அத்தியாயம் 41 (312) தக்ஷிணா ப்ரேஷணம் (தென் திசையில் அனுப்புதல்)
அந்த பெரிய வானரப் படையை கிழக்கு நோக்கி அனுப்பி விட்டு, சுக்ரீவன் தென் திசைக்கு வானரங்களை அனுப்ப முனைந்தான். அக்னி புத்திரனான நீலனையும், ஹனுமானையும், பிதாமகர் (ப்ரும்மா) புத்திரனான, ஜாம்ப3வானையும், மகா பலசாலிகளான சுஹோத்ரன், சராரி, சாரகு3ல்மன் என்ற வானரங்களையும், க3ஜன் க3வாக்ஷன், க3வயன், சுஷேணன், ருஷப4ன் இவர்களையும், மைந்த3ன்,
த்3விவிதன் இவர்களையும், விஜயன், க3ந்த4மாத3னன், உல்கா முகன், அசங்கன் என்ற ஹுதாஸ (அக்னி) புத்திரர்கள் இருவர், அங்கதன் தலைமையில் இருந்த வானரங்கள் என்று வேகமும் விக்ரமும் உடைய வானரங்களை விசேஷமாக தேர்ந்தெடுத்து ஆணையிட்டான். இவர்களை தலைமை தாங்கி நடத்திச் செல்ல அங்கதனை நியமித்தான். பின் தென் திசையைப் பற்றி விவரித்தான். இந்த திசையில் முக்கியமான இடங்கள், கடந்து செல்ல அரிய இடங்கள் என்று வரிசையாக பல தேசங்களை வானர ராஜன், வானரங்களுக்கு எடுத்துச் சொன்னான். ஆயிரம் தலை கொண்டது (சிகரம்) விந்த்யம். பலவிதமான மரங்கள், கொடிகள் அடர்ந்தது. நர்மதா என்ற நதியைக் காண்பீர்கள். கடப்பதற்கரிய இந்த நதியில் பெரும் நாகங்கள் வசிக்கின்றன. இதைச்சுற்றி, மேகலா, உத்கலா, தசார்ண என்ற நகரங்கள், அஸ்வவந்தி, அவந்தீ என்ற நகரங்கள், இவைகளை அணு அணுவாக கண்டு ரசித்தபடி செல்லுங்கள். அடுத்து வரும் த3ண்டகாரண்யம். இதன் மலைகள், நதிக் கரைகள், குகைகள், கோ3தா4வரி நதியினுள் தேடுங்கள். எல்லா இடங்களிலும் நன்றாகத் தேடுங்கள். அதன் பின், ஆந்திர, புண்டிர, சோழ, பாண்டிய, கேரள, அயோ முகம் எனும் இடம் இந்த இடங்களுக்கும் போய்த் தேடுங்கள். இந்த அயோ முகீ எனும் பர்வதம், தாதுப் பொருட்கள் நிறைந்தது. விசித்ரமான சிகரம் உடையது. அழகிய மலர்கள் நிறைந்த காடுகள் இருக்கும். சந்தன வனம் உள்ள இடங்கள், இங்கு நன்றாகத் தேடுங்கள். அங்கு ஒரு திவ்ய நதி பாய்கிறது. காவேரி என்ற பெயரில், அப்ஸர கணங்கள் இதன் கரையில் விளையாடுவர். ப்ரஸன்னமான நீருடன், சுபமாக காட்சி தருவாள். அந்த மலய மலையில், சக்தி வாய்ந்த, ஆதித்யனுக்கு இணையான தேஜஸ் உடைய மகரிஷி அகஸ்தியரைக் காண்பீர்கள். அவரை வணங்கி அனுமதி பெற்றுக் கொண்டு மகானான அவர் மனம் குளிர நடந்து கொள்ளுங்கள். தாம்ரபர்ணி நதியை அடைவீர்கள். இதில் முதலைகள் நிறைய இருக்கும். இதை நீந்தி கடந்து செல்லுங்கள். இந்த தாம்ர பர்ணி நதி, திவ்யமான சந்தன மரங்கள் அடர்ந்து மறைத்திருக்க, அனேக தீவுகளை உடையவளாக, கணவனை நாடிச் செல்லும் பெண் நாணத்துடன் செல்வது போல, சமுத்திரத்தை சென்றடைகிறாள். (நதி-த்3வீபம் உடையவள், தீவுகள், பெண்-த்வீபம், விளக்கை ஏந்தி) இதையடுத்து பாண்டிய ராஜ்யம் வரும். முத்துகளும் மணிகளும் கொண்டு அழகாக அலங்கரிக்கப் பட்ட நகரம். தங்க மயமாக திவ்யமான நகரம். பெரிய பெரிய தாழ்ப்பாள்களை உடைய கதவுகள், முத்துக்கள் இழைத்து செய்யப் பட்டிருக்கும். இவற்றைப் பார்த்துக் கொண்டே செல்லுங்கள். இதன் பின் சமுத்திரக் கரையை அடைவீர்கள். அகஸ்தியர் கவனமாக சிந்தித்து, உலகின் நன்மையைக் கருதி, மகேந்திர மலையை சமுத்திரத்தில் அமிழ்த்தினார். நீருக்குள், இந்த மகேந்திர மலையைக் காண்பீர்கள். விசித்ரமான அழகிய சிகரங்கள், மலைச் சாரல்கள், நதிகள், மரங்கள் என்று மலைகளுக்குரிய எல்லா லக்ஷணங்களும் பொருந்திய மகானான மலையரசன், ஜாதரூபம் (தங்கம்) நிறைந்த ஸ்ரீமான், இந்த மகேந்திர பர்வதம். பலவிதமான மரங்கள், மலர்ந்து கிடக்கும் புஷ்பங்களுடன் கொடிகள், இவைகளுடன் தேவ, ரிஷி, யக்ஷர்கள், முதலானவர்கள், அப்ஸர ஸ்த்ரீகள் இவர்கள், விரும்பி இங்கு வசிக்கிறார்கள். சித்த சாரணர்களும் கூட்டம் கூட்டமாக இங்கு வருவார்கள். அதி மனோஹரமான இயற்கையழகுடன் கூடிய இந்த மலைக்கு பருவ காலங்களில் இந்திரன் வரத் தவறுவதேயில்லை. இங்கு முனைந்து சீதையைத் தேடுங்கள். இதன் மறுபுறம் நூறு யோஜனை தூரம் பரந்து கிடக்கும் கடல். மனிதர்களால் நுழைய முடியாத தீவு ஒன்றும் தெரியும். அங்கும் தேடுங்கள். நன்றாக அலசித் தேடுங்கள். இது தான் நாம் வதம் செய்ய தேடிக் கொண்டிருக்கும் ராவணன் வாஸஸ்தலம். சஹஸ்ராக்ஷனுக்கு சமமான மகிமை வாய்ந்த ராக்ஷஸ ராஜனின் ஊர். இந்த சமுத்திர மத்தியில் அங்கா3ரகா என்ற பெயருடைய ராக்ஷஸி, நிழலைப் பிடித்து இழுத்து வைத்துக் கொண்டு புசிப்பவள். இவர்களுக்கு சந்தேகம் வராதபடி, வந்தாலும் சமயோசிதமாக பதில் சொல்லி தப்பித்துக் கொண்டு நரேந்திர பத்னியைத் தேடுங்கள். இதை தாண்டி சத யோஜனை தூரம் சமுத்திரத்தில் தேடிய பிறகு, சித்த சாரணர்கள் வசிக்கும், மலர்ந்த புஷ்பங்களுடன் கூடிய மரங்கள் அடர்ந்த மலை புஷ்பிதோ என்ற பெயருடன் விளங்கக் காண்பீர்கள். சந்திர, சூரியனின் கிரணங்களுக்கு இணையான பிரகாசத்துடன் சாகர ஜலம் நாலா புறமும் சூழ, ஆகாயத்தை தொட்டு விடும் போல உயர்ந்த சிகரங்களுடன் காணப்படும். தங்க மயமான இதன் ஒரு சிகரத்தில் சூரியனும், வெள்ளியாலான மற்றொரு சிகரத்தில் சந்திரனும் வசிக்கிறார்கள். இந்த மலையை செய் நன்றி மறந்தவர்கள் காண முடியாது. கொடூரமான குணம் உடையவர்களோ, நாஸ்திகர்களோ காண முடியாது. அதை தலையால் வணங்கி அந்த இடத்தை விட்டு கிளம்புங்கள். இதைக் கடந்து நாம் புக முடியாத சூர்யவான் என்ற பர்வதம். பதினான்கு யோஜனை தூரம் வழி நடக்க வேண்டும். வழியும் கஷ்டமானது. இதையும் தாண்டி வைத்யுதோ என்ற பர்வதம். எல்லா காலங்களிலும் புஷ்பிக்கும் மனோகரமான புஷ்பங்களும், பழங்களும் உடையது. இங்கு இஷ்டம் போல சாப்பிடுங்கள். அரிய பழங்களும், காய் கிழங்குகளும், ருசியுடன் இருப்பதைக் காண்பீர்கள். முடிந்தவரை சாப்பிட்டு மகிழுங்கள். இங்கு மது வகைகளும் கிடைக்கும். சந்தோஷமாக குடித்து அனுபவித்து விட்டு மேலே செல்லுங்கள். இதன் பின் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக குஞ்சரம் என்ற மலை காணப்படும். விஸ்வகர்மா அகஸ்தியருக்காக இங்கு மாளிகை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இங்கு ஒரு யோஜனை தூரம் விஸ்தாரமும், பத்து யோஜனை தூரம் உயரமும் உள்ள சர்ப்ப ராஜாவின் ஆலயம் போகவதி தெரியும். பலவிதமான ரத்னங்களும் அலங்காரமாக பதிக்கப் பெற்று, கூர்மையான பற்களும், கொடிய விஷமும் உடைய நாகங்கள் காவல் இருக்க இதில் சர்ப்ப ராஜா வாசுகி வசிக்கிறார். இந்த போகவதி நகரிலும் நுழைந்து மகா கவனமாகத் தேடுங்கள். இதைக் கடந்தும் என்ன தேசங்கள் தென் படுகின்றனவோ, தேடுங்கள். இதையும் கடந்து சென்றால், பெரிய ரிஷபம் இருக்கும். ரிஷபன் என்ற பர்வதம், பலவிதமான ரத்னங்களை உள்ளடக்கியது. கோ3சீர்ஷம், பத்3மகம், ஹரி, ச்யாமம், சந்தனம் என்பவை. உத்தமமான ரத்னங்களான இவை இங்கு தோன்றுகின்றன. அக்னிக்கு சமமான ஒளி மிகுந்த இந்த சந்தனத்தை தவறிப் போய் கூட தொடாதீர்கள். ரோஹிதா என்ற கந்தர்வர்கள், பயங்கரமானவர்கள் அவர்கள் தான் இந்த வனத்தை காவல் காத்து வருகிறார்கள். ஐந்து கந்தர்வ தலைவர்கள், சூரியனைப் போல காந்தியுடன் இருப்பார்கள். சைலூஷன், க்3ராமணி, சித்ரு, ஸுப்ரோ, பப்ரூ, இவர்கள் தவிர, ரவி சோம, அக்னி இவர்கள சரீர தாரிகளாக வசிக்கும் இடம். புண்ய கர்மாக்களை செய்தவர்கள் இருக்கும் இடம். பூமியின் முடிவில் ஸ்வர்கத்தையும் ஜயித்த பித்ரு ஜனங்கள் இருக்கும் இடம். அங்கு நம்மால் நுழைய முடியாது. யமனுடைய ராஜதானி. கடும் இருட்டு சூழ்ந்திருக்கும். வானர வீரர்களே, இது வரை தான் உங்களால் செல்ல முடியும். நீங்கள் நுழையவோ, தேடவோ இது தான் எல்லை. இதை தவிர வேறு இடங்கள் தென்பட்டாலும், அங்கும் தேடுங்கள். இதன் பிறகும் காணவில்லை என்றால், மற்ற இடங்களிலும் தேடுங்கள். வைதேஹி இருக்கும் இடத்தை தேடிக் கண்டு பிடித்து ஒரு மாதத்திற்குள் திரும்பி விடுங்கள், யார் வந்து ஒரு மாதத்திற்குள் கண்டேன் சீதையை என்று சொல்கிறார்களோ, அவன் எனக்கு சமமான அந்தஸ்தும், போகமும் கிடைக்கப் பெறுவான். என் உயிரை விட எனக்குப் பிரியமான செய்தி அது தான். எனக்கு பிரிய பந்துவாக ஆவான். அவன் இது வரை தவறு செய்திருந்தாலும் மன்னிக்கப் பெறுவான். நீங்கள் எல்லோருமே அளவில்லாத பராக்ரமம் உடையவர்கள். நல்ல குடியில் பிறந்தவர்கள். குண நலன்கள் நிரம்பப் பெற்றவர்கள். ராஜ குமாரியை தேடிக் கண்டு வாருங்கள், அதற்கு இணையாக, அதற்கு மேலும் நன்மையைப் பெறுவீர்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், தக்ஷிணா ப்ரேஷணம் என்ற நாற்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 42 (313) ப்ரதீசீ ப்ரேஷணம் (மேற்கு நோக்கி அனுப்புதல்)
தென் திசை நோக்கிச் செல்ல வானரர்களை தயார் செய்து, வழி சொல்லி அனுப்பி விட்டு, சுஷேணன் என்ற பெரிய வானரத்தை அழைத்துச் செய்ய வேண்டிய முறைகளை விவரிக்கலானான். பெரிய மேகம் போல இருந்த சுஷேணன் தாரையின் தந்தை. வாலியின் மாமனார். சுக்ரீவன் அவரை அணுகி வணங்கி அஞ்சலி செய்தவனாக மேற்கு திசையில் அவர் போய் தேட வேண்டிய இடங்களை வரிசைப் படுத்தி விவரமாகச் சொன்னான். மாரீச மகரிஷியின் புத்திரனும், நல்ல ஆற்றல் வாய்ந்த மகானுமான, சுஷேணன் மற்றும் பல வீரர்கள் சூழ நின்றிருந்தார். வைனதேயனுக்கு சமமான பிரகாசமும் புத்தியும், விக்ரமும் நிறைந்தவர். மற்றும் பல மரீசி புத்திரர்கள், மாரீசர்கள் வந்திருந்ததையும் கவனித்து, அவர்கள் பலத்தையும் ஆற்றலையும் அறிந்தவன் ஆனதால், வினயமாக பேசினான், சுக்ரீவன். இரண்டு நூறாயிரம் வீரர்கள், சுஷேணர் தலைமையில் வைதேஹியைத் தேடுங்கள். பெரிய ராஷ்டிரங்களையும், நிறைந்து பரந்து கிடக்கும் ஜன பதங்கள், நகரங்கள், அழகிய பெரிய நகரங்கள் எங்கும் தேடுங்கள். புன்னாக குக்ஷி என்ற இடம், வகுலம், உத்தாலகம் இவை ஜனங்கள் நிறைந்து இருக்கும். அதே போல தாழம்பு மண்டிக் கிடக்கும் இடங்கள் எங்கும் தேடுங்கள். ஒவ்வொரு நதியின் ஆரம்பத்திலிருந்தும், அதன் வழி பூராவும் தேடுங்கள். இங்கு நதிகள் குளிர்ந்த நீரையுடையவை. வேகமாக பிரவகித்துச் செல்பவை. தபஸ்விகளின் அரண்யங்கள், காடுகள், மலைகள், பாலைவனமாக வெறிச்சிட்டுக் கிடக்கும் மரு பூமிகள், பெரும் கற் பாறைகள், மற்றும் மலைகளே கோட்டை போல அமைந்துள்ள மேற்கு திசையில் நன்றாகத் தேடுங்கள். மேற்குத் திசையில் போய் நீங்கள் சமுத்திரத்தை அடைவீர்கள். அந்த கடல், திமிங்கிலம், நக்ரம் (ஆமை), முதலை, முதலியவை நிறைந்து, குறைவில்லாத ஜலத்துடன் அலை மோதிக் கொண்டு இருக்கும். இங்குள்ள தாழம்பூ புதர்களிலும், தமாலம் அடர்ந்த காடுகளிலும், தென்னந்தோப்புகளிலும், வானரர்களே, இஷ்டம் போல குதித்து விளையாடுங்கள். இந்த இடங்களில் சீதையைத் தேடுங்கள். ராவணன் இருக்கும் இடத்தை தேடுங்கள். அலைகள் மோத இருக்கும் பர்வதங்கள், காடுகள், முரசீ என்ற பட்டினம், அழகிய ஜடீபுரம், அவந்தி, அங்கலேபா, தவிர, இதுவரை கண்டிராத வனப் பிரதேசங்களும், வரும். ராஷ்டிரங்களும் பட்டினங்களும் விசாலமாக இருக்கும். சிந்து நதி சாகரத்தில் சங்கமமாகும் இடத்தில், ஒரு பர்வதம், ஹேமகிரி என்ற பெயருடைய, நூறு சிகரங்களையுடைய பெரிய மலை. பெரிய பெரிய மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும். இதனுடைய சாரல்களில், சிங்கங்கள் விளையாடும். திமிங்கிலம், மீன்வகைகள், யானைகள் இவைகளும் மர நிழலில் காணப் படும். மலையுச்சியில் காணப்படும் சிங்கத்தின் குகைகளில், இந்த யானைகளும் மதர்ப்புடனும், திருப்தியுடனும் வளைய வரும். இவைகளின் பிளிறல், இடி இடிப்பது போல இருக்கும். இந்த மலையின் சிகரங்கள் ஆகாயத்தை தொட்டு விடுவது போல உயர்ந்து இருக்கும். விசித்ரமான தாவரங்கள் நிறைந்தது. இந்த இடங்களில் வேகமாகத் தேடுங்கள். இந்த சமுத்திரக் கோடியில், பொன் நிறத்தில் நூறு யோஜனை தூரம், கடக்க முடியாத மலைத் தொடரைக் காண்பீர்கள். இருபத்து நான்கு கோடி கந்தர்வர்கள், சக்தி வாய்ந்த மகான்கள், விருப்பம் போல உருவம் எடுக்க வல்லவர்கள், அக்னி போன்ற தேஜஸ் உடைய இவர்களை வானரங்கள் இடையூறு எதுவும் செய்யாமல் விலகிச் செல்லுங்கள். இந்த பிரதேசத்து பழங்கள் எதையும் சாப்பிட வேண்டாம். இவர்கள் ஆற்றல் மிகுந்தவர்கள், எதிர்த்து நின்று எளிதில் சமாளிக்க முடியாது. இவர்கள் பழ, காய்கறி தோட்டங்களைக் கூட நல்ல பாதுகாவலுடன் வைத்திருப்பார்கள். அதற்காக பயப்படத் தேவையில்லை. உங்கள் வானர இயல்பாக நடந்து கொள்ளுங்கள். இந்த இடங்களில் ஜானகியைத் தேடுங்கள். அங்கு வைடூரிய வண்ணத்தில், மரங்களும், கொடிகளும் அடர்ந்த வஜ்ரோ என்ற பெரிய மலை இருக்கிறது. நூற்றுக் கணக்கான குகைகள் இருக்கும். இங்கு சற்று பிரயத்னத்துடன் தேடுங்கள். சமுத்திரத்தில் கால் பாகம் சக்ரவான் என்ற பர்வதம் இங்கு ஆயிரம் ஆரங்கள் உடைய சக்ரம் விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பட்டது. இங்கு தான் புருஷோத்தமன், பஞ்சமனான தானவ அரசன், ஹயக்ரீவனைக் கொன்று, சங்கையும், சக்ரத்தையும் இவனிடமிருந்து கைப்பற்றினார். இதன் விசாலமான மலைச் சாரல்களில். குகைகளில் ராவணனையும், வைதேஹியையும் தேடுங்கள். அறுபத்து நான்கு யோஜனை தூரத்தில் வராஹம் என்ற பர்வதம் தென்படும். சுவர்ணமான சிகரங்களும், ஆழமான கடல் நடுவில் கம்பீரமாகத் தெரியும். இதற்கு முன்னால் ஜ்யோதிஷம் என்ற ஜாத ரூப மயமான புரம், நகரம் உள்ளது. இங்குதான் துஷ்டனான நரகன் என்ற தானவ ராஜா வசிக்கிறான். இந்த இடத்திலும், மலைச் சாரல்களிலும், ராவணனை, வைதேஹியைத் தேடுங்கள். இந்த மலையரசனைத் தாண்டி, சமவெளி வரும். இந்த மலையும் பெருகி ஓடும் அருவிகளுடன், நல்ல இயற்கையழகுடன் காணப்படும். இதில் யானைகள், வராஹங்கள், சிங்க, வ்யாக்ரங்கள் எங்கும் கர்ஜித்த வண்ணம் இருக்கும். தங்கள் குரலையே கேட்டு மகிழ்ந்து, திரும்ப கத்தும். இங்குதான் பாகசாஸனன் எனும் மகேந்திரன், ஹரிஹயனாக, தேவர்களால் அபிஷேகம் செய்து வைக்கப் பட்டான். இந்த மலை மேகலான், (தொடர்ச்சி மலை) என்று பெயர் பெற்றது. மகேந்திரன் பாலிக்கும் இந்த மலையைக் கடந்து ஆயிரம் சிகரங்களையுடைய மலைத் தொடரைக் காண்பீர்கள். இளம் சூரியனின் வண்ணத்தில் தங்கத் தகடு போல ஜொலிக்கும், மஞ்சள் நிறப் பூக்களுடன், இந்த மலைகள் பார்க்கும் இடமெல்லாம் கண்களை பறிக்கும். இதன் நடுவில் மலைகளுக்கு அரசனான மேரு மலை தெரியும். வடக்கில் உள்ள மலையரசன் தான். ஒருமுறை பிரஸன்னமான ஆதித்யன் வரம் கொடுத்தார். சைலேந்திரனைப் பார்த்து இவையனைத்தும் உன்னைச் சார்ந்தே இயங்கும். இரவும் பகலும் என் தயவால் காஞ்சனமாகவே பிரகாசிக்கும். இங்கு தேவ கந்தர்வர்கள் வசிப்பார்கள். இவர்களும் சிவந்த நிறமாக காட்சியளிப்பார்கள். உலகில் தேவர்களும், மருத்கணங்கள், வசுக்கள், தேவலோக வாசிகள், இங்கு வந்து மேருவின் மேற்குப் பகுதியான உன்னிடத்தில் மாலை நேர சந்த்யா வந்தனம் செய்வார்கள். ஆதித்யனை வணங்குவர். சூரிய நமஸ்காரம் செய்வர். இவ்வாறு இவர்கள் துதி செய்து வணங்கியபின், அஸ்தமன மலைக்குப் பின் யார் கண்ணிலும் படாமல் சூரியன் மறைகிறான். பத்தாயிரம் யோஜனை தூரம், இந்த திவாகரன் அரை முஹுர்த்த நேரத்தில் கடந்து வேகமாக மலை வாயில் விழுகிறான். இந்த மலையின் சிகரத்தில் மிகப் பெரிய மாளிகை, மாடங்களும், கோபுரங்களுமாக, விஸ்வகர்மா கட்டி வைத்திருக்கிறார். அடர்ந்த மரங்களும், அதில் பக்ஷிகளின் கூக்குரலுமாக மிகவும் அழகாக இருக்கும். வருணன் கையில் பாசத்துடன் இங்கு வசிக்கிறான். மேரு மலைக்கும் அஸ்தமன மலைக்கும் இடையில், பத்து கிளைகள், தலைகள் போலத் தெரிய, தால மரங்கள் வரிசையும், வேதிகம் எனும் யாக சாலைகளும் உள்ளன. இங்கு எல்லா இடங்களிலும், கோட்டைகளிலும், நதிகளிலும், அருவிகளிலும், ராவணனை, வைதேஹியைத் தேடுங்கள். இங்குதான் மேரு சவர்ணி என்ற மகரிஷி இருக்கிறார். தன் கடும் தவ வலிமையால் ஆற்றலும், தேஜஸும் கூட, ப்ரும்மாவுக்கு இணையாக மேரு சவர்ணி என்ற பெயரும் பெற்றார். இவர் பெயரைச் சொல்லி விசாரிக்கலாம். இவரை அடி பணிந்து வணங்கி, மைதிலியைப் பற்றிச் சொல்லி, விசாரியுங்கள். இதுவரை உலகில் தாமஸமான இருட்டு மறைய, ஒளி வீசி உலகை காத்த பாஸ்கரன், பகல் பொழுதின் முடிவில் இங்கு மறைகிறான். வானர வீரர்களே, இது வரை தான் நீங்கள் செல்ல முடியும். இதற்கு அப்பால், பாஸ்கரன் இல்லாத, எல்லையில்லாத பரந்த வெளியைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. சீதையைக் கண்டு கொண்டு, ராவணின் இருப்பிடத்தையும் தெரிந்து கொண்டு அஸ்தமன மலை வரை தேடி விட்டு, மாதம் முடியுமுன், திரும்பி வாருங்கள். ஒரு மாதத்திற்கு மேல் எங்கும் தங்க வேண்டாம். அதற்கு மேல் தாமதம் செய்பவர்கள் என்னால் வதம் செய்யப் படுவீர்கள். வானர வீரர்களே, நீங்கள் சூரர்களே. உங்களுடன் ஆற்றல் மிகுந்த என் மாமனாரும் வருவார். நீங்கள் அனைவரும் விக்ரமம் உடையவர்கள், செயல் திறன் உடையவர்கள் என்பதில் சந்தேகமில்லை. உங்களிடம் ஒப்படைத்த வேலையை செய்து முடிப்பீர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள் என்பதையும் நான் அறிவேன். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள். மேற்குத் திசையில் அலசித் தேடுங்கள். நரேந்திர பத்னியை கண்டு கொண்டபின், நாம் நம் பொறுப்பை நிறைவேற்றியவர்களாக ராகவன் சமீபம் செல்வோம். இதைத் தவிர, இந்த காரியத்திற்கு அனுகூலமாக நீங்கள் எதுவும் செய்ய விரும்பினாலும் செய்யுங்கள். தேச காலங்களை அனுசரித்து, உங்கள் மனதில் பட்டதைச் செய்யுங்கள். இதன் பின் சுஷேணர் தலைமையிலான வானர படை, நிபுணனான சுக்ரீவன் சொன்னதை ஏற்று, விடை பெற்றுக் கொண்டு, வருணனின் திசையான, வருணன் பாலிக்கும் மேற்கு திசையில்சென்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ப்ரதீசீ ப்ரேஷணம் என்ற நாற்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 43 (314) உதீசீ ப்ரேஷணம் (வடக்கு நோக்கி அனுப்புதல்)
மாமனார் சுசேஷணரை வழி அனுப்பி விட்டு, வீரனான சதபலி என்பவரை நோக்கித் திரும்பினான். தனக்கும், ராகவனுக்கும் நன்மையுண்டாக, அந்த வானரேந்திரனிடம், பேசினான். உங்களைப் போலவே வீரர்களாக நூறாயிரம் வானரர்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். வைவஸ்வதனுடைய மகன் உட்பட உங்கள் மந்திரிகளை அழைத்துக் கொள்ளுங்கள். இமய மலையை அடுத்து உள்ள வட தேசத்தில் ராமபத்னியான வைதேஹியை தேட கிளம்புங்கள். இந்த காரியத்தில் நாம் வெற்றி பெற்று விட்டால், ராக4வனிடம் பட்டுள்ள கடனிலிருந்து விமோசனம் பெறுவோம். ராகவனுக்கு செய்ய வேண்டிய பிரதி உதவியை செய்தவர்களாக ஆவோம். ராகவன் மகான். நமக்கு மிகப் பெரிய உதவியைச் செய்திருக்கிறான். இந்த உதவிக்குப் பதிலாக நாமும் ஏதாவது செய்தால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும். நம் பிறவி பயனுடையதாக ஆகும். நம்மை, முன் பின் தெரியாத ஒருவர் உதவி கேட்டு செய்தாலே, மிகப் பெரிய புண்ய காரியமாக கருதப் படுகிறது. அப்படியிருக்க, மிகப் பெரிய உதவியை நமக்கு செய்தவர்களுக்கு நாம் பதில் உதவி செய்யாமல் இருக்கலாமா? இந்த நிலையில் நாம் ஜானகியை கண்டு பிடித்து சொல்வது தான் நாம் உடனடியாக செய்ய வேண்டியது. அதனால், நீங்கள் எல்லோருமே, தலைவனான என் நன்மையை நாடுபவர்கள். இந்த காரியத்தைச் செய்யுங்கள். எனக்காக. ராக4வனோ நரசத்தமன்( மனிதர்களில் உயர்ந்தவன்) நம்மிடத்தில் விசேஷமான அன்பு கொண்டவன். இந்த வட திசையில் உள்ள வனங்கள், கோட்டைகள், நதிகள், மலைகளை சார்ந்த இடம், மற்றும் எல்லா இடங்களிலும், நீங்கள் உங்கள் அறிவை பயன்படுத்தி, தேடுங்கள். இங்குள்ள மிலேச்சர்கள் (வெளி நாட்டினர்), புலிந்தர்கள், சூர சேனர்கள், ப்ரசதல தேசத்தவர், ப4ரத வம்சத்தினர், குரு வம்சம், பத்3ரகர்கள், சீனர்கள், பரமசீனர்கள், நிஹாரர்கள் என்பவர்கள், இங்கு திரும்பத் திரும்ப தேடுங்கள். இமய மலையின் சமவெளி பிரதேசங்களில் அலசித் தேடுங்கள். லோத்ர, பத்மக, புதர்களில் தேவ தாரு வனங்களில், ராவணனை, வைதேஹியைத் தேடுங்கள். இதன் பின் தேவ கந்தர்வர்கள் வசிக்கும் சோமாஸ்ரமம் சென்று, காலன் என்ற பெயருடைய பெரிய மலைச் சாரலை அடையுங்கள். இதனுடைய உயர்ந்த சிகரங்களில், சமவெளிகளில், குளங்களில், மஹாபா4காவான (பாக்யம் செய்தவள்) ராமபத்னி, அவளைத் தேடுங்கள். இதைக் கடந்து செல்லும், ஹேம க3ர்ப்ப4ம் என்ற மலையரசனைக் காண்பீர்கள். இதன் பின் சுத3ர்ஸனம் என்ற பர்வதம் வரும். இதன் பின் தேவசக2ன் என்ற பர்வதம் பக்ஷிகளுக்கு இருப்பிடமானது. பல விதமான மரங்களும், பலவிதமான பக்ஷி கணங்களும் நிறைந்தது. இந்த காட்டின் புதர்களில், அருவிகளில், குகைகளில், ராவணனை, வைதேஹியைத் தேடுங்கள். இதைக் கடந்து ஆகாசம் நூறு யோஜனை தூரம். பர்வதமோ, நதியோ, விருக்ஷமோ (மரமோ), உயிருள்ள ஜீவன்களோ எதுவுமே இருக்காது. வெட்டவெளி மட்டுமே. சீக்கிரமாக இதைக் கடந்து, கைலாஸ மலையை அடைந்து விடுங்கள். வெண்மையான இந்த சிகரத்தை அடைந்து மகிழ்ச்சி அடைவீர்கள். இங்கும் விஸ்வகர்மாவால் குபே3ரனுக்காக கட்டப் பட்ட ப4வனம் உள்ளது. வெண் மேகம் போன்று, தங்கத்தால் இழைத்து அலங்கரிக்கப் பட்டிருக்கும். இங்கு விசாலமான நளினீ என்ற நதி ஏராளமான கமல, உத்பல புஷ்பங்களுடன் காணப் படும். அப்ஸர கணங்கள் இதை பயன் படுத்துகின்றனர். ஹம்சங்களும் காரண்டவ பக்ஷிகளும், வளைய வரும். இங்கு வைஸ்ரவன ராஜா, எல்லா ஜீவ ஜந்துக்களாலும் பூஜிக்கப் படுபவர், அரசனாக இருக்கிறார். இங்கு யக்ஷ ராஜாவான த4னத3ன், ரகஸ்யமாக பாதுகாவலுடன் சந்தோஷமாக இருக்கிறார். இவருடைய மாளிகை சந்திரன் போல் இருக்கும். பர்வதங்களிலும், குகைகளிலும் வைதேஹியைத் தேடுங்கள். க்ரௌஞ்சம் என்ற மலைச் சிகரம் சென்று இதில் ஒரு பள்ளம் (வளை) நுழைய முடியாமல் அமைந்திருக்கும். பயப்படாதவர்கள் உள்ளே செல்லுங்கள். இதில் நுழைவது கடினம் என்பது பிரஸித்தம். (கேள்விப் பட்டிருக்கிறோம்). சூரியனுக்கு சமமான பிரபையுடைய மகாத்மாக்கள் வசிக்கிறார்கள். தேவர்களே பூஜிக்கும், மகான்களான மகரிஷிகள் பலர் இங்கு இருக்கிறார்கள். க்ரௌஞ்ச குகைகள் தவிர, மற்ற சாரல்கள், சிகரங்கள், சமவெளிகள், பள்ளத் தாக்குகள் இங்கெல்லாம் தேடுங்கள். க்ரௌஞ்ச சிகரத்தை நன்றாக கவனித்து பார்த்து, மரங்களே இல்லாத காம சைலம் எனும் இடத்தை, மானஸம் என்ற (விளையாடும் இடம்), பறவைகளின் இருப்பிடம், இங்கு தேவ, தானவ, ராக்ஷஸர்கள் மற்றும் எந்த ஜீவ ஜந்துவும் நுழைய வழியில்லை. இங்கும் எல்லா இடங்களிலும் தேடுங்கள். மலை சாரல்கள், மலைக் குன்றுகள் முதலிய இடங்களில் தேடுங்கள். க்ரௌஞ்ச மலையைத் தாண்டி மைனாகம் என்ற பர்வதம் மயனுடைய மாளிகை இங்கு அவன் தானாகவே கட்டிக் கொண்டது, தெரியும். தா3னவனான இவன் இருக்கும் இடத்தில், அஸ்வ முகம் கொண்ட ஸ்திரீகள் வசிக்கிறார்கள். இதன் பின் சித்தர்கள் வசிக்கும் ஆசிரமம் வரும். சித்3த4ர்கள், வைகா2னஸர்கள், பா3லகில்யா: என்ற தபஸ்விகள் – மாசற்ற இந்த தபஸ்விகளை வணங்கி, சீதையைப் பற்றி விசாரியுங்கள். தவ வலிமை, சித்திகள் பெற்ற இந்த மகான்களிடம் பணிவாக பேசுங்கள். இங்கு ஹேம புஷ்கரம் என்ற குளம், வைகா2னஸ என்ற குளம் மறைந்து கிடக்கும். இங்குள்ள ஹம்சங்கள் இளம் சூரியனின் நிறத்தில் சஞ்சரிக்கும். சுபமாக தென்படும். சார்வபௌ4மம் என்ற குபேரனுடைய அரண்மனையில் யானை தன் துணைகளான பெண் யானைகளுடன் எப்பொழுதும் சுற்றிக் கொண்டிருக்கும். இந்த குளத்தைத் தாண்டினால், சூரிய சந்திரனே இல்லாத, நக்ஷத்திர கணங்களோ, மேக மண்டலமோ இல்லாத, சப்தமின்றி வானவெளி, தெரியும். இந்த தேசத்தில் சூரியனுடைய கிரணங்கள் மட்டும் ஒளியைத் தருகின்றன. இங்கு தங்கள் தவம் நிறைவேறிய தபஸ்விகள் தேவர்கள் போல ஓய்வு எடுத்துக் கொண்டு இருப்பது போல தெரிவர். இவர்கள் தேஜஸ், உடல் காந்தியே இவர்களைக் காட்டிக் கொடுக்கும். இதைக் கடந்து சைலோதா என்ற கீழ் நோக்கி பாயும் நதி, இதன் இரு கரைகளிலும் கீசகம் என்ற மூங்கில் காடு. இவைகள் தான் இந்த சித்தர்கள் போக வர, போக்கு வரத்து சாதனமாக, நதியைக் கடக்க உதவுகின்றன. வடக்கில் இருக்கும் இந்த சித்தர்கள், தாங்கள் செய்த புண்ய கர்மாக்களின் பயனாக இங்கு வசிக்கும் பேறு பெற்றவர்கள். குரவக எனும் புஷ்பங்கள் நிறைந்த இடத்தில் வசிக்கும் பேறு பெற்றுள்ளனர். மஞ்சள் நிற தாமரைப்பூ நிறைந்த குளத்தில் ஸ்நான பானங்களை முடித்துக் கொள்வார்கள். இது போல நீல வைடூரியம் போன்ற இலைகள் மறைக்க ஆயிரக்கணக்கான நதிகள் இங்குள்ளன. சில வனங்களில் உத்பலமே செக்கச் சிவக்க காணப்படும். தங்க நிறமான புஷ்பங்களும் அடர்ந்து பூத்திருக்கும். இதனால் இந்த நீர் நிலைகளே பொன் நிறம் பெற்று இளம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் காணப்படும். விலையுயர்ந்த மணி பத்ரம், சிவந்த கேஸரி (குங்குமப் பூ), விசித்ரமான நீலோத்பல வனங்கள் என்று இந்த தேசம் நாலாபுறமும் சூழ்ந்து கிடக்கும். இங்குள்ள நதிகளின் மணலில், முத்துக்களும், மணிகளும், கணக்கில்லாமல் அடித்துக் கொண்டு வரப் படும். தங்கத் துகள்களுமாக பெரும் செல்வம் நிறைந்து வரக் காணலாம். பெரிய மரங்கள் இதில் மூழ்கி அமிழ்ந்து கிடப்பதால், புஷ்பங்கள் மட்டும் வெளியே தெரிய, நெருப்பு குவியல் போலவும், தங்கத் தகடு போலவும், நடு நடுவில், நீர் மட்டத்தில் காணக் கிடைக்கும். இங்குள்ள மரங்கள் நித்ய புஷ்பா:- எப்பொழுதும் பூக்கக் கூடியவை. எல்லா பருவ காலங்களிலும் இலைகள் நிறைந்து காணப்படும். தொட்டாலே திவ்யமான வாசனை தரக் கூடியவை. எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வல்லவை. சில மரங்கள் பல உருவங்களில், ஆடைகளாகத் தரும். மற்ற வகை மரங்கள் பழ வகைகளை கணக்கில்லாமல் தரும். சில முத்து, வைர, ஆபரணங்களை அளிக்கக் கூடியவை. ஸ்திரீகளுக்கு அனுரூபமாக, தனியாக, ஆண்கள் அணிந்து கொள்ள ஏற்றவை என்று ஆபரணங்கள். எந்த பருவ காலமானாலும், அதற்கு ஏற்ப பழங்களைக் காணலாம். இங்குள்ள உத்தமமான மரங்கள் மிகவும் அரிதானவை. பல விதமானவை. தங்க மயமான சில மரங்கள், படுக்கைகளை அளிக்கும். (ப்ரசூயந்தே-ப்ரசவிக்கின்றன). அழகிய ஆசனங்களைத் தருகின்றன. மனம் விரும்பிய மாலைகளை, மற்ற சில மரங்கள் தருகின்றன. பலவிதமான பானங்கள், உணவு பண்டங்கள் என்று விளைவிக்கும் மரங்களும் காணப்படுகின்றன. ரூப யௌவனம் இளம் வயதினர், நல்ல குணமும் நிறைந்த பெண்களும் நடமாடக் காணலாம். க3ந்த4ர்வர்கள், கின்னரர்கள், சித்3த4ர்கள், நாக3ர்கள், வித்3யாத4ரர்கள், இங்கு தங்கள் பிரியமான பெண்மகளுடன் உல்லாசமாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள். சுக்ருதம்-நல்விணைப் பயன் உடையவர்கள். உல்லாசமாக வாழ விரும்புபவர்கள். -பெண்களுடன் ரசித்து வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். கீதங்களும், வாத்ய கோஷங்களும் உல்லாச சிரிப்பிலும், நிறைந்து இவர்கள் இருக்கும் இடமே கோலாகலமாக இருக்கும். இங்கு மகிழ்ச்சியில்லாதவனோ, அஸத்தான விஷயங்களில் நாட்டமுடையவனோ, காண முடியாது. நாள் தோறும் இங்கு நன்மைகளே பெருகி வருவதைக் காணலாம். இந்த இடத்தையும் கடந்து சென்றால், வடக்கில் பாற்கடலைக் காணலாம். மத்தியில் ஸோமகிரி என்ற பர்வதம். இந்திர லோகம் போனவர்களும், ப்ரும்ம லோகம் போனவர்களும் இந்த கிரி ராஜனைக் காண்பர். சூரியன் இல்லாத இடத்தில் இந்த ஹேம மயமான ஒளியாலேயே அந்த இடம் பிரகாசமாகத் தெரியும். பதினோரு ரூபமாக விளங்கும் ப4க3வான் சம்பூ,4 மகா தே3வன், விஸ்வாத்மா, கொழுந்து விட்டெரியும் நெருப்பு போலவும், சூரியனின் ஒளி போலவும் இங்கு இருக்கிறார். ப்ரும்ம ரிஷிகள் சூழ பகவான் ப்ரும்மாவும் வசிக்கிறார். நீங்கள் இதற்கு மேல் வடக்கில் போக வேண்டாம். இதற்கு மேல் எந்த ஜீவனும் செல்ல அனுமதி கிடையாது, முடியாது. இந்த ஸோமகிரி வரை செல்ல தேவர்களே தயங்குவர். சிரமப் படுவர். இதைக் கண்ணால் கண்டு விட்டு திரும்பி விடுங்கள். வானர வீரர்களே, இது வரை தான் வானரங்கள் செல்ல முடியும். இதற்கு அப்பால் சூரியன் இல்லாத, எல்லையில்லாத வெட்ட வெளியைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. இது வரை நான் சொன்ன இடங்களில் கவனமாகத் தேடுங்கள். நான் சொல்லாத இடங்கள் எதிர்ப் பட்டாலும் தேடுங்கள். இதை நீங்கள் செய்வதால் தசரத குமாரனுக்கு மிகவும் பிரியமானதை செய்தவர்களாக ஆவீர்கள். அதை விட அதிகமாக எனக்கு உபகாரம் செய்தவர்களாக நான் கொள்வேன். காற்றும் நெருப்பும் போல, விதேஹ ராஜாவின் மகளைக் கண்டு கொண்டு வந்தால் பெரும் நன்மையை செய்தவர்கள் ஆவீர்கள். இதன் பின் செயற்கரிய செய்தவர்களாக, உங்கள் பந்துக்களுடனும், நண்பர்களுடனும் உலகில் எல்லா நன்மைகளையும் பெற்று வாழ்வீர்கள். என் உபசாரத்திற்கு பாத்திரமாக ஆவீர்கள். சத்ருக்கள் என்று யாருமே உங்களுக்கு இருக்க மாட்டார்கள். அதற்கு நான் பொறுப்பு. உங்கள் பிரியமான ஜனங்களுடன், வானர வீரர்களே, வளம் பெற்று வாழ்வீர்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், உதீ3சீ ப்ரேஷணம் என்ற நாற்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 44 (315) ஹனூமத் சந்தேச: (ஹனுமானிடம் செய்தி சொல்லியனுப்புதல்)
சுக்ரீவன், மற்றவர்களிடம் சொல்லி முடித்த பிறகு, ஹனுமானிடம் வந்தான். தன் மந்திரிகளில், அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது இந்த ஹனுமானிடமே. இந்த காரியத்தை சாதிக்கக் கூடியவன் ஹனுமானே என்று அவன் மனதிற்குப் பட்டது. அதனால் திரும்ப மேலும் சில விஷயங்களை அவனுக்கு சொல்ல ஆரம்பித்தான். விக்ரமம் நிறைந்த வாயு புத்திரனான ஹனுமானிடம், வானர சேனையின் அரசன் மகிழ்ச்சியுடன் சொன்னான். வானர ஸ்ரேஷ்டனே, இந்த பூமியிலோ, அந்தரிக்ஷத்திலோ, வானத்திலோ, அமரர் வீடான தேவ லோகத்திலோ, நீருக்குள்ளோ, உன் போல பராக்ரமம் உடைய மற்றொரு பிறவியை நான் அறியேன். உனக்குத் தான் சுரர்கள், கந்தர்வர்கள், நாக, நர தேவதைகள், இவர்கள் பூமியிலும், அண்ட சராசரங்களிலும் வசிக்கும் இடம் தெரியும். மகா கபியே, உன்னிடத்தில் தான் கதி, வேகம், தேஜஸ், லாகவம் இவை உன் தந்தையான மாருதிக்கு சமமாக உள்ளன. அதனால் சீதையை எப்படித் தேடி கண்டு பிடிப்பது என்பதில் உன் முழு முயற்சியையும் செய். ஹனுமன் புத்தியும், பலமும், பராக்ரமும் உன்னிடம் தான் உள்ளன. நீ நியாயம் அறிந்த பண்டிதன். தேச காலங்களை அனுசரித்துக் கொண்டு போகும் வினயமும் உள்ளவன். என்றான். ராகவனும், இதே போல, இந்த காரியத்தை செய்து முடிக்கக் கூடியவன் ஹனுமனே என்ற நம்பிக்கை மனதில் தோன்ற, அவனை அழைத்து தன் பெயர் பொறித்த மோதிரத்தை, அங்கு3லீயத்தை ராஜகுமாரிக்கு அடையாளம் காட்ட கொடுத்தார். ஹரி ஸ்ரேஷ்டனே, இந்த அடையாளத்தை வைத்து ஜனகாத்மஜா, இது என்னிடமிருந்து வந்திருக்கிறது என்பதால் மனதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் கொள்வாள். விக்ரமனே, நீ செயல் வீரன். உன் வழியும், செய்யும் முறையும் பாராட்டுக்குரியன ஆகும். சுக்ரீவன் உன்னிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறான். நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கிறான். அதுவே எனக்கும் காரிய சித்தியை அடைவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கிறது என்றார். இதைக் கேட்டு, ஹனுமான் அதை வாங்கி தன் தலை மேல் வைத்துக் கொண்டு, அவரை அடி பணிந்து வணங்கி விட்டு கிளம்பி விட்டான். உத்தமமான இந்த வானர வீரனின் உடன் புறப்பட்ட வீரர்கள், ஆரவாரித்தனர். அவர்கள் கூட்டத்தில் மேகங்கள் விலகி நிர்மலமாக இருந்த வானில் சந்திரன் போல ஹனுமான் தனித்து தெரிந்தான். ராமர் மேலும் அதி பலசாலியான ஹனுமான், குறைவில்லாத உன் விக்ரமம் நான் அறிந்ததே. உன் பலத்தை தான் நம்பியிருக்கிறேன், பவன சுதனே, ஜனக சுதாவைக் காண என்ன செய்வாயோ, குறைவின்றி செய்வாய் என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமத் சந்தேஸோ என்ற நாற்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 45 (316) வானர ப3ல ப்ரதிஷ்டா (வானர படை புறப்படுதல்)
புறப்படத் தயாராக நின்ற படை பலத்தைப் பார்த்து ராஜா சுக்ரீவன், மறு முறை ராம காரியத்தை சரியாக நிறைவேற்ற அவர்களுக்கு எச்சரித்தான். கவனமாக செய்யுங்கள் என்று சொல்லி உத்தரவிட்டதும், இந்த கட்டளை அதி முக்கியம் வாய்ந்தது என்பதை உணர்ந்த வீரர்கள், தரையில் மொய்க்கும் விட்டில் பூச்சிகளைப் போல பூமியே தெரியாமல் மறைத்துக் கொண்டு நின்றிருந்தவர்கள், உடனே புறப்பட்டனர். ராமரும் லக்ஷ்மணருடன் அந்த ப்ரஸ்ரவன மலையில் தங்கினார். சீதையைக் கண்டு பிடிப்பதில் கால கெடு ஒரு மாதமே என்பதால், வடக்கு நோக்கி புறப்பட்ட சதபலி, தன் சேனை வீரர்களை துரிதப் படுத்தினார். மலையரசன் இருக்கும் வட திசை நோக்கி வேகமாக சென்றார்கள். கிழக்கு நோக்கி வினதனும் தன் படை வீரர்களுடன் அதே போல கிளம்ப, தாரன், அங்கதன் முதலானோர் கூட ஹனுமானும், அகஸ்தியர் வாழ்ந்ததால் சிறப்பு பெற்ற தென் திசை நோக்கி பயணமானான். மேற்கு திசையில் சுஷேணர், கடினமான பாதையில், வருணனின் ஆளுகைக்கு உட்பட்ட திக்கில் தேடக் கிளம்பினார். இப்படி எல்லா திக்குகளிலும் தேட ஏற்பாடுகள் செய்து விட்டு, சுக்ரீவன் அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தான். சீதையைக் கண்டு அழைத்து வருவோம், ராவணனை ஒழிப்போம் என்று கோஷமிட்டபடி கிளம்பினார்கள். ஆட்டமும், பாட்டமும், கோஷமும், வானரர்கள், தங்கள் இயல்புக்கு ஏற்ப, கீச் கீசென்று கத்தியும், தாவி ஓடியும், குதித்தும் ஆரவாரித்தபடி சென்றனர். நான் ஒருவனே ராவணனைக் கொன்று விடுவேன் போன்ற வீர முழக்கங்களும் கேட்டன. ராவணனை அடித்து நொறுக்கி விட்டு ஜனகாத்மஜாவை அழைத்து வந்து விடுவேன், என் வீரத்தைப் பார்த்து தான் அவள் நடுங்குவாள் என்று சில மார் தட்ட, நீங்கள் எல்லாம் எதற்கு, இங்கேயே இருங்கள், நான் ஒருவனே பாதாளத்தில் இருந்தாலும், ஜானகியை அழைத்து வந்து விடுவேன் என்றும் சூளுரைத்தன. பூமியை பிளந்து விடுவேன், கடலை வற்றச் செய்து விடுவேன், நூற்றுக் கணக்கான யோஜனைகளை அனாயாசமாகத் தாண்டி விடுவேன், பூமியிலும், சாகரத்தில், மலைகளில், வனங்களில், பாதாளத்தில் எங்கும் என் கதியை யாராலும் தடுக்க முடியாது என்று ஒவ்வொரு வானரமும் மார் தட்டி பேசி கபிராஜனுக்கு உத்திரவாதம் அளித்தன.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வானர ப3ல ப்ரதிஷ்டா என்ற நாற்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 46 (317) பூ4 மண்டல ப்ரமண கத2னம் (உலகை சுற்றியதை விவரித்தல்)
ஆரவாரம் செய்தபடி வானரங்கள் அந்த இடைத்தை விட்டு வெளியேறிய பின், ராமர் சுக்ரீவனிடம் எஎப்படி உனக்கு பூ மண்டலம் முழுவதும் தெரிந்தது? என்று வினவினார். சுக்ரீவனும் விஸ்தாரமாக சொல்ல ஆரம்பித்தான். மகிஷ உருவத்தில் வந்த துந்துபி என்ற ராக்ஷஸனை மலய மலையை நோக்கி வாலி தள்ளிக் கொண்டு போன பொழுது, அவன் வழியில் கிடைத்த ஒரு குகைக்குள் நுழைந்து விட்டான். அவனைக் கொல்ல வாலியும் உடன் உள்ளே நுழைந்தான். குகை வாசலில் என்னை காவல் நிறுத்தி விட்டுச் சென்றான். வருடம் ஓடியது. வாலி வெளியே வரவில்லை. இதன் பின், ரத்தம் பிரவாகமாக குகைக்குள்ளிருந்து வந்தது. இதைக் கண்டு நான் ஆச்சர்யம் அடைந்தேன். என் சகோதரனைப் பற்றிய கவலையே மனதில் நிறைந்திருந்ததால், செய்வதறியாமல் ஒரு பாறையை எடுத்து அந்த பள்ளத்தின் வாயிலை மூடி விட்டேன். மலை போல பெரிய பாறையை நகர்த்த முடியாதபடி வைத்து மூடி விட்டேன். வெளியில் வர முடியாமல் மகிஷன் மடியட்டும் என்பது தான் என் எண்ணம். வாழ்க்கையே வெறுத்த மன நிலையில் தான் நான் கிஷ்கிந்தை வந்தேன். ராஜ்யமும், என் பொறுப்பில் வந்தது, ருமை, தாரை இருவரும் என் பட்ட மகிஷிகளாக ஆனார்கள். நண்பர்கள் சூழ இருந்ததில், நாளா வட்டத்தில் பயம் அகன்றது. ஒரு நாள், அந்த தா3னவனைக் கொன்று விட்டு வாலி வந்து விட்டான். உடனே நான் மரியாதையோடு ராஜ்யத்தை அவனுக்கு கொடுத்து விட்டேன். பயமும் என்னை வாட்டியது. அவனோ, என்னைக் கொல்வதே குறியாக இருந்தான். துஷ்டன், நான் என் மந்திரிகளுடன் ஓட ஓட துரத்தினான். நான் அவனுக்கு பயந்து, கண்டபடி ஓடினேன். பல நதிகள், இதுவரை கண்டிராத வனங்கள், நகரங்கள் என்று பூமியில் நான் ஓடி ஒளியாத இடமே இல்லையெனும் படி ஓடினேன். எரியும் சக்கரத்துள் நுழைந்து புறப்படுவது போல, பூமியை கோஷ்பதமாக (பசுவின் காலடி குளம்புக்குள் இடைப் பட்ட இடம்) கடந்தேன். கிழக்கு திசையில் சென்ற சமயம், பலவிதமான மரங்களைக் கண்டேன். மலைகளையும், அழகிய நதிகளையும் பல குளங்களையும் கண்டேன். உதயாசலத்தைக் கண்டேன். பலவிதமான தாதுப் பொருட்கள் மண்டிக் கிடந்ததைக் கண்டேன். பாற்கடலைக் கண்டேன். அப்ஸர கணங்கள் அதன் கரையில் இருப்பதைக் கண்டேன். வாலி துரத்த துரத்த ஒவ்வொரு திக்கிலும் அதன் எல்லைக்கே சென்று திரும்பினேன். திரும்ப வாலி துரத்தவும், வேறு திக்கில் ஓடுவேன். தென் திசையில் ஓடி விந்த்ய மலை, சந்தன காடுகள், மரங்கள், மலைகள் என்று ஒளிந்து திரிந்து திரும்பினேன். மறுபடியும் மேற்கு நோக்கி ஓடலானேன். பல நகரங்களையும் தேசங்களையும் தாண்டி அஸ்தமன மலைக்கே சென்று திரும்பினேன். பின் வடக்கில் ஓடினேன். ஹிமவானைக் கண்டு மேரு மலையையும், உத்தர சமுத்திரத்தையும் கண்டேன். ஓடி ஓடி களைத்தேன். வாலி விடுவதாக இல்லை. அப்பொழுது தான் புத்திமானான ஹனுமான் எனக்கு யோசனை சொன்னான். ராஜன், வாலி மதங்க3முனிவரின் சாபத்திற்கு ஆளாகி இருக்கிறான். இந்த ஆசிரம மண்டலத்தினுள் நுழைந்தால் அவன் தலை நூறாக வெடிக்கும் என்பது தான் அந்த சாபம். அதனால் அவன் இந்த ஆசிரம பக்கம் வர மாட்டான். இங்கு நாம் சங்கடமில்லாமல், நிம்மதியாக இருக்கலாம். அதனால் தான் ராஜ குமாரா, இந்த ருஸ்ய மூக மலையை அடைந்து நாங்கள் வாழ்ந்து வந்தோம். வாலி இங்கு வந்ததில்லை. இப்படித்தான் ராமா, நான் உலகின் மூலை முடுக்குகளை எல்லாம் அறிந்து கொண்டேன். உலகம் முழுவதும் சுற்றி விட்டு இந்த குகைக்குள் தஞ்சம் அடைந்து விட்டேன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், பூ4 மண்டல ப்ரமண கத2னம் என்ற நாற்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 47 (318) கபிசேனா ப்ரத்யாக3ம: (வானர படைகள் திரும்பி வருதல்)
சுக்ரீவன் கட்டளைப்படி வானரங்கள் விரைந்து சென்றன. வைதேஹியைத் தேட பலவாறாக முயற்சித்தன. குளங்கள், ஆறுகள், குகைகள், ஆகாயம், நகரங்கள், நதிகள் சூழ்ந்த கோட்டைகள், மலைகள், பாறைகள் என்று தேடின. சுக்ரீவன் சொன்னபடி சேனைத்தலைவர்கள், அந்த தேசங்களை நன்றாக அலசித் தேடினர். திரும்ப ஒரு மாதத்திற்குள் வந்து சேர வேண்டுமே என்ற கவலையில், இரவும் பகலும் நடந்து திரும்பி வந்தன. வெய்யிலோ, மழையோ, குளிரோ, எந்த பருவம் ஆனாலும் இரவுகளில் பழங்கள் நிறைந்த மரங்களில் இரவைக் கழித்து விட்டு, அந்த தேசத்தை பகல் பூராவும் தேடினர். மாதம் முடிந்தவுடன், ப்ரஸ்ரவன மலையைத் திரும்ப வந்து அடைந்தன. நிராசையுடன் வந்த அவர்கள் வானர ராஜனை சந்தித்து தங்கள் இயலாமையை தெரிவித்தனர். மகா பலவான் என்று சொல்லப் பட்ட வினதன், கிழக்குத் திசையில் வைதேஹியைத் தேடி, பயனின்றி வந்து சேர்ந்தான். வடக்கு நோக்கிச் சென்ற சதபலியும், தேடி அலுத்து, தன் படையுடன் திரும்பி விட்டான். மேற்குத் திசையில் சென்ற மாமனார், சுஷேணரும் மாதம் முடியும் தருவாயில் சுக்ரீவனிடம் வந்து விட்டார். ராமனுடன் அமர்ந்திருந்த சுக்ரீவனைக் கண்டு, நீ சொன்ன படியே மலைகள், வனங்கள், நகரங்கள், நதிகள், சமுத்திரக் கரை என்று தேடினோம். ஜனபதங்கள், குகைகள், எதையும் விடவில்லை. நீ சொன்ன இடங்கள் ஒன்று விடாமல், புதர்கள் முதல் தேடி விட்டோம். ஆகாய மார்கத்தில் உள்ள தேசங்கள், கோட்டைகள், பெரிய உருவம் கொண்ட ஜீவ ஜந்துக்கள் வாழும் இடங்கள் எல்லாம் தேடினோம். வானரேந்திரா, உதா3ர குணம் கொண்ட மகாத்மா அவன் தான் மைதிலியைக் காணப் போகிறான். அவள் சென்ற திக்கில் தேடச் சென்றிருக்கிறானே, அந்த வாயுசுதன் ஹனுமான் தான் அவன் என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், கபிசேனா ப்ரத்யாக3மனம் என்ற நாற்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 48 (319) கண்டு வனாதி விசய: (கண்டு முனிவரின் வனத்தில் தேடுதல்)
தாரன், அங்கதன் முதலானவரோடு சென்ற ஹனுமான், சுக்ரீவன் சொன்னபடியே விந்த்ய மலைக் குகைகளிலும், வனத்திலும், அடர்ந்த காடுகளிலும் பல யோஜனை தூரம் சென்று தேடினார்கள். பர்வதங்களின் சிகரங்கள், நதிகள், கோட்டைகள், ஆறுகள் போகும் பாதைகளில், பெரிய பெரிய மரங்கள் அடர்த்தியாக இருந்த காடுகளில், இலைகள் அடர்த்தியாக இருந்த இடங்களில் எல்லாம் தேடினார்கள் நாலா திசைகளிலும் தேடியும் மைதிலியைக் காணவில்லை. கிடைத்த இடங்களில் பழங்களையும், காய் கறி கிழங்குகளையும் சுவைத்து பசியாறி, ஆங்காங்கு தங்கி இளைப்பாறி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். ஒரு இடம் நுழையவே முடியாதபடி, குகைகளும் ஆழமான பள்ளங்களுடனும் இருந்தது. ஜலமோ, ஜன நடமாட்டமோ இன்றி சூன்யமாக இருப்பதைக் காண பயத்தில் மயிர் கூச்செரிந்தது. அந்த இடத்தைக் கடந்து வெளி வந்த சமயம், வானரர்கள் மிகவும் களைத்து விட்டிருந்தனர். இது போன்ற அரண்யங்களில் தேடித் தேடி பயனில்லாமல், மற்றொரு தேசத்தை தேடுவோம் என்று கிளம்பினார்கள். மரங்கள், பழங்களோ, பூ இலையோ இன்றி கட்டையாக நின்றன. நதிகளில் ஜலம் இல்லை. காய் கிழங்குகள் துர்லபமாக இருந்தது. ஒரே வறட்சி. மிருகங்களோ, மகிஷங்களோ, யானைகளோ, சார்தூ3லங்களோ, மற்றும் வன விலங்குகளோ, அவ்வளவு ஏன்? பக்ஷிகள் கூட தென்படவில்லை. செடி, கொடி, மரங்கள், புதர்கள், தானாக வளரும் புல் பூண்டு தாவரங்களே கூட தென்படவில்லை. இப்படி ஒரு வறண்ட இடமா என்று அதிசயித்தபடி கடந்து சென்றனர். இந்த இடம் பசுமையாக, தாவரங்களும், இலைகள் அடர்ந்த மரங்களுமாகத் தான் இருந்தது. மலர்ந்த தாமரைக் குளங்களும், வாசனை மிகுந்து ப்ரமரங்கள் சூழத் கண்ணுக்கு விருந்தாகத் தான் இருந்தது. இவையனைத்தும் காணாமல் போயின. கண்டு என்ற மகரிஷியின் தபோ வனம். இந்த மகரிஷி சத்யவாதி. கடினமான விரதங்களை மேற் கொண்டு தவம் செய்து வந்தார். அவருடைய மகன், பத்து வயது சிறுவன் திடுமென மறைந்தான். அந்த வருத்தத்தில், இந்த இடத்தை சபித்து விட்டார். நிழல் கொடுக்கும் மரங்களோ, மிருகங்களோ, பக்ஷிக3ணங்களோ இன்றி, உள்ளே நுழைந்து வெளி வருவதே கடினமாகி விட்டது. இந்த கானனத்தின் முடிவில், மலைகளிலும், குகைகளிலும், நதிகள் பிரவகித்த அடையாளமே மீதியாக இருந்த இடங்களிலும் தேடினார்கள். ஜனகாத்மஜாவைக் காணவில்லை. கவர்ந்து சென்ற ராவணனையும் காணவில்லை. சுக்ரீவனுக்கு பிரியமானதை செய்ய விரும்பியதால், இந்த இடத்தை வேகமாக கடந்தனர். அடுத்து, கொடிகளும், புதர்களுமாக மூடிக் கிடக்க, க்ரூரமாக ஒரு அசுரனைக் கண்டனர். இவனுக்கு யாரிடமும் பயம் இல்லை. தேவர்களுக்கும் அஞ்சாதவன் என்று சொல்லிக் கொண்டான். திடுமென எதிரில் மலை போல வந்து நின்ற அசுரனைப் பார்த்து வானரங்கள் திகைத்தன. நீங்கள் எல்லோரும் அழிந்தீர்கள், இதோ வந்தேன் என்று கத்தியபடி, முஷ்டியைத் தூக்கிக் கொண்டு அருகில் வந்தான். வாலி புத்திரன், அங்கதன் அவன் உருவத்தையும், கத்தலையும் கேட்டு, ராவணன் தான் இவன் என்று எண்ணி தன் புறங்கைகளால் ஓங்கி அடித்தான். மலை போல நின்றிருந்தவன் அந்த அடியைக் கூட தாங்காமல் பொத்தென்று விழுந்தான். கன்னத்தில் பட்ட அடியில், வாயிலிருந்து ரத்தம் பெருகியது. அவன் மூச்சு விடுவது நின்று விட்டது என்று வானரங்கள் தெரிந்து கொண்டு வானரங்கள் பயமின்றி அந்த இடம் முழுவதும் தேடினார்கள். குகைகள், மலைச் சாரல்களில் நன்றாகத் தேடி விட்டு, அடுத்த காட்டிற்குள் பிரவேசித்தனர். இங்கும் அலைந்து திரிந்து தேடி விட்டு உடல் களைத்தவர்களாக மனமும் வாட, ஏகாந்தமான ஒரு மரத்தடியில் அமர்ந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், கண்டு வனாதி விசய: என்ற நாற்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 49 (320) ரஜத பர்வத விசய: ( வெள்ளி மலையில் தேடுதல்)
அங்கதன் அவர்களைப் பார்த்து, மிகவும் களைத்து விட்டீர்கள், என்றான். தானும் களைத்து இருந்ததால் மெதுவாக பேசினான். மலைகள், நதிக்கரைகள், நுழைய முடியாத அடர்ந்த காடுகள், சமவெளிகள், மலைக் குகைகள் என்று எல்லா இடங்களிலும் தேடி விட்டோம். எங்குமே ஜானகியைக் காணவில்லை. அவளை கவர்ந்து கொண்டு போன ராவணனையும் காணவில்லை. தேவ கன்னிகை போன்ற ஜனகன் மகள், எங்கு இருக்கிறாளோ. நிறைய காலமும் விரயமாகி விட்டது. சுக்ரீவன் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். அதனால் திரும்பத் தேடுவோம். உடல் களைப்பை உதறி விட்டு, தூக்கத்தையும் அலுப்பையும் மறந்து திரும்ப எழுந்து வாருங்கள். தேடுவோம். ஜனகன் மகள் கிடைக்கும் வரை ஓய மாட்டோம். அனிர்வேதம் – தன்னம்பிக்கையை இழக்காமல் இருத்தல், இதுவும், பொறுமையும், மனதில் தோல்வியை ஏற்காத தன்மையும், தான் காரிய சித்திக்கு தேவையானவை என்று சொல்வார்கள். அதனால் தான் சொல்கிறேன். வானர வீரர்களே, இன்று மறு முறை இந்த வனம், துர்கம் -கோட்டை, நுழைய முடியாத மலையடிவாரங்கள் இவற்றில் தேடுவோம். உடல் வலியை பொருட்படுத்தாது இந்த வனத்தில் திரும்பத் தேடுவோம். நிச்சயம் நமது முயற்சிகளின் பலனை அடைவோம். நமது செயல்களில் பின்வாங்க இது நேரமல்ல. சுக்ரீவன் கோபக்காரன். கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். ராஜா அவன். அவனிடம் நாம் அஞ்சிதான் நடக்க வேண்டும். தவிர, ராம கோபத்துக்கும் ஆளாவோம். உங்கள் நன்மைக்காகத் தான் சொல்கிறேன். நமக்கு இடப்பட்ட கடமையை முடிக்காமல் திரும்புவதில் பலனில்லை. உங்களுக்குத் தோன்றியபடி செய்யுங்கள். வானரர்களே, உசிதம் என்றும் நம்மால் முடியும் என்றும் உங்களுக்குத் தோன்றினால், சொல்லுங்கள். நாம் ஒன்றாக இணைந்து செயல் படுவோம். உடனே க3ந்த4மாத3ன் எழுந்து அங்கதனுக்கு பதில் சொன்னான். பசியும் தாகமும் வாட்ட, வார்த்தை தெளிவில்லாமல் வர, சிரமப் பட்டு பேசினான். அங்கதா நீ சொன்னது சரியே. இது தான் நாம் செய்ய வேண்டியது. நமக்கு ஹிதமானது. திரும்பவும் தேடுவோம். மலைகளையும், குகைகளையும், சமவெளிகளையும் தேடி, சூன்யமான காடுகளிலும், சுக்ரீவன் நம்மிடம் சொன்ன இடம் ஒன்று விடாமல் தேடுவோம். எல்லோரும் வாருங்கள் எனவும், எல்லோருமாக எழுந்து மலைக் குகைகளில் தேடலாயினர். தென் திசையில் விந்த்ய மலைக் காடுகளில் தேடினர். ரஜத பர்வதம், சந்திரனுடைய பிரபை போன்று ஜொலித்தது. சிகரத்தில் ஏறி அதன் அடுத்த பக்கம் சமவெளியில் இறங்கினர். லோத்ர வனம் என்ற வனம் ரம்யமாக இருந்தது. சப்தபர்ண (ஒரு வகை மரம்) வனங்கள் வந்தன. சீதையைத் தேடிக் கொண்டே இதை கடந்தனர். எல்லோருமே மிக களைத்திருந்தனர். ராம மகிஷியை, அவனுடைய பிரியமான மனைவியை கண்டு பிடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வு தான் அவர்களை நடத்திச் சென்றது. மெதுவாக இறங்கி அந்த மலையடிவாரத்தில் சிரம பரிகாரம் செய்து கொள்ள அமர்ந்தனர். முஹுர்த்த நேரம் இளைப்பாறிய பிறகு திரும்பவும் விந்த்ய மலைகளில் தேடக் கிளம்பினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ரஜத பர்வத விசய: என்ற நாற்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 50 (321) ருக்ஷ பி3ல ப்ரவேச: (பள்ளத்தினுள் நுழைதல்)
விந்த்ய மலைகளின் குகைகளைப் பார்த்து, தாரனும் அங்கதனும், ஹனுமானுடன் விவாதித்தனர். இந்த குகைகள் அடர்ந்து இருட்டாக, சிங்க, சார்தூலங்கள் வாழ்வதாக காண்கின்றன. பாறைகளும் அருவிகளும் கூட நேராக இல்லை. நம் ப்ரஸ்ரவன மலை போல இல்லை. பேசிக் கொண்டே அந்த மலைத் தொடரின் தென் கோடிக்கு வந்து விட்டனர். வாயுசுதன், தான் முன்னால் போய் மலையை ஊன்றி கவனித்தான். ஒருவரை ஒருவர் விலகாமலும், அதே சமயம் தனித் தனியாகவும் தேட ஆரம்பித்தனர். க3ஜன், க3வாக்ஷன், க3வயன், சரப4ன், க3ந்த4மாத3னன், மைந்த3 த்3விவித3ர்கள், சுஷேணன், ஹனுமான், யுவராஜாவான அங்க3த3ன், தாரன், எல்லோருமே தங்கள் தேடலைத் தொடர்ந்து கொண்டிருந்த போதிலும், ஒருவருக்கொருவர் கூப்பிடு தூரத்திலேயே இருந்தனர். தொடர்ந்து இருந்த மலைச் சாரல்களில் தேடி தென் திசை சென்றனர், அகன்ற வாயுடன் ஒரு பள்ளத்தைக் கண்டனர். ருக்ஷ பி3லம் என்ற அதை தானவன் ஒருவன் காத்து வந்தான். எளிதில் உள்ளே நுழைய முடியாதபடி அமைந்திருந்தது. பசியும் தாகமும் வாட்ட களைத்தவர்களாக தண்ணீர் கிடைக்குமா என்று அந்த பள்ளத்தினுள் எட்டிப் பார்த்தனர். பல கொடிகளும் மரங்களும் பசுமையாகத் தென்பட்டன. க்ரௌஞ்ச பக்ஷிகளும், ஹம்ஸங்களும், சாரஸ பக்ஷிகளும், ஜலத்தில் நனைந்த சக்ரவாகங்களும் , உடலில் சிவந்த தாமரை மலரின் மகரந்தங்கள் ஒட்டிக் கொண்டிருக்க தாமரைக் குளம் இருப்பதை பறை சாற்றின. நல்ல நறு மணம் வீசியது. தங்கள் ஆவலை அடக்க மாட்டாமல், அந்த பள்ளத்தில் மேல் நின்றபடி, வானரங்கள் அதிசயத்தோடு அதனுள் நுழைய யோசித்தபடி நின்றன. மனதில் மகிழ்ச்சியும் உண்டாயிற்று. ஏதோ தைத்யேந்திரனுடைய மாளிகை போல எல்லா ஜீவ ராசிகளும் நிரம்பி, ஜீவ களையுடன் விளங்கியது. பயம் ஒரு புறம். ஆழம் தெரியாமல் காலை வைக்கத் தயக்கம். அதிக ஆழம் என்பது மட்டும் தெரிந்தது. எல்லோரும் ஹனுமானைப் பார்க்க, ஹனுமானும் அவர்களைப் பார்த்து உறுதியுடன் சொன்னான். நீங்கள் எல்லோரும் காடு, வனம் பற்றி அறிந்தவர்களே. தொடர்ச்சியாக மலைகளைப் பார்த்துக்கொண்டே தென் திசை வந்து விட்டோம். நாம் அனைவருமே களைத்து இருக்கிறோம். ஜானகியை காணவும் இல்லை. இதில் தென்படும் சக்ரவாக பக்ஷிகளும், ஹம்ஸங்களும், க்ரௌஞ்சங்களும், சாரஸமும் நீரில் நனைந்த உடலுடன் காணப்படுகின்றன. இவை இருக்கும் இடத்தில் ஜலாசயம், நீர் நிலை இருக்கும் என்பதும் உறுதி. நிச்சயம் குளமோ, ஏரியோ அருகில் இருக்கிறது,. இந்த பள்ளத்தின் கரையில், மரங்களும் பசுமையாகத் தெரிகின்றன. தைரியமாக போவோம், எனவும் எல்லாமாக உள்ளே நுழையத் தயாராகி விட்டன. சந்திரனோ, சூரியனோ ஒளி தர இல்லாத கும்மிருட்டு. திடுமென சிங்கத்தின் அலறல் கேட்கவும் நடுங்கி ரோமங்கள் குத்திட்டு நின்றன. மேலும் மாமிச பக்ஷிகளான மிருகங்கள் இருக்கக் கூடும் என்று தெரிந்தது. கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. அவர்கள் பராக்ரமம் எதுவும் பயன் தரும் நிலையிலும் இல்லை. இருட்டினுள் காற்று நுழைவது போல முன்னேறி நடந்தனர். வேகமாக பள்ளத்தினுள் இறங்கி விட்டார்கள். அடுத்து என்ன என்று தெரியாமலேயே நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஒருவரையொருவர் அணைத்தபடி எச்சரிக்கையோடு நடந்தனர். யோஜனை தூரம் நடந்தபின், தாகம், படபடப்பு என்ன செய்கிறோம், எங்கு போகிறோம் என்பது எதுவும் தெரியாமல், தாக சாந்திக்கு வழி கிடைக்கும் என்ற ஒரே நம்பிக்கையோடு, ஒருவரையொருவர் பிணைத்த கைகளை விடாமல், முன்னெச்சரிக்கையோடு நடந்தனர். ஒரு நிலையில் உயிர் வாழும் ஆசையே கூட இற்றுப் போயிற்று. இறங்கியாயிற்று. உடலும், உள்ளமும் துவண்டு போக, முடுக்கி விட்ட இயந்திரம் போல நடந்து கொண்டேயிருந்தனர். முடிவில்லாத பயணமாகத் தோன்றியது. திடுமென, இருட்டு விலக, வெளிச்சம் தெரிய சௌம்யமான வனத்தில் இருப்பதை உணர்ந்தார்கள். மரங்கள் ஒளி வீசக் கண்டனர். சால, தால மரங்கள் புன்னாக3, ககுப4 என்று பரிச்சயமான மரங்கள், வகுள, த4வ, சம்பக, நாக3 வ்ருக்ஷங்கள், பூக்கள் மலர்ந்து தெரிய, கர்ணிகார மரங்கள், கொத்து கொத்தாக சிவந்த மலர்கள், இளம் துளிர்கள், ரத்த சிவப்பாகத் தெரிந்தன. ஆபீடம் எனும் கொடிகள், ஆபரணங்கள் அணிந்து அலங்காரமாக நிற்பது போலவும், மரங்களின் உடல் பாகம் பசும் பொன்னால் ஆனது போலவும் காட்சி தந்தன. தாமரைக் குளங்களில், பறவைகள் முற்றுகையிட்டிருந்தன. தாமரை இலைகள், நீல வைமூடுரியம் போல பள பளவென்று இருந்தது. ஏராளமான தாமரை மலர்கள். பல வண்ணங்களில் இளம் சூரியனின் வண்ணத்திலும், பொன் போன்ற மஞ்சள் நிறத்திலும், பல வர்ண மீன்களும், பெரிய பெரிய ஆமைகளும், தாமரைக் குளங்கள் கண்ணுக்கு விருந்தாக இருந்தன. வீடுகள் பல மாளிகைகளாக இருந்தன. பொன் ஓடு வேய்ந்த விமானங்களும், வெள்ளித் தகடுகள் இழைத்தவைகளாகவும் இருந்தன. தாழ்ப்பாள்கள் ஒளியை சிதற, திறந்த சாளரங்களுடன், உயர்ந்த மாடங்கள், கோபுரங்களுடன் செல்வ செழிப்பை பறைச் சாற்றிக் கொண்டு நின்றன. மரங்களில் பழங்கள், பவழ மணி நிறத்தில் தென் பட்டன. பொன் வண்டுகள் பறக்க, மதுவைச் சிந்தும் மலர்கள், மணிகள் தங்கத்தால் கோர்க்கப் பெற்று சித்திர வேலைகள் செய்யப் பட்டிருந்தன. உயர்ந்த ஆசனங்கள், படுக்கைகள் தென் பட்டன. விலை மதிப்பு மிகுந்த வாகனங்கள், வெள்ளி, தங்கம், கண்ணாடி பாத்திரங்கள், திவ்யமான அகரு, சந்தனம் போன்ற வாசனைப் பொருட்கள், சுத்தமாக, உடனே சாப்பிடக் கூடிய நிலையில் காய்கறி, கிழங்குகளும், பழங்களும், பான வகைகளும், இனிய பழ ரஸங்கள், பானங்கள், குடி நீர் என்று இருந்தன. அழகிய ஆடைகள் குவிந்து கிடந்தன. கம்பளிகளும், மான் தோல்களும், குவிந்து கிடந்தன. சில இடங்களில் விரிக்கப் பட்டும், சில இடங்களில் மடித்தும் வைக்கப் பட்டிருந்தன. மேலும் செல்லச் செல்ல இவ்வாறான அரும் பொருட்கள் கணக்கில்லாமல் குவிந்து கிடப்பதைக் கண்டனர். சற்று தூரத்தில் சில பெண்மணிகள் நடமாடுவதைக் கண்டனர். ஒரு பெண்மணி மரவுரி தரித்து தாபஸியாக இருப்பதைக் கண்டு அவளிடம் சென்று தயங்கி நின்றனர். அவள் தவ வலிமை மிக்கவள் என்பது பார்த்த உடனேயே தெரிந்தது. அதிசயம் அடைந்த வானரங்கள் செய்வதறியாது நின்றன. ஹனுமான் முன் வந்து தாங்கள் யார்? இது யாருடைய இடம்? என்று வினவினான். வயது முதிர்ந்த அந்த மூதாட்டியை பணிவுடன் வணங்கி, செல்வ செழிப்பை பறை சாற்றும் வண்ணம், பொன்னும் மணியுமாக விளங்கும் இந்த குகை வீடு யாருடையது? தாங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள் என்றும் வினவினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ருக்ஷ பி3ல ப்ரவேசம் என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 51 (322) ஸ்வயம்ப்ரபா4தித்யம் (ஸ்வயம்ப்ரபா விருந்து உபசாரம் செய்தல்)
திரும்பவும் மான் தோலை உடுத்தியிருந்த (க்ருஷ்ணாஜினாம்பரம்- க்ருஷ்ணா என்ற வகை மான் அதனுடைய தோலால் ஆன உடை) அந்த மூதாட்டியிடம் ஹனுமான் விவரமாக வினவினான். தர்மசாரிணியாக, தவக் கோலத்தில் இருந்தவளிடம் பணிவாக சொன்னான். யதேச்சையாக இந்த பள்ளத்தினுள் நுழைந்து விட்டோம். இருட்டு என்பதைக் கூட எங்கள் பசி தாகத்தில் அலைந்து திரிந்த களைப்பில் நாங்கள் உணரவில்லை. எல்லோருமே களைத்து இருக்கிறோம். இந்த பெரிய அரண்யத்தில் இப்படியொரு பள்ளம், இதனுள் நீர் வாழ் ஜந்துக்கள், மற்ற ஜீவன்கள் நடமாடுவதைப் பார்த்து குடிக்க நீர் கிடைக்கும் என்ற ஆசையில் நுழைந்து விட்டோம். இங்குள்ள மரங்கள் செழிப்பாக இருப்பதைப் பார்த்தோம், புது இலைகள் இளம் சூரியனின் நிறத்தில் காணப்பட்டன. அதனால் இங்கு சூரிய வெளிச்சமும், தண்ணீர் வசதியும் இருப்பது உறுதியாயிற்று. பழங்கள், காய்கறிகள் சுத்தமாக, உடனடியாக சாப்பிடக் கூடிய நிலையில் வைக்கப் பட்டிருக்கின்றன. மாளிகைகளும் அழகாக இருக்கின்றன. நாவல் மரங்கள், பூத்துக் குலுங்கும் மரங்கள், வாசனை மிகுந்த நறு மலர்கள், இவை யாருடைய தேஜஸால் செழித்து வளருகின்றன. விமலமான ஜலம். அதில் பொன் நிற பத்மங்கள். பொன் வர்ண மீன்கள், ஆமைகளுடன் சேர்ந்து விளையாடுவதைக் காண முடிகிறது. இது யாருடைய தவ வலிமை. எங்களுக்குத் தெரியாத இந்த விவரங்களை நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும். இதைக் கேட்டு தபஸ்வியான அந்த மூதாட்டி பதில் சொன்னாள். தா3னவர்களில் ஒருவர் மயன் என்று இருந்தார். நல்ல தேஜஸ்வி. மாயாவி. தன் மாயையால் இந்த குகைக்குள் பொன் மயமாக இவற்றை நிறுவியிருக்கிறார். விஸ்வகர்மாவைத் தெரிந்திருக்கும். அவரும் தானவர்களுள் ஒருவரே. பல வருஷங்கள் தவம் செய்து, இந்த மாளிகைகளை உருவாக்கினார். ப்ரும்மாவை குறித்து தவம் செய்து சுக்ராச்சாரியாரிடம் பெரும் செல்வத்தை பெற்றார். இந்த வனத்தில் வசித்த பொழுது ஒரு அப்ஸர ஸ்த்ரீயான ஹேமா என்பவளிடம் ஈடுபாடு கொண்டார். இதை பொறுக்காத இந்திரன் கற்களால் அடித்து அவரைக் கொன்று விட்டான். பின் ப்ரும்மா இந்த வனத்தை ஹேமாவிடம் கொடுத்தார். சாஸ்வதமான பொருட்கள், தேவைகள் அனைத்தும் எப்பொழுதும் இருக்கும்படி, இந்த ஹிரண்மயமான மாளிகையையும் கொடுத்தார். நான் மேரு சவர்ணி என்ற ரிஷியின் புதல்வி. என்னுடைய பிரிய சகி ஹேமா. இந்த ப4வனத்தை நான் பாதுகாத்து வருகிறேன். என் பெயர் ஸ்வயம்ப்ரபா. அவள் நடனத்திலும் கானத்திலும் வல்லவள். அவள் எனக்கு வரம் கொடுத்தாள். இதை காவல் காத்து வருகிறேன். அது சரி, நீங்கள் யார்? இந்தக் காட்டில் ஏன் அலைந்து திரிகிறீர்கள். இந்த நுழைய முடியாத வனமும், இந்த பிலமும் (பள்ளமும்) எப்படி உங்கள் கண்ணில் பட்டன. இதோ, புத்தம் புதிய பழங்கள் இவை. காய், கிழங்கு வகைகள். தேவையான வரை புசித்து மகிழுங்கள், பசியாறுங்கள். இதோ தாகத்தை தீர்க்க பானங்கள். தாக சாந்தி செய்து கொள்ளுங்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஸ்வயம்ப்ரபா4தித்யம் என்ற ஐம்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 52 (323) பி3ல ப்ரவேச காரண கத2னம் (பள்ளத்தினுள் நுழைந்த காரணத்தைச் சொல்லுதல்)
சிரம பரிகாரம் செய்து கொண்டு வானரங்கள் தங்கள் இயல்பான உற்சாகத்தை அடைந்ததும், தாபஸி, திரும்பவும் அவர்களிடம் பரிவோடு பேசினாள். வானரங்களே, பசி அடங்கியதா? உடல் வலியும் அலுப்பும் நீங்கியதா? பழங்கள் சுவையாக இருந்தனவா? இப்பொழுது சொல்லுங்கள், என்னிடம் சொல்லலாம் அல்லவா? எனவும், ஹனுமான் முன் வந்து உள்ளது உள்ளபடி சொன்னான். எல்லா உலகுக்கும் அரசன், வருணனுக்கு சமமான சக்தியும் பலமும் உடையவன், தாசரதி, தசரத ராஜ குமாரன், தண்டகாவனம் வந்தான். லக்ஷ்மணன் என்ற அவன் சகோதரனும், மனைவி வைதேஹியும் உடன் வந்தனர். அவனுடைய மனைவியை ஜனஸ்தானத்திலிருந்து ராவணன் கடத்திச் சென்று விட்டான். வீரனான எங்கள் சுக்ரீவ ராஜா அவனுக்கு நண்பன். வானர ராஜாவின் கட்டளைப்படி நாங்கள் வந்தோம். ராவணன் என்ற அந்த ராக்ஷஸனையும், சீதா என்ற வைதேஹியையும் தேடப் பணித்தான். தென் திசை நோக்கி நாங்கள் வந்தோம். பல இடங்களிலும் தேடி பசியினால் களைத்து, மரத்தடியில் அமர்ந்தோம். எல்லோரும் முகம் வாடி, நிறம் வெளிறி, கவலையில் மூழ்கி சக்தியற்று அமர்ந்திருந்தோம். அந்த சமயம் இந்த பி3லம் ( பள்ளம்) கண்ணில் பட்டது. இருட்டாக இருந்த போதிலும், கொடிகளும் மரங்களும் இருப்பதாகத் தெரிந்தது. நனைந்த உடலுடன் ஹம்ஸங்கள் பறந்தன. குரரங்கள், ஸாரஸங்கள் இவைகளும் நனைந்த உடலுடன் காணப்பட்டன. இந்த பறவைகளே நீர் வாழ்வன. அதனாலும் அருகில் நீர் நிலை இருப்பது உறுதியாயிற்று. உள்ளே சென்று தான் பார்ப்போமே என்று நான் சொல்லவும், அப்படியே ஏற்றுக்கொண்டனர். அவர்களும் நான் சொன்னபடியே தாக சாந்திக்கு வழி இருக்கும் என்று நம்பினார்கள். ஒருவரோடு ஒருவர் கை கோத்தபடி, எல்லோருமாக மெதுவாக உள்ளே நுழைந்தோம். வேறு எந்த விதமான உத்தேசமும் எங்களுக்கு இல்லை. பசியினாலும், உடல் களைப்பினாலும் யதேச்சையாக உள்ளே வந்தவர்கள், உங்களைப் பார்த்து நின்றோம். தாங்கள் செய்த உபசாரத்தால், பழங்களும், காய்கறி கிழங்குகளும் எங்கள் பசியை போக்கி, புத்துணர்வைத் தந்தன. சரியான சமயத்தில், பசியினால் எங்கள் உயிர் பிரியாமல் காப்பாற்றினீர்கள். நாங்கள் பிரதி உபகாரம் செய்ய வேண்டும். சொல்லுங்கள், வானரங்கள் நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? இதைக் கேட்டு ஸ்வயம்ப்ரபா, உங்களை சந்தித்ததே சந்தோஷம். இங்கு எனக்கு என்ன தேவை, வேலை இருக்கிறது. சந்தோஷமாக இருங்கள், என்றாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், பி3ல ப்ரவேச காரண கதனம் என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 53 (324) அங்கதாதி நிர்வேத: (அங்கதன் முதலானோர் கவலை)
தாபஸியான ஸ்வயம்ப்ரபா இவ்வாறு மென்மையாக சொல்லவும், ஹனுமான் அவளைப் பார்த்து தர்மசாரிணி, நாங்கள் உங்களை தஞ்சம் அடைகிறோம். சுக்ரீவன் எங்களுக்கு கொடுத்த கால கெடு முடியுமுன் இந்த பள்ளத்திலிருந்து வெளியேற வகை செய்யுங்கள் என்றான். பயங்கரமான இந்த பள்ளத்தில் திக்கு திசை தெரியவில்லை. எங்கள் எல்லோருக்கும் சுக்ரீவனிடம் பயம். கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். அவன் கட்டளையை மீறினால், உயிர் போனதாகக் கொள்வோம். தர்மசாரிணீ, எங்களுக்கு கொடுக்கப் பட்ட காரியமும் மிகப் பெரியது. தாபஸி பதில் சொன்னாள். இந்த பிலத்தில் நுழைந்து விட்டால், உயிருடன் தப்புவது இயலாத காரியம். என் தவ வலிமையாலும், நியமங்களை அனுசரித்து பெற்ற சித்திகளாலும் உங்கள் அனைவரையுமே வெளியேற்றுகிறேன். எல்லோரும் கண்களை மூடிக் கொள்ளுங்கள். கண்களைத் திறந்து கொண்டு வெளியே போக முடியாது. உடனே வானரங்கள் தங்கள் மென்மையான கைகளால் கண்களைப் பொத்தி மூடிக் கொண்டன. சீக்கிரம் வெளியேற வேண்டும் என்ற ஆசையால், முகத்தையே கைகளால் மூடிக் கொண்டன. அடுத்த நிமிஷம் தாங்கள் பள்ளத்தின் வெளியே இருப்பதை உணர்ந்தார்கள். வெளியே நின்ற வானரங்களைப் பார்த்து ஸ்வயம்ப்ரபா4, ஆஸ்வாசப்படுத்தி, அந்த இடத்தைப் பற்றி விளக்கினாள். இது தான் விந்த்ய மலை. பலவிதமான மரங்கள் அடர்ந்து தெரிகின்றன. அதோ ப்ரஸ்ரவன மலை. அதோ பாருங்கள், மகா சமுத்திரம். சௌகர்யமாக போய் வாருங்கள். நான் கிளம்புகிறேன் என்று சொல்லி, திரும்ப பிலத்தினுள் சென்று விட்டாள். இந்த வானரங்கள் எதிரில் அலை மோதும் சமுத்திரத்தைக் கண்டனர். நீர் வாழ் ஜந்துக்கள், அலைகளோடு மேலே சென்று, திரும்ப அதனுடனேயே நீரில் மூழ்குவதைக் கண்டனர். ஆரவாரமான இந்த ஓசையைக் கேட்டு, இடி ஓசையோ என்று மயங்கின. மாயாவியான மயன் மாளிகையில் இருந்த பொழுதே, ராஜா சுக்ரீவன் கொடுத்த கால வரையறை முடிந்து விட்டது போலும் என்று விந்த்ய மலையடிவாரத்தில் மலர்ந்து கிடந்த மரங்களின் அடியில் அமர்ந்து தங்களுக்குள் மனம் விட்டுப் பேசிக் கொண்டன. நூற்றுக் கணக்கான கொடிகளில் மலர்கள் பூத்து குலுங்கின. வாசந்திகா மரத்தின் புஷ்பங்களைப் பார்த்ததும் அலறின. வசந்த காலம் வந்து விட்டது என்பதன் அறிகுறி வாசந்திகா மரத்தின் புஷ்பங்கள். வசந்த காலம் வந்து விட்டது என்று சொல்லிக் கொண்டன. காலம் ஓடி விட்டது. நாம் தான் கவனம் இன்றி இருந்து விட்டோம், என்பது உரைக்கவும், செயலிழந்து தரையில் அமர்ந்தன. வயது முதிர்ந்த வானரங்களும், விவரம் அறிந்தவர்களுமான சிலர், மதுரமாக பேசி, அவர்களுக்கு சமாதானம் சொன்னார்கள். தாங்கள் அனுமானித்தபடி, சுக்ரீவன் சொன்ன கால கெடு முடிந்து விட்டதை உறுதிப் படுத்தினார்கள். யுவராஜன், அங்கதன் நாம் வானர ராஜனின் கட்டளைப் படி, ஊரை விட்டு வெளியே வந்து தேட ஆரம்பித்து ஒரு மாதம் ஆனதை உணரவில்லை. ஆஸ்வயுஜ மாதத்தில் புறப்பட்டோம். கால கணக்கு வைத்துக் கொள்ள தவறி விட்டோம். இப்பொழுது என்ன செய்யலாம்? உங்களில் பலர் நீதி முறைகளை அறிந்தவர்கள். தலைவனின் நன்மையில் நாட்டமுடையவர்கள். எந்த காரியம் ஆனாலும், தீர்காலோசனையுடன் செய்யக் கூடியவர்கள். உங்களில் சிலரின் புகழ் திக்குகளில் எல்லாம் பரவியிருப்பதும் தெரிந்ததே. சுக்ரீவன் சொன்னதன் பேரில் என் தலைமையில் புறப்பட்டு வந்துள்ளீர்கள். நாம் மேற் கொண்ட கடமையை முடிக்காமல் திரும்பப் போய் பயனில்லை. அதை விட உயிரை விடுவதே மேல். வானர ராஜனின் ஆணையை மீறியவன் எவன் சுகமாக இருந்திருக்கிறான்? சுக்ரீவன் தானாக நியமித்த கால வரையறை அதை நாம் நினைவில் கொள்ளாமல் காலந்தாழ்ந்து போனால், சுபாவமாகவே கடுமையான சுக்ரீவன், இப்பொழுது அரசனாக, நம்மை தண்டிக்காமல் விட மாட்டான். தவறு செய்தவர்களை மன்னிக்கவே மாட்டான். அதை விட ப்ராயோபவேசம் (உண்ணாவிரதம் இருந்து மடிதல்) செய்வதே சிறந்தது. அதுவும், ராம காரியத்தில், சீதையைத் தேட என்ற அவன் முயற்சி பலனளிக்காமல் போனால் ஆத்திரமே அடைவான். அதைவிட மேல், நாம் அவன் எதிரிலேயே போகாமல், இங்கேயே உயிரை விடுவோம். மனைவி, குழந்தைகளை, செல்வம், வீடு வாசல்களைத் துறந்து, இந்த காடு மலைகளைச் சுற்றித் திரிந்தோம். இதில் நாம் அனுபவித்த கஷ்டங்களை அவன் செவி கொடுத்து கேட்க மாட்டான். திரும்ப போனால் துன்புறுத்துவான். வதம் தான் முடிவில். அதை விட இங்கேயே இருந்து மடிவோம். என்னை சுக்ரீவன் தானாக யுவ ராஜாவாக முடி சூட்டவில்லை. மகானான ராமனால் யுவ ராஜாவாக நியமிக்கப் பட்டேன். என்னிடம் சுக்ரீவனுக்கு நெடு நாளைய பகை உண்டு. இந்த சமயம் நான் போனால், இதே காரணமாக என்னை கடுமையாக தண்டிக்கவே முனைவான். என்னால் என் நண்பர்களான உங்களுக்கும் கஷ்டம். நான் இந்த புண்யமான சாகர கரையில் உயிரை விடுகிறேன். நீங்கள் திரும்பிப் போங்கள். இதைக் கேட்டு மற்ற வானரங்கள் மனம் நெகிழ்ந்தன. சுக்ரீவன் சுபாவமாகவே கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன். தற்சமயம் ராகவனும் தன் பிரிய மனைவியை இழந்த துக்கத்தில் அவள் நினைவாகவே இருக்கிறான். நம் நிலைமையின் தீவிரத்தை அவர்கள் உணர மாட்டார்கள். காலமும் கடந்து, கடமையையும் முடிக்காமல் நாம் போய் நின்றால், நமக்கு என்ன வரவேற்பு இருக்கும்? ராகவனுக்கு பிரியமான காரியத்தை, நம்மைக் கொண்டு முடித்து தர சுக்ரீவன் விரும்பினான். நாம் செய்து முடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருப்பவன், எதிர்மறையாக நாம் சொல்லும் செய்தி, அவனுக்கு பிடிக்காமல் போவதில் ஆச்சர்யமில்லை. ராகவனுக்காகவே நம்மை கொல்வான். தவறு செய்தவன், யஜமானனின் அருகில் செல்லவே கூடாது. நாம் அனைவருமே சுக்ரீவனின் பிரதான படையைச் சேர்ந்தவர்கள். இங்கேயே தேடிக் கொண்டிருப்போம். சீதை கிடைத்தால் திரும்பிப் போவோம். இல்லையெனில் யமராஜ்யம் போவோம், எனவும் மற்ற வானரங்கள் ஆமோதித்தன. வானரங்களின் மனதில் பயமே நிரம்பியிருப்பதைக் கண்டு தாரன் ஒரு உபாயம் சொன்னான். கவலை வேண்டாம். திரும்ப இந்த பிலத்தினுள் சென்று வசிப்போம். மாயா ஜாலங்கள் நிறைந்தது. யாரும் இதை எளிதில் கண்டு கொள்ளவோ, உள்ளே நுழையவோ முடியாது. நமக்கு உணவுக்கும் குறைவில்லை. ஏராளமான பழ மரங்களும், நீர் நிலைகளும் இருக்கின்றன. இந்திரனே வந்தாலும், ராகவனே தேடிக் கொண்டு வந்தாலும், வானர ராஜன் தேடிக் கொண்டு வந்தாலும் கண்டு பிடிக்க முடியாது. அதனால் பயம் இல்லை. மற்ற வானரங்கள் இதைக் கேட்டு ஆரவாரம் செய்தன. அவர்களுக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது. நமக்கும் துன்பம் இல்லாமல் இது நல்ல வழியே என்றன,
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், அங்கதாதி நிர்வேதோ என்ற ஐம்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 54 (325) ஹனுமத்பேதனம் (ஹனுமான் அறிவுரை)
தாரன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஹனுமான், மனதினுள் அங்கதனை சிலாகித்துக் கொண்டிருந்தான். யுவராஜாவாக ஆக தகுதி உள்ளவன் தான், இந்த வாலி மகன். ராஜ்யத்தையே நிர்வகிக்கும் புத்தி கூர்மையும், இவனிடம் இருக்கிறது. சுக்ல பக்ஷ சந்திரனின் கலை போன்று நல்ல வளரும் அறிகுறி இந்த இளம் வயதில் இந்த அங்கதனிடம் காணப்படுகின்றன. தந்தைக்கு சமமான பலமும், ப்ருஹஸ்பதி போல புத்தி கூர்மையும், தாரனை பணிவிடை செய்து மகிழ்விப்பதில் இந்திரன் சுக்ராசாரியருக்கு பணிவிடை செய்தது போல தெரிகிறது. சாஸ்திரங்கள் அறிந்தவன். தன் தலைவனுடைய கட்டளை எப்படிப் பட்டது, எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை தெளிவாக அறிந்திருக்கிறான். தற்சமயம் களைத்து இருக்கிறான். இவன் உற்சாகத்தை திரும்ப பெறச் செய்ய வேண்டும் என்று ஹனுமான் பேச ஆரம்பித்தான். நான்கு வித உபாயங்களில் மூன்றாவதான பேதம் என்பதிலிருந்து ஆரம்பித்தான். ஆளுக்கு ஆள் உபாயம் சொல்லி குழம்பிக் கிடந்த அங்கதனை மேலும் கலங்கச் செய்தான். கோபத்துடன் பேசுவது போல, தன் எண்ணத்தை சொன்னான். அங்கதா, என்ன பேச்சு பேசுகிறாய். உன் தந்தை வகித்த ராஜ்யம், அதை வாலியைப் போலவே நிர்வகிக்க வேண்டியவன் பேசுகிற பேச்சா இது. அங்கதா ஜாம்ப3வான், நீலன், சுஹோத்ரன், நான், இன்னும் எங்கள் போன்ற பலரை நீ சுக்ரீவனிடமிருந்து பிரிக்க முடியாது. சாம, தா3னாதி நால் வகைகளிலும் முடியாது. இந்த ஸ்திர புத்தி இல்லாத வானரங்கள், புத்ரர்கள், உற்றார் உறவினர், செல்வம், வீடு இவற்றை விட்டு உன்னுடன் வரும் என்றா நினைக்கிறாய். தவிர அந்த பி3லம் (பள்ளம்) ப்ரும்மாவினுடையது என்று சொல்லக் கேட்டோம். இதை லக்ஷ்மணன் பாணங்கள் அல்பமாக, அனாயாசமாக பிளந்து விடும். முன்பு இந்திரன், அசனி என்ற ஆயுதத்தை போட்டு அடித்தது ஒன்றுமே இல்லை எனும்படி, லக்ஷ்மணனுடைய கூர்மையான பாணங்கள் வந்து விழும். மலைகளைக் கூட பிளக்கும்படியான வஜ்ரம் போன்ற ஆயுதங்களால் லக்ஷ்மணன் அடிப்பான். நீ சொல்வது போல ப்ராயோபவேசம் செய்ய உன்னுடன் அமரும் வானரங்கள் திடுமென, புத்ர தா3ராதிகளை நினைத்துக் கொண்டு ஓடி விடுவார்கள். அல்லது பசி வந்தால், உடல் வலித்தால், இவை தாங்க மாட்டா. அப்பொழுது என்ன ஆகும்? உன் நலனை நாடும் நண்பர்களும் உடன் இருக்க மாட்டார்கள். பந்துக்களும் உடன் வர இருக்க மாட்டார்கள். உன் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். லக்ஷ்மண பாணங்கள், உன்னை எதுவும் செய்யாது, என்பதும் இல்லை. எதிர்த்து நீ நின்றால், லக்ஷ்மண பாணங்கள் பட்டு வீழ்வாய். எங்களுடன் சேர்ந்து நீயும் வந்து நின்றால் சுக்ரீவன் தண்டிக்க மாட்டான். முன் போலவே நீ யுவ ராஜாவாகத் தான் இருப்பாய். உன் தந்தை வழி உறவினன், சிறிய தந்தை, உன்னிடத்தில் அன்புடையவன் தான். சொன்ன சொல் மாற மாட்டான். உன் தாயிடம் நன்றிக் கடன் பட்டவன். அதனாலும் உன்னைக் கொல்ல மாட்டான். அதனால் அங்கதா, திரும்பி போவதில் தப்பில்லை வா என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமத் பேதனம் என்ற ஐம்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 55 (326) ப்ராயோபவேச: (வடக்கிருத்தல்)
ஹனுமானின் பேச்சைக் கேட்டு அங்கதன் குழம்பினான். தன் தலைவனிடம் மதிப்பு உடையவன் அதனால் தான் இப்படி பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டு பதில் சொன்னான். தன் அபிப்பிராயத்தைச் சொன்னான். ஸ்திரமான போக்கோ, நல்ல குணமோ, மனதில் தெளிவோ, நியாய உணர்வோ, கெடுதல் நினைக்காமல் இருக்கும் குணமோ, நேர்மையோ, விக்ரமமோ, தர்மமோ- இதில் எந்த குணமும் சுக்ரீவனிடத்தில் இல்லை. தமையனின் மனைவி தாய்க்கு சமமானவள். தமையன் உயிருடன் இருக்கும் பொழுதே அவளை தன் மனைவியாக்கிக் கொண்டவன். தர்மம் அவனுக்கு எங்கே தெரியும்? பள்ளத்தின் வாசலில் காவல் இரு என்று உள்ளே யுத்தம் செய்ய போனான். தமையன் உள்ளே சென்ற வழியை பாறை வைத்து மூடி விட்டு இவன் வந்து விட்டான். தமையன் என்ன ஆனான் என்று சிந்திக்கவில்லை. சத்யம் செய்து ராமன் கை பிடித்து சக்யம், நட்பு செய்து கொண்டு பின் மறந்தே போனான். இவன் என்ன சத்யவாதி. லக்ஷ்மணனிடம் உள்ள பயத்தால், தர்மம் என்று எண்ணியல்ல, எங்களை சீதையைத் தேட அனுப்பியிருக்கிறான். இதில் தர்மம் எங்கு வந்தது. பாபி, செய் நன்றி மறந்தவன், மறதியும், ஸ்திரமில்லாத புத்தியும் உள்ளவன். இவனை யார் நம்புவார்கள். நல்ல குலத்தில் பிறந்தவன், வாழ நினைப்பவன், இவனை நம்பி ஏன் இறங்கப் போகிறான். ஒரு போதும் இல்லை. ராஜ்யத்தில் குணம் உள்ளவனோ, நிர்குணனோ, தன் புத்திரர்களைத் தான் நியமிப்பார்கள். சுக்ரீவனுக்கு நான் சத்ரு குலத்தவன். வாலி மகன். என்னை ஏன் நீடித்து இருக்க விடுவான். உயிரோடு விட்டு வைத்திருப்பானா என்பதே சந்தேகம். அவன் கட்டளையை நிறைவேற்றாமல், தவறு செய்தவன் நான். சக்தியற்றவன். திரும்ப கிஷ்கிந்தை வந்தால் அனாதை போல நிற்பேன். விலங்கு பூட்டி சிறையில் வைத்தாலும் வைப்பான். சுக்ரீவன் க்ரூரன், வறட்டு பிடிவாதக் காரன். தயவு என்பதே இல்லாத கொடூரமான அரசன். நாட்டை விட்டு துரத்தினாலும் துரத்துவான். இப்படி விலங்குடன் இருப்பதைக் காட்டிலும், நாடு கடத்தப் படுவதைக் காட்டிலும், நான் ப்ராயோபவேசம் செய்து உயிரை விடுவது மேல். எனக்கு அனுமதி தாருங்கள், மற்ற வானரங்கள் அனைவரும் ஊர் திரும்பிச் செல்லுங்கள். நான் கிஷ்கிந்தை திரும்பப் போவதில்லை. இது நிச்சயம். இங்கேயே கிடந்து உயிர் விடுவது தான் என் முடிவு. என் வணக்கங்களைச் சொல்லி ராம லக்ஷ்மணர்களிடம் குசலம் விசாரியுங்கள். என் வணக்கங்களைத் தெரிவித்து ராஜாவிடம் குசலம் விசாரியுங்கள். வானர ராஜன், என் தந்தை வழி சிற்றப்பனிடம் நலம் விசாரித்ததாகச் சொல்லுங்கள். என் தாய், ருமா இவர்களையும் நலம் விசாரியுங்கள். என் தாயான தாரையை சமாதானம் செய்யுங்கள். இயல்பாகவே, புத்ர வாத்ஸல்யம் மிகுந்தவள். அவள் என் பிரிவைத் தாங்க மாட்டாள். என்னிடம் அக்கறை உள்ளவள், தபஸ்வினி. நான் இங்கு மறைந்தேன் என்று காதில் விழுந்தாலே உயிரை விட்டு விடுவாள். மற்றும் பெரியவர்கள், எல்லோரையும் வணங்கி, என் சார்பில் நலம் விசாரியுங்கள். இதன் பின் அங்கதன், பூமியில் தர்ப்பை புல்லை விரித்து அமர்ந்து விட்டான். இதைக் கண்ட வானரங்கள் கண்களில் நீர் மல்க, நின்றனர். சுக்ரீவனைத் திட்டின. வாலியைப் புகழ்ந்தன. அங்கதனை சுற்றி நின்று கொண்டு, தாங்களும் ப்ராயோபவேசம் செய்யத் தயாராயின. அங்கதன் சொன்னதன் உட்பொருள் இப்பொழுது தான் உரைத்தது போலும். எல்லோரும் தண்ணீரைத் தொட்டு கிழக்கு முகமாக அமர்ந்தன. சமுத்திரக் கரையை அடைந்து தர்ப்பையை விரித்து, அதன் தென் திசையில் கோடியில் அமர்ந்தன. (வடக்கிருத்தல்- வடக்கு முகமாக இருந்து உயிரை விடுதல்) நாங்களும் அங்கதனுடன் மடிவோம் என்று தீர்மானித்த வானரங்கள், ராமருடைய வனவாசமும், தசரதனின் மரணமும், ஜடாயு ஜனஸ்தானத்தில் யுத்தத்தில் வதம் செய்யப் பட்டதும், ராம கோபமும், சேர்ந்து இந்த வானரங்களின் உயிருக்கு ஆபத்தாக முடிந்தன என்று பேசிக் கொண்டே, பெருத்த உடலை உடைய வானரங்கள், சமுத்திர மணலில் திடுமென முளைத்த மலைக் குன்றுகளைப் போல ஆங்காங்கு அமர்ந்தனர். அந்த நிசியில், இவர்களின் கூச்சல், வானத்தில் மேகங்கள் திடுமென கூடி, இடி இடித்தாற் போல ஒலித்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ப்ராயோபவேசோ என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 21 (292) ஹனுமதா3ஸ்வாஸனம் (ஹனுமான் ஆறுதல் சொல்லுதல்)
ஆகாயத்திலிருந்து விழுந்த நக்ஷத்திரம் போல கீழே விழுந்த தாராவை மெதுவாக ஹனுமான் சமாதானம் செய்தான். தான் செய்த வினையின் பயனே, ஜீவன்களுக்கு குணமாகவும் (நன்மையாகவும்), தோஷமாகவும் (தீமையாகவும்) வெளிப்படுகிறது. சுபமோ, அசுபமோ, எல்லாவற்றையும் சேர்ந்து தான் அனுபவிக்கிறான். நீ யாரை எண்ணி வருந்துகிறாய்? நீயே வருத்தத்தில் இருக்கிறாய்? நீயே தீனமாக இருந்து எந்த தீனனுக்காக இரங்குகிறாய்? இந்த நீர்க்குமிழி போன்ற வாழ்க்கையில் யாருக்காக யார் வருந்துவது? இதோ குமாரன் அங்கதன். இவன் உயிருடன் இருக்கும் வரை இவனை கவனித்துக் காப்பாற்று. மேற் கொண்டு செய்ய வேண்டியது என்ன என்று யோசி. உன் சாமர்த்யம் அதில் செலவாகட்டும். இந்த உலகில் வாழ்க்கை நிச்சயமில்லாதது என்பதும் நீ அறிந்தது தானே. ஜீவன்களின் வருகையும், உயிர் நீத்தலும் நம் கையில் இல்லை. இக பர நன்மைகளைக் கருதி, எப்பொழுதும் சுபமானதையே செய்ய வேண்டும் என்பது சான்றோர் வகுத்த வழி. எவனிடத்தில் ஆயிரக் கணக்கான (அர்புதானி- நூறு மில்லியன்) வானரங்கள் தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக எண்ணி, விஸ்வாசத்தை வைத்திருந்தார்களோ, அந்த தலைவன் வாலி கால கதி அடைந்து விட்டான். இவன் நியாயமாக அர்த்தம், பொருள் தெரிந்து கொண்டவன். சாம, தான, காமம் இவைகளுக்கு அப்பாற் பட்டவன். தர்மவான்கள் அடையும் பெரும் உலகை அடைந்து விட்டான். சந்தேகமே இல்லை. இவனை நினைத்து நீ கவலைப் பட வேண்டியதில்லை. இந்த வானர வீரர்களும், உன் மகன் அங்கதன், வானர ராஜ்யம் இவை இப்பொழுது உன் தலைமையில் இயங்கட்டும். நீ பொறுப்பை ஏற்றுக் கொள். இவர்கள் அனைவரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். இவர்களை சாமாதானப் படுத்து. உன்னால் வளர்க்கப் பட்ட அங்கதன் பூமியை ஆளட்டும். சந்ததியை காப்பாற்ற வேண்டியதும் உன் பொறுப்பாகிறது. இப்பொழுது உடனடியாக செய்ய வேண்டிய க்ருத்யங்களைச் செய்வோம். அரசனுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளுடன் இவனுடைய சம்ஸ்காரங்களைச் செய்வோம். அங்கதனுக்கு முடி சூட்டுவோம். சிம்மாசனத்தில் அமர்ந்த புத்திரனைப் பார்த்து நீ மன சாந்தி அடைவாய். கணவன் மறைவினால் துயரம் அடைந்திருந்த தாரா, எதிரில் நின்று வினயமாக வேண்டிய ஹனுமானைப் பார்த்து பதில் சொன்னாள். அங்கதன் போல் நூறு புத்திரர்கள் இருந்தாலும் வாலிக்கு ஈடாகாது. நான் வானர ராஜ்யத்தை நடத்திச் செல்ல அருகதை உள்ளவள் அல்ல. அங்கதனும் அல்ல. தந்தை வழி ராஜ்யத்தை சுக்ரீவனே அடையட்டும். மேற் கொண்டு க்ருத்யங்களையும் அவனே செய்யட்டும். அங்கதனிடத்தில் இப்படி ஒரு எண்ணம் பரவ வேண்டாம். ஹனுமானே, புத்திரனுக்கு தந்தை தான் பந்து. தாயல்ல. எனக்கு வானர ராஜ்யத்தை நிர்வகிக்கும் சக்தியும் இல்லை. முன்பும் இல்லை, இப்பொழுதும் இல்லை. என் முன் அடிபட்டு கிடக்கும் வீரனை நான் சேவித்தால் போதுமானது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமதா3ஸ்வாஸனம் என்ற இருபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 22 (293) வால்யனுசாஸனம் (வாலி தீர்மானித்து ஆணையிடுதல்)
நாலா புறமும் பார்வையைச் செலுத்தி, மெதுவாக மந்தமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்த வாலி, தன் மகனுக்கு முன்னால் நின்றிருந்த சுக்ரீவனைக் கண்டான். வெற்றி பெற்ற சுக்ரீவனைப் பார்த்து வானர ராஜன், தெளிவாக, ஸ்னேகமாக பேசினான். சுக்ரீவா, என்னிடம் குறை கண்டு தோஷம் என்று தள்ளாதே. காலம் இழுக்கிறது பலவந்தமாக. அதன் படி புத்தியை மோகம் சூழ்ந்து கொள்கிறது. இரண்டும், இப்பொழுது தெரிகிறது, நமக்கு நன்மையைச் செய்யவில்லை. இயற்கையாக உடன் பிறந்தவனிடம் இருக்க வேண்டிய பாசம் கூட தொலைந்து விட்டது. விபரீதமாக விரோதம் வளர்ந்தது. இன்றே நீ வானரங்களின் இந்த ராஜ்யத்தை ஏற்றுக் கொள். நானும் இதோ, இன்றே வைவஸ்வத லோகம் அடைந்து விடுவேன் என்றும் தெரிந்து கொள். என் வாழ்க்கையையும், ராஜ்யத்தையும், ஏராளமான செல்வத்தையும் விட்டுச் செல்கிறேன். இதோடு என் புகழும் பெருமளவு மாசு பட்டு விட்டது. இந்த நிலையில் நான் சொல்வது உனக்கு பிடிக்காமல் இருக்கலாம். கஷ்டமாக இருந்தாலும் செய். ராஜன், என் மகன் இவன். இன்னும் விவரம் அறியாத பா3லகன். சுகமாக வாழ்ந்தவன். இவன் கஷ்டப் படாமல் பார்த்துக் கொள். பூமியில் விழுந்து புரண்டு கண்ணீர் விடுவதைப் பார். என் உயிருக்குயிரான மகன். என் குல விளக்கு. என் வாரிசு. நான் இல்லாததால் துன்பப் படாமல் பார்த்துக் கொள். இனி நீ தான் இவனுக்கு எல்லாம். பயந்தால், அபயம் அளித்து நான் இவனிடம் எப்படி இருப்பேனோ, அதே போல நடந்து கொள். தாரையின் மகன். உனக்கு சமமான பராக்ரமம் உடையவன். ராக்ஷஸர்களை வதம் செய்ய இவன் உன் முன் நிற்பான். உனக்கு அனுகூலமான காரியங்களைச் செய்து யுத்தத்தில் உதவியாக இருப்பான். இளம் வயது பாலகன். ஆனாலும் அங்கதன் உன்னை கரை சேர்ப்பான். இந்த தாரா, சுஷேணன் மகள். இவள் சூக்ஷ்மமான பொருளாதார அறிவு உடையவள். விளைச்சல், உற்பத்தி செய்தல் போன்ற பல விஷயங்களில் தெளிவான அறிவுடையவள். இவள் சரி என்று சொல்வது கண்டிப்பாக சரியாக இருக்கும். இவள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள். சந்தேகம் இல்லாமல் அந்த வழியில் செல். தாரா சொல்லி ஒரு காரியம் வேறாக ஆனதே இல்லை. ராகவனுடைய காரியத்தையும் நீ குறைவற செய்து தர வேண்டும். செய்யாமல் விட்டால் அதர்மம் என்பது தவிர, அவன் மனம் வாடினால், உன்னையும் அழித்து விடுவான். இதோ இந்த பொன் மாலையை அணிந்து கொள். சுக்ரீவா, இதில் லக்ஷ்மி நித்ய வாசம் செய்வாள். நான் இறந்த பின், விட்டு போய் விடக்கூடும். இப்பொழுதே போட்டுக் கொள். சகோதர பாசத்துடன் இவ்வளவும் சொல்லி விட்டு, திடுமென முகத்தின் தெளிவு மறைய, க்ரஹணம் பிடித்த சந்திரன் போல் ஆனான். வாலியின் பேச்சைக் கேட்டு சாந்தமாகி, தானாகவே யுக்தமானதை செய்ய முன் வந்த சுக்ரீவன், பொன் மாலையையும் வாங்கி கொண்டான். பொன் மாலையை சுக்ரீவனிடம் கொடுத்து விட்டு, வாலி தன் மகன் அங்கதன் பக்கம் திரும்பினான். மகனே, தேச காலங்களை அனுசரித்து நடந்து கொள். பிரியமோ, இல்லையோ, பொறுத்துக் கொள். சுக துக்கங்களை சமமாக பாவிப்பாய். சுக்ரீவன் சொல்படி நடந்து கொள். மகா பாக்கிய சாலி நீ. என்னால் நீ எப்படி கொண்டாடி, அன்பாக வளர்க்கப் பட்டாயோ, அதே போல சுக்ரீவனிடம் எதிர் பார்க்க முடியாது. இவன் நண்பனிடமும் நெருங்காதே, சத்ருவானாலும் நெருங்காதே. யஜமானன் என்று பழகு. அவன் நலனில் பெருந்தன்மையோடு நடந்து கொள். சுக்ரீவன் விருப்பம் அறிந்து நடந்து கொள். யாரிடமும் அதிக ஸ்னேகமும் வைக்காதே. அதற்காக நண்பனே இல்லாமல் எல்லோரிடத்திலும் விலகியே இருக்காதே. இரண்டுமே எல்லை மீறினால், தோஷமே. அதனால் நடு வழியில் இரு. இவ்வளவு சொல்லும் முன், கண்கள் செருக, அடிபட்ட வேதனை முகத்தில் தெரிய, பற்கள் கிட்ட, ஏறக்குறைய உயிர் இழந்த நிலைக்கு வந்து விட்டான். வானர சேனைத் தலைவர்களும், மற்ற வானரங்களும் அலற ஆரம்பித்தன. எல்லா வானர பிரஜைகளும் மனம் வருந்தின. கிஷ்கிந்தை இன்று சூன்யமாகி விட்டது. வானர ராஜன் ஸ்வர்கம் சென்று விட்டான் என்று கதறின. எங்கள் உத்யானங்கள், காடுகள் எல்லாமே அதன் தலைவனை இழந்து சூன்யமாகி விட்டன. வானர ராஜனை வீழ்த்தி, வானரங்களை ஒளியில்லாமல் செய்து விட்டீர்கள். எவனுடைய முயற்சியால், மகத்தான வனங்களும், கானனமும், பூக்கள் நிறைந்து விளங்குகிறதோ, இதை இனி யார் எங்களுக்குச் செய்யப் போகிறார்கள். கந்தர்வர்கள் கூட பெரும் யுத்தம் செய்த வீரன். கோ3லபன் என்ற க3ந்த4ர்வனுடன் பதினைந்து வருஷம் போரிட்டான். இரவு, பகல் இன்றி அந்த போர் நீடித்தது. அதன்பின் பதினாறாவது வருஷம் கோ3லபன் வீழ்ந்தான். அந்த துர்வினீதனைக் கொன்று வாலி, பெரிய பல்லும், பயங்கரமான உருவமும் உடையவனை வதைத்து, எங்கள் எல்லோருக்கும் அபயம் அளித்தான். அவன் எப்படி இப்பொழுது வீழ்த்தப்பட்டான் என்பது தான் நம்ப முடியாததாக உள்ளது. வானரங்கள் தங்கள் அரசன் வதம் செய்யப் பட்டதில் மிகுந்த மன வருத்தத்தை அடைந்தன. சிங்கம் நிறைந்த காட்டில், பாதுகாவலாக நின்ற பசுக்கள் தலைவன், அடிபட்டு கிடந்தால், மற்ற பசுக்கள் செய்வதறியாது திகைப்பது போல திகைத்தனர். இதனிடையில் தாரா, தன் கணவன் முகத்தைப் பார்த்து, துயரம் மேலிட, அவன் உடலை அணைத்துக் கொண்டு , மகா வ்ருக்ஷத்தை கொடி தழுவியது போல தழுவியபடி அழுதாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வால்யனுசாஸனம் என்ற இருபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 23 (295) அங்க3தா3பி4வாத3னம் (அங்கதன் வணங்குதல்)
முகத்தோடு முகம் வைத்து கணவன் உடலோடு அரற்றிய தாரா, ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு, இறந்து கிடந்த கணவன் உடலைப் பார்த்து புலம்பினாள். எஎனக்கு பதில் சொல்லாமல் கிடக்கிறாயே, என் துக்கத்திற்கு வடிகால் ஏது? பூமியில் கல் கிடப்பது போல கிடக்கிறாய் என்னை விட உனக்கு பூமி அதிக பிரியம் போலும். அவளை அணைத்துக் கொண்டு படுத்துக் கிடக்கிறாய். என்னுடன் பேசக் கூட முடியவில்லை. இந்த செல்வம் அனைத்தும் சுக்ரீவன் வசமாகப் போகிறது. அஹோ, சுக்ரீவன் தான் வீரன், விக்ரமன் என்றாகி விட்டது. சாகஸப் ப்ரிய, ருக்ஷ, வானரங்களில் பலசாலியான தலைவன் வீழ்ந்து விட்டான், என் புலம்பலையும், பிரியமான அங்கதனையும் நினைத்து பதில் சொல். இது வீர சயனம், இதில் யுத்தத்தில் அடிபட்டவன் தான் படுக்கலாம். உன் எதிரிகளை முன்பு நீ இப்படி கிடத்திக் கொண்டிருந்தாய். நல்ல ஜனங்கள் உனக்கு மந்திரிகளாக சுற்றிலும் இருந்தனர். யுத்தம் உனக்கு பிரியமான விளையாட்டாக இருந்தது. எனக்கு பிரிய கணவனாக இருந்தாய். இப்பொழுது என்னை அனாதையாக விட்டு விட்டு கிளம்பி விட்டாய். சூரனுக்குத் தான் பெண்ணை கொடுக்க வேண்டும் என்பார்கள். இப்பொழுது என்னைப் பார். ஒரு நிமிஷ நேரத்தில் என்னை தனியாக விட்டு கணவன் இல்லாதவளாக ஆக்கிச் சென்று விட்டாய். என் கௌரவம் அழிந்தது. என் வழி நிரந்தரமாக அடைபட்டு விட்டது. ஆழம் தெரியாத துயரக் கடலில் நான் மூழ்கி கிடக்கிறேன். உன் ஹ்ருதயமோ, கல்லாகி விட்டது. என்னிடம் இவ்வளவு பிரியமாக இருந்தவன், போனபோது, என் ஹ்ருதயம் ஏன் ஆயிரம் சுக்கல்களாக உடைந்து சிதறவில்லை. பதி இல்லாத பெண்ணுக்கு புத்திரன் இருந்தும், த4ன தா4ன்யங்கள் நிறைந்திருந்தும், அவளுக்கு வித4வா என்று பெயர் சூட்டப் படுகிறது. பூச்சிகளும், மற்றவைகளும் நடமாடும் இடத்தில் உனக்கு படுக்க இடம் தேடிக் கொண்டு விட்டாய். புழுதி படிந்து, ரத்தம் உலர்ந்து உன் சரீரத்தை இப்பொழுது பார்க்கும் பொழுது அணைக்கக் கூட என் கைகளால் முடியவில்லை. சுக்ரீவன் திருப்தியாக ஆனான். இன்று உன்னிடம் மிக அதிகமாக விரோதம் பாராட்டியவன் ஜயித்து விட்டான். ராமன் எய்த ஒரு பாணம், உன் சரீரத்தை தொட்டமாத்திரத்தில் நீ விழுந்து விட்டாய். உன்னைத் தடுத்து பார்த்தேன். இப்பொழுது இறந்து கிடக்கிறாயே என்று புலம்பினாள். அவன் உடலில் தைத்த பாணத்தை நீலன் வெளியே பிடுங்கி எடுத்த பொழுது பளிச்சென்று ஒரு ஒளி தெரிந்தது. அதனுடன் ரத்த துளிகளும் அவன் உடலிலிருந்து வெளிப் பட்டது. மலையிலிருந்து தாம்ர தாது கலந்து விழும் அருவி போல இருந்தது. தாரா, தன் புத்திரன் அங்கதனை அருகில் அழைத்து, புழுதியை துடைத்து, உடல் பூரா ரணமாக கிடந்த தன் பதியை, அவன் தந்தையை காட்டினாள். இதோ உன் தந்தை. அவர் கிடப்பதைப் பார். விரோதத்தை வளர்த்து தானே முடிவைத் தேடிக் கொண்டார். இளம் சூரியனைப் போன்ற சரீரம், யமன் வாயிலை சென்றடைந்து விட்டது. புத்ர, உன் தந்தை அரசன். அவனை வணங்கு. இருவருமாக பாதத்தில் வணங்கினர். அகன்ற புஜங்களுடன், நான் அங்கதன் என்று சொல்லி வணங்கும் மகனை முன் போல திர்காயுசாக இரு மகனே என்று ஏன் வாழ்த்தவில்லை. நானும் மகனே சகாயம் என்று விடப் பட்டேன். பசுக்கள் கூட்டத்தில் நுழைந்த சிங்கம், கன்றுடன் கூடிய பசுவை அடித்தது போல, சங்க்4ராமம் எனும் யக்ஞத்தில், ராம பாணம் அடித்ததே ஜலமாக, நான் இல்லாமலேயே தனியாக அவப்4ருத ஸ்நானம் செய்து முடித்து விட்டாய். தேவராஜன், உன்னிடம் சந்தோஷமாக கொடுத்த பொன் மாலை எங்கே? இங்கு என் கண்ணில் படவில்லையே. ராஜ்யலக்ஷ்மி உன் உயிர் பிரிந்த நிலையிலும் உன்னை விட்டுப் போகவில்லை. சூரியன் தன் கதியில் சுழன்று திரும்பி வரும் பொழுது மலையரசனை ஓளி மயமாக்குவது போல தெரிகிறது. உன்னை தடுத்து நிறுத்த என்னால் முடியவில்லை. என் வார்த்தைகள் உனக்கு ஏற்கவில்லை. நான் நினைத்ததை செயல் படுத்த என்னால் முடியவில்லையே. அதனால் நானும் வீழ்ந்தேன். யுத்தத்தில் அடிபட்டு நீ இறந்து பட்ட பொழுது, என்னிடமிருந்த லக்ஷ்மியும் விலகி சென்று விட்டாளோ?
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், அங்கத3 அபி4வாத3னம் என்ற இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 24 (295) சுக்ரீவ தாராஸ்வாஸனம் (சுக்ரீவன் தாரையை சமாதானப் படுத்துதல்)
கண்ணீர் விட்டு கதறி அழும் தாரையைப் பார்த்து, வாலியின் இளைய சகோதரன், தானும் வாலியின் முடிவை நினைத்து மன சங்கடம் அடைந்தான். முகம் வாட, அவனும், கண்களை நீர் மறைக்க, ராமன் அருகில் சென்றான். அவனுடன் சதா அண்டியிருந்த வானரங்களும் உடன் சென்றனர். ஆலகால விஷம் போன்ற கூர்மையான பா3ணங்களையும், வில்லையும் கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்த ராமனை, குறி தவறாத இலக்குடையவனைப் பார்த்து சொன்னான். நரேந்திரா, தாங்கள் பிரதிக்ஞை செய்த படி செய்து காட்டி விட்டீர்கள். தாங்கள் செயலின் பலன் உடனே தெரிந்து விட்டது, என் ஆசையும் அகன்றது. இந்த வாலியின் ஜீவிதத்துடனேயே போகங்களிலிருந்து என் மனமும் ஆசையைத் துறந்தது இதோ இந்த ராஜ மகிஷி, மிகவும் வருந்தி அனாதை போல அழுகிறாள். ஊர் ஜனங்கள் அனைவரும் அண்ணன் பிரிவைத் தாங்க மாட்டாமல் ஓலமிடுகின்றனர். அண்ணன் இறந்து போனான். இவைகளைக் கண்டு அங்கதன் என்னை தீராத சந்தேகக் கண் கொண்டு பார்ப்பான். எனக்கு ராஜ்யத்தில் ஆசை விட்டுப் போயிற்று. கோபத்தாலும், அடக்க முடியாத ஆங்காரத்தாலும், மிகவும் அலைக்கழிக்கப் பட்டதாலும், என் அண்ணனை வதம் செய்வது எனக்கு மிக அவசியமாக தோன்றியது. இக்ஷ்வாகு குமரா, இப்பொழுது நிஜமாகவே அவனை வதம் செய்தபின், வானர ராஜனை போருக்கு அழைத்து வீழ்த்தி அவன் மரணத்துக்கு காரணமான பின், நான் மிகவும் வருந்துகிறேன். தவிக்கிறேன். அந்த ருஸ்யமூக மலையிலேயே நெடு நாள் வாஸம் செய்வதே எனக்கு ஸ்ரேயஸ் என்று இப்பொழுது உணருகிறேன். அந்த விசேஷமான மலையில் என் போக்கில் வாழ்ந்து கொண்டிருந்திருக்கலாம். இவனை வதைத்து மூன்று உலகிலும் எனக்கு ஒரு லாபமும் இல்லை. நான் உன்னை கொல்ல மாட்டேன், ஓடு என்று என்னை உயிருடன் தப்ப விட்டான். மகாத்மா, புத்திசாலி. ராமா, அப்படி சொன்னது, அவன் பெருந்தன்மைக்கு அழகு. நான் இப்பொழுது செய்திருப்பது என் அறியாமைக்கு எடுத்துக் காட்டு. யார் தான் நல்ல குணசாலியான சகோதரனை வதம் செய்ய நினப்பார்கள்? ராஜ்யமும், சுகமும் என்ன செய்யும்? அதன் உட்பொருளை உணராமல், காமமே குறியாக நான் நடந்து கொண்டு விட்டேன். இவனைக் கொல்வது என் எண்ணமாக இருக்கவில்லை. என் சக்தியை மீறிய செயல் என்பதால், என் புத்தி விபரீதமாக ஆகி, உயிரை எடுப்பதாக மாறி விட்டது. மரத்தின் கிளையை நான் உடைத்து போட்டு, முஹுர்த்த நேரம் தலை குனிந்து நின்றேன். என்னை சமாதானப் படுத்திச் சொன்னான். இனி இப்படி செய்யாதே -என்றான். சகோதர பாசமும், பெருந்தன்மையும், தர்மமும் இவனிடம் பாதுகாப்பாக இருந்தன. என்னால் க்ரோதமும், காமமும், குரங்கு புத்தியும் தான் காட்ட முடிகிறது. நினைத்தே பார்க்க முடியாதது, தவிர்க்கப் பட வேண்டியது, இப்படி கூட ஒரு விருப்பம் இருக்க முடியுமா என்று தள்ள வேண்டியது, கண்களால் காணத் தகாதது, அப்படி ஒரு பாபத்தை செய்திருக்கிறேன். நண்பனே, என் சகோதரனை, இந்திரன் த்வஷ்டா வதம் செய்தது போல வதம் செய்திருக்கிறேன். இந்திரனுடைய பாபத்தை, பூமி, ஜலம், ஸ்த்ரீகள், மரங்கள் இவை ஏற்றுக் கொண்டன. என் பாபத்தை யார் ஏற்றுக் கொள்வார்கள்? கிளைக்கு கிளை தாவும் குரங்கு, என்னிடம் எதை எதிர் பார்க்க முடியும்? இந்த சன்மானம், மரியாதை இவற்றுக்கு நான் உரியவன் இல்லை. ஜனங்கள் என்னை யுவ ராஜனாக ஏற்றுக் கொண்டாலே அதிகம். ராஜ்ய பாரம் எனக்கு எப்படி ஒட்டும். நான் அதற்கு எப்படி தகுதியானவன் ஆவேன். அதர்மம் நிறைந்த குல நாசத்துக்கு காரணமான இப்படி ஒரு செயலை செய்து விட்டு எந்த முகத்தோடு ஜனங்கள் முன் நிற்பேன். நிந்திக்கும்படி ஒரு பாப காரியத்தை செய்தவன் நான். மகா நீசத்தனமான செயல். உலகில் வெறுக்கத்தக்க இந்த செயலால் என் மனம் மிகவும் வேதனை அடைகிறது. மழை, பள்ளத்தில் பெய்யும் பொழுது, நீரின் வேகம் அதிகமாவது போல, யானை அட்டகாசம் செய்து நதிக் கரையை, மணலை விழச் செய்வது போல செய்திருக்கிறது. (சுக்ரீவன் தன்னை யானையோடு ஒப்பிடுகிறான். காவ்ய அலங்காரம், ரூபகம் எனப்படும்) சகோதரன் வதம் இதன் பின் பாகம் என்றால், என் சந்தாபம் இதன் தலை, கண், தும்பிக்கை, தந்தமாக இருக்கின்றன. மனிதருள் சிறந்தவனே, அஹோ, இந்த கஷ்டம் தாங்க முடியவில்லையே. நெருப்பில் புடமிடப்படும் பொழுது தங்கம் அடிபட்டு தவிப்பது போல தவிக்கிறேன். எங்கள் குலத்தில் எல்லோரும் பலசாலிகள். வானர சேனைத் தலைவர்கள். அங்கதனைப் பார். பாதிப் பிராணன் போனவன் போல வாட்டமுடன் தெரிகிறான். சோகமும், தாபமும் இவன் பாதி உயிரை பறித்து விட்டன போலும். அங்கதனுக்கு சமமான மகன், நல்லவனாக, கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று கேட்பவனாக, வசத்தில் இருப்பவனாக, சுபுத்ரன் எங்கு கிடைப்பான்? இது போல சகோதரனை அண்டி நான் இருந்தது போல எந்த தேசத்திலும் ஒற்றுமையை காண முடியாது. ஒருவேளை அங்கதன் உயிருடன் இருக்கலாம். தாயார் அவனை பரிபாலிக்க இருக்கலாம். நான் சகோதரனிடமும், புத்திரனிடமும் இழந்த அன்பை பெற அக்னி பிரவேசம் செய்யப் போகிறேன். இதோ இருக்கும் மற்ற வானரங்கள், எந்த தேசத்திலிருந்தும் சீதையைத் தேடிக் கொண்டு வருவார்கள். ராஜ குமாரா, நான் இல்லாவிட்டாலும் குறைவின்றி அந்த வேலை நடக்கும். குலத்தை அழித்த, உயிர் வாழ தகுதியற்ற, எனக்கு அனுமதி கொடு. நான் செய்த தவற்றுக்கு பிராயசித்தம் செய்கிறேன் என்று இவ்வாறு வருந்தும் சுக்ரீவனை, வாலியின் இளைய சகோதரனைப் பார்த்து ரகு வீரன், சங்கடத்துடன் சற்று நேரம் பேசாமல் இருந்தார். அச்சமயம், புவனத்தை பாதுகாத்து ரக்ஷிக்கும், பூமிக்கு சமமான பொறுமையுடைய, பயமின்றி யாரும் நெருங்கத்தக்கவனான ராமன், அழுது புலம்பும் தாரையைக் கண்டார். அந்த வானர ராஜனின் மனைவியை, தன் கணவனின் இறந்த உடலை அணைத்து கதறும் அழகிய கண்களையுடைய தாரையை, (ஹரி) வானர மந்திரிகள் மற்றவர்கள் ஆறுதல் சொல்லி, மெதுவாக அங்கிருந்து அழைத்து போவதைக் கண்டார். அவர்களுடன் மெல்ல நடந்து சென்ற பொழுது, கையில் வில்லும், அம்புமாக, சூரியனுக்கு சமமான தேஜஸுடன் நின்ற ராமனைக் கண்டாள். வெளி மனிதர்களை கண்டறியாத தாரா, ராஜலக்ஷணங்களுடன், நெடிதுயர்ந்து, ஆக்ருதியுடன், வசீகரமான கண்களுடன் நின்றவனை, மான் விழியாளான தாரா, இது தான் காகுத்ஸனாக இருக்க வேண்டும் என்று ஊகித்தாள். எளிதில் நெருங்கமுடியாத மகானுபாவன், இந்திரனுக்கு சமமானவன், தன்னை சமாளித்துக் கொண்டு அந்த வீரனிடம் சென்றாள். சுத்தமான மனதையுடையவள், அவனை நேராக பார்த்து, உடல் இன்னமும் நடுங்க, மனஸ்வினியான தாரா, தன் லயத்தை குறி வைத்து அடித்து விட்ட ராமனைப் பார்த்து கேட்டாள். ராமா, நீ அப்ரமேயன். து3ராசத3ன். (எளிதில் நெருங்க முடியாதவன்), புலங்களை அடக்கியவன், உத்தமமான தா4ர்மிகன். குறைவிலா கீர்த்தியுடையவன். நல்ல அறிவாளி, பூமிக்கு சமமான பொறுமையுடையவன். சிவந்த கண்களையுடையவன். கையில் எடுத்த பா3ணமும், தூணியும் வில்லும் நீ மகா பலசாலி என்பதைக் காட்டுகின்றன. போரில் வதம் செய்வது உனக்கு கை வந்த கலை, மனித சரீரத்தில், தெய்வீகமான காந்தியுடன் விளங்குகிறாய். ஒரே பாணத்தால் என் கணவனை அடித்து வீழ்த்தி விட்டாய். என்னையும் அதே அம்பால் அடித்து விடேன். ராமா, நானும் என் கணவன் இருக்குமிடம் செல்வேன். நான் இல்லாமல் வாலி மிகவும் கஷ்டப்படுவான். ஸ்வர்கம் சென்றாலும், தாமரையின் நிர்மலமான பத்ரம் போன்ற கண்களுடையவன், என்னைத் தேடி காணாமல், பொன் நகைகள் அணிந்து வளைய வரும் அப்ஸர ஸ்த்ரீகளையும் விரும்ப மாட்டான். அந்த இடத்திலும் வருத்தமும், துயரமும் என் பிரிவினால் அவனை வாட்டும். அழகிய தடாகங்களின் கரையில் இப்பொழுது விதே3க கன்யாவை விட்டுப் பிரிந்து நீ அவஸ்தை படுவது போல அவஸ்தையை அனுபவிப்பான். நீ அறிவாய். மனைவியை பிரிந்து, குமாரர்களான ஆண்கள் எப்படி கஷ்டப் படுவார்கள், துக்கம் அனுபவிப்பார்கள் என்று நீ உணர்ந்தவன் அதனால், மனதில் புரிந்து கொண்டு என்னையும் வாலி சமீபம் அனுப்பி விடு. வாலி அங்கும் வருந்தாமல் இருக்கட்டும். ஸ்த்ரீ வதம் செய்யக் கூடாது என்று தயங்குகிறாய், என்னை ஸ்த்ரீ என்று பார்க்காதே. வாலியின் ஆத்மா என்று எண்ணி வதம் செய். ஸ்த்ரீ வத தோஷம் உன்னைத் தாக்காது. சாஸ்திரங்களும், வேதங்களும், புருஷனுக்கு மனைவியை ஆத்மா என்று சொல்கின்றன. ஒரு மனிதனுக்கு மனையாளாக ஒரு பெண்ணை தானம் செய்வதை விடச் சிறந்த தானம் வேறு எதுவும் இல்லை. அதிலும் நீ வாலிக்கு அவனுக்கு பிரியமான பெண்ணை தரப் போகிறாய். வீரனே, தர்மத்தை எண்ணிப் பார். இந்த தானத்தால் நீ அதர்மம் எதையும் செய்ததாக ஆகாது. வருத்தத்தில் வாடும் என்னை, அனாதையாக என் கணவரிடமிருந்து விலக்கி அழைத்துச் செல்கிறார்கள். இந்த நிலையில் நீ என்னை வதைப்பதில் தவறில்லை. ஸ்வர்கம் சென்று, யானை உல்லாசமாக நடப்பது போல நடக்கும், குதித்து ஓடும் வானர ராஜனை விட்டு, புத்திசாலியும், உயர்ந்த பொன் மாலையணிந்தவனுமான என் கணவனை விட்டு நான் அதிக நாட்கள் உயிருடன் இருக்க மாட்டேன். இவ்வாறு தாரா சொல்வதைக் கேட்ட ராமர், அவளை சமாதானப் படுத்தி ஆறுதல் சொன்னார். வீரனுக்கு மனைவியாக வாழ்ந்தவள், மனம் தளராதே. ப்ரும்மா உலகை படைத்த பொழுது, சுக துக்கம் சேர்த்து தான் படைத்திருக்கிறார். அவன் செயல் நாம் துக்கமோ, சுகமோ அனுபவிக்கிறோம். என்பது உலகில் பேசப் படும் ஒரு சொல். மூன்று உலகமும் அவருடைய நியதியை மீறி எதுவும் செய்வதில்லை. நீயும் மன அமைதியை பெறுவாய். உன் மகனும் யுவராஜா பதவியை அடைவான். இது விதியின் விளையாட்டு, அல்லது படைத்தவனின் விருப்பம் என்று தீரர்களான வீர பத்னிகள், வருந்துவதில்லை. பரந்தாமனான ராகவனால், சமாதானம் செய்யப் பட்ட தாரை, தன் துயரை மறந்து இயல்பாக ஆனாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவ தாராஸ்வாஸனம் என்ற இருபத்து நாலாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 25 (296) வாலி சம்ஸ்காரம் (வாலியின் இறுதிக் கடன்களை நிறைவேற்றுதல்)
சுக்ரீவனையும், தாராவையும், அங்கதனையும், அவர்களுக்கு சமமான வருத்தத்துடன் ராமர் சமாதானப் படுத்த முனைந்தார். கூடவே லக்ஷ்மணனும் இருந்தான். புலம்பி, அழுது கொண்டு இருப்பதால் போன உயிருக்கும் பலனில்லை. இருப்பவர்களுக்கும் நன்மையில்லை. இதில் மேற் கொண்டு நாம் செய்ய வேண்டியது என்ன என்று பார்ப்போம். உலக நடப்பு படி அனுசரித்து நடக்க வேண்டும். போதும் கண்ணீர் விட்டது. ஓரளவுக்குத்தான் எந்த செயலையும் அனுஷ்டிக்க வேண்டும். நியதிதான் உலகு சென்று கொண்டே இருப்பதன் அடிப்படை. நியதி தான் காரியம் நிறைவு பெற சாதனமாகவும் ஆகிறது. நியதி தான் உலகில் எல்லோருடைய இருப்பு, நடப்பு இவற்றின் அடிப்படையாகும். யாரும் தான் தான் கர்த்தா என்று எண்ன முடியாது. நியோகம்- நியதி என்பதன் தலைவனோ, கரை கண்டவனோ யாரும் இல்லை. உலகம் தன் போக்கில் இயங்குகிறது. காலம் தான் அதற்கு இலக்கு. காலம் காலத்தை மீறிச் செல்வதில்லை. காலம் தேய்வதுமில்லை. இயற்கையை மீறி எந்த செயலும் நடைபெறுவதுமில்லை. இந்த காலத்திற்கு இயற்கையின் நியதிக்கு பந்துவும் இல்லை. காரணமும் இல்லை, பராக்ரமும் இல்லை. மித்ரன், தா3யாதி3 என்ற சம்பந்தமும் இல்லை. காரணம் தன் வசத்திலிருப்பதில்லை. ஆனால் விவரம் அறிந்தவர்கள், காலத்தின் பரிணாமம் என்ன என்பதை கவனிக்க வேண்டும், தர்மம், அர்த்தம், காமம் இவை காலக்ரமத்தை சூழ்ந்து நடைபெறுகின்றன. இங்கு வாலி, தன் இயற்கையை எய்தினான். தான் செய்த வினைப் பயன்களை அனுபவித்தான். தர்ம, அர்த்த, காமங்களில் எதையும் விடாமல் அனுபவித்து புனிதனாக அல்லது புனிதமான தர்ம, அர்த்த, காமங்களை அனுபவித்து விட்டான். தன் தர்மத்தைக் காப்பாற்றி தன் செயலால் ஸ்வர்கம் செல்கிறான். தன் உயிரை விட்டபின் அவன் அடுத்த கதியான ஸ்வர்கத்தை அனுபவிக்கச் செல்கிறான். இது தான் இயற்கையின் நியதி. அதைத் தான் வாலி சென்றடைந்திருக்கிறான். இன்னமும் துக்கம் கொண்டாட வேண்டாம். செய்ய வேண்டியதைச் செய்வோம். ராமன், சொல்லி முடித்தவுடன், லக்ஷ்மணன், மனம் வாடி நின்றிருந்த சுக்ரீவனிடம், பொருள் பொதிந்த வார்த்தைகளால் சமாதானம் செய்தான். சுக்ரீவா, இந்த வாலிக்கு இறுதிக் கடன்களை நீ செய். தாரா, அங்கதன் அவர்களும் உடன் இருக்க வாலியை தகனம் செய்ய ஏற்பாடு செய். உலர்ந்த கட்டைகளை ஏராளமாக கொண்டு வரச் சொல். சந்தனம் போன்ற உயர் ஜாதி மரக் கட்டைகளை கொண்டு வாலியை தகனம் செய்வோம். சிறுவன் அங்கதன். இவனையும் சமாதானப் படுத்து. இன்னும் சிறு பிள்ளைத் தனமாக யோசித்து நிற்காதே. இப்பொழுது இந்த ஊர் உன் ஆளுமையில் இருக்கிறது. அங்க3தா3 மாலைகள், நல்ல வஸ்திரங்கள் கொண்டு வா. நெய், எண்ணெய், வாசனைத் திரவியங்கள், மற்ற பொருட்களையும் கொண்டு வாருங்கள். தாரா, நீ பல்லக்கு தயார் செய்து சீக்கிரம் கொண்டு வா. தாரன், அவ்வாறே பல்லக்கை கொண்டு வந்தான். பல வானரங்கள் சேர்ந்து இழுக்கும்படியாக செய்து கொண்டு வந்தான். பெரிய ரதம் போல, அழகிய ஆசனங்களுடன் அழகாக செய்திருந்தான். பக்ஷிகள் முதலிய வேலைப் பாடுகள், மரங்கள், புஷ்பங்கள் முதலிய சித்திர வேலைப் பாடுகள் செய்து அலங்கரித்திருந்தான். அழகிய இலைகளைக் கொண்டு மேற்பாகத்தை முடித்திருந்தான். ஜன்னல்களுடன் கூடிய விமானம் போல அதை அமைத்திருந்தான். விசாலமாக, விஸ்வகர்மாவின் வேலை போல நன்றாக செய்திருந்தான். தா3ரு மரத்தைக் கொண்டு, அழகிய கைவேலையுடன் தயாராக கொண்டு வந்தான். ஆபரணங்களும் மாலைகளும் அலங்காரமாக மாட்டப் பட்டிருந்தன. வாசனைக்காக ரக்த சந்தனம் உபயோகித்து, அதன் மேல் பத்மங்கள், புஷ்பங்கள் இவற்றை விரவியிருந்தான். சுற்றிலும் பிரகாசமாக இளம் சூரியன் வர்ணத்தில் அமைத்திருந்தான். பல்லக்கு தயாரானதைப் பார்த்து ராமர், சீக்கிரம் வாலி உடலை எடுத்து வரச் சொல், இறந்தவர்களுக்கான காரியங்களை சீக்கிரம் செய்து முடிக்கச் சொல், என்றார். மற்ற வானரங்களோடு அங்கதனும் சேர்ந்து வாலி உடலை பல்லக்கில் ஏற்றினார்கள். பலவிதமான மாலைகள் வஸ்திரங்கள், ஆபரணங்களுடன், வாலியை பல்லக்கில் வைத்து உயிர் பிரிந்த பின் தேகத்துக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை குறைவின்றி செய்ய, ராஜாவாக சுக்ரீவன் கட்டளையிட்டான். ரத்னங்களை, மற்றும் பல விலையுயர்ந்த பொருட்களை வாரி இறைத்தபடி நாலா புறமும் வானரங்கள் சூழ, பல்லக்கு புறப்பட்டது. செல்வத்தில் திளைத்த அரசர்கள் பெறும் எல்லா விதமான மரியாதைகளையும் உங்கள் தலைவனுக்கு செய்யுங்கள் என்று சொல்ல, வானரர்கள் அனைவரும் தங்கள் பந்துவை, உறவினரை இழந்தது போன்ற துக்கத்துடன் செயல் பட்டனர். பெண்கள் ஓலமிட்டபடி தொடர்ந்தனர். வாலியின் பெருமை வீரம் பேசப்பட்டது. அந்த கூக்குரல் வனாந்தரங்களில் எதிரொலித்து, வனத்தை சூழ்ந்தது. மணல் பிரதேசங்களில், மலை, நதிகள், இவைகளைத் தாண்டி ஊர்வலம் சென்றது. ஒரு ஏகாந்தமான இடத்தில் பல்லக்கை நிறுத்தி வாலியின் உடலை சிதையில் வைத்தனர். அப்பொழுது தாரா, வாலியின் உடல் மீது விழுந்து அரற்றினாள். ஹா நாதா, ஹா வானர மகாராஜ, ஹா, எனக்கு பிரியமானவனே என்று சொல்லி சொல்லி அழுதாள். உயிர் போன பின்னும் உன் முகம் வாடவில்லையே. அஸ்தமிக்கும் சூரியன் போல உன் முகம் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது. ராம பாணம் உனக்கு யமனாக வந்து வாய்த்தது. ஒரு பாணத்தை விட்டு எங்கள் அனைவரையும் அனாதையாக்கி விட்டான். இதோ இந்த வானரர்கள், உன் பிரஜைகள். நடந்து இந்த அத்வானத்திற்கு வந்துள்ளனர். தெரிந்து கொள். இவர்கள் உன் பிரிய மனைவிகள். இது சுக்ரீவன். இவர்கள், மந்திரிகள், தாரன் முதலானோர். இதோ பிரஜைகள் அனைவரும் வந்து மரியாதையாக நிற்கின்றனர். என்று பதியை பிரிந்து புலம்பும் தாரையை மற்றவர்கள் விலக்கினர். சுக்ரீவனுடன் அங்கதனும் நின்று சிதைக்கு தீ மூட்டினான். விதி முறைப்படி செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்தனர். இதன் பின் நீர்க் கடன்களை முடிக்க நதிக் கரைக்குச் சென்றனர். பின் எல்லோருமாக அங்கதனை முன் நிறுத்தி, வாலிக்கு நீர் வார்த்தனர். சுக்ரீவன் தானம் முதலிய கர்மாக்களை செய்ய, ராமனும் அதில் கலந்து கொண்டான். நல்ல பௌருஷம் வாய்ந்த வாலியை, இக்ஷ்வாகு குல நாதனான ராமனின் பாணத்தால் அடிபட்டு உயிரிழந்தவனை தகனம் செய்து விட்டு, சுக்ரீவன், ராமனிடம் வந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வாலி சம்ஸ்காரோ என்ற இருபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 26 (297) சுக்3ரீவாபி4ஷேக: (சுக்ரீவனுக்கு முடி சூடுதல்)
ஆடை கலைந்து, முகம் வாடி இருந்த சுக்ரீவனை வானர மந்திரிகள் சூழ்ந்து கொண்டனர். பிதாமகரை ரிஷிகள் சூழ்ந்து நிற்பது போல நன்மை செய்யும் ராமனை, சூழ்ந்து நின்றனர். கை கூப்பியபடி அவர்களை தலைமை தாங்கி வந்த ஹனுமான் பேசினான். வாயு புத்திரன், பொன் மலையோ, இளம் சூரியனோ எனும் படி பிரகாசமாக விளங்கினான். தங்கள் தயவால் சுக்ரீவன் தந்தை, பாட்டனார் வழி வந்த ராஜ்யத்தை அடைந்தான். சாதாரண வானரர்களுக்கு கிடைக்க முடியாத இந்த பதவி ப்ரபோ, உங்கள் அருளால் சுக்ரீவன் கிடைக்கப் பெற்றான். நீங்கள் அனுமதித்தால், நகரத்துள் சென்று சுற்றத்தாரும், உற்றாரும் மேற் கொண்டு செய்ய வேண்டிய காரியங்களை செய்வர். இவனும் ஸ்நானம் செய்து வந்திருக்கிறான். வாசனை திரவியங்களும், ஔஷதிகளும் சேர்த்து ஸ்நானம் செய்து வைக்கப் பட்டான். உங்களுக்கும் ரத்னம் முதலிவைகளைக் கொண்டு உபசரிப்பான். இந்த மலை குகை அழகிய வாசஸ்தலமாக மாற்றப் பட்டுள்ளது. தாங்கள் இதில் இளைப்பாறி, வசிக்கலாம். எங்கள் வானர குலம் மகிழ்ச்சியடையும் படி எங்கள் அரசனை பதவியில் அமர்த்துங்கள் என்று வேண்டிக் கொண்டான். ராகவன் பதில் சொன்னார். பதினான்கு ஆண்டு கிராமமோ, நகரமோ நான் நுழைய மாட்டேன். என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்கு அது. இந்த அழகிய மலை குகையில் சுக்ரீவன் ராஜ்யாபிஷேகம் செய்து கொள்ளட்டும். முறைப்படி செய்ய வேண்டியதை செய்து கொள்ளுங்கள். நடை முறை வழக்கங்களை அறிந்தவரான ராமர், இப்பொழுது நல்ல நிலமைக்கு வந்து விட்ட சுக்ரீவனைப் பார்த்து, சுக்ரீவா, அங்கதனுக்கு யுவ ராஜா அபிஷேகம் செய்து வை, என்று சொன்னார். உன் தமையனின் மகன், உனக்கு சமமான பலம் உள்ளவன், இவன் தான் யுவ ராஜாவாக தகுதி பெற்றவன். வரப் போவது மழைக் காலம். ஸ்ராவணம். எங்கும் நீர் நிறைந்து இருக்கும். வரும் நான்கு மாதங்களும், வார்ஷிக மாதங்கள் என்று சொல்லப் படும். இது புது முயற்சிகளை ஆரம்பிக்க ஏற்ற காலம் அல்ல. நீ உன் ஊருக்குள் போய் சுகமாக இரு. இந்த மலையடிவாரத்தில் நான் லக்ஷ்மணனுடன் இருக்கிறேன். இந்த மலை குகை அழகாக ரம்யமாக இருக்கிறது. விசாலமாக நல்ல காற்றோட்டமாக இருக்கிறது. நல்ல ஜலம் அருகில் நிறைய இருக்கிறது. கமலமும், உத்பலங்களும் நிறைந்த குளமும் உள்ளது. கார்த்திகை மாதம் வந்தவுடன், ராவண வதம் செய்ய கிளம்பு. இது நமக்கு கிடைத்துள்ள இடைவெளி நேரம். நீ உன் மாளிகைக்குப் போ. முடி சூட்டிக் கொண்டு, உன் தோழர்களை சந்தோஷப் படுத்து. இவ்வாறு ராமர் அனுமதித்ததும், வானர ராஜனான சுக்ரீவன், வாலி ஆண்டு வந்த கிஷ்கிந்தைக்குச் சென்றான். ஆயிரக் கணக்கான வானரங்கள் அவனை வணங்கியபடி பின் தொடர்ந்தன. பிரஜைகள் வானரத் தலைவனாக வந்த சுக்ரீவனை வணங்கி, தலை தரையில் படும் படி வணங்கினார்கள். சுக்ரீவன் பிரஜைகளுடன் பேசி, வணங்கியவர்களை எழுப்பி குசலம் விசாரித்த படி, தமையனின் அந்த:புரம் சென்றான். நண்பர்கள் அவனை அமரர்கள், ஸஹஸ்ராக்ஷன் எனும் இந்திரனுக்கு அபிஷேகம் செய்வித்தது போல செய்தார்கள். வெண் குடையும், தங்க பிடியுடைய சாமரமும், வந்து சேர்ந்தன. எல்லா விதமான ரத்னங்களும் பீ3ஜ ஔஷதி4கள், பாலுடைய மரத்தின் இலைகள், புஷ்பங்கள், வெண் பட்டாடைகள், அங்க3 ராகங்கள், நல்ல வாசனை உடைய மாலைகள், தரையில் பூக்கும், நீரில் தோன்றும், புஷ்ப மாலைகள், நல்ல சந்தனம், திவ்யமான வாசனை திரவியங்கள் நிரம்ப கொண்டு வந்து அக்ஷதைகளும் குறைவில்லாத பொன், தேன் சொட்டும் ப்ரியங்கு3 – குங்குமப்பூ)
(இதை பற்றி ஒரு குறிப்பு : ப்ரியங்கு3 விகஸதி ஸ்த்ரீணாம் ஸ்பர்சாத், அதாவது இந்த ப்ரியங்கு பெண்களின் ஸ்பரிசம் பட்டால் பூக்கும் என்பதாகும். தவிர,
(கவிகள் சில வகை பூக்கள் மலர சில சூழ்நிலைகளில் சில வகையான செய்முறைகள் பற்றி வர்ணித்துள்ளனர். அவையாவன-
பாதாத்யாத் அசோக, ஸ்மிலக, குரவகௌ, – காலால் உதைப்பதால் அசோகமும், குரவகமும்: கண்டூஷ சேசனாத் பகுல:- வாய் எச்சில் பட்டு ப3குலம்: நர்ம வாக்யாப்4யாம் மந்தா3ரோ- பரிவாக பேசுவதால் மந்தா3ரம்: படு ம்ருது3 ஹஸனாத் சம்பக: ம்ருதுவாகவும், சாமர்த்யமாகவும் சிரிப்பதால் சம்பகம். : வக்த்ர வாதாத் சூதோ- வாயினால் ஊதுவதால், அந்த காற்று பட்டு, மாமரம்: கீ3தாத் நமேரு – பாடுவதால் நமேரு என்ற மரம்: நர்த்தனாத் கர்ணிகார: முன் நின்று ஆடுவதால் கர்ணிகாரம்:)
தயிர், புலியின் தோல், பதினாறு சிறந்த கன்னிப் பெண்கள், இவற்றை சேமித்தனர். பின் வானர ஸ்ரேஷ்டனை காலத்தில், முறைப்படி ரத்னங்களும், வஸ்திரங்களும், ஆகாரங்களும் கொடுத்து பிராம்மணர்களை உபசரித்து, பின் குச ஆசனத்தில் அமர்ந்து அக்னியை வளர்த்து, மந்த்ரங்களால் புனிதமாக்கப் பட்ட ஹவிஸ் கொண்டு, மந்திரம் அறிந்தவர்கள் ஹோமம் செய்து, அதன் பின் பொன்னாலான வராஸனத்தில், வீட்டு மாடியில், அழகிய சித்திரங்கள் போட்டு அழகுற செய்த இடத்தில், கிழக்கு நோக்கி பல மந்திரங்கள் சொல்லி அமரச் செய்த பின், நத நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களைக் கொண்டு, வானரங்கள் அந்த சமயத்தில் நதிகளிலிருந்தும், சமுத்திரத்திலிருந்தும், கொண்டு வந்த ஜலத்தைக் கொண்டு தங்க கலசங்களில் நீரை நிரப்பிக் கொண்டு, விமலமான ஜலம், சுபமான வ்ருஷப ஸ்ருங்கத்தால் ஆன கலசங்களும், பொற்குடங்களும் சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட முறையிலும், மகரிஷிகள் வகுத்து தந்த விதி முறைப்படியும், க3ஜன் , க3வாக்ஷன், க3வயன், சரப4ன், க3ந்த4 மாத3னன், மைந்த3ன், த்3விவித3ன், ஹனுமான், ஜாம்ப3வான், நலன், எல்லோருமாக வாசனை நிறைந்த நல்ல ஜலத்தைக் கொண்டு அமரர்கள் வாஸவனை அபிஷேகம் செய்வித்தது போல அபிஷேகம் செய்து வைத்தனர். சுக்ரீவன் முழுக்காட்டப் பட்டு, அபிஷேகம் செய்யப் பட்ட பின், எல்லா வானர வீரர்களும், மகிழ்ச்சி பொங்க, குதூகலமாகச் சென்றனர். ராமனின் வார்த்தையை நினைவில், கொண்டு சுக்3ரீவன் அங்க3த3னை யுவ ராஜாவாக நியமித்தான். அங்கதனும் யுவ ராஜாவாக ஆன பின், மனம் நிறைந்த ஆசிகளுடனும், அன்புடனும் வானரர்கள், சாது4, சாது4 என்று சொல்லி சுக்ரீவனைப் பாராட்டினார்கள். ராமனை, லக்ஷ்மணனை திரும்பத் திரும்ப பாராட்டி மகிழ்ந்தனர். அந்த காரியங்கள் நன்றாக நடந்தேறியதில், அனைவரும் மகிழ்ந்தனர். கிஷ்கிந்தா திரும்பவும் பதாக, (கொடி) த்4வஜங்கள் அலங்கரிக்க, ஜனங்கள் மனம் நிறைந்து மகிழ்ச்சியோடு உலவி வர, ரம்யமாக ஆயிற்று. மலை குகைகளில் பழைய உல்லாசம் திரும்பியது. ராமரிடத்தில் வந்து மகாபிஷேகம் நன்றாக நடந்தேறியதைச் சொல்லி, வானர சேனைத் தலைவன், ருமா என்ற தன் மனைவியையும் திரும்பப் பெற்று, வீர்யவானாக, தேவேந்திரன் போல தன் ராஜ்யத்தை அடைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவாபி4ஷேகோ என்ற இருபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 27 (298) மால்யவன்னிவாஸ: (மால்யவானில் வசித்தல்)
சுக்ரீவனின் ராஜ்யாபிஷேகம் நடந்து முடிந்து, வானரமும் தன் குகைக்குச் சென்ற பின், ராமன் தன் சகோதரனுடன் ப்ரஸ்ரவண மலையை வந்தடைந்தார். புலி, மற்றும் பல மிருகங்கள் நிறைந்ததும், சிங்கத்தின் பயங்கரமான கர்ஜனை இடை விடாது ஒலிக்கும் அடர்ந்த காட்டுப் பிரதேசம். பலவிதமான கொடிகளும், புதர்களும் , மரங்களும் அடர்ந்த இருண்ட காடுகளில் கரடிகள், வானரங்கள், பசு வால் கொண்ட மிருகங்கள், பூனைகள் இவை வாழ்ந்து வந்தன. மேகம் போன்ற நிறமுடைய மலைப் பகுதி, எப்பொழுதும் சுத்தமான ஜலம் நிறைந்ததுமான, அந்த மலையின் உச்சியில் அமைந்த விசாலமான பெரிய குகையில் சௌமித்திரியுடன் தான் வசிக்க ஏற்ற இடமாக ராமர் தேர்ந்தெடுத்தார். சுக்ரீவனுடன் சில காலம் இருந்த பின் அந்த சமயத்துக்கு உகந்த, ரசிக்கத் தகுந்த சில விஷயங்கள் ரகு நந்தனன் கண்ணில் பட்டன. வணங்கி வினயத்தோடு நிற்கும் லக்ஷ்மணனை, லக்ஷ்மீகரமானவனை (பார்வைக்கு), லக்ஷ்மி வர்த4னனை (லக்ஷ்மியை வளர்க்க கூடியவனை), தன் இளவலைப் பார்த்துச் சொன்னார். லக்ஷ்மணா, இந்த குகை விசாலமாக காற்றோட்டமாக இருக்கிறது. இதில் மழைக் காலம் முடியும் வரை இருப்போம். இந்த மலை சிகரமும் உன்னதமாக உயர்ந்து ரம்யமாக இருக்கிறது. ராஜ குமாரா, வெண்மையான, கறுத்த, தாமிர நிற, கற்கள் அழகூட்ட, பலவிதமான தாதுப் பொருட்கள் மண்டிக் கிடக்கின்றன. சமவெளிகளும், அருவிகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. பலவிதமான மரங்கள் அடர்த்தியாக நிற்க, அதைத் தழுவி, அழகிய கொடிகள் சுற்றிக் கொண்டு தெரிகின்றன. பலவிதமான பக்ஷிகள் நிறைந்து, மயூரங்கள் கூக்குரல் இடுகின்றன. மாலதி மல்லிகை புதர்கள், சிந்துவார, குரண்டகம் முதலியவைகளும், கதம்ப, அர்ஜுன, சர்ஜம் முதலியவை மலர்ந்து ரம்யமாக தெரிகின்றன. இதோ தாமரை மலர்ந்து இருக்கிறது. சேறு மண்டியிருக்கும் இடத்தில், இதுவும் நம் குகைக்கு அருகிலேயே இருக்கிறது. லக்ஷ்மணா, கிழக்கு திசையில், நீர் ப்ரவகிக்கும் விதமாக இந்த குகையின் அமைப்பு சிறப்பாக அமைந்துள்ளது. பின் புறம் உயர்ந்து, காற்று இல்லாமல் இருக்கும். குகையின் வாயிற்புறம் சமதளமாக அமைந்துள்ளது. விசாலமாக, ம்ருதுவாக, மை போன்ற நிறத்தில் பள பளக்கிறது. வடக்கில் பார் லக்ஷ்மணா, இந்த மலை சிகரம் நெடிதுயர்ந்து இருக்கிறது. கண் மை போல, கார் மேகம் போல இதன் நிறம் ஒரு புறம். தென் திசையில் பார். வெண் பட்டாடை உடுத்திய கைலாச சிகரம் போலத் தெரிகிறது. பலவிதமான தா4துப் பொருட்கள் நிரம்பியது என்று தெரிகிறது. மேற்கு திசையில் பிரவஹிக்கும் நதி சலனமில்லாமல், தூய்மையாக இருக்கிறது. குகையின் கிழக்கு திசையில் பார். த்ரிகூட மலையில் ஜாஹ்னவி பிரவஹித்தது போல, சம்பகம், திலகம், தால, தமால புஷ்பங்கள் பூத்துக் குலுங்குவதைப் பார். பத்மகம், சரளம், அசோக வகை மரங்களும் அழகுற அமைந்துள்ளன. வானீரம், தினிசம், வகுலம், கேதகம், த4வம், ஹிந்தாளம், ஸ்த்ரிடை, நீலம், வேத்ரகம், க்ருதமலம், இவை கரைகளில் வளர்ந்து பலவித ரூபங்களில் ஆங்காங்கு விளங்குகின்றன. ஆடை அலங்காரங்களுடன் அழகாகத் தெரியும் பெண் போல இயற்கை அழகுற அமைந்துள்ளது. பலவிதமாக கூக்குரல் இடும் பலவிதமான பக்ஷிகள், ஒருவருக்கொருவர் மிகவும் அன்புடைய சக்ரவாக பக்ஷிகள், அலங்கரிக்கின்றன. அழகிய மண், அதி ரம்யமான ஹம்ஸ, ஸாரஸ, பக்ஷிகள் அலங்கரித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் அட்டஹாஸமாக சிரிப்பது போல இருக்கின்றன, உத்பலங்கள், சில இடங்களில் நீல நிறமான உத்பலங்கள், மற்றும் சில இடங்களில் சிவந்த நிறங்களில், சில இடங்களில் வெண்மையான நிறத்தில் என்று பல நிறங்களில் காணப்படுகின்றன. திவ்யமான குமுத மொட்டுக்கள், பாரிப்லவம் எனும் பக்ஷிகள், நூற்றுக்கணக்காக சூழ்ந்து, ப3ர்ஹிண, க்ரௌஞ்ச பக்ஷிகளும் இரைச்சலாக கத்துகின்றன. ரமணீயமான நதியை கூட்டமாக வந்து முனிவர்கள் உபயோகிக்கின்றனர். சந்தன மரங்களைப் பார். வரிசையாக நட்டு வைத்தது போல, மனதில் உதித்தது போல ககுப4 மரங்கள் சமமாக வளர்ந்திருப்பதைப் பார். சத்ருக்களை அழிக்க வல்ல வீரனே, அதோ பார். இந்த இடம் அதி ரமணீயமாக இருப்பதைப் பார். இங்கு நாம் நிச்சயம் ரசித்து, உணர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியும். இந்த இடத்திலேயே நமது வாசஸ்தலத்தை நிறுவிக் கொள்வோம். இங்கிருந்து கிஷ்கிந்தையும் வெகு தூரத்தில் இல்லை. அழகிய காடும் அருகில் இருக்கிறது. சுக்ரீவனுடைய நகரமும் இருக்கிறது. ராஜ குமாரனே, கீதங்கள் வாத்ய கோஷங்களாக காதில் விழுகின்றன. வானரர்கள், மிருதங்க வாத்யங்களுடன் நடனமாடுகிறார்கள் போலும். சுக்ரீவனுக்கு மனைவியும் கிடைத்து விட்டாள். ராஜ்யமும் கைக்கு வந்து விட்டது. நண்பர்களுடன் கொண்டாடுகிறான் போலும். ஏராளமான செல்வமும் வந்து சேர்ந்திருக்கிறது. கேட்பானேன் என்று சொல்லிய ராகவன் லக்ஷ்மணனுடன் தங்கள் இருப்பிடத்தை அங்கு அமைத்துக் கொள்வதில் முனைந்தான். நாலா புறமும் பார்க்க வசதியான, சமவெளியுடன் கூடிய அந்த ப்ரஸ்ரவண மலை குகையில், சௌகர்யமாக த்ரவ்யங்கள் நிறைந்த இடத்தில், மலையின் மேல் வாசம் செய்யலாயினர். வெளிப்பார்வைக்கு வசதியாக தெரிந்த இந்த சமவெளியும், மலைக் குகையும் ராமர் மனதில் உறுத்திக் கொண்டிருந்த வேதனையை தீர்க்க சக்தியற்றதாகவே இருந்தது. தன் உயிருக்குயிரான மணைவி அபகரிக்கப் பட்டது வேதனையை தந்து கொண்டேயிருந்தது. உதித்துக் கொண்டிருந்த சந்திரனைப் பார்த்தால், மேலும் அதிகம் வாட்டமுற்றார். இரவில் படுத்தால் நித்திரை வர மறுத்தது. திடுமென எழுந்து உட்கார்ந்து கொண்டு கண்ணீர் மல்க யோசனையில் ஆழ்ந்தார். அவரைப் போலவே அதே அளவு துக்கம் மனதில் இருந்தாலும், லக்ஷ்மணன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு ராமருக்கும் ஆறுதல் சொன்னான் வீரனே, இந்த வேதனையை மறக்கப் பார். இப்படி துக்கம் மனதை அரிக்க இடம் தராதே. துக்கமும் துயரமும் மனதை விட்டு களையப் பட வேண்டியவை. இடம் கொடுத்தால் இவை அனைத்தையும் நாசம் செய்து விடும். சந்தேகமேயில்லை. தாங்கள் செயல் வீரர். தெய்வ சங்கல்பம் என்று நம்பும் குணமுடையவர். ஆஸ்திகர். குண சீலன். கூடவே உழைக்கவும் தயங்காதவர். முயற்சி இன்றி அந்த ராக்ஷஸனைக் கொல்ல முடியாது. முறையற்ற செயலைச் செய்த ராக்ஷஸனை நீங்கள் நிச்சயம் யுத்தத்தில் வெற்றி கொள்வீர்கள். மனதிலிருந்து துயரத்தை அடியோடு களைந்து விட்டு முயற்சியை மேற் கொள்ளுங்கள். பின், அந்த ராக்ஷஸனை சுற்றத்தோடு, வேரோடு அழிக்கத் தயாராகுங்கள். சமுத்திரம், வனம், மலை என்று இயற்கையாக அமைந்த பூமியையே தலைகீழாக மாற்ற உங்களால் முடியும். அந்த ராவணன் எம்மாத்திரம். மழைக் காலம் இதோ வந்து விட்டது. சரத்காலம் வரும் வரை பொறுத்திருப்போம். அதன் பின் ராஜ்யத்தோடு, அவன் பரிவாரம், சேனைப் படைகள், சேர்த்து அவனை நாசம் செய்வோம். நான் உங்களுடைய உள் உரையும் சக்தியை தட்டி எழுப்புகிறேன். மூடி கிடக்கும் தணலை ஊதுவது போல, நிறைய ஆகுதிகள் செய்த பின் அடங்கி கிடக்கும் நெருப்பை கிளறி விடுவது போல, உங்கள் அடக்கி வைக்கப் பட்டிருக்கும் உள்ளுணர்வை தட்டி எழுப்பப் பார்க்கிறேன். ஹிதமானதும், சுபமானதுமான லக்ஷ்மணனது வார்த்தைகள், ராமனது மனதைத் தொட்டன. தன் தோழனுக்கும் மேலான சகோதரன் லக்ஷ்மணனிடம் ராமர் பதில் சொன்னார். நீ சொன்னது சரியே. என்னிடம் உள்ள அன்பினாலும், ஸ்னேகத்தாலும், என் நன்மையைக் கருதியும், சத்யமும் உன் விக்ரமும் வெளிப்பட பேசினாய் லக்ஷ்மணா,. எல்லா செயல்களையும் முடக்கி விடும் துயரத்தை இதோ விட்டேன். விக்ரமத்தில் அளவிட முடியாத தேஜஸை உத்ஸாகமாக கொண்டு வரப் போகிறேன். சரத் காலம் வரும் வரை பொறுத்து இருப்போம். உன் சொல்படி நடக்கிறேன். சுக்ரீவனுடைய நாட்டிற்கும் வளம் பெருகச் செய்கிறேன். உபகாரம் செய்தவனுக்கு பிரதி உபகாரம் செய்யத் தான் வேண்டும். செய் நன்றியை மறந்தவனும், பதில் உதவி செய்யாதவனும், நல்லவர்கள் மனதை நோகச் செய்கிறார்கள். இவ்வாறு ராமர் சொல்லவும் லக்ஷ்மணன் ஆறுதலாக பதில் பேசி, வணக்கத்துடன் அவர் சொல்வதைக் கேட்டு, தன்னை உணர்ந்து கொள்ளும்படியான தத்துவ உபதேசங்கள் செய்து, தன்னைத் தானே அறியும் மேலான உபதேசத்தைச் செய்தான். நரேந்திரனே, உங்களுக்கு உவப்பாக உள்ள விஷயங்களையே இது வரை சொன்னேன். அதற்கும் மேலாக கர்த்தாவாக, ஈஸ்வரன் ஒருவன் இருக்கிறான் சரத் காலத்தை எதிர்நோக்கி பொறுமையாக இருப்போம். இந்த மழையை பின்னால் சத்ருவை அழிக்கும் நேரத்திற்காக பொறுத்துக் கொள்வோம். கோபத்தை அடக்கிக் கொண்டு சரத் காலம் வரும் வரை நான்கு மாதங்கள் என்னுடன் பொறுமையை காப்பாய். சத்ருவை வதம் செய்ய சக்தியை வளர்த்துக் கொண்டு சிங்கங்கள் உலவும் இந்த மலையின் மேலேயே வசிப்போம் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், மால்யவன்னிவாஸோ என்ற இருபத்தேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 28 (299) ப்ராவ்ருட் ஜ்ரும்பணம் (மழைக் கால இடி ஓசை)
இவ்வாறு வாலியை வதம் செய்து சுக்ரீவனை ராஜ்யத்தில் அமர்த்தியபின், மால்யவான் மலையில் வசித்து வந்த காலத்தில் ராமர் ஒரு நாள் லக்ஷ்மணனிடம் சொன்னார். லக்ஷ்மணா, மழைக் காலம் வந்து விட்டது. ஆகாயத்தைப் பார். மேகங்கள், மலைகள் போல ஆகாயத்தை நிரப்பிக் கொண்டு நகர்ந்து செல்கின்றன. ஜலம் வரும் நேரம் இது. மழை பொழியப் போகிறது. ஒன்பது மாதம் கர்ப்பம் தரிப்பது போல சூரியனுடைய கிரணங்களால் சமுத்திர ஜலத்தைக் குடித்து ஆகாயம் பிரஸவிக்கிறது. இதன் ரஸாயணம் என்ன விசேஷம் தெரிகிறதா? (உப்புத் தண்னி சமுத்திர ஜலம். அதைக் குடித்தும் கர்ப்பம் தரிக்க வேண்டுமானால், ஆகாயத்தின், நல்ல எண்ணம், தவிர, உலக க்ஷேமத்திற்காக அதை மதுரமாக ஆக்கித் தருவது தான் விந்தை – உரையாசிரியர்) இந்த மேக மாலைகளில் படிப் படியாக இருப்பது போலத் தெரிகிறதே, அதில் ஏறி, சூரியனையே தொட்டு விடலாம் போல இல்லை? குடஜ, அர்ஜுன மாலைகளைக் கொண்டு போய் சூரியனுக்கு அணிவித்து விட்டு வர முடியும் போல காட்சி தருகிறது விந்தையாக இல்லை? சந்த்யா கால கிரணங்கள் சிவந்து தாம்ர வர்ணமாகத் தெரிய அதன் உள்ளே அதி வெண்மையாக, மெதுவான, ஆகாய படலங்கள், காயம் பட்டு அதன் மேல் பட்டி கட்டி விட்டது போலத் தெரிகிறது. காமாதுரன் போல ஆகாயம் பெருமூச்சு விடுவது போல் மந்தமான காற்று வீசுகிறது. அது சந்த்யா கால சந்தனம் பூசிக் கொண்டு, வெண்ணிற ஜலத்தை பொழிகிறது. பூமியைப் பார், சீதையை போல சோகத்தில் மூழ்கி இருக்கிறது. புது மழை ஜலம், கண்ணீர் விடுவது போலவும், பொங்கி நுரையாக ஓடுவது, தர்மத்தை எண்ணி கலங்கி வாடும் சீதையையும் ஒத்திருக்கிறது. மேகத்திலிருந்து விடுபட்டு, வெண் தாமரையைத் தொடுவது போல குளிர்ச்சியாக, கூப்பிய கைகளின் உள்ளே, பிடிக்கலாம் போல தாழம்பூ வாசனையைத் தாங்கி வரும் காற்று விளங்குகிறது. இந்த மலையில் நிறைய அர்ஜுன மரங்கள் பூத்திருக்கின்றன. அதனுடன் அதை மிஞ்ச நினைப்பது போல தாழம்பு வாசனை தூக்கலாகத் தெரிகிறது. சுக்ரீவனைப் போலவே இந்த மலையும், எதிரியை சாந்தப் படுத்தி விட்டு, அபிஷேகம் செய்யப் படுகிறது. மேகம் (க்ருஷ்ணாஜினம்-மான் தோல்) போல இதை தழுவி நிற்க, தாரையாக பொழியும் அருவிகள், யக்ஞோபவீதம் போல குறுக்காகத் தெரிய, காற்று நிரம்பிய குகைகளில் இருந்து வரும் சத்தம் (வாயால் ஏதோ படிப்பது போல இருக்க) நன்கு கற்றறிந்த அறிஞர் போல இந்த மலை தெரிகிறது. ஆகாயம் வேதனையோடு இருப்பது ஏன் தெரியுமா? திடும் திடும் என கசையால் அடிப்பது போல மின்னல் வெளி வருகிறது. தங்க நிறமான சாட்டையால் அடி பட்டு, உள்ளூக்குள் குமுறி அழும் அழுகுரல் தானோ இடி முழக்கம்? அதனால் முகத்தில் வேதனை படர்ந்து தெரிகிறதோ, லக்ஷ்மணா புரிகிறதா? கார் மேகத்தின் மடியில் மின்னல் துள்ளுகிறது. ராவணன் தூக்கிச் சென்ற போது, மைதிலி இப்படித்தான் துடித்திருப்பாளோ? இந்த திசைகளைப் பார். மன்மதனின் வசம் ஆனது போல, ஒருவரையொருவர் துரத்துவது போல, சந்திரனைத் தேடுவது போல விரைகின்றன. கிரகங்களும், சந்திரனும் மேகத்தின் அடர்ந்த பரப்பில் மறைந்து கண்ணுக்குத் தெரியாததால் தேடுகின்றன போலும். மலைகளைப் பார். மழைக் காலம் வந்ததால், மகிழ்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விடுவது போல, அது பெருகி ஓடுவது போல, சாரல்களில் குடஜ புஷ்பம் பூத்துக் குலுங்குவதைப் பார். என் துயரத்தை கிளறி ஊதி விடுவது தான் இவைகளின் நோக்கமோ? பனித்துளிகளோடு கூடிய காற்று புழுதியை அடக்கி விடுவதால், தூசு தும்பு எதுவும் இன்றி, சாந்தமாக இருக்கும் இந்த சூழ் நிலையில், அரசர்கள் யாத்திரைகளைத் தவிர்த்து ஓர் இடத்திலேயே தங்கி இருப்பார்கள். எப்பொழுதும் சுற்றிக் கொண்டிருக்கும் யாத்ரிகள் கூட தன் தேசங்களை சென்றடைவர். மனதால் வாழ ஆசை கொண்ட சக்ரவாக பக்ஷிகள், இப்பொழுது தங்கள் பிரியமான துனையுடன் கிளம்பி விட்டன. இவை வர்ஷா கால மழைத் துளிகளை குடிக்கும் குணம் உள்ளவை. இவைகளின் இறக்கைகளில் மழை வேகமாக அடித்தால் கூட அவை கீழே விழுவதில்லை. சில இடங்களில் பிரகாசமாக, சில இடங்களில் மறைந்து, ஆகாயம் போல பரவலாக சிதறிக் கிடப்பதாகத் தெரிகிறது. அமைதியான கடல் நடுவில், ஒரு சில மலைகள் முளைத்து நிற்பது போலத் தெரிகிறது. மலையின் நதிகள், ஸர்ஜ, கதம்ப புஷ்பங்களையும், புது ஜலம் பர்வதத்தின் தாதுப் பொருட்களை அடித்துக் கொண்டு வருவதையும், இவைகளை கலந்து சுமந்து கொண்டு வாசனையுடன் வீசும் காற்று, வெகு வேகமாக செல்லும் மயூரங்களும், கேகா எனும் பக்ஷிகள் இவையும் துணை வர வீசுகிறது. ரஸம் நிறைந்த ஜம்பூ பலம் (நாவல்) வண்டுகள் மொய்க்க (தேனை பருக வந்தவை), நிறைய சாப்பிட முடிகிறது. பழுக்காத மாங்காய்கள், வெம்பி போய் வித விதமான வர்ணத்தில் காற்றில் அடிபட்டு விழுந்து கிடக்கின்றன. மதம் பிடித்த யானை போல கர்ஜிக்கும் மேகங்கள், மின்னல் கொடியையும், கொக்குகள் வரிசையாக பறப்பது, மாலை அணிவித்தது போலவும் இருக்க, பெரும் மலை போன்ற ஆகிருதியுடன் தெரிகின்றன. இவை சண்டைக்குத் தயாராக கிளம்பியது போல இருக்கிறது. மழை நீர் மறைத்த புல்வெளிகளில், பர்ஹிண பக்ஷிகள் நடமாடுகின்றன. வனங்கள், மழை நின்ற நேரம், மத்யான்ன நேரங்களில் கண் கொள்ளா காட்சியாக விளங்குகின்றன. பறக்கும் கொக்குகள், மழை நீரில் மூழ்கி திளைத்து, மலைச் சிகரங்களில் ஓய்வெடுத்துக் கொண்டு திரும்ப பறக்கின்றன. கூட்டமாக இவை மேகத்துடன் ஓடி விளையாடுவது போல சந்தோஷமாக உயரத்தில் பறந்து மகிழ்கின்றன. காற்றில் வீசியெறியப் பட்ட சங்கு மாலையை அணிந்திருப்பது போல, ஆகாயம் காட்சியளிக்க, பூமியில் இந்த்ர கோ3ப – ஒருவகை பூச்சி, சிவப்பு, வெண்மை நிறங்களில்) பூச்சிகள், புதிதாக முளைத்த புல் தரைகளில் கோலம் போட்டது போல, அமர்ந்திருக்கின்றன. நதிகள் சமுத்திரத்தை நாடி வேகமாகச் செல்கின்றன. கொக்குகள் மகிழ்ச்சியுடன் கார் மேகத்தை நாடிச் செல்கின்றன. கணவனை அன்புடன் தேடி மனைவி செல்கிறாள். வனாந்தரங்களில் மயில் நடனம் நடை பெறுகிறது. கதம்ப வ்ருக்ஷங்கள், கிளைகளில் கதம்ப மொட்டுகள் நிரம்பி காணப் படுகின்றன. (கதம்பக மரத்தில், இடி சத்தம் கேட்டு மொட்டுகள் தோன்றும்.), காளைகள் காமத்துடன் பசுக்கள் இருக்கும் கொட்டிலை நோக்கிச் செல்கின்றன. பூமியும் பயிர் பச்சைகளுடன் அழகாக காட்சி தருகிறாள். இந்த மேகங்கள் நீரைத் தாங்குகின்றன. மழையாகப் பொழிகின்றன. மகிழ்ச்சியுடன் காணப் படுகின்றன. சில சமயம் த்யானத்தில் ஆழ்ந்திருப்பது போல், சில சமயம் நடனம் ஆடுவது போல், சில சமயம் ஒருவரையொருவர் கூடி சமாதானமாக பேசிக் கொள்வது போல், தெரிகின்றன. நதிகளில் நீர் அடர்ந்து காணப் படுகிறது. வனப் பிரதேசங்களில் யானைகள் மதம் பிடித்தது போல அலைகின்றன. தங்கள் பிரியமான துணையை விட்டு விலகி மயில்களும், வானரங்களும் நடமாடுகின்றன. தாழம்பு வாசனையை முகர்ந்து மகிழ்ச்சியுடன் வனத்தில் அருவி கொட்டும் நீர் ஓசையைக் கேட்டு யானைகளும் மயில்களுக்கு இணையாக நடனமாடுகின்றன. ஆறு கால்களுடைய தேனீக்கள், க்ஷண நேரம் புஷ்ப ரஸத்தை ரசித்து அதில் திளைத்து இருந்து விட்டு, பறந்து போய் விடுகின்றன. ஏனெனில் மழை தாரையில் அடிபட்டு கதம்ப மரக் கிளைகளில் காத்திருந்து கிடைத்த க்ஷண நேரத்தில் புஷ்ப ரஸத்தை பருகி விட்டு பறந்து விடுகின்றன. நாவல் மரங்களில் அங்க ராக பொடி போன்ற கரும் சிவந்த பழங்கள் நிறைந்து வணங்கி நிற்கும் நாவல் மரக் கிளைகளில் இந்த தேனீக்களும் கூட்டம் கூட்டமாக சேர்ந்து பறக்கின்றன. ரணத்திற்காக தயார் செய்யப் பட்ட படை யானைகள் போல, கொக்குகள் அணி வகுத்துச் செல்கின்றன. அதைக் காண யானைப் படைகள் மேல் கட்டப் பட்ட கொடிகள் போலவும், யானகள் பிளிறும் பெரும் சத்தம் போலவும், மேகத்தின் இடியோசை வந்து காதில் படவும், கொக்குகள் அணி வகுத்துச் செல்கின்றன. இந்த மேக நாதத்தைக் கேட்டு எதிரொலியென்று எண்ணி யானைகள் திரும்பி போகின்றன. காட்டுப் பிரதேசங்களில் சில இடங்களில் தேனீக்கள் கூட்டம் கூட்டமாக ரீங்காரம் செய்து கொண்டு பறக்க, சில இடங்களில் நீல கண்டமாக மயில்கள் ஆட, மதம் கொண்ட யானைகள் சில இடங்களில் ஆட, பல விதமான ஜீவன்களுக்கு இடம் கொடுத்தது போலத் தெரிகிறது. புது ஜலம் நிரம்பிய பூமிகளில் கத3ம்ப3, ஸர்ஜ, அர்ஜுன மரங்களின் தளிர்கள் விழுந்து குவியலாகத் தெரிய, மயில்கள் மதம் பிடித்தது போல ஆட, கள் குடிக்கும் இடம் போல இருக்கிறது. இலைகளில் தங்கியிருக்கும் துளி நீர், நிர்மலமான முத்து போல காட்சியளிக்கிறது. இதை பல வனங்களில் பறக்கும் பறவைகள், தாகம் எடுக்கும் பொழுது வந்து குடிக்கின்றன. இந்திரன் கொடுத்தது என்று மகிழ்ச்சியுடன் குடிப்பது போலத் தெரிகிறது. வனங்களில் சங்கீத கச்சேரி நடக்கிறது. வண்டுகள், மதுரமாக ரீங்காரம் செய்து கொண்டு பாடுகின்றன. மரங்களில் தாவும் வானரங்கள் தங்கள் குரலால் தாளம் போடுகின்றன. மேகத்தின் இடியோசை மிருதங்கம் வாசிப்பது போல உடன் கேட்கிறது. இதற்கு அனுசரணையாக மயில்கள் சில சமயம் வேகமாக ஆடுகின்றன. சில சமயம் கழுத்தை தூக்கிக் கொண்டு கத்துகின்றன. சில சமயம் மரத்தின் மேல் அமர்ந்து தன் தோகையை கீழே விரித்து பரவ விட்டுக் கொண்டு, வனத்தையே சங்கீத மயமாக ஆக்குகின்றன. வெகு நேரம் தூங்கிக் கொண்டிருந்த வானரங்களை மேகத்தின் கர்ஜனை, இடியோசை எழுப்பி விட்டது. பல விதமான உடல் சேஷ்டைகளுடன் விசித்ரமாக ஒலியெழுப்பிக் கொண்டு, புது மழை நீரில் நணைந்தபடி பாடுகின்றன. சக்ரவாக ஜோடிகளைத் தள்ளிக் கொண்டே புது வெள்ளம் பொங்க நதிகள், கரைகளில் வாடி விழுந்த இலைகளை தள்ளிக் கொண்டு (சக்ரவாக பக்ஷிகளுக்கு இடையூறு செய்யாமல், அப்புறப் படுத்திக்கொண்டு) தானும் தன் பதியை சென்றடையும் பரபரப்புடன் வேகமாக ப்ரவகித்துச் செல்கின்றன. (நதிகளின் பதி சமுத்திரம்). நீலமான மலைகளில் நீல வர்ணமாகத் தெரிகின்றன. மேகங்களில் இருக்கும்பொழுது அதே நீர், மேக வர்ணமாக விளங்குகிறது. காட்டுத் தீ எரித்த இடங்களில், காட்டுத்தீ நிறமாக, மலைகளில் வரும் பொழுது மலையாகவே, தங்கள் உற்பத்தி நிலையை கொண்டுள்ளன. யானைகள் உற்சாகமாக சுற்றுகின்றன. அவை செல்லும் வனங்கள் ரம்யமாக இருப்பதுடன், நீப (வேம்பு), அர்ஜுன மரங்களின் வாசனையும் காற்றில் கலந்து வீசுகின்றன. மயில்களும், அதைப் போன்ற பறவைகளுடன் தோகை விரித்து மகிழ்ச்சியுடன் ஓசை கிளப்புகின்றன. சக்கரத்துடன் கூடிய வண்டியுடன், பசு மாடுகளும் மேயும், புல் தரைகள் உள்ளன. மழை நீரின் வேகத்தில் அடிபட்ட மகரந்த கொடிகளையுடைய தாமரை மலர்களை விட்டு வண்டுகள் உடனே கதம்ப புஷ்பங்களை நாடிச் செல்கின்றன. சொல்லவொண்ணாத மகிழ்ச்சியுடன் தாவிச் செல்கின்றன. பெரிய யானைகள் மதம் கொண்டு திரிகின்றன. ம்ருகேந்திரன் என்று அழைக்கப்படும் சிங்கங்கள் விஸ்ராந்தியாக அமர்ந்திருக்கின்றன. மன நிறைவு முகத்தில் தெரிய. இந்த நகேந்திரனும் (மலையரசன்) ரம்யமாகத் தெரிகிறான். நிறைய நரேந்திரர்கள் இந்த பூமியில் உள்ளனர். சுரேந்திரன் (இந்திரன்-மழைக்கு காரணமானவன்) நிறைய நீரை பொழிந்து விளையாடி இருக்கிறான். மேகங்கள் சமுத்திர ஓசையையும் தூக்கி அடிக்கின்றன. நிறைய நீரை சுமந்து கொண்டு ஆகாயத்தை இருப்பிடமாக கொண்டுள்ளன. நதிகள், குளங்கள், ஸரஸ் எனும் சிறிய நீர் நிலைகள், கிணறு, மஹீ எனப்படும் குட்டை, இவை அனைத்தும் நீர் நிறைந்து பெருகி ஓடுகின்றன. காற்று பெரும் ஓசையுடன் வீசுகிறது. மழைத்துளிகள் பெரும் தூற்றலாக விழுகின்றன. நதிகளின் கரைகளை அரித்துக் கொண்டு ஓடுகின்றன. வழியில் தடங்கல்களை தகர்த்துக் கொண்டு ஓடுகின்றன. நரன் (மனிதர்களால்) நரேந்திரன் போல, மகேந்திரன் கொடுத்த காற்றால் கொண்டு வரப் பட்ட கார் மேகங்களே கும்பங்களாக, அதன் மூலம் நீரை பொழியச் செய்து அபிஷேகம் செய்தது போல, தன் ரூபத்தையும், லக்ஷ்மி கடாக்ஷத்தையும், தாங்களே காண காட்சியளிக்கின்றன. மேகம் நிறைந்துள்ள ஆகாயத்தில் (நக்ஷத்திரங்கள் தென்படாததால்) தாரையுடன் கூடிய பாஸ்கரன் தரிசனம் தருவதில்லை. திசைகள் ஒளி மங்கி, கார் மேகங்களின் கரு நிறத்தால் இருட்டியது போல காண்கின்றன. மலைகளின் குகைகள், மழை தாரையில் குளித்து, குளிப்பாட்டப் பட்டு அதிக சோபையுடன் தெரிகின்றன. மிக அதிகமாக பெரும் துளிகளாக பொழியும் மழை சாரல் முத்துக்கள் கோத்த மாலை போல தெரிகின்றன. வேகமாக வரும் தண்ணீர் மலையின் கற்களில் தடைபட்டு, சுழித்துக் கொண்டு ஓடுவது, கால் தடுக்கி சமாளித்துக் கொண்டு திரும்ப ஓடுவது போல இருக்கிறது. குகைக்குள் ப3ர்ஹிண பக்ஷிகள் இணந்து இரைச்சலாக கத்துவதை பாராட்டி மாலையணிவிப்பது போல இருக்கிறது. வெகு வேகமாக வெள்ளமாக பெருகி வரும் வெண் நுரையுடன் கூடிய மழை நீர், மலைகளின் கழுத்தில் முத்து மாலையை அணிவித்தது போல பெரும் குகைகளின் சிகரங்களில் இருந்து வடிகிறது. இந்த மழை நீர் பிரவாகம், ஸ்வர்க்க ஸ்த்ரீயின் கழுத்திலிருந்து நழுவி விழுந்து விட்ட முத்து மாலையே தானோ? சூரியன் அஸ்தமித்ததை எவ்வாறு தெரிந்து கொள்வது? பறவைகள் வீடு திரும்புவதைக் கண்டும், தாமரை மலர்கள் மூடிக் கொள்வதை வைத்தும், மாலதி புஷ்பங்கள் மலருவதைக் கொண்டும், சூரியன் அஸ்தமனம் ஆகி விட்டான் என்று தெரிகிறது. சுற்றிக் கொண்டு யாத்திரை சென்ற அரசனின் படைகள் திரும்பி வருகின்றன. வைரங்களும், மார்கங்களும், (விரோதங்களும், வீதிகளூம்) தண்ணீரால் சமப் படுத்தப் பட்டன. பாத்ரபத மாதத்தில் (புரட்டாசி) மாதத்தில் வேதம் கற்றுக் கொள்ளும் ப்ராம்மணர்களுக்கு, ப்ரும்மா, இது சாம வேதம் கற்றுக் கொள்ளும் நேரம் என்று சொல்கிறார். வேலைகளை செய்து முடித்து விட்டு, இந்த மழை காலத்திற்காக பொருட்களை சேகரித்து வைத்திருந்து, கோசல ராஜாவான ப4ரதன் ஆஷாட பர்வத்தை எதிர் நோக்கி தயாராக இருப்பான். சரயூ நதியிலும் வெள்ளம் நிறைந்து நதியின் இரைச்சல் கேட்கும். என்னைக் காண வந்த ஜனக் கூட்டத்தின் இரைச்சலை ஒத்திருக்கும் அந்த ஓசை. இந்த நீண்ட மழைக் காலத்தை சுக்ரீவன் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு எதிரியும் அழிந்தான். மனைவியும் கிடைத்துவிட்டாள். பெரும் ராஜ்யத்தில் அமர்த்தப்பட்டு விட்டான். நான் தான் இன்னமும், பெரும் ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப் பட்டவனாக, மனைவியையும் பறி கொடுத்து, இந்த பெரும் மழையில் நதியின் கரைகள் போல அலைக் கழிக்கப் படுகிறேன். லக்ஷ்மணா என் சோகம் நீண்டு கொண்டே போகிறது. மழை, வெளியில் செல்ல முடியாமல் தடுக்கிறது. ராவணனும் மிக கொடிய சத்ரு. கடக்க முடியாத பெரும் துன்பம் சூழ்ந்திருப்பதாக படுகிறது. இந்த பாதைகளைப் பார். இதில் யாத்திரை செய்ய முடியுமா? சுக்ரீவன் வணங்கி நின்றபோது கூட நான் ஒன்றும் சொல்லவில்லை. இப்பொழுது மனைவி மக்களோடு இணைந்திருக்கிறான். வெகு நாட்கள் பிரிந்திருந்தவன், இந்த சமயம் அவனிடம் எதுவும் சொல்வது கூட கடினம். என் காரியம் மிகப் பெரியது. அதனால் வானரத்தை குறை கூறவும் நான் விரும்பவில்லை. தானே நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு, காலம் வந்து விட்டது என்று அறிந்து, உபகாரம் செய்ய வேண்டியதை நினைவு கொள்வான் என்று எதிர்பார்ப்போம். சந்தேகப் படுவானேன்? அதனால் சுப லக்ஷணா, நானும் நல்ல காலம் வரும் என்று எதிர்பார்த்து காத்திருப்பேன். இந்த நதிகளுடையதும், சுக்ரீவனுடையதும் ஆன பிரஸாதத்தை (தயவை) எதிர்பார்த்து பேசாது இருக்கப் போகிறேன். உபகாரம் செய்தவனுக்கு பிரதி உபகாரம் செய்வதுதான் வீரனுக்கு அழகு. செய் நன்றி மறந்தவனும், பிரதி உபகாரம் செய்யாதவனும், நல்லவர்களுடைய மனதை துன்புறுத்துகிறான். இவ்வாறு ராமர் சொல்லவும், லக்ஷ்மணன் மனதில் இருத்திக் கொண்டு, ராமனுக்கு உத்ஸாகத்தை வளர்க்கும் விதமாக தன் ஆத்ம பலத்தை உணரும்படி சுபமாக பேசலுற்றான். ராஜன், உங்கள் விருப்பப்படி இந்த வானர ராஜன் கண்டிப்பாக செய்வான். அதிக தாமதம் செய்ய மாட்டான். சரத் காலத்தை எதிர் நோக்கி இருப்பான். பொறுங்கள். இந்த மழையையும் பொறுத்துக் கொள்ளுங்கள். சீக்கிரமே சத்ருவை அழிக்க மன வலிமையைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ப்ராவ்ருட் ஜ்ரும்பணம் என்ற இருபத்தெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 29 (300) ஹனுமத் ப்ரதி போ3த4னம் (ஹனுமான் நினைவு படுத்துதல்)
வானம் வெளுத்து விட்டது. ஹனுமான் ஆகாயம் நிர்மலமாக, மேகக் கூட்டம் இன்றி இருப்பதையும், ஸாரஸ பக்ஷிகள் கவலையின்றி பறந்து கொண்டிருப்பதையும், சந்திரனின் கிரணங்கள் ஒளி பரப்ப இரவு ரம்யமாக இருப்பதையும் கவனித்தான். இந்த அழகிய காட்சியைக் கண்டவுடன் ஹனுமான் சுக்ரீவனை நினைத்தான். தர்ம, அர்த்தம் இவைகளில் மந்த புத்தியுடையவனாக, அஸத்தான மார்கத்தில் திளைத்து, தனிமையில் தன் இஷ்டப்படி இருப்பவனை, தன் காரியம் ஆன திருப்தியுடன், பெண்களுடன் கூடிக் குலவி அதிலேயே மூழ்கி இருப்பவனை, தான் விரும்பிய, ஏங்கிய எல்லா மனோ ரதங்களும் ஒன்று சேர கிடைத்து விட்ட களிப்பில் தன்னை மறந்து இருப்பவனை, தன் மனைவியை அடைந்ததோடு, தாராவையும் விரும்பும் வானர ராஜனை, இரவு பகலாக கேளிக்கையில் மூழ்கி, ஜ்வரம் விட்டவனாக, எந்த வித சங்கோஜமும் இல்லாமல், நந்தன வனத்தில், அப்ஸர ஸ்த்ரீகளுடன் விளையாடும் இந்திரனைப் போல, மந்திரிகளிடம் ராஜ்ய காரியங்களை ஒப்படைத்து விட்டு, அவர்களை கண்ணால் கூட காணாமல் இருப்பவனை, ராஜ்யத்தை ஆளும் உத்தேசம் என்ன என்பதையே மறந்து விட்டு, காமத்திலேயே மூழ்கி இருப்பவனை, கால தர்மத்தை நன்கு அறிந்தவனும், நிச்சயமான பொருளாதார அறிவு படைத்தவனும், பொருள் பற்றிய தத்துவங்களை அறிந்தவனுமான, அனுமான், வானர ராஜனை நெருங்கி அறிவுரை கூறலானான். ஹிதமானதும், நன்மை பயக்க கூடியதுமான பத்தியமான (கடை பிடிக்க கடினமாக இருப்பினும், முடிவு நன்மையைத் தரக் கூடிய செயல்கள்) அறிவுரையை செய்தான். சாம, தர்ம, அர்த்தம், நீதி இவைகளை விளக்கும்படியான சொல்லை, பொருள் உணர்ந்து பேசக் கூடிய அனுமன், நயமாகவும், அன்புடனும், தன்னிடம் நம்பிக்கை கொண்டு அதைக் கேட்டு அனுசரிக்கும் விதமாக சுக்ரீவனிடம் பேசலானான். ராஜ்யம் கிடைத்து விட்டது. புகழும் வந்து சேர்ந்தது. குல தனமான ராஜ்யம், கூடவே லக்ஷ்மீ கடாக்ஷமும், செல்வமும் உன் கைக்கு வந்து விட்டது. மித்திரர்களைக் கூட்டி, செய்ய வேண்டியதை யோசித்து செய்ய வேண்டியது தான் தற்சமயம் நீ செய்ய வேண்டிய செயல். அதை உடனே இப்பொழுதே செய். கால தேசங்களை அனுசரித்து நண்பர்களுடன் தன் நடவடிக்கைகளை சரியாக வைத்துக் கொள்பவனுடைய ராஜ்யமும், புகழும், பிரதாபமும் வளரும். எவனுடைய பொக்கிஷமும், தண்டமும், நண்பர்களும், ஆத்மாவும் சமமாக இயங்குகின்றனவோ, சீராக இருக்கின்றனவோ, அவன் ராஜ்யத்தை இடையூறு இன்றி அனுபவிக்கிறான். அதனால், தாங்கள் செல்வம் கிடக்கப் பெற்று, அழியாத நல் வழியில் நின்று, நண்பனுக்காக, தேடிச் சென்று நட்பு கொண்டு அழைத்து வந்தவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய காலம் வந்து விட்டது. மற்ற காரியங்களை நிறுத்தி வைத்து விட்டு, தன் ஆப்த நண்பனுக்காக எவன் முனைகிறானோ, அவன் காலம் கடந்தபின் பரபரப்பாக, முன் பின்னாக காரியங்களை செய்வதால் தோன்றும் அனர்த்தங்களை தவிர்த்தவன் ஆகிறான். இந்த முன் யோசனை இல்லாதவன், கடைசி நேர அனர்த்தங்களில் மூழ்கி தத்தளிப்பான் என்பதும் உண்மையே. காலம் கடந்தபின் ஏராளமாக செய்தாலும், அந்த நண்பனுக்கு வேண்டியதை செய்ததாக ஆகாது. அதனால் வீரனே, நாம் உடனடியாக செய்ய வேண்டிய பொறுப்பு ராகவனுடைய காரியம். நாம் வாக்களித்தபடி, வைதேஹியைத் தேட ஏற்பாடுகளைச் செய்வோம். கடந்து போன காலம் திரும்ப வராது. ராஜன், வேகமாக செயல்பட துடித்தாலும், ராகவன் தற்சமயம் உன் வசத்தில் இருப்பதால் பொறுத்துக் கொண்டிருக்கிறான். நல்ல அறிவுடையவன். ஏராளமான ப3ந்து4க்களையுடையவன். அவன் பழம் பெரும் குல வழி வந்த குணம் காரணமாக, உனக்காக பொறுத்திருக்கிறான். காத்திருக்கிறான். தானே அளவிட முடியாத பலமும், பராக்ரமும் உடையவன், உயர்ந்த குண நலன்கள் உடையவன், உன்னையும் ஒரு பொருட்டாக எண்ணி காத்திருக்கிறான் என்பது அவன் பெருந்தன்மை. உனக்கு அவன் செய்த உதவிக்கு பிரதி உபகாரம் செய். வானர ராஜனேஸ்ரீ சிறந்த வானரங்களை பொறுக்கி கட்டளையிடு. அவன் வந்து உன்னை கேட்கும் வரை தாமதம் செய்யாதே. மற்றவர் தூண்டிய பின் செய்வது ஏடாகூடமாக ஆகும். வானர ராஜனே, அரிய செயலையும் செய்யக் கூடியவனே நீ. எதுவும் நன்மை செய்யாதவனுக்கு கூட நீ உதவி செய்ய தயங்கியதில்லை. அப்படி இருக்க, உனக்கு ராஜ்யமும், செல்வமும் கிடைக்கச் செய்தவனுக்கு, நீ பிரதி உபகாரம் செய்ய, சக்தி இருந்தும், இன்னமும் ஏன் ஆரம்பிக்காமல் இருக்கிறாய்? ராகவன் நினைத்தால் அவன் பாணங்களால் சுர, அசுர, பன்னக என்று அனைத்தையும் தன் வசம் ஆக்கிக் கொள்ள முடியும். நீ செய்த பிரதிக்ஞையை நினைத்து தன்னை அடக்கிக் கொண்டு காத்திருக்கிறான். நீ பிராணத்யாகம் செய்யும் நிலையில் இருந்தாய். அந்த சமயம் உன்னைக் காப்பாற்றி கரை சேர்த்தவன் ராமன். அவனுடைய வைதேஹியை நாம் தேடுவோம். பூவுலகிலும், வானுலகிலும், எங்கு இருந்தாலும் கண்டு பிடிப்போம். தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, மருத் கணங்களோ, யக்ஷர்களோ அவனுக்கு எதிராக எதுவும் செய்ய பயப்படுவார்கள். ராக்ஷஸர்கள் எம்மாத்திரம்? சக்தி வாய்ந்தவன், உனக்கு முன்பே உதவி செய்தவன், அந்த ராமனுக்கு பிரியமானதை நீ செய்தே ஆக வேண்டும். வானர ராஜனே, எல்லா விதத்திலும் முயற்சி செய்வோம். பூமியின் அடியிலோ, நீரின் ஆழத்திலோ, மேலே ஆகாயத்திலோ, எங்கு வேண்டுமானாலும் உன் கட்டளைப் படி நம் படை வீரர்கள் செல்வார்கள். செல்ல சக்தியுடையவர்களே. அதனால் வானர ராஜனே, கட்டளையிடு. யார், எங்கே, எப்படி முயற்சி செய்ய வேண்டும்.? கோடிக் கணக்கான நல்ல வீரர்கள் உன் படையில் இருக்கிறார்கள். சரியான சமயத்தில் நல்லபடியாக ஹனுமான் எடுத்துச் சொல்லக் கேட்ட சுக்ரீவன், அதை அப்படியே ஏற்றுக் கொண்டான். புத்திசாலித் தனமாக செயல் பட்டான். எப்பொழுதும் துடியாக இருக்கும் நீலனைக் கூப்பிட்டான். எல்லா திக்குகளிலும் இருந்து சைன்யங்களை வரவழைக்க ஏற்பாடு செய். சைன்யங்களுடன் அவர்கள் சேனைத் தலைவர்களும் வந்து சேரட்டும். ஒருவர் விடாமல் வந்து சேரும்படி ஏற்பாடு செய். காவலில் சிறந்த வீரர்கள், வேகமாக குதித்து ஓடக் கூடிய வானரங்கள், தளராத முயற்சியுடையவர்கள், இவர்களை உடனே என் கட்டளைப்படி ஒன்று கூட்டு. நீயும் மற்றொரு சைன்யத்தை தயாராக வைத்துக் கொள். மூன்று, ஐந்து (பதினைந்து) இரவுக்குள் இங்கு வந்து சேராத வானரங்களை தலையை சீவி விடு. அது தான் தண்டனை. விசாரனையே வேண்டாம். வயதான வானரங்களையும் நீ அங்கதனுடன் சென்று பார். என் கட்டளையை அவர்களுக்குச் சொல்லு. இவ்வாறு ஏற்பாடுகளைச் செய்து விட்டு, வானர ராஜன், திரும்பவும் தன் மாளிகைக்குள் சென்று விட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமத் பிரதி போ3த4னம் என்ற இருபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 30 (301) சரத்3 வர்ணனம் (சரத் கால வர்ணனை)
மேகங்களிலிருந்து விடுபட்டு ஆகாயம் நிர்மலமாக ஆயிற்று. சுக்ரீவனும் தன் குகைக்குள் நுழைந்து விட்டான். இங்கு ராமர், ஒரு மழைக் கால இரவில் உறக்கம் வராமல் எழுந்து கொண்டார். அவர் மனதில் துக்கம் பொங்கியது. வெளுத்த வானத்தையும், பிரகாசமாகத் தெரிந்த சந்திரனின் ஒளியையும், சரத் கால இரவின் துல்லியமான அழகையும் கண்டார். மனம் வாடியது. உலகே சந்திரனின் ஒளியை சந்தனம் போல பூசிக் கொண்டு நிற்பது போல காட்சியளித்தது. ஜனகன் மகளான தன் மனைவியைப் பிரிந்ததும், சுக்ரீவன் காமமே பெரிதாக களியாட்டம் போடுவதும், நேரம் வீணாகிறதே என்ற கவலை அவர் மனதில் நிரம்பியது. மனதில் அகலாமல் இருந்த ஜானகியை திரும்ப நினைத்துப் பார்த்துக் கொண்டார். பொன் மயமான தா4துக்கள் நிறைந்த அந்த மலையுச்சியில் அமர்ந்து, சரத் கால ஆகாயத்தைப் பார்த்து அவரது மனம் சீதையிடம் சென்று விட்டது. மேகங்களோ, இடி முழக்கமோ, மின்னல் வரிசையோ எதுவுமின்றி, மென்மையான ஸாரஸ பக்ஷிகளின் கூக்குரலே நிறைந்திருக்க, நாத்தழு தழுக்க, வருத்தத்துடன் புலம்பலானார். ஆசிரமத்தில் என்னுடன் வசித்த பொழுது, என் பிரியா, இந்த ஸாரஸ பக்ஷிகளின் கூக்குரலுக்கு அதே குரலில் பதில் கொடுப்பாள். மகிழ்வாள். இப்பொழுது எங்கு இருக்கிறாளோ? என்ன செய்கிறாளோ? மகிழ்ச்சியாகவா இருக்கப் போகிறாள்? பொன் வண்ணமாக மலர்ந்து கிடக்கும் இந்த அசன புஷ்பங்களின் நடுவில் அதே போல மலர்ந்த பொன் முகத்துடன், புன்னகையுடன் என்னை அழைத்துக் காட்டுவாள். அதே புஷ்பங்களை இப்பொழுது கண்டாலும், நான் அருகில் இல்லாத சமயம் ரஸிக்கவா போகிறாள்? கல ஹம்ஸங்கள் கீச் கீசென்று கத்தும். அதே போல கல கலவென்று பேசுபவள், இந்த சத்தம் கேட்டு துயிலெழுவாள். என்னையும் எழுப்புவாள். எங்கு இருக்கிறாளோ? துயில் கொள்வாளோ, என்னை எழுப்ப நினைப்பாளோ ? ஆரவாரமின்றி ஜோடி ஜோடியாக செல்லும் சக்ரவாக பக்ஷிகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும். இணைந்து செல்லும் அந்த பக்ஷிகளுக்கு தன் துணையைத் தவிர வேறு உலகமே கிடையாது. தாமரை இதழ் போன்ற கண்களையுடைய விசாலா, மேலும் கண்கள் விரிய இந்த பக்ஷிகளைக் கண்டு மகிழ்வாள். நதி, கிணறு, குளம் குட்டை எங்கு சென்றாலும், காடுகள், வனங்கள் என்று அலைந்தாலும், அவளுடன் இருக்கும் பொழுது மன நிறைவும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்குமே, அதே இடங்கள் தனிமையில் என்னை ஈர்ப்பதில்லையே. அவள் சுகுமாரி, என் பிரிவு அவளை வாட்டும். இந்த சரத் காலத்தின் நியதி, உற்றாரை எண்ணி ஏங்கச் செய்யும். இந்த சமயம் ஏற்கனவே, கலங்கி இருக்கும் அவளை காமனும் வாட்டுவானோ, அவள் எப்படித் தாங்குவாள்? கண்களில் நீர் மல்க, கவலையுடன் முகம் வாடி இருந்த சகோதரனைக் கண்டு, லக்ஷ்மணன் அனுதாபம் மேலிட, அருகில் சென்று ஆறுதல் சொல்லலானான். ஆர்ய, இது என்ன? தங்கள் பௌருஷம், தன்னம்பிக்கை எங்கே? இப்படி காமனால் துன்பப்பட மனதில் இடம் தரலாமா? இது உங்கள் பெருந்தன்மைக்கே இழுக்கல்லவா? தங்கள் யோக பலத்தால் இந்த துன்பத்திலிருந்து விடுபட்டு, சமாதி நிலையை அடைய முயற்சி செய்வீர்களா? தன் செயல்களில் மூழ்கி இருப்பதும், மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வதும், சமாதி யோகத்தில் காலத்தை செலவழிப்பதும் தங்களுக்கு கை வந்த கலை. தாங்களே சமர்த்தர். உதவி செய்யவும், அளவில்லாத சக்தியும், ஆற்றலும் உடையவர். தற்சமயம் நடப்பவை வினைப் பயன் என்று மனதை தேற்றிக் கொள்ளுங்கள். மனித குல மாணிக்கமே, ஜானகி தங்களை நாதனாக அடைந்தவள். மற்றவர் எவரும் அவளை எதுவும் செய்ய முடியாது. கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்றவள். அந்த கற்புத் தீயின் எதிரில் நின்று, வேறு யாரும் எதுவும் செய்ய முடியுமா என்ன? அவளுக்கு தீங்கு செய்வது இருக்கட்டும். இந்த நெருப்பின் அருகில் சென்று தாங்களே பொசுங்கிப் போகாமல் திரும்ப முடியுமா என்ன? யாராலும் எதிர்த்து நிற்க முடியாத பலம் உள்ளவன் லக்ஷ்மணன். இயல்பாகவே லக்ஷணங்கள் உடையவன். சொல் வன்மை உடையவன். அவன் சொல் எப்பொழுதும் நேர்மையாகவே சரியாகவே இருக்கும். இது அவன் பிறவிக் குணம். ராமர் அறிந்ததே. லக்ஷ்மணனின் அறிவுரை ஹிதமாக, பத்யமாக (ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும், நன்மை தரக் கூடியது,) நியாயத்தைச் சொல்வது, சாம, தர்ம, அர்த்தம் நிறைந்தது. எந்த காரணத்தைக் கொண்டும் தட்ட முடியாதது. ராமரும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டார். எசந்தேகமில்லாமல் நாம் மேற்கொண்டு செய்வதைத்தான் யோசிக்க வேண்டும். அதை கவனிப்போம். அரிய செயலைத் தொடருவோம். நடந்ததை எண்ணி நல்லதோ, கெட்டதோ, நினைத்துக் கொண்டே இருந்து என்ன பயன்? பத்3ம தளம் போன்ற கண்களையுடைய சீதையை ஒருமுறை நினைத்து பார்த்தவர், முகம் வாடியிருந்தாலும் லக்ஷ்மணனுக்கு பதில் சொன்னார். ஸஹஸ்ராக்ஷன் (இந்திரன்) பூமியை நீராட்டி, திருப்தி செய்து விட்டான். பயிர்கள் முளைத்தெழுந்து வளரத் தொடங்கி விட்டன. தன் காரியம் ஆன திருப்தியோடு திரும்பி விட்டான். மேகங்களும் நனைந்து, கம்பீரமாக கோஷமிட்டு, மலைகளிலும், மரங்களிலும் தங்களிடம் இருந்த நீரை கொடுத்துவிட்டு, விஸ்ராந்தியாக சிரம பரிகாரம் செய்து கொள்கின்றன. (நீரை சுமந்து வந்த களைப்புத் தீர) பெரும் யானைகள் மதம் நீங்கப் பெற்றது போல, மேகங்கள் வேகம் நீங்கி மெல்ல நடை போடுகின்றன. திசைகளை நீலோத்பலம் போல வெளிர் நிறத்துடன், தன் கருமையை திசைகளுக்கு கொடுத்து விட்டன போலும். மழைக் காற்றும் ஜலத்தை தாங்கி வேகமாக வீசியது, குடஜ, அர்ஜுன புஷ்பங்களின் வாசனையை பரவச் செய்தவை, இப்பொழுது சாந்தமாக வீசுகிறது. திடுமென, மயில்கள் கத்துவதும், யானைகள் பிளிறுவதும் கூட நின்று விட்டன. வேகமாக விழும் அருவியின் ஓசை கூட அடங்கி விட்டது. லக்ஷ்மணா, மகா மேகங்கள் வந்து ஜலத்தை வர்ஷித்து அபிஷேகம் செய்த பின், மலைகள், சந்தனம் பூசிக் கொண்டது போல சந்திரனின் ஒளியால் பூசப் பெற்று விளங்குகின்றன. இந்த சரத் காலம் தன்னிடமுள்ள அழகையெல்லாம் பங்கிட்டு கொடுத்திருப்பது போலத் தெரிகிறது. சப்தசத (ஒரு வகை மரம்) மரங்களின் கிளைகளில், சந்திர சூரியர்களின் கிரணங்களில், உயர்ந்த ஜாதி யானைகளின் விளையாட்டுகளில், தன்னுடைய தனித் தன்மையை பகிர்ந்து அளித்து விட்டு, சரத் தோன்றுகிறாள். லக்ஷ்மீ எப்பொழுதும் ஓரு இடத்தில் நில்லாள் என்பது பிரஸித்தம். பல இடங்களில் அவள் சோபை தெரியும். அதுதான் அவள் இயல்பு. இந்த சரத் கால குணமும் அதே போலத் தான். சூரியனின் முதல் கிரணங்கள் பட்டு, கண் விழிக்கும் பத்மங்களின் கூட்டங்களில் அவள் அதிகமாக காணப் படுகிறாள். போட்டி போடுவது போல, சப்தசத மரங்களின் புஷ்பங்களின் வாசனை, அதில் மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரம் கீதமாக ஒலிக்க, வேகமாக வீசும் காற்றுடன், மதம் கொண்ட யானைகளின் திமிரையும் அடக்கும் விதமாக, அழகாக வீசுகிறது. வெகு தூரம் யாத்திரை செய்து விட்டு வந்த உறவினரை வரவேற்பது போல ஹம்ஸங்கள், சக்ர வாக பக்ஷிகளை வரவேற்கின்றன. பெரிய விரிந்த இறக்கைகளையுடைய இந்த பக்ஷிகள், தங்கள் இணையை விட்டு எப்பொழுதும் பிரிவதில்லை. பத்மங்களின் மகரந்தம் இவைகளின் இறக்கைகளில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. பெரும் நதிகளை கடந்து வந்ததால், மணல் துகள்களும் தெரிகின்றன. ஹம்ஸங்கள் பிரியமுடன் இவைகளுடன் உறவாடுகின்றன. லக்ஷ்மி தன் கடாக்ஷத்தை பல விதங்களில் வெளிப்படுத்துகிறாள். பள்ளத்தை நோக்கிப் பாயும் அருவிகளில் பிரஸன்னமான ஜலத்தில், பசுக்களின் கூட்டத்தில், மதம் கொண்ட யானைகளின் நடையில் என்று அழகு பளிச்சிடுகிறது. ஆண் மயூரங்கள் த்யானத்தில் ஆழ்ந்து நிற்கின்றன. அவைகளுக்கு பிடித்தமான மேகக் கூட்டம் ஆகாயத்தை விட்டு விலகிச் சென்று விட்டன. மற்ற தோகை விரித்தாடும் பறவைகளும் வனத்தில் அதிகமாக காண முடியவில்லை. உற்சவம் முடிந்தபின் இருக்கும் மன நிலையில் இந்த மயூரங்கள் பெண் மயிலிடம் கூட நாட்ட மின்றி, விரக்தியாக தியானத்தில் மூழ்கி விட்டன போலும். வனப் பிரதேசங்களில் வீசும் காற்றில் மனதை மயக்கும் வாசனை வீசுகிறது. மரங்கள் ஏராளமான புஷ்பங்களைத் தாங்கி வளைந்து வணங்கி நிற்கின்றன. பளிச்சென்று விளக்கு போட்டது போல, பொன் நிற மலர்களும், வெண் நிற மலர்களும் பிரகாசமாக தெரிகின்றன. மலர்ந்த புஷ்பங்களின் அழகு கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது. தன் பிரிய பந்துக்களான பெண் யானைகள், குட்டிகள் தொடர, ஆண் யானைகள், நளினீ- தாமரைத் தண்டை விரும்பும் இந்த யானைகள், நீரில் மூழ்கி விளையாட, மந்த மந்தமாக நடந்து வருவது ரஸிக்கத் தகுந்ததாக இருக்கிறது. ஆகாயம் அலம்பி விட்டது போல வெளுத்து காட்சியளிக்கிறது. நதியில் ஜலம் குறைந்து, கீற்றாக கணப் படுகின்றன. காற்றும் குளிர்ந்து வீசத் தொடங்கி விட்டது. திசைகள் இருள் நீங்கி பிரகாசமாக ஆகி விட்டன. அரசர்கள் தங்களுக்குள் பகை கொண்டவர்கள் செயல்பட ஆரம்பிக்கும் நேரம் இது. சூரியனின் கிரணங்கள் சேறாக இருந்த நிலத்தை உலர்த்தி சமமாக்கி விட்டன. புழுதிப் படலம் அடங்கி விட்டது. இது தான் சமயம் என்று அரசர்கள் போர் புரிய கிளம்பி விட்டனர். சரத் காலத்துக்கே உரிய (சீதோஷ்ண நிலை காரணமாக) உடல் வலுவை பெற்று, மிகவும் ஆனந்தமாக சேற்றில் விளையாடி உடல் பூரா மண்ணாக, யுத்தம் செய்யத் தயாராக ருஷபங்கள், பசுக்களின் மத்தியிலிருந்து ஹுங்காரம் செய்கின்றன. பெண் யானைகள் குல ஸ்த்ரீகள் போல, மனதில் எழும் தீவிரமான ஆசையையும் அடக்கியபடி, மதம் கொண்ட (ஆண் யானை) கணவனை நெருங்கி உரசியபடி, வனத்தில் உடன் செல்கின்றன. மயூரங்களின் நிலை தான் பரிதாபம். தங்களுக்கு ஆபரணமாக விளங்கும் பெரிய தோகையை விலக்கி விட்டு, நதிக் கரைகளில் உலவும் சமயம், ஏதோ, ஸாரஸ பக்ஷிகள் சீண்டுவது போலவும், பயமுறுத்துவது போலவும் கற்பனை செய்து கொண்டு வாட்டத்துடன் மன அமைதியின்றி செல்கின்றன. தங்கள் பங்குக்கு கஜேந்திரங்கள் என்ற பெரிய யானைக் கூட்டத் தலைவர்கள், காரண்டவ, சக்ரவாக பக்ஷிகளை அதட்டி விரட்டியபடி, தாமரைக் குளங்களில் இறங்கி விழுந்து புரண்டு நீரைக் கலக்கி, தாமரைத் தண்டுகளை மாலையாக மாட்டிக் கொண்டு, தண்ணீரை அள்ளி அள்ளி குடிக்கின்றன. சேறும் இன்றி, அடி மண் (வண்டல் மண்) தெரிய பிரஸன்னமான, தெளிவான ஆற்று நீர், அருகில் பசுக்களும், மாடு, கன்றுகளும் நிரம்பிய கோகுலம், இடையில் அமைதியாக ஓடும் நதிகளில் ஸாரஸ பக்ஷிகளின் இடை விடாத கூக்குரலையும் ரஸித்தபடி ஹம்ஸங்களும், சந்தோஷமாக வந்து சேருகின்றன. நதிக் கரைகளில் வேகமாக ஓடும் நதிப் பிரவாகத்தில், குரங்குகள் தங்கள் வழக்கமான உற்சாகத்தை இழந்து நிற்க, ஓசையின்றி, நதிக் கரையும் அமைதியாக விளங்குகிறது. சர்ப்பங்கள் பல வர்ணங்களில் வெளிப் படுகின்றன. புதிதாக நீரைதாங்கி வந்த மேகங்கள் மழையைப் பொழியவும், அவை உடலில் பட்டு, காயங்களோடு, பசியும் சேர, பயங்கர விஷம் கொண்ட பாம்புகள், தங்கள் வளைகளில் வெகு காலமாக அடை பட்டு கிடந்தவை மெல்ல வெளி வந்து நடமாடுகின்றன. ராக3வதி- அன்புடையவள். ராக3வதி -சிவந்த நிறமுடையவள். சந்த்யாகாலம் ராகவதியாக, சந்திரனின் ஸ்பரிசத்தால் மகிழ்ச்சியுடன் கண் விழித்த தாரகையைக் கண்டு, (ராகவதி-பொறாமை கொண்டு) தானாகவே ஆகாயத்தை விட்டு வேகமாக விலகிச் செல்கிறாள். (சந்த்யா காலம் மறைந்து இருட்டத் தொடங்கி விட்டதை கவி சொல்லும் அழகு) நதிகள் தங்கள் வேகம் குறைய, நீரின் அளவு குறைய ஆங்காங்கு மணல் தரை தெரிகிறது. வெட்கத்துடன் கணவனுடன் துயிலும் பெண்களின் ஆடை விலகி உடல் பாகம் தெரிவது போல அவை தெரிகின்றன. நல்ல வெண் பட்டு உடுத்தி நிற்கும் பெண் போல ராத்திரி விளங்குகிறாள். சந்திரன் (சஸாங்கன்) உதித்ததால் சௌம்யமான வதனம், தாரா கணங்களே சிமிட்டும் கண்கள், சந்திரனின் ஒளிப் பிரவாகமே அவள் உடுத்தியிருக்கும் ஆடை, என்று அழகாக தெரிகிறாள். சால மரத்தின் பழுக்காத பழங்களை கடித்து துப்பி, விளையாட்டாக ஸாரஸ பக்ஷிகள் மகிழ்கின்றன. இவை ஒரு ஒழுங்குடன் வரிசையாக செல்வது ஒரு அழகு. திடுமென எல்லாமாக எழுந்து ஆகாயத்தில் அதே அணி வரிசையில் பறக்கின்றன. வெண்மையான இந்த பறவைகள் பறப்பது, காற்று வேகத்தில் தொடுத்து வைத்த பூ மாலை ஆகாயத்தில் வீசி எறியப் பட்டது போலவும், அது தானாக நீல வானத்திற்கு மாலை அணிவித்தது போல விழுந்தது போலவும் காட்சி தருகிறது. ஒரு ஹம்ஸம் தூங்குகிறது. அதைச் சுற்றி குமுத மலர்கள். அழகான ஒரு குளத்தில் நீர் நிரம்பிய இடத்தில் அது இருக்கிறது. மேகங்கள் இல்லாத நிச்சலமான வானத்தில், தாரா கணங்களுடன் கூடிய சந்திரன் அந்தரிக்ஷத்தில் தெரிவது போலவே, இந்த நீர் நிலையில் உள்ள ஹம்ஸமும் தெரிகிறது. ஓசையிடும் (மேகலை) இருப்பில் அணியும் ஒட்டியாணம் போல கல கலவென இரைச்சலிடும் ஹம்ஸங்கள் சூழ, பத்மங்களும் உத்பலங்களும் மலர்ந்து மாலையாகத் தெரிய, இந்த உத்தமமான வாபி (கிணறு) இன்று அலங்காரம் செய்து கொண்ட உத்தம ஸ்த்ரீ போன்ற லக்ஷ்மீ கடாக்ஷத்தைப் பெற்று விளங்குகிறது. பொழுது விடிந்து விட்டது என்பதற்கு அறிகுறியாக, மூங்கில் குழல்களில் புகுந்து புறப்பட்டு வரும் காற்றின் நாதம் கேட்கிறது. (தூர்ய மிஸ்ர ராகம்) இந்த சஞ்சாரத்தை பூர்த்தி செய்வது போல, பசுக்களும் காளைகளும் சத்தமிடுகின்றன. ஒருவருக்கொருவர் ஸ்வரக் கோர்வையை பூர்த்தி செய்வது போல இந்த ஒசைகள் இணைந்து இனிமையாக கேட்கின்றன. மந்தமான காற்று இதமாக வீசுகிறது. நதிகளில் விழுந்த புத்தம் புது மலர்கள், மலர்ந்து சிரிப்பது போல இருக்க, அதை இடையூறு செய்யாமல் நகர்ந்து போவது போல இருக்கிறது. அல்லது இந்த புது மலர்களின் எதிரில் நிற்க வெட்கி, காற்று மெதுவாக விலகிச் செல்கிறது. துவைத்து உலர்த்திய வெண் பட்டாடை போல நதிக் கரைகளில் சிப்பிகள் நிறைந்து காண்கின்றன. ஆறு கால்களையுடைய வண்டுகள், மிக மகிழ்ச்சியாக தென்படுகின்றன. வனத்தில் சுற்றித் திரிந்து தங்கள் பிரியாவுடன், ஏராளமான மதுவைக் குடித்து மயங்கியவைகளாக, கால்களில் மகரந்த பொடிகள் ஒட்டிக்கொண்டு வெண்மையாகத் தெரிய நாங்களும் காற்றுடன் யாத்திரை செய்வோம் என்பது போல பறக்கின்றன. ஜலம் பிரஸன்னமாக இருக்கிறது. அதில் மலர்ந்துள்ள குமுதம் பிரகாசமாகத் தெரிகிறது. க்ரௌஞ்ச பக்ஷிகளின் நாதமும் ஓங்கி ஒலிக்கின்றன. சாலி வனத்தில் பழங்கள் இன்னமும் முதிரவில்லை. காற்று ம்ருதுவாக வீசுகிறது. சந்திரனும் விமலனாக காட்சி தருகிறான். மழைக் காலம் முடிந்து விட்டது தானே என்று ஐயம் கொள்வது போலவும் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்டு விட்டது போலவும் ஒரு காட்சியைத் தோற்றுவிக்கின்றன. நதிகளே புது மணப் பெண்ணாக, நீர் மட்டத்தில் உள்ள மீன்களே மேகலையாக இருக்க, மெதுவாக நடக்கின்றனர். இரவு முழுவதும் கணவனால் அனுபவிக்கப் பட்ட மணப் பெண் விடிந்தபின், களைப்பும், சோம்பலுமாக நடப்பது போல அது இருக்கிறது. நதி முகங்களும் இது போன்ற புது மணப் பெண்ணின் முகத்தை ஒத்திருக்கிறது. சக்ரவாகங்களும், சைவலங்களும் சிப்பிகள் பட்டாடை உடுத்தியது போல உடலைச் சுற்றியிருக்க, பத்ரங்களுடன் ரம்யமாக காட்சி தருகின்றன. பா4ண, அஸன என்ற புஷ்பங்கள், முழுமையாக மலர்ந்து தென்படுகின்றன. அலங்காரமாக அமைந்துள்ளன. வண்டுகள் இனிமையாக ரீங்காரமிடுகின்றன. தன் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு மன்மதன் தன் வேலையை செய்ய இவைகளையும் பயன் படுத்திக் கொள்கிறான் போலும். நீரை பொழியும் இந்த மேகங்கள், செம்மையாக மழையை பொழிந்து உலகையே திருப்தியடையச் செய்து விட்டு, குளங்களையும் தடாகங்களையும் நிரப்பி விட்டு, முளை விட்ட பயிர் பச்சைகளுடன் பூமி செழிப்பாக இருப்பதைக் கண்டு திருப்தியுடன் வந்த வேலை முடிந்தது என்று ஆகாயத்தை விட்டுச் சென்று விட்டன போலும். இப்பொழுது ஜலமும் பிரஸன்னமாக இருக்கிறது. குரரீ என்ற பக்ஷிகளின் கூக்குரல் கூட இனிமையாக இருக்கிறது. நீர் நிலைகள் சக்ரவாக பக்ஷிகள் நிறைந்து காணப் படுகின்றன. அஸன புஷ்பங்கள், சப்த பர்ணங்கள், கோவிதா3ரங்கள் என்று புஷ்பங்கள் எங்கும் மலர்ந்து கிடக்கின்றன. மலைச் சாரல்களில் இவை பந்துக்களோடு இருப்பது போல அடுத்தடுத்து காணப் படுகின்றன. அடர்ந்து இருக்கும் இந்த பூ மரங்கள் கறுமையாகத் தெரிகின்றன. லக்ஷ்மணா, இந்த நதியைப் பார். ஹம்ஸங்களும், ஸாரஸ, சக்ரவாகங்களும், குரரீ என்ற பக்ஷிகளும் நதிக்கரை மணலை நிறைத்துக் கிடக்கின்றன. ஜயிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட ராஜ குமாரர்கள், ஒருவருக்கொருவர் தாங்கள் கொண்ட பகையை எண்ணி, யுத்தம் செய்ய இது தான் தருணம் என்று கிளம்பி விட்டார்கள். ராஜ குமாரனே, இது இந்த அரச குமாரர்களின் முதல் யாத்திரை. சுக்ரீவன் மட்டும் ஏன் இன்னமும் தயாராகாமல் இருக்கிறான்? அவனுக்கு இந்த உத்வேகம் வந்ததாகத் தெரியவில்லையே. நான்கு மாதம், மழைக் கால மாதங்கள், முடிந்து விட்டன. சீதையைக் காணாத என் மனம் தான் நூறு வருஷங்கள் ஆனது போல தவிக்கிறது. சக்ரவாக பக்ஷி போல கணவனான என்னைத் தொடர்ந்து வனம் வந்தாள். இந்த கடும் வனப் பிரதேசத்தை ஏதோ, விளையாடும் உத்யான வனமாக எண்ணி மகிழ்ந்தாள். என் நிலையை என்ன சொல்ல? ராஜ்யத்தை தர மறுத்து, வனத்துக்கு விரட்டப் பட்டு, பிரியமான மனைவியையும் பிரிந்து வாடும் என்னிடம் இந்த சுக்ரீவனுக்கு இன்னமும் தயவு வரவில்லையா? அல்லது லக்ஷ்மணா, அவன் என்னைப்பற்றி இப்படி நினைக்கிறானோ? இந்த நிமிஷம் இவன் அனாதை. தீனன். ராவணன் இவனை மிரட்டுகிறான். காமவசத்தில் மனைவியை எண்ணி புலம்புகிறான். உற்றார் உறவினர்கள் வெகு தூரத்தில் இருக்கிறார்கள். அதனால் தான் என்னை வந்து சரணம் அடைந்திருக்கிறான். வானர ராஜன் இப்படி எண்ணி தாமதம் செய்தால், நம்மை அவமதித்ததாகாதா? சீதையைத் தேட ஏற்பாடுகள் செய்யும் காலம் வந்தும், துர்மதி இன்னமும் எதுவும் செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கிறான். லக்ஷ்மணா, நீ கிஷ்கிந்தைக்குப் போய் அவனிடம் சொல், மூர்க்கன். கிராம்ய சுகத்தில் ஈடுபட்டு தன்னை மறந்திருக்கிறான். முன் உதவி செய்தவனுக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டியதிருக்க, வேண்டிக் கொண்ட பின்பும் நம்பிக்கையை வளர்த்து, அதைக் கெடுப்பவன் புருஷாத4மன். நல்லதோ, கெட்டதோ, வாக்கு கொடுத்ததை நிறைவேற்றுபவனே வீரன். அவன் தான் உத்தமமான மனிதன். செய் நன்றி மறந்தவர்களை, பிரதி உபகாரம் செய்யாமல் செய்த உபகாரத்தை மறந்தவனின் உடலை, மாமிச பக்ஷிகளான பறவைகள் கூடத் தொடுவதில்லை. அவ்வளவு நீசனாக மதிக்கப் படுகிறான். என் வில்லின் பலத்தை யுத்த முணையில் காண விரும்புகிறானோ? என் அம்புகள் மின்னல் போல பறக்கும். வில்லின் நுனிகள் தங்கத்தால் அலங்கரிக்கப் பட்டு கண்ணைப் பறிக்கும். இதைப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். நான் யார் என்பதை. வஜ்ரம் விழுவது போல விழும் என் பா3ணங்களின் ஓசையை கேட்க விரும்புகிறான் போலும். ஒரு முறை எதிரில் நின்று எனக்கு சகாயமாக நீயும் நிற்க, போரிட்டால் தெரிந்து கொள்வான். எந்த காரியத்தை முன்னிட்டு நாம் இவ்வளவு தூரம் வந்தோம், நேரம் தாழ்த்தாமல் அதை முடிக்க வேண்டுமே என்ற கவலையெல்லாம் அவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மழைக் காலம் என்று சொல்லி தனக்கு அவகாசம் கேட்டான். நான்கு மாதங்கள் ஓடி விட்டன. விளையாட்டு புத்தி, இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை. மந்திரிகள், பிரஜைகள் இவர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டு, குடியிலும், கூத்திலும் நேரத்தைக் கழிக்கின்றனர். நாம் இருவரும் தான் பரிதாபமாக, நமது சோகத்தையும், கவலையையும் பொறுத்துக் கொண்டு காத்திருக்கிறோம். வத்ஸ, லக்ஷ்மணா, நீ போய் சுக்ரீவனிடம் சொல். மகா பலவானான நீ போனால் மரியாதையாக பேசுவான். என் ரோஷம் எப்படிப்பட்டது என்று அவனிடம் சொல். நான் சொன்னதாக இதையும் சொல். வாலி அடிபட்டு சென்ற வழி இன்னமும் திறந்தே தான் இருக்கிறது. என்று சொல். அடிபட்டு வாலி சென்றது போல செல்ல விருப்பமா? என்று கேள். நேரம், காலத்தை அனுசரித்து நடந்து கொள். சுக்ரீவா, இல்லையெனில் வாலியின் கதி தான் உனக்கும் என்று சொல். வாலி என் ஒரு பாணத்தால் அடிபட்டு வீழ்ந்தவன் தான். ஆனால் உன்னை, உன் உற்றார், உறவினரோடு சேர்த்து அழிப்பேன். சத்ய வழியிலிருந்து தவறும் உன் போன்றவர்களுக்கு தண்டனையும் கடுமையாகவே இருக்கும். இனியாவது எது ஹிதம், நன்மை என்பதை புரிந்து கொண்டு செயல் படு. நர ஸ்ரேஷ்டனே, லக்ஷ்மணா, சமயத்துக்கு ஏற்றாற் போல, இன்னம் என்ன சொல்ல வேண்டுமோ சொல். சீக்கிரம் போ. இனியும் தாமதம் வேண்டாம். வானர ராஜனே, என்னிடம் சத்யம் செய்து செய்வதாக சொன்ன பிரதி உதவியை செய். சாஸ்வதமான தர்மம் இதுவே. வாலியை பின் பற்றி யம லோகம் போவாய். என் சரங்கள், ஆயுதங்கள் இவற்றின் வலிமையை நான் சொல்லித் தான் நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. என்றான். லக்ஷ்மணன் ராமனின் கோபாவேசத்தைக் கண்டு திடுக்கிட்டான். தன் தமையனின் உண்மை நிலையை புரிந்து கொண்டவனாக (கையாலாகாதவன் போல சுக்ரீவன் தயவை எதிர் நோக்கி நிற்க வேண்டி வந்ததால் சுய பச்சாதாபம் மேலிட) தீவிரமாக வானர ராஜனிடம் தான் எப்படி பேச வேண்டும் என்பது பற்றி யோசிக்கலானான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சரத்வர்ணனம் என்ற முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 31 (302) லக்ஷ்மணக்ரோத4: (லக்ஷ்மணனின் கோபம்)
ராமானுஜன் லக்ஷ்மணன், தன் தமையனின் சங்கடத்தை புரிந்து கொண்டான். குறைவில்லாத ஆற்றல் உடையவன், கொள்கைக்காக தன்னை அடக்கிக் கொண்டிருக்கிறான். ஆற்றாமையோடு சோகமும் சேர, அதன் காரணமாக கோபம் அலைக்கழிக்க, தீ3னனாக பேசுவதைக் கண்டு, லக்ஷ்மணன் ஆறுதல் சொன்னான். அண்ணலே, வானர பிறவி. நியாய அநியாயங்களை அதனிடம் எதிர் பார்க்க முடியாது. காரிய அகாரியங்களை தெரிந்து கொண்டு, பலாபலன்களை யோசித்து செயல் படுவான் என்று எப்படி நாம் எதிர் பார்க்க முடியும். வானர குணம், ராஜ்ய லக்ஷ்மி கைக்கு வந்தவுடன், போகத்தில் மூழ்கி விட்டது. அதை விட்டு வெளி வந்து யோசிக்க அதற்கு அவகாசமும் இல்லை. புத்தியும் இல்லை. புத்தி குறைவு காரணமாக கிராம்யமான கேளிக்கைகளில் தன்னை மறந்து இருக்கிறான். தாங்கள் செய்த உதவிக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்பதே நினைவு இருக்கிறதோ, இல்லையோ. இது போன்ற குணம் இல்லாதவர்களுக்கு ராஜ்யத்தை கொடுத்ததே தவறு. இவன் முன் பிறந்தவனை அழித்ததைப் போலவே இவனையும் அழித்து விடுவோம். உங்களைப் போல் நான் கோபத்தை அடக்கிக் கொண்டு காத்திருக்க மாட்டேன். இன்றே போய், அசத்தான அந்த சுக்ரீவனை ஒழித்து விட்டு வருகிறேன். வாலி புத்திரன் அங்கதன், மற்ற வானர வீரர்களுடன் ராஜ்யத்தை ஆளட்டும். இவ்வாறு தன் வில்லையும் அம்பையும் தயாராக வைத்துக் கொண்டு, கோபத்துடன் துடிக்கும் இளவலை, ராமர் ஏறிட்டார். யுத்தம் என்று வந்தால் தன் ஆற்றலை காட்டக் கூடிய வீரனை, சமாதானம் செய்தவாறு ராமர் சொன்னார். லக்ஷ்மணா, பொறு. என் மனத்தாங்கலைக் கேட்டு பொறுக்க மாட்டாமல், நீயும் வத4ம் செய்ய கிளம்பி விட்டாய். பொறு. உன் போன்றவர்கள் உலகில் பாப காரியம் எதுவும் செய்யக் கூடாது. அது மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்து விடும். புருஷோத்தமனானவன், தன் கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தற்சமயம், லக்ஷ்மணா, நீ உன் கோபத்தைக் காட்டாதே. முன் போலவே அந்த வானர ராஜனிடம் அன்புடன் பேசு. நயமாக சொல்லி செயல் படச் சொல். கடுமையான வார்த்தைகளைக் கூட தவிர்த்து, சமாதானமாக பேசு. கால தாமதம் செய்யாதே என்று உரைக்கும்படி சொல் என்று இவ்வாறு தமையன் சொல்லிக் கொடுத்தபடி, லக்ஷ்மணன் சுக்ரீவனின் ஊருக்குள் நுழைந்தான். எதிரியை அடியோடு அழிக்க வல்ல வீரன் அதை வெளிக் காட்டாமல், சமாதானமாக பேச, தன்னை தயார் செய்து கொண்டபடி சென்றான். ராமனுக்கு பிரியமானதைச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கோடு வானரத்தின் மாளிகையை நோக்கிச் சென்றான். மலை, சிகரங்களை தன்னுள் அடக்கி வைத்திருப்பது போல, தன் பெரிய வில்லையும், அம்புகளையும் தாங்கியபடி சென்றான். இந்திரனின் ஆயுதத்துக்கு ஒப்பான வில், காலாந்தகனுக்கு இணையான அம்புகள், இவற்றை கையில் பிடித்தபடி நடந்து சென்றான். ப்ருஹஸ்பதிக்கு சமமான புத்தியுடையவன், இப்பொழுது தமையன் சொன்னபடியே செய்வதாக எண்ணிச் சென்றான். தன் மனதில் பட்டதை சொல்லவோ, செய்யவோ தயங்கினான். தன் வரை காமக் க்ரோதங்களை அடக்கியவன், இப்பொழுது ராமனின் கோபத்தைக் கண்டு தானும் வெகுண்டான். வேகமாக வீசும் காற்று போல கடும் கோபத்துடன் நடந்தான். உள் மனதின் குமுறல் அவன் நடையிலேயே வெளிப்பட்டது. சால, தால அஸ்வ கர்ண மரங்கள் அவனது நடை வேகத்தில் சரிந்து விழுந்தன. மலையின் பாறைகளை தன் கைகளால் விலக்கியபடி, பல மரங்களை விழச் செய்தபடி வேகமாக நடந்தான். வேகமாக செல்லும் யானையின் பாதம் பட்டு சிறு கற்கள் பொடியாவது போல, அவனது பாதம் பட்டு கற்கள் நொறுங்கின. காரியத்தின் அவசரத்தை முன்னிட்டு, சீரான நேர் வழியைத் தவிர்த்து, ஒத்தையடிப் பாதையில் சென்றான். வெகு தூரத்திலிருந்தே, வானர ராஜனின் மாளிகையைக் கண்டான். மலைகளின் நடுவில், அந்த வானர ராஜனின் கோட்டை அமைந்திருக்கும் நேர்த்தியைக் கண்டு, இக்ஷ்வாகு ராஜகுமாரன் வியந்தான். உதடுகள் துடிக்க, சுக்ரீவனை நினைத்தபடி மேலும் நடந்தான். கிஷ்கிந்தையை காவல் காக்கும் பெரும் வானர வீரர்களை வெளிப் பிராகாரத்தில் கண்டான். வேகமாக வரும் லக்ஷ்மணனைப் பார்த்து, யார் என்பது தெரியாமல் அந்த வானர வீரர்கள், வளர்ந்த மரக் கிளைகளையும், பாறைகளையும் தற்காப்புக்காக எடுத்துக் கொண்டன. இந்த செயலைக் கண்டு லக்ஷ்மணனின் கோபம் இரண்டு மடங்காயிற்று. நிறைய கட்டைகளை (எரி பொருள்) போட்டு எரியும் நெருப்பை தூண்டி விட்டது போல கோபம் கொழுந்து விட்டெரியலாயிற்று. இன்னிலையில் லக்ஷ்மணனைக் கண்ட வானரங்கள் பயந்து நாலா புறமும் சிதறி ஓடின. வேகமாக ஓடி சுக்ரீவனுடைய மாளிகையை அடைந்து, கோபத்துடன் லக்ஷ்மணன் வருவதை தெரிவித்தன. ரகஸியமாக தாரையுடன் சல்லாபமாக இருந்த வானர ராஜன், சுக்ரீவன், இந்த வானர வீரர்களின் எச்சரிக்கையை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அங்கிருந்த மந்திரிகள் ஆணைப்படி இந்த வீரர்கள் கோட்டையைக் காக்க விரைந்தனர். நகரை விட்டு வெளி வந்து கோட்டையை சூழ்ந்து நின்றன. கறுத்த மலை போன்ற உருவம் உடையவை, நகமும் பற்களுமே ஆயுதங்களாக கொண்ட வானர வீரர்கள், விகாரமான, கோர ரூபம் கொண்டவை சில, பத்து யானை பலம், அதை விட அதிகமான பலம் என்று பலசாலிகளான வானரங்கள், சிறுத்தை போல மதர்ப்பும், பலமும் உடையவை, கைகளில் உடைந்த மரக் கிளைகளையும், கற்களையும் வைத்துக் கொண்டு தயாராக நின்றன. சுக்ரீவனின் பொறுப்பின்மையையும், தன் தமையனின் துக்கத்தையும் ஒன்றாக எண்ணிப் பார்த்த லக்ஷ்மணன் திரும்பவும் பெரும் கோபம் கொண்டான். கோபத்தினால் கண்கள் சிவக்க, தீர்கமாக உஷ்ண பெருமூச்சு விட்டபடி, புகையுடன் எரியும் தீ நாக்குகள் போலானான். பாணங்களே நாக்காக, அம்புகளே அதன் உடலாக, தன் தேஜஸே விஷத்துடன் கூடிய பெரும் நாக3ராஜன் போல, அது விஷத்தைக் கக்குவது போல அம்புகளை எய்யத் தயாரானான். காலாக்3னி போலவும், க3ஜராஜன் போலவும் கம்பீரமாக நின்றவனை அங்கதன் கண்டான். பயத்துடன் அருகில் சென்று மிகவும் வினயமாக, கூப்பிய கரங்களுடன் வருத்தம் தெரிய விசாரித்தான். சிவந்த கண்கள் தாமிரம் போல ஜொலிக்க இருந்த லக்ஷ்மணன் இவனைக் கண்டு வத்ஸ, அங்க3தா3 சுக்ரீவனிடம் போய் சொல். நான் வந்துள்ளேன் என்பதை தெரிவி. ராமானுஜன் உன்னைத் தேடி வந்திருக்கிறான் என்று சொல். தன் தமையனின் கஷ்டத்தை பொறுக்க மாட்டாமல், லக்ஷ்மணன் உன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறான் என்று சொல். அங்க3தா3 அவன் ஏதாவது பொருந்தும்படி பதில் சொன்னால் என்னிடம் வந்து சொல். சீக்கிரமாக வா. வத்ஸ, பயப்படாமல் போ. நான் சொன்னதாகச் சொல். பதில் சொன்னால் வந்து சொல் என்று சொல்லவும் அங்கதன் மிகவும் வருத்தத்துடன், சிற்றப்பனின் அருகில் செல்ல விரைந்தான். சௌமித்ரி வந்திருக்கிறான் என்றான். லக்ஷ்மணனின் கோபமான நிலையைக் கண்டவன், வருத்தத்துடன் முகம் வாட வேகமாக வந்தவன், சிற்றப்பனின் பாதங்களில் விழுந்து வணங்கி, தன் தாயையும், சுக்ரீவனின் பத்னியான ருமையையும் வணங்கி விட்டு லக்ஷ்மணனின் செய்தியை தெரிவித்தான். சுக்ரீவன் மதுவின் மயக்கத்தில், இன்னமும் மத3னனின் பிடியில் இருந்தான். தூக்கம் கலையவில்லை. லக்ஷ்மணனைக் குறித்து வானரங்கள் தங்களுக்குள் கிளுகிளுவென்று பேசிக் கொண்டன. தாங்களும் அவனைப் போலவே சிம்ம நாதம் செய்தன. இந்த ஆரவாரத்தில் சுக்ரீவன் விழித்துக் கொண்டான். மதுவினால் சிவந்த கண்களும், நிலை குலைந்த ஆடை ஆபரணங்களுமாக அரைத் தூக்கத்தில் எழுந்து நின்றான். அங்க3த3ன் சொன்னதை வைத்து நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்ட மந்திரிகள் அவசரமாக அவனை எழுப்பி, லக்ஷ்மணன் வந்திருப்பதை உணரும்படி எடுத்துச் சொன்னார்கள். சமாதானமாக பேசி சுக்ரீவனை புரிந்து கொள்ளச் செய்தனர். இந்திரனை சுர கணங்கள் நெருங்கி நிற்பதுபோல சுக்ரீவனை சூழ்ந்து நின்றபடி அறிவுரை கூறினர். ராம லக்ஷ்மணர்கள், சகோதரர்கள், சத்ய சந்தர்கள், மகா பலசாலிகளான ராஜ குமாரர்கள், ராஜ்யத்தை ஆளப் பிறந்தவர்கள், உனக்கு ராஜ்யத்தை தந்தவர்கள், உன்னுடன் நட்பு கொண்டவர்கள். அவர்களில் ஒருவனான லக்ஷ்மணன் கையில் வில்லேந்தி வாசலில் நிற்கிறான். அவனைக் கண்ட மாத்திரத்தில் பயந்து நடுங்கி வானரங்கள் இங்கும் அங்குமாக ஓடுகின்றன. ராக4வ சகோதரன், இந்த லக்ஷ்மணன், சொல்லின் செல்வன், வாக்ய சாரதி. ராமர் ஆணைபடி உன்னைக் கண்டு ஒரு விஷயம் சொல்ல வந்திருக்கிறான். எந்த விதமான சாகஸத்துக்கும் அஞ்சாதவன். இதோ இந்த தாரா தனயனான அங்கதனை உன்னிடம் விஷயம் சொல்ல அனுப்பியிருக்கிறான். அங்கதன் விரைந்தோடி வந்திருக்கிறான். அவன் சொல்வதை கொஞ்சம் கேள். கண்கள் ரோஷத்துடன் சிவந்திருக்க, லக்ஷ்மணன் நம் நகர வாயிலில் நிற்கிறான். நம் வானரங்களை கண்ணாலேயே பொசுக்கி விடுவான் போல நிற்கிறான். அவனை தலையால் வணங்கி, உன் புத்திரர்கள், உற்றார் உறவினரோடு போய் சமாதானம் செய். சீக்கிரம் போ. அவன் கோபத்தை தணி. எழுந்திரு. உன் சுய நிலைக்கு வா. ராமர் என்ன சொல்லி அனுப்பி இருக்கிறாரோ, கேட்டு அதன் படி செய். ராஜன், எழுந்திரு. நீ வாக்கு கொடுத்திருக்கிறாய். அதை சத்யமாகச் செய்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், லக்ஷ்மணக்ரோத4: என்ற முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 32 (303) ஹனூமத் மந்த்ர: (ஹனுமான் அறிவுரை சொல்லுதல்)
கோபத்துடன் லக்ஷ்மணன் மாளிகை வாசலில் நிற்கிறான் என்ற செய்தியை மந்திரிகள் வந்து தெரிவிக்கவும், மயக்கம் தெளிந்த சுக்ரீவன், தன் வராசனத்திலிருந்து துள்ளி குதித்து இறங்கி வந்தான். அவன் மந்திரிகள் விஷயம் அறிந்தவர்கள். சரியான மந்த்ராலோசனை சொல்ல வல்லவர்கள். சுக்ரீவனும் நம்பிக்கையோடு அவர்களிடம் ஆலோசனை கேட்டான். நான் தவறு எதுவும் செய்யவில்லையே. தவறாக எதுவும் பேசவில்லையே. ராகவ சகோதரன், லக்ஷ்மணன் ஏன் கோபத்துடன் வந்து நிற்க வேண்டும். என் நலனில் அக்கறை இல்லாத சிலர், என்னிடம் பொறாமை கொண்ட சிலர் அருகில் இருந்து விஷயங்களைத் தெரிந்து கொண்டு அவனிடம் பொய்யாக எதையோ சொல்லி மூட்டி விட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எல்லோரும் விசாரியுங்கள். தாங்களாக யோசித்தும் சொல்லுங்கள். லக்ஷ்மணன் வரவுக்கு என்ன காரணம் என்று மெதுவாக தெரிந்து கொள்ளுங்கள். லக்ஷ்மணனிடமோ, ராமனிடமோ எனக்கு பயம் இல்லை. அவர்களிடம் எனக்கு ஆபத்து வரும் என்று நாம் நினைக்கவில்லை. ஆனால், நண்பன், அகாரணமாக கோபித்துக் கொண்டால், பட படப்பு உண்டாகிறது. எப்பொழுதும் ஒருவரை நண்பராக கொள்வது எளிது. அதை காப்பாற்றி வைத்துக் கொள்வது தான் கஷ்டம். மனம் சஞ்சலமானது. அதனால் அல்ப காரியத்திற்காக கூட ஒருவர் மனம் மாறக் கூடும். நட்பில் விரிசல் தோன்றும். ராமர் எனக்கு செய்த உதவியை நினைத்து பார்க்கிறேன். அதே போல பிரதி உபகாரம் செய்ய என்னால் முடியாது. ஏதோ என்னால் முடிந்ததை செய்யத் தான் நினைக்கிறேன். அதுவும் தடைபட்டு போகுமோ என்று அஞ்சுகிறேன். சுக்ரீவன் இவ்வாறு மனம் விட்டு பேசிக் கொண்டே போகவும், மந்திரிகள் மத்தியில் இருந்து ஹனுமான் தன் கருத்தை தெரிவிக்க முன் வந்தான். ஹரிக3ணேஸ்வரா வானர கூட்டத் தலைவனே, நீ செய் நன்றி மறக்காமல் ராமர் செய்த உதவியை நினைத்து பிரதி உபகாரம் செய்ய நினைப்பதில் உன் நல்ல குணம் தெரிகிறது. உனக்கு இஷ்டமானதை செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்திரனுக்கு சமமான பலம் கொண்ட வாலியை தூரத்திலிருந்தே அடித்துக் கொன்றான். உன்னிடம் கொண்ட நட்பின் காரணமாக உன்னை நல்வழிப் படுத்த கோபம் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறேன். சிறுவர்களை அதட்டுவது போல, லக்ஷ்மணனை அனுப்பி இருக்கிறான். லக்ஷ்மணன் லக்ஷ்மி வர்த4னன். ராம சகோதரன். நீ உன் மயக்கத்தில், நேரம், காலம் எதையும் உணரும் நிலையில் இல்லை. சப்தச் சத மரங்கள் இலை அடர்ந்து கறுத்து தெரிகின்றன. மலர்கள் நிறைந்து சுபமாக காணப் படுகின்றன. சரத் காலம் ஆரம்பித்து விட்டது. ஆகாயத்தை பார். இடி மின்னலுடன் மேகங்கள் விலகி மறைந்து விட்டன. நிர்மலமாக இருக்கிறது. திசைகள், நதிகள், நீர் நிலைகள், பிரஸன்னமாக இருக்கின்றன. இது உத்யோக காலம். உழைக்க வேண்டிய நேரம். வானர ராஜனே, நீதான் இதை அறிந்து கொள்ளாமல், உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாய். உன் மயக்கத்தை தெளிவிக்கவே, லக்ஷ்மணன் வந்திருக்கிறான். ராகவன் ஏதாவது கோபமாக பேசினாலும் பொறுத்துக் கொள். மனைவியைப் பிரிந்து அவன் வேதனையில் இருக்கிறான். தவறு செய்தவன் நீ. அதனால் அடக்கமாக, கை கூப்பி அஞ்சலி செய்து லக்ஷ்மணனிடம் பணிவாக பேசு. மந்திரிகளுடன் சென்று ஹிதமானதை மட்டுமே பேசு. இந்த சமயம் உன் சுய கௌரவம் பார்க்காதே. ராகவன் வில்லை தூக்கி நிறுத்தி, கோபத்துடன் போரிடுவது என்று ஆரம்பித்து விட்டால், தேவாசுர, கந்தர்வர்கள் என்ன, அனைவரையும் தன் வசம் ஆக்கிக் கொள்ள சாமர்த்யம் உள்ளவனே. அவனை நீ சமாதானமாக, உன் பக்கம் தயவுடன் இருக்கும்படி பார்த்துக் கொள். முன்னால் உனக்கு உதவி செய்ததை மறக்காதே. அதனாலேயே அதிக பணிவுடன், ராகவன் மனம் கோணாமல் நடந்து கொள். உன் புத்திரர்கள், பந்து மித்திரர்களுடன் போய், தலையால் வணங்கி மன்னிப்பு கேள். கணவனிடம் மனைவி நடந்து கொள்வது போல ராஜன், நீயும் ராமனிடம் நடந்து கொள். கபிராஜனே, ராமனுடைய, ராமானுஜனுடைய கட்டளைகளை நீ மனதால் கூட மீற நினைக்காதே. உன் மனதிற்குத் தெரியும், ராகவனின் பலம். சுரேந்திரனுக்கு சற்றும் குறைந்தல்ல. மனிதன் தானே என்று அலட்சியமாக இருக்காதே.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமன் மந்த்ரோ என்ற முப்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 33 (304) தாரா சாந்த்வ வசனம் (தாரை சமாதானம் செய்தல்)
இதற்குள், ராமரது கட்டளைப் படி லக்ஷ்மணன் குகைக்குள் நுழைந்து விட்டான். வாசலில் நின்ற பெரிய பெரிய வானரங்களும், அஞ்சலி செய்தவாறு வணங்கி வழி விட்டன. யாரும் தடை செய்யவில்லை. பயத்துடன் அசையாது நின்றன. த3சரதா2த்மஜன், கோபத்துடன் வருகிறான் என்பது அவனது பெரு மூச்சிலேயே வெளிப்பட்டது. அந்த குகையே ப்ரும்மாண்டமாக, திவ்யமாக, ரத்னமயமாக, பூக்களும், பழங்களும் நிறைந்த மரங்களுடன் வனங்களுமாக, ரம்யமாகவும், செல்வ செழிப்பை பறை சாற்றுவதாகவும் இருந்ததை லக்ஷ்மணன் கண்டான். கடை வீதிகளும், பெரும் மாளிகைகளும், வீடுகளுமாக, எல்லா பருவ காலங்களிலும் பழங்களும், புஷ்பங்களுமாக நிறைந்த மரங்களுடன் இருக்கக் கண்டான். தேவ கந்தர்வர்களின் புத்திரர்கள், வானர ஜன்மம் எடுத்து வளைய வருவதைக் கண்டான். இவர்கள் திவ்யமான ஆடை ஆபரணங்களுடன் கண்களுக்கு விருந்தாக, நட்புடன் பழகும் தன்மையினராகத் தெரிந்தனர். சந்தன, அகரு பத்மங்கள் இவற்றின் வாசனை வீசியது. மைரேயமும் (ஒருவகை மது) மதுவும் வழி நெடுக தாராளமாக இருந்தன. அகலமான அந்த பிரதான வீதி விந்த்ய மேரு மலைக்கு இணையாக உயர்ந்த மாளிகைகளைக் கொண்டிருந்தது. ராகவன் அங்கு, மலைகளையும், விமலமான நீருடன் பிரவகித்த நதிகளையும் கண்டான். அங்க3த3னுடைய அழகிய வீடு, மைந்த3, த்3விவித3ர்களின் வீடு, க3வன், க3வாக்ஷன், க3ஜ, சரப4ன் இவர்களுடைய வீடுகள், வித்4யுன்மாலி, சம்பாதி, சூர்யாக்ஷன், ஹனுமான், இவர்களின் வீடுகள், வீர பா3ஹு, சுபா3ஹு, நலன் போன்ற மகான்களின் வீடுகள், பிரதானமான ராஜ வீதியிலேயே அமைந்திருப்பதைக் கண்டான். இவைகள் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப் பட்டன. வெண் மேகம் போன்ற பிரகாசத்துடன், திவ்யமான மாலைகளால் அலங்கரிக்கப் பட்டதாக இருந்தன. ஏராளமான த4ன, தா4ன்யங்களுடன், ஸ்த்ரீ ரத்னங்களும் நிறைந்து இருந்தன. கோட்டை வெண் சால மரத்தால் பாதுகாப்பாக அமைக்கப் பட்டிருந்தது. மகேந்திரனுக்கு சமமான உயர்ந்த மாளிகை சுக்ரீவ ராஜாவின் மாளிகை. வெண் நிற மாடிகளுடன் கூடிய பெரிய மாளிகை. கைலாச சிகரம் போல உயர்ந்து, தனித்து நின்றது. இங்கும் பழ மரங்களும், பூத்து குலுங்கும் மரங்களும் எல்லா பருவ காலத்தும் நிறைந்து இருக்கும்படி அடர்ந்து காணப்பட்டன. குளுமையான நிழலைத் தரும் மரங்கள், மனதைக் கவரும் வண்ணம் திவ்யமான புஷ்பங்களும், பழங்களும், இந்திரனுடைய தயவால், கறுத்து அடர்ந்து மேகம் போல விளங்கிய பெரிய பெரிய மரங்கள். ஆயுதம் தாங்கிய வீரர்கள் காவல் காக்க பொன்னாலான தோரணங்கள் அலங்கரிக்க இருந்த சுக்ரீவனது மாளிகையின் முகப்பு வாயிலில் நுழைந்தான், லக்ஷ்மணன். தடையேதுமின்றி அண்ட வெளியில் பா4ஸ்கரன் பயணம் செய்வது போல, யாருடைய குறுக்கீடும் இன்றி உள்ளே சென்றான். பல விதமான ஜனங்கள் நிரம்பியிருந்த ஏழு அறைகளை கடந்து சென்றான். அதன் பின் பலத்த காவலுடன் அந்த:புரம் தென்பட்டது. தங்க, வெள்ளி கட்டில்களும், அழகிய ஆசனங்கள் நல்ல உயர் ரக விரிப்புகளுடனும் காணப்பட்டன. ஆங்காங்கு தரையில் விரிப்புகள் போட்டு நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தன. உள்ளே நுழைந்ததுமே, மதுரமான கானம் கேட்டது. தந்தி வாத்யங்கள், தாள வாத்யங்கள் இணைந்து எழுந்தன. சமமான பதங்களுடன், தெளிவான அக்ஷரங்களுடன் பாடுவது கேட்டது. பல ஸ்த்ரீகள் ரூப, யௌவன சம்பன்னர்களாக, பலவிதமான ஆகிருதிகளுடன் சுக்ரீவ பவனத்தில் நடமாடக் கண்டான். உத்தமமான ஆபரணங்களும், மாலைகளும் அணிந்து, உற்றார் உறவினர் கூடியிருந்தனர். யாருமே, திருப்தியில்லாமலோ, கவலையுடனோ, உயர்தர ஆடை ஆபரணமின்றியோ, இருக்கவில்லை. சுக்ரீவனின் அடி மட்ட வேலையாட்கள் கூட சந்தோஷமாக காணப்பட்டனர். நூபுரங்களும், மேகலைகளும் ஓசையிட்டன. இந்த ஓசையைக் கேட்டு லக்ஷ்மணன் வெட்கினான். தன் கோபத்தைக் காட்ட வில்லின் நாணை மீட்டி, பெரும் நாதம் எழச் செய்தான். அது நாலா திசைகளிலும் பரவி எதிரொலித்தது. ஸ்த்ரீகளின் மத்தியில் நடமாட முடியாமல் ஓரமாக நின்றான். இந்த வில்லின் ஒலி வானர ராஜனின் காதில் விழுந்தது. லக்ஷ்மணன் வந்து விட்டான் என்று அறிந்து, தன் வராசனத்திலிருந்து குதித்து இறங்கினான். பயம் மேலிட்டது. அங்கதன் சொன்னது சரியாயிற்று. நிஜமாகவே லக்ஷ்மணன் வந்து விட்டான் என்று தெரிகிறது. சகோதர பாசம் மிக்கவன். வில்லின் ஒலியிலிருந்தே அவன் மன நிலை புலப்பட்டது. பயத்துடன் நடுங்கியபடி, தாராவைப் பார்த்து வேண்டினான். தாரா, சுபாவமாகவே மிருதுவாக பேசுபவன், மென்மையாக நடந்து கொள்பவன், இப்படி கோபாவேசமாக வர என்ன காரணம் இருக்க முடியும்? குமாரனை இப்படி கோபம் கொள்ள வைத்தது எது என்று உனக்குத் தெரிகிறதா? அகாரணமாக கோபாவேசம் அடைபவனும் அல்ல. நாம் ஏதாவது தவறு செய்து விட்டோமா. நம்மவர்கள், இவர்களுக்கு பிடிக்காததை எதையாவது செய்துவிட்டார்களா? யோசித்துப் பார்? சீக்கிரம் சொல். என்ன காரணம் என்று தெரிந்தால் பரிகாரம் செய்யலாம். அல்லது பா4மினி நீயே போ. நீயே போய் லக்ஷ்மணனைப் பார்த்து விசாரி. சமாதானமாக பேசி அவனை சமாதானமடையச் செய். உன்னைக் கண்டால் (விசுத்3தா4த்மா-உயர்ந்த பண்புகள் உடையவன்) தன் கோபத்தைக் காட்ட மாட்டான். சாதாரணமாக, ஸ்த்ரீகளிடம் பண்புடையவர்கள் தங்கள் கோபத்தைக் காட்ட மாட்டார்கள். நீ சமாதானமாக பேசி, அவன் வந்த காரணத்தை தெரிந்து கொள். பின்னால் நான் வந்து வரவேற்கிறேன். கமல பத்ராக்ஷனான லக்ஷ்மணனைப் பார்க்கிறேன். அவள் நடை தடுமாற, மதுவை அருந்தியதால், உடல் சோர, இடுப்பில் அணிந்திருந்த காஞ்சி, நூபுரங்கள் நழுவுவதையும் கூட பொருட்படுத்தாது வணக்கத்துடன் சென்றாள். வானர ராஜனின் மனைவி வருவதைப் பார்த்ததுமே, லக்ஷ்மணன் அவ்விடத்தை விட்டு விலகிப் போக யத்தனித்தான். ஸ்த்ரீகளுக்கு முன்னால் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, உதாசீனமாக, வாய் பேசாமல் நகர்ந்தான். மதுவின் மயக்கத்தால் சுபாவமாக உள்ள லஜ்ஜையை விட்டு, நரேந்திர குமாரன் அமைதியாக இருத்ததாலும், தைரியமாக, அவனை சமாதானப் படுத்தும் விதமாக சாமர்த்யமாக பேசினாள். மனுஜேந்திர புத்திர (மானிட அரசனின் மகனே) ஏன் இந்த கோபம்? என்ன காரணம்? உன் சொல்லை மதிக்காமல் எவனாவது நடந்து கொள்கிறானா? உன் கட்டளையை யாரால் மீற முடியும்? அப்படிச் செய்பவன் யார்? வனத்தில் இருக்கும் உலர்ந்த கட்டையைப் போன்றவன், தா3வாக்னி-காட்டுத்தீயான உன்னை சீண்டி விளையாடுகிறான். சந்தேகத்துக்கு இடமின்றி அவள் சமாதானம் பேசத்தான் வந்திருக்கிறாள் என்பது தெரியவும், லக்ஷ்மணன் பதில் சொன்னான். தாரே இது என்ன? காமத்தில் மூழ்கி, தர்மார்த்தங்களை மறந்து என்ன களியாட்டம்? அரசன் மறந்தாலும், மற்றவர் நினைவு படுத்துவதில்லையா? அரசனுக்கு நன்மையைச் சொல்ல யாரும் இல்லையா? ராஜ்யத்தை தான் பெரியதாக நினைக்கவில்லை, நாங்கள் வேதனையோடு காத்திருக்கிறோமே, அதை நினைத்து பார்க்க வேண்டாமா? அதையாவது எடுத்துச் சொல்வார் யாருமில்லையா? மந்திரிகள், பிரமுகர்களுடன் கூட, நீயும் சேர்ந்து மது பானமே செய்து காலத்தை கழிக்கிறீர்கள். நான்கு மாதங்கள்-மழைக் கால மாதங்கள். ஓய்வு எடுத்துக் கொண்டு வருவதாகச் சொன்ன ஹரி ராஜன், மறந்தே போய் விட்டான். நான்கு மாதங்கள் முடிந்து விட்டதை அவன் உணரவே இல்லை. களியாட்டத்தில், மது மயக்கத்தில் கிடக்கிறான். தர்மார்த்தங்களை சேவிப்பவர்கள், இப்படி மதுவினால் மயங்கி கிடப்பதில்லை. இதை உயர்வாக கொள்வதும் இல்லை. இந்த மது பானத்தால் பொருளும் நஷ்டமாகிறது. தர்மம் பிறளுகிறது. காமமும் வீணாகிறது. தர்ம நஷ்டத்தை எப்படி ஈடு செய்வோம? பொருள் நஷ்டத்தை, நல்ல நண்பனின் இழப்பை எப்படி சரி செய்ய முடியும்? சத்ய தர்ம பராயணனான மித்திரன் கிடைத்தும், தர்ம, அர்த்தங்களை பெரிதாக நினைப்பவன் என்ற அவன் குணம் தெரிந்தும், இப்படி நடந்து கொண்டால், இவை கை விட்டுப் போக எவ்வளவு நேரம் ஆகும். நாம் இணைந்து ஒரு செயலில் இறங்கினோம். பாதியில் அதை விட்டு விலகினால், தத்துவம் அறிந்த தாரையே நீயே சொல். எங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறான்.
இதைக் கேட்ட தாரை, லக்ஷ்மணனின் மதுர ஸ்வபாவம், இந்த கோபமான நிலையிலும் வெளிப் படுவதை உணர்ந்து வியந்தாள். தர்மார்த்தங்களை இயல்பாகச் சொல்லும் பாங்கை, சொல் வன்மையை புரிந்து கொண்டாள். கடந்து போன நாட்களில், தர்மார்த்தங்களை சுக்ரீவன் மறந்து, காலம் தாழ்த்தியதையும் நினைத்து, லக்ஷ்மணனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பதில் சொன்னாள். ராஜ குமாரனே, கோபம் கொள்ள இது நேரம் இல்லை. தன்னைச் சார்ந்தவர்களிடம் அதிகமாக கோபம் கொள்வதும் விவேகமாகாது. உங்கள் நலத்தில் அக்கறை கொண்டவன் தான் சுக்ரீவன், அவனுடைய கவனக் குறைவை பொறுத்துக் கொள். வீரனே அவன் தவற்றை பெரிதாக நினைக்காதே. புத்தியில், சக்தியில், உங்களைவிட குறைவான நண்பன். அவனிடம் போய் கோபம் கொள்ளலாமா? தாமஸமான நபர்கள் தான் கோப வசத்தில் தன்னை மறந்து பேசுவார்கள். நீ சத்வ குணம் மிக்கவன். உனக்கு எதற்கு கோபமும், ஆத்திரமும். ஹரி வீர பந்தோ, வானர ராஜனுக்கு நீயும் பந்துவே. உன் ரோஷத்தின் காரணமும் நான் அறிவேன். கால விரயம் ஆனதையும் அறிந்து கொண்டேன். எங்களுக்கு நீங்கள் செய்த பெரும் உதவியையும் அறிவேன். இனி செய்ய வேண்டியதையும் அறிவேன். அதே சமயம் சரீரஜன் என்ற மன்மதனுடைய தவிர்க்க முடியாத சக்தியையும் அறிவேன். சுக்ரீவன் போன்ற வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளவர்களை அவன் (மன்மதன்) ஆட்டிப் படைப்பதையும் அறிவேன். சுய கட்டுப் பாடு இல்லாத பாமர ஜனங்கள், இவன் வலையில் வீழ்ந்து மீள முடியாமல் கிடப்பதும் நிஜம். நீ காமனை வென்றவன். ஆனால் மன்யு என்ற கோபத்தின் வசம் ஆகி நிற்கிறாய். இந்த காமனின் வசம் ஆனவர்கள், தேச, காலமோ, அர்த்த தர்மமோ எதையுமே மனதில் ஏற்றுக் கொள்வதில்லை. நினைவில் கொள்வதில்லை. இந்த சுக்ரீவன் என் அருகில் தான் இருக்கிறான். காம போகத்தினால், லஜ்ஜையும் இவனை விட்டு விலகி விட்டது. பொறுத்துக் கொள். எப்படிபட்ட வீராதி வீரனாக இருந்தாலும் எதிர் நின்று போரிட்டு வெல்லும் சக்தி வாய்ந்தவன் நீ, பரவீர ஹந்த என்று பெயர் பெற்றவன் நீ. வானர வம்சத் தலைவனான சுக்ரீவனும் உன் சகோதரனே. பெரிய மகரிஷிகளே, தர்மத்தை அனவரதமும் அனுஷ்டிப்பவர்கள், தவத்தில் மூழ்கியவர்களே, சமயத்தில் காமனின் வசமாகி, மோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த வானர ராஜன் இயல்பாகவே சபல புத்தியுள்ளவன். சுகம் வந்த பொழுது தன்னை மறந்ததில் என்ன ஆச்சர்யம்?
அந்த வானர ஸ்த்ரீயான தாரை, அளவில்லாத பௌருஷம் கொண்ட லக்ஷ்மணனிடம், தன் நாயகனான சுக்ரீவனை காப்பாற்றும் பொருட்டு, இன்னமும் விளையாட்டு புத்தியாக, மது மயக்கத்தில் கிடப்பவனை, லக்ஷ்மணனின் கோபத்திலிருந்து மீட்க, உண்மை நிலையை எடுத்துச் சொல்லி அழகாக சமாதானம் செய்தாள். மேலும் சொன்னாள். நரோத்தமா, சுக்ரீவன் தன் பங்கு செயலையும் ஆரம்பித்து விட்டான். வெகு நாள் முன்பே, ஆணையிட்டுத் துவக்கி விட்டான். உங்கள் காரியத்தைச் செய்ய சக்தி வாய்ந்த வானரங்களை பல இடங்களிலும் இருந்து வரவழைத்து படையை கூட்டியிருக்கிறான். பல மலைகளிலும், காடுகளிலும் இருந்து வானரங்கள் கோடிக் கணக்காக வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் வா. நீ உன் நடத்தையைக் காப்பாற்றிக் கொண்டு ஒதுங்கி இருக்கிறாய். மனதில் களங்கமின்றி, நட்புடன் மித்ர பாவத்துடன், நல்லவர்களின் மனைவியை ஏறிட்டுப் பார்ப்பதில் தவறில்லை. தாரா இவ்வாறு அனுமதி அளித்தபின், தன் காரியத்தின் அவசரத்தையும் எண்ணி, லக்ஷ்மணன் அவளுடன் அந்த:புரத்தில் நுழைந்தான். பொன் மயமான பரமாசனத்தில் அமர்ந்திருந்த சுக்ரீவனைக் கண்டான். அழகிய விரிப்புகளுடன் கூடிய ஆஸனத்தில், ஆதித்யன் போலவே அமர்ந்திருப்பதைக் கண்டான். மகேந்திரன் போலவே ஆடை ஆபரணங்களோடு, தெளிவாக இருப்பதைக் கண்டான். உடன் இருந்த ஸ்த்ரீகளும் நல்ல ஆடை ஆபரணங்களோடு அதே போல இருந்தனர். அருகில் ருமை என்ற தன் மனைவியை அணைத்தபடி, தன் ஆசனத்தில் அமர்ந்து குறைவில்லாத ஆற்றல் உடைய லக்ஷ்மணனை தன் கண்கள் விரிய, அதை விட விசாலமான கண்களையுடைய லக்ஷ்மணனைக் கண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், தாரா சாந்த்வ வசனம் என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 34 (305) சுக்ரீவ தர்ஜனம் (சுக்ரீவனை மிரட்டுதல்)
வெளிப் பார்வைக்கு தைரியமாக இருப்பது போல தோற்றம் அளித்தாலும், புருஷ ரிஷபனான லக்ஷ்மணன் கோபத்துடன் இறுகிய முகத்துடன் இருப்பதைப் பார்த்து சுக்ரீவன் உள்ளூற நடுங்கினான். தசராத்மஜன், தன் சகோதரனின் வேதனையை பொறுக்க மாட்டாமல் துடிப்பதும் தெரிந்தது. தன் சுவர்ண மயமான ஆஸனத்தை விட்டு குதித்து எழுந்தான். மகேந்திரனது அலங்கார த்வஜம் விழுந்தது போல இருந்தது. ருமா, முதலிய மற்ற ஸ்த்ரீகளும் அதே போல ஆஸனத்தை விட்டு எழுந்து வந்து அருகில் நின்றனர். ஆகாயத்தில் பூரண சந்திரனை, தாரா கணங்கள் தொடருவது போல தொடர்ந்தனர். கை கூப்பியவாறு அவர்களுடன் செய்வதறியாது மரமாக நின்றான். ருமை, மற்றும் ஸ்த்ரீ கணங்களுடன் நின்ற சுக்ரீவனை லக்ஷ்மணன் ஏறிட்டான். கோபம் அகலாத குரலிலேயே பேசலானான். உலகில் அரசனாக இருப்பவன் சத்வ குணங்கள் நிறைந்த பெரியார்களுடன் இருக்க வேண்டும். இந்திரியங்களை வென்றவனாக, தயவும் பெருந்தன்மையும் உடையவனாக, செய் நன்றி மறவாதவனாக, சொன்ன சொல்லை மீறாதவனாக, இப்படிப் பட்ட குணங்கள் உடைய அரசன் தான் நிலைத்து நிற்பான், மதிக்கப் படுவான். எந்த அரசன், தன் நண்பனை, முன் அவன் செய்த உதவிகளையும் மறந்து, தர்ம வழியில் நிற்பவன், சொன்ன சொல்லை பெரிதாக மதிப்பவன் என்று தெரிந்தும், அவனுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகிறானோ, அவனை விட கொடியவன் வேறு யார் இருக்க முடியும்? காரணமின்றி நூறு அஸ்வங்களை கொல்வதும், ஆயிரம் பசுக்களை கொல்வதையும் விட, மனிதன் தான் கொடுத்த வாக்கை மீறும் பொழுது, தன் பந்து, உற்றார், உறவினரையே கொன்றவன் ஆகிறான். உதவியை பெற்றுக் கொண்டு, பிரதி உபகாரம் செய்வதை அறவே மறந்து போகும், நண்பர்களுக்கு, வதம் தான் தண்டனை. இது ப்ரும்மா சொன்ன ஸ்லோகம். உலகமே வணங்கும் ப்ரும்மா ஒரு முறை, செய் நன்றி மறந்தவர்களைப் பார்த்து கோபத்துடன் சொன்னார். வானர ராஜனே, தெரிந்து கொள். பிராம்மணனைக் கொன்றவனை விட, மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கொடியவர்கள். பசுவைக் கொல்வது, விரதத்தை தடுத்தல் இது போன்ற பாபங்களுக்கு கூட விடிவு உண்டு. பரிகாரம் சொல்லப் பட்டுள்ளது ஆனால் செய் நன்றி மறந்தவனுக்கு விமோசனமே கிடையாது. அனார்யன் நீ (பண்பற்றவன்) வானரா, இது போல செய் நன்றி மறந்து சொன்ன சொல்லையும் காப்பாற்ற முடியாதவன் என்பது நிச்சயம். ராமரிடம் உன் காரியத்தை சாதித்துக் கொண்டாய், மறந்து விட்டாய். பதில் உதவி செய்வதாக சொன்னாய். மறந்து விட்டாய். சீதையைத் தேட யத்னம் செய்வதாக சொன்னாய். நீ செய்ய விரும்பினால் தானே. க்ராம்யமான கேளிக்கைகளில் தன்னை மறந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். ராமர் உன்னை நம்பினார். தவளை வேடம் கொண்ட சர்ப்பம் இது என்று தெரிந்து கொள்ளவில்லை. தவளை போல் குரல் கொடுத்தாய். உன்னையும் பொருட்டாக எண்ணி வானர ராஜ்யத்தையும் உனக்கு அளித்தார். ராமரின் அரிய செயலை நீ அறியாய். வாலியை ஒரே பாணத்தால் அடித்து வீழ்த்தியதை பார்த்தாய். அந்த வழி இன்னமும் திறந்தே இருக்கிறது. வாலி அடிபட்டு இறந்து பட்ட வழி இன்னமும் மூடப்படவில்லை. சுக்ரீவா, காலம் அறிந்து நடந்து கொள். வாலியைப் போல மரணத்தை எதிர் கொள்ளாதே. நிச்சயம். இக்ஷ்வாகு குல வரிஷ்டனான ராமனது வில்லிலிருந்து புறப்படும் அம்புகளைத் தான் காண்பாய். வஜ்ரம் போன்றவை. அதன் பின் உனக்கு சுகம் ஏது? மனதாலும் ராம காரியத்தை அலட்சியம் செய்தவனுக்கு நன்மை என்பது ஏது?
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவ தர்ஜனம் என்ற முப்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 35 (306) தாரா சமாதானம்
தன் ஆத்திரம் தீர பேசிய லக்ஷ்மணனை தாரா, சமாதானம் செய்தாள். லக்ஷ்மணா அப்படி சொல்லவே சொல்லாதே. இவனிடம் கடுமையாக பேசாதே. அதிலும் உன் வாயிலிருந்து இவ்வளவு கடுமையான வார்த்தைகளால் இவனைச் சாடாதே. இவன் தாங்க மாட்டான். இந்த சுக்ரீவன் செய் நன்றி மறந்தவனும் அல்ல. மூர்க்கனும் அல்ல. பயங்கரமாக எதையும் செய்பவனும் அல்ல. உலக நடப்பு தெரியாதவனும் அல்ல. செய்த உதவியை இவன் மறக்க மாட்டான். மறக்கவும் இல்லை. வேறு யாரும் செய்ய முடியாத அரிய செயலை செய்து ராமர் இவனுக்கு உதவி இருக்கிறார். ராமரது தயவால் தான் கீர்த்தி, வானர ராஜ்யம் இவற்றை சாஸ்வதமாக அடைந்துள்ளான். மனைவி ருமாவையும் திரும்பப் பெற்றான். என்னையும் அடைந்தான். பரந்தப, இந்த பாக்யங்கள் கிடைத்த மகிழ்ச்சியில், வெகு நாட்களாக தூங்காமல் அனுபவித்த கஷ்டங்கள் மறைய, தூங்கி விட்டான். நேரம் போனது தெரியாமல் இருந்து விட்டான். விஸ்வாமித்திர முனிவரும் தான் க்3ருதாசீயிடம் பத்து வருஷங்கள் கழித்தார். தர்மாத்மாவான விஸ்வாமித்திர மாமுனி, காலம் ஓடி மறைந்ததை அறியவே இல்லை. அந்த மகா முனிவரே அப்படி நேரம், காலம் தெரியாமல் சிற்றின்பத்தில் ஈடுபட்டு இருந்தார் என்றால், சாதாரண பாமர ஜனங்களைப் பற்றி கேட்பானேன். லக்ஷ்மணா, வெகு காலம் கஷ்டப்பட்டவன். சரீர சுகம் கிடைத்தவுடன் தன்னை மறந்து விட்டான். இவனுடைய காமத்தை பொறுத்துக் கொள், லக்ஷ்மணா, ஆத்திரப்படாதே. தாத (சிறியவர்களை அழைக்க பயன்படுத்தும் சொல்) சாதாரண பாமர மனிதன் போல, உள் விஷயம், காரணங்களைத் தெரிந்து கொள்ளாமல் உன் போன்ற விவரம் அறிந்த மகா புருஷர்கள், எடுத்த எடுப்பில் கோபம் கொண்டு குற்றம் சாட்டுவது சரியல்ல. லக்ஷ்மணா சுக்ரீவனுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். உன்னை வேண்டுகிறேன். நான் தெளிவாக இருக்கிறேன். பெரும் கோபத்துடன் எழுந்த பட படப்பு அடங்கட்டும். இந்த சுக்ரீவன், ருமையையும், என்னையும், இந்த ராஜ்யத்தையுமே, அதனால் ராமனுக்கு நன்மை உண்டாகுமானால் தியாகம் செய்து விடுவான் என்று நான் நம்புகிறேன், ராகவனை சீதையுடன் சேர்த்து வைப்பான். ராவணனை யுத்தத்தில் அழித்து சசாங்கன், ரோஹிணியை திரும்பப் பெற்றது போல, ராகவன் சீதையை பெறச் செய்வான். லங்கையில் உள்ள ராக்ஷஸர்கள், நூறாயிரம் கோடி வீரர்கள், அதைத் தவிர பத்தாயிரம் வீரர்களாக, முப்பத்தாறு நூறாயிரம் போர் வீரர்களின் அணிகள் (ஸஹஸ்ர சதம்) இந்த வீரர்களை போரில் வெல்லாமல், ராவணனை நெருங்க முடியாது. இவர்களோ விருப்பம் போல ரூபம் எடுக்க வல்ல பலசாலிகள். சீதையைக் கவர்ந்து போன ராவணன் அவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறான். சகாயமில்லாமல், இந்த பெரிய போரை நடத்த முடியுமா? லக்ஷ்மணா ராவணன் க்ரூரமான காரியங்களை விளையாட்டாக செய்பவன். இதை வாலியே சொல்லி நான் கேட்டிருக்கிறேன். சுக்ரீவனுக்கு கூட தெரியுமோ, என்னவோ, நான் கேட்டதைச் சொல்கிறேன். வாலி விஷயம் அறிந்தவன். அவன் வந்ததை நான் அறியேன். சுக்ரீவன், உங்களுக்கு உதவி செய்ய வானரங்களை பல இடங்களுக்கும் அனுப்பி, படையுடன் வரச் சொல்லி இருக்கிறான். யுத்தம் செய்ய படைபலம் வேண்டாமா? அவர்களில் பலர் நல்ல வீரர்கள். மகா மகா பலசாலிகள். ஆற்றல் படைத்தவர்கள். ராகவ காரியத்தை சரியாக நிறைவேற்ற, இவர்களின் அனைவரின் உதவியும் தேவையாக இருக்கும். இன்று அந்த வானரர்கள் வந்து சேர வேண்டும். சௌமித்ரே, இந்த ஏற்பாட்டை சுக்ரீவன் முதலிலேயே செய்து விட்டான். ஆயிரம் கோடி கரடிகள், கோலாங்கூல எனும் வானரங்கள், நூறாயிரம் இன்று வந்து உன்னை சந்திப்பார்கள். ஆத்திரத்தை விடு லக்ஷ்மணா, கோடிக் கணக்கான அதற்கும் அதிகமான வானர வீரர்களை சந்திக்கப் போகிறாய். உன் ரத்தச் சிவப்பான கண்களை, ஆத்திரத்தில் துடித்த முகத்தைப் பார்த்த இந்த நகர பெண்கள் இன்னமும் அமைதி அடையவில்லை. முதலில் தோன்றிய சந்தேகம், பயம் இன்னமும் அவர்களை வாட்டுகிறது, பார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், தாரா சமாதானம் என்ற முப்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 36 (307) சுக்ரீவ லக்ஷ்மணானுரோத: (சுக்ரீவன், லக்ஷ்மணனுக்கு விளக்கிச் சொல்லுதல்)
சுபாவமாக இளகிய மனம் படைத்த லக்ஷ்மணன், விவரமாக தாரா சொன்னதைக் கேட்டு அமைதியானான். தர்மார்த்தங்கள் நிறைந்த தாரையின் மறு மொழி, லக்ஷ்மணனை, கோபத்தை விட்டு சகஜ நிலைக்கு திருப்பி விட்டது என்று தெரிந்ததும், சுக்ரீவனும், கிழிந்த பழைய ஆடையைத் தியாகம் செய்வது போல தன் பெரும் பயத்தை கை விட்டான். கழுத்தில் இருந்த மாலையையும் உதறி விட்டு, தன் மது மயக்கத்திலிருந்து முழுவதுமாக விடுபட்டவனாக தெளிவாக பேசினான். பலசாலியான லக்ஷ்மணனை நெருங்கி மன மகிழ்ச்சியோடு வினயமாக பேசினான். சௌமித்ரே, என்னிடமிருந்து லக்ஷ்மி (செல்வம்) கீர்த்தி, கபிராஜ்யம் இவை யாவுமே தொலைந்து போன நிலையில், நான் மனம் வாடி நின்ற சமயம் ராமர் செய்த உதவி மிகப் பெரிது. அவர் அருளால் நான் இவைகளைத் திரும்பப் பெற்றேன். தன் அரிய செயல்களால் புகழ் பெற்றவன். அவனுக்கு அதே போல பதில் உதவி செய்ய முடியாது. நினைத்து கூட பார்க்க முடியாதது. யாருக்கு அந்த சக்தி இருக்கிறது. நிச்சயம் சீதையை அடைவான். ராக்ஷஸ ராஜனை வெல்வான். நான் பெயரளவில் உதவியாக நிற்பேன். தன் ஆற்றலாலேயே இச்செயலை ராமன் செய்து முடிப்பான். எனக்கு ராமர் உதவி செய்ய ஏழு மரங்களையும் மலைப் பாறைகளோடு ஒரே பாணத்தால் பிளந்து தன் திறமையைக் காட்டினானே, லக்ஷ்மணா, தன் வில்லை எடுத்து நாணை பூட்டி, விரலால் மீட்டி ஓசையெழச் செய்தாலே போதும். பூமியே நடுங்கும். அந்த வீரனுக்கு நான் உதவி செய்வது எங்ஙணம். நரர்ஷப, அந்த மகானுடன் நான் அனுயாத்திரை உடன் செல்வது எனக்குத்தான் பெருமை சேர்க்கும். ராவணனை, ஊரோடு, உற்றார், உறவினரோடு அழிக்க அவன் புறப்படும் போது நானும் உடன் இருப்பேன். என் சக்தியோ, தகுதியோ அவ்வளவே. என் மனதில் உள்ள அன்பினாலும், அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையாலும் நான் அத்து மீறி ஏதாவது செய்திருந்தால், மன்னித்து விடு. யார் தான் தவறு செய்யவில்லை? சுக்ரீவன் இப்படி தாழ்ந்து பணிவாக, மன்னிப்பு கேட்கவும், லக்ஷ்மணன் கோபம் மறைந்தது. ஸ்னேகம் மீதூற, அன்புடன் பதில் சொன்னான். வானரேஸ்வரா என் தமையன் எப்பொழுதும் சநாதனே. (நாதனுடன் கூடியவனே) அநாதையில்லை. சமயத்துக்கு உதவி செய்ய அவனுக்கு யாராவது வந்து சேருவார்கள். தற்சமயம் நீ மனமுவந்து அவனுக்கு உதவி செய்வதாக கூறுகிறாய். நேர்மையானவன் தான் நீ. சுக்ரீவா, இந்த ராஜ்யம் உனக்கு கிடைத்தது சரியே. இதை அனுபவிக்கத் தகுந்தவனே நீ. மிகுந்த பிரதாபம் உடைய என் தமையன், இப்பொழுது உன் உதவியும் சேர, நிச்சயமாக யுத்தத்தில் வீரர்களை வெற்றி கொள்வான். சுக்ரீவா, நீ நன்றாக பேசினாய். நீ செய் நன்றி மறந்தவனும் அல்ல. புறமுதுகு காட்டாத வீரன் தான். நல்ல குடியில் பிறந்தவன். விவரம் அறிந்தவனே. அதற்கு தகுந்த வகையில் பேசினாய். சாமர்த்யம் குறைவாக இருந்தால், இப்படி ஒரு சொல் வராது. என் சகோதரனையும், உன்னையும் விட்டால் வேறு யாரால் இப்படி பேச முடியும். என் சகோதரனுக்கு ஏற்ற நண்பனே நீ. தேவர்கள் வெகு காலத்துக்கு முன்பே சகாயம் செய்ய வானரர்களை பிறப்பித்து விட்டார்கள். வா, என்னுடன் வந்து இதே போல என் சகோதரனின் சந்தேகத்தையும் தெளிவி. அவன் மனைவியைப் பிரிந்த வருத்தத்துடன் இருக்கிறான். சமாதானமாக பேசு. ராமருடைய மன வேதனையை தாளாமல் நான் சொன்ன கடுமையான சொல்லையும் பொறுத்துக் கொள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவ லக்ஷ்மணானுரோத: என்ற முப்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 37 (308) கபி சேனா சமாத்யயனம் (வானர சேனையை திரட்டுதல்)
லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்டு, சுக்ரீவன், அருகில் நின்றிருந்த ஹனுமனைப் பார்த்து, வானரர்களை பல இடங்களிலிருந்தும் வரவழைக்க ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னான். மஹேந்திர, ஹிமவத (இமயமலை), விந்த்3ய, கைலாஸ சிகரங்களில், மந்த3ர மலையில். பாண்டு சிகரத்தில், ஐந்து மலைகளில் இந்த வானரங்கள், இளம் சூரியனின் வண்ணத்துடன் கவலையின்றி எங்கும் சுற்றித் திரியும். மேற்கு சமுத்திர ஓரங்களிலும் இவை காணப்படும். ஆதி3த்ய பவனத்தில், மலைகளில், சாயங்கால சந்த்யா வண்ணங்களில். பாஞ்சால வனம் எனும் இடத்தில் சஞ்சரிக்கும் வானரங்கள், பெருத்த உடலை உடையவை. யானை போல தேகமும் கறுத்த மேகம் போலவும் தெரிவார்கள். இவை அஞ்சன மலையில் இருப்பவை. மகா சைல எனும் மலைகளின் குகைகளில் வசிப்பவை பொன் நிறமானவை. மேரு மலையருகில் இருப்பவை புகை மூட்டம் போல காணப்படுவர். மகா மலையில் உள்ளவர்களும் இளம் சூரியனின் வண்ணத்தில் காணப்படுவர். இந்த வானரங்கள் நல்ல வேகம் உடையவை. மைரேயம் எனும் மதுவை அருந்துபவர்கள். அழகிய வனங்களில், பெரிய காடுகளிலும், நல்ல வாசனை வீசும் மரங்கள் உள்ள இடங்களிலும் உள்ள வானரங்களை அழைத்து வா. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் வானரங்கள் இங்கு வந்து சேர வேண்டும். சாம தானம் முதலிய வழிகளை பின் பற்றி இவை யாவும் எந்த வித தடங்கலும் இல்லாமல், மறுப்பு சொல்லாமலும் வந்து சேரும்படி செய். வேகமாக செல்லக் கூடிய பல தூதர்களை நான் முன்பே அனுப்பி இருக்கிறேன். அவர்களையும் துரிதப் படுத்த உங்களையும் அனுப்புகிறேன். எந்த வானரங்கள் மிகவும் தாமதமாக செயல் படுகின்றனவோ, எவை காம மோகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனவோ, அவைகளை என்னிடம் கொண்டு வரவும். நான் தண்டனை கொடுப்பேன். பத்து நாட்களுக்குள் யார், யார் என் கட்டளைப் படி என்னைக் காண வந்து சேரவில்லையோ, அவர்கள் ராஜ கட்டளையை மீறிய குற்றத்திற்காக, தலை சீவப் படுவார்கள். என் கட்டளைப் படி நூறு, நூறாயிரம், கோடிக் கணக்கான வானரங்கள் புறப்படுங்கள். திசைகளை நோக்கிச் செல்லுங்கள். என் கட்டளையை செயல் படுத்தும் விதமாக பல திக்குகளிலும் செல்லுங்கள். வானர சிங்கங்களே, ஆகாயத்தை மேகம் மறைப்பது போல, நீங்களும் ஆகாயத்தை மறைத்துக் கொண்டு பெரும் அளவில் புறப்படுங்கள். என் கட்டளை. சிறந்த வானர வீரர்கள், பயங்கரமான தோற்றம் உடையவர்கள், கிளம்புங்கள். வழியை அறிந்து செல்லக் கூடியவர்கள், உலகம் முழுவதும் சுற்றி, தென் பட்ட வானர வீரர்கள் அனைவரையும் திரட்டி அழைத்து வாருங்கள். வாயு சுதனான ஹனுமானும், இதை உடனே செயல் படுத்த முனைந்தான். பல திக்குகளுக்கும், தேர்ந்த வானரர்களை அனுப்பலானான். அந்த வானரங்கள் அந்த க்ஷணமே, விஷ்ணு பாதம் போல (வாமனாவதாரத்தில் விஷ்ணு காலால், மூன்று அடியில் அண்ட சராசரங்களில் பரவியது போல) ஒளி பரப்பியபடி வழியைத் தேடிக் கொண்டு சென்றார்கள். ராம காரியமாக, சமுத்திரங்களிலும், மலைகளிலும், வனங்களிலும், குட்டைகளிலும் இருந்த வானரங்கள் அனைவரையும் தூண்டிக் கிளம்பச் செய்தனர். கபி ராஜனுடைய கட்டளை, ம்ருத்யு தண்டம் போன்றது. அதை மீற யாருக்கும் தைரியமில்லை. சுக்ரீவனிடம் கொண்ட பயத்தினால் அவை புறப்பட்டு வந்தன. அந்த மலையிலிருந்து கரு மை (கண் மை) போன்ற கரு நிறத்து வானரங்கள், கரு வண்ண மலை உருக் கொண்டது போல தோற்றத்துடன் ராகவன் இருக்கும் இடம் செல்ல புறப்பட்டனர். கோடிக் கணக்கான வானர வீரர்கள் அன்றே சூரியன் அஸ்தமித்த சமயம் ராகவன் இருந்த மலையை அடைந்து விட்டனர். கைலாஸ சிகரத்திலிருந்தும், சிம்மம் புலி போல பலம் கொண்ட ஆயிரம் கோடி வானர வீரர்களின் கூட்டம் வந்து சேர்ந்தது. ஹிமய மலையில் பழங்களையும், காய் கிழங்குகளையும் சாப்பிட்டு வளர்ந்தவை இவை. அனல் போல சிவந்த நிறம் கொண்ட வானரங்கள் குதித்து வேகமாக வந்து சேர்ந்தன. இவை விந்த்ய மலையிலிருந்து வந்தவை. ஆயிரம் கோடிக்கு மேல் குதித்து வேகமாக வந்து சேர்ந்தன. தமால வனத்தில் வசிப்பவை பாற்கடலின் அலை போல, தேங்காயையே சாப்பிட்டு வளர்ந்தவை, கணக்கில்லாமல் வந்து சேர்ந்தன. குகைகளில், காடுகளில், பள்ளத் தாக்குகளில் வசித்த வானரங்கள் சேனை, சூரியனையே மறைத்துக் கொண்டு வந்து சேர்ந்தன. இந்த வானரங்களை விரைவாக செல்ல பணித்தபடி சென்ற வானரங்கள், இமய மலையில் அந்த பெரிய மரத்தைக் கண்டனர். அந்த மலைச் சாரலில் தான் முன்பொரு சமயம் மகேஸ்வரன் யாகம் செய்தார். உலகில் அனைவருக்கும் மன சந்துஷ்டியும் அளித்தபடி மனோகரமாக, திவ்யமாக விளங்கினார். இந்த வானரங்கள், அந்த யாக சாலையில் அன்னம் சிதறியதால் விளைந்த பழம், காய் கிழங்குகள், அம்ருதம் போன்ற சுவையுடன் இருப்பதைக் கண்டு வியந்தார்கள். இந்த பழ வகைகளை உண்பவர், ஒரு மாத காலம் திருப்தியாக பசியின்றி இருப்பர். இந்த பழங்களையும், காய் கிழங்குகளையும் வானர வீரர்கள் சேகரித்துக் கோண்டனர். யாகம் நடந்த இடத்திலிருந்து, மணம் மிகுந்த மலர்களையும் பறித்து சேகரித்துக் கொண்டனர். இவைகளை சுக்ரீவனுக்கு கொடுக்க வேண்டும், அவன் சந்தோஷப் படுவான் என்று எண்ணி சேகரித்துக் கொண்டன. இந்த வானரங்கள், உலகின் மூலை முடுக்குகளிலிருந்து வீரர்களைத் திரட்டி, தாங்கள் முன் நின்று நடத்திச் சென்றன. முஹுர்த்த நேரத்தில் வேக வேகமாக நடந்து இவை சுக்ரீவன் இருக்கும் இடம் வந்து சேர்ந்தன. தாங்கள் கொண்டு வந்த பழங்கள், காய் கிழங்குகளை புஷ்பங்கள் இவற்றை சுக்ரீவனுக்கு கொடுத்தன. காடுகளிலும், மலைகளிலும், நதிக் கரைகளிலும் உலகில் வானர ஜாதி இருக்கும் இடம் எல்லாம் சென்று இவர்களை திரட்டி அழைத்து வந்து விட்டோம். உங்கள் கட்டளைப்படி, மேலும் பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். இதைக் கேட்டு மகிழ்ந்து, சுக்ரீவன், அவர்கள் கொண்டு வந்த அன்பளிப்பையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், கபி சேனா சமானயனம் என்ற முப்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 38 (309) ராம சமீப க3மனம் (ராமன் அருகில் செல்லுதல்)
சுக்ரீவன், அவர்கள் தந்த அன்பளிப்புகளை ஏற்றுக் கொண்டு உபசாரமாக பேசி அவர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் சென்றபின், தன் காரியம் ஆன திருப்தி மனதில் நிறைந்தது. மகா பலசாலியான ராமனும், இந்த வானரங்களின் வருகையால் நம்பிக்கை கொள்வான் என்று நினைத்துக் கொண்டான். இந்த கணக்கில்லாத வானர கூட்டத்தைப் பார்த்து, லக்ஷ்மணனும் மன நிறைவோடு சுக்ரீவனை விசாரித்தான். சுக்ரீவா, வா, கிஷ்கிந்தையை விட்டுக் கிளம்புவோம் என, சுக்ரீவனும் உடனே கிளம்பினான். இனி உன் கட்டளைப் படி நான் நடக்க சித்தமாக இருக்கிறேன் என்று லக்ஷ்மணனைப் பார்த்து சொல்லியபடி, ஸ்த்ரீ ஜனங்களை, தாரா முதலானவர்களை அனுப்பி விட்டு, முழு மூச்சுடன் செயலில் இறங்கினான். வாருங்கள், வாருங்கள், என்றும், கிளம்புங்கள் என்றும் குரல் கொடுத்து அந்த வீரர்களையும் அழைத்துக் கொண்டு பயணமானான். கை கூப்பியபடி ஸ்த்ரீ ஜனங்களும் கூச்சமின்றி பார்க்கத் தகுந்த விதமாக தங்களளவில் கௌரவமாக உடை உடுத்தியபடி, வந்து நின்றவர்களைப் பார்த்து சூரியனுக்கு சமமான காந்தியையுடைய சுக்ரீவ ராஜா கட்டளையிட்டான். வானரர்களே, என் பல்லக்கை தயார் செய்யுங்கள். அவர்களும் அவ்வாறே செய்தனர். சுக்ரீவனும், லக்ஷ்மணா, ஏறிக் கொள் என்று சொல்லி, அந்த காஞ்சனமான வாகனத்தில் கிளம்பினான். வெண் குடையை மேல் தாங்கி பெரும் வானரங்கள் தூக்க கிளம்பினார்கள். சாமரங்கள், வெண் கொற்றக் குடை சகிதம், சங்கம் பேரி, முதலியவை முழங்க புறப்பட்டனர். முன்னால் துதி பாடகர்கள் சென்றனர். உத்தமமான ராஜ்ய லக்ஷ்மியை அடைந்த சுக்ரீவன் (முதல் முறையாக) அரச மரியாதைகளுடன் கிளம்பினான். நூறு வானரங்கள், கூர்மையான ஆயுதங்களோடு முன்னும் பின்னும் பாதுகாக்கச் சென்றான். ராமர் இருக்கும் இடம் வந்ததும், லக்ஷ்மணனுடன் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி, கை கூப்பி வணங்கியபடி அவர் அருகில் சென்று பேசாமல் நின்றான். தாமரை மொட்டுகள் போல கூப்பிய கரங்களுடன், அசையாது நிற்கும் தாமரை தடாகம் போல நின்ற சுக்ரீவனை ராமர் பார்த்தார். உடன் வந்த வானர சைன்யத்தையும் பார்த்தார். காலில் வந்து விழுந்த சுக்ரீவனைத் தூக்கி நிறுத்தி அன்புடன் அணைத்துக் கொண்டார். உட்கார், என்று சொன்னார். பூமியில் அமர்ந்த சுக்ரீவனைப் பார்த்து, விசாரித்தார். சுக்ரீவா, காலம், தேசம் இவற்றை அறிந்து தர்மார்த்தங்களை செய்கிறாயா? தன் செயல்களை ஒழுங்காக திட்டமிட்டுக் கொண்டு எதையும் விடாமல் செய்பவன் தான் சிறந்த அரசன். தர்மத்தையும் அர்த்தத்தையும் விட்டு, காமமே பெரிதென்று வாழ்பவன், மரத்தின் நுனியில் தூங்கியவன் ஆவான். விழுந்தபின் விழித்துக் கொள்வான். தனக்கு நண்பர்கள் அல்லாத எதிரிகளை அழித்தும், உற்றாரான நண்பர்களை அரவணைத்தும் மேலும் நண்பர்களை பெருக்கிக் கொள்வதில் கவனமாகவும் இருக்க வேண்டும். மூன்று விதமான தர்மார்த்த காமங்களை அனுபவிக்க வேண்டியவனே அரசன். ஆனாலும் தர்மம் தான் முதலில் பேசப் படுகிறது. ராஜனுடைய முதல் கடமை தர்மத்தை ரக்ஷிப்பதே ஆகும். சத்ரு வினாசனா, இது நாம் செயல் பட வேண்டிய சமயம். நம் முயற்சிகளை ஒரு முனைப் படுத்தி செயல்களை ஆரம்பிப்போம். உன் மந்திரிகளுடன் கலந்து யோசி. ராமர் இவ்வாறு சொல்லவும் சுக்ரீவன் பதில் சொன்னான். மஹாபாஹோ, என் செல்வம், கீர்த்தி, சாஸ்வதமான கபி ராஜ்யம் இவை அனைத்தும் தொலைந்து போய் இருந்தன. உங்கள் தயவால் திரும்ப இவைகள் கிடைக்கப் பெற்றேன். நீங்களும், உங்கள் சகோதரனும் எனக்கு செய்துள்ள உதவி மிகப் பெரியது. இதற்கு பதில் உபகாரம் செய்யாமல் இருப்பது அபராதம். குற்றமே ஆகும். நூற்றுக் கணக்கான இந்த வானர வீரர்கள் வந்து சேர்ந்திருக்கின்றனர். உலகில் பல சாலியான வானர வீரர்களை சேகரித்து அழைத்து வந்திருக்கின்றனர். கரடிகளும், கோ லாங்கூலங்களும் வந்துள்ளனர். அந்தந்த காடு, வனம், குகை, கோட்டை இவைகளின் அடையாளமாக, பயங்கரமான உருவத்துடன் வந்திருக்கிறார்கள். தேவ கந்தர்வ புத்திரர்கள், இந்த வானரங்கள். விருப்பம் போல உருவம் எடுக்கக் கூடியவை. தங்கள் சைன்யம் புடை சூழ வந்து விட்டனர். நூற்றுக் கணக்கான, நூறாயிரம் குழுக்களாக, கோடிக் கணக்கான வானரங்கள், இருபதாயிரம் கொண்ட அணிகளாக சங்கம் (எண்ணிக்கை) பேர்களும் அணிகளாக, அர்புத சதம் (நூறு கோடி) வீரர்களாக, முன்னும் பின்னுமாக வானர வீரர்கள், சமுத்திர கரைகளிலிருந்தும், உலகின் மூலை முடுக்குகளிலிருந்தும் வந்து சேருவார்கள். இவர்கள் எல்லோருமே, நல்ல விக்ரமம் உடையவர்கள். ஒவ்வொருவரும் ஒரு இந்திரனுக்கு சமமானவர்கள். விந்த்ய, மேரு மலைவாசிகள் இவர்கள். அந்த மலைகள் போன்ற தோற்றம் உடையவர்கள். இவர்கள் உன்னிடம் வந்து சேர்ந்து, ராக்ஷஸனான ராவணனை அழித்து மைதிலியைக் கொண்டு வந்து விடுவார்கள். ஹரி ராஜன், (வானர ராஜன்) கட்டளைக்கு பணிந்து பெருமளவில் கூடியிருந்த வானரர்களையும், அவர்களை திரட்டி, அணி வகுத்து வரச் செய்திருந்த சுக்ரீவனின் செயலையும் பாராட்டிப் பேசிய ராகவன், மகிழ்ச்சியில் மலர்ந்த கண்களுடன் மலர்ந்த நீலோத்பலம் போல விளங்கினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ராம சமீப க3மனம் என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 39(310) சேனா நிவேச: (சேனையை தயார் செய்தல்)
கை கூப்பியபடி பணிவாக சுக்ரீவன் சொன்னதைக் கேட்டு ராமர், அந்த கைகளுடன் சேர்த்து அவனை அணைத்துக் கொண்டார். இந்திரன் மழை பொழிகிறான் என்றால் உலகில் அது ஒரு அதிசயமே இல்லை. ஆதித்யன் ஆயிரம் கிரணங்களோடு திசைகளை ஒளி மயமாக ஆக்குவதும் புதிதில்லை. சந்திரன் தன் சௌம்யமான கிரணங்களால் பூமியில் விமலமான காந்தியை பரவச் செய்வதும் அதிசயமல்ல. அதே போல உன் போன்றோரும் நண்பனுக்கு பிரதி உதவி செய்வதும் புதிதல்ல. சௌம்யனே சுக்ரீவா, நான் உன்னை அறிவேன். நீ எப்பொழுதும் பிரியமாக பேசுபவன். இந்த இயற்கையின் நியதிகள் போல குண நலன்கள் உனக்கும் இருக்கின்றன. நீ எனக்கு சகாயமாக வருவதால், நான் இப்பொழுதே எல்லா எதிரிகளையும் வென்று விட்டதாகவே நினைக்கிறேன். நீ என் நண்பனாக, எனக்கு உதவி செய்யவும் தகுதி வாய்ந்தவனே. இந்த ராக்ஷஸாத4மன், தன் வினாசத்திற்காகவே மைதிலியை கடத்திச் சென்றிருக்கிறான். பௌலோமியை வஞ்சித்து, அனுஹ்லாதன் சசியை கடத்திச் சென்றது போல. சீக்கிரமே அந்த ராவணனை கூர்மையான என் பாணங்களால் அடிப்பேன். பௌலோமியின் தந்தை கர்வத்துடன் நின்றவனை, இந்திரன் அடித்தது போல அடிப்பேன். இதற்குள் புழுதிப் படலம் எழுந்தது. ஆகாயத்தை மறைத்துக் கொண்டு உஷ்ணமான, கடுமையான சூரியனையும் மறைத்துக் கொண்டு, இந்த புழுதிப் படலம் எழுந்தது. இந்த புழுதியில் திசைகளே கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தன. மலைகளும் காடுகளும் கொண்ட பூமி நடுங்கியது. பின், மலையரசன் போன்ற உருவமும், கூரிய பற்களையுமுடைய எண்ணற்ற வானரங்களால் பூமியே கண்ணுக்குத் தெரியாதபடி அந்த இடம் நிறைந்தது. கண் மூடி திறக்கும் நேரத்தில் அந்த இடம் கோடிக் கணக்கான வானர பரிவாரங்களால், அவர்கள் தலைவர்களின் கட்டளைக் கிணங்கி நிறைக்கப் பெற்றது. இந்த வனத்தில் சஞ்சரிக்கும் வானரங்களின் கூக்குரலும் விதம் விதமாக ஒலித்தது. மலை வாசிகளின் குரல் ஒருபுறம், சமுத்திர கரைகளில் வசிப்பவர்கள் குரல் ஒரு புறம், மேகம் போல கர்ஜிக்கும் சில குரல்கள் மற்றும் பல, இணைந்து ஒலித்தன. ஒரு சில இளம் சூரியனின் நிறம் என்றால், மற்றும் சில முயல் வண்ணத்தில் வெண்மையாக காட்சி தந்தது. சில தாமரையின் மகரந்த நிறமான மஞ்சள் நிறத்துடன், மற்றும் சில மேரு மலை வாசிகள், கைலாச மலையின் வெண்மை நிறத்துடன் காணப் பட்டன. ஆயிரம் கோடி வானரங்களில் நடுவில் சதபலி என்ற வானரன் இருந்தான். தாரையின் தந்தையான வானர வீரன், பொன் மலை வந்து நிற்பது போல நின்றான். பல நூறு கோடி வானரர்கள் சேனை அவனுடன் வந்திருந்தது. ருமையின் தந்தை, சுக்ரீவனின் மாமனார், தாமரையின் மகரந்தம் போன்ற மஞ்சள் வர்ணத்தினார். நல்ல வீரர். இவரும் கோடிக் கணக்கான வீரர்கள் சூழ நின்றார். இவர் நல்ல புத்திமானும் கூட. பல அணிகள் கொண்ட பெரும் வானர படையுடன், ஹனுமானின் தந்தை கேஸரி வந்து சேர்ந்தார். கோ3லாங்கூல இனத்தவரின் ராஜா க3வாக்ஷன், பீம பலம் கொண்டவன். ஆயிரம் கோடி வானர வீரர்கள் சூழ, வந்து சேர்ந்தார். தூ3ம்ரன் என்ற கரடி ராஜன், இரண்டாயிரம் கோடி வீரர்களுடன் காணப் பட்டார். பனஸன் என்ற வானரத் தலைவன், மகாசலம், பெரிய மலை போன்ற பெருத்த வானரங்களின் படையுடன் மூன்று கோடி வீரர்களின் அணிவகுப்புடன் வந்து சேர்ந்தான். நீலன் என்ற வானர படைத் தலைவன், நீலாஞ்சனம் கரு மை போன்ற கரு நிற வானரப் படையுடன் வந்து சேர்ந்தான். பத்து கோடி வீரர்கள் அவனுடன் இருந்தனர். பொன் மலை போன்ற உருவத்துடன், க3வயன் என்ற படைத் தலைவன் ஐந்து கோடி வீரர்களுடன் வந்தான். த4ரீ முகன் என்ற படைத்தலைவனும், கணக்கில்லாத ஆயிரம் கோடி வீரர்களுடன் சுக்ரீவன் சமீபமாக வந்து நின்றான். அஸ்வினி புத்திரர்களான மைந்த3னும், த்3விவித3னும் ஆயிரம் கோடி, கோடி வானர வீரர்களுடன் வந்து சேர்ந்தனர். க3ஜன் என்ற பல சாலியான வானரம், மூன்று கோடி வீரர்களுடன் வந்தான். மேலும் பத்து கோடி வீரர்களும் வர சுக்ரீவனிடம் வந்து நின்றான். அவன் கட்டளைக்கு காத்திருந்தான். ருமன்வான் என்ற வானர வீரன், இவனும் நூறு கோடி வீரர்கள் சூழ வந்து நின்றான். க3ந்த4மாத3னன் தொடர்ந்து பின்னாலேயே வந்தது போல அங்கு வந்து சேர்ந்தான். இவனுடன் வந்த வீரர்களும், ஆயிரம் கோடி, நூறாயிரம் என்று ஆகும். இதன் பின் தந்தைக்கு சமமான பலம் கொண்ட அங்கதன் தன் வீரர்களுடன் வந்து சேர்ந்தான். இவன் படை வீரர்களின் எண்ணிக்கை, பத்ம சதம், சங்க சதம் என்பவை ஆகும். இதன் பின் தாரன் வந்தான். வெகு தூரத்திலிருந்தே, ஆகாயத்தில் கண் சிமிட்டும் தாரையைப் போல (நக்ஷத்திரம்) போல கண்ணுக்குத் தென்பட்டான். ஐந்து கோடி வானர வீரர்களுடன் வந்து கொண்டிருந்தான். இந்திர ஜானு என்ற வானர படைத் தலைவன், பதினோரு கோடி வீரர்களோடு மறு புறம் வந்து கொண்டிருந்ததும் தென் பட்டது. ரம்பன் என்ற வானர வீரன், இளம் சூரியன் போன்ற பிரகாசத்துடன், பத்தாயிரம் வீரர்கள் புடை சூழ., மேலும் ஆயிரம், நூறாயிரம், என்று அணி வகுத்து பின் தொடர வந்தான். பின் துர்முகன் என்ற வானர சேனாபதி, இரண்டு கோடி வீரர்களுடன் வந்தான். ஹனுமானும், கைலாஸ மலை போன்ற உருவம் கொண்ட பலசாலிகளான ஆயிரம் கோடி வானர வீரர்களை அழைத்து வருவது தெரிந்தது. நளன் வந்தான். கிளைக்கு கிளை தாவும் வானரங்கள், கோடிக் கணக்காக பின் தொடர வந்தான். சுக்ரீவனுடைய அபிமானத்துக்கு பாத்திரமான த3தி4முகன், பத்து கோடி வீரர்களுடன் வந்து கொண்டிருந்தான். சரப4ன், குமுதன், வஹ்னி வீரன், ரம்ஹன் என்பவன், மற்றும் பல வானர வீரர்கள், பர்வதங்களையும், வனங்களையும் கடந்து வந்து சேர்ந்தனர். வந்து சேர்ந்த படைத் தலைவர்களின் எண்ணிக்கையே கணக்கில் அடங்காமல் இருந்தது. வந்தவர்கள் பூமியில் அமர்ந்தனர். சிலர் மரங்களில் தாவியும், சப்தமிட்டுக் கொண்டும், மரங்களிலேயே இருந்தனர். சூரியனைச் சுற்றி மேக கணங்கள் நிற்பது போல சுக்ரீவனைச் சுற்றி இவர்கள் நின்றனர். மகிழ்ச்சி நிறைந்த குரலில் தங்களுக்குள் பேசிக் கொள்வதும் ஆரவாரமாக கேட்டது. சிலர் வணங்கியபடி, சிலர் அருகில் வந்து விசாரித்து தங்கள் வருகையை தெரிவித்தனர். சுக்ரீவனும் உடனுக்குடன் அவர்களை ராமனுக்கு அறிமுகப் படுத்தி வைத்தான். இதோ, வானர வீரகள் வந்து விட்டார்கள். அவர்களை சௌகர்யமாக இருக்கும்படி, அவர்கள் வசதிக்கேற்ப, மலைச் சாரல்களில், வனங்களில் தங்கச் செய்து விட்டு, மொத்த படை பலத்தை கணக்கிட்டு, அவர்களை தயார் செய்து விட்டு வருகிறேன் என்று கிளம்பினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சேனா நிவேசோ என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 40 (311) ப்ராசீ ப்ரேஷணம் (கிழக்கில் தேட அனுப்புதல்)
எதிரி பலத்தை எடை போடுவதில் சமர்த்தனான ராமனிடம் வந்து சுக்ரீவன், வானர வீரர்கள் வந்து விட்டார்கள். அணி வகுத்து அவர்களை வசதிக் கேற்ப தங்கவும் ஏற்பாடுகள் செய்து விட்டேன். இவர்கள் அனைவருமே பலசாலிகள். விருப்பம் போல உருவம் எடுக்க வல்லவர்கள். என் ஆணயை சிரமேற் கொண்டு செய்யக் கூடியவர்கள். பல வானர வீரர்கள், தை3த்ய தா3னவர்களுக்கு சமமான பலம் கொண்டவர்கள். எளிதில் களைப்படைய மாட்டார்கள். உற்சாகத்துடன், உழைக்கத் தயங்காதவர்கள். ஒவ்வொருவரும் அரிய பல செயல்களைச் செய்து புகழ் பெற்றவர்கள். பட்டங்கள் பெற்றவர். ஆற்றலுக்கு பெயர் போனவர்கள். பூமியிலும், நீரிலும் சஞ்சரிக்கக் கூடியவர்கள். பல விதமான மலைகளில் வசிப்பவர். கோடிக் கணக்கில் இவர்கள் வந்து விட்டார்கள். ராமா, இனி இவர்கள் உனக்கு கிங்கரர்கள். உன் சொல்லைக் கேட்டு அதன் படி நடப்பவர்கள். இவர்கள் போர் வீரர்களுக்கு உரிய முக்கியமான குணம், கட்டளையை புரிந்து கொண்டு நடக்கும் வீரர்கள். தங்கள் தலைவனின் நலனையே பெரிதாக நினைப்பவர்கள். உன் எண்ணத்தை புரிந்து கொண்டு செயல் படுவார்கள். சரியான சமயத்தில் வந்து விட்ட இந்த வீரர்கள் பல விதமான சாகஸம் உடையவர்கள், இவர்களிடம் என்ன செய்யலாம் என்பதை விவரமாகச் சொல். இந்த சைன்யம் இனி உன் சைன்யம். உன் ஆணைக்குட்பட்டது. எது உனக்கு சரியென்று தோன்றுகிறதோ, அது போல கட்டளையிட்டு நடத்திச் செல்வாயாக. சுக்ரீவன் இப்படிச் சொல்லவும் ராமர் சொன்னார். முதலில் சீதை உயிருடன் இருக்கிறாளா, இல்லையா என்பதைக் கண்டு பிடிப்போம். ராவணன் வசிக்கும் தேசத்தையும் கண்டு பிடிப்போம். ராவணனின் இருப்பிடத்தையும், வைதேஹியின் நிலையையும் தெரிந்து கொண்ட பின், சமயம் வரும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறேன். இந்த செயலை என்னால் செய்ய முடியாது. லக்ஷ்மணனாலும் செய்ய முடியாது. வானர ராஜனே, உன்னால் தான் முடியும். உன் படை வீரர்களால் தான் இதை சாதிக்க முடியும். அதனால் நீயே, அவர்களுக்கு ஆணையிடு. தலைவன் நீ. நீயே எப்படி செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று விவரமாக இவர்களுக்குச் சொல்லி அனுப்பு. என்றார். நீ என் நண்பன். அறிவுடையவன். கால தேசங்களை அனுசரித்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து கட்டளையிடு. இதைக் கேட்டு, வினதன் என்ற படைத் தலைவனை அழைத்து சுக்ரீவன், ராம லக்ஷ்மணர்களின் எதிரிலேயே, கைலாஸ பர்வதம் போல இருந்த அந்த பெரிய வானரத்திடம் விளக்கிச் சொல்லலானான். சூரியசந்திர புத்திரர்கள் போன்ற வானர வீரர்களுடன் செல்வாய். இவர்கள் தேச, கால அறிவு மிக்கவர்கள். செய்ய வேண்டியவைகள், செய்யக் கூடாததை அறிந்தவர்கள். இப்படிப் பட்ட வேகமாக செல்லக் கூடிய நூறாயிரம் வானரங்களை அழைத்துக் கொண்டு கிழக்கு திசையில் செல். (இங்கு சுக்ரீவன் கிழக்கு என்றது, விந்த்ய மலைக்கும், ஹிமய மலைக்கும் நடுவில் இருந்த ஆர்யாவர்த்தம் என்கிறார் உரையாசிரியர்) பல மலைகளும், வனங்களும், காடுகளும் நிறைந்து இருக்கும். அங்கு மலை சிகரங்களிலும், வனங்களிலும், நதிக் கரைகளிலும், ராவணன் இருப்பிடத்தை தேடுங்கள். சீதை இருக்கிறாளா என்று தேடுங்கள். பாகீரதி நதியை அடுத்து சரயூ, கௌசிகி நதிகளை கடந்து செல்லுங்கள். காலிந்தீ, யமுனை நதிகளை யாமுனம் என்ற மலைப் பகுதிகளை, சரஸ்வதி நதியை, சிந்து சோனா நதி, இந்த நதியின் ஜலம் மணி போல தெளிவாக இருக்கும், கால மஹீ என்ற பூமியை அடுத்து வரும் மலைகளை, காடுகளைக் கடந்து செல்லுங்கள். ப்ரும்ம மாலா, விதேஹ, மாலவான், காசி, கோஸல தேசங்கள், மகதம், மகா க்ராமங்கள், புண்டிர, வங்க தேசங்கள், கோசக் காரர்களின் பட்டினம், வெள்ளி போன்ற பூமியை உடைய இடங்கள் இங்கெல்லாம், தேடிக் கொண்டே செல்லுங்கள். ராமருடைய பிரிய மனைவியை, தசரதனுடைய மருமகளைத் தேடுங்கள். சமுத்திரத்தில் மூழ்கித் தேடுங்கள். மந்தர மலையின் கோடி வரை வசிக்கும் ஜனங்களிடம் விசாரியுங்கள். கர்ணப்ராவரணா:, என்றும், உஷ்டகர்ணகா: என்றும் யவனர்கள் தென்படுவார்கள். ஒரு பாதம் உடையவர்கள். இரும்பு போன்ற முகமும், கோரமான முகமும் கொண்டவர்கள். அழிவில்லாத பலம், மனிதனையே அடித்து தின்னும் ஜாதியினர். அடுத்து வரும் பிரதேசங்களில் வேடர்கள், தீக்ஷ்ணமான தலையலங்காரத்துடன், பொன் வண்ணத்தினராக, கண்டவுடன் நட்பு கொள்ளும் படியான அன்பு நிறைந்த தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள், ஆமை, மீன் இவற்றை சாப்பிடும் வேடர்கள். தீவில் வசிப்பவர்கள். நீருக்கடியிலும் சஞ்சரிக்கக்கூடியவர்கள். இவர்களை நரவ்யாக்ரர்கள் என்றும் அழைப்பர். இவர்கள் வீடுகளையும் அலசித் தேடுங்கள்.
இந்த மலைகளில் தாவிக் குதித்துச் செல்லுங்கள். ஏழு ராஜ்யங்கள் ஒன்று சேர்ந்து, யவத்வீபம் என்ற மலை நாடு. உயர்ந்த மலைச் சிகரங்கள் ஒன்று சேர்ந்து ஆகாயத்தையே தொட்டு விடும் போல நிற்கும். தேவ தானவர்கள் இங்கு வசிக்கிறார்கள். இந்த மலை உச்சியில், அருவிகளில், வனங்களில், ராம பத்னியைத் தேடுங்கள். இதன் பின், சிவந்த ஜலத்துடன், ஆழமான சோனா நதி, வேகமாக பிரவகித்துக் கொண்டு செல்லும். இந்த வழியே சென்று, சமுத்திரத்தைக் கடந்து, சித்த சாரணர்கள் வசிக்கும் இந்த சமுத்திரக் கரையில், தீர்த்தங்களிலும், அழகிய விசித்திரமான வனங்களிலும், ராவணன், வைதேஹி இருவரையும் தேடுங்கள். இதே மலையிலிருந்து உற்பத்தியாகி பிரவகிக்கும் மற்ற நதிகளும் இதே போல ரம்யமாக நீர் நிறைந்த அருவிகளும், சமவெளிகளுமாகத் தென்படும். இவைகளும் சமுத்திரத்தை அடையும் இடத்தில் பெரிய பெரிய தீவுகள் காணப் படும். இங்கும் தேடுங்கள். இந்த தீவுகளில் உள்ள ராக்ஷஸர்கள், நிழலைப் பிடித்து இழுப்பார்கள். இந்த சமுத்திரம், ரௌத்ரமான அலைகளுடன், ஆரவாரிக்கும் நீரின் ஓசையுடனும், பெருத்த உருவமுடைய ராக்ஷஸர்களுமாக காணப் படும். வெகு காலம் பசியுடன் காத்திருந்தவர்களுக்கு ப்ரும்மா, அனுமதி அளிக்கவும், நிழலைக் கொண்டே, அந்த நிழலுக்கு உரிய ஜந்துவை இழுத்து சாப்பிடுவார்கள். கருமேகம் போன்ற அந்த கடலில், பெரிய பெரிய நாகங்களும் வசிக்கும். லோஹிதம் என்ற இந்த சாகரத்தின் ஜலம் ரத்த சிவப்பாக இருக்கும், இந்த கடலும் ஆரவாரமாக, அலை ஓசையுடன் விரிந்து பரந்து கிடப்பதைக் காண்பீர்கள். இதன் பிறகு, வைனதேயனுடைய வீட்டைக் கண்பீர்கள், ரத்னங்கள், மணிகள் நிறைந்து, பசுமையான தோட்டத்தின் நடுவில் பெரிய வீடு. விஸ்வகர்மா கட்டியது. இங்குள்ள ராக்ஷஸர்கள், மந்தேஹா எனப்படுவர். பெரும் மலை போன்ற பயங்கரமான தோற்றத்துடன் இருப்பர். மலைச் சிகரங்களில் தொங்கிக் கொண்டிருப்பர். தங்கள் இஷ்டம் போல சஞ்சரித்துக் கொண்டும், சூரியோதய சமயம் இவர்கள் ஜலத்தில் குதிப்பார்கள். ராக்ஷஸர்களான இவர்கள் தினமும் ப்ரும்ம தேஜஸால், சூரியனுடைய கிரணங்களால் அடிபட்டு, சிவந்து காணப் படுவார்கள். ஆயினும் திரும்பத் தொங்குவார்கள். இதன் பின் க்ஷீரோத3ம் என்ற சாகரத்தைக் காண்பீர்கள். வெண் மேகம் போன்று பரவிக் கிடக்கும் இந்த கடல் பூமிக்கு முத்து மாலை அணிவித்தது போல இருக்கும். இதன் நடுவில் மகாஸ்வேதோ ரிஷபம், அதி வெண்மையான ரிஷபம், என்ற ஒரு பர்வதம், மலர்ந்து மணம் வீசும் திவ்ய மலர்களாலும், வெள்ளியால் நிறைந்த மலைகளும் சூழ இருக்கும். வெண் தாமரை மலர்கள் நிறைந்த குளங்கள், பொன் மயமான கேஸரங்கள், மகரந்த பொடி நிறைந்தவை, சுதர்ஸனம் என்ற பெயர் கொண்ட ஹம்ஸங்கள் நிறைந்து காணப்படும். பலவிதமான சாரணர்கள், யக்ஷ, கின்னரர்கள், அப்சரோ கணங்கள், மகிழ்ச்சியுடன் இங்கு வந்து கூடுவர். இந்த நளினியை (தாமரைத் தண்டு) வேண்டி அடிக்கடி வருவார்கள். இந்த க்ஷீரோதத்தைக் கடந்து வானரங்களே மேலும் செல்லுங்கள், ஜலோதம் என்ற ஸ்ரேஷ்டமான பர்வதத்தைக் காண்பீர்கள். பயங்கரமான நீர் வாழ் ஜந்துக்கள் நிறைந்தது. அல்லது பார்க்கும் யாவருமே பயப்படுவர். இங்கு தான் அந்த கோபத்தில் பிறந்த ஹயமுகன் (குதிரை முகம் கொண்டவன்) இருந்தான். அவனுடைய முகத்திலிருந்து வெளிப்பட்ட ஓதனம் (அன்னம்), இந்த இடத்தில் வேகமாக சராசரங்களில் பரவியது. நீர் வாழ் ஜந்துக்கள், அச்சமயம் அலறின. வடவாமுகம் என்ற இது பற்றி அறிந்தவர்கள் சொல்லிக் கேட்டது தான். உதயாசலத்திற்கு பதின் மூன்று யோஜனை தூரத்தில் ஜாத ரூப சிலம் என்ற கனக பர்வதம், அதில் சந்திரனைப் போன்ற ஒளியுடைய பன்னகம் (நாகம்) பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும். பத்ம பத்ரம் போன்ற விசாலமான கண்களுடன் கூடிய அதை, வானரங்களே, காண்பீர்கள். மலையுச்சியில் அமர்ந்திருக்கும், உலகில் ஜீவ ராசிகள் அனைத்தும் வணங்கும் பெருமையுடைய அனந்தனை, தேவனைக் காண்பீர்கள். மூன்று தலைகளுடன், காஞ்சனமான த்வஜஸ்தம்பமும், வேதிகம் எனும் யாக சாலையும் அருகில் இருக்கக் காண்பீர்கள். தேவர்கள் தலைவன் இந்திரன், மலையுச்சியில் பிரகாசமாக, கிழக்கு திசையில் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறான். இதற்கு அப்பால் ஸ்ரீமானான உதயாசலம், பொன் மயமாக இருக்கக் காண்பீர்கள். இந்த மலையும் பல யோஜனை தூரம் அடர்ந்து, பொன் மயமான சிகரங்களுடன், ஆங்காங்கு யாக சாலைகளுடன் இருக்கும். பூக்கள் நிறைந்த சால, தமால, தாள மரங்கள், கர்ணிகார மரங்கள், சூரியனுக்கு இணையான ஜாதரூபம் எனும் பொன் வர்ணத்தில் மின்னுவதைக் காணலாம். இதன் சிகரம், சௌமனஸம் என்று பெயர் பெற்றது. இது தனித்து தெரியும். த்ரிவிக்ரமனாக பகவான் விஷ்ணு இதன் மேல் ஒரு பாதத்தை வைத்து, மற்றொரு பாதத்தை மேரு மலையின் மேல் வைத்தார். திவாகரன், ஜம்பூத்வீபம் என்ற இந்த தேசத்தை வடக்காக சுற்றி வந்து, இந்த சிகரத்தில் முழுவதுமாகத் தெரிவான். இங்குள்ள மகரிஷிகள், வைகானஸர்கள், இவர்கள் சூரிய வர்ணத்துடன், தங்கள் தவ வலிமையால் காந்தியுடன் காணப் படுவர். இதன் அருகில் சுதர்ஸனம் என்ற தீவு பிரகாசமாகத் தெரிகிறதே, அங்கு உயிருள்ள பிராணிகள் அனைத்தும் சக்தியையும், கண் பார்வையையும் பெறுகின்றன. அந்த மலையின் சிகரத்தில், மலைசாரல்களில், குகைகளில், வனங்களில், ராவணனை, வைதேஹியைத் தேடுங்கள். தானே காஞ்சன சைலம் (தங்க நிறம்) இதில் சூரியனின் பிரகாசமும் பட்டு, தக தகவென்று ஜொலிக்கும். கண்களைப் பறிக்கும் ஒளியுடன் கூடிய இந்த மலையில் காலை சந்த்யா நேரம், செக்கச் சிவக்கத் தெரியும். ஆதியில் இது பூமிக்கும், புவனத்திற்கும் நுழை வாயிலாக இருந்தது. சூரியன் உதிக்கும் இடமாக. கிழக்கு திசையாகப் பெயர் பெற்றது. இந்த மலையின் பின் புறங்களிலும், அருவிகளில், குகைகளில், ராவணனை,. வைதேஹியைத் தேடுங்கள். இதற்கு அப்பால் கிழக்கு திசையில் போவது முடியாது. தேவர்கள் சஞ்சரிப்பார்கள். சந்திர சூரியர்களைத் தவிர மற்றவர்களுக்கு எதுவும் புலப்படாத இருட்டு சூழ்ந்திருக்கும். இந்த மலையின் ஒரு பாகம் விடாமல், குகைகளிலும், வனங்களிலும், நான் சொல்லாத மற்ற இடம் ஏதாவது இருந்தால் அங்கும் நன்றாகத் தேடுங்கள். வானர வீரர்களே, இது வரை தான் நாம் செல்லக் கூடிய எல்லை. இதற்கு அப்பால் சூரியனும் இல்லாமல் பரந்து கிடக்கும் இடத்தில் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. வைதேஹியை கண்டு பிடித்து, ராவணனின் இருப்பிடத்தையும் தெரிந்து கொண்டு, ஒரு மாதம் முழுவதும் முடியு முன் வந்து சேருங்கள். ஒரு மாதத்திற்கு மேல் எங்கும் தங்க வேண்டாம். தாமதம் செய்பவர்கள் தண்டிக்கப் பெறுவீர்கள். சிரச்சேதம் தான் தண்டனை. போய் வாருங்கள். வெற்றியுடன் திரும்பி வாருங்கள். மைதிலியைக் கண்டு கொண்டு மகிழ்ச்சியுடன் வாருங்கள். நீங்கள் போகும் கிழக்குத் திசையில் அடர்ந்த காடுகள் நிறைந்த, இந்திரனுக்கு சமமான காந்தியுடைய இந்த கிழக்கு திசையில் சாமர்த்யமாகச் சென்று, ரகு வம்ச பிரியாவான சீதையைக் கண்டு பிடித்து திரும்பி வாருங்கள். அதன் பின் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. என்றும் சுகமே.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ப்ராசீ ப்ரேஷணம் என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
ஸ்ரீமத் ராமாயணம்
கிஷ்கிந்தா காண்டம்
அத்தியாயம் 1 (272) ராம விப்ரலம்பா4வேச: (பிரிவுத் துயர் தாங்காமல் ராமர் புலம்புதல்) 4
அத்தியாயம் 2 (273) சுக்ரீவ மந்த்ர: (சுக்ரீவன் மந்த்ராலோசனை) 11
அத்தியாயம் 3 (274) ஹனூமத் ப்ரேஷணம் (ஹனுமானை அனுப்புதல்) 13
அத்தியாயம் 4 (275) சுக்3ரீவ சமீப க3மனம் (சுக்ரீவன் அருகில் செல்லுதல்) 15
அத்தியாயம் 5 (276) சுக்3ரீவ சக்2யம் (சுக்ரீவன் நட்பு) 17
அத்தியாயம் 6 (277) பூ4ஷண ப்ரத்யபி4க்ஞானம் (ஆபரணங்களை அடையாளம் கண்டு கொள்ளுதல்) 19
அத்தியாயம் 7 (278) ராம சமாஸ்வாஸனம் (ராமனை சமாதானப் படுத்துதல்) 21
அத்தியாயம் 8 (279) வாலி வத4 ப்ரதிக்ஞா (வாலியை வதம் செய்ய பிரதிக்ஞை செய்தல்) 22
அத்தியாயம் 9 (280) வைர விருத்தாந்தானுக்ரம:(விரோதம் வளர்ந்த விவரம், வரிசைக்ரமமாக) 25
அத்தியாயம் 10 (281) ராஜ்ய நிர்வாஸக் கத2னம் (ராஜ்யத்தை விட்டே வெளியேற உத்தரவிடுதல்) 26
அத்தியாயம் 11 (282) வாலி வதா4விஷ்கரணம் (வாலியை வதம் செய்ய தீர்மானித்தல்) 28
அத்தியாயம் 12 (283) சுக்ரீவ ப்ரத்யய தானம் (சுக்ரீவனுக்கு நம்பிக்கை அளித்தல்) 33
அத்தியாயம் 14 (285) சுக்ரீவ கர்ஜனம் (சுக்ரீவன் கர்ஜனை செய்தல்) 37
அத்தியாயம் 15 (286) தாரா ஹிதோக்தி: (தாரை ஹிதமாக சொல்லுதல்) 38
அத்தியாயம் 16 (187) வாலி சம்ஹார: (வாலி வதம்) 40
அத்தியாயம் 17 (287) ராமாதி4க்ஷேப: (ராமனை குறை கூறுதல்) 42
அத்தியாயம் 18 (289) வாலி வத4 சமர்த்தனம் (வாலி வதத்தை நியாயப் படுத்துதல்) 46
அத்தியாயம் 19 (290) தாராக3மனம் (தாரை வருதல்) 50
அத்தியாயம் 20 (291) தாரா விலாப: (தாரையின் புலம்பல்) 51
அத்தியாயம் 21 (292) ஹனுமதா3ஸ்வாஸனம் (ஹனுமான் ஆறுதல் சொல்லுதல்) 53
அத்தியாயம் 22 (293) வால்யனுசாஸனம் (வாலி தீர்மானித்து ஆணையிடுதல்) 54
அத்தியாயம் 23 (295) அங்க3தா3பி4வாத3னம் (அங்கதன் வணங்குதல்) 56
அத்தியாயம் 24 (295) சுக்ரீவ தாராஸ்வாஸனம் (சுக்ரீவன் தாரையை சமாதானப் படுத்துதல்) 57
அத்தியாயம் 25 (296) வாலி சம்ஸ்காரம் (வாலியின் இறுதிக் கடன்களை நிறைவேற்றுதல்) 61
அத்தியாயம் 26 (297) சுக்3ரீவாபி4ஷேக: (சுக்ரீவனுக்கு முடி சூடுதல்) 63
அத்தியாயம் 27 (298) மால்யவன்னிவாஸ: (மால்யவானில் வசித்தல்) 65
அத்தியாயம் 28 (299) ப்ராவ்ருட் ஜ்ரும்பணம் (மழைக் கால இடி ஓசை) 68
அத்தியாயம் 29 (300) ஹனுமத் ப்ரதி போ3த4னம் (ஹனுமான் நினைவு படுத்துதல்) 73
அத்தியாயம் 30 (301) சரத்3 வர்ணனம் (சரத் கால வர்ணனை) 75
அத்தியாயம் 31 (302) லக்ஷ்மணக்ரோத4: (லக்ஷ்மணனின் கோபம்) 82
அத்தியாயம் 32 (303) ஹனூமத் மந்த்ர: (ஹனுமான் அறிவுரை சொல்லுதல்) 85
அத்தியாயம் 33 (304) தாரா சாந்த்வ வசனம் (தாரை சமாதானம் செய்தல்) 86
அத்தியாயம் 34 (305) சுக்ரீவ தர்ஜனம் (சுக்ரீவனை மிரட்டுதல்) 90
அத்தியாயம் 35 (306) தாரா சமாதானம்… 91
அத்தியாயம் 36 (307) சுக்ரீவ லக்ஷ்மணானுரோத: (சுக்ரீவன், லக்ஷ்மணனுக்கு விளக்கிச் சொல்லுதல்) 93
அத்தியாயம் 37 (308) கபி சேனா சமாத்யயனம் (வானர சேனையை திரட்டுதல்) 94
அத்தியாயம் 38 (309) ராம சமீப க3மனம் (ராமன் அருகில் செல்லுதல்) 96
அத்தியாயம் 39(310) சேனா நிவேச: (சேனையை தயார் செய்தல்) 98
அத்தியாயம் 40 (311) ப்ராசீ ப்ரேஷணம் (கிழக்கில் தேட அனுப்புதல்) 100
அத்தியாயம் 41 (312) தக்ஷிணா ப்ரேஷணம் (தென் திசையில் அனுப்புதல்) 104
அத்தியாயம் 42 (313) ப்ரதீசீ ப்ரேஷணம் (மேற்கு நோக்கி அனுப்புதல்) 106
அத்தியாயம் 43 (314) உதீசீ ப்ரேஷணம் (வடக்கு நோக்கி அனுப்புதல்) 109
அத்தியாயம் 44 (315) ஹனூமத் சந்தேச: (ஹனுமானிடம் செய்தி சொல்லியனுப்புதல்) 113
அத்தியாயம் 45 (316) வானர ப3ல ப்ரதிஷ்டா (வானர படை புறப்படுதல்) 114
அத்தியாயம் 46 (317) பூ4 மண்டல ப்ரமண கத2னம் (உலகை சுற்றியதை விவரித்தல்) 115
அத்தியாயம் 47 (318) கபிசேனா ப்ரத்யாக3ம: (வானர படைகள் திரும்பி வருதல்) 116
அத்தியாயம் 48 (319) கண்டு வனாதி விசய: (கண்டு முனிவரின் வனத்தில் தேடுதல்) 117
அத்தியாயம் 49 (320) ரஜத பர்வத விசய: ( வெள்ளி மலையில் தேடுதல்) 118
அத்தியாயம் 50 (321) ருக்ஷ பி3ல ப்ரவேச: (பள்ளத்தினுள் நுழைதல்) 119
அத்தியாயம் 51 (322) ஸ்வயம்ப்ரபா4தித்யம் (ஸ்வயம்ப்ரபா விருந்து உபசாரம் செய்தல்) 121
அத்தியாயம் 52 (323) பி3ல ப்ரவேச காரண கத2னம் (பள்ளத்தினுள் நுழைந்த காரணத்தைச் சொல்லுதல்) 123
அத்தியாயம் 53 (324) அங்கதாதி நிர்வேத: (அங்கதன் முதலானோர் கவலை) 124
அத்தியாயம் 54 (325) ஹனுமத்பேதனம் (ஹனுமான் அறிவுரை) 126
அத்தியாயம் 55 (326) ப்ராயோபவேச: (வடக்கிருத்தல்) 127
அத்தியாயம் 56 (327) சம்பாதி ப்ரஸ்ன: (சம்பாதி வினவுதல்).. 128
அத்தியாயம் 57 (328) ஜடாயு தி3ஷ்ட கத2னம் (ஜடாயு மறைந்ததை தெரிவித்தல்) 129
அத்தியாயம் 58 (329) சீதா ப்ரவ்ருத்யுபாலம்ப: (சீதையின் நிலையை கண்டறிந்து சொல்லுதல்) 131
அத்தியாயம் 59 (330) சுபார்ஸ்வ வசனானுவாத3:(சுபார்ஸ்வன் சொன்னதை திருப்பிச் சொல்லுதல்) 133
அத்தியாயம் 60 (331) சம்பாதி புராவ்ருத்த கத2னம் (சம்பாதி முன் நடந்ததைச் சொல்லுதல்) 134
அத்தியாயம் 61 (332) சூர்யானுக3மநாக்2யானம் (சூரியனை தொடர்ந்து சென்றது) 136
அத்தியாயம் 62 (333) நிசாகர ப4விஷ்யாக்2யானம் (நிசாகரன் என்ற முனிவர் இனி நடக்கப் போவதைச் சொல்லுதல்.) 137
அத்தியாயம் 63 (334) சம்பாதி பக்ஷ ப்ரரோஹ: (சம்பாதியின் இறக்கைகள் வளருதல்) 138
அத்தியாயம் 64 (335) சமுத்திர லங்க4ண மந்த்ரணம். (சமுத்திரத்தை கடக்க யோசனை செய்தல்) 139
அத்தியாயம் 65 (336) ப3லேயத்தாவிஷ்கரணம் (அவரவர் சக்தியை சொல்லுதல்) 140
அத்தியாயம் 66 (337) ஹனுமத் ப3ல சந்துக்ஷனம். அனுமனுக்கு அவன் பலத்தை நினைவுறுத்துதல்… 142
அத்தியாயம் 67 (337) லங்க4னாவஷ்டம்ப: கடலைத் தாண்டும் முயற்சி.. 144
அத்தியாயம் 1 (272) ராம விப்ரலம்பா4வேச: (பிரிவுத் துயர் தாங்காமல் ராமர் புலம்புதல்)
பத்மமும், உத்பல புஷ்பங்களும் நிறைந்த பம்பா புஷ்கரிணியை அடைந்த ராமர் தன்னையறியாமல், துயரம் மேலிட லக்ஷ்மணனிடம் சொன்னார். அந்த புஷ்கரிணியைக் கண்டவுடன் முதலில் சந்தோஷத்தில் அவருடைய இந்திரியங்கள் மகிழ்ந்தன. பின் அதுவே காமத்தை கிளப்பி மனைவியை நினைக்கச் செய்தது. வைடூரியம் போல விமலமான நீரையுடைய இந்த புஷ்கரிணியின் அழகைப் பார். பத்மமும், உத்பலமும் மலர்ந்து அழகாகத் தெரிகின்றன. சுற்றிலும் வித விதமான மரங்கள். என் துயரம் என்னை வாட்டி எடுக்கிறது. இங்கு மரங்களைப் பார். பெரிய மலைகள், சிகரங்களுடன் இருப்பது போல கிளைகளைப் பரப்பிக் கொண்டு நிற்கின்றன. அழகான காடு இது. என்னுடைய இந்த மன நிலையிலும் கூட என்னால் இதை ரசிக்க முடிகிறது. ப4ரதனுடைய துக்கமும், வைதேஹியை பிரிந்ததும் என் மனதை வாட்டவே செய்கின்றன. பலவிதமான புஷ்பங்களுடன், குளிர்ந்த நீரும், மங்களமான காட்சியாக விளங்குகிறது. தாமரை மலர்கள் நீரை மறைத்து பூத்திருக்கின்றன. அதுவே, அதற்கு சோபையளிப்பதாக இருக்கிறது. சர்ப்பங்கள், விஷ நாகங்கள் ஒரு பக்கம், மிருகங்களும் பக்ஷிகளும் ஒரு பக்கம், மிக அதிகமாக நீலமும் பச்சையும் கலந்த நிறமாகத் தெரிகிறது. மரங்களின் பல வர்ணங்களிலான புஷ்பங்கள் கம்பளமாக விரிந்து கிடக்கிறது. புஷ்பத்தின் பாரம் தாங்காமல் நுனிகள் வளைந்து கொடுக்க, அதைச் சுற்றிப் படர்ந்திருந்த கொடிகளிலும் புஷ்பங்கள் மலர்ந்து கிடக்கின்றன. சுகமான இந்த காற்று மன்மதனின் காலம் இது என்பதை நினைவு படுத்துகின்றது. இந்த மாதமே க3ந்த4ம் (மணம்) நிறைந்தது. க3ந்த4வான், சுரபி என்று அழைக்கப்படும் இந்த காலத்தில் பூக்களும், பழங்களும் மரங்களில் நிறைந்திருப்பது இயற்கையே. மழையை பொழியும் மேகத்தை போல இந்த மரங்கள் புஷ்பங்களை வர்ஷிப்பதைப் பார். மலைச் சாரலிலும், அழகிய பல வித மரங்கள், காற்றில் அசைந்து, அசைய, அசைய அவற்றிலிருந்து புஷ்பங்கள் பூமியில் விழுந்து பூமியை அலங்கரிக்கின்றன. இந்த காற்றும், விழுந்த, இன்னும் மரத்தில் ஒட்டிக்கொண்டு விழப்பார்க்கும் புஷ்பங்கள் இவைகளை சீண்டி விளையாடுவது போல இருக்கிறது. யானைகள் தங்கள் இஷ்டம் போல் கிளைகளை உடைத்து ஒடித்து போட, அதன் புஷ்பங்களில் இருந்து கிளம்பும் தேனீக்கள், காற்று தயங்கி நின்ற இடங்களை இட்டு நிரப்புவது போல பாடும் தொனி கேட்கிறது. கோகிலங்கள் வெறி பிடித்தது போல விடாமல் பாடும் இனிய நாதம் கேட்டு, மரங்கள் கூட நடனம் ஆடுவது போல, மரங்கள் ஆட, மலையில் குகையிலிருந்து நுழைந்து புறப்பட்ட காற்று, அனுகீதம், உடன் பாடுவது போல இசைந்து ஒலிக்கிறது. வேகமாக அடிக்கும் காற்று சில சமயம் மரங்களின் நுனிக் கிளைகளை உடைத்து தள்ள, வரிசையாக நின்ற மரங்களுக்கு தொடுத்து வைத்த மாலையைப் போல அந்த உடைந்த கிளைகள் தெரிகின்றன. சந்தனத்தின் குளிர்ச்சியுடன் மேலே படும் பொழுது சுகமாக இருக்கும் காற்று, தன்னுடன் வாசனைகளையும் சுமந்து கொண்டு வந்து வருடிக்கொடுத்து, சிரம பரிகாரம் செய்து கொள்ள உதவுவது போல இருக்கிறது. இந்த காற்றினால் கிளைகள் உடைபட்டு விழ, நிற்கும் மரங்களிடம் அதில் இருந்த தேனீக்கள், கூட்டிலிருந்து வெளிப் படும் தேனீக்கள் முறையிடுவது போல ரீங்காரம் செய்கின்றன. மலைச் சாரலில் அழகிய மனோகரமான புஷ்பங்களுடன் மலைகளின் சிகரங்கள் போல் தோற்றம் தருகின்றன. மலைச் சிகரங்களே புஷ்பங்களால் மூடிக் கிடக்க, காற்றில் அசைந்து சஞ்சலமாக, தேனீக்களின் இனிய ரீங்காரம் சேர்ந்து மரங்களே பாடுவது போல கேட்கிறது. இந்த கர்ணிகார புஷ்பங்களைப் பார். எதிரில் வந்து நிற்பது போல தெரிகிறது. பொன் அணிகளை அணிந்து, மஞ்சள் பட்டாடை உடுத்தி யாரோ நிற்பது போல தோற்றம், மனதை மயக்குகிறது. இது வசந்த காலம் சௌமித்ரே, அதனால் பறவைகள் குதூகலமாக நாதம் செய்கின்றன. இந்த சமயம் நான் சீதையை விட்டு விலகி இருப்பது என்ன துரதிருஷ்டம். மன்மதன் தான் இந்த குயிலை அனுப்பி, துயரத்தில் ஆழ்ந்த என்னை மேலும் வாட்ட, குதூகலமாக பெரும் குரலில் ஆரவாரமாக பாடி என்னை அழைக்க அனுப்பியிருக்கிறான். போட்டிக்கு இதோ பார், தா3த்யூஹகோ என்ற பக்ஷி, இந்த அழகிய காட்டு அருவியில், நீர் வீழ்ச்சியில் லக்ஷ்மணா, மன்மதனின் ஏவலால் பெரும் குரலில் சப்தமிட்டு என்னை மேலும் வருந்தச் செய்கிறது. இந்த பறவையின் கூக்குரலைக் கேட்டு ஆசிரமத்தில் இருக்கும் பொழுது, பிரியா (சீதை) என்னை கூப்பிட்டு பரபரப்புடன் காட்டினாள். விசித்ரமான பறவைகள். எவ்வளவு விதமான குரல். சப்தமிடும் விதங்கள். மரங்களில், புதர்களில், கொடிகளிலிருந்து தடாலென்று விழுவது போல பறக்கின்றன. பறவைகள் தங்கள் இனத்தை தவிர மற்ற பறவைகளோடு போவது இல்லை. வ்யூஹம் அமைத்துக் கொண்டு யுத்தம் செய்யப் போகும் மனிதர்களின் ஒழுங்கு இந்த பறவைகள் தங்கள் இனம் சேர்ந்து ஒரே ஒழுங்காக போவதில், பறப்பதில் பார். இதில் சந்தோஷமாக பறக்கின்றன. ப்4ருங்க3 ராஜா, எனப்படும் வண்டுகள் ரீங்காரம் செய்வது மதுரமான நாதமாக இருக்கிறது. இந்த குலத்தில் பிரஸித்தமான சகுனம் எனும் பக்ஷி கூட்டம், தா3த்யூஹம், பும்சகோகிலம், இவைகளுடன் சேர்ந்து இந்தமரத்தில் ஏகமாக கூச்சலிடுகின்றன. என் மனதில் அனங்கனை கிளப்பி விடுகின்றன. அசோக, ஸ்தபக, அங்கார மரங்களில் இவைகளின் ஆரவாரம், இளம் தளிர் தாம்ர வர்ணங்களில் வெகுவாக முளைத்து வஸந்த காலம் என் மனதை நெருப்பாக சுடுகிறது. கூர்மையான பார்வையுடைய (இமைகளின் மயிர் அடர்ந்து சூக்ஷ்மமாக தெரிய) அழகிய கேசம், ம்ருதுவாக பேசும் என் மனைவியைக் காணாமல் நான் உயிருடன் இருந்து தான் என்ன பிரயோசனம்? என் பிரியமான மனைவிக்கு மிகவும் பிடித்த கானனம் இது. இந்த காலத்தில் அவளுடன் வந்திருந்தால், இந்த கோகிலங்கள் நிறைந்த எல்லையில்லாத காட்டில் குதூகலமாக உடன் வந்திருப்பாள். வஸந்த காலத்தின் குணம், மன்மதனை தூண்டி விட்டு ஆயாசப் படுத்துவது. இதுவே என்னை சுட்டுப் பொசுக்கப் போகிறது. அவளைக் காணாமல் இந்த அழகிய மரங்களை காணும் போது, அருகில் வைதேஹியைக் காணாமல் என் மனதில் துயரம் மண்டுகிறது. என்னைக் கண்டு வசந்தனும் (பருவ காலம்) இணைத்து வைப்பதே அவன் தொழிலாக இருக்க, மான் குட்டி போல மருளும் விழிகளையுடைய என் மனைவியை நினைவு படுத்தி, சிந்தனையும், சோகமும் பலமாக இழுக்க, மேலும் தாபமடையச் செய்கிறான். இந்த சுகமான காற்று சித்ர மாதக் காற்று எப்படி இப்படி க்ரூரமாக ஆயிற்று. எங்கு பார்த்தாலும் மயில்கள் கூட்டமாக ஆடுவதைப் பார். தங்கள் (பக்ஷங்கள்) இறக்கைகள் காற்றில் தூக்கிக் கொள்ள, ஸ்படிகம் போன்ற க3வாக்ஷம், புள்ளிகளுடைய பெண் மயிலுடன், பெண் மயில்கள் சூழ ஆடுகின்றனவே, தங்கள் மகிழ்ச்ச்சியில் மதம் பிடித்து தன்னை மறந்து இருக்கின்றன. என் மனக் கிளர்ச்சியை அதிகமாக்குகின்றன. இதோ பார், லக்ஷ்மணா, ஆடும் ஆண் மயிலைப் பார்த்து பெண் மயில் உடன் ஆடுகிறது. தானும் பதியான மயிலை பின்பற்றி, மலைச் சாரல்களில் சுற்றுகிறது. அவளை மனதில் கொண்டு, மயூரம் (ஆண் மயிலும்) மெதுவாக ஓடுகிறது. சில சமயம் பின் தொடருகிறது. இறக்கைகளை விரித்துக் கொண்டு, பரிகசிப்பது போல ஓடுகிறது. இந்த மயிலுக்கு நிச்சயம் பிரியையான பெண் மயிலை அரண்யத்தில் ராக்ஷஸன் தூக்கிக் கொண்டு போகவில்லை. அதனால் தன் மனைவியுடன், இந்த அழகிய மலைச் சாரலில் நடனமாடுகிறது. எனக்கோ, அவள் இல்லாமல் இந்த புஷ்ப மாசம் தாங்க முடியாத துக்கத்தைத் தருகிறது. திர்யக் யோனி எனப்படும் இந்த பக்ஷிகளிடம் கூட அன்பும் அரவணைப்பும் மிகுந்து இருப்பதைப் பார். லக்ஷ்மணா, பெண்மயில்கள் ஆதுரத்துடன் தன் துணையை தொடர்ந்து போவதைப் பார். இப்படித் தான் பரபரப்பு வந்தால், ஏதாவது புது விஷயம் சொல்ல வேண்டுமானால் ஜானகி தொடர்ந்து ஓடி வருவாள். இப்படி தூக்கிச் செல்லப் படாவிட்டால், நம்முடன் குதூகலமாக வந்து கொண்டிருப்பாள். இதோ பார், லக்ஷ்மணா, இவ்வளவு புஷ்பங்கள், இவை எனக்கு பயன் படாமல் போகின்றன. (சிசிர ருது) குளிர் காலம் முடியும் தறுவாயில் புஷ்பங்கள் பாரமாக நிறைந்து இருக்கும் உபவனங்கள், அழகிய மனதைக் கவரும் மலர்கள், மரங்களுக்கு லக்ஷ்மீகரமான களையைக் கொடுத்தபடி, வண்டுகளுடன் பயமின்றி, அல்லது பயன் படுத்தப் படாமல் பூமியில் இரைகின்றன. ஏன், இந்த பறவைகள் கூட்டமாக குரல் எழுப்புகின்றன? ஒருவரையொருவர் அழைக்கின்றனர் போலும். இரைச்சலாக இiருந்தாலும் இவை என் மனதில் கிளர்ச்சியை உண்டு பண்ணுகின்றன. என் ப்ரியா இருக்கும் இடத்திலும் இதே போல வஸந்த காலம், உல்லாசமாக இருந்தால், அவளும் என்னை நினைத்து வருந்திக் கொண்டிருப்பாள். நிச்சயம் அவள் இருக்கும் இடத்தில் வஸந்தன் அருகில் போகக் கூட மாட்டான். பத்மம் போன்ற நேத்ரங்களை உடையவள், என்னை விட்டு எப்படி இருப்பாள்? மற்றவர்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தால் என்ன செய்வாள்? இந்த வஸந்தனும் அங்கு போய் அவளை வருத்துவானோ. சியாமா, ம்ருதுவாக பேசுவாள், தாங்க மாட்டாமல் உயிரையே விட்டு விடுவாள். லக்ஷ்மணா, என் மனதில் புதிதாக இப்பொழுது ஒரு பயம் தோன்றுகிறது. அவள், துயரை தாங்கும் சக்தியுடையவள் இல்லை அதனால், என்னைப் பிரிந்த துக்கம் தாளாமல் நிச்சயம் அவள் உயிரை துறப்பதையே விரும்புவாளாக இருக்கும். அவள் உள்ளம் என்னிடத்தும், என் மனம் அவளிடத்தும் ஸ்திரமாக உள்ளது. பனித்துளியைத் தாங்கியபடி புஷ்பங்களை அடித்துத் தள்ளிக் கொண்டு சுகமாக மேலே படும் காற்று எனக்கு, அவளையே நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் பொழுது நெருப்பாக சுடுகிறது. சீதையுடன் இருந்தபொழுது எப்பொழுதும் மென்மையாக சுகமாக வீசிய காற்று, இப்பொழுது அவள் இல்லாமல் இவ்வளவு கடுமையாக எப்படி ஆயிற்று? இதோ இந்த பக்ஷி ஆகாயத்தில் இருந்து அப்பொழுதும் சத்தமிட்டது. இப்பொழுது அதே காகம், மரத்தில் இருந்தபடி சந்தோஷமாக ஆடுகிறது. (ஆகாயத்தில் இருந்து காகம் கடுமையாக கரைவது அனிஷ்டத்தைச் சொல்லும் சூசகம். அதே காகம் மரத்தில் அமர்ந்து கத்தியபடி ஆடுவது சுப சூசகம். இரண்டுமே முன்பு, பிரிவை குறித்தது, இப்பொழுது நன்மையே, இருவரும் சேருவர் என்பதைக் குறிப்பதாக பாவம்) இந்த பக்ஷி வைதேஹீயின் வாயிற்காப்போனாக இருந்தது. இப்பொழுது என்னை அவளிடம் அழைத்துச் செல்லப் போகிறது போலும். லக்ஷ்மணா, கேட்டாயா? மரத்தில் வசிக்கும் எல்லா பக்ஷிகளுமாக கூக்குரலிடுகின்றன. இந்த திலக மஞ்சரி என்ற புஷ்பம் காற்றில் அசைந்து கீழே விழுந்தது. இந்த வண்டைப் பார். அதனிடம் போய் கொஞ்சுவது போல பேசுகிறது (ரீங்காரம் செய்கிறது). மது அருந்து மயங்கிகிடக்கும் மாது போல அந்த திலக மஞ்சரி அசையாமல் கிடக்கிறது. அந்த அசோகம், காமத்தின் வசமானவர்கள் சோக வர்தனனாக (வளர்ப்பவனாக) செயல் படுகிறது. இளம் தளிர்கள், என்னைப் பார்த்து பயமுறுத்துவது போல இருக்கின்றன. சூத, மரங்களைப் பார் (மா) சிவந்த புஷ்பங்களால் அங்க ராகம் பூசிக் கொண்ட மனிதர்கள் போல பரபரப்புடன் விளங்குகின்றன. சௌமித்ரே, இதோ பார். இந்த பம்பா நதிக் கரையில், கின்னரர்கள் இங்குமங்குமாக நடமாடுகின்றனர். எங்கும் சுபமான மணம் வீசும் தாமரை மலர்களைப் பார். ஜலத்தில் இளம் சூரியன் பிரஸன்னமாக, தாமரையும் நீலோத்பலமும் மலர, ஹம்ஸ, காரண்டவ பக்ஷிகள் நிறைந்து, சௌகந்திகமாக, மணம் நிறைந்தவளாகத் தெரிகிறாள். மலர்ந்த தாமரைகளில் அமரும் வண்டுகள் மகரந்தத்தை சிதறச்செய்வதால், பங்கஜங்கள் நிறைந்து சோபையுடன் விளங்குகிறது. சக்ரவாகங்களும் காணப் படுகின்றன. நித்யம் திரும்பி வனம் செல்லும் மிருகங்கள், மான் கூட்டமும், யானைகளும் தண்ணிர் குடிக்க வருகின்றன. சுத்தமான ஜலத்தில் காற்று வீசி அலைகளைக் கிளப்பினாலும், பங்கஜங்கள் ஜலத்தால் அடிபட்டாலும் அழகாகத் தெரிகின்றன. பத்ம பத்ரம் போன்ற விசாலமான கண்களுடைய எப்பொழுதும் பிரியமான என் பங்கஜமான வைதேஹியை விட்டுப் பிரிந்து வாழ்க்கையே வெறுத்து விட்டது. இது என்ன வேலை? காமன் செய்யும் விஷமம். அருகில் இல்லாமல் போன பிரிய மனைவியை நினவு படுத்தி என்னை வருந்தச் செய்கிறது. கல்யாணி, அதைவிட கல்யாணமாக (சுபமாக) பேசுபவள், காமனே வந்தாலும் நான் பொறுத்துக் கொள்வேன். இந்த வஸந்த காலம், புஷ்பங்கள் நிறைந்த மரங்களைக் கொண்டு என்னை துன்புறுத்தாமல் இருந்தால். அவளுடன் இருக்கும் பொழுது மிகவும் ரமணீயமாக இருந்தது. எல்லாமே அவள் இல்லாமல் எதிர்மறையாகத் தெரிகிறது. பத்மங்களையும், கோச, பலாசங்களையும் கண் தான் பார்க்கிறது. மனம் உடனே இவை சீதையின் நேத்ரம் போல, இவை கேசம் போல என்று எடை போடுகிறது. மனோகரமாக வாயு, மரங்களின் இடையில் புகுந்து, பத்மங்களின் மகரந்த வாசனையை தாங்கி வரும் பொழுது, சீதையின், மூச்சுக் காற்று தானோ என்று நினைக்கிறேன். சௌமித்ரே, பம்பாவின் தென் திசையில், மலைச் சாரலில் பார். கர்ணிகார புஷ்பம், பூத்துக் குலுங்கும் அந்த கிளையைப் பார். எவ்வளவு சோபனமாகத் தெரிகிறது. இந்த மலை, மிக அதிகமாக தாது பொருட்களை உள்ளடக்கி இருக்கிறது. அதனால் காற்று வேகத்தில் இதிலிருந்து வெளிப்படும் புழுதியும், விசித்ரமாக இருக்கிறது. எப்பொழுதும் இலையை மறைத்து புஷ்பங்களோடு இருக்கும் மரங்கள் இந்த இடத்தின் விசேஷம் போலும். கிம்சுக புஷ்பங்கள் விளக்கு போட்டது போல பிரகாசமாகத் தெரிகிறது. பம்பா கரையில் வளரும் இந்த மரங்கள் தேனீக்களின் கூட்டில் இருந்து வழியும், தேன் மணம் உடையதாக, மாலதியும், மல்லிகை கொடியும் சுற்றிக் கொண்டு படர்ந்து வளர, கரவீர(அரளி) புஷ்பங்களும், தாழம்பூ (கேதகி) சிந்து3வார, வாசந்தி புஷ்பங்களும் மலர்ந்து தெரிகின்றன. மாதவி வாசனை நிரம்பிய முல்லை புதர்கள், எங்கும் காணப்படுகின்றன. சிரிபில்வம், மதூ4கம், வஞ்சுளா, வகுலா, சம்பகா, திலகா நாக வ்ருக்ஷம், இவைகளும் பூத்திருக்கின்றன. (நீபா) வேம்பு, வரணா, கர்ஜூரா இவைகளும் புஷ்பித்திருக்கின்றன. பத்மங்கள் கண்களை கவரும் வண்ணம் மலர்ந்திருக்கின்ற பார். நீல அசோகமும் மலர்ந்துள்ளது. லோத்ரா என்ற வகை மலையின் அடிவாரத்தில் சிங்கத்தின் கேசம் போல சிங்க கேசர பிஞ்சரம் எனும் வகை, அங்கோலம், குரண்டம், பூர்ணகம், பாரிபத்ரகம், சூதா:, பாடலய:, கோவிதார மரங்கள், இவைகளிலும் புஷ்பங்கள் தென்படுகின்றன. மலை சாரலில் முசுலிந்தான், அர்ஜுன மரங்களும் காணப்படுகின்றன. கேதகா, உத்தாளகா, சிரீஷம், சிம்சுபா, இவை, த4வ, சால்மலீ, கிம்சுகா தவிர, சிவந்த குரவக மரங்கள். தினிசா, நக்தமாலா, சந்தன, ஸ்பந்தன மரங்கள். ஹிந்தாலா:, திலகா, நாக வ்ருக்ஷம், இவைகளிலும் புஷ்பங்கள். இந்த புஷ்பங்கள் நுனியில் தெரிய, சுற்றிப் படர்ந்திருக்கும் கொடிகளிலும் புஷ்பங்கள் பூத்து தெரிகின்றன. பம்பையின் இந்த அழகிய பலா மரங்களைப் பார், லக்ஷ்மணா, காற்றில் உடைப் பட்டு விழுந்த கிளைகளுடன் நிமிர்ந்து நிற்கும் இந்த மரங்களை, மதா3ந்த4மான திமிருடன் ஸ்திரீகள் ஆண் மகனை கட்டிப் பிடிப்பது போல கொடிகள் அவைகளின் மேல் படர்ந்து கிடக்கின்றன. இந்த காற்று திருப்தியடையாமல், மரத்துக்கு மரம், மலையிலிருந்து மலைக்குத் தாவி, வனத்திலிருந்து மற்றொரு வனம் சென்று, ஒரே ரசத்தில் அலுத்ததாலோ, பல விதமாக வாசனைகளை அனுபவிக்கும் ஆசையோடு வளைய வருகிறது. சில மரங்களில் பூக்கள் முழுவதுமாக மலர்ந்து தேன் சொட்ட இருக்கிறது. சில இப்பொழுது தான் மொட்டு கட்டியிருக்கிறது. ஸ்யாம வர்ணமாக தெரிகிறது. மதுகரன் எனும் தேனீ, இது மிக அதிக ருசி, இது ஸ்வாது, இது நன்கு மலர்ந்த பூ என்று தன் ரீங்காரத்தில் தானே திளைத்து மகிழ்ந்தவாறு பூக்களை வட்டமிடுகின்றன. ஒரு பூவின் உள்ளே நுழைந்து திடுமென வெளிஸ்ரீ வந்து, பரபரப்போடு மற்றொரு இடம் செல்கிறது. தேனை விரும்பி இந்த வண்டுகள் பம்பாவில் உள்ள மரங்களைச் சுற்றி கூடு கட்டி வாழ்கின்றன. இதோ பார், பூக்கள் தானே கீழே விழுந்த அழகிய படுக்கையை விரித்து வைத்தாற்போல சுகமாக இருக்கிறது. இந்த மலைச் சாரல் முழுவதும் சிவப்பும் மஞ்சளுமாக புஷ்பங்களின் குவியல், நிரம்பி மலையின் வர்ணமே இது தானோ எனும் படி இருக்கிறது. பனிக் காலம் முடியும் பொழுது லக்ஷ்மணாஸ்ரீ மலர்கள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை சொரிகின்றன. அதனால் தான் இது புஷ்ப மாசம் என்று சொல்லப் படுகிறது. ஒருவரையொருவர் கூவி அழைத்துக் கொள்வது போல ஒவ்வொரு மரத்திலும், தேனீ வண்டுகள் கூட்டம். வித விதமான ரீங்காரத்வனியுடன் பேசிக் கொள்வது போலத் தெரிகிறது. இந்த காரண்டவ பக்ஷி, சாதாரணமாக தண்ணீரில் இருக்கும்,. இப்பொழுது சுபமான நீரை விட்டு வெளி வந்து தன் கூட்டாளிகளோடு சந்தோஷமாக இருக்கிறது. மந்தாகினியின் கரையிலும் இது போல மனோகரமான காட்சிகள் இருந்தன. சில இடங்கள் உலகில் புகழ் பெற்றவை. தன் சிறப்பினால் மனோ ரம்யமாக இருப்பவை. சாத்வியான வைதேஹி இதைப் பார்த்தால், இங்கேயே இருக்கும்படி நேர்ந்தால், இந்திர லோகமும் வேண்டாம், அயோத்தியும் வேண்டாம். அவற்றைக் கூட நான் விரும்ப மாட்டேன். அவளுடன் இந்த புல்வெளியில் அழகிய இடங்களில் மகிழ்ச்சியாக இருப்பேன். எந்த சிந்தனையும் என்னை வாட்டாது. இந்த காட்டில் மனைவி இல்லாமல் வரக் கூடாது. இந்த மலைச் சாரலும், புஷ்பங்கள் நிறைந்த மரங்களும், மனதை கிறங்க அடிக்கின்றன. புஷ்கரிணியின் குளிர்ந்த சுகமான ஜலத்தைப் பார். சக்ரவாகங்களும், காரண்டவ பக்ஷிகளும், மிதக்கின்றன. ப்லவ, க்ரௌஞ்ச பக்ஷிகளைப் பார். வராஹ மிருகங்களும் வந்து நீரைக் குடிக்கின்றன. இந்த பக்ஷிகள் ஆரவாரமாக கூச்சலிட்டுக் கொண்டு இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பக்ஷிகள் குதூகலம் எனக்கும் தொற்றிக் கொள்கிறது. அருகில் சீதை இல்லாததை மிகவும் உணருகிறேன். ச்யாமா, சந்திரன் போன்ற முகம் உடையவள், என் பிரியை அவளை நினைத்து ஏங்க செய்கிறது. இந்த மலைச் சாரலில் மிருகங்களைப் பார். எல்லாம் ஜோடி ஜோடியாக சுற்றுகின்றன. இந்த மான்கள் பெண் மான்களோடு இணைந்து செல்லும் பொழுது குட்டி மான்களின் சாயலை உடைய வைதேஹியை நம்மிடமிருந்து பிரித்து விட்டதே, விதி என்று மனம் வருந்துகிறது. யானைகளைப் பார். மதம் பிடித்தது போல தன் கூட்டத்தோடு தான் சஞ்சரிக்கிறது. இந்த அழகிய மலைச் சாரல் பந்து மித்திரர்களோடு அனுபவிக்க வேண்டிய இடம். தனித்து விடப்பட்ட நம் இருவரையும் நினைத்து இதுவும் என் வருத்தத்தைக் கிளறுகிறது. என் காந்தாவான, சீதையைப் பார்த்தால் தான் எனக்கு நிம்மதி. அவளுடன் திரும்ப இணைந்து வாழ்வேனா? லக்ஷ்மணா, வைதேஹி இங்கு இருந்து இந்த பம்பாவின் சுகமான தென்றலை அனுபவித்துக் கொண்டு இருக்கக் கூடாதா? பத்மத்தின் வாசனையுடன் மங்களகரமான துக்கத்தை அகற்றும், சுகத்தைக் கொடுக்கும் இந்த பம்பாவின் உபவன காற்றை அனுபவிக்க வசதியுள்ளவர்கள் பாக்யசாலிகள். பத்ம, பலாசம், போன்ற கண்களையுடைய ஸ்யாமா, என்னை விட்டுப் பிரிந்து எப்படி உயிரை வைத்துக் கொண்டு இருக்கிறாள்? ஜனகன் மகள், என்னுடன் இல்லை. திரும்பச் சென்று சத்ய வாதியான அந்த அரசனிடம் என்ன பதில் சொல்லுவேன்? ஜனங்கள் மத்தியில் சீதை எப்படி இருக்கிறாள் என்று குசலம் விசாரித்தால், நான் எந்த முகத்தோடு அவரை ஏறிட்டுப் பார்ப்பேன். மந்த புத்தி நான். என்னை என் தந்தை காட்டுக்கு அனுப்பினால், என் கூட தொடர்ந்து வருவேன் என்று வந்தவள், நல்லது நினைத்து சீதை என்னுடன் வந்தவள், இப்பொழுது எங்கு எப்படி இருக்கிறாளோ. அவளைப் பிரிந்து இன்னும் உயிருடன் இருக்கிறேனே, லக்ஷ்மணா, எப்படிப்பட்ட கொடியவன் நான். ராஜ்யத்தை இழந்த பொழுது என்னை தேற்றியவள் யாரோ, மனம் தடுமாறியபொழுது பாதுகாப்பாக இருந்தவள் யாரோ, அவளுடைய அழகிய கண்களையும், முகத்தையும் பார்க்க என் மனம் துடிக்கிறது. மெதுவாக புன்னகையுடன், ஹாஸ்யமாக பேசும், மதுரமாக ஹிதத்தைச் சொல்லும் அவள் வார்த்தைகளை எப்பொழுது கேட்பேன்? வன வாசம் என்ற நிலையையே எளிதாக்கி, என் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இருந்தவள், வனத்தில் என்னுடன் சம்பாஷித்தே மகிழ்ந்தாள். அயோத்தி போய் கௌசல்யையிடம் என்ன சொல்வேன்? மனஸ்வினி என் தாய். எங்கே என் மருமகள்? என்று கேட்கும் பொழுது நான் என்ன சொல்வேன்? லக்ஷ்மணா, நீ போ. போய் பரதனைப் பார்த்து சகோதர வாத்ஸல்யம் உடைய அவனை சமாதானப் படுத்து. நான் ஜனகன் மகளைக் காணாமல் உயிருடன் இருக்க மாட்டேன். ராமன் புலம்பிக் கொண்டே போகவும், லக்ஷ்மணன் சற்று யோசித்து, ஆறுதல் சொன்னான். மகாத்மாவான லக்ஷ்மணன், ராமா, உன்னை ஆஸ்வாஸப்படுத்திக் கொள். உனக்கு மங்களம். கவலைப் படாதே, புருஷோத்தமன் நீ. உன்னைப் போன்றவர்கள், மனதில் இப்படி சஞ்சலத்துக்கு இடம் கொடுக்கலாகாது. ப்ரிய ஜன விரஹம் துக்கம் தான். அதிக பற்றுதல் கூடாது என்று சொல்வது இதை எண்ணித் தான். அதி ஸ்னேஹ: (-அதிக பற்றுதல், அதிக எண்ணெய். இரண்டு விதமாக பொருள். அதிக எண்ணெய் இருந்தால் திரி ஈரமாக இருந்தாலும் எரிகிறது. அதி ஸ்னேக பரிஷ்வங்கம்- அதிக ஸ்னேகத்தை அணைத்து இருத்தல்) பாதாளம் வரை போவோமே, இன்னமும் தாண்டிப் போக வேண்டுமா, போவோம். எப்படியும் ராவணனின் இருப்பிடத்தைக் கண்டு பிடிப்போம். அந்த ராக்ஷஸன் தன் பாப கர்மாவின் பலனை அனுபவித்தே தீருவான். நமது தேடுதலின் தீவிரம் தாங்காமல் அவன் சீதையை விட்டு விடுவான். அல்லது தான் மரணம் அடைவான். திரும்ப தி3தியின் கர்ப்பத்தையே சென்றடைந்தாலும், சீதையுடன் அங்கும் அவனைத் துரத்தி சீதையை மீட்டு வருவோம். சீதையைத் தர மறுத்தால் அவனை வதம் செய்வோம். அண்ணலே, உங்கள் சிந்தனை ஆரோக்யமானதாக இருக்கட்டும். பயமும் வருத்தமும் உங்கள் மனதில் இடம் பெறலாகாது. முயற்சி செய்பவனுக்குத் தான் பலன் கிடைக்கும். உற்சாகம் தான் பலம் தரும். அண்ணலே, உற்சாகமின்றி, முயற்சியின்றி எதுவும் சாத்யமாகாது. உற்சாகம் உள்ளவனுக்கு உலகில் கிடைக்காதது எதுவும் இல்லை எந்த வேலையானாலும் உற்சாகம் உள்ளவர்கள் வருத்தம் அடைவதில்லை. இதே உற்சாகத்துடன் போராடி நாம் ஜானகியை மீட்போம். சாதாரண மனிதன் போல புலம்புவதை விடுங்கள். துயரத்திலிருந்து மீண்டு வாருங்கள். -கத2ம் மஹாத்மானம் க்ருதாத்மானம் ஆத்மானம் நாவபு3த்4யசே- நீங்கள் மகாத்மா, செயல் வீரன், இருந்தும் உங்களை நீங்களே இப்படி அறிந்து கொள்ளாமல் ஏன் வீணாக வருந்துகிறீர்கள். அக்ஞானம் உங்கள் குணமே அல்ல. உங்களை உணர்ந்து, எழுந்திருங்கள் என்று லக்ஷ்மணன் தட்டி எழுப்பவும், ராமர் தன் மோக வலையிலிருந்து விடுபட்டவராக, தைரியத்தை வரவழைத்துக் கொண்டார். சொல்ல முடியாத பராக்ரமம் உடைய ராமர் தன் மன வருத்தத்தை, அதைர்யத்தை தூர எறிந்து விட்டு, தன் இயல்பான கம்பீரத்தை அடைந்தார். தன் சகோதரன், லக்ஷ்மணனுடன் மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்ய முனைந்தார். புத்துணர்ச்சி பெற்றவராக, பம்பாவின் அழகிய மரங்களையும், அருவிகளையும், குகைகளையும் புத்துணர்வோடு திரும்ப பார்த்து விட்டு, கிளம்பி விட்டார். மத்த மாதங்கம் போல. மதம் கொண்ட யானை போல நடப்பவர், சற்றும் சிதறாத மனவுறுதி உடையவராக பழைய கம்பீரத்துடன் நடக்கும் தன் தமையனை லக்ஷ்மணன் பின் தொடர்ந்தான். தர்மத்துடனும், பலத்துடனும் பாதுகாப்பவனாக, கவனமாக பின் சென்றான். ருஸ்ய மூக மலையில் அருகில் நடந்து சென்ற அவர்கள், மிகவும் அத்புதமாக காணவே கண்ணுக்கரிய காட்சியனராகத் தெரிந்தனர். அங்கு, சாகா2மிருகம், எனும் குரங்கு அரசன் பயத்தால் நடுங்கினான். செய்வதறியாது ஸ்தம்பித்து நின்றான். பயத்தால் மனம் கனக்க, மந்தமாக நடக்கும் யானையைப் போல கம்பீரமாக நடந்து வரும் அவ்விருவரையும் பார்த்து, அந்த வானரம் பெரும் கவலையும், சிந்தனையும் அலைக்கழிக்க கவலையுடன் நோக்கிய வண்ணம் இருந்தான். புண்யமான அந்த ஆசிரமத்தை ராம, லக்ஷ்மணர்கள் அடைந்தனர். வானரங்கள் வசிக்கும் இடம், சுகம் தருவதாக, குளிர்ச்சியாக இருக்க கண்டு வியந்தனர். ஆனால் அந்த வானரங்கள் பயந்து நடுங்குவதைக் கண்டு, நிதானமாக, இருவரும் நெருங்கிச் சென்றனர். பலசாலிகளாக தங்கள் தோற்றமே அவர்கள் பயத்துக்கு காரணம் என்பதை அறியாதவர்களாக.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ராம விப்ரலம்பா4வேச: என்ற முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 2 (273) சுக்ரீவ மந்த்ர: (சுக்ரீவன் மந்த்ராலோசனை)
தங்கள் குடி பிறப்பாலும், குணத்தாலும் உயர்வடைந்தவர்கள், மகாத்மாக்கள் என தகுதி பெற்ற சகோதரர்கள் இருவரும் கையில் உயர் தர ஆயுதங்களை ஏந்தி, வருவதைக் கண்ட சுக்3ரீவன் கவலை கொண்டான். தோற்றமே அவர்களை சிறந்த வீரர்களாக காட்டியது. மனம் கலங்க, நாலா திக்குகளிலும் பார்த்து, ஒரு இடத்தில் தனியாக போய் நின்று கொண்டான். மகா பலசாலிகள் இவர்கள் என்று மனதில் எண்ணிக் கொண்டவன் பெரும் பீதியுடன், தன்னை கட்டுப் படுத்திக் கொள்ள இயலாதவனாக, வருந்தினான். அவர்கள் நடையின் கம்பீரத்தையும், லாகவத்தையும் விமரிசனம் செய்தவனாக, தன் கூட்டாளிகளுடன் கவலையுடன் வானர அரசன், தன் மந்திரிகளைக் கூட்டி ராம லக்ஷ்மணர்களைச் சுட்டிக் காட்டி மந்த்ராலோசனை செய்தான். தான் வர முடியாத இந்த இடத்திற்கு வாலி அனுப்பித்தான், வல்கலை, மரவுரி தரித்து தேடிக் கொண்டு இவர்கள் வந்திருக்கிறார்கள். வேஷதாரிகள் இவர்கள் என்பது நிச்சயம் என்றான். சுக்3ரீவனின் மந்திரிகள் வில்லேந்திய அந்த வீரர்களைப் பார்த்து அந்த மலையடிவாரத்திலிருந்த வேறொரு சிகரத்திற்கு சென்று விட்டனர். அவசரமாக சேனைத் தலைவர்கள், பிரதம தலைவரை கலந்தாலோசிக்க, எல்லா வானரங்களுமாக சுற்றி நின்று கொண்டன. தனித் தனியாகவும், கூட்டமாகவும் குதித்துக் கொண்டு, மலைக்கு மலை தாவியபடி, அந்த வேகத்தில் மலையின் சிகரங்களை ஆட்டம் காணச் செய்தபடி கடைசியில் எல்லாமாக ஓர் இடத்தில் கூடின. அணுக முடியாத இடத்தில் இருந்த மரக் கிளைகளை ஒடித்து போட்டன. ஒரே குழப்பமாக மலை பூரா சுற்றிச் சுற்றி வந்தன. மான்களையும், பூனைகளையும், சிறுத்தைகளையும் பயமுறுத்தியபடி சென்றன. சுக்3ரீவனின் மந்திரிகள் மலையின் ஓரிடத்தில் வந்து சேர்ந்த பின், வானர ராஜனைச் சுற்றி கை கூப்பியபடி நின்றன. வாலியின் விஷமமாக இருக்கும் என்ற சந்தேகத்துடன் பயந்து நடுங்கும் சுக்3ரீவனைப் பார்த்து, வாக்கிய கோவிதன், சொல்லின் செல்வன் என்றுபெயர் பெற்ற ஹனுமான் சொன்னான் பயப்படாதே – (இதுதான் ஸ்ரீமத் ராமாயணத்தில், அனுமனின் முதல் வார்த்தை) இந்த பரபரப்பை விடு. வாலியிடம் கொண்ட பயம் மிக அதிகமாக உன்னை பாதிக்கிறது. இந்த மலையில் வாலி பயம் கிடையாது. வானர ராஜனே, வாலி உன்னை துரத்தியடித்தான் என்பதால் நீ மனம் கலங்கி இருக்கிறாய். வாலியை பார்க்கவே கொடூரமாக இருக்குமே, அந்த கொடூரமான முகத்துடன் நான் யாரையும் இங்கு காணவில்லையே. உன் பாப செயலால் நீ அனுபவித்த துக்கம் நான் அறிந்ததே. ஆனால் இங்கு இப்பொழுது துஷ்டாத்மாவான வாலியும் இல்லை, நீ பயப்பட எந்த விதமான காரணமும் இல்லை. உன் வானர புத்தி, கிளைக்கு கிளை தாவும் குரங்கு புத்தி, உன்னை காட்டிக் கொடுக்கிறது பார். அல்ப புத்தியினால் உன்னை நீ ஸ்திரபடுத்திக் கொள்ள முடியாமல் திணறுகிறாய். புத்தியையும் நுண்ணறிவையும் உபயோகித்து, இங்கிதங்களைத் தெரிந்து கொண்டு மேற்கொண்டு செயல் படுவாயாக. புத்தியை தொலைத்த அரசன் பிரஜைகளை காப்பது எப்படி? ஹனுமானின் இந்த கனிவான வார்த்தைகளைக் கேட்டு அதைவிடவும் மென்மையாக ஹனுமானிடம் விவரித்தான்.
நீண்ட கைகளும், விசாலமான கண்களும் உடையவர்கள். கையில் வில், அம்பு, கத்தி வைத்திருக்கிறார்கள். பார்க்க தேவ குமாரர்கள் போல இருக்கிறார்கள். அந்த கம்பீரத்தைப் பார்த்து யார் தான் பயப் பட மாட்டார்கள். சிறந்த மனிதர்களாகத் தெரிகிறார்கள். வாலி அனுப்பி, வந்திருக்கிறார்களோ என்று எனக்கு சந்தேகம். அரசர்களுக்கு பலவிதமான நண்பர்கள் இருக்கலாம். அதனால் என் பயம் வீணல்ல. எதிரியானாலும், மனித வேஷம் கொண்டு ரகஸியமாக வந்திருக்கலாம்.. நம்பக் கூடாதவர்களை நம்பி விட்டால், மர்ம ஸ்தானங்களில் அடி படுவோம். இது போல காரியங்களில் வாலி மேதாவி. சந்தேகமேயில்லை. அரசர்கள் நான்கும் அறிந்து வைத்திருக்க வேண்டும். பல விஷயங்களை கவனமாக ஆராய்ந்து, எதிரியை அமுக்க வேண்டும். அந்த செயலை சாதாரண ஜனங்களைக் கொண்டே முடிப்பதும் உண்டு. அதனால் நீ சாதாரண பிரஜை போல, மட்டமான ஆடைகளுடன், கீழ் மட்ட பிரஜை போல மனித உருவில் போ. அவர்கள் யார் என்று அறிந்து வா. வானரமே, அவர்கள் நடையுடைபாவனைகள், சேஷ்டைகள், ரூபம், பேச்சு இவற்றை நன்றாக கவனித்து பார். சந்தோஷமாக இருந்தார்கள் என்றால், அவர்களின் உள் நோக்கம் என்ன? என்று தெரிந்து கொண்டு வா. புகழ்ந்து பேசி, விஸ்வாஸம் ஏற்படும்படி செய்து நீ விஷயங்களை கிரகித்துக் கொள். என்னை நோக்கி நின்று கொண்டு கேள்வி கேள், வானரனே. அந்த வீரர்கள் வில்லும் அம்புமாக காட்டுக்குள் நுழைய என்ன அவசியம்? என்று கேள். அவர்கள் நோக்கத்தில் எதுவும் கள்ளம் இல்லை, சுத்தமான ஆத்மாக்கள் தான் என்றால், நீ இதற்குள் தெரிந்து கொண்டு விடுவாய். குதித்து ஓடும் வானரமே, அவர்கள் பேசும் பேச்சைக் கொண்டு ஊகித்துக் கொள். நல்லவர்களா, கெட்டவர்களா என்பது சற்று பேச்சுக் கொடுத்தாலே தெரிந்து விடும். இவ்வாறு கபி ராஜன் ஆணையிட, மாருதனின் மகனான ஹனுமான், ராம, லக்ஷ்மணர்கள், தங்கி இருந்த இடம் போக தீர்மானித்தான். மிகவும் பயந்து சமாதானம் செய்தாலும் அடங்காமல் நடுங்கிக் கொண்டிருந்த வானர ராஜன் சொன்னதை செயல் படுத்த ஹனுமான், அப்படியே ஆகட்டும் என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான். ராமனும், அவனை விட பலசாலியான, லக்ஷ்மணனும் இருந்த திசை நோக்கி மஹானுபாவனான ஹனுமான் சென்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்3ரீவ மந்த்ர: என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 3 (274) ஹனூமத் ப்ரேஷணம் (ஹனுமானை அனுப்புதல்)
சுக்ரீவனின் வேண்டுகோளின்படி, ஹனுமான் ருஸ்ய மூக மலையிலிருந்து தாவி குதித்து ராகவர்கள் இருக்கும் இடம் செல்ல முனைந்தான். தன் வானர ரூபத்தை விட்டு, மாருதன் புதல்வன், பிக்ஷு ரூபத்தை எடுத்துக் கொண்டான். (சட2 பு3த்3தி4தயா கபி:- நம்ப முடியாத வாலியின் புத்தி, காட்டில் ஒளிந்து கொண்டிருக்கும் வானரங்களை அழிக்க வீரர்களை, வேஷம் போட்டு அனுப்பி வைத்திருக்கிறான், அவர்களை நாமும் பிக்ஷு ரூபத்தில் ஏமாற்றுவோம் என்ற எண்ணம்).பிறகு அந்த ஹனுமான் மெதுவாக, இதமாக பேசியபடி, மிகவும் வினயமாக ராகவர்களை, வணங்கி அவர்களை புகழ்ந்து பேசியபடி சம்பாஷனையை ஆரம்பித்தான். அவர்களை முறைப்படி உபசரித்து, மாருதாத்மஜன், கேட்க வேண்டிய கேள்வியை தன் மனதில் கோர்வைப் படுத்திக் கொண்டு, மிக மெதுவாக கேட்டான். சத்ய பராக்ரமர்களைப் பார்த்து ராஜரிஷிகளோ, தேவர்களோ எனும் படி கம்பீரமாக தோற்றம் தருகிறீர்கள், ஆனால் தபஸ்விகளாக விரதம் ஏற்றுக் கொண்டவர்களாகவும் காட்சி தருகிறீர்கள். இருவரும் நல்ல நிறமுடையவர்கள். இந்த இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்? இங்குள்ள வனசாரிகளான, வானரங்கள், உங்களைப் பார்த்து பயந்து நடுங்கி ஓடுகின்றனவே. இவை மட்டுமல்ல, மற்ற காட்டு மிருகங்களும் உங்களைக் கண்டு பயப்படுகின்றன. எதிரில் தெரியும் பம்பா கரையின் மரங்களைப் பார்த்து பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டே வருகிறீர்கள். இந்த நதியும், இதன் சுபமான ஜலமும் உங்கள் வரவால் சோபை பெற்றுத் தெரிகின்றன. தைரியமும், நல்ல வர்ணத்துடன் பிரகாசிக்கும் உடல் வாகும் உடைய நீங்கள் யார்? பொருந்தாத வல்கலை ஆடையை இடையில் உடுத்தி இருக்கிறீர்கள். உங்கள் புஜ பலத்தைப் பார்த்தும், நீங்கள் பெருமூச்சு விடுவதையும் கண்டு இங்குள்ள பிரஜைகள் வருந்துகிறார்கள். பார்த்தால் சிங்கத்துக்கு சமமான பலம், உருவம் உடையவர்களாகத் தெரிகிறீர்கள். கையில் இந்திரனுடைய வில்லுக்கு சமமான வில். எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள் தான் சந்தேகமில்லை. லக்ஷ்மீகரமான ரூபம் உங்கள் இருவருக்கும், ஸ்ரேஷ்டமான ருஷபம் – காளை போல பராக்ரமம் உடையவர்கள். யானையின் துதிக்கை போல உங்கள் புஜம், ஆனால் நல்ல தேஜஸ் உடைய மனிதர்கள். உங்கள் தேஜஸால் இந்த மலையே உயிர் பெற்றது போல பிரகாசிக்கிறது. ஏதோ ராஜ்யத்தின் அதிபதியாக இருக்க வேண்டியவர்கள், தேவர்களைப் போல இருக்கிறீர்கள். இந்த தேசம் எப்படி வந்து சேர்ந்தீர்கள். வீரர்களே, தாமரை இதழ் போன்ற கண்களையுடையவர்களே, ஜடையும் முடியும் தரித்தவர்கள், ஒருவருக்கொருவர், இணையாக உள்ளவர்கள், தேவலோகத்திலிருந்து இறங்கி வந்து விட்டீர்களா? யதேச்சையாக பூமிக்கு வந்து விட்ட சந்திர சூரியர்களோ, விசாலமான மார்பும், வீரம் தெரிய நிற்கும் தேவகுமாரர்கள், மனித ரூபத்தில் வந்து விட்டீர்களோ? சிங்கத்தின் தோள் வலிமையும், மகா உத்ஸாகமும், உயர்ந்த காளையின் மதமும் சேர்ந்தது போல, அடக்க முடியாத பலமும், உருண்டு திரண்ட புஜங்கள் இரும்பாலான தூண்கள் போல திண்ணெண்றிருக்க, ஒவ்வொரு அங்கத்திலும் ஆபரணங்கள் தரிக்க வேண்டியவர்கள், ஏன் எந்த விதமான ஆபரணமுமின்றி வந்துள்ளீர்கள். நீங்கள் இருவரும் இந்த உலகையே ரக்ஷிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். விந்த்ய மேரு மலை ஒரு எல்லையாகவும், சமுத்திரம் சூழ்ந்ததுமான இந்த பூமி, உங்கள் ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கலாம். இந்த இரு வில்லும் மிக நன்றாக நேர்த்தியாக வேலைப் பாடுடன் கூடியதாக இருக்கிறது. பொன்னாலான இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்றுத் தெரிகின்றன. தூணிகளும் அழகாக இருக்கின்றன. அம்பு நிறைந்து சுபமாக காட்சி தருகின்றன. உயிரைக் குடிக்கும் பாம்புகள் சீறிப் பாய்ந்து வருவது போல கூர்மையான அம்புகள். புடமிட்ட தங்கத்தால் அலங்காரம் செய்யப் பட்டவை. இந்த கத்திகளும் அப்படியே. இவ்வளவு நான் பேசியும் நீங்கள் இருவரும் ஏன் பதில் சொல்ல வில்லை. சுக்3ரீவன் என்று ஒரு வானர சேனைத் தலைவன். தர்மாத்மா. வீரன் தான். இருந்தும் சகோதரனால் கை விடப் பட்டு, துக்கத்தோடு, இந்த உலகில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் அனுப்பித்தான் நான் வந்தேன். அவன் அரசன். அவனுடைய முக்யமான படைவீரர்கள், நால்வர் உடன் வந்தோம், அவர்களுள் நானும் ஒருவன், என் பெயர் ஹனுமான். உங்கள் இருவருடனும் சுக்ரீவன் நட்பு கொள்ள விரும்புகிறான். நான் அவனுடைய மந்திரி என்று அறிந்து கொள்வீர்களாக. பவனாத்மஜன், அதாவது வாயுவின் மகன். சுக்ரீவன் வேண்டிக் கொண்டதால், பிக்ஷு ரூபத்தை எடுத்துக் கொண்டு வந்தேன். என் இஷ்டப் படி உருவம் எடுக்க என்னால் முடியும், ருஸ்ய மூக மலையிலிருந்து இங்கு வந்து சேர்ந்தேன். இவ்வாறு சொல்லி ஹனுமான் வீரர்களான ராம லக்ஷ்மணர்களைப் பார்த்தபடி நின்றான். வாக்கு வன்மை உடையவன், சொல்லின் பொருளை அறிந்து அழகாக பேசக்கூடியவன். ஆனாலும் மேற் கொண்டு எதுவும் சொல்லாமல் நின்றபடி இருந்தான். இவ்வாறு அவன் சொல்லி முடித்ததும், ராமர் லக்ஷ்மணனிடம் சொன்னார். அருகில் நின்ற சகோதரனைப் பார்த்து, முக மலர்ச்சியோடு, மகாத்மா சுக்3ரீவன் என்ற வானர ராஜனுடைய மந்திரி இவன். அவன் சொல்லியனுப்பி என்னிடம் வந்திருக்கிறான். சுக்ரீவனின் மந்திரி என்று வந்திருக்கிற வானரத்திடம் நீயே பேசு, லக்ஷ்மணா எதிரிகளை போரில் அடக்க வல்லமை மிக்க வீரனே, ஸ்னேகத்துடன் மதுரமாக இவனிடம் பேசு. இவனும் வாக்கு வன்மையுடையவனாக தெரிகிறான். ரிக் வேதத்தை முழுவதும் கற்றவன் அல்லாமல், யஜுர் வேதத்தை முறைப்படி மனனம் செய்தவன் அல்லாமல், சாம வேதத்தில் விற்பன்னனாக இல்லாதவன் எவனும் இவ்வாறு பேச முடியாது. வ்யாகரணம் எனும் இலக்கண சாஸ்திரத்தை இவன் முழுமையாக கற்றுத் தேர்ந்திருக்கிறான். நிறைய பேசினாலும் இவன் சொல்லில் அபசப்தம், தவறான சொல் எதுவும் இல்லை. இவன் கண்களிலோ, நெற்றியிலோ, முகத்திலோ, உடலிலோ எந்த விதமான சுருக்கமோ, சேஷ்டையோ இல்லை. விஸ்தாரமாகவும் இல்லை. அதிக சம்க்ஷேபமாகவும் – சுருக்கமாகவும் இல்லை. மிக விளம்பமாகவும் இல்லை. துரித காலத்திலும் இல்லை. நாபியிலிருந்து கண்டம் வழியாக இவன் குரல், மத்யம ஸ்ருதியில் இருந்தது. சம்ஸ்காரங்களை அறிந்தவன். வேகமாகவோ, மிக மெதுவாகவோ இன்றி, மனதைக் கவரும் வண்ணம், வார்த்தைகளை உச்சரிக்கிறான். மூன்று ஸ்தானங்களிலும் விளங்கிய இவனுடைய சிறப்பான வாக்கினால் யார் தான் கவரப் பட மாட்டார்கள். எதிரியாக இருந்து முயற்சி செய்தால் கூட இவனுடைய வாக்கு வன்மையை பாராட்டாமல் இருக்க முடியாது. எந்த அரசனுக்கு இது போல தூதன் இருக்கிறானோ, அனக, (மாசற்றவனே) அவன் செயல்கள், ஏன் வெற்றி பெறாமல் போகும்? இவ்வாறு குண நலன்களையுடைய காரியத்தை நிறைவேற்றி வைக்கக் கூடிய தூதர்கள் யாரிடம் இருக்கின்றனரோ, அவர்கள் நிச்சயம் எல்லா செயல்களையும் குறைவற செய்யப் பெறுவார்கள். இந்த தூதர்களின் வாக் வன்மையே போதுமானது. இவ்வாறு சொல்லவும் சௌமித்ரி சுக்ரீவனின் மந்திரியான வானரத்தைப் பார்த்து பதில் சொன்னான். லக்ஷ்மணன், தானும் வாக்கு வன்மையுடையவன். சொல்லும் பொருளும் தெரிந்து பேசக் கூடியவன். வந்தவனான ஹனுமானும் அதே போல வாக்கு வன்மையும், சொல்லும் பொருளும் அறிந்தவன். இப்படியிருக்கும் பொழுது, லக்ஷ்மணன் பவனாத்மஜனைப் பார்த்து கவனமாக பதில் சொன்னான். சுக்ரீவன் என்ற மகாத்மாவின் குணங்கள் எங்களுக்குத் தெரிந்ததே. குதித்து ஓடும் வானரர்களின் தலைவனாக உள்ள சுக்ரீவனைத் தான் நாங்களும் தேடி வந்தோம். சுக்ரீவன் கட்டளைப் படி என்று நீ சொல்வதை நாங்கள் ஏற்கிறோம். உன் வார்த்தையின் பேரில் செய்கிறோம். நிபுணனான லக்ஷ்மணனின் பதிலைக் கேட்டு, மிகவும் மகிழ்ந்த வாயு புத்திரனான கபி (வானரம்) அவர்களுடன் நட்பு தான் வெற்றிக்கு வழி வகுக்கக் கூடும் என்பதை உணர்ந்தவனாக, தன் எஜமானனிடம் சென்று சக்யம் என்ற நட்பை செய்து கொள்ளத் தூண்ட தீர்மானித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ஹனுமத் ப்ரேஷணம் என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 4 (275) சுக்3ரீவ சமீப க3மனம் (சுக்ரீவன் அருகில் செல்லுதல்)
இதன் பின் சுக்ரீவன் சொன்னதை செய்து விட்டோம் என்ற திருப்தியோடு, ஹனுமான் திரும்ப தங்கள் சம்பாஷனையை நினைத்து பார்த்து மனதினுள் மகிழ்ந்தவனாக, மனதால் சுக்ரீவனை சென்றடைந்தான். சுக்ரீவனுக்கு ராஜ்யம் கிடைத்து விடப் போகிறது. அவன் செய்யச் சொன்ன செயலை செய்து முடித்து விட்டேன் என்ற எண்ணங்கள் மனதில் தோன்றவும், ராமன் வந்து விட்டான், சுக்ரீவனுக்கு இனி ராஜ்யம் கிடைப்பது உறுதி என்ற நம்பிக்கையும் மனதில் வலுப் பெற்றது. மேலும் தொடர்ந்து விசாரிக்கலானான். நீங்கள் என்ன காரணத்திற்காக இந்த பம்பா கரை வந்து சேர்ந்தீர்கள்.? இதன் கரையில் பயங்கரமான காடு உள்ளதே. அதில் பலவிதமான விஷப் பாம்புகள், மிருகங்கள் நிறைந்து இருக்குமே, சகோதரனுடன் இங்கு வந்த காரியம் என்ன? என்றான். இதற்கும், ராமனின் சைகையை அடுத்து, லக்ஷ்மணனே பதில் சொன்னான். ராஜா தசரதன் என்று புகழ் பெற்ற, தர்மத்தில் சிறந்த அரசன் இருந்தார். நான்கு வர்ணத்தாரையும் விதிப் படி காப்பாற்றி வந்தார். இவரும் யாரையும் பகைத்துக் கொள்ளவில்லை, யாரும் இவரிடம் பகை கொள்ளவும் இல்லை. எல்லோருக்கும் எல்லா ஜீவ ராசிகளுக்கும் மற்றொரு பிதாமகர் (ப்ரும்மா) போல இருந்தார். அக்னிஹோத்ரம் முதலிய யக்ஞங்களை சாஸ்திரோக்தமான முறைப் படி செய்து வந்தார். த3க்ஷிணையும் நிறைய கொடுப்பார். அவருடைய மூத்த மகன் இவன். ராமன் என்று ஊரில் பிரஸித்தி பெற்றவன். உலகில் அனைவருக்கும் அபயம் அளிக்கக் கூடியவன். தன் தந்தை சொல்லை காப்பாற்ற முனைந்தவன். தசரதன் புத்திரர்களில் இவன் வீரன், குணத்தில் சிறந்தவன். ராஜ லக்ஷணங்கள் உடையவன். ராஜ சம்பத்து இவனைத் தேடி வந்தது. ஆயினும், ராஜ்யத்தை இழக்க நேரிட்டது. வனத்திற்கு அனுப்பப் பட்டான். என்னுடன், இங்கு வந்தான். சீதை என்று இவன் மனைவி. அவளும், நாளின் முடிவில் சூரியனின் பிரபை போல இவனைத் தொடர்ந்து வந்தாள். நான் இவனுடைய இளைய சகோதரன். நன்றி மறவாத, அறிவு நிறைந்த இந்த ராமனின் இளையவன். லக்ஷ்மணன் என்பது என் பெயர். இந்த ராமன், சுகமாக வாழ வேண்டியவன். மகான். சிறந்ததையே அனுபவிக்க வேண்டியவன். உலகில் எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஹிதத்தையே நினைப்பவன். இவன் ஐஸ்வர்யத்தை இழந்து வனம் வந்து வசிக்கலானான். அப்பொழுது இவனுடைய இளம் மனைவியை ராக்ஷஸன் அபகரித்துச் சென்று விட்டான். நாங்கள் இருவரும் அருகில் இல்லாத சமயம், விரும்பிய வண்ணம் உருவம் எடுக்க வல்ல ராக்ஷஸன், அவன் யார்? எதற்காக இவன் மனைவியை கடத்திக் கொண்டு சென்றான் என்பது எதுவும் தெரியவில்லை. த3னு என்று திதியின் புத்திரன். சாபத்தால் ராக்ஷஸ உருவம் அடைந்தவன். அவன் தான் சொன்னான். சுக்3ரீவன் வானர ஸ்ரேஷ்டன். சமர்த்தன். அவன் உன் மனைவியைக் கடத்திச் சென்றவனை அறிவான். நானும், ராமனும் சுக்3ரீவனை சரணம் அடைகிறோம். இந்த ராமன், ஏராளமான த4னம், செல்வங்களை தானம் செய்து அளவில்லா புகழ் பெற்றவன். உலக நாயகனாக ஒரு சமயம் இருந்தவன். இப்பொழுது சுக்3ரீவனை தலவனாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறான். இவனுடைய தந்தை முன் ஒரு சமயம், தர்ம வத்ஸலனாக, எல்லோருக்கும் அபயம் அளிப்பவனாக இருந்தான். அவன் மகனான இவனும் சரணம் அளிப்பவனாக விளங்கியவன், இன்று சுக்3ரீவனை சரணடைகிறான். சர்வ லோகத்திற்கும் தர்மாத்மாவாக இருந்து சரண்யனாக இருந்து, (காப்பாறுபவனாக இருந்து) எனக்கு கு3ருவான ராமன், இன்று சுக்3ரீவனை சரணம் அடைகிறான். இவனுடைய தயவில் பிரஜைகள் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்ந்தனர். அந்த ராமன் இன்று வானர ராஜனின் தயவை வேண்டுகிறான். குணங்களில் ஒப்பற்றவன். உலகில் உள்ள அரசர்கள் அனைவரும் இவனை கௌரவித்து, ஏன், தந்தை தசரதனே இவன் குணங்களால் கவரப் பட்டு, கௌரவமாக நடத்தி வந்தான். அந்த தசரத அரசனின் மூத்த மகன் மூவுலகிலும் பிரஸித்தி பெற்றவன். வானரேந்திரனான சுக்3ரீவனை சரணடைகிறான். துயரத்தில் மூழ்கி வருத்தத்துடன் சரணம் அடையும் ராமனுக்கு வானர சேனைத் தலைவனான சுக்3ரீவன் தயை செய்து உதவி செய்ய முன் வர வேண்டும். இவ்வாறு சொல்லும் பொழுதே, லக்ஷ்மணன் கண்களில் நீர் மல்கியது. ஹனுமான் இதைக் கவனித்து, தானும் அதே போல, கவனமாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளால், பதில் சொன்னான். இது போல, புத்தி நிறைந்த, க்ரோதத்தை ஜயித்த, புலனடக்கம் உள்ள வீரர்கள், என் வானர ராஜனால் நிச்சயம் காணப்பட வேண்டும். அதிர்ஷ்ட வசமாக நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். அவனும் ராஜ்யத்தை இழந்தவன். வாலியிடம் விரோதம் கொண்டுள்ளான். மனைவியை அபகரித்துக் கொண்டு சகோதரன் வாலியினால் துரத்தப் பட்டான். சூரிய புத்திரன் அவன். உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்வான். நம்முடன் சேர்ந்து சுக்ரீவனும் சீதையை தேட உதவி செய்வான். என்று சொன்ன ஹனுமான், லக்ஷ்மணனைப் பார்த்து மிக மென்மையாக, போவோமா? சுக்3ரீவன் இருக்கும் இடம் செல்வோமா? என்று கேட்டான். ஹனுமானின் வேண்டுகோளை கேட்டு லக்ஷ்மணன் ராமனைப் பார்த்து இந்த வானரம், வாயு புத்திரன், இவன் மிகவும் மகிழ்ச்சியோடு சொல்கிறான். இவன் எந்த காரியத்திற்காக வந்தானோ, அதை செய்து விட்டான். தானே வந்து விட்டான். நம் காரியமும் நிறைவேறும். ராக4வா பிரஸன்னமான முகத்தோடு, ஸ்பஷ்டமான வார்த்தைகளோடு, தெளிவாக சந்தோஷமாக பேசுகிறான். பொய்யாக இருக்காது. தீ4ரன் இவன். வாயு புத்திரன் தவறாக பேசமாட்டான். பிறகு வாயு புத்திரன் ஹனுமான், பிக்ஷு ரூபத்தை விட்டு, அந்த வீரர்களை தோளில் தூக்கிக் கொண்டு, சுக்3ரீவன் சமீபம் சென்றான். வாயு புத்திரனான அந்த வானரம், சுய ரூபத்தில், வானரங்களில் சிறந்தவன், மதியூகம் மிகுந்தவன் என்று பெரும் புகழ் வாய்ந்தவன், தன் காரியம் நிறைவேறிய மகிழ்ச்சியோடு, கால்களில் தன் பராக்ரமம் தெரிய லாகவமாக, ராஜ குமாரர்களை அழைத்துச் சென்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்3ரீவ சமீப க3மனம் என்ற நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 5 (276) சுக்3ரீவ சக்2யம் (சுக்ரீவன் நட்பு)
சுக்ரீவன் இருக்கும் மலையை நோக்கி, ருஸ்யமூகத்திலிருந்து ஹனுமான் சென்று, சுக்ரீவனிடம் ராம, லக்ஷ்மணர்கள் வந்துள்ள செய்தியைச் சொன்னான். இது தான் ராமன். திடமான விக்ரமம் உடையவன். வந்து விட்டான். இது லக்ஷ்மணன், அவன் சகோதரன். சத்ய ப்ராக்ரமன். இவர்கள் இக்ஷ்வாகு குலத்தவர். தசரத குமாரர்கள். தந்தை சொல்லை காப்பாற்ற வேண்டி வனம் வந்துள்ளனர். ராஜ சூயம், அஸ்வமேதம் என்று பல யாகங்களையும் செய்து, பலரையும் சந்தோஷமாக இருக்கச் செய்தவன். நிறைய தக்ஷிணை கொடுத்து பசுக்களும், நூறு, ஆயிரம், என்று கொடுத்து தவத்தினாலும், சத்ய வாக்கினாலும், பூமியை நன்றாக ஆண்டு வந்தவன், தசரத ராஜா. ஒரு பெண்ணின் தலையீடு காரணமாக அவன் மகனான இந்த ராமன், காட்டில் வசிக்க வந்து விட்டான். நியமங்களோடு காட்டில் வசித்து வரும் பொழுது, ராவணன் இவன் மனைவியை கவர்ந்து சென்று விட்டான். அவன், இப்பொழுது உன் உதவியை நாடுகிறான். உன்னுடன் இந்த சகோதரர்கள் இருவரும் நட்பு கொள்ள விழைகின்றனர். இருவரும் மிகுந்த மதிப்புக்குரியவர்கள். நம் பூஜைக்கு உரியவர்கள். இவர்களிடம் நட்பு கொள். இவர்களை உபசரி. ஹனுமானின் வார்த்தைகளைக் கேட்டு சுக்ரீவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ராகவர்களைப் பார்த்த உடன் மனதில் தோன்றிய பயம் நீங்கியது. தன் நடுக்கம் நீங்கப் பெற்றவனாக, தானும் மனித உருவம் எடுத்துக் கொண்டு, கண்ணுக்கு இனியவனாக, ப்ரீதியுடன் ராகவனிடம் பேசலானான். தாங்கள் தர்ம சீலர்கள். பலசாலிகள். இருந்தும் எல்லோரிடமும் அன்புடையவர்கள். வாயு புத்திரன், உள்ளது உள்ளபடி என்னிடம் விவரமாகச் சொன்னான். உங்கள் குணங்களைச் சொன்னான். அதுவே எனக்கு பெரிய உபகாரம், கௌரவம், லாபம் எல்லாமே. ப்ரபோ, நீங்கள் வானரமான என்னுடன் நட்பு கொள்ள விரும்புவதாகச் சொன்னான். அப்படி என்றால், என்னிடம் நட்பு கொள்வது உங்களுக்கு உகந்ததாக இருக்குமேயானால், இதோ நான் கை கொடுக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். (பா3ஹுரேஷ ப்ரசாரித:-இதோ என் கை நீட்டப் பட்டு விட்டது) உங்கள் கையினால் என் கையை பற்றிக்கொள்ளுங்கள். நட்பின் இலக்கணத்தை கடை பிடிப்போம். நிச்சயம். சுக்ரீவன் இவ்வாறு நட்புடன் பேசவும், ராமனும் மனம் மகிழ்ந்து அவன் கரத்தைப் பற்றிக் கொண்டான். மனப் பூர்வமாக ஸ்னேகத்தைக் காட்டும் அவனை அணைத்துக் கொண்டான். அப்பொழுது ஹனுமான் தன் பிக்ஷு ரூபத்தை விட்டு சுய ரூபத்தில் இருந்தான். கட்டைகளைக் கொண்டு வந்து நெருப்பை மூட்டினான். கொழுந்து விட்டெரியும் அக்னியை புஷ்பங்களால் பூஜித்து, சத்காரங்கள் செய்து, அடக்கத்துடன் அவர்கள் நடுவில் கொண்டு வந்து வைத்தான். இருவரும் அக்னியை வலம் வந்தனர். சுக்ரீவனும், ராகவனும் நட்பு எனும் உறவை ஏற்றுக் கொண்டனர். இருவரும் பிரியத்துடன் ஒருவரையொருவர் விரும்பியவர்களாக ஆனார்கள். வானரம் (ஹரி), ராகவர்கள், ராம, லக்ஷ்மணர்கள், ஒருவரையொருவர் பார்த்து பேசி திருப்தியடைந்தனர். நீ என் தோழனாகி விட்டாய். இனி, துக்கம், சுகம் நம் இருவருக்கும் பொதுவானதே. என் இனிய நண்பனே, என்று ராமன் மகிழ்ச்சியுடன் சுக்ரீவனிடம் சொன்னான். இலைகள், பூக்களுடன் கூடிய ஒரு கிளையை உடைத்து போட்டு, (சால மரக்கிளை) ராமனுடன் சுக்ரீவன் தானும் அமர்ந்தான். வானர ஸ்ரேஷ்டன், ஹனுமான், தானும் ஒரு சந்தன மரக் கிளையை அதன் பூக்களோடு உடைத்து வந்து லக்ஷ்மணனுக்கு ஆசனமாக போட்டான். இதன் பின், சுக்ரீவன், மென்மையாக, மதுரமான வார்த்தைகளால் தன் மகிழ்ச்சியை வெளிக் காட்டும் விதமாக, ராமனுடன் உரையாடினான். இன்னமும் அவன் கண்களில் பயமும், கவலையும் தெரிந்தன. ராமா, நான் ராஜ்யத்திலிருந்து விரட்டப் பட்டேன். பயத்துடன் தான் இந்த பிரதேசத்திலும் சஞ்சரிக்கிறேன். என் மனைவியும் அபகரிக்கப் பட்டாள். மிகவும் கஷ்டமான இந்த நிலையிலும், வனத்தில் கூட நிம்மதியாக இருக்க முடியாமல், பயம் வாட்டுகிறது. என் சகோதரன் தான் வாலி. அவன் தான் என்னை விரட்டுகிறான். என்னிடம் விரோதம் பாராட்டுகிறான். இதிலிருந்து எனக்கு விமோசனம் வேண்டும். ராமா, எனக்கு அபயம் தா இவ்வாறு சுக்ரீவன் வேண்டவும், மகா தேஜஸ்வியான ராமன், சிரித்துக் கொண்டே, மகா கபே, வானரமே, நட்பு என்பது ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதில் தான் நிலைத்து நிற்கும் என்பது எனக்குத் தெரியும். உன் மனைவியை கடத்திச் சென்ற வாலியை நான் வதைக்கிறேன். என்னுடைய அம்புகளைப் பார். இவை சூரியன் போல பிரகாசிக்கும், குறி தவறாத பாணங்கள். இவற்றை வேகமாக அந்த வாலியின் பேரில் பிரயோகித்து அவனை இல்லாமல் செய்கிறேன். மகேந்திர மலை கற்கள் போல கூர்மையான நுனியுடைய, நேராக, ரோஷத்துடன் சீறும் பாம்பு போன்ற என் அம்புகளால் தாக்கப் பட்டு பெரிய மலை கீழே விழுந்தது போல வாலி விழுவதை பார்க்கப் போகிறாய். தன் நன்மைக்காக ராமன், சொன்னதைக் கேட்டு, சுக்ரீவன் மிகவும் மகிழ்ந்தான். தன் மகிழ்ச்சியை வார்த்தைகளில் வெளிப் படுத்தினான். ந்ருசிம்ஹா, ராகவா, உன் தயவால் என் ப்ரியாவையும், ராஜ்யத்தையும் திரும்பப் பெறுவேன். நர தேவா, என் அண்ணன் என் மேல் விரோதம் பாராட்டி மேலும் என்னை துன்புறுத்தாதபடி செய். சீதை, வானரேந்திரன் (வாலி) ராக்ஷஸன் மூவருடைய முறையே, தாமரை, பொன் வண்ணமான, கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்ற கண்கள், சுக்ரீவனும் ராமனும் நட்பு கொண்ட சமயம், இடது கண்கள் வேகமாகத் துடித்தன.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்3ரீவ சக்2யம் என்ற ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 6 (277) பூ4ஷண ப்ரத்யபி4க்ஞானம் (ஆபரணங்களை அடையாளம் கண்டு கொள்ளுதல்)
இதன் பிறகு சுக்ரீவன் ரகுநந்தனனைப் பார்த்து அன்புடன் சொன்னான். இதோ என் மந்திரி ஒரு விஷயம் தெரிவித்தான். ஹனுமான் சொல்லி, என்ன காரியமாக வனம் வந்தாய் என்று தெரிந்து கொண்டேன். லக்ஷ்மணனுடன் வனத்தில் வசிக்கும் பொழுது, ராக்ஷஸன் உன் மனைவியை அபகரித்துச் சென்று விட்டதாகச் சொன்னான். ஜனகன் மகளான மைதிலியை, உன்னையும் லக்ஷ்மணனையும் விட்டுப் பிரித்து கழுகரசனான ஜடாயுவை கொன்று விட்டு, அழ, அழ, அவளைத் தூக்கிச் சென்று விட்டான், என்பதையும் அறிந்தேன். மனைவியைப் பிரிந்த துக்கம் சீக்கிரமே உன்னை விட்டு விலகும் ராமா, நான் அவளை கண்டு பிடித்து கொண்டு வருகிறேன். வேத ச்ருதி தொலைந்தது போல, காணாமல் போன சீதையை நான் அழைத்து வருவேன். பாதாளத்தில் இருந்தாலும் சரி, ஆகாயத்தில் இருந்தாலும் சரி, உன் மனைவியை திரும்ப அழைத்து வந்து உன்னிடம் ஒப்படைக்கிறேன். அரிந்த3மா (சத்ருக்களை அடக்கும் ஆற்றல் உடையவனே) இது நிச்சயம். ராகவா, நானும் வாக்கு மீற மாட்டேன். இந்திரன் உள்ளிட்ட தேவர்களும், அசுரர்களும் முயன்றாலும் கூட அவளை எதுவும் செய்ய முடியாது. விஷம் கலந்த உணவு போல அவர்கள் அவளை நெருங்க கூட முடியாது., உன் துயரத்தை விடுவாய். உன் பிரிய மனைவியை நான் மீட்டுத் தருகிறேன். ஒரு அனுமானத்தால் அவளை அறிவேன். அவள் தான் சந்தேகமே இல்லை. ஒரு கொடிய ராக்ஷஸனால் தூக்கிச் செல்லப் பட்ட ஒரு ஸ்த்ரீயை ராம, ராம என்று அலறும், லக்ஷ்மணா, என்றும் குரல் கம்ம, ராக்ஷஸன் மடியில், பாம்பு அரசனின் மனைவி போல துடித்து புரளும் ஒரு பெண்மணியைக் கண்டேன். என்னோடு சேர்த்து ஐந்து வானரங்கள் அங்கு இருந்தோம். மலை உச்சியில் நின்றதாலோ எங்களைப் பார்த்து தெரிந்தோ என்னவோ, தன் மேலாடையை அவள் வீசி எறிந்தாள். அதில் சுப4மான ஆப4ரணங்கள் இருந்தன. அவைகளை நாங்கள் கீழே விழாமல் பிடித்துக் கொண்டோம். பத்திரமாக வைத்திருக்கிறோம். ராகவா, அவைகளை கொண்டு வருகிறோம். அவற்றைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்வாய். இவ்வாறு பிரியமாக பேசிய சுக்ரீவனைப் பார்த்து ராமர் சகே2 சீக்கிரம் கொண்டு வா. ஏன் இன்னமும் தாமதம் செய்கிறாய்? எனவும், சுக்ரீவன் மலையின் ஆழமான ஒரு குகைக்குள் நுழைந்தான். வேகமாக சென்று உத்தரீயமும் அதனுள் ஆபரணங்களுமாக இருந்த முடிச்சை எடுத்து வந்தான். இதோ பார், என்று அவற்றை ராமனிடம் காட்டினான். அந்த ஆடையையும் ஆபரணங்களையும் பார்த்து கண்களில் நீர் நிறைய, பனி மூடிய சந்திரன் போல ஆனான். சீதையிடம் உள்ள ஸ்னேகத்தால், கண்கள் ப்ரவாகமாக ஆயின. ஹா ப்ரியே, என்று தன் தைரியத்தை இழந்தவனாக பூமியில் விழுந்தான். தன் மார்போடு அந்த ஆபரணங்களை அணைத்துக் கொண்டு, புற்றில் இருந்து வெளி வரும் பாம்பு போல பெருமூச்சு விட்டபடி, தன் கண்ணீரை கட்டுப் படுத்தவும் முடியாமல் அருகில் இருந்த சௌமித்திரியைப் பார்த்து கேட்டான். லக்ஷ்மணா, இதோ பார். வேகமாக கடத்தப் பட்டுச் செல்லும் போதும், சீதை, நமக்கு வழி காட்ட கீழே போட்டிருக்கிறாள். தன் சரீரத்திலிருந்து ஆபரணங்களை உத்தரீயத்தில் முடிந்து புல் நிறைந்த இந்த பூமியைப் பார்த்து வீசியிருக்கிறாள். ஆபரணங்கள் சிதறாமல் சிதையாமல் அப்படியே இருக்கின்றன. பார், எனவும், லக்ஷ்மணன் பதில் சொன்னான். குண்டலங்களையோ, இடுப்பில் அணியும் கேயூரம் எனும் ஆபரணத்தையோ நான் அறியேன். கால் கொலுசு தெரியும். தினமும் பாதங்களில் வணங்கும் பொழுது அவை என் கண்ணில் படும் என்றான். ராகவன் சுக்ரீவனிடம் பரபரப்புடன் விசாரித்தான். சுக்ரீவா, சொல், எந்த பக்கமாக அவளைத் தூக்கிக் கொண்டு போவதை கண்டாய்? என் உயிருக்குயிரான மனைவியை அபகரித்துச் சென்ற ராக்ஷஸன், எந்த தேசத்தவன். என் துன்பத்தை வளர்க்கும் அந்த ராக்ஷஸன் எங்கு வசிக்கிறான்? இவன் பொருட்டு நான் எல்லா ராக்ஷஸர்களையும் அழித்து விடப் போகிறேன். மைதிலியைக் கவர்ந்து என் ரோஷத்தை கிளப்பி விட்ட அந்த ராக்ஷஸனை உயிருடனிருக்க விட மாட்டேன். தன் ம்ருத்யுவைத் தானே தேடிக் கொண்டது போல என்னிடம் விரோதம் கொண்டு மரண வாயிலுக்கே வந்து விட்டவன். இரவில் நடமாடும் அந்த ராக்ஷஸன் பலவந்தமாக அவளைத் தூக்கிச் சென்றவன், அந்த என் எதிரி யார் என்று சொல். வானர ராஜனே, அவனை இப்பொழுதே யமனுடைய சன்னிதியில் கொண்டு நிறுத்துகிறேன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், பூ4ஷண ப்ரத்யபி4க்ஞானம் என்ற ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 7 (278) ராம சமாஸ்வாஸனம் (ராமனை சமாதானப் படுத்துதல்)
துயரத்துடன், ராமன் இவ்வாறு கேட்கவும், வானரம், தானும் அதே போல வருந்தி கண்ணீர் விட்டபடி, பதில் சொன்னான். அந்த பாபியான ராக்ஷஸனின் இருப்பிடம் நான் அறியேன். அவன் குலம், நிச்சயமாக ஏதோ தாழ்ந்த குலத்தவன் தான் அவன். அவனுடைய விக்ரமம், சாமர்த்யம் எதையும் நான் அறியேன். ஆனால் சத்யம் செய்கிறேன். ராமா, நீ வருந்தாதே. நான் எப்பாடு பட்டாவது மைதிலியை நீ திரும்ப பெறும்படி செய்கிறேன். என் புஜ பலத்தைக் கொண்டு, ராவணனை அவன் கூட்டதோடு அழியும்படி செய்கிறேன். நீ என்றென்றும் என்னிடம் பிரியமாக இருக்க, நான் இதைச் செய்கிறேன். இந்த கவலையை விடு. உன் இயல்பான தைரியம் தான் உன் போன்றோருக்கு அழகு. எனக்கும் தான் மனைவியைப் பிரிந்த துக்கம் வாட்டுகிறது. நான் இப்படி சிந்திக்கவும் இல்லை, கவலைப் படவும் இல்லை. தைரியத்தை இழந்து அழவும் இல்லை. சாதாரண வானரம் நான். தாங்களோ, மகான். வினயம், தைரியம் என்ற உயர்ந்த குணங்களுக்கு இருப்பிடமாக இருப்பவர். நீங்கள் ஏன் மனதை தளர விட வேண்டும்? கண்களில் வடியும் நீரை தைரியத்துடன் கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள். நல்ல பெருந்தன்மை உடையவர்களின் மரியாதை, மனவுறுதியை காப்பாற்றிக் கொள்ளுங்கள். தன் நம்பிக்கையுடைய தீரன், கஷ்டகாலத்திலும், பணம் (செல்வம்) குறைந்தபோதும், உயிரே போய் விடுமோ என்ற பயம் தோன்றும் காலத்தும், தன் புத்தியை உபயோகித்து, தீர ஆலோசித்து விமர்சனம் செய்து கொண்டு, கலங்காமல் நிற்பான். கோழையான மனிதன் தான், நித்யம் மனக் கவலையை தீர்க்க மாட்டாமல் திண்டாடுவான். பாரம் அதிகமான படகு தண்ணீரில் மூழ்குவது போல தன் மன பாரத்தினால் தானே அழிவைத் தேடிக் கொள்வான். இதோ என் கை கூப்பி வணக்கம் தெரிவித்து , உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன். அன்பினால் உங்களிடம் சொல்கிறேன். உங்கள் பௌருஷத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். மற்ற எண்ணங்களுக்கு மனதில் இடம் தராதீர்கள். தன்னம்பிக்கையும் ஆற்றலும் நிறைந்த உங்கள் இயல்புக்கு திரும்பி வாருங்கள். துயரம் வந்த பொழுது, அதையே நினைத்து வருந்துபவன், ஒருக்காலும் சுகத்தை அடைய மாட்டான். அவர்களுடைய தேஜஸும் குறையும். அதனால் நீங்கள் சிந்தனையை விடுங்கள். இப்படி துயரத்தையே தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தால், உயிர் வாழ்வதே கடினமாகி விடும். இந்த துக்கத்தை விடுங்கள். ராஜேந்திரா, தைரியமாக எழுந்து வாருங்கள். சினேகிதன் என்ற முறையில், உங்களுக்கு ஹிதம் என்று எண்ணி சொல்கிறேன். உபதேசம் செய்யவில்லை. நம் தோழமையை நினைத்துப் பார்த்து, நான் சொல்வதைக் கேளுங்கள். இவ்வாறு மதுரமாக, சமாதானப் படுத்திய சுக்ரீவனைப் பார்த்து ராமர் சொன்னார். மேல் துண்டால் முகத்தையும், கண்ணீரையும் துடைத்துக் கொண்டு, தன் இயல்பான நிலைக்குத் திரும்பிய ப்ரபு, சுக்ரீவனின் சொற்களால் தன்னை உணர்ந்தவராக, அவனை அணைத்துக் கொண்டு, ஒரு தோழன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தாய், சுக்ரீவா, என்றார். அன்பினாலும், என் நன்மையை விரும்புவதாலும், நீ என்னை தட்டி எழுப்பி விட்டாய். இதோ நான் என் இயல்பான குணத்தோடு நிமிர்ந்து நிற்க, உன் உதவி தான் காரணம். இது போல பந்து (உறவினன்) கிடைப்பது அரிது. இது போல கஷ்டமான நாட்களில் ஒரு நண்பன் இப்படி அமைவது கடினம். மேற்கொண்டு நடப்பதை யோசிப்போம். மைதிலியைத் தேட நீ முயற்சி செய்வாய். ராக்ஷஸன் துராத்மா, ரௌத்ர குணம் கொண்டவன் அதனால், கவனமாக செயல் பட வேண்டும். நான் செய்ய வேண்டியதையும் தயங்காமல் சொல். க்ஷேத்ரமும் நன்றாக இருந்து, நல்ல மழையும் பெய்தால் எப்படி விளையுமோ, அது போல உன் சொல் என்னிடம் எடுபடும். நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நான் அபிமானத்தோடு சொல்வதாகத் தோன்றினாலும், அது உண்மையே என்று நம்பி ஏற்றுக் கொள். பொய், நான் சொன்னதே இல்லை. இனியும் சொல்ல மாட்டேன். எப்பொழுதும் சொல்ல மாட்டேன். இது நான் உனக்கு சபதம் செய்து சொல்கிறேன். நான் நம்பும் சத்யத்தின் பேரில், ஆணை. இதன் பின் மிகவும் மகிழ்ந்த சுக்ரீவன் தன் கவலை நீங்கியவனாக ஆனான். ராகவனுடைய பேச்சும், சபதம் செய்ததும் அந்த சமயம் உடனிருந்த வானரங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. ஏகாந்தத்தில், நரனும், வானரனும் தங்கள் சுக, துக்கங்களை பகிர்ந்து கொண்டனர். மனிதருள் மாணிக்கமான ராகவனால் தன் காரியம் நிறைவேறும் என்று சுக்ரீவன் நம்பினான். மகானுபாவன் அவன் என்பதை வானர வீரன், மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ராம சமாஸ்வாஸனம் என்ற ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 8 (279) வாலி வத4 ப்ரதிக்ஞா (வாலியை வதம் செய்ய பிரதிக்ஞை செய்தல்)
இந்த சம்பாஷனைகளின் முடிவில், வானர ராஜனான சுக்ரீவன் மிக மகிழ்ச்சியடைந்தவனாக காணப் பட்டான். லக்ஷ்மணனும் அருகில் இருக்க, தன் நன்றியை தெரிவித்துக் கொண்டான். சிறந்த குணங்களின் இருப்பிடமான தாங்கள் எனக்குத் தோழனாக கிடைத்தது என் பாக்கியம். இதனால் நான் தேவதைகளின் அனுக்ரஹத்திற்கும் பாத்திரமாவேன் என்பதில் ஐயமில்லை. உங்கள் உதவியுடன் தேவலோகமே கூட எனக்கு கைக்கெட்டும் நிலையில் இருக்கும் பொழுது என் ராஜ்யம் கிடைப்பது என்ன கஷ்டம்? என் ப3ந்து4க்கள், மித்திரர்கள் இடையில் நான் தான் பாக்யசாலி. ஏனெனில் எனக்குத் தான் அக்னி சாக்ஷியாக ரகு குல செம்மல் நண்பனாக வாய்த்தான். நாள் செல்லச் செல்ல நானும் உங்களுக்கு ஏற்ற அனுரூபமான தோழன் தான் என்று உணருவீர்கள். நான், தானே என் குணங்களைச் சொல்லிக் கொள்வது சரியல்ல. உங்களைப் போன்ற மகான்கள், எடுத்த செயலை முடித்தே தீரும் ஆற்றல் உடையவர்கள். ஒருவரிடம் அன்பு வைத்தாலும், அது அசையாத ஆழமான பாசமாகத் தான் இருக்கும். தன்னம்பிக்கை மிக்கவனே, ராமா, தங்கமோ, வெள்ளியோ, ஆடை ஆபரணங்களோ, சாதுக்களின் நட்பில் விரிசலை உண்டு பண்ணாது என்று சாதுக்கள் சொல்வார்கள். செல்வம் நிறைந்தவனோ, தரித்ரனோ, துக்கத்தில் ஆழ்ந்தவனோ, சுகமாக இருப்பவனோ, தோஷமுடையவனோ, தோஷமே இல்லாதவனோ, நட்பு கொண்ட தோழன் உற்ற உறவினன் ஆவான். இருவருக்குள்ளும் அன்யோன்யமான தோழமை இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் செல்வத்தை தியாகம் செய்தோ, சுகத்தை தியாகம் செய்வதோ, தேகத்தையே தியாகம் செய்வதோ கூட இயல்புதான். ஆமாம், ஆமாம் என்று ராமனும் சுக்ரீவனை ஆமோதித்தான். லக்ஷ்மணனும் உடனிருக்க, சுக்ரீவனை புத்திசாலியாக அங்கீகரித்தான். வாஸவனுக்கு இணையான ஆற்றல் உடையவன் என்று பாராட்டினான். ராமன் நிற்பதைக் கண்டு, லக்ஷ்மணனும் நின்று கொண்டே இருப்பதை பார்த்து சுக்ரீவன், வனத்தில் சுற்றும் முற்றும் பார்த்தான். சற்று தூரத்திலேயே, பூக்களுடன் விளங்கிய சால மரத்தைக் கண்டான். ஒரு சில இலைகளே தெரிய, பூக்கள் நிறைந்திருந்த ஒரு கிளை வண்டுகள் மொய்த்திருந்ததை, ஒரு கிளையை உடைத்து, சால மரக் கிளையில் ராமனை அமரச் செய்து தானும் அமர்ந்தான். அவர்கள் இருவரும் அமர்ந்த பின்னும், லக்ஷ்மணன் நிற்பதைப் பார்த்து ஹனுமான், வேறொரு கிளையை கொண்டு வந்து போட்டு, வினயத்துடன் அமரச் செய்தான். ராமன் சௌகர்யமாக அமர்ந்த பின், சுற்றிலும் உத்தமமான அந்த மலையின் இயற்கையழகில், பிரஸன்னமான சமுத்திரம் போல, தன்னை உள்ளடக்கி மரக் கிளையில் அமர்ந்திருந்த ராமனைப் பார்த்து சுக்ரீவன், மெதுவாகச் சொன்னான். இந்த மகிழ்ச்சியின் ஊடே கவலை வாட்டிய தன் மனதின் மற்றொரு பாகத்தை திறந்து காட்டினான். ராமா, நான் என் மனைவியை பிரிந்து, அவளை பறி கொடுத்த துக்கத்துடன் இந்த ருஸ்ய மூக மலையில் திரிந்து கொண்டிருக்கிறேன். என் சகோதரன் வாலியினால் உறவையே நிராகரிக்கப் பட்டேன். அதற்கும் மேல் விரோதம் பாராட்டி வருகிறான். வாலியை நினைத்தாலே, நடுங்கும் எனக்கு, அனாதையான என்னிடம் தயவு செய். நீ சர்வ லோக சரண்யன், சர்வ லோக பயங்கரனாகவும் விளங்குவாய், தவற்றைக் கண்டால் என்று நான் அறிவேன். இதற்கு சிரித்துக் கொண்டே ராமன் பதில் சொன்னான். உபகாரம் செய்வது தான் நட்புக்கு அழகு. அபகாரம் செய்தவன் சத்ருவாவான். இன்றே உன் மனைவியை அபகரித்தவனைக் கொல்கிறேன். இதோ பார், வேகமாக செல்லும் கூர்மையான என் அம்புகளைப் பார். இவை கார்த்திகேய வனத்தில் தோன்றிய சரங்கள். பொன் வர்ணமாக அலங்கரிக்கப் பட்டது. கல்லால் ஆன அம்போ, மகேந்திர மலையின் கல்லோ மேலே வந்து விழுந்தது என்று அடிபட்டவன் மயங்கும்படி கனமானது. குறி தவறாத இவை ரோஷத்துடன் சீறும் பாம்புகள் போன்றவை. சகோதரன் என்று பெயர் வைத்துக் கொண்டு சத்ருவாக இருக்கும் வாலியை, தவறு செய்தவனை, மலையை பிளந்தது போல பிளந்து, கிழே விழுந்து கிடப்பதைப் பார்க்கத்தான் போகிறாய். ராகவனின் பேச்சைக் கேட்டு சுக்ரீவன் சாது, சாது என்று சொல்லி மகிழ்ந்தான். ராமா, நான் மிகவும் கஷ்டப்பட்டவன். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு நீ தான் கதி. என் தோழனானதால் உன்னிடம் மனம் விட்டு பேசுகிறேன். கைகளைப் பற்றிக் கொண்டு அக்னி சாக்ஷியாக நாம் நட்பு கொண்டோம்., என் உயிருக்கும் மேலானவன் ஆகி விட்டாய். சத்யமாக சொல்லுகிறேன். கண்களில் நீர் மறைக்கிறது. சந்தோஷத்தில் திக்கு முக்காடுகிறேன். அதனால் பேச்சு வரவில்லை என்றான். தன் கண்களைத் துடைத்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ராகவனைப் பார்த்து மேலும் சொன்னான். முன்பு வாலி என்னை ராஜ்யத்திலிருந்து இறக்கி விட்டான். கடுமையாக திட்டி விரட்டினான். ஓட ஓட விரட்டினான். உயிருக்குயிரான என் மனைவியையும், கவர்ந்து கொண்டான். என் நண்பர்களை சிறையில் அடைத்து விட்டான். அதோடு நில்லாமல் என் உயிரை எடுப்பதில் இப்பொழுது முனைந்து இருக்கிறான். அவன் அனுப்பிய பல வானரர்களை நான் போரிட்டு அழித்தேன். அதனால் தான் யாரைப் பார்த்தாலும் சந்தேகம். இந்த சந்தேகம் தான் ராகவா, முதன் முதலில் உன்னைப் பார்த்ததும் நடுங்கினேன். அதனால் தான் நானே வந்து வரவேற்கவில்லை. பயப்படவேண்டிய விஷயத்தில் எல்லோரும் தான் பயப்படுகிறார்கள். ஹனுமான் முன்னிட்ட ஒரு சிலர் தான் என் உதவிக்கு அருகில் இருக்கிறார்கள். நான் உயிர் வாழ்வதே இவர்கள் தயவால்தான். இவ்வளவு கஷ்டங்களுக்கிடையிலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உலாவி வருகிறேன் என்றால் மிகையில்லை. எங்கு போனாலும் உடன் வருவார்கள். நின்றால் நிற்பார்கள். இதை இன்னும் விவரிப்பானேன். என் சகோதரன் வாலி, உடல் ப3லத்துக்கு பெயர் போனவன். அவனை அழித்தால் தான் என் கஷ்டம் விடியும். அதைச் சுற்றித் தான் என் சுகமும், வாழ்வும் நிலைத்து நிற்க முடியும். இது தான் என் சோக கதை. மனக் கஷ்டம் தாங்காமல் சொல்லி விட்டேன். கஷ்டப் படுவேனோ, சுகமாக இருப்பவனோ, நண்பனுக்கு நண்பன் தான் உதவி. இதைக் கேட்டு ராமன் விசாரித்தான். என்ன காரணத்தால் விரோதம் ஏற்பட்டது. அதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றான். அந்த அடிப்படை காரணத்தை தெரிந்து கொண்டு தகுந்த முறையில் பதில் கொடுக்கலாம். இருவரின் பலம், குறை, நிறைகளைத் தெரிந்து கொண்டு செய்ய வேண்டியதைச் செய்வோம். உன்னை அவமானப் படுத்தினான் என்று கேட்டு எனக்கு அடங்கா கோபம் வந்தது. காற்றில் அலைக்கழிக்கப் படும் சமுத்திர ஜலம் போல அது மேலும் பெருகுகிறது. நான் த4னுஷை எடுத்து நிறுத்தி அம்பை பூட்டும் முன் கவலைப் படாமல் சொல். என் வில்லும் அம்பும் இந்த செயலுக்காகவே ஏற்பட்டது என்று வைத்துக் கொள். உன் எதிரி என்னால் அழியத் தான் இன்னமும் உயிருடன் இருக்கிறான். தன் நான்கு வானர நண்பர்களோடு, சுக்ரீவன் தனக்கும் வாலிக்கும் விரோதம் வளர்ந்த கதையை விவரித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வாலி வத4 பிரதிக்ஞா என்ற எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 9 (280) வைர விருத்தாந்தானுக்ரம:(விரோதம் வளர்ந்த விவரம், வரிசைக்ரமமாக)
வாலி என்ற என் சகோதரன், எனக்கு மூத்தவன், என் தந்தைக்கு பிரியமானவன், எனக்கும் அப்படித்தான் இருந்தான். தந்தை இறந்தபின், இவன் தான் மூத்தவன் என்று ராஜ்யத்தில் முடி சூட்டினர். எல்லோருக்கும் அது சம்மதமே. தந்தை, பாட்டனார் வழி வந்த ராஜ்யத்தை அவன் ஆண்டபோது, நான் ஏவல் வேலை செய்பவனாக அருகிலேயே நின்றிருந்தேன். து3ந்து3பி4யின் மகனான மாயாவி என்று வயதில் பெரியவன், அவனுடன் ஒரு பெண்ணின் காரணமாக விரோதம் என்ற வரை நான் கேள்விப் பட்டிருந்தேன். அவன் ஒரு சமயம் ஜனங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கிஷ்கிந்தா வாசலை அடைந்தான். பெருங்குரலில் சத்தமிட்டு வாலியை போருக்கு அழைத்தான். தூங்கிக் கொண்டிருந்த என் சகோதரன், கூக்குரலிடும் பைரவ நாதத்தைக் கேட்டு, விருட்டென எழுந்தவன், உடனே வேகமாக அவனை எதிர் கொண்டு போரிடச் சென்றான். அசுரன் அவன், அவனைக் கொல்ல கோபத்துடன் கிளம்பியவன், ஸ்த்ரீ ஜனங்கள் தடுத்தும் கேளாமல், நான் வணங்கியபடி தடுத்து போக வேண்டாம் என்று வேண்டியதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், எங்கள் அனைவரையும் லட்சியம் செய்யாமல் வெளியேறிச் சென்றான். மகா பலசாலிதான். இருந்தும், நானும் பின் தொடர்ந்து சென்றேன். அவன் கூடவே ஓடினேன். நான் தூரத்தில் பின் தொடர்ந்து வருவதை அந்த அசுரன் கண்டான். வாலியைப் பார்த்ததுமே பயந்தவன், இதன் பின் ஓடலானான். வேகமாக ஓடும் அவனைத் துரத்திக் கொண்டு நாங்கள் இருவரும் ஓடினோம். வழி பூரா சந்திரனின் வெளிச்சம், பிரகாசமாக இருந்தது. புல் மூடிய ஒரு பள்ளத்துள் அவன் இறங்கி விட்டான். அசுரனைத் தொடர்ந்து ஓடிய நாங்களும் அந்த பள்ளத்தை அடைந்து நின்றோம். பள்ளத்துள் சென்று விட்ட எதிரியை விட மனமின்றி ரோஷத்துடன் வாலி என்னிடம் சுக்ரீவா, இந்த பள்ளத்தின் நுழை வாயிலில் நீ நில். நான் உள்ளே போய் எதிரியைக் கொன்று போடும் வரை அசையாதே, என்று சொல்லிச் சென்றான். நான் இதைக் கேட்டு கவனமாக இருக்கும்படி வேண்டிக் கொண்டேன். என் பெயரில் சபதம் செய்து, நகராதே என்று சொல்லி பள்ளத்துள் நுழைந்து விட்டான். அப்படிச் சென்றவன், ஒரு வருஷம் ஆகியும் வெளியே வரவில்லை. என்ன நடக்கிறது என்பதும் எனக்குத் தெரியவில்லை. அந்த இடத்திலேயே நின்றபடி நான் காலம் கழித்தேன். காலமோ ஓடிக் கொண்டிருக்கிறது. என் அண்ணனையும் காணவில்லை. சகோதர பாசம் என்னை ஏதோ விபரீதம் என்றே எண்ண வைத்தது. அதனால் பயந்து நடுங்கினேன். வெகு நாட்கள் இவ்வாறு சங்கடத்துடன் தவித்தபின் ஒரு நாள், அந்த பள்ளத்திலிருந்து ரத்தமும், நிணமுமாக வெளி வந்தது. அதைக் கண்டு நான் மிகவும் பயந்து விட்டேன். துக்கமும் அடைந்தேன். அசுரர்கள் கூச்சலிடும் ஒலியும் என் காதில் விழுந்தது. என் மூத்தவன் வலி தாங்காமல் அலறுவது போலவும் கேட்டது. யுத்தத்தில் அடிபட்டு விட்டானோ? இந்த அடையாளங்களை வைத்துக் கொண்டு நான் இறந்தது என் சகோதரனே என்ற முடிவுக்கு வந்தேன். ஒரு பெரிய கல்லை எடுத்து, மலை போல் இருந்ததைப் புரட்டி, பள்ளத்தின் நுழை வாயிலை மூடி விட்டு அவனுக்கு நீர் தெளித்து விட்டு துக்கத்துடன் நான் கிஷ்கிந்தா வந்து சேர்ந்தேன். தோழனே, நான் மேல் மூச்சு வாங்க ஓடி வந்து சொன்னதை பெரு முயற்சியுடன் மந்திரிகள் கேட்டு விஷயத்தை புரிந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து யோசித்து சம்மதித்து எனக்கு முடி சூட்டினர். நியாயமாக நான் ராஜ்யத்தை ஆண்டு வரும் பொழுது, ராகவா, என் மனம் இன்னமும் சகோதரனை கௌரமாகவே எண்ணி இருந்த சமயம், ஒரு நாள் சத்ருவைக் கொன்று விட்டு வாலி ஊருக்குள் வந்தான். அவனை மதித்து, முறைப் படி நான் வணங்கினேன். சந்தோஷமாக அவன் ஆசி வசனம் எதுவும் சொல்லவில்லை. அவன் பாதங்களில் என் மகுடம் படும்படி விழுந்து வணங்கினேன். ஆயினும் வாலி என்னிடம் தயை கொள்ளவில்லை.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வைர விருத்தாந்தானுக்ரமோ என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 10 (281) ராஜ்ய நிர்வாஸக் கத2னம் (ராஜ்யத்தை விட்டே வெளியேற உத்தரவிடுதல்)
கோபத்துடன் பரபரப்பாக ஓடி வந்தவனை, நான் முடிந்தவரை சமாதானப் படுத்த முயற்சி செய்தேன். நல்ல வேளை சௌக்யமாக வந்து சேர்ந்தாய். அதிர்ஷ்ட வசமாக எதிரியையும் அழித்து விட்டாய். இதுவரை அனாதையாக இருந்த எனக்கு நாதனாக வந்து சேர்ந்தாய். இதோ பல கம்பிகளுடைய, பூர்ண சந்திரன் உதித்தது போன்ற ச2த்ரம், சாமரங்கள், இவைகளை ஏற்றுக் கொள். ராஜனே, மிகவும் கஷ்டப் பட்டு பள்ளத்தின் நுழை வாயிலில் வருஷக் கணக்காக காத்திருந்தேன். ரத்தம் அந்த பள்ளத்தின் உள்ளிருந்து பிரவாகமாக வருவதைப் பார்த்து நடுங்கி விட்டேன். ஏற்கனவே என்ன ஆயிற்றோ என்ற கவலை. என்ன செய்வது என்று தெரியாமல், மலைச் சிகரத்தை எடுத்து பள்ளத்தை மூடி, அங்கிருந்து ஓடி கிஷ்கிந்தை வந்து சேர்ந்தேன். அதுவரை கவலையில் மூழ்கியிருந்த மந்திரிகளும் ஊர் ஜனங்களும் எனக்கு முடி சூட்டினர். என் விருப்பத்தால் நான் முடி சூட்டிக் கொள்ளவில்லை. என்னை மன்னித்து விடு. நீ தான் அரசன். கௌரவத்துக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவன். நான் எப்பொழுதும் போல இருக்கிறேன். நீ இல்லாததால் இந்த ராஜ்ய காரியத்தை நான் ஏற்று நடத்தி வந்தேன். இடையூறு இல்லாத மந்திரி ஜனங்கள், ஊர் ஜனங்கள் இவர்களோடு திரும்ப ஒப்படைக்கிறேன். நான் பாதுகாத்து வந்ததை உன்னிடம் தருகிறேன். சத்ருக்களை வெற்றி கொள்ளும் வீரனே, என்னிடம் மனத்தாங்கல் கொள்ளாதே. இதோ கை கூப்பி வணங்குகிறேன். வேண்டிக் கொள்கிறேன். ஊர் ஜனங்களும், மந்திரிகளும் பலவந்தமாக என்னை அரசனாக்கினார்கள். தேசம் அரசன் இல்லாமல் சூன்யமாக இருக்கக் கூடாது என்பதால் அரசனாக நியமிக்கப் பட்டேன். ஸ்னேகத்துடன் இவ்வளவு சொல்லியும், அந்த வானரம் கோபமாக பேசி, தி4க், த்வாம் (நிந்தனை, வசைச் சொல்) என்று திட்டி, மேலும் பலவிதமாக ஏசினான். பிரஜைகளையும், மந்திரிகளையும், கூப்பிட்டு வைத்துக் கொண்டு, நண்பர்களுக்கு மத்தியில் என்னை வாய் கூசாமல் ஏசினான். அவர்களிடம் அவன் சொன்னான் உங்களுக்குத் தெரியும். ஒரு நாள் இரவில் மாயாவி என்ற மகாசுரன், க்ரூரமாக என்னை போருக்கு அழைத்தான். கெட்ட புத்தியுடையவன், யுத்தம் செய்ய அறை கூவினான். அவன் கர்ஜனையைக் கேட்டு, நான் அரண்மனையில் இருந்து வேகமாக வெளியேறிச் சென்றேன். இதோ இந்த சகோதரன், கெட்ட எண்ணத்தோடு என்னை பின் தொடர்ந்து வந்தான். எனக்கு துணை ஒருவன் பின்னால் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், பலசாலியாக இருந்தும் அவன் ஓடத் தொடங்கினான். நாங்கள் இருவருமாக அவனைத் துரத்த, துரத்த மேலும் பயந்து ஓடினான். வேகமாக ஓடி ஒரு பள்ளத்துள் நுழைந்து விட்டான். அவன் பயங்கரமான அந்த பள்ளத்துள் நுழைந்து விட்டதைக் கண்டதும், இதோ இந்த சகோதரனிடம் நான் சொன்னேன். அப்பொழுதே இவனைக் காண க்ரூரமாக இருந்தான். இந்த அரக்கனைக் கொல்லாமல் நான் ஊருக்குள் வர மாட்டேன். நான் இவனைக் கொன்று விட்டு வெளி வரும் வரை இந்த பள்ளத்தின் வாசலிலேயே இரு, என் வரவை எதிர்பார்த்து காத்திரு என்று சொல்லி உள்ளே சென்றேன். இவன் வாயிலில் நிற்கிறான் என்ற எண்ணத்துடன் நான் உள்ளே சென்றேன். அந்த அரக்கனை தேடிக் கண்டு பிடிக்கவே, ஒரு வருடம் ஆகி விட்டது. கடைசியில் அவனைக் கண்டு பிடித்து, இதற்குள் அவன் தன் தவற்றை உணர்ந்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான், அவன் பந்துக்களும் வந்து சேர்ந்தனர், எல்லோரையும் சேர்த்து அழித்து விட்டேன. அந்த சண்டையில் பெருகிய ரத்தம், அந்த பள்ளம் நிரம்பி, அந்த இடத்திலிருந்து வெளியே வருவதே சிரமமாகி விட்டது. து3ந்து3பி4யின் மகனான அந்த எதிரியைக் கொன்ற பின் வெளியே வரப் பார்த்தால், வாசல் கல்லால் மூடப் பட்டு இருந்தது. சுக்ரீவா, என்று பலமுறை திரும்ப திரும்ப அழைத்தும், கத்தியும் ஒரு பயனும் இல்லை. பதிலே வராமல் போகவும், நான் மிகவும் துக்கத்தையடைந்தேன். காலால் உதைத்து தள்ளி அந்த பள்ளத்திலிருந்து வெளி வந்து கால் நடையாக ஊர் வந்து சேர்ந்தேன். இங்கு வந்து பார்த்தால், இவன் தனக்கு ராஜ்யத்தை வசமாக்கிக் கொண்டு. முடி சூட்டிக் கொண் டிருக்கிறான். சுக்ரீவன் கொடியவன். சகோதர பாசம் இல்லாத, அல்லது மறந்து விட்ட மூர்க்கன் என்று சொல்லி என்னை உடுத்திய துணியோடு ஊரை விட்டே விரட்டி விட்டான். அவனால் அவமானப் பட்டது மட்டுமல்லாமல், என் மனைவியையும் அபகரித்துக் கொண்டு விட்டான். அவனிடம் உள்ள பயத்தால் பூமி முழுதும் சுற்றித் திரிந்தேன். கடல் சூழ்ந்த இந்த உலகில் ஒரு இடம் பாக்கி இல்லை. வேறொரு காரணத்தால் இந்த ருஸ்ய மூக பர்வதத்தில் வாலி நுழைய முடியாது என்று அறிந்து இங்கு வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். இது தான் எங்களிடையில் விரோதம் வளர்ந்த கதை. நானே நினைக்காமல் இப்படி ஒரு கஷ்டம் வந்து சேர்ந்தது. இதோ பார், ராகவா, வாலியிடம் பயந்து வருந்தும் எனக்கு சர்வ லோக ரக்ஷகனான நீ தான் தயவு செய்ய வேண்டும். சர்வலோக பயங்கரனாகவும் நீ இருப்பாய் என்பது தெரியும். அதனால் நீ வாலியை வதம் செய்தால் தான் என் துயர் தீரும் இவ்வாறு சுக்ரீவன் சொல்லவும், ராமர் சிரித்துக் கொண்டே கேட்பது போல கேட்டார். என் அம்புகள் குறி தவறாதவை. சூரியனைப் போன்ற தேஜஸ் உடையவை. இந்த அம்புகளை தவறாக நடந்து கொண்ட வாலியின் மேல் பிரயோகிக்கிறேன். உன் மனைவியை அபகரித்த அவனை நான் காணும் வரை தான் அவன் உயிருடன் இருப்பான். பாபாத்மாவான வாலி சரித்திரம் இழந்தவன் என்று தெரிகிறது. என்னையே ஒப்பிட்டுக்கொண்டு பார்த்து, உன் துக்கம் எவ்வளவு என்று உணருகிறேன். துயரக் கடலில் மூழ்கியிருக்கும் உன்னைக் காப்பாற்றுகிறேன். நிச்சயம் உன் விருப்பம் நிறைவேறப் பெறுவாய். ராமனுடைய சொல், தன் நன்மைக்கே என்று சுக்ரீவன் அகமகிழ்ந்தான். மேலும் விவரித்தான்.
இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ராஜ்ய நிர்வாஸ கத2னம் என்ற பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 11 (282) வாலி வதா4விஷ்கரணம் (வாலியை வதம் செய்ய தீர்மானித்தல்)
தன் சக்தியைப் பற்றிச் சொல்லி தனக்கு நம்பிக்கையை வளர்க்கும் விதமாக ராமன் பேசியதால், சுக்ரீவன் மகிழ்ச்சியடைந்தான். உபசாரம் செய்து ராமனை பூஜித்து மேலும் சொல்லலானான். சந்தேகமே இல்லை. நீங்கள் கோபம் கொண்டால் யுகாந்த பாஸ்கரன் போல உங்களுடைய கூர்மையான, தகிக்கும், மர்மத்தை தாக்கும் அம்புகளால் உலகங்களை அழித்து விடக் கூடியவர் தான். வாலியினுடைய பலம், வீர்யம், கலங்காத தன்மை இதை நான் விவரித்து சொன்னபின், என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யோசித்து முடிவு செய்யுங்கள். சமுத்திரத்தின் மேற்கிலிருந்து கிழக்கு, தெற்கிலிருந்து வடக்கு, என்று சூரியன் உதிக்கும் முன், ப்ரும்ம முஹுர்த்தத்தில் வாலி சுற்றி விட்டு வந்து விடுவான். சற்று கூட வாட்டமே அவனிடம் தெரியாது. பெரிய மலைகளையும் கால் நடையாக நடந்து குதித்து மேலேறி, உச்சியை அடைந்து விடுவான். பல உயர்தர பெரிய மரங்களை வனத்தில் காரணமில்லாமல் ஒடித்து போட்டிருக்கிறான். அவ்வளவு ப்ரயத்னம் உடையவன். கைலாச சிகரம் போன்ற பெரிய உருவம் கொண்டு துந்துபி என்று ஒரு அரக்கன், ஆயிரம் யானை பலம் உடையவனாக இருந்தான். அவன் ஒரு சமயம் மகா சமுத்திரத்தைப் பார்த்து, என்னிடம் யுத்தம் செய்ய வருகிறாயா? என்று கேட்டான். வீர்யம் அதிகமானதால் துஷ்டனானான். வரங்கள் பெற்றதால் மோகம் அவன் கண்களை மறைத்திருந்தது. இவனாக போய் யுத்தம் செய்ய அழைத்தும், மகானான சமுத்திர ராஜன், தானே வந்து, விதி வசத்தால் புத்தியை இழந்த இந்த அசுரனிடம், (துந்துபியிடம்) உன்னுடன் யுத்தம் செய்ய எனக்கு சக்தியில்லை. நான் சமர்த்தன் அல்ல, யுத்தம் செய்வதில் வல்லவனே, நான் சொல்வதைக் கேள். உன் தினவு எடுக்கும் புஜங்களுக்கு ஏற்ற, யுத்தம் செய்ய தகுதி பெற்ற ஒருவனைப் பற்றிச் சொல்கிறேன். சைல ராஜன், மகாரண்யத்தில் தபஸ்வி ஜனங்களுக்கு சமமாக இருப்பவன், சங்கரனுடைய மாமனார், ஹிமவான் என்று பெயர், பல பெரிய நீர் வீழ்ச்சிகளைக் கொண்டவன், பல குகைகளையுடையவன், அவன் தான் உனக்கு மகிழ்ச்சி தரும் விதமாக எதிர்த்து நின்று போராடுவான் என்றான். சமுத்திர ராஜன் பயந்து விட்டான் என்று அந்த அசுரன், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல கிளம்பி, ஹிமய மலையை அடைந்தான். அந்த மலையின் வெண்மையான பெரிய கற்களை பூமியில் வீசியெறிந்தான். அதோடு து3ந்து3பி4 பெருங்குரலில் யுத்த முழக்கமும் செய்தான். வெண் மேகம் போன்ற ஆக்ருதியுடன், சௌம்யமாக ப்ரீதி உண்டாகும்படியான ரூபத்துடன் ஹிமவான் தான் இருந்த இடத்திலிருந்தே பதில் சொன்னான். து3ந்து3பே4 என்னைத் துன்புறுத்தாதே. நான் என்ன யுத்த தர்மத்தைக் கண்டேன். எப்பொழுதும் தபஸ்விகள் நிறைந்து என்னை அண்டியிருக்க, நான் போர் செய்வது பற்றி எதுவும் அறியாதவன். இதைக் கேட்டு துந்துபி, கோபத்தால் சிவந்த கண்களுடன் இரைந்தான். நீ யுத்தம் செய்ய சமர்த்தன் இல்லையா, என்னிடம் பயந்து அப்படி சொல்கிறாயா? எதுவானாலும், என்னிடம் யுத்தம் செய்ய தகுதி வாய்ந்த ஒருவனைச் சொல் என்றான். இதைக் கேட்டு, ஹிமவான் யோசித்து கவனமாக, வார்த்தைகளை கோர்த்து பதில் சொன்னான். இதுவரை யாரும் ஹிமவானிடம் இப்படி பேசியதில்லை. சற்று கோபத்துடன் பதில் சொன்னான். வாலி என்று இந்திரன் மகன், இந்திரனுக்கு சமமான ப்ராக்ரமம் உடையவன், வானரமானாலும், அளவில்லாத ஒப்பிலா, பராக்ரமம் உடையவன். கிஷ்கிந்தையில் வசிக்கிறான். அவன் யுத்த கலை அறிந்தவன். மகா புத்திசாலி. சமர்த்தன். அவனைப் போய் பார். நமுசி, வாஸவனுடன் த்வந்த யுத்தம் செய்தது போல நீங்கள் இருவரும் த்வந்த யுத்தம் செய்யுங்கள். நீ உன் யுத்தம் செய்யும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினால், சிக்கிரமே போய் வாலியை எதிர் கொள். சூரனான அவன் எளிதில் பணிய மாட்டான் என்று ஹிமவான் சொன்னதைக் கேட்டு துந்துபி கோபத்துடன் உடனே புறப்பட்டான். கிஷ்கிந்தையை அடைந்து மகிஷ ரூபத்துடன், கூரிய கொம்புகளுடன், பயங்கரமான உருவத்துடன், மழைக் கால மேகம் போல ஆகாயத்தில் நீர் நிறைந்து தெரிவது போல வாசலில் வந்து நின்றான். பூமி நடுங்கும்படி துந்துபி கோஷம் போலவே ஓங்கி முழக்கம் இட்டான். அருகிலிருந்த பெரிய மரங்களை முட்டித் தள்ளி, பூமியை தன் கால் குளம்பினால் குழி பறித்தபடி, கொம்புகளால் வாசல் கதவை முட்டியபடி கர்வத்துடன் யானையைப் போல தாக்கினான். அந்த:புரம் சென்றிருந்த வாலி இந்த சப்தத்தைக் கேட்டு, பொறுக்க மாட்டாத கோபத்துடன் தன் ஸ்த்ரீகளுடன் வெளியே குதித்து வந்தான். தாரா கணங்களுடன் சந்திரன் உதிப்பது போல இருந்தது. தெளிவான வார்த்தைகளால் அளந்து பேசுவதுபோல துந்துபியைக் கேட்டான். காட்டில் அலையும் வானரங்கள் அனைத்துக்கும் தலைவனான ஹரீஸ்வரன் (குரங்குகள் தலைவன்) நான், ஏன் என் நகர் வாசலில் இடித்து சத்தம் போடுகிறாய்? து3ந்து3பே | உன்னை எனக்குத் தெரியும். உயிரை காப்பாற்றிக் கொள், ஓடு, இதைக் கேட்டு துந்துபி பெரும் கோபம் கொண்டு, ஸ்த்ரீகள் மத்தியில், என்னிடம் நீ இப்படி பேசுவது சரியல்ல. என்னுடன் யுத்தம் செய். என் பலம் என்ன என்று தெரிந்து கொள்வாய் என்றான். அல்லது இன்று இரவு என் கோபத்தை பொறுத்துக் கொள்கிறேன். உதயம் ஆனவுடன், வந்து சண்டையிடு. இப்பொழுது காம போகத்தில் திளைத்திருக்கிறாய். வானர ஸத்ரீகளை அணைத்து மகிழ்ந்து (சாகா2 ம்ருகம்) கிளைகளில் தாவும் உன் கூட்டத்தினருடன், பந்து ஜனங்களுடன் கூடி குலாவி மகிழ்ந்து இரு. பின்னால் என்னிடம் யுத்தம் செய்ய வா. நான் உன் கர்வத்தை நாசம் செய்ய வந்திருக்கிறேன். எனக்கு சமமாக போரிட்டு கிஷ்கிந்தையில் புது சரித்திரம் படை. யாராக இருந்தாலும் மதம் பிடித்து அலைபவனை, நிறைய குடித்து மயங்கியவனை, எல்லாவற்றையும் இழந்து தவிக்கிறவனை- இவர்களை கொல்பவன் மிகவும் மட்டமானவன். அதனால் உன்னைப் போல மதம் கொண்டவனையும் நான் கொல்ல விரும்பவில்லை. வாலி சிரித்தபடி பதில் சொன்னான். தாரா முதலிய ஸ்த்ரீகளை உள்ளே அனுப்பி விட்டான். நான் நிறைய மதுவை அருந்தி மயங்கி கிடக்கிறேன் என்று சாக்கு போக்கு சொல்லாதே. உண்மையில் என்னிடம் உனக்கு பயம். இதோ என் முதல் அடி. பதில் அடியைக் கொடு பார்க்கலாம். இவ்வாறு சொல்லி கோபத்துடன் தந்தை இந்திரன் கொடுத்த பொன் மாலையை கழற்றி விட்டு யுத்தம் செய்ய வந்து விட்டான். மலை போல இருந்த துந்துபியை, கொம்புகளைப் பற்றி சுழற்றியபடி, வானர ராஜன் தானும் சத்தமாக போர் முழக்கம் இட்டான். வாலி அந்த துந்துபியை போட்டு புரட்டி எடுத்து விட்டான். அதன் காதுகளிலிருந்து ரத்தம் பெருகலாயிற்று. இருவருமே ஒருவரையொருவர் ஜயிக்க வேண்டுமென்ற வெறியோடு போரைத் தொடர்ந்தனர். துந்துபியும், வானரமும் மிக பயங்கரமாக சண்டையிட்டனர். வாலியின் பலமோ, இந்திரனுக்கு சமமானது. முஷ்டிகளாலும், முழங்கால்களாலும், பாதங்களாலும், கற்களாலும் இடை விடாது ஒருவரை –யொருவர் அடித்துக் கொண்டனர். வானர, அசுரர்களின் சண்டை நீடித்தது. அசுரன் பலம் குறைய ஆரம்பித்தது. வாலி வெற்றி பெரும் வாய்ப்பு கூடியது. துந்துபியை தூக்கித் தரையில் அடித்தான். உயிர் போகும் படி அடிபட்டு, மாவு போல பிசையப் பட்டான். கடைசியில் உயிரிழந்து பூமியில் தடாலென்று விழுந்தான். அந்த உடலை, வாலி தன் பலம் கொண்ட மட்டும் வீசி எறிந்தான். ஒரு யோசனை தூரம் தள்ளி அந்த உடல் விழுந்தது. வீசிய வேகத்தில் அந்த இறந்த உடலில் இருந்த ரத்த துளிகளும், நிணமும் மதங்கருடைய ஆசிரமத்தில் விழுந்தது. முனிவர் அதைக் கண்டார். ரத்தமும், மாமிசமும், நிணமுமாக, அவர் கோபம் கொண்டு யாராக இருக்கும் என்று யோசித்தார். யார் இந்த துராத்மா? இவ்வளவு பரபரப்புடன் ரத்த விளாறாக வீசியிருக்கிறான்? யாரது? எந்த முட்டாள் இப்படி ஒரு விவரம் இல்லாத அறிவில்லாத செயலை செய்தது என்று இரைந்தார்? வெளியில் வந்து பார்த்த முனிவரின் எதிரில் பர்வதாகாரமான மகிஷ உடல் உயிரிழந்து கிடந்தது. தன் தவ வலிமையால் இதை செய்தது வாலி தான் என்று தெரிந்து கொண்டார். அந்த இறந்த உடலை அவருடைய ஆசிரமத்தில் வீசியெறிந்த வாலிக்கு சாபமிட்டார். இந்த இடத்திற்கு அவன் வரக் கூடாது. வந்தால் அவன் வதம் தான் நடக்கும். இந்த நந்தவனத்தை நான் பாதுகாத்து வருகிறேன். இதில் மாமிசமும் ரத்தமுமாக, மகிஷ சரீரத்தை வீசி அசுத்தமாக்கி விட்டான். அந்த அசுர உடல், பூமியில் விழும் பொழுது மரங்களை உடைத்துக் கொண்டு விழுந்தது வேறு அவருடைய கோபத்தை அதிகரித்தது. இந்த ஆசிரமத்தின் முன் ஒரு யோஜனை தூரம் நாற்புறமும், அந்த துர்புத்தி வாலி வந்தால் நிச்சயம் அவன் உயிருடன் இருக்க மாட்டான். அவனுடைய மந்திரிகள் என் வனத்தில் வசிப்பவர்கள், அவர்களும் கேட்கட்டும். யாரும் இங்கு இருக்க கூடாது. கிளம்புங்கள். சௌகர்யம் போல வெளியேறுங்கள். யாராவது என் சொல்லை மீறி இருந்தால் அவர்களையும் சபித்து விடுவேன். என் புத்திரன் போல இந்த வனத்தை பாலித்து வந்தேன். இலை, துளிர் இவை உடைந்து நாசமாக, பழங்கள் உதிர்ந்து வீணாகி விட்டன. இன்று ஒரு நாள் அவகாசம் தருகிறேன். நாளை எந்த வானரமாவது என் கண்ணில் பட்டால், பல வருஷ காலம் அவன் சிலையாக நிற்க வேண்டி வரும். முனிவர் சொன்ன சொல்லைக் கேட்ட வானரங்கள் அந்த வனத்திலிருந்து வெளியேறின. இதைக் கண்ட வாலி விசாரித்தான். மதங்க வன வாசிகள், நீங்கள் எல்லோருமாக வெளியேறி என் அருகில் வருகிறீர்கள். காட்டில் வாழும் வானரங்கள் குசலமாகத் தானே இருக்கிறார்கள்.? என்ன விஷயம்? எனவும், அந்த வானரங்கள் தாங்கள் வெளியேறிய காரணத்தையும், முனிவரின் சாபத்தையும் வாலிக்கு தெரியப்படுத்தின. பொன் மாலையணிந்த வாலி, இதைக் கேட்டு மகரிஷியிடம் கை கூப்பி வணங்கியபடி யாசித்தான். மகரிஷி அவனை கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்தி விட்டு, தன் ஆசிரமத்தில் நுழைந்து விட்டார். சாபத்தின் காரணமாக வாலி செயலிழந்து நின்றான். அதிலிருந்து இந்த சாப பயத்தினால் ருஸ்ய மூக மலையின் அருகில் கூட வர மாட்டான். அவ்வளவு ஏன், கண்ணால் காணக் கூட பயம். அவன் வர முடியாது என்று அறிந்து நான் இந்த மகா வனத்தில், என் மந்திரிகளோடு வசிக்கிறேன். அலைந்து திரிகிறேன். துரத்தப் பட்டவனாக வருத்தத்துடன் வசிக்கிறேன். இதோ பார், இது தான் அந்த துந்துபியின் எலும்புக் கூடு. அசுரனை, தன் வீர்யத்தைக் காட்டி, தோற்கடித்தபின், வீசியெறிந்த உடலின் மீதியான அஸ்தியே மலை போல கிடக்கிறது. இதோ இந்த சால மரங்கள் ஏழு மரங்கள் கிளைகளோடு நிற்கின்றனவே, இவற்றில் ஒன்றை கைகளால் ஆட்டி, ஏழு மரங்களும் இலைகள் உதிரச் செய்வான். இது ஒரு விளையாட்டு, வாலிக்கு. இது அவனுடைய தனிப் பட்ட வீரம். அரசனே, அந்த வாலியை நீ எப்படி யுத்தம் செய்து ஜயிக்கப் போகிறாய்.? சுக்ரீவன் இப்படி சொல்லவும் சிரித்துக் கொண்டே லக்ஷ்மணன் சொன்னான். என்ன செய்தால் நீ வாலி வதம் செய்ய முடியும் என்று நம்புவாய்?, உடனே சுக்ரீவன், இதோ இந்த ஏழு சால மரங்கள். இவைகளில் ஒவ்வொன்றையும் அடிக்கடி பிளந்து இருக்கிறான். ஒரே அம்பினால் ராமன் இவைகளை அடித்தால் ராமனுடைய விக்ரமத்தில் நம்பிக்கை கொண்டு, வாலி வதம் ஆனதாகவே எடுத்துக் கொள்வேன் என்றான். மகிஷனுடைய அஸ்தி இதோ இருக்கிறது. இதை பாதத்தால் தூக்கி இரண்டு வில் வைக்கும் தூரம் தூக்கிப் போட்டால் நம்புவேன். இவ்வாறு சொல்லி, கண்கள் சிவக்க நின்றிருந்த ராமனை முஹுர்த்த நேரம் தியானம் செய்து விட்டு திரும்பவும் சொன்னான். தானும் சூரன், மற்றொரு சூரனையும் வதைத்தவன் வாலி. அவன் பலமும் பௌருஷமும் உலகறிந்தது. யுத்தத்தில் அவன் தோற்றதே இல்லை. இவனுடைய செயல்கள் எதுவும் செயற்கரியவையே, என்று தேவர்களே ஒப்புக் கொள்வர். இதையெல்லாம் எண்ணித்தான் பயந்து நான் ருஸ்ய மூக மலையை அண்டி வாழ்ந்து வருகிறேன். அந்த வெற்றி கொள்ள முடியாத, தாங்க முடியாத பராக்ரமம் உடையவனை, வானரேந்திரனை, யுத்தத்தில் கோபம் கொண்டால் யாராலும் எதிர்க்க முடியாது -அப்படிப்பட்ட வீரனை நினைத்து நான் ருஸ்ய மூக மலையிலிருந்து ஒரு அடி கூட வெளியில் வைக்க நடுங்குகிறேன். மனம் நிறைய கவலையோடும், சந்தேகத்தோடும், இந்த மகா வனத்தில் திரிந்து கொண்டிருக்கிறேன். என்னிடம் அன்பு கொண்ட ஹனுமான் முதலான மந்திரிகளுடன் இருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல மித்திரர்கள் கிடைத்துள்ளனர். நீங்கள் கிடைத்தது என் பாக்கியமே. புருஷ வ்யாக்ரா உன்னைத்தான் இமயமலையைப் போல நம்பியிருக்கிறேன். என்னுடைய துர்புத்தியுள்ள சகோதரன் பலத்தை நான் அறிவேன். பலசாலி அவன். ராகவா யுத்தத்தில் உன் பராக்ரமத்தை நான் நேரில் கண்டதில்லை,. நான் உன்னை வாலியோடு ஒப்பிட்டு பேசவில்லை. அவமானம் செய்வதாகவும் எடுத்துக் கொள்ளாதே. உங்களால் முடியாதோ என்று பயப்படவும் இல்லை. வாலியின் மிக அரிய செயல்களை கண்டவன் ஆனதால் மனதில் அதைரியம் உண்டாகிறது. ராமா, உன் சொல் பிரமாணம் தான். உன் உடல் வாகும், தைரியமும், தெரியக் கிடக்கின்றன. இவையே நீ மகா தேஜஸ்வி என்று காட்டுகின்றன. நீறு பூத்த நெருப்பாக தெரிகிறது. சுக்ரீவனின் இந்த வார்த்தையைக் கேட்டு மெல்ல நகைத்தவாறு ராமன் பதில் சொன்னான். ப்ரபு, சுக்ரீவனைப் பார்த்து உனக்கு என் விக்ரமத்தில் நம்பிக்கை வர, யுத்தத்தில் என் தகுதியை நிரூபித்துக் காட்டுகிறேன், போதுமா இவ்வாறு சொல்லி, லக்ஷ்மணன் முன் பிறந்தோன், துந்துபியின் உடலை கால் கட்டை விரலால் அனாயாசமாக பத்து யோசனை தூரம், தள்ளி விழும்படி எட்டி உதைத்தார். உலர்ந்து கிடந்த அசுரனின் உடலை கால் கட்டை விரலால், வீர்யவானான ராமன், வீசியதைக் கண்டு சுக்ரீவன் மேலும் சொன்னான். லக்ஷ்மணனுக்கு முன்னால், சுட்டெரிக்கும் சூரியன் போல இருந்த ராமனைப் பார்த்து, வானரங்களுக்கு முன்னால் நின்றபடி ராமனிடம் சொன்னான். ஈரமாக மாமிசத்துடன் இருந்த பொழுது வாலி வீசி எறிந்தான். இப்பொழுது மாமிசம் எதுவுமின்றி உலர்ந்து புல் போல ஆகி விட்டது. ராகவா, நீ இப்பொழுது சந்தோஷத்தோடு உதைத்து தள்ளியதை, வாலி மிக களைப்பாக இருந்த சமயம், மகிஷனுடன் போராடி கொன்று, இதே போல வீசி எறிந்தான். ரகு நந்தனா, இதில் உன் பலம் அதிகமா என்று தீர்மானிக்க முடியவில்லை. ஈரமானது, உலர்ந்தது இதில் இடை வெளி மிக அதிகம் ராகவா என்றான். இது தான் சந்தேகம் உங்கள் இருவரில் யார் அதிக பலசாலி என்று தெரிந்து கொள்ள. ஒரு சால மரத்தை பிளந்து காட்டு. தெளிவாக தெரிந்து விடும் உன் பலம் என்ன என்பது. உன் வில்லை தயார் செய்து கொண்டு யானை தும்பிக்கை போல் நீண்டு இருப்பதை காது வரை இழுத்து மகா சரத்தை விடு. இதோ இந்த சால மரம் தான். நீ சந்தேகமில்லாமல் உன் அம்பால் இதை பிளந்து விடுவாய். வீணாக பேச்சை வளர்த்துவானேன். எனக்கு பிரியமானதை நீ கண்டிப்பாக செய். ராஜகுமாரனே, என் மேல் ஆணை. எப்படி தேஜஸில் சூரியன் சிறந்தவனோ, மகா மலைகளில் ஹிமய மலை சிறந்ததோ, நான்கு கால்களால் நடக்கும் மிருகங்களில் சிங்கமோ, அதே போல மனிதர்களில் வீரத்தில் சிறந்தவன் நீதான் என்று முடித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வாலி ப3லாவிஷ்கரணம் என்ற பதினொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 12 (283) சுக்ரீவ ப்ரத்யய தானம் (சுக்ரீவனுக்கு நம்பிக்கை அளித்தல்)
சுக்ரீவன் இவ்வளவு விவரமாக சொன்னதைக் கேட்டு, அவனுக்கு நம்பிக்கையூட்ட, மகா தேஜஸ்வியான ராமர், தன் வில்லை கையில் எடுத்தார். பயங்கரமான ஒரு அம்பை திக்குகள் எதிரொலிக்க பெரும் சத்தத்துடன் சால மரத்தை குறி வைத்து எய்தார். பலமாக விடப்பட்ட அந்த அம்பு, மலையில் இருந்த சால மரங்களை ஏழையும் பிளந்து கொண்டு பூமியில் சென்றது. (ரஸாதலம்) சென்றது. (பூமியை பிளந்து கொண்டு வேகமாக சென்ற அம்பு திரும்ப தூணியை வந்தடைந்தது. சால மரங்களை பிளந்த வரை தான் சுக்ரீவன் கண்டான். மற்றவை அவன் கண்களுக்கு புலப்படவில்லை என்று உரையாசிரியர் திலகர் ) ஏழு சால மரங்களும் பிளக்கப் பட்டு கிடப்பதைக் கண்டு வானர ராஜன், ராமனுடைய சர வேகத்தில் ஆச்சர்யம் அடைந்தான். சாஷ்டாங்கமாக பூமியில் விழுந்து ராகவன் பாதங்களில் தலை வைத்து வணங்கினான். ராமனுடைய செயலால் மகிழ்ந்து, தர்மம் அறிந்த ராமனை எல்லா விதமான, அஸ்திரங்களை அறிந்தவனை, சூரனை, நேரில் கண்டு மகிழ்ச்சியால் திக்கு முக்காடினான். புருஷ ரிஷப, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரையும் உன் பாணங்களால், யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியும். இந்த வாலி எம்மாத்திரம் ப்ரபோ, ஏழு சால மரங்களையும் பிளந்து பூமியில் சென்ற பாணம், இதன் முன் யார் தான் எதிர்த்து நிற்க முடியும். அதுவும் யுத்த பூமியில். இன்று என் துயரம் தீர்ந்தது. மகேந்திரன், வருணன் இவர்களுக்கு சமமான உங்களை மித்திரனாக அடைந்து என் உள்ளம் அன்பு நிறைந்து விளங்குகிறது. கை கூப்பி வணங்கி வேண்டிக் கொள்கிறேன். இன்றே எனக்கு விருப்பமானதை செய்யுங்கள். இதன் பின் லக்ஷ்மணனை கலந்தாலோசித்து, சுக்ரீவனை அணைத்துக் கொண்டு, கிஷ்கிந்தா போவோம். சீக்கிரம், நீ முன்னால் போ. நீ போய் வாலியை சகோதர துரோகியை யுத்தம் செய்ய அறை கூவி அழைப்பாய் என்றார். எல்லோருமாக வேகமாக சென்று, வாலியின் ஊரில் மரங்கள் இடையில் தங்களை மறைத்துக் கொண்டு நின்றனர். சுக்ரீவன் பலமாக கத்தினான். வாலியை யுத்தம் செய்ய வரும்படி அழைத்தான். வேகமாக வந்தது மூச்சு இரைக்க, ஆகாயத்தை பிளக்கும் ஓங்கிய குரலில் போருக்கு அழைத்தான். அந்த அறை கூவலைக் கேட்டு, வாலி கோபத்துடன் குதித்துக் கொண்டு எழுந்து வந்தான். அஸ்தமன சூரியன் திரும்ப வந்தாற் போல. இதன் பின் மகா பயங்கரமான யுத்தம், வாலி, சுக்ரீவர்களுக்கிடையில் மூண்டது. ஆகாயத்தில் பயங்கரமான கிரகங்களான புதனும், அங்காரகனும் போல இருந்தனர். கைத்தலம் கல் போலவும், முஷ்டிகள் வஜ்ரம் போலவும் தாக்க, சகோதரர்கள் இருவரும் விரோதத்தின் உச்சியில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். இருவரும் உருவத்தில் ஒத்து இருந்தனர். தேவர்களோ என்று சந்தேகம் கொள்ளும்படி உடல், பலம், ஆக்ருதி இவைகளுடன் சண்டையிட்டனர். ராகவனுக்கு எது சுக்ரீவன், எது வாலி என்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. அதனால் உயிரை பறிக்கும் சரத்தை விடவில்லை. இதற்கிடையில் வாலியின் கையால் நல்ல அடி வாங்கி களைத்த சுக்ரீவன், ராமனைக் காணாமல், திரும்ப ருஸ்யமூக மலைக்கு ஓடி விட்டான். அடியால் துவண்டு, களைத்து ரத்த விளாறாக, உடல் பூரா வலியுடன், வாலி துரத்தி வர, அவன் கோபத்திலிருந்து தப்பிக்க மகா வனத்தில் நுழைந்து விட்டான். சாபத்தின் நினைவு வரவும், வாலி பயத்துடன் பிழைத்து போ என்று சொல்லி விட்டு திரும்பி விட்டான். ராகவன், சகோதரனுடன் ஹனுமான் உடன் வர, சுக்ரீவன் இருந்த வனத்துக்கே வந்து சேர்ந்தார். அங்கு வந்து சேர்ந்த ராமரை லக்ஷ்மணனுடன் சேர்த்து பார்த்து, சுக்ரீவன் வெட்கத்துடன் தீனமாக பூமியை பார்த்தவாறு சொன்னான். கூப்பிடு யுத்தத்திற்கு என்று என்னிடம் சொல்லி, உன் விக்ரமத்தையும் காட்டி, நம்பிக்கையூட்டி, என் விரோதியிடம் இப்படி அடி வாங்க வைத்து, இது என்ன காரியம்? ஏன் இப்படி செய்தாய்? அப்பொழுதே ராகவா, நீ வாலியை வதம் செய்ய மாட்டேன் என்று சொல்லியிருக்கலாம். நான் இவ்வளவு தூரம் போய் முட்டியிருக்க மாட்டேன். தீனமாக அழுது புலம்பும் சுக்ரீவனைப் பார்த்து ராமர் பதில் சொன்னார். சுக்ரீவா, கேள். கோபத்தை விடு. நான் ஏன் என் பாணத்தை விடவில்லை என்பதைச் சொல்கிறேன். நீயும் வாலியும் பரஸ்பரம் ஒரே விதமான அலங்காரம், ஆடை, பருமன், நடை என்று ஒத்து இருந்தீர்கள். யார் வாலி, யார் சுக்ரீவன் என்ற வித்யாசமே தெரியவில்லை. குரலும், பாவனையும் கூட ஒன்றாக இருக்க, விக்ரமும், வாக்யமும் கூட ஒரே போல இருக்க, கவனித்து பார்த்து கூட என்னால் வித்தியாசப் படுத்தி தெரிந்து கொள்ள முடியவில்லை.. வானரோத்தமா, உங்கள் இருவரின் உருவ ஒற்றுமை என்னை செயலிழக்கச் செய்து விட்டது. என் அம்பு சத்ருவை கொன்று விட்டுத் தான் விடும். மகா வேகமானது. உயிரைக் குடிக்கும் பயங்கரமான என் அம்பை, உங்கள் உருவ ஒற்றுமையால், யார் மேல் விடுவது என்ற குழப்பத்தால், நான் விடவில்லை. தவறி உன் மேல் பட்டால், மூலத்தையே அழித்தவனாவேன். அறியாமல் பாணம் உன்மேல் பட்டு நீ இறந்து பட்டால், சிறு பிள்ளைத் தனமாக மூடத் தனமாக இருந்திருக்கும். என் பெயரே கெட்டுப் போகும். அபயம் கொடுத்து அவனையே வதம் செய்து விட்டான் என்று ஆகும். மகா பாதகமாக பேசப்படும். நானும், லக்ஷ்மணனும், சீதையும் இப்பொழுது உன் அதீனத்தில் இருக்கிறோம். உன்னை சரண் அடைந்துள்ளோம். அதனால், வானரா, எழுந்திரு. திரும்ப யுத்தம் செய். போ. சந்தேகப் படாதே. இந்த முஹுர்த்தம், பார், வாலி யுத்தத்தில் மாண்டு விழுவதைப் பார்ப்பாய். என் ஒரு அம்பு போதும். அவனை வீழ்த்த. உனக்கு ஒரு அடையாளம் செய்து கொள். து3வந்த4 யுத்தம் செய்யும் உங்கள் இருவரில் யார் நீ என்று தெரிந்து கொள்ள முடியும். இதோ இந்த க3ஜ புஷ்பம் என்ற புஷ்பத்தைப் பறித்து லக்ஷ்மணா சுபமாக இவன் கழுத்தில் மாலையாக போடு. அதன் பின், அந்த மலைப் பிரதேசத்தில் நிறைய பூத்துக் கிடந்த புஷ்பங்களைப் பறித்து மாலையாக கட்டி, லக்ஷ்மணன் சுக்ரீவன் கழுத்தில் மாலையாக போட்டான். சந்த்யா காலத்தில் மேகம் வெண்மையான கொக்குகள் கூட்டமாக பறக்க, மாலையணிந்தது போல தெரிவது போல அந்த லக்ஷ்மீகரமான பூமாலையால் சோபையுடன் காட்சி தந்தான். ராமனின் சமாதான வார்த்தைகளால் இழந்த தைரியத்தை திரும்பப் பெற்றவனாக சுக்ரீவன், ராமனுடன், வாலி ஆண்டு வந்த கிஷ்கிந்தை செல்ல புறப்பட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவ ப்ரத்யய தா3னம் என்ற பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 13 (284) சப்தஜனாஸ்ரம ப்ரணாம: (சப்த ஜன ஆசிரமத்தை வணங்குதல்)
ருஸ்யமூகத்திலிருந்து, லக்ஷ்மணன் தமையனான ராமன், சுக்ரீவனுடன் கிஷ்கிந்தையை அடைந்தான். வாலியினால் பாலிக்கப்பட்டு வந்த பிரதேசம். யுத்தத்திற்கு தேவையான சாதனங்கள், காஞ்சன பூஷிதமான தன் பெரிய வில், சூரிய கிரணங்கள் போன்ற அம்புகள், மற்றும் பலவற்றையும் எடுத்துக் கொண்டு வழி நடந்தனர். ராக4வர்களுக்கு முன்னால் சுக்3ரீவன் கழுத்தில் பட்ட அடியையும் பொருட்படுத்தாமல் சென்றான். லக்ஷ்மணனுக்கு பின்னால் ஹனுமான், வீரர்களான நலன், நீலன் என்ற வானரங்கள், தாரன் என்ற மகாவீரன், வானர சேனைத் தலைவர்கள், சென்றனர். அவர்கள் இங்கும் அங்கும் பார்த்தபடி, புஷ்ப பாரத்தால் வணங்கி நின்ற மரங்களையும், மறுபுறம் பிரஸன்னமான நதி, அருவிகள், சாகரத்தை நோக்கி பிரவஹிக்கும் நதிகள், இவைகளை பார்த்தபடி சென்றனர். மலை குகைகளை, மலைகளை, சிறிய அருவிகள், அதிக நீர் இல்லாத ஓடைகள், மலைச் சிகரங்கள் சில பெயர் பெற்றவை, வெட்ட வெளியான சமவெளிப் பிரதேசங்கள், இவை யாவுமே கண்ணுக்கு விருந்தாக அழகாகத் தெரிந்தன. இவற்றை ரசித்தபடி சென்றனர். சில இடங்களில் தாமரைக் குளங்கள், வைடூரியம் போல விமலமான ஜலத்துடன், மலர்ந்த புஷ்பங்களுடன், மொட்டுகளுடன் சோபையோடு விளங்கின. நீர் நிறைந்த தடாகங்கள் இவைகளிலும், காரண்ட, ஸாரஸ, ஹம்ஸ, வஞ்சுள, ஜல குக்குடங்கள் எனும் நீர் வாழ் பக்ஷிகளையும் கண்டனர். இவை தவிர, சக்ரவாகங்களும், மற்றும் பல பெயர் தெரியாத பக்ஷி இனங்களும் இனிய நாதம் செய்து கொண்டிருந்ததையும் ரசித்தனர். ம்ருதுவான தானியங்கள், துளிர்கள் இவற்றையே ஆகாரமாக கொண்ட, பயமின்றி சஞ்சரிக்கும், காட்டு மான்கள், பல நின்று கொண்டும், மெதுவாக நடந்து கொண்டும் இருப்பதைக் கண்டனர். சில பக்ஷிகளுக்கு தடாகமோ, நீரோ வேண்டியிருக்கவில்லை. வெண்மையான தந்தங்களையுடைய காட்டு யானைகள் சில தனியாக சஞ்சரித்துக் கொண்டிருந்தன. பயங்கரமான உருவத்துடன், இவை கரைகளை உடைத்துக் கொண்டிருந்தன. மதம் கொண்ட இவை, மலைகளிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட மலையின் பாகமே தானோ எனும் படி பெருத்த உடல்களுடன், திரிந்தன. பூமியில் புரண்டு புழுதி படிந்த உடல்களுடன் வானரங்கள், மற்றும் பல காட்டு விலங்குகள், ஆகாயத்தில் கூட்டமாக பறக்கும் பக்ஷிகள், இவற்றைப் பார்த்துக் கொண்டே வேகமாக சென்றனர். சுக்ரீவனுடைய ஆணைக்கு கட்டுப் பட்டு உடன் வந்த வானரங்களும் வேகமாக நடந்தன. இப்படி வேகமாக நடந்து கொண்டிருந்த பொழுதே, ரகுநந்தனன், த்3ருமஷண்ட3ம் என்ற வனத்தைக் கண்டு சுக்ரீவனிடம் விசாரித்தான். இதோ மேகம் போல ஆகாயத்தில் வ்ருக்ஷ ஷண்ட3ம் (அடர்ந்த மரங்கள் கூட்டம்) தெரிகிறதே. விரிந்து பரந்த வாழைத் தோட்டம். இது என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சகே2 (நண்பனே) இந்த விவரத்தை எனக்குச் சொல்வாய். ராமன் இவ்வாறு குதூகலத்துடன் கேட்கவும், நடந்து கொண்டே சுக்ரீவன் பதில் சொன்னான். ராகவா, இந்த விஸ்தீர்ணமான ஆசிரமம் சிரமத்தை போக்கக் கூடியது. உத்யான வனங்களும், நல்ல ருசியான பழ வகைகளும் கிடைக்கும் இடம். இங்கு சப்த ஜனங்கள் என்ற முனிவர்கள் நியமத்தோடு வாழ்ந்து வந்தனர். ஜலத்தில் மூழ்கி இருந்தபடி தவம் செய்தனர். தலை கீழாக ஏழு பேரும் தவம் செய்து வந்தனர். ஏழு இரவுகளுக்கு ஒரு முறை ஆகாரம் உட்கொண்டு வந்தனர். வாயுவே ஆகாரமாக வனத்தில் வசித்தனர். பல வருஷங்களுக்குப் பிறகு எழுவரும் சரீரத்துடன் தேவலோகம் சென்றனர். இவ்வளவு பிரபாவம் மிக்க இந்த தபஸ்விகளால் மரங்கள் வரிசையாக அடர்ந்து வளர்க்கப் பட்டன. இந்திரன் முதலிய தேவர்களும், அசுரர்களும் கூட நுழைய முடியாத இந்த ஆசிரமத்தை அமைத்தனர். இந்த ஆசிரமத்தில் பக்ஷிகள் வருவதில்லை. தானே தவிர்க்கின்றன. மிருகங்களும் அப்படியே. அப்படி தெரியாமல் நுழைந்து விட்டால் திரும்புவதே இல்லை. ஆபரணங்களின் ஓசை இங்கு கேட்கிறது. பலவிதமான பேச்சு சப்தங்களும் கேட்கின்றன. துர்யம், கீதம் இவைகளின் நாதமும் கேட்கிறது. நல்ல வாசனை மிகுந்து திவ்யமாக இருக்கிறது. ராகவா, அக்னி ஹோத்ரம் முதலிய மூன்று வித அக்னியும் எரிகிறது என்பது புகை மூலம் தெரிகிறது. அவை மரங்களை சூழ்ந்து புறாவின் நிறத்தில் அடர்ந்து தெரிகின்றன. இதோ, இங்கும் மரங்களின் மேல் புகை மூட்டம் தெரிகிறது. மலைகளின் மேல் மேகம் படர்ந்து இருப்பது போல தெரிகிறது. ராகவா, அந்த தர்மாத்மாக்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குவோம். இங்கு வந்து இந்த முனிவர்களை வணங்குபவர்கள் சரீரத்தில் எந்த விதமான அசுபமும் ஏற்படாது என்று நம்பிக்கை. ராமனும், லக்ஷ்மணனுடன் அந்த மகாத்மாக்களை எண்ணி த்யானம் செய்து வணங்கினான். அந்த முனிவர்களை வணங்கி விட்டு எல்லோருமாக தொடர்ந்து நடந்தனர். சப்த ஜன ஆசிரமத்திலிருந்து வெகு தூரம் நடந்து சென்ற பின், கிஷ்கிந்தையைக் கண்டனர். வாலியின் ஆளுமைக்குட்பட்ட கிஷ்கிந்தையைக் கண்டனர். இதன் பின், ராமானுஜன் (லக்ஷ்மணன்), ராமன், வானரம் மூவரும் தங்கள் உதயசூரியன் போன்று பிரகாசமான ஆயுதங்களை தயாராக வைத்துக் கொண்டு, சுரர்கள் எனும் தேவர்களின் தலைவனான இந்திர புத்திரன், வாலி ஆண்டு வந்த நகரில், அவனை வதம் செய்ய கூடினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சப்த ஜனாஸ்ரம ப்ரணாம: என்ற பதிமூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 14 (285) சுக்ரீவ கர்ஜனம் (சுக்ரீவன் கர்ஜனை செய்தல்)
வேகமாக நடந்து சென்று அனைவரும் வாலி ஆண்டு வந்த கிஷ்கிந்தையை அடைந்தனர். அடர்ந்த வனத்தில், மரங்கள் பின்னால் தங்களை மறைத்துக் கொண்டு நின்றனர். காட்டில் நாலா பக்கமும் பார்வையை செலுத்திய சுக்ரீவன், அந்த அழகிய வனத்தை எப்பொழுதும் நேசித்து வந்தவன், தானே கோபத்தை வரவழைத்துக் கொண்டான். பெருங்குரலில் முழக்கமிட்டு, யுத்தத்திற்கான அறைகூவலைச் செய்தான். தன் பரிவாரங்கள் சூழ, ஆகாயத்தை பிளக்கும்படி ஓங்கிய குரலில் சத்தமிட்டான். காற்றின் வேகத்தால் அலைக்கழிக்கப் பட்ட மேகம் இடி இடிப்பது போல கத்தினான். இளம் சூரியன் போலவும் சிங்கம் வெறி கொண்டு நடை போடுவது போலவும் இருந்த ராமனை ஒரு முறை பார்த்து விட்டு, அரிய இந்த செயலை அவனால் தான் செய்து முடிக்க முடியும் என்று மனதில் நினைத்துக் கொண்டவனாக அவனிடம் வேண்டினான். வாலியின் ஊரில் நுழைந்து விட்டோம். பொன்னாலான தோரணங்கள் அலங்கரிக்க, கொடி, யந்திரங்கள் நிறைந்த முன் வாயில் இது. வானரங்கள் பாதுகாவலாக நிற்கின்றன. ராக4வா, வாலி வதம் செய்வதாக முன் சொன்ன பிரதிக்ஞையை நினைவு கொள்ளுங்கள். பருவ காலங்களில் முளைக்கும் செடிகள் போல உங்கள் பிரதிக்ஞையை நிறைவேற்றவும் காலம் வந்து விட்டது. சத்ருக்களை எதிர்த்து நாசம் செய்யும் சக்தி வாய்ந்த ராமன் பதில் சொன்னான். க3ஜ புஷ்ப மாலை அடையாளமாக உன் கழுத்தில் லக்ஷ்மணன் அணிவித்திருக்கிறான், ஆகாயத்தில் விபரீதமாக நக்ஷத்திர மாலையுடன் சூரியன் ஜ்வலிப்பது போல ஜ்வலிக்கிறாய். இன்று வாலியிடம் உனக்கு உள்ள பயம், விரோதம் இரண்டையும், ஒரு பாணத்தால் நான் அழிக்கிறேன். சகோதர ரூபத்தில் உள்ள உன் சத்ருவை எனக்கு காட்டு. இன்று வாலி வதம் செய்யப் பட்டு புழுதியில் விழப் போகிறான். என் கண்ணில் பட்டபின் அவன் உயிருடன் திரும்பி போனால், நீ உடனே என்னை குற்றம் சொல்லாதே. குறை, நிந்தனை சொல்லக் கூடாது. உனக்கு எதிரில் ஏழு சால மரங்களை பிளந்து காட்டினேன். அதனால் எனக்கு வாலியை வதம் செய்யக் கூடிய பலம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள். நான் இதுவரை பொய் சொன்னதில்லை. இனியும் சொல்ல மாட்டேன். என்ன கஷ்டம் வந்தாலும் இது என் கொள்கை. விட மாட்டேன். தர்ம லோபம் என்ற விஷயங்களை நான் எப்பொழுதும் சொல்லவே மாட்டேன். (தர்ம லோபம்-தர்மத்திற்கு விரோதம்) உனக்கு கொடுத்த பிரதிக்ஞையை நிறைவேற்றுவேன். கவலையை விடு. பொன் மாலையணிந்த வாலியை போருக்கு அழைப்பது வரை தான் உன் வேலை. இந்திரன் மழையைக் கொண்டு பூமியில் அரிசியை, நெல்லை விளைவிப்பது போல நீ நிமித்த மாத்திரமே. அந்த வானரன் வெளியே வரும்படி போருக்கான அறைகூவலை பலமாக செய். உலகமெல்லாம் வென்றவன், தன் பலத்தால் பெரும் புகழடைந்தவன், நீயே முன் ஒரு சமயம் அவனுடன் மோதியிருக்கிறாய். போர் செய்வது வாலிக்கும் பிடித்தமானது என்று சொல்லியிருக்கிறாய். இது போன்ற சூரர்கள் எதிரிகள் போருக்கு அழைக்கும் பொழுது மறுப்பதும் இல்லை. உடனே வருவான். தன் பலம் தெரிந்தவன். ஸ்த்ரீ ஜனங்களுக்கு முன்னால் தன் இயலாமையை காட்டிக் கொள்ள மாட்டான். ராமன் இவ்வாறு சொல்லவும், பொன்னிறமான மஞ்சள் நிறக் கண்களையுடையவன், க்ரூரமாக சத்தமிட்டான். பெருங்குரலில், ஆகாயத்தை ஊடுருவிச் செல்வது போல முழக்கமிட்டான். அந்த சப்தத்தில், பூமியில் பயந்த பசுக்கள் பயந்து ஓடின. ராஜ தோஷத்தினால் பீடிக்கப் பட்ட குலஸ்த்ரீகள் போல ஓடின. (?) போரில் அடிபட்டு, அங்க ஹீனம் ஆனவர்கள் போல மிருகங்கள் தலை தெறிக்க ஓடின. கிரகங்கள் புண்யம் தீர்ந்தவுடன் பூமியில் விழுவது போல பறவைகள் விழுந்தன. இதன் பின் இந்த மேகத்துக்குச் சமமான இடி முழக்கத்தை அவசரம் அவசரமாக சுக்ரீவன் செய்தான். சூரிய புத்திரன், சௌர்யத்தால் வளர்ந்த தேஜஸுடன், நதிகளின் அரசனான சமுத்திரத்தில், காற்றினால் தள்ளப்பட்டு, அலைகள் வரிசை பல்கி பெருகுவது போல தன் பலம் வெளிப்பட விளங்கினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்3ரீவ க3ர்ஜனம் என்ற பதினான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 15 (286) தாரா ஹிதோக்தி: (தாரை ஹிதமாக சொல்லுதல்)
அந்த:புரத்தில் இருந்த வாலி, தன் சகோதரன் அடங்காத கோபத்துடன் எழுப்பும் போருக்கான அறைகூவலைக் கேட்டான். எல்லா ஜீவராசிகளையும் நடுங்க வைக்கும் அந்த கூக்குரலைக் கேட்டு அவன் தூக்கமும், மதுவின் மயக்கமும் தெளிய, பெரும் கோபம் சூழ்ந்து கொண்டது. சட்டென்று எழுந்தான். சந்த்யா கால சூரியன் போன்ற வாலி, ஆங்காரத்துடன் எழுந்து நின்றான். அப்பொழுதுதான் கிரஹணம் பிடித்த சூரியன் போல தன் ஒளியை இழந்தவனானான். பயங்கரமான பற்களும், கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல சிவந்த கண்களும், குளத்திலிருந்து வீசி எறியப் பட்ட பத்மம் போல விளங்கினான். சுக்ரீவனின் கூப்பாட்டைக் கேட்டு பொறுக்க மாட்டாமல் குதித்து எழுந்தான். வேகமாக பாதம் வைத்து பூமியை பிளந்து விடுவது போல பூமி அதிர நடந்தான். அவனை தாரா அணைத்து, ஸ்னேகத்துடன் அன்பை வெளிப்படுத்தி, தன் பயத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல், பரபரப்பை அடக்கிக் கொண்டு, அவன் நன்மைக்காக பேசலானாள். வீரா, திடுமென நதியில் வெள்ளம் வந்தது போல வந்துள்ள இந்த கோபத்தை விடுங்கள். படுக்கையிலிருந்து எழுந்து, உடனே தயாராக போருக்கு கிளம்பும் இந்த எண்ணத்தை, கழுத்தில் அணிந்த மாலையை மறுநாள் வீசியெறிவது போல வீசுங்கள். இவனுடன் சங்க்4ராமம் (போர்) செய்வதால் ஹரிராஜனே, வீரனே, உங்களுக்கு என்ன லாபம். உங்களை எதிர்த்து நிற்கும் சத்ருக்கள் நிறைந்து விட்டதாகவோ, (இப்பொழுது அழிக்காவிட்டால்) வீணாகும் என்றோ பயம் இல்லை. பரபரப்புடன் படுக்கையை விட்டெழுந்து உடனே கிளம்புவது எனக்கு சரியாகப் படவில்லை. கேளுங்கள். இதோ சொல்கிறேன். என்ன காரணத்திற்காக தடுக்கிறேன் என்பதையும் சொல்கிறேன். ஒரு முறை அடி வாங்கியவன் திரும்பவும் போருக்கு அழைக்கிறான் என்றால், உன்னால் அடிக்கப்பட்டு பிழிந்து எடுத்தது போல சக்தியை இழந்தவன் , ஓடியவன், திக்கு திசை தெரியாமல் உயிருக்கு பயந்து நடுங்கியபடி போனவன், திரும்ப இங்கு வந்து நின்று போருக்கு அழைப்பது எனக்கு சந்தேகத்தை கிளப்புகிறது. அவனுடைய கர்வமும், முயற்சியும், இப்பொழுது கத்தும் முறையையும் பார்த்தால், சப்தமிடும் பரபரப்பும், ஏதோ அல்பமான காரணமாகத் தெரியவில்லை. ஏதோ சகாயம் கிடைத்திருக்கிறது. இங்கு வந்து நிற்கும் சுக்ரீவனுக்கு நிச்சயம் ஏதோ உதவி கிடைத்திருக்கிறது. நல்ல பலமான வீரனின் உதவி கிடைத்ததாலேயே இது போல கர்ஜிக்கிறான். பிறவியிலேயே புத்திசாலி, நிபுணன். இந்த வானரன், பரீக்ஷை செய்து பார்க்காமல் யாரையும் நம்ப மாட்டான். நம்பி காரியத்தில் இறங்க மாட்டான். தவிர, முன்பே, நான் ஒரு விஷயம் கேள்விப் பட்டேன். அங்க3த3ன் வந்து சொன்னான். நம் குமாரன் அங்க3த3ன் வனத்தில் சுற்றித் திரிந்து விட்டு வரும் பொழுது, அவனுக்கு ஆப்தமான சில ஒற்றர்கள் அங்கு நடப்பதை தெரிவித்தனர். அயோத்யா நகர ராஜ குமாரர்கள், சூரர்கள், போரில் தோல்வியே காணாதவர்கள், இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவர்கள், ராம லக்ஷ்மணர் என்று பெயர் பெற்றவர்கள், சுக்ரீவனின் இஷ்டத்தை பூர்த்தி செய்ய வந்து சேர்ந்திருக்கின்றனர். உன் சகோதரன் தான் யுத்தத்தில் கடுமையாக போரிடக் கூடியவன் என்பது தெரிந்ததே. ராமனும், யுத்தம் என்று வந்தால், எதிரியின் பலத்தை வீழ்த்தி, யுகாந்த அக்னி போல எழக் கூடியவன். அண்டியிருக்கும் சாதுக்களுக்கு நிவாஸ விருக்ஷம் போன்றவன். உதவி என்று வந்தவர்களுக்கு ஒரே கதி. கஷ்டத்தில் உள்ளவர்கள் சரணம் என்று வந்தால் காக்கக் கூடிய ஒரே வீரன். புகழ் தானே வந்து நிரம்பும் பாத்திரம். க்ஞான, விக்ஞானம் நிறைந்தவன். தந்தையினால் ஜன நடமாட்டமில்லாத வனத்துக்கு விரட்டப் பட்டவர். தாதுப் பொருட்கள் மண்டி மலையரசனுக்கு உருவம் கொடுப்பது போல குணங்களால் உருவானவன். அதனால் அந்த மகானோடு உனக்கு விரோதம் தகாது. ஜயிக்கமுடியாத ஈடு இணையில்லாத பராக்ரமம் உடைய ராமனுடன், போரில் சூரனே, உன் நன்மைக்காக சொல்கிறேன், இப்பொழுது போரை எதிர்கொண்டு போவதை நான் விரும்பவில்லை. நான் சொல்வதைக் கேட்டு, அதன்படி செய்யுங்கள். உங்கள் ஹிதம் இதில் தான் என்று நான் நம்புவதால், இவ்வளவு சொல்கிறேன். சுக்ரீவனைக் கூப்பிட்டு சீக்கிரம் யுவராஜாவாக முடி சூட்டி வையுங்கள். உங்களுக்கு இளையவன். சகோதரன். அவனுடன் என்ன விரோதம்? என்னைக் கேட்டால், ராமனுடன் நட்பு கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும் என்று தான் சொல்வேன். விரோதத்தை தூக்கியெறிந்து விட்டு சுக்ரீவனுடன் ஸ்னேகமாக இருக்கலாம். இளையவன் என்பதால் இந்த வானரமும், நீங்கள் அணைத்து, சீராட்டப் பட வேண்டியவன் தானே. அங்கு இருந்தாலும், உங்கள் எதிரில் நின்றாலும், உங்களுக்கு உறவு முறையுடையவன். உடன் பிறந்தவனுக்கு சமமான உறவினன் வேறு யார் இருக்க முடியும். தானம் அளித்து கௌரவித்து, உபசாரம் செய்து நீங்கள் இதுவரை செய்த அநீதிக்கு மாற்றுத் தேடுங்கள். இந்த விரோதத்தைக் களைந்து உங்கள் அருகில் அவன் நிற்கட்டும். சுக்3ரீவன், விபுலக்3ரீவன் (அழகிய கழுத்துடையவன், அகன்ற கழுத்துடையவன்.) உடன் பிறந்தவன் என்பது மாற்ற முடியாத உண்மை. அவனை மூத்தவனாக, தமையனாக இருந்து அரவணைத்துக் கொண்டு போவது தான் தற்சமயம், தங்களுக்கு நல்லது. வேறு வழியில்லை. என்னிடம் அன்பு இருக்குமானால், நான் எது சொன்னாலும், செய்தாலும், தங்கள் நன்மைக்கே என்று நம்பினால், இவ்வளவு வேண்டிக் கொள்ளும் என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். தயவு செய்யுங்கள். நான் புலம்புவதை கேட்டு என்னிடம் கோபம், கொள்ள வேண்டாம். கோசல ராஜ குமாரன், இந்திரனுக்கு சமமான பராக்ரமம் உடையவன். அவனுடன் விரோதம் வேண்டாம். இப்படி தாரா, வாலியிடம் எது நல்லது என்பதை விவரமாக எடுத்துரைத்தாள். விநாசகாலம் வந்து சேரும் பொழுது, யமன் வாயில் விழ இருக்கும் ஜந்து போல, இந்த உபதேசம் அவனுக்கு பிடிக்காமல் போயிற்று.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், தாரா ஹிதோக்தி என்ற பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 16 (187) வாலி சம்ஹார: (வாலி வதம்)
தாரகைகளின் நாயகனான சந்திரன் போன்ற முகத்தையுடைய தாரா சொன்னதைக் கேட்டு, வாலி அவளை பயமுறுத்தும் விதமாக பேசலானான். என் சகோதரன் என்ற பெயர் கொண்ட சத்ரு இப்படி எதிரில் நின்று கர்ஜிக்கும் பொழுது என்ன காரணம் சொல்லி பொறுத்துக் கொள்வேன்? சூரர்களாக விளங்கும், யுத்தம் என்றால் கலங்காத வீரர்களுக்கும், போரில் புற முதுகு காட்டி ஓடாத வீரர்களுக்கும், இப்படி போருக்கு அறை கூவும் பொழுது பதில் கொடுக்காமல் பொறுத்துக் கொள்வது மரணத்தை விட கொடியது. அதனால் நானும் இதை பொறுக்க மாட்டேன். தவிர போர் செய்வது எனக்கு பிடித்தமானதே. ஹீனக்3ரீவன், (விபுலக்3ரீவனுக்கு எதிர்பதம். நிறைந்த கழுத்துடையவன் என்று தாரா சொன்னதற்கு பதிலாக கழுத்தே இல்லாதவன் என்று வாலி) சுக்3ரீவன் வந்து சத்தம் போடுகிறான். நான் எப்படி சும்மா இருப்பேன். ராமன் விஷயமாக கவலைப் படாதே. அவன் தர்மம் அறிந்தவன். செய் நன்றி மறவாதவன். அவன் எப்படி பாப காரியத்தைச் செய்வான்? உன் ஸ்த்ரீ ஜனங்களுடன் திரும்ப போ. ஏன் இன்னும் என் பின்னால் வருகிறாய்? என்னிடம் உன் பாசத்தை காட்டி விட்டாய். என்னிடம் உனக்கு பக்தி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு விட்டேன். இதோ போய் சுக்ரீவனுடன் போர் செய்யப் போகிறேன். இந்த பரபரப்பை விடு. இவனுடைய உயிரை பறிக்க மாட்டேன். ஒரு தட்டு தட்டி கர்வத்தை அடக்கி விட்டு வருகிறேன். வேண்டிய அளவு, முஷ்டியாலும், மரங்களால் அடித்தும் வலி எடுக்க ஓடச் செய்து விடுவேன். நான் கர்வத்தோடு எதிரில் போய் நின்றாலே தாங்க மாட்டான் துராத்மா. தாரையே, போதும், நிறுத்து. உன் சினேகிதத்தைக் காட்ட எச்சரிக்கை செய்து விட்டாய். என் உயிர் மேல் சபதம் செய்கிறேன். என் மேல் ஆணை. இந்த உடன் பிறந்தானை போரில் வெற்றி கொண்டு வருகிறேன். அவனை அணைத்து தாரா, பிரியமாக பேசி, அழுது கொண்டே பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து ஸ்வஸ்தி வசனங்கள் சொல்லி மங்களா சாஸனம் செய்தாள். மந்திரங்கள் அறிந்தவள். கணவன் வெற்றி பெற வாழ்த்தி அனுப்பினாள். கூட வந்த பெண்களுடன் அந்த:புரம் சென்றாள். சோகம் அவளை விட்டபாடில்லை. தாரா, கூட வந்த பெண்டிருடன் தன் வீட்டிற்குள் நுழைந்த பின். வாலி மகா சர்ப்பம் போல பெருமூச்சு விட்டுக் கொண்டு நகரத்தை விட்டு வெளியேறினான். மகா கோபத்துடன் வெளியேறி நாலா புறமும் சத்ரு எங்கே என்று கண்களால் தேடினான். சுக்ரீவனைக் கண்டு கொண்டான். ஸ்ரீமானான வாலி, அசையாமல், சற்றும் கலங்காமல் அமர்ந்திருந்து, நெருப்பு போல ஜ்வலிக்கும், மஞ்சள் நிறக் கண்களுடைய சுக்ரீவனைக் கண்டான். எதிரில் இருந்த சுக்ரீவனைப் பார்த்து வாலி மிக ஆங்காரத்துடன் முஷ்டியை உயர்த்திக் கொண்டு, அவனை நோக்கி அடிக்கத் தயாராக முன்னேறிச் சென்றான். பொன் மாலையணிந்த வாலியை நோக்கி சுக்ரீவனும் தன் முஷ்டியை தூக்கியபடி அடிக்கச் சென்றான். வாலி, கோபத்தினால் சிவந்த கண்களுடன், தானே வந்து போருக்கு அழைக்கும் சுக்ரீவனைப் பார்த்துச் சொன்னான். இதோ பார். என் முஷ்டியை. விரல்களை மடக்கி நன்றாக அழுத்தி பிடித்திருக்கிறேன். நான் வேகமாக உன் முகத்தில் குத்தினால் உயிரிழந்து விடுவாய். சுக்ரீவனும் அதே போல வாலிக்கு பதில் சொன்னான். என் தலையில் முஷ்டியால் அடித்துப் பார். உன் உயிரையும் பறித்துக் கொண்டு விழும். தெரிந்து கொள், என்றான். வாலியின் கையால் அடிபட்டவன், ரத்தம் பெருக, கோபத்துடன் ஓடினான். வாலி மலை போல நின்றான். சுக்ரீவனும் ஒரு சால மரத்தை வேரோடு பிடுங்கி எடுத்துக் கொண்டு, வேகமாக வாலியை அடித்தான். வஜ்ரம் மகா கிரியை அடித்தது போல விழுந்தது. அந்த அடியின் பலத்தால் கலங்கி போன வாலி, அதிக பாரத்தினால் சாகரத்தில் செல்லும் படகு சாமான்களோடு ஆடுவது போல ஆனான். இருவரும் பயங்கரமான விக்ரமம் உடையவர்கள். சுபர்ணனுக்கு சமமான வேகம் உடையவர்கள். வளர்ந்து கோரமான சரீரமும் கொண்டு, சந்திர சூரியர்கள் ஆகாயத்தில் சண்டையிடுவது போல சண்டையிட்டனர். ஒருவரையொருவர் சத்ருவாக நினைத்தவர்கள், பிடி எங்கு கிடைக்கும் என்று தேடி பிடித்துக் கொண்டனர். வாலியின் கை ஓங்கியது. அவன் பலமும், வீர்யமும் அதிகமாக இருந்தது. சூரிய புத்திரனான சுக்ரீவன் தோற்கலானான். வாலியினால் கர்வம் அடங்கப் பெற்று, தன் உடல் வலிமை குறைய, தோல்வியைத் தழுவலானான். கோபத்துடன் தன் திறமையைக் காட்டி போரிட்டான். மரங்கள், கிளைகள், வஜ்ரம் போன்ற தன் நகங்கள், முஷ்டிகள், முழங்கால்கள், பாதங்கள், புஜங்கள் இவைகளால் மறுபடி. மறுபடி தாக்கி யுத்தத்தைத் தொடர்ந்தான். வ்ருத்திரனும், வாஸவனும் கோரமாக சண்டையிட்டது போல போர் வளர்ந்தது. இருவருடைய வானர சரீரமும் ரத்தத்தில் குளித்தது போல ஆயிற்று. மேகத்தின் இடி முழக்கம் போல இருவரும் கர்ஜித்துக் கொண்டும் ஒருவரையொருவர் பயமுறுத்திக் கொண்டும் இருந்தனர். தோற்கும் நிலையில், சுக்ரீவனை வானர அரசன் வாலி பார்த்தான். நான்கு திசைகளிலும், ராகவனைத் தேடி அவன் கண்கள் சுழலுவதைக் கண்டான். அப்பொழுது ராமன் சுக்ரீவன் களைத்து விட்டதை அறிந்து, வாலியை வதம் செய்ய எண்ணி, ஒரு அம்பை கையில் எடுத்து அதை கண்ணால் பார்த்தார். ஆல கால விஷம் போன்ற ஒரு சரத்தை (அம்பை) எடுத்து, வில்லில் பூட்டி, கால சக்ரம் போல வில்லை வளைத்து, அம்பை சாக்ஷாத் யமனே வந்தது போல எய்தார். அந்த வில்லின் கோஷத்தைக் கேட்டு பயந்து பறவைகள், பயந்து நடுங்கின. மிருகங்கள் ஓடின. காலம் முடிந்து யுகாந்தம் வந்து விட்டதோ என்று மோகம் கொண்டன. வில்லிலிருந்து அம்பை, வஜ்ரம் போல சப்தம் செய்து கொண்டு, எரியும் கல் போல இருந்த மகா பாணத்தை, ராகவன், வாலியின் மார்பில் பட விட்டான். இதனால் வீர்யம் அழிந்து மகா தேஜஸ்வியான, வானர ராஜன், அதன் வேகத்தால் தாக்கப் பட்டு, பூமியில் விழுந்தான். இந்திர த்4வஜம் வேரோடு சாய்க்கப்பட்டது போல, ஒரு பௌர்ணமியில் நிலவு விழுந்தது போல, ஆஸ்வயுஜ சமயத்தில் (மாசத்தில்) ஸ்ரீயை இழந்து நினைவு இன்றி விழுந்தான். தங்கமும், வெள்ளியும் கொண்டு அலங்கரிக்கப் பட்ட உத்தமமான சரத்தை, உத்தமமான நரனான ராமன், சத்ருவை அழிக்கும் அந்த அம்பு ஒளியை உமிழ, சிவபெருமான் வாயிலிலிருந்து புகையுடன் கிளம்பிய அக்னியைப் போல விடுவித்தான். அதனால் அடிபட்ட வாஸவன் மைந்தன், ரத்தமும், நீரும் பெருக, காற்றினால் தள்ளப் பட்ட மலரைச் சொரியும் அசோக மரத்தைப் போல நினைவின்றி பூமியில் விழுந்தான். போரில் அடி பட்டு விழுந்த இந்திர த்fவஜத்தை ஒத்திருந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வாலி சம்ஹாரோ என்ற பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 17 (287) ராமாதி4க்ஷேப: (ராமனை குறை கூறுதல்)
வேரோடு வெட்டிச் சாய்த்த மரம் போல, ராம பாணத்தால் அடிபட்ட வாலி விழுந்தான். ரணத்தில் நிலைத்து நின்று கடுமையாக யுத்தம் செய்யும் ஆற்றல் மிகுந்தவன் தான். ஆடை ஆபரணங்களோடு பூமியில் சர்வாங்கமும் பட கிடந்தான். தேவராஜனின் கொடி கயிறு இற்று அறுந்து போனால், கொடி கீழே விழுவதைப் போல விழுந்தான். வானரர்களின் கூட்டத்து தலைவனான அவன் வீழ்ந்தவுடன், ஆகாயத்தில் சந்திரன் இல்லாமல் போனால் எப்படி இருக்குமோ, அது போல பூமி ஒளி குறைந்து விளங்கியது. பூமியில் விழுந்த பின்னும் வாலியின் சரீரத்தில் லக்ஷ்மிகரமான தேஜஸ் அழியவில்லை. உயிர் போகவில்லை, பராக்ரமமும் குறையவில்லை. இந்திரன் கொடுத்த உயரிய பொன்மாலை, வஜ்ர பூஷணம், வானர ஸ்ரேஷ்டனின் உயிரையும், தேஜஸையும், லக்ஷ்மியையும் தாங்கிக் கொண்டிருந்தது. சந்த்யா நேரத்து மேகம் போல பொன் மயமான அந்த மாலையுடன் வீரனான வாலி காட்சியளித்தான். அவனுடைய மாலையும், சரீரமும், மர்மத்தை அடிக்கும் சரமும், மூன்று விதமாக மாறி லக்ஷ்மியே நிற்பது போல கிழே விழுந்தவனும் சோபையுடன் விளங்கினான். அவனுக்கு ஸ்வர்கத்துக்கு வழி காட்டுவது போல அந்த அஸ்திரம் அவன் உடலில் தைத்து இருந்தது. ராம பாணத்தால் அடிபட்டு விழுந்தவனுக்கு பரம உத்தமமான கதியைத் தருவதாக இருந்தது. நெருப்பு தன் தீக்கனல்கள் இல்லாத நிலையில் எரிவது போல, யுத்தத்தில் வீழ்ந்தவனை மரியாதையோடு மெதுவாக பார்க்கத் துவங்கிய வீரனை, புண்யம் தீர்ந்தவுடன் தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து சேர்ந்த யயாதியைப் போல, யுகத்தின் முடிவில் ஆதித்யனை பூமியில் விழச் செய்தது போல, மகேந்திரனைப் போலவே போரில் தாங்க முடியாத வீரத்தைக் காட்டும் மகேந்திரன் புத்திரனை, கீழே விழுந்த வாலியை, இன்னமும் பொன் மாலையை அணிந்தவனாக, குறுகிய மார்பும், நீண்ட கைகளும், சிவந்த வாயும், முகமும் குரங்கு கண்களும் உடையவனாக ராமனும் லக்ஷ்மணனும் கண்டனர். அருகில் சென்றனர். ராகவனையும், மகா பலசாலியான லக்ஷ்மணனையும் கண்ட வாலி, கடுமையான, ஆனால் தர்மம் நிறைந்த நியாயமான கேள்வியைக் கேட்டான். நீ பெரிய சக்ரவர்த்தியின் மகன் என்று பெயர் பெற்றவன். கண்ணுக்கு விருந்தாக இருக்கிறாய். நல்ல குலத்தில் பிறந்தவன். நன்னடத்தை உள்ளவன். தேஜஸ்வி. ஒழுக்கத்தில் சிறந்தவன். (மறைந்து நின்று) எதிரில் நிற்காமல் என்னை வதம் செய்து உனக்கு என்ன புதிய பெருமை கிடைத்து விட்டது? நான் யுத்தத்தில் மூழ்கியிருக்கும் பொழுது அம்பு கொண்டு என் மார்பில் தாக்கியிருக்கிறாய். ராமன் கருணை நிறைந்தவன். பிரஜைகளின் நன்மைக்காக பாடு படுபவன். தயையும் அனுசரணையும் மிக்கவன். நல்ல உத்ஸாகம் உடையவன். காலம் அறிந்தவன். திடமான விரதங்களை உடையவன். இப்படி உலகில் எல்லோரும் உன் புகழ் பாடுகின்றனர். அடக்கம், பொறுமை, சாந்தி, தர்மம், தன்னம்பிக்கை, சத்யம், பராக்ரமம் இவை அரசர்களுக்கான குணங்கள். ராஜன், அபராதிகளை தண்டிப்பதும் அரசன் கடமையே. இந்த குணங்களை வைத்து பார்க்கும் பொழுது நான் ஒரு பிரஜை. தாரை தடுத்தும் கேளாமல் சுக்ரீவனோடு மோத வந்தேன். நான் மற்றவனோடு சண்டையிட்டுக் கொண்டு மும்முரமாக அதே கவனத்தில் இருந்தபொழுது நீ அடித்தது தகாது. உன்னை எதிரில் காணாத போது நீ என்னை அடிப்பாய் என்று நினைக்கவில்லை. உன்னை தன் ஆத்மாவை இழந்தவனாக, தர்மத்தை த்வஜத்தில் வைத்துக் கொண்டு அதர்மமாக நடப்பவனாக, நான் எதிர் பார்க்கவில்லை. பாபம் நிறைந்தவன், புற்களால் மறைக்கப் பட்ட கிணறு போல கபடமானவன், நல்லவன் போல வேஷம் போட்டுக் கொண்டு பாபத்தை செய்பவன், உள்ளடங்கி இருக்கும் அக்னி போன்றவன், இந்த விதமாக உன்னை நான் எதிர்பார்க்கவே இல்லை. உள்ளம் பூராவும் அதர்மமே நிறைந்திருக்க அதை மறைத்து கொண்டு, நல்லவனாக வேஷம் போடுபவனாக நான் எதிர் பார்க்கவில்லை. தற்சமயம் வனத்திலும் உன் நகரத்திலும் நான் உனக்கு எந்த அபகாரமும் செய்யவில்லை. உன்னை நன்றாக அறிந்தவன் கூட இல்லை. குற்றமற்ற என்னை ஏன் கொன்றாய்? காட்டில் மட்டுமே தென்படும் வானர இனத்தைச் சேர்ந்தவன் நான். பழங்களையும், கிழங்குகளையும் ஆகாரமாக கொண்டவன். என்னை இங்கு வந்து நான் சண்டைக்கு வராத பொழுது மற்றவனோடு மும்முரமாக போர் செய்து கொண்டிருந்த சமயம், என்னை ஏன் அடித்தாய்? பெரிய சக்ரவர்த்தியின் மகன் என்று புகழ் பெற்றவன், கண்ணுக்கு இனியவனாகவும் வேறு இருக்கிறாய். நீ என்ன ஆண்மையுடையவன் தானா? ராஜன், எவன் தான் க்ஷத்திரிய குலத்தில் பிறந்து இப்படி தர்மலிங்கத்தில் மறைந்து கொண்டு (புருஷ உருவம் கொண்டு) இது போல க்ரூரமான காரியத்தை செய்ததாக கேட்டிருக்கிறாய். சந்தேகமே இல்லை. இப்படி ஒரு அதர்மவானைப் பற்றி நான் கேட்டது கூட இல்லை. ராமா, ராஜ குலத்தில் பிறந்தவன் நீ. த4ர்மவான் என்று புகழ் பெற்றவன். ப4வ்யமான உருவில் வந்து அப4வ்யமான, தகாத செயலை செய்து விட்டு ஏன் ஓடுகிறாய்? சாம, தா3னம், பொறுமை, தர்மம், சத்யம், தன்னம்பிக்கை, பராக்ரமம் இவை அரசர்களின் குணம். ராஜன், அபராதிகளை தண்டிப்பது அவன் கடமையே. நாங்கள் காட்டில் திரிபவர்கள். பழங்களையும், காய்களையும், தின்பவர்கள். இது எங்களது இயல்பு. நீ மனிதர்களின் அரசன். பூமி, பொன், வெள்ளி இவை உங்களுக்குள் விரோதம் வளர காரணமாக இருக்கலாம். இங்கு இந்த வனத்தில் உனக்கு ஆசை வர என்ன இருக்கிறது? என்னுடையது என்று எந்த பொருள் மேல் நீ லோபம் கொண்டாய்? எங்களிடம் என்ன பலன்களை எதிர்பார்க்கிறாய் ? நயமும், வினயமும், விரோதமும், அனுக்ரஹமும், ராஜாவின் செயல் முறைகள். அரசர்கள் இஷ்டம் போல் நடக்க கூடாது. நீயோ காமமே பிரதானமானவன். க்ரோதத்தை அடக்காதவன். ராஜாவின் நடத்தைக்கு புறம்பான குணங்கள் உடையவன். கையில் ஆயுதம், அதை எப்படி பயன் படுத்துவது, யார் மேல் அடிக்கலாம் என்று அதே கவனமாக உலவி வருகிறாய். உனக்கு தர்மத்தில் ஈ.டுபாடும் இல்லை. பொருளிலும் புத்தி நிலைத்து நிற்க வில்லை. உன் இந்திரியங்கள் போன வழியில் காமாதுரனாக, மனித அரசனே, குறுகி நிற்கிறாய். காகுத்ஸனே, அபராதம் செய்யாத என்னை உன் பாணங்களால் அடித்து அதர்மத்தில் உழலுகிறாய். இது போன்ற அருவருப்பான செயலை செய்து விட்டு நல்லவர்கள் மத்தியில் என்ன சொல்வாய்? ராஜாவைக் கொன்றவன், ப்ரும்ம ஹத்தி செய்தவன், பசுவை வதைத்தவன், சோரன், பிராணிகளைக் கொல்வதில் ருசியுடையவன், நாஸ்திகன், மற்றவர்களை அண்டி இருப்பவன், இவர்கள், அழிவை அடைவார்கள். காட்டிக் கொடுப்பவன், கதர்ய: – மித்திரர்களைக் கொல்பவன், குரு படுக்கையை உபயோகிப்பவன், (குரு பத்னியிடம் தவறாக நடப்பவன்) இவர்கள் பாபாத்மாக்களுக்குரிய உலகம் செல்வார்கள். சந்தேகமே இல்லை. என் தோலை உடுத்தவும் முடியாது. என்னுடைய ரோமம், எலும்பு இவை எதையும் நல்லவர்கள் உபயோகிப்பதில்லை. என் மாமிசமும் சாப்பிட ஏற்றதில்லை. அதிலும் உன் போன்ற நியமங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என் மாமிசம் தேவையும் இல்லை. ஐந்து ஐந்து நகங்களையுடைய ஜீவன்களைத்தான் பிராம்மணர்களும், க்ஷத்திரியர்களும் சாப்பிடலாம்.
(ஸல்ய: ஸ்வாவித்- முள்ளம்பன்றி: கோதா- – முதலை: சச: முயல், கூர்ம-ஆமை) என் தோலையும் எலும்பையும் விவரம் அறிந்தவர்கள் தொடக் கூட மாட்டார்கள். நானும் ஐந்து நகம் உடைய பிராணியே, ஆனாலும் என் மாமிசம் சாப்பிட ஏற்றதல்ல. அப்படி இருக்க நான் வதம் செய்யப் பட்டிருக்கிறேன். தாரா, எனக்கு நன்மையைச் சொன்னாள். தடுத்தாள். அவளை மீறி மோகத்தால் காலன் கையில் மாட்டிக் கொண்டு விட்டேன். நீ நாயகனாக இருந்தால், ராமா, இந்த பூமி ஸனாதனாக, தலைவனையுடையவனாக ஆகாது. சீலம் நிறைந்த நல்ல பெண், தூர்த்தனான பதியை அடைந்தது போல ஆகும், நேர்மையில்லாதவன், பிறப்பிலேயே அல்பம், பொய்யான அடக்கம், மனக் கட்டுப்பாடு காட்டுபவன், எப்படி தசரதனுக்கு நீ பிள்ளையாக பிறந்தாய்.? பாபி, மகான் தசரதன். அவன் சரித்திரத்தை வீணாக்கிக் கொண்டு நல்லவர்களின் தர்மத்தை மீறுபவனாக எப்படி உதித்தாய்? ராமன் என்ற யானை, தர்மத்தை தியாகம் செய்தல் என்ற அங்குசம் கொண்டு என்னை வீழ்த்தி விட்டது. இந்த செயல் அசுபம் மட்டுமல்ல, யுக்தமானதும் அல்ல. யாரானாலும் நேர்மையான புத்தியுடையவர்கள் தூற்றுவார்கள். அறிஞர்கள் நிறைந்த சபையில் என்ன சொல்வாய்? எங்களிடம் விரோதம் உள்ளவர்கள், உன்னை புகழ்ந்து பேசி உன் விக்ரமத்தை சிலாகிப்பார்கள். அபகாரம் செய்யும் மனிதனிடம், ராஜன், விக்ரமம் இருப்பதாக நான் நம்பவில்லை. என் எதிரில் நின்று நான் காண யுத்தம் செய்திருந்தால், இப்பொழுது வைவஸ்வதம் எனும் லோகத்தை பார்த்துக் கொண்டிருப்பாய். என் கையால் அடிபட்டு உயிரிழந்தவனாக. என்னை நேருக்கு நேர் சந்திக்காமல் கொன்று போட நினைத்திருக்கிறாய். கள்ளைக் குடித்து மயங்கி தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனை, பாம்பு கடித்து விட்டு போவது போல என்னை அடித்து வீழ்த்தி இருக்கிறாய். முன்னாலேயே என்னிடம் இந்த காரியத்தை முடித்து தர வேண்டியிருந்தால், நான் ஒரே நாளில் மைதிலியை உன்னிடம் கொண்டு வந்து சேர்த்திருப்பேன். சுக்ரீவனுக்கு பிரியத்தை செய்வதற்காக என்னை வதம் செய்திருக்கிறாய். இந்த ராவணனை கழுத்தில் கட்டி தூக்கிக் கொண்டு வந்திருப்பேன். யுத்தத்தில் ஜயித்துக் கொண்டு வந்திருப்பேன். சமுத்திர ஜலத்திலோ, பாதாளத்திலோ, மைதிலி எங்கு இருந்தாலும் தேடிக் கொண்டு வந்து சேர்த்திருப்பேன். உன் ஆணைப்படி ஸ்வேதாவை அஸ்வதரீ கொண்டு வந்தது போல. நான் சாதாரணமாக ஸ்வர்கம் சென்றிருந்தால், சுஜ்ரீவன் ராஜ்யத்தை அடைந்தால் அது உசிதம், சரி எனலாம். இப்பொழுது என்னை அதர்மமாக கொன்று விட்டு அவன் ராஜ்யத்தில் முடி சூட்டிக் கொள்ளக் கூடாது. தகாது. இது போல ஜனங்கள் விதியினால் நியமிக்கப் படுகிறார்கள். உன்னால் முடிந்தால், சக்தியிருந்தால் எனக்கு சரியான பதிலை யோசி. இவ்வாறு சொல்லி முகம் வாடி, சரத்தினால் அடிபட்ட வலி முகத்தில் தெரிய, சூரியனைப் போல இருந்த ராமனை ஏறிட்டுப் பார்த்து, பேச்சை நிறுத்தி மௌனமாக இருந்தான், அமர ராஜனான இந்திரனின் மகன் வாலி.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், ராமாதி4க்ஷேபோ என்ற பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 18 (289) வாலி வத4 சமர்த்தனம் (வாலி வதத்தை நியாயப் படுத்துதல்)
ராமனால் அடிக்கப்பட்டு, நினைவு மழுங்கி கொண்டிருந்த போதும், கோபத்தோடு கடுமையாக விமரிசனம் செய்த வாலியை, தர்மார்த்தம் நிறைந்த பொருள் பொதிந்த பதிலைச் சொல்ல ராமர் தயாரானார். சூரியன் ஒளியிழந்தானோ, தண்ணீரை மழையாக பொழிந்து விட்ட கார் மேகமோ, அணைந்து போன நெருப்போ எனும்படி பேசிய வாலி வாய் மூடி மௌனியாக ஆனான். அந்த வானர ராஜனை பார்த்து, குற்றம் சாட்டப் பட்டவனான ராமன் பதிலுரைத்தான். உத்தமமான தர்மார்த்தங்கள் அறிந்தவன், வானர ராஜனுக்கும் உரைக்கும்படி தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்தான். லௌகீகமாக தர்மம், அர்த்தம், காமம், காலம் இவைகளை சரியாக தெரிந்து கொள்ளாமல், சிறு பிள்ளைத் தனமாக என்னை ஏன் நிந்திக்கிறாய்? புத்தி நிறைந்த வயது முதிர்ந்த ஆசார்யர்களை விசாரிக்காமல், அவர்கள் சம்மதம் இன்றி, சௌம்யனே, வானர இயல்பான சபல புத்தியினால் என்னை குற்றம் சாட்ட விரும்புகிறாய். இந்த பூமி இக்ஷ்வாகு குல அரசர்கள் ஆளுகைக்கு உட்பட்டது. மலைகளும், வனம், காடுகளும் அடங்கிய பூமி. இங்குள்ள மிருகங்கள், பக்ஷிகள், மனுஷ்யர்களை அணைக்கவும், அடிக்கவும், தண்டிக்கவும் இக்ஷ்வாகு வம்சத்தின் அரசர்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த நாட்டை சத்யவான், நேர்மையானவன் எனும் ப4ரதன் ஆளுகிறான். நயம், வினயம், இவை இரண்டும் தவிர சத்யமும் எந்த அரசனிடம் நிலைத்து நிற்கிறதோ, இவற்றுடன் விக்ரமமும் உள்ள அந்த அரசன், ப4ரதன், தேச காலங்களை அறிந்தவன். அவன் த4ர்மாதேசம் (கட்டளை) செய்திருக்கிறான். அதை நிறைவேற்றுவது என் போல் உள்ளவர்கள் கடமை. நானும் மற்ற அரசர்களும் தர்மம் நிலைத்து நிற்கும்படி அவன் கட்டளையை ஏற்று நடமாடிக் கொண்டிருக்கிறோம். பூமி முழுவதும் நடப்போம். அந்த பரதன் தர்மமே உருவாக பூமியை ஆளும் பொழுது தர்ம விரோதமான செயலை யார் செய்ய முடியும், செய்யத் துணிவார்கள். அதனால் நாங்கள் எங்கள் தர்மத்தில் நிலையான புத்தி உடையவர்கள். அனுசரித்து நடப்பவர்கள். பரதனின் கட்டளைப் படி, விதி முறைப்படி தர்மத்தை ஏற்று நடக்கிறோம். நீயோ கலப்படமான தர்மத்தை அனுஷ்டிப்பவன். நிந்திக்கும்படியான செயலை செய்தவன். காம தந்திரம் தான் உனக்கு பிரதானமாக ஆகி விட்டது. ராஜா என்ற கோட்டில் நிற்காமல் அலைகிறாய். மூத்த சகோதரன் தந்தைக்கு சமமானவன். வித்தையைத் தரும் ஆசிரியனும் தந்தைக்கு சமமானவனே. அதனால் பிறப்பினால் தந்தையையும் சேர்த்து மூன்று பேர் தந்தை ஸ்தானம் தந்து கௌரவிக்கப் பட வேண்டியவர்கள். இளையவனை தன் மகனாக பார்க்க வேண்டும். பாவிக்க வேண்டும். சிஷ்யனும் நல்ல குணமுடையவன் மகனாவான். தன் மகனோடு சேர்த்து இந்த மூவரும் புத்திரன் என்ற வாத்ஸல்யத்தோடு நோக்க வேண்டியவர்கள். இதுவும் தர்மமே. நல்லவர்கள் அனுஷ்டிக்கும் தர்ம மார்கம் சூக்ஷ்மமானது. எளிதில் புரிந்து கொள்ள முடியாதது. வானர ராஜனே, மரங்களில் தாவி குதித்து ஓடும் நீ எப்படி அறிவாய்? எல்லா ஜீவன்களின் ஹ்ருதயத்திலும் வியாபித்து இருக்கும் ஆத்மா, சுபமோ, அசுபமோ அறியும். இயற்கையிலேயே சபலம் உள்ளவன், கூட இருப்பவர்களும் அதே போல சபல சித்தம் உடைய வானரங்களே. இவர்களுடன் நீ எப்படி மேலான அறிவைப் பெறுவாய். பிறவியிலேயே குருடன், மற்றொரு பிறவிக் குருடனிடம் கேட்டு புதியதாக என்ன தெரிந்து கொள்ள முடியும்? இதை இன்னும் தெளிவாகச் சொல்கிறேன். வெறும் கோபம் மட்டும் வைத்துக் கொண்டு என்னை நிந்திக்க கூடாது. எதனால் நான் உன்னை அடித்தேன் என்பதைச் சொல்கிறேன் கேள். சகோதரன் மனைவியை அபகரித்து தர்மத்தை விட்டு அவளை அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். சுக்ரீவன் மனைவி ருமா உனக்கு மருமகள் போன்றவள். அவளிடம் நீ நியாயமின்றி உன் காமத்தை பூர்த்தி செய்து கொள்ள விழைகிறாய். இது தர்ம விரோதம் என்பதால் தண்டனை அளிக்கப் பட்டது. இது போல தர்ம விரோதமாக நடந்து கொள்ளும் காமாதுரர்களுக்கு தண்டனை தவிர வேறு எந்த விதத்தில் கட்டுப் பாட்டை விதிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவன் நான். இது போல பாப காரியத்தை பொறுத்துக் கொள்ள மாட்டேன். கூட பிறந்த சகோதரியையும், இளைய சகோதரனின் மனைவியையும், மனிதன் காமம் நிறைந்த எண்ணத்தோடு நடந்து கொள்வானானால், சாஸ்திரங்களில் அவனுக்கு தண்டனை வதம் தான் என்று சொல்லப் பட்டிருக்கிறது. பரதன் பூமியை ஆளும் சக்ரவர்த்தி. நாங்கள் அவன் கட்டளையை நிறை வேற்றி வருபவர்கள். நீ தர்மத்தை மீறியவன். எப்படி உன்னை உதாசீனப் படுத்த முடியும்? குரு தர்மத்தை மீறியவனை, காம வழியில் இது போல அத்து மீறி செல்பவர்களை பரதன் அடக்குவதில் முனைந்து இருப்பவன். அந்த பரதன் அறிவு மிகுந்தவன், தர்மத்தோடு ராஜ்யத்தை ஆண்டு வருபவன். நாங்களோ பரதன் கட்டளையை சிரமேற் கொண்டு அதுவே விதி என்று நடப்பவர்கள். வானர ராஜனே, உன்னைப் போல சட்டத்தை, கட்டுப்பாட்டை மீறுபவர்களை தண்டிக்கவே நியமிக்கப் பட்டிருக்கிறோம். சுக்ரீவனுடன் நான் நட்பு கொண்டிருக்கிறேன், லக்ஷ்மணனும் அப்படியே. தாரம், ராஜ்யம் இரண்டையும் இழந்து நிற்பவன், என்னிடம் ஈ.டுபாடு கொண்டுள்ளான். அக்னி சாக்ஷியாக நான் பிரதிக்ஞை செய்து கொடுத்து விட்டேன். என் போன்றவர்கள், ஒரு பிரதிக்ஞை செய்து கொடுத்து விட்டு எப்படி மீறுவோம். அதனால் இது போன்ற தர்ம பரமான காரணங்களால் தான் உன்னை அடித்தேன். இது சாஸனம் என்று ஏற்றுக் கொள். உன்னை அடக்கியது தர்ம சம்மதமே என்று புரிந்து கொள். நண்பன் என்பவனுக்கு உபகாரம் செய்வதும் தர்மம். நீயும் அதையே செய்திருக்கலாம். ஏனெனில் நீயும் தர்ம வழியில் நாட்டை ஆளுவதாக சொல்கிறாய். மனு சொன்ன இரண்டு ஸ்லோகங்களைச் சொல்கிறேன், கேள். இது தான் அறிஞர்கள் ஏற்றுக் கொண்டது, நாங்களும் அனுசரிக்கிறோம். மனிதர்கள் பாபம் செய்தால், அரசனின் தண்டனையை அனுபவிப்பதால், பாபம் நீங்கி, மற்றவர்களைப் போலவே நல்ல காரியங்களை செய்தவர்களுக்கு இணையான ஸ்வர்கத்தை அடைகிறார்கள். திருடன் தண்டனையை அனுபவித்து விட்டால், விடு பட்டபின், திருட்டு குற்றத்தின் பயனை அனுபவித்துக் கழித்து விடுகிறான். பாபியை தண்டிக்காமல் விட்ட அரசன், அந்த பாப பலனை அனுபவிக்கிறான். என் முன்னோர்களுள் ஒருவரான மாந்தாதா, என்பவர், ஸ்ரமணன் (அடி ஆள்) செய்த பாபத்தை அனுபவித்தார். அந்த ஸ்ரமணன், இப்பொழுது நீ செய்த பாபத்தை தான் செய்தான். மற்றும் பல அரசர்கள், கவனக் குறைவால் நிகழ்ந்த பிழைகளுக்கு பிராயச் சித்தம் செய்து தங்கள் மேல் உண்டான களங்கத்தை நீக்கிக் கொண்டுள்ளனர். வானர சார்தூலா, அதனால் பச்சாதாப் பட வேண்டாம். இந்த செயல் தர்மத்தை நிலை நிறுத்தவே செய்யப் பட்டது. நாங்களும் எங்கள் வசத்தில் இல்லை. தர்மம் எங்கள் கைகளை கட்டி விடுகிறது. மற்றொரு காரணமும் கேள், வானர ராஜனே, இதைக் கேட்ட பின் நீ சற்றும் கோபம் கொள்ளக் கூடாது. இதில் எனக்கு மனஸ்தாபமோ, கோபமோ இல்லை. வலை வீசியும், கயிற்றால் கட்டியும், பள்ளம் வெட்டி மறைத்தும், பலவிதமாக மனிதர்கள், மறைந்து இருந்தும், சில சமயம் நேரெதிரில் நின்றும் மிருகங்களைப் பிடிப்பது உண்டு. ஓடும் மிருகங்களையோ, பயப்படும் நிலையில் நம்பி அண்டியிருக்கும் நிலையிலோ, தவறு செய்ததாலோ, செய்யாமலோ, மாமிசம் வேண்டி ஜனங்கள் மிருகங்களை அடிப்பது உண்டு. இதில் தோஷம் இல்லை. தர்மத்தில் சிறந்த ராஜ ரிஷிகள், கூட வேட்டையாடச் செல்வர். அதனால் நீ யுத்தத்தில் என் பாணத்தால் வீழ்த்தப் பட்டாய் என்றால், அது பெரிய குற்றமாகாது. கிளைக்கு கிளை தாவும் மிருகம் தானே நீ, உனக்கு சமமாக யுத்தம் செய்தோ, செய்யாமலோ, நான் வதைப்பதில் தவறில்லை. அரசர்கள் துர்லபமான தர்மத்தையும் தர வேண்டியவர்கள். வானர ஸ்ரேஷ்டனே, நடை முறையில் இருக்கும் தர்மத்தை சுபமானதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்.? தேவர்கள் மனித ரூபத்தில் இந்த பூமியில் நடமாடுகிறார்கள். நீ தர்மத்தை அறியாமல், வெறும் கோபம் மட்டும் கொண்டு நிந்திக்கிறாய். தந்தை பாட்டனார் வழியில் நான் தர்மத்தை அனுசரித்து நடப்பதை குற்றம் சொல்கிறாய். இவ்வாறு ராகவன் சொல்லவும், மிகுந்த உடல் வேதனையிலும், ராகவனைக் குறை கூறவில்லை. நியாயத்தை உணர்ந்தவனாக, கை கூப்பி ராகவனை வேண்டிக் கொண்டான். இப்பொழுது நீ சொன்னது சரியே. அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். சந்தேகமேயில்லை. உயர்ந்த நிலையில் இருந்து நீ பேசும் பொழுது, கீழ்த்தரமான, அல்ப ஜீவனான நான் எதுவும் பதில் சொல்வது உசிதமல்ல. முடியவும் முடியாது. முன்னால் நான் என் அறியாமையால், கடுமையாக விமரிசனம் செய்ததை பொருட்படுத்தாதே. ராகவா, நீ பொருள் உணர்ந்த தீர்க தரிசனம் உடையவன். பிரஜைகளின் நன்மையில் நாட்டம் உடையவன். உன் புத்தி எப்பொழுதும் தெளிவாக இருக்கிறது. கார்ய காரணங்கள், அதன் பலன் இவைகளை நீ அறிவாய். என்னையும் தர்மத்தை விட்டு நகர்ந்து போனதாலோ, முன்னோர்கள் வழியை அத்து மீறியதாலோ தள்ளி, விடாமல் தர்மம் அறிந்தவனே, காப்பாற்றுவாய். என்னைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. தாரையைப் பற்றியும் எனக்கு கவலையும் இல்லை. பந்துக்களைப் பற்றியும் நான் வருந்தவில்லை. என் மகன் குணவான். கனகாங்க3த3ன், பொன்னிறமான அந்த அங்க3த3னைப் பற்றி தான் கவலைப் படுகிறேன். குழந்தையிலிருந்தே நான் அவனை மிக செல்லமாக வளர்த்து வந்திருக்கிறேன். என்னைக் காணாமல் அவன் தான் வற்றிய தடாகம் போல வாடி விடுவான். என் ஒரே பிரியமான மகன். பா3லன். இன்னும் விவரம், அறியாதவன். அவனை நல்ல வழியில் காப்பாற்றி முன்னுக்கு கொண்டு வருவது உன் பொறுப்பு. சுக்ரீவனிடத்திலும், அங்கதனிடத்திலும் நல்ல எண்ணம் கொள். நீ தான் காரியங்களை செய்ய வேண்டியது, செய்யக் கூடாது என்று பிரித்து இவர்களுக்கு ஆணயிடவும் வேண்டும், பாதுகாத்து அரவணைக்கவும் வேண்டும். நரபதியே, லக்ஷ்மணனிடத்திலும், பரதனிடமும் நீ வைத்துள்ள அக்கறையை, சுக்ரீவனிடமும், அங்கதனிடமும் காட்ட வேண்டும். என்னிடம் உள்ள த்வேஷம் காரணமாக, சுக்ரீவன் தாரையிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள். அவளிடம் த்வேஷம் (விரோதம்) பாராட்டாமல் இருக்கச் செய். உன் அனுக்ரஹத்தால், அவன் ராஜ்யத்தை அடையட்டும். உன் வசத்தில், நீ சொல்லும் விதமாக பணிந்து நடந்து வந்தால் தேவலோகத்தையே சம்பாதிக்கலாம். பூமியை ஆளுவது எம்மாத்திரம். தாரை தடுத்ததையும் கேளாமல் உன் கையால் வதம் செய்யப் பட வேண்டும் என்று விரும்பியது போல வந்தேன். சுக்ரீவன், என் சகோதரன், அவனிடம் த்வந்த யுத்தம் செய்தேன். இவ்வாறு ராமனிடம் சொல்லி, வணங்கி வாலி, மேலும் எதுவும் பேசாமல் வாயடைத்து நின்றான். தெளிவான அறிவும், தரிசனமும் பெற்று விட்ட வாலியைப் பார்த்து, சமாதானமாக ராமர் பேசினார். அமைதியாக, பொருள் பொதிந்த வார்த்தைகளால், தர்ம தத்வம் அவன் புரிந்து கொள்ளும் படி, தெளிவாக சொன்னார். வானர குலத்தோனே, நீங்கள் வருந்த வேண்டாம். மரத்துக்கு மரம் தாவும் இயல்பு உங்கள் இனத்தவருக்கு உண்டு. அது இயற்கையே. எங்களைப் பற்றியும் கவலை வேண்டாம். நாங்கள் விசேஷமான தர்ம விதியை அனுசரித்து செல்ல இருக்கிறோம். தண்டிக்கப் பட வேண்டியவன் தண்டனை பெறச் செய்வதும், தண்டிக்க வேண்டியவன் தண்டத்தை எடுப்பதுமான இந்த செயல், காரண காரிய சித்தியைப் பொறுத்து இரண்டும் அமையும். அதனால் கவலைப் பட வேண்டாம். என் பாணத்தால், தண்ட சம்யோகத்தால் (தண்டம் உடலில் பட்டதால்) கல்மஷம் நீங்கப் பெற்றவராக ஆகி விட்டீர்கள். (என் கையால் அடி பட்டதே உங்கள் நன்மைக்கே). உங்கள் இயல்பான நிலையை அடைந்து தர்மத்துக்கு அனுசரணையாக நடந்து வருவீர்களாக. இந்த சோகத்தை விடுங்கள். சோகமும், மோகமும், பயமும், வானர வீரனே, இனி உங்களை வருத்தக் கூடாது. மனதை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் அங்கதன் எப்படி இருக்கிறானோ, அதே போல என்னிடமும் இருப்பான். மதுரமாக மகாத்மாவான ராமன் சொல்லவும், தன்னை ஒரு முகமாக்கிக் கொண்டு, தெளிவாக ரணத்தில் தன்னை அடித்தவனான ராமனிடம், முதலில் தோன்றிய க்ரோதமும், வெறுப்பும் சற்றுமின்றி, வேண்டினான். அடி பட்ட வேதனை மிகுந்து இருந்தாலும், அதை லட்சியம் செய்யாமல், ப்ரபோ, அறியாமையினால் உங்களை தூஷித்தேன். மகேந்திரனுக்கு சமமான ப்ராக்ரமம் உடையவரே, சிறந்த பலசாலி நீங்கள். என்னிடம் தயை செய்யுங்கள். என்னை மன்னித்து விடுங்கள். மனிதருள் மாணிக்கமாக விளங்குபவர் நீங்கள் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், வாலி வத சமர்த்தனம் என்ற பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 19 (290) தாராக3மனம் (தாரை வருதல்)
ராம பாணத்தால் வீழ்த்தப்பட்டு, தரையில் கிடந்த வாலி, ராமனின் நியாயமான வாதங்களைக் கேட்டு பதிலேதும் சொல்லாமல் பேசாமல் இருந்தான். ராம பாணம் பட்டதால் உயிர் பிரியும் நிலையில் இருந்தான். அதற்கு முன், சுக்ரீவனோடு கை கலந்ததில் கற்களால் பட்டதும், முழங்கால்கள் குத்தி கிழிந்ததுமாக சரீரம் முழுவதும் ரணம். வாலியின் மனைவி இதை கேள்விப் பட்டாள். ராம பாணம் பட்டு வீழ்ந்ததை அறிந்தாள். மகனோடு இருந்தபொழுது இந்த விவரம் காதில் விழவும், குகையிலிருந்து புறப்பட்ட பெண் மான் போல வேகமாக கிளம்பிச் சென்றாள். அவர்களிடையில் பலசாலிகள் என்று பெயர் பெற்ற அங்கதன் முதலானோர் கூட ராம பாணத்தைக் கண்டு பயந்து ஓடி விட்டனர். பயந்து ஓடும் அவர்களையும் பார்த்தாள், வானரங்கள் வேக வேகமாக ஓடி விழுவதைப் பார்த்தாள். சேனையிலிருந்து, தலைவன் அடிபட்டு விழுந்தவுடன், மற்ற வீரர்கள் ஓடுவது போல ஓடின. தன் துக்கத்தை அடக்கிக் கொண்டு சிதறி ஓடும் அந்த வீரர்களை ஒன்று சேர்த்து, பிரயாசையுடன் அவர்களை ஓடாமல் தடுத்து நிறுத்தினாள். உயிருக்கு பயந்து ஓடுபவர்களை, சோர்ந்து போனவர்களை, அம்புகளால் கட்டி வைப்பது போல கூட்டினாள். வானரர்களே, நீங்கள் உங்கள் அரசனுக்கு பாதுகாவலாக செயல் படுபவர்கள். அரசனை விட்டு, நீங்கள் பயந்து ஓடி வரலாமா? ஏன் இப்படி தவறான வழியில் செல்கிறீர்கள்? ராஜ்யத்தின் காரணமாக, சகோதரன், தன் தமையனையே ரௌத்ரமாக அடித்து வீழ்த்தினானா? அல்லது வெகு தூரம் விரைந்து செல்லும் ராம பாணம் பட்டு வீழ்ந்தானா? என்று வானர ராணி கேட்கவும், வானரங்கள் விவரமாக சொன்னார்கள். மகன் உயிருடன் இருக்கும் பொழுது திரும்பி போ. உன் மகனைக் காப்பாற்றிக் கொள். யமன் தான் ராம ரூபத்தில் வந்து நிற்கிறான். வஜ்ரம் போன்ற பாணங்களால் வாலியையே வீழ்த்தி விட்டான். மரங்கள் உடைந்து விழுகின்றன. பெரிய பெரிய மலை பாறைகளும் உடைந்தன. இந்திரனுக்கு சமமான வாலியே அடிபட்டு விழுந்த பின், மற்ற வானரங்கள் எம்மாத்திரம். எல்லோரும் ஓடி விட்டோம். நமது சேனை முழுவதும் சிதறி விட்டது. நகர வாயிலை மூடுங்கள். காவலை கெட்டிப் படுத்துங்கள். உடனே அங்கதனுக்கு முடி சூட்டி அரசனாக்குங்கள். நடந்து வந்து வாலி புத்திரனை நாங்கள் காப்போம். இந்த இடம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், மற்ற வானரங்களோடு வேறு பாதுகாப்பான குகைக்குச் சென்று விடுவோம். மனைவியை இழந்த, மனைவியுடன் என்று பல வானரங்கள் இருக்கிறோம். லோபிகளான, பிரிந்து போன நம் இனத்தாரிடமே நமக்கு அதிக பயம். தோன்றியபடி வானரங்கள் தலைக்குத் தலை இப்படி பேசிக் கொண்டே போகவும், தாரா, சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள். தன் நிலைக்கு ஏற்ப, புத்திரனால் எனக்கு என்ன ஆக வேண்டும், ராஜ்யம் தான் எனக்கு எதற்கு? நானே இருந்து என்ன செய்யப் போகிறேன். மகா பாக்யசாலியான வாலி, வானரங்களில் சிம்மம் போல இருந்தவன், அவனே அழிந்தபின், என் கணவரை இழந்த பின், எனக்கு மீதி என்ன இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன? அங்கு நானும் நடந்தே செல்கிறேன். ராம பாணத்தால் அடிபட்டு வானர ராஜன் கிடக்கும் இடமே செல்கிறேன் என்று சொல்லிக் கொண்டே பெரிதாக அழுது கொண்டே ஓடினாள். தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு அழுதாள். அருகில் சென்று விழுந்து கிடந்த கணவனைக் கண்டாள். அரக்கர்களைக் கூட போரில் வென்றவன், புற முதுகு காட்டி அறியாதவன், மலையரசனைக் கூட அசைக்கும் வல்லமை உடையவன், வாஸவனின் வஜ்ரம் போன்றவன், பெருங்காற்றிலும் அசையாது நிற்பவன், பெரும் மேகம் போல கர்ஜிப்பவன், இந்திரனுக்கு சமமான பலசாலி, மழை பெய்து ஓய்ந்த மேகம் போன்றவன், பயங்கரமாக போர் செய்தாலும் தானும் அவர்களுக்கு சமமாக ஆடுபவன், சூரன், மற்றொரு சூரனால் வீழ்த்தப் பட்டான். சார்தூலம் எனும் புலி, மாமிசத்திற்காக சிங்கத்தை வீழ்த்தியது போல. உலகம் முழுவதும் கொடிகளுடனும், யாக சாலைகளுடனும் பெருமையாக வாழ்ந்தான். சுபர்ணன், நாகத்தின் காரணமாக சைத்ய வனம் எனும் தேவ லோக நந்த வனத்தை சின்னா பின்னமாக்கியது போல. உத்தமமான வில்லை இறக்கி வைத்து நிற்கும் ராமனைப் பார்த்தாள். அருகில் ராமானுஜன், அதன் பின் தன் கணவனின் சகோதரனான சுக்ரீவனையும் கண்டாள். இவைகளைக் கடந்து தன் கணவன் வீழ்ந்து கிடந்த இடம் சென்றாள். மிக்க வேதனையுடன் பூமியில் விழுந்து புரண்டாள். தூங்கி விட்டாளோ எனும்படி, சற்று நேரம் அசைவின்றி கிடந்தவள், திடுமென எழுந்து ஆர்ய புத்ர என்று அரற்றினாள். மனைவியான அவள், ம்ருத்யுவின் பாசத்தால் கட்டப் பட்டவன் போல கிடந்த வாலியைப் பார்த்து அழுதாள். அங்கு வந்த அங்கதனையும் பார்த்து, சுக்ரீவன் பெரும் மனக் கிலேசம் அடைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், தாராக3மனம் என்ற பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 20 (291) தாரா விலாப: (தாரையின் புலம்பல்)
தாரைகளின் நாயகனான சந்திரன் போன்ற முகத்தையுடைய தாரா, தன் கணவன் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு அவனை அருகில் சென்று அணைத்துக் கொண்டாள். அந்தகன் போல வந்து தன் கணவனை அடித்து வீழ்த்திய ராமபாணம் யானைக்கு சமமான அவனது பெருத்த சரீரத்தை துளைத்துச் சென்று இருப்பதைப் பார்த்து கதறினாள். வேரோடு பிடுங்கப்பட்ட மரம் போல ஆனாள். இந்திரனுக்கு சமமானவன் என்று புகழப் பெற்ற வாலி வீழ்ந்ததை பொறுக்க மாட்டாமல் அழுதாள். வானர ராஜனே, மரத்துக்கு மரம் தாவி குதித்து ஓடும் வானரங்கள் தலைவனே, யுத்தத்தில் பயங்கரமாக வீரம் காட்டுவாய் என்பார்களே. ஏன் இந்த அபலையைப் பார்த்து இன்று பேசாமல் இருக்கிறாய். ஹரி சார்தூ3லா, எழுந்திரு. நல்ல படுக்கையில் போய் படு. உன் போன்ற அரசனுக்கு இப்படி தரையில் விழுந்து கிடப்பது அழகல்ல. உனக்கு வசுதா4 (பூமி மிகவும் பிரியமானவள் என்பது தெரிந்ததே. ஏனெனில் நீ வசுதா4தி4பன். (பூமியின் நாயகன்) உயிர் போனாலும் இந்த பூமியை விட மாட்டேன் என்பது போல அணைத்துக் கொண்டிருக்கிறாய். நிச்சயமாக உனக்காக ஸ்வர்க மார்கத்தில் கிஷ்கிந்தையைப் போலவே மற்றொரு இடம் தயாராக இருக்கிறது. அதனால் தான் எங்களுடன் வெகுகாலமாக, மது நிறைந்த பூக்களுடன் கூடிய வனங்களில் விளையாடி மகிழ்ந்ததை மறந்து அல்லது அலுத்து சலித்து விட்டாய் போலும். நான் தான் சோக சாகரத்தில் மூழ்கி ஆனந்தம் இன்றி, எதிர்காலம் பற்றி எந்த நம்பிக்கையும் இன்றி தவிக்கிறேன். மகா யூத2பன் பெரிய சேனைத் தலைவனான நீ இன்றி, நீ ஐந்தாவது நிலையை அடைந்த பின் நாங்கள் என்ன ஆவோம். (குழந்தை பருவம், பால்யம், இளமை, முதுமை-4 இவைகளுக்கு அடுத்த நிலை-மரணம்). நீ விழுந்து கிடப்பதைப் பார்த்தும் என் ஹ்ருதயம் ஆயிரக் கணக்காக சிதறி விழவில்லையே. கல் மனம் என்று நினைக்கிறேன். சுக்ரீவன் மனைவியை அபகரித்தாய். அவனையும் துரத்தினாய். ஆனால் அவன் மூலமாகவே உனக்கு முடிவும் வந்து விட்டது, பார். நன்மையை நான் சொல்லியும் ஏற்காமல் என்னை நிந்தித்தாய். அலட்சியம் செய்தாய். மோகம் உன் கண்களை மறைத்தது. உன் நன்மையை விரும்புபவள் தானே நான். நன்மையைத் தானே சொன்னேன். இப்பொழுது தென் திசையில் ரூப யௌவனம் மிக்க அப்சர ஸ்த்ரீகளை மயக்கி உன் வசம் ஆக்கிக் கொள்ளப் போகிறாய். உன் ஜீவிதம் முடிந்து விட்டது என்பதால் தான் போலும் விதி உனக்கு எதிராக இருந்து விட்டது. சுக்ரீவனிடம் அனாவசியமாக, அவன் பலாத்காரமாக அழைத்தவுடன் அடித்து எதிர் கொள்ள வந்தாய். உன் வசம் இழந்தாய். இந்த காகுத்ஸனும், தேவையில்லாமல் உன்னை வதம் செய்து விட்டு, மற்றவனோடு சண்டையிடும் சமயம் குறுக்கே புகுந்து அடிப்பது நிந்திக்கத் தகுந்தது என்பதைக் கூட உணராமல், சற்றும் வருத்தம் இல்லாமல் நிற்கிறான் பார். நான் தான் அனாதையானேன். இது வரை துக்கமே அறியாதவள், வைதவ்யம் பூண்டு தவிக்கிறேன். என் நிலை மிக பரிதாபமாக ஆகி விட்டது. நம் மகன் அங்கதனை மிகப் பிரியமாக கொண்டாடி வளர்த்தோம். அவன் சுகுமாரன். சுகத்திலேயே வளர்ந்தவன். இப்பொழுது எப்படி இருப்பான்? தந்தை கோபத்தில் கண் மண் தெரியாமல் நடந்து கொண்டு இப்படி விழுந்து கிடந்தால் அவன் கதி என்ன? அங்கதா, உன் தந்தையை நன்றாக பார். பின்னால் கிடைக்காது. உன் மகனை உச்சி முகர்ந்து ஆசிர்வாதம் செய். சமாதானப் படுத்து. பிழைத்து எழுவாய் என்று நம்பிக்கையில்லையே. நீண்ட பிரயாணத்திற்கு தயாராகி விட்டவன் போல தெரிகிறாய். உன்னை அடித்து ராமன் மிகப் பெரிய செயலை செய்திருக்கிறான். சுக்ரீவனுடன் சேர்ந்த பின் அவன் மனதில் கருணை என்பதே இல்லாமல் போய் விட்டது. சுக்ரீவா, திருப்தியா? ருமாவுடன் சந்தோஷமாக இரு. ராஜ்யத்தை அனுபவி. உன் சகோதரன் தான் உனக்கு சத்ரு. அவனைத் தான் அடித்தாயிற்றே. இப்படி புலம்புகிறேன், என்னிடம் ஏன் பேசவில்லை. இதோ பார், வானர ராஜனே, உன் மற்ற மனைவிகளும், ஏராளமாக வந்து கூடியிருக்கிறார்கள். இவள் அழுவதைக் கேட்டு, மற்ற ஸ்த்ரீகளும், அங்கதனை அணைத்துக் கொண்டு பெரிதாக ஓலமிட்டு அழுதனர் அங்கதனை விட்டு நீண்ட பிரயாணம் போகிறீர்களே, பிரிய புத்திரனை விட்டுப் போவது சரியா? நானோ, என் மகனோ உங்களுக்கு அப்ரியமாக என்ன செய்தோம். எங்கள் இருவரையும் பிரிந்து வெகு தூரம் செல்லத் தயாராகி விட்டீர்களே. உங்கள் பாதத்தில் விழுந்து வணங்குகிறேன். அறியாமல் நாங்கள் தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள். ஹே, வானர ராஜனே, என்று இவ்வாறு தாரா மிகவும் வேதனையோடு அழுதபடி, கணவனின் அருகில் மற்ற ஸ்த்ரீகளுடன் ப்ரயோபவேசம் செய்யத் தீர்மானித்து விட்டாள். பூமியில் வாலி கிடக்கும் இடத்திலேயே அணைவருமாக தீக்குளிக்க முனைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், கிஷ்கிந்தா காண்டத்தில், தாரா விலாபோ என்ற இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 51 (247) ஜடாயு ராவண யுத்தம்
ஜடாயு இவ்வாறு நியாயமாக பேசியதைக் கேட்டு, ராவணனின் இருபது கண்களும் கோபத்தால் சிவந்தன. அக்னி போல தகிக்கலாயின. பொன்னாலான குண்டலங்கள் ஆட, சிவந்த கண்களுடன், ராக்ஷஸ ராஜன், கழுகு அரசனை எதிர்த்தான். இருவருக்கும் இடையில் அந்த வனத்தில் பெரும் யுத்தம் மூண்டது. காற்று அலைக்கழிக்க இரண்டு மேகங்கள் முட்டிக் கொள்வது போல இருந்தது. கழுகு ராஜ, ராக்ஷஸ ராஜனுக்கிடையில் நடந்த சண்டை அத்புதமாக, மகா பர்வதங்கள் ஒரு காலத்தில் இறக்கைகளுடன் இருந்ததை நினைவூட்டின. கூர்மையான பாணங்களை போட்டு, கழுகு அரசனை மகாபலசாலியான ராவணன் சரங்களை மழையாக பொழிந்து அடித்தான். அந்த சர ஜாலங்களை இறக்கையுடைய கழுகு அரசன் வாங்கி எதிர்த்து அடித்தான். தன் கூர்மையான நகங்களாலும், பற்களாலும், கால்களாலும் அவன் உடலில் காயங்களை உண்டு பண்ணினான். க்ரோதம் பொங்க ராவணன் பத்து திக்குகளிலும் செல்லும் ம்ருத்யு த3ண்டம் போன்ற கோரமான பாணங்களை எதிரியைக் கொன்று விடும் என்ணத்துடன் பிரயோகித்தான். அந்த பாணங்கள் குறி தவறாமல் முழுவதுமாக வில்லிலிருந்து புறப்பட்டவை, கழுகரசனை, கூர்மையான நுனிப் பகுதிகளால் குத்திக் கிழித்தன. அந்த ராக்ஷஸனின் ரதத்தில் ஜானகியை ஒரு முறைப் பார்த்து விட்டு, அவனுடைய பாணங்களை லட்சியம் செய்யாமல் ஜடாயு ராவணனை திரும்ப அடித்தான். முத்துக்களும், மணிகளும் கட்டி அலங்கரிக்கப் பட்டிருந்த வில்லையும், அம்பையும், தன் கால்களால் பக்ஷிராஜன் உடைத்தான். கோபத்தால் செய்வதறியாது ராவணன் மற்றொரு வில்லை உடனே எடுத்துக் கொண்டான். நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக பாணங்களை விட்டான். நான்கு புறமும் அந்த பாணங்கள் சூழ்ந்து கொள்ள, கூண்டில் அடைபட்ட பக்ஷி போல ஜடாயு திணறினான். இறக்கைகளால் அந்த சரங்களை நகர்த்திக் கொண்டு, தன் கால்களால் ராவணனுடைய பெரிய வில்லை உடைத்தான். ராவணன் விட்ட அக்னிக்கு சமமாக பிரகாசிக்கும் பா3ணங்களை ஜடாயு தன் இறக்கைகளாலேயே தடுத்து நிறுத்தி விட்டான். பல விதமான ராவணனுடைய பா3ணங்களை வேகமாக இஷ்டப்படி செல்லும், நெருப்பு போன்ற பா3ணங்களையும் தடுத்து, அலங்கரிக்கப் பட்ட அவனது ரதத்தையும் கீழே தள்ளினான். பூரண சந்திரன் போன்று இருந்த குடையையும், சாமரத்தையும் இடித்து தள்ளினான். வேகமாக அதிலிருந்த சாரதியுடன் கீழே தள்ளினான். சாரதி ஜடாயுவின் கூர்மையான அலகினால் குத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு விழுந்தான். ஜடாயு திரும்ப திரும்பத் தாக்கியதில், வில்லும் அம்பும் உடைந்து விழ, ரதத்தையும் இழந்து, அஸ்வமும், சாரதியும் இறந்து போக, தனித்து விடப் பட்ட ராவணன் சீதையை மடியில் இருத்திக் கொண்டு பூமியில் விழுந்தான். வாகனம் உடைந்து பூமியில் விழுந்த ராவணனைப் பார்த்து சகல ஜீவன்களும், கழுகரசனை சாது, சாது என்று பாராட்டின. வயதான காரணத்தால் களைத்துப் போன ஜடாயுவைப் பார்த்த ராவணன் திரும்ப உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, சீதையுடன் குதித்து எழுந்தான். ஜனகன் மகளை விடாமல் தூக்கிக் கொண்டு ஓடும் ராவணனை கழுகரசன் விடாமல் தொடர்ந்து சென்று தாக்கியது. அவனைத் தடுத்து, ஜடாயு, ஏ, ராவணா, வஜ்ரம் போன்ற பாணம் உடையவன் ராமன். அவன் மனைவியை அபகரித்துக் கொண்டு போய், அல்ப புத்தி உடையவனே, ராக்ஷஸர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாய். ப3ந்து4க்கள், சுற்றத்தார், மந்திரிகள், பரிவாரங்களோடு சேர்ந்து தாகம் கொண்டவன் தண்ணீர் என்று நினைத்து விஷம் குடித்தது போல அழிவாய். பக்க விளைவுகளை அறியாமல், வேலை செய்வதில் சாமர்த்தியமும் இல்லாமல், செயலில் இறங்கியவர்கள், இதோ நீ அழியப் போவதைப் போலத்தான் அழிவார்கள். கால பாசம் உன்னை இறுக்குகிறது. நீ எப்படி இதிலிருந்து விடுபட்டு பிழைத்திருக்கப் போகிறாய்? தூண்டிலில் அகப்பட்டுக் கொண்ட நீர் வாழ் ஜந்து, அதில் மாட்டியிருக்கும் மாமிசத்திற்கு ஆசைப் பட்டு, தூண்டிலில் வந்து விழுவதைப் போல, தன் உயிரை இழக்கப் போகிறாய். ராம, லஷ்மணர்கள் கையில் மாட்டிக் கொள்ளப் போகிறாய். காகுத்ஸர்கள் இருவருமே எளிதில் ஜயிக்க முடியாதவர்கள். ஆசிரமத்தை தாக்கி போர் புரிந்திருந்தாலும் கூட பொறுத்துக் கொள்வார்கள் ராகவ குல வீரர்கள் இருவரும். உலகில் எல்லோரும் நிந்திக்ககூடிய செயலை செய்திருக்கிறாயே திருடன் போல. இது வீரர்களுக்கு அழகல்ல. தன் வீர்யத்தில் நம்பிக்கை உள்ளவன் செய்யும் செயலும் அல்ல. வீரனாக இருந்தால், நேருக்கு நேர் நின்று சண்டை போடு. முஹுர்த்த நேரம் நில் ராவணா, உன் சகோதரன் கரன் விழுந்தது போல நீயும் அடிபட்டு விழப் போகிறாய். தன் வாழ் நாள் முடியும் நேரத்தில் இப்படித் தான் செய்வார்கள். தங்கள் விநாசத்தை எதிர்கொண்டு அழைப்பது போல. அதர்மமான காரியத்தை செய்ய முனைந்திருக்கிறாய். பாபம் உன்னை கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்து விடு படுவாய். லோகாதி4பதியான ஸ்வயம்பூ4 பகவான் கூட என்ன செய்து உன்னை விடுவிக்க முடியும். இப்படி சொல்லிக் கொண்டே கழுகரசன் தசக்ரீவனுடைய முதுகில் தடாலென்று விழுந்தது. அவனை பிடித்து தன் கூர்மையான நகங்களால் கிழித்தது. யானையின் மேல் ஏறி மாவுத்தன், துஷ்ட யானையை அடக்குவது போல தன் நகங்களால் அவனை குத்தி குத்தி துன்புறுத்தியது. அவன் கேசத்தை கலைத்தது. தன் நகமும், இறக்கையும், முகமுமே ஆயுதமாக திரும்பத் திரும்ப ராவணனை சித்ர வதை செய்தது. இப்படி கழுகு அரசனால் துன்புறுத்தப் பட்ட ராவணன் உதடுகள் துடிக்க, நடுங்கிக் கொண்டே கோபத்துடன், இடது கையால் வைதேஹியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, தன் புறங்கையால் ஜடாயுவை ஓங்கி அடித்தான். ஜடாயு தன் அலகினால் ஒவ்வொரு இடது புஜத்தையும் கடித்து குதறியது. வெட்டுண்ட புஜங்கள் கீழே விழ, உடனே வேறு புஜங்கள் தோன்றின. விஷ ஜ்வாலை வீசும் புற்றிலிருந்து பாம்புகள் புறப்படுவது போல உடனுக்குடன் புது புஜங்கள் முளைத்து வந்தன. கோபத்துடன் சீதையை கீழே விட்டு, முஷ்டிகளாலும், கால்களாலும் க்3ருத்4fர ராஜனை அடித்தான். சமான பலமுள்ள இருவரும் முஹுர்த்த நேரம் விடாமல் சண்டை செய்தனர். ராக்ஷஸ முக்யனுக்கும், பக்ஷிகளில் ஸ்ரேஷ்டமான ஜடாயுவுக்கும் நடந்த சண்டையில், ராமனுக்காக பரிந்து கொண்டு போராடும் கழுகு அரசனை ராவணன் கத்தியை எடுத்து இறக்கைகளை, பக்கங்களை , கால்களை என்று வரிசையாக வெட்டி விட்டான். க்ரூரமாக செய்யத் தயங்காத ராவணன் இப்படி செய்தவுடன், கழுகரசன் தடாலென்று பூமியில் விழுந்தது. எந்த நேரமும் உயிர் போகலாம் என்ற நிலையில் பூமியில் கிடந்த ஜடாயுவைப் பார்த்து, ரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்து, நெருங்கிய பந்து அடிபட்டதைப் பார்த்து கதறிக் கொண்டு ஜனகர் மகள் அருகில் வந்தாள். ஜடாயு தரையில் கிடப்பதை ராவணனும் பார்த்தான். நீல மேகம் போன்ற பெரிய உருவம், வெண்மையான மார்பு பிரதேசங்களை உடையதும், நல்ல வீரனும் ஆன ஜடாயு, அடங்கி விட்ட நெருப்புக் குழம்பு போல கிடந்தது. ராவணன் வேகத்துக்கு ஈ.டு கொடுக்க முடியாமல், பூமியில் விழுந்து கிடந்த அந்த பக்ஷியை சந்திர வதனம் உடைய சீதை அணைத்துக் கொண்டு அழுதாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஜடாயு ராவண யுத்தம் என்ற ஐம்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 52 (248) சீதா விக்ரோச: (சீதையின் அலறல்)
மரணதறுவாயில் கழுகு அரசன், ராக4வனின் ஆசிரமத்திற்கு அருகில் விழுந்து துடித்துக் கொண்டு கிடப்பதை ராவணன் பார்த்தான். அவனால் அடித்து வீழ்த்தப் பட்ட ஜடாயுவைக் கண்டு மைதிலி அழுதாள். ஜடாயுவை அணைத்துக் கொண்டு அரற்றினாள். துக்கத்துடன் புலம்பினாள். நிமித்தம், லக்ஷணம், ஸ்வப்னம், சகுனி பக்ஷிகளின் கூக்குரல் (இவை வரப்போவதை தெரிவிக்கும் சகுனங்கள்) சுக, துக்கம் இந்த சமயங்களில் எதிர்மறையாகத் தெரிகிறது. துக்கம் வரும் சமயங்களில் நிமித்தம் முதலானவைகளை கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறோம். ராமா, உனக்கு நிச்சயம் இங்கு நான் படும் கஷ்டங்கள் தெரிந்திருக்காது. மிருகங்களும், பக்ஷிகளும் நிச்சயம் எனக்காக காகுத்ஸனை நோக்கி ஓடும். இந்த ஜடாயு, கருணையால் என்னைக் காப்பாற்ற வந்தார். என்னுடைய துரதிருஷ்டத்தினால் அடிபட்டு பூமியில் விழுந்து கிடக்கிறார். காகுத்ஸா, என்னைக் காப்பாற்று, என்று வராங்கனா (அழகிய அங்கங்களையுடையவள்) சீதை, வேண்டிக் கொண்டு அழுதாள். பயத்துடன் ஆடைகளும் ஆபரணங்களும் நிலை குலைய, அநாதை போல அழும் அவளை நோக்கி ராக்ஷஸாதிபன் ஓடி வந்தான். கொடியைப் போல மரங்களை அணைத்துக் கொண்டு நின்ற அவளை, விடு, விடு என்று கத்திக் கொண்டு ராவணன் துரத்திக் கொண்டு போனான். ராமா, ராமா, என்று ராமன் இல்லாத வனத்தில் அலறும் அவளை காலனுக்கு சமமான கொடியவனான ராவணன், தன் காலம் இதனால் சமீபத்து வருவதை அறியாதவனாக அவள் கேசத்தை பிடித்து பலவந்தமாக இழுத்துக் கொண்டு போனான். மரியாதையோ, பண்போ இல்லாத இந்த செயலைப் பார்த்து, அண்ட சராசரங்களும், இருட்டில் மூழ்கியது போல ஆயிற்று. காற்று வீசவில்லை. சூரியன் ஒளியிழந்து காணப் பட்டான். சீதை அபகரிக்கப் பட்டதை தன் திவ்ய கண்களால் கண்டு கொண்ட பிதாமகர் ப்ரும்மா, காரியம் ஆயிற்று என்றார். தேவகார்யம் ஆன மகிழ்ச்சி ஒரு புறமும், சீதையின் கஷ்டத்தைக் காண சகியாமல் வருந்தியவர்களாகவும் பரம ரிஷிகள் தவித்தார்கள். தண்ட காரண்ய வாசிகள், யதேச்சையாக, தானாகவே, ராவணனுடைய விநாசம், அவள் மூலமாக ஏற்படப் போகிறது என்று பேசிக் கொண்டார்கள். அவள் கடத்திச் செல்லப் படுவதை வருத்தத்துடன் பார்த்தபடி நின்றார்கள். ராமா, ராமா என்றும் லக்ஷ்மணா என்றும் அவள் கதறுவதை பொருட்படுத்தாமல் அவளைத் தூக்கிக் கொண்டு ஆகாய மார்கமாக ராவணன் சென்றான். சிவந்த ஆடையும், ஆபரணங்களும் அணிந்திருந்த ராஜகுமாரி மேகத்தின் இடையில் மின்னலைப் போல தெரிந்தாள். அவளுடைய பீதாம்பரம் வேகமாக செல்லும் பொழுது காற்றில் பறக்க, ராவணன் என்ற மலை தீப்பற்றிக் கோண்டது போல இருந்தது. அவளுடைய சுபமான ஆபரணங்கள், தாம்ரங்களும், சுரபி என்பவைகளும், பத்ம பத்ரம் என்ற ஆபரணமும் ராவணனைக் காயப் படுத்தின. பொன்னிறமாகத் தெரிந்த அவளுடைய பட்டு வஸ்திரம், ஆகாயமே தாம்ர வர்ணமாக இருப்பது போல காட்சியளித்தது. முகம் வாடிக் கிடந்தது. ராமன் அருகில் இல்லாததால், சந்திரன் உதித்தவுடன் பிடுங்கி எறியப் பட்ட தாமரை மலராக அவள் வாட்டம் தெரிந்தது. அழகிய நெற்றியும், கேசமும், தாமரையின் மகரந்தத்தைப் போன்ற நிறமும், வெண்மையான விமலமான பல் வரிசையும், அவளுக்கு அழகை தந்து கொண்டிருந்தவை, அழுது கண்ணீர் வடிந்து கறையாக, சந்திர வதனமாக இருந்தவள், ராவணன் கடத்திச் செல்லும் பொழுது, பகலில் உதித்த சந்திரனாக இருந்தாள். முகம் வாடியிருந்தும், கருத்த ராவணனை, தன் இயல்பான தங்கத்தையொத்த நிறத்தால், பொன்னாலான ஒட்டியாணம் போல அலங்கரித்தாள் (வெள்ளி தான் நீல வர்ணத்துக்கு அலங்காரம், பொன்னாலான என்பதால், அலங்கரிக்கவில்லை என்றும் பொருள் கொள்ளலாம்). ஜனகன் மகளான சீதை செந்தாமரை போன்ற சோபையுடையவள். ராவணனை மின்னல் மேகத்தை ஒளி பெறச் செய்வது போல. தன் பிரகாசமான ஆபரணங்களால் ஒளி பெறச் செய்தாள். ஆபரணங்கள் உரசுவதால் ஏற்பட்ட சத்தம், மேகம் சபலம் கொண்டு கோஷம் இடுவது போல ஒலித்தது. சீதையின் தலையில் சூடியிருந்த உத்தமமான மலர்கள் சிதைந்து பூமியில் விழுந்தன. அந்த புஷ்பக் குவியல், ராவணன் செல்லும் வேகத்தில் அடிபட்டு திரும்ப அவனிடமே வந்தன. வைஸ்ரவணன் தம்பியான ராவணனை இந்த புஷ்பங்கள் கோடாக தொடர்ந்து சென்றன. உன்னதமான மேரு மலையை நக்ஷத்திர மாலை நெருங்கி செல்வது போல இருந்தது. சீதையின் கால்களிலிருந்து ரத்னம் இழைத்த நூபுரம் கழண்டு விழுந்தது. இனிமையான நாதத்துடன் அது மின்னல் விழுவது போல விழுந்தது. பெரிய தீப்பந்தம் போல தன் தேஜஸால் ஜ்வலிக்கும் சீதையை ஆகாய மார்கமாக தூக்கிக் கொண்டு வேகமாக சென்றான். நக்ஷத்திரங்கள் சிதறி தெறித்து விழுவது போல, அக்னி வர்ணமான பூஷணங்கள் சிதறி விழுந்தன. கழுத்திலிருந்த முத்து மாலை கங்கை கீழே இறங்கி வருவது போல நழுவி விழுந்தது. பலவிதமான பக்ஷிகள் நிறைந்த மரங்கள், ராவணனின் வேகத்தால், எதிர்காற்று பலமாக வீச பறவைகள் ஒரு முகமாக பறந்து திரும்ப மரத்தை அடைந்தது பயப்படாதே, என்று சீதையைப் பார்த்து சொல்வது போல இருந்தது. கமல புஷ்பத்தை பறித்தபின், நீரில் தங்கி விட்ட தாமரை நாளமும், மீன் முதலிய ஜலத்தில் வாழும் ஜீவன்களும் பெருமூச்சு விட்டபடி பிரிய சகியை விட்டுப் பிரிந்தது போல வைதேஹிக்காக இரங்கின. சீதையின் நிழலைத் தொடர்ந்து வருவது போல, சிங்கம் வ்யாக்4ரம், புலி, மிருகங்கள், பக்ஷிகள், ரோஷத்துடன் ஓடி வந்தன. நீர் வீழ்ச்சிகள் கண்கள் நீரைப் பொழிவது போல பொழிய, மலைச் சிகரங்கள் கைகளாக கடத்திச் செல்லப் படும் சீதையை நோக்கி கைகளை உயரத் தூக்கி புலம்புவது போல மலைகள் தெரிந்தன. சீதை அபகரித்துக் கொண்டு போகப் படுவதை பார்த்தும் தடுக்க இயலாத சூரியன் ஒளியின்றி முகம் வெளுத்து, சோபை குன்றியவனாக இருந்தான். தர்மமே இல்லை, எங்கே சத்யம்? எங்கே கருணை? அஹிம்சை எங்கே? எங்கே ராவணன் ராமனின் மனைவியை கடத்திக் கோண்டு போகிறானோ, அங்கு இந்த நல்ல குணங்கள் எப்படி இருக்க முடியும்? என்று எல்லா ஜீவராசிகளும் கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டு, அங்கலாய்த்தன. இளம் மான் குட்டிகள் அழுதன. வன தேவதைகள் பார்த்து பார்த்து, கண்ணீர் பெருகும் நயனங்களோடு உடல் வியர்த்து வடிய நின்றார்கள். இப்படி ஒரு துக்கத்தை யடைந்த சீதை கதறி அழுவதைப் பார்த்து, அப்பொழுதும் இனிய குரலில், ஹா ராமா, ஹா லக்ஷ்மணா என்று கதறுவதை பூமியை திரும்பத் திரும்ப நோக்கியபடி செல்லும் வைதேஹியை, கலைந்த கேசமும், கலங்கிய ஆடைகளுமாக தன் ஆத்ம விநாசத்தின் பொருட்டு, தன் அழிவிற்காகவே தசக்ரீவன் தூக்கிக் கொண்டு போனான். அழகிய பல் வரிசையுடையவள், மென்மையாக நகைப்பவள் என்று புகழப் பெறும் மைதிலி, ப3ந்து4 ஜனங்கள் யாரும் அருகில் இல்லாமல், ராம லக்ஷ்மணர் இருவரையும் காணாதவளாக, பெரும் பயத்தால் பீடிக்கப் பட்டு. நிறம் இழந்து பொலிவிழந்து போனாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சீதா விக்ரோசோ என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 53 (249) ராவண ப4ர்த்ஸனம் (ராவணனை திட்டுதல்)
ஆகாயத்தில் எழும்பி நின்று பறந்து செல்லும் ராவணனைப் பார்த்து, துக்கத்தில் ஆழ்ந்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாலும், ரோஷத்தாலும், அழுததாலும் சிவந்த கண்களுடைய மைதிலி, ஜனகன் மகள், பயங்கரமான பெரிய கண்களையுடைய ராக்ஷஸனைப் பார்த்துச் சொன்னாள். ராவணா, இந்த காரியம் செய்கிறாயே, வெட்கமாக இல்லை. தனியாக இருப்பதையறிந்து என்னை திருடிக் கொண்டு ஓடுகிறாயே. நீதானா, மிருக ரூபமாக வந்து என் கணவனை வெகு தூரம் செல்ல வைத்தது? திட்டமிட்டு தான் செய்திருக்கிறாய், சந்தேகமில்லை. என்னை காப்பாற்ற முனைந்த கழுகு அரசனான ஜடாயுவையும் கொன்று விட்டாய். வயதான கழுகு அரசன், என் மாமனாரின் சினேகிதன். ராக்ஷஸாத4மா, உன் வீர்யம் மிகவும் அழகுதான். தன் பெயரைச் சொல்லி யுத்த கோஷம் செய்து, யுத்தம் செய்து என்னை நீ வெற்றி கொள்ளவில்லை. இது போன்ற மட்டமான செயலை செய்து விட்டு, வெட்கமாக இல்லையா? ஸ்த்ரீ ஹரணம் என்பதே மட்டமான செயல். அதிலும் பிறன் மனைவி என்றால், கணவன் இல்லாத பொழுது கடத்தி வருவது இன்னமும் மட்டமானது. உலகம் உள்ளளவும் உன்னுடைய நீசமான இந்த செயலை உலகில் நிந்திப்பார்கள். அதர்மமானது, கொடுமையானது, நீ ஏதோ பெரிய குலத்தவன் என்று சொல்லிக் கொள்கிறாயே.திக் தே வீர்யம்- உன்னுடைய வீரம் அவ்வளவுதானா, (தி4க் என்ற சொல் நிந்தனையை குறிக்கும்). உன் வீரம் வீண், செல்வ சம்பத்துடையவன் என்று சொல்லிக் கொண்டாயே, உன் குலத்தைச் சொல்லி பெருமை பேசினாயே, தி4க் தே சாரித்ரம்- உன் நடத்தையும் அவ்வளவுதானா (தூ – என்று சொல்லி நிந்திப்பது போல தி4க் என்ற சொல்.) இது போன்ற நடத்தையுடையவன் நாசமாக போக. என்ன செய்ய முடியும்? இப்படி வேகமாக ஓடுகிறாயே. ஒரு முஹுர்த்தம் நின்று பார். உயிருடன் திரும்ப மாட்டாய். அந்த இரு ராஜ குமாரர்களின் கண்களில் பட்ட பின், சைன்யத்தோடு வந்தால் கூட முஹுர்த்த நேரம் கூட தாக்கு பிடிக்க மாட்டாய். சரங்களை கோத்து அவர்கள் உன் மேல் விட்டால் அதை ஸ்பரிசிக்க கூட உன்னால் முடியாது. காட்டுத் தீயில் சிக்கிய பறவை போல ஆவாய். உன் நன்மையை நினைத்து என்னை விட்டு விடு. ராவணா, என்னை பலவந்தமாக தூக்கிப் போகிறாயே, இதையறிந்து என் பதி, சகோதரனுடன் வந்து, உன்னை அழித்து விடுவான். என்னை விட்டு விடு. இல்லாவிடில் நீயே உன் அழிவைத் தேடிக் கொண்டவன் ஆவாய். இப்படி கஷ்டப் பட்டு என்னைத் தூக்கி போகிறாயே, இந்த உழைப்பும் வீணாகும். சந்திரனைப் போன்ற என் கணவனை பார்க்காத நான், சத்ரு வசத்தில் இருந்து வெகு நேரம் உயிருடன் இருக்க மாட்டேன். இதில் உனக்குத்தான் என்ன நன்மை, லாபம் என்று எதிர்பார்க்கிறாய் ? மரணம் நெருங்கி வந்தால் ஜீவன்கள் விபரீதமாக எதையாவது செய்கின்றன. முக்தியடைய என்ன செய்ய வேண்டுமோ அது பிடிக்காமல் போகிறது. இன்றே உன் கழுத்தில் கால பாசம் விழுந்து இறுக்குவதைக் காண்கிறேன். பயப் பட வேண்டிய இடத்தில் பயப்படாமல் இருக்கிறாயே, த3சானனா, பூமியில் மரங்களை தங்க மயமாக பார்க்கிறாய். வைதரணீம் என்ற பயங்கர நதியை (யம புரிக்கு ஜீவன் போகும் பொழுது காணும் நதி ரத்தம் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவதையும், அசிபத்ர வனம் (கத்திகளே இலைகளாக இருப்பது போல) என்பதையும் சீக்கிரமே காணப் போகிறாய். பொன்னிறமான புஷ்பங்களையும், வைடூரியம் போன்ற சோபையும் உடைய சால்மலியைக் காணப் போகிறாய். கூர்மையான இரும்பு ஊசி போன்ற முட்கள் உடையது- அதையும் காணப் போகிறாய். (இதுவும் மரணத்திற்கு பின் ஜீவனுடைய யாத்திரையில் காணப்படுவதாகச் சொல்லப் படுகிறது). மகாத்மாவான ராமனிடம் இப்படி தவற்றை செய்து விட்டு நீண்ட நாள் உயிருடன் இருக்க மாட்டாய். விஷத்தைக் குடித்தவன் போல் ஆவாய். தவிர்க்க முடியாத கால பாசத்தால் கட்டப் பட்டிருக்கிறாய், ராவணா, யாரைப் போய் சரணடைவாய். சகோதரன் கூட இல்லாமல், தனி ஆளாக, நிமிஷ நேரத்தில் ஆயிரக்கணக்கான ராக்ஷஸர்களை அழித்தவன் ராமன். இப்பொழுது அவனது பிரிய மனைவியை அபகரித்துக் கொண்டு செல்லும் உன்னை, கூர்மையான பா3ணங்களால் அடிக்க மாட்டான் என்று எப்படி நினைக்கிறாய். இவ்வாறு, இன்னும் பலவிதமாக கடுமையாக திட்டிக் கொண்டே வந்தாள். பயத்தாலும், சோகத்தாலும் களைப்படைந்தாள். வருத்தத்திலும் நிறைய பேசிக் கொண்டே, கருணையாக வேண்டிக் கொண்டும் வந்த சீதையை சற்றும் இரக்கமின்றி ராவணன் துக்கிக் கொண்டு போனபடி இருந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராவண ப4ர்த்ஸனம் என்ற ஐம்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 54 (250) லங்கா ப்ராபணம் (லங்கையில் கொண்டு சேர்த்தல்)
சீதையின் வார்த்தைகள் எதையும் ராவணன் கேட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. ரதம் ஆகாய மார்கமாக சென்று கொண்டிருந்தது. வருத்தத்தோடு கீழே நோக்கிய சீதை, மலையின் உச்சியில் ஐந்து வானரங்களைப் பார்த்தாள். அவர்கள் நடுவில் தான் உடுத்தியிருந்த பொன்னிறமான பட்டு வஸ்திரத்தில் சுபமான ஆபரணங்களை வைத்து கீழே போட்டாள். ராமன் தேடி வந்தால் இதை பார்க்கட்டும், அல்லது இவர்கள் சொல்லக் கூடும் என்று மனதில் எண்ணிக் கொண்டாள். தன் பரபரப்பில் ராவணன் இதை கவனிக்கவில்லை. விசாலாக்ஷியான சீதையை, பிங்கா3க்ஷன் எனும்படி சிவந்த நிறக் கண்களுடைய ராவணன் கண்களை இமை காப்பது போல எடுத்துச் செல்வதையும், அவள் கதறுவதையும் அந்த வானரங்கள் கண்டனர். பம்பை நதியைக் கடந்து லங்கையை நோக்கிச் சென்றான் ராவணன். வைதேஹியை பிடித்துக் கொண்டு, அவள் அழ, அழ மிகவும் மகிழ்ச்சியோடு ஊர் நோக்கிச் சென்றான். தன் ம்ருத்யுவைத் தானே எதிர் கொண்டு அழைப்பது போலவும், மகா விஷமுடைய கூரிய பல்லுடைய பெண் பாம்பை விளையாட்டாகச் சீண்டியது போலவும், தூக்கிக் கொண்டு வனங்களையும், நதிகளையும், மலைகளையும், சமுத்திரத்தையும் ஆகாய மார்கமாக கடந்து சென்றான். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல வேகமாக, முதலைகளும், திமிங்கிலம் இவை வசிக்கும், அழிவில்லாத, குறைவு இல்லாத வருணாலயம் என்ற நதிகளின் சரண்யனான சாகரத்தைக் கடந்து செல்லும் பொழுது, திகைத்த சமுத்திரத்தில் மீன்களும், பெரிய பாம்புகளும் கூட அசைவற்று நின்று விட்டன. வைதேஹியை தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்து வருணாலயமான சாகரமும் ஸ்தம்பித்தது. அப்பொழுது அசரீரி வாக்கு ஆகாயத்தில் கேட்டது. சித்தர்களும், சாரணர்களும் பேசிக் கொண்டனர். இது தான் உன் முடிவு த3சக்ரீவா, என்பதாக. துவண்டு போன சீதையை தூக்கிக் கொண்டு தன் ஊரில் பிரவேசித்தான், ராவணன். சீதையை மடியில் வைத்துக் கொண்டு ராஜ மார்கமாக பல அறைகள் கொண்ட தன் மாளிகையை சென்றடைந்தான். மயன், மாயாவை பிடித்தது போல சீதையை ராவணன் பிடித்துக் கொண்டான். கோரமான ரூபம் கொண்ட பிசாசிகளை காவல் வைத்தான். இவளுக்கு சம்மதமில்லாத ஸ்த்ரீயோ, புருஷனோ இவள் அருகில் வர விடாதீர்கள். முத்துக்கள், மணிகள், தங்க நகைகள், வஸ்திரங்கள், ஆபரணங்கள் என்று இவள் எதை விரும்பினாலும் உடனே கொடுங்கள். இது என் கட்டளை. வைதேஹியிடம் யாரும் கடுமையாக பேசக் கூடாது. அவளுக்கு பிடிக்காத விஷயங்களை பேசக்கூடாது. தெரிந்தோ, தெரியாமலோ இந்த கட்டளைகளை மீறினால் அவனுக்கு தன் உயிரின் மேல் விருப்பமில்லை என்றாகும். மரண தண்டனைதான். இவ்வாறு ராக்ஷசிகளுக்கு கட்டளையிட்டு, அந்த:புரத்திலிருந்து வெளியே வந்து என்ன செய்யலாம் என்று யோசித்தான். மகா வீர்யவான்களான எட்டு ராக்ஷஸர்களைக் கண்டான். தான் பெற்றுள்ள வரதானங்கள் தந்த பலத்தினால், மோகம் புத்தியை மறைக்க, தன் பலம், வீரம் இவற்றை தானே, புகழ்ந்து பேசியபடி, கட்டளையிட்டான். எஎல்லா ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு உடனே முன்பு க2ரன் இருந்த இடம் செல்லுங்கள். ஜனஸ்தானத்தில் இப்பொழுது ராக்ஷஸர்களே இல்லை. அங்கு தூரத்தில் இருந்து கொண்டு கடுமையாக, பயத்தை உண்டு பண்ணுங்கள். என் பெரும் படை ஜனஸ்தானத்தில் இருந்தது. அதை கரன், தூஷணனோடு ராமன் அழித்து விட்டான். அதனால் எனக்கு ராமனிடம் பயங்கர விரோதம். கோபமும் கூட. இந்த விரோதத்தை காப்பாற்றியாக வேண்டும். அந்த எதிரியை கொல்லாமல் எனக்கு தூக்கம் வராது. அதனால் இந்த கோபத்தையும், விரோதத்தையும் அவனிடம் எப்படியாவது காட்ட வேண்டும். க2ர, தூ3ஷணாதிகளை கொன்றவனை, கொன்று நான் பழி வாங்குவேன். ராமனைக் காயப் படுத்துவேன். செல்வம் இல்லாதவனுக்கு செல்வம் போல (?) ஜனஸ்தானத்தில் இருந்து கொண்டு நீங்கள் ராமன் என்ன செய்கிறான் என்பதை கண்காணிக்க வேண்டும். எல்லா நிசாசரர்களும் வெளியில் தெரியாதவாறு நடமாடுங்கள். எப்பொழுது ராமனை கொல்ல சந்தர்பம் கிடைக்கிறது என்பதிலேயே கவனம் வைத்திருங்கள். யுத்தம் என்று வந்தால் உங்கள் சக்தியையும், பலத்தையும், நான் அறிவேன். அதனால் தான் இந்த ஜனஸ்தானத்தில் உங்களை நியமிக்கிறேன். ராவணனுக்கு பிரியமான வார்த்தைகளைச் சொல்லி அவனை வணங்கி விடை பெற்றுக் கொண்டு லங்கா நகரத்தை விட்டு எல்லோரும் ஒன்றாக, ஜனஸ்தானத்தை நோக்கி தங்கள் உருவம் தெரியாதவாறு மாயையால் மறைத்துக் கொண்டு சென்றனர். இதன் பின் சீதை இருக்கும் இடம் சென்று, ராமனிடத்தில் தனக்கு உள்ள விரோதத்தை, தன் அறியாமையால் பெருமையும் மகிழ்ச்சியும் பொங்க, பறைசாற்றிக் கொண்டான், ராக்ஷஸாதிபனான ராவணன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் லங்கா ப்ராபணம் என்ற ஐம்பத்து நாலாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 55 (251) சீதா விலோப4னோத்3யம: (சீதையை ஆசை காட்டும் முயற்சி)
மகா பலசாலிகளான எட்டு ராக்ஷஸர்களை அழைத்து, ஜனஸ்தானத்தில் மறைந்திருந்து காவல் காக்குமாறு ராவணன் பணித்தான். பயங்கரமான தோற்றம் கொண்ட அவர்களை நியமித்து விட்டு, தன் அறியாமையால் நல்ல ஏற்பாடு செய்து விட்டதாக திருப்தியடைந்தான். வைதேஹியையே நினைத்துக் கொண்டு தன் மாளிகையினுள் சென்றான். வேகமாக தன் க்ருஹத்தில் நுழைந்து ராக்ஷஸிகள் சூழ இருந்த சீதையைக் கண்டான். கண்களில் நீர் மல்க, பெரும் காற்றில் அலைக்கழிக்கப் படும் படகைப் போல நடுங்கி கொண்டு, முகம் வாடியிருந்த சீதையைக் கண்டான். தன் கூட்டத்திலிருந்து தவறி வெளியே வந்து விட்ட பெண் மான் குட்டி, நாய்கள் சூழ்ந்து நின்றால், திடுக்கிட்டு தவிப்பது போல நின்றாள். தலை கவிழ்ந்து தரையையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம், ராவணன் பலவந்தமாக தன் மாளிகையைச் சுற்றிக் காட்டினான். அவளுடைய மன நிலையைப் பற்றி அவன் சற்றும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. தேவர்களின் மாளிகையைப் போல, விமானங்களும், பிரகாரங்களும் கூடிய ஆயிரக் கணக்கான ஸ்த்ரீகள் வசிக்கும் அரச மாளிகை. பக்ஷிகள் பலவிதமாக வளர்க்கப் பட்டன. ரத்னங்கள் இழைத்து செய்யப் பட்ட தூண்கள். சில குளிர்ச்சியானவை, சில உஷ்ணத்தைக் கொடுக்க கூடியதாய், சில ஸ்படிகத்தால் செய்யப்பட்டவை, மற்றும் சில வெள்ளியினாலானவை. பல தூண்களில் வைர வைமூடுரியங்கள் பதிக்கப் பட்டு கண்களை கூசச் செய்தன. திவ்யமான துந்துபி முழங்கியது. பத்தரை மாற்றுத் தங்கத்தால் தோரணங்கள் கட்டப் பட்டிருந்தன. விசித்ரமான வேலை பாடுகளுடன் கூடிய மாடிப் படிகள். அவளுடன் அதில் ஏறிய ராவணன் அழகிய ஜன்னல்களைக் காட்டினான். வெள்ளியால் செய்யப் பட்டு, பொன் கயிற்றினால் வலைகள் வேயப் பட்டிருந்தன. சுதா4மஹி என்ற விசித்ரமான பூமியையும் த3சக்3ரீவன் தன் வீட்டிலிருந்தபடியே சீதைக்கு காட்டினான். அவள் சோகத்தை சற்றும் உணராமல், தன் போக்கில் மகிழ்ச்சியுடன், தீர்கமான குளங்களையும், நாலா புறமும் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த புஷ்கரிணியையும் ராவணன் சீதைக்கு காட்டினான். ஒரு இடம் விடாமல் அவளுக்கு சுற்றி காண்பித்து விட்டு, சீதையை ஆசை காட்டுவதாக எண்ணிக் கொண்டு தற்பெருமை பேசினான். சீதே, எப்பொழுதும் அரிய பெரிய காரியங்களைச் செய்யும் ராக்ஷஸ வீரர்கள் என்னிடம் இருக்கிறார்கள். என் ஒவ்வொரு காரியத்திற்கும், ஆயிரம் பேர் என்ற கணக்கில் ராக்ஷஸர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த ராஜ தந்திரமும் இனி உனக்கு அடங்கியே இருக்கும். என் வாழ்க்கையும், உயிரும் இனி நீயே. விசாலாக்ஷி, நீ தான் என் உயிருக்கும் மேலானவள். ஆயிரக் கணக்கான ஸ்த்ரீகள் என்னால் மணந்து கொள்ளப் பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் நீ தலைவியாக இரு. என் மனைவியாக சம்மதிப்பாய். சீதே, பிரியமானவளே, என் வார்த்தைகளை நல்லெண்ணத்தோடு பார். என்னிடம் பிரியம் கொள். என்னை விரும்பு. வேறு விதமாக யோசிக்காதே. தவிக்கும் என்னிடம் கருணை காட்டு. நாலா புறமும் சமுத்திரம் சூழ்ந்த இந்த லங்கா புரத்தை, நூறு யோஜனை தூரம் பரவியுள்ள இந்த ராஜ்யத்தை, இந்திரனுடைய ஆட்களோ, சுராசுரர்களோ, தேவர்களோ, யக்ஷர்களோ, கந்தர்வர்களோ, ரிஷிகளோ யாரும் வந்து முற்றுகையிட முடியாது. எனக்கு சமமான வீரன் இந்த உலகில் இதுவரை நான் கண்டதில்லை. ராஜ்யத்திலிருந்து விரட்டப் பட்டு, கால் நடையாக, தீனமாக, தபஸ்வியாக வாழும் ராமனுடன் என்ன செய்யப் போகிறாய்? மனிதன், அல்பமான தேஜஸ் உடையவன். சீதே, என்னையே ஏற்றுக் கொள். உனக்கு சமமான கணவனாக நான் இருப்பேன். இளமை அழியக் கூடியது. பயப்படாதே. இங்கு என்னுடன் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டு இரு. ராகவனை கண்ணால் காண வேண்டும் என்ற எண்ணம் கூட உனக்கு வேண்டாம். வரானனே, அழகிய முகம் உடையவளே, மனதால் கூட இங்கு வர நினைப்பது யாருக்கும் சாத்தியமில்லை. மனக்கோட்டை கட்ட கூட முடியாது. வாயுவை ஆகாயத்தில் கயிற்றைக் கொண்டு கட்ட முடியுமா? கொழுந்து விட்டெரியும் அக்னியின் தூய ஜ்வாலையை கைகளால் பிடிக்க முடியுமா? மூன்று உலகிலும் அப்படி ஒருவனை இது வரை நான் கண்டதில்லை. சோப4னே, என் கையிலிருந்து பாதுகாப்புடன் இருக்கும் உன்னை யாராலும் தன் பலத்தால் கடத்திக் கொண்டு போக முடியாது. லங்கை என்ற பெரிய ராஜ்யம், இதை நீயே ஆண்டு கொள். உன் கட்டளைப் படி நடக்க என் கீழ் உள்ள எல்லோருக்கும், ராக்ஷஸர்கள், தேவர்கள் எல்லோருமே கடமைப் பட்டுள்ளனர். அபிஷேக நீர் உன் பேரில் பட்டால் கூட உன்னை கஷ்டப் படுத்தும். அவ்வளவு கோமளமானவள் நீ. அதனால் நீயும் மகிழ்ந்திருந்து என்னையும் மகிழ்விப்பாய். இதுவரை தீ வினையின் பயனாக, வன வாசத்தில் அனுபவித்த கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்தன. இனி, நல் வினை பயன்களை அனுபவிப்பாய். இங்கு வாசனை மிகுந்த மலர் மாலைகள் நிறைய இருக்கின்றன. வித விதமான ஆபரணங்கள் உள்ளன. இவைகளை என்னுடன் சேர்ந்து அனுபவிப்பாய். என் சகோதரன் வைஸ்ரவணனுடைய புஷ்பகம் என்ற விமானம் சூரியனுக்கு சமமானது. பிரகாசமானது,. அதையும் பலவந்தமாக நான் கொண்டு வந்தேன். விசாலமானது, அழகானது. மனோ வேகத்தில் செல்லக் கூடியது. அதில் அமர்ந்து சீதே, என்னுடன் உலகமெல்லாம் சுற்றுவாய். வரானனே, பத்மம் போன்ற உன் முகத்தில், சோகமும் வருத்தமும் பொருத்தமாக இல்லை. இவ்வாறு சொல்லிக்கொண்டே போகும் ராவணனை, தன் வஸ்திரத்தால் முகத்தை துடைத்த படி, இப்படி ஒரு அவஸ்தை வந்து சேர்ந்ததே என்று எண்ணி சிந்தனையோடு நின்றவளிடம் பாபாத்மா, ராவணன் மேலும் தன் பெருமையை பறை சாற்றிக் கெண்டான். வைதேஹி, வெட்கம் வேண்டாம். இதில் தர்மம் அழிகிறது என்று நினைக்காதே. எனக்கு உன்னிடம் ஏற்பட்டுள்ள இந்த ஈடுபாடும் தெய்வ சங்கல்பமே. அதனால் தானே உன்னை பலாத்காரமாக இவ்வளவு தூரம் அழைத்து வந்தேன். இதோ என் தலையால் உன் பாதங்களில் வணங்குகிறேன். கருணை காட்டு. சீக்கிரம் என்னிடம் இரங்கி அருள் செய். உன் வசத்தில், உனக்கு தாஸன் ஆனேன். இந்த வெறும் வார்த்தைகள், தவிக்கும் ராவணன் சொல்பவை. ராவணன் எப்பொழுதும், இதுவரை எந்த பெண்ணிடமும் தலை வணங்கி நின்றதில்லை. இவ்வாறு சொல்லி தசக்ரீவன், மைதிலியை, ஜனகன் மகளை, தன் அறியாமையால் தன் வசம் ஆனதாகவே நினைத்தான், தன் பொருந்தாதாத காமத்தால் காலனுக்கு தானே அழைப்பு விடுத்தவனாக ஆனான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சீதா விலோப4னோத்3யம: என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 56 (252) வத்ஸராவதி4கரணம் (ஒரு வருஷ கால கெடு வைத்தல்)
ராவணன் இவ்வளவு சொன்ன போதிலும், பயப்படாத வைதேஹி, தன் வருத்தத்தின் மத்தியிலும், வெளிவான சிந்தனையுடன், ஒரு புல்லை இடையில் வைத்து ராவணனுக்கு பதில் சொன்னாள். ராஜா தசரதன் அசைக்க முடியாத தர்ம சேதுவாக இருந்தார். சத்ய சந்தன் என்று புகழ் பெற்றார். அவர் மகன் ராக4வன். ராமன் என்று பெயர் கொண்டவன். மூவுலகிலும் பெயர் பெற்ற வீரன். நீண்ட புஜமும், விசாலமான கண்களும் உடையவன். அவன் என் பதி. எனக்கு தெய்வமே அவன் தான். இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன். சிம்மம் போன்ற தோள்வலியுடையவன். பெரும் புகழுக்குடையவன். லக்ஷ்மணன் என்ற சகோதரன் உடன் இருக்க, உன் உயிரை வாங்கி விடுவான். அவன் கண் முன்னால் என்னை நீ பலவந்தமாக அழைத்து வந்திருந்தால், ஜனஸ்தானத்திலேயே உன்னையும் மீளாத் தூக்கத்தில் ஆழ்த்தியிருப்பான். நீ சொல்லும் இதோ இந்த ராக்ஷஸர்கள், கோர ரூபமும், எல்லையில்லா பலமும் உடையவர்கள் என்றாயே, ராகவனுக்கு முன்னால் இவர்கள் பல்லைப் பிடுங்கிய பாம்பைப் போல ஆவார்கள். கருடனைக் கண்ட பாம்பு போல நடுங்குவார்கள். அவனுடைய வில்லிலிருந்து புறப்படும் அம்புகள், பொன்னிறமான அலங்கார வேலைப் பாடுகள் கொண்டவை. இவர்கள் சரீரத்தை துளைத்து விடும். வேகமாக அடித்துக் கொண்டு வரும் அலைகள், கடல் கரையில் செயலற்றுப் போவது போல ஆவார்கள். அசுரர்களும், சுரர்களும் உன்னை வதைக்க முடியாது என்று வரம் பெற்றிருக்கிறாய் ராவணா, இந்த ராமனிடம் வைரத்தை வளர்த்துக் கொண்டு இப்பொழுது நீ உயிர் வாழ்வதே அரிது என்றாகி விட்டது. அல்ப காலமே ஜீவித்திருக்கப் போகும் உனக்கு ராமன் தான் காலனாக வரப் போகிறான். யாகஸ்தம்பத்தில் கட்டப் பட்ட பசுவைப் போல உன் வாழ் நாள் முடியும் நேரம் நெருங்கி விட்டது. உன்னை கோபத்துடன் ராமன் பார்த்தாலே போதும், ருத்ரன் கண் பார்வையில் மன்மதன் சாம்பலாக ஆனது போல ஆவாய். சந்திரனை பூமியில் தள்ளுவானோ, சமுத்திரத்தை வற்றச் செய்வானோ, எதையோ செய்து சீதையை விடுவித்து விடுவான். நீ தான் உன் வாழ் நாளையும் தீர்த்துக் கொண்டு விட்டாய். லக்ஷ்மீகரமான செல்வத்தையும் அழித்துக் கொண்டு விட்டாய். உன் இந்திரியங்கள் வீணாகும். உன் செல்வாக்கை இழப்பாய். உன் காரணமாக லங்கா வைதவ்யம் அடையப் போகிறாளா? (வைதவ்யம் அடைந்து லங்கா ஜீவித்திருக்க மாட்டாள் என்பது ஒரு உரை, உன் காரணமாக நாதன் இன்றி வைதவ்யம் அடைவாள் என்பதும் ஒரு உரை) நீ செய்துள்ள இந்த பாப காரியம் நல்லதுக்கு இல்லை. எந்த ஒரு காரியம் நீ செய்திருக்கிறாயோ, தனியாக இருந்த என்னை கணவன் அருகிலிருந்து பிரித்து அழைத்து வந்திருக்கிறாயே, அது நல்லதுக்கு இல்லை. என் கணவரின் தம்பி, என் கொழுந்தன், தேவர்களுக்கு சமமான தேஜஸ் உடையவன். பயம் என்பதே அறியாமல் சூன்யமான தண்டகாவனத்தில் வசிக்கிறான். அவன் உன் கர்வத்தை, வீர்யத்தை உடல் பலத்தால் வந்த அகம்பாவத்தை, உன் உடலிலிருந்து அகற்றிவிடுவான். யுத்தத்தில் சரங்களை மழையாக பொழியும் பொழுது, இவை உன்னை விட்டுத் தானே விலகி விடும். காலனின் வசமான மனிதர்கள், தங்களுடைய அழிவைத் தானே தேடிக்கொள்ளும் விதமாக விபரீதமான காரியங்களில் பிரவேசிக்கிறார்கள். என்னை நிர்பந்தித்து அழைத்து வந்து உன் அழிவு நெருங்கி விட்டதை நீயே உணர்ந்து கொள். உனக்கு மட்டுமல்ல, உன்னைச் சார்ந்த ராக்ஷஸர்கள், அந்த:புரம் எல்லாமே தங்கள் முடிவை நெருங்கி விட்டதாக தெரிந்து கொள். யாகத்தின் மத்தியில் வைக்கப் பட்டு பிராம்மணர்கள் வேத மந்திரம் சொல்லி ப்ராண ப்ரதிஷ்டை முதலியவை செய்த, பாவனமான இடத்தை ஒரு சண்டாளன் வந்து அவமரியாதை செய்வது முடியாது. அதே போல தர்மமே கொள்கையாக உடைய ராமனின் தர்ம பத்தினி. பதி விரதை நான். நீ என்னை தொடக் கூட முடியாது. ராக்ஷஸாதமா, நீ பாபி. ராஜ ஹம்ஸத்துடன் தாமரைக் காட்டில் எப்பொழுதும் விளையாடி மகிழும் பெண் ஹம்ஸம், வான் கோழியை ஏன் ஏறிட்டுப் பார்க்கப் போகிறது? இந்த சரீரம் ஒரு பொருட்டே இல்லை. இதைக் கட்டுவாயோ, அல்லது சாப்பிடுவாயோ, இந்த சரீரத்தை பாதுகாத்து எனக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை. இந்த சரீரமோ, என் வாழ் நாளோ இரண்டுமே எனக்குத் தேவையில்லை. பூமியில் நான் நிந்தைக்கு ஆளாகி வாழவும் விரும்பவில்லை. கோபத்துடன் கடுமையாக பேசிய வைதேஹி, இதற்கு மேல் ராவணனிடம் எதுவும் பேசவில்லை. சீதையின் பதிலைக் கேட்டு அவள் வார்த்தைகளின் கடுமை மயிர் கூச்சலைத் தோற்றுவிக்க, ராவணன் எல்லையில்லா ஆத்திரம் அடைந்தான். பயமுறுத்தலானான். மைதிலி, கேள். பன்னிரண்டு மாதங்கள் அவகாசம் தருகிறேன். இந்த கால கெடுவிற்குள் நீயாக என் வசம் ஆகாவிடில், அழகாக சிரிப்பவளே, என் சமையல்காரர் காலை ஆகாரத்திற்கு உன்னை கண்ட துண்டமாக வெட்டி விடுவார். ஜாக்கிரதை என்றான். அதே கோபத்துடன் ராக்ஷஸிகளைப் பார்த்து கட்டளையிட்டான். மாமிசத்தையும், ரத்தத்தையும் விரும்பி சாப்பிடும் ராக்ஷஸிகளே, இந்த பெண்ணுக்கு நல்ல விதமாக புத்தி சொல்லி என் வசமாகச் செய்யுங்கள். இவளுடைய கர்வத்தை அடக்குங்கள். ராவணன் சொன்னவுடனேயே, கோரமான அந்த ராக்ஷஸிகளின் கூட்டம், அவனை வணங்கி, மைதிலியை சுற்றிக் கொண்டனர். இவர்களை நியமித்து விட்டு, பூமி அதிர நடந்து ராவணன், அசோக வனத்தின் மத்தியில் இவளை கொண்டு செல்லுங்கள். அங்கு இவளை ஜாக்கிரதையாக காப்பாற்றி வாருங்கள். எப்பொழுதும் இவளைச் சுற்றி காவல் இருங்கள். காட்டு யானைக் குட்டியை மெதுவாக வழிக்கு கொண்டு வருவது போல. சில சமயம் பயமுறுத்தி, சில சமயம் நயமாக பேசி இவளை நம் பக்கம் வரும்படி செய்யுங்கள் என்றான். கட்டளையை சிரமேற்கொண்டு, ராக்ஷஸிகள் சீதையை அழைத்துக் கொண்டு அசோக வனம் சென்றனர். எந்த பருவமானாலும், பலவிதமான பூக்களும், பழங்களும் நிறைந்து விளங்கும் மரங்கள் உடைய, யானைகள் எப்பொழுதும் மதம் பிடித்து திரியும் யானைக் கூட்டங்களும் உள்ள அந்த அசோக வனத்தின் அழகை ரசிக்கும் நிலையில் சீதை இல்லை. ராக்ஷஸிகள் நாலா புறமும் சூழ்ந்து நிற்க, புலிக் கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்ட மான் குட்டி போல இருந்தாள். பெரும் சோகத்தில் ஆழ்ந்த ஜனகன் மகளான மைதிலி, கயிற்றால் கட்டப் பட்ட பெண் மான் போல, தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாமல், தவித்தாள். விரூபமான கண்களையுடைய ராக்ஷஸிகளால் பெரிதும் பயமுறுத்தப் பட்ட மைதிலிக்கு அமைதி கிடைக்கவேயில்லை. எப்பொழுதும் தன் கணவனையே நினைத்து, தான் தெய்வமாக நினைக்கும் ராமனின் தியானத்திலேயே, வேறு எது பற்றிய நினைவும் இல்லாதவளாக, தன் சோகமும் பயமுமே துணையாக, அந்த அசோக வனத்தில் இருந்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் வத்ஸராவதி4கரணம் என்ற ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 57 (253) ராம ப்ரத்யாக3மனம் (ராமன் திரும்பி வருதல்)
மிருக ரூபத்தில் வந்தது ராக்ஷஸன், விருப்பம் போல ரூபம் எடுக்க வல்ல மாரீசன் தான் என்பது தெரிந்தவுடன், அவனை வீழ்த்தி விட்டு, அவசரமாக தான் வந்த வழியே திரும்பினான் ராமன். வேகமாக மைதிலியைக் காண ஓடிவரும் அவனை, பின்னாலிருந்து கோவேறு கழுதைகள் (க2ர) கோரமாக கத்தியபடி தொடர்ந்தன. அந்த குரலின் பொருளையறிந்து, பயங்கரமான கெடுதல் வருவதை அறிவிக்கும் நிமித்தம் அது என்பதால், மனம் சஞ்சலமாக, வைதேஹி எப்படி இருக்கிறாளோ என்று கவலை கொண்டான். அது அசுபமான நிமித்தம், வரப் போகும் கெடுதலை சொல்வதாகும் என்று நினைத்தபடி வேகமாக நடந்தான். மனம் வைதேஹியை நினைத்தது. சௌக்யமாக இருக்கிறாளோ இல்லையோ, ராக்ஷஸர்கள் சாப்பிட்டு விட்டார்களா? இந்த மாரீசன் என் குரலில் அலறியது ஏன்? இதைக் கேட்டு லக்ஷ்மணன் என்ன நினைத்தானோ ? சௌமித்ரி இந்தக் குரலைக் கேட்டிருந்தால், மைதிலியை அங்கேயே விட்டு, அல்லது அவளே அனுப்பியோ என்னை தேடிக் கொண்டு வரக் கூடும். ராக்ஷஸர்கள் சேர்ந்து சீதையின் வதத்தை தான் விரும்பினார்களா? பொன் மானாக வந்து ஏமாற்றி, என்னை ஆசிரமத்திலிருந்து இவ்வளவு தூரம் இழுத்து வந்து மாரீசன் அம்பு துளைக்கப் பட்டு மாண்டான். ஹா லக்ஷ்மணா, நான் செத்தேன் என்று என் குரலில் கத்தினான். அவர்கள் இருவரும் க்ஷேமமாக இருக்கிறார்களோ இல்லையோ. நான் இல்லாத வனத்தில் என்ன நடக்கிறதோ, இந்த ஜனஸ்தானம் காரணமாகத் தான் ராக்ஷஸர்களுடன் விரோதமே வந்தது. இங்கு தெரியும் நிமித்தங்கள் பலவும் கோரமானவை. ஏதோ கெடுதல் நேரப் போவதைத் தான் தெரிவிக்கின்றன. இப்படி யோசித்துக் கொண்டே வேகமாக நடந்த ராமன், திரும்பவும் கோ3மாயு கத்தவும் (ஒரு வகை கழுதை) அதைக் கேட்டு மேலும் கவலை கொண்டான். மிருக ரூபம் எடுத்து தன்னை ஏமாற்றி அந்த இடத்தை விட்டு விலகச் செய்த ராக்ஷஸனின் செயலுக்குப் பின் ஏதோ பயங்கரமாக நடக்கப் போகிறது என்று சந்தேகம் வலுப் பெற்றது. ஜனஸ்தானத்தை நோக்கி ராமன் வேகமாக நடந்தான். ஏற்கனவே கலங்கியிருந்த ராமனை பக்ஷிகளும் அலறுவது போல கூச்சலிட்டுக் கொண்டு இடது புறமாக வந்தன. இந்த நிமித்தங்கள் மிகவும் பயங்கரமாக ஏதோ நடந்திருப்பதைத் தான் சொல்லுகின்றன என்று தெரிந்து கொண்ட ராமன், எட்டி நடை போட்டு வேகமாக ஆஸ்ரமத்தை நோக்கிச் சென்றான். சீதையையும், லக்ஷ்மணனையும் நினைத்த படியே, ஓடி வந்து ஜனஸ்தானம் வந்து சேர்ந்தான். அப்பொழுது முகம் வெளிறி, ஓடி வரும் லக்ஷ்மணனைக் கண்டான். சற்று தூரத்திலேயே லக்ஷ்மணனைக் கண்டு வருந்தியவனாக, ராமனும், அதைவிட அதிகமாக வருத்தத்தை முகத்தில் தேக்கியபடி லக்ஷ்மணனும், சந்தித்தனர். ஓடி வந்த ராமனும், பதறிக் கொண்டு வந்த லக்ஷ்மணனும் ஒருவரையொருவர் சந்தித்தவுடன், சகோதரனைப் பார்த்து, ராக்ஷஸர்கள் நடமாடும் இடத்தில் சீதையை தனியே விட்டு வந்து விட்டாயே, என்று சொல்லியபடியே ராமர், அவனது இடது கரத்தை பிடித்தபடி நிற்காமல் தொடர்ந்து ஓடலானார். மிகவும் துக்கத்துடன், ஆனால் மதுரமாக லக்ஷ்மணனிடம் சொன்னார். லக்ஷ்மணா, அஹோ கஷ்டம். அவளை தனியே விட்டு வந்து விட்டாயே, சௌக்யமாக இருப்பாளா? எனக்கு சந்தேகமே இல்லை. வீரனே, ஜனகர் மகள் நிச்சயம் காணாமல் போயிருப்பாள் அல்லது, சாப்பிடப் பட்டிருப்பாள். காட்டில் திரியும் ராக்ஷஸர்கள் அவளை சும்மா விட மாட்டார்கள். இது வரை ஏகமாக அசுபமான நிமித்தங்களையே கண்டு வருகிறேன். உயிரோடு சீதையைக் காண்போமா, லக்ஷ்மணா, ஜனகர் மகளை அருகில் சென்று காண்போமா. கோ3மாயு பயங்கரமாக அலறியது. மிருகங்கள், பக்ஷிகள் எல்லாமே ஒரே திசையில் நோக்கி கத்துகின்றன. ஏதோ நடக்கக் கூடாதது நடக்கப் போகிறது என்று தெரியப் படுத்துகின்றன. ராஜ குமாரி நலமாக இருப்பாளா, லக்ஷ்மணா , வா போகலாம். இந்த ராக்ஷஸனின் வேலை. மிருக உருவத்துடன் என்னை ஆசை காட்டி, இவ்வளவு தூரம் இழுத்து வந்து எப்படியோ சிரமப் பட்டு அதைக் கொன்றால், மிருகத்தின் இடத்தில் அந்த ராக்ஷஸன் இறக்கும் தறுவாயில் இருந்தான். என் மனம் சஞ்சலப் படுகிறது. இடது கண் துடிக்கிறது. லக்ஷ்மணா, சந்தேகமே இல்லை. சீதையை யாரோ தூக்கிச் சென்று விட்டார்களோ, இறந்தே போய் விட்டாளோ. இறக்கும் தறுவாயில் இருக்கிறாளோ. என் உள் மனதில் ஏதோ விபரீதம் என்றே தோன்றுகிறது என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராம ப்ரத்யாக3மனம்
என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 58 (254) அனிமித்த தரிசனம் (தீய சகுனங்களையே காணுதல்)
லக்ஷ்மணன் எதுவும் பேசாமல், தீனமாக இருப்பதையும், எதிரில் வைதேஹி வராததையும் வைத்து, ராமர் பதட்டமடைந்தார். லக்ஷ்மணா, தண்டகாரன்யம் போகிறேன் என்று சொன்ன உடனேயே என்னைத் தொடர்ந்து வந்தாளே, அந்த வைதேஹி எங்கே? அவளை விட்டு விட்டு நீ இங்கே வந்திருக்கிறாயே. ராஜ்யத்திலிருந்து துரத்தப் பட்டு, தீனமாக தண்டகாரன்யம் வந்த என்னை, எனக்கு சகாயமாக வந்தவள் எங்கே? கொடியிடையாள் எங்கே? எவளைப் பிரிந்து நான் முஹுர்த்தம் கூட உயிர் தரித்து இருக்க மாட்டேனோ, அந்த என் உயிருக்குயிரான சீதை எங்கே? தேவ குலத்து பெண்களுக்கு இணையான என் சீதை எங்கே? அவள் இல்லாமல் எனக்கு, தேவராஜன் என்றோ, பூமியில் பெரிய அரசன் என்றோ பதவிகள் தேவையில்லை. அப்படிப் பட்ட ஜனகன் மகள் எங்கே? என் உயிருக்குயிரான வைதேஹி இன்னமும் உயிருடன் இருக்கிறாளா? இல்லையா, காட்டிற்கு நாடு கடத்தப் பட்டு வந்தது கூட பயனில்லாமல் போகுமா? சௌமித்ரே, சீதை காரணமாக நானும் இறந்து, நீ தனியாக அயோத்தி திரும்பிச் செல். கைகேயி திருப்தியாக ஆவாள். அவள் மன விருப்பம் நிறைவேறியவளாக மகிழ்ச்சியடைவாள். மகனையும், ராஜ்யத்தையும் இழந்து தபஸ்வினியான என் தாய் கௌசல்யா, கைகேயிக்கு ஏவின வேலை செய்யும் பரிசாரிகையாக நிற்கப் போகிறாளா? வைதேஹி உயிருடன் இருந்தால் நான் ஆசிரமம் வருகிறேன். (சுவ்ருதா, விருத்தா யதி- சுவ்ருத்தா, நன்னடத்தையுள்ளவள், வ்ருத்தா, போய் விட்டாள், யதி, என்றால்) அவள் உயிருடன் இல்லையெனில், லக்ஷ்மணா, நானும் உயிரை விடுவேன். ஆசிரமம் வந்தால், சிரித்தபடி, சீதை எதிர்ப்படவில்லையெனில், லக்ஷ்மணா, நான் உயிரை விடுவேன். சொல்லு, வைதேஹி உயிருடன் இருக்கிறாளா, இல்லையா? ராக்ஷஸர்கள் தின்று தீர்த்து விட்டார்களா? நீ அது தான் ஓடி வந்தாயா? சுகுமாரி, பா3லா, எதிலும் துக்கத்தைக் காண மாட்டாள். என் பிரிவினால் வைதேஹி என்ன விதமாக மனத் துயர் அடைந்தாளோ? அந்த ராக்ஷஸன் என் குரலில் லக்ஷ்மணா என்று பெருங்குரலில் கத்திய பொழுது நீயே பயந்து விட்டாய். என் குரல் போலவே இருந்த அந்த ஓலத்தைக் கேட்டு சீதையும் பயந்து என்னைத் தேட உன்னை அனுப்பியிருப்பாள். என்னை சீக்கிரமாக பார்க்கும் ஆவலோடு நீயும் போ என்று அனுப்பியிருக்கிறாள். எப்படி பார்த்தாலும் சீதையை தனியாக தவிக்க விட்டு வந்தது சரியல்ல. கஷ்டம், ராக்ஷஸர்களின் கொடிய வஞ்சனை. பழி வாங்க அவர்களுக்கு இடம் கொடுத்தாற் போல ஆயிற்று. க2ரனை வதம் செய்ததால், ராக்ஷஸர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சீதையை அடித்து தின்றிருப்பார்கள். சந்தேகமே இல்லை. அஹோ, இப்படி ஒரு கஷ்டமா? நான் என்ன செய்வேன்? இப்படி சோகத்தில் மூழ்கி செய்வதறியாது நிற்கும் படியான நிலையும் வந்ததே? நமக்கு இப்படி ஒரு சோதனை வர வேண்டுமா? இவ்வாறு சீதையை நினைத்து வருந்திக் கொண்டே, ராகவன் ஜனஸ்தானம் வந்து சேர்ந்தார். வேகமாக லக்ஷ்மணனும் உடன் வந்தான். துயரமே உருவாக, பசியாலும், தாகத்தாலும் ஓடி வந்த சிரமத்தாலும், பெருமூச்சு விட்டுக் கொண்டு, முகம் வாடி, முகம் வெளிறிக் கிடக்கும் சகோதரனை எதுவும் நிந்திக்கவும் தோன்றாமல் (ஏன் தனியாக விட்டு வந்தாய் என்று) தங்கள் இருப்பிடத்தை வந்தடைந்தவர்கள், அது சூன்யமாக இருக்கக் கண்டார்கள். தங்கள் ஆசிரமத்தில் நுழைந்து, உள்ளே தாங்கள் நடமாடும் இடங்களில் அவளைக் காணாமல், வாசஸ்தலம் அழியாமல் இருக்கிறது என்று ஒரு புறம் நிம்மதியும், சீதை எங்கே என்ற கவலையும் ஒன்றாக அவர்களுக்கு ஏற்பட்டது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் அனிமித்த தரிசனம் என்ற ஐம்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 59 (255) லக்ஷ்மணாக3மன விக3ர்ஹணம்
(லக்ஷ்மணன் ஓடி வந்ததை குற்றமாகச் சொல்லுதல்)
ஆசிரமத்தின் உள்ளூம் புறமும் தேடிப் பார்த்த ரகு நந்தனன், சௌமித்திரியைப் பார்த்து மிகுந்த துக்கத்துடன் இப்படி கேட்டான். எஎன்ன காரணம்? சௌமித்ரே, எதற்காக சீதையை தனியே விட்டு நீ என்னைத் தேட வந்தாய்? உன்னை நம்பி, உன் பொறுப்பில் தானே விட்டுச் சென்றேன். நீ ஓடி வருவதைக் கண்டதுமே, என் மனதில் ஏதோ பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்று பட்டது. அது உண்மையாக ஆகி விட்டது. என் இடது கண்ணும் புஜமும் ஹ்ருதயமும் துடிக்கிறது. சீதை இல்லாமல் நீ தனியே வருவதை வெகு தூரத்திலிருந்து பார்த்த பொழுதே எனக்கு திக்கென்றிருந்தது. ராமன் மேலும் மேலும் பேசப் பேச, லக்ஷ்மணன், துயரத்துடன், ஏற்கனவே கவலையுடன் இருக்கும் ராமனிடம் பதில் சொன்னான். நானாக வரவில்லை. அவளை விட்டு, அவள் தான் உக்ரமாக பேசி என்னை விரட்டினாள். உங்களைத் தேட அனுப்பினாள். நீங்கள் தான் ஹா லக்ஷ்மணா, ஹா சீதே, என்று அலறினீர்கள். காப்பாற்று என்று கத்தினீர்கள். அதைக் கேட்டு மைதிலி பித்து பிடித்தவள் போல் ஆகி விட்டாள். துயரம் நிரம்பிய அந்த ஓலம் காதில் விழுந்தவுடன், மைதிலி பொறுக்க மாட்டாமல், அதை விட துக்கத்துடன் காப்பாற்று என்று அலறியதைக் கேட்டு துடி துடித்துப் போனாள். பயத்துடன் அழுது கொண்டே, உங்கள் மேல் உள்ள ஸ்னேகத்தால் என்னை போ, போ என்று விரட்டினாள். திரும்பத் திரும்ப நீ போய் பார் என்று என்னை விரட்டிய போதும் நான் அசையவில்லை. உங்கள் மேல் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக பேசினேன். ராமனை பயமுறுத்தும் ராக்ஷஸன் எவன் இருக்கிறான்? பயப்படாதே, இது வேறு யாரோ அலறும் சத்தம் என்று சொன்னேன். திட்டினாள். நீசமாக பேசினாள். உங்களிடம் எப்படிச் சொல்வேன். மூன்று உலகுகளையும் காப்பாற்றக் கூடியவன், த்ராஹி (காப்பாற்று) என்று கேட்பானா? சோப4னே, ஏதோ காரணத்திற்காக என்ன நினைத்தோ இந்த ராக்ஷஸன் தான் இந்த குரலை எடுத்துக் கொண்டு த்ராஹி, த்ராஹி என்று சொல்கிறான். என்னை வரவழைக்கக் கூட இருக்கலாம். கவலைப் படாதே, பொறு என்று சொன்னேன். லக்ஷ்மணா, என்னை காப்பாற்று என்ற குரல் அபஸ்வரமாக கேட்கிறது. அதனால் கவலையை விடு. சாதாரண பெண்கள் போல நீ கவலைப் படலாமா? மூன்று உலகிலும் ராமனை எதிர்த்து நிற்கக் கூடிய மனிதன் இதுவரை தோன்றியதுமில்லை, இனித் தோன்றப் போவதும் இல்லை. யுத்தத்தில் ராமனாவது, தோற்பதாவது. இந்திரனே, தன் பரிவாரங்களோடு தேவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு வந்தால் கூட ராமனை ஜயிக்க முடியாது. இவ்வளவு சொல்லியும் வைதேஹி, துக்கத்தாலும், மோகத்தாலும் தன்னை மறந்தவளாக எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கண்களில் நீர் பெருக என்னிடம் பல கொடூரமான வார்த்தைகளைச் சொன்னாள். பாபி, என்னிடம் உனக்கு ஏதோ கெட்ட எண்ணம் இருக்கிறது. சகோதரன் இறந்து விட்டால் என்னை அடையலாம் என்று நினைக்கிறாயா? அது நடக்காது. அல்லது பரதன் தன் ஒற்றன் போல உன்னைத் தொடர்ந்து அனுப்பி இருக்கிறானா? இவ்வளவு அலறியும் ராமனை காப்பாற்ற நீ கிளம்ப மறுக்கிறாய். கூடவே மறைந்து இருந்து நல்லவன் போல நடிக்கும் சத்ரு நீ. எனக்காகத் தான் காட்டில் அண்ணனைத் தொடர்ந்து வந்தாயோ. யாரோ உன்னை ஏவியிருக்கிறார்கள். அதனால் தான் இப்பொழுது ராமனைக் காப்பாற்றத் தயங்குகிறாய். இவ்வாறு வைதேஹி சொல்லவும், பரபரப்புடன், சிவந்த கண்களுடன் கோபத்தில் என் உதடுகள் துடிக்க, நான் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தேன். இப்படிச் சொல்லிய சௌமித்திரியைப் பார்த்து துக்கத்தில் தன் நிலை மறந்தவராக, ராமர் திரும்பவும் சொன்னார். நீ செய்தது தவறு லக்ஷ்மணா, அவளை விட்டு நீ ஓடி வந்தது தவறு தான். ராக்ஷஸர்களை நான் எப்படியும் சமாளிப்பேன் என்று தெரிந்தும், மைதிலி ஏதோ கோபமாக சொன்னாள் என்பதற்காக அவளை தனியே விட்டு விலகி வந்தேன் என்று சொல்கிறாயே. இது எனக்கு சரியாகப் படவில்லை. கோபத்தில் அவள் பிதற்றினால், நீ அதற்கு மேல் கோபம் கொண்டு, யோசிக்காமல் என் கட்டளையை நிறைவேற்றாமல் தவறு செய்திருக்கிறாய். இது எனக்கு சந்தோஷம் தருவதாகவோ, சம்மதமாகவோ இல்லை. இதோ பார், இந்த ராக்ஷஸன் விழுந்து கிடக்கிறான். இவன் தான் பொய்யாக, மான் ரூபம் எடுத்து ஆசிரம வாயிலில் சஞ்சரித்திருக்கிறான். என்னை அந்த இடத்தை விட்டு விலக்கவே இப்படி செய்து ஏமாற்றியிருக்கிறான். வில்லை இழுத்து, நாணை பூட்டி, சலீலம் என்ற பாணத்தால் சுலபமாக நான் அவனை அடித்தேன். மிருக ரூபத்தை விட்டு, வித்யாசமான குரலில் அலறிக் கொண்டு விழுந்தான். இடுப்பில் ஆபரணங்களோடு ராக்ஷஸனாக ஆகி விட்டான். என் அம்பு பட்டு துளைத்த பின் தான் வெகு தூரம் கேட்கும் விதமாக என் குரலில் அலறி ஓலமிட்டான். இதைக் கேட்டு நீ ஓடி வந்து விட்டாய், தனியாக சீதையை விட்டு விட்டு.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் லக்ஷ்மணாக3மன விக3ர்ஹணம் என்ற ஐம்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 60 (256) ராமோன்மாத3: (ராமன் பித்து பிடித்தவன் போல் ஆதல்)
ராமனின் இடது கண் துடித்துக் கொண்டேயிருந்தது. என்ன தடுத்தும் நிற்பதாக இல்லை. இடது கண்ணின் பாதி துடித்துக் கொண்டேயிருந்தது அவனை மிகவும் வாட்டியது. உடல் பூராவும் வியர்த்து ஆறாக பெருகியது. திரும்பத் திரும்ப அசுபமான நிமித்தங்களே வரக் கண்டு சீதை க்ஷேமமாக இருப்பாளா என்ற சந்தேகம் பெருமளவில் மனதில் வியாபித்தது. இருவரும் வேகமாக நடந்து அவளைக் காணும் ஆவலோடு தங்கள் இருப்பிடம் சென்றடைந்தனர். அது சூன்யமாக இருக்கக் கண்டு துணுக்குற்றார். துக்கம் தொண்டையை அடைத்தது. ஆங்காங்கு குடிசைகளைப் பார்த்துக் கொண்டே சீதையைத் தேடியவாறு நடந்தனர். பர்ணசாலைக்குள்ளும் இல்லை, பனிக் காலத்து தாமரை போல, லக்ஷ்மி விலகிய பர்ணசாலை சூன்யமாக தெரிந்தது. மரங்கள் அழுவது போல, பூக்கள் வாடி, அமைதியாக இருந்த பக்ஷிகளுடன், ஓசையின்றி நடமாடிய மிருகங்களுமாக அசாதாரண அமைதி நிலவியது. லக்ஷ்மியே அகன்ற பிறகு நமக்கு என்ன வேலை என்பது போல வனதேவதைகள் காட்டை விட்டுச் சென்று விட்டது போல காட்சியளித்தது வனம். அஜினம் எனும் ஆசனமும் குசத்தால் ஆன ஆசனமும் இறைந்து கிடந்தது. பாய் விரிக்கப் பட்டிருந்தது. சூன்யமான இருப்பிடத்தைக் கண்டு புலம்ப ஆரம்பித்தார். உள்ளும் புறமும் திரும்பத் திரும்பத் தேடியபின், யாரோ தூக்கிச் சென்று விட்டார்களா, உயிர் பிரிந்திருக்குமோ, தொலைந்து போனாளோ, யாராவது சாப்பிட்டு தீர்த்திருப்பார்களோ, ஒளிந்து கொண்டாளோ, அல்லது காட்டிற்குள் தானும் என்னைத் தேட கிளம்பி விட்டாளோ, பூவோ, பழமோ சேகரித்துக் கொண்டு வரச் சென்றிருப்பாளோ, தாமரை மலரைப் பறிக்க அல்லது தண்ணீர் கொண்டு வர நதிக் கரைக்குச் சென்றிருப்பாளோ? வனம் முழுவதும் சல்லடையாகத் தேடியும் பிரியமான மனைவியைக் காணவில்லை. கண் சிவந்து, உன்மத்தம் பிடித்தவன் போலானார். மரத்திற்கு மரம் ஓடிப் போய் தேடினார். நதிக்கு நதி ஓடிப் பார்த்தார். மலை குகைகளில், ஒரு இடம் விடாமல் தேடியும் சீதையைக் காணாமல் ராமர் துயரக் கடலில் மூழ்கினார். கதம்ப புஷ்பத்தை விரும்பி உன்னிடம் வருவாளே, கதம்ப மரமே நீ கண்டாயா? பில்வ மரமே, மஞ்சள் நிற பட்டாடையுடுத்து, இளம் தளிர்களை பறிக்க வருவாளே, என் பிரிய மனைவி அவள், பில்வம் போன்ற ஸ்தனங்களையுடையவள், அவளை நீ கண்டாயா? அர்ஜுன மரமே நீதான் சொல். அர்ஜுன மரத்தை அவளுக்கு பிடிக்கும். ஜனகர் மகள் உயிருடன் இருக்கிறாளா, இல்லையா அதையாவது சொல். அவள் பயந்த சுபாவம் உடையவள். ககுப மரமே, நீ மைதிலியை நன்றாக அறிவாய். நாங்கள் இருவருமாக உன் அடியில் நிறைய பேசியிருக்கிறோம். அவளை நீ நன்கு அறிவாயே. இளம் தளிர்களும், புஷ்பங்களுமாக சோபையுடன் விளங்குவாயே, வண்டுகள் மொய்க்கும் மரங்களில் சிறந்தவனே, நீ பார்த்தாயா? திலக மரமே, நீ கண்டாயா? சோகத்தை தீர்க்கும் அசோக மரமே, என்னையும் என் துயரை நீக்கி உன் பெயருடையவனாக ஆக்குவாயா? சீக்கிரம் சொல், என் பிரியை எங்கே. தாள மரமே நீ தான் சொல்லேன். உன் பழங்களைப் பார்த்தால் அவள் ஸ்தனம் நினைவு வருகிறது. என்னிடத்தில் கருணையிருந்தால் அழகிய ஸ்தனங்கள் உடைய என் மனைவியைக் கண்டு சொல்லேன். ஜம்பூ3 நீதான் பார்த்தாயா? என் மனைவியை பார்த்திருந்தால் யோசிக்காமல் சொல்லு. கர்ணிகார மரமே புஷ்பங்களுடன் நிறைந்து அழகாக விளங்குகிறாயே, என் சாதுவான மனைவியை எங்காவது கண்டாயா? சூத, வேம்பு, பலா, மாகா4 சால, குரவான், த4வான், மாதுளம், அஸனான் என்ற மரத்தடிகளிலும் சென்று புலம்பியவாறு ராமன் சீதையைத் தேடினான். ப3குள மரங்களையும், புன்னக, சம்பக, கேதகி புதர்களையும் விசாரித்துக் கொண்டு பித்து பிடித்தவன்போல அலைந்தான். மிருக3மே (மான் குட்டியே) உன் சாயலில் கண்களையுடையவள், உன் கூட்டத்தினரை அடையாளம் கண்டு கொள்வது போல அவளைக் கண்டு பிடித்துச் சொல்லேன். யானையே, நீயும் தான் பார்த்தாயானால், எனக்குச் சொல்லு. அவள் கால்கள் உன் தும்பிக்கை போல இருக்கும். நீ அவளைப் பார்த்திருக்கிறாய். உனக்குத் தெரியுமே, எங்காவது தென்பட்டால் சொல்லு. சந்திரன் போன்ற முகத்தையுடைய என் பத்னியை, புலியே, நீ கண்டாயா? பயப்படாமல் சொல்லு. எங்கே வெகு தூரம் போய் விட்டாய், சீதே, எனக்கு பிரியமானவள் நீ, என்னை துன்புறுத்தலாமா? மரங்களில் மறைந்து கொண்டு ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய். நில், நில், என்னிடம் கருணை கொள். விளையாட்டாக பேசாமல் இருக்கிறாயா? போதும் விளையாட்டு. வெளியில் வா. உன் உடையை வைத்தே உன்னை கண்டு கொள்வேன். வெகு தூரம் ஓடாதே. ஆ, இங்கு நிச்சயம் இல்லை. இருந்தால், என்னைக் காணத் துடித்தவள், இவ்வளவு நேரம் அலட்சியமாக இருக்க மாட்டாள். ராக்ஷஸர்கள் நிச்சயம் அவளைத் தின்று தீர்த்து விட்டார்கள். என்னை விட்டுப் பிரிந்தவளை அடித்து பங்கு போட்டுக் கொண்டு சாப்பிட்டு இருப்பார்கள். அழகிய குண்டலங்களோடு கூடிய முகமும், எடுப்பான நாசியும், பல் வரிசையும், இவர்கள் கையில் அகப்பட்டு சின்னா பின்னமாகி இருக்கும். சம்ப3கம் போன்ற கழுத்தை பிடித்து நெருக்கியிருப்பார்களோ. கோமளமானவள், அழ, அழ, சுபமான கழுத்தை நெரித்து சாப்பிட்டு இருப்பார்களோ? கையில் உள்ள ஆபரணங்களோடு இளம் துளிர் போன்ற மெதுவான கைகளோடு, புஜத்தோடு நடுங்கிக்கொண்டு இருந்தபடி கடித்து தின்றிருப்பார்கள். அந்த ராக்ஷஸர்களுக்கு தின்பண்டமாக ஆக்கத்தான் நான் உன்னை விட்டு விலகிச் சென்றேனோ. இவ்வளவு ப3ந்து4க்கள், சுற்றத்தார் உள்ள உன்னை அனாதையாக விட்டுச் சென்று ராக்ஷஸர்களுக்கு கொடுத்து விட்டேனா? ஹா லக்ஷ்மணா, உன் கண்ணுக்கு எங்காவது தென் படுகிறாளா? ஹா சீதே, ஹா பிரியே, எங்கு போனாய்? என்று திரும்பத் திரும்ப புலம்பிக் கொண்டு ராமன், வனத்தில் இங்கும் அங்குமாக ஓடி ஓடி களைத்தான். சில சமயம் வேகமாக ஓடிச் சென்று பார்த்தான். சில சமயம் பலமாக கத்தி அழைத்து, வலுவிழந்தான். பித்து பிடித்தவன் போல் ஆனான். காந்தாவான மனைவியைத் தேடித் தேடித் திரிந்தான். காடுகளையும், நதிகளையும், மலை பிரதேசங்களையும், மரங்கள் அடர்ந்த கானனங்களையும், சுற்றிச் சுற்றி வந்தான். அந்த பெரிய வனம் முழுவதும் சல்லடை போட்டு சலித்தது போல தேடியும், மைதிலியைக் காணாமல், தன் நம்பிக்கையை இழந்தவனாக, திரும்பவும் முயற்சி செய்வோம் என்று கிளம்பினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராமோன்மாதோ என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 61 (257) சீதான்வேஷணம் (சீதையைத் தேடிச் செல்லுதல்)
ஆசிரம பதம் சூன்யமாகவும், ஆசனங்கள் கலைந்த நிலையில் தாறுமாறாக கிடப்பதையும், சீதை காணாமல் போய் இருப்பதையும் கண்டு புஜங்களை பிடித்துக் கொண்டு ஓவென்று அலறினான், ராமன். லக்ஷ்மணா, சீதை எங்கே? எந்த இடம் போய் இருப்பாள்? யார் தூக்கிச் சென்றிருப்பார்கள்? தின்று தீர்த்திருப்பார்களோ? யார்? மரங்களில் ஒளிந்து கொண்டு, என் தவிப்பைப் பார்த்து சிரிக்க காத்திருந்தால், சீதே, போதும் விளையாட்டு. சிரித்தது போதும், உடனே வா. என் எதிரில் வா. மான் குட்டிகளோடு விளையாடி பொழுது போக்குகிறாயோ, நான் தேடி வந்து விடுவேன் என்று நம்பிக்கையா? போதும், உன்னைத் தேடி அலைந்து கண்களில் நீர் மல்கத் தவிக்கிறேன், என்னுடன் விளையாடலாம் , வா. லக்ஷ்மணா, நான் எப்படி உயிர் வாழ்வேன்? சீதையின்றி வாழ்க்கையை நினைத்து பார்க்கவே முடியவில்லையே. உயிரை விட்டு தான் என்ன செய்வேன்? பரலோகம் போனால் அப்பா தசரதர் இருப்பார். பிரதிக்ஞை செய்து என் வசனத்தைக் காப்பாற்ற வனம் அனுப்பினேன், வன வாச காலத்தை முடிக்காமல் என்னெதிரில் எப்படி வந்தாய் என்று கேட்பார். பண்பு இல்லாதவன், காமத்தில் மூழ்கியவன், பொய் சொல்லுபவன் என்று எல்லோர் எதிரிலும் நிச்சயம் சொல்வார். தன் வசத்தில் இல்லாமல், சோகத்தில் மூழ்கி, என் மனோரதமும் நிறைவேறாமல் தவிக்கும் என்னை விட்டு, நேர்மையில்லாத மனிதனை விட்டு கீர்த்தி விலகிப் போவதைப் போல எங்கே போனாய்? அழகிய இடையுடைய அழகியே, என்னை விட்டுப் போகாதே. உன் பிரிவைத் தாங்க முடியவில்லை. உயிரே போனாலும் போய் விடும். என்று புலம்பிக் கொண்டே பல இடங்களிலும் தேடியும் சீதையைக் காண முடியவில்லை. பெரும் சேற்றில் அகப்பட்டுக் கொண்ட யானையைப் போல துயரத்தில் மூழ்கி பரிதவிக்கும் ராமனைப் பார்த்து, லக்ஷ்மணன், அவனை தேற்றும் பொருட்டு ஆறுதல் சொன்னான். ராமா, நல்ல புத்திசாலியான நீயே இப்படி வருந்தலாமா? நானும் வருகிறேன், இருவருமாக தேடுவோம், வா. மலை குகைகளில் தேடுவோம். இந்த மலையில் குகைகளும் நிறைய இருக்கின்றன. வா, ஏதோ ஒன்றில் நுழைந்து வெளி வரத் தெரியாமல் சீதை தவிக்கிறாளோ என்னவோ. வனங்களில் வழி தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறாளோ, மலர்ந்த புஷ்பங்களைப் பார்த்து தாமரை குளக் கரையில் நிற்கிறாளோ, நம்மை சற்று பயமுறுத்த ஒளிந்து கொண்டிருக்கிறாளோ, புல்லை சேகரிக்கவோ, ஸ்னானம் செய்யவோ நதிக்கரைக்கு போய் இருக்கிறாளோ, தேடலாம் வாருங்கள். எதுவானாலும் மனதை திடப் படுத்திக் கொள்ளுங்கள். சோகம் புத்தியை மழுங்கச் செய்யும். அதற்கு இடம் தரக் கூடாது. ஸ்னேகமாக, பரிவும் பாசமுமாக, லக்ஷ்மணன் இப்படிச் சொன்னதைக் கேட்டு, ராமன் சற்றுத் வெளிந்து லக்ஷ்மணனுடன் காடுகளில் தேடலானான். காடுகளையும், மலைகளையும், நதிகளையும், சிறிய குளங்களையும் பார்த்து தேடியவாறு நடந்தனர். தசரத குமாரர்கள், இவ்வாறு சீதையைக் காணாமல் அந்த மலையின் சாரல்களிலும், உச்சியில் சிகரத்திலும், குகைகளிலும் நுழைந்து பார்த்தனர். இந்த மலையில் சீதை இல்லை, லக்ஷ்மணா, எனவும், லக்ஷ்மணனும் மனம் உடைந்து போனான். தண்டகாரண்யம் முழுவதும் தேடி களைத்த ராமனைப் பார்த்து அவன் வருத்தம் அதிகரித்தது. ஒளி விடும் தேஜஸை உடைய வீரன், வாடி துவண்டு இருப்பதைக் கண்டு, கண்டிப்பாக உனக்கு சீதை கிடைப்பாள், நல்லறிவு உடையவனே, ஜனகன் மகள் சீதையை நீ நிச்சயம் திரும்ப பெறுவாய். எப்படி மகா பாஹுவான விஷ்ணு, பலியை கட்டி வைத்து பூமியை அடைந்தாரோ, அவ்வாறு நீயும் சீதையை அடைவாய். அன்பினால், சமாதானப் படுத்தும் லக்ஷ்மணனைப் பார்த்து, துயரத்தில் வார்த்தை எழும்பாமல், தீனமான குரலில் ராமன் லக்ஷ்மணா, வனம் முழுவதும் நன்றாக தேடி விட்டோம். தாமரை மலர்ந்து தண்ணீரை மூடியிருக்கும் குளக்கரைகளிலும் தேடினோம். இந்த மலையும், மலை குகையையும் நன்றாக அலசி பார்த்தாயிற்று. என் உயிருக்குயிரான வைதேஹியைக் காணவில்லை. இவ்வாறு புலம்பிய ராமன் சீதையை தூக்கிக் கொண்டு போய் இருப்பார்களோ என்ற எண்ணம் தலை தூக்க திகைத்தான். இந்த எண்ணம் மனதை வாட்ட, தீனமாக, முஹுர்த்த நேரம் செய்வதறியாது நின்றான். புத்தியும், நினைவும் மங்கியது. உடலில் எல்லா அங்கங்களும் விழுந்து விட்டாற் போல களைப்பும் மேலிட, இதிலிருந்து விடுபடுவது எப்படி என்று யோசிக்கக் கூட முடியாத படி உடலும் உள்ளமும் களைத்தவனாக தரையில் அமர்ந்தான். கண்ணீர் பெருக, தொண்டையடைக்க, ஹா பிரியே, என்று பலமுறை அழுதான். ஒரே ப3ந்து4வாக அருகில் இருந்த லக்ஷ்மணன், தன்னால் ஆன மட்டும் ஏதோ சமாதானமாகச் சொன்னது அவன் காதில் விழவில்லை. உதடுகள் அசைவதை மட்டுமே கண்கள் கண்டன.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சீதான்வேஷணம் என்ற அறுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 62 (258) ராக4வ விலாப: (ராகவனின் அழுகை)
கமல லோசனன், மஹாபா3ஹு என்றும் புகழப் படும் ராமன், சீதையை காணாமல், தன் உன்மத்த நிலையில், எதிரே அவளைக் கண்டது போலவும், எழுந்து அருகில் சென்றால் மறைந்து விடுவது போலவும் உருவெளித் தோற்றங்களை கண்டு பரிதவித்தான். புஷ்பங்கள் உனக்கு பிடிக்கும். அதனால் அசோக மரத்தடியில் பூப் பறித்துக் கொண்டிருக்கிறாயோ என்று அருகில் சென்றால், அந்த மரமே உன்னை நினவூட்டுகிறது. நீ இல்லை. வாழை மரத்தின் அருகில் சென்றால் கதலி மரம் உன் உடல் அமைப்பை நினவு படுத்துகிறது. உன் மணம் என் நாசியில் நிறைந்திருக்கிறது. கர்ணிகார வனத்தில் சென்றால் நீ உல்லாசமாக சிரிப்பது போல அந்த புஷ்பங்கள் மலர்ந்து தெரிகின்றன. இது என்ன பரிகாசம்? எதற்கு என்னை வருத்துகிறாய்? இந்த ஆசிரமத்தில் இப்படி ஓஹோ வென்று சிரிக்கலாமா? வாஸ்தவம் தான். உனக்கு பரிகாசம் செய்யப் பிடிக்கும் தான். எனக்கும் அது தெரியும். சீக்கிரம் வா, என் பிரிய மனைவியே, இந்த குடிசை சூன்யமாகத் தெரிகிறது. லக்ஷ்மணா, இவ்வளவு புலம்பியும் சீதை வரவில்லையே. எப்படி வருவாள்? ராக்ஷஸர்கள் நிச்சயம் தின்று தீர்த்திருப்பார்கள். அல்லது கடத்திச் சென்றிருப்பார்கள். இந்த மிருகங்களைப் பார். கண்களில் நீர் நிரம்ப நிற்கின்றன.
இதனால் வைதேஹி ராக்ஷஸர்களின் ஆகாரமாக ஆகி விட்டாளோ என்ற கவலை அதிகமாகிறது. ஹா வர வர்ணினி, எங்கே போனாய்? எப்படி இருக்கிறாய்? ஹா கைகேயி, சகாமா ப4வ- இப்பொழுது திருப்தியா, இதைத் தானே விரும்பினாய். சீதையுடன் கிளம்பிச் சென்றவன், அவளைத் தொலைத்து விட்டு வந்து நிற்கிறான் என்று சந்தோஷப் படு. எப்படி சூன்யமான அந்த:புரத்தில் பிரவேசிப்பேன். வீர்யமும் இல்லை, தயையும் இல்லை இந்த ராமனுக்கு என்று உலகம் பேசும். சீதா இல்லாமல், வன வாசம் முடிந்து மிதிலா அரசன் ஜனகன் வந்து குசலம் விசாரிக்க வந்தால், அவர் முகத்தை எப்படி ஏறிட்டுப் பார்ப்பேன்? அவள் இல்லாமல் நான் திரும்பிச் சென்றால், விதேஹ ராஜாவிடம் அவருடைய செல்வ மகள் தொலைந்து போனாள் என்று சொல்வேனா? அவர் மகளிடம் அளவில்லாத பாசம் உள்ளவர். எப்படித் தாங்குவார். நிச்சயம் பைத்தியமாக ஆவார். பரதன் ஆண்டு வரும் நகரத்துள் நான் நிச்சயம் பிரவேசிக்க மாட்டேன். லக்ஷ்மணா, என்னை இந்த வனத்திலேயே தனியாக விட்டு, நீ திரும்பி போ. அயோத்தி திரும்பி போ. அயோத்தி சுபமான நகரம் தான். சீதையின்றி சுவர்கம் கூடத்தான் எனக்கு சூன்யமாக தெரியும். ப4ரதனை இறுக அணைத்து நான் சொன்னதாகச் சொல். ராமன் உன்னை பூமியை ஆள அனுமதி கொடுத்திருக்கிறான் என்று சொல். தாயார்கள், சுமித்திரையையும், கைகேயியையும், கௌசல்யாவையும் முறைப்படி வணங்கி என் கட்டளைப்படி மூவரையும் நீ நன்றாக காப்பாற்று. சத்ருவை அழிக்கும் வல்லமை உடையவனே, சீதை காணாமல் போனதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டியது உன் கடமை. அழகிய கேசம் உடைய மனைவியைப் பிரிந்து பரிதவிக்கும் ராமன், தன் பலம் அனைத்தும் இழந்தது போல தீனமாக புலம்புவதை கேட்டு, சீதையை வனம் அழைத்து வந்து பத்திரமாக காப்பாற்ற தவறி விட்டோமே என்று லக்ஷ்மணனும் மிகவும் வருத்தம் அடைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராக4வ விலாபோ என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 63 (259) துக்கானு சிந்தனம் (துக்க நினைவுகள்)
ராஜகுமாரன், உயிருக்குயிரான மனைவியை பிரிந்த சோகத்தில், தானும் வருந்தி, சகோதரனையும் வருத்தி, எல்லையில்லா மனத் துயரத்தில் ஆழ்ந்தான். மோகம் புத்தியை மழுங்கசெய்து விடும். அதனால் தான் போலும், தான் வருந்துவதால் லக்ஷ்மணனையும் வருத்துகிறோம் என்பதை உணராமல் தன்னுள் மூழ்கி கிடந்தான். அழுகையும், நீண்ட பெருமூச்சுமாக, சாதாரண ஜனங்கள் இப்படி ஒரு நிலையில் எப்படி நடந்து கொள்வார்களோ, அதே போல, தன் மகத்தான துக்கத்தை லக்ஷ்மணனிடம் சொல்லிக் கொண்டான். லக்ஷ்மணா, என்னைப் போல துரதிர்ஷ்டம் பிடித்தவர்கள் இந்த உலகத்திலேயே யாரும் இருக்க மாட்டார்கள். அடுத்தடுத்து மாற்றி மாற்றி ஏதோ ஒரு துன்பம் என் ஹ்ருதயத்தை பிளக்கிறது. முன் ஜன்மத்தில் நான், தான் தோன்றித் தனமாக, பல பாப காரியங்களை அடிக்கடி செய்திருக்கிறேன் போலும். அதன் பலன் இப்பொழுது தெரிகிறது. அடுத்தடுத்து துக்கமே காண்கிறேன். ராஜ்யம் கை விட்டுப் போயிற்று. பந்து ஜனங்களைப் பிரிந்து வந்தேன். தந்தை மாண்டார். தாயாரை விட்டு விலகியது, லக்ஷ்மணா, திரும்ப நினைத்து பார்க்கும் பொழுது ஒவ்வொரு துக்கமும் அடி மேல் அடியாக என்னை தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. இந்த துயரங்கள் வனம் வந்து சூன்யமான வனத்தில் வாழ்ந்ததில் என் உடலை வருத்துவது நின்று போயிற்று. இப்பொழுது சீதையைப் பிரிந்ததால் மறுபடியும் இவை கிளைத்து எழுந்து என் மனதை வாட்டுகிறது. கட்டையில் உள்ள நெருப்பு திடுமென பற்றிக் கொண்டாற் போல. நிச்சயம், உன் அண்ணி, ராக்ஷஸன் பலவந்தமாக தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் போகும் பொழுது, பயந்து சுஸ்வரமாக பேசும் இயல்பு உடையவள், அபஸ்வரமாக அலறியிருப்பாள். எப்பொழுதும் சந்தனம் பூசி சிவந்த ஸ்தனங்கள், எந்த சேற்றில் மாட்டிக் கொண்டு தவிக்கிறதோ? ராகு பீடித்த சந்திரன் போல அவள் முகம் அடர்ந்த கேசத்துடன் ராக்ஷஸன் பிடியில் எப்படி இருந்திருக்கும்? என் பிரிய மனைவியின் கழுத்தில் எப்பொழுதும் அழகாக விளங்கிய ஹாரங்கள், ராக்ஷஸன் பிடியில், கழுத்தை நெரித்து, ரத்தத்தை குடித்த பொழுது, எப்படி தவித்திருக்கும்? நான் இல்லாத சமயம் காட்டில் ராக்ஷஸர்களால் பிடித்து இழுக்கப் பட்டிருந்தால், நிச்சயம் பெண் மான் குட்டி அலறுவது போல காப்பாற்று என்று அலறியிருப்பாள். நீண்ட விழிகள் தீனமாக, கத்தியிருப்பாள். என்னுடன் கூட முன்பு ஒரு சமயம் இந்த கல் பலகையில் அமர்ந்திருந்தாள். அழகாக சிரித்துக் கொண்டு உன்னை பரிகாசம் செய்து கொண்டிருந்தாள். உன்னுடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாள். இந்த கோதா3வரி நதிக்கு கூட தனியாக போக மாட்டாள். பயம். இந்த நதிக் கரைக்கு போகவும் பிடிக்கும். திரும்பத் திரும்ப கோதாவரி நதிக் கரைக்கு போவோமா? என்பாள். அவளே பத்3மா, பத்3மம் போன்ற முகம் உடையவள், பத்3மத்தைப் போன்று விசாலமான கண்களையுடையவள், பத்3மங்களைப் பறித்துக் கொண்டு வர என்னை வேண்டுவாள். அப்படி மலர்களைப் பறிக்க கூட நான் இல்லாமல் போக மாட்டாள். பூக்கள் நிறைந்த மரங்களைக் கொண்ட இந்த வனம், இங்கும் தனியாக போக பயம். பூக்கள் வேண்டும் என்றால், நானும் உடன் வந்தால் தான் போய் பறிப்பாள். ஏ ஆதி3த்யா, உலகில் நடப்பது, நல்லது, கெட்டது எல்லாம் நீ அறிவாய். சத்யமோ, அசத்யமோ எந்த செயலானாலும் நீ சாக்ஷி, என் பிரிய மனைவி எங்கே? எங்கு போனாள்? யாராவது அபகரித்துக் கொண்டு போனார்களா? சொல். எப்பொழுதும் துக்கத்தில் மூழ்கியே இருக்க வேண்டியவன் தானா நான்? இந்த உலகில், மற்றும் உள்ள உலகங்களிலும் நடப்பவைகளை நீ உடனுக்குடனே அறிவாய். ஏ வாயுவே, நீ தான் சொல். குண சாலினி, என் மனைவி, எனக்கு பிரியமானவள், அவள் கடத்திச் செல்லப் பட்டாளா? இறந்தே போனாளா? எங்காவது வழி தெரியாமல் திணறுகிறாளா? இவ்வாறு துயரத்துடன் அழும் ராமனை, நினைவு தடுமாறி மூர்ச்சை நிலையை அடைந்தவனை சௌமித்ரி, மிகவும் சமாதானப் படுத்தி, நியாயமானதும், அந்த சமயத்துக்கு ஏற்றவாறும் ஆறுதல் சொல்லித் தேற்றினான். அண்ணலே, இந்த துயரத்தை விடுங்கள். தைரியமாக இருங்கள். உற்சாகத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். அவளைத் தேடுவதில் மும்முரமாக ஈ.டுபடுவோம். மிகவும் கடுமையான சோதனைகளிலும், மனிதனுக்கு இடை விடாத முயற்சியும், உற்சாகமும் தான் கை கொடுக்கும். ரகு வம்ச வர்தனனைப் பார்த்து சௌமித்ரி பலவாறாக தைரியம் அளித்து நடக்க வேண்டியதைக் கவனிப்போம் என்று சொல்லவும், சற்றே ஆறுதல் அடைந்தாலும், மறுபடியும் துக்கம் மனதை ஆக்ரமிக்க தைரியத்தை இழந்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் துக்கானு சிந்தனம் என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 64 (260) ராம க்ரோத4: (ராமனின் கோபம்)
தீனமான குரலில் பரிதாபமாக லக்ஷ்மணனுக்கு பதில் சொன்னார், ராமர். சீக்கிரம் கோதாவரி நதிக் கரைக்கு போய், சீதா அங்கு தாமரை மலர்களைப் பறிக்கப் போனாளா என்று பார். லக்ஷ்மணனும் உடனே கோதாவரி நதிக் கரைக்கு ஓடிச் சென்று பார்த்தான். திரும்ப வந்து அங்கு காணவில்லை, பலமாக கூப்பிட்டு பார்த்தேன், பதிலும் இல்லை என்றான். எங்கு தான் போயிருப்பாள்? அருகில் இருந்தாலே, என் துன்பங்களை அகற்றுபவள் எங்கு போயிருக்கக் கூடும் என்றும் எனக்குத் தெரியவில்லை என்றவர், சற்றுப் பொறுத்து தானே கோதாவரி நதிக் கரைக்கு சென்று பார்த்தார். சீதே, எங்கே இருக்கிறாய்? என்று பலமாக கத்தினார். சகல ஜீவ ஜந்துக்களும், வதம் செய்யப் பட வேண்டிய ராக்ஷஸன் அபகரித்துக் கொண்டு போனதை அறிந்திருந்தும் ராமனிடம் சொல்லவில்லை. கோ3தா3வரியிடம், மற்ற பூ4தங்கள், இவனுடைய உயிருக்குயிரான மனைவி, சொல்லேன், என்ற போதும் வாயடைத்து இருந்தாள். ராமனே திரும்பத் திரும்ப கேட்ட பொழுதும் சொல்லாமல் இருந்து விட்டாள். ராக்ஷஸ ராஜனின் பயங்கர ரூபம், தான் கண்ட அவனது பயங்கர செயல்கள், துராத்மாவான அவனிடம் பயந்து, கோ3தா3வரி வைதேஹியைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. நதிகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக எதுவும் சொல்லாததால், ராமன் லக்ஷ்மணனைப் பார்த்து லக்ஷ்மணா, இந்த கோ3தா3வரி எதுவும் சொல்ல மறுக்கிறாள். என்ன செய்யலாம். திரும்பச் சென்று ஜனகரிடம் என்ன சொல்வேன்? வைதேஹியின் தாய் வந்து விசாரித்தால் என்ன பதில் சொல்வேன்? ராஜ்யத்தை இழந்து காட்டில், காட்டு வாசிகள் போல வசிக்கப் போகிறேன் என்று அறிந்தும் பின் தொடர்ந்து வந்தாள். அந்த பெரிய இழப்பு கூட எனக்குத் தெரியாதபடி இந்த காட்டில் என் மனதில் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்தாள். பந்துக்கள், தாயாதிகள், என்னை கை விட்ட சமயம், உடன் இருந்த ராஜகுமாரி, இப்பொழுது அவள் இல்லாமல் நான் இரவுகளை தூங்காமல் விழித்துக் கொண்டே கழிக்கப் போகிறேன். நீண்ட இரவுகள் என்னை வதைக்கப் போகின்றன. மந்தா3கினி நதி, இந்த ஜனஸ்தானம், ப்ரஸ்ரவன மலை, இவைகளை திரும்பவும் சுற்றித் தேடப் போகிறேன். ஒரு வேளை அவள் கிடைப்பாளோ. இந்த மிருகங்கள் என்னை திரும்பத் திரும்ப பார்க்கின்றன. ஏதோ சொல்ல விரும்புகின்றன. ஜாடையாக என்ன சொல்ல ஆசைப் படுகின்றன, புரிகிறதா, பார். அவைகளின் அருகில் சென்று ராமன் தழ தழத்த குரலில் சீதை எங்கே போனாள் என்று வினவினான்? ராமன் இவ்வாறு கேட்கவும் பரபரப்புடன் எழுந்திருந்து அந்த மிருகங்கள், தென் திசையை நோக்கி ஆகாயத்தைப் பார்ப்பதும், அந்த திசையில் தான் சீதையை கடத்திக் கொண்டு போனான் என்பதை தங்கள் முக, பாவ, உடல் அசைவுகளால் தெரியப் படுத்த முயன்றன. அந்த திசையில் ஓடிக் காட்டின. திரும்ப நராதி4பனான ராமனைப் பார்த்தவாறு ஓடின. இப்படி பூமியையும் மார்க3த்தையும் தங்களால் இயன்ற வரை மாற்றி மாற்றிக் காட்டவும் லக்ஷ்மணன் கவனமாக பார்த்து, தென் திசையில் தேடுங்கள் என்று மிருகங்களின் பா4வம், செயல்கள் உணர்த்துவதாக உணர்ந்து கொண்டான். அவைகளின் அசைவுகளையும், சொல்ல முயலும் சொற்களையும் லக்ஷ்மணன் பொறுமையாக முழுவதுமாக கேட்டு, முடிவாக சகோதரனிடம் தான் புரிந்து கொண்டதைச் சொன்னான். அண்ணா, சீதை எங்கே என்று நீ கேட்டவுடன் இவை பரபரப்புடன் எழுந்தன. பூமியைக் காட்டி, தென் திசையையும் ஓடிக் காட்டுகின்றன. நைருதி திசையான தென் திசையில் சென்று பார்ப்போம். சீதை திரும்ப வந்து கொண்டிருந்தாலும் வழியில் பார்ப்போம் என, சரி என்று காகுத்ஸனும் புறப்பட்டான். பூமியை பார்த்தபடியே, லக்ஷ்மணன் கூடச் சென்றான். அன்யோன்யமாக பேசிக் கொண்டே சென்ற சகோதரர்கள் இருவருமாக பூமியில் விழுந்து கிடந்த புஷ்பங்களைப் பார்த்தனர். கோடு போட்டது போல இருந்த பூக் குவியலைக் கண்டு ராமன், லக்ஷ்மணனை அழைத்து காட்டினான். லக்ஷ்மணா, இதோ பார், இந்த புஷ்பங்களை நான் அறிவேன். நான் தான் காட்டில் பறித்துக் கொடுத்தேன். இவைகளை தொடுத்து வைதேஹி தலையில் சூட்டிக் கொண்டாள். எனக்காக சூரியனும் வாயுவும், பூமியும், இந்த புஷ்பங்களை என் நன்மைக்காக எனக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த புஷ்பங்களை பாதுகாத்து வருகின்றன. லக்ஷ்மணனிடம் இதைச் சொன்னபின், ப்ரஸ்ரவன மலையை சுற்றி இருந்த மலை சிகரங்களைப் பார்த்துக் கேட்டான். மலையரசனே, சர்வாங்க சுந்தரியான என் மனைவியைக் கண்டாயா? உன் மலைச் சாரல்களில் என்னுடன் நிறைய நடந்து சஞ்சரித்திருக்கிறாளே, என்று சிங்கம் கோபத்துடன் ஒரு சிறிய மிருகத்தை அதட்டுவது போல கேட்டான். பர்வதமே பொன்னிறமான அந்த தங்கத்தை (தங்கம் பொன்றவளை) உடனே என் எதிரில் கொண்டு வந்து காட்டு. இல்லையேல், என் அம்பில் வில்லைப் பூட்டி உன்னை தூள் தூளாக்குகிறேன், பார். இவ்வாறு ராகவன் சொன்ன பின்னும், குகைகளில் ப்ரதித்வனி- எதிரொலி மூலம் தான் காட்ட விரும்புவதாக தெரியப் படுத்திய போதிலும், மலையரசனால் சீதையை நேரில் காட்ட இயலவில்லை. இந்த மலையும் சரி, நதியும் சரி, ஏதோ தெரிந்து கொண்டே நமக்கு சொல்ல மறுக்கின்றன, இதோ என் பா3ணங்களால் தகித்து சாம்பலாக்குகிறேன் என்று சொல்லியபடியே, பூமியை எதேச்சையாக பார்த்த ராமனின் கண்களில், ராக்ஷஸனின் காலடி தடங்கள் தென்பட்டன. ராமன் வருவானோ என்று இங்கும் அங்குமாக ஓடிய சீதையின் காலடி அடையாளங்களையும் கண்டு கொண்டான். ராக்ஷஸன் காலடி அதைத் தொடர்ந்து தென்பட்டது, ராக்ஷஸன் அவளைத் துரத்திக் கொண்டு வந்ததை தெரிவிப்பது போல இருந்தது. அதை கூர்ந்து கவனித்து, சீதையின் பின்னால் ராக்ஷஸனின் காலடி அடையாளங்களைத் தொடர்ந்து கொண்டே போன பொழுது, உடைந்த வில்லும், தூணியும், சுக்கு நூறாக உடைந்த ரதமும் தென்பட்டன. படபடப்புடன், ஹ்ருதயம் துடிக்க ராமர் லக்ஷ்மணனிடம் சொன்னார். பார் லக்ஷ்மணாஸ்ரீ சீதையின் ஆபரணங்களிலிருந்து சிதறிய தங்கத் துகள்கள், இந்த பூமியில் இரைந்து கிடப்பதைப் பார். லக்ஷ்மணாஸ்ரீ இந்த இடத்தில் ராக்ஷஸர்கள் அவளைத் துண்டாடி தின்று தீர்த்திருக்கிறார்கள். அவள் காரணமாக இருவர் சண்டையிட்டிருக்கிறார்கள். தங்களுக்குள் பங்கு பிரிப்பதில் சண்டை வந்ததோ என்னவோ, கோரமான யுத்தம் நடந்திருக்கிறது. ராக்ஷஸர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். முத்து மாலைகள் கட்டி, தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டு உடைந்து கிடக்கும் ரதம் யாருடையதாக இருக்கும் ? பெரிய வில். நல்ல சூரனாகவோ, வீரனாகவோ அல்லது ராக்ஷஸர்களில் சிறந்த வீரனோ? வைடூரியம் இழைத்து, இளம் சூரியனைப் போல இருக்கும் இந்த தங்கத்தாலான கவசம் யாருடையதாக இருக்கும். பிடுங்கி பூமியில் எறியப்பட்டு கிடக்கிறதே, குடை, நூறு கம்பிகளுடன், திவ்யமான மாலைகளால் சோபையுற அலங்காரமாக இருந்திருக்க வேண்டும். அதன் தண்டத்தை உடைத்து, பூமியில் நன்றாக வீசி எறிந்திருக்கிறார்கள். இதோ இரண்டு பிசாச வதனமும் (த்ருஷ்டிக்காக கட்டப் பட்டிருந்தவை) கழுதை முகமும் பொன்னால் செதுக்க பட்டுள்ள ரதத்தின் ஒரு முன் பாகம், இதிலிருந்து ரதம் மிகப் பெரியதாகவும், விசாலமாகவும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. யாருடைய ரதம்? கொழுந்து விட்டெரியும் தீ ஜ்வாலை போன்ற த்வஜங்கள், இவை யுத்தத்தில் ஏற்றப் பட்டு வரும் சமர த்வஜங்கள். கிழிந்து, உடைந்து கிடக்கிறது. யாருடைய யுத்த வாகனமாக இருக்கும்? ரதத்தில் கட்டப் படும் தூணி- அம்புகளை வைக்க பயன் படும் பை போன்றது, அக்ஷ மாத்ரா, கூரிய அம்புகள், அக்னி போன்ற உரையுடன், யாருடைய அம்புகள் இப்படி அடிக்கப் பெற்று, இரைந்து கிடக்கின்றன. கோரமாக தாக்கக்கூடிய அம்புகள் இவை. சரங்கள் நிரம்பிய தூணி இதோ சிதிலமாகி உடைந்து கிடக்கிறது. லக்ஷ்மணா, இதோ பார். யாருடைய சாரதியோ, அடிபட்டு மரணமடைந்திருக்கிறான். இவன் கையில் சாட்டையும், கத்தியும் இருப்பதை பார். மணி குண்டலங்கள் தரித்து சாமரம் வீசுபவர்கள் இருவரும் யாருக்கு சாமரம் வீசிக் கொண்டு வந்தனரோ அடிபட்டு உயிர் இழந்து பூமியில் கிடக்கின்றனர். இதோ வெளிவாகத் தெரியும் பாதம் ஏதோ ஒரு ராக்ஷஸனுடையது. இந்த காலடியைப் பார்த்து என் வைரம் நூறு மடங்காகிறது. என் உயிரைக் குடிக்க வந்த காலனா? யார் அவன்? கோரமான ஹ்ருதயம் உடைய சில ராக்ஷஸர்கள், தன் இஷ்டம் போல செய்யக் கூடியவர்கள் சீதையைக் கவர்ந்து சென்றதோடு, தங்களுக்குள் சண்டை வேறு போட்டிருக்கிறார்கள், இவர்கள் சீதையை என்ன செய்திருப்பார்கள். கவர்ந்து சென்ற பின், கொன்று போட்டிருப்பார்களோ, முழுவதுமாக வாயில் போட்டு விழுங்கி விட்டார்களோ, பாவம் தபஸ்வினி, அவள் அனுஷ்டித்த தர்மம் அவளைக் காப்பாற்றவில்லையே. மகா வனத்தில் அவளை அபகரித்துக் கொண்டு போகும் பொழுதும், கூறு போட்டு ராக்ஷஸர்கள் தின்ற போதும் தர்மம் அவளைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா? லக்ஷ்மணா, இந்த உலகில் யார் என்னுடன்விரோதம் பாராட்டுபவர் இருக்கிறார்கள்? அவ்வளவு தைரியம் யாருக்கு இருக்கும்? உலகில் சூரனாக இருந்து, செயற்கரிய செய்ய வல்லவனாக இருந்தால் கூட கருணையுடன் தன் பலத்தை பிரயோகம் செய்யாமல் இருப்பவனை, அக்ஞானத்தால் அவமதிக்கிறார்கள். உலகில் உள்ளோர் என்னை கருணையுடன் அன்பைக் காட்டி, உலகின் நன்மையை நினைத்து, ம்ருதுவாக சாந்தமாக இருந்தால், வீரமில்லாதவன், கோழை என்று மதிக்கிறார்கள். மூவுலகிலும் உள்ள வீரர்கள், தேவர்கள் பார்வையில் என்னை ஆசிரயித்த குணங்களே தோஷங்களாகத் தெரிகின்றன போலும். இன்றே ராக்ஷஸர்களை ஒட்டு மொத்தமாக இல்லாமல் செய்ய என்னால் முடியும். சந்திரனின் ஒளியையும் தன்னுள் அடக்கி உதிக்கும் சூரியனைப் போன்றவன் நான். என் தேஜஸை உள்ளடக்கி நான் குணங்களை வெளியில் தெரியும்படி நடந்து வருகிறேன். என்னை விரோதித்துக் கொண்டு யக்ஷர்களோ, கந்தர்வர்களோ, பிசாச, ராக்ஷஸர்களோ, கின்னரர்களோ, மனுஷ்யர்களோ சுகமாக இருக்க மாட்டார்கள். லக்ஷ்மணா, என் அஸ்திரங்கள் இதோ ஆகாயத்தை நிரப்பப் போவதைப் பார். மூவுலகிலும் சஞ்சரிப்பவர்களை கீழே தள்ளுகிறேன் பார். க்ரஹ கணங்கள் சுற்றுவது தடைப் பட்டு நிற்கப் போகின்றன. நிசாகரனான சந்திரனின் முகமே தெரியாதபடி மறைத்து விடுகிறேன். தொலைந்து நஷ்டமாகிப் போன காற்று, நெருப்பு, மருத் கணங்கள், பாஸ்கர த்யுதி (சூரிய ஒளி) இவைகளைச் சேர்த்து என் ஒரே பாணத்தால் அடிக்கிறேன். மலை சிகரத்தை வைத்து மத்தாக்கி கடைகிறேன். சமுத்திர ஜலத்தை வற்றச் செய்கிறேன். மரங்களும், கொடிகளும், புதர்களும் சூழ்ந்த வனத்தை த்வம்சம் செய்கிறேன். சாகரம் நாசமாக போக பாணம் செலுத்துகிறேன். மூவுலகையும், கால தர்மத்தை நான் கையிலெடுத்துக் கொண்டு ஆட்டி வைக்கிறேன். ஈஸ்வரர்கள் என்று தன்னைச் சொல்லிக் கொள்பவர்கள், என் சீதையை குசலமாக திருப்பித் தராவிடில், இது தான் நடக்கும். சௌமித்ரே, என் விக்ரமத்தை இந்த முஹுர்த்தத்தில் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும். சர்வ பூதங்களும் ஆகாயத்தில் குதிக்கப் போவதில்லை. என் வில்லின் நாணிலிருந்து புறப்பட்ட பாணங்கள் ஜாலங்களாக நிரந்தரமாக வந்து கொண்டேயிருக்கும். நாராசமான அந்த பாணங்களால் அடிபட்டு பயந்து நடுங்கும் மிருகங்களும், பக்ஷிகளும் எல்லா வித இயற்கையின் மரியாதைகளும் மீறி உலகம் கொந்தளிக்கப் போகிறது. பார், லக்ஷ்மணா, என் காது வரை இழுத்த வில்லின் நாண், எதிர்க்க முடியாத அம்புகளை விடுத்து ஜீவ லோகத்தையே உண்டு, இல்லையென்று ஆக்கப் போகிறது. மைதிலியின் காரணமாக உலகமே பிசாசங்கள் இன்றி, ராக்ஷஸர்கள் ஒட்டு மொத்தமாக அழித்து விடுகிறேன். ஒருவர் கூட மீதி இல்லாமல் செய்கிறேன். கோபத்துடன் நான் விடும் சரங்களைக் கண்டு தேவர்கள் நடுங்கட்டும். இன்று என் கோபத்தினால் வெகு தூரம் செல்லும் என் பாணங்களால் தேவ, தானவ, யக்ஷ, இந்த ராக்ஷஸர்களின் உலகமும் கிழித்து, துண்டாக, சிதிலமாக்கப் படும். என் அம்புகளைக் கொண்டு இவர்கள் தங்கள் மரியாதையை இழந்தவர்களாக ஆகப் போகிறார்கள். இந்த ஈஸ்வரர்கள் என் சீதையை இறந்தவளாகவோ, கடத்தப் பட்டவளாகவோ என்னிடம் ஒப்படைத்தாலும் நான் ஏற்க மாட்டேன். என்னிடம் இது வரை இருந்ததுபோலவே என் பிரிய மனைவியை திருப்பித் தர வேண்டும். அதுவரை ஓய மாட்டேன். சராசரங்களையும், உலகம் அனைத்தையும் நாசம் செய்வேன். என் சீதையைக் காணும் வரை என் பாணங்களின் பிரயோகம் தொடரும். இப்படிச் சொல்லி உதடுகள் துடிக்க, ரோஷத்தால் சிவந்த கண்களுடன், வல்கலை உடையை அணிந்து கொண்டு, ஜடையை முடிந்து கொண்டான். முன்பு த்ரிபுரத்தை எரிக்க வந்த ருத்ரனை நினைவூட்டுவதாக இருந்தது. தீக்ஷ்ண புத்தியுடைய ராமனின் அந்த தோற்றம், கண்டவர் நடுங்கும் வண்ணம் இருந்தது. லக்ஷ்மணன் கையிலிருந்து வில்லை வாங்கி ஆலகால விஷம் போன்ற தன் பாணங்களைத் தொடுத்து வில்லில் வைத்து விட்டான். யுகாந்தாக்னி போல கோபம் கொப்புளிக்க பின் வருமாறு சூளுரைத்தான். நரை, ம்ருத்யு, காலம், விதி இவற்றை எப்படி மீற முடியாதோ, அதே போல நான் க்ரோத வசத்தில் இருக்கும் பொழுது உலகத்தார் என்னைத் தடுக்க முடியாது. அழகிய பல் வரிசையுடைய, மாசற்ற என் மனைவியை என் எதிரில் உடனே கொண்டு வந்து நிறுத்தாவிடில், தேவ, கந்தர்வ, மனுஷ்ய, பன்னகம் நிறைந்த இந்த உலகத்தை, மலைகளோடு மாற்றிக் காட்டுகிறேன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராமக்ரோதோ4 என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 65 (261) க்ரோத4 சம்ஹார பிரார்த்தனை
(கோபத்தை அடக்கிக் கொள்ள பிரார்த்தித்தல்)
சீதா கடத்திச் செல்லப் பட்டாள் என்பது தெரிந்து அடக்க மாட்டாத வேதனையும், கோபமும் கொண்ட ராமன் தவிப்பதையும், லோகத்தையே இல்லாமல் செய்து விடத் துணிந்து விட்டதையும், தன் வில்லில் வைத்த கண்ணோடு, வேகமாக பரவி அழிக்க வல்ல நெருப்பு போல, பெருமூச்சு விடுவதையும், ஹரன் போல உலகம் முழுவதும் எரித்து விடும் கோபத்துடன், யுக முடிவை தன்னிடம் வைத்திருக்கும் ஹரனே உருவெடுத்து வந்து விட்டாற்போல நிற்கும் தோற்றத்தையும், இதுவரை கண்டறியாத ருத்ர ரூபம், இதைக் கண்டு லக்ஷ்மணன் கை கூப்பி வணங்கியவாறு, வாடிய முகத்தோடு வேண்டினான். அண்ணலே, முன்பு ம்ருதுவாக, கண்யமாக, உலக ஜீவ ராசிகள் அனைத்துக்கும் நன்மையே விரும்பி இருந்தவர், இப்பொழுது கோபத்தின் வசமாகி, இயற்கையையே மாற்றத் துணிந்து விட்டது சரியல்ல. சந்திரனிடத்தில் லக்ஷ்மீகரமான ஒளி,, சூரியனிடத்தில் பிரபா, வாயுவிடம் சென்று கொண்டே இருக்கும் தன்மை, பூமிக்கு பொறுமை இவைகள் சாஸ்வதமானவை. ஒருவனுடைய அபராதம் காரணமாக உலகையே அழிக்கத் துணிகிறீர்கள். இந்த யுத்த ரதம் யாருடையது ? யார் உடைத்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், என்ன காரணத்திற்காக, ஆயுதத்துடன் வந்து, பரிவாரத்தோடு வந்தவன் யார்? குதிரையின் குளம்பு அழுந்தி அடையாளம் இட்ட இடங்களில் ரத்தக் கறை தெரிகிறது. ராஜகுமாரனே, இந்த இடத்தில் இப்பொழுது தான் யுத்தம் நடந்து முடிந்திருக்கிறது. ஒரே ஆள் தான் அடித்திருக்கிறான், இருவர் இல்லை. வாக்கு வன்மை உடையவனே, பெரும் படையோடு வந்ததாகவும் தெரியவில்லை. ஒரே ஒருவனுடைய துஷ்டத்தனம். இதன் பொருட்டு உலகையே அழிக்க முயலாதீர்கள். கையில் உள்ள ஆயுதத்தை முறையாக பயன் படுத்துபவன், அவசியமான சமயத்தில், மற்றபடி சாந்தமாக, ம்ருதுவாக இருக்க வேண்டியவர்கள், அரசர்கள். எப்பொழுதும் எல்லா ஜீவ ராசிகளுக்கும் அபயம் அளித்து வரும் தாங்கள். யார் தான், உங்கள் மனைவியை நாசம் செய்து, அப்படி நாசம் செய்தால் தனக்கு நல்லது என்று நினைப்பான்? நதிகளோ, சாகரமோ, மலைகளோ, தேவ கந்தர்வர்களோ, யாருமே உங்களுக்கு பிரியமில்லாததைச் செய்யத் துணிய மாட்டார்கள். தீக்ஷை எடுத்துக் கொண்ட ப்ரதம ரிஷியை, மற்ற சாதுக்கள் எதிர்த்து எதுவும் செய்யத் துணிய மாட்டார்கள். யார் சீதையை கடத்திச் சென்றான் என்பதை ஆராய்ந்து பார்ப்போம். நீங்கள் செய்ய வேண்டியது அது தான். அவனை கண்டு பிடியுங்கள். நானும் வில்லேந்தி உடன் வர, பரம ரிஷிகள் உதவியோடு, சமுத்திரத்தையும், கலக்கிப் பார்ப்போம். மலைகளையும், வனங்களையும், பலவிதமான குகைகளையும், ஆழமான நதிகளையும் தாமரைக் குளங்களையும், தேவ கந்தர்வ உலகங்களையும் தேடுவோம். பொறுமையாக நிதானமாக தேடுவோம். உங்கள் மனைவியைக் கடத்திச் சென்றவனை அடையும் வரை, மூவுலக நாயகர்களும், சீதையை தானாகவே கொண்டு வந்து தங்கள் முன் நிறுத்தாவிடில், கோஸல நாட்டுத் தலைவனே, அதன் பின் சமயம் வந்து விட்டது என்று மற்றதைச் செய்யலாம். தன் சீலத்தால், வினயமாக, சமாதானமாக சீதையை திரும்பப் பெறாவிடில், நரேந்திரா, உங்கள் கூர்மையான பாணங்கள், இந்திரனுடைய வஜ்ரத்திற்கு சற்றும் குறைந்ததல்ல, அதைக் கொண்டு இந்த செயலில் இறங்குவோம்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க்ரோத4 சம்ஹார பிரார்த்தனை என்ற அறுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 66 (262) ஔசித்ய ப்ரபோ3த4னம் (உசிதமான செயலை நினைவு படுத்துதல்)
அனாதை போல புலம்பினார். மீளாத் துயரில் மூழ்கி விட்டதாக தானே எண்ணிக் கொண்டு, செயலற்று நின்றார். பெரும் மோகம் ஆட்கொள்ள, புத்தியும் ஸ்தம்பித்த நிலையில் கிடந்த ராமனை லக்ஷ்மணன் தேற்றினான். கால்களை பிடித்து விட்டபடியே, செய்ய வேண்டியதைப் பற்றி அறிவுறுத்தினான். சமாதானமாக பேச்சுக் கொடுத்தான். பெரும் தவப் பயனாக, கணக்கில்லா நற் செயல்களின் விளைவாக, அமரர்களுக்கு அம்ருதம் கிடைத்தது போல, தசரதனுக்கு கிடைக்கப் பெற்றவன் நீ. உன் குணங்களையே எண்ணி, எண்ணி, உன் பிரிவினால் மஹீபதியான (பூமியின் நாயகன்) ராஜா மேலுலகம் சென்றார். தெய்வத்தன்மையை அடைந்தார் என்று ப4ரதன் சொல்லிக் கேட்டோம். காற்று வீசி மேலே படுவது போல ஸ்பரிசம் போல க்ஷண நேரத்தில் பல செயல்கள் நடந்து விடுகின்றன. பிராணிகளில் ஆபத்து இல்லாமல் யார் வாழ்ந்திருக்கிறார்கள் ? அதனால் சமாதானப் படுத்திக் கொள் காகுத்ஸா. இப்பொழுது வந்துள்ள துக்கத்தை நீ சகித்துக் கொண்டு மேற் கொண்டு செய்ய வேண்டியதை யோசியாமல், உணர்ச்சி வசப் படுவாயானால், ப்ராக்ருதனான சாதாரண நகர ஜனங்கள், சகிப்புத் தன்மையோ, திறமையோ மிக அல்பமாக உள்ள ஜனங்கள் என்ன ஆவார்கள். இந்த துக்கத்தில், உலகங்களை தகித்து விட்டாயானால், கஷ்டப் படுவது நம் பிரஜைகளே. நரவ்யாக்4ர, உன்னையே சரணமாக நினைத்திருக்கும் ஜனங்கள், யாரைப் போய் வேண்டுவார்கள். அவர்கள் கஷ்டங்களுக்கு நிவ்ருத்தி ஏது? லோக ஸ்வபாவம் இது. நகுஷனின் மகனான யயாதி இந்திரனுக்கு சமமான பதவியை அடைந்தான். வினயம் அவனை விட்டு அகன்றது. கர்வம் கொண்டான். அழிந்தான். நம் குலகுருவான வசிஷ்டர், புரோஹிதர் ஒரே நாளில் நூறு குழந்தைகளைப் பெற்றார். அப்படியே அழியவும் அழிந்தார்கள். உலகமே வணங்கும் ஜகஜ்ஜனனீ, அவளும் ஒரு முறை சலனம் அடைந்தாள் என்று பார்க்கிறோம். கோஸலேஸ்வரா, எந்த இரு தர்மம் உலகின் கண்களைப் போன்றவை, எதில் அனைத்தும் அடங்கியுள்ளதோ, ஆதித்யனும், சந்திரனும் கூட, மகா பலசாலிகள், கிரஹணம் எனும் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர். தேகம் எடுத்த ஜீவன்கள், மிகப் பெரிய வீரனாக இருந்தாலும், தேவர்களே ஆனாலும், புருஷர்ஷப, (புருஷர்களில் ரிஷபம் போன்றவன்) தெய்வம் அல்லது விதி எனும் நியதியிலிருந்து தப்ப முடியாது. நியாயம், அநியாயம் என்பது இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கும் உண்டு. இவ்வாறு கேள்விப் பட்டிருக்கிறோம். இந்த நியதியை தவிர்க்க முடியாது. அதனால் நீ வீணாக கவலைப் படாதே. சீதை நஷ்டமாக, மறைந்தே போயிருந்தாலும், யாரோ கடத்திக் கொண்டே போயிருந்தாலும், சாதாரண ஜனங்கள் போல நீ வருந்தி புலம்பத் தேவையில்லை. சத்யத்தைக் காணும், எப்பொழுதும் வெளிவான புத்தியையுடைய உன் போன்றவர்கள், எதற்குமே கலங்க மாட்டார்கள். ராமா, மிகப் பெரிய கஷ்ட காலத்திலும் நிராசை அடைய மாட்டார்கள். புத்தியை உபயோகித்து தத்வம் என்ன என்று ஆராய்ந்து பார். மகா அறிவாளிகள் சுபம் எது, அசுபம் எது என்று தெரிந்தவர்கள் நடப்பதை பகுத்தறிந்து கொள்கிறார்கள். எதிலும் குண தோஷங்களை பிரித்து பார்க்காமல் நிச்சயமில்லாத செயல்கள் செய்பவர்களுக்கு இஷ்டப் பட்ட பலன் கிடைக்காது. நீயே தான் ராமா, முன்பு பலமுறை எனக்கு உபதேசித்திருக்கிறாய். உனக்கு யார் புதிதாக சொல்லித்தர முடியும். நீயே சாக்ஷாத் ப்ருஹஸ்பதி ஆவாய். தேவர்களாலும் புரிந்து கொள்ள முடியாத புத்தியுள்ளவன் நீ. துயரத்தால், அடங்கி கிடக்கும் உன் அறிவைத் தட்டி எழுப்புகிறேன். தெய்வீகமானாலும் சரி, மானுஷமானாலும் சரி, உன் பராக்ரமத்தை அறிந்து இக்ஷ்வாகு குலத்தின் பலம் பொருந்திய காளை போன்றவனே, எதிரிகளை வதைக்கும் முயற்சியில் இறங்குவாய். சர்வ நாசம் செய்து ஆகப் போவது என்ன? பாபியான உன் எதிரி யார் என்று தெரிந்து கொண்டு யுத்தத்தில் இறங்குவாயாக.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஔசித்ய ப்ரபோ3த4னம் என்ற அறுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 67 (263) க்3ருத்ர ராஜ த3ரிசனம் (கழுகு அரசனைக் காணுதல்)
முன் பிறந்தவனாக இருந்தாலும், லக்ஷ்மணன் சொன்னவுடன், சாரக்3ராஹி (சாரமான விஷயத்தை உடனே புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்பவன்) எதிலும் உட்பொருளை கிரகித்துக் கொள்ளும் குணமுடைய ராமர், லக்ஷ்மணனின் கூற்றில் இருந்த நியாயத்தை உணர்ந்து கொண்டார். மிகவும் பயங்கரமாக வெடித்த தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, வில்லை கீழே வைத்து விட்டு லக்ஷ்மணனைப் பார்த்து போவோம் வா என்றார். வத்ஸா (குழந்தாய்) என்று அழைத்து எங்கு போகலாம்? என்ன உபாயம் செய்தால் சீதையைக் காண்போம், யோசித்துச் சொல். இவ்வாறு தன் துயரை அடக்கிக் கொண்டு சுய நிலைக்கு மீண்டு விட்ட ராமனின் அமைதியான கேள்விக்கு, லக்ஷ்மணன் பதில் சொன்னான். இதே ஜனஸ்தானத்தில் தான் தேட வேண்டும். பலவிதமான மரங்கள் அடர்ந்தது. ராக்ஷஸர்கள் நடமாடும் இடம். இங்கு பல மலை குகைகளும், ஆழமான பள்ளங்களும் இருக்கின்றன. குகைகளும் பலவிதமாக பயங்கரமாக உள்ளன. அவைகளும் பல வித மிருகங்கள் வசிக்கும் இடமாக பயன் படுத்தப் பட்டு வருபவை. சில கின்னரர்களுக்கு இது வாசஸ்தலமாகும். கந்தர்வர்கள் சிலரும் இவற்றை தங்கள் வாசஸ்தலமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் உடன் வர இந்த இடங்களை முதலில் தேடுவோம். உன் போன்ற புத்தியுடைய, மகாத்மாவான சிறந்த மனிதர்கள், ஆபத்து வந்த சமயம், கலங்குவதில்லை. காற்றடித்தால், லட்சியம் செய்யாது இருக்கும் மலையைப் போல திடமாக இருப்பார்கள். இவ்வாறு பேசிக் கொண்டே வனத்தை சுற்றி வந்து தேடினார்கள். கோபமாக இருந்த ராமன், வில்லை வளைத்து தயாராக நின்றவன், சமாதானமாகி தேடுகையில் மலை போன்ற உருவமும், மகா பாக்யசாலியான உத்தமமான பறவை அரசன் ஜடாயு, ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டான் ப்ரும்மாண்டமான அந்த சரீரத்தைப் பார்த்து, இந்த பக்ஷி ராஜனா சீதையைத் தின்றிருப்பான்? இப்படி கழுகு அரசனாக வேடம் பூண்டு ஏதோ ராக்ஷஸன் தான் வனத்தில் அலைகிறான் போலும். விசாலாக்ஷியான சீதையைத் தின்று விட்டு சௌக்யமாக இருக்கிறது. இதை என் கோரமான பாணங்களால் அடிக்கட்டுமா? இவ்வாறு பேசிக் கொண்டே பக்ஷியை மெதுவாக நெருங்கினார்கள். சமுத்திரம் வரையிலான பூமியை நடுங்கச் செய்து அசைத்து விடக் கூடிய வில்லும், அம்புகளும் கையில் தயாராக இருந்தன. அவனைப் பார்த்து தீனமாக, வாயில் நுரை தள்ள, ரத்தம் பெருக, தசரத குமாரனைப் பார்த்து பக்ஷி பேசியது. யாரை ஔஷதி போல தேடிக் கொண்டு வருகிறாயோ, அந்த தேவியையும், என் உயிரையும் ராவணன் அபகரித்தான். உன்னைப் பிரிந்து, லக்ஷ்மணனும் அருகில் இல்லாத பொழுது, ராகவா, பலசாலியான ராவணன் அவளை கவர்ந்து கொண்டு செல்வதை நான் பார்த்தேன். சீதையைக் காப்பாற்ற நான் ராவணனுடன் யுத்தம் செய்து அவனை வீழ்த்தினேன். அவன் ரதம், குடை இவைகளை அடித்து நொறுக்கி, பூமியில் விழச் செய்தேன். இதோ அவன் வில்தான் உடைந்து கிடக்கிறது. இதோ அவன் விட்ட அம்புகள். இதோ யுத்த ரதம் என்னால் சின்னா பின்னமாகப் பட்டது. என் இறக்கைகளாலேயே அடித்து தள்ளினேன், அவன் தான் சாரதி. பூமியில் விழுந்தான். களைப்படைந்த என் இறக்கைகளை வாளால் வெட்டித் தள்ளி, ராவணன் சீதையை எடுத்துக் கொண்டு ஆகாய மார்கத்தில் போனான். ஏற்கனவே ராக்ஷஸன் அடித்து விட்ட என்னை நீயும் உன் பாணங்களைக் கொண்டு வதைக்காதே. யார் என்று அறிந்து கொண்டதும், கண்களில் நீர் மல்க, ராமன் சீதையின் நிலை கேட்டு இரண்டு மடங்காகி விட்ட தன் துயரமும் தாபமும் வெளிப்பட, ஜடாயுவின் வாக்யத்தைக் கேட்டு, பெரிய வில்லை கீழே வைத்து விட்டு ஜடாயுவை அணைத்துக் கொண்டு கதறினான். லக்ஷ்மணனும் ஜடாயுவை பரிவுடன் அணைத்துக் கொண்டு, நடந்ததை தன் உள்ளத்தில் திரும்ப நினைத்து பார்த்துக் கொண்டான். கஷ்டப் பட்டு மூச்சு விடும் ஜடாயுவைப் பார்த்து, ராமனின் துயரம் பன் மடங்காகியது. லக்ஷ்மணா, ராஜ்யத்தை இழந்து, வனத்தில் வசித்து, சீதையை இழந்து, இந்த பக்ஷிராஜனும் நமக்காக அடிபட்டு உயிரை துறக்கும் நிலையில் இருக்கிறான், என் துரதிர்ஷ்டம், (அலம்-போதும், போதும்,) நெருப்பையே சுட்டு விடும் போல் இருக்கிறதே. பெரிய கடல் நிரம்பியிருப்பதைக் கூட இன்று நீந்தி கடந்து விடுவேன். ஆனால் என் போதாத காலம், நதிகளின் அரசனான சமுத்திரம் வற்றி விடாமல் இருக்க வேண்டும். சராசரங்களிலும் என்னை விட அபாக்யசாலி யாருமே இருக்க முடியாது. இல்லையெனில், சொல்லி முடியாத இந்த பெரும் துக்கம் எனக்கு ஏன் வந்து வாய்க்கிறது? நரைத்த தலையுடன், வயது முதிர்ந்த கழுகு அரசன், நம் தந்தைக்கு பிரியமான சகா-தோழன். என் பாக்யத்தின் கோளாறினால், அடிபட்டு பூமியில் விழுந்து கிடக்கிறார். இவ்வாறு பலவும் சொல்லி லக்ஷ்மணனுடன், தந்தையை தொடுவது போல ஸ்னேகத்துடன் ஜடாயுவை அணைத்துக் கோண்டான். இறக்கைகள் வெட்டப் பட்டு, ரத்தத்தில் தோய்ந்து கிடந்த க்3ருத்4ர ராஜனை, மைதிலி எங்கே? என் உயிருக்கு சமமான மைதிலி எங்கே என்று கேட்கையிலேயே மயங்கி விழுந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க்3ருத்4ர ராஜ தரிசனம் என்ற அறுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 68 (264) ஜடாயு சம்ஸ்கார: (ஜடாயுவின் அந்திமக் கிரியைகள்)
மித்ரனுக்கு சமமான சௌமித்திரியிடம், ரௌத்ரனான ராக்ஷஸன், ஜடாயுவை அடித்து வீழ்த்தியிருப்பதைக் குறித்து அங்கலாய்த்துக் கொண்டான். லக்ஷ்மணா, என் பொருட்டு, முயற்சி செய்து இந்த பக்ஷி யுத்தத்தில் அருமையான உயிரை விட்டிருக்கிறது. இந்த ராக்ஷஸனால் அடிக்கப் பட்டு வீழ்ந்திருக்கிறது. உடல் பூராவும் நிறைய காயங்கள் பட்டிருக்கின்றன. மிகவும் துன்பப் பட்டிருக்க வேண்டும். ஏதோ, உயிர் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. குரலே எழும்பாமல், சிதிலமாகிக் கிடக்கிறது. ஜடாயோ, உங்களால் முடியுமானால், ஏதாவது பேச முடியுமானால், சீதை என்ன ஆனாள் சொல்லுங்கள். ஏன் உங்களை இப்படி வதம் செய்தான் சொல்லுங்கள். சீதையை ஏன் அபகரித்துக் கொண்டு போனான் என்று சொல்லுங்கள்? ராவணனுக்கு நான் செய்த அபராதம் என்ன? எதைக் கண்டு என் பிரிய மனைவியை கடத்திக் கொண்டு போனான். ராவணன் பிடியில் சந்திரனுக்கு சமமான சீதையின் முகம் எப்படி இருந்தது. பக்ஷி ராஜனே, சீதை அந்த சமயம் என்ன சொன்னாள்? அவள் பேசிய சொற்களை அப்படியே சொல்லுங்கள். அந்த ராக்ஷஸன் எப்படிப் பட்டவன்? அவன் பலம் என்ன? என்ன வேலை? அவன் வீடு எங்கே? தந்தையே, தயவு செய்து சொல்லுங்கள். என்றார். அனாதை போல அழும் ராமரை திரும்பி பார்த்து ஜடாயு வாய் குழற, விவரமாக சொல்லியது. துராத்மாவான ராவணன் அவளைக் கடத்திச் சென்றான். மாயையில் வல்லவன். ஒரேயடியாக காற்று வீசும் துர்தினம் அன்று. குழப்பமாக சண்டையிட்டோம். களைத்து சற்று ஓய்ந்த நேரத்தில் என் இறக்கைகளை வெட்டி வீழ்த்தி, அந்த ராக்ஷஸன் சீதையைத் தூக்கிக் கொண்டு போனான். தென் திசையில் சென்றான். ராகவா, என் பிராணன் பிரியும் தறுவாயில் இருக்கிறது. பார்வை மழுங்குகிறது. மரங்கள் பொன்னிறமாக, வாசனைத் தைலம் தடவிய தலை கேசத்தோடு காண்கிறேன். ராவணன், சீதையை தூக்கிக் கொண்டு எந்த முஹுர்த்தத்தில் சென்றானோ, அந்த சமயம் தொலைந்த பொருளை எஜமானன் திரும்பப் பெறுகிறான். விந்தோ என்ற முஹுர்த்தம், காகுத்ஸா அவனுக்குத் தெரிந்திருக்காது. உன் பிரியையான ஜானகியை அபகரித்துக் கொண்டு ராக்ஷஸேஸ்வரனான ராவணன், தூண்டில் புழுவிற்கு ஆசைப் பட்டு மாட்டிக்கோண்ட மீன் போல சீக்கிரமே நாசமடைவான். கவலைப் படாதே. சீக்கிரமே அந்த ராக்ஷஸனை யுத்தத்தில் கொன்று விட்டு சீதையுடன் மகிழ்ச்சியாக இருப்பாய். ராமனுடன் பேசும் பொழுதே, வாயிலிருந்து ரத்தமும், நிணமுமாக வழிந்தது. விஸ்ரவஸின் மகன், வைஸ்ரவனான குபேரன் சகோதரன் என்று சொல்லி முடிக்கு முன்பே இறந்து விழுந்தது. சொல்லுங்கள், சொல்லுங்கள் என்று வேண்டியபடி, கூப்பிய கைகளுடன் ராமன் எதிரில் நிற்கையிலேயே, ஜடாயு பிராணன் பிரிந்தது. ஜடாயுவின் பிராணன் கழுகு உடலை விட்டு ஆகாயத்தில் சென்றது. தலை பூமியில் விழ, கைகளை விரித்தபடி தன் உடலை கீழே தள்ளி, இறந்த உடலாக மிஞ்சியது. உயிர் போன ஜடாயு உடலைப் பார்த்து சிவந்த கண்களையும் பார்த்து ராமர் மேலும் துக்கத்துடன் சௌமித்ரியிடம் சொன்னார். ராக்ஷஸர்கள் வாசஸ்தலமான இந்த தண்டகாரண்யத்தில், பல காலம் சௌக்யமாக வாழ்ந்து வந்த கழுகு அரசன், சிதிலமாகி விட்டான். பலகாலம் வாழ்ந்தவன். வயது முதிர்ந்த பக்ஷிராஜன் அடிபட்டு, இறந்து கீழே விழுந்து கிடக்கிறார். காலத்தை வெல்ல யாராலும் முடியாது. எனக்கு உபகாரம் செய்ய வந்த பக்ஷி ராஜன், லக்ஷ்மணா, எனக்காக உயிரை விட்டிருக்கிறார். தந்தை, பாட்டனார் காலத்திலிருந்தே குடும்ப நண்பன். சீதையை அபகரித்துச் செல்லும் ராவணனை எதிர்த்து நின்ற சமயம், பலசாலியான ராவணன் அடிக்கப் பெற்று, என் காரணமாக உயிரை இழந்திருக்கிறார். பறவை உடலில் இருந்தும் தர்மத்தை அனுஷ்டித்து வந்துள்ள சூரனாகவும், அபயம் அளிக்கும் குணம் கொண்டதுமாக வாழ்ந்த பக்ஷிராஜனின் வாழ்க்கை, தர்மசாரிகளாக சாதுக்கள் எங்கும் நிறைந்துள்ளனர் என்பதையே காட்டுகிறது. என் பொருட்டு பக்ஷிராஜன் உயிரை விட்டது, சீதை அபகரிக்கப் பட்டதை விட அதிகமாக என்னை வாட்டுகிறது. ராஜா தசரதன் எப்படியோ, அப்படியே இந்த பக்ஷிராஜனும், மதிக்கத் தகுந்தவர். பூஜிக்கப் பட வேண்டியவர். சௌமித்ரே, கட்டைகளை அடுக்கு. நான் நெருப்பை கடைகிறேன். என் பொருட்டு உயிரை விட்ட பக்ஷிராஜனுக்கு அந்திம சம்ஸ்காரங்களை நான் செய்கிறேன். பக்ஷிகளின் நாதனுக்கு நல்ல கதி கிடைக்கச் செய்கிறேன். ரௌத்ரமான ராக்ஷஸனால் கொல்லப் பட்டவன் நல்ல கதியடைய நான் இந்த சிதைக்கு நெருப்பு மூட்டுகிறேன். எந்த கதி, யாகம் செய்பவர்களுக்கு மட்டுமே உரியதோ, எந்த கதி நித்யம் அக்னி ஹோத்ரம் செய்யும் தர்ம சீலர்களுக்கு உரியதோ, யுத்தத்தில் புற முதுகு காட்டாதவர்களுக்கு என்ன கதியோ, பூமியை தானம் செய்பவர்களுக்கு என்ன கதியோ, என்னால் அனுமதிக்கப் பெற்று தந்தையே, உத்தமமான லோகங்களுக்குச் செல்லுங்கள். க்ருத்ர ராஜ, நல்ல பண்புள்ளவரே, என்னால் சம்ஸ்காரம் செய்யப் பட்டவராக மேலுலகம் செல்லுங்கள் இவ்வாறு சொல்லி, பக்ஷி ராஜனுடைய சிதைக்கு ராமன் நெருப்பை வைத்தான். தன் பந்து (உறவினன்) இறந்தால் துக்கிப்பது போல துக்கத்துடன் ராமன் இதைச் செய்தான். சௌமித்திரியுடன் வனம் சென்று மரணம் அடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை ஒன்று விடாமல் அந்த பக்ஷிக்குச் செய்தான். பின் கோதாவரி நதிக்குச் சென்று, பக்ஷிக்கு நீர்க் கடன்களைச் செய்தான். சாஸ்திரங்களில் சொல்லியுள்ள படி இறந்த பக்ஷி ராஜனுக்கு, தாங்கள் ஸ்நானம் செய்து நீர்க் கடன்களைச் செய்தனர். அந்த பக்ஷி ராஜன் மிகவும் கஷ்டமான செயலைச் செய்து யுத்தத்தில் வீழ்த்தப் பட்டான். மகரிஷிகளுக்கு சமமான அந்திம கிரியைகள் செய்யப் பெற்று, சுபமான புண்ய கதியை அடைந்தான். பக்ஷி ராஜனுடைய காரியங்கள் ஆன பின், திடமான புத்தியுடன் சீதையைத் தேடுவதில் தீவிரமாக யோசனை செய்த படி, விஷ்ணுவும், வாஸவனும் போல இருவரும் புறப்பட்டனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஜடாயு சம்ஸ்காரோ என்ற அறுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 69 (265) கப3ந்த4 க்3ராஹ: (கபந்தனால் பிடிக்கப் படுதல்)
ஜடாயுவின் அந்திம கிரியைகள் செய்து முடித்த பின், ராம, லக்ஷ்மணர்கள் புறப்பட்டனர். வனத்தில் சீதையைத் தேடியபடி, மேற்கு நோக்கி நடந்தனர். பின் தெற்கு நோக்கிச் சென்று, கைகளில் வில், அம்பு, கத்தி இவைகளை சுமந்தவர்களாக இக்ஷ்வாகு குல ராஜ குமாரர்கள் சளைக்காமல் நடந்தனர். பயங்கரமான காடுகள், மரங்களும், புதர்களுமாக அடர்ந்து தெரிந்த காடுகள், பல விதமான கொடிகள் சூழ்ந்து வேலியாக தடுக்க, நுழைய முடியாதபடி இருந்த அடர்ந்த காட்டினுள்ளும் வழியை ஏற்படுத்திக் கொண்டு நுழைந்தனர். தென் திசையை இலக்காகக் கொண்டு, தாங்களே வழி அமைத்துக் கொண்டு வேகமாகச் சென்றனர். மிகப் பெரிய அந்த பெரிய காட்டை கடந்து சென்று கொண்டிருந்தனர். ஜனஸ்தானத்திலிருந்து மூன்று கோசம் (ஆறு மைல்) நடந்த பின், நல்ல தேஜஸ் உடைய இருவரும் க்ரௌஞ்சாரன்யம் என்ற காட்டை அடைந்தனர். அந்த காடு பலவிதமாக மேக மண்டலம் சூழ சந்தோஷமாக இருப்பது போலத் தெரிந்தது. சுபமான புஷ்பங்கள் பல வர்ணங்களிலும், மணம் வீசும் விதம் விதமான வகைகள் நிறைந்து, மிருகங்களும் பக்ஷிகளும் வளைய வர, வைதேஹியைத் தேடிக் கொண்டு சென்ற இருவரும், இவற்றை ரசித்தவாறு சென்றனர். ஆங்காங்கு அமர்ந்து மூன்று கோஸ தூரம் கிழக்கு முகமாகச் சென்றனர். சீதையின் நிலை உள்ளத்தை வாட்டினாலும் தொடர்ந்து நடந்தனர். க்ரௌஞ்ச அரண்யம் முடிந்து மதங்கா3ஸ்ரமம் நெருங்கும் சமயம், இந்த வனமும் பெரிய பெரிய மிருகங்கள் நிறைந்திருக்கக் கண்டனர். பக்ஷிகள், மற்றும் பலவித ஜீவ ஜந்துக்களும் நிறைய இருந்தன. மரங்கள் கிளைகள் நிறைந்து அடர்ந்து காணப் பட்டன. தசரத ராஜ குமாரர்கள், ஒரு குகையைக் கண்டனர். பாதாளம் வரை செல்வது போல அழகாக ஒரே இருட்டாக இருந்ததைக் கண்டனர். அந்த குகையில் சற்று தூரத்தில் மிகப் பெரிய உருவம் உடைய ராக்ஷஸியை இருவரும் கண்டனர். அவள் முகமே கோணலாக, அசாதாரணமாக இருந்தது. சாதாரண அல்ப ஜந்துக்கள். அவளைக் காணவே பயப்படுவர். அருவருப்பைத் தரும், கோரமான காட்சியாக இருந்தாள். நீளமான வயிறும், கூர்மையான பற்களும், கறுப்பும், தோல் தடித்து விகாரமாகத் தெரிய பெரிய பெரிய மிருகங்களையும் அடித்து தின்பவளாக, தலை கேசம் அவிழ்ந்து தொங்க, நளினம் சற்றும் இல்லாத அவளைப் பார்த்து ராம, லக்ஷ்மணர் இருவரும் திகைத்து நோக்கினர். சகோதரர்கள் இருவருமாக நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, முன்னால் சென்று கொண்டிருந்த லக்ஷ்மணனைப் பிடித்து வா, வா, நாம் சந்தோஷமாக அனுபவிக்கலாம் என்று அவன் கையைப் பிடித்து இழுக்கலானாள். சௌமித்ரியை அணைத்துக் கொண்டு, நான் அயோ முகி என்ற பெயருடையவள். உன் அதிர்ஷ்டம் எனக்கு உன்னைப் பிடித்து விட்டது. மீதி உள்ள வாழ் நாட்களை நீ என்னுடன் இந்த மலைச் சாரல்களிலும், வனத்திலும் சுற்றி விளையாடி கழிப்பாயாக. இவ்வாறு அவள் சொல்லவும், கோபத்துடன் லக்ஷ்மணன், அவளுடைய காதுகளையும், மூக்கு, ஸ்தனங்களையும் வெட்டினான். காதும், மூக்கும் அறுபட்டதும், விகாரமான குரலில் கத்திக் கொண்டு அந்த ராக்ஷஸி, வேகமாக ஓடி விட்டாள். பயம் தரும் மிகப் பெரிய உருவத்துடன் அவள் ஓடுவதைக் கண்டு, மேலும் அடர்ந்த காட்டினுள் நுழைந்தவர்களாக, எதிரிகளை கண்டால் அடிக்கவும் தங்களை காத்துக் கொள்ளவும் தயாராக, சாவதானமாக, கவனமாக நடந்தனர். லக்ஷ்மணன் ராமனைப் பார்த்து என் தோள் துடிக்கிறது. ஏதோ கெடுதல் வரும் என்று தோன்றுகிறது. பலவிதமான அனிஷ்டமான நிமித்தங்களை காண்கிறேன். அதனால் அண்ணலே, தயாராக இருங்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். எனக்கே இந்த துர்நிமித்தங்கள்,உடனே ஏதோ ஒரு கெடுதல் நம்மை நெருங்குவதை உணர்த்துவதாக தெரிகிறது. மகா தேஜஸ்வி, சத்வ குணம் உடையவன் , சீலமுடையவன், தானே ஒழுக்கத்தில் சிறந்து விளங்குபவன், என்று சொல்லப் படும் லக்ஷ்மணனே பயந்து இவ்வாறு சொல்லவும், ராமனும் ஏற்றுக் கொண்டான். லக்ஷ்மணன் மேலும், விவரித்தான். வஞ்சுளகம் எனும் இந்த பக்ஷி மிக கொடுமையானது. நமக்கு யுத்தத்தில் விஜயம் தான் என்று சொல்கிறது. இருவரும் கவனமாக தேடிக் கொண்டே போகும் பொழுது, ஏதோ சட, சடவென்று முறியும் சத்தம் கேட்டது. இந்திரன் ஆகாயத்தை நொறுக்கிப் போட்டாற் போல பயங்கர இடி சத்தம். ஆகாயம் பூராவும் இந்த ஓசையே நிறைந்திருந்தது. இருவரும் கைகளை கோத்துக் கொண்டு என்ன சத்தம் என்று அறிய முற்பட்டபொழுது, ஒரு பெரிய ராக்ஷஸன் மிகப் பெரிய வயிற்றுடன் எதிர்ப்பட்டான். மிகப் பெரிதாக வளர்ந்த உருவம். தலையோ, முகமோ இன்றி, வயிற்றினுள் தெரிந்த முகத்துடன், மயிர்க்கால்களே, கத்திகள் போல கூர்மையாக குத்திட்டு நிற்க, மரங்கள் வளர்ந்து நிற்கும் , நீல மேகம் போன்ற உடல். ரௌத்ரமான இடி முழக்கம் போன்ற குரல். வயிற்றில் தெரிந்த முகம், அதில், பெரிய இமைகள், நீளமும் அகலமுமாக, மஞ்சள் நிறத்துடன், மார்பில் ஒற்றைக் கண், பெரும் பற்களுடன் கூடிய நாக்கும், வாயும், மகா கோரமான கரடி, சிங்கம், மான், யானை என்று கிடைத்ததை விழுங்கும் இரண்டு புஜங்கள் யோஜனை தூரம் நீண்டு, கைக்கு கிடைத்த எல்லாவிதமான கரடி, பக்ஷி கணங்கள், மிருகங்கள் என்று ஆகர்ஷித்து இழுத்து, கூட்டமாக மான்களையும் விடாது துரத்தி பிடிக்கும் புஜங்கள், இவைகளை க்ரோச தூரத்தில் இருக்கும் பொழுதே பார்த்து விட்டனர். இந்த இரு சகோதரர்கள் நிற்பதைப் பார்த்து பயந்து ஓடி வரும் மிருகங்கள், காப்பாற்ற வேண்டி சூழ்ந்து கொண்டன. இவைகளையும் அந்த புஜங்கள் விடாமல் பற்றிக் கொண்டன. அங்கிருந்தே கப3ந்த உருவத்தை நீண்ட புஜத்துடன் கூடியதை, கொடுமையான பெரிய உருவத்தைக் கண்டனர். பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அந்த கபந்தனின் புஜங்கள், சகோதரர்கள் இருவரையும் வளைத்து சுழற்றிக் கொண்டு இழுத்துச் செல்லலாயின. அந்த மகா பலசாலியின் ஆக்ரமிப்புக்கு எதிரில், கையில் வில்லும், அம்பும், கத்தியும் சுமந்து கொண்டு வந்த, ஸ்திரமான எதையும் தாங்கும் உடல் வாகு கொண்ட வீரர்களே அந்த பெரிய புஜங்களின் இழுப்புக்கு இழுபட்டு செல்லலாயினர். தைரியசாலியும், சூரனுமான ராகவன் கவலைப்படவில்லை. குழந்தை பருவத்திலிருந்தே, தான் தனியாக எதையும் செய்யாமல் ராமனை சார்ந்தே வாழ்ந்து பழகிய லக்ஷ்மணன் கவலைப் பட்டான். வருத்தத்துடன் ராமனிடம் ராகவா, இந்த ராக்ஷஸனிடம் போய் அகப்பட்டுக் கொண்டோமே. நாம் வீரர்களாக இருந்து என்ன பயன்? நான் ஒருவன் கட்டுண்டது போதும். நீ உன்னை விடுவித்துக் கொள். இந்த பூதத்துக்கு என்னை பலியாக கொடுத்து விட்டு, நீ ஓடி விடு. சீக்கிரமே வைதேஹியை கண்டு கொள்வாய் என்று எனக்குத் தோன்றுகிறது. திரும்பச் சென்று தந்தை பாட்டனார் வழி வந்த ராஜ்யத்தை அடைவாய். ராஜ்யத்தில் அமர்ந்தாலும் என்னை எப்பொழுதும் நினைவு வைத்துக் கொள். இவ்வாறு லக்ஷ்மணன் சொல்லவும் ராமன் பதில் சொன்னான். வீரனே, பயப்படாதே. உன் போல் பலசாலிகள், இப்படி பயப் படக் கூடாது. கவலைப்படக் கூடாது. இதற்குள், க்ரூரனான கபந்தன், இடி முழக்கம் போன்ற குரலில், சகோதரர்கள் இருவரையும் பார்த்து வினவினான். யார் நீங்கள்? இருவருமாக, ருஷபம் போன்ற தோள்களும், பெரிய கத்தியும், வில், அம்பும், வைத்துக் கொண்டு இந்த ஜன சஞ்சாரமில்லாத காட்டில், இந்த பயங்கரமான தேசத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். தெய்வ வசமாக என் கண்ணில் பட்டீர்கள். என்ன காரியமாக இங்கு வந்துள்ளீர்கள் சொல்லுங்கள். இந்த தேசம் வந்து, நான் பசியோடு இருக்கும் நேரம், கையில் பா3ணம், கத்தி, வில் என்று வைத்துக் கொண்டிருந்தாலும், என் வாய் வரை வந்து உயிருடன் திரும்பிச் செல்வது என்பது நடக்காது. கபந்தன் பேசிக் கொண்டு இருக்கையிலேயே, ராமன், லக்ஷ்மணனிடம், கஷ்டப் பட்டு நடந்து வந்து, அதை விட கொடிய நிலையை அடைந்து, சீதையை பிரிந்து, அவளையும் திரும்பப் பெறாமல், இப்படி ஒரு விபரீதத்தில் மாட்டிக் கொள்ளவா. விதி மிகக் கொடியது லக்ஷ்மணா. விதியின் வலிமை தான் உன்னையும், என்னையும் இந்த பாடு படுத்துகிறது. விதியின் முன் எதுவுமே லட்சியமில்லை. சூரனோ, பலசாலியோ, அஸ்த்ர ஸஸ்திரங்கள் அறிந்தவனோ, போரில் தோல்வியே கண்டறியாத வீரனோ, காலத்தின் முன் வருந்தத்தான் செய்கிறார்கள். மணற்பாங்கான, நதிக்கரை போல. லக்ஷ்மணனிடம் இப்படிச் சொன்னாலும், திடமான புத்தியும், சத்ய விக்ரமும் உடைய பிரதாபவானான தசரத குமரன், ராமன், நல்ல பலசாலியான லக்ஷ்மணனை ஸ்திரமாக நிற்கச் சொல்லி, தானும் ஸ்திரமாக அசைக்க முடியாதபடி நின்று கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் கப3ந்த4 க்3ராஹோ என்ற அறுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 70 (266) கப3ந்த4 பா3ஹுச்சே2த:3 (கபந்தனின் கைகளை வெட்டுதல்)
சகோதரர்கள் இருவரும் தன் புஜமான பாசத்தில் கட்டுண்டு நிற்பதைப் பார்த்து கப3ந்த4ன் கேட்டான். பசித்திருக்கும் என்னைப் பார்த்து ஏன் நிற்கிறீர்கள், க்ஷத்திரிய குமாரர்களே, தெய்வமாக உங்களை எனக்கு ஆகாரமாக அனுப்பி வைத்திருக்கிறது. இதைக் கேட்டு தன் துயரத்திலிருந்து சமாளித்துக் கொண்டு விட்ட லக்ஷ்மணன், தன்னை ஸ்திரப் படுத்திக் கொண்டு அந்த சமயத்துக்கு உகந்ததான செயலை செய்ய தீர்மானித்தான். ராக4வா, இந்த ராக்ஷஸன் உன்னையும், என்னையும் வெகு வேகமாக இழுக்கிறான். அதனால் கத்தியினால் இவன் கைகளை வெட்டி விடுவோம். இந்த ராக்ஷஸன் உருவத்திலும் பெரியவன், செயலும் அப்படியே இருக்கும். இவன் பலம் இவனது புஜமே. உலகை ஜயித்தது போல நம்மையும் கொல்ல விரும்புகிறான். தவற்றைச் செய்யும் வீணர்களை வதம் செய்வது அரசர்களுடைய கடமையே. யாகத்தின் நடுவில் கொண்டு வரப் பட்ட யாக பசு போல. இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ராக்ஷஸன் கோபம் கொண்டு தன் வாயை இன்னும் பெரிதாக்கிக் கொண்டு அவர்களை விழுங்கத் தயாரானான். உடனே ராக4வர்கள், இருவரும் கத்தியை எடுத்து அவனுடைய உடலின் பாகமான புஜங்களை வெட்டி எறிந்தனர். வலது கையை ராமன் வேகமாக தன் வாளினால் வெட்ட, இடது புஜத்தை லக்ஷ்மணன் வெட்டி எறிந்தான். கைகளை இழந்த அந்த பெரிய கைகளுக்குடையவன் ஓவென்று அலறிக் கொண்டு விழுந்தான் . ஆகாயத்தையும், பூமியையும், திக்குகளையும் அந்த ஓசையால் கலங்கடித்துக் கொண்டு, மேகம் போல விழுந்தான். கைகளில் வெட்டப் பட்ட இடத்திலிருந்து ரத்தம் பெருகும் நிலையிலும், அந்த தா3னவன், நீங்கள் இருவரும் யார்? என்று வினவினான். இவ்வாறு கேட்ட தா3னவனுக்கு லக்ஷ்மணன் பதில் அளித்தான். இவன் இக்ஷ்வாகு குல தா3யாதி3யான ராமன் என்று உலகில் பெயர் பெற்றவன். இவனுடைய இளைய சகோதரன் நான் என்பதை தெரிந்துகொள். என் பெயர் லக்ஷ்மணன். தாயாரின் குறுக்கீட்டினால், ராமன் வனத்துக்கு கடத்தப் பட்டான். என்னுடனும், தன் மனைவியுடனும், நடந்தே வனத்தில் சுற்றிக் கொண்டு வந்தான். ஜன சஞ்சாரம் இல்லாத காட்டில் வசிக்கும் பொழுது இவன் மனைவி ராக்ஷஸனால் அபகரித்துச் செல்லப் பட்டாள். அவளைத் தேடிக் கொண்டு நாங்கள் இங்கு வந்தோம். நீ யார்? எதற்காக கபந்த உருவத்துடன் காட்டில் கிடக்கிறாய்? முகம், வாய், வயிற்றில் இருக்க, முழங்கால் உடைந்து அமர்ந்து இருக்கிறாய். லக்ஷ்மணன் இவ்வாறு கேட்கவும் கப3ந்த4ன் மகிழ்ந்தான். இந்திரனின் சொல்லை நினைவு கூர்ந்தவனாக, உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களுக்கு ஸ்வாகதம். அதிர்ஷ்டவசமாக உங்கள் இருவரையும் கண்டேன். அதிர்ஷ்டவசமாக, உங்கள் கைகளால் என் நீண்ட புஜம் வெட்டப் பட்டது. எனக்கு இந்த விகாரமான உருவம் வந்தது எப்படி என்பதை விவரமாகச் சொல்கிறேன். கேளுங்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் கப3ந்த4 பா3ஹுச்சே2தோ என்ற எழுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 71 (267) கப3ந்த4 சாபாக்2யானம் (கபந்தன் தன் சாபத்தை விவரித்தல்)
ராமா, முன்னொரு காலத்தில், நானும் மகா பலசாலியாக, மிக அழகிய உருவத்துடன் இருந்தேன். என் சரீர அழகு மூன்று உலகிலும் புகழப் பெற்றது. சூரியனும், சோமனும், வருணனும், இந்திரனும் எப்படி உடல் அழகால் போற்றப் பெற்றனரோ, அதற்கு இணையான உடல் வாகு எனக்கும் இருந்தது. என் அழகு எனக்கு கர்வத்தை கொடுத்தது. உலகில் மற்றவரை துச்சமாக நினக்கச் செய்தது. வனத்திற்கு வரும் ரிஷிகளை அவ்வப்பொழுது பயமுறுத்துவேன். ஸ்தூல சிரஸ் என்ற ரிஷி இந்த என் வழக்கத்தால் ஒரு முறை கோபம் கொண்டார். காட்டு ஜீவராசிகளை இந்த ரூபத்தால் வந்த கர்வத்தால் பயமுறுத்துவதைப் பார்த்துக் கொண்டே இருந்தார். கோரமான சாபம் கொடுக்கும் வல்லமையுடைய அவர் ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் இது போலவே கோரமான ரூபம் உனக்கு வந்து சேரட்டும். எல்லோரும் கண்டு அருவருப்பு அடையட்டும். இவ்வாறு சாபமிடவும் வருந்தி நான் அவரை கெஞ்சினேன். இந்த சாபத்துக்கு விமோசனம் என்ன? என்று கேட்கவும் அவரும் ராமன் வனத்துக்கு வந்து உன் சரீரத்தை தகனம் செய்யும் பொழுது விடுபடுவாய். அப்பொழுது உன் அழகிய உருவத்தை பெறுவாய், உன் சுயமான லக்ஷ்மீகரத்தை அடைவாய் என்றார். த3னு என்பவருடைய மகன் நான். லக்ஷ்மணா இது தவிர, இந்திரனுடைய கோபத்துக்கும் ஆளானேன். மிகவும் கடினமான தவம் செய்து ப்ரும்மாவை சந்தோஷப் படுத்தினேன். எனக்கு தீ3ர்கா4யுசு என்று அவர் வரம் தந்தார். இதில் எனக்கு மேலும் அலட்சியம் கூடியது. எனக்கு தீ3ர்கா4யுஸ் கிடைத்திருக்கும் பொழுது இந்திரன் தான் என்னை என்ன செய்ய முடியும் என்று கர்வத்தோடு சண்டையிட இந்திரனை அழைத்தேன். நூறு பிரிவுடைய வஜ்ராயுதத்தால், அவன் கையால் அடிபட்டேன். என் தொடைகளும், முகமும் சரீரத்தினுள் போய் விட்டன. இந்த உருவமும் வேண்டாம், என்னைக் கொன்று விடு என்று இந்திரனை நான் கெஞ்சினேன். அதனால் யமனிடத்தில் என்னை கொண்டு நிறுத்தினான். பிதாமகருடைய வரம் சத்யமானது. அதை மீற முடியாது உனக்கு தீர்கமான ஆயுள் அவர் கொடுத்திருக்கிறாரே, என்று யம ராஜா யோசித்தார். ஆகாரம் இல்லாமல், இந்த உருவத்துடன் நான் எப்படி ஜீவித்து இருப்பேன் என்று நான் அழவும், வஜ்ரத்தால் அடிபட்டு என் தொடைகளும், வயிற்றுக்குள் போக, தலையும் கழுத்திற்குள் விழுந்து விட்ட நிலையில், நீண்ட நாள் வாழ்வது எப்படி என்று கேட்கவும், இந்திரன் என் கைகளை நூறு யோஜனை தூரம் நீளூம்படி செய்தான். என் வயிற்றில் நீண்ட பற்களைக் கொடுத்தான். அதனால் என் நீண்ட கைகளால் வனத்தில் சஞ்சரிக்கும் மிருகங்களை இழுத்து, நேரடியாக வயிற்றுக்குள் போட்டுக் கொண்டு வெறுப்பின் உச்சியில், சிங்கமோ, யானையோ, புலியோ எதுவானாலும் விழுங்கி விடுகிறேன். இந்திரனும் இதையே சொன்னான். எப்பொழுது ராமன், லக்ஷ்மணன் கூட வந்து யுத்தத்தில் உன் புஜங்களை வெட்டுகிறானோ, அப்பொழுது ஸ்வர்கம் போவாய் என்றான். இந்த உடலுடன், ராஜ லக்ஷணம் நிரம்பிய ராமா, வனத்தில் கிடைத்ததை வாய் அருகில் கொண்டு வரும் பொழுது என்ன என்று பார்க்கிறேன். எது கிடைத்தாலும் சரி என்று வாழ்ந்து வருவதே, ஒரு நாள் ராமன் வருவான் என்ற ஆசையில் தான். இவ்வளவு நாள் இந்த நம்பிக்கையில் தான் காலம் கழித்தேன். என் தேகம் கீழே விழுந்து கிடக்கும் சிரமத்தையும் பொறுத்துக் கொண்டேன். அந்த ராமன் நீ தானா? உனக்கு மங்களம். ராகவா, நான் வேறு யாராலும் கொல்லப் பட முடியாதபடி மகரிஷி வரம் கொடுத்திருக்கிறார். நரர்ஷபா, மனிதருள் சிறந்தவனே, நான் உனக்கு என் மதியினால் உதவி செய்கிறேன். உங்கள் இருவருக்கும் நண்பனாக இருக்கிறேன். என்னை அக்னியில் சம்ஸ்காரம் செய்யுங்கள். தயவு செய்து என் சாப விமோசனத்துக்கு வழி செய்யுங்கள் என்று த3னுவின் மகன் வேண்டிக் கொள்ளவும், லக்ஷ்மணன் கேட்டுக் கொண்டு நிற்கையிலேயே தானே பதில் சொன்னான், ராமன். என் மனைவி சீதா, யசஸ்வினி, ராவணனால் அபகரிக்கப் பட்டாள். நான், சகோதரன், லக்ஷ்மணனுடன் ஜனஸ்தானத்திலிருந்து சற்று தூரம் விலகி சென்ற பொழுது, யாரும் இல்லாத சமயம், இந்த காரியம் நடந்திருக்கிறது. அவன் பெயர் மட்டும் தான் தெரியும். அந்த ராக்ஷஸ உருவத்தை கூட நான் கண்டதில்லை. எங்கு வசிக்கிறான் என்பதோ, அவனுடைய பிரபா4வமோ, எங்கள் இருவருக்கும் தெரியாது. துயரம் அழுத்த, அனாதை போல நாங்கள் அவளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். இந்த உபகாரம் நாங்கள் செய்கிறோம். இதே போல இதற்கு சமமான காருண்யம் எங்களளடமும் இருக்கட்டும். யானைகள் அவ்வப்பொழுது உடைத்து போட்ட மரக் கிளைகளை கொண்டு வந்து, உலர்ந்த கட்டைகளை அடுக்கி உன்னை எரிக்கிறோம். நாளைக் காலை விடிந்தவுடன், நல்ல நேரத்தில் செய்கிறோம். நீ சொல், யார் எப்படி அபகரித்துக் கொண்டு போனார்கள், தெரியுமா? ஏதாவது தெரிந்தால் சொல். விஷயமாக ஏதாவது நீ சொன்னால், அதுவே எங்களுக்கு பரம உபகாரமாக இருக்கும். ராமர் கேட்கவும், குசலமாக ஆன த3னு மகன் பதில் சொன்னான். எனக்கு தெய்வீகமான அறிவும் இல்லை. மைதி2லியையும் எனக்குத் தெரியாது. யார் அவளை அறிவார்களோ, அவளைப் பற்றிச் சொல்கிறேன். என்னை எரித்து நான் என் ரூபத்தை அடைந்த பின் சொல்கிறேன். ப்ரபோ, எரித்து விடாதவரை எனக்கு சக்தியில்லை. எதுவுமே அறியும் திறனும் இந்த சரீரத்தில் இருக்கும் வரை எனக்கு இல்லை. சாபத்தின் காரணமாக என் புத்தியும் வேலை செய்யவில்லை. ராக4வா அதனால் உன் சீதையை அபகரித்த ராக்ஷஸனை, மகா பலசாலியாக இருக்க வேண்டும் அந்த ராக்ஷஸன், என்னால் தானாக வரவழைத்துக் கொண்ட இந்த கோர ரூபம் இது. இந்த என்னை சூரியன் மலை வாயில் களைத்து விழுமுன் ஒரு பள்ளத்தில் போட்டு, முறைப்படி எரித்து விடு. பள்ளத்தில் போட்டு, விதி முறைப் படி நீ சம்ஸ்காரங்கள் செய்தால், ராமா, அந்த ராக்ஷஸனை அறிந்த ஒருவரைப் பற்றி உனக்குச் சொல்வேன். அவனுடன் நட்பு கொள். அசாதாரண வீரன் அவன். உன்னுடன் சந்தோஷமாக நட்பு கொள்வான். மூன்று உலகிலும் அவன் அறியாதது எதுவும் இல்லை எனலாம். வேறு ஏதோ காரணத்திற்காக உலகங்களை சுற்றி இருக்கிறான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் கப3ந்த4 சாபாக்2யானம் என்ற எழுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 72 (268) சீதாதி4க3மோபாய: (சீதையை அடைய உபாயம் சொல்லுதல்)
இவ்வாறு கபந்தன் சொன்னதைக் கேட்டு, வீரர்களான ராஜகுமாரர்கள் இருவரும், மலையில் ஒரு பள்ளத்தை கண்டறிந்து நெருப்பு மூட்டினர். லக்ஷ்மணன் பெரும் நெருப்பு துண்டங்களையெடுத்து கபந்தனின் சிதைக்கு தீ மூட்டினான். வெறும் மாமிசபிண்டம், மலை மேல் கிடப்பது போல இருந்த கபந்தனுடைய சரீரத்தை அதன் கொழுப்பின் காரணமாக நெருப்பு மிக மெதுவாகவே எரிக்க முடிந்தது. திடீரென்று அவசரமாக சிதையை விட்டு புகையில்லாத அக்னி போல வெளிக்கிளம்பி, அப்பழுக்கில்லாத தூய உடையும், திவ்ய மாலைகளும் அணிந்தவனாக சிதையின் அக்னியில், விமலமான ஆகாயத்தில் சூரியன் போல் பிரகாசித்துக் கொண்டு, ஒவ்வொரு அங்கத்திலும் உரிய ஆபரணங்களோடு, மிகவும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தபடி வெளி வந்தான். ஹம்ஸங்கள் பூட்டிய திவ்யமான விமானத்தில் ஏறி நின்றபடி, பத்து திக்குகளையும் தன் பிரகாசத்தால் வெளிச்சமாக்கிக் கொண்டு, அந்தரிக்ஷத்தில் நின்றபடி, கபந்தன் ராமனிடம் சொன்னான். ராக4வா கேள். எந்த விதமாக சீதையை சீக்கிரம் அடைய முடியும் என்பதைச் சொல்கிறேன். ராமா, *ஆறு விதமான யுக்திகள். இதனுள் எல்லாவிதமான முயற்சிகளும் அடக்கம். தசை முடியும் சமயம், தசா பாகத்தால் சேவிக்கப் படுகின்றன. தசாபாகம் வந்தடையும் சமயம் பலம் குன்றி இருப்பர். இந்த நிலையில் நீ லக்ஷ்மணனுடன் இருக்கிறாய். இதன் காரணமாக உனக்கு மனைவியை பிரியும் நிலை வந்தது. இதனால் அவஸ்யம் நீ ஒரு நண்பனைப் பெற வேண்டும். நண்பர்களுக்காக நீ உயிரைக் கொடுப்பவன் என்பது தெரிந்ததே. இந்த நட்பை நீ செய்தால் தான் சித்தியடைய முடியும். பலவாறு யோசித்த பின் என் மனதில் தோன்றுவதை சொல்கிறேன், கேள். (* இருந்து ஜோதிட விஷயங்கள்) ராமா, சுக்ரீவன் என்று ஒரு வானரன். இந்திரனின் மகனான வாலியின் சகோதரன். இந்த சகோதரனால் விரட்டப் பட்டான். பம்பா வரை நீண்டிருக்கும் ருஸ்ய மூக மலையில் வசிக்கிறான். சுய கௌரவம் மிகுந்தவன். நான்கு வானரங்கள் மட்டுமே அவனுடன் இருக்கின்றன. நல்ல பலசாலி. தேஜஸ் உடையவன். அளவில்லாத சக்தியுடையவன். சத்ய சந்தன். வினயமுடையவன். மகான், நல்ல புத்திசாலி. பொறுமை அடக்கம் உடையவன். வானரேந்திரன். இப்படி இருந்தும் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடையவன். மகா பலமும் பராக்ரமமும் உடையவன் என்று புகழ் பெற்றவன். இவ்வளவு குணங்கள் இருந்தும், சகோதரனால் ராஜ்யத்தின் காரணமாக நாட்டை விட்டுத் துரத்தப் பட்டான். அவன் உனக்கு மித்ரனாவான். சீதையை தேடிக் கண்டு பிடிப்பதில் சகாயமாக இருப்பான். ஹே ராமா, துக்கத்தை விடு. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொள். நடக்க வேண்டியது, விதி, நடந்து விட்டது. இப்பொழுது வேறு விதமாக மாற்ற நம்மால் முடியாது. இக்ஷ்வாகு குல நாதனே, விதியை மாற்ற முடியாது. சீக்கிரமாக இங்கிருந்து கிளம்பு. ராமா| பலசாலியான சுக்ரீவனை சந்தித்து அவனை உன் நண்பனாக ஏற்றுக் கொள். இன்றே, இப்பொழுதே போய், ராமா, சந்திரன் பிரகாசமாக இருக்கும் இந்த சமயத்திலேயே போய் செயல் படுங்கள். வானரர்களின் தலைவன், வானரமே என்று மட்டமாக எண்ண வேண்டாம். செய் நன்றி மறவாதவன். சகாயம் செய்யத் தயாராக இருப்பவன். இஷ்டம் போல் உருவம் எடுக்கவும் வல்லவன். வீர்யம் உடையவன். நீங்கள் அவன் செய்ய விரும்பும் காரியத்தை முடித்து தர சக்தியுடையவர்களே. அவன் தேவை நிறைவேறினாலும், இல்லாவிட்டாலும், உங்கள் காரியத்தை அவன் முடித்து கொடுப்பான். மனதில் சந்தேகத்துடன் நிம்மதியில்லாமல் ருக்ஷரஜஸ: புத்ர: -ருக்ஷரஜஸ் என்ற வானரத்தின் மகன் சுக்3ரீவன், பம்பா நதிக் கரையில் அலைந்து கொண்டிருக்கிறான். பாஸ்கரனின் சொந்த மகன், வாலியினால் துரத்தப் பட்டவன், ஆயுதங்களை தயாராக எடுத்துக் கொண்டு சீக்கிரமாக ருஸ்யமூக மலை சென்று, அந்த வானரத்தை, சந்திரன் சாட்சியாக சக்யம் செய்து கொள். வனசாரி, வனத்தில் திரியும் ஜாதி என்று யோசிக்காதே. குரங்குகளில் ஸ்ரேஷ்டன். ஒவ்வொரு ஸ்தானத்தையும், நர மாமிசம் புசிக்கும் ராக்ஷஸர்களின் நடமாட்டத்தையும் அறிந்தவன். தன் புத்தி கூர்மையால் துல்யமாக தெரிந்து கொண்டுள்ளான். ராக4வா, உலகத்தில் அவன் அறியாத இடமே இல்லை எனலாம். ஆயிரம் கிரணங்களோடு சூரியன் பிரகாசமாக உள்ள அளவும், அவன் நதிகளையும், பெரிய மலைகள், மலை குகைகள், பள்ளங்கள் இவற்றில் தேடி, வானரர்களோடு கூட, உன் பத்னியை கண்டு பிடித்துக் கொடுப்பான். பெரிய உருவம் உடைய வானரங்களை பல திக்குகளிலும் அனுப்புவான். உன் பத்னியும் உன்னைப் பிரிந்து வருந்திக் கொண்டிருப்பாள். ராவணனின் இடத்தில் நிர்மலமாக அவள் இருப்பதை தெரிந்து சொல்வான். மேரு மலையின் சிகரத்தில் இருந்தாலும், மாசற்றவளான உன் பத்னி பாதாளத்தில் இருந்தாலும், வானர ஸ்ரேஷ்டன் ராக்ஷஸர்களை அடித்து உன் பிரியையான வைதேஹியை திருப்ப கொண்டு வந்து சேர்ப்பான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில சீதாதி4க2ம உபாயோ என்ற எழுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 73 (269) ருஸ்யமூக மார்க3 கத2னம்
(ருஸ்யமூக மலைக்கு போகும் வழியை சொல்லுதல்)
ராமனுக்கு சீதையைத் தேட வழியை காட்டி விட்டு, விஷயம் அறிந்த கப3ந்த4ன் மேலும் சொன்னான். ராமா, இதோ நல்ல வழி. இங்கு மரங்கள் பூத்து குலுங்குகின்றன. கிழக்கு பக்கத்தில் வெய்யில் குறைந்த சமயம் மனோ ரஞ்சகமாக இருக்கும். ஜம்பூ3, பிரியால, பனஸ, ப்லக்ஷ, ந்யக்4ரோத, திந்து3க, அஸ்வத்த2, கர்ணிகார, சூத போன்ற பல மரங்கள், த3ன்வனா, நாக3, திலக, நக்தமாலகா, நீலாசோக, கத3ம்ப, கரவீர என்ற புஷ்பங்கள் உடைய மரங்கள், (சிவந்த மலர்களையுடைய) அக்னி முக்ய, அசோக மரங்கள் பாரிபத்ர மரம்,- இவைகளில் ஏறி அல்லது உங்கள் பலத்தால் கீழே தள்ளி, பழங்களை சாப்பிட்டபடி நடந்து செல்லுங்கள். இதைக் கடந்தால் வரும் வனத்தில் மரங்கள், சிறப்பாக பூக்களை பிரதானமாக உடையவை, பூத்துக் குலுங்கும். கண்ணுக்கு விருந்தாக மலர்களை சொரியும். குரவக மரங்கள் வடக்கில் உள்ளதை போலவே விளங்கும். எல்லா விதமான பழ மரங்களும், தேனீக்கள் கூடு கட்டி, மதுவைச் சிந்தும் மரங்கள் நிறைந்த காடு. சைத்ர ரதம் என்ற தேவ லோக வனத்தைப் போல. இதிலும் எல்லா பருவங்களிலும், கனி வகைகள் கிடைக்கும். பழங்களின் பாரத்தால், மரங்கள் வளைந்து, பெரிய கிளைகளோடு, அடர்ந்து இருக்கும். மேகமோ, பர்வதமோ எனும்படி பெரிய பெரிய மரங்கள். அவைகளில் ஏறியோ, கிளைகளை உடைத்து பூமியில் தள்ளியோ, சௌகர்யம் போல அம்ருதம் போன்ற அந்த பழங்களை லக்ஷ்மணன் உனக்கு கொண்டு வந்து கொடுப்பான். வனத்திலிருந்து வனம், மலையிலிருந்து மற்றொரு மலை, பலவிதமான சமவெளி, பிரதேசங்கள், இவைகளைக் கடந்து, அழகிய நீர்நிலையான பம்பா என்ற பெயருடைய இடத்தை சென்றடைவீர்கள். கற்கள் எதுவும் இன்றி, அசையாமல், சமமான தீர்த்தம். இதன் உற்பத்தி ஸ்தானம் எது என்பதே தெரியாதது ஒரு சிறப்பு. மலையிருந்து வந்ததும் அல்ல. அப்படி ஒரு அழகிய குளம் போன்றது. ராமா, அதில் தோன்றிய வண்டல் மண்ணின் காரணமாக அதில் விளையும் கமலங்களும், உத்பல புஷ்பங்களும் மிக அருமையாக இருக்கும். நிறைய பூத்திருக்கும். அங்கு ஹம்ஸங்கள், ப்லவா:, க்ரௌஞ்ச, குரரா: என்ற பக்ஷிகள், இனிமையான நாதத்துடன் கூக்குரலிடும். இவை யாவும் பம்பா நதி ஜலத்தில் மட்டுமே தென்படுபவை. யாருமே இதுவரை, அவைகளை அடித்து துன்புறுத்தியோ, வேட்டையாடியதோ இல்லை என்பதால், மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. நெய் சேர்த்து செய்த பிண்டங்கள் போல ஸ்தூலமாக இருக்கும் அந்த பக்ஷிகளை சாப்பிடுங்கள். வளைந்த அலகையுடைய சிவந்த நரம்புகளுடையவை. பம்பை நதியில் உன் அம்புகளால், மீன்களைப் பிடித்து, நாக்கு, இறக்கையின்றி, கொழுத்த, முட்களையுடையவற்றை, இரும்பில் சுட்டு, உனக்கு பக்தியுடன் லக்ஷ்மணன் கொண்டு வந்து கொடுப்பான். புஷ்பங்கள் நிறைந்த பம்பா நதிக் கரையில், இந்த மீன்களைச் சாப்பிடும் பொழுது, பத்மங்களின் மணம், குளிர்ந்த காற்று, ஆரோக்யமான அனுபவிக்கக்கூடிய குளிர்ச்சியுடன் வீச, உயர் ரக வெள்ளியினாலானதோ, ஸ்படிகமோ எனும்படி, தூய்மையான மீன்களை, கணக்கில்லாமல் இருப்பதை, எப்பொழுதும் நிறைந்து இருப்பவற்றை பிடித்து, இந்த லக்ஷ்மணன் புஷ்கர இலையில் வைத்துக் கொடுப்பான். ஸ்தூலமான, மலை குகைகளில் வசிக்கும், வனத்தில் சஞ்சரிக்கும் இயல்புடைய வானரங்களை, மாலை வேளைகளில் சுற்றிப் பார்த்து தெரிந்து கொண்டு லக்ஷ்மணன், ராமா, உனக்கு காட்டுவான். இந்த வானரங்கள், பெரிய காளைகள் போல பெருத்த உடலும், நல்ல ரூபமும் உடையவை. நடனமாடும். தண்ணீர் குடிக்க வரும் வானரங்களை, ராமா, பம்பையில் காண்பதே ஒரு காட்சி. காட்டு பூ மாலைகளை அணிந்திருக்கும், இவைகளையும், மாலை வேளைகளில் சுற்றி வரும் பொழுது லக்ஷ்மணன் காட்டுவான். (விடபிமால்ய எனும் வகை பூ மாலை). பம்பாவின் குளிர்ந்த நீரையும் பார்த்து உன் துயரம் அகலும். திலகா, நக்தமாலகா என்ற புஷ்பங்கள் நிறைய பூத்திருக்கும். உத்பலங்களும் கணக்கில்லாமல் மலர்ந்து கிடக்கும். தாமரை மலர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், எங்கும் கண்களுக்கு விருந்தாக மலர்ந்து கிடப்பதைக் காணலாம். அவைகளை எப்பொழுதும் எந்த மனிதனும் வளர்க்கவும் இல்லை. யாரும் பறிப்பதும் இல்லை. அந்த மால்யங்கள் (கொத்தாக பூத்தவை) வாடுவதும் இல்லை, சுருங்குவதும் இல்லை. மதங்க3 முனிவரின் சிஷ்யர்கள், அங்கு இருந்தனர். ஒற்றுமையாக வாழ்ந்தனர். கட்டுப் பாட்டோடு இருந்தனர். குருவிற்காக காட்டிலிருந்து சாமான்களை பாரமாக தூக்கி வரும் பொழுது அவர்கள் சரீரத்திலிருந்து பெருகிய வியர்வைத் துளிகள் பூமியில் விழுந்தன. அவைகள் பூக்களாக மலர்ந்தன. முனிவரின் தவ வலிமையால். தவம் செய்யும் முனி குமாரர்களின் வியர்வையில் முளைத்த பூக்கள் எப்பொழுதும் வாடாமல் இருக்கின்றன. அவர்களுக்கு ஏவல் செய்து கொண்டிருந்த ஸ்ரமணி என்ற தபஸ்வினி, சப3ரீ என்ற பெயருடையவள், நீண்ட ஆயுசையுடையவள். இன்னமும் அங்கு இருக்கிறாள். உன்னைப்பார்த்து எல்லா தேவர்களும் வணங்கும் உன்னை வணங்கி ஸ்வர்க லோகம் போகப் போகிறாள். பம்பா நதியின் மேற்கு கரையில் அமைந்துள்ள ஆசிரமத்தைப் பார்த்து, பாதுகாப்பாக அமைந்துள்ள இடத்தை அடைவாய். அந்த மலையிலும், வனத்திலும் நிறைய பாம்புகள் உண்டு. ஆனால், அந்த ஆசிரமத்திற்குள் அவை நுழைவதில்லை. அந்த மதங்க3 ரிஷியின் பெயரால் அந்த வனமும் மதங்க வனம் என்றே அழைக்கப் படுகிறது. தேவ லோகத்து நந்தனத்துக்கு சமமான அந்த வனத்தில் பலவிதமான பறவைகள் பறக்கும் இனிய ஓசையில் நீ சந்தோஷமாக ரசித்து இருப்பாய். கவலைகளிலிருந்து உனக்கு ஒரு மாறுதலாக இருக்கும். சுதுக்காரோஹணம் என்ற பெயரையுடைய கல் பலகை இருக்கிறது- மிகவும் சிரமப் பட்டு மேலே ஏற வேண்டிய இடம் என்பது இதன் பொருள். ருஸ்ய மூகத்திற்கும், பம்பா நதிக்கும் எதிரில், பூக்கள் நிரம்பிய மரங்கள் நிறைந்த இடத்தில், முன் காலத்தில் ப்ரும்மாதானே நிர்மாணித்தது. அதை குட்டி யானைகள் (அல்லது நாகங்கள். நாகம்- யானை, நாகம் இரு பொருளும் இருந்தாலும், இங்கு யானை) ரக்ஷித்து வருகின்றன. மலையின் உச்சியில் உள்ள இந்த படுக்கையில் படுத்து யார் என்ன கனவு கண்டாலும் கனவில் காணும் செல்வத்தை விழித்தவுடன் அடைவான். ஆனால் எதேனும் கெட்ட எண்ணத்தோடு அந்த கல்லில் ஏறினால், அங்கேயே ராக்ஷஸர்கள், தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அடித்து விடுவார்கள். இந்த குட்டி யானைகள், மதங்க வனத்தில் விளையாடி, ஆரவாரமாக பிளிறிக் கொண்டு வளைய வரும், கும்மாளம் இடும் சத்தம் கேட்கும். ஒவ்வொன்றும் நீல மேகம் போன்ற உருவமும், நிறமும் உடையவை. தனித் தனியாகவும், கூட்டமாகவும் குளத்தில் இறங்கி நீரில் முழ்கி, குளித்து விட்டு சந்தோஷமாக செல்லும். தன்னிச்சையாக செல்லும் இவைகளையும், கரடிகளையும், நீல நிறத்தில் கோமளமாக விளங்கும் ருரூன் என்ற வகை மான்களையும் கண்டு மகிழ்வாய். இந்த காட்சியே மனதில் நிராசை என்பதே தோன்ற விடாமல் உற்சாகத்தை அளிக்க வல்லவை. ராமா, அந்த மலையில் ஒரு அழகான குகை இருக்கிறது. அதன் வாயிலிலும் ஒரு கல் மறைவாக இருக்கும், உள்ளே நுழைவது மிகக் கடினம். அந்த குகையின் முன் வாசலில் பெரிய குளிர்ந்த நீரையுடைய நீர் நிலை ஒன்று உள்ளது. பலவிதமான பழங்கள், கனி காய் வகைகள், மிருகங்களும் நிறைய கிடைக்கும் இடம் அது. அங்கு தான் சுக்3ரீவன் நான்கு வானரங்களுடன் வசிக்கிறான். சில சமயம் மலை உச்சியில் போய் நிற்பான். இவ்வளவு விவரங்கள் சொல்லி விட்டு, கப3ந்த4ன் அந்த இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு மாலையணிந்து சூரியனின் வர்ணத்துக்கு இணையாக ஆகாயத்தில் நின்றான். நீ போய் வா, நாங்களும் கிளம்புகிறோம் என்று சொல்லி, ஆகாயத்தில் நிற்கும் மகா பாக்3யசாலியான கப3ந்த4னுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு, கிளம்பினர். போய் வாருங்கள். உங்கள் காரியம் நிறைவேறட்டும் என்று அவனும் வாழ்த்தி அனுப்பினான். மிகவும் மகிழ்ச்சியோடு அவர்கள் அனுமதி பெற்று கப3ந்த4ன் கிளம்பி விட்டான். தன் சுய ரூபத்தையடைந்து கப3ந்த4ன் பாஸ்கரனுக்கு சமமான காந்தியுடையவனாக ஆகாயத்தில் நின்றபடி, ராமனைப் பார்த்து திரும்பவும், -நட்பு கொள்- என்று சொன்னான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ருஸ்யமூக மார்க3 கத2னம் என்ற எழுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 74 (270) சப3ரீ ஸ்வர்க3 ப்ராப்தி (சபரி சுவர்கம் செல்லுதல்)
அரசகுமாரர்கள் இருவரும், கப3ந்த4ன் காட்டிய வழியிலேயே பம்பா செல்ல கிழக்கு முகமாக புறப்பட்டனர். ராம, லக்ஷ்மணர்கள் இருவரும் அந்த மலையில் இருந்த அனேக சிறிய பழ மரங்களை பார்த்தபடி நடந்தனர். சுக்ரீவனைக் காணும் உத்தேசத்துடன் ராம லக்ஷ்மணர்கள் நடந்தனர்.
ஆங்காங்கு ஓய்வெடுத்துக் கொண்டு பம்பாவின் மேற்கு கரையை அடைந்தனர். பம்பா என்ற அந்த புஷ்கரிணியின் மேற்கு கரையில் சபரியின் அழகிய ஆசிரமத்தைக் கண்டனர். அந்த ஆசிரமம், மிகவும் அழகாக கண் கவர் மலர்களுடன் கூடிய மரங்களும், செடி கொடிகளுமாக, ரசிக்கும் படி இருந்தது. அவர்களைக் கண்டவுடன் சபரி கூப்பிய கரங்களுடன் வந்து ராமரின் பாதங்களில் விழுந்து வணங்கி வரவேற்றாள். லக்ஷ்மணனையும் அதே போல் உபசாரமாக வரவேற்றாள். பாத்3யம் ஆசமனீயம் என்று முறைப் படி அதிதிகளுக்கு தர வேண்டியவைகளைத் தந்தாள். தவம் செய்ய விரதங்களை ஏற்று நடத்தி வரும் ஸ்ரமணீ (தவம் செய்யும் பெண்மணி), மதங்க சிஷ்யையான சபரியை ராமரும் நலம் விசாரித்தார். உன் தவம் இடையூறு இல்லாமல் நடக்கிறதா? கோபத்தையும், ஆகாரத்தையும் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறாயா? தபோத4னே, உன் நியமங்கள் சரிவர நடத்திச் செல்ல முடிகிறதா? உன் மனதிற்கு சுகம், நிம்மதி கிடைத்ததா? நன்றாக பேசுபவளே, நீ செய்த கு3ரு சுஸ்ரூஷை பணிவிடை பயனுள்ளதாக உள்ளதா? சித்3த4ர்களுக்கு இணையான அந்த தபஸ்வினி, வயது முதிர்ந்த சப3ரீ ராமன் அருகில் வந்து பதில் சொன்னாள். இன்று தவம் செய்ததின் பலன் கிடைத்தது. உன் தரிசனம் கிடைத்தது, என் தவப் பயனே. இன்று நான் செய்த தவங்கள் பூர்த்தியாயின. என் கு3ருவுக்கு நான் செய்த பணிவிடைகளும் வீணாகவில்லை. நன்றாக அவர்களை பூஜித்த பலன் கிடைத்து விட்டது. என் ஜீவனும் பயன் பெற்றது. ஸ்வர்கம் செல்வேன் என்பதும் நிச்சயம் ஆயிற்று. தேவர்களில் சிறந்தவனே, உன்னை பூஜை செய்து உன் கடாக்ஷம் பெற்று நான் புனிதமானேன். அரிந்த3மா, (எதிரிகளை அழிப்பவனே) அக்ஷயமான லோகங்களை சென்றடைவேன். உன் பிரசாதம் கிடைத்தபின் எனக்கு எட்டாதது எது? நீ சித்ர கூடம் வந்தபோதே, சில மகரிஷிகள் தர்மம் அறிந்த மகா பாக்ய சாலிகளான சிலர் விமானத்தில் இங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு நான் பணிவிடை செய்து வந்தேன். உன் ராமன் இங்கு வருவான், அவன் வருகையால் இந்த ஆசிரமம் பாவனமாக ஆகும் என்று சொன்னார்கள். என்னைப் பார்த்து, நீ சௌமித்ரியுடன் வரும் அதிதியை உபசரித்து வரவேற்று, தேவைகளை கேட்டறிந்து பணிவிடை செய். அவர்களை கண்ணால் காணும் பாக்கியம் பெறுவாய். அதன் பலனாக அக்ஷயமான லோகங்களை அடைவாய் என்று ஆசிர்வதித்துச் சென்றனர். நானும் அன்றிலிருந்து காட்டில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை சேகரித்து வருகிறேன். இந்த பம்பையின் கரைகளில் விளைவதை உனக்காக சேகரித்து வைத்துள்ளேன். சப3ரீ இவ்வாறு சொல்லவும், ராமன் த3னுவின் மகனான கபந்தனின் சொல்படி, வெளியில் சென்றறியாத அவள் சக்தியை தெரிந்து கொள்ள விரும்பி, அவளை நோக்கி உன் பிரபாவம் பற்றி த3னு சொன்னான். ப்ரத்யக்ஷமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன், சம்மதமானால் சொல் எனவும், சபரீ அந்த வனத்தை இருவருக்கும் காட்டினாள். இதோ பார், மேக வனம் போல அடர்ந்து பக்ஷிகளும், மிருகங்களும் நிறைந்த இந்த இடத்தைப் பார். இதை மதங்க வனம் என்றே அழைத்தனர். இந்த மகா வனத்தில் என் குரு ஜனங்கள், மகாத்மாக்களாக வாழ்ந்தனர். மந்திரங்கள் சொல்லி சாஸ்திர விதிப்படி ஹோமங்கள் செய்தனர். இது தான் விசேஷமான வேதி. இதில் தான் நல்ல தவம் செய்து முதிர்ந்த நிலையில் நடுங்கும் கரங்களோடு இந்த யாக சாலையில் புஷ்பங்களைக் கொண்டு யாகம் செய்தனர். அவர்களின் தவ வலிமையைப் பார். இன்றும் கூட இந்த வேதியின் பிரபாவத்தால் நான்கு திக்குகளிலும் லக்ஷ்மீகரமாக விளங்குகிறது இந்த ஆசிரமம். உபவாசம் இருந்து உடல் வருத்தி தவம் செய்து வந்தவர்கள், நடக்க கூட முடியாமல் போன சமயம் நினைத்த மாத்திரத்தில் ஏழு சமுத்திரங்களும் இங்கு வந்து சேர்ந்தன என்பதைப் பார். ஸ்நானம் செய்தபின் தங்கள் வல்கலைகளை இங்கு உலர்த்துவர். இன்றும் இங்குள்ள மரங்கள் வாடுவதில்லை. தேவ கார்யங்களை செய்பவர்கள், இந்த மரத்தின் பூக்களையும் பழங்களையும் உபயோகிப்பர். அதனால் இந்த பூக்களும், தளிர்களும் எப்பொழுதும் வாடாத தன்மையைப் பெற்றுள்ளன. இந்த வனம் முழுவதையும் பார்த்து விட்டாய். கேட்க வேண்டியதை கேட்டும் தெரிந்து கொண்டு விட்டாய். அதனால் இப்பொழுது உன் அனுமதியுடன் இந்த சரீரத்தை தியாகம் செய்ய விரும்புகிறேன். என் குருஜனங்கள், மகாத்மாக்கள் சென்ற உலகம் போய் அவர்கள் அருகிலேயே இருக்க விரும்புகிறேன். அந்த முனிவர்களின் ஆசிரமத்தில் நான் பரிசாரிணியாக ஏவல் செய்யும் வேலைக் காரியாக இருந்தேன் என்றாள். தர்மம் நிறைந்த அவளது கோரிக்கையை சிலாகித்த ராகவன், லக்ஷ்மணனுடன் அவளை ஆசிர்வதித்து சப3ரீ, உன் விரதம் நான் அறிவேன். என்னையும் பக்தியுடன் உபசரித்தாய். உன் இஷ்டப்படி செய்வாய். சுகமாக போய் வா, என்றார். வல்கலை மரவுரி உடுத்து நடுங்கும் கரங்களோடு அந்த முதியவள், அந்த நிமிஷத்தில் தன் ஜீர்ணமான சரீரத்தை தியாகம் செய்தாள். ராமனது அனுமதி பெற்று, தன்னை நெருப்பில், ஆகுதி செய்து அந்த நெருப்பின் பிரகாசத்துக்கு சமமான பிரகாசமுடன் ஸ்வர்கம் சென்றாள். திவ்யமான ஆபரணங்களுடனும், திவ்யமான மாலைகளை அணிந்தவளாக, திவ்யமான அங்க ராகங்கள் பூசியவளாக, உயர்ந்த ஆடைகளுடன், கண்ணுக்கு இனியவளாக காட்சி தந்தாள். மின்னல் போல் அந்த இடமே அவள் பிரகாசத்தால் பிரகாசமாகியது. எங்கு அவளுடைய குரு ஜனங்கள், மகரிஷிகள் நடமாடுகின்றனரோ, அந்த புண்யஸ்தலத்துக்கு, சபரீ ஸ்ரீ தன் ஆத்ம சமாதியால் சென்றடைந்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சப3ரீ ஸ்வர்க3 பிராப்தி என்ற எழுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 75 (271) பம்பா தரிசனம்
தன் ஆத்ம பலத்தால் சபரீ திவ்ய லோகங்களைச் சென்றடைந்ததும், சகோதரன் லக்ஷ்மணனுடன் ராமன் யோசனையில் ஆழந்தான். அந்த மகாத்மாக்களின் பிரபாவத்தை நினைத்து, ஒரே முனைப்புடன் உலக நன்மையையே நினைத்து செயல் பட்டவர்கள் அவர்கள், மகான்கள் என்று நினைத்தபடி உடன் வந்த லக்ஷ்மணனிடம் பேச்சுக் கொடுத்தான். இந்த ஆசிரமத்தை பார்த்து விட்டோம். மகான்கள் இருந்த இடம். பல ஆச்சர்யங்கள் தெரிகின்றன. மானும் புலியும் ஒன்றையொன்று நம்பிக்கையோடு இணைந்து வாழ்கின்றன. பல வித பக்ஷிகளின் சரணாலயமாக இது விளங்குகிறது. ஏழு சமுத்திரங்களின் ஜலமும், இந்த தீர்த்தத்தில் வந்து கலந்திருக்கிறது. விதி முறைப்படி நீந்தார் கடனும் செய்கிறார்கள். நாமும் நம் முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்து விட்டோம். அசுபங்கள் நீங்கி, கல்யாணம் (நன்மை) எதிரில் தெரிவது போல இருக்கிறது. இந்த எண்ணம் என் மனதில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உண்டாக்குகிறது. என் ஹ்ருதயத்தில் சுபமான காலம் வந்து விட்டது என்று தோன்றுகிறது. அதனால் வா, போகலாம். கண்ணுக்கு இனியதான காட்சி தரும் பம்பாவை கடந்து செல்வோம். ருஸ்யமூக பர்வதம் எங்கே என்று பார்ப்போம். அதிக தூரத்தில் இல்லை என்று நம்புகிறேன். சூரிய புத்திரனான சுக்3ரீவன் அங்குதான் வசிப்பதாகச் சொன்னார்கள். தர்மாத்வான அவன், வாலியிடம் பயந்து எப்பொழுதும் நான்கு வானரங்களோடு ஆபத்தை எதிர் நோக்கியே நடுங்கிக் கொண்டு இருப்பதாக அறிந்தோம். வேகமாக அந்த இடம் போய் சேருவோம். வானர வீரனான சுக்3ரீவனைக் காண்போம். இப்பொழுது சீதையைத் தேடுவது அவன் பொறுப்பில் தானே இருக்கிறது. தீ4ரனான ராமனே இப்படிச் சொன்னதைக் கேட்டு லக்ஷ்மணனும், எனக்கும் பரபரப்பாகத் தான் இருக்கிறது. சீக்கிரமாக சென்று வானர வீரனை காண்போம். என, இருவரும் அந்த ஆசிரமத்தை விட்டு வெளி வந்தனர். நீர் நிறைந்து பாவனமாக இருந்த பம்பா புஷ்கரிணியைக் கண்டனர். நாலாபுறத்திலும் மரங்கள் அடர்ந்து கொடிகளும், பத்மங்களும், வாசனை மிகுந்த தாமிர நிறத்தில் பத்மங்கள், வெண் தாமரைகள், மற்றும் பல புஷ்பங்கள் மண்டிக் கிடந்த நீர் நிலையைக் கண்டனர். பல வர்ணங்கள் கொண்ட கம்பளம் வேலை பாடு மிக்க விரிப்பு போல நீலமான குவலய மலர்கள் மலர்ந்து மற்றும் பல வர்ண பூக்களும் இரைந்து கிடக்க அத்புதமான காட்சியாக இருந்தது. தூரத்திலிருந்தே அந்த நீர் நிலையைக் கண்ட ராமன், நெருங்கி வந்து மதங்க சரஸ் என்ற குளத்தில் நீராடினான். அரவிந்த3, உத்பல, பத்மங்கள் என்று பூக்களின் மணம் நாசியை நிறைத்தது. மாமரங்கள் பூக்கும் காலம் ஆதலால், ப4ர்ஹிண (தோகையுடைய பக்ஷி) குயில்கள் கூவ, திலக, பீ4ஜ பூரம், த4வம், சக்ர என்ற மரங்கள் பூக்கள் நிறைந்திருக்க, தவிர பூக்களுடன் கூடிய கரவீரம், புன்னாக இந்த மரங்களும் மாலதி, மல்லிகை பூக்கள் நிறைந்த புதர்கள், பண்டீரம், நிசுலம், என்ற தாவர வகைகள், அசோகம், சப்தபர்ணம், கேதகீ என்ற தாழம்பூ, நிறைய மொட்டுக்களுடன் கூடிய பலவிதமான மரங்கள், ஒவ்வொரு மரமும், தன்னை கவனமாக அலங்கரித்துக் கொண்ட ஸ்த்ரீ போல காணக் கிடைக்காத சௌந்தர்யத்தோடு விளங்கின. பெரிய பெரிய மரங்கள் எல்லாமே, பூக்கள் நிறைந்தவை. எங்கும் கோயஷ்டி, அர்ஜுனகம், சதபத்ரம், கீரகம் மற்றும் பல பக்ஷிகள் இனிமையாக கத்திக் கொண்டிருந்தன. ராகவர்கள் இருவரும் சேர்ந்து மேலே சென்றபடி இருந்தனர். பக்ஷிகள் நிறைந்த குளத்தையும், வனத்தையும் கண்டு களித்தபடி, நடந்து பம்பா வந்து சேர்ந்தனர். சுபமான குளிர்ந்த நீரையுடைய சமுத்திரம் போன்ற புஷ்கரிணீ. அங்கு இருந்த பக்ஷிகள் கூட மகிழ்ச்சியாகத் தென்பட்டன. பாதப மரங்கள் அழகூட்டின, பலவிதமான மரங்கள், பலவிதமான குளங்கள் இவைகளைக் காண, காண தன் மனைவியை நினைத்து ராமன், காமனால் துன்புறுத்தப் பட்டவனாக ஆனான். உபவனங்களில் பூக்களைக் கண்டும், சால, சம்பகங்கள் சோபையுடன் விளங்க, பக்ஷிகள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து இருப்பதைக் காணவே லக்ஷ்மீகரமான, சொல்லி விளக்க முடியாத ப்ரபையுடன் இருந்தது. தண்ணீர் ஸ்படிகம் போல் தெளிந்து நிரம்பி இருந்தது. மென்மையான மணல் தெரிந்தது. தாமரை மலர்களின் மணம் வீசும் அந்த பம்பா என்ற புஷ்கரிணியைத் திரும்பவும் பார்த்து, சத்ய விக்ரமனான ராமன், லக்ஷ்மணனைப் பார்த்து சொன்னார். இதன் கரையில் தான் முன் சொன்ன தா4துக்கள் நிறைந்த ருஸ்யமூக பர்வதம் இருப்பதாக கேள்விப்பட்டோம். ருக்ஷ ரஜஸ் என்ற (ஹரி குரங்கின் மகனான சுக்3ரீவன் என்ற மகா வீர்யவான் வசிக்கிறான் என்று கேள்விப் பட்டோம். லக்ஷ்மணா, நரர்ஷபா, அந்த சுக்3ரீவனை தேடிப் போ. ராஜ்யத்தை இழந்து, சீதையிடம் அபரிமிதமான ஆசக்தி (அன்பு) வைத்து வாழ்ந்து வந்த நான் அவள் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வேன். பிரிவின் துயரால் பாதிக்கப் பட்ட ராமன், வேறு எந்த சிந்தனையும் இன்றி, தனக்காகவே (ராமனுக்காகவே) வாழ்ந்து வரும் லக்ஷ்மணனைப் பார்த்து, தன் வருத்தத்தை அடக்கிக் கொண்டார். மனோஹரமான, நளினமான பம்பா பிரதேசத்தில் நுழைந்தனர். சோகமும், வருத்தமும் நடத்திச் செல்ல, மனம் வருந்தியபடி வழி நடந்தனர். வெகு தூரம் வளைந்து வளைந்து சென்ற வழியில் நடந்து எதிர்ப்பட்ட சமவெளியைக் கடந்து பம்பாவைக் கண்டனர். சுபமாக விளங்கிய காடும், அனேக, பலவிதமாக பக்ஷிகளின் கூடுகள் தென் பட இருந்த இடத்தைக் கண்டனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் பம்பா தரிசனம் என்ற எழுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
ஸ்ரீமத் ராமாயணத்தில் ஆரண்ய காண்டம் நிறைவுற்றது.
அத்தியாயம் 26 (222) தூ3ஷணாதி வத4ம் (தூஷணன் முதலானோர் வதம்)
தன் சைன்யம் நாசமாவதைப் பார்த்த தூஷணன். மிக அதிக சாகஸம் உடைய தன் ஐந்து ராக்ஷஸர்களிடம் சண்டையிட ஆணையிட்டான். அவர்களும் சூலங்களாலும், பட்டிசங்களாலும், வாட்களாலும், கற்களை வர்ஷித்தும், மரங்களாலும், தங்கள் சரங்களாலும் இடைவிடாது சண்டையிட்டனர். கற்களும், மரங்களும் மழையாக பொழிவதைக் கண்ட ராமன் அவைகளை தன் பாணங்களால் இழுத்து தன் பக்கம் ஆக்கிக் கொண்டான். அவை யார் மேல் விழுந்திருந்தாலும் அவர்கள் உயிர் இழந்திருப்பார்கள். கண் மூடி கண் திறப்பதற்குள் இந்த செயல் நடந்து விட, ராமன் அவர்களை கொல்ல பெரும் கோபத்தை வரவழைத்துக் கொண்டான். கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போன்ற தன் அம்புகளால் தூஷணனையும் சேர்த்து அடித்தான். சேனாபதியான தூ3ஷணன் சத்ரு தூ3ஷணன் என்று பெயர் பெற்றவன். தானும் பெரும் கற்கள் போன்ற பாணங்களால் ராமனை அடித்தான். ராமன் தன் ஆயுதத்தால் அவன் வில்லை பிளந்தான். நான்கு குதிரைகளையும் ஒரே அடியில் வீழ்த்தினான். குதிரைகளையடித்து அர்த்த சந்திரன் போல சாரதியையும் வீழ்த்தி ராக்ஷஸனை மார்பில் மூன்றாக பிளந்தது. சாரதி, குதிரை, ரதம், தன் வில் எல்லாம் ஒரே சமயத்தில் நாசமாக, அவனும் ஒரு மலைச் சிகரத்தை எடுத்துக் கொண்டு ராமன் மேல் வீசினான். இவ்வாறு யுத்தம் செய்யும் தூ3ஷணனின் இரு புஜங்களும் இற்று விழும்படி ராமன் பாணத்தை எய்தான். அவன் சரீரமும் பூமியில் விழுந்தது. இரண்டு த3ந்தங்களையும் இழந்த தன் மானம் மிகுந்த மகா க3ஜத்தைப் போல விழுந்து கிடக்கும் தூஷணனைப் பார்த்து சாது சாது என்று எல்லா ஜீவராசிகளும் ராமனை பாராட்டின. இதற்குள், மூன்று சேனைத் தலைவர்கள், ராமனை நோக்கி வேகமாக ஓடி வந்தார்கள். கால பாசத்தால் கட்டுண்டவர்களாக மகா கபாலன், ஸ்தூ2லாக்ஷன், ப்ரமாதீ3 என்ற பலசாலி மூவரும் வந்தனர். மகா கபாலன் என்பவன், மிகப் பெரிய சூலத்தை ஏந்தி வந்தான். ஸ்தூ2லாக்ஷன் பட்டிசம் எனும் ஆயுதத்தையும், ப்ரமாதி3 பரஸ்வதம் எனும் ஆயுதத்தையும் கையில் எடுத்து வந்தனர். தன் வீட்டிற்கு வந்த அதிதிகளை வரவேற்பதைப் போல தன் கூர்மையான பாணங்களால் அந்த ஆயுதங்களை ராமன் எதிர் கொண்டு கைப் பற்றினான். மகா கபாலனுடைய தலை ஒரு அம்பினால் துண்டித்து விழுந்தது. பல அம்புகளைக் கொண்டு ப்ரமாதி3யை பலமிழக்கச் செய்தான். அவன் பெரிய மரத்தின் கிளை போல கீழே சாய்ந்தான். ஸ்தூ2லாக்ஷனுடைய கண்களை கூர்மையான அம்புகளால் நிரப்பினான். தூ3ஷணனின் உதவிக்கு வந்த ஐந்து ராக்ஷஸர்களையும் கோபம் கொண்டு பா3ண வர்ஷத்தினால் யமலோகத்துக்கு அனுப்பினான். தூ3ஷணன் சேனையோடு அழிந்தான் என்று கேள்விப் பட்ட க2ரன், மகா பலசாலியான தன் சேனைத் தலைவர்களுக்கு ஆணயிட்டான். சாதாரண மனிதனான ராமனுடன் யுத்தம் செய்து இந்த தூ3ஷணன் மகத்தான சேனையுடன் அழிந்தான். எல்லா விதமான சஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு யுத்தம் செய்ய வாருங்கள் ராக்ஷஸர்களே, என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு ராமனை எதிர்த்து போரிடச் சென்றான். ஸ்யேனகாமி, ப்ருது2க்3ரீவோ, யக்ஞ சத்ரு, விஹங்க3ம:, து3ர்ஜய:, கரவீராக்ஷ:, பருஷன், கால கார்முகன், மேக4 மாலி, மகா மாலி, சர்ப்பாஸயோ, ருதி4ராசனன், என்ற பன்னிரண்டு படைத் தலைவர்கள், சைன்யத்துடன் கூட ராமனை நோக்கி முன்னேறினர். கூடவே தீவிரமான ஆயுதங்களையும் விட்டனர். அந்த சைன்யத்தின் அம்புகளைக் கொண்டே, நெருப்பின் ஜ்வாலை போல பள பளக்கும் அம்புகளைக் கொண்டு அந்த ராக்ஷஸர்களை அடித்து வீழ்த்தினான். வஜ்ரத்தால் அடிபட்ட பெரிய மரங்கள் போல அவர்கள் கீழே விழுந்தார்கள். நூறு ராக்ஷஸர்களை ராமர் நூற்று ஒரு கர்ணி என்ற ஆயுதத்தால் அடித்தார். ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தை ஆயிரத்தால் அடித்தார். இதனால் ஆயுதங்களை இழந்து, உடலும் சின்னா பின்னமாகி ராக்ஷஸர்கள் பூமியில் விழுந்தனர். அவர்களுடைய தலையின் கேசம் யுத்தத்தில் விழுந்தவர்களின் ரத்தம் தோய்ந்த தலைகள் பூமியில் சிதறிக் கிடந்தன. இந்த கோரமான யுத்தம் க்ஷண நேரத்தில் முடிந்து வனம் ராக்ஷஸர்களே இல்லாமல் ஆயிற்று. பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்களின் உடல் தான் மீதியாக கிடந்தன. ராமன் ஒருவனாக பதா3தியாக (தன் கால்களில்) நின்று, தனி மனிதனாக க2ரன் ஒருவன் தவிர மற்ற அனைவரையும் மாய்த்தான். த்ரிசிரஸ் என ஒரு ராக்ஷஸனும், க2ரனும் தான் ராமனுக்கு எதிரி பக்ஷத்தில் இருந்தனர். தன் படை பலம் முழுவதும் ராமன் கையில் மாண்டு போனதைப் பார்த்து க2ரன் ரதத்தில் ஏறி இந்திரனைப் போல ராமனை எதிர்த்து வந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் தூ3ஷணாதி வதோ4 என்ற இருபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 27 (223) த்ரிசிரோ வத4: (திரிசிரஸின் வதம்)
க2ரன் வேகமாக செல்லும் பொழுது, சேனாபதியான த்ரிசிரஸ், அவனை தடுத்து, நான் போகிறேன் முதலில், அனாவசிய சாகஸம் வேண்டாம் என்று சொல்லி இதோ பார், ராமனை யுத்தத்தில் வீழ்த்திக் காட்டுகிறேன் என்று கர்வத்தோடு மேலும் தற்பெருமை பேசலானான். நான் சொல்வது சத்யமே. ஆயுதத்தை ராமனை வதம் செய்யும் விதமாக உபயோகிக்கிறேன். எல்லா ராக்ஷஸர்களையும் அழித்த அவனை வதம் செய்யாமல் விடக் கூடாது. இன்று யுத்தத்தில் நானா, ராமனா என்று பார்த்து விடலாம், யார் ம்ருத்யு வசம் அடைகிறார்கள் என்று பார். ஒரு முஹுர்த்த நேரம் இந்த ரண களத்திலிருந்து விலகி பார்வையாளனாக இருந்து பார். நான் ராமனை வீழ்த்தினால் சந்தோஷமாக ஜனஸ்தானம் திரும்பி போவாய். அல்லது நான் இறந்தால் ராமனுடன் சண்டை செய்யப் போவாய். இவ்வாறு த்ரிசிரஸ் சொல்லவும், க2ரன், சரி போய் யுத்தம் செய் என்று சொல்லியனுப்பினான். த்ரிசிரஸ் குதிரை பூட்டிய ரதத்தில் இருந்த படியே ராமனை எதிர்த்துச் சென்றான். ஒரு மலைக்கு மூன்று சிகரம் முளைத்தாற்போல இருந்தான் த்ரிசிரஸ். மகா மேகம்போல சரங்களை வர்ஷித்தான், அதற்கு சமமாக தானும் கோஷமிட்டான். வேகமாக வந்து கொண்டிருந்த த்ரிசிரஸ் என்ற ராக்ஷஸனைப் பார்த்து ராமன், கூர்மையான அம்புகளை எடுத்து வில்லில் வைத்து குறி பார்த்துக் கொண்டான். ராமனுக்கும் த்ரிசிரஸHக்கும் நடுவில் பயங்கரமான யுத்தம் மூண்டது. சிங்கமும் யானையும் சண்டையிடுவது போல இருந்தது. த்ரிசிரஸின் பாணம் ராமனின் நெற்றியில் பட்டது. மூன்று முறை இவ்வாறு படவும், ராமர் கோபத்துடன் த்ரிசிரஸிடம், அஹோ, விக்ரமனான இவன் சூரன். ராக்ஷஸனுக்கு இப்படி ஒரு பலமா? பூக்களைப் போடுவது போல என் நெற்றியில் அடித்து விட்டான். இதோ, என் அம்பையும் அனுபவித்துப் பார். என்று சொல்லி ஆலகால விஷம் போல கூர்மையான அம்புகளை எய்து, அவன் வயிற்றுப் பகுதியில் பதினாறு முறை விட்டார். நான்கு முறை குதிரையில் ஏறி பவனி செல்லும்பொழுது அடித்தார். நான்கு பாணங்கள் குதிரையை வீழ்த்தின. எட்டு பாணங்கள் ரதத்தில் இருந்த வீரனை கீழே தள்ளின. அவனுடைய த்வஜத்தையும் ராமர் கீழே தள்ளினார். ரதமும் இன்றி கீழே நின்ற அவனையும், சாரதியையும் சரியாக மார்பில், படும்படி அடித்தார். அவன் ஜடமாக ஆனான். மிகவும் கோபத்துடன் மூன்று பாணங்களால் அவன் மூன்று தலையும் தெறித்து விழும்படி, செய்தார். அவன் ரத்தம் கக்கிக் கொண்டு பூமியில் விழுந்தான். கரனுடைய பக்ஷ ராக்ஷஸர்கள், பலரும் இவ்வாறு அடிபட்டு விழுந்தனர். புலி துரத்திய மிருகங்கள் போல ஓடி மறைந்தனர். இவ்வாறு ஓடியவர்களை கரன் தடுத்து நிறுத்தி, தானே ராமனை எதிர்கொண்டு போரிடச் சென்றான். ராகு சந்திரனை பிடிக்கப் போவது போல சென்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் த்ரிசிர வதோ4 என்ற இருபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 28 (224) க2ர ராம சம்ஹார: (கரனும் ராமனும் போரிடுதல்)
ரண களத்தில் தூ3ஷணன் விழுந்ததையும், த்ரிசிரஸ் மாண்டதையும் கண்ட க2ரனுக்கு ராமனிடத்தில் பயம் தோன்றியது. எதிர்க்க முடியாத ராக்ஷஸ சைன்யம் அழிந்தது. த்ரிசிரஸHம், தூ3ஷணனும் ஒரே அம்பில் மாண்டனர். ராக்ஷஸர்களில் மீதி இருந்தவர்களும் சண்டையிட மனமின்றி இருப்பதைப் பார்த்த க2ரன், தானே ஆலகால விஷம் போன்ற பாணங்களை ராமன் பேரில் எய்தான். வில்லின் நாணை சுண்டி நாதம் வரச் செய்து, தன் பயிற்சி பெற்ற அஸ்திரங்களை காட்டி, தன் ரதத்தில் இருந்தபடியே யுத்த பூமியைச் சுற்றி வந்தான். எல்லா திக்குகளிலும் தன் பாணங்களை செலுத்தி பார்த்துக் கொண்டான். ராமரும் தன் வில்லை நிறுத்தி அம்புகளை பூட்டிக் கொண்டு தயாரானார். தீப்பொறி பறப்பது போல் எதிர்த்து அடிக்க முடியாத அம்புகளை பிரயோகம் செய்தார். ஆகாயம் துளி கூட இடம் இன்றி, மழை மேகம் பொழிவது போல, ராமனும் கரனும் விட்ட பாணங்கள் ஆகாயத்தையே மறைத்து எங்கும் அம்பு மயமாகத் தெரிந்தன. இந்த சர ஜாலம் மறைக்க, சூரியன் இருப்பதே கூட தெரியவில்லை. ஒருவரையொருவர் வதைக்கும் உத்தேத்துடன் போரிடும் சமயம், ஒரு முறை கூர்மையான பாணத்தால் க2ரன், ராமனை அடித்தான். கையில் வில்லுடன் ரத்த்தில் ஏறி வரும் க2ரன், பாசக் கயிற்றுடன் வரும் யம ராஜனை ஒத்திருந்தான், ராமன் களைத்து இருப்பதாக க2ரன் நினைத்தான். சிங்கம் போல வீறு நடை போடுபவன், அதே போல வீர்யம் உடையவன், ஏதோ சிறு மிருகத்தைக் கண்டு மிருக ராஜா லக்ஷியம் செய்யாது போவது போல அலட்சியமாக இருந்தான். பிரகாசமான ரதத்தில் சூரியனுக்கு போட்டியாக வந்த க2ரன், ராமனைப் பார்த்து விட்டில் பூச்சிகள், நெருப்பை நெருங்குவது போல நெருங்கினான். தன் கை முஷ்டியில் வில்லை பிடித்திருக்கும் இடத்தில் அம்புகளைப் போட்டு வில்லை முறித்தான். திரும்பவும் ஏழு சரங்களை எடுத்து, இந்திரனுடைய வஜ்ராயுதத்திற்கு சமமான பாணங்களை கோபத்துடன் க2ரன் விட்டான். க2ரனுடைய இந்த அம்புகள் தாக்கி ராமனுடைய கவசம் கீழே விழுந்தது. மேலும் ஆயிரக் கணக்கான பாணங்களை போட்டு அடித்து விட்டு, ராக்ஷஸன் பெருங்குரலில் எக்காளமிட்டான். அந்த ஆயுதங்கள் உடல் பூரா தைத்து காயம் பட்ட நிலையிலும் ராமன், புகையில்லாத நெருப்பு போல ஜ்வலித்தான். கம்பீரமான யுத்த நாதம் செய்து, ராமன் எதிரியை முடிவு கட்டும் பொருட்டு, தன் பெரும் வில்லை தயார் செய்து கொண்டு, மகானான வைஷ்ணவ வில்லை எடுத்து, மகரிஷி கொடுத்த வில்லையும், பாணங்களையும் எடுத்துக் கொண்டு, க2ரனை நோக்கி ஓடினான். பொன்னொளி வீசும் அந்த பாணங்களைக் கொண்டு முதலில் ராமன் க2ரன் ரதத்திலிருந்து த்வஜத்தை கீழே விழச் செய்தான். பொன்னிறமான அந்த த்வஜம் பல துண்டுகளாக சிதறி விழுந்தது. க2ரனும் நான்கு பாணங்களால் ராமனது உடலில் மர்ம ஸ்தானங்களில் படும் படி விட்டான். க2ரனின் வில்லிலிருந்து புறப்பட்ட பல பாணங்கள் பட்டு ராமனது உடலும், ரத்தத்தில் தோய்ந்தது. வில்லை எடுத்து ஆறு பாணங்களை குறி பார்த்து அடித்தார். தலையை ஒரு பாணம் கொய்தது. இரண்டு பாணங்கள் புஜங்களை வெட்டித் தள்ள, மூன்று அர்த்த சந்திர வடிவிலான பாணங்கள் மார்பில் அடித்தன. அதன் பிறகு மகா தேஜஸ்வியான ராமன், சூரியனுக்கு ஒப்பான நாராசமான பதின் மூன்று சரங்களை ராக்ஷஸனைக் கொல்ல ஏவினார். இதில் ஒரு ஜோடி நான்கு குதிரைகளையும், ஆறு தலையையும், கரனுடைய ரத சாரதியையும் வீழ்த்த, மூன்று மூன்று தலையின் கேசத்தையும், இரண்டு கண்களையும் அடித்தன. பன்னிரண்டாவது பாணம் அம்போடு வில்லை கீழே தள்ளியது. பதிமூன்றாவது பாணத்தை சிரித்துக் கொண்டே, இந்திரன் போன்ற கரன் பேரில் எய்தார். தன் வில்லும் ஒடிந்து விழ, குதிரைகள், ரதம் எல்லாம் இழந்து, சாரதியும் இறந்து போன பின்னும் க2ரன் க3தை4யை கையில் எடுத்துக் கொண்டு தரையில் நின்றான். இந்த அரிய செயலைக் கண்டு மகாரதியான ராமனை பாராட்டி, தேவர்களும், மகரிஷிகளும், மிகவும் மகிழ்ந்து கை கூப்பி வணங்கினர். விமானத்திலிருந்த பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் ஆரவாரித்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ர ராம சம்ப்ரஹார: என்ற இருபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 29 (225) க2ர க3தா4 பே4த3னம் (கரனுடைய கதையை உடைத்தல்)
ரதத்தை இழந்த பின் க3தை4யை தூக்கிக் கொண்டு வந்த கரனை மிருதுவாக ஆரம்பித்து கடுமையாக சாடினார். யானை, குதிரை, ரதங்களோடு பெரும் பலம் உடன் இருக்கும் பொழுது பயங்கரமாக யுத்தம் செய்தாய். உலகில் எல்லோரும் ஆச்சர்யப் படும் படி சண்டையிட்டாய். உலகில் பாபம் செய்யும் கொடியவன் தண்டிக்கப் பட வேண்டியவனே. மூன்று உலகுக்கும் நாயகனானாலும் இதில் மாற்றம் இல்லை. க்ஷணதா3சர (ராக்ஷஸ) லோக விருத்3த4மான- விரோதமான, காரியத்தைச் செய்யும், கடுமையானவனை உலகம் தண்டிக்கிறது. துஷ்ட சர்ப்பம் வீட்டுக்குள் வந்தால் அடிப்பது போல. லோப4த்தினால் பாபத்தை செய்பவர்கள், காமத்தினால் செய்பவர்கள், தான் செய்வது பாபம் என்று அறியாத பொழுது தன் நிலை இழந்து முடிவை அடைகிறார்கள். ப்3ராம்மணி என்ற சிறு ஜந்து, நகத்தை விழுங்கினாற் போல (ப்ராம்மணி- க்ஷுத்ர ஜந்து, மிகச் சிறிய ஜீவன். கரகா3– விரல் நகம்) தர்ம வழியில் தவம் செய்து கொண்டு தண்டகா வனத்தில் வசிக்கும் தபஸ்விகளைக் கொன்று என்ன பலம் கிடைக்கும் என்று எதிர் பார்த்தாய், ராக்ஷஸனே, உலகில் ஜனங்கள் விரும்பாத செயல்களைச் செய்து, க்ரூரமாக பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு வாழ்பவர்கள் வெகு காலம் சந்தோஷமாக வாழ மாட்டார்கள். வேர் அறுபட்ட மரம் போல விழுவார்கள். பாபத்தின் பலனை எந்த ஜீவனானாலும் அனுபவித்தே தீர வேண்டும். காலம் வரும் பொழுது, தால விருக்ஷத்தின் புஷ்பம் போல வெகு சீக்கிரத்தில் அதன் பலனை அடைகிறார்கள். பாப கர்மத்திற்கு பலன் கை மேல் கிடைத்து விடுகிறது. விஷம் கலந்த அன்னம் உண்டது போல. ராக்ஷஸனே, நான் அரசனால் நியமிக்கப் பட்டிருக்கிறேன். கோரமான பாபத்தை செய்பவர்களை, உலகில் விரும்பத் தகாததை செய்பவர்களை தண்டிக்கும்படி, உயிரை வாங்கும்படி எனக்கு கட்டளை. ராக்ஷஸனே, இன்று தான் என்னால் விடப்பட்ட சரங்கள் உன் உடலை கிழித்து கீழே தள்ளப் போகின்றன. எறும்பு புற்றை பாம்புகள் அழிப்பது போல. இந்த தண்டகாரண்யத்தில் நீ தின்று தீர்த்த தபஸ்விகளின் எண்ணிக்கையில், நீயும் உன் படை வீரர்களோடு போய் சேருவாய். ரிஷிகள் இன்று நீ, என் பாணங்களால் அடிபட்டு விழுவதை பார்க்கட்டும். நரகத்தில் இருக்கும் உன்னை விமானத்தில் இருந்த படி பார்க்கட்டும். இவர்கள் முன்னால் உன்னால் ஹிம்சிக்கப் பட்டவர்கள் அல்லவா. உன்னால் முடிந்தவரை முயன்று பார். பனங்காயைத் தள்ளுவது போல இன்று உன் தலையை உருட்டுவேன். இவ்வாறு ராமன் சொல்லவும், கோபத்தால் கண்கள் சிவக்க சிரித்துக் கொண்டே கரன் பதில் சொன்னான். என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் பிதற்றினான். தசரத குமாரா, ப்ராக்ருதமான, ராக்ஷஸர்களைக் கொன்று விட்டு தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறாய். இப்படி புகழ்ந்து சொல்லிக் கொள்ள உனக்கு என்ன தகுதி இருக்கிறது? விக்ரமும் பலமும் உள்ள நரோத்தமர்கள், தங்களைப் பற்றி, கர்வத்தோடு பேசிக் கொள்ள மாட்டார்கள். ப்ராக்ருதர்கள், நாகரீகம் அறியாத கிராம வாசிகள், எதையும் செய்யாமல், க்ஷத்திரிய குலத்துக்கே களங்கம் விளைவிப்பவர்கள், அர்த்தம் இல்லாமல் பிதற்றுவார்கள். இப்பொழுது ராமா, நீ பிதற்றுவது போல. தன் குலத்தின் பெருமை விளங்க எவன் யுத்தத்தில் ஈடுபடுகிறானோ, அவன் வெறும் பேச்சு பேச மாட்டான். ம்ருத்யு எதிரில் நிற்கும் பொழுது தானே தன்னை புகழ்ந்து பேசிக் கொள்வது லகு4த்வம். கையால் ஆகாத தன்மை தான் வெளிப் படும். செயல் அறியாதவன் தான் பேசுவான். பொன்னிறமான குசாக்னி, எரியும் போது தங்கமாக தெரியும், அது போல. இங்கு நான் க3தை4யுடன் நிற்பது உன் கண்களுக்குத் தெரியவில்லை. பூமியில் கால் பதித்து இருந்தாலும், மலை பலவித தாதுக்களுடன் நிற்கும் பொழுது அசைக்க முடிவதில்லை. அது போல என்னை அசைக்க முடியாது. உன் உயிரைக் குடிக்க என் க3தையே போதுமானது. மூன்று உலகிலும் பாசத்தை ஏந்திய யமனுக்கு சமமானவன் நான். இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால், உன்னிடத்தில் பேசி நேரத்தை வீணாக்குவானேன். இதோ சூரியன் அஸ்தமனம் ஆகி விடும் யுத்தத்திற்கு இடைஞ்சலாக. சூரியன் அஸ்தமித்த பிறகு யுத்தம் செய்யக் கூடாது. பதினாலாயிரம் ராக்ஷஸர்களை நீ கொன்றிருக்கிறாய். உன்னைக் கொன்று அவர்கள் கண்ணீரை துடைப்பேன். இவ்வாறு சொல்லிக் கொண்டே பெரும் கோபத்துடன் க3தை4யை தூக்கி ராமனை அடித்தான். சூடான கல் போல இருந்த அந்த க3தை4 கரன் கையிலிருந்து விடுபட்டு, மரங்களையும், புதர்களையும் பஸ்மமாக்கிக் கொண்டு, அவன் அருகிலேயே வந்து சேர்ந்தது. ம்ருத்யு பாசம் போன்று வேகமாக வந்து விழும் அந்த க3தை4யை ராமன் தன் பாணத்தினால் அந்தரிக்ஷத்திலேயே பல துண்டுகளாக சிதறிப் போகும்படி செய்தான். ராம பாணத்தால் சிதறுண்டு போன அந்த க3தை4, மந்த்ர ஔஷதி பலத்தினால் அடக்கப் பட்ட பாம்பைப் போல விழச் செய்யப் பட்டது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ர க3தா4 பேதனம் என்ற இருபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 30 (226)க2ர சம்ஹார: (கரனை சம்ஹாரம் செய்தல்)
தர்ம வத்ஸலனான ராமன், அந்த க3தை4யை ஒடித்து விட்டு, சிரித்துக் கொண்டே, பரபரப்படைந்த க2ரனிடம் இவ்வாறு சொன்னார். ராக்ஷஸனே, இதோ உன் பலத்தை காண்பித்து விட்டாய். அத4மனே, என்னை விட பல மடங்கு சக்தி குறைந்தவன். வீணாக கர்ஜிக்கிறாய். இதோ பார் உன் க3தை4. என் பாணத்தால் துளைக்கப் பட்டு சிதறி பூமியில் கிடக்கிறது. உன் பெயரைச் சொல்லி கர்வப் பட்டுக் கொண்டாயே. உன்னிடத்தில், எதிரியை கொல்லும் க3தை4 இருப்பதாக சொல்லிக் கொண்டாய். நீ சொன்னாயே, இறந்து பட்ட ராக்ஷஸர்களின் கண்ணீரைத் துடைப்பேன் என்று, கர்வமாக பேசினாயே, அந்த வார்த்தையையும், அல்ப குணம் கொண்ட உன் தாழ்ந்த போலியான நடத்தையையும், ராக்ஷஸனின் உயிரையும் சேர்த்து எடுக்கிறேன். க3ருடன் அம்ருதத்தை எடுத்தது போல. இன்று உன் தலை வேறான உடலிலிருந்து நிண நீர் பெருகப் போகிறது. நுரையாக பெருகி வரும். அதோடு என் பாணத்தால் துளைக்கப் பட்டு பெருகும் ரத்தமும் சேர்ந்து பூமி குடிக்கட்டும். உடல் பூராக, மண் ஒட்டிகொண்டிருக்க, புஜங்கள் இரண்டையும் இழந்தவனாக பூமியை அணத்துக் கொண்டு தூங்கு. கிடைக்க முடியாத ஸ்த்ரீயை அடைந்தது போல தூங்கு. நீ மீளாத தூக்கத்தில் ஆழ்ந்தபின், ராக்ஷஸாத4மனே, இந்த தண்டகாரண்யம், புகல் இல்லாதவர்களின் புகலிடமாக ஆகப் போகிறது. என் பாணங்கள் ஜனஸ்தானத்தை ஹதம் செய்தபின், ராக்ஷஸனே, முனிவர்கள் இந்த காடுகளில் பயமில்லாமல் சஞ்சரிப்பார்கள். ராக்ஷஸிகள், எப்பொழுதும் மற்றவர்களை பயமுறுத்துபவர்கள், இன்று முகம் வாடி, தங்கள் பந்துக்களை இழந்தவர்களாக, கண்களில் நீர் மல்க, தாங்களே பயந்து நிற்கப் போகிறார்கள். சோக ரஸம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளப் போகிறார்கள். உனக்கு அனுரூபமான பத்னிகள், நீ அவர்களுக்கு இது போல ஒரு கணவன். நீ இப்படி கொடியவனாக, அல்பனாக, நித்யம் ப்ராம்மணர்களுக்கு இடைஞ்சலாக இருந்து வந்ததால், முனிவர்கள் உன்னை நினைத்து பயந்து கொண்டே ஹோமத்தில் ஹவிஸைப் போடுவார்கள். இப்படி ராமன் பேசிக் கொண்டே போன போது க2ரன், இடை மறித்து, தன் கடுமையான குரலில், குற்றம் சொல்லலானான். ஆஹா, ரொம்ப த்3ருடமாக பயப் பட வேண்டிய இடத்திலும் பயப்படாமல், அலட்சியம் காட்டுகிறாய். எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாது என்பதை, மரணத்தின் வாயில் விழுந்தவர்கள் உணருவதில்லை. கால பாசத்தில் கட்டுப் படுகிறார்கள். இந்திரியங்களை அடக்காதவர்கள், செய்ய வேண்டியது எது, செய்யக் கூடாதது எது என்றும் அறிவதில்லை. ராமனைப் பார்த்து தன் புருவத்தை நெரித்துக் கொண்டு, அருகில் இருந்த மகா சால மரத்தைக் கண்டான் க2ரன். அதை பல்லைக் கடித்துக் கொண்டு வேரோடு பிடுங்கி, ராமன் பேரில், இதோ நீ அழிந்தாய் என்று சொல்லிக் கொண்டே வீசினான். மேலேயிருந்து விழும் அந்த மரத்தை தன் பாணங்களால் சிதைத்து, ராமன் கோபத்தை வரவழைத்துக் கொண்டான். இனி க2ரனை உயிருடன் விடுவதில்லை, கொன்றே ஆக வேண்டும் என்று தீர்மானித்து, உடலில் வியர்வை ஆறாக பெருக கண்கள் சிவக்க, பல ஆயிரம் பாணங்களால் கரனைப் பிளந்தான். ப்ரஸ்ரவன மலையில் அருவி நீர் வீழ்ச்சியாக கொட்டுவது போல க2ரன் உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. எதுவும் செய்ய இயலாதபடி செயலிழந்து போன க2ரன், மதம் பிடித்தவன் போல், ராமனை நோக்கி ஓடி வந்தான். தன் பாணத்தால் அடிபட்டு கிழே வேகமாக விழும் கரனின் உடல் தன் மேல் படாதவாறு விலகி, நெருப்பு போன்ற ஒரு சரத்தை யுத்தத்தில் கரனை வதம் செய்வதற்காகவே, மற்றொரு ப்ரும்ம தண்டம் போன்ற அஸ்திரத்தை ராமன் பிரயோகித்தான். இது தேவ ராஜனான இந்திரனால் ராமனுக்கு கொடுக்கப் பட்டது. ராமனின் வில்லிலிருந்து புறப்பட்ட இந்த அஸ்திரம் க2ரனின் மார்பில் பட்டது. இந்த அஸ்திரத்தின் சூட்டைத் தாள மாட்டாமல், க2ரன் பூமியில் விழுந்தான். ஸ்வேதாரண்யம் என்ற இடத்தில் (திருவெண்காடு) அந்தகன் விழுந்தது போல கீழே விழுந்தான். விருத்ராசுரன், வஜ்ரத்தால் அடிபட்டது போல பேஃன என்பவனால் நமுசி அடிபட்டது போலவும், இந்திரனின் அசனி என்ற ஆயுதத்தால் அடிபட்டவன் போல விழுந்தான். அச்சமயம் ராஜ ரிஷிகளும், மகரிஷிகளும் எல்லோருமாக வந்து ராமனை வாழ்த்தி சந்தோஷமாக சொன்னார்கள். மகாபா4க, (நல்ல அதிருஷ்டம் உடையவனே) ராமா, இந்த காரணத்திற்காகத் தான் இந்திரன் சரபங்கரின் ஆசிரமத்திற்கு வந்தான். இந்த தேசத்திற்கு முனிவர்களால் வரவழைக்கப் பட்டாய். (ஏதோ ஒரு காரணம் சொல்லி) இந்த க்ரூரமான ராக்ஷஸர்களை வதம் செய்யவே வந்தது போல இங்கு வந்து சேர்ந்தாய். எங்கள் கஷ்டத்தை நீக்கி விட்டாய். தசரத குமாரனே, இனி ரிஷிகள் சுகமாக தங்கள் தவத்தை செய்வார்கள். தண்டகா வனத்தில் இனி உபத்ரவம் எதுவும் இராது. இதற்க்கிடையில், தேவர்கள், சாரணர்களுடன் வந்து சேர்ந்தார்கள். துந்துபி முழங்க, புஷ்பங்களை மழையாக பொழிந்தார்கள். ஆச்சர்யம் கொண்டவர்களாக பிரமித்தபடி ராமனை சந்தோஷமாக வாழ்த்தினர். அரை முஹுர்த்தத்திற்கு சற்றே அதிகமான நேரத்தில் ராமன் கூர்மையான பாணங்களால் பதினாலாயிரம் ராக்ஷஸர்களை, பயங்கரமான செயல்களை தயங்காமல் செய்ய வல்லவர்களை, க2ர, தூ3ஷண ராக்ஷஸர்களையும், மற்ற ராக்ஷஸர்களையும் பெரும் யுத்தத்தில் மாய்த்து விட்டான். அஹோ, எவ்வளவு பெரிய காரியம். ராமன் விளையாட்டாக செய்து விட்டான். அஹோ, வீர்யம், அஹோ தா3க்ஷ்யம் (புத்திசாலித் தனம்) விஷ்ணுவைப் போலத் தெரிகிறான். இவ்வாறு பேசிக் கொண்டே தேவர்கள் தங்கள் இருப்பிடம் சென்றார்கள். இதற்குள் வீரனான லக்ஷ்மணன் சீதையுடன் மலை குகையிலிருந்து வெளி வந்து ஆசிரமத்தை அடைந்தான். ராமனோ வெற்றி வீரனாக, மகரிஷிகள் வாழ்த்த, ஆசிரமத்தில் நுழைந்தான். லக்ஷ்மணனும் உடனே வந்து ராமனை விசாரித்தான். சத்ருக்களை அழித்த அந்த வீரனை, மகரிஷிக்கு நன்மையை செய்தவனைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சீதை ஆலிங்கனம் செய்து கொண்டாள். ராக்ஷஸ கணங்கள் அழிந்ததோடு, ராமனையும் நலமாக கண்டதில் அவள் மகிழ்ச்சியடைந்தாள். மகரிஷிகள் ராக்ஷஸர்களை கூட்டத்தோடு அழித்ததைப் பாராட்டி பேசி, சந்தோஷமாக வாழ்த்த, தன் கணவனை பெருமிதத்தோடு ஜனகன் மகள் திரும்பவும் தழுவிக் கொண்டாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ர ஸம்ஹாரோ என்ற முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 31 (226) ராவண க2ர விருத்தோபலம்ப:
(ராவணனிடம் கரன் பற்றிய விவரம் சொல்லப் படுதல்)
ஜனஸ்தானத்திலிருந்து அகம்பனன் என்ற ராக்ஷஸன், ராவணனிடம் விஷயம் சொல்ல, வேகமாக ஒடி லங்கையை சென்றடைந்தான். ராஜன், ஜனஸ்தானத்திலிருந்த பல ராக்ஷஸர்கள் கொல்லப் பட்டார்கள். க2ரனும் வீழ்ந்தான். எப்படியோ நான் தப்பி வந்தேன் என்றான். இதைக் கேட்டு ராவணன் கண் சிவக்க, கண்களாலேயே எரித்து விடுபவன் போல பார்த்துக் கொண்டு அவனை மேலும் விசாரித்தான். யார் அவன்? அழகான ஜனஸ்தானத்தை ஏன் அழித்தான்? யார் அவன்? மூவுலகிலும் இடம் இல்லாமல் தவிக்கப் போகிறான். எனக்கு பிடிக்காததை செய்து விட்டு, இந்திரனேயானாலும் சுகமாக இருக்க முடியாது. வைஸ்ரவனும், யமனும், ஏன் விஷ்ணுவே கூட சுகமாக இருக்க முடிந்ததில்லை. காலனுக்கும் நான் காலன். நெருப்பையும் சுட்டு பொசுக்குவேன். ம்ருத்யுவை, மரண தர்மத்தோடு இணைத்து வைப்பேன். எனக்கு கோபம் வந்தால் அக்னியையும், சூரியனையும் கூட தகிப்பேன். காற்றை அதன் வேகத்தை தடுத்து நிறுத்த என்னால் முடியும். இவ்வாறு கோபத்துடன் பேசும் த3சக்3ரீவனைப் பார்த்து அகம்பனன் நடுங்கிக் கொண்டு கை கூப்பி அஞ்சலி செய்தவனாக பதில் சொன்னான். பயத்துடன் நாக்குழற, ராவணனிடம் அபயம் யாசித்தான். ராக்ஷஸர்களில் சிறந்தவனான ராவணன் அவனுக்கு அபயம் அளித்து சமாதானப் படுத்தவும், அகம்பனன் நடுக்கம் குறைந்து பேசலானான். த3சரத2 குமாரன், சிங்கம் போல கர்ஜிக்கிறான். சிங்கத்திற்கு சமமான பலம் உடையவன். ராமன் என்று பெயர். அகன்ற மார்பும், நீண்ட புஜங்களுமுடையவன். வீரன். மிகப் புகழ் வாய்ந்தவன். ஸ்ரீமான். அளவில்லாத விக்ரமம் உடையவன். தூ3ஷணன், க2ரன் இவர்களையும் சேர்த்து, ஜனஸ்தானம் அழிந்தது. இதைகேட்டு, ராவணன், நாக ராஜன் போல பெருமூ<மூச்சு விட்டுக் கொண்டு, அகம்பனா, அந்த ராமன் ஜனஸ்தானம் எப்படி வந்தான்? இந்திரனோடு எல்லா அமரர்களையும் அழைத்துக் கொண்டு வந்தானா? அகம்பனன் பதில் சொன்னான். ராமனுடைய பலத்தையும், விக்ரமத்தையும் விவரமாக சொன்னான். ராமன் என்று பெயருடையவன். மிகுந்த தேஜஸ்வி. வில்லேந்தியவர்களுள் சிறந்தவன் அவனே. திவ்யாஸ்திரங்கள் பல அவனிடம் உள்ளன. யுத்தம் என்று வந்தால் இந்திரனுக்கு சமமாக போர் செய்ய வல்லவன். அவனுக்கு அனுரூபமான ஒரு சகோதரன். லக்ஷ்மணன் என்று பெயர். அவனும் நல்ல பலசாலி. சிவந்த கண்களும், துந்துபி முழங்குவது போல முழங்கும் குரலும் உடையவன். இளையவன். சந்திரன் போன்ற முகக் காந்தியுடையவன். இவர்கள் இருவரும் சேர்ந்தால், நெருப்பும், காற்றும் சேர்ந்தாற்போல ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பர். ராஜ குமாரனான ஸ்ரீமான் ராமனால் ஜனஸ்தானம் அழிந்தது. தேவர்கள் யாரும் இல்லை. சந்தேகமே இல்லை. ராமன் கையிலிருந்து புறப்பட்ட பாணங்கள், பொன்னிறமானவை. ஐந்து முகம் கொண்ட நாகங்கள் போல ராக்ஷஸர்களை விழுங்கி விட்டது. ராக்ஷஸர்கள் பயந்து கொண்டு எங்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் ராமனே எதிரில் நிற்கக் கண்டார்கள். இவ்வாறு ஜனஸ்தானம் முழுவதும் அவனால் நாசமாக்கப் பட்டது. அகம்பனனின் வார்த்தையைக் கேட்டு ராவணன், இப்பொழுதே ஜனஸ்தானம் போய் ராம லக்ஷ்மணர்களை அழிக்கிறேன் என்று கிளம்பினான். அகம்பனன் தொடர்ந்தான். ராஜன், கேள். ராமனுடைய பலத்தையும், பௌருஷத்தையும் பற்றி இன்னமும் கேள். கோபம் கொண்ட ராமனை எதிர்க்க இயலாது. விக்ரமத்தால் பெரும் புகழ் எய்தியவன். சுபர்ணா நதியின் வேகத்தை தன் பாணங்களால் தடுத்து நிறுத்தக் கூடியவன். தாரா, க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள் இவற்றோடு சேர்த்து ஆகாயத்தை வளைக்க கூடியவன். இந்த ராமன் மூழ்கிக் கொண்டிருக்கும் பூமியை தூக்கி நிறுத்தக் கூடியவன். சமுத்திரத்தின் அலைகளை தடுத்து, பிளந்து பூமியில் உலகனைத்தையும் மூழ்கச் செய்யக் கூடியவன். சமுத்திரத்தின் வேகத்தையும், காற்றே ஆனாலும், அதன் வேகத்தையும் தன் கரங்களால் தடுக்கக் கூடியவன். உலகங்கள் அனைத்தையும் அழித்து விட்டு திரும்ப ஸ்ருஷ்டிக்கக் கூடியவன். அவ்வளவு விக்ரமமும், பெரும் புகழும் உடையவன். அந்த ராமனை நீ யுத்தத்தில் ஜயிக்க முடியாது. மற்ற ராக்ஷஸர்களும் ஜயிக்க முடியாது. பாபியான ஜனங்களுக்கு ஸ்வர்கம் கிடைக்காதது போல உனக்கு அவனை ஜயிக்க முடியாது. எல்லா தேவர்களும், அசுரர்களும் சேர்ந்தாலும் அவனை வதம் செய்ய முடியாது என்று தோன்றுகிறது. ஒரு உபாயம் உண்டு, கவனமாக கேள். அவனுடைய மனைவி, உலகிலேயே உத்தமமான ஸ்த்ரீ. சீதை என்று பெயர். அழகிய இடை உடையவள். சமமான அங்கங்களை உடையவள். ஸ்யாமா. ஸ்த்ரீ ரத்னம் அவளே. மேலும் ரத்னங்களாலான ஆபரணங்களை அணிந்திருக்கிறாள். தெய்வ மகளோ, கந்தர்வ ஸ்த்ரீயோ அப்ஸரமகளோ, ராக்ஷஸ குலப் பெண்ணோ, அவளுக்கு சமமாக ஆக மாட்டார்கள். மனிதர்களில் எங்கு இருக்கப் போகிறார்கள்? அந்த மனைவியை நீ கடத்திச் செல். வஞ்சனையினால் மகா வனத்திலிருந்து தூக்கிச் செல். அவளைப் பிரிந்து, அவளிடம் உயிரை வைத்துள்ள ராமன் உயிரை விட்டு விடுவான். சற்று யோசித்து விட்டு, ராக்ஷஸாதிபன், மகான் என்று பெயர் பெற்றவன், அகம்பனனின் சூழ்ச்சியை ஏற்றுக் கொண்டான். பின் அவனிடம் நல்லது, நாளை போகிறேன். நான் தனியாக சாரதியோடு போகிறேன். வைதேஹியை அழைத்து வருவேன். சந்தோஷமாக என்னுடைய பெரிய ஊருக்கு அழைத்து வந்து விடுகிறேன் என்றான்.
மனதில் களங்கத்தோடு, ராவணன், ஆதி3த்யனுக்கு சமமான ரதத்தில் ஏறி, நாலு திக்குகளும் பிரகாசிக்க கிளம்பினான். நக்ஷத்திரங்கள் சஞ்சரிக்கும் ஆகாயத்தில் மேகங்கள் நடுவில் பிரகாசமாகத் தெரிந்தது. தாடகையின் மகனான மாரீசனுடைய ஆசிரமம் போய்ச் சேர்ந்தான். மாரீசன் மனிதர்கள் உணவு வகைகளை, ப4க்ஷ்யம், போ4ஜ்யம் என்று வித விதமாக உபசரித்தான். தானே ஆசனம் அளித்து, குடிக்க ஜலம் கொடுத்து பொருள் பொதிந்த சொற்களால் குசலம் விசாரித்தான். ராக்ஷஸேஸ்வரா, உலகுக்கெல்லம் அரசனே, எல்லாம் சௌக்யமாக, குசலமாக இருக்கின்றனவா? வேகமாக இங்கு வந்தது என்ன காரியமாக இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. இவ்வாறு மாரீசன் சொல்லவும், மகா தேஜஸ்வியான ராவணன் யோசித்து கவனமாக பின் வருமாறு சொன்னான். நான் மிகவும் கவனமாக காப்பாற்றி வந்த ஜனஸ்தானத்தை ராமன் அழித்து விட்டான். யுத்தத்தில் நெருங்க முடியாத அந்த இடம் முழுவதும் நாசமாகி விட்டது. அதனால் அவன் மனைவியை அபகரிக்க நீ எனக்கு உதவி செய். இதைக் கேட்டு திடுக்கிட்ட மாரீசன் பதில் சொன்னான். யார் உனக்கு மித்ர ரூபத்தில் சத்ருவாக, சீதையைப் பற்றிச் சொன்னார்கள்? நீ நன்றாக இருப்பதை பொறுக்காத சிலர் உன் ஊரில் இருக்கிறார்கள். யார் உனக்கு சீதையை இங்கு அழைத்து வா என்று சொன்னது? அதைச் சொல். ராக்ஷஸ லோகத்தின் குலப் பெருமையை யார் உடைக்க விரும்புகிறார்கள்? இந்த விஷயத்தில் உன்னை உற்சாகப் படுத்துபவன் எவனானாலும் அவன் உனக்கு சத்ருவே. ஆலகால விஷம் உடைய கொடிய பாம்பின் வாயிலிருந்து பல்லை பிடுங்கச் சொல்லி உனக்கு உபதேசம் செய்தது யார்? இது போல ஒரு தவறான வழியை போதித்தது யார்? சுகமாக தூங்கிக் கொண்டிருந்த உன்னை யாரோ தலையில் இடறி இருக்கிறார்கள். ராகவன் என்ற யானை, உயர் ஜாதி யானை. புகழ் பெற்ற வம்சத்தில் வந்தவன் என்பது ஒன்று, தன் தேஜஸால் பிரஸித்தி பெற்றவன் என்பது ஒன்று இவை இரண்டுமே அந்த யானைக்கு இரண்டு தந்தந்தங்கள் என்று வைத்துக் கொள். அதை எதிர்த்து சீண்டுவது புத்திசாலித் தனம் ஆகாது. இந்த ராமனை நரசிங்கனாகப் பார். ரண பூமியில் முடிவான சந்தியில் நிற்பவன். ராக்ஷஸர்களை மிருகங்களாக அழித்து விடும் பலம் உள்ளவன். இப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கும் அந்த சிங்கத்தை எழுப்புவது உசிதமல்ல. கூர்மையான கத்தி போன்ற பற்களையுடையது சிங்கம் என்றால் இவன் பாணங்கள் (கூர்மையான அம்புகள்) நிரம்பிய தூணியுடையவன். வில்லே திமிங்கிலமாக, புஜவேகமே சேறாக, சரங்களே அலைகளுடைய சமுத்திரமாக, மிகப் பெரிய ரண பூமியே வெள்ளமாக உள்ள ராம பாதாளம் என்பது மிக கோரமானது, அதில் குதித்து தாண்ட முயலுகிறாய். ராக்ஷஸ ராஜனே, இது சரியல்ல. லங்கேஸ்வரா, மன்னித்துக் கொள். சந்தோஷமாக லங்கை போய் சேர். உள்ளதைக் கொண்டு பிரஸன்னமாக இரு. உன் மனைவிகளுடன் ரமித்துக் கொண்டு இரு. ராமன் வனத்தில் தன் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கட்டும். இவ்வாறு மாரீசன் விவரமாக சொல்லவும், ராவணன் தன் ஊரான லங்கைக்கு திரும்பிச் சென்றான். உத்தமமான தன் வீட்டினுள் நுழைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராவண க2ர விருத்தோபலம்ப: என்ற முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 32 (228) சூர்ப்பணகோத்3யம: (சூர்ப்பணகையின் முயற்சி)
இதற்கிடையில், சூர்ப்பணகா தன்னைச் சார்ந்த க2ரன், தூ3ஷணன், த்ரிசிரஸ், மற்றும் பதினாலாயிரம் ராக்ஷஸர்கள் ஒருவர் பின் ஒருவராக, ராமன் ஒருவன் எதிரில் நிற்க முடியாமல் மடிந்து விழுந்ததை நம்ப முடியாமல், திகைத்தவள், பெரும் குரலெடுத்து அழலானாள். பலசாலிகள், செயற்கரிய செயல்களை எவ்வளவோ பயங்கரமான செயல்களையும் செய்து புகழ் பெற்றவர்கள், இவர்களை யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் போரில் வீழ்த்திய ராமனை நினைத்தபடி, தாங்க முடியாத மன வருத்தத்துடன் லங்கேஸ்வரனான ராவணனைக் காணச் சென்றாள். மகா தேஜஸுடன், விமானத்தின் முன்னால், மந்திரிகள் சூழ அமர்ந்திருந்த ராவணனை தூரத்திலிருந்தே கண்டு கொண்டாள். இந்திரன் மருத் கணங்கள் சூழ அமர்ந்திருப்பது போல இருந்தது அந்த காட்சி. பொன்னாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். யாக குண்டத்தில் ஆஹுதி செய்தவுடன் குபீரென்று எழும் பொன்னிறமான தீயின் ஜ்வாலை போல இருந்தான். தேவ, கந்தர்வ, மற்ற ஜீவன்கள், யாராலும் ஜயிக்க முடியாத மகா வீரம் உடையவன். சூரன், காலனுடைய மற்றொரு முகம் போன்றவன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், வஜ்ரத்தால் அடிபட்ட தழும்புகளை உடலில் பெருமையுடன் தாங்கியவன். ஐராவதத்தின் தந்தங்கள் குத்தி கிழித்த மார்பில் ஆறிய புண் வடுக்களை உடையவன். எங்கும் காணுதற்கரியதான இருபது புஜங்களும், பத்து தலைகளும் கண் கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது. ராஜ லக்ஷணங்கள் உடைய வீரன். அகன்ற மார்பும், அழகிய வைடூரிய நிற தேக காந்தியும், பொன்னாலான குண்டலங்களும், நிமிர்ந்த தோளும், வெண்மையான பல் வரிசையும், பெரிய முகமும், பர்வதம் போன்ற சரீரமும் உடையவன். விஷ்ணுவின் சக்ரத்தால் பட்ட அடிகளும், பல நூறு முறை தேவர்களுடன் சண்டையிட்டதில் மற்ற சஸ்திரங்கள் பட்டு அடி வாங்கியவன். உடல் பூராவுமே இந்த தேவர்களிடம் பட்ட அடிகளின் அடையாளங்கள் தென் பட இருப்பவன். குறுக்க அல்லது குறைக்க முடியாத சமுத்திரத்தைக் கூட வற்றச் செய்பவன். வேகமாக செயல்படுபவன். பர்வதேந்திரனை அசைத்தவன். சுரர்கள் எனும் தேவர்களை துன்புறுத்தியவன். தர்மங்களை கை விட்டவன். பிறன் மனைவியை அபகரிக்கும் குணம் உள்ளவன். திவ்யாஸ்திரங்கள் அனைத்தையும் அறிந்தவன். எப்பொழுதும் யாகங்களை தடை செய்பவன். போ4கவதீ என்ற ஊரையடைந்து அங்கு வாசுகியை தோற்கடித்தான். தக்ஷகனை தோற்கடித்து, அவனுடைய பிரியமான மனைவியை கவர்ந்து கொண்டு வந்தவன். கைலாஸ பர்வதம் சென்று நர வாகனன் எனும் குபேரனை ஜயித்து அவனுடைய புஷ்பக விமானத்தைக் கவர்ந்து கொண்டு வந்தவன். விரும்பிய இடத்திற்கு கொண்டு செல்லக் கூடியது இந்த விமானம். சைத்ர ரதம் எனும் வனத்தையும், நளினமான நந்தன வனத்தையும் அழித்து விட்டவன். இவை தேவர்களுடைய உத்யான வனங்கள். இவன் க்ரோதத்துக்கு ஆளாயின. சந்திரனும், சூரியனும் உதிக்கும் பொழுது, மிகுந்த பராக்ரமம் உடையவைகளான இவைகளையே தன் கைகளால் அலட்சியமாக தட்டி விடும் அளவுக்கு மலை போன்ற உயரமான உடல் வாகுடையவன். பத்தாயிரம் வருஷங்கள் வனத்தில் இருந்து தவம் செய்து, முன்பொரு சமயம் ப்ரும்மாவை (ஸ்வயம்பூ) குறித்து யாகம் செய்து தன் தலைகளையே ஆகுதி செய்தவன். தே3வ, தா3னவ, க3ந்த4ர்வ, பிசாசங்கள், பறவைகள், (இறக்கை கொண்டு பறப்பவை அனைத்திடமும்) பாம்புகள் (ஊர்வன) இவைகளிடமிருந்து தனக்கு அப4யம் கிடைக்கப் பெற்றவன். யுத்தத்தில் மனிதர்கள் அன்றி வேறு யாராலும் மரணம் கூடாது என்று ப்ராம்மணோத்தமர்களைக் கொண்டு மந்திரங்கள் சொல்லி புண்யமான யாகம் செய்தவன். ஹவிஸைப் பெற வந்த சந்திரனை அடித்தவன். விரும்பிச் செய்யும் யாகங்களை அழித்து, க்ரூரமாக ப்ரும்மாவையே அடித்தவன். துஷ்டன். துஷ்ட நடத்தையுள்ளவன். கடுமையானவன். தயையே இல்லாதவன். ப்ரஜைகளுக்கு எது ஹிதமானதோ, அதை செய்யாமல் வேண்டுமென்றே, எதிராக செய்பவன். அதில் தான் அவனுக்கு சந்தோஷம். எல்லா உலகிலும் உள்ள எல்லா ஜீவராசிகளும் பயந்து நடுங்கும்படியான ராவணனை, தன் சகோதரனை அவள் மகா பலசாலியாக மட்டுமே கண்டாள். திவ்யமான ஆடை ஆபரணங்களை அணிந்து, அழகிய மாலைகளை அணிந்து அழகுற, நல்ல ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்த அவனை, கால காலனுக்கு உவமையாக சொல்லும் விதமாக, புலஸ்திய குல நந்தனாக, ராக்ஷஸேந்திரனாக, மகா அதிர்ஷ்ட சாலியான ராவணனை, சத்ருக்களை கண்ட மாத்திரத்தில் அழிப்பவனை, மந்திரிகள் சூழ இருக்கும்பொழுது, நெருங்கி, பயத்தால் நடுங்கியபடி ராக்ஷஸி, சூர்ப்பணகா பேசலானாள். சிவந்து விசாலமான கண்களையுடைய அவனைப் பார்த்து, மகாத்மாவான (லக்ஷ்மணனால்) கோரமாக்கப் பட்ட முகத்தையுடையவள், இதுவரை பயம் என்பதே தெரியாமல் வனத்தில் திரிந்து கொண்டிருந்தவள், பயமும் மோகமும் அலைக்கழிக்க, பயங்கரமான செய்தியை ராவணனிடம் தெரிவித்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பணகோத்3யமோ என்ற முப்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)s
அத்தியாயம் 33 (229)ராவண நிந்தா3(ராவணனை நிந்தித்தல்)
மிக பரிதாப நிலையில் இருந்த சூர்ப்பணகா, லோக ராவணனான (உலகையே துன்புறுத்தக் கூடிய) ராவணன் மந்திரிகள் சூழ இருக்கும் பொழுது கடுமையான வார்த்தைகளால் நிந்தித்தாள். கேட்பார் யாருமின்றி தன்னிஷ்டப் படி காமத்திலும், போகத்திலும் மூழ்கி, சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மதா3ந்தமாக, தனக்கு சமமாக ஆமாம் போடும் ஜனங்களுடன் தன்னை மறந்து இருக்கிறாயே. கிராம்ய சுகங்களில் ஈடுபட்டு, தன் சுக போகத்தில் ஆழ்ந்து இருக்கும் அரசனை, ஸ்மசான அக்னி போல பிரஜைகள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். தானே செயல்களை முனைந்து செய்யாத அரசன், அந்த செயல்கள் அழியும் பொழுது அதனுடன் தானும் அழிகிறான். அவன் ராஜ்யமும் அழியும். எளிதில், காணக் கிடைக்காத, தகாத காரியங்களைச் செய்யும் தன் ஸ்வாதீனத்தில் இல்லாத அரசனை ஜனங்கள் தவிர்க்கிறார்கள். யானை, தூரத்திலிருந்தே நதியின் சேறான பாகத்தை அறிந்து கொண்டு அருகில் போவதே இல்லை. விஷய போகங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளத் தெரியாத அரசர்கள், மேன்மையை அடைய வழியில்லை. சமுத்திரத்தில் விழுந்த மலைகளைப் போல் அதே ஸ்திதியில் இருக்க வேண்டியது தான். தன்னை சார்ந்தவர்களையும் அடக்கி, நீ தேவ கந்தர்வ, தானவர்களால் கூட செய்ய முடியாதவைகளை செய்து காட்டியவன். சபலனான ராஜாவாக எப்பொழுது ஆனாய்? ராக்ஷஸா, நீ இன்னும் குழந்தை குணமும் புத்தி இல்லாதவனாகவும் இருக்கிறாய். தெரிந்து கொள்ள வேண்டியதை சரிவர தெரிந்து கொள்ளாதவன் எப்படி அரசனாக இருக்கிறாய்? எந்த அரசனுக்கு ஒற்றர்களும், பொக்கிஷமும், நீதியும் தன் வசத்தில் இல்லையோ, அரசனே, அந்த அரசர்கள், சாதாரண நாட்டு ஜனங்களுக்குச் சமமாக ஆகிறார்கள். அதனால் தான் சக்ரவர்த்திகள் வெகு தூரத்தில் நடக்கும் செய்திகளையும், நடப்புகளையும் ஒற்றர்கள் மூலம் பார்க்கின்றனர், தெரிந்து கொள்ளுகின்றனர். அதனால் தூரதர்ஸ:- தொலை நோக்குடையவர்கள் என்று சொல்லப் படுகின்றனர். நீ ஒற்றனையே நியமிக்கவில்லை என்று நினைக்கிறேன். விஷயம் அறியாத மந்திரிகள் உன்னை சூழ்ந்து நிற்கின்றனர். உன் பந்துக்கள் ஜனஸ்தானத்தில் அழிந்ததே இன்னும் உனக்குத் தெரியவில்லை. மாபெரும் வீரர்களான பதினாலாயிரம் ராக்ஷஸர்களும், ஒரு ராமனால் அழிக்கப் பட்டார்கள். கரனும் தூஷணனும் மாண்டனர். ரிஷிகளுக்கு அபயம் கொடுத்திருக்கிறான் ராமன். தண்டகா வனத்தில் வசிப்பவர்கள் க்ஷேமமாக இருக்கிறார்கள். செயற்கரிய செய்யும் ராமனால் தண்டகா வனம் த்வம்சம் செய்யப் பட்டுள்ளது. ராவணா, நீ லோபி, தன் ஆதீனத்தில் இல்லை. அபரிமிதமான செல்வமும், அதிகாரமும் உன்னிடம் கர்வத்தை (மதம்) தான் உண்டு பண்ணியிருக்கின்றன. உன் விஷய போக, நாட்டத்தால், வெளியில் உண்டாகியுள்ள பயத்தை உணரவில்லை. கடுமையாக நடந்து கொள்பவனை, அல்பமாக கொடுப்பவனை, மதா3ந்தமானவனை, கர்வம் கொண்டு பிடிவாதம் கொண்ட அரசனை கஷ்டகாலங்களில் ஜனங்கள் பின் பற்றுவதில்லை. அபிமானமும், எளிதில் நெருங்க முடியாத தன்மையும், தன்னலமே பெரிதாக நினைக்கும் குணமும் உள்ள அரசனை, அவசியம் இன்றி கோபித்துக் கொள்பவனை, அரசனேயானாலும், ஜனங்கள் தாங்களே கொன்று விடுவர். அது போன்ற சமயங்களில் அவர்கள் நீ சொல்வதை கேட்க மாட்டார்கள். இடும் கட்டளைகளை செய்ய மாட்டார்கள். பயமுறுத்தினாலும், பயப்பட மாட்டார்கள். ராஜ்யத்திலிருந்து பதவி இழந்தவன், சீக்கிரமே, புல்லுக்கு சமமாக அல்பமாக எண்ணப் படுவான். காய்ந்த விறகு கட்டைகள் கூட பயன்படும். உடைந்த பானைத் துண்டுகள் கூட உபயோகமாகும், புழுதி கூட உபயோகமாகும். ஆனால், பூமியை ஆண்ட அரசர்கள் தன் நிலையில் இருந்து விழுந்தவர்கள், ஒரு காரியத்திற்கும் உபயோகம் ஆக மாட்டார்கள். அனுபவித்த பழைய ஆடையோ, மாலையோ, வாடி வீணானால் எப்படியோ, அப்படித் தான் ராஜ்யத்திலிருந்து விழுந்த அரசனும். தனிப்பட்ட முறையில் சமர்த்தனாக இருந்தாலும் ஒரு வித பயனும் இல்லாதவனாக கருதப் படுவான். தன் நிலையில் எப்பொழுதும் விழிப்புடன், எல்லா விஷயங்களையும் அறிந்தவனாகவும், புலனடக்கம் உடையவனாகவும், செய் நன்றி மறவாதவனாகவும், தர்ம சீலம் உடையவனாகவும், உள்ள அரசனே நிலைத்து நிற்பான். தன் புற கண்களை மூடிக் கொண்டிருந்தாலும், நீதி கண்களால் விழித்திருப்பவன். வெளிவாக வெளிப்படும் க்ரோதமும், வெளிவும் உடைய அரசன் தான் ஜனங்களால் பூஜிக்கப் படுகிறான். ராவணா, நீயோ இந்த குணங்கள் எதுவும் இல்லாதவன். துர்புத்தி, உனக்கு ராக்ஷஸர்கள் ஒன்றாக மறைந்தது கூடத் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. மற்றவர்களை அவமதிப்பவன், விஷயமே குறியாக இருப்பவன், தேச, கால வர்த்தமானங்களை புரிந்து கொள்ளாதவன், தகாத புத்தியுடையவன், குண தோஷங்களை பிரித்து அறிந்து கொள்ள முடியாதவன், சீக்கிரமே அழிவான். நீயும் அழிவாய். இவ்வாறு தன் குற்றங்களை விவரித்துச் சொல்லக் கேட்ட ராக்ஷஸ ராஜா, செல்வமும், கர்வமும், பலமும் நிரம்பப் பெற்றவன், வெகு நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராவண நிந்தா3 என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 34 (230) சீதா ஹரணோபதேச:
(சீதையை கடத்திச் செல்ல யோசனை சொல்லுதல்)
இப்படி கடுமையாக விமரிசிக்கும் சகோதரி சூர்ப்பணகையை, தன் மந்திரிகள் மத்தியில் இருந்த ராவணன், கோபத்துடன் விசாரித்தான். யாரது ராமன்? என்ன வீர்யம் அவனுக்கு? எப்படி இருப்பான்? பராக்ரமம் என்ன? எதற்காக தண்டகாவனம் வந்தான்? நுழையவே முடியாத இந்த பெருங் காட்டில் அவனுக்கு என்ன வேலை? அவனிடம் என்ன புது ஆயுதம் இருக்கிறது? எதைக் கொண்டு க2ர, தூ3ஷணர்களை அடித்தான்? த்ரிசிரஸையும் மற்ற ராக்ஷஸர்களையும் எதனால் அடித்தான்? இவ்வாறு ராக்ஷஸேந்திரன் கேட்கவும், ஆத்திரம் தலைக்கேற, ராக்ஷஸி சூர்ப்பணகா ராமனை வர்ணிக்க ஆரம்பித்தாள். உள்ளபடி விவரித்தாள். -நீண்ட கைகளும், அகன்ற மார்பும் உடையவன். வல்கலையும் மரவுரியும் தரித்தவன். கந்தர்ப்பனுக்கு சமமான தேக காந்தியுடையவன். ராமன், தசரதன் மகன். இந்திரனுடைய வில்லுக்கு சமமான வில்லை வைத்திருக்கிறான். பொன்னிறமான பள பளக்கும் அம்புகளை, மகா விஷம் கொண்ட சர்ப்பங்கள் போன்ற பாணங்களை, அதில் வைத்து இழுத்து விடுகிறான். அவன் சரத்தை கையில் எடுத்ததையோ, விட்டதையோ, தன் வில்லை வளைத்ததையோ, யுத்தம் நடக்கும் பொழுது எவராலும் காண முடியவில்லை. மழையாக பொழிந்த பாணங்களையும், அடிபட்டு விழுந்த ராக்ஷஸர்களையும் தான் கண்டோம். இந்திரன் செய்தானே, உத்தமமான பயிரை, கல்லை மழையாக பொழிந்து அழித்தான். நெடிதுயர்ந்த உருவம் கொண்ட ராக்ஷஸர்களை, பதினான்கு ஆயிரம் வீரர்களை, கால் நடையாக வந்த இவன் அழித்தான். அரை முஹுர்த்த நேரத்திற்கு சற்றே அதிகமான நேரத்தில், க2ரன், தூ3ஷணனுடன் அழிந்தான். ரிஷிகளுக்கு அபயம் அளித்திருக்கிறானாம். தண்டகா வன வாசிகள் இனி க்ஷேமமாக இருப்பார்கள். நான் எப்படியோ தப்பி வந்தேன். அவமானம் செய்யப் பட்டேன். ஸ்த்ரீ வதம் கூடாது என்று நினைத்தோ என்னவோ, ராமன் என்னை கொல்லாமல் விட்டான். அவனுக்கு ஒரு சகோதரன். குண, சீல, விக்ரமம் எனும் குணங்களில் இவனை ஒத்தவன். இவன் ராமனிடம் மிகுந்த அன்பும், பக்தியும் உடையவன். லக்ஷ்மணன் என்ற பெயருடைய வீர்யவான். நல்ல கோபம் கொண்டவன். அடங்கிய கோபம் அவனுடையது. எதிலும் வெற்றியேயன்றி, தோல்வியே காணாதவன். பலசாலி, ராமனுடைய வலது கை போன்றவன். நித்யம் உடன் இருப்பவன். அவன் (ராமன்) உயிர் வெளியே நடமாடுவது போல அவனுடன் ஒன்றியவன். அவனுக்கு அனுசரணையாக இருப்பதே அவன் கொள்கை, குறிக்கோள் எல்லாம். இந்த ராமனுக்கு, பூரண சந்திரன் போன்ற அழகிய முகமும், விசாலமான கண்களும் உடைய ஒரு மனைவி. தர்ம பத்தினி. இவனிடம் மிகுந்த பிரியம் உள்ளவள். அவனுடைய நன்மையே எண்ணி செயல் படுபவள். அவள் கேசம் அழகியது, நாசி அழகியது, கால் பகுதிகள் அழகியவை. அழகே உருவானவள். இந்த வன பிரதேசத்தில், புகழ் பெற்று விளங்குகிறாள். வனதேவதை போல கொண்டாடப் படுகிறாள். மற்றொரு லக்ஷ்மி தேவி போல விளங்குகிறாள். பத்தரை மாற்றுத் தங்கம் போல நிறத்தினள். சிவந்து கவிழ்ந்த விரல் நகம் சுபமாக தெரிகிறது. பெயர் சீதை. சிறுத்த அழகிய இடையுடையவள். வைதேஹி மிகவும் லக்ஷணமாக இருக்கிறாள். எந்த தேவ குலப் பெண்ணும், கந்தர்வி, யக்ஷியோ, கின்னரியோ, இது போல ஒரு பெண்ணை நான் இது வரை கண்டதில்லை. யாருக்கு சீதை மனைவியாக இருந்து, மகிழ்ச்சியோடு அணைத்துக் கொள்கிறாளோ, அவன் உலகில் எதையும் வெற்றி கொள்வான். அவன் வாழ்க்கை பலனுடையதாகும். உலகில் இந்திரனை விட மேலான பதம் அடைவான். சுசீலா அவள், நல்ல சீலமுடையவள். பார்த்தவர்களை உடனே பிரமிக்கச் செய்யும்படியான உடல் வாகுடையவள். உலகில் ஈடு இணையில்லாத அழகி இவள் தான். உனக்கு அவள் அனுரூபமான பத்னியாவாள். நீ தான் அவளுக்கு ஏற்ற பதி. ஒவ்வொரு அங்கத்திலும் அழகு சொட்டும் அவளை உனக்கு மனைவியாக கொண்டு வர நான் முயற்சி செய்தேன். மயக்கும் முக அழகுடையவளை உனக்காக கவர்ந்து வர முயற்சி செய்தேன். அந்த சமயம் தான் இப்படி விரூபம் ஆக்கப் பட்டேன். லக்ஷ்மணன், தன் பெரிய கைகளால் என்னை இப்படி செய்து விட்டான். ஒரு முறை அந்த பூரண சந்திரன் போன்ற முகமுடைய சீதையை, நீ கண்டாயானால், மன்மதனுடைய பாணங்கள் உன்னை குத்திக் கிழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தவிக்கப் போகிறாய். அவளை மனைவியாக கொள்ளும் எண்ணம் இருந்தால் உடனே கிளம்பு. சீக்கிரம். உன் வலது பாதம் வெற்றி நடை போட தயாராகட்டும். ராக்ஷஸ ராஜனே, ஆசிரமத்தில் வசிக்கும் அந்த ராமனை வதம் செய்து, ராக்ஷஸர்களுக்கு பிரியமானதை செய்வாய். அந்த கொடியவனை, உன் கூர்மையான பாணங்களால் பிளந்து, மகா ரதியான லக்ஷ்மணனையும் அழித்து நாதனை இழந்த சீதையை நீ அபகரித்துக் கொண்டு வா. (ராமனை உயிருடன் பிடித்து எனக்கு கொடு என்று கம்ப ராமாயணம்) ராக்ஷஸேஸ்வரா, உடனே யோசிக்காமல் செயலில் இறங்கு. நான் சொல்வதை செவி மடுத்துக் கேள். ராவணா, உன் சக்தியை அறிந்து கொண்டு, அபலையான சீதையை ஜனஸ்தானத்திலிருந்து கவர்ந்து கொண்டு வா. கொடி போன்ற மெல்லிய உடலுடையவளை உனக்கு மனைவியாக ஆக்கிக் கொள்.
யாராலும் எதிர்க்க முடியாதபடி பாணங்களைத் தொடுத்து, ஜனஸ்தான ராக்ஷஸர்களை ராமன் அழித்ததை, க2ரன் இறந்து பட்டதையும் தூ3ஷணன் மாண்டதையும் நினைத்து பார். யோசித்து பார். அடுத்து செய்ய வேண்டியதை உன் மனதில் பட்டபடி செய். நீயே தீர்மாணித்துக் கொள்.-
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சீதா ஹரணோபதேசோ என்ற முப்பத்து நாலாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 35 (231) மாரீசாஸ்ரம புனர் கமனம் (மாரீச ஆசிரமத்திற்கு திரும்பவும் செல்லுதல்)
சீதையைப் பற்றிய சூர்ப்பணகையின் வர்ணனைகள், ராவணன் உடல் ரோமங்களை குத்திட்டு நிற்கச் செய்தன. மந்திரிகளை அவசரமாக அனுப்பி விட்டு, என்ன செய்வது என்று யோசித்தான். பல விதமாக யோசித்து, தோஷங்களையும் குணங்களையும், தன் பலம், எதிரி பலம் இவைகளையும் யோசித்து, இப்படிச் செய்யலாம் என்று தானே நிச்சயம் செய்து கொண்டு, ஸ்திர புத்தியுடன் வாகனங்கள் இருக்கும் இடம் சென்றான். மறைந்து ரகசியமாக யான சாலை எனும் வாகனங்கள் இருக்கும் இடம் அடைந்த ராவணன் சாரதியைக் கூப்பிட்டு, ரதத்தை ஏற்பாடு செய் என்று ஆணையிட்டான். அப்படியே, சாரதியும் உடனே ரதத்தை ஆயத்தமாக கொண்டு வந்து நிறுத்தினான். ரத்னங்களால் அலங்கரிக்கப் பட்ட, விருப்பபடி செலுத்தக் கூடிய, பொன் ரதத்தை, த்ருஷ்டிக்காக, அவலக்ஷணமான பிசாச முகங்கள் தங்க ஆபரணங்கள் அணிந்தது போன்ற முகப்பு வேலைகளுடன், மேக நாதம் போல முழங்கும் குபேரனுடைய தம்பியான ராவணன் சமுத்திரக் கரையை அடைந்தான். வெண் கொற்றக் குடையும், சாமரங்களும், த3சானனன் தானே வைடூரிய நிறத்தில் ப்ரகாசமாகவும், பத்தரை மாற்றுத் தங்கத்திலானான குண்டலங்களும், இருபது புஜங்களும், பத்து தலைகளும், காணுதற்கரிய உடல் வாகும், எண்ணியதை சொல்லும் முன் செய்யத் தயாராக நின்ற பரிவாரமும், அவன் சோபையை அதிகரித்தன. தேவர்களின் விரோதி, முனி ஜனங்களை கண்ட மாத்திரத்தில் கொல்பவன், பெரிய மலையரசன், பத்து தலைகளுடன் நிற்பது போல தோற்றத்தினன், அதிசயமான தன் ரதத்தில் ஏறி நின்றான். மனதில் எண்ணிய மாத்திரத்தில் கொண்டு சேர்க்கும் அந்த ரதம், மேகத்திற்கு மின்னல் போல், அவனுக்கு அனுரூபமாகத் தெரிந்தது. (மேக மண்டலம் ஆகாயத்தில், மின்னல் சூழ தெரிவது போல இருந்தான்.) வீர்யவானான ராவணன், காடுகளுடன் கூடிய மலை பிரதேசங்களை கடந்து சென்றான். சாகரம் எல்லைக் கோடு போல தெரிவதை ரசித்தான். நெருக்கமாக, பலவித பூக்களும், பழங்களும் உடைய மரங்கள் தெரிய, அருகில், மங்களகரமான, குளிர்ந்த நீரையுடைய நதிகள் பிரவகித்துச் செல்வதைக் கண்டான். பத்மங்கள் பூத்த தடாகங்கள் ஆங்காங்கு தெரிந்தன. விசாலமான ஆசிரம பதங்கள், வேள்விக்கான இடங்களுடன் அலங்காரமாக தெரிய, வாழைத் தோட்டங்கள், தென்னை மரங்கள் சோபையூட்ட, சால, தால, தமால மரங்களில், புஷ்பங்கள் மண்டிக் கிடந்தன. இவை அடுத்தடுத்து வளர்ந்து அடர்ந்து காணப்பட்டன. மிகவும் கடினமான ஆகார நியமங்களை கை கொண்டு வசித்த பரம ரிஷிகள் வளைய வரும் இடங்களை கண்டவாறு ஆகாய மார்கத்தில் சென்றான். நாக3ர்கள், சுபர்ணர்கள், க3ந்த4ர்வர்கள், கின்னரர்கள் என்ற ஆயிரக் கணக்கானவர்கள், வைகானஸர்கள், தும்ர, வாலகில்யர்கள், மரீசிபர்கள் என்ற, காமத்தை வென்ற சித்தர்களும் சாரணர்களும், அந்த இடத்துக்கே சோபையூட்டினர். அப்ஸர ஸ்த்ரீகள் திவ்யாபரணங்களையும், மாலைகளையும் அணிந்து, திவ்யமான ரூபம் உடையவர்களாக, க்ரீடா, ரதி-இவைகளின் விதி முறைகளை அறிந்தவர்களாக, ஆயிரக் கணக்காக சஞ்சரிக்க கண்டான். தெய்வ மகளிர், தேவர்களின் பத்னிகள், ஸ்ரீமதிகள் உபாசிக்கும் இடமாக இருந்ததை. தேவ, தானவ கூட்டங்கள், ஆசைகளைத் துறந்தவர்களாக சஞ்சரித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். ஹம்ஸ, க்ரௌஞ்ச பக்ஷிகள், சாரஸ பக்ஷிகள் நாதம் செய்ய வைதூர்யம் போல் பிரகாசமாக விளங்கிய நீண்ட சமவெளிகளை, அழகிய மனதை கவரும் வண்ணம், சமுத்திரம் என்று நினைக்கும்படி பெரியதான, வெண்மையான, விசாலமான திவ்ய மலைகளுடன், தாள வாத்யங்களும், நாதம் நிறைந்த கீத சப்தங்களுடனும் விளங்கிய விமானங்களை (வீடுகளின் மேல் தளம்) கண்டபடி சென்றான். தவ வலிமையால் மூவுலகையும் வெற்றி கொண்டவர்கள் தேவையை உணர்ந்து உபசாரம் செய்ய கந்தர்வர்களும், அப்ஸர ஸ்த்ரீகளும் சுற்றி வரக் கண்டான், குபேரன் தம்பியான ராவணன். நாசிக்கு இதமான வாசனை வீசும் சந்தன மரக் காடுகளைத் தாண்டி, ஆயிரக் கணக்கான மரங்கள் நிறைந்த சந்தன வனங்களை கண்டபடி சென்றான். அகருவை முக்யமாக கொண்ட வனங்கள், உபவனங்கள், தக்கோலம் எனும் ஜாதியின் பழங்கள், மிகுந்த வாசனையுடையவை, இவைகளை கண்டான். தமாலபுஷ்பம் நிறைந்த மரங்கள், குல்மா மரங்கள், மரீச மரங்கள், இவைகளிலிருந்து விழுந்து கிடக்கும் புஷ்பங்கள் கரையருகில் குவிந்து கிடக்க, சங்கங்கள் பெருமளவில் கிடக்க, பவழக் கூட்டங்கள் பொன்னிறமான மலைகள், (அல்லது பவழம் பொன் மலை போல குவிந்து கிடந்தது) ப்ரஸன்னமான குதூகலத்தை விளைவிக்கும், மனதை கவரும் அருவிகள், வெள்ளித் தகடாக பிரவகித்ததைக் கண்டான். தன, தான்யம் நிறைந்த ஸ்த்ரீ ரத்னங்கள் வளைய வர, யானைகளும், குதிரைகளும், ரதங்களும் கூட்டமாக தெரிந்த நகரங்களை பார்த்தபடி சென்றான். சமமாக எங்கும் பசுமையாக, ம்ருதுவாக வருடிக் கொடுக்கும் காற்றுடன் கூடிய சிந்து ராஜனுடைய எல்லையில்லாத, தேவலோகத்துக்கு இணையான தேசத்தைக் கண்டான். அங்கு அடர்ந்து கறுத்தும், மேகம் போல் தெரிந்த ந்யக்ரோத மரத்தின் கீழ் நிறைய ரிஷிகள் இருக்கக் கண்டான். கண் எதிரில் அதன் கிளைகள் நூறு யோசனை தூரம் நீண்டு, மிகப் பேரிய உருவம் உடைய யானையையும், ஆமையின் எலும்புகளையும், சாப்பிடுவதற்காக, கருடன், இதன் கிளைகளில் கொண்டு வந்து வைத்துக் கொண்டது. திடுமென பக்ஷிராஜன் கொண்டு வந்து வைத்த பாரத்தால், இலைகள் நிறைந்த கிளை ஒன்று சட சடவென்று முறிந்தது. அந்த மரத்தடியில் மஹரிஷிகள், பலர் இருந்தனர். வைகானஸர்கள், மாஹா, வாலகில்யா: மரீசிபா:, ஆஜா, மற்றும் தூரா: என்பவர்கள். அவர்கள் மேல் விழுந்து விடாமல் அந்த உடைந்து போன பெரிய கிளையை தூக்கிக் கொண்டு வேகமாக அந்த இடைத்தை விட்டு அகன்றது. தச யோசனை நீண்டிருந்த கிளையை ஒரு பக்கம், யானையையும், ஆமையையும் ஒரு பக்கம் என்று தூக்கிக் கொண்டு பறந்தது. வெகு தூரம் சென்று மாமிசத்தை சாப்பிட்டு விட்டு, அந்த மரக்கிளையை வைத்து சிறு மிருகங்களை பயமுறுத்தி விளையாடி விட்டு சந்தோஷத்துடன் சென்றது. மகரிஷிகளும் ஆபத்தின்றி தப்பித்தார்கள். இந்த மகிழ்ச்சியில் உற்சாகம் பெற்று மேலும் சாகஸம் செய்ய எண்ணி, இரண்டு மடங்கு விக்ரமத்துடன் மகேந்திரன் வீட்டிற்கு சென்று, இரும்பு கம்பிகளை உடைத்து, ரத்னமயமான க்ருஹத்துக்குள் நுழைந்து இடித்து தள்ளிக் கொண்டு உள்ளே போய், ரகசியமாக அம்ருதத்தை கைபற்றிக் கொண்டு வந்தது. அந்த மகரிஷி கணங்கள் வழக்கமாக அமரும், சுபர்ணன் அடையாளம் செய்து வைத்திருந்த, சுப4த்ரம் என்ற பெயருடைய ந்யக்4ரோத3 மரத்தை குபேரன் சகோதரனான ராவணன் கண்டான். சமுத்திர கரையை அடைந்து நதிகள் அரசனான சமுத்திரத்தைக் கடந்து, ஏகாந்தத்தில் இருந்த காட்டின் நடுவில், அழகிய ஆசிரமத்தைக் கண்டான். அங்கு க்ருஷ்ணாஜினம் தரித்து ஜடா முடியுடன், வல்கலை தரித்து, ஆகார நியமங்களுடன் வசித்த மாரீசன் என்ற ராக்ஷஸனைக் கண்டான். ராவணன் அங்கு வந்து சேர்ந்தவுடன், அந்த மாரீச ராக்ஷஸன், விதி முறைப் படி உபசரித்து, அமானுஷ்யமான எல்லா வித தேவைகளையும் தானே முன்னின்று பூர்த்தி செய்து போஜனம் ஜலம் கொடுத்து, குசலம் விசாரித்தான். லங்கா ராஜ்யத்தின் அரசனே, எல்லாம் நலமாக இருக்கின்றனவா? என்ன காரியமாக இவ்வளவு சீக்கிரம் இங்கு திரும்பி வந்திருக்கிறாய்? இவ்வாறு மாரிசன் சொன்னவுடன் ராவணன் மெதுவாக யோசித்து பின்வருமாறு சொன்னான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் மாரீசாஸ்ரம புனர்க3மனம் என்ற முப்பத்தைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 36 232)சஹாயைஷணா (உதவி செய்யவேண்டுதல்)
மாரீசா, கேள். நான் சொல்வதைக் கேள். மிகுந்த மனக் கஷ்டத்தில் இருக்கிறேன். என் மனக் கஷ்டம் தீர நீ தான் வழி சொல்ல வேண்டும். உனக்குத் தெரியும். என் சகோதரன் க2ரன் ஜனஸ்தானத்தில் இருந்தான். தூ3ஷணனும் என் சகோதரி சூர்ப்பணகா, த்ரிசிரஸ் எல்லோரும் இருந்தனர். மற்றும் ஏராளமான ராக்ஷஸ வீரர்கள், குறி தவறாமல் அடிக்கக்கூடிய வில் வீரர்கள் இருந்தனர். என் கட்டளைப்படி இந்த ராக்ஷஸர்கள், முனிவர்களை அவர்கள் செய்யும் தர்ம காரியங்களை செய்ய விடாமல் தடுத்து வந்தனர். பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்கள், கரன் சொல்வதை சிரமேற் கொண்டு செய்து வந்தவர்கள், இப்பொழுது ஜனஸ்தானத்தில் இல்லை. ராமனுடன் யுத்தம் செய்யச் சென்றார்கள். கரனை முன்னிட்ட ராக்ஷஸர்கள், எல்லா விதமான தாக்குதல்களையும் செய்ய வல்லவர்கள். கோபம் கொண்ட ராமனால் ரணத்தின் முன் நின்று ஒரு வார்த்தை கூட கடுமையாக பேசாமல், தன் வில் அம்புகளால் செய்து காட்டி விட்டான். உக்ர தேஜஸ் உடைய பதினாலாயிரம் ராக்ஷஸர்களை கால் நடையாக வந்த மனிதன், கூர்மையான பாணங்களால் அடித்து வீழ்த்தி விட்டான். க2ரனும் யுத்தத்தில் மாண்டான். தூ3ஷணனும் மாண்டான். திரிசிரஸும் யுத்தத்தில் அழிந்தான். இப்பொழுது தண்டகா வனம் பயமில்லாமல் போய் விட்டது. தந்தையால் மனைவியோடு விரட்டப் ப்ட்டவன், க்ஷீண ஜீவனம் செய்பவன், க்ஷத்திரிய குலத்திற்கு கேடாக வந்தவன், இந்த பெரும் சைன்யத்துக்கு யமனாக வந்து சேர்ந்தான். சீலம் இல்லாதவன், கடுமையானவன், பொல்லாதவன், மூர்க்கன், லோபி4, புலனடக்கம் இல்லாதவன், தன் தர்மத்தை விட்டவன், அதர்மமே உருவானவன். ஜனங்களுக்கு, உயிர்களை ஹிம்சை செய்வதையே கொள்கையாக உடையவன், எந்த விதமான விரோதமும் இல்லாமல், நல்ல எண்ணம் இல்லாத, அவனால் வேண்டுமென்றே என் சகோதரி காது, மூக்கு அறுபட்டு விரூபமாக ஆக்கப் பட்டாள். அவன் மனைவி, தேவ லோக பெண் போல இருப்பவளை ஜனஸ்தானத்திலிருந்து கொண்டு வரப் போகிறேன். என் முயற்சியில் நீ சகாயமாக இரு. உதவியாக இரு. மகா பலசாலியான நீ அருகில் இருந்தால் சகோதரர்களுடன் தேவர்களே வந்து நின்றாலும் நான் கவலைப் பட மாட்டேன். அதனால் எனக்கு உதவியாக இரு. நீ சமர்த்தன் ராக்ஷஸா. உனக்கு சமமாக வீர்யமோ, கர்வமோ, யுத்தத்தில் சாமர்த்யமோ, வேறு யாரிடமும் இல்லை. உனக்குத் தான் உபாயம் சொல்லத் தெரியும். மகா சூரன் நீ. மாயா பிரயோகங்களை நன்றாக அறிந்து வைத்திருக்கிறாய். இதற்காகத்தான் நான் உன்னிடம் வந்தேன், நிசாசரா. என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்., கேள். என் சொல்படி எனக்கு வேண்டிய உதவியைச் செய். நீ பொன்னிறமான மானாக உருவம் எடுத்துக் கொண்டு, வெள்ளியின் நிறத்தில் புள்ளிகள் உள்ள பொன் மானாக, அந்த ராமனுடைய ஆசிரமத்தில் சீதையின் கண்ணில் படும்படி சஞ்சரி. மிருக ரூபியாக உள்ள உன்னைப் பார்த்து சீதா மோகம் கொள்வாள். நிச்சயம் இதை பிடித்துத் தாருங்கள் என்று ராமனையும், லக்ஷ்மணனையும் வேண்டுவாள். அவர்கள் இருவரும் அந்த இடத்தை விட்டகன்றதும், நான் சுகமாக, சௌகர்யப்படி ஒரு தொந்தரவும் இல்லாமல் அபகரிப்பேன். ராகு சந்திர பிரபையை கிரஹிப்பது போல. அதன் பின் மனைவியை இழந்ததால் வாடி வருந்தும் ராமனை சுலபமாக கொல்வேன். என் மன விருப்பம் நிறைவேறிய திருப்தியோடு அவளை அடைவேன் என்றான். இந்த கதையைக் கேட்டு மாரீசனின் முகம் சுருங்கியது. மிகவும் பயந்தவனாக ஆனான். உதடுகளை ஈரமாக்கிக் கொண்டு, கண் கொட்ட மறந்தது போல இடுங்கிய கண்களோடு, இறந்தவன் போல வருத்தத்துடன் ராவணனை ஏறிட்டுப் பார்த்தான். மகா வனத்தில் ராமனுடைய பராக்ரமத்தை அறிந்தவன், பயமும், வருத்தமும் மனதை அலைக்கழிக்க, ராவணனைப் பார்த்து கை கூப்பி வணங்கியவனாக நல்லதைச் சொல்லலானான். அவனுக்கு ஹிதமானதை. அதுவே தனக்கும் ஹிதமானது என்று உணர்ந்து விவரமாக சொன்னான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஸஹாயைஷணா என்ற முப்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 37 (233) அப்ரிய பத்2ய வசனம்
(நன்மை தரக்கூடிய ஆனால் பிடித்தமில்லாத விஷயத்தை சொல்லுதல்)
ராக்ஷஸேந்திரன் சொன்னதைக் கேட்டு மலைத்த மாரீசன், பதில் சொல்ல வார்த்தை எழாமல் தவித்தான். பிறகு மிக கவனமாக, தான் சொல்வதில் எதுவும் தவறாகி விடக் கூடாதே என்று பயத்துடன், ராஜன், எப்பொழுதும் பிரியமாக பேசக் கூடிய ஜனங்கள் சுலபமாக கிடைப்பார்கள். பிரியமல்லாதது ஆனால் ஹிதமானது என்ற உபதேசத்தை செய்பவர்களும் குறைவு, அப்படி செய்தாலும், அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் அதை விடக் குறைவு. நீயே ராமனை குணங்கள் இல்லாதவனாக நினைக்கவில்லை. மகேந்திர, வருணன் இவர்களுக்கு சமமாக எண்ண வேண்டிய மகா வீர்யவானாகத் தான் நீயும் அறிந்திருக்கிறாய். அப்படி உனக்கு சொல்லாத ஒற்றன் சபல புத்தியுள்வனே ஆவான். ராக்ஷஸேஸ்வரா, உலகில் ராக்ஷஸர்கள் சௌக்யமாக இருக்க வேண்டுமா? ராமன் கோபம் கொண்டு உலகில் ராக்ஷஸர்களே இல்லாமல் செய்ய வேண்டுமா? உன் ஆயுள் முடிவதற்காகவே ஜனகன் மகளாக சீதை தோன்றினாளா? சீதையை காரணமாக காட்டி மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொண்டு அழைக்கப் பார்க்கிறாய். உன்னை நாயகனாக கொண்ட லங்கா நகரமும், ராஜ்யமும் ராக்ஷஸர்களுடன் சேர்ந்து கட்டுப் பாடின்றி காமுகனாக திரியும் உன்னால் முழுவதுமாக அழியப் போகிறதா? வேண்டாம். யாரோ உனக்கு தவறாக சொல்லி கொடுத்திருக்கிறார்கள். இது காமுகனான, சீலமில்லாதவன் செய்யும் செயல். பாபத்தை செய்யத் துணிந்து வந்திருக்கிறாயே, வேண்டாம். அரசன் மதி கெட்டுபோனால், அவன் ராஜ்யமும் அவனுடனேயே அழியும். ராமனை அவன் தந்தை கைவிடவும் இல்லை, துரத்தவும் இல்லை. மரியாதை இல்லாமல் அவன் ஒரு போதும் நடந்து கொண்டதும் இல்லை. அவன் லோபியும் அல்ல, சீலம் இல்லாதவனும் அல்ல. அவனை க்ஷத்திரிய குலத்துக்கு கேடாக வந்தவன் என்று சொல்வதும் நியாயமே இல்லை. கௌசல்யானந்தவர்த4னன், அவன். தர்ம குணங்கள் இல்லாதவன் என்று எப்படி சொல்கிறாய்? அவன் கொடியவனும் அல்ல, எந்த ஜீவனுக்கும் ஹிதமில்லாததை செய்பவனும் இல்லை. கைகேயியினால் ஏமாற்றப் பட்ட தந்தையைக் கண்டு சத்யவாதி என்ற தந்தையின் பெயருக்கு களங்கம் வரக் கூடாது என்றும், செய்கிறேன் என்று சொன்ன தந்தையின் வாக்கை காப்பாற்றும் பொருட்டும் காட்டுக்கு வந்தான். தந்தை தசரதனுக்கும், தாயான கைகேயிக்கும் பிரியமானதை செய்ய ராஜ்யத்தைத் துறந்து, போகங்களைத் துறந்து தண்டகா வனம் வந்துள்ளான். ராமன் கொடூரமானவனும் அல்ல. அவித்வானும் இல்லை. புலனடக்கம் இல்லாதவன் இல்லை. பொய்யாக, தவறாக கேள்விப் பட்டிருக்கிறாய். நீ இவ்வாறு பேசுவது தகாது. ராமன் தர்மமே உருவானவன். சாது. சத்ய பராக்ரமன். எல்லா உலகுக்கும் அரசன். தேவர்களுக்கு இந்திரன் போன்றவன். தன் தேஜஸால் வைதேஹியை ரக்ஷித்து வருகிறான். சூரியனுடைய ஒளியை பிடுங்கி வருவேன் என்று சொல்வது போல வைதேஹியை அபகரித்து வருவேன் என்று சொல்கிறாய். ராமனே திடுமென பற்றிக் கொண்ட நெருப்பு என்று வைத்துக் கொண்டால், அவனுடைய வில்லும் அம்பும் எரி பொருளாகும். தாங்க முடியாத பாணங்கள் கொழுந்து விட்டெரியும் தீ ஜ்வாலையாகும். இதில் தானாக போய் விழ முயற்சிக்காதே. நீயாக போய் ராஜ்யம், சுகம், உயிர் எல்லாவற்றையும் துறந்து, இப்பொழுது வாழும் இஷ்டமான வாழ்க்கையையும், நாசமாக்கிக் கொள்வாய். ராமன் தானே காலனாக நிற்க, அவன் வில் பெரிய வாயை திறந்து கொண்டு காத்திருக்க, அதிலிருந்து புறப்படும் சரங்கள் தீ ஜ்வாலையாக சுட, தாங்க முடியாத வீரத்தோடு, சத்ருக்களை அழிக்கும் அவன் பராக்ரமத்தை எதிர்த்து நிற்க முடியாமல், திணறுவாய். அவன் வில்லே கையில் எமனுடைய பாசக்கயிறு போல இருக்கும். இதை அறியாமல் நீயாக அவன் எதிரில் போய் நின்று உன் அழிவைத் தேடிக் கொள்ளாதே. ஜனகன் மகளுடைய தேஜஸும் உன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாதது. ஒப்பிட்டு சொல்ல முடியாதது. நரசிங்கமான ராமனுடையவள். சிங்கம் போன்ற அவன் தோள்களை ஆசிரயித்தவள். தன் உயிரை விட மேலாக ராமன் அவளை நினைக்கிறான். மனைவி, நித்யமும் அவனைத் தொடர்ந்து, அனுசரித்து செல்லும் பிரியமான பத்னி. மிதிலா நகரத்து செல்வ மகளான அவளை யாரும் அசைக்க முடியாது. நெருப்பின் ஜ்வாலை போன்றவள். அழகிய இடையுடையவள். ராக்ஷஸாதி4பா, எதற்காக இந்த வீண் முயற்சி? அவனை நீ யுத்தத்தில் எதிர் கொண்டால் அது தான் உன் வாழ்வின் முடிவு என்று எண்ணிக்கொள். உன் வாழ்க்கையோ, சுகமோ, ராஜ்யமோ எதுவுமே உனக்கு அரிய பொருளாகிவிடும். இன்னும் நிறைய நாள் உயிருடன் இருந்து அனுபவிக்க எண்ணம் இருந்தால், ராமனோடு மோதாதே. அவனுக்கு எதிராக எதுவும் செய்யாதே. எல்லா மந்திரிகளுடனும், விபீஷணனுடனும் கலந்து ஆலோசி. தர்மம் அறிந்த உன் மந்திரி வர்க்கங்களையும் கேட்டு நிச்சயம் செய்து கொள். குண, தோஷங்களையும், பலா பலன்களையும் பிரித்து ஆராய்ந்து பார்த்து உன் சக்தியையும் ஒப்பிட்டபின், எது ஹிதம், எது ஹிதமில்லாதது என்று எது நன்மை தரும், எது கெடுதல் என்பதை தீர்மானித்துக் கொண்டு காரியத்தில் இறங்கு. என் மனதில் பட்டதை சொல்கிறேன். கோஸல ராஜ குமாரனுடன் யுத்தம் செய்வது உன் சக்திக்கு அப்பாற்பட்டது. நிசாசர அரசனே, என் அறிவுரையைக் கேட்டுக் கொள். இந்த காரியம் நீ செய்யாதே. உனக்கு நல்லதல்ல.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் அப்ரியபத்2ய வசனம் என்ற முப்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 38 (234) ராமாஸ்திர மகிமா (ராமனின் பாணங்களின் மகிமை)
ஒரு சமயம் நான் காடுகளில் திரியும் பொழுது, ஆயிரம் யானை பலம் உடையவனாக, தன் வீர்யத்தில் கர்வமும் உடையவனாக பெரிய மலை போல இருந்தேன். நீல மேகம் போன்ற நிறமும், பத்தரை மாற்றுத் தங்கத்தாலான குண்டலங்களும், வில்லும், ஆயுதங்களும் ஏந்தி உலகத்தில் எல்லோரும் பயப்படும் வண்ணம் தண்டகாரண்யத்தில் அலைந்து திரிந்தேன். ரிஷி மாமிசம் தான் ஆகாரம். விஸ்வாமித்திரர் என்ற மகா முனிவர் என்னிடம் பயந்து தானே போய் தசரத ராஜாவிடம் வேண்டிக் கொண்டார். நரேஸ்வரா, மாரீசன் மிகவும் பயங்கரமானவன். என்னால் அவனை சமாளிக்க முடியவில்லை. இந்த ராமன் தான் எங்களை காப்பாற்ற முடியும். அவனை என்னுடன் அனுப்பு, எனவும், தசரத ராஜா, முனிவரே, என் மகன் பா3லன். பன்னிரண்டு வயது குழந்தை. இன்னும் அஸ்திர சஸ்திரங்களை அறியாதவன். வேண்டுமானால் சைன்யத்துடன் நான் வருகிறேன். உங்கள் சத்ருக்களை நாசம் செய்கிறேன். ராஜா இவ்வாறு சொல்லவும், முனிவர் சொல்லுவார். அந்த ராக்ஷஸனை எதிர்க்க, ராமன் அன்றி வேறு யாராலும் முடியாது. நீ தேவர்களைக் கூட யுத்தத்தில் காப்பாற்றியது அறிந்ததே. நீ செய்த மகத்தான காரியங்களை மூவுலகும் அறியும். ஆனாலும் உன் பெரிய சைன்யம் இங்கேயே இருக்கட்டும். இவன் பா3லனேயானாலும் அந்த மாரீசனை அடக்க சாமர்த்தியம் உள்ளவன். ராமனை அழைத்துக் கொண்டு போகிறேன், உனக்கு மங்களம் உண்டாகட்டும். ராஜன், ராமனைத் தா என்று கேட்டு முனிவர் ராமனை மிகவும் மகிழ்ச்சியோடு தன் ஆசிரமத்திற்கு அழைத்து சென்று விட்டார். பின்னர் தண்டகாரண்யத்தில் யாகம் செய்ய தீக்ஷை ஏற்றுக் கொண்ட முனிவருக்கு பாதுகாவலாக, தன் வில்லை தயாராக வைத்துக் கொண்டு ராமன் நாலா புறமும் காவல் காத்தபடி கவனமாக நின்றான். சூது வாது அறியாத ஸ்ரீமான், பத்ம பத்ரம் போன்ற கண்களையுடையவன். காக பக்ஷம் எனும் முன் குடுமி வைத்துக் கொண்டு சிறுவன், கையில் வில்லும், அடர்ந்த கேசமும், பொன் மாலைகள் மார்பில் புறள, தன் தேஜஸால் தண்டகாரண்யத்தையே பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்தான். இளம் சந்திரன் உதித்தது போல இருந்தான், ராமன். வரங்கள் பெற்றதால் என் பலத்தில் அபார கர்வம் கொண்டிருந்த நான் அலட்சியமாக அந்த ஆசிரமம் சென்றடைந்தேன்.என் குண்டலங்கள் பத்தரை மாற்றுத் தங்கத்தாலானது. அதன் ஒளி என் நீல மேகம் போன்ற பெரும் தேகத்தில் பட்டு சிதறும். நான் உள்ளே நுழைந்ததைக் கண்ட உடனே, அவசரமாக ஆயுதத்தை எடுத்து தயாராக இருந்த வில்லில் பூட்டி என் மேல் பிரயோகம் செய்தான். பரபரப்புடன் அவன் பிரயோகம் செய்த பாணங்களை, அவனுடைய மகிமை தெரியாமல், பா3லன் இவன் என்று எண்ணி லட்சியம் செய்யாமல் நான் விஸ்வாமித்திரருடைய யாக வேதி3யை நோக்கி ஓடினேன். எதிரிகளை ஒழிப்பதில் வல்லவனான ராகவன் என் மேல் கூர்மையான அம்பால் அடித்தான். அந்த அம்பு என்னை சத யோஜனை தூரம் தள்ளி, சமுத்திரத்தில் கொண்டு தள்ளியது. என்னை அவன் அப்பொழுது கொல்ல விரும்பவில்லை. வீரனான அவனால் நான் காப்பாற்றப் பட்டேன். அவனுடைய சர வேகத்தால் தள்ளப் பட்டு, எதுவும் செய்ய இயலாமல் ஆழமான சமுத்திரத்தில் போய் விழுந்தேன். வெகு நேரம் கழித்து நினைவு வந்து, நான் லங்கைக்கு திரும்பிச் சென்றேன். இவ்வாறு அவனால் உயிர் போகாமல் தப்பி பிழைத்தேன். அந்த சமயம் ராமன் சிறுவன். அஸ்த்ர சஸ்திரங்களை அறியாதவன். அப்பொழுதே அவன் குறி தவறாமல் அடித்தான். அதனால் தான் உன்னை தடுக்கிறேன். ராமனுடன் விரோதம் வைத்துக் கொள்ளாதே. மீறி செய்தால், விளைவு பயங்கரமாக இருக்கும். ராக்ஷஸ ராஜனே, விளையாட்டு, ரதி என்று மூழ்கியிருக்கும் ராக்ஷஸர்களுக்கும், சமாஜ உற்சவங்கள் செய்து கொண்டிருக்கும் லங்கா வாசிகளுக்கும், அனர்த்தம், கேடுதான், ராவணா, அவர்களும் வருந்துவார்கள். அழகிய மாட, மாளிகைகள் நிரம்பி, பல விதமான ரத்னங்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்ட லங்கா நகரம் மைதி2லி காரணமாக அழியப் போகிறது. தாங்கள் சுயமாக பாபம் செய்யாத போதும், அப்பழுக்கின்றி இருப்பவர்களும் கூட பாபிகளின் சங்கத்தால், மற்றவர்களின் பாபம் காரணமாக அழிவை அடைகின்றனர். பாம்புகள் ஆக்ரமித்திருக்கும் நீர் நிலையில் மீன்கள் கஷ்டப் படுவது போல. திவ்யமான சந்தன பூச்சுகளுடன், திவ்யமான ஆபரணங்கள் அணிந்து உல்லாசமாக இருக்கும் ராக்ஷஸர்கள் உன் காரணமாக அடிபட்டு பூமியில் விழுவதை பார்ப்பாய்.. மனைவியை இழந்தவர்கள், மனைவியையும் உடன் அழைத்துச் செல்பவர்கள் என்று, ராக்ஷஸர்கள் பத்து திக்குகளிலும் பயந்து ஓடும் ராக்ஷஸர்கள், யுத்தத்தில் மாண்டவர்கள் போக மீந்தவர்கள், சரணம் இன்றி, அலை பாய்வதைக் காணப் போகிறாய். பாணங்கள் ஏக காலத்தில் வந்து விழுந்து, நெருப்பு ஜ்வாலையாக பற்றிக் கொண்டு எரிய, லங்கையை வெகு சீக்கிரத்தில் காணப் போகிறாய், சந்தேகமே இல்லை. பிறன் மனைவியை தீண்டுவது போன்ற பாபம் வேறு எதுவும் இல்லை. உன்னால் மணந்து கொள்ளப் பட்ட பெண்களே ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள். உன் மனைவியிடம் சுகமாக இரு. உன் குலத்தைக் காப்பாற்று. உனக்கு இஷ்டமான உயிரையும், செல்வ செழிப்பையும் ராஜ்யத்தையும் காப்பாற்று. அழகிய களத்ரங்களையும் (மனைவிகளையும்) மித்திரர்கள், பந்துக்கள், சுற்றத்தாரை வெகு காலம் அனுபவிக்க விரும்பினால், ராமனுடன் விரோதம் பாராட்டாதே. உன் நலனை விரும்பும் நல்ல நண்பன் நான். நான் சொல்வதைக் கேட்காமல் சீதையை பலவந்தமாக அபகரிப்பாயானால், உன் பலம் க்ஷீணமாகும். ராமனுடைய சரங்களால் அடிபட்டவனாக உயிரை இழப்பாய். பந்துக்களை யமனிடம் நீயே அழைத்துச் செல்பவனாக இருப்பாய்.
இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராமாஸ்திர மகிமா என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 39 (235) சாகாயகரணாப்யுபகம: (உதவி செய்ய மறுத்தல்)
எப்படியோ அந்த சண்டையில் அவனிடமிருந்து தப்பித்தவன், இன்னமும் அதை நினைத்தாலே நடுங்கிக் கொண்டிருக்கிறேன். நீயும் கேள். என்ன நடந்தது என்று சொல்கிறேன், பதில் பேசாதே, இடை மறிக்காதே. சிலர் எனக்கு ஆறுதல் சொல்லி தைரியமூட்டினர். சிலர் மனக்லேசத்தை நீக்கி திரும்ப தண்டகாரன்யம் வரை உடன் வந்தனர். அதிலும் முக்யமாக இருவர் அளித்த உற்சாகத்தில் நான் உண்மை நிலையை மறந்தேன். மிருக ரூபத்தில் தண்டகாரன்யத்தில் சஞ்சரித்தேன். நீண்ட நாக்கும், பெரிய உடலும், கூரிய பற்களுமாக மகா பலசாலியாக மாமிசம் தின்னும் மகா ம்ருகமாக சுற்றி வந்தேன். தவம் செய்யும் முனிவர்களை பயமுறுத்திக் கொண்டு, அக்னி ஹோத்ரம் நடக்கும் இடங்களிலும், மடங்களிலும், மரத்தடிகளிலும், அலைந்தேன். அவர்களை அடித்து, ரத்தத்தைக் குடித்துக் கொண்டு, மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டு திரிந்தேன். ரிஷி மாமிசங்களைத் தின்று க்ரூரமாக வனத்தில் வசிக்கும் ஜீவன்களை பயமுறுத்திக் கொண்டு, தண்டகா வனம் முழுவதும் பயமின்றி நடமாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது தபஸ்வியாக ராமனைக் கண்டேன். மகா பாக்யசாலியான வைதேஹியையும், மகா ரதியான லக்ஷ்மணனையும் கண்டேன். ஆகார நியமங்களோடு தவம் செய்பவனாக கண்டேன். உலகிலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாக, தவம் செய்யும் அவனை, அலட்சியமாக, தபஸ்வி தானே என்று எண்ணி, பழைய வைரத்தை மனதில் வைத்துக் கொண்டு கூர்மையான கொம்புகளால் முட்டுவது போல ஓடினேன். அவனோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல் மூன்று பாணங்களை விட்டான். பெரிய வில்லை இழுத்து விட்ட அந்த கூர்மையான பாணங்கள் கருட வேகத்தில், காற்று வேகத்தில் பாய்ந்து வந்தன. வஜ்ரம் போன்றவை, சத்ருக்களை அழித்தே தீரும் என்பது போல பயங்கரமானவை, எங்கள் ரத்தத்தை குடிக்க வந்தது போல எங்களைத் துரத்தின. இந்த பா3ணங்களின் தன்மையை முன்பே அறிந்திருந்தும் நான் அறிவிலியாக, ராமனை எதிர் கொண்டு போனதை நினைத்து பயந்து நடுங்கலானேன். என் கூட்டாளிகள் இருவரும் அந்த க்ஷணத்திலேயே மாண்டு விழுந்தனர். எப்படியோ உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்தேன், இங்கு ஒளிந்து கொண்டிருக்கிறேன், தவம் செய்யும் சாக்கில். தபஸ்வியாக ஆகி விட்டேன். மரங்கள் ஒவ்வொன்றிலும் ராமனை பார்க்கிறேன். வல்கலை மரவுரி தரித்து கையில் வில்லுடன் ராமன் நிற்பது யமன் பாசக் கயிறு ஏந்தி நிற்பது போலத் தெரிகிறது. ஆயிரக்கணக்கான ராமர்களைப் பார்க்கிறேன். ராவணா, இந்த காடே எனக்கு ராம மயமாகத் தெரிகிறது. ராக்ஷஸாதிபா, உன்னைத் தவிர, மற்ற எல்லாமே எனக்கு ராமனாக காட்சியளிக்கிறது. கனவில் ராமனைக் கண்டால் அலறி அடித்துக் கொண்டு விழித்துக் கொள்கிறேன். ராவணா, ரகாரத்தில் ஆரம்பிக்கும் பெயர்கள் எல்லாமே எனக்கு ராமனாகத் தெரிகிறது. பயத்தில் நடுங்கும் எனக்கு ரதம் என்றாலோ, ரத்னம் என்றாலோ கூட பயம் உண்டாகிறது. அவனுடைய பிரபாவத்தை அறிந்தவன் நான் சொல்கிறேன், கேள். ராமனுடன் விரோதம் வைத்துக் கொள்ளாதே. ரகு4 நந்தனன், ப3லியையும், நமுசியையும் கூட கொல்வான். என்ன வேண்டுமானாலும் செய்து கொள். என்னை மன்னித்து விடு. ராமனுடன் யுத்தம் செய்வதானாலும் செய்து கொள். என்னைத் திரும்பவும் பார்க்க விரும்பினால், ராமன் பேச்சை எடுக்காதே. எவ்வளவோ சாதுக்கள், கிரமமாக தர்மத்தை அனுஷ்டித்தவர்கள் கூட, மற்றவர்களின் அபராதத்தால், தன் பரிவாரங்களோடு அழிந்து காணாமல் போய் இருக்கிறார்கள். இதோ, நானும், உன் தவற்றால் அழியப் போகிறேன். நிசாசரா, உனக்கு விருப்பம் போல செய்து கொள். உனக்கு நன்மையைச் சொல்லி நான் திருத்த முடியும் என்று தோன்றவில்லை. ராமனோ, மகா தேஜஸ்வி. மகா ப3லமுடையவன். அவன் ராக்ஷஸ லோகத்துக்கு யமனாக ஆகி விடக் கூடாதே என்பது தான் என் கவலை. சூர்ப்பணகா சொல்லி, கரன் ஜனஸ்தானம் சென்றானே, அவன் கதி என்ன ஆயிற்று. அழிந்தான். ராமனுடைய துல்யமான வில் வித்தைக்கு முன்னால் நிற்க முடியாது. இப்பொழுது சொல்லு, ராமன் செய்த தவறு என்ன? இந்த வார்த்தையை ப3ந்து4 என்ற நல்லெண்ணத்தில் சொல்கிறேன். இதை ஏற்றுக் கொள்ளாவிடில் ப3ந்து4க்களோடு உயிரை விடுவாய். ராமனுடைய பாணங்களை எதிர்க்க முடியாமல் அடி பட்டு வீழ்வாய், இது நிச்சயம்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சகாய-அப்4யனுகமோ என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 40 (236) மாயா ம்ருக3 ரூப பரிக்3ரஹ நிர்ப3ந்த4:
(மாய மான் ரூபத்தை எடுத்துக் கொள்ள நிர்பந்தித்தல்)
மாரீசன் சொன்ன யுக்தமான வார்த்தைகளை கேட்டுக் கொண்டாலும் அதன்படி நடக்க ராவணன் தயாராக இல்லை. இறக்கும் தறுவாயில் உள்ள ஜீவன் மருந்தை ஏற்றுக் கொள்ளாதது போல. பத்2யமாகவும், ஹிதமாகவும் மாரீசன் நண்பனாக சொன்ன ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளாத ராக்ஷஸாதி4பன், காலனால் தூண்டப் பட்டவன் போல கடுமையாக பதில் சொன்னான். உப்பு மண்ணில் விதை விதைத்தாற் போல இந்த வார்த்தைகள் என் மனதில் பதியவில்லை. உன் வார்த்தைகள் பலனற்றவை. மாரீசனே, பொருத்தமில்லாத ஆலோசனைகள் சொல்கிறாய். நீ சொல்வதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. என்னை யாராலும் அசைக்க முடியாது. பாப சீலனான, மூர்க்கனான, அதிலும் மனிதனான ராமனுக்கு முன்னால் நின்று நான் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவன் கரனைக் கொன்றவன். ப3ந்துக்களையும், ராஜ்யத்தையும், தாயையும், தந்தையையும் விட்டு பெண் பிள்ளையின் வார்த்தையைக் கேட்டு, ஒற்றையடிப் பாதையில் வனம் வந்திருக்கிறான். அவனுடைய உயிருக்கும் மேலான சீதையை உன் முன்னாலேயே அபகரிக்கத்தான் வேண்டும். இது என் மனதில் நிச்சயம் செய்யப் பட்ட விஷயம். மாரீசா, இதை மாற்ற முடியாது. இந்திரனோடு, தேவர்கள் எல்லோரும் வந்தாலும், சுராசுரர்கள் வந்து நின்றாலும், என் முடிவில் மாற்றம் இல்லை. இதில் தோ3ஷமோ, குணமோ உன்னைக் கேட்டால் நீ சொன்னால் போதுமானது. இந்த காரியத்தில் அபா4யமோ, உபாயமோ நான் என் மந்திரிகளிடம் கேட்டு விசாரித்துக் கொள்கிறேன். அரசனிடம் கை கூப்பி வேலை செய்பவர்கள், தன் நிலை மறந்து விடக் கூடாது. அவனுக்கு ப்ரதிகூலம் இல்லாத சொல்லை, ம்ருது3வாக, ஹிதமாக, சுப4மாக சொல்ல வேண்டும். உபசாரத்தோடு மரியாதையாக பேச வேண்டியவர்கள், பூமியை ஆளும் அரசர்கள். நிந்திப்பது போன்ற ஆலோசனையை ஹிதம் என்று நினைத்து சொன்னாலும், கௌரவம் இல்லாத அந்த சொல், கௌரவத்தோடு பேசப் பட வேண்டிய அரசனுக்கு உகந்ததாக இருப்பதில்லை. அரசர்கள் பராக்ரமம் உடையவர்கள். ஐந்து விதமான முகங்களைத் தரிக்கிறார்கள். அக்னியின், இந்திரனின், சோமனின், யமனின், வருணனின் முகங்கள் இவை. தாங்க முடியாத தகிக்கும் உஷ்ணத்தையும், விக்ரமத்தையும், சந்திரன் போன்ற குளுமையான தயவையும், தண்டனையளிக்கும் தன்மையும், ப்ரஸன்னமான தன்மையும் ஒன்று சேர, அரசன் தாங்குகிறான். க்ஷணதா3சர, (ராக்ஷஸா) அதனால் எந்த நிலையிலும் பார்த்திபர்கள் எனும் அரசர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை பூஜிக்க வேண்டியதும் பிரஜைகளின் கடமை. உனக்கு தர்மம் தெரியவில்லை. மோகம் உன் புத்தியை மறைக்கிறது. தேடி வந்த என்னிடம் இது போல கடுமையான வார்த்தைகளைப் பேசுகிறாய். குண, தோஷங்களை நான் கேட்கும் பொழுது சொல். என் சக்தியைப் பற்றி உனக்கு தெரியாதா? இப்பொழுது சொல், பலசாலியே, இந்த பெரிய காரியத்தில் நீ உதவி செய்தாக வேண்டும். என் கட்டளைப் படி செய்ய வேண்டியது என்ன என்று சொல்கிறேன் கேள். சுவர்ண மயமான மான் ரூபம் எடுத்து, வெள்ளியின் நிறத்தில் புள்ளிகள் உடைய புள்ளி, மானாக, அந்த ராமனின் ஆசிரமத்தில் சீதையின் முன்னால் நடமாடு. வைதேஹியை ஆசை காட்டி வெகு தூரம் செல். மாயா ம்ருகமான உன்னைப் பார்த்து, ஆச்சர்யம் அடைந்து பொன்னிறமான இந்த மானைக் கொண்டு வாருங்கள் என்று உடனே வைதேஹி ராமனைக் கேட்பாள். ராமன் கிளம்பியதும் வெகு தூரம் அவனை இழுத்துச் செல். ஹா சீதே, ஹா லக்ஷ்மணா, என்று ராமன் குரலில் கத்து. இதைக் கேட்டு ராமன் இருக்கும் இடத்திற்கு சீதை லக்ஷ்மணனையும் அனுப்புவாள். ராமன் குரலைக் கேட்ட பரபரப்பில் லக்ஷ்மணனும் ஓடி வருவான். காகுத்ஸனும் முன்னால் போக, லக்ஷ்மணனும் தொடர்ந்து ஓடிய பின், நான் வைதே3ஹியை அபகரிப்பேன். சஹஸ்ராக்ஷன், ஆயிரம் கண்களுடைய இந்திரன், சசியை அபகரித்தது போல அபகரிப்பேன். இந்த காரியத்தை செய்து விட்டு உன் இஷ்டம் போல எங்கு வேண்டுமானாலும் போ. ராக்ஷஸா, ராஜ்யத்தில் பாதியைத் தருகிறேன். மாரீசா, இது உன் அதிர்ஷ்டமே. சௌம்யனே, போ. இந்த காரியத்தை நல்ல முறையில் செய்ய (சிவம்) நல்ல மார்கம் இதுவே. நான் உன்னை ரதத்தில் தொடர்ந்து வருவேன். தண்டகாரன்யத்தில் யுத்தம் இல்லாமல் ராமனை வஞ்சித்து, சீதையை அடைந்து, லங்கைக்கு திரும்பிச் செல்வேன். உன்னுடன் என் காரியம் நிறைவேறிய திருப்தியோடு. இதை நீ செய்ய மறுத்தால், மாரீசா, இதோ, இப்பொழுதே, உன்னைக் கொல்வேன். பலாத்காரமாக நான் சொன்னதை நீ செய்தே ஆக வேண்டும். அரசனை எதிர்த்து நிற்பவன் எப்பொழுதும் சுகத்தை அடைவதில்லை. அவனை நெருங்கி உன் உயிருக்கு ஆபத்து என்று பயந்தால், என்னால் அடிக்கப் பட்டு உனக்கு மரணம் நிச்சயம். அதனால் யோசித்துப் பார். இது இரண்டிலும் எது உனக்கு உகந்ததோ, அந்த மரணத்தை தேர்ந்தெடுத்துக் கொள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் மாயா ம்ருக3 ரூப பரிக்3ரஹ நிர்ப3ந்தோ4 என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 41 (237) ராவண நிந்தா3 (ராவணனை நிந்தித்தல்)
அரசனாக இருந்து ராவணன் இப்படி கட்டளையிட்ட பின், பயமின்றி ராக்ஷஸாதிபனை மாரீசன் நிந்தித்தான். கடுமையான வார்த்தைகளால் சாடினான். எந்த பாபி உனக்கு விநாசத்தை இப்படி உபதேசித்தானோ. புத்திரனோடும், ராஜ்யத்தோடும், மந்திரிகளுடனும் ஒட்டு மொத்தமாக அழிவாய். நீ சுகமாக இருப்பதை யாரோ விரும்பவில்லை, அதனால் தான் இப்படி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த ம்ருத்யு த்வாரம்- மரணத்தின் வாசலை உனக்கு காட்டியது யார்? சில ராக்ஷஸர்கள், உனக்கு சத்ருக்களாக இருந்து, உன்னால் அடக்கி ஒடுக்கப் பட்டவர்கள், பலவானான ஒருவருடன் உன்னை மோத விட்டு நாசம் செய்ய திட்டமிட்டு, நீ அழிவதைக் காண விரும்புகிறார்கள் போலும். யாரோ ஒரு அல்பன், நீ உன் செயலாலேயே நாசமாக வேண்டும் என்ற உத்தேசத்துடன் உன்னை இப்படி தூண்டி விட்டிருக்கிறான். ராவணா, உன் மந்திரிகள், வதைக்கப்பட வேண்டிய இந்த துஷ்டர்களை அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்களே. மகா பள்ளத்தில் விழ இருக்கும் உன்னை தடுக்காமல் இருக்கிறார்களே. நல்ல மந்திரிகள், காம வசமாகி தறி கெட்டுச் செல்லும் அரசனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை உடையவர்கள். ஆனால் அந்த நல்ல மந்திரிகள் தடுத்தும் கேளாமல் நீ வந்திருக்கிறாயோ. தர்மம் அர்த்தம், காமம், புகழ் இவைகளை வெற்றி வீரனே, அரசனுடைய தயவால் தான் மந்திரிகள் பலன் பெறுகிறார்கள். இவை விபரீதமாக போகும் பொழுது எல்லாமே வீணாகிறது. தலைவனின் குணக் கேடால் இவர்களும் எதிராக பலன்களைப் பெறுகிறார்கள். மற்ற ஜனங்கள் தர்மமும், புகழும், ராஜனை அடிப்படையாக கொண்டது. அதனால் எந்த நிலையிலும் அரசனைக் காப்பாற்றியே ஆக வேண்டும். கடுமையான சொற்களால் ராஜ்யத்தை ஆள முடியாது. நிசாசரனே, ப்ரதிகூலமாக நடந்து கொள்வதாலும், வினயம் இல்லாத போதும் ராஜ்யம் ஆள்வது முடியாது. உன் மந்திரிகள் உன்னுடைய கடுமையான ஆக்ஞைகளுக்கு பணிந்து போகிறார்கள். தவறு என்று அறிந்தும் உன்னோடு அவர்களூம் இதனால் பாதிக்கப் படுவார்கள். ஓட்டத் தெரியாத சாரதியின் கையில் வேகமாக செல்லும் ரதத்தை கொடுத்து, வழியும் நேராக இல்லாமல் போனால், அவன் செய்வதறியாது திகைப்பதைப் போல, ரதத்தை விழச் செய்வது போல ஆகும். எவ்வளவோ சாது ஜனங்கள், உலகில் யுக்தமாக தர்மத்தையே அனுஷ்டித்து வருபர்கள், மற்றவர்கள் தவற்றால் நாசம் அடைந்துள்ளனர். பிரதி கூலமான எஜமானனால் சுற்றார், உற்றாரோடு அழிந்திருக்கிறார்கள். இந்த முறையில் பிரஜைகளை நீ ரக்ஷிப்பாயானால், அவர்கள் மாட்டு சாணத்தில் மறைத்து வைத்திருக்கும் ஏலக்காய் போல தங்கள் சக்தியை இழப்பார்கள். முன்னேற வழியின்றி அமுக்கப்பட்டவர்களாக யாருக்கும் உதவியின்றி மடிவார்கள். ராவணா, இந்த ராக்ஷஸர்களுக்கு அரசனாக வந்து வாய்த்தாயே. அதனாலேயே ராக்ஷஸர்களின் அழிவு நிச்சயம். துர்புத்தியுடையவனே, புலனடக்கம் இல்லாத, கெட்ட குணங்கள் அனைத்துக்கும் இருப்பிடமானவனே, கடைசியாக காகம் உட்கார பனங்காய் விழுந்த கதையாக இந்த காரியம் என் தலையில் வந்து விழுந்ததே. என் செய்வேன். இன்றைய தினத்தை நினைத்து நீ நிச்சயம் வருந்தப் போகிறாய். சைன்யத்தோடு அழியும் பொழுது நீ நினத்துக் கொள்வாய். என்னை கொன்று விட்டு, உடனே ராமன், என்னைத் தூண்டி விட்டது யார் என்று பார்த்து உன்னையும் கொல்லப் போகிறான். எதிரியின் கையால் மரணமடைகிறேன். அதில் என் ஜன்ம சாபல்யம் ஆகும் ராமனை பார்த்த மாத்திரத்திலேயே நான் அழிந்தேன் என்று கொள். சீதையை அபகரித்துக் கொண்டு போய், நீயும் பந்துக்களோடு அழிந்ததாகவே கொள். சீதையை ஆசிரமத்திலிருந்து நீ அழைத்துக் கொண்டு வந்து விட்டால் நீயும் இருக்க மாட்டாய், நானும் இருக்க மாட்டேன். லங்கையும் இருக்காது. ராக்ஷஸர்களும் இருக்க மாட்டார்கள். உன் நன்மைக்காக உன்னை தடுக்கும் என்னை கோபித்துக் கொண்டு இவ்வளவு நிந்திக்கிறாய் ராக்ஷஸா. ஆயுள் முடியும் தறுவாயில் உள்ளவன், நண்பர்கள் சொல்லும் ஹிதமான உப தேசங்களைக் கேட்காமல், மேலுலகம் செல்லும் நேரம் வாய்த்து விட்டவர்கள் இப்படித் தான் செய்வார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராவண நிந்தா என்ற நாற்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 42 (238) ஸ்வர்ண ம்ருக3 ப்ரேக்ஷணம் (பொன் மானை அனுப்புதல்)
ராவணனைப் பார்த்து இவ்வாறு சொல்லிவிட்டு, தீனமாக போவோம் என்று சொன்னான். ராக்ஷஸ ராஜனிடம் பயம். என்னைப் பார்த்து விட்டால் ராமன் நிச்சயமாக ஆயுதத்தை எடுப்பான். வில்லும், அம்புகளும் எப்பொழுதும் அவன் கையிலேயே இருக்கும். அதன் பிறகு எனக்கு வாழ்வே இல்லை. ராமனை எதிர்த்து யாரும் உயிருடன் திரும்பியதில்லை. நீ தான் எதிர்த்து நிற்கிறாய். யம தண்டம் உன்னை துரத்துகிறது. நீ இவ்வளவு துராத்மாவாக இருக்கும் பொழுது நான் என்ன செய்வது? என்ன சொல்லி என்ன பலன்? இதோ போகிறேன். மகனே, உனக்கு மங்களம். நிசாசரனே, உனக்கு மங்களம். ராவணன் இந்த வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தான். மாரீசனை ஆரத் தழுவிக் கொண்டு, உன் போன்ற வீரர்களுக்கு இது தான் அழகு. என் வழியில் என்னைப் போல் பேசினாய். இந்த நிமிஷத்திலிருந்து நான் உன்னிடம் கொண்ட கோபமும் தீர்ந்தது. இதோ ரத்னங்களால் அலங்கரிக்கப் பட்ட இந்த ரதத்தில் ஏறிக் கொள். என் கூட வந்து என் ரதத்தில் வந்து வைதேஹிக்கு ஆசை காட்டி விட்டு உன் இஷ்டம் போல செல்வாய். சூன்யமான இந்த ஆசிரமத்திலிருந்து வேகமாக சீதையை அழைத்துக் கொண்டு வந்து விடுவேன். விமானம் போன்ற அந்த ரதத்தில் ராவணனும் மாரீசனும் ஏறிக் கொண்டு சீக்கிரமாக அந்த ஆசிரம பிரதேசத்தை விட்டுப் புறப்பட்டனர். அதே போல நகரங்களையும், வனங்களையும் பார்த்துக் கொண்டு, மலைகளையும், நதிகளையும் கடந்து, பல ராஷ்டிரங்களையும் நகரங்களையும் கடந்து தண்டகா வனத்தை, ராகவனுடைய ஆசிரமம் இருக்கும் இடத்தை அடைந்தனர். ராக்ஷஸர்கள் தலைவனான ராவணன் மாரீசனுடன் ஆசிரமத்தைக் கண்டான். அந்த காஞ்சன மயமான ரதத்திலிருந்து இறங்கி, மாரீசன் கைகளைப் பிடித்துக் கொண்டு ராவணன், இதோ ராகவனின் ஆசிரமம் வாழை மரங்கள் சூழத் தெரிகிறது. நண்பனே சீக்கிரம் நான் சொன்னபடி செய், நமது காரியம் நிறைவேறும் படி செய். என்றான். மாரீசனும், மிருக ரூபம் எடுத்துக் கொண்டு ராமனது ஆசிரம வாசலில் நடமாடினான். மிகவும் அத்புதமான காட்சியாக அது இருந்தது. மணிகள் நிரம்பிய கொம்பும், நுனியில் சந்திரன் போல வெண்மையும், கறுப்புமான முக அமைப்பு, சிவந்த பத்3மமோ, உத்பலமோ எனும் முகம், இந்திர நீல உத்பல புஷ்பம் போல காதுகள், சிறிது வளைந்து நிமிர்ந்த கழுத்து, இந்திர நீல வண்ண இலை போன்ற உதடுகள், முல்லை புஷ்பம் போன்ற வஜ்ரத்துக்கு இணயாக இறுகிய வயிறு, ஒளி வீசும் தேனீக்கள் போல புள்ளிகள் உடைய பக்கங்கள், தாமரையின் மகரந்தம் போன்ற அழகும், வைடூரியத்துக்கு நிகரான பாத குளம்புகளும், உடலும், முட்டிகளுமாக, மிக அழகாக சேர்ந்தாற் போல அமைந்த உடல் வாகும், இந்திரனுடைய ஆயுத நிறத்தில் வாலும் மேல் நோக்கித் தெரிய, மனதைக் கவரும் அழகிய வர்ணமுடையதாய், பலவிதமான ரத்னங்கள் பதித்திருக்க, ஒரு க்ஷணத்தில் ராக்ஷஸன் பரம சோபனமான அழகிய மானாக ஆனான். ராமனின் ஆசிரமத்தையும் சேர்த்து அந்த வனத்தையே ஒளி மயமாக ஆக்கிக் கொண்டு, காட்சிக்கு இனிய, மனதை கவரும் தோற்றத்துடன் ரூபத்துடன் அந்த ராக்ஷஸன் வைதேஹியை ஆசை காட்டி இழுப்பதற்காக, பல விதமான தாதுக்கள் மண்டிய மலைகளில் சஞ்சரித்தபடி, புல் வெளிகளில் நடந்து நூற்றுக்கணக்கான புள்ளிகளால் விசித்ரமாக ஆகி காட்சிக்கு இனியவனாக, மரங்களின் இலைகளை கடித்தும் தின்று கொண்டும் சஞ்சரித்தான். அழகிய ஆனால் வாசனையில்லாத கர்ணிகார புஷ்பங்கள் பூத்துக் குலுங்க நின்ற மரங்களும், வாழை எனும் கதலி மரங்களும் நிரம்பிய வீட்டின் முன் நின்று சீதையின் கண்ணில் பட வேண்டும் என்றே அந்த மான் மெதுவாக நடை போட்டது. தாமரை மலர் போன்ற அழகிய பின் புறம் கொண்ட அந்த மான் ராமனது ஆசிரம வாயிலில் நடந்தது. சுகமாக தன் போக்கில் நடந்து செல்வது போல சற்று தூரம் தள்ளிப் போய் பின் திரும்பி வந்து, ஒரு முஹுர்த்தம் வேகமாக போவது போல போய் திரும்பி வந்தது. பூமியில் உருண்டு விளையாடுவது போல விளையாடி அமர்ந்து கொண்டது. ஆசிரம வாசல் வழியாக மான் கூட்டங்கள் சென்றன. அவைகளுடன் தானும் நடந்து சென்று சற்று தூரம் சென்ற பின் திரும்பி வந்தது. சீதையைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் அல்லது சீதை தன்னைக் காண வேண்டும் என்ற எண்ணத்துடன், மிருக ரூபம் எடுத்த ராக்ஷஸன் தவிப்போடு காத்திருந்தான். அழகிய வட்டங்களாக அமைந்த அந்த ஆசிரம மண்டலத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. காட்டில் வசிக்கும் மற்ற மிருகங்கள், அருகில் வந்து முகர்ந்து பார்த்து பத்து திக்குகளிலும் ஓடின. அருகில் வந்த மிருகங்களை தன் சுபாவப்படி அடித்து சாப்பிடத் தோன்றிய எண்ணத்தையும் அடக்கிக் கொண்டு அவைகளை தொட்டு பார்த்ததோடு நிறுத்திக் கொண்டான். இந்த சமயம் விசாலாக்ஷியான வைதேஹி பூக்களை பறிக்கும் உத்தேசத்தோடு, மரங்கள் இருக்கும் இடம் வந்து சேர்ந்தாள். கர்ணிகார புஷ்பங்களையும், அசோக, சூத, புஷ்பங்களையும், மதுவுண்டது போல மயக்கும் விழிகளையுடைய சீதை , பறித்தபடி மெல்ல நடந்து சென்றாள். அந்த காட்டின் சூழ் நிலைக்கு சற்றும் பொருந்தாத ரத்னமயமான மானைக் கண்டாள். முத்துக்களும், மணிகளும் விசித்ரமாக அலங்கரிக்க, அழகிய பற்களும் உதடுகளும் கொண்டு, உடலில் பரவியிருந்த மயிர்கால்களும் அழகிய தாதுக்களால் ஆனது போல இருக்கக் கண்டாள். இதைக் கண்ட ஆச்சர்யத்தால் விரிந்த கண்களுடன், அதை சினேகமாக பார்த்தாள். பலவிதமான ரத்னங்கள் நிறைந்த மான் ரூபத்தை இது வரை கண்டதில்லை என்பதால். மாயா மான் ரூபம் கொண்ட ராக்ஷஸனும் அவள் கவனத்தை தன் பால் ஈர்ப்பதற்காகவே, அந்த வனத்தையே ஒளி மயமாக ஆக்கிக் கொண்டு சஞ்சரித்தது. அதிசயமான இந்த மானைக் கண்டு சீதை ஆச்சர்யம் அடைந்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஸ்வர்ண மிருக ப்ரேக்ஷணம் என்ற நாற்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 43 (239) லக்ஷ்மண சங்கா2 ப்ரதி சமாதானம்
(லக்ஷ்மணனின் சந்தேகத்தைக் கேட்டு சமாதானம் செய்தல்)
பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த சீதை அதைப் பார்த்து மகிழ்ந்தாள். பொன்னிறத்தில், வெள்ளியிலான புள்ளிகளுடன், இரு பக்கமும் அழகாகத் தெரிய அதிசயத்துடன் பார்த்தாள். பொற் கொடி அசைந்தாடுவது போல் இருந்த அவள், ஆச்சர்யத்தால் விரிந்த கண்களுடன் கணவனை அழைத்தாள் லக்ஷ்மணனையும் ஆயுதத்தோடு வரும்படி சொன்னாள். அவள் கூப்பிட்டதால் அருகில் வந்த ராம, லக்ஷ்மணர்கள் இருவருமே அந்த பொன் மானைக் கண்டனர். சுற்று முற்றும் பார்த்த லக்ஷ்மணன் சந்தேகம் கொண்டு ராமனிடம் சொன்னான். இது அதே மாரீச ராக்ஷஸன் தான். மிருக ரூபத்தில் வந்திருக்கிறான். ஆவலோடு வேட்டையாட வரும் அரச குலத்தினரை ஏமாற்ற இப்படி மாயா உருவம் எடுத்துக் கொண்டு ஏமாந்தவர்களை கொல்வான். அவனுக்கு தெரிந்த மாயா ஜாலம் இது. விரும்பியபடி உருவத்தை மாற்றிக் கொள்ள வல்லவன். மாயாவி என்பது தெரிந்தது தானே. பொன் மான் உருவம் எடுத்து வந்திருக்கிறான். இயற்கையில் இப்படி ஒரு மான் ஸ்ருஷ்டியே கிடையாது. லோகநாதா, இது மாயை தான் சந்தேகமேயில்லை. சௌமித்திரி சொல்வதில் கவனம் செலுத்தாமல், சீதை அந்த அழகிய மானின் விசித்ரமான தோலில் மனதை செலுத்தி மென் நகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். தன் கணவனிடம் சொன்னாள். ஆர்ய புத்ர, இந்த மான் மிகவும் அழகாக என் மனதை கவருகிறது. இதைக் கொண்டு வாருங்கள். நமக்கு விளையாட்டுப் பொருளாக இருக்கும். இந்த ஆசிரமத்தில் பலவிதமான மான்கள் அழகிய காட்சி தரும் விதமாக சஞ்சரிக்கின்றன. ஸ்ருமரா,. சமரா எனும் வகை மான்கள் நிறைய இருக்கின்றன. கரடிகள், புள்ளி மான்கள், வானரங்கள், கின்னரங்கள் இவை பலவிதமான விசித்ரமான உருவங்களுடன் சஞ்சரிக்கின்றன. இது போன்ற மானை இது வரை நாம் கண்டதில்லை. இதன் அழகு வித்தியாசமாக இருக்கிறது. பலவிதமான வர்ணங்களில் வித விதமாக புள்ளிகளும், ரத்னம் போல புள்ளிகளுமாக சேர்ந்து தெரிகிறது. இந்த வனப் பிரதேசத்துக்கே இதனால் சோபை உண்டாகியிருக்கிறது. ஆஹா என்ன அழகு, என்ன லாகவம், என்ன களை என் மனதை இந்த மான் தன் அத்புதமான ரூபத்தால் மயக்குகிறது. இதை பிடிக்கப் போய், உயிருடன் பிடித்து விட்டால் ஆச்சர்யம் தான், நமக்கு ஆனந்தமாக இருக்கும். வன வாசம் முடிந்து திரும்ப ஊர் போகும் பொழுது அந்த:புரத்துக்கு அலங்காரமாக இருக்கும். ஆர்ய புத்ராஸ்ரீ பரதனுக்கும், என் மாமியார்களுக்கும் இதைக் காட்டினால் நிச்சயம் சந்தோஷப் படுவார்கள். அதிசயமான உபகார பொருளாக இருக்கும். உயிருடன் பிடிக்க முடியாமற் போனால், இதனுடைய தோலை அழகாக தனியாக எடுத்து வைத்துக் கொள்வோம். இதைக் கொன்ற பின், பொன்னிறமான இதன் தோலை தரை விரிப்பாக பயன் படுத்துவேன். இதை பிடிப்பது கஷ்டமாக இருக்கும் என்று தோன்றுகிறது. இதைப் பார்த்து எனக்கு தோன்றும் ஆசையே நூதனமாக இருக்கிறது. அடக்க முடியாத இந்த ஆவல் பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படுவது இல்லை. இதன் அத்புதமான சரீரத்தால் எனக்கு தோன்றிய வினோதம் தான் இந்த ஆசைக்கு காரணமோ என்று நினைக்கிறேன். பொன்னாலான ரோமக் கால்கள், மணிகள் பதித்த கொம்பும், சந்திரன் போன்ற அழகும், இப்படி சீதை சொல்வதையும் கேட்டு, அந்த மானையும் பார்த்த ராமனின் உள்ளத்திலும் குதூகலம் தொற்றிக் கொண்டது. தானே, அதன் ரூபத்தால் கவரப் பட்டவனாக, சீதையின் தூண்டுதலும் சேர, ராமன் மகிழ்ச்சியுடன் லக்ஷ்மணனிடம் சொன்னான். இதோ பார் லக்ஷ்மணா, வைதேஹி இந்த மானை மிகவும் ஆசைப் படுகிறாள். பார், இது போல கண்களைக் கவரும் வண்ணம் மான்கள் இருக்காது. இந்த வனத்திலும் , நந்தவனங்களிலும், சைத்ர ரத பிரதேசங்களிலும் கூட, பூமியிலேயே வேறு எங்கும் இது போன்ற, இதற்கு சமமான மான் வகை இருந்ததாக கேட்டதேயில்லை. குறுக்கும் நெடுக்குமாக, பொன் வர்ணத்தில், அக்னிக்கு சமமான கோடுகள் பிரகாசமாக காண்கின்றன. அந்த கோடுகளே ஒளி மயமாக இருப்பதாகக் கூட தோற்றமளிக்கிறது. கனகம் போன்ற புள்ளிகள் சோபையளிக்கின்றன. இது ஹுங்காரம் செய்யும் போது வெளியில் நீட்டிக் கொண்டு தெரியும் நாக்கு, மேகத்திலிருந்து சமுத்திரம் கொட்டுவது போல இருக்கிறது. மரகதக் கல்லால் ஆன பாத்திரம் போன்ற முகம். சங்கமும் முத்தும் போன்ற வயிற்றுப் பிரதேசம், யாருக்குத்தான் இதைப் பார்த்து மனதில் ஆசை வராது. ஒளி வீசும் இந்த வர்ணத்தையும், ரத்னங்கள் ஒன்று சேர்ந்ததைப் போன்ற வனப்பையும் பார்த்து ஆச்சர்யம் ஏற்படாது? பெரிய வனங்களில் அரசர்கள், மாமிசத்திற்காகவோ, அல்லது விளையாட்டாகவோ, வேட்டையாடி மிருகங்களை கொல்வார்கள். வனங்களில் செல்வத்தைத் தேடிச் செல்வார்கள். பலவிதமான தாதுப் பொருட்களையும், மணி ரத்னம் சுவர்ணம் போன்ற விலையுயர்ந்த பொருட்களைத் தேடிச் செல்வார்கள். இது அரசர்கள் குணம். பணத்தை குவித்து, மேலும் சேர்த்து குவித்துக் கொண்டே போக வேண்டும். மனதில் நினைத்ததை எல்லாம் சேர்த்து வைத்துக் கொள்வது என்று ஒரு குணம். சுக்ரன் செய்தானே அது போல். எதோ ஒரு பொருளை நாடிச் செல்பவன், செல்லும் மார்கம் தவறாக இருந்தாலும், அதிக ஆசையுடன் அந்த பொருளைத் தேடுகிறான் என்றாலும் கூட, அர்த்த சாஸ்திரம் அறிந்தவர்கள், அந்த இலக்கையும் அடைய வேண்டிய ஒன்றாகவே சொல்கிறார்கள். இந்த மான் ரத்னத்தை மிகவும் அதிசயமான இதன் தோலை மைதிலி விரும்புகிறாள். இதில் என்னுடன் சேர்ந்து அமர ஆசைப் படுகிறாள். காதலி, பிரியகி, ப்ரவேணி, சாவிகி என்ற மான் வகைகளின் தோல்கள் இதன் ஸ்பரிசத்திற்கு சமமாக இருக்காது என்று நினைக்கிறேன். தவிர, ஆகாய மார்கத்தில் சஞ்சரிக்கும் தெய்வீகமான மிருகங்களின் வகையைச் சேர்ந்ததாக கூட இருக்கலாம். தாரா ம்ருக, மஹீ ம்ருக என்று இவைகளைச் சொல்வார்கள். அல்லது நீ சொல்வது போல, லக்ஷ்மணா, ராக்ஷஸனின் மாயையாக இருந்தால், இதை கட்டாயம் வதம் செய்தே ஆக வேண்டும். இந்த மாரீசன் கொடியவன். இவன் வனத்தில் வசிக்கும் முனி புங்கவர்களைத் துன்புறுத்தி வந்தான். பல ராஜ வம்சத்தினரை அரசர்களை தூக்கிக் கொண்டு போய் வேட்டையாடி இருக்கிறான். கொன்று குவித்திருக்கிறான். அதனாலேயும் இந்த ராக்ஷஸனை வதம் செய்தே ஆக வேண்டும். இதற்கு முன்னால் வாதாபி என்ற ராக்ஷஸன், தபஸ்விகளை ஏமாற்றி, வயிற்றில் இருந்து கொண்டு பிராம்மணர்களை கொன்று வந்தான். அஸ்வதரீ, தன் கர்பத்தைக் கொல்வது போல, ஒரு சமயம் லோபத்தினால், அகஸ்திய மகா முனிவரை, அவருடைய உண்மையான தேஜஸை அறியாமல் சாப்பிட முயன்றான். அவனுடைய எண்ணத்தை தெரிந்து கொண்ட அகஸ்திய முனிவர் சிரித்துக் கொண்டே, வாதாபியிடம் சொன்னார். வாதாபி, கணக்கில்லாத தபஸ்விகளை நீ ஏமாற்றி கவளீகரம் செய்தாய் அல்லவா, இப்பொழுது நீயும் என்னால் செரிக்கப் பட்டு விட்டாய் என்றார். அந்த வாதாபியைப் போல் இவனும் உலகில் முனிவர்களை ஏமாற்றுபவனாக இருக்க விடக் கூடாது. என்னைப் போன்றவர்களை புலனடக்கமும், தர்மத்தில் புத்தியும் உள்ளவர்களை அலட்சியமாக நினக்க விடக் கூடாது, வாதாபியை அகஸ்தியர் அழித்தது போல நான் இந்த மாரீச ராக்ஷஸனை அழிக்கிறேன். இங்கு நீ கவனமாக நில். தயாரான நிலையில் மைதிலியை காப்பாற்றிக் கொண்டு நிற்பாயாக. ரகுனந்தனா, இப்பொழுது என்ன செய்வது? நான் இதைக் கொல்வேன். அல்லது பிடித்து வருவேன். நான் போய் இந்த மிருகத்தை கொண்டு வரும் வரையில், இதன் தோலில் ஆசை வைத்த மைதிலியை கவனமாக பார்த்துக் கொள். இந்த விசேஷமான தோல் காரணமாகவே இன்று இந்த மிருகம் அழியப் போகிறது. நீ சற்றும் சளைக்காமல், இந்த ஆசிரமத்தில் சீதையை கண் காணித்துக் கொண்டு இரு. ஒரு அம்பினால் இந்த புள்ளி மானை அடித்துக் கொன்று இதன் தோலையும் எடுத்துக் கொண்டு சீக்கிரம் வந்து விடுவேன். லக்ஷ்மணா, மிக பலசாலியான பக்ஷி ராஜாவான ஜடாயு நம்மிடம் பரிவோடு சொன்ன புத்திமதியை நினைவு வைத்துக் கொள். எல்லா விதத்திலும் சந்தேகம் கொண்டு கண் இமைக்காமல் மைதிலியை பாதுகாப்பாய். ஒவ்வொரு க்ஷணமும் ஆபத்து வரும், வரலாம் என்று நினைவு வைத்துக் கொள் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் லக்ஷ்மண சங்கா2 ப்ரதி சமாதானம் என்ற நாற்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)s
அத்தியாயம் 44 (240) மாரீச வஞ்சனா (மாரீசனின் வஞ்சனை)
ரகு நந்தனனான ராமன், சகோதரனுக்கு இப்படி கட்டளையிட்டு, ஜாக்கிரதையாக இருக்கும் படி சொல்லிவிட்டு, வாளை இடையில் செருகிக் கொண்டான். உருக்கிய பொன் நிறத்தில் ஒளி வீசும் வாள் அது. தன் அலங்காரங்களுள் ஒன்றாகி விட்ட, மூன்றாக வளைந்த வில்லையும், முதுகில் இரண்டு அம்புகளையும் எடுத்து கட்டிக் கொண்டு கிளம்பினான். வஞ்சனை செய்ய வந்த மாரீசன், ராஜ குமாரன் தன் வலையில் விழுந்ததை பார்த்து பயந்து ஒரு சமயம் மறைந்தான். சற்று பொறுத்து கண்ணெதிரில் தோன்றினான். மிருகம் இருக்கும் இடத்தை நோக்கி இடையில் கட்டிய வாளும், கையில் வில்லும் அம்புமாக, தொடர்ந்து ஓடினான் ராமன். இதோ எதிரில் தெரிகிற உருவம் பளிச்சென்று தெரிய ஓடிச் சென்று அருகில் போக, போக, மேலும் மேலும் ஓட வைத்தபடி, அம்பு பட்டு விழுந்தது போல ஆசைக் காட்டி, சில சமயம் பரபரப்புடன் பயந்தது போல, சில சமயம் ஆகாயத்தை தொடுவது போல எம்பி குதித்து, சில சமயம் கண்களுக்கு தெரியும்படி, சில சமயம் மறைந்து சில சமயம் வனப்பிரதேசத்தில் இங்கும் அங்குமாக ஓடி அலைக்கழித்தது. ஆகாயமே துண்டாகி விழுந்ததோ, சரத் கால சந்திரன் போல் ஒரு சமயம், முஹுர்த்த நேரத்தில் வெகு தூரம் சென்று பிரகாசமாகத் தெரிந்தது. இதோ, இதோ என்று ராமனை வெகு தூரம் அழைத்துச் சென்று விட்டது. ஆசிரமத்திலிருந்து வெகு தூரம், மான் உருவம் எடுத்த மாரீசன் ராமனை இழுத்துச் சென்றான். இது போல ஆட்டம் காட்டியதைக் கண்டு, கோபம் கொண்டு, ஒரு மரத்தின் நிழலில் பசுமையான இடத்தில் சற்று நின்றான். உயிரோடு பிடிக்க வேண்டும் என்ற ஆசையால், அடிக்காமல் இருந்த அவனை சுற்று தூரத்தில் தென் பட்ட மான் பைத்தியமாக்கியது. மிருக ரூபத்தில் இருந்த நிசாசரன் சற்று தூரத்தில் மற்ற காட்டு மிருகங்களோடு மிருகமாக போவது போலத் தெரிந்தது. அதை பிடிக்க விரும்பி ராமன், திரும்பவும் பின் தொடர்ந்து ஓடினான். அந்த க்ஷணமே பயத்துடன் மறைந்து கொண்டது. மறுபடியும் சற்று தூரத்தில் அடர்ந்து இருந்த மரத்தடியிலிருந்த வெளிப் பட்டது. அப்பொழுது அதைப் பார்த்த தேஜஸ்வியான ராமன், இனி இதை கொல்ல வேண்டியது தான் என்று தீர்மானித்தவனாக, திரும்பவும் அம்பை தொடுத்து கோபத்துடன் ராமன் எய்ய தயாரானான். எதிரிகளுக்கு பயங்கரமான, சூரிய கிரணங்கள் போல ஒளி விடும் பாணத்தை தொடுத்து, த்ருடமான வில்லில் வைத்து, பலமாக இழுத்து அந்த மிருகத்தைப் பார்த்து அடித்தான். பெருமூச்சு விடும் நாகத்தைப் போல அந்த அம்பு சீறிக் கொண்டு பாய்ந்தது. தீப் பிழம்பு போன்ற அந்த ப்ரும்மாவினால் செய்யப் பட்ட அஸ்திரத்தை விட்டான். உத்தமமான அந்த அஸ்திரம், மிருக ரூபத்தைக் குத்தி பிளந்து கொண்டு, நிஜ ரூபத்தை அடைந்து விட்ட மாரீசனுடைய ஹ்ருதயத்தை பிளந்து அவனை வீழ்த்தியது. நிமிஷ நேரம் அவன் துடிதுடித்து சரத்தினால் அடிபட்டவனாக, கீழே விழுந்தான். இன்னும் அல்ப நேரமே ஜீவித்திருக்கப் போகும் மாரீசன், பெருங்குரலில் கத்திக் கொண்டு இறக்கும் தறுவாயில் தன் செயற்கையான மிருக உருவத்தை கை விட்டான். ராவணனுடைய வார்த்தையை நினைவு வைத்துக் கொண்டு, எதை சொன்னால் லக்ஷ்மணன் சூன்யமான ஆசிரமத்தில் சீதையை தனியே விட்டு இங்கே வருவான், அந்த சமயம் ராவணன் அவளைக் கடத்திச் செல்வது சுலபமாகும் என்ற விஷயங்களை மனதில் வைத்தவனாக, அதற்கான நேரம் வந்து விட்டதை உணர்ந்து, ராகவனைப் போன்ற குரலில், ஹா சீதே, ஹா லக்ஷ்மணா, என்று ஓலமிட்டான். தன் மர்மஸ்தானத்தில் பட்ட அடியின் வேதனையை தாங்க மாட்டாதவனாக, ராக்ஷஸ உருவத்துடன், தன் மிகப் பெரிய உடலை விட்டு மேலுலகம் சென்றான். அப்பொழுது விசித்ரமான இடையலங்காரமும், சர்வாபரண பூஷிதனாக, தங்க மாலைகளை அணிந்தவனாக, பெரும் பற்களையுடைய ராக்ஷஸனாக, அம்புகள் துளைக்கப் பட்ட அவன் உடல் பூமியில் விழுந்தது. பூமியில் விழுந்த, கோரமான ராக்ஷஸ உடல் ரத்தத்தில் மிதப்பதைப் பார்த்து, ராமன், மனதால் லக்ஷ்மணனும், சீதையும் இருக்கும் இடம் சென்றான். லக்ஷ்மணனின் எச்சரிக்கையை நினைவு படுத்திக் கொண்டான். மாரீசனின் மாயையே இது. முன்னாலேயே எச்சரித்தான். அப்படியே நடந்து விட்டது. இந்த மாரீசன் என் கையால் அடிபட்டு மாண்டான். ஆனால், ஹா சீதே, ஹா லக்ஷ்மணா என்று ஏன் கத்தினான்? இந்த கூக்குரலைக் கேட்டு சீதை என்ன நினைப்பாள்? எப்படி இருப்பாள்? லக்ஷ்மணன் என்ன நிலையில் இருக்கிறானோ? இப்படி தர்மாத்மாவான ராமன் நினைக்க, மாரீசனை வீழ்த்தியதால் மகிழ்ந்து மயிர்க் கூச்சல் எடுத்த நிலையில் ஒரு நிமிஷம் இருந்தவன், பெரும் கவலைக் குள்ளானான். கவலையில் பயமும் இருந்தது. தீவிரமாக பயம் மனதை ஆட்கொள்ள, மிருக ரூபமான ராக்ஷஸனைக் கொன்று, அவன் கூக்குரலைக் கேட்டதால் உண்டான பயம் மனதை அரிக்க, ஏதோ சில புள்ளி மான்களை ஆகாரத்திற்காக அடித்து எடுத்துக் கொண்டு, ஜனஸ்தானத்தை நோக்கி வேகமாக ஓடினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் மாரீச வஞ்சனா என்ற நாற்பத்து நாலாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 45 (241) சீதா பாருஷ்யம் (சீதை கடுமையாக பேசுதல்)
கணவனின் அடிபட்ட வேதனை நிறைந்த குரலைக் கேட்ட சீதை, லக்ஷ்மணனிடம் போய், பதட்டத்துடன், ராகவன் என்ன ஆனான் என்று பார்த்து வா என்று சொன்னாள். லக்ஷ்மணா, மிகவும் வேதனையோடு ஒலிக்கும் இந்த குரல் கேட்டு என் உயிர் என் வசத்தில் இல்லை. நடுக்காட்டில் பரிதாபமாக அலறும் உன் சகோதரனைக் காப்பாற்றுவாய், சீக்கிரம் ஓடிப் போய் பார். எந்த பாணத்தால் அடிபட்டாரோ, ராக்ஷஸர்களின் வசம் அகப்பட்டுக் கொண்டு, சிங்கத்தின் வாயில் அகப்பட்டுக் கொண்ட காளைக் கன்றாக தவிக்கிறாரோ, என்று புலம்பினாள். தமையனின் கட்டளையை மனதில் கொண்டு லக்ஷ்மணன் உடனே கிளம்பவில்லை. ஜனகன் மகள் கோபம் கொண்டு மேலும் சொன்னாள். சௌமித்ரே, மித்ர ரூபத்தில் வந்த சத்ரு நீ. இப்பொழுது தவிக்கும் நிலையிலும், அண்ணனைக் காப்பாற்ற நீ போகத் தயாராக இல்லை. ராமன் அழியட்டும் என்று நினைக்கிறாயா? என்னை அடையலாம் என்று எண்ணமா? என்னிடம் கொண்ட சபலத்தினால் தான் ராகவனைத் தொடர்ந்து போக மறுக்கிறாயா? அவருக்கு ஏற்பட்ட கஷ்டம் உனக்கு உகந்ததாக இருக்கிறதா? சகோதரனிடம் அன்பு என்று எதுவும் இல்லையா? மகா தேஜஸ்வி ராமன். உடனே ஓடிப் போய் அவனுக்கு உதவி செய்ய வேண்டியதிருக்க ஏன் மலைத்து நிற்கிறாய்? நான் என்ன செய்வேன்? இது போல சங்கடம் வரும், அந்த சமயம் என்னை அடையலாம் என்ற எண்ணத்துடன் தான் உடன் வந்தாயா? கண்களில் நீர் ஆறாகப் பெருக இப்படி புலம்பும் சீதையை லக்ஷ்மணன் சமாதானப் படுத்த முயன்றான். மான் குட்டி போல நடுங்கிக் கொண்டிருந்த சீதையைப் பார்த்து வைதே3ஹி, உன் கணவன் சாமான்யமானவன் இல்லை. பன்னக3, அசுர, க3ந்த4ர்வ, தே3வ, மானுஷ, ராக்ஷஸர்கள், இவர்களில் யாராலும் அவரை வெல்ல முடியாது. தேவி, இந்த தேவர்களில், மனிதர்களில், கந்தர்வர்களில், பக்ஷிகளில், ராக்ஷஸர்களில், பிசாச, கின்னரர்களில், மிருகங்களில், பயங்கரமான தா3னவர்களிடமும் அண்ணலை எதிர்த்து போரிடும் வலிமை உள்ளவன் எவனும் இல்லை. யாராலும் ராமனை யுத்தத்தில் வெல்ல முடியாது. வதைத்து விடுவானோ என்று பயப்படாதே. கவலையை விடு. ராமன் அருகில் இல்லாத சமயம், உன்னைத் தனியே வனத்தில் விட்டுப் போக முடியாது, அதனால் தான் நான் யோசிக்கிறேன். அவனுடைய பலம் அசாதாரணமானது. தானே சமாளித்துக் கொள்வான். மூன்று உலகிலும் யாராலும் ராமனை ஜெயிக்க முடியாது. அதனால் மனதை தளர விடாதே. கவலையை விடு. அந்த விசித்ரமான மிருகத்தை அடித்து விட்டு உன் கணவன் இதோ வந்து விடுவான். இந்த சப்தம் எப்படியோ ராமனின் குரலை ஒத்திருக்கிறது. ஏதோ செயற்கையாகத் தெரிகிறது. இதிலும் ஏதோ மாயையே. அந்த ராக்ஷஸன் மாயா ஜாலங்களில் வல்லவன். உன்னை என்னிடம் ஒப்படைத்து பாதுகாக்கச் சொல்லி விட்டு ராமன் சென்றான். என்னிடம் கொடுக்கப் பட்ட அடைக்கலப் பொருள் நீ. உன்னை ரக்ஷிக்க வேண்டியது என் கடமை. அதனால் உன்னை தனியே விட்டு போவது முடியாது. இங்குள்ள நிசாசரர்களுடன் நாம் விரோதத்தை வளர்த்துக் கொண்டு விட்டோம். க2ரனை அழித்ததிலிருந்து ஜனஸ்தானத்தில் நம் நிலைமை கவலைக் கிடமாக ஆகி விட்டது. வனத்தில் திரியும் ராக்ஷஸர்கள் வித விதமாக சப்தம் செய்வார்கள். கத்துவார்கள். ஹிம்சையையே விளையாட்டாக கொண்டவர்கள் இவர்கள். அதனால் கவலைப் படாதே என்று லக்ஷ்மணன் சொன்னது சீதைக்கு சமாதானமாக இல்லை. கோபத்தில் கண்கள் சிவந்தது. சத்யவாதியான லக்ஷ்மணனிடம், யாரைப் பார்த்து என்ன பேசுகிறோம் என்பதை உணராமல் கடுமையாக தாக்கிப் பேசலானாள். அனார்ய, பண்பில்லாதவனே, கருணை இல்லையா உனக்கு? கொடியவன் நீ, குலத்தை கெடுக்க வந்தவன். ராமனுடைய கஷ்டம் உனக்கு பிரியமாக இருக்கிறதா? ஏதோ கஷ்டத்தில் ராமன் அகப்பட்டுக் கொண்டு அலறும் பொழுது நீ மெதுவாக பேசிக் கொண்டிருக்கிறாய். சக்களத்திகளிடம் பிறந்த குழந்தைகள் ஒருவருக்கொருவர் இவ்வாறு இருப்பது ஆச்சர்யம் இல்லை. உன்னைப் போன்ற, மனதில் ஒன்று, வெளியில் ஒன்று என்று செய்யும் கெட்ட எண்ணம் கொண்டவர்கள், எதற்காக ராமனுடன் தொடர்ந்து வனம் வந்தாய்? ஒவ்வொரு அடியையும் தொடர்ந்து வந்தது எனக்காகவா? அல்லது பரதன் உன்னை ஒற்றனாக தொடர்ந்து போக அனுப்பினானா? அப்படி இருந்தால் அது நடக்காது சௌமித்ரே, நீயோ ப4ரதனோ இப்படி ஒரு எண்ணம் கொண்டிருந்தால் அது நடக்கவே நடக்காது. நான் எப்படி நீல மேக4 ஸ்யாமளனாக, பத்3ம பத்ரம் போன்ற கண்களும் உடையவனை கணவனாக அடைந்து அனுபவித்த பின், வேறு பாமர ஜனங்களை மனதாலும் நினைப்பேன் என்று நம்புகிறாய்? உன் எதிரில் உயிரை விடுவேன். சௌமித்ரே சந்தேகமே இல்லை. ராமனை விட்டு ஒரு க்ஷணம் கூட பூமியில் வாழ மாட்டேன். நாராசமான, கொடுமையான இந்த வார்த்தையைக் கேட்டு, கை கூப்பியபடி லக்ஷ்மணன், தன்னை வென்றவன் ஆனதால் எதிர்த்து பதிலேதும் கோபத்துடன் சொல்லாமல், தவிர்த்தான். பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன், வைதேஹி, நீ எனக்கு தெய்வத்துக்கு சமமானவள். இது போன்ற தகாத சொற்களை பெண்கள் பேசுவது அதிசயமல்ல. பெண்களின் சுபாவமே இது தான். உலகில் உள்ள சாதாரண, மனிதப் பெண்கள் பேசும் பேச்சு. தர்மத்தை கை விட்ட, சபல புத்தியுள்ள பெண்கள், இருவருக்குள் பேதபாவத்தை உண்டு பண்ணி, சண்டை மூட்டி விடுவார்கள். இது போன்ற அல்ப பேச்சைக் கேட்க எனக்கு சக்தியில்லை. ஜனகன் மகளே, வைதேஹி, என் இரண்டு காதுகளிலும் கொதிக்கும் நாராசம் போன்ற இந்த வார்த்தைகளை கொட்டி விட்டாய். என்னை சுடுகிறது. இந்த வனத்தில் சஞ்சரிக்கும் தேவதைகளே, கேளுங்கள், நன்றாக கேளுங்கள். நியாயமாக பேசும், நல்லதை சொன்ன என்னிடம் இவள் பேசும் பேச்சைக் கேளுங்கள். தி4க், த்வாம்- நீ நாசமாக போ. என்னை இப்படி சந்தேகிக்கிறாயே, துஷ்ட ஸ்வபாவம் கொண்ட ஸ்த்ரீத்வம் உன்னை பேச வைக்கிறது. குருவான ராமன் கட்டளையை மேற் கொண்டு உனக்கு காவலாக இங்கு நிற்கும் என்னைப் பார்த்து என்னவெல்லாம் சொல்லிவிட்டாய். காகுத்ஸன் இருக்கும் இடம் செல்கிறேன். நீ சௌக்யமாக இரு. அழகிய வதனம் உடையவளே, உனக்கு மங்களம். விசாலாக்ஷி உன்னை எல்லா வன தேவதைகளும் காப்பாற்றட்டும். கோ4ரமான நிமித்தங்கள் தெரிகின்றன. திரும்ப வந்து உன்னை ராமனோடு காண்பேனா? இன்னமும் அழுது கொண்டிருந்த மைதிலி மேலும் சொன்னாள். கோ3தா3வரியில் போய் விழுகிறேன். ராமன் இல்லாமல் நான் இருக்க மாட்டேன். லக்ஷ்மணா கழுத்தில் சுருக்கு மாட்டிக் கொள்வேன். அல்லது விஷம் சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன். நெருப்பில் விழுவேன். ராமனை பிரிந்த என் பாதம் கூட பிற புருஷன் மேல் பட விட மாட்டேன் என்று வயிற்றில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். மனக் கலக்கம் கொண்டு, வேதனையோடு அழும் அவளை, சௌமித்ரி ஒரு நிமிஷம் பார்த்து, விசாலமான கண்கள் குளமாக நின்றவளைப் பார்த்து சமாதானம் சொன்னான். அவனைப் பார்த்து சீதை பதில் ஏதும் சொல்லவில்லை. இதன் பின் சீதையை வணங்கி, செய்வதறியாமல், அவளைத் திரும்பத் திரும்ப பார்த்தபடி ராமன் இருக்கும் இடம் சென்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சீதா பாருஷ்யம் என்ற நாற்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 46 (242) ராவண பி4க்ஷூ சத்கார:
சீதையின் கடுமையான வார்த்தைகளால் மிகவும் பாதிக்கப் பட்ட லக்ஷ்மணன், ராமனை நினைத்து மனதில் வேண்டிக் கொண்டபடி தேடக் கிளம்பினான். இந்த இடைவெளிக்காக காத்திருந்த ராவணன் உடனே பரிவ்ராஜக (சன்யாசி) ரூபம் எடுத்துக் கொண்டு சீதையை அணுகினான். ம்ருதுவான காஷாய வஸ்திரம் தரித்து தலை முடியை சிகையாக கட்டி, குடையும் காலில் செருப்பும் இடது கையில் தண்டமும், கமண்டலமும் கொண்டு, நல்ல சன்யாசியைப் போல வைதேஹியை நெருங்கினான். சகோதரர்கள் இருவரும் இல்லாத வனத்தில் அவளை, சந்திர சூரியர்கள் இல்லாத சந்த்3யா காலம் போல, மகா தபஸ்வினியாக புகழ் வாய்ந்தவளை, ராம பத்தினியை, இளம் பெண்ணாக, கண்டான். சந்திரன் விட்டுச் சென்ற ரோஹிணி போல இருந்தவளை பயங்கரமான கிரகம் பிடிப்பது போல அருகில் சென்றான். அவனுடைய உக்ரமான தேஜஸை அறிந்த ஜனஸ்தானத்து மரங்கள் கூட அசையவில்லை. காற்றும் ஸ்தம்பித்து நின்றது. வேகமாக விழும் மலை அருவிகள் கூட சிவந்த கண்களுடன் அவன் பார்ப்பதைக் கண்டு, மெதுவாக போக ஆரம்பித்தன. கோதாவரி நதி பயத்துடன் மெள்ள சென்றது. ராமன் இல்லாத சமயம் வந்த த3சக்3ரீவனைப் பார்த்து மிரண்டன. பிக்ஷூ ரூபத்துடன் ராவணன் வைதேஹி இருக்கும் இடம் சென்றான். கணவனை நினைத்து கவலையுடன் இருக்கும் அவளை பவ்யமே அறியாதவன், மிக பவ்யமாக நெருங்கினான். சனி பகவான் சித்ரா நக்ஷத்திரத்தை அணுகுவது போல அணுகினான். பாபி, புல் மூடிய கிணறு போன்றவன், ராம பத்னியை பார்த்தபடி நின்றான். அழகிய பல் வரிசையுடைய சுபமான சீதையை பூர்ண சந்திரன் போன்ற முகமுடையவளைக் கண்டான். சோகத்துடன் கண்ணீர் பெருக்கியபடி பர்ண சாலையில் அமர்ந்து இருந்தவளைக் கண்டான். பத்3ம பத்ரம் போன்ற கண்களுடையவளை, மஞ்சள் நிற வெண் பட்டாடை அணிந்தவளை, மனதுள் மகிழ்ச்சியோடு நிசாசரன் அருகில் சென்றான். மன்மத பாணங்களால் துளைக்கப் பட்டவன், வாயால் ப்ரும்ம கோ4ஷம், வேத மந்திரங்களை உச்சரித்தபடி மரியாதையுடன் பேசலானான். ராக்ஷஸாதி4பன், உலகில் உத்தமமான அந்த ஸ்த்ரீயை லக்ஷ்மி தேவி பத்மாஸனத்தை விட்டு வந்தது போல இருப்பவளை ராவணன் புகழ்ந்து பேச ஆரம்பித்தான். காஞ்சனம் போன்ற நிறமுடையவளே, நீ யார்? மஞ்சள் நிற பொன்னிற பட்டாடை அணிந்தவளே, கமல புஷ்ப மாலையணிந்து சாக்ஷாத் லக்ஷ்மி தேவி போலவே இருக்கிறாயே, ஹ்ரீ:., ஸ்ரீ:, கீர்த்தி என்ற பாவனமான தேவியின் ரூபமோ, அப்ஸர ஸ்த்ரீயோ, லக்ஷ்மி தேவியே வந்து உதித்திருக்கிறாயோ, பாவனமான முகச் சாயல் உடையவளே, தன்னிஷ்டம் போல நடப்பவளே, செல்வ செழிப்போ, ரதியோ உனக்கு இரண்டும் சமமே. உன் கேசம் கறுத்து, சமமாக, மென்மையாக இருக்க, வெண்மை ஒளி வீசும் பல் வரிசை, ஓரத்தில் சிவப்பும், கறுப்பு தாரகையும் உடையதாக விசாலமான விமலமான கண்கள், விசாலமான ஜகனம், யானை தந்தம் போன்ற துடைகள், உன் அங்கங்கள் குறுகியும், சேர்ந்தும் இருக்க வேண்டிய முறையில் உள்ளன. பெரிய மேல் நோக்கிய தால பழங்கள் போன்ற ஸ்தனங்கள், மணி மாலைகள் மட்டுமே ஆபரணமாக உடையன. அழகாக சிரிப்பவளே,, அழகிய பற்களுடையவளே,, அழகிய கண்கள் உடையவளே, உல்லாசமான உடல் காந்தியுடையவளே, என் மனதை கொள்ளை கொள்கிறாய். காந்தா, நதி வெள்ளத்தால் கரை அடித்துக் கொண்டு போவது போல என் மனம் தவிக்கிறது. கைக்குள் அடங்கும் இடையுடையவளே, அழகிய கேசமும், கூடியிருக்கும் ஸ்தனமும் உள்ளவளே, நீ தேவ லோக பெண்ணா? கந்தர்வியா? யக்ஷ குலத்துப் பெண்ணா? கின்னரியா? இந்த ரூப சௌந்தர்யம் இந்த வர்க பெண்களிடம் கூட நான் கண்டதில்லையே. பூமியில் உன்னைத் தவிர வேறு யாருமே இவ்வளவு அழகாகத் தெரிந்ததில்லையே. முதல் தரமான ரூப சௌந்தர்யம், சுகுமாரி, இளம் வயது பெண் நீ. இந்த காட்டில் ஏன் வாசம் செய்கிறாய். என் புத்தி குழம்புகிறது. இந்த இடம் பயங்கரமான கோர ரூபமுடைய ராக்ஷஸர்களின் வாசஸ்தலம். நீ இங்கு வசிப்பது நல்லதல்ல. பாதுகாப்புடையதும் அல்ல. அழகிய மாட மாளிகைகள், நகரங்களும், உபவனங்களும், நல்ல வாசனையுடைய புஷ்பங்கள் நிறைந்த உத்யான வனங்கள் இவை தான் நீ நடந்து செல்லும் பாக்யத்தைப் பெறத் தகுந்தவை. உன்னைச் சார்ந்த ஆபரணங்கள் விசேஷமானவை. உயர்தர ஆகாரம், உயர்ந்த வஸ்த்ரங்கள் இவை உன்னால் சோபை பெறும். உன் கணவனும் நல்ல தகுதியுடையவனாக இருப்பான் என்று நினைக்கிறேன். நீ யார்? ருத்ர கூட்டங்களோ, மருத்கணங்களோ, வசுக்களோ இவர்களில், யார், உன்னை, இவ்வளவு அழகிய முகத்தையுடையவள், எங்கள் குலத்தவள் என்று சொல்லி பெருமைப் படுவர். நீ ஏதோ தெய்வ மங்கையாக எனக்குத் தோன்றுகிறாய். இந்த இடத்திற்கு தே3வர்கள் வருவதில்லை. க3ந்த4ர்வர்களோ, கின்னரர்களோ வருவதில்லை. இது ராக்ஷஸர்கள் வசிக்கும் இடம். நீ எப்படி இங்கு வந்தாய்? இங்கு இருப்பவை எல்லாம் வானரங்கள். கிளைக்கு கிளைத் தாவும் வானரங்கள், சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், கரடிக் கூட்டங்கள், எருமை மாடுகள், இவைகளைக் கண்டு நீ பயப் படுவதில்லையா? இவைகளின் நடுவில் நீ எப்படி இருக்கிறாய்? மதம் பிடித்த யானைகள் கோரமாக சத்தமிட்டுக் கொண்டு வேகமாக ஓடும். பார்க்கவே பயமாக இருக்கும், நீ எப்படி பயப்படாமல் இந்த மகாரண்யத்தில் தனியாக இருக்கிறாய்? யார்? யாருடைய மகள்? அல்லது மனைவி? ஏன்? என்ன காரணமாக தண்டகா வனம் வந்து தனியாக நடமாடுகிறாய், கல்யாணி, இந்த இடம் ராக்ஷஸர்கள் பயங்கரமாக நடமாடும் இடம் ஆயிற்றே. இப்படி துராத்மாவான ராவணன் புகழ்ந்து பேசக் கேட்ட மைதிலி, ராவணன் என்று அறியாமல், பிராம்மண வேஷத்தில் வந்தவனை அப்படியே நினைத்து, அதிதிகளுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்தாள். முதலில் தண்ணீர் கொடுத்து, வரவேற்று ஆசனம் கொண்டு வந்து போட்டு, போதும் என்றவுடன் சௌம்யமாக தெரிந்த அவனைப் பார்த்து பேசலானாள். கையில் பாத்ரமும், காவியுடையும், பொருத்தமாக அணிந்து, பிராம்மண வேஷத்தில், வேறு விதமாக சந்தேகப் பட இடமின்றி, இருந்தவனை அப்படியே பிராம்மணணாக எண்ணி, வரவேற்றாள். இதோ ப்ருசீ (புல்லால் ஆன ஆசனம்), பிராம்மணரே, இதோ பாத்யம், ஏற்றுக் கொள்ளுங்கள். வனத்தில் விளந்த உத்தமமான ஆகாரம் இதோ. இதை சாப்பிடுங்கள். இவ்வாறு நரேந்திரனான ராமன் மனைவி, களங்கமில்லாமல் முழு மனதுடன் வரவேற்கவும், அவளை நன்றாக உன்னித்து பார்த்து, அவளை பலவந்தமாக கடத்திச் செல்வதை மனதில் உறுதி செய்து கொண்டு, தன்னை தானே வதம் செய்து கொள்ளும் விதமாக ராவணன் திட்டமிடலானான். மிருகத்தை வேட்டையாடச் சென்ற பதியும், தொடர்ந்து தான் அனுப்பிய லக்ஷ்மணனும் கண்ணுக்கு எட்டும் வரையில் தெரியாத நிலையில் அவர்களை எதிர் நோக்கி பார்வையை செலுத்திய மைதிலிக்கு எதிரே, இருந்ததெல்லாம் பெரும் காடு, பசுமையாக, கரிய அடர்ந்த மரங்களுமாக அந்தகாரம் மட்டுமே.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராவண பிக்ஷூ சத்காரோ என்ற நாற்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 47 (243) ராவணாதி4க்ஷேப: (ராவணனை நிந்தித்தல்)
துறவியின் வேடத்தில் வந்த ராவணன், ஏதோ பொதுவாக விசாரிப்பது போல விசாரிக்கவும், அவனது வேடத்தை உண்மையாக நம்பிய வைதேஹி தன்னைப் பற்றிச் சொன்னாள். பிராம்மணன், மேலும் அதிதி, எதுவும் சொல்லாவிட்டால் என்னை சபிக்கக் கூடும் என்று எண்ணி ஒரு முஹுர்த்தம் யோசித்து விட்டு சீதா பதில் சொன்னாள். ஜனகருடைய மகள் நான். மிதிலா ராஜ்யத்தின் அரசன் ஜனகன் என் தந்தை. என் பெயர் சீதை. ராமனுடைய பிரியமான மனைவி. இக்ஷ்வாகு அரசர்களின் வீட்டில் வசித்து வந்தோம். மானுஷமான போ4கங்களை அனுபவித்தவாறு பன்னிரண்டு வருஷங்கள், எல்லா விதமான சௌகர்யங்களும், தேவைகளும் குறைவின்றி அனுபவித்தோம். பதின்மூன்றாவது வருஷம் ராஜா, என் பிரபுவை வரவழைத்து ராஜ்யாபிஷேகம் செய்வதாக, மந்திரிகளுடன் சேர்ந்து தீர்மானம் செய்து ராமனுக்கு முடிசூட்டு விழா ஏற்பாடாயிற்று. ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த பொழுது, கைகேயி என்ற ராஜாவின் மனைவி, வரம் வேண்டினாள். அவள் கேட்ட வரத்தை வாக்கு கொடுத்திருந்த என் மாமனார் கொடுத்ததை மதித்து எங்களுக்கு வனவாசமும், பரதனுக்கு அபிஷேகமும் என்று ஏற்றுக் கொண்டோம். இவை இரண்டையும் தான் தேவி கைகேயி தன் பர்த்தாவிடம் யாசித்தாள். சத்ய சந்தனான ராஜா, ந்ருபோத்தமன் என்று அரசர்களுள் சிறந்தவன் என்று பெயர் பெற்றவன் சற்று யோசிக்கவும் நான் சாப்பிட மாட்டேன், தூங்க மாட்டேன், நீர் குடிக்க மாட்டேன், ராமனுக்கு அபிஷேகம் என்றால் அதுதான் என் வாழ்வின் முடிவாகும் என்று நச்சரித்து, அவள் பிடிவாதம் பிடித்த பொழுது மாமனார் அவளைக் கெஞ்சி பார்த்தார். பலவிதமாக சமாதானம் செய்தார். அவள் கேட்கவில்லை. என் கணவருக்கு அப்பொழுது இருபத்தைந்து வயது, எனக்கு பதினெட்டு வயது. என் கணவர் மகா தேஜஸ்வி, உலகில் ராமன் என்று பெயர் பெற்றவன், குணவான், சத்யவான், ஒழுக்கம் நிறைந்தவன், விசாலமான கண்களும், நீண்ட புஜங்களும் உடையவன். எல்லா ஜீவன்களுக்கும் நன்மை செய்வதையே விரதமாக கொண்டவன். என் மாமனாரான தசரத ராஜா, என் கணவருக்கு முடி சூட்டவில்லை. முதல் நாள் சொன்னபடி அபிஷேகம் என்று நினைத்து, தந்தையின் அறைக்கு வந்தவனை, என் கணவரைப் பார்த்து கைகேயி அதட்டலாகச் சொன்னாள்.- உன் தந்தை கட்டளை நான் சொல்கிறேன் கேள், ராகவா. பரதனுக்கு இந்த ராஜ்யத்தை, இடையூறு இல்லாமல் முழுவதுமாகத் தர வேண்டும். அதனால் நீ காட்டில் ஒன்பது, ஐந்து வருஷங்கள் வசிக்க வேண்டும். காட்டுக்கு உடனே கிளம்பிப் போ, காகுத்ஸா. உன் தந்தையின் வாக்கை சத்யமாக செய்- என்றாள். அப்படியே ஆகட்டும் என்று கைகேயியிடம் சொல்லி விட்டு சிறிதும், பயமோ தயக்கமோ இன்றி என் கணவர் த்ருடமான கொள்கையுடையவர், உடனே கிளம்பி விட்டார். கொடுக்கவேண்டும், யாரிடமும் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது, சத்யம் தான் பேச வேண்டும், பொய் பேசக் கூடாது, பிராம்மணா, இது தான் ராமனுடைய உத்தமமான தர்மம். விரதம். இதை எப்பொழுதும் கடை பிடித்து வருபவன் ராமன். இவருடைய சகோதரன், தாயார் வேறு, சிறிய தாயார் மகன், லக்ஷ்மணன், என்று மகா வீர்யவான். சமர், யுத்தம் என்று வந்தால் எதிரியைத் தொலைக்காமல் விடமாட்டான். அவனும் உதவியாக ராமனுடன் வந்தான். அவனும் புருஷவ்யாக்4ரன் என்று பெயர் பெற்றவன். ராமனைப் போலவே த்ருடமான கொள்கைகளையுடையவன். தர்மத்தையே செய்பவன். தனுஷையும் எடுத்துக் கொண்டு ராமனை உடனே பின் தொடர்ந்து காட்டுக்கு வந்து விட்டான். நானும் வந்தேன். ஜடை முடி தரித்து, தாபஸ வேஷத்தில், என்னுடன் கூட சகோதரனும் உடன் வர, தண்டகாரன்யம் வந்து சேர்ந்தான், ராமன். நித்யம் தர்மத்தை செய்து வருகிறான். புலனடக்கம் கொண்டு தவம் செய்து வருகிறான். இப்படித்தான், கைகேயியின் காரணமாக மூவரும் இந்த காட்டிற்கு வந்து சேர்ந்தோம். இந்த கம்பீரமான காட்டில் அலைந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம். முஹுர்த்த நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இங்கேயே வசிக்கலாம். இதோ என் கணவர் வந்து விடுவார். காட்டில் கிடைப்பதை நிறைய எடுத்துக் கொண்டு, சேகரித்துக் கொண்டு வருவார். ருரூ என்று ஒரு வகை மான், கோதா, பன்றிகள் இவற்றைக் கொன்று நிறைய மாமிசம் எடுத்துக் கொண்டு வருவார். சரி, இப்பொழுது நீங்கள் யார்? பெயர், குலம், கோத்ரம் இவற்றைச் சொல்லுங்கள். பிராம்மணனே, தனியாக எதற்கு தண்டகாரன்யத்தில் திரிகிறீர்கள். இவ்வாறு ராம பத்தினி கேட்கவும் மகா பலசாலியான ராக்ஷஸாதிபன், ராவணன் கடுமையாக பதில் சொன்னான். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் அடங்கிய இந்த உலகத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் ராக்ஷஸ கணங்களின் நாயகன் நான் சீதே, நான் தான் ராவணன். உன்னை பொன்னிறமாக, பட்டாடையில் கண்டதிலிருந்து என் மனைவிகளிடம் எனக்கு ருசியே இல்லாமல் போய் விட்டது. மாசற்றவளே, இங்கும் அங்குமாக அபகரித்துக் கொண்டு வந்த பல உத்தம ஸ்த்ரீகளின் கூட்டத்தில், நீ தலைமையாக, பட்ட மகிஷியாக எனக்கு விளங்குவாய். சமுத்திரத்தின் மத்தியில் மிகப் பெரிய நகரம் லங்கா என்ற என்னுடைய தலை நகரம். மலையின் உச்சியில் அமைந்துள்ளது. நாலா புறமும் சமுத்திரம் சூழ்ந்துள்ளது. சீதே, அங்கு என்னுடன் காடுகளில் சந்தோஷமாக சுற்றுவாயாக. இந்த வனவாசம் உனக்கு பிடித்தமாக இருக்காது. நிச்சயம். என் மனைவியாக ஆனால் ஆயிரக்கணக்கான தாஸிகள், சர்வாலங்கார பூஷிதையாக, சீதே, உனக்கு பணிவிடை செய்வார்கள். இவ்வாறு ராவணன் சொல்லக் கேட்டதும், ஜனகன் மகள் அடங்கா கோபம் கொண்டாள். கொடி போன்ற வளைந்து அழகிய தோற்றம் கொண்ட சீதை, அவனை சற்றும் லட்சியம் செய்யாமல், ராக்ஷஸன் என்றும் பயப் படாமல் பதில் சொன்னாள். மிகப் பெரிய மலையைப் போல அசைக்க முடியாத பலம் உடையவன் என் கணவன். மகேந்திரனுக்கு இணையானவன். பெரும் கடல் போல் வற்றாத தன்மை, யாராலும் அவனை குறைத்து மதிப்பிட முடியாத செம்மையுடைய ராமன் என் கணவன். நான் எப்பொழுதும் ராமனைச் சார்ந்தே இருப்பவள். எல்லா லக்ஷணங்களும் உடையவன். ந்யக்4ரோத மரம் போல, அடர்ந்த ஆல மரம் போல, அடைக்கலம் என்று வந்தோரை காப்பாற்றுபவனாக, அடியார்கள் கூட்டமாக சூழ்ந்துள்ளவன். சத்ய சந்தன், மகா பாக்யசாலி. என் கணவன் ராமன். நான் அந்த ராமனை எப்பொழுதும் சார்ந்தவள். நீண்ட கைகளும், அகன்ற மார்பும், சிங்கம் போல வீறு கொண்ட நடையும், ந்ருசிங்கமான, அந்த ராமனுக்கு மனைவி நான். எப்பொழுதும் அவனிடமே இருப்பவள். பூர்ண சந்திரன் போன்ற முகமுடையவன் ராமன். ராஜாவின் வாத்ஸல்யம் மிக்க மகன். புலனடக்கம் உடைய தனித் தன்மை கொண்டவன், புகழ் வாய்ந்தவன், மகாத்மா அவன். அந்த ராமனின் பத்னி, அவனையே சார்ந்து இருப்பவள். நீ ஒரு அல்ப குள்ள நரி. பெண் சிங்கமான என்னை விரும்புகிறாயா? எளிதில் அடைய முடியாதவள் நான். என்னைத் தொட உன்னால் முடியாது. சூரியனின் பிரபையைப் போன்ற காந்தியுடையவள் நான். துரதிர்ஷ்டம் பிடித்தவனே, சம்பக மரக்கட்டைகளை நிறையக் காணப் போகிறாய் (அடி வாங்க போகிறாய்) ராமனுடைய பிரிய மகிஷியை விரும்புகிறாயோ, மிருக சத்ருவான சிங்கம் பசித்திருக்கும்பொழுது எதிரில் நின்றவன் போல் ஆவாய். ஆல கால விஷம் கொண்ட பாம்பின் பல்லை பிடுங்க முயற்சிக்கிறாய். மந்தர மலையை கைகளால் தூக்கிச் செல்ல முயற்சிக்கிறாய். கால கூட விஷத்தை குடித்து விட்டு சௌக்யமாக போக விரும்புகிறாய். கண்களை ஊசியால் குத்திக் கொள்கிறாய். கூர்மையான கத்தியை நாக்கால் நெருடிப் பார்க்கிறாய். ராமனுடைய பிரியமான மனைவியை அடைய வேண்டுமோ, அது எப்படித் தெரியுமா, கழுத்தில் பெரிய கல்லைக் கட்டிக் கொண்டு சமுத்திரத்தை கடக்க முயலுவது போல. சூரிய சந்திரன் இரண்டையும் கைகளில் தூக்கிக் கொள்ள செய்யும் முயற்சி போலத் தான் இதுவும். ராமனுடைய பிரிய பார்யாவான என்னை பலாத்காரமாக அழைத்துச் செல்ல நினைக்கிறாயா. கொழுந்து விட்டெரியும் நெருப்பை, உடுத்திக் கொண்டிருக்கும் வஸ்த்ரத்தில் முடிந்து கொள்ள நினைப்பது போல இருக்கிறது. ராமனிடம் கல்யாண குணங்களோடு இணைந்து இருக்கும் மனைவியை கடத்த முயற்சிக்கிறாய். இரும்பினால் ஆன சூலங்களின் மேல் நடமாட விரும்புவது போல இருக்கிறது. ராமனுக்கு சமமான மனைவியை அடைய விரும்புகிறாயோ, காட்டில் சிங்கத்திற்கும், ஓநாய்க்கும் என்ன வித்தியாசமோ, சமுத்திரத்திற்கும், சிறிய ஓடைக்கும் என்ன இடை வெளியோ, சுத்தமான வீரனுக்கும் கள்ளைக் குடிப்பவனுக்கும் என்ன வித்தியாசமோ அந்த இடைவெளி, ராமனுக்கும் உனக்கும். தங்கத்திற்கும், கண்ணடி, இரும்புக்கும் என்ன தார தம்யமோ, சந்தனத்திற்கும், சேற்றிற்கும் என்ன இடைவெளியோ, யானைக்கும், பூனைக்கும் என்ன சம்பந்தமோ, அது போலத் தான் தா3சரதி2க்கும், உனக்கும் உள்ள தகுதி. காக்கைக்கும், வைனதேயனான க3ருடனுக்கும் என்ன இடைவெளியோ, வான் கோழிக்கும், மயிலுக்கும் என்ன இடைவெளியோ, சாரஸ, கழுதைக்கிடையில் என்ன இடை வெளியோ, அது தான் தாஸரதிக்கும், உனக்கும் உள்ள சம்பந்தம். சஹஸ்ராக்ஷனுடைய வில்லுக்கு சமமான பிரபாவம் உடைய, கூர்மையான பாணங்களுடையது ராமனுடைய வில். இதையும் மீறி நீ என்னை அபகரித்துக் கொண்டு போனாலும் நான் உனக்கு பணிய மாட்டேன். மக்ஷிகா என்ற கொசு, வஜ்ரத்தின் எதிரில் என்ன செய்ய முடியும்? ரஜனீசரன் (இரவில் சஞ்சரிப்பவர்கள்) என்று பெயர் பெற்ற ராக்ஷஸனிடம் இவ்வளவு பேசி விட்டு, களங்கமில்லாத த்ருடமான குரலில் பேசிக் கொண்டே வந்தவள், உடல் நடுக்கமுற, காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட வாழை மரம் போல துவண்டு போனாள். காலனுக்கு சமானவனான ராக்ஷஸன், நடுங்கிக் கொண்டிருக்கும் சீதையைப் பார்த்து, அவளை மேலும் பயமுறுத்தும் எண்ணத்தோடு. தன் குலம், ப3லம், வேலை, பெயர் எல்லாவற்றையும் பெருமையாக சொல்லிக் கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராவணாதி4க்ஷேபோ என்ற நாற்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 48 (244) ராவண விகத்த2னம் (ராவணனை நிந்தித்தல்)
சீதையின் கடுமையான பதிலைக் கேட்டுக் கொண்டேயிருந்த, ராவணன் பொறுமையிழந்தான். புருவத்தை சுருக்கிக் கொண்டு, ராவணன் தன்னைப் பற்றி மேலும் சொன்னான். வரவர்ணினீ, (சிறந்த வண்ணமுடையவளே) நான் வைஸ்ரவனின் தம்பி. மாற்றாந்தாய் மகன், ராவணன் என்ற பெயர் கொண்டவன். உனக்கு மங்களம் உண்டாகட்டும். (ப4த்3ரம் தே என்பது பேசும் பொழுது சொல்லும் ஒரு வழக்கு சொல், வாழ்த்து போல) நான் தசக்ரீவன், பத்து தலையுடையவன். மிகுந்த பிரபாவம் உடையவன். எந்த ராவணனைக் கண்டு தே3வர்களும், க3ந்த4ர்வர்களும், பிசாச, பக்ஷிகள், பாம்புகள் என்று உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் பயந்து, யமனே நேரில் வந்தாற்போல் நடுங்குகிறார்களோ, அந்த ராவணன் நான். மாற்றாந்தாயின் மகனான வைஸ்ரவணோடு வேறொரு காரணத்திற்காக சண்டை வந்தது. இருவரும் கோபத்துடன் த்வந்த யுத்தம் செய்தோம். அதில் அவனை என் விக்ரமத்தால் ஜெயித்தேன். இதனால் பயந்து செல்வ செழிப்பில் இருந்த என் அண்ணன் பயத்தால் நடுங்கி ஊரைவிட்டே ஓடி விட்டான். நர வாகனன் என்று பெயர் பெற்ற அவன் கைலாஸ மலையில் இருக்கிறான். இஷ்டப் படி செல்லக் கூடிய புஷ்பக விமானம் அவனுடையது, அதை என் பலத்தாலேயே கவர்ந்து கொண்டேன். அதில் ஏறி நான் ஆகாயத்தில் சஞ்சரிப்பேன். மைதிலி, கோபம் கொண்டால் என் முகத்தைப் பார்க்கவே பயப்படுவார்கள். மகா ரதிகள், தேவர்கள், இந்திரனை உள்ளிட்ட தேவர்கள் நடுங்குவார்கள். நான் நிற்குமிடத்தில் வாயு தயங்கி கொண்டே வீசுவான். கடுமையான வெப்பம் கொண்ட சூரியனின் கிரணங்களையும், அவன் குளுமையாக ஆக்கிக் கொள்வான். மரங்களின் இலை அசையாது, நதியில் நீர் நிலைத்து நின்று விடும். எங்கெங்கு நான் நிற்கிறேனோ, நடக்கிறேனோ, அங்கு இயற்கை கூட ஸ்தம்பித்து நிற்கும். சமுத்திரத்தின் அக்கரையில் சுபமான லங்கா என்ற நகரம் இந்திரனுடைய அமராவதி போல இருக்கும். ராக்ஷஸர்கள் நிறைந்தது. வெண்மையான ஒளி வீசும் பிராகாரங்கள் கூடியது. ஒவ்வொரு அறையும் தங்கத்தாலானது. வைடூரியத்தால் தோரணங்கள் கட்டப் பட்டு இருக்கும். யானை, குதிரை, ரதங்கள் விடாமல் ஓடிக் கொண்டிருக்கும். தாள வாத்யங்களும், மற்ற இன்னிசை வாத்யங்களும் சதா முழங்கிக் கொண்டிருக்கும். உத்யானங்கள் எந்த பருவம் ஆனாலும், அதன் புஷ்பங்களோ, பழங்களோ நிறைந்தே விளங்கும். எல்லா பருவங்களிலும் வேண்டியது கிடைக்கும். சீதே, அங்கு நீ என்னுடன் வசித்தால், ராஜ குமாரி, பிறகு நீ மனித இனத்தையே மறந்து விடுவாய். திவ்யமான போகங்களை அனுபவித்து பழகி விட்டால், வர வர்ணினி,, இதோ உயிர் போய் விடும் என்ற நிலையில் இருக்கும் ராமனை நினைத்து கூட பார்க்க மாட்டாய். த3சரத2 ராஜா தனக்கு பிரியமான புத்திரனை அரசு கட்டிலில் ஏற்றி விட்டு, மூத்த மகன் வீர்யம் குறைந்தவன் என்று காட்டிற்கு அனுப்பி விட்டான். அந்த ராமனை நீ நினத்தும் பார்க்க வேண்டாம். புத்தியில்லாத, ராஜ்யத்தை விட்டு நீக்கப் பட்ட ராமனோடு உனக்கு என்ன வேலை? தபஸ்வி வேஷம் போட்டுக் கொண்டு தவம் செய்யும் ராமனிடம், விசாலா உனக்கு என்ன வைத்திருக்கிறது? உலகில் உள்ள எல்லா ராக்ஷஸர்களுக்கும் தலைவன், தானே வந்து யாசிப்பவனை அடை. மத3னனின் சரங்களால் துளைக்கப் பட்டு தவிக்கும் அவனை நீ திருப்பியனுப்புதல் சரியாகாது. என்னை திருப்பியனுப்பினால் மிகவும் கஷ்டப் படுவாய், புரூரவனை ஊர்வசி காலால் மிதித்து அவமதித்த பின் கஷ்டப் பட்டது போல படுவாய். யுத்தம் என்று வந்தால், அந்த மனிதன், ராமன், என் விரலுக்கு சமமாக ஆக மாட்டான். உன் பாக்யம் நான் வந்து நிற்கிறேன். வரவர்ணினி, என்னை ஏற்றுக் கொள். இவ்வாறு ராவணன் சொல்லக் கேட்ட சீதா கோபத்துடன், முகம் சிவக்க, ராக்ஷஸாதிபனை நிந்திக்கலானாள். வைஸ்ரவரனை சகோதரனாகப் பெற்றவன், எல்லா ஜீவன்களாலும் நமஸ்கரிக்கப் படும் குபேரனுக்கு உடன் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டு இப்படி அதமமான செயலை செய்ய எப்படி முனைகிறாய். ராவணா, ராக்ஷஸர்கள் அனைவரும் நிச்சயம் நாசமாகப் போகிறார்கள். இவர்களுக்கு நீ துஷ்டராஜா, துர்புத்தி, புலனடக்கம் இல்லாதவன். இந்திரன் சசியை அபகரித்த பின் உயிர் வாழ்ந்தான். ஆனால் ராம பத்னியான என்னை அபகரித்தபின் உனக்கு வாழ்வே இருக்காது. நீ இந்திரனுடைய கையிலிருந்து சசியை அபகரித்து வேண்டுமானால் பலகாலம் உயிர் வாழ்வாயாக இருக்கும். அம்ருதம் அருந்தியிருந்தால் கூட, என் போன்றவர்களை தூஷித்தால், நீ நல்ல கதியடைய மாட்டாய்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராவண விகத்த2னம் என்ற நாற்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 49 (245) சீதாபஹரணம் (சீதையை அபகரித்தல்)
சீதையின் பேச்சைக் கேட்டு, பிரதாபம் உடையவனான ராவணன், கை மேல் கை வைத்துக் கொண்டு பெரும் உருவம் எடுத்துக் கொண்டான். திரும்பவும் மைதிலியிடம் யோசித்து கவனமாக சொன்னான். பைத்தியம் பிடித்தவள் போல நீ என் வீர்ய பராக்ரமங்களை சரியாக கேட்டுக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். நான் ஆகாயத்தில் நின்று கொண்டு பூமியை என் புஜங்களில் தாங்குவேன். சமுத்திரத்தை குடித்து தீர்ப்பேன். யமனுடன் நேருக்கு நேர் நின்று சண்டையிடுவேன், ஜயிப்பேன். கூர்மையான சரங்களைக் கொண்டு சூரியனைத் தாக்குவேன். பூமியை பிளக்க வேண்டுமா, பிளந்து காட்டுவேன். பித்து பிடித்தவளே, இஷ்டப் படி ரூபம் எடுக்க வல்ல என்னைப் பார். பதியாக பார். இவ்வாறு சொன்ன ராவணனின் கண்கள் நெருப்புத் துண்டம் போல ஆயின. கோபத்தால் கண்கள் இரண்டும் சிவந்து போயின. சௌம்யமான பிக்ஷூ ரூபத்தை விட்டு, ராவணன் தன் சுய ரூபத்தை எடுத்துக் கொண்டான். காலனைப் போல இருந்தான். வைஸ்ரவனன் சகோதரனான ராவணன். பத்தரை மாற்றுத் தங்கத்தாலான நகைகள் அணிந்தவன், சிவந்த கண்களுடன், மகா ஆங்காரத்துடன், நீல மேகம் போன்ற உடலும், பத்து தலைகளும், இருபது கைகளுமாக க்ஷணதா3சரன் என்ற ராக்ஷஸன் காட்சி கொடுத்தான். பரிவ்ராஜக சரீரத்தை விட்டு பெரும் உடலுடன் சுய ரூபத்தையடைந்தவன், கோபத்தால் சிவந்த கண்களுக்கு இணையாக சிவந்த ஆடைகளை அணிந்திருந்தான். கறுத்த குழலுடைய மைதிலியைப் பார்த்து, மூன்று உலகிலும் புகழ் பெற்ற ஒருவனை கணவனாக அடைய விரும்பினால், என்னை ஏற்றுக் கொள். அழகியே, நான் தான் உனக்கு ஏற்ற கணவன். என்னை ஏற்றுக் கொள். நான் தான் உனக்கு பொருத்தமான கணவனாக வெகு காலம் இருப்பேன். உனக்கு பிடிக்காததை ஒருகாலும் செய்ய மாட்டேன். பத்ரே, மனித ஜன்மம் என்ற நிலையை விட்டு, என் நிலையில் இருந்து பார். ராஜ்யத்திலிருந்து நீக்கப் பட்டவன், காரியம் ஈடேறாதவன், ராமன். அவனது ஆயுட் காலம் எல்லைக்குட்பட்டதே. என்ன குணம் என்று அவனை இப்படி அன்புடன் ஈடுபாட்டுடன் பார்க்கிறாய். மூடே, பண்டித மாநினீ, முட்டாளே, உன்னை பண்டிதையாக நினைத்துக் கொண்டிருக்கிறாய். எவன், ஸ்த்ரீ வார்த்தையைக் கேட்டு, யானைகள் உலவும் இடத்தில் வசிக்க வந்திருக்கிறானோ, புத்தியில்லாதவன், அவனை ஏன் நினைத்து உருகுகிறாய், என்று இப்படி சொல்லிக் கொண்டே, தானும் பிரியமாக பேசும், பிரியமாக பேசியே கேட்டு வந்தவளான மைதிலியின் அருகில் வந்து காமத்தால் அறிவிழந்த, துஷ்டாத்மா ராவணன் சீதையை பிடித்து இழுத்தான். ஆகாயத்தில் பு3த4ன், ரோஹிணியை அபகரித்தது போல. இடது கையால் சீதையின் தலை மயிரை பிடித்துக் கொண்டு, கால்களில் மற்றொரு கையினால் பிடித்து தூக்கினான், ம்ருத்யுவை போலவே இருந்த அவனைக் கண்டு, பெரிய புஜங்களும், கூரிய பற்களும் கொண்டு, பெரிய மலை போன்ற உடலும் கொண்டவனைக் கண்டு பயந்து நடுங்கி வனதேவதைகள் ஓடின. திவ்யமான கர அடையாளமிட்ட கரடு முரடான ரதம், மாயா சக்தியால் திடுமென அங்கு தோன்றியது. ஹேம வர்ணமான உடலுடன் ராவணனின் ரதம் வந்து சேரவும், அவளை கெட்ட வார்த்தைகளால் திட்டி பயமுறுத்திக் கொண்டே, ராவணன் சீதையை பலவந்தமாக தன் மடியில் இருத்திக் கொண்டு ரதத்தில் ஏறினான். ராவணனால் வலுக் கட்டாயமாக ரதத்தில் ஏற்றப் பட்ட சீதை பெரிய குரலில் அலறினாள். ராமா, என்று துக்கத்துடன் அரற்றினாள். வனத்தில் வெகு தூரம் சென்று விட்ட ராமனை கூவியழைத்தாள். காமம் என்பதே இல்லாத அவளை காமாதுரனான ராவணன் ஆகாய மார்கமாக கடத்திக் கொண்டு போனான். புத்தி பேதலித்தவன் போலும், மகா கஷ்டத்தில் சிக்கியவன் போலும், சென்றான். சீதை அலறினாள். கத்தினாள். ஹா லக்ஷ்மணா, மகா பா3ஹோ, குரு வார்த்தையை தட்டாதவனே, அதர்மமாக என்னை கடத்திக் கொண்டு போகிறானே, தெரியவில்லையா, நீ அறிய மாட்டாய். ராக்ஷஸன் என்னை கடத்திக் கொண்டு போகிறான். வாழ்க்கையில் சுகம், அர்த்தம் இவற்றை, தர்மத்தை நிலை நாட்ட என்று தியாகம் செய்து விட்டு வந்த ராக4வா, அதர்மமாக என்னை ராவணன் கடத்திச் செல்வதை அறிய மாட்டாயா. அவினீதர்கள், வணக்கம் இல்லாத கொடியவர்களை பணிய வைப்பாய் என்று பெயர் பெற்றவனே, இதோ இப்படி பாபம் செய்யும் இவனை தண்டிக்க ஏன் வராமல் இருக்கிறாய்? அடங்காத க்ரூரமான ஜனங்கள் தங்கள் கொடும் செயலின் பலனை உடனே அனுபவிப்பார்கள் என்று சொல்வார்களே, இந்த துஷ்டனுக்கு அந்த நீதி இல்லையா? அஹோ, கஷ்டம். காலமும் துணை போகிறதா இவனுக்கு. பயிர்களுக்கு சேறு போல. காலத்தினால் (யமனால்) புத்தியை இழந்தவன் இப்படி ஒரு காரியம் செய்கிறானே. இது உன் வாழ்வை குடிக்கும் க்ரூரமான செயல். ராமனிடத்தில் இனி நீ கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறாய். ஹந்த, கஷ்டம். கைகேயி, சகாமா- தன் இஷ்டம் நிறைவேறியவளாக, தன் பந்துக்களுடன் திருப்தியாக இருக்கட்டும். புகழ் வாய்ந்த ராமனுடைய தர்ம பத்னி, நான் இப்படி கடத்தப் படுகிறேனே, கர்ணிகார மரங்களே, பூக்கள் சொரிய நிற்கிறீர்களே, உங்களை அழைக்கிறேன். ஜனஸ்தானத்து மரங்களே, சீக்கிரம் ராமனுக்கு சொல்லுங்கள். ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு போகிறான் என்று தெரிவியுங்கள். மால்யவானின் சிகரமே, உன்னை வணங்குகிறேன். மலையே, சீக்கிரம் ராமனுக்கு தெரிவியுங்கள். ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு போகிறான் என்று. ஹம்ஸ, காரண்டவ பக்ஷிகள் மிதக்கும் கோதாவரியே, நதியே, சீக்கிரம் ராமனிடம் சொல்லு. சீதையை ராவணன் தூக்கிக் கொண்டு போகிறான் என்பதை. பலவிதமான மரங்களிலும் வசிக்கும் வனதேவதைகளே, உங்களை நமஸ்கரிக்கிறேன். என் கணவனிடம் நான் அபகரிக்கப் பட்டதை சொல்லுங்கள். இங்கு என்ன என்ன சத்வ, ஜந்துக்கள் உண்டோ, வசிக்கின்றனவோ, அனைத்தையும் சரணடைகிறேன், என் கணவரிடம் நான் கடத்தப் பட்டதை சொல்லுங்கள். உன் உயிருக்கும் மேலான பிரிய மனைவியை ராவணன் தூக்கிச் சென்றான் என்று சொல்லுங்கள். தன் வசத்தில் இல்லாத சீதையை ராவணன் பலவந்தமாக தூக்கிச் சென்றதை தெரியப் படுத்துங்கள். இப்பொழுது கூட இந்த விஷயம் தெரிந்தால், மகா பலசாலியான ராமன், வைவஸ்வதன் தூக்கி கொண்டு போயிருந்தால் கூட திரும்ப அழைத்து வந்து விடுவான். இவ்வாறு கருணை மேலிட புலம்பிக் கொண்டே மரத்தின் மேலிருந்த கழுகு ராஜனைக் கண்டாள். அதை பார்த்து ராவணனின் வசத்தில் இருந்தவள், துக்கம் தொண்டையை அடைக்க, குரல் எடுத்து அழைத்தாள். ஜடாயோ, இதோ பார். அனாதை போல என்னை கடத்திக் கோண்டு போகிறானே, அண்ணலே, இந்த பாபி ராக்ஷஸன், என்னைத் தூக்கிக் கொண்டு போகிறானே, நீங்கள் இவனை தடுக்க முடியாது, க்ரூரன் இவன், துர்மதி, ஆயுதம் வைத்திருக்கிறான், பல நகரங்களை ஜயித்தவனாம், சக்தியுடையவன். ராமனிடம் நடந்ததை நடந்தபடி சொல்லுங்கள். என்னை ராவணன் அபகரித்துக் கொண்டு செல்வதைச் சொல்லுங்கள், லக்ஷ்மணனிடம் உள்ளபடி விவரமாக சொல்லுங்கள் என்றாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சீதாபஹரணம் என்ற நாற்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 50 (246) ஜடாயுரபி4யோக: (ஜடாயு எதிர்த்து போராடுதல்)
தூங்கிக் கொண்டிருந்த ஜடாயு, இந்த அலறலைக் கேட்டான். உடனே எழுந்தவன், ராவணனையும், சீதையையும் கண்டான். மலயுச்சியிலிருந்து பக்ஷிராஜன், கூர்மையான மூக்கை, அலகை உடையவன், மரத்தின் மேலிருந்து சுபமான ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னான். பின், ஏ, தசக்ரீவா, இந்த நீசமான, நிந்திக்கத்தகுந்த செயலை நீ செய்யக் கூடாது. நீ சத்ய சந்தனாக இருந்து, முன்னால் தர்ம வழியில் பிரஸித்தியைப் பெற்றவன். சகோதரா, இந்த நீசத் தனம் செய்யாதே. நான் ஜடாயு என்ற பெயர் கொண்ட கழுகரசன். நானும் பலசாலியே. மகேந்திரனும் வருணனுக்கும் இணையாக எல்லா உலகுக்கும் ராஜா, ராமன், தசரதகுமாரன். எல்லா ஜீவ ஜந்துக்களுக்கும் நன்மையே செய்பவன். அந்த லோகநாதனுடைய தர்ம பத்தினி இவள். சீதை என்று பெயர் பெற்றவள். இவளையா கடத்திச் செல்லப் பார்க்கிறாய். தர்மத்தில் நிற்கும் ஒரு அரசன் எப்படி பிறன் மனைவியைத் தொடலாம். ராஜ தா3ரா என்றால் இன்னும் விசேஷமாக காப்பாற்றப் பட வேண்டும். பலசாலியே, இந்த எண்ணத்தை விடு. பிறன் மனைவியைத் தீண்டுதல் என்பது மகா நீசமான செயல். இது போல செயல்களை மற்றவர்கள் நிந்திக்கும்படியான செயல்களைச் செய்யாதே. எப்படி உனக்கு உன் மனைவிகளோ, அதே போல மற்றவர்கள் மனைவிகளும் ரக்ஷிக்கப் பட வேண்டியவர்களே. தர்மமோ, அர்த்தமோ, காமமோ, சாஸ்திர சம்மதமில்லாதவற்றை அரச குலத்தினர் அனுஷ்டிப்பது இல்லை. பௌலஸ்த்ய அரசனே, ராஜா என்பவன், தானே தர்ம ஸ்வரூபமாகவும், காமனாகவும், செல்வத்தின் உத்தமமான நிதியும் ஆகிறான். ராஜாவை மூலமாகக் கொண்டே தர்மம் சுபமோ, பாபமோ, மற்ற பிரஜைகளிடம் தோன்றுகிறது. பாப ஸ்வபாவமும், சபலமும் கொண்ட நீ எப்படி ராக்ஷஸ ராஜனாக ஆனாய்? துஷ்டத்தனம் செய்பவன் கையில் விமானம் போல, இவை உன்னிடம் எப்படி வந்தன. ஒருவனுடைய இயல்பை மாற்ற முடியாது தான். துஷ்டாத்மாக்களை வெகு காலம் நன்மைகள் ஆசிரயித்து இருப்பதில்லை, நகரத்தில் இருந்த போதும் சரி, இப்பொழுதும் சரி, தர்மாத்வான ராமன் யாருக்கும் தீங்கு இழைத்ததில்லை. நீ ஏன் அவனுக்கு தீங்கு செய்ய விழைகிறாய்? ஒரு வேளை சூர்ப்பணகா2 காரணமாக, ஜனஸ்தானத்திலிருந்து க2ரன் ராமன் கைகளில் இறந்தானே என்றா? ராமனின் அம்புகள் துல்லியமாக செயல் படுபவை, அவைகள் பட்டு க2ரன் இறந்தானே என்றா? அதில் ராமனது தவறு என்ன? அத்து மீறி அவன் என்ன செய்தான்? அதற்காக அவன் மனைவியை நீ கடத்திச் செல்கிறாயா? சீக்கிரம் விடு வைதே3ஹியை. விருத்திரனை இந்திராசனி அடித்தது போல என் கண்களாலேயே தகிக்கும் முன் அவளை விடு. ஆலகால விஷத்தைக் கக்கும் சர்ப்பத்தை மடியில் வஸ்திரத்தில் கட்டிக் கொண்டு, புரியாமல் விழிக்கிறாய். கழுத்தில் விழுந்து கிடக்கும் கால பாசத்தைக் காணாமல் ஏமாறுகிறாய். எந்த பாரத்தை வகிக்க முடியுமோ, அதைத் தான் தூக்க வேண்டும். பாரம் தூக்குபவனை கீழே தள்ளுவதாக இருக்க கூடாது. எந்த அன்னத்தை புசிக்கிறானோ, அந்த அன்னம் அவனால் ஜீரணம் செய்யப் படுவதாக, அந்த அளவே இருக்க வேண்டும். அவனை வியாதியில்லாமல் வைக்கக் கூடிய அளவுதான் அன்னத்தை புசிக்க வேண்டும். எந்த காரியத்தைச் செய்வதால் தர்மமோ, கீர்த்தியோ, புகழோ எதுவும் கிடைக்காது, வெறும் சரீர சிரமம் மட்டும் தான் என்ற செயலை ஏன் செய்ய வேண்டும். ராவணா, ஆறாயிரம் வருஷங்கள் ஆனவன் நான். தந்தை பாட்டனார் வழி வந்த ராஜ்யத்தை நியாயமாக ஆண்டு வந்த பின், வயது முதிர்ந்த கிழவனாக உன் முன் நிற்கிறேன். நீ இளைஞன். வில்லும், அம்பும் வைத்திருக்கிறாய். கவசம் அணிந்து ரதத்தில் நிற்கிறாய், இருந்தும் வைதே3ஹியை கடத்திக் கொண்டு குசலமாக நீ போய் சேர மாட்டாய். என் கண் முன்னாலேயே வைதே3ஹியை பலவந்தமாக நீ கடத்திக் கொண்டு போக முடியாது. காரணங்களும், நியாயங்களும் நிறைந்த அழியாத, வேத கீதத்தைப் போல. சூரனாக இருந்தால் முஹுர்த்த நேரம் நில், ராவணா, என்னுடன் சண்டையிடு. முன்பு க2ரனை பூமியில் தள்ளியது போல உன்னையும் பூமியில் தலை குப்புற விழச் செய்வேன். அடிக்கடி சண்டையில் ராமன் தை3த்ய தா3னவர்களை வதைத்து கீழே தள்ளியிருக்கிறான். வல்கலை மரவுரி தரித்த ராமன் சீக்கிரமே வந்து உன்னை அழிக்கப் போகிறான். நான் என்ன செய்ய முடியும்? ராஜ குமாரர்கள் வெகு தூரம் சென்றுள்ளார்கள். அவர்கள் முன்னால் நடுங்கிக் கொண்டு சீக்கிரமே நாசமடையப் போகிறாய், நிசாசரனே. நான் உயிருடன் இருக்கும் வரையில், இவளை நீ அழைத்துச் செல்ல விட மாட்டேன். சுபமானவள் சீதா. கமல பத்ரம் போன்ற கண்களுடைய ராமனின் மனைவி. பிரியமான மகிஷி. அந்த மகாத்மாவுக்கு பிரியமானதை நான் செய்து தான் ஆகவேண்டும். உயிரைக் கொடுத்தாவது, ராமனுக்கும் அவன் தந்தை த3சரத2னுக்கும் நான் கடமைப் பட்டவன். நில். நில், ராவணா, த3சக்3ரீவா, ஒரு முஹுர்த்த நேரத்தில் பார், உனக்கு அதிதி பூஜை யுத்தமாகத் தருகிறேன். உயிருள்ளவரை போராடுவேன். நிசாசர, மரத்திலிருந்து பழம் விழுவது போல உன்னை ரதத்திலிருந்து விழச் செய்கிறேன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஜடாயுரபி4யோகோ என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
ஸ்ரீமத் ராமாயணம்
ஆரண்ய காண்டம்
அத்தியாயம் 1 (197) மகரிஷி சங்க3: (மகரிஷிகளை சந்தித்தல்) 3
அத்தியாயம் 2 (198) விராத4 சம்ரோத4: (விராதன் செய்த இடையூறு) 5
அத்தியாயம் 3 (199) விராத4 ப்ராஹார: (விராதனை அடித்தல்) 7
அத்தியாயம் 4 (200) விராத4 நிக3ளனம் (விராதன் முடிவு) 8
அத்தியாயம் 5 (201) ஸரப4ங்க3 ப்3ரும்மலோக ப்ரஸ்தா2னம்… 10
அத்தியாயம் 6(202) ரக்ஷோ வத4 ப்ரதிக்ஞானம்… 12
அத்தியாயம் 7 (203) சுதீக்ஷ்ணாஸ்ரமம் (சுதீக்ஷ்ணருடைய ஆசிரமம்) 14
அத்தியாயம் 8 (204) சுதீக்ஷ்ணாப்4யனுக்ஞா (சுதீக்ஷ்ணரிடம் விடை பெறுதல்) 15
அத்தியாயம் 9 (205) சீதா த4ர்மாவேத3னம் (சீதை தர்மத்தைச் சொல்லுதல்) 16
அத்தியாயம் 10 (206) ரக்ஷோ வத4 சமர்த்தனம்… 18
அத்தியாயம் 11 (207) அகஸ்தியாஸ்ரம: (அகஸ்தியரின் ஆசிரமம்) 20
அத்தியாயம் 12 (208) அகஸ்திய தரிசனம்… 25
அத்தியாயம் 13 (209) பஞ்சவடீ கமனம் (பஞ்சவடிக்குச் செல்லுதல்) 27
அத்தியாயம் 14 (210) ஜடாயு சங்கமம் (ஜடாயுவை சந்தித்தல்) 29
அத்தியாயம் 15 (211) பஞ்சவடீ பர்ணசாலா (பஞ்சவடியில் குடிலை அமைத்தல்) 30
அத்தியாயம் 16 (212) ஹேமந்த வர்ணனம் (முன் பனிக் கால வர்ணனை) 32
அத்தியாயம் 17 (213) சூர்ப்பணகா பா4வாவிஷ்கரணம் (சூர்ப்பணகாவின் மன நிலை) 34
அத்தியாயம் 18 (214) சூர்ப்பணகா விரூபணம்… 35
அத்தியாயம் 19 (215) க2ர க்ரோத4: (கரனின் க்ரோதம்) 37
அத்தியாயம் 20(216) சதுர்த3ஸ ரக்ஷோ வத4: (பதினான்கு ராக்ஷஸ வதம்) 39
அத்தியாயம் 21 (217) க2ர சந்தூ3ஷணம் (கரனை தூஷித்தல்) 40
அத்தியாயம் 22 (218) க2ர சன்னாஹ: (கரன் போருக்கு அறை கூவுதல்) 41
அத்தியாயம் 23 (219) உத்பாத தரிசனம் (கெட்ட சகுனம் தோன்றுதல்) 43
அத்தியாயம் 24 (220) ராம, க2ர, ப3ல சன்னிகர்ஷ: 45
அத்தியாயம் 25 (221) க2ர சைன்யாவமர்த3: (கர சைன்யத்தை வீழ்த்துதல்). 47
அத்தியாயம் 26 (222) தூ3ஷணாதி வத4ம் (தூஷணன் முதலானோர் வதம்) 49
அத்தியாயம் 27 (223) த்ரிசிரோ வத4: (திரிசிரஸின் வதம்) 50
அத்தியாயம் 28 (224) க2ர ராம சம்ஹார: (கரனும் ராமனும் போரிடுதல்) 52
அத்தியாயம் 29 (225) க2ர க3தா4 பே4த3னம் (கரனுடைய கதையை உடைத்தல்) 53
அத்தியாயம் 30 (226)க2ர சம்ஹார: (கரனை சம்ஹாரம் செய்தல்) 55
அத்தியாயம் 31 (226) ராவண க2ர விருத்தோபலம்ப: 57
அத்தியாயம் 32 (228) சூர்ப்பணகோத்3யம: (சூர்ப்பணகையின் முயற்சி) 60
அத்தியாயம் 33 (229)ராவண நிந்தா3(ராவணனை நிந்தித்தல்) 61
அத்தியாயம் 34 (230) சீதா ஹரணோபதேச: 63
அத்தியாயம் 35 (231) மாரீசாஸ்ரம புனர் கமனம் (மாரீச ஆசிரமத்திற்கு திரும்பவும் செல்லுதல்) 65
அத்தியாயம் 36 232)சஹாயைஷணா (உதவி செய்யவேண்டுதல்) 67
அத்தியாயம் 37 (233) அப்ரிய பத்2ய வசனம்… 69
அத்தியாயம் 38 (234) ராமாஸ்திர மகிமா (ராமனின் பாணங்களின் மகிமை) 71
அத்தியாயம் 39 (235) சாகாயகரணாப்யுபகம: (உதவி செய்ய மறுத்தல்) 73
அத்தியாயம் 40 (236) மாயா ம்ருக3 ரூப பரிக்3ரஹ நிர்ப3ந்த4:.. 74
அத்தியாயம் 41 (237) ராவண நிந்தா3 (ராவணனை நிந்தித்தல்) 76
அத்தியாயம் 42 (238) ஸ்வர்ண ம்ருக3 ப்ரேக்ஷணம் (பொன் மானை அனுப்புதல்) 77
அத்தியாயம் 43 (239) லக்ஷ்மண சங்கா2 ப்ரதி சமாதானம்… 79
அத்தியாயம் 44 (240) மாரீச வஞ்சனா (மாரீசனின் வஞ்சனை) 82
அத்தியாயம் 45 (241) சீதா பாருஷ்யம் (சீதை கடுமையாக பேசுதல்) 84
அத்தியாயம் 46 (242) ராவண பி4க்ஷூ சத்கார: 86
அத்தியாயம் 47 (243) ராவணாதி4க்ஷேப: (ராவணனை நிந்தித்தல்) 88
அத்தியாயம் 48 (244) ராவண விகத்த2னம் (ராவணனை நிந்தித்தல்) 91
அத்தியாயம் 49 (245) சீதாபஹரணம் (சீதையை அபகரித்தல்) 93
அத்தியாயம் 50 (246) ஜடாயுரபி4யோக: (ஜடாயு எதிர்த்து போராடுதல்) 95
அத்தியாயம் 51 (247) ஜடாயு ராவண யுத்தம்… 97
அத்தியாயம் 52 (248) சீதா விக்ரோச: (சீதையின் அலறல்) 99
அத்தியாயம் 53 (249) ராவண ப4ர்த்ஸனம் (ராவணனை திட்டுதல்) 102
அத்தியாயம் 54 (250) லங்கா ப்ராபணம் (லங்கையில் கொண்டு சேர்த்தல்) 103
அத்தியாயம் 55 (251) சீதா விலோப4னோத்3யம: (சீதையை ஆசை காட்டும் முயற்சி) 105
அத்தியாயம் 56 (252) வத்ஸராவதி4கரணம் (ஒரு வருஷ கால கெடு வைத்தல்) 107
அத்தியாயம் 57 (253) ராம ப்ரத்யாக3மனம் (ராமன் திரும்பி வருதல்) 109
அத்தியாயம் 58 (254) அனிமித்த தரிசனம் (தீய சகுனங்களையே காணுதல்) 111
அத்தியாயம் 59 (255) லக்ஷ்மணாக3மன விக3ர்ஹணம்… 112
அத்தியாயம் 60 (256) ராமோன்மாத3: (ராமன் பித்து பிடித்தவன் போல் ஆதல்) 114
அத்தியாயம் 61 (257) சீதான்வேஷணம் (சீதையைத் தேடிச் செல்லுதல்) 116
அத்தியாயம் 62 (258) ராக4வ விலாப: (ராகவனின் அழுகை) 118
அத்தியாயம் 63 (259) துக்கானு சிந்தனம் (துக்க நினைவுகள்) 119
அத்தியாயம் 64 (260) ராம க்ரோத4: (ராமனின் கோபம்) 120
அத்தியாயம் 65 (261) க்ரோத4 சம்ஹார பிரார்த்தனை……. 125
அத்தியாயம் 66 (262) ஔசித்ய ப்ரபோ3த4னம் (உசிதமான செயலை நினைவு படுத்துதல்) 126
அத்தியாயம் 67 (263) க்3ருத்ர ராஜ த3ரிசனம் (கழுகு அரசனைக் காணுதல்) 127
அத்தியாயம் 68 (264) ஜடாயு சம்ஸ்கார: (ஜடாயுவின் அந்திமக் கிரியைகள்) 129
அத்தியாயம் 69 (265) கப3ந்த4 க்3ராஹ: (கபந்தனால் பிடிக்கப் படுதல்) 131
அத்தியாயம் 70 (266) கப3ந்த4 பா3ஹுச்சே2த:3 (கபந்தனின் கைகளை வெட்டுதல்) 134
அத்தியாயம் 71 (267) கப3ந்த4 சாபாக்2யானம் (கபந்தன் தன் சாபத்தை விவரித்தல்) 135
அத்தியாயம் 72 (268) சீதாதி4க3மோபாய: (சீதையை அடைய உபாயம் சொல்லுதல்) 137
அத்தியாயம் 73 (269) ருஸ்யமூக மார்க3 கத2னம்… 139
அத்தியாயம் 74 (270) சப3ரீ ஸ்வர்க3 ப்ராப்தி (சபரி சுவர்கம் செல்லுதல்) 141
அத்தியாயம் 75 (271) பம்பா தரிசனம்… 143
அத்தியாயம் 1 (197) மகரிஷி சங்க3: (மகரிஷிகளை சந்தித்தல்)
ஆத்மாவான் என்று புகழப் படும் ராமன், தண்டகாரண்யத்துள் பிரவேசித்து, எளிதில் நாசம் செய்ய முடியாதபடி இருந்த ஆசிரம மண்டலங்களைக் கண்டான். குசம் என்ற தர்ப்பை புல் விரிக்கப் பட்டு, ப்ரும்ம லக்ஷணங்களுடன் கூடிய அவை ஆகாயத்தில் சூரிய மண்டலம் பிரகாசமாக விளங்குவது போல இருந்தன. எல்லா ஜீவ ஜந்துக்களுக்கும் சரணாலயமாக இருந்தன. விசாலமான முற்றங்களுடன், பலவிதமான மிருகங்கள் பக்ஷி வகைகள் வளைய வரும் இடமாக இருந்தன. அப்ஸர கணங்கள் வணங்கும் இடமாகவும் அவர்கள் ஆடிப் பாடும் இடமாகவும் விளங்கின. விசாலமான அக்னி வளர்க்கும் இடமும், கரண்டி, பாத்திரங்கள் மான் தோல் ஆசனங்கள், புல், தர்ப்பம், சமித்து (அரச மரத்து கிளை உலர்ந்தது) ஜலம் நிரம்பிய கலசங்களும், பழங்களும், கிழங்கு வகைகளும் நிறைந்திருந்தன. காட்டு மரங்கள் மிகப் பெரிய மரங்கள், பாவனமான மரங்கள், இவைகளும், ருசியான பழங்கள் நிறைந்த மரங்களும் தென்பட்டன. பலி, ஹோமம் இவற்றை இடைவிடாது செய்து பாவனமான அந்த இடத்தில் வேத கோஷம் இடைவிடாது கேட்டது. காட்டுப் புஷ்பங்கள் இரைந்து கிடந்தன. பத்மங்கள் லக்ஷ்மீகரமாக விளங்கின. ம்ருதுவான கருப்பு மான் தோல் ஆசனங்களும், இந்த மான்களும் பழம், காய் கிழங்குகளையே உண்ணும் சாக பக்ஷிணிகளாக இருந்தன. சூர்ய, வைஸ்வானர ஒளியுடன், ப்ரும்ம வித்தையை அறிந்த மகான்களான ப்ராம்மணர்கள்,பாவனமான ஆகார நியமங்களை அனுஷ்டித்தவர்களாக இடையறாது ப்ரும்ம கோஷம் செய்ததாலும், வேத கோஷங்களாலும் ப்ரும்மாவின் இருப்பிடமோ என்று சந்தேகம் கொள்ளும் வகையில், பழம் பெரும் முனிவர்கள், பெரும் தவ வலிமையுடைய ரிஷிகள், அந்த இடத்தை அலங்கரித்தனர். இந்த தபஸ்விகளின் ஆசிரமங்கள் இருந்த மண்டலத்தைப் பார்த்து ராமர் அருகில் சென்றார். மகிழ்ச்சியுடன் சீதையும் தொடர்ந்து சென்றாள். இவர்கள் வருவதைப் பார்த்து, உதித்து எழுந்த சந்திரனோ என்ற ஐயத்துடன், தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்த முனிவர்கள், லக்ஷ்மணனைப் பார்த்து, சீதையையும் நோக்கி மங்கள ஆசிர்வாதங்களை பொழிபவர்களாக, அவர்களை வரவேற்றார்கள். அந்த வனவாசிகள், ராமருடைய லக்ஷ்மீகரமான ரூபத்தையும், சுகுமாரமான தேகத்தையும், அலங்காரத்தையும் கண்டு அதிசயித்தனர். கண் கொட்டாமல் (இமை என்று ஒரு அவயவம் இருப்பதையே மறந்தவர்களாக) ஆச்சர்யத்துடன் அம்மூவரையும் பார்த்தபடி நின்றனர். எல்லா ஜீவ ஜந்துக்களுக்கும் நன்மை செய்வதையே விரதமாகக் கொண்ட ராமனை, அதிதியாக பர்ணசாலைக்குள் அழைத்துச் சென்றனர். நெருப்புக்கு இணையான தவ வலிமையுடைய அந்த முனிவர்கள், முறைப்படி அதிதி சத்காரம் செய்தபின், தண்ணீர் கொண்டு வந்து தந்தனர். ஆசிரமத்து பொருட்களான பழங்கள், கிழங்கு வகைகள் இவற்றை சாப்பிடக் கொடுத்து தர்மம் அறிந்தவர்களான அவர்கள் கை கூப்பி வணங்கியபடி வினவினர். இந்த ஆசிரமத்து ஜனங்களுக்கு, அவர்களை காப்பாற்றும் தார்மீக பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் அரசன், தண்டனை கொடுக்க உரிமையுடையவன் என்பதால் குரு ஆகிறான். எங்களால் பூஜிக்கப் பட வேண்டிய, மதித்து மரியாதை செலுத்தவேண்டிய பெருமை உடையவனாக ஆகிறான். அவனே எங்களுக்கு சரண்யமும் ஆவான். (ஆபத்து என்று வந்தால் புகலிடம்) ராக4வா, இந்திரனுடைய செல்வத்தில் நான்கில் ஒரு பங்கு இங்கு உலகில் பிரஜைகளால் காப்பாற்றப் படுகிறது. அதனாலேயே பூமியின் போகங்களை அரசர்கள் அனுபவிக்கிறார்கள். உலகம் வணங்கும் தகுதி, தவிர போக விலாசங்களையும் அடைகிறார்கள். அதனால் நாங்கள் உங்கள் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். உங்களைச் சார்ந்து வாழ்பவர்கள். நகரத்தில் இருந்தாலும், வனத்தில் இருந்தாலும் நீ எங்கள் அரசன். எங்கள் சமூகத்தின் தலைவன். நாங்கள் ஆயுதங்களை தியாகம் செய்தவர்கள். எங்களில் பலரும் கோபத்தை ஜயித்து, புலனடக்கம் செய்து ஆசிரம வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். தவமே செல்வமாக உடைய எங்களை, கர்ப்பத்தில் சிசுவை காப்பது போல காக்க வேண்டியது அரசன் கடமையாகும். இவ்வாறு சொல்லி, ராமனுடன் லக்ஷ்மணனையும் உபசரித்து, காட்டில் கிடைக்கும் பழங்களையும், காய், கிழங்கு வகைகளையும் கொண்டு பலவிதமான ஆகாரங்கள், பூக்கள் என்று கொடுத்து உபசரித்தனர். தங்கள் தலைவனாக ராமனை ஏற்றுக் கொண்டபின், வைஸ்வானர (அக்னி) போன்ற தேஜஸ் உடைய அந்த தபஸ்விகளும், சித்தர்களும் முறையாக வந்து ராமனை பூஜித்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் மகரிஷி சங்கோ3 என்ற முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 2 (198) விராத4 சம்ரோத4: (விராதன் செய்த இடையூறு)
தபஸ்விகளின் ஆதித்யத்தை (விருந்தோம்பலை) ஏற்றுக் கொண்ட ராமன், விடிந்தவுடன் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு மேலும், காட்டின் உள் பக்கமாகச் சென்றான். பலவிதமான மிருகங்கள் கூட்டம் கூட்டமாகத் திரிந்தன. ஓநாய்களும், சிறுத்தை புலிகளும் வாசம் செய்த காடு. ஆங்காங்கு விழுந்து கிடந்த மரங்களும், கொடி புதர்களுமாக ஜலம் எங்கு என்பதே தெரியாமல், பூமி மூடிக் கிடந்தது. ஆந்தைகளும், ஜில்லிகா என்ற பறவைக் கூட்டங்களும் இரைச்சல் இட்டன. லக்ஷ்மணன் பின்னால் வர, ராமன் நடுக் காட்டைக் கண்டான். கோரமான மிருகங்கள் நடுவில் தெரிய, காட்டு மத்தியில் காகுத்ஸன், ஒரு மலையின் சிகரத்தைப் போன்ற பெரிய மனித உருவத்தைக் கண்டான். பெரும் சத்தம் காட்டையே கலக்கியது. கம்பீரமான கண்களும், பெரிய வாயும், கோணலான பெரிய வயிறும், பயங்கரமாக, அருவருப்புத் தரக் கூடிய குரூபமாக நெடிதுயர்ந்த கோர உருவத்தை, புலித்தோலை உடுத்துக் கொண்டு, பாதி ஆடையில் ரத்தம் சொட்ட, எந்த ஜீவ ஜந்துவையும் பயமுறுத்தும் வகையில், வாயைப் பிளந்து கொண்டு வரும் யமனைப் போல, மூன்று சிங்கங்கள், நான்கு புலிகள், இரண்டு காளை மாடுகள், புள்ளி மான்கள் பத்து, பெரிய கொம்பு நிணம் சொட்டும் பெரிய யானைத்தலை, இவைகளை தன் சூலத்தில் மாட்டிக் கொண்டு, பெரும் குரலில் கூச்சலிட்டுக் கொண்டு, ராமனையும் லக்ஷ்மணனையும் பின் சீதையையும் பார்த்து கோபமாக ஓடி வந்தான். அந்தகனான காலன் (யமன்) ஜனங்களைப் பார்த்து ஓடி வருவது போல வந்தான். பூமியை கிடு கிடுக்கச் செய்யும் பெரும் குரலில் ஓலமிட்டுக் கொண்டு, வைதேஹியைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்துச் சொன்னான். ஜடா முடி தரித்த நீங்கள், க்ஷீணமான வாழ்க்கை வாழ்பவர்கள். மனைவியுடன் கூட தண்டகாரண்யம் வந்திருக்கிறீர்கள். கையில் வில், அம்பு, கத்தி வேறு. இது என்ன தபஸ்வி வாழ்க்கை. உடன் பெண்ணையும் வைத்துக் கொண்டு. அத4ர்ம சாரிகள் நீங்கள், பாபிகள். யார் நீங்கள்? முனிவர்களின் பெயரைக் கெடுக்க வந்துள்ளீர்கள். நான் இந்த காட்டில் திரியும் விராத4ன் என்ற ராக்ஷஸன். என் கையில் ஆயுதம் இருக்கிறது. ரிஷி மாமிசத்தை சாப்பிட்டு காலம் கழிப்பவன். இந்த பெண் அழகாக இருக்கிறாள். எனக்கு மனைவியாக இருப்பாள். பாபிகளான உங்கள் இருவரின் ரத்தத்தையும் குடிக்கத் தான் போகிறேன். இவ்வாறு துராத்மாவான விராத4ன், அகங்காரத்துடன் பேசிக் கொண்டே போனான். இதைக் கேட்டு ஜனகர் மகள் நடுங்கி விட்டாள். பெருங்காற்றில் வாழை மரம் நடுங்குவது போல நடுங்கினாள். விராத4னின் மடியில் இருந்த அவளைப் பார்த்து ராக4வன், லக்ஷ்மணனிடம் முகத்தில் வாட்டத்துடன் நின்றவனிடம், இதோ பார் லக்ஷ்மணா, நரேந்திரனான ஜனகருடைய மகள், என் மனைவி, இவ்வளவு சுபமான நடத்தையுடையவள், இவளை விராத4ன் தூக்கி வைத்துக் கொண்டு நிற்பதைப் பார். மிகவும் செல்லமாக சுகமாக வளர்க்கப் பட்டவள். புகழ் வாய்ந்த ராஜ குமாரி. நம்மிடம் கைகேயி எதை எதிர் பார்த்து வனம் அனுப்பினாளோ, இன்று இதோ அவள் இஷ்டம் பூர்த்தியாகப் போகிறது. தீர்க4 தரிசினி. அவள் தொலை நோக்கு உடையவள். புத்திரனுக்கு ராஜ்யத்தை கொடு என்று கேட்டு, நிறுத்திக் கொள்ளாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்பை செலுத்தி வந்த என்னை காட்டுக்குப் போ என்று துரத்தினாளே. அவளுடைய உள் மனதின் எண்ணம் இதோ தெரிகிறது. என் மத்யமாம்பாவான சிற்றன்னை, இன்று தன் இஷ்டம் பூர்த்தியானதைக் கண்டு ஆனந்திக்கப் போகிறாள். மாற்றான் வைதேஹியை தொட்டு தூக்கியிருக்கிறானே, இந்த துக்கம் மற்ற துக்கங்களை தூக்கியடித்து விட்டது. சௌமித்திரி, தந்தை இறந்ததோ, என் ராஜ்யம் கையிலிருந்து நழுவியதோ, இந்த துக்கத்திற்கு முன் ஒன்றுமேயில்லை. இவ்வாறு கண்ணீர் பெருக்கி வருந்தும் காகுத்ஸனைப் பார்த்து லக்ஷ்மணன் கோபத்துடன், தடுக்கப் பட்ட பெரும் நாகத்தைப் போல சீறிக் கொண்டு சொன்னான். இந்திரனுக்கு சமமான நாயகன் நீ. அநாதை போல இப்பொழுது ஏன் வருந்துகிறாய்? நான் இருக்கிறேன். நீ சொல்வதை செய்ய. இதோ பார். என் சரத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் அம்புகள் அந்த ராக்ஷஸனின் உயிரைப் போக்கி, அவனுடைய ரத்தத்தால் பூமியை நனைக்கும். ராஜ்யத்தை விரும்புகிறான் ப4ரதன் என்று எண்ணி நான் கொண்ட கோபம், அதை விராத4னிடத்தில் இப்பொழுது பிரயோகிக்கிறேன். வஜ்ராயுதத்தை தாங்கும் இந்திரன் மலையின் மேல் வஜ்ராயுதத்தைப் பிரயோகித்தது போல பிரயோகிக்கிறேன். என் தோள் வலியால், வேகமாக செல்லும் இந்த வில்லிலிருந்து புறப்படும் அம்பு அந்த ராக்ஷஸனின் பெரிய ப்ரும்மாண்டமான மார்பை துளைக்கட்டும். உடலிலிருந்து உயிரை பறிக்கட்டும். பூமியில் தாறு மாறாக அவன் உடல் விழுந்து கிடக்கட்டும்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் விராத4 சம்ரோதோ4 என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 3 (199) விராத4 ப்ராஹார: (விராதனை அடித்தல்)
வனத்தையே ஒரு கலக்கு கலக்கும்படியான பெருங்குரலில் விராத4ன் மேலும் சொல்லலானான். உங்களைத்தான் கேட்கிறேன். யார் நீங்கள்? எங்கு போகிறீர்கள்? கண்கள் சிவக்க இருந்த ராக்ஷஸனை ராமர் பார்த்தார். இக்ஷ்வாகு குல நாதனான தன்னை அறியாமல் யாரென்று வினவும் ராக்ஷஸனைப் பார்த்து பதில் சொன்னார். நாங்கள் க்ஷத்திரியர்கள். நன்னடத்தை உடையவர்கள். காட்டில் தென்படுகிறோமே என்று யோசிக்கிறாயா? உன்னைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறோம். யார் நீ? இந்த தண்டகா வனத்தில் ஏன் சஞ்சரிக்கிறாய்? இதற்கு பதிலாக ராமனைப் பார்த்து விராத4ன் சொன்னான். சரி, சொல்கிறேன். ராக4வா, நானும் ஒரு அரசன் தான். ஜவன் என்பவர் மகன். என் தாயார் சதஹ்ரதா3. பூமியில் உள்ள ராக்ஷஸர்கள் என்னை விராத4ன் என்பர். ப்ரும்மாவைக் குறித்து நான் செய்த தவத்தின் பலனாய் எந்த சஸ்திரத்தாலும் கொல்ல முடியாத வரம் எனக்கு கிடைத்தது. இந்த உலகில் என்னை சிதைக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. இந்த பெண்ணை விட்டு விட்டு எதையும் எதிர்பார்க்காமல் வந்த வழியே வேகமாக ஓடிப் போங்கள். நான் உங்களை உயிருடன் விடமாட்டேன். கண்கள் கோபத்தினால் சிவக்க பெருத்த உருவத்தோடு நின்றிருந்த விராத4னிடம் ராமர் திரும்பவும் அவனைப் பார்த்து, புத்தியில் பாபத்தை சுமந்து கொண்டு திரிபவனே, நீசனே, தி4க் த்வாம், நாசமாவாய். நீ நிச்சயமாக ம்ருத்யுவை வலிய அழைக்கிறாய். நான் உயிருடன் இருக்கும் வரையில், நீ எங்கும் போக முடியாது. நில். யுத்தத்தில் நீ வேண்டியதை அடைவாய். ராமர் உடனே வில்லை தயாராக வைத்து அம்பை பூட்டி, வேகமாக செலுத்தி ராக்ஷஸனை அடித்தார். வில்லில் நாணில் ஏழு அம்புகளை பூட்டி ஏக காலத்தில் விட்டார். க3ருடனைப் போலவும், வாயுவைப் போலவும் வேகமாக செல்லக் கூடிய தங்க மயமான அம்புகள் சீறிப் பாய்ந்தன. அவை விராத4னுடைய உடலைத் துளைத்து, ரத்தம் சொட்ட சொட்ட பூமியில் விழுந்தன. இவ்வாறு அடி பட்ட விராத4ன் வைதே3ஹியை பூமியில் விட்டு விட்டு, சூலத்தை தூக்கி பிடித்தவாறு, ராம, லக்ஷ்மணர்களை நோக்கி கோபத்துடன் ஓடினான். இந்திரனுடைய கொடியைப் போன்ற தன் சூலத்தை ஏந்தியபடி, பெருங் குரலெடுத்து கத்தியபடி காலனே ஓடி வருவது போல ஓடினான். அவர்களும் கூர்மையான ஆயுதங்களை விராத4னின் உடலில் படும்படி விட்டனர். அவன் பலமாக சிரித்தபடி மகா ரௌத்ரனாக, ஹுங்காரம் செய்தான். உடலை சிலிர்த்த மாத்திரத்தில் அஸ்திரங்கள் அவன் உடலிலிருந்து கீழே விழுந்தன. வரம் பெற்றிருந்த காரணத்தால், ராக்ஷஸனின் உடலில் தைத்த அம்புகள், உயிரைத் தொட்டும் அவனை அழிக்கவில்லை. விராதன் சூலத்தை தூக்கிக் கொண்டு ராகவனை நோக்கி ஓடினான். அந்த சூலம், வஜ்ராயுதத்தை போன்று, ஆகாயத்தில் எரியும் நெருப்புத் துண்டம் போல ஒளிர்ந்ததை இரண்டு அம்புகளால் ராமர் துண்டித்து விழச் செய்தார். மேரு மலையிலிருந்து துண்டு மலை உருண்டு விழுவதைப் போல அந்த சூலம் சின்னா பின்னமாகி ராமருடைய அம்பினால் துளைக்கப் பட்டதாக, ராக்ஷஸன் கையிலிருந்து விழுந்தது. உடனே இருவரும் கத்திகள் இரண்டை எடுத்துக் கொண்டு க்ருஷ்ண சர்ப்பம் போல இருந்த கத்திகளால், வேகமாக விழுந்து கொண்டிருந்தவனை பலமாக அடித்தனர். அடிபட்ட நிலையிலேயே இருவரையும் கைகளால் தூக்கிக் கொண்டு கிளம்பினான். ராமர் அவன் அபிப்பிராயத்தை உணர்ந்து கொண்டு லக்ஷ்மணனிடம், இதே வழிதான் நாமும் போக வேண்டும். நம்மை தூக்கிக் கொண்டு போகிறபடி போகட்டும். பேசாமல் இரு என்று சொல்லி ராக்ஷஸன் மேற் கொண்டு என்ன செய்யப் போகிறான் என்பதைக் கவனித்தார். இரு சிறுவர்களைத் தூக்குவது போல ராம லக்ஷ்மணர்களை தோளில் ஏற்றி வைத்துக் கொண்டு ராக்ஷஸன் பலமாக கத்தியபடி வனத்தை நோக்கிச் சென்றான். பெரும் மேகம் போல அடர்ந்து இருண்டிருந்த வனத்தின் உள்புறம், பலவிதமான மரங்கள் அடர்ந்து இருந்த பகுதிக்குச் சென்றான். அந்த இடத்தில் பலவிதமாக பக்ஷிகள், நூற்றுக் கணக்காக விசித்திரமாக இருந்தன. குள்ள நரிகளும் காட்டு யானைகளும் மற்ற மிருகங்களும் நிறைந்திருந்தன.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் விராத4 ப்ரஹாரோ என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 4 (200) விராத4 நிக3ளனம் (விராதன் முடிவு)
ராம லக்ஷ்மணர்களை விராதன் தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்து சீதை பலமாக அலறினாள். கைகளை வீசி பலமாக கத்தினாள். இதோ, தசரதன் மகன் ராமன், சுபாவமாகவே நற்குணங்கள் நிரம்பியவன், ஒழுக்கத்தில் சிறந்தவன், கோர ரூபமுடைய ராக்ஷஸனால், லக்ஷ்மணனையும் சேர்த்து அபகரித்துக் கொண்டு போகப் படுகிறான். என்னை ஓநாய்கள் சாப்பிட்டு விடும். சிறுத்தைகள், யானைகள் அடித்து போட்டாலும் போடும். ராக்ஷஸோத்தமா, என்னை பிடித்துக் கொண்டு போ. காகுத்ஸர்களை விட்டு விடு. உனக்கு நமஸ்காரம். அவளுடைய கூக்குரலைக் கேட்டு ராம லக்ஷ்மணர்கள், அந்த ராக்ஷஸனை உடனே வதம் செய்வது தான் சரி என்று தீர்மானித்தனர். உடனே சௌமித்திரி, அந்த ரௌத்திரனின் இடது கையை வெட்டினான். ராமர் வலது கையை வேகமாகத் துண்டித்தார். கைகள் வெட்டப் பட்டவுடன், அந்த ராக்ஷஸன் பெரும் வேகத்துடன் பூமியில் விழுந்தான். மலையின் மேல் வஜ்ரத்தால் அடித்து துண்டாக்கியது போல பெரிய சரீரம் பூமியில் விழுந்தது. முஷ்டிகளாலும், முழங்காலாலும், பாத3ங்களாலும் அந்த ராக்ஷஸனைத் துன்புறுத்தி பெரும் முயற்சியுடன் அவனை தரையில் கிடத்தினார்கள். பல அம்புகளால் துளைக்கப் பட்டும், கத்தியினால் அடி வாங்கியும், பூமியில் கூழாக ஆன போதும், உயிர் துறக்கவில்லை. பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தான். அப்படியும், மலை போல் அசையாமல், அஸ்திர சஸ்திரங்களின் தாக்குதலாலும் உயிர் பிரியாமல் இருந்த சரீரத்தைப் பார்த்து ராமர் அவன் பயத்தை போக்கும் விதமாக லக்ஷ்மணனிடம் சொன்னார். புருஷவ்யாக்4ரனே, இவன் தவ வலிமையுடையவன். அதனால் தான் அஸ்திர சஸ்திரங்களால் இவனை வெற்றி கொள்ள முடியவில்லை. பள்ளம் தோண்டி புதைத்து விடுவோம். பெரும் யானையைப் போன்ற சரீரத்துடன் இந்த காட்டில் ருத்3ரன் போல திரிகிற இவனை புதைக்க பெரிய பள்ளம் தோண்டுவோம். விராதனுடைய கழுத்தில் தன் பாதத்தை வைத்து அழுத்தியபடி நின்ற ராமர், லக்ஷ்மணனை பெரும் பள்ளத்தை தோண்டச் சொன்னார். இதைக் கேட்டு, விராதன் ராமரைப் பார்த்து பிரயாசையுடன் கஷ்டப் பட்டுக் கொண்டு பின் வருமாறு சொன்னான் இந்திரனுக்கு சமமான பலசாலிகளான உங்களால் நான் தோற்கடிக்கப் பட்டேன். என் கண்ணை மறைத்த மோகத்தால் நான் உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. கௌசல்யைக்குப் பிறந்த புத்திர செல்வம் நீ, ராமன் என்று இப்பொழுது அறிந்து கொண்டேன். லக்ஷ்மணனையும் சீதையையும் தெரிந்து கொண்டேன். இந்த கோரமான ராக்ஷஸ உருவத்தை நான் சாபத்தால் பெற்றேன். தும்பு3ரு என்ற க3ந்த4ர்வன் நான். வைஸ்ரவனால் சபிக்கப் பட்டேன். அவரை பலவிதமாக வேண்டிக் கொண்டபொழுது, சாப விமோசனம் என்ன என்று அவரே சொன்னார். எப்பொழுது தசரத குமாரன் ராமன் யுத்தத்தில் உன்னை அடித்து வீழ்த்துகிறாரோ, அப்பொழுது சுயரூபம் அடைந்து நீ ஸ்வர்கம் செல்வாய் என்றார். இவ்வாறு ரம்பா4விடம் மையல்கொண்டு, அவருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்ய நான் தவறிய பொழுது, வைஸ்வானர ராஜா கோபத்துடன் சொல்லியிருந்தார். அந்த பயங்கரமான சாபத்திலிருந்து உன்னருளால் விடுபட்டேன். ராமா, உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். நான் என் இருப்பிடம் செல்கிறேன். இதோ, சற்று தூரத்தில், பிரதாபம் மிகுந்த சரப4ங்க3ர் என்ற முனிவர் வசிக்கிறார். சூரியனை நேரில் கண்டாற்போல தேஜஸால் பிரகாசிக்கும் அவர் கால் யோசனை தூரத்திலேயே இருக்கிறார். சீக்கிரம் அவர் இருக்கும் இடம் செல்லுங்கள். உங்களுக்கு அவர் பல நன்மைகளைச் செய்வார். இதோ இந்த பள்ளத்தில் என்னைப் போட்டு விட்டு, நீங்கள் சௌக்யமாக போய் வாருங்கள். குணம் இழந்த ராக்ஷஸர்களை இப்படித் தான் செய்ய வேண்டும். இது போல பள்ளத்தில் போட்டு இறக்கும் ராக்ஷஸர்களும் நல்ல கதியடைவார்கள். இவ்வாறு காகுத்ஸனைப் பார்த்து சொல்லி விட்டு, தன் அம்புகள் துளைத்த சரீரத்தை விட்டு ஸ்வர்கம் சென்றவனைப் போலவே ஆனான். மண் வெட்டியை எடுத்து லக்ஷ்மணன், விராத4ன் சரீரம் கிடந்த இடத்தின் அருகிலேயே, பள்ளம் தோண்டினான். பெரிய குரலில் கத்தும் குணமுடைய ராக்ஷஸனை அந்த பள்ளத்தில் தள்ளினர். அந்த பள்ளத்தில் தள்ளி,, தங்கள் அஸ்திர சஸ்திரங்களால் அவன் மரணம் அடையமாட்டான் என்பதால், பள்ளத்தில் கிடந்த ராக்ஷஸனை அதனுள்ளேயே வதம் செய்தனர். ராமனுடைய கையால் அடிபடுவதை வியாஜமாகக் கொண்டு விராதன் தானே தன் உயிரை விட்டான். காட்டில் சுற்றிக் கொண்டிருந்த அவன் சற்று முன் ராமரிடம் சொல்லியிருந்தான். எந்த ஆயுதங்களாலும் எனக்கு மரணம் கிடையாது என்று வரம் பெற்று இருந்ததை விவரித்திருந்தான். அதனால் ராமர், அந்த பெரிய சரீரத்தை பள்ளத்தினுள் வேகமாகத் தள்ளினார். அந்த சத்தம் வானத்தில் எதிரொலித்தது. மிகவும் பிரயாசையுடன் இருவருமாக விராதனை பள்ளத்தில் தள்ளி, பயம் நீங்கியவர்களாக மகிழ்ச்சியடைந்தனர். பிறகு அவர்கள் இருவருமாக சீதையை தேடிச் சென்று அவளையும் அழைத்துக் கொண்டு மகாவனத்தினுள் நுழைந்தனர். ஆகாயத்தில் சூரியனும் சந்திரனும் ஒன்றாக காட்சியளிப்பது போல விளங்கினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் விராத4 நிக3ளனம் என்ற நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 5 (201) ஸரப4ங்க3 ப்3ரும்மலோக ப்ரஸ்தா2னம்
(சரபங்கர் ப்ரும்மலோகம் செல்லுதல்)
பயங்கரமான பலம் பொருந்திய ராக்ஷஸனை வதைத்தபின், சீதையை அணைத்து ஆறுதல் சொல்லியபடி, வீரனான ராமன் லக்ஷ்மணனைப் பார்த்துச் சொன்னார். இந்த காட்டு வழி சிக்கலானது. நாமும் இந்த காட்டில் பழகியவர்கள் அல்ல. சீக்கிரமாக தபோத4னரான ஸரப4ங்க3ரின் ஆசிரமத்தை சென்றடைவோம். என்று சொல்லி வேகமாக ஸரப4ங்க3ரின் ஆசிரமத்தை தேடிக் கொண்டு சென்றனர். அங்கு, தவ வலிமையால் தேவர்களுக்கு இணையான பிரபாவம் கொண்டிருந்த முனிவரின் அருகில் அத்புதமான ஒரு காட்சியைக் கண்டனர். சூரியனோ, வைஸ்வானரோ எனும்படி பிரகாசமான சரீரத்துடன் தேவர்களின் ரதத்திலிருந்து இறங்கி பூமியில் கால் படாமல் நடந்த இந்தி3ரனைக் கண்டனர். அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்து, மகாத்மாக்களால் பூஜிக்கப் பட்ட இந்தி3ரன் ஏறி வந்த ரதத்தை அருகில் நின்று பார்த்தனர். யானைகளும் குதிரைகளும் பூட்டிய ரதம் ஆகாயமார்கமாகச் சென்றது. இளம் சூரியன் போல ஜ்வலித்தது. வெண் மேகம் போலவும், சந்திர மண்டலம் போலவும் விமலமான குடையை மாலைகள் சூட்டி அலங்காரம் செய்திருந்தனர். தங்கப் பூண் போட்ட தண்டங்களில் சாமரங்கள் தென்பட்டன. அழகிய பெண்கள், தலையசைத்து கேட்டுக் கொண்டிருக்க, க3ந்த4ர்வ, அமர, சித்3த4ர்கள், மகரிஷிகள் ஆகாயத்தில் இருந்த தே3வராஜனான இந்திரனை அழகிய பாடல்களால் ஸ்தோத்திரம் செய்தனர். ஸரப4ங்க3ருடன் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து ராமர் லக்ஷ்மணரிடம் நூறு யாகம் செய்ததால் சதக்ரது என்று பெயர் பெற்ற இந்திரன் போல தெரிகிறது. ஆகாயத்தில் இவன் ரதம் தெரிகிறது பார் என்று சுட்டிக் காட்டினர். லக்ஷ்மீகரமான அத்புதமான இந்த ரதத்தைப் பார். இந்த புரூஹுதனுடைய குதிரைகள் இந்திரனுடையது என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஆகாயத்தில் நிற்கும் இந்த குதிரைகள், ரதத்தை சுற்றி நிற்கும் வீரர்கள், வாளேந்தி நிற்கும் இளம் வீரர்கள், குண்டலங்கள் தரித்து நூற்றுக் கணக்காக நிற்கிறார்கள். சிவந்த ஆடையணிந்து நல்ல உடல் வாகு உடையவர்களாக, புலியைப் போல பாயத் தயாராக இருப்பவர்கள், யாராலும் எளிதில் எதிர்த்து நிற்க முடியாத வலிமையுடையவர்கள். எல்லோருமே கழுத்தில் மாலையணிந்து பிரகாசமாக இருக்கிறார்கள். உருவத்தைப் பார்த்தால் இருபத்தைந்து வயதுக்குள் இருப்பதாகத் தெரிகிறது. சௌமித்திரி, இது தேவர்களின் நிரந்தரமான வயது. இவர்கள் பார்க்க லக்ஷணமாகவும், வீரர்களாகவும் தெரிகிறார்கள். லக்ஷ்மணா, நீ சீதையுடன் இங்கேயே நில். நான் சென்று இவ்வளவு அழகிய ரதத்தில் வருவது யார் என்று தெரிந்து கொண்டு வருகிறேன். லக்ஷ்மணனை அங்கேயே நிற்கச் சொல்லி பணித்து விட்டு ராமர் தான் தனியாக ஸரப4ங்க3ர் ஆசிரமம் சென்றார். ராமர் வருவதைப் பார்த்த சசீபதியான இந்திரன், ஸரப4ங்க3ரிடம் விடைபெற்றுக் கொண்டு, உடன் வந்த தேவர்களிடம் சொன்னான். இதோ வந்து கொண்டிருக்கும் ராமன், என்னைத் தெரிந்து கொண்டு பேசும் முன் கிளம்பி விடுங்கள். இப்பொழுது என்னை பார்க்க வேண்டாம். தன் காரியம் முடிந்து ஜெயித்தபின் நான் சீக்கிரமே காணப் போகிறேன். மிகவும் கஷ்டமான காரியங்களை இவன் இன்னும் செய்ய வேண்டியது இருக்கிறது. அந்த வேலைகளை முடித்து விட்டுத் தான் என்னை காண வேண்டும். தபஸ்வியான ஸரப4ங்க3ரை மரியாதை செய்து வணங்கி விடை பெற்றுக் கொண்டு தன் குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறி மறைந்தான். தன் பரிவாரத்தோடு இந்திரன் கிளம்பிச் சென்றபின், ராமர் அக்னி ஹோத்ரம் செய்ய ஆரம்பித்து விட்ட ஸரப4ங்க3 முனிவரைக் கண்டான். அவர் பாதத்தில் வணங்கி, சீதையும், லக்ஷ்மணனும் உடன் வணங்க, அவர் சொன்னபின் ஓரிடத்தில் அமர்ந்தனர். முனிவர் அவர்களை உணவருந்த அழைத்தார். அப்பொழுது இந்திரன் வரவைப் பற்றி ராமர் விசாரித்தார். ஸரப4ங்க3ரும் விவரமாகச் சொன்னார். ராமா, இந்த இந்திரன் எனக்கு வரம் அளித்து ப்ரும்ம லோகம் அழைத்துச் செல்ல வந்தான். சாதாரணமாக மற்றவர்களுக்கு கிடைக்க முடியாத பல பலன்களை நான் உக்ரமான தவத்தால் கிடைக்கப் பெற்றுள்ளேன். நீ அருகில் இருப்பதையறிந்து பிரியமான அதிதியாக உன்னை வரவேற்று உபசரிக்காமல் ப்ரும்ம லோகம் போகவும் எனக்கு விருப்பம் இல்லை. தேவர்கள் வசிக்கும் தேவலோகத்துக்கு, உன்னைக் கண்டு, பேசி, கூட இருந்தபின் போய்க் கொள்கிறேன். நான் தவப் பயனாய் பெற்ற புண்ய லோகங்கள், அழிவில்லாத பல உள்ளன. இதோ, அந்த ப்ரும்ம மயமான தேவலோகத்தைச் சேர்ந்த என் தவப் பயன்களை ஏற்றுக் கொள். இவ்வாறு சரபங்க ரிஷி சொன்னதும், சாஸ்திரங்களையறிந்த வீரனான ராமன் பதில் சொன்னான். மகா முனியே, இவையனைத்தையும் நானே சம்பாதித்துக் கொள்வேன். இப்பொழுது இந்த வனத்தில் நாங்கள் வசிக்க ஒரு இடம் வேண்டும் அதைத் தான் வேண்டுகிறேன். இந்திரனுக்கு சமமான பலமுடைய ராமன் இவ்வாறு யாசிக்கவும், ஸரப4ங்க3ர் இங்கு அருகில் சுதீக்ஷ்ணர் என்ற தார்மீகரான முனிவர் இருக்கிறார். அவர் உங்களுக்கு இருக்க வசதிகள் செய்து தருவார். அவர் இருக்கும் இடமும் மிகவும் சுத்தமான அழகிய இடம். அவரிடம் போய் கேட்டால், அழகான வனப் பிரதேசத்தில் உங்களுக்கு இருப்பிட வசதிகள் செய்து கொடுப்பார். இதோ இந்த மந்தா3கினி நதியின் எதிர்புறமாகச் செல்லுங்கள். ஆங்காங்கு புஷ்பங்களால் ஆன படகுகள் கிடைக்கும். அதில் செல்லுங்கள். இதுதான் வழி. நரவ்யாக்4ரனே, ராமா, இப்பொழுது ஒரு முஹுர்த்தம் இங்கு இரு. என்னைப் பார். பாம்பு சட்டையை உரிப்பது போல நான் இந்த நைந்து போன சரீரத்தை த்யாகம் செய்யும் வரை இரு. இவ்வாறு சொல்லிக் கொண்டே, மந்திரங்களை அறிந்த சரபங்கர், மகா தேஜஸ்வியான ஸரபங்கர் ஆஜ்யம் என்ற நெய் விட்டு ஹோமம் வளர்த்து அக்னியில் பிரவேசித்து விட்டார். அவருடைய ரோமங்களையும் கேசத்தையும் கூட அக்னி எரித்து பஸ்மமாக்கி விட்டது. தோலும், எலும்புகளும் மக்கி மடிந்து ரத்தம் தோய்ந்த மாமிசம் எதுவும் மீதியில்லை. ராமர், லக்ஷ்மணர், சீதை மூவரும் ஆச்சர்யத்துடன் ஸ்தம்பித்து நின்றனர். செய்வதறியாது இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த அக்னியிலிருந்து அக்னி போலவே தேஜஸ் நிறைந்த குமாரன் தோன்றினான். அந்த நெருப்பு மூட்டத்திலிருந்து வெளி வந்த ஸரபங்கர் தெளிவாகவே தெரிந்தார். இடைவிடாது அக்னிஹோத்ரம் செய்யும் மேதாவிகள் அடையும் லோகமான ப்ரும்ம லோகம் சென்றார். தேவர்களுக்கு கூட எளிதில் கிடைக்க முடியாத அந்த பாக்யம், நற்செயல்களைச் செய்த பெரியவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாகும். ப்ரும்மாவும் அவரைப் பார்த்து ஸ்வாக3தம் சொல்லி வரவேற்றார். தன் புண்ய கர்மாவினால் ப்ரும்மாவின் ப4வனம் சென்றடைந்த மகரிஷியைப் பார்த்து பிதாமகரான ப்ரும்மாவும் மகிழ்ந்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஸரப4ங்க3 ப்ரும்மலோக ப்ரஸ்தா2னம் என்ற ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 6(202) ரக்ஷோ வத4 ப்ரதிக்ஞானம்
(ராக்ஷஸர்களை வதம் செய்வதாக வாக்கு தருதல்)
ஸரபங்கர் இவ்வாறு ஸ்வர்கம் சென்றதும், முனிவர்கள் அனைவரும் அங்கு கூடி விட்டனர். மகா தேஜஸ்வியான ராமனை வந்தடைந்தார்கள். வைகா2னஸமென்ற அக்னியை உடையவர்கள், மரவுரி தரித்தவர்கள், கானல் நீரை குடிப்பவர்கள் கற்களை உடைப்பவர்கள், வெறும் இலையை ஆகாரமாக கொண்ட தபஸ்விகள், தன் பற்களால் தானியங்களை அரைப்பவர்கள், நீரில் மூழ்கி தவம் செய்பவர், தூக்கத்தைத் துறந்தவர்கள், ஆகாயத்தை நோக்கித் தவம் செய்பவர், அல்லது ஆகாயத்தை குறித்து ஆராய்ச்சி செய்பவர்கள், என்று பலர். சில முனிவர்களுக்கு தண்ணீரே ஆகாரம். ஒரு சிலர் காற்றையே உண்டனர். வெறும் பூமியில் சிலர் படுப்பவர்கள், சிலர் ஆகாயத்தை நிலையமாக உடையவர். கைகளை உயரத் தூக்கியபடி நிற்பவர் சிலர். மிகவும் சாதுவானவர்கள். ஈர ஆடையே அணிபவர்கள். ஜபம் செய்து கொண்டே இருப்பவர். அனவரதமும் தவம் செய்பவர். பஞ்ச தபம் எனும் தவத்தைச் செய்தவர். என்று இவ்வாறு முனிவர்கள் எல்லோருமே ப்ரும்ம தேஜஸுடன் கூடியவர்கள், த்ருடமான யோகமும் சமாதியும் அறிந்தவர்கள், பலரும் ஸரபங்க ஆசிரமத்தில் ராமனைக் காண வந்து சேர்ந்தனர். ரிஷி முனிவர்களின் கூட்டம் ஒரே குரலில் தர்மம் அறிந்து நடப்பவர்களிலும் ஸ்ரேஷ்டனான ராமனைப் பார்த்து சொன்னார்கள். ராமா, நீ இக்ஷ்வாகு குலத்தின் இந்த பிரதேசங்களுக்கும் பிரதானமான நாதன், தலைவன். மகாரதியே, தேவர்களுக்கு இந்திரன் போல மூன்று உலகிலும் உன் வீர்யத்தாலும், புகழாலும் கொண்டாடப் படுபவன். தந்தை சொல்லைக் காக்க என்று எடுத்துக் கொண்ட பிரதிக்ஞையை உலகம் அறியும். உன்னிடத்தில் சத்யமும், தர்மமும் ஏராளமாக உள்ளன. மகானான உன்னையடைந்து தர்மத்தை அறிந்திருப்பதோடு, அதை பாலிப்பதிலும் ஈ.டுபாடு உடையவன் என்பதால் உன்னை யாசித்து வேண்டிக் கொள்கிறோம். பொறுத்துக் கொள்வாயாக. எந்த அரசன், பிரஜைகளிடம் ஆறில் ஒரு பங்கை வரி என்று வசூலித்துக் கொண்டு, அவர்களை புத்திரர்களை காப்பது போல காக்காமல் விடுகிறானோ, அவனை அதர்மம் சூழ்ந்து கொள்ளும். தன் உயிரை விட மேலாக கருதும் புத்திரர்களைப் போல பிரஜைகளை எண்ணி, ரக்ஷிக்க அரசன் கடமைப் பட்டுள்ளான். இவ்வாறு செய்து விஷய வாசனைகள் எனப்படும் இகத்தின் சுகங்களை அனுபவிக்கிறான். பல வருஷங்கள் நிலைத்து நிற்கும் கீர்த்தியையும் அடைகிறான். ப்ரும்மாவின் சமமான ஸ்தானத்தை அடைந்து அங்கும் புகழோடு வாழ்கிறான். பழங்கள், காய் கிழங்குகளை உண்டு, முனிவர்கள் செய்யும் தவப் பயனில் நான்கில் ஒரு பாகம் அரசனை சென்றடைகிறது, அந்த அரசன் பிரஜைகளை தர்ம வழியில் ரக்ஷித்துக் கொண்டிருப்பானேயானால். ப்ராம்மணர்கள் நிறைந்த, பெரும்பாலும் வான ப்ரஸ்த ஆசிரமத்தை அடைந்துள்ள மகான்கள், நீ எங்கள் தலைவனாக இருக்கும் பொழுதே, அநாதைகள் போல ராக்ஷஸர்களால் இம்சிக்கப் படுகிறார்கள். இதோ வந்து பார். தவம் செய்யும் முனிவர்களின் சரீரங்களைப் பார். பல ராக்ஷஸர்கள் பலமுறை அடித்து துன்புறுத்தியிருப்பதைப் பார். பம்பா நதி தீரத்திலிருந்து, மந்தாகினி வரை, சித்ர கூடத்தில் இருப்பவர்களையும் கசக்கி பிழிகிறார்கள். இதை பொறுக்க மாட்டாமல் தான், வந்தோம். கொடும் செயல்களைச் செய்யும் ராக்ஷஸர்கள், கோரமாக இந்த வனத்தில் செய்யும் அட்மூடுழியங்களுக்கு ஒரு முடிவு வேண்டும். அதனால் தான் உன்னை சரண்யனாக எண்ணி சரணடைகிறோம். இரவில் சஞ்சரிக்கும் இந்த ராக்ஷஸர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்று ராமா|. இந்த பூமியில் உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கதி இல்லை. அரசகுமாரனே, எங்கள் எல்லோரையும் அவர்கள் பிடியிலிருந்து காப்பாற்று. இதைக் கேட்டு காகுத்ஸன், எல்லா தபஸ்விகளும் முனிவர்களும் அடங்கிய கூட்டத்தைப் பார்த்து பதில் சொன்னார். தாங்கள் இவ்விதம் என்னிடம் கெஞ்சும் விதமாக சொல்லக் கூடாது. ஆணையிடுங்கள். நான் என் சொந்த காரியத்திற்காக வனம் வந்தேன். தந்தையின் கட்டளைப் படி யதேச்சையாக நான் வனம் வந்திருந்தாலும், உங்களுடைய இந்த ராக்ஷஸ தொல்லையை நீக்கவும், கடமைப் பட்டுள்ளேன். உங்கள் கஷ்டமும் தீருமானால், என் வன வாசமும் பயனுடையதாக ஆகும். தபஸ்விகளுடைய சத்ருக்களை யுத்தத்தில் ஜயிக்க விரும்புகிறேன். என் சகோதரன் வலிமையையும் என் வலிமையையும் இங்குள்ள தபஸ்விகள் அறிந்து கொள்ளட்டும். இவ்வாறு முனிவர்களுக்கு அபயம் அளித்து, சகோதரன் லக்ஷ்மணன், மனைவி சீதையுடன் சுதக்ஷ்ணர் ஆசிரமத்தை அடைந்தார். தபஸ்விகள் நிறைந்து அந்த இடம் காணப் பட்டது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ரக்ஷோ வத4 ப்ரதிக்ஞானம் என்ற ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 7 (203) சுதீக்ஷ்ணாஸ்ரமம் (சுதீக்ஷ்ணருடைய ஆசிரமம்)
ராமர் சகோதருடனும் சீதையுடனும் அந்த பிராம்மண கூட்டத்துடனும் சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றார். சிறிது தூரம் அத்வானமாக இருந்த இடத்தைக் கடந்து பெருகி ஓடும் நதிகளைக் கடந்து, பெரும் மேகம் போன்று உயர்ந்து இருந்த ஒரு பெரிய மலையைக் கண்டனர். பலவிதமான மரங்கள் நிறைந்து அடர்ந்திருந்த காட்டுப் பகுதியில் இக்ஷ்வாகு ராஜ குமாரர்கள் சீதையுடன் நுழைந்தனர். அந்த அச்சுறுத்தும் காட்டில், பூத்துக் குலுங்கும் மரங்களையும், கனி மரங்களையும் கண்டனர். நடந்து நடந்து இவைகளை கடந்து சென்றபடி ஆசிரமத்தை அடைந்தனர். மரவுரி ஆடைகள் வரிசையாக தொங்க விடப்பட்டிருந்ததை வைத்து அதை முனிவரின் ஆசிரமம் என்று ஊகித்துக் கொண்டனர். அங்கு அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த சுதீக்ஷ்ண முனிவரின் ஜடை முடிகள், மண் மூடிக் கிடந்தன. அவரை முறைப் படி ராமர் வணங்கினார். தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். ப4க3வன், நான் ராமன். தங்களைக் காண வந்திருக்கிறேன், மகரிஷியே, சத்ய விக்ரமனே, என்னிடம் பேசுங்கள். அவரும் கண் திறந்து பார்த்து ராமனைத் தெரிந்து கொண்டு, ஆலிங்கனம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு சொன்னார். ராமா, உன் வரவு நல் வரவு ஆகுக. உனக்கு ஸ்வாகதம். நீ இந்த ஆசிரமத்திற்கு வந்ததால், இந்த ஆசிரமம் நாயகனை அடைந்தது போல ஆயிற்று. உன் வரவால் இந்த இடம் பாவனமாயிற்று. பாக்யம் பெற்றது. இந்த பூமியில் உடலை தியாகம் செய்து விட்டு தேவலோகம் செல்ல வேண்டியவன் நான், உன் வரவை எதிர்பார்த்து தான் சரீரத்தை தரித்து காத்திருந்தேன். சித்ர கூடத்திலிருந்து வந்தவர்கள் மூலமாக நீ அரசைத் துறந்தாய் என்று கேள்விப் பட்டேன். காகுத்ஸா, தேவராஜனான இந்திரன் இங்கு வந்தான். என் புண்ய கர்மாக்களின் பலனாக எல்லா லோகமும் எனக்கு வசமானதாகச் சொன்னான். இப்படி தவ வலிமையால் ஜயித்த தேவ ரிஷிகள் நிறைந்த இடங்களில் நீ மனைவியுடனும், சகோதரனுடனும் மகிழ்ச்சியாக இரு. உக்ரமான தவம் செய்து வலிமை மிகுந்த அந்த முனிஸ்ரேஷ்டரைப் பார்த்து, சத்யமே பேசும் அவரிடம் ராமன், ப்ரும்மாவைப் பார்த்து இந்திரன் பேசுவது போல பேசினார். மகா முனிவரே, உலகங்களை நானே வெற்றி கொள்வேன். தற்சமயம் எனக்கு இருக்க இடம் வேண்டும் என்று தங்களை நாடி வந்தேன். நீங்கள் எல்லா ஜீவ ஜந்துக்களிடமும் இரக்கம் உள்ளவர். எல்லாம் அறிந்தவர் என்று கௌதமரான மகான் சரபங்கர் சொல்லி உங்களை நாடி வந்தேன். இதைக் கேட்டு மகிழ்ச்சியுடன், உலகெல்லாம் பரவிய கீர்த்தியுடைய அந்த முனிவர், இந்த ஆசிரமத்திலேயே சந்தோஷமாக இருங்கள். இங்கு எல்லா வசதிகளும் உள்ளன. மகரிஷிகள் வந்து போய் கொண்டிருப்பார்கள். இந்த ஆசிரமத்திற்கு வரும் மிருகங்களும் யாரையும் துன்புறுத்தாமல் சுற்றி விட்டு பயமின்றி பார்ப்பவர் மனதை கவர்ந்து தன் இஷ்டப் படி விளையாடி விட்டு திரும்ப போய் விடும். இது தவிர இங்கு வேறு எந்த விதமான இடையூறும் இருக்காது. மகரிஷி இவ்வாறு சொல்லவும் லக்ஷ்மணன் முன் பிறந்தவனான ராமன், தன் வில்லையும் அம்பையும் சுட்டிக் காட்டி, அப்படி வந்தாலும் மிருகங்களை நான் விரட்டிக் கொள்கிறேன். இந்த ஆசிரமத்தில் வெகு நாட்கள் இருக்க மாட்டோம் என்று நினைக்கிறேன் என்றார். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, பொழுது சாய்ந்து இரவு வருவதன் அறிகுறியாக, மேற்கில் சூரியன் மலை வாயிலில் விழுந்தான். அழகிய அந்த சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்தில், சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் தங்கினார். சுதீக்ஷ்ணர் தானே முனி ஜனங்களின் ஆகாரமான அன்னம் அளித்து உபசரித்தார். சந்த்யா காலம் மறைந்து இருள் சூழ்ந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சுதீக்ஷ்ணாஸ்ரமோ என்ற ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 8 (204) சுதீக்ஷ்ணாப்4யனுக்ஞா (சுதீக்ஷ்ணரிடம் விடை பெறுதல்)
சுதீக்ஷ்ணரின் உபசாரத்தை ஏற்றுக் கொண்டு அந்த இரவை அவருடைய ஆசிரமத்தில் கழித்தபின், விடிந்தவுடன், ராமர் சௌமித்திரியுடன் எழுந்திருந்து, சீதையுடன் உத்பல புஷ்பங்களின் மணம் வீசும் குளிர்ந்த நீரில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, அக்னியையும், தேவர்களையும் பூஜை செய்து விடியற்காலை சூரியனை வணங்கி, தபஸ்விகளுக்கு சரணமாக இருந்த வனத்தில், உதய சூரியனைக் கண்டு மனம் நிர்மலமாக, தெளிந்த உள்ளத்துடன் சுதீக்ஷ்ணரை தரிசிக்கச் சென்றார்கள். அவரை வணங்கி, ராகவன், மெதுவாக பகவன், உங்கள் கிருபையால் இரவு நன்றாகத் தூங்கினோம். நாங்கள் வணங்கி உபசாரம் செய்ய வேண்டியிருக்க, நீங்கள் எங்களை நன்றாக உபசரித்தீர்கள். விடை பெற்றுக் கொள்கிறோம். முனிவர்கள் அவசரப் படுத்துகின்றனர். இந்த ஆசிரம மண்டலம் முழுவதும் சுற்றிப் பார்க்க விரும்புகிறோம். புண்ய கர்மாக்களை செய்து வரும் முனிவர்களின் ஆசிரமத்தை தரிசித்து வருகிறோம். தண்ட காரண்ய வாசிகளான உங்களிடம் இந்த முனிவர்களுடன், நாங்களும் கூட விடை பெறுகிறோம். இவர்கள் நித்யம் தர்ம கர்மாக்களைச் செய்பவர்கள். தவம் செய்து மென்மையான குணம் வந்து சேரப் பெற்றவர்கள். கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் போன்று தூய்மையானவர்கள். சூரியன் தன் கிரணங்களால் தகிக்க ஆரம்பிக்கும் முன் (குழந்தை இல்லாதவன் தவறான வழியில் லக்ஷ்மியை கிடைக்கப் பெற்று, செல்வத்தை செய்வதறியாது திகைப்பது போல) நாங்கள் கிளம்பிச் செல்ல விரும்புகிறோம் என்று சொல்லி முனிவரின் பாதத்தில் வணங்கி நின்றனர்.
சௌமித்ரியும், சீதையும் முறையே முனிவரை வணங்கினர். பாதத்தில் வணங்கிய சகோதரர்கள் இருவரையும் எழுப்பி மார்புற அணைத்துக் கொண்டு மிகவும் அன்புடன், பரிவுடன் விடை கொடுத்தார் முனிவர். பத்ரமாக போய் வாருங்கள். நிழல் போல் பின் தொடர்ந்து வந்துள்ள சீதையோடும், சௌமித்ரியுடனும் நலமாக போய் வா. தண்டகாரண்ய முனிவர்களின் அழகிய ரம்யமான ஆசிரமங்களையும் பார். தவமே குறியாக உள்ள இந்த சுத்தமான ஆத்மாக்களுடைய இருப்பிடமான இங்கு ஏராளமான பழங்கள், காய் கனி வகைகள் கிடைக்கின்றன. வனத்தில் மலர் சொரியும் மரங்களும் நிறைய உள்ளன. கூட்டம் கூட்டமாக வரும் மிருகங்களும் சாந்தமானவையே. பிரஸன்னமான நீரை உடைய குளங்களும், மலர்ந்த தாமரை மலர்களுடன் தாமரைக் குளங்களும், வாத்துகள் நிரம்பிய நீர் நிலைகளும், சிறு குளங்களும், கண்ணுக்கு ரம்யமாக விளங்குவதைக் காண்பீர்கள். மயில்கள் ஆடுவதைக் காணலாம். சௌமித்ரே, குழந்தாய், நீயும் சௌக்யமாக போய் வா. இந்த ஆசிரமத்திற்கு திரும்பவும் வாருங்கள் என்றார். அப்படியே ஆகட்டும் என்று சொல்லி காகுத்ஸன், லக்ஷ்மணனுடன் முனிவரை பிரதக்ஷிணம் செய்து வணங்கி, கிளம்பத் தயாரானான். மங்களகரமான வில்லையும், தூணியையும், கத்திகளையும் அந்த சகோதரர்களுக்கு விசாலாக்ஷியான சீதை எடுத்துக் கொடுத்தாள். அவைகளை உடலில் அணிந்து கொண்டு, கத்தியையும் வில்லையும் கையில் எடுத்துக் கொண்டு, அவ்விருவரும் சீதையுடன் புறப்பட்டுச் சென்றார்கள். மான்கள். அழகிய வடிவம் கொண்டவர்கள், தங்கள் தேஜஸால் பிரகாசமாக விளங்கியவர்கள், ரகுவம்ச ராஜ குமாரர்கள், சீதையுடன் வழி நடந்து செல்லலாயினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சுதீக்ஷ்ணாப்4யனுக்ஞா என்ற எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 9 (205) சீதா த4ர்மாவேத3னம் (சீதை தர்மத்தைச் சொல்லுதல்)
சுதீக்ஷ்ணரிடம் விடை பெற்றுக் கிளம்பிய ராமனிடம் மனதைக் கவரும் இனிமையான வார்த்தைகளால் சீதை தன் மனதில் பட்டதைச் சொன்னாள். மிகவும் சூக்ஷ்மமாக மிகப் பெரிய அதர்மம் வந்து சேர்ந்து விடுகிறது. நாமே ஆசையினால் செய்யும் ஒரு காரியத்தால் அனர்த்தம் வருவதை கொஞ்சம் கவனமாக இருந்து தவிர்க்க முடியும். ஆசையினால் வரும் மூன்று அனர்த்தங்கள் சாதாரணமாக சொல்வதுண்டு. மித்யா வாக்யம்-பொய் பேசுதல், இதுவே பெரிய குற்றம். மற்ற இரண்டும் இன்னும் பெரிய குற்றம். பரதாராபிகமனம்- பிறன் மனையை நாடுதல், மாற்றான் மனைவியை நாடுதல், வினா வைரம் ச ரௌத்3ரதா- காரணமின்றி ஒருவரிடம் ரௌத்ரம் கோபம் கொள்ளுதல். ராகவா, இதில் பொய் பேசுவது என்பது உங்களிடம் இருந்ததில்லை. இனியும் இருக்காது. தர்மத்தையே அழிக்கக் கூடிய பரஸ்த்ரீ க3மனம், மாற்றான் மனைவியை விரும்புவது என்பதும் உங்களிடம் இருந்ததும் இல்லை, இனியும் இருக்காது. மனிதர்களுள் இந்திரன் போன்றவனே, உங்கள் மனதில் இப்படியொரு எண்ணம் கூட வராது என்பது நிச்சயம். அரசகுமாரனே, தன் மனைவியிடமே ஈ.டுபாடு உடையவன் நீங்கள் என்பதை நான் அறிவேன். எப்போதும் இப்படியே இருப்பீர்கள். தர்மத்தில் விருப்பமுள்ளவன், சத்ய சந்தன், தந்தை சொல்லை மீறாதவன் என்றெல்லாம் பெயர் பெற்றுள்ள உங்களிடம் சத்யமும் தர்மமும் நிலைத்து நிற்கின்றன. இந்திரியங்கள் உங்கள் வசத்தில் இருக்கின்றன. புலனடக்கம் உள்ளவர்கள் சத்யத்தையும், தர்மத்தையும் காப்பது எளிதே. மூன்றாவதான இந்த மற்ற பிராணிகளை ஹிம்ஸை செய்வது என்பதை மோகத்தால் இப்பொழுது செய்ய முனைகிறீர்கள். யாரிடமும் வைரம், விரோதம் இல்லாத பொழுது, தண்டகாரண்ய வாசிகளுக்கு பிரதிக்ஞை செய்து கொடுத்திருக்கிறீர்கள். ரிஷிகளை காப்பதற்காக ராக்ஷஸர்களை வதைப்பேன் என்பதாக. இவர்களாலேயே இந்த வனம் தண்டகா வனம் என்று பெயர் பெற்றுள்ளது வில் அம்புகளை எடுத்துக் கொண்டு சகோதரனோடு கிளம்பி விட்டீர்கள். இப்படி கிளம்பிய உங்களைப் பார்த்து எனக்கு கவலையுண்டாகிறது. உங்களை முற்றிலும் அறிந்தவள் என்பதால், உங்கள் நடவடிக்கைகளை வைத்து யோசித்துப் பார்க்கும்பொழுது, இந்த செயல் நல்லதல்ல, நன்மையைத் தராது என்று தோன்றுகிறது. இந்த தண்டகாவனம் போவதே எனக்குப் பிடிக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்றும் சொல்கிறேன் கேளுங்கள். கையில் வில்லும் அம்பும் ஏந்தி நீங்கள் சகோதரனோடு வனத்தில் செல்கிறீர்கள். காட்டில் திரியும் உங்களைப் பார்த்து யாராவது அம்பை எடுத்து அடிக்கலாம். நெருப்புக்கு எரி பொருள் கிடைத்தாற் போல் க்ஷத்திரியர்களுக்கு, அருகில் பலசாலியான எதிரி அகப்பட்டால் பலம் ஏகமாக வளர்ந்து விடும். வேகம் வந்து விடும். முன்பு ஒரு காலத்தில் ஒரு முனிவர் இருந்தார். சத்யவாதி. ஒழுக்கமும் தவ வலிமையும் உடையவர். எதோ ஒரு பாவனமான வனத்தில் இருந்தார். மிருகங்களும் பக்ஷிகளும் நிரம்பிய இடம். அவருடைய தவத்திற்கு இடையூறு செய்யும் பொருட்டு வேட ரூபம் தரித்து இந்திரன் அங்கு வந்து சேர்ந்தான். கையில் கத்தியோடு அந்த ஆசிரமம் வந்து சேர்ந்தான். அந்த தபஸ்வியிடம் கத்தியை கொடுத்து, பாதுகாப்பாக வைத்திருக்கும்படியும் தான் வந்து வாங்கிக் கொள்வதாகவும் சொல்லிச் சென்றான். பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலையில் அந்த கத்தியை வனத்தில் நடமாடும் பொழுதெல்லாம் தன் கையிலேயே வைத்துக் கொண்டு அந்த முனிவர் அதை பாதுகாப்பதில் கவனமாக இருந்தார். இந்த ஆயுதம் சதா கையில் இருந்ததாலேயே தவத்தில் அவருக்கு இருந்த ஈடுபாடு குறைந்து, ரௌத்ர புத்தி வந்து சேர்ந்தது. மெள்ள மெள்ள வெறி ஏறி அனாவசியமாக ரௌத்ர வ்ருத்தியை மேற் கொண்டு, நரகம் சென்றார். இது முன்னொரு சமயம் நடந்த கதை. ஆயுதம் அருகிலேயே இருந்ததால் குணம் மாற அந்த ஆயுதமே காரணமாக ஆயிற்று. அக்னி அருகில் இருப்பது போல் தான் ஆயுதம் தரிப்பதும். உங்களிடம் உள்ள அபிமானத்தினாலும், ஸ்னேகத்தாலும் நினைவு படுத்துகிறேன். உபதேசம் செய்யவில்லை. த4னுஷை ஏந்தி இந்த தவற்றை நீங்கள் ஒருபொழுதும் செய்யக்கூடாது. தண்டகா வனத்தை ஆஸ்ரயித்து இருக்கும் ராக்ஷஸர்களை ஒரு விரோதமும் இன்றி வதம் செய்யக் கூடாது. அவர்கள் எந்த வித அபராதமும் செய்யாத பொழுது, அந்த ஜனங்களை கொல்வதை நான் விரும்பவில்லை. வீரர்களான க்ஷத்திரியர்கள், வனத்தில் நிம்மதியாக வசிப்பவர்களை கஷ்டப் படும் பொழுது காப்பாற்ற வேண்டும் என்பது வரை தான் கடமை. சஸ்த்ரம் எங்கே, வனவாஸம் எங்கே. (ரௌத்ரம்) கடும் கோபம் கொண்டு அடிப்பது எங்கே. தவம் செய்யும் எளிமை எங்கே, நம்மை சூழ்ந்திருக்கும் இந்த தேச தர்மத்தைக் காப்பாற்றுவோம். அண்ணலே, சஸ்த்ரம் எனும் ஆயுதத்தை ஏந்துவதால் புத்தி கலங்கித்தான் போகிறது. திரும்ப அயோத்தி சென்ற பின் க்ஷத்திரிய தர்மத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு காப்பாற்றுவீர்கள். அது என் மாமனார், மாமியாருக்கும் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும். ராஜ்யத்தைத் துறந்து பற்றில்லாத முனிவராக வாழ்வது என்று எப்பொழுது தீர்மானம் செய்து வனம் வந்தீர்களோ, அதை முழுவதுமாக நிறைவேற்றுவோம். தர்மத்திலிருந்து அர்த்தம் பிறக்கிறது. தர்மத்தினால் சுகம் கிடைக்கும். தர்மத்திலிருந்து சர்வமும் கிடைக்கிறது. இந்த உலகமே தர்ம சாரமாகும். நியமங்களை கடை பிடித்து தன்னை வருத்திக் கொண்டாலும், விடாது முயற்சியுடன் தர்மத்தை காப்பவன் நிபுணனாவான். சுகத்திலிருந்து சுகம் பெற முடியாது. நித்யம் சுசியாக, சுத்தமாக இருந்து தவ வழியில் செல்லுங்கள். சௌம்ய, இவை எல்லாமே நீங்கள் அறிந்தது தான். இருந்தும், பெண்களுக்கே உரிய சபல புத்தியால் இவ்வளவு சொன்னேன். இல்லையெனில் உங்களுக்கு த4ர்மோபதேசம் செய்ய யாருக்கு அருகதை இருக்கிறது? நன்கு யோசித்து, தம்பியுடன் கலந்தாலோசித்து எப்படித் தோன்றுகிறதோ, செய்யுங்கள். சீக்கிரம் ஆகட்டும்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சீதா த4ர்மாவேத3னம் என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 10 (206) ரக்ஷோ வத4 சமர்த்தனம்
(ராக்ஷஸர்களை வதம் செய்வதை நியாயப் படுத்துதல்)
தன் கணவனிடம் கொண்ட அன்பினால், சீதை இவ்வளவு தூரம் விவரமாக விவாதித்ததைக் கேட்டுக் கொண்டிருந்த ராமன், மைதிலிக்குப் பதில் சொன்னான். தேவி, ஹிதமானதைச் சொன்னாய். இது உன் சினேகத்தை காட்டுகிறது. அது சரியே. ஜனகர் மகளே, உன் குலத்திற்கு உகந்ததாயும், தர்மம் அறிந்தவள் என்பதைக் காட்டும் வகையிலும் உன் சொற்கள் அமைந்திருந்தன. நான் வேறு என்ன சொல்லப் போகிறேன். நீயே சொன்னாய். க்ஷத்திரியர்கள் ஆயுதம் தரிப்பதன் நோக்கம் என்ன என்றால், எங்கும் காப்பாற்று என்று வருந்தி எழுப்பும் குரல் கேட்கக் கூடாது என்பதே. சீதே, தண்டகாரண்ய வாசிகளான முனிவர்கள், தங்கள் விரதங்களை அனுஷ்டிப்பதில் தீவிரமாக இருப்பவர்கள். கஷ்டம் தாங்காமல் தாங்களாகவே என்னை சரணடைந்தார்கள். இந்த வனத்தில் தங்கள் வழியில் யாரையும் அண்டாமல் வசிக்கும் பொழுதும், கனி, காய், கிழங்குகளை உண்டு யாரையும் துன்புறுத்தாமல் காலத்தை கழிக்கும் பொழுதும், இந்த ராக்ஷஸர்களின் கொடிய செயல்களின் பலனாக சுகமாக இருக்க முடியவில்லை. அந்தந்த காலத்திற்கு ஏற்ப தங்கள் விரதங்களை பாலனம் செய்து வருகிறார்கள். நர மாமிசம் தின்னும் ராக்ஷஸர்கள் இவர்களைத் தின்று தீர்க்கிறார்கள். இப்படி ராக்ஷஸர்கள் வாயில் அகப்பட்டுக் கொண்ட முனிவர்கள், மற்ற பிராம்மணர்களைப் பார்த்து என்னை சரணடையும்படி சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் சொன்னதைக் கேட்ட பின்பும் வாளாவிருக்க முடியாமல் நானாக இவ்வாறு சொன்னேன். மன்னிக்க வேண்டும் பெரியவர்களே, எனக்கு இது அவமானம். வெட்கம் தரும் விஷயம், ஏனெனில், நான் வந்து உங்களை விசாரித்து தேவையானதை செய்து கொடுப்பது என் கடமையாக இருக்க நீங்களே வேண்டிக் கொண்டு என்னிடம் வரும்படி ஆயிற்று. அவர்கள் முன்னிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அவர்கள் எல்லோரும் சேர்ந்து பதில் அளித்தனர். பல விதமான ரூபம் எடுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்த ராக்ஷஸர்கள், இந்த தண்டகாரண்யத்தில் எங்களைத் துன்புறுத்துகிறார்கள். நீ தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். பர்வ காலங்களில் நாங்கள் ஹோமம் செய்யும் பொழுது வந்து விடுகிறார்கள். அடிக்கிறார்கள். திரும்ப அடிக்க எங்களால் முடியவில்லை. மாமிசத்தை ஆகாரமாக கொண்ட அவர்கள் பலம் எங்களுக்கு இல்லை. தவம் செய்யும் இந்த தபஸ்விகளை இவர்கள் பிடியிலிருந்து தப்புவிக்க வழி தேடிக் கொண்டிருந்த எங்களுக்கு நீதான் கதி. புகலிடம். எங்கள் தவ வலிமையால் அவர்களை கொல்ல முடியும். அதற்கு நாங்கள் சமர்த்தர்களே. ஆனால் பல காலமாக தவம் செய்து சேர்த்த தவ பலன்கள் நஷ்டமாகும். சிலர் அவர்கள் வாயில் உணவாக அகப் பட்டுக் கொள்வதைப் பார்த்து சாபங்கள் கூட கொடுத்திருக்கிறோம். தவம் செய்வது மிகக் கடினம். இதில் வரும் இடையூறுகளும் மிக அதிகம். இப்படி கஷ்டப் பட்டு தவம் செய்வது, இப்படி சாபங்கள் கொடுத்து வீணாகிறது. விரயமாகிறது. அதனால் எங்களை காப்பாற்று. உன் சகோதரனையும் உதவிக்கு அழைத்துக் கொள். உங்களையே நாயகனாக ஏற்றுக் கொள்கிறோம். என்றனர் அந்த அப்பாவி தபஸ்விகள். ஜனகர் மகளே, இவ்வாறு வருந்தி புலம்பும் ரிஷி, முனிவர்களின் நிலையைப் பார்த்து இரங்கி கருணை மேலிட நான் வாக்கு கொடுத்து விட்டேன். ஒரு முறை வாக்கு கொடுத்து விட்டால் உயிரே போவதானாலும் மீற மாட்டேன். முனிவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பது என் கடமையாகிறது. நான் என் உயிரை விட்டாலும் விடுவேன். உன்னையும், லக்ஷ்மணனையும் தியாகம் செய்தாலும் செய்வேன். கொடுத்த வாக்கை மீற மாட்டேன். அதுவும் அப்பாவிகளான ரிஷி முனிவர்களிடம் செய்வதாக சொல்லி விட்டு, இப்பொழுது மாற்ற முடியாது. அவர்கள் சொல்லாமலே செய்ய வேண்டியவன் நான். அவர்களே வந்து வேண்டிக் கொண்ட பின், சத்யமும் செய்து கொடுத்த பின் எப்படி மீறுவேன்? என்னிடத்தில் உள்ள அன்பினாலும், பரிவினாலும் நீ இவ்வாறு பேசினாய், வைதேஹி, நான் மகிழ்ச்சியடைந்தேன். தவறாக நீ எதுவும் சொல்லவில்லை. நீ பிறந்த குலத்திற்கும், புகுந்த வீட்டிற்கும் ஏற்ற விதமாகத் தான் யோசனை சொன்னாய். என்னுடன் கூட தர்மத்தை கடை பிடிக்க வந்த சஹ தர்ம சாரிணீ நீ. என் உயிரை விட பிரியமானவள். இவ்வாறு மிதிலா ராஜ குமாரிக்கு பதில் சொல்லி விட்டு, பிரியமான மனைவியுடனும், வில்லேந்தி உடன் வந்த சகோதரனுடனும் ரம்யமான தபோ வனத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ரக்ஷோ வத4 சமர்த்தனம் என்ற பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 11 (207) அகஸ்தியாஸ்ரம: (அகஸ்தியரின் ஆசிரமம்)
ராமன் முன்னால் சென்றான். நடுவில் சீதை. பின்னால் கையில் வில்லுடன் லக்ஷ்மணன் பின் தொடர்ந்தான். பலவிதமான மலைச்சாரல்களையும் வனங்களையும் பார்த்துக் கொண்டே பல நதிகளைக் கடந்து அழகிய இயற்கை காட்சிகளை தரிசித்தவாறு சென்றனர். சாரஸ பக்ஷிகளும், சக்ரவாகங்களும் நதி மணலில் சஞ்சரிக்கும் பக்ஷிகளும், தாமரை மலர் மலர்ந்து நிறைந்த தடாகங்களும், நீரில் வாழும் பறவைகளும், கம்புகளில் கட்டப் பட்ட புள்ளி மான்களும், மதம் பிடித்த யானைகளும், காட்டு எருமைகளும், வராகங்களும், மரங்களுக்கு எதிரிகளான யானைகளும் என்று காட்டில் பல காட்சிகளைக் கண்டு ரசித்தவாறு சென்றனர். அத்வானத்தில் வெகு தூரம் நடந்து சென்றபின் மாலை வெய்யில் நீளமாக நிழலைத் தந்த நேரம் ஒரு தடாகத்தைக் கண்டனர். அழகிய தாமரைக் குளம். இரண்டு யானைக் குட்டிகள் அலங்காரமாக நிறுத்தப் பட்டிருந்தன. சாரஸம், ஹம்ஸம், காத3ம்ப4ம் என்ற நீர் வாழ் பறவைகள் நிறைந்திருந்தது. அந்த குளத்தின் நீர் பிரஸன்னமாக இருந்தது. எங்கிருந்தோ வாத்ய கோஷங்களும், பாடும் சத்தமும் கேட்டது. ஆனால் நேரில் யாரும் தென்படவில்லை. ராமனும், லக்ஷ்மணனும் ஆவல் மேலிட த4ர்மப்4ருதர் என்ற முனிவரை இது பற்றிக் கேட்டனர். அத்புதமான சங்கீதம் கேட்கிறது. எங்கிருந்து வருகிறது? யார் பாடுகிறார்கள்? விவரமாகச் சொல்லுங்கள், இதில் ரஹஸ்யம் ஏதுமில்லையே, சொல்லலாம் என்றால் சொல்லுங்கள் எனவும், முனிவர் அந்த குளத்தின் பிரபாவத்தை விவரமாக சொல்ல ஆரம்பித்தார். இது வெகு காலமாக பஞ்சாப்ஸரஸ் என்ற பெயருடன் இருந்து வருகிறது. மாண்ட கர்ணி என்ற முனிவரால் நிர்மாணிக்கப் பட்டது. மாண்ட கர்ணி என்ற மகா முனி, வெகுகாலம் கடுமையான தவம் செய்தார். பத்தாயிரம் வருஷம் காற்றையே ஆகாரமாகக் கொண்டு நீரில் மூழ்கியவாறு தவம் செய்தார். இதனால் அக்னியும் மற்ற தேவர்களும் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். வாட்டத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். இந்த முனிவர் நம்மில் ஒருவராக வர எண்ணுகிறார். அதனால் நம்மில் ஒருவர் பாதிக்கப்படுவோம். மூவுலகிலும் இருந்த தேவ்ர்கள், தங்கள் பதவி பறி போகுமோ என்ற பயத்தினால் பீடிக்கப் பட்டவர்களாக இவருடைய தவத்தைக் கலைக்க இடையூறு செய்வது என்று தீர்மானித்து, எல்லோருமாக ஒரு திட்டம் வகுத்தனர். மின்னலைப் போன்ற அழகிய தோற்றம் உடைய ஐந்து அப்ஸர ஸ்த்ரீகளுடன் தன் தவத்தின் உச்ச நிலையில் இருந்த முனிவர் இருக்கும் இடம் வந்தனர். தேவர்கள் தங்கள் காரிய சித்திக்காக முனிவரை மதனனின் வசத்தில் விழச் செய்தனர். இந்த ஐந்து அப்ஸர ஸ்த்ரீகளும் முனிவரின் பத்னிகளாக ஆனார்கள். இந்த குளத்தின் அடியில் அவர்களுக்காக வீட்டைக் கட்டினார். இங்கு அந்த ஐந்து அப்ஸர ஸ்த்ரீகளும் சுகமாக வசித்தபடி, யௌவனத்தைப் பெற்ற முனிவருடன் சந்தோஷமாக இருந்து அவரையும் மகிழ்வித்தனர். இவ்வாறு விளையாடும் அவர்களின் பாட்டு சத்தம் தான் கேட்கிறது. அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்களின் குலுங்கும் சத்தமும் ஊடே கேட்பது ஆச்சர்யம் என்று முனிவர் சொல்ல, ராகவனும் அவ்வாறே ஆச்சர்யம் தான் என்று ஆமோதித்து, அதோடு அந்த விஷயத்தை விட்டு விட்டு, சற்று தொலைவில் நோக்கினார். ஒரு ஆசிரமம் தென்பட்டது. குசம் என்ற தர்ப்பை புல் போட்டு வேயப் பட்டு, ப்ரும்ம தேஜஸுடன் கூடிய ஆசிரம மண்டலம் (ப்ராம்மணர்கள் வசிக்கத் தகுந்த ஏற்பாடுகளுடன் கூடிய) தெரியவும், சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் உள்ளே நுழைந்தனர். அங்குள்ள முனிவர்கள் எல்லோரும் உற்சாகமாக வரவேற்று உபசரிக்க பெரும் புகழ் பெற்ற மகானான ராமன் அங்கு வசித்தார். மகரிஷிகள் இருப்பிடத்தில் வரிசைக் கிரமமாக ஒவ்வொருவர் இருப்பிடத்திற்கும் சென்று அவர்கள் உபசரிப்பை ஏற்றுக் கொண்டு தங்கினார்கள். ஏற்கனவே தன் முயற்சியாலும், பயிற்சியாலும் பல நல்ல அஸ்திரங்களை அறிந்திருந்தவர் தான் என்றாலும், அந்த தபஸ்விகளிடம் வசிக்கும்பொழுது மேலும் பலவற்றை தெரிந்து கொண்டார். சில இடங்களில் பத்து நாட்கள், சில இடங்களில் மாதக் கணக்கில், சில இடங்களில் வருஷம் பூராவுமாக வசித்தனர். சில இடங்களில் நான்கு மாதங்கள், சில இடங்களில் ஐந்து, ஆறு மாதங்கள், சில இடங்களில் ஒன்றரை மாதம் என்றும், மூன்று மாதம் ஓரிடத்தில், மற்றொரு இடத்தில் எட்டு மாதம் என்றும் சுகமாக வசித்து வந்தனர். இவ்வாறு அந்த முனிவர்களின் ஆசிரமத்தில் வசிக்கும்பொழுது காலமும் அனுகூலமாக சுழல, பத்து வருஷம் பூர்த்தியாயிற்று. சுற்றிச் சுற்றி சீதையுடன் திரும்பவும் சுதீக்ஷ்ணரின் ஆசிரமம் வந்து சேர்ந்தனர். இங்கும் முனி ஜனங்கள் வந்து உபசரிக்க, சிறிது காலம் அங்கேயே இருந்தார். இந்த ஆசிரமத்தில் இருந்த பொழுது ஒரு நாள் முனிவரைப் பார்த்து, பகவன், இந்த அரண்யத்தில் பகவான் அகஸ்தியர் வசிக்கிறாரென்று கேள்விப் பட்டேன். அவர் பெரிய மகான். அறிஞர். தவ வலிமையுடையவர் என்றும் அறிந்தோம். அவர் ஆசிரமம் எங்கு இருக்கிறது? நான், சகோதரன் லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் அவரை வணங்கி ஆசீர்வாதம் பெற விரும்புகிறேன் எப்படி போக வேண்டும் ? அவருக்கு நானே பணிவிடை செய்து அந்த முனிஸ்ரேஷ்டருடன் சிறிது காலம் இருக்க வேண்டும் என்ற ஆவல் என் மனதில் மேலோங்கி நிற்கிறது என்று சொல்ல, சுதீக்ஷ்ணர் பதில் சொன்னார். தசரத குமாரன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, மகிழ்ச்சியுடன் சுதீக்ஷ்ணர், நானே இதைப் பற்றி உங்களிடம் சொல்ல இருந்தேன். அகஸ்தியர் ஆசிரமத்திற்கு லக்ஷ்மணனுடன் போய் தரிசித்து விட்டு வாருங்கள் என்று அனுப்ப இருந்தேன். சீதையுடனும் அந்த ஆசிரமத்திற்கு போய் வாருங்கள். நீங்களே சொன்னது நல்லதாயிற்று. அகஸ்தியர் இருப்பிடத்தை வெளிவாகச் சொல்லுகிறேன். இந்த ஆசிரமத்திலிருந்து ஒரு யோஜனை தூரம், அதன் பின் நான்கு யோஜனை தூரம் தென் திசையில் சென்றால், சகோதரன் அகஸ்தியருடைய ஆசிரமம் வந்து சேரும். சமவெளியான பிரதேசத்தில் உள்ள வனம். பிப்பல மரம் நிறைந்தது. பலவிதமான புஷ்பங்கள் உடைய மரங்களும், பக்ஷிகள் இடை விடாமல் சத்தம் போடும் இனிமையான இடம். சுத்தமான பிரஸன்னமான ஜலமும், பாவனமான நீர் நிலைகளும், தாமரைத் தடாகங்களும் நிறைந்தது. ஹம்ஸங்களும், காரண்டவ பக்ஷிகளும், சக்ர வாகங்களும் அழகூட்டும். அங்கு ஒரு நாள் இருந்து விட்டு மறு நாள் காலை கிளம்புங்கள். தென் திசையில் மேலும் சென்றால் அடர்ந்த காட்டின் ஒரு புறமாக யோஜனை தூரம் சென்றால், அகஸ்திய ஆசிரமம் வரும். ரம்யமான காடு. நிறைய மரங்களுடன் அடர்ந்து இருக்கும். அகஸ்தியரை தரிசிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால் இன்றே புறப்படுங்கள். இவ்வாறு முனிவர் சொல்லவும், சகோதரனுடன் அவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு சீதையுடன் புறப்பட்டார். பெரும் மலைகளையும், அழகிய காடுகளையும் பார்த்துக் கொண்டே நடந்தனர். வழியில் தென்பட்ட குளங்களையும், நதிகளையும் கடந்து, சுதீக்ஷ்ணர் சொன்னபடியே வழியை மனதில் கொண்டு நிதானமாகச் சென்றனர். உற்சாகமாக இருந்த ராமன் லக்ஷ்மணனிடம் சொன்னார். லக்ஷ்மணா, இது தான் அந்த மகா முனிவருடைய ஆசிரமமாக இருக்க வேண்டும். சுதீக்ஷ்ணருடைய சகோதரன், புண்ய கர்மாக்களை செய்து வருபவர் என்று தெரிகிறது. வழியில் ஆயிரக் கணக்கான மரங்களைப் பார்த்தோமே, அவையனைத்தும் கனிகளின் பாரத்தால் வளைந்து தொங்கினவே, கவனித்தாயா? முதிர்ந்த திப்பிலி பழங்களின் வாசனை இந்த வனத்தில் எழுகிறது. அதைக் காற்று அடித்துச் சென்று, திடீரென்று கசப்பு மேலிடும் வாசனை மூக்கைத் துளைக்கிறது. ஆங்காங்கு விறகு கட்டைகள் சேமித்து வைக்கப் பட்டிருக்கின்றன. தர்ப்பைப் புல் வெட்டப் பட்டு வைடூரியம் போல பிரகாசிக்கிறது. இதோ வனத்தின் நடுவில் உள்ள கருமேகம் போல ஆஸ்ரம நெருப்பின் புகை மலை சிகரம் போலத் தெரிகிறது. ஆசிரம வாசிகள் வீடுகளில் அடுப்பு எரியும் புகை தெரிகிறது. பல தீர்த்தங்களில் ஸ்னானம் செய்து விட்டு பிராம்மணர்கள் தாங்களே பறித்து வந்த புஷ்பங்களைக் கொண்டு பூஜைகள் செய்கின்றனர். சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்தில் இருந்த பொழுது நாம் கேள்விப் பட்டோமே, அவருடைய சகோதரன் ஆசிரமம் எப்படி இருக்கும் என்று அவர் விவரித்தாரே, அதே போல இருப்பதால் இது தான் நாம் தேடி வந்த அகஸ்தியரின் ஆசிரமமாக இருக்க வேண்டும். மரணத்தையும் இழுத்து பிடித்துக் கொண்டு உலக நன்மைக்காக இவர் செய்த ஒரு காரியம் நாலா திக்குகளிலும் உள்ளவர்களும் இவரை சரணடையச் செய்து விட்டது.
ஒரு சமயம் வாதாபி, இல்வலன் என்று இருவர் இங்கு வசித்து வந்தனர். சகோதரர்கள். இருவரும் பிராம்மணர்களைக் கொன்று குவிக்கும் க்ரூரமான புத்தியுடையவர்கள். நல்ல பலம் பொருந்திய அசுரர்கள். இல்வலன் தன்னை ஒரு பிராம்மணன் போல அலங்கரித்துக் கொண்டு, சம்ஸ்க்ருத பாஷையில் பேசிக் கொண்டு, தங்கள் வீட்டில் ஸ்ரார்த4ம் என்றும் அதனால் சாப்பிட வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டும், பிராம்மணர்களை அழைத்து வருவான். தன் தம்பியையே மேஷமாக்கி, நன்றாக சமைத்து சிரார்த்3த4 விதிப் படி பரிமாறுவான். கொடும் புத்தியுடையவன். அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன், பெருங் குரலில், வாதாபி வா என்று அழைப்பான். மேஷம் எனும் ஆட்டு உருவத்தில் இருந்த வாதாபி, ஆடு போலவே கத்திக் கொண்டு அந்த பிராம்மணர்களின் சரீரங்களை பிளந்து கொண்டு வெளியே வருவான். இவ்வாறு விரும்பிய வடிவம் எடுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்த அந்த சகோதரர்கள், பல ஆயிரம் பிராம்மணர்களை அழித்தனர். இதே விதமாக அகஸ்தியரை ஒரு முறை சாப்பிட அழைத்தனர். ஸ்ரார்த4த்தில் நன்றாக உணவை அனுபவித்து சாப்பிட்டு விட்டார். ஸ்ரார்தம் முடிந்தவுடன், கைகளில் நீர் விட்டு, சகோதரனை வெளியில் வா என்று இல்வலன் அழைத்தான். அவன் நோக்கத்தை அறிந்து கொண்ட அகஸ்தியர் பலமாக சிரித்து, எப்படி வெளியே வருவான், அவன் தான் ஜீரணமாகி விட்டானே என்றார். உன் சகோதரன், ஆடு ரூபத்தில் சமைக்கப் பட்டு என்னால் சாப்பிடப் பட்டவன் யம லோகத்தை அடைந்து விட்டானே என்று சொல்லவும், அந்த அரக்கன் அகஸ்தியரை அடித்து துன்புறுத்த ஆரம்பித்தான். தன் சகோதரன் இறந்த செய்தியை அவனால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. அக்னிக்கு சமமான தவ வலிமை உடைய அகஸ்தியர் அவனை தன் கண்களாலேயே சுட்டெரித்தார், அந்த முனிவரின் ஆசிரமம் இது. சுற்றிலும் குளங்கள், மரங்கள் அடர்ந்த காடுகள் என்று அழகாக அமைந்துள்ளது. பிராம்மணர்களிடம் கொண்ட பற்றினால் அவர் ஒருமுறை இப்படி செய்ய வேண்டியதாயிற்று. இப்படி பேசிக் கொண்டே சௌமித்திரியுடன் நடந்து சென்று கொண்டிருக்கையிலேயே சூரியன் மலை வாயில் விழுந்தான். ஸந்த்யா காலம் வந்தது. மாலை நேர ஜப தபங்களை சகோதரன் கூட செய்து விட்டு ஆசிரமத்தை சென்றடைந்தனர். அகஸ்தியரின் சகோதரனான ஒரு ரிஷியைக் கண்டு வணங்கி நின்றனர். அவரும் ராமரை அடையாளம் கண்டு கொண்டு நன்கு உபசரித்தார். அன்று இரவு கனி, காய், கிழங்கு வகைகளை ஆகாரமாகக் கொண்டு அங்கேயே வசித்தனர். அன்று இரவு நகர்ந்து விடிந்தவுடன், அகஸ்திய சகோதரனான அந்த ரிஷியிடம் விடை பெற்றுக் கொண்டனர். ப4கவன், வணங்குகிறோம். இரவு நிம்மதியாக தூங்கினோம். உங்களிடம் விடை பெற்றுக் கொள்கிறோம். உங்கள் தமையனாரும் குருவுமான அகஸ்தியரைக் காணச் செல்கிறோம் என அவரும் சரி போய் வாருங்கள் என்று விடை கொடுத்து அனுப்பினார். ரகுநந்தனனும், அவர் சொன்ன வழியை பின்பற்றிச் சென்று வழியில் கானகத்தையும் கண்டு ரசித்தபடி சென்றனர். நீவாரம், பனஸம் (பலா) தாலான் (தேக்கு) ஸ்தினிசான், வஞ்சுலான், தவான், சிரவில்வம், மதூகான், பில்வலானி, தந்துகானி, என்ற மரங்கள், சில பூ மரங்கள், சில மலர்க் கொடிகள் சூழப் பெற்றவை என்று நூற்றுக் கணக்கான மரங்களைக் கண்டனர். யானையின் கைகளால் ஒடிக்கப் பட்டவை, வானரங்கள் வாழ்பவை, மதம் பிடித்த ஆந்தைக் கூட்டங்கள், நிறைந்தவை, அந்த மரங்களில் வசித்த பல நூறு பறவைகள் சேர்ந்து ஒருங்கே கூக்குரலிட்டன. அப்பொழுது அருகில் இருந்த லக்ஷ்மணனைப் பார்த்து, ராஜீவ லோசனன் என்று புகழ் பெற்ற அகன்ற கண்களையுடைய ராமர், பின் தங்கி தொடர்ந்து வந்த சகோதரனைப் பார்த்துச் சொன்னார். லக்ஷ்மணா, ஈரமான இலைகளுடன் கூடிய இந்த செடி கொடிகள், சாந்தமான மிருகங்களும், பக்ஷிகளும் வளைய வருவது, இவை ஆத்ம ஞானியான ரிஷியின் ஆசிரமம் வெகு தூரத்திலில்லை என்பதைத் தெரிவிக்கின்றன. தன் செயலால் அகஸ்தியர் என்ற பெயர் பெற்ற மகா முனி அவர். களைத்து வருபவர்களின் களைப்பை போக்கி ஆறுதல் தரும் விதமாக அவரது ஆசிரமம் தென் படுகிறது. யாக சாலையின் அக்னியில் நெய் வார்த்து ஹோமம் செய்ததால் உண்டாகும் புகை ஆசிரமத்தை சூழ்ந்து தெரிகிறது. வல்கலை எனும் மரவுரி ஆடைகள் உலர்த்தப் பட்டிருப்பது மாலையாக தெரிகிறது. மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தாலும் அமைதியாக இருக்கின்றன. பலவிதமான பக்ஷிகளின் இரைச்சல் தான் இனிய நாதமாக கேட்கிறது. உலகுக்கெல்லாம் நன்மையை செய்ய விரும்பி, ம்ருத்யுவையே கட்டி நிறுத்தி வைத்து தக்ஷிண திசைக்கு சரணம் அளித்தவர். புண்ய கர்மாக்கள் செய்து பாவனமான அகஸ்தியரின் ஆசிரமம் இது. எவருடைய பிரபாவத்தால் ராக்ஷஸர்கள் இந்த தென் திசையை பயந்தபடி பார்க்கிறார்களோ, உள்ளே நுழைய தயங்கி, வீண் முயற்சி என்று பின் வாங்கி விடுவார்களோ, அந்த அகஸ்தியர் இந்த திசையை தனதாக்கிக் கொண்டு விட்டார். அன்று முதல் இங்குள்ள மாமிச பக்ஷிகளான மிருகங்கள் கூட (வைரம்) விரோதம் இன்றி மிகவும் சாந்தமாகி விட்டன. மகானான இவர் இந்த திசைக்கு வந்த பின் இந்த த3க்ஷிண திசையே பிரத3க்ஷிணா ஆகி விட்டது. (பிரதக்ஷிணா-நல்லவர்கள் நாடி வரும் இடம்.) மூன்று உலகிலும் பெயர் பெற்று விளங்குகிறது. அன்று முதல் கொடுங்காரியம் செய்யும் க்ரூரர்கள் இங்கு கால் வைப்பதே அரிதாகி விட்டது. சூரியனின் கதியை தடுக்கும் எண்ணத்துடன் வளர்ந்து கொண்டே வந்த விந்த்ய மலை, இவருடைய கட்டளைக்குப் பணிந்து வளர்ந்து கொண்டே போகும் தன் எண்ணத்தை கை விட்டது. தீர்காயுள் உடைய அகஸ்திய பெருமானுடைய, தன் செயல்களால் உலகில் புகழை நிலை நாட்டிக் கொண்ட அகஸ்தியருடைய ஆசிரமம் இது. கல்வியிற் சிறந்த வினயம் உடைய மகான்கள் தினம் வந்து சேவித்துச் செல்லும் இடம். நல்லவர்களுடைய ஹிதத்தில் எப்பொழுதும் நாட்டமுடையவர். அதனால் உலகத்தினர் தினம் இவரை அண்டி தங்கள் குறை தீரப் பெறுகின்றனர். தன்னிடம் வந்தவர்களுக்கு பல நன்மைகளை செய்பவர். அந்த மகா முனிவரை நான் வணங்கி பூஜை (மரியாதை) செய்யப் போகிறேன். மீதி வன வாசத்தை நான் இந்த இடத்திலேயே கழிக்கப் போகிறேன். பிரபோ4ஸ்ரீ (பிரபோ4 என்று லக்ஷ்மணனை விளித்துச் சொன்னதாகவும், பிரபோ4: என்று அகஸ்தியரை குறித்துச் சொன்னதாகவும் பாட பேதம். கோவிந்தராஜருடைய விளக்கம்ஈ சுஸ்ரூஷை செய்வதில் நிபுணனான, சகோதர வாத்ஸல்யம் மிகுந்த லக்ஷ்மணனை ப்ரபோ4 என்று ராமன் அழைப்பது பக்த பராதீ4னனான ராமப4த்ரனின் சாமர்த்யமான பேச்சு எனலாம். இதுவும் சரியே. இதே போல மற்றொரு இடத்தில் ராமர் வியந்து சொல்லும் பொழுது -ப்ரீதோஸ்மி தே மஹத்கர்ம த்வயா க்ருதமிதம் ப்ரபோ4 – உன்னுடைய இந்த மிக அரிய செயலால் மிகவும் சந்தோஷம் அடைந்தேன் என்று அதிசயித்துச் சொல்லும் பொழுது ப்ரபோ4 என்று வார்த்தை பிரயோகம். அத்- 28 ஸ்லோகம்) இங்கு தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், மிகவும் பெருமை வாய்ந்த ரிஷிகள், தன் ஆகாரத்தை கட்டுப் படுத்திக் கொண்டுள்ள அகஸ்தியரை எப்பொழுதும் வந்து உபசரிக்கின்றனர். இங்கு பொய் சொல்பவன் உயிருடன் வாழவே முடியாது. க்ரூரனாக இருந்தாலும் கெட்ட குணங்கள் உடையவனோ, கொலை செய்யும் கொடியவனோ, காமத்தில் மூழ்கியவனோ, இங்கு வாழவே முடியாது. இந்த முனிவரின் ப்ரபாவம் அப்படி. இங்குள்ள தேவர்களும் யக்ஷர்களும் யானைகளும் பாம்புகளும், பக்ஷிகளும் கூட ஆகார நியமத்தை மேற் கொண்டு தர்மத்தை மதித்து நடப்பவர்களாக இருக்கிறார்கள். இங்கு இருந்து சித்தியடைந்த மகாத்மாக்கள் சூரியனுக்குச் சமமான ஒளியுடைய விமானங்களில், தங்கள் தேகத்தைத் துறந்து புது தேகம் பெற்று, பெறும் தவ வலிமை மிக்க ரிஷிகளாக ஸ்வர்கம் சென்றுள்ளனர். யக்ஷ தன்மையோ, அமரத் தன்மையோ பலவிதமான ராஜ்யங்களோ, இங்குள்ள தேவதைகள், இங்கு வந்து வணங்கும் ஜீவர்களுக்குத் தருகின்றனர். சௌமித்ரே, ஆசிரம வாசலை அடைந்து விட்டோம். நீ முன்னால் பிரவேசி. நான் சீதையுடன் வந்துள்ளதைச் சொல்லு.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் அகஸ்தியாஸ்ரமோ என்ற பதினொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 12 (208) அகஸ்திய தரிசனம்
ஆசிரமத்திற்குள் நுழைந்த லக்ஷ்மணன், அகஸ்திய சிஷ்யனைப் பார்த்துச் சொன்னான். ராகவனுடைய இளைய சகோதரன் நான். ராஜா தசரதன் என்பவர் எங்கள் தந்தை. அவருடைய பலசாலியான மகன் ராமன், தன் மனைவி சீதையுடன் முனிவரை தரிசிக்க வந்துள்ளான். என் பெயர் லக்ஷ்மணன். அவன் தம்பி, அவனுக்கு அனுகூலமானவன், பக்தன், அவனுக்கு ஹிதமானவன். ஒருவேளை நீங்கள் எங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். எங்கள் தந்தையின் கட்டளைப் படி நாங்கள் மூவரும் இந்த அடர்ந்த கானகத்துள் வந்து சேர்ந்திருக்கிறோம். நாங்கள் மூவருமாக பகவான் அகஸ்தியரை தரிசிக்க விரும்புகிறோம். அவரிடம் நாங்கள் வந்திருப்பதை தெரிவியுங்கள். லக்ஷ்மணனுடைய இந்த வார்த்தையைக் கேட்ட அந்த தபஸ்வி, இதோ என்று சொல்லி, அக்னி ஹோத்ரம் செய்து கொண்டிருந்த முனிவரை அணுகி, விஷயம் சொல்ல விரைந்தான். தவ வலிமையால் பெற்ற தேஜஸுடன், அருகில் நெருங்கவே தயங்கச் செய்யும் மதிப்பு மிக்க அந்த முனி ஸ்ரேஷ்டரை, அவர் இருக்கும் இடம் சென்று கை கூப்பி அஞ்சலி செய்து ராமன் வருகையைத் தெரிவித்தான். அருகில் அமர்த்திக் கொண்டு வினவிய அகஸ்திய முனிவரிடம், லக்ஷ்மணன் சொன்னபடியே வரிக்கு வரி சொன்னான். இவர்கள் தசரத குமாரர்கள். ராமனும், லக்ஷ்மணனும். ராமன் தன் மனைவி சீதையுடன், மூவருமாக வனம் வந்துள்ளனர். பராக்ரமம் உடைய இந்த இரு ராஜ குமாரர்களும் தங்களை தரிசிக்கும் ஆவலுடன் வந்துள்ளனர். இதற்கு மேல் என்ன செய்வது என்பதை கட்டளையிடுங்கள என்று சிஷ்யன் சொல்லி நிறுத்தினான். ராமன் வந்திருக்கிறான், வாயிலில் நிற்கிறான், வைதேஹியும் உடன் இருக்கிறாள் என்று அறிந்து, முனிவர் அதிர்ஷ்ட வசமாக வெகு காலத்திற்குப் பிறகு இன்று என்னைக் காண வந்துள்ளான். இவர்கள் வரவேண்டுமே என்று நான் மனதில் ஆசைப் பட்டேன். போ, ராமனை, மனைவியுடனும், லக்ஷ்மணனுடனும் எல்லா மரியாதைகளையும் குறைவின்றி செய்து என் அருகில் அழைத்து வா. இது வரை ஏன் அழைத்து வரவில்லை என்று முனிவர் அனுமதித்து கட்டளையிடவும், வணங்கி எழுந்த சிஷ்யன், இதோ என்று சொல்லிச் சென்றான். தர்மம் அறிந்தவரும், மகானுமான அகஸ்திய முனிவரின் கட்டளையை சிரமேற் கொண்டு விரைந்தான். பரபரப்புடன் வெளியே வந்து அந்த சிஷ்யன் லக்ஷ்மணனிடம் சொன்னான். ராமர் எங்கே? முனிவரை தரிசிக்க வரட்டும். சீக்கிரம் வாருங்கள். லக்ஷ்மணன் கூடவே ஆசிரம வாயில் வரை சென்ற சிஷ்யன், காகுத்ஸனான ராமனையும், ஜனகர் மகளான சீதையையும் தரிசித்தான். அந்த சிஷ்யன் அகஸ்தியர் சொன்ன செய்திகளை தெரிவித்து, மரியாதையுடன், தகுந்த உபசாரங்கள் செய்து, ஆசிரமத்துள் சீதையுடன் கூட ராம லக்ஷ்மணர்களை அழைத்துச் சென்றான். ஏராளமான மான்கள் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த ஆசிரமத்தைக் கண்டு, உள்ளே, ப்3ரும்மஸ்தலம், அக்னி ஸ்தலம், விஷ்ணுவின் ஸ்தலம், மகேந்திர ஸ்தலம், வைவஸ்வதனுடைய ஸ்தலம் என்றும், சோமஸ்தலம், பக4ஸ்தலம், குபே3ரஸ்தலம் என்பதையும், தா4து, விதா4து ஸ்தலம், வாயுவின் ஸ்தலம், அனந்தன் எனப்படும் நாகராஜனுடைய ஸ்தலம், அதே போல காயத்ரியின் வசுக்களின் ஸ்தானம், பாச ஹஸ்தனான வருணனின் ஸ்தானம், கார்த்திகேயனுடைய ஸ்தானம், தர்மஸ்தானம் என்பதையும் கண்டனர். சிஷ்யர்கள் சூழ, முனிவரும் எதிர் கொண்டழைக்க வந்து விட்டார். தன் தேஜஸால் பிரகாசித்த முனிவரை ராமர் கண்டு கொண்டார். லக்ஷ்மணனைப் பார்த்து லக்ஷ்மணாஸ்ரீ பார். அதோ மகா முனிவர் அகஸ்தியர் வருகிறார். தவ வலிமையால் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக தெரிவதைக் கொண்டு இவர் தான் அகஸ்தியர் என்று ஊகிக்கிறேன். இவ்வாறு சொல்லிக் கொண்டே சூரிய கிரணங்களைப் போல பிரகாசமான அகஸ்திய முனிவரை நெருங்கி அவர் பாதங்களை கைகளால் பிடித்தபடி, விழுந்து வணங்கி, அபி4வாதனம் சொல்லி, கை கூப்பியவாறு நின்றார். சீதையும் லக்ஷ்மணனும் அதே போல வணங்கி நின்றனர். ராமரை கைகளைப் பற்றி வரவேற்று, ஜலம் கொடுத்து, ஆசனம் அளித்து உபசரித்தபின், குசலப் ப்ரச்னங்கள் விசாரித்து, உட்காருங்கள் என்று ஆசனங்களில் அமரச் செய்தார். அக்னி ஹோத்ரம் செய்து முடித்து, அதிதிகளுக்கு அர்க்யம் அளித்து, அதிதி பூஜை செய்து, வானப்ரஸ்த தர்மத்திற்கு ஏற்றபடி அவர்களுக்கு போஜனம் அளித்தார். அவர் முதலில் அமர்ந்தபின்,. ராமர் அமர்ந்தார். தர்மம் அறிந்தவன், கூப்பிய கைகளுடன் இருப்பதைப் பார்த்து, காகுத்ஸா, அக்னி ஹோத்ரம் செய்து, அர்க்யம் அளித்து தான் அதிதி பூஜையை ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிடில் தபஸ்வி, சாக்ஷியே எதிரியானது போல, பர லோகத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். எல்லா உலகத்திலும் மகாரதியான அரசன் தர்மத்தை நடத்திச் செல்பவன். பூஜிக்கப் பட வேண்டியவன். அதிலும் நீ பிரியமான அதிதி. கௌரவிக்கப் பட வேண்டியவன், தானே வந்து சேர்ந்திருக்கிறாய் என்று சொல்லி புஷ்பங்களையும், கனி காய் கிழங்குகளையும், ராகவனுக்குக் கொடுத்தார். தன் மனம் திருப்தியடையும் வரை இவ்வாறு உபசாரம் செய்த பின், இதோ பார், தெய்வீகமான பெரிய வில். தங்கம், வைரம் முதலிய ரத்னங்களால் அலங்கரிக்கப் பட்டது. வைஷ்ணவ வில் இது. புருஷ வ்யாக்4ரா, விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப் பட்டது. அமோகமான சூரியனுக்கு இணையான ப்ரும்ம தத்தம் (ப்ரும்மாவினால் தரப் பட்டது) அம்பு இதோ. இதுவும் உத்தமமானதே. எடுக்க எடுக்க குறையாத அம்புகளையுடைய இந்த தூணி, இதை எனக்கு மகேந்திரன் கொடுத்தான். இதிலுள்ள அம்புகள் நெருப்பு போல ஜ்வலிக்கும். சிறந்த வெள்ளியினால் உறையிட்ட இந்த கத்தியைப் பார். பொன்னால் அலங்கரிக்கப் பட்டது. இந்த வில்லினால் யுத்தத்தில் ராக்ஷஸர்களை வதைத்து, அக்னி போல ஜ்வலிக்கும் லக்ஷ்மியை அடைவாய். (ஆஜஹார-கவர்ந்து கொள்.) முன்பு விஷ்ணு, தேவர்கள் செல்வமான லக்ஷ்மியை அடைந்தது போல. அதே வில், அதே தூணிகள் இரண்டும், அம்புகள். வாள்கள் இவையும் இரட்டையாக, இவைகளை மானத, (சம்மானம் செய்பவன்) உன் வெற்றிக்காக (திரும்ப) பெற்றுக் கொள். வஜ்ர தரனான இந்திரன் வஜ்ரத்தை திரும்ப பெற்றது போல பெற்றுக் கொள். இவ்வாறு சொல்லி, சிறந்த ஆயுதங்களை அந்த மகான் ராமனுக்கு கொடுத்து விட்டு, மேலும் சொல்லுவார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் அகஸ்திய தரிசனம் என்ற பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 13 (209) பஞ்சவடீ கமனம் (பஞ்சவடிக்குச் செல்லுதல்)
ராமா, மிகவும் மகிழ்ச்சி. லக்ஷ்மணா, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் இருவரும். சீதையையும் அழைத்துக் கொண்டு என்னை வணங்க வந்தது பெரும் மகிழ்ச்சி. நடந்து வந்த களைப்பு உங்கள் முகத்தில் தெரிகிறது. ஜனகர் மகள் வாட்டமாக இருக்கிறாள். சுகுமாரி இந்த பெண். மிகவும் சுகமாக வாழ்ந்தவள், வளர்ந்தவள். இந்த கஷ்டங்களுக்குப் பழக்கம் இல்லாதவள். ஏதோ விட்ட குறை என்பது போல வனம் வந்திருக்கிறாள். பர்த்தாவிடம் அவளுக்கு உள்ள அன்பினால் தூண்டப் பட்டு இப்படி கூட வந்திருக்கிறாள். இவளை சந்தோஷமாக வைத்துக் கொள். உன்னுடன் வனம் வந்ததே அதிகம். மிகவும் கடினமான காரியம். சாதாரண பெண்கள் சுபாவமாக வளமான காலத்தில் செல்வ சுக போகங்களை கணவனுடன் அனுபவித்து விட்டு, கஷ்ட காலத்தில் கை விட்டுச் சென்று விடுவர். சமுத்திரத்தின் சல சலப்பும், ஆயுதங்களின் கூர்மையும், கருடன், வாயு இவர்களின் வேகத்தையும் கொண்டவர்கள் பெண்கள். இதோ உன் மனைவி இந்த தோஷங்கள் எதுவும் இல்லாதவள். மிக சிலாக்கியமானவள். இவளைப் பார்த்து அனுசரிக்கலாம். தேவி அருந்ததி போல தூய்மையானவள். உங்கள் வரவால் இந்த தேசமே புகழ் பெற்றது. சௌமித்திரியுடன் நீ வந்தது இந்த தேசத்திற்கே பெரிய ஆபரணம் கிடைத்ததுபோல சிறப்பு பெற்றது. இந்த இடத்தில் எதிரிகளை அழிக்கக் கூடிய பலசாலியான நீ வைதேஹியுடன் வசிப்பாய். இவ்வாறு முனிவர் வாழ்த்தி அனுப்பவும், ராமரும் அஞ்சலியுடன் மகானான அந்த முனிவரைப் பார்த்து சொல்லலானார். முனிபுங்கவரே, உங்கள் தேஜஸ் நெருப்பைவிட மேலானது. உங்கள் அனுக்ரஹம் கிடைக்க நான் புண்யம் செய்தவன் ஆவேன். வரங்கள் தரும் முனி புங்கவரே, உங்கள் ஆசிர்வாதம் கிடைக்கப் பெற்ற நாங்கள், நான், சௌமித்ரி, சீதை மூவரும் இங்கேயே வசிக்கிறோம். ஆயினும், குறிப்பாக ஒரு இடம் சொல்லுங்கள். தண்ணீர் வசதியுடன் அடர்ந்த காட்டுப் பிரதேசமாக, எந்த இடத்தில் நான் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டால் சுகமாக இருக்க முடியுமோ, அப்படி ஒரு இடத்தைக் காட்டுங்கள். ராமனின் வார்த்தையைக் கேட்டு ஒரு நிமிஷம் யோசித்து விட்டு தீரனான அந்த முனிவர் சொன்னார். குழந்தாய், இங்கிருந்து இரண்டு யோஜனை தூரத்தில், கனிவகைகளும், காய் கிழங்குகளும் நிறைந்த வனம், அதைச் சார்ந்த நீர் நிலைகளும் உள்ள ஒரு இடம், நிறைய மிருகங்களும் நிறைந்தது, பஞ்சவடீ என்று பெயர் பெற்றது. அந்த இடத்தில் சௌமித்திரியுடன் ஆசிரமம் கட்டிக் கொள். தந்தையின் கட்டளையை அவர் சொன்னபடியே நிறைவேற்றுபவனாக அந்த இடத்தில் சந்தோஷமாக இருப்பாயாக. தசரத ராஜா உனக்கு கொடுத்திருந்த பதினான்கு வருஷ கெடு பெரும்பாலும் ஆகி விட்டது. இன்னும் கொஞ்ச காலம் தான் மீதியிருக்கிறது. உன் பிரதிக்ஞையை நிறைவேற்றி, வன வாசம் முடிந்து ராஜ்யத்தை அடைவாய். உன் தந்தை பாக்கியம் செய்தவர். ரகுநந்தனா, யயாதியைப் போல் மகனால் சிறப்பு பெற்றார். மூத்தவனான உன்னால் அவர் கடை தேறினார். இந்த விருத்தாந்தங்களையும் நான் அறிவேன். மாசற்றவனே, உன் தந்தை என் நண்பர். என் தவ வலிமையாலும் சில விஷயங்களை அறிந்து கொண்டேன். உன் மனதில் ஓடும் எண்ணமும் என் தவ வலிமையால் நான் உணர்ந்து கொண்டு விட்டேன். இங்கு என்னுடன் இருக்கலாம் என்று சொன்னவன், ஏன் பஞ்சவடிக்குப் போகச் சொல்கிறான் என்று யோசிக்கிறாய் அல்லவா? அது மிக அழகான இடம். அங்கு மைதிலி மகிழ்ச்சியோடு இருப்பாள். இங்கிருந்து அதிக தூரமும் இல்லை. மிகவும் ஸ்லாகிக்கத் தகுந்த இடம். (பாராட்டுக்குரிய) அருகில் கோதாவரி நதி. மைதிலி அங்கு மகிழ்ச்சியோடு இருப்பாள். கனி, காய் வகைகள் நிறைய கிடைக்கும். பறவைகள் கூடும் இடம். இதெல்லாம் மைதிலி ரசிப்பாள். நீ மனைவியுடன் இருப்பவன். அவளை காப்பாற்றும் சக்தியும் உடையவன். ரசிக்கும்படியான பல இடங்களும். புண்ய தீர்த்தங்களும் உள்ள இடம் அது. அதனால் தான் அந்த இடத்தை உனக்கு சிபாரிசு செய்கிறேன். தவிர, இங்கு இருந்து முனிவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சூழ்ந்து கொள்வார்கள். அவர்களுடன் உனக்கு சரியாக இருக்கும். இதோ தெரிகிறது பார். பெரிய காடு. பூக்களை நாடி வரும் வண்டுகள் நிறைந்தது. இங்கிருந்து வடக்குத் திசையில் சென்று ஆல மரத்தை சென்றடைவாய். (ந்யக்4ரோத4ம்) அதன் அருகில், மலைக்கும் அருகில் இருக்கும்படியாக இடத்தை தேர்ந்தெடுத்து ஆசிரமத்தைக் கட்டிக் கொள். மலயடிவாரத்தில் நித்யம் பூக்களுடன் பூத்து குலுங்கும் மரங்கள் நிறைந்த இடம் பஞ்சவடீ என்றே பெயர் பெற்றது. இவ்வாறு அகஸ்தியர் சொல்லவும், சௌமித்திரியுடன் அகஸ்தியரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினர். முனிவர் தன் பாதத்தில் விழுந்து வணங்கியவர்களை ஆசிர்வதித்து அனுப்பினார். சீதையுடன் மூவருமாக பஞ்சவடி நோக்கிச் சென்றார்கள். கையில் வில்லுடன், ராஜ குமாரர்கள் இருவரும், தூணி நிறைய அம்புகளுடன், சண்டை என்றால் பயப்படாத வீரர்கள், மகரிஷி சொன்ன வழியில் பஞ்சவடியை நோக்கி ஒன்றாக நடந்தார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் பஞ்சவடீ கமனம் என்ற பதின்மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 14 (210) ஜடாயு சங்கமம் (ஜடாயுவை சந்தித்தல்)
பஞ்சவடியை சென்றடைந்த அவர்கள், சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகையில் மிகப் பெரிய உருவத்துடன், கழுகரசனைக் கண்டார்கள். நல்ல பராக்ரமம் உடையதாக முதல் பார்வையிலேயே அறிந்து கொண்டனர். அந்த பக்ஷியை, ராம லக்ஷ்மணர்கள் ஏதோ ராக்ஷஸ ஜாதியைச் சேர்ந்தது என்று எண்ணி யார் நீ? என்று வினவினர். ஆல மரத்தில் இருந்த அந்த பெரிய உருவம் கொண்ட பக்ஷி இவர்களைப் பார்த்து அன்புடன் பரிவு மேலிட அரவணைப்பது போன்ற மதுரமான குரலில் பதில் அளித்தது. குழந்தாய், உன் தந்தையின் நண்பன் நான், என்னைத் தெரியவில்லையா? என்றது. தந்தையின் நண்பன் என்று தெரிந்ததும், ராகவன், மனம் சமாதானமாகி தகுந்த மரியாதைகள் செய்து வணங்கியபின், அவரைப் பற்றி விசாரித்தான். குலம், பெயர், இவற்றைக் கேட்டான். ராமனுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக அந்த கழுகரசன், தன்னைப் பற்றியும், தன் குலம் இவற்றை விவரமாக சொல்லலானான். மகாபாஹோ, முன் காலத்தில் ப்ரஜாபதிகள் என்று சிலர் இருந்தனர். இவர்களைப் பற்றி முதலிலிருந்து சொல்கிறேன். முதல்வன் கர்த3மன். விக்ரீதன் என்பவன் அடுத்தவன். சேஷன், சம்சரையன் என்று பல புத்திரர்கள் உடைய புகழ் வாய்ந்தவர்கள். இவர்களுக்குப் பிறகு ஸ்தா2ணு, மரீசி, அத்ரி, க்ரது என்ற பலசாலிகள். புலஸ்தியன், ஆங்கி3ரஸ, எனப்படுபவர்கள், ப்ரசேதஸ், புலஹன் என்றும், தக்ஷன், விவஸ்வான், அரிஷ்டனேமி என்றும், ராகவா, ஐந்தாவது வரிசையில் கஸ்யபன், மகா தேஜா என்றும் இருந்தனர். இவர்களில் த3க்ஷன் ப்ரஜாபதி என்று பெயர் பெற்றான். ஆறாவதாக பெண்கள். கீர்த்தி வாய்ந்த காஸ்யபர், இவர்களில் அழகிய எட்டு பெண்களை தனதாக்கிக் கொண்டார். அதி3தி, தி3தி, த3னு, காலிகா , தாம்ரா, க்ரோதவசா, மனு, அனலா என்பவர்கள். இவர்களிடம் காஸ்யபர், மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தி, எனக்கு சமமான புதல்வர்களை உலகெங்கும் புகழும் விதமாக பெறுவீர்கள் என்று அனுக்ரஹித்தார். அதி3தி மனம் இசைந்து அவருடன் வாழ்ந்தாள். தி3தியும் காலிகாவும், மற்றவர்களும் இஷ்டமில்லாமல் அவருடன் வாழ்ந்தனர். அதிதியிடம் முப்பத்து மூன்று தேவதைகள் பிறந்தனர். ஆதி3த்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், அஸ்வினி குமாரர்கள் இவர்கள் அதிதி பெற்ற பிள்ளைகள். தி3தி தை3த்யர்களை பெற்றாள். இவர்களும் நல்ல புகழ் வாய்ந்தவர்கள். காடுகளும், கடலும் சூழ்ந்த பூமி அவர்கள் வசம் இருந்தது. த3னுவின் மகன் அஸ்வக்3fரீவன். நரகன் என்பவனையும், காலகன் என்பவனையும் காலிகா பெற்றாள். க்ரௌஞ்சி, பா4சி, ச்யேனி, சுகி, த்ருத ராஷ்டிரி என்று ஐந்து பெண்களை தாம்ரா என்பவள் பெற்றாள். இந்த பெண்களும் உலக புகழ் பெற்றனர். த்ருத ராஷ்டிரி என்ற மனைவி, ஹம்ஸங்களையும், கல ஹம்ஸங்களையும், சக்ரவாகங்களையும் பெற்றாள். இவையும் நல்ல முறையில் வளர்ந்தன. சுகீ, நதா என்ற பெண்னை பெற்றாள். நதாவுக்கு வினதா என்று ஒரு மகள். க்ரோதவசா என்பவள் பத்து பெண்களைப் பெற்றாள். ம்ருகீ3, ம்ருக3 மந்தா3, ஹரி, ப4த்ரமதா3, மாதங்கீ3, சார்தூ3லி, ஸ்வேதா, சுரபி4 என்றும், நல்ல லக்ஷணங்களுடன் கூடிய சுரஸா, கத்3ருகா என்ற இருவரையும் பெற்றாள். ம்ருகங்கள், பெண் ம்ருகங்களிடம் தங்கள் வம்ச வ்ருத்தியை செய்தன. பிள்ளகளை பெற்றன. ருக்ஷர்கள் ம்ருக3 மந்தா3விடமும், ஸ்ருமர, சமர எனப்படும் வகை ஜீவன்களையும், ஹரி என்பவர் ஹர்யாவிடம் வானரங்களையும், உண்டு பண்னினார்கள். ப4த்3ரமதா3 என்பவள் இராவதி என்ற மகளைப் பெற்றாள். அவளிடம் ஐராவதம் என்ற புகழ் வாய்ந்த யானைகள் தோன்றின. மாதங்கர், மாதங்கியிடம் தன் புத்திரர்களைப் பெற்றார். கோ3லாங்கூ4லம், சார்தூ3லி, வ்யாக்4ரம் இவைகளைப் பெற்றார். ஸ்வேதா என்பவள் திக்கஜங்களை புத்திரர்களாக பெற்றாள். சுரபிக்கு இரண்டு பெண்கள். ரோஹிணி என்றும் க3ந்த4ர்வீ என்றும் புகழ் பெற்ற இருவர். ரோஹிணீ பசுக்களை ஈன்றாள். க3ந்த4ர்வீ குதிரைகளை மக்களாகப் பெற்றாள். சுரஸா என்பவள் நாகங்களை புத்திரர்களாகப் பெற்றாள். கத்3fரு என்பவள் பாம்புகளுக்கு தாயானாள். புண்யத்தின் பலனாக எல்லா மர வகைகளையும் அனலா பெற்றாள். கத்3ரு என்பவள், பூமியைத் தாங்கும் ஆயிரம் தலையுடைய நாகத்தை ஈன்றாள். வினதாவுக்கு இரண்டு புத்திரர்கள். க3ருடன், அருணன் என்று இருவர். இந்த இருவரில் நான் அருணனுக்கு பிறந்தவன். சம்பாதி என்று எனக்கு மூத்தவன். என் பெயர் ஜடாயு என்று அறிந்து கொள்வாயாக. ஸ்யேனி புத்திரன் நான். நீ விரும்பினால், நீங்கள் இங்கு இருக்கும் பொழுது உங்களுக்கு உதவியாக இருக்கிறேன். இந்த அடர்ந்த காடு மிகவும் பயங்கரமானது. மிருகங்களும், ராக்ஷஸர்களும் வளைய வரும் இடம். நீயும் லக்ஷ்மணனுமாக வெளியே போகும் காலங்களில், குழந்தாய், நான் சீதையை பாதுகாத்து வருவேன். ஜடாயுவை யார் என்று அறிந்து கொண்ட ராமர், அவரை வணங்கி மார்புறத் தழுவி மகிழ்ந்தார். என் தந்தையின் நண்பன், தந்தையை நேரில் கண்டது போல இருக்கிறீர்கள் என்று சொல்லி திரும்பத் திரும்ப ஜடாயுவிடம் தன் கதையை சொல்லச் சொல்லி கேட்டார். சீதையை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, மகா பலசாலியான ஜடாயு உடன் வர, லக்ஷ்மணனும் ராமனுமாக பஞ்சவடியை அடைந்தனர், எதிரிகளை விட்டில் பூச்சியை அழிப்பது போல அழிக்கும் வல்லமை உடையவர்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஜடாயு சங்க3மம் என்ற பதினான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 15 (211) பஞ்சவடீ பர்ணசாலா (பஞ்சவடியில் குடிலை அமைத்தல்)
பலவிதமான யானைகளும் மிருகங்களும் நிறைந்திருந்த வனத்தின் நடுவில் பஞ்சவடியை அடைந்தவுடன், ராமர் லக்ஷ்மணனிடம் சொன்னார். லக்ஷ்மணா, முனிவர் சொன்ன இடம் வந்து விட்டோம் என்று நினைக்கிறேன். மரங்கள் பூத்துக் குலுங்க ரம்யமாக இருக்கும் இந்த இடம் தான் பஞ்சவடீ பிரதேசமாக இருக்க வேண்டும். நீ தான் இப்பொழுது கானகத்தை நன்றாக அளந்து வைத்திருக்கும் நிபுணனாக ஆகி விட்டாயே. எல்லா இடங்களிலும் நன்றாக கவனித்துப் பார். எந்த இடத்தில் ஆசிரமம் அமைத்தால் வசதியாக இருக்கும். எந்த இடத்தில் சீதை சந்தோஷமாக இருப்பாள். நீயும், நானும் சௌக்யமாக இருக்க முடியும் என்று தேடிப் பார். அருகில் ஜல வசதி இருக்க வேண்டும். ஏதாவது குளமோ, ஆறோ தென்படுகிறதா பார். வனத்தில், அழகான இடமும், நல்ல தண்ணீர் இரண்டும் இணைந்து இருந்து விட்டால் மிகவும் நல்லது. அருகில் குசம் எனும் புல் இருக்க வேண்டும். சமித்துகள் சேகரிக்க அரச மரங்கள் இருப்பதாக, குடிநீர் சுத்தமாக கிடைப்பதாக உள்ள இடத்தில் குடிலைக் கட்டு எனவும், சீதையும் உடன் இருக்க, காகுத்ஸனிடம் மரியாதையுடன் பதில் சொன்னான். எகாகுத்ஸஸ்ரீ நான் உன் தாஸன். ஆகவே, நீயே உசிதமான இடத்தை தேர்ந்தெடுத்து இந்த இடத்தில் பர்ணசாலையை கட்டு என்று சொல், செய்கிறேன்எ என்றான். மகாத்மாவான லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்டு ராமனும் சம்மதித்து, பலவிதமாக அவனுடன் விவாதித்து, தகுந்த இடத்தை நிச்சயம் செய்தான். ஆசிரமத்தை அழகுற அமைப்பதில் சிறந்தவனான சௌமித்திரியின் கைகளை தன் கைகளில் வைத்துக் கொண்டு ராமர் சொல்லுவார். இந்த இடம் சமமாக இருக்கிறது, சௌமித்ரி, பலவிதமான புஷ்பங்களுடன் மரங்கள் அடர்ந்து இருக்கின்றன. இந்த இடத்தில் சௌகர்யம் போல் ஆசிரமத்தைக் கட்டு என்றார். இதோ அருகிலேயே, சூரியனைப் போலவே பிரகாசிக்கும் தாமரை மலர்கள் வாசனை வீசும், தாமரைக் குளம். அதில் நீரை மறைத்த வண்ணம் பூக்கள் பூத்திருக்கின்றன. நிபுணரான அகஸ்தியர் வர்ணித்தபடியே, இதோ கோதாவரி மிக அழகாகத் தெரிகிறாள். கரைகளில் அடர்ந்த மரங்கள் மலர்களைச் சொரிகின்றன. ஹம்ஸங்களும், காரண்டவ பக்ஷிகளும், சக்ரவாகங்களும் அதன் அழகை மிகைப் படுத்திக் காட்டுகின்றன. வெகு தூரம் என்றும் இல்லை, அருகில் என்றும் இல்லாத இடத்தில் மிருகங்கள் கூட்டம் கூட்டமாகத் தெரிகின்றன. மலையின் நடுவில் குகைகள் நிறைய இருக்கின்றன. இந்த இடங்களில் மயில்கள் கூவி எதிரொலிக்கின்றன. ரம்யமாகத் தெரியும் இந்த மலைச் சாரலில் மரங்கள் சூழ்ந்து பூத்துக் குலுங்குவது கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது. நிறைய தா4துப் பொருட்கள், சில இடங்களில் வெண்மையாக, சில இடங்களில் தாம்ர வர்ணமாக, ஆங்காங்கு பொன்னிறமாகவும், ஜன்னல்கள் போல தெரிகின்றன. சால, தால, தமால, கர்ஜூர, பனஸ, ஆம்ர, நீவார, சதினீச, புன்னாக மரங்கள் சோபையை அதிகரிக்க, சூத, அசோக, திலக, சம்பக, கேதக போன்ற புஷ்பங்கள் கொத்து கொத்தாக, செடிகளிலும், கொடிகளிலும், புதர்களிலும், அந்தந்த மரங்களைச் சுற்றி படர்ந்து இருக்கின்றன. சந்தன மரங்களும், ஸ்யந்தன மரங்களும், வேப்ப மரங்களும். பல, விகுசை என்ற மரங்களும், த4வ, அஸ்வ கர்ண, கதி3ர, சமீ, கிம்சுக, பாடல மரங்களும் காணப் படுகின்றன. இந்த அடர்ந்த வனம் புண்யமானது. பக்ஷிகளும், பறவைகளும், பலவித மிருகங்களும் வசிக்கும் இந்த இடத்தில் இவைகளோடு வசிப்போம் லக்ஷ்மணா. இவ்வாறு ராமர் சொன்னவுடன், எதிரிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த வீரனான லக்ஷ்மணன், வெகு விரைவில் சகோதரனுக்காக ஆசிரமத்தைக் கட்டி முடித்தான். மிக விசாலமான பர்ணசாலை, மண் தரையை சமன் செய்து, நல்ல தூண்களை நட்டு, மூங்கில்களை கொண்டு கூரை வேய்ந்து, சமீ என்ற விருக்ஷத்தின் (அக்3னிக3ர்ப4-நெருப்பை உள்ளடக்கியது), இலைகளை மேலே போட்டு, த்ருடமான கயிறு கொண்டு கட்டி, குசம், காசம், சரம் என்ற புற்களைக் கொண்டு நன்கு மூடி நிழல் தரும்படி செய்து சமதளமாக்கி, ராகவனுடைய நிவாஸஸ்தானம் பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சிறப்பாக செய்து முடித்தான். மகானான லக்ஷ்மணன் கோதாவரி நதிக்குச் சென்று தானும் ஸ்நானம் செய்து விட்டு, தாமரைப் பூக்களைப் பறித்துக் கொண்டு திரும்பி வந்தான். பின் புஷ்ப ப3லி கொடுத்து, சாந்தி கர்மாக்களை முறைப் படி செய்தபின், ராமரை அழைத்து வந்து, தான் கட்டிய ஆசிரமத்தைக் காட்டினான். அதை சீதையுடன் கண்டு களித்த ராமர், கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்த ஆசிரமத்தை வியந்து, பர்ணசாலையை சுற்றி பார்த்தார். மிகவும் மகிழ்ச்சியுடன் தன் சகோதரனை அணைத்துக் கொண்டு, மிகவும் சினேகத்துடனும், உள்ளார்ந்த அன்புடனும் சொன்னார். ப்ரபோ4 (ராமர் லக்ஷ்மணனை ப்ரபோ என்று அழைப்பது இது இரண்டாவது தடவை) நீ செய்த இந்த செயல் மிகவும் அத்புதமானது. உனக்கு நிறைய தர வேண்டும் என்று நினைத்தாலும், என்னால் தற்போதைக்கு இந்த ஆலிங்கனம் தான் தர முடிந்தது. பா4வம் உணர்ந்து, தர்மம் அறிந்து, செய் நன்றி மறவாமல் நீ புத்ரனாக இங்கு இருக்கும் பொழுது நம் தந்தை மறைந்த உணர்வே தோன்றவில்லை. அவர் இடத்தை இட்டு நிரப்ப நீ இருக்கிறாய். லக்ஷ்மி வர்த4னனான லக்ஷ்மணனிடம் இவ்வாறு சொல்லி, அந்த தேசத்தில் சுகமாக வசிக்க ஆரம்பித்தான். சில காலம் ஸ்வர்க3த்தின் அமராவதியில் தே3வர்கள் கவலையின்றி இருப்பது போல லக்ஷ்மணனுடனும் சீதையுடனும் வசித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் பஞ்சவடீ பர்ண சாலா என்ற பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 16 (212) ஹேமந்த வர்ணனம் (முன் பனிக் கால வர்ணனை)
ராக4வன் அந்த இடத்தில் சுகமாக வசித்துக் கொண்டு இருக்கையிலேயே சரத் ருது மறைந்து ஹேமந்த ருது ஆரம்பித்தது. ஹேமந்த ருது (முன் பனிக்காலம்) சாதாரணமாக அனைவருக்கும் பிடித்தமானதே. ஒரு நாள் இரவு இன்னும் முழுதும் பிரியாத விடியற்காலையில் ரகு நந்தனன் கோதாவரியில் ஸ்நானம் செய்யச் சென்றான். சீதையுடன் அண்ணல் முன் செல்ல, கையில் கலசத்துடன், வினயமாக லக்ஷ்மணன் பின் தொடர்ந்து சென்றான். நடந்து கொண்டே ராமரிடம் – பிரியமாக பேசும் வீரனே, இந்த பருவம் உனக்கு மிகவும் பிடித்தமானது. ஹேமந்த ருது ஆரம்பித்து விட்டது. இதனால் சுபமான வருஷம் அலங்கரித்தது போல ஆகிறது. உலகமே மூடு பனி சூழ்ந்திருக்க, பூமி தான்யங்கள் நிறைந்து காண்கிறது. ஜலம் அனுபவிக்க சுகமாக, அக்னி மிகவும் வேண்டியவனாகவும் இருக்கும் காலம். புது அயன காலத்தில், அதாவது சூரியனின் கதி மாறும் காலத்தில் பித்ரு தேவதைகளை பூஜித்து, கல்மஷம் இல்லாத நல்ல மனிதர்கள், ஜனபதங்களில் உள்ளவர்கள், திருப்தியாக, வீடுகளில் பொருள்களை சேமித்து வைத்து விட்டு, யாத்திரை செல்லக் கிளம்புவர். சூரியன் அந்தகனான யமனுடைய திசையான தென் திசையில் தன் ஒளியைப் பரப்பிக் கொண்டு செல்வதால், உத்தரா திசை, வடதிசை ஒளியிழந்து காணப் படுகிறாள். (திலகம் இல்லாத ஸ்த்ரீ போல). இயற்கை பனியை போர்த்திக் கொண்டு நிற்க, சூரியன் வெகு தூரத்தில் கைக்கு எட்டாமல் சஞ்சரிக்கும் போது, தன் பெயர் பொருத்தம் வெளிப்பட ஹிமவான் என்ற மலை (ஹிமம்-பனி) ஹிம வானாகவே தெரிகிறான். உன் சகோதரன் ப4ரதன் ஸ்வர்கத்தையும் ஜயித்து விட்டான். வனத்தில் இருந்த போதிலும், தாபஸ விருத்தியை மேற் கொண்டுள்ள பொழுதும், ராமனையே பின் பற்றி வருகிறான். இளைய சந்ததியினர் தந்தையை கொள்வதில்லை. தாயை ஒத்து இருப்பர் என்பது உலக வழக்கு. பரதன் அதை மாற்றி விட்டான். ராஜா தசரதன், கணவனாக அமைந்து, பரதன் போல பிள்ளையை பெற்றவள் கைகேயி, எப்படி அவ்வளவு க்ரூரமாக பேசினாள்? இவ்வாறு ஸ்னேகமாக லக்ஷ்மணன் சொல்லி வரும் பொழுது, தாயாரை குற்றம் சொல்வது போல சொன்ன இந்த வார்த்தையை கூட பொறுக்க மாட்டாதவராக ராமர் சொன்னார். மத்யம அம்மாவை நீ இப்படி குறை சொல்லக் கூடாது. லக்ஷ்மணா, அதே இக்ஷ்வாகு வம்ச நாதனான பரதனைப் பற்றிப் பேசு. என் மனம் வன வாசத்தில் நிச்சலனமாக இருக்கிறது. த்ருடமாக இருக்கிறது. இருந்தும் சில சமயங்களில் வருத்தம் மேலிடுகிறது. பரதனின் ஸ்னேகம், அவனுடைய பிரியமான மதுரமான வாக்யங்களை நினைத்துப் பார்க்கிறேன். மனதை தொடும் அம்ருத மயமான இனிய சொற்களை நினைத்து பார்க்கிறேன். அவனை எப்பொழுது காணப் போகிறோம் என்றும், சத்ருக்4னனும் நீயும் நானும், பரதனுடன் சேர்ந்து இருக்கப் போகிறோம் என்றும் பரிதவிக்கிறேன். இவ்வாறு பேசிக் கொண்டே கோதாவரியை அடைந்தனர். அங்கு காகுத்ஸன், தன் மனைவி சீதையுடனும், சகோதரனுடனும் ஸ்நானம் செய்து முடித்தான். பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும் தர்ப்பணம் செய்து விட்டு தண்ணீர் விட்டு விட்டு, சூரியனை ஸ்தோத்திரம் செய்தனர். தேவதைகள் கூடி இருந்தனர். சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் ஸ்னானம் செய்து முடித்த நிலையில் நின்ற ராமனைப் பார்க்க, அபிஷேகம் ஆன ருத்ர பகவான், உமையுடனும், நந்தியுடனும் (சில பாடங்களில் விஷ்ணுவுடனும்) நிற்பது போல இருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ஹேமந்த வர்ணனம் என்ற பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 17 (213) சூர்ப்பணகா பா4வாவிஷ்கரணம் (சூர்ப்பணகாவின் மன நிலை)
ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, ராம, லக்ஷ்மணர்கள் சீதையுடன் அந்த கோதாவரி கரையிலிருந்து தங்கள் ஆசிரமத்திற்குத் திரும்பினர். ஆசிரமத்தையைடைந்து ராகவன் லக்ஷ்மணனோடு அந்த பருவத்தின் தினசரி கடன்களை முடித்துக் கொண்டு, பர்ண சாலையை அடைந்தனர். மகரிஷிகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் உபசாரம் செய்ததை ஏற்றுக் கொண்டு, லக்ஷ்மணனுடன் பலவிதமான நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அந்த பர்ண சாலையில் சீதையுடன் அமர்ந்திருந்த காட்சி, சித்ரா நக்ஷத்திரத்தோடு சந்திரன் இருப்பது போல இருந்தது. இவ்வாறு அமர்ந்து கதைகளில் மனதை செலுத்தி சந்தோஷமாக இருந்த பொழுது எதேச்சையாக ஒரு ராக்ஷஸி வந்து சேர்ந்தாள். அவள் சூர்ப்பணகா என்ற பத்து தலை ராவணனின் சகோதரி. இங்கு வந்து தேவ குமாரன் போல விளங்கிய ராமனைக் கண்டாள். சிங்கம் போன்று உயர்ந்த தோள்களும், நீண்ட கைகளும், பத்3ம பத்ரம் போன்ற கண்களும், ஆஜானுபாஹுவாக நெடிதுயர்ந்த சரீரமும், பிரகாசமான முகத்தோடு, மிகவும் கண்ணுக்கு ரம்யமாக விளங்கியவனை, ஜடா மண்டலத்தோடு, யானையை போன்று நடப்பவனை, சுகுமாரனை, நல்ல குணங்களின் இருப்பிடமாக ராஜ குமாரனுக்குரிய அடையாளங்களோடு, ராமனை, இந்தீ3வரம் போல ச்யாமளனை, கந்த3ர்ப்பனுக்கு இணையான அழகனை, இந்திரனோ எனும்படி கம்பீரமாக இருந்த ராமனைப் பார்த்து சூர்ப்பணகா காம வசம் அடைந்தாள். சுமுகனை, துர்முகீ, சிறுத்த இடையுடைய ராமனை, பெரு வயிறு உடையவள், விசாலமான கண்களை உடையவனை, விரூபமான கண்கள் உடையவள், அழகிய கேசம் உடையவனை, தாம்ர வர்ணத்தில் குத்திட்டு நிற்கும் தலை மயிரை உடையவள், கண்டவுடன் ப்ரீதியை உண்டாக்கும் ராமனின் ரூபத்துக்கு எதிரில் விரூபமான அவள், சுஸ்வரமாக பேசும் ராமன் முன், பை4ரவ ஸ்வரா, கடும் குரலுடையவள், தருணம், இளைஞனான ராமனை, தா3ருணா- பயங்கரமான வடிவத்தினள், வயதானவள், தா3க்ஷிண்யமே உருவானவனை, (த3க்ஷிணம்) எப்பொழுதும் நேர்மையானவனை, எப்பொழுதும் தவறான காரியங்களையே செய்பவள், நியாயமான நடத்தை உடையவனை, மிகவும் கெட்ட நடத்தையுடையவள், பிரியமான ராமனை, அப்ரியமான சரீர வாகையுடைய, ரோமம் மண்டிய உடலையுடைய சூர்ப்பணகா பேசினாள். ஜடையுடன், தபஸ்வி போன்ற வேஷத்தில், மனைவியுடன், கையில் வில்லும் அம்பும் ஏந்தி, ராக்ஷஸர்கள் வசிக்கும் இந்த தேசத்துக்கு எப்படி வந்து சேர்ந்தாய்? இங்கு வந்து என்ன காரியம் சாதிக்கப் போகிறாய்? உண்மையைச் சொல். இப்படி ராக்ஷஸி சூர்ப்பணகை கேட்ட பொழுதும், பரந்தாமனான ராமன், தன் நேர்மையான குணமே தெரியும்படி, விவரமாக சொல்ல ஆரம்பித்தான். எப்பொழுதுமே உண்மையில்லாததை பேசுவது ராமனுக்கு உகந்தது அல்லவே. விசேஷமாக ஆசிரமத்தில் ஸ்த்ரீ ஜனங்கள் நடுவில் ஏன் பொய் பேசப் போகிறான். விவரமாகச் சொன்னான்.
த3சரத2ன் என்று ஒரு அரசன் இருந்தான். மூன்று உலகிலும் தன் விக்ரமத்தால் பெயர் பெற்றவன். நான் அவனுடைய மூத்த மகன். ராமன் என்று அழைப்பார்கள். இதோ இவன் என் தம்பி லக்ஷ்மணன். என்னைத் தொடர்ந்து வந்தவன். இவள் என் மனைவி. வைதே3ஹி என்று புகழ் பெற்றவள். தாய் தந்தை இருவரும் சேர்ந்து யோசித்து கட்டளையிட்டதால், தர்மத்தை நிலை நிறுத்த இந்த கானனத்தில் வசிக்க வ்ந்தேன். உன்னைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். யார் நீ? யாருடைய மகள்? உன்னைப் பார்த்தால் ராக்ஷஸியாகத் தெரியவில்லை. இங்கு என்ன காரணத்திற்காக வந்திருக்கிறாய்? உண்மையைச் சொல்லு. இதைக் கேட்டு ராக்ஷஸி பதில் சொன்னாள். காமனின் வசத்தில் இருந்தவள், தன்னைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொண்டாள். ராமா, சொல்கிறேன் கேள். உண்மைதான் சொல்கிறேன். நான் என் விருப்பப்படி ரூபம் எடுத்துக் கொள்ள வல்லவளான சூர்ப்பணகை. ராக்ஷஸி. இந்த அரண்யத்தில் தனியாக நடமாடுகிறேன். இது ஒரு பயங்கரமான வனம். என் சகோதரன் ராவணன் , நல்ல பலசாலியான ராக்ஷஸ ராஜா. வீரன். பெயர் பெற்ற விஸ்ரவசின் புத்திரன். நீ கூட கேள்வி பட்டிருக்கலாம். எப்பொழுதும் தூங்கும் குணமுடைய கும்பகர்ணன் இரண்டாமவன். விபீ4ஷணன் தர்மாத்மா. இவனுக்கு ராக்ஷஸர்களுக்கு இயல்பான குணம், நடத்தை கிடையாது. க2ர, தூ3ஷணன் என்று சகோதரர்கள், யுத்தத்தில் பெரும் புகழ் வாய்ந்தவர்கள், அவர்களைக் காண வந்தேன். ராமா, முன் பின் பார்த்திராததால் உன்னைக் கண்டதும் நின்றேன். என் மனதில் உன்னை ப4ர்த்தாவாக வரித்து விட்டேன். புருஷோத்தமனான நீ தான் எனக்கு கணவன். ராமா, நான் நிறைய ப3லம், பராக்ரமம் உடையவள். இஷ்டப் படி நடமாடுவேன். சீதையுடன் என்ன செய்யப் போகிறாய்? எனக்கு கணவனாகி வெகு காலம் வாழ்வாய். இவள் உருவமும், ரூபமும் உனக்கு ஏற்றதாக இல்லை. நான் தான் உனக்கு அனுரூபமாக இருப்பவள். மனைவி என்ற எண்ணத்தோடு என்னைப் பார். இதோ இவளை, ரூபமில்லாத, அசத்து, விரூபமான, வயிற்று பாகமே இல்லாத (சிற்றிடையாளான) இந்த மனுஷியை, உன் சகோதரனுடன் சேர்த்து விழுங்கி விடுகிறேன். பிறகு மலைச் சாரல்களிலும், வனங்களிலும், பல விதமான அழகிய காட்சிகளைக் கண்டு ரசித்துக் கொண்டு என்னுடன் த3ண்டகா வனத்தில் சஞ்சரிப்பாய். இவ்வாறு பேசும் அவளைப் பார்த்து காகுத்ஸன் நகைத்தான். சொற்களை அளந்து பேசுவதில் வல்லவனான ராமன் பேச ஆரம்பித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பணகா பா4வாவிஷ்கரணம் என்ற பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 18 (214) சூர்ப்பணகா விரூபணம்
(சூர்ப்பணகாவை அங்க3 ப4ங்க3ம் செய்தல்)
காம பாசத்தில் சிக்குண்ட சூர்ப்பணகையைப் பார்த்து ராமர், தெளிவான, ம்ருதுவான வார்த்தைகளை சிரித்துக் கொண்டே சொன்னார். இதோ இருப்பவள் என் மனைவி. நான் திருமணம் ஆனவன். மனைவியிடத்தில் பிரியம் உள்ளவன். உன் போன்ற பெண்கள் சக்களத்தியோடு வாழ்தல் கடினம். என் தம்பி இவன். பார்வைக்கு அழகாக இருப்பதோடு நல்ல சீலம் உடையவன். ஸ்ரீமான். மனைவி அருகில் இல்லை. லக்ஷ்மணன் என்ற பெயருடைய வீரன். இளைஞன். அழகிய தோற்றமும் உடையவன். இவனுக்குத்தான் மனைவி வேண்டும். அபூர்வமான உனக்கு இவன் ப4ர்த்தாவாக இருப்பது தான் பொருத்தமாக இருக்கும். என் சகோதரனை வேண்டிக் கொள். விசாலாக்ஷி, சக்களத்தியின்றி மேரு மலையை சூரிய ஒளி தழுவுவது போல தழுவிக் கொள். இவ்வாறு ராமன் சொல்லவும் காமத்தால் செய்வதறியாது திகைத்தவள், உடனே ராமனை விட்டு லக்ஷ்மணனை பிடித்துக் கொண்டாள். இந்த உன் உருவத்துக்கு நான் ஏற்றவளே. நல்ல நிறமுடையவள் நான். என்னுடன் சுகமாக தண்டகாவனத்தில் சுற்றுவாயாக. ராக்ஷஸி இப்படிச் சொன்னதும், சூர்ப்பணகையைப் பார்த்து மெதுவாக சிரித்து வார்த்தைகளை அளந்து பேசினான். எப்படி நீ ஒரு தாஸனுக்கு மனைவியாகி தாஸியாக இருக்க எண்ணுகிறாய்? நான் என் சகோதரனின் கீழ், அவன் சொல்படி நடப்பவன். தன்னிச்சையாக எதுவும் செய்யாதவன். கமலம் போன்ற நிறம் உடையவளே, சம்ருத்தியான அர்த்தம் (பொருள்) உடையவனை, சித்3தா4ர்த்தா (தன் விருப்பம் நிறைவேறியவளாக) வாக, நீ சென்றடைவாய். அவனுக்கு மனைவியாக இரு. அண்ணல் ராமனை வேண்டி அவனுக்கு மனைவியாக போ. இதோ இருக்கும் சீதையை, நீ சொல்வது போல, ரூபமில்லாத, அசத்தான, கோரமான, வயிற்றுப் பகுதியே இல்லாத, வயது முதிர்ந்த மனைவியை விட்டு உன்னை ஏற்றுக் கொள்வான். இது போன்ற உன் விசேஷமான ரூப லாவண்யங்களைப் பார்த்து யார் தான், மானுஷ ஸ்த்ரீயை விரும்புவர். இது போல லக்ஷ்மணனும் நிராகரிக்க, கொடூரமானவள், இந்த சொல்லை உண்மையென்றே நம்பினாள். பரிகாசம் என்று உணர்ந்து கொள்ளவில்லை. பர்ணசாலைக்குள் நுழைந்து விட்ட ராமனை சீதையுடன் இருந்தவனைப் பார்த்து, காமம் தலைக்கேற, இந்த விரூபமான, கராளமான (பயங்கரமான), வயிறு இல்லாத கிழவியை, மனைவியாக வைத்துக் கொண்டு என்னை உயர்வாக எண்ண மறுக்கிறாய். இன்று இதோ இவளை சாப்பிட்டு விடுகிறேன். நீ பார்த்துக் கொண்டே இரு. மானுடப் பெண் எனக்கு ஒரு பொருட்டல்ல. நீ என்னுடன் சஞ்சரிப்பாய். சக்களத்தியை ஒழித்துக் கட்டி விட்டு நானும் சந்தோஷமாக உன்னுடன் வருவேன். இவ்வாறு சொல்லிக் கொண்டே மான் விழி கொண்ட சீதையை, நெருப்புத் துண்டம் போன்ற கண்களுடன் சூர்ப்பணகா மிகக் கோபத்துடன் அருகில் ஓடி பிடிக்க முயன்றாள். பெரிய நெருப்பு கோளம் ரோஹிணியை பிடிக்க ஓடுவது போல ஓடினாள். யமனின் பாசக்கயிறு போன்ற அவளை, மிக பலத்துடன் விழுபவளைத் தடுத்து ராமர், லக்ஷ்மணனிடம் சொன்னார். லக்ஷ்மணா, நாகரீகமற்ற, க்ரூரமான, பண்பற்றவர்களிடம் பரிகாசம் செய்வது வீண். சௌமித்ரே, இதோ பார் சீதையை. உயிரை கையில் பிடித்துக் கொண்டு, பயத்தால் நடுங்கி கொண்டு நிற்கிறாள். இந்த கோரமான ரூபமுடைய அநாகரீகமான பெண்மணியின் உருவத்தை சிதைத்து விட்டு, விட்டு விடு என்றார். ராமர் சொன்னபடியே, லக்ஷ்மணன், ராமர் பார்த்துக் கொண்டு நிற்கையிலேயே, கோபத்துடன் தூக்கி, வாளினால் அவள் கர்ணங்களையும் (காதுகளையும்), மூக்கையும் அரிந்தான். ரத்தம் சொட்ட இன்னும் கோரமாக, விரூபம் செய்யப் பட்டவளாக பெருங்குரலில் கூக்குரலிட்டாள். மழைக் கால மேகம் இடி இடிப்பது போல் இருந்தது. ஏற்கனவே விரூபா. கொட்டும் ரத்தத்தை கைகளால் மூடிக் கொண்டு மகா வனத்தினுள் ஓடினாள். ராக்ஷஸர்களுடன் கூட்டமாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்த க2ரன் சபையில் நுழைந்து மேலேயிருந்து ஏதோ கல் விழுவது போல விழுந்தாள். தரையில் தடாலென்று விழுந்தவள், பயத்துடன், மனைவியுடன் காட்டுக்கு வந்துள்ள ராம, லக்ஷ்மணர்களைப் பற்றி விவரித்தாள். தன் ரூபத்தை சிதைத்ததையும் சொன்னாள். க2ரன் சகோதரி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பணகா விரூபணம் என்ற பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 19 (215) க2ர க்ரோத4: (கரனின் க்ரோதம்)
ரத்தம் சொட்ட வந்து விழுந்தது தன் சகோதரி தான் என்று அறிந்து கொள்ளவே க2ரனுக்கு சற்று நேரம் பிடித்தது. பின் அவளை விசாரித்தான். எழுந்திரு,. விஷயத்தைச் சொல். இந்த பட படப்பை அடக்கிக் கொண்டு, நடந்ததைச் சொல் என்றான் தெளிவாகச் சொல். யார் உன்னை விரூபம் செய்தது, யார் அவன்? க்ருஷ்ண சர்ப்பத்தின் மேல் கால் வைத்தவன். ஆலகால விஷம் போன்ற என்னிடம் வாலாட்டுபவன் யார்? விளையாட்டாக, விரல் நுனியில் அவனை நாசமாக்குவேன். யார் அவன்? என்னை நெருங்கி விளையாடுகிறான். கால பாசத்தை கழுத்தில் இறுக்கிக் கொள்கிறோம் என்று கூட அறியாமல் மோகத்தில் ஆழ்ந்து இருக்கிறான். யார் உன்னை இன்று எதிர்த்து, விஷத்தைக் குடித்திருக்கிறான். தன்னிஷ்டப்படி உருவம் எடுத்துக் கொண்டு தன்னிச்சையாக திரிபவளான உன்னை யார் சீண்டியது? இந்த நிலைக்கு உன்னைக் கொண்டு வந்தவன் யார்? அவன் அந்தகனை எதிர் கொண்டழைத்தவன் ஆவான். உன் பலமும் விக்ரமமும் அவன் அறியவில்லை. தேவ, கந்தர்வ, பூதங்கள், ரிஷிகள் மகாத்மாக்கள் இவர்களில் யார் உன்னை ரூபம் சிதையச் செய்தது. யார் அந்த மகா வீரன்? இந்த உலகில் எனக்கு பிடிக்காததைச் செய்யக் கூடிய யாரையுமே நான் கண்டதில்லை. பாக சாஸனன், ஸஹஸ்ராக்ஷன் என்று அழைக்கப் படும் தேவர்கள் தலைவனான இந்திரனையன்றி வேறு யார் இந்த துணிச்சல் பெற்றது. இன்று அவன் உயிரை எடுக்கிறேன். உயிரை போக்கும் வல்லமையுடைய என் அம்புகளால் ஸாரஸ பக்ஷி தண்ணீரில் உள்ள பாலை பிரித்து குடிப்பது போல, என் குறி தவறாத பாணங்களால் அவன் உயிரை பறிப்பேன். என் சரத்தால் அடிபட்டு விழுபவன் உடலில் இருந்து வெளிப்படும், நிண நீரும், ரத்தமும் பூமியை சகதியாக்கப் போகிறது. எவனுடைய உடல் என்னால் யுத்தத்தில் அடிக்கப் பட்டு விழுகிறதோ, அதை கழுகுகள் உணவாகக் கொள்ளப் போகின்றன. யார் என் கையில் அகப்பட்டுக் கொண்டானோ, அந்த துரதிருஷ்ட சாலியை தேவர்களோ, கந்தர்வர்களோ, பிசாசங்களோ, ராக்ஷஸர்களோ கூட காப்பாற்ற முடியாது. மெதுவாக நினைவு திரும்பியவுடன் என்னிடம் சொல். எந்த துர்வினீதன் உன் உருவத்தை சிதைத்தான். வனத்தில் நீ, உன் இஷ்டப்படி சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பொழுது உன்னை எதிர்த்து தோற்கடித்தவன் யார்? இவ்வாறு சகோதரன் பரிவுடன் வினவியதும், சூர்ப்பணகா கண்களில் நீர் பெருக பதில் சொன்னாள். இளைஞர்கள். அழகிய உருவம் உடையவர்கள். சுகுமாரமான தேகம் ஆயினும் மகா ப3லம் பொருந்தியவர்கள். புண்டரீகாக்ஷர்கள், விசாலமான கண்களையுடையவர்கள். மரவுரி வல்கலை தரித்து இருக்கின்றனர். கனிகளையும், காய் கறிகளையும் மட்டுமே சாப்பிட்டு சாந்தமானவர்கள். தவம் செய்யும் முனிவர்கள். தர்ம வழியில் செல்பவர்கள். தசரதனுடைய குமாரர்களாம் இருவரும். சகோதரர்கள். ராம, லக்ஷ்மண என்று பெயர் படைத்தவர்கள். கந்தர்வ ராஜன் போல கம்பீரமான ஆகிருதியுடையவர்கள். அரச குமாரர்கள் என்பதற்கான உடல் அடையாளங்கள் தெரிகிறது. தேவர்களா, மனிதர்களா என்று இனம் பிரித்து என்னால் கண்டு கொள்ள முடியவில்லை. இளம் வயது பெண்ணொருத்தி, அழகிய உருவம் உடையவள், எல்லா வித ஆபரணங்களும் அணிந்தவள், இவர்களுக்கு மத்தியில் இருக்கக் கண்டேன். அவர்கள் இருவரையும் ஏமாற்றி அந்த பெண்ணை கைப் பற்றி வரப் போனேன். இந்த கதியடைந்தேன். ஏதோ அனாதை, போக்கிடம் இல்லாத பாமரப் பெண் போல ஆனேன். அவளுடையது, அந்த இரு வீரர்களுடையதும், இவர்களை சண்டையில் வென்று ரத்தத்தை நிண நீரோடு குடிக்க விரும்புகிறேன். இது என்னுடைய முதல் விருப்பம். அண்ணா, நீ இதை நிறைவேற்ற வேண்டும். சண்டை முடிவில் அவ்விருவரும் விழுந்து கிடக்கச் செய். மூவரின் ரத்தமும் நான் குடிக்கும்படியாக அவர்களை போரில் வீழ்த்து. சூர்ப்பணகா அரற்றியதைக் கேட்டு பொறுக்க மாட்டாத கரன், பதினான்கு மகா பல சேனையை ஆணையிட்டான். யமனுக்கு சமமான ராக்ஷஸர்களுக்கு கட்டளையிட்டான். இரண்டு மனிதர்கள். கையில் ஆயுதம் தாங்கியவர்கள். பயங்கரமான தண்டகா வனத்தினுள் நுழைந்துள்ளனர். கூடவே ஒரு பெண் வேறு. அவர்களை வென்று அந்த பெண்னையும் கொன்று வாருங்கள். அவர்களின் ரத்தத்தை என் சகோதரி குடிப்பாள். ராக்ஷஸர்களே, இது என் சகோதரியின் ஆசை. சீக்கிரம் போங்கள். அவர்கள் இருவரையும் கொன்று வாருங்கள். உங்கள் பலம் முழுவதும் பிரயோகித்து, நன்றாக அடித்துக் கொண்டு வாருங்கள். உங்கள் கையில் அடி வாங்கித் தவிக்கும் அவர்களைப் பார்த்து மகிழ்ந்து இவள் அவர்கள் ரத்தத்தைக் குடிப்பாள். பதினான்கு ராக்ஷஸ வீரர்களும் இவ்வாறு கட்டளையிடப் பெற்று, அங்கு சென்றார்கள். பெரும் மேகம் காற்றினால் அலைக்கழிக்கப் படுவது போல அங்கு போனவுடன், உக்கிரமான தேஜஸையுடைய ராமனை, தீக்ஷ்ணமான ஆயுதங்களால் அடித்தும் ராக்ஷஸர்கள், எளிதில் அடைய முடியாதவனை, ராமனை துன்புறுத்த முடியவில்லை. காட்டு யானைகள் தானாக தோன்றி வளர்ந்து வரும் காட்டுத் தீயிடம் எதுவும் செய்ய இயலாமல் தவிப்பது போல அருகில் செல்ல முடியாமல் தவித்தார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ரக்ரோதோ4 என்ற பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 20(216) சதுர்த3ஸ ரக்ஷோ வத4: (பதினான்கு ராக்ஷஸ வதம்)
சூர்ப்பணகா ராகவனின் ஆசிரமம் வந்து ராக்ஷஸர்களுக்கு சகோதரர்களையும், சீதையையும் காட்டினாள். அவர்களும் பர்ணசாலையில் அமர்ந்திருக்கும் ராமனைக் கண்டனர். உடன் லக்ஷ்மணனும், சீதையும் அமர்ந்திருந்தனர். அருகில் வந்து நின்ற ராக்ஷஸியையும், ராக்ஷஸர்களையும் பார்த்து, ராமர் லக்ஷ்மணனிடம் சொன்னார். முஹுர்த்த காலம் சீதையை காப்பாற்றிக் கொண்டு இங்கேயே இரு. இவளுடைய உறவினர்களையும் சேர்த்து அழிக்கிறேன். தானே வந்து விழுந்த பூச்சிகளைப் போல நஷ்டமடையப் போகிறார்கள். லக்ஷ்மணனும் சரியென்று ஆமோதித்து, ராமர் யோசித்து தான் சொல்லியிருப்பார் என்ற நம்பிக்கையுடன் அங்கேயே நின்றான். பெரும் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு ராமர் புறப்பட்டார். தயாரானவுடன் ராக்ஷஸர்களைப் பார்த்து எதசரத ராஜாவுடைய பிள்ளைகள் நாங்கள். ராம, லக்ஷ்மணர்கள். கடக்க முடியாத இந்த தண்டகா வனத்தினுள் சீதையுடன் வந்து சேர்ந்தோம். கனிவகைகளையும், காய் கிழங்குகளையும் உண்டு சாந்தமாக தர்மத்தை அனுசரித்துச் செல்லும் தவம் செய்யும் தபஸ்விகள். இப்படி தண்டகாரண்யத்தில் வசிக்கும் எங்களை, எதற்காக உபத்ரவம் செய்கிறீர்கள்? ரிஷிகளின் வேண்டுகோளின் படி ஆயுதங்களை ஏந்தி வந்துள்ளேன். பாபாத்மாக்களான உங்களைக் கொல்லவே, தவறான நடத்தையுடைய உங்களை, பெரும் யுத்தம் செய்தாவது அழிக்க எண்ணம் கொண்டுள்ளேன். என் எதிரில் இப்படியே நின்று கொண்டிருந்தால், சந்தோஷமாக திரும்பி போக முடியாது. உயிர் மேல் ஆசை இருந்தால், உடனே திரும்பி போங்கள். ராமர் சொன்னதைக் கேட்டு, பதினான்கு ராக்ஷஸர்களும் பெரும் கோபம் கொண்டு சூலங்களை ஏந்திக் கொண்டு முன்னால் வந்தார்கள். பிராம்மணர்களை அடிப்பதே தொழிலாக கொண்டவர்கள், பதில் சொன்னார்கள், மகாத்மாவான கரன், எங்கள் தலைவன். அவனுக்கு கோபத்தை உண்டு பண்ணிவிட்டு, நீ தான் இப்பொழுது உயிர் இழக்கப் போகிறாய். இதோ இன்று நாங்கள் உன்னை அடித்து வீழ்த்துகிறோம் பார். நீ தனி ஆள். நாங்கள் இவ்வளவு பேர் எதிரில், யுத்தம் செய்ய முனைந்து நிற்கும் பொழுது நீ என்ன செய்வாய்? யுத்தம் செய்வது எங்கே? நிற்கவே முடியாது. வா, வா, முதலில் கை முஷ்டிகளால் நாங்கள் அடித்தாலே, உன் கை வில், அம்புகள் பறந்து போகும். கூடவே நீயும் உயிரிழப்பாய். பதினான்கு ராக்ஷஸர்களும், இப்படி பேசிக் கொண்டே, கோபத்துடன் ஆயுதங்களை தூக்கிக் கொண்டு வெறி கொண்டவர்களாக ராமனை நோக்கி ஓடி வந்தனர். வேகமாக ஓடி வந்த அந்த ராக்ஷஸர்களின் பின்னால், பரிக4ம், பட்டிசம் எனும் ஆயுதங்களையும், சூலங்களையும், ஏந்தியபடி வீரர்கள் வந்தனர். பயங்கரமான தங்க முலாம் பூசிய, மிகவும் சக்தி வாய்ந்ததுமான ஆயுதங்களை ராமன் பேரின் ஏவினர். ராமனோ, அந்த பதினான்கு சூலங்களையும், தன் அம்பினால் எதிர்த்து அவர்கள் பேரிலேயே விழும்படி செய்தான். பெரும் வீரர்களான அவர்களும் சளைக்காமல், நாராசம் எனும் ஆயுதத்தை எடுத்து பதினான்கு பேரும் ஒன்றாக ராமன் பேரில் பிரயோகித்தனர். அதை பிடித்து வில்லை தயார் செய்து கொண்டு ராக்ஷஸர்களை லட்சியமாக உத்தேசித்து, இந்திரன் வஜ்ராயுதத்தை பிரயோகித்தது போல பிரயோகித்தான். தங்க நிறமான அம்புகள், கூர்மையான ஜ்வலிக்கும் அலங்காரங்களுடன் கூடியதுமான அம்புகளை குறி பார்த்து எய்ய, அவை ராக்ஷஸர்களின் மார்பை பிளந்து ரத்தத்தில் தோய்ந்தவைகளாக கீழே விழுந்தன. எறும்பு புற்றிலிருந்து பாம்புகள் வெளி வருவது போல இருந்தது. வேரற்ற மரங்களாக, ஒடிந்து விழுந்த மரங்களைப் போல அவர்கள், சரிந்தனர். உயிர் பிரிந்த நிலையில் துண்டான உடல்கள் ரத்தத்தில் தோய்ந்த சரீரமும் கீழே விழுந்தன. இவர்கள் இப்படி தோற்று விழுவதைக் கண்ட ராக்ஷஸி கோபத்துடன் செய்வதறியாது பயந்து பயங்கரமாக சத்தமிட்டுக் கொண்டு ஓடினாள். பெரும் குரலில் ஓலமிட்டுக் கொண்டு வேகமாக சென்ற சூர்ப்பணகா திரும்பவும் கரனிடம் சென்று எதுவும் சொல்லத் தெரியாமல் தரையில் விழுந்தாள். சகோதரன் அருகில் துக்கத்துடன், கண்கள் நீரை பெருக்க, முகம் வாடி, அவனிடம் நடந்தது அனைத்தையும் விவரமாக சொன்னாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் சதுர் த3ஸ ரக்ஷோ வதோ4 என்ற இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 21 (217) க2ர சந்தூ3ஷணம் (கரனை தூஷித்தல்)
மறுபடியும் வந்து கீழே விழுந்த சூர்ப்பணகையைப் பார்த்து, க2ரன் சற்று கோபத்துடன் அழுத்தம் திருத்தமாக நீ வந்ததே அனர்த்தம் விளைவிக்கத்தான் என்று கடிந்து கொண்டான். எதற்காக மறுபடியும் அழுகிறாய்? உனக்காக சூரர்களான ராக்ஷஸர்களை பொறுக்கி எடுத்து அனுப்பினேனே போதாதா. இவர்கள் எப்பொழுதும் என் பக்தர்கள். என் நன்மையில் நாட்டம் கொண்டவர்கள், பிரியமானவர்கள். இவர்கள் தான் மற்றவர்களை கொன்று ரத்தத்தை குடிப்பார்களே அன்றி மற்றவர்கள் இவர்களை வீழ்த்தியதே இல்லை. என் வார்த்தையை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள். எதற்காக ஹா, ஹா என்று அலறுகிறாய். சர்ப்பம் போல் பூமியில் கிடந்து நெளிகிறாய். நாதனாக நான் இருக்கும் பொழுதே அனாதை போல அழுகிறாய். எழுந்திரு, எழுந்திரு, மனக்லேசத்தை விடு, பயப்படாதே, என்று க2ரன் சமாதானப் படுத்தவும், கண்களைத் துடைத்துக் கொண்டு காதுகளையும் மூக்கையும் இழந்து ரத்தம் சொட்ட நான் இருக்கிறேன், வலியை பொறுத்துக் கொண்டு நிற்கிறேன், நீ சமாதானம் சொல்கிறாய். நீ பதினான்கு ராக்ஷஸர்களை அனுப்பினாயே, அவர்கள், லக்ஷ்மணணோடு ராமனை அழிக்கச் சென்றனர். இதனால் நீ சந்தோஷம் அடைவாய் என்று தானே சென்றார்கள். சூலமும், பட்டசமும் ஏந்தி கடுமையாக போர் புரிய எண்ணி வந்தவர்களை அந்த ராமன், ஒட்டு மொத்தமாக எல்லோரையும் அழித்து விட்டான். அவனுடைய அம்புகள் மர்மத்தை பிளக்கும் சக்தி வாய்ந்தவை போலும். ஒரு க்ஷண நேரத்தில் ராம பா3ணம் பட்டு அவர்கள் விழுந்ததைக் கண்டு நான் பயந்து ஓடி வந்தேன். திரும்பவும் உன்னையே சரணடைகிறேன். நாலா புறமும் பயம் சூழ்ந்து நிற்கிறது. ராக்ஷஸ ராஜனே, நான் மிகவும் மனம் நொந்து வாடி இருக்கிறேன். பெரும் சோக சாகரத்தில் மூழ்கி இருக்கும் என்னைக் காப்பாற்று . இந்த சமுத்திரத்தில் வருத்தம் என்ற முதலைகள் வாழ்கின்றன. பரித்ராஸம், மிக அதிகமான பயம் என்றவை அலைகளாக அடித்துக் கொண்டே இருக்கின்றன. ராமனுடைய கூரிய அம்பினால் இவர்கள் அடிபட்டு வீழ்ந்தார்கள். பிசிதாஸனர்களான ராக்ஷஸர்கள் விட்டில் பூச்சிகளாக விழுந்தனர். உன் வீரர்களிடம், ராக்ஷஸர்களிடம், என்னிடம் சிறிதாவது அனுக்ரோஸம் (தயை) இருக்குமானால், ராமனிடம் சண்டையிட தேஜஸும், சக்தியும் உனக்கு இருப்பதாக எண்ணினால், ராக்ஷஸர்களுக்கு முள்ளாக, இடைஞ்சலாக வந்து வாய்த்த இந்த ஜனஸ்தான வாசியை அழிப்பாய். இன்று ராமனை, என் எதிரியை அழிக்கவில்லையென்றால், உங்கள் முன்னிலையில் உயிரை விடுவேன். நீ ராமனோடு யுத்தம் செய்ய சென்றால், நிற்க கூட முடியாது என்று என் மனதில் படுகிறது. உன் படை பலம் உனக்கு பக்க பலமாக இருந்தாலும் கூட, யுத்தத்தில் நீ சூரனாக இருந்தாலும், உன் பலம் கல்பிதமானது, ஆரோபிதமானது என்றே நான் என்ணுகிறேன். உண்மையில் நீ வீரனே அல்ல. மனிதர்களான அவ்விருவரையும் நீ கொல்லாவிட்டால், கொல்ல முடியாவிட்டால், ராமனிடத்தில் நின்று நேருக்கு நேர் யுத்தம் செய்ய சக்தி இல்லையென்றால், தண்டகாரண்ய ராஜ்யம் எதற்கு? இதை அழி. அல்ப வீரியன் நீ. உனக்கு சக்தியும் இல்லை. ஜனஸ்தானத்திலிருந்து உடனே உன் பந்துக்களைக் கூட்டிக் கொண்டு வெளியேறு. ராமனுடைய தேஜஸ் உன்னைச் சூழ்ந்தால் உடனே நாசமடைவாய். தசரத குமாரனான ராமனோ, தேஜஸ் நிரம்பியவன். அவன் தம்பியும் சுத்த வீரன். அவன் தான் என் உருவத்தை சிதைத்தான். பெருத்த வயிறுடைய அந்த ராக்ஷஸி இவ்வாறு புலம்பி, அழுது புரண்டு, கைகளால் வயிற்றில் அடித்துக் கொண்டு பெருங்குரலில் ஓலமிட்டாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ர சந்தூ3ஷணம் என்ற இருபத்தோராவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 22 (218) க2ர சன்னாஹ: (கரன் போருக்கு அறை கூவுதல்)
ராக்ஷஸர்களுக்கு மத்தியில் தன்னை இவ்வாறு ஏசும் சூர்ப்பணகையைப் பார்த்து கரன், இன்னும் கடுமையாக பதில் சொன்னான். உன்னை அவமானம் செய்திருக்கிறார்கள். அதனாலேயே நான் அளவில்லாத கோபமும் அடைந்துள்ளேன். உப்புக் கடல் ஆரவாரித்து நிற்பது போல என் படையுடன் நான் சென்றால் அவனால் எதிர்த்து க்ஷணம் கூட நிற்க முடியாது. ராமனை ஒரு பொருட்டாகவே நான் எண்ணவில்லை. மனிதன், க்ஷீணமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவன். தன்னுடைய துஷ்டத்தனமான காரியங்களின் பலனாக இன்று உயிரை விடப் போகிறான். கண்ணீரை துடைத்துக் கொள். இந்த பட படப்பையும் அடக்கிக் கொள். ராமனை அவன் சகோதரனுடன் சேர்த்து இன்று யம லோகம் அனுப்புகிறேன். இன்று நான் அடித்து வீழ்த்தி மந்த ப்ராணனாக இருக்கும் பொழுது, உஷ்ணமான அவன் ரத்தத்தை நீ குடித்துக்கொள். இதைக் கேட்டு ராக்ஷஸி, மனம் மகிழ்ந்தாள். மூர்க்கத்தனத்தால் தன் சகோதரனை புகழ்ந்து பேச ஆரம்பித்தாள். முதலில் கோபத்தை கிளறி விட்டு, இப்பொழுது புகழ்ந்து பேசவும், க2ரன் சமாதானமாகி தன் சேனாபதியான தூ3ஷணனை கூப்பிட்டு ஆணையிட்டான். பதினான்கு ஆயிரம் சேனை வீரர்கள், நான் நினைத்ததை செய்து முடிக்கும் திறனுடையவர்களாய், வேகமாக நின்று உறுதியுடன் போர் புரியக் கூடிய வீரர்கள், புற முதுகு காட்டி ஓடாத வீரர்கள், நீல மேகம் போன்ற வர்ணம் உடைய, கோரமான ரூபமும், கோரமான செயல்களுக்கு அஞ்சாதவர்களாக, உலகில் ஹிம்சையே விளையாட்டாகக் கொண்டவர்கள். உக்ரமான தேஜஸையுடைய பலசாலிகள். சார்தூலம் போல கர்வம் கொண்ட பெரும் வாயையுடைய மகா சக்தி வாய்ந்த, f பொறுப்பாக எந்த வேலையானாலும் செய்து முடிக்கக்கூடிய ராக்ஷஸர்களை தேர்ந்தெடுத்து படையை தயார் செய். என் ரதத்தை தயார் செய்யுங்கள். வில்லையும், அம்புகளையும் ஏற்பாடு செய். பலவிதமான அம்புகள், விசித்ரமான வாட்கள், சக்தி ஆயுதங்கள், கூர்மையான ஆயுதங்கள், இவைகளுடன் ராக்ஷஸர்களின் சேனைக்கு முன் ரதத்தில் சென்று சேனையை நடத்திச் செல்லப் போகிறேன். துர்விநீதனான ராமனை வதம் செய்ய ரணத்தைப் பற்றிய விவரம் அறிந்த நான் முன்னால் இருப்பது தான் சரி. இவ்வாறு கரன் சொல்லவும், சூரியனின் நிறத்தில் இருந்த ரதத்தை, கவனமாக தேர்ந்தெடுத்த நல்ல இளம் குதிரைகளை பூட்டி, தூ3ஷணன் கொண்டு வந்து நிறுத்தினான். அந்த ரதம் மேரு மலையைப் போல உயர்ந்து இருந்தது. புடமிட்ட தங்கத்தால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. இடைஞ்சல் இல்லாத சக்கரம், வைடூரியம் இழைத்து, தங்கத்தில் செய்யப் பட்டது. மீன், புஷ்பங்கள், மரங்கள், மலை, சந்திரன், சூரியன், மங்களமான பக்ஷி கூட்டங்கள், நக்ஷத்திரங்கள் இவை சித்திரங்களாக அலங்கரித்தன. கொடியும், கிங்கிணி என ஒலிக்கும் மணிகளும் கட்டப் பட்டது. நல்ல குதிரைகள் பூட்டிய அந்த ரதத்தில் கர்வத்தோடு ஏறி அமர்ந்தான் க2ரன். பெரும் பலம் படைத்த ராக்ஷஸர்கள், அவன் ரதத்தில் ஏறி அமர்ந்தவுடன், பரிவாரத்தோடு இருவரையும் (கரனையும், தூஷணனையும்) தொடர்ந்து செல்லலாயினர். தன் ரதத்தில் நின்று எல்லா ராக்ஷஸர்களையும், கோரமான ஆயுதங்களோடும், கொடியுடன் நின்றவர்களை கிளம்புங்கள் என்று கட்டளையிட்டான். ஜனஸ்தானத்திலிருந்து அந்த பெரும் படை ஆரவாரமாக கிளம்பியது. முத்கரம், பட்டசம், சூலம், கூர்மையான பரஸ்வதம், வாட்கள், சக்கரங்கள், கையில் வைத்துக் கொள்ளும் தோமரங்கள், சக்தி ஆயுதம், கோரமான பரிக4ம் எனும் ஆயுதம், நிறைய அம்புகள், க3தை4கள், கத்தி, முஸலங்கள், வஜ்ரங்கள், பார்க்கவே பயுங்கரமாகத் தெரியும் பல ஆயுதங்கள் இவற்றை எடுத்துக் கொண்டு, பயங்கர உருவம் உடைய ராக்ஷஸர்கள் பதினாயிரம் வீரர்கள், கரனின் எண்ணத்தை நிறைவேற்றும் உறுதியோடு ஜனஸ்தானத்திலிருந்து கிளம்பினார்கள். பெரும் விக்ரமம் கொண்ட வீரர்கள், போட்டியிட்டுக் கொண்டு முன்னேறுவதைப் பார்த்தபடி, கரனுடைய ரதமும் சென்றது. அவன் அனுமதி பெற்று சாரதி, பொன்னிறமான இளம் குதிரைகளைத் தட்டி ஓடச் செய்தான். ரதம் வேகம் எடுத்தது. நான்கு திக்குகளிலும் இந்த ஓசை நிறைந்தது. கோபம் பெருகி வர, கரன், கடுமையான குரல் உடையவன், எதிரியை வதைக்க, யமனைப் போல வேகமாக போகச் செய்தான். பெருத்த குரலில் கோஷமிட்டான். மேகம் கற்களை பொழிகிறதோ எனும்படி பெருத்த கூக்குரலுடன் அவன் படை புறப்பட்டது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ர சன்னாஹோ என்ற இருபத்திரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 23 (219) உத்பாத தரிசனம் (கெட்ட சகுனம் தோன்றுதல்)
ஜனஸ்தானத்திலிருந்து கரன் சென்றவுடன், அமங்களமான சிவந்த நீர் மழையாகப் பொழிந்தது. ரதத்தில் பூட்டப் பட்டிருந்த மகா வேகமாக செல்லக் கூடிய குதிரைகள், கீழே விழுந்தன. யதேச்சையாக ராஜ மார்கத்தில் அலங்காரமாக வைக்கப் பட்டிருந்த புஷ்பங்கள் சம தளத்தில் விழுந்தன. திடுமென கரும் சிவப்பாக ஒரு வட்டம் சூரியனைச் சுற்றி தெரிந்தது. ஒரு பெரும் கழுகு, ஹேம தண்டத்தில் பொருத்தப் பட்டிருந்த கொடியை தட்டி விட்டுச் சென்றது. மாமிசம் தின்னும் பல வித மிருகங்கள், ஜனஸ்தானத்தின் அருகில் வந்து தமது கரகரப்பான தொனிகளில் சத்தமிட்டன. விடிந்த சமயம் கிழக்கில் பைரவ நாதம் செய்து கொண்டு யாத்திரை செய்பவர்களுக்கு அசுபமான குள்ள நரிகள் பெருங்குரலில் ஓலமிட்டன. தனித் தனியாக மலை போன்ற மேகங்கள், சிவந்த நீரை ஏந்திக் கொண்டு பவனி வர, ஆகாசம் காகங்களால் நிறைந்து அநாகாசம் ஆக்கியது (ஆகாசம் தெரியாமல் செய்தது). ரோமாஞ்சனம் உண்டு பண்ணக் கூடிய கறுமை நிறத்துடன் அவை திசைகளை மறைத்தன. ராஜதானியை மறைத்தன. ரத்தத்தில் தோய்ந்தது போல வர்ணத்தில் ஸந்த்யா காலம் விளங்கியது. யுத்தத்திற்காக விரைந்து கொண்டிருந்த கரனை நோக்கி பறவைகள், சத்தமிட்டன. பயத்தை வெளிப் படுத்தும் வகையில் கங்க – கழுகுகள் கத்தின. எப்பொழுதும் நல்ல சகுனமாக கருதப் படாத குள்ள நரிகள் நிறைய தென் பட்டன. அதுவே கோரமான தரிசனமாக இருந்தது. சூரியாஸ்தமன சமயத்தில் சில கபந்த உருவங்கள், வாயிலிருந்து தீ பறக்க நடமாடின. காலம் இல்லாத காலத்தில் பெரிய கிரஹணம் வந்து சூரியனைப் பிடித்தாற் போல இருந்தது. காற்று வேகமாக அடித்தது. சூரியனில் ஒளியே இல்லை. ராத்திரி இன்னும் வராமலேயே நக்ஷத்திரங்கள் மின் மினி பூச்சி போல மின்னின. பறவைகளும், மீன்களும் அடங்கி இருக்க தாமரை மலர்கள் இன்றி உலர்ந்த சேறு தான் மீந்திருந்தது. அந்த க்ஷணத்தில் மரங்கள் பூவோ, பழமோ இன்றி இருந்தன. காற்று இல்லாமலேயே மண் வாரியடித்தது. சாரிகா: என்ற பக்ஷிகள் கீச் கீசென்று கத்தின. ஆந்தைகள் தொப்பென்று விழுந்தன. மலை, வனம், காடு சார்ந்த பூமி ஆடியது. ரதத்தில் இருந்த க2ரன் சமாளித்துக் கொண்டது நர்த்தனம் ஆடுவது போல இருக்க அவனது இடது புஜம் துடித்தது. அவன் குரலும் தடுமாறியது. பார்வையும் குன்றியது. நெற்றி புடைத்துக் கொண்டது போல இருந்தது. இந்த அபசகுனங்களைப் பார்த்து மனம் தளர்ந்த ராக்ஷஸ வீரர்களைப் பார்த்து க2ரன் உற்சாகமூட்டுவது போல சிரித்துக் கொண்டே, இந்த துர் நிமித்தங்களைக் கண்டு பயப்பட மாட்டேன், நல்ல வீர்யம் உடையவன், அல்ப வீரம் உடையவனைப் பார்த்து அலட்சியமாக நகைத்துக் கொண்டு போவது போல இந்த விஷயங்களுக்கு நான் அதிக முக்யத்துவம் தரவில்ல. ஆகாயத்தில் உள்ள நக்ஷத்திரங்களைக் கூட கூர்மையான பாணங்களால் வீழ்த்தி விடுவேன். ம்ருத்யுவையும், மரண தர்மம் என்பதுடன் சேர்த்து விடுவேன். தன் பலத்தில் கர்வம் கொண்டுள்ள ராக4வனை அழிக்காமல், அவன் சகோதரனுக்கும் பாடம் கற்பிக்காமல், கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொண்டு, யுத்தம் செய்யாமல் திரும்புவது என்பது நடக்காது. அவர்கள் ரத்தத்தை குடித்து என் சகோதரி திருப்தியாகட்டும். அவளுக்காகத் தான் ராம, லக்ஷ்மணர்களுடன் விரோதமே வந்தது. யுத்தத்தில் பராஜயம், தோல்வி என்பது நான் அறியாதது. உங்களுக்கு எதிரில் நான் சொல்வது பொய்யல்ல. மதம் பிடித்த ஐராவதத்தில் போகும் தேவ ராஜனான இந்திரனையும், கையில் வஜ்ரம் வைத்துக் கொண்டு எதிர் பட்டால் கூட யுத்தம் செய்து அவனை கொல்வேன். இந்த அல்ப மனிதர்கள் எந்த மூலை? அந்த ராக்ஷஸ சேனை க2ரன் கர்ஜித்ததைக் கேட்டு பெரும் மகிழ்ச்சியடைந்தது. ம்ருத்யு பாசம் அவர்களை கட்டிப் போட இருக்கும்பொழுது அவர்கள் வேறு என்ன செய்வார்கள்? யுத்தத்தைக் காண பலரும் வந்து சேர்ந்தனர். ரிஷிகள், தேவ கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், மற்றும் பலரும் வந்து தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பசுக்களும் பிராம்மணர்களுக்கும் ஸ்வஸ்தி. நல்லது நடக்கட்டும். உலகில் உள்ள நல்லவர்கள் அனைவருக்கும் ஸ்வஸ்தி. ராக4வன் ஜயிக்கட்டும். யுத்தத்தில் சக்ரதரன் எப்படி எல்லா அசுரர்களையும் அழித்தானோ, அவ்வாறே, பௌலஸ்தியர்களை, இரவில் நடமாடும் இந்த ராக்ஷஸர்களை அழிக்கட்டும். இன்னும் பலவிதமாகப் பேசிக் கொண்டு பரம ரிஷிகளாக உள்ளவர்களும் ஆவல் மேலிட, பார்க்கலானார்கள். அங்கு விமானங்களில் அமர்ந்த தேவர்கள், ராக்ஷஸர்களுடைய பெரிய சேனையைக் கண்டனர். இவர்கள் ஆயுள் முடியப் போகிறது என்று எண்ணினர். ரதத்தில் ஏறி கரன் வேகத்துடன் உக்ரமாக வெளிப் பட்டான். அந்த ராக்ஷஸனைப் பார்த்து மற்ற ராக்ஷஸர்களும் கிளம்பினர். கரனைச் சூழ்ந்தபடி மகா பலசாலிகளான பன்னிரண்டு ராக்ஷஸர்கள், ஸ்யேனகாமி, ப்ருது2க்3ரீவோ, யக்ஞ சத்ரு, விஹங்க3ம:, துர்ஜயன், கரவீராக்ஷன், பருஷன், கால கார்முகன், மேக4 மாலி, மகா மாலி, சர்ப்பாஸயோ, ருதிராசனன் என்ற ராக்ஷஸ வீரர்கள், கரனுக்கு பாதுகாவலாகச் சென்றனர். மகா கபாலன், ஸ்தூலாக்ஷன், ப்ரமாதீ,3 த்ரிசிரஸ், என்ற நால்வரும், தூ3ஷணனைத் தொடர்ந்தனர். அந்த சேனை பயங்கரமான செயல் திறனோடு, யுத்தத்தில் விருப்பதோடு, மகா பலசாலியான ராக்ஷஸ சேனை, அந்த ராஜ குமாரர்களை, திடுமென நெருங்கின, கிரகங்களின் மாலை சந்திர சூரியர்களை நெருக்குவது போல.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் உத்பாத த3ரிசனம் என்ற இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 24 (220) ராம, க2ர, ப3ல சன்னிகர்ஷ:
(ராமனுடைய, கரனுடைய பல பரீக்ஷை)
பராக்ரமம் உடைய க2ரன், ராமனுடைய ஆசிரமத்தை நோக்கி வந்த பொழுது அதே துர் நிமித்தங்களை ராமனும் கண்டான். அந்த துர் நிமித்தங்கள், மயிர் சிலிர்க்கச் செய்வதாயும், மகா கோரமாகவும் இருந்ததால், பிரஜைகளுக்கு கெடுதல் என்று உணர்ந்த ராமன் லக்ஷ்மணனிடம் சொன்னான். லக்ஷ்மணா, இந்த நிமித்தங்களைப் பார். எல்லா ஜீவன்களுக்கும் கெடுதலை செய்பவை. ராக்ஷஸர்களை அழிக்கத் தோன்றியவை. கர்த3ப4ம் போல, சிவந்த மேகங்கள் ஆகாயத்தில் சஞ்சரிக்கின்றன. ரத்த தாரையை பெருக்கிக் கொண்டு, கடும் குரல் உடைய பக்ஷிகளின் கூக்குரல் கேட்கிறது. அஸ்திரங்களில் புகை, எழும்புகிறது. யுத்தம் என்று வந்தால் விருப்பத்தோடு யுத்தம் செய்யும் என் தங்க நிற அம்புகளில் அவை படிகின்றன. இங்கு கூவும் பக்ஷிகளும், வனத்தில் சஞ்சரிக்கும் மிருகங்களின் சப்தமும், நமக்கு பயம் வரப் போவதை தெரிவிக்கின்றன. உயிருடன் இருப்பது கூட சந்தேகமே. பெரும் யுத்தம் வரப் போகிறது சந்தேகமே இல்லை. என் புஜம் திரும்பத் திரும்பத் துடிக்கிறது. நமக்கு ஜயம் அருகில் இருக்கிறது. சூரனே, எதிரிகளுக்குத் தான் தோல்வி. உன் முகம் ஒளியுடன் ப்ரஸன்னமாகத் தெரிகிறது. லக்ஷ்மணா, யுத்தம் செய்ய புறப்பட்டவர்களின் முகம் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆயுள் முடிந்து விடுமோ என்று பயப் படுபவர்கள் முகம் தான் ஒளியிழந்து காணப் படும். ராக்ஷஸர்கள் செய்யும் அட்டகாசமான சப்தம் பெரிய சப்தமாக கேட்கிறது. பே4ரியை அவர்கள் கொமூடுரமாக அடித்து நொறுக்குகிறார்கள். அதனால் சத்தம் காதை பிளக்கிறது. சுகத்தை விரும்பியவன், அனாக3த விதா3னம், (சங்கீத பரிபாஷை) அடங்கிய குரலில் இருக்க வேண்டும். ஆபத்து என்று சந்தேகப் படுபவர்கள் தான் கெடுதலை எதிர்பார்த்து அதிகமாக சப்தம் செய்கின்றனர். அதனால் கையில் வில்லையும் அம்பையும் தயாராக வைத்துக் கொண்டு, வைதேஹியையும் அழைத்துக் கொண்டு குகைக்குள் இரு. இதை எதிர்த்து எதுவும் சொல்லாதே. என் பாதங்கள் மேல் ஆணை. சீக்கிரம் போ. குழந்தாய், தாமதிக்காதே. நீ சூரன், பலவான், இவர்கள் கொல்லப் படவேண்டியவர்கள், சந்தேகமே இல்லை. நான் தனியாக இந்த நிசாசரர்களை எல்லோரையும் அழிக்க விரும்புகிறேன். இவ்வாறு ராமர் சொல்லவும், சீதையை அழைத்துக் கொண்டு எளிதில் நுழைய முடியாத அந்த குகைக்குள், கையில் வில்லையும் அம்பையும் ஏந்தி, எந்த நிலைக்கும் தயாராக நுழைந்தான். லக்ஷ்மணன் குகைக்குள் நுழைந்த பின், அப்பாடா, என்று ராமர் நிம்மதியுடன், தன் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டார். அக்னிக்கு சமமாக இருந்த அந்த கவசத்தை அணிந்து, ராமர், புகையில்லாத அக்னி ஜ்வாலை போல இருந்தார். வில்லை எடுத்துக் கொண்டு, மகா பலம் வாய்ந்த அம்புகளையும் எடுத்துக் கொண்டு எட்டு திக்கும் கேட்கும்படி, தன் வில்லில் நாதத்தை உண்டாக்கினார். பிறகு, தேவர்களும், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள் யாவரும் யுத்தத்தைக் காணும் ஆவலோடு வந்து சேர்ந்தனர். ரிஷிகளும், மகாத்மாக்களும் உலகில் ப்ரும்ம ரிஷிக்கு சமமானவர்களும், புண்ய கர்மாக்களை செய்தவர்களும் ஒன்று கூடி தங்களுக்குள் பேசிக் கொண்டனர். உலகில் உள்ள பசுக்களும், ப்ராம்மணர்களும் க்ஷேமமாக இருக்கட்டும். அவர்களுக்கு ஸ்வஸ்தி. நன்மையுண்டாகட்டும். ராகவன் யுத்தத்தில் ஜயிக்கட்டும். சக்ரதாரியான பகவான் முன்பு, அசுரர்களையெல்லாம் வென்றது போல இந்த புலஸ்தியர்களை, நிசாசரர்களை யுத்தத்தில் தோற்கடிக்கட்டும். இவ்வாறு ஆசிர்வதித்து, தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு மேலும் கவலையுடன் பேசிக் கொண்டனர். பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்கள், பயங்கரமான செயலுடையவர்கள் ஒரு புறம், மறு புறம் தர்மாத்மா ராமன் மட்டுமே தனியாக. யுத்தம் எப்படி நடக்கப் போகிறது? என்று ராஜ ரிஷிகளும் சித்தர்கள் கணங்களோடு கூட, பிராம்மணோத்தமர்கள், ஆவல் மேலிட அங்கு வந்து சேர்ந்தனர். தேவர்களும், விமானங்களில் அமர்ந்தபடி வந்தனர். யுத்த களத்தில் முன்னிலையில் நிற்கும் ராமனை, தேஜஸே உருவாக நின்றவனைப் பார்த்து, உலகில் உள்ள சகல ஜீவ ராசிகளும் பயந்து நடுங்கின. செயற்கரிய செய்ய முனைந்த ராமனது உருவம் சொல்லில் அடங்காத தன்மையாக இருந்தது. கோபத்துடன் பினாகத்தை எடுத்துக் கொண்டு நிற்கும், ருத்ரனைப் போல இருக்கிறான் என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட தேவ, கந்தர்வ, சாரணர்களின் எதிரில் கம்பீரமான கோஷமும், கோரமான ஆயுத த்வஜமும், அதிசயமாக ராக்ஷஸர்களின் எதிரில் தோன்றியது. அந்த வனத்தில் அதன் பின் சிம்ம நாதம் செய்யும் கோஷங்களும், ஒருவரையொருவர் தாக்குவதும், வில்லிலிருந்து புறப்படும் அம்புகளின் ஒலியும், இடி முழக்கம் போன்ற ஆரவாரமும், துந்துபி நாதமும், ஒருவரையொருவர் குத்தும் சத்தமும், கலந்து ஒரே கூச்சலாக கேட்டது. அந்த சத்தத்தால் காட்டில் சஞ்சரிக்கும் நாய்கள் திரும்பி பார்க்காமல் சத்தம் இல்லாத இடத்தை நோக்கி ஓடின. அந்த சேனை ராமனை நெருங்கியது. சாகரம் போல கம்பீரமாக பலவித ஆயுதங்களை சுழற்றி அடித்தபடி நான்கு புறங்களிலும், ரண பண்டிதனான ராமன் சுழன்று சுழன்று போரிட்டான். எதிரில் நின்ற க2ரனுடைய சைன்யத்தைப் பார்த்தான். பெரிய வில்லை எடுத்து, தூணியிலிருந்து அம்புகளை எடுத்து, கோபத்தை வரவழைத்துக் கொண்டு, ராக்ஷஸர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற உத்தேசத்துடன் யுகாந்த அக்னி போல ஜ்வலித்துக் கொண்டு சண்டையிட்ட ராமனைக் காணவே கண் கூசியது எனலாம். கோபத்துடன் சண்டையிடும் அவனைக் கண்டு தேஜஸே உருக் கொண்டது போல இருந்த ராமனைக் கண்டு பயந்து வன தேவதைகள், ஓடின. இந்த கோபமான ராமனுடைய உருவம் அந்த சமயத்தில் த3க்ஷ யக்ஞத்தை அழிக்க வந்த பினாகியை ஒத்திருந்தது. அந்த ஆயுதங்கள், ஆபரணங்கள், த்வஜங்கள் இவைகள் அக்னி போலத் தெரிய, ராக்ஷஸ சைன்யம், சூரியோதயத்தில் இருட்டு காணாமல் போவது போல ஆயிற்று.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் ராம, க2ர, ப3ல சன்னிகர்ஷோ என்ற இருபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 25 (221) க2ர சைன்யாவமர்த3: (கர சைன்யத்தை வீழ்த்துதல்).
எதிரியை ஒழித்துக் கட்டுவது என்ற தீர்மானத்துடன் கையில் வில்லேந்தி நின்ற ராமனை, க2ரன் தன் பரிவாரத்தோடு ஆசிரம வாயிலில் சந்தித்தான். கையில் வில்லும் அம்பும் ஏந்தி நிற்கும் ராமனைப் பார்த்து க2ரன் தன் சாரதியிடம் நெருங்கிச் செல்ல உத்தரவிட்டான். அவன் ஆணைப்படி, சாரதியும் குதிரைகளை தட்டி விரட்டினான். தனி ஆளாக, ராமன் வில்லுடன் நின்ற இடத்திற்கு வந்தனர். க2ரனின், பாதுகாப்பிற்காக உடன் வந்த ராக்ஷஸர்கள், பெருங்குரலில் எக்காளமிட்டு, சிரித்து நடனமாடினர். இந்த ராக்ஷஸர்கள் மத்தியில் நக்ஷத்திரங்களுக்கு இடையில் லோஹிதாங்கன் உதித்தது போல க2ரன் இருந்தான். ஆயிரக் கணக்கான அம்புகளை ராமன் பேரில் எய்து விட்டு, கரன் பெருங்குரலில் முழக்கமிட்டான். பயங்கரமான வில்லை ஏந்தி நின்ற ராமனை எல்லா ராக்ஷஸர்களூமாக சூழ்ந்து கொண்டு பல விதமான சஸ்திரங்களை அவன் பேரில் விட்டனர். முத்3கரம், பட்டிசம், சூலம், ப்ராஸம், க2ட்க3ம், பரஸ்வதம், இவற்றை ராக்ஷஸர்கள் ரோஷத்துடன் ராமன் பேரில் பிரயோகித்தனர். ராமனை நோக்கி ரதத்திலும், குதிரையிலுமாக சென்றனர். ராமனை யுத்தத்தில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு பர்வதம் போன்ற யானைகளில் வந்தனர். இந்த ராக்ஷஸர்கள் தங்கள் பலம் முழுவதும் பிரயோகித்து அம்புகளை மழையாக பொழிந்தனர். மலையுச்சியில் வர்ஷிக்கும் மேக கூட்டம் போல இவர்கள் நடுவில் ராமன், நாலாபுறமும் சூழப் பெற்று நின்றான். இவர்கள் எல்லோருமாக விட்ட அஸ்த்ர, சஸ்த்ரங்களை ராமன் பிடித்து வைத்துக் கொண்டான். அது நதிகளை சாகரம் தன்னுள் ஏற்றுக் கொண்டது போல இருந்தது. இவ்வளவு அடி பட்டும் ராமன் கலங்கவில்லை. வஜ்ரம் மகா மலையை அசைக்க முடியாதது போல. அந்த கூர்மையான ஆயுதங்கள் பட்டு உடல் பூறாக ரத்த விளாறாக ஆகியது. ஸந்த்யா காலத்து மேகங்கள் சூரியனை சூழ்ந்து இருப்பது போல ஆனான். தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும் கவலை கொண்டனர். ஒருவன், ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்களால் சூழப் பட்டு நிற்பதைக் கண்டு செய்வதறியாது கலங்கினார்கள். அப்பொழுது ராமன் கோபத்துடன் தன் அம்புகளை வரிசைப் படுத்திக் கொண்டு நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக பா3ணங்களை விட ஆரம்பித்தான். கால தண்டம் போன்ற அவை, எதிர்த்து நிற்க முடியாத சக்தியுடையவை, தடுக்க முடியாத பேராற்றல் உடையவை. விளையாட்டாக ராமன் இந்த பாணங்களை சத்ரு சைன்யத்தின் மேல் விடவும், ராக்ஷஸர்களின் உயிரை எடுத்துக் கொண்டு சென்றன. காலனின் பாசம் போல ராக்ஷஸ தேகங்களை பிளந்து கொண்டு, அந்த சரங்கள், ரத்தம் தோய்ந்து அந்தரிக்ஷத்தில் அக்னி ஜ்வாலை போல விளங்கின. கணக்கிலடங்காத ராம பாணங்கள், வில்லிலிருந்து புறப்பட்டன. மிக உக்ரமாக ராக்ஷஸர்களின் உயிரை வாங்கும் விதமாக, த்வஜங்களை அடித்து தள்ளி, வில்களை உடைத்து, வர்மங்களையும், தலைகளையும் வீழ்த்திக் கொண்டு சென்றது. ஆபரணம் அணிந்த கைகள் தனியாக தெறித்து விழுந்தன. யானையின் தும்பிக்கைப் போன்ற துடைகள் தனியாக விழுந்தன. நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் சின்னா பின்னமானார்கள். குதிரைகள் சாரதியோடு ரதத்தோடு அடிபட்டு விழுந்தன. யானைகள், யானைப் பாகர்கள், அதன் மேல் அமர்ந்த வீரர்களுடனே அடிபட்டு விழுந்தன. ராமனின் அம்புகள் துளைத்தன, உடைத்தன, கால் படை வீரர்களை தாக்கி யமனுக்கு விருந்தினனாக அனுப்பின. இவ்வாறு அடிபட்டு, வீழ்ந்த ராக்ஷஸ வீரர்கள் பெருங்குரலில் அழுதனர். வலி தாங்காமல் அரற்றினர். அந்த வீரர்கள் கூர்மையான பாணங்களால் அடிக்கப் பெற்று தவித்தனர். ராமன் சளைக்காமல் போராடினான். சில வீரர்கள், பெரும் பலம் படைத்தவர்கள், சூரர்கள், சூலங்களையும், வாட்களையும், பரஸ்வதங்களையும் எடுத்துக் கொண்டு ராமனை நோக்கிச் சென்றனர். அருகில் சென்றதும் பயந்து ஆயுதங்களை கீழே போட்டனர். அந்த ஆயுதங்களை தன் அம்புகளால் தன் பக்கம் வரவழைத்துக் கொண்டு அவைகளாலேயே பலரை அடித்து நொறுக்கினான். பலர் தலையிழந்து விழுந்தனர். உலகில், பெரும் காற்றில் அடிபட்டு விழும் மரங்களைப் போல விழுந்தனர். மீதியிருந்த கலங்கிய ராக்ஷஸர்கள், கரனை நோக்கி ஓடினர். அவனிடமே அப4யம் என்று சரணடைந்தனர். அவர்களை ஒன்று சேர்த்து, சமாதானம் செய்து, தூ3ஷணன் காகுத்ஸனை நோக்கி ஓடி வந்தான். ருத்3ரனை நோக்கி யமன் வருவது போல திரும்பி அனுப்பப் பெற்ற பலரும், தூஷணன் கொடுத்த தைரியத்தால், ராமனை நோக்கி ஓடி வந்தனர். சால, தால, மரங்கள், கற்கள் இவற்றை ஆயுதமாக வீசினர். சூலம், அம்பு இவற்றை கையில் வைத்துக் கொண்டு, பெரும் பலம் உடைய ராக்ஷஸர்கள், சரங்களையும், சஸ்திரங்களையும் மழையாகப் பொழிந்தனர். மலைகளை பிடுங்கி எறிந்தனர். சிலர் கற்களை சரமாரியாக எறிந்தனர். யுத்தம் பயங்கரமாக இருந்தது. ரோமாஞ்சனம் உண்டு பண்ணும்படி அத்புதமாக இருந்தது. ராமருடைய யுத்தம் மகா பயங்கரம் என்றால், ராக்ஷஸர்களும் சளைக்கவில்லை. எல்லோருமாக சேர்ந்து ராமனை அடிக்க ஓடி வந்தனர். அவர்களையும், நான்கு திக்குகளையும் பார்த்து விட்டு, சரங்களை மழையாக பொழியும் ராக்ஷஸர்களின் மேல் ராமன் காந்தர்வ அஸ்திரத்தைப் பிரயோகம் செய்தான். வில்லிலிருந்து அம்புகள் ஆயிரக் கணக்காக கிளம்பின. பத்து திக்குகளையும் ராம பா3ணம் நிறைத்தது. ராக்ஷஸர்கள், இந்த அம்புகளை விடுபவனையும் காண முடியவில்லை. வில்லில் இருந்து விடுபடும் சரங்களை, அம்புகளையும் காணவில்லை. அடிபட்டு விழும் ராக்ஷஸர்களைத் தான் கண்டனர். திவாகரனை மறைத்து சரங்கள் அந்தகாரத்தை உண்டு பண்ணி விட்டன. ஆகாய மண்டலமே ராம பாணங்களால் நிறைந்து விட்டதோ என்று இருந்தது. ராமன், அந்த சரங்களை அனாயாசமாக விட்டுக் கொண்டிருந்தான். ஒரே சமயத்தில் அம்புகளும், ராக்ஷஸர்களும் பூமியில் விழ. ஆங்காங்கு பூமி பிளந்தது போல ஆயிற்று. ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள், அடிபட்டவர்கள், கீழே விழுந்தவர்கள், கை கால் துண்டாடப் பட்டவர்கள், இரண்டாக கிழிக்கப் பெற்றவர்கள், ஆங்காங்கே காணப் பட்டனர். சரீரத்தின் பல பாகங்களும் துண்டித்து தனித் தனியாக கிடந்தன. குதிரைகளும் யானைகளும் ரதங்கள் உடைந்தும், சாமரங்களும், த்வஜங்களும், வ்யஜனங்களும் இரைந்தும் கிடந்தன. ராமனுடைய பாணத்தால் அடிபட்ட விசித்திரமான சூலம், பட்டிசம் இவைகளும், யுத்தத்தில் அடிபட்டவர்களூமாக பூமியே பயங்கரமாகத் தெரிந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், ஆரண்ய காண்டத்தில் க2ரசைன்யாவமர்தோ3 என்ற இருபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 101 (178) பித்ரு தி3ஷ்டாந்த ஸ்ரவணம் (தந்தை மறைந்ததை சொல்லுதல்)
ராமனது விளக்கத்தைக் கேட்டபின் ப4ரதன் பதிலிருத்தான். தர்மம் இல்லாத என்னிடம் ராஜ தர்மம் என்ன பயனைத் தரப் போகிறது. சாஸ்வதமான தர்மம், நம்மிடம் இருந்து வந்தது, மூத்தவன் இருக்க, இளையவனுக்கு முடி சூட்டுவது இல்லை என்று ஒரு தர்மம், அதை காப்போம். இதோ கூட்டமாக வந்துள்ள என்னுடன் அயோத்தி திரும்பி போகலாம் வாருங்கள். இந்த குலத்திற்கும், எங்களுக்கும் க்ஷேமம் உண்டாகும்படி முடி சூட்டிக் கொள்ளுங்கள். ராஜாவை தேவனாகச் சொல்வார்கள். என் வரையில் தேவத்வம், ராஜாவிடம் இருப்பதாக நம்புகிறேன். ஏனெனில், எந்த அரசனிடம் அமானுஷ்யமான தர்மார்த்தத்துடன் கூடிய நெறி முறைகள் விளங்கியதோ, யாகங்கள் செய்து, நல்லவர்கள் வழியில் சென்றாரோ, அந்த ராஜா, நான் கேகய ராஜ்யத்திலும், நீங்கள் வனத்திலும் இருக்கும் பொழுது பரம பதத்தை அடைந்து விட்டார். நீங்கள் லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் வனம் சென்ற மாத்திரத்திலேயே, துக்கமும் சோகமும் தாங்காமல் மறைந்து விட்டார். புருஷவ்யாக்ரனே, எழுந்திருங்கள். தந்தைக்கான நீர்க் கடன்களைச் செய்யுங்கள். நானும், இந்த சத்ருக்னனும் ஏற்கனவே செய்து விட்டோம். பித்ரு லோகத்தில், அன்புடன் கொடுக்கப் பட்டவையே அழிவில்லாமல் இருக்கும் என்று சொல்வார்கள். தாங்களோ, தந்தைக்கு பிரியமானவர். உங்களையே நினைத்து, உங்களையே காண விரும்பியவராக, உங்களிடத்தில் வைத்த மனதுடன் புத்தியை வேறெங்கும் செலுத்தாதவராக, உங்களைப் பிரிந்து, உங்களையெண்ணி வருந்தி வருந்தி, உங்களையே இடைவிடாது மனதில் தியானம் செய்தவராக, உங்கள் தந்தை அஸ்தமித்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பித்ரு திஷ்டாந்த கதனம் என்ற நூற்று ஓராவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 102 (179) நிவாப தானம் (நீர்க் கடன் செய்தல்)
பரதன் உணர்ச்சி பொங்க சொல்லிய, தன் தந்தையின் மரணச் செய்தியை அறிந்த ராமர் சொல்லொணா துன்பம் அடைந்தார். வார்த்தையே வஜ்ரமாக தேவராஜனான இந்திரன் யுத்தத்தில் செலுத்திய வஜ்ராயுதம் போல், மனதுக்கு பிடிக்காத இந்த செய்தியை செவியில் கேட்டார். பூத்துக்குலுங்கும் மரத்தைக் கோடாலியால் (பரசுவினால்) வெட்டியது போல தடாலென்று பூமியில் விழுந்தார். பூமியில் விழுந்து கிடக்கும் ராமனை, நதிக்கரையில் அயர்ந்து உறங்கும் யானையை தூக்குவது போல தூக்கினார்கள். சகோதரர்கள், அதே அளவு துக்கத்தினால் பாதிக்கப் பட்டவர்களாக இருந்தும், வைதேஹியும் அழ, தண்ணீர் தெளித்து மூர்ச்சை தெளிவித்தனர். நினைவு திரும்ப வரப் பெற்றவுடன் கண்ணீர் பெருக, ஏதோ நிறைய பேச விரும்புவது போல ஆரம்பித்தார். பரதன் வாயினால், தந்தை ஸ்வர்கம் அடைந்த செய்தியைக் கேட்டு பதில் சொன்னார். அயோத்தியில், தந்தை இல்லாமல் என்ன செய்வோம். ராஜாக்களில் சிறந்தவரான அவர் இன்றி அயோத்தியில் யார் ராஜ்ய பாலனம் செய்ய முடியும். அந்த மகானுக்கு மகனாக பிறந்தும் என்னால் என்ன பயன்? என்னைப் பிரிந்த துக்கத்தால் இறந்தார். என் கையால் சம்ஸ்காரமும் நான் செய்யவில்லை. பரதா, நீ கொடுத்து வைத்தவன். நீயும் சத்ருக்னனுமாக அவரது இறுதிக் காரியங்களைச் செய்தீர்கள். தலைமையில்லாத, சக்ரவர்த்தி இல்லாத அயோத்தியில் வன வாசம் முடிந்த பிறகு கூட நான் நுழைய விரும்ப மாட்டேன். வனவாசம் முடிந்து நான் அயோத்தி திரும்பும் பொழுது, தந்தை இல்லாமல் யார் என்னை வரவேற்பார்கள். தந்தை பரலோகம் சென்றபின், அயோத்தியில் என்ன இருக்கிறது. முன்பு, என்னை சமாதானப் படுத்தும் வகையில் அவர் சொன்ன வார்த்தைகளை நினைத்து பார்க்கிறேன். அந்த வாக்யங்கள் இன்னமும் என் காதுக ளி ல் கேட்பது போல இருக்கிறது. இவ்வாறு பரதனிடம் சொல்லிவிட்டு, தன் மனைவியிடம் சொன்னார். பூரண சந்திரன் போன்ற அழகிய முகத்தையுடைய சீதையைப் பார்த்து சொன்னார் . சீதே, உன் மாமனார் மறைந்து விட்டார். லக்ஷ்மணா, நம் தந்தையை இழந்தோம். பரதன் மிகவும் துக்ககரமான விஷயத்தைச் சொல்லியிருக்கிறான். ப்ருதிவீபதி ஸ்வர்கம் அடைந்த செய்தி தான் அது. எல்லோர் கண்களிலும் கண்ணீர் பெருகியது. நால்வரும் தந்தையை நினைத்து வருந்தினர். பரத சத்ருக்னர் இருவருமாக ராம லக்ஷ்மணர்களை சமாதானப்படுத்தி, தந்தைக்கு நீர் கடன் செய்ய வேண்டினர். கணவனை நிமிர்ந்து பார்க்கமுடியாதபடி கண்களை நீர் மறைக்க, சீதையும் தன் மாமனாரை நினைத்து வருந்தினாள். அவளை சமாதானப் படுத்தி, ராமர் லக்ஷ்மணனைப் பார்த்து சொன்னார். லக்ஷ்மணா, இங்குதீ புண்ணாக்கு, மரவுரி இவற்றைக் கொண்டு வா. தந்தையின் நீர்க்கடனைச் செய்யப் போகிறேன் சீதை முன்னால் செல்லட்டும். நீ கூடவே போ. நான் பின்னாலேயே வருகிறேன். இந்த வழி அவ்வளவு நன்றாக இல்லை. என்று சொல்லியவாறு கிளம்பிய ராமரை, சுமந்திரர் பின் தொடர்ந்தார். உயர்ந்த உள்ளம் படைத்தவரும், செயலிலும் சொல்லிலும் எப்பொழுதும் இனிமையாக, மிருதுவாக இருப்பவரும், செய்ய வேண்டியதை அறிந்தவரும், எளிமை, தயை, சாந்தம் எனும் நற்குணங்களுக்கு இருப்பிடமாக விளங்கியவருமான சுமந்திரர் அவர்களை சமாதானப் படுத்தியபடி பேசிக் கொண்டே உடன் சென்றார். மந்தாகினி நதியை அடைந்து அவர்கள் சுலபமாக ஸ்னானம் செய்ய உதவினார். அந்த புண்ய தீர்த்தம் அழகிய கரையும், கரையில் பூத்துக் குலுங்கும் மரங்களுமாக கண் கொள்ளா காட்சியாக இருந்தது. வேகமாக சுழல்களோடு அடித்துக் கொண்டு செல்லும் பிரவாகம், சுத்தமாக கசடு ஏதுமின்றி, நிர்மலமாக இருந்தது. அந்த ஜலத்தை கையால் எடுத்து விட்டு தந்தையே, இந்த நீர் உங்களுக்காக என்று சொல்லி விட்டனர். ராஜ குமாரர்கள், ஜலத்தை கைகளுக்குள் ஏந்தி, அஞ்சலி செய்தபடி, தென் திசையை நோக்கி அழுதபடி சொன்னார்கள். ராஜ சார்தூலன் என்று புகழ் பெற்ற அரசனே, உனக்கு இந்த தூய்மையான அழிவில்லாத ஜலம் உரித்தாகுக. பித்ரு லோகம் சென்றடைந்த உங்களுக்கு என்னால் தரப்பட்ட இந்த ஜலம் சேரட்டும். மந்தாகினி நதிக் கரையிலேயே ராகவன், தந்தைக்காக நிவாபம் எனப்படும் நீத்தார் கடனைச் செய்தார். சகோதரர்களுடன் கூட தர்ப்பையை வைத்து அதன் மேல் இங்குதீ பழத்தின் பிண்ணாக்கு, இலந்தையுடன் கூட வைத்து, மிகவும் வருத்தத்துடன் சொன்னார். மகாராஜா, இதைச் சாப்பிடுங்கள். பிரியமுடன் சாப்பிடுங்கள். இது தான் தற்சமயம் எங்கள் உணவு. எந்த அன்னத்தினால் மனிதன் உருவாகிறானோ, அந்த அன்னம் தான் அவனுக்கு தேவதைகள். பின் அதே வழியில் திரும்ப நதிக்கரையை அடைந்து . சற்று ஏறி, மணல் பரப்படி கடந்து, சமமான பூமியை அடைந்தனர். பின் பர்ணசாலை வாசல் வரை நடந்து வந்த பின் பரத, சத்ருக்னர்களை தன் இரு புஜங்களாலும் அனைத்துக் கொண்டார். இவர்களின் அழுகைக் குரல் மலை மேல் பட்டு எதிரொலித்தது. சகோதரர்களுடன் வைதேஹி குரலும் சேர்ந்து சிங்கங்கள் நடனமாடுவது போல இருந்தது. இதைக் கேட்டு பரதனின் படை வீரர்கள் பயந்தனர். உரத்த குரலில் அழுகை சத்தம் கேட்கிறதே, நிச்சயம் பரதன் ராமனைக் கண்டு கொண்டு விட்டான். தந்தை இறந்த செய்தி கேட்டு எல்லோருமாக புலம்பும் சத்தம் இது என்று தெளிந்தனர். உடனே தாங்கள் நின்ற இடத்தை விட்டு, ஒரே முகமாக சப்தம் வந்த திசையை நோக்கிப் புறப்பட்டனர். தானே அலங்காரமாக விளங்கும் குதிரைகளில் சிலர்,
யானைகளில் சிலர். ரதத்தில் ஏறி சிலர். சுகுமாரர்களான சிலர் இது போல வர, மற்றவர்கள் நடந்தே செல்லலாயினர். இப்பொழுது தானே ராமன் நம்மை விட்டுப் பிரிந்தான், சில நாட்களாகத் தானே என்று எண்ணாமல், வெகு நாட்களாக பிரிந்தவனை காணப் போவது போல ஆவலுடன் ஓட்டமும் நடையுமாக சென்றனர். சகோதரர்கள் நால்வருமாக இருப்பதைக் காணவும், பலவித வாகனங்களில் காலடியோசை பெரும் இரைச்சலாக கேட்க, சென்றனர். மேகங்கள் மோதிக் கொள்ளும்பொழுது கேட்கும் இடியோசையை ஒத்திருந்தது. குட்டி யானைகள் கூட சாவகாசமாக நடந்த பெண் யானைகள் பயந்தன. வேகமாக வேறு காட்டிற்கு சென்றன. வராஹ, ஒனாய் கூட்டங்கள், காட்டு எருமைகள், சர்ப்ப, வானரங்கள், புலி, கோகர்ண பசுக்கள் பயந்து சிறு மான்களுடன் கூட ஓடின. ரதங்களுடன் ஹம்சங்கள், காரண்டவம் போன்ற பறவைகள், அதே போல ஆண் கோகிலங்கள், க்ரௌஞ்ச இவை தடுமாறி பல
திக்குகளிலும் ஒன்றாக பறந்தன. ஆகாயமே பக்ஷிகள் நிரம்பியிருந்தது. அதுவும் மனிதர் கூட்டமாக நடமாடும் பூமியும் ஏக காலத்தில்ல் பரபரப்பாக விளங்கியது. புல் விரிப்பில் அமர்ந்திருந்த ராகவனை திடீரெனக் கண்டனர். கைகேயியையும் கூடவே மந்தரையையும் தூற்றிக் கொண்டு ராமனை நோக்கி முன்னேறி சென்று, கண்ணீர் பெருக நின்றனர். அந்த ஜனங்களை ராமர் தந்தையைப் போலவும் தாயைப் போலவும் அனைத்து ஆறுதல் சொன்னார். சிலர் வணங்கினர். ஒத்த வயதுடைய நண்பர்கள், சுற்றத்தார், பந்துக்கள் அவர்கள் தகுதிக் கேற்ப அருகில் சென்று வணங்கியோ, வாழ்த்தியோ சென்றார்கள். இவர்களின் ஓலம் ஆகாயத்தை அடைந்து மிருதங்க கோஷம் போல எங்கும் பரவியது..
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பித்ரு தி3ஷ்டாந்த கத2னம் என்ற நூற்று இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 103 (180) மாத்ரு தரிசனம் (தாய்மார்களை சந்தித்தல்)
ராஜ பத்னிகளான கௌசல்யை, சுமித்ரா, கைகேயியை வசிஷ்டர் அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். ராமன் இருக்குமிடம் நோக்கி மெதுவாக நடந்து மந்தாகினி நதிக்கரையை அடைந்தனர். ராம லக்ஷ்மணர்கள் உபயோகிக்கும் தீர்த்தத்தைக் கண்டனர். கௌசல்யா அதைக் கண்டதும், கண்ணீருடன் வாடிய முகத்துடன், சுமித்திரையிடம் சொன்னாள். மற்ற ராஜ பத்னிகளும் இருந்தனர். அனாதைகள் போல வனத்தில் தீர்த்தத்தை பருகி வாழ்கின்றனர். இதையும் உன் மகன் லக்ஷ்மணன் என் மகனுக்காக சோம்பலில்லாமல் கொண்டு வந்து கொடுக்கிறான். எவ்வளவு மோசமான காரியமானாலும் உன் மகன் முனுமுனுக்காமல் சகோதரனுக்காக செய்கிறான். செல்வம் இல்லையே என்று யோசிப்பதில்லை. க்லேசங்களை (உடல் வருத்தங்களை) பொருட்படுத்துவதே இல்லை. அவன் கூட இன்று தன் வான ப்ரஸ்த தர்மத்தில் ஈ.டுபட்டிருப்பதை விடட்டும். (நகரம் திரும்பட்டும்). இவ்வாறு பேசிக் கொண்டே, தென் திசையில் புல்தரையில் வைக்கப் பட்டிருந்த இங்குதீ பிண்ணாக்கு தந்தைக்காக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். ராமர் தன் தந்தைக்காக வைத்திருந்த பிண்டங்களைப் பார்த்து மற்ற எல்லா தசரத பத்னிகளுக்கும் கௌசல்யை காட்டினாள். இதோ ரகு4 குல, இக்ஷ்வாகு குல நந்தனனாக இருந்த சக்ரவர்த்திக்கு மகன் கொடுத்த பித்ரு பிண்டம். வகையாக செய்திருக்கிறான் பாருங்கள். தேவர்களுக்கு சமமாக வாழ்ந்த அரசனுக்கு இது உகந்ததாக இல்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு இந்த போஜனம் ஒத்ததாக இல்லை என்று நான் எண்ணுகிறேன். இதை விட வேறு துக்கம் என்ன வேண்டும்? ராமன், சக்ரவர்த்தி குமாரன் தந்தைக்கு இங்குதீ3 புண்ணாக்கை படைக்கிறான் என்றால் அதையும் வசுதா4தி4பனாக இருந்த அரசன் ஏற்றுக்கொள்கிறார். இதை பார்த்தும் என் ஹ்ருதயம் வெடிக்காமல் இருக்கிறதே. நாம் கேள்விப் பட்டது சத்யமாக ஆகிவிட்டது. உலக வழக்கில் சொல்வதுண்டு. எந்த அன்னத்தால் மனிதன் உண்டாகிறானோ, அந்த அன்னம் அவனுக்கு தேவதையாக ஆகிறது. இப்படிச் சொல்லி வருந்தும் கௌசல்யையை மற்ற சக்களத்திகள் சமாதானப் படுத்தி அழைத்துச் சென்றனர். ஆசிரமத்தில் ராமனைக் கண்டனர். ஸ்வர்க லோகத்திலிருந்து ஏதோ அமரன் இறங்கி வந்தது போல இருந்தான் அவன். எல்லா போகங்களையும் துறந்து விட்ட ராமனைப் பார்த்து தாய்மார்கள் வருந்திக் கண்ணீர் பெருக்கினர். சோகத்தால் இளைத்து இருந்த ராமன் எழுந்து வந்து அவர்களை கால்களில் வீழ்ந்து வணங்கினான். அவர்கள், கைகளால், ம்ருதுவான ஸ்பர்சத்தால் அவன் முதுகில் மண்ணைத் தட்டி விட்டனர். ராமன் வணங்கியபின் சௌமித்ரியும் வந்து எல்லோரையும் வணங்கினான். அவனைக் கண்டும் தாய்மார்கள் துக்கம் அடைந்தனர். ராமனை போலவே இவனையும் ஆசிர்வதித்தனர். தசரத ராஜாவுக்கு பிறந்த பிள்ளை, சுபமான லக்ஷணங்களையுடைய லக்ஷ்மணன் என்றனர். சீதையும் வந்து அவர்கள் பாதங்களைத் தொட்டு வணங்கினாள். மாமனார் மறைந்த துக்கத்தினால் கண்ணீர் பெருக அவர்கள் முன் நின்றாள். அவளை அணைத்து தாய்மார்கள் வன வாசத்தால் இளைத்து தீனமாக இருந்தவளைப் பார்த்து கௌசல்யை சொன்னாள் விதே3ஹ ராஜாவின் மகள். தசரத2 அரசனின் மருமகள். ராம பத்னி. இவ்வளவு இருந்தும், ஜன நடமாட்டம் இல்லாத இந்த வனத்தில் இப்படி கஷ்டப் படும்படி ஆனதே. சூரியனின் வெப்பத்தால் தகிக்கப் பட்ட பத்மம் போலவும் உத்பல புஷ்பம் வாடியது போலவும், தங்கத்தை வெள்ளியில் முக்கி எடுத்தாற்போல, சந்திரனை மேகங்கள் மறைத்தாற்போல, உன் முகத்தைப் பார்த்து எனக்கு துக்கம் பொங்குகிறது. அரணிக் கட்டையில் உருவாகும் அக்னி போல இந்த கவலை என்னை அரித்தெடுக்கிறது. இவ்வாறு வருத்தத்துடன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே ராகவன் வந்து வசிஷ்டரை வணங்கி விட்டு அவ்விடம் வந்தான். அக்னிக்கு சமமான புரோஹிதரை ப்ருஹஸ்பதியை இந்திரன் எனும் அமரர்கள் தலைவன் போல பாதங்களைப் பற்றிக் கொண்டு வணங்கி எழுந்து அருகிலேயே அமர்ந்தான். கடைசியில் மந்திரிகளுடனும், ஊர் பிரமுகர்களுடனும் படைத் தலைவர்களுடனும் தர்மத்தை அறிந்த பெரியவர்களுடனும் தர்மவானான பரதன் அண்ணன் அருகில் வந்து அமர்ந்தான். உட்கார்ந்த உடனேயே, தபஸ்வி வேஷத்தில் இருக்கும் அண்ணனைப் பார்த்து லக்ஷ்மீகரமாக விளங்கும் பரதன் மகேந்திரன், பிரஜாபதியைப் பார்த்து கேட்பது போல கூப்பிய கரங்களுடன் பேசலானான். இந்த பரதன் ராமரை வணங்கி மரியாதையுடன் என்ன, எப்படிச் சொல்லப் போகிறான் என்றறிய அங்குள்ள மக்கள் உற்சாகமிக்கவர்களாக இருந்தனர். ராமன், சத்யத்தில் அசையாத நம்பிக்கையுடையவன், லக்ஷ்மணன் மகானுபாவன், பரதன் தார்மிகன், மூவரும் மூன்று அக்னி போல விளங்குகின்றனர். நண்பர்களும் சுற்றத்தாரும், பந்துக்களும் சூழ அமர்ந்திருக்கிறார்கள், சபையினரின் நடுவே மூன்று விதமான அக்னி ஜ்வலிப்பது போல.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் மாத்ரு தரிசனம் என்ற நூற்று மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 104 (181) ராம ப4ரத சம்வாத3: (ராம, பரத, சம்பாஷனைகள்)
லக்ஷ்மணன் உடன் இருக்க, ராமர், பரதனைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தாயே, சொல், கேட்கிறேன் என்று அனுமதி அ ளி த்துச் சொன்னார். எதற்காக ஜடா முடி தரித்து இந்த தேசம் வந்தாய்? ராஜ்யத்தை விட்டு இவ்வளவு தூரம் மான் தோல் உடுத்து வந்திருக்கிறாய். விவரமாகச் சொல், எனவும், கைகேயி புத்ரன், கூப்பிய கைகளுடன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான். அண்ணலே, தந்தை புத்ர சோகத்தால் தவித்தவராக ஸ்வர்கம் போய் விட்டார். பத்னியால், என் தாய் கைகேயியால் வேண்டப் பட்டு, பெரும் பாபத்தைச் செய்து தனக்கும், எனக்கும் அபகீர்த்தியை உண்டு பண்ணி விட்டார். என் தாய் நினைத்தபடி ராஜ்ய சுகத்தை அனுபவிக்கவும் முடியவில்லை. விதவையாக ஆனது தான் பலன். இதனாலும் துக்கம் அவளை வாட்டுகிறது. அவள் கோரமான கதியைத் தான் அடையப் போகிறாள், என் தாயான கைகேயி. அதனால், இப்பொழுது உன் அடிமையாக கேட்கும் என்னிடம் தயை செய்ய வேண்டும். இன்றே முடி சூட்டிக் கொள். இந்திரன் போல, ராஜ்யத்தை ஏற்றுக் கொள். நம் தாய்மார்கள், கணவனை இழந்தவர்கள், இந்த பிரஜைகள், இதையே வேண்டி நீ இருக்குமிடம் தேடி வந்திருக்கிறார்கள். கருணை காட்டு. நம் குல வழக்கப் படி பரம்பரையாக நடந்து வந்த வழக்கம் தான். அதனால் தர்ம முறையிலேயே ராஜ்யத்தை ஏற்றுக் கொள். உன் உற்றாரையும் சுற்றத்தாரையும் மகிழ்விப்பாய். உன்னை நாயகனாக அடைந்து பூமி நாதனை அடைந்தவளாக ஆகட்டும். நிர்மலமான சந்திரனை, சரத்கால ரஜனி (இரவு) அடைவது போல ராஜ்யத்தை ஏற்றுக் கொள். மந்திரிகளுடன் கூட, தலையால் வணங்கி நாங்கள் வேண்டிக் கொள்வது இதுதான். எங்களிடம் கருணை காட்டு. உன் சகோதரன், சிஷ்யன், அடிமை என்று என்னிடம் கருணை காட்டு. இந்த இயற்கையின் எல்லைக் கோடு வரை பரவியுள்ள தந்தை வழி ராஜ்யத்தை அவர் பூஜித்து பாதுகாத்ததை, நீ ஏற்றுக் கொள்ள மறுக்க முடியாது. திரும்பவும் ராமரை முறைப்படி பாதங்களில் வீழ்ந்து வணங்கி பரதன் நின்றான். மதம் பிடித்த யானை போல திரும்ப திரும்ப பெருமூச்சு விடும் பரதனை அணைத்தபடி ராமர் பதில் சொன்னார். நல்ல குலத்தில் பிறந்து சத்வ குணம் நிறைந்து தேஜஸ்வியாக விரதங்களை அனுஷ்டிக்கும் என் போன்ற ஜனங்கள், ராஜ்யத்திற்காக எப்படி தவறு செய்ய முடியும்? உன்னிடத்தில் ஒரு இழை அளவு கூட நான் குற்றம் காணவில்லை. வீரனே, உன் தாயையும் நீ சிறு பிள்ளைத் தனமாக தூஷிக்கக் கூடாது. பத்னியிடமும், புத்திரர்களிடமும் எப்பொழுதும் பெரியவரான குடும்பத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. உலகில் நம்மை எப்படி அறிவார்கள்? சாதுவான ஜனங்கள் நம்மை இன்னாரின் புதல்வர்கள், சிஷ்யர்கள் என்று அடையாளம் காட்டுவர். இதை நீயும் அறிவாய். என்னை காட்டில் மரவுரி தரித்து இரு என்று சொல்லவோ, ராஜ்யத்தில் அமர்ந்து பாலனம் செய் என்று சொல்லவோ தசரத மகாராஜா அதிகாரம் உடையவரே. தர்மம் அறிந்த தந்தையிடம் எவ்வளவு கௌரவம் நம் மனதில் உண்டோ, அதே அளவு தாய்மார்களிடமும் இருக்க வேண்டும். இவர்கள் இருவருமாக வனம் போ என்று சொன்னபின், தாய் தந்தை இருவராலும் கட்டளையிடப் பட்ட பின், நான் வேறு விதமாக என்னதான் செய்ய முடியும்? அயோத்தி ராஜ்யம், உலக புகழ் பெற்றது, உன்னை அடைய வேண்டும், தண்டகாரண்யத்தில், மரவுரி தரித்து நான் வசிக்க வேண்டும், எல்லோர் முன்னிலையிலும் இவ்வாறு பாகப் பிரிவினை செய்து விட்டு, தசரத ராஜா கட்டளையிட்டு விட்டு ஸ்வர்கம் சென்று விட்டார். தந்தை கொடுத்த பாகத்தை நீ அனுபவிப்பதில் தவறு எதுவுமில்லை. நீ அனுபவிக்கத்தான் வேண்டும். தந்தை எனக்கு அளித்த பதினான்கு வருஷ வன வாசத்தை நானும் அனுபவித்தே தீருவேன். என் தந்தை சொன்னபடி, அறிஞர்களில் மூத்தவர், மகானானவர், அவர் சொன்னதை செய்வதில் தான் எனக்கு நன்மை இருப்பதாக நம்புகிறேன். இதைத் தவிர சர்வலோக ஈஸ்வரன் என்ற பதவியையும் விரும்ப மாட்டேன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராம ப4ரத சம்வாதோ3 என்ற நூற்று நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 105 (182) ராம வாக்யம்
இந்த சகோதரர்கள் உற்றாரும், சுற்றாரும் சூழ அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையிலேயே, இரவு மெதுவாக நகர்ந்து பொழுது விடிந்தது. மந்தாகினி நதிக் கரையில் ஜப தபங்களை முடித்துக் கொண்டு, திரும்ப ராமனிடம் வந்து அனைவரும் அமர்ந்தனர். என்ன பேசுவது என்று அறியாமல் எல்லோருமே மௌனமாக இருந்தனர். பரதன் தான் அந்த மௌனத்தைக் கலைத்து பேச ஆரம்பித்தான். என் தாய் சமாதானமாகி விட்டாள். எனக்கு கொடுக்கப் பட்ட ராஜ்யம் இது. இதை நான் உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள் என்று வேண்டினான். மிகப் பெரிய ராஜ்யம் இது. வேகமாக ஜலம் வரும் பொழுது சேதுவும் உடைந்தால் அடக்க முடியாமல் போவது போல நான் ஒருவன் இந்த பெரும் அரசைக் கட்டி ஆள்வது கடினம். கோவேறு கழுதையின் மேல் அமர்ந்து ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு போகும் காகம் போல எனக்கு உன்னைத் தொடர்ந்து வரவும் சக்தியில்லை. நீயே தான் கதி. எவன் மற்றவர்களை அண்டி வாழ்கிறானோ, அவன் வாழ்க்கை சிக்கலில்லாமல் போகும். ஆனால் மற்றவர்களை வாழ வைப்பது கஷ்டம்., மனிதன் விதை போட்டு வளர்த்து மரமாக்குகிறான். அதே மரம் நன்கு வளர்ந்த பின், சிறிய மனிதன் ஏற முடியாதபடி வளர்ந்து நிற்கிறது. பூத்து காய்த்து, பழுக்கும் சமயங்க ளி ல் அந்த மரத்தின் பலனை அவன் அனுபவிக்க முடியாமல் கூட போகும். இந்த பலனை எண்ணித்தான் மரத்தை நட்டான் எனினும், மனிதனின் சக்தி அவ்வளவு தான். இது ஒரு உவமையே. நீயே இதன் பொருளை அறிந்து கொள். எங்களுக்கு நீ தகுந்த தலைவன். வேலையாட்களான எங்களை நீ கட்டளையிட்டு பாலிக்கவில்லையெனில், வரிசையாக அணி வகுத்து நிற்கும் இந்த சேனையை மகாராஜாவாக நீ முன்னின்று நடத்திச் செல். தகிக்கும் சூரியனைப் போல ராஜ்யத்தில் நீ இருக்க, உன்னை பின் தொடர்ந்து வரும் யானைகள் நடனமாடட்டும். அந்த:புர ஸ்த்ரீகள் மனம் மகிழட்டும்.
இதைக் கேட்டு, சரியாக சொன்னதாக பரதனை வாழ்த்தி விட்டு, ஊர் ஜனங்கள் திரும்பவும் ராமனை யாசித்தனர். பரதன் வருத்தத்துடன், புலம்புவதைக் கேட்ட ராமர், அவனை சமாதானப் படுத்தும் விதமாகச் சொன்னார். விதி என்பது நம் கையில் இல்லை. இதை இஷ்டப் படி வளைக்க முடியாது. இந்த மனிதன் விதியின் எதிரில் அதிகாரம் செய்ய முடியாது. இதோ, ஒன்று, இதோ மற்றொன்று என்று நம்மை க்ருதாந்தன் எனும் விதி இழுத்துக் கொண்டே போகிறது. உலகில் எல்லாமே, ஒரு முடிவைக் கொண்டதே. சேர்த்து வைத்த நிறைய செல்வமும் ஒரு நாள் விழும். சேர்க்கைகளும் பிரிவில் தான் முடியும். வாழ்க்கை மரணத்தை முடிவாகக் கொண்டது. பழுத்த பழங்கள் பழுத்து விழுவதில் பயம் இல்லை. அதே போல மனிதனுக்கும் மரணத்தைத் தவிர, வேறு எதிலும் பயமில்லை. நல்ல அஸ்திவாரத்தோடு கட்டப் பட்ட மாளிகையும் எப்படி ஒரு நாள் (ஜீர்ணமாக) பழுது பட்டு இடி பாடுகளுடன் காட்சி தருமோ, அதே போல வயது ஏற, ஏற, முதுமை மனிதனை அலைக் கழிக்கிறது. இரவு, முடிந்து விடிந்தபின், அந்த இரவு திரும்ப வருவதில்லை. யமுனை நிறைந்து இருந்தாலும், உப்பு நீரைக் கொண்ட சமுத்திரத்தைத் தான் போய் சேருகிறது. நீர் நிலைகளில் ஜலம் வேணிற் காலத்தில் வற்றுவது போல, ஜீவன்களின் ஆயுளும், பகலும், இரவும் நகர, நகர, குறைந்து கொண்டே போகிறது. தன் ஆத்மாவைப் பற்றி கவலைப் படு. மற்ற கவலைகள் எதற்கு? நின்றாலும், நடந்தாலும், ஆயுள் குறைந்து கொண்டே போகிறது. ம்ருத்யுவுடனேயே வாழ்கிறோம். ம்ருத்யுவுடன் கூடவே வெளி யேறிச் செல்கிறோம். வெகு தூரம் அத்வானத்தில் சென்றாலும் ம்ருத்யு உடன் வருகிறான். உடலில் சுருக்கங்கள் வந்து விட்டன. தலை மயிர் வெளுத்துப் போகிறது. முதுமை வந்த பின், உடல் தளர்ந்த நிலையில் மனிதன் என்ன தான் செய்ய முடியும்? சூரியன் உதித்தவுடன், மகிழ்ச்சி கூத்தாடுகிறார்கள். அஸ்தமித்தவுடன் மகிழ்ச்சியடைகிறார்கள். இடையில் தன் ஆயுள் குறைந்து போனதை மனிதன் உணருவதேயில்லை. ருதுக்கள் மாற, மாற மனிதனின் கால கதியும் கூடவே க்ஷயம் ஆகிறது. பெரும் கடலில், கட்டை மேல் கட்டை போட்டுத் தாண்ட முடியும் என்று நினைப்பது போலத்தான் இந்த சம்சாரக் கடலைத் தாண்டுவதும். இப்படித்தான் மனைவியும் புத்திரர்களும், தாயாதிகளும், செல்வமும் சேர்ந்து ஓடச் செய்கின்றன. ஒரு நாள் இவை எல்லாமே இல்லாது போகும். ஜீவன் இந்த பா4வத்தை உணராததால் தான் ஒருவன் இறந்தால் வருத்தமடைகிறான். இது அறிவுடமையாகாது. சேர்ந்து நடந்து செல்பவர்கள், ஒருவன் வழியில் நின்று நீங்கள் போய்க் கொண்டே இருங்கள், நான் பின்னால் வருகிறேன் என்று சொல்வது போல, நம் முன்னோர்கள், தந்தை, பாட்டனார் அவருக்கும் முன்னால் பலர் சென்ற வழி இன்றும் உள்ளது. அதை அடைந்து ஏன் வருத்தப் பட வேண்டும்? வேறு வழி எதுவும் இல்லாதபோது வயது ஏறும் பொழுது, வேகமாக வரும் நதியைத் திருப்ப முடியாதது போல எதையும் தடுத்து நிறுத்த முடியாது. தன் ஆத்மாவுக்கு எது சுகமோ அதைச் செய்ய வேண்டும். பிரஜைகள் சுகமாக இருக்கச் செய்வது அரசன் கடமை என்று சொல்வார்கள். தர்மாத்மாவாக, சுபமான யாகங்களைச் செய்து, நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, பாபங்கள் அகல, நம் தந்தை சக்ரவர்த்தியும் இருந்து ஸ்வர்கம் சென்றார். தன் கீழ் வேலை செய்பவர்களையும் பிரஜைகளையும் சரிவர பாலித்து வந்ததால், நிறைய பொருள் தானம் செய்தும் நம் தந்தை தேவலோகம் சென்றார். பலவிதமான யாகங்களைப் பார்த்தும், ஏராளமான போகங்களையும் அனுபவித்து, உத்தமமான ஆயுசையும் வாழ்ந்து நம் தந்தை ஸ்வர்கம் சென்றார். நீண்ட ஆயுளோடு, நன்றாக அனுபவித்து மகிழ்ந்தபின் தான் அவர் காலம் முடிந்தது என்பதால் நாம் நம் தந்தையை எண்ணி வருந்த வேண்டியது இல்லை. உபயோகித்து பழசாகிப் போன மனித உடலைத் தியாகம் செய்து விட்டு, தெய்வ சம்பத்தை அடைந்து விட்டார். ப்ரும்ம லோகத்தில் சஞ்சரிக்கும் நிலையை அடைந்து விட்டார். அறிவு உடையவன் இவர் விஷயத்தில் வருத்தப் படவே தேவையில்லை. எந்த நிலைமையானாலும், தைரியமும், புத்தியும் உள்ளவன், கட்டுப் பாட்டுடன் துக்கத்தைத் தாங்கிக் கொண்டு, அழுது புலம்புவதை விட்டு, கடமையில் கண்ணாக இருக்க வேண்டும். அதனால் நீ ஸ்வஸ்த2னாக இரு. (சுகமாக இரு) துக்கத்தை விடு. அயோத்தி மா நகரில் வசி. தந்தையினால் நியமிக்கப் பட்டவன் ஆதலால் அந்த நகரில் இருந்து ராஜ்ய பாலனம் செய். நானும் உன்னால் நியமிக்கப் பட்டவனாக என் இடத்தில் இருந்து தந்தையின் கட்டளையை நிறைவேற்றுகிறேன். அவருடைய கட்டளையை மீறி நடப்பது என்னால் முடியாது. அது நியாயமும் அல்ல. அவர் நமக்குத் தந்தை, நம் பந்து, அவர் சொல்லைக் கேட்பது தான் உனக்கும் நியாயம். அவர் சொன்ன வன வாசத்தை மேற் கொண்டு, அவர் சொன்ன சொல்லை நான் காப்பேன். செய்து காட்டுவேன், பரலோகத்தை விரும்பும் யாரானாலும், தார்மீகனாக கருணை உடையவனாக குருவை மதித்து நடப்பவனாக இருக்க வேண்டும். ஸ்வபாவமாக உள்ள உன் ஆத்மாவின் தூண்டுதலின் படி நடந்து வா, நரர்களில் ரிஷபம் போன்றவனே, பரதா, நம் தந்தை தசரதனுடைய சுபமான நடவடிக்கைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதே வழியில் செல்வாய். இவ்வாறு தந்தையின் கட்டளையை ஏற்று, கீழ் படியத்தான் வேண்டும் என்று இளையவனான பரதனுக்கு அறிவுரை சொல்லி, பலவிதமாக எடுத்துக் காட்டி நிறுத்தினார், ராமர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராம வாக்யம் என்ற நூற்று ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 106 (183) பரத வசனம் (பரதனின் பதில்)
இவ்வாறு பொருள் பொதிந்த வார்த்தைகளைச் சொல்லி ராமன் நிறுத்தியதும், பரதன் பதில் சொல்லலானான். உன்னைப் போல் இந்த உலகில் வேறு யார் இருக்க முடியும்? அரிந்த3மா, உன்னை துக்கம் வதைக்காது. சந்தோஷம் உன்னை பாதிக்காது. முதியவர்களுக்கும் நீ சம்மதமானவன். ஆனால் அவர்களையும் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கிறாய். உயிருடன் உள்ளதோ, இல்லாததோ, நல்லதோ, கெட்டதோ எதிலும் சமமாக பார்க்கும் புத்தி உள்ளவன், எவனோ, அவனை எந்த விஷயம் தான் பாதித்து வருந்தச் செய்யும். அரசகுமாரனாக இருந்தும் நீ தொலை நோக்குடைய முனிவர்களுக்கு சமமானவன். இது போல சாதாரண துக்கங்கள் உன்னை பாதிக்காது. தேவர்களுக்கு சமமானவன் நீ. மகான். சத்ய சந்தன். எல்லாம் அறிந்தவன். தீர்க தரிசி. புத்திமான் கூட. அதனால் ராகவா, இவ்வளவு குணங்கள் உடைய உன்னை, நடப்பதையும் நடக்காததையும் உணரும் குசலம் படைத்தவனை, தாங்க முடியாத துக்கமும் வருத்தாது. பிறகு, பரதன் தொடர்ந்தான். நான் ஊரில் இல்லாதபொழுது, என் தாய் காரணமாக செய்தது. அவளுடைய அறியாமையால் செய்தது. யாருக்கும் சம்மதமுமில்லை. அதை பொறுத்தருள வேண்டுகிறேன். நானும் தர்ம பந்தத்தில் கட்டுண்டவன் தான். அதனால் தான் இவளைக் கொல்லாமல் விட்டு வைத்திருக்கிறேன். வேறு யாராவது இந்த இடத்தில் இருந்தால், தண்டனைக்கு உள்ளாகி இருப்பார்கள். இந்த பாப காரியங்களின் பலனாக தண்டனை கொடுத்து இருப்பேன். தசரதன் பிள்ளையாக பிறந்த யார் தான், அதர்மம் என்று அறிந்து, இது போல ஒரு அருவருப்பான காரியத்தைச் செய்வார்கள். குருவும் தந்தையுமான அவர் வயது முதிர்ந்து மறைந்தும் விட்டார். தந்தையை தெய்வமாக நினைக்கிறோம். அவரை இந்த சமயம் குற்றம் சொல்ல மாட்டேன். யார் தான் தர்மமும் இல்லை, அர்த்தமும் இல்லை என்ற இந்த செயலில் மனமுவந்து ஈடுபடுவார்கள்? தன் மனைவிக்கு பிரியமானதை செய்வதாக எண்ணி தர்மம் அறிந்தவன், தர்மத்தை கடைபிடிப்பவன் எவனும் இது போன்ற செயலை செய்ய மாட்டான். ஆனால், காலம் முடியும் தறுவாயில் மனிதனின் புத்தி பேதலித்துப் போகும் என்பார்கள். அரசன் இவ்வாறு செய்ததால் இந்த உலக வழக்கு உண்மையே என்று ஆகிறது. நல்லதை நினைத்து ஆரம்பித்து, க்ரோதமும், மோஹமும் சாஹஸமும் அவரை திசை திருப்ப, தந்தை செய்ததை சரி செய்யுங்கள். தந்தை தவறு செய்தால் அதை மகன் திருத்துவது நல்லது தான். அவன் தான் மகன். விபரீதமாக, வேறு விதமாக செய்ததையும் திருத்தி நல்வழிப்படுத்தும் மகனாக நீங்கள் இருங்கள். தந்தை செய்த தவற்றை திருத்துங்கள். உலகில் வீரர்கள் தூற்றும் இந்த செயலால் பாதிக்கப் பட்ட எங்கள் எல்லோரையும், கைகேயியை, என்னை, தந்தையை, நண்பர்களை, பந்துக்களை, ஊர் ஜனங்களை, மற்றும் எல்லோரையும் காப்பாற்றுங்கள். நீங்கள் தான் இந்த சமயம் காப்பாற்ற முடியும். காடு எங்கே? க்ஷத்திரிய தர்மம் எங்கே? இந்த ஜடை எங்கே? ராஜ்ய பரிபாலனம் தலைமேற் கொள்வது எங்கே? இது போல எதிர்மறையான பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. க்ஷத்திரியனுடைய முதற் கடமை முடி சூடிக்கொள்ளுதல். இதனால் பிரஜா பாலனம் செய்வது சாத்தியம் ஆகும். ப்ரத்யக்ஷமாக உள்ள இந்த தர்மத்தை விட்டு, சந்தேகத்துக்கு இடமான பொருந்தாத அனிச்சயமான தர்மத்தை க்ஷத்திரிய தர்மத்திற்கு புறம்பானதை ஏன் மேற் கொள்ள வேண்டும். உடல் உழைப்பு மிகுந்த தர்மம் தான் அனுஷ்டிக்க வேண்டும் என்று தாங்கள் விரும்பினால், தர்மத்துடன் நான்கு வர்ணத்தார்களையும் பாலித்து, உடல் வருந்த உழைத்தவர்கள் ஆவீர்கள். நான்கு ஆஸ்ரமங்களுள் க்ருஹஸ்தாஸ்ரமம் விசேஷமாக சொல்லப் படுகிறது. தர்மம் அறிந்தவர்கள் சொல்லும் இதை எப்படி தாங்கள் துறக்கலாம்? கேள்வி ஞானத்தாலும், என் நிலையாலும் (அந்தஸ்து), பிறப்பாலும் உங்கள் எதிரில் நான் பாலனாவேன். நீங்கள் இருக்கும் பொழுது நான் எப்படி ராஜ்யம் ஆளுவேன்? புத்தி குணங்களில் உங்களை விடக் குறைவானவன், அந்தஸ்து என்று எடுத்துக் கொண்டால் உங்களுக்கு தாழ்ந்தவன், நீங்கள் பாலனாக கருதும் அளவு இளையவன், நான் ஆளும் தகுதி பெற்றவனாக எப்படி ஆவேன். எனக்கு கட்டளையிடுங்கள். உங்கள் தர்மத்தை பாலியுங்கள். நீங்கள் இல்லாமல் இருக்க எனக்கு முடியாது. இந்த ராஜ்யம், தந்தையுடையது. அப்பழுக்கின்றி முழுவதுமாக நீங்கள் முடி சூட்டிக் கொண்டு, பாலனம் செய்யுங்கள். இங்கு வந்துள்ள சுற்றத்தார், உற்றார் முன்னிலையிலேயே, பிரஜைகள் கூட இருக்க, உங்கள் ராஜ்யாபிஷேகம் நடை பெறட்டும். ருத்விக்குகள், வசிஷ்டர் முதலானோர், மந்திரங்கள் அறிந்தவர்கள், இவர்கள் கையால் அபிஷேகம் செய்து வைக்கப் பட்டவராக, எங்களுடன் அயோத்தி திரும்பி வாருங்கள். தன் தவ வலிமையால் மூவுலகையும் ஜயித்து, மருத் கணங்களோடு வாஸவன் போல மூன்று விதமான கடன்களை கழித்தவனாக, எதிரிகளை நெருப்பைச் கட்டிக் கொள்ளச் செய்து, நண்பர்களை நன்கு உபசரித்து, வேண்டியதைக் கொடுத்து இங்கு நீயே ஆட்சி செய்வாய். என்னையும் சேர்த்து ஆட்சி செய். அண்ணலே, இன்று உங்கள் முடி சூட்டு விழாவைப் பார்த்து நம் அன்பர்கள் மகிழ்ச்சியடையட்டும். எதிரிகள் பயந்தவர்களாக பத்து திக்குகளிலும் ஓடட்டும். என் தாயின் ஆக்ரோஷத்தை மறந்து, புருஷர்ஷபனே,
(புருஷர்களில் ரிஷபம் போன்றவனே) நம் தந்தையையும் இந்த கொடும் பழியிலிருந்து காப்பாற்று. தலை வணங்கி கேட்கிறேன். என்னிடம் தயை செய்வாயாக. மகேஸ்வரன், தன் கீழ் உள்ள பூதங்களிடம் தயை செய்வது போல செய். இவ்வளவு சொல்லியும் இவற்றை மறுத்து, வனம் தான் செல்வாயானால், நானும் வனம் வருகிறேன். இப்படி திட்ட வட்டமாக பரதன் சொன்னவுடன் ராமர் என்ன பதில் சொல்வதென்று திகைத்தார். பரதனை உடன் அழைத்துப் போவதும் முடியாது, தான் தன் தந்தையின் கட்டளையை மீறவும் முடியாது. ராகவனிடத்தில் இப்படி ஒரு அத்புதமான திகைப்பைப் பார்த்து கூடியிருந்த ஜனங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கூடவே துக்கமும் அடைந்தனர். அயோத்யா வரவில்லையே என்று துக்கம். தன் கொள்கையில் உறுதியாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி, அவனை நிகமம், வேதம் அறிந்த ரித்விக்குகளும், படைத்தலைவர்களும், கண்களில் நீர் மல்க தாய் மார்களும், இப்படிப் பேசிய பரதனைப் பாராட்டினர். ராமனைத் திரும்பவும் வேண்டினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத வசனம் என்ற நூற்று ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 107 (184) ராம ப்ரதி வசனம் (ராமனின் பதில்)
திரும்பவும் அப்படியே பேசும் பரதனைப் பார்த்து, ராமர் பதில் சொன்னார். லக்ஷ்மணன் முன் பிறந்த அண்ணல், தாயாதிகளின் மத்தியில், அவர்களால் வெகுவாக கௌரவிக்கப் பட்டவராக பதில் சொல்ல முனைந்தார். நீ சொன்னது, தசரத அரசனுக்கும், கைகேயிக்கும் பிறந்த அரச குமாரன் என்ற நிலைக்கு மிகப் பொருத்தமானதே. ராஜ வம்சத்தில் தோன்றிய உனக்கு அது தான் அழகு. முன்னால் நம் தந்தை உன் தாயாரை மணந்து கொண்டு உன் தாய் வழி பாட்டனாருக்கு, ராஜ்யத்தை உத்தமமான தக்ஷிணையாக வாக்களித்தார். (திருமண அன்பளிப்பு) தேவாசுர யுத்தம் வந்ததும் அந்த யுத்த சமயத்தில் உன் தாய் செய்த சேவையில் மகிழ்ந்து வரங்கள் அளித்தார். அதை நினைவு படுத்தி உன் தாய் இரண்டு வரங்களை இப்பொழுது யாசித்துப் பெற்றுக் கொண்டாள். உனக்கு ராஜ்யமும், எனக்கு நாடு கடத்தலும். அதை அப்படியே சக்ரவர்த்தியான ராஜா சம்மதித்து வரங்கள் கொடுத்தார். அதனால் தந்தை என்னை இங்கு இரு என்று நியமித்து விட்டார். பரதா, பதினான்கு வருஷங்கள் வன வாசம் என்று நியமித்து விட்டார். அதனால் நான் இந்த ஜன சஞ்சாரமற்ற காட்டிற்கு வந்தேன். லக்ஷ்மணன் என்னைத் தொடர்ந்து வந்தான். சீதையும் உடன் வர, தந்தை சொல்லை காப்பாற்றியாகி விட்டது. நீயும் அதே போல அப்படி அப்படியே உள்ளதை ஏற்றுக் கொண்டு, தந்தையை சத்யவாதியாக்கு. சீக்கிரமே முடி சூட்டிக்கொள். தந்தையை கடனிலிருந்து விடுவித்து, அவரை காப்பாற்று. என் பொருட்டு இதை செய். தாயாரையும் மகிழ்ச்சி கொள்ளச் செய். ஒரு பழைய நாட்டு வழக்கு கேட்டிருக்கிறோம். க3யையில் யாகம் செய்து, க3யையில் பித்ரு கர்மாக்கள் செய்து, (புத்) என்ற நரகத்திலிருந்து தந்தையரை விடுவிக்கிறார்கள் என்பதாலேயே மகனுக்கு புத்திரன் என்று பெயர். (பும்னாம்னோ நரகாத் த்ராயதே இதி) எப்பொழுதும் தந்தையை காப்பது மகன் கடமையே. பல குழந்தைகளை பெற வேண்டும், எல்லோரையும் குணவான்களாக, கல்வி, கேள்விகளில் சிறந்தவர்களாக ஆக்க வேண்டும். இப்படி பல பேர் இருந்தால் ஒருவனாவது க3யை போவான். இவ்வாறு ராஜ ரிஷிகள் எல்லோரும் எதிர் பார்த்தனர். அதனால் இப்பொழுது உனக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தில், தசரத ராஜனை நரகம் போகாமல் காப்பாற்று. அயோத்யா திரும்பி போ. பிரஜைகளை சந்தோஷமாக வைத்திரு, சத்ருக்னன் உடன் இருக்க, மற்ற பிராம்மணர்கள் உதவியோடு ராஜ்யத்தை ஆளுவாய். நான் சீக்கிரமே, தாமதிக்காமல் தண்ட காரண்யம் போகின்றேன். எங்கள் இருவருடனும், வைதேஹியும் வருவாள். நீ அரசன் பரதா, மனிதர்களுக்கு அரசனாக இரு. நானும் காட்டில் இருக்கும் காட்டு மிருகங்களுக்கும், மற்ற ஜீவன்களுக்கும் அரசனாக இருக்கிறேன். நீயும் சந்தோஷமாக அயோத்தி மா நகர் போ. நானும் மகிழ்ச்சியுடன் தண்டகா வனம் போகிறேன். உன் தலையை அரசு எனும் குடை வெய்யிலிலிருந்து காத்து குளிர்ச்சி தரட்டும். நானும் மர நிழல்களில் வசித்து, அந்த அதிசயமான சுகத்தை அனுபவிக்கிறேன். சத்ருக்னன், நல்ல புத்திசாலி. அவன் உனக்கு சகாயமாக இருப்பான். எனக்கு சௌமித்திரி, என்னுடைய முதல் நண்பன் என்று பெயர் பெற்றவன். நாம் நல்வருமாக தசரத ராஜாவை சத்யசந்தனாகச் செய்வோம். கவலைப் படாதே.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராம பிரதி வசனம் என்ற நூற்று ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 108 (185) ஜாபா3லி வாக்யம் (ஜாபாலி என்ற முனிவர் பேசுதல்)
பரதன் சொல்வதும், ராமன் மறுத்து சமாதானம் செய்வதுமாக இருந்த சமயம், அங்கிருந்த ஜாபாலி முனிவர், பிராம்மணோத்தமர், ராமனிடம் தர்மத்திற்கு விரோதமான ஒரு அபிப்பிராயத்தைச் சொன்னார். ராகவா, உன் எண்ணம் அர்த்த சாஸ்திரத்துக்கு பொருந்தாதது. சாதாரண ஜனங்களைப் போல் நீ ஏன் இப்படி யோசிக்கிறாய்? யார், யாருக்கு பந்து, யாருக்கு யாரிடத்தில் என்ன காரியம், எவனால், எவனுக்கு நன்மை அல்லது தீமை, ஒருவனாக பிறக்கும் ஜீவன் ஒன்றாகவே மறைகிறது. தாய் தந்தை என்று மயங்குவது கூட ராமா, உன்மத்தன் என்று தான் சொல்ல வேண்டும். யாரும், யாருக்கும் சொந்தமில்லை. வேறு கிராமம் போய் ஒருவன் சில காலம் வசித்து விட்டு, வேறு இடத்துக்கு புறப்பட்டுச் செல்வது போல, அந்த இடத்தை விட்டு, மறு நாளே காலி செய்து கொண்டு கிளம்புவது இல்லையா? அது போலத்தான் மனிதர்களுக்கு தாய், தந்தை, வீடு, செல்வம் எல்லாம். நாம் இருக்க ஓர் இடம், அவ்வளவு தான். காகுத்ஸா, இதில் அதிக முக்யத்வம் கொடுத்து நல்லவர்கள் மயங்குவதில்லை. தந்தை வழியில் வந்த ராஜ்யத்தைத் துறந்து, மிகவும் கடினமான சிக்கல் நிறைந்த உபயோகமில்லாத வழியை ஏன் ஏற்றுக் கொள்ள விரும்புகிறாய். செல்வம் நிறைந்த அயோத்தி மா நகரில் முடி சூட்டிக் கொள். இந்த நகரம் என்ற பெண் உன்னை நாயகனாக அடையத் தவம் இருக்கிறாள். ராஜ போகங்களை அனுபவித்துக் கொண்டு ராஜ குமாரா, நீ அயோத்தியில் சுகமாக இரு. தேவலோகத்தில் இந்திரன் இருப்பது போல இரு. தசரதன் உனக்கு எந்த உறவும் இல்லை. நீயும் அவருக்கு எந்த வித பந்துவும் இல்லை. அவர் ஒரு அரசர். நீ வேறு ஒரு அரசன். பிரஜைகளுக்கு தந்தை வித்து மாத்ரமே. தாயுடன் கலந்து புருஷனாக பிறக்கிறது. இப்பொழுது அந்த அரசன் போன இடம் நீயும் போக வேண்டியானே. இது தான் இயற்கை. மனிதனின் கதி இதுவே தான் என்று இருக்கும் பொழுது நீ ஏன் வீணாக கவலைப் படுகிறாய். அர்த்தம், தர்மம் இது இரண்டையும் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன். மற்றவைகளை நினைப்பதில்லை. பித்ரு, தைவம் என்று எட்டு விதமாக ஜனங்கள் யோசிக்கும் பொழுது அன்னம் உபத்ரவம் செய்வதைப் பார். இறந்தபின் நீ என்ன சாப்பிடுவாய்? இங்கு அனுபவித்து விட்டு வேறு சரீரம் போகும் பொழுது உனக்கு சிரார்தம் செய்வார்கள். அது பத்யமாக இருக்காது. சில மேதாவிகளால் செய்யப் பட்ட க்ரந்தங்கள், முறைகள் இவை. யாகம் செய், தானம் கொடு, தீக்ஷை எடுத்துக் கொள். தவம் செய். உடலை வருத்து, தியாகம் செய் என்றெல்லாம் சொல்வார்கள். இந்த உலகைத் தவிர, வேறு எதுவும் இல்லை என்று புத்தியில் கொள். ப்ரத்யக்ஷம் எதுவோ அதை மட்டுமே நம்பு. பரோக்ஷமானது எதுவோ (கண்ணுக்குத் தெரியாதது) அதை விடு. உலகில் நல்லவர்களை முன்னிட்டுக் கொண்டு நிதர்சனமான உண்மைகளை மட்டுமே ஏற்றுக் கொள். இப்பொழுது பரதன் மகிழ்ச்சியுடன் தரும் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ஜாபா3லி வாக்யம் என்ற நூற்று எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 109 (186) சத்ய ப்ரசம்ஸா (சத்யத்தின் உயர்வு )
ஜாபா3லியின் வாதத்தைக் கேட்டு, தர்ம சிந்தனை உள்ளவர்களிலும் ஸ்ரேஷ்டனான ராமன், அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் பதில் சொன்னார். பெரியவரே, எனக்கு பிரியமாக இருக்க வேண்டும் என்று இப்படி ஒரு வாதம் செய்துள்ளீர்கள். நல்லது போல தோன்றும் கெடுதல், கார்யமே இல்லாத காரியம், வெளித்தோற்றம் ஒன்று, உட்பொருள் எதிர்மறையாக இருக்கும் இந்த வார்த்தைகளால் பலன் ஒன்றும் இல்லை. மரியாதையை விட்ட மனிதன், கெடுதலான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவன் நல்ல மதிப்பை பெறுவதுமில்லை, நல்லவர்கள் அவனது இரட்டை வேடத்தை உணர்ந்து கொள்வார்கள். குலத்தில் பிறந்தவனோ இல்லாதவனோ, வீர புருஷனாக தன்னை நினப்பவன், ஒருவனது நடத்தை தான் அவன், நல்லொழுக்கம் உள்ளவனா இல்லையா என்பதை உலகிற்கு காட்டுகிறது. பெருந்தன்மை உடையவனைப் போல, சிறு புத்தி உள்ளவன், ஒழுக்கத்தை விட்டு நல்லொழுக்கம் உள்ளவன் போலவும் குறிக்கோளே இல்லாதவன் உயர்ந்த குறிக்கோள் உள்ளவன் போலவும், சீலமே இல்லாதவன் சீலவான் போலவும் அதர்மத்தை தர்மம் போல, இந்த உலகில் ஜனங்களை குழப்பக் கூடிய விஷயங்களை நாம் ஏற்றுக் கொண்டால், விதி முறை இல்லாத செயல்களால், நல்லதை விடுத்து நடந்து கொள்வோமேயானால், புத்தியுள்ள எவன் தான் கார்யா கார்யம் எது என்பதை அறிந்தவன், என்னை பெரிதாக நினைப்பான்? உலகோர் தூற்றும் கெட்ட நடவடிக்கையுள்ள ஜனங்களோடு நானும் ஒருவன் ஆவேன். என் குணம் என்றும் நன்னடத்தை என்றும் எதைச் சொல்வேன். ஸ்வர்கம் செல்ல என்னிடம் நல்ல செயல் எது இருக்கும்? என் ப்ரதிக்ஞையை விட்டு நிகழ் கால சுகத்தை மட்டும் நினைத்து நான் செயல் பட்டால் பின்னால் அது கெடுதலையே தரும். ஆசையினால் அலைக்கழிக்கப் பட்டு அலைபவர் இந்த உலகம் முழுவதும் இருக்கிறார்கள் ஆனால் நன்னடத்தையுள்ள அரசன் இருந்தால், பிரஜைகளும் அந்த நன்னடத்தையை பின்பற்றுவார்கள். சத்யம், சத்யமே தான் மற்றும் கருணை இவை காலம் காலமாக ராஜாவின் குணம் என்று சொல்லப் பட்டு வந்திருக்கிறது. அதனால் சத்யத்தை அடிப்படையாகக் கொண்ட ராஜ்யம், சத்யமாக உலகில் நிலைத்து நிற்கும். ரிஷிகளும், தேவர்களும், சத்யத்தை தான் போற்றினர். இந்த உலகில் சத்யவாதிகள் குறைந்து கொண்டே வருகிறார்கள். சர்ப்பத்தைக் கண்டால் நடுங்கி விலகுவது போல அசத்யத்தைக் கண்டு அருவருத்து விலக்க வேண்டும். தர்மம் முதல் சத்யம். மற்ற எல்லா குணங்களுக்கும் அடிப்படையானது. சத்யம் தான் கடவுள். சத்யத்தில் மற்ற எல்லா நன்மைகளும் அடக்கம். சத்யத்தில் தான் பத்மாவான லக்ஷ்மி வசிக்கிறாள். எல்லாமே சத்யத்தை சார்ந்து தான் இருக்கிறது. அதனால் சத்யத்தை மிஞ்சி வேறு எதுவுமே இல்லை. தானம், யக்ஞம் செய்தல், ஹோமம் செய்தது தவம் செய்வதும், உடலை வருத்தி செய்யும் விரதங்களும் வேதங்கள், எல்லாமே சத்யத்தின் அடிப்படையில் அமைந்தவை. அதனால் சத்யத்தை நாம் அனுஷ்டிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒருவன் உலகை ஆள்கிறான். ஒருவனே குலத்தைக் காக்கிறான். ஒருவன் நரகத்தில் உழலுகிறான். ஒருவன் ஸ்வர்கம் செல்கிறான். அதனால் நான் தந்தையின் சொல்லை ஏன் கேட்காமல் இருக்க வேண்டும்? என் தந்தை வாக்குத் தவறாதவர். அவர் சத்யத்தை நான் நிலை நிறுத்த வேண்டும். லோபத்தினாலோ, மோகத்தினாலோ, அறியாமையினாலோ, தாமஸ குணம் நிரம்பி சூழ்ந்து இருப்பதாலோ, என் தந்தையின் சத்யம் எனும் பாலத்தை உடைத்தவனாக ஆவேன். இது போல அசத்ய சந்தனாக, ஸ்திர புத்தி இல்லாதவனை தேவர்களோ பித்ருக்களோ ஏற்றுக் கொள்வதில்லை என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். இந்த தர்மம் திருப்பி அடிக்கக் கூடியது. தர்மம் தான் சத்யம் என்றும், அழியாதது என்றும் நான் நினைக்கிறேன். மற்றவை வெறும் சுமை என்று நல்லவர்கள் நீக்கி விட்டார்கள். க்ஷத்திரிய தர்மத்தை நான் விட்டேன். தர்மம் நிறைந்தது போன்ற அதர்மமான ராஜ தந்திரம் எனக்கு வேண்டாம். சிறு புத்தியுள்ள, வன்முறையாளர்களும், லோபத்தினாலும் பாபம் செய்பவர்கள் அனுஷ்டிக்கும் ராஜ தந்திரம் எனக்கு வேண்டாம். சரீரத்தால், பாபத்தை செய்கிறார்கள். மனதால் திட்டமிடுகிறார்கள். வாயால் பொய் பேசுகிறார்கள். இந்த மூன்றுமே பாதகம். பூமி, கீர்த்தி, புகழ், லக்ஷ்மி இவை சத்யமுள்ள மனிதனையே நாடுகின்றன. சத்யம் இருக்கும் இடத்தில் தான் இவை விளங்குகின்றன. அதனால் சத்யத்தையே கடை பிடிப்போம். சிறு பிள்ளைத் தனமாக என்னை மட்டமாக விவரிக்கும் வழி இது. நீங்கள் என்னை செய்யச் சொல்லும் இந்த செயல். யுக்தி பூர்வமான வாக்கியங்களால் நீங்கள் சொன்னது, எனக்கு நன்மையைச் செய்யாது. நான் எப்படி குருவிடம் வன வாசம் போகிறேன் என்று சத்யம் செய்து விட்டு, பரதனிடம், குருவான தந்தை சொன்னதை மீறி நடப்பேன். குருவின் சன்னதியில் நான் ஸ்திரமான புத்தியுடன் தான் பிரதிக்ஞை செய்தேன். அப்போது கைகேயியும் மிகவும் மகிழ்ந்தாள். ஆகார நியமங்களோடு, ஒழுக்கத்தோடு, இந்த வன வாசத்தை முடிப்பேன். பழம், காய் கறிகளை உண்டு, பித்ருக்களையும், தேவதைகளையும் பூஜித்துக் கொண்டு, திருப்தியாக பஞ்ச வர்கனாக நான் உலக யாத்திரையை நடத்துவேன். நிர்தனனாக இருந்தாலும், சிரத்தையாக செய்யக் கூடியது எது, எதை தவிர்க்க வேண்டும் என்ற சிந்தனையோடு, இந்த கர்ம பூமியில் பிறந்த நாம் கர்மாவை செய்ய வேண்டியது மிக அவசியம். அதிலும் சுபமானதை செய்வோமானால், அக்னியும், வாயுவும், சோமனும் அதன் பலனில் பங்கு பெறுவார்கள். நூறு யாகங்களைச் செய்து தேவராஜன் ஸ்வர்கம் சென்றான். உக்ரமான தவத்தை மேற் கொண்டு மகரிஷிகள் தேவலோகம் செல்கின்றனர். உக்ரமான தேஜஸை உடைய அந்த முனிவரின், நாஸ்திக வாதத்தை பொறுக்க முடியாத அரச குமரன், அவர் வாதத்தை நிந்திக்கும் விதமாக பேசலானான். மூவுலகிலும் நல்லவர்கள் என்றால் சத்யம், தர்மம், பராக்ரமம், பூத தயை, பிரியமாக பேசுதல், என்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. இது தான் நாம் கடை பிடிக்க வேண்டிய நியதியும் ஆகும். இவ்வாறு பிராம்மணர்கள் எல்லோருமாக ஏகமனதாகச் சொன்னார்கள். தர்ம வழியில் நடப்பவன், உலகில் எப்படியும் விரும்பியதை அடைகிறான். கோணல் புத்தியுடன் நாஸ்திகம் பேசும் உங்களை அருகில் சேர்த்துக் கொண்ட என் தந்தையைச் சொல்ல வேண்டும். நாஸ்திக வாதம் தர்ம வழியிலிருந்து விலகிப் போகச் செய்யும். திருடனை எப்படி அண்ட விடாமல் ஜாக்கிரதையாக இருப்போமோ, அப்படித்தான் இந்த நாஸ்திக வாதம் பேசும் அறிஞர்களையும் அண்ட விடாமல் தள்ளியே இருக்க வேண்டும். பிரஜைகள் சந்தேகப்பட வேண்டியவர்களுள், இந்த நாஸ்திகர்களான, புத்திமான்கள் முதல் இடம் பெருகிறார்கள். ஜாபாலி முனிவரே, உங்களுக்கு முன்னாலும், பின்னாலும் பலர் சுபமான பல காரியங்களைச் செய்தனர். ஹோமங்கள் செய்தும், புண்ய கர்மாக்களைச் செய்தும் இக பர சௌக்யங்களை அடைந்தார்கள். தானம் செய்வதில் பிரதானமாக இருந்து தேஜஸுடன் தர்மத்தில் சிந்தனையுடைய சத்புருஷர்கள், ஹிம்சையை வெறுத்து, குற்றமற்றவர்களாக உலகில் வாழ்கின்றனர். இவர்கள் பூஜிக்கத் தகுந்தவர்கள். முக்கியமான முனிவர்கள். இவ்வாறு கோபத்துடன் பேசும் ராமனைப் பார்த்து அந்த பிராம்மணர், சமாதானப் படுத்தி நயமாகப் பேசி, ஆஸ்திகத்தை ஆதரித்துப் பேசலானார். நான் நாஸ்திக வாதம் பேசவில்லை, நான் நாஸ்திகனும் இல்லை. வேறு யாரும் இங்கு நாஸ்திக வழியில் செல்பவர்களும் இல்லை. காலத்தை அனுசரித்து நாஸ்திகம் பேசினேன். ஆனால் திரும்பவும் ஆஸ்திக மதத்தைப் பேசி திரும்பிவிட்டேன். உன்னை உன் நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று என் மனதில் தோன்றியதைச் சொன்னேன். சில சமயங்களில் எதிர்மறையாக பேசியும் ஒரு நல்ல செயலை நடக்கச் செய்ய வேண்டியுள்ளது. அது தான் காரணம் என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சத்ய ப்ரசம்ஸா என்ற நூற்று ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 110 (187) இக்ஷ்வாகு வம்ச கீர்த்தனம் (இக்ஷ்வாகு வம்சத்தைப் பற்றி சொல்லுதல்)
ராமர் கோபத்தில் இருப்பதாக நினைத்து வசிஷ்டரும், சமாதானம் செய்ய முனைந்தார். ஜாபாலி உலக வழக்கு தெரிந்தவர். உன்னை உன் பிடிவாதத்திலிருந்து மாற்றி திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசையினால் இப்படி பேசியிருக்கிறார். உலகுக்கெல்லாம் நாயகனே, இந்த உலகம் தோன்றிய வரலாற்றைச் சொல்கிறேன் கேள். பூவுலகம் எங்கு நிர்மாணிக்கப்பட்டதோ, அந்த இடம் முழுவதும் ஜலமாக இருந்தது. எங்கும் தண்ணீரே தான். அப்பொழுது ஸ்வயம்பூவாக (தானே தோன்றியவர்) ப்ரும்மா தோன்றினார். அவருடன் தேவதைகளும் தோன்றினார்கள். அப்பொழுது அவர் வராக உருவம் எடுத்து பூமியை அடிமட்டத்திலிருந்து மேலே கொண்டு வந்தார். உலகம் பூராவும் சிருஷ்டி செய்தார். இதில் சமர்த்தர்களான அவருடைய பிள்ளைகளும் உதவி செய்தனர். ஆகாயம் வரை பரந்து கிடந்த தேஜஸுடன் சாஸ்வதமான நித்ய, அழிவில்லாத ப்ரும்ம ஸ்வரூபம் நிற்க, அவரிடமிருந்து மரீசி தோன்றினார். மரீசியிடமிருந்து காச்யபர் மகனாக பிறந்தார். காஸ்யபருக்கு விவஸ்வான் என்று பிள்ளை. விவஸ்வானுக்கு மனு என்ற மகன் பிறந்தான். அவன் தான் பிரஜாபதி என்று அழைக்கப் படும் முதல் இக்ஷ்வாகு அரசனின் தந்தை. இந்த விசாலமான பூமி முதலில் மனுவினால் இக்ஷ்வாகுவுக்கு கொடுக்கப் பட்டது. அவன் அயோத்தியை தலை நகராகக் கொண்டு ஆண்ட முதல் இக்ஷ்வாகு அரசன். இக்ஷ்வாகுவுக்கு குக்ஷி என்று ஒரு பிள்ளை. குக்ஷிக்கு மகனாக விகுக்ஷி பிறந்தான். விகுக்ஷிக்கு பா3ணன் என்ற பராக்ரம சாலியான மகன் பிறந்தான். பா3ணனுக்கு அனரண்யன் என்ற புகழ் வாய்ந்த மகன். இவன் காலத்தில், நல்ல மழை பொழிந்து வந்ததால் துர்பிக்ஷம் எனும் வறட்சியே தோன்றியதில்லை. அனரண்யன் அரசனாக இருந்த வரை திருடன் என்ற சொல்லே கிடையாது. இவனுக்குப் பிறகு ப்ருது2 என்ற அரசன் வந்தான். அந்த ப்ருது2வுக்குப் பிள்ளையாக த்ரிசங்கு தோன்றினான். அவன் சத்யவாதி. தன் சரீரத்துடன் ஸ்வர்கம் சென்றான். இந்த த்ரிசங்குவின் மகன் தான் புகழ் வாய்ந்த து3ந்து3மாரன். து3ந்து3மாரனுக்கு மகா பலசாலியான யுவனாஸ்வன் என்ற மகன் பிறந்தான். யுவனாஸ்வனுக்கு மகனாக மாந்தா4தா என்று ஒருவன் பிறந்தான். மாந்தா4தாவுக்கு சுசந்தி4 என்று ஒரு மகன். சுசந்தி4க்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் த்4ருவ சந்தி4, மற்றவன் ப்ரசேனஜித். தேஜஸ்வியான துருவசந்திக்கு பரதன் என்று மகன். பரதனுக்கு நெடிய உருவம் கொண்ட அஸிதன் பிறந்தான். இந்த அரசர்களுக்கு சத்ருக்களும் தோன்றினர். ஹைஹயர்கள், தாள ஜங்கர்கள், சூரர்களான சசிபிந்து எனும் இனத்தவர்கள், இவர்கள் ஒரு முறை சூழ்ந்து கொண்டு யுத்தத்தில் அரசனை புற முதுகிட்டு ஓடச்செய்தனர். அவருக்கு இரண்டு மனைவியர் என்று கேள்வி. ஒருவள், மற்றவள் கர்ப்பத்தை கலைக்க அவளுக்கு விஷத்தைக் கொடுத்து விட்டாள். காளிந்தீ என்ற அந்த பெண், இமயமலையை அடைந்து, தவம் செய்து கொண்டிருந்த பா4ர்கவரான ஸ்யவனர் என்ற முனிவரை அடைந்து வணங்கி. தன் புத்ரன் க்ஷேமமாக இருக்க வேண்டினாள். அவரும் தேவி உனக்கு உலகில் பெரும் புகழை அடையப் போகும் மகன் பிறப்பான் என்று ஆசிர்வதித்து அனுப்பினார். தார்மிகனான, நல்ல சீலம் உள்ளவனாக, உன் வம்சத்தை விளங்கச் செய்பவனாக இருப்பான். முனிவரை பிரதக்ஷிணம் செய்து அவரை வணங்கி, வீட்டிற்கு வந்து தாமரை தளம் போன்ற பெரிய கண்களுடன், பத்3மகர்ப4னுக்கு சமமான தேஜஸுடன் புத்ரனை ஈன்றெடுத்தாள். சபத்னி (சக்களத்தி), கர்பத்தை அழிக்க விஷம் கொடுத்தும் அந்த விஷத்துடனேயே பிறந்ததால், சக3ரன் என்று அழைக்கப் பட்டான். (க3ரம்-விஷம்) இந்த சக3ரன் தான் சமுத்திரத்தைத் தோண்டினான். இவனுக்கு ஒரு மகன் பிறந்தான். பிரஜைகள் நடுங்கும்படி இருந்த அசமஞ்சன் என்ற மகன், அவன் உயிருடன் இருக்கும் பொழுதே, தந்தையால் கைவிடப்பட்டான் என்று கேள்வி. பாப கர்மாவைச் செய்தான் என்பதால் தண்டனையாக இப்படிச் செய்தான். இந்த அசமஞ்சனுக்கு பிறந்த அம்சுமான், நல்ல வீரன். அம்சுமானுக்கு திலீபனும், திலீபனுக்கு ப4கீ3ரதனும் பிறந்தனர். பகீரதன் பிள்ளை ககுத்ஸன். அதன் பின் வந்தவர்கள் காகுத்ஸர்கள் என்று சொல்லப் படும் அளவு பிரஸித்தமாக இருந்தான். ககுத்சனுடைய பிள்ளை ரகு4. அதனால் ராகவர்கள் என்றும் அழைக்கப் பட்டனர். ரகுவின் பிள்ளை தேஜஸ்வியான கல்மாஷபாத3ன். சௌதா3சன் என்றும் அழைக்கப் பட்டான். இவனுக்கு சங்க2ணன் என்று மகன். இவனும் வீரனே. இருந்தும் சைன்யத்தோடு அழிந்தான். இவன் மகன் சுதர்ஸனன் சூரன் எனப்பட்டான். அவன் அழகும் பிரஸித்தம். சுதர்சனனுக்கு அக்னி வர்ணன், இவனுக்கு சீக்4ரகன் (வேகமாக செல்பவன்), இவனுக்கு மரு, மருவிற்கு ப்ரசுக்ருகனன். இவன் மகன் தான் பெரும் புகழ் பெற்ற அம்ப3ரீஷன். அம்பரீஷனுக்கு நகுஷன் மகனாக பிறந்தான். இவன் சத்ய விக்ரமன். இவனுக்கு பரம தார்மிகனான நாபா4கன் என்ற பிள்ளை. இவனுக்கு இரண்டு பிள்ளைகள், அஜன், சுவ்ரதன் என்ற பெயர் பெற்றவர்கள். அஜனுக்கு பிறந்தவன் தான் தசரத ராஜா. உலகம் முழுவதையும் வென்று பரிபாலித்து வந்தான். இவனுக்கு முதல்வனாக பிறந்து ராமன் என்று பெயர் பெற்று, தாசரதியாக விளங்குகிறாய். சொத்துக்கு உரிமையுள்ளவன். அதனால் உன் ராஜ்யத்தை ஏற்றுக் கொள். ஜனங்களை பாதுகாத்து வா. இக்ஷ்வாகு வம்சத்தில் எப்பொழுதும் முன் பிறந்தவனே அரசாளும் தகுதி பெற்றவனாக இருந்து வந்திருக்கிறான். இளையவன் முடி சூடுவது, மூத்தவன் இருக்க, என்பது இந்த வம்சத்தில் இது வரை கிடையாது. இந்த ராகவ குலத்தின் பழமையான தர்மம் இது. இதை அழித்து விடாதே. உன் தந்தை, பெரும் புகழுடன் இந்த ராஜ்யத்தை பரிபாலித்து வந்தது போலவே, நீயும் செல்வம் மிகுந்த இந்த நாட்டை ஆள வேண்டும். இதை ஏற்றுக் கொள் என்றார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் இக்ஷ்வாகு வம்ச கீர்த்தனம் என்ற நூற்று பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 111(188) ப4ரதானுசாஸனம் (பரதன் வாதம்)
வசிஷ்டர், ராஜ புரோஹிதர். அவர் ராமரிடம் இவ்வாறு விவரமாக சொல்லி வேண்டிக் கொண்ட பின், மேலும் சொன்னார். இந்த உலகில் பிறந்தவர்களுக்கு மூன்று பேர் குரு. தாய் தந்தைக்குப் பின் குருவாக ஆசார்யன் என்று சொல்வார்கள். ராகவா, தந்தை பிறக்கச் செய்கிறார் என்றால் ஆசார்யர் புத்தியை வளர்க்கிறார். அதனால் ஆசார்யனும் குருவாகிறார். உன் தந்தைக்கு ஆசார்யனாக இருந்தவன் நான். இப்பொழுது உனக்கும் ஆசார்யன். நல்வழி சொல்லும் என் வார்த்தையை தட்டாதே. இதோ இவர்கள் உங்கள் ராஜ சபையில் அங்கத்தினர்கள். அணிவகுத்து நிற்கும் படைத் தலைவர்கள். பிராம்மணர்கள், இவர்களிடம் இதுவரை மதிப்பு கொடுத்து நடந்து வந்தவன் நீ. நேர் வழியை தட்டாதே. வயது முதிர்ந்த தாயை அலட்சியம் செய்யாதே. இவள் சொல்வதைக் கேட்டாலும் சரி. யாசிக்கும் பரதனுக்கு அருள் செய். சத்ய பராயணனாக இருந்து கொண்டு, உனக்கு நீயே அநீதியை செய்வதாக ஆகும். இவ்வாறு குரு மதுரமாக சொல்லவும், ராமர் பதில் சொன்னார். தாய் தந்தை, தனயனிடம் எந்த முறையில் நடந்து கொள்கிறார்களோ, அதே போலத்தான் தனயனும் தன் தாய் தந்தையரிடம் திருப்பிச் செய்ய வேண்டும். தன் சக்திக்கேற்றபடி, தருவதாலும், உடைகள் வாங்கிக்கொடுத்து வசதியாக வாழச் செய்து, நித்யம் பிரியமாகப் பேசி, வளர்த்து வருகிறார்கள். அப்படியிருக்க என் தந்தை தசரத ராஜா. அவர் எனக்கு இட்ட கட்டளை பொய்யாகக் கூடாது. இவ்வாறு ராமர் சொல்லவும், பரதன் சுமந்திரனைப் பார்த்து, இங்கு தரையில், புற்களைப் பரப்பி வை சாரதே, அண்ணலான ராமன் என்னிடம் தயை கொள்ளும் வரையில் நான் ஆகாரமின்றி, தரித்திரனான பிராம்மணனைப் போல, இந்த குடிலின் வாசலில் படுத்துக் கிடப்பேன். ராமன் திரும்பி வரும் வரையிலும், இங்கேயே அவனைப் பார்த்துக் கொண்டு கிடப்பேன் என்று சொல்லி புல் படுக்கையில் அமர்ந்து விட்டான். ராஜரிஷிக்கு சமமான ராமன் அப்பொழுது பரதனைப் பார்த்து பரதா, நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? இது பிராம்மணர்கள் கடை பிடிக்க வேண்டிய வழி. தலையில் மகுடம் சூடியவர்களுக்கு இப்படி வடக்கிருந்து (புல் தரையில் அமர்ந்து, உயிர் போகும் வரை வடக்கு நோக்கி இருத்தல்) உயிர் விடுவது அழகல்ல. எழுந்திரு, நர சார்தூலா, இந்த கடுமையான விரதத்தை மேற் கொள்ள வேண்டாம். ராகவா, சீக்கிரமாக அயோத்தி திரும்பி போ. உட்கார்ந்த நிலையிலேயே பரதன் திரும்பி ஊர் ஜனங்களைப் பார்த்து நீங்கள் அண்ணலை கட்டளையிட்டு சொல்லாமல் சும்மா இருக்கிறீர்கள் என்று சொல்ல, அவர்கள், காகுத்ஸனை நாங்கள் அறிவோம், அவன் சொல்வது சரிதான், என்று ஊர் ஜனபத, ஜனங்கள் ஒட்டு மொத்தமாக பதில் சொன்னார்கள். இவனும் (ராமனும்), தந்தை சொல்படி செய்கிறான். அவனால் அதை மீற முடியாது. அதனால் நாங்களும் நிர்பந்தமாக ராமனை திரும்பி வரும்படிச் சொல்ல அசக்தர்களாக இருக்கிறோம். இதைக் கேட்டு ராமர், பரதனைப் பார்த்து, இதைப் பார். இவர்கள், நண்பர்கள், பந்துக்கள். இவர்கள் சொல்வதைக் கேள். இவர்களும் தர்மம் அறிந்தவர்கள். நியாயமாகத் தான் சொல்கிறார்கள். இவர்கள் சொல்வதையும், நான் சொன்னது இரண்டையும் சேர்த்து யோசித்துப் பார். முதலில் எழுந்திரு. என்னையும் தொடு, உடன் ஜலத்தையும் தொடு. பரதன் உடனே எழுந்திருந்து ஜலத்தை தொட்டுக் கொண்டு சொன்னான். என் ராஜ சபை அங்கத்தினர்களே, படைத் தலைவர்களே, மந்திரிகளே, கேளுங்கள். நான் தந்தையிடம் ராஜ்யத்தை யாசிக்கவில்லை. தாய் சொல்வதைக் கேட்டு பணிய மாட்டேன். பரம தார்மிகனான அண்ணன் ராமன் சொல்லையும் கேட்க மாட்டேன். தந்தை சொல்படி வனத்தில் வசித்து தான் ஆக வேண்டும் என்றால், பதினான்கு வருஷம் நான் காட்டில் வசிக்கிறேன். சகோதரனின் இந்த வார்த்தையைக் கேட்டு திகைத்த ராமன், ஒரு நிமிஷம் செய்வதறியாது நின்றார். பின், கூட்டத்தைப் பார்த்து என் தந்தை உயிருடன் இருக்கும்பொழுது செய்த ஏற்பாட்டை நான் மீற முடியாது. பரதனாலும் மாற்ற முடியாது. வனவாசம் பிடிக்காமல் இதில் வெறுத்து நான் தந்தையை ஏமாற்றுவது நியாயமல்ல. கைகேயியும் என் தந்தையுமாக சொன்னது சொன்னது தான். பரதன் பொறுமையின் எல்லையில் இருப்பவன் என்பதையும் நான் அறிவேன். இதில் எல்லோருக்கும் நன்மை ஏதெனில், நான் வன வாசத்திலிருந்து திரும்பி வந்து, தர்மசீலனான பரதனுடன் சேர்ந்து இந்த தேசத்து அரசனாக ஆவேன். அரசன் கைகேயியுடன் சேர்ந்து இட்ட கட்டளை. நான் அதன் படி நடக்கிறேன். இதை செய்ய விடாமல் தடுத்து, மகா ராஜாவை பொய்யனாக ஆக்காதீர்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரதானுசாஸனம் என்ற நூற்று பதினொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 112 (189) பாது3கா ப்ரதா3னம் (பாதுகையைத் தருதல்)
அந்த இரண்டு ஒப்பிலா சகோதரர்களின் வாக்கு வாதத்தைக் கேட்டு, மகரிஷிகள் நம்ப முடியாமல் திகைத்து நின்றனர். ரிஷி கணங்கள், உள்ளும் புறமும், ஹிதத்தையே விரும்புபவர்கள், சித்தர்கள், மகரிஷிகள், இந்த இரண்டு சகோதரர்களையும் வாழ்த்தினர். தர்மத்தில் சிறந்த இந்த இருவரையும் மகன்களாக பெற்றவர் புண்யவான். பாக்யசாலி. நாங்கள் இருவருடைய வாதத்தையும் ஏற்றுக் கொள்கிறோம். பத்து தலை ராவணனின் வதம் ஆக வேண்டும் என்ற எண்ணம் அடி மனதில் தலை தூக்க, அவர்கள் பரதனைப் பார்த்து உபதேசித்தனர். நற்குடியில் பிறந்தவனே, புத்திமான்களில் சிறந்தவனே, நன்னடத்தை உடையவனே, சிறந்த கீர்த்தி உடையவனே, பரதா, ராமரது வாதத்தை ஏற்றுக் கொள். தந்தையின் கட்டளை என்று அறிந்து கொள். இவன் தந்தையை வாக்குத் தவறாமல் காப்பதோடு, தானும் வாக்கு தவறாதவன் என்று புகழ் வளர இருக்கட்டும். கைகேயியிக்கு, வாக்குத் தவறாமல் இருந்ததால் தான் ராஜா ஸ்வர்கம் சென்றார். இவ்வாறு சொல்லிவிட்டு, கந்தர்வர்களும், மகரிஷிகளும், ராஜ ரிஷிகளும் தங்கள் தங்கள் இருப்பிடம் சென்றனர். தன் கட்சியைப் பேசிய மகரிஷிகளை பூஜித்து ராமர் முகம் மலர மகிழ்ச்சியுடன் சொல்லலானார். அதே வார்த்தைகளைக் கேட்டு பரதன் உடல் குறுக, கூப்பிய கைகளுடன் ராமனைப் பார்த்து இவ்வாறு வேண்டினான். ராஜ தர்மத்தை ஆலோசித்து, குல தர்மத்தையும் மனதில் கொண்டு, நானும் என் தாயுமாக யாசிப்பதை நீங்கள் செய்து தான் ஆக வேண்டும். நான் ஒருவனாக இந்த பெரிய ராஜ்யத்தை ஆள சாமர்த்யம் இல்லாதவன். ஊர் ஜனங்களையும், ஜனபத பிரமுகர்களையும் கவனித்து சந்தோஷமாக வைத்திருக்க எனக்கு சக்தியில்லை. நமது தாயாதிகள், படை வீரர்கள், நண்பர்கள், சுற்றத்தார், யாவரும் உங்களையே நாயகனாக அடைய விரும்பி இருந்தார்கள். வயலில் வேலை செய்பவர்கள், விவசாயிகள், மழையை வரவேற்பது போல உங்களை விரும்பி வரவேற்றனர். இந்த ராஜ்யத்தை அடைந்து ஸ்தாபனம் செய். நீ தான் இதற்கு சக்தியுடையவன் என்று சொல்லிக் கொண்டே ராமன் கால்களில் விழுந்தான். அவனை வாரியணைத்து மடியில் இருத்துக் கொண்டு ராமர் ம்ருதுவாகச் சொன்னார். இப்பொழுது நீ சொன்னது உன் வினயத்தைக் காட்டுகிறது. இது உனக்கு இயல்பாக வந்த குணம். நீ ராஜ்யத்தை பரிபாலிப்பதில் சமர்த்தன் தான் சந்தேகமே இல்லை. மந்திரிகளிடமும், சுற்றத்தாரிடமும், புத்திசாலிகளான மந்திரிகளிடமும் எல்லா விஷயங்களையும் கலந்து ஆலோசித்து, பெரிய காரியங்களைக் கூட செய்ய சக்தி உடையவன் தான். சந்திரனிடமிருந்து ஒளி விலகினாலும், ஹிமவான், ஹிமம் (பனியை) உதிர்த்து விட்டாலும், சமுத்திரம் கரையைத் தாண்டி வந்தாலும் வரலாம், நான் தந்தைக்கு கொடுத்த வாக்கை மீற மாட்டேன். காமத்தினாலோ, லோபத்தினாலோ, உன் தாய் உனக்காக இதை செய்திருக்கிறாள். இதை மனதில் வைத்துக் கொண்டு வருத்தப் படாதே. தாயிடம் தாயாகவே மதித்து நடந்து கொள். இவ்வாறு சொல்லும் கௌசல்யை மகனைப் பார்த்து, பரதன் சொன்னான். தேஜஸால் சூரியனைப் போலவும், வளர்பிறை சந்திரன் போலவும் விளங்கிய ராமனைப் பார்த்து யாசித்தான். அண்ணலே, இந்த பாதுகையில் ஏறி நில்லுங்கள். தங்கத்தால் அலங்கரிக்கப் பட்ட இந்த பாதுகைகள் தான் இனி எல்லா லோகத்திற்கும் யோக க்ஷேமங்களை நிர்வகிக்கப் போகின்றன. ராமரும் அவ்வாறே பாதுகையின் மேல் ஏறி நின்று, கழட்டிக் கொடுத்தார். மகாத்மாவான பரதன் அந்த பாதுகைகளை தலையால் வணங்கி ராமனிடம் சொன்னான். பதினான்கு வருஷம் நானும் ஜடா முடி தரித்து, பழம் காய் கறிகளை உண்டு, வாழ்ந்து வருவேன். ராகவா, நீ திரும்பி வருவதை எதிர்பார்த்து, நகரத்தின் வெளியிலேயே இருப்பேன். தங்கள் பாதுகைகளில் ராஜ பாரத்தை ஒப்புவிக்க ராஜ்யத்தை நிர்வகிக்கிறேன். பதினான்கு வருஷம் முடிந்த அதே நாளில், ரகோ4த்தமா, உங்களைக் காணாவிடில் நான் அக்னியில் ப்ராயோபவேசம் செய்வேன். இது உறுதி அப்படியே ஆகட்டும் என்று சொல்லி ராமனும் பரதனை ஆதரவாக அணைத்து, சத்ருக்னனையும் அணைத்துக் கொண்டு பரதனிடம் சொன்னார். தாயாரான கைகேயியை கவனித்துக் கொள். அவளிடம் ஆத்திரப் படாதே. என் பேரில், சீதை பேரில் ஆணை. பரதா இதை மீறாதே. இவ்வாறு சொல்லி
கண்களில் நீர் மல்க சகோதரர்களை விடுவித்தார். அந்த பாதுகைகளை பரதன் அலங்கரித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, ராகவனையும் பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்தான். பின், முறைப்படி குரு ஜனங்களையும், மந்திரிகளையும், பிரஜைகளையும், சகோதரர்களையும் விடை கொடுத்து அனுப்பினான் ராமன், தன் கொள்கையில் இமயமலை போல அசையா பிடிப்புள்ள வீரன். துக்கம் தொண்டையை அடைக்க தாய்மார்கள் விடை பெறக் கூட சக்தியில்லாதவர்கள் ஆனார்கள். ராமர், தானே தாய்மார்களை வணங்கி விடை கொடுத்து விட்டு தன் குடிலுக்குள் சென்று விட்டார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பாது3கா ப்ரதா3னம் என்ற நூற்று பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)s
அத்தியாயம் 113 (190) பாது3கா க்3ரஹணம் (பாதுகையை ஏற்றுக் கொள்ளுதல்)
அந்த பாதுகைகளை தலையால் தாங்கியவனாக, மகிழ்ச்சியுடன் பரதன், சத்ருக்னனுடன் ரதத்தில் ஏறினான். வசிஷ்டரும், வாம தேவரும், ஜாபாலியும், த்ருடவ்ரதனான (உறுதியான கொள்கையுடையவனான) பரதனுக்கு முன்னால் சென்றனர். மற்ற மந்திரிகளும் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு செல்வோரும் சென்றனர். கிழக்கு முகமாக நடந்து மந்தாகினியை அடைந்தனர். சித்ர கூட மலையை பிரதக்ஷிணமாக கடந்து சென்றார்கள். அந்த பெரிய மலையில் பல விதமான தாதுக்கள், ஆயிரக் கணக்காக இருக்கக் கண்டனர். அழகிய பல இடங்களையும் கண்டு ரசித்தவாறு சைன்யத்துடன் பரதன் சென்றான். பரத்வாஜரின் ஆசிரமத்தை சற்றுத் தொலைவிலிருந்து கண்டு கொண்ட பரதன், அந்த ஆசிரமத்தை அடைந்து அவரை பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். சந்தோஷம் அடைந்த பரத்வாஜர் சொன்னார். குல நந்தனா, உன் வேலை முடிந்ததா? ராமனைக் கண்டாயா? என்று கேட்டார். சகோதர பாசம் மிகுந்த பரதன் அவரது கேள்விக்குப் பதில் சொன்னான். நானும் குருவுமாக மிகவும் வேண்டிக் கொண்ட பின்னும், வசிஷ்டரிடம் ராகவன், தந்தையின் வாக்கைத் தான் காப்பாற்றுவேன், தீர்மானமாக பதினான்கு வருஷங்கள் காட்டில் வசிப்பதாக தந்தைக்கு கொடுத்த வாக்கை மீற மாட்டேன். இவ்வாறு சொல்லவும் வசிஷ்டர் சொன்னார். சொல்லும் பொருளும் அறிந்தவர், அழகாக வார்த்தைகளை கோர்த்து நயமாகச் சொன்னார். இந்த தங்கத்தால் அலங்கரிக்கப் பட்ட பாதுகைகளைக் கொடு. இவை உன் சார்பில் அயோத்தியாவின் யோக க்ஷேமங்களை நிர்வகிக்கும், என்றார். வசிஷ்டர் இவ்வாறு சொல்லவும், ராகவன் கிழக்கு முகமாக நின்று பாதுகையின் மேல் ஏறி நின்று, என் ராஜ்யத்திற்கு கொடுத்தார். ராமன் விடை கொடுத்து அனுப்பியதால் திரும்ப அயோத்யா நகரம் செல்கிறேன். சுபமான பாதுகைகளை எடுத்துக் கொண்டு செல்கிறேன். பரதன் சொல்லி முடித்தவுடன், பரத்வாஜர், மிகவும் மகிழ்ந்து, அதை விடவும் சுபமான செய்தியைச் சொன்னார். இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ராமனுடைய சீலத்தையும், நடத்தையையும் பார்க்கும் பொழுது. உனக்குப் பெரியவன், நீ அவன் வழிப்படி நடந்து கொள். கீழ் நோக்கி பாயும் நீரைப் போல நெடிதுயர்ந்த தோள்களை உடைய அந்த ராமன், தன் தந்தையின் வாக்கை காப்பாற்ற, நீ தர்மத்தை அறிந்தவனாக, தர்மத்தையே கடை பிடிப்பவனாக-இப்படி இரண்டு புதல்வர்களைப் பெற்ற தசரதன் பாக்யவான். இவ்வாறு பரத்வாஜர் சொல்லி ஆசிர்வதித்தபின், அவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு பரதன், அவரை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்த பின் தன் வழி நடந்தான். வாகனங்களிலும், சக்கர வண்டிகளிலும், குதிரைகள் யானைகளும் கொண்ட சேனை, அணி வகுத்து விஸ்தீர்ணமாக பரதனைப் பின் தொடர்ந்து சென்றது. அலைகள் நிறைந்த யமுனை நதியைக் கடந்து, சுபமான ஜலத்தையுடைய கங்கையைக் கண்டனர். அந்த புண்ய நதியை, பந்துக்களோடு கடந்து சென்று, பரதன் ச்ருங்கிபேர புரம் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தான். ச்ருங்கிபேர புரத்திலிருந்து அயோத்தியைக் கண்டான். தந்தையும், தமையனும் இல்லாத அயோத்தி மாநகரத்தைக் கண்டு பரதன், சுமந்திரரைப் பார்த்து சொன்னான். சாரதே, அயோத்தியைப் பார். தூங்கி வழிகிறது. எந்த வித கோலாகலமோ சப்தமோ, ஆனந்தமோ அழகோ இல்லாமல் வாடித் தெரிகிறது என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பாது3கா க்3ரஹணம் என்ற நூற்று பதிமூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 114 (191) அயோத்யா ப்ரவேச: (அயோத்தியில் நுழைதல்)
ரதங்களின் கம்பீரமான, இனிய நாதம் மேலெழ, பரதன் அயோத்தியில் பிரவேசித்தான். பூனைகளும், யானைகளும் (சோம்பேறித்தனமாக) நடமாடிக் கொண்டிருக்க,
மனிதர்களும், யானைகளுடன் (சோம்பலுடன்) உற்சாகமின்றித் தெரிந்தனர். இருட்டு சூழ்ந்து ஒளி யில்லாத இரவு நேரம் போலவும், ராகு சத்ருவின் பிரியமான மனைவி, லக்ஷ்மீகரமாக இருந்தவளை, புதிதாக முளைத்த கிரஹத்தினால் பீடிக்கப் பட்ட ரோஹிணையைப் போலவும், காற்றினால் வற்றிய ஜலத்தையுடைய நீர் நிலை போலவும் வெய்யிலில் வாடும் பறவை போலவும், மலையிலிருந்து விழும் சிறிய அருவி, வற்றி, மெல்லிய கோடாக விழுவது போலவும், யாக குண்டத்திலிருந்து அக்னி புகையின்றி வருவது போலவும், ஹவிஸ் போடப்படும் பொழுது மட்டும் கீற்றாகத் தோன்றி மறைவது போலவும் கவசத்தில் அடிபட்டு கலைந்தது போலவும், அடிபட்ட யானை, ரத த்வஜம் இவை போலவும், பெரும் போரில் தோற்றுத் திரும்பிய படைபோலவும், நுரையுடனும், பெரும் இரைச்சலோடும் சமுத்திரத்தில் உண்டான அலைகள், அமைதியான காற்றினால் அடக்கப் பட்டு, சத்தம் இன்றி அடிப்பது போலவும், தகுதியான யாகம் செய்பவர்கள் விட்டுச் சென்ற பின், வேதியில் அமைதி காப்பது போலவும், ஆண் பசு விட்டுச் சென்று விட்டதால், வருந்தும் பெண் பசு, வாட்டத்துடன் பசுக்கள் கூட்டத்தில் இருந்தும் புத்தம் புதிய புல்லை மேய உற்சாகமின்றி நிற்பது போலவும், ஒளி வீசும் மணிகள், நளினமாக, அதே சமயம் உத்தமமான பிரகாசத்துடன் கூடிய மணிகளை, ஜாதி அறிந்து கோத்தவைகளை, நீக்கி விட்ட முத்து மாலை போலவும், புண்யம் குறைந்ததால் அவசரமாக தன் இடத்திலிருந்து வெளி யேறிய பூமியைப் போலவும், ஆகாயத்திலிருந்து நழுவி விழுந்த நக்ஷத்திரம் தன் பிரகாசத்தை இழந்தது போலவும், வஸந்த கால முடிவில், பூக்கள் நிறைந்து, வண்டுகள் மொய்க்க விளங்கிய காட்டுக் கொடி, காட்டுத் தீயினால் வாடி வதங்கி இருந்தது போலவும், வேத கோஷங்கள் இன்றி, கடை வீதிகளின் கோலாகலம் இன்றி, சந்திரனும், நக்ஷத்திரங்களும் மறைக்கப் பட்ட நிலையில், மேகங்கள் சூழ்ந்த ஆகாயம் போலவும், பல விதமான மது வகைகள் நிரம்பி இருக்கும் இடங்கள், பான பூமி எனப்படும் குடிக்கும் இடங்கள், குடிப்பவர்கள் விட்டுச் சென்றதால், தன் களையிழந்து கிடப்பது போலவும், தண்ணீர் பந்தல்கள் பாத்திரங்கள் உடைந்து உபயோகித்து தீர்ந்த தண்ணீர் பின் நிரப்பப் படாமல் கிடப்பது போலவும், வில்லின் நாண், அதன் இடத்திலிருந்து விடுபட்டு பூமியில் விழுந்து கிடப்பது போலவும், இவை ஒருசமயம் வெகுவேகமாக செல்லக் கூடிய அம்புகளுடன், அம்பு நிறைந்த தூணிகளுடனும், கயிறுகளுடனும் இருந்தவையே, குதிரை மேல் சவாரி செய்தபடி, சுமந்து வந்து கொண்டிருந்த பாத்திரங்களை தடாலென்று கை நழுவி கீழே போட்டது போலவும், துர்பலமான குழந்தைகளைப் போலவும், நீர் வற்றி, மீன்களும், ஆமைகளும் நிரம்பி, கரைகள் இடிபட்டுக் கிடக்கும் கிணறுகள் போலவும், உத்பல புஷ்பங்களை பறித்துப் போட்டது போலவும், சந்தோஷம் இல்லாத மனிதன் தன் உடலில் வாசனை திரவியங்களைக் கொண்டு பூசிக் கொள்ள மறுப்பது போலவும், சோகத்தின் வெப்பத்தினால் துவண்டு போய் அலங்காரங்களை விலக்கிய உடல் போலவும், மழைக் காலத்தில் ஆகாயத்தில் தோன்றிய சூரியனுடைய வெளிச்சத்தை, கரு மேகங்கள் சூழ்ந்து மூடிக் கொண்டது போலவும், ரதத்தில் இருந்த ஸ்ரீமானான தசரத குமாரன், பரதன் சாரதி சுமந்திரனைப் பார்த்துச் சொன்னான். சிறந்த ரதத்தை ஓட்டிச் செல்லும் சாரதியே, ஏன் இன்று கம்பீரமான பாடல் ஒலிகள் கேட்கவில்லை.? எப்பொழுதும் அயோத்தியில், கீதங்களும், வாத்ய இசை ஒலிகளும், சப்தம் நிறைந்திருக்குமே. பூ மாலைகளின் மணமும். மத்த கஜங்களின் முகத்திலிருந்து வரும் நெடியும் காணப் படவில்லையே. காற்றில் அகரு வாசனை மிதந்து வருமே. வாகனங்கள் போகும் கோஷமும்,
குதிரைகளின் கனைக்கும் இனிய ஓசையும் கேட்க வில்லையே. ராமர் விட்டுச் சென்றபின், இந்த நகரத்தில் மதம் பிடித்த யானையின் பிளிறலும், ரதங்கள் ஓடும் ஓசையும் கூட நின்று விட்டன போலும். இவை எதுவுமே கேட்கவில்லையே. இளம் பெண்கள் சந்தனம், அகரு போன்ற வாசனை திரவியங்களை தெளித்து புத்தம் புதிய மாலைகளை, ராமன் விட்டுச் சென்றபின் அணிவதே இல்லை போலும். வித விதமான ஆடை ஆபரணம் அணிந்து ஜனங்கள் யாத்திரை போவதும் நின்று விட்டதா? உற்சவங்கள் எதுவுமே இல்லையே. ராமன் விட்டுப் போனதால், ஏற்பட்ட சோகமே இந்த ஊரில் இன்றும் சூழ்ந்து நிற்கிறதோ. என் சகோதரன் கூடவே இந்த நகரத்தின் சோபையும் போய் விட்டதா. இது அயோத்தி போலவே இல்லை. என் சகோதரன் எப்பொழுது திரும்பி வந்து மிகப் பெரும் விழா போல வந்து அயோத்தியில் மகிழ்ச்சியைத் திரும்பக் கொண்டு வரப் போகிறானோ. கோடை மழை போல அது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். நன்றாக அலங்கரித்துக் கொண்டு இளம் பெண்களும், நிமிர்ந்து நடக்கும் ஆண்களும், அயோத்தியின் பெரும் வீதிகளில் நடந்து, நிறைந்து, கண் கொள்ளா காட்சியாக அப்பொழுது தான் விளங்கும். இவ்வாறு பலவிதமாக புலம்பிக் கொண்டே தந்தையின் வாசஸ்தலமான பவனம் வந்து சேர்ந்தான். சிங்கம் விட்டுச் சென்ற குகை போல, நரேந்திரனான தசரதன் இல்லாத வீடு, வெறிச்சென்றிருந்தது. சூரியனின் வெளிச்சமே வராத நாள் போல ஒளி யின்றி இருந்த அந்த:புரம் மற்ற இடங்கள் இவற்றைப் பார்த்து பரதன் துக்கத்துடன் கண்ணீர் பெருக்கினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் அயோத்யா பிரவேசோ என்ற நூற்று பதிநான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 115 (192) நந்தி3க்3ராம வாச: (நந்திகிராமத்தில் வசித்தல்)
தாய்மார்களை வீட்டில் விட்டு விட்டு, பரதன் தன் குரு ஜனங்களைப் பார்த்துச் சொன்னான். நான் நந்தி கிராமம் செல்கிறேன். உங்கள் அனைவரிடமும் விடை பெற்றுக் கொள்கிறேன். ராமன் இல்லாமல் இங்கு இருப்பதை விட, அங்கு வசிப்பது மேலாகும். தந்தையும் மேலுலகம் சென்று, தமையனான ராமனும் வனத்தில் இருக்கும்பொழுது நான் அவர் திரும்பி வருவதை எதிர் பார்த்து காத்திருக்கிறேன். உண்மையில் அவர் தான் ராஜா. புரோஹிதரான வசிஷ்டரும், மற்ற மந்திரிகளும் பரதன் சொன்னதைக் கேட்டு, பரதா, நீ சொல்வது சரியே. உன் நிலைக்கு பொருத்தமானதே. நாங்களும் உன்னை சிலாகிக்கிறோம். உன் சகோதர பாசம் தெரிந்ததே. அப்படியிருக்க நீ இங்கு இருக்க விரும்பாததில் வியப்பில்லை. மந்திரிகளும் ஒத்துக் கொண்டு அனுமதி தந்தபின், சுமந்திரரைப் பார்த்து ரதத்தை ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டு, தாயார் அனைவரையும் வணங்கி எழுந்து வந்து ரதத்தில் ஏறினான். சத்ருக்னனும் அவனைத் தொடர்ந்து ரதத்தில் ஏறினான். இருவரும் மந்திரிகள் புடை சூழ, கிளம்பினர். முன்னால் வசிஷ்டர் முதலான பிராம்மணர்கள் சென்றனர். கிழக்கு முகமாகச் சென்று நந்திகிராமம் என்ற இடத்தை அடைந்தனர். சொல்லாமலேயே படை வீரர்களும், யானை, குதிரை, ரதங்களும் பரதனை பின் தொடர்ந்தன. ஊர் ஜனங்களும் பரதன் பின்னால் சென்றனர். பாதுகையை தலையில் தாங்கியவாறு சகோதர பாசம் மிகுந்த பரதன், பரிவாரங்களோடு நந்தி கிராமம் சென்றடைந்தான். நந்தி கிராமம் சென்றடைந்தவுடன் குரு ஜனங்களைப் பார்த்து பரதன் இந்த ராஜ்யம் என் தமையனால் பாதுகாத்து வைத்துக் கொள்ளச் சொல்லி (ந்யாசமாக) தரப் பட்டுள்ளது. இந்த தங்கத்தால் அலங்கரிக்கப் பட்ட பாதுகைகளே நாட்டின் க்ஷேமத்தை நிர்வகிக்கப் போகின்றன. பாதுகையை நல்ல ஆசனத்தில் மரியாதையுடன் வைத்து விட்டு பரதன் ஊர் ஜனங்களிடமும் சொன்னான். இந்த பாதுகைகள் அண்ணலின் பாதங்கள். இதற்கு சீக்கிரம் குடை விரியுங்கள். சாமரம் வீசுங்கள். என் தமையனின் தர்மம் இந்த பாதுகையில் நிலை நிறுத்தப் பட்டுள்ளது. நம் மீது உள்ள கருணையால் அவர் என்னிடம் இதை (சன் ந்யாசமாக- அடைக்கலப் பொருள்) பாதுகாகாத்து வைக்கச் சொல்லி தந்திருக்கிறார். அவர் திரும்பி வரும் வரை இதை பாதுகாப்பேன். ராமர் வந்தவுடன், அவர் பாதங்களில் சேர்த்து விட்டு, பாதுகையுடன் கூடிய அவர் பாதங்களை கண்டு மகிழ்வேன். அது வரை இது என் பொறுப்பில், எனக்கு சகாயமாக விளங்கும். ராஜ்ய பாரத்தை இந்த பாதுகைகளில் சமர்ப்பித்து நான் என் முன்னோர்கள் ஆண்ட வகையில் ராஜ்யத்தை ஆளுவேன். இதை விட நான்கு பங்கு மகிழ்ச்சி ஏற்படக் கூடிய நாள், என்றைக்கு அண்ணல் ராமன் திரும்பி வந்து முடி சூட்டிக்கொண்டு, ஜனங்கள் உற்சாகமாக ஆரவாரிக்க ராஜ்ய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாரோ, அதுவே ஆகும். அன்று என் மகிழ்ச்சியும், புகழும் சொல்லத் தரமாக இருக்காது. இவ்வாறு பலவாறு புலம்பியவாறு பரதன் நந்திகிராமத்தில், பாதுகையின் ராஜ்யத்தை ஸ்தாபித்தான். மந்திரி வர்கங்கள், ஆமோதித்து உடன் இருந்தனர். பிரபுவான பரதன், ஜடை முடி தரித்து முனி வேஷத்தையே ஏற்றுக் கொண்டு, நந்தி கிராமத்தில் வசித்தான். வீரனான அவனை சார்ந்து சைன்யமும் அங்கேயே இருந்தது. ராமர் வரவை எதிர் நோக்கி காத்திருக்கலாயினர். பிரதிக்ஞையை மனதில் இறுத்தி தனக்கு அவர் இட்ட கட்டளையை சரிவர செய்து வருபவனாக., பாதுகைக்கு அபிஷேகம் செய்து வைத்து, நந்தி கிராமத்தில் வசித்தான். ராஜ மரியாதைகளான சத்ர சாமரங்கள் பாதுகைக்கே செய்யப் பட்டன. தானே இவற்றை செய்தான். ராஜ்ய சாஸனத்தை முதலில் பாதுகையிடம் விண்ணப்பித்துக் கொள்வான். அதன் பின் அதன் ஆளுமைக்குட்பட்டு, ராஜ்யத்தை பரிபாலித்தான். எந்த வேலையானாலும் பரிசுப் பொருட்கள், மற்றவை வந்து சேர்ந்தாலும் முதலில் பாதுகைக்கு சமர்ப்பித்துவிட்டு, பின் செய்ய வேண்டியதை பரதன் தானே செய்து வந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் நந்தி கிராம நிவாஸோ என்ற நூற்று பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 116 (193) க2ர விப்ரகரண கத2னம் (க2ர என்ற அரக்கனின் தொல்லைப் பற்றி சொல்லுதல்)
பரதன் திரும்பிச் சென்ற பின், தபோவனத்தில் ராமர், தபஸ்வி ஜனங்களுடைய சுக துக்கங்களைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். சித்ர கூடத்துக்கு முன்னால் இருந்த தவம் செய்யும் முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்து வந்தவர்கள், ராமரிடம் வந்து ஏதோ சொல்ல விரும்பியவர்களாகத் தெரிந்தனர். கண்களாலும், புருவங்களாலும் சமிக்ஞை செய்து கொண்டு, ராமரை நம்பவும் முடியாமல் தங்களுக்குள் மெதுவாக முனு முனுக்கும் குரலில் பேசிக் கொண்டார்கள். இவர்களுடைய ஆவல் ததும்பும் முகங்களைப் பார்த்து தன்னிடம் ஏதோ அவ நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதையும் அறிந்து, ராமர், அவர்கள் தலைவர் போலத் தோன்றிய ரிஷியிடம் கை கூப்பி வணங்கியவாறு பின் வருமாறு சொன்னார்.
ப4கவன், என்னிடம் என்ன தவறு என்று தபஸ்வி ஜனங்கள் பேசத் தயங்குகிறார்கள். என் நடத்தையில் உங்களுக்கு என்ன சந்தேகம்? என்னிடமோ, என் தம்பி லக்ஷ்மணனிடமோ, கவனக் குறைவினால் ஏதாவது உங்கள் வழக்கத்துக்கு மாறாக செய்யப் பட்டதா? வணங்கத் தக்க உங்களிடம், என் மனைவி சீதை தான் தவறாக நடந்து கொண்டாளா? எனக்கு பணிவிடை செய்வதில் அவள் என்றும் குறைவு வைத்ததில்லையே என்றார். அந்த ரிஷி, தவம் செய்து நரைத்த முடியும், அதை விட முதிர்ந்த அனுபவமும் உடையவர், அழுது விடுவாரோ என்ற குரலில், ராமரைப் பார்த்துச் சொன்னார். ஜீவன்களிடம் தயை உடைய ராமனே, கல்யாண குணங்கள் நிரம்பிய உன் பத்னி, தான் செய்ய வேண்டியவற்றை செவ்வனே செய்தாள். ஒரு குறையும் இல்லை. தபஸ்விகளிடம், முக்கியமாக அவள் சரியாகத்தான் செய்தாள். தபஸ்விகள் உன்னிடம் தான் எதோ கேட்க விரும்புகின்றனர். ராக்ஷஸர்கள் தொல்லை தருவதைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ராவணனின் இளைய சகோதரன் க2ரன் என்ற பெயருடைய ராக்ஷஸன் இங்கு வசிக்கிறான். ஜனஸ்தானத்திலிருந்து தபஸ்வி ஜனங்கள் அனைவரையும் துரத்தியடித்து, கர்வம் கொண்டவனாக, பூவுலகை ஜயித்தவனாக, கொடுங்கோலனாக, மனிதர்களை அழிக்கும் யமனாக பாபி, எதற்கும் தயங்காதவனாக, குழந்தாய், உன்னையும் விட மாட்டான். நீ அமைதியாக இருந்தாலும் பொறுக்க மாட்டான். நீ இந்த ஆசிரமத்திற்கு வந்ததிலிருந்து ராக்ஷஸர்கள் இங்குள்ள முனிவர்களைத் துன்புறுத்துகின்றனர். பயங்கரமாக, க்ரூரமாக, நடுங்கச் செய்யும் கோர ரூபங்களைக் காட்டி எங்களை பயமுறுத்துகின்றனர். பல விதமான உருவங்கள் எடுத்துக் கொண்டு தாறு மாறாக ரூபங்களுடன் எதிரில் வருகின்றனர். அசுத்தங்களையும், தபஸ்விகள் தொடக் கூட விரும்பாத பொருட்களை அவர்கள் மேல் எறிகின்றனர். சிலரை உடனே கொல்கின்றனர். சிலரை மாயா ஜாலத்துடன் எதிரில் தெரியாமல் நின்று அடிக்கின்றனர். சிறு பிள்ளைத்தனமாக, மூடர்கள், தபஸ்விகளை அவர்கள் ஆசிரமத்திலிருந்து அவர்கள் அறியாமல் தூக்கிச் சென்று மகிழ்கிறார்கள். யாகக் கரண்டிகளை வீசி எறிகிறார்கள். பாத்திரங்களைப் போட்டு உடைக்கின்றனர். அக்னியை அணைக்கின்றனர். யாகம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே கலசங்களை கவிழ்த்து விடுகின்றனர். துராத்மாக்களான அவர்களால் துன்புறுத்தப் பட்ட, தாங்க மாட்டாமல் பலர் ஆசிரமத்தை துறந்து ஓடி விட்டனர். என்னையும் வேறு இடம் செல்ல இன்று வெகுவாக தூண்டுகின்றனர். அதையே தான் இந்த ராக்ஷஸர்களும் விரும்புகிறார்கள். சரீரத்தில் படும் படி துன்புறுத்தினால் நாங்களாக ஆசிரமத்தை விட்டு ஓடி விடுவோம் என்று எதிர்பார்த்து தான் அந்த ராக்ஷஸர்களும் ஹிம்சை செய்கிறார்கள். பழமையான ஆசிரமம் இது. அருகிலேயே நல்ல பழ. மூலங்களைக் கொண்ட காடு. கூட்டங்களாக வெகு நாட்களாக வசித்து வருகிறோம். அந்த க2ரன் உன்னிடமும் ஏதாவது தவறுதலாக நடந்து கொள்வான். நாங்கள் கிளம்புகிறோம். எங்களுடனேயே கிளம்பி வா. மனைவியுடன் கூட நீ இருக்கும்பொழுது சந்தேகம் வருவது இயல்பே. சக்திமானாக இருந்தாலும் இந்த இடம் நல்லவர்கள் வசிக்கத் தகுந்தது அல்ல. இவ்வாறு சொன்ன தபஸ்வியைப் பார்த்து, ராஜ குமாரனான ராமன் உடனே பதில் தகுந்தபடி சொல்ல முடியாமல் தவித்தான். அவர்களை உடனே எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் திகைத்தான். ராகவனை வாழ்த்தி விடை பெற்றுக் கொண்டு குலபதியான அந்த ரிஷி தன் இனத்தாருடன் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார். குலபதியான அந்த ரிஷியை வணங்கி, ராமரும் அவர்களுக்கு சமாதானமாக பேசி அந்த தேசத்தை விட்டுப் போகாமல் இருக்கச் சொல்லி, அவர்களும் சம்மதித்தனர், மன சமாதானம் அடைந்தனர். அவர்கள் மகிழ்ச்சியாக ஆசிர்வாதம் செய்து உபதேசங்கள் செய்தனர். இதன் பின் ராமரும் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார். ரிஷி ஜனங்கள் மகிழ்ச்சியுடன் இல்லாத அந்த ஆசிரமத்தில் க்ஷணம் கூட இருக்கப் பிடிக்காமல் ராமனும் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டார். அந்த தபஸ்விகளும் ராமனைத் தொடர்ந்து சென்றனர். பழமையான ஆசாரங்களை திடமாக கடை பிடித்து நடந்து வந்த அந்த தபஸ்விகள், ராகவனையே எப்பொழுதும் பின் பற்றுபவர்களாக ஆனார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் க2ர விப்ரகரண கத2னம் என்ற நூற்று பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 117 (194) சீதா பாதிவ்ரத்ய ப்ரசம்ஸா
தபஸ்விகள் விட்டுச் சென்ற பின், ராமர் யோசித்தார். அங்கு தானும் வசிப்பது சரியல்ல என்று எண்ணினார். இங்கு பரதன் வந்து நம்மை பார்த்தான். தாய்மார்களும் வந்தனர். திரும்பத் திரும்ப அவர்களைச் சந்தித்த நினைவு தொடர்ந்து வரும். ஊர் ஜனங்களும் வந்து பார்த்தனர். பரதனுடன் வந்த படை வீரர்களும், குதிரைகளும், யானைகளும் மலம் கழித்தும் அந்த இடத்தை மிகவும் அதிகமாக நாசமாக்கி விட்டனர். அதனால் வேறு இடம் செல்வோம் என்று தீர்மானித்த ராகவன், லக்ஷ்மணனுடன் சீதையும் தொடர புறப்பட்டார். அத்ரி மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்து அவரை வணங்கினார். தன் புத்திரர்களைக் கண்டது போல மகிழ்ச்சியுடன் அவரும் ராமர், லக்ஷ்மணன், சீதை இவர்களை வரவேற்றார். தானே அதிதி சத்காரம் செய்ய கட்டளையிட்டு விட்டு வந்து எல்லா வசதிகளும் குறைவற செய்து தர முனைந்தார். லக்ஷ்மணனையும், சீதையையும் உபசரித்தார். வயது முதிர்ந்த தன் மனைவியை அழைத்து, தர்மம் அறிந்தவரான அந்த முனிவர், உலக நன்மைக்காக பாடு படும் புண்யாத்மாவான அத்ரி மகரிஷி அனசூயையிடம், வைதேஹியை அழைத்துச் செல்ல பணித்தார். சிறந்த தபஸ்வியும், பண்புடையவளுமான அனசூயை என்ற அந்த மூதாட்டியை ராமனுக்கு பரிச்சயம் செய்து வைத்தார். உலகம் ஒரு சமயம் மழை இல்லாமல் பத்து ஆயிரம் வருஷங்கள் தகித்துக் கொண்டிருந்த பொழுது இவள் உக்ரமான தவம் செய்து நியமங்களை கடை பிடித்து பத்தாயிரம் ஆண்டுகள் தவம் செய்தாள். பழங்களையும், உணவுக்கான வகைகளையும் சிருஷ்டித்தாள். கங்கையை வரவழைத்து பெருகச் செய்தாள். அந்த அனசூயை விரத ஸ்னானம் செய்து தடைகளை நீக்கினாள். தேவ கார்யத்திற்காக ஓர் இரவு பத்து இரவுகளாக நீடிக்கும்படி செய்தாள். இவள் உனக்கு தாய்க்கு சமமானவள். மாசற்றவனே ராமா, உலகமே வணங்கத்தக்க இந்த மூதாட்டியை கோபமே இல்லாதவள் என்று புகழ் பெற்ற இவளை வைதேஹி தெரிந்து கொள்ளட்டும். தன் செயல்களாலேயே இவள் உலகில் அனசூயா என்று புகழ் பெற்றாள். இவ்வாறு ரிஷி சொன்னவுடன் அப்படியே ஆகட்டும் என்று ராமர் சீதையைப் பார்த்து ராஜகுமாரி, இந்த ரிஷி சொன்னதைக் கேட்டாய் அல்லவா? நம் நன்மைக்காகத்தான் சொல்கிறார். சீக்கிரம் தபஸ்வினியான அனசூயையுடன் போ. இதைக் கேட்டவுடன் சீதையும் அத்ரி பத்னியை பின் தொடர்ந்து சென்றாள். வயது முதிர்ந்து, உடல் தளர்ந்து, தலை நரைத்து இருந்த அந்த மூதாட்டியை, பெருங்காற்றில் வாழை மரம் ஆடுவது போல நடுங்கும் தேகமுடையவளை, பதிவிரதை என்று புகழ் பெற்ற அனசூயையை வணங்கி தன் பெயர் சொல்லி அபிவாதனம் செய்தாள். கை கூப்பி வணங்கியவளாக அந்த மூதாட்டியிடம் குசலம் உடல் நலம் விசாரித்தாள். அவளும் சீதையைப் பார்த்து சந்தோஷத்துடன் சீதே, நல்ல காலம், நீ தர்மம் அறிந்தவளாக, அதன் வழியில் நடக்கிறாய். பா4க்யசாலி. ப3ந்து4 ஜனங்களை விட்டு, செல்வ செழிப்பையும், சௌகர்யங்களையும் துறந்து, பா4மினீ, காட்டில் வசிக்க வந்த ராமனை பின் தொடர்ந்து வந்திருக்கிறாய். நகரத்தில் இருந்தாலும் சரி, வனத்தில் இருந்தாலும், சுபமான செல்வத்துடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எந்த பெண்ணுக்கு கணவனே பிரியமானவனோ, அந்த பெண்கள் மிக நல்ல கதியடைவார்கள். நற்குடியில் பிறந்த பெண்களுக்கு கணவன் எப்படி இருந்தாலும், கெட்ட நடத்தை உடையவனேயானாலும், காமாதுரனாக இருந்தாலும், செல்வம் இழந்தவனாக இருந்தாலும், கணவனே தெய்வமாகும். இதைவிட சிறந்த வேறொரு உறவை நான் கண்டதில்லை. அழிவில்லாத தவம் செய்து பெரும் பலனுக்கு இணையான தர்மம் இது. அசத்தான பெண்கள் இதன் பெருமைகளை அறியாமல் குறை கூறுவர். காம வசமாக கணவனை தெய்வமாக கொண்டாடத் தெரியாத ஸ்த்ரீகள், பெரும் அபகீர்த்தியையும், தர்மத்தை விட்டு விலகி நாசத்தையும் அடைவர். மைதிலி, அந்த ஸ்த்ரீகள் செய்யக் கூடாததை செய்து மீள முடியாமல் தவிப்பர். உன் போன்ற குணம் உள்ள பெண்கள், உலக வழக்கை அறிந்து தர்மம் செய்வதன் பலனாக ஸ்வர்கத்தில் சஞ்சரிப்பர். நீ இவ்வாறு பதியைத் தொடர்ந்து வந்து பதிவ்ரதா ஸ்த்ரீகளின் நடத்தையை அனுசரித்து கணவனின் தர்மத்துக்கு உதவியாக விளங்கி சஹதர்மசாரிணீயாக அந்த பதத்துக்கு பொருளாக விளங்குவாயாக. இதன் பயனாக பெரும் புகழையும், தர்மத்தையும் அடைவாய்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சீதா பாதிவ்ரத்ய ப்ரசம்ஸனம் என்ற நூற்று பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 118 (195) தி3வ்யாலங்கார க்3ரஹணம் (உயர்ந்த ஆபரணங்களை பெற்றுக் கொள்ளுதல்)
தானும் அசூயை இல்லாதவள், (சீதை) அனசூயா என்ற அந்த மூதாட்டியை பூஜித்து பதில் சொன்னாள். சிறந்த பண்புடைய தங்கள் இவ்வாறு சொல்வதில் ஆச்சர்யம் இல்லை. இதை நானும் அறிவேன். பெண்களுக்கு கணவன் தான் குரு. என் கணவன் இன்று செல்வம் இன்றி இருந்தாலும், வித்தியாசமின்றி நான் உபசாரம் செய்து பணிவிடைகள் செய்து வருவது தான் முறை என்பதையும் அறிவேன். மேலும் என் கணவன் சிலாக்யமான குணங்களை உடையவன். தயையும் கருணையும் உடையவன். புலனடக்கமும், அசையாத அன்பும் உடையவன். தர்மாத்மா. தாய் போலும், தந்தை போலும் பாசத்தைக் காட்டுபவன். கௌசல்யை தன் தாயார் என்பதால் அவளிடம் எப்படி பரிவுடன் நடந்து கொள்வாரோ, அதே போல அரசனின் மற்ற பத்னிகளிடமும் பரிவும் அன்பும் கொண்டவர். அரசன் ஒரே ஒரு முறை பார்த்த ஸ்த்ரீ தான் என்றாலும், அவளையும் தாயாகவே பாவிக்கும் குணம், அரசனிடத்தில் உள்ள வாதல்யத்தால், இவரிடம் தானாக அமைந்து விட்டது. இந்த பயங்கரமான ஜன நடமாட்டமில்லாத, காட்டிற்கு வந்தபின் கூட என் மாமனார் எனக்கு போதித்தது மனதில் நினைவு இருக்கிறது. பாணிக்ரஹணம் செய்து விவாகம் நடந்த சமயம், அக்னி சாக்ஷியாக என் தாயார் எனக்கு புத்தி சொன்ன வாக்யமும் மனதில் பதிந்திருக்கிறது. அந்த வாக்யங்களையே, தாயே, தர்மசாரிணி, தங்களை சந்தித்ததில் திரும்ப புதியதாக சொல்லியிருக்கிறீர்கள். நற்குல பெண்டிருக்கு பதிக்கு சேவை செய்வதை விட பெரிய தர்மம் இல்லை என்பதை வலியுறுத்தி சொன்னீர்கள். பதிக்கு பணிவிடை செய்து சாவித்திரி ஸ்வர்கம் சென்றாள். அதே போல பதி சுசுருஷை பணிவிடை செய்தே தாங்களும் தெய்வத் தன்மை பெற்று விளங்குகிறீர்கள். தேவ லோகம் சென்றாலும் பதி தான் தேவதை. சந்திரனை விட்டுப் பிரிந்து ரோஹிணியைக் காணவே முடிவதில்லை. இது போலத்தான் சிறந்த பெண்கள் தங்கள் கணவனிடத்தில் அசையாத அன்பும் பரிவும் கொண்டு, தங்கள் புண்ய கர்மாவின் பலனாக தேவலோகத்தில் சிறந்து விளங்குகின்றனர். இப்படி சொன்ன சீதையை, அனசூயா மகிழ்ச்சியுடன் அணைத்து உச்சி முகர்ந்து கொண்டாடினாள். பல விதமான நியமங்கள், விரதங்களை அனுஷ்டித்து சேர்த்த தவ பலம் எனக்கு நிறைய உண்டு மென்னகை புரிபவளே, சீதே, அவை அனைத்தையும் உனக்கு கொடுக்கிறேன். உன் சொல், நீ பேசுவது இவை என் மனதிற்கு உகந்ததாகவும், பிடித்தும் இருக்கிறது. உன்னிடத்தில் எனக்கு அன்பும் பெருகுகிறது. என்ன வேண்டும் சொல்? இதற்கு பதிலாக மெல்ல புன்னகைத்தபடி, சீதை (க்ருதம்-செய்தாகிவிட்டது) நீங்கள் நிறைய கொடுத்தாயிற்றே என்றாள். தவ வலிமைகளை உடைய அனசூயாவைப் பார்த்து. இதனால் அன்பும் அவளிடம் ஒட்டுதலும் அதிகமாக, அந்த மூதாட்டி,சீதே, உனக்கு மகிழ்ச்சியும் வெற்றியும் தரும் விதமாக என்ன செய்வேன் என்று யோசித்து, இதோ இந்த தெய்வீகமான மாலை, வஸ்திரங்கள், ஆபரணங்கள், அங்க ராகம் எனப்படும் உடலில் பூசிக் கொள்ளும் பொருட்களையும், அலங்கார பொருட்களாக அனுலேபனம் எனும் வாசனை திரவியங்களையும், கொடுத்தாள். இவை மிக உயர்ந்தவை சீதா, உன் உடலை அழகு செய்யட்டும். இவை நித்யம் மங்களகரமாக விளங்கட்டும். இந்த அங்க ராகங்களை பூசிக் கொண்டு, உன் கணவனை லக்ஷ்மி தேவி, விஷ்ணுவை மகிழ்விப்பது போல மகிழ்விப்பாய். அந்த அலங்கார பொருட்கள், வஸ்திரம், ஆபரணங்கள், மாலை இவற்றை சீதை மிகவும் அன்புடன் வாங்கிக் கொண்டாள். கைகளை கூப்பி தவத்தில் சிறந்த அந்த மூதாட்டியை வணங்கினாள். அவளை அருகில் அமர்த்திக் கொண்டு அனசூயா கேட்டாள். இந்த ராமனை, ஸ்வயம் வரத்தில் அடைந்ததாகச் சொன்னார்களே, மைதிலி, அந்த சம்பவத்தை விவரமாகச் சொல்லு என்றாள். ஒன்று விடாமல் எல்லா விவரங்களையும் விஸ்தாரமாகச் சொல் என்று வினவ, சீதை சொல்லலானாள். என் தந்தை மிதி2லாதிபன், சிறந்த நீதிமான், ஜனகன் என்று பெயர். க்ஷத்திரிய தர்மத்தை அறிந்து நியாயமாக நாட்டை ஆண்டு வந்தார், வருகிறார். அவரது ஏர் கலப்பையில் பூமியில் நான் கிடைத்தேன். பூமியை பிளந்து கொண்டு அவருக்கு மகளாகத் தோன்றினேன். என்னைக் கண்டு அவர் ஆச்சர்யம் அடைந்தார். மண் மூடிக் கிடந்த என் உடலைக் கண்டு ஆனந்தமும், ஆச்சர்யமும் ஒன்று சேர, தனக்கு குழந்தையில்லாத காரணத்தால் என்னை அன்போடு அனைத்து, தானே எனக்கு இவள் மகள் என்று சொல்லி என்னிடத்தில் பாசம் வைத்தார். இதே சமயம் ஆகாச வாணியும் இந்த மனித குழந்தை, அரசனே, இவள் உன் மகளேயாவாள் என்று சொல்லியது. இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த மிதிலையரசனான என் தந்தை, என்னை அடைந்ததால், மேலும் பல செழிப்புகளையும், வளர்ச்சியையும், நிறைவும் அடைந்தார். தன் மூத்த ராணியிடம் என்னைக் கொடுக்க, அவளும் என்னிடத்தில் தாய்ப் பாசத்தை பொழிந்தாள். கல்யாண வயதை நெருங்கி விட்ட என்னைப் பார்த்து என் தந்தை பெரும் சிந்தனைக்குள்ளானார். பணத்தை இழந்த தரித்திரன் போல ஆனார். இந்திரனுக்கு சமமான பலம் உடையவனானாலும், பெண்ணின் தந்தை என்றால், உலகில் தனக்கு சமமானவர்- களிடமும் வார்த்தை வாங்க வேண்டியிருக்கிறது. அதுபோல ஜனங்கள், தன்னிடம் ஏசும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று உணர்ந்து, சிந்தனை எனும் சமுத்திரத்தில் மூழ்கினார். கரையேற துடுப்பு கிடைக்காதவராக தவித்தார். அயோனிஜாவான எனக்கு தகுந்த பதியை எங்கு தேடுவேன் என்று கவலைப் பட்டார். இவ்வாறு யோசித்து, என் மகளுக்கு ஸ்வயம் வரம் ஏற்பாடு செய்வேன் என்று தீர்மானித்தார். பெரும் யாகத்தில் வருணன் ஒரு சமயம் கொடுத்த உயர்ந்த வில்லும், அம்புகளை வைக்கும் தூணியும் அம்புகளும் இருந்தன. அதை மனிதர்களால் அசைக்க முடியாது. அதன் பேரில் உள்ள மரியாதை காரணமாக அதை தொட்டு வளைத்து நாணேற்ற, மற்ற அரச குமாரர்கள் ஸ்வப்னத்திலும் நினைத்து கூட பார்த்ததில்லை. அந்த வில்லை சத்யவாதியான என் தந்தை, அந்த வில்லை வைத்து, எல்லோர் முன்னிலையிலும், எல்லா அரசர்களையும் வரவழைத்து, அவர்களிடம் சொன்னார். இந்த வில்லை நாணேற்றி, அம்பு பூட்ட தயாராக யார் செய்கிறார்களோ, அந்த மனிதனுக்குத் தான் என் மகள் மனைவியாவாள். இதில் சந்தேகமே இல்லை என்றார். அந்த மலையை நிகர்த்த வில்லைப் பார்த்து மலைத்து கௌரவமாக வணங்கி மற்ற அரசர்கள் நகர்ந்து விட்டனர். அதை தொட்டு தூக்க கூட திராணியில்லாதவர்கள். பல நாட்கள் சென்றபின், இந்த தேஜஸ்வியான ராகவன், விஸ்வாமித்திரர் கூட யாகத்தை காண வந்தான். சத்ய பராக்ரமனான ராமனும், லக்ஷ்மணன் என்ற சகோதரன் உடன் வர வந்து சேர்ந்தான். விஸ்வாமித்திரரை என் தந்தை பூஜை செய்து வரவேற்றார். அவர் தான் சொன்னார். இவ்விருவரும் தசரத குமாரர்கள், வில்லைக் காண விரும்புகிறார்கள் என்றார். ராஜ குமாரனுக்கு தெய்வீகமான வில்லைக்காட்டு எனச் சொல்லவும் அந்த வில் கொண்டு வரப் பட்டது. நிமிஷ நேரத்தில் அந்த வில்லைத் தூக்கி நாணேற்ற தயாராக நிறுத்தி, நாண் கயிற்றை இழுக்கவும், வில் படீரென்று மத்ய பாகத்தில் உடைந்தது. கற்கள் விழுந்தது போல அந்த சப்தமே பெரும் சத்தமாக இருந்தது. அங்கேயே என் தந்தை என்னை ராமனுக்காக என்று ஜல பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு கொடுக்க முனைந்தார். என்னை அப்படி கொடுத்தபொழுது ராமன் வாங்கிக் கொள்ளவில்லை. அயோத்தியாபதியான தன் தந்தையின் சம்மதமின்றி ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். உடனே மாமனார் தசரதருக்கு சொல்லியனுப்பி, அவரும் வந்ததும் முறைப்படி என்னை என் தந்தை ராமனுக்கு கன்யாதானம் செய்து கொடுத்தார். என் தங்கை ஊர்மிளை, பார்க்க அழகாக இருப்பாள், சாது, அவளை லக்ஷ்மணனுக்கு மனைவியாக என் தந்தை கொடுத்தார். இப்படித்தான் ஸ்வயம்வரத்தில் நான் கன்யா தானமாக கொடுக்கப் பட்டேன். அன்றிலிருந்து வீர்யம் உடையவர்களில் சிறந்த என் பதியிடம் நான் அனுராகம் உடையவளாக இருந்து வருகிறேன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் திவ்யாலங்கார க்ரஹணம் என்ற நூற்று பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 119 (196) தண்டகாரணய பிரவேச: (தண்ட காரண்யத்தில் நுழைதல்)
இந்த கதையைக் கேட்டு, அனசூயா, மைதிலியை கைகளால் அணைத்துக் கொண்டு, தலையில் முத்தமிட்டு, தெளிவான பதங்கள், அக்ஷரங்களோடு பேசினாய், மதுரமாக இருந்தது. ஸ்வயம் வரத்தில் நடந்ததை நேரில் காண்பது போல கேட்டேன். மதுரமாக பேசுபவளே, உன் ஸ்வயம்வர கதையை நீயே சொல்லக் கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அஸ்தமித்து விட்டது. இரவு வந்து கொண்டிருக்கிறது. நாள் முழுவதும் ஆகாரத்திற்காக சுற்றித் திரிந்த பறவைகள், தங்கள் கூடுகளுக்கு திரும்பும் சத்தம் கேட்கிறது. இரவு நித்திரைக்கு அவை ஆயத்தமாகின்றன. இதோ முனிவர்கள் ஸ்னானம் செய்து ஈரமான மரவுரிகளுடன், கலசங்களை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ரிஷிகள் அக்னியை வளர்த்து செய்யும் ஹோம புகை, புறா உடலின் நிறத்தில் காற்றில் அலைக்கழிக்கப் பட்டுத் தெரிகின்றன. மரங்களில் இலைகள் உதிர்ந்து மிகக் குறைவான இலைகளே இருக்கின்றன. தனியான இந்த இடத்திலும் திசைகள் தெரியவில்லை. இரவில் நடமாடும் சில ஜந்துக்கள் எதிரில் நடமாடுகின்றன. இதோ இவை இந்த தபோவனத்து மிருகங்கள். வேதி நீரை குடிக்கின்றன. நக்ஷத்திரங்கள் அலங்கரிக்க, சீதே, இதோ பார் இரவு ராணி வந்து விட்டாள். கிரணங்கள் சுற்றி வட்டமாக இருக்க, ஆகாயத்தில் சந்திரனும் பவனி வரக் கிளம்பி விட்டான். கிளம்பு, ராமனின் உடன் செல்லும் பத்னியே, விடை கொடுக்கிறேன். போய் வா. மதுரமாக நீ சொன்ன கதை இன்னமும் என் காதில் ஒலிக்கிறது. அதனால் மகிழ்ச்சியடைகிறேன். என் எதிரிலேயே நகைகளைப் போட்டுக் கொள். அலங்காரம் செய்து கொள். குழந்தாய், திவ்யமான இந்த ஆபரணங்களை பூட்டிக் கொண்டு அழகாக தெரிவாய். அதைக் காண எனக்கு ஆவல் மேலிடுகிறது. அவ்வாறே அலங்கரித்துக் கொண்டு தேவதையைப் போல சீதை அனசூயாவை வணங்கி விடை பெற்றுக் கொண்டு ராமன் இருப்பிடம் சென்றாள். சர்வாலங்கார பூஷிதையாக தன் எதிரில் வந்த சீதையைப் பார்த்து ராகவன் ஆச்சர்யத்துடன் ஏறிட்டான். அன்புடன் தனக்கு அவற்றைக் கொடுத்த அனசூயைப் பற்றி சீதை, அங்கு நடந்த அனைத்தையும் விவரமாகச் சொன்னாள். அன்புடன் அவள் கொடுத்த வஸ்திரம், ஆபரணங்கள், மாலை இவற்றைக் காட்டினாள். ராமன் மகிழ்ச்சியடைந்தது போலவே, லக்ஷ்மணனும் மகிழ்ச்சியடைந்தான். மனிதர்களுக்கு கிடைக்க முடியாத அந்த மரியாதையை அவளுக்கு கிடைத்ததை எண்ணி பெருமை கொண்டான். அந்த இரவு அங்கேயே சித்தர்களான தபஸ்விகளுடன் கழித்தனர். அந்த இரவு விடிந்ததும், அக்னிஹோத்ர கர்மாக்களைச் செய்து விட்டு, அந்த தபஸ்விக ளி டம், சித்தர்களிடமும், வனத்தில் மட்டும் தென்படும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினர். அவர்கள், அந்த வனத்தில் ராக்ஷஸர்களின் சஞ்சாரம் உண்டு என்றும் கவனமாக இருக்கும்படியும், எச்சரித்து அனுப்பினர். இந்த ராக்ஷஸர்கள் மனிதர்களை உண்பவர்கள். பல விதமான ரூபங்களில் திரிபவர்கள், சில பயங்கர காட்டு மிருகங்களும் ரத்தத்தைக் குடிக்கும் குணம் உள்ளவை. சில மிருகங்கள் அடித்து போட்டதையோ, மயங்கி கிடப்பதையோ உண்பவர்கள். மற்றும் சில தபஸ்விகளை தர்ம வழியில் செல்பவர்களை அடித்து தின்கின்றன. இந்த வனத்தில் அவைகளிடம் கவனமாக தவிர்த்து செல்வாய். ராகவா, இதுதான் மகரிஷிகள் செல்லும் வழி. வழியில் பழங்கள் சேகரித்துக் கொள்ளுங்கள், இந்த வனத்தைக் கடந்து செல்ல உனக்கு பலமும் சக்தியும் கிடைக்கட்டும். இவ்வாறு அஞ்சலி செய்து தபஸ்விகள், பிராம்மணர்கள் ஸ்வஸ்தி மங்களம் சொல்லி வாழ்த்தி அனுப்ப, பரந்தபனான ராமன், மனைவியுடன் அந்த வனத்தில், லக்ஷ்மணனுடன் கூட பிரவேசித்தான். அது சூரிய மண்டலத்தில் இருந்து ஆகாயத்தில் சூரியன் பிரவேசிப்பது போல இருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தண்டகாரண்ய பிரவேசோ என்ற நூற்று பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
ஸ்ரீமத் ராமாயணத்தில் அயோத்யா காண்டம் நிறைவுற்றது.
அத்தியாயம் 81 (158) சபா4ஸ்தாபனம் (சபையை கூட்டுதல்)
பரம்பரை பெருமையைச் சொல்லிப் பாடுபவர்களும், கவிஞர்களும் பரதனைப் போற்றி, சிறப்பாக அமைக்கப் பெற்ற கவிதைகளால், மங்களகரமான துதிகளைப் பாடினர். சங்குகளை ஊதியும், உச்ச ஸ்வரத்தில் வாத்யங்களை இசைத்தும், யாமங்களில் வாசிக்கப் படும் துந்துபி எனும் வாத்தியத்தையும், முழங்கினர். அந்த சத்தம் ஆகாயத்தை நிரப்பியது. இது ஏற்கனவே நைந்து போய் இருந்த பரதனின் மனதை மேலும் வாட்டியது. அந்த கோஷத்தை கேட்டு கண் விழித்து எழுந்தவன், நான் அரசன் இல்லை என்று கத்தினான். சத்ருக்னனைப் பார்த்து, பார், சத்ருக்னா, கைகேயியின் வேலையை. இதையெல்லாம் என் மேல் சுமத்தி விட்டு, தசரத ராஜா ஸ்வர்கம் சென்று விட்டார். தர்ம ராஜனான அவரது தர்மத்தை ஆதாரமாக கொண்ட ராஜ்ய லக்ஷ்மி, மிகக் குறைவான ஜலத்தில் ஆடும் படகு போல இருக்கிறாள். நமது சிறந்த தலைவனும் வனம் சென்று விட்டான். இந்த என் தாயார், தர்மத்தை விட்டு விலகி, தானாக ராகவனை அனுப்பி வைத்தாள். இவ்வாறு பரதன் புலம்ப, தொடர்ந்து ஸ்த்ரீ ஜனங்களும், மற்றவர்களும் கண்ணீர் விட, அந்த சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைக்கும் விதமாக வசிஷ்டர் வந்து சேர்ந்தார். இக்ஷ்வாகு நாதனுடைய சபையில் அவர் பிரவேசித்தார். தங்கமயமான அழகிய மணி, ரத்னங்கள் நிறைந்ததுமான சபையில், சுத4ர்மாவைப் போன்ற தர்மாத்மா, தன் கூட்டத்துடன் வந்து சேர்ந்தார். தன் ஆசனத்தில் அமர்ந்து தூதர்களுக்கு கட்டளையிட்டார். பிராம்மணர்களையும், க்ஷத்திரியர்களையும், வைஸ்யர்களையும், மந்திரி வர்கங்களையும், சிறு கூட்டங்களுக்கு அதிபர்களையும், எல்லோரையும் அழைத்து வாருங்கள். நமது தினசரி வேலையை செய்ய வேண்டும். சத்ருக்னன், பரதன் இரு ராஜ குமாரர்களையும், யுதாஜித், சுமந்திரன், மற்றும் அங்கு நலம் விரும்பும் யார் இருந்தாலும் அழைத்து வாருங்கள். அப்பொழுது ஒரே கல கலப்பாக, ரதத்திலும், குதிரை மேல் ஏறியும், யானையில் வருபவர்களுமாக ஜனங்களின் வருகையால், பெரும் கோஷம் எழுந்தது. பரதன் வருவதைப் பார்த்து சதக்ரது என்று புகழப் படும் இந்திரனோ, தசரத ராஜாவே தானோ, என ஜனங்கள் ஐயமுற்றனர். ஆரவாரத்துடன் பரதனை வரவேற்றனர். மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறினர். தசரதனின் மகன் கலந்து கொண்ட அந்த சபை, தசரத ராஜா உயிருடன் இருந்த பொழுது முன்பு எப்படி இருந்ததோ, அதே போல விளங்கியது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சபா4ஸ்தாபனம் என்ற எண்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 82(159) சேனா ப்ரஸ்தாபனம் (சேனையைக் கிளப்புதல்)
மகானான வசிஷ்டர் தலைமையில் கூடியிருந்த அந்த சபையில் புத்தி சம்பன்னனான பரதன் சுற்றிலும் பார்த்தான். தகுதிக்கேற்ப அவரவர்கள் ஆசனங்க ளி ல் அமரவும், வந்திருந்தவர்களில் விலையுயர்ந்த வஸ்திரங்கள், அங்க ராகம் முதலியவற்றால் அந்த சபை அழகுற அமைந்திருந்தது. வித்வான்கள் நிறைந்த அழகான அந்த சபை, பனிக்காலம் முடியும் நேரம், மேகம் இல்லாத இரவில், பூர்ண சந்திரன் பிரகாசிப்பது போல இருந்தது. பிரஜைகள் அனைவரையும் எதிரில் கண்டு, தர்மம் அறிந்த புரோஹிதரான வசிஷ்டர், பரதனைப் பார்த்து மெதுவாகச் சொன்னார். குழந்தாய், தசரத ராஜா ஸ்வர்கம் சென்று விட்டார். த4ன, தா4ன்யம் நிறைந்த இந்த விசாலமான ப்ருதுவியை (பூமியை) உனக்கு கொடுத்து விட்டு, தன் கடமையை செய்து விட்டுச் சென்றார். ராமனும் அதே தர்ம வழியில் வந்தவன், தந்தை சொல்லை மீறாமல், சசி, ஜ்யோத்ஸ்னாவை (சந்திரன், ஒளி யை) பின் பற்றுவது போல வனம் சென்றான். தந்தையாலும், சகோதரனாலும் உனக்குத் தரப் பட்ட இந்த ராஜ்யம், இடையூறு இன்றி முழுவதுமாக சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு அனுபவிப்பாய். மந்திரிகள் அனைவரும் மகிழ சீக்கிரமே முடி சூட்டிக் கொள். கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், எல்லையைக் கடந்து சமுத்திர பிரதேசங்களிலிருந்தும் ரத்னங்களை உனக்கு கொண்டு வரட்டும். இதைக் கேட்டு பரதன் மனதுள் ராமனை தியானித்தபடி தன் எண்ணத்தை சொல்லலானான். சபா மத்தியில் தொண்டையடைக்க, கண்களில் நீர் பெருக, புரோஹிதரைப் பார்த்து ப்ரும்மசர்ய விரதத்தை பூண்டு ஒழுங்காக இருப்பவனும், வித்யாவை முழுவதுமாக கற்றவனும், தர்மத்தில் ஈ.டுபாடும் உடையவன் ராஜ்யத்தை அபகரிக்க நான் யார்? தசரத அரசனுக்கு மகனாக பிறந்தவன். ராஜ்யத்துக்கு ஆசைப் பட்டு அபகரித்தாவது ஆள வேண்டும் என்று நினைப்பானா? ராஜ்யமும் நானும், ராமனுக்கு அதீ4னமானவர்கள். வசிஷ்டரே, இங்கு தர்மத்தைச் சொல்லுங்கள். தி3லீபன், நகுஷனுக்கு சமமானவன், மூத்தவன், ஸ்ரேஷ்டன், தர்மாத்மா, காகுத்ஸன், அவன் தான் ராஜ்யத்தை ஆளத் தகுதியுடையவன். தசரதன் தன் தந்தையிடமிருந்து பெற்றது போல. இந்த பெருந்தன்மையில்லாத செயலை செய்வேனேயானால், பரலோகத்திலும் பெருமை சேர்க்காத, ஸ்வர்கம் செல்லும் தகுதியைத் தராத பாபத்தை செய்வேனேயானால், இக்ஷ்வாகு வம்சத்தில் நான் குலத்தைக் கெடுக்கும் கோடாலியாவேன். என் தாய் விரும்பினாள். எனக்கு அது கூட சம்மதமில்லை. இங்கு இருந்து கொண்டு எங்கோ எட்டாத தூரத்தில் வனத்தில் திரியும் ராமனை கை கூப்பி வணங்குகிறேன். ராமனையே நான் பின் தொடர்ந்து செல்வேன். அவன் தேவலோகத்துக்கு கூட அரசனாக இருக்கக் கூடிய தகுதி பெற்றவன். மூவுலகையும் ஆளும் பேறு பெற்றவன். இந்த வார்த்தைகளைக் கேட்டு, சபையினர், நியாயமானதே என்று எண்ணி, ஆனந்த கண்ணீர் விட்டனர். ராமனையும் நினைத்து பார்த்தனர். பரதன் தொடர்ந்தான். ஒருக்கால் ராமனை திரும்பி வரச் சொல்லி என் முயற்சியில் நான் வெற்றி பெறா விட்டால், நான் வனத்திலேயே வசிப்பேன். ஆர்ய தமையனாரும், லக்ஷ்மணனும் எப்படி வசிக்கிறார்களோ, அதே போல. எல்லா விதமான உபாயங்களையும் கையாண்டு பார்ப்பேன். அவரைத் திரும்ப அழைத்து வரும் முயற்சியை தொடர்ந்து செய்வேன். பெரியவர்களே, சாதுக்களே, குணவான்களே, உங்கள் முன் என்னுடைய எண்ணத்தைச் சொல்லி விட்டேன். வேலைக்காரர்கள், மார்கத்தை திருத்தியமைக்கும் வல்லமை வாய்ந்த அனைவரையும் நான் முன் கூட்டியே அனுப்பி விட்டேன். அவர்களுடன் யாத்திரை போவோம் என்று என் விருப்பம். அருகிலிருந்த சுமந்திரனைப் பார்த்து திட்டமிடுவதில் வல்லவரான அவரிடம் என் கட்டளைப் படி, சுமந்திரரே, சீக்கிரம் உடனே கிளம்பி யாத்திரைக்கு ஏற்பாடுகள் செய்யுங்கள். சீக்கிரம். படை பலமும் அழைத்து வாருங்கள். இவ்வாறு பரதன் சொன்னதும், சுமந்திரரும் மகிழ்ச்சியுடன் அந்த கட்டளையை நிறைவேற்ற புறப்பட்டார். பிரஜைகளும் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். படைத் தலைவர்கள், படையைச் சேர்ந்தவர்களும், இதைக் கேட்டு, ராமனை திரும்பி அழைத்துவர சேனையைக் கொண்டு வரத் தயாரானார்கள். படை வீரர்களின் பத்னிகள், தங்கள் தங்கள் கணவன்மாரை யாத்திரையில் கலந்து கொள்ளச் சொல்லி அவசரப் படுத்தினார்கள். அவர்கள் குதிரைகள், ரதங்கள் என்று வேகமாகச் செல்லக் கூடிய எந்த வாகனமானாலும், சரி என்று படை வீரர்களை படைத் தலைவர்கள் கிளப்பினார்கள். படை தயாரானதையறிந்து பரதன், குரு சந்நிதியில் என் ரதத்தையும் ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்ல, அவ்வாறே சுமந்திரர், உயர்ந்த ரக குதிரைகள் பூட்டி, நல்ல ரதத்தைக் கொண்டு வந்தார். தன் எண்ணத்தில் உறுதியாக இருந்த அந்த ராகவன், சத்யத்தில் நாட்டம் கொண்டவனாக, மகாரண்யம் சென்ற தமையனை எண்ணி, சுமந்திரரிடம் சொன்னான். சுமந்திரரே, சிக்கிரம் ஆகட்டும். உலகின் நன்மைக்காக, ராமனை வேண்டப் போகிறேன். படையையும், படைத் தலைவர்களையும் கூட்டிக் கொண்டு வனம் சென்று, ராமனை திரும்ப அழைத்து வரப் போகிறேன் எனவும், சுமந்திரர், பிரஜைகளையும், பிரமுகர்களையும், படைத்தலைவர்களையும், நண்பர்களையும் கூட்டி, கிளம்பத் தயார் செய்தார். ஒவ்வொரு குலத்திலிருந்தும், பிராம்மணர்களும், அரசனைச் சார்ந்தவர்களும், கிடைத்த ஒட்டகம், குதிரை, கோவேறு கழுதை, யானை, குதிரைகளில் என்று ஏறிக் கிளம்பினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சேனா ப்ரஸ்தாபனம் என்ற எண்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 83 (160) ப4ரத வன ப்ரஸ்தா2னம் (பரதன் வனம் புறப்படுதல்)
விடியற்காலையில் எழுந்து பரதன் உத்தமமான ரதத்தில் ஏறி புறப்பட்டான். ராமனை காணும் ஆவலுடன் மந்திரிகளும், புரோஹிதர்களும் முன் சென்றனர். அவர்களும் சிறந்த குதிரைகள் பூட்டிய, சூரியனுடைய ரதத்துக்கு ஒப்பான வாகனங்களில் ஏறி புறப்பட்டனர். இக்ஷ்வாகு குல நந்தனான பரதனைப் பின் தொடர்ந்து, இளம் யானைகள் ஆயிரக் கணக்கில் சென்றன. அதுவும் ஒரு வழக்கம். பலவித ஆயுதங்களை ஏந்திய வில்லாளிகள், அறுபதாயிரம் ரதங்களில் உடன் சென்றனர். அந்த புகழ் வாய்ந்த ராஜகுமாரனை நூறாயிரம் குதிரைகளில் ஏறித் தொடர்ந்தனர். சத்ய சந்தனும் ஜிதேந்திரியனுமான பரதனை பின் பற்றிச் சென்றனர். கௌசல்யா, சுமித்ரா, கைகேயி மூவருமே, ராமனைத் திரும்பி அழைத்து வருவதில் மகிழ்ச்சியடைந்து, உத்தமமான வாகனங்களில் ஏறிச் சென்றனர். ராமனை, லக்ஷ்மணனோடு காணப் போகிறோம் என்று மகிழ்ச்சியோடு தங்களுக்குள் கதை பேசிக் கொண்டு சென்றனர். உலகில் துக்கமே இல்லாதபடி நாசம் செய்து விடுபவன், மேக வண்ண ஸ்யாமளன், மகா பாஹு, ஸ்திரமான புத்தியுள்ளவன், த்ருடமான விரதம் உடையவன் என்று ராமனை புகழ்ந்து பேசி, அவனை எப்பொழுது காண்போம் என்றும், நம்மைக் கண்டதும் ராமன் என்ன செய்வான்? நம் துக்கம் அகலும். சூரியன் உதித்த உடனேயே உலகை வியாபித்து இருந்த இருட்டு மறைவது போல நமது துன்பங்கள் மறைந்து விடும் என்று ஊர் ஜனங்கள் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர். ஒருவரையொருவர் குசலம் விசாரித்து, ஆலிங்கணம் செய்து கொண்டும், உடன் சென்றனர். இந்த விஷயத்தில் சம்மதம் தெரிவித்த பலரும், நிகமங்களையறிந்த அறிஞர்களும், ராமனைக் காணச் சென்றனர். நகைகள் செய்பவர், தந்தங்களில் வேலை செய்பவர், செங்கல் வைத்து பூசி தளம் போடுபவர், வாசனை திரவியங்கள் தயாரிப்பவர், தங்க நகை செய்யும் ஆசாரிகள்,
கம்பளி நெய்பவர், ஸ்னானம் செய்விப்பவர், எண்ணெய் தேய்த்து விடுபவர், வைத்யர்கள், தூபங்களை போடுபவர், மது பானம் விற்பவர், துணி துவைக்கும் வண்ணான், நெசவாளிகள், பறையடிப்பவர்கள், கூத்து நடத்தும் கலைஞர்கள், பெண்களுடன் சென்ற கைவர்த்தகர்கள், வேதம் அறிந்த பிராம்மணர்கள், மாட்டு
வண்டிகளில் பரதனைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கில் சென்றனர். நல்ல ஆடை, அணிகளுடன் வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு பரதனைத் தொடர்ந்தனர். போர் வீரர்களுடன் கூடிய படை, சகோதர பாசம் மிகுந்த கைகேயி மகனை, அவன் தன் சகோதரனை திரும்ப அழைத்து வரச் செல்லும்பொழுது உடன் வருவதில் மகிழ்ச்சியுடன் தொடர்ந்தனர். அவர்கள் அத்வானமான இடங்களைக் கடந்து பல தூரம் சென்று, ரதங்கள், குதிரை, யானைகள் இவற்றில் ஏறி சிருங்கிபேர புரம் நோக்கிச் செல்லும் வழியில் கங்கைக் கரையை அடைந்தனர். குகன், ராமனின் நண்பன், அங்கு தன் சுற்றத்தோடு, வசிக்கிறான். நல்ல வீரன். சற்றும் குறைவின்றி தன் பிரஜைகளை கவனமாக பாலித்து வருபவன். சக்ரவாக பக்ஷிகள் அலங்கரிக்கும் கங்கைக் கரையை அடைந்து, பரதனோடு சேனையும் கூடாரமிட்டுத் தங்கியது. தன் சேனை வீரர்களைப் பார்த்து சுத்தமான கங்கை நதியையும் கண்டு, பரதன் மந்திரிகளைப் பார்த்து உத்தரவிட்டான். இஷ்டப் படி சேனை வீரர்களை இங்கு தங்க விடுங்கள். ஓய்வு எடுத்துக் கொண்டு நாளை இந்த நதியைக் கடந்து செல்வோம். ஸ்வர்கம் சென்ற தந்தைக்கு இந்த நதி ஜலத்தில் தர்ப்பணம் செய்ய நினைக்கிறேன். எனவும், அப்படியே ஆகட்டும் என்று சொல்லி மந்திரிகளும் சேர்ந்து தனித் தனியாக தங்கும் ஏற்பாடுகளை கவனிக்கலாயினர். கங்கையில் இறங்கி அந்த மகா நதிக் கரையில் அணி வகுத்து நின்ற சேனையை கண் பார்த்தாலும், பரதனின் மனம் ராமனை திரும்ப அழைத்து வரும் எண்ணத்திலேயே சுழன்றது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ப4ரத வன ப்ரஸ்தானம் என்ற எண்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 84 (161) குகாக3மனம் (குகன் வருதல்)
கங்கை நதிக் கரையில், கொடிகளை பறக்க விட்டுக் கொண்டு அணி வகுத்து நின்ற சேனையைக் கண்டதும், குகன், தன் சுற்றத்தாரை அவசரமாக அழைத்து தன் கவலையை விவரித்தான். மிகப் பெரிய சேனை, சமுத்திரம் போல விரிந்து கிடக்கிறது. மனதால் கூட யோசித்து இதன் அளவை மதிப்பிட முடியவில்லை. இந்த து3ர்பு3த்3தி4 ப4ரதன், தானே வந்து விட்டானா? கோவிதா3ர த்வஜம் ரதத்தில் தெரிகிறது. பெரிய கொடி. நம்மை கட்டிப் போடுவானா, வதைப்பானா, தெரியவில்லை. தசரத ராமன், அப்பா காட்டிற்கு விரட்டினார் என்று, லக்ஷ்மி சம்பன்னனாக வந்தான். அந்த அரசனுக்கு கிடைக்காத நல்ல நிலைமையில் இருப்பதையறிந்து, கைகேயி புத்திரனான பரதன் கொல்ல வந்து விட்டான் போலும். ராமன் எனக்கு இப்பொழுது யஜமானர். நண்பனும் கூட. அவனுடைய சுக துக்கம் என்னுடையது. நீங்கள் எல்லோரும் கங்கைக் கரையில் தயாராக நில்லுங்கள். கங்கையில் கலக்கும் நதிக்கருகில் செம்படவர்கள் எல்லோரும் சேர்ந்து நில்லுங்கள். நதியை பாதுகாக்க வேண்டும். மாமிசம், பழ, மூலங்கள் தயாராக வைத்துக் கொண்டு காவல் இருங்கள். ஜாலங்களை வைத்துக் கொள்ளுங்கள். நூற்றுக் கணக்கான படகுகளும், ஐந்நூறு கூட இருக்கட்டும், நூறு நூறு மரக்கலங்கள், இவற்றுடன் தயாராக நில்லுங்கள். பரதன் ராமனிடத்தில் நல்லெண்ணத்துடன் வந்திருந்தால், சேனை பத்திரமாக இந்த நதியைக் கடக்கும். என்று சொல்லி, மீன்களும், மாமிசமும், மது வகைகளும், பரிசுப் பொருட்களாக எடுத்துக் கொண்டு பரதனை நோக்கி குகன் சென்றான். அவன் வருவதைப் பார்த்து சுமந்திரன், வினயமாக பரதனிடம் சொன்னான். இதோ, தாயாதிகள் ஆயிரம் பேருடன், ஸ்தபதி பரிவாரங்களுடன் வருகிறானே, தண்டகாரண்யத்தில் வயதான, ஆனால் ஆரோக்யமானவன். உன் சகோதரனுக்கு நண்பன். அதனால் பரதன் வேடர் தலைவன் குகனை சந்திக்கத் தயாராக இருக்கட்டும். இவனுக்குத் தான் இப்பொழுது ராம, லக்ஷ்மணாதிகள் எங்கிருக்கிறார்கள் என்று தெரிந்திருக்கும். இதைக் கேட்ட பரதன், சுமந்திரனைப் பார்த்து சீக்கிரம் குகன் என்னைக் காண வரட்டும் என்றான். அனுமதி கிடைத்தவுடன், தன் பரிவாரம் சூழ வந்திருந்த குகன் மகிழ்ச்சியுடன் பரதனை வந்து கண்டான். இந்த தேசம் மரங்கள் அடர்ந்தது. இந்த தாசர்கள் இருப்பிடத்தில் வசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். வேடர்கள் சம்பாதித்து வரும் பழ வகைகள், கிழங்குகள், ஈரமான, உலர்ந்த மாமிசம் மற்றும் காட்டு சாமான்கள், எல்லாமே இருக்கின்றன. சேனை வீரர்கள் உணவு கொண்டபின், இன்று இரவு இங்கு தங்குவீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்குத் தேவையான பொருட்களை எங்களிடம் பெற்றுக் கொண்டு நாளை சைன்யத்தோடு செல்வீர்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் குகாகமனம் என்ற எண்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 85 (161) குஹ சமாகம: (குஹன் வந்து சந்தித்தல்)
குகன் சொன்னதைக் கேட்ட பரதன் பொருள் பொதிந்த, காரண கார்யங்களை விளக்குவதாக பதில் சொன்னான். என் குருவான ராமனின் சகா என்பது உறுதியாகி விட்டது. எப்படியெனின், இவ்வளவு பெரிய சேனையை நீ ஒருவனாகவே ஆதித்யம், விருந்தோம்பல், செய்வதாக ஏற்றுக் கொள்கிறாய். இதன் பின் பரதன் பரத்வாஜாஸ்ரமம் போகும் வழியை வினவினான். குகனே, எந்த வழியில் நாங்கள் பரத்வாஜாஸ்ரமம் செல்வோம்? கங்கை இந்த இடத்தில் ஆழமாக கடப்பதற்கு அரியதாகத் தெரிகிறது. ராஜ குமாரன் இவ்வாறு சொல்லவும் அவன் புத்தியை வியந்தவாறு காட்டில் திரியும் குகன், (அல்லது அந்த இடத்தின் தன்மையை அறிந்த குகன்) பதில் சொன்னான். செம்படவர்கள் அவர்களுடன் செல்வார்கள். கையில் வில்லேந்தி பொறுப்புடன் நடத்தி செல்வர். நான் உன்னுடன் வருகிறேன். இந்த பெரிய சேனையைக் கண்டு எனக்கு சந்தேகம் வருகிறது. நீ ராமனைக் காண விரும்பும் உத்தேசம் என்ன? அவனுக்கு கெடுதலாக இல்லையே? ஆகாயத்தைப் போல நிர்மலமான பரதன் இதைக் கேட்டு மிருதுவான வார்த்தைகளால் பதில் சொன்னான். அது போல ஒரு காலம் வரவே வேண்டாம். நீ என்னை சந்தேகிக்கலாகாது. ராகவன், என் மூத்த சகோதரன். தந்தைக்கு சமமானவன். வன வாசம் என்று வந்து விட்டவனை திருப்பி அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். சத்யமாக சொல்கிறேன் குகா, வேறு விதமாக எண்ணாதே. பரதன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சி நிறைந்தவனாக, முகம் மலர்ந்து, த4ன்யன் நீ. நீ பாக்யசாலி. உலகில் உனக்கு சமமாக மற்றொருவரைக் காண்பது அரிது. யத்னமில்லாமல் தானாக வந்த ராஜ்யத்தை நீ ஏற்க மறுக்கிறாய். உன் புகழ் சாஸ்வதமாக உலகமெங்கும் பரவி விளங்கட்டும். நீ கஷ்டப் பட்டு ராமனை திருப்பி அழைத்துச் செல்ல நினைக்கிறாய். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே சூரியனின் ஒளி மறைந்து இருள் சூழ ஆரம்பித்தது, குகனுடன் தானும் சென்று சேனையை நல்ல படியாக தங்க ஏற்பாடுகள் செய்த பின், சத்ருக்னன் படுக்கச் சென்றான். பரதன் மனதில் வேதனை நிரம்பியிருந்தது. நியாயமாக நடந்து கொண்டு, குறை சொல்ல முடியாதபடி கவனமாக இருந்தும் இப்படி ஒரு பழிச் சொல் வந்து சேர்ந்ததே என்று வருந்தினான். உள்ளூர நெருப்பாக சுட்டது. காட்டுத் தீயில் தகிக்கப் பட்ட மரத்தின், மறைந்திருக்கும் அக்னி போல, அவனை வாட்டி எடுத்தது, உடல் வியர்த்து வடிந்தது. சூரியனின் கிரணங்கள் பட்டு இமவான், சிறு பனித்துளிகளை வெளியிடுவது போல இருந்தது. கைகேயி மகனை துக்கமே மலையாக நால்புறமும் சூழ்ந்ததோ எனும்படி, இந்த மலைக்கு த்யானமே கற்கள், அதில் அவன் மூச்சுக் காற்றே தாதுக்கள், தைன்யம்- தீன பாவமே மரங்கள், சோக ஆயாசம் சிகரங்கள். மோகம் அனந்த சத்வங்கள். சந்தாபமே மருந்து, மூங்கில்கள், வெளிக் காட்டிக்கொள்ள முடியாதபடி ஹ்ருதயத்திலேயே ஜ்வரமாக தங்கி விட்ட மனக் கலக்கம்,பெருமூச்சுகளில் வெளிப்படுவதைத் தவிர நினைவு இழக்கச் செய்தது. ரிஷபம் தன் கூட்டத்திலேயே அடிபட்டது போல நர ரிஷபமான அவனும் மன அமைதியை அடையவில்லை. இதை உணர்ந்த குகன், தானே தமையனைப் பற்றிச் சொல்லி சமாதானப் படுத்தினான்
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் குஹ சமாகமோ என்ற எண்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 86 (162) குக வாக்யம் (குகனின் மறுமொழி)
காடுகளில் வசிக்கும் குகன், பரதனிடம் தான் கண்ட லக்ஷ்மணனின் நல்ல குணத்தை வியந்து பாராட்டினான். சிறந்த வில், அம்பு இவைகளை ஏந்தி சகோதரனை பாதுகாக்க தூங்காமல் விழித்திருந்து, கவனமாக இருந்த லக்ஷ்மணனிடம் நான் சொன்னேன். குழந்தாய், இதோ படுக்கை தயாராக இருக்கிறது. சுகமாக இதில் படுத்து தூங்குவாய். ராகவ நந்தனா, இங்குள்ள ஜனங்கள் இது போன்ற கரடு முரடான வாழ்க்கை முறைக்கு பழக்கப் பட்டவர்கள். நீங்கள் சுகமாக வாழ்ந்தவர்கள். தர்மாத்மாவே, உன் தமையனை காவல் காக்க நாங்கள் விழித்திருப்போம். எனக்கும் உலகில் ராமனை விட பிரியமாக எதுவும் இல்லை. இதில் நீ கவலைப் படாதே. சத்யமாக சொல்கிறேன். இந்த ராமனுடைய கருணையால் உலகம் பெரும் புகழையும், தர்மத்தையும், அர்த்தத்தை (பொருளையும்) அடையும் என்று நான் நம்புகிறேன். எதிர்பார்க்கிறேன். அந்த நான், பிரிய சகாவான ராமனை தூங்கும் பொழுது சீதையுடன் கூட ரக்ஷிக்கிறேன். நான் கையில் வில்லேந்தி, என் சுற்றத்தாரும் உடன் இருக்க எல்லோருமாக காவல் இருக்கிறோம். இந்த காட்டில் நான் அறியாத நடமாடும் ஜீவன் எதுவும் இல்லை. என்னிடம் யுத்தம் என்று வந்தால், நால்வகைப் படையும், எதிர்த்து நிற்க பலமும் உண்டு. இவ்வாறு சொல்லியும் லக்ஷ்மணனை சம்மத்திக்க வைக்க முடியவில்லை. எங்கள் வார்த்தையில் உண்மை இருப்பதை உணர்ந்தான். இருந்தும், சீதையும் உடன் இருக்க தசரத புத்திரன் தரையில் தூங்கும் பொழுது, எனக்கு தூக்கம் எப்படி வரும்? உயிர் வாழ்வதோ, சுகங்களோ எனக்கு பெரியதாகத் தெரியவில்லை. குகனே, எவன் யுத்தத்தில் தேவாசுரர்களை எதிர்த்து நின்று ஜயிக்க சக்தி உடையவனோ, அவனை, மனைவியுடன் புல் தரையில் படுத்துறங்குவதைப் பார். மிகப் பெரிய யாகங்கள் செய்து, தவம் செய்து பெற்ற பிள்ளை, முக்கியமான மகன் (முக்கியமானவன் என்பது ராஜ்யத்தின் வாரிசு என்ற பொருளில்) ராஜ லக்ஷணங்கள் பொருந்தியவன், இவனை நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, தசரத ராஜா அதிக நாள் இருக்க மாட்டார். அவரது இறுதிக் கடன்களை செய்ய வேண்டி வரும். ரம்யமானதும், நான்கு முகம் கொண்ட வீடுகளும், விசேஷமாகப் பிரிக்கப் பட்ட பெரும் வீதிகளும், மாளிகைகளும் வீடுகளும் நிரம்பியதுமான, புஷ்டியாக ஜனங்கள் வளைய வருவதும், ஓய்வு எடுக்க என்று உத்யான வனங்கள் நிறைந்ததுமான அயோத்தி நகரத்தில், சமாஜ உத்ஸவங்கள் நடக்கும் பொழுது, மிகவும் உத்ஸாகமாக ராஜ தானியில் என் தந்தை கலந்து கொள்வார். பிரதிக்ஞையை சத்யமாக்கி, நாங்கள் சௌக்யமாக திரும்பி வந்து, அவருடன் சுகமாக நகருக்குள் நுழைவோமா என்று இருக்கிறது. இப்படி வருந்தி பேசிக் கொண்டே நின்று கொண்டே ராஜ குமாரன், இரவு பூரா கழித்தான். விடிந்ததும் இருவருமாக ஜடையை தரித்துக் கொண்டு இந்த கங்கைக் கரையை சுகமாகத் தாண்டிச் செல்ல நான் உதவி செய்தேன். மரவுரியை ஆடையாக உடுத்திக் கொண்டு ஜடா முடியுடன் யானைக் கூட்டம் போல பலமும் பராக்ரமமும் உடைய இருவரும், சீதையை உடன் அழைத்துக் கொண்டு, சிறந்த வில் அம்பு கத்தி இவைகளுடன், அவளை பாதுகாப்பதிலேயே கவனமாக இருவரும் சென்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான மத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் குக வாக்யம் என்ற எண்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 87 (164) ராம சயனாதி ப்ரச்ன: (ராமன் படுத்துறங்கிய இடம் முதலியவற்றை பரதன் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல்)
குகனுடைய வர்ணனையைக் கேட்டு பரதன் அந்த காட்சியை மனதில் நினைத்துப் பார்த்து வருந்தினான். பரதனும், சுகுமாரன் நெடிய உருவம் உடையவன், சிங்கம் போன்ற தோள்களும், நீண்ட கைகளும். புண்டரீகம் (தாமரை போன்ற) விசாலமான கண்களும் உடைய இளஞன். ஒரு முஹுர்த்த காலம் தன்னை ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு, மனம் வாட, ஹ்ருதயத்தில் அடிபட்ட பறவை கீழே விழுவது போல விழுந்தான். அருகிலிருந்த சத்ருக்னன், அவனைத் தாங்கி அணைத்துக் கொண்டு வாய் விட்டு அழுதான். உபவாசத்தினால் இளைத்து இருந்த தாய்மார்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் இருவரும் கதறியழுவதைப் பார்த்து மனம் வருந்தினர். கௌசல்யை வந்து பரதனை அணைத்து சமாதானம் செய்தாள். தபஸ்வினி, தாய்ப் பசு கன்றை முகத்தால் வருடிக் கொடுப்பது போல அன்புடன் வினவினாள். மகனே, உன் உடல் இப்படி சுடுகிறதே, வியாதி ஒன்றும் இல்லையே. இன்று ராஜ குலம் உன்னை சார்ந்து இருக்கிறது. புத்திரனே, உன்னைப் பார்த்து நான் உயிர் வாழ்கிறேன். ராமன், சகோதரனுடன் சென்ற பின், எனக்கு புகலிடம் நீயே. தசரத ராஜாவும் மறைந்த பின், நீ ஒருவன் தான் எங்களுக்கு நாதன், காப்பாற்றக் கூடியவன். லக்ஷ்மணன் ஏதாவது அப்ரியமாக சொல்லி கேள்விப் பட்டாயா? அல்லது என் மகன் ஏதாவது சொன்னானா? தன் ஒரே மகனை வனத்துக்கு அனுப்பிவிட்டு தவிக்கும் கௌசல்யையைப் பார்த்து சமாதானப் படுத்தி பரதன் தன்னை சமாளித்துக் கொண்டு குகனிடம் சொன்னான். குகனே, என் தமையன் எங்கு வசித்தான்? இரவு எங்கு இருந்தான்? சீதை எங்கே, லக்ஷ்மணன் எங்கே படுத்தனர். என்ன சாப்பிட்டு எங்கு தூங்கினர். குகனே எனக்கு அந்த இடத்தைக் காட்டு எனவும், வேடர் தலைவனான குகன் சந்தோஷமாக விவரித்தான். அதிதியாக வந்தவன் என் மனதுக்குகந்தவன் என்று நான் அவனுக்கு ஹிதமான அன்னம், பதார்த்தங்கள், பலவகைப் பழங்கள், ராமனுக்கு சாப்பிட என்று கொண்டு வந்தேன். அவை அனைத்தையும் திருப்பி அனுப்பி விட்டான். ஏற்றுக் கொள்ளவில்லை. க்ஷத்திரிய தர்மம் என்று சொன்னான். நாங்கள் கொடுக்கத்தான் வேண்டும், யாரிடமும் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது, சினேகிதனே என்று சொல்லி எங்கள் ஆதித்யத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. லக்ஷ்மணன் கொண்டு வந்த தண்ணீரைக் குடித்து விட்டு சீதையுடன் உபவாசம் இருந்தான். மீதி ஜலத்தைக் குடித்து விட்டு லக்ஷ்மணனும் எதையும் தொடவில்லை. மூவருமாக சேர்ந்து வாய் வார்த்தையாக சந்த்யா வந்தனம் செய்தனர். சௌமித்ரி தானே புல் முதலியவற்றைக் கொண்டு வந்து படுக்கை தயார் செய்தான். தாங்களே தயாரித்த அந்த விரிப்பில் சீதையுடன் ராமன் அமர்ந்தான். இருவரின் பாதங்களையும் அலம்பி லக்ஷ்மணன் சென்றான். இதோ இங்குதீ மரம். இதோ அந்த புல் படுக்கை. இதன்மேல் தான் இரவு ராமனும், சீதையும் தூங்கினர். அவர்களைச் சுற்றி வந்தபடி, முதுகில் தூணியைக் கட்டிக் கொண்டு அதில் எல்லா அம்புகளையும் வைத்து, தன் வில்லை எடுத்துக் கொண்டு, தயாராக இருந்த நிலையில், லக்ஷ்மணன் இரவு பூரா விழித்திருந்தான். நானும் என்னிடம் உள்ள மிகச் சிறந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு நின்றபடி இருந்தேன். எங்கு லக்ஷ்மணன் இருந்தானோ, அதே இடத்தில் தூங்காமல், என் சுற்றத்தாரும் உடன் இருந்தனர். தயாராக வில், அம்பு, கத்தி சகிதம் இந்திரன் போன்றவனை, காப்பாற்ற காவல் காத்தோம்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராம சயனாதி ப்ரச்னோ என்ற எண்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 88 (165) சய்யானுவீக்ஷணம் (படுக்கையைக் காணுதல்)
குகன் விவரித்ததைக் கேட்டு, பரதன் அந்த இங்குதீ மரத்தடிக்குச் சென்று ராமனுடைய படுக்கையாக இருந்த இடத்தைக் கண்டான். தாய்மார்களிடம் அந்த இடத்தைக் காட்டி, இது தான் மகாத்மாவான ராமன் படுத்த படுக்கையறை, இந்த இடத்தில் தான் வசித்தான் என்று காட்டினான். பெரும் பழமை வாய்ந்த குலத்தில் பிறந்து ராகவன் இப்படி கட்டாந்தரையில் தூங்குவது உசிதம் இல்லை. உயர் வகை கம்பளிகள் விரித்த படுக்கையில் படுத்து பழக்கமானவன், எப்படித்தான் இங்கு தூங்கினானோ,
மாளிகையின் மேல் விமானங்கள் கூரைகள், தங்கத்தாலும், வெள்ளி யாலும் இழைத்திருக்க, உயர் ரக விரிப்புகள் விரித்திருக்க, பூக்கள் இரைத்திருக்க, சந்தனம் அகரு போன்ற வாசனைத் திரவியங்கள் தெளித்து, மேகம் போன்ற வெண்மை பிரகாசிக்க, கிளிகள் கொஞ்ச உயர்ந்த மாளிகைகளில், குளிர்ச்சியும் நறுமணமும் ஓங்கி இருக்க, சுவர்களில் தங்கத் தகடுகள், இழைத்திருக்க, மேரு மலைக்கு சமமான உயர்ந்த இடங்களில் வசித்து விட்டு, கீதங்களும், வாத்யங்களும் முழங்க, உயர்ந்த ஆபரணங்கள் உரசுவதால் ஏற்படும் இனிமையான ஒலியும் சேர, மிருதங்க வாத்யங்கள் முழங்க, தினமும் எழுப்பப் பட்டவன். பாடுபவர்களும், துதி சொல்பவர்களும் துதி பாடி, கவிதை பாடுபவர்களும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, கீதங்களை தயார் செய்து பாடி, பரந்தபனை (அளவில்லாத பராக்ரமம் உடையவனை) எழுப்புவர். இந்த உலகை நம்பவே கூடாது. எதுவுமே சத்யமாக, சாஸ்வதமாகத் தெரியவில்லை எனக்கு. ஸ்வப்னமோ என்று என் மனம் குழம்புகிறது. தசரத ராஜாவின் மகன், தரையில் உறங்கும் காலம் வருமானால், விதேஹ ராஜாவின் மகள், இனிமையான தோற்றம் உடையவள், பிரியமானவள், தசரதன் மருமகள், அவளும் தரையில் உறங்கினாள் என்றால் எதுதான் சாஸ்வதம். இந்த படுக்கை என் சகோதரனுடையது. தானியங்களை அடித்து எடுத்தபின் மிகுந்த வைக்கல், உடலை உறுத்தும். சீதை ஆபரணங்களை அணிந்தபடியே தூங்கியிருக்கிறாள் என்று நினைக்கிறேன். ஆங்காங்கே தங்கத் துகள்கள் தெரிகின்றன. உத்தரீயத்தை இங்குதான் உலர்த்தியிருக்க வேண்டும். நூலிழைகள் தெரிகின்றன. கணவனுடன் இருந்ததால், சுகமான படுக்கை என்று அவன் ஏற்றுக் கொண்ட பின், தனக்கு சுகமாக இல்லை என்று சொல்லியிருக்க மாட்டாள். உணர்ந்தே இருக்க மாட்டாள். ஹா, நான் கொடும் சித்தமுடையவன். என் காரணமாக ராகவன் மனைவியுடன் அனாதை போல உறங்க நேர்ந்தது. சக்ரவர்த்தி குலத்தில் பிறந்தவன், சர்வ லோகத்துக்கும் சுகத்தையளிக்க வல்லவன், எல்லோருக்கும் பிரியமானவன். ராஜ்யத்தை தியாகம் செய்து உத்தமமான சௌக்யமான வாழ்க்கையைத் துறந்து பூமியில் எப்படித் தூங்கினானோ. இந்தீவர, நிலோத்பல புஷ்பம் போன்றவன். சிவந்த கண்களுடன் பிரியமாக காட்சி தருபவன். சுகத்திற்கு தகுதியுடையவன். கஷ்டப்பட வேண்டிய தேவையே இல்லாது வளர்ந்தவன், பூமியில் படுத்து உறங்குகிறான். லக்ஷ்மணன் பாக்யசாலி. கஷ்டமான காலத்திலும் ராகவனைத் தொடர்ந்து செல்கிறான். வைதேஹி பாராட்டப் பட வேண்டியவள். பதியைத் தொடர்ந்து வந்து விட்டாள். நாம் தான், அந்த மகாத்மாவைப் பிரிந்து கண்டனத்துக்கு உள்ளானோம். இந்த பூமி சூன்யமாகத் தெரிகிறது. தசரதனும் மறைந்து. ராமனும் வனம் சென்றபின், யாருமே மனதால் கூட வசுந்தராவை (பூமியை) வேண்டுவதில்லை. புஜ பலத்தால் பாதுகாக்கப் பட்டிருந்தும், கோட்டையின்றி, பழக்கப்படாத குதிரைகளும், யானைகளுமாக, ராஜதானியை கவனிக்காமல், படை வீரர்களை சந்தோஷமாக வைத்திருக்காத, சரியான பாதுகாவலும் இல்லாத நாட்டை எதிரிகள் கூட மதிப்பதில்லை. விஷம் கலந்து வைக்கப் பட்ட உணவுப் பண்டம் சீண்டுவாரின்றி இருப்பது போல. இன்றிலிருந்து நானும் தரையில் தான் படுத்துறங்குவேன். புல் இருந்தாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி. பழங்கள் காய் வகைகளை உண்பவனாக ஜடை முடி தரித்து உலவுவேன். அவன் காரணமாக மீதி காலத்தை வனத்தில் கழிப்பேன். ராமனுடைய ப்ரதிக்ஞையிலிருந்து அவனை விடுவித்து, அதை நான் பூர்த்தி செய்வேன். அதனால் அவன் செய்த பிரதிக்ஞையும் நிறைவேறும். அண்ணனுக்காக நான் வனத்தில் வசிக்கும் பொழுது சத்ருக்னன் என்னுடன் இருப்பான். லக்ஷ்மணன் கூட அண்ணன் அயோத்தியை ஆளுவார். பிராம்மணர்கள், ராமனுக்கு அயோத்தியில் முடி சூட்டுவார்கள். தேவதைகள், என்னுடைய இந்த எண்ணத்தை பூர்த்தி செய்யட்டும். தலையால் வணங்கி நான் வேண்டிக் கொள்கிறேன். இதன் பின்பும், ராமனுடைய அனுக்ரஹம் கிடைக்கவில்லையெனில், நானும் காட்டிலேயே வசிப்பேன். வெகு நாள் என்னை கவனியாது இருக்க முடியாதல்லவா.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சய்யானுவீக்ஷணம் என்ற எண்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 89 (166) கங்கா தரணம் (கங்கை நதியைக் கடத்தல்)
இரவு அந்த கங்கைக் கரையிலேயே கழித்து விட்டு, விடியற்காலையில், ராகவனான பரதன் எழுந்து, சத்ருக்னனை எழுப்பினான். சத்ருக்னா, எழுந்திரு. வேடர் தலைவன் குகனை சீக்கிரம் அழைத்து வா. நமது சேனையை கங்கை நதியை கடக்க வைக்க வேண்டும். சத்ருக்னனும் நான் தூங்கவில்லை, நானும் அண்ணன் இருவரையும் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்றான். இதற்குள் குகனே அங்கு வந்து சேர்ந்து விட்டான். காகுத்ஸா, இரவு நதி தீரத்தில் எப்படி இருந்தது. சுகமாக இருந்ததா? சைன்யத்தினர் சௌக்யமா? குகனது ஸ்னேகமான வார்த்தைகளைக் கேட்டு, பரதன் சொன்னான். ராஜன், சுகமாக இருந்தோம். நன்றாக கௌரவிக்கப் பட்டோம். உன் செம்படவர்களுக்கு ஆணையிட்டு சேனையை அக்கரை சேர்த்து விடு. இதைக் கேட்டு குகனும் வேகமாக செயல் பட்டான். திரும்ப தன் நகரம் சென்று, உற்றார் உறவினரிடம் சொன்னான். எழுந்திருங்கள். விழித்துக் கொண்டு படகுகளை இழுங்கள், உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். பரதனின் சேனையை கங்கையைக் கடக்கச் செய்ய வேண்டும். அரசனின் கட்டளை என்பதால், அனைவரும் அவசரமாக எழுந்து நூற்றுக் கணக்கான, படகுகளை தயார் செய்தனர். நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் ஸ்வஸ்திக் அடையாளமிட்ட படகுகளை பெரிய கடிகாரம் வைக்கப்பெற்று, கொடிகள் கட்டி, அழகு பெற அமைத்த, சிறந்த படகுகளைக் கொண்டு வந்தனர். அதில் ஒரு ஸ்வஸ்திக் அடையாளமிட்ட வெண்ணிற கம்பளம் சுற்றப் பட்ட, நந்தி போன்று கோஷமிடும் சுபமான படகை குகன் தானே ஓட்டி வந்தான். அதில் பரத சத்ருக்னரோடு கௌசல்யா, சுமித்திரா, மற்ற அரச பத்னிகளும் அமர்ந்தனர். புரோஹிதரும், அவருக்கு முன்னால் மற்ற குரு ஜனங்கள், பிராம்மணர்களும், பின்னால் அரச பத்னிகளும், மேலும் படகை செலுத்துபவர்களும் அமர்ந்தனர். இவர்களுக்கு இருப்பிடம் தயார் செய்யுங்கள். தீர்த்தத்தில் ஸ்னானம் செய்யுங்கள். பாத்திரங்களை கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் ஒரே கூச்சலாக ஆயிற்று. செம்படவர்கள் படகுகளைத் தாங்களே ஓட்டினர். படகில் ஏறிய கூட்டத்தை சமாளித்து வேகமாக ஓட்டினர். சில பெண்கள் நிரம்பியதாக, சில குதிரைகளை ஏற்றிக்கொண்டு, சில பெரும் தனத்தையுடைய பெட்டிகளைச் சுமந்து கொண்டு சென்றன. அக்கரை சேர்ந்து இந்த ஜனங்களை இறக்கி விட்டு திரும்பி வந்து, திரும்ப சென்று செம்படவ பந்துக்களால் கங்கை நீரில் கோலமிட்டது போல ஆயிற்று. யானைகளின் மேல் ஏறி சவாரி செய்யத் தெரிந்தவர்கள், யானை மேலேறி நதியைக் கடந்தார்கள். அதைக் காண, மலைக் குன்றுகள், கொடியுடன் அசைந்து அசைந்து நகருவது போல இருந்தது. சிலர் படகில் ஏறினர். சிலர் தள்ளும் கட்டு மரங்களில் கடந்தனர், ஒரு சிலர் குடத்தை கட்டிக் கொண்டு மிதந்தனர், மற்றும் சிலர் கைகளால் அடித்து நீந்தி சென்றனர். த்வஜத்தை உடைய சேனை செம்படவர்களால் தங்களாகவே கடந்து செல்லப்பட்டு, மைத்ரம் என்ற முஹுர்த்தத்தில் பிரயாக வனம் சென்றடைந்தனர். சேனையை ஆஸ்வாசப் படுத்தி அவரவர் விருப்பப்படி வசதிகள் செய்து விட்டு பரத்வாஜ முனிவரைக் காண, வேதம் அறிந்தவர்களை முன்னிட்டுக் கொண்டு பரதன் சென்றான். பரதன் பிராம்மணருடைய ஆசிரமத்தை அடைந்து, தேவ புரோஹிதரின் அழகிய குடிலைக் கண்டான். மரங்களால் சூழப் பெற்றதும், மிகப் பெரிய வனம், அதில் பரத்வாஜ முனிவரின் வாசஸ்தலத்தைக் கண்டான்.
(இதுவரை வால்மிகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கங்கா தரணம் என்ற எண்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 90 (167) பரத்வாஜாஸ்ரம நிவாஸ: பரத்வாஜாஸ்ரமத்தில் வசித்தல்)
சற்று தொலைவிலிருந்த பரத்வாஜாஸ்ரமத்தைப் பார்த்து விட்ட ராஜகுமாரன் பரதன், கூட வந்த படை வீரர்களை அங்கேயே நிறுத்தி விட்டு, மந்திரிகளுடன் நடந்தே சென்றான். தன் ஆயுதங்களையும் கூட வந்தவர்களிடம் கொடுத்து விட்டு, உடுத்தியிருந்த பட்டாடையுடனே குடும்ப புரோஹிதரின் பின் சென்றான். மந்திரிகளையும் வாசலில் நிறுத்தி விட்டு, தான் மட்டும் புரோஹிதருடன் உள்ளே பரத்வாஜரை தரிசிக்கச் சென்றான். வசிஷ்டரை பார்த்த மாத்திரத்தில், மகா தபஸ்வியான பரத்வாஜர், தன் ஆசனத்திலிருந்து விரைவாக எழுந்து வந்து சிஷ்யர்களை அர்க்யம் கொண்டு வரச் சொல்லி, பணித்தபடி வந்தார். பரதன் வணங்கி நின்றான். வசிஷ்டரை வரவேற்று, இது யார் என்று வினவ, அவர் பரதன் என்று அறிமுகப் படுத்தினார். அவர்களுக்கு அர்க்யம், குடிக்க நீர் கொடுத்தபின், பழங்கள் கொண்டு வந்து கொடுத்து உபசரித்தார். வரிசை கிரமமாக ஒவ்வொருவரையும் குசலம் விசாரித்தார். தசரத ராஜா மறைந்தது கேள்விப் பட்டு, துக்கம் விசாரித்தார். அயோத்தி மாநகரில், படையில், பொக்கிஷத்தில்
நண்பர்களிடம், மந்திரிகளிடம் எல்லாம் நலமா என்று விசாரித்தார். வசிஷ்டரும், பரதனும் அதே போல பரத்வாஜ முனிவரிடம் குசலம் விசாரித்தனர். சரீரம், அக்னி, மரங்கள், சிஷ்யர்கள், மிருக, பக்ஷிகள் என்று ஒவ்வொன்றாக குசலம் விசாரித்தனர். எல்லாம் நலமே என்று பதில் சொன்னபின், ராகவனிடம் ஸ்னேகமாக வினவினார். பரதா, இங்கு வரக் காரணம் என்ன? நீ ராஜ்யத்தை ஆளுவதில் மும்முரமாக இருக்க வேண்டிய சமயம், எனக்கு விவரமாக சொல்லு. எனக்கு குழப்பமாக இருக்கிறது. தனக்கு சத்ருவானவனை மட்டுமே வதைக்க கூடியவன் கௌசல்யை பெற்ற மகன். கௌசலானந்த வர்தன:, கௌசல்யையின் ஆனந்தத்தை பெருக்குபவன் என்று பெயர் பெற்றவன், சகோதரனுடன், மனைவி சகிதமாக வெகு நாட்களுக்கு நாட்டை விட்டு அனுப்பப் பெற்றான். உன் தந்தை தன் பத்னி சொன்னாள் என்று என்ன நினத்தோ, பதினான்கு வருஷங்கள் வனத்தில் இரு என்று கட்டளையிட்டார். நீ அவனுக்கு எதுவும் கெடுதல் செய்ய நினைத்து வரவில்லையே? ராஜ்யத்திற்கு இடையூறு வரக் கூடாது என்று ராமனுக்கும், அவன் தம்பி லக்ஷ்மணனுக்கும் எதிராக, எதுவும் செய்ய நினைத்து சேனையுடன் வந்திருக்கிறாயா? என்று கேட்டார். வார்த்தை வெளி வராமல், கண்களில் நீர் பெருக துக்கம் தொண்டையை அடைக்க, ப4கவன், நீங்களும் இப்படிச் சொல்லலாமா? நான் என்ன செய்வேன்? கஷ்டம். என் பேரில் குற்றம் சாட்டும்படி ஆயிற்று. என்னை வருத்தாதீர்கள். இதில் எனக்கு சம்மதமில்லை. என் தாய், நான் இல்லாத போது செய்த ஏற்பாடு. இது எனக்கு உடன் பாடும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை. அந்த வார்த்தையை நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். நான் ராமனை திரும்ப அயோத்யா அழைத்து போகவும், பாதங்களில் விழுந்து வணங்கி, ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டவுமே நடந்து வந்தேன். இப்பொழுது என்னை புரிந்து கொண்டு அனுக்ரஹிக்க வேண்டும். சொல்லுங்கள். ராமனை இப்பொழுது எங்கு காண முடியும் ? வசிஷ்டர் முதலான ரித்விக்குகளும் அப்படியே யாசித்தனர். இதன் பின் பரத்வாஜர் சொன்னார். பரதா, இது நீ பிறந்த ராஜ குலத்தின் பெருமைக்கு ஏற்றதே. ராகவ வம்சத்தில் பிறந்தவன், குருவை வணங்குவதிலும், அடக்கமும், சாதுக்களை மதித்து நடப்பதிலும், அதிசயமில்லை. எனக்கும் அப்படித்தான் மனதில் பட்டது. இருந்தாலும் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளவே உன்னைக் கேட்டேன். உன்னை நான் கேட்டதாலேயே உன் புகழும், பெயரும் மேலும் மேலும் வளரும். ராமன், லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் இருக்கும் இடம் நான் அறிவேன். இந்த உன் சகோதரன் சித்ரகூடம் என்ற பெரிய மலையில் வசிக்கிறான். நாளை போகலாம். இன்று உன் மந்திரிகளுடன் இங்கேயே இரு. இவர்கள் தாங்கள் சௌகர்யம் போல இருக்கட்டும் என்றார். சரி என்று ஒத்துக் கொண்டு மனதில் நம்பிக்கை தோன்ற, ராஜ குமாரனான பரதன், ஆசிரமத்தில் இரவு தங்க சம்மதித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத்வாஜாஸ்ரம நிவாசோ என்ற தொன்னூறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 91 (168) பரத்வாஜாதித்யம் (பரத்வாஜர் செய்த விருந்து உபசாரம்)
அங்கு தங்குவதாக தீர்மானித்து விட்ட பரதனைப் பார்த்து முனிவர் விருந்துண்ண அழைத்தார். அதற்கு பரதன், நீங்கள் அர்க்4யம், பாத்3யம் கொடுத்ததே விருந்து தானே. வனத்தில் கிடைப்பதை வைத்து நீங்கள் கொடுத்ததே பெரிது என்றான். சிரித்துக் கொண்டே பரத்வாஜர், அன்புடன் பழகுகிறாய், அழகாக பேசுகிறாய். உன்னை அறிந்து கொண்ட பின், ஏதாவது கொடுத்து உன்னை சந்தோஷப் படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. உன் சேனை வீரர்களுக்கும் போஜனம் செய்து வைக்கிறேன்., மனுஜாதிபா, அரசனே, என் அன்பையும் உனக்கு தெரிவிக்க வேண்டும். ஏன் தூரத்திலேயே சேனையை நிறுத்தி விட்டு இங்கு வந்தாய்? ஏன் கூடவே அழைத்து வரவில்லை என்று கேட்க, பரதன் பவ்யமாக கை கூப்பியவனாக பதில் சொன்னான். தபோத4னரே, ப4கவன், உங்களிடத்தில் பயம். அதனால் தான் சைன்யத்துடன் வரவில்லை. அரசனோ, அரச குமாரனோ எப்பொழுதும் தபஸ்விகளிடம், அவர்கள் விஷயத்தில் தலையிடாமல் விலகியே இருக்க வேண்டும். குதிரைகள், அத்துடன் மனிதர்கள், மதம் பிடித்த உயர் ஜாதி யானைகள், பூமியை மறைத்துக் கொண்டு பெருமளவில் வருகின்றன. அவைகள் இங்குள்ள மரங்களை, ஜலத்தை, பூமியை ஆஸ்ரமத்து குடிசைகள் இவற்றை நாசம் செய்து விடக்கூடாதே என்று நான் மட்டும் வந்தேன். ரிஷி, அவர்களையும் அழைத்து வா என்று கட்டளையிடவும், பரதன் சேனையை வரவழைத்தான். முனிவரும் அக்னி சாலையில் பிரவேசித்து, தண்ணீரை குடித்து, சுத்தம் செய்து விருந்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய விஸ்வகர்மாவை வரவழைத்தார். விஸ்வகர்மாவையும், த்வஷ்டாவையும் அழைக்கிறேன். விருந்து ஏற்பாடு செய்ய விரும்புகிறேன். ஏற்பாடு செய்யுங்கள். மூன்று லோகபாலர்களையும் அழைக்கிறேன். இந்திரன் முன்னிட்ட தேவர்களையும் அழைக்கிறேன். விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். கிழக்கு முகமாக பாயும் நதிகளும், மேற்கு முகமாக பாயும் நதிகளும் இன்று பூமியிலும், அந்தரிக்ஷத்திலும் வந்து சேரட்டும். மற்றவைகள் மைரேயம் என்ற மதுவை சுரக்கட்டும். மற்றவை கரும்பு ரஸம் போல இனிக்கும் சுத்தமான ஜலம் உடையதாக இருக்கட்டும். குளுமையாக இருக்கட்டும். தேவ கந்தர்வர்களையும், ஹாஹா ஹு ஹு என்னும், விஸ்வாவசுக்களையும், அதே போல அப்சர ஸ்த்ரீகளையும், கந்தர்வர்களையும் எல்லோரையும் அழைக்கிறேன். துதா3சீம், விஸ்வாசீம், மித்ரகேசி, அலம்பு3சா, நாக3 த3ந்தா, ஹேமா, ஹேமாத்3ரியில் இருப்பவர்களையும், இந்திரனுக்கு பணிவிடை செய்பவர்களையும் பிரும்மாவையும், அவனைச் சார்ந்த பெண்கள் எல்லோரையும், தும்புருவுடன் கூட அழைக்கிறேன். தங்கள் கூட்டத்தாருடன் வந்து சேரட்டும். வனத்தை திவ்யமாக ஆக்குங்கள். ஆடை ஆபரணங்களை பத்ரங்களைக் கொண்டு செய்வியுங்கள். பழங்களைக் கொண்டு திவ்யமான பெண்களை உண்டாக்குங்கள். குபேரனுடைய செல்வம் இங்கு வந்து சேரட்டும். இங்கு பகவான் சோமன் அன்னத்தை வடிக்கட்டும். ப4க்ஷ்யம், போ4ஜ்யம், சோஷ்யம், லேஹ்யம் மேலும் பலவிதமான விசித்திரமான உணவு வகைகள், மரங்களிலிருந்து விழும் பூக்களைக் கொண்டு மாலைகளையும், மது வகைகளும், குடி வகைகளும், மாமிசங்களும் பலவிதமாக, இவ்வாறு சமாதியில் இருந்தபடி, தன் நிலையில்லா தேஜஸால், கல்வி, ஸ்வரத்துடன் கூட தன் தவ வலிமையால் முனிவர் கட்டளையிட்டார். கிழக்கு முகமாக நின்று கை கூப்பி அஞ்சலி செய்தபடி, மனதால் த்யானம் செய்த மாத்திரத்தில், தனித் தனியாக எல்லா தேவதைகளும் வந்து சேர்ந்தனர்.
மலயம், து3ர்த4ரம், என்ற காற்று, வியர்வையை அகற்றும் விதமாக சுகமாக உடலை ஸ்பரித்துக் கொண்டு மங்கள கரமாக, ஸ்னேகமாகவும் வீசியது. மேகங்கள் திவ்யமான பூக்களை மழையாக பொழிந்தன. திவ்யமான துந்துபி கோஷம் திசைகளில் எல்லாம் பரவியது. உத்தமமான குழல்கள் ஊதின, அப்ஸர ஸ்த்ரீகள், நடனம் ஆடினர். கந்தர்வர்கள் பாடினர். வீணையிலிருந்து சுஸ்வரமாக கானம் ஒலித்தது. அந்த நாதம் ஆகாயத்தையும், பூமியையும் பிராணிகளின் செவிகளையும் நிறைத்தது. சஞ்சாரங்கள் நிறைந்து ம்ருதுவாக, சமமாக, தாளக் கட்டுடன் கூடியதாக இருந்தது. செவிக்கு இதமாக இருந்த அந்த நாதம் நின்றதும், பரதனின் சைன்யம் விஸ்வகர்மாவின் ஏற்பாட்டைக் கண்டனர்.
ஐந்து யோஜனை தூரம், பூமி சமதளமாக ஆக்கப்பட்டிருந்தது. பசுமையான பலவகை மரங்களின் நிழல் மறைத்திருந்தது. நீல வைமூடுரியம் போன்ற, வில்வ மரங்களும், கபித்த மரங்களும் (நாவல்), பனஸ (பலா) மரங்களும், பீஜ பூரகம் (விளாம்பழம்) ஆமலகம் (நெல்லி) இருந்தன. தவிர சூதா (மா) பழங்கள் நிரம்பியதுமாக வனம் திவ்யமாக அனுபவிக்கத் தக்கதாக இருந்தது. வடக்கிலிருந்து வந்த நதி, இரு
கரைகளிலும் மரங்கள் வளர்ந்து செழிப்பாக இருக்க, பெருகி ஓடியது. அழகிய நான்மாடக் கூடங்களும், யானைக் கட்டும் இடங்களும், குதிரை லாயங்களும், அழகிய மாளிகைகளும், வீடுகளும், தோரணங்கள் கட்டப் பெற்று, மங்களகரமாக விளங்குவதாக, வெண் மணலும், வெண் மேகம் போல அரச மாளிகையும், அதிலும் அழகிய மலர் மாலைகள் தோரணமாக கட்டப் பெற்றிருக்க, வாசனைத் திரவியங்களைத் தெளி த்து, ஓய்வு எடுத்துக் கொள்ள உயர்ந்த சயனாசனங்களும், விசேஷமான அறுசுவை உண்டியும், நல்ல வஸ்திரங்களும், எல்லாவிதமான அன்ன வகைகளும், சமைத்து வைக்கப் பட்டு, நிர்மலமான வெண்ணிற பாத்திரங்கள், அழகிய ஆசனங்கள், லக்ஷ்மீகரமாக விளங்கிய விரிப்புகளுடன் கூடிய படுக்கைகள், என்று தயாராக இருந்த மாளிகையினுள், மகரிஷி அனுமதியுடன் பரதன் நுழைந்தான். கைகேயி புத்திரனான பரதன் அந்த வீட்டில், ரத்னங்கள் நிறைந்த மாளிகையில் நுழைந்தவுடன், மற்ற மந்திரிகள், புரோஹிதர்களுடன் நுழைந்தனர். அந்த மாளிகையைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். அங்கு ராஜாவுக்கான ஆசனமும், சத்ர சாமரங்களும் இருந்தன. மந்திரிகளுடன் கூட பரதன் அரசனாகவே விளங்கினான். ராமனுக்காக அந்த ஆசனத்தை வணங்கி, சத்ர சாமரங்களை வீசி விட்டு, பரதன் மந்திரியின் ஆசனத்தில் அமர்ந்தான். அவரவர் தகுதிக் கேற்ப மந்திரிகள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்தனர். சேனாபதிகளும், அதன் பின் அரசன் ஆணையை செயல் படுத்தும் உத்யோகஸ்தர்களும் அமர்ந்தனர்.
பிறகு அங்கு பரத்வாஜரின் ஆணைப் படி, நதிகள் (பாயஸ கர்தமா- கெட்டியான திரவமாக, பாயஸம் நதியாகவே பிரவகித்தது) தோன்றின. அந்த நதிகளின் இரு கரைகளும் வெண் மணல் இட்டு பூசப் பெற்றிருந்தன. பரத்வாஜரின் பிரசாதத்தில் தங்கும் இடங்களும் சிறப்பாக இருந்தன. ஒரு முஹுர்த்த நேரத்தில், திவ்யமான ஆபரண அலங்காரங்களுடன் இருபதாயிரம் ஸ்த்ரீகள், ப்ரும்மாவால் அனுப்பப் பட்டு வந்து சேர்ந்தார்கள். தங்க, மணி, முத்து, பவளம் இவைகளால் அழகுற விளங்கினர். இருபதாயிரம் பெண்களை குபேரன் அனுப்பி வைத்தான். அவர்கள் எந்த புருஷனைத் தொட்டாலும் அவன் பைத்தியம் பிடித்தவன் போல ஆனான். நந்தனம் எனும் இடத்திலிருந்து இருபதினாயிரம் அப்ஸரஸ்த்ரீகள் வந்தனர். சூரியனுக்கு சமமான பிரபையும், நாரதர், தும்புருவுக்கு இணயாக பாடக் கூடிய கந்தர்வ அரசர்கள் பரதனின் முன்னால் நின்று பாடினர். அலம்பு3ஸா, மிஸ்ரகேசி, புண்டரீகா, மற்றும் வாமனா, இவர்கள் பரத்வாஜருடைய ஆணையால் பரதனுக்கு முன்னால் நடனமாடினர். அவர் தவ வலிமையினால் தேவர்களின் மாலைகளும், சைத்ர வன மாலைகளும், பிரயாக க்ஷேத்திரத்தில் தென் பட்டன.
பி3ல்பா, மாதங்கி3கா, காம்ஸ்ய க்3ராஹா, விபீ4தகா, அஸ்வத்தா2, நர்த்தகா: – என்ற இவர்களும் பரத்வாஜரின் கட்டளைப் படி வந்து சேர்ந்தார்கள். அதன் பின் சரளதாளா:. திலகா, கந்த மாலகா: என்ற வகையினர், கூனிகளாகவும், வாமனர்களாகவும் குற்றேவல் செய்ய வந்து சேர்ந்தனர். சிம்சுபா, ஆமலகீ, ஜம்பூ தவிர காட்டு கொடி வகைகள் பெண் வேடம் தரித்து பரத்வாஜரின் ஆசிரமத்தில் வந்து நின்றனர். மதுவோ, மது கலந்த நீரோ குடியுங்கள். பசித்தால் பாயஸம் குடியுங்கள். விரும்பிய அளவு மாமிசங்கள் பக்குவம் செய்யப் பட்டவை, எது வேண்டுமானாலும் வேண்டிய அளவு சாப்பிடுங்கள். எண்ணெய் முதலியவை கொண்டு தேய்த்து, நதி தீரங்களில் ஸ்னானம் செய்து வைக்கப் பட்டார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழெட்டுப் பெண்கள் பணிவிடை செய்தனர். அழகிய கண்களுடைய அவர்கள் அன்யோன்யமாக நடந்து கெஎண்டனர். குதிரைகள், யானைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், தவிர, சுரபியின் குழந்தைகளான பசுக்கள், வாகனத்தில் பூட்டபட்டவை இவைகளுக்கு திருப்தியாகும் படி உணவு காட்டி, வழக்கம் போல சாப்பிடச் செய்து, கரும்புகளையும், தேன் பொரி இவற்றையும் கொடுத்தனர். இக்ஷ்வாகு குலத்தின் படை வீரர்கள், பலசாலிகள், இந்த வாகனங்களை ஓட்டுபவர்கள், மதோன்மத்தர்களாக (நல்ல ஆகாரம், குடி இவற்றால் தன்னை மறந்தவர்களாக) ஆனார்கள். குதிரை வீரன் குதிரையை கவனிக்கவில்லை. யானையை பிடித்துச் செல்பவன் யானையை கவனிக்கவில்லை. வேண்டியதை வேண்டும் அளவு பெற்றவர்களாக ரக்த சந்தனத்தை பூசிக் கொண்டு, அப்ஸர ஸ்த்ரீகளுடன் சந்தோஷமாக நேரத்தைக் கழித்த படை வீரர்கள், அயோத்யாவும் போக வேண்டாம், தண்டகா வனமும் செல்ல வேண்டாம், பரதன் குசலமாக இருக்கட்டும், ராமனும் குசலமாக இருக்கட்டும், என்றனர்.
தரைப் படை வீரர்கள், யானை, குதிரைகளைக் கட்டி அடக்கி வைப்பவர்கள், இதுவரை காணாத சுகத்தைக் கண்டவர்களாக, ஆயிரக் கணக்கானவர்கள் மகிழ்ச்சியாக பொழுதைப் போக்கினர். பரதனை பின் தொடர்ந்து வந்தவர்கள், இது தான் ஸ்வர்கம் என்றனர். நடனம் ஆடினர் சிலர். சிலர் சிரித்தனர். சிலர் பாடினர். மாலையை அணிந்து கொண்டு முன்னும் பின்னுமாக ஓடினர். அமுதத்திற்கு சமமான அந்த அன்னத்தை உண்ட பின், திவ்யமான பதார்த்தங்களைக் கண்டு ஆவலுடன் சாப்பிடலாயினர். சேனையின் அடி மட்டத்திலிருந்து அனைவரும், மிகவும் திருப்தி அடைந்தவர்களாக ஆடைகள் கசங்கியது தெரியாமல் மகிழ்ந்து இருந்தனர். யானைகளும் கோவேறு கழுதைகளும், ஒட்டகங்களும், பசுக்களும், குதிரைகளும், மற்ற மிருக பக்ஷிகளும் நிறைந்து இருந்தன. நல்ல வெண்ணிற ஆடையில்லாதவன் அங்கு தென்படவில்லை. பசியுடையவனாகவோ, முகம் வாடியவனாகவோ யாரும் தென் படவில்லை. தலை நரைத்தவர் கூட தென் படவில்லை. நல்ல நெய் (வாராள – ஒரு அளவு, படி என்பது போல) குடம் குடமாக, ஒரு புறம். பழங்களை பக்குவப் படுத்தி கலந்தவை, வடைகள், வாசனையும், ரஸமும் நிறைய, இவற்றை அன்னத்துடன் கலந்து, த்வஜம் போல் புஷ்பங்களால் அலங்கரித்து தட்டு நிறைய வௌளை வெளேரென்று அன்னம், இதை பார்த்து வியந்து நின்றார்கள். வனத்தின் அருகில் ஒரு இடத்தில் கிணறு என்று சொல்லும்படியான பாத்திரத்தில் பாயஸம் நிரம்பி இருந்தது. வேண்டியதை வேண்டும் போது கொடுக்கும் பசுக்கள், மரங்கள் தேனை சொரிந்தன. மயக்கும் மதுவகைகள் கிணறுகளாக நிரம்பி இருக்க, மாமிச வகைகளுக்கும் குறைவில்லை. கொதிக்கும் பாத்திரங்களில் (மார்க, மயூரா, கௌக்குட என்று தூரத்தை அளக்கும் அளவுகள்- ஒரு மார்க என்பது 8 மைல்) தூரம், தட்டுகள் ஆயிரக் கணக்காக வைக்கப் பட்டிருந்தன. கோடிக் கணக்கில் தங்கமாக ஜொலிக்கும், பாத்திரங்கள், தட்டுகள், கும்பம் போன்றவை, தயிர் நிரம்பிய சிறிய குடங்கள், இளம் காராம் பசுவின் பாலால் தயாரிக்கப் பட்டது, மனதை ஈர்க்கும் வாசனையும், சில வெண்மையாக, சில பழுப்பு நிறமாக பாயஸங்கள், சர்க்கரை சேர்த்து கல்கம், சூர்ணம், கஷாயம் என்ற வகை மருந்துகளும், வித விதமான ஸ்நான சாமான்கள் நதிக் கரைகளில், பாத்திரங்களில் வைக்கப் பட்டிருந்ததை ஜனங்கள் கண்டனர். பல் தேய்க்கவும், வாய் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ளவும், பல் பொடிகள், வெண்ணிறமாகவும், சந்தன நிறத்திலும், குளிக்க உபயோகிக்கும் கல்கம் (கெட்டியாக நீர் பட்டால் கரையும் படி) கண்ணாடிகள் முகம் பார்க்க, வஸ்திரங்கள் கணக்கில்லாமல், ஜோடி ஜோடியாக காலணிகள், ஆயிரக் கணக்கில் கண் மை வகைகள், பலவிதமான மனதைக் கவரும் படுக்கை வகைகள், ஆஸனங்கள், குதிரைகளுக்கும் மற்ற வாகனம் இழுக்கும் மிருகங்களுக்கும் குடிக்கத் தண்ணீர், பான வகைகள், உத்பலம், தாமரை நிறைந்த குளங்கள், அமிழ்ந்து குளிக்கவும், நீந்தி விளையாடவும், ஆகாசம் போல நிர்மலமான தண்ணீர் நிறைந்து குளங்கள் நீல மணி போல நிறமுடைய புல் தரைகள், பசுக்கள் மேய அங்கு கண்டனர். ஆச்சர்யம், ஸ்வப்னமோ என்ற பிரமை இவை அந்த ஜனங்களை ஆட்கொண்டன. மகரிஷி இப்படி ஒரு கண்ணுக்கு விருந்தையும் பரதனுக்காக படைத்து விட்டார். தேவர்கள் நந்தன வனத்தில் உலவுவது போல சுற்றி வந்தனர். அந்த ரம்யமான இடத்தில் இரவு நகர்ந்தது.. அந்த நதிகளும், கந்தர்வர்களும், உயர் குலப் பெண்களும் பரத்வாஜரிடம் விடை பெற்றுச் சென்றனர்.
மதுவைக் குடித்து மயங்கி கிடந்த ஜனங்கள், திவ்யமான வாசனை திரவியங்களைப் பூசிக் கொண்டவர்களாக, வித விதமான அழகிய மாலைகளைத் தரித்துக் கொண்டவர்களாக கிடந்த மனிதர்கள் தான் மிஞ்சினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத்வாஜாதித்யம் என்ற தொன்னூற்று ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 92 (169) பரதவாஜாமந்த்ரணம் (பரத்வாஜரிடம் விடை பெறுதல்)
இப்படியாக இரவைக் கழித்து விட்டு, பரத்வாஜர் கொடுத்த விருந்தினால் மிகவும் திருப்தியடைந்தவர்களாக, அவரிடம் விடை பெறச் சென்றான். அக்னி ஹோத்ரத்தை செய்து முடித்துவிட்டு, முனிவர் அப்பொழுது தான் எழுந்து வந்தார். அன்புடன் பரதனிடம் விசாரித்தார். இரவு சுகமாக தூங்கினீர்களா? கூட வந்த பரிவாரங்கள் திருப்தியடைந்தனரா? பரதன் அவர் காலடியில் விழுந்து வணங்கினான். ஆஸ்ரமத்திலிருந்து கிளம்பி விட்ட முனிவரைத் தொடர்ந்து நடந்து வந்தவன், இரவு நன்றாகத் தூங்கினோம் ஸ்வாமி, என் படையைச் சேர்ந்த மற்றவர்களும் கூட நன்றாக சாப்பிட்டுத் தூங்கினார்கள். என் மந்திரி முதலியவர்களும், திருப்தியாக இருக்கிறார்கள், அவர்கள் தேவைகள் எல்லாம் நன்றாக பூர்த்தி செய்யப்பட்டன. எங்கள் களைப்பு, பசி நீங்கியது. நல்ல விதமாக இடம் கிடைத்து, நன்றாகத் தூங்கியதால் இப்பொழுது எல்லோரும் காலாற நடந்து வரத் தயாராக இருக்கிறார்கள். உங்களிடம் விடை பெற்றுக் கொள்கிறேன், மகரிஷியே, சமீபத்தில் புறப்பட்டுப் போனவன் சகோதரன், என்று நட்போடு என்னைப் பாருங்கள். அவனுடைய ஆஸ்ரமம் எங்கு இருக்கிறது. எப்படி போக வேண்டும் என்பதை விவரமாகச் சொல்லுங்கள். தன் சகோதரனைக் காண மிகவும் ஆவலோடு இருந்த பரதனைப் பார்த்து பரத்வாஜர் சொன்னார். ஜன நடமாட்டம் இல்லாத வனத்தில் 3.5 யோசனை தூரத்தில் சித்ரகூடம் என்று ஒரு மலை. அழகிய மலைச் சாரலும், காடுகளும் நிரம்பியது. அதனுடைய வட பகுதியில், மந்தாகினி நதி ஓடுகிறது. இந்த நதி கண்ணுக்குத் தெரியாத விதமாக, கரையில் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. அதையடுத்த காடும் மரங்கள் நிரம்பியது. அந்த நதியைக் கடந்த உடன் வருவது சித்ரகூட மலை. அங்கு பர்ணசாலை கட்டிக் கொண்டு இருவரும் வசிக்கிறனர். தென் திசையில், அல்லது தென் கிழக்கில் கஜ, குதிரைகள் பூட்டிய ரதங்களையும், வாகனங்களையும் நிறுத்தி வைத்து விட்டு ராகவனைக் காணப் போ. ராஜக் குல பெண்கள், வாகனங்களை விட்டு இறங்கி முனிவரை சூழ்ந்து நின்று கொண்டனர். சுமித்திரை கை பிடித்து அழைத்து வர, கௌசல்யையும் அங்கு வந்து சேர்ந்தாள். தன் இஷ்டமும் பூர்த்தியாகாமல், உலக நிந்தைக்கும் ஆளான கைகேயியும் சற்று வெட்கத்துடன் வந்து வணங்கி நின்றாள். மகாமுனிவரை பிரதக்ஷிணம் செய்து பரதனுக்கு தள்ளியே நின்றனர். பரதனைப் பார்த்து முனிவர், உன் தாயார்களை தெரிந்துகொள்ள வேண்டும், அறிமுகப் படுத்தி வை எனவும், பகவன், இதோ நிற்கிறாளே, முகவாட்டத்தோடு, உடல் இளைத்து உருமாறி நிற்கிறாளே, தேவதை போன்ற ராஜ மகிஷி இவள் தான், சிம்மம் போன்ற நடையும், பராக்ரமமும் உடைய, ராமனைப் பெற்ற மகராசி. அதிதி மகனைப் பெற்றது போல பெற்ற மாதரசி. இவள் இடது புறம், ம்ருதுவாக பேசும் குணம் உடையவள் அரசனின் மத்ய ராணி. இவளும் துக்கத்தால் வாடி காணப் படுகிறாள். காட்டு நடுவில் பூக்களும் இலையும் உதிர்ந்த நிலையில் உள்ள கர்ணிகார மரம் போல இருக்கிறாள். தேவர்களுக்கு இணையான இரு புத்திரர்களுக்குத் தாய். வீரர்களான லக்ஷ்மண, சத்ருக்னர்கள் இவள் பிள்ளைகள். எவள் காரணமாக மனிதர்களுள் புலியாக போற்றப் பட்ட இருவரின் வாழ்வும் நாசமானதோ, புத்திரனைப் பிரிந்து ராஜா தசரதர் ஸ்வர்கம் சென்றாரோ, க்ரோதமும் அறியாமையும், ஐஸ்வர்யத்தில் பற்றும், பிடிவாதமும் உடையவள், இவள் தான் என் தாய் என்று தெரிந்து கொள்ளுங்கள். பாபத்தைச் செய்யத் துணிந்து விட்ட கொடியவள்.
இவளிடத்திலிருந்து தான் என் கஷ்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன. இவ்வாறு சொல்லி நாத்தழதழக்க பரதன் நிறுத்தினான். கோபம் கொண்ட நாகம் போல பெருமூச்சு விட்டான். பரதன் சொன்னதைக் கேட்டு, புத்திமானான பரத்வாஜர், அர்த்தம் செறிந்த இவ்வார்த்தைகளைச் சொன்னார். பரதா, கைகேயியை தூஷிக்காதே. அவளை துஷ்டையாக எண்ணாதே. ராம ப்ரவ்ராஜனம் (ராமனை நாட்டை விட்டு வெளியேற்றியது) என்ற இந்த செய்கை, சுகத்திற்கு ஆதாரமாக, நன்மையை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்று அறிவாய். தேவர்களுக்கும், ராக்ஷஸர்களுக்கும், விஷயம் அறிந்த முனிவர்களுக்கும் இந்த ராமனது செய்கையால் (வெளி ஸ்ரீ நடப்பால்) ஹிதமே நடக்கும் என்றார்.
முனிவரை வணங்கி பிரதக்ஷிணம் செய்து விடை பெற்றுக் கொண்டு, பரதன் சைன்யத்தைக் கிளம்புங்கள் என்று உத்தரவிட்டான். குதிரைகளை ரதங்களில் பூட்டி, பலவிதமான ஜனங்கள், பலவிதமான வாகனங்களில் ஏறி, புறப்பட்டனர். இளம் யானைக் குட்டிகள், யானைகள் தங்க அம்பாரியுடனும், கொடியுடனும், கோடை முடிவில் மேகம் போல கர்ஜித்துக்கொண்டு கிளம்பின. பெரியவையும், சிறியவையுமான பல வாகனங்கள், கிளம்பின. கால் நடையாக மற்றும் பலரும் தொடர்ந்தனர். கௌசல்யை போன்றவர்களும், ராமனைக் காணப் போகிறோம் என்ற ஆவலுடன் வாகனங்களில் ஏறிக் கொண்டனர். சூரிய சந்திரன் போன்ற ஒளி யுடைய சிவிகையில், பரதனும் அமர்ந்து தன் பரிவாரங்களோடு புறப்பட்டான். அந்த பெரும் கூட்டமான சேனை, தென் திசை நோக்கி யானைகளும், பக்ஷிகளும் நிறைந்த வனப் பிரதேசத்தைக் கடந்து கங்கையின் அக்கரையில், கி3ரிகளையும், நதிகளையும் மகிழ்ச்சியுடன் கடந்து காட்டு மிருக பக்ஷிகளை பயமுறுத்தியபடி அரசனது குதிரை வீரர்கள், அந்த பெரும் வனத்தினுள்ளே சென்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத்வாஜாமந்த்ரணம் என்ற தொன்னூற்று இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 93 (170) சித்ரகூட வனப் ப்ரேக்ஷணம் (சித்ரக் கூட மலையைக் காணுதல்)
கொடிகள் பறக்க செல்லும், ரத, கஜ துரக சேனையுடன், ஒவ்வொரு படைத் தலைவனும் தன் கீழ் உள்ள படைவீரர்களை மேற்பார்வை பார்த்தவாறு செல்வதை வனவாசிகளான கரடிகள், மான்கள், மற்றும் பல மிருகங்களும் பார்த்தன.
மலைகளிலும், நதிகளிலும் இவை அணி வகுத்துச் செல்வதைக் கண்டன. தசரதன் மைந்தனான பரதனும் மகிழ்ச்சியுடன் கிளம்பினான். தர்மாத்மாவான இவனை நான்கு புறமும் ஆரவாரத்துடன் சேனை வீரர்கள் சூழ்ந்து கொண்டனர். சமுத்திரம் போல அடுத்தடுத்து பெருகிவரும் சேனை, மழைக் காலத்தில் ஜலம் பூமியை மூழ்கடிப்பதைப் போல தரையே தெரியாமல் செய்தது. யானைக் கூட்டம், குதிரைகள் கூட்டம் வீரர்கள் சூழ்ந்து நிற்க, சில சமயம் பரதனைக் காணவே முடியாதபடி இருந்தது. வெகு தூரம் சென்றபின் வாகனங்கள் களைத்துப் போய் தடுமாறுவதைப் பார்த்து மந்திரிகளுள் சிறந்தவரான வசிஷ்டரைப் பார்த்துச் சொன்னான், பரதன். இந்த இடத்தைப் பார்க்கும் பொழுது நாம் கேள்விப் பட்ட வரையில் பரத்வாஜர் சொன்ன இடத்திற்குத் தான் வந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இது தான் சித்ர கூட மலையாக இருக்க வேண்டும். இது தான் மந்தாகினி நதி. இதோ தூரத்தில் அடர்ந்த நீல நிறக் காடு தெரிகிறது. சித்ர கூட மலையின் மலைச் சாரல்கள் ரம்யமாகத் தெரிகின்றன. தற்சமயம் என் யானைகள் அதை நாசம் செய்கின்றன. இந்த மரங்கள் மலை அடிவாரத்தில் பூத்துக் குலுங்குகின்றன. சூரியன் மறைந்த சமயம், மேகங்கள் நுனியில் நீர்த்துளிகளைத் தாங்கி நிற்பதைப் போல தோன்றுகிறது. சத்ருக்னா, பார் இந்த தேசத்தில் கின்னரர்கள் சஞ்சரிக்கின்றனர். சமுத்திரத்தில் முதலைகள் இருப்பது போல வனத்தில் மிருகங்கள் எதிரில் திரிகின்றன. பார். வாயு வேகத்தில் ஓடும் இந்த மான் குட்டிகள், காற்றில் கொண்டு செல்லப் படும் சரத் கால மேகங்கள் வானில் தெரிவது போல இருக்கின்றன. இந்த மரங்கள் பூக்களைத் தலையில் சொரிந்து தள்ளுகின்றன. வனத்தின் பயங்கரத்தை நீக்கி விட்டால், அயோத்யா நகரம், அதன் ஜனங்கள் நிறைந்து இருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது. காலடியில் கிளம்பிய புழுதி, ஆகாயத்தைத் தொடுவது போல கிளம்புகிறது. இதைக் காற்று உடனே தள்ளிக் கொண்டு போகிறது, ஏதோ, எனக்கு நன்மை செய்ய விரும்புவது போல. ரதங்கள் குதிரைகள் பூட்டப் பெற்று நல்ல சாரதிகளால் ஓட்டப் படுபவை சத்ருக்னா, காட்டில் ஓடுவதை சீக்கிரம் பார். மயில்கள், கண்ணுக்கு விருந்தாக பயந்து ஓடுவதைப் பார். பக்ஷிகளுக்கும் இருப்பிடமான இந்த மலை மிகவும் மனோகரமாக எனக்குத் தெரிகிறது. தபஸ்விகள் வசிக்கும் இந்த இடம், நிச்சயமாக ஸ்வர்கத்திற்கு இட்டுச் செல்லும் வழியே ஆகும். ஆண் மான்கள், பெண் மான்களுடன் இணைந்து ஏராளமான குட்டி மான்களுடன் வனத்தில் பூக்களை அலங்காரமாகத் தொடுத்து வைத்தது போல தெரிகின்றன. சேனைகளை படை வீரர்களை, கானகத்தில் ராம லக்ஷ்மணர்கள் தங்கியிருக்கும் இடத்தை தேடச் சொல்லுங்கள். பரதனுடைய உத்தரவைக் கேட்டு, ஆயுதம் ஏந்திய வீரர்கள், வனத்தின் உள் பக்கம் தேடச் சென்றனர். ஓர் இடத்தில் எழும்பிய புகையைக் கண்டனர். புகை மூட்டத்தைக் கண்டு பரதனிடம் சொன்னார்கள். அமானுஷ்யமான இந்த இடத்தில் அக்னியைக் காண்பது சாத்தியமில்லை. அதனால் நிச்சயம் ராம லக்ஷ்மணர்கள் பர்ணசாலை அருகில் தான் இருக்க வேண்டும். தவிர, ராமனைப் போன்ற வேறு ஒருவர் இருக்க முடியாது. அதனால் சகோதரர்கள் இருவரும் தபஸ்விகளாக இங்கு தான் இருக்கிறார்கள். அவர்கள் வார்த்தையைக் கேட்டு, சத்ருக்களை அழிக்கக் கூடிய பலம் பொருந்திய பரதன், சைன்யத்தைப் பார்த்து, நீங்கள் இங்கேயே நில்லுங்கள். இதற்கு மேல் வர வேண்டாம். நானே போகிறேன். சுமந்திரர், குரு வசிஷ்டர் உடன் வரட்டும். உடனே படை வீரர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர். பரதன் புகை மூட்டம் கிளம்பிய இடத்திலேயே தன் பார்வையைப் பதித்து நின்றான். பரதனால் நிறுத்தி வைக்கப் பட்ட வீரர்களும் புகை மூட்டத்தைக் கண்டு, இதோ ராமனைக் காணப் போகிறோம் என்று மகிழ்ச்சி அடைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சித்ரகூட வன ப்ரேக்ஷணம் என்ற தொன்னூற்று மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 94 (171) சித்ரகூட வர்ணனை (சித்ரகூட மலையின் வர்ணனை)
வெகு காலமாக ஆனது போல சித்ர கூட வாசியான ராமன், வைதேஹியின் மனம் ஆனந்தமடையவும், தனக்கும் ஒரு மாறுதலடையவும் சித்ர கூட மலையை அவளுக்குச் சுற்றிக் காட்டினார். இந்திரன் சசிக்கு காட்டுவது போல, அமரனுக்கு இணையான அவர், சீதைக்கு மலைப் பிரதேசங்களை காட்டினார். பத்ரே, ராஜ்யத்தை விட்டு வந்தது, உற்றாரை பிரிந்து வந்தது இவை கூட இந்த அழகிய மலைச் சாரலைக் கண்ட பின் என் மனத்தை உறுத்துவதில்லை. எவ்வளவு பறவைகள் பார். இந்த மலை தன் சிகரங்களால் ஆகாயத்தை தொட முயற்சி செய்வது போல இல்லை. இந்த மலை விசேஷமான தா4துக்களை உள்ளடக்கி இருக்கிறது. சில இடங்களில் வெள்ளி போல பள பளக்கிறது. சில இடங்கள் ரத்தச் சிவப்பாகத் தெரிகிறது. மஞ்சள் பூசியது போல சில இடங்கள் விளங்குகின்றன. சில இடங்களில் உயர்ந்த மணி கணங்கள் போல ஒளி வீசுகிறது. அர்க்க புஷ்பம் (எருக்கம்பூ) தாழம்பூ, சில ஜ்யோதி ரஸம் என்ற புஷ்பம், இந்த மலையரசனுடைய தேகத்தைப் பிரகாசிக்கச் செய்கின்றன. ஏற்கனவே தா4துக்கள் நிறைந்தது. பலவிதமான மான் கூட்டமும், பலவிதமான மரங்களும் நிறைந்து துஷ்டத்தனம் என்பதே இல்லாததாக நிர்மலமாக இந்த மலைப் பிரதேசம் விளங்குகிறது. பறவை இனங்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதைப் பார். மா, நாவல், மஞ்சள் சால விருக்ஷம், சிவந்த புஷ்பங்களுடைய லோத்ர மரங்கள், பியால, பலா, த4வ அன்கோ2ல பணிந்து நிற்கும் தினிச மரங்கள், வில்வ, திந்து3க, மூங்கில் மரங்கள், காசிமரி, அரிஷ்டவர, மதூ4க, திலக, இலந்தை, நெல்லி, வேம்பு, வேத்ர, தன்வன பீ4ஜகம் என்ற வகை மரங்கள், பூத்துக் குலுங்குவதாக, பழங்கள் நிரம்பியதாக, நிழல் தரும், அழகாக எல்லாமாக இரைந்து கிடப்பதைப் போல வளர்ந்து இந்த மலையின் அழகை கூட்டுகிறது. மலையின் சாரல்களில் வளர்ந்து நிற்கும் இவைகளைப் பார். பிரமிப்பு ஊட்டும் அழகு இது. ஜோடி ஜோடியாக கின்னரர்கள், தங்கள் இஷ்டப் படி விளையாடி மகிழ்கின்றனர். கிளைகளில் கட்டப் பட்டுள்ள வாள்களையும், விசேஷமான ஆடைகளையும் பார். வித்யாதர ஸ்திரீகள், விளையாடும் இடம் போல இந்த இடம் தோன்றுகிறது. ஒரு பெரிய யானை, மத ஜலம் முகத்தில் பெருக, நிற்பது போல இந்த மலையும் ஆங்காங்கு விழும் அருவிகள், சிறு நீர் வீழ்ச்சிகள், நடு நடுவே தெரியும் நீர் நிலைகள் இவற்றுடன் தெரிகிறது. யார் தான் பலவிதமான புஷ்பங்களின் மணத்தை ஏந்தி வீசும் காற்றை ரஸிக்காமல் இருப்பார்கள். நாசிகளுக்கு இவை விருந்தானால், குகைகளுக்குள் நுழைந்து வரும் காற்றின் தனித் தன்மை கொண்ட நாதம் காதுகளுக்கு விருந்தாகிறது. நீயும் உடன் இருந்தால், பல சரத் ருதுக்களை இங்கேயே கழிக்க நான் தயார். லக்ஷ்மணனும் இருந்து விட்டால் எந்த வித சோகமும் என்னை பாதிக்காது. பா4மினீ, இந்த இடத்தின் அழகில் என் மனதை பறி கொடுத்து விட்டேன். பழ வகைகளும், பூக்களும் நிறைந்த பலவித பக்ஷிகளின் கூக்குரலோடு விசித்திரமான சிகரங்களையுடைய இந்த மலைக்கு ஈடு ஏது? இந்த வன வாசத்தால் எனக்கு இரண்டு லாபம். ஒன்று தந்தையின் வாக்கு பொய்யாகாமல் பரதனுக்கு பிரியமாக நடந்து கொண்டது. இரண்டாவது, வைதே3ஹி, இந்த சித்ர கூட மலையின் அழகை உன்னுடன் சேர்ந்து ரஸிப்பது. நீ உடன் இருப்பது. நீ என்னுடன் சேர்ந்து, மனம் வாக்கு காயங்களால் பலவிதமான பாவங்களை உணர்ந்து ரஸிக்கிறாய். இதையே தான் அம்ருதம் என்று சொல்வார்களோ. ராஜ ரிஷிகளான பலர் அரசு பதவியை விட இந்த அனுபவத்தை தான் உயர்வாக சொல்லியிருக்கிறார்கள். வன வாசம் சென்ற என் மூதாதையர்கள் இந்த அனுபவத்தை உணர்ந்து இருக்க வேண்டும். மலையின் கற்கள் கூட அழகு. அகலமாக நூற்றுக் கணக்காக காணப் படுகின்றன. பலவித வர்ணங்களில் நீலம், மஞ்சள், வெண்மை, இளம் சிவப்பு நிறக் கற்கள். இரவில் பார்க்கும் பொழுது அக்னி ஜ்வாலை போல தெரிகின்றன. ஆயிரக்கணக்கான மூலிகைகள், அவைகளின் பிரகாசத்தாலேயே இனம் கண்டு கொள்ளலாம் எனும் படி ஒளி வீசுகின்றன. சில இடங்களில் வழுக்குகின்றன. சில இடங்கள் உத்யான வனம் போல, சில ஒற்றைக் கல்லாகத் தெரிகிறது, இந்த மலையின் விசேஷம் இது. பூமியை பிளந்து சித்ரகூட மலையை செருகி வைத்தது போல இருக்கிறது. சித்ரகூடத்தின் மத்யபிரதேசம் இது. நாலா திசைகளிலும் சுப4மாகவே தெரிகிறது. புன்னாக3, சதகர, பூர்ஜ இலைகள் பூமியை மூடி காமிகளுக்கு இயற்கையாக படுக்கை விரித்து வைத்திருப்பது போல இந்த புல் தரை இருப்பதைப் பார். கமல புஷ்பத்தின் மகரந்தம் ம்ருதுவாக இரைந்து கிடப்பதைப் பார். காமிகளுக்கு பலவித பழங்கள், செல்வம் நிறைந்த இந்த சித்ர கூட மலை வட பிரதேசத்து மலைகளையும் மிஞ்சி விட்டது. பலவிதமான நீர் நிலைகளும், பழங்களும், மூலங்களும் இதிலும் நிறைந்துள்ளன. சீதே, உன்னோடும், லக்ஷ்மணனுடனும் இங்கு வசிக்கும் காலத்தை ரஸித்தபடி குலதர்மத்தை வளர்க்கும் விதமாக, நல்லவர்களின் வழியில், என் நியமங்களை தவறாமல் செய்தபடி கழிப்பேன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சித்ரகூட வர்ணனா என்ற தொன்னூற்று நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 95(172) மந்தா3கினி வர்ணனை
மலைகளைக் கடந்து நடந்து வந்த ராமனும், சீதையும் மந்தாகினி நதியைக் கண்டனர். அந்த அழகிய நதியை சீதைக்கு காட்டிய ராமர் அவளிடம் சொன்னார். சந்திரன் போன்ற அழகிய முகமுடைய விதேஹ ராஜ குமாரியிடம் இந்த காட்சிகளைக் காட்டி விவரித்தார். விசித்ரமான மணலையுடைய அந்த நதியில் ஹம்சங்களும், ஸாரஸ பக்ஷிகளும் விளையாடின. ஆங்காங்கு தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின. பலவிதமான, நதிக் கரையில் வளரும் மரங்கள், பழங்களுடனும், பூக்களுடனும் அழகுற விளங்கின. மான் கூட்டமாக வந்து நீரைப் பருகி அதைக் கலங்கச் செய்திருந்தன. அழகிய இந்த தீர்த்தம் என் மனதில் ஆசையை உண்டு பண்ணுகிறது. ப்ரியே, சீதே, இந்த நதியில் ஜடை முடி தரித்து வல்கலை மரவுரி தரித்தவர்களாக ரிஷிகள் ஸ்னானம் செய்வர். கைகளை உயரத் தூக்கியவர்களாக, சூரிய நமஸ்காரம் செய்வர். இந்த முனிகள் தங்கள் விரதங்களை அனுஷ்டிப்பதில் மிகவும் தீவிரமானவர்கள். விசாலாக்ஷி, காற்று இதன் சிகரங்களில் மோதி திரும்பும் போது இந்த மலைச் சிகரங்கள் நடனமாடுவது போல தோற்றமளிக்கின்றன. மரங்களிலிருந்து இலைகளும், புஷ்பங்களும் விழுந்து நதியை மூடி மறைக்கின்றன. சில இடங்களில் தண்ணீர் ரத்னம் போல் தெளி வாக, சில இடங்களில் மண் கலங்கலாக, சில இடங்களில் சித்தர்கள் நிரம்பியும், இந்த மந்தாகினி நதியைப் பார். நீரில் விழுந்த புஷ்பம் குவியலாக காற்றில் நகர்ந்து செல்வது, ஜல மத்தியில் படகு செல்வது போல இல்லை. இந்தப் பறவைகளைப் பார். கீச் கீசென்று மழலை பேசும் இவை, கூவிக் கொண்டே மலை மேல் ஏறுவது போல போவதைப் பார். இந்த சித்ரகூட மலை, மந்தாகினி நதி இவைகளைப் பார்த்து நகர வனத்தை விட இதுவே மேல் என்று நினைக்கிறேன். உன் அருகாமையும் இருப்பதால். குற்றமற்ற சித்தர்கள், தவமே தனமாக உடையவர்கள், தமம், சமம் என்னும் நற்குணங்களையுடைய சித்தர்கள், புழங்கும் இந்த ஜலத்தில் என்னுடன் நீயும் இறங்கி விளையாடி மகிழ்வாய். இந்த மந்தாகினி நதியை சகியாக எண்ணி மகிழ்ச்சியுடன் நீரில் இறங்கு. தாமரை மலர்களை மூழ்கச் செய்யும் குளங்களையும் பார். பாமினி, ஊர் ஜனங்களைப் போல் இந்த மதம் பிடித்த யானைகளையும், அயோத்தி தான் இந்த பர்வதம் என்றும் நினைத்துக் கொள். இந்த மந்தாகினி நதியை சரயூ நதியாக பார். தர்மாத்மாவான லக்ஷ்மணன் என் ஆணைப் படி நடக்கச் சித்தமாக இருக்கிறான். நீயும் எனக்கு அனுகூலமாக இருக்கிறாய். இதுவே போதும். என் மனம் நிறைந்து இருக்கிறது. மூன்று வித யாகங்களை செய்தபடி தேன் பழம் இவற்றையே ஆகாரமாகக் கொண்டு, அயோத்தியும் வேண்டாம், ராஜ்யமும் வேண்டாம் நீ அருகில் இருக்கும் இதுவே போதும். நான் சந்தோஷமாக இருப்பேன். இந்த ரம்யமான ஜலத்தில் யானைக் கூட்டங்கள் வந்து கொட்டமடிக்கின்றன. இந்த ஜலத்தைக் குடிக்க யானை, சிங்கம், வானரங்கள் எல்லாமே வருகின்றன. பூக்கும் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. அதுவே அலங்காரமாகத் தெரிகிறது. இங்கு வருபவன் யாரானாலும், களைப்பு நீங்கி சுகமாக இருப்பான் என்பதில் சந்தேகமில்லை. நதியை இப்படி ரசித்து மனைவியுடன் சேர்ந்து அனுபவித்து விட்டு, கண் மை போல கருத்து அடர்ந்து இருந்த சித்ர கூட மலைச் சாரல்களில் உலாவினான், ராமன், ரகு வம்சத்தை விளங்கச் செய்ய வந்த ராஜ குமாரன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் மந்தா3கினி வர்ணனா என்ற தொன்னூற்று ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 96 ( 173) லக்ஷ்மணக்ரோத4: (லக்ஷ்மணனின் கோபம்)
மைதிலிக்கு இயற்கையின் சௌந்தர்யத்தை சுற்றிக் காட்டி விட்டு, ஓரிடத்தில் அமர்ந்து மாமிசங்களைக் கொடுத்து அவளை மகிழ்விக்கலானார். இதோ பார், இது மேத்யம். இது ருசியாக உள்ளது. இது அக்னியில் நன்றாக வெந்திருக்கிறது என்று சொல்லிச் சொல்லி பார்த்து பார்த்து சீதைக்கு உபசரித்துக் கொடுத்தார். இவ்வாறு இவர்கள் இங்கு அமர்ந்திருந்த பொழுது, சைன்யத்தின் சப்தமும், புழுதியும் ஆகாயத்தை நிறைத்தன. இந்த பெரும் சத்தத்தைக் கேட்டு நடுங்கிய பறவைகள், நால் திசைகளிலும் பறந்தன. சைன்யத்தினால் உண்டான இந்த சப்தத்தை ராகவன் கேட்டான். ஓடி வரும் படைத் தலைவர்களையும் கண்டான். நாற்புறமும் ஓடும் வீரர்களையும், அதனால் எழுந்த ஆரவாரத்தையும் கேட்டு, லக்ஷ்மணனைக் கூப்பிட்டு ராமர் விசாரித்தார். சுமித்ரை பெற்ற நற்செல்வமே, லக்ஷ்மணா, இந்த பயங்கர சப்தத்தைக் கேட்டாயா?. கம்பீரமாக, இரைச்சலாக வரும் இந்த சத்தம் எதனால் இருக்கும்? காட்டில் யானைகள் சிங்க கூட்டங்களுக்கு பயந்து அலறி ஓடுகின்றனவா? எருமைகளே பயந்து அலறும் சத்தமா? திடுமென சிங்கம் வந்து தாக்கியதால் மான் கூட்டம் உயிருக்குப் பயந்து ஓடுகின்றனவா. ஏதாவது அரசனோ, அரசகுமாரனோ வேட்டையாட வந்திருக்கிறார்களா? அவர்களுடைய நாய்கள் குரைக்கும் சத்தமா? சௌமித்ரே, தெரிந்து கொண்டு வா. இந்த மலையில் நடமாடுவது கஷ்டம். பறவைகள் கூட தடுமாறக் கூடிய அளவு அடர்ந்த காட்டுப் பிரதேசம். எல்லா விவரங்களும் தெரிந்து கொண்டு வா. உடனே லக்ஷ்மணன் அவசரமாக அருகில் இருந்த சால மரத்தில் ஏறி எல்லா திக்குகளிலும் பார்வையை செலுத்தியபடி கிழக்கு திசையில் நோக்கினான். அங்கு பெரும் சேனையைக் கண்டான். ரத, கஜ, துரக, பதாதி என்ற நால் வகை சேனைகளும் முன்னேறி வரக் கண்டான். குதிரைகள் யானகள் நிறைந்த ரதங்கள், கொடிகள் மேலே பறக்க, போர்க் கால சேனையாக நினைத்து ராமரிடம் சொன்னான். அக்னியை அணைத்து வையுங்கள் அண்ணா, சீதையை பாதுகாப்பாக குகைக்குள் இருக்கச் சொல்லுங்கள். உங்கள் வில்லையும், அம்பையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். கவசத்தை எடுத்து அணிந்து கொள்ளுங்கள். யார் படை என்று நினைக்கிறாய் என்று ராமன் வினவ, நன்றாக பார்த்து விட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி ஊன்றி கவனித்த லக்ஷ்மணன், கண்களாலேயே எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டு, கண்களில் அனல் பறக்க ரோஷத்துடன் பல்லைக் கடித்தபடி சொன்னான். ராஜ்யம் கையில் கிடைத்து முடி சூட்டிக் கொண்டவுடன், இடையூறு இன்றி ராஜ்யம் பூராவும் ஆள விரும்பி, கைகேயி புத்திரனான பரதன் தான் நம்மைக் கொல்ல வந்து கொண்டிருக்கிறான். இந்த மிகப் பெரிய சேனையுடன், லக்ஷ்மீகரமாக கோவிதா3ரக் கொடியை உடையது, உயர்ந்த மேல் பாகம் கொண்ட ரதங்கள் தெரிகின்றன. இதோ இஷ்டம் போல் குதிரைகளில் ஏறிக் கொண்டு வேகமாக வரும் வீரர்கள், இதோ சந்தோஷமாக யானைகளை நடத்திக் கொண்டு வரும் மாவுத்தர்கள், வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் இருவரும் வில்லேந்தி மலையடிவாரம் செல்வோம். அல்லது இங்கேயே நிற்போம். தயாராக, ஆயுதங்களை கையில் ஏந்தியபடி. இந்த கோவிதார த்வஜத்தையுடையவன் இன்று நம் வசம் வந்து சேருவான். இதோ பரதனை பார்க்கப் போகிறோம். எவன் காரணமாக இந்த வன வாச துக்கத்தை நீ அடந்தாயோ, சீதையும், நானும். சாஸ்வதமான ராஜ்யம் தானாக உன்னை வந்து அடைய வேண்டியது, எதனால் பறிக்கப் பட்டதோ, அந்த காரணமான பரதன் வந்து கொண்டிருக்கிறான். இவன் சத்ரு. இவனை வதைக்கத் தான் வேண்டும். பரதனை வதம் செய்வதில் எந்த தோஷமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. முதலில் கெடுதல் செய்தவனை வதைப்பதில் எந்த தோஷமுமில்லை. பரதன் தர்மத்தின் விதியையும் மீறியவன். இவனை நான் வதைத்தபின் நீ ராஜ்யத்தை அடைந்து ஆட்சி செய்வாய். ராஜ்யத்தை அடைய பேராசைக் கொண்ட கைகேயி இன்று புத்திரனை இழந்து தவிக்கட்டும். மரத்தை யானை நடுவில் முறித்தது போல பரதனை நான் யுத்தத்தில் அடித்து வீழ்த்துவதைப் பார்த்து வருந்தட்டும் இந்த கைகேயியையும் அவள் சுற்றத்தார், பந்துக்களோடு அழித்து விடுகிறேன். இந்த பூமிக்கு ஏற்பட்ட களங்கம் விலகட்டும். இன்று இந்த கோபமும், நமக்கு ஏற்பட்ட அவமரியாதையும் விலகச் செய்கிறேன். அறைக்குள் நெருப்பு போல இந்த சைன்யம் அழியச் செய்கிறேன். இன்று இந்த சித்ரகூட மலைச் சாரலில் உள்ள காடுகளில், கூர்மையான பாணங்களால் சத்ரு சரீரங்களை பிளந்து ரத்தம் ஆறாக பெருக்கெடுத்து ஓடச் செய்கிறேன். என்னுடைய சரங்கள் (அம்பு) தைத்து யானைகளும் குதிரைகளும் மார்பு பிளந்து விழ, மனித உடல்களையும் சேர்த்து நாய்கள் மொய்க்கட்டும். பெரும் யுத்தத்தில், என்னுடைய வில்லும், அம்பும் பொய்த்ததே இல்லை. சைன்யத்தோடு இந்த பரதனை வீழ்த்துவேன், சந்தேகமே இல்லை என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் லக்ஷ்மணக் க்ரோதோ என்ற தொன்னூற்று ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 97 (174) பரத குண ப்ரசம்சா (பரதனின் குணத்தை மெச்சுதல்)
கோபத்துடன் யுத்தம் செய்ய தயாராக கிளம்பி விட்ட லக்ஷ்மணனைப் பார்த்து அவனை சமாதானப் படுத்தும் விதமாக ராமர் சொல்ல ஆரம்பித்தார். இப்பொழுது வில், அம்பு இவற்றால் என்ன பயன்? கவசங்களும் எதற்காக? பரதன் தானே வந்திருக்கும்பொழுது, லக்ஷ்மணா, யோசித்துப் பார். அப்பாவிடம் சத்யம் செய்து வனம் வந்து விட்டு, பின்னாலேயே பரதனைக் கொன்று ராஜ்யத்தை அபகரித்து என்ன செய்வேன்? அபவாதம் தான் மிஞ்சும். இது என்ன நியாயம்.? எந்த ஒரு செல்வம் நம் பந்துக்களுக்கோ, நண்பர்களுக்கோ நஷ்டத்தைத் தருமானால், அது எனக்கு வேண்டாம். விஷம் கலந்த உணவு பண்டத்தை நிராகரிப்பது போல இதையும் நிராகரிப்பேன். தர்மம், அர்த்தம், காமம் இவற்றை உங்கள் பொருட்டு நான் ஏற்றுக் கொள்வேன். இது சத்யம். சகோதரர்களை சேர்த்து வைத்துக் கொள்ளவும், அவர்கள் நன்மைக்காகவும் லக்ஷ்மணா, நான் ராஜ்யத்தையும் விரும்பினேன். அதைக் காக்க ஆயுதம் எடுப்பேன். சாகரத்தை ஆடையாக உடைய இந்த பூமி எனக்கு அடைய முடியாதது அல்ல. அதர்ம வழியில் இந்திர பதவி கிடைத்தாலும் வேண்டாம். பரதனும், நீயும், சத்ருக்னனும் இல்லாமல் எனக்கு ஒரு சுகம் உண்டானால் அதை அக்னி பஸ்மமாக்கட்டும். நான் என்ன நினைக்கிறேன் என்றால், பரதன் அயோத்தியிலிருந்து என் உயிருக்கும் மேலான சகோதர பாசம் நிறைந்தவன், குல தர்மத்தை மனதில் கொண்டு இங்கு வந்திருக்கிறான். இப்பொழுது தான் கேள்விப் பட்டிருக்கிறான். நீயும், நானும் ஜடா முடி தரித்து ஜானகியுடன் வனம் வந்துள்ளோம் என்று அறிந்து, ஸ்னேகத்துடன் காண வருகிறான். அவன் உள்ளம் முழுவதும் நம்மிடம் அன்பும், உடல் நம்மை பிரிந்த சோகத்தால் வாடியும், நம்மைக் காண வருகிறானே அன்றி வேறு எதுவும் விரும்பியவனாக எனக்குத் தெரியவில்லை. தாய் கைகேயியிடம் கடுமையாக பேசி வாதிட்டு, தந்தையை சம்மதிக்கச் செய்து, ராஜ்யத்தை எனக்கு கொடுக்க வருகிறான். இப்பொழுதுதான் சமயம் கிடைத்து பரதன் நம்மைக் காண வருகிறான். மனதால் கூட நமக்கு கெடுதலை நினைக்க மாட்டான். எப்பொழுதாவது, பரதன் உனக்கு பிரியமில்லாததை செய்திருக்கிறானா? இப்படி ஒரு பயம் பரதனிடத்தில் உண்டாகக் காரணம் என்ன? ஏன் சந்தேகம்? பரதனைப் பற்றி கடுமையாக பேசாதே. அவனைத் தூற்றாதே. பரதனை தவறாக விமரிசித்து நீ பேசினால் நானும் அதை ஒத்துக் கொண்டு கடுமையாகப் பேசினதாக ஆகும். என்ன ஆபத்து வந்தாலும், புத்திரர்கள், தந்தையைக் கொல்வது என்ன நியாயம்? அல்லது தன் (ரத்தமான) ப்ராணனான சகோதரனை மற்றொரு சகோதரனே கொல்வதும் என்ன நியாயம்? ராஜ்யத்தின் காரணமாகத் தான் நீ இவ்வளவு பேசினாய் என்றால், பரதனைக் கண்டதும் நான் சொல்கிறேன், ராஜ்யத்தை இவனுக்கு கொடு என்று. நான் பரதனிடம் ராஜ்யத்தை லக்ஷ்மணனுக்கு கொடு என்று சொன்ன மாத்திரத்தில் லக்ஷ்மணா, உடனே சரி என்று தான் சொல்வான். இவ்வாறு தர்ம சீலனான ராமன் தனது நன்மைக்காக சொல்வதைக் கேட்டு லக்ஷ்மணன், வெட்கத்தால், தன் சரீரத்திற்குள்ளேயே நுழைந்தது போல ஆனான். வெட்கத்துடன், லக்ஷ்மணன் பதில் சொன்னான். அல்லது தந்தையே உன்னைக் காண வருகிறார் போலும் – வெட்கத்துடன் உடல் குறுக நிற்கும் லக்ஷ்மணனைப் பார்த்து ராமர் நீ சொல்வது சரிதான். பெரியவர் தான் நம்மைக் காண வருகிறார். அல்லது, நாம் இருவரும் சுகமாக இருந்து பழகியவர்கள், இங்கு என்ன சிரமப் படுகிறோமோ என்று வீட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்ல வந்திருக்கலாம் அல்லது மிக கோமளமான சீதை, கொண்டாடி வளர்க்கப் பட்டவள், அவளை மட்டுமாவது திரும்ப அழைத்துச் செல்லலாம் என்று வந்திருக்கலாம். இதோ தெரிகிறது பார், வேகமாக ஓடும், நல்ல ஜாதிக் குதிரைகள், பார்க்கவும் அழகாகவும் இளம் வயது குதிரைகள், காற்று வேகத்தில் பறக்கக் கூடிய உத்தமமான குதிரைகள், இதன் உடல் பாரத்தால் பூமியே நடுங்குகிறது, அப்படிப் பட்ட சத்ருஞ்சயன் என்ற யானை இதுவும் வயது முதிர்ந்த நம் தந்தையின் உடமைகள். வெண் குடையை காணவில்லை. உலகிலேயே மிகச் சிறந்ததாகச் சொல்லப் பட்டு மரியாதை செய்யப் படும் வெண் குடை இல்லாதது கவலையாக இருக்கிறது. மரத்திலிருந்து இறங்கு லக்ஷ்மணா, நான் சொல்வது போல செய். ராமர் இவ்வாறு சொல்லவும், சால மரத்தின் உச்சியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மணன் இறங்கி வந்தான். ராமன் அருகில் நின்று கொண்டு சேனை வரும் திசையில் பார்வையைச் செலுத்தினான். இங்கு பரதன் தன் வீரர்களுக்கு ஆர்பாட்டம் எதுவும் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டு, எதிரில் மலையின் அடிவாரத்தில் சேனையை நிறுத்தி இருக்கச் செய்தான். பாதி இக்ஷ்வாகு சேனை, பர்வதத்தின் யோசனை தூரம் அடைத்து நிற்க, பக்கத்தில் குதிரைகளும், யானைகளும், ரதங்களும் நிறுத்தப் பட்டன. இந்த சேனை கர்வத்தை விட்டு, அடக்கமாக ரகு நந்தனனை மகிழ்விக்க, நீதி மானான பரதன் நடத்திச் செல்கிறான் என்பதற்கேற்ப, கட்டுப் பாடுடன் விளங்கியது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத குண ப்ரசம்ஸா என்ற தொன்னூற்று ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 98 (175) ராமான்வேஷணம் (ராமனைத் தேடுதல்)
சேனையை அணிவகுத்து நிறுத்தி வைத்து விட்டு, தான் கால் நடையாக சென்று காகுத்ஸனைக் காண விரும்புவதாக குரு ஜனங்களிடம் சொன்ன பரதன், சத்ருக்னனைக் கூப்பிட்டுச் சொன்னான். இந்த காடு முழுவதும் சீக்கிரம் தேட ஏற்பாடு செய். இந்தக் காட்டில் வசிக்கும் ஜனங்கள் உதவியோடு, வேடர்கள் உதவியோடும், நன்றாகத் தேடு. ஆயிரக் கணக்கான தன் உறவினர்களுடன் குகன் வில்லையும் அம்பையும் ஏந்திக் கோண்டு ராமனைத் தேடிச் செல்லும் நம்முடன் வரட்டும். மந்திரிகள், குரு ஜனங்கள், ஊர் ஜனங்கள், பிராம்மணர்கள் எல்லோரும் சூழ்ந்து வர, காடு முழுதும் கால் நடையாகச் சென்று அலசுவேன். ராமனையோ, லக்ஷ்மணனையோ, சீதையையோ பார்க்காதவரை எனக்கு அமைதி கிடைக்காது. சந்திரனை ஒத்த அந்த அழகிய முகத்தை காணாத வரை என் சகோதரனின், தாமரை இதழை ஒத்தக் கண்களைக் காணாத வரை எனக்கு சாந்தியில்லை. என் சகோதரனின் பாதங்களில் வீழ்ந்து தலையால் வணங்காதவரை என் உள்ளத்திற்கு அமைதியில்லை. ராஜ்யத்திற்கு உரிமையுடையவனான ராமன் தன் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாதவரை, தந்தை,பாட்டன் வழி வந்த ராஜ்யத்தை ஏற்று முடி சூட்டிக் கொள்ளாத வரை என் உள்ளத்திற்கு நிம்மதியில்லை. சௌமித்ரி பாக்யசாலி. அவன் தான் தினமும் ராஜீவாக்ஷணான ராமனின் முகத்தைப் பார்க்கிறான். நிர்மலமான சந்திரனை ஒத்த முகத்தை தரிசிக்கிறான். ஜனகன் மகளான வைதேஹியும் புண்யம் செய்தவள். சாகரத்தை எல்லையாக கொண்ட பூமியை ஆளும் பர்த்தாவை பின் தொடர்ந்து செல்கிறாள். இந்த சித்ரகூட மலையும், புண்ணியம் செய்தது. மலைகளுக்கு அரசன் போன்ற இந்த மலை. ஏனெனில் நந்த3னத்தில் குபேரன் வசிப்பது போல இதில் காகுத்ஸன் வசிக்கிறான். இந்த நுழைய முடியாத காடும் புண்ணியம் செய்தது. காட்டு யானைகளுக்கு இருப்பிடமாக இருந்தது, இப்பொழுது வில்லாளிகளுள் சிறந்த
வில்லாளியான ராமனுக்கு இடம் தந்துள்ளது. இவ்வாறு சொல்லிக் கொண்டே பரதன் நடந்தே வனத்தினுள் சென்றான். பூத்துக்குலுங்கும் மரங்கள் அடர்ந்த வழியாகவே நடந்து, பூக்கள் நிரம்பிய அதே சால மரத்தை வந்தடைந்தனர். அங்கிருந்தபடியே ராமர் ஆசிரமத்திலிருந்து எழும் புகை மூட்டத்தைக் கண்டான். அதைக் கண்டதும் பரதன் ஆனந்த பரவசம் அடைந்தான். சமுத்திரத்தைக் கடந்து சென்று விட்டவன் போல. இதோ ராமன் இருக்கும் இடம் கண்டு பிடித்து விட்டேன் என்று மகிழ்ந்தான். புண்ய ஜனங்கள் வந்து போகும், ராமருடைய ஆசிரமத்தை, சித்ரகூட மலையில் கண்டு கொண்ட பரதன், குகனை உடன் அழைத்துக் கொண்டு வேகமாக செல்ல, அவன் சேனை தொடர்ந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராமான்வேஷணம் என்ற தொன்னூற்று எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 99 (176) ராம சமாக3ம: (ராமரை சந்தித்தல்)
சேனையைப் பார்த்து செய்ய வேண்டியதை சொல்லி விட்டு, உற்சாகமாக பரதன் சத்ருக்னனையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றான். வசிஷ்ட முனிவரிடம், தாய்மார்களை பார்த்து சீக்கிரம் அழைத்து வாருங்கள் என்று சொல்லி விட்டு தான் முன்னே சென்றான். சுமந்திரரும் சத்ருக்னனை சற்று தொலைவிலிருந்தபடியே பின் தொடர்ந்தார். அவருக்கும் பரதனை போலவே, ராமனைக் காணும் ஆவல் மிகுந்திருந்தது. போய்க் கொண்டே பரதன் தபஸ்விகள் தங்கியிருக்கும் பர்ண சாலையையும் குடிசையையும் கண்டான். பர்ணசாலை வாசலில் வெட்டி வைக்கப் பட்டிருந்த விறகுகளையும், பறித்து வைக்கப் பட்டிருந்த புஷ்பங்களையும் கண்டனர். ஆசிரமத்தில் நுழையப் போன சமயம் ராமனுடையதும், லக்ஷ்மணனுடையதுமான அடையாள சின்னங்களைக் கண்டனர். தர்ப்பைகளும், சிறிய சிறிய கட்டாக நிறைய கட்டி வைக்கப் பட்டிருந்தன. ஒரு புறம் பசு எருமை சாணி குவிக்கப் பெற்று வரட்டிகள் தட்டப் பட்டு இருந்தன. இதை பார்த்து பரதன், சத்ருக்னன், மந்திரிகளைப் பார்த்து, பரத்வாஜர் சொன்ன இடம் வந்து சேர்ந்து விட்டோம் போலத் தெரிகிறது. மந்தாகினி நதியும் அதிக தூரத்தில் இல்லை. இதோ அருகில் வந்து விட்டதாக அறிகிறேன். உயரத்தில் உலர்த்தப் பட்ட மரவுரி ஆடை லக்ஷ்மணனால் கட்டப் பட்டிருக்க வேண்டும். வழி தவறி விடக் கூடாது என்பதற்காக, அகாலத்தில் வரும் பொழுது அடையாளமாக இருக்க இப்படிச் செய்திருக்கிறான். இதோ பெரிய தந்தங்களையுடைய யானைகள், வேகமாக நடை போட்டுக் கொண்டு மலையடிவாரத்தில் அன்யோன்யமாக பிளிறும் சத்தம் கேட்கிறது. வனத்தில் வசிக்கும் முனிவர்கள் எப்பொழுதும் பாதுகாத்து வரும் அக்னி புகை, கரும் நிறமாக தெரிகிறது. மகரிஷியைப் போன்ற ராகவனை, புருஷவ்யாக்ரன் என்று புகழ் பெற்றவனை, குருவின் சம்ஸ்காரத்தை தொடர்து செய்பவனை இன்று இங்கு காணப் போகிறேன். இன்னும் சற்று நேரம் நடந்தபின் (ஒரு முஹுர்த்தம்) மந்தாகினீ நதியை அடைந்தவுடன், உடன் வந்தவர்களிடம் பின் வருமாறு சொன்னான். வீராசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்ய உரிமை பெற்றவன், இந்திரன் போன்றவன் இந்த ஜன சஞ்சாரமில்லாத காட்டில் வசிக்கிறான் என்று கண்டும் நான் உயிருடன் இருக்கிறேனே, என்னால் தான் இந்த கஷ்டம் வந்தது. லோக நாயகனாக விளங்க வேண்டியவன் எல்லா சுகங்களையும் தியாகம் செய்து வனத்தில் வசிக்க வந்துள்ளான். இன்று அவன் கால்களில் விழுந்து சமாதானம் செய்யப் போகிறேன். இப்படி புலம்பிக் கொண்டே அந்த பர்ண சாலையை, ரம்யமாக அமைக்கப் பட்டு சால, தால, அஸ்வ கர்ண இலைகள் நிறைய வைத்துக் கட்டப் பட்டிருந்ததைக் கண்டனர். விசாலமாக, புற்கள் நிரம்பி இருந்த விஸ்தீர்ணமான பகுதியைக் கண்டனர். யாக சாலையின் நடுவில் வேதி போல, ஒரு இடம். ராமனுடைய வாசஸ்தலத்தில் கிழக்கு மேற்காக கட்டப் பட்டு, விசாலமாக அக்னி பிழம்பு ஜ்வலிக்க இருக்கக் கண்டான். கூட்டமாக வரும் மிருகங்கள் எளிதில் நுழைய முடியாதபடி சிங்க குகை போலவும், தோலால் ஆன கவசம் வேலைப் பாடு செய்யப் பெற்று, தங்கத்தின் துளி தெளிக்கப் பெற்றது போல, ரக்த பிந்துக்களையுடைய மான் தோல் ஆசனங்கள். இந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கு சமமான சரங்களை தாங்கி நிற்கும் தூணிகள், தங்க முலாம் பூசப் பெற்றது போன்ற சத்ருக்களை வதைக்கும் சூரிய கிரணங்கள் போல ஒளி வீசும் அம்புகள். அதன் தூணியில் வைக்கப் பெற்று இருந்ததையும், ஸர்ப்பங்கள் நிற்பது போல கூர்மையான முகம் உடைய வெண்ணிறத்தில் உரைகளுடன் கூடிய கத்திகள் ஒருபுறம், இவற்றையும் கண்டனர். குருவை ஒரு முறை பார்த்து விட்டு பரதன் குடிசையின் உள்ளே நோக்கினான். ஜடா முடி தரித்து அமர்ந்து இருக்கும் ராமனைக் கண்டான். க்ருஷ்ணாஜினம் என்ற மான் தோல் ஆசனத்தில் மரவுரி ஆடையில் ராமனைக் கண்டான். அக்னியால் சூழப் பெற்றவன் போல் பிரகாசிக்கும் அண்ணலைக் கண்டான். சிங்கம் போன்ற உயர்ந்த தோள்களும், நீண்ட கைகளும், தாமரை மலரைப் போன்ற கண்களும், சாகரம் வரையிலான பூமிக்கு நாயகனான தர்ம சீலனை, ப்ரும்மா போன்று அமர்ந்திருக்கும் ராமனைக் கண்டான். புல்லை விரித்து போட்டு, தரையில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மணனையும், சீதையையும் கண்டான். அவனைக் கண்டதும் பரதன் ஒரே ஓட்டமாக ஓடி, வாய் வார்த்தை வராமல், தைரியத்தை இழந்தவனாக, துக்கத்துடன் அழ ஆரம்பித்தான். அழுகையினூடே சொன்னான். எவனை, சபையில் பிரஜைகள் வந்து வணங்கி உபசரிக்கத் தகுந்தவனோ, அவன் எனக்கு முன் காட்டு மிருகங்கள் சூழ நிற்கிறான். ஆயிரக் கணக்கான ஆடை ஆபரணங்களுடன் முன்பு வாழ்ந்தவன் இப்பொழுது க்ருஷ்ணாஜினம் தரித்து தர்மத்தை நடத்திக் காட்டும் விதமாக வாழ்ந்து வருகிறான். எந்த தலையில் வித விதமாக புஷ்பங்கள் சூடி மகிழ்ந்தானோ, அதில் ஜடா முடி தெரிகிறது. எவன் யாகம் செய்தால், தேவையான பொருட்கள் குவித்து வைக்கப் படுமோ, அவன் தன் உடல் உழைப்பால் பொருட்களைச் சேர்த்து தர்மத்தை நிலை நிறுத்துகிறான். சந்தனம் பூசப் பெற்று விளங்கும் அண்ணலின் சரீரம் இப்பொழுது மண்ணில் நடமாடி அழுக்காகத் தெரிகிறது. எப்படி பொறுத்துக் கொள்கிறாரோ. சுகத்தில் திளைக்க வேண்டிய ராமன், என் பொருட்டு இந்த கஷ்டங்களை அனுபவிக்கிறார். என் வாழ்க்கையே வீண். உலகோர் தூற்றும் படியான கொடியவன் நான். இவ்வாறு புலம்பிக் கொண்டு வியர்வை முகத்தில் வழிய, ராமனது பாதம் கைகளுக்கு எட்டும் முன்பே பூமியில் விழுந்தான். துக்கத்தால் பீடிக்கப் பட்ட பரதன், ஆர்யே, என்று தீனமாக ஒரு வார்த்தை பேசியதோடு சரி. மேற் கொண்டு எதுவும் பேச முடியாமல் தேம்பினான். கண்ணீர் பெருக, தொண்டையடைக்க விம்மல் தான் வந்ததேயன்றி, ஒரு வார்த்தை கூட எழும்பவில்லை. சத்ருக்னனும் ராம பாதத்தில் விழுந்து வணங்கினான். அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்ட ராமனது கண்களிலும் நீர் பெருகியது. இதற்குள் சுமந்திரரும், குகனும் வந்து சேர்ந்தனர். ஆகாயத்தில், சூரியனும், சந்திரனும், சுக்ர ப்ருஹஸ்பதிகளும் சேர்ந்து இருந்ததைப் போல இருந்தது. பெரும் யானை பூட்டிய ரதத்தில் படைத்தலைவர்களாக விளங்கக் கூடிய உரிமை பெற்ற அச்சகோதரர்கள், ராஜ குமாரர்கள், பெரும் வனத்தில் காட்டு ஜனங்கள் இடையே நிற்பதைக் கண்டு மகிழ்ச்சியின்றி, அனைவரும் கண்களில் நீர் பெருக நின்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராம சமாகம: என்ற தொன்னூற்று ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 100 (177) கச்சித் சர்க: (கேள்விகள்)
ஜடா முடி தரித்து, உடல் இளைத்து, கூப்பிய கைகளுடன் தரையில் வீழ்ந்து வணங்கிய பரதனை, யுக முடிவில் சூரியனைக் கண்டது போல ராமர் கண்டார். அவனை வாரியெடுத்து, அணைத்து, உச்சி முகர்ந்து அருகில் அமர்த்திக் கொண்டபின், வினவினார். தந்தை எப்படி இருக்கிறார்? நீ ஏன் வனம் வந்தாய்? அவர் உயிரோடு இருக்கும் பொழுது நீ காட்டிற்கு வருவது சரியல்ல. வெகு தூரத்திலிருந்து வந்திருக்கிறாய். பல நாட்கள் கழித்து உன்னைப் பார்க்கிறேன். நுழையமுடியாத இந்த அரண்யத்தில் எதற்காக வந்தாய்? நீ இங்கு வருவதற்கு தந்தை அனுமதித்தாரா? அவருக்குத் தெரியுமா? தீனனாக, தந்தை பரலோகம் சென்று விடவில்லையே? பாலன் நீ, உன் கையிலிருந்து ராஜ்யம் நழுவி விட்டதா? தந்தைக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை முறையாக செய்து வருகிறாயா? ராஜா தசரதன் நலமாக இருக்கிறாரா? சத்ய சந்தன் அவர். ராஜ சூய, அஸ்வமேத யாகங்களை தர்ம விதிப்படி செய்தவர். தர்ம சிந்தனையுள்ள நல்ல சக்தி வாய்ந்தவர் நம் தந்தை. அவர் பிராம்மணர்களையும். வித்வான்களையும், இக்ஷ்வாகு குல உபாத்யாயர்களை வழக்கம் போல் உபசரிக்கிறாரா? தாய்மார்களான கௌசல்யை, சுமித்ரா, (நல்ல ப்ரஜையைப் பெற்றவள்), இவர்களும், சுகத்தையே விரும்பும் கைகேயியும் நலமா? கைகேயி மகிழ்ச்சியுடன் இருக்கிறாளா? புரோஹிதரை மரியாதையுடன் நடத்துகிறாயா? அவர் வினயமும், நற்குல பிறப்பும், கல்வி கேள்விகளில் சிறந்தவரும், அசூயையற்றவரும், வருவதை முன் கூட்டியே சொல்லும் சக்தி படைத்தவரும் ஆவார். அக்னி காரியங்களில், நல்ல புத்திமான்களாகவும், விதி முறைகளை அறிந்தவர்களுமாக நியமித்து வைத்திருக்கிறாயா? ஒரு சிலர் தான் இதுவரை ஹோமம் செய்ததையும், இனி செய்ய வேண்டியதையும் அறிந்திருப்பார்கள். தேவர்களையும் பித்ருக்களையும் பூஜிக்கிறாயா? தந்தைக்கு சமமான வயது முதிர்ந்த வேலையாட்களை மரியாதையுடன் நடத்துகிறாயா? வைத்யர்களையும், பிராம்மணர்களையும் கௌரவிக்கிறாயா? நல்ல வில்லாளியான உபாத்யாயரை மதித்து நடக்கிறாயா? அவர் வில், அம்பு இவற்றை அறிந்திருப்பதோடு அர்த்த சாஸ்திரத்திலும் நிபுணர். மந்திரிகளை நியமித்து விட்டாயா? மந்திரிகள் எப்பொழுதும் நமக்கு சமமானவர்களாக இருக்க வேண்டும். சூரர்களாகவும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், இந்திரிய அடக்கம் உடையவராகவும், நல்ல குலத்தில் பிறந்தவர்களாக, இங்கிதம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். வெற்றியின் அடிப்படையாக மந்த்ராலோசனை செய்ய வேண்டியது முக்கியம். சாஸ்திரங்களில் நிபுணத்வம் உள்ள, மந்திரிகளுடன், மந்த்ராலோசனை முறைகளை அறிந்த மந்திரிகளுடன் இந்த மந்த்ராலோசனை செய்ய வேண்டும். ஒரே ஒருவருடன் ஆலோசனை செய்வதும் கூடாது. அதே போல எண்ணிக்கை மிக அதிகமாகவும் கூடாது. நீ செய்யும் மந்த்ராலோசனை நாட்டை விட்டு வெளி ஆட்களுக்குத் தெரிவதில்லையே. பாதுகாத்து வைத்துக் கொள்கிறாயா? சிறியதாக ஆரம்பித்து பெருக வாழும் முறைகளை அர்த்த சாஸ்திரப் படி சீக்கிரம் ஆரம்பித்து செய்கிறாயா? அனாவசிய தாமதம் செய்யாமல் இருக்கிறாயா? மற்ற அரசர்கள் நீ செய்ததையும், செய்து கொண்டிருப்பதையும் மட்டுமே அறிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும். நீ செய்யப் போவதை அவர்களுக்குத் தெரியாமல் வைத்திருப்பது தான் சாமர்த்தியம். அப்படி செய்கிறாயா? மந்த்ராலோசனை செய்ததை தர்க்கம், யுக்தி இவற்றால், நல்லதல்ல என்று தெரிய வந்தால், புரிந்து கொள்கிறாயா? உன் மந்திரிகள் ஒத்துக் கொள்கிறார்களா? ஆயிரக் கணக்கான மூர்க்கர்களை விட, ஒரு பண்டிதன் உயர்வு என்று ஏற்றுக் கொள்கிறாயா? பண்டிதனை அலட்சியம் செய்தால் பொருளாதாரத் தட்டுப் பாடு வரும் பொழுது, பெரும் ஆபத்து வந்து சேரும். ஒரே ஒரு மந்திரி, சூரனாகவும், மேதாவியாக, சாமர்த்தியம் உடையவனாக, நல்ல தீர்க தரிசனம் உடையவனாக இருந்தால், அரசனுக்கும், அரச குமாரன் அல்லது குடும்பத்துக்கும் பெரும் செல்வத்தை ஈட்டித் தருவான். வேலையாட்களை நியமிக்கும்பொழுது, கவனமாக நியமிக்க வேண்டும். முக்கியமான பெரியவர்களிடம், திறமை மிகுந்த வேலையாட்கள், மத்தியமாக உள்ளவர்களுக்கு, அதே போல நடுத்தரமான ஆட்கள், கீழ் மட்ட அதிகாரிகளுக்கு இதை விட திறமை குறைந்த ஆட்கள் என்று நியமித்து வைத்திருக்கிறாயா? அமாத்யர்கள், தர்மார்த்த காம எனும் லௌகீக விஷயங்களிலும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தந்தை, பாட்டனாருக்கு சமமானவர்கள், ஒழுக்கத்தில் சிறந்தவர்கள், இவர்களை தகுதியறிந்து தகுதியான பதவியில் வைத்து போற்றுகிறாயா? கைகேயி புத்திரனே, நீ கொடுக்கும் தண்டனை அதிகம் என்று பிரஜைகள் நினைக்கும்படி தண்டிக்கிறாயா? நீ அளிக்கும் தண்டனை நியாயமானதே என்று மந்திரிகள் ஆமோதிக்கிறார்களா? யாகம் செய்பவர்கள் உன்னை அலட்சியம் செய்யாமல் இருக்கிறார்களா? ஸ்த்ரீகள் தீவிரமாக பிரதிபலனை எதிர்பார்க்கும், காமியாக நினைக்காமல் இருக்கிறார்களா? வைத்யர் உபாயங்களில் வல்லவராக இருப்பதும், வேலையாட்கள் முனுமுனுப்பதும், சூரனாக இருப்பவன் பணத்தாசை பிடித்தவனாக இருந்தாலும் இவர்களை ஒடுக்க வேண்டும். இவர்களால் அரசனும் மாட்டிக் கொள்வான். சேனாபதியாக யாரை நியமித்தாய்? சேனாபதி எப்பொழுதும் கர்வம் உடையவனாக, சூரனாக, புத்தியுடையவனாக, எளிதில் அசைக்க முடியாத காம்பீர்யம் உடையவனாக, ஒழுக்கம் உடையவனாக, நல்ல குடும்பத்தில் பிறந்தவனாக, ராஜ குடும்பத்தில் அன்பும் ஈ.டுபாடும் உடையவனாக இருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் விட, காரிய சாமர்த்தியம், ஆற்றல் உடையவனாகவும் இருக்க வேண்டும். பலவானான முக்ய போர் வீரர்கள், அவர்களுடைய திறமையைக் காட்டி, செயற்கரிய செயல்களைச் செய்தவர்கள்- இவர்களை சன்மானம் கொடுத்து, மதிப்புடன் மரியாதைகள் செய்கிறாயா? சேனையில் உள்ள வீரர்களுக்கு உணவும், ஊதியமும் சரியான சமயத்தில் தருகிறாயா? இதில் தாமதம் செய்வது இல்லையே. இந்த விஷயத்தில் தாமதம் செய்தால், அதாவது உணவும், ஊதியமும் உரிய காலத்தில் தராமல் வைத்தால் படை வீரர்கள் எஜமானனிடம் கோபித்துக் கொள்வார்கள். தூஷிப்பார்கள். இதனால் ஏற்படும் அனர்த்தமும் மிக அதிகம். நம் குலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உன்னிடம் அன்புடன் இருக்கிறார்களா? எல்லோருமாகச் சேர்ந்து உன் பொருட்டு உயிர் விடத் தயாராக இருக்கிறார்களா? ஜனபதத்தைச் சேர்ந்த, ஊர்
ஜனங்களிடமிருந்து ஒருவனை, வித்வானாகவும், மிருதுவான சுபாவம் உள்ளவனாக, இரக்கம் உள்ளவனாகவும், ஆற்றல் உடையவனாகவும் உள்ளதை உள்ளபடி சொல்பவனாகவும், ஒருவனை பொறுக்கி எடுத்து, தூதனாக நியமித்துக் கொண்டாயா? அவன் பண்டிதனாக இருப்பதும் அவசியம். சாரணர்களைக் கொண்டு பதினெட்டுப்
பிரிவுகளில் தன் பக்ஷத்தில் பத்தும், ஐந்துமாக மூன்று மூன்று நபர்களாக குழுக்களைப் பிரித்து வைத்து உளவு பார்த்துக் கொள்கிறாயா? தீர்த்தங்களை அறிந்து கொள்கிறாயா.
எதிரிகளை அழிக்கும் திறன் படைத்தவனே, பரதா, தப்பி ஓடியவர்களையும், உன் நன்மையில் ஈ.டுபாடு இல்லாத வெளியேறிய பின் திரும்பி வந்தவர்களையும், பலமற்றவர்கள் என்று அலட்சியமாக இருந்து விடாதே. லௌகிகத்தில் தேர்ச்சி பெற்ற பிராம்மணர்களையும் நீ மதித்து நடத்துகிறாயா? இவர்கள் அனர்த்தத்தை தடை செய்வதில் வல்லவர்களாக இருக்கலாம், தங்களை அறிஞனாக எண்ணிக்கொள்ளும் சிறு பிள்ளைத் தனம் உள்ளவர்களாக இருக்கலாம். இவர்களிடத்திலும் ஒரு கண் வைத்திருப்பது நல்லது. முக்கியமான தர்ம சாஸ்திரங்கள், இருக்கும்பொழுது, இவற்றை அறியாமல், பிரதி பிம்பம் போன்ற நிழலைக் கண்டு கொண்டு அர்த்தமின்றி, பிதற்றுவார்கள். அயோத்தி மா நகரம் எப்படியிருக்கிறது? நம் தந்தை முன்னோர்கள் காலத்திலிருந்து வீரர்கள் இங்கு வசித்து வந்திருக்கின்றனர். இதன் பெயர் விளங்க, நல்ல காவல் மிகுந்த வாசலும், யானை, குதிரை பூட்டிய ரதங்கள் நிறைந்து, பிராம்மணர்கள், க்ஷத்திரியர்கள், வைஸ்யர்கள் தம் தம் செயலில் கவனமாக எப்பொழுதும் இருக்க, ஆயிரக் கணக்கான புலனடக்கமும், உற்சாகமும் உடைய பெரியவர்கள் நிறைந்திருக்க, விசாலமானதும், பல விதமான மாளிகைகளும், வைத்ய ஜனங்கள் நிறைந்ததுமான அயோத்தியை அப்படியே காப்பாற்றி வருகிறாயா? இது எப்பொழுதும் கோலாகலமாக இருக்கும் நகரம். நம் ஜனபதத்து ஜனங்கள் சுகமாக இருக்கிறார்களா? நூற்றுக் கணக்கான தங்கும் மடங்களும், அதில் தங்கும் முறை தவறாத ஜன சமூகமும், தேவாலயங்களும், தண்ணீர் பந்தல்களும், ஆங்காங்கு குளங்களும் அலங்கரிக்க, மகிழ்ச்சியுடன் ஆண்களும், பெண்களுமாக வளைய வர, சமாஜோத்சவங்கள் கொண்டாடி, எல்லையை பாதுகாத்து வைத்து, பசுக்கள் உடையதும், வன்முறை எதுவுமின்றி, நாய்கள் இன்றி ரம்யமாக, பயத்தை விட்டொழித்தவர்களாக, ஆங்காங்கு குகைகளுடன், பாபியான எவருமே இல்லாமல் என் முன்னோர்களால் பாலித்து வரப் பட்ட ஜனபதத்திலும், விசாலமான புற நகரத்திலும் ஜனங்கள் சுகமாக இருக்கிறார்களா?
உனக்கு கீழ் வேலை செய்யும், வயலில் வேலை செய்யும் விவசாயிகள், பசுக்களை மேய்த்து வாழ்க்கையை நடத்தும் இடையர்கள், இவர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகுகிறாயா? இவர்களால் உலகத்தார் பயன் அடைகின்றனர். இவர்களை ஒற்றர்களைக் வைத்து கஷ்ட நஷ்டங்களை அறிந்து காப்பாற்றுகிறாயா? விஷய வாசனை -யுடையவர்களையும், அரசன் காப்பாற்ற வேண்டியது அவன் கடமையே. பெண்களை சமாதானமாக, பாதுகாப்பாக வைத்திருக்கிறாயா? இவர்களை அலட்சியப் படுத்தவும் கூடாது. ரகசியங்களை இவர்களிடம் பேசவும் கூடாது. ரகஸியமாக பேசாதே. மரங்கள் அடர்ந்த காடுகள் உள்ளனவா? க3ணிகா ஸ்திரீகளையும், குதிரை யானைகளையும் சரிவர காப்பாற்றுகிறாயா? ராஜ மார்கத்தில் முன் பகலில் ஜனங்களை நேரில் காண்கிறாயா? உன் செயல்கள் பூர்த்தியாகின்றனவா? சந்தேகமில்லாமல் ப்ரத்யக்ஷமாக வைத்துக் கொண்டிருக்கிறாயா? செய்ததையே திரும்பச் செய்ய நேருகிறதா? எல்லா கோட்டைகளும், தன தான்யம், குடி நீர், ஆயுதங்கள் யந்த்ரங்கள் நிரம்பியுள்ளனவா? வில்லாளிகளும், சில்பிகளும், அங்கு இருக்கிறார்களா? உனக்கு வரும்படி நிறைய இருக்கிறதா? செலவு குறைவாக செய்கிறாயா? உன் பொக்கிஷ தனம் எப்பொழுதுமே, சரியான பாத்ரமின்றி (தகுதியற்றவர்கள்) கொடுக்கப் படுவது இல்லையே? உன் செலவு தேவதைகளுக்கும், பித்ருக்களுக்கும், பிராம்மணர்களுக்கும், மித்திரர்களுக்கும், பயன் படுவதாகவே இருக்க வேண்டும். தவறுதலாக கூட விசாரிக்காமல், நிரபராதியாக ஒருவனைப் பிடித்து தண்டிக்காமல் இருக்கிறாயா? கண்ணால் பார்க்காதவரை, சுத்தமான ஆத்மா, பெரியவர் என்று சமூகத்தில் பிரஸித்தமான ஒருவரை, திருட்டுக் குற்றம் சுமத்தினாலும், விசாரிக்காமல் நம்பாதே. கண்ணால் பார்த்தும், சரியான காரணங்களால் நிரூபிக்கப் பட்ட பின்பும், பண ஆசையால் பிடி பட்ட திருடனை விசாரித்து தெளிந்த பின்னும் விட்டு விடவில்லையே. உன் மந்திரிகள், கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக, தனவானான ஒருவன் ஏதோ காரணத்தால் நொடித்துப் போய் இருக்கும் பொழுது, பற்றின்றி விசாரிக்கிறார்களா? தவறாக குற்றம் சுமத்தப் பட்டு தண்டிக்கப் படும் குற்றவாளிகள் மேல் விழும் அஸ்திரங்கள் நம் குலத்தில் பிறக்கும் குழந்தைகளையும், வீடுகளில் பசுக்களையும் தாக்கி அழித்து விடும். ஆட்சியை நியாயமாக செய்யும் பக்ஷத்தில், முதியவர்களையும், குழந்தைகளையும், முக்கியமான வைத்யர்களையும், தானம் கொடுத்தும், மனம் வாக்கு இவற்றால் போற்றி வைத்திருக்கிறாயா? குரு ஜனங்களையும், முதியவர்களையும், தபஸ்விகளையும், தேவதைகள் அதிதிகளையும், மடாதிபதிகளையும், மற்றும் சித்தர்கள், அல்லது செயற்கரியவை செய்து காட்டியவர்களையும், பிராம்மணர்களையும், நமஸ்கரிக்கிறாயா? சில சமயம் பொருளைக் கொண்டு தர்மம், சில சமயம் தர்மத்தைக் கொண்டு பொருள், இரண்டுமே சில சமயம் பிரியத்தை விரும்பும் காமத்தினால் பாதிக்கப் படாமல் பார்த்துக்கொள்கிறாயா? ஜயசீலனே, பரதா, காலம் அறிந்து தர்மம், காமம் , அர்த்தம், மூன்றையுமே அதனதன் சமயத்தில் அனுபவிக்கிறாயா? ஊர், ஜனபத ஜனங்களுடன், பிராம்மணர்களும், சர்வ சாஸ்திரங்களையும் அறிந்த அறிஞர்கள், ஆசிர்வதித்திருக்கிறார்களா? ராஜ தோஷம் என்பது பதினான்கு உண்டு. அவையாவன: நாஸ்திக வாதம், பொய், க்ரோதம், அலட்சியம், தாமதம் செய்தல், கண்டும் காணாமல் இருத்தல், க்ஞானிகளுக்கும் சோம்பேறித்தனம், பஞ்ச விருத்தி (மகா பாதகங்களான ஐந்து) பண விஷயத்தில் ஒரே ஒரு எண்ணம், அர்த்தம் அறியாதவர்களுடன் ஆலோசித்தல், தீர்மானித்த விஷயத்தை ஆரம்பிக்காமல், கால தாமதம் செய்து நீடித்தல், மந்த்ராலோசனையை காப்பாற்றி வைக்காது வெளியில் தெரிய விடுதல், சுபமானவற்றை பிரயோகிக்காமல் இருத்தல், எப்பொழுதும் எதிர்த்து பேசுதல், இந்த தோஷங்களை தவிர்த்து வருகிறாயா? வித்யா மூன்று வகைப் படும். 1) பத்து, ஐந்து, நான்கு விதமாக பிரிக்கப் பட்டது. (2) ஏழு ஏழாக பிரிக்கப் பட்டது (3) எட்டு வர்கமாக, மூன்று வர்கமாக பிரிக்கப் பட்டது, எனவாகும். தெய்வீக, மானுஷ, என்று ஆறு குணங்கள், புலனடக்கம், இவைகளுடன் இருபது வகை இயற்கை மண்டலம், யாத்திரை, தண்டனை அளித்தல், த்வியோனி, சந்தி விக்ரஹம் என்ற ராஜ தந்திரங்களை அறிவாயா? நீ, நான்கு, மூன்று பேர்கள் கொண்ட குழுக்களோடு தனித் தனியாக, எல்லோரையும் சேர்த்து, அதிலேயே, ஒரு விஷயத்திலேயே மூழ்கியவருடன் தனியாக, என்று மந்திரிகளுடன் ஆலோசனை செய்கிறாயா? நீ வேதம் கற்றது பயனுடையதாக இருகின்றனவா? உன் மனைவிகளிடம் நல்ல முறையில் பயன் பெறுகிறாயா? நீ கேட்டறிந்த கல்வி கேள்விகள் கை கொடுக்கின்றனவா? இப்படி நான் சொன்னபடியே, உன் புத்தியும், ஆயுசையும், புகழையும் வளர்க்கும் தர்ம, காம, அர்த்தங்கள் இணைந்து செயல்படுவதாக இருந்து, நம் தந்தை, நம் முன்னோர்கள் கடை பிடித்த நெறிகளையே கடை பிடித்து வருகிறாயா? அதே சுபமான நன்னெறியை பின் பற்றி வருகிறாயா? ருசியான ஆகாரத்தை தனியாக சாப்பிடுவது இல்லையே? உனக்கு நன்மையை விரும்பும் நண்பர்களுக்கும் நிறைய கொடுத்து சந்தோஷமாக வைத்திருக்கிறாயா? ராஜா என்பவன் தர்ம நெறியில் நின்று பிரஜைகளைப் பாலிப்பதோடு, சமயத்தில் பிரஜைகளுக்கு தண்டனை கொடுப்பவனாகவும், பூமியை இடையூறு இன்றி அடைந்து வித்வானாக ஆண்டு வந்தால், இங்கிருந்து போகும் பொழுது, ஸ்வர்கத்தை அடைகிறான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கச்சித் ஸர்கோ என்ற நூறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 61(138) கௌசல்யோபாலம்ப: (கௌசல்யையின் புலம்பல்).
ராமன் வனம் சென்றபின் ஒரு நாள், கௌசல்யை தன் மன அழுத்தம் தாங்க மாட்டாமல் கணவனிடம் சொன்னாள். மூன்று உலகிலும் உங்கள் புகழ் பரவியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும், என் மகன் ராகவன் கருணை மிகுந்தவன், பிரியமாக பேசுபவன், கேட்டதை உடனே தரும் குணவான். சீதையுடன் இரு ராஜ குமாரர்களும் வனத்தில் எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறார்களோ. சிறு பெண். உஷ்ணத்தையும்,
குளிரையும் எப்படித் தாங்குகிறாளோ. வடை பாயஸத்தோடு அறுசுவை உண்டியை சுவைத்து பழகியவள், காட்டில் கிடைக்கும் ருசியற்ற உணவை சாப்பிட்டு எப்படி
சமாளிக்கிறாளோ. எப்பொழுதும், கீதங்களையும் வாத்ய கோஷங்களையும் கேட்டு மகிழ்வாள். கொடிய காட்டு மிருகங்களின் சத்தத்தைக் கேட்டு சகித்துக் கொண்டு இருக்கிறாள். என் மகன் எங்கு தூங்குகிறானோ, அவன் தோளை சாய்த்து படுக்கும் இடம் எப்படி இருக்கிறதோ. தாமரை வண்ணன், நல்ல கேசம் உடையவன், அவன் மூச்சுக் காற்றே பத்மம் போன்ற வாசனையுடையது. எப்பொழுது காண்பேனோ. என் மனம் வஜ்ரத்தால் ஆனது போலும். மகனைக் காணாமல் ஆயிரம் துகள்களாக பிளக்கவில்லையே. என் பந்துக்களை காட்டுக்கு விரட்டி விட்டீர்களே, என்ன கருணை. சுகமாக இருக்க வேண்டியவர்கள் காட்டில் அலைகிறார்கள். பதினைந்தாவது வருஷம் திரும்பி வரும் சமயம் ராஜ்யத்தையும் கோசத்தையும் (பொக்கிஷம்) பரதன் தருவானா? சிரார்த கார்யத்தில் சிலர் தன் பந்துக்களையே சாப்பிட வைப்பார்கள். காரியம் ஆனபின் பிராம்மணர்களை அழைப்பார்கள். வித்வான்களாகவும், குணவான்களும் இப்படி பின்னால் தருவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தேவ லோகத்து அமிர்தமானாலும் அவர்களுக்கு அது ஏற்கத் தக்கது இல்லை. பிராம்மணர்களேயானாலும், ஒருவர் சாப்பிட்டபின் மிகுந்ததை, ஏற்க மாட்டார்கள். ஏற்பதும் தகாது. ரிஷபம் உடைந்த கொம்புடன் இருந்தால் ஏற்கத் தகாது போல. மகா ராஜனே, கனிஷ்டனான இளயவன் அனுபவித்த ராஜ்யத்தை பெரியவனான சகோதரன் ஏன் ஏற்றுக் கொள்வான்? மறுக்காமல் இருப்பானா? மற்றவன் கொண்டு வந்த உணவை புலி தின்னாது, இவன் நரவ்யாக்ரன். இவனும் மற்றவர் சொத்தை தொட மாட்டான். ஹவிஸ், ஆஜ்யம், யாகத்தில் சமர்ப்பிக்கும் நைவேத்யம், (கபாலம் அல்லது பாத்திரத்தில் விசேஷமாக தயார் செய்யப் படுவது-புரோடஸ:) காதிர என்ற வகை மரத்தில் செய்த யூபஸ்தம்பங்கள், குசம், – இவைகளை ஒரு யாமம் ஆனபின் திரும்ப யாகத்தில் உபயோகிப்பது இல்லை. இந்த விதமான அவமதிப்பை ராமன் ஏற்றுக் கொள்ள மாட்டான். மதுவின் சாரத்தை எடுத்து விட்டு தருவது போலவும், சோம ரஸம் இல்லாமல் அல்லது வீணாகி விட்ட யாகத்தை போல இந்த ராஜ்யம் அவனுக்கு உகந்தது அல்ல. பலசாலிகளான சிறுத்தை புலி, வாலதி எனும் மிருகம் சீண்டினால் பொறுக்காதது போல இந்த அவமரியாதையை பொறுக்க மாட்டான். பெரும் யுத்தத்துக்கு பயப் பட மாட்டான். அத4ர்மம் என்பதால் இப்பொழுது சண்டைக்கு வரவில்லை. உலகில் த4ர்மம் தழைக்கப் பாடு படுபவன். இவன் பலம் அறியாததா? யுகா3ந்தகன் போல ஜீவன்களையும் சாகரத்தையுமே எரிக்க வல்ல மகாவீர்யம் உடையவன். மகா பலம் பொருந்தியவன். ஜலத்தில் தோன்றும் ஜீவன்கள் தன் குழந்தைகளையே அழிப்பது போல தன் தந்தையாலேயே அழிக்கப்பட்டான். சிங்கத்துக்கு சமமான பலம் உடைய இந்த வீரன், வ்ருஷபா4க்ஷன், நரஸ்ரேஷ்டன். பழமையான சாஸ்திரம் பிராம்மணர்கள் ஆசரித்து வருவது, நீங்கள் அறிந்ததே, இருந்தும் நீங்களே புத்ரனை நாடு கடத்திய பின் (சத்யத்திற்கு பங்கம் வரக் கூடாது என்று புத்திரனை வெளி யேற்றியது சாஸ்திர சம்மதம் என்று நினைத்தால்), எனக்கு யார் கதி. பெண்களுக்கு கணவன் தான் கதி, அவனுக்குப் பின் மகன். மூன்றாவது தாயாதிகள். நான்காவது கதி கிடையாது. எனக்கு நீங்களும் ஆதரவு இல்லை. ராமனையும் வனத்துக்கு அனுப்பியாயிற்று. இப்படி முழுவதுமாக வதைத்த பின் காட்டுக்குப் போகவும் நான் விரும்பவில்லை. உங்களால் இந்த ராஜ்யம் அழிந்தது. ராஷ்டிரங்கள் அழிந்தன. அதன் ஆத்மா அழிந்தது. மந்திரிகள் நாசம் ஆயினர். புத்திரனுடன் கூட நானும் நாசமானேன். உங்கள் மனைவியும், மகனும் தான் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். இவ்வாறு கடும் சொற்களால் தாக்கப் பட்ட அரசன் மிகவும் வருத்தத்துடன் மூர்ச்சையடைந்தான். பிறகு தெளிந்து தான் செய்த ஒரு தவற்றை நினைத்துக் கொண்டு சொல்லலானான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கௌசல்யா உபாலம்போ என்ற அறுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 62(139) கௌசல்யா ப்ரசாதனம் (கௌசல்யையை சமாதானப் படுத்துதல்)
ராம மாதா மிகவும் கோபத்துடனும், தாபத்துடனும் அரசனிடம் கடுமையாக பேசவும், அவர் வருத்தத்துடன் நினைவுகளில் மூழ்கினார். மூர்ச்சையடைவது, திரும்ப நினைவு வருவதுமாக சிறிது நேரம் சென்றது. அருகில் கௌசல்யையைப் பார்த்து, தான் செய்த தவற்றை திரும்பவும் ஒருமுறை மனதில் நினைத்து பார்த்துக் கொண்டார். முன் ஒரு சமயம் அறியாமல் சப்3த3வேதி3 என்ற பா3ணத்தால் தான் செய்ததையும், தற்சமயம் ராமன் பிரிவையும் இணைத்து இரு பக்கமும் துன்பம் அடைந்தார். இந்த சோகத்தின் நடுவில் கௌசல்யையிடம் சொன்னார். கௌசல்யே, உன்னை வேண்டிக்கொள்கிறேன். என்னை மன்னித்து விடு. கை கூப்பி வணங்குகிறேன். வெளி மனிதர்களிடம் கூட நீ வாத்ஸல்யம் காட்டுபவள். கருணை மிக்கவள். நிர்குணனாக இருந்தாலும், கணவன் பெண்களுக்கு ப்ரத்யக்ஷ தைவதம் என்று தர்மம் அறிந்தவர்கள் சொல்வார்கள். நீ தர்மம் அறிந்தவள்.உலக வழக்கு அறிந்தவள். நீ துக்கத்தில் இருந்தால் கூட இது போல பிரியமற்ற வார்த்தைகளைப் பேசுவது தகாது. ராஜா இப்படி தீனமாக வேண்டவும், கௌசல்யையின் கண்களில் மடை திறந்தது போல நீர் பெருகியது. அரசனின் கூப்பிய கைகளைப் பிடித்து தன் தலையில் பதித்துக் கொண்டவளாக பதட்டத்துடன், கோர்வையாக பேசக் கூட முடியாமல் பதில் சொன்னாள். மன்னித்துக் கொள்ளுங்கள், ஸ்வாமி, கால்களில் விழுகிறேன். கணவனால் கைவிடப் பட்டவள், என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் இரண்டு உலகங்களிலும் அவள் நல்ல கதியை அடைய முடியாது. சத்யவாதி, தர்மவாதி என்று உங்களை அறிவேன். புத்ர சோகம் கண்ணை மறைக்க ஏதோ சொல்லி விட்டேன். சோகத்தில் மூழ்கினால், தைரியம் போகும். கேள்வியும் கல்வியும் அழியும், எல்லாவற்றையும் பொசுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதைப் போன்ற வேறொரு சக்தி கிடையாது. சத்ருவின் கையில் அடி வாங்கினால் கூட பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், சூக்ஷ்மமான வேதனையையும் பொறுத்துக் கொள்ள முடியாது. ராமன் வன வாசம் சென்று இன்று ஐந்து இரவுகள் ஆகி விட்டன. ஐந்து வருஷம் போல இது என்னை வாட்டி எடுக்கிறது. அவனையே நினைத்து, வேதனை என்னை உருக்குகிறது. வேகமாக நதி ஜலம் வந்து சமுத்திரத்தையே கலக்குவது போல இவ்வாறு கௌசல்யை சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே, வெளிச்சம் குறைந்தது. சூரியன் மறைய, மெதுவாக இருள் சூழ்ந்தது. கௌசல்யை இவ்வாறு சமாதானமாக பேசிய பின், அரசனும் சற்று மனம் தெளி ந்து உறக்கத்தில் ஆழ்ந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கௌசல்யா ப்ரசாதனம் என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 63(140) ரிஷி குமாரவதா4க்2யானம் (ரிஷி குமரனை கொன்ற வரலாறு)
ஒரு முஹுர்த்த நேரம் சென்றது. அரசன் விழித்துக் கொண்டான். சிந்தனை அவன் மனதை வியாபித்தது. இந்திரனுக்கு சமமான தேஜஸ் உடையவன். ராம, லக்ஷ்மணர்கள் அகன்றதால் இருட்டு சூரியனை மறைப்பது போல, வேதனை அவன் மனதில் வியாபித்தது. கௌசல்யை பேசியதையும், தான் செய்த ஒரு தவற்றையும் நினைத்துக் கொண்டான். ராமன் வனம் சென்ற ஆறாவது இரவு, திடுமென நினைவு வந்தது போல கௌசல்யையிடம் சொல்ல ஆரம்பித்தான். கௌசல்யே, நாம் எது செய்கிறோமோ, சுப4மோ, அசுப4மோ அதையே தான் நாமும் அனுபவிக்கிறோம். தன் கர்மா தான் தனது சுக துக்கத்திற்கு காரணம். அர்த்த லாபம், நிறைவோ, குறைவோ, நம் கர்மத்தின் பலன். இதில் தோஷம் சொல்பவனை அறியாதவன் என்றுதான் சொல்வார்கள். மாமரத்தை வெட்டி விட்டு, பலாச மரத்திற்கு ஜலம் வார்த்து வளர்த்தால் பலன் என்னவாக இருக்கும்? அது போல ராமன் வளர்ந்து பலன் தரும் சமயம் அவனை தியாகம் செய்து விட்டு தவிக்கிறேன். என் துர்மதி. ஒரு சமயம் சப்தத்தைக் கேட்டு, குமாரனாக இருந்த பொழுது, கையில் வில்லேந்தி சப்3fத3வேதி3 என்ற பா3ணத்தைக் கொண்டு நான் மிகப் பெரிய தவற்றைச் செய்தேன். அது இப்பொழுது என்னை குதறியெடுக்க வந்து சேர்ந்திருக்கிறது. இந்த துக்கம் நானே வருவித்துக் கொண்டது. விளையாட்டாக, சிறுவன் விஷம் அருந்தியது போல, ஏதோ ஒருவன் பலாச மரத்தில் நாட்டமுடையவனாக இருந்திருக்கலாம். அது போல நானும் சப்த வேதி என்ற இந்த பாணத்தை எய்தினேன்.
தேவி, நமது திருமணத்திற்கு முன்பு நான் யுவ ராஜாவாக ஆனேன். மழைக் காலம் வந்தது. என் மனம் உற்சாகத்தில் திளைத்தது. ஒரு நாள் பூமியில் வாழும் ஜீவ ஜந்துக்களுக்கு பிராண ரஸம் போன்ற தன் கிரணங்களால் வேண்டுமளவு பருக செய்து உயிரூட்டிய பின், சூரியன் மேற்கு வாயிலில் விழும் நேரம். திடுமென உஷ்ணம் குறைந்து மேகங்கள் சில்லென்று தோன்றின. அந்த சமயம் ஓநாய்களும், சாரஸங்களும், ப3ர்ஹிணம் என்ற மயில் இனமும், கூடுகளை நோக்கிச் சென்றன. மரங்கள் ஒரு பக்கமாக ஸ்நானம் செய்தது போல நனைந்திருந்தன. மழைக் காற்றினால் விழுந்த இறக்கைகளுடன் பறவைகள், மரங்களை வந்தடைந்தன. விழுந்த ஜலத்தால், துளையிடப் பெற்ற இலைகளும், அடிக்கடி விழும் மழைத்துளிகளால் மதம் பிடித்த மான் முகத்தில் தோன்றும் வியர்வை முத்துக்களைப் போல மலை அழகாக விளங்கியது. வெண்மை நிற அருவிகள், மலையின் இடுக்களிலிருந்து வெளி வருவதைப் பார்க்க, விபூதி பூசிய பாம்புகள் புற்றிலிருந்து வருவது போல இருந்தன. இயற்கையின் அழகு இவ்வளவு சுகமாக இருந்த சமயம், வில்லும் அம்பையும் ஏந்தி ரதத்தில் ஏறி, உடற் பயிற்சி செய்ய விரும்பி, சரயூ நதிக் கரையை அடைந்தேன். நீரை அருந்த மகிஷமோ, யானையோ இரவு நேரத்தில் வனத்துக்கு வரும்.
காட்டு நாயோ ஏதோ ஒன்று வந்தால் அடித்து வீழ்த்தும் எண்ணம் கொண்டு காத்திருந்தேன். கையில் அம்பு பூட்டிய வில்லுடன், தனிமையில் ஒரு காட்டு மிருகத்தை அடித்தபின், இன்னொரு கொடிய மிருகம் வரும் என்று காத்திருந்தேன். அந்த கும்மிருட்டில், திடீரென கும்பத்தை நிரப்புவது போல சத்தம் கேட்டது. கண் தெரியவில்லை. சத்தம் மட்டும் கேட்டது. ஏதோ யானை பிளிறுவது போல இருந்தது. உடனே, ஆலகால விஷம் போலவும், நெருப்புத் துண்டம் போலவும் தகிக்கும் என் அம்பை, சத்தம் வந்த திக்கை நோக்கி பெரிய காட்டு யானையை குறி வைப்பதான எண்ணத்துடன் விட்டேன். ஹா ஹா என்ற அலறல் கேட்டது. பா3ணத்தால் மர்மத்தில் அடிபட்ட மனிதக் குரல். என்னைப் போல தபஸ்வி பேரிலும் அம்பை விடுபவர்கள் இருக்கிறார்களா? இருட்டு நேரத்தில் தண்ணீர் எடுக்கத்தானே வந்தேன். அம்பால் அடிக்க நான் யாருக்கு என்ன அபராதம் செய்தேன்? என்னைப் போன்ற ரிஷிகள், த3ண்டம் எடுப்பதில்லை என்று சபதம் செய்தவர்கள், (அடிக்கக் கூடாது, அஹிம்சை விரதம் பூண்டவர்கள்) காட்டில் காட்டு ஜீவன்களுடன் காலத்தை கழிப்பவர்கள், எங்களை ஆயுதத்தால் அடித்துக் கொல்வது என்ன நியாயம்.? ஜடா முடி தரித்து வல்கலை மரவுரி ஆடையணிந்து திரிகிறோம். என்னால் யாருக்கும் ஒரு துன்பமும் நேர்ந்ததில்லையே. என்னைக் கொல்லும் அளவு யாருக்கு என்ன அபராதம் செய்தேன். உபயோகமில்லாத இந்த வதம், அனர்த்தம் தான் விளையும். இதை யாரும் சரி என்று சொல்ல மாட்டார்கள். என்ன சொல்லி என்ன பயன்? என் காலம் முடியும் நேரம் இது. என்னை வதம் செய்து என் பெற்றோரை பரிதவிக்க விட்டானே, அது தான் வருத்தம். முதியவர்களான என் பெற்றோர்கள், நான் இவ்வளவு நாளாக பாதுகாத்து வந்தேன். என் மரணத்திற்கு பிறகு எப்படி வாழ்வார்கள்?. இருவரும் வயதானவர்கள். நான் இப்படி பா3ணத்தால் அடிபட்டு கிடக்கிறேன், விவரம் அறியாத சிறுவனால், நாங்கள் மூவரும் அழிந்தோம். வேதனை மிகுந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, என் கையிலிருந்து அம்பும் வில்லும் நழுவி விழுந்தது. அப்பொழுது நான் எந்த திசையிலிருந்து இந்த தீனமான அழுகுரல் கேட்கிறது என்பதை கவனித்து, அந்த திக்கில் சென்றேன். என் மனம் சொல்லொனா துயரத்தில் மூழ்கியது. சரயு நதிக் கரையில் அடிபட்டு வீழ்ந்து கிடந்த தபஸ்வியைக் கண்டேன். ஜடா முடி விரிந்து கிடந்தது. ஜலம் நிறைந்த குடம் கவிழ்ந்து கிடந்தது. மண்ணில் விழுந்து உடலெல்லாம் சேறு. அம்பால் அடிபட்டு கீழே விழுந்து கிடக்கிறான். என்னைப் பார்த்தான். பயந்து நடுங்கிக் கொண்டு நிற்கும் என்னைப் பார்த்து கண்களாலேயே எரித்து விடுபவன் போல பார்த்து கோபமாக கேட்டான். ராஜன், இந்த காட்டில் வசிக்கும் நான் உனக்கு என்ன அபராதம் செய்தேன்? என் பெற்றோர்களுக்கு குடிக்க தண்ணீர் எடுக்கத் தானே வந்தேன். என்னை ஏன் அடித்தாய்? ஒரே பாணத்தால் என் மர்மத்தில் அடித்து விட்டாய். என் தந்தையும் தாயும், இருவரும் கண் தெரியாதவர்கள். தாகத்தால் தவிக்கிறார்கள். நான் வருவதை எதிர் நோக்கி காத்திருப்பார்கள். உடல் பலமில்லாமல் என்னையே நம்பியிருப்பவர்கள். இந்த கஷ்டத்தை எப்படி தாங்கப் போகிறார்கள். தவம் செய்வதனால் ஒரு பயனும் இல்லை. கல்வி கேள்விகளாலும் ஒரு பயனும் இல்லை. இதோ என் தந்தை நான் விழுந்து கிடப்பதை அறிய மாட்டாரே. தெரிந்தும் தான் என்ன செய்வார்? சக்தியும் இல்லை, பராக்ரமமும் இல்லை. விபத்தில் மாட்டிக் கொண்டு, சக்தியின்றி கிடக்கும் யானையை மற்ற யானைகள் காப்பது போல நீயே போ. போய் என் பெற்றோரிடம் சொல்லு. கோபம் கொண்ட நெருப்பு வனத்தையே அழிப்பது போல அவர்கள் உன்னை தகிக்காமல் இருக்கட்டும். இதோ இந்த ஒற்றையடிப் பாதை என் தந்தையின் ஆசிரமம் போகும். முதலில் அவரை வணங்கி திருப்தி படுத்து. கோபித்துக் கொண்டு உன்னை சபிக்காதபடி நடந்து கொள். முதலில் இந்த அம்பை எடு. மர்மத்தில் பட்டது வலிக்கிறது. மெதுவாக நதிக்கரையிலேயே வளர்ந்த மரங்கள், வேரோடு பிடுங்கப் பட்டால் கரையையே அழிப்பது போல அந்த அம்பு அவன் உடலில் மர்மதானத்தில் தைத்தது, வலி தாங்க முடியாமல் அவஸ்தைப் படுகிறான். அந்த அம்பை எடுத்தால் உயிர் போய் விடும். அதனால் அம்பை பிடுங்கி எடுக்க நான் யோசித்தேன். அவன் துக்கத்துடனும், வேதனையுடனும் தவிக்க நானும் பல மடங்கு துக்கம் அடைந்தேன். என் பரிதாப நிலையை முனிகுமாரன் அறிந்து கொண்டான். மிகவும் கஷ்டப் பட்டு உடல் நிறம் மாறி விட்ட நிலயிலும், பாதி பிராணன் போன நிலையிலும் சோகத்தை விட்டு, தைரியமாக என்னைப் பார்த்து சொன்னான். ராஜன், ப்ரும்ம ஹத்தி தோஷம் வரும் என்று பயப்படாதே. அந்த கவலையை விடு. நான் ப்ராம்மணன் அல்ல. வைச்யனுக்கு, சூத்ர ஸ்த்ரீயிடம் பிறந்தவன். இவ்வாறு பா3ணம் தைத்த உடலுடன் கஷ்டப் பட்டு சொல்லி முடித்தவன் நடுங்கும் உடலோடு பூமியில் சாய்ந்தான். அந்த பா3ணத்தை எடுத்து நான் அவன் சிரமப் படாமல் உயிர் விடும்படி செய்தேன். என்னைப் பார்த்தபடியே உயிர் விட்டான். பாதி உடல் ஜலத்தில். பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த அவனது உடல் அருகில் பத்ரே, நான் மிகவும் வேதனையுடன் அமர்ந்திருந்தேன்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ரிஷி குமார வதா4க்2யானம் என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 64 (141) தசரத2 தி3ஷ்டாந்த: ( தசரத மரணம் )
தசரத ராஜா, அழுது கொண்டே கௌசல்யையிடம் அந்த மகரிஷியின் மரணத்தைப் பற்றி, தான் செய்த வதத்தை விவரமாகச் சொன்னார். அறியாமல் இவ்வளவு பெரிய பாபத்தை செய்துவிட்டு யோசிக்கலானேன். இதை எப்படி சரி செய்வது? குடத்தை நிரப்பிக்கொண்டு முனிகுமாரன் சொன்ன வழியிலேயே நடந்து ஆசிரமத்தை அடைந்தேன். வயது முதிர்ந்து, கண்களும் தெரியாத நிலையில் அவனது பெற்றோரைக் கண்டேன். பக்ஷிகள், இறக்கைகள் இழந்தது போல நின்றிருந்த இருவரையும் கண்டேன். உட்கார்ந்தபடி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த இருவரையும் பார்த்து இவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தவனாக என்ன சொல்வார்களோ என்ற பயத்துடன் சோகமும் வேதனையும் ஒரு புறம் வாட்ட, மறுபுறம் பயம் அரித்தெடுக்க, ஆசிரமத்தில் நுழைந்தேன். என் பாத அடி சத்தம் கேட்டு என்ன குழந்தாய், தண்ணீரில் விளையாடிவிட்டு வருகிறாயா, உன் தாயாருக்கு தொண்டை வறண்டு போகிறது. சீக்கிரம் வா. உன் தாயாரோ, நானோ ஏதாவது உனக்கு வருத்தம் தர பேசியிருந்தாலும், மனதில் வைத்துக் கொள்ளாதே, மகனேஸ்ரீ இப்பொழுது நீதான் எங்களுக்கு கதி. எங்கள் கண்களும் நீயே, உன் மூலம் தான் உலகையே காண்கிறோம். எங்கள் உயிர் உன் கையில். குழந்தாய், ஏன் பேசாமல் இருக்கிறாய். அந்த முனிக்கு கூட கேட்கமுடியாத நைந்த குரலில் பயந்து நடுங்கிய குரலில் நான் சொன்னேன். மனம் வாக்கு காயம் இவற்றால் வாக்கில் பலத்தைக் கொண்டு வந்து, புத்ர சோகத்தால் என்ன செய்வாரோ என்று நடுங்கினேன். நான் தங்கள் புத்திரன் அல்ல. தசரதன் என்ற க்ஷத்திரியன். என் செயலால், நல்ல மனிதர்கள் தூற்றும் ஒரு துக்கத்தை அடைந்தேன். ப4கவன், கையில் வில்லுடன் நான் சரயூ நதிக்கரை வந்தேன். காட்டு நாய்போல எதையாவது அடிக்கலாம், நீர் குடிக்க வரும் யானையை அடிக்கலாம் என்று காத்திருந்தேன். அப்பொழுது குடத்தில் நீர் நிரப்பும் சப்தம் கேட்டது. யானைதான் என்று நினைத்து பாணத்தை விட்டேன். போய்ப் பார்த்தால் என் அம்பினால் அடிபட்டு, மர்மத்தில் துளைத்த உடம்புடன் பாதி பிராணன் போய், பூமியில் விழுந்து கிடந்த தபஸ்வியைக் கண்டேன். அவன் சொன்னதன் பேரில், வலி தாங்காமல் துடித்தவனைக் காப்பாற்ற பாணத்தை வேகமாக எடுத்தேன். பாணத்தை எடுத்த வேகத்திலேயே அவன் உயிர் பிரிந்தது. நீங்கள் பெற்றோர்கள். கண் தெரியாதவர்கள் என்று அவன் சொன்னான். என் அறியாமையாலும், அவசரத்தாலும், உங்கள் பிள்ளை என் கையால் மடிந்தான். இப்பொழுது என்ன செய்யலாம் என்று தாங்களே சொல்லுங்கள் என்று சொன்னேன். என் வார்த்தையின் கொடுமை அவர் மனதில் உறைத்து உடனே எதுவும் சொல்லக்கூட முடியாமல் முனிவர் திகைத்தார். கை கூப்பி நடுங்கியபடி நின்று கொண்டிருந்த என்னிடம் கண்களில் நீர்பெருகி ஆறாக ஓட நாத்தழதழக்க சொன்னார். ராஜன், இந்த அசுப செய்தியை நீயே வந்து என்னிடம் சொல்லாமல் இருந்திருந்தால், உன் தலை ஆயிரம் சுக்கல்களாக வெடிக்கச் செய்திருப்பேன். க்ஷத்திரியன் செய்யும் வதம், அதுவும் வான ப்ரஸ்த சமயத்தில் விசேஷமாக, தெரிந்து செய்தால் தன் ஸ்தானத்திலிருந்து இறக்கிவிடக் கூடிய சக்தியுடையதே. இதற்கு வஜ்ரதாரியான இந்திரனும் விலக்கல்ல. தவம் செய்யும் முனிவரை தெரிந்து சஸ்திர பிரயோகம் செய்தால், எய்தவன் தலை ஏழாக சிதறும். ப்ரும்மவாதிகளின் சக்தி அப்படிப் பட்டது. உனக்கு தெரியாமல் செய்த அபராதம் ஆனதால் பிழைத்தாய். இங்கு இக்ஷ்வாகு குல ராஜ்யத்தில் நீ யார்? எங்களை எங்கள் மகன் இறந்து கிடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல் அரசனே, அவனை பார்க்க விரும்புகிறோம். மான் தோல் ஆடை சிதிலமாகியிருக்க, ரத்தத்தில் நனைந்த உடலை, தர்மராஜன் போன்றவனை, நினைவு இன்றி தரையில் கிடப்பவனை தர்மராஜன் வசம் ஆகி விட்டவனை, எங்கள் மகனைக் காண வேண்டும். நான் ஒருவனாக அவ்விருவரையும் அழைத்துச் சென்று, அவர்கள் மகன் உடலை தொடச் செய்து காட்டினேன். மகனின் உடலில் விழுந்து புரண்டு அரற்றினர். அந்த தந்தை பரிதாபமாக மகனிடம் என்னுடன் பேச மாட்டாயா? நான் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டாயா? ஏன் தரையில் விழுந்து கிடக்கிறாய், மகனே, என் மேல் கோபமா. என்னைப் பார், இதோ உன் தாயாரைப் பார். ஏன் எங்களைத் தழுவிக் கொள்ளவில்லை? மகனே ஏதாவது இனிமையாகப் பேசுவாயே, பேசு. யாரிடம் போய் இந்த அர்த்த ராத்திரியில் என் மன வருத்தத்தை சொல்லிக் கொள்வேன். அதீ4னமான-மூப்பின் காரணமாக வலுவின்றி உள்ள- என்னை, மதுரமாக சாஸ்திர விஷயமோ, வேறு விஷயமோ, நான் சந்த்யா வந்தனம் செய்து ஸ்னானம் செய்த பின், அக்னி ஹோத்ராதிகள் செய்து சொல்வதைக் கேட்கப் போகிறார்கள். புத்திரனை இழந்து விட்ட எனக்கு யார் கதி? யார் எனக்கு கந்த மூல பழங்களைக் கொண்டு வந்து தருவார்கள். உபசரித்து சாப்பிடச் செய்வாயே? நானொரு வேலைக்கும் உதவாதவன். இதோ இவளைப் பார். கண்ணும் தெரியாமல் வயதும் முதிர்ந்து, தபஸ்வினியான இவளையும் நான் எப்படி காப்பாற்றுவேன்? நில் மகனே. யம சத3னம் போகாதே. நாளை எங்கள் இருவருடன் செல்வாயாக. நாங்கள் இருவரும் இந்த துக்கத்தை தாங்க மாட்டோம். சீக்கிரமே உன்னைக் காண யம சத3னம் வந்து சேருவோம். அங்கு வைவஸ்வதனைப் பார்த்து கேட்பேன். தர்ம ராஜனே, சற்றுப் பொறு. நாங்கள் பெற்றோர். நாங்கள் கேட்கும் வரம் தர வேண்டும். எங்களுக்கு அபயம் தருவது உன் பொறுப்பு. மகனே, நீ பாபமே அறியாதவன். மேலும் பாபமான செயலால் உயிரை இழந்தவன். அதனால் யுத்தத்தில் வீரர்கள் சென்றடையும் சத்ய லோகத்தை அடைவாய். எந்த கதியை சக3ரனும், சைப்4யனும், தி3லீபனும், ஜனமேஜயனும், நகுஷனும், து3ந்து3மாரனும் அடைந்தார்களோ, அந்த கதியை அடைவாய் மகனே. எல்லா சாதுக்களுக்கும், அத்தியயனம் செய்பவர்களுக்கும் தவம் செய்பவர்களுக்கும், பூமியை தானம் செய்தவர்களுக்கும், அக்னி ஹோத்ரம் செய்தவர்களுக்கும், ஏக பத்னி விரதனானவனுக்கும், ஆயிரம் பசுக்களை தானம் செய்தவருக்கும் குரு சேவையில் திளைத்தவர்களுக்கும் தன் தேகத்தை ந்யாசம் செய்ய வல்லமை பெற்ற யோகிகளுக்கும் என்ன கதியோ அந்த கதியை அடைவாய். நம் குலத்தில் பிறந்தவன், தவறான கதியை அடையமாட்டான். என் பந்து, நீயும் அதே கதியை அடைவாய். இவ்வாறு வேதனையோடு புலம்பினார். மனைவியுடன் சேர்ந்து மகனுக்கு நீர்க்கடன் செலுத்த முயன்றார். அந்த முனி புத்திரனும், தன் நற் செயல்களால் சம்பாதித்த புண்யங்கள் உடன் வர, திவ்ய ரூபம் பெற்றவனாக ஸ்வர்கம் சென்றான். இந்திரனுக்கு சமமான நிலை பெற்றான். முதியோர்கள் இந்திரனுடன் நேரில் பேசினர். ஒரு முஹுர்த்தம் அவர்களை சமாதானப் படுத்தி இந்திரன். நீங்களும் கூடிய சீக்கிரத்தில் என் உலகம் வந்து சேருவீர்கள். உங்களுக்கு நான் பணிவிடை செய்யக் கடமை பட்டவனாவேன். என்றான். இவ்வாறு சொல்லி முனி குமாரன், திவ்யமான விமானத்தில் ஏறிச் சென்றான். மகனுக்கான இறுதிக் கடன்களை மனைவியுடன் செய்து முடித்து விட்டு, வாய் மூடி மௌனியாக நின்றிருந்த என்னைப் பார்த்து சொன்னார். ராஜனே, இன்றே என்னையும் கொன்று விடு. எனக்கு மரணத்தைப் பற்றிய பயம் இல்லை. ஒரு அம்பை எய்து என் மகனைக் கொன்று, என்னை அனாதையாக்கி விட்டாய். நீ அறியாமல் செய்து விட்ட செயல் தான் என்றாலும் நான் உன்னை சபிக்கிறேன். நீயும் இந்த தாங்க முடியாத துக்கத்தை அனுபவிப்பாய். நான் தற்சமயம் அனுபவிக்கும் புத்ர சோகத்தை நீயும் அனுபவிப்பாய். இதே போல புத்ர சோகம் தான் உனக்கு யமனாகும். அறியாமல் க்ஷத்திரியனான நீ, முனி குமாரனைக் கொன்றாய் என்பதால் ப்ரும்மஹத்தி தோஷத்திலிருந்து பிழைத்தாய். உனக்கும் என்னைப் போல ஒரு கஷ்டம் வரும். என்று என்னை சபித்து, வெகு நேரம் துக்கமும் வேதனையும் பொங்க அழுது கொண்டிருந்தார். பின் சிதையை மூட்டி இருவரும் நெருப்பில் விழுந்து உயிர் விட்டனர். இந்த தகாத செயல் இப்பொழுது ஞாபகம் வருகிறது. சிறுவனாக இருந்த பொழுது சப்தவேதியை பயன் படுத்தும் ஆசையினால் நான் செய்த தவறு, நான் இப்பொழுது அனுபவிக்கிறேன். சாப்பிட்ட அன்னம் காரணமாக வியாதி பிடித்தது போல. அதனால் ப4த்3ரே, இப்பொழுது அந்த சமயம் வந்து விட்டது. இன்று நான் புத்ர சோகத்தால் உயிர் விடப் போகிறேன். என் கண்களால் உன்னைப் பார்க்க இயலவில்லை. கௌசல்யா, என்னை நன்றாகத் தொடு. இப்படிச் சொல்லி அழுத வண்ணம் பயமும் வாட்ட, மனைவியிடம் சொன்னான். யமனிடம் சென்றவர்கள் பார்க்க முடிவதில்லை. என்னை ஒரு வேளை ராமன் தொட்டால், தனமும் யுவராஜ்யமும் அவனுக்கு கிடைத்தால் நான் பிழைத்தாலும் பிழைப்பேன். ராமனுக்கு நான் செய்த அபசாரத்திற்கு எனக்கு இது வேண்டும். கெட்டவனாக இருந்தாலும், புத்திரனை யாராவது தியாகம் செய்வார்களா? நாடு கடத்தப்பட்ட எந்த மகன் தான் தந்தையை நிந்திக்காமல் இருப்பான்? என் கண்களால் உன்னை பார்க்க முடியவில்லை. நினைவும் மழுங்குகிறது. வைவஸ்வதனுடைய தூதர்கள் என்னை அவசரப் படுத்துகிறார்கள். இதை விட துக்கமானது கௌசல்யே, என் அந்திம காலத்தில் சத்ய பராக்ரமனான, தர்மம் அறிந்தவனான, ராமனை பார்க்காமல் போகிறேன். ஈ.டு இணையில்லாத என் மகனைக் காணாமல், என் உயிர் போகப் போகிறது. நீர் குமிழியை சூரியன் உலர்த்தி விடுவது போல. அந்த மனிதர்கள் தான் தேவர்கள் – எவர், அழகிய குண்டலம் அணிந்த ராமன் முகத்தை காண்கிறார்களோ, பதினைந்தாவது வருஷம் திரும்பி வரும் ராமனை, தாமரை இதழ் போன்ற கண்களுடையவனை, அழகிய புருவமும், பற்களும், சுந்தரமான நாஸிகமும், பார்க்க கொடுத்து வைத்தவர்கள். அந்த முகத்தைப் பார்த்தவர்களே பாக்கிய சாலிகள். நக்ஷத்திரங்களின் நாயகனான சந்திரன் போன்ற முகம் உடையவன், வன வாசத்தை முடித்துக் கொண்டு அயோத்தி திரும்பி வருவான். யாருடைய பாக்கியத்தில் சுகம் எழுதப் பட்டிருக்கிறதோ, அவர்களே ராமனைக் காண்பர். வழியில் சுக்ரனைக் கண்டது போல. கௌசல்யே, என் மன பிராந்தி என் இதயத்தை வருத்துகிறது. எதுவுமே தெரியவில்லை. சப்தமோ, ஸ்பரிசமோ, ரசமோ, எந்த இந்திரியமும் மன நிம்மதியில்லாத போது வேலை செய்வதில்லை. எண்ணெய் தீர்ந்த விளக்கின் திரிபோல. இது என் ஆத்மாவை தாக்கும் வேதனை, என்னோடேயே தான் மடிய வேண்டும். நதியின் வேகம் கரைகளை அரித்துக் கொண்டு செல்வது போல,. ஹா, ராக4வா, மகா பா3ஹோ, ஹா, என் ஆயாசத்தை நீக்குபவனே, ஹா, தந்தைக்கு பிரியமானவனே, மகனே, எங்கு இருக்கிறாய்? ஹா கௌசல்யே, இதோ நான் போகிறேன். தபஸ்வினியான சுமித்ரே, இதோ நான் போகிறேன். ஹா கொடியவளே, குலத்தைக் கெடுக்க வந்த கைகேயி, இவ்வாறு சொல்லிக் கொண்டு ராம மாதாவும், சுமித்ரைக்கும் எதிரில் அரசன் கால கதியடைந்தான். பேசிக்கொண்டே, பிரியமான மகனின் பிரிவால் வருந்தி பாதி ராத்திரியில் தாங்க முடியாத மன வேதனையுடன் அரசன் இறந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தசரத2 தி3ஷ்டாந்தோ என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 65 (142) அந்த:புராக்ரந்த: (அரசனின் மனைவி, மக்கள் வருந்துதல்)
அந்த இரவு நகர்ந்து மறுநாள் விடியற்காலை. வாழ்த்து பாடி துயிலெழுப்பும் பாடகர்களும், வாத்யம் வாசிப்பவர்களும் அரசனது மாளிகையில் வந்து கூடினர். சாரதிகள், நல்ல சம்ஸ்காரம் படைத்த பாடகர்கள், ஸ்ருதி சுத்தமாக பாடுபவர்கள் துதி பாடுபவர்கள், தனித் தனியாக பாடவும், சொல்லவும் ஆரம்பித்தனர். ராஜாவை துதி பாடி, மிக உயர்ந்த ஆசிகளை வழங்கிய வண்ணம் பாடியது அந்த மாளிகையின் விஸ்தீர்ணமான அறைகளில் எதிரொலித்தது. அவர்கள் துதி பாடிக் கொண்டிருக்கும் பொழுதே, சிலர் தாள வாத்யங்களை வாசித்தனர். இந்த சப்தத்தில் பறவைகளும் விழித்துக் கொண்டு ஓசையிடலாயின. கிளைகளில் இருந்தும், கூண்டுகளிலிருந்தும் அரசர் குலத்தினரின் வளர்ப்பு பறவைகளும் கீச் கீச்சென்று ஓசைப் படுத்தின. வீணையின் சுபமான நாதம் காற்றில் மிதந்தது. ஆசிகள் வழங்கும் விதமாக அமைந்திருந்த பாடல்கள், அந்த மாளிகையை நிரப்பியது. பின் நல்ல செய்தி சொல்பவர்கள், சில தேர்ந்த கலைஞர்கள், பெண்கள் போல அலங்கரித்துக் கொண்டவர்கள், வந்து சேர்ந்தனர். காலத்தில் முறைப் படி ஸ்னானம் செய்விக்க, ஹரி சந்தனம் கலந்த ஜலத்தை தங்க குடங்களில் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர். பல கன்னிகைகள், மங்களமான ஆசனங்களையும் உணவு பதார்த்தங்களையும் கொண்டு வந்து வைத்தனர். எல்லா லக்ஷணங்களும் பொருந்தியதாகவும், விதி முறைப்படி அர்ச்சனை செய்ததும், நல்ல குணமுடைய லக்ஷ்மீகரமான பரிசுப் பொருட்கள் வந்து சேர்ந்தன. சூரியோதயம் ஆனது தான் தாமதம், எல்லாமே தயாராக இருந்தன. ஏதாவது விட்டுப் போயிற்றா, எல்லாம் சரியாக வந்து சேர்ந்ததா? என்று சோதித்து பார்க்கப் பட்டது. கோசல ராஜாவின் சயன க்ருஹத்திற்கு அருகில் இருந்தவர்கள், அந்த:புரத்து ஸ்த்ரீகள் வந்து கணவனை எழுப்ப வந்தனர். வினயமாகவும் நயமாகவும் சொல்லியும் பலனில்லாமல் போகவே, படுக்கையை மெதுவாக தொட்டுப் பார்த்து எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அந்த பெண்கள் ஸ்வப்னாவஸ்தையா என்று புரியாமல் அசைத்துப் பார்த்து உயிர் இருக்கிறதா என்று சந்தேகம் வரவும், உடல் வியர்க்க திகைத்தனர். எதிர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட நாணல் புல் போல தவித்தனர். ஸ்த்ரீகள் அரசனைக் கண்டு சந்தேகப் பட்டுப் பார்த்து, நாம் எதை நினைத்து பயப்பட்டோமோ, அது நடந்தே விட்டது என்று நிச்சயித்து, கௌசல்யையையும் சுமித்திரையையும் தேடிப் போக, இருவரும் அயர்ந்து தூங்கியவர்கள் எழுந்திருக்கவில்லை. அவர்கள் முகத்திலும் இருட்டு மூடியதுபோல சற்றும் ஒளி இல்லை. கௌசல்யா, பின் அரசன், பின் சுமித்திரா என்று மாறி மாறி பார்த்து இவர்கள் இருவரும் தூங்குகிறார்கள், அரசன் தூக்கத்திலேயே உயிர் பிரிந்து விட்டது என்பதையும் தீர்மானமாக ஊகித்துக் கொண்டனர். தன் கூட்டத்தை விட்டு விலகி வந்த பெண் யானை தீனமாக அலறுவது போல, அந்த ஸ்த்ரீகள், தீனமாக அழ ஆரம்பித்தனர். இவர்களது அழு குரலால் திடுமென விழிப்பு கொடுக்கவும், கௌசல்யாவும், சுமித்திராவும் தூக்கத்தை விட்டு எழுந்தனர். இருவரும் அரசனைக் கண்டும், தொட்டு உணர்ந்தும், ஹா நாதா என்று அலறி பூமியில் விழுந்தனர். ஆகாயத்திலிருந்து நழுவி விழுந்த நக்ஷத்திரத்தைப் போல கோசலேந்திரன் மகள் துடித்தாள். கௌசல்யை பூமியில் விழுந்ததைக் கண்டதும் அரசன் சாந்தியடைந்ததை உறுதி செய்து கொண்ட மற்ற ஸ்த்ரீகள் அழ ஆரம்பித்தனர். இவர்களது ஓலம் பலமாகி அந்த:புரத்தை தாண்டி மாளிகை முழுவதும் பரவலாயிற்று. நிமிஷ நேரத்தில், அரசனது மாளிகை பயமும், வருத்தமும் தெரிய அழும் ஓலக் குரலே எங்கும் நிறைந்ததாயிற்று. தசரத ராஜாவின் பத்னிகள், அரசன் இறந்து போனதால் அனாதைகள் போல ஆனார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் அந்த:புராக்ரந்தோ என்ற அறுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 66 (143) தைல த்3ரோண்யத்சயனம்(எண்ணெய் நிறைந்த பாத்திரத்தில் உடலை பத்திரப் படுத்துதல்)
அடங்கிய அக்னி ஜ்வாலை போலவும், நீர் வற்றிய சமுத்திரம் போலவும், சூரியன் ஒளி இழந்தது போலவும் ஸ்வர்கம் சேர்ந்த அரசனின் உடலைப் பார்த்து கௌசல்யை
கண்களில் நீர் மல்க, வேதனை வாட்ட, அரசன் தலையை தாங்கியபடி கைகேயியிடம் சொன்னாள். கைகேயீ, உன் இஷ்டம் பூர்த்தியாயிற்றா? இடையூறு இல்லாமல் ராஜ்யத்தை அனுபவி. அரசனை விட்டு, கொடியவளே, துஷ்டத்தனம் செய்தாயே. என்னைப் பிரிந்து ராமன் போனான். இதோ பதியும் போய்ச் சேர்ந்தார். நான் உயிர் வாழ்வது என்பது இயலாத காரியம். கைகேயியைத் தவிர, அவளுக்குத்தான் தர்ம நியாயமே கிடையாது, மற்ற ஸ்த்ரீகள் யார் தான் கணவன் இன்றி உயிருடன் வாழ விரும்புவர். லோபியானவன் சாப்பாட்டின் பக்குவம் அறிய மாட்டான். கைகேயி கூனியின் காரணமாக ராகவ குலத்தையே அழித்து விட்டாள். அரசனும் தகாத இடத்தில் வாக்கு கொடுத்து ராமனை காட்டுக்கு அனுப்பினான், சீதையோடு. ஜனக ராஜாவும் என்னைப் போல இப்பொழுது தவித்துக் கொண்டிருப்பார். நான் இப்பொழுது அனாதையாக கணவனையும் இழந்தவளாக தவிப்பதை ராமன் அறிய மாட்டான். விதேஹ ராஜாவின் மகள், கஷ்டமே அறியாதவள், காட்டில் என்ன செய்கிறாளோ. இரவில், மிருக பக்ஷிகள் கோரமாக கத்தும் பொழுது, பயந்து ராமனிடம் சரணடைவாள். விதேஹ ராஜாவும் அவளைப் பிரிந்த துயரத்தில் உயிர் விடுவாரோ? இந்த சரீரத்தோடு நானும் அக்னியில் விழுந்து உயிர் துறந்தால் என்ன? தாதிகள் வந்து அவளை அரசனின் உடலை விட்டு பிரித்து அழைத்து சென்றனர்.
மந்திரிகள் வந்து அரசனது உடலை தைலம் நிறைந்த பாத்திரங்களில் வைத்து மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி யோசித்தனர். புத்திரர்கள் இல்லாமல் அரசனது அந்திமக் கிரியைகளை செய்வது முடியாது என்பதால், சரீரத்தை பாதுகாத்து வைக்க முனைந்தனர். நிஜமாகவே அரசன் இறந்தான் என்பதை நம்பவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் அந்த:புரத்து ஸ்த்ரீகள், சுற்றி நின்று துக்கத்துடன் வாய் பொத்தி நின்றனர். ஏற்கனவே பிரியமாக பேசும் ராமன் எங்களை விட்டு போய் விட்டான். நீயும் எங்களை தவிக்க விட்டுப் போகிறாயே, கைகேயியின் கெட்ட எண்ணத்தால் நாங்கள் ராமனை பிரிய நேர்ந்தது. இப்பொழுது அவளுடன் எப்படி நிம்மதியாக வாழப் போகிறோம். என்று அரற்றினர். ராமனையும், லக்ஷ்மணனையும், சீதையையுமே பெரிதாக நினைக்காத கைகேயிக்கு வேறு யார் தான் உயர்வாக இருக்கப் போகிறார்கள். இப்படியே பகல் கழிந்து இரவும் வந்தது. கூடியிருந்தவர்களும் மற்றவர்களும், புத்திரனில்லாமல் இறுதி கடன் செய்ய வேண்டாம் என்று தீர்மானித்ததால், மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் அரசனை அதே நிலையில் பாதுகாத்து வைத்தனர். நகரமே சோகத்தில் மூழ்கியது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தைல த்3ரோண்யத்சயனம் என்ற அறுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 67 (143) அராஜக து3ரவஸ்தா2 வர்ணனம் (அரசன் இல்லாமை-அதன் காரணமாக வரக்கூடிய துன்பங்கள்)
அன்று இரவு அயோத்யாவில், எங்கும் ஆனந்தம் இல்லாத, வருத்தம் தோய்ந்த முகங்களே காணப் பட்டன, தீன ஸ்வரங்களே கேட்டன. பொழுது விடிந்தது. ராஜ சபையினர் கூடினர். மார்க்கண்டேயர், மௌத்3க3ல்யர், வாம தே3வர், காச்யபர், காத்யாயனர், கௌ3தமர், ஜாபா3லி போன்ற பெரும் புகழ் பெற்ற பிராம்மணர்களும், மந்திரிகளும் தனித் தனியாக பேசினர். ச்ரேஷ்டமான ராஜ புரோஹிதரான வசிஷ்டர் தலைமையில் ஆலோசனைகள் செய்தனர். நூறு வருஷம் ஆனது போல நமக்கு இந்த ஒரு இரவு நகர்ந்தது. இந்த அரசன் ஸ்வர்கம் சென்று விட்டான். ராமனும் வனம் சென்று விட்டான். லக்ஷ்மணனும் ராமனுடன் கூடவே சென்றான். ப4ரத, சத்ருக்4னர்கள் இருவரும் மாமன் வீடு சென்றுள்ளனர். தாய் வழி பாட்டனார் வீட்டில் வசிக்கின்றனர். இக்ஷ்வாகு குலத்துக்கு இப்பொழுதே யாரையாவது அரசனாக நியமித்து விடுவோம். அரசன் இல்லாத நாடு வினாசத்தை அடையும். அரசன் இல்லாத நாட்டில், பெரும் சத்தத்துடன் மேகம் இடி இடித்து திவ்யமான நீரைப் பொழிவதில்லை. அரசன் இல்லாத நாட்டில், விதைகள் நன்றாக முளப்பதில்லை.
அரசன் இல்லாத நாட்டில், பெண்களோ, மனைவியோ, மக்களோ வசத்தில் இருப்பதில்லை. செல்வமும் இல்லை, மனைவியும் இல்லை. இது மிகவும் துரதிர்ஷ்டம். அரசன் இல்லாத ஊரில் எது தான் சத்யம்? அராஜகமான நாட்டில், சபைக்கு பெரியவர்கள் வர மாட்டார்கள். சந்தோஷமாக உத்யான வனங்களுக்கும், அழகிய புஷ்கரங்களுக்கும் செல்ல மாட்டார்கள். பிராம்மணர்கள் யக்ஞ சீலர்களாக இருக்க மாட்டார்கள். விரதங்களை அனுஷ்டித்து சாந்தமாக யாகங்களை செய்ய மாட்டார்கள். மகா யக்ஞங்களைச் செய்யும் எஜமானர்களும், பிராம்மணர்களுக்கு நிறைய தக்ஷிணை கொடுக்க மாட்டார்கள். செல்வந்தர்களாக இருக்க மாட்டார்கள். சந்தோஷமாக நட, நர்த்தகர்கள், உத்ஸவங்களிலும், சமாஜங்களிலும், கூட மாட்டார்கள். வேலை செய்பவர்கள், தங்கள் கடமையை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். கதைகளைப் பேசி மனம் நிறைந்து சிரித்து மகிழ மாட்டார்கள். குமாரிகள் தங்க நகைகளை அணிந்து மாலை வேளைகளில் உத்யானங்களில் விளையாடச் செல்ல மாட்டார்கள். காதலிகளுடனும், மனைவிகளுடனும் உல்லாசமாக வெளியிடங்களுக்குச் செல்ல மாட்டார்கள். வேகமாக செல்லும் ரதங்களில் ஏறி காட்டுப் பிரதேசங்களுக்கு உல்லாசமாக பயணம் செய்ய மாட்டார்கள். தனவந்தர்கள், கதவுகளைத் திறந்து வைத்தபடி நிம்மதியாக தூங்க மாட்டார்கள். க்ருஷி, பசு வளர்ப்பவர்களும், கதவை சாத்தி பூட்டி, கவலையடைவர். ராஜ மார்க்கங்களில் யானைகள், அறுபதுக்கும் மேல் வயதானவைகள், கிழ யானைகள் தான் திரியும். எப்பொழுதும், சரங்களை வைத்து பயிற்சி செய்வதும், பூமி அதிர உடற்பயிற்சி செய்யும் கோஷமும் கேட்காது. வியாபாரிகள் வண்டி நிறைய பொருட்களை ஏற்றிக் கொண்டு க்ஷேமமாக போய் வர மாட்டார்கள். முனிவர்கள், சாயங்காலம் தன்னடக்கத்துடன், ஒற்றையாக போக மாட்டார்கள். அரசன் இல்லாத நாட்டில் யோக க்ஷேமம் இராது. சேனைகள் எதிர் படையை ஜயிக்க சக்தியுள்ளதாக இருக்காது. உயர் ஜாதி குதிரைகள் பூட்டிய
வாகனங்களில் ஜனங்கள் பரபரப்புடன் செல்பவராக மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டார்கள். ரதங்கள் போட்டி போட்டுக் கொண்டு வீதியை நிறைக்காது. ஜனங்கள் சாஸ்திரம் தெரிந்தவர்களாக ஒருவருடன் ஒருவர் சாஸ்திர விஷயங்களைப் பேசிக் கொண்டு வனங்களிலும் உப வனங்களிலும் காலம் கழிக்க மாட்டார்கள். ஜனங்கள் மாலைகளையும், பூக்களையும், மோதகங்களையும் ஏந்தி தேவதைகளை அர்ச்சிக்கும் பொருட்டு வெளியில் செல்ல மாட்டார்கள். சந்தனம், அகரு போன்ற வாசனைப் பொருட்களை பூசிக் கொண்டு ராஜ குமாரர்கள், வசந்த காலத்து மரங்கள் போல அலங்காரமாக வளைய வர மாட்டார்கள். நதிகள் ஜலம் இல்லாதது போலவும், புல் பூண்டு இல்லாத வனம் போலவும், கோபாலன் (பசுக்களை மேய்ப்பவன்) இல்லாத பசுக் கூட்டம் போலவும், அரசன் இல்லாத நாடு ஆகும். ரதத்தின் த்வஜமாகவும், நெருப்பின் புகையாகவும், க்ஞானத்தில் ப்ரக்ஞானமாகவும், இருந்த நமது அரசன் தெய்வத் தன்மை அடைந்து விட்டான். அரசன் இல்லாத நாட்டில், எதுவும் யாருடையதுமாக நிச்சயமாக இருக்காது. மீன்களைப் போல ஜனங்கள் பரஸ்பரம் சாப்பிடுவார்கள். மரியாதைகள் இன்றி, நாஸ்திகர்களாக, சந்தேகங்கள் நிரம்பியவர்களாக ராஜ தண்டம் பெற்று வருந்துபவர்களாக இருப்பார்கள். சரீரத்தில் கண் பார்க்கும் சக்தியோடு எப்பொழுதும் முக்கியமாக விளங்குவது போல ராஷ்டிரத்தின் சத்ய தர்மத்திற்கு நரேந்திரன் ஆவான். ராஜா, சத்யம், ராஜா தான் தர்மம். குல ஜனங்களுக்கு குலம். ராஜா, மாதா, பிதா, ராஜாதான் மற்ற மனிதர்களுக்கு நன்மை செய்பவனும் ஆவான். நல்ல அரசனின் நான்னடைத்தையினால் யமன், வைஸ்ரவனன், இந்திரன், வருணன், இவர்கள் அனைவரிலும் அரசன் சிறப்பு பெறுகிறான். அரசன் இல்லாத நிலை இருட்டு போல. இதில் எதுவும் தெளிவாகத் தெரியாது. உலகில் அரசன் இல்லையெனில் நியாயமாக பிரித்துக் கொண்டு வாழ மாட்டார்கள். இப்பொழுது அரசன் உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது சொல்லைக் காப்பாற்ற நாம் கடமைப் பட்டிருக்கிறோம். எப்படி அலைகள், சமுத்திரத்தை மீறிச் செல்லாதோ, அது போல. பிராம்மணர்கள், நடந்ததை வைத்துக் கொண்டு யோசித்து, ஆலோசித்து, இக்ஷ்வாகு குலத்தின் இளைய மைந்தனை ராஜ்யத்தில் முடி சூட்டி அமர்த்துவோம் என்று முடிவு செய்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் அராஜக து3ரவஸ்தா வர்ணனம் என்ற அறுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 68 145) தூ3த:ப்ரேஷணம் (தூதர்களை அனுப்புதல்)
இதைக் கேட்டு வசிஷ்டர் பதில் சொன்னார். மித்திரர்களும், மந்திரிகளும் சபையில் கூடியிருந்தனர். ராஜ்யம் ப4ரதனுக்கு தரப்பட்டுள்ளது. அவன் மாமன் வீட்டில் இருக்கிறான். சத்ருக்4னனும் சகோதரனுடன் அங்கு இருக்கிறான். அதனால் வேகமாக செல்லும் குதிரைகளைப் பூட்டி ரதத்தில் தூதர்கள் செல்லட்டும். இரண்டு சகோதரர்களையும் அழைத்து வரட்டும். சபையினரும் அவ்வாறே செய்வோம் என்று ஆமோதித்தனர். சித்3தா4ர்த்தா, விஜயா, ஜயந்தா, அசோகா, நந்த3னா, என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேனோ அதைப் போலவே செய்யுங்கள். வேகமாக செல்லும் குதிரைகளில் ஏறி ராஜ க்3ருஹம் செல்லுங்கள். உங்கள் உணர்ச்சிகளை வெளிக் காட்டிக் கொள்ளாமல், என் கட்டளை என்று ப4ரதனிடம் சொல்ல வேண்டும். புரோஹிதர் குசலம் விசாரித்தார் என்று சொல்லுங்கள். மற்ற மந்திரிகளும் அவ்வாறே விசாரித்ததாகச் சொல்லுங்கள். ஏதோ வேலை இருப்பதால் உங்களை அவசரமாக வரச் சொன்னார் என்று சொல்லுங்கள். அவனிடம் ராமன் வனம் சென்றது பற்றியோ, அரசன் இறந்தது பற்றியோ சொல்ல வேண்டாம். ராக4வ குலத்துக்கு வந்துள்ள இந்த கஷ்டங்களைச் சொல்ல வேண்டாம். பட்டு வஸ்திரங்களையும், பூ4ஷணங்களையும், உயர்ந்த பரிசுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு பரதனுக்கும் கேகய ராஜனுக்கும் கொடுங்கள். வழிக்கு வேண்டிய ஆகாரங்களை மூட்டையாகக் கட்டிக் கொடுத்தபின், தூதர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். கேகய நாட்டிற்கு அவர்கள், உயர் ஜாதி குதிரைகளில் ஏறி புறப்பட்டனர். வசிஷ்டரிடம் அனுமதி பெற்று தூதர்கள் விரைவாக செல்லலாயினர். பிரலம்பத்தின் வடக்கு நோக்கிச் சென்று, மாலினி நதியைக் கடந்து சென்றனர். ஹாஸ்தின புரத்தில், கங்கையைக் கடந்து சென்று, கிழக்கு முகமாக சென்றனர். பாஞ்சால தேசத்தை அடைந்து மத்தியில் குரு, ஜாங்க3லம் என்ற இடங்களையும் கடந்து சென்றனர். குளங்களையும், நீர் நிரம்பிய நதிகளையும், சுத்தமான நீருடைய நீர் நிலைகளையும் பார்த்துக் கொண்டே காரியத்தின் அவசரத்தை உணர்ந்து தூதர்கள் வேகமாகச் சென்றனர். சர த3ண்டம் என்ற இடத்தில், ஜனங்கள் நிறைந்திருப்பதை பார்த்துக் கொண்டே, சுத்தமான ஜலமும், பலவிதமான பறவைகள் வசிப்பதுமான ஒரு நதியைக் கடந்து நிகூல மரம் என்ற இடத்தை அடைந்து மேலும் சென்றனர். குலிங்கா3ம் என்ற ஊரை அடைந்தனர். இக்ஷுமதி என்ற நதி, தந்தையர் பாட்டனார் காலத்திலிருந்தே புண்ய நதி என்று பெயர் பெற்றது- அதையும் கடந்து சென்றனர். வேத பாரங்கதர்களாக இருந்த பிராம்மனோத்தமர்கள் வசித்த பா3ஹ்வீகாள் என்ற இடத்தையும், சுதா4மானம் என்ற மலையையும் கடந்து, விஷ்ணு க்ஷேத்திரமாக இருந்த இடத்தையும், விபாசம், சால்மலீ என்ற ஊர்களையும் கடந்து, பல நதிகளையும், கிணறுகளையும், சிறியதும் பெரியதுமான குளங்கள், சிங்கம் புலி நடமாடும் காடுகள் என்று ஓய்வு ஒழிச்சலின்றி, ராஜ கார்யம், அரச கட்டளை என்பதால் நிற்காமல் பிரயாணம் செய்து, வழி கரடு முரடாக இருந்ததையும், குதிரைகள் களைத்தையும் பொருட்படுத்தாமல், கி3ரி வ்ரஜம் என்ற கேகய ராஜ்யத்தின் பகுதியான ஊரையடைந்தனர். ஏழாவது நாள் கேகய ராஜதானியை அடைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தூ3த ப்ரேஷணம் என்ற அறுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 69 (146) ப4ரத து3ஸ்வப்ன: (பரதன் கண்ட கெட்ட கனவு)
தூதர்கள் அந்த நகரத்தில் நுழைந்த அதே இரவு பரதன் ஒரு கெட்ட கனவைக் கண்டான். ராஜாதி ராஜனுடைய மகன், அந்த கெட்ட கனவைக் கண்டு மிகவும் பரிதவித்தான். நண்பர்கள், பிரியமாக பேசுபவர்கள், அவனுடைய தாபத்தைக் கண்டு வினோதமாக பேசியும், கதையளந்தும், அவன் மனத்துயரை மாற்ற முயன்றனர். சிலர் வாத்யங்கள் வாசித்தும், சாந்தமாக உரையாடியும், நாட்டியமாடியும் காட்டினர். நாடகமாக நடித்துக் காட்டினர் சிலர். ஹாஸ்யமாக பலவாறாக பேசிக் காட்டி மகிழ்வித்தனர். அப்படி இருந்தும், கூட்டமாக வயதொத்த நண்பர்கள், பல முயற்சி செய்து சிரிக்க வைக்க முயன்றும், பரதன் மனம் சமாதானம் ஆகவில்லை. கூட்டத்தில் ஒரு நண்பன், ஏன் இந்த விளையாட்டுகளில் உன் மனம் செல்லவில்லை? சந்தோஷமாக இல்லையே என்று வினவினான். அவனுக்கு பரதன் பதில் சொன்னான். கேள். என்ன காரணத்தினாலோ என் மனம் அலை பாய்கிறது. எதுவும் என்னை மகிழ்விக்கவில்லை. இப்படி தீனனாக ஆனேன் என்று சொல்ல ஆரம்பித்தான். ஸ்வப்னத்தில் என் தந்தையைக் கண்டேன். ஒரே அழுக்காக, தலையை விரித்துக் கொண்டு, மலையுச்சியிலிருந்து விழுவது போலக் கண்டேன். விழுந்த இடம் ஒரே அழுக்கு, சாணி நிரம்பிய பள்ளம். அதிலிருந்து வெளி வர நீந்திக் கொண்டிருந்தார். ஏதோ அடிக்கடி சிரிப்பது போலவும் இருந்தது. கைகளை குவித்து தண்ணீர் குடிப்பது போல இருந்தது. பார்த்தால் எண்ணெய். எள் அன்னம் சாப்பிட்டு விட்டு, திரும்பத் திரும்ப தலை கீழாக எண்ணெயில் மூழ்கியவராக, உடலெங்கும் எண்ணெய் பூசிக் கொண்டவராகவும் கண்டேன். ஸ்வப்னத்தில் சமுத்திரம் வற்றிக் கிடக்கிறது. சந்திரன் பூமியில் விழுந்து கிடக்கிறான். பூமியை ஏதோ வாட்டுகிறது. இருட்டு சூழ்ந்து கிடக்கிறது. பட்டத்து யானையின் தந்தம் உடைந்து காணப்பட்டது. கொழுந்து விட்டெரிந்த நெருப்பு திடுமென அணைந்தது. பூமி கீழிறங்கி இருந்தது, மரங்கள் பலவும் வாடி சுருங்கி இருந்தன. மலைகளை, புகை மண்டியதாக அடிபட்டதாகக் கண்டேன். கரும் நிறமுடைய பெண்கள் அரசனைச் சுற்றி, கரு நிற ஆடையணிந்து, அரசன் கறுத்த ஆசனத்தில் அமர்ந்திருக்க சிரிக்கின்றனர். சிவந்த மாலையணிந்து வேகமாக உடல் பூராவும் ஏதோ பூசிக் கொண்டு தென் திசை நோக்கிச் சென்றார். ராக்ஷஸி ஒருவள், கோரமான முகம் உடையவள், அரசனைப் பிடிப்பது போல ஓடுகிறாள். இந்த பயங்கரமான ஸ்வப்னம் இன்று கண்டேன். நானோ, ராமனோ, லக்ஷ்மணனோ இறக்கப் போகிறோம். கர என்ற கோவேறு கழுதை பூட்டிய வண்டியில் போவது போல எந்த மனிதன் கனவில் காண்கிறானோ, அந்த மனிதன் சீக்கிரமே மரணமடைவான். இதனால் தான் நான் வருத்தமாக இருக்கிறேன். அது தான் உங்களுக்கு சமமாக கேளிக்கைகளில் ஈ.டுபட முடியவில்லை. என் உடலும் உள்ளமும் சரியாக இல்லை. பயப்படும் இடம் எதுவும் இல்லாமலே, பயத்தை உதற முடியவில்லை. என் நா வறளுகிறது. என் நிழலைக் கண்டே நடுங்குகிறேன். காரணம் தெரியாமல் பதட்டம் தோன்றுகிறது. இவ்வாறு தான் கண்ட கெட்ட கனவை விவரித்து விட்டு, மற்றவர்கள் சமாதானமாக என்ன சொல்லியும் பயம் நீங்காதவனாக பரதன் தவித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ப4ரத து3ஸ்வப்னோ என்ற அறுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 70 (147) ப4ரத ப்ரஸ்தா2னம் (பரதன் புறப்படுதல்)
பரதன் தன் அனுபவத்தை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே தூதர்கள், குதிரைகள் களைத்து மூச்சிரைக்க, சாதாரணமாக உள்ளே நுழைய முடியாத பாதுகாவல் நிறைந்த நகரத்துள் வந்து சேர்ந்தனர். அரசனைக் கண்டு வணங்கினர். ராஜகுமாரனால் நன்கு கவனித்து உபசரிக்கப் பட்டனர். பின் பரதனிடம் சொன்னார்கள். புரோஹிதர் உங்களை குசலம் விசாரித்தார். மற்ற மந்திரிகளும் விசாரித்தனர். ஏதோ ஒரு முக்கியமான காரியம் இருப்பதால் அவசரமாக வரும்படி சொன்னார். இதோ விலையுயர்ந்த வஸ்திரங்களும், ஆபரணங்களும் உங்கள் பாட்டனாருக்காக கொண்டு வந்தோம். இவற்றை அவருக்கு கொடுங்கள். இதில் இருக்கும் இருபது கோடியில், பத்து கோடியை மாமனுக்கு கொடுத்த பின் மீதியை ஆப்த நண்பர்களுக்கு கொடுங்கள். வந்த தூதர்களுக்கு தேவையானவற்றை பார்த்து செய்த பின், ப4ரதன் கேட்டான் என் தந்தை சௌக்யமா? தசரத2 ராஜா நலமா? ராமன், லக்ஷ்மணன் ஆரோக்யமாக இருக்கிறார்களா? ராம மாதா எனக்கும் மாதா, பெரியவள், தர்மமே பராயணமாக இருப்பவள், எதிலும் தர்மத்தைக் காண்பவள், அந்த கௌசல்யா சௌக்யமா? லக்ஷ்மணன் மாதா சுமித்திரா நலமா? சத்ருக்னன் தாயார், மத்4யமாம்பா அவள். நலமாக இருக்கிறார்களா? எப்பொழுதும் தன் சுய நலமே பெரியதாக நினைப்பவள், பிடிவாதக்காரி, கோபம் உடையவள், தன்னை புத்திசாலியாக நினைத்துக் கொள்பவள், என் தாயார் கைகேயி, ஆரோக்யமாக இருக்கிறாளா? எனக்கு என்ன சொல்லியனுப்பினாள்? இவ்வாறு பரதன் சரமாரியாக கேட்கவும், கவனமாக வார்த்தைகளை எண்ணி பதில் சொன்னார்கள். யாருடைய குசலம் நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களோ அவர்கள் யாவரும் குசலமாக இருக்கிறார்கள். பத்3மாவான, லக்ஷ்மீ தேவி உங்களை விரும்புகிறாள். உங்களை வரவேற்க காத்து நிற்கிறாள் எனவும், சீக்கிரம் ரதத்தை தயார் செய்து கொண்டு கிளம்புங்கள். நான் போய் மகாராஜாவான கேகய அரசனிடம் அனுமதி பெற்று வருகிறேன். தூதர்கள் அவசரப் படுத்துகிறார்கள் என்று சொல்லி வருகிறேன் என்று சொன்னபடி தன் தாய் வழி பாட்டனாரிடம் அனுமதி கேட்கச் சென்றான். ராஜன், தூதர்கள் வந்திருக்கிறார்கள். நான் என் தந்தையிடம் செல்கிறேன். என்னை நீங்கள் திரும்ப ஸ்மரிக்கும் பொழுது, (பார்க்க விரும்பும் பொழுது) வந்து சேருவேன். என்றான். ராகவனை உச்சி முகர்ந்து, தழுவிக் கொண்டு, தாத்தா கேகய ராஜா, குழந்தாய், போய் வா. நான் அனுமதி கொடுத்து வழியனுப்ப ஏற்பாடு செய்கிறேன். கைகேயி சுப்ரஜா உன் தாயிடமும் தந்தையிடமும் நான் குசலம் விசாரித்ததாகச் சொல்லு. புரோஹிதரையும் மற்ற வித்வான்களையும் நான் விசாரித்ததாகச் சொல்லு. சிறந்த வில்லாளிகளான ராமனையும், லக்ஷ்மணனையும் நான் விசாரித்ததாகச் சொல்லு., அவனுக்கு உத்தமமான யானை, சித்ர விசித்திரமான கம்பளங்கள், ஆசனங்களில் விரிக்க விரிப்புகள், என்று கைகேயி மகனுக்கு இன்னும் பல பொருட்களையும், நிறைய தனமும் அளித்தான். தங்க நாணயங்கள் இரண்டு இரண்டு ஆயிரம், பதினாறு நூறு குதிரைகள், இவைகளையும் உடன் அனுப்பி, ஏராளமான பொருளையும் கொடுத்து, கைகேயி புத்திரனை அரசனான கேகய ராஜன் வழியனுப்பினான். உடன் செல்ல சேவகர்களையும், குணமுடைய நம்பிக்கைக்கு உகந்தவர்களை, அமாத்யர்கள் சிபாரிசின் பேரில் அஸ்வபதி தேர்ந்தெடுத்து அனுப்பினான். ஐராவதம் போன்ற அழகுடைய யானைகளையும், கோவேறு கழுதை போன்ற சீக்கிரம் போகக் கூடிய மிருகங்களையும், மாமன் கொடுத்து அதற்கு மேலும் தனமும் கொடுத்தான். அந்த:புரத்தில் வளர்க்கப் பட்ட நன்கு வளர்ந்து புலிக்கு சமமான வீர்யம் கொண்ட மிகப் பெரிய உருவமும், பெரிய பற்களையும் உடைய வளர்ப்பு நாய்களையும் உபாயனமாக (அன்பளிப்பு) கொடுத்தான். கேகய ராஜா கொடுத்த தனம் முதலியவற்றால் கைகேயி மகனான பரதன் மகிழ்ச்சி அடையவில்லை. அவசரமாக ஊர் போய் சேர வேண்டும் என்று அவன் மனம் தவித்தது. தூதர்கள் அவசரம் என்று சொன்னதும், ஸ்வப்னத்தின் நினைவும் அவனை அலைக்கழித்தன. ஜனங்களும் யானைகளும், அஸ்வங்களும் நிறைந்த தன் மாளிகையிலிருந்து கிளம்பி ராஜ மார்கத்தை வந்தடைந்தான். சற்று நடந்து அந்த:புரத்தையடைந்தான். நேராக, தாய்வழி பாட்டி இருந்த அறையை அடைந்து, யுதாஜித் என்ற மாமனிடமும், பாட்டியிடமும் விடை பெற்றுக் கொண்டு ரதத்தில் சத்ருக்னனுடன் ஏறிக் கொண்டான். ரதங்களை மண்டல சக்ரங்களையும் பூட்டி, ஒட்டகம், குதிரை, கோவேறு கழுதைகளில் வேலையாட்கள் பரதனைப் பின் தொடர்ந்தனர். நாற்புறமும் பாதுகாவலர்கள் வர, பெரியவரின் மந்திரி வர்கங்கள் உடன் வர, சத்ருவே இல்லாத சத்ருக்னனை ரதத்தில் உடன் அமரச் செய்தபடி, இந்திர லோகத்திலிருந்து சித்3த4ர்கள், கிளம்புவது போல கிளம்பினான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத ப்ரஸ்தானம் என்ற எழுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 71 (148) அயோத்யா கமனம் (அயோத்யா வருகை)
ராஜ க்ருஹத்திலிருந்து கிழக்காக புறப்பட்டு, சுதா3மம் என்ற நதியைக் கண்டனர். கரை கண்ணுக்குத் தெரியாத வகையில் அகலமாக, மனதை சந்தோஷிக்கச் செய்யும் சுத்தமான ஜலமும் அலைகளுடன் கூடிய தனித் தனி கிளை நதிகளுடனும் அந்த நதி மிக அழகாக இருந்தது. அதையடுத்து சதத்3ருமம், எலாதா3னே என்ற நதிகளைக் கடந்து அபர பர்ப4டான், என்ற மலையை அடைந்தார்கள். மலையை மிகவும் ரசித்து பார்த்தவாறு, சைத்ர ரதம் என்ற வனத்தை நோக்கி பிரயாணப் பட்டார்கள். சரஸ்வதியையும், கங்கையையும் எதிர் கொண்டனர். வடக்கில், மத்ஸ்ய தேசத்தினரின் பாருண்டம் என்ற வனத்தில், வீரனான பரதன் நுழைந்தான். குலிங்க3ம் என்ற வேகமான நதியையும், ஹ்லாதி3னி என்ற, சுற்றிலும் மலை சூழ்ந்த நதியையும் கடந்து யமுனையை அடைந்து தன் படை பலங்களுக்கு ஓய்வு கொடுத்தான். அங்கு ஸ்னானம் செய்து உடல் குளிர, களைத்துப் போன குதிரைகளை அவிழ்த்து விட்டு, சற்று மேய விட்டு, சிறிது நேரம் தங்கி சாப்பிட்டு, ஜலத்தை எடுத்துக் கொண்டு, மேலே கிளம்பினர். அனபீ4ஷனன் என்ற ஒருவனால் பாதுகாக்கப் பட்ட அரண்யத்தை, ப4த்ரமான வாகனத்தில் இருந்தபடி ப4த்3ரனான ப4ரதன், மாருதன் ஆகாயத்தை தாண்டுவது போல வேகமாக கடந்தான். கடக்க முடியாத பா4கீரதியையும், அம்சுதா3னம் என்ற மகா நதியையும், ராகவன் கடந்து ப்ராக்வடம் என்று அச்சமயம் புகழ் பெற்றிருந்த மரத்தடியை அடைந்தான். அங்கு கங்கையைக் கடந்து குபு3கோ3ஷ்டிகா என்ற இடத்தை அடைந்தனர். சேனைகளோடு த4ர்ம வர்த4னம் என்ற இடத்தை அடைந்தனர். தக்ஷிணாவர்தமாக போய், ஜம்பூ ப்ரஸ்தம் போய் சேர்ந்தனர். வரூதம் என்ற அழகிய கிராமத்துக்கு போய் சேர்ந்தான் தசரத குமாரனான பரதன். அங்கு ஒரு அழகிய வனத்தைக் கண்டு அதில் வாசம் செய்து விட்டு கிழக்கு முகமாக கிளம்பினர். உஜ்ஜிஹா என்பவளின் உத்யானம் விசேஷமான மரங்களுடன் பிரியமாக வளர்க்கப் பட்டிருப்பதைக் கண்டனர். சால மரங்கள் நிறைந்த அந்த இடத்தில்,மற்றவர்களிடமிருந்து விடை பெற்று குதிரைகளை வேகமாக செலுத்திக் கொண்டு பரதன் முன்னால் சென்றான். (இந்த இடத்தில், பரதன் சந்தேகப் பட்டு கேள்வி மேல் கேள்வியாக கேட்க, சாரதி பதில் சொல்ல வேண்டியிருக்கும். பரதனுக்கு பதில் சொல்ல சாரதி தயாராகும் முன், அதிவேகமான குதிரைகளில் பரதன் சென்று விடுகிறான் என்று நடந்ததை அப்படியே வர்ணிப்பதில் சமர்த்தரான கவி, சாரதி மட்டுமல்ல, ரஸிகர்களான வாசகர்களுக்கும் பதிலை எதிர் பாராமல் இருக்க, பரதன் வேகமான குதிரைகளில் ஏறி தனி வழி சென்றான் என்று சொல்லியிருப்பது ரஸிக்கத் தக்கது என்பது உரை-
யாசிரியர்களின் கருத்து. அரசமாளிகை வரை அசுப4ங்களைப் பார்த்து, ஒவ்வொரு இடத்தைக் கடக்கும் பொழுதும், பரதன் கேள்வி கேட்டால் சாரதி என்ன பதில் சொல்வான்?)
சர்வ தீர்த்தம் என்ற இடத்தில் தங்கி உத்தானிகா என்ற நதியைக் கடந்து மேலும் பல மலைப் பிரதேசத்து நதிகளைக் கடந்து சில சமயம் காட்டு குதிரைகளின் மேல், சில சமயம் யானையின் மேல் ஏறி, கு3டிகாம் என்ற இடத்தை தாண்டினர். சிகதாவதீம் என்ற சிவந்த நீருடைய நதியை படகின் மூலம் கடந்தனர். ஏக சாலம் என்னும் இடத்தில் ஸ்தா2ணுமதியையும், வினதா என்ற இடத்தில் கோ3மதி நதியையும், களிங்க நகரத்தில் சால வனத்தைக் கண்டு பரதன் வேகமாக பிரயாணம் செய்தான். வாகனம் மிகவும் களைப்படைந்து போனது., அந்த இரவு வனத்தில் கழித்தபின், அருணோதய சமயத்தில் மனுவால் நிர்மாணிக்கப் பட்ட அயோத்திமா நகரைக் கண்டனர். ஏழு நாட்களாக வழியில் தூங்காமல் பிரயாணம் செய்து வந்த பரதன் அந்த அயோத்தி நகரை எதிரில் தெரியக் கண்டு சாரதியிடம் சொன்னான். சாரதியே, புண்யமான உத்யானங்களையுடைய பகழ் பெற்ற அயோத்தி நகர் வெகு தூரத்தில் இல்லை. வெண் மண்ணால் கட்டப்பட்ட
மாளிகைகள் தூரத்திலிருந்தே தெரிகிறது. குணம் நிறைந்த யக்ஞம் செய்யும் பிராம்மணர்கள், வேதங்களில் கரை கண்டவர்கள், நிறைந்த தனமுடைய செல்வந்தர்களாகவும் இருக்கும்படி ராஜரிஷியான என் தந்தை பார்த்துக் கொண்டார். ஊர் நெருங்கி விட்டது என்பது அதன் விசேஷமான சப்தங்களால் தெரிகிறது. ஆணும் பெண்ணுமாக போகும் பொழுது பேசிக் கொண்டு போவதை கேட்கிறேன். எப்பொழுதும் உத்யான வனங்கள் மாலை நேரங்களில் விளையாடி களைத்த ஜனங்களும், ஓடிப் பழகும் ஜனங்களுமாக பிரகாசமாகத்தான் கண்டிருக்கிறேன். இன்று ஆசையுடன் விளையாட வருபவர்கள் யாருமில்லாமல் அழுது வடிகிறது. சாரதியே, நகரமே காட்டுப் பிரதேசமாகத் தெரிகிறது. இங்கு யாருமே வாகனங்களில் போவது தெரியவில்லை. யானைகளின் மேல் ஏறியோ, குதிரைகளில் ஏறிப் போவோரும், வருவோருமாக எப்படி முன்பு ஊரில் ஜன நடமாட்டம் நிறைந்து இருக்குமோ, பூத்துக் குலுங்கும் உத்யானவனங்கள் ஜனங்களின் உல்லாசத்துக்காக இருந்தனவோ, அவைகளில் இன்று ஆனந்தமே இல்லாதது போல காண்கிறேன். மிருகங்களும் பக்ஷிகளும், மதம் பிடித்து எழுப்பும் ஓசைகளும் கேட்கவில்லை. கீழே விழுந்து கிடக்கும் இலைகளைப் பார்த்தால், மரங்களும் ஓவென்று குரலெடுத்து அழுவது போல இருக்கிறது. மதுரமான குரலில் பாடும் பறவைகளைக் காணவில்லை. சந்தன, அகரு வாசனைகளைக் கொண்ட புகையை ஏந்திக் கொண்டு வரும் காற்றும் இன்று நகரின் அருகிலேயே வரவில்லையா? பேரி, மிருதங்க, வீணா இவைகளின் நாதம் போட்டியிட்டுக் கொண்டு கேட்குமே, அதுவும் இல்லை. பாபமானதும், விரும்பத் தகாததுமாக காட்சிகளையே நிறையக் காண்கிறேன். நிமித்தங்களும் நன்றாக இல்லை. அதனால் என் மனம் நடுங்குகிறது. சாரதியே, என் பந்துக்கள் நலமாக இருக்கிறார்களா? ஏதோ கெடுதல் என்று என் உள் மனம் சொல்கிறது. இவ்வாறு வாடிய மனத்தினனாக, உடலும் களைத்து, நடுங்கும் இந்திரியங்களுடையவனாக, இக்ஷ்வாகு குலத்தினரால் பாலிக்கப் பட்ட அயோத்தி நகரில் பிரவேசித்தான். வைஜயந்தீ என்ற பெயர் பெற்ற வாசல் வழியே நுழைந்தான். வாசல் காப்பவர்கள் எழுந்து, விஜய கோஷம் செய்ய அவர்கள் கூடவே சென்றான். மனம் பூரா சிந்தனை வியாபித்து இருந்தாலும், அஸ்வபதியின் சாரதி மிகவும் களைத்து இருப்பதைக் கண்டு விசாரித்தான். ஏன் என்னை வேகமாக அழைத்து வந்தீர்கள்? காரணம் இல்லாமல் இராது. ஏதோ அசுபம் என்று தோன்றுகிறது. என் தைரியமும் என்னை விட்டு விலகுகிறது. இதற்கு முன் பெரிய மகாராஜா இறந்தால் ஊரும் மற்றவைகளும் எப்படி இருக்கும் என்று கேள்விப் பட்டுள்ளேனோ, அதே போல காண்கிறேன். வாசல்கள் பெருக்கி சுத்தமாக வைக்கப் படவில்லை. கற்கள் இரைந்து கரடு முரடாக கிடக்கின்றன. வாசல் கதவுகள் அலங்கரிக்கப் படவில்லை. லக்ஷ்மீகரமாக இல்லை. பலி கர்மமோ, தூப தீபங்களோ இல்லை. ஒளி யிழந்த ஜனங்கள். குடும்பத்தோடு யாரையுமே காணவில்லை. குடும்பஸ்தர்கள் வசிக்கும் இடத்திலும் களையே இல்லை. தேவதைகள் உறையும் கோவில்களில் கூட்டமில்லை. பழைய மாலையை கழட்டி, அபிஷேக ஆராதனைகள் செய்யப் படவில்லை. அதனால் மாலைகள் விற்கும் கடைகளும் இல்லை. வணிகர்களும் முன் போல இல்லை. வியாபாரம் செய்வதில் சிறிதும் சிரத்தையின்றி, த்யானத்தில் இருப்பது போல இருக்கிறார்கள். பக்ஷி கணங்கள் கூட தீனமாக இளைத்துக் காண்கின்றன. எதிரில் வரும் ஸ்திரீ புருஷர்கள், ஏதோ வாட்டமாகவே தென் படுகிறார்கள். இவ்வாறு வினவிக் கொண்டே பரதன், அரச மாளிகையை அடைந்தான். சூன்யமான உள் வீதிகளையும், கதவுகளிலும் தாழ்ப்பாள்களிலும் புழுதி மண்டி கிடப்பதையும், இந்திரன் புரிபோல பிரகாசமான நகரம் வாடியிருப்பதையும் கண்டு மனதை வாட்டும் பல விஷயங்களைக் கண்டதால் சந்தேகமும் பயமும் வர, ஒன்றும் பேசாமல் தந்தையின் மாளிகையினுள் நுழைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் அயோத்யா கமனம் என்ற எழுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 72 (149) பரத சந்தாப: (பரதனின் பரிதவிப்பு)
தந்தையின் மாளிகையில் அவரைக் காணாமல் பரதன் தாயின் மாளிகையில் அவளைக் காணச் சென்றான். வெளியூர் சென்றிருந்த மகன் திரும்பி வந்து விட்டதையறிந்து கைகேயி, தங்க மயமான ஆஸனத்தை விட்டு குதித்து எழுந்தாள். தன் வீடும் லக்ஷ்மீ களையின்றி இருப்பதைக் கண்டும், தாயின் பாதங்களில் விழுந்து வணங்கினான். மகனை உச்சி முகர்ந்து, அணைத்துக் கொண்டு, அருகில் அமரச் செய்து கேட்கலானாள். பாட்டனாரின் வீட்டை விட்டுக் கிளம்பி எவ்வளவு நாளாயிற்று? வேகமாக ரதத்தில் வந்தது, பயணம் சிரமமாக இருந்ததா? உன் மாமனான யுதாஜித் சௌக்யமா? வெளி யூரில் இருந்து இவ்வளவு நாள் இருந்து விட்டு வந்திருக்கிறாய். என்னிடம் விவரமாக சொல்லு. எப்படியிருந்தது? இவ்வாறு பிரியமாக கைகேயி கேட்டவுடன், அரச குமாரன் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தான். இன்று ஏழு இரவு ஆகிறது. நான் ஆர்யகரான பாட்டனார் வீட்டை விட்டு கிளம்பி. உன் தந்தை, என் பாட்டனார், மாமன் எல்லோரும் நலமே. எனக்கு நிறைய பணமும், ரத்னங்களும் கொடுத்தார். கூட வந்தவர்கள் களைத்து விட்டனர். அதனால் முன்னால் வந்தேன். ராஜாவின் கட்டளையை எடுத்துக் கொண்டு வந்த தூதர்கள், அவசரப் படுத்தியதால் வேகமாக வந்தேன். இப்பொழுது நான் கேட்பதற்கு, அம்மா, நீ பதில் சொல்ல வேண்டும். இந்த தங்க மயமான படுக்கை சூன்யமாக இருக்கிறது. மற்ற இக்ஷ்வாகு ஜனங்களும் மகிழ்ச்சியாக தென்படவில்லை. இங்கு, அம்மாவின் மாளிகையில் அரசர் நிறைந்து இருப்பார். அவரைக் காண விரும்பித் தான் வந்தேன். ஆனால் அவரைக் காணவில்லை. நான் தந்தையின் கால்களில் வணங்க விரும்புகிறேன். எங்கு இருக்கிறார் சொல்லு? பெரிய தாயாரான கௌசல்யை வீட்டில் இருக்கிறாரா? அவனுக்கு பதில் பிரியமாக சொல்வதாக நினைத்து, கைகேயி, பயங்கரமான அப்பிரியமான விஷயத்தைச் சொன்னாள். ராஜ்ய லோபத்தால் புத்தி மழுங்கியவளாக விஷயம் அறியாத அவனுக்கு நடந்த விஷயம் சொல்ல முனைந்தாள். எல்லா ஜீவராசிகளுக்கும் என்ன கதியோ, அதை உன் தந்தையும் அடைந்தார். மகாத்மாவான ராஜா, தேஜஸ்வி, நிறைய யாகம் செய்தவர். நல்ல கதியை அடைந்தார். இந்த வார்த்தைகளைக் கேட்டு நல்ல தர்ம புத்தி உள்ளவனும், நியாயமானவனும், ஒழுக்கத்தில் சிறந்தவனுமான பரதன் தந்தையின் மரணம் என்ற செய்தியைக் கேட்டு, மிகவும் வருந்தி, பூமியில் விழுந்து புரண்டான். ஹா என்று தீனமாக அலறினான். தந்தையை நினைத்து அழுதான். தந்தையின் இந்த படுக்கை எப்பொழுதும் எனக்கு பிடிக்கும். மேகம் விலகிய ஆகாயத்தில் சந்திரனைப் போல் இந்த படுக்கையில் அவர் அமர்ந்திருப்பது அழகாக இருக்கும். சந்திரன் இல்லாத ஆகாயம் போலவும், திடுமென வற்றி விட்ட சமுத்திரம் போலவும் இந்த அறை விளங்குகிறது. கண்ணீர் விட்டுக் கொண்டு, தொண்டை வரள, துணியால் முகத்தை மூடிக் கொண்டு அழுதான். இவ்வாறு வருந்தும் அவனை, தேவன் போல இருந்தவனை, பரசுவால் வெட்டி சாய்த்த சால மரம் போல விழுந்து கிடந்தவனை, யானை போன்று கம்பீரமானவனை, சூரிய சந்திரர்கள் போல பிரகாசமானவனை, பூமியிலிருந்து எழுப்பி, சோகத்தால் தவிப்பவனிடம் சொன்னாள். எஎழுந்திரு, மகனே, எழுந்திரு. ராஜ குமாரனே, புகழ் வாய்ந்த உன் போன்றவர்கள் இப்படி வருந்தி அழக் கூடாது. சூரியனுடைய ஒளி போல உன் புத்தி. தான யக்ஞம் இவைகளை செய்ய அருகதை பெற்றவர்களை சீலமும், ஸ்ருதியும், வசனமும் பின் தொடர்ந்து செல்லும். வெகு நேரம் அழுத பின், தரையில் புரண்டு பலவிதமாக துக்கம் வாட்ட தாயிடம் சொன்னான். ராமனுக்கு முடி சூட்டுகிறாரோ, அல்லது பெரிய யாகம் எதையாவது ஆரம்பித்து செய்கிறாரோ என்று எண்ணி நான் வந்தேன் சந்தோஷமாக. இங்கு எல்லாமே விபரீதமாக இருக்கிறது. என் தந்தையை இனி பார்க்க முடியாது. என்னிடம் பிரியமுள்ளவரை இனி நான் எப்பொழுதுமே காண மாட்டேனா? எதனால் தந்தை மறைந்தார்? என்ன வியாதி? நான் வரும் முன் மறைந்து விட்டாரே. ராமன் முதலானோர் பாக்யசாலிகள். தந்தையின் அந்திம கார்யங்களை செய்ய கொடுத்து வைத்தவர்கள். நான் வந்ததை இன்னமும் ராமன் அறியவில்லை போலும். வந்து உடனே என்னை உச்சி முகர்ந்து, அன்புடன் அணைத்துக் கொள்வான். சுகமான ஸ்பரிசம் உடைய அந்த கைகள் எப்பொழுதும் நேர்மையானவற்றையே செய்பவை. அவை எங்கே? அந்த கைகளால் புழுதி படிந்த என் தேகத்தை தடவிக் கொடுப்பானே. எந்த ராமன் எனக்கு சகோதரனோ, அவனே எனக்கு தந்தை, பந்து. அவனுக்கே நான் தாஸன். அவனுக்கு சீக்கிரம் சொல்லியனுப்புங்கள், அம்மா நான் வந்து விட்டதை தெரியப் படுத்துங்கள். தந்தைக்கு பின் ஜ்யேஷ்ட சகோதரன் தான் தந்தைக்கு சமமாக வணங்கத் தக்கவன். அது தான் தர்மம். இனி நமக்கு எல்லாம் ராமன் தான் கதி. அவன் பாதத்தில் வணங்குவேன். த்ருட பாராக்ரமம் உடையவன். சத்ய சந்தன். தர்மம் அறிந்ததோடு, அதன் வழியில் பிறழாமல் நிற்பவன். என் தந்தை கடைசியாக என்ன சொன்னார்? அதைச் சொல்லுங்கள். கைகேயி பதிலுரைத்தாள். ராமா என்று அலறிக் கொண்டு, ஹா சீதே, ஹா லக்ஷ்மணா என்று அழுதார். அழுது கொண்டே பரலோகம் சென்றார். நல்ல கதி அடைந்திருப்பார். இது தான் அவரது கடைசி வார்த்தை, மகா கஜம், (பெரிய யானை) கயிற்றால் கட்டுண்டது போல, காலத்தின் தர்மம் அதனால் கட்டுண்டார். திரும்பி வரும் ராமனையும் சீதையையும், லக்ஷ்மணனையும் காண்பவர்கள் பாக்கியசாலிகள். இதைக் கேட்டு மற்றொரு கெடுதலான விஷயம் இருக்குமோ என்று பயம் தாக்க, முகம் வருத்தத்தைக் காட்ட, தாயாரிடம் பரதன் வினவினான். கௌசல்யையை மகிழ்விக்க வந்த தர்மாத்மா இப்பொழுது எங்கே? லக்ஷ்மணனுடனும் சீதையுடனும் எங்கே சென்றான்?
இவ்வாறு கேட்டவுடன் முழு விவரமும் நடந்தபடி விவரமாக சொல்ல ஆரம்பித்தாள் கைகேயி. மகனே, அந்த ராஜ குமாரன் வல்கலை மரவுரி உடுத்திக் கொண்டு பெரும் காடான தண்ட காரண்யம் போய் விட்டான். லக்ஷ்மணனும் சீதையும் அவனைத் தொடர்ந்து சென்று விட்டனர். இதைக் கேட்டு பரதன் பயந்தான். சகோதரனது ஒழுக்கத்தில் சந்தேகம் கொண்டவனாக, தன் வம்சத்து பாரம்பரியம் தெரிந்தவன் தான் ஆனாலும் ஒருவித பயம் தோன்ற, மேலும் கேட்டான். ராமன் என்ன தவறு செய்தான்? பிராம்மணனுடைய தனத்தை அபகரித்தானா? பணக்காரனோ, தரித்திரனோ, பாபம் செய்யாதவனைத் தண்டித்தானா? பரதா3ரம் என்ற பிறன் மனையை நாடினானா? எந்த தவற்றுக்காக சிறு குழந்தையைக் கொல்லும் கொடிய செயலை செய்பவனைப் போல, நாடு கடத்தப் பட்டான்? அந்த தாயார், தன் சபல புத்தியினால், ஸ்த்ரீ சுபாவத்தாலும், விவரமாக சொன்னாள். தன்னை பண்டிதையாக எண்ணி மகிழும் குணமுள்ளவள் ஆனதால் தன் பெருமை சொல்லலானாள். நல்ல புத்திசாலியான ராமன் எந்த பிராம்மண செல்வத்தையும் திருடவில்லை. எவரையும் பணக்காரரோ, ஏழையோ, பாபம் செய்யாத நிரபராதியை தண்டிக்கவில்லை. பிறன் மனைவியை ராமன் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான். நான் தான் மகனே, ராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்று அறிந்ததும், உன் தந்தையை யாசித்தேன். உனக்கு ராஜ்யம், ராமனுக்கு வன வாஸம் என்று. உன் தந்தை சரி என்று அவ்வாறே செய்ய ஒப்புக் கொண்டார். ராமனையும், சகோதரன் லக்ஷ்மணன், சீதையுடன் வனத்திற்கு அனுப்பி விட்டார். அவ்வாறு அவர்கள் சென்றபின், சக்ரவர்த்தி புத்திர சோகம் தாங்காமல் மேல் உலகம் சென்று விட்டார். நீ இப்பொழுது மகா ராஜா பதவியை ஏற்றுக் கொள். உனக்காகத் தான் நான் இவ்வளவும் செய்தேன். சோகமோ, சந்தாபமோ இன்றி தைரியமாக இருப்பாய் மகனே. உன் வசத்தில் இந்த நகரம், இந்த நாயகன் இல்லாத ராஜ்யமும் இப்பொழுது இருக்கிறது. அதனால் மகனே, சீக்கிரம் வசிஷ்டர் முதலான பிராம்மணோத்தமர்களுடன் விதி முறை அறிந்தவர்களைக் கொண்டு சாஸ்திர விதிப் படி உனக்கு கிடைத்துள்ள ராஜ்யத்தில் முடி சூட்டிக் கொள்ள ஏற்பாடு செய் என்றாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ப4ரத சந்தாபோ என்ற எழுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 73 (150) கைகேயி விகர்ஷணம் (கைகேயியை குறை சொல்லுதல்)
தந்தை இறந்ததையும், சகோதரர்கள் நாடு கடத்தப் பட்டதையும் கேட்டு, பரதன் துக்கத்தில் மூழ்கினான். துடித்துப் போனான். எனக்கு இந்த ராஜ்யம் கிடைத்து என்ன பயன்? தந்தையை இழந்து, தந்தைக்கு சமமான சகோதரனையும் இழந்து வருந்தும் எனக்கு மேலும் துக்கத்தைத் தருகிறாய். காயத்தின் மேல் உப்பு நீர் தெளி த்தாற் போல. அரசனை உயிரிழக்கச் செய்து, ராமனை தபஸ்வியாக்கி இந்த குலத்தை இல்லையென்றாக்க, கால ராத்திரி போல வந்து சேர்ந்தாய். நெருப்பு என்று அறியாமல் என் தந்தை உன்னை மடியில் கட்டிக் கொண்டார். உன்னால் தான் இவ்வளவு விரைவில் என் தந்தை ம்ருத்யுவை அடைந்தார். குலத்தைக் கெடுக்க வந்தவளே, இந்த குலத்தில் மோகத்தின் வசத்தால் சுகம் மறைந்தது. அபகரிக்கப் பட்டது சத்ய சந்தன் என்று பெரும் புகழ் பெற்று வாழ்ந்த தசரத ராஜா, என் தந்தை, உன்னை அடைந்து , தாங்கொணா துக்கத்தை தாங்கும்படி ஆயிற்று. தர்ம வத்ஸலனான என் தந்தையை நாசம் செய்து விட்டாய். எப்படித்தான் ராமனை விரட்டினாயோ, எப்படித்தான் அவனும் வனம் சென்றானோ. கௌசல்யாவும் சுமித்திராவும் புத்ர சோகத்தால் பீடிக்கப் பட்டு வாழ்கிறார்களோ, இல்லையோ, உன்னைத் தாயாக அடைந்த நான் வாழ்வது தான் எப்படி? ஆர்யனான (பெரியவன்) ராமனும் உன்னிடம் தன் சொந்த தாய் போலத்தானே நடந்து கொண்டான். பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையறிந்தவன், தர்மாத்மா. அதே போல மூத்தவளான கௌசல்யா, தீர்க தர்சினி, உன்னிடத்தில் சகோதரி போல நடந்து கொண்டு வந்திருக்கிறாள். அவள் மகனை, பிறவியிலேயே மகானான ராமனை மரவுரி, வல்கலை உடுத்தி காட்டுக்கு அனுப்பி விட்டு கவலையில்லாமல் எப்படி இருக்கிறாய்? எதிலும் குற்றம் காணாமல் சூரனான ராமன், க்ருதாத்மா என்று புகழ் பெற்றவனை என்ன காரணம் சொல்லி வனத்துக்கு அனுப்பினாய்? உன் லோபத்தில், நீ ராகவனை சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் ராஜ்யம் காரணமாக இந்த அனர்த்தத்தை செய்திருக்கிறாய். நான் ராம லக்ஷ்மணர்கள் இருவரையும், புருஷ வ்யாக்ர என்று பெயர் பெற்ற இருவரையும் காணாமல் எந்த சக்தியில் ராஜ்யத்தைக் காப்பாற்ற முடியும். மகா பலவானான அரசனே, ராமனின் பலத்தையறிந்து அவனை ஆஸ்ரயித்து இருந்தார். மேரு மலை தன் சாரலில் உள்ள வனத்தை ஆஸ்ரயித்து இருப்பது போல. அந்த நான், பெரும் பாரமான இத ராஜ்யத்தை, இளம் காளைக் கன்றின் தோளில் கனமான கலப்பையை வைப்பது போல, ராஜ்யத்தைப் பெற்று எப்படி நிர்வகிப்பேன்? என்ன சாமர்த்தியம் இருக்கிறது எனக்கு? அப்படியே எனக்கு சக்தி இருந்தாலும், சந்தர்ப்ப வசத்தாலும், புத்தி பலத்தாலும் என்னால் சமாளிக்க முடிந்தாலும் நீ ஜயிக்க விடமாட்டேன். கைகேயி, புத்திரனையே அடிப்பவள் நீ. ராமனுக்கு உன்னிடத்தில் எப்பொழுதும் தாயார் என்ற மரியாதை இல்லாமல் இருந்திருந்தால், பாபத்தை செய்யத் துணிந்த உன்னை தியாகம் செய்வதால் நான் எந்த வித வருத்தமோ, நஷ்டமோ, அடைய மாட்டேன். இப்படி ஒரு புத்தி உனக்கு எப்படித்தான் வந்ததோ? நல்ல சரித்திரம் உள்ள குலத்திலிருந்து மாறுபட்டு விழுந்தாய். நம் முன்னோர்களையும் கெட்ட பெயர் பெறும்படி செய்து விட்டாய். இந்த குலத்தின் முறை, மூத்தவர்களையே ராஜ்யத்தில் அமர்த்துவது என்பது. மற்ற சகோதரர்கள் அவனைச் சுற்றி ஒற்றுமையாக பணி செய்வார்கள். நீ ராஜ தர்மத்தையும் நினைத்துப் பார்க்கவில்லை. சாஸ்வதமான அரச குடும்பத்து கதி விதிகளையும் அறிய மாட்டாய். எப்பொழுதும் அரசர்கள் மூத்த மகனைத் தான் தனக்கு பின் பட்டத்துகு உரியவனாக நினைப்பார்கள். விசேஷமாக இக்ஷ்வாகு குலத்தில் அது தான் முறை. தர்மத்தை ரக்ஷிப்பது ஒன்றே குறியாக இருப்பவர்கள். அது தான் குலத்திற்கு அழகு என்று தர்மத்தை சார்ந்து நடப்பவர்கள். குலத்தின் சரித்திரம் (பெருமை) இப்பொழுது உன்னால் வீழ்ந்தது. உன் குலத்திலும் முன்னோர்கள் மகான்களாக இருந்திருக்கிறார்கள். உனக்கு மட்டும் ஏன் இந்த மட்டமான புத்தி எங்கிருந்து வந்தது? உன் இஷ்டத்தின்படி நான் நிச்சயம் செய்ய மாட்டேன். என் வாழ்க்கையே நாசமாகும் படி இப்படி ஒரு செயலை துணிந்து செய்திருக்கிறாய். உனக்கு பிடிக்காத காரியத்தையே செய்யப் போகிறேன். காட்டிலிருந்து ராமனை திரும்ப அழைத்து வரப் போகிறேன். அவனுக்கு நான் தாஸனாக இருந்து சலனமில்லாமல் ஊழியம் செய்வேன். என்று இவ்வாறு பரதன் ராமனை பிரியமான வார்த்தைகளால் புகழ்ந்து, சோகத்தில் மூழ்கி இருந்த போதும், குகையில் இருக்கும் சிங்கம் கர்ஜிப்பது போல கர்ஜித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கைகேயி விகர்ஷணம் என்ற எழுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 74 (151) கைகேயி ஆக்ரோச: (கைகேயியின் ஆக்ரோஷம்)
தாயாரை இவ்விதம் குறை சொல்லி விட்டு, மகா கோபத்துடன் பரதன் திரும்பவும் சொன்னான். கைகேயி, கொடியவளே, துஷ்டத்தனமாக செய்திருக்கிறாயே, ராஜ்யத்திலிருந்து விலகி, நானும் உன்னை கை விட்டேன், அழுது கொண்டு தனியாக இரு. உனக்கு ராஜா என்ன கெடுதல் செய்தார். ராமன் தான் என்ன கெடுதல் செய்தான்? இவர்கள் இருவரில் ஒருவருக்கு ம்ருத்யுவும், மற்றவருக்கு நாட்டை விட்டு போகும்படியும் சமமான துன்பம் கிடைக்க செய்து விட்டாய். சிசு வதம் செய்வது போல மகா பாபம் செய்திருக்கிறாய். இந்த குலத்தின் நாசத்திற்கு காரணமாக ஆனாய். கைகேயி, நீ நரகத்திற்குத் தான் போவாய். என் தந்தையை சென்றடைய மாட்டாய் (இறந்த பின்) இப்படி ஒரு கோரமான பாப காரியத்தை செய்திருக்கிறாய். உலகம் அனைத்தும் விரும்புகிற ஒன்றை நாசம் செய்து விட்டு எனக்கு பயத்தை உண்டு பண்ணியிருக்கிறாய். உன் காரணமாக என் தந்தை மறைந்தார். ராமனும் வனம் சென்றான். உன்னால் எனக்கு அபகீர்த்தி தான் ஏற்பட்டது. மாத்ரு ரூபத்தில், எனக்கு சத்ருவாக வந்தவளே, கொடியவளே, ராஜ்யத்தில் காமம் கொண்டவளே, உன்னுடன் நான் பேசப் போவது இல்லை. பதியைக் கொன்றவள் நீ. கௌசல்யாவும், சுமித்திராவும் மற்றுமுள்ள என் தாயார்களும் குலத்தை தூஷிக்க வந்த உன்னால் மகத்தான துன்பத்தை அடைந்தார்கள். ராஜா அஸ்வபதி தர்ம ராஜாவுக்கு சமமானவன். புத்திசாலி. நீ அவருக்கு பிறந்த மகளே அல்ல. ராக்ஷஸி. குலத்தைக் கெடுக்க அங்கு வந்து பிறந்திருக்கிறாய். நித்யம் சத்ய பராயணனான ராமன் காட்டுக்கு போக நேர்ந்தது. அதே துக்கத்தில் தந்தையும் தேவலோகம் சென்றார். தந்தையை இழக்கச் செய்த பின் எனக்கு ராஜ்யம் வாங்கித் தந்ததாகச் சொல்கிறாயே, அது பாப கர்மத்தின் பலன் இல்லையா? இதனால் எனக்கு என்ன புகழ் இருக்கும்? கௌசல்யாவுக்கு இப்படி ஒரு பிரிவைத் தந்ததால் உனக்கு என்ன ஆதாயம்? அழிவை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறாய். உனக்குத் தெரியாததா? கௌசல்யா வயிற்றில் பிறந்தவன் மூத்தவன். தந்தைக்கு சமமானவன். சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் பிறப்பவன் தான் புத்திரன். ஹ்ருதயத்திலிருந்தும் உண்டாகிறான். அதனால் தான் தாயாருக்கு பிரியதமன். பந்துக்களுக்கும் பிரியமானவன். ஒரு சமயம் தர்மம் அறிந்தவர்கள், தேவர்களுக்கு சம்மதமன சுரபியை தாங்கிக் கொண்டு வந்து பூமியில் அவள் புத்திரர்கள் நினைவு இழந்து கிடந்தவர்களைக் காண்பித்தனர். அவள் புத்திர சோகத்தால் வருந்தி கண்ணீர் பெருக்கினாள். அவளுடைய கண்ணீர் கீழே இருந்து கிளம்பிச் சென்ற தேவராஜனின் உடலில் விழுந்தன. சூக்ஷ்மமாக சுரபியின் வாசனையுடன் இந்திரனும் தன் உடலில் விழுந்த சுரபியின் கண்ணீரை, புனிதமான வாசனையால் கண்டு கொண்டான். மதிப்பு மிக்க சுரபியைத் தேடி இந்திரனும், அவள் ஆகாயத்தில் நின்று தீனமாக அழுவதைக் கண்டான். அதைக் கண்டு பரிதாபப்பட்டு ஆறுதல் சொல்லும் விதமாக, சுரபியே, உனக்கு என்ன பயம்? எங்களிடத்தில் உனக்கு ஒரு குறையும் இல்லையே, எதனால் காரணம் இன்றி அழுகிறாய்? சுரபி பதில் சொன்னாள். சாந்தம் பாபம். (இது ஒரு பேச்சு வழக்கு. அமங்களமாக ஏதாவது காதில் பட்டால் உடனே சொல்வது) அமராதிபனே,
உங்களில் யாரும் எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. என் புத்திரர்கள் இருவரும் தவறான வழியில் சென்று பூமியில் புதைந்து போனார்கள். அதை எண்ணித் தான் வருந்துகிறேன். இவ்விருவரும் இளைத்து, தீனமாக, சூரியனுடைய கிரணங்களால் தகிக்கப் பட்டவர்களாக கிடக்கிறார்கள். என் சரீரத்திலிருந்து உண்டானவர்கள். துன்பத்தில் இருக்கிறார்கள். பாரம் அழுத்த வேதனை படுகிறார்கள். அவர்களைக் கண்டு என் உள்ளம் நடுங்குகிறது. புத்திரனுக்கு சமமாக பிரியமானவர்கள் வேறு யார் இருக்கிறார்கள். என்றாள். எவளுக்கு ஆயிரக்கணக்கான புத்திரர்கள், உலகெங்கும் வியாபித்து இருக்கிறார்களோ, அவள் கஷ்டத்தில் இருந்த இரண்டு புத்திரர்களுக்காக அழுகிறாள். இதைக் கண்டு இந்திரனும் புத்திரனுக்கு மேலான வேறு எதுவும் இல்லையென்று உணர்ந்து கொண்டான். எப்பொழுதும் ஈ.டு இணையில்லாத நடத்தையுடையவளும், உலகை தாரணம் செய்யும் விருப்பமும், லஷ்மி கடாக்ஷம் உள்ளவளும் இயல்பிலேயே பிறருக்கு உதவி செய்பவளுமான கௌசல்யா, ஒரே மகனான ராமனும் உடன் இல்லாமல் எப்படி இருப்பாள்? ஒரே மகனையுடைய சாத்வீ, அவள் மகனை பிரித்த பாவம் உனக்கு. அதனால் நீ எப்பொழுதும் இவ்வுலகிலும், பர லோகத்திலும் துக்கத்தை அனுபவிப்பாய். நான் இதற்கு மாற்று செய்யப் போகிறேன். சந்தேகமில்லாமல், இந்த சகோதரனுக்கும், தந்தைக்கும், இழந்த கீர்த்தியை நிலை நாட்டுவேன். திரும்ப அழைத்து வந்து கௌசல்யையின் பக்க பலமான ராமனை ராஜ்யத்தில் நியமித்து விட்டு, நானே வனம் செல்வேன். ஊர் ஜனங்கள் கண்ணீருக்கிடையில் என்னை நிந்திக்கும்படி நான் இருக்க மாட்டேன். நீ என்ன வேண்டுமானாலும் செய். அக்னியில் பிரவேசம் செய்வாயோ, தண்டகா வனம் தான் போவாயோ, கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்டு மாய்வாயோ, வேறு வழி என்ன? ராமனிடம் பூமியை ஒப்படைத்து விட்டு நான் திருப்தியாக, கல்மஷம் நீங்கியவனாக ஆவேன். அங்குசத்தால் அடி பட்ட காட்டு யானை கோபம் கொண்டு பெருமூச்சு விடுவது போல கண்கள் சிவக்க, ஆடை சீர் குலைய, ஆபரணங்களைக் களைந்தவனாக பூமியில் விழுந்தான், ராஜ குமாரனான பரதன். இந்திரனுடைய கொடி, உத்ஸவம் முடிந்த அல்லது பாதிக்கப் பட்டதால் விழுந்து கிடப்பது போல கிடந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கைகேயி ஆக்ரோஷோ என்ற எழுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 75 (152) பரத சபதம் (பரதன் சூளுரைத்தல்)
வெகு நேரம் கழித்து சுய நினைவு அடைந்த பரதன் தீனமாக தாயாரைப் பார்த்து மந்திரிகளுக்கு எதிரிலேயே அவளைக் குற்றம் சாட்டிப் பேசினான். எனக்கு ராஜ்யம் வேண்டாம். உன்னைத் தாயாராக நினைக்கவும் இல்லை. அபிஷேகம் என்பதை நான் அறியேன். சத்ருக்னனுடன் நான் தேசத்தில் இல்லாத பொழுது அரசனால் கொடுக்கப் பட்டது. மகாத்மாவான ராமன் வனம் சென்றதையும் நான் அறியேன். கூடவே சௌமித்திரியும், சீதையும் சென்றதையும் நான் இங்கு வந்து தான் தெரிந்து கொண்டேன். இவ்வாறு உரத்த குரலில் அலறும் பரதனின் குரலைக் கேட்டு, கௌசல்யை, சுமித்திரையிடம் சொன்னாள். கைகேயி பிள்ளை வந்து விட்டதாகத் தெரிகிறது. நான் அவனை பார்க்க வேண்டும், பரதன் தீர்க தரிசனம் உள்ளவன். முகம் வாடி, மலினமாக இருந்தாலும், உடல் நடுங்க மெதுவாக நடந்து பரதன் இருக்குமிடம் செல்ல புறப்பட்டாள். பரதனோ, ராமனுடைய தம்பி, சத்ருக்னனுடன் அவளைத் தேடி அவள் இருக்கும் இடம் வந்து விட்டான். இருவரும் அவள் பாதங்களில் வணங்கி அணைத்துக் கொண்டனர். துக்கத்தால் வருந்தியவளை சமாதானம் செய்ய முற்பட்டனர். அவர்கள் இருவரையும் அழுது கொண்டு நிற்பவர்களைப் பார்த்து, கௌசல்யா தானும் அடக்க முடியாமல் கண்ணீரைப் பெருக்கினாள். பின் பரதனிடம் இதோ, ராஜ்யத்தை விரும்பிய உனக்கு இடையூறு இன்றி ராஜ்யம் தயாராக இருக்கிறது. கைகேயி அவசரமாக, வாங்கி வைத்திருக்கிறாள். என் மகனை மரவுரி கட்டி காட்டுக்கு அனுப்பி வைத்தது தான் கொடிய செயல். அவனிடத்தில் என்ன குறை கண்டாளோ. எதிலும் க்ரூரமாக காண்பவள், கைகேயி. என்னையும் அவள் சீக்கிரமே நாடு கடத்தினால் நல்லது. ஹிரண்ய நாபனான என் மகன் எங்கு இருக்கிறானோ, அதே வனத்திற்கு நானும் செல்வேன். அல்லது நானே, சுமித்திரையுடன் கூட அக்னி ஹோத்ரத்தையும் எடுத்துக் கொண்டு ராமன் இருக்கும் இடம் செல்வேன். அல்லது நீயே என்னை அந்த இடத்திற்கு அழைத்து சென்று விடு. என் புத்திரர்கள் அங்கு தவம் செய்கிறார்கள். இந்த தன தான்யம் நிறைந்த விஸ்தீர்ணமான பூமி, யானை குதிரை, ரதங்கள் நிறைந்தது ராஜ்யம் உனக்கு என்று ஆகி விட்டது. குத்தலாக இது போல பல வாக்கியங்களை அவள் சொல்ல, பரதன் காயத்தின் மேல் ஊசியால் குத்தியது போல துடித்துப் போனான். அவள் காலில் விழுந்தான். மனம் அலை பாய, பெரிதாக அழுதான். சற்று நேரம் அழுது நினைவு இழந்தவன், பின் ஸ்திரப் படுத்திக் கொண்டு சொன்னான். கை கூப்பியவனாக கௌசல்யையைப் பார்த்து பேசலானான். ஆர்யே, எதுவும் அறியாத என்னை எப்படித் திட்டுகிறாய்? நான் கவடு அறியாதவன். ராகவனிடத்தில் நான் கொண்டுள்ள அளவற்ற அன்பையும், ஸ்திரமான மரியாதையையும் நீ அறிவாய். தமையனான ராமன் வனம் சென்றது எனக்கு சம்மதமாக இருந்திருப்பின், கொடியவனான எனக்கு சாஸ்திரங்களை பின் பற்றும் புத்தி இல்லாது போகட்டும். தமையனான ராமன் வனம் சென்றது எனக்கு முன்பே தெரிந்திருந்து நான் சம்மதித்து இருந்தால், எப்பொழுதும் சத்ய சந்தன், நல்லவர்களுள் ஸ்ரேஷ்டன் என்ற நற்பெயர்கள் எல்லாம் வராது போகட்டும்.
(மனம் கொண்டு வனம் போக்கி இருப்பேனேயானால் – எனக்குத் தெரிந்து, என் அனுமதியுடன் என் தமையன் வனம் சென்று இருப்பானேயானால்- இந்த சபதம் ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் சேர்த்துக் கொள்ளவும்)
பாபிகள் செல்லும் இடம் வாய்க்கட்டும். சூரியனை நோக்கி சிறுநீர் கழிப்பவனோ, தூங்கும் பசுவை உதைப்பவனோ பெறும் பாபம் வந்து சேரட்டும்.
ஏராளமான வேலைகளை வாங்கிக் கொண்டு அதர்மமாக பொருளைக் கொடுக்காமல் ஏமாற்றினால் என்ன பாபமோ, அதுவும்
புத்திரர்களைப் போல எண்ணி ராஜ்யத்தை பாலனம் செய்யும் அரசனுக்கு துரோகம் செய்பவன் என்ன பாபத்தை அடைவானோ, அதுவும்,
தன் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு, தங்களை பரிபாலிக்கும் அரசனுக்கு என்று எடுத்து வைக்காத பிரஜைகளின் பாபமும்,
சூக்ஷ்மமான சாஸ்திரார்த்தங்களை உபதேசிக்கும் குரு மிகவும் முயற்சி எடுத்து சொல்லித் தரும் பொழுது, துஷ்டனான சிஷ்யன் அதை நாசம் செய்தால் என்ன பாபமோ, அதுவும்,
தபஸ்விகளிடம் பாடம் கேட்டு, யாகத்தில் யக்ஞ தக்ஷிணையை கொடுக்காமல் ஏய்க்கும் மனிதர்களுடைய பாபம் எதுவோ, அதுவும் என்னை வந்து சேரட்டும்.
யானை, குதிரை , ரதம் இவைகளுடன் சஸ்திரங்கள் வைத்து யுத்தம் செய்யும் பொழுது, நல்லவர்களுடைய தர்மம் எதுவோ அதுவும் என்னை வந்தடையாமல் போகட்டும்.
சூரியன் சந்திரனுக்கு சமமான தேஜஸை உடையவன், ராஜ்யத்தில் அமரும் பொழுது, அதைக் காண முடியாமல் போகட்டும்.
தயை இல்லாதவன் எவன், பெரியவர்கள் இருக்கும் பொழுது அவர்களை மதியாமல் நல்ல பாயஸத்தை தனியாக சாப்பிடுகிறானோ, அவன் அடையும் பாபமும்,
பசு மாட்டை காலால் உதைப்பவனும், பெரியவர்களை தானே வேதனைப் பட வைப்பவனும், நண்பனுக்கு துரோகம் செய்பவனும், என்ன பாபத்தை அடைவார்களோ, அதுவும்,
நம்பிக்கையோடு, தங்களுக்குள் பேசிக் கொண்ட ரகஸியத்தை, எவன் வெளியில் விவரித்து சொல்கிறானோ, அவன் அடையும் பாபமும்,
செய் நன்றி மறந்தவனும், எதுவுமே நன்மை செய்யாதானும், வெட்கம் இல்லாதவனும், உலகில் வெறுக்கத் தகுந்த நடவடிக்கை உடையவனும் அடையும் பாபமும்,
புத்திரர்கள், மனைவிமார், வேலைக்காரர்கள், இவர்களுடன் சேர்ந்து தன் வீட்டில் வசிப்பவன், அவர்களை விட்டு தான் மட்டும் வயிறு நிறைய சாப்பிட்டால் என்ன பாபமோ, அதுவும், என்னை வந்து சேரட்டும்.
தனக்கு நிகரான மனைவியை அடையாமல், குழந்தை பேறு இல்லாமல் அழியட்டும். தர்மமான செயலின் பலனை அடையாமல் போகட்டும்.
தன் பத்னிகளிடம் தன் வம்சத்தை காணாது போகட்டும்.
துக்கத்துடனேயே தன் ஆயுசு முழுவதும் இந்த செல்வம் கிடைக்காமலே போகட்டும்.
அரசனை, ஸ்த்ரீகளை குழந்தைகளை , வயதானவர்களை வதைப்பதில் என்ன பாபம் வருமோ, தன்னிடம் வேலை செய்பவனை தியாகம் செய்வதில் என்ன பாபம் உண்டோ, அதுவும்,
யுத்தத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது, சத்ரு பக்ஷமும் பயங்கரமாக இருக்கும் பொழுது, களத்தை விட்டு ஓடுபவனை வதைத்தால் அடையும் பாபம் எதுவோ, அதுவும்,
கபாலத்தை ஏந்தி, மரவுரி, வல்கலை தரித்தவனாக, உன்மத்தனாக பிக்ஷை கேட்டு உலகை சுற்றி வரட்டும், என் சம்மதத்தோடு தமையனார் வனம் போய் இருந்தால்.
மதுவில் மயங்கி கிடக்கும் பெண்களிடமும், சூதாட்டக் காயிலும் மயங்கி கிடக்கட்டும். காமக் க்ரோதங்கள் அவனை வாட்டட்டும்.
தர்மத்தில் மனம் போகாமல், அதர்மத்தையே சேவிக்கட்டும்.
அவன் செய்யும் தர்மமும், சரியான பாத்திரம் (தேவையுள்ள மனிதன்) இல்லாது போகட்டும்.
சேர்த்து வைத்த தனம், பலவிதமான பொருட்கள், ஆயிரக் கணக்கானவைகளை திருடன் கொள்ளையடித்துக் கொண்டுபோகட்டும்.
இரண்டு சந்த்யா காலங்களிலும் தூங்குபவனுக்கு என்ன பாபம் சொல்லப் பட்டிருக்கிறதோ, அதுவும்,
அக்னியை கொடுப்பதால் என்ன பாபமோ, குருவின் படுக்கையில் படுப்பதால் என்ன பாபமோ, மித்ர துரோகிக்கு என்ன பாபமோ, அதுவும் வந்து சேரட்டும்.
தேவதைகளுக்கும், பித்ருக்களுக்கும், பெற்றோருக்கும், பணிவிடை செய்யாமலே போகட்டும்.
நல்லவர்களின் உலகத்திலிருந்து, நல்ல புகழிலிருந்து, சேர்த்து வைத்துள்ள நற் கர்மாக்களின் பலன்களிலிருந்தும், இன்றே, இப்பொழுதே தள்ளப் பட்டு விழட்டும்.
தாயாருக்கு பணிவிடை செய்யாமல், (தீர்க பாஹுவும்) நீண்ட கைகளும், அகன்ற மார்பும், அனர்த்தமான செயல்களுக்கு பயன் படட்டும்.
நிறைய குழந்தைகளுடன், தரித்திரனாக, ஜ்வரம் வியாதி இவற்றால் பீடிக்கப் பட்டவனாக, எப்பொழுதும் க்லேசத்துடனேயே காலத்தைக் கழிக்கட்டும்
நம்பிக்கை வைத்தவர்கள், தீனர்கள், யோகிகள், யாசிக்கும் பொழுது ஏளனம் செய்பவன் அடையும் பாபமும், வந்து சேரட்டும்.
மாயையில் எப்பொழுதும் ரமிக்கட்டும். கடும் சொல் உடையவனாக, கஞ்சனாக, சுத்தம் இல்லாதவனாக, அரசனிடம் பயந்தவனாக, அதர்மாத்மாவாக இருக்கட்டும்.
ருது ஸ்னானம் செய்து வீட்டில் காத்திருக்கும் மனைவியை அலட்சியம் செய்யும் துராத்மா அடையும் பாபமும்,
தர்ம பத்னியை விட்டு, வெளியில் (பர தாரா) பிறன் மனையை நாடும், நியாயமான வழியைத் துறந்த மூடர்கள் அடையும் பாபமும்,
புத்திரர்களை பறி கொடுத்த பிராம்மணன், எந்த கெட்ட காரியத்தின் பலனாக இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறானோ, அந்த பாபமும்,
குடிநீரை தூஷிப்பதால் உண்டாகும் பாபமும், விஷத்தைக் கொடுப்பதால் வரும் பாபம், இவை என்னை வந்து சேரட்டும்.
கலுஷமான புத்தியுடையவன், பிராம்மணன் பூஜை செய்ய முனையும் பொழுது தடுப்பவன், பசு மாட்டை பலவந்தமாக பால் கறப்பவன் இவர்கள் அடையும் பாவ கதியை நானும் அடைவேன், என் அனுமதியுடன், எனக்குத் தெரிந்து என் சகோதரன் வனம் போய் இருந்தால்.
தாகத்துடன் தவிக்கும் பொழுது, தாமதமாக தண்ணீர் கொடுப்பவன், பக்தியுடன் விவாதிப்பவர்கள், தங்கள், தங்கள் மார்கத்தை எண்ணி செயல் படுபவர்கள், இதில் தவறான எண்ணத்தை புகுத்துபவன் என்ன பாபத்தை அடைவானோ, அது என்னையும் வந்து சேரட்டும். மேற் சொன்ன பாவ பலன் அனைத்தும் என்னை சேரும், நான் மட்டும் மனதறிந்து ராமனை வனம் செல்ல அனுமதித்திருந்தால் என்று பரதன் சபதம் செய்தான். இவ்வாறு கடினமான சபதங்களை மேற் கொண்ட, பரதன், கௌசல்யையின் தவறான எண்ணத்தை நீக்கி தன் நிலையை விளக்க மிகவும் கஷ்டப் பட்டு தவித்தான். அதைக் கண்ட கௌசல்யை சொன்னாள் மகனே, என் துக்கம் இன்னும் அதிகமாகிறது. நீ இப்படி சபதம் செய்தது எனக்கு உயிரே போவது போல இருக்கிறது. சுபமான லக்ஷணங்கள் உடையவன் நீ. நல்ல காலமாக உன் புத்தி சபலமடையவில்லை. தர்மத்தில் நிலை பெற்று இருக்கிறது. குழந்தாய், சத்ய ப்ரதிக்ஞை செய்யும் நீயும் நல்லவர்களின் லோகம் சென்றடைவாய். இவ்வாறு சொல்லி, பரதனை அணைத்து மார்புற தழுவி, சமாதானம் செய்தாள். சகோதர வாஞ்சையுடைய அவனை சந்தேகித்தோமே என்றோ மிகவும் வேதனையுடன் அழலானாள். இவ்வாறு மகாத்மாவான பரதன், தன் பக்க நியாயங்களைச் சொல்லியும், அழுதும் அன்று இரவு ஒருவரையொருவர் சமாதானம் செய்வதிலேயே கழிந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பரத சபதோ என்ற எழுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 76 (153) தசரத ஔர்த்3வ தே3ஹிகம் (தசரதரின் இறுதிக் கடன்கள்)
இவ்வாறு பரதன் வருந்தி புலம்பிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு ரிஷி ச்ரேஷ்டரான வசிஷ்டர் வந்து சேர்ந்தார். வாக்கு வன்மை கொண்ட அவர், நிலைமையை உடனே புரிந்து கொண்டு பரதனுக்கு ஆறுதலாகப் பேசினார். ராஜ குமாரனே, உனக்கு மங்களம். சோகத்தை விடு. பகழ் வாய்ந்த மகா ராஜாவுக்கு காலம் வந்து விட்டது. நீ மேற் கொண்டு செய்ய வேண்டியதை கவனி. வசிஷ்டர் சொன்னதைக் கேட்டு, பரதன் சற்றுத் தெளிந்தான். தர்ம முறைப்படி இறுதிக் கடன்களைச் செய்தான். தைலப் பாத்திரத்திலிருந்து எடுத்து பூமியில் வைத்து, உடல் முழுவதும் மஞ்சள் வர்ணமாகி தூங்குவது போல கிடந்த மகா ராஜாவை, பலவிதமான ரத்னங்கள் இழைத்த படுக்கையில் கிடத்தினர். மகாராஜாவின் உடலைக் கண்டு பரதன் மிகவும் வருந்தினான். நான் வெளியூர் போனவன் திரும்பி வருமுன் என்ன அவசரம் மகாராஜாவே. ராமனையும், லக்ஷ்மணனையும் நாடு கடத்தி விட்டு, இங்கு தவிக்கும் ஜனங்களை விட்டு எங்கு போகப் போகிறீர்கள், மகா ராஜா. புருஷ சிம்ஹமான ராமனையும் இழந்து தவிக்கிறார்கள், இந்த பூமி நீங்கள் இல்லாமல் நன்றாகவே இல்லை. ராமனும் வனம் சென்றபின், யோக க்ஷேமம் அறிந்து, இந்த பூமியின் தேவைகளை அறிந்து செய்து கொண்டிருந்த நீங்களும் போன பின் இந்த ராஜ்ய லக்ஷ்மி நாதனை இழந்தவள் போல இருக்கிறாள். சந்திரன் இல்லாத இரவு போல எனக்குத் தோன்றுகிறாள். இவ்வாறு அழுது புலம்பும் பரதனை, வசிஷ்டர் அழைத்து, சக்ரவர்த்தியின் இறுதிக் கடன்களை செய்யப் பணித்தார். அவைகளை குறைவில்லாமல் செய் என்று வசிஷ்டர் சொல்லவும், பரதனும் ரித்விக், புரோஹிதர்கள், ஆசார்யர்கள், இவர்களுடன் வேகமாக செயல் பட்டான். நரேந்திரனுடைய அக்ன்யகாரத்திலிருந்து (ஹோமம் செய்ய என்று தனியாக வளர்க்கும் அக்னி வைக்கும் இடம்) அக்னியைக் கொண்டு வந்து, யாகம் செய்பவர்கள், வேதம் அறிந்தவர்களுடன் முறைப்படி க்ருத்யங்களைச் செய்தான். பல்லக்கில் ஏற்றி, தங்கமும், நல்ல ஆடைகளும், பலவிதமான பொரிகளை இறைத்துக் கொண்டு ஜனங்கள் முன் சென்றனர். சந்தனம், அகரு, மெல்லிய பத்மம், தேவதாரு இவற்றைக் கொண்டு சிதையை அமைத்தனர். சிதையின் மத்தியில் வைத்து நெருப்பு மூட்டி, ஜபங்களைச் செய்தனர். ரிக் வேதம் அறிந்தவர்கள் சொல்லி முடித்தவுடன், சாம வேதிகள் சாம வேதத்தைப் பாடினர். பல்லக்குகளிலும், வாகனங்களிலும், தகுதிக்கேற்ப அவரது மனைவிகள் நகரத்தில் இருந்து வந்தனர். அங்கு வயதானவர்கள் சூழ்ந்திருக்க, அக்னி சயனம் என்ற யக்ஞத்தை செய்தனர். கௌசல்யை முதலிய அரசனது மனைவியர், சரயூ நதிக்கு வாகனங்களில் சென்று நதியில் ஸ்னானம் செய்தனர். பரதனுடன், தசரத அரசனின் பத்னிகளும் மந்திரி புரோஹிதர்களும் செய்ய வேண்டிய க்ருத்யங்களை செய்து விட்டு ஊர் திரும்பினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தசரத ஔர்த்3வ தே3ஹிகம் என்ற எழுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 77 (155) பரத சத்ருக்ன விலாப: (பரதனும், சத்ருக்னனும் வருந்துதல்)
பத்து நாட்கள் ஆனதும் சுத்தம் செய்து கொண்டு அரச குமாரன் ச்ரார்த்த கர்மாவைச் செய்தான். பிராம்மணர்களுக்கு ரத்னம் தனம் அன்னம் இவற்றை நிறையக் கொடுத்தான். கம்பளங்கள், வெண்மையாகவும், நூற்றுக்கணக்கான பசுக்களும், தாச, தாசிகளும், வாகனங்கள், வீடுகள், முதலியவற்றையும் பிராம்மணர்களுக்கு தந்தையின் இறுதிக் கால காரியங்களைச் செய்யும் பொழுது தானமாகக் கொடுத்தான். பின் விடியற்காலையில், பதின் மூன்றாவது நாள், பரதன் வருத்தம் தாங்கமாட்டாமல் அழுதான். தொண்டையடைக்க, சிதா மூலத்தில் தந்தையிடம் சொன்னான். சகோதரன் ராமனிடம் எங்களை ஒப்படைத்து விட்டுச் சென்றீர்கள். அந்த ராமனும் காட்டுக்கு போகவும், சூன்யமாக, நான் தனித்து விடப்பட்டேன். நீங்களும் கை விட்டு விட்டீர்கள். புத்திரனையும் வனத்துக்கு அனுப்பி விட்டு தவிக்கிறாளே, அந்த கௌசல்யா, அவளையும் தவிக்கவிட்டு எங்கு சென்றீர்கள் பிரபோ, தந்தையின் நிர்வாண மிச்சத்தை பார்த்து மிகவும் வருந்தி, பூமியில் விழுந்தான். மந்திரி வர்கங்கள் வந்து யாயாதியை ரிஷிகள் சூழ்ந்து கொண்டது போல அவனை சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். சத்ருக்னனும் மறைந்த அரசனது குணங்களைச் சொல்லி புகழ்ந்தான். மந்தரா பிரபாவத்தால், கைகேயி என்ற முதலை கலக்கி, வர தானம் என்ற ரூபத்தில் சோக சாகரம் வந்து சேர்ந்தது. தந்தையே, சுகுமாரனான பாலன், பரதனை விட்டுப் போக எப்படி மனம் வந்தது. சாப்பிடும், குடிக்கும் பொருட்களிலும், வஸ்த்திரங்கள், ஆபரணங்கள், முதலியவை எங்களுக்காக நீங்கள் கவனமாக செய்தது போல வேறு யார் செய்வார்கள்? பூமி பிளக்க வேண்டிய சமயத்தில் பிளப்பதில்லை. தர்மக்ஞனான நீங்கள் போன பொழுது பூமி ஏன் பிளக்கவில்லை. சகோதரனும், தந்தையும் இன்றி இக்ஷ்வாகு குலம் நசித்து விட்டது. அயோத்தியில் நுழையவே மாட்டோம், தபோவனம் செல்வோம் என்ற இருவரையும் பார்த்து வசிஷ்டர் அங்கு வந்தார். (வித்3யாம் சர்வாமபி அஸௌ வேத3 இதி வைத்ய:) வைத்யரான வசிஷ்டர் அருகில் வந்து பரதனை எழுப்பி, உன் தந்தை மறைந்து இன்று பதின்மூன்று நாட்கள் ஆகி விட்டன. அஸ்தி மட்டுமே பாக்கி என்ற நிலையில், நீ ஏன் புலம்பி வருந்துகிறாய். மூன்று இரட்டைகள் (உணவும், நீரும், சோகமும், மோகமும், ஜரா ம்ருத்யு,) இவை ஜீவன்களிடத்தில் மாறுபாடின்றி கலந்தவை. இயற்கை நியதி இது. இதை நாம் தடுக்க முடியாது. இதை நினைத்து நினைத்து நீ வருந்துவது சரியல்ல. சுமந்திரனும் வந்து சத்ருக்னனை எழுப்பி, சமாதானப் படுத்தி, தத்வம் அறிந்தவர் ஆதலால், உலகில் ஜீவன்களின் நிலையாமையையும், பற்றிச் சொன்னார். இருவரும், தனித் தனி இந்திர த்வஜம் மழை நீரில் நனைந்து கிடப்பதைப் போல கிடந்தவர்கள், மந்திரிகள் அவசரப் படுத்தியதன் பேரில், கண்களைத் துடைத்துக் கொண்டு, சிவந்த கண்களுடன் மேற் கொண்டு காரியங்களை கவனிக்க எழுந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், ப4ரத சத்ருக்4ன விலாபோ என்ற, எழுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்).
அத்தியாயம் 78 (155) குப்3ஜா விக்ஷேப: (குப்ஜையை தண்டித்தல்)
லக்ஷ்மணன் சகோதரன் சத்ருக்னன், பரதனை சமாதானப் படுத்தினான். எல்லா ஜீவன்களுக்கும் இதே கதிதான் எனும் பொழுது, தன் தந்தை என்பதால் துக்கம் அதிகமாவது இயற்கையே. ஆயினும் சோகத்தை விடு. சத்வ குணம் நிறைந்த ராமன், பத்னியுடன் வனம் சென்றான். பலவான், வீர்யம் நிறைந்தவன் லக்ஷ்மணன், ஏன் வாளா இருந்தான். தந்தையை அடக்கியாவது ஏன் ராமனை விடுவிக்கவில்லை. வருமுன் காத்தலே அழகு. நியாய அநியாயங்களை உணர்ந்த அரசரே, பெண்ணின் வசமாகி தவறான வழியில் செல்லும் பொழுது, ராஜாவை திருத்த ஏன் முயற்சிக்கவில்லை என்று சத்ருக்னன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, வாசலில் கூனி சர்வாபரண பூஷிதையாகத் தென்பட்டாள். ஒட்டியாணம், வித விதமான மற்ற சுபமான ஆபரணங்கள் அணிந்து, பெண் குரங்கு கயிற்றால் கட்டப் பட்டது போல விளங்கினாள். வாயில் காப்போர், கருணையற்ற அவளைக் கண்டு, பிடித்து வந்து சத்ருக்னனிடம் ஒப்படைத்தனர். எவள் காரணமாக, ராமன் வனம் போகவும், தந்தை இயற்கை எய்தவும் நேர்ந்ததோ, அந்த கொடியவள் இவள் தான், உன் இஷ்டம் போல தண்டனை கொடு என்று சொன்னார்கள். அந்த:புர வேலைக் காரர்களிடம், இவள் செய்த கொடும் காரியத்தின் பலனை அனுபவிக்கட்டும். சகீ ஜனங்களுடன் வந்த அவளை பலமாக பிடிக்கவும், கூட வந்த பெண்கள் ஓடி விட்டனர். கூனியின் ஓலம் அந்த மாளிகையை நிறைத்தது. அவளுடன் வந்த பெண்கள், நாம் அழிந்தோம், இவளுடன் இருந்தால் நமக்கும் அதோ கதி தான், கருணையும், தயையும் உடைய கௌசல்யையை சரண் அடைவோம் என்று அவளிடம் ஓடினர். கோபத்தால் கண் சிவக்க, சத்ருக்களை தபிக்கக் கூடிய சத்ருக்னன் தரையில் விழுந்து அழும் கூனியை இழுத்தான். அப்பொழுது அவளுடைய பலவிதமான நகைகள், பூமியில் இறைந்தன. சரத் கால ஆகாயம் போல அந்த அறை விளங்கியது. இறைந்து கிடந்த ஆபரணங்கள் நக்ஷத்திரங்களாக ஜொலிக்க, ப3லவானான சத்ருக்னன் அவளை இறுக பிடித்தபடி, கைகேயியை குறை சொல்லவும், கைகேயி பயந்து மகனிடம் வந்தாள். அதைக் கண்டு பரதன், விடு, ஸ்த்ரீகளை வதைக்கக் கூடாது. நான் கூட என் தாய் என்று பார்க்காமல் கைகேயியை கொன்று போட்டிருப்பேன். ராமன் மாத்ரு கா4தகன் என்று (தாயை கொன்றவன்) கோபிப்பானே என்பதால் விட்டேன். தார்மிகனான ராமன் இச்செயலை ஏற்க மாட்டான். கூனியை அடித்து என்ன பயன், ராமனுக்கு அதுவும் சம்மதமாக இராது. போகட்டும் என்று கூனியை விட்டார்கள். அவள் கைகேயியை சரணடைந்தாள். கைகேயி அவளை சமாதானப் படுத்தி, அடிபட்டு விழுந்த க்ரௌஞ்ச பக்ஷியை பார்ப்பது போல பார்த்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் குப்3ஜா விக்ஷேபோ என்ற எழுபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 79 (156) சசிவ ப்ரார்த்த2னா ப்ரதிஷேத4:
பதினான்காம் நாள் விடிந்ததும், ராஜ்ய அதிகாரிகள் வந்து பரதனை சந்தித்தனர். எங்களுக்கு குருவுக்கு குருவாக இருந்த தசரத ராஜா ஸ்வர்கம் சென்று விட்டான். ராமனை லக்ஷ்மணனுடன் நாடு கடத்தி விட்டார். அதனால் நீ தான் ராஜா. இப்பொழுது எங்களுக்கு அரசனாக ஆவாய். ராஜ குமாரனே, நியாயமாக ராஜ்யத்தை ஆண்டு புகழ் பெறுவாய். அதில் ஒரு தவறும் இல்லை. அபிஷேக ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொண்டு ராகவா, உன் சுற்றாரும், அரசு பணிகளில் வரிசையாக உள்ளவர்களும் காத்திருக்கின்றனர். அழியாத, தந்தை, பாட்டனார் வழி வந்த இந்த ராஜ்யத்தை ஏற்றுக் கொள். உன்னை முடி சூட்டிக் கொண்டு எங்களையும் காப்பாய். அபிஷேகத்திற்காக வைக்கப் பட்டிருந்த பாத்திரங்கள், மற்ற சாமான்கள், எல்லாவற்றையும் ஒரு முறை பிரதக்ஷிணமாக பார்த்து விட்டு, பரதன் அவர்களைப் பார்த்துச் சொன்னான். மூத்தவன் ராஜ்யத்தை ஆளுவது தான் உசிதம். நம் குல வழக்கமும் அதுதான். பெரியவர்கள் நீங்கள் இப்படி என்னிடம் சொல்வது சரியன்று. எங்களுக்கு முன் பிறந்தவனான ராமன் தான் அரசனாவான். நான் வனம் சென்று ஒன்பது, பின் ஐந்து வருஷங்கள் கழிப்பேன். சதுரங்க சேனையோடு படை தயாராகட்டும். வனத்திலிருந்து ராமனை திரும்ப அழைத்து வருவேன். அபிஷேகத்திற்கான இந்த ஏற்பாடுகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டே செல்வேன். ராமன் இருக்கும் இடத்தை தேடியறிந்து அங்கேயே முடி சூட்டி அழைத்து வருவோம். அவனை முன்னிருத்தி, யாக சாலையிலிருந்து அக்னியைக் கொண்டு வருவது போல வருவோம். சுயநலம் மிகுந்த என் தாயின் எண்ணம் பூர்த்தியாக விட மாட்டேன். நான் கொடிய வனத்தில் வசிப்பேன். ராமன் ராஜாவாக ஆவான். சில்பிகளைக் கொண்டு பாதைகள் போடப் படட்டும். நேர் வழிகளும், குறுக்கு வழிகளும் போடுங்கள். துர்க (கோட்டை) விஷயம் அறிந்தவர்களும், காவல்காரர்களும் உடன் வரட்டும். இவ்வாறு ராமனைப் பற்றி சொல்லும் ராஜ குமாரனைக் கண்டு ஜனங்கள் எல்லோருமாக மங்களமான வாக்யங்களைச் சொல்லி வாழ்த்தினர். இவ்வாறு பேசும் உன்னிடம் பத்மாவான லக்ஷ்மி தேவி நிலைத்திருக்கட்டும். நீ ஜ்யேஷ்டன் என்று ராமனுக்கு ராஜ்யத்தை தர விரும்புகிறாய். உத்தமமான எண்ணம் இது. இந்த சம்பாஷனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் விட்டனர். மந்திரிகளும், பரிஷத் அங்கத்தினர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். சில்பி வர்கங்களை அழைத்து பாதைகள் போட, ஜனங்களை நியமித்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சசிவ மந்த்ரனா ப்ரதிஷேத4: எழுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 80 (157) மார்க சம்ஸ்கார: (பாதை போடுதல்)
இதன் பின் பூமியின் தன்மையை அறிந்த அறிஞர்களும், தச்சர்களும் தன் வேலைகளில் சூரர்களான தோண்டுபவர்களும், யந்திரங்கள் அமைப்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும், ஸ்தபதிகளும், யந்திர விதிகளையறிந்த புருஷர்களும், மர வேலை செய்பவர்களும், மரத்தைப் பற்றிய விவரம் அறிந்த அறிஞர்களும், கிணறு வெட்டுபவர்களும், மூங்கில் கொண்டு வேலை செய்பவர்களும், நன்றாக பார்க்கக் கூடியவர்கள் முன் செல்ல, பின்னால் சென்றனர். இந்த வேலையின் உத்தேசம் அனைவருக்கும் உத்ஸாகம் அளித்தது. ஏராளமான ஜனங்கள் கூட்டமாகச் சென்றது, பர்வ காலத்தில் சமுத்திரம் ஆரவாரிப்பது போல, ஆரவாரம் மிகுந்திருந்தது. பாதையமைக்கும் துறையில் நிபுணர்கள் பலவிதமான உபகரணங்கள் எடுத்துக் கொண்டு முன்னால் சென்றார்கள். கொடிகள், வல்லி, புதர்கள், கற்கள், இவற்றை அகற்றி பாதையமைக்க வழியில் பல மரங்களை வெட்டினர். மரங்கள் இல்லாத இடங்களில் சிலர் மரங்களை நட்டனர். சிலர் குடாரங்களாலும் (மண் வெட்டி), அறுமுகம் கொண்ட கருவிகளாலும், கூர்மையான ஆயுதங்களால் வெட்டியும், வேலைகளை செய்து கொண்டிருக்க, வேறு சிலர் வாசனை மிகுந்த புற்களைச் சுற்றிய தூண்களை நியமித்தனர். பலமாக வெட்டி அகழிகளை உண்டாக்கினர். சில சமவெளி களை நிறுவினர். ஒரு சிலர், கிணறுகளை மண் அடித்து தூர்த்து விட்டு வேறு இடத்தில் ஆழமாகத் தோண்டினர். வேறு சிலர் பாதைகளை சமமாக்கினர். கட்ட வேண்டியவற்றை கட்டியும், தோண்ட வேண்டியவற்றைத் தோண்டியும், உடைக்க வேண்டியவற்றை உடைத்தும், அந்தந்த தேசத்து மனிதர்களும் உதவி செய்ய, ஏராளமான நீர் பெருகி வழிய, பலவித வடிவங்களில், சாகரமோ எனும் படி பல நீர் நிலைகளை ஜலமில்லாத வறண்ட பிரதேசங்களிலும், தோன்றும் படி உத்தமமான குளங்களை வெட்டினர். அவற்றைச் சுற்றி யாக சாலைகள் அமைத்தனர். செங்கற்கள் பதித்த தளங்களும், பூக்கள் நிறைந்த மரங்களும், மதம் பிடித்தது போல இரைச்சலிடும் பறவைக் கூட்டங்களும், கொடிகளால் அலங்கரிக்கப் பட்டிருந்ததுமாக, சந்தனம் கலந்த நீர் தெளிக்கப்பட்டு, பலவிதமான புஷ்பங்களால் அலங்கரித்து தேவர்களின் பாதை போல, சேனை செல்லும் பாதையை அழகாக அமைத்தனர். தேவைக்கு ஏற்ப, வழியில் கட்டளையிட்டு வேலை வாங்கக்கூடியவர்களை நியமித்து, ரமணீயமான தேசங்களிலிருந்து கொண்டு வந்து பயிரிட்டு வளர்த்து, பலவிதமான ருசியுடைய பழங்களையும் உடைய நிவாஸஸ்தலம் மகாத்மாவான பரதனுக்காக ஏற்பாடு செய்யப் பட்டது. அதையும் முஹுர்த்த நேரத்தில் அலங்கரித்து வைத்தனர். பெரும் அகல பாதைகளை நல்ல முறையில் நிர்மாணித்தனர். அவை நிறைய மண் நிறைந்து காணப் பட்டாலும், இருபுறமும் நீர் செல்ல வழியோடு (பரிகா2) அமைந்திருந்தன. முக்கிய வீதிகளில் இந்திர நீல பதுமைகளும், வரிசையாக மாளிகைகளும், வியாபாரம் செய்ய கடைவீதிகளும், கொடிகளை அழகுற கட்டி பறக்க விட்டபடி அமைத்தனர். பால்கனிகளும், ஆகாயத்தை தொடும் விமானங்களும், முகப்புவாயில் தோரணங்களும், இந்திர புரிபோலவே அமைத்தனர். ஜாஹ்னவியை கொண்டு வந்து பலவித மரங்கள் உடைய காட்டையும், நிர்மலமான குளிர்ந்த தண்ணீர் குடிக்கவும், பெரிய மீன்களையுடையதும், சந்திரனும் தாரா கணங்களும் நிறைந்து ஆகாயம் போல இரவில் அழகாக தெரிவது போல நரேந்திரனுடைய மார்கம், க்ரமமாக சில்பிகளால் நிர்மாணிக்கப் பட்டு அதே போல அழகாகத் தெரிந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் மார்க சம்ஸ்காரோ என்ற எண்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 41 (118) நகர சம்க்ஷோப: (நகரத்தாரின் மனக் குமுறல்)
புருஷ வ்யாக்ரன் என்று புகழ் பெற்ற தசரத ராஜா திரும்பி வந்ததும், அந்த:புரத்து ஸ்த்ரீகள் இன்னும் தொடர்ந்து புலம்பலானார்கள். எங்களுக்கெல்லாம் நாதனாக இருந்தவன் எங்கே போகிறான். திட்டினால் கூட கோபித்துக் கொள்ள மாட்டான். கோபம் வரக் கூடிய சந்தர்பங்களைத் தவிர்த்து கோபித்துக் கொண்டவர்களையும் இனிமையாகப் பேசி சமாதானம் செய்து, துக்கமோ சுகமோ ஒரே போல இருப்பவன் எங்கு, ஏன் சென்றான்? கௌசல்யா தான் அவனைப் பெற்றவள். இருந்தும் அவளிடம் பிரியமாக இருப்பது போலவே நம்மையும் தாயாக மதித்தான். கைகேயியின் வற்புறுத்தலுக்கு இணங்கி ராஜா வனத்துக்கு கடத்தி விட்டான். நம் ஜனங்களை பாதுகாத்து ரக்ஷித்தவன் கிளம்பி விட்டான். ஐயோ, இந்த அரசனுக்கு புத்தி இல்லை. தர்மமே உருவான, எல்லோருக்கும் பிரியமான சத்யவ்ரதனான ராமனை வனத்தில் வசிக்கச் சொல்லி அனுப்பி விட்டான். இவ்வாறு அங்கு இருந்த ராணிகள், கன்றை இழந்த தாய்ப் பசுவைப் போல அழுதனர். துக்கம் தாங்காமல் அரற்றினர். அந்த:புரத்து இந்த அலறல், காதில் விழவும் ஏற்கனவே புத்ர சோகத்தால் தவித்துக் கொண்டு இருந்தவன் இன்னும் அதிக வேதனையடைந்தான். அக்னி ஹோத்ரிகள் தங்கள் அக்னியில் ஹோமம் செய்யவில்லை. வீடுகளில் சமையலே நடக்கவில்லை. ஒரு வேலையும் செய்ய ஓடாமல் பிரஜைகள் நிற்க, சூரியன் மட்டும் நில்லாமல் அஸ்தம் அடைந்தான். யானைகள் உணவுக்காக கொடுக்கப் பட்ட கவளங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பசுக்கள் கன்றுகளுக்கு ஊட்டவில்லை. முதன் முதலில் பிறந்த மகனைக் கண்டு தாய் ஆனந்தம் அடையவில்லை. த்ரிசங்குவும், லோஹிதாங்க3னும், பி3ருஹஸ்பதியும், பு3த$னும் பயங்கரமான க்ரஹங்கள் எல்லாம் சந்திரனை அடைந்து நின்று விட்டன. நக்ஷத்திரங்கள் தங்கள் ஒளியை இழந்தன. க்ரஹங்கள் தங்கள் பிரகாசத்தை இழந்தன. விசாகா2: (கிளையில்லாத) புகையுடனும் ஆகாயத்தில் தெரிந்தன. வாயுவின் வேகத்தால் ஆகாயத்தில் தூக்கியெறியப்பட்ட சமுத்திரம், மேகங்களை அடியோடு மறைத்து விட்டது. ராமன் வனம் செல்ல புறப்பட்டபொழுது, நகரம் இவ்வாறு தவித்து தத்தளித்தது. திசைகள் கவலையுற்றன. எங்கும் இருள் சூழ்ந்தது போல இருந்தது. க்ரஹமோ, நக்ஷத்திரமோ, வேறு எதுவும் பிரகாசிக்கவில்லை. அகஸ்மாத்தாக எதிர்ப்
பட்டவர்களிடம் ஜனங்கள் தீனமாக ஏதோ ஒப்புக்கு பேசி விட்டு நகர்ந்தனர். ஆகாரத்திலோ, விளையாட்டிலோ யாருக்கும் மனம் ஒன்றவில்லை. சோகத்தால் வாடிய முகத்துடன், பெருமூச்சு விடுபவர்களாக, அயோத்யா நகர் ஜனங்கள் தசரத ராஜாவை குறை கூறினர். ராஜ மார்கத்தில் ஜனங்கள் யாருமே சந்தோஷமாக இல்லை. கண்களில் நீர் திரையிட்டிருக்க, அவரவர் தன் துக்கத்தில் மூழ்கியவராக நடமாடினர். குளிர்ந்த காற்றும் வீசவில்லை. சந்திரனைப் பார்த்தால் சௌம்யமாகத் தெரியவில்லை. சூரியனின் வெப்பமும் சுடவில்லை. எல்லாமே குழப்பமாக இருந்தது. சிறு குழந்தைகள் தாயிடம் எதுவும் வேண்டும் என்று கேட்கவில்லை. அதே போல மனைவியும் கணவனிடம் எதுவும் வேண்டவில்லை. சகோதரர்கள் தங்களுக்குள் எதுவும் கேட்டுப் பெற்றுக் கொள்ளவில்லை. எல்லோருடைய மனதிலும், ராமனின் நினைவே மேலோங்கியிருந்தது. ராமனுடைய நெருங்கிய நண்பர்கள், எதிலும் மனம் செல்லாமல் படுக்கையும் கொள்ளாமல் தவித்தனர். மகாத்மாவான ராமன் இல்லாத அயோத்தி, இந்திரன் மலைகளுடன் சேர்த்து பூமியை அசைத்த பொழுது நாகங்களும், யுத்தம் செய்யும் வீரர்களும் குதிரைகளும் ஒன்றாக பயந்து சோகம் மேலிட, அலறியது போல இருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் நகர சம்க்ஷோப4: என்ற நாற்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 42 (119) தசரதாக்ரந்த: (தசரதன் அழுகை)
புழுதிப் படலம் மறையும் வரை அரசன் தன் கண்களை அகற்றவில்லை. அத்யந்த தார்மிகனான புத்திரனை அந்த புழுதிப் படலத்தினுள் கண்டு கொண்டானோ? அது வளர்ந்து கொண்டே சென்று மறைந்தது. புழுதியும் தெரியாமல் போனவுடன் அரசன் துக்கம் தாங்காமல் பூமியில் விழுந்தான். அவன் வலது கையைத் தாங்கி கௌசல்யை பிடித்துக் கொள்ளவும், இடது கையை கைகேயி பற்றிக் கொண்டாள். அவளைப் பார்த்து, நயமாகவே, நன்றாகப் பார்த்து தன் இந்திரியங்கள் பலமிழந்த நிலையிலும் தசரத ராஜா கைகேயி, என் அங்கங்களைத் தொடாதே. பாபம் செய்யத் துணிந்த உன்னை நான் கண்ணால் கூட காண விரும்பவில்லை. நீ எனக்கு மனைவியுமல்ல, உறவினளும் அல்ல. உன்னை அண்டி வசிப்பவர்கள் எல்லோருமே எனக்கு உற்றாரும் அல்ல. நானும் அவர்களுக்கு பந்து அல்ல. அர்த்தம் என்ற பொருளே, செல்வமே பெரிதென்று நினைத்த உன்னை நான் தியாகம் செய்கிறேன். நீ தான் தர்மத்தையே விட்டவளாயிற்றே. திருமண காலத்தில் அக்னி சாக்ஷியாக எந்த கையைப் பற்றினேனோ, இந்த உலகிலும், பரலோகத்திலும் கூட அதை விட்டேன். பரதன் அரசை அடைந்து மகிழ்ச்சியடையட்டும். அவனும் எனக்கு பிதா என்ற முறையில் எந்த கடனும் செய்ய வேண்டாம். அவன் செய்தாலும் என்னை வந்தடையாமல் போகட்டும். திடுமென நடந்த நிகழ்ச்சிகளின் பலனாக உடல் இளைத்து கிடந்த கௌசல்யா, உடல் பூரா புழுதி மண்டியிருந்த அரசனைத் தூக்கி நிறுத்தி, பேச்சை திசை திருப்பினாள். காம வசப்பட்டு ஒரு ப்ராம்மணனைக் கொன்று விட்டு, அக்னியில் கை வத்தவன் போல தவித்துக் கொண்டு, தபஸ்வியாக செல்லும் புத்திரனை நினைத்து நினைத்து வருந்திய அரசன், ரதம் போன வழியை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு, தன் சுய நிலையை அடையவே இல்லை. க்ரஹணத்தால் பீடிக்கப் பட்ட சூரியனைப் போல தன் தேஜஸை இழந்தான். பிரியமான புத்திரனை திரும்ப திரும்ப நினைத்து கண்ணீர் பெருக்கினான். அவன் நகரத்தின் எல்லைக்குப் போய் விட்டான் என்று அறிந்ததும் புலம்பினான். என் மகனை ஏற்றிச் சென்ற ரதம் போன பாதை தெரிகிறது. என் மகனைக் காணவில்லையே. சுகமான உயர்ந்த படுக்கையில் படுத்து சந்தன வாசனை கம கமக்க, தகுதி வாய்ந்த ஸ்த்ரீகள் விசிறி விட, உத்தமமான என் மகன் தூங்குவான். அவன் இன்று எங்கேயோ மரத்தின் அடியில் கட்டையையோ, கல்லையோ தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கப் போகிறான். புழுதி படிந்த உடலுடன் ஒரு வசதியுமில்லாத பரதேசியைப் போல விழித்தெழுவான். ப்ரஸ்ரவண மலையில் பெண் யானைகளின் இடையில் ரிஷபம் போல நிற்கும் இவனை, லோக நாதனான ராமன் அனாதையாக சுற்றுவதை காட்டு ஜனங்கள் காண்பார்கள். ஜனகனுடைய செல்ல மகள் சீதை முள் நிறைந்த வழியில் நடந்து களைத்து போயிருப்பாள். வனம் என்றால் என்ன என்று தெரியாத வரை சரி. இப்பொழுது ப்ரத்யக்ஷமாகப் பார்த்து பயந்து போய் இருப்பாள். பயங்கரமாக நாய்கள் குரைப்பதைக் கேட்டு நடுங்குவாள். கைகேயி, நன்றாக இரு. இஷ்டப்பட்டதை கேட்டு வாங்கிக் கொண்டு, விதவையாக ராஜ்யத்தை அனுபவி. நான் உயிருடன் இருப்பேன் என்று எண்ணாதே. அந்த ராமன் இல்லாமல் எனக்கு உயிருடன் இருக்கவே பிடிக்கவே இல்லை. புலம்பியவாறே அரசன் நகருக்குள் வந்தான். நாற் சந்திகள் சூன்யமாக கிடந்தன. கடை வீதிகள் மூடப்பட்டிருந்தன. ராஜ வீதி அமைதியாக கிடந்தது. எங்கும் துக்கத்தின் சாயலே வீசியது. ராமனையே நினைத்தபடி நடந்து வந்து தன் வீட்டுக்குள் நுழைந்தது மேகத்தில் சூரியன் மறைந்தது போல இருந்தது. ராம, லக்ஷ்மண, சீதை இல்லாத வீடு, நுழையவே பிடிக்கவில்லை. தழ தழத்தக் குரலில், மிகவும் பரிதாபமாக ராம மாதாவின் அறைக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள். வேறு எந்த இடத்திலும் எனக்கு ஆறுதல் கிடைக்காது. என்றான். இதைக் கேட்டு காவற்காரர்கள், அரசனை கௌசல்யையின் அறையில் கொண்டு விட்டனர். கௌசல்யையின் அறையில் கட்டிலின் மேல் அமர்ந்தும் கூட மனம் வாடியது. சந்திரன் இல்லாத ஆகாயம் போல இரண்டு புதல்வர்களும், மருமகளும் இல்லாத வீடு அரசனுக்கு வேதனையளித்தது. கைகளை உயரத் தூக்கி ஓவென்று கதறி அழுதார். ஹா ராமா, என்னைக் கொன்று விடு. எவர்கள், ஆரோக்யமாக வாழ்ந்து, ராமன் திரும்பி வருவதைக் காண கொடுத்து வைத்திருக்கிறார்களோ, அவர்களே பாக்யசாலிகள். ராத்திரி நேரம் தனக்கு கால ராத்திரியே என்று எண்ணினான். நள்ளிரவில் கௌசல்யையைப் பார்த்து, ராமனைத் தொடர்ந்து சென்ற என் கண்கள் இன்னும் திரும்பவில்லை. கௌசல்யே, உன்னை பார்க்க முடியவில்லை. சாதுவே, என்னைக் கொஞ்சம் கையினால் தொட்டு பாரேன். ராமனையே நினைத்து மிகவும் பரிதவித்துக் கொண்டிருந்த கௌசல்யை, அருகில் வந்தமர்ந்தவள், இது வரை அடக்கி வைத்திருந்த தன் துக்கத்தை தாள மாட்டாமல் கதறினாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தசரதாக்ராந்தோ என்ற நாற்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 43 (120) கௌசல்யா பரிதேவனம் (கௌசல்யா வருந்துதல்)
படுக்கையில் துவண்டு கிடந்த மகாராஜாவைப் பார்த்து கௌசல்யா புத்ர சோகத்தால் வருந்தியவளாக அரசனிடம் சொன்னாள். சர்ப்பம் தன் விஷத்தைக் கக்கி விட்டு, நிச்சிந்தையாகத் திரிவது போல, கைகேயி ராமனிடத்தில் விஷத்தைக் கக்கி விட்டு, அவனை காட்டுக்கும் அனுப்பி விட்டு, தன் காரியம் ஆன திருப்தியோடு வளைய வருவாள். என்னை இன்னும் அதிகமாக பயமுறுத்தி விரட்டப் போகிறாள். வீட்டுக்குள் நுழைந்து விட்ட பாம்பு பயமுறுத்துவது போல. இந்த நகரத்தில் ராமன் நடந்து சென்று பிக்ஷை எடுத்து வாழ வேண்டும். வேண்டிய வரங்களைத் தானே தரக் கூடிய சக்தியுடையவன் என் மகன். க3ஜ ராஜன் போல நடப்பவன். வில்லேந்தி கம்பீரமான ஆக்ருதியோடு, இப்பொழுது சகோதரனுடனும், மனைவியுடனும் காட்டில் வசிக்கப் போகிறான். கைகேயி சொன்னதைக் கேட்டு அவனைக் காட்டுக்கு அனுப்பி விட்டீர்கள். இதுவரை கண்டறியாத வனப் பிரதேசம், என்னவெல்லாம் கஷ்டங்கள் இருக்குமோ. எப்படித்தான் நாட்களை கழிக்கப் போகிறார்களோ. ஆடை ஆபரணங்களை களைந்து விட்டு அனுபவிக்க வேண்டிய காலத்தில் மரவுரி உடுத்தி காட்டுக்கு விரட்டி விட்டீர்கள். நன்றாக சாப்பிட்டு பழக்கமானவர்கள், காட்டில் கிடைக்கும் பழங்களையும், தழைகளையும் சாப்பிடப் போகிறார்கள். திரும்பவும் மனைவி சகோதரர்களுடன் ராமனைக் காணக் கூட எனக்கு ஆயுள் இருக்கப்போகிறதோ, இல்லையோ. துக்கம் தான் என்னை அரித்து எடுக்கிறதே. தூங்கி எழுவதற்கு முன் வருவதாகச் சொன்னான். இரண்டு வீரன்களும் பிரதிக்ஞை முடிந்து திரும்பி வரும் பொழுது, இந்த ஊர் ஜனங்கள், எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள். புகழ் வாய்ந்த மகிழ்ச்சி நிறைந்த ஜனங்களுடன், ஏற்றிய கொடிகள் பறக்க, திரும்பி வந்த ராஜகுமாரர்களைப் பார்த்து, பர்வ காலத்தில் சமுத்திரம் போல ஆரவாரிக்கப் போகிறது. மாடு மேய்ப்பவர்கள் திரும்பி வரும் பொழுது களைத்துப் போன தன் பத்னியை, ரிஷபத்தில் ஏற்றி ஓட்டி வருவது போல சீதையை ரதத்தின் முன்னால் வைத்து ஓட்டி வருவான். ராஜ மார்கத்தில் கூட்டமாக நின்று ஜனங்கள் பொரிகளை இரைத்து வரவேற்கப் போகிறார்கள். சுபமான குண்டலங்களைத் தரித்து அவர்கள் வரும்பொழுது கன்யா ஸ்த்ரீகளும், ப்ராம்மணர்களும், பழம் முதலியவைகளை கையில் வைத்துக் கொண்டு வரவேற்பார்கள். முன்னூறு ஆண்டு காலமாக சீராட்டி வளர்த்தது போல இருக்கிறது. முன் ஜன்மத்தில் கன்றுக்கு பாலூட்ட நினைக்கும் தாய் ஜீவன்களின் ஸ்தனங்களை, கொடுமையாக அடித்து வதைத்தேனோ, இப்பொழுது அனுபவிக்கிறேன். சிங்கம் வந்து கன்றை அடித்து பிரித்துக் கொண்ட பின், தாய்ப் பசு வாடுவது போல வாடுகிறேன். கைகேயி பலாத்காரமாக என் மகனை என்னிடமிருந்து பிரித்து விட்டாளே. நல்ல குணவானும், சாஸ்திரங்களை அறிந்தவனுமான என் ஒரே மகன் இல்லாமல் நான் உயிருடன் இருக்கவே விரும்பவில்லை. எனக்கு சக்தியில்லை. பலசாலியான நெடிதுயர்ந்து வளர்ந்த என் மகன் அருகில் இல்லாமல் நான் வாழ்ந்து தான் என்ன செய்யப் போகிறேன். என் சரீரத்தில் எழும் துக்கத்தின் காரணமாக அக்னி ஜ்வாலை, சூரியன் தன் கிரணங்களால் பூமியைத் தகிப்பது போல தகிக்கிறது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கௌசல்யா பரி தே3வனம் என்ற நாற்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 44 (121) சுமித்ராஸ்வாசனம் (சுமித்திரை சமாதானம் செய்தல்)
உத்தமமான ஸ்த்ரீயான கௌசல்யை அழுவதைப் பார்த்து தர்மத்தில் சிறந்த அறிவுள்ளவளான சுமித்திரை சமாதானம் செய்தாள். ஆர்யே, உன் மகன் புருஷோத்தமன். நல்ல குணங்கள் உடையவன். நீ இப்படி பரிதவித்து அழுவதால் என்ன பயன்? தந்தை சொல்லைக் கேட்டு ராஜ்யத்தைத் துறந்து வனம் போய் இருக்கிறான். தந்தையின் சத்யவாதி என்ற பெயர் நிலைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக தானே ஏற்றுக் கொண்டு வனம் சென்றான். எப்பொழுதும், அவன் எங்கு இருந்தாலும், சீலத்தில் சிறந்த அறிஞர்கள் சூழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள். அதனால் அவன் உத்தமமான வழியில் தன் காலத்தை செலவழித்துக் கொண்டு, அதாவது பயன் தரும்படியான வாழ்க்கையை எங்கு இருந்தாலும் வாழ்ந்து கொண்டிருப்பான். தவிர, லக்ஷ்மணன் உடன் இருக்கிறான். மாசற்ற நற்குணங்களுக்கு இருப்பிடம் அவன். ராமனுடன் சேர்ந்து வாழ்வதில் அவனுக்கும் தான் லாபம். அரண்ய வாசத்தில் என்ன துக்கம் என்று அறிந்தே ஜானகி உடன் சென்றிருக்கிறாள். பிரபுவான தசரத மகாராஜா, கீர்த்தி என்னும் கொடியை, உலகம் முழுவதும் பரப்பி வைத்திருக்கும் பொழுது, தர்மம் சத்யம் இவற்றை செல்வமாக கிடைக்கப் பெற்ற ராமன் எதைத் தான் சாதிக்க மாட்டான். ராமனுடைய வீர்யத்தையும், நன்னடத்தையும் கண்டு சூரியனும் அவனை தகிக்க மாட்டான். எப்பவுமே சுகமாக, சரியான சீதோஷ்ன நிலையில், காற்றும் அவன் மேல் மென்மையாக வீசுவான். இரவில் தூங்கும் பொழுது, சந்திரன் தன் குளுமையான கிரணங்களால், மெதுவாக தொட்டு பரிசுத்தமான ராமனை, தந்தை பாதுகாப்பது போல பாதுகாப்பான். திமித்வஜசுதன் என்ற ராக்ஷஸனை (திமி- திமிங்கிலம் இதை கொடியில் உடைய இந்திரன், அவனுக்கு உதவி செய்ய தசரதர் சென்ற பொழுது தான் கைகேயி உதவி செய்ததும், அரசனை காப்பாற்றி, வரம் பெற்றதும்) யுத்தத்தில் வென்றான், என்று தெரிந்தவுடன் ப்ரும்மா தானே வந்து ரணத்தில் திவ்யாஸ்திரங்களை கொடுத்தாரோ, அந்த வீர புருஷனின் மகன் ராமன். புருஷவ்யாக்4ர, மனிதருள் வ்யாக்4ரம்-புலி போன்ற பலசாலி. தன் புஜ பலத்தில் அசாத்திய நம்பிக்கையுடையவன். காடானாலும், தன் வீட்டில் இருப்பது போலவே நிச்சிந்தையாக இருப்பான். எவனுடைய அம்பு போகும் திசையில் சத்ருக்கள் மடிந்து விழுவார்களோ, அந்த வீரனுடைய அதிகாரத்தில் பூமி ஏன் நிலைத்து நிற்காது. எந்த லக்ஷ்மி, சௌர்யம், கல்யாண குணங்கள் இவை ராமனிடத்தில் இருக்கின்றனவோ, இதே காரணமாக வனவாசத்திலிருந்து திரும்பி வந்து ராமன் ராஜ்யத்தை அடைந்தே தீருவான். இவன் சூரியனுக்கும் சூரியனாக இருப்பான். பிரபுக்களுக்கு பிரபு. லக்ஷ்மியின் லக்ஷ்மித்வம் இவனே. கீர்த்தியின் முதன்மையாக நிற்பவன். பொறுமைக்கே பொறுமை சொல்லித்தருபவன் ஆவான். தேவதைகளுக்கும் இவன் தேவன் ஆவான். ஜீவன்களுக்குள் உத்தமமானவன். இவனுக்கு வனம் என்ன? நகரம் என்ன? எதையும் அவன் கஷ்டமாக நினைக்க மாட்டான். இந்த வீரன், பூ4 தேவியையும், வைதேஹியையும், லக்ஷ்மியையும் சேர்த்து அடைவான். இம்மூவருடனும் சேர்ந்து ராஜ்யாபிஷேகம் செய்து கொள்வான். அயோத்யா ஜனங்கள், துக்கத்தினால் உண்டான கண்ணீர் பெருக விட்டு, நகரை விட்டு வெளியேறிச் செல்லும் எந்த ராமனைப் பார்த்து சோகத்தால் பீடிக்கப் பட்டவர்களாக எல்லோருமாக சீதையைப் போலவே, பின் தொடர்ந்து சென்றனரோ, அந்த தோல்வியையே அறியாத வீரனுக்கு லக்ஷ்மி தேவியை அடைவது என்ன கஷ்டம். வில்லைத் தாங்குவதில் ஸ்ரேஷ்டனான லக்ஷ்மணன், பாணங்களும், வாள், அஸ்திரங்கள் இவற்றை ஏந்தி, ராமனுக்கு முன்னால் செல்லும் பொழுது ராமனால் சாதிக்க முடியாதது என்று என்ன இருக்க முடியும்? வன வாசம் முடிந்து திரும்பி வந்த ராமனை இதோ கண்டதாகவே நினைத்துக் கொள். இந்த மோகமும், சோகமும் எதற்கு? இதை விடுங்கள் தேவி. நான் சொல்வது சாத்யமே. சந்த்ரோதயம் போல, எதிரில் வந்து உங்கள் கால்களில் விழுந்து வணங்கும் மகனை இதோ காண்பீர்கள். திரும்பி வந்து முடி சூட்டிக் கொண்டவனாக மகத்தான ராஜ்ய ஸ்ரீயை ஏற்றுக் கொண்டு இந்த கண்களால் காணும் பொழுதும் கண்ணீர் விடுவீர்கள். ஆனால் அது ஆனந்த மிகுதியால் வரும் கண்ணீராக இருக்கும். ராமனிடத்தில் சிறிதளவு கூட சோகமோ, துக்கமோ தென்படவில்லை. சீக்கிரமே, சீதையுடனும், லக்ஷ்மணனுடனும், உங்கள் மகனைக் காண்பீர்கள். மேலும், தேவீ, நீங்கள், இங்குள்ள மற்ற அனைத்து ஜன சமூகத்தையும் சமாதானப் படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். இந்த சமயம் இது போல மனதை தளர விடலாமா? ராகவனை மகனாகப் பெற்றவள், இது போல சிந்தனை வயப் படுவது பொருத்தமாக இல்லையே. ராமனைத் தவிர வேறு ஒருவரை, இவ்வாறு நியாயமாகச் செல்பவனைக் காண்பது அரிது. தன் சுற்றார், நண்பர்களுடன் கூட வந்து நமஸ்கரிக்கும் மகனைக் கண்டு, ஆனந்த கண்ணீர் விடும் நாள் அதிக தூரத்தில் இல்லை. மழைப் பொழியும் மேகத்தின் இடையில் மின்னல் தோன்றுவது போல, உங்கள் மகன் நல்ல கொடையாளி.. அயோத்யா திரும்பி வந்த உடனேயே, தன் மிருதுவான கைகளால் உங்கள் பாதங்களை ஸ்பர்சிப்பான் என்பது நிச்சயம். வணங்கி நமஸ்காரம் செய்யும் மகனை, நண்பர்கள் கூட்டத்தோடு வரும் சூரனை, மேகங்கள் மலைகளின் மேல் நீர் பொழிவது போல உன் ஆனந்த கண்ணீரால் ப்ரோக்ஷிப்பாய். (ப்ரோக்ஷணம்-நீர் தெளித்தல்). இது போல பல சமாதான வார்த்தைகளால் சமாதானப் படுத்தி, ராமனுடைய தாயாரிடம் பேசி சுமித்ரா நிறுத்தினாள். நரதேவனான தசரத பத்னியும், லக்ஷ்மணன் தாயுமான சுமித்ரை சொன்னதைக் கேட்டு ராம மாதாவின் துக்கம் அவளை விட்டு நீங்கியது, மிகக் குறைவான நீரைக் கொண்ட மேகம் சரத் காலத்தில் காணாமல் போவது போல.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சுமித்ராஸ்வாசனம் என்ற நாற்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 45 பௌர யாசனம் (ஊர் ஜனங்களின் வேண்டு கோள்.)
சத்ய பராக்ரமனான ராமனை பின் தொடர்ந்து சென்ற ஜனங்கள், வன வாசம் செல்லும் அவனிடம் மிகவும் ஈ.டுபாடு கொண்டிருந்தவர்கள். சுஹ்ருத் தர்மம்- திரும்பி வர வேண்டும் என்று விரும்பும் சுற்றத்தாரோ, உற்றாரோ, அவர்களை வெகு தூரம் சென்று வழியனுப்பக் கூடாது, என்று தசரத ராஜா சொன்னதையும் மீறி, பலமாக திரும்பி செல்ல வேண்டியதையும் கேட்காமல், ரதத்தை தொடர்ந்து வந்து விட்டிருந்தனர். அயோத்தியில் இருந்த புருஷர்களுக்கு இவன் பூர்ண சந்திரன் போன்றவன். தன் பிரஜைகள் திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்ட பொழுதும், தன் தந்தையின் வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் ராமன் வனம் செல்வதை மேற் கொண்டு விட்டான். சினேகம் நிறைந்த விழிகளால் அவர்களைப் பார்த்து, தன் சொந்த பிரஜைகளைப் (குழந்தைகளை) பார்ப்பது போல மிக அன்புடன் சொன்னான். -அயோத்யா நகர் ஜனங்களே, என்னிடம் நீங்கள் காட்டும் இந்த அன்பை பரதனிடமும் காட்டுங்கள். இந்த செயலில் தான் நீங்கள் என் விருப்பத்தை நிறைவேற்றியவர்கள் ஆவீர்கள். பரதனும் என்னைப் போலவே கல்யாண சாரித்திரம்- நன்னடத்தை, உள்ளவன். அவன் ஆட்சியில் முடி சூட்டப் பெற்று, உங்கள் விருப்பங்களை கட்டாயமாக பூர்த்தி செய்வான். வயதில் பாலனானாலும், ஞானத்தால் முதியவன். ம்ருதுவாக அதே சமயம் வீர்யம் என்ற எதிர் மறை குணங்கள் உடையவன். உங்கள் பயங்களை போக்கி, உங்களுக்கு அனுகூலமான ஆட்சியை நடத்துவான். அவன் ராஜ குமாரர்களுக்கான யோக்யதாம்சம் நிரம்பியவன். தேர்ந்து எடுக்கப் பட்டவன். தவிர எனக்கு பெரியோர்களின் கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பும் உள்ளது. என் விருப்பம் என்ன என்றால், நான் வன வாசம் போனதால், மகாராஜா சிரமப் படாமல் வருந்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். – தாசரதியான ராமன் இவ்வாறு தர்மத்தை உபதேசம் செய்யச் செய்ய பிரஜைகள் அவனையே தங்கள் அரசனாக வேண்டினர். லக்ஷ்மணனும் ராமனுமாக, தீனமாக மன்றாடும் பிரஜைகளை தடுத்து நிறுத்தவே முயன்றனர். கண்களை கண்ணீர் மறைக்க உடன் தொடரும் இந்த ஜனங்களை என்ன செய்ய? ஞானத்தாலும், வயதிலும் மும்மடங்கு மூத்த ப்ராம்மணர்கள் கூட, வயோதிகத்தால் நடுங்கும் தலையுடன், தூரத்திலிருந்தே குதிரைகளைப் பார்த்து உயர் ஜாதி குதிரைகளே, திரும்பி வாருங்கள். போக வேண்டாம். உங்கள் எஜமானனுக்கு நன்மையைச் செய்யுங்கள். ஜீவன்கள் காதுகள் உடையவையே. முக்கியமாக குதிரைகளுக்கு கேட்கும் சக்தி மிகச் சிறந்தது. உங்களுக்கு நிச்சயம் எங்கள் முறையீடு கேட்கும். தயவு செய்து திரும்பி வாருங்கள். அவன் சுத்த வீரன். தர்மாத்மா. த்ருட விரதன். நல் வழியில் செல்பவன். அவனை ஊருக்குள் அழைத்து வருவது தான் உங்கள் வேலை. ஊருக்குள்ளிருந்து செல்வத்தை வெளி யேற்றிக் கொண்டு செல்வது சரியல்ல. இவ்வாறு வருந்தி புலம்பும் வயோதிகர்களான ப்ராம்மணர்களின் குரலைக் கேட்டு ராமன் வேகமாக ரதத்தை விட்டு இறங்கினான். சீதையுடன், லஷ்மணனுடனும் அந்த ப்ராம்மணர்களின் அருகில் சென்றான். அவர்களுடன் சரி சமமாக நடந்தே செல்ல ஆரம்பித்தான். மரியாதை கருதி அவன் அவர்களுடன் நடந்து வருகிறான் என்பதை புரிந்து கொண்ட ப்ராம்மணர்கள் திகைத்தனர். மிகவும் வேதனையுடன் ராமனைப் பார்த்து சொன்னார்கள் எஎங்களுடைய ப்ராம்மண்யம் எனும் ப்ரும்ம ஸ்வரூபம் உன்னை அனுசரித்து வருகிறது. எங்கள் தோள்களில் ஏற்றிக் கொண்டு நீ போகும் இடம் எல்லாம், அக்னியேயானாலும் தொடர்ந்து அக்னிக்குள் விழுவோம். வாஜபேய யாகங்கள் செய்து பழக்கமான எங்கள் சிஷ்யர்களைப் பார். ஜலம் வற்றியவுடன் மேகத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நடக்கும் ஜீவன்கள் போல இவர்களும் எங்களைத் தொடர்ந்து வருகிறார்கள். குடை கிடைக்காமல் போன உனக்கு வெய்யிலில் வருந்தும் பொழுது, இந்த சிஷ்ய கூட்டங்களாலேயே உனக்கு நிழல் தரும் குடைகளை அமைத்துத் தருவோம். இந்த சிஷ்யர்கள் வாஜபேய யாகம் செய்ய பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இளம் ப்ரும்மசாரிகள். எங்கள் புத்தி எப்பொழுதும் வேத மந்திரங்களையே மனனம் செய்து கொண்டிருக்கும். உன் காரணமாக அந்த புத்தி வனவாசத்தை பின் தொடருவதாக ஆனது. எங்கள் உள்ளத்திலேயே வேதம் நிலைத்து நிற்கிறது. அதுவே எங்களுக்கு மிகச் சிறந்த தனம். வீடுகளில் மனைவிகள் பாதுகாப்பாக வசிக்கிறார்கள். எங்கள் புத்தி மந்திர பாராயணங்களால் பதப்பட்டு போய் இருந்தும், உன்னிடத்தில் நிலைத்து நிற்கிறது. ஒரு விஷயம் எங்களுக்கு புரியவில்லை. தர்மத்தையே நினைத்து, தர்மத்தையே செய்து வரும் உன்னிடத்தில் அதர்மமாக ஒரு காரியம் நடந்தேறுமானால், தர்மத்தை பின் தொடர்ந்து போய் நாங்கள் சாதிக்கப் போவது என்ன? அதனால் நாங்கள் யாசிக்கிறோம், திரும்பி வா. வெண்மையான ஹம்சம் போல நரைத்த தலையுடன், ஆசார நியமங்களை கடை பிடித்து சுபமான வாழ்கை நடத்தியவர்கள், பூமியில் விழுந்து வணங்கியதால் புழுதி மண்டிய சரீரத்தோடு பல யாகங்கள் செய்தவர்கள், இங்கு கூடியிருக்கும் ப்ராம்மணர்கள். அந்த யாகங்களின் பூர்த்தி நீ திரும்பி வந்து தான் செய்தாக வேண்டும். உலகில் உயிர்கள் அசையும், அசையாத பொருட்களும் பக்தியை செய்கின்றன. யாசிக்கும் இந்த பக்தர்களிடம் நீயும் உன் பக்தியைக் காட்டு. உன்னைத் தொடர்ந்து வேகமாக நடக்க சக்தியற்றவர்களான மரங்கள், அடி வேரிலிருந்து வளைந்து காற்று வேகத்தில் உன்னைத் தொடுவது போல ஆடுகின்றன. ஓ வென்று அழுவது போல ஓசை கேட்கவில்லை? மரங்களில் அமர்ந்திருக்கும் பக்ஷிகள், அசையாமல், ஓரு வேலையும் ஓடாமல், ஆகாரம் கூட இன்றி உன்னைத் திரும்பி வர யாசிக்கின்றன. இவ்வாறு புலம்பிக் கொண்டே வரும் ப்ராம்மணர்கள், திரும்பி வரச் சொல்லி வற்புறுத்திக் கொண்டே வரவும், தமசா நதி ராகவனை தடுத்து நிறுத்துவது போல முன்னால் வழி மறித்தது. சுமந்திரர் களைத்துப் போன குதிரைகளை ரதத்திலிருந்து விடுவித்து, தண்ணீர் குடிக்க வைத்து, தமஸா நதிக் கரையில் மேய விட்டார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌர யாசனம் என்ற நாற்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 46 (123) பௌர மோஹனம் (ஊர் ஜனங்களின் கவனத்தை திசை திருப்புதல்)
ரம்யமான தமசா நதிக் கரையில் ராகவன், சௌமித்திரியிடம் சொன்னார். இப்போதைக்கு ஒரு இரவு முன்னால் நாம் வனம் புறப்பட்டு வந்தோம், வன வாசம் செய்வோம் என்று சொல்லிக் கொண்டு வந்தோம். அதை நினைத்து நீ மனதை வாட்டிக் கொள்ளாதே. சூன்யமான இந்த காட்டைப் பார். எதிரில் அழுவது போல தெரிகிறது. மிருகங்களும் பக்ஷிகளும் ஒளிந்து கொண்டு இருக்கின்றனவா, தெரியவில்லை. நம் தந்தையின் ராஜதானி அயோத்யா. அயோத்யா நகர் ஆண் பெண்கள் சகலரும், நாம் விட்டு வந்ததை எண்ணி வருந்துகின்றனர். ஜனங்கள், தசரத ராஜாவிடம் அவருடைய குணங்களால் ஈ.ர்க்கப் பட்டு மிகவும் அன்பு செலுத்தி வந்தனர். உன்னையும், என்னையும் சத்ருக்ன பரதர்களையும் அவ்வாறே எண்ணினர். தந்தையை நினைத்து கவலையாக இருக்கிறது. அம்மாவும் என்ன செய்வாளோ என்று இருக்கிறது. அழுது அழுது கண் தெரியாமல் போய் விடக் கூடாது. பரதன் நல்லவன். அவன் வந்து விட்டால் நம் பெற்றோரை தர்மார்த்த காமம் நிறைந்த நல்ல வார்த்தைகளைச் சொல்லி சமாதானப் படுத்துவான். பரதனுடைய நேர்மையை நினைத்தால் நம் தாய் தந்தையரைப் பற்றி கவலைப் பட வேண்டாம். அவன் பார்த்துக் கொள்வான். என்னை பின் தொடர்ந்து நீ வந்து விட்டாய். வைதேஹியை பாதுகாப்பாக வைக்க இடம் தேட வேண்டும். இன்று இரவு வெறும் தண்ணீர் மட்டும் குடித்து, பொழுதைக் கழிப்போம். வனத்தில் கிடைக்கும் பொருட்கள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும் வேண்டாம் என்று சௌமித்திரியிடம் சொல்லி விட்டு, சுமந்திரனிடம், உன் குதிரைகளை அவிழ்த்து விட்டு ஒய்வு எடுத்துக் கொள் என்று சொன்னார். சூரியன் அஸ்தமித்தவுடன் சுமந்திரரும் குதிரைகளை ஆஸ்வாசப் படுத்தி, அவைகளுக்கு உணவு கொடுத்து கட்டி வைத்து விட்டுத் திரும்பினார். சந்த்யா கால ஜபங்களை முடித்துக் கொண்டு, இரவு தூங்க படுக்கையை லக்ஷ்மணனுடன் சுமந்திரரும் சேர்ந்து தயார் செய்யலானார்கள். மரத்தின் இலைகளைக் கொண்டு தமசா நதிக் கரையில் அமைத்த அந்த படுக்கையில், ராமர் , சௌமித்திரியுடன், மனைவியுடனும் அமர்ந்தார். ராமரும் சீதையும் தூங்கிய பின் சௌமித்திரி விழித்திருந்து, சுமந்திரனுடன் அவர்களைப் பற்றியே பேசிக் கொண்டு இரவைக் கழித்தான். பொழுது விடிந்தது. ராமர் அந்த இரவை நதிக் கரையில் (கோகுல) பசுக்கள் நிறைந்து இருந்த தமஸா நதியின் அருகில் இருந்து வந்த சப்தங்களால் தூக்கம் கலைந்து எழுந்தார். சாதாரண ஊர் ஜனங்கள் போலவே இயற்கையின் மடியில் வசித்தார். தம் வீடுகளில் சௌக்யமாக இருக்க வேண்டிய இவர்கள், நமக்காக, நம் கஷ்டத்தை தங்களுடையதாக எண்ணி இங்கு மரத்தடிகளில் தூங்குகிறார்கள். பார். இவர்கள் நம்மை திருப்பி அழைத்துச் செல்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். உயிரை விட்டாலும் விடுவார்கள். இந்த முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இவர்கள் தூங்கும் பொழுதே நாம் மெதுவாக எழுந்து சென்று விடுவோம். மேலும் இந்த இஷ்வாகு நகர் வாசிகள், அதிக நேரம் தூங்கவும் மாட்டார்கள். நாம் ராஜ குமாரர்களாக இருந்து கொண்டு ஊர் ஜனங்கள் நம் பொருட்டு கஷ்டங்களை அனுபவிக்க விடக் கூடாது. நம் கஷ்டம் நம்மோடு. இவர்களையும் வருத்தக் கூடாது. நியாயமான இந்த வார்த்தைகளைக் கேட்டு லக்ஷ்மணன், எனக்கும் அப்படித் தான் படுகிறது. சீக்கிரம் ரதத்தில் ஏறிக் கொள்வோம். சுமந்திரனைப் பார்த்து ராமர், ரதத்தை தயார் செய் என்று சொல்ல, சீக்கிரம் அரண்யத்தின் உட்பகுதிக்குச் செல்வோம். அது தான் சரி என்றார். சுமந்திரரும் உடனே கயிறுகளை எடுத்து, குதிரைகளை ரதத்தில் பூட்டி, இதோ தயாராகி விட்டது, சீதை லக்ஷ்மணன் கூட ஏறிக் கொள்ளுங்கள் என்று சொல்லவும், ராகவனும் வேகமாக ஏறி பெருகி ஓடும் தமஸா நதியைக் கடந்து சென்றார். நதியைக் கடந்து, கொடும் பிராணிகளுக்கும் அபயம் தரும் அடர்ந்த காட்டுப் பாதையை அடைந்தார்கள். தடங்கல் இல்லாத மங்களகரமான வழியாக அது இருந்தது. ஊர் ஜனங்களை திசை திருப்புவதற்காக அவர் சுமந்திரனிடம் சொன்னார் சாரதே, கிழக்கு முகமாக சற்று தூரம் ரதத்தை ஓட்டு. ஒரு முஹுர்த்த நேரம் வேகமாக ஓட்டி விட்டு திரும்பிவா. ஊர் ஜனங்கள் என்னைக் காணாதவாறு செய் என்றார். சாரதியும் அவ்வாறே செய்தார். திரும்பி வந்து ராமனையும், மற்ற இருவரையும் ஏற்றிக் கொண்டு ரதம் புறப்பட்டது. ரகுவம்சத்தை விளங்கச் செய்ய வந்த இருவரையும், சீதையுடன் தபோவன மார்கமாக செல்லும் விதமாக சாரதி குதிரைகளை கடிவாளத்தை இழுத்து வழி நடத்தினார். தானே மகாரதியான ராமன், சாரதி அழைத்துச செல்ல வனம் சென்றான். யாத்திரை மங்களகரமாக இருக்கும் பொருட்டு, ரதம் கிழக்கு முகமாக முதலில் சென்றது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌர மோகனம் என்ற நாற்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 47 (124) பௌர நிர்வ்ருத்தி (ஊர் ஜனங்கள் திரும்புதல்)
பொழுது விடிந்தது. ராகவனைக் காணாமல் ஊர் ஜனங்கள் மனம் வாடினர். கண்க ளி ல் நீர் வடிய, துக்கத்துடன் எதிரே தென் பட்டவர்களை ராகவனோ என்ற ஆவலுடனேயே நோக்கினர். ராகவனைக் காணவில்லை. அதனால் பெரிதும் துக்கம் அடைந்தனர். அந்த புத்திமானான ராமன் இல்லாமல் முகம் வாடி, தீனர்களாக பரிதாபமாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர். என்ன தூக்கம் தூங்கினோம். புத்தியை மழுங்க செய்யும் தூக்கத்தால் இன்று ராமனைக் காணாமல் தவிக்கிறோம். அகன்ற தோளும், நீண்ட கைகளும் உடைய ராமனை இனி எப்பொழுது காண்போம்? அவனும் தான் எப்படி பக்த ஜனங்களான நம்மை நடுவில் விட்டு விட்டு வனம் சென்றான். தன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளை தந்தை பரிபாலிப்பதைப் போல நம்மைக் காத்து வந்தவன். ரகு குல ஸ்ரேஷ்டன். நம்மை விட்டு எப்படி கானகம் போனான். இங்கேயே நாம் உயிரை விடுவோம். கூண்டோடு கைலாசமாக எல்லோரும் உயிர் விடுவோம். ராமனை விட்டு நாம் என்ன சுகம் கிடைக்கப் போகிறது என்று உயிர் வாழ வேண்டும்? இங்கு நிறைய பெரிய பெரிய உலர்ந்த கட்டைகள் கிடக்கின்றன. இவைகளைக் கொண்டு சிதை அமைத்து எல்லோருமாக உயிர் விடுவோம். நகரில், ஸ்த்ரீ பால, வ்ருத்தர்கள், அனைவரும் நம்மை எதிர் பார்த்து இருப்பார்கள். ராகவன் இல்லாமல் நாம் போய் நின்று என்ன சொல்வோம். ராகவனை நழுவ விட்டு விட்டோம் என்று சொல்வோமா? ஏற்கனவே நொந்து போய் இருக்கும் ஜனங்கள் இன்னும் அதிகமாக தவிப்பார்கள். வெற்றி வீரனான ராகவனும் நாமும் கிளம்பினோம். அவனை விட்டு தனியாக போய் நாம் அந்த நகர் ஜனங்களை எப்படி எதிர் கொள்வோம். கையைத் தூக்கி இவ்வாறு வருந்தியபடி, தங்களுக்குள் பேசிக் கொண்டு, கன்றைப் பிரிந்த தாய்ப் பசுவைப் போல மிகவும் வருத்தமடைந்தனர். சற்று தூரம் ரதத்தின் அடிச் சுவடுகளை பின்பற்றி நடந்தவர்கள், சுவடுகள் காணாமல் போகவும் திகைத்து திரும்பி வந்தனர். இது என்ன? இப்பொழுது என்ன செய்வோம்? தெய்வமே நமக்கு ப்ரதிகூலமாக இருக்கும்பொழுது, நாம் என்ன செய்ய முடியும் என்று வருந்தியவர்களாக, போன வழியிலேயே திரும்பி வந்து அயோத்தியை அடைந்தார்கள். ஊர் ஜனங்கள் அதே நிலையில் மனம் வாடிய நிலையிலேயே, கண்ணீர் பெருக நின்றிருந்தனர். வந்தவர்கள் தங்கள் அனுபவங்களை இவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அயோத்யா நகரமே சோபையிழந்து காணப் பட்டது. நீர் பாம்பை நீர் நிலையிலிருந்து ஓடிக் கொண்டிருக்கும் பொழுது கருடன் பிடித்துக் கொண்டு போனது போல இருந்தது. ஆகாசம் சந்திரன் இல்லாமல் சோபையில்லாமல் இருப்பது போலவும், சமுத்திரம் நீர் வற்றினால் போலவும், ஆனந்தம் இல்லாத அயோத்தி நகரத்தைக் கண்டனர். பெரும் செல்வம் படைத்த பெரிய மாளிகைகளுக்குள் நுழைந்தவர்கள், தன் பந்துக்கள், மற்றவர்கள் என்று கூட இனம் பிரித்து அறியாதவாறு அங்கு துக்கம் சூழ்ந்திருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌர நிர்வ்ருத்தி என்ற நாற்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 48(125) பௌராங்கனா விலாப: (ஊர் பெண்களின் புலம்பல்)
அடி பட்டது போல துடித்துக் கொண்டு, திரும்பி வந்த ஊர் ஜனங்கள், ஊருக்குள் வந்து மற்ற ஜனங்களுடன் தங்கள், மனத்தாங்கலை சொல்லி, துக்கத்தை பகிர்ந்து கொண்டனர். வந்தவர்களும் சரி, இங்கு இருந்தவர்களும் சரி, கண்கள் குளமாக உடல் சக்தியனைத்தும் வடிந்து விட்ட நிலையில் இருந்தனர். தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று மனைவி குழந்தைகளுடன் இதே நினைவாக, கண்ணீர் பெருக்கியபடி இருந்தனர். வியாபாரிகள் கடை விரிக்கவில்லை. சந்தோஷமோ மகிழ்ச்சியோ எங்கும் காணப் படவில்லை. கடை வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. வீடுகளில் பலவிதமாக சமையல் செய்யப் படவில்லை. நஷ்டம் வந்ததால் வருத்தமோ, மிகுந்த பண வரவைக் கண்டு ஆனந்தமோ அடையவில்லை. முதல் மகனைப் பெற்ற தாய்கூட அளவுக்கு அதிகமாக மகிழவில்லை. வீடு தோறும், திரும்பி வந்த கணவனைப் பார்த்து, அழுது கொண்டே வீட்டு ஸ்த்ரீகள் இடைவிடாது நிந்தனை செய்து கொண்டிருந்தனர். வீட்டில் அவர்களுக்கு என்ன வேலை? மனைவி மக்களோடு என்ன வைத்திருக்கிறது? சுகங்களும் எதற்காக? ராகவனைக் காணாதவரை இவையெல்லாம் பயனற்றவையே. அவன் ஒருவன் தான் உலகிலேயே சத்புருஷன். எவன் சீதையுடன் வனம் கிளம்பிய ராமனை பின் தொடர்ந்தானோ, அந்த லக்ஷ்மணன் ஒருவன் தான் உலகிலேயே சத்புருஷன். வனத்தில் ராமனுக்கு பணிவிடைகள் புரிந்து கொண்டு செல்கிறான். நீர் நிலைகள் புண்யம் செய்தவை. பத்மங்கள் மலர்ந்து கிடக்கும் குளங்கள் புண்யம் செய்தவை. இவைகளில் ராமன் முதலானோர் இறங்கி சுத்தமான அந்த நீரில் குளித்தும், மூழ்கியும் தங்கள் களைப்பை போக்கிக் கொள்வர். காட்டில் உள்ள அடர்ந்த மரங்கள் ராகவனுக்கு சோபையளிக்கும். சிகரங்களை உடைய மலைகளும்,அதில் பெருகும் அருவிகளும், அது காடாக இருந்தாலும், மலைச் சிகரமோ, எங்கு ராமன் போகிறானோ, அவனை பிரியமான அதிதியாக வரவேற்று உபசரிப்பர். ப்4ரமரங்கள் (வண்டுகள்) சுற்றி வர, பூக்கள் நிறைந்த மரங்கள், ஏராளமாக பூக்கள் பூத்துக் குலுங்க, மகரந்தங்களின் வாசனை இதமாக வீச, ராமனுக்கு அழகிய காட்சியை காணக் கொடுக்கும். ராமன் வந்திருக்கிறான் என்று பருவம் இல்லாத காலத்தும் பழங்கள் பழுத்தும், பூக்கள் மலர்ந்தும் உள்ள மரங்களுடன் மலைகள் பரவசத்துடன் உபசாரமாக காட்சி தரும். அவைகளிலிருந்து வெளிப்படும் அருவிகளில், ராகவனின் உபயோகத்துக்கான நிர்மலமான நீர் அருவியாக வடியும். இந்த நீர் வடியும் அருவிகளும் பலவிதமாக அமைந்து கண்களுக்கு விருந்தாக அமையும். பல விதமான மரங்கள் மலைச் சரிவுகளில் ராமனுக்கு நிழல் கொடுத்து மனதை ரமிக்கச் செய்யும். ராமன் இருக்கும் இடத்தில் பயம் இல்லை. அவமானம் இல்லை. அவன் இயல்பாகவே சூரன். தசரதபுத்திரன். வெகு தூரத்தில் இருந்து கொண்டு அவனை பின் தொடருவோம். இது போன்ற மகாத்மாவான தலைவரின் பாதசுவடுகளை பின் பற்றி நடப்பதே சுகம் தரும். அவர் தான் நமக்கு நாதன். நம் ஜனங்களுக்கு அவன் தான் கதி. அவனே புகலிடம். நாங்கள் சீதைக்கு பணிவிடைகள் செய்கிறோம். நீங்கள் ராகவனுக்குச் செய்யுங்கள். இவ்விதம் ஊர்ப் பெண்கள் தங்கள் கணவன்மாரிடம் பேசினர். காடானால் என்ன? உங்களை ராமன் யோக க்ஷேமம் விசாரிப்பான். பெண்களை சீதா தேவி பார்த்துக் கொள்வாள். யார் தான் இங்கு மனம் இன்றி, அழகின்றி, துக்கம் தொண்டையை அடைக்க வளைய வரும் மக்களுடன் இருக்க விரும்புவர். கைகேயி வசம் ராஜ்யம் சென்றடைந்தால் நாம் உயிர் வாழ்ந்து தான் என்ன பயன்? மக்கட் செல்வத்தால், பணத்தால் என்ன பயன்? குலத்தைக் கெடுக்க வந்த கோடாலியாக, கைகேயி ஐஸ்வர்யம் ஒன்றே குறியாக கணவனையும் புத்திரனையும் தியாகம் செய்து விட்டாள். மற்ற யாரை அவள் விட்டு வைப்பாள்? அவள் ராஜ்யத்தில் நாம் ஏவல் செய்யும் வேலையாட்களாக வாழ மாட்டோம். அவளையும் அவள் குழந்தைகளையும் சேர்த்து சபிப்போம். கருனையின்றி எவள் தசரத அரசனின் மகனை நாட்டை விட்டுத் துரத்தினாளோ, யார் தான் அவளைச் சார்ந்து சுகம் காண முடியும். அதர்மமே உருவானவள், துஷ்டை. இங்கு நாயகனில்லாமல் எல்லாமே உபத்ரவம் அடையப் போகின்றன. ஒரு கைகேயி காரணமாக பெரிய அனர்த்தம் வர இருக்கிறது. ராமனை அனுப்பி விட்டு அரசன் உயிர் தரிக்க மாட்டான். தசரதர் இறந்தால் ஒரே அழுகை தான் மிஞ்சும். புண்யங்கள் அழிய, நல்ல கதியடையாமல் விஷத்தைக் குடித்து, தசரதனை பின் தொடர்ந்து செல்லுங்கள். போன இடம் தெரியாமல் அழிவீர்கள். (அஸ்ருதிம் வாபி க3ச்ச2த2). சேனையில் பசுக்களை (குதிரை, யானை முதலியவைகளை) சேர்த்து விடுவதைப் போல நாம் பரதனுடைய ராஜ்யத்தில் சேர்க்கப் பட்டோம். பூர்ண சந்திரன் போன்ற ராமன், சியாமள வர்ணன், எதிரிகளை அழிக்கும் வல்லமை வாய்ந்தவன். சத்ருக்கள் அவன் எதிரில் வரவே அஞ்சுவர். ஆஜானுபாஹுவாக நெடிதுயர்ந்தவன், லக்ஷ்மணனுக்கு முன் பிறந்தவன். தானே முன்னின்று பேசுபவன். மதுரமாக பேசுபவன். சத்யவாதி. மகா பலம் உடையவன். இருந்தும் சௌம்யமாக காட்சி தருபவன். உலகம் முழுவதும் சந்திரனை விரும்புவது போல விரும்பப் படுபவன். மதம் பிடித்த யானையின் நடையுடையவன். புருஷ சார்தூல என்று அழைக்கப்படுபவன். மகா ரதி. அவன் நடந்து செல்வதால் மகாரண்யங்கள் சோபை பெறும். நகரத்து ஸ்த்ரீகள் இவ்வாறு புலம்பி வருந்தினர். இப்படி அழுகையும், புலம்பலும், பயமுமாக பகல் கழிந்தது. சூரியனும் மறைந்தான். இரவு வந்தது. எங்கும் விளக்கு ஏற்றப் படாமலும், அத்3யயனம், நல் கதை பேசுதல் எதுவும் இன்றி, இருட்டு மூடியது போல ஆயிற்று அந்த நகரம். கடை வீதிகள் அமைதியாயின. மகிழ்ச்சி ஆரவாரம் எதுவுமின்றி, ஆகாயம் கூட நக்ஷத்திரம் இல்லாமலிருப்பது போல தோன்றியது. தங்கள் குழந்தைகளோ, சகோதரர்களோ நாடு கடத்தப் பட்டால் வருத்தம் அடைவது போலவே துக்கத்தை அனுபவித்த ஸ்த்ரீகள், தங்கள் மக்களை விட ராகவனின் பிரிவை அதிகமாக உணர்ந்தனர். தண்ணீர் வற்றி ஆரவாரம் இன்றி இருக்கும் சமுத்திரம் போல அன்று அயோத்யா நகரம், பாட்டு, ஆட்டம்,உற்சவம் எதுவுமின்றி, கடை வீதிகள் மூடிக் கிடக்க, மகிழ்ச்சியின்றி இருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌராங்கனா விலாபோ என்ற நாற்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 49 (126) ஜனபதாக்ரோச: (ஊர் ஜனங்களின் புலம்பல்)
ராமரும் மீதி இருந்த இரவு நேரத்தில், தந்தை சொல்லை நினைத்தபடி, அரண்யத்தின் உள்ளே செல்லலானான். நடந்து போய்க் கொண்டு இருக்கையிலேயே பொழுதும் விடிந்தது. சந்த்யா ஜபங்களை முடித்துக் கொண்டு, ஸ்னானம் செய்தார். எல்லை கரையில் இருந்த கிராமங்களை, பூத்துக் குலுங்கிய மரங்கள் நிறைந்த தோட்டங்களைப் பார்த்தபடி மெதுவாக நடந்து சென்றனர். தசரத அரசனை –திக்- கஷ்டம், இந்த தசரதன் காம வசமாகி விட்டான். பொல்லாத கைகேயி, பாபி, பாபத்தையே செய்யத் துணிந்தவள். கொடுமையானவள். மரியாதையை தொலைத்து விட்டு, கொடும் காரியத்தில் பிரவேசித்திருக்கிறாள். தார்மிகனான புத்திரனை வேறு யாராயினும் இப்படி நாட்டை விட்டுத் துரத்துவார்களா? வனம் புகுந்த ராமனை, அன்பும் கருனையும் உடைய பத்னி சீதையும் தொடர்ந்து போய் இருக்கிறாள். சுகமாகவே இருந்து பழகியவள். எப்படித்தான், இந்த காட்டின் துக்கங்களை சகித்துக் கொள்ளப் போகிறாளோ. ஐயோ, இந்த தசரத ராஜா, தன் மகனிடம் மிகவும் பிரியம் உள்ளவன் போல இருந்தானே, இப்படி அநியாயம் செய்து விட்டானே. ராமனைத் தியாகம் செய்ய எப்படித் துணிந்தான். மாசற்ற அரசிளங்குமரன், பிரஜைகளுக்கு பிரியமானவன், இவ்வாறு கிராமத்து ஜனங்கள் பேசிக் கொள்வதைக் கேட்டபடியே கோசல ராஜ்யத்தைக் கடந்து நடந்து சென்றனர். அச்சமயம் வேதவஹி என்ற சுபமான சிறு ஆறு எதிர்ப் படவும், அதைக் கடந்து அக்கரையில் அகஸ்தியர் வசிக்கும் இடம் உள்ள திசையில் நடந்தனர். நிறைய தூரம் நடந்த பின் சீதவஹா என்ற நதியைக் கடந்து கோமதி நதிக் கரையை அடைந்தனர். நீர் வெள்ளமாக ஓட அந்த நதி சமுத்திரமோ என்று சொல்லும் படி இருந்தது. வேகமாக செல்லும் குதிரைகளில் ஏறி அதையும் கடந்து சென்ற ராகவன் மயில்களும், ஹம்ஸங்களும் கூக்குரல் இடும் ஸ்யந்திகா என்ற நதியையும் கடந்தார். இந்த பிரதேசம் முன்னொரு சமயம் மனு தானாக தசரதனுக்கு கொடுத்த இடம். விசாலமாக பரந்து, பல சிறு ராஜ்யங்கள் சூழ இருந்த பிரதேசத்தை வைதேஹிக்கு காட்டினார் ராமர். சாரதியே, என்று சுமந்திரனை அழைத்து சுபாவமாகவே கம்பீரமான குரலை உடைய ராமர், அவரிடம் மனம் விட்டு பேசினார். எஎப்பொழுது திரும்பி வந்து நாம் சரயூ நதிக் கரையில் பழையபடி தாய் தந்தையோடு, நந்தவனங்களில் பூத்து குலுங்கும் பூப் படுகைகளில் விளையாடி, மகிழ்ந்திருக்கப் போகிறோமோ. சரயூ வனத்தில் வேட்டையாட பெரியதாக ஒன்றும் இல்லாவிட்டாலும், செல்வந்தர்களின் பொழுது போக்கு அது தான். அந்த இடத்தில் ராஜ ரிஷிகள் நிறைய இருப்பார்கள். வசதி மிக்க ஜனங்கள் அந்தந்த காலங்களில் இந்த இடத்தில் கூடி உல்லாசமாக பொழுதைக் கழிப்பர். இது போல பேசிக் கொண்டே அந்த அத்வானமான இடத்தை கடந்து சென்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ஜனபதாக்ரோச: என்ற நாற்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 50 (127) குஹ சங்கமம் (குகனை சந்தித்தல்)
விசாலமான கிராமப் புறங்களைக் கடந்து, ராமர், அயோத்தியை நோக்கி கை கூப்பியவாறு, வணங்கியபடி வேண்டினார். காகுத்ஸனால் பாலிக்கப் பட்ட அயோத்தியே, உன்னிடம் விடைபெறுகிறேன். எந்த தெய்வங்கள் உன்னிடம் வசிக்கின்றனவோ, உன்னை பாதுகாத்து வருகின்றனவோ, அவைகளை நான் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை பூர்த்தி செய்து விட்டு வந்து பார்க்கிறேன். வனவாசம் முடிந்து திரும்பி வந்து தாய் தந்தையரோடு வந்து வணங்குகிறேன். பின் அந்த ஜனபத ஜனங்களைப் பார்த்து கை உயர்த்தி, கண்கள் சிவந்து கலங்க, அந்த ஜனங்களை, அவர்களும் கண் கலங்க நிற்பதைக் கண்டு உணர்ச்சி மேலிட, வாழ்த்தி விடை பெற்றுக் கொண்டார். என்னிடத்தில் பரிவும் தயையும் காட்டினீர்கள். என் பொருட்டு நிறைய துக்கம் அனுபவித்து விட்டீர்கள். உங்கள் வேலைகளை கவனிக்கத் திரும்பிச் செல்லுங்கள். என்றார். அவர்களும் மகாத்மாவான ராமனை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விட்டு கிளம்பியவர்கள், காலெழும்பாமல் ஆங்காங்கு நின்றனர். இவ்வாறு திரும்பிச் செல்ல மனமின்றி நிற்கும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே திடுமென மறைந்தார், இரவு வந்ததும் சூரியன் காணாமல் போவது போல. பிறகு, தான்யமும் தனமும் நிறைந்த தானம் செய்யும் குணமுள்ள பலரைக் கொண்ட சுபமான, பயம் சற்றும் இல்லாத, சைத்யங்களும், அழகிய மாளிகைகளும் சூழ்ந்த, உத்யான வனங்களும், மாமரக் காடுகளும், நீர் நிலைகளும் நிறைந்த, கோசல தேசத்தை ரதத்திலேயே கடந்து சென்றனர். இங்கு வசித்த ஜனங்கள் திருப்தியுடன் புஷ்டியாக காணப் பட்டனர். கோகுலங்களும், கோபியர்களும் வாழ்ந்த இடங்களையும் கடந்து சென்றனர். சக்ரவர்த்தியால் பாலிக்கப் பட்ட கோசல தேசத்தில் ப்ரும்ம கோஷம் நிறைந்திருந்ததையும் கவனித்து கேட்டபடி கடந்தனர். மத்தியில் பரந்து விரிந்த ரம்யமான உத்யானங்கள் சுற்றிலும் இருக்க, சக்ரவர்த்திகளால் அனுபவிக்கத் தகுந்த ராஜ்யத்தை, திடமான கொள்கையுடையவர்களிலும் சிறந்தவனான ராமர் கடந்து சென்றார். பின் திவ்யமான கங்கையைக் கண்டனர். த்ரிபதகா என்று அழைக்கப் படும், சிவ ஜலமான, புண்யமான ரிஷி கணங்கள் வசித்து வரும் இடமான கங்கைக் கரையை அடைந்தனர். அருகிலேயே ஆசிரமங்கள் தெரிய, மகான்களால் அலங்கரிக்கப் பட்டதும், சமயங்களில் அப்ஸர ஸ்த்ரீகள் வந்து மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழும், சுத்தமான ஜலத்தையுடையதும், தேவ, தானவ, கின்னரர்களும், அவர்களுடன் நாக கந்தர்வ பத்னிகளும் வந்து வணங்கும் பெருமை பெற்றதும், இதனாலேயே தனி அழகு பெற்றதும், அவ்வப்பொழுது நன்மையை செய்யும் தேவர்கள் நூற்றுக் கணக்காக வந்து நீரில் மூழ்கி விளையாடவும், தேவ உத்யானங்களுக்கு இணையான நூற்றுக்கணக்கான உத்யான வனங்களும் பூந்தோட்டங்களும் கரைகளில் விரிந்து பரந்து கிடப்பதுமான கங்கை கரையை அடைந்தனர். இந்த தேவர்களுக்காக ஆகாயத்திலும் பிரவஹிக்கும் கங்கையில் பிரஸித்தி பெற்ற தெய்வத் தாமரைகள் மலர்ந்திருக்க, ஜலம் அடித்து அட்டஹாஸமாக ஆரவாரம் செய்ய, நிர்மலமான நுரை பொங்கி சிரிப்பது போல இருக்க, சில இடங்களில் நேராக விழும் நீர், மற்றும் சில இடங்களில் சுழித்துக் கொண்டு ஓடும், சில இடங்களில் நின்று கம்பீரமாகத் தெரியும், மற்றும் சில இடங்களில் வேகமாக ஓடும் ஜலம், சில இடங்களில் கம்பீரமான நாதம் கேட்கும், சில இடங்களில் அதுவே காதைத் துளைக்கும் பைரவ நாதமாக கேட்கும். இந்த ஜலத்தில் தேவர்கள் கூட்டமாக வந்து நிற்பர். நிர்மலமான உத்பல புஷ்பங்கள் மேலும் அழகூட்டும். சில இடங்களில் சிவந்த மண்ணும், சில இடங்களில் அமைதியான மணலும் தெரிந்தது. ஹம்ஸங்களும், சாரஸங்களும் கூக்குரலிட, சக்ர வாகங்கள் கத்தி மேலும் அதிக சோபையூட்ட, எப்பொழுதும் மதம் பிடித்த பறவைக் கூட்டங்கள் கோஷமிட்டு
உள்ளிருந்தே சப்தம் வருவது போலத் தோன்றியது. சில இடங்களில் கரையில் வளர்ந்த மரங்கள் மாலயணிவித்தது போல இருக்க, சில இடங்களில் மலர்ந்த உத்பலங்கள் காடாக மண்டிக் கிடக்க, சில இடங்களில் தாமரை அதே போல பரவிக் கிடக்க, மற்றும் சில இடங்களில் குமுத மலர்கள், அதன் தண்டுகளும் மலரோடு அலங்காரமாகத் தெரிந்தது. பல விதமான புஷ்பங்களின் மகரந்த தூள்கள் புகையாக மூடி இருக்க, கங்கையின் மேற் பரப்பு மதாலஸமாக காட்சி தந்தது. (மதுவின் மயக்கத்தில் இருப்பது போல இருந்தது.) குப்பை கூளங்கள் எதுவுமின்றி, நிர்மலமான ஸ்படிக மணி போல காட்சி தந்தது. கரைகளில் திக்கஜங்களும், காட்டு யானைகளும், மதம் பிடித்த சிறந்த ஜாதி யானைகள் தேவராஜனின் பட்டத்து யானைகள் பிளிறும் குரல் எதிரொலித்தது. மிகவும் கவனமாக அணிந்து கொண்ட உத்தமமான ஆடை ஆபரணங்களையுடைய பெண் போல, பழங்களும், புஷ்பங்களும், இளம் தளிர்களையும் உடைய மரங்களும் புதர்களும் இருந்தன. பறவைகளும், சிம்சுமாரங்களும், முதலைகளும், பாம்புகளும் வாழும் இடமாக கொண்டதும், விஷ்ணு பாதத்தில் இருந்து வெளிப்பட்டு, தெய்வாம்சம் கொண்ட ஜலம், பாபத்தை நீக்கக் கூடியதும் அந்த சங்கரனுடைய ஜடைகளில் இருந்து விழுந்தவளும், சகரனுடைய தேஜஸால் பூமிக்கு கொண்டு வரப் பட்டவளுமான, சமுத்திரனின் மகிஷியான கங்கையை, ஸாரஸங்களும், க்ரௌஞ்சங்களும் இடை விடாது நாதம் செய்ய விளங்கிய சிரிங்கி பேர புரம் என்ற ஊருக்கு மகாபாஹுவான ராமர் வந்து சேர்ந்தார்.
மகாரதியான ராமர், நீர் சிறு சுழல் சுழலாக வட்டமிடும் அழகைக் கண்டு, சுமந்திரனிடம் சொன்னார். இன்று இங்கேயே வசிப்போம். சாரதியே, இங்கு அருகிலேயே பெரிய இங்குதீ மரம், பூக்களும், தளிர்களும் நிறைந்ததாக இருக்கிறது. இங்கேயே இருப்போம். மதிப்புக்குரிய சுபமான ஜலம் உடைய கங்கை இந்த இடத்தில் பிரவகிக்கிறாள்.
நதிகளில் சிறந்த இந்த கங்கையைக் கண்டு மகிழ்வோம். தே4வ, தா3னவ, க3ந்த4ர்வ, ம்ருக3, பக்ஷிகள், பாம்புகள், இவைகள் கூட்டமாக ஒன்று சேரும் இடம் இது. லக்ஷ்மணனும், சுமந்திரனும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, குதிரைகள் மேல் அமர்ந்தவாறு அந்த இங்கு3தீ3 மரத்தை அடைந்தனர். ராமர் அந்த இடத்தில் மனைவியுடன் ரதத்திலிருந்து இறங்கினார். அந்த அழகான மரத்தடியில் நிற்கவும், சுமந்திரரும் இறங்கி குதிரைகளை அவிழ்த்து விட்டு, வினயமாக வணங்கியபடி ராமனிடம் வந்து சேர்ந்தார். அந்த இடத்தில் ஆத்மார்த்தமான ஒரு நண்பன் கு3கன் என்ற பெயருடையவன், வேட ஜாதியினன், மிக பலமுடையவன். ஸ்தபதி என்று புகழ் பெற்றவன், ராமர் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன், முதிர்ந்த ஞானிகளான மந்திரிகள், சுற்றத்தார், மற்றும் பலருடன், புருஷவ்யாக்4ரனான ராமனைக் காண வந்து சேர்ந்தான். வெகு தூரத்திலிருந்தே, வேட ராஜன் வருகிறான் என்று தெரிந்து கொண்டு, சௌமித்திரியுடன் ராமர் அவனை எதிர்கொண்டு சந்தித்தார். அவனும் ராமனைத் தழுவிக் கொண்டு, குசலம் விசாரித்தான். எப்படி அயோத்தியோ, அதே போல இந்த இடமும் உன்னுடையதே. நான் என்ன செய்ய வேண்டும் சொல், என்றான். இது போல பிரியமான அதிதி யாருக்கு கிடைக்கும். பிறகு பலவிதமான ருசியான அன்னம் முதலிய பதார்த்தங்களைக் கொண்டு வந்து அர்க்யம் அளித்து உபசாரம் செய்தான். உன் வரவு நல் வரவாகுக என்று ஸ்வாகதம் சொல்லி, இந்த பூமி பூராவும் உன்னுடையதே. நாங்கள் உனக்கு ஏவல் செய்து வாழும் பிரஜைகள். நீ கட்டளையிடு. நீ தான் தலைவன். எங்களை ஆட்சி செய்வாய். பழம், போஜ்யம், குடிக்க பானங்கள், லேஹ்யங்கள் என்று நான்கு விதமான ஆகார வகைகளும் கொண்டு வந்துள்ளோம். விசேஷமான படுக்கைகளும், உன் குதிரைகளுக்கு உணவும், வந்து விட்டன, என்று அடுக்கிக்கொண்டே போகும் குகனைப் பார்த்து ராமர் சொன்னார் – உன் உபசாரம் மிகவும் சிறந்தது. நல்ல முறையில் எங்களை வரவேற்று உபசரித்து, மகிழ்ச்சியாகச் செய்தாய். நடந்து வந்து, உன் அன்பை தெரிவித்ததையும் பாராட்டுகிறோம். தோள்களை ஆரத் தழுவிக் கொண்டு, ராமன் மிகவும் அன்புடன் சொன்னான். அதிர்ஷ்ட வசமாக உன்னைக் கண்டோம் குகனே. ஆரோக்யமாக, சுற்றத்தார் சூழ உன்னை காண மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உன் ராஜ்யத்திலும், நண்பர்களிடமும் செல்வ நிலை நலமாக உள்ளதா? நீ கொண்டு வந்துள்ள இந்த பொருட்களை, அன்புடன் கொண்டு வந்திருக்கிறாய். இருந்தும் திருப்பித் தருகிறேன். நான் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. புல், மரவுரி, இவற்றை அணிந்து பழங்கள், மூலங்களைத் தின்று காலம் கழிக்க வந்தவன் நான் என்று அறிந்து கொள். காட்டில் திரியும் தபஸ்வியாக, தர்ம மார்கத்தில் ஈ.டுபட்டவனாக நான் என் காலத்தை கழிக்க வந்துள்ளேன். குதிரைகளுக்கு உணவு தான் நான் வேண்டுவது. மற்ற எதுவும் வேண்டாம். இதனாலேயே என்னை நன்றாக உபசரித்ததாகக் கொள்வேன். இந்த குதிரைகள் தசரத ராஜாவுக்கு பிரியமானவை. இவைகளுக்கு உபசாரம் செய்தாலே, நான் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன். குதிரைகளுக்கு உணவும் குடி நீரும் கொடுக்கச் சொல்லி குகன் தன்னுடன் வந்த ஆட்களுக்கு உத்தரவிட்டான். பின், மரவுரி ஆடைகளை அணிந்து, மேற்கு நோக்கி சந்த்யா ஜபங்களை முடித்துக் கொண்டு, லக்ஷ்மணன் தானே கொண்டு வந்த ஆகாரத்தை உட்கொண்டு, அங்கேயே படுத்த ராமனின் கால்களை நீரால் அலம்பி, லக்ஷ்மணன் பணிவிடை செய்தான். பின் மனைவியுடன் ராமரை அந்த இடத்தில் இருக்க விட்டு, தான் அகன்றான்.
சுமந்திரனும், லக்ஷ்மணனும், குகனும் சம்பாஷிக்கலானார்கள். வில்லையேந்தி இரவு விழித்திருந்து காவல் காத்தனர். தசரதன் மகனாக பிறந்து, கஷ்டம் என்பதே அறியாமல் வளர்ந்து, சுகத்தில் திளத்த ராஜகுமாரனாக புகழ் வாய்ந்த ராமன் இவ்வாறு மரத்தடியில் உறங்க, இரவும் கழிந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் குஹ சங்கமம் என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 51(128) குஹ லக்ஷ்மண ஜாக3ரணம்
(குகனும், லக்ஷ்மணனும் உறக்கமின்றி காவல் இருத்தல்)
சற்றும் கர்வமின்றி, ராகவனான லக்ஷ்மணன், இவ்வாறு இரவு பூராவும் விழித்திருந்து காவல் இருப்பதைக் கண்டு குகனுக்கு வருத்தம் தோன்றியது. மகனே, இதோ பார். இதுவும் சுகமாக இருக்க, உனக்கென்று தயார் செய்யப் பட்ட படுக்கை. இதில் படுத்துக் கொள். நீயும் ராஜ குமாரனே. இங்குள்ள மற்ற ஜனங்கள் இது போன்றே வாழ்க்கைக்குப் பழகியவர்கள். நீயும் மற்ற அரச குமாரர்களைப் போலவே சுகமாக வாழ்ந்தவன். நாங்கள் இரவு பூராவும் காவல் இருக்கிறோம். காகுத்ஸனான ராமனைவிட எனக்கு பிரியமானவர்கள் வேறு எவரும் இல்லை. சத்யமாக சொல்கிறேன். இவனுடைய தயவால் உலகம் முழுவதும், பெரும் புகழும் தர்மமும் பெருமளவில் அர்த்த காமங்களும் நிறையப் போகின்றன என்று நினைக்கிறேன். நான், பிரியமான சகாவான ராமனை, சீதையுடன் என் தாயாதிகள், சுற்றத்தார் சூழ கையில் வில்லேந்தி ரக்ஷிக்கிறேன். இந்த காட்டில் அலைந்து திரிந்து, நான் அறியாத இடமோ, பொருளோ இங்கு கிடையாது. சதுரங்க சேனை வந்தால் கூட நாங்கள் எதிர்த்து நின்று வெற்றி பெறுவோம். இதைக் கேட்டு லக்ஷ்மணன் சொன்னான். உன்னால் பாதுகாக்கப்படும் பொழுது நாங்கள் ஏன் பயப் படுகிறோம். இங்கு நிலவும் தர்மத்தைக் காணும்பொழுது உன் ப ளிங்கு போன்ற குணமும் தெரிகிறது. என் மனதை வாட்டும் சங்கடம், தசரத ராஜாவின் மகன், மனைவியுடன் தரையில் படுத்துறங்குகிறான், என்று நேரில் காணும் பொழுது எனக்கு உறக்கம் வரவில்லை. எனக்கு, உயிரோ, சுகங்களோ எதுவுமே கிடைத்து என்ன பயன்? யுத்தம் என்று வந்தால் தேவர்களோ, அசுரர்களோ, எல்லோரும் சேர்ந்தால் கூட ராமனை அசைக்க முடியாது. அவனைப் பார். புல் படுக்கையில் பத்னியோடு. பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, மந்த்ர ஜபங்கள் செய்து, தசரதனுக்கு பிறந்தவன். எல்லா சுப லக்ஷணங்களும் பொருந்தியவன். இவனைப் பிரிந்து தசரத ராஜா அதிக நாள் ஜீவித்து இருக்க மாட்டார். இந்த பூமி சீக்கிரமே நாயகன் இன்றி அரசர் இன்றி ஆகப் போகிறது. ராஜ பவனம், ஆரவாரம் அடங்கி அமைதியாக இருக்கப் போகிறது. இந்த இரவே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. கௌசல்யாவும், ராஜாவும், என் தாயாரும் உயிருடன் இருக்கிறார்களோ, இல்லையோ. என் தாய் ஒரு வேளை சத்ருக்னனைக் காணும் ஆவலில் உயிருடன் இருப்பாள். வீரனான மகனைப் பெற்ற கௌசல்யா என்ன செய்கிறாளோ. சுற்றிலும் உள்ளோர் எப்பொழுதும் அவளிடம் அன்புடனும், பாசத்துடனும் இருப்பர். ஜனங்களுக்கு பிரியமாகவே நடந்து கொள்வாள். அரச குலத்தின் இந்த துக்கத்தால் அயோத்யா புரியும் வாடும். மூத்த மகனை, கண் படைத்த பயனாக பிறந்தவனை துறந்து அரசன் தன் உயிரை தரித்து இருப்பானா என்பதே சந்தேகம். அரசன் மரித்தால், கௌசல்யையும் இறப்பாள். பிறகு என் தாயும் அவர்களைத் தொடர்ந்து மறைவாள். தன் மனோரதம் நிறைவேறாத குறையோடு, மகனான ராமன் கையில் ராஜ்யத்தை ஒப்படைக்காமலே என் தந்தை ராஜா தசரதன் இறக்கப் போகிறார். இந்த சமயத்தில் அவர் அருகில் இருப்பவர்கள் பாக்கியசாலிகள். இறுதிக் கடன்களை யார் செய்கிறார்களோ? என் தந்தை அயோத்தியின் வீதிகளில் மகிழ்ச்சியாக உலாவுவார். நான்கு மூலையாக அழகாக கட்டப் பட்ட, நல்ல முறையில் பிரிக்கப் பட்ட ராஜ வீதி. அழகிய மாளிகைகள் உள்ளது. பலவிதமான க3ணிகா ஸ்த்ரீகள் நிறைந்தது. ரதங்களும். குதிரை யானைகள் அடிக்கடி நடமாடும், எப்பொழுதும் வாத்ய கோஷம் நிறைந்திருக்கும். ஜனங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்யமாகவும் எல்லா விதமான கல்யாணங்களும் நிரம்பியவர்களாக தென்படுவார்கள். ஓய்வாக இருக்க உத்யான வனங்கள் நிறைய உண்டு. ஆங்காங்கு சமாஜ உத்ஸவங்கள், கோலாகலமாக நடைபெறும்.. இந்த வீதிகளில் சுகமாக என் தந்தை உலவி வருவார். நாங்கள் வனம் வந்த பிறகு தந்தையின் நிலை என்ன ஆயிற்றோ. உயிருடனிருக்கிறாரா? அதுவே தெரியவில்லை. இந்த வனவாசம் முடிந்து திரும்பி வந்து அவரைக் காண்போமா? சத்ய பிரதிக்ஞையை முடித்து இந்த அயோத்யாவில் நுழைவோமா? இது போல மனம் வருந்தி அந்த ராஜகுமாரன் லக்ஷ்மணன் நின்று கொண்டே பேசிக் கொண்டிருந்த பொழுதே இரவும் கழிந்தது. இவ்வாறு மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசிய லக்ஷ்மணனைப் பார்த்து, நண்பனான குகன் ஜுரம் வந்து அவஸ்தைப் படும் யானையைப் போல் தானும் வருத்தம் அடைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் குஹ லக்ஷ்மண ஜாகரணம் என்ற ஐம்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 52 (129) கங்கா தரணம் (கங்கையை கடத்தல்)
இரவு மறைந்து, பொழுது விடிந்ததும், ராமர், சுப லக்ஷணனான லக்ஷ்மணனிடம் சொன்னார். சூரியன் உதயமாகி விட்டது. ஓர் இரவு கழிந்தது. இதோ பார், கரும் நிற குயில் கூவுகிறது. மற்ற பறவைகள் கூக்குரலும் கேட்க ஆரம்பித்து விட்டது. சமுத்திரத்தை நோக்கி பாய்ந்தோடும் இந்த கங்கையை கடந்து செல்வோம். ராமர் சொன்னதைக் கேட்டு, லக்ஷ்மணன் சுமந்திரனிடமும் குகனிடமும் விடை பெற்றுக் கொண்டு தயாராக கிளம்பி நின்றான். குகனும் தன் மந்திரி ஜனங்களை அழைத்து படகுகளைத் தயார் செய்யச் சொன்னான். த்ருடமான படகுகளை, குகனுடைய மந்திரிகள் தயார் செய்து விட்டு வந்து அவனிடம் சொன்னார்கள். படகுகள் வந்து சேர்ந்ததும், குகன் ராமனை கை கூப்பி வணங்கி, இதோ படகுகள் வந்து விட்டன. இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று பணிந்து நின்றான். நீயே அமரன் வழித் தோன்றலோ எனும் சிறப்பு பெற்றவன். சாக3ரத்தை நோக்கி பயணம் செய்யும் இந்த கங்கை நதியைக் கடக்க இதோ படகு. இதில் ஏறிக் கொள். என்றான். ரொம்ப நல்லது என்று நன்றி சொல்லி, சீக்கிரம் ஏற்றி விடு என்றார். வில்லேந்திய இருவரும் வாட்களையும் மற்றவைகளையும் கட்டி வைத்துக் கொண்டு, மற்ற ஜனங்களைப் போலவே, படகில் மூவருமாக சென்றனர். இவ்வாறு பயணம் கிளம்பிய ராமனைப் பார்த்து சாரதியான சுமந்திரன் நான் என்ன செய்ய? என்று வினவினான். தாசரதி (தசரதன் மகன்), சுமந்திரனை வலது கையால் பிடித்துக் கொண்டு, சுமந்திரா, சீக்கிரமாக ராஜா தசரதரிடம் செல். தயங்காமல் போய் வா என்றான். இது வரை எனக்கு செய்தது போதும். நீ திரும்பிச் செல். நாங்கள் நடந்தே வனத்துக்குள் போவோம் என்றான். தனக்கும் விடை கொடுத்து விட்டான் என்று சாரதிக்கு துக்கம் பொங்கியது. சுமந்திரன் இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த அந்த வீரனிடம் சொன்னான் உலகிலேயே இது போல எந்த மனிதனுக்கும், இப்படி ஒரு நிலை வந்திருக்காது. ஒன்றும் அறியாத பட்டிக் காட்டான் போல, சகோதரனுடனும், மனைவியுடனும் வனத்தில் வசிக்க கிளம்பி விட்டாய். எதிலுமே பயனில்லை என்று எண்ணுகிறேன். ப்ரும்மசர்யம் அனுஷ்டித்து வருவதாலோ, தானே முயன்று கல்வி கற்பதாலோ, பலன் இல்லை. மிருதுவான குணம் இருந்தும், நேர்மையாக இருந்தும், உனக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்ததே. மூன்று உலகையும் ஜயிக்கும் சக்தி படைத்த நீ, இந்த வனத்தில் இருந்தும், வைதேஹியுடனும், சகோதரனுடனும் நல்ல கதியே அடைவாய். நீயும் என்னை கை விட்ட நிலையில் எங்கள் பாடு தான் கஷ்டம். பாபியான கைகேயியின் கைப் பாவையாக ஆவோம். துக்கம் தான் அனுபவிக்கப் போகிறோம். இவ்வாறு சொல்லிக் கொண்டே சுமந்திரன் தனக்கு நிகரில்லாத சாரதியான சுமந்திரன், நகர்ந்து செல்லும் படகை பார்த்தவாறு நின்றுகொண்டு இருந்தவர், அது சற்று தூரம் சென்றதும் வாய் விட்டே அழுதார். அதைக் கண்டு ராமர் திரும்பத் திரும்ப சொன்னார். சுமந்திரா, இக்ஷ்வாகு குலத்தோருக்கு உன்னைப் போல வேறொரு நண்பன் இருந்ததில்லை. ராஜா தசரதன் என்னை நினைத்து வருந்தாமல் இருக்கும் படி பார்த்துக் கொள். ஏற்கனவே வயதானவர். அதிலும் இப்பொழுது இந்த துக்கத்தினால் அடிபட்டு போய் இருக்கிறார். காம வசத்தில் இருப்பவர். அதனால் விசேஷமாக சொல்கிறேன் கேள். கைகேயியை திருப்தி படுத்த அவர் என்ன சொன்னாலும் யோசிக்காமல் செய். பெரிய சக்ரவர்த்திகள் ராஜ்ய பாலனம் செய்வது இப்படித்தான். இதனால் இவர்கள் செயல்களை மனதில் போட்டுக் கொண்டு வருந்தாதே. அவருக்கு சந்தேகம் தோன்றாத படியும், மனம் வருந்தாதபடியும், என்ன செய்ய வேண்டுமோ அதை செய். அவரும் இந்திரியங்களை வென்றவரே. பெரியவர். வயது முதிர்ந்தவர். துக்கத்தை கண்டறியாதவர். அவரிடம் நான் சொன்னதாகச் சொல்லு. என் வணக்கத்தை தெரிவித்த பின், நானோ, லக்ஷ்மணனோ, மைதிலியோ அயோத்தியை விட்டு வந்தோமே என்று வருந்தவில்லை, வனத்தில் வசிக்கிறோமே என்றும் எங்களுக்கு மன வருத்தம் இல்லை. பதினான்கு வருஷ விரதம் முடிந்து திரும்பி வரும் பொழுது எங்கள் மூவரையும் நீங்கள் காணத்தான் போகிறீர்கள். விரைவில் இந்த வன வாசத்தை முடித்துக் கொண்டு திரும்பி வருவோம் என்று தாய்மார்களிடம் சொல் சுமந்திரா. மற்ற தேவிகளுடனும், கைகேயியிடமும் திரும்பத் திரும்பச் சொல். தேவி கௌசல்யாவிடம் தேக ஆரோக்யம் விசாரி. பாதங்களில் விழுந்து வணங்கியதாகச் சொல். சீதையுடையதும், என்னுடையதும், லக்ஷ்மணனுடையதுமான பாதாபி வந்தனங்கள் அவருக்கு உரித்தாகுக. மகாராஜாவிடம் பரதனை சீக்கிரம் அழைத்து வரச் சொல். அவன் வந்தவுடன் அரச பதவியில் நியமிக்கட்டும். பரதனை ஆரத் தழுவி அவனது முடி சூட்டு விழாவில் நீங்கள் எல்லோரும் மும்முரமாக ஆகி விட்டால் எங்களைப் பிரிந்த துக்கம் தெரியாது. சுமந்திரரே, மகாராஜாவிடம் இருப்பது போலவே, பரதனிடம் கைங்கர்யம் செய்து வாருங்கள். அதே போல தாயார்களிடம் நடந்து கொள்வீர்களாக. எப்படி கைகேயியிடம், நடந்து கொள்வீர்களோ, அதேபோல் சுமித்திரை, என் தாயாரிடமும் நடந்து கொள். தந்தை தான் விரும்பியபடி முடி சூட்டு விழாவைக் கண்டு நிச்சயம் சுகமாக இருப்பார் இவ்வாறு ராமன் சொல்லி முடித்தவுடன் சுமந்திரர் பதில் சொன்னார். இதை நான் உபசாரமாக சொல்லவில்லை. ஸ்னேகத்தினால், மறைக்காமல் சொல்கிறேரன். உன்னிடம் பக்தி கொண்டவன் என்ற முறையில் என் வார்த்தையை பொறுத்துக் கொள். உன்னை விட்டு எப்படி நான் அந்த நகரம் செல்வேன். உன்னைப் பிரிந்து, தங்கள் புத்திரர்களைப் பிரிந்தது போல தவித்த ஜனங்கள், நீ ரதத்தில் இருந்து நான் ஓட்டி வந்த போதே ஆவேசமானார்கள். நீயும் இல்லாமல் நான் ரதத்தை ஓட்டிச் செல்லும் பொழுது, கட்டுக் கடங்காமல் ஆவேசம் அடைவார்கள். சூன்யமான ரதத்தை பார்த்து ஊரே வாடும். தன்னுடைய சைன்யம் முழுவதும் யுத்தத்தில் மடிய, சாரதி மட்டும் மிஞ்சியது போல நீ தூரத்தில் இருந்தாலும் மனதால் எதிரில் நிற்பது போல நினைத்து வரும் பிரஜைகள், இன்று உங்களால் ஆகாரம் இல்லாமல் செய்யப் பட்டார்கள். நீ புறப்பட்டு வரும் பொழுதே உன் பிரிவை எண்ணிப் பார்க்கக் கூட முடியாத ஜனங்கள் வியாகுலம் அடைந்ததை ப்ரத்யக்ஷமாக கண்டாய். அப்பொழுது எழுந்த ஓலம் ஒன்றுமேயில்லை என்பது போல, இப்பொழுது என்னைக் கண்டதும் ஓலமிடப் போகிறார்கள். தேவியிடம் நான், உன் மகனை மாமன் வீட்டில் கொண்டு விட்டு வந்தேன் என்றா சொல்வேன்? கவலைப் படாதே என்று சொல்வேனா? அசத்யமானாலும் இது போல ஒரு வார்த்தையை சொல்ல மாட்டேன். சத்யம், என்று எப்படி பிரியமில்லாத வார்த்தையை சொல்வேன். உன் பந்து ஜனங்களை ஏற்றிக் கொண்டு ஓடிய இந்த குதிரைகள், அந்த ரதத்தில் நீ இல்லாமல் எப்படி இருக்கப் போகின்றன. அதனால் உன்னை விட்டு அயோத்தி போக என்னால் முடியாது. நானும் உன்னுடன் வனத்தினுள் வர அனுமதி கொடு. இவ்வளவு வேண்டியும் எனக்கு அனுமதி கிடைக்காவிடில் இந்த ரதத்துடனேயே அக்னியில் விழுவேன். உன்னால் தியாகம் செய்யப் பட்ட பின் எனக்கு வேறு வழி இல்லை. உனக்கு வன வாசத்தில் ஏற்படும் இடைஞ்சல்களை நான் சமாளிப்பேன். உன்னால் நான் ரதத்தில் பிரயாணம் செய்யும் சுகத்தை அனுபவித்தேன். இப்பொழுது உன் கூடவே வனம் வர ஆசைப் படுகிறேன். நீயும் பிரியத்துடன் சம்மதிப்பாய் என்று நம்புகிறேன். தயை செய். வன வாசத்தையும் உன்னுடனேயே அனுபவிக்கிறேன். இதோ இந்த குதிரைகளும், உனக்கு பணிவிடை செய்யுமானால், மிக நல்ல கதியை அடையும். என் தலையால் நான் உங்கள் மூவருக்கும் பணிவிடை செய்வேன். அயோத்தி என்ன? தேவ லோகமானாலும் நான் விட்டு விட்டு வரத் தயார். அந்த அயோத்தியில் நீ இல்லாமல் திரும்ப நுழைவது என்பதே இயலாது. மகேந்திரனுடைய ராஜதானி அவனுடைய துர் நடத்தையால் மோசமான நிலையை அடைந்தது போல ஆகி விட்டது அயோத்யா. என்னுடைய மனோரதம் பூர்த்தியானதும், இதே ரதத்தில் உன்னை வைத்து ஊருக்குள் அழைத்துச் செல்வேன். உன்னுடன் கூட இருக்கும்பொழுது பதினான்கு வருஷங்கள் க்ஷணமாக பறந்து விடும். அல்லது நூறு எண்ணுவதற்குள் முடிந்து விடும். நீ அடியார்களி டம் வாத்ஸல்யம் கொண்டவன். உன் முன்னால் நிற்கும் பக்தனை, தாஸனை, தனக்குரிய இடத்தில் இருந்து வேண்டும் என்னை கைவிடலாகாது.
இவ்வாறு யாசிக்கும் சுமந்திரரைப் பார்த்து ராமர் எசுமந்திராஸ்ரீ நீ என்னிடம் வைத்துள்ள யஜமான விஸ்வாசத்தையும் பக்தியையும் நான் அறிவேன். ஆயினும் என்ன காரணத்திற்காக உன்னை கட்டாயமாக ஊருக்கு அனுப்புகிறேன் என்பதையும் கேள். நீ திரும்பி ஊருக்குள் வந்ததைக் கண்டால் தான் என் சிற்றன்னையான கைகேயி ராமன் வனம் சென்று விட்டான் என்று நம்புவாள். அரசன் பொய் சொல்லவில்லை என்று தார்மிகனான என் தந்தையைப் பற்றி அவதூறு சொல்லாமல் இருப்பாள். மகிழ்ச்சியடைவாள். என் முதல் விருப்பம், என் சிற்றன்னை, பரதனால் பாலிக்கப் படும் இந்த விசாலமன ராஜ்யத்தை அனுபவிக்கட்டும். எனக்கும் அரசனுக்கு நன்மை செய்பவனாக நீ ஊருக்குத் திரும்பி போ. உனக்கு நான் சொல்லிய சந்தேசங்களை (செய்திகளை) அப்படி அப்படியே சொல்லு. இவ்வாறு திரும்பத் திரும்ப சுமந்திரனை சமாதானப் படுத்தி அனுப்பிவிட்டு ராமர் குகனிடம் சொன்னார். குகனே, இன்னமும் இந்த இடத்தில் நான் வசிப்பது நல்லதல்ல. ஜனங்கள் வந்து போகும் இந்த இடத்தை விட்டு ஆஸ்ரமம் அமைத்து வாழ வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும் செய்வோம். நான் தபஸ்வி ஜனங்கள் போல நியமங்களை ஏற்று, தந்தையின் நன்மைக்காகவும், சீதையின், லக்ஷ்மணனின் நன்மைக்காகவும், ஜடை தரித்துக் கொண்டு கிளம்புகிறேன். ந்யக்ரோத மரத்தின் (ஆல மரம்) பாலைக் கொண்டு வா. அந்த மரத்தின் பாலை குகன் அரச குமரனுக்காக கொண்டு வந்து கொடுத்தான். லக்ஷ்மணனும் தானுமாக, அந்த மரத்தின் பாலைக் கொண்டு ஜடைகளை முடிந்து கொண்டனர். நீண்ட கைகளையுடைய வீரர்களான அவ்விருவரும், தலை முடியை ஜடையாக்கிக் கொண்டு காட்டில் வாழும் முனி வேஷம் தரித்தனர். இருவரும் ரிஷிகள் போலவே சோபையுடன் விளங்கினர். வைகா2னஸம் எனும் தபஸ்வி நிலையை ஏற்றுக் கொண்ட சகோதரர்கள், விரதங்களைச் செய்தனர். உதவி செய்த குகனிடம் ராமர் சொன்னர் உன் படை பலத்திலும், பொக்கிஷத்திலும், கோட்டையிலும், ஊருக்குள்ளும், சற்றும் குறையாத கவனத்துடன் இரு குகா. ராஜ்யத்தைக் காப்பது என்பது சுலபமல்ல. விழிப்புடன் இரு என்றார்.
அவனையும் வழியனுப்பி விட்டு, வேகமாக கங்கையைக் கடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் லக்ஷ்மணனை துரிதப் படுத்தினார். லக்ஷ்மணா, படகில் ஏறு. சீதையையும் ஏற்றி விடு. மனஸ்வினியான அவளை கை கொடுத்து ஏற்றி விடு. அவ்வாறே லக்ஷ்மணன், சீதைக்கு கை கொடுத்து முதலில் ஏற்றி விட்டு பின்னால் தானும் ஏறிக் கொண்டான். பின்னால் தானும் ஏறிக் கொண்டபின் வேடர் குல அரசனான குகன் தன் பந்துக்களை துரிதப் படுத்தினான். படகில் ஏறிய ராமர், ப்ரும்ம முறையிலும், க்ஷத்திரிய முறையிலும் தங்கள் நன்மைக்காக ஜபம் செய்தார். நதியில் முறைப்படி ஆசமனீயம் செய்து, சீதையுடன் வணங்கினார். லக்ஷ்மணனும் வணங்கினான். சுமந்திரனிடம் விடை பெற்றுக் கொண்டு, சேனையோடு நின்றிருந்த குகனிடமும் விடை பெற்றுக் கொண்ட பின் அமர்ந்த ராமர், படகுகளை ஓட்ட ஆரம்பித்தார். படகு நகர்ந்து சிவனுடைய ஜடா முடியினால் தடுக்கப் பட்ட மகா வேகத்தையுடைய கங்கையில் வேகமாக சென்றது. மத்தியில் வந்ததும், பா4கீரதியைப் பார்த்து வைதே3ஹி கை கூப்பி வணங்கியவாறு சொன்னாள் இதோ இவர் தசரத புத்திரன். மகாராஜாவின் கட்டளையை நிறைவேற்றி விட்டு, உன் அருளால் பதினான்கு வருஷங்கள் காட்டில் வசித்து, சகோதரனுடனும் என்னுடனும் திரும்பி வருவார். அப்பொழுது தேவி, க்ஷேமமாக திரும்பி வந்து உனக்கு பூஜை செய்கிறேன். நீயே த்ரிபத2கா3 என்று பெயர் பெற்றவள். எல்லாவிதமான இஷ்டங்களும் பூர்த்தியானவளாக ப்ரும்ம லோகத்திலும் இருப்பாய். சமுத்திர ராஜனின் மனைவியாக உலகிலும் காணப் படுகிறாய். அந்த உன்னை வணங்குகிறேன். போற்றுகிறேன். மங்களமாக திரும்பி வந்து அரசும் கைக்கு வந்த நிலையில், நூறாயிரம் பசுக்களையும், வஸ்திரங்களையும், அன்னம் முதலியவைகளையும் உனக்கு நன்மையுண்டாக வேண்டும் என்று வேண்டி, ப்ராம்மணர்களுக்கு கொடுக்கிறேன். நூற்றுக் கணக்கான குடங்கள் நிறைய மதுவும், மாமிசம் சேர்த்த அன்னத்துடனும் உனக்கு படைக்கிறேன். திரும்ப ஊருக்குள் வந்தால் நான் எப்பாடு பட்டாயினும் இந்த விரதத்தை பூர்த்தி செய்கிறேன். உன் கரையில் வசிக்கும் தேவதைகள், அவர்கள் அனைவரையும் வணங்குகிறேன். மற்ற தீர்த்தங்களையும், ஆலயங்களையும், வணங்குகிறேன். இந்த மகா பாஹுவான என் கணவர், திரும்பவும் சகோதரனுடனும் என்னுடனும் கூட, மாசற்ற இந்த நகரத்தினுள் நுழையும் படி பாவனமான கங்கையே, அருள் செய். இவ்வாறு கங்கையுடன் சம்பாஷித்தபடி சீதையுடன் தென்கரையை அடைந்தனர்.
கரையை அடைந்ததும், படகை விட்டு இறங்கி நின்றனர். லக்ஷ்மணனைப் பார்த்து ராமர், ஜனங்கள் மத்தியிலோ, நிர்ஜனமான இடமோ, எப்பொழுதும் காப்பாற்றத் தயாராக இரு லக்ஷ்மணா. நீ முன்னால் போ. சீதை உன் பின்னால் வரட்டும். நான் பின்னால் தொடர்ந்து வருகிறேன். உன்னையும் சீதையையும் பாதுகாத்தபடி வருகிறேன். நாம் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எந்த வேலையையும் ஒத்திப் போடலாகாது. இன்று வனவாசம் என்றால் என்ன, என்ன கஷ்டம் என்பதை சீதையும் தெரிந்து கொள்வாள். ஜன சமூகத்தை விட்டு விலகி வந்து, க்ஷேத்திரங்களோ வீடுகளோ இன்றி, மேடும் பள்ளமுமாக வனத்தை இன்று நேரில் காணப் போகிறாள். ராமர் சொன்னதைக் கேட்டு, லக்ஷ்மணன் முன்னால் சென்றான். பின்னால் சீதை, அதன் பின் ராகவன். கங்கையைக் கடந்து அக்கரை சேர்ந்து விட்ட ராமனைப் பார்த்து, சுமந்திரன் நெடுந்தூரம் கண்ணுக்கு எட்டியவரை பார்த்து விட்டு, திரும்பிச் செல்லும் வழியில் புறப்பட்டான். கண்களை கண்ணீர் மறைத்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கங்கா தரணம் என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 53 (130) ராம சம்க்ஷோப4: (ராமனின் மன வருத்தம்)
ஒரு மரத்தடியை அடைந்து சாயங்கால சந்த்யா வந்தனம் முதலியவற்றை செய்த பின், லக்ஷ்மணனிடம் இன்று முதல் நகரத்துக்கு வெளியே போகிறோம். சுமந்திரனும் விட்டு போய் விட்டானே என்று கவலைப் படாதே. இன்றிலிருந்து இரவுகள், விழித்திருந்து கவனமாக இருக்க வேண்டியவை ஆகும். சீதையின் யோக க்ஷேமம் நம் இருவர் பொறுப்பாகிறது. இந்த இரவை இப்படியே ஏனோ, தானோவென்று கழித்து விடுவோம். லக்ஷ்மணா, நாமே சம்பாதித்து, கிடைத்ததை தரையில் விரித்து படுப்போம். மிக உயர்ந்த படுக்கைகளுக்கு உரியவனான ராமன் தரையில் அமர்ந்து லக்ஷ்மணனிடம் மனம் விட்டுப் பேசலானான்.
இன்று மகாராஜா தூங்க சிரமப் படுவார். கைகேயி மட்டும் தன் எண்ணம் நிறைவேறிய திருப்தியில் சந்தோஷமாக இருப்பாள். பரதன் வந்து விட்டால், ராஜ்யத்திற்காக திரும்பவும் அரசனைத் துளைத்தெடுக்காமலிருக்க வேண்டும். அரசர் கைகேயியிடம் தன் காமத்தால் வசமாக அகப்பட்டுக் கொண்டு விட்டார். என்ன செய்வார்? வயதும் ஆகி விட்டது. நாம் இல்லாததால் சகாயம் செய்வோரும் இல்லாமல் அனாதையாகி விட்டார். இந்த கஷ்டத்தையும் பார்த்து அரசனின் மனம் சஞ்சலித்ததையும் பார்க்க, காமம் தான், அர்த்த, தர்மத்தை விட பலமுள்ளது, சிறந்தது என்று தோன்றுகிறது. இல்லாவிடில் யார் தான் அசடாக இருந்தாலும், பெண் வார்த்தையைக் கேட்டு பிள்ளையைத் துறப்பான். அதுவும் நியமம் தவறாமல் விதி முறைகளை அனுசரித்து வரும் என்னை நம் தந்தை விரட்டியது போல வேறு யார் தான் செய்வார்கள்? கைகேயி புத்திரன் பரதன் தான் மனைவியுடன் சந்தோஷமாக கோசல ராஜ்யத்தில் சக்ரவர்த்தி போல வாழ்ந்து அனுபவிக்கப் போகிறான். முழு ராஜ்ய சுகத்திற்கும் அவன் ஒருவனே தகுதி பெற்றவனாவான். தந்தையும் வயதான காரணத்தால் இயற்கை எய்தி விட்டால், நானும் வனத்தில் சுற்றிக் கொண்டு இருந்தால், பரதன் ஒருவனே ராஜ்ய பரிபாலனம் செய்வான். அர்த்தத்தையும், தர்மத்தையும் விட்டு காமத்தையே பின் பற்றுபவர்கள் இந்த தசரத ராஜா போலத்தான் ஆபத்துக்கு உள்ளாவார்கள். பரதனுக்கு ராஜ்யம் கிடைக்கவும், தசரதராஜாவின் முடிவுக்கும், என்னை நாடு கடத்தவுமே கைகேயி வந்து சேர்ந்தாள். இன்னமும் இந்த கைகேயி என் மேல் உள்ள மனஸ்தாபத்தால், தாயாரான கௌசல்யையும், சுமித்ராவையும் படுத்தாமல் இருக்க வேண்டும். என் காரணமாக சுமித்ரா தேவி துக்கம் அடையக் கூடாது. அதனால் லக்ஷ்மணா, நீ நாளைக்கே அயோத்தி போ. நான் ஒருவன் சீதையுடன் தண்டகா வனம் போகிறேன். கௌசல்யை அனாதையாக திண்டாடாமல் நீ சகாயமாக இரு. குறுகிய புத்தியுள்ளவள் கைகேயி. துவேஷத்தால் ஏதாவது அநியாயம் செய்தாலும் செய்வாள். பரதனிடம் என் தாயாரை விட்டு வைக்க வேண்டும். ஏதோ ஒரு ஜன்மத்தில், என் தாய், பெற்றவளிடமிருந்து குழந்தைகளைப் பிரித்திருக்கிறாள். அதனால் தான் லக்ஷ்மணா, இந்த ஜன்மத்தில் இப்படி ஒரு துக்கம் அவளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. நான் பிறந்து அவளுக்கு ஒரு பயனும் இல்லை. மேலும் துக்கத்தை வளர்ப்பவனாகவே ஆனேன். எந்த பெண்ணும் என்னைப் போல ஒரு மகனைப் பெற வேண்டாம். லக்ஷ்மணா, பார். நான் என் தாயாருக்கு எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறேன். சாரிகா என்ற பறவை கதை தெரியுமா? கிளியே, எதிரி பாதத்தைக் கடி (எதிரியான பூனையின் பாதத்தை) என்று சொல்லுமாம். நானாக ஒரு உதவியும் செய்யவில்லை. அவளே கவலைப் பட்டு வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறாள். ஒரு புத்திரன் இருந்தும் இல்லாதவளாக இருக்கிறாள். என்னால் அவளுக்கு என்ன பயன்? அதிர்ஷ்டமில்லை. நினைத்தால் நான் ஒருவனே, என் கோபத்தால் அயோத்தியோ, முழு உலகமோ, போரில் ஜயித்துக் காட்டுவேன். ஆனால் வீர்யத்தை காரணமில்லாமல் காட்டக் கூடாது அல்லவா? அதனால் தயங்குகிறேன் அது அதர்மம் என்பதால். லக்ஷ்மணா, அதனால் தான் நான் என் தலையில் முடி சூட்டிக் கொள்ளவில்லை. இதுபோல பல விஷயங்கள் பேசி வருந்தி கண்ணீர் விட்ட பின், இரவின் பின் பகுதியில், பேசாமல் இருந்தான். தன் மன வருத்தத்தை வெளி யிட்டு முடித்த ராமனை, ஜ்வாலை அடங்கிய நெருப்பு போலவும், வேகம் அடங்கிய சமுத்திரம் போலவும், இருந்தவனை லக்ஷ்மணன் சமாதானப் படுத்தினான். இரவில் சந்திரன் இல்லாத ஆகாயம் போல நீ புறப்பட்டு வந்ததால், அயோத்தியா மாநகரம் ஒளியிழந்து நிற்கிறது. பெரியவனான நீ வருந்துவதால் என்னையும், சீதையையும் வருத்தத்தில் ஆழ்த்துகிறாய். நானோ, சீதையோ, நீயின்றி ஒரு நிமிஷமும் உயிரோடு இருக்க மாட்டோம். நீரிலிருந்து எடுத்த மீன்கள் போல ஆவோம். தந்தையையோ, சத்ருக்னனையோ, தாயார் சுமித்திரையையோ, பார்க்க நான் ஆசைப் படவில்லை. சுவர்கம் கிடைத்தாலும் வேண்டாம். எக்காரணம் கொண்டும், உன்னைப் பிரிவதைதான் நான் விரும்ப மாட்டேன். என்றான். பிறகு ந்யக்ரோத மரத்தினடியில், முடிந்தவரை படுக்கையை வசதியாக தயார் செய்து கொண்டனர். அன்று இரவு அவர்கள் மனத்தில், வருத்தமோ, பயமோ தோன்றவில்லை. மலைக் குகைகளில் சிங்கக் குட்டிகள் நிச்சிந்தையாகத் தூங்குவது போல தூங்கினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராம சம்க்ஷோபோ4 என்ற ஐம்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 54 பரத்3வாஜாஸ்ரம க3மனம் (பரத்வாஜரின் ஆஸ்ரமத்தை அடைதல்)
அந்த பெரிய மரத்தடியில் இரவைக் கழித்து, விடிந்தவுடன் அவர்கள் புறப்பட்டனர். எந்த இடத்தில் பாகீரதியை, யமுனை எதிர்கொண்டு கலக்கிறதோ, அந்த இடத்தை நோக்கிச் சென்றனர். மிகப் பெரும் வனத்தைக் கடந்து சென்றனர். பலவிதமான பூமி பாகங்களையும், மனோ ரஞ்சகமான இடங்களையும், முன் கண்டறியாத பல இடங்களையும் பார்த்துக் கொண்டு நடந்தனர். புஷ்பங்களும், பழங்களும் நிறைந்திருந்த மரங்கள் பலவிதமாகத் தெரிந்த ஒரு இடத்தில் அன்று பொழுது சாயும் வேளையில் வந்து சேர்ந்தனர். பிரயாகைக்கு அருகில் வந்து விட்டோம் லக்ஷ்மணா,
அதோ பார். புகை தெரிகிறது. பகவானுடைய இருப்பிடத்திற்கு அருகில் வந்து விட்டோம். நிச்சயம் கங்கா யமுனை சங்கமிக்கும் இடம் இது தான்.
நதி ஜலம் ஒன்றின் மேல் ஒன்று மோதும் ஓசை கேட்கிறது பார். இது தான் ப4ரத்3வாஜ முனிவரின் ஆஸ்ரமாக இருக்க வேண்டும். பலவித மரங்கள் தெரிகின்றன. வில்லேந்தியபடி இருவரும் சூரியன் மலை வாயில் விழும் நேரத்தில் கங்கா யமுனையின் சங்கம க்ஷேத்திரத்தில் இருந்த முனிவரின் இருப்பிடத்தை அடைந்தனர். இவர்களைக் கண்டு பயந்து மிருகங்களும், பக்ஷிகளும், பரத்வாஜரை சென்றடைந்தன. முனியைக் காண வேண்டி மூவரும் சற்று தூரத்திலேயே நின்றனர். சிஷ்ய கணங்கள் சூழ இருந்த முனிவரின் ஆஸ்ரமத்தில் நுழைந்து, தபஸ்வியை, தவப் பலனாக கிடைத்த ஞானக் கண் உடையவரும், தனிமையில் இருந்து தன் விரதங்களை செய்தவருமான முனிவரை, அக்னி ஹோத்ரம் செய்து முடித்து விட்ட நிலையில், கண்ட மாத்திரத்தில் கை கூப்பி வணங்கி, ராமர் லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் சேர்ந்து வணங்கினார். தாங்கள் யார் என்பதையும் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டார்.
பகவன், நாங்கள் இருவரும் தசரத ராஜாவின் குமாரர்கள். இவள் என் மனைவி வைதேஹி.. ஜனகர் மகள். நற்குணங்கள் நிறைந்தவள். என்னைத் தொடர்ந்து சற்றும் முகம் கோணாமல் காட்டுக்கு வசிக்க வந்திருக்கிறாள். என் தந்தை என்னை நாடு கடத்தி விட்டார். இவன் லக்ஷ்மணன். என் பிரியமான சகோதரன். இவனும் என்னைத் தொடர்ந்து வனம் வந்து விட்டான். பகவன், தந்தையின் கட்டளைப்படி தபோவனங்களில் வசிக்கப் போகிறோம். பத்ரம், மூலம், பழம் இவற்றை ஆகாரமாகக் கொண்டு தர்மத்தையே அனுஷ்டிக்கப் போகிறோம். புத்திசாலியான அரச குமாரன் சொன்னதைக் கேட்டு, பரத்வாஜ முனிவர் அவர்களை வரவேற்று, ஜலம் அர்க்யம் முதலியவைகளைக் கொடுத்து உபசரித்தார். காட்டு, மூல, பழங்களைக் கொண்டு தயாரிக்கப் பட்ட பலவிதமான அன்னம், ரசம் முதலிய பதார்த்தங்களைக் கொடுத்து சாப்பிடச் செய்து, வசிக்க ஏற்ற இடமும் அமைத்துக் கொடுத்தார். முனி குமாரர்களுக்கு சமமாக, மிருகங்களும், பக்ஷிகளும் வளைய வந்த அந்த இடத்தில் ராமர் வந்திருப்பதை அனைவருக்கும் தெரிவித்து ஸ்வாகதம் சொல்லியபடி, முனிவர் சொன்னார். வெகு நாளைக்குப் பின் உன்னை பார்க்கிறேன் காகுத்ஸா, உன்னை நாடு கடத்திய செய்தியும் கேள்விப் பட்டேன். இந்த இடத்தில் மகா நதிகள் கூடுகின்றன. இந்த சங்கமத்தில் இந்த இடம் புண்யமாகவும், ரமணீயமாகவும் இருக்கும். இந்த இடத்தில் நீங்கள் சௌக்யமாக இருங்கள். ராகவன் பதில் சொன்னார். ப4கவன், இந்த இடம் நகரத்துக்கு அருகில் உள்ளது. ஊர் ஜனங்கள் எங்களைப் பார்க்க வந்து விடுவார்கள். வைதேஹியைக் காணவும் வந்து கொண்டே இருப்பர். அதனால் இங்கு வசிக்க நான் விரும்பவில்லை. தனிமையான இடத்தில் எங்களுக்கு ஒரு ஆஸ்ரமம் தேடிக் கொடுங்கள் ஸ்வாமி. ஜனகன் மகளான வைதேஹி சுகமாக இருக்கும்படி இருந்தால் போதும். பொருள் பொதிந்த இந்த பதிலைக் கேட்டு பரத்வாஜர் சொல்வார் இங்கிருந்து இருபது மைல் தூரத்தில் ஒரு மலையடிவாரம் உள்ளது. அங்கு வசிப்பாய். அங்கும் பல மகரிஷிகள் இருக்கிறார்கள். புண்யமான இடம். எப்பொழுதும் பார்க்க அழகாக இருக்கும். பசு போல வாலுடைய (கோலாங்கூலம்) வானரங்கள், கரடிகள் வசிக்கின்றன. சித்ர கூடம் என்ற பெயர் உடையது. கந்த மாதன மலைக் கருகில் உள்ளது. எவர் ஒருவர் இந்த சித்ர கூடத்தின் அழகைக் காண்கிறார்களோ, அவர்கள் அதன் பின் பாபத்தை செய்யக் கூட நினைக்க மாட்டார்கள். எப்பொழுதும் அவர்கள் மனதில் நல்லது தான் தோன்றும். பல நூறு சரத் காலங்கள் வசித்த ரிஷிகள் அங்கு சஞ்சரித்து, கபால சிரஸHடன் (வெண்மையாக ஆனத் தலையுடையவர்களாக) தேவ லோகம் சென்றுள்ளனர். இந்த இடம் தான் நீ சுகமாக வசிக்க ஏற்றது. அல்லது இந்த வன வாசத்தை என்னுடன் இங்கேயே கூட கழிக்கலாம். என்றார். பரத்வாஜர், பிரியமாக அதிதியாக வந்த ராமரை வேண்டியதை கவனித்து உபசரித்து, மனைவியுடனும், சகோதரனுடனும் மன மகிழ்ச்சியோடு உபசரித்தார். தர்மம் அறிந்த மகரிஷியான அவருடன் பல கதைகள் பேசியபடி, அன்று இரவு கழிந்தது. சீதையுடன் மூவரான அவர்கள், களைப்பு நீங்க, அந்த இரவை சுகமாக கழித்தனர். விடிந்ததும், ஜ்வலிக்கும் அக்னி போல இருந்த முனிவரிடம் சென்றனர். பகவன், சத்ய சீலரே, உங்கள் ஆஸ்ரமத்தில் இரவு சுகமாக இருந்தோம். விடை கொடுங்கள். போய் வருகிறோம். என்றனர். அவரும், மூல, பழங்கள் நிறைந்த சித்ர கூடம் போ. அந்த இடத்தில் வசிப்பது உனக்கு சௌகர்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பலவிதமான மரங்கள் நிறைந்தது, கின்னர, உரகம் நிறைந்தது. மயூரங்கள் கத்தி அழகூட்டும். யானைகள் வசிக்கும் இடம். போய் வாருங்கள். சித்ர கூடம் புகழ் வாய்ந்த மலைச் சாரல்கள் உடையது. அழகாக இருப்பதோடு, புண்யமான இடம். தேவையான பழம் முதலிய ஆகாராதிகள் கிடைக்கும் இடம். அங்கு யானைக் கூட்டமும், மான் கூட்டமும் இணைந்து செல்லும். அவைகளை கண்டு மகிழ்வாய் ராகவா. நதிகளும் அருவிகளும் நிறைந்து இருக்குமிடத்தில் சீதையுடன் நடந்து சென்று, உன் மனம் மகிழ்ச்சியடையும். கணக்கிலடங்காத கோயஷ்டிக (ஒரு பக்ஷி) கோகிலங்கள் நிறைந்து, ஆரவாரமாக நாதம் செய்ய, மங்களகரமான அந்த பிரதேசத்தில், மான்கள் துள்ளியாட, மதம் பிடித்த யானைகள் உலவ, மிக ரம்யமாக இருக்கும். இந்த இடத்தில் உன் ஆஸ்ரமத்தை அமைத்துக் கொண்டு வாழ்வாய்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ப4ரத்3வாஜாஸ்ரம க3மனம் என்ற ஐம்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 55 (132) யமுனா தரணம் (யமுனையைக் கடத்தல்)
முனிவரை வணங்கி ராஜ குமாரர்கள் விடை பெற்றனர். முனிவர் அவர்களுக்கு ஸ்வஸ்த்யயனம் (மங்களா சாஸனம்) செய்தார். தந்தை மங்களா சாஸனம் செய்வது போல செய்தார். பிறகு ராமனைப் பார்த்து கங்கா, யமுனை சங்கமமாகும் இடத்தைக் கடந்த பின், காலிந்தீ3 என்ற நதியைக் காண்பீர்கள். இது மேற்கு நோக்கிச் செல்லும் நதி. வேகமாக சுழித்துக் கொண்டு ஓடும். காளிந்தீ நதி புராணமான புண்ய தீர்த்தம். அதன் பின் படகை எடுத்துக் கொண்டு அம்சுமதி என்ற நதியை கடந்து செல்லுங்கள். அங்கு உள்ள பசுமை நிறைந்த ந்யக்4ரோத மரத்தை அடைந்து, சுற்றிலும் பசுமையான மரங்கள் அடர்ந்து இருட்டாக இருக்கும் அந்த இடத்தில், சித்தர்கள் வசிக்கிறார்கள். சீதை அவர்களை வணங்கி ஆசி பெறட்டும். அந்த மரத்தடியை அடைந்து அங்கேயே வசித்தாலும் வசிக்கலாம். அல்லது மேற்கொண்டு சென்றாலும் சரி. இன்னொரு க்ரோச தூரம் (2 மைல்) சென்றால் அடர்ந்த , இருண்ட கானகத்தைக் காண்பீர்கள். யமுனை நதிக் கரையில், மூங்கில் காடுகளும், ப3தரி மரங்களும் சல்லகி எனும் மரங்களும் நிறைந்த மிகவும் ரம்யமான வழியாகும். இந்த வழியில் தான் நான் பலமுறை சித்ரகூடம் போய் இருக்கிறேன். வழியும் ரம்யமாக இருப்பதோடு, நேர்வழி. காட்டுத் தீ இல்லாமல் வசதியான வழி. இவ்வாறு வழி சொல்லி அனுப்பி விட்டு மகரிஷி திரும்பிச் சென்றார். இம்மூவரும் முனிவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர். முனிவர் சென்றபின், ராமர் லக்ஷ்மணனிடம் சொன்னார். நமது பாக்கியம் தான் லக்ஷ்மணா, முனிவர் நம்மிடம் இவ்வளவு அன்புடன் இருக்கிறார். தங்களுக்குள் பேசிக் கொண்டு, சீதை முன் செல்ல காளிந்தீ நதிக் கரையை அடைந்தனர். சுழித்துக் கொண்டு ஓடி வரும் நதி வேகத்தைக் கண்டு, அதை கடப்பதைப் பற்றிய கவலை தோன்றியது. கட்டைகளை எடுத்து, இருவருமாக ஒரு படகை தயாரித்தனர். சிறிய மூங்கில் துண்டுகளையும், உசீரம் (வாசனையுள்ள ஒரு வேர்) என்ற நாணல் வகை புல்லையும் கொண்டு பெரிய படகாக கட்ட ஆரம்பித்தனர். வேதஸ என்ற மரக் கிளைகளையும், நாவல் மரக் கிளைகளையும் கொண்டு வந்து, வீரனான லக்ஷ்மணன் வெட்டி சீதை உட்கார வசதியாக ஆசனம் அமைத்துக் கொடுத்தான். லக்ஷ்மி தேவி போல விளங்கிய தன் மனைவியைப் பார்த்து ராமர், சற்றே வெட்கத்துடன் தயங்கியவளை கை லாகு கொடுத்து தூக்கி ஏற்றிவிட்டார். வைதேஹியின் அருகில் வஸ்திரங்களையும், பூஷணங்களையும் வைக்க மரத்தில் குடைந்து பெட்டி போல செய்தார் ராமர். முதலில் சீதையை ஏற்றி படகை பிடித்துக் கொண்டு பின் இருவரும் மகிழ்ச்சியுடன் ஏறி அமர்ந்தனர். பாதி நதியைக் கடந்த நிலையில், சீதை காளிந்தீ நதியை வணங்கினாள். ஸ்வஸ்தி தேவி, உன்னை கடந்து செல்கிறேன். பதியைத் தொடர்ந்து வந்த என்னை காப்பாற்று. உன்னை பூஜிக்கிறேன். நூற்றுக் கணக்கான குடம் மது வகைகளும் நூறாயிரம் பசுக்களும் அளிக்கிறேன். ராமர் திரும்பி வந்து இக்ஷ்வாகு தலை நகரான அயோத்தி ராஜ்ய பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் என் வேண்டுதலை நிறைவேற்றுவேன். இவ்வாறு கை கூப்பி காளிந்தீ நதியை வேண்டினாள். நதியின் தென் கரையை வந்தடைந்தனர். பிறகு அலை அடித்துக் கொண்டு ஓடும் அம்சுமதி நதியையும் கடந்து சென்றனர். கரையில் இருந்த பலவகை மரங்களை பயன் படுத்தி யமுனை நதியைக் கடந்தனர்.
படகை விட்டு விட்டு யமுனை கரையோரமாக நடந்து கறுத்து அடர்ந்திருந்த ந்யக்4ரோத மரத்தடியை அடைந்தனர். அந்த மரத்தினிடம் வைதேஹி மகா வ்ருக்ஷமே, உனக்கு நமஸ்காரம். பதிவிரதையான என்னை கரை சேர்ப்பாயாக (காப்பாற்றுவாயாக). என் மாமனார் வயதானவர். நீண்ட நாள் வாழட்டும். என் கணவரும் இளைய சகோதரரும், பரதன் முதலானோரும் நீண்ட ஆயுசோடு விளங்கட்டும். என் மாமியார் கௌசல்யையையும், சுமித்திரையையும் திரும்பக் காண வேண்டும். இவ்வாறு வேண்டி, அந்த மரத்தை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்தாள். இதன்பின் சீதையை நிமிர்ந்து பார்த்த ராமர், லக்ஷ்மணனிடம், இவளை அழைத்துக் கொண்டு நீ முன்னால் போ, நான் பின்னால் கையில் ஆயுதங்களை ஏந்தி பாதுகாப்பாக வருகிறேன். என்று சொன்னார். எந்த எந்த புஷ்பங்களையோ, பழங்களையோ பார்த்து வைதேஹி கேட்டால், அவளுக்கு பறித்துக் கொடு. அவள் மனம் மகிழும் படி கூடவே சென்று, வேண்டியதை தேடிக் கொடு என்றார். நடந்து போகும் அவ்விருவரின் மத்தியில், ஜனகர் மகள் சென்றாள். பெரிய யானைகளுக்கிடையில் செல்லும் குட்டி யானை போல நடந்தாள். ஒவ்வொரு மரத்தையும், புதரையும், பூக்கள் மண்டிய செடிகளையும் இது வரை காணாத ஒவ்வொன்றையும் பற்றி ராமனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவாறு நடந்தாள். பல அழகிய பூக்களை மரங்களிலிருந்து பறித்துக் கொண்டு வந்து லக்ஷ்மணன் அவளுக்கு கொடுத்தான். நதியைக் கண்டு ஜனக ராஜாவின் மகள் குதூஹலம் அடைந்தாள். மணல் பல வர்ணங்களில் தெரிய, கறுத்தும், ஹம்ச, ஸாரஸ பக்ஷிகள் நிறைந்ததுமான அந்த நதியைக் கண்டு மகிழ்ந்தாள். ஒரு க்ரோச மாத்திரத்தில் இவ்வாறு நடந்து ராமரும், லக்ஷ்மணரும் யமுனா வனத்தில் மாமிசம் நிறைந்த மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு வந்தனர். அந்த சுபமான வனத்தில் பக்ஷிகளின் இரைச்சலோடும், வானரங்களும், யானைகளும் நடமாடும் இடத்தில் நடந்தபடி, வனத்தின் மையமான இடத்தை அடைந்து தாங்கள் வசிக்க ஏற்பாடுகளை செய்ய முனைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் யமுனாதரணம் என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 56(133) சித்ர கூட நிவாஸ: (சித்ர கூடத்தில் வசித்தல்)
அன்று இரவு கழிந்ததும், இன்னும் தூங்கிக் கொண்டிருந்த லக்ஷ்மணனை ரகுநந்தனன், மெதுவாக எழுப்பினான். சௌமித்ரே, காட்டு பக்ஷிகள் கூக்குரலிடுவதைக் கேள். நாம் கிளம்ப நேரம் ஆகி விட்டது. புறப்படுவோம். தூங்கிக் கொண்டிருந்த லக்ஷ்மணன், ராமர் எழுப்பியவுடன் தூக்கத்தையும் (சோம்பலையும்), களைப்பையும், உதறித் தள்ளி, எழுந்து மூவருமாக நதி ஜலத்தைத் தொட்டு, முனிவர் சொன்னபடியே, சித்ர கூடத்தை நோக்கி செல்லலாயினர். சௌமித்திரியுடனும், சீதையுடனும் நடந்து சென்ற ராமர், சீதையைப் பார்த்துச் சொன்னார். வைதேஹி, இந்த மரங்களின் நுனியில் பூக்கள் செக்கச் சிவக்க பூத்து நிறைந்திருப்பதை பார்த்தால் கொழுந்து விட்டெரியும் அக்னி ஜ்வாலை போல இல்லை. கிம்சுகம் என்ற இந்த மரம் தன் புஷ்பங்களால் பனி மறையும் நேரத்தில் கொத்து கொத்தாக பூத்து, இலை தெரியாமல் மூடிக் கிடக்கும். ப4ல்லாதகான் என்ற மரம் இது. இதோ பார் வில்வ மரம். இதில் வானரங்கள் குடியிருக்கின்றன. எல்லா மரங்களுமே பழ மரங்களுமாகவும், புஷ்பங்களின் பாரத்தால் வணங்கியபடியும் தெரிகின்றன. நாம் கட்டாயம் உணவுக்கு பஞ்சமில்லாமல் உயிர் வாழ முடியும். த்3ரோண அளவு (கிட்டத்தட்ட 2 படி அளவைக் குறிக்கும் சொல்) தேனீக்கள் கூடு கட்டியிருப்பதைப் பார். லக்ஷ்மணா, பார். தேனீக்கள் ஒவ்வொரு மரத்திலும் கூடு கட்டி தேனை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. நத்யூஹம் என்ற பறவை இங்கு கத்துகிறதா, அதற்கு பதில் சொல்வது போல மயில் அகவும் சத்தம் கேட்கிறது. இந்த வனப் பிரதேசம் மிகவும் ரமணீயமாக இருக்கிறது. சித்ர கூட மலை அருகில் வந்து விட்டோம். இங்கும் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. யானைக் கூட்டம் வரிசை வரிசையாக செல்கின்றன. பக்ஷிகள் இரைச்சலும் சேர்ந்து கேட்கிறது. உயர்ந்த சிகரத்தையுடைய மலை. இது தான் சித்ர கூடமாக இருக்க வேண்டும். இதன் பின் அவர்கள் மேலும் நடந்து பூமி சம தளமாக இருந்த இடத்தை தேர்ந்தெடுத்து, இங்கேயே வசிப்போம் என்று தீர்மானித்தனர். அருகில் நீர் நிலையில் நல்ல ஜலமும், நிறைய பழங்கள் உடைய மரங்களும், கிழங்குகளும் கிடைக்கும் படியான அழகிய இடத்தைக் கண்டு கொண்டனர். இந்த மலையின் உச்சியில் முனிவர்கள் வசிக்கிறார்கள். இங்கேயே நாம் நமது இருப்பிடத்தை தயார் செய்து கொண்டு திருப்தியாக வாழ்வோம். இவ்வாறு பேசிக் கொண்டே, மூவரும் சுற்றி சுற்றி வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தனர். இவர்களைக் கண்டு முனிவர் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் அடைய அவரை மூவரும் வணங்கினர். தங்களைப் பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டனர். தர்மம் அறிந்த முனிவரும் ஸ்வாகதம் சொல்லி, உட்காருங்கள் என்று உபசரித்து, அதிதி சத்காரம் செய்தார்.
பின் ராமன், லக்ஷ்மணனைப் பார்த்து த்ருடமான கட்டைகளை உயர்ந்த ரக மரத் துண்டுகளை கொண்டு வா. இங்கு நாம் வசிக்க வீடு கட்டுவோம். இந்த இடம் எனக்கு பிடித்திருக்கிறது என்றார். இதைக் கேட்டு லக்ஷ்மணனும் காட்டுக்குள் சென்று பலவித மரங்களைக் கொண்டு வந்து பர்ண சாலையை கட்டத் துவங்கினான். ஒரே நோக்கோடு, ஈ.டுபட்டு கஷ்டமான இந்த வேலையையும் சளைக்காமல் செய்வதைப் பார்த்து வியந்தார். பணிவிடை செய்வதில் ஏகாக்ர சித்தம் உடையவனாகவும், செய்யும் நேர்த்தியையும் பார்த்து பாராட்டினார். பின், லக்ஷ்மணா, மானின் மாமிசத்தைக் கொண்டு வா. யாக சாலை வைத்து யக்ஞம் செய்வோம். வாஸ்து சமனம் என்ற பூஜையையும் செய்வோம். நீண்ட நாள் ஆரோக்யமாக வாழ விரும்புபவர்கள், இதை செய்ய வேண்டும். சாஸ்திர முறைப் படி என்ன செய்ய வேண்டுமோ, செய்வோம். முதலில் ஒரு மானை வேட்டையாடி வா என்று சொல்லியனுப்பினார். எதிரிகளை க்ஷண நேரத்தில் தோற்கடிக்கும் வல்லமை வாய்ந்த லக்ஷ்மணன், ராமரின் கட்டளைப் படி மானை வேட்டையாடி வந்தான். இதை வேகவை. யாக சாலையில் இதைக் கொண்டு யாகம் செய்வோம். சீக்கிரம் லக்ஷ்மணா, சௌம்யமான முஹுர்த்தம் இது. இன்று நாளும் த்4ருவம் எனப்படும். லக்ஷ்மணன் க்ருஷ்ண மிருகத்தை அடித்து மேத்4யம் என்பதைக் கொண்டு நெருப்பில் கொழுந்து விட்டெரியும் பொழுது போட்டான். நன்றாக வெந்தபின், பக்குவமான பின் ராமரிடம் சொன்னான். இதோ கரும் நிற மான். நன்றாக வேக வைக்கப் பட்டது. இதைக்கொண்டு உன் யாகத்தை செய். எனவும், ராமர் குளித்து விட்டு ஜபங்களை நன்கு அறிந்தவரானாதலால், நியமங்களோடு ஜபம் செய்து, யாகத்துக்குண்டான எல்லா மந்திரங்களையும் சுருக்கமாக வரிசையாக சொல்லி, தேவ கணங்களை திருப்தி செய்து, பூஜை செய்து, தங்கள் பவனத்திற்குள் நுழைந்தார்கள். இதனால் அவருக்கு மிக்க மன நிறைவும், திருப்தியும் ஆனந்தமும் உண்டாயிற்று. வைவஸ்வத தேவ பலி, ருத்ரனுக்கான பலி, வைஷ்ணவ பலி இவற்றையும் செய்து, வாஸ்து சம் சமனீயம் என்றவைகளையும், பல மங்களங்களையும் செய்து வைத்தார். ஜபங்களை முறைப் படி செய்து, நதி ஜலத்தில் நீராடி, பாப சம்சமனம் என்ற காரியத்தையும், பலியையும், சிறந்த முறையில் செய்தார். வேதி (யாக) ஸ்தல விதானங்களை நான்கு புறமும் தூண்களுடன் கூடிய பூஜையறை முதலியவற்றை ஆஸ்ரமத்திற்கு அனுரூபமாக இருக்கும் படி அமைத்துக் கொண்டார். இருவருமாக காட்டில் கிடைத்த மாலைகள், பழ வகைகள், கிழங்கு வகைகள், பக்வமான மாமிசம், ஜலம், இவற்றைக் கொண்டு, ஜபங்கள் செய்து, வேதத்தில் சொல்லியபடி சமித் குசங்கள் தர்ப்பங்கள், இவற்றைக் கொண்டு ஐந்து பூதங்களையும் அதி தேவதைகளையும் தர்ப்பித்து விட்டு (திருப்தி செய்து விட்டு) சீதையுடன் உள்ளே நுழைந்தனர். மங்களமான முறையில், புது மனை புகும் விழாவைச் செய்தனர். அந்த வீடு சரியான இடத்தில் அதிக காற்று அடிக்காமல் மரத்தின் நிழலில் மறைந்து அழகாக விளங்கியது. நல்ல முறையில் கட்டப் பட்ட அந்த வீட்டில் எல்லோரும் ஒன்றாக வசிக்க நுழைந்தார்கள். தர்மம் நிறைந்த இந்திரன் சபையில் தேவ கணங்கள் நுழைவது போல. பலவிதமான பக்ஷிகளும், மிருகங்களும் நிறைந்த அந்த இடத்தில், விசித்திரமான இலைகளையுடைய ஸ்தபக என்ற மர வகை நிறைந்து காணப்பட்டது. உத்தமமான அந்த காட்டில் யானைகளும், மான்களும் சுதந்திரமாக ஓசையெழுப்பிக் கொண்டிருந்தன. ஜிதேந்திரர்களான ராஜ குமாரர்கள் மன நிறைவோடு வசிக்கலாயினர். அழகிய சித்ர கூட மலையில் ஏறி, சுத்தமான தீர்த்தம் உள்ள மால்யவதி நதியில் இறங்கியும், ராமர் மன மகிழ்ச்சி அடைந்தார். நகரத்தை விட்டு வந்த வேதனையும் அவர் மனதிலிருந்து அகன்றது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சித்ரகூட நிவாசோ என்ற ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 57(134) சுமந்த்ரோபாவர்த்தனம் (சுமந்திரர் திரும்பி வருதல்)
ராமர் கிளம்பிச் சென்ற பின் வெகு நேரம் வரை குகன் சுமந்திரருடன் பேசிக் கொண்டிருந்தான். அங்கிருந்தபடியே எதிர்க்கரையில் ராம, லக்ஷ்மண, சீதை மூவரும் பரத்வாஜ ஆசிரமத்தை அடைந்ததையும், பிரயாகை சென்றதையும், சித்ர கூட மலையடிவாரம் சென்றதையும் அறிந்து கொண்டனர். பின் குதிரைகளை ரதத்தில் பூட்டிக் கொண்டு சுமந்திரர் விடை பெற்றார். மனம் கனக்க, அயோத்தி நோக்கி பிரயாணமானார். வாசனை மிகுந்த பூக்களையுடைய நந்த வனங்களையும், நதிகளையும் குளங்களையும் கடந்து, சீக்கிரமாக கிராமங்களையும், நகரங்களையும் கண்டு சாயங்கால வேளையில் மறு நாள் சாரதி அயோத்தி வந்து சேர்ந்தார். ஊர் மகிழ்ச்சியின்றி காணப் பட்டது. சூன்யமாக, அமைதியாக இருந்த ஊரைக் கண்டு, சுமந்திரர் யோசித்தார். இது என்ன? ராமரை பிரிந்த துக்கம் என்ற அக்னி இந்த ஊர், யானைகள், குதிரைகள், ஜனங்கள், ஊர் தலைவர்கள், எல்லோரையும் ஒட்டு மொத்தமாக தகித்து சாம்பலாக்கி விட்டதா? சீக்கிரமாக ஓடக் கூடிய குதிரைகளைத் தட்டி வேகமாக ஓட்டிக் கொண்டு நகர வாசலில் நுழைந்தார். சுமந்திரனைக் கண்டதும், நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான ஜனங்கள் ஓடி வந்து எங்கே ராமன்? என்று ஆவலுடன் கேட்டனர். கங்கா கரையில், தார்மிகனான ராமனிடம் விடை பெற்றுக் கொண்டு நான் திரும்பி வந்து விட்டேன், என்று சுமந்திரர் சொன்னதும், நதியைக் கடந்து போய் விட்டார்களா? -ஹா திக்- என்று ஜனங்கள் வருந்தினர். கூட்டம் கூட்டமாக நின்ற ஜனங்கள், திரும்பத் திரும்ப சுமந்திரர் சொன்ன செய்திகளை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டும், இனி எப்பொழுது ராமரை பார்க்கப் போகிறோம் என்று ஏக்கத்துடனும், வருத்தத்துடனும் பேசிக் கொண்டனர். தா3ன யக்ஞமோ, விவாகமோ, சமாஜ உத்ஸவமோ, இப்போதைக்கு ராமனைக் காண மாட்டோம் என்றனர். இவர்களுக்கு எது உகந்தது, எது பிரியமானது, எது நன்மை தரக் கூடியது என்று பார்த்து பார்த்து ராமன் தந்தையைப் போல நகரத்தை பாலித்து வந்தான்.
ஜன்னல்களிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஸ்த்ரீகளும், கடை வீதிகளில் நடமாடிக் கொண்டிருந்த பெண்களும் ராமனது பிரிவை தங்கள் தீனமான குரல்களில் வெளிப் படுத்தினார்கள். முகத்தை மூடியபடி, சுமந்திரர் அந்த ராஜ மார்கத்தில் ரதத்தை செலுத்திக் கொண்டு, தசரத ராஜா இருந்த வீட்டிற்கே சென்றார். ரதத்திலிருந்து வேகமாக இறங்கி, அரசனது மாளிகையில் பிரவேசித்து, பிரமுகர்கள் நிறைந்த ஏழு அறைகளைக் கடந்து உள்ளே சென்றார். அவர் வந்ததை, உப்பரிகைகளிலும், விமானங்களிலும்
மாளிகைகளிலும் இருந்து பார்த்த அரச குல ஸ்த்ரீகள், ஹா, ஹா என்று அலறினர். ஒருவரையொருவர் நீர் நிறைந்த விழிகளால் ஏறிட்டுப் பார்த்துக் கொண்டனர். ரகசியமாக, அடங்கிய குரலில் பேசிக்கொண்டனர். ராமனோடு கிளம்பிச் சென்றவன், ராமன் இல்லாமல் திரும்பி வந்திருக்கிறான். இந்த சாரதி, கதறும் கௌசல்யைக்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறான் என்றனர். பாவம், கௌசல்யை. எப்படித்தான் உயிர் தரித்து இருக்கிறாளோ, அரசனின் அந்த:புரத்தைச் சேர்ந்த அந்த பெண்களின் வார்த்தையில் உண்மை இருக்கிறது என்று எண்ணியபடி சுமந்திரர் இன்னும் உள்ளே சென்றார். எட்டாவது அறையில் பரிதாபமாக, புத்ர சோகத்தால் இளைத்து, வெளுத்த உடலுடையவனாக ராஜா தசரதனைக் கண்டான். அருகில் சென்று அரசனை வணங்கி, ராமர் சொன்னதை அப்படியே சொன்னார். வாய் திறவாது அவர் சொல்லி முடிக்கும் வரை கேட்ட அரசன், மனம் கலங்க, மூர்ச்சையாகி பூமியில் விழுந்தார். சுமந்திரர் உதவியுடன் கௌசல்யா, அரசரை தூக்கி நிறுத்தி கஷ்டமான காரியத்தை செய்து விட்டு வந்திருக்கிறான் இந்த சாரதி, இவனுடன் பேசாமல் ஏன் இருக்கிறீர்கள் என்று அரசனைக் கடிந்து கொண்டாள். வன வாசத்திலிருந்து வந்திருக்கிறான். இப்பொழுது இப்படி நயமில்லாமல் நடந்து கொண்டு அவமதிக்கிறீர்கள். ராகவா எழுந்திருங்கள். உங்களுக்கு நன்மையுண்டாகட்டும். சோகத்தில் சகாயம் செய்வது உலக வழக்கம் தானே. (அல்லது நீங்கள் இப்படிசோகத்தில் மூழ்கி கிடந்தால் பரிஜனங்கள் என்ன ஆவார்கள் என்பது திலகர் உரை). யாரைக் கண்டு பயந்து சாரதியிடம் பேசாமல் இருக்கிறீர்களோ, அந்த கைகேயி இங்கு இல்லை. நிம்மதியாக பேசலாம் என்று சொல்லி கௌசல்யா, தன் வருத்தம் அழுத்த தரையிலமர்ந்தாள். கௌசல்யை அழுவதையும், அவள் பதியின் நிலைமையையும் பார்த்து அருகிலிருந்த மற்ற ஸ்த்ரீகளும் அழலாயினர். வயதானவர், சிறுவர், என்றோ, பெண்களோ, ஆண்களோ எல்லோரும் அந்த சமயம் ஒரே விதமான மன நிலையில் இருந்தனர். திரும்பவும் அயோத்யாவில் அழும் குரல் ஓலமாக எழுந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சுமந்திரோபாவர்த்தனம் என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 58 (135) ராம சந்தேசாக்யானம் (ராமனது செய்தியை விவரித்தல்)
மோகத்திலிருந்து விடுபட்டு அரசன் இழந்த நினவை திரும்பப் பெற்றான். சாரதியை அழைத்து நடந்த விவரங்களைக் சொல்லப் பணித்தான். கை கூப்பி வணங்கி நின்ற சாரதி, துக்கமும், சோகமும் ஒன்று சேர, ராமனையே நினத்து வாடும் முதியவரை, நவக்ரஹங்கள் அப்பொழுது தான் பிடித்தது போல தவிக்கும் அரசரை, உடல் நலம் சரியில்லாத யானை பெருமூச்சு விடுவதைப் போல இருந்தவரை, புழுதி படிந்த உடலுடன் கண்களில் நீர் மல்க நிற்கும் அரசரைப் பார்த்தான். அரசர் வினவினார். மரத்தடியை அடைந்த ராமன் என்ன சொன்னான்? சாரதியே | எப்பொழும் சுகமாக வாழ்ந்தவன், என்ன செய்தான்? சயனம் எப்படி இருந்தது? உருத்தாமல் இருந்ததா? பூமி பாலன் மகன், அனாதையாக தரையில் படுத்தானா? எவன் வெளியே கிளம்பினால், ரத, கஜ ரக பதாதி என்று நால் வகை சேனைகளும் பின் தொடருமோ, அவன் நிர்ஜனமான வனத்தில் எப்படி இருக்கிறான்.? க்ருஷ்ண சர்ப்பங்கள் மண்டி கிடக்கும். யானைகளும், மிருகங்களும் வசிக்கும் இடத்தில் என் குமாரர்கள் எப்படி வைதேஹியுடன் வசிக்க முடியும் ? சுகுமாரியான சீதா தபஸ்வி. அவளுடன் என் குமாரர்கள் ரதத்திலிருந்து இறங்கி காலால் நடந்து சென்றார்களா? நீ பாக்யசாலி சுமந்திரா| என் குழந்தைகளை கண்டாய். அஸ்வினி தேவதைகள் கோவிலுக்குள் நுழைவதைப் போல என் குழந்தைகள் காட்டிற்குள் செல்வதைக் கண்ணால் காணும் பேறு பெற்றாய். ராமன் என்ன சொன்னான்? லக்ஷ்மணன் என்ன சொன்னான்? மைதிலி என்ன சொன்னாள்? சாரதி| என் மகன் உட்கார்ந்தது, படுத்தது, சாப்பிட்டது என்ன என்று விவரமாக சொல்லு. இதைக் கேட்டே நான் உயிர் வாழப் போகிறேன். யயாதி, சாதுக்களிடம் இருந்தது போல. அரசன் இவ்வளவு கேட்ட பின், சாரதி சொல்ல ஆரம்பித்தார், மகாராஜா| தர்மத்தையே பின் பற்றும் ராமன், கை கூப்பி, தங்கள் பாதங்களில் விழுந்து வணங்கியதாக சொல்லச் சொன்னார். தந்தைக்கு எல்லாம் தெரியும், இருந்தாலும் சாரதி, என் வார்த்தைகளாக சொல்லு. திரும்ப திரும்ப பாதங்களில் தலை பட வணங்கியதாக சொல்லு. அந்த:புரத்தில் அனைவரிடமும் நான் நலம் விசாரித்ததாக சொல்லு. என் தாய் கௌசல்யைக்கு வணக்கம். குசலம் விசாரித்ததாக சொல்லு. அவளைக் கவலைப் படாதே என்று சொல். எப்பொழுதும் தர்ம சிந்தனையுடன் அக்னி பூஜை செய்து வருபவளாகவே இரு, தேவி. அரசனிடம் அதே ஈடுபாட்டுடன் இரு. மற்ற தாயார்களிடம் (அரசனின் மற்ற
மனைவிகளிடம்) அபிமானமோ, மானமோ வைத்துக் கொள்ளாதே. கைகேயியிடமும் ராஜாவிடம் கனிவாக இருக்கும்படி பார்த்துக் கொள். குமாரனான பரதனிடம், அரசன் என்ற எண்ணத்துடன் இரு. அரசன் என்று வந்தவுடன், அர்த்த ஜ்யேஷ்டா, பணம் படைத்தவன் என்ற தர்மம் தான் செல்லுபடியாகும். அது தான் ராஜ தர்மம். பரதனிடம் குசலம் விசாரி. நானும் விசாரித்ததாக சொல்லு. எல்லோரிடமும் பேசி பழகிக் கொண்டு இரு. இக்ஷ்வாகு குல நந்தனனான என் தந்தையிடம் சொல். யௌவராஜ்யத்தில் நியமிக்கப் பட்டவனிடத்தில், ராஜ்ய பதவியில் இருப்பவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அது போல அனுசரித்து நடந்து கொள்ளச் சொல். ராஜாவுக்கு வயது முதிர்ந்து விட்டது. அவரை அதிகமாக வருத்தம் அடைய செய்யாதீர்கள். குமாரனுடய ராஜ்யத்தில் நீங்கள் வசியுங்கள். அவன் கட்டளையை நிறவேறச் செய்யுங்கள். இதைச் சொல்லும் பொழுது ராமன் கண்களில் நீர் பெருகி ஓடியது. சுமந்திரா| என் தாயை உன் தாயாக எண்ணி கவனமாக பார்த்துக் கொள் என்றான். தாமரை மலர்ப் போன்ற கண்களில் நீர் மறைக்க ராமன் இந்த வார்த்தையைச் சொன்னான். லக்ஷ்மணனுக்கு மகா கோபம். நெடு மூச்சு விட்டுக் கொண்டு கேட்டான். எந்த அபராதத்திற்காக அரச குமாரனை நாடு கடத்தினீர்கள்? மகாராஜா, கைகேயியின் கட்டளையை சிரமேற்கொண்டு, செய்யத் தகாததைச் செய்து விட்டீர்கள். அதன் பலனை நாங்கள் அனுபவிக்கிறோம். லோபம் காரணமாக இருந்ததா? வரதானம் நிமித்தமாக வந்ததா? எதுவானாலும் மிகவும் கொடுமை. இஷ்டம் போல் தன் வரையில் எதுவானாலும் செய்திருக்கலாம். ராமனை தியாகம் செய்வதில், ஒரு காரணமும் தென் படவில்ல. யோசிக்காமல் செய்த காரியம். புத்தி லாகவத்தால் விபரீதமாக ஆரம்பிக்கப் பட்டது. ராகவனை வெளியேற்றிய உங்களுக்கு பல கஷ்டங்கள் உண்டாக்கப் போகிறது. நான் மகா ராஜாவிடம் தந்தை ஸ்தானத்தையே விட்டு விட்டேன். எனக்கு சகோதரனும், பந்துவும், தலைவனும் தந்தையும், ராமனே. உலக முழுவம் விரும்பும் ஒருவனை, உலகத்தாரே நேசிக்கும் ஒருவனை தியாகம் செய்து விட்டு, இப்படி ஒரு காரியம் செய்து விட்டு, உலகத்தை என்ன செய்து பரிபாலிக்கப் போகிறீர்கள்? எப்படி ஜனங்களை மனம் குளிரச் செய்வீர்கள்? பிரஜைகளுக்கு பிடித்தமான ராமனை தார்மிகனானவனை தியாகம் செய்து விட்டு, உலகத்தையே எதிர்த்துக் கொண்டு எப்படி அரசனாக ராஜ்ய பாலனம் செய்யப் போகிறீர்கள்? ஜானகி எதுவும் சொல்லத் தெரியாமல், ஆச்சர்யமும், வினோதமுமாக நின்றாள். இது வரை கஷ்டம் என்றால் என்ன என்று அறியாதவள். மற்ற இருவரும் ஆவேசமாக பேசி, கண்களில் நீர் பெருக நிற்பதை மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றாள். எதுவும் சொல்லவில்லை. நான் கிளம்பியவுடன், அவளும், என்னைப் பிரியும் வருத்தம் தெரிய, கண்களில் நீர் பெருக நின்றாள். ராமர் தான் லக்ஷ்மணனை அணைத்துக் கொண்டு துக்கம் தாளாமல் அழுதார். சீதை அவர்களையும், கிளம்பிய என் ரதத்தையும் பார்த்தபடி இருந்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், ராம சந்தேசாக்2யானம் என்ற ஐம்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 59 (136) தசரத விலாப: (தசரதனின் புலம்பல்)
இவ்வாறு சாரதியான சுமந்திரன் சொல்லி நிறுத்தவும், இன்னமும் சொல்லு என்று ராஜா தூண்டினார். மீதியையும் சொல் எனவும், சுமந்திரன் திரும்பவும் விஸ்தாரமாக ராமர் சொல்லியனுப்பிய செய்தியை சொல்லலானார். மரவுரி, வல்கலை அணிந்து ஜடா முடிகளை செய்து கொண்டு, கங்கையைக் கடந்து அவர்கள் பிரயாகை நோக்கிச் சென்றனர். லக்ஷ்மணன் முன்னால் சென்றான். நடுவில் சீதை. இவர்களை பாதுகாத்துக் கொண்டு ராமன் கடைசியில் சென்றான். இவர்கள் இவ்வாறு செல்வதைப் பார்த்த பின் செய்வதறியாது நான் திரும்பி விட்டேன். என் குதிரைகளை திருப்பினால், அவைகளும் வர முரண்டு பிடித்தன. ராஜ குமாரர்களை விட்டு வருவது அந்த குதிரைகளுக்கு கூட தாங்கமுடியவில்லை. நான் இருந்த இடத்தில் இருந்தே ராஜ குமாரர்களுக்கு வணக்கம் செலுத்தி விட்டு, இதயம் பாறையாக கனக்க, ரதத்தை ஓட்டிக் கொண்டு திரும்பி வந்தேன். குகனுடன் சில நாட்கள் அங்கேயே இருந்தேன். ஒரு வேளை ராமன் குரல் கொடுப்பானோ என்ற நப்பாசையுடன் காத்திருந்தேன். ராமனுடைய கஷ்டத்தைக் கண்டு மரங்கள் கூட வாடி விட்டன. மொட்டுகளும், மலர்களும் வாடி வதங்கி போய் விட்டன. நதிகளில் நீர் கொதிக்கிறது. சிறிய குளங்களோ, நீர் நிலைகளோ, இதே நிலை தான். சுருங்கிய இலைகளையுடைய பலாசமரங்கள் வனத்தில் தென்படுகின்றன. ஊர்வன ஊர்ந்து செல்வதில்லை. யானைகள் அதிர நடப்பதில்லை. ராமனது சோகத்தில் பங்கு கொள்வது போல வனம் நிச்சப்தமாக ஆகி விட்டது. புஷ்கரங்களில் இலைகள் மிதந்தன. நதிகளில் நீர் கலங்கலாக இருந்தது. பத்மங்களில் சேறு தெளித்திருந்தது. மீன்களும், பறவைகளும் ஓய்ந்து கிடந்தன. ஜலத்தில் பூக்கும் பூக்களும், மலர்களும், தரையில் முளைத்து பூத்தவையும், ஒளி யின்றி, வாசனை குறைவாக இருந்தன. முன் போல பழங்களும் இல்லை. உத்யான வனங்கள் இன்று சூன்யமாகத் தெரிகின்றன. பறவைகளும் மறைந்து இருக்கின்றன. ஓய்வு எடுக்க என்று உள்ள தோட்டங்களிலும் நந்த
வனங்களிலும் எதிலுமே உற்சாகத்தைக் காணவில்லை அரசே. அயோத்தி மா நகருள் நுழைந்த என்னை யாருமே வாழ்த்துக் கூறி வரவேற்கவில்லை. ஜனங்கள் ராமரைக் காணாமல் திரும்ப திரும்ப பெருமூச்சு விடுகின்றனர். ராமன் இன்றி அரச ரதம் திரும்பி வந்ததைப் பார்த்து, ராஜ மார்கத்தில் வந்த ஜனங்கள் ஏமாற்றமடைந்து கண்ணீர் பெருகும் முகத்தை திருப்பிக் கொண்டனர். வீட்டு மாடியிலிருந்தும், உப்பரிகையிலிருந்தும், மாளிகைகளிலிருந்தும் பார்த்த ஜனங்கள், பெண்கள் ராமனைக் காண விரும்பியவர்களாக ஹா ஹா என்று அலறிய சத்தம் கேட்டது தங்கள் பெரிய கண்கள் நீரில் மிதக்க, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இந்த வருந்தி புலம்பும், ஜனங்களில் யார் மித்ரன், யார் மித்ரனல்லாதவன் என்று பாகு படுத்தி தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. எல்லோரும் ஒரே போல கவலையும், உதாசீனமும் கொண்டவர்களாக இருந்தனர். கௌசல்யா புத்ரனை பிரிந்து வாடுவதைப் போலவே, பூரா அயோத்யா நகரமும் மகிழ்ச்சியின்றி இருப்பது போல எனக்குத் தெரிகிறது.
சாரதியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு தசரத ராஜா தீனமாக தழ தழக்கும் குரலில் சொன்னார் கைகேயியின் பாப புத்தியில் மாட்டிக் கொண்டு, நான் மந்த்ர குசலர்களான பெரியவர்களையும் கலந்து ஆலோசிக்கவில்லை. நண்பர்களையும் கேட்கவில்லை. மந்திரிகளிடம் அபிப்பிராயம் கேட்கவில்லை. சாஸ்திரங்களை ஒப்பிட்டு பார்க்கவும் இல்லை. அவசரமாக, பெண்ணின் காரணமாக மோகத்தில் மூழ்கி எடுத்த முடிவு. இந்த பெரும் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பது விதி என்று தான் சொல்ல வேண்டும். யதேச்சையாக இந்த குலத்தை நாசம் செய்யவே வந்து சேர்ந்தது. என் சுக்ருத பயன் ஏதாவது கொஞ்சம் இருக்குமானால், என்னை ராமனிடம் கொண்டு சேர். என் காலம் முடியும் நேரம் வந்து விட்டது. எந்த விதத்திலாவது என் கட்டளைகள் திருப்பப் படட்டும். (கைகேயியே மனம் மாறி என்றும் தோன்றுகிறது). ராமன் இன்றி முஹுர்த்தம் கூட வாழ என்னால் முடியாது. அல்லது, ராமன் வெகு தூரம் போய் இருப்பான். என்னை ரதத்தில் ஏற்றிக் கொண்டு போய் அவனிடம் காட்டு. அழகிய பல் வரிசையை உடையவன், சிறந்த வில்லாளி, லக்ஷ்மணனுக்கு முன் பிறந்தவன் எங்கே போனான்? அவனை சீதையுடன் கூட பார்க்க உயிருடன் இருப்பேனா?. சிவந்த கண்களுடையவன், மகா பாஹு, மணி குண்டலங்களால் அலங்கரிக்கப் பட்டவன், அந்த ராமனை கண்ணால் காணாது போனால், நான் நிச்சயம் யமனுடைய அடியைத் தான் அடைவேன். ஐயோ, இதை விட வேறு என்ன கஷ்டம் வேண்டும்? இக்ஷ்வாகு நந்தனனைக் காணாமல் துடிக்கிறேனே. என் ராகவனைக் காண மாட்டேனா? ஹா ராமா, ஹே ராமானுஜா, (லக்ஷ்மணன்), ஹே வைதேஹி, நீ தபஸ்வினி, நான் அனாதையாக இறந்து கொண்டிருப்பதை நீங்கள் மூவரும் அறிய மாட்டீர்கள். தன் துக்கத்தில் ஆழ்ந்து போன ராஜா, சோக சாகரத்தில் மூழ்கியவராக, கரை ஏற முடியாமல் தவித்தான். கௌசல்யே, நான் சமுத்திரத்தில் மூழ்கி கொண்டிருக்கிறேன். அது எப்படிப்பட்ட சமுத்திரம் தெரியுமா? ராம சோகம் என்பதே மகா வேகம். சீதையை பிரிந்த துக்கம் தான் எல்லைகள். என் சுவாஸம் தான் வீசும் சுழல் காற்று. என் கண்ணீர் தான் கடலில் நுரையாக பெருகி வரும். கைகளை நான் தூக்கிப் போடுவது தான் பெரும் மீன் கூட்டங்கள், என் கதறல் சமுத்திர கர்ஜனைக்கு இணையானது. என் விரிந்த தலை முடி தான் பாசி. கைகேயி தான் வடவாக்னி. என் கண்ணீர் தான் வெள்ளம். கூனி வாக்யம் தான் பெரிய முதலை, அந்த கொடியவளின் ராமனைக் கடத்தும் யோசனை தான் அலைகள், கஷ்டகாலமே, நான் இந்த சமுத்திரத்தில் மூழ்கி கிடக்கிறேன், ராகவன் இல்லாமல் கஷ்டப் பட்டு ஜீவிக்கிறேன். இந்த சோக சாகரத்தை தாண்ட முடியவில்லை. இது கொஞ்சம் கூட நன்றாக இல்லை. ராகவனை, லக்ஷ்மணனை காணாமல் இருப்பது, என்று ராஜா புலம்பி படுக்கையில் வீழ்ந்தார். உடனே மூர்ச்சையானார். ராம மாதா அவரது புலம்பலையும், உடல் நிலையையும் கண்டு பயந்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தசரத விலாபோ என்ற ஐம்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 60(137) கௌசல்யா சமாஸ்வாசனம்.
(கௌசல்யையை சமாதானம் செய்தல்)
நடுங்கும் குரலில் கௌசல்யா, சாரதியிடம் வேண்டினாள். சாரதி, என்னையும் ராமன் இருக்கும் இடத்துக்கு அழைத்துக் கொண்டு போ. அவர்களை விட்டு இருப்பது என்னால் முடியவில்லை. ரதத்தை திருப்பு. தண்டகாவனம் போகலாம். அவர்களைப் பின் தொடர்ந்து செல்கிறேன். அல்லது யமனடி சேருகிறேன். கண்கள் நிரம்பி, தொண்டை அடைக்கப் பேசினாள். அவளை சமாதானப் படுத்த சாரதி சொன்னார். தாயே, இந்த மோகம் பரபரப்பு, சோகம் இவைகளை விடுங்கள். இவைகள் உங்கள் துக்கத்தை அதிகப் படுத்தும். இந்த தாபத்தை துறந்து ராமன் காட்டில் வசிக்கிறான். லக்ஷ்மணனும் அவன் அடியை பின்பற்றி, பணி செய்பவனாக, பரலோகத்தையும் ஜயிப்பான். ஜிதேந்திரியன். ஜனங்கள் இல்லாத காட்டிலும் சீதை, வீட்டில் இருப்பது போலவே கவலையின்றி இருக்கிறாள். பயப்படவும் இல்லை. ராமனிடம் வைத்த மனம் நிறைந்த நம்பிக்கையோடு வளைய வருகிறாள். இவளிடத்தில் தீனமாக வருந்தும் சாயல் கூட இல்லை. வன வாசம் செய்ய அவள் ஏற்றவளே என்று கூட நான் நினைத்தேன். நகரத்தில் உபவனம் சென்றால் எப்படி அனுபவித்து ரசிப்பாளோ, அதேபோல ஜன நடமாட்டம் அற்ற காட்டிலும் ரசித்து மகிழ்கிறாள். பால சந்திரன் போன்ற முகம் உடைய பாலா, சிறு குழந்தை போல ரசிக்கிறாள். வனத்தில் வேறு யாரும் இல்லாததால், ராமனையே சார்ந்து இருக்கிறாள். அவனிடம் வைத்த இதயம் இவளுடையது. அவனைச் சார்ந்தது தான் வாழ்க்கை. ராமன் இல்லாத அயோத்யா கூட அவளுக்கு வனமாகத் தெரியும். வழியில் கிராமங்களையும், நகரங்களையும் பார்த்து விசாரித்தாள். நதிகளின் கதியை பார்த்து வியந்தாள். பலவிதமான மரங்களைப் பார்த்து ராமனையோ, லக்ஷ்மணனையோ கேட்டு அது என்ன என்று தெரிந்து கொள்வாள். அயோத்தியிலிருந்து இரண்டு மைல் தூரத்தில், வனத்தில் ஏதோ விளையாட வந்தது போல இருந்தாள். அவளைப் பற்றி இவைகளைத்தான் எனக்கு நினைவு வருகிறது. பட்டென்று ஒரு வார்த்தை சொன்னாள். தெளிவாக சொல்ல வரவில்லை. எதோ பரபரப்பாக சொன்னதை நினைவு படுத்திக் கொள்ள முடியாமல் சாரதி, தேவியிடம் மதுரமாக சொன்னான். சந்திர கிரணம் போன்ற அவள் முகம், வழி நடையாலோ, காற்றினாலோ, சம்ப்ரமம் பரபரப்பாகவோ, வெயிலில் அலைந்ததாலோ சற்றும் மாறவே இல்லை. பூர்ண சந்திரனுக்கு சமமான தயாளுவான வைதேஹியின் முகம் வாடியோ, சுருங்கி அழகு குன்றியோ தென்படவே இல்லை. கால்களில் அலக்த எனும் சென்னிற திரவத்தால் அலங்கரித்துக் கொள்பவள், அது இல்லாத நிலையிலும், அவள் பாதங்கள் தாமரை மலருக்கு சமமான பிரபையுடன் விளங்கியது. நூபுரங்களை கழட்டியதால் சுலபமானது போல, விளையாட்டாக தானே விளையாடுகிறாள். ராமனிடத்தில் வைத்த அன்பினால், ஆபரணங்களை கழட்டி வைத்தது தான். யானையையோ, சிங்கத்தையோ, புலியையோ பார்த்து ராமனது
தோளில் சாய்ந்தபடி பயமின்றி எதிர் நோக்கி நிற்கிறாள். அவளைப் பற்றி நீங்களோ மகாராஜாவோ கவலைப் பட வேண்டியதில்லை. இது சாஸ்வதமாக வரும் சரித்திரம், உலக வழக்கு. அவர்கள், மகரிஷிகள் வழியில் நன்கு ஊன்றியவர்களாக, சோகத்தை விட்டு மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய், காட்டில் கிடைக்கும் பழம் முதலியவற்றை ஆகாரமாக கொண்டு, வனத்தில் பிடிப்புடன், தந்தையின் சுபமான பிரதிக்ஞையை நிறை வேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு சொல்லிக் கேட்டும் கௌசல்யை, ராகவா என்றும், மகனே என்றும், பிரியமானவனே என்றும் அரற்றுவதை நிறுத்த முடியவில்லை.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கௌசல்யா சமாஸ்வாஸனம் என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)