிவில் கால் பாவாமல் விழுவது போல, மகாராஜனே, முதலில் யோசிக்காமல் இந்த காரியத்தைச் செய்தாய். உன் வீர்யத்தில் கர்வம் கொண்டு பின் விளைவுகளை யோசிக்கவில்லை. ஐஸ்வர்யம் உள்ளவன், முன் செய்ய வேண்டியதை பின்னாலும், பின்னால் செய்ய வேண்டியதை முன்னாலும் செய்தால், அவனை விவரம் அறிந்தவனாக, நல்லது கெட்டதை தெரிந்தவனாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. விபரீதமாக, தேச காலத்துக்கு பொருந்தாத, தன் செயல்களால் தாங்களே வருந்துவார்கள். ஹவிஸ், புலன்களை அடக்கி நியமத்துடன் இல்லாதவர்களுக்கு கொடுப்பது வீண் என்று சொல்வது போல, தன் செயல்களில் மூன்று விதமான, குறைவு, நிறைவு, சமமான நிலை என்ற சூழ் நிலைகளிலும், ஐந்து வித யோகங்கள் (செயலை ஆரம்பிக்கும் உபாயம், மனித, பொருள் சம்பத்துக்கள், சக்திகள், தேச கால விபாகங்கள், வரக் கூடிய ஆபத்துக்கள், கார்ய சித்தி என்பவை) இவற்றை ஆராய்ந்து, மந்திரிகள் யோசித்து சொல்ல அவகாசம் அளித்து, சபையின் கருத்தைக் கேட்டு நடப்பவன் ராஜா. எந்த அரசன், தன் வரவை உணர்ந்து, காலம் அறிந்து தன் மந்திரிகளையும் தட்டி எழுப்பி, புத்தி மதியாலும், நட்புணர்வோடும், நெருங்கியவனாக, தர்மம், அர்த்தம், காமம் இவற்றையும் குறைவின்றி அனுபவிக்கிறானோ, அந்த அரசன் தான் இரட்டை இரட்டையாக சொல்லப் படும் மூன்று நலன்களைப் பெறுகிறான். இந்த மூன்றிலும் எது உயர்ந்தது என்று உனக்குத் தெரிந்திருந்தும் ஏன் கவனமாக இல்லை. ராஜவாக இருந்தாலும், அவனைச் சேர்ந்தவர்களும், நிறைய கற்றறிந்தவர்களாக இருந்தும் என்ன பயன்? நிறைய தானம் செய்தல், சமாதானம், பேதம், காலத்தில் தன் ஆற்றலைக் காட்டுதல், யோகம் இவை தவிர (நயானயம்) நியாயம், அநியாயங்கள், சரியான காலத்தில் மந்திரிகளுடன் கலந்தாலோசித்து தர்மார்த்த காமங்களை உணர்ந்து அனுபவிப்பவன் வாழ்க்கையில் இது போல கஷ்டங்கள் வரவே வராது. அது போல உள்ளவனே ஆத்மவான். சுய கௌரவம் உடையவன். மந்திரிகளுடன், விஷயம் அறிந்தவர்களிடம் கலந்து ஆலோசித்து, ஒரு செயலில் நன்மை, தீமைகள், பின் விளைவுகள் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடஎது என்று முன் கூட்டியே தெரிந்து கொண்டு செய்பவன், என்றும் வாழ்கிறான். சாஸ்திர அர்த்தங்களை தெரிந்து கொள்ளாமல் மனிதர்கள், பசுக்கள் போல் புத்தியுடன், வெட்டிப் பேச்சாக, என்றும் பேசும் ஆவலுடன் மட்டும் மந்த்ராலோசனைகளில் பேசுகிறார்களே, விவரம், சாஸ்திரம் அறியாத இவர்கள் பேச்சைக் கேட்டு, பயனற்ற இவர்கள் சொல்லை மதித்து எதுவுமே செய்யக் கூடாது. நிறைய பொருளை விரும்பும் இவர்களின் பேச்சு, ஹிதம் நன்மை போலத் தோற்றம் தரும். இவர்கள் அர்த்த சாஸ்திரம் அறியாதவர்களாக இருந்தால், தங்கள் அறியாமையை மறைக்க அடித்து பேசுவார்கள். தீமை என்பதையே உணராமல் இவர்கள் வாக்கு வன்மையால் மயக்கும் விதமாக பேசுகிறார்களே, இவர்களை அடையாளம் கண்டு கொண்டு, முதலில் மந்த்ராலோசனை சபையிலிருந்து நீக்கி விட வேண்டும். இவர்களால் காரியம் கெடுவது தான் அதிகமாக இருக்கும். இவர்கள் சமயங்களில் சத்ருக்களுடன் சேர்ந்து கொண்டு, தன் யஜமானனை கவிழ்க்கவும் செய்வார்கள். இவர்கள் புத்திமான்களாக இருந்து விட்டாலோ, கேட்கவே வேண்டாம். விபரீதமான காரியங்களை செய்து விடுவார்கள். அரசன், இது போன்ற நண்பன் அல்லாத, நண்பன் போல தோற்றம் அளிக்கும் நபர்களை இனம் கண்டு கொள்ள வேண்டியது மிக அவசியம். கூடியிருக்கும் மந்திரி சபையில் இவர்களது செயல், நடவடிக்கைகளே காட்டிக் கொடுத்து விடும். உடனே மந்திரி சபையிலிருந்து வெளியேற்றி விடுவதே அரசனுக்கு நன்மை பயக்கும் செயலாகும். திடுமென ஒரு செயலை அவசரமாக செய்வார்கள். சபலமான செயல்களை உடையவர்கள், க்ரௌஞ்ச மலையின் இடைவெளியைத் தெரிந்து கொண்டு பறவைகள் வசிப்பது போல (க்ரௌஞ்ச மலை ஸ்கந்தனால் பிளக்கப் பட்டது. இதில் பறவைகள் அதுவரை கூடு கட்ட இயலவில்லை) அது போல சட்டத்தின் ஓட்டைகளைத் தெரிந்து கொண்டு உள்ளே நுழைந்து கெடுதல் விளைவிப்பது அல்லது தன் காரியத்தை சாதித்துக் கொள்வது போன்ற செயல்கள், இவை காட்டிக் கொடுத்து விடும். இந்த உடன் இருந்து குழி பறிக்கும் சத்ருக்களை தெரிந்து கொள்ளாதவன், அனர்த்தங்களையே அடைவான். தன் நிலையிலிருந்து தள்ளப் படுவான். இவையனைத்தையும் முன்னமே உனக்குச் சொன்னேன். சகோதரனே, எது நன்மை தரக் கூடியதோ அதை செய்வோம். யோசித்து நீ என்ன விரும்புகிறாயோ, அதையே செய்வோம்.
கும்பகர்ணன் பேசியதைக் கேட்டு தசக்ரீவன் புருவத்தை நெரித்து, கோபத்துடன் பதில் சொன்னான். மதிப்புக்குரிய குருவாக உன்னை நினைத்துக் கொண்டு ஆசாரிய ஸ்தானத்தில் நிறுத்திக் கொண்டு எனக்கு உபதேசம் செய்கிறாயா? எதற்கு இவ்வளவு வார்த்தைகளை வீணாக்குகிறாய்? இப்பொழுது நடக்கவேண்டியதை பார்ப்போம். பிரமையினாலோ, புத்தி தடுமாற்றத்தினாலோ, பலம், ஆற்றல் இவற்றில் கொண்ட நம்பிக்கையாலோ, செய்து விட்டதை திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறோம். வீண் க3தை4 பேசுவதாகத் தான் முடியும். புதிதாக எதையும் நீ சொல்லவில்லையே. இந்த சமயம் நாம் செய்ய வேண்டியது என்ன என்று யோசிப்போம். போனது போனதே. அதை நினைத்து வருந்தி என்ன ஆகப் போகிறது? என்னுடைய நியாயமற்ற இந்த செயலை, கவனக் குறைவால் நான் செய்த தவற்றை, உன் பலத்தால், ஆற்றலால் சமனாக்கு. என்னிடத்து ஸ்னேகம் இருந்தாலோ, உன் ஆற்றலில் நம்பிக்கை இருந்தாலோ, இதைச் செய். மனதில் அன்புடையவனாக இருந்தால் இதைச் செய். தீனனாக, பொருள் இழந்து கஷ்டத்தில் இருக்கும் உறவினனிடம் எவன் உதவி செய்கிறானோ, நம்பிக்கைத் தரும் தூதனாக நிற்கிறானோ, அவன் தான் உறவு, சுற்றத்தான். இவ்வாறு கடுமையாக பேசும் ராவணனிடம், இவன் கோபத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டு, கும்பகர்ணன் கவனமாக பதில் சொன்னான். தன் புலன்களின் வழி சென்று இப்பொழுது மிக மோசமான நிலையில் இருக்கும் அண்ணனை, பரிதாபத்துடன் உன்னித்துப் பார்த்து சமாதானமாக பேச ஆரம்பித்தான். கும்பகர்ணன் மெதுவாக பேசினான்.
ராக்ஷஸேந்திரா, போதும். கவலைப் படாதே. கோபத்தை விலக்கி விட்டு நிம்மதியாக இரு. நான் உயிருடன் இருக்கும் வரை நீ எதற்கும் கலங்க வேண்டாம். யாரை நினைத்து நீ தவிக்கிறாயோ, அவனை நான் இன்றே நாசம் செய்கிறேன். நீ எந்த நிலையில் இருந்தாலும் நான் உனக்கு நன்மையைத் தான் செய்வேன். உடன்பிறந்தவன் என்ற உரிமையுடன், இது வரை எனக்குத் தோன்றியதை எல்லாம் சொன்னேன். உன்னிடம் அன்புள்ளவன் ஆதலால், இது போன்ற சமயங்களில் யாரானாலும் சொல்லக் கூடியதைத் தான் சொன்னேன். நெருங்கிய பந்துவாக செய்ய வேண்டியதை, ரண பூமியில் நிச்சயம் செய்வேன். இன்று யுத்த களத்தில் தலைமையில் நான் செல்வதையும், நான் போரிடுவதையும் பார். ஹரிவாஹிணி, வானர சேனை பயந்து ஓடுவதைக் காணப் போகிறாய். ராமனும் சகோதரன் லக்ஷ்மணனும் போரில் மடிந்து விழுந்தபின் இவர்கள் என்ன செய்வார்கள். யுத்த பூமியிலிருந்து சீதையின் முன்னால் நான் ராமனது துண்டித்த தலையைக் கொண்டு வந்து வைப்பேன். நீ சந்தோஷமாக இரு, அண்ணா. இதைக் கண்டு சீதை துக்கத்தை அடையட்டும். யார் யாருடைய சொந்த ப3ந்த4ங்கள் இந்த யுத்தத்தில் வருந்துகிறார்களோ, அந்த ராக்ஷஸர்கள் இன்று நான் சமர பூமியில் வதைக்கப் போகும் ராமனைப் பார்த்து மன ஆறுதல் அடையட்டும். இவர்கள் கண்ணீரை இன்று நான் துடைப்பேன். உறவினர்களை இழந்து சோக சாகரத்தில் மூழ்கி இருக்கும் உறவினர்கள் முகம் மலரச் செய்வேன். சூரியனும் பிரகாசமாக இருக்க, மலையளவு பெரிய மேகம் போன்று சஞ்சரிக்கும் சுக்ரீவன் என்ற வானரத் தலைவனை தூள் தூளாக சிதறச் செய்கிறேன். ராகவனான, தாசரதியைக் கொல்லத் துடிக்கும் என் போன்ற ராக்ஷஸ வீரர்கள் உன்னை பாதுகாக்க இருக்கும் பொழுது நீ ஏன் வருந்துகிறாய்? என்னைக் கொன்று விட்டுத் தான் (அல்லது) கொன்றால் தான், ராமன் உன்னிடம் வருவான், வர முடியும். ராக்ஷஸாதிபா, அதனால் மனதில் கவலைக்கு இடமே கொடாதே. இப்போழுது கூட எனக்கு கட்டளையிடு, பரந்தபனே, இன்று வேறு யாரையும் யுத்த பூமிக்கு அனுப்ப வேண்டாம். உன் சத்ருக்களை நான் ஒருவனே கலக்கி விடுவேன். இந்திரனேயானாலும், யமனோ, அக்னி, மாருதன் இருவரும் சேர்ந்து வந்தாலோ, குபேர, வருணர்களானாலும், நான் அவர்களை ஒரு கை பார்த்து விட்டு வருவேன். கிரி போன்ற என் சரீரமும், என் கை சூலமும், கூர்மையான பற்களையும் பார்த்து, யுத்த பூமியில் இந்திரனே இருந்தாலும் நடுங்குவான். சந்தேகமேயில்லை. என் கையில் ஆயுதம் இன்றி, மண்ணில் வேகமாக நடக்கும் பொழுது உயிர் வாழ ஆசைப்படும் எவன் தான் எனக்கு முன் வருவான்? இந்த சக்தியோ, க3தை4யோ, அம்புகளோ எதுவுமே எனக்குத் தேவையில்லை. என் கைகளாலேயே அந்த இந்திரனையும் வதைத்து விடுவேன். என் முஷ்டியின் அடியை அந்த ராகவன் தாங்குவானோ, இல்லையோ, அப்படி முஷ்டியை எதிர்த்து நின்றால், என் அம்புகள் அவன் ரத்தத்தைக் குடிக்கும். ராஜன், நான் இருக்கும் பொழுது ஏன் கவலைப் படுகிறாய்? அவஸ்தை படுகிறாய்? சத்ருக்களை அழிக்க இதோ நான் கிளம்பி விட்டேன். ராமனிடத்தில் கொண்டுள்ள பயத்தை விடு ராஜன், இதோ நான் யுத்தத்தில் அவனைக் கொன்று வருவேன். ராம, லக்ஷ்மணர்களையும், சுக்ரீவனையும், மகா பலசாலியான ஹனுமானையும், இந்த லங்கையை எரித்தவன் அவன் தானே, அவனையும் மற்ற வானரங்களையும் யுத்த பூமியில் திரியும் யாராக இருந்தாலும், கொன்று விடுகிறேன். அசாதாரணமான கீர்த்தியை உனக்கு அளிக்க விரும்புகிறேன். ராஜன், உனக்கு யாரிடம் பயம்? இந்திரனிடமா? ஸ்வயம்பூவான ப்ரும்மாவிடமா? நான் கோபத்துடன் யுத்த பூமியில் நிற்கும் பொழுது இந்த தேவர்கள் கூட்டம் நிம்மதியாக படுத்து தூங்கி விடுவார்களா என்ன? யமனையும் அடக்கி விடுவேன். நெருப்பை விழுங்கி விடுவேன். சூரியனையே கீழே விழச் செய்வேன். நக்ஷத்திரங்களுடன் பூமியில் விழுந்து கிடப்பதைக் காண்பாய். இந்திரனை வதைப்பேன். வருணாலயம் எனும் சமுத்திரத்தைக் குடித்து தீர்த்து விடுவேன். பர்வதங்களை பொடிப் பொடியாக்குவேன். பூமியை கிழித்து விடுவேன். இன்று வெகு காலமாக உறங்கிக் கொண்டிருந்த கும்பகர்ணனின் ஆற்றலை உலகத்தார் காணட்டும். இந்த மூன்று உலகும் என் ஆகாரத்திற்குப் போதாது என்பது தெரிந்தது தானே. தாசரதியை வதம் செய்து நீ சுக போகத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவன், வீணாக கவலையில் மூழ்கியுள்ள உன்னை பழையபடி குதூகலமாக்க, நான் போகிறேன். ராமனையும், அவன் தம்பி லக்ஷ்மணனையும் சேர்த்து போரில் வீழ்த்தி வானர படைத் தலைவர்களை சாப்பிட்டு விடுகிறேன். நீ மகிழ்ச்சியாக ரமித்துக் கொண்டு இரு. வேண்டிய அளவு அக்ர்ய வாருணீ- ஒரு வகை மது குடித்து மகிழ்வாய். எதைச் செய்ய விரும்புகிறாயோ, செய். இந்த ஜ்வரம், பயம் உன்னை விட்டு விலகட்டும். என்னால் இன்று ராமன் யம லோகத்துக்கு அனுப்பப் பட்ட பின், வெகு காலத்திற்கு சீதா உன் வசத்திலேயே இருப்பாள், கவலைப் படாதே.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கும்ப4கர்ணானுசோகோ என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 64 (471) சீதா ப்ரலோப4னோபாய:(சீதையை ஆசை காட்டி இணங்கச் செய்ய உபாயம் செய்தல்)
பெரிய உடல் கொண்ட கும்பகர்ணன் சொன்னதைக் கேட்டு, மகோதரன் பதில் சொன்னான். கும்பகர்ணா, நீ நல்ல குலத்தில் பிறந்தவன். சுய கௌரவமும், பிடிவாதமும் உடையவன். ஆனால் நீ நிலைமையை சரியாக உணர்ந்து கொள்ளாமல், பழைய நினைவில் இருக்கிறாய். இது வரை நடந்ததும், உனக்கு முழுதும் தெரியாது. கும்பகர்ணா, அரசனுக்கு நியாய, அநியாயங்கள் தெரியவில்லை. நீ குழந்தையாக இருந்ததிலிருந்தே நினைத்ததை சாதிப்பாய். அதே போல வெட்டிப் பேச்சு பேசுகிறாய். இடம், புத்தி, இதுவரை ஏற்பட்டுள்ள நஷ்டங்கள், தேச காலங்கள் பற்றிய அறிவு இவையனைத்தும் உள்ள நம் அரசனே, தனக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை வரவழைத்துக் கொண்டிருக்கிறான். ப்ராக்ருத புத்தியுடைய சாதாரண ஜனங்கள் போல, பெரியவர்களை வணங்காத ஒருவனால் செய்யப் படும் காரியத்தை பலமும், நல்ல புத்தியும் உடைய எவனாவது செய்வானா? தர்ம, அர்த்த, காமங்கள் இவற்றை நீ விவரித்தாயே, அதை பிரித்து அறிந்து கொள்ளவும், உன் ஸ்வபாவத்தில் இடம் இல்லை. அவரவர் கர்ம பலன் தான் விரும்பிச் செய்யும் காரியங்களில் வெளிப்படுகிறது. பாபத்தை செய்பவன் நன்மை அடைவதும், அவன் முன் செய்த வினைப்பயனே. தர்மமோ, அர்த்தமோ, மற்றவையோ எதுவுமே நன்மை தருவதாக இல்லை. அத4ர்ம, அனர்த்தம் இவை, எதிர்க் காற்றுப் போல நம்மைத் தள்ளிவிடுகிறது. இவ்வுலக, பரலோக பலன்களை அவன் கர்மமே நிர்ணயிக்கிறது. கர்மம் ஒன்றையே ஆசிரயித்தவன், அதன் பலனைத்தான் அடைவான். இவையனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு செயலில் இறங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். சத்ருவின் பலத்தையும் நாம் அறிந்து கொண்டுள்ளோம். இதில் மறைக்க என்ன இருக்கிறது? இந்த யுத்தத்திற்கு காரணம் என்ன என்பதும் தங்களுக்குத் தெரிந்ததே. இருந்தும் தவறான அந்த செயலையும் நாம் சற்றும், எதிர்பாராமல் நடந்ததையும் சொல்கிறேன், கேள். நம்ப முடியாத அந்த நிகழ்ச்சியைக் கேள். ஜனஸ்தானத்தில் ஒருவனாக, ராக்ஷஸர்களை அழித்தான். அங்குள்ள ராக்ஷஸர்கள் இன்னமும் கண்களில் பயம் வெளிப்படையாகத் தெரிய நடமாடுகிறார்கள். தூங்கும் சிங்கம் போன்ற தசரதாத்மஜனான ராமனை, எழுப்ப பார்க்கிறாய். சாக்ஷாத் காலனே போல தாங்க முடியாத ஜ்வலிக்கும் ராமனை, அதுவும் கோபத்துடன் யுத்த முனையில் யாரால் தான் எதிர் கொண்டு நிற்க முடியும்? இந்த எதிரியின் முன் தனியாக போவது எனக்கு சம்மதமாக இல்லை. இந்த சத்ருவை அடக்குவதும், தாக்குவதும் சந்தேகம் தான். த4னம் நிறைந்தவனை, செல்வமே இல்லாத ஒரு ஏழை தனக்கு எதிரியாக நினைப்பது போல இருக்கிறது. இதில் முனைந்து இன்னமும் செயலில் இறங்கினால் உயிரைத் தியாகம் செய்ய முனைவது போலத்தான். சந்தேகமேயில்லை. ராக்ஷஸோத்தமா, மனிதர்களில் இவனுக்கு சமமானவன் இல்லை. இந்திர, வைவஸ்வதர்கள் சேர்ந்து ஒருவனாக வந்தது போல வந்து நிற்கிறான். இவனுடன் மோத எப்படி தயாராகிறாய்? வெற்றியடைவோம் என்று எப்படி எண்ணுகிறாய்? இவ்வாறு கும்பகர்ணனுக்கு எடுத்துச் சொல்லி விட்டு, மகோதரன், சபையில் மற்ற ராக்ஷஸ வீரர்களுக்கு மத்தியில் ராவணனைப் பார்த்துச் சொன்னான். ராக்ஷஸேஸ்வரா, கேள். சீதை உன் வசம் ஆவாள் என்று எப்படி எதிர் பார்க்கிறாய்? அப்படியும் சீதையை அடைந்து தான் என்ன பயன்? வீணாக வெறும் வாய்ச் சொற்களால் என்ன கிடைக்கப் போகிறது. நான் ஒரு வழி சொல்கிறேன். உனக்கு சம்மதமானால் ஏற்றுக் கொள். நான், த்விஜிஹ்வன், ஸம்ஹராதி, கும்பகர்ணன், விதர்தனன் நால்வருமாக சேர்ந்து ராகவனைத் தாக்குகிறோம் என்று அறிவித்து விடு. நாங்கள் சென்று, ராமனுடன் போர் தொடுக்கிறோம்.. ஜெயித்து விட்டால் நான் சொல்லப் போகும் உபாயம் எதுவும் தேவையில்லை. நம் சத்ரு உயிருடன் இருந்தால், அப்பொழுது இந்த உபாயத்தைக் கொண்டு உன் விருப்பம் நிறைவேறச் செய்வோம். நாங்கள் யுத்த களத்திலிருந்து நேரே வருவோம். உடல் பூரா ரத்தம் பெருகி ஓட, எங்கள் உடலில் நாங்களாகவே, ராம நாமம் பொறித்த பாணங்களால் குத்திக் கொண்டு, கூர்மையான அந்த பாணங்கள் ராம லக்ஷ்மணர்களோடு சண்டையிட்ட பொழுது உடலில் தைத்ததாகவும் வேறு வழியின்றி ராம லக்ஷ்மணர்களை நாங்கள் விழுங்கி விட்டோம் என்றும் சொல்லியபடி உன் காலில் விழுவோம். தாங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறுவோம். பிறகு, அரசனே, ஊரில் கஜஸ்கந்தனை விட்டு முறை அறைந்து அறிவித்து விடு. ராமன் கொல்லப் பட்டான். லக்ஷ்மணனும் உடன் மடிந்தான். சைன்யம் முழுவதும் நம் வீரர்கள் வசம் ஆகி விட்டன, என்று ஊரெங்கும் முரசு ஒலிக்கச் சொல்லச் செய். மிகவும் மகிழ்ந்தவன் போல உன் வேலையாட்களுக்கும், அவர்கள் பரிவாரங்களுக்கும் நிறைய செல்வமும், பரிசும் பொருட்களும் கிடைக்கச் செய். எல்லோருக்கும் மாலைகளும், நல்ல வஸ்திரங்களும், வீரர்களுக்கு உரிய அங்க ராகங்கள், நல்ல மது வகைகள், வீரர்களுக்கு தர ஏற்பாடு செய். நீயும் மகிழ்ச்சியாக இருப்பது போல வெளியில் காட்டிக் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து குடி. இது பரவி, உலகம் பூராவும் ராக்ஷஸர்கள் ராமனைத் தின்று தீர்த்து விட்டார்கள் என்ற செய்தி பரவி, நம்ப வைத்த பிறகு, நீ ரகசியமாக சீதையை சந்தித்து, சமாதானம் செய்து அவளை தன, தான்யங்கள், மற்ற தேவைகள், ரத்னங்கள் இவைகளை வாரியிறைத்து உன் வசம் செய்து கொள்ள முயற்சி செய். ஆசை காட்டு. பயமும்,. சோகமும் அவளை பலஹீனமாகச் செய்து விட்ட நிலையில் இந்த சந்தர்பத்தில், தன் நாதன் தான் இறந்து விட்டானே என்ற எண்ணத்தில், உன் வசம் விரும்பாவிட்டாலும் வந்து சேருவாள். தன் கணவன் மடிந்து விட்டான் என்று தெரிந்த பின்னும், நிராசையினாலும், ஸ்த்ரீ லகுத்வம் (எளிதில் மயங்கும் பெண் புத்தியாலும்) உன்னைக் கண்டிப்பாக வந்து சேருவாள். அவள், முன்பு சுகமாக வாழ்ந்தவள். வசதிகளுடனேயே பிறந்து, வசதியாகவே வளர்ந்தவள். அப்படிப்பட்ட ஒரு சுகமான வாழ்க்கையை அவளுக்கு நீ அளிக்க முடியும். தேவையில்லாமல் மன வேதனையுடன் வாடிக் கொண்டிருக்கிறாள். உன்னை அடைந்தால் இழந்த சுக வாழ்க்கையை பெற முடியும் என்று தெரிந்தால், கண்டிப்பாக வருவாள். எனக்குத் தெரிந்து இது ஒரு நல்ல நீதி (வழி). ராமனைக் கண்ணால் கண்டாலே அனர்த்தம் தான். இங்கேயே, கற்பனையாக நாமே ஒரு நிகழ்ச்சியைத் தயார் செய்து கொண்டால், யுத்தமே இல்லாமல் நம் பலனை அடையலாம். நமக்கு சைன்யமும் அழியாது. யாருக்கும் சந்தேகமும் வராது. சத்ருக்களை யுத்த பயமின்றி, ஜயித்து, அரசனே, நீ புகழும், புண்யமும், பெரும் செல்வமும், கீர்த்தியையும், வெகு காலம் அனுபவித்துக் கொண்டிருப்பாய்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சீதா ப்ரலோப4னோபாய: என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 65 (472) கும்பகர்ணாபி4ஷேணனம் (கும்பகர்ணன் போர் முனைக்குச் செல்லுதல்)
மகோதரனை அலட்சியப்படுத்தி விட்டு, கும்பகர்ணன், அவனை விலக்கி, தானே தன் சகோதரனான ராவணனிடம் பேசலானான். உன் பயத்தை நான் போக்குகிறேன். ராமனை நான் இன்று இல்லாமல் செய்து விடுகிறேன். சத்ரு பயம் இன்றி நீ சந்தோஷமாக இரு. வீணாக நடக்காத காரியங்களைப் பற்றி பேசி வார்த்தைகளை விரயமாக்காதே. புலம்புவது சூரனாக இருப்பவனுக்கு அழகல்ல. வீண் பேச்சு, நீர் இல்லாத மேகங்கள் காரியமின்றி இடி முழக்கம் செய்வது போல. இன்று காரியம் முடிந்து நான் கர்ஜிப்பதைக் கேள். (மகோதரன் போல செயல் திறன் இன்றி வெறும் வாய்ப் பேச்சால் அலட்டிக் கொள்பவன் அல்ல நான். நீர் நிறைந்த மேகம் இடி இடித்து மழை பொழிவது போல, நான் எதிரிகளை அழித்து விட்டு வந்து சிம்ம நாதம் செய்வேன், கேள். என்பதாக) அரிய செயல்களை பாடு பட்டு செய்து முடித்து விட்டு வந்து அல்லாமல் சூரர்கள் தன் பெருமை பேச மாட்டார்கள். தானும் திருப்தியுற மாட்டார்கள். செயலிழந்து, புத்தியற்ற தன்னை பண்டிதனாக நினைத்துக் கொள்ளும் உன்னைப் போன்றவர்கள் மகோதரா, சொன்ன சொல்லை அரசன் நம்பியதால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறான். உன்னைப் போன்ற பிரியமாக பேசும், வெட்டிப் பொழுது போக்கும், உபயோகமற்ற ஆட்களால் அரசனுக்கு உறு துணையாக அவன் அக்ரமங்களுக்கும் உடன் செல்லும் உன் போன்ற வீரமற்ற கோழைகளால் தான் அரசன் இன்று இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு வருந்துகிறான். லங்கையில் அரசன் மட்டுமே மீதி என்ற நிலைக்கு வந்திருக்கிறோம். நமது பொக்கிஷம் காலி, பெரும் படை அழிந்தது. நண்பனாக ராஜாவின் அருகில் இருந்து, நட்புக்கு சற்றும் பொருத்தமில்லாத தவறான துர் போதனைகளை செய்கிறாய். இதோ, நான் புறப்பட்டு விட்டேன். சத்ருக்களை வென்று வருகிறேன். இது வரை நீங்கள் செய்து வந்த துர் போதனையால் அரசனுக்கு ஏற்பட்ட சரிவை சரி செய்யப் போகிறேன்.
கும்பகர்ணன் இவ்வாறு சொல்லவும், அரசனான ராவணன் பலமாக சிரித்தபடி பதில் சொன்னான். கும்பகர்ணா, இந்த மகோதரன் ராமனிடத்தில் மிகவும் பயந்து விட்டான். நடுங்குகிறான். அதனால் தான் அவனுடன் யுத்தம் செய்ய தயங்குகிறான். மற்றபடி இவன் நல்ல வீரனே. போர்க்கலையை அறிந்தவனே. ஆயினும், கும்பகர்ணா, உன்னைப்போல் வேறு யார் எனக்கு இருக்கிறார்கள்? அன்பு கொண்டவன், பலசாலி, உனக்கு இணை வேறு யார்? கும்பகர்ணா, சத்ருவை வெற்றி கொள்ளப் போ. வெற்றியடைவாய். இது போல பயப்படும் பலரையும் அவர்கள் பயத்திலிருந்து விடுவிக்கத்தான் உன்னை எழுப்பினேன். அரிந்தமா, (சத்ருக்களை அடக்குபவனே) நெருங்கிய உறவினர் தங்கள் அன்பை வெளிப்படுத்த இது தான் தருணம். அதனால் கிளம்பு. சூலத்தை எடுத்துக் கொள். கையில் பாசத்துடன் வரும் அந்தகன் போல வானரங்களையும், ராஜ குமாரர்களையும் விழுங்கி விட்டு வா. அவ்விருவரும் ஆதித்யனுக்கு சமமான தேஜஸ் உடையவர்கள். உன் ரூபத்தைக் கண்டே வானரங்கள், பயந்து அலறிக் கொண்டு ஓடப் போகின்றன. ராம,லக்ஷ்மணர்களுக்கும் அடி வயிற்றில் கலக்கம் உண்டாகும். இவ்வாறு சொல்லி மகாராஜா ராவணன், தானே திரும்பத் தோன்றியது போல, (தன் உயிருக்கு அபயம் கிடைத்தது போல) நம்பிக்கை வரப் பெற்றான். கும்பகர்ணனின் பலம் அறிந்தவன். அவன் பராக்ரமமும் அறிந்தவன். நிச்சயம் வெற்றியுடன் வருவான் என்ற நம்பிக்கைத் தந்த குதூகலத்தால், களங்கமும் நீங்கிய சந்திரன் போல மன அமைதி அடைந்தான். ஒரு கூர்மையான சூலத்தை கையில் எடுத்துக் கொண்டு கும்பகர்ணன் வேகமாக வெளியேறினான்.
பல யுத்தங்களில் சத்ருக்களின் ரத்தத்தைக் குடித்த தன் பழைய சூலத்துடன், இரும்பாலான கத்தி, பொன்னால் ஆன உறையில் புடமிட்ட தங்கம் போல ஜொலிக்க, இந்திரனுடைய அசனி என்ற ஆயுதம் போலவும், வஜ்ரத்துக்கு சமமான கௌரவம் வாய்ந்ததுமான ஆயுதங்களுடன், சிவந்த மாலையுடன், தானே கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல கிளம்பியவன், ராவணனிடம், நான் தனியாகவே போகிறேன், சைன்யம் இங்கேயே நிற்கட்டும் என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான். இன்று அந்த இளைத்து வாடிக் கிடக்கும் வானரங்கள் அனைவரையும் தின்று பசியாறுவேன் என்று சொன்னதைக் கேட்டு, ராவணன் சைன்யம் கூடவே வரட்டும். படையுடனேயே செல். கையில், சூலம் தவிர, உத்கலம், முதலியவற்றையும் எடுத்துக் கொள். வானரங்கள் சாதாரணமானவை அல்ல. வேகமாக செல்லக் கூடியவர்கள், மகத்தான ஆற்றல் உடையவர்கள். எதற்கும் அஞ்சாத கலங்காத நெஞ்சுரம் மிக்கவர்கள். செயல் வீரர்கள். தனியாக போனால், எல்லாமாக சேர்ந்து பற்களாலேயே கடித்துக் குதறி விடும். அதனால் எல்லாவித பாதுகாப்புடனும் கூடிய நம் ராக்ஷஸ படையுடன் செல். ராக்ஷஸர்களுக்குத் துன்பத்தை விளைவிக்கும் எதிரி தரப்பு வீரர்கள் அனைவரையும் மீதி இல்லாமல் நசுக்கி விடு. இதன் பின், ராவணன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து, மணிகளாலான மாலையை கும்பகர்ணனுக்கு அணிவித்து விட்டான். தன் புஜத்தை அலங்கரித்த அங்கதம், அங்குலீ என்று இஷ்டமான ஆபரணங்களை பூட்டி விட்டான். முயல் போன்ற வெண்மையான ஹாரத்தையும் அணிவித்தான். திவ்யமான, வாசனை மிகுந்த மலர் மாலைகளை கழுத்திலும், காதுகளில் குண்டலங்களையும், அணிவித்தான். இவ்வாறாக, ஹார, கேயூர, கங்கணம் என்ற எல்லா வித ஆபரணங்களும் அணிந்து கும்பகர்ணன், பெரிய கர்ணங்களை (காதுகளை) உடையவன், நன்றாக வளர்க்கப்பட்ட அக்னி போன்று காட்சி தந்தான். ஸ்ரோணி சூத்ரம், மேசகம் இவையும் ஒளி வீசின. (ஆபரணங்கள்) அம்ருத மதனத்தின் பொழுது புஜங்கத்தால் கட்டப் பட்டிருந்த மந்தர மலையை ஒத்திருந்தான். இதன் பின் கவசத்தை அணிந்தான். பாரத்தை தாங்க கூடியதும், காற்று கூட புக முடியாத பாதுகாப்பான மின்னலைப் போன்று ஒளி வீசும், தன் தேக காந்தியால் பிரகாசமாக பெரும் மலையில் சந்த்யா கால கிரணங்கள் படர்ந்து கிடப்பது போல தோற்றமளித்தான். கையில் சூலத்தையும் ஏந்தி, மூவுலகத்தையும் அளக்கத் தயாராகி நின்ற நாராயணன் போல நின்றான். தன் சகோதரனை ஆலிங்கணம் செய்து பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்த பின், தலை குனிந்து வணக்கத்துடன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான். போருக்கு கிளம்பியவன், காலில் விழுந்து வணங்கியதும், ராவணன் அவனை தூக்கி ஆசிர்வாதங்கள் செய்து அனுப்பினான். பெருத்த உடலும், ஓங்கிய குரலும், மகா பலசாலியுமான அவனை புகழ்ந்து பேசி ஆசிகள் வழங்கினான். சங்க, துந்துபி கோஷங்களும், ஆயுதம் தாங்கிய போர் வீரர்களின் இரைச்சலும், யானைகளும், குதிரைகளும், ரதங்களும் எழுப்பிய ஓசையால் பெரும் நாதமாக இடி முழக்கமாகக் கேட்க, ரதங்களில், உத்தமமான ரதியான கும்பகர்ணனைத் தொடர்ந்து, சேனையும் அணி வகுத்துச் சென்றது. சர்ப்பங்கள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், குதிரைகள், சிங்க, யானை, பறவைகள் இவை சித்திரங்களாக (அடையாளத்துக்காக) வரையப் பெற்றிருந்த ரதங்கள் அடுத்தடுத்து கிளம்பின. மாளிகைகளின் மேலிருந்து புஷ்பமாரி பொழிந்தனர். அந்த புஷ்பக் குவியலில் மறைந்து போன, கும்பகர்ணன் அதிலிருந்து மீண்டு, கையில் கூர்மையான சூலம், குடைகளுடன், தானவ, தேவ சத்ரு, மதத்துடன், ரத்தத்தைக் குடிக்கும் வெறியுடன் கிளம்பினான்.
கால் நடையாகவும், பல போர் வீரர்கள் கோஷமிட்டபடி உடன் வந்தனர். கண்களை பயங்கரமாக உருட்டி விழித்தபடி, ஸஸ்திரங்களை கையில் ஏந்தியவர்களாக, தொடர்ந்து சென்றனர். ஒரு சிலர் மிகப் பெரிய உருவமும், சிவந்த கண்களுமாக, சூலங்களையும், வாட்களையும், கூர்மையான பரஸ்வதங்களையும் வீசியபடி வந்தனர். பெரிய அகலமான பரிகங்கள், க3தை4கள், முஸலங்கள், தாள ஸ்கந்தங்கள், பெரிய பெரிய க்ஷேபணிகள், எதிர்த்து நிற்க முடியாத அளவு மற்ற ஆயுதங்கள், பயங்கரமாக, கண்ணால் கண்டாலே மயிர் கூச்செரியும் படியாக, கும்பகர்ணனுடன் சென்ற வீரர்கள் கைகளில் இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட வில்களிலிருந்து கிளம்பிய மகாநாதம், அறு நூறுக்கும் மேற்பட்ட மற்ற ஆயுதங்கள், இவற்றுடன் ரௌத்ரனாக, வண்டி சக்கரம் போல சுழலும் தன் பெருவிழிகளுடன், கும்பகர்ணன், திரும்பி தன்னுடன் வந்த வீரர்களைப் பார்த்துச் சொன்னான். இன்று இந்த வானர கூட்டத்தை, நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளாக, கூட்டம் கூட்டமாக என்னிடம் வந்து விழுந்து மடியச் செய்வேன். காட்டில் திரியும் வானரங்களால் என்னை திரும்பி எதுவும் செய்ய முடியாது. இவர்களைப் போன்ற பிறவிகள், புரங்கள், நகரங்கள் இவைகளுக்கு அலங்காரமானவைகள். நம் நகரை முற்றுகையிட்டுள்ள ராகவனும், அவன் சகோதரனும் தான் நம் இலக்கு. அவன் இறந்து விழுந்தால் எல்லாமே விழுந்தது. அவனை யுத்தத்தில் வதைப்பேன். என்று சொல்லிக்கொண்டே, பூமி கிடுகிடுக்கும் விதமாக, பெருத்த ஓங்கிய குரலில் போர் முழக்கம் செய்தான். சமுத்திரம் நடுங்கியது.
இவ்வாறு கும்பகர்ணன் போர் ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்கும் பொழுதே பயங்கரமான துர் நிமித்தங்கள் தெரிந்தன. தீப்பொறிகள் வானை சூழ்ந்தது போலவும், மேகங்கள் கழுதைகள் போலவும், சிவந்த வானமுமாக காணப்பட்டது. சாகரம், மலைகள், வனங்கள் இவை நிறைந்த பூமி நடுங்கியது. குள்ள நரிகள் ஊளையிட்டன. அவைகளின் வாயிலிருந்து நெருப்புத் துண்டங்கள் போல ஏதோ வெளியில் விழுந்தன. பறவைகள் அப்ரதிக்ஷணமாக வட்டமிட்டன. போகும் வழியில் மாலை போல கழுகுகள் பறந்தன. இடது கண்ணும் தோளூம் துடித்தன. சூரியன் ஒளியிழந்து காணப்பட, காற்றும் மந்தமாக வீசியது. சுகத்தை தருவதாக இல்லை. க்ருதாந்தன் எனும் விதி வழி காட்ட நடப்பது போல கும்பகர்ணன் இந்த நிமித்தங்களின் இடையிலும் கலங்காது முன்னேறினான். லங்கையின் ப்ராகாரங்களை கால் நடையாக கடந்து வந்து, யுத்த பூமிக்கு வந்தவன் எதிரில் வானர சைன்யம் சமுத்திரம் அலை மோதுவது போல கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படர்ந்திருக்க, வானர சேனை அத்புதமாகத் தெரியக் கண்டான். வானரங்களோ, கும்பகர்ணனின் மிகப் பெரிய உருவத்தைக் கண்டே, திகைத்தவர்களாக, காற்றில் நாலா புறமும் விசிறி எறியப் படும் இலைகள் போல ஆனார்கள். அந்த வானர சைன்யம், மிகப் ப்ரசண்டமாக, ஆகாயத்தில் மேகத் துண்டங்கள் சஞ்சரிப்பது போல இருப்பதைக் கண்ட கும்பகர்ணன், மகிழ்ச்சியுடன், ஆரவாரம் செய்தான். இந்த ஆரவார ஓசையிலேயே பல வானரங்கள் வேரறுந்த மரங்களாக பூமியில் விழுந்தனர். தன் பெரிய பரிகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கும்பகர்ணன் எதிரிகளை அழிக்க முற்பட்டான். யுக முடிவில் தன் கிங்கரர்களுக்கு தண்டம் அளிக்கும் பிரபு போல வானரக் கூட்டம் தன்னைப் பார்த்த மாத்திரத்தில் அலறும்படி வேகமாக நுழைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கும்பகர்ணாபி4ஷேணனம் என்ற அறுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 41 (448) அங்க3த3 தூ3த்யம் (அங்கதன் தூது செல்லுதல்)
சுக்ரீவன் திரும்பி வந்தவுடன், ராமர் அவனை மார்புற அணைத்து என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் இது என்ன சாகஸம்? அரசனாக இருப்பவன் இது போல முன் யோஜனையின்றி சாகஸ காரியங்கள் செய்வது நல்லதல்ல. என்னையும் இந்த பெரிய சைன்யத்தையும், விபீஷணனையும், குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு, நீ கஷ்டமான காரியத்தில் துணிந்து இறங்கியிருக்கிறாய். சாகஸப்ரிய, இதனால் நாங்கள் எப்படி தவித்துப் போனோம் தெரியுமா? யோஜனையின்றி இது போல இனி செய்யாதே. உனக்கு ஏதாவது நேர்ந்தால், சீதையினால் தான் எனக்கு என்ன லாபம்? நீளமான கைகளையுடைய பரதனாலோ, இளையவன் லக்ஷ்மணனாலோ, சத்ருக்களை அழிக்கும் சத்ருக்னனாலோ என் சரீரத்தாலேயே கூட எனக்கு என்ன பயன்? நீ மட்டும் திரும்பி வராமல் இருந்தால், நான் என்ன தீர்மானம் செய்து கொண்டேன் தெரியுமா? உன் வீர்யம் தெரிந்தது தான். மகேந்திரன், வருணனுக்கு சமமான வீரர் தான், இருந்தாலும், ஒரு வேளை முடிவு விபரீதமாக போயிருந்தால், நான் என்ன செய்திருப்பேன், தெரியுமா? ராவணனை யுத்தத்தில் ஜயித்து, விபீஷணனை ராஜ்யாபிஷேகம் செய்வித்து விட்டு, அயோத்தி சென்று பரதனை அங்கு நிரந்தரமாக அரசனாக நியமித்து விட்டு, நான் என் சரீரத்தை தியாகம் செய்திருப்பேன். ராமர் இப்படி சொல்லவும், சுக்ரீவன் தன் செயலுக்கு மன்னிப்பு வேண்டினான். காரணம் விவரித்தான். உன் மனைவியைக் கடத்திச் சென்ற ராக்ஷஸ ராஜா, ராவணனைப் பார்த்தவுடன் எனக்கு பொறுக்க முடியவில்லை. என் பலம் தெரிந்து என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு, ஒரு கை பார்க்கலாம் என்று நினைத்தேன், என்றான். அவனை அவர் வீர செயலுக்காக பாராட்டி விட்டு, ராமர் லக்ஷ்மீ சம்பன்னனான லக்ஷ்மணனைப் பார்த்து, மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி விவாதிக்கலானார். குளிர்ந்த நீர் இருக்கும் இடம், பழங்கள் நிறைந்த வனங்கள் இவற்றை கைப்பற்றி நம் படை வீரர்களை வ்யூஹம் அமைத்து நிற்கச் செய்வாய். உலகமே அழியும் வண்ணம், மிகப் பெரிய யுத்தம் நம் முன்னால் நிற்கிறது. எதிரிகளின் சைன்யத்தை அழிக்கும் சமயம், நம் வானர, கரடி வீரர்களை பாதுகாப்பாகவும் வைக்க வேண்டும். காற்று கூட கடுமையாக வீசுகிறது. பூமி நடுங்குகிறது. மலையின் உச்சிகள் ஆடுகின்றன. மரங்கள் தானாக விழுகின்றன. மேகங்கள் கழுகுகள் போல தோற்றமளிக்கின்றன. இடி இடிப்பதும், வழக்கமான முழக்கமாக இல்லாமல் ஏதோ கெடுதல் நடக்கப் போவதை முறையறிவிப்பதைப் போல இடிச் சத்தம் கேட்கிறது. மழை பொழிவதும் க்ரூரமாக இருக்கப் போகிறது. ரத்தத் துளிகள், கலந்த வர்ஷா மழையாக இருக்கப் போகிறது. சந்த்யா கால வானத்தைப் பார். ரக்த சந்தனம் போல சிவந்த நிறத்தில், இதுவும் மனதில் பயத்தையே உண்டு பண்ணுகிறது. ஆதித்யனிடமிருந்து அக்னி மண்டலம் சிதறி விழுவதைப் போல தனித் தனியாக பிரகாசம் தெரிகிறது. இதுவும் மனதில் திகிலையே மூட்டுகின்றன. மிருகங்களும் பக்ஷிகளும் தீனமாக அலறுகின்றன. பிரகாசம் இல்லாத இரவு, சந்திரனும் எங்கு மறைந்தானோ. உலகம் முடியும் சமயம்,பிரளய காலத்தில், கரும் சிவப்பு நிறத்தில் கிரணங்களோடு சந்திரன் இருப்பான் என்று கேள்வி பட்டிருக்கிறேன். இதன் ஒளி வட்டத்தைப் பார். அதுவும் ஏதோ கிரஹத்தால் பீடிக்கப் பட்டது போலவும், சிவந்த (நெருப்பில் போடப் பட்ட இரும்பு வர்ணம்) வண்ணமும், கொடூரமாகவும், தெளிவின்றியும் இருக்கிறது. சூரியனுடைய பாதையில் லக்ஷ்மணா ஒரு கரும் புள்ளி போல கறையாகத் தெரிகிறது. நக்ஷத்திரங்களைப் பார். யுக முடிவில் நாம் இருப்பது போல பிரமை உண்டாகிறது. லக்ஷ்மணா காகங்களும், கழுகுகளும், கருடன்களும் கீழ் நோக்கி விழுகின்றன. குள்ள நரிகள் அமங்கலமாக ஊளையிடுகின்றன. மலைத் துண்டுகளைக் (கற்களை) சூலங்களையும், வாட்களையும் கொண்டு, வானர, ராக்ஷஸர்கள் இடையே பெரும் போர் நடக்கப் போகிறது. பூமியில், யுத்தத்தில் மடிந்தவர்களின் ரத்தமும் நிணமும், மாமிசமும் சேறாக ஓடப் போகிறது. நாம் சீக்கிரம், இன்றே ராக்ஷஸன் பாலித்து வரும் இந்த லங்கையை முற்றுகையிடுவோம். வானர சேனை நம்முடன் பாதுகாப்பாக வரட்டும். நாலா புறமும் இடைவெளியின்றி சூழ்ந்து கொள்வோம். கிளம்புங்கள் என்று ஆணையிடவும், அந்த மலையின் மேலிருந்து வேகமாக கீழே இறங்கினார். கீழே இறங்கி நின்று எதிரிகளால் சேதப் படுத்த முடியாதபடி அமைக்கப் பட்டிருந்த தன் படையின் அணி வகுப்பை பார்வையிட்டார். நேரம், காலம் இவற்றின் தன்மைகளை அறிந்தவராதலால், தாங்கள் புறப்பட சரியான நேரத்தை தேர்ந்தெடுத்துச் சொன்னார். சரியான நேரத்தில் தன் வில்லை கையில் எடுத்துக் கொண்டு யாவருக்கும் முன்னால் லங்கையை நோக்கி நடந்தார். சேனையும் தொடர்ந்து ராமர் கூடவே, விபிஷண, சுக்ரீவர்கள், ஹனுமான், ஜாம்பவான், நலன், ருக்ஷராஜன், நீலன், லக்ஷ்மணன் என்று வரிசையாக உடன் சென்றனர். பூமியே தெரியாதபடி மறைத்துக் கொண்டு, ருக்ஷ, வானரர்களின் சைன்யம் அதன் பின் சென்றது. யானை அளவு பெருத்த உடலைக் கொண்ட வானரங்கள் சிலர், மலையில் இருந்து பெயர்த்து எடுத்து வந்த கற்களையும், சிலர் வேரோடு பிடுங்கிய மரங்களையும் வைத்திருந்தனர். சீக்கிரமே, ராம லக்ஷ்மணர்கள், லங்கை வந்து சேர்ந்தனர். கொடிகள் பறக்க, அழகிய உத்யான வனங்கள், மாளிகைளில் கொடிகள் பறந்தன, அதுவே அழகிய காட்சியாக இருந்தது. வேலைப்பாடமைந்த வாயில் கதவுகள். உயர்ந்த பிராகாரங்கள். அதில் கட்டப்பட்டிருந்த தோரணங்கள். தேவர்களும் எளிதில் நுழைய முடியாதபடி, பாதுகாவலுடன் விளங்கிய கோட்டை. இந்த கோட்டைக்குள் வானர வீரர்கள், ராமரின் ஆணைப்படி, தங்களால் முடிந்தவரை முற்றுகையிட்டனர். லங்கையின் வடக்கு வாயில் மற்ற வாயில்களைக் காட்டிலும் உயர்ந்தது. மலையின் சிகரம் போல தோற்றமளித்தது. அந்த இடத்திற்கு வில்லேந்திய வீரர்களாக ராம லக்ஷ்மணர்கள் வந்து சேர்ந்தனர். லங்கையின் வெகு அருகில், தாங்கள் தங்கும் பாசறையை அமைத்துக் கொண்டு, தசரதாத்மஜனான ராமன், லக்ஷ்மணனுடன், ராவணன் ஆட்சிக்குட்பட்ட, லங்கையில், ராவணன் தானே நின்று எதிர்க்கப் போவதாகச் சொன்ன வடக்கு வாசலில் போருக்குத் தயாராக நின்றனர். அந்த வாசலில் ராவணனைத் தவிர வேறு யாராலும் நிற்க முடியாது. சாகரத்தை வருணன் ரக்ஷிப்பது போல அந்த இடத்தை ராவணன் கடுமையான காவலுடன் ஆயுதம் தாங்கிய வீரர்களை நிறுத்தி, சாதாரண பொது ஜனங்களை அச்சுறுத்தும் விதமாக தயார் செய்து வைத்திருந்தான். பாதாளத்தை தானவர்கள், தங்களுக்கே சொந்தமானது என்று ரக்ஷிப்பது போல லங்கை நகரை தன்னுடையது என்று ரக்ஷித்தான். போர் வீரர்களுக்கான ஆயுதங்கள் கணக்கின்றி, அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. ஆயுதங்கள் குவியலாக அதே அளவு கவசங்களும் கிடந்தன. வாயில் அருகில் சென்று, முதலில் நீலன் கிழக்கு வாசலில், மைந்தன், த்விவிதனோடு சேர்ந்து முற்றுகையிட்டான். அங்கதன் தெற்கு வாயிலில் தன் முற்றுகையைத் துவங்கினான். ருஷபன், க3ஜன், க3வாக்ஷன், க3வயன், இவர்களுடன் ஹனுமான் மேற்கு வாசலை அடைந்தார். ப்ரமாதீ3, ப்ரக4ஸன், மற்றும் பலரும் உடன் வர, சுக்ரீவன் மத்தியில் நின்றான். சிறந்த வானர வீரர்களுடன், சுபர்ண (கருடன்) ஸ்வஸனன் (காற்று) இவர்களுக்கு சமமான வேகம் படைத்த (36) முப்பத்தாறு கோடி வானரர்கள், தனித் தனி குழுக்களாக அதனதன் தலைவர்களுடன் தயாராக இருக்க, சுக்ரீவன் தன் முற்றுகையைத் தொடர்ந்தான். ராமர் ஆணைப்படி, லக்ஷ்மணன், விபீஷணன் கூடச் சென்று, ஒவ்வொரு வாசலிலும், கோடி கோடி வீரர்களை நியமித்தான். சுக்ரீவனும், ஜாம்பவானும் தாங்கள் முற்றுகையிட்ட இடத்தை, ராமருக்கு எந்த நேரத்திலும் சகாயமாக இருக்கும் படி அருகில் அமைத்துக் கொண்டனர். வானர சார்தூலர்கள் எனப்பட்ட, பல வானரங்கள் சார்தூலம் (சிறுத்தை) போன்றே பற்களுடையவர்களாக இருந்தனர். கைகளில் மரக்கிளைகளைப் பிடித்தபடி, மகிழ்ச்சியுடன் யுத்தம் செய்ய காத்திருந்தனர். பற்களும், நகங்களுமே ஆயுதங்களாக வால்களை சுருட்டிக் கொண்டு காத்திருந்தனர். விதம் விதமான உருவமும், முகமும் கொண்டவர்கள். சிலர் பத்து யானை பலம் எனக்கு என்றால், மற்றும் சில எனக்கு ஆயிரம் யானை பலம் என்றன. மற்றும் சில, நூறு பங்கு அதிக பலம் எனக்கு என்று சொல்லிக் கொண்டாலும் அனைவருமே சமமான பலம் கொண்டவர்களே. விட்டில் பூச்சிகள் கூட்டமாக வருவது போல இந்த வானர கூட்டம் அலை மோதியது. ஆகாயத்தை நிரப்பி பரவும் விட்டில் பூச்சிகள் போலவே, இந்த வானர வீரர்களின் கூட்டமும், தரையை மறைத்தது. துள்ளி குதித்துக் கொண்டு லங்கையின் அருகில் வந்து விட்ட, ருக்ஷ, வானரங்கள், நூறு நூறு கோடி வானரங்கள் ஒரே சமயத்தில் மலையின் மேல் தோன்றின. இருபதாயிரம் வீரர்கள் யுத்தம் செய்யத் தயாராக, ஊருக்குள் செல்ல முயன்றன. கைகளில் ஒடித்த மரக்கிளைகளுடனும், வானரங்கள், வாயு கூட நுழைய முடியாது என்று பெயர் பெற்ற லங்கையை சுற்றிச் சூழ்ந்து கொண்டன. திடுமென தென்பட்ட இந்த வானரங்களின் தாக்குதலால் ராக்ஷஸர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். மேகம் போன்று பெருத்த உடலும், இந்திரனுக்கு சமமான பலமும் கொண்ட வானரங்கள் படையுடன் நெருங்கி வருவதால் உண்டான சப்தமும் மிக அதிகமாக இருந்தது. காடும் மலைகளும் கொண்ட லங்கையே நடுங்குவது போல இருந்தது. ராம லக்ஷ்மணர்களால் பாதுகாக்கப் பட்டு சுக்ரீவன் தலைமையில் கூடிய அந்த சேனை, தேவர்களும் உள்ளே நுழைய முடியாதபடி நெருங்கி நின்றது. ராக்ஷஸர்களின் வதம் தான் குறிக்கோள் என்பதை அவர்களிடம் பல முறை எடுத்துச் சொல்லியும், அடிக்கடி தலைமை தாங்கும் வீரர்களுடன் கலந்தாலோசித்தும், ராமர் உத்தரவுகள் பிறப்பித்தார். க்ரமம், யோகம், ஆனந்தர்யம் என்ற நிலைகளை நன்கு அறிந்தவரான ராமர், மூன்றாவது நிலையான ஆனந்தர்யம் என்ற நிலையை அடைய, ராஜ தர்மத்தையும் நினைவில் கொண்டு, விபீஷணனும் அனுமதிக்க, வாலி புத்ரனான அங்கதனை அழைத்துச் சொன்னார். சௌம்ய தச வதனனிடம் போய் நான் சொன்னதாகச் சொல். ராக்ஷஸா லக்ஷ்மி உன்னை விட்டு விலக, ஐஸ்வர்யம் உன்னை விட்டுப் போகப் போகிறது. லங்கையை ஒரு கலக்கு கலக்கி, பயமின்றி, கவலையின்றி, உடல் வருத்தமும் இன்றி இருந்த நாட்கள் முடிந்து விட்டன. புத்தி மழுங்கி தப்பிக்க நினைக்கிறாயா. ரிஷிகளுக்கும், தேவதைகளுக்கும், கந்தர்வ, அப்ஸரஸ்களுக்கும், நாகர்களுக்கும், யக்ஷர்களுக்கும், அரசர்களுக்கும், இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸனே என்னவெல்லாம் பாபங்கள் செய்தாயோ, அலட்சியம் மிகுந்த மனதால் நீ செய்த கெட்ட காரியங்களின் பலன் இதோ எதிரில் வந்து நிற்கிறது. இதை உன்னால் தவிர்க்கவும் முடியாது. எதிர்க்கவும் முடியாது. இன்று ஸ்வயம்பூவான ப்ரும்மா தந்த வரத்தின் பலனால் நீ அடைந்த கர்வம் தீரப் போகிறது. மனைவியை பிரிந்ததால் வருந்தும் நான் கையில் வில்லுடன் போர் செய்யத் தயாராக எதிரில் நிற்கிறேன். இதுவே உன் அழிவுக்குப் போதும். உன் லங்கையின் வாசலில், தண்டதாரியாக நிற்கிறேன். தேவதைகள், மகரிஷிகள், எல்லா ராஜரிஷிகள் இருக்கும் இடம் செல்லப் போகிறாய். எந்த பலத்தால், மாயையால் சீதையை தண்டகாரண்யத்தில் இருந்து என்னை மீறி தூக்கி வந்தாயோ, அந்த பலத்தை இப்பொழுது காட்டு. ராக்ஷஸாதமா என் கூர்மையான பாணங்களால், அராக்ஷஸம், ராக்ஷஸனே இல்லாமல் செய்யப் போகிறேன். என்னிடத்தில் மைதிலியை ஒப்படைத்து நீ சரணம் அடைந்தால், தப்பிக்கலாம். ராக்ஷஸ ஸ்ரேஷ்டன், தர்மாத்மா, விபீஷணன் எங்கள் பக்கம் வந்து விட்டான். நிச்சயமாக, லங்கா நகர் ஐஸ்வர்யத்தை முழுவதுமாக அவன் அடையப் போகிறான். ராஜ்யத்தை அதர்மத்தின் துணையோடு வெகு நாள் ஆள முடியாது. விஷயம் தெரியாத மூர்க்க மந்திரிகளின் சகாயத்தோடு ராஜ்யத்தை ஆளுவது எளிதல்ல. தைரியமாக வந்து யுத்தம் செய். ராக்ஷஸா உன் வீரத்தை துணையாக கொண்டு எதிரில் வா. என் பாணங்களால் அடிபட்டு பாவனமாக ஆகி உயிரை விடுவாய். மூன்று உலகையும் பக்ஷியாக மனோ வேகத்தில் கடந்து சென்று ஒளிந்து கொள்ளப் பார்த்தாலும், என் பார்வை பட்டாலே, உயிருடன் திரும்பி வர மாட்டாய். உன் நன்மைக்காக சொல்கிறேன். உன் சரீரம் போன பின், கிடைக்கும் பரலோக வாழ்க்கையை எண்ணி இப்பொழுதே லங்கையை கண்டு மகிழும் நிலையில் வைத்துக் கொள். நான் வந்து எதிரில் நின்ற பின், உனக்கு விமோசனம் ஏது? இந்த உலக வாழ்க்கை தான் ஏது? இவ்வளவையும் கேட்டு, மனதில் பதிய வைத்துக் கொண்டு, தாராவின் மகனான அங்கதன், ஆகாய மார்க்கத்தை அடைந்து, ஹவ்யவாகனன (அக்னி) உருக்கொண்டு வந்தது போல வேகமாக விரைந்து சென்றான். முஹுர்த்த நேரத்தில், ராவணன் மாளிகையை அடைந்து, மந்திரிகளுடன் ராவணன் தன் சபையில் வீற்றிருப்பதைக் கண்டான். அவனுக்கு அருகில் குதித்து எழுந்த அங்கதன், புஜங்களில் அவன் சூடியிருந்த கனகாங்கதங்களுடன், நெருப்புத் துண்டம் திடுமென எதிரில் விழுந்தது போல இருந்தான். ராமனின் வார்த்தைகளை, குறையாமலும், மிகையாகாமலும், உள்ளபடி தெரிவித்தான். தன்னை யார் என்று சொல்லிக் கொண்டு, மந்திரி சபையில் யாவருக்கும் முன்பாக தூது வந்த விஷயத்தை தெரிவித்தான். கோஸலேந்திரனின் தூதன் நான். தெளிவாக செயல் படும் ராமனின் தூதன் நான். வாலி புத்திரன் அங்கதன் என்பான், நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். கௌசல்யானந்த வர்தனன் ராமன் தெரிவிக்கச் சொன்ன ஒரு விஷயம் இந்த சபையில் சொல்லவே வந்தேன். எழுந்து வந்து நேருக்கு நேர் போரிடு. மனிதனாக இரு. கொமூடுரமான செயல்களைச் செய்பவனே உன்னை உன் மந்திரிகளுடன், உற்றார், உறவினரோடு அழிக்கவே வந்து நிற்கிறேன், நான். மூன்று உலகமும் தற்சமயம், நீ மரித்ததைக் கொண்டாடப் போகிறது. இடையூறு விலகியது என்று மகிழப் போகிறது. தேவ, தானவ, யக்ஷர்களுக்கும், கந்தர்வ, உரக, ராக்ஷஸர்களுக்கும், சத்ருவான உன்னை இன்று நான் மேலுலகம் அனுப்பப் போகிறேன். முள்ளாக உறுத்திக் கொண்டு இடையூறு செய்தாயே, அந்த ரிஷிகள் மகிழ்ச்சியடையும் படி உன்னை நான் வதம் செய்யப் போகிறேன். நீ வீழ்ந்தவுடன் இந்த அரசு விபீஷணனுக்குப் போகும். வைதேஹியை மரியாதையுடன் வணங்கி என்னிடம் ஒப்புவிக்கவில்லையெனில், உன் கதி அதோ கதி தான். இவ்வாறு கடுமையாகப் பேசிக் கொண்டே போகும் அங்கதனைப் பார்த்து அளவில்லா ஆத்திரம் கொண்ட ராக்ஷஸேந்திரன், கண்கள் தாம்ரம் போல சிவக்க, தன் மந்திரிகளுக்கு கட்டளையிட்டான். பிடியுங்கள் இந்த மூர்க்கனை. அறிவில்லாத இவனைக் கொல்லுங்கள் என்று திரும்ப திரும்பச் சொன்னான். ராவணனின் உத்தரவை நிறைவேற்ற நான்கு வீரர்கள் வந்து அங்கதனைக் கட்டிப் பிடித்தனர். அக்னி ஜ்வாலை போன்று இருந்த தாரா புத்திரனை, அழுத்தி பிடித்தனர். தன் பலத்தை இந்த ராக்ஷஸர்களுக்கு காட்டுவது என்று நிச்சயம் செய்து கொண்ட அங்கதன், தன்னை அமுக்கி பிடித்திருந்த வீரர்களுடனேயே ஆகாயத்தில் எழும்பினான். மலை போல உயர்ந்து நின்ற மாளிகையின் உச்சியின் நின்று கொண்டு அவர்களை கை நழுவ விட்டான். அந்த உயரத்திலிருந்து, அந்தரத்தில் இருந்து விழுவது போல அந்த ராக்ஷஸ வீரர்கள், தடாலென்று கீழே விழுந்தார்கள். இதன் பின் ராக்ஷஸ ராஜனைக் கூப்பிட்டு, அங்கதன் மாளிகையின் சிகரத்தைக் காட்டினான். அவன் கண் முன்னாலேயே, கால்களால் ஓங்கி உதைக்க அந்த மாளிகை விரிசல் கண்டது. முன்னொரு காலத்தில் ஹிமவானின் சிகரத்தை வஜ்ரதாரியான இந்திரன் பிளந்தது போல பிளந்தது. மாளிகையை இடித்து விட்டு, தன் பெயரைச் சொல்லி அறை கூவி அழைத்து, பெரும் குரலில் கோஷம் செய்தபடி ஆகாயத்தில் தாவி குதித்தான். எல்லா ராக்ஷஸர்களும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, வானரங்கள் ஆரவாரம் செய்ய, வானரர்கள் மத்தியில் நின்றிருந்த ராமனிடம் வந்து சேர்ந்தான்.
ராவணன் தன் மாளிகை இடிந்ததில் பெரும் கோபம் கொண்டான். தன் விநாச காலம் ஆரம்பித்து விட்டது என்றும் உணர்ந்து கொண்டவன் போல பெருமூச்சு விட்டான். இங்கு ராமனோ, ஏராளமான வானர வீரர்கள் ஏக காலத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, சத்ருவை வதம் செய்வதில் இன்னும் தீவிரமான முனைப்போடு ஏற்பாடுகளைச் செய்யலானார். ஒரு பெரிய மலையே வந்து எதிரில் நிற்பது போன்ற, மிகப் பெரிய சரீரம் உடைய சுஷேணன், பல வானரங்கள் சூழ, நல்ல வீர்யவானான அவன், சுக்ரீவன் கட்டளைப்படி, நான்கு கோட்டை வாசல்களிலும் முற்றுகையிட்டிருந்த வானர வீரர்களை மேற் பார்வையிட்டபடி, சுற்றிச் சுற்றி வந்தான். நக்ஷத்திரங்கள், அம்புலியைச் சுற்றுவது போலிருந்தது. நூறு அக்ஷௌஹிணி வீரர்களின் தேவைகளை கவனித்து வந்தான். சமுத்திரம் போன்று பரந்து விரிந்திருந்த சேனையைக் கண்டு ராக்ஷஸ சமூகம் வியந்தது. கூடவே பயமும் எழுந்தது. ஒரு சிலர் பெரும் யுத்தம் வருகிறது என்று மகிழ்ச்சியடைந்தனர். வெளிப் பிராகாரங்கள் முழுவதும் வானரங்களால் நிரம்பி வழிந்தது. ராக்ஷஸர்கள் அதைக் காணவே முடியாமல் திகைத்தனர். வெளிப் பிராகாரமே வானர மயமாக ஆகிவிட்டது. (வானரீ க்ருதம்). எதுவும் செய்ய முடியாமல் கை பிசைந்து நின்றனர். ஹா ஹா என்று சிலர் பயத்துடன் அலறினர். ராக்ஷஸ ராஜதானி, என்றும் இல்லாத காட்சியாக கோலாகலமாக, அடி மனதில் பயம் இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், தங்கள் பொறுப்பை உணர்ந்த சில ராக்ஷஸர்கள், கைக்கு கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சஞ்சரித்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண அங்க3த3 தூ3த்யம் என்ற நாற்பதாவது ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 42 (449) யுத்3தா4ரம்ப4: ( யுத்த ஆரம்பம்)
இதன் பின் ராக்ஷஸர்கள் கூட்டமாக ராவணன் மாளிகையை அடைந்தனர். ராமன், எண்ணற்ற வானர வீரர்களுடன் முற்றுகையிட்டு நகரை சூழ்ந்து கொண்டு நிற்பதை அறிவித்தனர். தன் நகரம் சூழப்பட்டதையறிந்து கடும் கோபம் கொண்ட ராவணன், இரண்டு இரண்டு படிகளாகத் தாவி ஏறி மாளிகையின் உச்சிக்கு ஏறிச் சென்று சுற்றும் முற்றும் பார்த்தான். மலைகளுடனும், கானனங்கள், வனங்களுடன், தான் கவனமாக பாதுகாத்து வந்த லங்கா நகரம், கண் முன்னால் கணக்கில்லாத வானரங்கள் ஆக்ரமித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வானரங்களே தென் பட்டன. பூமியைக் கூட காண முடியவில்லை. இந்த கூட்டத்தை எப்படி சமாளிப்போம் என்று கவலை கொண்டான். வெகு நேரம் யோசித்து, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கூர்ந்து பார்த்த பொழுது ராமன், தன் வீரர்கள் சூழ நிற்பதைக் கண்டான், தன் சைன்யத்தின் மத்தியில் ஏதோ பேசிக் கொண்டே, ஒருவித திருப்தியும், மகிழ்ச்சியும் முகத்தில் தெரிய, எதேச்சையாக லங்கையை நோக்கினார். நாலா புறமும் ராக்ஷஸர்கள் காவல் இருக்க, மிகுந்த பாதுகாப்புடன் ரக்ஷிக்கப் பட்ட நகரம், அழகிய கொடிகளும், பட்டங்களும் கட்டப் பெற்றது. இதைக் கண்டு ஒரு நிமிஷம் ரசித்த ராமர், மனதால் சீதையிடம் சென்று விட்டார். உடனே முகமும், மனமும் வாடியது. என் காரணமாக சீதை இங்கு சிறையில் இருக்கிறாள். பூமியில் படுத்து, இளைத்து துரும்பாகி, சோகமே உருவாக இருக்கிறாள். இந்த எண்ணம் வந்ததும், சட்டென்று தன்னை சமாளித்துக் கொண்டவராக, போர் வீரர்களுக்கு ஆணையிட்டார். எதிரிகளை வதம் செய்வோம், கிளம்புங்கள், எனவும், எல்லோருமாக சிம்ம கர்ஜனை செய்தனர். உற்சாகம் பொங்கி பெருகியது. இந்த லங்கையை எங்கள் முஷ்டியாலேயே தகர்ப்போம் என்று ஆரவரித்தனர். அனேகமாக எல்லா வானரங்களுமே, உடைத்த மரக்கிளைகளுடன், அல்லது, மலை மேல் பொறுக்கி எடுத்த கற்கள் இவற்றையே ஆயுதமாக வைத்துக் கொண்டிருந்தனர். இவையனைத்தையும், ராவணன் மாளிகையின் மேல் நின்றபடி பார்த்தான். ராமனுக்கு பிரியமானதை செய்வோம், என்று உற்சாகத்துடன் மலைகளில் மரங்களில் ஏறும் வானரங்களையும் பார்த்தான். தன் உயிரை பொருட்படுத்தாமல், உயிரை விடவும் துணிந்து சால, தால மரக்கட்டைகளை தூக்கிக் கொண்டு ஓடி வரும் வானரங்களின் மனோ பலம் ராவணனை சிந்திக்கச் செய்தது. கையில் மலையில் எடுத்த கற்களோ, மரக் கிளைகளோ இல்லாத வானரங்கள், தங்கள் முஷ்டியை மடித்துக் காட்டின. ப்ராகாரம், அழகிய தோட்டம், தோரணங்கள் எல்லாவற்றையும் குதறி எடுத்தன. சுத்தமான ஜலம், பார்க்கவே ப்ரஸன்னமாகத் தெரிந்த சிறு குளங்கள், இவையும் வானர மயமாகவே தெரிந்தன. எங்கும் தூசு, புல்லும், சிறு கட்டைகளும் இரைந்தன. ஆயிரம் வீரர்கள் கொண்ட படை, கோடி வீரர்கள் கொண்டது, நூறு கோடி வீரர்கள் என்று தனித் தனியாக எங்கே நோக்கினும் வானர படை லங்கையை ஆக்ரமித்தபடி முன்னேறிக் கொண்டிருந்தன. பொன் மயமான தோரணங்களை பிடுங்கி எறிந்தன. கைலாச சிகரம் போன்ற கோபுரங்களை மிதித்து அழித்தன. இங்கும் அங்குமாக தாவி குதித்து, ஓடியும், கர்ஜித்துக் கொண்டும், வானரங்கள், பெரிய பெரிய யானைகள் அளவில் உருவத்தாலும், லங்கையை சுற்றி ஓடின. ஜயத்யதி ப3லோ, ராம: லக்ஷ்மணச்ச மகா ப3ல: (அதி பலசாலியான ராமனுக்கு ஜயம், அதே போல பலவானான லக்ஷ்மணனுக்கும் ஜயம்) என்று கோஷம் இட்டன. சுக்ரீவ ராஜாவுக்கு ஜயம். இவன் ராகவனால் பாதுகாக்கப் படுபவன். இந்த கோஷமும் கர்ஜனையும், லங்கையின் ப்ராகாரங்களில் முழங்கின. இந்த வானரங்கள் விரும்பிய வடிவம் எடுக்க வல்லவை என்பதையும் ராவணன் கவனித்தான். தங்களை சுறுக்கிக் கொண்டும், பெருக்கிக் கொண்டும் திரிந்தன. வீர பா3ஹுவும், சுபா3ஹுவும், நலனும், இது வரை காட்டிலேயே திரிந்தவர்கள். ப்ராகாரத்தில் எப்படியோ நுழைந்து விட்டார்கள். இதற்கிடையில் குமுதன், பத்து கோடி வீரர்கள் கொண்ட படையுடன்,கிழக்குவாசல் காவலைத் தகர்த்துக் கொண்டு, உள்ளே நுழைந்து விட்டான். இவனுக்கு உதவி செய்ய ப்ரகஸன் என்ற வானரத் தலைவனும் உள்ளே வந்தான். பின்னாலேயே பல வானரர்களை உடன் அழைத்துக் கொண்டு பனஸனும் நுழைந்து விட்டான். தென் திசையில் சதப3லி என்ற வீரன், தன் இருபது கோடி வீரர்களுடன் உள்ளே நுழைந்தான். தாராவின் தந்தை முதியவரான சுஷேணன், மேற்கு வாயிலைக் கவனித்துக் கொண்டார். ஆறு கோடி வீரர்களுடன் முன்னேறி வந்தார். வட திசையில், ராமர், லக்ஷ்மணனுடன் கூட முன்னேறி வர, சுக்ரீவனும் உடன் நுழைந்தான். கோ3லாங்கூ4லம் எனும் பெரிய உருவத்தையுடைய க3வாக்ஷன், பார்க்கவே பயங்கரமான உருவம் உடையவன், கோடிக் கணக்கான வீரர்களுடன் ராமனின் பக்கங்களில் வந்தான். தூ3ம்ர: என்ற கரடி ராஜன், படு வேகமாக செல்லக் கூடிய தன் வீரர்களுடன், மற்றொரு பக்கத்தில் ராமனுக்கு காவலாக உள்ளே நுழைந்தான். தயாரான நிலையில், கையில் க3தை4யுடன் விபீஷணன், தன் மந்திரிகளுடன் தொடர்ந்தான். க3ஜன், க3வாக்ஷன், க3வயன், சரப4ன், க3ந்த4 மாத3னன் என்ற ஐவரும், முன்னால் நின்று ஓடி, ஓடி வானர சேனை கட்டுக் குலையாமல் பார்த்துக் கொண்டனர். இவற்றைக் கண்ட ராவணனுக்கு கோபம் தலைக்கேறியது. உடனே தன் படை வீரர்களுக்கு உத்தரவிட்டான். உடனே கிளம்புங்கள் என்று ராவணன் வாயிலிருந்து உத்தரவு வந்தது தான் தாமதம், ராக்ஷஸர்கள் பெரும் கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்தனர். பேரிகள் முழங்கின. சந்த்ர, பாண்டிர, புஷ்கர, ஹேம கோணம் எனும் வாத்யங்களை முழங்கியபடி ராக்ஷஸர்கள் உச்சஸ்தாயியில், போர் முழக்கம் செய்தனர். நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான சங்கங்கள் முழங்கின. ராக்ஷஸர்கள் வாயில் வைத்து ஊதிய பொழுது, ரஜனீசரர்கள் (இரவில் சஞ்சரிப்பவர்) என்ற அந்த ராக்ஷஸர்கள், ஒரே மூச்சாக இழுத்து ஊதியதாலேயோ என்னவோ, நீலம் பாரித்து, கிளியின் வர்ணத்தை அடைந்து விட்டது போல் இருந்தது. அதுவரை மேகங்கள் சஞ்சரித்துக் கொண்டு, மின்னல்களுடன் இருந்த ஆகாயம், இடி முழக்கம் கேட்டவுடன் மழை பொழிய ஆரம்பித்தது போல, ராவணனின் ஆணை கிடைத்தவுடன், ராக்ஷஸ சேனையும் குதித்துக் கொண்டு ஆரவாரத்துடன் போருக்கு புறப்பட்டது. எதிர் கொண்டு வந்த ராக்ஷஸ சேனைக்கு பதில் கொடுப்பது போல, சமுத்திரத்தில் வேகமாக அடிக்கும் அலைகளின் ஓசைக்கு இணையாக, வானர சைன்யமும் முழக்கம் இட்டது. மலய மலையே நிரம்பி விட்டது போல தோன்றியது. சங்க துந்துபி கோஷங்களும், சிம்ம நாதமும், வேகமாக செல்லும் வீரர்கள் நடையோசையும், பூமியும் ஆகாயமும், சாகரமும் ஒரே சமயத்தில் நிரம்பி வழிவது போல காணப்பட்டது. யானைகள் பிளிறுவதும், குதிரைகள் கனைப்பதும், ரதங்களின் சக்கரம் ஓடும் சத்தமும், ராக்ஷஸர்கள் அதிர நடக்கும் ஓசையும், பெரும் யுத்தம் ஆரம்பமாகி விட்டதை உணர்த்தின. தேவாசுரர்களூள் முன் நடந்த பெரும் போரைப் போலவே, வானரங்களுக்கும், ராக்ஷஸர்களுக்கும் இடையிலும் பயங்கரமான யுத்தம் மூண்டது. க3தைகளையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல பிரகாசிக்கும், சக்தி, சூலம், பரஸ்வதம் போன்ற ஆயுதங்களையும், தங்கள் பெயரையும், பராக்ரமத்தையும் சொல்லிக் கொண்டு, வானரர்களைத் தாக்கினர். வானரர்களும், ராக்ஷஸர்களை அடித்து நொறுக்கினர். ஜயத்யதி ப3லோ ராமோ, ராஜா ஜயதி சுக்ரீவோ, லக்ஷ்மணச்ச மகா ப3ல: என்ற கோஷம் வானையெட்டியது. ஜய ஜய என்று சொல்லியபடி ராக்ஷஸர்களை முஷ்டிகளாலும், தங்கள் பல், நகம், இவற்றாலும் தாக்கினர். மேலும் மேலும் ராக்ஷஸர்கள் தேர்ந்த வீரர்கள் யுத்த களத்தில் இறங்கிய வண்ணம் இருந்தனர். பிடிபாலம், வாள், சூலம், இவைகளை வீசியபடி, வேகமாக வந்தனர். வானரர்களும் கோபத்துடன் அவர்களை ப்ராகாரத்திலேயே கீழே தள்ளி மிதித்து அழித்தன. இருபக்கமும் அடிபட்டு, ரத்தமும், நிணமும் பெருக, சேறாகி போன பூமியில், ராக்ஷஸ வானரர்களின் சமமான பலத்தோடு யுத்தம் நடந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் யுத்3தா4ரம்போ என்ற நாற்பதாவது இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 43 (450) த்3வந்த4 யுத்3த4ம்
இரண்டு பக்கமும், வானர, ராக்ஷஸர்களின் மத்தியில் கடுமையாக பல பரீக்ஷை ஆரம்பித்தது. ராக்ஷஸர்கள் பத்து திக்கும் கேட்கும்படி உரத்த குரலில் கோஷம் செய்து கொண்டு வந்தனர். தங்கத்தால் ஆன பீடங்களையுடைய குதிரைகளின் கனைப்பும், அக்னி ஜ்வாலை போன்று பிரகாசிக்கும் த்வஜங்களுடன், ஆதித்யனுக்கு சமமான ரதங்களும், மனதைக் கவரும் கவசங்களுடனும் ராக்ஷஸர்கள், ராவணனுக்கு ஜயம் என்று சொல்லியபடி யுத்தம் செய்ய வந்தனர். படைகள் படைகளுடன் என்று ஆரம்பித்த யுத்தம் திடுமென, தனி நபர்களுக்கிடையில் நடக்கும் த்வந்த யுத்தமாக மாறி விட்டது. ஒருவருக்கொருவர் முட்டிக்கொள்ளவும், தாக்கித் தள்ளவும் யுத்தத்தின் போக்கே மாறியது போல இருந்தது. ஹரி புத்திரனான அங்கதனுடன் இந்திரஜித் ராக்ஷஸன் மோதினான். முன் ஒரு காலத்தில், த்ரியம்பகனுடன், அந்தகன் மோதியது போல. எப்பொழுதும் ரணத்தில் எதிரிகளால் தாங்க முடியாத பலத்தைக் காட்டும் சம்பாதியும், ப்ரஜங்கன் என்ற ராக்ஷஸனும் மோதினர். ஜம்புமாலியும், ஹனுமானும் மோதிக் கொண்டனர். சுமஹாக்ரோதோ (மிக அதிகமான கோபம் உடையவன்) என்ற ராக்ஷஸன், ராவண சகோதரனான விபீஷணனுடன் கைகலப்பு செய்தபடி, இருவரும் த்வந்த யுத்தம் செய்தனர். தபனன் என்ற ராக்ஷஸனுடன் கஜன் என்ற வானரம், நீலனும், நிகும்பனும், வானரேந்திரனான சுக்ரீவன் ப்ரகஸனுடன், விரூபாக்ஷனுடன் லக்ஷ்மணன் என்று தொடர்ந்தது. அக்னி கேது, ரஸ்மி கேது என்ற ராக்ஷஸர்கள், மறு புறத்திலிருந்து சுப்தக்னன், யக்ஞ கோபன் என்ற இருவரும் ராமருடன் சண்டையிட வந்தார்கள். வஜ்ர முஷ்டி என்பவன் மைந்தனுடனும், அக்னி ப்ரபன் என்பவன், த்விவிதனுடனும் என்று ராக்ஷஸர்களுக்கும், வானரர்களுக்கும் இடையில் தனித் தனியாக சண்டை மூண்டது. ப்ரதபனன் என்ற வீரன், ராக்ஷஸன், ரண துர்தரன் – என்பவன் நலனுடன் எதிர்த்து நின்றான். ராக்ஷஸனை போரில் அசைக்க முடியாது என்று பெயர் பெற்றவன் என்றால், வானரனான நலன் வேகத்தில் ஈடு இணை இல்லாதவன் என்று பெயர் பெற்றவன். தர்ம புத்திரன் சுஷேணன் வித்யுன்மாலி என்ற ராக்ஷஸனுடன் மோதி த்வந்த யுத்தம் செய்தான். மற்ற வானரங்களும் எதிர்ப் பட்ட ராக்ஷஸர்களுடன் கைகலந்து போரைத் தொடர்ந்தனர். பெரும் யுத்தம். மயிர்க்கூச்சல் எடுக்கும் விதமாக தொடர்ந்தது. இரு பக்கமும் வீரர்கள் வெற்றியை விரும்பும் பலசாலிகள். ராக்ஷஸர்களும், வானர வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் யுத்தம் செய்தனர். வானர, ராக்ஷஸர்கள் உடல்களிலிருந்து கேசம் உதிர்ந்து விழுந்தன. சரீரம் மோதுவதால் உண்டான ரத்தப் பெருக்கு நதியாக பெருகியது. வஜ்ரத்தை ஏந்தி இந்திரன் அடிப்பது போல, இந்திரஜித், வாலி புத்திரனான அங்கதனை அடித்தான். அங்கதனும் க3தை4யை எடுத்துக் கொண்டு, சத்ரு சைன்யத்தை நாசம் செய்ய வல்ல தன் க3தை4யால் இந்திரஜித்தின் பொன்னாலான வேலைபாடமைந்த ரதத்தை, அதன் குதிரைகளோடும், சாரதியுடனும் வேகமாக அடித்து நொறுக்கினான். சம்பாதி மூன்று பாணங்களால் ப்ரஜங்கனோடு போர் செய்தபடி, அஸ்வகர்ணம் என்ற ஆயுதத்தால் யுத்த பூமியில் ப்ரஜங்கனை அடித்து வீழ்த்தினான். ரதத்தில் நின்றபடி ஜம்புமாலி ரதத்தையே ஹனுமானின் மார்பில் ஓட்டினான். மாருதாத்மஜன், அந்த ரதத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு, தன் புறங்கையால் ஓங்கி அடித்தான். பெரும் கோஷத்துடன் நலனை நெருங்கிய ப்ரதபனன், நலன் கையால் கண்களை இழந்தான். தபனன் என்ற ராக்ஷஸன் கைகளில் கூர்மையான பாணங்களுடன் போரிட வந்தவனை கற்களால் அடித்தும், முஷ்டியால் குத்தியும் கஜன் வீழ்த்தினான். சைன்யங்களை தன் வாயில் போட்டு விழுங்குவது போல வந்த ப்ரகஸனை சுக்ரீவன், சப்த பர்ணம் என்ற ஆயுதத்தால் தாக்கி பிளந்தான். அம்புகளை மழையாக பொழிந்து பயங்கரமாக காட்சியளித்த ராக்ஷஸனை, விரூபாக்ஷனை, லக்ஷ்மணன் ஒரே பாணத்தால் கீழே விழச் செய்தான். நாலா புறமும் சூழ்ந்து நின்று அக்னி கேதுவும், ரஸ்மி கேதுவும், சுப்தக்னன், யக்ஞ கோபன் என்பவனுமாக ராக்ஷஸர்கள் ராமர் மேல் அம்புகளைப் பொழிந்தனர். நால்வரின் தலைகளையும் ஒரு கூர்மையான அம்பினால், கொய்து கீழே விழும்படி ராமர் செய்து விட்டார். வஜ்ர முஷ்டி மைந்தனுடன் போர் செய்த பொழுது, தன் முஷ்டியினாலேயே மைந்தன் அவனை விழச் செய்தான். அவன் ரதமும், குதிரையும் கூட பூமியில் விழுந்தன. கரு நீல மலை போல நின்ற நீலனை, நிகும்பன் எதிர் கொண்டான். சூரியன் தன் ஒளிக்கிரணங்களால் மேகத்தைத் துரத்துவது போல தன் கூரிய அம்புகளால் நீலனை பிளந்து தள்ள முயன்றான். ப்ரஹஸ்தன் என்ற ராக்ஷஸன், தானும் நூறு அம்புகளைக் கொண்டு நீலனை அடித்தான். தனக்கு சகாயமாக அவன் செய்ததை ஆமோதித்த நிகும்பன் பலமாக சிரித்தான். அவனுடைய ரத சக்கரத்தையே எடுத்து, யுத்தத்தில் விஷ்ணுவைப் போல அந்த சக்கரத்தால் நிகும்பனை காயப்படுத்தி, உதவிக்கு வந்த சாரதியையும் மாய்த்தான். த்விவிதன், அசனி என்ற இந்திரனின் ஆயுதம் போன்று கூர்மையாக இருந்த ஒரு கல்லை எடுத்து எல்லா ராக்ஷஸர்களும் திகைத்து நிற்கும்படி அடிக்கலானான். வானரேந்திரனான த்விவிதனுக்கு ஆயுதமே அது தானே. மலையின் சிகரமோ எனும்படி பெரிய பெரிய பாறைகளையே ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டவன் அவன். அசனிப்ரபன் என்ற ராக்ஷஸன், தானும் அசனிக்கு சமமான பாணங்களை கையில் எடுத்துக் கொண்டான். இந்த அம்புகள் உடல் பூரா தைக்கவும், காயங்களிலிருந்து ரத்தம் பெருக, கோபம் கொண்டு, ஒரு சால மரத்தையே எடுத்து ரதத்தையும் குதிரையையும் வீழ்த்தி அசனிப்ரபனை உயிரிழக்கச் செய்தான். வித்யுன்மாலீ, ரதத்தில் அமர்ந்தவனாக, தங்க முலாம் பூசப் பெற்ற தன் அம்புகளால் திரும்பத் திரும்ப சுஷேணனை அடித்தான். பெரும் கூச்சலுடன் திரும்பத் திரும்பத் தாக்கினான். ரதத்தில் இருந்த அவனைப் பார்த்து, சுஷேணன் ஒரு பெரிய கல்லை எடுத்து, ரதத்தை தூள் தூளாக்கினான். லாகவமாக தப்பி, கீழே இறங்கி நின்ற வித்யுன் மாலி, பூமியில் காலூன்றி நின்றபடி, தன் க3தையை எடுத்து போரைத் தொடர ஆரம்பித்தான். வானரோத்தமனான சுஷேணனும் கோபம் கொண்டு, கையில் பெரிய கல்லை எடுத்துக் கொண்டு, ராக்ஷஸனை துரத்திக் கொண்டு சென்றான். வித்யுன்மாலி என்ற அந்த ராக்ஷஸன், வேகமாக ஓடி வரும் சுஷேணனை மார்பில் க3தை4யால் ஓங்கி அடித்தான். பயங்கரமான அந்த அடியையும் பொறுத்துக் கொண்டு, சுஷேணன், தான் கொண்டு வந்த கல்லை ராக்ஷஸனின் மார்பில் ஓங்கி வீசினான். கல்லால் மார்பில் அடிபட்டது தாங்க முடியாத வலியும் வேதனையும் முகத்தில் தெரிய, வித்யுன்மாலி மயங்கி விழுந்தான். இப்படியாக சூரர்களான வானரர்களும், ராக்ஷஸர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தேவர்களும் தைத்யர்களும் சண்டையிடுவது போல தங்கள் த்வந்த யுத்தத்தை தொடர்ந்தனர். உடைந்து விழுந்த வாட்களாலும், க3தை4களாலும், சக்தி, தோமர, பட்டஸம் என்ற ஆயுதங்களாலும் பிளந்து போன, உடைந்து போன ரதங்களாலும், யுத்தத்திற்கான குதிரைகளுமாக அடிபட்ட யானைகளும், வானர ராக்ஷஸர்களாலும், சக்கரங்கள் அச்சு முறிந்து தாறு மாறாக கிடப்பதுமாக, அந்த யுத்த களம் காணவே பயங்கரமானதாக இருந்தது. வானர, ராக்ஷஸர்களின், தலை இழந்த சரீரங்கள் ஆங்காங்கு இரை பட்டன. தேவாசுர யுத்த முடிவில் இருந்தது போலவே காட்சியளித்தது. வானர வீரர்களால், குத்திக் கிழிக்கப் பட்டவர்களாக, ரத்தம் சொட்ட, வருந்திய ராக்ஷஸர்கள், சூரிய அஸ்தமனம் ஆவதை எதிர் பார்த்து காத்திருந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் த்வந்த யுத்தம் என்ற நாற்பதாவது மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 44 (451) நிசா யுத்தம் (இரவில் யுத்தம்)
இவ்வாறு வானர, ராக்ஷஸர்கள் யுத்தம் செய்து கொண்டு இருக்கும் பொழுதே, சூரியன் அஸ்தமனம் ஆனான். இரவு வந்தது. உயிரைக் குடிக்கும் இரவு வந்தது. ஒருவருக்கொருவர் கொண்ட விரோதத்தால், தங்கள் தங்கள் வெற்றியையே குறியாகக் கொண்ட பயங்கரமான பலம் கொண்ட போர் வீரர்கள், இரவும் போரைத் தொடர்ந்தனர். வானர, ராக்ஷஸர்கள் ஒருவரையொருவர் ஏசிக் கொண்டனர். நீ ராக்ஷஸன் என்று வானரம் சொல்ல, நீ தான் வானரம் என்று ராக்ஷஸனும் பதிலுக்கு ஏசியபடி, அந்த இரவிலும் கை கலப்பில் இரு தரப்பிலும் நிறைய வீரர்கள் மாண்டனர். வெட்டு, குத்து, ஓடு, ஏய், ஏன் ஓடுகிறாய் என்ற சத்தங்கள், அந்த இரவு நேரத்தில் கேட்டன. கறுத்த உடலும், தங்க நகைகளுடன் பெரிய சரீரம் உடைய ராக்ஷஸர்கள், மலையரசன், ஔஷதிகள் பள பளக்க இருப்பது போல தெரிந்தனர். அந்த இரவில், ராக்ஷஸர்கள் கோபத்துடன், என்ன செய்கிறோம் என்பது தெரியாமல், வேகமாக ஓடி, விழுந்து, வானரங்களை விழுங்கினர். பதிலுக்கு வானரங்கள், அவர்களின், தங்கத்தால் ஆன ஆசனங்களையுடைய குதிரைகளை, பள பளக்கும் கொடிகளை, கிடைத்ததை பற்களால் கடித்து த்வம்சம் செய்தனர். ராக்ஷஸ கூட்டத்தை ஒரு கலக்கு கலக்கியவர்களாக, குஞ்சரம் எனும் யானையை, யானையின் மேல் இருந்தவர்களை, கொடிகள், பட்டங்கள் பறக்கும் ரதங்கள் என்று கைக்கு கிடைத்ததை, அடித்து, நொறுக்கி, பற்களால் கடித்து சேதப் படுத்தினர். ராமனும், லக்ஷ்மணனும், கூர்மையான அம்புகளால், கண்ணுக்கு தென் பட்ட, தென் படாத ராக்ஷஸர்களை அடித்தனர். குதிரை, கோவேறு கழுதைகள் பூட்டிய ரதங்கள், சக்கரங்கள் தாறு மாறாக ஓட்டப் பட்டதில், எழுந்த புழுதி காதுகளையும், கண்களையும் நிறைத்தது. மயிர் கூச்செரியும் பயங்கரமான அந்த யுத்தத்தில், அடி பட்டவர்கள் உடலிலிருந்து ரத்தம் ஆறாக பெருகியது. அந்த சமயம், பேரீ, ம்ருதங்க, பணவ எனும் வாத்யங்களின் ஓசை, சங்கம், முழல், இவற்றின் நாதத்தோடு இசைந்து மிகவும் அத்புதமான கலவையாக கேட்டது. அடிபட்டு அலறும் ராக்ஷஸர்களின் ஓலமும், வானரங்களின் அடிபட்டு அழும் குரலும் நாராசமாகக் கேட்டது. சக்திகளாலும் சூல, பரஸ்வதங்களாலும் அடிபட்டு இறந்த வானரங்கள், கற்களால் அடிபட்டு இறந்த ராக்ஷஸர்களின் உடலும், சஸ்திரங்களின் பிரயோகத்தால் துண்டாடப் பட்ட உடல் பாகங்களும், பூஜை முடிவில் இரைந்து கிடக்கும் புஷ்பங்கள் போல யுத்த பூமியில் இரைந்து கிடந்தன. அந்த இரவு, ஹரி, ராக்ஷஸர்களின் உயிரை குடிக்கும் இரவாக அமைந்தது. யுத்த பூமி, இவர்களின் இறந்த உடல்கள், உடல் பாகங்கள், ரத்தம் , நிணம் இவை பெருகி சேறாக, உள்ளே நுழைவதோ, நடப்பதோ கூட கடினமான நிலையில் அருவருப்பாக காட்சியளித்தது. ஜீவன்களால், தவிர்க்க முடியாத காலராத்ரி போல இருந்த நல்ல இருட்டில், ராக்ஷஸர்கள் ராமனையே நோக்கி ஓடி வந்தனர். தங்கள் மேல் பட்ட அம்புகளை வைத்து குறி பார்த்து, அடையாளம் கண்டு கொண்டவர்களாக ஓடி வந்தனர். கோபத்துடன் கர்ஜனை செய்யும் சப்தமும், அடிபட்டு அலறும் சத்தமும் சேர்ந்து, ஏழு சமுத்திரங்களும் சேர்ந்து ஆர்பரிப்பது போல கேட்டது. ஆறு சரங்களை ஏக காலத்தில் பிரயோகம் செய்தார் ராமர். ஆறு பேரைக் கொன்றார். கண் மூடித் திறப்பதற்குள், அக்னி ஜவாலை போன்ற கூர்மையான அம்புகளால், யக்ஞசத்ருவும், துர்தர்ஷன், மகா பார்ஸ்வ, மகோதரர்கள், வஜ்ரத்ம்ஷ்டிரன், மகா காயன், சுக, சாரணர்கள், இவர்கள் ராமருடைய பாணத்தால், மர்மத்தில் அடி பட்டவர்கள், உயிரை காப்பாற்றிக் கொள்ள யுத்த பூமியிலிருந்து வெளியேறினார்கள். பொன்னாலான, வேலைப்பாடமைந்த பாணங்கள், தீ நாக்குகள் போல அந்த இரவில் மின்னின. திக்குகளையும் அடையாளம் காட்டுவது போல, ராம நாமம் பொறிக்கப் பட்ட ராம பாணங்கள் அந்த ரண பூமியை நிறைத்தது. ராமர் எதிரில் நின்ற மற்ற ராக்ஷஸர்கள், நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிகளைப் போல மடிந்து விழுந்தனர். கூர்மையான பொன் நிற பாணங்கள், ஆயிரக் கணக்காக சரத் கால இரவின் கும்மிருட்டில், மின் மினி பூச்சிகள் பறப்பது போல பாய்ந்து சென்றன. ராக்ஷஸர்களின் அட்டகாசமும், வானரங்களின் கூக்குரலும் இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு இரவின் பயங்கரத்தை மேலும் அதிகரிக்கச் செய்தன. திடுமென எழுந்த இந்த சத்தங்கள் த்ரிகூட மலையில் எதிரொலித்தது, மலை பதில் சொல்வது போல இருந்தது. கோலாங்கூலங்கள் பெரிய சரீரம் உடையவை. ராக்ஷஸர்கள் போலவே, கறுத்த உடலும், பலமும் கொண்டவர்கள். கைகளால் அளைந்து தட்டுப் பட்ட ராக்ஷஸர்களை விழுங்கின. அங்கதன் தன் எதிரியைத் தேடி யுத்த பூமியில் அலைந்தான். ராவணன் மகனான இந்திரஜித்தை கண்டு கொண்டு அவன் ரதத்தையும் குதிரையையும் அடித்து விழ்த்தினான். ரதமும் விழுந்து, குதிரையும் அடிபட்ட நிலையில் இந்திரஜித், அங்கதன் எதிரில் நின்றவன், திடுமென மறைந்து போனான். வாலி புத்திரனின் இந்த வீரச் செயலைக் கண்ட தேவர்களும், ரிஷிகளும், மகிழ்ந்தனர். இந்த யுத்தத்தில் ராம லக்ஷ்மணர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதையும், அவர்கள் பிரபாவத்தையும் எல்லா ஜீவராசிகளும் உணர்ந்தனர். இந்திரஜித் யாராலும் ஜயிக்க முடியாதவன் என்று பெயர் பெற்றவன். கண்ணுக்கு புலப்படாமல் மறைந்து நின்றதைக் கண்டு, இதுவே அவன் நல்ல அடி வாங்கியிருப்பதை உணர்த்துவதாக எண்ணி மகிழ்ந்தனர். சுக்ரீவன், விபீஷணன் முதலானோர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படையாகவே சொன்னார்கள். சாது, சாது என்று பாராட்டினர். சத்ருவான இந்திரஜித் பலத்த காயமடைந்தான் என்பதைக் கொண்டாடினார்கள். வாலி புத்திரனான அங்கதனிடம் தோற்றதில் இந்திரஜித் அதிக கோபமும், தாபமும் அடைந்தான். கோபத்தில் செய்வதறியாது, ப்ரும்மாவிடம் பெற்ற வரத்தினால், மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாமல் ஆகாயத்தில் நின்றபடி, கூர்மையான பாணங்களை கல் மாரி பொழிவது போல வர்ஷிக்க ஆரம்பித்தான். நாகமயமான சரங்களால், ராம லக்ஷ்மணர்களையும் அடித்தான். மாயையால் தன்னை மறைத்துக் கொண்டு, ராகவர்களையும் மோகம் அடையச் செய்து, யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து நின்று, கூட யுத்தம் செய்பவனாக, தன் சர பந்தத்தால், ராம லக்ஷ்மணர்களை கட்டி விட்டான். திடுமென, ஆலகால விஷம் போல வந்து விழுந்த சரங்களால் அடிபட்டு, குமாரர்கள் இருவரும் பூமியில் சாய்ந்ததைக் கண்ட வானரங்கள் திகைத்தன. நேரில் நின்று, வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாத ராக்ஷஸ ராஜ புத்திரன், துராத்மா, மறைந்து நின்று மாயையால், ராம லக்ஷ்மணர்களை கட்டி விட்டான், தன் நாக பாசத்தால் நினைவு இழக்கச் செய்து விட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நிசா யுத்தம் என்ற நாற்பதாவது நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 45 (452) நாக3 பாச ப3ந்த4: (நாக பாசத்தால் கட்டுண்டது)
அதி பலசாலியான ராமர், மறைந்து யுத்தம் செய்யும் ராவண குமாரனின் இருப்பிடத்தை நோக்கி பத்து வீரர்களை அனுப்பினார். இரண்டு பேர் சுஷேணனின் தாயாதிகள், நீலன், வாலி புத்திரனான அங்கதன், சரபன் எனும் வேகம் மிகுந்த அக்னி புத்திரன், எப்பொழுதும் வணங்கியே நிற்கும் ஜாம்பவான், ரிஷபம் போன்ற தோள்களையுடைய ரிஷபன், இவர்களை நியமித்தார். அவர்களும் மகிழ்ச்சியுடன் பெரிய மரக்கிளைகளை எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் தாவிச் சென்றனர். பத்து திக்குகளிலும் தேடினர். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பின் வேகத்துக்கு இணையாக செல்லும் சக்தி வாய்ந்த இந்த வானர வீரர்களை, மேலும் மேலும் விசேஷமான அஸ்திரங்களால் ராவணி (ராவணன் மகன்) தடுத்தான். நாராசம் போன்ற ஆயுதங்களால் உடலில் பட்ட காயங்களையும் லட்சியம் செய்யாமல் முன்னேறிச் சென்ற வானரங்கள், சூரியனைப் மேகம் மறைத்ததால் உண்டாகும் இருட்டைப் போல அந்தரிக்ஷத்தில் சூழ்ந்திருந்த அந்தகாரத்தில் எதையும் தெளிவாக காண முடியாமல் திகைத்தனர். யுத்த கலையை அறிந்திருந்த ராவணி, ராம லக்ஷ்மணர்களையே குறி வைத்து மேலும் மேலும் பாணங்களை மழையாக பொழிந்தான். நிரந்தரமான சரீரம் உடைய ராம லக்ஷ்மணர் இருவரும் அம்புகளாக மாறிய பாம்புகளால் சூழப் பெற்றனர். காயம் பட்ட இடத்திலிருந்து ரத்தம் பெருகி ஓடியது. இரண்டு கிம்சுக (ரத்தச் சிவப்பு நிற புஷ்பங்கள்) புஷ்பங்கள் மலர்ந்து கிடப்பது போல இருவரும் கிடந்தனர். கரு நீல மலையை ஒத்த சரீரம் உடையவனான இந்திரஜித் அந்தரிக்ஷத்தில் இருந்தபடி, தான் புலனாகாமலேயே சகோதரர்கள் இருவரையும் பார்த்து இந்திரனுக்கு கூட என்னுடன் யுத்தம் செய்யும் பொழுது, என்னை நேரில் காணவோ, பிடிக்கவோ முடியவில்லை. நீங்கள் மனிதர்கள், எனக்கு ஒரு பொருட்டே இல்லை. இதைக் கேட்ட சகோதரர்கள் இருவரும். கூர்மையான பாணங்களை அவன் இருக்கும் இடம் நோக்கி பிரயோகம் செய்தனர். கணக்கில்லாத பாணங்களை திரும்ப திரும்ப அடித்தாலும், மாயாவியான ராவணி, தன்னை அந்த பாண வர்ஷத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டவனாக, தானும் மேலும் மேலும் அடித்தான். இருவரையும் மர்ம ஸ்தானத்தில் படும்படி அடித்து விட்டு, அஸ்திரங்களால் கட்டவும் கட்டி விட்டான். நிமிஷ நேரத்தில் இருவராலும் பார்க்க கூட முடியவில்லை. த்வஜத்தில் கட்டியிருந்த கொடி, கயிறு அறுந்தவுடன் விழுவது போல இருவரும் பூமியில் சரங்களால் சல்லடையாக துளைக்கப் பட்ட உடலுடன் விழுந்தனர். வீர சயனத்தில், காயங்களிலிருந்து பெருகும் ரத்தத்துடன், இருவரும் உறங்குவது போல கிடந்தனர். உடல் பூரா வலியுடன் அசையாது கிடந்தனர். ஒரு விரல் அளவு இடம் கூட அவர்கள் உடலில் அம்பு படாத இடம் இல்லை. க்ரூரமான ராக்ஷஸனால் அம்புகளால் துளைக்கப் பெற்ற இருவரும் உடலிலிருந்து, ப்ரஸ்ரவன மலையில் அருவி கொட்டுவது போல ரத்தம் பெருகலாயிற்று. முதலில் ராமர், மர்மங்களில் அடிபட்டவராக விழுந்தார். கோபம் கொண்ட இந்திரஜித் முன் ஒரு சமயம் இந்திரனை வெற்றிக் கொள்ள பயன்படுத்திய அம்புகள், கீழ் நோக்கி வீசப்பட்ட, பொன்னிறமான, கூர்மையான, நாராசமான பாணங்களாலும், பல்ல, அஞ்சலிக, எனும் அஸ்திரங்களாலும், வதிஸ தந்தம், சிம்ஹ தம்ஷ்டிரம், க்ஷீரம் எனும் ஆயுதங்களாலும் ராமனை அடித்து விட்டான். பாணங்களால் வீழ்த்தப் பட்டு கீழே கிடந்த ராமனைப் பார்த்து லக்ஷ்மணன் மிகவும் வேதனையடைந்தான். கமல பத்ராக்ஷனான ராமன் அம்புகளால் துளைக்கப் பட்டு பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டு அழ ஆரம்பித்தான். வானரங்களும் மிகவும் வேதனை அடைந்தன. கண்களில் நீர் நிறைய, வருத்தத்துடன், சப்தமிட்டன. வாயு புத்திரன் கூட செய்வதறியாது திகைத்து நின்றான், ராம லக்ஷ்மணர்களைச் சூழ்ந்து கொண்டு வாடிய முகத்தோடு நின்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நாக3 பாச ப3ந்தோ4 என்ற நாற்பதாவது ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 46 (453) சுக்3ரீவாத்3யனு சோக: (சுக்ரீவன் முதலானோர் வருத்தம்)
வானத்தையும், பூமியையும் மாறி மாறி பார்த்த வானரங்கள், பாணங்களால் அடிபட்டு ராம லக்ஷ்மணர்கள் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டனர். செய்வதறியாது திகைத்தனர். ராக்ஷஸர்கள் வேலை. அந்த சமயம் சுக்ரீவனுடன் விபீஷணன் வந்து சேர்ந்தான். நீல, மைந்த, த்விவித, சுஷேண, குமுத, அங்கதன் முதலானோர் அனுமானும் ராகவ குமாரர்கள் இருவரையும் எண்ணி துயரில் மூழ்கியபடி நின்றனர். மெதுவாக சுவாசம் மட்டும் வந்து கொண்டிருக்க, வேறு எந்த வித அசைவும் இன்றி, அம்புகள் தைத்த இடத்தில் ரத்த பெருக்கோடு தூங்குவது போல கிடந்தனர். இரண்டு த்வஜங்கள் விழுந்து கிடப்பது போல, கீழே விழுந்து கிடக்கும் இரண்டு சர்ப்பங்கள் மூச்சு விடுவது போல, பெரு மூச்சு விட்டபடி, கிடந்தனர். கண்களில் நிரம்பிய கண்ணீருடன், சேனைத் தலைவர்களான வானர வீரர்கள் சூழ்ந்து நின்றனர். விபீஷணன் உள்பட, அனைத்து வீரர்களும், அம்பு பட்டு இவர்கள் விழக் கூட செய்வார்களா? என்று நம்ப முடியாத திகிலோடு வைத்த கண் வாங்காமல், விழுந்து கிடந்த இருவரையும், அசையாது கிடந்த இருவரையும் பார்த்தபடி நின்றனர். அந்தரத்தையும் நாலு திக்குகளிலும் பார்வையை செலுத்திய வீரர்கள், மாயா யுத்தம் செய்யும் ராவணியான இந்திரஜித்தை எங்குமே காண முடியவில்லை. தன்னை மறைத்துக் கொண்டு யுத்தம் செய்யும் கலையை கற்றவன் இந்திரஜித். சற்று முயன்று விபீஷணன் தமையன் மகனைக் கண்டு கொண்டான். விபீஷணனும் தான் பெற்றிருந்த வரத்தின் பயனாக செயற்கரிய செய்த வீரனான இந்திரஜித்தை, வானத்தில் மறைந்து கொண்டு நிற்பதையும் கண்டு கொண்டான். தேஜஸ், புகழ், விக்ரமம் இவற்றில் சற்றும் சளைத்தவன் அல்ல இந்திரஜித். தன் அம்புகளின் இலக்கான ராம லக்ஷ்மணர்கள், தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு, மற்ற ராக்ஷஸர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தபடி, தூஷணனைக் கொன்றவன், கரனை வீழ்த்திய மகா பலசாலி என்று சொன்னீர்களே, இதோ வந்து பாருங்கள், என் பாணங்களால் அடித்து வீழ்த்தி விட்டேன். இவர்களை இனி யாராலும் பிழைக்கச் செய்ய முடியாது என்று மார் தட்டி, தற் பெருமையடித்துக் கொண்டான். எல்லா ரிஷிகள் கூட்டமும் வந்து சேர்ந்தாலும், இவர்களை காப்பாற்ற முடியாது. எந்த இருவர் காரணமாக என் தந்தை கவலையில் இரவுகளில் தூக்கமின்றி வாடுகிறானோ, மழைக் கால நதி போல எவர் பொருட்டு லங்கை கலங்கி தவிக்கிறதோ, எல்லா அனர்த்தங்களுக்கும் மூலமான இவ்விருவரையும் நான் வீழ்த்தி விட்டேன். ராம, லக்ஷ்மணர்களின், எல்லா வானர வீரர்களின் விக்ரமமும் பலனின்றி போயிற்று. சரத்காலத்து மேகம் போல இவர்கள் சக்தியும், வீர்யமும் உபயோகமின்றி வீணாயின. இவ்வாறு சொல்லிக் கொண்டே அருகில் நின்றிருந்த நீலனையும், மற்ற வானர சேனைத் தலைவர்களையும் அடிக்க ஆரம்பித்தான். நீலன் மேல் ஒன்பது பாணங்கள், மைந்தன், த்விவிதன் மேல் மூன்று மூன்று பாணங்கள், ஜாம்பவானின் மார்பை பிளந்து விடும் எண்ணத்தோடு, அவர் மார்பில் ஒரு பாணம், வேகமாக சென்ற ஹனுமானின் மேல் பத்து அம்புகள், கவாக்ஷன், சரபன் இருவர் மேலும் இரண்டு இரண்டு பாணங்கள் போட்டு வதைத்தான். இந்திரஜித் வாலி புத்ரனான அங்கதனையும், கோலாங்கூலர்களின் தலைவனான வீரனையும், பாணங்களை மழையாக பொழிந்து, அவர்கள் தப்பி ஓடுவதைத் தடுத்தான், இவ்வாறு ஒருவர் விடாமல் அடித்து விட்டு, உச்சஸ்தாயியில், பெரும் குரலில் முழக்கமிட்டான். மற்ற சிறிய வானரங்கள் பயந்து ஓடுவதைப் பார்த்து பெரிதாக சிரித்தான். இதோ, பாருங்கள். யுத்த களத்தில் என் பாணங்களால் கட்டி விட்டேன். ராக்ஷஸர்களே, கவலையை விடுங்கள். எனவும், ராக்ஷஸர்கள் ராவணியின் இந்த அத்புதமான வீர செயலை ஆச்சர்யத்துடன் நம்ப முடியாமல் பார்த்தபடி நின்றனர். சற்றுப் பொறுத்து, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி, இடி முழக்கம் போன்ற தங்கள் குரலில் இந்திரஜித்தை வாழ்த்தலானார்கள். அசையாமல் பூமியில் கிடந்த ராம லக்ஷ்மணர்களைப் பார்த்து உயிரிழந்து விட்டனர் என்று எண்ணி, இந்திரஜித்தை சூழ்ந்து கொண்டு, மகிழ்ச்சியுடன் லங்கை திரும்பிச் சென்றனர். ராவணியின் பாணங்களால் ராம லக்ஷ்மணர்கள் அடிபட்டு கிடப்பதை தங்களுக்குள் பேசிக் கொண்டே சென்றனர். சுக்ரீவனை பயம் சூழ்ந்து கொண்டது. முகம் வாடி, கண்களில் நீர் ததும்ப, சோகமே உருவாக நின்ற சுக்ரீவனைப் பார்த்து விபீஷணன், சுக்ரீவா தைரியத்தை வரவழைத்துக் கொள். யுத்தம் என்றால் இப்படித்தான் விஜயம், வெற்றி நிலையானதல்ல. நமக்கு பாக்கியம் மீதி இருந்தால் இவர்கள் இருவரும் பிழைத்து எழுந்து விடுவார்கள். இது மூர்ச்சைதான். மயக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். நீ உன்னையும் தேற்றிக் கொண்டு, மற்ற வானரங்களும் பயந்து ஓடாமல் சேனையைக் கட்டுப் படுத்தி நிலை நிறுத்து. இவர்கள் சத்ய தர்ம பராக்ரமர்கள். இவர்களுக்கு ம்ருத்யுவினால் ஆபத்து இல்லை. தன் கண்ணீரால் நனைந்த கைகளால் சுக்ரீவன் கண்களை துடைத்த விபிஷணன், பின் தண்ணீரைக் கொண்டு வந்து ஜபம் செய்து அந்த ஜலத்தை சுக்ரீவன் மேல் தெளித்தான். வானர ராஜன் மீது நீரைத் தெளித்து அவனை உலுக்கி எழுப்பிய பின், வானர ராஜனே, இது ஸ்னேகத்தை, அன்பை வெளிப்படுத்தும் நேரமல்ல. எழுந்திரு. காலம் கடந்து போகு முன் யுத்த களத்தில் நமது பொறுப்பை நிறைவேற்றுவோம். அடுத்து செய்ய வேண்டியதை யோசி, என்று உணர்த்தினான். முழுவதும் நினைவு தப்பு முன் ராம,லக்ஷ்மணர்களை காப்பாற்ற முயற்சி செய். நம்மை பின்பற்றி வந்துள்ள சைன்யத்தை பற்றி யோசி. இவர்களையும் காப்பாற்ற வேண்டும். நினவு திரும்பிய உடனேயே ராமர் நம்மை ரக்ஷிப்பார். இது ராமனுடைய இயல்பே அல்ல. இப்படி மூர்ச்சையடைந்து கிடப்பது ராமன் விஷயத்தில் புதியதாக இருக்கிறது. ஆயுள் நீங்கியவனாக தெரியவில்லை. முகத்தைப் பார். லக்ஷ்மீகரமாக விளங்குகிறது. அதனால் உன்னைத் தேற்றிக் கொள். இந்த சேனையையும் நல்ல விதமாக சொல்லித் தேற்று. திரும்ப நாளை யுத்தத்திற்கான காரியங்களை ஆரம்பித்து நான் ஏற்பாடுகளை கவனிக்கிறேன். இதோ பார், பயத்தால் விரிந்த கண்களுடன், மயிர்கூச்செரிய, ஒருவரோடு ஒருவர் காதோடு காதாக பேசிக் கொண்டிருக்கிறார்களே, வானரங்கள், என்னைக் கண்டதும் ஓட்டம் எடுக்கிறார்களே, இந்த படை வீரர்களை சமாளி. சந்தோஷப்படுத்து. வாடிய மாலையை கழற்றி எறிவது போல இந்த சோகத்தை, வானரங்கள் மறந்து உற்சாகம் அடையும்படி செய். வானர ராஜனை இப்படி சொல்லி சமாதானம் செய்த விபீஷணன், தலை தெறிக்க ஓடும் வானர வீரர்களை ஒன்று சேர்த்து சேனையை திரும்ப நிலை நிறுத்தும் முயற்சியில் ஈ.டுபட்டான்.
மகா மாயாவியான, இந்திரஜித் ராக்ஷஸர்கள் புடை சூழ, தந்தையைக் காணச் சென்றான். ஆசனத்தில் வீற்றிருந்த தந்தையைப் பார்த்து, ராம, லக்ஷ்மணர்கள் அடி பட்டு விழுந்தார்கள். என் பாணங்களால் கட்டி விட்டேன் என்று சொல்லவும், மகனை மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டான் ராவணன். ராக்ஷஸர்கள் மத்தியில், மகன் வெற்றி வீரனாக வந்து சத்ருவை வீழ்த்தி விட்டேன் என்று சொல்லக் கேட்ட தந்தையான ராக்ஷஸ ராஜன், மகனை உச்சி முகர்ந்து பாராட்டி, நடந்ததை விளக்கிச் சொல்லும்படி கேட்டான். இந்திரஜித்தும், தன் பாணங்கள் பட்டு இருவரும் அசைவற்று பூமியில் கிடப்பதைச் சொன்னான். இதுவரை மனதில் உறுத்திக் கொண்டிருந்த ராம, லக்ஷ்மணர்கள் பற்றிய பயம் விலக, ராவணன் தன் மகனைக் கொண்டாடினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சுக்ரீவாத்3யனுசோக: என்ற நாற்பதாவது ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 47 (454) நாக3 ப3த்3த4 ராம லக்ஷ்மண ப்ரத3ர்சனம் நாக பாசத்தால் மூர்ச்சித்த ராம லக்ஷ்மணர்களை காட்டுதல்)
ராவணாத்மஜன், இந்திரஜித், வெற்றி வீரனாக லங்கை திரும்பியதும், ராகவர்களை பத்திரமாக பாதுகாத்துக் கொண்டு, வானர வீரர்கள் நின்றனர். ஹனுமான், அங்கதன், நீலன், சுஷேணன், குமுதன், நலன், க3ஜன், க3வாக்ஷன், க3வயன், சரப4ன், க3ந்த4மாத3னன், ஜாம்ப3வான், ரிஷப4ன், ஸ்கந்தன், ரம்ப4:, சதபலி, ப்ருது2 எல்லோரும் சேனையை அணிவகுத்து நிறுத்தி வைத்துக் கொண்டும், மரங்களில் ஏறி நின்றபடியும், குறுக்கும், நெடுக்குமாக, மேலாகவும், எல்லா திசைகளிலும் கவனம் செலுத்தியபடி, கவனமாக காவல் இருந்தனர். புல் அசைந்தாலும், ராக்ஷஸனோ என்று நடுங்கினர். மகிழ்ச்சியில் திளைத்த ராவணன், இந்திரஜித்தை அனுப்பி விட்டு, சீதைக்கு காவல் இருந்த ராக்ஷஸிகளை அழைத்தான். த்ரிஜடையும், மற்ற ராக்ஷஸிகளும், அரசனது ஆணை என்பதால் வந்து சேர்ந்தனர். அந்த ராக்ஷஸிகளிடம் சந்தோஷமாக ராவணன் சொன்னான். இந்திரஜித்தால் கொல்லப் பட்டார்கள், ராமனும், லக்ஷ்மணனும். சீதையிடம் சொல்லுங்கள். புஷ்பக விமானத்தில் ஏற்றிக் கொண்டு போய் வீழ்ந்து கிடக்கும் ராம லக்ஷ்மணர்களைக் காட்டுங்கள் என்றான். எந்த ஆசிரயம், அடைக்கலம் தனக்கு நிச்சயம் என்று நம்பி என்னை இதுவரை லக்ஷியம் செய்யாமல் இருந்தாளோ, அது நாசமானதைக் காட்டுங்கள். இவள் கணவனோடு, சகோதரனான லக்ஷ்மணனும் மடிந்தான். யுத்த களத்தில் வீழ்ந்து கிடக்கும் அவர்களைப் பார்த்தால், மைதிலி, கவலையின்றி, மனதில் எந்த வித சங்கடமும் இன்றி, எதையும் லட்சியம் செய்யாமல் என்னை வந்தடைவாள்.
எல்லா விதமான ஆபரணங்களும் அலங்கரிக்க, இன்று காலனின் வசமான ராமனை லக்ஷ்மணனையும் சேர்த்து தானே கண்ணார கண்டு திரும்பினால் வேறு வழியின்றி விசாலா, என்னை நாடி வந்து ஏற்றுக் கொள்வாள் என்பது நிச்சயம். துராத்மாவான ராக்ஷஸ ராஜனின் இந்த வீண் பிதற்றலைக் கேட்டு, ராக்ஷஸிகள் அப்படியே என்று சொல்லி, புஷ்பகம் இருக்கும் இடம் சென்றனர். புஷ்பகத்தை எடுத்துக் கொண்டு ராவணனின் கட்டளைப்படி, அசோக வனம் சென்று மைதிலியை அழைத்துச் சென்றனர். தன் கணவனை எண்ணி வருந்தும் அவளையும் ஏற்றிக் கொண்டு, த்ரிஜடையும் உடன் வர ராக்ஷஸிகள் ராம லக்ஷ்மணர்களைக் காட்ட அவளை அழைத்துச் சென்றனர். இதனிடையில் ராவணன், லங்கையை பதாக, த்வஜங்களுடன் வெகுவாக அலங்கரிக்கச் செய்து விட்டான். ராகவர்கள் இருவரும், ராமனும் லக்ஷ்மணனும் இந்திரஜித்தால் வதம் செய்யப் பட்டனர் என்று பெருமளவில் முறையடித்து அறிவித்து விட்டான். விமானத்தில் த்ரிஜடையுடன் சென்ற சீதை வானர சேனை சின்னா பின்னமாகி கிடப்பதைக் கண்டாள். ராக்ஷஸர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதையும் கேட்டாள். ராம லக்ஷ்மணர்கள் அருகில் துக்கத்துடன் முகம் வாடி இருந்த வானரர்களையும் கண்டாள். அம்புகளே படுக்கையாக, விழுந்து கிடந்த வீரர்கள் இருவரையும் கண்டாள். நினைவின்றி நாக பாசத்தால் கட்டுண்ட நிலையில் லக்ஷ்மணனையும், ராமனையும் பார்த்தாள். கவசம் பிளந்து போய் அதனிடையில் அம்பு துளைத்து கிடந்த சரீரத்தைப் பார்த்தாள். பூமியில் தூண்கள் சரிந்து கிடப்பது போல கிடந்த ராம லக்ஷ்மணர்கள் இருவரையும் பார்த்து, புண்டரீகம் போன்ற கண்களையுடையவர்கள், அக்னி குஞ்சுகள் போல காணப்பட்ட இருவரையும் கண்டாள். நர ரிஷபர்கள் என்று புகழ் பெற்றவர்கள் இவ்வாறு சர தல்பத்தில் (அம்பு படுக்கையில்) கிடப்பதைக் கண்டாள். துக்கம் தாங்காமல் பெரிதாக புலம்பினாள். தன் கணவனையும், சகோதரனான லக்ஷ்மணனையும் கண்களை நீர் மறைக்க, பார்த்து அழுதாள். தேவர்களுக்கு இணையான பிரபாவம் உடைய இருவரையும் பார்த்து இருவரும் உயிரிழந்ததாகவே எண்ணி புலம்பினாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நாக3 பாச ப3த்3த4 ராம லக்ஷ்மண ப்ரதர்சனம்: என்ற நாற்பதாவது ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) 4)
அத்தியாயம் 48 (455) சீதாஸ்வாஸனம் (சீதையை சமாதானம் செய்தல்)
தன் கணவன் அடிபட்டுக் கிடப்பதையும், அருகில் லக்ஷ்மணனும் வீழ்ந்து கிடப்பதையும் பார்த்து, சீதை பெரிதும் அழுதாள். துக்கம் அவளை உலுக்கியது. லக்ஷணம் அறிந்த சோதிடர்கள், எனக்கு புத்திரர்கள் உண்டு என்றும், சுமங்கலியாக இருப்பாய் என்றும் சொன்னார்களே, இப்பொழுது அடிபட்டு ராமன் கிடக்கும் சமயம், அந்த ஞானிகள் சொன்னது கூட பொய்யாகப் போனதே. யாகத்தில் ரிஷி பத்னிகள் என்னிடம் சொன்னார்களே, உன்னுடன் சேர்ந்து ராமன் நிறைய யாகங்கள் செய்வான் என்றனரே, ராமன் இப்படி கிடக்கும் சமயம் அந்த உத்தமர்கள் சொன்னதும் பொய்யாகிப் போனதே. தவத்தில் சிறந்த ப்ராம்மணர்கள், நான் கேட்ட பொழுது சுபமான செய்திகளைச் சொன்னார்களே, அவை, அந்த ஞானிகளின் வாக்குமா பொய்யாகிப் போகும்? வீரனான அரசனின் மனைவி நீ பாக்கியம் செய்தவள் என்றார்களே, அவர்கள் எல்லோருமே இந்த ராமன் அடிபட்டு கிடப்பதைப் பார்க்க, பொய்யர்களாக ஆனார்களா? இந்த ஞானிகளின் வாக்கும் தவறுமா? என் பாதங்களைப் பார்த்து இந்த பாதங்கள், பரந்த ராஜ்யத்தில் கணவனுடன் கூட அமர்ந்து ராஜ்யாபிஷேகம் செய்யப் பெறும் தகுதி வாய்ந்தவை என்றனரே, வைதவ்யம் அடையும் பெண்களுக்கு இது போன்ற சுபமான அங்க லக்ஷணங்கள் அமைவது அரிது. சுபமான என் அங்க லக்ஷணங்கள் எல்லாம் அழிந்து போயினவா? பத்மம் ஸ்த்ரீகளின் சரீரத்தில் (அடையாளமாக) தென்படும் பொழுது, பத்மம் என்ற பெயரே புனிதமாகிறது என்பார்களே, அது எப்படி தவறாகும். இப்படி ராமன் வீழ்ந்து கிடக்கிறானே, இவை எப்படி பயனற்றுப் போகும். என் கேசம் சூக்ஷ்மமானது, கறுத்த குழல், என் புருவங்கள் இணைந்தவை, என் துடைகளும் பெருத்து ரோமமின்றி இருப்பவை, பற்கள் வரிசையாக, குறைவின்றி இருக்கின்றன. என் ஸ்தனமோ பெருத்தும், இடைவெளியின்றியும் இருப்பவை. வெளியில் தெரியாமல் அடங்கிக் கிடக்கும் என் நாபியும் சுபமான லக்ஷணமே. மணியின் நிறம் என் உடல் நிறம், என் உடலில் வளர்ந்துள்ள ரோமம் கூட ம்ருதுவானவையே. இந்த பன்னிரண்டு லக்ஷணங்களும் என்னிடம் இருப்பதாக விஷயம் அறிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்களே. சுபமான லக்ஷணங்களை உடையவள், பாக்கியசாலி என்று புகழ்ந்தனரே. கால்களும், கைகளும், சமமாக வர்ணமும் உடையவை, மந்தஸ்மிதா என்றும் கன்யா லக்ஷணம் அறிந்தவர்கள் வர்ணித்தனரே. பெரும் ராஜ்யத்தில் சக்ரவர்த்தினியாக கணவனுடன் கூட எனக்கு அபிஷேகம் நடக்கும் என்றார்களே. இதைச் சொன்னவர்களும் சோதிடக் கலையில் வல்லவர்கள். அது அனைத்தும் இப்படி வீணாகுமா? ஜனஸ்தானத்தை சுத்தம் செய்து, தாண்ட முடியாத கடலையும் தாண்டி வந்த வீரர்கள் இந்த கோஷ்பதம் (பசுக்களின் முன் இரண்டு, பின் இரண்டு குளம்புகளுக்கு இடையில் உள்ள அளவு தூரம்) வீழ்த்தப் பட்டார்களே. வாருணம், ஐந்திரம், ஆக்னேயம், வாயவ்யம், ப்ரும்ம சிரஸ் எனும் அஸ்திரம் இவை ராகவர்களை வந்து அடையட்டும். கண்ணில் படாமல், மறைந்து நின்று மாயா யுத்தம் செய்து, இந்திரனுக்கு சமமான இந்த வீரர்களை, என் நாதனான ராமனையும் லக்ஷ்மணனையும் அனாதைகளாக அடித்து விட்டிருக்கிறான். ராகவன் கண் முன்னால் நின்று யாரும் யுத்தம் செய்து ஜயிக்க முடியாது. வாயு வேகத்தில், மனோ வேகத்தில் செல்பவனாக இருந்தாலும், ராகவ பாணத்திற்கு முன்னால் நிற்கவே முடியாது. இது காலத்தின் கோலம் தான். க்ருதாந்தன் எனும் விதியின் தவிர்க்க முடியாத விளையாட்டே. ராமன், தன் சகோதரனுடன் யுத்தத்தில் அடிபட்டு வீழ்ந்தான் என்பது நடக்கக் கூடிய காரியமாக இல்லவே இல்லை. இது போல ராமனையும், மகா பலசாலியான லக்ஷ்மணனையும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. என்னையும், என் தாயையும், மாமியாரான தபஸ்வினி கௌசல்யையும் கற்பனையில் கூட இப்படி ஒரு காட்சி அண்டாது. எப்பொழுது திரும்பி வருவார்கள்? எப்பொழுது சீதையையும், லக்ஷ்மணனையும், ராமனையும் காண்போம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்களே, அந்த பெரியவர்களிடம் என்ன சொல்ல. விரதம் முடியும் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் தாய் மார்களிடம் எப்படிச் சொல்வோம்? இவ்வாறு வருந்தி புலம்பும் சீதையைப் பார்த்து த்ரிஜடா சொன்னாள். தேவி, வருந்தாதே. உன் கணவன் உயிருடன் தான் இருக்கிறான். நான் சொல்வதற்கான காரணங்களைச் சொல்கிறேன். எப்படி இந்த ராம லக்ஷ்மணர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்று தீர்மானமாக சொல்கிறேன் என்பதன் காரணத்தை சொல்கிறேன், கேள். தங்கள் தலைவன் அடிபட்டு போரில் மாண்டான் என்று தெரிந்தால் படை வீரர்கள் முகத்தில் கோபமோ, ஆனந்தமோ இருக்காது. தவிர, இந்த புஷ்பக விமானம் இந்த வீரர்கள் உயிரிழந்திருந்தால் உன்னைத் தாங்காது. நீரில் துடுப்பை இழந்த படகு இலக்கின்றி அலைவது போல இந்த சேனை உற்சாகமின்றி குறிக்கோள் இன்றி தன் போக்கில் அலைந்து கொண்டிருக்கிறது. இவர்களை ஒன்று சேர்த்து நடத்திச் செல்லும் தலைவன் இல்லாதது தான் காரணம். நான் சொல்வதைக் கேள். இருவருமே, இதோ எழுந்து சக்தி வாய்ந்த இந்த சேனையை பழையபடி, உற்சாகமாக, கவலையின்றி போர் செய்யும் பரபரப்புடன், துடிப்புடன் செயல் படச் செய்து விடுவார்கள். நல்ல காலம் உதயமாகிறது என்ற நம்பிக்கையோடு பார். காரண காரியங்கள் அதைத்தான் தெளிவாகச் சொல்கின்றன. காகுத்ஸர்கள் இருவரும் அடிபட்டு தான் வீழ்ந்திருக்கிறார்கள். உயிர் தரித்திருக்கிறார்கள். உன்னிடம் கொண்ட அன்பினால் சொல்கிறேன். நான் இதுவரை பொய்யான பேச்சை பேசியதே இல்லை. இனியும் சொல்ல மாட்டேன். உன் சரித்திரத்தாலும், குண சீலங்களாலும் என் மனதில் நிறைந்து விட்டாய். இந்த இருவரும் இந்திரன் முதலான தேவர்கள் வந்து நின்றாலும், யுத்தத்தில் ஜயிக்கக் கூடியவர்கள். இவர்களை யாராலும் அசைக்க முடியாது. அப்படி ஒரு காட்சியை நான் கண்டிருக்கிறேன். அதனால் தான் உன்னிடம் திரும்பத் திரும்ப சொல்கிறேன். கவனித்துப் பார், மைதிலி, உணர்வு இன்றி கிடக்கும் பொழுதும் இவர்களது முகத்தில் லக்ஷ்மீகரமான களை அப்படியே இருக்கிறது பார். விட்டுப் போகவில்லை. சாதாரணமாக, உயிர் இழந்த மனிதர்களின் முகத்தைக் காணும் பொழுது விகாரமாகத் தெரியும். ஜனகாத்மஜே, உன் சோகத்தை விடு. மோகத்தை கலைத்துக் கொண்டு நிதர்சனமான உண்மையைப் பார். ராம லக்ஷ்மணர்கள் பொருட்டு மனம் வருந்தாதே. இந்த சமயம் இவ்விருவரும் உயிரைத் துறந்து போகக் கூடியவர்களே அல்ல. இவ்வாறு த்ரிஜடை சொல்லவும், கை கூப்பி வணங்கி ஏவமஸ்து நீங்கள் சொன்னது பலிக்கட்டும் என்று வேண்டிக்கொண்ட உத்தம ஸ்த்ரீயான மைதிலி அந்த புஷ்பக விமானத்தை திருப்பச் செய்து த்ரிஜடையுடன் லங்கை வந்து சேர்ந்தாள். புஷ்பக விமானத்திலிருந்து இறங்கி பழையபடி, அசோக வனத்தில் ராக்ஷஸிகளின் மத்தியில் இருக்கலானாள். ராக்ஷஸ ராஜன் விரும்பி, கவனமாக பாதுகாத்து வந்த அந்த மரங்கள் அடர்ந்த அந்த வனத்தில் உடல் இருந்தாலும், உள்ளம் ராம லக்ஷ்மணர்களிடமே இருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சீதாஸ்வாஸனம் என்ற நாற்பதாவது எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 49 (456) ராம நிர்வேத3: (ராமனின் மன வருத்தம்)
சுக்ரீவன் முதலான வீரர்கள் எதுவும் செய்யத் தோன்றாமல், அச்சமயம் தங்கள் பொறுப்பு அவ்விருவரையும் பாதுகாத்தலே என்பது போல சுற்றி சுற்றி வந்தனர். முகத்தில் வேதனையும், கவலையும் மண்டிக் கிடந்தாலும் கோரமான பாணங்களின் தாக்குதலால் நினைவிழந்து கிடந்தாலும், நினைவைத் திரும்ப பெறுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். முதலில் நினைவு வரப் பெற்ற ராமன் எழுந்து நிலைமையை தெரிந்து கொண்டு விட்டான். தன் மன வலிமையாலும், உடல் ஆரோக்யத்தாலும், பாணங்களின் பாதிப்பிலிருந்து சீக்கிரமாக விடுபட்டான். அருகில் ரத்தம் பெருக ஆழமான காயங்களுடன் தீனமான முகத்துடன் கிடந்த சகோதரனைப் பார்த்து திடுக்கிட்டான். சீதையினால் எனக்கு என்ன பயன்? உயிர் வாழ்ந்து தான் என்ன பயன்? இதோ என் சகோதரன் உயிர் இழந்தவனாக கிடப்பதைக் காண நேர்ந்து விட்டதே. தேடிப் பார்த்தால், பூமியில் சீதைக்கு சமமான பெண் கிடைப்பாள். லக்ஷ்மணனுக்கு சமமான சகோதரன் கிடைக்க மாட்டான். எனக்கு மந்திரியாக, வழி காட்டியாக விளங்குபவன், இந்த வானர கூட்டத்தின் முன்னால் நான் உயிரை விடுவேன். சுமித்ரா மகன், ஐந்தாவது நிலையை (மரணம்) அடைந்து விட்டது நிஜமானால், நான் தாயார் கௌசல்யையிடம் என்ன பதில் சொல்வேன்? கைகேயியிடம் தான் என்ன சொல்வேன்? சுமித்ரா அம்பாவிடம் எந்த முகத்துடன் எதிரில் போய் நிற்பேன்? தன் மகனைக் காண ஆவலுடன் காத்து நிற்பவளிடம் நான் போய் என்ன சொல்வேன். இந்த செய்தி காதில் பட்டால் அவள் குரரீ என்ற பக்ஷியைப் போல கதறுவாள். கன்றை இழந்த தாய் பசு போல துடிப்பாள், நடுங்குவாள். இவன் இன்றி தனியாக நான் போய் நின்றால், அவளை எப்படி சமாதானப் படுத்துவேன். சத்ருக்னனும், பரதனும் என்ன நடந்தது என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்? என்னுடன் வனம் வந்தவன், அவன் இல்லாமல் நான் திரும்ப அயோத்தி போவேனா? சுமித்ரா எதுவும் சொல்லக் கூட வேண்டாம், அவள் முகக் குறிப்பில் அவள் மன வருத்தம் தெரியும். அதைக் கூட நான் தாங்க மாட்டேன். இங்கேயே நானும் சரீரத்தைத் துறந்து விடுகிறேன். உயிர் வாழ என்னால், முடியாது. ஹா திக், என் கஷ்டகாலம், துஷ்க்ருத்யங்களை செய்தவன், அனார்யன், நான். என் காரணமாக இந்த லக்ஷ்மணன் மாண்டவன் போல கிடக்கிறான். சரங்களே படுக்கையாக. லக்ஷ்மணா, எப்பொழுதும் நான் தான் மனம் வருந்தி புலம்புவேன். நீ சமாதானம் செய்வாய். உன்னால் எழுந்து என்னிடம் பேச முடியாமல் சக்தியிழந்து கிடக்கிறாய். இந்த யுத்தத்தில் ராக்ஷஸர்களை அடித்து வீழ்த்தியவன் நீ. நீயே அந்த யுத்த பூமியில் மற்றவர் மூலம் அடிபட்டு விழுவாயா? நம்பவே முடியவில்லை. தன் உடல் ரத்தமே சுற்றிலும் பெருகி ஓட இப்படி அம்பு படுக்கையில் கிடக்கிறாயே, சூரியன் அஸ்தமனம் அடைந்தது போல காண்கிறாய். மர்ம ஸ்தானங்களில் பட்டு விட்டதா? அது தான் பேச முடியவில்லையா? நீ வாய் திறந்து பேசாவிட்டால் கூட உன் கண்கள் சொல்லுமே. வனம் போகிறேன் என்று நான் கிளம்பியதும், யோசிக்காமல் உடன் வந்தவன். நீ யமனிடம் போனால் நான் பார்த்துக் கொண்டு நிற்கவா? நானும் உன்னை தொடர்ந்து வருவேன். என் தவற்றால் நீ இந்த கதியடைந்தாய். எனக்கு இஷ்டமான பந்து நீ. இப்படி ஒரு அவஸ்தையை அனுபவிக்க நேர்ந்துள்ளது. மிகுந்த கோபம் வந்த நேரத்தில் கூட நீ கடுமையாக பேசிக் கேட்டதில்லை. பிரியமில்லாததை எப்பொழுதும் சொன்னதில்லை. ஒரே வேகத்தில் ஐனூறு பாணங்களை ஒரே சமயத்தில் விட்டவன். கார்த்த வீர்யனை விட வில் வித்தையில் சிறந்தவன், லக்ஷ்மணன். இந்திரனே எதிரில் வந்து அஸ்திரங்களை, அம்புகளை பிரயோகித்தாலும், அதற்கு சமமான அஸ்திரங்களைக் கொண்டு திருப்பித் தரக் கூடியவன். உயர்ந்த உத்தமமான படுக்கைகளில் தூங்க வேன்டியவன். பூமியில் அம்புகளுக்கிடையில் கிடக்கிறானே. என்னை பொய்யன் என்று தூற்றப் போகிறார்கள். விபீஷணனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தது க3தை4யாகப் போகிறது. சுக்ரீவா நீ திரும்பிப் போ. ராவணன், இந்த நிலையில் வெகு வேகமாக தாக்கி என்னையும் அழிக்கவே முயலுவான். அங்கதன், நீலன், நலன், அவர்கள் சேனை வீரர்கள் எல்லோரையும் பத்திரமாக அழைத்துக் கொண்டு, வந்த வழியே சமுத்திரத்தைக் கடந்து செல். யுத்தத்தில் யாரும் செய்ய முடியாத அரிய செயலை ஹனுமான் செய்தான். ருக்ஷ ராஜனும், கோலாங்கூலாதிபனும் செய்த வீர சாகஸங்களையும் நான் மறக்க மாட்டேன். அங்கதன் செய்ததையோ, மைந்த த்விவிதர்களின் செயலையோ, கேஸரியான சம்பாதி செய்த அத்புதமான யுத்தத்தையும் மறக்க மாட்டேன். தங்கள் பங்குக்கு க3வயன், க3வாக்ஷன், சரப4ன், க3ஜன், மற்றும் வானர வீரர்கள் உயிரை திருணமாக மதித்து போரிட வந்தார்கள். சுக்ரீவா, மனிதனாக பிறந்து விதியை வெல்ல முடியாது. ஒரு ஆப்தனான, அன்புடைய நண்பனாக செய்ய வேண்டியதை நீ செய்து விட்டாய். சுக்ரீவா, நீ தர்மத்திற்கு பயப்படுபவன். மித்ரனாக நீ செய்த உபகாரங்கள் மிக அதிகம். நீயும் உன்னை சார்ந்த வானர வீரர்களும் அதே அளவு விஸ்வாசத்துடன் எனக்காக உயிரைக் கொடுக்கவும் தயாரானார்கள். எல்லோருக்கும் அனுமதி தருகிறேன். உங்கள் விருப்பம் போல் திரும்பிச் செல்லுங்கள். கறுமையில்லாத பழுப்பு நிற கண்களையுடைய உடைய வானரங்கள், ராகவனின் பேச்சைக் கேட்டு மேலும் கண்ணீர் பெருக்கியபடி நின்றனர். இந்த நிலையில் விபீஷணன், கையில் ஏந்திய க3தை4யுடன், சேனையை தாறு மாறாக ஓடாமல் வகைப் படுத்தி நிறுத்தி வைத்து விட்டு ராகவன் இருக்கும் இடம் வந்தான். கரு நீல மலை ஒன்று வேகமாக நடந்து வருவதைப் போல வந்த அவனை ஒரு நிமிஷம் ராவணி என்று (இந்திரஜித்) நினைத்த வானரங்கள் அலறின. அசையாமல் நின்றன. யுத்தபூமியில் புழுதி மண்டிய சரீரத்துடன் செய்வதறியாது நின்றன. இருவரும் வீழ்ந்தார்கள் என்று கேள்விப்பட்டதால், ராம லக்ஷ்மணர்களைக் காண விபீஷணன் வேகமாக வந்தான். காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட மேகக்கூட்டம் போல, வானர வீரர்கள் ஆங்காங்கு நிற்பதையும், இந்திரஜித் தான் வருகிறான் என்று நினைத்து தன்னைப் பார்த்து வானரங்கள் அலறுகின்றன என்பதையும் விபீஷணன் புரிந்து கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராம நிர்வேதோ3 என்ற நாற்பதாவது ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 50 (457) நாக பாச விமோக்ஷணம் (நாக பாசத்திலிருந்து விடுபடுதல்)
வானர ராஜன் சுக்ரீவன் தான் முதலில் தன்னை சமாளித்துக் கொண்டவன். வானரங்களை அதட்டி நகரச் செய்தான். சற்று தூரத்தில் விபீஷணன் வருவதைப் பார்த்து இந்திரஜித் என்று பயந்து ஓடிய வானரங்கள் மேலும் கலவரத்தை மூட்டி விட்டன. (முந்தைய அத்தியாயத்தில் இந்த வானரங்களின் பயத்தைப் பற்றி பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ஆறு ஸ்லோகங்களால், சுக்ரீவனும், அங்கதனும் இந்த வானரங்களின் பயத்தைப் போக்க எடுத்துக் கொண்ட சிரமங்களையும், சந்தேகம் விலக அவர்கள் தன்னிலை அடையச் செய்ததையும் வர்ணித்திருக்கிறார், கவி வால்மீகி) அங்கதன் சுக்ரீவனைப் பார்த்து சொன்னான். சுக்ரீவா, இதோ ராம, லக்ஷ்மணர்கள் அடிபட்டு தரையில் விழுந்து கிடக்கிறார்கள். நாம் இந்த கவலையிலேயே இருக்கும் பொழுது, இந்த வானரங்களை கவனிக்காமல் விட்டு விட்டோம். இதோ பார், இவர்கள் முகத்தில் பயம் தெரிய, நாலா திக்குகளிலும் ஓடுகிறார்கள். பயத்தில் கண்கள் தெறித்து விழுந்து விடும் போல நடுங்குகிறார்கள். இங்கும் அங்குமாக அலை பாய்கிறார்கள். ஏதோ நிமித்தம் இருக்க வேண்டும். பயப்படும்படியாக, ஏதோ நடக்கிறது. ஒருவருக்கொருவர் வெட்கம் இல்லாமல் பின்னால் திரும்பி பார்த்துக் கொள்கிறார்கள். ஒருவரையொருவர் இடித்துக் கொண்டும், கீழே விழுந்தவர்களைத் தாண்டிக்கொண்டும் ஓடுகிறார்கள். அங்கதன் சொல்லிக் கொண்டிருந்த இதே சமயம் விபீஷணன் கையில் க3தை4யுடன் அங்கு வந்து சேர்ந்தான். சுக்ரீவனுக்கு ஜயம், ராகவர்களுக்கு ஜயம் என்று வாழ்த்திக்கொண்டே அருகில் வந்தான். விபீஷணனை அந்த கோலத்தில் (கையில் உயர்த்தி பிடித்த க3தை4யுடன்) கண்டவுடன் தான் சுக்ரீவனுக்குப் புரிந்தது. வானரங்கள் பயந்து ஓடக் காரணம் என்ன என்பதும் தெரிந்தது. அருகில் நின்றிருந்த ருக்ஷ ராஜனான ஜாம்பவானைப் பார்த்துச் சொன்னான். இதோ இந்த விபீஷணனைப் பர்த்து தான், ராவணன் மகனான இந்திரஜித் என்று எண்ணி இந்த வானரங்கள் பயந்து அப்படி ஓடி இருக்கின்றன. சீக்கிரம் இவர்களிடம், வந்திருப்பது விபீஷணன் தான், பயப்பட வேண்டாம் என்று சொல்லி தடுத்து நிறுத்துங்கள். எனவும், ஜாம்பவானும் அவ்வாறே ஒடும் சைன்யத்தை தடுத்து நிறுத்தி, விஷயத்தைச் சொல்லி நிலைமையை சமாளிக்க முயன்றான். பயம் விலகியவர்களாக வானரங்கள் திரும்பி வந்தன. ஜாம்பவான் சொன்ன பின், விபீஷணனை புரிந்து கொண்டு சாந்தமானார்கள். விபீஷணனோ, ராமரின் சரீரம் அம்புகளால் துளைக்கப் பட்டு இருப்பதையும், இன்னமும் நினைவு திரும்பாமல் கிடக்கும் லக்ஷ்மணனையும் பார்த்து வருந்தினான். தன் கண்ணிரை அடக்க முடியாமல், அந்த கண்ணீரால் நனைந்த கைகளால் அவன் கண்களைத் துடைத்தவன், துக்கம் தாங்காமல் தானும் அழ ஆரம்பித்து விட்டான். தந்திரமாக யுத்தம் செய்யும் ராக்ஷஸர்கள் கையால் இவ்விருவரும் அடிபட்டனரே. நல்ல அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள், பிரியமாக பேசி, நடந்து கொள்பவர்கள், நேர்மையாக போர் செய்பவர்கள் இப்படி அடி பட்டு கிடக்க நேர்ந்து விட்டதே. என் தமையன் மகன் துராத்மா. மறைந்திருந்து போர் செய்பவன். கபடமான புத்தியால் இவர்களை வீழ்த்தியிருக்கிறான். எந்த இருவர்களின் வீர்யத்தை நம்பி, நான் என் முன்னேற்றமும், எதிர்காலத்தில் நல்ல நிலைமையை அடைவேன் என்றும் நம்பிக் கொண்டு இருக்கிறேனோ, அவர்களே விழுந்து விட்டார்கள். என் ராஜ்ய மனோரதமும் நிறை வேறப் போவதில்லை. நான் அழிந்தேன். ராவணன் தன் பிரதிக்ஞையை பூர்த்தி செய்தவனாக, தன் இஷ்டம் நிறைவேறிய கர்வத்துடன் திரிவான். இவ்வாறு புலம்பும் விபீஷணனை அணைத்தபடி, சுக்ரீவன் தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக சமாதானம் செய்தான். சிறந்த அறிவுடையவனே, கவலைப் படாதே. நீ நிச்சயம் லங்கா ராஜ்யத்தை அடைவாய். சந்தேகமே இல்லை. ராவணன், தன் மகனோடு, விருப்பம் போல இருக்க முடியாது. இந்த இருவரும் காயம் பட்டு மயங்கித் தான் கிடக்கிறார்கள். இதோ சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து விடுவார்கள். இவ்வாறு விபீஷணனை சமாதானப் படுத்தி விட்டு, அருகில் நின்றிருந்த தன் மாமனாரான சுஷேணனைப் பார்த்து, சூரர்களான சில வானரங்கள துணையோடு இந்த இருவரையும் கிஷ்கிந்தைக்கு அழைத்துச் சென்று குணப்படுத்துங்கள். என்றான். நான் இங்கு ராவணனை புல் பூண்டின்றி அழித்து விட்டு, மைதிலியை அழைத்து வருகிறேன். நஷ்டமான ஸ்ரீயை, இந்திரன் திரும்ப பெற்றது போல, நான் வெற்றி வீரனாக வருவேன். வானர ராஜன் சொன்னதைக் கேட்டு, சுஷேணன் பதிலளித்தான். தேவ, அசுரர்கள் யுத்தம் நடந்த பொழுது மிக பயங்கரமாக, கோரமாக நடந்தது. தானவர்களும், தேவர்களும் திரும்பத் திரும்ப, இருவரும் உயர்ந்த சஸ்திரங்களை அறிந்தவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த வீரர்களைப் பார்த்து பிருஹஸ்பதி, மந்திரங்கள் உச்சரித்தும், ஔஷதிகள், மருந்துகள் கொண்டும் சிகித்சை அளித்தார். அந்த ஔஷதிகள் இன்னமும் பாற்கடலில் கிடக்கின்றன. அவற்றை கொண்டு வரட்டும். வேகமாக வானரங்கள் போகட்டும். சம்பாதி, பனஸன் போன்றவர்கள் மலை மேல் இருக்கும் அந்த ஔஷதிகளை அறிவார்கள். திவ்யமான சஞ்சீவ கரணீம், விசல்யா, என்ற ஒன்று., இது தேவர்களால் தயாரிக்கப் பட்டது. சந்திரன் என்றும் த்ரோணம் என்பவையும், பாற்கடலான உத்தமமான சாகரத்தில், அமுதம் கடையப் பட்ட இடத்தில் இன்னமும் கிடக்கின்றன. ஔஷதங்கள் நிறைந்த அந்த பர்வதம், பாற்கடலில் தேவர்கள் கொண்டு வந்து போட்டது, அப்படியே கிடக்கிறது. வாயு புத்திரன் ஹனுமான் அங்கு போகட்டும். சுஷேணன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, வாயுவும், மேகம் மின்னலோடு நடுங்க, சமுத்திர ஜலம் கலங்க, பூமி நடுங்க, தன் இறக்கைகளின் சலனத்தால் தோன்றிய பெரும் காற்றினால் ஆங்காங்கு தீவுகளில் பெரிய பெரிய மரங்களை கீழே தள்ளி சாய்த்தபடி, உப்பு நீர்க் கடலில் பெரிய மரங்கள் வேரோடு சாய, அங்கு வசித்த பாம்புகளும், நாகங்களும் பயந்து அலை பாய்ந்து வேக வேகமாக சமுத்திரத்தின் அடி மட்டம் செல்ல, ஒரு முஹுர்த்த நேரத்தில், வைனதேயனான கருடன் அங்கு வந்து சேர்ந்ததை வானரங்கள் கண்டனர். கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல பிரகாசமாக விளங்கிய கருட ராஜனைக் கண்டனர். நெருங்கி வந்த கருடனைக் கண்டதும், நாகங்கள் அலறிக் கொண்டு ஓடின. இரு வீரர்களையும் கட்டி வைத்திருந்த நாக பாசம் விலகியது. சுபர்ணன் என்று அழைக்கப் படும் கருடன், காகுத்ஸ வீரர்களைப் பார்த்து வாழ்த்தி, தன் கைகளால் அவர்கள் உடல் பூராவும் தடவிக் கொடுத்தான். காயங்கள், இந்த ஸ்பரிசாத்தாலேயே குணம் அடைந்தன. பழைய நிறமும், பொலிவும் இருவர் உடலிலும் வந்து சேர்ந்தது. தேஜஸ், வீர்யம், உற்சாகம், போன்ற உயரிய குணங்களும் வந்து சேர்ந்தன. நல்ல களை பொருந்திய உடல் அமைப்பும், புத்தியும், நினைவாற்றலும் இரு மடங்காகி வளர்ந்தன. அவர்கள் இருவரையும் எழுப்பி நிறுத்திய கருடன், வாஸவன் போல இருந்த இருவரையும், தனித் தனியே ஆலிங்கனம் செய்து மகிழ்ச்சியோடு ராமர் அருகில் நின்றான். ராமரும் கருடனைப் பார்த்து அதிர்ஷ்ட வசமாக தங்கள் வரவால் எங்கள் கஷ்டம் நீங்கியது. ராவணன் மகன் தன் சாமர்த்யத்தால், எங்களை வீழ்த்தியதிலிருந்து தப்பினோம். பழையபடி பலமும் எங்களுக்கு வந்து சேர்ந்தது. என் தந்தை தசரதன் போலவும், அஜன் (ப்ரும்மா), பிதாமகராக உயிர்களை காப்பாற்றுவது போலவும், தாங்கள் வந்து சேர்ந்தீர்கள். என் மனம் மகிழ்ச்சியில் நிறைந்துள்ளது. தாங்கள் யார்? அழகிய ரூபமும், திவ்யமான வஸ்திர ஆபரணங்களும் தரித்தவராக, திவ்யமான மாலையும், அங்க ராகமும் பூசிய உடலுமாக காண்கிறீர்கள். என்று வினவ, மகா தேஜஸ்வியும், மகா பலசாலியுமான வைனதேயன் பதில் சொன்னார். நான் பக்ஷி ராஜன். காகுத்ஸா, உன் சகா நான். பிரியமான உயிர், உடலுக்கு வெளியே சஞ்சரிப்பது போல சஞ்சரிப்பவன். க3ருத்மான் என்று அழைப்பர். உங்கள் இருவருக்கும் உதவி செய்யவே இங்கு வந்தேன். மகா வீர்யம் உடைய அசுரர்களோ, பலம் வாய்ந்த தானவர்களோ, கந்தர்வர்களோ, இந்திரனைத் தொடர்ந்து வரும் தேவர்களோ, இந்த சர பந்தனத்தை விடுவிக்க சக்தியுடையவர்கள் அல்ல. இது மிகவும் பயங்கரமானது. க்ரூர கர்மாவான இந்திரஜித் தன் மாயா பலத்தால், உண்டாக்கியிருப்பது. காத்ரவர்கள் எனும் கொடிய நாகங்கள் இவை. கூர்மையான பற்களுடன், விஷத்தை கக்கக் கூடியவை. ராக்ஷஸனின் மாயையால், (சரங்களாகி) உங்கள் உடலைத் தாக்கி வீழ்த்தின. சத்ய பராக்ரமா, ராமா, நீ பாக்யவான். தர்மம் அறிந்தவனே, எல்லா நன்மைகளையும் அடையப் பெறுவாய். உன் சகோதரன் லக்ஷ்மணனும், யுத்தத்தில் எதிரிகளை அழித்து வெற்றியை நிலை நாட்டுவான். இந்த செய்தியைக் கேட்டு, நான் வேகமாக வந்தேன். உங்கள் இருவரிடமும் உள்ள ஸ்னேகத்தால், நட்பை நிலை நிறுத்த ஓடி வந்தேன். இந்த கடுமையான அஸ்திர பந்தனத்திலிருந்து உங்களை மீட்டேன். நீங்கள் இருவரும் சற்றும் அயராது, தெளிவாக யோசித்து செயல் படுங்கள். இயல்பாகவே ராக்ஷஸர்கள், தந்திரமாக யுத்தம் செய்பவர்கள். நீங்கள் சுத்தமான பா4வத்துடன், நேர்மையாக யுத்தம் செய்ய வந்துள்ளீர்கள். உங்கள் நேர்மையே உங்களுக்கு பலம். அதனால் ராக்ஷஸர்களின் செயல்களை அப்படி அப்படியே நம்ப வேண்டாம். இந்த நிகழ்ச்சி ஒரு பாடமாக இருக்கட்டும். ராக்ஷஸர்கள் மாயாவிகள். நினைவிருக்கட்டும். என்று சொல்லி ராம லக்ஷ்மணர்களை அணைத்து ஆசிர்வதித்து சுபர்ணன் கிளம்பினான். சகே2 ராக4வா, எதிரிகளுக்கும் பிரியமானவன் நீ. எனக்கு விடை கொடு. நான் கிளம்புகிறேன். என் நிலையில், நண்பனாக உள்ள யாராக இருந்தாலும் இதைச் செய்திருப்பார்கள். அதனால் என் செயலை பெரிதாக எண்ணாதே. உன் செயலை ஆதரிக்கும் உற்ற நண்பனாக நடந்து கொண்டேன். அவ்வளவு தான். பாலர்களும், முதியவர்களும் மட்டும் தான் லங்கையில் மீதம் இருப்பார்கள் எனும் படி, உன் சரங்களால் லங்கையை துளைத்து எடுத்து வெற்றி பெறுவாய். ராவணன் என்ற எதிரியை அழித்து, சீதையை அடைவாய். இவ்வாறு சொன்ன சுபர்ணன், வானர வீரர்களுக்கு மத்தியில் ராம லக்ஷ்மணர்களின் காயத்தை ஆற்றி, பிரதக்ஷிணமாக ஒரு சுற்று சுற்றி, ஆகாயத்தில் வந்தது போலவே காற்றோடு காற்றாக மறைந்தான். வானர வீரர்கள், சேனைத் தலைவர்கள், காயம் எதுவுமின்றி, நிமிர்ந்து நின்ற ராகவர்களைப் பார்த்து மகிழ்ந்தனர். தங்கள் வால்களை அடித்துக் கொண்டு, சிங்க நாதம் செய்தன. பேரியும், ம்ருதங்கமும் முழங்கலாயின. சங்கத்தை ஊதின. ஊரையே கலக்கும் விதமாக பெரும் குரலில் சத்தமிட்டன. மலையிலிருந்து கற்களையும், மரங்களையும் கொன்டு வந்து, தங்கள் தோள்களைக் குலுக்கி, வீரத்தை வரவழைத்துக் கொண்டன. போருக்குத் தயாராக கிளம்பின, ராக்ஷஸர்களை நடுங்கச் செய்வதாக சொல்லிக் கொண்டு உச்சஸ்தாயியில் கோஷம் இட்டன. லங்கை கோட்டை வாசலை சென்றடைந்தன. இரவில் இடி முழக்கம், காதை பிளப்பது போல, இந்த வானர வீரர்களின் ஜய கோஷம் கேட்டது. இரவு முடியும் தறுவாயில் இளம் காலை நேரத்தில் இந்த சத்தம் மிக அதிகமாக கேட்டது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் நாக3 பாச விமோக்ஷணம் என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 51 (458) தூ3ம்ராபி4ஷேணனம் (தூம்ரன் போருக்கு வருதல்)
ஆனந்த கூத்தாடும் ராக்ஷஸ வீரர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் ஒரு பக்கம் இருக்க, வானர வீரர்களின் உற்சாகம் மிகுந்த ஜய கோஷமும் கேட்க, ராவணன் அதிர்ச்சியடைந்தான். கம்பீரமாக, தெளிவாக வந்த அந்த பெரும் ஓசையை கேட்டவுடன், தன் மந்திரிகளை அழைத்து விசாரித்தான். இந்த வானரங்களின் கூட்டத்திலிருந்து உற்சாகமான ஆரவார சத்தம் எப்படி வருகிறது? ஏதோ இந்த வானரங்கள் விரும்பியது நடந்து விட்டது போல கூச்சல் போடுகின்றனவே. ஏராளமானவர்கள், ஒரே சமயம் பெரும் குரலில் கர்ஜிக்கும் மேகம் போல ஓசையெழுப்பினால், அவர்களே எதிர்பாராத ஒரு பெரும் நன்மை அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும், என்பதில் சந்தேகமேயில்லை. இவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம், சமுத்திரத்தின் அலை ஓசையைக் கூட அடக்கி விடுகிறது, பாருங்கள். அந்த வீரர்கள் இருவரும் நாக பாசத்தின் சரங்களால் அடிபட்டு வீழ்ந்து கிடந்தனர். நினைவிழந்து கிடந்தனர். இப்பொழுது இந்த சத்தம், இந்த ஆரவாரம் எனக்கு சந்தேகத்தைக் கிளப்புகிறது. இவ்வாறு மந்திரிகளை கலந்தாலோசித்த ராவணன், அருகில் இருந்த ராக்ஷஸ வீரர்களிடம், போய் இந்த வானரங்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கு காரணம் என்ன என்று விசாரித்துக் கொண்டு வாருங்கள் என்று அனுப்பினான். சோகத்தில் மூழ்கி அடக்கமாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில் உற்சாக கூக்குரல் பொருத்தமாக இல்லையே. அந்த ராக்ஷஸர்களும் உடனே மாளிகையின் மேல் ஏறி சுக்ரீவன் அணி வகுத்து நிறுத்தியிருந்த வானரப் படையைக் கண்டனர். ராகவர்கள் இருவரும், நாக பாசத்திலிருந்து விடுபட்டவர் களாக நிற்பதைக் கண்டனர். இதைக் கண்டு திடுக்கிட்ட ராக்ஷஸர்கள், மாளிகையின் மேலிருந்து இறங்கி, முக வாட்டத்துடன், ராவணன் இருக்கும் இடம் வந்து சேர்ந்தனர். தீனமான முகத்துடன், இந்த அப்ரியமான விஷயத்தை ராவணனிடம் சொன்னார்கள். எந்த இருவர் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டு, நினைவிழந்து கிடந்தனரோ, அவ்விருவரும், பாண பாசத்திலிருந்து விடுபட்டு, தங்கள் புஜ பலம் மேலும் கூடியவர்களாக நிமிர்ந்து நிற்கின்றனர். கட்டியிருந்த கயிற்றை அறுத்து விட்டு பெருமிதமாக நடக்கும் யானைகள் போல இருவரும் இன்று யுத்த களத்தில் தென் படுவார்கள். கஜேந்திரனுக்கு இணையாக இவர்கள் விக்ரமும் (ஆற்றலும்) அதிகரித்திருக்கும் இவர்கள் சொன்னதைக் கேட்டு, ராக்ஷஸேந்திரன் சிந்தனையும் சோகமும் சூழ்ந்து கொள்ள, முக வாட்டம் அடைந்தான். வர பலத்தால் கிடைத்த பயங்கரமான அஸ்திரம், நாக பாசம். அந்த ஆலகால விஷம் போன்ற பாசத்தில் சிக்கியவர்கள், அதிலிருந்து விடுபடுவது எளிதல்ல. இந்திரஜித்தால் பிரயோகிக்கப் பட்ட அந்த பாணங்கள் அமோகமானவை. சூரியனுக்கு சமமான பிரகாசம் மிக்கவை. என் எதிரிகள் இந்த பாசத்திலிருந்து விடுபட்டார்கள் என்றால், நம் படை பலம் முழுவதுமே சந்தேகமான நிலையில் இருப்பதாக எண்ணுகிறேன். வாசுகியின் வீர்யம் இப்படி பலம் இல்லாததாக, பயனற்று கூட போகுமா என்ன? (வாசுகி – பாம்பின் பெயர்). இதனால் யுத்தத்தில் என் உயிர் பிழைத்தது என்று நம்பி இருந்தேன். மனதில் இந்த எண்ணங்கள் பெருமூச்சாக வெளிப்பட, புஸ் புஸ் என்று பெருமூச்சு விடும் மலைப் பாம்பு போலவே ராவணன் காட்சியளித்தான். ராக்ஷஸர்களின் மத்தியிலிருந்து தூம்ராக்ஷன் என்பவனை அழைத்து, ராக்ஷஸா, நீ இப்பொழுது கிளம்பு. நல்ல பொறுக்கி எடுத்த வீரர்களுடன், ராமனை வதம் செய்யும் உத்தேசத்துடன் சென்று, போர் செய். வானரர்களையும் நாசம் செய். ராக்ஷஸேந்திரனின் கட்டளையை ஏற்று, தூம்ராக்ஷன், அரசனை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, கிளம்பினான். அந்த மாளிகையின் வாயிலை விட்டு இறங்கியதுமே படைத் தலைவனை அழைத்து, யுத்தம் செய்ய போர் வீரர்களை தயார் செய் என்று உத்தரவிட்டான். தூம்ராக்ஷனின் கட்டளை, ராவண ராஜாவின் கட்டளை என்பதால், அவனும் உடனே ஆயத்தம் செய்ய முனைந்தான். பலசாலிகளான பல ராக்ஷஸ வீரர்கள், கர்ஜித்தபடி, மணிகளை இடுப்பில் அணிந்தவர்களாக உடனே புறப்பட்டனர். சூலம், உத்கரம், என்ற பலவிதமான ஆயுதங்களை ஏந்தியவர்களாக உற்சாகமாக போர் செய்யத் தேவையான பட்டஸம், க3தை, தண்டம், ஆயஸம், முஸலம், இவைகளை சேகரித்துக் கொண்டனர். பரிகங்களும், பிண்டிபாலம், பல்ல, ப்ராஸ, பரஸ்வத, என்ற ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். மேகங்கள் இடி இடித்தபடி, ஆகாயத்தில் வேகமாக சஞ்சரிப்பது போல, கோஷமிட்டுக் கொண்டு சென்றனர். தூம்ராக்ஷனுடைய ரதம் தயாராகி வந்தது. கவசங்கள், த்வஜங்கள் இவை அலங்காரமாக மாட்டப் பட்டிருந்தன. பலவித முகங்கள் செதுக்கிய (கடுமையான) வேலைபாடமைந்த (கர-கோவேறு கழுதையின் உருவம்) பொறிக்கப்பட்ட, ரதத்தில், பெரும் ஆரவாரத்துடன், தூம்ராக்ஷனும் ஏறினான். ஓநாய், சிங்கம், இவைகளின் உருவங்களும், கழுதை உருவங்களும் தங்கத்தில் பொறிக்கப்பட்டிருந்தன. சிரித்துக் கொண்டு ஹனுமான் இருந்த மேற்கு வாயில் நோக்கி ரதத்தைச் செலுத்தினான். அதில் பொறிக்கப்பட்டிருந்த கழுதையின் கத்தல், போன்ற குரல் உடைய தூம்ராக்ஷன் (கரயுக்தம்-கழுதை உருவம் உடைய, கரஸ்வனம்-கழுதை போன்ற குரலுடைய) கிளம்பியதும் வானத்தில் கழுகுகள் எதிர்கொண்டன. ரதத்தின் உச்சியில் ஒரு பெரிய கழுகு வந்து விழுந்தது. இறந்த உடலைத் தின்னும் இந்த மாமிச பக்ஷிணிகளான பறவைகள், த்வஜத்தின் முன்னால் மாலை கோர்த்தது போல அமர்ந்தன. அபஸ்வரமாக கூச்சலிட்டுக் கொண்டு, பாதி உடலுடன் கபந்தனாக ஒரு பக்ஷி ரத்தம் சொட்ட விழுந்தது. காற்றும் எதிர் திசையில் சுழன்று வீசலாயிற்று. இருள் மூடி, திசைகளும் தென் படவில்லை. ராக்ஷஸர்களுக்கு ஆபத்தை சொல்லும் விதமாக விழுந்த கழுகுகளைக் கண்டு தூம்ராக்ஷன் கவலை கொண்டான். க்ஷண நேரத்தில் எங்கிருந்தோ வந்து சூழ்ந்து கொண்ட இந்த பக்ஷிகள் எங்கிருந்து வந்தன என்று யோசித்தான். முன்னும் பின்னும் அணி வகுத்து வந்த ராக்ஷஸர்களுக்கும் இதே கவலை தோன்ற, செய்வதறியாது திகைத்தனர். எதிரில், ராகவனால், தானே ராகவன் முன் நின்று ஒழுங்கு படுத்தியிருந்த வானர படை, உற்சாகத்துடன் தங்களுடன் மோதத் தயாரான நிலையில் இருப்பதையும் கண்டனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் தூம்ராபிஷேணனம் என்ற ஐம்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 52 (459) தூ3ம்ராக்ஷ வத4ம் (தூம்ராக்ஷனை வதம் செய்தல்)
வானர சைன்யத்திலிருந்து தூம்ராக்ஷனை வரவேற்பது போல கோலாகலமான சத்தம் எழுந்தது. பயங்கரமான ஆற்றல் உடையவன் தூம்ராக்ஷன் என்பது அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. இதன் பின் ஹரி (வானரம்) ராக்ஷஸர்களின் மத்தியில் கடுமையான போர் மூண்டது. ஒருவருக்கு ஒருவராக, கைகளில் மரங்களை ஏந்தியவர்களுக்கும், சூல உத்கரத்தை ஏந்தியவர்களுக்கும் இடையில் கை கலப்பு ஆரம்பித்தது. ஆரம்பத்தில், பயங்கரமான த்ரிசூலங்களையும், விசித்ரமான பரிக4ங்களையும் கொண்டு போரிட்ட ராக்ஷஸர்களால் வானரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வானரங்களும் சளைக்காமல், வேரோடு பிடுங்கிய மரங்களாலேயே ராக்ஷஸர்களை தரையோடு தரையாகச் செய்தனர். கோபம் கொண்ட ராக்ஷஸர்கள் கூர்மையான பாணங்களை வானரங்களின் மேல் விட்டனர். பெரிய பெரிய க3தை4களையும் பட்டஸங்களையும் கொண்டு, வானரங்களை அடித்து நொறுக்கினர். சரங்கள் துளைத்த உடல்கள், சூலங்களால் பிளக்கப் பட்ட உடல்கள் என்று வானர வீரர்கள் ஆனாலும், மேலும் ஆத்திரம் கொண்டு, மரங்களோடு கற்களையும் எடுத்து வீசலாயினர். நல்ல வேகம் உடைய வானரர்கள், ராக்ஷஸர்களை கண்ட இடத்தில் அடித்து, தங்கள் பெயரைச் சொல்லி கோஷம் செய்தனர். ராக்ஷஸ சேனையை ஒரு கலக்கு கலக்கி விட்டன. வானர, ராக்ஷஸர்களுக்கிடையிலான அந்த யுத்தம் மகா கோரமாக தொடர்ந்தது. ராக்ஷஸர்கள் இவர்கள் மூலம் பலத்த காயம் அடைந்தனர். சிலர் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. பக்கங்கள் கிழிபட்ட முகம் உடையவர்களாக சிலர் குப்பையாக மரங்களால் அடிக்கப் பட்டவர்களாக, கற்களால் பொடியாக்கப் பட்டவர்களாக சிலர், சிலர் பற்களால் கடிக்கப் பட்டு காணப்பட்டனர். த்வஜங்களை கீழே தள்ளி,, ரதங்களை உடைத்து, அதை ஓட்டி வந்த மிருகங்களையும் அடித்து, ராக்ஷஸர்களைத் தரையில் விழச் செய்து அட்டகாசம் செய்தன. கஜேந்திரனோ, மலைக் குன்றோ எனும்படி பெருத்த உருவம் உடைய வானரங்கள், கால்களால் மிதித்தும், முஷ்டிகளால் குத்தியும், ராக்ஷஸர்களை நாசம் செய்தனர். தங்கள் குதிரைகள், ரதத்தில் பூட்டிய மிருகங்களோடு சேர்த்து கீழே தள்ளப் பட்டவர்களாக, பயங்கரமான வேகத்துடனும், பலத்துடனும் வானரங்கள் திரும்பத் திரும்ப வந்து வெறி பிடித்தது போல அடித்தும், குத்தியும் நகங்களால் கீறியும் பற்களால் கடித்தும் துன்புறுத்தியதில், முகமே மாறிப் போக, தலை மயிரைப் பிடித்து இழுத்து வானரங்கள் செய்த சித்ர வதையை பொறுக்க மாட்டாமல் அலறினார்கள். செய்வதறியாதவர்களாக, பூமியில் விழுந்தார்கள். சில ராக்ஷஸ வீரர்கள், வானரங்கள் புறங்கைகளால் அடித்ததையே பொறுக்க மாட்டாதவர்களாக, வஜ்ரத்தால் அடித்தது போன்ற தாங்க முடியாத வேதனைக்குள்ளானார்கள். மற்றும் சிலர் ஆத்திரமடைந்து பலம் கொண்ட மட்டும் கத்தி வானரங்களை பயமுறுத்த முனைந்தனர். தொடர்ந்து வானர வீரர்களின் முஷ்டி, நகம், பற்கள், தவிர மரங்கள் இவற்றால் தாக்கப் படுவது பொறுக்க மாட்டாமல் பலர் ஓடினர். ஓடும் வீரர்களைப் பார்த்து தூம்ராக்ஷன், அவர்களை தடுத்து நிறுத்த இயலாமல், தன் ஆத்திரத்தை வானர சைன்யத்தின் மேலேயே திருப்பினான். ப்ராஸங்களால் இழுத்து வானர வீரர்கள் பலரை கடைந்து எடுப்பது போல வாட்டினான். ரத்தம் சொட்ட கீழே விழச் செய்தான். முத்3க3ரம் எனும் ஆயுதத்தால், மேலும் பலரை பூமியில் விழச் செய்தான். பரிகத்தால் சிலரை, பிண்டிபாலம் என்ற ஆயுதத்தால் கிழித்து நாராக்கினான். பட்டஸத்தால் பலமாக அடித்து சிலரை கதி கலங்கச் செய்தான். சூலத்தால் சிலரைத் தாக்கினான். இவர்கள் தங்கள் உடலிலிருந்து பெருகிய ரத்தத்தில் நனைந்தார்கள். சிலர் ராக்ஷஸர்களின் காலடியில் மிதி பட்டு அழிந்தார்கள். பயத்தால் நடுங்கிய சிலர், ஏக பார்ஸ்வம் என்ற ஆயுதத்தால் குத்தி கிழிக்கப் பெற்றனர். த்ரிசூலமும், ஆந்த்ரம் எனும் ஆயுதமும் இப்படியே கிழித்து ரத்தம் பெருகச் செய்தன. கோரமான யுத்தம் தீவிரமாக ஆக ஆக, கற்கள் உராயும் சத்தமும், ஆயுதங்கள் உராயும் சத்தமும் கூட ஒன்று போல கேட்டன. இதற்கு அனுசரணையாக தாளம் போடுவது போல வில்லில் அம்பை தொடுத்து விடும் நாதமும், மிக மந்தமான கதியில் சங்கீதமும், காந்தர்வர்கள் பாடுவது போல இருந்தது. கையில் வில்லேந்தி நின்ற தூம்ராக்ஷன், பாணங்களை வர்ஷித்து, ஓடும் வானரங்களைப் பார்த்து சிரித்தபடி, மேலும் கணக்கில்லாத பாணங்களைப் பொழிய ஆரம்பித்தான். இதைக் கண்ட மாருதி, ஒரு பெரிய கல்லை கையில் எடுத்துக் கொண்டு, தூம்ராக்ஷனை நோக்கி வந்தான். கண்கள் சிவக்க, முகத்தில் ஆத்திரம் தாண்டவமாட, தன் தந்தைக்கு சமமான பராக்ரமம் உடையவனான வாயுபுத்திரன், அந்த கல்லை தூம்ராக்ஷனுடைய ரதத்தின் மேல் வீசினான். மேலே வந்து விழும் கல்லைப் பார்த்து. பயந்து தன் க3தை4யை தூக்கி, பரபரப்புடன், ரதத்திலிருந்து குதித்து கீழே வந்து நின்றான். மாருதி வீசிய கல் ரதத்தை தூள் தூளாக்கியது. சக்ரமும், த்வஜமும், அதில் பூட்டியிருந்த குதிரையும், ஆயுதங்கள் வைக்கப் பட்டிருந்த பெட்டியும், ஆசனமும் போன இடம் தெரியவில்லை. ரதம் நொறுங்கி விழுந்தவுடன் கிளைகளோடு ஒரு மரத்தைக் கொண்டு ராக்ஷஸனை வதம் செய்தான். தலை அறுந்து ராக்ஷஸன் விழுந்தான். தூம்ராக்ஷன் சமாளித்துக் கொண்டு ஓடுவதைக் கண்ட மாருதி, மற்றொரு பெரிய கல் ஒன்றை எடுத்துக் கொண்டு துரத்தினான். தூம்ராக்ஷன் பல முட்கள் நிறைந்த தன் க3தை4யால் மாருதியின் தலையில் ஓங்கி அடித்தான். மருதனுக்கு இணையான பலம் கொண்ட மாருதன் அந்த அடியை லக்ஷியம் செய்யவில்லை. தூம்ராக்ஷனின் நடுத் தலையில் தன் கையிலிருந்த கல்லை வீசி, அவனை நிலை தடுமாறச் செய்தான். பெரும் மலை ஒன்று வேரோடு பிடுங்கி எறியப் பட்டது போல தூம்ராக்ஷன் நினைவு இன்றி பூமியில் சரிந்தான். தூம்ராக்ஷன் மடிந்து விழுந்ததைக் கண்ட ராக்ஷஸர்கள் ஓட்டமாக ஓடி லங்கையில் நுழைந்து கொண்டனர். வானரங்களின் இம்சையை பொறுக்க மாட்டாதவர்களாக ஓடினர். சத்ருவை ஒழித்த மாருதி, தன் சரீர சிரமத்தையும் மறந்தவனாக, மற்ற வானரங்கள் உற்சாகமாக வாழ்த்த, தானும் உற்சாகம் அடைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் தூ3ம்ராக்ஷ வத4ம் என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 53 (460) வஜ்ரதம்ஷ்டிர யுத்தம் (வஜ்ர தம்ஷ்டிரன் செய்த யுத்தம்)
தூம்ராக்ஷன் அடிபட்டு விழுந்ததைக் கேள்விப்பட்ட ராவணன், ராக்ஷஸாதிபன், கோபத்துடன், மேல் மூச்சு வாங்க சீறும் நாகத்தைப் போல இருந்தான். சற்று யோசனையுடன், உஷ்ணமாக, தீர்கமாக பெருமூச்சு விட்டவன், வஜ்ரத்ம்ஷ்டிரன் என்ற ராக்ஷஸனை அழைத்தான். ஆத்திரத்துடன், அறிவிழந்து அவனுக்கு ஆணையிட்டான். வீரனே, நீ கிளம்பு. பொறுக்கி எடுத்த வீரர்களுடன் யுத்தகளம் செல்வாய். தாசரதி ராமனை கொல். சுக்ரீவனை அவன் படையுடன் நாசமாக்கு என்றான். வஜ்ரதம்ஷ்டிரனும், பெரும் படையுடன் கிளம்பினான். யானைகள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள் பூட்டிய ரதங்களை, இவைகளின் மேல் ஆரோஹணித்த வீரர்களுடன், அழகிய பதாகம், த்வஜம் இவற்றுடன் ரதங்களில் அலங்காரமாகச் சென்றான். விசித்ரமான கேயூரம், முகுடம், இவற்றால் அலங்கரிக்கப் பட்டவனாக, ரதத்தை பிரதக்ஷிணம் செய்து வணங்கியபின், ஏறினான். ஆயுதங்கள்-யஷ்டிகள், தோமரங்கள், சூலங்கள், முஸலங்கள், பிண்டிபாலங்கள், பாசங்கள், சக்தி, பட்டஸங்கள் என்ற அனைத்தும் தாராளமாக இருந்தன. வாள், சக்கரங்கள், க3தை4கள், கூர்மையான பரஸ்வதங்கள், இவற்றுடன், பல விதமான ஆயுதம் ஏந்திய காலாட்படையினரும் உடன் சென்றனர். ராக்ஷஸர்கள் விதம் விதமான ஆடைகளுடன் தென்பட்டனர். யானைகள் மதம் கொண்ட நிலையில், பெரிய மலைகளே அசைந்து வருவது போல வந்தன. அதன் மேல் யுத்தம் செய்வதில் வல்லமை பெற்ற ராக்ஷஸர்கள், தோமரம் அங்குசம் இவைகளை ஏந்தியபடி, ஏறி அமர்ந்தனர். மின்னலுடன் கூடிய மழைக் கால மேகங்கள், ஆகாயத்தில் ஊர்ந்து செல்வது போல, பெரும் கோஷத்துடன் இந்த ராக்ஷஸ சேனை நகர்ந்தது. தெற்கு வாசல் வழியாக யுத்த பூமியை அடைந்தது. இங்கு அங்கதன் தன் சேனைக்கு தலைவனாக நின்றிருந்தான். வாசலைக் கடக்கும் பொழுதே அவர்களுக்கு அசுபமான சகுனங்கள் தோன்றின. ஏராளமான மின் மினி பூச்சிகள் ஆகாயத்திலிருந்து அவர்கள் மேல் வந்து விழுந்தன. நெருப்பை உமிழ்வது போல காணப்பட்டன. குள்ள நரிகள் பயங்கரமாக ஊளையிட்டன. மிருகங்கள் பயங்கரமாக சத்தமிட்டன. ராக்ஷஸர்களின் மரணத்தை முன்கூட்டியே எச்சரிப்பது போல இருந்தது. ராக்ஷஸ வீரர்கள் கால் தடுக்கி விழ இருந்தனர். சமாளித்து எழுந்து நடந்தனர். இந்த துர் நிமித்தங்களே, ராக்ஷஸர்களின் மனதில் பயத்தை தோற்றுவிக்கப் போதுமானதாக இருந்தது. வஜ்ரதம்ஷ்டிரன் கலங்காமல், தன் வீரர்களையும் தேற்றி, முன் செல்லச் செய்தான். ஓடும் ராக்ஷஸர்களைப் பார்த்து வானரங்கள் உற்சாகத்துடன் கூச்சலிட்டனர். நாலா திக்குகளிலும் இந்த கூக்குரல் எதிரொலித்தது. இதன் பின் வானர வீரர்களுக்கும், ராக்ஷஸர்களுக்கும் இடையில் கடுமையான போர் மூண்டது. ஒருவரையொருவர் வெட்டி சாய்ப்பதையே குறியாகக் கொண்டு போரிட்டனர். உடல் தனி தனியாக, கை, கால் வெட்டுப் பட்டவர்களாக, ரத்தம் பெருக்கோட எங்கும் ஓலம் நிறைந்தது. பூமியில் ரத்த சேற்றில் பலர் விழுந்தனர். யுத்தத்தில் புற முதுகு காட்டாத வீரர்கள் சிலர் ஆயுதங்களை பிரயோகம் செய்தனர். மலைப் பாறைகளும், ஆயுதங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஓசையெழுப்பின. தவிர சங்கமும், பேரியும் முழங்கின. சிலர் அஸ்திரங்களை கை விட்டு கைகலப்பு செய்ய முனைந்தனர். புறங்கைகளாலும், பாதங்களாலும் முஷ்டியாலும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். முழங்கால் முட்டி பெயர்ந்து சிலர், உடலில் பட்டு சிலர், கற்கள் விழுந்து பொடிப் பொடியாக சிலர், சில வானரங்கள் யுத்தம் செய்யும் விதத்தில் எதிர்க்க முடியாமல் சிலர், வஜ்ரதம்ஷ்டிரன் முடிந்த வரை பாணங்களைப் பொழிந்து வானரங்களை பயப்படச் செய்தான். கையில் பாசத்துடன் நடமாடும் காலனைப் போல யுத்த பூமியில் சஞ்சரித்தான். பலசாலிகளான பலரும், அஸ்திரங்களையும் போர் முறைகளை அறிந்திருந்த பலரும், கோபத்தின் உச்சியில் வானரங்களை சின்னா பின்னமாக்கி குவித்தனர். அங்கதன் இதைக் கண்டு தன் ஆத்திரத்தை இரு மடங்காக்கிக் கொண்டு, சூழ்ந்து வரும் ஸம்வர்தக நெருப்பைப் போல, தாக்கலானான். கைகளில் மரத்தை எடுத்துக் கொண்டு, ராக்ஷஸ சைன்யத்தினுள் புகுந்து, அடிக்கலானான். சிவந்த கண்களுடன், ஒரு சிறிய மிருகத்தை சிங்கம் தாக்குவது போல தாக்கலானான். இந்திரனுக்கு சமமான பராக்ரமத்துடன், யுத்த பூமியை கலக்கினான். அங்கதன் கையால் அடிபட்ட பல ராக்ஷஸர்கள், வேரோடு சரிந்த மரங்கள் போல தலை அறுந்து தொங்க விழுந்தனர். ரதங்களும், குதிரைகளும், அழகிய கொடிகளுமாக, ஹரி, ராக்ஷஸ சரீரங்களும், அதிலிருந்து பெருகிய ரத்தமுமாக, யுத்த பூமி பயங்கரமாக காணப்பட்டது. இதன் மேல் அவர்கள் அணிந்திருந்த ஹாரங்கள், கேயூரங்கள், வஸ்திரங்கள் இவையும் அலங்கோலமாக தரையில் விழுந்து பரவிக் கிடந்தன. சரத்கால இரவு போல இருந்தது. மேகத்தை விரட்டிச் செல்லும் காற்று போல அங்கதனின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ராக்ஷஸ சேனை திணறியது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் வஜ்ரதம்ஷ்டிர யுத்தம் என்ற ஐம்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 54 (461) வஜ்ரத3ம்ஷ்டிர வத4ம் (வஜ்ர தம்ஷ்டிரனின் வதம்)
அங்கதன் முன்னேறி வர வர, தன் படை வீரர்கள் சிதறிக் கொண்டு போவதையும் பார்த்த வஜ்ரதம்ஷ்டிரன் அளவில்லா ஆத்திரம் அடைந்தான். தன் வில்லின் நாணை விரலால் மீட்டி நாதம் எழுப்பினான். இந்திரன் வஜ்ராயுதத்தை வீசியது போல பெரும் நாதம் எழுந்தது. அந்த நாதத்தைக் கேட்டு வானரங்கள் நடுங்கின. சரமாரியாக வஜ்ர தம்ஷ்டிரனின் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளுக்கு பல வானரங்கள் பலியாயின. பலவிதமான யுத்த தந்திரங்களை அறிந்திருந்த முக்யமான ராக்ஷஸ தலைவர்கள், ரதங்களில் ஏறி, வேகமாக செயல் பட ஆரம்பித்தனர். வானர வீரர்களின் கைகளில் கற்களே ஆயுதங்களாக இருந்தன. பல ஆயுதங்களை ராக்ஷஸர்கள், வானரங்கள் மேல் பிரயோகம் செய்தனர். வானரங்கள் கையில் கிடைத்ததை, மரக் கிளைகள், கற்கள், சிறியதும் பெரியதுமாக, என்று வீசின. உத்தமமான யானையை போல கம்பீரமான பல ராக்ஷஸ வீரர்கள், யுத்த கலையைக் கற்றுத் தேர்ந்த சூரர்களாக, அஞ்சி புறமுதுகு காட்டி ஓடாதவர்களாக, நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தனர். ராக்ஷஸ சரீரங்களும், வானர உடல்களும், கை கால் உடைந்து தலையில்லாத உடலாக பலவிதமாக அடிபட்டு, பூமியில் விழுந்தன. ஆகாயத்தில் கழுகுகளும், மற்ற பக்ஷிகள் கங்க, பாலாட்ய, கோமாயு எனும் பக்ஷிகளும் வட்டமிட்டன. பயந்த சுபாவம் உடையவர்கள் இந்த காட்சியை கண்ணால் கண்டாலே உயிர் விட்டு விடுவார்கள் எனும்படி, தலையறுந்த பல சடலங்கள் பூமியில் கிடந்தன. இரு பக்கமும் நல்ல சேதம். ராக்ஷஸர்களும், வானரங்களும் அந்த யுத்தத்தில் அடிபட்டு விழுந்தன. வஜ்ரதம்ஷ்டிரன் கண் எதிரிலேயே ராக்ஷஸ சைன்யம் ஒடுங்கலாயிற்று. வானரர்களால் கடுமையாக தாக்கப் பட்ட ராக்ஷஸர்களில் ஒருவன் மடிந்து விழுவதைக் கண்ட ராக்ஷஸ சைன்யம் கட்டுப்பாட்டை இழந்தது. பயந்து நடுங்கிய ராக்ஷஸ போர் வீரர்களை, தைரியமூட்டி, ஒன்று சேர்க்க முயன்ற வஜ்ரதம்ஷ்டிரன், தன் பலத்தையெல்லாம் ஒன்று சேர்த்து, கடுமையாக பாணங்களை பிரயோகம் செய்தான். கல்லால் செய்யப்பட்டது போன்று திடமாக, கூர்மையான பாணங்கள் பட்டு ஏழு, எட்டு, ஒன்பது, ஐந்து என்று கூட்டம் கூட்டமாக, கொத்து கொத்தாக வானரங்கள் மடிந்து விழுந்தனர். கடும் ஆத்திரத்துடன் பிரதாபம் மிக்க வஜ்ரதம்ஷ்டிரன் யுத்தம் செய்த பொழுது எதிரில் நிற்க முடியாமல் பயந்து வானரங்கள் மூலைக்கு ஒன்றாக ஓடின. அங்கதனை சூழ்ந்து கொண்டு முறையிட்டன. பிரஜைகள் ப்ரஜாபதியிடம் முறையிடுவது போல. வானரங்களின் பயத்தை போக்க, அங்கதன் தானும் வஜ்ரத்ம்ஷ்டிரனும் மட்டும் போர் புரிவது என்று முடிவு செய்தான். மத்த கஜமும் வானரமும் மோதிக் கொண்டது போல இருவரும் மோதிக் கொண்டனர். ஆயிரம் ஆயிரம் பாணங்கள் கொண்டு வஜ்ரதம்ஷ்டிரன், அங்கதனை அடித்தான். யானையை தோமரங்களால் அடிப்பது போல அடித்தான். வாலி புத்திரன் உடலில் ரத்தம் பெருகியது. மகா பலசாலியான அவன் உடலில் ஒரு இடம் விடாமல் காயம் பட்டு ரத்தம் பெருகியது. ஒரு பெரிய மரத்தைக் கொண்டு வந்து வஜ்ரதம்ஷ்டிரன் மேல் போட்டான். எங்கிருந்தோ பெரிய மரம் ஒன்று தன் மேல் விழுவதைக் கண்டு பரபரப்படைந்த ராக்ஷஸன் தன்னை சமாளித்துக் கொண்டு மேலே விழுந்த மரத்தை தூள் தூளாக்கி விட்டான். வஜ்ர தம்ஷ்டிரனின் பராக்ரமத்தைப் பார்த்து வானர வீரனான அங்கதன் ஒரு பாறையை எடுத்து எறிந்தான். வேகமாக வீசப் பட்ட அந்த பாறை தன்னை நோக்கி வருவதைக் கண்ட வஜ்ரதம்ஷ்டிரன் ரதத்திலிருந்து இறங்கி க3தை4யை கையில் எடுத்துக் கொண்டான். அந்த பாறையோ ரதத்தில் பூட்டியிருந்த குதிரை, சக்கரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து தரையோடு தரையாக்கியது. திரும்பவும் ஒரு பாறையை அதிலிருந்த மரங்களுடன் அங்கதன் பெயர்த்து எடுத்து வஜ்ரதம்ஷ்டிரனின் தலை மேல் போட்டான். இதனால் அவன் மூர்ச்சையடைந்தான். தன் க3தை3யை ஆலிங்கனம் செய்து கொண்ட நிலையிலேயே முஹுர்த்த நேரம் நினைவின்றி கிடந்தான். நினைவு தெரிந்து எழுந்தவுடன், எதிரில் நின்ற அங்கதனை க3தை4யால் ஓங்கி அடித்தான். அங்கதனின் மார்பை குறி வைத்து பலமாக போட்டான். இதன் பின் க3தை4யையும் தவிர்த்து, இருவரும் முஷ்டி யுத்தம் செய்யலாயினர். ஒருவரையொருவர் முஷ்டியால் மோதிக் கொண்டும், அடித்துக் கொண்டும் முஷ்டி யுத்தம் செய்தனர். இருவரும் உடலிலிருந்து ரத்தம் பெருக, அங்காரகனும் புதனும் போல இருந்தனர். பின், பரம தேஜஸ்வியான அங்கதன், திடுமென ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி வைத்துக் கொண்டான். வாளையும் கையில் எடுத்துக் கொண்டான். தோலால் உறை போடப்பட்ட கூரிய வாள் இருவர் கையிலும் இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் ஒழித்து விட வேண்டும் என்று ஆவேசத்தோடு போரிட்டனர். இருவரும் தளர்ந்து களைத்தவர்களாக பூமியில் முட்டிக்கால் போட்டுக் கொண்டு நின்றனர். ஒரு நிமிஷ நேர இடைவெளிக்குப் பிறகு, அடிபட்ட நாகம் சிலிர்த்து எழுவது போல அங்கதன் சிலிர்த்து எழுந்தான். கையில் இருந்த நிர்மலமான வாளால், வஜ்ரத்ம்ஷ்டிரனின் தலையில் ஒரு போடு போட்டான். அவன் தலை பூமியில் உருண்டது. இரண்டாகப் பிளந்த தலை பூமியில் கிடப்பதைக் கண்ட ராக்ஷஸர்கள் பயத்தால் நடுங்கினர். வெட்கத்துடன் தலை குனிந்தபடி லங்கையை நோக்கி ஓட்டம் பிடித்தனர். வஜ்ரதம்ஷ்டிரனை வதம் செய்து விட்டு, வஜ்ரதரனான இந்திரனைப் போல வானர வீரர்களின் மத்தியில் வாலி புத்திரன், முப்பத்து முக்கோடி தேவர்களும், சஹஸ்ராக்ஷனும் சூழ நிற்பது போல மகிழ்ச்சியுடன் நின்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் வஜ்ரத3ம்ஷ்டிர வத4ம் என்ற ஐம்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 55 (462) அகம்பன யுத்தம் (அகம்பனனுடன் போர் புரிதல்)
வாலி புத்திரனின் கையில் வஜ்ரத்ம்ஷ்டிரன் வதம் செய்யப் பட்டான் என்று கை கூப்பி நின்று செய்தி சொன்ன படைத் தலைவனை, ராவணன் விசாரித்து நடந்ததை தெரிந்து கொண்டான். அதன் பின் சீக்கிரம் கிளம்புங்கள். அகம்பனனை தலைமை தாங்கச் சொல். அவனுக்கு எல்லா சஸ்திரங்களையும் பிரயோகிக்கத் தெரியும். இந்த யுத்தத்தில் தலைவனாகவும், காப்பாற்றுபவனாகவும் கண்டிப்பாக இருப்பான். நித்யம் யுத்தம் செய்ய விருப்பம் உடையவன். என் முன்னேற்றத்தில் நாட்டமுடையவன். இவன் காகுத்ஸனையும், சுக்ரீவனையும், நிச்சயம் வெற்றி கொள்வான். மற்ற பயங்கரமான வானரங்களையும் அடித்து நொறுக்கி விடுவான். ராவணனின் இந்த கட்டளையை ஏற்று, அகம்பனனும் தன் சேனையை விரட்டினான். பலவிதமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பயங்கரமான தோற்றத்துடன் பல ராக்ஷஸர்கள் படைத் தலைவனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு களத்தில் இறங்கினர். புடமிட்ட தங்கத்தாலான குண்டலங்களையணிந்த ராக்ஷஸன் ரதத்தில் ஏறி, நீருண்ட பெரிய மேகம் போன்ற ஆக்ருதியும், அதே போல இடி முழக்கம் போன்ற குரலுமாக, ஆரவாரத்துடன், ராக்ஷஸ வீரர்கள் புடை சூழ, கிளம்பினான். இவனுடைய தேஜஸும், பராக்ரமமும், தேவர்கள் கூட நினைத்து பார்க்க முடியாது. யுத்த களத்தில் ஆதித்யனுக்கு சமமாக இருந்தான். மகா உற்சாகத்துடன், யுத்தம் செய்யும் ஆவலுடன் குதித்து ஓடி வந்தவன் திடுமென வாட்டமடையும் படி அவனது இடது கண் துடித்தது. ரதத்தை இழுத்துச் செல்லும் குதிரைகள் எதிர்பாராது தயக்கம் காட்டின. அகம்பனனின் முக வர்ணமும் மாறியது. குரலும் தழதழத்தது. என்றுமில்லாமல் காற்று, சாதாரண நாட்களில் பரிவாக வீசுவது, இன்று கடுமையாக வீசுவது போல தோன்றியது. பறக்கும் பறவைகளும், மிருகங்களும், இன்று ஓசையிடுவது கூட கடுமையாக கேட்டது. இயற்கைக்கு மாறான இந்த சூழ்நிலைகள் பயத்தை தோற்றுவித்தன. சிங்கம் போன்ற தோள்களும், சார்தூலம் போன்ற ஆற்றலும் உடைய வீரனான அகம்பனன், இந்த துர்நிமித்தங்களை மனதில் போட்டுக் கொள்ளாமல் அலட்சியப் படுத்தி விட்டு, யுத்த களத்தில் இறங்கினான். ராக்ஷஸர்களுடன் வேகமாக கிளம்பிச் சென்றவனை வாழ்த்தி ஜய கோஷம், சமுத்திரத்தின் அலை ஓசையையும் அடக்கும் விதமாக எழுந்தது. வானர சைன்யம் இதைக் கேட்டு நடுங்கின. கைகளில் மரம், கற்கள் இவற்றுடன் போரிட வந்து சேர்ந்தன. இரண்டு படைகளும் சற்றும் சளைக்காது வெற்றி பெறும் முயற்சியை கைவிடாது தொடர்ந்து யுத்தம் செய்தன. ராம, ராவணர்களின் பொருட்டு இரு தரப்பிலும், உயிரையே த்ருணமாக மதித்து போரிட இசைந்து வந்திருந்தனர். அனைவருமே அதி பலசாலிகள். மலை போன்ற உருவம் உடையவர்கள். ராக்ஷஸர்களூம், வானரங்களும் ஒருவரையொருவர் கொன்று குவிக்கலாயினர். யுத்தத்தில் கோஷமிடும் அவர்களின் ஓங்கிய இரைச்சல் ஒன்றையொன்று மிஞ்சுவதாகவே இருந்தது. ஒருவருக்கொருவர் தூஷித்துக் கொண்டதும் தெளிவாக கேட்டது. தூசி பறந்து அந்த பிரதேசம் முழுவதும் பரவியது. சிவந்த வண்ணத்தில் பயங்கரமாக காணப்பட்ட மண்ணிலிருந்து எழுந்த புழுதி படர்ந்து பரவியது. வெண் நிற பட்டாடைகள் இந்த புழுதி படிந்து மங்கின. த்வஜமா, பதாகமா, வர்மமா, துரகமா, எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. ஆயுதமும், ரதமும் கூட கண்களுக்குப் புலப்படவில்லை. ஓடும் வீரர்கள் போடும் கூச்சல்தான் மிகுந்து கேட்டது. சத்தம் தான் கேட்டதேயன்றி உருவங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. மிகுந்த கோபத்துடன் சென்ற வானரங்கள், வானரங்களையே அடித்து நொறுக்கின. கண்களை மறைத்த புழுதிப் படலத்தில், ராக்ஷஸர்களே ராக்ஷஸர்களை அடித்துக் கொன்றனர். எதிரியை அடிக்கப் போய் கண் தெரியாததால் தன் பக்க ஆட்களையே அடித்து விட்டனர். இதன் காரணமாக பூமி ரத்த சேறாகியது. சற்று பொறுத்து ரத்த பெருக்கின் ஈரத்தால் புழுதி எழும்புவது குறைந்தது. உயிரற்ற உடல்களே தன்னை மறைக்க, பூமி கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாள். மரம், சக்தி, சிலா (கல்), ப்ராஸம் (ஆயுதம்), கதா, பரிகம், தோமரங்கள், இவை இருபக்கமும் இருந்த ஆயுதங்கள் ஆயினும் வானரங்களும், ராக்ஷஸர்களும் தயங்காது வீரத்துடன் போரிட்டனர். பெருத்த சரீரமுடையவர்களுக்கு அவர்கள் புஜங்களே பரிகம் என்ற ஆயுதமாக பயன்பட்டது. பயங்கரமான காரியங்களைச் செய்ய இரு தரப்பினரும் தயங்கவே இல்லை. ராக்ஷஸர்களை இவர்கள் கொன்று குவித்தனர் என்றால் ராக்ஷஸர்களு<ம் அதே போல வானரங்களை தாக்கினர். அவர்களும் ஆத்திரம் கொண்டு ப்ராஸ, தோமரம் இவைகளை ஏந்தியவர்களாக, சக்தி வாய்ந்த அஸ்திர சஸ்திரங்களையும் கொண்டு யுத்தம் செய்தனர். அகம்பனன் ஆத்திரத்துடம் போரிட்டாலும், இடையிடையே தன் வீரர்களையும் மகிழ்வித்து, உற்சாகம் ஊட்டியபடி இருந்தான். தங்கள் மேல் விழும் சஸ்திரங்களை மரக் கிளைகளாலேயே தடுத்து தங்களை காப்பாற்றிக் கொண்டு, சமயம் வாய்த்த பொழுது அதே மரக் கிளையாலேயே எதிரியை அடிக்கவும் செய்தனர். இதற்கிடையில் குமுதன் நலன் என்ற வீரர்களும், மைந்தன் த்விவிதனும் கோபத்துடன் களத்தில் இறங்கி ராக்ஷஸர்களைத் தாக்கினர். இவர்களும் பெரிய மரங்களைக் கொண்டு ராக்ஷஸ படையை மத்தினால் கடைவது போல கலக்கி விட்டனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் அகம்பன யுத்தம் என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 56 (463) அகம்பன வத4ம் (அகம்பனனை வதம் செய்தல்)
வானர வீரர்கள் செய்த அரிய செயலான யுத்த முறையைக் கண்டு அகம்பனன் தன்னுள் ஆத்திரத்தையும், போர் வெறியையும் வளர்த்துக் கொண்டான். சிறந்த வில்லை எடுத்து தயாராக வைத்துக் கொண்டு சாரதியிடம், சாரதியே, இந்த வானரங்கள் நம் ராக்ஷஸ வீரர்களை பெருமளவு கொன்று குவிக்கும் இடத்திற்கு ரதத்தைக் கொண்டு போ. பெருத்த சரீரம் உடைய பல வானரங்கள் கைகளில் பெரிய மரக் கிளைகளை வைத்துக் கொண்டு நிற்கின்றன. இவர்களை வதம் செய்தே ஆக வேண்டும். யுத்தத்தை சிலாகிக்கும் வீரன் தான் நான். இந்த வானரங்கள் நம் படையை ஒரு கலக்கு கலக்கி, அணி வகுத்து வைத்திருந்த ஒழுங்கையெல்லாம் கலைத்து விட்டார்கள். சரங்களை மழையாக பொழிந்து வானர படையை நிர்மூலமாக்க முனைந்தான், அகம்பனன். எதிரில் நிற்கக் கூட வானர வீரர்களால் முடியவில்லை. போர் செய்வது எங்கே? அகம்பனனது பாணங்களால் அடிபட்டு, கை கால்கள் உடைந்தவைகளாக ஓட்டம் பிடித்தனர். அகம்பனனோடு போர் செய்ய இயலாமல், அப்படி செய்ய முயன்றவர்களும் மரணத் தறுவாயில் இருப்பதை ஹனுமான் கண்டான். தன் சுற்றத்தாரைக் காக்க, கம்பீரமாக நடுவில் வந்து நின்றான். அந்த மகா வானரத்தைக் கண்டதுமே, வானர படையின் வீரர்கள் உற்சாகமும் பலமும் அடைந்தனர். திடுமென வந்து நின்ற ஹனுமான் மேல் அகம்பனன் அம்புகளை சரமாரியாக பொழிந்தான். தன் மேல் வந்து விழுந்த கூரிய அம்புகளைப் பற்றி கவலைப் படாமல் ஹனுமான், அகம்பனனை வதம் செய்ய என்ன வழி என்று யோசிக்கலானான். தன் படை பலத்தை ஒன்று கூட்டி, பூமி நடுங்கும்படி வேகமாக ஓடி, அகம்பனனை அடிக்கச் செய்தான். மேலும் மேலும் உரத்த குரலில் அவன் கோஷம் இடுவதையும், தன் தேஜஸால் நெருப்பு போல பிரகாசமாக விளங்குவதையும் கண்டு அனைவரும் திகைத்தனர். கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஜ்வாலை போல இருந்தான். தன்னை யாராலும் அடிக்க முடியாது என்ற நம்பிக்கையோடு, ஒரு கையில் பெரிய கல்லை எடுத்துக் கொண்டு, வேகமாக ஓடி, வீசி சுழற்றி எறிந்தான். அது சுழன்று சுழன்று அகம்பனனை துரத்தியது. முன் காலத்தில் நமுசியை வஜ்ரம் கொண்டு புரந்தரனான இந்திரன் தாக்கியது போல இருந்தது. தன்னை நோக்கி வரும் பெரும் பாறையை தூரத்திலிருந்தே கண்டு கொண்ட அகம்பனன் அர்த்த சந்திரன் என்ற அஸ்திரத்தால் அதைத் தடுத்தான். ராக்ஷஸனின் பாணங்களால் அந்த மலைப் பாறை தூளாக சிதறியது. தன் குறி தூளாகி விழுந்ததைக் கண்டு ஹனுமான் மேலும் ஆத்திரமடைந்தான். பெரிய மலை போல வளர்ந்திருந்த அஸ்வகர்ணம் என்ற மரத்தை, வேரோடு பிடுங்கி, சுழற்றி அடித்தான். தன் கால்களால் பூமி அதிர உதைத்து ஓடிய வேகத்தில் இடைபட்ட மரக் கிளைகள் சட சடவென்று முறிய, ஹனுமான் யானைகளையும், அதில் ஏறியிருந்தவர்களையும் ரதங்களோடு ரதத்தில் இருந்தவர்களையும் நடந்து வந்த போர் வீரர்களையும் வரிசையாக அடித்துத் தள்ளிக் கொண்டே வந்தான். யுத்த களத்தில் நடமாடும் யமன், (அந்தகன்) போல சுழன்ற ஹனுமானைப் பார்த்து ராக்ஷஸர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தன் படை வீரர்களான ராக்ஷஸர்கள் மேல் தாக்குதல் செய்யும் ஹனுமான் மிக அதிக சேதம் விளைவிப்பதைக் கண்டு, கவலைக் கொண்ட அகம்பனன், ஓடும் வீரர்களை திரும்பி வர அழைத்தபடியே, கூரிய பாணங்களாக, உடலைக் கிழிக்கக் கூடியவைகளாக, பத்து பாணங்களை எடுத்து ஹனுமானின் மேல் பிரயோகித்தான். இந்த பாணங்களால் கிழிக்கப் பெற்றும், சற்றும் வாட்டமடையாத ஹனுமான், தன் மேல் குத்தி நின்ற அம்புகளே மரங்களாக மலை போல நின்றான். மலர்ந்து நிற்கும் அசோக புஷ்பம் போலவும், புகை இல்லாத நெருப்பு போலவும் நிமிர்ந்து நின்றான். பின், வேறொரு மரத்தை பிடுங்கி எடுத்துக் கொண்டு விரைவாக அகம்பனனின் தலையில் அடித்தான். ஹனுமானின் கை பலமும், கோபமும் ஒன்று சேர, பலமான அந்த அடியில் அகம்பனன் கீழே விழுந்து மடிந்தான். அகம்பனனே அடிபட்டு இறந்து விழுந்தான் என்பது ராக்ஷஸ வீரர்களுக்கு அளவில்லாத பயத்தையும், கவலையையும் தந்தது. பூகம்பம் வந்த சமயம் மரங்கள் நிலை கொள்ளாது தவிப்பது போல தவித்தனர். தங்கள் ஆயுதங்களை போட்டு விட்டு ராக்ஷஸ வீரர்கள் லங்கையை நோக்கி ஓட்டம் பிடித்தனர். வானரங்கள் ஓடும் ராக்ஷஸர்களை துரத்தின. அவிழ்ந்த கேசமும், வியர்வை ஆறாக பெருக, பயத்துடன், மேல் மூச்சு வாங்க, ஓடினர். ஒருவரையொருவர் இடித்து தள்ளிக் கொண்டு நகரத்தில் பிரவேசித்தனர். திரும்பித் திரும்பி ஹனுமான் நிற்பதை பார்த்துக் கொண்டே ஓடினர். அவர்கள் அனைவரும் லங்கைக்குள் நுழையும் வரை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு திரும்பிய ஹனுமனை மற்ற வானரங்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்தின. ஹனுமானும் மகிழ்ச்சியுடன் அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தான். காலத்திற்கேற்ப, தன் ஆற்றலை வெளிப்படுத்தும் ஹனுமான், வெற்றிக் களிப்பில் வானரங்கள் செய்த கூச்சலையும், அடி வயிற்றிலிருந்து அவை எழுப்பிய கத்தலையும் ரசித்தான். உயிருடன் இருந்த சில ராக்ஷஸர்களையும் விரட்டி, சிம்ம கர்ஜனை செய்தான். வீர சோபையுடன், ராக்ஷஸர்களை ஒன்று சேர அடித்த ஹனுமான், நண்பன் அல்லாத பெரிய அசுரனான பீமனை (பெரிய உருவம் கொண்டவனை) பலியை, பலசாலியை யுத்த களத்தில் வெற்றி கொண்ட விஷ்ணுவைப் போல விளங்கினான். தேவ கணங்கள் வந்து ஹனுமானைக் கொண்டாடின. ராம லக்ஷ்மணர்கள் நேரில் வந்து பாராட்டினர். சுக்ரீவன் மற்றும் வானர வீரர்கள், மகா பலசாலியான விபீஷணன் இவர்களும் வந்து வாழ்த்தினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் அகம்பன வத4ம் என்ற ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 26 (433) கபி ப3லாவேக்ஷணம் (வானர படை பலத்தை, (ராவணன்) தானும் காணுதல்)
சாரணனின் அறிவுரை பத்யமானது, நன்மை பயக்க கூடியது. தெளிவாக நிதர்சனமான உண்மையை ப்ரதிபலிப்பதாக இருந்தது. இதைக் கேட்டு ராவணன் பதில் சொன்னான். தேவ, கந்தர்வ, தானவர்கள் எல்லோருமாக சேர்ந்து வந்து என்னுடன் யுத்தம் செய்ய வந்தாலும் கூட நான் பயப்பட மாட்டேன். மூன்று உலகும் என்னை எதிர்த்து நின்றாலும் நான் பயந்து சீதையைத் திருப்பி தர மாட்டேன். சௌம்யனே, நீ மிகவும் பயந்து போயிருக்கிறாய். அந்த வானரங்கள் உன்னை நன்றாக அடித்து துன்புறுத்தியிருக்கின்றன. அதனால் தான் இன்றே சீதையை திருப்பிக் கொடுத்து விடு என்றும், அது தான் நல்லது என்றும் சொல்கிறாய். யார் தான், எந்த சக்களத்தி மகன் தான் என்னை யுத்தத்தில் ஜெயிக்கிறான் பார்க்கலாம் என்று கோபமாக சொல்லி விட்டு ராவணன் தன் மாளிகையின் உச்சிக்கு ஏறினான். தங்க நிறமும், வெண்மையும் கலந்து பூசப் பெற்று, நாலா புறமும் தாள மரங்கள் சூழ இருந்த, அழகிய மாளிகையின் மேல் மாடி வரை ஏறிச் சென்றான். இரண்டு ஒற்றர்களும் உடன் ஏறினர். அங்கிருந்து ராமர் தங்கியிருக்கும் இடத்தையும், வானர வீரர்களுடைய அணி வகுப்பையும் காண விரும்பி மேலே ஏறிய ராவணன் ஆத்திரத்தில் தன்னை மறந்திருந்தான். சமுத்திரத்தையும், மலைகளையும், வனங்களையும் பார்த்தபடி, வானரங்கள் ஆக்ரமித்திருந்த இடத்தை நோக்கினான். பூமியே கண்ணுக்குத் தெரியாதவாறு, கூட்டமாக இருந்த வானரங்களைக் கண்டான். அந்த பகுதியே இந்த வானரங்களால் நிறைந்து காணப்பட்டது. எல்லையில்லாமல் பரந்து கிடந்த கணக்கற்ற வானர வீரர்களின் பெரும் படையைப் பார்த்து ராக்ஷஸ ராஜா சாரணனை வினவினான். இந்த கூட்டத்தில் யார் யார் நல்ல சூரர்கள். நல்ல பலசாலிகள். உற்சாகத்துடன் முன்னால் நின்று போரிடக் கூடியவர்கள் யாவர்? யார் சொல்லி சுக்ரீவன் கேட்பான்? யார் யார் படைத் தலைவர்கள்? இவர்கள் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள்? விவரமாகச் சொல்லு. சாரணன் சொல்ல ஆரம்பித்தான். யார் யார் முக்கியமானவர்கள் என்று வரிசைக்கிரமமாகச் சொன்னான். இதோ, பாருங்கள், லங்கையை நோக்கியபடி ஆட்டம் போட்டுக் கொண்டு நிற்கிறானே ஒரு சேனாபதி, இவனுடைய சேனையில் நூறாயிரம் வீரர்கள் இருக்கிறார்கள். இவன் தன் பெரும் குரலில் கோஷம் இட்டாலே, லங்கா நகரம் நடுங்கும், தோரணங்கள் ஆட, ப்ராகாரங்கள் அதிரும். மலைகளும் வனங்களும் கூட கிடு கிடுக்கும். வானர வீரர்களின் தலைவனான சுக்ரீவனின் படையில் நடு நாயகமாக நிற்பவன் நீலன். கைகளைக் கட்டிக் கொண்டு நடந்து வருகிறானே, திடுமென நினைத்துக் கொண்டாற்போல் லங்கையை பார்த்து கத்துகிறானே, அவன் தான் அங்கதன். வாலை சுழற்றித் தரையில் அடிக்கிறான், அந்த ஓசையே இப்படி பயங்கரமாக கேட்கிறது. பெரிய உருவமும், பத்மத்தின் மகரந்தம் போன்ற வண்ணமும், இவனை எங்கிருந்தாலும் காட்டிக் கொடுக்கும். உற்சாகமாக தன் துடைகளைத் தட்டி தன் பெயரைச் சொல்லி, போருக்கு அழைக்கிறான், பாருங்கள். சுக்ரீவன் இவனைத்தான் யுவராஜாவாக நியமித்திருக்கிறான். வாலி புத்திரன் இவன். தந்தைக்கு சமமான பலம் உடையவன். சுக்ரீவனுக்கு பிரியமானவன். இந்திரனுக்கு வருணன் உதவியாக உடன் செல்வது போல, ராகவனுக்கு உதவி செய்ய வந்திருக்கிறான். இதோ இருக்கிறானே, இவன் தான் ஜனகாத்மஜாவை கண்டு கொண்டு பேசி விட்டுப் போய் இருக்கிறான். வேகம் மிகுந்த ஹனுமான். இவனும் ராகவனுடைய நலனில் அக்கறையுடையவன். பல வானர வீரர்கள் கொண்ட படையை முன்னின்று நடத்திச் செல்பவன். நம்மை நோக்கித் தான் முன்னேறி வருகிறான். புதுமையான, யாராலும் அடக்க முடியாத பராக்ரமம் கொண்ட வாலி புத்திரன் அருகில் அவனைப் போலவே, இருக்கிறானே, இவன் தான் சேதுவைக் கட்டி முடித்த நலன். உடலை முறுக்கிக் கொண்டு ஹுங்காரம் செய்தபடி, மகிழ்ச்சி கூக்குரல் இட்டுக் கொண்டு, எழுந்திருப்பதும், அமர்வதுமாக, நிலை கொள்ளாமல் தவிக்கிறார்களே, இந்த வானர வீரர்கள், இவர்களின் கோபமும் அளவிடமுடியாதே. எதற்கும் அடங்கவும் மாட்டார்கள். சண்டர்கள், சண்ட பராக்ரமம் உடையவர்கள். எட்டு நூறாயிரம், பத்து கோடி, நூறு, நூறு கோடி என்று படை வீரர்கள் இவனைத் தொடர்ந்து வருவார்கள். சாதாரணமாக சந்தன மரக் காடுகளில் தென்படுபவர்கள், இவர்களும் தனித் தனியாக தாங்கள் புதுமையாக ஏதாவது செய்து லங்கை போரில் தங்களை வெளிபடுத்திக் கொள்ள ஆவலுடன் வந்து கொண்டிருக்கிறார்கள். வெள்ளி வெளுத்த நிறமும், சபலமான சுபாவமும், இவன் பராக்ரமமும், புத்தியும் மூவுலகிலும் பிரஸித்தம். அடிக்கடி இவனிடம் ஓடி வந்து சந்தேகங்களை நிவிருத்தி செய்து கொண்டு போகிறானே, இவன் முன்பு கோமதி தீரத்தில் வசித்தவன். படை வீரர்களை ஒழுங்காக நிறுத்தி வைத்து ஏற்பாடுகளை செய்யும் சமயம் கூட, ஏதோ சொல்லி அவர்களை மகிழ்ச்சியடைய செய்தபடி இருக்கிறான். ரம்யமான பர்ய என்ற பர்வத வாசி. சங்கோசனன் என்ற மலைத்தொடரில் ஒரு மலை பர்ய. அங்கு ராஜ்யத்தை ஆண்டு வருகிறான். குமுதீ என்ற சேனைத் தலைவன் இவன். இவனிடம் நூறாயிரம், ஆயிரம் வீரர்கள் உண்டு. இவன் நிர்வகிக்கும் படையில் வீரர்கள் இளைஞர்கள், நல்ல உழைப்பாளிகள், வீரர்கள். இவர்களுடைய வால், நீண்டு, தாம்ர வர்ணத்தில், மஞ்சள் நிறமாக, கருத்த, வெண்மையான என்று பல வர்ணங்களில் இருக்கும். கோரமாக சண்டையிடக் கூடியவர்கள். யுத்தம் செய்ய ஆவலுடன் இவர்களும் தயாராக இருக்கிறார்கள். துடிப்புடன், புதுமையாக என்ன செய்யலாம், லங்கையை வீழ்த்த தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்கள். இதோ பாருங்கள், உருவத்தில் நீண்டு சிங்கம் போன்ற அமைப்பும், கேஸரி வர்ணமும், லங்கையை கண்களாலேயே எரித்து விடுபவன் போல பார்த்துக் கொண்டு நிற்கிறானே, அவன் விந்த்யமலைத் தொடரில் க்ருஷ்ணகிரி என்ற அழகிய இடம் அங்கு வசித்து வரும் தலைவனான ரம்போ4 என்ற வானரம். இவனிடமும், நூறு, நூறாயிரம், முன்னூறாயிரம் என்று படை வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களும் சூரர்கள். சண்ட ப்ரசண்டமாக, முழு மூச்சுடன் போரில் இறங்கக் கூடியவர்கள். தங்கள் தலைவனை நாலா புறமும் சூழ்ந்து கொண்டு உற்சாகமாக வருகிறார்கள், பாருங்கள். மற்றவர்களைப் போலவே இவர்கள் இலக்கும் நம் லங்கையே. இதைத் தாக்க வந்திருக்கிறார்கள். இதோ ஒரு வானரத் தலைவன், அடிக்கடி காதுகளை நிமிர்த்தி, ஹுங்காரம் செய்தபடி இருக்கிறானே, இவனுக்கு ம்ருத்யுவிடமே பயம் இல்லை. அதனால் யுத்தத்தைக் கண்டு அலறி ஓடுபவனும் இல்லை. இன்னொருவன், குறுக்காக பார்த்துக் கொண்டு, ரோஷத்துடன் உடல் நடுங்க, தன் வாலைத் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டு நிற்கிறானே, இவனும் பயம் என்பதே அறியாதவன். வேகமாக செல்லக் கூடியவன். அழகிய சால்வேய மலையில் இருப்பவன். சரப4ன் என்ற பெயருடையவன். இவனுடைய வீரர்கள் விஹாரா என்று அழைக்கப் படுகிறார்கள். ராஜன், இவனிடமும் நூறாயிரம், நாற்பதாயிரம் படை வீரர்கள் உள்ளனர். இவர்கள், ஆகாயத்தை மேகம் மறைப்பது போல, பூமியை மறைத்துக் கொண்டு நிற்கிறார்கள். வானர வீரர்களின் மத்தியில் தேவர்களிடையில் இந்திரன் போல நிற்கிறான். இவன் குரலும் பேரீ வாத்யம் முழங்குவது போல கேட்கிறதே. சாகாமிருகம் (கிளைகளில் வசிப்பவர்கள்) என்று பெயர் பெற்ற இந்த வானர வீரர்களில், யுத்தம் என்று ஆவலுடன் கூடியிருக்கும் சேனையின் நடுவில் தலைவனாக உள்ளவன் பாரியாத்ரம் என்ற மலை வாசி. இவனுடன் யுத்தம் செய்வது யாருக்குமே கஷ்டம்தான். இவன் தான் பனஸன் என்ற வானரத் தலைவன். இவனுடனும், நூறாயிரம், தவிர ஐம்பதாயிரம் வீரர்கள் வருகிறார்கள். இந்த சேனைத் தலைவர்களுக்கும் பொதுவான தலைவன் ஒருவன் இருக்கிறான். தனித் தனியாக உள்ள சேனையை பராமரிக்கும் இந்த சிறிய தலைவர்கள், இவர்களுக்கு மேலதிகாரியான இந்த வீரனிடம் தங்கள் நிலையைப் பற்றி விவரமாகச் சொல்கிறார்கள். சமுத்திரக் கரையில் மற்றொரு பாஸ்கரன் போல நின்று கொண்டு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறானே, அவன்தான் வினதன் என்ற சேனைத்தலைவன். நதிகளுக்குள் உத்தமமான நதியான பர்ணாசா என்ற நதியின் ஜலத்தைக் குடித்து வளர்ந்தார்கள். நூறாயிரம் வீரர்கள் இவனுடன் வருகிறார்கள். தங்களை யுத்தத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறானே, அவன் க்ரோத4னன் என்ற படைத் தலைவன். இந்த படை வீரர்கள் தனித் தனியாகவும் நல்ல பலசாலிகள். ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக அணி வகுத்து நிற்கிறார்கள். மஞ்சள் நிறத்துடன், நம்மை நெருங்கி வருகிறானே, கோபத்துடன் மற்ற வீரர்களை ஒதுக்கித் தள்ளி விட்டு வருகிறானே, அவன்தான் கவயன் என்பவன். இவனிடமும் நூறாயிரம் வீரர்கள் இருப்பார்கள் என்று நம்பலாம். எழுபது பிரிவுகள்,அதனுள் வீரர்கள் என்று அமைத்திருக்கிறார்கள். இந்த படைத் தலைவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் தான் லங்கையை நாசம் செய்ய வேண்டும் என்பது போல உறுதியான நோக்கத்தோடு, போருக்குத் தயாராக நிற்கிறார்கள். இவர்களும் விரும்பிய வண்ணம் தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள், பலசாலிகள். வசதிக்காக, தனித் தனியாக பிரித்து நிற்க வைக்கப் பட்டிருந்தாலும், ஒரே குறிக்கோளோடு போரிடத் தயாராக நிற்கிறார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கபி ப3லாவேக்ஷணம் என்ற இருபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 27 (434) ஹராதி வானர பராக்ரமாக்யானம்(ஹரன் முதலிய வானரங்களின் பராக்ரமம் பற்றி வர்ணனை)
ராஜன் மற்றவர்களையும் பற்றிச் சொல்கிறேன், கேளுங்கள் என்று சாரணன், வானர படைத்தலைவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ராவணனிடம் தொடர்ந்தான். இவர்கள் உயிரைத் த்ருணமாக மதித்து போரிட வந்துள்ளார்கள். ராகவனுக்காக உயிரையும் கொடுக்க சித்தமாக வந்திருக்கிறார்கள். தாம்ர வர்ணமோ, பொன் நிறமோ, நீண்ட வால் தான் இவர்களுக்கு அடையாளம். கபில (நாவல்), சிவந்த வர்ணத்தினரும் உண்டு. பயங்கரமான செயல் பாடுடையவர்கள். சேர்ந்து இருக்கும் பொழுது சூரியனுடைய கிரணங்கள் போல விளங்குவார்கள். பூமியில் ஹரனென்ற இந்த படைத்தலைவனோடு, நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான வீரர்கள். மரத்துக்கு மரம் தாவி சீக்கிரமே லங்கையை அடைந்து விடத் துடிக்கிறார்கள். இன்னும் பலரையும் வரவழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டுத் தான் வருகிறான். இவனே ராவணனான உங்களை ஜயிக்க கனவு காண்கிறான். இவர்கள் ஹரிராஜனான சுக்ரீவனின் கிங்கரர்கள். நீலனைப் போன்ற பலரும் எதிரில் நிற்கிறார்கள். கடல் கடந்து வந்துள்ள ஏராளமான போர் வீரர்கள், உற்சாகத்துடன், போரில் மடியவும் தயாராக, வந்து நிற்கிறார்கள். கருத்த மேகம் போன்று உருவமும், சத்ய பராக்ரமமும் உடையவர்கள். இதுவரை மலைகளிலும், நதிகளின் கரையிலும் இருந்து லங்கையை நோக்கி வரும் இந்த கரடி கூட்டம் மிகவும் பயங்கரமானது. வேகமாக முன்னேறி வரும் இந்த படையும் தூ4ம்ரன் என்ற படைத் தலைவனின் தலைமையில் வருகிறது. தூம்ரன் என்பவன் பயங்கரமான கண்களும், கொடூரமான தோற்றமும் உடையவனாக இருக்கிறான். நர்மதை நீரைக் குடித்து வளர்ந்தவர்கள், தாங்களே நீருண்ட மேகம் போல காட்சி தருகிறார்கள். ருக்ஷவந்தம் என்ற சிறந்த மலையில் வாசம் செய்தவர்கள். இந்த தூம்ரனுடைய இளைய சகோதரன், மலை போல பெருத்த சரீரத்துடன் சகோதரனுக்கு சமமான சரீரமும், அதை விட அதிகமான பராக்ரமமும் உடையவன். இதோ ஜாம்பவான். அமைதியாக இருப்பது போலத் தெரிகிறது. குரு சேவை செய்து நிறைய கற்றவர். கோபத்துடன் அடித்தால் தாங்க முடியாது. இந்திரனுக்கு நிறைய உதவிகள் செய்தவர். தேவாசுர யுத்தங்களில் நிறைய உதவி செய்து, பல வரங்களையும் பெற்றவர். இந்த வீரர்கள் மலை உச்சி வரை சுலபமாக ஏறி, பெரிய பெரிய மேகம் போன்ற கற்களை அனாயாசமாகத் தூக்கி வீசுவார்கள். இவர்களுக்கு மரண பயம் சிறிதும் இல்லை. கவலையும் இல்லை. ராக்ஷஸர்களுக்கு சமமானவர்கள். பிசாசங்கள் போல தந்திரம் மிக்கவர்கள். இவர்களுடைய சைன்யமும் நிறைய நடமாடுகின்றன. அக்னி போன்ற தேஜஸ் உடையவர்கள். இப்பொழுதே தாண்டி குதிக்க தயாரான நிலையில் நிற்பது போலத் தெரிகிறது. வானர வீரர்கள் நெருங்கி நின்று பேசிக் கொண்டிருக்கிறார்களே, அவன் தான் த3ம்பன் என்ற சேனாபதி. இவன் ஒரு சமயம் பலாத்காரமாக இந்திரனை இழுத்துக் கொண்டு வந்தவன். நின்றால், மலையில் பாதி இருக்கிறான், க்ரதன்- அகத்தனன் என்று பெயர் பெற்றவன். ஒரே எட்டில் மலையுச்சியை அடைந்து விடுவான். நாலு கால் பிராணிகளிடம் இவனைப் போல உருவம் வேறு யாருக்கும் இல்லை. இவன் சன்னாதனன் என்ற வானரங்களின் பிதாமகர். தோல்வியே அறியாதவன். இவனுடைய பலமும், போரில் இந்திரனுக்கு சமமானதே. கந்தர்வ கன்னியிடம் பிறந்தவன். க்ருஷ்ண வர்த்மா என்பவரின் மகன். தேவாசுர யுத்தத்தில், தேவர்கள் சகாயத்திற்காக சென்றவன். ஜம்பூ த்வீபத்தில், உங்கள் சகோதரன் வைஸ்ரவனன் வந்தால் தங்கும் இடம். பர்வதங்களின் அரசன் என்று புகழ் பெற்ற மலை, கின்னரர்கள் வசிக்கும் இடம், நடந்து போக, விளையாட சுகமான இடம், அந்த மலை இவனுடைய இருப்பிடம். (திரு வேங்கட மலை) இவனும், கோடி, ஸஹஸ்ரம் என்று படை வீரர்களோடு வந்து நிற்கிறான். லங்கையை வீழ்த்துவது தன் படை வீரர்களாக இருக்க வேண்டும் என்பது இவனது விருப்பம். இதோ இருப்பவன், ப்ரமாதீ என்ற வானரப் படைத் தலைவன். கங்கை கரையில் யானைக் கூட்டத்தையே கலங்க அடிக்க கூடியவன். முன்பு ஒரு சமயம், யானைகளுக்கும், வானரங்களுக்கும் இடையில் தோன்றிய விரோதத்தை இவன் மறக்கவே இல்லை. குகைகளில் வசித்துக் கொண்டு இவன் தலைமையில் வானரர்கள் யானைகளையும் அவை வசிக்கும் மலைகளையும், மரங்களையும் தாக்கி சண்டை இடுவர். ஹைமவதீ என்ற நதிகளில் முக்கியமாகச் சொல்லப் படுவதுண்டு. வானர சேனைத் தலவர்களுள் இவனும் ஒரு முக்கியமான ஸ்தானம் வகிப்பவன். உசீர பீஜம் என்ற பெரிய மலை. மந்தர மலை போன்று இருக்கும். அதில் வசிக்கிறான். உலகில் தேவலோகத்து இந்திரன் வந்தது போல பெருமை வாய்ந்த அரசனாக விளங்குகிறான். இவனையும் நூறாயிரம், ஆயிரம் வீரர்கள் பின் பற்றுகிறார்கள். எல்லோருமே வீர்யமும், விக்ரமும் அதனால் உண்டாகும் கர்வமும் மிகுந்தவர்கள். இவனையும் வெல்வது கடினமே. புழுதி மண்டலம் மேகம் போல மறைக்க கூட்டமாக வரும் கோ3லாங்கூலம் என்ற இனத்தினர். வெளுத்த முகமும், நல்ல வேகமும் உடைய இவர்கள் தலைவன் க3வாக்ஷன். இவர்களும் லங்கையை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு முன்னேறி வருகிறார்கள். லங்கையை தங்கள் பலத்தால் ஜயிக்க வேண்டும் என்று வேகமாக வருகிறார்கள். அதனால் தான் புழுதி மண்டலம் வானளாவ எழுகிறது. இவர்கள் வசிக்கும் இடத்திலும், எப்பொழுதும், மரங்கள் பழங்களும், பூக்களும் நிறைந்து வண்டுகள் மொய்க்க காணப்படும். சூரியனுக்கு இணையான வர்ணமுடைய அனுபர்யா என்ற மலை. இந்த மலையின் விசேஷம் அங்குள்ள மிருகங்களும், பக்ஷிகளும் கூட பள பளவென்ற வண்ணத்துடன் காட்சி தருவார்கள். முனிவர்கள், ரிஷிகள் இந்த இடத்தை விடவே மாட்டார்கள். எல்லா விதமான பழ மரங்களும் இருப்பதால், மாற்றி-மாற்றி ஏதோ ஒரு வித பழம் கிடைத்துக் கொண்டேயிருக்கும். இங்கு கிடைக்கும் தேனும் மிகவும் உயர்ந்தது. இங்கு வசிக்கும் வானரப் படைத் தலவன் தான் கேஸரி என்று புகழ் பெற்ற வீரன். ஆயிரக் கணக்கான மலைகளில் ஆறு காஞ்சன பர்வதம் எனப்படும். அவைகளுக்கு இடையில், ராக்ஷஸர்களுக்கிடையில் நீ உயர்ந்து நிற்பது போல, மலைகளுள் இந்த மலையும் விசேஷ ஸ்தானம் பெற்றது. இங்குள்ளவர், கபில வர்ணத்தினர், வெண்மையானவர், தாம்ர வர்ணத்தினர், தேன் போன்று இளம் பசுமை நிறத்தினர், என்று வானரங்கள் வசிக்கிறார்கள். இவர்கள் நீண்ட நகமும், உறுதியான பற்களும் உடையவர்கள். புலிகள் போல எதிர் கொள்ள முடியாத பலசாலிகள். எல்லோருமே அக்னி போன்று ஜ்வலிக்கக் கூடியவர்கள். போர் முனையில், ஆல கால விஷம் போன்றவர்கள். அடர்ந்த வால் இவர்களுடைய தனித் தன்மை. மதம் பிடித்த யானை போல நடமாடுபவர்கள். பெரிய பெரிய மலை கல் பெயர்ந்து நடப்பது போல நடப்பார்கள். குரலும் இடி முழக்கம் போல இருக்கும். உருண்ட, பழுப்பும் சிவப்பும் கலந்த வர்ண கண்களுடையவர்கள். பயங்கரமான நடையும், குரலும், கொண்டவர்கள். லங்கையை மிதித்து நாசமாக்குவது போல பூமி அதிர நடந்து வருகின்றனர். இதோ நிற்பவன், எப்பொழுதும் ஆதித்யனை உபாசிப்பவன். வெற்றியை விரும்பும் ஜயார்தீ. சதபலி என்று உலகில் பெயர் பெற்றவன். இவனுக்கும் அதே எண்ணம் தான். தன் படைகள் தான் லங்கையை முன்னின்று தாக்கி வெற்றி பெற வேண்டும் என்பதே. தங்கள் பலத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். ராமனுக்கு பிரியமானதைச் செய்யத் துடிக்கிறார்கள். ராம விரோதியிடம் தயை காட்ட மாட்டார்கள். கஜன், கவாக்ஷன், கவயன், அனலன், நீலன் இவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் பின்னால் கோடிக் கணக்கான போர் வீரர்களுடன் வந்திருக்கிறார்கள். விந்த்ய மலையிலும், மற்ற இடத்திலும் இன்னும் கணக்கில்லாத வானரங்கள் நம் எண்ணிக்கைக்கு அடங்காத பலர் இருக்கிறார்கள். மகாராஜா, எல்லோருமே மிக உயர்ந்த ப்ரபாவம் உடையவர்கள். மகா சைலம் போன்ற சரீரமும், சாமர்த்யமும் உடையவர்கள். நீண்டு பரவி இருக்கும் இந்த பூமியை க்ஷண நேரத்தில் நாசமாக்கும் சக்தி படைத்தவர்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஹராதி வானர பராக்ரமம் என்ற இருபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 28 (435) மைந்தா3தி பராக்ராமாக்2யானம்(மைந்தன் முதலானவர்களின் வலிமை பற்றிய வர்ணனை)
ராவணன் கேட்டதன் பேரில், சாரணன் தனக்குத் தெரிந்த வரை சொல்லி முடித்தவுடன், சுகன் சொல்ல ஆரம்பித்தான். ராஜன், இதோ இங்கு நிற்பவர்களைப் பாருங்கள். மதம் பிடித்த யானை போலவும், கங்கை கரையில் உள்ள ந்யக்ரோத மரம் போலவும், சால மரம் போலவும், பெருத்த சரீரத்தையுடைய இவர்கள் நாம் நெருங்கக் கூட முடியாத பலசாலிகள். தைத்ய தானவர்களுக்கு இணையான பராக்ரமம் உடையவர்கள். இது போல ஆயிரம் கோடி, ஒன்பது, ஐந்து கோடி, சங்க (ஒரு அளவு) ஆயிரம், ப்ருந்த சதம் என்னும் அளவையும் மீறி விடும் வண்ணம் கணக்கில்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் சுக்ரீவனின் மந்திரிகள். எப்பொழுதும் கிஷ்கிந்தையில் வசித்தவர்கள். இவர்கள் தேவ கந்தர்வர்களிடம் பிறந்தவர்கள். விரும்பிய வண்ணம் தங்கள் உருவை மாற்றிக் கொள்ள வல்லவர்கள். இதோ இரு இளம் வீரர்கள் நிற்பதைப் பாருங்கள். இவ்விருவரும் மைந்த3ன், த்3விவித3ன் என்று பெயர் பெற்றவர்கள். இவர்களுக்கு சமமாக உலகத்தில் வேறு யாருமே இல்லை. இவர்கள் இருவரும் ப்ரும்மாவால் அனுமதி அளிக்கப் பட்டு அமுதத்தைப் பருகியவர்கள். இவர்களும், மற்றவர்களைப் போலவே, தங்கள் படை பலத்தால் லங்கையை பிடித்து விட வேண்டும் என்று விரும்புகிறார்கள். மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள். காட்டு யானை போல நிற்கிறானே, எவன் கோபம் கொண்டால் சமுத்திரத்தைக் கூட வற்றச் செய்து விடுவானோ, அவன் தான் லங்கையை கண்டு சொன்னவன். வைதேஹியை கண்டு கொண்டு சென்றவன். முன்னால் நாம் இவனை சந்தித்து இருக்கிறோம். திரும்ப வந்திருக்கிறான். கேஸரியின் மூத்த மகன், வாதாத்மஜன் என்று பெயர் பெற்றவன். ஹனுமான் என்றும் அழைப்பார்கள். சமுத்திரத்தை தாண்டி குதித்து வந்தவன். இவனும் விரும்பிய வண்ணம் ரூபத்தை எடுத்துக் கொள்ள வல்லவனே. வானர ஸ்ரேஷ்டன். பலமும், ரூபமும் இணைந்து எதிர்க்க முடியாத, தடுக்க முடியாத வேகமும், கதியும் உடையவன். குழந்தையாக இருந்த பொழுதே உதிக்கும் சூரியனைப் பார்த்து, தாகத்துடன் அதை பிடிக்க எண்ணி, மூன்று யோஜனை தூரம் ஆகாயத்தில் தாவி குதித்து, ஆதித்யனை பிடித்து வருவேன் அதன் பின் என்னை பசி வாட்டாது என்று மனதால் நினைத்தபடி, கிளம்பி விட்டான். தன் பலத்தில் கர்வம், தன்னம்பிக்கை இவற்றுடன் மேலேறி சென்றான். தேவ, கந்தர்வ தானவர்கள் கூட ஆதித்யன் அருகில் செல்ல முடியாது என்பதை அந்த இளம் வயதில் அறிந்திருக்கவில்லை. ஆதித்யனின் தேஜஸால். நெருங்க முடியாமல் உதயன கிரியில் விழுந்து விட்டான். கீழே விழுந்த பொழுது கல்லில் பட்டு கன்னம் ஒரு பக்கமாக நசுங்கி விட்டது, அதிலிருந்து இவன், நீண்ட கன்னங்களை உடையவன் என்ற பொருளில் இந்த வானரன் ஹனுமான் ஆனான். இந்த ஹரி, வானரம், ஆகமங்களை அறிந்தவன், சத்யமாக என்னால், இவனுடைய பலமோ, ரூபமோ, ப்ரபாவமோ வர்ணித்துச் சொல்ல முடியாது. இவனுடைய குறிக்கோளும் தான் ஒருவனாக, லங்கா நகரை முறியடிக்க வேண்டும் என்பதே. இவனால் தான் லங்கா ஜாஜ்வல்யமாக நெருப்பின் ஜ்வாலையால் கொழுந்து விட்டு எரியக் கண்டோம். தாங்களும் மறந்திருக்க முடியாது. இவனது வேலைதான் அது. இவனுக்கு அருகில், ஸ்யாமள வண்ணனாக, பத்மம் போன்ற கண்களுடன், பார்த்தாலே சூரன் என்று தெரியும் வண்ணம் நிற்கிறானே, அவன் தான் இக்ஷ்வாகு வம்சத்தின் அதி ரதன், உலகில் இவன் பெருமையைப் பற்றி அறியாதவர் இல்லை. தர்மத்தை விட்டு அணுவும் பிறளாதவன், தர்மமே இவனை அண்டியிருப்பது போல இருப்பவன். உலகில் இவன் பௌருஷத்தை அறியாதவர் இல்லை. ப்ரும்மாஸ்திரம் முதல் அஸ்த்ர சாஸ்திரத்தோடு, வேதங்களையும் கற்றவன். அறிந்து கொள்ள வேண்டியது அனைத்தையும் நன்றாகவே அறிந்தவன். தன் பாணங்களாலேயே ஆகாயத்தை துண்டாடக் கூடியவன். மலைகளை பிளந்து விடுவான். ம்ருத்யுவுக்கு சமமான கோபமும், இந்திரனுக்கு சமமான பராக்ரமமும் உடையவன். இவன் மனைவியைத் தான் நீ ஜனஸ்தானத்திலிருந்து அபகரித்துக் கொண்டு வந்தாய். இந்த ராமன் தான் உன்னுடன் போர் புரிய முன்னேறி வருகிறான். இவனுடைய வலது பகுதியில், சுத்தமான சொக்கத் தங்கம் போன்ற நிறமுடையவன், விசாலமான மார்பும், தாம்ர வர்ண கண்களுமாக, கருத்த தூக்கி முடியப் பட்ட கேசமுமாக, இவன் தான் லக்ஷ்மணன் என்ற ராம சகோதரன். ராமன் உயிர் தான் வெளியே நடமாடுகிறதோ எனும்படி உற்ற தோழனான, சகோதரன். ராமனுக்கு மிகவும் பிரியமானவன். உயிருக்கு உயிரானவன். நயத்திலும், யுத்தத்திலும், தேர்ச்சி பெற்றான். சர்வ சாஸ்திர விசாரதன். அடங்கிய கோபம் உடையவன். இவனையும் எதிர்த்து போரிடுவது இயலாத காரியம். எப்பொழுதும் வெற்றியையே கண்டவன். நல்ல புத்திசாலி. பலசாலி. ராமனது வலது கை போன்றவன். ராமனுக்காக உயிரையும் கொடுப்பான். இவனும் தான் ஒருவனாக லங்கையை ஜயிக்க நினைக்கிறான். இந்த ராமனின் இடது புறத்தில் நிற்கிறானே, நமது ராக்ஷஸ கூட்டத்தினரால் ஒதுக்கித் தள்ளப் பட்ட ராஜா விபீஷணன், ராஜ ராஜாவான, ஸ்ரீமானான ராமனால் லங்கை நாயகனாக அபிஷேகம் செய்து வைக்கப் பெற்றிருக்கிறான். இந்த விபீஷணனும் தற்சமயம் எதிரிகளின் படையோடு நம்முடன் மோத வருகிறான். சாதாரண மலை குன்றுகளுக்கு இடையில் சிகரம் போல உயர்ந்து தெரிகிறானே, அனைத்து சாகா மிருகங்கள் (கிளைக்குத் கிளை தாவும் வானர இனம்) இனத்தவரின் அரசன். மலைகளுக்கு இடையில் மலையரசனான ஹிமவான் போல நிமிர்ந்து நிற்கிறான். உற்றார், உறவினரின் அன்புக்கு பாத்திரமானவன் ஆதலால் அவர்கள் வாழ்த்துகின்றனர். இதனால் தேஜஸும், புகழும், புத்தியும் ஞானமும் கிடைக்கப் பெற்றவனாக சிறந்த அரசன் என்று பெயர் பெற்றிருக்கிறான். கிஷ்கிந்தையை பாலனம் செய்கிறான். கிஷ்கிந்தையின் குகைகளுக்குள், விஸ்தீர்ணத்தில் ஆகாயத்துக்கு இணையாக, வனங்கள் நிறைந்து, எளிதில் நுழைய முடியாத பாதுகாவலுடன் இருக்கும் தன் அரண்மனையில் பிரதான சேனைத் தலைவர்களுடன் வசிக்கிறான். இவனுடைய கழுத்தில் தங்கத்தாலான மாலை சோபையுடன் விளங்குகிறது, பாருங்கள். சத புஷ்கரா என்ற இந்த மாலையில் லக்ஷ்மீ வாசம் செய்கிறாள். தேவர்களுக்கும், மனுஷ்யர்களுக்கும், மதிப்புக்குரிய மாலை. இந்த மாலையையும், தாராவையும் (வாலி மனைவி), வானர ராஜ்யத்தையும், வாலியை வதம் செய்த பின், ராமர் தான் இவனுக்கு கொடுத்தார். நூறு, நூறாயிரம் கோடி எனப்படும். நூறு கோடியை சங்கம் என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்வார்கள். நூறு சங்கத்தின் ஆயிரம் பங்கு, மகா சங்கம் எனப்படும். இந்த மகா சங்கத்தின் ஆயிரம் மடங்கு ப்ருந்தம் என்று சொல்வோம். நூறு ப்ருந்த ஆயிரங்கள் மகா ப்ருந்தம் எனப்படும். இந்த மகா ப்ருந்த ஆயிரங்கள் ஒரு நூறு இருந்தால் பத்மம் எனப்படும். இதே போல நூறு பத்மங்கள் மகா பத்மம் எனப்படும். இதை ஆயிரத்தால் பெருக்க, மகா பத்மம் வரும். மகா பத்ம ஆயிரங்கள் ஒரு நூறு சேர்ந்தால், கர்வம் எனப்படும். இதை ஆயிரத்தால் பெருக்க, மகா கர்வம் வரும். மகா கர்வத்தின் ஆயிரங்கள் சமுத்திரம் எனப்படும். நூறாயிரம் சமுத்திரம் அமோகம் எனப்படும். நூறாயிரம் அமோகம், மகா மோகம் எனப்படும். இப்படி, ஆயிரம் கோடி, நூறு சங்கம், ஆயிரம் மகா சங்கம், அதே போல நூறு பத்மங்கள், மகா பத்மாங்கள் ஆயிரம், கர்வ நூறும், நூறு சமுத்திரம், மகா மோகம் எனும் எண்ணிக்கையும் அதே போல நூறாக, இவன் கோடி மகௌகம், சமுத்திரம் போன்ற வீரர்களோடு, விபீஷணன் மந்திரிகளுடன் உடன் வர, சுக்ரீவன் வானரேந்திரன் நம் பேரில் படையெடுத்து வருகிறான். தானும் நல்ல பலசாலி, உடன் வருபவர்களும் பலசாலிகளே. இந்த வாஹிணி (பெரிய படை)யைப் பார். எதோ கிரஹம் எரிந்து கொண்டு இருப்பது போல தெரிகிறது. அதனால் பெரு முயற்சி செய்து யுத்த ஏற்பாடுகளைச் செய். எதிரிகளிடம் தோல்வி அடையக்கூடாது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மைந்தா3தி பராக்ரமாக்2யானம் என்ற இருபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 29 (436) சார்தூ3லாதி சார ப்ரேஷணம் (சார்தூலன் முதலான ஒற்றர்களை அனுப்புதல்)
சுகன் விவரித்தபடி, வானர சேனை அணி வகுத்து நிற்பதையும், லக்ஷ்மணன், ராமனது வலது கரமாக இயங்குவதையும், ராமனின் சகோதரனுக்கு அருகில், தன்னைச் சார்ந்த விபீஷணன் நிற்பதையும், வானர ராஜனான சுக்ரீவன், பீம விக்ரமனாக, பலசாலியாக நிற்பதையும், க3ஜன், க3வாக்ஷன், க3வயன், மைந்த3ன், த்3விவித3ன், இவர்களையும், அங்க3த3ன், வஜ்ரஹஸ்தன் எனும் இந்திரனின் மகனின் மகன், பலசாலி என்று பார்த்த மாத்திரத்தில் தெரியும் படி நிற்பதையும், வீரனான ஹனுமானையும், ஜயிக்க முடியாத ஜாம்பவானையும், சுஷேணன், குமுதன், நீலன், நலன் என்ற அளவில்லாத பராக்ரமம் உடைய வீரர்களையும் பார்த்து மனம் வாடினான். கோபம் மேலோங்கியது. இதுவரை சொல்லி வந்த சுக, சாரணர்களை திட்ட ஆரம்பித்தான். தலை குனிந்து நின்ற அவ்விருவரையும் பார்த்து கடுமையாக பேசலானான். ஆத்திரத்தில் வாய் குழறியது. அளவில்லா பதட்டம் அவனை ஆக்ரமித்தது. ராவணன் கடுமையாக அவர்களைச் சாடினான். அரசனை அண்டி வாழும் மந்திரிகளுக்கு இது அழகல்ல. அரசனுக்கு பிடிக்காததை அவன் எதிரிலேயே சொல்வது என்ன சாமர்த்யம்? நிக்ரஹம், ப்ரக்ரஹம் என்ற ராஜ நீதிகளை அறிந்தவர்கள் பேசும் பேச்சா இது? நம் எதிரிகளை, போர் செய்து நம்மை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு முன்னேறி வரும் சத்ருக்களை இருவரும் இப்படி மாறி மாறி தோத்திரம் செய்கிறீர்களே. குரு, ஆசார்யர்கள், முதியவர்கள் என்று உங்களை நான் உபசரித்து வணங்கி வந்தது வீணாயிற்று. ஊழியம் செய்பவர்கள், ராஜ நீதியில் எப்படி இருக்க வேண்டும் என்று அறிந்தவர்கள் தானே நீங்கள். தெரிந்தோ அல்லது வேண்டுமென்றே தெரியாதது போல நடித்துக் கொண்டோ, நீங்கள் என் எதிரிகளின் புகழ் பாடுகிறீர்கள். அறிவு வெறும் மூட்டை, பாரம் மட்டும் தானா? இது போன்ற மூர்க்கர்களான மந்திரிகளுடன் நான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே, பெரிது. அதுவே அதிர்ஷ்டம் தான், என்னிடம் இவ்வளவு கொடுமையான செய்திகளைச் சொல்ல உங்களுக்கு பயம் விட்டுப் போய் விட்டதா? உயிர் மேல் ஆசையே இல்லாமல் போய் விட்டதா? அரசனாக நான் பதவியில் இருக்கும் பொழுதே, உங்களுக்கு இப்படி பேச தைரியம் வந்தது, ஆச்சர்யம் தான். நெருப்பைத் தொட்டு விட்டு, மரங்கள் வனத்தில் நிம்மதியாக இருக்க முடியுமா? ராஜத்ரோகத்துக்கு ஆளான அபராதிகள், மீண்டு வருவது நடக்கக் கூடியதா? இதோ உங்கள் இருவரையும் இப்பொழுதே கொல்வேன். சத்ரு பக்ஷத்தை உயர்வாக விமரிசிக்கிறீர்கள். முன் நீங்கள் செய்த உபகாரங்களை நினைத்து, என் கோபத்தை அடக்கிக் கொள்கிறேன், நான் உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளுமுன் இங்கிருந்து போய் விடுங்கள். என் கண் முன் நிற்காதீர்கள். உங்களை கொல்லாமல் விடுகிறேன். நீங்கள் செய்துள்ள நன்மைகளை நினைத்து, உங்களை உயிருடன் விடுகிறேன். என்னிடம் சற்றும் அன்பு இல்லாமல், செய் நன்றி கொன்றவர்களை நான் ஒரு போதும் உயிருடன் விட்டதில்லை. ராவணன் இவ்வாறு சொல்லவும், வெட்கத்துடன் தலை குனிந்தபடி, ராவணனுக்கு ஜய கோஷம் செய்து ஆசிர்வதித்து விட்டு இருவரும் வெளியேறினர். தசக்ரீவன், இதன் பின் தன் அருகில் இருந்த மகோதரனைப் பார்த்து நல்ல சாமர்த்யமுள்ள ஒற்றர்களை ஏற்பாடு செய், என்றான். மகோதரனும் உடனே தகுந்த ஒற்றர்களைத் தேடி அழைத்து வந்தான். நான்கு ஒற்றர்கள் வேகமாக வந்து ஜய, ஜய என்று சொல்லி அரசனின் கட்டளைக்கு காத்திருந்தனர். ராக்ஷஸாதிபன், ராவணன் அவர்களை சோதித்து பார்த்து, இவர்கள் தன்னிடம் பக்தி கொண்டவர்களே, சூரர்கள் தான், இளகிய மனம் இல்லாதவர்கள் என்று உறுதி செய்து கொண்டான். உடனே போங்கள். ராமனுடைய நடவடிக்கைகளைக் கண் காணியுங்கள். என்ன காரணத்தினால், இவனுடன் சேர்ந்து கொண்டவர்கள் இவனிடம் அன்புடன் இணைந்து இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதில் ஏதாவது இடைவெளி, கருத்து வேறுபாடு இருக்கிறதா என்று கவனித்துப் பாருங்கள். எப்படி தூங்குகிறான், விழித்திருக்கிறான், வேறு என்ன வேலை செய்கிறான், இவைகளை முழுதும் அறிந்து கொண்டு வந்து சொல்லுங்கள். ஒற்றர்கள் திறமையாக கொண்டு வந்து தரும் சிறு செய்திகளும், எதிரிகளின் வீழ்ச்சிக்கு வழி வகுத்து அரசர்கள் வெற்றி அடைவார்கள். இதில் அதிக கஷ்டம் கூட இல்லை. வசுதாதிபன், புத்திசாலியாக இருந்தால், மிக சுலபமாக எதிரியை தனக்கு அதிக நஷ்டமின்றி வீழ்த்தலாம் என்றான். ஒற்றர்களும் மகிழ்ச்சியுடன் அப்படியே செய்கிறோம் என்று சொல்லி விடை பெற்றனர். சார்தூலனை முன்னால் நிறுத்தி மற்றவர்களும் பிரதக்ஷிணம் செய்து வணங்கினர். இதன் பின் அவர்கள் லக்ஷ்மணனும், ராமனும் தங்கியிருந்த இடம் சென்றனர். சுக்ரீவ விபீஷணர்களையும் மறைந்திருந்து கண்டு கொண்டனர். பெரிய சேனையைக் கண்டதும், பயத்தால் வெல வெலத்துப் போனார்கள். அதற்கேற்ப, தர்மாத்மாவான விபீஷணன் அவர்களைக் கண்டு கொண்டான். சார்தூலனை, இதோ ஒரு ராக்ஷஸன் என்று வானரங்கள் பிடித்துக் கொண்டு போய் ராமனிடம் நிறுத்தின. கருணையுடன் ராமர் அவர்களை விடுவித்து விட்டார். மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு என்பதைப் போல, வேகமாக மேல் மூச்சு வாங்க, லங்கை வந்து சேர்ந்தனர். இதன் பின், தசக்ரீவன் முன்னிலையில் இதே தொழிலாக செய்து வந்த ராக்ஷஸர்கள் தான் எனினும், சுஷேண மலையின் அருகில் வந்து இறங்கியிருக்கும் ராமனது படை பலத்தை விவரமாகச் சொன்னார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சார்தூ3லாதி சார ப்ரேக்ஷணம் என்ற இருபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 30 (437) வானர ப3ல சங்க்யானம் (வானர படையை எண்ணிச் சொல்லுதல்)
ஒற்றர்கள், ராவணனிடம் வந்து, சுஷேண மலையில் வந்து இறங்கியிருக்கும் ராமனின் படை பலத்தைப் பற்றி புள்ளி விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் வாயிலாக, போர் தொடுக்கத் தயாராக ராமன் வந்திருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட ராவணன், கவலையும் பதட்டமும் அடைந்தான். முகம் வெளிறி இருந்த சார்தூலனைப் பார்த்து யார் கையிலாவது அகப்பட்டுக் கொண்டாயா? தீனனாக இருக்கிறாயே? சத்ருக்கள் கோபத்துடன் உன்னை தண்டித்து விட்டார்களா? என்று கேட்டான். ஒற்றனாக போய் வந்த சார்தூலன் என்ற ராக்ஷஸன், ராக்ஷஸ சார்தூலனான ராவணனைப் பார்த்து பதில் சொன்னான். நாங்கள் எதுவுமே செய்ய முடியவில்லை, ராவணா, ராகவன் தான் எங்களைக் காப்பாற்றி விட்டான். அவர்கள் படை பலத்தையும், வீரத்தையும் கண்ணால் கண்டது தான். எதுவுமே பேச முடியவில்லை. விசாரிப்பது எங்கே? வாய் திறந்து ஏதாவது கேட்க முடிந்தால் தானே. எல்லா வழிகளும் மிகுந்த பாதுகாவலுடன் அமைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைந்தவுடன் நான் வெளி ஆள் என்பது தெரிந்து விட்டது. உடனே பிடித்து விட்டார்கள். முழங்கால்களாலும், முஷ்டியாலும், புறங்கையாலும், பற்களாலும் நையப் புடைத்து விட்டார்கள். இழுத்துக் கொண்டு போய் ராகவன் முன்னால் நிறுத்தினார்கள். உடல் பூரா ரத்தம். செய்வதறியாது உடல் முழுவதும் வலியோடு நின்றேன். வானரர்களிடம் செம்மையாக அடிபட்டு, கை கூப்பி யாசிக்கும் நிலையில் ராமனிடம் போய் நின்றேன். என்னைக் கண்டவுடனே, எதுவும் விசாரிக்க கூட ராமன் அனுமதிக்கவில்லை. வேண்டாம், வேண்டாம் என்று தடுத்து விட்டான். இந்த பெரிய சமுத்திரத்தை, மலைக் கற்களைக் கொண்டு நிரப்பி, லங்கையின் வாசலில், கையில் ஆயுதத்தோடு நிற்கிறான், ராமன். கருட வ்யூஹம் அமைத்து வானர வீரர்களை, பயிற்சியளித்து அவர்களுடன் லங்கையை நோக்கியே வந்து கொண்டிருக்கிறான். என்னை விடுவித்த பின் நான் வேகமாக வந்து விட்டேன். லங்கையின் உள்ளே அவர்கள் நுழையும் முன் ஏதாவது செய். சீதையைக் கொடுத்து சமாதானம் செய்து கொள். அல்லது யுத்தம் செய்ய ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய். தன் மனதில் சற்று யோசித்து விட்டு ராக்ஷஸாதிபன், சார்தூலனுக்கு பதில் சொன்னான். தேவ, கந்தர்வ, தானவர்கள் எல்லோருமாக வந்து முற்றுகையிட்டு என்னை எதிர்த்தாலும், யுத்தம் தான் செய்வேன். சீதையை ஒரு பொழுதும் தர மாட்டேன். ஸர்வ லோகமும் என்னை பயமுறுத்தினாலும் சரிஏ ராவணன் திரும்பவும் சார்தூலனைப் பார்த்து நீ பார்த்தவரை, யார் யார் சூரர்கள்? பலசாலிகள்? ஏதாவது தெரிந்ததா? உன் ஊகம் என்ன? என்று வினவினான். வானரர்கள் எப்படிப் பட்டவர்கள்? அவர்கள் சக்தி, ப்ரபாவம் என்ன? யாருடைய பிள்ளைகள்? பேரன்கள்? விவரமாகச் சொல்லு எனவும், சார்தூலன், பதில் சொன்னான். சார்தூலனும், ராவணனுடைய உத்தமமான போர் வீரர்களுள் ஒருவன், ராவணன் அனுப்பி ஒற்றனாகச் சென்றவன். சொல்ல ஆரம்பித்தான். ருக்ஷ ரஜஸ் என்பவனின் மகன் கத்3க3த3ன் என்பவன். யுத்தத்தில் எதிர் கொள்ள முடியாத பலசாலியாக இருந்தான், அவன் மகன் ஜாம்பவான் என்று புகழ் பெற்றவன். அவன் இருக்கிறான். இந்த கத்கதனுடைய மற்றொரு பிள்ளை சதக்ரது எனும் இந்திரனுடைய குரு புத்திரன். ஒருவனாக ஒருமுறை ராக்ஷஸர்களை ஆட்டி வைத்தான். சுஷேணன் என்று பெயருடைய ஒருவன், தர்மத்தின் பிள்ளை. நல்ல வீர்யவான். சௌம்யமாக காணும் சோமனுடைய (சந்திரன் உடைய) மகன் ததி4முகன், என்ற வானரம். தங்கள் வேகத்தை பரீக்ஷை செய்து பார்த்துக் கொண்டிருந்த இருவர், சுமுகன், துர்முகன் என்று இருவர், ம்ருத்யுவே வானர ரூபத்தில் ப்ரும்மா ஸ்ருஷ்டி செய்து வைத்தது போல இருக்கிறார்கள். ஹுத வாஹனன் எனும் அக்னியின் மகன் நீலன் என்பவன் தான் சேனாபதி. வாயு புத்திரன் தான் ஹனுமான். இவன் புகழை நாம் கேட்டிருக்கிறோம்.
இந்திரனின் பேரன் அங்கதன் என்பான், இளைஞன். மைந்தன், த்விவிதன் என்ற இருவரும் அஸ்வினியின் புத்திரர்கள். இவர்களும் பலசாலிகளே. ஐந்து பேர், காலாந்தகன் போன்று வைவஸ்வதன் புத்திரர்கள்- கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்த மாதனன் என்பவர்கள். பத்து கோடி வானர வீரர்கள், யுத்தம் செய்யும் ஆவலுடன் ஸ்ரீமான்களான தேவர்களின் புத்திரர்கள். மற்றவர்களைப் பற்றிச் சொல்லத் தெரியவில்லை. இந்த தசரத குமாரன் இருக்கிறானே, சிங்கம் போல கர்ஜிக்கிறான். இளம் ரத்தம். தூஷணனை அடித்தானே, கரனையும் வதம் செய்து, த்ரிசிரஸையும் வதம் செய்தானே. இந்த ராமனுக்கு மூவுலகிலும் ஈடு இணையே கிடையாது. விராதனை வதம் செய்தவன். கபந்தனை எதிர்த்து அவனுக்கு அந்தகனாக நின்றான். இந்த பூவுலகில் ராம குணங்களை முழுவதுமாகச் சொல்ல யாரால் தான் முடியும்? ஜனஸ்தானத்தில் அவனுக்கு எதிரில் சென்ற அனைத்து ராக்ஷஸர்களும் அழிந்தார்கள். லக்ஷ்மணனும் தர்மாத்மா. யானைகள் கூட்டத்தின் இடையில் ரிஷபம் போல தனித்து நிற்கிறான். இவனுடைய பாணம் செல்லும் வழியில் நின்றால், வாஸவன் கூட பிழைக்க மாட்டான். பாஸ்கரனின் வம்சத்தில் உதித்த குமாரர்கள், ஸ்வேதன், ஜ்யோதிர்முகன் என்ற இருவர். வருணனின் மகன் ஹேம கூடன் என்ற வானரம். விஸ்வ கர்மாவின் மகன் நலன். இந்த வானரங்கள் குதித்து ஓடும் இயல்புடையவை, இதில் நலன் போன்ற வீரர்களும் உண்டு. வசு புத்திரன், இவனும் நல்ல பராக்ரமம் உடையவனே. சுது3ர்தரன் என்பவன் ஒருவன். இதற்கிடையில் ராக்ஷஸர்கள் மத்தியிலும் சிறந்த வீரனாக இருந்த விபீஷணன், தங்கள் சகோதரன் அவனும் அங்கு இருக்கிறான். ராமனுடைய நன்மைக்காக பாடு படுவதாக உறுதி செய்து கொண்டு இவர்கள் லங்கையை முற்றுகை இட்டிருக்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை விவரமாகச் சொன்னேன். சுஷேண மலையில் வந்து இறங்கியிருக்கிறார்கள். மேற்கொண்டு செய்ய வேண்டியதை நீயே தீர்மானித்துக் கொள். என்று நிறுத்தினான், சார்தூலன்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் வானர ப3ல சங்க்2யானம் என்ற முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 31 (438) வித்யுத் ஜிஹ்வ மாயா ப்ரயோக: (வித்ய்த் ஜிஹ்வன் என்பவனின் மாயை)
ஒற்றர்கள் மூலம் நடப்பைத் தெரிந்து கொண்ட பின், ராவணன், மந்திரிகளை சீக்கிரமாக அழைத்து வர உத்தரவிட்டான். எல்லோரும் தயாராக வாருங்கள். மந்த்ராலோசனை செய்து, மேற்கொண்டு செய்ய வேண்டியதை தீர்மானிக்க வேண்டும். தாமதம் செய்யாமல் எல்லோரும் உடனே வந்து சேருங்கள் என்று செய்தி சொல்லி அனுப்பினான். ராவணனின் உத்தரவைக் கேட்டவுடனேயே எல்லோரும் வேகமாக வந்து சேர்ந்தார்கள். கூடியிருந்த மந்திரிகளுடன் ராவணன் ஆலோசனை நடத்தினான். எதிர் நோக்கி இருக்கும் பிரச்னையைப் பற்றி விவாதித்தான். ஒற்றர்கள் மூலம் கேள்விப் பட்ட விஷயம்- ராமன் படையுடன் சுஷேண மலையில் வந்து இறங்கியிருக்கிறான். மகா பலசாலியான அவனை யுத்தத்தில் எதிர் கொள்ள தயாராக வேண்டும்- இந்த விஷயங்களைப் பற்றி பேசி, மந்திரிகளை அனுப்பி விட்டு, ராவணன் தன் மாளிகை சென்றான். வித்யுத் ஜிஹ்வன் என்ற ராக்ஷஸனை கூப்பிட்டு அனுப்பினான். மாயாவியான அவனை மைதிலி இருக்கும் இடம் ராவணன் தானே அழைத்துச் சென்றான். ஜனகன் மகளை சற்றுக் குழப்பு, என்று உத்தரவிட்டான். கையில் பெரிய வில்லுடன், ராமனைப் போன்ற ஒரு தலையை மற்றொரு கையில் வைத்தபடி, என்னருகில் வந்து நில். வித்யுத் ஜிஹ்வன் என்ற அந்த ராக்ஷஸனும் சம்மதித்து அவ்வாறே மாயையால் செய்து காட்டினான். சீதையைக் காணும் ஆவலுடன் குபேரனின் சகோதரனான ராவணன் அசோக வனத்திற்குச் சென்றான். அவள் பிறப்புக்கும் தகுதிக்கும், சற்றும் பொருந்தாத தீனமான நிலையில் இருக்கக் கண்டான். பூமியில் அமர்ந்து, தலை குனிந்து துக்கத்தில் மூழ்கியவளாக, அந்த அசோக வனத்தில் கொண்டு வந்து வைக்கப் பட்ட நிலையிலும், தன் கணவனை இடைவிடாது த்யானம் செய்து கொண்டிருந்தவளைக் கண்டான். கோரமான ராக்ஷஸிகள் நாலா புறமும் காவல் நின்றனர். அவளை நெருங்கி, கர்வமும், மகிழ்ச்சியுமாகச் சொன்னான். நான் இவ்வளவு சமாதானமாகச் சொல்லியும் யாரை நினைத்து உருகுகிறாயோ, க2ரனை அழித்த அந்த உன் கணவன் ராமன் யுத்தத்தில் கொல்லப் பட்டான். உன் நம்பிக்கை வேரோடு சின்னாபின்னமாகி விட்டது. உன் கர்வம் அடக்கப் பட்டது. சீதே, இப்பொழுது இந்த கஷ்டம் தாங்க மாட்டாமல் என் மனைவியாகப் போகிறாய். இந்த பிடிவாதத்தை விடு. உயிர் போன பின் அவனை நினைத்து என்ன செய்ய போகிறாய் ? என் பத்னிகளுக்கு மகிஷியாக, என் பட்டத்து ராணியாக இரு. தன்னை மிகவும் அறிவுடையவளாக நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலியே, மூடத்தனமாக எதையோ நம்பிக்கொண்டிருக்கிறாயே, அது பொய்த்து விட்டது. சீதே, இதைக் கேள். உன் கணவனின் வதம் பற்றிச் சொல்கிறேன், கேள். வ்ருத்திரனைக் கொன்றது போல கொன்று விட்டேன். என்னைக் கொல்ல ராமன் சமுத்திரத்தைக் கடந்து வந்தான் அல்லவா. வானர ராஜன் அழைத்து வந்து பெரும் படையுடன், சமுத்திரத்தின் வட கரையில் முகாமிட்டு இருந்தானே, அந்த பெரும் படையுடன், இன்று திவாகரன் அஸ்தமனம் ஆகுமுன் தானும் அழிவைத் தேடிக் கொள்வான். நேற்று பாதி இரவில் வந்து இறங்கிய படைகளைப் பற்றி இன்று காலை தெரிந்து கொண்ட நான், முதலில் ஒற்றார்களை அனுப்பி நன்றாகத் தூங்குவதைத் தெரிந்து கொண்டேன். ப்ரஹஸ்தன் மூலமாக பெரும் படையை அனுப்பி, ராமனும், லக்ஷ்மணனும் சேர்ந்து இருக்கும் இடம் சென்று அவன் பலத்தை அழித்தேன். பட்டஸங்களையும், பரிகங்களையும், சக்ரங்கள், தண்டங்கள். வாட்கள், மகா ஆயஸம் என்ற இரும்பு ஆயுதங்கள், பாணங்கள் ஏராளமாக சூலங்கள், பள பளவென பிரகாசிக்கும் கூடம், உத்கரம் என்ற ஆயுதம், யஷ்டிகள், தோமரங்கள் சக்திகள், சக்ரங்கள், முஸலங்கள் இவைகளை எடுத்துக் கொண்டு ராக்ஷஸர்கள் வானரங்கள் பேரில் மாற்றி மாற்றி பிரயோகித்தார்கள். தூங்கும் ராமனை, ப்ரஹஸ்தன் பலமாக ஒரு அடி கொடுத்து கைகளை கட்டி, தலையை கொய்து கொண்டு வந்தான். யதேச்சையாக விழித்துக் கொண்ட விபீஷணனை கைது செய்து கொண்டு வந்து விட்டான். மற்ற வானரங்களையும் லக்ஷ்மணனையும் துரத்தி அடித்து விட்டான். மூலைக் கொன்றாக அவர்கள் ஓடி விட்டனர். சுக்ரீவன், க்3ரீவம் (கழுத்து) துண்டிக்கப் பட்ட நிலையில், தூங்குகிறான். ஹனுமான் அவனுடைய விசேஷமான கன்னத்திலேயே அடிபட்டு மாண்டான். ஜாம்பவானை ஜானுவிலேயே (முழங்கால்) அடித்து விட்டான். அந்த அடி தாங்காமல் அவனும் மாண்டான். பெரிய மலையை ரம்பம் கொண்டு அறுத்து தள்ளுவது போல, மைந்த த்விவிதர்களை அடி மரத்தில் அடிப்பது போல அடித்து தள்ளி விட்டான். பனஸன், பனஸம் (பலாப் பழம்) போல இந்த இருவரையும் தொடர்ந்து சென்று விட்டான். ததி4 முகன், ஏராளமான நாராசம் எனும் ஆயுதங்கள் தாக்கப் பட்டு அழிந்தான். குமுத3ன், நல்ல தேஜஸ்வி, அம்புகளால் குரலே எழும்பாதபடி செய்யப் பட்டு விட்டான். ராக்ஷஸர்கள் அம்பு மாரி பொழிந்து அங்கதனை வீழ்த்தி விட்டார்கள். நாலாபுறமும் வானரங்கள் ரத்தம் கக்கிக் கொண்டு பரிதாபமாக விழுவதை பார்த்துக் கொண்டே அங்கதன் உயிரை விட்டான். மீதியுள்ள வானரங்கள் (ஹரிகள்) என் ரதத்தில் பூட்டப் பட்டிருந்த யானைகள் காலில் மிதி பட்டனர். குதிரைகள் கீழே தள்ளி பலரை எழுந்திருக்க முடியாமல் செய்து விட்டது. இப்படி அடிபட்டவர்களை பார்த்து பலர் பயந்து ஓடியே போய் விட்டனர். ராக்ஷஸர்கள் பின் தொடர்ந்து ஓடி, பெரிய யானைகளை சிங்கங்கள் துரத்துவது போல துரத்தி அடித்து விட்டார்கள். சிலர் கடலில் மூழ்கினர். சிலர் ஆகாயத்தில் வீசியெறியப் பட்டனர். கரடிகள், மரங்களில் ஏறி வானரங்களைப் போலவே ஆனார்கள். கடற்கரையிலும், மலையிலும், வனங்களிலும், பிங்கள எனப்படும் வானரங்கள், விரூபாக்ஷன் போன்ற ராக்ஷஸர்கள் கணக்கில்லாமல் கொல்லப் பட்டனர். இவ்வாறு தான் உன் கணவன், தன் சைன்யத்தோடு என் படை வீரர்களால் அடிக்கப் பட்டு மாண்டான். ரத்தம் கொட்டி ஏராளமாக, புழுதி படிந்து கிடந்த இந்த தலையை கொண்டு வந்தேன் என்று சொன்ன ராக்ஷஸன், சீதையுடன் இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராக்ஷஸிகளைப் பார்த்து, வித்3யுத்ஜிஹ்வனை அழைத்து வா என்று கட்டளையிட்டான். கொடியவனான அந்த ராக்ஷஸன், மேலும் சொன்னான் அவன் தான் யுத்த களத்திலிருந்து ராமனின் தலையைத் தானாக கொண்டு வந்தவன் இதன் பின் வித்3யுத்ஜிஹ்வன் வில்லையும் அம்பையும் துண்டிக்கப் பட்ட தலையயும், ராவணனுக்கு எதிரில் பிரமாணமாக, சாட்சியாக வைத்து விட்டு நின்றான். ராவணன் அவனைப் பார்த்து விசாரித்தான் வித்யுத்ஜிஹ்வா, மஹா ஜிஹ்வா (வித்யுத்ஜிஹ்வந்- மின்னல் போன்ற நாக்குடையவன், மஹா ஜிஹ்வா-நீளமான நாக்குடையவன்) சீதையின் எதிரில் வை. தாசரதியின் தலையை சீக்கிரம் அவள் பார்க்கட்டும். பாவம், வருத்தத்தால் இளைத்துக் கிடக்கிறாள். தன் கணவன் ஐந்தாவது நிலையை அடைந்த காட்சியை கண் குளிரக் காணட்டும். இதைக் கேட்ட அந்த ராக்ஷஸன் தலையை சீதை முன்னால் வைத்தான். ராவணனும் வில்லை அவள் முன் வைத்து பார், மூவுலகிலும் புகழ் பெற்ற ராமனின் கோதண்டம். அம்புகளுடன் கூட ப்ரஹஸ்தன் கொண்டு வந்தான். அந்த ராமனை இரவில் தூங்கும் பொழுது கொன்று விட்டு, இவைகளை கவர்ந்து கொண்டு வந்து விட்டான். இனியாவது என் வசம் ஆவாய் என்று ராவணன் வித்யுத்ஜிஹ்வனின் உதவியால் துண்டிக்கப் பட்ட தலையைக் காட்டி, விதேஹ ராஜ குமாரியான சீதையை அழ விட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் வித்3யுத்ஜிஹ்வ மாயா பிரயோகோ என்ற முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 32 (439) சீதா விலாப: (சீதை வருந்தி புலம்புதல்)
சீதை, துண்டிக்கப்பட்ட அந்த தலையையும், உத்தமமான ராமனது வில்லையும் பார்த்து, ஹனுமான் சொல்லியிருந்த சுக்ரீவ சக்யம் முதலியவைகளை மனதில் நினைத்துக் கொண்டவளாக, கண்களிலும், முக சாயலிலும் தன் கணவனை ஒத்திருந்த அந்த தலையைப் பார்த்தாள். கேசத்தையும், தான் கொடுத்த சூடாமணி அந்த தலையில் சூடப் பெற்றிருப்பதையும் பார்த்தாள். எல்லா அடையாளங்களும் பொருந்த,(ராமனின் தலைதான் என்று) அடையாளம் கண்டு கொண்டவளாக பெரும் துக்கத்தை அடைந்தாள். திடுமென கைகேயியை நினைத்து அவளை தூஷிக்க ஆரம்பித்தாள். ஸகாமா பவ கைகேயீ – கைகேயீ நீ விரும்பியது இதோ நடந்து விட்டதே, சந்தோஷமாக இரு, இதோ குல நந்தனனாக அவதரித்தவன் கொல்லப் பட்டான். உன் விருப்பம் நிறைவேறியது. நீ செய்த கலகத்தால், இந்த குலமே அடியோடு அழிந்தது. கைகேயி, என் கணவன் ராமனால் உனக்கு என்ன தீங்கு நேர்ந்தது. எதற்காக அவனை மரவுரியைக் கொடுத்து வீட்டை விட்டுத் துரத்தினாய்? இவ்வாறு புலம்பி உடல் நடுங்க, சாய்க்கப்பட்ட வாழை மரம் போல கீழே பூமியில் விழுந்தாள். ஒரு முஹுர்த்த நேரத்தில் சமாளித்துக் கொண்டு, தன்னினைவு பெற்றவளாக, அந்த தலையை அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தாள். ஹா, ஹதாஸ்மி, மகா பாக்யசாலி என்று போற்றப்படுபவனே, வீரனுக்கான கதியை அடைந்து விட்டாயா? என்னை இங்கு தனியாக தவிக்க விட்டு விட்டாயே, கணவனை இழந்தவளாக வேறு நான் துன்பம் அனுபவிக்க செய்து விட்டாயே. பெண்கள், கணவனுக்கு முன்னால் மரணம் அடைவது தான் நல்லது என்று சொல்வார்களே. எனக்கு முன்னால், உயிரற்றவனாக ஆகி விட்டாயே, நன்னடத்தை மிக்கவனே, நான் என்ன செய்வேன்? ஏற்கனவே பெரும் துக்கத்தில், சோக சாகரத்தில் மூழ்கி கிடக்கிறேன், உன்னை பற்றுக் கோடாக எண்ணி யிருந்தேனே. உன்னை நம்பித் தான் நான் உயிர் தரித்து இருக்கிறேன். என்னை காப்பாற்ற வருவாய் என்று நான் எதிர் பார்த்திருக்க இது என்ன, நீயே வீழ்ந்து விட்டாயா? உன்னை புத்திரனாகப் பெற்ற என் மாமியார் கௌசல்யை, இதை எப்படித் தாங்குவாள். கன்றை இழந்த தாய் பசு போல, மகனை இழந்து கதறப் போகிறாள். ஜோதிடம் அறிந்த நிபுணர்கள், நீ நீண்ட நாள் வாழ்வாய், உனக்கு தீர்கமான ஆயுள் என்றெல்லாம் சொன்னார்களே. அவர்கள் வார்த்தை பொய்யாகுமா. இப்படி அல்பாயுளில் மறைந்து விட்டாயே. ராமா, இது எப்படி நடக்க முடியும்? சொன்னவர்கள் மகா அறிஞர்கள். அறிவாளிகளின் கணிப்பும் கூட நம் விதிப்படி மாறுமா என்ன? காலத்தின் கோலம் இது தானோ? நயம், சாஸ்திரம் இவற்றை அறிந்தவன் நீ. என்னைக் காணாமலேயே ம்ருத்யுவை அடைந்து விட்டாய். யாருக்கு என்ன சங்கடமானாலும், அதிலிருந்து தப்ப உபாயம் சொல்பவன், மற்றவர்களின் இடர்களைத் தவிர்ப்பதிலும் குசலமானவன், நீ. கால ராத்திரி தான் ரௌத்ரமானவன், கருணை இல்லாதவன், என்னை மறைத்து, உன்னை ஆரத் தழுவி, என்னிடமிருந்து பிரித்துச் சென்று விட்டானோ. கமல லோசனா, தவம் செய்து வாடி இருக்கும் என்னை நிமிர்ந்து பார்க்காமலேயே பூமியில் கிடக்கிறாயே, என்னை விட பிரியமான பூதேவியை ஆலிங்கனம் செய்து கிடப்பதில் அவ்வளவு ஆனந்தமா? க3ந்த4 மால்யம் என்ற வாசனை நிறைந்த புஷ்பங்களால் நான் தவறாது பூஜித்து வந்தேனே, இதோ இந்த வில், பொன் நகைகளால் அலங்கரிக்கப் பட்ட இந்த வில் என்னை விட உனக்கு அதிக பிரியமானதாகி விட்டதா? ஸ்வர்கம் போய், தந்தை தசரதன், என் மாமனார், மற்றும் பெரியவர்கள் பலரையும் காண்பாய். ஆகாயத்தில் நக்ஷத்திரமாக ஆகி, ராஜ ரிஷி வம்சமான உன் குலம், மகா புண்யமானது, அதை மகோன்னதமாக ஆக்குவாய். என்னை ஏன் திரும்பி பார்க்கவில்லை. ராஜன், என்னுடன் ஏன் பேச மறுக்கிறீர்கள். இளம் வயதில், அதே இளம் வயது மனைவியாக நான் உங்களை வந்து சேர்ந்து, கூடவே ஸஹ த4ர்மசாரிணீ என்று தொடர்ந்து வந்தேனே, பாணிக்3ரஹணம் செய்யும் காலத்து சொன்ன மந்திரங்களையே நினைவு வைத்துக் கொண்டு, கூடவே வருவேன் என்று வந்தேனே. அதை நினைத்துப் பார், காகுத்ஸா,. என்னையும் இந்த துன்பத்திலிருந்து விடுவித்து உன்னுடன் அழைத்துக் கொள். என்னை விட்டு நீ தனியே எப்படி போகலாம். இந்த உலகை விட்டு மேலுலகம் செல்பவன், என்னை மட்டும் இங்கேயே வருந்தி புலம்ப விட்டுச் செல்வது எப்படி சரியாகும். மங்களமான வஸ்துக்களை உடலில் தரித்தவன், என்னால் ஆலிங்கனம் செய்யப் பட்ட இந்த உடல், காகமும் கழுகுகளும் தின்று தீர்க்கப் போகின்றனவா? அக்னி ஹோத்ரம் முதலிய யக்ஞங்களைச் செய்தவன், யாகத்தில் நிறைந்த தக்ஷிணைகள் கொடுத்து திருப்தி செய்தவன், உனக்கு அக்னி ஸம்ஸ்காரம் செய்ய கொடுத்து வைக்கவில்லையே? நாடு கடத்தப் பெற்று, முடிவில் திரும்பி தனியாக வரும் லக்ஷ்மணனைப் பார்த்து, கௌசல்யா, மூன்று பேரில் ஒருவனாக வருகிறாயே என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுக்கப் போகிறாள். அப்படி கேட்கும் பொழுது அவன் என்ன பதில் சொல்வான்? உன்னுடன் நட்பு கொண்ட சுக்ரீவன் படை பலத்துடன், இரவு தூங்கும் பொழுது ராக்ஷஸர்கள் வதம் செய்து விட்டார்கள் என்று சொல்வானா? தூங்கும் பொழுது வதம் செய்யப் பட்ட உன்னையும், ராக்ஷஸ க்ருஹத்தில் இருக்கும் என்னையும் நினைத்து, அவன் ஹ்ருதயம் பிளந்து போகும் படி வேதனைப் படுவான். அதிக நாள் உயிருடன் இருக்க மாட்டான். ராகவா, என் காரணமாக, அதிர்ஷ்டக் கட்டையான என்னால், ராஜ குமாரன், ராமன் சமுத்திரத்தைக் கடந்து வந்தும், ஒன்றுமில்லாதவன் போல மடிந்து போக நேரிட்டது. தசரத குலத்தில் வாழ்க்கைப் பட்டவள் நான். என்னை குலத்தை கெடுக்க வந்தவள் என்று அறியாமல் மருமகளாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆர்ய புத்திரனான ராமனுக்கு மனைவியாக வந்து அவனுக்கு ம்ருத்யுவைத் தான் என்னால் தர முடிந்திருக்கிறது. ஏதோ தானம் கொடுக்கப்படுவதை நான் தடுத்து இருக்கிறேன், போலும். அந்த பாபம் தான் என்னை வாட்டுகிறது. அதிதியாக யார் வந்தாலும், அள்ளி அள்ளிக் கொடுத்த குடும்பத்தில் வந்து சேர்ந்த நான், இப்படி அல்லல் படுவானேன். ராவணா, ஒரு காரியம் செய். என்னையும் வெட்டி இந்த ராமன் உடல் மேலேயே போட்டு விடு. பதி பத்னிகளை சேர்த்து வைத்த புண்ணியம் உனக்கு கிடைக்கட்டும். என்னையும் வெட்டி, என் தலையோடு தலை, உடலோடு உடலாக ராமனுடன் சேர்த்து வை. ராவணா, நானும் என் பதியுடன் செல்வேன். இவ்வாறு திரும்பத் திரும்ப, துண்டிக்கப் பட்ட ராமனது தலையையும், அவன் வில்லையும் பார்த்த வண்ணம் அழுது அரற்றினாள். இவ்வாறு அழுது புலம்பும் சீதையைப் பார்த்தபடி நின்றிருந்த ராவணனிடம் ஒரு சேவகன் அருகில் வந்து, கை கூப்பி வணங்கியபடி, ஆர்ய புத்ர, விஜயஸ்வ என்றவன், வணங்கி அபி வாதனம் செய்து, சேனாபதி ப்ரஹஸ்தன் தங்களைக் காண வந்திருக்கிறார். ப்ரபோ, ஏதோ ராஜ கார்யம் பற்றி பேச வேண்டுமாம். மந்திரிகள் அனவரையும் கூட்டி வைத்துக் கொண்டு தங்கள் வரவுக்காக காத்திருக்கிறார், விஷயம் சொல்ல என்னை அனுப்பினார், என்றான். பொறுப்பு மிக்க இந்த காரியத்தில், தயவு செய்து தாங்கள் பொறுமையுடன் தரிசனம் தர வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார். இதைக் கேட்டு தசக்ரீவன் அவசரமாக, அசோக வனத்தை விட்டு, மந்திரிகளை சந்திக்கச் சென்றான். சபைக்குச் சென்று தன் செயலை பெருமையாக சொல்லிக் கொண்டான். அதன் பின், ராமனைப் பற்றி தான் தெரிந்து கொண்டதை, அவனது பராக்ரமம், பிரபாவம் இவற்றை அவர்களுக்குச் சொன்னான். இதனிடையில், சீதையின் எதிரில் வைக்கப்பட்டிருந்த வில்லும், துண்டிக்கப் பட்ட தலையும், மாயமாக மறைந்தன. ராவணன் அந்த இடத்தை விட்டு அகன்ற பொழுது அவையும் மறைந்து விட்டன. பயங்கரமான வீர தீரர்களான தன் மந்திரி சபையில், ராவணன் இந்த நிகழ்ச்சியைச் சொல்லி சிரித்துக் கொண்டான். மந்திரிகள் இதன் பின், தாங்கள் வந்த காரியத்தை நினைவு படுத்த, அருகில் படை பலத்துடன் வந்து இறங்கியிருக்கும் எதிரியையும், அவர்கள் சக்தியைப் பற்றியும் பேச்சு திசை திரும்பியது. காரணம் எதுவும் சொல்லாமல், பேரீ, முரசம் ஒலிக்க என் சேனையை தயாராக வந்து என்னை சந்திக்கச் செய்யுங்கள் என்று ராவணன் உத்தரவிட்டான். அவன் சொல்லை ஏற்று, அப்படியே என்று சொல்லி மந்திரிகளும் சேனையை தயார் செய்து, யுத்தம் செய்ய விரும்பும் தங்கள் தலைவனான ராவணனின் விருப்பத்தை நிறைவேற்றினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில சீதா விலாபோ என்ற முப்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 33 (440) சரமா சமாஸ்வாஸனம் (சரமா வந்து சமாதானம் செய்தல்)
சீதை மூர்ச்சையடைந்து கிடப்பதைப் பார்த்து சரமா என்ற ராக்ஷஸி, தன் சினேகிதியாகிவிட்ட, பிரிய சகியான சீதையிடம் வந்து சேர்ந்தாள். அருகில் வந்து ம்ருதுவாக பேசும் சரமா, ராக்ஷஸேந்திரன், மாயா பலத்தால் எதையோ காட்டி அழ விட்டதை புரிந்து கொண்டு விட்டாள். சீதைக்கு காவலாக அருகில் இருந்ததில் அவளிடம் நெருங்கிய நட்பு கொண்டு விட்ட சரமா திடுமென அடிபட்டவளைப் போல, நினைவிழந்து கிடப்பவளை கண்டாள். புழுதி படிந்து பூமியில் கிடந்தவள், மிகவும் சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தவளை அருகில் நெருங்கி விசாரித்தாள். அவளை சமாதானம் செய்ய முனைந்தாள். வைதேஹி, கவலைப் படாதே. மனதை தேற்றிக் கொள். ராவணன் உன்னிடம் சொன்னதையும், நீ பதில் சொன்னதையும் கேட்டேன் (கண்ணால் எதையும் காணவில்லை). பயப்படாதே. சூன்யமான ஆகாயத்தில் உன்னை பயமுறுத்த, ராவணன் எதையோ காட்டியிருக்கிறான். மாயை. விசாலாக்ஷி, சகி நான், அன்புடன் சொல்கிறேன் கேள். உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன். அவன் பரபரப்புடன் வெளியேறுவதைப் பார்த்தேன். எதற்கு ஓடினான் என்பதையும் தெரிந்து கொண்டேன். மைதிலி, தூங்கும் ராமனை கொல்வது என்பது நடக்கக் கூடிய காரியமா? அதிலிருந்தே இதில் ஏதோ சூது இருக்கிறது என்பது தெரியவில்லை? மரங்களையும் கற்களையும் ஆயுதமாக வைத்துக் கொண்டு போராடும் வானரர்களைத் தான் அவ்வளவு சுலபமாக அழித்து விட முடியுமா? தேவேந்திரன் தேவர்களை ரக்ஷிப்பதைப் போல இந்த வானரங்களை ராமன் ரக்ஷிக்கிறான். இந்த வானர வீரர்கள், ராமனுடைய நிழலில் கவலையற்று இருக்கிறார்கள். நீண்ட புஜமும், அகன்ற மார்பும் உடைய ஸ்ரீமான், ப்ரதாபம் நிறைந்த ராமன், கையில் வில்லேந்தி நின்றால், வில்லின் ஓசையே அவனை தர்மாத்மா என்று உலகுக்கு பறை சாற்றுவது போல ஒலிக்குமே. தன் ஜனங்களையும், பிறர் ஜனங்களையும் வேற்றுமையின்றி பாது காப்பது தான் அவன் குணம். அவன் வீரம் மற்றவர்களைக் காக்கத் தான் பயன் படும். லக்ஷ்மணனுடன் அவன் குசலமாக இருக்கிறான். நீதி முறைகளை நன்கு அறிந்து, தெளிந்தவன். சொல்ல முடியாத, நினைக்கவே முடியாத பலமும், பௌருஷமும் நிறைந்தவன். எதிரி படையை வீழ்த்தக் கூடியவன். ராகவனுக்கு எதுவும் நேரவில்லை. சீதே, கவலையை விடு. ஸ்ரீமானான ராமன், சத்ருக்களை அழிப்பவன், அவன் குசலமாக இருக்கிறான். மாயையறிந்த மாயாவியான இந்த ராவணன், உன்னிடம் தவறாக ஒரு செய்தியை திரித்துச் சொல்லியிருக்கிறான். தற்சமயம் அவன் தான் எல்லா ஜீவராசிகளுக்கும் விரோதியாகி இருக்கிறான். உன் கஷ்டங்கள் விடிந்து விட்டன. நல்ல காலம் பிறந்து விட்டது. கல்யாணமான, மங்களகரமான நிகழ்ச்சிகள் உன் வாழ்வில் நடக்கக் காண்பாய். லக்ஷ்மி உன்னை வந்தடையப் போகிறாள். நான் சொல்வதைக் கேள். உனக்கு நிம்மதி கிடைக்கும். சாகரத்தைக் கடந்து வந்த ராமன், தன் படையுடன், சமுத்திரத்தின் தென் கரையில் வந்து இறங்கி விட்டான். அளவில் அதே சமுத்திரத்திற்கு இணையான தன் வானர வீரர்களுடன் தீர்மானமாக போர் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்கிறான். பார்த்த மாத்திரத்திலேயே, அவன் எண்ணம் கண்டிப்பாக ஈடேறும் என்று தெரிகிறது. லக்ஷ்மணனுடன் காகுத்ஸன், ராவணன் அனுப்பி வைத்த அல்ப வீரர்களை ஒன்றும் செய்யாமல் அனுப்பி விட்டானாம், அவர்கள் வந்து சொல்கிறார்கள், ராவணன் தீர்ந்தான் என்கிறார்கள். இந்த நிலைமையைத் தெரிந்து கொண்டு ராக்ஷஸாதிபன், இதோ தன் மந்திரிகளுடன் மந்த்ராலோசனை செய்கிறான். சரமா என்ற அந்த ராக்ஷஸி இப்படி பேச்சுக் கொடுத்து சீதையை சமாதானப் படுத்திக் கொண்டு இருக்கையிலேயே, பயங்கரமாக பே4ரி முழங்க சைன்யத்தின் ஆரவாரமும் கேட்டது. கையில் தண்டம் வைத்துக் கொண்டு வாசிக்கும் பே4ரி முதலிய வாத்யக்காரர்கள், யுத்த காலத்தை அறிவிக்கும் விதமாக முழங்கியதையும் கேட்டு சரமா, மதுரமாக பேசும் சுபாவம் உள்ள சீதையிடம் சொன்னாள். சீதே, இது பே4ரிகா என்ற வாத்யம். அதை வாசிப்பதால் பெரும் சப்தம் உண்டாகும். கம்பீரமாக, மேகத்தின் இடி முழக்கம் போல கேட்பதைப் பார். மதம் பிடித்த யானையை அடக்கி வைப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ரதத்தை ஓட்டுபவர்கள் குதிரைகள் பூட்டி ரதத்தை தயார் செய்வார்கள். குதிரையில் ஏறி யுத்தம் செய்யும் வீரர்கள் மகிழ்வார்கள். ப்ராஸம் என்ற ஆயுதத்தை கையில் ஏந்தி ஆயிரக் கணக்கானவர், யூத்த களத்தில் இறங்கத் தயாராக ஆகின்றனர். ஆங்காங்கு கூடி தரை வீரர்கள் ராஜ மார்கத்தை நிரப்பி விட்டனர். (பதாதி என்ற வாகனம் இன்றி நடந்து செல்லும் போர் வீரர்கள்) இந்த சேனையின் அணி வகுப்பே கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது. பலமாக சத்தமெழ இவர்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்க்க, நீர்த்திவலைகள் தெறிக்க, அலைகள் ஓசையிட இருக்கும் சமுத்திரம் போலவே இருக்கின்றது. சுத்தமாக, சஸ்திரங்கள் ஒளி வீச கையில் வைத்துக் கொண்டு, தாங்களும் ப்ரஸன்னமாக இவர்கள் உரைகளையும் மற்ற சாதனங்களையும் வேறு தூக்கிக் கொண்டே செல்கின்றனர். ரதம், குதிரை, யானைகளையும் அலங்கரித்து, யுத்தம் செய்யத் தயாரான ராக்ஷஸர்கள், குதூகலத்துடன் ஆரவாரம் செய்வது தான் பெரும் ஓசையாக கேட்கிறது. பல வர்ணங்களில் ஒளி சிதறச் செய்வதை பார். (பட்டாசுகளாக இருக்கலாம்). வனத்தை எரிக்கும் காட்டுத் தீ போல இருக்கின்றன. மணிகள் அடிப்பதைக் கேள். ரதங்கள் ஓடும் பெரும் ஓசை, குதிரைகள் கணைக்கும் சத்தம், தவிர துர்யம் எனும் வாத்யத்தை இசைப்பதும் சேர்ந்து கேட்கிறது தெரிகிறதா? ராக்ஷஸேந்திரனைப் பின் பற்றும், விஸ்வாசமிக்க படை வீரர்கள், ஆயுதங்களை உயர்த்தி பிடித்தபடி கோஷம் செய்து கொண்டு போகும் சம்ப்ரமம், பரபரப்பும், அதைத் தொடர்ந்து கூச்சலும், மயிர்க் கூச்செரியச் செய்கிறது. ராக்ஷஸர்களுக்கு ஆபத்து என்று தோன்றுகிறது. லக்ஷ்மீ தேவி உன்னை வந்தடைவாள். பிறர் துயர் துடைக்கும் அரும் குணம் உடையவளே, ராமன் கமல பத்ராக்ஷன், கோபத்தை ஜயித்தவன், தைத்யர்களுக்கு வாஸவன் போன்றவன், இந்த போரில் ராவணனை வென்று, அளவில்லா தன் பராக்ரமத்தை நிரூபித்தவனாக, உன் கணவன் உன்னை வந்தடைவான். லக்ஷ்மணன் சகாயத்துடன், உன் கணவன் தன் வீர விளையாட்டை ஆரம்பிக்கப் போகிறான். சத்ருக்களிடம், சத்ருவை அழிக்கும் விஷ்ணுவின் துணையோடு வாஸவன் யுத்தம் செய்தது போல செய்வான். ராமன் இங்கு வந்து சேர்ந்தவுடன், அவனுடன் இணைந்து நீ சந்தோஷமாக இருப்பதை நான் காணத்தான் போகிறேன். உன் மனோ ரதம் பூர்த்தியாகும். சத்ருக்கள் ஒழிந்தபின், ஆனந்த கண்ணீர் பெருக, நீ நிம்மதியாக இருப்பாய். சோபனேஸ்ரீ உன் கணவனை அணைத்து மார்பில் முகம் பதித்து சீக்கிரமே இந்த கொடுமையான கஷ்டங்களை மறந்தவளாக சந்தோஷமாக இருப்பாய். முழங்கால் வரை நீண்டு புரளும் உன் வேணியை, இவ்வளவு மாதங்களாக முடிந்து வைத்திருந்ததை, ராமன் வந்து அவிழ்த்து விடப் போகிறான். பூர்ண சந்திரன் உதித்தது போன்ற அவன் முகத்தைப் பார்த்து சோகத்துடன் இவ்வளவு நாள் விட்ட கண்ணீர் மறந்து போகும். பெண் பாம்பு சட்டையுரிப்பதைப் போல உன் கவலைகளை களைந்து எறிந்து விடுவாய். மைதிலி சீக்கிரமே, இந்த ராவணன் யுத்தத்தில் வீழ்வான். சுகமாக வாழ்ந்து பழகிய பிரியமான மனைவியான உன்னுடன், ராமன், எல்லா சுகங்களும் திரும்பக் கிடைக்கப் பெற்று ராமனும் மன நிறைவோடு சுகமாக இருப்பான். வீரனான அவனுடன் சேர்ந்து நீயும் மகிழ்ச்சியுடன் இருப்பாய். பூமித்தாய் நல்ல மழை பெய்தபின், செழித்து வளரும் பயிர்களுடன் இருப்பதைப் போல மன நிறைவோடு இருப்பாய். வா, இதோ சூர்யோதயம் ஆகிறது பார். ப்ரஜைகளுக்கு உயிர் நாடி இந்த திவாகரனான சூரியன் தான். இவனை வணங்கு. மலையின் நாலா புறமும் சூழ்ந்து கொண்டு, குதிரைகள் முன் செல்வது போல ஒளிக் கதிர்கள் வழி காட்ட, ஒளி மண்டலமாக ஆக்குகிறானே, இந்த சூரியனை வணங்கி வழி படுவோம், வா.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சரமா சமாஸ்வாஸனம் என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 34 (441) ராவண நிச்சய கத2னம் (ராவணன் தீர்மானத்தை தெரிந்து கொண்டு வந்து சொல்லுதல்)
சற்று முன் நடந்த நிகழ்ச்சிகளால் தவித்துப் போய் விட்ட சீதை, சரமாவின் வார்த்தைகளைக் கேட்டு சமாதானம் அடைந்தாள். பூமியை மேகம், நீரை வர்ஷித்து மகிழ்விப்பது போல, சரமா சீதையை தன் வார்த்தைகளால் அமைதியடையச் செய்தாள். சகியான சீதைக்கு மன நிம்மதி கிடைக்கும் விதமாக, மேலும் பேச்சுக் கொடுத்தாள். அந்தந்த நேரத்திற்கு இசைவாக பேசும் திறன் உடையவள், சரமா என்பது தெளிவாகத் தெரிந்தது. சீதே, தேவையானால், நீ சொல்லும் செய்தியை ராமனிடம் தெரிவித்து விட்டு, யார் கண்ணிலும் படாமல் திரும்பி வரக் கூட நான் தயார். ஆகாய மார்கமாக, பிடிமானம் இல்லாத வெட்ட வெளியில் நான் சுற்றுவேன். என்னை யாரும், வாயுவோ, கருடனோ கூட கண்டு கொள்ள மாட்டார்கள். இப்படிச் சொல்லும் சரமாவைப் பார்த்து சீதை, மதுரமாக, முன் இருந்த சோகமும் பயமும் விலகியவளாக தெளிவாக பதில் சொன்னாள். சரமா, நீ சமர்த்தா தான் (சாமர்த்யம் உடையவள் தான்), சந்தேகமே இல்லை. ரஸாதலம் கூட போய் நலமாக திரும்பி வருவாய். இருந்தாலும், என் அருகில் இருக்கும் வரை செய்யக் கூடாதது எதையும் செய்து மாட்டிக் கொள்ளாதே. இதில் ஆபத்தும் இருக்கிறது அல்லவா. நிச்சயமாக எனக்கு ஏதாவது செய்து தான் ஆக வேண்டும் என்றால், ராவணன் என்ன செய்கிறான், செய்யப் போகிறான் என்பதை தெரிந்து கொண்டு வந்து சொல்லு. சத்ரு ராவணனான (சத்ருக்களை வருத்துபவன்) இந்த ராவணன் தான் க்ரூரமானவன். மாயை அறிந்தவன். என்னையும் குழப்பி விட்டான். வருணீ எனும் மதுவை குடித்து மயங்கியது போல ஆடுகிறான். எப்பொழுதும் பயமுறுத்துகிறான். அடிக்கடி வந்து ஏதாவது சொல்லி என்னை நடுங்கச் செய்கிறான். இந்த ராக்ஷஸிகளின் நடுவில் என்னை சிறை வைத்திருக்கிறானே. இதனால் எப்பொழுதும் சந்தேகம். கவலை அரிக்க என் மனம் ஒரு நிலையில் இல்லை. எந்த நிமிஷமும் என்ன நேருமோ என்று பயம் வாட்டுகிறது. தூக்கி வாரிப் போடுகிறது. அவன் என்ன செய்ய நினைக்கிறான், நிச்சயமாக நடக்கப் போவது என்ன என்று தெரிந்து கொண்டு வந்து சொன்னால், நான் நன்றியுடையவளாக இருப்பேன். என்னிடம் உனக்கு உள்ள அன்பின் காரணமாக இந்த காரியத்தைச் செய்யச் சொல்கிறேன். சீதை இவ்வாறு சொன்னவுடன், அவள் முகத்தை கைகளில் ஏந்தியபடி, சரமா, ஜானகி, உன் எண்ணம் இது தான் என்றால், இதோ போகிறேன். சத்ருக்களின் திட்டம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு திரும்பி வருகிறேன். என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு சரமா, ராக்ஷஸ ராஜனின், ராஜ சபைக்குச் சென்றாள். சபையில் பேசிக் கொண்டதையும், ராவணனின் தீர்மானமான போர் திட்டங்களையும் தெரிந்து கொண்டு, சீக்கிரமே அசோக வனம் திரும்பி வந்தாள். அசோக வனத்தில் சீதையைக் காண விரைந்தாள். தன் ஆசனமான தாமரை மலரிலிருந்து இறங்கி வந்து விட்ட லக்ஷ்மி தேவி போல இருந்த சீதையைக் கண்டு ஒரு நிமிஷம் மலைத்தாள். திரும்பி வந்த சரமாவைப் பார்த்து சீதை மகிழ்ச்சியுடன் ஆலிங்கனம் செய்து வரவேற்று, தன் ஆசனத்தில் அமரச் செய்தாள். வசதியாக இங்கு அமர்ந்து நீ அறிந்து வந்ததைச் சொல், என்றாள். ராவணன் என்ன செய்ய நினைத்திருக்கிறான்? சுபாவமாகவே க்ரூரமான குணம் உடையவன். துராத்மா. சரமாவும் தான் தெரிந்து கொண்டு வந்ததை விவரமாகச் சொன்னாள். ராக்ஷஸேந்திரனின் தாயாரும், மற்ற முதிய மந்திரி வர்கங்களும் உன்னை விடுவிக்கும் படி பலவிதமாகச் சொல்லிப் பார்த்தார்கள். தக்க மரியாதைகளுடன் சீதையைத் திருப்பிக் கொடு. மனித இனத்தின் அரசன் அவன். அவன் மனைவி மைதிலியை அவனிடமே ஒப்புவித்து விடுவது தான் சரியானது. ஜனஸ்தானத்தில அத்புதமாக நடந்த யுத்தத்தை அறிவோம். அதிலிருந்தே நாம் நிதர்சனமான உண்மையை, ராமனது பராக்ரமத்தை புரிந்து கொண்டிருக்க வேண்டும். சமுத்திரத்தைக் கடப்பது என்ற அரிய செயலைச் செய்தவன். நல்ல பலமுள்ளவனாகத் தான் இருப்பான். ஹனுமான் வந்த பொழுது நடந்ததும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். மனிதனாக பிறந்தவன், இந்த ராக்ஷஸர்களை எதிர்த்து வெற்றி கொள்வது இது வரை நடந்திருக்கிறதா? இந்த ஹனுமான் வந்து செய்து காட்டியுள்ளான், என்று இவ்வாறு வயதில் பெரியவர்கள், மந்திரிகளும், ராவணனின் தாயும் பல முறை எடுத்துச் சொல்லி அறிவுரை செய்தனர். பணத்தில் வெறி கொண்டு சேர்த்து வைப்பவன், அதை எந்த அவசரத்துக்கும் கூட கொடுக்க மனமின்றி, தன்னிடம் வைத்துக் கொள்வது போல, உன்னைத் திருப்பித் தருதல், விடுவித்தல் என்ற உபதேசம் ராவணன் காதில் ஏறவே இல்லை. யுத்தத்தில், உயிர் உள்ள வரை களத்தை விட முடியாதது போல அல்லது கிடைத்த அமிர்தத்தை விட முடியாதது போல, உன்னை விடுவிக்க அவனுக்கு சம்மதமில்லை. மந்திரிகளுடன், சற்றும் கருணையின்றி பேசும் ராவணன் நடத்திய மந்த்ராலோசனையின் முடிவு இது தான். அவனுக்கு ம்ருத்யு நெருங்கி விட்டது. அதன் காரணமாகத் தான் நல்ல உபதேசங்கள் அவனுக்கு உவப்பாக இல்லை. உன்னை விடுவிக்க மறுப்பது கூட பயம் தான் காரணம். யுத்தம் என்று தீர்மானமாக அறிவித்து விட்டான். தன்னைச் சார்ந்த அனைத்து ராக்ஷஸர்களுக்கும் அழிவைத் தேடத் தான் அவன் புத்தி இப்படி போகிறது போலும். ராவணன் படை தான் உன் ராமனின் கூர்மையான பாணங்களால் அழியப் போகிறது. கருவிழியாளே, கவலைப் படாதே, ராமன் உன்னைத் தன்னுடன் அயோத்தி அழைத்துச் செல்வான். இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, பேரீ, சங்கம் என்ற வாத்யங்கள் சேர்ந்து குழப்பமாக கேட்டன. பூமி அதிர நடந்து சென்ற வானர சைன்யத்தின் குதூகல கூச்சலும் கேட்டது. லங்கையில் இருந்த ராக்ஷஸ ராஜாவின் சேவகர்கள், இந்த வானர சேனையின் போர் முழக்கத்தைக் கேட்டு தங்கள் தைரியத்தை இழந்து, ஒருவித சோர்வு ஆட்கொள்ள, தவித்தனர். அரசனின் இந்த ஊழியர்கள், அரசனின் குற்றம் காரணமாக நன்மையைக் காணப் போவதில்லை.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண நிச்சய கத2னம் என்ற முப்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 35 (442) மால்யவது3பதேச: (மால்யவான் முதலானோர் உபதேசித்தல்)
சங்க நாதமும், பேரீ நாதமும் கலந்து முழங்க, ராமன் தன் படையுடன் இதோ முன்னேறி வருகிறான். இந்த சப்தத்தைக் கேட்டு ராவணன் ஒரு முஹுர்த்த நேரம் தன்னுள் யோசித்தான். பின் நிமிர்ந்து மந்திரிகளைப் பார்த்து இது வரை இந்த சபையில் உங்கள் தரப்பு வாதம் கூச்சலாக நிறைந்து இருந்தது. எதிரி சமுத்திரத்தைக் கடந்து வந்து விட்டான், படைபலத்தை சேர்த்துக் கொண்டு வந்து முற்றுகையிட்டிருக்கிறான் என்றெல்லாம் ராமனைப் பற்றிச் சொல்லக் கேட்டேன். சத்ய பராக்ரமர்களான உங்கள் பராக்ரமத்தையும், யுத்தம் செய்யும் சக்தியையும் நான் அறிவேன் என்றான். உலகத்தையே தகிப்பவன், க்ரூரன் என்று பெயர் பெற்ற ராவண ராஜா, தன் மந்திரிகள் அனைவரும் கூடியிருந்த அந்த சபையில் அவர்களையே நிந்திக்கும் விதமாக பேசுவதைக் கேட்டு, மந்திரிகள் தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் இருந்தனர். மால்யவான் என்ற ராவணனது தாய் வழி பாட்டனார், எழுந்து நின்றார். அரசனே எந்த அரசன் வித்தை உள்ள இடத்தில் வினயமாக நின்று, நியாயத்தை அனுசரித்து நடக்கிறானோ, அவன் தான் ராஜ்யத்தை ஆளுவான். எதிரிகளை தன் வசப் படுத்திக் கொள்வான். சண்டையிடும் சந்தர்பம் சரியாக இருந்தால் சண்டையிடலாம். காலம் சரியாக இல்லாத பொழுது, சந்தி செய்து கொள்வதிலும் தவறில்லை. இதனால் தன் பக்ஷத்து வீரர்களுக்கு நன்மை செய்தவன் ஆவான். ஐஸ்வர்யத்தையும் பெறுவான். தாழ்ந்து இருப்பவன், சமாதானமாக போரை தவிர்த்து, எதிரிக்கு சமமாக ஆகி விடலாம். இது தான் அரசன் செய்ய வேண்டிய செயலும் ஆகும். சத்ருக்களை அவமதிக்கக் கூடாது. அதாவது அவர்கள் பலத்தைக் குறைவாக மதிப்பிடக் கூடாது. தன்னை விட பலசாலியோடு மோதி வீணாக நாசமாவானேன். அதனால் எனக்குத் தோன்றுவது என்னவென்றால், ராமனுடன் சமாதானமாக போவோம். ராவணா, என்ன காரணத்திற்காக நம் மீது படையெடுத்து வந்திருக்கிறானோ, அந்த சீதையை அவர்களிடம் ஒப்படைத்து விடலாம். தேவ, ரிஷிகள், கந்தர்வர்கள் எல்லோருமாக சேர்ந்து எந்த ராமன் வெற்றியடைய வாழ்த்துகிறார்களோ, அவனிடம் நீ விரோதம் பாராட்டாதே. அவனுடன் சந்தி, சமாதானம் செய்து கொள்வது பற்றி யோசித்துப் பார். பகவான் ப்ரும்மா இரண்டு பக்ஷங்களை ஸ்ருஷ்டி செய்தான். சுரர்கள், அசுரர்கள் என்று. அவர்கள் தர்மத்தையும், அதர்மத்தையும் முறையே ஏற்றுக் கொண்டனர். அமரர்கள் எனப்படும் தேவர்கள் தர்ம பக்ஷத்தில் நின்றனர். மகாத்மாக்கள் என்று புகழப்பட்டனர். அதர்மம் ராக்ஷஸர்களின் பக்ஷம். அசுரர்களின் பக்ஷம். ராவணா, தர்மம் அதர்மத்தை விழுங்கி விடும். அதனால் தான் இந்த யுகம் க்ருத யுகம் ஆயிற்று. அதர்மம் தர்மத்தை விழுங்கும் பொழுது திஷ்ய: என்ற கலி யுகம் வருகிறது. நீ உலகில் சஞ்சரித்து பல மகத்தான தர்மங்களை அழித்தாய். அதர்மத்தை ஏற்றுக் கொண்டாய். நம்மிடம் பலமும் ஏராளமாக இருந்தது. அதனால் நீ அதர்மம் என்ற பாம்பை, விஷயம் அறியாமல் ஊட்டி வளர்த்து விட்டாய். அது இப்பொழுது நம்மை விழுங்கக் காத்திருக்கிறது. சுரர்களின் பக்ஷத்தை அவர்களுடைய குணங்கள், சுர பாவனைகள் (பெருந்தன்மை) வளர்க்கின்றன. ஏதோ சிறிதளவு நன்மை செய்ததைக் கூட நீ இப்பொழுது விஷயங்களில், சிற்றின்பங்களில் ஈடுபட்டு, உன்னையறியாமல் அக்னிக்கு சமமான ரிஷிகளின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறாய். அவர்களின் ப்ரபாவம் கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் ஜ்வாலைக்கு சமமானது. தவ வலிமையால், ஆத்ம பலம் நிறைந்தவர்கள், தர்மத்தின் அனுக்ரஹம் வேண்டும் என்பதில் தான் அவர்களுக்கு நாட்டம். இந்த த்விஜாதியினர், இரட்டை பிறப்புடையவர்கள் என்று அழைக்கப் படும் ப்ராம்மணர்கள், சிறந்த யாகங்களைச் செய்கின்றனர். அந்தந்த காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப, அக்னியில் ஹோமம் செய்கின்றனர். விதிகளை அறிந்து எதையும் விடாமல் நியமத்தோடு செய்கின்றனர். உயர்ந்த குரலில் வேதத்தை அத்யயனம் செய்கின்றனர். ராக்ஷஸர்களை லட்சியம் செய்யாமல் ப்ரும்ம கோஷங்களை, வேத மந்திரங்களை உரக்கச் சொல்கின்றனர். இவர்கள் திசைகள் தோறும் விரட்டப் பட்டனர். அக்னிக்கு சமமான இந்த ரிஷிகளின் அக்னி ஹோத்ரத்தில் கிளம்பும் புகை ராக்ஷஸர்களின் தேஜஸை மறைத்து நிற்கிறது. பத்து திக்குகளிலும், அந்தந்த தேசங்களில், புண்ய காரியங்களில் த்ருடமான விரத நியமங்களுக்கு கட்டுப் பட்டு, தீவிரமான தவம் செய்யும் இவர்களின் தவ வலிமை ராக்ஷஸர்களைத் தகிக்கிறது. தேவ, தானவ, யக்ஷர்களிடமிருந்து கொல்லப் படாமல் இருக்க நீ வரம் பெற்றிருக்கிறாய். மனிதர்களும், வானரங்களும், கரடிகளும், மகா பலசாலியான கோலாங்கூலங்களும் (கோவேறு கழுதைகள்) இவர்கள் இங்கு வந்து புதிய பலம் பெற்றவர்களாக கர்ஜிக்கின்றன. பலவிதமான பயங்கரமான உத்பாதங்களைப் பார்த்து எல்லா ராக்ஷஸர்களுக்குமே ஆபத்து என்று நான் உணருகிறேன். மேகங்கள் நீருக்கு பதில் நாசகாரமான திரவங்களால் ஆனது போல காண்கின்றன. உஷ்ணமான ரத்தத்தை லங்கையின் மேல் வர்ஷிக்க தயாராக இருப்பது போல காண்கின்றன. வாகனங்களை இழுக்கும் மிருகங்கள் அழுகின்றன. கொடிகள் கீழே விழுந்து, வர்ணம் இழந்து காணப்படுகின்றன. முன் போல ஒளி வீசி பரவவில்லை. கழுதைகளும், கோமயம், காட்டு யானைகள், ஊருக்குள் வந்து கத்துகின்றன. லங்கையில் நுழைந்து கலகம் செய்கின்றன. காலிகா, வெண்மையான பற்களைக் காட்டி எதிரில் நின்று சிரிக்கிறார்கள். வீட்டில் பலி கொடுக்கப் படும் அன்னம் முதலியவற்றை நாய்கள் தின்று தீர்க்கின்றன. பசுக்களிடம், கழுதைகள் தான் பிறக்கின்றன. குள்ள நரிகளிடம் எலிகள் பிறக்கின்றன. பூனைகள் (லக்ஷெஒபாரட-பாநதஹரெ) புலி, சிறுத்தைகளுடன் சேருகின்றன. பன்றிகள் நாய்களுடன் செல்கின்றன. கின்னரர்கள் ராக்ஷஸர்களுடனும், மனிதர்களிடமும் கூடுகின்றனர். வெண்மையாக, வெளிறி, ரத்த சிவப்பான பாதங்களுடனும், பறவைகள் காலனின் தூண்டுதலால் புறாக்கள், ராக்ஷஸர்களின் வினாசத்தை சொல்வது போல பறக்கின்றன. கிளிகள் வீடுகளில் வளர்க்கப் பட்டு வருவது கூட கோர்வையில்லாமல் வீசி, கூசி என்று கத்துகின்றன. கீழே விழுந்து கலகம் செய்வதில் நாட்டமுடையவைகளாக இருக்கின்றன. சூரியனைப் பார்த்து மிருகங்களும் பக்ஷிகளும் ஓலமிடுகின்றன. கருப்பான, காண சகிக்காத ஒரு புருஷனின் தலை வீடுகளில் அடிக்கடி தென்படுகிறது. இதைப்போல இன்னும் பல துர் நிமித்தங்களைக் காண்கிறேன். ராமனை, விஷ்ணுவாக மதிப்போம். மனித சரீரம் எடுத்து வந்துள்ள விஷ்ணுவாக போற்றுவோம். சாதாரண மனிதன் அல்ல ராகவன். த்ருடமான விக்ரமம் உடையவன். சமுத்திரத்தைக் கடந்து வர சேது கட்டினவன். அத்புதமான வேலை செய்தவன். சாதாரண மனிதனாக இருக்க முடியாது. மனிதருள் அரசனாக வந்து அவதரித்துள்ள ராமனிடம் சமாதானம் செய்து கொள். ராவணா, புரிந்து கொண்டு யோசித்து செய். என்றைக்கும் பொருந்தும் படியான வழியைத் தேர்ந்தெடு. இவ்வாறு சொல்லி விட்டு மால்யவான், ராக்ஷஸாதிபதியின் மன ஓட்டத்தை திரும்பவும் பரீக்ஷித்துப் பார்த்து, ராவணன் முகத்தைப் பார்த்து எதுவும் மாறுதல் இல்லாததால் வாய் மூடி மௌனியாக நின்றார். உத்தமமான பௌருஷம் நிறைந்த வீரர்களுள் ஒருவரான மால்யவானும் செயலிழந்து நின்றார்
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மால்யவது3பதேச: என்ற முப்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 36 (443) புரத்3வார ரக்ஷா: (கோட்டை வாசலை ரக்ஷித்தல்)
விதியின் பிடியில் இருந்த ராவணனுக்கு மால்யவானின் உபதேசம் ஏற்காததில் வியப்பில்லை. அவர் ஹிதமாக சொன்னது பிடிக்காமல் புருவங்களை நெரித்து, கண்களை கோபத்துடன் உருட்டியபடி, மால்யவானுக்கு பதில் சொன்னான். எனக்கு நன்மை செய்வதாக நினைத்து எனக்கு எதிராக கடுமையாக பேசுகிறீர்கள். நீங்களும் எதிரியின் பக்ஷம் பேசுகிறீர்கள். என் காதில் இவை ஏறாது. நைந்து போனவன் போல தீனனான ராமன், வேறு வழியின்றி வானரங்களை சரணடைந்திருக்கிறான். சாகா மிருகங்கள் எனப்படும் வானரங்கள், கிளைக்கு கிளை தாவித் திரியும் மிருகங்கள். தந்தையால் வனத்துக்குப் போ என்று விரட்டப் பட்டவனை, என்ன காரணம் கொண்டு இப்படி சிலாகித்து பேசுகிறீர்கள், எப்படி அவனை சாமர்த்யசாலி என்று சொல்கிறீர்கள்? நான் ராக்ஷஸர்களுக்கு ஈஸ்வரன். தேவர்களுக்கும் பயங்கரமானவன். என்னை ஏன் மட்டமாக நினைக்கிறீர்கள். பராக்ரமத்தில் சற்றும் குறையாத, யாராலும் எனக்கு எதிரில் நிற்க முடியாது என்ற நிலையில் இருக்கும் என்னை அவமதித்து, தாழ்வாக பேசுகிறீர்கள். வீரனுக்கு வீரன் தோன்றும் த்வேஷமா? எதிரியிடம் உள்ள பக்ஷபாதமா? என்னிடம் ஏன் கடுமையாக பேசுகிறீர்கள்? வெளி ஆட்கள் தூண்டுதலா? பதவியில் இருப்பவனை, நல்ல செல்வாக்கோடு இருப்பவனை யார் தான் குறை சொல்வார்கள். பண்டிதர். சாஸ்திர ஞானம் உடையவர். தத்துவங்களை உணர்ந்தவர். ஏதோ எதிரிகளின் வேலை தான், உங்களைப் பிடித்து புத்தி மழுங்க செய்திருக்கிறார்கள். வனத்திலிருந்த சீதையைக் கொண்டு வந்தவன் நான். தன் பத்மாஸனத்திலிருந்து இறங்கி வந்த சாக்ஷாத் லக்ஷ்மி தேவியைப் போல இருக்கும் சீதையை நான் ஏன் திருப்பித் தர வேண்டும். ராகவனிடம் எனக்கு என்ன பயம்? கோடிக் கணக்கான வானரங்கள் சூழ நிற்கிறான். சுக்ரீவனும் லக்ஷ்மணனும் தான் துணை. பார்த்துக் கொண்டே இருங்கள். சில நாட்களில் என் கையால் இந்த ராமன் வதை படப் போகிறான். த்வந்த யுத்தத்தில் எனக்கு எதிராக தேவர்கள் கூட நின்று ஜயித்ததில்லை. யுத்தம் என்றால் ராவணன் பயந்து ஓடியதில்லை. எதற்காக இப்பொழுது பயப்பட வேண்டும். யாரிடமும் பணிந்து கை கட்டி நிற்க மாட்டேன். இது என் கூட பிறந்த குணம். ஸ்வபாவத்தை விட முடியாது. எதேச்சையாக, சமுத்திரத்தின் மேல் சேதுவைக் கட்டி விட்டால், ஆச்சர்யப்படும்படி, நீங்கள் பயப்படும்படி இதில் ராமன் என்ன செய்து விட்டான்? உங்களுக்கு சத்யம் செய்து கொடுக்கிறேன், கேளுங்கள். இந்த சேதுவின் மூலம் சமுத்திரத்தைக் கடந்து இங்கு வந்தவன், உயிருடன் திரும்பி போக மாட்டான். அவன் வானர சேனையும் தாங்காது. தன் போக்கில் பிடிவாதமாக பேசிக் கொண்டே போகும் ராவணனைப் பார்த்து வெட்கமடைந்த பெரியவரான, மால்யவான், மேற்f கொண்டு எதுவும் பேசவில்லை. தன் சரீர பலத்தாலும், வீரத்தாலும் உண்டான கர்வம் தலைகேற, அவன் செய்யும் துஷ்டத்தனமான காரியங்களை மனதில் நினைத்தபடி, இவனுடைய பாபமே இவனை அழிக்கப் போகிறது. கூடவே இவன் ஜனங்களான ராக்ஷஸர்களும், ராஜ்யமும் அழியத் தான் போகிறது. வழக்கம் போல, ஜய விஜயீ பவ, போன்ற ஆசிர்வாதங்களைச் சொல்லி ஆசிர்வதித்து விட்டு, மால்யவான் தன் மாளிகை சென்றார்.
இதன் பின் ராவணன், தன் மந்திரிகளுடன் மந்த்ராலோசனை செய்து விட்டு விவரமாக பேசி, லங்கையை முன் கண்டிராதபடி பாதுகாவலை உறுதியாகச் செய்ய முனைந்தான். கிழக்கு திசைக்கு ப்ரஹஸ்தனை நியமித்தான். தென் பகுதிக்கு மகா வீர்யவான்களான, மகா பார்ஸ்வன், மகோதரன் என்ற இருவரும். பல ராக்ஷஸர்களுடன் மகா காயன் மேற்கு வாசலுக்கு காவலாக நியமிக்கப்பட்டான். இந்திரஜித் இங்கு தலைமை தாங்கி நின்றான். வடக்கு திசையில் மகாமாயன் என்பவனை பல ராக்ஷஸர்களுடன் அனுப்பி விட்டு, சுக சாரணர்களையும் அனுப்பி வைத்தான். மந்திரிகளிடம் நானும் இந்த வடக்கு திசையில் இருப்பேன் என்று அறிவித்த ராவணன், விரூபாக்ஷன் என்ற மகா வீர்யமுள்ள ராக்ஷஸ வீரனை மத்தியில் நியமித்தான். இங்கும் பல ராக்ஷஸர்கள், விரூபாக்ஷனுக்கு உதவியாக நியமிக்கப் பட்டனர். இவ்வாறு லங்கையின் பாதுகாவலை கெட்டிபடுத்தி விட்டு தான் ஏதோ சாதித்தது போல மகிழ்ந்தான். காலத்தின் கட்டாயம் தவிர, வேறு என்ன? ஜய ஜய என்ற ஆசிர்வாதங்கள் செய்த மந்திரிகளை அனுப்பி விட்டு, நகர காவலுக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து விட்டு ராவணன் தன் அந்த:புரம் வந்து சேர்ந்தான், நிறைந்த செல்வமும், செழிப்பும் உடைய ராவணன்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் புரத்3வார ரக்ஷா: என்ற முப்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 37 (444) ராம குல்ம விபாக: (ராமன் தன் படையை அணிவகுத்து நிறுத்துதல்)
நர, வானர வீரர்களின் தலைவர்களான ராமனும், சுக்3ரீவனும், வாயு சுதனும், ஜாம்ப3வான் என்ற கரடித் தலைவனும், ராக்ஷஸனான விபீ4ஷணனும், வாலி புத்திரனான அங்க3த3னும், சௌமித்ரி, சரப4ன் என்ற வானரம், சுஷேணன் அவன் தாயாதிகள், மைந்த3னும், த்3விவித3னும், க3ஜன், க3வாக்ஷன், க3வயன், நலனும், பனஸனும், கூடி சத்ரு விஷயமாக பேசலானார்கள். இதோ எதிரில் தெரியும் லங்கை, ராவணன் பாலித்து வரும் நகரம். இதை யாருமே நெருங்க முடிந்ததில்லை. சுரர்களோ, உரக, கந்தர்வ, அமரர்கள் யாருமே இங்கு வந்து ஜயித்ததில்லை. இப்பொழுது நாம் நமது காரியம் நிறைவேற என்ன செய்யலாம் என்பதை தீர்மானிப்போம். இந்த இடத்தில் ராக்ஷஸாதிபனான ராவணன் நித்ய வாசம் செய்கிறான். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, ராவணனின் இளையவனான விபீஷணன் சொன்னான். என் மந்திரிகளோடு, அனலன், சரப4ன், சம்பாதி, ப்ரக4ஸன் நால்வரும் லங்கைக்கு போய் விட்டு இப்பொழுது தான் திரும்பி வந்திருக்கிறார்கள். சகுனி என்ற பறவை ரூபம் எடுத்துக் கொண்டு போய் ராவணனின் படை அணி வகுப்பை தெரிந்து கொண்டு வந்திருக்கிறார்கள். எந்த விதமான பாதுகாவல் ஏற்பாடுகள் என்பதையும் தெரிந்து கொண்டனர். இவர்கள் சொன்னதை வைத்து ராவணன் படை வ்யூஹம் எப்படி இருக்கும் என்று நான் சொல்கிறேன். கேளுங்கள். கிழக்குத் திசையில் ப்ரஹஸ்தன், கோட்டை வாசலை காவல் காத்தபடி நிற்கிறான். தென் திசையில் மகா பார்ஸ்வன், மகோதரன் இருவரும். இந்திரஜித் மேற்கு வாசலில் பொறுப்பை ஏற்று நிற்கிறான். இவனைச் சுற்றி பல ராக்ஷஸர்கள் பட்டஸம், சூலம், வில், உத்3க3ரம் போன்ற ஆயுத பாணிகளாக நிற்கின்றனர். பலவிதமான ஆயுதம் தாங்கிய வீரர்கள் ராவணனது கோட்டை பாதுகாவலுக்கு நிற்கிறார்கள். ஆயிரக் கணக்கான வீரர்கள் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். வடக்கு வாசலில் ராவணன் தானே முன் நிற்கிறான். விரூபாக்ஷன் இவனுக்கு உதவியாக இருக்கிறான். சூலமும், வாளும், வில்லும் ஏந்திய ராக்ஷஸ வீரர்கள் மத்தியில் இருக்கிறார்கள். இதுவரை ஏற்பாடுகளைப் பார்த்து விட்டு என் மந்திரிகள் வேகமாக திரும்பி வந்து விட்டனர். ஆயிரக் கணக்கான யானைகள், ரதங்கள் பத்தாயிரக் கணக்கில், குதிரைகள் இதைப் போல இரு மடங்கு, கோடிக் கணக்கான ராக்ஷஸர்கள், யுத்தம் என்று வந்தால் உயிரைத் திருணமாக மதித்து போரிடும் வீரர்கள். நல்ல பலசாலிகள். இந்த நிசாசரர்கள் எப்பொழுதும் ராவணனுக்கு பிரியமானவர்களே. ஒவ்வொரு ராக்ஷஸ வீரனுக்கும், பக்க பலமாக, ஆயிரம் ஆயிரம் பேர் நிற்கின்றனர். இவ்வாறு தன் மந்திரிகள் தெரிந்து கொண்டு வந்ததை விபீஷணன் சொன்னான். அந்த ராக்ஷஸ மந்திரிகளையும் ராமனிடம் அழைத்து வந்தான். அவர்களும் தாங்கள் கண்டதை நேரிடையாக ராமனிடம் தெரிவித்தனர். கமலபத்ராக்ஷன் ராமன், கண்கள் விரியக் கேட்டார். விபீஷணன் மேலும் தன் சகோதரனைப் பற்றிய விவரங்களைச் சொன்னான். ராவணன் குபேரனை யுத்தத்தில் ஜயித்ததை விவரித்தான். ஆறாயிரம் ராக்ஷஸ வீரர்கள் ராவணனுக்கு இணையான பலமும், ஆற்றலும், செல்வத்திலும், கௌரவத்திலும், கர்வத்திலும் அவனைப் போலவே இருப்பவர்கள் வருவார்கள். இதைக் கேட்டு அதைரியமோ, கோபமோ கொள்ள வேண்டாம். உனக்கு ரோஷத்தை உண்டாக்கவே இந்த விவரங்களைச் சொல்கிறேன். நீ சமர்த்தன் தான். தேவர்களையும் அடக்கி விடுவாய். சதுரங்க படையுடன், வானரங்களை சரியானபடி வ்யூஹம் அமைத்துக் கொண்டு நடத்திச் செல்லுங்கள். ராவணனை ஒரு கை பார்த்து விடலாம். கலக்கி எடுத்து விடலாம். விபீஷணன் சொன்னதைக் கேட்டு ராமரும், வானர வீரர்களுக்கு பொறுப்புகளை விநியோகித்தார். கிழக்கு வாயிலில் நீலன் தன் படையுடன் ப்ரஹஸ்தனை எதிர்க்கட்டும். அங்கதனும் தன் படையுடன் தென் திசையில் மகா பார்ஸ்வன். மகோதர்களை கலக்கட்டும். பவனாத்மஜன் ஹனுமான், மேற்கு வாயிலில் நுழையட்டும். தைத்ய, தானவ, ரிஷிகளின் சமூகத்தை துன்புறுத்தி வந்த வர தான பலம் தந்த கர்வத்துடன் உலகை ஆட்டிப் படைத்து வருத்திக் கொண்டிருந்த ராவணனை நான் எதிர் கொள்வேன். அவனை வதம் செய்து நிச்சயமாக வெற்றி வாகை சூடத் தான் போகிறோம். லக்ஷ்மணன் என்னுடன் இருப்பான். வடதிசையில் பொறுப்பை நான் ஏற்கிறேன். ராவணனை தன் படை பலத்துடன், வடதிசையில் நாங்கள் மோதுவோம். சுக்ரீவனும் கரடி ராஜனும் விபீஷணனும், நமது படைகளின் மத்தியில் இருக்கட்டும். வானர வீரர்கள், யுத்தம் செய்யும் பொழுது மனித உருவம் எடுத்துக் கொள்ள வேண்டாம். வானரங்கள் தான் நமது சின்னம். தன் ஜனங்கள் என்று அடையாளம் காட்ட போதுமானது. மனிதர்களான எழுவர், நானும், லக்ஷ்மணனும், தன்னோடு சேர்த்து ஐவரான விபீஷணன், முன் நின்று போர் செய்வோம். இவ்வாறு ஏற்பாடுகள் செய்து விட்டு சுஷேண மலையில் ஏறிப் பார்க்கலாம் என்று சொல்லவும், எல்லோருமாக கிளம்பினர். சுஷேண மலைச் சாரல் மிக ரம்யமாக இருப்பதைக் கண்டு ரசித்து விட்டு, இறங்கி வந்து, தன் படை வீரர்களுடன் லங்கையை முற்றுகையிட்டார். பூமியை மறைத்த படி வானரங்கள் படை சென்றது. சத்ருவை வதம் செய்ய வேண்டும் என்று எல்லோரும் மனதினுள் தீர்மானித்துக் கொண்டனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராம கு4ல்ம விபா4க3: என்ற முப்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 38 (445) சுவேளாரோஹணம் (சுவேள மலையில் ஏறுதல்)
லக்ஷ்மணனையும், சுக்ரீவனையும், விபீஷணனையும் அழைத்து இந்த சுவேள மலையில் ஏறுவோம். இந்த மலை மிக அழகாக இருக்கிறது. தாதுப் பொருட்கள் நிறைந்தது. இதன் மேல் உச்சி வரை ஏறி இன்று இரவை இங்கேயே கழிப்போம், எனவும், எல்லோருமாக மலையில் ஏற ஆரம்பித்தனர். லங்கையையும் நன்றாக பார்க்க முடியும். எந்த ராவணன் என் உயிருக்குயிரான சீதையை அபகரித்துக் கொண்டு போனானோ, அவன் வசிக்கும் இடம் எப்படி இருக்கிறது என்பதையும் பார்ப்போம். அவன் தர்மம் பற்றி எதுவும் அறியாமல், குலமோ, நடத்தையோ எதுவும் பற்றிக் கவலைப்படாமல், நீசமான ஒரு செயலை செய்து ராக்ஷஸ குலத்தையே தாழ்த்தி விட்டான். என் மனதில் பொங்கி வரும் ஆத்திரம், இந்த ஒரு அதமனான ராவணனின் செயலால், ராக்ஷஸ குலத்தையே அழிக்கப் போகிறது. விதி வசத்தால் ஒருவன் செய்யும் பாப காரியம், நீசமான, தன் சுய நலமே பெரிதாக நினைக்கும் ஒருவனால், அவன் குலமே அழிகிறது. இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, ராமனும் சுவேள மலையின் அழகிய சரிவு பிரதேசங்களைக் கடந்து மேலே ஏறினார். பின்னாலேயே லக்ஷ்மணனும் ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தான். பெரிய வில்லையும், அம்புகளையும் எடுத்துக் கொண்டு, தன் விக்ரமத்தை, ஆற்றலை வெளிப்படுத்த நேரமும், வாய்ப்பும் வந்து விட்டதை எண்ணி மனதில் மகிழ்ச்சியோடு சென்றான். அவனைத் தொடர்ந்து சுக்ரீவன், மந்திரிகளோடு விபீஷணன், ஹனுமான், அங்கதன், நீலன், மைந்த த்விவிதர்கள், பின்னாலேயே சென்றனர். கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்த மாதனன், பனஸன், குமுதன் இவர்களும், ஹரன், ரம்பன் என்ற சேனைத் தலைவர்கள், ஜாம்பவானும், சுஷேணனும், ரிஷபன் என்ற புத்திமானான வானர வீரன், துர்முகனும்,சத பலியும், இவர்கள் தவிர, வேகமாக நடக்கக் கூடிய பல வானரங்கள், வாயு வேகத்தில் மலையில் ஏறி பழக்கப் பட்ட அந்த வன வாசிகள், ஏறினர். நூற்றுக் கணக்காக ராகவன் ஏறிக் கொண்டிருந்த சுஷேண மலையில் ஏறினர். சீக்கிரமே மலை மேல் ஏறி அதன் உச்சியில் நின்று லங்கையைக் கண்டனர். ஆகாயத்தில் இருப்பது போல உயரத்தில் அமைந்திருந்த அழகிய நகரைக் கண்டனர். பிராகாரங்களும், மாளிகைகளும், அழகாகத் தெரிய, ராக்ஷஸிகள் நிறைந்த லங்கையைக் கண்டனர். ப்ராகாரங்களில் கறுத்த உருவத்துடன் நடமாடிய ராக்ஷஸ வீரர்களைக் கண்டனர். இவர்கள் அணி வகுப்பு மற்றொரு ப்ராகாரம் போல ஒழுங்காக இருந்தது. போர் வெறி கொண்ட ராக்ஷஸர்களின் கோஷம் பல விதமாகக் கேட்டது. ராமரும் மற்றவர்களும் லங்கையை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கையிலேயே சூரியன் மறைய அஸ்தமன சூரியனின் கிரணங்கள் வானத்தில் கோலம் போட்டது போல வண்ண கலவையாகத் தெரிந்தது. ஸந்த்யா மெதுவாக கரைய வானத்தில் சந்திரனும் உதயமாக, இரவு வந்தது. வானர சேனைத் தலைவனான ராமர், விபீஷணனை கலந்து ஆலோசித்து, லக்ஷ்மணன் கூட அன்று இரவு அந்த மலையுச்சியில் சுகமாகக் கழித்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சுவேளாரோஹணம் என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 39 (446) லங்கா த3ரிசனம் (லங்கையை தரிசித்தல்)
வானர வீரர்கள், அன்று இரவு அந்த மலை மேல் தங்கி, லங்கையின் வனங்களையும், உப வனங்களையும் கண்டனர். நீளமான, விசாலமான, சமமான பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு, கண் கொள்ளா காட்சியாக அமைந்திருந்த தோட்டங்களை பார்த்து வானர வீரர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். சம்பக, அசோக, புன்னாக, சால, தால எனும் மரங்கள் நெருக்கமாக அமைந்திருந்தன. தமால வனம் மறைக்க சிறிய குன்றுகள் மாலையணிவித்தது போல ஊரைச் சுற்றி அமைந்திருந்தது. ஹிந்தாள, அர்ஜுன, நீப, சப்தபர்ண மரங்கள் பூத்து குலுங்கின. திலக, கர்ணிகார, பாடல எனும் வகை புஷ்பங்கள் நிறைந்த மரங்கள். மரங்களைச் சுற்றி படர்ந்திருந்த கொடிகளும், புஷ்பங்களின் பாரத்தால் நெகிழ்ந்து தலை வணங்கி இருந்தன. இப்படி திவ்யமான மரங்களும் புஷ்பங்களுமாக இந்திரனுடைய அமராவதி போல லங்கை காட்சியளித்தது. சிவந்த இளம் தளிர்களும் விசித்ரமான குசுமங்களும், பசுமை போர்த்தியிருந்த தரையும், தவிர எங்கும் காணாத பல அழகிய வனத்தில் விளையும் தாவர வகைகளுமாக,வாசனை நிரம்பிய புஷ்பங்களும், பழங்களுமாக அங்கிருந்த மரங்கள், ஆபரணங்களைச் சூடிக் கொண்ட மனிதர்கள் போல, இவைகளைத் தன் மேல் தரித்துக் கொண்டிருந்தது. சைத்ர ரதம் போன்றும், நந்தன வனத்துக்கு சமமாகவும் எல்லா ருதுக்களிலும் ரம்யமாகவே, அந்தந்த பருவத்து மலர்கள், பழங்கள் என்று செழிப்பாக ரம்யமாக விளங்கும் வனத்தில் வண்டுகள் ரீங்காரம் ஓயாது கேட்டது. நத்யூஹ, கோயஷ்டிக, ப3க (கொக்குகள்) ஆடும் மயில்கள், மலையருவிகளின் சப்தத்தோடு இணைந்து வந்த பரப்4ருத் என்ற பறவைகளின் கூச்சலையும் கேட்டனர். எப்பொழுதும் பறவைகள் உல்லாசமாக கூச்சலிட, ப்4ரமரங்கள் சுற்றிக் கொண்டிருக்கும், கோகிலத்தின் இசையும், மண்டிக் கிடந்த மற்ற பறவைகளின், இவை தவிர கூட்டம் கூட்டமாக வந்து போகும் பறவைகளின் கூச்சலும் சேர்ந்து இருந்த அந்த பிரதேசத்தின் ராஜாவான, ப்4ருங்க ராஜாவின் படையான ப்4ரமரங்கள் கோஷ்டி கானம் செய்தன போலும். கோணாலகம் எனும் பறவைகள் சுழன்று சுழன்று பறப்பது கண்களைக் கவர, ஸாரஸ பக்ஷிகளும் கூட்டம் கூட்டமாக இனிமையாக இரைச்சல் போடுவது கேட்டது. வானர வீரர்கள் இதற்கு மேலும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல், ஆரவாரத்துடன் வனத்தினுள் நுழைந்தனர். வானரங்கள் கூட்டமாக உள்ளே நுழைந்த பொழுது வரவேற்பது போல, மலர்களின் மணத்துடன் காற்று சுகமாக வீசுயது. நாசிக்கு இதமாக இருந்தது. ஒரு சிலர் சுக்ரீவனின் அனுமதியைப் பெற்று கொடிகள் பறக்க இருந்த லங்கா நகரின் வீதிகளில் சென்றனர். வழியில், ஆகாயத்தில் பறக்கும் பறவைகளை பயமுறுத்திக் கொண்டும், மிருகங்களையும், சிறு பக்ஷிகளையும் பயந்து அலற வைத்த படி, பூமி அதிர நடந்தனர். உரத்த குரலில் கோஷமிட்டபடி நடந்தனர். இவர்கள் கூட்டமாக நடந்த அதிர்வில் எழுந்த புகை மண்டலம் வானளாவி எழுந்தது. கரடிகள், சிங்கங்கள், வராகங்கள், மகிஷங்கள், யானைகள், மான்கள் இந்த சத்தத்தால் பயந்தன. நாலா திக்குகளிலும் ஓடலாயின. த்ரிகூடத்தின் சிகரம், வானளாவி நின்ற உயர்ந்த மாளிகைகள் திடுமென, புஷ்பங்கள் வாரியிறைக்கப் பட, வெள்ளி முலாம் பூசியது போல ஆயிற்று. நூறு யோஜனை விஸ்தீர்ணம், விமலமாக அழகாக காட்சியளித்தது. மென்மையாகவும், லக்ஷ்மீகரமாகவும் பக்ஷிகள் கூட எட்ட முடியாதபடி உயர்ந்தது, மனதால் கூட எட்டி பிடிக்க முடியாது என்று வர்ணிக்கப் பெற்றது, இந்த மனிதர்கள் தங்கள் கர்மாக்களின் பயனாக எப்படி எட்ட முடியும்? இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் ராவணன் பாலித்து வந்த லங்கா நகரம் நிர்மாணம் செய்யப் பட்டிருந்தது. நூறு யோஜனை தூரம் அகலம், முன்னூறு யோஜனை நீளமும், அந்த நகரம் கோபுரங்களும், மாளிகைகளும், அவைகளில் பொன்னும், மணியும், தேக்கும் இழைத்துச் செய்யப் பட்ட வேலைப்பாடுகளும், வெண் மேகம் போன்ற வண்ணத்துடன் இருந்த அந்த மாளிகைகளும், விமானங்களும், லங்கைக்கு அலங்காரமாக விளங்கின. சூரியனுடைய அடர்ந்த ஒளி வட்டத்தில், மத்யமமான வைஷ்ணவ பத்மம் போல, இந்த ஊரில் ஆயிரக் கணக்கான தூண்களின் நடுவில் மாளிகை கட்டப் பட்டிருந்தது. வானத்தை தொட முயலுவது போலவும், கைலாஸ மலை போலவும், நாற்கால் மண்டபங்கள் ராவணனுடைய ஊரில் அலங்காரங்கள் நிறைய இருந்தன. நூறு ராக்ஷஸர்கள் எப்பொழுதும் காவல் இருந்து பாதுகாக்கப் படும் அந்த ஊரில் மனதைக் கவரும் வண்ணம், காடுகளும், சிறு குன்றுகளும், காட்சி தந்தன. பல விதமான தாதுப் பொருட்கள், உபவனங்கள் நிறைந்தது. பலவிதமான பறவைகள் வட்டமடித்தன. பலவிதமான சிறு மிருகங்கள் வசித்தன. பலவிதமான பூக்கள் குவியலாக காணப் பட்டன. ராக்ஷஸர்களும் கணக்கில்லாமல் வசித்தனர். இப்படி செழிப்பாக, நிறைவாக இருந்த ஊரை, தானும் நிறைவான குணங்களையும், பொருளையும் உடையவனான ராமன், லக்ஷ்மீவான், லக்ஷ்மணன் கூட இருப்பவனான ராமன், கண்டு களித்தான். பெரிய பெரிய வீதிகளுடன் கல கலப்பாக இருக்கும் அந்த நகரை பார்த்து, லக்ஷ்மணனின் தமையன், தேவ லோகத்து நகரமோ, எனும் படி அமைந்திருந்த லங்கையை பார்த்து பெரிதும் வியந்தார். பலவிதமான ரத்னங்கள் நிறைந்த பிராஸாதங்கள் (மாளிகைகள்) மாலையாக அலங்கரிக்க, அந்த நகரத்தின் முக்கியமான இடங்களில் பொருத்தியிருந்த யந்திரங்களையும், தாழ்ப்பாள், பூட்டு இவற்றையும் ராமன் பார்த்து மனதில் குறித்துக் கொண்டார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் லங்கா தர்ஸனம் என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 40 (447) ராவண சுக்3ரீவ நியுத்3த4ம் (ராவணன் சுக்ரீவனுடன் கை கலத்தல்)
சுஷேண மலையின் உச்சியில் சுக்ரீவனுடனும், மற்ற வானரங்களுடனும் ஏறிச் சென்றிருந்த ராமரும் மற்றவர்களும், அங்கிருந்தபடியே நாலா புறமும் சுற்றிப் பார்த்தனர். முஹுர்த்த நேரம் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். த்ரிகூட மலையின் மேல், விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பெற்ற லங்கை, மிகத் தெளிவாக,அழகிய முறையில் உறுதியாக கட்டப் பட்டிருப்பதையும், அதை சுற்றி இருந்த அழகிய தோட்டங்களையும், நீர் நிலைகளையும் பாராட்டியபடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அதே சமயம், தன் மாளிகையின் கோபுரத்தின் மேல் ராக்ஷஸேந்திரனும் வந்து நின்றான். வெண் கொற்றக் குடையும், சாமரமும், உடல் முழுவதும் ரக்த சந்தனம் பூசி, ரத்னாபரணங்களை தரித்தவனாக, கரு மேகம் போன்ற நிறமும், நகைகளால் மறைக்கப் பட்ட ஆடைகளுடன், ஐராவதத்தின் தந்தங்கள் குத்தி புண்ணாகி தழும்பாக தெரிந்த மார்பும், முயல் குட்டியின் ரத்தம் போன்று சிவந்த ஆடையுமாக நின்றவனை, மற்றவர்களுடன் சுக்ரீவனும் கண்டான். சந்த்யா கால சூரியனுடன், மேக ராசிகள் நிறைந்த ஆகாயத்தில் நிற்பது போல நின்றவனை ராமரும் மற்ற வானரங்களும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, சுக்ரீவன் திடுமென குதித்து எழுந்தான். க்ரோத வேகத்துடன், தன் சக்தியும் பலமும் தெரிய மலை உச்சியிலிருந்து மாளிகையின் சிகரத்தை நோக்கி ஆகாய மார்கமாக தாவிச் சென்றான். பயம் சற்றும் இல்லாத மனத்தினனாய், ராவணனுக்கு எதிரில் சற்று நின்று, அவனைக் கூர்ந்து பார்த்து, அலட்சியமாக பேச்சு கொடுத்தான். ராவணா, லோக நாதனான ராமனுடைய சகா, அவன் தாஸன் நான். ராக்ஷஸா, இன்று என் கையால் நீ அரசன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை இழக்கப் போகிறாய் என்று சொல்லிக் கொண்டே, அவன் மேல் தாக்கினான். அவன் தலையில் இருந்த மகுடத்தை வேகமாக பறித்து பூமியில் வீசி எறிந்தான். எங்கிருந்தோ திடுமென முளைத்தது போல எதிரில் வந்து நின்ற சுக்ரீவனைப் பார்த்து ராவணன் ஒரு க்ஷணம் திக்கு முக்காடிப் போனான். சமாளித்துக் கொண்டு சுக்ரீவனைப் பார்த்து ஏய் சுக்ரீவா, ஹீனக்ரீவாஸ்ரீ (கழுத்து இல்லாதவனே) என்று சொல்லியபடி, தன் கைகளால் சுக்ரீவனை பிடித்து கீழே தள்ளி விட்டான். ஒரு பந்தை எடுப்பது போல அவனை எடுத்து பூமியில் வீசினான். இருவரும் வேர்வை வடியும் உடலும், ஆங்காங்கு பட்ட காயங்களுடனும், தங்கள் நற்குடி பிறப்பின் காரணமான பெரும் தன்மையால் அடிக்கும் பொழுதும் தன் எல்லையை மீறாதவர்களாக, சால்மலி, கிம்சுக மரங்கள் இரண்டும் தங்களுக்குள் மோதிக் கொண்டது போல, முஷ்டிகளாலும், புறங்கையாலும், புஜங்களாலும், முன் கையாலும், ராக்ஷஸேந்திரனும், வானர ராஜனும் சண்டை செய்தனர். இருவருமே நல்ல பலசாலிகள். அவர்கள் சண்டையும் அந்த பலத்தைக் காட்டும் வகையில் இருந்தது. குட்டிசண்டை தான் என்றாலும், விட்டுக் கொடுக்க இருவரும் தயாராக இல்லை. கீழே தள்ளி, எடுத்து நிறுத்தி, வணங்கி அடிபடாமல் நகர்ந்து, கால்களின் நின்ற நிலையை விடாமல் சமாளித்துக் கொண்டு இருவரும் கோபுர வாயிலில் நின்றபடி, ஒருவரையொருவர் அடித்து சோர்ந்து போனார்கள். கீழே விழுந்தாலும், பூமியில் படாமல் திரும்ப எழுந்து நின்று, மேல் மூச்சு வாங்க நின்றவர்கள், சமாளித்துக் கொண்டு, கட்டிப் பிடித்து, கைகளை முறுக்கி, கைகளை கோர்த்து இந்த போட்டியைத் தொடர்ந்தனர். சிக்ஷா பலமும், சம்ப்ரமமும் இருவருக்கும் ஒத்த நிலையில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. யுத்த மர்மங்களை அறிந்து அதன்படி நியாயமாக த்வந்த யுத்தம் செய்தனர். சார்தூலமும், சிம்மமும் போல மோதிக் கொண்டு இருவருமே கர்வத்துடன், விட்டுக் கொடுக்க தயாராக இல்லாமல், இரண்டு யானைக் குட்டிகள் போல சண்டையிட்டனர். (ஞரஸெதலிநங) மார்பில் அடித்து, துன்புறுத்தி இருவரும் குப்புற தரையில் விழுந்தனர். ஒரே சமயத்தில் விழுந்தனர். திரும்ப எழுந்து ஒருவரையொருவர் வாயால் நிந்தித்துக் கொண்டு, திரும்ப யுத்த மார்கத்தில் குத்து சண்டையை ஆரம்பித்தனர். உடல் பயிற்சியும், முறையாக கற்றுத் தேர்ந்ததிலும் இருவரும் சமமே. எளிதில் ஆயாசமோ, கஷ்டமோ, வாட்டமோ அடையாத உடல் வலிமை மிக்கவர்கள். யானையின் துதிக்கை போல விளங்கிய புஜங்களால் ஒருவரையொருவர் தடுத்தபடி, சிறந்த யானை போன்றவர்கள் இருவரும், வெகு நேரமாக இந்த குத்துச் சண்டையை போட்டுக் கொண்டே மண்டல மார்கத்தில் சஞ்சரித்தனர். ஒருவரையொருவர் நெருங்கி அடிக்க முயலுவதும், இரை தேடும் பூனை போல பதுங்கி இருந்து, வேகமாக தாவி மோதுவதும், (குத்துச் சண்டையின் பரிபாஷைகள்) மண்டனங்களும், சக்ரங்களும், வித விதமான ஸ்தானங்களும், போவதும், வருவதும், கோமூத்ரி எனும் நிலையும், குறுக்காக பாய்வதும், வக்ரமாக போவதும், பரிமோக்ஷம், ப்ராஹாரம், வர்ஜனம், பரிதாவனம் என்றவை தவிர, அபிதிரவனம், ஆபாவம், ஆஸ்தானம்.சவிக்ரஹம், பராவ்ருத்தம், அபாவ்ருத்தம்,அவத்ருதம், அவப்ருதம், உபன்யஸ்தம், அபன்யஸ்தம், என்ற யுத்த மர்கங்களை நன்கு அறிந்தவர்கள், இருவரும் சுற்றிச் சுற்றி வந்து தொடர்ந்து தங்கள் குத்துச் சண்டையை செய்தனர். ராவணனும் வானரேந்திரன் சுக்ரீவனும் இந்த சமயத்தில் திடுமென ராக்ஷஸன் மாயா பலத்தை மேற் கொண்டான். இதை புரிந்து கொண்ட வானராதிபன், ஆகாயத்தில் தாவி குதித்து தன்னைக் காத்துக் கொண்டதோடு வெற்றி பெற்றவனாகவும் ஆனான். ராவணன் இருந்த இடத்திலேயே நின்றபடி சுக்ரீவனைக் காணாமல் திகைத்தான். ராவணன் சுற்றும் முற்றும் தேடிய நேரத்திலேயே, சுக்ரீவன், வெற்றி நடை போட்டுக் கொண்டு ஆகாயமார்கமாக, ராமரும் மற்றவர்களும் நின்ற இடம் வந்து சேர்ந்து விட்டான். சூரியனின் புத்திரன், தன் சாகஸத்தை முடித்துக் கொண்டு திரும்ப ஆகாய மார்கமாகவே வந்து சேர்ந்து ரகு குல ராஜ குமாரனை ஜய கோஷம் செய்து வாழ்த்தியபடி அருகில் வந்து நின்றான். இயல்பாகவே த்வந்த யுத்தம் செய்வதில் மகிழ்ச்சியடையும் வானரங்கள், வெற்றி பெற்ற சுக்ரீவனை வாழ்த்தி, கொண்டாடின.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண சுக்3ரீவ நியுத்3த4ம் என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 16 (423) விபீஷணாக்ரோச: (விபீஷணன் கோபம்)
விபீஷணன் தெளிவாக, நிதானமாகத் தான் சொன்னான். ஆயினும் காலத்தின் வசத்தால், அந்த ஹிதமான சொற்கள் ராவணனுக்கு சினத்தையே மூட்டின. சபத்னி (சக்களத்தி) கூட வாழ்வதும், ஆலகாலம் விஷம் கொண்ட பாம்புடன் வாழ்வதும் கூட சாத்யமாகலாம், ஆனால், மித்ரன் போன்ற வாய் வார்த்தைகளுடன், மனதால் சத்ருவாக இருப்பவனுடன் வாழ்தல் அரிது. ராக்ஷஸனே, தாயாதி, பங்காளி என்று வந்தால், உலகம் பூராவும் இதே போலத்தான் இருப்பதைக் கண்டிருக்கிறேன். தன் பங்காளிக்கு ஒரு கஷ்டம் என்றால் இந்த பங்காளி (தாயாதி) என்ற பந்துக்கள் அதிக சந்தோஷம் அடைவார்கள். முன்னுக்கு வந்து விட்ட சாதகனாகவோ, வைத்யனோ, தர்ம சீலமாக இருப்பவனையோ, இந்த பங்காளி கூட்டம் அலட்சியம் செய்யும். சூரனாக இருப்பவனை அவமதிக்கும். ஆததாயி எனும் இவர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து கொண்டு, கஷ்டத்தில் இருக்கும் பங்காளியை ஏளனம் செய்து மகிழ்வர். மனதில் ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டு, செயல் படும் இந்த பங்காளிகள், மிகவும் பயங்கரமானவர்கள். யானைகள் பாடும் ஒரு ஸ்லோகம் உண்டு. பத்மவனத்தில் ஒருமுறை கையில் கயிற்றுடன் வந்த மனிதர்களைப் பார்த்து யானைகள் பேசிக் கொண்டன. அக்னியோ, மற்ற ஆயுதங்களோ, பாசமோ (கயிறு) நமக்கு பயமே இல்லை. நமது இனத்தவரே தங்கள் சுயநலத்திற்காக நம்மையும் படுகுழியில் தள்ளுவார்கள். இந்த தாயாதி, ஞாதி எனும் பந்துக்கள் (பங்காளிகள்) தான் பயங்கரமானவர்கள். நம்மை பிடிக்க, நம் இனத்தவரையே பயன்படுத்திக் கொள்கின்றனர். சந்தேகமேயில்லை. ஞாதீ எனும் பங்காளியிடம் பயப்பட வேண்டும் என்பது நாம் அறிந்ததே. பசுக்களிடம் நிறைவான செல்வம் இருப்பது போல, ப்ராம்மணனிடம் அடக்கம் இருப்பது போல, ஸ்த்ரீகளிடம் சாபல்யம் இருப்பது போல, பங்காளிகளிடம் பொறாமை நிறைந்திருக்கும். அதனால் இவர்களிடம் கவனமாகத் தான் இருக்க வேண்டும். அதனால் எனக்கு இது விருப்பமில்லை. எப்படி நான் உலகில் பெருமை வாய்ந்தவனாக, ஐஸ்வர்யம் நிறைந்தவனாக, நல்ல குலத்தில் பிறந்தவனாக, சத்ருக்களுக்கு நினைத்தாலே பயம் தோன்றும்படி அவர்கள் சிந்தையில் நிலைத்து இருக்கிறேனோ, அதே போல இருக்கவே விரும்புகின்றேன். குளத்தில் தாமரை இலைகளில் விழுந்த நீர் பட்டும் படாமலும் இருப்பது போலத்தான் இந்த உறவினர். இப்படிபட்ட பண்பற்றவர்களுடன் நட்பு கொள்வதும் தாமரை இலை தண்ணீர் போலத்தான். வண்டு தாகம் வந்தால் ரஸத்தைக் குடிக்க மட்டுமே வருவது போலத்தான். உன் போன்ற பண்பற்றவர்களுடன் உறவினன் என்று இசைந்து இருப்பதும் தேவையற்றதே. ஸ்நானம் செய்து விட்டு வந்து யானை தன் தலையில் தானே சேற்றை வாரி இறைத்துக் கொள்வது போலத்தான், உன் போன்ற பண்பற்றவர்களின் நட்பும். உன்னையன்றி வேறு யாராவது இப்படி பேசியிருந்தால், விபீஷணா இவ்வளவு நேரம் உயிருடன் இருக்க மாட்டான். திக், குலபாம்ஸன (கஷ்டம், குலத்தை கெடுக்க வந்தவனே) குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பே, என்றான் ராவணன். ஆத்திரத்தின் உச்சியில் நின்று கத்திய ராவணனின் இந்த வார்த்தைகளைக் கேட்டபின், நியாயவாதியான விபீஷணன் இதற்கு மேலும் பொறுக்க மாட்டாதவனாக, நான்கு ராக்ஷஸர்களுடன் குதித்து எழுந்து விட்டான். தானும் ஆத்திரம் அடைந்தான். ஆகாயத்தில் நின்று கொண்டு தமையனான ராவணனைப் பார்த்து அதே வேகத்தில் பதில் சொன்னான். என் தமையன் நீ. என்னை என்ன வேண்டுமானாலும் சொல். மூத்தவன் தந்தைக்கு சமமாக மதிக்கப் பட வேண்டியவன். தர்ம வழியில் செல்லாமல் கஷ்டத்தை எதிர் கொள்கிறாய் என்பதால் சொன்னேன். தவறாக எண்ணிக் கொண்டு என்னைப் பார்த்து மிகக் கடுமையாக பேசுகிறாய். இதை என்னால் பொறுக்க முடியவில்லை. தசானனே, உன் நன்மைக்காக ஹிதமாக எடுத்துச் சொன்னேன். காலத்தின் நிர்பந்தம். உனக்கு ஏற்கவில்லை. உன் நல்ல காலம் முடிந்து விட்டது போலும். அதனால் தான் என் சொல் உனக்கு ஏற்கவில்லை. இப்படித்தான் விதியில் பிடியில் இருப்பவர்கள், என்னதான் தேர்ந்தவர்களாக இருந்தாலும், நல்ல உபதேசத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ராஜன், எப்பொழுதும் பிரியமாக பேசுபவர்கள் சுலபமாக கிடைப்பார்கள். பிரியமில்லாத ஹிதமான வார்த்தையைச் சொல்ல தயங்குவார்கள். இப்படி உண்மை நிலையை எடுத்துச் சொல்பவனும், கேட்பவனும் மிகவும் அரிது, அரணிக் கட்டையில் அக்னி பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்தபின் அதை தவிர்ப்பது எப்படி முடியாதோ, அதே போலத்தான். கூர்மையான ராம பாணங்கள், நெருப்புத் துண்டங்கள் போல மேலே விழும். அவை உன் மேல் பட்டு, நீ தோற்று விழுவதை பார்க்க எனக்கு மனம் இல்லை. சூரர்களாக, பலவான்களாக, அஸ்திர சஸ்திரம் அறிந்தவர்களாக இருந்தாலும், யுத்தம் என்று வந்தால், முடிவு எப்படியும் இருக்கலாம். எந்த கட்சியினர், விதியின் பிடியில் இருக்கிறார்களோ, எவர்களுக்கு அழிவு காலம் வந்து விட்டதோ, அவர்கள் தான் வீழ்வார்கள். மணல் வீடு போல சரிந்து விழுவர். அதனால் என்னை மன்னித்து விடு. நீ பெரியவன். உன் நன்மைக்காக நான் சொன்னது பிடிக்கவில்லையென்றால், விட்டு விடு. உன்னையும் இந்த நகரத்தையும் காப்பாற்றிக் கொள். ராக்ஷஸர்களையும் சேர்த்து. உனக்கு நன்மையுண்டாகட்டும். நான் போகிறேன். நான் இல்லாமல் சுகமாக இரு. நிசாசரனே, உன் நன்மைக்காகத்தான், படுகுழியில் விழ இருக்கும் உன்னைத் தடுக்கிறேன். அது உனக்கு பிடிக்கவில்லை. அயுட்காலம் முடிந்து விட்ட நிலையில் உள்ளவர்கள், நண்பர்கள் சொல்லும் ஹிதமான சொற்களை ஏற்றுக் கொள்வதில்லை.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீஷணாக்ரோச: என்ற பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 17 (424) விபீ4ஷண சரணாகதி நிவேத3னம் (விபீஷண சரணாகதி)
ராவணனின் சகோதரன், கடுமையாக பதில் சொல்லி விட்டு ராகவன் இருந்த இடத்திற்கு முஹுர்த்த நேரத்தில் வந்து சேர்ந்தான். ராமனும், லக்ஷ்மணனும் அவனைக் கண்டார்கள். மேரு மலையின் சிகரம் போல பெருத்த உருவத்துடன், ஒளி வீசும் மின்னல் போல, ஆகாயத்தில் நின்றவனை, பூமியிலிருந்து வானரத் தலைவர்களும் கண்டனர். மேகமோ (அசலம்) மலையோ எனும்படி இருந்த விபீஷணன், வஜ்ராயுதம் போல ப்ரபையுடன் திவ்யமான ஆபரணங்கள் அலங்கரிக்க, ஆயுதங்களை ஏந்தியவனாக, இருந்தான். அவனைத் தொடர்ந்து வந்த நான்கு ராக்ஷஸர்களும், அதே போல கையில் ஆயுதங்களுடனும், நல்ல ஆபரணங்களை உடலில் தரித்துக் கொண்டவர்களாகவும் விளங்கினர். தன்னையும் சேர்த்து ஐந்து பேராக வந்து நின்ற விபீஷணனைப் பார்த்து சுக்ரீவன், மற்ற வானர வீரர்களுடன் இது பற்றி பேசி யோசிக்கலானான். சற்று நேரம் யோசித்த பின்னும் ஒரு முடிவுக்கும் வர முடியாமால், ஹனுமான் முதலான வானரர்களை அழைத்து விசாரித்தான். இதோ இந்த நான்கு ராக்ஷஸர்களுடன் வருபவன், கையில் ஆயுதங்களோடு வருகிறானே, நம்மைக் கொல்லத்தான் வருகிறானோ என்றான். சுக்ரீவனின் பேச்சைக் கேட்டு மற்ற வானரங்கள் தற்காப்புக்காக, சால மரங்களையும், பெரிய கற்களையும் எடுத்து வைத்துக் கொண்டு தயாராக நின்றனர். ராஜன், சீக்கிரம் உத்தரவு கொடுங்கள். இந்த துராத்மாவை வதம் செய்து விடுகிறோம் என்றனர். அல்ப தேஜஸ் உடைய இந்த ராக்ஷஸர்களை சீக்கிரமே பூமியில் விழச் செய்கிறோம் என்று ஆர்பரித்தன. தங்களுக்குள் இவர்கள் ஏதோ பேசிக் கொள்வதைப் பார்த்த விபீஷணன், சமுத்திர கரை வந்தும், வட திசையில் ஆகாயத்திலேயே நின்றான். நிறைந்த அறிவுடையவனான விபீஷணன் பெரிய குரலில், சுக்ரீவனையும் மற்ற வானரர்களையும் பார்த்து ராவணன் என்ற ராக்ஷஸ ராஜா, தவறு செய்து கொண்டிருக்கிறான். அவன் ராக்ஷஸேஸ்வரன். எனக்கு மூத்த சகோதரன். அவனுக்கு இளைய சகோதரன், நான் விபீஷணன் என்று பெயர் பெற்றவன். இந்த ராவணன் தான் ஜனஸ்தானத்திலிருந்து சீதையை அபகரித்துக் கொண்டு வந்தவன். தடுத்த ஜடாயுவையும் வதம் செய்து விட்டவன். சீதை, ராக்ஷஸ ஸ்த்ரீகள் நாலாபுறமும் சூழ, தன் வசத்தில் சுதந்திரமாக இருக்க முடியாதபடி, பலத்த காவலுடன், நன்றாக ரக்ஷிக்கப் பட்டு வருகிறாள். நான் அவன் செயலின் விபரீதத்தை, அதன் காரண காரியங்களோடு பலவிதமாக புத்தி சொல்லி பார்த்தேன். நல்லபடியாக, சீதையை ராகவனிடம் கொடுத்து விடு என்று யாசித்தேன். திரும்பத் திரும்ப நான் சொல்லியும், ராவணன் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. மரணத் தறுவாயில் உள்ளவனுக்கு, விதியும் விபரீதமாக இருந்தால், மருந்து வேண்டியிருப்பதில்லை, அது போல ராவணனுக்கு என் வேண்டுகோள் ஏற்கவில்லை. அந்த நான், ராவணனால் கடுமையாக ஏசப் பட்டு, தாஸன் போல அவமதிக்கப் பட்டேன். இப்பொழுது என் புத்திரர்களையும், மனைவி மக்களையும் விட்டு ராமனை சரணடைகிறேன். சர்வலோக சரண்யனான ராமனிடம் சீக்கிரம் சொல்லுங்கள். தயவு செய்து விபீஷணனான நான் சரணம் வேண்டி வந்து நிற்பதைச் சொல்லுங்கள். அதிக அனுபவம் இல்லாத சுக்ரீவன் இதைக்கேட்டு, லக்ஷ்மணனுக்கு முன்னால் பரபரப்புடன் ராமனிடம் சென்று இந்த செய்தியைச் சொன்னான். ராவணனுடைய இளைய சகோதரனாம், விபீஷணன் என்ற பெயருடையவன், நான்கு ராக்ஷஸர்களுடன் வந்து நிற்கிறான். உங்களிடம் சரணடைய வந்திருப்பதாக தெரிவிக்கச் சொல்கிறான். பரந்தபனே, மந்த்ராலோசனையிலும், வ்யூஹம் அமைத்து சேனையை வடிவமைப்பதிலும், நயத்திலும், ஒற்றர்களைக் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ, அதையும் தீர்மானித்துக் கொண்டு ஆணையிடுங்கள். உங்கள் நலம், நம் வானரங்களின் க்ஷேமம், எதிரிகளின் எண்ணம், இவைகளை ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். இந்த ராக்ஷஸர்கள் விரும்பிய வண்ணம் உருவத்தை மாற்றிக் கொள்ள வல்லவர்கள், மாயாவிகள் என்பது தெரியும்., கண்ணுக்குத் தெரியாமல் நின்றும் சண்டை போடுவார்கள். நல்ல சூரர்கள். போரின் நெளிவு சுளிவுகளை அறிந்தவர்கள். அதனால் வெளிப்பார்வைக்குத் தெரிவதை வைத்து இவர்களை ஒரு போதும் நம்பக் கூடாது. ராக்ஷஸேந்திரனுடைய ஒற்றனாகக் கூட இருக்கலாம். இளைய சகோதரன் என்கிறான். உள்ளே நுழைந்து, நமது நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, பின் அடித்தாலும் அடிக்கலாம். தன் மித்திரர்கள் கூட்டம், மூல பலம், சேவகம் செய்யும் ஊழியர்கள் பலம் இவற்றை ஏற்றுக் கொள்ளலாம். சத்ரு சகாயத்தை நம்பக் கூடாது. பிறப்பினால் இவன் ராக்ஷஸன். உடன் பிறந்தவன், அனுசரித்து மித்ரனாக இருந்தவன். எதிரி பக்ஷத்திலிருந்து வந்து நிற்கிறான். இவனை எப்படி நம்பலாம்.? ராவணன் தான் ரகசியமாக அனுப்பி வைத்திருக்கிறான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவனை உடனே தண்டிப்பது தான் சிறந்த வழி என்று எனக்குத் தோன்றுகிறது. பொறுமையின் பூஷணமாக நிற்பவனே இந்த ராக்ஷஸன் ஏதோ கெட்ட எண்ணத்தோடு தான் வந்திருக்கிறான். நம்பி இடம் கொடுத்தால், நம்மையே அழித்து விடுவான், ஜாக்கிரதை. சந்தேகத்துக்கு இடம் கொடாமல் எதிரியின் ஒற்றன், சாமர்த்யமாக உள் விஷயங்களைத் தெரிந்து கொண்டு, சமயம் வாய்த்த பொழுது ஆந்தை, காக்கை கூட்டத்தை அழிப்பது போல அழித்து விடுவான். இவனை வதம் செய்வோம். உடன் வந்துள்ள மந்திரிகளையும் சேர்த்து கடுமையாகத் தண்டிப்போம். கொடியவனான ராவணனின் சகோதரன் இவன் என்று இவ்வாறு ராமனைப் பார்த்து படபடப்புடன் தன் எண்ணத்தை வெளியிட்டு விட்டு, சுக்ரீவன் மௌனமாக நின்றான். சேனைத் தலைவன் சுக்ரீவன். அவன் எண்ணம் தெரிந்து விட்டது. ராமர் ஹனுமான் முதலானோர் பக்கம் திரும்பினார். வானர ராஜன், ராவணனின் இளைய சகோதரன் பற்றி தன் எண்ணத்தை சொல்லி விட்டார். நீங்களும் கேட்டீர்கள். அவர் மனதில் தோன்றியதை விவரமாகச் சொல்லக் கேட்டீர்கள். நெருக்கடி வரும் பொழுது என்ன தான் ஆற்றல் நிரம்பியவன் ஆனாலும், நண்பர்களையும் கலந்தாலோசிப்பது அவசியம். உங்கள் மனதில் உள்ளதைச் சொல்லுங்கள் என்று ராமன் கேட்கவும், மற்ற வானர வீரர்களும் மரியாதையுடன் தங்கள் எண்ணத்தைச் சொன்னார்கள்.
ராகவா, மூன்று உலகிலும், தங்கள் அறியாதது ஒன்றும் இல்லை. நட்பின் இலக்கணமாக திகழும் தாங்கள் எங்களுக்கும் மதிப்பு கொடுத்து விசாரிக்கிறீர்கள். தாங்கள் தான் சத்ய விரதன். தார்மிகன், த்ருடமான விக்ரமம் உடையவன், சூரன், ஆராய்ந்து செயல் படுபவன். நல்ல நினவாற்றலும், கட்டுப்பாடும் உடையவன். நண்பர்களிடம் கூட சமமான அந்தஸ்து கொடுத்து அவர்கள் எண்ணத்தை தெரிந்து கொள்ள விழைகிறீர்கள் என்றான் சுக்ரீவன். உன் மந்திரிகள், ஒவ்வொருவராக தங்கள் எண்ணத்தைச் சொல்லட்டும். தாங்கள் நினைப்பதை, சரியான காரணங்களுடன், செய்ய வேண்டியது என்ன என்பதையும் சொல்லட்டும். அனைவருமே புத்திசாலிகள், ஆற்றல் மிகுந்தவர்கள், என்பது தெரிந்ததே என்றான், ராகவன். முதலில் அங்கதன் எழுந்தான். விபீஷணனை பரீக்ஷை செய்து பார்ப்போம். சத்ரு சைன்யத்திலிருந்து வந்தவனை எப்பொழுதும் சந்தேகத்தோடு தான் கண் காணிக்க வேண்டும். திடுமென வந்த உடனேயே விபீஷணனை நம்பத் தகுந்தவனாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. உள் மனத்தின் எண்ணங்களை மறைத்துக் கொண்டு நல்லவர்கள் போல நடிப்பார்கள். சமயம் வாய்த்த பொழுது இடைவெளி கிடைத்ததை பயன் படுத்திக் கொண்டு பிளவை ஏற்படுத்துவார்கள். அதனால் மிகப் பெரிய அனர்த்தம் விளையும். எந்த ஒரு செயலையும், செய்யும் முன் அதனால் தோன்றக் கூடிய நன்மை, தீமைகளை கணித்துக் கொண்டு செய்யத் துணிய வேண்டும். குணம் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். தோஷம் அதிகமானால், விட்டு விடுவோம். இவனிடத்தில் நமக்கு குறைகளே அதிகம் தெரியுமானால், மறு யோசனையின்றி இவனைத் தியாகம் செய்து விடுவோம். அப்படியின்றி குணங்களே அதிகம் இருந்தால், சந்தோஷமாக ஏற்றுக் கொள்வோம் என்றான். சரபன் எழுந்தான். நடக்கக் கூடிய விஷயமாக தன் எண்ணத்தைச் சொன்னான். அரசனே, ஒற்றர்களை அனுப்பி இவனை கண் காணிக்கலாம். சூக்ஷ்ம புத்தியுள்ள ஒற்றர்கள் இவனைச் சுற்றி நடப்பதை தெரிந்து கொண்டு வந்த பின் நாம் யோசித்து மேற் கொண்டு செய்ய வேண்டியதை யோசிப்போம்ஏ என்றான். ஜாம்பவான் எழுந்தான். சாஸ்திரங்களை அறிந்தவர் ஆனதால், அதில் நிறைய அனுபவம் உடையவர். ஆதலால் தன் எண்ணத்தைச் சொன்னார். ராக்ஷஸேந்திரனும், விபீஷணனும் ஒருவருக்கொருவர் கருத்து வேறு பாடு உடையவர்களே. காலம் தவறி வந்து நிற்கிறான். அது தான் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. யோசித்து செய்யலாம். இதன் பின் மைந்தன் எழுந்தான். நியாய, அநியாயங்களை அறிந்தவன், கருத்தாழம் மிக்க செய்தியைச் சொன்னான். இந்த விபீஷணன் ராவணனின் தம்பி. இவனை மதுரமாக விசாரிக்கலாம். மெதுவாக பேச்சு கொடுத்து இவனுடைய உள்ளெண்ணத்தை புரிந்து கொள்வோம். அதன் பின் தீர்மானிப்போம். துஷ்டனா, துஷ்டன் இல்லையா என்பது சிறிது நேரம் பேச்சுக் கொடுத்தால் தெரிந்து விடும் என்றான். இதன் பின் அனுபவம் மிக்க ஹனுமான் எழுந்தான். ராகவா தாங்கள் அறியாதது எதுவும் இல்லை. தங்கள் புத்தி கூர்மைக்கு முன் ப்ருஹஸ்பதியும் வாயடைத்து நிற்க வேண்டியதே. எங்களுக்கு ஒரு மதிப்பு கொடுத்து விசாரிக்கிறாய் என்பதால் சொல்கிறோம். மற்ற மந்திரிகள் சொன்ன விஷயங்களும், இப்பொழுது நடந்துள்ள செயலும் ஒத்து போகவில்லை. ஒரு வேலையில் ஈடுபாட்டுடன் செய்து காட்டாத வரை ஒருவனுடைய சாமர்த்யத்தை நாம் எடை போடக் கூடாது. கண்டவுடன் ஒருவரைப் பற்றி அபிப்பிராயம் நாமே எற்படுத்திக் கொள்வது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. ஒற்றர்களை அனுப்புவோம் என்று ஒருவர் சொன்னார். இதில் பலன் எதுவுமில்லை என்பதால் ஏற்கத் தக்கதாக இல்லை. இதில் எந்தவிதமான பொருளோ, செல்வமோ சம்பந்தப் பட வில்லை. காலம் கடந்து இந்த விபீஷணன் வந்திருக்கிறான் என்று ஒரு வாதம். இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில், இந்த தேச காலமும், அவ்வப்போழுது மாறும். மனிதனுக்கு மனிதன் குண தோஷங்கள் மாறுவது போல மாறிக் கொண்டே இருக்கும். ராவணனிடத்தில் துஷ்டத்தனத்தைக் கண்டு, தங்கள் சக்தியையும் அறிந்து கொண்டு, இப்பொழுது வந்திருப்பது அவன் புத்திசாலித் தனத்தை தான் காட்டுகிறது. யாரும் அறியாமல் ரகஸியமாக அவனை கண் காணிக்கலாம் என்றும் சொல்லப் பட்டது. வந்தவன் நேர்மையாக இருந்தால், கேள்விக் கேட்கப் படுவதைப் பார்த்து சந்தேகம் வரலாம். இதனால் நல்ல நண்பனாக வர இருந்த ஒருவனை நாம் இழந்தவர்களாக ஆவோம். நல்ல எண்ணத்தோடு, நம்பிக்கையோடு வருபவனை அனாவசியமாக சந்தேகக் கண் கொண்டு பார்த்து நாமே நஷ்டமடைவோம். மற்றவர்களுடைய மனோ பாவத்தை சட்டென்று நாம் தெரிந்து கொள்வது அவ்வளவு சுலபமான செயலும் அல்ல. ஸ்வபாவமாக நிபுணனாக இருப்பவன் தன் மனோ பாவத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்கவும் அறிந்திருப்பான். இவன் சொல்வதைக் கேட்டால், கெட்ட எண்ணத்தோடு வருவதாகத் தெரியவில்லை. இவன் முகமும் ப்ரஸன்னமாக இருக்கிறது. கபடு உடையவனாகத் தெரியவில்லை. சந்தேகம் இல்லாத தீர்மானமாக புத்தியுடன், ஸ்வஸ்தமாக இருக்கிறான். கெட்டவனாக இருந்தால், நேருக்கு நேர் நிற்க மாட்டான். இவன் சொல்லும் தீயதாகத் தெரியவில்லை. அதனால் எனக்கு இவனுடைய நல்லெண்ணத்தில் சந்தேகம் இல்லை. மறைத்து வைத்துக் கொண்டாலும் ஒருவனது உடல் வாகும், முழுவதும் மறைந்து விடாது. உள் மனதின் பாவனைகளை அரசர்களின் நடையுடை பாவனைகள் கண்டிப்பாக காட்டிக் கொடுத்து விடும். சரியான தேச, காலம் அறிந்து தான் வந்திருக்கிறான். தாங்கள் செயல் வீரன், வேகமாக பலன் தரும் விதமாக தங்கள் பிரயோகங்களைக் கண்டிருப்பான். தங்கள் செய்கைகளையும், அதன் பலன்களையும், ராவணனின் பொய்யான பகட்டு வார்த்தைகளையும் கேட்டு உங்கள் பக்கம் அதிக நன்மை கிடக்கலாம் என்று நம்பி வந்திருக்கலாம். வாலி வதமும், சுக்ரீவனின் ராஜ்ய பட்டாபிஷேகமும் அவன் காதுகளுக்கும் எட்டியிருக்கும். தனக்கும் ராஜ்யம் கிடைக்கக் கூடும் என்ற அபிலாஷையுடன், புத்திசாலித்தனமாக இங்கு வந்திருக்கலாம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது இவனை நம் பக்கம் எற்றுக் கொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். இது என் எண்ணம். இந்த ராக்ஷஸனின் நேர்மை பற்றி நான் சொன்னதை ஏற்றுக் கொள்வதோ, தள்ளுவதோ, தங்கள் இஷ்டம். புத்திசாலிகளின் சிறந்தவனே, உங்கள் சொல் தான் பிரமாணம் என்று முடித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீ4ஷண சரணாகதி நிவேத3னம் என்ற பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 18 (425) விபீஷண ஸங்க்ரஹ நிர்ணய: (விபீஷணனை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தல்)
வாயு குமாரன் சொன்னதைக் கேட்டு ப்ரஸன்னமாக ஆன ராமர், தன் மனதில் ஏற்கனவே தீர்மானித்துக் கொண்டு விட்டாலும், மற்றவர்கள் அபிப்பிராயத்தையும் தெரிந்து கொள்ளும் பொருட்டு கேட்டுத் தெரிந்து கொண்ட பின், தன் எண்ணத்தைச் சொன்னார். நீங்கள் என் நலனை விரும்பும் நண்பர்கள். அதனால் விபீஷணனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளவே விரும்பினேன். எனக்கும் ஒரு எண்ணம் விபீஷணனிடத்தில் இருக்கிறது. சொல்கிறேன். கேளுங்கள். என் கொள்கை, யாராயினும், நண்பன் என்று சொல்லிக் கொண்டு வந்தால் எப்பொழுதும் கை விட மாட்டேன். அவனிடம் குறை இருந்தால் கூட பொருட்படுத்த மாட்டேன். நல்ல ஜனங்களுடைய குணமே அது தான். இதைக் கேட்டு சுக்ரீவன் குறுக்கிட்டு ஒரு விஷயம் சொன்னான். மற்றொரு வானரமும் விவரமாக இதையே சொன்னார். துஷ்டனோ, இல்லையோ, இந்த ராக்ஷஸன், இப்படிபட்ட ஒரு கஷ்டமான நிலையில் இருக்கும் சகோதரனை விட்டு வருகிறானே, மற்ற யாரைத் தான் சரியான சமயத்தில் கை விட்டு விலக மாட்டான்? இவனை எப்படி நம்ப முடியும்? சுக்ரீவன் சொன்னதைக் கேட்டு, மற்றவர்களையும் பார்த்த ராமர், சற்று சிரித்தபடி, லக்ஷ்மணன் பக்கம் திரும்பினார். லக்ஷ்மணனை விசாரித்தார். சாஸ்திரங்களை கற்று அறியாமலோ, பெரியவர்களை அண்டி சேவை செய்யாமலோ, சுக்ரீவன் இப்பொழுது பேசியது போல பேச முடியாது. சரியே. ஆனாலும் இதில் இன்னமும் சூக்ஷ்மமாக எனக்கு ஒரு விஷயம் தெரிகிறது. எல்லா அரசர்களிடமும், ப்ரத்யக்ஷமாகத் தெரிவது ஒன்று, லௌகீகமாக மற்றொன்று, என்று இரண்டுமே இருக்கும். நண்பரல்லாதவர், அந்த குலத்தில் உதித்தவர், மற்றொரு சூழ் நிலையில் வேறு ஒரு தர்மத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயமாக உத்தரவிடப் பட்டவர், கஷ்டகாலங்களில் எதிர்த்து நிற்பவர் என்று பல வகைப் படுவர். அதனால் தான் இவன் இங்கு வந்திருக்கிறான். தன்னைச் சார்ந்தவர்கள் சுற்றத்தார், உறவினர் இவர்களை பாபமில்லாதவர்கள், தன் குலத்தினர், நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று கொள்வது இயற்கை. அதனால் அரசர்களுக்கு இந்த சமயத்தில் இது போல வருபவனை சந்தேகிப்பது அவசியமே. மற்றொரு தோஷம் சொல்லப் பட்டது. இவன் உள்ளே வந்து எதிரி பலத்தை தெரிந்து கொண்டு போகத் தான் வந்திருக்கிறான் என்பதாக. இதற்கும் சாஸ்திர சம்மதமாக பதில் சொல்கிறேன். கேளுங்கள். நாம் அவன் குலத்தை சேர்ந்தவர்கள் அல்ல. நமது நடவடிக்கைகளைக் கொண்டு அவன் என்ன புரிந்து கொள்வான். மற்றொரு காரணம் யாரோ சொன்னார்கள். ராக்ஷஸனான விபீஷணன் ராஜ்யத்தை அடையும் ஆசை உடையவனாக இருக்கலாம். நம்மைக் கொண்டு அவன் ஆசை நிறைவேறும் என்று நினைத்து வந்திருக்கலாம். அதனால் விபீஷணனை ஏற்றுக் கொள்வோம், என்பதாக. எல்லா சகோதரர்களும் பரதனுக்கு இணையாக மாட்டார்கள். தந்தைக்கு மகன் என் போலவோ, நண்பர்கள் உன்னைப் போலவோ கிடைப்பது அரிது இவ்வாறு ராமர் சொல்லி நிறுத்தவும், லக்ஷ்மணனும் சுக்ரீவனுமாக எழுந்திருந்து பணிவாக சொன்னார்கள். இந்த விபீஷணன் ராவணன் அனுப்பித்தான் வந்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம், அப்படி இருந்தால் அவனை வதம் செய்வது தான் சரி என்று எனக்குத் தோன்றுகிறது. ராக்ஷஸன் வஞ்சக புத்தியுடன் இவனை இங்கு அனுப்பி, நம் நம்பிக்கைக்கு பாத்திரமாகும் படி நடந்து கொண்டு, ரகஸியமாக, நம்மிருவரில் ஒருவரையோ, இருவரையுமோ தீர்த்துக் கட்டும்படி சொல்லி உத்தரவிட்டு அனுப்பியிருக்கலாம். அல்லது லக்ஷ்மணனை கொல்லச் சொல்லி, உத்தரவிட்டு இருக்கலாம். அதனால் உடன் வந்துள்ள மந்திரிகளோடு வதம் செய்வது தான் சரி. கொடுமையான ராவணனின் உடன் பிறந்தவன், இவன். இவனை எப்படி நம்பலாம். என்று கேட்டு விட்டு சுக்ரீவன் மௌனமானான். ராமர் பதில் சொன்னார். துஷ்டனோ, துஷ்டன் இல்லையோ, யாராக இருந்தால் என்ன? இவன் இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸன் தான். ஆனாலும் என்ன? மிக சூக்ஷ்மமாகக் கூட எனக்கு துன்பம் விளைவிக்க யாராலும் முடியாது. பிசாசங்களோ, தானவர்களோ, யக்ஷர்களோ, பூமியில் உள்ள ராக்ஷஸர்களோ, என் விரல் நுனியால் நான் ஒருவனே வதம் செய்ய சக்தியுடையவனே. என் மனதில் வதம் செய்ய நினைத்து விட்டால், ஹரிகணேஸ்வரா, யாராலும் தடுக்க முடியாது. ஒரு க3தை4 கேள். ஒரு புறாவின் மனைவியை ஒருவன் வேட்டையாடி கொன்று விட்டான். பின்னால் ஒரு சந்தர்ப்பத்தில் அவன், அந்த புறாவிடமே சரணமடைந்தான். அந்த புறா, அவனையும் உபசரித்து தன் மாமிசத்தையே உணவாக ஏற்றுக் கொள்ள வேண்டியது. அந்த சத்ரு தான் தன் மனைவியைக் கொன்றவன் என்றும் அந்த புறா அறிந்திருந்தும். இப்படி ஒரு பக்ஷியே சரணன் என்று வந்தவனை ரக்ஷிக்குமானால், என் போன்ற ஜனங்கள் ஏன் மறுக்க வேண்டும்? கண்வ ரிஷியின் மகன் கண்டு (ஒருவர் பெயர்) பாடிய பாட்டைக் கேட்டிருப்பீர்கள். தீனமாக, கை கூப்பியபடி வந்து நின்று நீ தான் கதி என்று சரணம் யாசிப்பவனை, சத்ருவே ஆனாலும், கருணையுடன் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும், கொல்லக் கூடாது. கஷ்டத்தில் இருப்பவனோ, அல்லது கர்வத்துடன் செல்வாக்குடம் இருப்பவனோ, மற்றவனை சரணம் என்று அடைந்தால், தன் உயிரைக் கொடுத்தாவது அவனைக் காப்பாற்ற வேண்டும். பயத்தினாலோ, மோகத்தாலோ, காமத்தினாலோ, ரக்ஷிக்காமல் விட்டு விட்டால், தன் சக்திக்கேற்ப நியாயமான முறையில் இந்த கடமையை செய்யத் தவறினால், உலகில் நிந்திக்கப்படும் பாபியாக ஆவான். சரணம் அடைந்தவனை ரக்ஷிக்காதவன், நம் கண் முன்னாலேயே நாசம் அடைவான். அவனுடைய சுக்ருதம், செய்த புண்யம் அவ்வளவும் வீணே. காப்பாற்று என்று வந்தவனை கை விட்டால், அதில் வரும் தோஷம் மிகப் பெரியது. இது ஸ்வர்கத்தைத் தராது. கீர்த்தியை நாசமாக்கும். பலமோ, வீர்யமோ எதுவுமே இந்த செயலில் கிடையாதுஎ இவ்வாறு கண்டு முனிவர் சொன்னதைத் தான் நான் பின் பற்றப் போகிறேன். சரணம் என்று வந்தவனை காப்பாற்றுவது தான் தர்மம். புகழும் (ஸ்வர்கம்) நல்ல கதியும் தரக் கூடியது. இதனால் நம் நிலை மேன்மை பெறுமேயன்றி குறையாது. ஒரு முறை வந்து வணங்கி என்னைப் பார்த்து நீ தான் கதி என்று வந்தவனை ஒரு போதும் கை விட மாட்டேன். உலகில் எந்த ஜீவனாக இருந்தாலும் சரி, இது என் விரதம். ஹரி ஸ்ரேஷ்டா அவனை அழைத்து வா. நான் அவனுக்கு அபயம் அளித்தாகி விட்டது. சுக்ரீவாஸ்ரீ வந்திருப்பது, விபீஷணன் தானா அல்லது ராவணனாகவே இருந்தாலும் அழைத்து வாஏ என்றார்.
ராமரின் இந்த பேச்சைக் கேட்டு, வானர வீரனான சுக்ரீவன், குரல் தழ தழக்க, அன்புடன் பதில் சொன்னான். இதில் ஆச்சர்யப் பட என்ன இருக்கிறது. நீ தர்மம் அறிந்தவன். லோக நாதன். எல்லோருக்கும் சுகத்தையே தருபவன். பெருந்தன்மையோடு நல்ல வழியில் நினைப்பவன். நீ சொன்னதைக் கேட்டு என் மனமும் மாறி விட்டது. என்னுடைய அந்தராத்மாவும், இந்த விபீஷணன் மாசற்றவன் என்றே நினக்கிறது. அனுமானம், பா4வம் இவற்றாலும், நன்றாக பரீக்ஷை செய்தும் இவனை ஏற்றுக் கொள்வது தான் சரி என்று நம்புகிறேன். சீக்கிரமே, அவனும் எங்களுக்கு சமமாக இங்கே இருக்கட்டும். ராகவா விபீஷணனும் நல்ல அறிவாளி. நம்முடன் நட்பு கொண்டு நண்பனாக இங்கு இருக்கட்டும். இவ்வாறு சொல்லி, சுக்ரீவன் சீக்கிரமாக விபீஷணனை காணச் சென்றான். இந்திரன், வைனதேயனான பக்ஷிராஜனைக் காணச் சென்றது போல இருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீ4ஷண சங்க்3ரஹ நிர்ணயோ என்ற பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 19 (426) ஸர தல்ப சம்வேச: (தர்ப்பை ஆசனத்தில் அமருதல்)
ராமர் அபயம் கொடுத்து ஏற்றுக் கொண்ட பின், ராவணன் சகோதரனான விபீஷணன், பூமியை நோக்கி ஆகாயத்திலிருந்து மிக்க மகிழ்ச்சியுடன் இறங்கினான். அவனிடம் நேசம் கொண்டு உடன் வந்த மந்திரிகளும் அதே போல இறங்கி அருகில் வந்து நின்றனர். ராமரை நெருங்கி அவர் காலில் விழுந்து வணங்கினான். நான்கு ராக்ஷஸர்களுடன் சரணம் வேண்டி, தானும் தன் மந்திரிகளுமாக ராமர் பாதங்களில் விழுந்து எழுந்தவன், ராமரிடம் தன் நிலையை விவரித்தான். ராகவா, நான் ராவணனின் இளைய சகோதரன். அவனால் மிகவும் அவமதிக்கப் பட்டேன். தர்மமோ, நியாயமோ, மனதை சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கச் செய்ய வேண்டும். தாங்கள், உலகில் எல்லா ஜீவன்களுக்கும் அபயம் அளிப்பவர் என்பதால் உங்களை சரணமடைந்தேன். லங்கையை, என் சுற்றார், உற்றார், உறவினர்கள், செல்வங்கள் எல்லாவற்றையும் துறந்து வந்து விட்டேன். இனி என் சுகமோ, வாழ்க்கையோ, ராஜ்யமோ, உங்கள் கையில் தான் இருக்கிறது. இவ்வாறு விபீஷணன் சொன்னதைக் கேட்டு ராமர், அவனை சமாதானப் படுத்தும் விதமாக கண்களால் அன்பு ததும்பப் பார்த்து, சொல். ராக்ஷஸர்களின் பலம் என்ன? குறை என்ன? என்று கேட்டார். ராமர் கேட்டபடி, விபீஷணன் ராவணனுடைய பலத்தைப் பற்றி விவரமாக சொல்லலானான். ராவணனை உலகில் யாராலும் வதம் செய்ய முடியாது. தேவர்களோ, தானவர்களோ, ராக்ஷஸர்களோ அவனை நெருங்கக் கூட முடியாது. பத்து தலைகள், ப்ரும்மாவின் வர தானத்தால் பெற்றவன். ராவணனுக்கு அடுத்தவன், எனக்கு மூத்த சகோதரன், கும்பகர்ணன். நல்ல வீர்யமுடையவன். இந்திரனுக்கு சமமாக யுத்தம் செய்யக் கூடிய ஆற்றல் படைத்தவன். ராமா, அவனுடைய சேனாபதி, ப்ரஹஸ்தன் என்று கேள்வி பாட்டிருக்கலாம். கைலாஸத்தில் இவன் மணிபத்ரனை வென்றான். கோ3தா3ங்குலித்ராணம் என்பதையும், பிளக்க முடியாத கவசத்தையும் அணிந்தவர். போரில் வில்லேந்தி, கண்ணுக்கு புலப்படாமல் நின்று யுத்தம் செய்பவன், இந்திரஜித். அணி வகுத்து சேனையை நிறுத்தி வைத்து, பெரும் போரில், அக்னியை வணங்கி, மறைந்து நின்று இந்த இந்திரஜித் யுத்தம் செய்து எதிரிகளை வதைப்பான். இவனுடைய போர் முறைகளே புதுமையானவை. ஊகிக்க முடியாதவை. மகோதர, மகாபார்ஸ்வ என்ற ராக்ஷஸர்கள், அகம்பனன் இவர்கள் அவனுடைய சேனைத் தலைவர்கள். லோக பாலர்களுக்கு சமமாக யுத்தத்தில் வீரத்தைக் காட்டுவார்கள். பத்து கோடி, ஆயிரம் கோடி ராக்ஷஸர்கள் அதாவது பத்தாயிரம் கோடி ராக்ஷஸர்கள் விரும்பியபடி உருவத்தை மாற்றிக் கொண்டு ராவணனுடன் இருந்தனர். லங்கா வாசிகளான இந்த ராக்ஷஸர்களை, நிணமும் மாமிசமுமாக புசிக்கக் கூடியவர்களை வெற்றிகரமாக நடத்திச் சென்று, லோக பாலர்களை வெற்றி கொண்டான். தடுத்த தேவர்களையும் ராவணன் போரில் முறியடித்தான். விபீஷணன் சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டு, யோசித்தபடி த்ருட பராக்ரமனான ராமன், பதில் சொன்னார். விபீஷணா, ராவணனின் படைத் தலைவர்களையும் அவர்கள் பராக்ரமத்தையும் பற்றிச் சொன்னாய். தெரிந்து கொண்டேன். இந்த ப்ரஹஸ்தன், சகோதரர்களுடன் சேர்த்து ராவணனை வதம் செய்யப் போகிறேன். தசானனனுக்குப் பின் உன்னை அரசனாக ஆக்குவேன். இது சத்யம். ரஸாதலம் சென்றாலும், பாதாளத்தில் பதுங்கினாலும், ராவணனைக் கண்டு பிடித்து, அவன் ப்ரும்மாவிடமே அடைக்கலம் புகுந்திருந்தாலும் விட மாட்டேன். நான் உயிருடன் இருக்கும் வரை அவனை தப்ப விட மாட்டேன். புத்திரர்கள், படை பலம், பந்துக்கள், உற்றார்கள், எல்லோருமாக சேர்த்து ராவணனைக் கொல்லாமல் அயோத்தியில் நுழைய மாட்டேன். என் மூன்று சகோதரர்களின் பேரில் ஆணை. ராமர் இவ்வாறு ஆவேசமாகச் சொன்னதைக் கேட்டு தலை வணங்கி தர்மாத்மாவான விபீஷணன் சொன்னான். ராக்ஷஸர்களை வதம் செய்ய உதவி செய்வேன். உயிர் உள்ளவரை உங்கள் படையில் இருந்து போராடுவேன் என்று சத்யம் செய்தான். இவ்வாறு சொன்ன விபீஷணனை அணைத்துக் கொண்ட ராமர், மகிழ்ச்சியுடன் லக்ஷ்மணனைப் பார்த்து லக்ஷ்மணா, சமுத்திர ஜலத்தைக் கொண்டு வா. அதைக் கொண்டு இந்த ஞானியான விபீஷணனை முழுக்காட்டு. நான் ப்ரஸன்னமாக சாட்சியாக நிற்க, இவனை ராக்ஷஸ ராஜாவாக அபிஷேகம் செய் என்றார். இவ்வாறு உத்தரவு இட்டதும், லக்ஷ்மணனும் அவ்வாறே விபீஷணனை ஜலத்தால் முழுக்காட்டி, வானர வீரர்களின் மத்தியில், ராமரின் கட்டளைப் படி அரசனாக அபிஷேகம் செய்து வைத்தான். ராமருடைய கருணையை, (அபயம் என்று விபிஷணனை உடனே ஏற்றுக் கொண்டு அருளியதை) கண்டு ராமரை புகழ்ந்து, சாது, சாது நன்று, நன்று என்று பலமாக கோஷம் இட்டு ஆரவாரத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. ஹனுமானும் சுக்ரீவனும் விபீஷணனைப் பார்த்து இந்த எல்லையற்ற சமுத்திரத்தை எப்படிக் கடப்போம் என்று வினவினார்கள். சேனைகளுடன், எல்லா வானர வீரர்களும் கூட்டமாக தாண்டியாக வேண்டும். இந்த நத நதீபதி எனப்படும் வருணாலயத்தை எப்படி கடப்போம். ஒரு உபாயமும் தோன்றவில்லை என்றனர். இதைக் கேட்டு விபீஷணன் பதில் சொன்னான். ராஜா ராகவன், இந்த சமுத்திரத்தை சரண் அடையட்டும். இந்த சாகரம் சகரன் என்ற அரசனால் தோண்டப் பட்டது. அளவில்லாத, ஒப்பிட முடியாத பெரும் கடல். இது ராமனுடைய முன்னோர்களின் வேலை என்று தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு விபீஷணன் விஷயம் அறிந்து சொல்லவும், சுக்ரீவன் ராமனும் லக்ஷ்மணனும் இருந்த இடம் வந்து சேர்ந்தான். மெதுவாக, விபீஷணன் சொன்னதை அவர்களிடம் விண்ணப்பித்துக் கொண்டான். (விபுலக்ரீவன்), சுக்ரீவன் சொன்ன, சமுத்திரத்தை நோக்கி பிரார்த்தனை செய்வது ராமருக்கும் உவப்பாகவே இருந்தது. இயல்பாகவே தர்ம வழியில் செல்லும் ராமர், இந்த யோஜனையை உடனே ஏற்றுக் கொண்டார். லக்ஷ்மணனையும், பின் சுக்ரீவனையும் பார்த்து ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார். சிரித்துக் கொண்டே லக்ஷ்மணா, விபீஷணனின் ஆலோசனை எனக்கும் சரி என்றே தோன்றுகிறது. நீ சொல், சுக்ரீவா நீயும் சொல், உன்னுடைய அபிப்பிராயம் என்ன? என்று கேட்டார். சுக்ரீவா, மந்த்ராலோசனை செய்து பழக்கப் பட்டவன், இரண்டு விதமாகவும் யோசித்து முடிவாக இருவரும் சொல்லுங்கள் என்றார். ராமர் அவர்கள் அபிப்பிராயத்தை கேட்டதால் இருவரும் யோசித்து மரியாதையுடன் பதில் சொன்னார்கள். ராகவா, எங்களுக்கு இது எப்படி சம்மதம் இல்லாமல் இருக்கும்.? சுலபமாக நாம் செய்யக் கூடிய காரியம். இந்த சமுத்திரம், ஆழமாக, கடக்க அரிதாக இருப்பது தெரிந்ததே. இதன் மேல் சேது கட்டாமல் நாம் எப்படி அக்கரை போய் சேருவோம். இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், அசுரர்கள் சேர்ந்து வந்தாலும், லங்கையை கைப்பற்ற முடியாது. சூரனான விபீஷணன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டு செய்வோம். நேரம் கடத்தாமல் உடனே செயல் படுவோம். இந்த சமுத்திரத்தையே வழி கேட்போம். எப்படி சைன்யத்தோடு நாம் இதைக் கடந்து ராவணன் பாலித்து வரும் லங்கையை போய் சேருவோம் என்று சொல்லி தர்ப்பாஸனங்களை தயாரித்து (தர்ப்பை என்ற புல்லால் ஆன ஆசனம்) சமுத்திரத்தின் கரையில் உபவாசம் இருக்க ஆரம்பித்த ராமர், வேதியின் உள்ளே நுழைந்த அக்னி போல பிரகாசமாக இருந்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஸர தல்ப சம்வேசோ என்ற பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 20 (427) சுக்3ரீவ பே4தனோபாய: (சுக்ரீவனை கலைக்க உபாயம் செய்தல்)
சேனைகள் வந்து இறங்கியிருப்பதைப் பார்த்து சுக்ரீவனின் வீரர்கள் என்றும் தெரிந்து கொண்ட, சார்தூலன் என்ற ராக்ஷஸன், ராக்ஷஸ ராஜாவின் ஒற்றன், சேனைகளின் கட்டுக் கோப்பான அணி வகுப்பைக் கண்டு அதிசயித்தான். சுக்ரீவனால் கவனமாக பாதுகாக்கப் பட்ட படை. மிகவும் ஒழுங்காக இருப்பதையும் ராவண ராஜாவிடம் தெரிவிக்க ஓடினான். லங்கையின் உள்ளே வேகமாக சென்று அரசனைக் கண்டான். வானரங்கள், கரடிகள் நிறைந்த ஒரு பெரும் படை லங்கையை முற்றுகையிட வந்திருக்கின்றன. ஆழமாக, ஒப்பில்லாத இந்த சாகரத்தின் கரையில் மற்றொரு சாகரமோ எனும் படி ஏராளமான வீரர்கள் வந்து இறங்கி இருக்கிறார்கள். இருவர், ராம, லக்ஷ்மணர் என்ற பெயருடையவர்கள், தசரத குமாரர்களாம், உத்தமமான ஆயுதங்களை கையிலேந்தி, சீதையைத் தேடி வந்திருக்கின்றனர். இந்த சமுத்திரக் கரையில் அமர்ந்திருக்கின்றனர். பத்து யோஜனை தூரம் இந்த சேனை வீரர்கள் நிற்கிறார்கள். ஆகாயத்தில் நின்று பார்த்து உண்மை நிலையை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தூதர்களையும் அனுப்பி நிலைமையை சீர் தூக்கி பார்த்து, நிறைய தானம் கொடுத்தோ, சமாதானமாக பேசியோ, அவர்களுக்குள் பிளவு ஏற்படுத்தியோ, உடனே செயல் படுங்கள். ராக்ஷஸேஸ்வரனான ராவணன், சார்தூலன் சொன்னதைக் கேட்டு பரபரப்பும், கவலையும் அடைந்தான். சுகன் என்ற ராக்ஷஸனை அழைத்து சுக்ரீவனிடம் போய் நான் சொன்னதாகச் சொல். இந்த செய்தியை மிக ரகஸியமாக, ம்ருதுவான வார்த்தைகளால் அவனுக்கு மனதில் படும்படி சொல். நீயோ பெரிய ராஜ குலத்தில் பிறந்தவன். நல்ல பலசாலி. ருக்ஷ ரஜஸ் என்பவனின் மகன். எனக்கு சகோதரனுக்கு சமமானவன் நீ. ஹரீசா, நீ இப்பொழுது இறங்கியிருக்கும் செயலில், உனக்கு ஒருவித லாபமும் இல்லை. செய்யாமல் விட்டால் நஷ்டமும் இல்லை. நான் ராஜகுமாரனின் மனைவியை அபகரித்து வந்தால், அதில் உனக்கு என்ன? சுக்ரீவா, கிஷ்கிந்தைக்கு திரும்பி போ. உன் வானர கூட்டத்தால் இந்த லங்கையை ஒரு பொழுதும் ஜயிக்க முடியாது. தேவர்களும், கந்தர்வர்களும் கூட இதில் வெற்றி பெற முடியாது எனும் பொழுது மனிதர்களும், வானரங்களுமாக இந்த லங்கையை பிடிக்க முடியுமா? என்று இவ்வாறு ராக்ஷஸ ராஜன் சொன்ன செய்தியை எடுத்துக் கொண்டு, தூதுவனான சுகன், உடனே ஆகாய மார்கமாக, சாகரத்தின் மேலாக கடந்து சென்று வெகு தூரம் பயணம் செய்து ஆகாயத்தில் நின்றபடியே சுக்ரீவனை அழைத்து ராவணனின் செய்தியைச் சொன்னான். இதை சொல்லி முடிக்கும் முன் வானரங்கள் வேகமாக குதித்து எழுந்து சென்று, முஷ்டிகளால் அடித்தும், உதைத்தும், தாக்க ஆரம்பித்தன. ஏக காலத்தில், பல வானரங்கள் இடையில் அகப்பட்டுக் கொண்ட ராக்ஷஸன், தடாலென்று பூமியில் இறங்கி அடி தாங்காமல் அழுது அரற்றியபடி, காகுத்ஸா, காப்பாற்று. தூது வந்தவர்களை கொல்லுவதில்லை. இந்த வானர வீரர்களை தடுத்து நிறுத்து. இவர்கள் தன் எஜமானனின் கொள்கையை கை விட்டு தன் இஷ்டம் போல செய்கிறார்கள். தனக்கு கொடுக்கப் பட்ட செய்தியைச் சொல்லாத தூதனைத் தான் வதம் செய்ய வேண்டும். மிகவும் சங்கடத்துடன் சுகன் இவ்வாறு புலம்பியது ராமர் காதில் விழுந்தது. உடனே வந்து இவனை வதம் செய்து விடாதீர்கள் என்று தடுத்தபடியே வேகமாக வந்தார். வானர, கரடி கூட்டங்களிடமிருந்து சுகனை விலக்கினார். காய்ந்த சருகு போல ஆன சுகன், விடுபட்டதும், ஆகாயத்தில் நின்றபடி மேலும் சொல்ல ஆரம்பித்தான். ஏசுக்ரீவாஸ்ரீ சிறந்த பண்புடையவன் நீ. சக்தி வாய்ந்தவனேஸ்ரீ எங்கள் அரசனிடம் என்ன பதில் சொல்லட்டும்ஏ என்று கேட்டான். இவ்வாறு சுகன் சொன்னதைக் கேட்டு, வானரங்கள் மத்தியில் தன் பலம் தெரிய நின்று கொண்டு, தீனமாக கேட்ட சுகன் என்ற ராவணனின் ஒற்றனைப் பார்த்து சுக்ரீவன் பதில் சொன்னான். குரலிலேலே தன் வலிமையை காட்டும் விதமாக கர்ஜித்தான். நீ எனக்கு மித்ரனும் அல்ல. என்னிடம் அனுதாபம் கொண்டவனும் அல்ல. எனக்கு எப்பொழுதும், எந்த விதத்திலும் நீ உபகாரம் செய்யவும் இல்லை. எனக்கு பிரியமானவனும் இல்லை. வாலி, உன்னை வதம் செய்ய நினைத்தது போல் எனக்கு உன்னை வதம் செய்யும் எண்ணமும் இல்லை. நீ வதம் செய்யப் பட வேண்டியவன் தான் என்பது வேறு விஷயம். நானே உன்னைக் கொல்லுவேன். உன் புத்திரர்கள், தாயாதிக்கூட்டம், பந்துக்கள், எல்லாவற்றையும் சேர்த்து நானே நாசமாக்குவேன். லங்கையையும் என் பெரும் பலத்தால், சீக்கிரமே பஸ்மமாகப் போகச் செய்வேன். ராவணா, நீ தப்பிக்க முடியாது. உன்னை யார் ரக்ஷிப்பார்கள். தேவர்கள், இந்திரன், இவர்களில் யாரிடம் அடைக்கலம் புகுவாய்? சூரியனின் பாதையில் ஒளிந்து கொண்டாலும், உன்னை விட மாட்டேன். மலை குகைகளில் மறைந்து கொள்வாயோ, மகேஸ்வரனின் பாத கமலங்களில் சரணடைவாயோ, எப்படியானாலும், உன் உற்றார், சுற்றாருடன் அழிந்தாய். மூன்று உலகிலும் உன்னைக் காப்பாற்ற யாரும் முன் வர மாட்டார்கள். பிசாசங்களோ, ராக்ஷஸனோ, கந்தர்வனோ உன்னைப் போன்ற ராக்ஷஸனோ, யாரும் உனக்கு உதவி செய்ய தயாராக இல்லை என்பதை தெரிந்து கொள். வயது முதிர்ந்த ஜடாயு என்ற பக்ஷிராஜனை அடித்து விட்டு, நீ என்ன ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் எதிரில் நின்று போர் புரிந்து ஜயித்தா சீதையை அபகரித்தாய்? இன்னமும் உனக்கு புத்தி வரவில்லையே. இன்னமும் ராமன் யார் என்று தெரிந்து கொள்ளாமல் தடுமாறுகிறாயே. அவன் மகா பலசாலி, நல்ல அறிவாளி,, தேவர்கள் கூட எதிர்த்து நிற்க முடியாத போர் நுணுக்கம் அறிந்தவன். உன் உயிரை எடுக்கவே வந்தவன். இதன் பின் வாலி புத்திரனான அங்கதனும் பேசினான். மகாராஜா, இவன் தூதன் அல்ல, ஒற்றன் என்று எனக்குத் தோன்றுகிறது. இங்கு நின்று கொண்டு நம் படை பலத்தை எடை போடுகிறான். இவனை பிடித்து நிறுத்திக் கொள்வோம். லங்கை திரும்பிப் போக விட வேண்டாம் என்றான். அரசன் அனுமதியுடன், வானரங்கள் குதித்து எழுந்து சுகனை கட்டி பிடித்து ராமனிடம் அழைத்து வந்தனர். வழி முழுதும் சுகன் அனாதை போல புலம்பிக் கொண்டே வந்ததை யாரும் லட்சியமே செய்யவில்லை. சுகன் அலறினான். பலவந்தமாக என்னைக் கட்டி இழுத்து வந்திருக்கிறீர்கள், என் கண்களை குருடாக்குவீர்களோ, என்ன செய்தாலும், நான் பிறந்ததிலிருந்து மரணம் அடையும் வரை செய்த பாபங்கள் உங்களையே சேரும். என்னைக் கொன்றால், அல்லது நான் உயிரை இங்கு விட்டேனேயானால், அதன் பலனையும் அனுபவிப்பீர்கள் என்றான். அதற்குள் அங்கு வந்து விட்ட ராமர், வானரங்களை தடுத்து தூது வந்தவன் இவன், இவனை விட்டு விடுங்கள என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சுக்3ரீவ பே4தனோபாய: என்ற இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 21 (428) சமுத்ர ஸம்க்ஷோப: (சமுத்திரத்தை வற்றச் செய்தல்)
இதன் பின், கடற்கரையில் தர்ப்பை எனும் புல்லை பரப்பி, அதன் மேல் அமர்ந்து கிழக்கு நோக்கி சமுத்திரத்தை வணங்கி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். சமுத்திர ராஜனை, தன் கைகளை விரித்து வேண்டினார். சர்ப்பம் போல நீண்ட கைகள். எதிரிகளை அழிக்கும் வல்லமை பெற்ற ராமனின் புஜங்கள்- ஒருகாலத்தில் இவை பொன் ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. விலை மதிப்பில்லாத தங்க கேயூரம், முத்துக்களாலான ப்ரவரம் எனும் ஆபரணம் இவை இந்த புஜங்களில் இருந்ததால் பெருமை பெற்றன, சந்தனமும், அக3ருவும் (வாசனைப் பொருட்கள்) பூசப் பெற்றவை, நற்குடியிற் பிறந்த மாதர்களால், இளம் சூரியனின் வண்ணத்தில் பூசப்பட்ட சந்தன குழம்பு எப்பொழுதும் மணக்க, முன் சீதையுடன் கூடி இருக்கும் சமயங்களில் தனிச் சோபையுடன் விளங்கியவை, கங்கா ஜலத்தில் வசிக்கும் தக்ஷகன் போல நீண்டவை, யுத்தத்தில், எதிரிகளை வாட்டமுறச் செய்யும் வல்லமை பெற்றவை, காலனோ என்று எண்ணி நடுங்கச் செய்பவை, நண்பர்களுக்கு ஆனந்தம் தருபவை, இடது கரத்தில் வில்லின் தழும்பு ஏறியிருக்க, வலது கை (தக்ஷிண) தன் பெயருக்கு ஏற்ப தாக்ஷிண்யம் மிகுந்தது. மகா பரிகம் போல (குறுக்குக் கட்டை போல) திரண்டு இருந்தவை, ஆயிரக் கணக்கில் பசுக்களை தானம் செய்த கைகள், இன்று எனக்கு மரணம் அல்லது சாகரத்தை தரணம் (தாண்டுதல்) என்று நிச்சயம் செய்து கொண்டு, முனிவர்களைப் போல விரதங்களையும், நியமங்களையும் முறையாக அனுஷ்டித்து, தன் வேண்டுதலை ஆரம்பித்தார். இவ்வாறு ராமர், நியமத்தோடு புல் தரையில் அமர்ந்து சரணாகதியை ஆரம்பித்து மூன்று இரவுகள் முடிந்து விட்டன. மூன்றாவது இரவும் முடிந்து விடிந்தவுடன், த4ர்ம வத்ஸலன் என்றும் நீதிமான் என்றும் போற்றப் பட்ட ராமர், சாகரத்தைக் குறித்து பிரார்த்தனை செய்தும், நதிகளின் தலைவன், சாகரன், வரவில்லை. முறைப்படி ராமர் செய்த வேண்டுகோளை ஏற்று எதிரில் வரவில்லை. இதனால், இடது கோடியில் இயல்பாகவே சிவந்த கண்களையுடையவன், பெரும் கோபம் கொண்டான். அருகில் இருந்த லக்ஷ்மணனைப் பார்த்து இந்த சமுத்திரம் நம்மை அவமதிக்கிறது. இன்னமும் எதிரில் வந்து நிற்கவில்லை பார். பொறுமையும், அடக்கமும், நேர்மையும், ப்ரியமாக பேசுவதும், குணம் இல்லாதவர்களிடம் எடுபடாது. இந்த நல்ல குணங்கள் அவை இல்லாதவர்களிடம் பலன் தராது. தன்னை தானே புகழ்ந்து கொண்டு, துஷ்டனாகவும், கர்வம் கொண்டவனாகவும், விபரீதமாக நடக்கும் மனிதனைத் தான் கண்டபடி அடிப்பவனைத்தான் உலகத்தார், பயந்து சொன்னபடி கேட்கின்றனர். அமைதியாக இருந்து புகழையும் அடைய முடியாது. நல்ல பெயரையும் எடுக்க முடியாது. யுத்தத்தில் வெற்றியும் பெற முடியாது. அதனால் லக்ஷ்மணா, இன்று என் பாணங்கள் பட்டு, பிளந்து போன மகரங்கள் (ஆமைகள்) மட்டுமே மகராலயத்தில் நிறைந்து கிடக்கப் போகின்றன. (மகராலயம் -சமுத்திரம்), நீர் வற்றிப் போன நிலையில், கொந்தளிக்கும் அடிப்பரப்பில் வசிக்கும் பெரிய பாம்புகள் தடுமாறுவதைப் பார். யானைகள் பிளிறுவதையும், மீன்களும், மற்ற நீர் வாழ் ஜந்துக்களும், நிலை குலைந்து போவதைப் பார். சமுத்திர ஜலத்தை என் பாணங்களால் வற்றச் செய்வேன். நான் பொறுமையுடன் தாழ்ந்து நின்று வேண்டியதால், இந்த சமுத்திர ராஜன் அசமர்த்தன், சாமர்த்யம் இல்லாதவன் என்று எண்ணி விட்டான் போலும். அலட்சியம் செய்கிறான். இது போன்ற ஜனங்களிடம் பொறுமையாக இருந்து பயன் இல்லை. என் எதிரில் வராமல் சமுத்திரம் மௌனம் சாதிக்கிறது. லக்ஷ்மணா, என் வில்லை எடு. ஆலகால விஷம் போன்ற அம்புகளைக் கொண்டு வா. சமுத்திரத்தை வற்றச் செய்கிறேன். வானர வீரர்கள் நடந்து சென்று அக்கரை அடையட்டும். வற்றாத கடல் என்று பெயர் பெற்ற இந்த சாகரத்தை வற்றச் செய்கிறேன். கட்டுப் பாட்டை மீறாத அலைகளுடன் ஆயிரக் கணக்கான அலைகள் ஆரவாரத்துடன் விளங்கும் இந்த சமுத்திர ராஜனை தன் எல்லைகள் காணாமல் போக திகைக்கச் செய்கிறேன். இந்த மஹார்ணவம் எனும் பரந்து விரிந்த சமுத்திரம், நீர் வாழ் ஜந்துக்கள், முதலைகள் நிறைந்து இருக்கிறதே, இதை என் பாணங்களால் வற்றச் செய்கிறேன். இவ்வாறு சொல்லி, கோபத்தினால் கண்கள் துடிக்க, வில்லேந்திய கைகளுடன் யுகாக்னி போல தகிப்பவனாக ராமன் நின்றான். இந்திரனின் வஜ்ராயுதம் போன்ற பல ஆயுதங்களை உக்ரமான, கூர்மையான பல அம்புகளை தன் வில்லிலிருந்து அடுத்தடுத்து பிரயோகம் செய்தான். அந்த உத்தமமான அம்புகள், பெரும் வேகத்துடன், நெருப்பைக் கக்கியபடி, சமுத்திரத்தில் விழ, பயத்துடன் பாம்புகள் தாறுமாறாக அலைய, கடல் நீர் பொங்கி மிக பயங்கரமாக இருந்தது. சுழல் காற்றின் வேகமும், அதன் ஓசையும் போல சமுத்திரத்தில் இருந்து ஆரவாரம் எழுந்தது. பெரிய பெரிய அலைகள் வீச, முதலைகளும் ஆமைகளும் பெரிய உருவங்களோடு வீசி எறியப் பட, சங்குகளும், சிப்பிகளும் இரைய, அலைகள் அடித்ததால் பெரும் புகை சூழ்ந்தது போல, அதுவே ஜல மட்டத்தை மறைத்தது. திடுமென கடல் கொந்தளித்து, பயங்கரமாக காட்சியளித்தது. பாம்புகள் தங்கள் அமைதியான வாழ்க்கை பாதிக்கப் பட்டதால், சங்கடத்துடன் நெளிந்தன. அவைகளின் கண்களும், நாக்குகளும், நெருப்பு பிழம்பு போல தனித்து ஜ்வலித்தன. பாதாளத்தில் வசிக்கும் தானவர்களும் இந்த திடீர் மாற்றத்தால், திகைத்தனர். சிந்து ராஜனின் அலைகள் பெரிய மலையளவு எழுந்து அடங்கின. விந்த்ய மலையோ, மந்தரமோ எனும் படி, உயர்ந்து எழுந்தன. சுழன்று சுழன்று வீசிய கடல் அலைகளும், பரபரப்புடனும், பதபதைப்புடனும் வளைய வந்த பாம்புகளும், தானவர்களும், தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளி வந்த முதலைகளுமாக கடல் தத்தளித்தது. இப்படி உக்ரமான வேகத்துடன், ஒப்பில்லாத தன் வில்லைத் தயாராக்கி, ஒலி எழ சீண்டியபடி நின்ற ராகவனிடம், லக்ஷ்மணன் வந்து, வேண்டாம், வேண்டாம் என்று சொல்லி வில்லை தான் வாங்கிக் கொண்டான். இது இல்லாமலே சமுத்திர ராஜன் தங்களுக்குப் பணிந்து வருவான். ஒப்பில்லாத வீரனே, உங்களைப் போன்ற வீரர்கள், சினந்து கொள்வதும், தண்டிப்பதும் சரியல்ல. இயல்பான உங்கள் சாது வ்ருத்தம – சமாதானமான வழி, அதையே கடைபிடியுங்கள். ராம கோபத்தைக் கண்டு திடுக்கிட்டு ஹா கஷ்டம், என்று ஆகாயத்தில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த மகரிஷிகள், சுரர்கள், தேவ ரிஷிகளும், வேண்டாம், வேண்டாம், என்று ஒருமிக்க வேண்டினர். லக்ஷ்மணன் சாமாதானம் செய்ததில் ஆறுதல் அடைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சமுத்திர ஸம்க்ஷோபோ என்ற இருபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 22 (429) சேது ப3ந்த4: (சேதுவைக் கட்டுதல்)
இதன் பின் ரகு ஸ்ரேஷ்டனான ராமர், சமுத்திரத்தைப் பார்த்து கடுமையாகச் சொன்னார். மஹார்ணவா, பெரும் கடலே, இன்றே உன்னை வற்றிப் போகச் செய்ய என்னால் முடியும். நீர் வற்றி பாதாளம் தெரிந்தால் அதையும் சேர்த்து அழிக்க முடியும். என் அம்புகள் உன் ஜலத்தை தகிக்கச் செய்து விடும், சுருங்கிப் போவாய். சாகரா, மணல் தான் மிஞ்சியிருக்கும். எங்கும் புழுதி தான் பறக்கும். என் அம்புகள், ஆழமான உன் ஜலப் பரப்பை வற்றச் செய்தபின், வானரங்கள் சுலபமாக நடந்து சென்றே அக்கரை அடைந்து விடுவார்கள். என் பௌருஷமும், விக்ரமமும் நீ அறியாதவை. தானவாலயா, என்னுடன் மோதி வீணாக கஷ்டப்படாதே. ப்ரும்மாஸ்திரத்தை த்யானித்து, அம்பில் பூட்ட முனைத்து விட்டார், ராமர். வில்லை இன்னும் வேகமாக இழுத்து பிரயோகம் செய்ய வேண்டியது தான். ஸ்வர்க லோகம் நடுங்கியது. மலைகள் ஆட்டம் கண்டன. உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. திசைகள் தென்படவே இல்லை. நீர் நிலைகள், குளங்களும், நதிகளும் வற்ற ஆரம்பித்தன. சூரியனும், சந்திரனும், நக்ஷத்திரக் கூட்டங்களும் குறுக்காக பயணம் செய்தன. பாஸ்கரனின் கிரணங்கள் வெளிச்சம் போட்டு காட்டின. ஆயினும் இருள் மறையவில்லை. நூற்றுக் கணக்கான மின் மினி பூச்சிகள், நிறைந்தது போல ஆகாயம் காட்சியளித்தது. ஆகாயத்திலிருந்து, அதனைத் தாண்டி, அந்தரிக்ஷத்திலிருந்து மிகப் பெரிய ஓசைகள் எழுந்து பரவின. ஆகாயத்திலிருந்து வரிசை வரிசையாக காற்றின் வேகம் மரங்களைப் பிளந்து தள்ளின. மேகங்களைத் தூக்கிக் கொண்டு ஓடுவது போலவும், மலை சிகரங்களில் மோதியது போலவும், மின்னல் பிரகாசமாக வெளிப்பட்டது. தேவ லோகத்தையே தொட்டு விடுவது போல மேகக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து பெருத்த ஓசையுடன் இடி இடித்தன. இப்படிச் செய்யும் பொழுது அக்னியும், மின்னல்களும் வெளி வந்தன. கண்ணில் தென்பட்டவை எல்லாம் வஜ்ரத்தால் அடிபட்டது போல அலறின. கண்ணில் படாமல் மறைந்திருந்தவை, பயங்கரமாக ஓலமிட்டன. பயந்து நடுங்கியபடி செய்வதறியாது திகைத்தன. நீர் வாழ் ஜந்துக்கள் அனைத்தும், நீரில் தோன்றும் அலைகளோடு, நாகங்களோடு, ராக்ஷஸர்களோடு, மற்ற ஜீவ ராசிகளோடு நடுங்கின. பயத்துடன் இங்கும் அங்குமாக அலை பாய்ந்தன. திடுமென அதிகரித்த சமுத்திர ஜலத்தின் வேகத்தால், அலைகள் ஒரு யோஜனை தூரம் கரையைக் கடந்தது. இப்படி கொந்தளித்து, தன் கரையை மீறிச் செல்வது போல பொங்கி எழும் சமுத்திரத்தை பார்த்தபடி எதுவும் செய்யாமல் நின்றான். அச்சமயம், மத்தியில் இருந்து சாகரன் தானே எழுந்து வந்தான். உதய சூரியன், மேரு மலையின் மேல் நிற்பது போல கண்ணுக்குத் தென்பட்டான். ஜ்வாலை பறக்கும் நாக்குகளுடன், பாம்புகள் உடன் வந்தன. கண்ணுக்கு குளிர்ச்சியான வைமூடுரியம் போலவும், சிவந்த மாலையும், ஆடைகளும், பொன் மாலைகளும் அலங்கரிக்க, தாமரை இதழ் போன்ற கண்களுடன், தலையில் பூ மாலைகளை சூடியவனாக, எதிரில் நின்றான். தன்னுள் பதுங்கிக்கிடக்கும் ரத்னங்களைக் கொண்டே ஆபரணங்கள் செய்வித்தவன் போலவும், ஹிமவான் போல பலவிதமான தாதுப் பொருட்கள் நிறைந்த மலை போலவும், கௌஸ்துப மணியின் சகோதரன் போன்ற ஒரு மணி, மின்னல் போல பிரகாசமாக இருக்க, அதை தன் விசாலமான மார்பில் அணிந்தவனாக, ஆர்பரித்த அலகளாலேயே மேலுக்குத் தள்ளப் பட்டவனாக எதிரில் நின்றான். அலைகளுடன் கூடவே, தள்ளப் பட்டு பர பரத்த, முதலைகளும், உரகங்களும், ராக்ஷஸர்களும் உடன் வந்தன. காளிகா என்ற, கறுத்து வீசிய காற்றினால் தள்ளப் பட்ட அலைகளின் ஆட்டமும் மிக அதிகமாக இருந்தது. தேவதைகளுக்கு சமமான உருவம் எடுத்துக் கொண்டு சில நீர் வாழ் ஜந்துக்கள் தொடர்ந்தன. சமுத்திர ராஜனைத் தொடர்ந்து கங்கை, சிந்து முதலிய பிரதான நதிகளும் வர, சாகரன் முதலில் பெயர் சொல்லி அழைத்து, கையில் வில்லுடன் நின்றிருந்த ராமனைப் பார்த்து கை கூப்பி அஞ்சலி செய்தவனாகப் பேச ஆரம்பித்தான். ராகவா, இந்த பூமி, வாயு, ஆகாயம், ஜலம், ஜோதி, இவை தன் இயல்பிலேயே நிற்பவை. சாஸ்வதமாக மாறாத குணங்களைக் கொண்டவை. என் இயற்கை சுபாவம், நான் ஆழமாக, கடக்க முடியாதவனாக இருப்பது தான். நான் அதைத்தான் கடை பிடித்தேன். இதை நான் மீற முடியாது. மீறினால் பலவிதமாக மாறுதல்கள் விபரீதமாகத் தோன்றும். இதை நான் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ராஜ குமாரா, என்னிடம் வாழ்ந்து வரும் முதலை, ஆமை, மீன் இவைகளின் நலனைக் கருதி, செயல் பட வேண்டியவன் நான். காமத்தாலோ, லோபம் காரணமாகவோ, பயம் காரணமாகவோ நான் ஜலத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியாது. வேறு எந்த உபாயம் செய்து கடந்து செல்வதானாலும் நான் உதவி செய்வேன். உன் வீரர்கள் தாண்டிச் செல்லும் வரை, என்னிடம் உள்ள முதலைகளை அடக்கி வைத்திருப்பேன். எந்த விதத் தடங்கலும் இன்றி வானரங்கள் கடந்து போக வழி செய்வேன். ராமர் சொன்னார் என் வில்லில் நான் பூட்டிய இந்த அம்பு வீணாகக் கூடாது. அமோகமான பாணம் இது. இதை நான் செலுத்தக் கூடிய ஒரு இடம் சொல் என்றார். ராமர் சொன்னதைக் கேட்டு, அவர் கையில் தயாராக இருந்த ஆயுதத்தையும் பார்த்து சாகரன் பதில் சொன்னான். வடக்கு திசையில் ஒரு இடம் இருக்கிறது. த்3ரும குல்யம் என்று பெயர் பெற்றது. நீ புகழ் பெற்று விளங்குவது போலவே, இந்த இடம் ப்ரஸித்தமாக, காணவே பயங்கரமாக இருக்கும். ஆபீ4ரம் என்ற கொடிய பாம்புகள், என் ஜலத்தைக் குடித்து தீர்க்கின்றனர். பாபகாரியம் செய்யும் இந்த ஜந்துக்கள் என்னைத் தொடுவதே எனக்குப் பிடிக்கவில்லை. உன் உத்தமமான சரம் இந்த பாபிகளை அழிக்கட்டும். இதைக் கேட்டு ராமரும், சாகரம் காட்டிய இடத்தில், தன் பாணத்தை பிரயோகம் செய்தார். இந்த இடம் மரு காந்தாரம் பாலைவனம் என்று உலகில் பிரஸித்தி பெறலாயிற்று. ராம பாணம் பட்டவுடன் பூமி அலறினாள். இதனால் ஏற்பட்ட காயத்திலிருந்து பாதாள நீர் வெளி வரலாயிற்று. பெரிய கிணறு தோன்றியது. அதை வ்ரண (காயம்) என்றே அழைக்கின்றனர். இந்த கிணற்றில் நீர் வற்றாமல் சமுத்திரம் போலவே விளங்குகிறது. இதில் ஜலம் விழுவதும் பலமான ஓசையாக கேட்கும். மரு காந்தாரம் என்றே இந்த இடம் பிரஸித்தி பெறும் என்று சொல்லி ராமர் அதற்கு ஒரு வரமும் அளித்தார். பசுக்கள் நிறைந்து, ரோகம் குறைந்து, பழங்களும், கிழங்குகளும் ரஸம் நிறைந்ததாக, எப்பொழுதும் ஈரமும், பால் நிறைந்தும், நல்ல வாசனையுடைய ஔஷதிகள் நிறைந்தும் இந்த பாலைவனம் எப்பொழுதும் சுபிக்ஷமாக இருக்கும். இவ்வாறு ராமர் கொடுத்த வரத்தால், நல்ல பாதையும் ஏற்பட்டது. இந்த பள்ளத்தை வற்றச் செய்து தன் பாணத்திற்கு ஒரு இலக்கை தந்த பின், ராகவனைப் பார்த்து சமுத்திர ராஜன் சொன்னான். சர்வ சாஸ்திரங்களையும் அறிந்தவனே, இதோ நளன் என்று ஒருவன் இருக்கிறானே, இவன் விஸ்வகர்மாவின் மகன். தந்தைக்கு சமமான சாமர்த்யம் உள்ளவன். இவன் தந்தையே இவனுக்கு வரம் தந்திருக்கிறார். இந்த வானர வீரன் என் மேல் சேதுவைக் கட்டட்டும். இவன் தந்தை எனக்கு நண்பன் அதே போலத்தான் இவனும் எனக்கு. நான் அந்த சேதுவை தாங்கிக் கொள்கிறேன். இவ்வாறு சொல்லி சமுத்திர ராஜன் மறைந்தான். நளனை வெளிப்படுத்தி, ராமனுக்கு அறிமுகப் படுத்தி விட்டு சென்று விட்டான். இதன் பின் நளன் ராமனிடம் வந்தான். நான் சேதுவைக் கட்டுகிறேன். இந்த வருணாலயத்தின் மேல் விஸ்தீர்ணமாக பாலத்தைக் கட்டுகிறேன். என் தந்தையின் திறமை எனக்கும் உண்டு. அதை பயன்படுத்தி, சமுத்திர ராஜன் சொன்னது போலவே சேதுவைக் கட்டுகிறேன். உலகில் மனிதனுக்கு தண்டம் தான் வரம் என்று தோன்றுகிறது. செய் நன்றி கொன்றவர்களிடம் பொறுமையை காட்டுவது வீண். சமாதானமாக பேசுவதோ, தானமோ மற்ற எதுவுமே பலன் தராது. இந்த பெரிய சாகரம், ராகவனின் தண்டத்திற்கு பயந்து, பள்ளத்தைக் காட்டிக் கொடுத்து விட்டது. சேது கட்டுவதைக் காணும் ஆசை வேறு. என் தாயார் மந்தராவுக்கு என் தந்தை விஸ்வகர்மா ஒரு வரம் கொடுத்தார். தேவி, எனக்கு சமமான மகன் உனக்குப் பிறப்பான் என்றார். அதனால் விஸ்வகர்மாவின் வம்சத்தில் பிறந்த அவருக்கு சமமான (கட்டட கலைஞர்) நான். இந்த சமுத்திர ராஜனால் நினைவு படுத்தப் பட்டேன். சமுத்திர ராஜன் சொன்னது சரியே. மற்றவர்கள் யாரும் சொல்லாமல் நான் தானாக என் சாமர்த்யத்தை பறை சாற்றிக் கொள்ள விரும்பவில்லை. இந்த வருணாலயத்தின் மேல் சேதுவைக் கட்ட எனக்கு திறமையும் இருக்கிறது, நம்பிக்கையும் வந்து விட்டது. மற்ற வானர வீரர்களை உதவிக்கு வைத்துக் கொண்டு இன்றே சேதுவைக் கட்டஆரம்பிக்கிறோம். ராமரும், மற்ற வானரங்களுக்கு, நளனுக்கு உதவி செய்யச் சொல்லி உத்தரவு கொடுத்தார். நூற்றுக் கணக்கான வானரங்கள் அந்த பெரும் வனத்தில் மகிழ்ச்சியுடன் கூடினர். ஒவ்வொன்றாக தாங்களே மலை போல பெருத்த உடல் கொண்டவர்களாக, மலைகள் (கற்கள், மரங்கள்) இவற்றைக் கொண்டு வந்து குவித்தனர். சால, திலகம், ஸ்தினிசம் என்ற மரங்கள், வில்வம், சப்தபர்ணம், கர்ணிகாரம், இவை புஷ்பங்களோடு கொண்டுவரப் பட்டன. சூதம், அசோகம், என்ற மரங்கள் இவை வேரோடு பிடுங்கிக் கொண்டு கிளைகளை ஒடித்துக் கொண்டும் வரப் பட்டன. இவை சமுத்திரத்தை நிரப்பின. மரத்தின் கிளைகளை இந்திரன் கொடியைத் தூக்கிக் கொண்டு போவது போல, உற்சாகமாகத் தூக்கிக் கொண்டு வந்து சேர்த்தன. தாள மரங்கள், தென்னை மரங்கள், மாதுள புதர்கள், விபீதகம் என்ற வகை மரங்கள், பகுளம், கதிரம் எனும் வகை, வேம்பு (நிம்ப) மரங்களையும் பிடுங்கிக் கொண்டு வந்தன. பெரிய யானை அளவு, கற்களையும் கொண்டு வந்து சேர்த்தன. மலைகளை பெரும் ப்ரயத்னத்தோடு பெயர்த்து தூக்கிக் கொண்டு வந்தன. சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து வேகமாக சாகர ஜலத்தில் வீசிய பொழுது, சமுத்திர ஜலம் தூக்கியடித்து ஆரவாரம் செய்தது. அந்த நீர்த் திவலைகள் ஆகாயத்தையே எட்டின. சில வானரங்கள் சேர்ந்து சமுத்திரத்தின் மேல் கயிற்றைக் கொண்டு வந்து சேர்த்தன. நூறு யோஜனை தூரம் கயிறுகள் கொண்டு வரப் பட்டன. பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் கொண்ட சேதுவை, நளன், நத நதீபதியான சமுத்திரத்தின் மேல் கட்டினான். ஒரு சிலர் கையில் தண்டத்துடன், வேலையில் ஈடுபட்டிருந்த வானரங்களை பாதுகாத்தனர். ராமருடைய கட்டளையை சிரமேற்கொண்ட வானர வீரர்கள், மேகம் போன்ற பர்வத கற்களையும், பூத்துக் குலுங்கும் மரங்களையும் புல் கயிற்றால் கட்டினர். அப்படி அப்படியே கொண்டு வந்து சேது கட்ட உபயோகித்தனர். சிறு குன்று போல இருந்த பெரும் கற்களையும் சுமந்தபடி வானரங்கள் ஓடி ஓடிச் சென்றன. ஓடும் பொழுது சிதறிய கற்கள் உராய்ந்து உண்டான சத்தமே பெருமளவு இருந்தது. முதல் நாள் பதினான்கு யோஜனை சேது கட்டப் பட்டு விட்டது. இதனால் உற்சாகமடைந்த வானரங்கள், மேலும் வேகமாக செயல் பட மறு நாள் இருபது யோஜனை தூரம் பூர்த்தியாயிற்று. பெரிய பெரிய உடல் வாகுள்ள வானரங்கள், தங்கள் பலத்தை ஒன்று கூட்டி, மூன்றாவது நாள், அதே முயற்சியோடு இருபத்தியோரு யோஜனை தூரத்தைக் கட்டி முடித்தனர். நான்காவது நாள், இதுவே இருபத்திரண்டாக உயர்ந்தது. தங்கள் வேகத்தை இன்னும் அதிகரித்துக் கொண்ட வானரங்கள், ஐந்தாம் நாள், இடைவிடாது வேலை செய்து, இருபத்து மூன்று யோஜனை தூரம் பூர்த்தி செய்தனர். விஸ்வகர்மாவின் மகனான நளன், தன் தந்தையைப் போலவே, செய்யும் தொழிலே கவனமாக, சமுத்திரத்தின் மேல் சேதுவைக் கட்டி முடித்து விட்டான். ஆகாயத்தில், ஸ்வாதியின் பாதை தனித்து தெரிவதைப் போல சேதுவின் அமைப்பும் அமைந்தது. (ஸ்வாதி நக்ஷத்திரம்). இதன் பின் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும் வந்து ஆகாயத்தில் நின்றபடி இந்த அத்புதமான காரியத்தை கண்டு களித்தனர். பத்து யோஜனை விஸ்தீர்ணமும், நூறு யோஜனை நீளமும் கொண்ட சேதுவை, நள சேது என்று கொண்டாடினர். வேறு யாராலும் செய்ய இயலாத இந்த செயலை நளன் செய்து முடித்தான். வானரர்கள் அதன் மேல் குதித்தும், ஓடியும், கர்ஜித்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. எண்ணி பார்க்க முடியாத இந்த அத்புதமான மயிர் கூச்செரியச் செய்யும் செயற்கரிய செயலால், ஆவல் தூண்டப் பட்ட எல்லா ஜீவ ராசிகளும், சமுத்திரக் கரைக்கு வந்து சேதுவை தரிசித்துச் சென்றனர். ஆயிரம், கோடிக் கணக்கான வானர வீரர்களின் ஒன்று சேர்ந்த உழைப்பின் பயனாக, சமுத்திரத்தின் மேல் சேதுவைக் கட்டி, மறு கரையைச் சென்றடைந்தார்கள். இந்த சேது, விசாலமாக, நல்ல தளம் போடப் பெற்று, நன்றாக இடைவெளியின்றி இணைக்கப் பட்டதாக, நடக்க இசைவாக, பார்வைக்கு லக்ஷணமாக, சமுத்திரத்தின் தலையில் வகிடு (எல்லைக்கோடு) எடுத்தது போலக் காணப்பட்டது. சமுத்திரத்தைக் கடந்து சென்றவர்களுடன், கையில் க3தை4யுடன் விபீஷணன், தன் மந்திரிகளுடன் வழி காட்டுவது போல முன் நடந்து சென்றான். சுக்ரீவன் ராமரைப் பார்த்து, தாங்கள் ஹனுமான் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள். லக்ஷ்மணனை அங்கதன் தூக்கி வருவான், என்றான். இந்த சாகரம், மிகப் பெரியது, ராகவாஸ்ரீ இந்த இருவரும் ஆகாய மார்கமாக உங்களைக் கொண்டு சேர்ப்பார்கள் என்றான். ராகவன் வானரங்களுடன் நடந்து செல்வதையே விரும்பினார். அந்த சேனையின் முன்னிலையில் தலைமை தாங்கி, ஸ்ரீமானான ராமர், வில்லேந்தி லக்ஷ்மணனுடனும், சுக்ரீவனுடனும் நடந்தே சென்றார். மற்ற வானரங்கள் மத்தியிலும், பக்கங்களிலும், வந்தன. சில நீரில் குதித்தன. ஒரு சில வழி தெரியாமல் திண்டாடின. ஒரு சில ஆகாய மார்கமாக, கருடன் போல பறந்தன. தாண்டிச் சென்றன. இந்த வானரங்கள் செய்த கூச்சலில், சாகரத்தின் ஓசை கூட அடங்கி விட்டது. அந்த சேதுவின் மேல் நடந்து கடலைக் கடந்த பல வானர வீரர்கள், குதி நடை போட்டுக் கொண்டுச் சென்றன. கரையை அடைந்து ராமர் தன் கூடாரத்தை அமைத்தார். அமைத்தார். வானரங்களுக்குத் தேவையான பழங்கள், காய், கிழங்குகள் நிறைந்து இருந்த வனத்தை தேர்ந்தெடுத்தார். தேவர்களும், சித்த சாரணர்களும், ராமனை பர பரப்புடன் தேடி வந்து, அத்புதமான சேது பந்தனத்தை பாராட்டி, மகரிஷிகளுடன், கடல் நீரைக் கொண்டு ராமனை முழுக்காட்டினர். நர தேவனே, வெற்றி பெறுவாய், சத்ருக்களை ஜயிப்பாய். இந்த சமுத்திரத்தையும் சேர்த்து உன் நாட்டையும் பெற்று ஆளுவாய். பல காலம் வாழ்ந்திருப்பாயாக என்று பல விதமான சுபமான வாழ்த்துக்களை அருளினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சேது ப3ந்தோ4 என்ற இருபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 23 (430) லங்காபி4ஷேணனம் (லங்கையை முற்றுகையிடுதல்)
லக்ஷ்மணனின் முன் பிறந்தோனான ராமன், நிமித்தங்களின் லக்ஷணங்களையும் அறிந்தவன். இளைய சகோதரனை அணைத்துக் கொண்டு, லக்ஷ்மணா, இப்பொழுது நாம் காணும் நிமித்தங்களின் பேரில் சொல்கிறேன். குளிர்ந்த நீரைத் தொட்டு, பழங்கள் நிறைந்த வனங்களை நம் வசப் படுத்திக் கொண்டு, படைகளையும் அணி வகுக்கச் செய்து, தயாராக நிற்போம். உலகையே நாசம் செய்யக் கூடிய பயங்கரமான ஒரு விஷயத்தை எதிர் கொள்ளப் போகிறோம். இந்த ருக்ஷ, வானர வீரர்களை பாதுகாத்து நிர்வகிக்க வேண்டும். காற்று மாசு பட்டதாக வீசுகிறது. பூமி நடுங்குகிறது. பர்வதத்தின் உச்சிகள் ஆடுகின்றன. மரங்கள் கீழே விழுகின்றன. இந்த நிமிஷம், அறுபட்ட மிருக மாமிசத்தின் நிறத்தில் மேகங்கள் அலைகின்றன. மேகத்தின் இடியோசையும் கடுமையாக இருக்கிறது. ரத்தமும் நிணமுமாக மழை பொழியப் போவது போல மனதில் ஒரு காட்சி தெரிகிறது. இந்த சந்த்யா காலமும் சிவந்த சந்தனம் போன்று கொடூரமாக காட்சி அளிக்கிறது. ஆதித்யனிடமிருந்து அக்னி மண்டலம் எரிந்து கொண்டே கீழே விழுவது போல இருக்கிறது. மிருகங்களும், பக்ஷிகளும் தீனமாக அலறுகின்றன. சூரியனைப் பார்த்து முறையிடுவது போல, பெரும் பயம் வரப் போவதைக் குறிக்கும் நிமித்தங்களில் இந்த மிருகங்களின் ஊளையும் ஒன்று. இரவு வந்து விட்டது. இருட்டில் சந்திரனின் ஒளியும் குளுமையாக இல்லை. தகிக்கிறது. சந்திரனைப் பார்த்தாலும் கடும் சிவப்பாக, உலகத்தின் நாச காலத்தில் உதிப்பது போலத் தெரிகிறது. சந்திரனைச் சுற்றி பரிவேஷம், (பரி வட்டம்) சிவந்து காணப்படுகிறது. சூரியனிடத்தில் கருமையான களங்கம் தென்பட்டது. லக்ஷ்மணா, இவையெல்லாம் நல்ல நிமித்தங்கள் அல்ல. நக்ஷத்திரங்களைப் பார். புழுதி படிந்து காணப்படுகின்றன. யுக முடிவு வரும் போலத் தோன்றுகிறது. காகங்களும், ஸ்யேனங்களும், கழுகுகளும், கீழ் நோக்கி பறக்கின்றன. குள்ள நரிகள், அமங்கலமாக ஊளையிடுகின்றன. பயந்து அலறுவது போலத் தோன்றுகின்றன. கற்களும், சூலங்களும், வாள், கத்திகளும், வானரங்களும், ராக்ஷஸர்களும், மாற்றி மாற்றி வீசி அடிக்க பெரும் யுத்தம் வரப் போகிறது. பூமியில் மாமிசமும், ரத்தமும் இரையப் போகிறது. இன்றே சீக்கிரமாக, ராவணன் பாலித்து வரும் இந்த லங்கா நகரை முற்றுகையிடுகிவோம். நாலா புறமும் வானர வீரர்கள் சூழ, வேகமாகச் செல்வோம். இவ்வாறு சொல்லி, யுத்தம் வந்ததில், தன் பராக்ரமத்தைக் காட்டி யுத்தம் செய்ய கிடைத்த வாய்ப்பினால் உற்சாகம் கொண்டவராக, ராமன் எல்லோருக்கும் முன்னால் சென்றார். லங்கையை நோக்கி படை புறப்பட்டது. விபீஷணனும், சுக்ரீவனும், மற்ற வானர வீரர்களும், எதிரியை நிச்சயம் வதம் செய்து விடுவோம், வெற்றி நமதே என்று கோஷம் செய்தபடி, நிச்சயமாக வெல்வோம் என்ற உறுதியோடு நடை போட்டனர். ராகவனுடன் நடந்த வானர வீரர்கள், ராகவனின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று மனப் பூர்வமாக விரும்பினர். அவர்களை அன்புடன் பார்த்தபடி, அவர்கள் மன உறுதியையும், வீர்யத்தையும் பாராட்டியபடி ராகவன் நடந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் லங்காபி4ஷேணனம் என்ற இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 24 (431)ராவண ப்ரதிக்ஞா (ராவணன் சூளுரைத்தல்)
சுக்ரீவ ராஜாவின் முக்யமான பிரமுகர்கள் அடங்கிய ராஜசபை, சுபமான நக்ஷத்திரங்கள் நிறைந்த இரவில், சரத் கால சந்திரன் போல சோபையுடன் விளங்கியது. அந்த படை வீரர்களின் கால்களின் வேகத்தால் பூமி அதிர்ந்தது. சாகரம் போன்ற சேனையின் நடமாட்டத்தால், வசுந்தரா என்ற பூமி மிகவும் பாதிக்கப்பட்டாள். வேகமாக நடந்த வானர சேனை லங்கையை நெருங்க நெருங்க, பேரீ, ம்ருதங்க வாத்யங்களின் கோஷங்கள், மயிர் கூச்செரியும் வண்ணமாக ஓங்கி ஒலித்ததைக் கேட்டனர். இந்த கோஷம் இந்த வீரர்களையும் தூண்டி விட, உற்சாக மிகுதியில், அதை விட அதிகமாக தாங்களும் கோஷம் செய்தனர். ராக்ஷஸர்களும், இந்த வானர வீரர்களின் கர்ஜனையைக் கேட்டனர். மதம் கொண்டு ஆடுபவர்கள் செய்யும் ஜயகோஷம் இடி முழக்கத்திற்கு இணையாக இருப்பதைக் கேட்டனர். சித்ர த்வஜங்கள், கொடிகள் பறக்க, சோபனமாக விளங்கிய லங்கையைக் கண்டவுடன், ராமனின் மனம் சீதையிடம் சென்று விட்டது. இங்கு தான் மான் விழியாளான என் சீதை, ராக்ஷஸிகளின் காவலில் இருக்கிறாள். சிவந்த சரீரம் உடைய ஏதோ ஒரு க்ரஹத்தால், ரோஹிணி நக்ஷத்திரம் பீடிக்கப் பட்டது போல இருக்கிறாள். சிந்தனை மனதை அழுத்த நீண்ட பெருமூச்சு விட்டவர், அருகில் லக்ஷ்மணனைப் பார்த்து, தனக்குத்தானே ஆறுதலாகச் சொல்லிக் கொள்வது போல தம்பியிடம் சொன்னார். லக்ஷ்மணா, இதோ பார். ஆகாயத்தில் கோலம் போட முனைவது போல உயர்ந்து நிற்கும் இந்த மாளிகைகளைப் பார். மலையின் உச்சியில், விஸ்வகர்மா, தன் மனதில் கற்பனை செய்தபடி கட்டியிருக்கிறார். இந்த லங்கையில் விமானங்கள் ஏராளமாக ஒன்றையொன்று மிஞ்சும்படி நிறைந்து தெரிகின்றன பார். விஷ்ணுவின் பாதத்தால், ஆகாயத்தில் வெண்மையான நிறம், வெண் மேகங்கள் போல, ஆகாயத்தை மறைத்தது போல காட்சியளிக்கிறது. சித்ர ரதம் என்ற அழகிய வனங்கள் பூக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பலவிதமான கொடிகள் பறக்கின்றன. புஷ்பங்களையும், பழங்களையும், இந்த மத கஜங்கள் அனுபவிப்பதைப் பார். பூக்களைச் சுற்றி வண்டு மொய்க்கின்றன. அல்லது பெரிய பெரிய தோட்டங்கள், பூக்கள் நிறைந்து இருப்பதால் வண்டுகளின் நடமாட்டமும் அதே அளவு நிறைந்திருக்கிறது. குயில்கள் பாடும் ஓசை, தோதவீ என்ற பக்ஷிகளின் இரைச்சல், இதமான காற்று. என்று ராமர் பரவசமாக இயற்கையின் அழகில் தன்னை பறி கொடுத்தவராக சொல்லிக் கொண்டே போனார். இதன் பின், தாசரதியான ராமர், தன் படை வீரர்களை தகுந்தபடி அணி வகுத்து இருக்கச் செய்து, நிர்வாகத்தை தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். அங்கதனும், நீலனும் மத்தியில் ஹ்ருதய ஸ்தானத்தில் நில்லுங்கள். இந்த இருவரையும் யாராலும் ஜயிக்க முடியாது. சுற்றிலும் வானர சைன்யம் சூழ்ந்து நில்லுங்கள். வலது பக்கம் ரிஷப4ன் என்ற வானர வீரன் பொறுப்பேற்கட்டும். யானையைப் போல பலமும், வேகமும் உடைய கந்தமாதனன் வானர சேனையின் இடது பகுதியில் பொறுப்பு ஏற்று, தலைமை தாங்கட்டும். நான் முன் பகுதியில், தலை வாசலில் லக்ஷ்மணனோடு நிற்கிறேன். ஜாம்பவானும், சுஷேணனும், தன் வேகத்தைக் காட்ட விரும்பும் வானரங்கள் இருவரும், மற்றும் உள்ள சிறந்த கரடிகள், சேனையின் வயிற்றுப் பகுதியான மத்திய பாகத்தை காக்கட்டும். கால்கள் ஆரம்பிக்கும் இடத்தில், கபிராஜா சுக்ரீவன் நிற்கட்டும். மேக மண்டலத்தோடு ஆகாயமே இறங்கி வந்து விட்டாற் போல பரவி இருந்த வானர சேனை, அணி வகுத்து நின்றதே புதுமையாக இருந்தது. முன்னணியில் நின்ற அறிவு மிகுந்த, தேஜஸும் உடைய பெரிய வானரங்கள் கட்டுக் கோப்பாக தங்கள் கீழ் இருந்த படை வீரர்களைப் பாதுகாத்தார்கள். பெரிய கற்களையும், மரங்களையும் தூக்கிக் கொண்டு, யுத்தத்தில் தங்கள் பலத்தைக் காட்ட வானர வீரர்கள் தயாராக நின்றனர். லங்கையை தங்கள் முஷ்டிகளாலேயே பெயர்த்து விடுவோம் என்று பேசிக் கொண்டன. தங்கள் மனதில் பட்டதை சந்தோஷமாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அப்பொழுது ராமர் சுக்ரீவனை அழைத்துச் சொன்னார். சேனையை தயார் செய்து விட்டோம். இந்த சுகனை விட்டு விடு என்றார். சுக்ரீவனும் தூது வந்த சுகனை விடுவித்தான். நடுங்கியபடி அந்த சுகம் ராவணனிடம் சென்றது. (சுகன் என்ற தூதன், சுகம் என்பது கிளிக்கும் பெயர்) ராவணன் தன்னருகில் வந்த சுகத்தை (சுகனை) பார்த்து சிரித்தபடி, என்ன இது, தூது வந்த கிளியே, உன் பக்ஷங்கள் அடிபட்டு கிடக்கின்றனவே, அந்த கூட்டத்தில் மாட்டிக் கொண்டு விட்டாயா? பலர், பலவிதமான குழப்பமான கொள்கை உ<டையவர்கள், ஆளுக்கு ஆள் ஏதாவது சொன்னார்களா? குழம்பி விட்டாயா? என்று ஏதோ ஹாஸ்யமாக பேசுவது போல பேசிக் கொண்டே போக, பயத்தால் நடுங்கியபடி நின்ற சுகன் உண்மை நிலவரத்தைச் சொல்ல ஆரம்பித்தான். ராஜன், சாகரத்தின் வடகரையில் நின்று நீ சொன்னதைச் சொன்னேன். செய்தி முழுவதும், நிதானமாக, புரியும் படி சொன்னேன். என்னைக் கண்டதும் வானரங்கள், கோபத்துடன் முஷ்டியை உயர்த்திக் கொண்டு அடிக்க வந்தன. சீக்கிரமே என்னை பிடித்து விட்டனர். அடிக்கவும், குத்தவும் ஆரம்பித்தனர். பேசவே முடியவில்லை. கேள்வி என்ன கேட்பேன்? இயல்பாகவே வானரங்கள் கோபம் மிகுந்தவை. கூர்மையான புத்தியும், வெறியும் மிகுந்தவை. அந்த ராமனோ, விராத4னை, கப3ந்த4னை, நம் க2ரனை அடித்தவன். வீழ்த்தியவன். சுக்ரீவனின் துணையோடு, சீதையைத் தேடி வந்திருக்கிறான். அகலமும் நீளமுமாக சேதுவைக் கட்டி, உப்பு நீர் நிறைந்த சமுத்திரத்தை தாண்டி வந்து விட்டான். ராக்ஷஸர்களை எதிர்த்து போரிட அறை கூவியபடி நிற்கிறான். கையில் வில் ஏந்தி படையின் முன்னணியில் இருக்கிறான். ஆயிரக்கணக்கான கரடிகள், வானரங்கள் நிறைந்த இந்த சேனையே புதுமையாக இருக்கிறது. ஒவ்வொன்றும் சிறு குன்று போல பெருத்த உருவத்தில், பூமியை மறைத்தபடி நடமாடுகின்றன. இந்த வானர சேனைக்கும், நமது ராக்ஷஸ சேனைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. தேவ, தானவ சேனை எதிரெதிராக நின்று மோதிக் கொள்ளத் தயாராக நிற்பது போல இருக்கிறது. ஊருக்குள் நுழைந்து நாசம் விளைவிக்கும் முன் ஒரு காரியம் செய். சீதையை அவனிடம் கொடுத்து விடு. அல்லது பெரும் யுத்தத்திற்கு தயாராக ஆகிக் கொள் என்று சொல்லி நிறுத்தியது. சுகனின் வார்த்தையைக் கேட்டு ராவணன் கோபம் கொண்டான். சிவந்த கண்களாலேயே எரித்து விடுவது போல பார்த்தான். என்னுடன் போரிட தேவ, தானவ கூட்டமே வந்தாலும் கூட சீதையைத் தர மாட்டேன். எல்லா லோகமும் வந்து பயமுறுத்தினாலும் கூட முடியாது. இதோ பார், உன் முன்னாலேயே என் சரங்கள் ராகவனை ஓட ஓட விரட்டப் போகின்றன. வஸந்த காலத்தில் பூக்கள் நிரம்பிய மரங்களை வண்டுகள் மொய்ப்பது போல என் பாணங்கள் ராகவனை மொய்த்து விடும். மின் மினி பூச்சிகளைக் கண்டு உயர்ந்த ஜாதி யானையான குஞ்சரம் பயப்படுவதாவது. என் தூணியில் கூர்மையான அம்புகள் இருக்கின்றன. நெருப்பைக் கக்கிக் கொண்டு அவை வெளிப்படும் பொழுது அவர்கள் என்ன கதி ஆகிறார்கள் பார். நல்ல பலசாலி நான். என் முழு பலத்தோடு எதிர்த்து நிற்பேன். ஜோதிகளில் சிறந்த சூரியன் போல, தன் பிரபையால் தனித்து நிற்பேன். சாகரத்துக்கு இணையான வேகத்தோடு செயல்படுவேன். காற்றுக்கு இணையான நடை என் நடை. இதையெல்லாம் தாசரதி அறிய மாட்டான். அதனால் தான் என்னோடு மோத வருகிறான். முன் காலத்தில் நான் போர்களில் காட்டிய பராக்ரமத்தை அவன் அறிந்திருக்க நியாயமில்லை. என்னுடைய வில் என்ற வீணை, அம்புகளால் மீட்டி நான் வாசிக்கும் பொழுது, வெற்றி கோஷம் போன்று முழக்கம் நாராச தளம் வரை போய் கேட்கும். இந்த கோஷமே எதிரிகளை பயந்து நடுங்கச் செய்யும். எனக்கு துன்பம் விளைவிக்க எண்ணி வந்த எதிரி சேனையில் மூழ்கி திளைத்து நான் மீண்டு வருவேன். ஆயிரம் கண்களுடைய வாஸவனோ, வருணனோ, தானே யமனே வந்தாலும் வைஸ்ரவனனே வந்து நின்றாலும், தங்கள் ஆயுதங்களைக் கொண்டு என்னை அழிக்க முடியாது. (சரங்கள் என்ற அக்னியால் என்னை பொசுக்க முடியாது).
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண ப்ரதிக்ஞா என்ற இருபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 25 (432) சுக, சாரண ப்ரேஷணாதிகம்(சுகனையும், சாரணனையும் அனுப்புதல்)
தசரதாத்மஜனான ராமன், தன் படையோடு கடலைத் தாண்டி லங்கையின் கரையை எட்டி விட்ட நிலையில், ராவணன், தன் மந்திரி சபையைக் கூட்டினான். இது வரை நாம் கேள்விப்படாத புதுமை, ராகவன் கடலின் மேல் சேதுவைக் கட்டி, படை பலத்தோடு வந்து சேர்ந்து விட்டான். கடக்க முடியாத கடலையும் கடந்து வந்து விட்டான். சமுத்திரத்தில் சேது பந்தனம் செய்தது கூட பெரிதில்லை. இந்த வானர சேனையின் அளவு, வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகத் தெரிகிறது. நீங்கள் இருவரும் வானர சைன்யத்தின் உள் புகுந்து, சேனையின் பலம், அளவு இவற்றைத் தெரிந்து கொண்டு வாருங்கள். ராமனுடைய, சுக்ரீவனுடைய மந்திரிகள் யாவர், எப்படிப் பட்டவர்கள், வானர வீரர்களின் படைத்தலைவர்கள், அவர்கள் சக்தி என்ன, சேதுவை எப்படி கட்டினார்கள். ஜலம் நிறைந்த சாகரத்தின் மேல் என்ன செய்து சேதுவைக் கட்ட முடிந்தது. வானர வீரர்கள் தற்சமயம் தங்கும் இடம், வசிக்கும் நிலை என்ன? ராமனுடைய வேலை என்ன? சக்தி, வீர்யம் அல்லது தனிப் பட்ட போர் முறைகள் என்ன? லக்ஷ்மணனுடைய வீர்யம் போர் செய்யும் முறை இவற்றையும் நன்றாகத் தெரிந்து கொண்டு வாருங்கள். யார் அவர்கள் சேனாபதி? இதையும் தெரிந்து கொண்டு சீக்கிரம் திரும்பி வாருங்கள். இவ்வாறு கம்பீரமாக கட்டளையிட்ட பின், சுக, சாரணர்கள் என்ற ராக்ஷஸர்கள் இருவரும், தாங்களும் வானர ரூபம் எடுத்துக் கொண்டு, கூட்டத்தோடு கூட்டமாக உள்ளே நுழைந்தனர். எண்ண முடியாத பெரும் கூட்டமாக இருந்த வானர சேனையைக் கண்டு மலைத்து விட்டனர். மலைகள் மேலும், அருவிகளிலும், குகைகளிலும், சமுத்திர கரையிலும், உப வனங்களிலும், எங்கு நோக்கினாலும் வானர வீரர்களே காணப்பட்டனர். நீந்த தயாராக இருந்த சிலர், நீந்தி கரையேறிய சிலர், நீந்த ஆசைப்பட்டாலும் தயங்கி நீரில் இறங்க பயந்தபடி சிலர், ஊருக்குள் நுழைந்தவர்கள், நுழைய காத்திருப்பவர், என்று பலவகையிலும், பலசாலிகளான வானரங்கள், உச்சஸ்தாயியில் தங்களுக்குள் பேசிக் கொள்வது கேட்டது. சமுத்திரம் போலவே அளவில் இருந்த அந்த சேனை, அந்த சமுத்திரம் போலவே அடுத்தடுத்து வந்து கொண்டேயிருப்பதை சுக, சாரணர்கள் கண்டனர். மறைந்து, ஒளிந்து நடமாடிய இவ்விருவரையும் விபீஷணன் கண்டு கொண்டான். இருவரையும் பிடித்து ராமரிடம் அழைத்துச் சென்றான். ராமா, இவர்கள் இருவரும் ராவணனுடைய மந்திரிகள். சுக, சாரணர்கள் என்று தெரிவித்தான். லங்கை நகரத்திலிருந்து ஒற்று வேலை செய்ய வந்திருக்கிறார்கள் என்றான். உயிர் வாழ்வதில் நம்பிக்கையே இற்றுப் போன நிலையில், முகம் வெளிறி, பயந்து நடுங்கியபடி நின்றிருந்த இருவரையும் ராமர் ஏறிட்டுப் பார்த்தார். கூப்பிய கரங்களுடன் தங்கள் நிலையை எடுத்துச் சொன்னார்கள். ராஜன், நாங்கள் இருவரும் எங்கள் அரசன், ராவணன் அனுப்பித் தான் வந்தோம். ரகு நந்தனா, இந்த படையின் பலத்தை அறிந்து கொள்ளத்தான் வந்தோம் என்றனர். உடனே ராமர் சிரித்துக் கொண்டே, படை பலம் முழுவதும் பார்த்து விட்டீர்களா? எங்களை நன்றாக பரீக்ஷித்து தெரிந்து கொண்டீர்களா? உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை பூர்த்தி செய்து கொண்டு சௌக்யமாக போய் வாருங்கள். இன்னமும் பார்க்காதது இருந்தால் நன்றாக பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதையும் தெரிந்து கொள்ளுங்கள். விபீஷணனே அழைத்துச் சென்று காட்டுவான் என்றார். எல்லா ஜீவராசிகளிடம் தயை மிகுந்த பரம்பொருளான ராகவன், மேலும் பரிவுடன், பிடிபட்டோமே என்று பயம் வேண்டாம். ஆயுதம் இன்றி இருப்பவர்களோ, பிடிபட்டவர்களோ, தூதனாக வருபவனோ, இவர்களைக் கொல்லக் கூடாது. மறைந்து ஓளிய வேண்டாம். உங்கள் சுய ரூபத்தில், விபிஷணனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, லங்கை திரும்பிச் சென்று, த4னத3ன் சகோதரனான ராவணனிடம் நான் சொன்னதாகச் சொல்லுங்கள். நான் இப்பொழுது சொல்வது போலவே, ராக்ஷஸ ராஜாவிடம் சொல்லுங்கள். எஎந்த பலத்தை நம்பி சீதையை என்னிடமிருந்து கடத்திக் கொண்டு வந்தாயோ, அதைக் காட்டு. உன் இஷ்டம் போல, சைன்யத்துடன், உற்றார், உறவினருடன், நாளை காலையில் நாங்கள் லங்கையைத் தாக்கும் பொழுது காட்டு. பிராகாரங்களையும், தோரணங்கள் அலங்கரிக்கும் மாளிகைகளையும், ராக்ஷஸ பலமும் எங்கள் முன் தோற்று அடி பணிந்து நிற்கப் போவதைப் பார். ராவணா, வரப் போகும் யுத்தத்தில் நான் என் கோபத்தைக் காட்டப் போகிறேன். உன்னால் தாங்க முடியுமா, பார். நீயோ, உன் சைன்யமோ எதிரில் நிற்க முடியாமல் ஓடத்தான் போகிறீர்கள். நாளைக்காலை, இந்திரன் வஜ்ரத்தை தானவர்கள் பேரில் பிரயோகித்ததைப் போல, நானும் ஆயுதப் பிரயோகம் செய்யப் போகிறேன். தயாராக இரு இது தான் நான் ராவணனுக்குச் சொல்லும் பதில் செய்தி. போய் சொல்லுங்கள் என்று சொல்லி சுக, சாரணர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் ராகவனைப் பார்த்து ஜய, ஜய என்று வாழ்த்தி தர்ம வத்ஸலனான ராகவனை நினைத்தபடி லங்கை வந்து சேர்ந்தனர். ராவணனைக் கண்டு நடந்ததைச் சொன்னார்கள். ராவணா, ராக்ஷஸேஸ்வரா, விபீஷணன் எங்களைக் கண்டு கொண்டான். ராகவன் முன் கொண்டு நிறுத்தினான். நியாயமாக நாங்கள் வதம் செய்யப் பட்டிருக்க வேண்டும். அளவில்லா தேஜஸ் உடைய தர்மாத்மா ராமன். எங்களை விடுவித்து விட்டான். நான்கு லோக பாலர்களும் ஒன்றாக இருப்பது போல இந்த நால்வரும் சிறந்த மனிதர்களாக, உத்தமமான குணம் உடையவர்களாக சேர்ந்திருக்கிறார்கள். தாசரதியான ராமன், ஸ்ரீமான் லக்ஷ்மணன், விபீஷணனும், சுக்ரீவனும் நல்ல தேஜஸுடன் மகேந்திரனுக்கு சமமான விக்ரமத்துடன் இருக்கிறார்கள். இப்பொழுது தோரணங்கள் தொங்க அழகான ப்ராகாரங்களுடன் விளங்கும் லங்கையையே பெயர்த்து எடுத்துச் சென்று விடுவார்கள். மற்ற வானர வீரர்கள் இருக்கட்டும், ராமனுடைய ரூபமும், போரில் அவனது அணுகு முறையும் பார்த்தால், அவன் ஒருவனே லங்கையை நாசம் செய்ய போதுமானது. நீங்கள் மூவரும் சேர்ந்தும் எதுவும் செய்ய முடியாது. ராம, லக்ஷ்மணர்களால் பாலிக்கப் பட்டு வரும் சுக்ரீவனின் வானர சேனை, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் வந்தாலும் கூட பிளக்க முடியாதது. பத்து யோஜனை விஸ்தீர்ணமும், நூறு யோஜனை நீளமும் உள்ள சேது கட்டப் பட்டதை கண் முன்னே காண்கிறோம். சாகரத்தைக் கடந்து சேனையும் வந்து சேர்ந்து விட்டது. நத நதீபதியின் தென் திசையில் ராமன் தன் சேனையுடன் வந்து தங்கியிருக்கிறான். தாண்டி வந்து சேர்ந்து விட்டவர்களும், இன்னும் வந்து கொண்டிருப்பவர்களுமாக சேனையில் உள்ளோரின் பலமும் சக்தியும் சொல்லத் தரமன்று. கொடியைத் தூக்கிக் கொண்டு வானர வீரர்கள் மகிழ்ச்சியுடன் முன்னேறி வருகிறார்கள். ஆவலுடன் யுத்தம் செய்ய வருகின்றனர். அவர்களுடன் விரோதம் பாராட்ட வேண்டாம். நம் நிலைமையை உணர்ந்து அமைதி காப்போம். சீதையை தாசரதிக்கு கொடுத்து விடு என்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சுக, சாரண ப்ரேஷணாதிகம் என்ற இருபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
ஸ்ரீமத் ராமாயணம்
யுத்த காண்டம்
அத்தியாயம் 1 (408) ஹனுமத் ப்ரசம்சனம் (ஹனுமானை பாராட்டுதல்) 7
அத்தியாயம் 2 (409) ராம ப்ரோத்சாஹனம் (ராமரை உற்சாகப் படுத்துதல்) 8
அத்தியாயம் 3 (410) லங்கா து3ர்கா3தி கத2னம் (லங்கையின் கோட்டை முதலியவற்றை விவரித்தல்) 9
அத்தியாயம் 4 (411) ராமாபி4ஷேணனம் (ராமன் போருக்கு ஆயத்தங்கள் செய்தல்) 11
அத்தியாயம் 5 (412) ராம விப்ரலம்ப: (பிரிவாற்றாமையால் ராமன் புலம்புதல்) 18
அத்தியாயம் 6 (413) ராவண மந்த்ரணம் (ராவணன் மந்த்ராலோசனை செய்தல்) 20
அத்தியாயம் 7 (414) சசிவோக்தி: (மந்திரிகளின் ஆலோசனை) 21
அத்தியாயம் 8 (415) ப்ரஹஸ்தாதி வசனம் (ப்ரஹஸ்தன் முதலானோர் சொல்வது) 23
அத்தியாயம் 9 (416) விபீ4ஷண சமாலோசனம் (விபீஷணன் ஆலோசனை சொல்லுதல்) 24
அத்தியாயம் 10 (417) விபீ4ஷண பத்2யோபதே3ச: (விபீஷணன் நன்மையை எடுத்துச் சொல்லுதல்) 26
அத்தியாயம் 11 (418) த்3விதீய மந்த்ராதி4வேச: (திரும்பவும் மந்திரி சபையைக் கூட்டுதல்) 28
அத்தியாயம் 12 (419) கும்ப4கர்ண மதி: (கும்பகர்ணனின் ஆலோசனை) 30
அத்தியாயம் 13 (420) மகா பார்ஸ்வ வசோபி4னந்தனம்(மகா பார்ஸ்வன் சொன்னதைக் கொண்டாடுதல்) 33
அத்தியாயம் 14 (421) ப்ரஹஸ்த விபீ4ஷண விவாத3: (ப்ரஹஸ்தனும், விபீஷணனும் வாதம் செய்தல்) 34
அத்தியாயம் 15 (422) இந்திரஜித், விபீ4ஷண விவாதம் (இந்திரஜித்தும், விபீஷணனும் வாதித்தல்).. 36
அத்தியாயம் 16 (423) விபீஷணாக்ரோச: (விபீஷணன் கோபம்) 38
அத்தியாயம் 17 (424) விபீ4ஷண சரணாகதி நிவேத3னம் (விபீஷண சரணாகதி) 39
அத்தியாயம் 18 (425) விபீஷண ஸங்க்ரஹ நிர்ணய: (விபீஷணனை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தல்) 43
அத்தியாயம் 19 (426) ஸர தல்ப சம்வேச: (தர்ப்பை ஆசனத்தில் அமருதல்) 46
அத்தியாயம் 20 (427) சுக்3ரீவ பே4தனோபாய: (சுக்ரீவனை கலைக்க உபாயம் செய்தல்) 48
அத்தியாயம் 21 (428) சமுத்ர ஸம்க்ஷோப: (சமுத்திரத்தை வற்றச் செய்தல்) 50
அத்தியாயம் 22 (429) சேது ப3ந்த4: (சேதுவைக் கட்டுதல்) 53
அத்தியாயம் 23 (430) லங்காபி4ஷேணனம் (லங்கையை முற்றுகையிடுதல்) 57
அத்தியாயம் 24 (431)ராவண ப்ரதிக்ஞா (ராவணன் சூளுரைத்தல்) 58
அத்தியாயம் 25 (432) சுக, சாரண ப்ரேஷணாதிகம்(சுகனையும், சாரணனையும் அனுப்புதல்) 61
அத்தியாயம் 26 (433) கபி ப3லாவேக்ஷணம் (வானர படை பலத்தை, (ராவணன்) தானும் காணுதல்) 63
அத்தியாயம் 27 (434) ஹராதி வானர பராக்ரமாக்யானம்(ஹரன் முதலிய வானரங்களின் பராக்ரமம் பற்றி வர்ணனை) 66
அத்தியாயம் 28 (435) மைந்தா3தி பராக்ராமாக்2யானம்(மைந்தன் முதலானவர்களின் வலிமை பற்றிய வர்ணனை) 69
அத்தியாயம் 29 (436) சார்தூ3லாதி சார ப்ரேஷணம் (சார்தூலன் முதலான ஒற்றர்களை அனுப்புதல்) 71
அத்தியாயம் 30 (437) வானர ப3ல சங்க்யானம் (வானர படையை எண்ணிச் சொல்லுதல்) 73
அத்தியாயம் 31 (438) வித்யுத் ஜிஹ்வ மாயா ப்ரயோக: (வித்ய்த் ஜிஹ்வன் என்பவனின் மாயை) 75
அத்தியாயம் 32 (439) சீதா விலாப: (சீதை வருந்தி புலம்புதல்) 77
அத்தியாயம் 33 (440) சரமா சமாஸ்வாஸனம் (சரமா வந்து சமாதானம் செய்தல்) 80
அத்தியாயம் 34 (441) ராவண நிச்சய கத2னம் (ராவணன் தீர்மானத்தை தெரிந்து கொண்டு வந்து சொல்லுதல்) 83
அத்தியாயம் 35 (442) மால்யவது3பதேச: (மால்யவான் முதலானோர் உபதேசித்தல்) 85
அத்தியாயம் 36 (443) புரத்3வார ரக்ஷா: (கோட்டை வாசலை ரக்ஷித்தல்) 87
அத்தியாயம் 37 (444) ராம குல்ம விபாக: (ராமன் தன் படையை அணிவகுத்து நிறுத்துதல்) 89
அத்தியாயம் 38 (445) சுவேளாரோஹணம் (சுவேள மலையில் ஏறுதல்) 90
அத்தியாயம் 39 (446) லங்கா த3ரிசனம் (லங்கையை தரிசித்தல்) 92
அத்தியாயம் 40 (447) ராவண சுக்3ரீவ நியுத்3த4ம் (ராவணன் சுக்ரீவனுடன் கை கலத்தல்) 93
அத்தியாயம் 41 (448) அங்க3த3 தூ3த்யம் (அங்கதன் தூது செல்லுதல்) 95
அத்தியாயம் 42 (449) யுத்3தா4ரம்ப4: ( யுத்த ஆரம்பம்) 101
அத்தியாயம் 43 (450) த்3வந்த4 யுத்3த4ம்… 103
அத்தியாயம் 44 (451) நிசா யுத்தம் (இரவில் யுத்தம்) 106
அத்தியாயம் 45 (452) நாக3 பாச ப3ந்த4: (நாக பாசத்தால் கட்டுண்டது) 108
அத்தியாயம் 46 (453) சுக்3ரீவாத்3யனு சோக: (சுக்ரீவன் முதலானோர் வருத்தம்) 109
அத்தியாயம் 47 (454) நாக3 ப3த்3த4 ராம லக்ஷ்மண ப்ரத3ர்சனம் நாக பாசத்தால் மூர்ச்சித்த ராம லக்ஷ்மணர்களை காட்டுதல்) 112
அத்தியாயம் 48 (455) சீதாஸ்வாஸனம் (சீதையை சமாதானம் செய்தல்) 113
அத்தியாயம் 49 (456) ராம நிர்வேத3: (ராமனின் மன வருத்தம்) 115
அத்தியாயம் 50 (457) நாக பாச விமோக்ஷணம் (நாக பாசத்திலிருந்து விடுபடுதல்) 117
அத்தியாயம் 51 (458) தூ3ம்ராபி4ஷேணனம் (தூம்ரன் போருக்கு வருதல்) 121
அத்தியாயம் 52 (459) தூ3ம்ராக்ஷ வத4ம் (தூம்ராக்ஷனை வதம் செய்தல்) 123
அத்தியாயம் 53 (460) வஜ்ரதம்ஷ்டிர யுத்தம் (வஜ்ர தம்ஷ்டிரன் செய்த யுத்தம்) 125
அத்தியாயம் 54 (461) வஜ்ரத3ம்ஷ்டிர வத4ம் (வஜ்ர தம்ஷ்டிரனின் வதம்) 127
அத்தியாயம் 55 (462) அகம்பன யுத்தம் (அகம்பனனுடன் போர் புரிதல்) 129
அத்தியாயம் 56 (463) அகம்பன வத4ம் (அகம்பனனை வதம் செய்தல்) 130
அத்தியாயம் 57 (464) ப்ரஹஸ்த யுத்தம் (ப்ரஹஸ்தனுடன் யுத்தம் செய்தல்) 132
அத்தியாயம் 58 (465) ப்ரஹஸ்த வதம் (ப்ரஹஸ்தனின் வதம்) 135
அத்தியாயம் 59 (466) ராவணாபி4ஷேணனம் (ராவணன் போருக்கு புறப்படுதல்) 138
அத்தியாயம் 60 (467) கும்பகர்ண ப்ரபோத4: (கும்பகர்ணனை எழுப்புதல்) 147
அத்தியாயம் 61 (468) கும்ப4கர்ண வ்ருத்த கத2னம் (கும்பகர்ணனிடம் நடந்ததைச் சொல்லுதல்) 152
அத்தியாயம் 62 (469) ராவணாப்4யர்த்தனா (ராவணனின் வேண்டுகோள்) 154
அத்தியாயம் 63 (470) கும்பகர்ணானுசோக: (கும்பகர்ணனின் வருத்தம்) 156
அத்தியாயம் 64 (471) சீதா ப்ரலோப4னோபாய:(சீதையை ஆசை காட்டி இணங்கச் செய்ய உபாயம் செய்தல்) 160
அத்தியாயம் 65 (472) கும்பகர்ணாபி4ஷேணனம் (கும்பகர்ணன் போர் முனைக்குச் செல்லுதல்) 162
அத்தியாயம் 66 (473) வானர பர்யவஸ்தாபனம்(வானரங்களின் தடுமாற்றமும், திரும்ப நிலை நிறுத்துதலும்) 165
அத்தியாயம் 67 (474) கும்பகர்ண வத4: (கும்பகர்ணனின் வதம்) 167
அத்தியாயம் 68 (475) ராவணானுசோக: (ராவணன் வருந்துதல்) 178
அத்தியாயம் 69 (476) நராந்தக வத4: (நராந்தகனின் வதம்) 179
அத்தியாயம் 70 (477) தேவாந்தகாதி வத: (தேவாந்தகன் முதலானோர் வதம்) 185
அத்தியாயம் 71 (478) அதிகாய வத4: (அதிகாயனின் வதம்) 188
அத்தியாயம் 72 (479) ராவண மன்யு சல்யாவிஷ்கார: (ராவணனை மன்யு எனும் கோபம் துளைத்தெடுப்பது) 194
அத்தியாயம் 73 (480) இந்திரஜித் மாயா யுத்தம் (இந்திரஜித்தின் மாயா யுத்தம்) 195
அத்தியாயம் 74 (481) ஔஷதி4 பர்வதானனம் (ஔஷதி மலையைக் கொண்டு வருதல்) 199
அத்தியாயம் 75 (482) லங்கா தா3ஹ: (லங்கையை எரித்தல்) 204
அத்தியாயம் 76 (483) கம்பனனாதி வத: (கம்பனன் முதலானோர் வதம்) 207
அத்தியாயம் 77 (484) நிகும்ப4 வத4: (நிகும்பனின் வதம்) 211
அத்தியாயம் 78 (485) மகராபி4ஷேணனம் (மகராக்ஷன் போருக்கு வருதல்) 213
அத்தியாயம் 79 (486)மகராக்ஷ வத4: (மகராக்ஷனை வதம் செய்தல்) 214
அத்தியாயம் 80 (487) திரோஹித ராவணி யுத்தம் (ராவணன் குமாரன், மறைந்திருந்து போர் செய்தல்) 216
அத்தியாயம் 81 (488) மாயா சீதா வத4: (மாயா சீதையை வதம் செய்தல்) 218
அத்தியாயம் 82 (489) ஹனுமதா3தி நிர்வேத3: (ஹனுமான் முதலானோர் வருந்துதல்) 220
அத்தியாயம் 83 (490) ராமாஸ்வாஸனம் (ராமரை சமாதானப் படுத்துதல்) 222
அத்தியாயம் 84 (491) இந்திரஜித் மாயா விவரணம் (இந்திரஜித்தின் மாயா பற்றி சொல்லுதல்) 225
அத்தியாயம் 85 (492) நிகும்பிளாபியானம் (நிகும்பிளை நோக்கி படையெடுத்தல்) 226
அத்தியாயம் 86 (493) ராவணி ப3ல கத2னம் (ராவண குமாரனின் பலத்தை விவரித்தல்) 228
அத்தியாயம் 87 (494) விபீஷண, ராவணி பரஸ்பர நிந்தா3 (விபீஷணனும் ராவணன் மகன் இந்திரஜித்தும் பரஸ்பரம் ஏசிக் கொள்ளுதல்) 230
அத்தியாயம் 88 (495)சௌமித்ரி ராவணி யுத்தம் (சௌமித்ரியும் ராவணன் மகனும் யுத்தம் செய்தல்) 232
அத்தியாயம் 89 (496) சௌமித்ரி சந்துக்ஷணம் (லக்ஷ்மணனை போருக்கு புறப்பட தூண்டுதல்) 235
அத்தியாயம் 90 (497) சௌமித்ரி ராவணி யுத்தம் (சௌமித்திரியும் ராவணியும் போரிடுதல்) 236
அத்தியாயம் 91 (498) ராவணி வத| (ராவணன் மகன் இந்திரஜித்தை வதம் செய்தல்) 239
அத்தியாயம் 92 (499) ராவணி சஸ்திர ஹத சிகித்ஸா (இந்திரஜித்தின் சரங்களால் பட்ட காயங்களுக்கு சிகித்சை செய்தல்) 243
அத்தியாயம் 93 (500) சீதா ஹனனோத்யம நிவ்ருத்தி (சீதையைக் கொல்ல முயன்றதை தடுத்தல்) 245
அத்தியாயம் 94 (501) கா3ந்த4ர்வாஸ்திர மோகனம் காந்தர்வாஸ்திரத்தைக் கொண்டு மயங்கச் செய்தல்) 248
அத்தியாயம் 95 (502) ராக்ஷஸி விலாப| (ராக்ஷஸிகளில் புலம்பல்) 251
அத்தியாயம் 96 (503) ராவணாபி4ஷேணனம் (ராவணன் போருக்குச் செல்லுதல்) 254
அத்தியாயம் 97 (504) விரூபாக்ஷ வத4ம் (விரூபாக்ஷனின் வதம்) 257
அத்தியாயம் 98 (505) மகோதர வத4| (மகோதரன் வதம் செய்யப்படுதல்) 259
அத்தியாயம் 99 (506) மகா பார்ஸ்வ வத|| (மகா பார்ஸ்வனின் வதம்) 260
அத்தியாயம் 100 (507) ராம ராவணாஸ்த்ர பரம்பரா(ராம, ராவணர்களின் தொடர்ந்த அஸ்திரங்களின் தாக்குதல்) 262
அத்தியாயம் 101 (508) லக்ஷ்மண சக்தி ஷேப| (சக்தி ஆயுதத்தால் லக்ஷ்மணன் அடிபட்டு விழுதல்) 265
அத்தியாயம் 102 (509) லக்ஷ்மண சஞ்ஜீவனம் (லக்ஷ்மணனை மூர்ச்சை தெளிவித்தல்) 268
அத்தியாயம் 103 (510) ஐந்த்ர கேது பாதனம் (இந்திர கேது எனும் கொடியை விழச் செய்தல்) 272
அத்தியாயம் 104 (511) ராவண சூல ப4ங்க3|| (ராவணனின் சூலத்தை உடைத்தல்) 274
அத்தியாயம் 105 (512) தசக்ரீவ விசூர்ணனம் (தசக்ரீவ ராவணனை அலைக்கழித்தல்) 276
அத்தியாயம் 106 (513) சாரதி விஞேயம் (சாரதியின் விண்ணப்பம்) 278
அத்தியாயம் 107 (514) ஆதித்ய ஹ்ருதயம்… 280
அத்தியாயம் 108 (515) சுபா4 சுப4 நிமித்த தரிசனம் (சுப அசுப நிமித்தங்களைக் காணுதல்) 282
அத்தியாயம் 109 (516) ராவண த்4வஜோன்மத2னம் (ராவணன் கொடியை விழச் செய்தல்) 284
அத்தியாயம் 110 (517) ராவணைக சத சிரச் சே2த3னம் (ராவணனின் நூற்றியொரு தலையை கொய்தல்) 286
அத்தியாயம் 111 (518) பௌலஸ்த்ய வத|| (புலஸ்திய குலத்தினனான ராவணனின் வதம்) 289
அத்தியாயம் 112 (519) விபீ4ஷண விலாப : (விபீஷணன் வருந்தி புலம்புதல்) 290
அத்தியாயம் 113 (520) ராவணாந்த:புர பரிதே3வனம் (ராவணனின், உற்றார், உறவினர்கள் வருந்துதல்) 292
அத்தியாயம் 114 (521) மந்தோ3த3ரீ விலாப|| (மந்தோதரி அழுது புலம்புதல்) 294
அத்தியாயம் 115 (522) விபீ4ஷணாபி4ஷேக: (விபீஷணனுக்கு முடி சூட்டுதல்) 300
அத்தியாயம் 116 (523) மைதிலி பிரிய நிவேத3னம் (மைதிலிக்கு பிரியமானதைச் சொல்லுதல்) 302
அத்தியாயம் 117 (524) சீதா பர்த்ரு முகோத்வீக்ஷணம் (சீதை கணவனின் முகத்தைப் பார்த்தல்) 305
அத்தியாயம் 118 (525) சீதா ப்ரத்யாதே3ச: (சீதையை ஏற்க மறுத்து திருப்பி அனுப்புதல்) 307
அத்தியாயம் 119 (526) ஹுதாசன ப்ரவேச: (அக்னி பிரவேசம்) 308
அத்தியாயம் 120 (527) ப்ரும்ம க்ருத ராம ஸ்தவ| (ப்ரும்மா செய்த ராம துதி) 310
அத்தியாயம் 121 (528) சீதா ப்ரதிக்3ரஹ|| (சீதையை ஏற்றுக் கொள்ளுதல்) 312
அத்தியாயம் 122 (529) தசரத ப்ரதிசயாதேச: (தசரதன் வந்து பரிந்துரை செய்தல்) 314
அத்தியாயம் 123 (530) இந்திர வர தானம் (இந்திரன் வரம் அளித்தல்) 316
அத்தியாயம் 124 (531) புஷ்பகோபஸ்தாபனம் (புஷ்பக விமானத்தை வரவழைத்தல்) 317
அத்தியாயம் 125 (532) புஷ்பகோத்பதனம் (புஷ்பக விமானம் கிளம்புதல்) 319
அத்தியாயம் 126 (533) ப்ரத்யாவ்ருத்தி பத2 வர்ணனம்.(திரும்பி சென்ற வழியை விவரித்தல்) 320
அத்தியாயம் 127 (534) ப4ரத்3வாஜாமந்த்ரணம் (பரத்வாஜர் விருந்துண்ண அழைத்தல்) 323
அத்தியாயம் 128 (535) ப4ரத ப்ரியாக்2யானம் (பரதனுக்கு பிரியமானதை தெரிவித்தல்) 324
அத்தியாயம் 129 (536) ஹனுமத் பரத சம்பாஷணம் (ஹனுமானும் பரதனும் சம்பாஷித்தல்) 327
அத்தியாயம் 130 (537) ப4ரத சமாக3ம: (பரதனை சந்தித்தல்) 330
அத்தியாயம் 131 (538) ராம பட்டாபிஷேக|| ( ராம பட்டாபிஷேகம்) 333
அத்தியாயம் 1 (408) ஹனுமத் ப்ரசம்சனம் (ஹனுமானை பாராட்டுதல்)
நடந்ததை நடந்தபடி ஹனுமான் சொல்லக் கேட்ட ராமன், மனம் மகிழ்ந்து அன்புடன் பதில் சொன்னார். ஹனுமான் செய்தது மிக அரிய செயல். இந்த உலகில் கடினமான இந்த செயலை வேறு யாரும் மனத்தளவில் கூட செய்யலாம் என்று நினைத்திருக்க முடியாது. பெரிய சாகரத்தை தாண்டியதே மிகப் பெரிய காரியம். கருடனோ, வாயுவோ, அன்றி இப்பொழுது ஹனுமான் அன்றி வேறு யாராலும் முடியாது. தேவ, தானவ, யக்ஷர்களில், கந்தர்வ, உரக, ராக்ஷஸர்களில், ராவணன் கவனமாக பாதுகாத்து வரும் லங்கையின் உள்ளே பிரவேசிக்க முடியாது. வீரமும், பலமும் மிக்க ராவணனின் நகரில், எதிரிகள் தரப்பிலிருந்து யாரும் தடுக்கப் படாமல் உள்ளே நுழைவானா, அப்படியே நுழைந்தாலும் உயிருடன் திரும்பி வருவானா என்பது சந்தேகமே. உயிருடன் திரும்புவது சுலபமல்ல. அப்படியிருக்க, லங்கா நகரின் கோட்டைக்குள் நுழைந்து வெளியிலும் வந்துள்ள ஹனுமானுக்கு இணை அவனேதான். சுக்ரீவன் இட்ட கட்டளையை நிறைவேற்றி, தான் சிறந்த மந்திரி என்று நிரூபித்து விட்டான். மகத்தான இந்த காரியத்தில் தன் பலம், புத்தி, விக்ரமம் அனைத்தையும் பிரயோகித்து காரியத்தை செவ்வனே செய்து காட்டியிருக்கிறான். கடினமான காரியம் செய்ய ஒருவரை நியமிக்கும் பொழுது அதை பிரியமாக விருப்பத்துடன் செய்பவனே புருஷோத்தமன். சதுர்த்தனாக – ஆற்றலுடையவனாக- இருந்தும், தலைவனின் விருப்பத்தை நிறைவேற்றாமல், ஓரளவு செய்து முடித்து திரும்புபவன், மத்யமன். இதை செய் என்று சொல்லி அனுப்பிய போதும், சக்தியுடையவனாக இருந்தும், செய்யும் முறை அறிந்தும் செய்யாமல் வருபவன் அதமன். அப்படியிருக்க ஹனுமான் நியமித்த காரியத்தை செய்யும் பொழுது தன்னையும் தாழ்வாக காட்டிக் கொள்ளவில்லை. சுக்ரீவனையும் திருப்தி செய்து சந்தோஷமாக்கியிருக்கிறான். நானும், ரகு வம்சமும், லக்ஷ்மணனும், வைதேஹியை கண்டு கொண்டதால், தர்மம் தவறாமல் காப்பாற்றப் பட்டோம். மனம் கலங்கி தீனனாக இருந்த எனக்கும் மன நிம்மதி கிடைத்தது. இங்கு வந்து எனக்கு பிரியமானதை சொன்னவனுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். ஹனுமானே, என் மனப் பூர்வமான ஆலிங்கனம் உனக்கு எல்லா க்ஷேமத்தையும் கொடுக்கட்டும். மகத்தான செயலை செய்த ஹனுமானுக்கு இதுதான் நான் தரும் பரிசு என்று சொல்லி மகிழ்ச்சி பூரிப்போடு ஹனுமானை தழுவிக் கொண்டார். தனக்கு இடப்பட்ட கட்டளையை செவ்வனே முடித்து விட்டு வந்தவனை ஆரத் தழுவிக் கொண்டார். சற்று நேரம் யோசித்து பின்னர், ரகோத்தமன், சுக்ரீவனும் கேட்டுக் கொண்டிருக்கையில், சீதையை தேடிக் கண்டு பிடித்தது ஒரு நல்ல ஆரம்பம். சாகரத்தை நினைக்கும் பொழுது கவலையாக இருக்கிறது. எப்படித்தான் நீர் நிறைந்த சாகரத்தை வானர வீரர்கள் தாண்டிச் சென்று அக்கரை அடைவார்களோ, வழியில் நீரில் மூழ்காமல், எதுவும் அசம்பாவிதம் ஆகாமல் படை வீரர்கள் அக்கரை போய் சேர வேண்டும். வைதேஹி வ்ருத்தாந்தம் கேட்டு சமாதானம் ஒரு புறம் இருக்க, அடுத்து செய்ய வேண்டிய செயல்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஹனுமத் ப்ரஸம்சனம் என்ற முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 2 (409) ராம ப்ரோத்சாஹனம் (ராமரை உற்சாகப் படுத்துதல்)
இவ்வாறு சிந்தனை வயப் பட்ட ராமனை சுக்ரீவன் ஆறுதல் சொல்லி உற்சாகமடையச் செய்தான். சாதாரண ஜனங்கள் போல ராமா, நீயும் கலங்கலாமா? நீ சுத்த வீரன். செய் நன்றி மறந்தவன் நண்பனை கை விடுவது போல இந்த கவலையை கை விடு. இந்த சமயம் இந்த கவலை தேவையே இல்லை. ஜானகி இருக்கும் இடம் தெரிந்தாயிற்று. சத்ருவின் இருப்பிடம் தெரிந்து கொண்டு விட்டோம். ராகவனே, நீ புத்திசாலி. சாஸ்திரம் அறிந்தவன். பண்டிதன். க்ருதாத்மா எனும் சாதகனுக்கு சுய நிந்தை அனாவசியம். ஆபத்து கூட. (தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை சாதகனுக்கு இடையூறே) . பெரிய பெரிய ஆமைகள், முதலைகள் நிரம்பிய சமுத்திரத்தை தாண்டிச் செல்வோம். லங்கையில் நுழைவோம். ராவணனை வதைப்போம். உற்சாகத்தை இழந்து கவலைப் படுபவன், சோகத்திலேயே மூழ்கியவனாக, தன் பொருளை இழக்கிறான். காரியத்தையும் செய்வதில்லை. நமது வானர வீரர்கள் சூரர்கள். சமர்த்தர்கள். உனக்கு பிரியமானதைச் செய்யத் துடிப்பவர்கள். நெருப்பில் விழக் கூட தயாராக இருக்கிறார்கள் இவர்களின் குதூகல ஆரவாரத்தை வைத்து சொல்கிறேன். மேலும் நான் ஊகித்துச் சொல்கிறேன், நம்பிக்கையுடன் சொல்கிறேன். நாம் நம் பலத்தை திரட்டி ராவணனை போருக்கு அழைத்து, வெற்றிக் கொடி நாட்டி, சீதையை அழைத்து வருவோம். பாப காரியத்தை செய்த ராவணனுக்கு நீ தண்டனை தர வேண்டியதும் அவசியம். இடையில் பாலம் கட்டி நாம் லங்கையை அடைவோம். த்ரிகூட சிகரத்தில் அமைந்துள்ள நகரத்தைப் பார். ராவணன் தோற்று விழுவதைக் கண் குளிரப் பார். அதற்கு முன், சமுத்திரத்தின் மேல் பாலம் கட்டுவது மிக முக்கியமான காரியம். இது இல்லாமல் நம் வானர சேனை வீரர்கள் சேதமடையாமல் அக்கரை போய் சேருவது சிரமமே. வானரங்கள் என்ன, இந்திரன் உள்ளிட்ட தேவர்களே திகைக்கும் செயல். சேதுவைக் கட்டி, லங்கையின் அருகாமை வரை பாதை அமைத்து சைன்யம் அங்கு போய் சேர்ந்து விட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். இந்த வானரர்கள், தங்கள் விருப்பம் போல உருவம் எடுத்துக் கொண்டு தளராமல் யுத்தம் செய்யக் கூடியவர்கள். அதனால் நாம் உடனடியாக செய்ய வேண்டியதை சிந்திப்போம். தயக்கமும், சோகமும், மனிதனை உயர விட்டாமல் தடுக்கும், ஆணி வேரையே அழிக்க வல்லவை இவை. தயக்கம் சர்வார்த்த நாசினி என்றால், சோகம் சூரனையும் அவன் தன் சௌர்யம் இழக்கச் செய்து விடும். உற்சாகத்தோடு, தன்னம்பிக்கையோடு, எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய ஊக்கத்தைத் தரும் சத்வ குணத்தை வரவழைத்துக் கொள். மகத்தான பொறுப்புகளையுடைய உன் போன்ற சூர வீரர்கள், கஷ்டமோ, நஷ்டமோ எதுவானாலும் கவலைப் படுவதில்லை. அது அவர்களின் இயல்பும் இல்லை. நீயோ புத்திசாலிகளுள் ஸ்ரேஷ்டன். சாஸ்திரங்களை நன்கு அறிந்தவன். நானும், என்னைப் போன்ற மந்திரிகளும் உனக்கு உதவ காத்திருக்கிறோம். எங்களை சரியான முறையில், முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவாய். ராகவா, மூன்று உலகிலும் நான், உன் போல யுத்தத்தின் முன்னிலையில் வில்லும் கையுமாக நிற்கும் வீரனைக் கண்டதில்லை. இந்த வானரங்கள் இதே நினைவாக, போர் புரியும் ஆவலுடன் தயாராக நிற்கின்றார்கள். இவர்களுடன் எந்த ஆபத்தையும் நீ எதிர் கொள்ளலாம். சீக்கிரமே இந்த சமுத்திரத்தைக் கடந்து சென்று சீதையைக் காண்பாய். பூபதே, அரசனே, அதனால் சோகத்தை தவிர்த்து, க்ரோதம் கொள். க்ஷத்திரியன், சுபாவமாக கோழை, படை பலமும் இல்லை என்றால் தான் செயலிழந்து சண்டைக்கு பயப்படுவான். ராகவா, இந்த சமுத்திரத்தை தாண்டி எப்படி செல்லலாம் என்று சூக்ஷ்ம புத்தியுடன் யோஜனை செய். இந்த நத நதிபதியை நாம் எல்லோருமாக தாண்டி விட்டோமானால் வெற்றி நிச்சயம். இந்த வானர வீரர்கள் போரில் சூரர்கள். கற்களையும், மரங்களையும் கொண்டே, மழையாக பொழிந்து எதிரி படையை த்வம்சம் செய்து விடுவார்கள். வருணாலயம் என்ற இந்த சாகரத்தை தாண்டி விட்டால் ராவணன் ஒழிந்தான் என்றே கொள். அதிகம் சொல்வானேன். நீ விஜயனாக திரும்பி வருவாய். நிமித்தங்களும், என் மனதில் பெருகும் மகிழ்ச்சியுமே சாட்சி. நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராம ப்ரோத்சாஹனம் என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 3 (410) லங்கா து3ர்கா3தி கத2னம் (லங்கையின் கோட்டை முதலியவற்றை விவரித்தல்)
சுக்ரீவன் ஆறுதலாக சொன்னதையும், ஹனுமானின் ஆலோசனையையும் ராகவன் அப்படியே ஏற்றுக் கொண்டான். இந்த சம்பாஷனையில், சுக்ரீவன் சொல்லில், காரணங்களும், பொருளும், ஹனுமனின் வாக்கில் பரமான தத்வார்த்தமும் நிறைந்திருந்தது. ராகவன் சொன்னான், தவம் செய்து அணை கட்டுவோம். அல்லது சாகர ஜலத்தை வற்ற செய்வோம். எப்படியும் இந்த சாகரத்தை தாண்டியே ஆக வேண்டும், செய்வோம். ஹனுமானே, லங்கையில் நுழைய முடியாத கோட்டைகள் எவ்வளவு? நீ கண்ட வரையில் விவரமாக சொல். படையின் அளவு என்ன? கோட்டை வாசல் எப்படி பாதுகாக்கப் படுகின்றது. ஒற்றர்கள் இருக்கிறார்களா? ரசசிய உளவாளிகள் லங்கையில் உள்ளனரா? ராக்ஷஸர்களின் வீடுகள் எப்படி அமைந்துள்ளன? எப்படி நீ லங்கையில் கண்டாயோ, சுகமாகவோ வேறு விதமாகவோ, நீ கண்டபடி சொல். எல்லாவற்றையும் விவரமாக சொல்வதில் நீ தேர்ச்சி பெற்றவன் என்பதிலும் சந்தேகமேயில்லை என்றான். சொல்லின் செல்வனான, மாருதாத்மஜன், ராமரின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் துவங்கினான். கேளுங்கள். கோட்டை அமைப்பு இவற்றை, நான் கண்டபடியே சொல்கிறேன். லங்கா நகரம் மிகவும் பாதுகாப்பாக எளிதில் நெருங்க முடியாதபடி அமைந்துள்ளது. படை வீரர்கள் நாலா புறமும் காணப்படுவார்கள். ராக்ஷஸர்களும் ராவணனை விருப்பத்துடன் அனுசரித்து இருப்பவர்கள். ராவணனின் தேஜஸால் படை வீரர்கள் உற்சாகம் அடைவார்கள். லங்கையின் செழிப்பை சொல்லி முடியாது. படை பலத்தையும், அதன் பிரிவுகளையும், வாகனங்களின் எண்ணிக்கை, சமுத்திரத்தின் பயங்கரமும் முக்கியமாக முதலில் சொல்கிறேன். மதம் பிடித்த யானைகள் உலவும் லங்கா நகரம், மிகவும் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக இருக்கிறது. பெரிய ரதங்கள் தெருக்களில் ஓடுகின்றன. கூட்டம் கூட்டமாக ராக்ஷஸர்கள் தென்படுவார்கள். குதிரைகளும், அதை ஓட்டுபவர்களும், நிறைய உண்டு. வெளி மனிதர் யாரும் எளிதில் உள்ளே சென்று விட முடியாது. திடமாக தாழ்ப்பாள் போடப் பட்டு, குறுக்காக பெரிய சட்டங்கள் போடப் பட்டு இருக்கும். நான்கு வாசல்கள், பெரிய கதவுகள் அகலமும் உயரமுமாக இருக்கும். இந்த கதவுகளிலும் யந்திரங்கள் பொருத்தப் பட்டுள்ளன. இக்ஷுபலா என்ற இந்த யந்திரங்களும் மிகப் பெரியவை, மிகுந்த பலம் கொண்டவை. வெளியிலிருந்து வரும் சைன்யத்தை இவை இங்கேயே நிறுத்தி திருப்பி விடும். வாசலில் நன்றாக சோதித்து அப்பழுக்கு இல்லாத சதக்4னீ என்ற ஆயுதம், கூர்மையாக இரும்பினால் செய்யப் பட்டு நூற்றுக் கணக்காக வைத்து, ராக்ஷஸ கூட்டங்களால் பாதுகாக்கப் படுகின்றன. வெளி ப்ராகாரத்தில் நுழையவே முடியாது. பொன்னிறமாக, பவழம், மணி வைடூரியம், முத்து இவை பதிக்கப் பெற்ற பெரும் ப்ராகாரம். குளிர்ந்த நீரை எடுத்துச் செல்லும் பெரிய அகழிகள். ஆழமானவை. இதில் முதலைகளும், மீன்களும் நிரம்பி இருக்கும். நான்கு வாசல்களிலும் யந்திரங்கள் பொருத்தப் பெற்ற நீண்ட பாலங்கள் காணப்படும். வரிசையாக வீடுகள். வேற்று சைன்யம் வந்தால் இந்த பாலத்தை தாண்டுவதே அச்சம் தரும் செயலாகும். பெரிய உத்தரங்கள் இந்த யந்திரங்களால் இயக்கப் படும். ஒருவனாக இந்த பாலத்தை இறக்கி விட முடியாது. அவ்வளவு திடமானது. கனமானது. பொன்மயமான பல தூண்களும் யாக சாலைகளும் அழகாகத் தெரியும். ராவணன் ஸ்வயமாகவே சண்டையிட விருப்பம் உள்ளவன். அவனது இயல்பே யுத்தம் செய்வது. தானாக முன்னுக்கு வந்தவன். எதற்கும் கலங்காதவன். படைகளை பாதுகாத்து வைத்து, பராமரிப்பதில் வல்லவன். லங்கையோ நெருங்க முடியாத கோட்டைகள், அகழிகள் சூழ்ந்தது. பயங்கரமானது. நதி, பர்வதம், வனம் தவிர செயற்கை என்ற நான்கு விதமான தடைகள் கோட்டைக்குள் நுழைய விடாமல் தடுக்கும். சமுத்திரத்தின் அக்கரையில் அமைந்துள்ளது. சமுத்திரமோ, வெகு தூரம் பரவி கடக்க கஷ்டமாக அமைந்துள்ளது. இதில் கப்பல் போகவும் வழியில்லை. இந்த நகரமும் மலையின் உச்சியில் நிர்மாணிக்கபட்டது. எளிதில் நுழைய முடியாதபடி, தேவர்களின் தலை நகரம் போன்றது. மாற்று சாதனங்களும் எதுவும் இல்லை. குதிரைகளும் யானைகளும் கணக்கிலடங்கா. இந்த லங்கையை எளிதில் ஜயிக்க முடியாது தான். பரிக4ம் எனும் ஆயுதமும், சதக்4னீ எனும் ஆயுதமும் வித விதமான யந்திரங்களும், இந்த துராத்மாவான ராவணனின் ஊரை அலங்கரிக்கின்றன. பத்தாயிரம் ராக்ஷஸர்கள் கிழக்கு வாயிலில் கையில் சூலத்துடன், பலசாலிகளாக, வாள் வித்தையில் தேர்ந்தவர்களாக, காவல் நிற்கிறார்கள். நூறு பத்தாயிரம் வீரர்கள், தென் திசையில் காவல் இருக்கிறார்கள். நான்கு விதமான (ரத, கஜ, துரக, பதாதி-கால் நடை வீரர்கள்) போர் வீரர்கள், சைன்யங்களாக பிரிந்து, தேர்ந்தெடுத்த உத்தமமான காவல் வீரர்கள் நிற்கிறார்கள். மேற்கு பகுதியில் ஒரு கோடி ராக்ஷஸர்கள் இருப்பார்கள். உரையுடன் வாள் அலங்கரிக்க, எல்லா அஸ்திர ஞானமும் உடையவர்கள். வடக்கில் நூறு கோடி ராக்ஷஸர்கள் காவல் இருப்பார்கள். ரதம் ஓட்டுபவர்கள். குதிரை பராமரிப்பவர்கள் என்று பலரும், ராவணனால் நன்றாக போஷித்து வளர்க்கப் பட்டவர்கள். நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் அடுத்த பதவியில் இருக்கிறார்கள். இவர்களும் போர் வீரர்களே. எளிதில் இவர்களையும் முறியடிக்க முடியாது. இந்த பாலங்களையே நான் தகர்த்து எறிந்தேன். அகழிகளை நிரப்பி விட்டேன். லங்கா நகரை எரித்தேன். ப்ராகாரங்களை த்வம்சம் செய்தேன். உடல் பலம் ஒன்று மட்டும் கொண்டு ராக்ஷஸர்களை ஓட வைத்தேன். எப்படியாவது ஏதாவது செய்து சமுத்திரத்தை தாண்டி விட்டோமானால், இந்த வானரங்கள் லங்கையை அழித்து விட்டார்கள் என்றே கொள்ளலாம். அங்க3த3ன், த்3விவித3ன், மைந்த3ன், ஜாம்ப3வான், பனஸன், நளன், நீலன், சேனாபதி, தவிர வானர சைன்யம் முற்றிலும் இருக்கும் பொழுது நமக்கு என்ன குறை? கடல் தாண்டிச் சென்று ராவணன் ஊரை அடைந்து, மலைகளுடனும், தோரணங்களுடனும், ப்ராகாரங்களுடனும், அதில் உள்ள வீடுகள், மாளிகைகள் இவற்றுடன் லங்கா நகரையே தூக்கிக் கொன்டு வந்து விடுவார்கள். சீக்கிரம் கட்டளையிடுங்கள். படை திரண்டு முஹுர்த்த நேரத்தில், புறப்பட ஆயத்தம் செய்து விடுவோம்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் லங்கா து3ர்கா3தி கத2னம் என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 4 (411) ராமாபி4ஷேணனம் (ராமன் போருக்கு ஆயத்தங்கள் செய்தல்)
வரிசைக் கிரமமாக ஹனுமான் தான் கண்டதைச் சொல்லக் கேட்ட சத்ய பராக்ரமனான ராமன் பதில் சொன்னான். பலசாலியான ராவணனின் ஊரைப் பற்றிச் சொன்னாய். லங்கா புரியின் உயர்வைச் சொன்னாய். வெகு சீக்கிரம் அதை துவம்சம் செய்து விடுகிறேன். மத்தால் கடைவது போல் கடைந்து விடுகிறேன். பார்த்துக் கொண்டே இரு. இது சத்யம் என்றவன், சுக்ரீவனைப் பார்த்து உடனே கிளம்ப சரியான நேரம் இது தான். விஜய என்ற முஹுர்த்தமும், சூரியன் நடு வானில் வந்து விட்டதும் நல்ல சகுனங்கள். என் சீதையை அபகரித்துக் கொண்டு போனவனை நேரில் தெரிந்து கொள்வோம். என் விஷயமாக விவரங்கள் தெரிந்த பிறகு இப்பொழுது நம்பிக்கையுடன் உயிர் தரித்து இருப்பாள். காத்திருப்பாள். இதோ உயிர் போய் விடும் என்ற சமயம் வியாதியஸ்தன், அமுதத்தைப் பருகி, நம்பிக்கை துளிர் விட காத்திருப்பது போல இருப்பாள். இன்று பங்குனி மாத உத்திரம். நாளை ஹஸ்தம். சுக்ரீவா, சேனையை தயார் செய். எல்லோருமாக கிளம்புவோம். நல்ல நிமித்தங்களும் தோன்றுகின்றன. ராவணனை வதைத்து ஜானகியை அழைத்து வர இவை சாதகமான சகுனங்களே. என் கண்களின் இமைகள் துடிக்கின்றன. என் மனோரதம் நிறைவேறும், வெற்றி பெறுவேன் என்று சொல்வது போல இருக்கிறது. இதைக் கேட்டு லக்ஷ்மணனும், சுக்ரீவனும் மரியாதையுடன் வணங்கி நிற்க, மேலும் விவரமாக சொல்லலானார். சேனையின் தலைமையில் நீலன் போகட்டும். வேகமாக செல்லக் கூடிய நூறாயிரம் வானர வீரர்களுடன் வழியை சரி பார்த்துக் கொண்டு முன்னால் செல்லட்டும். சேனாபதி நீலனே, பழங்களும் காய் கிழங்குகளும் நிறைந்து, குளிர்ந்த ஜலம், காடுகள் அடர்ந்தவழியில் உன் வீரர்களை அழைத்துச் செல். வழியில் மது நிறைந்த பூக்களுடன் இருந்தால் இன்னும் விசேஷம். சீக்கிரம் கிளம்பு. துஷ்டர்கள் இந்த ஜலத்தை, பழம், காய் கிழங்குகளையும் கெடுத்து விடாமல் பார்த்துக் கொள். காவல் இருக்கும் ராக்ஷஸர்களிடம் ஜாக்கிரதையாக இரு. பள்ளமான குகைகளில், அடர்ந்த காடுகளில் வானரங்கள் குதித்து போகும் பொழுது கவனமாக செல்லுங்கள். எதிரிகளின் பலம் மறைந்திருந்து தாக்கலாம். பயங்கரமான செயலில் இறங்குகிறோம். தைரியமாக விக்ரமத்தை காட்ட வேண்டிய சமயம். உங்களிடம் அதிகமாக சேமித்து வைக்கப் பட்டுள்ள பலத்தை இப்பொழுது காட்டுங்கள். கடல் போன்ற இந்த சைன்யத்தின் முன் நிற்கும் வீரர்கள், நல்ல பலசாலிகளாக கபி சிங்கங்களாக நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக செல்லுங்கள். மலை போன்ற க3ஜனும், மகா பலசாலியான க3வயனும், க3வாக்ஷனும், முன்னால் செல்லுங்கள். வீரர்களே, நீங்கள் சேனைத் தலைவர்கள், தலைமை தாங்கி படையை நடத்திச் செல்லுங்கள். வானர சேனை கிளம்பட்டும். தென் பகுதியை ருஷப4னென்ற வானரன் கவனித்துக் கொள்ளட்டும். (க3ந்த4 ஹஸ்தி) மத ஜலம் பெருக்கெடுத்து ஓடும் யானையைப் போல எதிர்க்க முடியாத பலம் உடையவன் க3ந்த4 மாத3னன், இடது பகுதியில் இருந்து கவனித்துக் கொள்ளட்டும். சேனைகள் நடுவில் நான் செல்வேன். ஐராவதத்தின் மேல் ஏறி இந்திரன் வருவது போல ஹனுமானின் முதுகில் ஏறி, நாலா புறமும் வீரர்களை மகிழ்வித்துக் கொண்டு வருவேன். இந்த லக்ஷ்மணன் அந்தகன் போல போரில் விளங்குபவன், அங்கதனோடு வரட்டும். சார்வபௌ4மன் என்ற யானையில் மேல் குபேரன் (தனாதிகாரி) வருவது போல வருவான். ஜாம்பவானும், சுஷேணனும், வேக3 த3ர்சீ என்ற வானர வீரனும், மூவருமாக மையப் பகுதியை கவனித்துக் கொள்ளுங்கள். ராகவன் சொன்னபடியே சுக்ரீவன், சேனையை அணி வகுத்தான். வானர கணங்களுக்கு கட்டளைகள் பிறப்பித்தான். எல்லா வானர வீரர்களுமே, யுத்தம் செய்யும் ஆவலுடன், குகைகளில் இருந்தும், மலை சிகரத்திலிருந்தும் குதித்து வேகமாக வந்தன. இதன் பின் வானர ராஜனும், லக்ஷ்மணனும் வணங்கி நிற்க, ராமன் தென் திசை நோக்கி சேனையுடன் தன் பிரயாணத்தை துவங்கினார்.
நூற்றுக் கணக்காக, நூறாயிரம், கோடி, பத்து கோடி யானை போன்ற பெருத்த உருவமுடைய வானர வீரர்களுடன் போருக்கு கிளம்பினான். முன் நின்று நடத்திச் செல்லும் அவனைத் தொடர்ந்து வானர வீரர்களின் பெரும் சேனை, மகிழ்ச்சியுடன் ஆனந்தத்துடன் குதித்துக் கொண்டு கிளம்பின. சுக்ரீவனால் நன்றாக பரிபாலிக்கப் பட்டு வந்த பிரஜைகள், அரசனிடம் தங்கள் அபிமானம் வெளிப்பட குதூகலமாக கிளம்பினர். கர்ஜித்துக் கொண்டும், பெரும் ஆரவாரம் செய்து கொண்டும் தென் திசை நோக்கிச் சென்றன. நல்ல வாசனையுள்ள பழங்களை சாப்பிட்டுக் கொண்டும், மதுவைக் குடித்துக் கொண்டும், திருப்தியாக சென்றன. பெரிய மரங்களை தோளில் சுமந்து கொண்டு சென்றன. மகரந்த பொடி நிறைந்த கொத்து கொத்தான பூக்களுடன் மரங்களை வேரோடு பிடுங்கி, ஒருவருக்கொருவர் திடுமென போட்டி போட்டுக் கொண்டு தூக்கிச் சென்றன. சில சமயம் கீழே போட்டன. கிழே விழும் நிலையில் உள்ளதை சில தள்ளி விட்டன. அடுத்து வந்தவனை தள்ளி விட்டு மகிழ்ந்தன சில. ராவணனை நாம் கொல்ல வேண்டும். மற்ற ராக்ஷஸர்களையும் விட்டு வைக்க வேண்டாம். ராகவன் சமீபத்தில் வந்து இவ்வாறு கத்தி விட்டுச் சென்றன. முன்னால் ருஷபனும், நீலனும், குமுதனும் செல்ல, வழியை சீராக்கிக் கொண்டு பல வானரங்களை ஏவி வேலை வாங்கியபடி சென்றனர். நடுவில் அரசன் சுக்ரீவன், ராம, லக்ஷ்மணன், மூவரும் பலமான போர் வீரர்களால் சூழப் பட்டவர்களாக, எதிரிகளுக்கு நெருங்க முடியாத சக்தி வாய்ந்த பலசாலிகள் பலர் சூழ பாதுகாப்பாக சென்றனர். இந்த வானர சேனையை கட்டுக்குள் வைத்து பாதுகாத்தபடி கேஸரி, பனஸன், க3ஜன், அர்க்கன் என்ற தலைவர்கள் நடந்தனர். சுக்ரீவனுக்கு பின்னால் ஜாம்பவான், சுஷேணன், ருக்ஷன் என்ற தலைவர்கள் சேனையின் பின் பகுதிக்கு தலைமை தாங்கினார்கள். நீலன் என்ற சேனாபதி நாலாபுறமும் சுற்றி வந்து ஆணைகள் கொடுத்துக் கொண்டிருந்தான். த்ரிமுகன், ப்ரஜங்க3ன், ரம்ப4ன் ரப4ஸன், என்பவர்கள் வானரங்களை வேகமாக செல்லத் தூண்டியபடி சென்றனர். தங்கள் பலத்தில் கர்வம் கொண்டவர்களாக, ராமனின் கட்டளை என்பதால், வழியில் மலைகளையோ, வனங்களையோ, குளம், பூக்கள் நிறைந்து காணப்படும் நீர் நிலைகளையோ, பழம் காய்கள் நிறைந்து கிடந்த மரங்களையோ, செடி கொடிகளையோ, ஏறிட்டு கூட பார்க்கவில்லை. சமுத்திரம் போல இருந்த அந்த வானர சேனை, நகரங்களையும், ஜனபதங்களையும் தவிர்த்து ஒதுக்குப் புறமாகவே சென்றது. சமுத்திரத்திற்கு இணையாக ஜய கோஷம் செய்தன. தாசரதியின் அருகில் இருந்த வானர வீரர்கள், சூரர்களாக, சிறந்த வானர வீரர்கள், வேகமாக குதிரை மேல் ஏறிச் செல்வது போன்ற வேகத்துடன் குதித்துச் சென்றனர். நர ருஷபம் (மனிதர்களுள் காளை போன்ற கம்பீரம் உடையவர்கள்) என வர்ணிக்கப்பட்ட ராஜ குமாரர்கள், இந்த செயல்களை ரசித்தவாறு சென்றனர்.
பெரும் கிரகங்களால் சூழப்பட்ட சந்திரன் போல இருவரும் விளங்கினர். வானர ராஜாவான சுக்ரீவனும், லக்ஷ்மணனும் உடன் வர, ராமன் பெரும் சைன்யத்துடன் போருக்கு ஆயத்தமாக சென்றான். அங்கதன் தோள் மேல் அமர்ந்திருந்த லக்ஷ்மணன், கூடிய சீக்கிரம் சீதையை காப்பாற்றி, ராவணனை வதம் செய்து விட்டு, நம் எண்ணமும் நிறைவேறி விடும், நாமும் செல்வம் கொழிக்கும் அயோத்திக்கு திரும்பிச் செல்வோம் என்று ஆவலும் நம்பிக்கையுமாக ராமனிடம் சொன்னான். ராகவா, ஆகாயத்திலும், பூமியிலும் பல நல்ல சகுனங்கள் தெரிகின்றன. இந்த நிமித்தங்கள் சுபமான பலன்களைச் சொல்கின்றன. வெற்றியை சூசகமாக தெரிவிக்கின்றன. நம் சேனைக்கு அனுகூலமாக காற்று கூட இதமாக வீசுகிறது. இனிய குரலில் பறவைகள் கூவுகின்றன. மிருகங்களின் சத்தமும் வாழ்த்துவது போல கேட்கின்றன. நாலா திசையும் ப்ரஸன்னமாகத் தெரிகிறது. சூரியனின் ஒளியும் விமலமாகத் தெரிகிறது. சுக்ரனும், சுபமாக நோக்குகிறான். பா4ர்கவன் உனக்கு அனுகூலமாக இருக்கிறான். ரிஷிகளின் கூட்டமும், ப்ரும்ம ராசியாக, விசுத்3த4மாக காட்சி அளிக்கின்றன. இவை எல்லாமே நல்ல பிரகாசமான கிரணங்களோடு (பார்வையோடு) பிரதக்ஷிணமாகச் செல்கின்றன. புரோஹிதருடன், த்ரிசங்குவும் ராஜ ரிஷியாக விமலமாகத் தெரிகிறார். இவர் நமக்கு பாட்டனார். இக்ஷ்வாகு குலத்தின் மூதாதையருள் ஒருவர். நிர்மலமான விசாக நக்ஷத்திரத்தில், உபத்ரவம் செய்யாத யோகத்தில் நிற்கிறார். இந்த நக்ஷத்திரம், இக்ஷ்வாகு வம்சத்தினருக்கு மிகவும் சிறந்த நக்ஷத்திரம். தென்மேற்கு திசையில், நிருருதனைக் காண்கின்றோம். மூலம், மூலமான தூமகேதுவினால் பீடிக்கப் பட்டதாக பிரகாசமாகத் தெரிகிறது. இவை அனைத்தும் ராக்ஷஸர்களின் வினாசத்திற்காக என்றே இப்படி கூடியிருக்கின்றன. காலன் நெருங்கி வந்து விட்டதால் தான், அவர்களைச் சுற்றி கிரகங்களும், நக்ஷத்திரங்களும் இப்படி அமைந்துள்ளன. ஜலம் ப்ரஸன்னமாக ருசியோடு இருக்கிறது. வனங்களில் பழங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பருவத்துக்கான பூக்கள், பழங்கள் இவைகள் மணம் வீசி, மரங்கள் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கின்றன. இந்த வானர சைன்யம் அணி வகுத்து செல்வதே அவ்வளவு இனிய காட்சியாகத் தெரிகிறது. ப்ரபோ, தாரகாசுரனை வதம் செய்ய, தேவ சேனை புறப்பட்டுச் சென்றது போல இருக்கிறது. இவைகளைப் பார்த்து மனம் மகிழ்ச்சி கொள்வாய். ஆர்ய, இவைகளை அன்புடன் பார். என்று சொல்லி லக்ஷ்மணன் நிறுத்தினான். சேனை சுற்றிக் கொண்டு, பூமியை பிரதக்ஷிணம் செய்தவாறு, நடந்தது. ருக்ஷ, வானர, சார்தூலங்கள், நகமும், பற்களுமே ஆயுதங்களாக கைகளினாலும், பாதங்களாலும் பூமி அதிர நடக்கவும், புழுதி ஏகமாக கிளம்பியது. சூரியனின் ஒளியையே மறைத்து விடும் போல அந்த புழுதிப் படலம் எழுந்து நின்றது. மலைகளையும், காடுகளையும் கடந்தபடி தென் திசை நோக்கி வானர சேனை பிரயாணம் செய்தது. மேகத்தின் உறவினர்கள் இறங்கி வந்து விட்டது போல, ஆகாயத்தை மறைத்தபடி, வெகு தூரத்துக்கு வெகு தூரம், வானர சேனையே காணப்பட்டது. நதிகளையும், அருவிகளையும், வயல் வெளிகளையும், நீர் நிறைந்த குளங்களையும், மரங்கள் அடர்ந்த மலைகளையும், சமவெளியான பூமி பிரதேசங்களையும், வனங்களையும், பழங்கள் நிறைந்த மரங்களையும் மத்தியிலும், எதிரிலும், குறுக்காகவும், கீழிருந்தும், நுழைந்து கடந்தனர். பூமியை மறைத்தபடி பெரும் சேனை அணி வகுத்துச் சென்றது. எல்லோரும் மனதில் மகிழ்ச்சி நிரம்பியவர்களாக, காற்று வேகத்தில் சென்றனர். ராகவன் காரியத்திற்காக, விக்ரமத்தை வரவழைத்துக் கொண்டவர்களாக வானர வீரர்கள் சென்றனர். ஒருவருக்கொருவர், தங்கள் மகிழ்ச்சியையும், பலத்தையும் காட்டிக் கொண்டு விளையாட்டாக முன்னேறினர். வழியில், இளம் வீரர்கள், தங்கள் வயதுக்குரிய சாகஸங்களை செய்தவாறு சென்றனர். சிலர் வேகமாக நடந்தனர். சிலர் ஓடினர். சிலர் தாவி குதித்து சென்றனர். வனத்தில் வசிக்கும் வானரங்கள் சில கிளு கிளுவென நகைத்தன. வால்களை தரையில் ஓங்கி அடித்தும், பாதங்களால் தரையில் மிதித்தும், மரங்களை வேரோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு சில, மலைகளின் மேல் புஜங்கள் உராய நடந்து சில, தங்கள் உற்சாகத்தை வெளிக் காட்டின. மலையின் மேல் தாவி ஏறி உச்சியை அடைந்து கீழே இருப்பவர்களைப் பார்த்து சில சத்தமிட்டன. கோஷமிட்டன. தங்கள் கால்களால் கொடிகளை அழுத்தி மிதித்து, வழி செய்தன. பெரிய மலைகளையே பெயர்த்து எடுத்துக் கொண்டு விட்டது போல, பெரிய பாறாங்கற்களை தூக்கிக் கொண்டு வழி நடந்தன. நூற்றுக் கணக்காக, ஆயிரம் நூறாக, கோடிக் கணக்காக, ஆயிரமாயிரம் கோடி கணக்காக, பயங்கரமான வானர வீரர்கள் நடமாடி நிரம்பி பூமி அதிர்ந்தது. இரவும் பகலுமாக அந்த வானர சேனை சென்றபடி இருந்தது. சுக்ரீவன் அவர்கள் தேவைகளை கவனித்து எந்த விதமான குறையும் இன்றி பாதுகாத்தான். யுத்தம் செய்யும் ஆவலே தூண்டுதலாக அவர்கள் வேக வேகமாகச் செல்ல உதவியது. சீதையை விடுவிக்க வேண்டும், கால தாமதம் செய்யக் கூடாது என்று எண்ணி, எங்கும் முஹுர்த்த நேரம் கூட நிற்காமல் சென்றன. இப்படியாக, நடந்து நடந்து, மரங்கள் அடர்ந்த, பல விதமான மிருகங்கள் நிறைந்த மலய மலையை வந்தடைந்தனர். விசித்ரமான காடுகளையும், நதிகள், நீர் வீழ்சசிகள், அருவிகளையும், பார்த்தபடி ராமர் முன்னால் சென்றார். சஹ்ய, மலய மலைகளில் சம்பக, திலக, சூத, அசோக, சிந்து வாரகம், கரவீர, தினிசம் என்ற மரங்களை, அதன் கிளைகளை உடைத்தபடி வானர வீரர்கள் சென்றனர். அங்கோல, கரஞ்ச, ப்லக்ஷ, ந்யக்ரோத, திந்துக, ஜம்பூக (நாவல்) ஆம்வலிக (நெல்லி) நீபன் (வேம்பு) போன்ற மரங்களையும் விட்டு வைக்கவில்லை. சமவெளி பிரதேசத்திலும் பலவிதமான அழகிய காடுகளும் மலைகளும் காணப்பட்டன. காற்று வேகத்தில் புஷ்பங்களை உதிர்த்தன. சந்தனத்தின் குளிர்ச்சியுடன் காற்று இதமாக வீசியது. வண்டுகள் பாட்டிசைக்க, மதுவின் மணம் வீசும் புஷ்பங்களை நாடி பறந்தபடி இருந்தன. அந்த மலையரசன், தாது பொருட்களும் அணிகலன் போல விளங்க, அழகாகத் தெரிந்தான். தாதுக்களின் பொடி காற்றில் பரவி தூசியாக எங்கும் பரவி நின்றது. பூமியை மறைத்து நின்ற அந்த பெரிய வானர சேனை கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரவியிருந்தது. மலைச் சாரல்களில், ரம்யமாகத் தெரிந்த பூக்களுடன் கூடிய செடி கொடிகள், புதர்கள், தாழம்பூ, சிந்துவாரம், வாஸந்தி, மனோரமா, மாத4வி, க3ந்த4 பூர்ணா, முல்லை, மல்லிகைப் புதர்கள், பூக்கள் அடர்ந்து விளங்க, சிரி பி3ல்வம், மதூகம், வஞ்சுளா, வகுளா என்ற புஷ்பங்கள், ஸ்பூர்ஜகா, திலகா, நாக வ்ருக்ஷம், இவைகளிலும் பூக்கள் நிறைந்திருக்க, சூதா, பாடலி, கோவிதா3ரம் என்ற புஷ்பங்களும், முசுலிந்த, அர்ஜுன, சிம்சுபா, குடஜா, த4வ, சால்மலி, சிவந்த குரவகம், ஹிந்தாள, தினிச, சூர்ணகா, நீபிகா, நீலாசோகம், வரணா, அங்கோல, பத்3மகம் மற்றும், பலவகைத் தாவரங்களும், குதித்து தாவி ஓடிய வானரங்களால் மிதி பட்டு, நசுக்கப் பட்டு த்வம்சம் செய்யப் பட்டன. அந்த மலையில் கிணற்று நீர் குளிர்ந்து இருந்தது. அதே போல குளங்கள் தெளிவான குளிர்ந்த நீருடன் காணப்பட்டன. சக்ரவாகங்கள் பின் தொடர காரண்டவங்கள் காணப்பட்டன. ப்லவ, க்ரௌஞ்ச, பக்ஷிகள் நிறைந்து கிடந்தன. வராக, மான் முதலியவைகளும், கரடிகளும், சிங்கங்களும், புலிகளும், பயங்கரமான விஷப் பாம்புகளும், பெரிய பெரிய உருவத்துடன் சஞ்சரித்தன. நல்ல வாசனையுடைய பத்மங்களும், மலர்ந்த குமுதங்களும், உத்பல புஷ்பங்களும், நீரில் விளையும் பலவிதமான புஷ்பங்களுடன் அந்த நீர் நிலைகள் ரம்யமாக விளங்கின. அந்த மலைச் சாரலில் பலவிதமான பறவை இனங்கள், கோலாகலமாக கூவின. அந்த வானரங்கள் குளித்தும், குடித்தும் அந்த தண்ணீரில் விளையாடியும் மகிழ்ந்தன. மலை மேல் ஏறி போட்டி போட்டுக் கொண்டு தண்ணீரில் குதித்து விளையாடின. அம்ருதம் போன்ற பழங்களையும், காய் கிழங்குகளையும், பூக்களையும், வானர வீரர்கள் பறித்தன. மதம் தலைகேற, மரங்களில் ஏறி உதிரச் செய்தன. த்3ரோணம் (ஒரு அளவு-மரக்கால், எட்டுபடி கிட்டத்தட்ட பத்து கிலோ) அளவு தொங்கிக் கொண்டிருந்த தேன் கூடுகளை கலைத்து மதுவை அருந்தின. இதற்காக, மரக் கிளைகளை வளைத்தும், உடைத்தும் இந்த செயலின் காரணமாக கொடிகளை மிதித்து அழித்தும், கால் அதிர, மலைப் பிரதேசங்களில் நடந்தும் வானர வீரர்கள், மேலும் நடந்து சென்றன. சில வானரங்கள், அளவுக்கு மீறி மதுவை அருந்தியதால், செய்வதறியாது மரங்களின் மேலேயே நடனமாடின. மற்றும் சில தள்ளாடியபடி மரத்தின் மேலிருந்து கீழே விழுந்தன. பூமியில் கண்டபடி இந்த வானரங்கள் விழுந்து கிடந்தன. பாத்திகளும் வரப்புமாக, பயிர் செய்ய தயார் நிலையில் இருந்த விளை நிலங்கள் போல இவை காணப்பட்டன. இதன் பின் மகேந்திர மலையை அடைந்து ராமர் அந்த மலையில் ஏறலானார். மரங்கள் அலங்காரமாக இருந்த மலையுச்சியை அடைந்தான். அந்த மலையுச்சியிலிருந்து தசரதகுமாரன், ஆமைகளும், மீனும் வளைய வரும் பெரும் சமுத்திரத்தைக் கண்டார். சஹ்யம் என்ற மலையைக் கடந்து மலயம் என்ற பெரிய மலையையும் தாண்டி, கிரமமாக எல்லோரும் கடற்கரையை அடைந்தனர்.
கடற்கரை பெரும் ஓசையுடன், கம்பீரமாக காணப்பட்டது. அதை அடுத்து இருந்த வேலாவனம் என்ற இடத்திலிருந்து ராமன் லக்ஷ்மணனுடனும், சுக்ரீவனுடம் சமுத்திரத்தை ஆராய்ந்தார். கற்களை குளிப்பாட்டுவது போல அலைகள் வேகமாக வந்து மோதி, நீரை வாரியிறைத்து நனைத்து விட்டு திரும்பிச் சென்றன. கண்கொள்ளா காட்சியாக இருந்தது. திடுமென ஒரு அலை புறப்பட்டு வருவதும், கரையின் கற்களில் மோதி திரும்பிச் செல்வதுமாக இருந்ததைப் பார்த்த ராமன், சுக்ரீவனிடம் சொன்னார். சுக்ரீவா, இதோ நாம் வருணாலயம் என்று அழைக்கப் படும் சமுத்திரத்தை வந்தடைந்து விட்டோம். நாம் முன்னே நினைத்தபடியே அதே சிந்தனை தான் இப்பொழுதும் தோன்றுகிறது. கரையே தெரியாது பரவிக் கிடக்கும் இந்த சாகரம், நதிகளின் அரசன். ஏதாவது உபாயம் செய்து தான் இதைத் தாண்ட முடியும். தற்சமயம் இங்கேயே தங்குவோம். வானரர்களை அக்கரை சேர்ப்பிக்க என்ன வழி என்று யோசிப்போம். சீதையை இழந்த துயரத்தால் மனம் நொந்து இருந்தாலும், அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் ராமன், எல்லோருமாக கடற்கரையில் தங்க ஏற்பாடுகளைச் செய்வதில் முனைந்தார். பலவிதமாக உத்தரவுகள் பிறப்பித்து வானரங்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் தெளிவு படுத்தினார். யாரும் தங்கள் சேனையை விட்டு விலகிச் செல்லக் கூடாது. அவரவர்கள் இருக்கும் இடத்தில் அப்படியே இருங்கள். நாம் யோசித்து முடிவு செய்யும் வரை சேனைத் தலைவர்கள், தங்கள் பொறுப்பில் உள்ள வானரங்களை கண் காணித்து பாதுகாப்பாக வைத்திருங்கள். ஆபத்து காலத்தில் எப்படி கவனமாக இருப்போமோ அது போல. இதைக் கேட்டு சுக்ரீவனும், லக்ஷ்மணனும் சமுத்திரக் கரையிலிருந்து சற்று தள்ளி இருந்த மரங்கள் அடர்ந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். அந்த வானர படையும் அங்கு தங்க, அருகிலேயே மற்றொரு சமுத்திரம் உண்டானது போல காட்சியளித்தது. வேளாவனத்தின் இனிய நீரை, வெண்ணிறமாக இருக்கக் கண்டு, அதை திரும்ப திரும்பக் குடித்து திருப்தியடைந்த வானரங்கள், அடுத்து சமுத்திரத்தைக் கடக்கும் நேரத்தை எதிர் நோக்கி இருந்தனர். இவர்கள் இங்கு தாங்கள் தங்கவும், உண்ணவும் உறங்கவும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த சமயம் கிளப்பிய ஆர்பாட்டத்தையும் மீறி சமுத்திரத்தின் அலை ஓசை ஓங்கி கேட்டது. சுக்ரீவன் தன் படை வீரர்களை மூன்றாக பிரித்து, அதற்கான தலைவர்களையும் நியமித்து கவனமாக போருக்கு ஆயத்தங்களைச் செய்து வைத்தான். அனைவரும் ராம காரிய சித்திக்காக போர் புரிய உறுதி எடுத்துக் கொண்டு, சமுத்திரத்தை பார்த்தவாறு காத்திருந்தனர். வெகு தூரத்தில் ராக்ஷஸ ராஜதானி தெரிந்தது. இடையூறாக குறுக்கிடும் பெரிய சமுத்திரத்தைப் பார்த்து வருந்தினர்.
இரவின் ஆரம்பத்தில், சமுத்திரம், கோரமாக சிரிப்பது போல (நுரை தள்ளிக் கொண்டு) தோற்றம் அளித்தது. பயங்கரமான முதலைகளும், ஆமைகளும் அலைகளுடன் நடனமாடுவது போல ஒரு சமயம் காட்சியளித்தது. சற்றுப் பொறுத்து சந்திரோதயம் ஆகும் வேளையில், தன் பதியான சந்திரனின் வரவை மகிழ்ச்சியோடு எதிர் கொள்வது போல அலைகளான கைகளை நீட்டி ஆரவாரித்தது போல இருந்தது. நுரையே சந்தனமாக, அதை தன் அலைகளால் பிசைந்து தயார் செய்து வைப்பது போலவும், அதை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, திசைகள் எனும் பெண்கள், சந்தனத்தை சந்திரனுக்கு பூசுவது போலவும், தோன்றியது. வேகமாக வீசிய காற்றில், பெரிய முதலைகளும், திமிங்கிலங்களும், பாம்புகளும் நிறைந்த புஜகாலயமாக விளங்கியது. பலவிதமான ஜந்துக்கள் மூழ்கி நீரில் வளைய வர, அசையாமல் இருந்தவை, மலைகள் விழுந்து கிடப்பவை போலத் தோன்றின. என்ன தான் முயன்றாலும், எளிதில் கடக்க மார்கம் இல்லை. ஆழமான, அசுரர்களின் இருப்பிடமான சமுத்திரம். எப்படி கடப்பது? நேரம் ஆக ஆக, நீரினுள் தெரிந்த பாம்புகளும், நாகங்களும், முதலைகளும் காற்றில் அலை பாய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. மேலும் கிழுமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்த பெரிய பெரிய நீர் வாழ் ஜந்துக்களை இது வரை கண்டதேயில்லை. தேவர்களுக்கு எதிரிகளான அசுரர்களின் இருப்பிடமான பாதாளம் வரை பரவியிருந்த சமுத்திரத்தின் ஆழம் தெரியாமல், மேற்பரப்பில் சிதறும் நீர்த் திவலைகள் நெருப்புப் பொறி பறக்க, வெளிப் பார்வைக்கு மற்றொரு ஆகாயம் போலவே இருந்தது. ஆகாயம் சாகரம் போல என்று சொல்லலாமா, சாகரம் அம்பரம் (ஆகாயம்) போல என்று சொல்லலாமா? இரண்டும் ஒன்றே. இந்த நீரும் ஆகாயத்துடன் தொடர்புடையது. ஆகாயமும் நீரின் ஒரு பகுதி உடையது. தாரா கணங்கள் நிறைந்தது ஆகாயம் என்றால் ரத்னங்களையுடையது சாகரம். ஆகாயத்தில் மேகங்கள் மாலை மாலையாக சஞ்சரிப்பது போலவே, சமுத்திரத்தின் அலைகளும் மாலை மாலையாக போட்டி போட்டுக் கொண்டு வீசுகின்றன. இவை இரண்டுக்கும் இடையில் அதிக வித்தியாசமே இல்லை போல அந்த இரவின் பின் பகுதியில் ஆகாயமும், சமுத்திரமும் ஒன்றோடொன்று இணைந்தும் காட்சி தந்தது. ஆகாயத்தில் பெரும் ஓசையுடன் இடி இடிக்கும் மேகம் உண்டு என்றால், சமுத்திர ராஜனின் அலைகள் யுத்தத்தில் முழங்கும் மகா பேரி என்ற வாத்தியத்தின் நாதம் போல ஓங்கி ஒலிக்கின்றது. ரத்னங்களை உள்ளடக்கிய சமுத்திரத்தின் அடங்கிய நாதம் காற்றினால் பெரிதாக்கப் பட்டு கம்பீரமாக கேட்கிறது. இந்த நாதத்தால் ஈர்க்கப் பட்டு முதலைகள் வேகமாக வந்து ஒன்றோடொன்று முட்டிக் கொள்வதால், தடாலென்று கீழே விழுகின்றன. காற்றும், சமுத்திரத்தின் அருகாமையும் வானர வீரர்களை குதூகலமாக இருக்கச் செய்தது. இயற்கையின் அழகை ரசித்து, சாகரத்தைக் கண்ட வியப்பு அடங்காமலே வானரங்கள் இரவைக் கழித்தன. அவர்களுக்குள் சமுத்திரம் தன் பரபரப்பான அலைகளின் ஓசையால், தானே தடுமாறுவது போல கற்பனை செய்து மகிழ்ந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராமாபி4ஷேணனம் என்ற நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 5 (412) ராம விப்ரலம்ப: (பிரிவாற்றாமையால் ராமன் புலம்புதல்)
நீலன் என்ற வானர வீரன், அந்த பெரிய வானர சேனையை வகைப் படுத்தி, அணி அணியாக சாகரத்தின் வட கரையில் சௌகர்யமாக இருக்கச் செய்தான். மைந்த3னும், த்3விவித3னும் மாறி மாறி காவல் இருந்து ரக்ஷித்தனர். நத நதீ பதி (நதம்-கிழக்கிலிருந்து மேற்கே பாயும் நதி, நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாயும்) எனப்படும் சாகரத்தின் கரையில் சேனையை ஒழுங்கு படுத்தி நிலை நிறுத்திய பின், ராமன் லக்ஷ்மணனைப் பார்த்துச் சொன்னார். சாதாரணமான துக்கமானால், காலப் போகில் மறந்து விடும். சீதையைப் பிரிந்த என் துக்கம் நேர் எதிராக தினம் தினம் அதிகரிக்கிறது. என் பிரியமான மனைவி வெகு தூரத்தில் இருக்கிறாள். ராக்ஷஸன் அபகரித்துச் சென்று விட்டான், என்ற கவலைகள் ஒரு புறம் இருக்க, இந்த இளம் வயதில் அவள் தனிமையை அனுபவிக்கிறாளே, அவள் யௌவனமே வீணாகிறதே என்ற கவலையும் என்னை வாட்டுகிறது.
காற்றே, நன்றாக வீசு. என் காந்தாவைத் தொட்டு என்னையும் தொடு. நீ என்னை ஸ்பரிசிக்கும் சமயம், சந்திரனோடு என் பார்வை கலக்கட்டும். விஷம் குடித்தவன் உடல் தகிப்பது போல என் உடல் தகிக்கிறது. ராவணன் அபகரித்துச் சென்ற பொழுது ஹா நாதா, என்று என் சீதை அலறினாளே, அதை நினைத்து அந்த பிரிவே எரி பொருளாக, அவளைப் பற்றிய சிந்தனையே பெரும் நெருப்பாக, மதனாக்னி இரவும் பகலுமாக என்னை தகிக்கிறான். இந்த சமுத்திரத்தில் நான் மூழ்கி இந்த சூட்டை தணித்துக் கொள்கிறேன். லக்ஷ்மணா, நீ இங்கேயே நில். நீருக்குள் மூழ்கி எப்படியோ தூங்கும் என்னை காமன் தகிக்க மாட்டான். நானும், என் பிரிய மனைவியும் ஒரே பூமியில் இருப்போம் என்ற எண்ணம் கூட தகிக்கும் என் உள்ளத்திற்கு சாந்தி தரும். நீர் நிரம்பிய வயல் வரப்பு, நீர் வற்றி விட்ட அடுத்த வயலுக்கு ஈரத்தைத் தருவது போல, உயிர் வாழ்கிறாள் என்று கேட்டதால் நானும் உயிர் வாழ்கிறேன். ஜானகி உயிர் தரித்து இருக்கும் செய்தி, நம்பிக்கை வறண்டு போன என் மனதிலும் நம்பிக்கை எனும் நீரை தெளித்து விட்டிருக்கிறது. சதபத்ரம் போன்று நீண்ட விழிகளையுடைய என் பிரிய மனைவியை எப்பொழுது காண்பேனோ. சத்ருக்களை ஜயித்து லக்ஷ்மீகரமான சீதையைக் காண்பேனா? பத்மம் போன்ற அவள் முகத்தை கைகளால் தூக்கி, சற்றே உயர்த்தி உதடுகளை ஸ்பரிசித்து முத்தமிடுவேனா? வியாதிக் காரனுக்கு மருந்து போல அது எனக்கு நன்மை தரும். தாள பழம் போன்ற ஸ்தனங்களை இறுக்கி அணைத்துக் கொள்ள என் கை துடிக்கிறது. ராக்ஷஸர்களின் மத்தியில் பயத்தால் நடுங்கியபடி, என்னை நாதனாக உடையவள் அனாதையாக தவிக்கிறாள். ஜனக ராஜனின் மகள். என் பிரிய மனைவி. தசரத ராஜாவின் மருமகள். இவ்வாறு இருந்தும் ராக்ஷஸிகளின் மத்தியில் அகப்பட்டுக் கொண்டு எப்படித்தான் தூங்குகிறாளோ. எப்பொழுது தான் ராக்ஷஸிகளின் மத்தியில் இருந்து வெளி, வருவாளோ. நீலமான ஆகாயத்தில், சரத் கால சந்திரன் தென்படுவது போல மெல்லிய கீற்றாக ஒளி வீசியபடி தெரிவாள். ஸ்வபாவமாகவே மெல்லிய தேகம் உடையவள். இப்பொழுது சாப்பிடாமல், சோகத்தினாலும் மேலும் இளைத்து, காணப்படுவாள். ராக்ஷஸனின் மார்பில் அம்புகளை பொழிந்து கீழே வீழ்த்தி விட்டு, எப்பொழுது தான் நான் சீதையை மீட்டுக் கொண்டு வருவேனோ. தேவ லோக ஸ்த்ரீகள் போன்ற லாவண்யம் மிக்க என் சீதை, என் தோளில் முகம் பதித்து, தன் கஷ்டம் நீங்க ஆனந்த பாஷ்பம் சொரியும் நாள் எப்பொழுது வருமோ. மைதிலியை பிரிந்த இந்த துக்கம் என்று தான் என்னை விட்டு அகலுமோ. மாசு படிந்த ஆடையை நினைத்த மாத்திரத்தில் களைவது போல இந்த துக்கத்தை களைய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? புத்திசாலியான ராமனே இப்படி புலம்புவதைக் கேட்ட சூரியனும், பகல் முடிவில் மந்தமான பிரகாசத்துடன் இருந்தவன் அஸ்தமனம் அடைந்தான். லக்ஷ்மணன் வந்து சமாதானம் செய்ய ராமன் எழுந்து சந்த்யா கால வந்தனைகளைச் செய்யலானார். மனதில் கமல பத்ராவான சீதையே நிறைந்திருந்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராம விப்ரலம்போ என்ற ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 6 (413) ராவண மந்த்ரணம் (ராவணன் மந்த்ராலோசனை செய்தல்)
லங்கையில் ஹனுமான் செய்த சாகஸங்களைக் கண்டு ராக்ஷஸேந்திரனான ராவணன் வெட்கினான். குனிந்த தலையுடன், தன் சபையோரைப் பார்த்து நடந்ததை விவாதிக்க ஆரம்பித்தான். நமது ராஜதானியான லங்கையில் யாரும் நுழையவே முடியாது என்பதை பொய்யாக்கியதும் அல்லாமல், பெரும் சேதம் விளைவித்து, தப்பியும் சென்று விட்டான் ஹனுமான். ஒரு வானரம் வந்து நம் காவலில் உள்ள ஜானகியை பார்த்து விட்டு போய் இருக்கிறான். உறுதியான சைத்ய மாளிகை சேதமாகி இருக்கிறது. பலசாலிகள் என்று பெயர் பெற்ற ராக்ஷஸர்கள் வதம் செய்யப்பட்டிருக்கிறார்கள். லங்கா நகரத்தையே ஒரு கலக்கு கலக்கி விட்டு ஹனுமான் சென்றிருக்கிறான். என்ன செய்வேன்? உங்கள் அனைவருக்கும் மங்களம் உண்டாகட்டும். மேற் கொண்டு நாம் செய்ய வேண்டியது என்ன? சொல்லுங்கள். எதை செய்தால் சரியாக இருக்கும் ? பெரியோர்கள், சபையோரை கலந்தாலோசித்து செயல் படுவது தான் வெற்றிக்கு வழி என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இதனால் ராம விஷயமாக உங்கள் கருத்தை தெரிந்து கொள்ளத்தான் இந்த கூட்டத்தைக் கூட்டி இருக்கிறேன். உலகில் மூன்று விதமான மந்திரிகள் உண்டு. உத்தம, மத்யம, அதம என்றபடி. இந்த மூன்று வகை மந்திரிகளைப் பற்றிச் சொல்கிறேன். ஒரு செயலை ஆரம்பிக்கும் முன், தெய்வத்தை வேண்டி, மூன்று விதமான மத்ராலோசனைகள் செய்து, சாமர்த்யம் மிக்க மந்திரிகளுடன் கலந்தாலோசித்து, சமமான அந்தஸ்தில் உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் அணுகி அவர்கள் கருத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, தானும் யோசித்து தீர்மானம் செய்து கொண்டு அடுத்து செய்ய வேண்டிய முயற்சியைத் தொடங்கினால் அவனை புருஷோத்தமன் என்று சொல்லலாம். ஒரே ஒரு விஷயத்தை விஸ்தாரமாக எண்ணி ஆலோசித்து, ஒரே தர்மத்தில் மனதை செலுத்துபவன், ஒருவனாக செயல் படுபவன் மத்யமன். செய்யப் போகும் செயலின் நன்மை தீமைகளை ஆராயாமல், தர்மத்தையும் விட்டு, செய்வேன் என்று ஒரே செயலில் தானே முனைந்து நிற்பவன் புருஷ அதமன். எப்படி மனிதர்களில் உத்தம, மத்யம, அதமர்கள் உண்டோ, அதே போல மந்த்ராலோசனைகளும் மூன்று வகைப் படும். சாஸ்திரங்களில் நல்ல தேர்ச்சியும், சுயமாக அறிவும், ஸ்திரமான புத்தியும் உள்ள மந்திரிகள், உறுதியுடன் ஒரு விஷயத்தை வலியுறுத்தும் பொழுது அது உத்தமமான மந்த்ராலோசனையாகும். பலவிதமான கருத்து வேறுபாடுகள் கொண்டு, ஆலோசனை முடிவில் ஒரு விஷயத்தை வலியுறுத்துவது மத்யமமாகும். பலரும் பலவிதமான முரண்பாடான கருத்துக்களைச் சொல்லி, எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளாமலே முடிவது அதமமான மந்த்ராலோசனை. ஆகையால், பெரியோர்களே, நீங்கள் சொல்வது கருத்து ஒருமித்த நல்ல ஆலோசனையாக இருக்கட்டும். செய்ய வேண்டியதை அறிந்து கொள்ளுங்கள். இதைதான் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லக் காத்திருக்கிறேன். ஆயிரக் கணக்கான வானர வீரர்கள் சூழ, நம்மை தாக்க ராமன் வந்து கொண்டிருக்கிறான். ராகவன் இந்த சாகரத்தையும் சுலபமாக தாண்டி வந்து விடுவான். சகோதரனுடனும், வேகம் மிக்க படை வீரர்களுடனும் சமுத்திரத்தை வற்றத்தான் செய்வானோ, வேறு என்னதான் செய்வானோ. இப்படி இருக்க வானரர்களுடன் நாம் விரோதம் பாராட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். தற்சமயம் நாட்டுக்கும், நமக்கும் நன்மை எது என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆலோசனை சொல்லுங்கள் என்று ராவணன் வேண்டிக் கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண மந்த்ரணம் என்ற ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 7 (414) சசிவோக்தி: (மந்திரிகளின் ஆலோசனை)
இவ்வாறு ராவணன் வேண்டிக் கொள்ளவும், சபையில் இருந்த ராக்ஷஸ வீரர்கள், கை கூப்பி வணங்கி, தங்கள் கருத்துக்களை சொல்லலாயினர். எதிரி பலத்தை அறிந்து கொள்ளாமல், நீதிக்கு புறம்பாக, அறிவில்லாத சிலர் தன் பக்க பலத்தையும் தெரிந்து கொள்ளாமல் அரசனை பயமுறுத்துவர். ராஜன், நமது சேனையோ மிகவும் விஸ்தாரமானது. ஆயுதங்களோ கணக்கிலடங்கா. பரிக4ம், சக்தி, இஷ்டி, சூல, பட்டஸம் எனும் ஆயுதங்கள் நிரம்பி கிடக்கின்றன. அப்படி இருக்க, அரசனே, தங்கள் மனதில் கவலை ஏன்? குழப்பம் ஏன்? எந்த விதமான தாழ்வு மனப்பான்மைக்கும் இடம் கொடுக்காதீர்கள். போ4கவதி சென்று, பன்னகர்களை நீங்கள் வெற்றி கொண்டு வந்தீர்கள். பல யக்ஷர்கள் காவல் இருக்கும் கைலாஸ சிகரம் சென்று மலையை அசைத்து கலக்கி, குபேரனை உங்கள் வசத்தில் செய்து கொண்டீர்கள். மகேஸ்வரனை சக்யம் செய்து கொண்டு, மகேஸ்வரனே உங்களை சிலாகித்துச் சொல்ல, விபோ4 லோக பாலர்களை வெற்றி கொண்டீர்கள். மகா பலசாலிகள் எனும் யக்ஷர்கள் கூட்டத்தை நசுக்கி, அடக்கி, தாங்கள் கைலாச சிகரத்திலிருந்து இந்த விமானத்தை அபகரித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். தா3னவ அரசனான மயன், உங்கள் நட்பை விரும்பி, பயமும் காரணமாக, தன் மகளை உங்களுக்கு மணம் செய்து கொடுத்தான். ராக்ஷஸ புங்கவா, யாருக்கும் அடங்காமல் மது என்ற தானவ அரசன், கும்பீனஸம் எனும் ஊரில் தன் பலத்தால் அடங்கா கர்வம் கொண்டு திரிந்த பொழுது அவனை யுத்தத்தில் வென்று அவன் கர்வத்தை அடக்கினீர்கள். ரஸாதலம் சென்று, நாகர்களை வென்று, வசமாக்கிக் கொண்டீர்கள். வாசுகியும், தக்ஷகனும், சங்கனும், ஜடீ எனும் நாக ராஜனும் பலவந்தமாக உங்கள் வசம் ஆனார்கள். பலம் மிக்க, வீரர்களான பல ராக்ஷஸர்கள் வரங்கள் பெற்று, அழிவில்லாதவர்களாக இருந்தவர்கள், இவர்களையும் ஒரு வருஷம் நீண்ட யுத்தம் செய்து, அவர்களை வெற்றி கொண்டீர்கள். படையுடன் சென்று, தன் பலத்தாலும், மாயா யுத்தம் செய்தும், ராக்ஷஸர்கள் பலரையும் தங்கள் ஆளுகைக்கு கீழே கொண்டு வந்தீர்கள். லோக பாலர்களை வென்ற பின், விளையாட்டாக இந்திர லோகம் சென்று, இந்திரனை வீழ்த்தினீர்கள். வருணனுடைய மகன்கள் சூரர்கள். நான்கு வித சேனையோடு வந்தவர்களை, போர் முடிவில் தோற்கடித்தீர்கள். யம லோகம் என்ற பெரும் கடலையும் நீங்கள் விட்டு வைக்கவில்லை. ம்ருத்யு தண்டம், நிஜ சமுத்திரத்தின் பெரிய முதலைகள் போல இருக்க, சால்மலி (ஸிலக சஒததஒந தரக்ஷெக்ஷெ) மரங்கள் அடர்ந்ததும், கால பாசம் எனும் பெரும் அலைகள், யம கிங்கரர்கள் தான் பாம்புகள், இப்படி இருந்த யம லோகம் என்ற சமுத்திரத்திலேயே மூழ்கி எழுந்து பெரும் வெற்றி அடைந்தீர்கள். (ம்ருத்யு தண்டம், கால பாசம், யம கிங்கரர்கள் இவர்களைக் கூட தாண்டி வந்து விட்டவர் தாங்கள்). யமனை தடுத்து நிறுத்தினீர்கள். நேர்மையான யுத்தம் செய்து, வீரர்களான அவர்களும் மகிழ்ச்சி அடையச் செய்தீர்கள். இந்திரனுக்கு சமமான பல க்ஷத்திரியர்களுடன் உங்கள் ராஜ்யம், வசுமதியாக, செல்வம் நிறைந்தவளாக, வசுமதியாகவே (பெரிய மரங்கள் அடர்ந்த இந்த பூமி போலவே) ஆயிற்று. (பூமிக்கு மரங்கள் போல, அரசனுக்கு சிற்றரசர்கள்) இந்த வீரர்களது சாகஸத்துக்கு முன்னால் ராமனது வீரம் ஒன்றுமே இல்லை. ராமன் இவர்களுக்கு சமமாக ஆக மாட்டான். பல சிறந்த வீரர்களை அடக்கி ஒடுக்கி உங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள். மகாராஜனே இந்த வானரங்களை எண்ணி ஏன் கவலைப் பட வேண்டும். இந்திரஜித் ஒருவனே இவர்களை அடக்கி விடுவான். இந்திரஜித் யாகம் செய்து மகா உத்தமமான மாகேஸ்வரம் எனும் அஸ்திரத்தை வரமாகப் பெற்றிருக்கிறான். இது உலகில் யாரிடமும் இல்லாத அரிய சக்தி. தேவர்களின் சேனை ஒரு சமுத்திரமாக இருந்தது. சக்தியும் தோமரமும் மீன்களாக, விளிசீர்ண, அந்த்ர என்ற பாசிபடர்ந்து, யானைகள் ஆமைகள் போல, அஸ்வங்கள் குதிரைகள் தவளைகளாக நிறைந்து கிடந்தது. ருத்ரனும், ஆதித்யனும் பெரிய முதலைகளாக காட்சி தந்தனர். மருத் கணங்களும், வசுக்களும் சமுத்திரத்தில் காணப் படும் பாம்புகள் போல ஆயினர். ரதங்களும், அதில் பூட்டிய குதிரைகளும் நீரில் தோன்றும் அலைகள் போல இருக்க, காலாட்படை, மணல்போல ஆயிற்று. இப்படிபட்ட தேவர்களின் சேனையான சமுத்திரத்தையே கலக்கி, தேவராஜனான இந்திரனைப் பிடித்து லங்கைக்கு கொண்டு வந்தீர்கள். இதன் பின், பிதாமகரான ப்ரும்மா வேண்ட, அவனை விடுவித்தீர்கள். அந்த தேவராஜனோ, சம்பரன், வ்ருத்ரன் என்ற ராக்ஷஸர்களை அழித்தவன். அவனே, ப்ரும்மாவின் சகாயத்தால் விடுபட்டு திரும்பிச் சென்றான். தேவர்களின் தலைவன் அவன். அந்த இந்திரஜித் என்ற தங்கள் மகனையே போருக்கு அனுப்புங்கள். ராமனுடன் கூட சேர்த்து வானர சேனையை எதிர்த்து போரிட்டு வென்று வருவான். சாதாரண ஜனங்களிடமிருந்து வந்த ஆபத்து தான் இது. இதை மனதில் போட்டு கலங்கத் தேவையே இல்லை. நிச்சயமாக தாங்கள் ராமனை வதம் செய்து விடுவீர்கள், கவலையே வேண்டாம் என்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சசிவோக்தி என்ற ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 8 (415) ப்ரஹஸ்தாதி வசனம் (ப்ரஹஸ்தன் முதலானோர் சொல்வது)
கரு நீல மலை போல உருவம் கொண்ட ப்ரஹஸ்தன் என்ற சேனாபதி பேசலானார். இவர் அறிவு மிக்கவர், சூரனான ராக்ஷஸ மந்திரி ஆனாலும், கை கூப்பி பணிவாகவே பேசத் தொடங்கினார். தேவ க3ந்த4ர்வ தா3னவர்களோ, பிசாச, பக்ஷிகள், உரகங்கள் (பாம்புகள்) இவை எதுவானாலும் உன்னை அசைக்க முடியாது. இந்த மனிதர்கள் எம்மாத்திரம் என்று நாம் அனைவரும் நம்பிக் கொண்டு அலட்சியமாக இருந்து விட்டோம். அந்த சமயம் வானரம் வந்து நம்மை ஏமாற்றி, நாசம் விளைவித்து விட்டு போய் விட்டது. நான் உயிருடன் இருக்கும்பொழுது மற்றொரு முறை அந்த வானரம் வந்து உயிருடன் திரும்ப முடியாது. சாகரம் வரை பரவியுள்ள, மலைகளும் காடுகளும், வனங்களும், வானரமே இல்லாமல் போகும்படி அழித்து விடுகிறேன், கட்டளையிடுங்கள். இனி நமது காவல் துறையில் அதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன். வானரம் எதுவும் நகரத்துக்குள் நுழைய முடியாதபடி காவலை பலப் படுத்தி விடுகிறேன். ராக்ஷஸ ராஜனே, இனி தோல்வி என்று நீ மனமுடைந்து போக விட மாட்டேன் என்றார். அடுத்து து3ர்முகன் என்ற ராக்ஷஸன், நம் எல்லோருக்கும் இந்த தாக்குதல் ஒரு பாடமே. இதை இனியும் பொறுத்திருக்க மாட்டோம். நம் ஊரும், அந்த:புரமும், மாற்றான் ஒருவன் வந்து நாசம் செய்து விட்டு போகும் அளவு காவல் பலமின்றி இருந்திருக்கிறது. நாம் கவனம் இன்றி இருந்து விட்டோம். நமது மதிப்புக்குரிய ராக்ஷஸ ராஜனின் நகரத்துக்குள் வந்த வானரத்தை சும்மா விட மாட்டோம். நான் ஒருவனே போய், அந்த வானரம் பயங்கரமான கடலுக்குள் ஒளிந்திருந்தாலும், ரஸாதலமே சென்று மறைந்திருந்தாலும், கண்டு பிடித்து வதைத்து விட்டு வருவேன், என்றான். இதன் பின் மிகவும் கோபத்துடன் வஜ்ரதம்ஷ்டிரன் என்ற ராக்ஷஸன் எழுந்தான். ஒரு பெரிய உத்தரத்தை எடுத்தான். ரத்தமும் நிணமும் தோய்ந்து கிடந்த அதை முன் நிறுத்திக் கொண்டு, இந்த ஹனுமானை அடித்து நமக்கு ஆகப் போவது என்ன? துராத்மா, அவனை விடுவோம். ராமன், சுக்ரீவனோடும், லக்ஷ்மணனோடும் யுத்தம் செய்வோம், இவர்கள் இருக்க, அல்பனான ஹனுமானுடன் நமக்கு என்ன பேச்சு? இதோ இந்த பரிகத்தை வைத்துக் கொண்டு இப்பொழுதே போய் ராமனை சுக்ரீவனோடும், லக்ஷ்மணனோடும் சேர்த்து வதைத்து விட்டு திரும்பி வந்து விடுவேன் என்று மார் தட்டினான். நான் ஒருவனே போதும். வானர சைன்யத்தை வேரோடு அழிக்க ஒரு உபாயமும் சொல்கிறேன். விரும்பினால் கேளுங்கள். ராக்ஷஸேந்திரா, நமக்குள் ஒற்றர்களை அனுப்பி விஷயங்களைத் தெரிந்து கொண்டு அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தாக்குவோம். நமது பக்ஷத்தில், விருப்பம் போல உருவத்தை மாற்றிக் கொள்ளவும், விரும்பிய நேரத்தில் விரும்பிய இடம் செல்லவும் சக்தி பெற்ற பல ராக்ஷஸர்கள் இருக்கிறார்கள். நாம் ஆயிரக் கணக்காக, காகுத்ஸன் நம்பும் விதமாக அமைதியாக உருவம் எடுத்துக் கொண்டு செல்வோம். பயந்த தோற்றத்துடன் மனிதர்களாக காகுத்ஸனிடம் போய் உன் இளைய சகோதரன் பரதன் தான் அனுப்பி வைத்தான். வன வாச காலம் முடிந்து திரும்பும் நாள் வந்து விட்டது. அப்படி நீ வந்து விடாமல் தடுக்க, வதம் செய்து விடச் சொல்லி எங்களுக்கு உத்தரவு என்று சொல்வோம். அவன் உடனே பரதனை சந்திக்கச் சென்று விடுவான். உடனே நாம் நம் படை வீரர்களைத் திரட்டி ஆகாயத்தில் நின்றபடியே, கத்திகள், சூலங்கள், க3தை4 போன்ற ஆயுதங்களை வைத்துக் கொண்டு வானர சைன்யத்தை அழித்து விடுவோம். கூட்டமாக ஆகாயத்திலிருந்து கற்களை மழையாக பொழிந்து அவர்கள் எதிர்க்க இயலாமல் செய்து விடுவோம். அனைத்து வானரங்களும் ஒரே சமயத்தில் யமலோகம் செல்ல வழி செய்வோம். ஏதாவது சொல்லி, ராம லக்ஷ்மணர்களை அப்புறப் படுத்தி விட்டால், மற்றவர்கள் உயிரை பறிப்பது எளிதே, என்றான். இதன் பின், கும்பகர்ணன் மகனான நிகும்பன் பேசினான். இவனும் நல்ல வீரனே. மகா கோபத்துடன் ராவணனைப் பார்த்து எஎல்லோரும் இங்கேயே இருங்கள். நான் ஒருவன் போகிறேன். ராகவனை, லக்ஷ்மணனோடு சேர்த்து கொன்று விட்டு வருகிறேன். சுக்ரீவனையும், ஹனுமானையும் மற்ற வானரங்களையும் ஒரே அடியில் வீழ்த்தி விடுவேன். என்றான். இதன் பின், மலை ஒன்று எழுந்தது போல எழுந்த வஜ்ரஹனு என்ற ராக்ஷஸன், கோபத்துடன், நாக்கை சுழற்றி ஏற்கனவே ஈரமான உதடுகளை ஒரு முறை ஒற்றி, தயார் செய்து கொண்டவனாக பேசினான். நாம் எல்லோரும் வேகமாக செயல் படுவோம். பயம் எதற்கு? நான் ஒருவனே அந்த வானரங்களைத் தின்று தீர்த்து விடுவேன். சௌக்யமாக, யுத்தத்தில் மதுவை குடித்து மகிழ்ந்து இருங்கள். நான் ஒருவனே சென்று சுக்ரீவனையும், லக்ஷ்மணனையும் வதம் செய்து விட்டு வருகிறேன். அங்கதனையும், லக்ஷ்மணனையும், ஏன், யுத்த களத்தில் யானை போல உலவும் ராமனையுமே அழித்து விடுவேன் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப்ரஹஸ்தாதி வசனம் என்ற எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 9 (416) விபீ4ஷண சமாலோசனம் (விபீஷணன் ஆலோசனை சொல்லுதல்)
இதன் பின் பலர் பேசினர். நிகும்பன், ரபஸன், சூர்ய சத்ரு என்ற பலசாலியான ராக்ஷஸன், சுப்தக்னன் (தூங்குபவரைக் கொல்பவன்), யக்ஞஹா (யாகத்தை அழிப்பவன்), மகா பார்ஸ்வான், மகோதரன், அக்னிகேது, துர்தர்ஷன், ரஸ்மிகேது என்ற வீரன், மகா தேஜஸ்வியான இந்திரஜித், (ராவணனுடைய மகனான இவன், சிறந்த போர் வீரன்), விரூபாக்ஷன், முதலானோர். இதற்குள், தங்கள் தேஜஸால் சுயமாகவே நெருப்பு போன்று ஜ்வலித்த, ப்ரஹஸ்தன், வஜ்ரதம்ஷ்டிரன், தூம்ராக்ஷன், அதிகாயன், துர்முகன் என்ற ராக்ஷஸன் இவர்கள் பரிகம், பட்டஸம், ப்ராஸங்கள், சக்தி, சூல, பரஸ்வதம் எனும் ஆயுதங்கள், வாள், வில், அம்புகள் கூட நிறைய கூர்மையான வாட்கள், இவைகளை எடுத்துக் கொண்டு, ஆங்காரமாக கோஷம் இட்டுக் கொண்டு, ராவணனிடம் வந்து, ராவணனைப் பார்த்துச் சொன்னார்கள். இன்றே போய் ராமனை வதம் செய்வோம். லக்ஷ்மணனோடு, சுக்ரீவனையும் வதம் செய்வோம். லங்கையை நாசம் செய்த அல்பனான ஹனுமானையும் அடித்து வீழ்த்துவோம் என்று கோஷம் செய்தவர்களை அடக்கி விட்டு விபீ4ஷணன் எழுந்தான். பணிவாக பேச ஆரம்பித்தான். திரும்பவும் கூச்சலிட்ட அவர்களை அடக்கி அமரச் செய்து விட்டு, தொடர்ந்தான். தமையனே மூன்று விதமான உபாயங்களை செய்தும் நமது காரியம் ஆகவில்லையென்றால் தான் நான்காவதான பலத்தை பிரயோகம் செய்ய வேண்டும். விஷயம் அறிந்தவர்கள் நமக்கு இப்படித்தான் அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். அதுவும், நன்றாக சோதித்து பார்த்து முறைப்படி செய்ய வேண்டும். விழிப்புடன், படையுடன் வந்து நிற்கும் வீரனை, ஏற்கனவே நமது செயலால் ரோஷத்துடன், எதிர்க்க முடியாத தன்னம்பிக்கையுடன் நம்மை போருக்கு அழைக்கும் பொழுது, எப்படி எதிர் கொள்வாய்? நம்மை ஜயிக்க என்று அவன் உறுதியுடன் திட்டமிட்டுக் கொண்டு வந்து நிற்கிறான். இந்த பயங்கரமான நத நதீபதியான சமுத்திரத்தை தாண்டி போய் விட்ட ஹனுமானை யார் தான் ஜயிக்க முடியும்? நினைக்கவே கூட முடியவில்லை. நமது நிசாசர பலம் அளவிட முடியாதது. நமது சேனையும் அளவில் பெரியது. இருந்தும் எதிரியின் பலத்தை அலட்சியப் படுத்தி மட்டமாக நினைக்க கூடாது. அதுவும் தீர விசாரிக்காமல் நாம் ஒரு முடிவுக்கு வருவது எப்படி சரியாகும்? மேலும், ராக்ஷஸ ராஜன், முன்னால் ராமனுக்கு தீங்கிழைத்திருக்கிறான். ஜனஸ்தானத்திலிருந்து அவன் மனைவியை அபகரித்துக் கொண்டு வந்திருக்கிறான். அவனது கீர்த்தி அறியாமல் மோதிய க2ரனை அவன் வீழ்த்தி விட்டதும் தெரிந்ததே. ஜீவன்கள் எதுவானாலும், ஒரு உயிரை காப்பாற்றுவது தான் தர்மம். தவிர, பிறன் மனைவியைத் தூக்கி வந்தது மனிதத் தன்மையும் இல்லை. புகழ் தரும் தீரச் செயலும் இல்லை. பொருளை நாசம் செய்யும் கோரமான பாபம். மேலும் மேலும் பாபம் செய்யத் தூண்டும். ஆகையால், அபகரித்து வந்த வைதே3ஹியை நாம் விடுவித்து விட வேண்டும், அனாவசியமாக கலகத்தை வரவழைத்து யாருக்கு என்ன பயன்? அவர்களும் நல்ல வீரர்கள். தவிர தர்ம வழியில் செல்பவர்கள். அவர்களுடன் எதிர் நின்று போர் செய்ய நம்மால் முடியாது. பயனின்றி ஒரு விரோதம் நமக்குத் தேவை தானா? மைதிலியைக் கொடுத்து விடலாம். ரத்னங்கள் நிறைந்த, யானைகளும், குதிரைகளும் நிரம்பிய இந்த ஊர், அந்த ராமனின் படைகளால் தாக்கப் படும் முன், மைதிலியைக் கொடுத்து விடலாம். வானர சைன்யம், பயங்கரமாக, கணக்கில்லாமல் கூட்டமாக வந்து, நம்மால் எதிர்க்க முடியாமல், லங்கையை நாசம் செய்து விட்டு போகும் முன், மைதிலியைக் கொடுத்து விடலாம். லங்கையும் நாசமாகும், சூரர்களான நமது வீரர்களும் பெருமளவில் மடிவார்கள். நாமாக, ராமனின் மனைவியை பெருந்தன்மையாக திருப்பித் தராவிட்டால், இந்த கஷ்டங்கள் வந்து சேருவது நிச்சயம். உடன் பிறந்தவன் என்ற உரிமையில் சொல்கிறேன். நான் சொல்வதைக் கேள். உனக்கு நன்மையும், தர்மம் என்றும் உணர்ந்து சொல்கிறேன். மைதிலியைக் கொடுத்து விடலாம். ராமன் வந்து சேருமுன், சரத்கால சூரிய கிரணங்களைப் போல அம்புகளைக் கொண்டு, கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு, ஒப்பில்லாத உயர்ந்த அஸ்திரங்களைக் கொண்டு, ராஜகுமாரன், உன்னை வதம் செய்யும் பொருட்டு வந்து நிற்கு முன், தாசரதியிடம் மைதிலியை திருப்பித் தந்து விடலாம். கோபம் கொள்ளாதே, ராஜன், சுகத்தையும், தர்மத்தையும் நாசம் செய்யும் இந்த அனாவசிய ரோஷத்தை விடு. உன் புகழையும், சௌக்யத்தையும் வளர்க்கக் கூடிய தர்ம வழியை பின்பற்றுவாயாக. தயவு செய். நாம் எல்லோரும் பந்து ஜனங்களுடன் நல்ல முறையில் வாழ வழி செய். நம் புத்திரர்களுடன் மற்றவர்களும் நலமாக வாழ வழி செய். தாசரதியிடம் மைதிலியைக் கொடுத்து விடலாம். விபீஷணன் சொன்னதைக் கேட்டு, ராக்ஷஸேந்திரனான ராவணன், எதுவும் சொல்லாமல் அந்த சபையை விட்டு வெளியேறி, தன் மாளிகை சென்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீஷண சமாலோசனம் என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 10 (417) விபீ4ஷண பத்2யோபதே3ச: (விபீஷணன் நன்மையை எடுத்துச் சொல்லுதல்)
மறு நாள் விடியற்காலை, விபீஷணன் தன் மனதினுள் தர்மம், அர்த்தம் இவற்றை எண்ணி, ஒரு தீர்மானம் செய்து கொண்டவனாக ராக்ஷஸ ராஜனின் வீட்டினுள் நுழைந்தான். தன் செயலையும், தான் சொல்லப் போகும் செய்தியையும், ராவணன் எப்படி எடுத்துக் கொள்வானோ, என்று பயந்தபடியே சென்றான். மலைச் சிகரம் போலவே கம்பீரமாக, உயர்ந்து நின்ற மாளிகை. அழகான அறைகளாக தடுக்கப் பட்டு, ஜனங்கள் நிறைந்து காணப்பட்டது. புத்திசாலிகளான (மகா அமாத்யர்கள்) மகா மந்திரிகள், தாங்களும் ஈ.டுபாட்டுடன் நிர்வகித்ததால், அழகுற விளங்கியது. எங்கும் ராக்ஷஸர்கள் காவல் காத்தபடி நின்றிருந்தனர். மதம் கொண்ட யானைகளின் பெருமூச்சு காற்று சூழ் நிலையின் காற்றையே கலக்கி அடித்தது. சங்க கோஷம் பெரும் கோஷமாக கேட்டது. தூரி, பேரிகையின் முழக்கம், அதைத் தொடர்ந்து வந்தன. பெண்கள் கூட்டம் கூட்டமாக வளைய வந்தனர். ராஜ வீதியில் பேச்சுக் குரல்களைக் கேட்டனர். புடமிட்ட, பொன்னால் செய்யப் பட்ட வளைவுகள், வியூகங்கள் கொண்டு அழகாக அலங்காரங்கள் செய்யப் பட்டிருந்தன. க3ந்த4ர்வர்கள் தங்கும் இடமோ, மருத் என்ற இனத்தினர் வசிக்கும் ஆகாயமோ, எனும் படி ரத்னங்கள் குவித்து வைக்கப் பட்டிருந்த மாளிகை. போகிகளின் (சிற்றின்பத்தில் திளைத்தவன், நாகம்) மாளிகை போல இருந்தது. (ரத்னங்களின் இருப்பிடம் நாகங்கள், மித மிஞ்சி கிடப்பதால், நாகங்களே வசிக்கும் இடமோ என்று ஐயம் , செல்வந்தன் வீட்டில் ரத்னங்கள் சேமித்து வைக்கப் பட்டிருப்பது செல்வ செழிப்பைக் காட்ட- இது சொல்லின் இரு பொருளையும் இணைத்து வர்ணிக்கும் காவ்ய அலங்காரம்). ஆகாய மண்டலம் போன்று பரந்து, விஸ்தாரமாக ஒளி மிகுந்து இருந்த தன் தமையனின் மாளிகைக்குள் விபீஷணன் நுழைந்தான். மங்கள கீதங்கள் இசைக்கப் படுவதையும், விடியற்காலையில் ஆசிர்வதிக்கும் விதமாக வாழ்த்துக்களையும் கேட்டபடி நடந்தான். வேத கோஷங்களும் கேட்டன. தன் தமையனின் நலனுக்காக, வெற்றிக்காக விசேஷமாக செய்யப் படும் வேத பாராயணங்கள் என்று உணர்ந்தான். ப்ராம்மணர்கள் தயிர் நிரம்பிய பாத்திரங்களையும், நெய், புஷ்பம், அக்ஷதைகள் இவைகளுடன் மந்திரங்கள் சொல்லி பூஜை செய்வதைக் கண்டான். மற்ற ராக்ஷஸர்கள் வணங்கி மரியாதை செய்ய, தன் தேஜஸால் கொழுந்து விட்டெரியும் தீயின் ஜ்வாலை போல பிரகாசித்த, த4னதா3னுஜன், குபேரன் தம்பியான ராவணன் ஆஸனத்தில் அமர்ந்து இருப்பதையும் கண்டான். அருகில் சென்று வணங்கி நின்றான். சபையின் நடை முறைகளை அறிந்தவனாதலால், பொன்னாலான ஆஸனத்தில் அமர்ந்திருந்த அரசன், பார்வையால் தனக்கு ஆஸனத்தை அளித்த பின், அதை ஏற்றுக் கொண்டு அமர்ந்தான். மந்திரிகள் முன்னிலையில், மற்ற பொது ஜனங்கள் இல்லாத அந்த சமயத்தில் தன் மனதினுள் காரண காரியங்களோடு தீர்மானம் செய்து வைத்து இருந்த ஒரு விஷயத்தைச் சொல்ல தயக்கத்துடன், ராவணனுக்கு இதமாக எப்படி சொல்லலாம் என்று சிந்தனையோடு ஆரம்பித்தான். தேச காலங்களையும், உலக வழக்குகளையும் அறிந்தவன் தான் விபீஷணன். தமையனை வாழ்த்தி, சமாதானமாக, கோர்வையாக பேச ஆரம்பித்தான். ராஜன், நீங்கள் சீதையை எப்பொழுது இங்கு கொண்டு வந்து சிறை வைத்தீர்களோ, அன்று முதல் பல கெட்ட நிமித்தங்களையே காண்கிறோம். நமக்கு அசுபமான துர் நிமித்தங்கள். அக்னி, மந்திரம் சொல்லி வளர்க்கும் பொழுதும் நேராக எரிவது இல்லை. தீப்பொறிகளோடு, புகையோடு, ஜ்வாலை புகையினால் மாசு பட்டதாக, வளருகிறது. ப்ரும்ம ஸ்தலம் எனும் யாக சாலைகளிலும், அக்னி ஹோத்ரம் செய்யும் இடங்களிலும் பூச்சி புழுக்கள் ஊர்வன காணப்படுகின்றன. ஹவ்யம் எனும் யாகத்தில் போடப் படும் ஹவிஸில் எறும்புகள் காணப்படுகின்றன. (யாகத்துக்காக அக்னியை வளர்க்கும் பொழுது புகை தோன்றக் கூடாது என்று சாஸ்திரம்). பசுவின் பால் சிவப்பாக காண்கிறது. யானைகள் சோர்ந்து போய் வீரம் இன்றி காண்கின்றன. குதிரைகள் தீனமாக கணைக்கின்றன. புல்லை கூட விரும்பி உண்பது இல்லை. கோவேறு கழுதைகள், குதிரை போன்றவை ரோமங்கள் உதிர்ந்து காண்கின்றன. தன் இயல்பான ஸ்வபாவத்துடன் நடமாடுவதில்லை. கட்டப் பட்டு இருக்கும் இடத்திலும் ஏதோ கவலையுடன் காணப்படுகின்றன. காக்கைகள் கூட்டமாக நம் எதிரிலேயே கத்துகின்றன. கூட்டமாக மாளிகைகளின் மேல் அமர்ந்தபடி காணப்படுகின்றன. கழுகுகள் கூட்டமாக வட்டமிடுகின்றன. ஊர் பூராவும் இரண்டு சந்த்யா காலங்களிலும் ஏராளமான குள்ள நரிகள், அமங்களமாக ஊளையிடுகின்றன. மாமிசம் உண்ணும் மிருகங்கள், நகரின் வாயிலில் கூட்டமாக நின்று கத்துகின்றன. இதன் எதிரொலியும் சேர்ந்து நாராசமாக ஒலிக்கின்றது. இது போன்ற நிலையில் நாம் பிராயச்சித்தம் செய்ய வேண்டியது அவசியம். ராஜன், தங்களுக்கு சரி என்று தோன்றினால், வைதேஹியை ராமனிடத்தில் திருப்பிக் கொடுத்து விடுங்கள். இதைச் சொல்லும் பொழுது நான் என் அறியாமையினால் சொல்கிறேன் என்று மகாராஜா நினைத்தாலும், தவறான காரியத்தைச் செய்யக் கூடாது. இந்த தோஷம் எல்லா ஜனங்களையும் பாதிக்கும். ராக்ஷஸ, ராக்ஷஸிகளையும், ஊரில், அந்த:புரத்தில் எல்லோரையும் இந்த தோஷம் தாக்கும். எல்லா மந்திரிகளும் தங்கள் எண்ணத்தைச் சொல்லி விட்டார்கள். நான் கேட்டதையும், கண்டதையும் சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் சொன்னேன். இதில் உள்ள நியாயத்தை தாங்கள் உணர்ந்து கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். மந்திரிகள் நிறைந்த சபையில், அவர்களுக்கு எதிரிலேயே, இளையவன் தன் தமையனைப் பார்த்துச் சொல்லி விட்டான். தன் மனதில் ராவணனுக்கு நலம் தரும், நோய் தீர்க்கும் மருந்து போன்று பத்யமானது என்று நம்பிய விஷயங்களை கூடியவரை நிதானமாக சொன்னான். காரண காரியங்களுடன், இதமாக, பொருள் பொதிந்த இனிய சொற்களால், கடந்த காலத்து வன் செயலும், அதன் நிகழ் கால பாதிப்பையும் எடுத்துச் சொன்னான். இந்த விவரங்கள் ராவணன் அறியாததல்லவே. ஆயினும், ஜுரம் வந்தவன் போலும், வெறி பிடித்தவன் போலும், ராவணன் தன் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்த விஷயங்களை, நன்மை தரும் ஆலோசனைகளை கேட்கவே விரும்பாதவன் போல, அலட்சியமாக பதில் சொன்னான். இதில் ஒரு பயமும் இல்லை. எனக்குத் தெரிந்து எந்த ஆபத்தும் இல்லை. என்ன முயன்றாலும், ராகவன் மைதிலியைத் திரும்ப பெறப் போவதில்லை. அது நடக்க விட மாட்டேன். தேவர்கள் இந்திரனுடன் வந்தாலும், லக்ஷ்மணனின் தமையன், என் முன்னால் நிற்கக் கூட முடியாது. தன் ஆற்றலில் அளவிட முடியாத நம்பிக்கையோடு, கர்வத்தின் உச்சியில் இருந்த ராவணன், அசுர சைன்யத்தின் நாசத்துக்கு தானே காரணமாக இருக்கப் போவதை அறியாதவனாக, மகா பலசாலியான ராவணன், உடன் பிறந்தவன் என்ற உரிமையுடன் நல்லதைச் சொல்ல வந்த விபீஷணனை திருப்பி அனுப்பி விட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீஷண பத்2யோபதே3சோ என்ற பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 11 (418) த்3விதீய மந்த்ராதி4வேச: (திரும்பவும் மந்திரி சபையைக் கூட்டுதல்)
மைதிலியிடம் தான் கொண்ட காதல் மயக்கத்தால், உடல் இளைத்து வருந்திய ராவணன், நண்பர்கள் இந்த பாப செயலை உயர்வாக எண்ணி பாராட்டாத காரணத்தால், மேலும் ஆத்திரம் அடைந்தவனாக, காலம் கடந்த சமயம் மந்திரி சபையை திரும்பவும் கூட்டினான். தன் ஆடம்பரமான, பொன்னும், மணியும், ரத்னங்களும் இழைத்துச் செய்யப் பட்ட ரதத்தில், குதிரைகள் பணிவாக ஏற வசதியாக குனிந்து கொடுக்க, ஏறிக் கொண்டான். ஸ்ரேஷ்டமான அந்த ரதத்தில், பெரிய மேகம் போன்ற அமைப்பும், கர்ஜிப்பது போன்ற சப்தமும் கூடிய அந்த ரதத்தில் ஏறி சபையை நோக்கிச் சென்றான். உரையுடன் கூடிய வாளை ஏந்திய போர் வீரர்களும், மற்றும் பலவிதமான ஆயுதம் ஏந்திய வீரர்களும் ராக்ஷஸர்கள், ராக்ஷஸேந்திரனுடைய ரதத்தின் முன்னால் சென்றனர். பலவிதமான அலங்காரங்களுடன், பலவிதமான வேஷங்களுடன் முன்னும் பின்னும் பக்கங்களிலும் அரசனைச் சூழ்ந்து பாதுகாவலாகச் சென்றனர். அதி ரதர்கள், ரதத்திலும், யானையின் மேல் ஏறியும் வீரர்கள், மதம் கொண்ட யானைகளை திறம்பட செலுத்திக் கொண்டும், குதிரைகளை அறிந்த வீரர்கள் விளையாட்டாக குதிரைகளைச் செலுத்திக் கொண்டும், பின் தொடர்ந்தனர். க3தை4யும் , பரிக4ம், சக்தி, தோமரம் என்ற ஆயுதங்களுடன் சிலர், சிலர் சூலத்துடன், உடன் சென்றனர். ஆயிரக் கணக்கான தூ4ரி எனும் வாத்யம் இசைக்கப் பட, அதற்கு இணையாக சங்கு சப்தமும், சபைக்கு ராவணன் செல்லும் பொழுது முழங்கின. திடுமென, ஓடும் சக்கரங்களின் ஒலி அதிர, ரதம், லக்ஷ்மீகரமாக விளங்கிய ராஜ மார்கத்தை வந்தடைந்தது. வெண் கொற்றக் குடைகள் விரிந்து அழகாகத் தெரிந்தன. சந்திரனுக்கு இணையாக தூய வெண்ணிற குடைகள், ராக்ஷஸேந்திரனை மறைத்தன. வலது, இடது புறங்களில் தங்கத்தை தூளாக்கி ஸ்படிகத்தால் ஆன பிடியினுள் போட்டு செய்யப் பட்டிருந்த சாமரங்கள், வ்யஜனங்கள் இருபுறமும் வீசப் பட்டன. வழி முழுவதும் கூப்பிய கரங்களுடன் ஜனங்கள் அரசனைக் காண நின்றிருந்தனர். பல ராக்ஷஸர்கள், ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான ராவணனை தலை குனிந்து வணங்கினர். ராக்ஷஸர்கள் துதி செய்தும், ஜய கோஷம் செய்தும், வாழ்த்தியும், வழி முழுவதும் கொண்டாட, ராக்ஷஸ ராஜா, தன் சபை வந்து சேர்ந்தான். அந்த சபையில் உத்தரங்கள், உயர் தரமான பொன்னால் செய்யப் பட்டிருந்தன. சுவர்ணம், வெள்ளி இவற்றால் ஆன தூண்கள். பரிசுத்தமான ஸ்படிகம் போன்ற தூய்மையுடன் உட்புறம். அறுநூறு பிசாசங்கள், பாதுகாப்பாக, த்ருஷ்டி பரிகாரங்களாக வைக்கப் பட்டிருந்தன. விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கபட்ட இந்த சபையினுள், தன் தேக காந்தியால் தானும் பிரகாசமாக விளங்கிய ராவணன், நுழைந்தான். பிரியங்க3 என்ற வகை மான் தோல் விரிக்கப் பெற்ற வைமூடுரியம் பதிக்கப் பெற்ற உயர்ந்த பிடிகளைக் கொண்ட வராசனத்தில் ராவணன் சென்றமர்ந்தான். தூதர்களை அழைத்து, எல்லா ராக்ஷஸ பிரமுகர்களையும் அழைத்து வர ஆணையிட்டான். மிக முக்கியமான காரியம் ஒன்று இருக்கிறது. அது பற்றி ஆலோசனை செய்ய வேண்டும் என்றான். தூதர்கள் பறந்தனர். எல்லா இடங்களிலும், வீடுகளிலும், படுக்கையறைகளிலும், உத்யான வனங்களிலும், வீட்டைச் சுற்றி இருந்த உல்லாச க்ருஹங்களிலும் பயப்படாமல் சென்று, அரசனின் கட்டளையைத் தெரிவித்தனர். சிலர் அழகிய ரதத்திலும், சிலர் கிடைத்த ரதங்களிலும், தனியாகவே குதிரை மேல் ஏறியும், யானையில் மேல் ஏறி சிலரும், எதுவும் தயாராக இல்லாத பலர் நடந்தும் ராஜ சபையை அடைந்தனர். திடுமென அந்த நகரம், ரதங்கள், குதிரைகள், யானைகள் ஜனங்கள் நடமாட்டத்தால், பரபரப்படைந்தது. அமைதியாக இருந்த ஆகாயத்தில் திடுமென பறவைகள் கூட்டமாக தெரிவது போல இருந்தது. வாகனங்களை வெளியில் நிறுத்தி விட்டு, அவர்கள் நடந்து சபைக்குள் நுழைந்தனர். மலை குகைக்குள் சிங்கங்கள் நுழைவது போல நுழைந்தனர். அரசனின் பாதங்களில் வணக்கம் செலுத்தி, பதிலுக்கு ராஜ மரியாதையையும் ஏற்றுக் கொண்டு, ஆசனங்களில் சிலர், விரிப்புகளில் சிலர், பூமியில் சிலர் என்று அமர்ந்தனர். அரசனின் கட்டளை என்று வந்து கூடியிருந்த பிரமுகர்கள், தங்கள் தகுதிக்கு ஏற்ப, ராவண ராஜாவை முகமன் கூறி வணங்கியும், வாழ்த்தியும் அமர்ந்தனர். குறிப்பிட்ட விஷயங்களில் பண்டிதர்களான மந்திரிகளும், நல்ல குணம் நிறைந்த அமாத்யர்களும், விவரம் அறிந்த அறிஞர்கள், புத்திமான்களாக பல துறைகளில் பிரகாசிப்பவர்கள், நூற்றுக் கணக்காக அங்கு வந்து சேர்ந்தனர். அதில் பலர் சூரர்கள். ரம்யமாக இருந்த சபையில், எல்லா விதத்திலும் சுகமாக இருந்த ராக்ஷஸேந்திரனுடைய ராஜ சபையில் கூட்டமாக கூடினர். ராக்ஷஸர்கள் தங்கள் அரசனை நாலாபுறமும் சூழ்ந்தவாறு அமர்ந்தனர். விபீஷணனும், உயர்ந்த வேலைப்பாட்டுடன் அமைந்த தன் ரதத்தில் ஏறி தமையனின் சபைக்கு வந்து சேர்ந்தான். தன் முன் பிறந்தவனான சகோதரனுக்கு, இளையவன் தன் பெயர் சொல்லி வந்தனம் செய்து, கால்களைப் பிடித்து திரும்பவும் வணங்கி விட்டு அமர்ந்தான். சுகனும், ப்ரஹஸ்தனும் அதே போல வந்து அரசனை வணங்கி தங்களுக்கு அளிக்கப் பட்ட ஆசனங்களில் அமர்ந்தனர். அழகிய பொன்னாபரணங்கள், ஆடைகள், வாசனை திரவியங்கள், மிக உயர்ந்த அகரு, சந்தனம், இவை தவிர, மணம் நிறைந்த மலர் மாலைகள் இவைகளை அணிந்து காட்சியளித்த ராக்ஷஸர்களின் சமூகத்தால் அந்த சபையே மணம் வீசிற்று. யாரும் உரக்க பேசவில்லை. யாரும் பொய் சொல்லி உள்ளே நுழையவில்லை. குறுக்காக யாரும் நடமாடவில்லை. எல்லோருமே திருப்தியாக, நல்ல வீர்யம் உள்ளவர்கள், அரசன் ஏதோ முக்யமான விஷயம் சொல்ல இருக்கிறான் என்பதால், அவன் முகத்தைப் பார்த்தபடி இருந்தனர். அந்த ராவணன், சஸ்திரங்கள் தாங்கிய மகா பலசாலிகாளான வீரர்கள் கொண்ட சபைக்குத் தலைவன், வசுக்களின் மத்தியில் வஜ்ரம் ஏந்திய இந்திரன் போல பிரகாசமாகத் தெரிந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் த்விதீய மந்த்ராதிவேசோ என்ற பதினொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 12 (419) கும்ப4கர்ண மதி: (கும்பகர்ணனின் ஆலோசனை)
யுத்தத்தில் வெற்றி வாகை சூடியே பழகிய அந்த அரசன், ப்ரஹஸ்தன் எனும் சேனாபதியை அழைத்துச் சொன்னான். சேனாபதியே, நான்கு விதமாகவும் கல்வி கற்ற போர் வீரர்களைக் கொண்டு நகரத்தை பாதுகாக்க ஏற்பாடு செய். இதைக் கேட்ட ப்ரஹஸ்தன், அரசனின் கட்டளையை சிரமேற்கொண்டு, உடனே அந்த மாளிகையின் உள்ளும் புறமும், காவலை பலப்படுத்தினான். நகரத்தைக் காவல் செய்ய ரகஸியப் படைகளையும் தயார் செய்து தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு, ப்ரஹஸ்தன் அரச சபையில் வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். அரசனே, காவல் வீரர்களை உள்ளும் புறமும், நம்பிக்கையான விதத்தில் பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்து நிற்கச் செய்து விட்டேன். இனிமேலும் தயங்காமல், தாங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள் என்றான். ராஜ்யத்தின் நலனை முன்னிட்டு, ப்ரஹஸ்தன் உடனடியாக செய்த ஏற்பாடுகளை புரிந்து கொண்ட அரசன் ராவணன், தன் நண்பர்கள், தனக்கு ஆப்தர்கள், என்று கூடியிருந்த ஜனங்களின் மத்தியில் தான் சொல்ல நினைத்ததைச் சொல்ல ஆரம்பித்தான். பிரியமோ, அப்ரியமோ (மனம் இசைந்தோ, இசையாமலோ), சுகம், துக்கம், லாபம் நஷ்டம், நன்மையோ தீமையோ, தர்மம், அர்த்தம், காமம் எனும் புருஷார்த்தங்களை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அரச காரியங்கள் அனைத்திலும், உங்களை கலந்தாலோசித்து, உங்கள் சம்மதத்துடன் தான் செய்து வந்திருக்கிறேன். உங்களுடன் நான் செய்த மந்த்ராலோசனைகள் எதுவுமே இதுவரை பலனளிக்காமல் போனதில்லை. சந்திரன், க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள், மருத்கணங்கள், இவற்றுடன் இந்திரன் இருப்பது போல, நான் உங்களுடன் இருந்து வந்திருக்கிறேன். இந்த பெரும் செல்வத்தையும் அடைந்தேன். உங்களிடம் எல்லா விவரங்களையும் சொல்லப் போகிறேன். கும்பகர்ணன், தூங்கிக் கொண்டிருந்ததால், அவனுடன் இது விஷயமாக ஆலோசனை செய்யவில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் எழுந்திருக்கிறான். எல்லா சஸ்திரங்களையும் பிரயோகிக்கத் தெரிந்தவன், பலசாலி, ஆனால் தூக்கம் அவனை ஆறு மாதங்களாக ஆட்கொண்டிருந்தது நாம் அறிந்ததே. மற்றொரு விஷயம், தண்டகாரண்யத்திலிருந்து, ராமனுடைய பிரியமான மனைவி, ராக்ஷஸர்களின் இயல்புக்கு ஏற்ப கொண்டு வரப் பட்டாள். அவளோ, என் மனைவியாக, என் படுக்கையறைக்கு வர மறுக்கிறாள். அவள் நடையழகு ஒன்றே போதும், மூன்று உலகிலும் அந்த சீதையைப் போல மற்றொரு பெண்ணை நான் கண்டதில்லை. சிறுத்த இடையும், பெருத்த பின்னழகும், சரத் கால சந்திரன் போன்ற முகமும், பொற்சிலை உயிர் பெற்றது போன்ற வடிவும், இனிமையான குணமும் உள்ளவள். மயன், தன் மாயையால் சிருஷ்டி செய்தானோ எனும்படி, தனித்து விளங்கும் அழகுடையவள். சிவந்து மென்மையாக விளங்கும் பாதங்களின் அமைப்பும், மிக நேர்த்தியாக தாமிர வர்ண நகத்துடன் கூடிய பாதங்களின் அழகைக் கண்டே நான் சொக்கிப் போனேன். என் உடலில் காம வேட்கை தகிக்கிறது. நெருப்பின் ஜ்வாலை போலும், சூரிய கிரணம் போலும் ப்ரபையுடையவளும், விசாலமான கண்களையுடையவளான சீதையைக் கண்ட உடனேயே நான் மன்மதனின் வசம் ஆகி விட்டேன். சற்றே நிமிர்ந்த வதனமும், பெரிய அழகிய கண்களும் என்னை நிலை தடுமாறச் செய்து விட்டன. அந்த க்ஷணமே நான் அவள் வசம் ஆகி விட்டேன் என்றால் மிகையாகாது. காமனின் வசம் ஆகி விட்டேன். க்ரோதமும், மகிழ்ச்சியும் தரக் கூடிய, உடல் வெளிறி, நிதானத்தை இழக்கச் செய்யக் கூடிய காமனால் நான் நிலை குலைந்து போனேன். சோகமும், தாபமும் என்னை வாட்டுகிறது. பாமினியான அவள், ஒரு வருஷ காலம் அவகாசம் வேண்டினாள். தன் கணவன் வந்து விடுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறாள். அழகிய நீண்ட கண்களைப் பார்த்து, நான் இந்த ஒரு வருஷ காலம் அவகாசம் கொடுத்தேன். மன்மதனின் இடைவிடாத தாக்குதலால் இந்த ஒரு வருஷ காலத்திற்குள் நான் களைத்து விட்டேன். வெகு தூரம் ஓடிய பிறகு குதிரைகள் களைத்து விழுவதைப் போல இருக்கிறேன். வற்றாத சமுத்திரத்தை இந்த வானரங்கள் எப்படி தாண்டி வரப் போகின்றன. கடல் வாழ் ஜந்துக்கள் நிறைந்து பயங்கரமான சமுத்திரத்தை இந்த தசரத குமாரர்கள் தான் எப்படித் தாண்டி வரப் போகிறார்கள். ஆனால், ஒரே ஒரு வானரம் வந்து நம் நகரத்தை சூறையாடி விட்டுப் போய் விட்டது. இப்பொழுது செய்வதறியாது திகைக்கிறேன். சொல்லுங்கள். உங்களுக்குத் தோன்றும் வழிகளைச் சொல்லுங்கள். மனிதனிடத்தில் எனக்கு பயம் இல்லை. ஆனாலும் உங்களையும் கலந்து ஆலோசிக்க விரும்புகிறேன். சொல்லுங்கள். உங்கள் உதவியால் தான் தேவாசுர யுத்தங்களை நான் ஜயித்தேன். அந்த ராஜ குமாரர்கள், சுக்ரீவன் முன்னிட்ட வானர சைன்யத்துடன் சமுத்திரத்தின் அக்கரை வந்து சேர்ந்துள்ளனர். சீதையின் இருப்பிடம் தெரிந்து விட்டது. அதனால் சமுத்திர கரை வரை வந்து விட்டார்கள். சீதையைத் தரக் கூடாது. தசரத குமாரர்களையும் வதம் செய்ய வேண்டும். இந்த விதமாக நீங்கள் யோசித்து ஒரு வழி சொல்லுங்கள். நீதி மார்கமாக ஆராய்ந்து சொல்லுங்கள். உலகில் வேறு யாருக்கும் என்னளவு சக்தி இருப்பதாகத் தெரியவில்லை. இந்த வானரங்கள் சமுத்திரத்தைக் கடந்து வரவா போகின்றன? நிச்சயம் வெற்றி எனக்குத் தான் என்று இவ்வாறு சொல்லிக் கொண்டே போனான். ஒரு விதமான ஜுர வேகத்தில், தான் சொல்வது சரிதானா என்று உணராமல் உளறியதைக் கேட்டு கும்பகர்ணன் கோபம் கொண்டான். தான் பேச ஆரம்பித்தான். ராமனையும், லக்ஷ்மணனையும் அடக்கி சீதையை கொண்டு வந்திருந்தால், நீ சொல்வது சரியே. சற்று யோசித்து கவனமாக கையாண்டிருக்கலாம். யமுனை வெள்ளம் போல கட்டுக் கடங்காமல் போகும் உன் மனதை கட்டுப் படுத்திக் கொள். மகாராஜா இவையனைத்தையும், ஆரம்பத்திலேயே எங்களிடம் சொல்லி ஆலோசனை கேட்டாயா? நீ செய்தது தவறு என்று தான் எனக்கும் தோன்றுகிறது. அரசனாக இருப்பவன், தீர்மானித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். செய்த பின் நியாய அநியாயங்களை விமரிசித்து என்ன பயன்? செயலில் இறங்கும் முன் ஆராய்ந்து முடிவு செய்து கொண்டு செயல் பட்டால், அந்த செயலில் அசையாமல் உறுதியாக நிற்க முடியும். அது தான் நியாயமான அரசனுக்கு அழகு. யோசிக்காமல், விபரீதமான காரியங்களை எந்த வித உபாயமும் பற்றி சிந்திக்காமல் செய்தால், அதன் பலனும் விபரீதமாகத் தான் இருக்கும். புலன்களை அடக்கி நியமங்களை அனுஷ்டித்து செய்யப் படாத யாகத்தின் ஹவிஸ் வீணாகப் போவதைப் போல போகும். புத்தி மோகத்தால் நினைத்தபடி செய்து விட்டு, பின்னால் பலா பலன்களை ஆராய்பவன் என்ன நியாயத்தையும், அநியாயத்தையும் பிரித்து உணரப் போகிறான். சபல புத்தியுடையவனுடைய செயலில் உடன்பாடு இல்லையென்றால், பறவைகள் க்ரௌஞ்ச மலையின் பொந்துகளை மாற்றுவது போல பிரஜைகள் மாற்றி விடுவர். மிகப் பெரிய காரியத்தை யோசிக்காமல் ஆரம்பித்திருக்கிறாயே, அதிர்ஷ்ட வசமாக ராமன் உன்னை வதம் செய்யவில்லை. மாமிச உணவில் விஷம் கலந்தது போல உடனே உன்னை வதம் செய்யாமல் விட்டானே, ஆயினும், மற்றவர்கள் உன் செயலைக் குறை கூறினாலும், நான் உன் பக்கமே இருந்து, உன் சத்ருக்களை அழிப்பேன். இந்திரனும், விவஸ்வானும் சேர்ந்து வந்தாலும், காற்றும் அக்னியும் சேர்ந்து வந்தாலும், குபேர வருணர்கள் இணைந்து வந்தாலும், நான் அவர்களை யுத்தத்தில் அழிப்பேன். பெரிய மலை போன்ற என் சரீரத்தையும், என் கையில் உள்ள கூர்மையான சூலத்தாலும், என் கூரிய பற்களுடன் நான் யுத்த வெறி கொண்டு ஆடும் பொழுது புரந்தரனான இந்திரனே நடுங்குவான். மற்றொரு ஆயுதம் எடுத்து அவன் என்னை அடிக்கும் முன் நான் அவன் ரத்தத்தைக் குடித்து விடுவேன். நிச்சயம். கவலைப் படாதே. தசரத குமாரர்களை வதம் செய்து உனக்கு சுகமாக, வெற்றியைக் கொண்டு வர நான் முயற்சி செய்கிறேன். லக்ஷ்மணனோடு ராமனையும் அழித்து வானர வீரர்கள் சைன்யம் அனைத்தையும், விழுங்கி விடுவேன். நீ கவலையின்றி, உன் தினசரி காரியங்களில் ஈடுபடு. நன்றாக, அக்ரிய வருணீம் என்ற மதுவைக் குடித்து ரமித்துக் கொண்டிரு. உனக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை செய்து கொண்டிரு. என் கையால் அடிபட்டு ராமன் யம லோகம் சென்ற பின், நிச்சயம் சீதா உன் வசம் ஆகி விடுவாள் என்றான் கும்பகர்ணன்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கும்பகர்ண மதி: என்ற பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 13 (420) மகா பார்ஸ்வ வசோபி4னந்தனம்(மகா பார்ஸ்வன் சொன்னதைக் கொண்டாடுதல்)
ராவணன் கோபமாக இருப்பதை அறிந்து, மகா பலசாலியான மகா பார்ஸ்வன், சற்று யோசித்து விட்டு, பணிவாக கை கூப்பியபடி, சொல்லலானான். எவன், மிருகங்களும், விஷப் பாம்புகளும் உள்ள வனத்தில் நுழைந்த பின், எளிதாக கிடைக்கும் மதுவை உண்ணாமல் திரும்பி வருவானோ அவனை அறிவிலி என்றே கொள்ள வேண்டும். சத்ருக்களை வென்று, வாகை சூடும் தலைவனே, உனக்குத் தலைவனாக வேறு யார் உண்டு? சத்ருக்களை ஒட்ட நசுக்கி விட்டு, நீ வைதேஹியுடன் சுகமாக இருப்பாய். குக்குட நியாயம்ஏ (சேவல்கள் விதி) என்பதை அனுசரித்து பலாத்காரமாக சீதையை ஆக்ரமணம் செய்து அனுபவித்து மகிழ்ந்து இரு. உன் விருப்பம் நிறைவேறிய பின், என்ன ஆபத்து வந்தாலும் நல்லதோ, பொல்லாதோ, சமாளித்துக் கொள்ளலாம். நம்மிடம் கும்பகர்ணனும், இந்திரஜித்தும், இந்திரனின் வஜ்ரமேயானாலும் தடுத்து எதிர் அம்பு விடத் சக்தியுடையவர்கள் நிறைய உண்டு. (சாம), சமாதானப் பேச்சுக்கள், (தானம்) நிறைய தானம் கொடுத்தும், (பேதம்) தகுந்த அறிஞர்களைக் கொண்டு எதிரியின் பலத்தை பிளவுப் படுத்தியும், கடைசியில் தண்டமும் பிரயோகம் செய்து. உன் காம, அர்த்தங்களை சாதித்துக் கொள்வாய். இங்கு கூடியிருக்கும் நாங்கள் அனைவரும், உன் சத்ருக்களை, சஸ்திரங்களை மழையாகப் பொழிந்து நம் வசம் ஆக்கி விடுவோம். கவலை வேண்டாம். இது நிச்சயம். மகா பார்ஸ்வன் இவ்வாறு சொல்லக் கேட்டு, ராவணன் மகிழ்ந்து அவனுக்கு உபசாரம் செய்தான். மகா பார்ஸ்வனே, ஒரு விஷயம், ரகஸியம் சொல்கிறேன், கேள். வெகு காலத்திற்கு முன் நடந்தது. அதில் எனக்கு நேர்ந்த பாதிப்பையும் சொல்கிறேன். பிதாமகருடைய பவனத்திற்கு புஞ்சிகஸ்தலா என்ற பெண் போய்க் கொண்டிருந்தாள். ஆகாயத்தில் அக்னி கொழுந்து போல பிரகாசமாக, கண்ணை பறிக்கும் விதமாக சென்று கொண்டிருந்தவளை நான் கண்டேன். அவளை ஆடைகளை விலக்கி பலாத்காரமாக நான் அனுபவித்தேன். அவள் ஸ்வயம்பூவான ப்ரும்மாவின் வீட்டிற்குச் சென்றதும், அவர் அவளுடைய நிலையையும், என் செயலையும் தெரிந்து கொண்டு விட்டார். மகா கோபத்துடன் அவர் என்னை சபித்து விட்டார். இன்று முதல், நீ எந்த ஸ்த்ரீயையும் அவள் விருப்பம் இல்லாமல் நெருங்குவாயானால், உன் தலை நூறாக சிதறிப் போகும், ஜாக்கிரதை என்று என்னைப் பார்த்துச் சொன்னார். இதனால் தான், சாபத்தின் பயத்தால், சீதையை நெருங்கவும் பலாத்காரமாக என் படுக்கையறைக்கு அழைத்து வரவும் தயங்குகிறேன். சாகரத்துக்கு சமமான என் வேகம், மாருதனான காற்றுக்கு சமமான என் நடை, இவைகளை தாசரதி அறிய மாட்டான். அவன் என் முன் வந்து சேரக் கூட முடியாது. மலை குகையில் தூங்கும் சிங்கத்தை தட்டி எழுப்பினால், அது பயங்கரமான கோபத்துடன், சாக்ஷாத் யமனே வந்து நின்றது போல சிலிர்த்துக் கொண்டு வருமே, அது போலத்தான் என் மேல் அவன் படையெடுத்து வருவதும். தானே வந்து என்னிடம் போர் தொடுத்தால், இரட்டை நாக்குடைய பாம்புகள் போல சீறிப் பாயும் என் அம்புகளின் சக்தியை யுத்தத்தில் ராமன் காணுவான். சீக்கிரமே, வஜ்ரத்துக்கு சமமான என் பாணங்கள், கூர்மையான இரட்டை அம்புகள், ராமனை தகித்து விடும். யானையை, நெருப்பு பொறிகளைக் கொண்டு அடக்குவது போல அடக்கி விடுவேன். அதனால், பெரும் படையுடன் வந்துள்ள அவன் பலத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உதிக்கும் சூரியன், நக்ஷத்திரங்களின் பிரபையை அளப்பது போல. ஆயிரம் கண் படைத்த இந்திரனையே போரில் வெற்றி கொண்டவன், நான். திரும்பவும் அந்த இந்திரனே வந்தாலும், வருணனே வந்தாலும், என்னை ஜெயிக்க முடியாது. இந்த நகரத்தை நான் புஜ பலத்தால் அடைந்தேன். முன் காலத்தில் வைஸ்ரவனன் என்ற குபேரனின் பாதுகாப்பில் இருந்ததை நான் போரில் கைபற்றினேன்.ஏ என்றான், ராவணன்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மகா பார்ஸ்வ வசோபினந்தனம் என்ற பதின் மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 14 (421) ப்ரஹஸ்த விபீ4ஷண விவாத3: (ப்ரஹஸ்தனும், விபீஷணனும் வாதம் செய்தல்)
ராக்ஷஸேந்திரனுடைய பேச்சைக் கேட்டு, கும்பகர்ணன் கர்ஜித்ததையும் கேட்டு, விபீஷணன் தன் எண்ணத்தை சொல்ல விரும்பினான். ராவணனின் நன்மையைக் கருதி, காரண காரியங்களோடு விவரமாக, சொல்ல ஆரம்பித்தான். ராஜன், நீ சீதை என்று எண்ணி இருப்பது ஐந்து விரல், ஐந்து தலையுடைய பெரிய பாம்பு. உள்ளும் புறமும் உன்னை சூழ்ந்து நிற்கும் விஷப் பாம்பு என்று கொள். அவள் புன்னகை என்று நீ நினப்பது, இந்த விஷப் பாம்பின் கூரிய பற்கள் என்று புரிந்து கொள். மலை குகைகளில் வசிக்கும் இந்த வானரங்கள். லங்கையை ஆக்ரமித்து, தங்கள் பற்களாலும், நகங்களாலும், (இவைகளே அந்த வானரங்களின் ஆயுதம்) நாசம் செய்யும் முன், தாசரதியிடம் மைதிலியை ஒப்படைத்து விடு. நமது ராக்ஷஸ வீரர்களின் தலைகளை ராவணனுடைய கூரிய பாணங்கள் கொய்து கொண்டு போகும் முன், வஜ்ரம் போல கடுமையாக, காற்றிலும் வேகமாக வந்து தாக்கும் முன், தாசரதியிடம் மைதிலியை ஒப்படைத்து விடு. கும்ப கர்ணனோ, இந்திரஜித்தோ, ராஜன், மகா பார்ஸ்வனோ, மகோதரனோ கூட, நிகும்பனும், கும்பனும், அதிகாயனும் சேர்ந்து வந்தாலும் கூட யுத்தத்தில் ராமன் முன்னால் நிற்க முடியாது. ராமனுக்கு எதிரில் நின்று போரிட்டு, நீ உயிருடன் தப்பிக்கவே முடியாது. என்ன தான் சூரியனையே அடைக்கலம் அடைந்தாலும், மருத் கணங்களை சரணடைந்தாலோ, இந்திரன் மடியிலேயே பதுங்கி கிடந்தாலும், ம்ருத்யுவிடம், ஆகாயத்தில், பாதாளத்தில் ஓடி ஒளிந்து கொண்டாலும், தப்ப முடியாது. விபீஷணன் சொன்னதைக் கேட்டு, ப்ரஹஸ்தன் பதில் சொன்னான். எங்களுக்கு எதிலும் பயம் இல்லை. தேவர்களிடமோ, தானவர்களிடமோ, வேறு இடத்திலோ, யக்ஷ, கந்தர்வ, மகா உரக, பக்ஷி ராஜனிடத்திலோ எங்களுக்கு பயம் கிடையாது. அப்படி இருக்க, சாதாரண மனிதர்களின் தலைவனாக இருக்கும் அரச குமாரன் யுத்தம் செய்ய வந்தால், அந்த ராமனிடம் ஏன் பயந்து நடுங்கப் போகிறோம். ஹிதமில்லாத ப்ரஹஸ்தனின் அர்த்தமில்லாத பேச்சைக் கேட்டு, விபீஷணன், தர்மார்த்த, காமம் எனும் விஷயங்களில் தெளிவான ஞானம் உடையவனான விபீஷணன், அதை மறுத்து மேலும் சொன்னான். ப்ரஹஸ்தா, நீயும் ராஜாவும், கும்பகர்ணனும் ராமனைப் பற்றி அறிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள். அது நடக்காது. அதர்மத்தில் புத்தியை செலுத்தியவன், ஸ்வர்கம் போக ஆசைப் படுவது போலத்தான் உங்கள் பேச்சு. ப்ரஹஸ்தா, ராமனை வதம் செய்வது, உனக்கோ, எனக்கோ, ராக்ஷஸர்கள் அனைவரும் சேர்ந்தோ எப்படி முடியும்? பெரிய கடலை படகு கூட இல்லாமல் நீந்தி கடப்பது சாத்யமா? தர்மமே முக்யமானவன், மகா ரதி, இக்ஷ்வாகு வம்சத்தின் சிறந்த அரசன். அவனிடம் ப்ரஹஸ்தா, தேவர்களும் அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ராமனிடம் செயலற்று நின்று விடுகிறார்கள். ராகவனின் கையிலிருந்து விடுபடும் அம்புகள், கூர்மையானவை. எதிர்க்கவே முடியாது. எதிரியின் உடலைத் துளைத்துக் கொண்டு செல்லும் வல்லமையுடையவை. ப்ரஹஸ்தா, அறியாமல் அவனைப் பற்றி மட்டமாக பேசுகிறாய். பிதற்றுகிறாய். ராவணனோ, இல்லை அதிக பலசாலியான த்ரிசீர்ஷனோ, கும்பகர்ணனோ, அவன் மகன் நிகும்பனோ, இந்திரஜித்தோ, நீயோ, தாசரதியான ராமனுடன் யுத்தம் செய்து சமாளிக்க சக்தியுடையவர்கள் அல்ல. இந்திரனை ஜயித்தால் ராமனையும் ஜயிக்க முடியும் என்று நினைக்காதே. தேவாந்தகனோ, நராந்தகனோ, அதிகாயனோ, அதிரதனோ, மகாத்மாவான அகம்பனனோ, இந்த அகம்பனன் பெரிய மலை போல அசையாது நிற்க கூடியவன், இவனே கூட ராமனை எதிர்த்து யுத்தம் செய்ய சக்தியுடையவன் அல்ல. இந்த அரசன் (ராவணன்) கவலையினால் குழப்பத்தில் இருக்கிறான். நண்பர் என்ற போர்வையில் இவனுக்கு நன்மையைச் சொல்லாத கூட்டதினர் சூழ்ந்து நிற்க, உண்மையை அறிய மாட்டான். மோகத்தில் ஆழ்ந்திருக்கிறான். சுபாவமாக கூர்மையான புத்தியுடையவன், ஏனோ, ராக்ஷஸ ஜனங்களின் அழிவுக்காகவே போலும், ஆராய்ந்து பார்க்காமல் செயல் படுகிறான். நீங்கள் எல்லோருமாக இந்த அரசனை காப்பாற்றுங்கள். அனந்தன் என்ற பாம்பு, ஆயிரம் தலை நாகம், பீமன் எனும் பலசாலியான நாகம் இவை பலாத்காரமாக இவனைச் சுற்றி சூழ்ந்து படர்ந்து கிடக்கின்றன. இந்த சிக்கலில் இருந்து அவனை விடுவியுங்கள். தற்சமயம் எப்படி பூதம், பிசாசு பிடித்து கொண்டு விட்ட மனிதனை, தலை கேசத்தை பிடித்து உற்றாரும், சுற்றாரும் சேர்ந்து முழு மூச்சுடன் விடுவிக்க முயற்சி செய்வார்களோ, அப்படி நீங்கள் எல்லோருமாக சேர்ந்து அரசனை உலுக்கி விழிக்கச் செய்யுங்கள். உங்கள் அரசன், கண் மூடித்தனமாக, தலை குப்புற, பாதாளத்தை நோக்கி விழ இருக்கிறான். ராமன் என்ற சாகரம், திடுமென, பெருகி, நாலாபுறமும் அவனை சூழ்ந்து கொண்டு, தன்னுள் மூழ்கடிக்கும் முன் அவனை காப்பாற்றுங்கள். காகுத்ஸன், சாதாரணமானவன் அல்ல, சாகரம் போல, பாதாளம் போல பயங்கரமானவன். நான் என்னுடைய இந்த அறிவுரையைத் திரும்பத் திரும்ப சொல்கிறேன். இது தான் நம் நகரத்துக்கும், அரசனுக்கும், ராக்ஷஸ ஜனங்களுக்கும், நம் நண்பர்கள், பந்துக்களுக்கும், நன்மை தரக் கூடியது. திரும்பவும் சொல்கிறேன். மனிதர்களின் அரசன், அவன் மனைவியை திருப்பிக் கொடுத்து விடுவோம். எதிரியின் பலத்தையும், நம் பலத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்த பின் மந்திரி அறிவுரை சொல்ல வேண்டும். நமது நிலையையும், இதனால் ஏற்படக் கூடிய நாசத்தையும், புத்தி பூர்வமாக ஆராய்ந்து கொள்ள வேண்டும். தவிர, நம் அரசனின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும், இவையெல்லாம் நல்ல மந்திரியின் பொறுப்புகள் அல்லவா?
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப்ரஹஸ்த விபீஷண விவாதம் என்ற பதிநான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 15 (422) இந்திரஜித், விபீ4ஷண விவாதம் (இந்திரஜித்தும், விபீஷணனும் வாதித்தல்)
விபீஷணன் ப்ருஹஸ்பதிக்கு சமமான புத்தியுடையவன் என்று மதிக்கப் பெற்றவன் தான். ஆயினும், அந்த சமயம், அவன் அறிவுரைகளை ராக்ஷஸ படை வீரர்களில் முக்கியமான இந்திரஜித் ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தையே | இந்த சிற்றப்பனின் பேச்சைக் கேட்டு ஏன் பயந்தவன் போல பேசாமல் இருக்கிறீர்கள். இந்த குலத்தில் பிறந்த யாருமே இப்படி கோழையாக இருக்க மாட்டார்கள். கோழைத்தனமாக பேசவோ, செய்யவோ மாட்டார்கள். தங்களுடைய வீர்யம், சக்தி, பராக்ரமம், சௌர்யம், தைரியம், தேஜஸ் இவைகளுக்கு சற்றும் பொருந்தாத விதமாக, இந்த விபீஷணன் நம் குலத்தில் தப்பி பிறந்து விட்டான். கடைசியில் பிறந்தவன். இந்த ராஜகுமாரர்கள் இருவரும் என்ன பிரமாதமான பலசாலிகள்? எங்களில் ஒரு ராக்ஷஸனோ, ஏன் சாதாரண ஒரு குடி மகனே கூட வீழ்த்தி விடுவான். எதற்கு அனாவசியமாக பயமுறுத்துகிறாய்? கோழை நீ, வீரம் இல்லாதவன். தேவராஜன், மூவுலகுக்கும் நாதன் என்று பெயர் பெற்ற இந்திரனையே நான் வெற்றி கொண்டு பூமியில் விழச் செய்தேன். அது முதல், என்னிடம் திசைகள் தோறும், தேவ கணங்கள் எல்லோரும் பயந்த வண்ணமே இருக்கிறார்கள். ஐராவதத்தை தள்ளி பூமியில் அலறிக் கொண்டு விழச் செய்தேன். அதனுடைய தந்தங்களை பலாத்காரமாக நான் பிடுங்கிய பொழுது தேவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னை தடுக்க அவர்களுக்கு தைரியமும் இல்லை, வலிவும் இல்லை. அந்த நான், தேவர்களின் கர்வத்தை அடக்கியவன், உத்தமமான தைத்யர்களுக்கும் சோகத்தை அளிப்பவன், ஏன் ஒரு நரேந்திர குமாரனிடம் சக்தியற்றுப் போவேன் என்று சொல்கிறாய்? நான் சிறந்த வீரன். சாதாரண கீழ் மட்ட மனிதர்கள் இருவர். அவர்களிடம் நான் பயப்படுவேனா? சாஸ்திரங்கள் அறிந்த விபீஷணன், பின்னும் தன் அமைதியை காத்தபடி பதில் சொன்னான். இந்திரனுக்கு சமமானவன், எதிர்க்க முடியாதவன், நல்ல பலசாலி, தேஜஸ் உடையவன், தன் பலத்தில் அசைக்க முடியாத தன்னம்பிக்கை உடையவன், என்று சொல்லப் படும் இந்திரஜித்தின் பேச்சைக் கேட்டும், தன் மனதில் பட்ட நிதர்சனமான உண்மை நிலையை எடுத்துச் சொல்லவே முனைந்தான். குழந்தாய், ,நீ சிறுவன். இந்த மந்த்ராலோசனையில் அபிப்பிராயம் சொல்ல உனக்கு அனுபவம் போதாது. உன் மனம் இன்னும் பக்குவப் படவில்லை. அதனால் அர்த்தமற்ற, தன் நாசத்துக்கு வழி சொல்லும் விதமாக பிதற்றினாய். புத்ரன் என்பதால் ராவணனுக்கு மிகவும் நெருங்கியவன் நீ. பந்துவாக அவனுக்கு நன்மை எது என்று தெரிந்துகொண்டு சொல்ல வேண்டிய சமயம் இது. சம்பந்தமில்லாத யாரோ, வெளி மனிதர்கள் சொல்லும் பொதுவான அறிவுரையைச் சொல்கிறாய். இது தீமை என்று உனக்குத் தோன்றவில்லையா? ராமனை எதிர்த்து அழிவைத் தேடிக் கொள்ளும் வழியை சொல்கிறாய்? உன் மோகம் கண்களை மறைக்கிறது. அடக்கம் இன்றி தவறான ஒன்றை கர்வத்துடன் பேசுகிறாய். வெறும் சாகஸமே உடையவன் நீ. சிறுவன். எப்படி இந்த மந்த்ராலோசனை சபையில் நுழைந்தாய். முதலில் உன்னை தண்டிக்க வேண்டும்.. இந்திரஜித், நீ சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறாய். வினயமும் இல்லை, விவரமும் இல்லை. பிடிவாதமாக உனக்குத் தோன்றியதை சரியென்று சாதிக்கிறாய். துராத்மா, மூர்க்கனே, அறிவிலியே, உன்னை வியாபித்து இருக்கும் அகங்காரம் எனும் மாயையை விலக்கிப் பார். யார் தான், ப்ரும்ம தண்டம் போல பிரகாசிக்கும் ராமனின் வில்லிலிருந்து புறப்படும் கூர்மையான பாணங்களை எதிர்த்து நிற்க முடியும் என்று நினைக்கிறாய்? ராமனுடைய பாணங்கள் யம தண்டம் போன்றவை. தனம், ரத்தினங்கள், ஆபரணங்கள், நல்ல ஆடைகள், பல விதமான மணிகள் இவற்றுடன் சீதையை ராமனிடத்தில் சேர்ப்பித்து விட்டு, நாம் கவலையின்றி நிம்மதியாக இருப்போம், என்றான் விபீஷணன்.
இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் இந்திரஜித் விபீஷண விவாதம் என்ற பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 56 (327) சம்பாதி ப்ரஸ்ன: (சம்பாதி வினவுதல்)
இந்த வானரங்கள் உபவாசம் இருந்த மலையின் உச்சியில் சம்பாதி என்பவனும் வந்து சேர்ந்தான். சிரஞ்சீவியான கழுகு அரசன். ஜடாயுவின் சகோதரன். ஸ்ரீமான். இவன் ஆற்றலும், பலமும் பலர் அறிவர். விந்த்ய மலையின் ஒரு குகைக்குள் இருந்து வெளி வந்து, உபவாசம் இருக்க அமர்ந்த வானரங்களைப் பார்த்து மனதில் மகிழ்ச்சி கொண்டான். விதி தான் மனிதனை உலகில் ஆட்டுவிக்கிறது. சமயத்தில் தேவைகளை பூர்த்தி செய்து நன்மையும் செய்கிறது. வெகு காலத்திற்குப் பிறகு, எனக்கு ஆகாரமாக இந்த வானரங்களை கொண்டு வந்து சேர்த்ததும் விதியே. ஒவ்வொன்றாக உயிர்விட விட நான் புசித்து பசியாறுவேன் என்றது. பசியினால் பல நாட்களாக வாடிக் கிடந்த பக்ஷியின் குதூகலத்தைப் பார்த்து அங்கதன் ஹனுமானிடம் சொன்னான். ஹனுமானே, பார். சீதை என்ற பெயரில், மறைமுகமாக வைவஸ்வத யமனே வானரங்களின் வாழ்க்கை முடிய நம்மை இந்த தேசம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ராமனுடைய வேண்டுகோளையும் நாம் நிறைவேற்றவில்லை. அரசன் ஆணையையும் முடித்துக் காட்டவில்லை. இந்த வானரங்களுக்கு இப்படி ஒரு ஆபத்து திடுமென வந்து சேர்ந்தது. வைதேஹியைக் காப்பாற்ற ஜடாயு போரிட்டதையும், மடிந்ததையும் நாம் கேள்விப் பட்டோம். இப்படி, பறக்கும் பறவைகள் கூட ராமனுக்கு பிரியத்தையே செய்ய விழைகின்றன. இதோ, நாமும் அதே போலத்தான் உயிர் விடத் துணிந்திருக்கிறோம். ஸ்னேகமும், காருண்யமும் உள்ளவர்கள், தங்களுக்குள் உயிரை கொடுத்து கூட உதவி செய்யத் தயங்க மாட்டார்கள். ஜடாயு செய்தது அது தான். ராகவனுக்காக அலைந்து நாமும் உயிர் விடும் தறுவாயில் இருக்கிறோம். பல காடுகளில் தேடி விட்டோம். மைதிலியைக் காணவில்லை. ஜடாயு பாக்யசாலி. ராவணனால் வதம் செய்யப் பட்டான். அவனுடன் யுத்தம் செய்து மாண்டான். ராமனால் அவனுக்கு நல்ல கதியும் கிடைத்தது. சுக்ரீவனிடம் பயப்படத் தேவையும் ஏற்படவில்லை. ஜடாயுவை அடித்துக் கொன்றதும், அரசன் தசரதன் மறைந்ததும், வைதேஹியை ராவணன் கவர்ந்து சென்றதும், வானரங்கள் இப்படி நாசமடையவே தான் போலும். சீதையுடன் ராம லக்ஷ்மணர்கள் அரண்யத்தில் வாசம் செய்ததும், ராகவனுடைய பாணத்தால் வாலி வதம் ஆனதும், ராம கோபத்தால் ஜனஸ்தான ராக்ஷஸர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்ததும், கைகேயி பெற்ற வரங்களின் பலனே. அதன் பின் விளைவுகளே. பூமியில் படுத்து புரண்ட படி நடந்ததை அசைபோட்டுக் கொண்டிருந்த வானரங்களின் பேச்சால், இதுவரை வரிசையாக நடந்த அனர்த்தங்களை தெரிந்து கொண்ட சம்பாதி மனக் கலக்கம் உற்றான். தீனமாக அவர்களைப் பார்த்து வினவினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சம்பாதி ப்ரஸ்னோ என்ற ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 57 (328) ஜடாயு தி3ஷ்ட கத2னம் (ஜடாயு மறைந்ததை தெரிவித்தல்)
கூர்மையான அலகுடைய பக்ஷி ராஜன், அங்கதன் முதலானோர் செய்கையை கவனித்துக் கொண்டும் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டும் வந்தது. ஜடாயுவின் பெயர் அடிபட்டதைக் கேட்டவுடன் அங்கதனைப் பார்த்து, யாரது? என் உயிருக்குயிரான இளைய சகோதரன் பெயரைச் சொல்லி உரக்க கோஷமிடுவது யார்? என் சகோதரன் ஜடாயு வதம் செய்யப் பட்டானா? என் மனம் நடுங்குகிறதே. ஜனஸ்தானத்தில் ராக்ஷஸனுக்கும், கழுகுக்கும் எப்படி சண்டை மூண்டது? என் தம்பியின் பெயரைக் கேட்டே வெகு நாட்களாகி விட்டன. இந்த மலையுச்சியிலிருந்து கீழே இறங்க வேண்டும். சற்று உதவி செய்யுங்கள். உங்களுடன் அமர்ந்து என் இளைய சகோதரனைப் பற்றி விசாரிக்க வேண்டும். என் தம்பி குணவான். நல்ல விக்ரமம் உடையவன். வெகு நாட்களாக அவனைப் பற்றி விவரம் எதுவும் தெரியாமல் இருந்தது. உங்கள் வாயால் அவன் பெயரைக் கேட்டதும் சந்தோஷப்பட்டேன். ஆனால், அவன் போரில் மடிந்தான் என்று சொல்கிறீர்களே, அது எப்படி? வானரோத்தமர்களே, விஸ்தாரமாகச் சொல்லுங்கள். ஜனஸ்தானத்தில் இருந்தான். தசரதனுடைய சகா அவன். என் சகோதரன். தசரதனுடைய பிரிய புத்திரன் ராமன், அவன் ஜ்யேஷ்ட மகன் என்பதும் தெரியும். என் இறக்கைகள், சூரிய ஒளியில் எரிந்து போய் விட்டன. அதனால் தான் நகர முடியாமல் கஷ்டப் படுகிறேன். இந்த மலையுச்சியிலிருந்து இறங்கி உங்களுடன் சமமாக அமர ஆசைதான். உங்கள் குரல் வேதனையில் தோய்ந்து இருப்பதை கேட்ட பின்னும், இங்கேயே இருக்கிறேன். அந்த கழுகரசனின் வார்த்தைகளுக்கு வானரங்கள் செவி மடுக்கவில்லை. அதன் செயல்- கிடைத்ததை தின்று விடும் குணம்- தெரிந்ததால் பதில் பேசாமல் இருந்தன. இவன் நம் அனைவரையும் தின்று விடுவான். நாமோ உயிர்த் தியாகம் செய்ய அமர்ந்திருக்கிறோம். இவனுக்கு வேட்டைதான் என்று பேசிக் கொண்டன. இப்பொழுதே இவன் நம்மை புசித்தாலும் நல்லது தான். நம் வேலை சீக்கிரம் முடியும் என்றன. மற்ற வானரங்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, அங்கதன் மட்டும் சம்பாதியின் அருகில் சென்றான். கழுகு அரசனை இறக்கிக் கொண்டு வந்தான். அங்கதன் தங்கள் கதையைச் சொன்னான். ருக்ஷரஜஸ் என்று வானரேந்திரன், நல்ல பிரதாபம் உடையவன் இருந்தான். அரசனான அவன் தான் என் தந்தையின் தந்தை. இரண்டு குமாரர்களில், என் தந்தை வாலி, மற்றவன் சுக்ரீவன். இருவருமே பலசாலிகள். என் தந்தை வாலி, தன் அரிய செயல்களால் உலகில் புகழ் பெற்று வாழ்ந்தான். தசரத ராஜா, இக்ஷ்வாகு குல அரசன், அவன் மகன் ஸ்ரீமான் ராமன் என்பவன், தண்டகா வனம் வந்தான். சகோதரன் லக்ஷ்மணனுடனும், மனைவி சீதையுடனும் வனம் வந்தான். தந்தையின் கட்டளையை ஏற்று, தர்ம வழியில், நடந்து வந்தான். அவன் மனைவியை ஜனஸ்தானத்திலிருந்து ராவணன் பலவந்தமாக தூக்கிச் சென்றான். ராமனுடைய தந்தையின் சகா2 ஜடாயு என்ற கழுகரசன். ஆகாய மார்கத்தில், ராவணன் அவளைக் கவர்ந்து செல்வதைக் கண்டான். ராவணனை ரதத்திலிருந்து கீழே தள்ளி, மைதிலியை காப்பாற்ற முனைந்தான். களைத்து நின்ற சமயம், முதியவரான ஜடாயுவை, ராவணன் அடித்து வீழ்த்தி விட்டான். இப்படித்தான் ராவணனுடன் யுத்தம் செய்து வதம் செய்யப் பட்டான். பின், ராமர் அந்த வழியில் வந்த பொழுது, விழுந்து கிடந்த ஜடாயுவைக் கண்டு, அவருக்கு சம்ஸ்காரங்கள் செய்து நல்ல கதியடையச் செய்தார். இதன் பின் என் தந்தை வழி உறவினனான, சுக்ரீவனுடன் ராமர் சக்யம் செய்து கொண்டார். என் தந்தையை வதம் செய்தார். என் தந்தையுடன் சுக்ரீவனுக்கு விரோதம். என் தந்தையைக் கொன்று ராமர், சுக்ரீவனை அவன் மந்திரிகளுடன் ராஜ்யத்தில் அமர்த்தி விட்டார். அரசனாக முடி சூட்டி விட்டார். வானர ராஜனாக நியமிக்கப் பட்டவுடன், ராஜா சுக்ரீவன், எங்களை அனுப்பினான். வைதேஹியைத் தேடுங்கள் என்று கட்டளையிட்டு தென் திசைக்கு அனுப்பினான். இரவில் சூரியனைத் தேடுவது போல நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். தண்டகாரண்யத்தில் தேடி விட்டு, அறியாமல் எல்லோருமாக ஒரு பள்ளத்தில் இறங்கி விட்டோம். மயனுடைய மாயா சக்தியால் அந்த பள்ளத்தினுள் ஒரு நகரம் அமைக்கப் பட்டுள்ளது. அங்கு தேடிக் கொண்டிருந்த சமயம், நேரம் போனதே தெரியவில்லை. ராஜா எங்களுக்கு கொடுத்த ஒரு மாத காலம் என்ற கால வரையறை முடிந்து விட்டது. கபிராஜனுடைய குணம் தெரியும். அவனிடம் பயந்து உயிரை விடுவதே மேல் என்று ப்ராயோபவேசம் செய்யத் துணிந்து அமர்ந்திருக்கிறோம். காகுத்ஸனும், லக்ஷ்மணனும், கபிராஜனும் அவர்கள் கட்டளையை நிறை வேற்றாமல் திரும்பப் போனால் நிச்சயம் கோபத்துடன் தண்டிப்பார்கள். அங்கு போனாலும் உயிருடன் இருப்பது சந்தேகமே, என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஜடாயு தி3ஷ்ட கத2னம் என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 58 (329) சீதா ப்ரவ்ருத்யுபாலம்ப: (சீதையின் நிலையை கண்டறிந்து சொல்லுதல்)
உயிரை விடத் துணிந்து விட்ட வானரங்களைப் பார்த்து, க்ருத்ர (கழுகு) ராஜன், கண்களில் நீர் மல்க, பதில் சொன்னான். ஜடாயு என் இளைய சகோதரன். அவன் பலவானான ராவணனால் வதம் செய்யப் பட்டான் என்று சொல்கிறீர்கள். எனக்கு வயதும் ஆகி விட்டது. இறக்கைகளும் இல்லை. இதையும் கேட்டு நான் பொறுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இப்பொழுது சக்தி இல்லை. அதனால் என் தம்பியைக் கொன்ற எதிரியை பழி வாங்க நினைத்தாலும், செயல் படுத்த முடியவில்லை. முன்பு வ்ருத்திர வதம் ஆன பின் நானும் என் சகோதரனும், சூரியனைத் தொட்டு விட நினைத்து மேலும் மேலும் வானில் உயரப் பறந்தோம். சூரிய கிரணங்களின் வெப்பத்தையும் பொறுத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்தோம். சூரியன் உச்சிக்கு வந்தபொழுது ஜடாயு தாங்க முடியாமல் தவித்தான். நான் என் இறக்கைகளால் அவனை மறைத்துக் கொண்டு அவன் கஷ்டப் படுவதை குறைக்க முயன்றேன். என் அன்பு சகோதரன் மிகவும் வாடி விட்டான். அவனைக் காக்க முனைந்ததில் என் இறக்கைகள் பஸ்மமாகி விட்டன. விந்த்ய மலையில் வந்து விழுந்தேன். இங்கு இருந்தபடி நான் எவ்வளவோ முயற்சித்தும் என் சகோதரனின் நிலை என்ன ஆயிற்று, எங்கு இருக்கிறான் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஜடாயுவின் சகோதரன் இவ்வாறு சொல்லவும், யுவ ராஜாவான அங்கதன், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டு, சம்பாதியிடம் உதவி கேட்டான். கழுகு அரசனே, ஜடாயுவின் சகோதரன் என்று சொல்கிறாய். அந்த ராக்ஷஸனின் நிலயம் எங்கு இருக்கிறது தெரியுமா? தெரிந்தால் சொல், என்றான். என் இறக்கைகள் பஸ்மமாகி விட்டன. எனக்கு சக்தியும் இல்லையே. வானரர்களே, வாய் வார்த்தையாக நான் ஒரு உபகாரம் செய்ய முடியும். எனக்கு எல்லா உலகமும் தெரியும். வருணனின், த்ரிவிக்ரமனாக விஷ்ணு பகவான் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் தெரியும். மகாசுரர்களை அடக்கியதும், சமுத்திர மத2னமும் தெரியும். இது ராம காரியம். முதலில் இதை நான் செய்யத்தான் வேண்டும். இது என் கடமையே. முதுமை வந்து என் தேஜஸை அபகரித்து விட்டது. ஏதோ உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அழகிய இளம் பெண், சர்வாலங்கார பூஷிதையாக, ராவணன் அபகரித்துச் செல்வதை நான் பார்த்தேன். ராம, ராம என்றும், லக்ஷ்மணா என்றும் அலறினாள். பூ4ஷணங்களை வீசி எறிந்தாள். உடல் துடிக்க கதறினாள். அவளுடைய உயர்ந்த பட்டாடை, சூரியனின் கிரணங்கள் பட்டு, ஒளியைச் சிதற விடுவதைப் போல இருந்தது. கறுத்த ராக்ஷஸனுடன் மேகத்தின் இடையில் மின்னல் பளிச்சிடுவது போல இருந்தாள். அவள் சீதையாகத் தான் இருக்க வேண்டும். ராம, ராம என்று அலறியதால் அவள்தான் என்பது நிச்சயம். அந்த ராக்ஷஸனின் இருப்பிடம் எது என்பதைச் சொல்கிறேன், கேளுங்கள். விஸ்ரவஸின் புத்திரன், சாக்ஷாத் குபேரனுடைய சகோதரன், லங்கா எனும் நகரை ஆண்டு வருபவன் அந்த ராக்ஷஸன் ராவணன். இதோ இருக்கிறது அந்த தீவு. சமுத்திரத்தில் நூறு யோஜனை தூரம் தள்ளி அமைந்திருக்கிறது. விஸ்வகர்மா அமைத்த நகரம் லங்கா புரி. பத்தரை மாற்றுத் தங்கத்தால் ஆன வாசல்களும், அழகிய வேலைப் பாடுகளும், யாக சாலைகளும், வெண்மையான ப்ராகாரங்களுமாக நேர்த்தியாக விளங்கும். அந்த லங்கா நகரில் தான் சீதை சிறை வைக்கப் பட்டிருக்கிறாள். வெண் பட்டாடையுடன், ராக்ஷஸிகள் சூழ ராவணனுடைய அந்த:புரத்தில், தீனமாக அமர்ந்திருக்கிறாள். ஜனக ராஜாவின் மகளை அந்த லங்கையில் காண்பீர்கள். நாலா புறமும் கடல் சூழ, மிக்க பாதுகாவலுடன் அமைந்த லங்கா நகரில், அவளைக் காண்பீர்கள். இந்த நூறு யோஜனை தூரத்தைக் கடந்து சென்று, தென் கரையில் ராவணனையும் காண்பீர்கள். வானரங்களே, சீக்கிரம், உங்கள் விக்ரமத்தைக் காட்டுங்கள். என் அறிவுக்கு பட்டதைச் சொல்கிறேன். போய் பார்த்துவிட்டு திரும்ப வாருங்கள். முதல் படி, குளிங்க எனும் தானியங்களை கொத்திச் சாப்பிடும் கோழி இனம். இரண்டாவது பலி போஜனம் எனும் காகம். மரங்களில் வசிக்கும் பறவைகள். மூன்றாவது க்ரௌஞ்சம், குரரீ என்பவை. ஸ்யேன எனும் கழுகு வகைகள் நான்காவது. கருடன் இனம் ஐந்தாவது. பலம், வீர்யம், அழகிய உருவம் இவை உடைய ஹம்ஸங்கள் ஆறாவது. அதையும் அடுத்த நிலை வைனதேயனுடையது. வானர வீரர்களே, பிறப்பால் நாங்கள் வைனதேயர்கள். இங்கு இருந்தபடியே நான் ராவணனையும், ஜானகியையும் காண்கிறேன். எங்களுக்கும் நான்கு வேதங்களில் அதிகாரமும், கூர்மையான கண் பார்வையும் உண்டு. ஆகாரம், வீர்யம், பிறவி இவற்றால் வானரர்களே, நூறு யோஜனை தூரம் பார்க்கும் சக்தி எங்களுக்கு பிறவியிலேயே அமைந்து விட்டது. தூர த்ருஷ்டி எங்கள் இன பறவைகளுக்கு உண்டு. மிகவும் நீச காரியத்தை செய்திருக்கிறான் இந்த ராவணன். என் சகோதரனை வதம் செய்தவனை பழி வாங்கியதாகவும் ஆகும். இந்த உப்புக் கடலைத் தாண்ட உபாயம் தேடுங்கள். சீதையைக் கண்டு கொண்ட பின், வெற்றி வீரர்களாகத் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் என்னை சமுத்திர கரைக்கு அழைத்துச் செல்லுங்கள். என் சகோதரன் ஸ்வர்கம் சென்று விட்டான். அவனுக்கு நீத்தார் கடனை நான் செய்ய வேண்டும். நத, நதீபதி எனும் சமுத்திர கரைக்கு வானரங்கள், சம்பாதியை அழைத்துச் சென்றன. நீர்க்கடன்களை செய்தபின் திரும்ப அதனுடைய வாசஸ்தலத்தில் கொண்டு விட்ட வானரங்கள், நம்பிக்கையுடன் காணப்பட்டனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சீதா ப்ரவ்ருத்யுபாலம்ப: என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 59 (330) சுபார்ஸ்வ வசனானுவாத3:(சுபார்ஸ்வன் சொன்னதை திருப்பிச் சொல்லுதல்)
சம்பாதியின் வார்த்தைகள் அமுத தாரையென வானரங்களின் காதில் விழுந்தன. நம்பிக்கையை தூண்டி விட்டது. வானர ஸ்ரேஷ்டனான ஜாம்ப3வான், தரையிலிருந்து குதித்து எழுந்து கழுகரசனிடம் சென்றான். மற்ற வானரங்களும் தொடர்ந்தன. எங்கே சீதா? யார் கண்ணால் கண்டது? யார் மைதிலியை அபகரித்துச் சென்றவனை அறிவான். அறிந்ததை எங்களுக்கும் சொல்லுங்கள். செய்வதறியாது திகைத்து நிற்கும் எங்களுக்கு வழி காட்டு. யார் அவன்? தாசரதியின் வில்லின் வலிமையையும், லக்ஷ்மணனின் கூர்மையான பாணங்களையும் பற்றி அறியாதவன். அறியாமல் இந்த காரியத்தை செய்திருக்கிறான் என்றான். வானரங்கள் சீதா விஷயமாக மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதையறிந்த சம்பாதி, மேலும் விவரமாக சொன்னான். கேளுங்கள். நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன். நீண்ட கண்களையுடைய சீதா இப்பொழுது எப்படி இருக்கிறாள் என்பதையும் அறிந்து சொல்கிறேன். இந்த மலை பல யோஜனை தூரம் பரவியிருக்கிறது. நான் இதில் விழுந்த நாளிலிருந்து கிடக்கிறேன். என் வயதும் கூடி, வீர்யமும் அழிந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நகர முடியாமல் ஒரே இடத்தில் கிடக்கிறேன். என் மகன் சுபார்ஸ்வன் எனக்கு ஆகாரங்கள் கொண்டு வந்து கொடுத்து கவனித்துக் கொள்வான். கந்தர்வர்கள் தீக்ஷ்ண காமா: (அதிக காமம் உடையவர்கள்), நாகங்கள் தீக்ஷ்ண கோபா: (அதிக கோபம் உடையவை), மான்கள் தீக்ஷ்ண ப4யம் (அதிக பயம் உடையவை) நாங்கள் தீக்ஷ்ண க்ஷூதா4: (நாங்கள் அதிக பசியுடையவர்கள்) என்பது நியதி. ஒரு நாள் எனக்கு பசி தாங்க முடியாமல் தவிக்கிறேன், என் மகன் சூரியன் மறையும் நேரம் வருகிறான். பசியினாலும், களைப்பினாலும், நான் அவனைக் கோபித்துக் கொண்டதையும் பொருட்படுத்தாமல், அவன் எனக்கு ஆகாரத்தை கொடுத்து விட்டு, ஒரு விஷயம் சொன்னான். அப்பா, நான் சரியான சமயத்தில் தான் வந்தேன். உங்கள் ஆகாரத்தை தேடி ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தேன். மகேந்திர மலையருகில் வரும் பொழுது, சாகரத்தில் இருந்த ஏராளமான சத்வங்களை, ஜீவ ஜந்துக்களை குறி பார்த்து நான் வேகமாக இறங்கிய பொழுது, குறுக்காக, அஞ்சன மலை உடைந்தாற்போன்ற கரிய நிற ராக்ஷஸன் ஒருவன் ஒரு ஸ்த்ரீயை அபகரித்துக் கொண்டு போய் கொண்டிருந்தான். நான் ஆகாரத்தை தேடுபவன் அவனிடம் வழி விடுமாறு கேட்டேன். சாதாரணமாக பணிவுடன் கேட்பவர்களை யாரும் அடிக்க மாட்டார்கள். தவிர, ஆகாய மார்கத்தில் பறவையான என்னை தடுக்க யார் தான் நினைப்பார்கள். வேகமாக போய்க் கொண்டிருந்தவன், என்னைத் தள்ளிக் கொண்டு நிற்காமல் சென்று விட்டான். வானத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சித்3த4ர்கள், மகரிஷிகள் என்னை காப்பாற்றினர். நல்ல வேளை சீதா உயிருடன் இருக்கிறாள் என்று பேசிக் கொண்டனர். ஸ்த்ரீயையும் அழைத்துக் கொண்டு வான வெளியில் இந்த வேகத்தில் பறக்கிறானே, நலமாக போய் சேர்ந்தால் போதும், அது வரை நல்லது என்றனர். இதன் பின் அவர்களே மேலும் சொன்னார்கள். இது ராக்ஷஸ ராஜா, ராவணன் என்ற பெயருடையவன். ராமருடைய மனைவி சீதையை கவர்ந்து செல்கிறான். இவள் பட்டாடைகளும், ஆபரணங்களும் நிலை குலைய கதற கதற தூக்கிச் செல்கிறான். வேகமாக போவதிலேயே கவனமாக இருக்கிறான். அவளோ, ராம, ராம என்றும் லக்ஷ்மணா, என்றும் அலறுகிறாள். இதுவும் காலத்தின் கட்டாயமே என்று முக்காலமும் உணர்ந்த சித்3த4ர்கள் சொல்கிறார்கள். இவ்வளவும் சுபார்ஸ்வன் என்னிடம் சொன்னான். இருந்தும் தொடர்ந்து சென்று போரிடவோ, சீதையை மீட்க வேண்டும் என்றோ எனக்குத் தோன்றவில்லை. என் இறக்கைகள் கூட இல்லை, பக்ஷிராஜன் என்று பெயர் தான். நான் நினத்து தான் என்ன பலன்? இப்பொழுது என்னால் செய்யக் கூடியது, என் வாக்கு, புத்தி, நல்ல எண்ணெம் இவைகளைக் கொண்டு உங்களுக்கு வழி காட்டுவது தான். கேளுங்கள், சொல்கிறேன். உங்கள் வீர பராக்ரமத்தைக் காட்ட ஒரு சந்தர்ப்பம். தாசரதிக்கு பிரியமானதை நானும் செய்ய வேண்டும். என் புத்தியும், வாக்கும் தான் எனக்கு வசமாக உள்ளன. இதைக் கொண்டு உலகுக்கே நன்மை செய்யப் போகிறேன். நல்ல வீரர்களாக, புத்தி கூர்மையுள்ளவர்களாக உங்களை பொறுக்கி எடுத்து இந்த வேலையில் ஏவியிருக்கிறான், உங்கள் அரசன். ராம லக்ஷ்மணர்களுடைய ஆயுதங்களும் குறி தவறாதவை. மூன்று உலகையும் ஆட்டிப் படைக்க வல்லவை. தசக்ரீவனும் நல்ல பலமும், விக்ரமும் உடையவனே. இருந்தாலும். உங்களைப் போன்ற வீரர்களுக்கு எதுவுமே செய்ய முடியாது என்பது இல்லை. அதனால் போதும், கால விரயம் ஆனது ஆயிற்று. மதி நுட்பத்துடன் செயல் படுவோம். நீங்கள் செயலுக்கு அஞ்சாதவர்கள். சுத்த வீரர்கள். இதில் சந்தேகமேயில்லை என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுபார்ஸ்வ வசனானுவாத3: என்ற ஐம்பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 60 (331) சம்பாதி புராவ்ருத்த கத2னம் (சம்பாதி முன் நடந்ததைச் சொல்லுதல்)
கழுகரசன் வேண்டிக் கொண்டபடியே, வானரங்கள், சமுத்திரக் கரையில் ஜடாயுவுக்கு நீர்கடன்கள் செய்ய செய்து, ஸ்னானம் செய்தபின், அதன் இருப்பிடத்தில் கொண்டு சேர்த்தார்கள். தன்னைச் சுற்றி அங்கதன் முதலானோர் அமர்ந்து இருப்பதைப் பார்த்து சம்பாதி மிகவும் சந்தோஷமாக மேலும் பழைய கதைகளை நினைவு கூர்ந்து சொல்லலானான். யாரும் சத்தம் போடாமல் அமைதியாக கேளுங்கள். எனக்குத் தெரிந்த வரையில் மைதிலியைப் பற்றிச் சொல்கிறேன். இந்த விந்த்யமலையில் முன்பு நான் விழுந்தேன். சூரிய கிரணங்கள் பட்டு எரிந்து பஸ்மமாகிப் போன இறக்கைகளும், தகிக்கும் உடலுமாக ஆறு இரவுகள் நினைவு இன்றி கிடந்தேன். ஏழாவது நாள் கண் விழித்தால் எதுவுமே புலப்படவில்லை. இதன் பின் சாக3ரத்தைப் பார்த்து, நதிகளையும், அருவிகளையும், அதைச் சுற்றி இருந்த பிரதேசங்களையும் வைத்து இது விந்த்ய மலைச் சாரலின் ஒரு பகுதி என்பதை ஊகித்துக் கொண்டேன். என்னைச் சுற்றி பல பக்ஷிகள் ஆரவாரம் செய்தன. நான் கண் விழித்ததில் அவைகள் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிந்தது. குகையின் உள்ளே நான் இருப்பதையும், விந்த்ய மலை என்பதையும் தெரிந்து கொண்டேன். நிசாகரன் என்ற பெயருடன் ஒரு ரிஷி உக்ரமாக தவம் செய்து சித்தியடைந்த ஆசிரமம் இருந்தது. இந்த ரிஷி பல வருஷங்களாக (8000 வருஷம்) இங்கு வசித்து விட்டு, ஸ்வர்கம் சென்றார். மெதுவாக மலையிலிருந்து இறங்கி குத்தும் முட் புதர்களுடன் தர்ப்பைகள் வளர்ந்து கிடந்த பூமியை வந்தடைந்தேன். அந்த ரிஷியைக் காண விரும்பினேன். ஜடாயுவும் நானும் அவரது ஆசிரமத்தில் படித்தவர்கள். அந்த ஆசிரமத்தில் நறுமணத்துடன் கூடிய சுகமான காற்று வீசியது. ஆனால், மரங்களில் புஷ்பங்களோ, பழங்களோ காணப்படவில்லை. நான் மெதுவாக ஒரு மரத்தடியில் அமர்ந்து நிசாகரன் என்ற அந்த மகானை தரிசிக்க காத்திருந்தேன். ஸ்னானம் செய்து விட்டு ஈரம் உலராத உடலும், தலையிலிருந்து சொட்டும் நீருமாக அவர் வந்தார். தூரத்திலிருந்தே, தவ வலிமையால் பெற்ற ஒளி வட்டம் அவரை காட்டிக் கொடுத்தது. அவரை கரடிகள், புலிகள், குள்ள நரிகள், சிங்கங்கள், யானைகள், ஊர்வன என்று ப்ரும்மாவை ஜீவ ராசிகள் தொடருவது போல ஆசிரமத்து ஜந்துக்கள் தொடர்ந்து வந்தன. ஆசிரமத்தில் நுழையும் முன், என்னை ரிஷி பார்த்து தெரிந்து கொண்டு விட்டார். ஒரு முஹுர்த்த நேரம் சென்ற பின், வெளியே வந்து என்னை விசாரித்தார். என்ன காரியமாக வந்தாய்? உன் ரோமங்கள் எரிந்து போனதால் சௌம்யனே, அடையாளம் தெரியவில்லை. உன் தோலெல்லாம் வெந்து ரணமாகி கிடக்கின்றனவே. இறக்கைகள் ஏன் நெருப்பில் பொசுங்கி போனது போல காண்கின்றன. முன்பு எனக்கு பரிச்சயமான இரண்டு க்3ருத்3ரர்களும், சகோதரர்கள், கம்பீரமான தோற்றமும், காற்று போல வேகமும், அழகிய உருவமும் கொண்டவை. நீ மூத்தவன் சம்பாதி தானே. உன் தம்பி ஜடாயு. மனித உருவம் எடுத்து என் பாதங்களைப் பற்றிக் கொள். என்ன ஆயிற்று? எப்படி விழுந்தாய்? எப்படி இறக்கைகளை இழந்தாய். வியாதியா அல்லது தண்டனையா? தண்டனை என்றால் தண்டித்தவர் யார்? விவரமாகச் சொல் என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், புரா வ்ருத்த வர்ணனம் என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 61 (332) சூர்யானுக3மநாக்2யானம் (சூரியனை தொடர்ந்து சென்றது)
நானும் அனாவசிய சாகஸம் செய்து, சூரியனை தொடர்ந்து போய் பிடிக்க முயன்றதையும், தண்டிக்கப் பெற்றதையும் விவரமாகச் சொன்னேன். ப4கவன் உடல் முழுவதும் வெந்து போய், வ்ரணமாக இருக்கும் நிலையில் எனக்கு வெளியில் செல்ல வெட்கமாக இருக்கிறது. அடிபட்ட உடல் சிரமம், பேசக் கூட எனக்கு சக்தியில்லை. நானும் ஜடாயுவும் போட்டி போட்டுக் கொண்டு எங்கள் பலத்தில் எங்களுக்கு இருந்த கர்வத்தாலும், தன்னம்பிக்கையாலும், வானில் ஒருவரையொருவர் மிஞ்சும் எண்ணத்துடன் பறந்தோம். கைலாஸ மலையில் முனிஜனங்களுக்கு முன் பந்தயம் கட்டி, சூரியனை உதயத்திலிருந்து அஸ்தமன மலை வரை தொடருவோம் என்று மார் தட்டினோம். இருவரும் ஒன்றாகவே புறப்பட்டோம். மேலேயிருந்து பார்த்தால் தனித் தனியாக நகரங்கள், ரதத்தின் சக்கரம் போல காணப்பட்டன. சில இடங்களில் வாத்ய கோஷங்களும், சில இடங்களில் ப்ரும்ம கோஷமும் கேட்டன. பல ஸ்த்ரீகள் மதுரமாக பாடுவதும் கேட்டது. சிவந்த ஆடையணிந்த பலரைக் கண்டோம். வேகமாகத் தாவி, ஆதித்யனின் பாதையை அடைந்து விட்டோம். மேலேயிருந்து பூமியைப் பார்த்தால், பசுமையான வயல்கள், விரிப்புகளாகத் தெரிய, மலைகள் சிறு கற்களை இரைத்தாற்போல இருந்தன. ஆங்காங்கு நதிகளும், நீர் நிலைகளும், பூமியே உபவீதம் (பூணூல்) அணிந்தது போல காட்சியளித்தது. ஹிமவானும் விந்த்ய மலையும், மேருவும், மிகப் பெரிய இந்த மலைகள், நீரில் விளையாடும் யானைகள் போல தோற்றமளித்தன. கிளம்பிய போது இருந்த தீவிரம் குறைய, வியர்வை பெருக, உடல் வலியும், சூரிய வெப்பமும் எங்களை பாதிக்க, பயம் தோன்றியது. மோகமும், தயக்கமும், மூர்ச்சையடைவோம் போன்ற உணர்வும் தலை தூக்கியது. எந்த திசை என்று புரியவில்லை. வாருணீ எனும் மேற்கு திசையா, ஆக்னேய எனும் யமனுடைய இருப்பிடம் இருக்கும் தென் திசையா, எதுவும் தெரியவில்லை. யுகாந்தம் வந்து விட்டது போலவும், நெருப்பில் வாட்டி எடுத்தது போல உடல் எரிச்சலும், கண்களை இடுக்கி சமாளித்துக் கொண்டு கீழே பார்த்தேன். பூமியிலிருந்து சூரியனைப் பார்ப்பது போலவே, பூமி சூரியனின் பாதையிலிருந்து காட்சி தந்தது. ஜடாயு என்னைக் கேட்காமலே இறங்க துணிந்து விட்டான். அவனைப் பார்த்த நானும் தொடர்ந்தேன். என் இறக்கைகளால் அவனை அணைத்து, சூரியனின் வெப்பத்திலிருந்து அவனை பாது காத்தபடி, நான் சென்றேன். ஜடாயு பிழைத்தான். என் இறக்கைகள் எரிந்து சாம்பலாயின. நான் நினைவிழந்து வாயு மார்கத்திலிருந்து விலகி விழுந்தேன். ஜடாயு ஜனஸ்தானத்தில் விழுந்ததாக நினைவு. நான் இறக்கைகளின்றி, விந்த்ய மலையில் வந்து ஜடமாக கிடந்தேன். ராஜ்யமும் போயிற்று. இறக்கைகளும் இல்லை. உயிர் வாழ்ந்து என்ன பயன் என்று பலமுறை மலையிலிருந்து விழுந்து உயிரை விட முயற்சித்தேன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சூரியானுக3மனாக்2யானம் என்ற அறுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 62 (333) நிசாகர ப4விஷ்யாக்2யானம் (நிசாகரன் என்ற முனிவர் இனி நடக்கப் போவதைச் சொல்லுதல்.)
மிகுந்த வேதனையோடு நான் இவ்வாறு முனி புங்கவரிடம் என் கஷ்டத்தைச் சொல்லி அழுதேன். முஹுர்த்த நேரம் தியானத்தில் ஆழ்ந்த முனிவர், பின்வருமாறு சொன்னார். உன் இறக்கைகள் தகித்து அழிந்தது அழிந்தது தான். புதிதாக முளைக்கப் போவதில்லை. உன் உயிரும், கண்களும், பிற்காலத்தில் மிகப் பெரிய காரியத்திற்கு பயன்படப் போகின்றன. உன் விக்ரமமும் பலமும், இதுவரை காணாத அளவு வெளிப்படும் என்று நான் அறிகிறேன். என் தவ வலிமையால் நான் எதிர்காலத்தில் நடக்கப் போவதை உணர்ந்தேன். இது தவிர, நான் கேள்விப்பட்டதும் அதுவே. இக்ஷ்வாகு குலத்தில், த3சரத2ன் என்று ஒரு அரசன் வருவான். அவன் மகன் ராமன் என்ற பெயருடன் மகா தேஜஸ்வியாக விளங்குவான். தன் சகோதரன் லக்ஷ்மணனுடன் அரண்யம் செல்வான். தந்தையை சத்ய பராக்ரமனாக செய்ய, அவர் ஆணையை ஏற்று வனம் செல்வான். ராவணன் என்று ராக்ஷஸ ராஜா. இந்த ராமனின் மனைவியை அபகரிப்பான். இந்த ராக்ஷஸனை யாராலும் வதம் செய்ய முடியாது. ஜனஸ்தானத்திலிருந்து சீதையை கவர்ந்துச் செல்வதையும் யாராலும் தடுக்க முடியாது. அவளை பல விதமாக அவன், உணவு பதார்த்தங்களும், ஆடை ஆபரணங்களைக் காட்டியும் மயக்க முயலுவான். அவள் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், துக்கத்தில் மூழ்கி இருப்பாள். இந்திரன் வந்து பரமான்னம் அவளுக்குத் தருவான். சுரர்களுக்கு கூட கிடைக்காத அமுதம் போன்ற அந்த அன்னம், இந்திரன் அளித்தது என்று அறிந்து முதல் பாகத்தை ராமனுக்காக பூமியில் வைப்பாள். என் பர்த்தா, லக்ஷ்மணனுடன் உயிருடன் இருந்தாலும், தேவத்வம் அடைந்திருந்தாலும், இந்த அன்னம் அவர்களுக்கு போய் சேரட்டும் என்று வேண்டிக் கொள்வாள். ராம தூதர்களாக வானரங்கள் இங்கு வருவார்கள். நீ அவர்களுக்கு மைதிலி இருக்கும் இடம் சொல்ல வேண்டும். எங்கும் போகாதே. ஆனால் பக்ஷங்கள் இல்லாமல் எங்கு போகப் போகிறாய். தேச காலங்கள் கனிந்து வரக் காத்திரு. உன் இறக்கைகளையும் பழைய நிறத்தையும் திரும்பப் பெறுவாய். உன்னை இன்றே பழையபடி இறக்கைகளுடன் இருக்கும்படி செய்ய எனக்கு சக்தியில்லை. இங்கு இருந்தபடியே உலகுக்கு நன்மை தரும் பல செயல்களை செய்யப் போகிறாய். அந்த ராஜ குமாரர்களுக்கு மட்டுமல்ல, இதனால் பிராம்மணர்களும், தேவர்களும், முனிவர்களும், இந்திரனும் கூட நன்மை அடைவார்கள். நானும் இருந்து அந்த ராஜ குமாரர்களை பார்க்க விரும்புகிறேன். ஆனால் அவ்வளவு நாள் என்னால் உயிர் தரித்து இருக்க முடியாது. நான் சரீரத் தியாகம் செய்கிறேன், என்று தத்வார்த்தங்களை அறிந்த அந்த முனிவர் சொன்னார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், நிசாகர ப4விஷ்யாக்2யானம் என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 63 (334) சம்பாதி பக்ஷ ப்ரரோஹ: (சம்பாதியின் இறக்கைகள் வளருதல்)
அந்த முனிவர், இன்னும் பல விதமாக அழகாக பேசி என்னை சமாதானம் செய்து விட்டு தன் ஆசிரமம் சென்று விட்டார். என் குகைக்குள்ளிருந்து வெளியில் கொண்டு வரச் செய்து, மெதுவாக ஏறி விந்த்ய மலை மேல் இருந்து கொண்டு, உங்கள் வரவை எதிர் நோக்கி காத்திருக்கிறேன். கிட்டத் தட்ட நூறு வருஷங்கள் ஆகியிருக்கும். அந்த முனிவரின் வார்த்தையை மனதில் இருத்தி நம்பிக்கையோடு விடிவு காலம் வரும் என்று காத்திருக்கிறேன். நிசாகர முனிவர் மஹா ப்ரஸ்தானம் என்ற விரதத்தை ஏற்று, ஸ்வர்கம் சென்ற பின், எனக்கு சஞ்சலமும், நம்பிக்கையும் மாறி மாறி வந்து அலைக்கழிக்கும். மரணத்தை தழுவலாம் என்று நினைத்து நான் தற்கொலை செய்து கொள்ளத் துணிவேன். முனி சொன்னதை நினைத்து அதைத் தவிர்த்து விடுவேன். உயிரை ரக்ஷித்து வைத்துக் கொள், அதற்கு அவசியம் வரும் என்று சொன்னது வேத வாக்காக என் மனதில் பதிந்து விட்டது. தீபம் தன் ஒளியால் இருட்டை விலக்கி ஒளி பரவச் செய்வது போல இந்த வார்த்தைகள் என் மனதில் தவறான எண்ணம் புகாமல் தடுத்து வருகிறது. ராவணன் துராத்மா செய்த காரியத்தை அறிந்தவுடன், என் மகனை வாயால் கடிந்து கொண்டேன். மைதிலியை ஏன் காப்பாற்றாமல் விட்டாய் என்று கேட்டேன். அவள் அலறலைக் கேட்டும், அந்த இருவரின் தவிப்பையும் உணர்ந்து கொண்டேன். தசரதன் என் நண்பன். அதனாலும் என் கடமை, மைதிலியை காப்பாற்றியிருக்க வேண்டும் என்றும் கடிந்து கொண்டேன். இது போல வானரங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, அவர்கள் எதிரிலேயே கழுகரசனுக்கு இறக்கைகள் முளைத்து வளரத் தொடங்கின. தன் சரீரத்தில் தோன்றிய மாறுதல்களை பழையபடி இறக்கைகள் வந்து விட்டதையறிந்து சம்பாதி மகிழ்ச்சி கடலில் மூழ்கினான். வானரங்களைப் பார்த்து நான் சொன்னபடி, ரிஷி நிசாகரனின் பிரபாவம் தான் இது. அவர் அளவிடமுடியாத தவ வலிமை உடையவர். ஆதித்ய கிரணங்களால் பொசுங்கிப் போன என் இறக்கைகள் திரும்ப கிடைத்து விட்டன. இளம் வயதில் எனக்கு இருந்த பராக்ரமும் திரும்ப கிடைக்கப் பெற்றேன். அதே போல பலமும், வீர்யமும் வந்து விட்டதாக உணர்கிறேன். அதனால் கிளம்புங்கள். சீதையைத் தேட எல்லா முயற்சிகளையும் செய்வோம். என் பக்ஷங்கள் திரும்ப கிடைத்ததே உங்கள் காரியம் சித்தியாகும் என்பதற்கான நல்ல அறிகுறி. தன் சக்தியைக் காட்ட அந்த வானரங்களை மலையுச்சியிலிருந்து தன் அலகால் கீழே கொண்டு வந்து சேர்த்தது. வானரங்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. இந்த சம்பவத்தால் வானரங்களும் தங்கள் பலமும், பௌருஷமும் கூடியதாக உணர்ந்தனர். அபி4ஜித் முஹுர்த்தத்தில் கிளம்பினர். சீதையை கண்டு பிடிக்க பல மடங்கு உற்சாகம் அவர்களுக்கு வந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சம்பாதி பக்ஷ ப்ரரோஹோ என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 64 (335) சமுத்திர லங்க4ண மந்த்ரணம். (சமுத்திரத்தை கடக்க யோசனை செய்தல்)
க்3ருத்3ர ராஜன் சம்பாதி சொன்னதை திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்த வானரங்கள், தங்களுக்குள் புத்துணர்ச்சி தோன்றுவதை உணர்ந்தார்கள். ஓங்கி கோஷமிட்டனர். சிம்மத்தின் விக்ரமம் வந்து சேர்ந்தது போல, ராவணனின் நாசம் அதிக தூரத்தில் இல்லை என்று முழக்கமிட்டனர். மிகவும் சந்தோஷத்துடன் சாகர கரைக்கு வந்தார்கள். சீதையைக் காணப் போகிறோம் என்ற நம்பிக்கை வலுத்தது. அந்த இடம் முழுவதும் சுற்றித் திரிந்து ரசித்தனர். மொத்த உலகத்தின் பிரதி பிம்பம் போல இருந்தது கடல். தென் கடலின் வட திசையில் வந்து நின்றனர். கடலில் மெதுவாக இறங்கி வானரங்கள் அனைவரும் உற்சாகமாக நின்றனர். பல விதமான நீர் வாழ் ஜந்துக்கள், மேலும் கீழுமாக சஞ்சரிப்பது ரசிக்கத் தகுந்ததாக இருந்தது. பலவிதமான உருவங்களுடன், பெரிய பெரிய மீன்கள், ஆமைகள், சில தூங்குவது போல அமைதியாக இருக்க, சில துள்ளி குதித்து விளையாடின. சில இடங்களில் பர்வதாகாரமாக தெரிந்தன. பாதாள வாசிகளான தானவேந்திரர்களும் சஞ்சரித்தனர். ரோமம் குத்திட்டு நிற்க, பயமும், ஆவலுமாக இந்த காட்சிகளை வானரங்கள் ரசித்தனர். ஆகாயத்தைப் போலவே கடலும் எல்லையற்று இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தன. திடுமென கவலை சூழ யோசித்தனர். இந்த கடலைத் தாண்டி செல்ல வேண்டுமே, முடியுமா? கடலைப் பார்த்து மலைத்து நின்று விட்ட வானரங்களைப் பார்த்து வாலி புத்திரன் அங்கதன் ஆறுதல் சொல்லி உற்சாகமூட்டினான். பயமும் தயக்கமும் அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. வருத்தப்படாதீர்கள். மனதில் வருத்தமோ, தயக்கமோ வர இடம் கொடுக்காதீர்கள். சற்று பலம் குறைந்தவர்களை இந்த தயக்கமும், கவலையும் செயலிழக்கச் செய்து விடும். கோபம் கொண்ட நாகம் பா3லகனை பலி வாங்குவது போல. நல்ல காரியம் செய்ய வேண்டிய சமயத்தில் இப்படித் தோன்றும் பயத்தையும், தயக்கத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நாம் உற்சாகத்தை மேற் கொள்வோம். இப்படி அங்கதன் அவர்களை சமாதானம் செய்து பேசிக் கொண்டிருந்த பொழுதே சூரியன் மலை வாயில் விழுந்து இருள் சூழ்ந்தது. அன்று இரவு நகர்ந்த பின், திரும்ப, அங்கதன் வானரங்களைக் கூட்டி மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்யலானான். மருத்3 க3ணங்கள் சூழ, இந்திரன் அமர்ந்திருப்பது போல அங்கதன் இருந்தான். வேறு யார் தான் இந்த வானர சேனையை கட்டி காக்க முடியும்? சிலர் அங்கதனைச் சுற்றி, சிலர், அனுமனுடன், சிலர் மற்ற பெரிய வானர வீரர்களுடன் என்று கூட்டம் கூட்டமாக விவாதித்தனர். அங்கதன் இறுதியில் கேட்டான். யார் இந்த மகா சமுத்திரத்தை கடக்க சக்தியுடையவன்? யார் இதை கடலைக் கடந்து சென்று, சுக்ரீவன் சொல்லைக் காப்பாற்ற போகிறான். எந்த வீரன் நூறு யோஜனை தூரம் கடலைக் கடந்து அரிய பெரிய செயலை சாதிக்கப் போகிறான்? அப்படி செய்வதால், இங்கு கூடியிருக்கும் நம் அனைவரையும் காப்பாற்றப் போகிறான். எந்த ஒருவனின் ஆற்றலால் நாம் அனைவரும் திரும்ப ஊர் போய் சேருவதும், நம் மனைவி மக்களைக் காண்பதும் சாத்தியம் ஆகும். காரியத்தை முடித்துக் கொண்டு சென்றால் தான் நமக்கு வரவேற்பும், பின் வாழ்க்கையில் சுகமும் கிடைக்கும். இது உறுதி. எந்த ஒருவனின் ஆற்றலால் நாம் ராம லக்ஷ்மணர்களையும், சுக்ரீவனையும் சந்தோஷமாக அருகில் சென்று காண முடியுமோ, அவன் நம்மில் யார்? அப்படி ஒருவன் நமக்கிடையில் இருந்து நூறு யோஜனை தூரம் சாகரத்தைத் தாண்டிச் சென்று வெற்றியோடு திரும்பி வரக் கூடியவன் யாரானாலும் நாங்கள் அவனைத் தஞ்சம் அடைகிறோம். அவன் புண்யமான அபயம் என்பதை நமக்கு அருள் செய்யட்டும். அங்கதனுக்கு யாருமே மறு மொழி சொல்லவில்லை. அந்த வானர சைன்யமே ஸ்தம்பித்து போய் நின்றிருந்தது. திரும்பவும் அங்கதன் அவர்களைப் பார்த்து நீங்கள் அனைவருமே ப3லவான்கள், ஸ்ரேஷ்டர்கள், திடமான பராக்ரமம் உடைய வீரர்கள். பெயர் பெற்ற குலங்களில் பிறந்தவர்கள். நல்ல வீரர்கள் என்றும் தைரியசாலிகள் என்றும் நம்பப்படுபவர்கள். எப்பொழுதாவது, யாருக்காவது, ஏதாவது சந்தர்ப்பம் கிடைத்து சமுத்திரத்தை அல்லது எதையாவது தாண்டிய அனுபவம் இருக்கிறதா? அவரவர் சக்தியின் அளவை சொல்லுங்கள். என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சமுத்திர லங்க4ண மந்த்ரணம் என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 65 (336) ப3லேயத்தாவிஷ்கரணம் (அவரவர் சக்தியை சொல்லுதல்)
அங்கதன் இப்படிக் கேட்டவுடன், வானரங்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களையும், எவ்வளவு தூரம் வெற்றிகரமாக தாண்டினோம் என்பதையும் தெரிவித்தன. க3ஜன், க3வாக்ஷன், க3வயன், சரப4ன், க3ந்தமாத3னன், மைந்த3, த்3விவித3ன், சுஷேணன், ஜாம்ப3வான் எல்லோரும் தங்கள் பராக்ரமத்தை சொன்னார்கள். தங்களால் செய்ய முடிந்ததை நினைவு கூர்ந்து சொன்னார்கள். கஜன், பத்து யோஜனை தூரம் தாண்டுவேன் என, கவாக்ஷன் இருபது யோஜனை என்றான். கவயன் என்ற வானர வீரன், நான் முப்பது யோஜனை தூரன் சுலபமாகத் தாண்டுவேன் என, சரபன் முன் வந்து நான் நாற்பது யோஜனை தூரம் தாண்டுவேன் என்றான். கந்த மாதனன் ஐம்பது, மைந்தன் அறுபது, த்விவிதன் எழுபது, சுஷேணன் என்பது யோஜனை தூரமும் தாண்ட முடியும் என்று சொன்னார்கள். முதியவரான ஜாம்பவான் எழுந்து, முன் ஒரு காலத்தில் எங்களுக்கும் நல்ல சக்தியிருந்தத்து. முதுமையினால் தளர்ந்து விட்டோம். ஆனாலும் ராம காரியம். வானர ராஜன் செய்து தருவதாக சொன்ன சொல்லை காக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம். நான் கண்டிப்பாக முயன்று பார்க்கிறேன். தொன்னூறு யோஜனை தூரம் தாண்டி விடுவேன் என்றது. இவ்வளவு தான் என் பராக்ரமம் என்பது இல்லை. முன்பு பகவான் விஷ்ணு த்ரிவிக்ரமனாக வந்து பூமியை மூவடியால் அளந்த பொழுது கூடவே மூன்று உலகையும் பிரதக்ஷிணம் செய்தவன் நான். அப்படிப்பட்ட நான் இப்பொழுது வயது முதிர்ந்து, உடல் தளர்ந்து ஓடுவதும், தாண்டுவதும் பழைய கதையாகி விட்டது. என் இளம் வயதில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? என்றது. இவ்வளவுதான் முடியும் என்று நினைக்கிறேன். அவசியமானால், இன்னமும் முடியுமா என்று முயன்று பார்க்கிறேன் எனவும், அங்கதன் எழுந்தான். ஜாம்பவானை சிலாகித்து விட்டு, நான் நூறு யோஜனை தூரம் தாண்டுவேன். தாண்டி கடலைக் கடந்து அக்கரை சென்று விட்டு திரும்ப முடியுமா என்பது சந்தேகமே, என்றான். கவனமாக, மனதில் படும் சொல்லை விஷயமறிந்த முதியவரான ஜாம்பவான் சொன்னார். தாத, (குழந்தாய்) நீ நிச்சயம் நூறு யோஜனை தூரம் தாண்டுவாய், திரும்பியும் வருவாய். அந்த சக்தி உனக்கு உண்டு. ஆனால் வேறு யாரையாவது அனுப்புவது தான் சரி. நீ தலைவன். உன் தலைமையில் நாங்கள் வந்திருக்கிறோம். அந்த பொறுப்பு உன்னிடம் இருப்பதால் நீயே கிளம்புவது சரியன்று. சைன்யத்தை தலைமை தாங்கி செல்பவன், சைன்யத்தின் மனைவி போன்றவன். மனைவியை காப்பாற்றுவது போல தலைவனைக் காக்க வேண்டும். எங்களால் ரக்ஷிக்கப்பட வேண்டியவன் நீ. இந்த தேடல் என்ற செயலுக்கு நீ தான் மூலம், ஆதாரம். உன்னைச் சார்ந்து மற்றவர்கள் வந்துள்ளோம், எப்பொழுதுமே பொருளாதாரத்தில், மூலம் (சுக்ஷைகூIதுக்ஷைலு-மூல தனம்) ரக்ஷிக்கப் பட வேண்டியதே. மூலம் (வேர்) இருந்தால் தான் புஷ்ப, பழங்களைப் பார்க்க முடியும். அதனாலும் வேருக்கு நீர் வார்த்து போஷிப்பது அவசியமாகிறது,. நீ தான் இந்த காரியத்தை நடை முறைப்படுத்தி, தலைவனுக்கும் பதில் சொல்ல வேண்டியவன். சாதனமும் நீயே, காரணமும் நீயே. எங்கள் குரு (அரசன்) புத்திரன், குரு (யுவ ராஜா) நீயே. அதனால் உன்னை வைத்து தான் நாங்கள் செயல்பட முடியும். ஜாம்பவான் இவ்வாறு சொல்லி தடுக்கவும், அங்கதன் நான் இல்லையென்றால், வேறு யார் இந்த அரிய செயலை செய்ய ஏற்றவன்? சொல்லுங்கள். வேறு யாரும் முன் வரவில்லையென்றால், பழையபடி ப்ராயோபவேசம் தான் வழி. வானர ராஜனின் கட்டளையை நிறைவேற்றாமல் நாம் திரும்பப் போவதில்லை. இது நிச்சயம். கிஷ்கிந்தை போனாலும் நமக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லை. வானரராஜன் நம்மை தண்டிக்காமல் விட மாட்டான். தன் கட்டளையை நிறைவேற்றாதவரை, அவன் நம்மிடம் ஈவு, இரக்கம் காட்ட மாட்டான். அதனால் நீங்களே சொல்லுங்கள். ஜாம்பவான் யோசித்து பதில் சொன்னார். இந்த காரியத்தை நல்ல முறையில் முடித்துக் கொடுக்கக் கூடியவன் நம்மிடையில் இருக்கிறான். அவனை நான் தூண்டி விடுகிறேன். என்று சொல்லி, தனியாக, இந்த சம்பாஷணைகளில் கலந்து கொள்ளாமல் அமர்ந்திருந்த வரிஷ்டனான பலசாலியான ஒரு வானரத்திடம் சென்று அமர்ந்தார். அனுமன் தான் அது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ப3லேயத்தாவிஷ்கரணம் என்ற அறுபத்தைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 66 (337) ஹனுமத் ப3ல சந்துக்ஷனம். அனுமனுக்கு அவன் பலத்தை நினைவுறுத்துதல்
இந்த ப்ரச்னைக்கு முடிவு என்ன என்ற கேள்விக் குறி எல்லோர் முகத்திலும் கவலையாகத் தெரிந்தது. ஜாம்பவான் ஹனுமானைப் பார்த்து பேசலானார். வீரனே, வானர ஜாதியாக இருந்தாலும், எல்லா சாஸ்திரங்களையும் அறிந்தவனே., தனிமையில் ஏகாந்தமாக வந்து அமர்ந்து விட்டாய், ஏன்? எதுவும் பேசாமல் இருக்கிறாய்? ஹனுமன், நீ வானர ராஜனான சுக்ரீவனுக்கு சற்றும் குறைந்தவனல்ல. அவனுக்கு சமமானவனே. ராம லக்ஷ்மணர்களுடன் கூட ஒப்பிடும் அளவுக்கு தேஜஸும், பலமும் உனக்கு உண்டு. அரிஷ்டனேமியின் புதல்வன் வைனதேயன் என்ற மகா பலசாலி, க3ருத்மான் என்று பெயர் பெற்றவன். உத்தமமான பக்ஷி ராஜன். பலமுறை அவனை நான் சமுத்திரத்தில் கண்டிருக்கிறேன். கடலிலிருந்து நாகங்களை குறி வைத்து உயரத்திலிருந்து பாய்ந்து கவ்விக் கொண்டு பறந்து விடுவது கண் கொள்ளா காட்சியே. அந்த பக்ஷி ராஜனுக்கு இறக்கைகளில் என்ன பலமோ, அந்த பலம் உன் புஜங்களுக்கும் இருக்கிறது. விக்ரமும் வேகமும், அதற்கு சற்றும் குறைந்ததல்ல. ப3லம், பு3த்தி, ஆற்றல், தேஜஸ் இவை ஹரிபுங்கவனே, எல்லா ஜீவ ராசிகளிடமும் உள்ளதைவிட உயர்வாகவே உன்னிடம் அமைந்துள்ளன. ஏன் தன்னை அறிந்து கொள்ளாமல் இருக்கிறாய். ஒரு அப்ஸர ஸ்த்ரீ மிக அழகானவள். அஞ்சனா என்று பெயர். கேஸரி என்பவரின் மனைவி. இந்த கேஸரி வானர ராஜன். இவள் அழகு மூவுலகிலும் புகழ்ந்து பேசப்பட்டது. ஏதோ ஒரு சாபத்தால் வானர குலத்தில் பெண் வானரமாக பிறந்தாள். குஞ்சரன் என்ற சிறந்த வானர வீரனின் மகளாகப் பிறந்தாள். வானர இயல்பில் ஒரு நாள், தன் விருப்பம் போல உருவம் எடுக்க வல்லவள் ஆனதால், மனித உருவம் எடுத்துக் கொண்டு, அவள் அழகும் யௌவனமும் கண்களைப் பறிக்க, விசித்ரமான மாலைகளும், உயர்ந்த பட்டாடைகளும் தரித்து, மழைக் கால மேகம் கர்ஜித்துக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் மலையின் மேல் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். மஞ்சள் நிற ஆடை, சிவந்த மேலாடை என்று வளைய வந்தவள், மெதுவாக நடக்கும் பொழுது காற்று வீச, அவள் ஆடை விலகியது. அந்த சமயம் அவள் அங்கங்கள் பளிச்சென்று தெரிந்தன. பெருத்த அழகிய கால், துடை பாகங்களும், நெருங்கி இருந்த ஸ்தனங்களும், அழகிய முகமும், சிறுத்த இடையும், உருண்டு திரண்ட புஜங்களும், உடலமைப்பும், சுபமான சர்வாங்கமும் கொண்ட புகழ் பெற்ற ஸ்த்ரீயைக் கண்டதுமே, மாருதி, காம வசமானான். நீண்ட புஜங்களைப் பற்றி அவளை அணைத்துக் கொண்டான். தன் நிலை மறந்து மன்மதனின் வசமாகி அவளைக் கட்டிப் பிடித்தான். அவள் நடுங்கி விட்டாள். நல்ல நடத்தையுடையவள். யார் நீ? என்னுடைய ஏக பத்னி விரதத்தை ஏன் கெடுக்க நினைக்கிறாய். இதைக் கேட்டு மாருதி பதில் சொன்னான். பெண்ணே, பாக்யசாலியாக இரு. நான் உன்னை எந்த விதத்திலும் துன்புறுத்தமட்டேன். உனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டேன். பயப்படாதே. நான் மாருதி. உன்னை அணைத்து விட்டு இதோ விலகி விட்டேன். ஆயினும் என் ஸ்பரிசம் பட்டதால் வீர்யவானாக, புத்தி சம்பன்னனாக உன் மகன் பிறப்பான். மகா ஆற்றலும், மகா பலமும், பராக்ரமும் உடையவனாக புகழ் பெற்று விளங்குவான். தாண்டுவதிலும், குதிப்பதிலும் எனக்கு சமமாக இருப்பான். இவ்வாறு சொல்லவும், உன் தாய் மகிழ்ந்தாள். மகா கபியே, குகைக்குள் உன்னை பெற்றெடுத்தாள். நீ பாலனாக இருந்த சமயம் உதய சூரியனைப் பார்த்து பழம் என்று எண்ணி, நீ தாவி தாவி குதித்து ஆகாய மார்கத்தில் சென்று விட்டாய். முன்னூறு யோஜனை தூரம் சென்றபின், அந்த சூரியனுடைய தேஜஸால், உனக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் உற்சாகம் அடைந்து மேலும் தாவி, அந்தரிக்ஷம் சென்றாய். இதைக் கண்டு இந்திரன், கோபத்துடன் தன் வஜ்ரம் என்ற ஆயுதத்தால் அடித்தான். நீ மலை மேல் விழுந்தாய். அதனால் உன் கன்னம் (ஹனூ-கன்னம்) நசுங்கியது. அதிலிருந்து உனக்குப் பெயரே ஹனுமான் என்று ஆயிற்று. நீ அடிபட்டதைக் கேட்டு க3ந்த4 வாஹனன் (மணத்தை ஏந்திச் செல்பவன்) என்ற பெயர் கொண்ட வாயு, மூன்று உலகிலும் தான் சஞ்சரிப்பதை நிறுத்தி விட்டான். ப்ரபஞ்சனன் என்றும் வாயுவுக்கு பெயர் உண்டு. மூவுலகும் ஸ்தம்பித்து நிற்கவும், தேவர்களும், மற்றவர்களும் பரபரப்புடன் திகைத்தனர். கோபித்துக் கொண்டிருந்த மாருதியை சமாதானம் செய்தனர். ப்ரும்மா உனக்கு வரம் கொடுத்தார். எந்த சஸ்திரத்தாலும் உன்னைக் கொல்ல முடியாது. யுத்தத்தில் சத்ய விக்ரமனாக புகழ் பெறுவாய் என்றார். உன் கன்னம் நசுங்கிப் போய் இருந்ததைக் கண்டு, சஹஸ்ராக்ஷன் எனும் இந்திரனும் வரம் கொடுத்தான். மரணம் உன்னை அண்டாது என்பதாக. அதனால் சிரஞ்சீவியாக இருப்பாய். உனக்கு வாஸ்தவத்தில் தந்தை கேஸரியே. மாருதனின் அனுக்ரஹத்தால் பிறந்தவன், அதனால் மாருதி போன்ற தேஜஸ், பலம் உனக்கு வாய்த்தது. இப்படிப்பட்ட உன் பலத்தை வர்ணிக்க நான் யார்? அரும் பெரும் காரியங்களைச் செய்ய உனக்குத் தான் சக்தி உள்ளது. அஞ்சனா க3ர்ப்ப4 சம்ப4வா நீ தான் எங்களுக்கு பிராண வாயு போன்றவன். எங்கள் உயிர் தரிக்கச் செய்வது உன் கையில் இருக்கிறது. வாயு சுதனே, வத்ஸ, குழந்தாய், ப்லவனம் (குதித்து தாவி தாண்டுதல்) எனும் தாண்டுதலைச் செய்ய நீயே ஏற்றவன். நாங்கள் உயிரை இழக்கும் நிலையில் இருக்கிறோம். நீதான் எங்களுக்கு அரு மருந்தாக இருந்து உயிர்ப்பிக்க வேண்டும். பக்ஷிராஜனே திரும்ப வந்து விட்டாற் போல, தாக்ஷ்யமும், (சாமர்த்யமும்) விக்ரமும் இணைந்து வந்தது போல வந்திருக்கிறாய். பகவான் த்ரிவிக்ரமனாக வந்த சமயம், நான் மூவுலகையும் அவருடன் பிரதக்ஷிணம் செய்திருக்கிறேன். முப்பத்து ஏழு கோடி ஜீவராசிகள் உடைய பூவுலகை வலம் வந்திருக்கிறேன். அந்த நான் இப்பொழுது வயது முதிர்ந்தவன், பராக்ரமம் எதுவும் இன்றி, முதுமை என் சக்தியை இழக்கச செய்து விட்ட நிலையில், உன்னைத்தான் நம்பியிருக்கிறோம். எல்லா குணங்களும் நிரம்பியவன். நீதான் எங்களுக்கு கதி. அதனால் ப்லவங்கம, விஜ்ரும்பஸ்வ, மூச்சை அடக்கி வெளி விட்டு உன் பலத்தை பெருக்கிக் கொள். இந்த வானர இனத்திலேயே நீ உத்தமமானவன். இந்த வானர சைன்யம், உன் வீர்யத்தைக் காண காத்திருக்கிறது. ஹரி சார்தூலா, எழுந்திரு. இந்த பெருங்கடலைத் தாண்டு. உன் கதி (நடை) மற்ற யாருக்கும் கிடையாது. உன் வழியே தனி. இந்த வானரங்களைப் பார். முகம் வாடி இருக்கின்றன. ஏன் இன்னமும் யோசிக்கிறாய். மகா வேகம் படைத்தவனே, மூவடியால் உலகை அளந்த த்ரிவிக்ரமன் போல நீயும் எழுவாய். த்ரிவிக்ரமன் போலவே உன் விக்ரமும் வளரட்டும். ஜாம்பவான் தூண்டி விட தன் ஆற்றலைத் தெரிந்து கொண்ட ஹனுமான், பவனாத்மஜன் தன் உருவத்தை பெரிதாக்கிக் கொண்டு, வானரங்கள் மனம் குளிரச் செய்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமத் ப3ல சந்துக்ஷணம் என்ற அறுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 67 (337) லங்க4னாவஷ்டம்ப: கடலைத் தாண்டும் முயற்சி
ஜாம்பவான் இப்படி ஸ்துதி செய்யவும், மகா பலசாலியான ஹனுமான் வளர ஆரம்பித்தான். வாலை ஆட்டிக் கொண்டு, மகிழ்ச்சியுடன் தன் பலத்தைக் கூட்டிக் கொண்டான். முதியவர்களான வானர வீரர்களும், ஹனுமனை தோத்திரம் செய்து, பாராட்ட, தேஜஸும் கூடி, வார்த்தைகளில் விவரிக்க முடியாத அதிசயமான ரூபத்துடன் ஹனுமான் காட்சி தந்தான். மலை குகையிலிருந்து வெளி வரும் சிங்கம் பிடறி மயிரை அசைத்துக் கொண்டு, வருவது போல, ஹனுமானும் கர்ஜனை செய்தபடி வளர்ந்தான். மாருதனுடைய புத்திரன் (ஔரஸ-மாருதியின் சொந்த மகன்) என்பதால் மாருதன் போலவே கர்ஜிக்கிறான். வளருகிறான். நூறு யோஜனை தூரம் தாண்ட தன்னை தயார் செய்து கொள்ளும் விதமாக வளர்ந்து தன் உருவத்தை பெரிதாக்கிக் கொள்ளும் ஹனுமனைப் பார்த்து வானரர்கள் எதிர்பாராத இந்த மாற்றத்தைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். திகைத்தனர். மகிழ்ச்சியும், ஆராவார கூச்சலுமாக, சற்று முன் இருந்த கவலை மறைய, பெருங்குரலில் கோஷமிட்டனர். விரிந்த கண்களுடன் வியப்பும் மகிழ்ச்சியுமாக ஹனுமானை உற்சாகப் படுத்தினர். நாராயணன் த்ரிவிக்ரமனாக வளர்ந்த பொழுது பிரஜைகள் ஆரவரித்து ஊக்கமளித்தது போல இருந்தது. முகத்தின் சோபை உடல் வளர வளர அதிகமாகத் தெரிந்தது. புகையில்லாத நெருப்பு போலவும், ஆகாயமே விளக்கு வைத்தாற்போல ஒளியைச் சிதற விடுவது போலவும், வானரங்களின் மத்தியிலிருந்து புறப்பட்டு வானரங்களில் மூத்தவர்களை வணங்கி, ஹனுமன் சொன்னான். அருஜத்- ஆரோக்யமான வாயு பர்வதங்களின் மேலே சஞ்சரித்து ஹுதாசன எனும் நெருப்பின் தோழனான வாயு, ப3லவான், ஒப்புவமை இல்லாதவன், ஆகாயத்தில் தெரிபவன், படைப்பிலேயே அதிக வேகம் உடைய வாயு, அவனுடைய ஔரஸ- மானஸ புத்திரன்- வாயுவின் அருளினால் பிறந்தவன்- -நான். ப்லவனம் (குதித்தல், எம்புதல் தவளை, குரங்குகள் செய்வது போல) எனும் தாவிச் செல்லும் வகையில் எனக்கு இணை யாரும் இல்லை. வானத்தை மறைத்து என்னால் பரந்து நிற்க முடியும். மேரு மலையை எந்த வித உதவியுமின்றி ஆயிரம் முறை தொட்டு விட்டு வருவேன். என் புஜங்களின் சக்தியால் நான் சமுத்திர லங்க4ணம் அனாயாசமாக செய்வேன். இடையில் வரும் பர்வதங்கள், நதிகள் அனைத்தையும் சமாளிப்பேன். என் வேகத்தில் என் கால்களுக்கு இடையில் சமுத்திரம் கடையப் பட்டது போல கலங்கும். வருணாலயம் எனும் கடல், இதில் உள்ள பன்னக- நாகங்கள், இவைகளை சாப்பிடும் பக்ஷிராஜனான கருடன் வேகமாக வந்து நாகங்களை கொத்திக் கொண்டு போகும் சமயம் நானும் அதன் வேகத்துக்கு ஈ.டு கொடுப்பேன். உதய கிரியிலிருந்து புறப்பட்டு தன் கிரணங்களோடு ஜ்வலிக்கும் சூரியனை அவன் அஸ்தமனம் ஆகும் வரை தொடர்ந்து செல்லவும் என்னால் முடியும். பூமியைத் தொடாமலே திரும்பியும் வந்து விடுவேன். வானர வீரர்களே, என் மகத்தான வேகத்தாலேயே, ஆகாயத்தில் தென்படும் இடர்பாடுகளை களைந்து விடுவேன். சமுத்திரத்தை வற்றச் செய்வேன். பூமியை பிளந்து விடுவேன். மலைகளை ஆட்டி வைப்பேன். நான் தாண்டி குதித்து செல்லும் பொழுது எதிரில் எது வந்தாலும், என் கால்களுக்கு இடையிலான ஊரு, (துடை) வேகத்தில் அகற்றி விடுவேன். மகார்ணவத்தை, இந்த பெரும் கடலை, தாண்டும் என் முயற்சியில், கொடிகளிலும், மரங்களிலும் உள்ள புஷ்பங்கள் உதிர்ந்து என்னுடன் பறந்து வரப் போகின்றன. ஸ்வாதி நக்ஷத்திரத்தின் பாதை போல என் வழி ஆகாயத்தில் தனித்து தெரியப் போகிறது. பயங்கரமான ஆகாய மார்கத்தில் எம்பி குதித்து நான் ஏறியும். இறங்கியும் செல்வதை உலகத்தவர் அனைவரும் காணப் போகின்றனர். மகா மேகம் போன்று வானில் நான் சஞ்சரிப்பதை நீஙகள் காணத்தான் போகிறீர்கள். ஆகாயத்தையே விழுங்கி விடுவது போல ப்ரும்மாண்டமான உருவத்துடன் நான் மலைகளையும், மேகங்களையும் கைகளால் அப்புறப்படுத்திக் கொண்டு, சமுத்திரத்தை கலக்கிக் கொண்டு செல்லும் பொழுது, வைனதேயன், நான் எங்கள் இருவரில் யாருக்கு வேகம் அதிகம் என்று நீங்கள் யோசிப்பீர்கள். சுபர்ண ராஜாவான வைனதேயன், என் தந்தை மாருதன், இப்பொழுது நான், என்று தெரிந்து கொள்வீர்கள். கண் மூடி திறப்பதற்குள், பிடிமானம் எதுவும் இல்லாத ஆகாயத்தில், திடுமென சென்றடைந்து விடும் என் வேகம், மேகத்தில் தோன்றும் மின்னலின் வேகத்திற்கு இணையாக இருக்கும். நான் சாகரத்தின் மேல் தாவி தாண்டிச் செல்லும் பொழுது, முன் காலத்தில் த்ரிவிக்ரமனாக பகவான் விஷ்ணு, மூவுலகை ஈரடியால் அளந்த சமயம், அவர் பாதம் காட்சி தந்ததைப் போல இருப்பேன். இவைகளை நான் அறிவினால் உணர்ந்து சொல்கிறேன். மனதில் பட்டதைச் சொல்கிறேன். நிச்சயம் ஜனகாத்மஜாவை காண்பேன். நீங்கள் அனைவரும் சந்தோஷமாக ஆரவாரியுங்கள். என் சக்தியில் சந்தேகம் வேண்டாம். மாருதனுடைய வேகமும், கருடனுடைய கூர்மையும் கொண்டு இருபதாயிரம் யோஜனை கூடத் தாண்டுவேன் என்று நான் நம்புகிறேன். வஜ்ரம் ஏந்திய வாஸவனோ, ஸ்வயம்பூவான ப்ரும்மாவோ, கையில் வைத்திருக்கும் அமுதத்தை, அவர்கள் எதிரிலேயே தட்டிப் பறித்துக் கொண்டு வந்து விடுவேன். இலங்கையைக் கூட அலாக்காக தூக்கி வந்து விடுவேன் என்று எனக்குத் தோன்றுகிறது. இப்படி தன் புதிய வளர்ச்சியில் மகிழ்ச்சி நிறைந்த குரலில் ஹனுமான் வானரர்களிடம் நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசவும், வானரங்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தன. ஆச்சர்யத்துடன் வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் இருந்தன. இந்த உறுதி மொழிகள் அவர்களின் கவலையை அடியோடு நீக்கியது. ஜாம்பவான் பேச ஆரம்பித்தார். வீரனே, கேஸரி மகனே, ஹனுமானே, மாருதாத்மஜனே, உன்னைச் சார்ந்தவர்களின் பெரும் கவலை நீங்கியது. தாத, உன் நலனில் நாங்கள் அனைவரும் நாட்டம் உடையவர்களே. நலமாக சென்று வர வாழ்த்துகிறோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த உன் காரிய சித்திக்கு மங்களா சாஸனம் செய்கிறோம். ரிஷிகளின் பிரஸாதத்தாலும், இந்த முதிய வானரங்களின் நல்லெண்ணத்தாலும், குரு ஜனங்களின் ஆசிர்வாதத்தினாலும், இந்த பெரும் கடலை கடக்க தாவிச் செல். நாங்கள் நீ திரும்பி வரும் வரை ஒற்றைக் காலில் நிற்போம். இந்த வானர சமூகத்தின் ஜீவிதம் (உயிர்) உன்னுடன் வரும். எங்கள் மனோ பலம் உனக்கு ஆதரவாக உடன் வரும். இதைக் கேட்டு ஹனுமான் அவர்களைப் பார்த்து, இந்த பூமி தளத்திலிருந்து நான் கிளம்ப இயலாது. நான் இதை உதைத்துக் கொண்டு தாவிச் செல்லும் வேகத்தை இந்த பூமி தாங்காது. இந்த சிறு பாறைகள் இடைஞ்சலாக இருக்கும். மகேந்திர மலையின் சிகரம் ஸ்திரமானது, பெரியது. இந்த மகேந்திர மலையின் சிகரத்திலிருந்து நான் வேகம் எடுக்கிறேன். பல வித மரங்கள், தாதுக்கள் மண்டிய இடத்தில், நூறு யோஜனை தூரத்தை கடக்க, கால்களால் உதைத்து நான் தாவிச் செல்லும் வேகத்தை இந்த சிகரம் தாங்கும். இதன் பின் மாருதி மகனான வானர ஸ்ரேஷ்டன், மலை மேல் ஏறினான். எதிரிகளை த்வம்சம் செய்யக்கூடிய பலசாலியாக, பலவிதமான மரங்கள் வளர்ந்த மிருகங்கள் வாழ்ந்த பசுமையான தாவரங்கள் நிறைந்த கொடியில் மலர்ந்த புஷ்பங்கள், நித்யம் பூக்களுடனும் பழங்களுடனும் காட்சி தரும் மரங்கள், சிங்கமும், சார்தூலமும் சஞ்சரிக்கும், மதம் கொண்ட யானைகள் உலவும், யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் நிலைகளை கலக்கி அட்டகாசம் செய்யும், மகான்கள் வாழும் அந்த மகேந்திர மலையின் சிகரத்தை, மகா பலவானான ஹனுமான் மகேந்திரனுக்கு சமமான விக்ரமத்துடன், ஏறி அடைந்தான். மகானான அவன் பாதங்கள் பட்ட இடம் வலி எடுக்க, மகேந்திர மலை தவித்தது. தன் போக்கில் மதம் கொண்டு திரிந்த பெரும் யானையை எதிர் பாராத விதமாக சிங்கம் தாக்கியது போல வேதனைப் பட்டது. நாக கந்தர்வ மிதுனங்கள் பானங்களை ரசித்துக் கொண்டிருந்ததை கை நழுவ விட்டனர். பறவைகள் தூக்கியெறியப் பட்டு கீழே விழுந்தன. வித்யாதர கணங்கள் அவசரமாக மலைச் சாரலை விட்டு அகன்றனர். மலையில் அசையாது படுத்துக் கிடந்த பெரும் நாகங்கள் அசைந்தன. மலையுச்சியிலிருந்து தாதுக்களின் (உலோக) துகள்கள் சிதறின. அந்த மகா கிரியின் நிலையே இப்படி ஆகி விட்டது. பாதி ஊர்ந்து கொண்டிருந்த நாகங்கள், தங்கள் கதி தடைப் பட்டதால் வேதனையுடன் உஷ்ண பெருமூச்சு விட்டன. பூமியில் நட்ட கொடிக் கம்பத்தில் கொடியை பறக்க விட்டது போல அந்த மலை விளங்கியது. பயத்துடன் பரபரப்புடன் அவசரமாக மலையுச்சியை விட்டு விரைந்து செல்லும் ரிஷிகள் மலையுச்சியில் நிறைந்து விட்டனர். வழிப்போக்கன், நடு காட்டில் கூட வந்த யாத்ரியை தவற விட்டது போல, இவர்கள் அனைவரும் விலகிச் செல்லவும், மகா மலை தவிப்பது போல இருந்தது. தன் வேகத்தை தனக்குள் அடக்கிக் கொண்டு, மகா வேகவானான வானர வீரன், எதிரிகளில் சிறந்த போர் வீரனையும் எதிர்த்து ஜயிக்க கூடிய வீரன், மனதை ஒருமைப் படுத்தி, மஹானுபாவன், தன் மனதால் இலங்கையை அடைந்தான். மனஸ்வியான ஹனுமான் மனோ பலம் மிகுந்தவன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், லங்க4ணாவஷ்டம்போ என்ற அறுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம் நிறைவுற்றது.