பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் அயோத்யா காண்டம் 20 – 40

அத்தியாயம்  20 (97) கௌசல்யாக்ரந்த:  (கௌசல்யை புலம்புதல்)

கை கூப்பியபடி ராமன் வெளி யேறியதும், பெண்களின் அந்த:புரத்தில் வருந்தி புலம்பும் ஒலி கேட்டது. யாரும் சொல்லாமலேயே தந்தைக்கும், அந்த:புர பெண்களுக்கும் வேண்டியதை செய்பவன் ராமன். நமக்கு அவன் தான் சரணம் என்றிருக்க, அவன் ஊரை விட்டு போகிறான். கௌசல்யையிடம் தாய் என்று எவ்வளவு மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளானோ, அதே போல நம்மிடமும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளான். கோபமே அறியாதவன். எதிராளி  கோபமாக இருந்தால் கூட சமாதானமாக பேசக் கூடியவன். இன்று வனத்திற்கு ஏகுகிறான். நமது ராஜாவிற்குத் தான் புத்தி இல்லை. பூமியை ஆளும் அரசனாம். ஜீவலோகத்திற்கே யார் கதியோ, அவனை தியாகம் செய்கிறான். என்று தசரத மகிஷிகள், கன்றை இழந்த பசுக்கள் போல கதறினார்கள். மகா ராஜா ஏற்கனவே புத்திர சோகத்தால் தவித்துக் கொண்டு இருந்தவர், அந்த:புரத்திலிருந்து அழுகை குரல் கேட்கவும் தன் ஆசனத்தில் இருப்புக் கொள்ளாமல் தவித்தார்.

ராமரோ, தீர்மானமாக, தன் சகோதரனுடன் கூட தன் தாயின் அறையை அடைந்தார். வயதான ஒருவர், மிகவும் பூஜிக்கத் தக்கவராக மாளிகையின் வாசலில் கண்டார். இவர் அமர்ந்திருக்க, மற்றவர்கள் பலர் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். ராமரைக் கண்டவுடன் அவர்கள் அவசரமாக எழுந்து ஜய கோஷம் செய்தனர். ஆசிர்வாதங்கள் செய்தனர். முதல் அறையைக் கடந்து இரண்டாவது அறையில், வேத வித்துக்களான பிராம்மணர்களைக் கண்டார். பல முறை தசரத ராஜாவினால் சம்மானம் செய்யப் பட்ட வயது முதிர்ந்த பலரைக் கண்டார். அவர்களை வணங்கி விடை பெற்றுக் கொண்டு மூன்றாவது அறைக்குச் சென்றார். ஸ்த்ரீகள், குழந்தைகளும் பெரியவர்களுமாக, அறை வாயிலை காக்கும் பணியில் இருந்தனர். அவர்களும் மகிழ்ச்சியுடன் ராமரை வாழ்த்தி வழி விட்டனர். ஒரு சிலர் ராம மாதாவிடம் செய்தி சொல்லச் சென்றனர். இரவு பூராவும் சிரத்தையுடன் விரதமிருந்து, கௌசல்யா விடிந்தவுடன் தன் மகனின் நலனுக்காக, பகவான் விஷ்ணுவைக் குறித்து பூஜைகள் செய்து கொண்டிருந்தாள். அவள் எப்பொழுதுமே விரதங்கள், பூஜைகள் செய்பவள், வெண் பட்டு உடுத்தி, மந்திரங்கள் சொல்லி, அக்னியில் மங்களகரமாக யாகம் செய்து கொண்டிருந்தாள். சுபமான அந்த தாயாரின் அந்த:புரத்தில் நுழைந்த ராமர் அக்னியில் ஹோமம் செய்து கொண்டிருந்த தாயாரைக் கண்டார். தேவ கார்யம் என்று அங்கு சேகரிக்கப் பட்டு வைத்திருந்த பொருட்களைக் கண்டார். தயிர் அக்ஷதை, நெய், மோதகங்கள், ஹவிஸ், பொரிகள், மாலைகள், வெண்ணிறமான மாலைகள், பாயஸம், க்ருதம், சமித்து, பூர்ண கும்பங்கள், இவைகளை ரகுனந்தனன் பார்த்தான். விரத யோகங்களினால் இளைத்து இருந்த தூய பட்டாடை உடுத்தியிருப்பவளை, தேவதைகளுக்கு நைவேத்யங்களை சமர்ப்பித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தான். மகனைப் பார்த்தவுடன், ஆவலுடன், தாயன்பு மேலிட மகிழ்ச்சியுடன் அருகில் வந்தாள். வந்து கொண்டிருந்த தாயாரை முன்னால் சென்று கைகளைப் பிடித்து எதிர் கொண்டார். மகனை அணைத்து உச்சி முகர்ந்து, தன் மகனான ராகவனிடம், எளிதில் ஜயிக்க முடியாத வீரனைப் பார்த்து, புத்ர வாத்ஸல்யத்தோடு கௌசல்யா ஹிதமான வார்த்தைகளை சொல்லலானாள். உசிதமான குலத்தில் பிறந்த நீ, வயதான முதியவர்களின், தர்மசீலர்களான, மகாத்மாக்களிடம்  இருந்து ஆயுசையும், கீர்த்தியையும், தர்மத்தையும் அடைவாயாக. தந்தையான அரசன் வாக்கு தவறாமல் சத்யப்ரதிக்ஞனாக இருக்கும்படி பார்த்துக் கொள். இன்றே உன்னை யுவராஜாவாக முடி சூட்டப் போகிறார் உன் தந்தை, இவ்வாறு சொல்லிக் கொண்டே அவள் அளித்த ஆஸனத்தை ஏற்றுக் கொண்டு, சாப்பிட அழைத்தவுடன், கைகளைப் பற்றிக் கொண்டு ராமர் சொன்னார். சுபாவமாக வினயம் உடையவர், தாயாரிடம் மதிப்புடையவர், வணங்கி தண்டகாரண்யம் செல்லத் தயாராக வந்தவர், மெதுவாக பேசலானார். தேவி, உனக்குத் தெரியாது. மிகப் பெரிய பயம், ஆபத்து வந்துள்ளது. இதை உனக்கும் வைதேஹிக்கும், லக்ஷ்மணனுக்கும் துக்கம் தரக் கூடியதை நான் சொல்லப் போகிறேன். இந்த ஆசனம் எனக்கு எதற்கு? நான்தான் தண்டகாரண்யம் போகப் போகிறேனே. தர்பாஸனத்தில் அமரும்படியான காலம் எனக்கு வந்திருக்கிறது. ஜன நடமாட்டமில்லாத வனத்தில் பதினான்கு வருஷம் வசிக்கப் போகிறேன். பழங்களையும், வேர்களையும் தின்று கொண்டு, முனிவர்கள் போல மாமிசத்தைத் துறந்து இருக்கப்போகிறேன். அரசன் பரதனுக்கு ராஜ்யத்தைக் கொடுக்கப் போகிறார். என்னை தபஸ்வியாக தண்டகாரண்யம் போகச் சொல்கிறார். ஆறும் எட்டுமாக, பதினான்கு வருஷங்கள், காட்டில் கழிக்கப் போகிறேன். காட்டு ஜனங்களோடு, மிருகங்களோடு மிருகமாக வாழப் போகிறேன். இதைக் கேட்டு கௌசல்யா தேவி, கோடாலியால் சால விருக்ஷத்தை வெட்டிச் சாய்த்தது போலவும், தேவ லோகத்திலிருந்து எதோ தேவதை கீழே விழுந்தது போலவும் தரையில் சாய்ந்தாள். இந்த துக்கத்தை தாங்க முடியாத அவளை, தன் தாயை நினைவு இழந்தவளை தூக்கி நிறுத்தினார். கைகளால் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார். எதிர்பாராத இந்த துக்கத்தால் தடுமாறியபடி, லக்ஷ்மணனும் கேட்டுக் கொண்டிருக்க, ராமரிடம் சொன்னாள்.  எனக்குப் பிள்ளையாக பிறக்காமல் இருந்திருந்தால், குழந்தையில்லை என்ற ஒரே குறையாக போய் இருந்திருக்கும். இந்த துக்கத்தைக் காண நேர்ந்திருக்காது. மலடி என்ற ஒரே துக்கம் தான் இருந்திருக்கும். பதியின் செல்வாக்கினால், நான் எந்த விதமான சுகமோ, நல்லதையோ காணவில்லை. பிள்ளையிடம் நல்லதை அனுபவிப்போமென்று சமாதானப் படுத்திக் கொண்டேன். ராமா, மனதை பிளக்கும் பல பிடிக்காத வார்த்தைகளை, சபத்னிகளிடம்,  நான் பெரியவளாக இருந்தும், என்னை விட சிறியவர்களிடம் கேட்டேன். இதை விட பெண்களுக்கு தாழ்வு வேறு என்ன வேண்டும். என் சோகமும், புலம்பலும் முடிவே இல்லாதது. உன்னை முன்னிட்டு இருந்தும் கூட இப்படி என்னை புறக்கணித்து விட்டார்களே, நீயும் வெளியில் போய் விட்டால், என் கதி என்ன? கைகேயியின் பரிவாரங்கள், சமமானவர்களோ, இன்னும் கீழ் நிலையில் உள்ளவர்களோ, இதுவரை எனக்குப் பணிந்து, நான் சொன்னதைக் கேட்டு நடந்தவர்கள் கூட, இனி கைகேயி புத்ரனை எண்ணி என்னிடம் பேசக் கூட மாட்டார்கள். எப்போதும் கோபம், கைகேயியிக்கு, என்னை என்னதான் சொல்ல மாட்டாள்? அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே எனக்கு சக்தியில்லை. மகனே, பத்து, ஏழு வருஷங்கள் நீ வெளியில் இருக்கும்பொழுது சபத்னிகளின் ஏளனம் என்னால் தாங்க முடியாது. உன் முகத்தையும் பார்க்காமல் நான் எப்படி வாழ்வேன். பரிதாபப் படும் நிலையில், ஒரு பரிதாபமான வாழ்க்கை வாழ வேண்டியிருக்கும். என் ஹ்ருதயம் மிகவும் கடினமானது. அதனால்தான், இந்த விஷயம் கேட்டும் வெடிக்காமல் இருக்கிறது. அழுது ஓலமிடும்  மிருகத்தை, சிங்கம் அன்றே தின்று தீர்த்து விடுவது போல, இன்றே யமன் வந்து என் வாழ்க்கையை முடித்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இதயத்தை இரும்பால் செய்து விட்டான். அதனால் தான் அது தூளாகிப் போகவில்லை. இந்த துக்கத்தில் கூட சரீரம் குலையவில்லை. காலமில்லாமல் மரணம் வருவதில்லை என்பது நிஜம்தான். உப்பு நிறைந்த உவர் நிலத்தில் விதை போட்டது போல என் மகனின் நலனுக்காக நான் செய்த விரதங்களும், தானங்களும், புலனடக்கி நான் நியமம் இருந்ததும், தவம் செய்ததும், பலனற்றுப் போயினவே. கன்றைப் பிரிந்த பசுவைப் போல துடிக்கிறேன். ஏதோ ஒரு வழியில் மரணம் சம்பவிக்கும் என்றால், இந்த பெரிய துக்கத்தினால் பீடிக்கப் பட்டு, வாடியவளாய் இன்றே போகிறேன். சந்திரனைப் போன்ற முகக் காந்தியுடைய என் மகனைக் காணாமல், இந்த வாழ்வே வீண். நானும் உன் கூடவே வனம் வருகிறேன்.  கன்றைத் தொடர்ந்து பசுக்கள் போவதில்லயா? அது போல.  ராகவனைப் பார்க்கப் பார்க்க துக்கம் மேலிட, தாங்க முடியாமல் தவித்தாள் கௌசல்யை. கின்னரி தன் மகனைக் கட்டுண்ட நிலையில் கண்டது போல அவள் துக்கம் பெருகலாயிற்று.

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நான்கு ஆயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா கண்டத்தில், கௌசல்யாக்ரந்தோ, என்ற இருபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம்  21 (98)  கௌசல்யா லக்ஷ்மண ப்ரதிபோ34ம். (கௌசல்யை, லக்ஷ்மணன் இவர்களுக்கு விளக்கிச் சொல்லுதல்)

ராம மாதா இவ்வாறு புலம்புவதைக் காண சகியாத லக்ஷ்மணன் சொல்வான். எனக்கும் இது சம்மதமில்லை, தாயே, பெண் வார்த்தையைக் கேட்டு, ராஜ்ய லக்ஷ்மியை உதறி விட்டு ராமர் வனம் போவது எனக்கும் சம்மதமில்லை. வயதானதால் அரசருக்கு புத்தி விபரீதமாகி விட்டது. விஷய வாசனை இன்னமும் அவரை அலைக் கழிக்கிறது. மன்மதன் வசம் இருந்த கிழவரான அரசர் என்ன தான் சொல்ல மாட்டார்.  தூண்டி விடப் பட்டவராக பேசி இருக்கிறார்.  வனத்திற்கு அனுப்பும்படி ராமர்தான் என்ன தவறு செய்தார். அவரிடம் என்ன தோஷம் இருக்கிறது என்று ராஜ்யத்தை விட்டு வனத்திற்கு போகும்படி விரட்ட வேண்டும்? உலகத்தில், எதிரில் தான் என்று இல்லை, தனிமையில், மறைமுகமாக கூட, எந்த ஒரு மனிதனும், தன் மித்திரனோ, அறியாதவனோ,  ஆயினும் இந்த ராமனிடத்தில் குறை சொல்ல மாட்டார்கள். தேவர்களுக்கு சமமானவன். நேர்மையானவன். அமைதியானவன். எதிரியானால் கூட வாத்சல்யத்தோடு பார்க்கும் அளவு வசீகரமானவன். தர்மத்தைக் காக்கிறேன் என்று எவரும் புத்திரனை தண்டிக்க மாட்டார்கள். அரசனுக்கு பால்யம் திரும்பி இருக்கிறது. அதனால் தான் இந்த வார்த்தையை பேசியிருக்கிறார். ராஜாவுக்கு சாதாரண மற்ற பிள்ளைகள் போல் இருந்தால், யார் தான் இந்த வார்த்தையைக் கேட்டு வனம் போக சம்மதிப்பார்கள். அரசன் இவ்வாறு பேசும்பொழுது, ராமா, நீ என் துணையுடன் ராஜ்யத்தை உன் வசமாக்கிக் கொள். நான் கையில் வில்லேந்தி பாதுகாவலாக உன் அருகில் இருக்கும்பொழுது, யார் உன்னை என்ன செய்ய முடியும். யமனைப் போல நான் நிற்கிறேன். பரதன் பக்ஷத்தில் இருந்து யார் வந்து எதிர்த்தாலும், இந்த அயோத்தி பூராவும் மனித நடமாட்டமே இல்லாது செய்து விடுகிறேன். என் கூர்மையான அம்பால், எதிர்க்கும் எல்லோரையுமே, அழித்து விடுகிறேன். சாதுவாக (ம்ருதுவாக) இருப்பவன் தான் மேன் மேலும் தலை குனியும்படி ஆகிறது. நம் தந்தை கைகேயியினால் தூண்டப்பட்டு துஷ்டனாகி விட்டார். நமக்கு சத்ருவானார். செல்வோம், வதைப்போம். செய்யும் காரியத்தின் பலாபலன்களை அறியாமல், மூடத்தனமாக நடக்கும்  ஒருவர் பெரியவரானாலும், தந்தையே ஆனாலும், அடக்கி ஒடுக்குவது தான் முறை. எந்த பலத்தில், உனக்கு கொடுத்த ராஜ்யத்தை, பரதனுக்கு தூக்கி கொடுக்கிறார்? என்ன காரணம் சொல்கிறார் இந்த செயலுக்கு, எதிரிகளை அழிக்கும் ஆற்றல் படைத்தவனே, உன்னுடனும், என்னுடனும் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டு, ராஜ்ய லக்ஷ்மியை பரதனுக்கு கொடுக்க சக்தி ஏது? பரதனிடத்தில் எனக்கு பிரியம் உண்டு தான். சத்தியத்தின் பேரிலும் எனக்கு பிரியமான இந்த தனுசின் பேரிலும் ஆணையிடுகிறேன், தேவி, கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயில் ராமன் பிரவேசிக்க முற்பட்டால், அவனுக்கு முன்னால் நான் அந்த நெருப்பில் விழுந்து விட்டிருப்பேன் இதை நம்புங்கள் தாயே. உதிக்கும் சூரியன் இருளை விலக்குவது போல என் வீர்யத்தால் உன் துக்கத்தை அகற்றுவேன். தேவி, தாங்கள், என் வீரத்தைப் பாருங்கள். ராமனும் பார்க்கட்டும் கைகேயியின் மோகத்தில் வீழ்ந்து கிடக்கும் மகாராஜாவைக் கொல்லுவேன். வயது முதிர்ந்த நிலைக்கு பொருந்தாத பா3லனைப் போல சஞ்சலமாக இருக்கும் பரிதாபத்துக்குரிய என் தந்தையை மாய்ப்பேன். இதுபோல லக்ஷ்மணன் பேசுவதைக் கேட்ட கௌசல்யா, ராமனைப் பார்த்து, துக்கம் இவனை இப்படி பேச செய்கிறது. கேட்டாயா, உனக்கு பிடித்தமானால் மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய், என்றாள். என் சக்களத்தி அதர்மமாக சொன்னதைக் கேட்டு, என்னை தவிக்க விட்டு நீ வனம் போக வேண்டாம். போகாதே. நீயும் தர்மம் அறிந்தவனே.  தர்மம் தான் மேலானது என்று எண்ணி, தர்ம வழியில் நடக்க விரும்பினால், இங்கிருந்து எனக்கு பணிவிடைகள் செய்வாய். அதுவும் உத்தமமான தர்மமே. தன் வீட்டில் நியமத்துடன் வசித்துக் கொண்டு, தாயாருக்கு சேவை செய்தவாறு காஸ்யபர் தேவ லோகம் சென்றார். அரசனை மதிப்புடன் எப்படி மரியாதையாக நினைக்கிறாயோ, அப்படியே தான் நானும். நான் உன்னை அனுமதிக்க மாட்டேன் வனம் போக கூடாது. உன்னை பிரிந்து வாழ்வில் எனக்கு எதுவுமே இல்லை. உன் கூட வந்து புல்லைத் தின்று கூட சந்தோஷமாக இருப்பேன். என்னை தவிக்கவிட்டு, பிடிவாதமாக நீ வனம் போவாயேயானால். நான் ப்ராயோபவேசம் செய்கிறேன். உயிர் வாழ்வதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. சமுத்திரம், நதிகளின் அரசனாக இருந்து கொண்டு, ப்ரும்மஹத்தி தோஷத்தை அடைந்தது போல என் மரணத்தின் பலனும் உன்னைச் சாரும். இவ்வாறு அழுது புலம்பும் தாயைப் பார்த்து தர்மாத்மாவான ராமன், பதில் சொன்னார்.  தாயே, தந்தையின் கட்டளையை மீற எனக்கு சக்தியில்லை. உன்னை வணங்குகிறேன், ஆனாலும் வனம்  செல்லத்தான் வேண்டும். கண்டு என்ற முனிவர், பசு வதை கூடாது என்று அறிந்திருந்தும், விரதத்தை மேற் கொண்டிருந்த தந்தை சொன்னார் என்பதற்காக பசுவை வதைத்தார். நமது குலத்தில் முன்னோர்கள் பிதாவான சகரரின் ஆணைப் படி பூமியைத் தோண்டிக் கொண்டு சென்றவர்கள், வதம் செய்யப் பட்டனர். ஜாமதக்னியான பரசுராமர் ரேணுகா என்ற தன் தாயை, காட்டில் தந்தை சொன்னார் என்பதற்காக பரசு எனும் கோடாலியால் வீழ்த்தினார்.  இது போல பல தேவர்களுக்கு சமமான வீரர்களால் செய்யப் பட்டது. இதனால் தந்தையின் வார்த்தையை குறைவற கடைபிடிப்பேன். நான் ஒருவன் மட்டும் தான்  தந்தை சொல்லை மீறாமல் நடப்பவன் என்று எண்ணாதே. இதோ நான் சொன்ன எல்லோருமே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று தான் வாழ்ந்திருக்கிறார்கள். நான் புதிதாக இது தார்மீகம் என்று பிரதிகூலமாக நடக்கவில்லை. முன்னோர்கள் சரி என்று சொன்ன, நேர் வழியைத் தான் பின் பற்றுகிறேன். இதை நான் செய்தே ஆகவேண்டும். உலகில் இதற்கு மாற்று இல்லை. பிதாவின் சொல்லைக் கேட்டு அதன் படி நடப்பதில் இழப்பு எதுவும் இல்லை. இவ்வாறு சொல்லி விட்டு, லக்ஷ்மணனிடம் சொன்னார். சொல்லின் செல்வரான ராமன்,  வில்லின் வீரனான லக்ஷ்மணனிடம் சொன்னார். லக்ஷ்மணா,  நீ என்னிடம் வைத்திருக்கும் அன்பை  நான் அறிவேன். எதிர்க்க முடியாத உன் ஆற்றலையும், சக்தியையும் நான் அறிவேன். சுபமான லக்ஷணங்களை உடையவனே, என் தாயின் துக்கம் அளவிடமுடியாதது. தர்மத்திற்கும், பொறுமைக்கும் பொருள் அறியாமல், இவற்றின் உண்மை தத்துவத்தை அறியாமல் வீணாக செயல் படக் கூடாது. உலகில் தர்மம் தான் சிறந்தது. சத்யத்தில் தர்மம் நிலைத்துள்ளது. தந்தை வசனம் என்பதும் உண்மையான தர்மம். உத்தமமானதே. தந்தைக்கு உறுதியளித்து விட்டு, தாயின் பொருட்டோ, பிராம்மணனின் பொருட்டோ அதை மாற்றக் கூடாது.

தர்மத்தைக் கடை பிடிப்பவன் வாக்கு தவறக் கூடாது. அதனால் தந்தையுடைய கட்டளையை மீற முடியாது. தந்தையின் உத்திரவுப் படி தான் கைகேயி என்னிடம் பேசினாள். அதனால் இந்த பண்பாடற்ற எண்ணத்தை, க்ஷத்ர தர்மம் என்று நீ நம்புவதை விடு. என் புத்திமதியை அனுசரித்து நட. தீவிரமாக யோசிக்காதே. லக்ஷ்மணனுக்கு அண்ணனாக ராமன் சினேகமாக தம்பியைப் பார்த்து சொல்லிவிட்டு, திரும்பவும் கௌசல்யையைப் பார்த்து, கை கூப்பியவனாக, தலையாலும் வணங்கி, அனுமதி கொடுங்கள் தாயே, இதோ வனம் செல்லத் தயாராகி விட்டேன். என் உயிரின் மேல் ஆணை. எனக்கு மங்களா சாஸனம் செய்து வழியனுப்புங்கள். என் பிரதிக்ஞையை முடித்து நான் திரும்பி வருவேன். யயாதி போல, ராஜரிஷி, தேவலோகத்தை விட்டு திரும்பி வந்தது போல வருவேன். கவலை படாதே. வருத்தத்தை மனதினுள் அடக்கிக் கொள்ளுங்கள். தந்தை சொல்லை நிறைவேற்றிவிட்டு, நான் இங்கு தான் வருவேன். நீயும், நானும், வைதேஹியும், லக்ஷ்மணனும், சுமித்திரையும் தந்தை சொன்னதைக் கேட்டுத் தான் ஆக வேண்டும். இது தான் காலம் காலமாக வந்துள்ள தர்மம்.  தாயே, இந்த ஏற்பாடுகளை நிறுத்துங்கள். துக்கத்தை அடக்கிக் கொண்டு, நான் வனவாசம் செல்வதை மனதில் ஒப்புக் கொள்ளுங்கள். இது தான் தர்மம் என்று எண்ணி சமாதானம் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு மகன் தீர்மானமாக சிறிதும் தடுமாற்றமின்றி  நியாயப் படுத்தி சொன்னவுடன், இறந்தவன் திரும்பி வந்தது போல, தேவி ராமனை திரும்பவும் நன்றாக பார்த்து விட்டு தொடர்ந்தாள். உனக்கு தந்தை எப்படியோ, அப்படித்தானே நானும். ஸ்வதர்மமும்  அது தான், உறவும் அது தான். நான் உன்னை அனுமதிக்க மாட்டேன். என்னை விட்டு போகாதே. நீ இல்லாமல் நான் வாழ்ந்து தான் என்ன பயன்? அமுதமே கிடைத்தாலும் என்ன பயன்? இந்த உலகம் முழுவதும் தடுத்தாலும், உன்னுடன், உன்  சன்னிதானத்தில் முஹுர்த்த காலம் இருப்பதையே நான் பெரிதாக நினைப்பேன். தீப் பந்தங்கள் கொண்டு விரட்டப் பட்ட யானை (மகா கஜம்) அத்வானத்தை அடைந்தது போல, மறுபடியும் தாயின் புலம்பல் அதிகரித்தது. இதைக் கண்டு தாயின் கருணையை எண்ணிய ராமன், தன் நினைவையே இழந்து விட்டது போல இருந்த தாயாரையும், தாங்க முடியாத கோபத்துடன் இருந்த லக்ஷ்மணனையும் பார்த்து, இந்த சமயத்தில் தான் ஒருவனே சொல்லக் கூடும் என்பது போன்ற வார்த்தைகளைச் சொன்னான். தர்மத்தில் வழியில் தீவிரமாக செல்பவன், தார்மீகமான சொல்லும் அவன் சொல்வதில் தான் சிறப்பு. லக்ஷ்மணா, உன் பக்தியையும் பராக்ரமத்தையும் நான் அறிவேன். என் அபிப்பிராயம் என்ன என்று தெரிந்து கொள்ளாமல் நீயும்,  தாயாருடன் சேர்ந்து கொண்டு என்னை மேலும் துன்பத்தில் ஆழ்த்துகிறாய்.  ஜீவ லோகத்தில், தர்மத்தை அனுசரிப்பதன் பலன்களாக, தர்மம், அர்த்தம், காமம் என்று மூன்றுமே சொல்லப் பட்டிருக்கின்றன. சந்தேகமில்லாமல் இந்த மூன்றும் எனக்கு கிடைக்கும்., தாயும் மகனுமாக, மனைவி தன் வசத்தில் இருப்பது போல இவை என் வசம் இருக்கின்றன. மூன்றுமே இல்லாத போது தர்மத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும். அர்த்தமே குறியாக இருப்பவனை மற்றவர்கள் வெறுப்பார்கள். காமாத்மாவாக இருப்பவனும் புகழ் அடைய மாட்டான். குரு, அரசன், அதற்கும் மேல் தந்தை, வயது முதிர்ந்தவன், கோபத்தினாலோ, அதிக மகிழ்ச்சியாலோ, அல்லது காம வசமாகவோ, ஏதோ ஒன்றைச் செய்ய கட்டளையிடுகிறார் என்றால், நேர்மையான புத்தி, நடவடிக்கையுள்ளவன் எவன் தான் இதில் தர்மத்தை உணர்ந்து நடக்க மாட்டான்? அதனால் தான் நான் தந்தையின் வாக்கை மீறிச் செல்ல மாட்டேன். இந்த பிரதிக்ஞையை முழுவதுமாக எப்படி சொன்னாரோ, அதே போல செய்யாமல் என்னால் இருக்க முடியாது, அவர் நம் இருவருக்கும் தந்தை, குரு ஸ்தானத்தில் இருப்பவர். தேவிக்கும் கணவன். ஒரே கதி எனும் நிலையில் இருப்பவர். அது தான் தர்மம். அவர் உயிருடன் இருக்கும் பொழுது, தர்மராஜாவான அவரை விட்டு, என்னுடன் வருகிறேன் என்று சொல்கிறாயே, இது நடக்குமா? முடியுமா ஏதோ விதவையான ஒரு பெண் மகனுடன் வருகிறேன் என்று சொல்வது போல, இது சரியில்லை. அதனால் தாயே, எனக்கு அனுமதி கொடுங்கள். எனக்கு ஸ்வஸ்தி மங்களங்களை செய்யுங்கள். இந்த வனவாச காலம் முடிந்து திரும்பி வருவேன். யயாதி வந்தது போல.  கேவலம் இந்த ராஜ்யத்திற்காக, என் புகழ், என் தனித் தன்மையை,  பின்னால் மிகவும் சிறப்பாக வளரக் கூடியதை, தள்ளி  விட்டு, இப்படி அதர்மமாக வரும் ராஜ்யத்தை அடைவதை அவசியமற்றதாக, இரண்டாம் பக்ஷமாக நினைக்கிறேன். என் புகழ் மேன் மேலும் வளர வேண்டும். நாம் வாழும் நாள் மிகக் குறைவானதே. தாயாரை இப்படி சமாதானப் படுத்தி விட்டு, தம்பியை அடக்கி, தனக்கு சம்மதமான தர்ம ரகஸ்யத்தை தம்பிக்கு உபதேசம் செய்து சமாதானம் செய்து, மனதில் தாயை பிரதக்ஷிணம் செய்தான்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், கௌசல்யா, லக்ஷ்மண பிரதி போ3த4னம் என்ற இருபத்தொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம்  22 (99)  தை3 ப்ராப3ல்யம்

மகா ஆத்திரத்தில் கண்கள் சிவக்க, பாம்பின் அரசன் மூச்சு விடுவது போல சீறிக் கொண்டு,  அதனாலேயே  தீனனாக தெரிந்த சௌமித்திரியை அணுகி ராமர்,  சமாதானப் படுத்த முயன்றார். நண்பனும், பிரியமான சகோதரனுமான லக்ஷ்மணன், ரோஷத்தின் எல்லையில், கோபமே உருவாக நின்றிருந்தவனை,  அருகில் சென்று, சத்வமான தன் தீர்மானத்தை சற்றும் விட்டுக் கொடுக்காமல், அதே சமயத்தில் சௌமித்திரியின் தவற்றை, அவன் அவமானம் என்று நினைப்பதை மாற்றும் வகையில்,  தெளிவாக விளக்கிச் சொன்னார். தைரியம் எது என்பதை அவனுக்கு எடுத்துச் சொன்னார், தன் மகிழ்ச்சியை அவன் உணரும் வகையில் மெதுவாக சாந்தப் படுத்தி தன் வழிக்கு கொண்டு வர முயன்றார். இன்று எனக்கு அபிஷேகம், முடி சூட்டு விழா என்று  ஏற்பாடுகள் செய்திருந்தது, தானாகவே  நிறுத்தப் படட்டும். நீ என் தாயாரை கவனித்துக் கொள். என் பிரிவை அவள் தாங்க மாட்டாள். தவிக்கும் அவளை நீதான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சௌமித்திரி,  அவள் எந்த காரணத்தைக் கொண்டும் துன்பப் படுவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதுவரை, தெரிந்தோ, தெரியாமலோ, தந்தைக்கும், தாய்மார்களுக்கும், சிறிதளவு கூட பிடிக்காததைச் செய்ததாக நினைவு இல்லை. நம் தந்தை, எப்பொழுதும் சத்யனாக சத்ய பராக்ரமனாக இருந்து வந்திருக்கிறார். தர்மத்திற்கும், வினைப் பயனுக்கும் பயப்படுகிறவர். தன் வினை தன்னைச் சுடும் என்பதில் நம்பிக்கை உள்ளவர். அவர் பயமின்றி இருக்கட்டும்.  ஒரு சமயம் பின்னால் யோசித்துப் பார்க்கும் பொழுது, அவருக்கும் இந்த காரியம் தர்மம் அல்ல என்று தோன்றலாம். அதனால் மனதில் தாபம் கொண்டால் அது என்னையும் பாதிக்கும். இந்த அபிஷேக ஏற்பாடுகளை நிறுத்தி விட்டு, எல்லோருக்கும் சம்மதமாக, சினேக பாவத்துடன், இன்றே வனம் போக விரும்புகிறேன். எனது வெளியேறுதலால், சந்தோஷமாக, மகன் பரதனுக்கு இடையூறின்றி முடி சூடட்டும்.  நான் மரவுரி, ஜடாமுடி தரித்து வனம் சென்ற பின் தான் கைகேயியின் மனம் சாந்த மடையும். அதனால் காலம் தாழ்த்தாமல் கிளம்புகிறேன். என் புத்தி ஸ்திரமாக என் வசத்தில் உள்ளது. இதில் கலக்கம் தோன்றும் முன் கிளம்புகிறேன். இந்த மன நிலையை கலைக்காமல் கிளம்புகிறேன். நான் நாட்டைத் துறந்து இருக்கும் காலத்தில் கவனமாக இரு. இப்பொழுக்து நாம் கொடுத்துவிட்ட ராஜ்யத்தை திருப்பித் தரும் பொழுது, கைகேயியின் கண்ணோட்டம்  எப்படி இருக்குமோ, என்னை துன்புறுத்த எண்ணும் இந்த எண்ணம், விதியா, காலனுடையதா, எதேச்சையாக நேர்ந்ததா தெரியவில்லை. உனக்குத் தெரியும் லக்ஷ்மணா, நான் தாயார்களுக்குள் வித்தியாசமாகவே நடந்து கொண்டதில்லை. விசேஷமாக, அவளிடமும், அவள் மகனிடமும் நான் சிறிதளவும் வேற்றுமை பாராட்டியதில்லை. இந்த அபிஷேகத்தை நிறுத்தவும், நான் நாட்டை விட்டுச் செல்லவும், கடும் வார்த்தைகளால் அவளால் சாடப் பட்டேன் என்றால் அது விதியின் காரியமே. ராஜ குமாரியாக இருந்து சற்றும் குணமற்ற பாமர ஸ்த்ரீயைப் போல கணவன் எதிரிலேயே, சுய நினைவோடு இருந்தும் நான் வருந்தும் படி பேசினாள். இது நினைத்து பார்க்க முடியாத விதி தான் எனக்கும் அவளுக்கும் இடையே ஒரு தடுப்பு விழுந்து விட்டது. மனிதர்கள் உற்சாகமாக யுத்தம் செய்யப் புறப்படச் செய்வதும் இந்த விதி தான். அதே செயலை வேறு விதமாக செய்யலாமே என்பது தோன்றுவதே இல்லை. இதுவும் விதி தான். சுக துக்கத்திலும், பயத்திலும், க்ரோதத்திலும், லாபத்திலும், நஷ்டத்திலும், இருப்பதும் இல்லாததும் அது அது அப்படி அப்படியே இருப்பதும் கூட விதி தான். உக்ரமாக தவம் செய்யும் ரிஷிகள் கூட விதியினால் தூண்டப் பெற்று, தங்கள் நியமங்களை விட்டு, காமம் க்ரோதம் இவற்றிற்கு ஆளாவதைக் காண்கிறோம். இது சற்றும் யோசிக்காமல் எதேச்சையாக நேர்ந்ததே. ஆரம்பித்து விட்டதை திரும்ப பழைய நிலைக்குக் கொண்டு செல்ல அந்த விதியாலும் முடியாது. இது போல தத்வ விஷயங்களை நினைவில் கொண்டு உன் மனதைக் கட்டுப் படுத்திக்கொள். என் அபிஷேகம் தடைப் பட்டது கூட என் மனதில் தாபத்தை வருத்தத்தை உண்டு பண்ணவில்லை. அதனால் நீயும் வருத்தமடையாமல் இருந்து, என்னுடன் கூட இந்த முடி சூட்டு விழாவினை சீக்கிரம் நிறுத்தப் பார். இந்த ஜலம் நிரம்பிய கலசங்களினாலேயே நான் தபஸ்வியாக விரதம் எடுத்துக் கொள்ளூம் விரதஸ்னானம் நடக்கட்டும். அல்லது, எனக்கு எதற்கு இந்த ராஜ்ய திரவியங்கள். நானாக ஜலம் கொண்டு வந்து என் விரத ஸ்னானத்தை செய்து கொள்கிறேன். லக்ஷ்மி கை விட்டுப் போனதற்காக வருந்தாதே லக்ஷ்மணா, ராஜ்யம் ஆனாலும் சரி, வனவாசம் ஆனாலும் சரி, நல்லதிற்குத்தான் ஆரம்பம் என்று நினை. லக்ஷ்மணா,  இந்த காரியம் தடைப் பட்டதில் சிற்றன்னையையும் ஒரேயடியாக தூஷிக்க வேண்டாம். விதி வசத்தால் தான் அவளும் இஷ்டமில்லாததை பேசியிருக்கிறாள். விதியில் ப்ரபாவம் அப்படிப் பட்டது.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், தை3வ ப்ராப3ல்யம் என்ற இருபத்திரண்டாவது அத்தியாயம்.)

அத்தியாயாம் 23 (100) லக்ஷ்மணக்ரோத4: (லக்ஷ்மணணின் கோபம்)

இவ்வாறு ராமர் சொல்லி வரும் பொழுது, தலை குனிந்த வண்ணம் கேட்டுக் கொண்டிருந்த லக்ஷ்மணன், துக்கம், சந்தோஷம் இரண்டிற்கும் மத்தியிலான நிலையில் இருந்தான். புருவங்களுக்கு மத்தியில், நெற்றியைச் சுருக்கி, தன் வளையில் அடைபட்ட, கோபம் வெளிப்பட இருக்கும் மகா சர்ப்பம் போல பெருமூச்சு விட்டான். அவன் கண்களும், புருவங்களும் கோபம் கொண்ட சிங்கத்தின் முகம் போல இருந்தது. தும்பை விட்டு வாலை பிடித்தது போல, கழுத்தை சாய்த்து வேறு பக்கம் பார்த்துக் கொண்டு, ராமனிடம் சொன்னான். தவறான இடத்தில் இவ்வளவு கோலாகலங்களும் நடந்திருக்கிறது. சந்தேகம் இல்லாமல் உங்களை நம்பிக்கொண்டிருக்கும் ஜனங்களிடம் பரபரப்படையாமல்  எப்படித்தான் பேசுகிறீர்களோ? தர்மத்தின் விரிவுரைகள் மிகவும் சிக்கலானவை. தர்மாத்மாவே, ஏன் இதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் ? உங்களை விட்டு மற்றவர்க்கு அபிஷேகம் என்ற இந்த செயல் உலகில் எதிர்ப்புக்கு உள்ளாகும். என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் புத்தியில் புதியதாகத் தோன்றியுள்ள இந்த மனோ பாவம், அது தர்மம் என்றே வைத்துக் கொண்டாலும் எனக்குப் பிடிக்கவில்லை.  நான் ஒப்புக் கொள்ளும் படியாக இல்லை. தந்தையிடம் உள்ள பாசத்தால் ஏமாறுகிறீர்கள். நீங்கள் சக்தியிருந்தும், எதிர்த்து போராடாமல் கைகேயியின் வசத்தில் விழுந்த அரசனின் செயலை நியாயப்படுத்துகிறீர்கள். அதர்மம் என்று உலகத்தார் தூஷிக்கும் செயலை, துரோகம் இல்லை என்று எடுத்துக் கொண்டு விட்டீர்கள். எனக்கு துக்கம் தான். தர்மம், தர்மம் என்று சொல்வது கூட தேவையற்றது தான். நீங்கள் சொல்லும் இந்த தர்ம உபதேசம் உலகத்தாருக்கு பிடிக்கவே பிடிக்காது. பெற்றோர் என்று பெயர் வைத்துக் கொண்டு, நன்மையல்லாததை தன் மகனுக்கு செய்யத் துணிந்தவர்கள் சத்ருக்களே. தங்கள் இச்சைப்படி, காமத்தில் மூழ்கியிருப்பவர்கள், மனதாலும் மற்றவர்களுக்கு நல்லதை செய்வார்கள் என்று எப்படி எதிர் பார்க்கலாம். இப்படிப்பட்ட சுயநலம் மிக்கவர்களிடம் உங்கள் தர்ம நியாயம் எடுபடாது. தெய்வம், விதி என்றே வைத்துக் கொண்டாலும், எனக்கு அது உகந்ததாக இல்லை. தள்ளுபடி செய்ய வேண்டியதே ஆகும். உடல் வலிவற்றவன், வீர்யமில்லாதவன், தெய்வம், விதி  என்று கையாலாகாமல் விட்டிருக்கலாம்.  ஆனால், வீரர்கள், தன்னம்பிக்கை உடையவர்கள், தெய்வத்தையோ விதியையோ நம்புவதில்லை. விதியை மதியால் வெல்லலாம். மனித யத்தினத்தால் விதியை மாற்ற வல்லமையுடையவர்கள், தன் பொருளை இழந்து வருந்தி இருப்பதில்லை. இன்றே நாமும் பார்ப்போமே. மனிதனுடைய பராக்ரமத்தையும், விதியின் வலிமையையும் பார்ப்போமே.  இன்றே விதியா, மனித முயற்சியா, இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம். என் புஜ பலத்தால் விதியை வீழ்த்துவதை ஜனங்கள் காண்பார்கள். விதியினால் தடுக்கப்பட்ட தங்கள் ராஜ்யாபிஷேகம், என் புஜ பலத்தால் நடக்கட்டும். மதம் பிடித்து ஓடும் உக்ரமான மிகப் பெரிய யானையை அங்குசத்தால் அடக்க முடியாதது போல விதியை நான் என் பலத்தால் திருப்பி விடுகிறேன். லோக பாலர்கள் அனைவரும் வந்தாலும், மூவுலக நாயகர்கள் வந்தாலும், இன்று ராமனுடைய முடி சூடும் வைபவத்தை தடுத்து நிறுத்த முடியாது. தந்தை எம்மாத்திரம்? எவர் உனக்கு வனவாசம் என்று விதித்தார்களோ, அவர்கள், பதினான்கு வருஷம் வனத்தில் வசிக்கட்டும். அப்படி அவருடைய ஆசையை வெட்டி முறிப்பேன். எவள் உன் அரசுரிமையை பறித்து, தன் மகனுக்கு கொடுக்க விரும்புகிறாளோ, அவளையும் வீழ்த்துவேன். என் பலத்திற்கு முன் விதி என்ன செய்யும்? உக்ரமான என் பௌருஷம் அவர்களுக்கு துக்கத்தை தரும்படி வெளிப்படப் போகிறது. ஆயிரம் வருஷங்கள் நீங்கள் ராஜ்யத்தை பரிபாலனம் செய்தபின், தங்கள் குமாரர்களிடம் ராஜ்யத்தை ஒப்புவித்து விட்டு நீங்கள் வனம் செல்லலாம். புத்திரர்களை ராஜ்யத்தில் ஸ்தாபித்து விட்டு ராஜ ரிஷிகளாக, முன் காலத்தில் பெரியவர்கள் வனம் சென்றார்கள். ராமா, நால்வராக நாம் இருக்கும் பொழுது, ராஜ்யம் பிளவு படும் என்று பயந்து ராஜ்யத்தை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டினால், இதோ பிரதிக்ஞை செய்கிறேன். நாங்கள் மற்ற மூவரும் பங்கு கேட்க மாட்டோம். உங்கள் ஆட்சிக்கு உட்பட்ட ராஜ்யத்தை நாங்கள் பாலனம் செய்வோம். அலைகள் சமுத்திரத்தைக் காப்பது போல.  அதனால் மங்கள வஸ்துக்களால் அபிஷேகம் செய்யப் பெறுவாயாக. கவலையற்று இருங்கள். நான் ஒருவனே எதிர்க்கும் வீரர்களை நாசம் செய்யப் போதும். இந்த கைகள் அழகுக்காக இல்லை. இந்த வில் எனக்கு ஆபரணமும் இல்லை. நம்முடைய சரங்களும், ஸ்தம்பங்க ளி ல் கயிறு கட்ட, கொடி கட்ட என்று ஏற்பட்டவை அல்ல. அமித்திரர்களான சத்ருக்களை அழக்கவே இவைகளை சுமந்து செல்கிறேன். எனக்கு சத்ரு என்று தோன்றுபவர்கள், மேலும், மேலும் வளர்ந்து வருவதும், எனக்கு சம்மதமாக இல்லை.  மின்னல் போன்று ஒளி விடும் என் வாளின் தாக்குதலால் சத்ருவைப் பிடித்து, இந்திரனாக இருந்தாலும், துண்டு துண்டாக வெட்டுவேன். யானைகளும், குதிரைகளும், ரதங்களும், துண்டிக்கப்பட்ட தலைகள், கை கால்கள், என்று குவிந்து ஆகாயம் சஞ்சாரம் செய்ய இயலாததாக செய்வேன். என் கத்தியின் சுழற்ச்சியைக் கண்டு, மின்னலுடன் மேகம் விழுந்ததோ, எரியும் மலைகள் விழுந்தனவோ, என்று ஜனங்கள் எண்ணச் செய்வேன். என் கத்தியின் சுழற்ச்சியும், எதிரி விழுவதும் ஒன்றாக இருக்கும்படி செய்வேன். கோதாங்குலி எனும் ஆயுதத்தைக் கட்டிக் கொண்டு, கையில் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு நான் கிளம்பினால், எவன் புருஷன் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு எதிரில் வருவான் பார்க்கலாம். பலருக்கு மத்தியில் நான், ஒருவனாக, ஒரே அம்பினால் பலரை அடித்து தள்ளுவேன். பாணங்களை வர்ஷித்து அரசன், குதிரை, யானைகள், இவற்றை மர்மத்தில் அடித்து வீழ்த்துவேன்.  நான் கற்றுக் கொண்ட அஸ்திரங்களின் பிரபாவத்தை இன்று காணலாம். மகாராஜாவான  தசரதனை இறக்கி விட்டு, அந்த ஸ்தானத்தில், தங்களை  நிலை நிறுத்துவேன். பிரபோ |  சந்தனம் பூசப் பெற்று கேயூர கங்கணங்களை அணிந்த இந்த கைகள், பூமியை விடுவிக்கவும், நண்பர்களைக் காக்கவும், தகுதியானவையே. இந்த புஜங்கள் தங்கள் வேலையைச் செய்யும். உங்கள் முடி சூட்டு விழாவை தடுக்க வந்தவர்களை தடுத்து நிறுத்தி விடும். நீங்களே சொல்லுங்கள்.  இன்று யாரை வெற்றி கொண்டு வர வேண்டும்? உங்களுடைய சத்ருவை, அவன் புகழ், நண்பர்கள் கூட்டத்தோடு அழித்

து வரவா? இந்த பூமி தங்கள் வசம் ஆகும் விதமாக எனக்கு கட்டளை இடுங்கள். நான் தங்கள் தாஸன். கிங்கரன்.  (ஏவியதை செய்பவன்.) ராக4வ வம்ச வர்த4னான ராமன், லக்ஷ்மணனை பல முறை அணைத்து, கண்ணீரைத் துடைத்து சமாதானம் செய்து, தந்தையின் வழியில் நிற்பவன் நான், அதை புரிந்து கொள், சௌம்யனே,  இது தான் நேர் வழி என்று சொன்னார்.

இது வரை வால்மகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், லக்ஷ்மணக்ரோத4|| என்ற இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின், தமிழாக்கம். (ஸ்லோகங்கள்-42).

அத்தியாயம் 24 (101) கௌசல்யார்த்தி சமாஸ்வாசனம் (வருந்தும் கௌசல்யையை சமாதானம் செய்தல்)

தன் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதில் உறுதியாக நிற்கும் மகனைக் கண்டு, கண்களில் நீர் பொங்க, தாயான கௌசல்யா, தர்மத்திற்கு அனுகூலமானதை சொன்னாள். இது வரை காணாத துக்கம் வந்து சேர்ந்திருக்கிறது. தர்மாத்மாவாக, பிரியமாக பேசுபவனாகவே நான் அறிந்திருந்த தசரத ராஜ குமாரன், எனக்கு பிறந்த மகன், உஞ்ச விருத்தி செய்து வாழப் போகிறான் இவனுடைய வேலைக் காரர்களும், தாச விருத்தி செய்யும் குற்றேவல் செய்பவர்களும்  ம்ருஷ்ட்டான்னம்.- நிறைந்த உணவே சாப்பிடுவார்கள். இவன் அவர்களுக்கெல்லாம்  நாதனாக இருந்தவன் காட்டில் கிழங்குகளை சாப்பிட்டு உயிர் வாழ நேர்ந்து விட்டதே. இதைக் கேட்டு யார்தான் சகிப்பார்கள். பயப்படாமல் இருக்க முடியுமா? யாரானாலுல் பயப்படத்தான் செய்வார்கள். குணவானான இந்த மகனையே ராஜா கடத்துகிறார் என்றால், மற்றவர்களின் கதி என்ன? உலகில் பலவானாக இருப்பவன், விதி தான். அவன் தான் எல்லா உயிர்களையும் நடத்திச் செல்கிறான், தன் இஷ்டப்படி. உலகில் மற்ற ஜனங்களுக்கு எல்லாம் அபிராமனாக இருந்த நீ, காட்டுக்கு விரட்டப் படுகிறாய். பனிக்காலம் முடிந்து உலர்ந்த புல்லை வெய்யில் எரிப்பது போல இந்த துக்கம் என்னை எரிக்கப் போகிறது. உன்னை, என் மகனைக் கானாத துக்கமே காற்றாக, அழுது புலம்புவதே சமிதாக, அழும் பொழுது விடும் கண்ணீரே ஆஹுதியாக, கவலையும் கண்ணீரும் பெரும் புகையாக, நீ திரும்பி வரும் நாளை எண்ணி வருந்தி பெருமூச்சு விட்டு, ஆயாசமாகி, அதில் உண்டாகும் சோகமே அக்னியாக, மிகப் பெரியதாக ஆகி என்னை கண்டிப்பாக அழிக்கப் போகிறது.  உலர்ந்த புல் சித்திரை மாத வெய்யிலில் எரிவது போல.  பசு மாடு கூட தன் கன்றைத் தொடர்ந்து சென்று விடும். நான் உன்கூட வருகிறேனே,மகனே, நீ போகுமிடம் எல்லாம் தொடர்ந்து வருகிறேன். இவ்வாறு மிகவும் துக்கத்துடன் அரற்றும் தாயிடம் ராமர் சொன்னார். ஏற்கனவே, ராஜா கைகேயியினால் வஞ்சிக்கப் பட்டு இருக்கிறார். நானும் வனம் சென்றபின், நீயும் கவனிக்கவில்லையென்றால், நிச்சயம் உயிருடன் இருக்க மாட்டார். பெண்களுக்கு கணவனை துறந்து செல்வதைப் போல பெரிய பாபம் வேறு கிடையாது. இந்த பாபத்தை நீ மனதாலும் செய்யக் கூடாது. என் தந்தை உயிருடன் இருக்கும்பொழுது நீ அவருக்கு பணிவிடைகள் செய். அதுதான் சனாதன தர்மம்.  இவ்வாறு ராமன் சொன்னவுடன், கௌசல்யா ராமன் சொல்வதில் நியாயம் இருப்பதை உணர்ந்து, சரி என்று ஒத்துக் கொண்டாள். ராமர் மேலும் சொன்னார். 

தாயே, எனக்கும் உங்களுக்கும் தந்தை சொல் மதிக்கத்தகுந்தது. அரசன் உனக்கு குரு, கணவன், ஸ்ரேஷ்டன், எல்லோருக்கும் தலைவன். இதோ, இந்த ஒன்பதும், ஐந்துமான வருஷங்கள், பெருங்காட்டில் கழித்து விட்டு வந்து விடுகிறேன். வந்து நீ சொல்வதைக் கேட்டு இருக்கிறேன்.  இவ்வாறு பிரியமான மகன் சொல்லவும், கண்களில் நீர் குளம் கட்ட, புத்ர பாசத்தால் மிகவும் வருந்தியவளாக, இருக்கலாம், மகனே, சபத்னிகளின் மத்தியில் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. என்னையும் அழைத்துச் செல், ஏதோ காட்டு மிருகம் கூட வருவது போல வருகிறேன்.  இதைக் கேட்டு, கண்களில் நீர் மல்க, தாயின் கண்ணீரைத் துடைத்து, தந்தையை விட்டு என்னுடன் வருவதில் தான் உனக்கு இஷ்டம் என்றால், உயிருடன் இருக்கும் வரை  ஸ்த்ரீகள் கணவனை தெய்வமாக நினைக்க வேண்டும் என்று சொல்லப் படுவது என்ன ஆகும். உங்களுக்கும் எனக்கும் பிரபுவாக ராஜா இருக்கிறார். லோக நாதனாக அரசன் இருக்கும்பொழுது, நாமும் அனாதைகள் அல்ல. பரதனும் நல்லவன் தான். தர்மாத்மா. எல்லோரிடமும் பிரியமாக பேசுபவன். அவன் தங்களை நிச்சயம் நல்ல முறையில் பாதுகாப்பான். அனுசரணையாக இருப்பான். நான் வெளியேறியதும், மகாராஜா புத்ர சோகத்தால் தடுமாறிப் போகாமல், அதனால் சிரமங்களை அனுபவிக்காமல் இருக்கும் வகையில், நீங்கள் அவருக்கு உதவியாக இருங்கள். இந்த துக்கம் தாங்க முடியாதது. இது அவரை பாதிக்காமல் இருக்க வேண்டும். வயது முதிர்ந்த அரசனுக்கு இதமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக்கொள்ளுங்கள். விரதம், உபவாசம் இவைகளில் ஈ.டுபட்டு, உத்தமமான காரியங்களை செய்து வரும் தாங்கள், பதியை அனுசரிக்காமல் போனால் அது எப்படி நன்மை பயக்கும். கணவனுக்கு பணிவிடை செய்தே பெண்கள் ஸ்வர்கம் செல்ல முடியும். அவள் தேவ பூஜை கூட செய்யாமலும், நமஸ்காரம் கூட செய்யாமலும் இருந்தாலும், கணவனின் நலனையே மனதில் கொண்டு, அவனுக்கு பணிவிடைகள் மட்டுமே குறைவற செய்து வந்தாலே, நல்ல கதி அடைவாள் என்று நமது வேதங்களும், ஸ்ம்ருதிகளும் சொல்கின்றன. அக்னி காரியங்களை செய். மணம் மிகுந்த புஷ்பங்களால் தேவதைகளை பூஜை செய். நல்ல விரதமுடைய பிராம்மணர்களை உபசரி. இவ்வாறு நான் திரும்பி வருவதை எதிர்பார்த்து நாட்களை கழிப்பாயாக. ஆகார நியமங்களையும், மற்ற கட்டுப் பாடுகளையும் கொண்டு, கணவனின் பணிவிடையில் மனதை செலுத்தி வந்தாயானால், நானும் வந்தபின் நல்கதி அடைவாய். உன் விருப்பங்கள் பூர்த்தியாகும்.  இவ்வாறு ராமர்  சொல்லவும், கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, ராமா நீ தீர்மானம் செய்து விட்டாய். உன்னை தடுத்து நிறுத்த எனக்கு சக்தியில்லை. காலத்தை வெல்ல முடியாது. ஏகாக்ர புத்தியுடன் போய் வா மகனே,  நீ திரும்பி வந்தபின் என் துக்கங்கள் அகன்று விடும். நல்லொழுக்கம் உடையவனே, உன் கடமை முடிந்து, திரும்பி வந்து, தந்தை பட்ட கடனைத் தீர்த்தபின்,  நானும்  சந்தோஷமாக இருப்பேன். விதியின் விளையாட்டு இது, உலகில் எப்பொழுதும் இதை நம்மால் மாற்ற முடியாதது. இதோ, நானே என் வார்த்தைகளால் ஆசிர்வதிக்கிறேன். மகாபாஹோ, இப்பொழுது போய், க்ஷேமமாக திரும்பி வா. எதிரில் நின்று அழகான வார்த்தைகளால் பேசி என்னை மகிழ்விப்பாய். இதோ, அந்த நாள் வந்து விடும். நீ வனவாசத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்து விடுவாய். உன்னை ஜடா முடிகளுடன், மரவுரியை அணிந்தவனாக பார்க்கிறேன். வனவாசத்தில் ராமர் உறுதியாக இருப்பதைக் கண்டு, தன்னை கட்டுப் படுத்திக்கொண்டு தேவியான கௌசல்யை, ராமனுக்கு சுபமான வார்த்தைகளால் ஸ்வஸ்தி மங்களங்கள் செய்தாள். (வழியனுப்பும் முறையில், ஆசிர்வாதங்கள் செய்து, காப்பு செய்தல்).

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், கௌசல்யார்த்தி சமாஸ்வாசனம்  என்ற இருபத்து நான்காவது அத்தியாயம்.)

அத்தியாயம் 25 (102) மாத்ரு ஸ்வஸ்த்யயனம் (தாயார் ஆசிர்வதித்தல்)

தன் வாட்டத்தை மறைத்துக் கொண்டு சுத்தமான ஜலத்தை எடுத்துக் கொண்டு தாயார் கௌசல்யா, ராமனுக்கு ஸ்வஸ்தி மங்களங்களை செய்தாள். என்னால் உன்னை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் போய் வா மகனே, ரகுகுல ஸ்ரேஷ்டனே, சீக்கிரமே திரும்பி வா. நல்லவர்களின் வழியில், மேன்மேலும் வளர்ச்சியடைவாய். எந்த தர்மத்தை நீ முழு நம்பிக்கையோடு, நியமத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளாயோ, அந்த தர்மம் உன்னை காக்கட்டும். ராக4வ சார்தூ3லா அந்த தர்மம் உன்னை பாலிக்கட்டும்.

மாளிகைகளிலும்,கோவில்களிலும், எந்த தெய்வங்களை வணங்குகிறாயோ, அவை காட்டில் மகரிஷிகள் கூட உன்னை நன்றாக காப்பாற்றட்டும். விஸ்வாமித்திர முனிவர் உனக்கு கொடுத்த திவ்யாஸ்திரங்கள், அதன் குணம் ஒன்று சேர, சதா உன்னை காக்கட்டும். தந்தைக்கு செய்த பணிவிடைகள், தாயாருக்கு செய்தவை, சத்யத்தை நிலை நிறுத்தி வரும் அவை உன்னை காக்கட்டும். நீடுழி வாழ்வாயாக.

சமித்து, குசம், பவித்ரம், வேத்யங்கள், ஆலயங்கள், பிராம்மணர்களுடைய யாக பூமிகள், மலைகள், மரங்கள்,  சிறிய நீர் நிலைகள், பறவைகளும், ஊர்வனவும், சிங்கங்களும் உன்னை ரக்ஷிக்கட்டும்.  நரோத்தமா, உனக்கு ஸ்வஸ்தி. உலகில் சாதனை புரிந்தவர்களான  மகரிஷிகளும் நன்மையை செய்யட்டும். ஸ்ருஷ்டிகர்த்தவான  தா4தா   ப்ரும்மா உனக்கு நன்மையை செய்யட்டும். சூரியனும், ப43 (சூரியனின் 12 நிலைகளில் ஒன்றின் பெயர்) அர்யம (சூரியன்), உனக்கு நன்மை செய்யட்டும்.  வாசவன் முதலான லோக பாலர்கள், ருதுக்கள், பக்ஷங்கள், மாசங்கள், சம்வத்சரங்கள் (வருஷங்கள்), இரவுகள், பகல்கள், முஹுர்த்தங்கள், எல்லாம் உனக்கு எப்பவும் நன்மையே செய்யட்டும்.  ஸ்ம்ருதி, த்4ருதி, த4ர்மம் (நினவுஆற்றல், தன்னம்பிக்கை, நீதி) இவை மகனே, உன்னை காக்கட்டும்.

பகவான் ஸ்கந்தனும், சோமதேவனும், ப்ருஹஸ்பதியும், சப்த ரிஷிகளும், நாரதரும் எப்பொழுதும் உன்னை ரக்ஷிக்கட்டும். திசைகளும், திசை நாயகர்களும் – இவைகளை எப்பொழுதும் நான் வணங்கி வந்திருக்கிறேன். இவை வனத்தில் உன்னை எப்பொழுதும் ரக்ஷிக்கட்டும். எல்லா மலைகளும், சமுத்திரங்களும், ராஜாவான வருணனும், ஆகாயம், வானம், பூமி, நதிகள் இவை அனைத்தும், நக்ஷத்திரங்கள் யாவும், க்ரஹங்களும், அவைகளின் தேவதைகளும், இரவு பகலாக, ஸந்த்யா காலங்களிலும், வனத்தில் சஞ்சரிக்கும் உன்னை பாதுகாக்கட்டும். ஆறு புண்யமான பருவங்களும், மாதங்களும், வருஷங்களும், கலைகளும், காஷ்டா: (கால அளவு- 1/30 ஒரு கலை.  கலை என்பது ஒரு நிமிஷம், 48 வினாடிகள்) இவை உன்னை ஆசிர்வதிக்கட்டும். முனி வேஷம் தரித்து அடர்ந்த காடுகளில் திரியும் பொழுது ஆதித்யர்களும், அரக்கர்களும், உனக்கு சுகத்தை தருபவர்களாக இருக்கட்டும்.

ராக்ஷஸர்களிடமும், பிசாசுகளிடமும், பயங்கரமான க்ரூர கர்மாக்களைச் செய்யும் க்ரவ்யாதிகளிடமும் (மாமிச ப4க்ஷிணிகள்), மகனே, உனக்கு பயம் ஏற்படாமல் இருக்கட்டும். பெரிய யானைகளும், சிங்கங்களும், புலிகளும், கரடிகளும், பற்களையுடைய எருமைகளும், கொம்புகளையுடைய பயங்கர மிருகங்களும் உன்னை வருத்தாமல் இருக்கட்டும். மகனே, மனித மாமிசம் சாப்பிடும் மற்றும் ஜீவ ஜந்துக்கள், உன்னை துன்புறுத்தாமல் இருக்கட்டும். 

இங்கு நான் பூஜித்து வந்த ஆகமங்கள், உனக்கு நன்மையை செய்யட்டும் மகனே. உன் பராக்ரமங்கள் சித்தியடையட்டும்.  சர்வ சம்பத்தியும் அடைந்து ஸ்வஸ்திமானாக சென்று வா. மறுபடியும் வாழ்த்துகிறேன் – அரசர்களிடமும், பார்த்திவர்களிடமும், எல்லா தேவர்களிடமும், உனக்கு இடையூறு செய்யும் மற்றவர்களிடமிருந்தும் நன்மை உண்டாகட்டும். சுக்ரனும், சோமனும், சூரியனும், த4னத3னும், யமனும் கூட உன்னை காப்பாற்றட்டும். த3ண்டகாரண்ய வாசிகளால் ராமா, பூஜிக்கப்பட்டவர்களாக, அக்னியும், வாயுவும், ஹோம புகையும், ரிஷி ஜனங்களின் வாயினால் ஓதப் படும் மந்திரங்களும், ரகுனந்தனா, நீ ஸ்னானம் செய்யும் பொழுது காக்கட்டும். சர்வ உலகுக்கும் பிரபுவான ப்ரும்மா, ஜீவன்களுக்கு காரணமானவன், ரிஷிகள், மீதியுள்ள தேவர்கள் யாவரும் காட்டில் வசிக்கும் உன்னை காக்கட்டும். இவ்வாறு சொல்லி மாலைகளாலும், கந்தம் முதலிய பூஜா த்ரவியங்களாலும் தேவதைகளை அனுரூபமான ஸ்தோத்திரங்களால் துதித்து, பூஜைகள் செய்து, கண்கள் கலங்க, பிராம்மணர்களைக் கொண்டு அக்னியில் ஹோமமும் முறைப்படிசெய்து, ராமனுக்கு மங்களம் உண்டாக வேண்டிக் கொண்டாள். நெய், வெண்மையான மாலைகள், சமித்துக்கள், வெண்ணெய் இவைகளைத் தருவித்து, உபாத்யாயர்களைக் கொண்டு விதிப் படி ஹோமம் செய்யச் சொன்னாள். அவரும், உடல் நலம் காக்கவும், சாந்தியும் பெற ஹோமங்கள் செய்தார் ஹோமம் செய்த மீதியினால் வெளியில் பலிகள் செய்தார்.  தேன், தயிர், அக்ஷதைகள்,இவைகளைக் கொண்டு பிராம்மணர்கள் ஸ்வஸ்தி வசனம் சொல்லி ஆசிர்வதித்தனர். வனத்தில் ராமர் மங்களமாக இருக்க ஸ்வஸ்தி வாசகங்களைச் சொன்னார்கள். அந்த பிராம்மணர்களுக்கு, யசஸ்வினியான. ராம மாதா வேண்டிய அளவு தக்ஷிணைகள் கொடுத்தாள். பின் ராமனைப் பார்த்து சொன்னாள்.

எல்லா தேவதைகளும் வணங்கும் இந்திரனுக்கு, வ்ருத்திராசுரனைக் கொன்ற போது எந்த மங்களம் உண்டாயிற்றோ, அது உனக்கும் உண்டாகட்டும். சுபர்ணா என்ற நாகராஜனுக்கு வினதா என்ற கருடன், அமுதத்தை வேண்டிய பொழுது என்ன மங்களா சாஸனம் செய்தாளோ அது  உனக்கும் உண்டாகட்டும். அம்ருதம் உண்டான பொழுது, வஜ்ர தரனான இந்திரனால், தைத்யர்கள் அடிக்கப் பட்டபொழுது, அதிதி என்ன மங்களா சாஸனம் செய்தாளோ அது உனக்கும் உண்டாகட்டும். அளவில்லாத பராக்ரமனான விஷ்ணு, மூன்று அடிகளால் உலகை அளந்தபொழுது, என்ன மங்களம் உண்டாயிற்றோ, ராமா, அது உனக்கும் உண்டாகட்டும்.

ருதுக்களும், சாகரங்களும், தீவுகளும், வேதங்களும், லோகங்களும், திசைகளும், மகாபாஹோ, உனக்கு மங்களங்களைத் தரட்டும். சுப மங்களங்கள் உண்டாகட்டும்.  என்று இவ்வாறு சொல்லி தலையில் பூஜை செய்து மிகுதியான புஷ்பங்களைப் போட்டு, கந்தங்களையும் இட்டு விட்டு, ராமனுக்கு, விசல்யகரணீம் என்ற ஔஷதியையும் ரக்ஷையாகக் கட்டி விட்டு, மந்திரங்கள் சொல்லி ஜபமும் செய்தாள். துக்கத்தில் மூழ்கி இருந்தாலும், தன்னை மகிழ்ச்சியாக காட்டிக் கொண்டு, வெறும் வார்த்தைகளால், பாவம் இல்லாமல், (மன விருப்பம் இல்லாமல்), சொன்னாள். உச்சி முகர்ந்து, அணைத்துக் கொண்டு, ராமா, சித்தார்த்தனாக (உன் எண்ணம் நிறைவேறியவனாக,) போய் வா மகனே,, சுகமாக போய் வா. ஆரோக்யமாக, உன் இஷ்டங்களை பூர்த்தி செய்து கொண்டு, திரும்பி அயோத்தி வந்த உன்னை, நலமாக காண்கிறேன்.  குழந்தாய், ராஜ வம்ச வழியில் ஸ்திரமாக இருந்துகொண்டு, என் துக்கங்கள் விலகி மகிழ்ச்சியில் பூரித்த முகத்தோடு, காட்டிலிருந்து வந்தவனை, உன்னை வரவேற்கிறேன். பூரண சந்திரன் உதித்தது  போல நீ திரும்பி வருவதை பார்க்கிறேன். வனவாசம் முடிந்து இங்கு வந்து பத்ராசனத்தில் அமர்ந்து, தந்தைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றியவனாக, திரும்ப உன்னை பார்க்கிறேன். மங்களங்கள் கூடியிருக்க, வனவாசம் முடிந்து இங்கு வந்து, மருமகளையும், என்னையும், தினமும் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வாய்.  எங்கள் இஷ்டங்களை பூர்த்தி செய்வாய். போய் வா. என்னால் பூஜிக்கப் பட்ட தேவ கணங்கள், சிவன் முதலானோர், மகரிஷிகள், பூத, மகாசுர, நாகங்கள், வனத்திற்கு புறப்பட்டு விட்ட உனக்கு நிச்சயமாக ஹிதங்களையே செய்யட்டும். ராகவா, என்று இவ்வாறு கண்ணீர் பெருகும் விழிகளோடு, மங்களா சாஸனங்களை விதி முறைப்படி முடித்து, ராகவனை பிரதக்ஷிணம் செய்து, திரும்பத்  திரும்ப அணைத்துக் கொண்டாள். தாயால் இவ்வாறு பிரதக்ஷிணம் செய்யப்பட்ட ராகவன்,  தாயாரின் சரணங்களைப் பற்றி, திரும்பத்  திரும்ப வணங்கி, தன் இயல்பான தேக காந்தி இன்னும் அதிகமாக பிரகாசிக்க, சீதையின் இருப்பிடம் சென்றான்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், மாத்ரு ஸ்வஸ்த்யயனம் என்ற இருபத்து ஐந்தாவது அத்தியாயம்.)

அத்தியாயம் 26  சீதா ப்ரத்யவஸ்தா2பனம்

கௌசல்யையை வணங்கி, தன் கொள்கையில் ஸ்திரமாக, வனம் செல்ல விடை பெற்றுக் கொண்டு, ராஜ மார்கம் வழியாக செல்லும் பொழுது, ஜனங்கள் நிறைந்து இருந்த அந்த வீதியில், ஒவ்வொருவரும் ராமனைப் பார்த்து, மனம் கலங்கினர். அவன் குணங்களை எண்ணி தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இவையனைத்தையும் இதுவரை வைதேஹி அறிந்திருக்கவில்லை. அவள் மனதில் இன்னமும் முடி சூட்டு விழா நடந்து கொண்டிருப்பதாகவே எண்ணியிருந்தாள். மனதில் மகிழ்ச்சியோடு தெய்வ காரியங்களை தானே செய்து விட்டு, ராஜ குல வழக்கப்படி, ராமன் திரும்பி வருவதை எதிர் நோக்கி காத்திருந்தாள். ராமர் தன் மாளிகையில் நுழைந்த பொழுது, நன்கு அலங்கரிக்கப்பட்டு, உற்றாரும், சுற்றாரும், கோலாகலமாக நிறைந்திருந்த வீட்டில், சற்று லஜ்ஜையுடன் தலை குனிந்தவாறு சென்றார். எழுந்து வந்த சீதா, கண்களில் நீர் வடிய, மனதின் வருத்தம் முகத்தில் தெரிய, கவலையால் வாடிய இந்திரியங்களுடன் ராமனைப் பார்த்து திடுக்கிட்டாள். அவளைப் பார்த்ததும் ராமர், தன் மனதை வாட்டிய துக்கத்தை அதற்கு மேலும் பொறுக்க மாட்டாதவராக, உடைந்து போனார். முகம் வாடி, தாங்க மாட்டாத சோகத்துடன், ப்ரபோ, இது என்ன என்று வினவினாள். இன்று ப்3ருஹஸ்பதி வம்சத்தில் வந்தவர்கள், புஷ்ய நக்ஷத்திரம் என்றார்களே, ப்ராம்மணர்கள் அனைவரும் இன்று நல்ல நாள் என்று நிச்சயித்தார்களே, ஏன் இப்படி முகம் வாடி வருத்தம் தோய்ந்தவராக இருக்கிறீர்கள்? உங்களுடைய அழகிய முகம், நீரில் தோன்றும் நுரை போன்ற வெண்ணிற குடை, அதன் பல நூறு பரிதிகளால் அலங்கரிக்கப் பட வில்லையே. குடை எங்கே? சந்திரனோ, ஹம்சமோ எனும்படியான, குளிர்ந்த சாமரங்கள் வீசப் படவில்லை. வாக்கு வன்மை நிறைந்த பாடகர்கள் சந்தோஷமாக துதிப்பார்களே, நரர்ஷபா4 (மனிதருள் ரிஷபம் போன்று கம்பீரமானவனே), அவர்களும் தென்படவில்லையே. பாடுபவர்களும், ஆடுபவர்களும் காணப் படவில்லை. பாலில் செய்யப்பட்ட த்ரவ்யங்களோ, தயிரோ கொண்டு, வேதத்தில் கரை கண்ட ப்ராம்மணர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட தங்களை ஆசிர்வதிக்க காணோம். பிரமுகர்களோ, சாதாரண ஜனங்களோ, உங்களைத் தொடர்ந்து வரக் காணோம். நான்கு வர்கத்தவர்களும் சேர்ந்த ஊர் ஜனங்கள் எங்கே? உயர் ஜாதி குதிரைகள் பூட்டிய,, தங்க மயமாக அலங்கரிக்கப்பட்ட புஷ்ய ரதம் எங்கே? உங்களுக்கு முன்னால் செல்ல வேண்டுமே? முன்னால் யானையும் இல்லை. க்ருஷ்ண பக்ஷ மேகம் போலவும், சிறிய மலைக் குன்று போலவும் யானைகள் தொடர்ந்து வருமே. பத்ராசனத்தை அலங்கரிக்கப் போகும் வீர புருஷனை கௌரவிக்கும் வகையிலான  எதையுமே காணவில்லையே. அபிஷேகம் என்று தீர்மானித்து அலங்கரிக்கப் பட்டதே, இப்பொழுது என்ன ஆயிற்று? ப்ரபோ, இது போன்ற நிலையில் தங்களை நான் கண்டதே இல்லையே. சந்தோஷமாகவும் இல்லையே? இவ்வாறு தொடர்ந்து கேள்விகளை அடுக்கும் மனைவியைப் பார்த்து ராமர் சொன்னர். 

சீதே, என் மதிப்புக்குரிய தந்தை என்னை நாடு கடத்தி, வனத்திற்கு அனுப்புகிறார். நல்ல குலத்தில் பிறந்து, தர்மம் அறிந்தவளே, அந்த தர்மத்தை பின் பற்றும் நெறி உள்ளவளே, கேள்,   இன்று  எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரமாக கேள். என் தந்தையான தசரத ராஜா, வாக்குத் தவறாதவர். அவர் ஒருமுறை சிற்றன்னை கைகேயியிக்கு இரண்டு வரங்கள் கொடுத்தார். அவள், இன்று, எனக்கு முடி சூட்டு விழா என்று அரசர் நிச்சயித்து, ஏற்பாடுகளைச் செய்தபின்,  சற்றும் எதிர்பார்க்காத விதமாக, என்னை பதினான்கு ஆண்டுகள் வனத்தில் வசிக்க சொல்லியும், பரதனை ராஜ்யத்தில் அமர்த்தவும், வரமாக பெற்று, இருவரும் அவ்விதமே முடிவு செய்து விட்டனர். இது தர்மத்திற்கும் ஒவ்வாதது. விதியின் தூண்டுதல் என்று தான்  சொல்லவேண்டும். நான் இதோ ஜன சஞ்சாரமற்ற வனத்திற்கு போகுமுன், உன்னிடம் விடைபெற வந்தேன். பரதனுக்கு எதிரில் என்னை எப்பொழுதும் புகழ்ந்து பேசாதே. எதையும் அவனிடம் விசேஷமாக எதிர்பார்க்காதே.  ஜாக்கிரதையாக அனுசரித்து அவனிடம் நடந்து கொள். புராதனமான  இந்த அரசு மகாராஜாவால் பரதனுக்குத் தரப் பட்டுள்ளது. அதனால் அவன் இப்பொழுது அரசன். அதனால் அரசனுக்குரிய மரியாதைகளை அவனுக்குத் தர மறக்காதே. நான் அரசனுடைய வாக்கை கடை பிடித்து, இன்றே வனத்திற்கு போகிறேன். மனஸ்வினீ, (புத்திசாலி, தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கும் குணம்) நீ கலங்காதே. மாசற்றவளே, நான் வனம் சென்றபின், விரதங்களை அனுசரித்துக் கொண்டு காலத்தை கழிப்பாய். விடியற்காலை எழுந்து தேவ பூஜைகளைச் செய்தபின், என் தந்தையான மகாராஜா தசரதனை வணங்கி வா. என் பிரிவினால் வாடும் என் தாய் கௌசல்யா, வயது முதிர்ந்தவள், தர்மத்தை நினைத்து நீ அவளுக்கு மரியாதைகள் செய். மற்ற தாய்மார்களும், வணங்கத் தக்கவர்களே. ஸ்னேகத்திலும், அன்பிலும், வசதியிலும் மூவரும் எனக்கு சமமே. பரத சத்ருக்னர்கள் எனக்கு உயிருக்குயிரானவர்கள். அவர்களை சகோதரன் அல்லது மகனுக்கு சமமாக எண்ணி நடந்து கொள். பரதனுக்கு இஷ்டமில்லாததை எப்பொழுதும் செய்யாதே. அவன் அரசன். நம் தேசத்திற்கும், குலத்திற்கும் பிரபு. நாம் நல்லபடி அவர்களை மதித்து, சீலத்துடன், பெரு முயற்சிகளுடனும் அரசனுக்கு சேவை செய்தால் தான், அரசன் நம்மிடம் மகிழ்ச்சியடைவான். மாறினால் பலனும் விபரீதமாகும். தன் வயிற்றில் பிறந்த புத்திரர்களையே தியாகம் செய்கின்றனர். தன் புத்திரர்கள் தனக்கு ஒத்துப் போகவில்லையெனில், வெளி ஜனங்களை சமர்த்தர்களாக இருப்பவர்களை ஏற்றுக் கொள்வார்கள். அதனால், கல்யாணி நீ இங்கு அனுசரித்து நடந்து கொள். சத்ய விரதம் என்று அப்படியே ஏற்றுக் கொள். யோசிக்காதே. எப்படியோ இங்கேயே இருந்து நாட்களை கழிப்பாய். நான் அடர்ந்த கானனம் போகிறேன். ப்ரியே நீ இங்குதான் இருந்தாக வேண்டும். பா4மினீ எதுவும் தவறாக நடந்து விடாமல் கவனமாக இரு.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், சீதா ப்ரத்யவஸ்தா2பனம் என்ற இருபத்து ஆறாவது அத்தியாயம்.)

அத்தியாயம் 27 பதிவ்ரதாத்யவசாயோ (பதிவிரதம்இதன் உயர்வு)

இவ்வாறு ராகவன் சொல்லி நிறுத்தியதும், பிரியமான மனைவியான சீதை, சற்று கோபத்துடன் பதில் சொன்னாள். இது என்ன பேச்சு ராமா, சுலபமாக சொல்கிறீர்கள். அல்லது கிண்டலா? ஆர்யபுத்ரா, தாயோ, தந்தையோ, சகோதரனோ, புத்திரனோ, மருமளும், தன் தன் பாக்யத்தை அனுபவிக்கிறார்கள். பர்த்தாவான கணவனின் பாக்யத்தை பத்னி, மட்டும் தான் அடைகிறாள். நல்லதோ, கெட்டதோ, அதனால் பத்னி என்ற முறையில் நானும் வனத்தில் வசிக்க வேண்டும் என்பது சொல்லாமலே விதிக்கப் பட்டதாக ஆகிறது. பெண்களுக்கு கணவன் ஒருவன் தான் கதி.  தந்தையோ, மகனோ தானோ கூட இல்லை, தாயும் இல்லை, சினேகிதிகளும் இல்லை. இன்றே நீங்கள் வனத்துக்கு புறப்படுவது நிச்சயமானால், நான் முன்னே செல்வேன். வழியில் முட்களையும், புற்களையும்  அகற்றி வழியமைத்துக் கொடுப்பவளாக செல்வேன். கோபத்தையும், பொறாமையையும் விட்டு விட்டு, குடித்து விட்டு மீதி வைத்த தண்ணீர் போல என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அதில் பாபமும் இல்லை. வீட்டு வாசல் வரை விமானங்கள் மூலம் வந்தாலும், ஆகாய கதியாக வந்தாலும், எந்த நிலையிலும், கணவனின் அடிச் சுவடு சிறந்தது. என் தாயாராலும், தந்தையாலும் நான் இந்த முறையில் எண்ணும்படிதான் வளர்க்கப் பட்டிருக்கிறேன். புதிதாக இந்த சமயம் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. ஜன நடமாட்டமில்லாத கடினமான வழி நடந்து, வனத்திற்கு பல விதமான மிருகங்கள் நிறைந்ததும், புலி, ஓனாய்கள் இருந்தாலும், தந்தை வீட்டில் நிச்சிந்தையாக இருந்தது போலவே சுகமாகவே இருப்பேன். மூவுலகையும் பற்றி எனக்கு கவலையில்லை. என் கவலையெல்லாம் என் கணவனை சுற்றியதே. நியமத்துடன் ப்ரும்மசாரிணியாக, உங்களுக்கு பணிவிடைகள் செய்து கொண்டு வனத்திலும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.  யாராக இருந்தாலும், வனத்தில் ரக்ஷிக்க உங்களால் முடியும். என்னை பாதுகாப்பது என்ன கஷ்டம். இன்றே உங்களுடன் வனம் செல்வேன், சந்தேகமேயில்லை. இந்த முடிவிலிருந்து என்னை மாற்ற முடியாது. பழங்களோ, கிழங்குகளோ என்னாலும் இவைகளே ஆகாரமாக இருக்க முடியும். கூட இருப்பதால் நீங்கள் சிரமமாக உணரும்படி செய்ய மாட்டேன். உங்களுக்கு முன்னால் செல்வேன். நீங்கள் உண்டபின் உண்பேன்.  நதிகளையும், மலைகளையும் தோட்டங்களையும், காடுகளையும் நான் பயமின்றி ரசித்து மகிழ்வேன். நீங்கள் நாதனாக உடன் வரும்பொழுது நான் ஏன் பயப்படப் போகிறேன்.  ஹம்சங்கள், காரண்ட பக்ஷிகள் நிறைந்ததும், தாமரை மலர்கள் பூத்து குலுங்குவதுமான தடாகங்களை உங்களுடன் சேர்ந்து நடந்து பார்த்து மகிழ ஆசைப் படுகிறேன். இது போன்ற நீர் நிலைகளில் விரதங்கள் மேற்கொண்டு, ஸ்னானங்கள் செய்வோம். நீங்கள் உடன் இருக்கும்பொழுது இது போல ஆயிரம் வருஷம் ஆனாலும் நான் இருக்கத் தயார்.  அதுவன்றி ஸ்வர்கமே ஆனாலும், தனியாக இருக்க மாட்டேன். மிருகங்கள் நிறைந்ததும், குரங்குகளும், யானைகளும் நிறைந்ததுமான அடர்ந்த வனத்திலும் தந்தை வீட்டில் இருந்ததைப் போலவே சந்தோஷமாக இருப்பேன். உங்கள் பாதச் சுவட்டைத் தொடர்ந்து நடந்து வருவேன். உங்களையே சார்ந்து, வேறு எண்ணமின்றி, இருந்து வந்திருப்பவள் நான். என்னை உடன் அழைத்துச் செல்லாமல் இங்கே விட்டுப் போவதானால் எனக்கு மரணம் தான் கதி.  நான் வருவது உங்களுக்கு பாரமாக இருக்காது. என்னை உடன் அழைத்துச் செல்லுங்கள். இவ்வளவு சொல்லியும், தர்மத்தை விரும்பும் சீதையை அழைத்துச் செல்ல ராகவனுக்கு மனம் வரவில்லை. வனத்தில் மிகப் பெரிய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று சொல்லி சமாதானம் செய்கிறான்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், பதி வ்ரதாத்யவசாயோ என்ற இருபத்து ஏழாவது அத்தியாயம்.)

அத்தியாயம் 28 (105) வன துக்க ப்ரதி போதனம் (வனத்தின் கஷ்டங்களை எடுத்துச் சொல்லுதல்)

இவ்வாறு நியாயமாக சொல்லும் தர்ம பத்னியைப் பார்த்து வனத்தில் கஷ்டப்படுவாளே என்று எண்ணி, ராமர் உடன் அழைத்துச் செல்ல விரும்பவில்லை. கண்களில் நீர் நிரம்ப, கெஞ்சும் மனைவியை தடுத்து நிறுத்தவே நினைத்தார். சீதே, பெரிய குடும்பத்தில் பிறந்தவள் நீ. இங்கேயே இருந்து தர்மத்தை அனுசரித்து நடந்து வந்தால், என் மனதிற்கு நிம்மதியாக இருக்கும். நான் சொல்வதைக் கேள்.  அதில் தான் நன்மை. காட்டில் வாசம் செய்வது மிகவும் கஷ்டமானது என்று புரிந்து கொள். காட்டில் வாசம் செய்யலாம் என்ற எண்ணம் உனக்கு ஏன் வந்தது? பல கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.  உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்.  நான் அறிந்தவரை வனத்தில் சுகம் என்பதே கிடையாது. கஷ்டம்தான். மலை அருவிகள் கொட்டும்

இடங்களில் குகைகளில் இடம் பார்த்து வசித்தோமானால் சிங்கங்களின் பயங்கரமான கர்ஜனைகளைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். சூன்யமான இடத்தில் இடையூறு இன்றி விளையாடும் மிருகங்கள் நம்மைக் கண்டால் அருகில் வரும். அதுவும் கஷ்டம்தான். நதிகளில் முதலைகள் இருக்கும். சேறாகி கிடக்கும். கடப்பது கடினம். மதம் பிடித்த யானைகள் உலவும். அதனாலும் வனம் கஷ்டம்தான். வழியெல்லாம் கொடிகளும், முள் செடிகளும் நிறைந்து, பூச்சிகளும், கிணற்றுத் தவளைகளும் கத்தும், கிணற்றில் நீர் வற்றியிருக்கும். தாண்டிச் செல்வதும் கஷ்டம். அதனால் வன வாசம் கஷ்டம் தான். வெடித்துக் கிடக்கும் பூமிகளில், தரையில் படுக்க வேண்டும். இலை தழைகளைப் போட்டு கரடு முரடான தரையில் எப்படித் தூங்குவது? அதனால் தான் சொல்கிறேன். வனவாசம் கஷ்டம் தான். பகலோ, இரவோ, மரங்களிலிருந்து தானாக விழுந்தவைகளைக் கொண்டு பசியாற வேண்டும்.  சீதே, உனக்கு எதற்கு இந்த கஷ்டம். உபவாசங்கள் வேறு. வல்கலை, மரவுரி தரித்துக் கொண்டு, நாங்கள் ஜடையும் முடியுமாக இருப்போம். உனக்கு பார்க்கவே கஷ்டமாக இருக்கும். இதில், வந்த அதிதிகளை கவனிக்க வேண்டும். பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும், விதி முறைப் படி பூஜைகள் செய்ய வேண்டும். தினமும் மூன்று முறை ஸ்னானம் செய்ய வேண்டும். அப்படித்தான் நியமம். அதனாலும் வன வாசம் கஷ்டம் தான். தானே பறித்து வந்த புஷ்பங்களைக் கொண்டு நித்ய பூஜைகளையும் செய்ய வேண்டும். வேதியமைத்து, தொன்று தொட்டு வந்த விதி முறைப் படி இவைகளை செய்து வர வேண்டும்.  இதுவும் வன வாசத்தில் கஷ்டம். கிடைத்தைக் கொண்டு திருப்தியாக வேண்டும். ஆகாரமோ, வனத்தில் கிடைத்தது தான். அதனாலும் வனவாசம் கஷ்டமே. காற்றும் அதிகமாக இருக்கும். பசியோடு பயங்கரமாக பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். வனம் வந்து இந்த கஷ்டங்களை நீயும் ஏன் அனுபவிக்க வேண்டும்? ஊர்வன, பலவிதமாக நிறைய இருக்கும். தன் இஷ்டத்திற்கு பூமியில் நடமாடும். அதை பார்த்து பயப் படுவாய். சில நதிகளில் இருக்கும்.  சில நதிக் கரைகளில். சில வழிகளில் சுருண்டு கிடக்கும். அதனாலும் வனவாசம் கஷ்டம். சிறிய பூச்சிகள், தேள், புழு பூச்சிகள், கடிக்கும் கொசு போன்றவை, இவையும் உன்னை பாதிக்கும். முள் நிறைந்த மரங்கள், குசம் என்ற புல் உறுத்தும். வனத்தில் வளைந்து, கிளைகளோடு  மரங்கள், இடையில் புகுந்து செல்ல கஷ்டமாக இருக்கும். உடல் வருத்தமும் நிறைய இருக்கும். பயமும் பலவிதமாக இருக்கும். காட்டில் வசிப்பது ஒரு வாசமா? க்ரோதமோ, லோபமோ இன்றி தபசில் மனதை செலுத்த வேண்டும். பயப்படும்படியாக இருந்தால் கூட பயப்படக் கூடாது. அதனால் வனவாசத்தில் துக்கம் தான் அதிகம். அதனால் நீ வனத்திற்கு வர வேண்டாம். யோசித்து பார்க்க பார்க்க, வனவாசத்தில் கஷ்டங்களைத் தான் நான் உணருகிறேன்.  ராமர் இவ்வளவு சொல்லி மறுத்தும், சீதை, அதை எற்றுக் கொள்ள மனமில்லாமல், துக்கத்துடன் திரும்பவும் கெஞ்சும் குரலில் சொன்னாள்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், வன துக்க ப்ரதி போதனம்  என்ற இருபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம்  29 (106)  வனானுக3மன யாஞ்சா நிர்ப3ந்த4😦வனம் செல்ல தானும் வருவதாக நிர்பந்தித்தல்)

ராமனது இந்த வார்த்தைகளைக் கேட்டு மிகவும் துக்கமடைந்த சீதா, கண்களில் நீர் பெருக, வேண்டலானாள். உங்களிடம் எனக்கு உள்ள ஸ்னேகத்தை முன்னிட்டு பார்க்கையில், இதுவரை நீங்கள் சொன்ன எதுவுமே குறையென்று எனக்குத் தோன்றவில்லை. இவைகளையும் நிறைவாகவே எடுத்துக் கொள்கிறேன். மான்களோ, சிங்கங்களோ, யானைகளோ, புலிகளோ, சரபங்களோ, சமர, உமரங்களோ மற்றும் காட்டில் திரியும் ஜந்துக்கள் இது வரை உங்களைக் கண்டதேயில்லை என்பதால் அவையும் உங்களைக் கண்டு பயப்படும்.  பயம் எல்லோருக்கும் பொதுவானதே. என்னைச் சார்ந்த பெரியவர்கள் கட்டளையிட்டு சொல்லியிருக்கிறார்கள். உங்கள் கூடவே எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று. உங்களைப் பிரிய நேரிட்டால் அதை விட உயிர் விடுவதே மேல்.  உங்கள் அருகில் இருக்கும்பொழுது, என்னை யார் என்ன செய்ய முடியும்? தேவர்கள் தலைவனான இந்திரன் கூட என்னை எதுவும் செய்ய முடியாது. பதியில்லாமல் இருக்கும் பெண் தான் சக்தியற்றவளாகிறாள். இது தவிர பிராம்மணர்கள் சொல்லியும் கேட்டிருக்கிறேன். தாய் வீட்டில் இருக்கும்பொழுது, இவள் வனத்தில் வசிப்பாள் என்று சொல்லியிருக்கிறார்கள். லக்ஷணிகளும், பிராம்மணர்களும் இப்படிச் சொல்வதைக் கேட்டு, வனவாசம் எப்படி இருக்கும் என்று நான் உற்சாகமாக கேட்டிருக்கிறேன். எனக்கு வனவாசம், தனியாக வந்து சேராமல், தங்களுடன் போகக் கிடைத்ததே அதிகம். என் வாழ்க்கையில் வனம் செல்ல நேரிடும் என்று சொன்ன பெரியவர்கள் சொல்லும் பொய்யாகாமல் நான் உங்களுடன் சேர்ந்து வருவேன். தோள் வலி இல்லாத ஜனங்களுக்கு வனவாச கஷ்டங்கள் பெரியதாக தெரியலாம். நான் சிறு பெண்ணாக இருந்த பொழுதே, தாயை பார்க்க வந்த ஒரு பிக்ஷிணி, சன்யாசினி, தவம் செய்து வந்த சாது, வன வாசத்தைப் பற்றி நிறையச் சொன்னாள். அதனாலும் நான் வனத்தைக் காண விரும்புகிறேன். இப்பொழுது உங்களுடன் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதோ நான் தயாராகி விடுவேன். சூரன் நீங்கள். உங்களுக்கு பணிவிடைகள் செய்து கொண்டு உடன் வருவதில் எனக்கு மகிழ்ச்சியே. களங்கமில்லாத சுத்தமான மனதுடையவரே, நானும் எந்த குறையுமின்றி அன்புடன் கணவனைத் தொடர்ந்து செல்ல அனுமதியளியுங்கள்.  எனக்கு தெய்வமே என் கணவன் தான். வேதம் அறிந்த பிராம்மணர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். மரணத்திலும் உங்களுடன் இருப்பது தான் எனக்கு நன்மை தரும். இந்த உலகில், தந்தையால் தாரை வார்க்கப்பட்டு கொடுக்கப்படும் பெண், அவள் காலாந்தரமான மரணத்திலும் அந்த கணவனுடன் இருப்பாள். என்ன காரணம்? ஏன் பதிவிரதையான என்னை, உங்கள் மனைவி, உங்கள் சுக துக்கத்தில் பங்கு பெறும் என்னை அழைத்துச் செல்வதில் இவ்வளவு தயக்கம்? இவ்வளவு சொல்லியும் என்னை உடன் அழைத்துச் செல்ல மறுத்தால், நான் விஷமோ, ஜலமோ, அக்னியோ என் மரணத்துக்கு வழியாக தேர்ந்தெடுத்துக் கொள்வேன். இவ்வளவு சொல்லியும், கெஞ்சியும், ராமர் அவளை அழைத்துச் செல்ல சம்மதிக்கவில்லை. இதையறிந்து கவலை கொண்ட சீதையின் கண்களிலிருந்து பெருகிய நீர் பூமியை நனைக்க, கோபம் கொண்ட பத்னியை ராகவன் சமாதானம் செய்ய முனைந்தார். 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், வனானுக3மன யாஞ்சா நிர்ப3ந்த4: என்ற இருபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 30(108) வனகமனாப்யுபபத்தி: (தொடர்ந்து வனம் செல்ல முனைதல்)

பல விதமாக கணவனால் சாமாதானப் படுத்தப் பட்டும் சீதை தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.  உரிமையினாலும், அன்பினாலும் கணவனிடம் கேலியாகச் சொன்னாள். என் தந்தை மிதிலாதிபர், உங்களைப் பற்றி என்ன நினைப்பார். மாப்பிள்ளை என்று ஏற்றுக் கொண்டோமே, புருஷ வேஷத்தில் ஸ்த்ரீயோ என்று நினைக்க மாட்டாரா. ராமா, உலகமே பொய் சொல்கிறதா? அல்லது தெரியாமல் சொல்கிறதா? ராமன் பெரிய தேஜஸ்வீ என்றும், சூரியன் போல பிரகாசிக்கிறான் என்றும் சொல்வதெல்லாம் வெறும் வார்த்தை தானா?  என்ன காரியம் செய்து விட்டோம் என்று இப்பொழுது இவ்வளவு மன வாட்டம்?  யாரிடம் பயம்? வேறு யாரையும் எண்ணிக் கூட பார்க்காமல் நீங்களே கதி என்று இருக்கும் என்னை இங்கேயே விட்டு விட்டு போக விரும்புகிறீர்கள்.  த்3யுமத்சேனன் மகனான சத்ய வந்தனை தொடர்ந்து சென்ற சாவித்திரியாக என்னைப் பாருங்கள். உங்கள் வசத்தில் இருப்பவளாக பாருங்கள். மனதால் கூட நான் பர புருஷர்களை நான் கண்டதில்லை. உங்களைத் தவிர யாரையும் நினைத்தது கூட இல்லை. ஏதோ, சாதாரண குல தூஷணியாக உள்ள ஸ்த்ரீ போல என்னை நினைத்து பேசுகிறீர்கள். சிறு வயதிலிருந்து உடன் வசித்து வருபவள், தன் மனைவி, சதி இவ்வளவும் தெரிந்தும், கூத்தாடி போல தன் மனைவியை பிறன் பொறுப்பில் விட்டுச் செல்லத் துணிகிறீர்கள். யாருக்கு நன்மை என்று என்னை இங்கேயே தங்கச் சொல்கிறீர்களோ, யார்  தடுக்கிறார்களோ, அவர்களுக்கு குற்றேவல் செய்து கொண்டு நீங்கள் இருங்கள். என்னை வற்புறுத்த வேண்டாம். என்னை உடன் அழைத்துச் செல்லாமல் வனம் போக முடியாது. தவமோ, அரண்யமோ, சுவர்கமாகவே இருந்தாலும் கூட உங்களருகில் இருக்கும்பொழுது, எனக்கு வழி நடை களைப்போ, வேறு சிரமமோ உண்டாகாது.  உங்களுடன் இருக்கும்பொழுது, குசத்தால் (ஒருவகை புல்) ஆன படுக்கையும் எனக்கு அரண்மனையின் இந்த விஹார சயனமாகவே இருக்கும். கூர்மையான முட்களைக் கொண்ட மரங்கள், பஞ்சு அடைத்த மெத்தையோ, புலித்தோலால் ஆனதோ என்பது போல எனக்கு சுகம் தருபவையாகவே இருக்கும். பெருங்காற்றில் தூசி என் உடலை மூடினால், அதுவே சந்தனம் பூசியதாக எண்ணி மகிழ்வேன். குசத்தால் ஆன படுக்கையில் காடுகளில், நதிக்கரைகளில்  படுக்கும்பொழுது,  அதைவிட சுகமாக வேறு என்ன இருக்க முடியும் என்று நினைத்துக் கொள்வேன். பத்ரம், பலம், மூலம் ( இலை, பழம், கிழங்குகள்,) இவைகளை நீங்களே சம்பாதித்துக் கொண்டு  வந்து தரும்பொழுது, கொஞ்சமாகவோ, நிறையவோ, அது எனக்கு அமுதமாக இருக்கும். தந்தையையோ, தாயையோ என் வீட்டையோ நினைத்து கூட பார்க்க மாட்டேன். புஷ்பங்களை ரசித்து, பழங்களை சாப்பிட்டுக் கொண்டு இருக்க பழகிக் கொள்வேன்.  ஒருபோதும் உங்களுக்கு பாரமாக இருக்க மாட்டேன். என் காரணமாக உங்களுக்கு வருத்தமோ, சோகமோ வர இடம் கொடுக்க மாட்டேன். உங்களுடன் கூட இருப்பது தான் எனக்கு ஸ்வர்கம், நீங்கள் இல்லாத இடம் எனக்கு நரகம் தான். இதைப் புரிந்து கொண்டு மிகவும் பிரியமாக, என்னுடன் வனம் செல்வாய். ராமா, இவ்வளவு சொல்லியும், என்னை இங்கு விட்டுச் சென்றால், இன்றே விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வேன். எதிரிகளின் வசம் ஆக மாட்டேன். நீங்கள் என்னைவிட்டுச் சென்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை. அதைவிட மரணமே மேல். இந்த துக்கத்தை ஒரு முஹுர்த்தம் கூட சகிக்க மாட்டேன் என்று நான் சொல்லும்பொழுது, பத்து, மூன்று, இன்னம் ஓன்று என்று பதினான்கு வருஷங்கள் நான் எப்படி இருப்பேன்? என்று கதறி அழலானாள். கணவனைக் கட்டிக் கொண்டு அரற்றலானாள். இதுவரை கண்களில் நீர் விட நேர்ந்ததே இல்லை.  அரணிக் கட்டையில் அக்னி போல வெகு காலமாக சேர்ந்து இருந்த கண்ணீர் பிரவாகமாக ஓடலாயிற்று. பெண் யானை அங்குசத்தால் குத்தப் பட்டது போல, ராமனது சொல் அவளைத் தாக்கியது. தாமரை மலரிலிருந்து நீர் சொட்டுவது போல அவள் முகத்திலிருந்து ஸ்படிகம் போன்ற கண்ணீர் வடிந்தது. வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும் சந்திரன் போன்ற அவள் முகம், பெரிய கண்கள் வாட, அப்பொழுதுதான் நீரிலிருந்து பறித்து வெளியே எறியப் பட்ட தாமரையை ஒத்திருந்தது.  தன்னினைவு இழந்தவள் போல துக்கமடைந்த அவளை, தன் கைகளால் அணைத்துக் கொண்டு சமாதானம் செய்வது போல ராமர் சொன்னார். தேவி, நீ துக்கம் அடைவாய் என்றால் எனக்கு ஸ்வர்கம் கூட தேவையில்லை. எனக்கு யாரிடமும் எப்பொழுதும் பயம் இருந்ததில்லை. உன்னைக் காக்க எனக்கு சாமர்த்யம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. உன் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளவே கேட்டேன். என் கூட வனவாசத்திற்கு என்றே ஸ்ருஷ்டிக்கப் பட்டிருக்கிறாய். தன் மானம் உள்ளவனுக்கு கீர்த்தி போல நீ எப்பொழுதும் என்னுடன் இணைந்தே இருப்பாய். உன்னைப் பிரிந்து இருக்க என்னாலும் முடியாது. யானைத் தும்பிக்கை போன்ற கால்களை உடையவளே, முன் காலத்திலிருந்து பெரியவர்கள் அனுசரித்து வந்துள்ள தர்மம், அதை நான் அனுசரித்துச் செல்வேன். சூரியனை சுவர்சலா போல நீயும் என்னைத் தொடர்ந்து வா. வனத்திற்கு நானாகவா போகிறேன்? தந்தையின் வாக்கு என்னை நடத்திச் செல்கிறது. தந்தையின் வாக்கு சத்யத்தை அடிப்படையாகக் கொண்டது. இதை மீறி நான் உயிர் வாழக் கூட விரும்ப மாட்டேன். நம் வசமான தாய், தந்தை, குருவை விட்டு பராதீனமான தெய்வங்களை பலவிதமாக ஆராதனை செய்வது கூட முறையல்ல. எந்த மூன்றும், மூன்று உலகிலும் பவித்திரமானதோ, இதைப் போல வேறு இல்லை என்பதாலேயே கொண்டாடப் பட்டு ஆராதிக்கப் படுகிறது. சத்யம், தானங்கள், யக்ஞம், நிறைய தக்ஷிணை கொடுத்தல், இவை யாவும் தந்தைக்கு இதமான பணிவிடைக்கு முன் ஒன்றும் இல்லை. குருவான தந்தையை அனுசரித்து நடப்பவனுக்கு, சுவர்கமோ, தன தான்யமோ, வித்யா, புத்திரர்கள், மற்ற சுகங்கள் எதுவுமே துர்லபம் இல்லை. தேவ கந்தர்வ, கோ லோகங்களையும், ப்ரும்ம லோகங்களையும், மனிதர்கள், தந்தை தாய் சொல்லைக் கேட்டு நடப்பவர்கள் அடைகிறார்கள். அதனால் என் தந்தை எப்படி கட்டளையிடுகிறாரோ, அதைப் பின் பற்றி நடக்க விரும்புகிறேன். அது தான் சனாதன தர்மம். அதனால் இப்பொழுதே தீர்மானித்து விட்டேன். உன்னையும் தண்டகா வனம் அழைத்துச் செல்கிறேன். நீயும் என் கூட வசிக்கிறேன் என்று உறுதியோடு சொல்கிறாய்.  நீ என்னுடன் வனத்திற்கு வர என்றே ஸ்ருஷ்டிக்கப் பட்டிருக்கிறாய் போலும்.  மதிரேக்ஷனே, என்னைத் தொடர்ந்து வனம் வருவாய். உன்னை பீரு, பயந்தவள் என்று நினைத்தேன். என் உடன் நடந்து வந்து எனக்கு சஹ தர்மினியாக இரு. என் குலத்திற்கும், உன் குலத்திற்கும் நீ எடுத்துக் கொண்டுள்ள இந்த முடிவு இசைந்ததே. மிகவும் நன்மை பயக்கும், சோபனமான என் செயல்களில் என்னைத் தொடர்ந்து வா.  வனவாசத்திற்கு வேண்டிய காரியங்களை செய்ய ஆரம்பி. இப்பொழுது உன்னைத் துறந்து ஸ்வர்கம் கூட போக மாட்டேன்.  ப்ராம்மணர்களுக்கு ரத்னங்களும், யாசிப்பவர்களுக்கு போஜனமும், கொடு. யாருக்கு எது வேண்டுமானாலும் கொடு. சீக்கிரம் ஆகட்டும். பூஷணங்களோ, விலையுயர்ந்த நல்ல ஆடைகளோ, மற்றவைகளும், அழகாக இருக்கிறது என்பதற்காக சேர்த்து வைத்த பொருட்களும், விளையாட என்று சேர்த்து வைத்த பொருட்களையும், படுக்கைகளையும் வாகனங்களையும், மற்றவைகளையும் உன் வேலைக்கார, சேவகர்களுக்கு கொடுத்து விடு. அதன் பின் சீதை சந்தோஷமாக அவ்வாறே தன் பொருட்களை தானம் செய்ய ஆரம்பித்தாள். தான் உடன் வருவது, கணவனுக்கு சம்மதமே என்று அறிந்த பின் மிகவும் மகிழ்ச்சியாக, மனம் நிறைந்தவளாக, தர்மம் அறிந்த பலருக்கும் தானம் செய்தாள்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், வனகமனாப்யுபபத்தி: என்ற முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)s

அத்தியாயம்  31(109)  லக்ஷ்மண வனானுகமனாக்ஞா 

(லக்ஷ்மணனும் உடன் வர சம்மதித்தல்)

இந்த உரையாடல் நடக்கும் சமயமே வந்து விட்ட லக்ஷ்மணன், துக்கத்தை அடக்க மாட்டாதவனாக, கண்க ளி ல் நீர் வழிய சகோதரன் கால்களைப் பிடித்துக் கொண்டு, சீதையையும் ராமனையும் ஒன்றாக பார்த்தவாறு சொன்னான். இருவரும் சேர்ந்து வனம் போவது என்று தீர்மானித்து விட்டதால், நானும் கையில் வில்லேந்தி உங்கள் முன்னால் செல்வேன்.  என்னுடன் கூட பல பெரிய காடுகளில் பக்ஷிகளும், மிருகங்களும் எதிரில் வர, பயமின்றி சஞ்சரிப்பீர்கள்.  தேவ லோகம் முழுவதும் தருவதானாலும் எனக்கு வேண்டாம். அமரத்வம் தருவதானாலும் தேவையில்லை. உலகிலேயே ஐஸ்வர்யம் கிடைக்கும் என்றாலும், நீ இல்லாமல் எனக்கு எதுவுமே வேண்டாம். லக்ஷ்மணன் இவ்வாறு தீர்மானமாக வனவாசத்திற்கு உடன் வருவேன் என்று சொல்லவும் அவனை கைகளால் அனைத்தவாறு ராமர், அவனை தடுத்து நிறுத்தும் உத்தேசத்துடன் சொல்ல ஆரம்பித்தார். லக்ஷ்மணன் பதிலிறுத்தான் முன்னாலேயே நீங்கள் எனக்கு அனுமதி கொடுத்தாயிற்றே. இப்பொழுது நான் சொல்லும்பொழுது ஏன் தடுக்கிறீர்கள். இது எனக்கு சந்தேகத்தை உண்டாக்குகிறது எனவும், ராமர் தனக்கு முன்னால் வனம் செல்ல துணிந்துவிட்ட வீரன் லக்ஷ்மணன் இப்பொழுது கை கூப்பி யாசிப்பதைப் பார்த்து, ஹே. வீரா, நீ தர்மத்தில் ஈடுபாடுடையவன். எப்பொழுதும் நல்வழியில் செல்பவன். எனக்கு சினேகிதனும், பிரியமான சகோதரனும், உயிருக்குயிரானவனும் நீயே.  சௌமித்ரே, இப்பொழுது நீயும் எங்களுடன் வனம் வந்து விட்டால், கௌசல்யை, சுமித்ரை இவர்களை யார் பார்த்துக் கொள்வார்கள். வேண்டுவதை மழையாக வர்ஷிக்கும் நம் தந்தை இப்பொழுது காம பாசத்தில் கட்டுண்டு கிடக்கிறார். சக்ரவர்த்தியாக இருந்தும், மகா தேஜஸ்வியாக இருந்தும் அவரால் தற்சமயம் தன் இஷ்டப்படி எதுவும் செய்ய முடியாது. இன்னிலையில் அஸ்வபதியின் குமாரியான கைகேயி, ராஜ்யம் கைக்கு வந்து விட்ட நிலையில், சக்களத்திகளுக்கு ஏன் நன்மை செய்யப்போகிறாள். அவர்கள் வருத்தத்தை அவள் எப்படி உணருவாள்? பரதனும் ராஜ்யத்தை அடைந்து, கைகேயியின் பக்கமே இருப்பான். கௌசல்யாவையும், சுமித்ரையையும் நினைக்க கூட அவனுக்கு நேரம் இராது. அந்த கௌசல்யாவை, நீயாகவோ, ராஜாவின் அனுக்ரஹம் மூலமோ, நீ காப்பாற்றி வா. இதுதான் எனக்கு சரியென்று படுகிறது. அதன் படி நட. இதில் என்னிடம் நீ கொண்டுள்ள பக்தியும் வெளிப்படும். குருவான தாய்க்கு பணிவிடை செய்து நீயும் நல்ல கதியடைவாய். தாயாரை நாம் எல்லோருமாக உதாசீனம் செய்து விட்டு போவதும் நல்லதல்ல. ராமர் இவ்வாறு சிக்கல்களை எடுத்துச் சொன்னவுடன், சொல்லின் செல்வரும், அழகாக பேசத் தெரிந்தவருமான லக்ஷ்மணர் பதில் சொன்னார். உங்கள் தேஜசை அறிந்த பரதன், உங்கள் தேஜஸாலேயே, தாய்மார்களை மதித்து பூஜிப்பான். இதில் சந்தேகமே இல்லை. என்ன காரணத்திலாவது மனம் மாறி பரதன், கர்வம் கொண்டு ராஜ்யத்தை சரியாக நிர்வகிக்கவில்லையென்றால், துர்மதியான அவனை நான் க்ரூரன் என்று வதமே செய்து விடுவேன். சந்தேகமே இல்லை.  மூவுலகும் அவன் கட்சியில் இருந்தாலும் சரி. ஆனால், அந்த கௌசல்யா, என்னைப் போல ஆயிரம் பேர்களை சமாளிக்கத் தெரிந்தவள். மதிப்பு மிக்க அவளுக்கு ஆயிரம் கிராமங்கள் உபஜீவனமாக கிடைத்துள்ளனவே, அதில் அவள் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, என் தாயாரையும் போஷித்து வருவாள். என் போன்றவர்களையே பொறுப்பு ஏற்றுக் கொண்டு காப்பாற்ற சக்தியுடையவள் அவள். என்னை ஏற்றுக் கொள். நானும் உடன் வருவேன். இதில் அதர்மம் எதுவும் இல்லை, எனக்கும் திருப்தியாக இருக்கும். உன் காரியமும் ஆகும். வில்லையும் அம்பையும் ஏந்தி, க2னித்ரத்தையும், மண் வெட்டியையும் எடுத்துக் கொண்டு உன் முன்னால் வழி காட்டிக் கொண்டு செல்வேன். உங்களுக்கு பழங்களையும், கிழங்குகளையும் கொண்டு வந்து கொடுப்பேன். வேறு காட்டு சாமான்கள், ஆகாரத்திற்கு ஏற்றதாக இருந்தால், தாபஸர்கள் சாப்பிடக் கூடியதாக கொண்டு வந்து தருவேன்.  மலைச் சாரல்களில் நீங்கள் வைதேஹியுடன் ஆனந்தமாக இருங்கள். நீங்கள் தூங்கும்பொழுதும் விழித்திருந்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன். இவ்வாறு லக்ஷ்மணன் சொல்லவும், மிகவும் மகிழ்ந்து போன ராமர், இந்த சொல்லினாலேயே நெகிழ்ந்து போனவராக, சரி வா. உன் இஷ்ட மித்திர பந்துக்களிடம் விடை பெற்றுக் கொண்டு வா என்று சொன்னார். இரண்டு வில்கள், வருணன் அரசனுக்கு கொடுத்தது,  ஜனகருடைய யக்ஞத்தில் இரண்டு வில்கள், இவைகளையும், துளைக்க முடியாத கவசங்கள் இரண்டையும், குறைவில்லாமல் அம்பு நிறைந்தே இருக்கும் அம்புறாத்தூணிகள் இரண்டையும், தங்க கவசம் போட்ட, சூரியனுக்கு சமமான ஒளி யுடைய இரண்டு வாட்களையும், இவைகளை பூஜித்து ஆசார்யரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளன, இந்த ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, லக்ஷ்மணா, சீக்கிரம் வா. அவனும் தன் நண்பர்களிடம் விடை பெற்று, வனவாசத்திற்கு செல்வது என்று தீர்மானித்தவனாக, ஆசார்யரின் க்ருஹம் சென்று, ஆயுதங்களை எடுத்துக் கொண்டான்.  திவ்யமான அந்த ஆயுதங்களை, மாலைகள் அணிவித்து கௌரவமாக வைக்கப்பட்டிருந்தது. இவைகளை எடுத்துக் கொண்டு வந்து ராமரிடம் காட்டினான். ராமரும், அவைகளை சரி பார்த்து, சரியான சமயத்தில் வந்து சேர்ந்தாய் லக்ஷ்மணா என்று பாராட்டி, நான் என்னுடைய செல்வங்களை. பொருளை, ப்ராம்மணர்களுக்கும், தபஸ்விகளுக்கும் கொடுக்க விரும்புகிறேன். நியும் உடன் இரு. நமது குரு ஜனங்களிடம் த்ருட பக்தி கொண்ட பலர் இங்கு இருக்கின்றனர். அவர்களுக்கும், மேலும் மற்ற எல்லா அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களூக்கும் கொடுக்க விரும்புகிறேன். லக்ஷ்மணா, நீ சீக்கிரம் சென்று, வசிஷ்ட புத்திரனான சுயக்ஞன், என்ற பெரியவரை அழைத்து வா. இவர் ப்ராம்மணோத்தமர். எல்லாவற்றையும் சிஷ்டர்களான ப்ராம்மணர்களுக்கு கொடுத்து விட்டு, நாம் வனம் செல்வோம்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் லக்ஷ்மண வனானுகமன ஆக்ஞா என்ற முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 32 (109) வித்த விஸ்ரானனம் (செல்வத்தை தானம் செய்தல்)

தமையனின் கட்டளையை ஏற்று, லக்ஷ்மணன் வேகமாக சென்று, சுயக்ஞருடைய க்ருஹத்தில் நுழைந்தான். அக்னியே குடி புகுந்தது போன்ற தேஜஸ் உடைய அவரை வணங்கி லக்ஷ்மணன், சகே2 உடனே வந்து பார். வேண்டாததை செய்பவர்களால் வீடு எப்படி ஆகியிருக்கிறது, வந்து பார். எனவும், அவரும் விரைவில் ஸந்த்யா ஜபங்களை முடித்துக் கொண்டு, சௌமித்திரியுடன் புறப்பட்டார். ராமனுக்கு என்று 

அளிக்கப்பட்டிருந்த அழகிய மாளிகையை அடைந்தார். வேதம் அறிந்தவரான அவரை சீதையுடன், கை கூப்பி வரவேற்றார் ராமர். தவ ஒளியால் அக்னி போன்று பிரகாசித்த சுயக்ஞரை பின் தொடர்ந்தனர். சரீரத்தில் அணியும், தங்கமயமான அணிகலன்களையும், குண்டலங்களையும், தங்கத்தில் கோர்த்த மணி வகைகளையும், கேயூரங்கள், வலயங்கள், மற்றும் பலவிதமான ரத்னங்கள், இவைகளை ராமரும் சீதையுமாக அவருக்கு அளித்து மரியாதைகள் செய்தனர்.  இவை தவிர, சீதை ப்ரத்யேகமாக, தன்னுடைய மாலை, ஹேம சூத்ரம், அவருடைய பத்னிக்கு கொடுத்தாள். வனம் செல்வதால் தன்னுடைய ஒட்டியானத்தையும், (மேகலா) அவருடைய மனைவிக்கு என்று சொல்லி  கொடுத்தாள். இவை தவிர, பலவிதமான நகைகள், சுபமான கேயூரங்கள் இவற்றையும், சீதை சொல்லி ராமர் அவரிடம் கொடுத்தார். கட்டில், உட்காரும் ஆசனங்கள், பலவித ரத்னங்கள் இழைத்து செய்யப்பட்டவை, இவைகளையும், வைதேஹி சொல்லி அவரிடம் ஒப்படைத்தான். என் தாய் மாமன் கொடுத்த சத்ருஞ்ஜயோ என்ற யானை அதையும் மற்ற நூறு யானைகளுடன் உங்களுக்குத் தருகிறேன் என்று சொல்லி அவைகளையும் கொடுத்தான். மூவருக்கும் ஆசிகள் அளித்து அவைகளை சுயக்ஞர் பெற்றுக் கொண்டார். பிறகு, ராமர் பிரியமாக பேசும் சகோதரனான சௌமித்திரியைப் பார்த்து, ப்ரும்மா, தேவபதியிடம் பேசுவது போல சொன்னார். அகஸ்தியரையும், கௌசிகரையும், அழைத்து ரத்னங்களைக் கொடு. ப்ரம்மணோத்தமர்களான இவ்விருவருக்கும், பயிர்களுக்கு நீர்  தெளிப்பது போல நூற்றுக் கணக்கான பசுக்களையும் தானமாக கொடு.  தங்கம், வெள்ளி, மணி, நிறைய தனம் இவற்றை கொடு. கௌசல்யையும், சுமித்திரையையும் இவர்கள் பக்தியுடன் பரி பாலிப்பார்கள். தைதிரீய ஆசார்யர், அவரை அழைத்து, வாகனங்களும், வேலை செய்யும் தாசிகளும் கொடு. வேத வித்தானவர் இவர். நல்ல பட்டு வஸ்திரங்களை அவர் திருப்தியடையும் வரை கொடு. ரதம் ஓட்டும் சாரதிகள், பெரியவர்கள், உன் வயதொத்தவர்கள், வெகு நாளாக இங்கு இருப்பவர்கள், யாவருக்கும் நிறைய மணிகள், வஸ்திரங்கள், பொருள்இவற்றை திருப்தி அடையும்படி கொடு. கடுகாலாபா: என்று அழைக்கப் படும்,  வைசம்பாயனர் வழி வந்த, வேதம் கற்கும் மாணவர்களுக்கும், மற்ற பசுகா:, தண்டமானவா: என்றும் அழைக்கப்படும் மாணவர்கள், இவர்களுக்கும் நிறைய கொடு. எப்பொழுதும் தங்கள் அத்யயனத்திலேயே இவர்கள் கவனமாக இருப்பதால், வேறு எதுவும் செய்வதில்லை. ருசியாக சமைக்கும் சமையற்காரர்கள், சுமார் எண்பது பேர் இருப்பார்கள், அவர்களுக்கு ரத்னம் நிறைந்த பாத்திரங்கள் கொடு. இருநூறு பத்ரகர்கள்,(சமையல் வேலையில் உதவி செய்பவர்கள்)  இவர்களுக்கு நல்ல அரிசியும், ஆயிரம் பசுக்களையும் கொடு. கௌசல்யையை சுற்றி நிற்கும் மேகலீ என்ற தாசிகளுக்கு, ஒவ்வொருவருக்கும், ஆயிரம் பேருக்கும், நிறைய கொடு. அதனால் என்னிடம் அன்புள்ள தாயார் கௌசல்யை மகிழ்வாள். இதோ நிற்கும் ப்ராம்மணர்களுக்கும் கொடு. இவ்வாறு சொன்னவுடன், லக்ஷ்மணன் தானே அந்த ப்ராம்மணர்களுக்கு பொருளை குபேரனைப் போல கொடுத்தான். கண்களில் நீர் மல்க நின்றிருந்த அவர்கள், இவர்களையே அண்டியிருந்தவர்கள், செய்வதறியாது நிற்பதைக் கண்டு, மேலும் மேலும், அவர்களுக்குத் தனித் தனியாக பார்த்து த்ரவ்யங்களைக் கொடுத்தான், ராமன். பின் அவர்களைப்  பார்த்து, லக்ஷ்மணனுடைய இந்த வீட்டையும், என் வீட்டையும் நாங்கள் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள். இதைக் கேட்டு அந்த உபஜீவிகள், துக்கமடைந்ததைக் கண்டு, த4னாத்யக்ஷனைக் கூப்பிட்டு, மேலும் தனம் கொண்டு வரச் சொல்லி அவர்களுக்கு கொடுத்தார்.  கண் கொள்ளா காட்சியாக அந்த த4னம் குவிந்து கிடந்தது.  லக்ஷ்மணனும், புருஷவ்யாக்ரம் என்று போற்றப்படும் ராமனுமாக, அந்த தனத்தை தாங்களே கைகளால் எடுத்து, ஏழை ப்ராம்மணர்கள், குழந்தைகள், வயதானவர்கள், மற்ற எளியவர்களுக்கு தாராளமாக கொடுத்தார்கள்.  அங்கு பிங்கள கார்க்யன், த்ரிஜடா என்ற ப்ராம்மணர், தினமும் உஞ்ச வ்ருத்தியால் பிழைப்பவர் ஒருவர் இருந்தார்.  வயதான அவருக்கு இளம் மனைவி, குழந்தைகள் இருந்தனர்.  தரித்திரத்தால் கஷ்டப்பட்டு அலுத்தவளாக, அவரைப் பார்த்து, மனைவியான பெண், இந்த மண்னைத் தோண்டும் கரண்டி, கூடை இவற்றை வைத்துவிட்டு, ராமரை போய் தரிசனம் செய் என்று சொல்லியனுப்பினாள். ஏதாவது தானம் பெற்று வரச் சொல்லி அனுப்பினாள். அவரும் ராமரைக் காண வந்தார். ப்ருகு, ஆங்கிரஸ் போன்ற முனிவர்களுக்கு சமமான தேஜஸ் உடைய அவரை, கூட்டத்தில் ஐந்தாவது அறை வரை யாரும் தடுக்கவில்லை. ராஜ குமாரர்களை அடைந்து அவர் மெல்லிய குரலில் சொன்னார். நான் தனம் இல்லாதவன், நிறைய புத்திரர்கள், தினமும் வனத்தில் உஞ்ச வ்ருத்தி செய்து பிழைக்கிறேன். என்னை கொஞ்சம் கவனியுங்கள். என்fறு கெஞ்சலாக கேட்கவும், ராமர் சற்று பரிகாசம் கலந்த குரலில், ஆயிரக்கணக்கான பசுக்களில் ஒன்று கூட மீதியில்லையே, சரி பரவாயில்லை, தண்டத்தை வீசி எவ்வளவு தூரம் வீசுகிறீர்களோ, அவ்வளவும் உங்களுக்கே என்று சொன்னார். முனிவர், இடுப்புத் துணியை வரிந்து கட்டிக் கொண்டு, கம்பை தன் முழு பலத்துடனும், பிராணனும் (சக்தியும்) உபயோகித்து வீசினார். அவர் கையிலிருந்து விடுபட்ட தண்டம், சரயுவைத் தாண்டிப் போய், விழுந்தது. பல ஆயிரம் பசுக்களும், ரிஷபங்களும், இருந்த இடத்தில் அது விழுந்தது, அவரை அணைத்துக் கொண்டு ராமர், சரயூ நதிக் கரையிலிருந்து பசுக்களை, இடையர்களைக் கொண்டு ரிஷியின் ஆசிரமத்திற்கு ஓட்டிச் செல்லச் செய்தார். பிறகு அவரை சமாதானப் படுத்தி, கோபம் கொள்ள வேண்டாம், இது ஒரு பரிகாசம் தான் விளயாட்டுதான் என்று சொல்லி அனுப்பினார். இன்னமும் வேண்டுமானாலும் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். தன் மனைவியுடன் வந்து த்ரிஜடா என்ற அந்த முனிவர், பசுக்களைப் பெற்றுக் கொண்டு, புகழ், பலம், அன்பு இவற்றை குறைவற பெறுவாயாக என்று ஆசிகள் வழங்கிச் சென்றார். தர்மத்தாலும், பலத்தாலும் சம்பாதிக்கப் பட்ட அந்த செல்வத்தை, மேலும் நண்பர்களுக்கு பலகாலமாக பேசிப் பழகி வந்த நண்பர்களுக்கு கொடுத்தார். அங்கு இருந்தவர்களில், தகுதிக்கேற்ப கௌரவித்து, தானம் பெறாத பிராம்மணனோ, நண்பரோ, வேலையாட்களோ, தவிர, தரித்திரர்களோ, பிக்ஷை வாங்கி பிழைக்கும் நிலையில் ஏழைகளோ இல்லை எனும்படி ராமர் தன் வசம் இருந்த அனைத்தையும் கொடுத்து விட்டார்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் வித்த விஸ்ரானனம் என்ற முப்பத்து இரண்டாவது அத்தியாயம்.)

அத்தியாயம் 33 (110) பௌர வாக்யம் (ஊர் ஜனங்களின் பேச்சு)

வைதேஹியுடன் சேர்ந்து ப்ராம்மணர்களுக்கு தனம் முழுவதும் நிறைய நிறைய கொடுத்து விட்டு, ராகவர்கள் இருவரும் சீதையுடன் தந்தையைக் காணச் சென்றனர்.  யாராலும் எதிர்க்க முடியாத ஆயுதங்களை மாலைகளால் அலங்கரித்து எடுத்துக் கொண்டு, மாளிகையின் விமான சிகரங்களில் ஏறி நின்று ஜனக் கூட்டத்தைப் பார்த்தனர். அந்த ஜன சமுத்திரத்தின் இடையில் ரதத்தை ஓட்டிச் செல்வது இயலாது. அந்த மாளிகையிலிருந்து இறங்கி நடந்து செல்லும் ராகவனை, சகோதரனும், மனைவியும் உடன் வரக் கண்ட ஜனங்கள், சோகத்தால் பீடிக்கப் பட்டவர்களாக பலவிதமாக பேசலானார்கள். எவன் கிளம்பிச் செல்லும்பொழுது சதுரங்க சேனையும் பின் தொடருமோ, அவனை சீதையுடன் கூட தனியாக லக்ஷ்மணன் மட்டும் தான் பின் தொடருகிறான். ஐஸ்வர்யத்தை அனுபவித்து உணர்ந்தவன், தர்மாத்மாவான தந்தையின் வாக்கு பொய்யாகக் கூடாது என்பதற்காக, வனம் செல்கிறான். எந்த சீதையை பஞ்ச பூதங்களும் கூட கண்டதில்லை, ஆகாசம் கண்டதில்லை எனும்படியாக பாதுகாப்பாக வாழ்ந்த சீதை இன்று ஊர் ஜனங்கள் காண பூமியில் நடந்து செல்கிறாள்.  சிவந்த சந்தனத்தை உபயோகிக்கும் சீதை, பலவிதமான வாசனை திரவியங்களால் அழகு படுத்திக் கொள்பவள், இந்த மழையிலும், குளிரிலும், வெய்யிலிலும் எப்படி இருக்கப் போகிறாள். சீக்கிரமே அவள் வர்ணமிழந்து, அழகு குறைந்து வாடி விடுவாள். இன்றாவது தசரதர் நேர்மையாக உணர்ந்து பேசுகிறாரோ பார்க்கலாம். பிரியமான புத்திரன் ராமன், அவனை நாடு கடத்த அவர் விரும்ப மாட்டார். குணமே இல்லாத புத்திரனேயானாலும், இவ்வாறு வீட்டை விட்டுத் துரத்த யாருக்குத் தான் மனம் வரும். இந்த மகனோ, தன் நன்னடத்தையால் உலகை வென்றவன். எல்லோரிடமும் கருணையும், அனுசரணையும் உடையவனாகத் தான் கேட்டிருக்கிறோம். இவனுடைய அடக்கமும், பொறுமையும் அவனுக்கு சோபையூட்டும் குணங்களே. குணங்கள் என்று சொல்லப்படும் ஆறும் உடையவன். அதனால் அவன் நாட்டை விட்டுச் செல்கிறான் என்று ஜனங்கள் தவித்தார்கள். நீர் நிலையை அண்டியிருக்கும் நீர் வாழ் ஜந்துக்கள், வெய்யில் காலத்தில் வருந்துவதைப் போல வருந்தினர். மகா காந்தி பொருந்திய, தர்மத்தின் ஸாரமோ எனும்படி இருக்கும் இவன் தான் இந்த ஜன சமூகத்தின் ஆணி வேர். ஆணி வேரில் அடி பட்டால் புஷ்பங்களும், பழங்களும் உடைய மரம் என்ன ஆகும்?  நமது அரசனின் இந்த ராஜ்யம் முழுவதும் உள்ள ஜனங்கள் இப்பொழுது பீடிக்கப் பட்டிருக்கிறார்கள். ராமன் தான் ஆணிவேர் என்றால், மற்ற ஜனங்கள் இந்த மரத்தின் இலைகள், புஷ்பங்கள், பழங்கள் ஆவார்கள். நாமும் லக்ஷ்மணனைப் போல, பத்னியுடனும், பந்துக்களுடனும் ராமன் போகும் வழியில் அவன் அடியைப் பின் பற்றி செல்வோம். நமது உத்யான வனங்களோ, க்ஷேத்திரங்கள், வீடுகள் இவைகளைத் தியாகம் செய்து விட்டு நாமும் ராமனுடன் சமமான சுக துக்கங்களை அனுபவிப்பவர்களாக செல்வோம். தார்மீகனான ராமனால் நமக்கு நன்மையே. நமது பொக்கிஷங்களை முழுவதுமாக எடுத்துக் கொண்டு, வீடுகள் உருக் குலைந்து போக, தன தான்யங்களை யாரோ கொண்டு செல்ல, சாரமாக உள்ள எல்லாவற்றையும் நாம் உடன் கொண்டு செல்ல, புழுதி மூடிய, தேவதைகள் விலகிச் சென்று விட, எலிகள் இங்கும் அங்குமாக ஓட, வளைகள் தோன்றி, எங்கும் தண்ணீரோ, அடுப்பு எரியும் புகையோ இல்லாத நிலையில், பெருக்கி சுத்தம் செய்வதும் இல்லாமல், பலி கர்மாவோ,  யாகங்களோ, மந்திர ஜபமோ, ஹோம கார்யங்களோ இல்லாமல் போக, காலம் கெட்டதால் உடைந்து விழுந்த பாத்திரம் பண்டங்களும் மட்டும் கிடக்க, நம்மால் தியாகம் செய்யப் பட்ட வீடுகளை கைகேயி கட்டி ஆளட்டும். ராமன் செல்லும் வனம் நமக்கு நகரம் ஆகட்டும். நம்மால் கை விடப்பட்ட இந்த நகரம் வனமாகும். வனத்தில், பல் உடைய மிருகங்களும், மலை வாழ் மாமிச பக்ஷிணிகள் நம்மைக் கண்டு பயந்து, யானைகளும், சிங்கங்களும், மற்ற காட்டு மிருகங்களும் வனத்தை விட்டு ஓடிப் போகும். அவை நாம் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பட்டும். அவை தியாகம் செய்த இடத்தில் நாம் புதிதாக வசிக்க ஏற்பாடுகள் செய்து கொள்வோம். புல் மண்டி, மாமிசம் உண்ணும் மிருகங்கள் நிரம்பி, ஓனாய்களும், மான்களும் பக்ஷிகளும் நிரம்பிய நகரத்தை கைகேயி, தன் புத்திரனுடனும், இஷ்ட மித்திர பந்துக்களுடனும் ஆண்டு அனுபவிக்கட்டும். கவலையின்றி ராமனுடன் வனத்தில் வசிப்போம். என்று இவ்விதமாக பலவாறு ஜனங்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டதை ராகவனும் கேட்டான். இதைக் கேட்டு அவன் மனம் வாடியது. கைலாச சிகரம் போன்ற தந்தையின் மாளிகையை சற்று தூரத்தில் இருந்தே கண்டான். மதம் பிடித்த யானை போல பராக்ரமம் உடைய அந்த ராமன், தந்தை வீட்டில் நுழைகையில் வாசலில் நின்றிருந்த வீரன் வணங்கினான். அவனைக் கடந்து செல்லவும் சுமந்திரன் பரிதாபமாக நின்றிருந்ததைக் கண்டான். தனக்கு பிரியமானவர்கள் வர மாட்டார்களா என்று எதிர் நோக்கியிருந்த தன் தந்தையை, கவலையில் மூழ்கியிருந்தவரைப் பார்க்க, சற்றும் வாட்டம் இல்லாதவனாக, முக மலர்ச்சியோடு காணச் சென்றான்.  தந்தையின் ஆணையை விதி முறைப் படி கேட்டு,  செய்ய விரும்பியவனாக, ராமன் உள்ளே சென்றான். சுமந்திரனைப் பார்த்து நின்றான். மகா ராஜாவுக்கு காவலாக நிற்பது போல நின்றிருந்த சுமந்திரனைப் பார்த்து, எந்த தந்தையின் கட்டளையை சிரமேற் கொண்டு வனம் செல்ல தீர்மானித்து கிளம்பி நின்றானோ, அவரிடம், சுமந்திரனை அனுப்பி, நான் வந்திருப்பதாக அரசனிடம் சொல் என்று சொல்லியனுப்பினான்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌர வாக்யம் என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம்  34 தசரத சமாஸ்வாதனம் (தசரதரை சமாதானம் செய்தல்)

தனக்குவமை இல்லாத பெருந்தகையான ராமன், ஸ்யாமள வர்ணமும், கமலம் போன்ற திருவிழிகளும் உடைய தசரத குமரன், வாயிலில் நின்ற சுமந்தரிரிடம், தந்தையிடம் நான் வந்திருப்பதாகச் சொல் என்று சொல்லவும், ஏற்கனவே முகம் வாடி நின்றிருந்த சுமந்திரர், வேகமாக சென்று ராஜா தசரதனைக் கண்டார். பெருமூச்சு விட்டபடி,வெளிறி போன சூரியன் போலவும், நெருப்பு சாம்பல் மூடிக் கிடப்பது போலவும், நீர் வற்றிய குளம் போலவும் பொலிவிழந்த அரசனைக் கண்டார். ராமனையே எண்ணி வருந்தும்  கவலை சூழ்ந்த மனத்தினனாக இருந்த அரசன் நிமிர்ந்து பார்க்கவும், சுமந்திரர் கைக்கூப்பியவாறு, அரசனை ஜெய கோஷங்களால் வாழ்த்தியபின், பயத்தினால் வார்த்தைகள் தடுமாற, மெதுவாக கஷ்டப் பட்டு சொன்னான். பூபதியே, உங்கள் மகன், புருஷவ்யாக்ரன் என்று போற்றப் படுபவன், உங்களைக் காண வாசலில் நிற்கிறான். ப்ராம்மணர்களுக்கு தனத்தை தானம் செய்து விட்டான். மற்ற அனைத்தையும்  அவனை சார்ந்து வாழ்ந்த வேலையாட்கள் மற்றும் அனைவருக்கும் கொடுத்து விட்டான். உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். அந்த ராமன் உங்களை தரிசிக்கட்டும். தன் நண்பர்களிடமும்  விடை பெற்றுக் கொண்டு, உங்களைக் காண வந்துள்ளான். மகாரண்யம் செல்லத் தயாராகிவிட்ட அவனை மகாராஜா பார்க்க வேண்டும். அரசனுக்குரிய குணங்கள் அனைத்தும் நிரம்பியவன், சூரியன் தன் கிரணங்களுடன் பிரகாசிப்பது போன்ற தேஜஸ்வி, சத்யவாதியான தர்மாத்மா, சமுத்திரம் போன்ற கம்பீரம் உடையவன், வாசலில் நிற்கிறான். தங்களைக் காண அனுமதி வேண்டி நிற்கிறான். இவ்வாறு சொன்ன சுமந்திரனைப் பார்த்து, தசரத ராஜா, களங்கமில்லாத ஆகாசம் போன்றவர், பதில் சொன்னார்.

சுமந்திரா, அழைத்து வா. என் மனைவிகளையும், என் பக்கம் உள்ள மற்றவர்களையும் அழைத்து வா. என் மனைவிமார் சூழ்ந்திருக்க ராமனை பார்க்க விரும்புகிறேன். சுமந்திரர் அந்த:புரம் சென்று, பெண்களிடம் மகாராஜா உங்களை அழைக்கிறார் விரைந்து வாருங்கள் என்று சொல்லி முடிக்குமுன் அந்த ஸ்த்ரீகள், அரசனின் கட்டளை என்பதால், விரைந்து அரச மாளிகையை அடைந்தனர். எழுனூரில் பாதியான, முன்னூற்று ஐம்பது பத்னிகளும், கௌசல்யையை சூழ்ந்து கொண்டு சென்றார்கள். மனைவிகள் வந்து விட்டார்கள் என்பதை நிமிர்ந்து பார்த்து விட்டு, சுமந்திரரைப் பார்த்து சுமந்திரா, என் மகனை அழைத்து வா என்றார். அந்த சாரதி, ராமனையும், லக்ஷ்மணனையும், சீதையையும் அழைத்துக் கொண்டு வந்து அரசனின் சமீபத்தில் விட்டான். தொலைவிலிருந்தே கை கூப்பியபடி வரும் தன் மகனைப் பார்த்து அரசன், துக்கம் தாங்காமல் ஆசனத்திலிருந்து விழுந்தான். அவனை சூழ்ந்து ஸ்த்ரீ ஜனங்கள் இருந்தனர். ராமனைக் கண்டதும் அவனை நோக்கி வேகமாக ஓடி வந்தான். அவனை நெருங்கும் முன்பே கீழே விழுந்தான்.  துக்கம் தாளாமல் மூர்ச்சையானான். ராமனும் லக்ஷ்மணனும் வேகமாக வந்து அரசனை தாங்கிக் கொண்டனர்.  துக்கத்தாலும், சோகத்தாலும், அரசன் நினைவு இழந்ததைக் கண்டு ஆயிரக் கணக்கான ஸ்த்ரீ 

ஜனங்களின் கூக்குரல் ஏக காலத்தில் எழுந்தது. அரண்மனை இந்த ஓலத்தால் நிறைந்தது. ஹா, ஹா, ராமா, என்று கூடவே எழுந்த ஆரவாரத்துக்கிடையில் ராமனும் லக்ஷ்மணனுமாக சீதையின் உதவியோடு ராஜாவை படுக்கையில் கிடத்தினர். ஒரு முஹுர்த்த நேரத்திற்கு பிறகு நினைவு திரும்பி எழுந்த அரசனிடம்,  சோகமோ, மோகமோ தன்னை எந்த விதத்திலும் பாதிக்காத மன நிலையை வெளிப்படுத்தும் விதமாக,  தெளிவான குரலில் கை கூப்பியவராக சொன்னார். மகாராஜா, விடை பெற்றுக் கொள்கிறேன். எங்கள் அனைவருக்கும் நீங்கள் தான் தலைவர். தண்டகாரண்யம் செல்ல தயாராகி விட்ட எங்களை சௌக்யமாக இருந்து நல்ல முறையில் பாருங்கள். லக்ஷ்மணனுக்கும் அனுமதி கொடுங்கள். சீதையும் என்னுடன் வருகிறாள். இவர்கள் இருவரையும் பல காரணங்கள் சொல்லி நான் தடுத்தும் இவர்கள் கேட்கவில்லை. தங்களை சமாளித்துக் கொண்டு எங்கள் மூவரையும் குசலமாக போய் வர அனுமதியுங்கள். ப்ரஜாபதி, தன் ஆத்மஜர்கள் எனப்படும் குழந்தைகளை அனுப்பியது போல, லக்ஷ்மணன், நான், சீதை எங்கள் மூவருக்கும் விடை கொடுங்கள். வனவாசத்திற்குத் தயாராக கிளம்பி நிற்கும் மகனைப் பார்த்து ராஜா சொன்னார் ராகவா,  கைகேயிக்கு கொடுத்த வரத்தால் நான் கட்டுப் பட்டேன். என்னை ஒடுக்கி விட்டு, நீயே அயோத்யா அரசனாக இரு. இதைக் கேட்டு ராமர், சொல்லின் செல்வர், தர்மமே தன் உயிராக மதிப்பவர், வணக்கத்தோடு பதில் சொன்னார். நீங்கள் இன்னும் பல வருஷங்கள்  பூபதியாக இருந்து அரசாளுங்கள். நான் காட்டில் வசிக்கிறேன். உங்களை பொய்யனாக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. ஒன்பதும் ஐந்துமாக வருஷங்கள் காட்டில் வசித்த பின், பிரதிக்ஞையை முடித்துக் கொண்டு, அரசனே உங்கள் காலடியில் இருப்பேன். அழுது அரற்றிக் கொண்டு, சத்ய பாசத்தால் கட்டுப் பட்டவனாக, கைகேயியின் தூண்டுதலின் பேரில் வனம் செல்ல பணித்து விட்டு, இப்பொழுது ராஜா சொல்வார் -ஸ்ரேயஸ் பெற வாழ்த்துகிறேன். (ஸ்ரேயஸ்-மேன் மேலும் புகழ் அடைதல்) க்ஷேமமாக திரும்பி வர வாழ்த்துகிறேன். போய் வா , மகனே, சத்ருக்களை வென்று,  போகும் பாதையில்  பயமோ இடையூறோ இன்றி போய் வா. உன்னை தடுத்து நிறுத்த எனக்கு சக்தியில்லை. நீ சத்யாத்மா. குழந்தாய், உன் மனம் தர்மத்தில் தோய்ந்தது. ரகு நந்தனா, என் புத்தியில் உன்னைத் தடுக்க சக்தியில்லை. இன்று இரவு, மகனே போகாதே. ஒரு நாள் நான் உன்னை பார்த்தே நன்மையடைவேன். தாயாரையும், என்னையும் பார்த்துக் கொண்டு இந்த இரவு இங்கேயே இரு. உன் இஷ்டங்களை பூர்த்தி செய்து கொண்டு, விடியற்காலையில் புறப்படுவாய். ராகவா, நீ செய்வது மிகவும்  கடினமான காரியம். எனக்கு பிரியமானது என்று எண்ணி, நான் சொன்னதன் பொருட்டு, இஷ்ட ஜனங்களை விட்டு வனம் செல்கிறாய். இது எனக்கு இஷ்டம் இல்லை ராமா. சத்யமாக சொல்கிறேன். ராகவா, மறைந்து நிற்கும் அக்னி போல பெண்ணினால் விஷமமாக ஏமாற்றப் பட்டேன். எனக்கு செய்யப் பட்ட இந்த வஞ்சனையை நீ ஏற்று, என்னைக் காப்பாற்ற முயலுகிறாய். வாழ்வை குலைக்க வந்த இந்த கைகேயியினால் தூண்டப் பட்டேன். என்னுடைய மூத்த மகனாக இருந்து நீ இப்பொழுது, என்னை வாக்குத் தவறாமல் காப்பாற்றுவதற்காக செய்வதும் ஆச்சர்யமில்லை. – தந்தையின் இந்த தீனமான வார்த்தைகளைக் கேட்டு, லக்ஷ்மணனை அருகில் வைத்துக் கொண்டு,  ராமன் -இன்று வரை இல்லாதது நாளை என்ன புதிதாக வந்துவிடப் போகிறது, இன்றே கிளம்புவது தான் எல்லாவிதத்திலும் நல்லது. நான் துறந்த இந்த பூமியை ராஷ்டிரத்தோடும், ஜனங்களுடனும், தன தான்யம் நிறைந்ததுமாக பரதனுக்கு கொடுங்கள். வனம் செல்லத் துணிந்த என் மனம் இனி மாறாது.  கைகேயியிக்கு நீங்கள் மகிழ்ச்சியோடு, திருப்தியாக கொடுத்த வரங்களை முழுவதுமாக கொடுங்கள். வாக்குத் தவறாதவர் என்ற உங்கள் பெயர் நிலைத்திருக்கட்டும். உங்கள் கட்டளையை, நீங்கள் சொன்ன விதமாகவே பாலனம் செய்து பதினான்கு வருஷங்கள், காட்டில் காட்டு ஜனங்களோடும், மிருகங்களுடனும் கழிக்கிறேன்.  இன்னும் விமரிசித்துப் பேசிக்கொண்டு இருப்பானேன். பரதனுக்கு ராஜ்யத்தைக் கொடுங்கள். எப்பொழுதும் நான் ராஜ்யத்தை விரும்பியதில்லை. தன் சுகத்தையும் பெரிதாக நினைத்ததில்லை.  உங்கள் கட்டளையை நிறைவேற்றுவதே எனக்கு விருப்பம். அதனால் துக்கத்தை விடுங்கள்.- கண்களில் நீர் நிரம்பியவராகவே இருக்க வேண்டாம். நதிகளின் அரசனான சமுத்திரம், எப்பொழுதும் என்ன தான் வந்தாலும், கடக்க முடியாததாகவே இருக்கும். வற்றிச் சுருங்காது.  எனக்கு ராஜ்யத்தில் விருப்பமில்லை. சுகத்திலும் ஈ.டுபாடு இல்லை. இங்கு இருக்கும் எல்லா காமங்களிலும் விருப்பம் இல்லை. சுவர்கம் கூட, ஏன் உயிர் வாழ்வதையுமே நான் பெரிதாக மதிக்கவில்லை. உங்களை வாக்குத் தவறாத சத்யவானாக பார்க்க விரும்புகிறேன். உங்களை யாரும் பொய்யன் என்று சொல்லி விடக் கூடாது. ப்ரத்யக்ஷமாக உள்ள உங்கள் நற்செயல்களாலும், சத்யத்தாலும் சபதமிடுகிறேன். இங்கு இனி ஒரு க்ஷணம் கூட என்னால் இருக்க முடியாது. ப்ரபோ, நீங்களும் வருந்த வேண்டாம். எனக்கும் எந்த வித ஏமாற்றமும் இல்லை. கைகேயி என்னிடம் வனம் போ என்று வேண்டினாள். நானும் போகிறேன் என்று சொன்னேன். அதை, அந்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.  தேவா, இதை எண்ணி மனம் கலங்க வேண்டாம். நாங்கள் காட்டில் சந்தோஷமாக இருப்போம். அமைதியான மான்கள் சூழ்ந்திருக்க, பலவிதமான  பக்ஷிகள் பாட, நாங்கள் மகிழ்ச்சியாகவே இருப்போம். தேவதைகள் ஆனாலும் தந்தை தெய்வமாக மதிக்கத் தகுந்தவர். அதனால் தெய்வ வாக்காகவே மதித்து தந்தை சொல்லை ஏற்றுக் கொள்கிறேன். இந்த தாபத்தை விடுங்கள். பதினான்கு வருஷங்கள் கழிந்தபின் திரும்பி வந்த என்னை காண்பீர்கள்.  கண்ணீர் விடும் இந்த ஜனங்களை அடக்கி சமாதானம் செய்ய வேண்டிய நீங்களே ஏன் இவ்வளவு வருந்துகிறீர்கள். இந்த ஊர், ராஜ்யம், பூமி எல்லாவற்றையும் பரதனுக்கு கொடுங்கள். நான் உங்கள் கட்டளையை ஏற்று வனம் செல்கிறேன். நீண்ட நாட்கள் வனத்தில் இருக்க கிளம்புகிறேன். நான் துறந்து செல்லும் இந்த பூமியை, மலை பிரதேசங்களையும், காடுகளையும், சுபமான எல்லை வரை பரதனுக்கு சாஸனம் செய்து கொடுங்கள். நீங்கள் சொன்னபடியே நடக்கட்டும். பார்த்திபனே, என் மனம் சற்றும் சஞ்சலமாகவில்லை. மிகப் பெரிய போக போக்யங்களில் எனக்கு ஈ.டுபாடும் இல்லை. எனக்கு பிரியமானதிலும் இப்பொழுது பற்று சற்றும் இல்லை. சிஷ்டர்கள் என்று சொல்லப்படும் குணவான்கள் சம்மதிக்கும் வகையில் நான் தங்கள் கட்டளையை ஏற்று, நடக்கிறேன். என் பொருட்டு கவலையை விடுங்கள். உங்களை வாக்கு தவறச் செய்து இந்த ராஜ்யமோ, மற்ற போகங்களோ, சீதையோ, என் உயிரோ, எதுவானாலும் என்னிடம் வைத்துக் கொள்ள நான் விரும்ப மாட்டேன்.  உங்களைப் போலவே நானும்  சத்யத்தை பெரிதாக மதிக்கிறவன். கிடைத்த பழம், கிழங்குகளை உண்டு, மலைகளைப் பார்த்துக் கொண்டு, நதிகளையும், அருவிகளையும் கண்டு களித்தவாறு வனத்தில் நாங்கள் நாட்களை கழிப்போம். இதுவரை காணாத அபூர்வமான மரங்களை சீதாவுக்கு காட்டுவேன். நீங்கள் கவலையை விடுங்கள். இவ்வாறு சோகத்தாலும், குற்ற உணர்ச்சியிலும் தடுமாறிய அரசனுக்கு ஆறுதல் சொல்லியும், மகனை கட்டியனைத்தவர், வேறு எதையும் உணரவில்லை. அரசனின் மனைவி கைகேயியைத் தவிர, மற்ற அனைவரும்  அழுது அரற்றினர். எங்கும் ஹா, ஹா என்ற சப்தம் நிறைந்தது. சுமந்திரர் கூட தாங்க மாட்டாமல் நினைவு இழந்தார்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தசரத சமாஸ்வாசனம் என்ற முப்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 35  சுமந்திர கர்ஹணம். (சுமந்திரர் நிந்தித்தல்)

தசரதனுடைய ரத சாரதியும், உற்ற நண்பருமான சுமந்திரர், இந்த சூழ் நிலையின் இறுக்கத்தை தாங்க மாட்டாதவராக, கைகளை முஷ்டியால் குத்திக் கொண்டு, பல்லைக் கடித்தவாறு, கண்களின் சிவப்பில் தன் கோபம் தெரிய, பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றிருந்தவர், திடீரென்று, அரசனின் மனதை படித்தவர் போல், கைகேயி நடுங்கும்படி சரமாரியாக, கடும் சொற்களால் அவளைத் தாக்க ஆரம்பித்தார். வேகமாக வந்து விழுந்த வார்த்தை எனும் பாணங்கள், கைகேயியின் உள்ளத்தை குத்தி கிழிக்கலாயின. கைகேயி, உன்னால் கணவனே தூக்கியெறியப் பட்டான். உன் கணவன் ஏதோ சாதாரணமானவனும் அல்ல. உலக மக்களையும், ஸ்தாவர ஜங்கம எனும் சராசரங்களையும் பாலிக்கும் அரசன். இதை விட செய்யக் கூடாத விஷயம் என்று ஒன்று இருக்கவே முடியாது. பதியை நாசம் செய்தவள் நீ. குலத்தையும் நாசம் செய்தவளாக ஆகப் போகிறாய். நம் ராஜா, மகேந்திரன் போல ஜயிக்க முடியாதவராக இருந்தார். அசைக்க முடியாத மலை போல ஸ்திரமாக இருந்தார். பெரும் கடல் போல வற்றாது, குறைவற்று இருந்தார். அவரையே வாட்டி எடுத்து விட்டாய்.  உனக்கு வரம் கொடுத்த பதி என்பதற்காகவா, இவ்வளவு அவமதிப்பு செய்கிறாய்? பெண்களுக்கு கோடி புத்திரர்களை விட கணவனது இஷ்டமே உயர்ந்தது என்று சொல்வார்கள். புத்திரர்கள் வயது வந்த பின், அரசன் காலம் ஆனபின் ராஜ்யத்தை அடைவார்கள் இது தான் இக்ஷ்வாகு குல தர்மம். இதையே அழிக்க முற்பட்டு விட்டாய். பரதன் அரசனாகட்டும். உலகை ஆளட்டும். நாங்கள் எங்கு ராமன் இருக்கிறானோ, அங்கு செல்கிறோம். உன் விஷயத்தில், எந்த ப்ராம்மணனும் இங்கு வசிக்க விரும்பவில்லை.  மரியாதை அறியாத நீ, அப்படி ஒரு காரியம் செய்ய நினைக்கிறாய். உன் நடவடிக்கையால், பூமி பிளந்து போகவில்லையே என்று கூட ஆச்சர்யமாக இருக்கிறது ராமனை காட்டுக்குப் போ என்று சொன்ன நாக்கு துண்டித்து விழவில்லை. மாமரத்தை வெட்டி விட்டு, எலுமிச்சை மரத்தை நட்டானாம். அதை பால் வார்த்து வளர்த்தும் இனிப்பாக இல்லையே என்றானாம். உன் பிறவி அப்படி என்று எண்ணுகிறேன். தாயைப் போலவே இருக்கிறாய். முன்னால் நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். உன் தந்தைக்கு யாரோ உத்தமமான வரம் தந்திருந்தார்கள். எந்த ஜந்துவானாலும் அதன் பாஷையை உன் தந்தை புரிந்து கொள்வார். அதனால் குறுக்காக பறந்து செல்லும் பூச்சிகளின் பாஷையையும் அவர் புரிந்து கொண்டார். இரண்டு மின்மினி பூச்சிகளின் படுக்கையறை சம்பாஷணையைக் கேட்டு ஒரு முறை தானே சிரித்துக் கொண்டார். உன் தாயார் கோபம் கொண்டு எதற்காக சிரித்தீர்கள் என்று கேட்டாள். தந்தை சொன்னார் தேவி, இந்த ரகஸ்யத்தை உனக்கு சொன்னால், உடனே என் மரணம் சம்பவிக்கும். சந்தேகமே இல்லை. உன் தாயார், கேகயனிடம் சொன்னாள் எதுவானாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். உயிருடன் இரு, இல்லாவிட்டால் போ, என்னை பரிகஸிக்கிறாய் என்றாள். உன் தந்தை தனக்கு இந்த வரம் கொடுத்தவரிடம் சென்று நடந்ததைச் சொன்னான். வரம் அளித்த சாது சொன்னார். இந்த ரகஸ்யத்தை வெளியிட்டால் மரணம் நிச்சயம். அதனால் சொல்லாதே. என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். அவள் பிடிவாதம் பிடித்தால் பிடிக்கட்டும். கண்டு கொள்ளாதே என்று சொல்லி அனுப்பி விட்டார். உன் தந்தையும் மனம் தேறி, உன் தாயாரை அடக்கி, பல காலம் குபேரன் போல வாழ்ந்தார். அதே போல நீயும் அரசனை ஆட்டுவிக்கிறாய். உலகத்தில் ஒரு வழக்கு உண்டு. தந்தையைப் போல பிள்ளைகள், தாயைப் போல பெண்கள் என்று.  தாயின் குணம் மகளை அடைகிறது என்பது உண்மை தான். சக்ரவர்த்தி சொன்னதை அப்படியே எடுத்துக் கொள்ளாதே. கணவனின் விருப்பம் அறிந்து நட.  தேவராஜன் போல உள்ள உன் கணவன், உலகையே பாலிப்பவன், அதர்மத்தைச் செய்யும் படி தூண்டாதே. உனக்கு ப்ரதிக்ஞை செய்ததை மீற மாட்டார். தேவி, தசரத ராஜா, ஸ்ரீமான், மூத்தவர்,  அள்ளிக் கொடுக்கும் வள்ளல், தன் கடமையுணர்ந்து செயல் படுபவர். தன் தர்மத்தைக் காப்பாற்றி வருபவர். உலகை காக்கும் தகுதி உடையவர்.  நீயே சொல்லிவிடு. ராமனுக்கே முடி சூட்டி வையுங்கள் என்று .  ராமன் வனம் சென்றால், அவமானம் தான் உனக்கு மிஞ்சும்.  ராகவன் தனக்குரிய ராஜ்யத்தை அடையட்டும். நீ கவலையற்று இருக்கலாம். அவனையன்றி வேறு யாரும் இந்த ஊரில் வசிக்க முடியாது, வசிக்கக்  கூடாது. ராமனிடம் பொறுப்பை ஒப்படைத்த பின், இது வரை முன்னோர்கள் செய்து வந்தபடி தசரத ராஜா, தன் முதுமையில் வனம் செல்வார்.  இது போல, சமாதானமாகவும், கடுமையாகவும் சுமந்திரர், வினயமாக, வணங்கியபடி சொன்னார். இதை கேட்டு அந்த ராணி சிறிதளவும் அசைந்து கொடுக்கவுமில்லை. அவள் முகபாவம் சற்றும் மாறவும் இல்லை. 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சுமந்திர கர்ஹணம் என்ற முப்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 36 (113) சித்3தா4ர்த்த ப்ரதி போதனம்(சித்தார்த்தர் என்ற முனிவர் நியாயத்தைச் சொல்லுதல்)

இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த தசரத ராஜா, தன் ப்ரதிக்ஞை காரணமாக தன்னையும் மீறி நடந்தவைகளால் மிகவும் பீடிக்கப் பட்டு வருந்தினான். சாரதியான சுமந்திரனைப் பார்த்து, நாத்தழதழக்க, கண்களில் நீர் பெருக சொன்னார். சுமந்திரா, ரத்னங்கள் நிறைந்த பெட்டிகளும், நாலுவித சேனையும் ராமனைத் தொடர்ந்து செல்லும்படி செய். சீக்கிரம் ஏற்பாடு செய். பாடகர்களும், அழகிய பெண்களும், வியாபாரிகளும், பெரும் தனவந்தர்களும், குமாரனுடைய சேனையை அலங்கரிக்கட்டும். இவனிடம் ஏவல் செய்யும் வேலைக்காரர்களில் யாரையெல்லாம் வீர்யத்தால் இவனுக்கு பிடிக்குமோ, அவர்களுக்கும் நிறைய பணம் கொடுத்து இவனுடன் அனுப்பி வை. முக்யமான ஆயுதங்கள், நகரத்தார், வண்டிகள் காகுத்ஸனின் பின் செல்லட்டும். வனத்தில் வேட்டையாடுபவர்கள் அதிகமாக இருப்பார்களே. பலவிதமான மான்களை வேட்டையாடி, யானகளையும் கண்டு ரசித்தபடி, காட்டில் கிடைக்கும் தேன் முதலியவற்றை உண்டு, பலவிதமான நதிகளையும் கண்டு மகிழ்ந்து ராமன் ராஜ்யத்தை மறந்து இருக்கட்டும். ஜன நடமாட்டமில்லாத வனத்தில் ராமன் சஞ்சரிக்கப் போகிறானே, என்னுடைய தான்ய கோசமும், தன கோசமும் (கோசம்-சேமித்து வைத்திருப்பது) அவனுடன் செல்லட்டும். புண்யமான இடங்களில் யாகம் முதலியவை செய்து, நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, ரிஷிகளுடன் சம்பாஷித்தபடி, சுகமாக வனத்தில் வசிப்பான். பரதனும் நல்லவன் தான். அவன் அயோத்தியை பாலிக்கட்டும். எல்லாவிதமான சுக, சௌகர்யத்திற்கான பொருட்களும் ராமனுக்கு கிடக்கும்படி செய்யுங்கள்.  இவ்வாறு காகுத்ஸன் (தசரதன்) சொன்னவுடன் கைகேயியிக்கு பயம் வந்து விட்டது. முகம் சுருங்கியது. குரல் கரகரத்தது. அரசனைப் பார்த்து ராஜ்யத்தில் எல்லா ஜனங்களையும் அனுப்பிவிட்டு, கள்ளைக் குடித்து விட்டு வெறும் மண் பானையை விட்டுச் செல்வது போல், சூன்யமான ராஜ்யத்தை பரதன் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்றாள். வெட்கம் இன்றி கைகேயி பேசுவதைக் கேட்டு தசரதர், கடுமையாகப் பேசுபவளைப் பார்த்துச் சொன்னார். அனார்யே,  (பண்பற்றவளே) என் கழுத்தில் பாரத்தை ஏற்றி விட்டு, நான் சுமையைத் தாங்கி நிற்கும் பொழுது மேலும் ஏன் அடிக்கிறாய்? புதிதாக இன்னும் என்ன செய்ய ஆரம்பித்திருக்கிறாய்? முன்னால் விட்டுப் போயிற்றோ, சொல்ல. கோபத்துடன் அரசன் கத்தவும், கைகேயி இரண்டு பங்கு கோபத்துடன் பதிலுக்கு இரைந்தாள். உங்கள் குடும்ப வழக்கம் தான். சகரன் தன் மூத்த பிள்ளையை அடக்கினான். அசமஞ்சன் என்ற மகனைத் தண்டித்தான். அது போல இவனும் போகட்டும்.-திக்- என்று அரசன் தலையில் அடித்துக் கொண்டான். சுற்றியிருந்தோர் இந்த பேச்சினால் வெட்கித் தலை குனிந்தனர். கைகேயி எதையும் லக்ஷ்யம் செய்யவில்லை. அங்கு இருந்த சித்தார்த்தர் என்ற பெரியவர், தன்னுடைய  நன்னடத்தையால் பெரிதும் மதிக்கப் பட்டு, அரசனுக்கு உறுதுனையாக இருந்தவர், ராஜாவுக்குப் பரிந்து  கைகேயியிடம் சொன்னார்.  அசமஞ்சன் வழியில் பார்த்த சிறு குழந்தைகளை பிடித்து சரயுவில் போட்டு அவர்கள் தவிப்பதைக் கண்டு  மகிழ்ந்தான். அதைப் பார்த்து நகர் ஜனங்கள் கோபித்துக் கொண்டு அரசனிடம் முறையிட்டார்கள். அசமஞ்சன் அல்லது நாங்கள். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அரசனே என்று சொல்லவும் அரசன், எதைக் கண்டு இப்படி பயம்? என்று கேட்க, ஊர் ஜனங்கள் உன் புத்தியில்லாத மகன், எங்கள் குழந்தைகளை வைத்து விளையாடுகிறான். மூடன், எங்கள் குழந்தைகளை சரயுவில் மூழ்கடித்து, அவர்கள் கதறுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறான். பெரும் கஷ்டத்தை நாங்கள் அனுபவிக்கிறோம் என்றனர்.  பிரஜைகளின் நன்மைக்காக, அவர்களுக்கு துன்பம் செய்யும் தன் மகனைத் தியாகம் செய்தான். அவனை ஒரு வாகனத்தில் ஏற்றி, அவசரமாக, மனைவியுடனும் சில முக்கியஸ்தர்களுடனும், உயிருள்ள வரை ஊருக்குள் வரக் கூடாது என்று கட்டளையிட்டார். அவன் பிக்ஷை ஓடு ஏந்தி ஊரெல்லாம் அலைந்தான். பாப கர்மத்தை செய்த பலனை அனுபவித்தான். தார்மிகனான ராஜா, சகரன், இப்படித்தான் தன் பிள்ளையைத் தியாகம் செய்தான். ராமன் என்ன பாபம் செய்தான்? எதற்காக இந்த தண்டனை? ராகவனிடத்தில் எந்த விதமான குணக் குறைவையும் நாங்கள் காணவில்லை. இவனிடத்தில் குறை என்பதே இல்லை. முயலை அடையாளமாக கொண்ட சந்திரன் போல, தேவி, நீ ராமனிடத்தில் ஏதேனும் குறை கண்டாயா? என்ன குற்றம் செய்தான் என்று நாடு கடத்தப் படுகிறான்? துஷ்டன் அல்லாதவனை, நல் வழியில் நிற்பவனை, தியாகம் செய்வதும்  தர்மத்திற்கு விரோதமே.  இது இந்திரனுடைய தேஜஸைக் கூட அழிக்கக் கூடியது. அதனால் போதும் தேவி, ராஜ்ய லக்ஷ்மியை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டாய். சாதாரணமாக ஜனங்கள் காப்பாற்றப் படுவதைப் போலவே இவனும் பாலிக்கப் பட வேண்டியவனே. இல்லயேல் உனக்குத் தான் அவமானம்.  சித்தார்த்தர் சொன்னதைக் கேட்டு அரசர், களைத்தவனாக, குரலும் சோகத்தால் நடுங்க கைகேயியிடம் சொன்னார்.  இவர் சொல்வதும் உனக்கு ஏற்காது, கைகேயி. பாபம் செய்யத் துணிந்து விட்டாய். எனக்கோ, என் ஜனங்களுக்கோ இதமானது உனக்குப் பிடிக்காதது தான். நல்ல வழியிலிருந்து விலகிப் போகும் நீ, அந்த வழியில் செல்லும் க்ருபணர்கள்-அல்பர்கள், போலத் தானே நடந்து கொள்வாய். நான் ராமனை பின் தொடர்ந்து போகிறேன். இந்த ராஜ்யமோ, தனமோ, சுகமோ எனக்கு எதற்கு? ராஜா பரதனுடன் நீ ஏகாந்தமாக, தன்னந்தனியாக ராஜ்ய சுகத்தை அனுபவி. 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சித்3தா4ர்த ப்ரதி போதனம் என்ற முப்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 37 (114)  சீர பரிக்ரஹ நிமித்த வசிஷ்ட கோப:(மரவுரியை அணிந்து கொள்ள வற்புத்தவும், வசிஷ்டர் கோபித்தல்)

மந்திரியும், சாரதியுமான சுமந்திரர் வார்த்தையையும், பின் தொடர்ந்த சம்பாஷனைகளையும் கேட்டு ராமர் தசரதரிடம் வினயமாக சொன்னார். தந்தையே, போகத்தை விட்ட எனக்கு, வனத்தில் காட்டு ஜனங்கள், மிருகங்களோடு வசிக்கத் துணிந்து விட்ட எனக்கு, உற்றார், சுற்றாரைத் துறந்து செல்லும் எனக்கு, இந்த பொருட்களால் என்ன லாபம்? யானையைக் கொடுத்து விட்டு அங்குசத்திற்கு போராடுபவன் போல இருக்கிறது நீங்கள் சொல்வது. உத்தமமான யானையே கை விட்டுப் போன பின் அந்த கயிற்றில் அவ்வளவு மோகமா? நல்லவர்களுள் ஸ்ரேஷ்டனே, எனக்கு கொடியேந்தி வரும் நால் வகை சேனையால் என்ன பயன்? எனக்கு வேண்டியதை நான் தெரிந்து கொள்கிறேன். இப்பொழுது மரவுரி கொண்டு வந்து தந்தால் போதும். மண்ணை தோண்டும் கரண்டியும், கூடையும் இரண்டாக கொண்டு வந்து தாருங்கள். பதினான்கு வருஷம் காட்டில் வசிக்க இவை வேண்டும். அந்த கூட்டத்தில், லஜ்ஜையின்றி, கைகேயி தானே மரவுரியைக் கொண்டு வந்து தந்து, இதை உடுத்திக் கொள் என்றாள். தன் உயர்ந்த வஸ்திரங்களை களைந்து விட்டு ராகவன் மரவுரியைத் தரித்தான், ரிஷி ஜனங்களைப் போல். ராமன் அணிந்தது போலவே லக்ஷ்மணனும் மரவுரியை அணிந்து கொண்டான். பட்டு ஆடை உடுத்தியிருந்த சீதை, பெண் மான் வலையில் அகப்பட்டுக் கொண்டது போல கண்களில் பயம் தெரிய விழித்தாள்.  கைகேயி கொடுத்த மரவுரியை கைகளில் ஏந்தியபடி, கண்களை நீர் மறைக்க, கந்தர்வ ராஜன் போன்று இருந்த தன் பதியை நோக்கினாள். அதை திருப்பி திருப்பி பார்த்து, முனி பத்னிகள், எப்படித்தான் இதை ஆடையாக அணிகிறார்களோ, என்றாள். ஒரு மரவுரியை கழுத்தில் வைத்துக் கொண்டு மறு நுனியை எப்படி, என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாட, அவளுக்கே வெட்கமாகி விட்டது. இதையறிந்த ராமர் வேகமாக அவள் அருகில் வந்து, பட்டாடையின் மேலேயே, தானே மரவுரியை அணிவித்தார். ராமனின் இந்த செய்கையைக் கண்டு அந்த:புரத்து ஜனங்கள் கண்களில் கண்ணீர் பெருகியது. தன் தேக காந்தியால் கம்பீரமாக நின்ற ராமனிடம், குழந்தாய், இவளுக்கு வனவாசம் ஏற்றதில்லை. நீதான் பித்ரு வாக்ய பரிபாலனம் என்ற காரணம் காட்டி வனம் போகிறாய். எங்களுக்கு ஆறுதலாக இவள் இங்கேயே இருக்கட்டும் என்றனர். மகனே, லக்ஷ்மணன் உனக்குத் துணையாக வருவான். அவனுடன் வனம் செல்வாயாக. தாபஸ ஸ்த்ரீ போல காட்டில் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு இந்த சிறு பெண்ணை தவிக்க விடாதே. நாங்கள் யாசிப்பதைக் கொடு புத்ரா, சீதை இங்கேயே இருக்கட்டும். தர்மம் என்று நீ தான் இருக்க ஒப்ப மாட்டாய் என்றனர். ஸ்த்ரீகளின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே , தசரதன் மைந்தன், தன் மனைவிக்கும் தன்னைப் போலவே மரவுரியை அணிவித்து விட்டான். சீதையும் மரவுரி தரித்ததைக் கண்டு குல குருவான வசிஷ்டர் கைகேயியைத் தடுத்து, கோபத்துடன் சொன்னார். அதிக பிரசங்கியே, புத்தியில்லாதவளே, கைகேயி, குலத்தைக் கெடுக்க வந்தாயா? அரசனை ஏமாற்றி விட்டு நீ மட்டும் என்னவாக வாழப் போகிறாய்? சீலம் இழந்தவளே, சீதை வனம் போகத் தேவையில்லை. ராமனை தொடர்ந்து சீதை போவதாகச் சொல்வது இயற்கையே. அவள் பிறப்புக்கு அது தான் அழகு. மனைவி தன் ஆத்மா போன்றவள். ராமனுக்கு சீதை தன் ஆத்மா போல என்பதால் அவளை விட்டுப் பிரிந்து இவனும், ராமனை விட்டுப் பிரிந்து சீதையும் இருக்க மாட்டார்கள். நாமும் பின் தொடர்ந்து செல்வோம். இந்த நகரமே உடன் வரட்டும். வாயில் காப்பவர்களும், குடும்பத்தோடு வரட்டும்.  இந்த நகரம், ராஷ்டிரமும், சபையோரும், ராமனுடன் உடன் வசிப்போம். அவ்வளவு ஏன்? பரதனும், சத்ருக்னனும் நமக்கு முன்னால் மரவுரி தரித்து, மூத்தவனான ராமனைத் தொடர்ந்து வனம் செல்வது நிச்சயம். பிறகு சூன்யமான இந்த நகரை,  மரங்களோடு மரமாக நின்று  நீயே அனுபவிப்பாய். கைகேயீ, பிரஜைகளின் விருப்பத்துக்கு மாறாக நீ சொல்வதை அவர்கள் ஏன் கேட்க வேண்டும்? எங்கு ராமன் பூபதியாக இல்லயோ, அந்த இடம் ராஜ்யமாகவே இருக்கப் போவதில்லை. ஆனால் ராமர் இருக்கும் இடமான வனம் ராஷ்டிரமாக ஆகி விடும். தந்தை விரும்பிக் கொடுக்காத அரசை பரதன் தான் ஆளுவானா? அதுவும் சந்தேகமே.  சக்ரவர்த்திக்கு உன்னிடம் பிறந்த புதல்வன் ஆனாலும், நீ பூமிக்கும் ஆகாயத்துக்குமாக குதித்தாலும், பித்ரு வம்சத்தின் சரித்திரத்தை அறிந்தவன், வேறு விதமாக எதுவும் செய்ய மாட்டான். புத்திரனே வெறுக்கும்படி, ஒரு காரியம் செய்திருக்கிறாய். இந்த உலகத்திலேயே ராமனைத் தொடர்ந்து போகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. கைகேயி இன்றே நீ பார்க்க போகிறாய். பசுக்களும், யானைகளும், மான்களும், பறவைகளும் ராமன் போகும் பொழுது கூடவே கிளம்பிச் செல்வதைக் காணப் போகிறாய். நகர முடியாமல் மரங்கள் அந்த திசையை நோக்கி நிற்பதைக் காண்பாய். அதனால் நல்ல ஆபரணங்களை மருமகளாகிய சீதைக்கு கொடு. இந்த மரவுரி வேண்டாம். இந்தப் பெண்ணுக்கு மரவுரியைத் தருவது சற்றும் பொருந்தாது என்று வசிஷ்டர் தடுத்தார். கேகய ராஜ புத்ரி, ஒரு ராமனை வனம் போகச் சொன்னாய். நல்ல ஆபரணங்கள் பூண்டவளாக இவள் அரண்யத்தில் ராமனுடன் வசிக்கட்டும். இவளும் ராஜ புத்ரியே. அதனால் வாகனங்களும், பரிசாரகர்களும், சூழ்ந்து வர இவள் செல்லட்டும். உனக்கு வரம் கொடுக்கப்பட்ட போது இந்த விஷயம் சொல்லப் படவில்லை. அதனால் எல்லா வஸ்திரங்களையும் இவள் எடுத்துச் செல்வதில் தடையேதுமில்லை. ப்ராம்மணோத்தமரான வசிஷ்டர், அரசரின் பெருமைக்கும் மதிப்புக்கும் சற்றும் குறையாத மதிப்பும் மரியாதையும் பெற்றவர், இவ்வாறு சொன்னபோது, சீதையின் முக பாவத்தில் ஏதும் மாற்றமில்லை. அவள் கணவனின் முகக் குறிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சீர பரிக்ரஹ நிமித்த வசிஷ்ட கோபம் என்ற முப்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம்  38(115)  ஜனாக்ரோசம்  (ஜனங்களின் ஆவேசம்)

இவ்வளவு பேர் அவளைத் தாங்க இருக்கும்பொழுது, அனாதை போல சீதை மரவுரியை அணிய வேண்டி வந்துள்ளதே என்று ஜனங்கள் பலவிதமாக ஆவேசம் அடைந்தனர். தசரத ராஜாவை, -தி4க்- -தி4க்- என்று சிலர் திட்டினர். இவர்களுடைய இந்த செய்கையால், அரசன் இன்னும் அதிகமாக கலக்கமடைந்தான். தர்மத்திலோ, புகழிலோ, தான் உயிர் வாழ்வதிலும் கூட சிரத்தையை இழந்தான். இக்ஷ்வாகு வம்சத்து ராஜா, தன் மனைவி கைகேயியைப் பார்த்து, உஷ்ணமாக பெருமூச்சு விட்டபடி சொன்னான். கைகேயி, குசம் என்ற புல்லால் ஆன இந்த ஆடையுடன் சீதை வனம் போக வேண்டாம். சுகுமாரி, இதுவரை சுக, போகங்களிலேயே வளர்ந்த குழந்தை. என் குரு சொன்னது போல இவள் வனவாசத்திற்கு ஏற்றவள் அல்லள். என் குரு நாதர் சொன்னது மிகவும் சரியானதே. ராஜாதி ராஜன் மகள், தபஸ்வினியாக வனம் செல்ல யாருக்கு என்ன அபராதம் செய்தாள்? இவளை மரவுரி தரித்து, ஜனங்கள் மத்தியில் சன்யாசினி போல நிற்க வைத்து விட்டாயே. இது நான் கொடுத்த வாக்கில் இல்லை. நான் அது போல பிரதிக்ஞை செய்யவும் இல்லை. மரவுரியைத் தவிர்த்து,  நல்ல ஆடைகளை ஜனக நந்தினிக்கு கொடு. அவள் ஆடையாபரணங்களுடன் சௌக்யமாக வனம் செல்லட்டும். நான் வாழவே தகுதியற்றவன். இப்படி ஒரு அபத்தமான பிரதிக்ஞையை முறைப் படி வேறு செய்திருக்கிறேனே. உனக்கு குழந்தை பருவத்திலேயே இது கை வந்த கலை. அதனால் தான் மூங்கில் தன் புஷ்பங்களையே எரிப்பது போல  என்னை வதைக்கிறாய். ராமன் உனக்கு என்ன குற்றம் செய்தான்? அவனிடம் உனக்கு விரோதம் என்றாலும், வைதேஹி என்ன செய்தாள்? பெண் மான் போன்ற அலையும் கண்களையுடையவள், ம்ருதுவான சுபாவம் உள்ளவள், சாது, உனக்கு என்ன அபகாரம் செய்தாள்? கைகேயி, அவள் ஜனக ராஜாவின் மகள். நினைவிருக்கட்டும். பாபியே, ராமனை வனத்துக்கு அனுப்புகிறாயே, அது போதாதா? ஏன் இன்னும் அல்பமாக நீ செய்த பாதகங்கள் போதாது என்பது போல மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே போகிறாய். நீ சொல்வதைக் கேட்டு, நான் பிரதிக்ஞை செய்தது, இன்று தனக்கு யுவராஜா அபிஷேகம் என்று வந்த ராமனிடம் சொன்னாயே, அதுவரை தான். அதற்கு மேல் வற்புறுத்தாதே. மைதிலியையும் மரவுரி தரித்தவளாக காண விரும்புகிறாயே,  என்று இவ்வாறு ராஜா புலம்பி, தன் சோகத்துக்கு வடிகால் கிடைக்காமல் திணறினார். இதே புத்ர சோகத்தால் பீடிக்கப் பட்டவராக, கஷ்டம் தாளாமல் கீழே விழுந்தார். இவ்வாறு தந்தையைக் கண்ட ராமன், வன வாசத்திற்குத் தயாராக கிளம்பியவன், வாய் பேச முடியாமல் அமர்ந்திருக்கும் தந்தையிடம் சொன்னான். தந்தையே, இதோ என் தாய் கௌசல்யா இருக்கிறாள். புகழ் வாய்ந்த ஸ்த்ரீ ரத்னம் இவள். வயது முதிர்ந்த நிலையிலும், சிறிதும் தன் கடமைகளில் குறை வைத்தவள் அல்ல. இன்னிலையிலும் அவள் உங்களைக் குற்றம் சொல்லவில்லை.  நானும் விட்டுச் சென்ற பின், சோக சாகரத்தில் மூழ்கி கிடப்பாள்.  புத்ர சோகம் இவளை அரித்து எடுக்காமல், நீங்கள் இவளை நல்ல முறையில், பாதுகாத்து  மரியாதையுடன் காப்பாற்ற வேண்டியவர் ஆவீர்.  என்னையே நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவள் இப்பொழுது உங்களுக்காக தபஸ்வினியாக வாழ வேண்டும். தந்தையே,  நான் வனம் சென்றபின், புத்திரனை விட்டு பிரிந்து வாழும் என் தாயை, நான் காட்டில் திரியும் பொழுது அதே வருத்தத்தில் யமலோகம் சென்று விடாதபடி பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ஜனாக்ரோசோ என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம்  39 (116) வனாகமனாப்ருச்சா (வனம் செல்ல விடை பெறுதல்)

முனி வேஷத்தில் இருந்த ராமனின் வார்த்தைகளைக் கேட்டு, மனைவிகள் சூழ இருந்த அரசன் கலங்கினான். ராகவனை நிமிர்ந்து பார்க்கவும் முடியாதவனாக தவித்தான். நேருக்கு நேர் பார்த்து பதில் சொல்ல முடியாதபடி  மனம் வருந்தினான். ஒரு முஹுர்த்த நேரம் நினைவே இல்லாதவனாக துக்கத்துடன் அழுதான். ராமனையே மனதில் வைத்துக் கொண்டு, பலவிதமாக சிந்தித்தான். நிச்சயம், எதோ ஒரு சமயம் நான் பல பேரை பிரித்திருக்கிறேன். அதன் பலன் தான் இப்பொழுது அனுபவிக்கிறேன். பிராணிகளை வதைத்தேனோ, அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறேன். இந்த கைகேயியிடம் அவஸ்தைப் படுவதை விட நான் ம்ருத்யுவை வரவேற்கிறேன். என் எதிரில் நெருப்பு உருவம் கொண்டது போல நிற்கிறாளே,  நல்ல உயர்ந்த வஸ்திரங்களைக் களைந்து என் மகன் முனிவர்கள் போல கரடு முரடான மரவுரியைத் தரிக்கச் செய்து விட்டாளே, இவ்வளவு பேர் இந்த ஒரு கைகேயி காரணமாக வருந்துகிறார்கள். சுய நலமே பெரிதாக நினைக்கும் இவளிடம் சேர்ந்து நான் இந்த பெரிய தவறை செய்து விட்டேனே என்று சொன்ன அரசன், கண்களில் நீர் நிறைந்து பார்வையை மறைக்க, ராமா என்று ஒரு முறை அழைத்தான். பின் எதுவும் பேச சக்தியற்றவனாக ஆனான்.  ஒரு முஹுர்த்த நேரத்தில் நினைவு திரும்பி, சுமந்திரனைப் பார்த்துக் கண்கள் இன்னமும் நிரம்பியிருக்க, சுமந்திரா, பட்டத்து யானை பூட்டிய ரதத்தையும், உயர் ஜாதி, குதிரைகளையும் கொண்டு வந்து இவனை ஜனபதங்களைத் தாண்டி விட்டு விட்டு வா. இதுதான் நல்ல குணமுடைய குணவான்களுக்கு கிடைக்கும் பலன் போலும். தாயும் தந்தையுமே, இப்படி ஒரு குணவானான புத்திரனை காட்டுக்கு அனுப்புகிறார்களே, என்றான். ராஜாவின் கட்டளைப் படி, சுமந்திரன் சீக்கிரம் சென்று அலங்கரிக்கப் பட்ட குதிரைகளுடன் கூடிய ரதத்தைக் கொண்டு வந்தான். பொன்னால் வேயப் பட்டிருந்த அந்த ரதத்தை சாரதி ராஜ குமாரனுக்காக கொண்டு வந்து வணங்கி நின்றவனாக, குதிரைகள் பூட்டிய ரதம் தயாராகி விட்டது என்றான். தசரதன் உடனே, பொக்கிஷ விஷயங்களை கவனித்துக் கொண்டிருந்த தனாதிகாரியை அழைத்து, ஆடை ஆபரணங்களும், உயர்ந்த அணிகலன்களும், இவ்வளவு வருஷங்கள் வரும்படியாக  வைதேஹிக்காக சீக்கிரம் கொண்டு வா, என்று உத்தரவிட்டார். உடனே அவரும், பொக்கிஷ அறைக்குச் சென்று அவர் சொன்னபடியே, தேவையானவற்றைக் கொண்டு வந்து சீதைக்கு கொடுத்தார். நல்ல குலத்தில் பிறந்த அவள், மங்களமான அந்த ஆபரணங்களை தன் உடலில் அணிந்து கொண்டாள். அந்த விசித்திரமான அணிகலன்களை பூண்டு அந்த இடத்தையே பிரகாசமாக்கியது போல விளங்கினாள். சூரியன் உதிக்கும் பொழுது ஆகாயம் அதன் பிரபையால் அழகுறுவது போல இருந்தது. இதன் பின் சீதை தன் மாமனாரின் பாதங்க ளி ல் வணங்கி எழுந்தாள். அவளை அணைத்து, உச்சி முகர்ந்து ஆசிர்வதித்து மாமனாரான தசரதர் சொல்லுவார். உலகில் ஒரு வழக்கு உண்டு. பெண்கள் கணவன் நல்ல நிலைமையில் இருக்கும் வரை பிரியமாக இருந்து விட்டு, அவனுடைய கஷ்ட காலத்தில் அவனுக்கு உறு துனையாக இருக்க மாட்டார்கள் என்பதாக. அது அசத்யம். உண்மையல்ல என்று இப்பொழுது நான் உணருகிறேன். இது பெண்களின் சுபாவம் என்று சொல்வார்கள். கணவனிடம் சுகத்தை அனுபவித்து விட்டு, அல்பமான ஒரு ஆபத்து என்றவுடன், துக்கப் படுவார்கள். விலகி போய் விடுவார்கள். பொய்யே சீலமாக ஹ்ருதயம் இல்லாத கடின சித்தர்களாகவே பெண்கள் வர்ணிக்கப் படுகிறார்கள். யுவதிகள் க்ஷண சித்தர்கள். குலமோ, வித்தையோ, கொடுத்தையோ, சேர்த்து வைக்கப் பட்டதையோ பெண்ணின் மனதை மகிழ்விக்கப் போதுமானதல்ல. ஒரு சமயம், போல மற்றொரு சமயம் இருக்க மாட்டார்கள். சாத்4வீ எனும் நல்ல குணமுடைய பெண்களானால், தன் குலப் பெருமையை நிலை நாட்டும் விதமாக, சத்யத்திலும், தர்மத்திலும் ஈ.டுபாடு கொண்ட  ஸ்த்ரீகளுக்கு கணவனே விசேஷமாக பூஜிக்கத் தகுந்தவன் ஆகிறான். அதனால் நீ, நாட்டை விட்டுத் துரத்தப் பட்ட என் மகனை அவமதித்து விடாதே. செல்வந்தனோ, செல்வத்தை இழந்தவனோ, கணவன் என்பதால் இவன் தான் உனக்கு தேவதைகளுக்கு சமமானவன். இந்த வார்த்தைகளின் பொருள் உணர்ந்து சீதை மாமனாரின் எதிரில் நின்று வணங்கியவளாக பதில் சொன்னாள். பெரியவரான தாங்கள் சொன்னபடி எல்லாவற்றையும் செய்கிறேன். கட்டளையாக ஏற்றுக் கொள்கிறேன். கணவனை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் அறிவேன். பலர் சொல்லியும் கேட்டு இருக்கிறேன். அசத்தான சிலருடன் என்னையும் சேர்த்து எண்ணாதீர்கள். தர்மத்தை விட்டு நான் விலக மாட்டேன். சந்திரனிடமிருந்து ஒளி  விலகாதது போல. தந்திகள் இல்லாத வீணையை வாசிக்க இயலாது. சக்கரம் இல்லாத ரதம் தெருவில் ஓட முடியாது. அது போல நூறு குழந்தைகள் இருந்தாலும் பதியில்லாமல் பெண் சுகத்தை அடைய மாட்டாள். தந்தை தருவது ஓரளவு என்றால், தாய் தருவதும் ஓரளவே. மகனிடமும் ஓரளவே எதிர் பார்க்கலாம். அளவில்லாமல் தருபவன் கணவன் மட்டுமே. அவனை ஏன் பூஜிக்கக் கூடாது?  நல்ல கேள்வி ஞானமும், தர்மத்தை அறிந்தவளும், உயர் குலத்தில் பிறந்தவளுமான சீதை பெரியவரே, பெண்களுக்கு கணவன் தான் தெய்வம், இதில் ஏன் சந்தேகப் படுகிறீர்கள் என்றாள். அவள் வார்த்தை மனத்தை தொட, மகிழ்ச்சியடைந்த கௌசல்யா,  துக்கமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு அவஸ்தையில் கண்களில் நீர் பெருக நின்றாள். மற்ற  பெண்கள் மத்தியிலும் பெரு மதிப்பு பெற்றிருந்த அவளை காலில் விழுந்து வணங்கி ராமரும் சொன்னார். தாயே, அதிகமாக வருந்தாதே, வருத்திக் கொள்ளாதே. உன் துக்கத்தில் என் தந்தையை மறந்து விடாதே. வனவாசம் சீக்கிரமே முடிந்து விடும். நீ தூங்கி எழுந்திருப்பதற்குள், ஒன்பது வருஷங்களும் ஐந்துமாக வருஷங்களை ஓட்டி விட்டு, என் சுற்றார், உற்றார் சூழ, உன்னை வந்து பார்ப்பேன்.   ஜனனியான தன் தாயாரிடம் இவ்வாறு வணங்கி விடை பெற்றபின், முன்னூற்று ஐம்பது பேரிடமும், தாயார் ஸ்தானத்தில் இருந்தவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டார். அவர்களும் வருத்தத்துடன் நின்றிருக்க, ராமர் சொன்னார். – கூடவே இருந்த உரிமையாலும், தெரியாமலும் ஏதாவது சொல்லியிருந்தாலும், பொருட்படுத்தாமல் எனக்கு விடை கொடுங்கள் – ராகவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஏக காலத்தில் எல்லோருமாக ஏதோ சொல்ல க்ரௌஞ்ச பக்ஷிகள், ஏக காலத்தில் கூக்குரல் இட்டது போல இருந்தது. மனிதர்களுக்கு இந்திரன் போன்ற தலைவனான தசரத ராஜாவின் மனைவிகள், ராமனுக்கு ஆசிர்வாதம் செய்ய, முன்பு தசரத ராஜாவின் பவனம் எப்படி பணவம், முரசம் போன்ற வாத்யங்கள் முழங்க கோலாகலமாக இருந்ததோ, அந்த ராஜ பவனம் அழுது அரற்றும் பரிதாபமான ஓலங்கள் நிறைந்து துக்கத்தில் மூழ்கியதாக காட்சியளித்தது.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் வன கமனாப்ருச்சா என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 40(117) பௌராத்யனுவ்ரஜ்யா (ஊர் ஜனங்கள் உடன் வருதல்)

பிறகு ராமனும் லக்ஷ்மணனும், சீதையும் தசரத ராஜாவை வலம் வந்து வணங்கி, விடை பெற்றுக் கொண்டு ராம மாதாவிடம் வந்தனர். லக்ஷ்மணனும் கௌசல்யையை வணங்கி விட்டு சுமித்திரையிடம் வந்தான். வணங்கிய மகனை தூக்கி அணைத்து, உச்சி முகர்ந்து, கண்கள் குளமாக இருந்தாலும், மகனின் நன்மையை உத்தேசித்து தன்னை அடக்கிக் கொண்டு, அவனுக்கு ஒரு செய்தி சொன்னாள். –மகனே, நீ வனவாசத்திற்கு என்றே பிறந்தவன். சகோதரனுடன் போகும் பொழுது ராமனிடத்தில் தவறு எதுவும் செய்து விடாதே. உனக்கு சுற்றாரும், உற்றாரும் அவனே. கஷ்டத்தில் இருந்தாலும், சுக போகத்தில் திளைத்தாலும், ராமன் தான் உனக்கு கதி. இது உலகில் நல்லவர்களின் தர்மம். முன் பிறந்தோனை குருவாக எண்ணி, அவனுக்கு அடங்கி இருப்பது இந்த குலத்திற்கே உரிய பெருமை.  மிகப் பழமையான இந்த தர்மத்தை நீ கடை பிடிப்பதும் உசிதமே.  தானம், யாகங்களில் தீக்ஷை எடுத்துக் கொள்வது, போரில் உயிர் விடுவது இவை தான் நம் குல தர்மம். – பிரியமான ராகவன் கிளம்பத் தயாராக இருந்ததைக் கண்டு சுமித்ரா மகனை துரிதப் படுத்தினாள். – மகனே போய் வா. ராமனை தசரதனாக நினை. என்னை ஜனகாத்மஜாவான சீதையாக நினைத்துக் கொள். வனத்தையே அயோத்தியாக நினைப்பாய். சௌக்யமாக போய் வா, மகனே – என்று விடை கொடுத்தாள். இந்திரனுக்கு சாரதியாக மாதலி அமைந்தது போல, தசரத ராஜாவுக்கு சாரதியான சுமந்திரன் வினயமாக, ராமனிடம் வந்து, புகழ் வாய்ந்த ராஜ குமாரா, ரதத்தில் ஏறுவாய்.  நீ சொல்லும் இடத்தில் உன்னை சீக்கிரம்  கொண்டு சேர்க்கிறேன்.  என்றான். பதினான்கு வருஷங்கள் நீ காட்டில் வசித்தாக வேண்டும். அவைகளை வரிசைப் படுத்தி வைத்துக் கொள். தேவியினால் கட்டளையிடப் பட்டு இருக்கிறாய்.  சூரியனுடைய பிரகாசத்துக்கு இணையாக இருந்த அந்த ரதத்தில் மகிழ்ச்சியுடன் சீதை ஏறி அமர்ந்தாள். மாமனார் கொடுத்த ஆடை ஆபரணங்களை அணிந்து கணவனைப் பின் தொடர்ந்து செல்லும் மருமளுக்கு வனவாச காலத்தில் போதுமான அளவு இருக்கும்படி நிறைய கொடுத்திருந்தார். அதே போல ஆயுதங்களையும், சகோதரர்களுக்கு கவசங்களையும், ரதத்தின் மேல் வைத்து, தங்கத்தால் கவசமிடப் பட்டிருந்த அக்னி போல ஜ்வலித்துக் கொண்டிருந்த ரதத்தில் சகோதரர்கள் இருவரும் விரைவாகத் துள்ளி  குதித்து ஏறி அமர்ந்தனர். சீதையுடன் மூவரும் அமர்ந்த பின், திரும்பி பார்த்து சுமந்திரர், தயாராக இருந்த குதிரைகளை வாயு வேகத்தில் செல்லக் கூடியவைகளை  செலுத்தலானார்.  மகாரண்யம் கிளம்பி விட்ட ராமனைக் கண்டு நகரமே மயக்கத்தில் ஆழ்ந்தது.  மதம் பிடித்த யானையின் பிளிறல்களுக்கு சமமாக ஜனங்களின் கூக்குரலும் சேர்ந்து கொள்ள, குதிரைகளின் கனைப்பும் சேர்ந்து ஊரில் பெரும் ஓசை எழுந்தது. வெய்யிலில் வாடியவன் நீரைக் கண்டு ஓடுவது போல ஊரில் இருந்த சிறு குழந்தை முதல் வயதான மூத்தவர்கள் வரை எல்லோரும் ராமனை பின் தொடர்ந்து ஓடினர். பக்கங்களிலும், பின்னாலும், எதிரிலுமாக கண்களில் நீர் பெருக ஓடி வந்த ஜனங்கள், பெருங்குரலில் சொன்னார்கள். சாரதியே, குதிரைகளின் கடிவாளத்தை இழுத்துப் பிடி. மெதுவாக போ. ராமனுடைய முகத்தைப்  பார்க்கிறோம். இனி எங்களுக்கு தரிசனம் கிடைப்பது மிக துர்லபமே. ராம மாதாவின் ஹ்ருதயம் நிச்சயம் இரும்பால் ஆனது. தேவன் போல் தன் கர்பத்தில் பிறந்தவனை வனம் போவது கண்டும், பிளக்கவில்லையே. வைதேஹி புண்ணியம் செய்தவள். நிழல் போல கணவனை விடாமல் தொடர்ந்து செல்கிறாள். தர்மத்தில் திளைத்தவள். மேரு மலையை சூரிய பிரகாசம் விடாதது போல, இவள் கணவனை விடாமல் தொடர்ந்து செல்கிறாள். ஆகா, லக்ஷ்மணன் பாக்கியம் செய்தவன்.  பிரியமாக பேசும் ராமனுடன் உடன் செல்கிறான். அவனுக்கு பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்றான். லக்ஷ்மணா, இது உனக்கு பெரிய சித்தி. உன் மகத்தான முன்னேற்றத்திற்கு முதல் படி. இதுவே உன்னை சுவர்கத்திற்கு அழைத்துச் செல்லும் வழி. ஏன் என்றால், நீ ராமனை அனுசரித்து கூடவே செல்கிறாய். இவ்வாறு சொன்னவர்கள், வடியும் கண்ணீரைத் தடுத்து நிறுத்த இயலாமல், தங்களுக்கு பிரியமான இக்ஷ்வாகு நந்தனன் போகும் பொழுது பின்னாலேயே சென்றனர். இங்கு, அரசன் பத்னிகள் சூழ, தீனர்களாக அவர்களும் அழுது புலம்பிக் கொண்டிருக்க, ராமனை பார்க்கிறேன் என்று அறையை விட்டு வெளியே வந்தான். பெரிய யானை கட்டப்பட்டு கிடக்கும் பொழுது, மற்ற சிறிய யானைகள் சூழ்ந்து கொண்டு பிளிருவது போல, தன் முன்னால் பெண்கள் ஓ வென்று குரல் எடுத்து அழுவதைக் கண்டான். காகுத்ஸன், ராஜாவான தசரதன், இப்பொழுது தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்தவன், ஸ்தம்பித்து நின்று விட்டான்.  காலம் வரும் பொழுது பூரண சந்திரனும் கிரஹங்களால் மூமூடப் படுவது போல, நின்றான்.  நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்த ஆத்மாவான ராமன், சுமந்திரரைப் பார்த்து சீக்கிரம் போ என்று துரிதப் படுத்தினான். சுமந்திரனை ராமன் யாஹி, யாஹி,  போ, போ என்று சொல்லவும், ஜனங்கள், திஷ்ட, திஷ்ட, நில், நில் என்று  தடுக்கவும், இரண்டையும் செய்ய முடியாதவனாக சுமந்திரர் வழியில் நின்றார். ஊர் ஜனங்கள் கண்ணீருடன் உடன் நடக்க, ராமன் செல்லும் பொழுது கீழே விழுந்தவர்கள், பூமியின் மண்ணை மறைத்தார்கள். அழுது, கண்ணீர் பெருக, ஹா, ஹா என்று ஓலமிட்டுக் கொண்டு ராகவனின் புறப்பாடு நகரத்தவர்களுக்கு பெரும் துக்கத்தைத் தருவதாக இருந்தது.  இப்படி ஊர் ஜனங்கள் வருந்துவதைக் கண்டு தசரத ராஜா வெட்டிய மரம் போல சாய்ந்தான். ராமரின் பின்னால் கல கல சப்தம் உண்டாயிற்று. மகாராஜா மிகவும் துக்கத்துடன் வருந்துவதைக் கண்டு சிலர் ராமா, என்று அலற, சிலர் ராம மாதா என்று குரல் கொடுக்க, அந்த:புரம் அல்லோல கல்லோலப் பட்டது. ராமனோ, வருத்தத்தினால் புத்தி கலங்கிய அரசனும், தாயாரும் பின் தொடர்ந்து வருவதைப் பார்த்தும்,  தாய்மார்கள் குழந்தையை கயிற்றால் கட்டி வைப்பது போல, தர்ம பாசத்தால் கட்டுண்டவன், செய்வதறியாது திகைத்தான்.  நல்ல வாகனங்களில் செல்லும் தகுதி பெற்றவர்கள், நடந்து வருகிறார்கள். பலவிதமான சுகங்களுக்கு அருகதை பெற்றவர்கள், துக்கத்தையே அறியாதவர்கள், துக்கப் படுவதை கண்டு சகிக்க மாட்டாமல் சாரதியைப் பார்த்து யாஹி, யாஹி, போ என்று கட்டளையிட்டான். கொட்டிலை நோக்கி ஓடி வரும் கன்றைப் பார்த்து வாத்சல்யம் மிகுந்த தாய் பசு கன்றை நோக்கி ஓடிவருவது போல ராம மாதா ஓடி  வந்தாள். கௌசல்யை அழுது கொண்டே, ஹா ராமா, லக்ஷ்மணா, ஹா சீதே, என்று அரற்றிக் கொண்டே ரதத்தின் பின் தொடர்ந்து ஓடி வருவதை திரும்பிப் பார்த்தான்  ராமன். ராஜா தசரதர் திஷ்ட, நில் என்று கத்தினார். யாஹி, போ, என்று ராமன் சொன்னான். சக்கரத்தின் இடையில் அகப்பட்டுக் கொண்டது போல சுமந்திரன் திணறினான். நாளைத் திட்டினாலும், எனக்கு கேட்கவில்லை என்று சொல்லிக் கொள். இந்த துக்கத்தை நீடித்துக் கொண்டே போவதும் பாபம் என்று ராமன் சுமந்திரனிடம் சொல்லவும், 

ஜனங்களிடம் சொல்லி விட்டு நடந்து கொண்டிருந்த குதிரைகளைத் தட்டிக் கொடுத்து  வேகமாக போகச் செய்தான். சில ஜனங்கள் ராமனை வலம் வந்து திரும்பி சென்றனர். மனதாலும், கண்ணிர் பெருக்காலும் அவனை பிரிந்து செல்ல முடியாதவர்கள் ஆனார்கள். திரும்பி வர வேண்டும் என்று விரும்பும் உறவினரை வெகு தூரம் அனுயாத்திரை செய்யக் கூடாது என்று மந்திரிகள் அரசனிடம் சொன்னார்கள். அவர்களுடைய ஏற்கத் தகுந்த அறிவுரையை ஏற்று, உடல் வியர்வையால் தெப்பமாக, பார்க்கவே கஷ்டமாக இருந்த வருத்தம் தோய்ந்த முகத்தினனாக, தன் மனைவி மார்களுடன் தசரத ராஜா, மகனை பார்த்தவாறே நின்று விட்டார். 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌராத்யனுவ்ரஜ்யா என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

விடாமல் தொடர்ந்து செல்கிறாள். தர்மத்தில் திளைத்தவள். மேரு மலையை சூரிய பிரகாசம் விடாதது போல, இவள் கணவனை விடாமல் தொடர்ந்து செல்கிறாள். ஆகா, லக்ஷ்மணன் பாக்கியம் செய்தவன்.  பிரியமாக பேசும் ராமனுடன் உடன் செல்கிறான். அவனுக்கு பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்றான். லக்ஷ்மணா, இது உனக்கு பெரிய சித்தி. உன் மகத்தான முன்னேற்றத்திற்கு முதல் படி. இதுவே உன்னை சுவர்கத்திற்கு அழைத்துச் செல்லும் வழி. ஏன் என்றால், நீ ராமனை அனுசரித்து கூடவே செல்கிறாய். இவ்வாறு சொன்னவர்கள், வடியும் கண்ணீரைத் தடுத்து நிறுத்த இயலாமல், தங்களுக்கு பிரியமான இக்ஷ்வாகு நந்தனன் போகும் பொழுது பின்னாலேயே சென்றனர். இங்கு, அரசன் பத்னிகள் சூழ, தீனர்களாக அவர்களும் அழுது புலம்பிக் கொண்டிருக்க, ராமனை பார்க்கிறேன் என்று அறையை விட்டு வெளியே வந்தான். பெரிய யானை கட்டப்பட்டு கிடக்கும் பொழுது, மற்ற சிறிய யானைகள் சூழ்ந்து கொண்டு பிளிருவது போல, தன் முன்னால் பெண்கள் ஓ வென்று குரல் எடுத்து அழுவதைக் கண்டான். காகுத்ஸன், ராஜாவான தசரதன், இப்பொழுது தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்தவன், ஸ்தம்பித்து நின்று விட்டான்.  காலம் வரும் பொழுது பூரண சந்திரனும் கிரஹங்களால் மூமூடப் படுவது போல, நின்றான்.  நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்த ஆத்மாவான ராமன், சுமந்திரரைப் பார்த்து சீக்கிரம் போ என்று துரிதப் படுத்தினான். சுமந்திரனை ராமன் யாஹி, யாஹி,  போ, போ என்று சொல்லவும், ஜனங்கள், திஷ்ட, திஷ்ட, நில், நில் என்று  தடுக்கவும், இரண்டையும் செய்ய முடியாதவனாக சுமந்திரர் வழியில் நின்றார். ஊர் ஜனங்கள் கண்ணீருடன் உடன் நடக்க, ராமன் செல்லும் பொழுது கீழே விழுந்தவர்கள், பூமியின் மண்ணை மறைத்தார்கள். அழுது, கண்ணீர் பெருக, ஹா, ஹா என்று ஓலமிட்டுக் கொண்டு ராகவனின் புறப்பாடு நகரத்தவர்களுக்கு பெரும் துக்கத்தைத் தருவதாக இருந்தது.  இப்படி ஊர் ஜனங்கள் வருந்துவதைக் கண்டு தசரத ராஜா வெட்டிய மரம் போல சாய்ந்தான். ராமரின் பின்னால் கல கல சப்தம் உண்டாயிற்று. மகாராஜா மிகவும் துக்கத்துடன் வருந்துவதைக் கண்டு சிலர் ராமா, என்று அலற, சிலர் ராம மாதா என்று குரல் கொடுக்க, அந்த:புரம் அல்லோல கல்லோலப் பட்டது. ராமனோ, வருத்தத்தினால் புத்தி கலங்கிய அரசனும், தாயாரும் பின் தொடர்ந்து வருவதைப் பார்த்தும்,  தாய்மார்கள் குழந்தையை கயிற்றால் கட்டி வைப்பது போல, தர்ம பாசத்தால் கட்டுண்டவன், செய்வதறியாது திகைத்தான்.  நல்ல வாகனங்களில் செல்லும் தகுதி பெற்றவர்கள், நடந்து வருகிறார்கள். பலவிதமான சுகங்களுக்கு அருகதை பெற்றவர்கள், துக்கத்தையே அறியாதவர்கள், துக்கப் படுவதை கண்டு சகிக்க மாட்டாமல் சாரதியைப் பார்த்து யாஹி, யாஹி, போ என்று கட்டளையிட்டான். கொட்டிலை நோக்கி ஓடி வரும் கன்றைப் பார்த்து வாத்சல்யம் மிகுந்த தாய் பசு கன்றை நோக்கி ஓடிவருவது போல ராம மாதா ஓடி  வந்தாள். கௌசல்யை அழுது கொண்டே, ஹா ராமா, லக்ஷ்மணா, ஹா சீதே, என்று அரற்றிக் கொண்டே ரதத்தின் பின் தொடர்ந்து ஓடி வருவதை திரும்பிப் பார்த்தான்  ராமன். ராஜா தசரதர் திஷ்ட, நில் என்று கத்தினார். யாஹி, போ, என்று ராமன் சொன்னான். சக்கரத்தின் இடையில் அகப்பட்டுக் கொண்டது போல சுமந்திரன் திணறினான். நாளைத் திட்டினாலும், எனக்கு கேட்கவில்லை என்று சொல்லிக் கொள். இந்த துக்கத்தை நீடித்துக் கொண்டே போவதும் பாபம் என்று ராமன் சுமந்திரனிடம் சொல்லவும்,

ஜனங்களிடம் சொல்லி விட்டு நடந்து கொண்டிருந்த குதிரைகளைத் தட்டிக் கொடுத்து  வேகமாக போகச் செய்தான். சில ஜனங்கள் ராமனை வலம் வந்து திரும்பி சென்றனர். மனதாலும், கண்ணிர் பெருக்காலும் அவனை பிரிந்து செல்ல முடியாதவர்கள் ஆனார்கள். திரும்பி வர வேண்டும் என்று விரும்பும் உறவினரை வெகு தூரம் அனுயாத்திரை செய்யக் கூடாது என்று மந்திரிகள் அரசனிடம் சொன்னார்கள். அவர்களுடைய ஏற்கத் தகுந்த அறிவுரையை ஏற்று, உடல் வியர்வையால் தெப்பமாக, பார்க்கவே கஷ்டமாக இருந்த வருத்தம் தோய்ந்த முகத்தினனாக, தன் மனைவி மார்களுடன் தசரத ராஜா, மகனை பார்த்தவாறே நின்று விட்டார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌராத்யனுவ்ரஜ்யா என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

ஸ்ரீமத் ராமாயணம் அயோத்யா காண்டம் 1 – 19

ஸ்ரீமத் ராமாயணம்

அயோத்யா காண்டம்

அத்தியாயம்  1 (78) ராம அபிஷேக வ்யவஸாய: (ராமனின் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள்.) 6

அத்தியாயம்  2 (79)  பரிஷத3னுமோத3னம் (சபையினர் அனுமதித்தல்) 9

அத்தியாயம்  3  (80)   புத்ரானு ஸாஸனம் (மகனுக்கு அறிவுரை) 11

அத்தியாயம்  4 (81)  மாத்ராசீ பரிக்ரஹ (தாயின் ஆசிர்வதம் பெறுதல்) 14

அத்தியாயம்  5  (82)  வ்ரத சர்யா விதானம் (விரதங்களை ஏற்று நடத்துதல்) 16

அத்தியாயம்  6  (83) பௌரோத்ஸேக|| (ஊர் ஜனங்களின் மகிழ்ச்சி) 17

அத்தியாயம்  7 மந்த2ரா பரிதே3வனம்… 19

அத்தியாயம் 8 (85)  மந்தரோபஜாப:  (மந்தரையின் தவறான அறிவுரை) 21

அத்தியாயம்  9  ராம ப்ரவாசனோபாய சிந்தா (ராமனை நாடு கடத்தும் யோசனை) 23

அத்தியாயம் 10 (87)   கைகேயி அனுனய||  (கைகேயியை சம்மதிக்கச் செய்தல்) 26

அத்தியாயம் 11 (88)   வரத்3வய நிர்ப4ந்த||(தனக்கு தந்த இரண்டு வரங்களையும் தரும்படி நிர்பந்தித்தல்) 28

அத்தியாயம் 12 (89)  கைகேயி நிவர்த்தன பிரயாஸ|| (கைகேயியை திருத்த முயற்சி) 30

அத்தியாயம் 13 (90)  தசரத விலாப  (தசரதன் புலம்புதல்) 35

அத்தியாயம் 14 (91)   கைகேயி உபாலம்ப:  (கைகேயி நிந்தனை செய்தல்) 37

அத்தியாயம் 15 (92)  சுமந்திர ப்ரேஷணம் (சுமந்திரரை அனுப்புதல்) 40

அத்தியாயம் 16 (93)  ராம ப்ரஸ்தா2னம் ( ராமர் கிளம்புதல்) 42

அத்தியாயம் 17 (94)  ராமாக3மனம் (ராமன் வருகை) 44

அத்தியாயம் 18 (95) வனவாஸ நிதேஸ: (வனம் செல்ல ஆணையிடுதல்) 45

அத்தியாயம் 19 (96) ராம ப்ரதிக்ஞை (ராமன் சத்தியம் செய்தல்) 48

அத்தியாயம்  20 (97) கௌசல்யாக்ரந்த:  (கௌசல்யை புலம்புதல்) 50

அத்தியாயம்  21 (98)  கௌசல்யா லக்ஷ்மண ப்ரதிபோ3த4ம். (கௌசல்யை, லக்ஷ்மணன் இவர்களுக்கு விளக்கிச் சொல்லுதல்) 52

அத்தியாயம்  22 (99)  தை3வ ப்ராப3ல்யம்… 55

அத்தியாயாம் 23 (100) லக்ஷ்மணக்ரோத4: (லக்ஷ்மணணின் கோபம்) 57

அத்தியாயம் 24 (101) கௌசல்யார்த்தி சமாஸ்வாசனம் (வருந்தும் கௌசல்யையை சமாதானம் செய்தல்) 59

அத்தியாயம் 25 (102) மாத்ரு ஸ்வஸ்த்யயனம் (தாயார் ஆசிர்வதித்தல்) 61

அத்தியாயம் 26  சீதா ப்ரத்யவஸ்தா2பனம்… 64

அத்தியாயம் 27 பதிவ்ரதாத்யவசாயோ (பதிவிரதம்-இதன் உயர்வு) 65

அத்தியாயம் 28 (105) வன துக்க ப்ரதி போதனம் (வனத்தின் கஷ்டங்களை எடுத்துச் சொல்லுதல்) 67

அத்தியாயம்  29 (106)  வனானுக3மன யாஞ்சா நிர்ப3ந்த4:(வனம் செல்ல தானும் வருவதாக நிர்பந்தித்தல்) 68

அத்தியாயம் 30(108) வனகமனாப்யுபபத்தி: (தொடர்ந்து வனம் செல்ல முனைதல்) 69

அத்தியாயம்  31(109)  லக்ஷ்மண வனானுகமனாக்ஞா….. 71

அத்தியாயம் 32 (109) வித்த விஸ்ரானனம் (செல்வத்தை தானம் செய்தல்) 73

அத்தியாயம் 33 (110) பௌர வாக்யம் (ஊர் ஜனங்களின் பேச்சு) 75

அத்தியாயம்  34 தசரத சமாஸ்வாதனம் (தசரதரை சமாதானம் செய்தல்) 77

அத்தியாயம் 35  சுமந்திர கர்ஹணம். (சுமந்திரர் நிந்தித்தல்) 80

அத்தியாயம் 36 (113) சித்3தா4ர்த்த ப்ரதி போதனம்(சித்தார்த்தர் என்ற முனிவர் நியாயத்தைச் சொல்லுதல்) 81

அத்தியாயம் 37 (114)  சீர பரிக்ரஹ நிமித்த வசிஷ்ட கோப:(மரவுரியை அணிந்து கொள்ள வற்புத்தவும், வசிஷ்டர் கோபித்தல்) 83

அத்தியாயம்  38(115)  ஜனாக்ரோசம்  (ஜனங்களின் ஆவேசம்) 85

அத்தியாயம்  39 (116) வனாகமனாப்ருச்சா (வனம் செல்ல விடை பெறுதல்) 86

அத்தியாயம் 40(117) பௌராத்யனுவ்ரஜ்யா (ஊர் ஜனங்கள் உடன் வருதல்) 88

அத்தியாயம் 41 (118)  நகர சம்க்ஷோப: (நகரத்தாரின் மனக் குமுறல்) 90

அத்தியாயம் 42 (119) தசரதாக்ரந்த: (தசரதன் அழுகை) 92

அத்தியாயம் 43 (120) கௌசல்யா பரிதேவனம் (கௌசல்யா வருந்துதல்) 93

அத்தியாயம் 44 (121) சுமித்ராஸ்வாசனம் (சுமித்திரை சமாதானம் செய்தல்) 94

அத்தியாயம் 45 பௌர யாசனம் (ஊர் ஜனங்களின் வேண்டு கோள்.) 96

அத்தியாயம் 46 (123) பௌர மோஹனம் (ஊர் ஜனங்களின் கவனத்தை திசை திருப்புதல்) 98

அத்தியாயம் 47 (124) பௌர நிர்வ்ருத்தி (ஊர் ஜனங்கள் திரும்புதல்) 99

அத்தியாயம் 48(125) பௌராங்கனா விலாப: (ஊர்     பெண்களின் புலம்பல்) 100

அத்தியாயம் 49 (126) ஜனபதாக்ரோச: (ஊர் ஜனங்களின் புலம்பல்) 102

அத்தியாயம் 50 (127) குஹ சங்கமம் (குகனை சந்தித்தல்) 103

அத்தியாயம் 51(128) குஹ லக்ஷ்மண ஜாக3ரணம்… 106

அத்தியாயம் 52 (129) கங்கா தரணம் (கங்கையை கடத்தல்) 107

அத்தியாயம்  53 (130) ராம சம்க்ஷோப4: (ராமனின் மன வருத்தம்) 111

அத்தியாயம்  54 பரத்3வாஜாஸ்ரம க3மனம் (பரத்வாஜரின் ஆஸ்ரமத்தை அடைதல்) 113

அத்தியாயம் 55 (132) யமுனா தரணம் (யமுனையைக் கடத்தல்) 115

அத்தியாயம்  56(133) சித்ர கூட நிவாஸ: (சித்ர கூடத்தில் வசித்தல்) 117

அத்தியாயம் 57(134) சுமந்த்ரோபாவர்த்தனம் (சுமந்திரர் திரும்பி வருதல்) 119

அத்தியாயம் 58 (135) ராம சந்தேசாக்யானம் (ராமனது செய்தியை விவரித்தல்) 120

அத்தியாயம்  59 (136) தசரத விலாப: (தசரதனின் புலம்பல்) 122

அத்தியாயம் 60(137) கௌசல்யா சமாஸ்வாசனம். 124

அத்தியாயம் 61(138) கௌசல்யோபாலம்ப: (கௌசல்யையின் புலம்பல்). 125

அத்தியாயம் 62(139) கௌசல்யா ப்ரசாதனம் (கௌசல்யையை சமாதானப் படுத்துதல்) 126

அத்தியாயம் 63(140) ரிஷி குமாரவதா4க்2யானம் (ரிஷி குமரனை கொன்ற வரலாறு) 127

அத்தியாயம் 64 (141) தசரத2 தி3ஷ்டாந்த: ( தசரத மரணம் ) 130

அத்தியாயம் 65 (142) அந்த:புராக்ரந்த: (அரசனின் மனைவி, மக்கள் வருந்துதல்) 133

அத்தியாயம் 66 (143) தைல த்3ரோண்யத்சயனம்(எண்ணெய் நிறைந்த பாத்திரத்தில் உடலை பத்திரப் படுத்துதல்) 134

அத்தியாயம் 67 (143) அராஜக து3ரவஸ்தா2 வர்ணனம் (அரசன் இல்லாமை-அதன் காரணமாக வரக்கூடிய துன்பங்கள்) 135

அத்தியாயம் 68 145) தூ3த:ப்ரேஷணம் (தூதர்களை அனுப்புதல்) 137

அத்தியாயம் 69 (146) ப4ரத து3ஸ்வப்ன: (பரதன் கண்ட கெட்ட கனவு) 138

அத்தியாயம் 70 (147) ப4ரத ப்ரஸ்தா2னம் (பரதன் புறப்படுதல்) 139

அத்தியாயம் 71 (148)  அயோத்யா கமனம் (அயோத்யா வருகை) 140

அத்தியாயம் 72 (149) பரத சந்தாப: (பரதனின் பரிதவிப்பு) 143

அத்தியாயம் 73 (150) கைகேயி விகர்ஷணம் (கைகேயியை குறை சொல்லுதல்) 145

அத்தியாயம் 74 (151) கைகேயி ஆக்ரோச: (கைகேயியின் ஆக்ரோஷம்) 146

அத்தியாயம் 75 (152) பரத சபதம் (பரதன் சூளுரைத்தல்) 148

அத்தியாயம் 76 (153) தசரத ஔர்த்3வ தே3ஹிகம் (தசரதரின் இறுதிக் கடன்கள்) 151

அத்தியாயம் 77 (155) பரத சத்ருக்ன விலாப: (பரதனும், சத்ருக்னனும் வருந்துதல்) 152

அத்தியாயம்  78 (155) குப்3ஜா விக்ஷேப: (குப்ஜையை தண்டித்தல்) 153

அத்தியாயம் 79 (156) சசிவ ப்ரார்த்த2னா ப்ரதிஷேத4:.. 154

அத்தியாயம்  80 (157) மார்க சம்ஸ்கார: (பாதை போடுதல்) 155

அத்தியாயம் 81 (158) சபா4ஸ்தாபனம் (சபையை கூட்டுதல்) 156

அத்தியாயம் 82(159) சேனா ப்ரஸ்தாபனம் (சேனையைக் கிளப்புதல்) 157

அத்தியாயம் 83 (160) ப4ரத வன ப்ரஸ்தா2னம் (பரதன் வனம் புறப்படுதல்) 159

அத்தியாயம் 84 (161) குகாக3மனம் (குகன் வருதல்) 160

அத்தியாயம் 85 (161) குஹ சமாகம: (குஹன் வந்து சந்தித்தல்) 161

அத்தியாயம் 86 (162) குக வாக்யம் (குகனின் மறுமொழி) 162

அத்தியாயம் 87 (164) ராம சயனாதி ப்ரச்ன: (ராமன் படுத்துறங்கிய இடம் முதலியவற்றை பரதன் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல்) 163

அத்தியாயம் 88 (165) சய்யானுவீக்ஷணம் (படுக்கையைக் காணுதல்) 164

அத்தியாயம்  89 (166) கங்கா தரணம் (கங்கை நதியைக் கடத்தல்) 166

அத்தியாயம் 90 (167) பரத்வாஜாஸ்ரம நிவாஸ: பரத்வாஜாஸ்ரமத்தில் வசித்தல்) 167

அத்தியாயம் 91 (168) பரத்வாஜாதித்யம் (பரத்வாஜர் செய்த விருந்து உபசாரம்) 168

அத்தியாயம் 92 (169) பரதவாஜாமந்த்ரணம் (பரத்வாஜரிடம் விடை பெறுதல்) 172

அத்தியாயம் 93 (170) சித்ரகூட வனப் ப்ரேக்ஷணம் (சித்ரக் கூட மலையைக் காணுதல்) 174

அத்தியாயம்  94 (171) சித்ரகூட வர்ணனை (சித்ரகூட மலையின் வர்ணனை) 175

அத்தியாயம் 95(172) மந்தா3கினி வர்ணனை……. 177

அத்தியாயம் 96 ( 173) லக்ஷ்மணக்ரோத4: (லக்ஷ்மணனின் கோபம்) 178

அத்தியாயம் 97 (174) பரத குண ப்ரசம்சா (பரதனின் குணத்தை மெச்சுதல்) 179

அத்தியாயம் 98 (175) ராமான்வேஷணம் (ராமனைத் தேடுதல்) 181

அத்தியாயம்  99 (176) ராம சமாக3ம: (ராமரை சந்தித்தல்) 182

அத்தியாயம்  100 (177) கச்சித் சர்க: (கேள்விகள்) 184

அத்தியாயம் 101 (178) பித்ரு தி3ஷ்டாந்த ஸ்ரவணம் (தந்தை மறைந்ததை சொல்லுதல்) 188

அத்தியாயம்  102 (179) நிவாப தானம் (நீர்க் கடன் செய்தல்) 189

அத்தியாயம் 103 (180) மாத்ரு தரிசனம் (தாய்மார்களை சந்தித்தல்) 191

அத்தியாயம் 104 (181) ராம ப4ரத சம்வாத3: (ராம, பரத, சம்பாஷனைகள்) 192

அத்தியாயம்  105 (182)  ராம வாக்யம்… 194

அத்தியாயம் 106 (183) பரத வசனம் (பரதனின் பதில்) 196

அத்தியாயம் 107 (184) ராம ப்ரதி வசனம் (ராமனின்  பதில்) 198

அத்தியாயம் 108 (185) ஜாபா3லி வாக்யம் (ஜாபாலி என்ற முனிவர் பேசுதல்) 199

அத்தியாயம் 109 (186) சத்ய ப்ரசம்ஸா (சத்யத்தின் உயர்வு ) 200

அத்தியாயம் 110 (187) இக்ஷ்வாகு வம்ச கீர்த்தனம் (இக்ஷ்வாகு வம்சத்தைப் பற்றி சொல்லுதல்) 202

அத்தியாயம் 111(188) ப4ரதானுசாஸனம் (பரதன் வாதம்) 204

அத்தியாயம் 112 (189) பாது3கா ப்ரதா3னம் (பாதுகையைத் தருதல்) 205

அத்தியாயம் 113 (190) பாது3கா க்3ரஹணம் (பாதுகையை ஏற்றுக் கொள்ளுதல்) 207

அத்தியாயம் 114 (191) அயோத்யா ப்ரவேச: (அயோத்தியில் நுழைதல்) 208

அத்தியாயம் 115 (192) நந்தி3க்3ராம வாச: (நந்திகிராமத்தில் வசித்தல்) 210

அத்தியாயம் 116 (193) க2ர விப்ரகரண கத2னம்  (க2ர என்ற அரக்கனின் தொல்லைப் பற்றி சொல்லுதல்) 211

அத்தியாயம் 117 (194) சீதா பாதிவ்ரத்ய ப்ரசம்ஸா…… 212

அத்தியாயம் 118 (195) தி3வ்யாலங்கார க்3ரஹணம் (உயர்ந்த ஆபரணங்களை பெற்றுக் கொள்ளுதல்) 214

அத்தியாயம் 119 (196) தண்டகாரணய பிரவேச:  (தண்ட காரண்யத்தில் நுழைதல்) 216

ஸ்ரீமத் ராமாயணத்தில் அயோத்யா காண்டம் நிறைவுற்றது. 217

அத்தியாயம்  1 (78) ராம அபிஷேக வ்யவஸாய: (ராமனின் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள்.)

 

மாமன் வீட்டிற்கு புறப்பட்ட பரதன், நித்ய சத்ருக்4னன் (எப்பொழுதும் சத்ருக்களை அழிப்பவன்) ஆக விளங்கிய தன் சகோதரன் சத்ருக்னனையும் உடன் அழைத்துச் சென்றான்.  மிகுந்த மரியாதையுடனும், உபசாரங்களுடன் அரச குமாரன் அங்கு வசித்து வந்தான். அஸ்வபதி என்ற பெயருடைய அவன் மாமனால் மிகுந்த புத்திர வாஞ்சையுடன்  கொண்டாடப்பட்டாலும், தன் இஷ்டம் போல இருக்க முடிந்தாலும்,  வயதான தந்தையை அடிக்கடி நினைத்துக் கொள்வான்.  அதே போல தசரத ராஜாவும், அருகில் இல்லாத இந்த பிள்ளைகள் இருவரையும் அடிக்கடி நினைவு கூர்ந்தார். இந்த இருவரும் மகேந்திரனுக்கும், வருணனுக்கும் இணையானவர்கள் என்று சொல்லி மகிழ்வார்.  என் சரீரத்திலிருந்து  வெளிப்பட்ட நான்கு கைகள் போன்றவர்கள் என் நான்கு பிள்ளைகளும் என்று சொல்வார்.  ஆயினும் ராமன் ஒரு படி உயர்ந்து நின்றான். உலகத்து ஜீவராசிகளுக்கு ப்ரும்மா போல, சிறந்த குணவானான ராமன், நல்ல தேஜஸ்வியாகவும், மனதை கவரும் இனிய இயல்பாலும் அதிக பிரியமானவன் ஆனான்.  ராவணனுடைய வதத்தை விரும்பிய தேவர்கள் வேண்டிக் கொண்டபடி, சனாதனனான விஷ்ணு அல்லவா மனித உருவில் அவதரித்திருக்கிறான்?  இந்த மகனைப் பெற்றதால் கௌசல்யை போற்றப் பெற்றாள். இந்திரனைப் பெற்ற அதிதி எப்படி சிறந்த மகனைப் பெற்றவள் என்று பெருமையடைந்தாளோ, அதே போல பெருமை கௌசல்யையும் பெற்றாள்.   ராமனோ, வீர்யமும் நல்ல ரூபமும் இருந்தும் அசூயை இல்லாதவன். தசரதனுக்கு சமமான குணங்கள் உடையவன். அரசகுமாரன். பூமியில் உவமை என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவு குணமுள்ளவன்.  எப்பொழுதும் சாந்தமாக இருப்பான். ம்ருதுவாக பேசுவான். முதலில் பேசுபவன். கடினமாக யாராவது அவனிடம் பேச முயன்றாலும் பதில் சொல்ல மாட்டான். ஏதோ விதத்தில் செய்த சிறிதளவு உபகாரத்தையும் திருப்தியுடன் நினைவில் வைத்துக் கொள்பவன். ஆத்மவான், அதாவது பெருந்தன்மையும் தன்னம்பிக்கையும் ஒரு சேர படைத்தவன். மற்றவர்கள் தனக்கு செய்த அபகாரங்கள் நூற்றுக் கணக்கில் இருந்தாலும் மறந்து விடுவான்.  ஒழுக்கத்தில் சிறந்த பெரியவர்கள், சிறந்த அறிஞர்கள், வயதில் மூத்தவர்கள், நல்ல குணவான்கள், இவர்களிடம்,  அஸ்த்ர யோக விஷயங்களைப் பற்றியோ, மற்ற விஷயங்களையோ பேசிக் கொண்டிருப்பான்.  புத்திமான். இனிமையாக பேசுபவன்.  முதலில் பேசுபவன். ப்ரியமாக பேசுபவன்.  வீர்யவான். தன்னுடைய மகத்தான வீர்யத்தில் தானே ஆச்சர்யம் அடையாதவன்.  பொய் பேசவே மாட்டான். வித்வான், வயதானவர்களை மதித்து நடப்பவன்.  ப்ரஜைகளிடம் சுபாவமாகவே அன்பும், ஈ.டுபாடும் உடையவன்.  ப்ரஜைகளை சந்தோஷமாக வைத்துக் கொள்வதும் தன் கடமை என்று நினைப்பவன். கருணை உடையவன், கோபத்தை ஜயித்தவன். ப்ராம்மணர்களைப் பூஜிப்பவன். தீனர்களிடம் இரக்கம் உள்ளவன். தர்மம் அறிந்தவன். எப்பொழுதும் தன்னடக்கம் உடையவன்.  சுத்தமாக இருப்பவன். தன் குலத்திற்கேற்ற கொள்கையுடையவன்.  தன்னுடைய க்ஷத்திரிய தர்மத்தை வெகுவாக மதிப்பவன்.  தன் தர்மத்தை அனுஷ்டிப்பதால் உண்டான கீர்த்தியாலும், இந்த கீர்த்தியே ஸ்வர்கம் என்று எண்ணுபவன்.  ஸ்ரேயஸ் இல்லாத, நன்மை இல்லாத காரியங்களில் இவனுக்கு நாட்டமே கிடையாது. அனாவசியமான பயனற்ற விஷயங்களைப் பேசுவதில் ருசி கிடையாது.  வாசஸ்பதி போல சரிக்கு சரி பதில் சொல்லும் சிறந்த பேச்சாளன்.  நோய் நொடியற்ற திட காத்திரமான சரீரம் உடைய இளைஞன். தேச காலம் அறிந்தவன். இது போன்ற குணங்களையுடைய ராஜ குமாரன்,  தன் குண விசேஷத்தால் அரசனுக்கு, வெளியே நடமாடும் தன் பிராணனே போல பிரியமானான்.

 

நல்ல விதமாக கல்வி கற்றுத் தேர்ந்தான். எல்லா அங்கங்களுடனும் வேதத்தை முழுமையாக பாராயணம் செய்தான். வில் அம்பு வித்தையில் தந்தையை விடச் சிறந்தவனானான். பரதனுக்கு முன் பிறந்தவன், கல்யாண குணங்களுக்கு  இருப்பிடம் என்று மற்றவர் சொல்லும் படி இருந்தான். நல்லவன், நேர்மை சத்யம் இந்த குணங்களுக்கு இருப்பிடம் என்றும்,  நல்ல நினைவாற்றலும், ப்ரதிபா எனப்படும் பெருந்தன்மையுடையவன் என்றும் பெயர் பெற்றான். முதியவர்களளடம் வினயமாகவும், கல்வி கற்ற பிராம்மணர்களளடம் மரியாதையாகவும் நடந்து கொண்டான்.  அவர்களளடம் தர்மார்த்த காமங்களை விவாதித்து தெரிந்துகொண்டான். லௌகிகத்திலும் தேர்ந்தவன். சமயம் போல நடந்து கொண்டான்.  சரஸ்வதி கடாக்ஷம் பூர்ணமாக அவனுக்கு கிடைத்திருந்தது.

 

நெடிதுயர்ந்த ஆக்ருதி (உடலமைப்பு) மரியாதையை தோற்றுவித்தது. மந்திரிகளிடம் ரகஸியமாக விஷயம் தெரிந்து கொள்ள உதவியாளர்களை நியமித்து வைத்திருந்தான். மோகம், க்ரோதம், ஹர்ஷம் (சந்தோஷம்) த்யாகம், சங்க்ரஹம் (அடக்குதல்) இந்த குணங்களை சமயத்தில் வெளிப்படுத்தவும், அடக்கவும் அறிந்திருந்தான். ஸ்திரப்ரக்ஞன் –  திடமான அறிவு உடையவன். தன் கொள்கைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டான்.  தவறான வார்த்தைகளே இவன் வாயிலிருந்து வராது. புகழ் மொழிகள் இவன் தலைக்கு ஏறுவதில்லை. தன்னுடையதும், பிறருடையதுமான குறை  நிறைகளை துல்லியமாக உணர்ந்தவன்.  சாஸ்திர ஞானம் உள்ளவன், செய் நன்றி மறவாதவன்.  மனிதர்களை எடை போடுவதில் வல்லவன். கண்டிப்பதிலும்,  அனுக்ரஹம் செய்வதிலும் நியாயப் படி நடப்பவன்.  சத்யத்தைக் கடை பிடிப்பதிலும், நல்லவர்களை ஏற்றுக்  கொள்வதிலும், விடுவதிலும், இடம்,  பொருள் அறிந்தவன். தண்டிப்பதிலும் அதே போல கண்டிப்பாக இருப்பவன். வருவாய்த் துறையில் உபாயங்களை உணர்ந்தவன்.  செலவினங்களை உணர்ந்து செய்பவன். சாஸ்திர சமூகங்களில் மேன்மையான ஸ்தானம் வகிப்பவன். பலவிதமான, வித்தியாசமான நீதி முறைகளையும் தெரிந்து வைத்திருப்பவன். சோம்பல் அற்றவன். அர்த்த தர்மங்களை கடை பிடித்து சுகமாக இருப்பவன்.  பொருளாதார கொள்கைகளை அறிந்தவர்களிடம்  சீராக பதவிகளை பிரித்துக் கொடுத்து,  தகுதி அறிந்து பதவிகளை கொடுத்து, தன் மேற் பார்வையில் வைத்துக் கொண்டான். குதிரைகள் யானைகள் இவை மேல் ஏறி சவாரி செய்யவும் , அவற்றை அடக்கவும் கற்றவன்.  அதனால் அதி ரதன் என்ற பெயருக்கும் தகுதியானவனே. தனுர் வேத முறைகளை கற்றுத் தேர்ந்து, தானே முன்னின்று சேனையை நடத்தி செல்லக் கூடியவன். அணி வகுத்து படைகளை போருக்கு ஆயத்தமாக்கவும் அறிந்திருந்தான்.  சுரர்களோ, அசுரர்களோ, அல்லது சேர்ந்தோ வந்து தாக்கினால் கூட யுத்தத்தில் அசைக்க முடியாத பலம் உள்ளவன். அசூயை இல்லாதவன். கோபத்தை வென்றவன், கர்வமோ,  தற்பெருமையோ அண்ட முடியாதவன். எந்த ஒரு ஜீவ ராசியையும் அவமதிக்க மாட்டான்.  எந்த கொள்கையுமின்றி  காலத்தின் போக்கில் போவது  இவனிடம் கிடையாது. பிரஜைகளின் அன்புக்கு இந்த அரச குமாரன் பாத்திரமானது இந்த குணங்களால் தான் எனலாம்.  பூமா தேவிக்கு இணையான இவனுடைய பொறுமை மூன்று உலகிலும் பேசப் பட்டது. புத்தியில்  ப்ருஹஸ்பதி போலவும், வீரத்தில் இந்திரன் போலவும் இருந்த இவனை தந்தை மிகவும் விரும்பியதில்  வியப்பில்லை.  ஜனங்களை கவர்ந்திழுக்கும் உயர்ந்த குணங்களையுடைய ராமன், சுயமாகவே கிரணங்களுடன் பிரகாசிக்கும்  சூரியன் போலவே விளங்கினான்.  நன்னடத்தையும்,  பராக்ரமமும் இணைந்து விளங்கும் ராஜ குமாரனை லோக பாலன் எனப்படும் அளவு, தனக்கு நாதனாக வேண்டும் என்று பூமியும் விரும்பினாள்.  ஒப்புவமை இல்லாத தன் மகனைக் கண்டு தசரத ராஜா, சிந்தனை வயப்பட்டார். வயதான அந்த அரசரின் மனதில் ஒரு குதூகலமான எண்ணம் தோன்றியது.  அன்பின் காரணமாக, தான் உயிருடன் இருக்கும் பொழுதே, இவனை அரசனாக்கிப் பார்க்க வேண்டும், அது முடியுமா என்று ஆசை மனதில் தோன்றியது. இவனை நினைக்கும் பொழுதே என் மனதில் பாசம் பொங்குகிறது. அரசு முடி தரித்தவனாக காண ஆசைப் பட்டதில் வியப்பில்லை.  எல்லா உயிர்களிடமும் கருணை உடையவன். மேன் மேலும் அபிவிருத்தி செய்வதில் கருத்து உடையவன். என்னை விட பிரஜைகளுக்கு பிரியமானவன். கனத்த மேகங்கள் போல உலகத்தாருக்கு நன்மைகளை பொழிபவன். வீர்யத்தில்  யமனையும் (தர்ம ராஜாவையும்) இந்திரனையும்  ஒத்தவன். நல்ல புத்தி கூர்மையில், ப்ருகஸ்பதிக்கு சமமானவன். த்ருதி என்று சொல்லப்படும் அசையாத கொள்கையுடையவன். இதில் அசையாத மலை போன்றவன். (மஹீதரன் – மலை)   என்னை விட பலவிதத்திலும் மேன்மை பொருந்தியவன். இந்த பூமியை முழுவதுமாக என் மகன் அடைந்து ஆளுவதை, இந்த வயதான காலத்தில் கண் குளிரக் கண்ட பின்னரே ஸ்வர்கம் செல்ல வேண்டும். இது போன்ற பல எண்ணங்கள் அரசன் மனதில் தோன்றின. காரணம், மற்ற அரசர்களிடம் காண முடியாத, அளவில்லாத சிறந்த குணங்களுடைய மகனைக் காணும் தோறும்,  வலுப் பெற்ற இந்த எண்ணத்தை, தன் மந்திரிகளிடமும், தகுதி படைத்த பெரியவர்களிடமும்,  சுபமான வாழ்த்துக்களைக் கூறும் தன் நலம்  விரும்பிகளான ஊர் மக்களிடமும் சொல்லி, அவர்கள் அனுமதியும் பெற்றான். ராமனை யுவராஜாவாக நியமிப்பது என்று தசரத ராஜா முடிவெடுத்தார். இதற்கிடையில்  தன் சரீரத்தில் நரையைக் கண்டார். மேதாவியான அரசன், ஆகாயத்திலும், அந்தரிக்ஷத்திலும், பூமியிலும் பயங்கரமான உத்பாதங்களை விளைவிக்கக்கூடிய சகுனங்களையும்  கண்டார். தன் துக்கத்தை நீக்கக் கூடிய பூர்ண சந்திரன் போன்ற ராமன், ஜனங்களுக்கும் பிரியமானவனாக இருந்ததையும் அறிந்தார். தனக்கும், பிரஜைகளுக்கும் ஸ்ரேயஸைத் தரக் கூடியதும், பிரியத்தினாலும்,  இது தான்  தக்க காலம் என்று உணர்ந்து, வேகமாக செயல் பட்டார்   முக்கியமான பூபதிகள் (அரசர்கள்), சிறிய ஜனபத தலைவர்கள், ஊர் பிரமுகர்கள் இவர்களை வரவழைத்தார். அவர்களுக்கு தகுதியான வெகுமதிகள் கொடுத்து கௌரவித்தார். ஜனங்கள் தாங்களும் நன்றாக அலங்கரித்துக் கொண்டு இந்த நடவடிக்கைகளில் பங்கு கொண்டார்கள். இந்த அவசரத்தில்,  கேகய ராஜாவையும், ஜனக ராஜாவையும் அழைக்கவில்லை, பின்னால் பிரியமான செய்தி கேட்டு மகிழ்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்.  எதிரிகளை அடக்கும் வல்லமை வாய்ந்த தங்கள் அரசன் முடி சூட்டி அமர்ந்திருந்த சபையில் மற்ற அரசர்கள் நுழைந்தார்கள். தசரத ராஜா சொல்லப் போவதை எதிர் பார்த்து காத்திருந்தனர்.  சுற்றிலும் இருந்த ஜனபதங்களிலிருந்தும், சிற்றுர்களிலிருந்தும் வந்து சேர்ந்த ஜனங்களும் , அழைக்கப்பட்ட அரசர்களும் சூழ, தசரத ராஜா அமர்ந்திருந்த காட்சி, மற்ற அமரர்களின் நடுவில் தலைவனாக சஹஸ்ராக்ஷன் அமர்ந்திருப்பதை ஒத்திருந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தின், ராமாபிஷேக வ்யவஸாய|| என்ற முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்)   

 

அத்தியாயம்  2 (79)  பரிஷத3னுமோத3னம் (சபையினர் அனுமதித்தல்)

 

பூமியின் நாயகனான தசரத ராஜா, சபையினரை வரவேற்று, இதமாக, தெளிவான வார்த்தைகளால், தான் எடுத்த முடிவையும், அதை நியாயப் படுத்தும் விதமாகவும் பேசினார்.  தனது கனத்த கம்பீரமான குரலில், இனிய நாத அலைகள் எதிரொலிக்க, மேகத்தின் ஒலிக்கு சமமான ஸ்வரத்தில் பேசினார். அரச லக்ஷணங்கள் நிரம்பிய அவரது குரலும், பேச்சும் அவையினரை கவர்ந்திழுத்தது.  நான் சொல்லப் போகும் விஷயம் நீங்கள் யாவரும் அறிந்ததே. ஒரு மகனைப் போல அன்புடன் என் முன்னோர்கள் இந்த ராஜ்யத்தை பரி பாலித்து வந்தார்கள். நானும் அதே வழியில் உத்தமமான முறையில் ராஜ்ய பாலனம் செய்து வந்துள்ளேன்.  என் முன்னோர்கள் போலவே, நாட்டின் நன்மையே முதல் கடமையாக எண்ணி நடந்து வந்துள்ளேன். விழிப்புடன் இருந்து மேலும் மேலும் ஸ்ரேயஸை பெறும் வகையில் இந்த நாட்டை ஆண்டு வந்தேன். வெண் குடையின் கீழ் பல வருஷங்களாக வசித்து, இதே சிந்தனையில் நரை கண்டது.  சரீரமும் வலுவிழந்தது. களைத்த இந்த உடலுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறேன்.  இந்த ராஜ்ய பாரத்தைத் தாங்க இந்திரியங்களை அடக்காதவர்களால் முடியாது.  தர்மமே, கனத்த த்வஜமாக தோளில் தங்கியிருந்தது.  அந்த ராஜ்ய பாரத்தை இறக்கி வைக்க விரும்புகிறேன். பிரஜைகளின் நன்மைக்காக ராமனை ராஜ்யத்தில் ஸ்தாபனம் செய்து விட்டு நான் ஓய்வு பெறுகிறேன். இங்கு கூடியுள்ள அனைவரையும் வேண்டிக் கொண்டு பிராம்மண ஸ்ரேஷ்டர்களையும்  பிரார்த்திக்கிறேன். என் வாரிசுகளில் மூத்தவனான என் மகன் ராமன், என் போலவே உத்தம குணங்களை உடையவன். இந்திரனுக்கு சமமான வீர்யம் உடையவன்.  எதிரிகளை நாசம் செய்யக் கூடியவன்.  புஷ்ய நக்ஷத்திரத்தில் சந்திரன் போல சிறந்த தர்ம புத்தியுடன் கூடியவன்.  இவனை மகிழ்ச்சியுடன் யுவ ராஜாவாக நியமிக்கிறேன்.  லக்ஷ்மணனுக்கு முன் பிறந்த இவன் லக்ஷ்மி கடாக்ஷம் மிக்கவன். அரசனாக இருக்கத் தகுதி உடையவன். மூவுலகும்  இவனால் நாயகனை பெற்றதாக மகிழ்ச்சியடையும். மங்களகரமான இந்த பூமியை ஆளும் பொறுப்பில் இவனை நியமித்து விடுவதால், என் மன பாரம் நீங்கியவனாக நான் நிம்மதியடைவேன். நான் நன்கு யோசித்து தான் இந்த முடிவை எடுத்தேன். நீங்களும் உங்கள் கருத்துக்களைச்  சொல்லுங்கள்.  மாறுபட்ட கருத்துக்களையும் சொல்லுங்கள்.  இது என் முடிவு என்றாலும் மற்ற கருத்துக்களையும் நாம் ஆராய்வோம். ஏனெனில் எதுவுமே விவரமாக அலசி விவாதிப்பதில் நன்மையுண்டு என்று பேசிய அரசனைப் பார்த்து மற்ற அரசர்கள் ஆரவாரம் செய்தார்கள். மழை மேகத்தைக் கண்டு மயில்கள் ஆடுவது போல ஆடினார்கள். அந்த சபையின் ஆரவார ஒலி வானளாவ எழுந்தது. பூமியே ஆட்டம் கண்டு விடுமோ என்று ஐயம் எழச் செய்தது. அன்பும், ஆனந்தமுமாக வாழ்த்தொலிகள் எழுந்தன. தர்மார்த்தங்களை அறிந்த தங்கள் அரசன் சொன்னதை ஏற்றுக் கொண்ட எல்லோரும், உள்ளுர் பிரமுகர்கள்,  பிராம்மணர்கள், பிரஜைகள், வந்திருந்த மற்ற அரசர்கள் எல்லோரும் கலந்து ஆலோசித்து தங்கள் முடிவை அரசனுக்கு தெரிவித்தார்கள்.

 

பல ஆயிரம் வருஷங்களாக ராஜ்ய பரிபாலனம் செய்து முதிர்ந்த அரசரே| தாங்கள் சொன்னபடி ராமனை யுவராஜாவாக அபிஷேகம் செய்து வையுங்கள். ரகுவீரனான அந்த மகா பலசாலியை குடையுடன் பெரிய யானை மேல் பவனி வருவதைக் காண விரும்புகிறோம்.  இவ்வாறு ஒருமித்து சொல்லவும், அறிந்திருந்தும் அவர்கள் வாய் மொழியாக கேட்க விரும்பிய அரசன், என் சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் ராமனை அரசனாக்க விழைகிறீர்கள். அரசர்களே| நான் தர்ம வழியில் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டு வரும் பொழுதே அப்படி என் மகனை ஆவலுடன் எதிர் பார்க்க என்ன காரணம்  என்று வினவினான். புர ஜனங்களும், மற்றவர்களும் பதில் சொன்னார்கள். உன் மகனிடத்தில் பல விதமான கல்யாண குணங்கள் இருக்கின்றன. புத்திசாலியான உன் மகன் தேவர்களுக்கு சமமானவன்.  எங்களுக்கு பிடித்த அவனது குணங்களை வரிசைப் படுத்தி சொல்கிறோம். தன் குணங்களால் இவன் இந்திரனுக்கும் மேலானவன். சத்யம் தர்மம் இவற்றில் முழுமையாக நம்பிக்கையுள்ளவன். இக்ஷ்வாகு அரசர்களிலும் இவனுக்கு தனித்த இடம் உண்டு. சத்புருஷன் என்று இவனைத் தான் சொல்ல வேண்டும். செல்வமும், தர்மமும் இவனிடத்தில் தோன்றியவையே. சந்திரனைப் போல பிரஜைகளுக்கு சுகத்தைக் கொடுப்பவன். பொறுமையில் பூமிக்கு சமமானவன். புத்தியில் ப்ருஹஸ்பதிக்கு ஒப்பானவன். வீர்யத்தில் சசீபதியான இந்திரனே ஆவான்.  சத்யவாதி. ஒழுக்கத்தில் சிறந்தவன். தர்மங்கள் அனைத்தையும் அறிந்தவன். பொறாமையற்றவன். தானும் சாந்தமாக இருந்து எதிராளியையும் அமைதியாக்கக் கூடியவன்.  தன்னடக்கம் உடையவன். செய்நன்றி மறவாதவன். பெருந்தன்மையும், மென்மையான ஸ்வபாவமும் ஒரு பக்கம்  இருந்தாலும்,  திடமான கொள்கையும் உடையவன்.  பணிவும், அடக்கமும், அசூயை இல்லாத நேர்மையும், சாதாரண ஜனங்களிடம் கூட உண்மையே பேசும் தன்மையும் உடையவன். கல்வி கேள்விகளில் சிறந்த முதிய பிராம்மணர்களிடம் மரியாதையுடன் வணங்கி சேவை செய்பவன். இங்கு இவனுடைய புகழும், கீர்த்தியும் எல்லையற்று பரவியுள்ளது. தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ, யுத்தத்தில் அவன் முன் நிற்க இயலாது.  வேதத்தை அதன் அங்கங்களோடு முறைப்படி கற்றவன். வித்யாவ்ரதன் எனும் பெயருக்குரியவன் இவனே. காந்தர்வ வித்தை எனப்படும் சங்கீதமும் அறிந்தவன். பரதனுக்கு முன் பிறந்த இந்த ராமன் நண்பர்களுக்கு சாதுவானவன். அதனால் தீனன் என்று பொருளன்று.  நல்ல புத்திசாலி. நிபுணர்களான பெரியவர்களும், தர்மார்த்தங்களை விவாதிக்க கூடிய நிபுணர்களும் கூட இவனிடம் பணிவாகவே நடந்து கொள்வர். சௌமித்திரியுடன்  எந்த ஒரு நகரத்திலோ, கிராமத்திலோ கலகத்தை அடக்க என்று செல்பவன் வெற்றியடையாமல் திரும்பியதில்லை.  அப்படி வரும் பொழுது யானையில் வீற்றிருப்பவன், குடி ஜனங்களை குசலம் விசாரிக்காமல் போக மாட்டான்.  நகரத்து ஜனங்களை தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக நினைப்பவன்.  எங்களிடம் பேசும் பொழுது தந்தை மகனிடம் பேசுவது போல இருக்கும். உங்கள் குழந்தைகள், மனைவிமார்கள், அக்னி காரியங்கள், வேலை செய்யும் ஆட்கள்,  சிஷ்ய கணங்கள், உங்களைச் சார்ந்த மற்றவர்கள் என்று ஒருவர் விடாமல் விசாரிப்பான். ஜனங்களில் யாருமே கஷ்டப் பட்டால் பொறுக்க மாட்டான். மிகவும் வருந்துவான். ஊர்க் கேளிக்கைகளிலும், உத்ஸவங்களிலும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வான், சத்யமே பேசுபவன். வயதானவர்களையும் மதித்து பேசுவான். புன்னகையுடன், தானே முன்னால் பேச்சுக் கொடுப்பான். எல்லா விதத்திலும் தர்மத்தையே சார்ந்து இருப்பவன். நல்லவைகளை இணைத்து வைப்பான். நல்ல பேச்சுத் திறமையுடையவன்.  இந்த கலையில் அவன் வாசஸ்பதியே தான். அழகிய புருவமும், நீண்ட தாமரை போன்ற நயனங்களும், சாக்ஷாத் விஷ்ணு தானே வந்திறங்கியதைப் போன்ற தோற்றமும் உடையவன். இந்த ராமன் உலகுக்கெல்லாம் அபி4 ராமன். சௌர்ய, வீர்ய பராக்ரமங்களால் ஜனங்கள் மதிப்பைப் பெற்றவன்.  பிரஜைகளை பரி பாலனம் செய்வதில் ஈடுபாடு உடையவன். எந்த விதத்திலும் அதிக ஆசையோ, இந்திரியங்கள் கட்டுக் கடங்காமல் போவதோ இவனிடம் கிடையாது. மூவுலகையும் சர்வ சாதாரணமாக ஆளும் தகுதியுடையவன். இந்த பூமி எம்மாத்திரம்?  இவனுடைய கோபமோ, தயையோ காரணமின்றி வெளிப்படாது. அபராதம் செய்து தண்டனைக்குள்ளானவர்களை தண்டிப்பதில் தயக்கம் காட்ட மாட்டான். அதே போல நிரபராதிகளை கோபிக்க மாட்டான்.  தான் ஆனந்தம் அடைந்தான் என்றால், சுற்றியுள்ளவர்களுக்கு பெரும் தனம் கொடுத்து மகிழ்வான். பல பேர் அரசர்களாக, சாந்த குணம் உடையவர்களாக, தங்கள் பிரஜைகளின் அன்புக்கு பாத்திரமானவர்களாக இருக்கலாம். ஆனால்

அவர்களின் மத்தியிலும் ராமன் க்ரஹங்களுடன் பிரகாசிக்கும் சூரியன் போல் ஒளி வீசுகிறான். இவ்வளவு நல்ல குணங்களைக் கொண்ட ராமனை பூமியே தனக்கு நாயகனாக வர விரும்பினாள்.  அதிர்ஷ்டவசமாக, ராக4வா, (தசரதன்) உன் மகன் இவ்வளவு சிறப்புகளுடன் பிறந்திருக்கிறான், காஸ்யபருக்கு கிடைத்தது போல. அவனுக்கு,  பலம், ஆரோக்யம், ஆயுஷ், தனம் இவற்றை எல்லா ஜனங்களும் இந்த நகரத்திலும், புற நகர், கிராமப் பகுதிகளிலிருந்து வந்திருப்பவர்களும் ஆசிர்வதிக்கின்றனர். உள்ளும் புறமும், இவர்கள் கூடி எல்லா தேவதைகளையும் வணங்குகின்றனர். ராமனுடைய நலனை விரும்பி யாசிக்கின்றனர். அவர்கள் வேண்டுதல் உன் தயவால் நிறைவேறட்டும். இந்தீவர ஸ்யாமள வர்ணனான ராமனை, எல்லா சத்ருக்களையும் அடக்குபவனை, யுவ ராஜாவாக நாங்கள் காண வேண்டும். உன்னுடைய உத்தமமான மகன், யுவராஜாவாக வலம் வருவதைக் கண் குளிரக் காண வேண்டும். வரதனான (வரம் அருளும் சக்தி பெற்றவன்) எங்கள் நன்மைக்காகவும், உலக க்ஷேமத்திற்காகவும், தேவாதி தேவன் போன்ற உன் மகனை சந்தோஷமாக முடி சூட்டுவாய் என்றனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின்  இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தின், பரிஷத3னுமோத3னம் என்ற இரண்டாவது  அத்தியாயத்தின் தமிழாக்கம்)   

 

 

 

அத்தியாயம்  3  (80)   புத்ரானு ஸாஸனம் (மகனுக்கு அறிவுரை)

 

கூப்பிய கரங்களோடு ஏக மனதாக அனைவரும் வேண்டிக் கொள்ளவும், அரசன் அப்படியே என்று ஏற்றுக் கொண்டான். அவர்களிடம் இதமாகவும், பிரியமாகவும் பேசலானான். ஆஹா, நான் சிறந்த பாக்யவான். மிகவும் சந்தோஷம், அளவில்லாத பெருமை பெற்றேன். என் மகனை நீங்கள் அனைவரும் யுவராஜாவாகக் காண விழைகிறீர்கள் என்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. பின் பிராம்மணர்களை நோக்கி, வசிஷ்டரையும்,  வாமதேவரையும், அவர்களைச் சார்ந்த மற்ற ரிஷிகளையும் ராமனது யுவராஜா அபிஷேகத்திற்கான (முடி சூட்டுதல்) ஏற்பாடுகளை செய்யச் சொல்லுங்கள். இந்த சைத்ர மாதம், ஸ்ரீமான். லக்ஷ்மீகரமானது,  புண்யமான காலம். வனங்களில் புஷ்பங்கள் நிறைந்திருக்கும். இதை அரசர் சொல்லி முடித்தது தான் தாமதம் ஜனங்களிடம் மகிழ்ச்சி ஆரவாரம் பெருமளவு எழுந்தது. அந்த ஓசை மெதுவாக குறைந்து அடங்கியபின்,  அரசர் முனிவர் பெருமானான வசிஷ்டரிடம்f தானே பேசினார்.  முடி சூட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை நீங்களே முன்னின்று செய்யுங்கள். உங்கள் ஆணையின் படி மற்றவர்கள் ராமனின் முடி சூட்டு விழாவிற்கு தேவையான காரியங்களை ஆரம்பிக்கட்டும்.  இதைக் கேட்டு வசிஷ்டரும், அரசன் முன் பணிவாக கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்த அதிகாரிகளை அவரவர் தகுதிக் கேற்ப வேலைகளைச் செய்யப் பணித்தார். பல பொருட்களை சேகரித்து வருமாறு கட்டளையிட்டார். சுவர்ணம், (தங்கம்), ரத்னங்கள், பலிகள், பலவிதமான மருந்து பச்சிலைகள், வெண்மையான முத்து போன்ற நெல் பொரி, தனித் தனியாக தேன்,  நெய், பலவிதமான வாசனைப் பொருட்கள், ஆயுதம் நிரப்பிய ரதங்கள், நான்கு விதமான படை வீரர்கள். சுபமான லக்ஷணங்கள் கொண்ட யானைகள், வெண் சாமரங்கள், வெண் நிற குடைகள், கொடிகள், அக்னி வளர்க்க கும்பங்கள், நூறு தங்க குடங்கள், அழகிய கொம்புகளுடைய அல்லது கொம்புகளுக்கு தங்க முலாம் பூசப் பட்ட காளைகள், புலித்தோல், இவை நாளைக் காலையில் அரச சபையில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்றார். இதைத் தவிர, வேறு பொருட்கள் தேவையானாலும் கொண்டு வந்து வையுங்கள். நகரம் முழுவதும், அந்த:புர வாசல்கள்,  சந்தன மாலைகளால் அலங்கரிக்கப் படட்டும்.  த்ருஷ்டியை விலக்கும் தூபங்கள் காட்டுங்கள். நல்ல அன்னம், சுவையான தயிர், பால் முதலியவற்றுடன், அவரவர் விருப்பப்படி ஆயிரக் கணக்கான பிராம்மணர்களுக்கு விருந்து தயாராகட்டும். இந்த முக்கியமான பிராம்மணர்களை நன்கு கௌரவித்து காலையில் நெய், தயிர், பொரிகள், தக்ஷிணைகள், இவை நிறையக் கொடுங்கள்.  சூரியன் உதித்த உடனேயே நாளைக் காலை மங்கள கீதம் பாட ஆரம்பிக்க வேண்டும். பிராம்மணர்களுக்கு அழைப்பு விடுங்கள். நாளை அவர்கள் வரும் பொழுது ஆசனங்கள் தயாராக இருக்கட்டும்.  ராஜ மார்கத்தை நீர்  தெளித்து, கொடிகள் கட்டுங்கள்.  தாள வாத்யங்கள் முழங்கட்டும்.

பெண்கள் நன்கு அலங்கரித்துக் கொண்டு வீதிகளில் நடமாடட்டும். இவர்களை அரச மாளிகைகளில் அடுத்த அறைகளில் தங்கச் செய்யுங்கள். கோவில்களிலும்,

மடங்களிலும் நல்ல சாப்பாடும், தக்ஷிணையும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். நல்ல மாலைகளை விற்பவர்களை தனித் தனியாக நிற்கச் செய்யுங்கள். தீர்கமான வாளை இடையில் அணிந்துள்ள வீரர்கள், தயாராக, மகாராஜாவின் வீட்டு முன் வாயிலில் கூடட்டும். விடியற் காலையிலேயே இவைகள் சரிவர நிறைவேற்றப் படுகிறதா என்பதையும் கண்காணித்து விட்டு அரசரிடம் வந்து, தாங்கள் செய்த ஏற்பாடுகளை விவரித்தனர்.   வசிஷ்டரும் வாமதேவரும் முன் நின்று பொறுப்புடன் ஏற்பாடுகளை செய்ததைக் கண்டு அரசன் தன் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். பின், சுமந்திரனை அழைத்து, ராமனை அழைத்து வா என்று பணித்தார். சீக்கிரம் அழைத்து வா எனவே, சுமந்திரரும் ஆகட்டும் என்று சொல்லி விரைவாக ரதத்தில் சென்றார்.

ரதம் ஓட்டும் சாரதிகளில் சிறந்தவர் சுமந்திரர். தான் சென்ற ரதத்திலேயே ராமனை அழைத்து வந்தார். அப்பொழுது அங்கு இருந்த வேத வித்துக்களையும், மந்திரிகளையும் தசரத ராஜா அமரச் செய்தார்.  கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் இருந்து வந்திருந்த அரசர்கள், பூமி பாலர்கள், ம்லேச்சர் எனும் வெளி  நாட்டினர், ஆர்யர்கள், மற்றும் காடு மலை பிரதேசங்களில் தலைவர்களாக விளங்குபவர்கள், இவர்கள் அரசனைச் சூழ்ந்து அமர்ந்தனர்.  இவர்கள் மத்தியில் தசரத ராஜா வீற்றிருந்ததைக் காண, இந்திரன் மருத் கணங்கள் மத்தியில் இருந்தது போல விளங்கியது. மாளிகையில் அமர்ந்தபடியே ரதத்தில் வரும் தன் மகனைக் கண்டார். கந்தர்வ ராஜனைப் போன்ற அழகும், உலகில் பிரஸித்தி பெற்ற பௌருஷமும், தீர்கமான புஜங்களும், திடமான உடலும், மதம் பிடித்த யானை நடப்பது போல நடையழகும், சந்திர காந்தம்  போன்ற முக அழகும், ராமனை, மிகவும் பிரியமாக தோற்றம் தருபவனாகக் கண்டார்.  தன் ரூபத்தாலும், உதார குணத்தாலும், புருஷர்களின் கண்களையும், மனதையும் அபகரிப்பவனாக,  வெய்யிலில் வாடிய பயிர்கள் மழையைக் கண்டு ஆவலுடன் வரவேற்பது போல, அரசன்  வைத்த விழி வாங்காமல் ராமனைக் கண்டார். உத்தமமான அந்த ரதத்திலிருந்து சுமந்திரர் கை கொடுத்து ராமனை இறங்கச் செய்து தந்தையின் அருகில் அழைத்துச் சென்றார். கூப்பிய கரங்களுடன் வழியில் இருந்தவர்களுக்கு வணக்கம் சொல்லியபடியே ராமன் பின் தொடர்ந்தான். கைலாஸ மலை சிகரமோ எனும் படி உயர்ந்து அழகு வாய்ந்த அந்த மாளிகையின் வாசற்படிகளில் சுமந்திரருடன் ராமனும் ஏறினான்.  அரசனைக் கண்டு வணங்கி தன் பெயர் சொல்லி பாதங்களில் வணங்கினான். அவனது கூப்பிய கரங்களைப் பற்றி தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டார். பிரியமான மகனை ஆரத் தழுவிக் கொண்டார். புதிதாக கொண்டுவரப் பட்ட, அழகான மணி காஞ்சனம் இவைகளால் அலங்கரிக்கப் பட்ட வராசனத்தைக் காட்டி ராமனை அதில் அமரச் சொன்ன ராஜா தசரதன், அதில் அமர்ந்த தன் மகன் மிகவும் கம்பீரமாக, பிரகாசமாகத் தெரிவதை ரசித்தார். உதய காலத்தில் மேரு மலையை அழகுறச் செய்யும் சூரியனோ எனும் படி பிரகாசமாக இருந்த ராமனால் அந்த சபையே ஒளி கூடியது.  விமலமான கிரஹங்களையும், நக்ஷத்திரங்களையும் கொண்ட சரத் கால ஆகாயம், சரத் கால சந்திரனின் உதயத்தால், கண் கொள்ளா காட்சியாக விளங்குவது போல அந்த சபை ராமனின் வரவால் பெருமை பெற்றது. தன் மகனைக் காணக் காண அரசனின் பெருமிதம் வளர்ந்தது.  தானே நன்கு அலங்கரித்துக் கொண்டு கண்ணாடி  மாளிகையில் நிற்பது போல மகிழ்ந்தார். சிறந்த மகனைப் பெற்றதால் சிறப்புற்ற பலருள் ஒருவனான தசரத ராஜா, தேவேந்திரனைப் பார்த்து காஸ்யபர் சொன்னது போல சொன்னார். ராமா, எனக்கு சமமான பத்னியும், மூத்தவளுமான ராணியிடம் பிறந்தவன் நீ.  தகுதி வாய்ந்த என் புத்திரர்கள் நால்வரிலும், எனக்குப் பிரியமானவன் நீயே. தவிர, உன் குணத்தால் நீயும் இங்குள்ள பிரஜைகளை மகிழ்வித்து வந்திருக்கிறாய்.  அதனால் நாளை புஷ்ய நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில் உன்னை யுவ ராஜாவாக நியமிக்க விரும்புகிறேன். ஏற்றுக் கொள்.  இயல்பாகவே நீ நற்குணங்கள் நிரம்பியவன். வினயம் உடையவன். இருந்தும் என் மகன் என்ற வாத்ஸல்யத்தால், உனக்கு சில விஷயங்கள் சொல்கிறேன்.  உன் நன்மைக்காக இவற்றைக் கேள். நீ எப்பொழுதும் போல பணிவாக இரு. தன்னடக்கம் கொள். காம க்ரோதங்களால் ஏற்படும் கஷ்டங்களை தவிர். நேரடியாகவும், மறை முகமாகவும், மந்திரி முதலான எல்லோரையும் பிரஜைகளையும் சந்தோஷமாக வைத்திரு. பசுக்கள் நிறைந்த கொட்டில்களையும், ஆயுத கிடங்குகளையும் எப்பொழுதும் நிரம்பி இருக்குமாறு வைத்துக் கொள். தானும் மகிழ்ச்சியாக இருந்து பிரஜைகளையும் சந்தோஷமாக வைத்திருப்பவன் தான் நல்ல அரசன். அமுதம் கிடைக்கப் பெற்ற தேவர்கள் போல நண்பர்கள் அவனைக் கொண்டாடுவர். அதனால் நீயாக உன் வழியை நியமமாக வகுத்துக் கொண்டு அதன் வழி நடப்பாயாக. இதனிடையில், ராமனின் நண்பர்களில் சிலர் ஓடி வந்து, கௌசல்யைக்கு விஷயம் தெரிவித்தனர். அந்த ஸ்த்ரீ ரத்னம், செய்தி சொல்ல வந்த நண்பர்களுக்கு, தங்கம்,  ரத்னங்கள்,  பசுக்கள், மற்றும் பல விதமான பரிசுப் பொருட்களை, பிரியமான செய்தி சொன்ன காரணத்திற்காக கொடுத்தாள். இங்கு அரசனை வணங்கி ராமன், ரதத்தில் ஏறி, ஜனங்கள் கூட்டமாக ஆரவாரத்துடன் பின் தொடர, தன் மாளிகைக்குச் சென்றான். அந்த நகர ஜனங்கள், அரசனின் அறிவிப்பைக் கேட்டு, வெகு நாட்களாக எதிர்பார்த்த லாபம் உடனே கிடைத்தாற் போல மகிழ்ச்சியுடன், அரசனிடம் விடை பெற்று தங்கள் வீடுகள் சென்று தேவர்களை அர்ச்சனை செய்யலானார்கள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தின், புத்ரானுசாஸனம் என்ற   மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)    

 

 

அத்தியாயம்  4 (81)  மாத்ராசீ பரிக்ரஹ (தாயின் ஆசிர்வதம் பெறுதல்)

 

ராமன் விடை பெற்று சென்ற பின், கூடியிருந்த மந்திரிகளிடமும், முக்கியமான பிரஜைகளிடமும் கலந்து ஆலோசித்து, அரசன், நாளை புஷ்ய நக்ஷத்திரம்.  நாளையே என் மகன் முடி சூட வேண்டும். தாமரை இதழ் போன்ற அழகிய கண்களையுடைய என் மகன் நாளை யுவ ராஜாவாக ஆவான் என்று எண்ணி மகிழ்ந்தவனாக, உள் அறைக்குச் சென்றான்.   சாரதியான சுமந்திரனைக் கூப்பிட்டு, ராமனை இப்பொழுதே அழைத்து வா, என்று பணித்தான். சுமந்திரர் உடனே திரும்பவும் ராமனுடைய பவனத்திற்கு ரதத்தில் விரைந்தார். வாயில் காப்போன் வந்து, திரும்ப சுமந்திரர் வந்திருக்கிறார், அரசர் அழைக்கிறாராம் என்று சொல்லக் கேட்ட ராமனின் மனதில் கவலை தோன்றியது.  அவசரமாக சுமந்திரரை எதிர்கொண்டு ராமர்,  எதற்காக திரும்ப அழைக்கிறார், விவரமாக சொல் என்றார்.  சுமந்திரர், ராஜா உன்னை பார்க்க விரும்புகிறார்.  உன் இஷ்டம். வருவதோ, இல்லை வேறு விதமாக  எண்ணினாலும் சரி, நான் போய் சொல்கிறேன் என்றார். சுமந்திரர் இவ்வாறு சொல்லவும், விரைவில் தயாராகி,  அரச மாளிகைக்கு அவரை சந்திக்கச் சென்றான்.  ராமன் மாளிகை வாசலில் வந்து விட்டான் என்று அறிந்ததுமே, அரசர் அவனை உள்ளே அழைத்து வருமாறு பணித்தார்.  தூரத்திலேயே தந்தையைக் கண்டு அவரை வணங்கியபடியே ராமன் வேகமாக  வந்தான்.  காலில் விழுந்து  வணங்கியவனை  ஆரத்  தழுவி,  அருகில்   ஆசனத்தில் அமரச் செய்த பின், ராஜா பேச ஆரம்பித்தார். – ராமா, எனக்கு வயதாகி விட்டது. வேண்டிய அளவு சுகங்களையும் போகங்களையும் அனுபவித்தாயிற்று.  நிறைய தக்ஷிணைகள் கொடுத்து,  நூற்றுக் கணக்கான யாகங்களும், அன்ன தானமும், செய்த பின் நீ பிறந்தாய்.  அதனாலேயே நீ எனக்கு மிகவும் பிரியமானவன். இன்று நீ ஈடு இணையில்லாமல் உயர்ந்து நிற்கிறாய். என் இஷ்டப் படி தானங்கள் கொடுத்தேன். வேண்டிய அளவு சுகங்களை அனுபவித்தேன். தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள், பிராம்மணர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து வந்துள்ளேன். உனக்கு முடி சூட்டுவதைத் தவிர எனக்கு வேறு கடமைகள் எதுவும் பாக்கியில்லை. அதனால் நான் சொல்லும் சில அறிவுரைகளை கவனமாக கேள். அதன் படி நடப்பாயாக. இன்று பிரஜைகள் எல்லோரும் உன்னை அரசனாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதனால் நாளை யுவராஜாவாக உனக்கு முடி சூட்டுகிறேன்.  தவிர, மகனே, இன்று அசுபமான கனவுகளைக் காண்கிறேன். பயங்கரமான கனவுகள். ஆகாயத்திலிருந்து கற்களும், நெருப்பைக் கக்கும் நக்ஷத்திரங்களும் வந்து விழுவதைக் கண்டேன். பல வேறு கிரஹங்கள் என்னை சூழ்ந்து கொண்டன. அவை செய்த சப்தங்கள்  தெளிவாக இல்லை. ஆனால் பயங்கரமாக இருந்தது. சூரியன், அங்காரகன், ராகு இவர்களின் இது போன்ற நிமித்தங்களைக் காண நேர்ந்தால், அரசன் மடிவான் என்று சொல்கிறார்கள்.  அல்லது கோரமான ஏதோ ஆபத்து வரும் என்றார்கள்.  அதனால்,  என்  புத்தி  மழுங்குவதற்கு  முன்,  ராமா,  நீ  முடி  சூட்டிக்கொள். மனித புத்தி சஞ்சலமானது, தெரிந்ததே. இன்று சந்த்ரோதயம் ஆகி விட்டது. புஷ்யத்திற்கு முன்பான புனர்வசு. நாளை புஷ்ய யோகம் நன்மை பயக்கும் என்று  சோதிடர்கள்       சொல்கிறார்கள். என் மனம் என்னை விரைவில் செய் என்று துரத்துகிறது. அதனால் நாளை புஷ்ய நக்ஷத்திரத்தில் முடி சூட்டிக் கொள். யுவராஜாவாக நானே அபிஷேகம் செய்து வைக்கிறேன். தவ வலிமை உடையவனே, இன்று இரவு மனைவியுடன், தர்ப்பாஸனத்தில் (தர்ப்பை என்ற புல்லால் ஆன ஆசனம்) அமர்ந்து உபவாசங்கள், விரதங்கள் இவற்றை செய். உனக்கு ஏராளமான நண்பர்கள். அவர்கள் கூட இருந்து ரக்ஷிக்கட்டும். இது போன்ற நற்காரியங்களுக்கு தடைகளும் நிறைய வரும். பரதன் ஊரில் இல்லை. அவன் வருமுன் உன் முடி சூட்டு விழா நடந்து விட வேண்டும் என்று என் மனம் சொல்கிறது. பரதன் நல்லவன் தான். நல்லவர்கள் மத்தியில் தான் இருக்கிறான். மூத்த சகோதரனான உன்னிடம் அன்பும் பணிவும் கொண்டவன் தான். அவனுடைய தன்னம்பிக்கையும், நல்ல எண்ணமும் தெரிந்ததே. ஆயினும் மனித மனம் ஸ்திரமில்லாதது என்று எனக்குத் தோன்றுகிறது.  தர்மத்தில் ஈ.டுபாடு உடையவர்கள், நடந்தேறிய ஒரு செயலை கெடுக்க முன் வர மாட்டார்கள். இவ்வாறு பலவும் பேசிய பின், அவரிடம் விடை பெற்று கிளம்பு முன், மறுபடியும் நாளை முடிசூட்டு விழாவிற்கு வந்து சேர் என்று  தசரதன் மகனிடம் சொன்னார்.  அரசர் சொன்னதை மனதில் அசை போட்டவாறு தன் மாளிகைக்கு கிளம்பிய ராமன், திடுமென தாயை நினத்தவனாக, கௌசல்யை மாளிகையை சென்றடைந்தான்.  அங்கு யோகினி போல, வெண் பட்டுடுத்தி, நியமத்துடன், தேவதைகளை வேண்டியபடி பூஜையறையில் தாயைக் கண்டான். லக்ஷ்மணனும், சுமித்ரையும் அங்கு ஏற்கனவே வந்திருந்தனர்.  சீதையும் வரவழைக்கப் பட்டாள். மறு நாள் நடக்க இருக்கும் முடி சூட்டு வைபவத்தைப்  பற்றி பேசியபடி எல்லோருமாக கௌசல்யையின் இல்லத்தில் இருந்தனர். நாளைக்கு புஷ்ய நக்ஷத்திரத்தில் ராமனுக்கு முடி சூட்டு விழா என்று மனம்  கொள்ளா ஆனந்தத்துடன், ப்ராணாயாமம் செய்து ஜனார்தனனை த்யானம் செய்தபடி இருந்த தாயைக் கண்டான்.  அம்மா, தந்தையால் ப்ரஜா பாலனம் செய்யும்படி நியமிக்கப் பட்டிருக்கிறேன். தந்தையின் கட்டளைப்படி நாளை முடி சூட்டு விழா நடக்க இருக்கிறது. இந்த இரவு நானும் சீதையும் உபவாசம் இருக்கவேண்டும்.  உபாத்யாயர்களும், வேதங்கள் அறிந்த பண்டிதர்கள் அவர் அருகில் இருந்த சமயம் தான் இவ்வாறு சொன்னார். அம்மா, எனக்கும் வைதேஹிக்கும் எல்லா மங்களங்களும் கிடைக்கும்படி நீயும் என்ன செய்ய வேண்டுமோ அவைகளை குறைவறச் செய்.  இதைக் கேட்டு கௌசல்யை, கண்களில் நீர் பெருக, வெகு நாளாக எதிர்பார்த்து காத்திருந்தது கிடைத்தது போன்ற மகிழ்ச்சியுடன், வாழ்த்தினாள். வத்ஸ, ராம, குழந்தாய், நீன்ட நாள் வாழ்வாயாக. உனக்கு இடையூறு செய்பவர்கள் அழிந்தார்கள். இந்த ராஜ்ய லக்ஷ்மியை அடைந்து தாயாதிகளையும், என்னையும், சுமித்திரையையும் ஆனந்தமாக இருக்கச் செய். மகனே, மங்களகரமான நக்ஷத்திரத்தில் என் வயிற்றில் பிறந்தாய். அதனாலேயே, உன் தந்தை சத்புத்திரனைப் பெற்ற பெருமையை அடைந்தார். தாமரை மலர் போன்ற கண்களையுடைய மஹா விஷ்ணுவிடம் நான் பொறுமையாக வேண்டிக் கொண்டு வந்தேன். அதனால் தானோ என்னவோ, இக்ஷ்வாகு ராஜ்யஸ்ரீ உன்னை வந்தடைகிறாள். இவ்வாறு தாயார் சொன்னதைக் கேட்டு,  அருகில் மிகவும் பணிவாக நின்று கொண்டிருந்த லக்ஷ்மணனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, லக்ஷ்மணா, நீயும் என்னுடன் கூட இந்த பூமியை ஆட்சி செய்.  என்னுடைய இரண்டாவது அந்தராத்மா போன்ற உன்னையும் இந்த ராஜ்யஸ்ரீ வந்து அடைந்துள்ளாள். சௌமித்ரே, இந்த ராஜ்யத்தை அடைவதால் கிடைக்கும் பலவிதமான போகங்களையும் அனுபவிப்பாய். உயிர்வாழ்வதையும், இந்த ராஜ்யத்தையும் உனக்காகவே ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறு லக்ஷ்மணனிடம் சொல்லி விட்டு தாயார்களை வணங்கி, அனுமதி பெற்று சீதையையும் அழைத்துக் கொண்டு தன் மாளிகை சென்றார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தின், மாத்ராசீ பரிக்ரஹ என்ற நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)    

அத்தியாயம்  5  (82)  வ்ரத சர்யா விதானம் (விரதங்களை ஏற்று நடத்துதல்)

 

நாளை நடக்க இருக்கும் முடி சூட்டு விழாவைப் பற்றி மகனிடம் விவரமாக பேசிய பின்,  தசரத ராஜா, வசிஷ்டரை அழைத்து தபோதனரே, நீங்கள் முன்னின்று ராமனுக்கு விரதங்களை அனுஷ்டிக்கச் சொல்லிக் கொடுங்கள். ராஜ்யத்தை அடையும் முன், மனைவியோடு அவன் விரதங்களை பூர்ணமாக அனுஷ்டிக்க வேண்டும். அது அவன் நன்மைக்கே என்பதை சொல்லுங்கள். வேத சாஸ்திரங்களில் சிறந்த அறிஞரான அவரும், அப்படியே என்று சொல்லி தானே ராமனது மாளிகைக்குச் சென்றார்.  விரத முறைகளை நினைவு படுத்திக் கொண்டவராக, ப்ராம்மம் என்ற ரதத்தில் ஏறி , வெண் மேகம் போன்ற ராம பவனத்தில் மூன்றாவது அங்கணம் வரை ரதத்திலேயே சென்றார்.  அவர் வந்து விட்டதையறிந்து பர பரப்புடன் வேகமாக வந்து எதிர்கொண்டழைத்த ராமர், கௌரவம் மிகுந்த குருவான அவரை, தன் மாளிகைக்குள் வரவேற்றபடி, கை கொடுத்து ரதத்திலிருந்து இறங்க உதவி செய்தார். அந்த பரபரப்பை ரசித்தபடி, இறங்கிய குரு வசிஷ்டர், இயல்பாக பேசியபடி, பிரியமாக அவனும் சந்தோஷமாகும் படி பேசிக் கொண்டே வந்தார்.  உன் தந்தை உன்னிடம் மிகவும் ப்ரஸன்னமாக இருக்கிறார், ராமா, யுவராஜ பதவியை அடையப் போகிறாய். இன்று நீயும், சீதையுமாக விரதங்களை மந்திர பூர்வமாக அனுஷ்டியுங்கள். நாளைக் காலை நகுஷன் யயாதியை அரசனாக்கியது போல, உன் தந்தை தசரத ராஜா உனக்கு முடி சூட்டி, யுவ ராஜாவாக ஆக்கப் போகிறார். இதன் பின் வசிஷ்டர் முறைப் படி மந்திரங்கள் சொல்லி, சீதையுடன் உபவாச விரதங்களை அனுஷ்டிக்கச்  செய்தார்.  பிறகு, ராமரும், அரசரின் குருவான அவரை முறைப்படி பூஜித்து, மரியாதைகள் செய்தார். குருவும் விடைபெற்று, ராமனின் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.  பிரியமாக பேசும் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு, உள்ளே சென்றார். அன்று ராம பவனம், உற்றாரும், உறவினரும், நண்பர்களும் குதூகலமாக, ஆண்களும் பெண்களுமாக கல கலப்பாக விளங்கியது. 

 

அந்த மாளிகையிலிருந்து வெளி வந்த குரு வசிஷ்டர், மதம் பிடித்த யானைக் கூட்டம், மலர் நிறைந்த குளத்தில் குழுமியதைப் போல, வழி முழுவதும் ஜனங்கள் கூட்டம் கூட்டமாக ராம பவனத்தை நோக்கி வருவதும், போவதுமாக, இருப்பதைக் கண்டார். குதூகலமான அந்த ஜன நெரிசலில், ரதத்தை ஓட்டிச் செல்வதே பெரும் ப்ரயத்னமாக இருந்தது. ஜன சமுத்திரம் அலை அலையாக மோதியது. அவர்களின் மகிழ்ச்சி நிறைந்த ஆரவார இரைச்சலும் அலை ஓசையை விட அதிகமாகவே இருந்தது. ராஜ மார்கங்கள் ஜன சமுத்திரமாகவே ஆயிற்று. வீதிகளில் நீர்

தெளிக்கப்பட்டு, வாசனை நிறைந்த மலர் மாலைகளால் தோரணங்கள் கட்டப் பெற்று, அயோத்யா நகரமே,  வீடு தோறும் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டதாக ஆயிற்று. முடி சூட்டு விழாவைக் காண ஸ்த்ரீ பாலர் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை, சூரிய உதயத்தை எதிர் நோக்கி காத்திருந்தனர். அயோத்தியின் இந்த மகோத்ஸவத்தைக் கொண்டாட உற்சாகத்துடன் அலங்கரித்துக் கொண்ட ஜனங்கள், ராஜ வீதிகளில் நடமாடுவதைப் பார்த்தவாறு வசிஷ்டர், ஆங்காங்கு இருந்த

ஜனங்களின் மத்தியில் வழி வகுத்துக் கொண்டு மிக மெதுவாக வெளியேறினார். அரசமாளிகையை வந்தடைந்தார். இந்திரனை குருவான ப்ருஹஸ்பதி சென்று கண்டதைப் போல தசரத ராஜாவின் இருப்பிடம் சென்றார். அவர் திரும்பி வந்து விட்டதையறிந்து ராஜாவும் தானே நேரில் வந்து விசாரித்தார்.   விரதானுஷ்டானம் முதலியவைகளை செய்வித்து விட்டதாக வசிஷ்டர் வாயால் கேட்ட அரசனின் மனம் நிம்மதி அடைந்தது. வசிஷ்டர் வந்தவுடன் அரசனுடன் ஆலோசனைகளில் இருந்த மற்ற அரசர்களும், பிரமுகர்களும் எழுந்து நின்றனர். குருவின் அனுமதியுடன் அவர்களை விடை கொடுத்து அனுப்பி விட்டு, அரசன் அந்த:புரம்  சென்றார். சிங்கம் ஒன்று மலைக் குகைக்குள் நுழைவது போல இருந்தது அந்த காட்சி.  இந்திரன் மாளிகை போல இருந்த அந்த மாளிகையின் அந்த:புரம், பெண்கள் பலர் சூழ்ந்திருக்க, பார்த்திபனான அரசன்  நக்ஷத்திர கூட்டத்தினுள் சந்திரன் நுழைவது போல நுழைந்தார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தின், வ்ரத சர்யா விதானம்  என்ற ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)    

 

அத்தியாயம்  6  (83) பௌரோத்ஸேக|| (ஊர் ஜனங்களின் மகிழ்ச்சி)

 

புரோஹிதர் சென்ற பின் ராமர், விசாலாக்ஷியான சீதையுடன், (விசாலமான கண்களை உடையவள்)  மனதை அடக்கி பகவான் நாராயணனை  த்யானம் செய்து, பூஜை செய்தார். ஹவிஸ் நிறைந்த பாத்திரத்தை தலையில் தாங்கி வந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பில் ஆகுதியாக தேவதைகளுக்கு சமர்ப்பித்தார். மீதியிருந்த ஹவிஸை, தானும் தன் பிரிய மனைவியும் பிரஸாதமாக உண்ட பின், தர்ப்பைகளால் செய்யப் பட்ட படுக்கையில் படுத்தார். மஹா விஷ்ணுவை, மஹா லக்ஷ்மியுடன் த்யானம் செய்தவராகவே உறங்கினார். பாதி இரவில் எழுந்திருந்து, வீட்டை அலங்கரிக்க ஆரம்பித்தார்.  துயில் எழுப்பப் பாடும் பாடல்களின் இனிய நாதத்தைக் கேட்டபடி, பூர்வா சந்த்யா  வந்தனம் செய்தார்.  ஜபங்களைச் செய்த பின்,  வெண் பட்டு உடுத்தி,  மதுசூதனனை வணங்கி வழிபட்டு பூஜைகள் செய்தார்.  பின் வந்திருந்த பிராம்மணர்களோடு பேசிக் கொண்டு இருந்தார்.  புண்ய தினமான அன்று அயோத்தியில் இனிமையான கம்பீரமான நாதங்கள் நிரம்பின.  தாள வாத்யங்களும் அதற்கு இனையான தந்தி வாத்யங்களும் முழங்கின. ராமரும் சீதையும் இரவு உபவாசம் இருந்த விஷயத்தைப் பற்றி மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். விடிந்தால் முடி சூட்டு விழா என்பதால் ஊர் ஜனங்கள் வீதிகளை அலங்கரிக்க ஆரம்பித்தனர். கோவில்களின் மேலும், உயர்ந்த மாளிகைகளின் மேலும், நான்கு வீதிகள் கூடும் இடத்திலும், தெருக்களிலும், மடங்களிலும், வியாபார ஸ்தலங்களிலும்,  கடை வீதிகளிலும், தனித் தனி கடைகளிலும், குடும்பஸ்தர்கள் வீடுகளிலும், பிரமுகர்களின் பவனங்களிலும், பெரிய

மாளிகைகளிலும், எல்லா சபைகளிலும், ஆங்காங்கு  தென் பட்ட மரங்களிலும் கொடிகள் கட்டப் பெற்றன.  பல விதமான சித்திரங்களுடன் பதாகா எனப்படும், கொடிகளும் இடை இடையே இருந்தன.  பாடிக்  கொண்டு வரும் பாடகர்களும், ஆடிக் கொண்டு வரும் நட நர்த்தகர்களும், மனதுக்கும் செவிக்கும் இனிய வார்த்தைகளை ஜனங்கள் கேட்டனர்  தங்களுக்குள் ராமனது முடிசூட்டு விழாவை கதையாக பேசிக்  கொண்டனர். இந்த ராம அபிஷேக உத்ஸவ சமயத்தில், வீடுகள், வாசல்கள், மைதானங்களிலும், விளையாடும் சிறுவர் சிறுமியர் கூட இதையே பேசினர். ஊர் ஜனங்களே ராஜ மார்கத்தை பூ மாலைகளால் அலங்கரித்து, வாசனை திரவியங்கள்  தெளித்து ராமன் முடி சூட்டு விழாவிற்காக தயார் செய்து விட்டனர்.  இரவு வந்தால் வெளிச்சம் வேண்டும் என்பதற்காக ஆங்காங்கு தீபங்களுடன் கம்பங்கள் நடப்பட்டன. சந்துகளிலும், இடை இடையே இருந்த சிறு வீதிகளிலும் கூட இந்த கம்பங்கள் நடப் பெற்றன. இவ்வளவு ஏற்பாடுகளையும்  செய்தபடி, ராமனது முடி சூட்டு விழாவைக் காண ஜனங்கள் காத்திருந்தனர். நாலு பேர் கூடினால் தசரத ராஜாவை புகழ்ந்து பேசினார்கள். அஹோ, இந்த இக்ஷ்வாகு குல ராஜா, மகாத்மா. தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்து ராமனுக்கு முடி சூட்ட முன் வந்தானே. நாம் எல்லோருமே அதிர்ஷ்டம் செய்தவர்கள் ஆவோம். ராமன் நமக்கு அரசனாக வருவது நம் நல் வினைப் பயனே.  இது போல அரசன் அமைவது அரிது.  வித்வானாகவும், தர்மாத்மாகவும் இருப்பவன். சகோதரர்களிடமும் பாசம் மிக்கவன். எப்படி சகோதரர்களிடம் வாஞ்சையுடன் இருக்கிறானே அதே போல நம்மிடமும் பாசத்துடன் இருப்பான்.  தசரத ராஜா நீமூடுழி வாழட்டும். அவர் தயவால் தானே நாம் ராமனை முடி சூடியவனாக காணப் போகிறோம். இவ்வாறு பலவாறு பேசிக் கொண்டு, தொலை தூரத்து ஜன பதங்களிலிருந்தும் ஜனங்கள் கூட்டமாக ராம பட்டாபிஷேக வைபவத்தைக் காண வந்து சேர்ந்தனர், அயோத்தி நகரம் நிரம்பி வழிந்தது. வேகமாக அடிக்கும் அலைகளால் சமுத்திர ஓசை அதிகரிப்பது போல இந்த ஜன சமுத்திரமும் ஆரவாரித்தது.  இந்திரனே பொறாமைப் படும் படியான அந்த நகரம்,  அலை மோதும் ஜனங்களும், அவர்களின் ஆரவாரமும் சேர,  சமுத்திரங்களையும், கடல்களையும்  தன்னிடத்தில் கொண்ட ஆழ்கடல் போல இருந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தின், பௌரோத்சேக:  என்ற ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)    

 

அத்தியாயம்  7 மந்த2ரா பரிதே3வனம்

 

எங்கேயோ பிறந்து, கைகேயியுடன் கூட வசித்து வந்தவள், குடும்பத்தில் பரம்பரையாக ஊழியம் செய்து வரும் தாசி, எதேச்சையாக, சந்திரனுக்கு சமமாக ஒளி வீசும் அந்த பிரகாரத்தில் ஏறி வந்தாள். (ஞாதி தாசி- குடும்பத்து பழைய தாசி, தாய் தந்தையரை அறியாதவள். கேகய ராஜா, தனத்தோடு அனுப்பி வைத்த, ஊழியம் செய்ய வந்த வேலைக்காரி. வால்மீகி முனிவர் இவளை அதிகமாக வர்ணிக்காமல் விட்டதே, இந்த சந்தர்பத்தில் ரஸ போஷகமாக உள்ளது என்பது பெரியவர்கள் கருத்து). ராஜமார்கம் பூராவும் நீர்  தெளிக்கப்பட்டு, பூக்களால் அலங்கரித்து இருப்பதை அந்த மாளிகையின் பிராகாரத்திலிருந்து பார்த்தாள். எங்கு நோக்கினும் தோரணங்களும், மலர் மாலைகளும், த்வஜங்களும், ஜனங்கள் அனைவரும் தலைக்கு ஸ்னானம் செய்து, சந்தன நீரை வாரி இறைத்த வண்ணம் செல்வதைக் கண்டாள். பூ மாலைகளும், மோதகங்களும் ஏந்தி, பிராம்மணோத்தமர்கள், கோவில்களில் பூஜை செய்வதைக் கண்டாள். கோவில் வாசல்கள் சுபமாக, வெண்ணிறமாக அலங்கரிக்கப் பட்டு, மங்கள வாத்யங்கள் முழங்கக் கண்டாள். ஜனங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ப்ரும்ம கோஷம் கேட்டது. உயர்ந்த குதிரைகளும், யானைகளும், பசுக் கூட்டங்களும் கூட மகிழ்ச்சியாகத் தெரிந்தன. ஊர் ஜனங்கள் பக்கம் பக்கமாக கொடிகளையும், தோரணங்களையும் கட்டுவதில் முனைந்திருந்தனர். இவ்வளவு கோலாகலமாக அயோத்யாவைப் பார்த்து மந்த2ரா ஆச்சர்யம் அடைந்தாள். மகிழ்ச்சியால்  மலர்ந்த கண்களுடன், வெண் பட்டினால் அலங்கரித்துக் கொண்டு அருகில் வந்த ஒரு தா4த்ரி (வேலைக்காரி, பொதுவாக தாம்பூலம் கொண்டு செல்பவர்கள்) பெண்ணை அழைத்து விசாரித்தாள். நிறைய பொருள் வைத்துக் கொண்டு ராம மாதா, எதற்காக எல்லோருக்கும் தனம், பொருள் இவற்றை மகிழ்ச்சியோடு தானம் செய்கிறாள்? என்று வினவினாள். இந்த ஜனங்கள் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்? இவர்கள் இப்படி சந்தோஷப்படும் படி அரசன் என்ன செய்தான்? அந்த தா4த்ரி மிகவும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு, நல்ல விஷயம் சொல்லும் ஆவலுடன் ராமனுக்கு ராஜ்ய கிடைக்கப் போவதைத் தெரிவித்தாள். நாளை புஷ்ய நக்ஷத்திரத்தில், கோபமே இல்லாத ராமனை, ராகவனை யுவராஜாவாக, ராஜா தசரதர் முடி சூட்டப் போகிறார். மாசில்லாத ராமனை யுவராஜாவாக காணப் போகிறோம்.

 

தாத்ரியின் வார்த்தையைக் கேட்டு அந்த கூனி, பொறுக்க மாட்டாத கோபமும் தாபமுமாக, கைலாச சிகரம் போன்ற அந்த மாளிகையிலிருந்து வேகமாக கீழே இறங்கி வந்தாள். எதிலும் பாபத்தையே காணும் மந்தரா என்ற அந்த கூனி, அடக்க மாட்டாத கோபத்துடன், கைகேயியின் மாளிகையின் உள்ளே புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த கைகேயியை எழுப்பி விஷயத்தை சொன்னாள். மூடே,(முட்டாளே) எழுந்திரு. ஏன் தூங்குகிறாய். உன்னை நோக்கி பயங்கரமான ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. உன்னை சூழ்ந்து நிற்கும் ஆபத்தையறியாமல், தன்னை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இப்படி இருக்கிறாய். உள்ளத்தில் உனக்கு கெடுதலை எண்ணிக் கொண்டு, வெளியில் பிரியமானவன் போலத் தெரியும் உன் கணவனை நம்பிக் கொண்டிருக்கிறாய். வெய்யில் நாளில் நதிகளின் ஊற்றுகள் வற்றுவது போல உன் சௌபாக்கியம் அழியப் போகிறது. இவ்வாறு கடும் வார்த்தைகளைக் கேட்ட கைகேயி, கூனியினால் பெரும் சங்கடத்துக்குள்ளானாள். கூனியைப் பார்த்துக் கேட்டாள். மந்தரையே, ஏதாவது அசுபமாக நடந்து விட்டதா? உன் முகம் வாடியிருக்கிறது. மிகவும் துக்கத்தோடு காணப் படுகிறாய். என்ன விஷயம்? மதுரமாக கேட்ட கைகேயியிடம் மகா கோபத்துடன், தன் முகத்தை இன்னமும் வருத்தமாக வைத்துக் கொண்டு, அவளுடைய நன்மையை விரும்புபவள் போலவும், ராகவனுக்கு எதிராக, சொல்ல ஆரம்பித்தாள். உன் நாச காலம் ஆரம்பித்து விட்டது போலும். பெரிய ஆபத்து வந்துள்ளது. தசரத ராஜா ராமனுக்கு முடி சூட்டப் போகிறார். யுவ ராஜாவாக. அதனால், உன் நன்மையையே விரும்பும் என்னை துக்கமும் சோகமும் அலைக் கழிக்கின்றன. ஆழமான பயம் என்ற குளத்தில் முழுகியவள் போலவும், நெருப்பினால் சுடப்பட்டவள் போலவும், உன்னைத் தேடி வந்தேன். உன் துக்கம் என் துக்கம் அல்லவா? உனக்கு ஏதாவது கெடுதல் என்றால், நான் உன்னை விட அதிக துக்கம் அடைவேன். உன் வளர்ச்சியில் தான் என் வளர்ச்சியும். இதில் சந்தேகமேயில்லை. அரச குலத்தில் பிறந்தவள் நீ, சக்ரவர்த்தியான அரசனின் மகிஷி. ராஜ தர்மத்தின் சூக்ஷ்மத்தை இன்னமும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். தர்மத்தை பேசுகிறானே, துஷ்டனாக நடந்து கொள்கிறான் உன் கணவன். பெருந்தன்மையாக பேசுகிறான். உள்ளுக்குள் பயங்கரமானவன். சுத்தமான மனம் உள்ளவள் நீ. அவனுடைய கெட்ட எண்ணத்தை தெரிந்து கொள்ளவில்லை. ஒன்றும் இல்லாத கௌசல்யையை செல்வம் கொழிக்கச் செய்யப் போகிறான் உன் கணவன். துஷ்டாத்மா, பரதனை உன் பந்துக்களிடம் அனுப்பி விட்டு, நாளை ராமனை இடையூறின்றி, முடி சூட்டி வைக்கப் பார்க்கிறான். சத்ருவோ, சர்ப்பமோ எதிர்ப்பட்டால் என்ன செய்வாயோ, அது போல ராஜா தசரதரிடம் நீ நடந்து கொள்ள வேண்டும். சுகமாக இருக்க வேண்டியவள் நீ. பொய்யான சமாதான வார்த்தைகளால், உன்னை ஏமாற்றி விட்டு, ராமனை ராஜ்யத்தில் நிலை நிறுத்தப் பார்க்கிறானே. நீ பந்துக்களுடன் அழிந்ததாகவே நினைத்துக் கொள். இப்போதும் மோசம் இல்லை. கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில் உனக்கு நன்மையைத் தேடிக்கொள். சீக்கிரம். உன் மகனையும் என்னையும் காப்பாற்று. எதுவும் புரியாதது போல விழிக்கிறாயே. மந்தரையின் வார்த்தைகளைக் கேட்டு படுக்கையிலிருந்து எழுந்து வந்த கைகேயி, சுபமான முக விலாஸம் உடையவளான கைகேயி, மிகவும் சந்தோஷமாக சரத்கால சந்திர கிரணம் போல ஆச்சர்யம் அடைந்தவளாக, ஒரு ஆபரணத்தை கூனிக்கு கொடுத்தாள். அவளைப் பார்த்து எனக்கு மிகவும் பிரியமான விஷயத்தை சொல்லியிருக்கிறாய், மந்தரா, மிகவும் சந்தோஷம். உனக்கு வேறு என்ன வேண்டும் கேள், ராமனோ, பரதனோ, இருவரில் நான் வித்தியாசமே கண்டதில்லை. அதனால் அரசன் ராமனுக்கு முடி சூட்டுவதில் நான் சந்தோஷமே அடைகிறேன். இதை விட பிரியமான விஷயம் இருக்க முடியுமா? நல்ல வார்த்தை சொன்னாய். என்ன வேண்டுமோ கேள் தருகிறேன். இந்த நல்ல செய்தியை எனக்கு சொன்ன உனக்கு வேண்டியதை தருவேன் என்றாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் மந்த2ரா பரிதே3வனம் என்ற ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 8 (85)  மந்தரோபஜாப:  (மந்தரையின் தவறான அறிவுரை)

 

மந்தரை அவளை அசூஜையுடன் பார்த்துக் கொண்டு, கோபமும் துக்கமும் பொங்க அவள் கொடுத்த ஆபரணத்தையும் வீசி விட்டு, மேலும்  தன் கருத்தை அவள் மேல் உரையேற்றினாள்.   ஏ அசட்டுப் பெண்ணே | வேண்டாத இடத்தில் இது என்ன குதூகலம் ?  சோக சாகரத்தில் மூழ்கி கொண்டிருக்கிறாய். அதை அறியாமல் சந்தோஷம் என்கிறாயே. உன்னைப் பார்த்து சிரிக்கத் தான் தோன்றுகிறது.  துக்கமே அறியாத நல்ல பெண் நீ. வருத்தப் பட வேண்டிய விஷயத்திலும் மகிழ்ச்சியடைகிறாய்.   எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது.  புத்தியில்லாமல் இப்படி பேசுகிறாயே. உனக்கு எப்படி புரிய வைப்பேன்? சக்களத்தி புத்திரன் மேன்மையடைகிறான் என்றால் உன் பகைவன் மேன்மையடைகிறான்.  அது உனக்கு ம்ருத்யுவுக்கு சமம் இல்லையா? பரதனிடத்தில் தான் ராஜ்ய விஷயத்தில் ராமனுக்கும் பயம். அது தான் நான் கவலைப் படுகிறேன். பயந்தவர்களிடம் தான் பயம் தோன்றும். லக்ஷ்மணன் நல்லவன். ராமனே சகலமும் என்று இருப்பவன்.  அதே போல சத்ருக்னன் பரதனைச் சார்ந்து இருக்கிறான். மற்ற இருவர்களும் பரதனுக்கும் இளையவர்களே.  ராமனுக்கு அடுத்துப் பிறந்தவன் பரதனே. அதனால் ராஜ்யத்திற்கு உரிமை கொண்டாட,  ராமனுக்கு போட்டியாக வரக் கூடியவன் பரதன் தான் என்பதால், உன் மகனை நினைத்து நான் வருந்துகிறேன். க்ஷத்திரிய தர்மத்தை கவனித்து பார்த்தால், அரசர்கள் புத்திசாலிகளாக இருப்பதோடு, பாபம் செய்வதில் அஞ்சாதவர்களாகவும் இருப்பார்கள்.  அதனால் உன் மகன் பரதன் ராமனிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  கௌசல்யை அதிர்ஷ்டசாலி. அவள் பிள்ளை முடி சூடப் போகிறான்.  நாளைக் காலை புஷ்ய நக்ஷத்திரத்தில் அவனுக்கு முடி சூட்டு விழாவை பிராம்மணோத்தமர்கள் கூடி கோலாகலமாக நடத்தி வைப்பார்கள். வசுமதியை (பூமியை) அடைந்து ராஜாவாக சந்தோஷமாக இருக்கும் பொழுது, நீ கூப்பிய கரங்களுடன், ராஜ மாதாவான கௌசல்யைக்கு குற்றேவல் செய்ய வேண்டியிருக்கும்.  எங்களுடன் கூட அவளுக்கு கைங்கர்யம் செய்ய தொடர்ந்து வருவாய்.   உன் மகன் ராமன் இட்ட வேலையை செய்யட்டும்.  ராமன் சம்பந்தப் பட்ட பெண்கள் மகா சந்தோஷமாக ஆவார்கள். உன் மருமகள், பரதனுக்கு ஏற்பட்ட தாழ்வினால் முகம் வாடி இருப்பாள். இவ்வளவு சொல்லிய மந்தரையை அலட்சியப் படுத்தி கைகேயி, ராமனுடைய குணங்களையே புகழ்ந்து பேசினாள். அரசனுடைய மூத்த மகன். தர்மம் அறிந்தவன். குரு ஜனங்களுக்கு பிரியமானவன். செய் நன்றி மறவாதவன். வாக்கு மீறாதவன்.  சத்யவாதி.   ஒழுக்கம் தவறாதவன்.  அதனால் யுவராஜா பதவிக்கு ஏற்றவனே. அவன் தீர்காயுஸாக இருக்கட்டும். சகோதரர்களையும் தன் கீழ் வேலை பார்க்கும் மற்றவர்களையும் தந்தைக்கு சமமாக இருந்து பாதுகாப்பான். இந்த ராமனுக்கு அபிஷேகம் என்று கேட்டு ஏன் வருந்துகிறாய்?   கூனியே | தந்தை பாட்டன் வழி வந்த ராஜ்யத்தை ராமனுக்கு பிறகு, நூறு வருஷமானாலும் பரதன் அடையத் தான் போகிறான். மந்தரையே, நல்ல காலம் பிறந்திருக்கிறது. நெருப்பினால் சுட்டது போல அவஸ்தை படுகிறாய். பல மங்களங்கள் வர இருக்கின்றன, ஏன் வருந்துகிறாய்?  எனக்கு பரதன் எப்படி பிரியமானவனோ, அதை விட அதிகமாக ராமனும் பிரியமானவனே.  கௌசல்யையை விட அதிகமாக என்னிடம் அன்புடன் பணிவிடைகள் செய்து வருகிறான். ராமனுக்கு ராஜ்யம் என்றால் அது பரதனுக்கும் தான். தன்னைப் போலவே சகோதரர்களையும் ராமன் மதிக்கத் தெரிந்தவன். கைகேயியின் இந்த வார்த்தைகளை கேட்டு, மந்தரை பெருமூச்சு விட்டாள். அதிக துக்கத்துடன் தன் எண்ணத்தை வலியுறுத்தி கைகேயியிடம் பேசினாள்.  உன் அறியாமையால், இந்த செயலில் உள்ள அனர்த்தத்தை உணராமல் பிதற்றுகிறாய். உன்னையே நீ தெரிந்து கொள்ளவில்லையே. சோகமும் துக்கமும் சூழ்ந்து நிற்கிறது.  சோக சாகரத்தில்  மூழ்கி  கொண்டிருக்கிறாய். அதையும் தெரிந்து கொள்ளவில்லை. ராகவனான ராமன் அரசனானால், அவனுக்குப் பின் அவன் மகன் அரசனாவான். அவனுக்கு பின் அவன் மகன். ராஜ வம்சம் இப்படித்தான் போகும். பரதன் பரிகாசத்துக்கு ஆளாவான்.  அரசனுடைய புத்திரர்கள் எல்லோருமே அரசனாக முடியுமா? அதனால் மூத்த மகன் தான் ராஜ்யத்துக்கு என்று ராஜ தர்மம் அறிந்த பெரியவர்கள் தீர்மானித்து இருக்கிறார்கள். அழகியே | மற்றவர்கள் என்ன குணவானாக இருந்தாலும், மூத்த மகன் தான் பட்டத்துக்கு உரியவன். அவன் மூலம் ராஜ வம்சம் தொடரும். அதனால் உன் மகன் எதுவும் கிடைக்காமல், அனாதையாக நிற்பான். ராஜ வம்சமோ, சுகமோ எதுவுமே அவனுக்கு இனி கிடையாது. நான் உனக்கு புத்தி சொல்லத் தான் வந்தேன். நீ என்னையும் அறிந்து கொள்ளாமல் ஏசுகிறாய். சக்களத்தியின் நல்ல காலம், நீ எனக்கு வரங்கள் தருவதாக சொல்கிறாய். பார்த்துக் கொண்டே இரு. இடையூறு இன்றி ராஜ்யம் கைக்கு வந்ததும் ராமன் பரதனை நாடு கடத்தி விடுவான். அதோடு நிறுத்துகிறானோ,  உலகத்தை விட்டே துரத்துகிறானோ. குழந்தை என்று பரதனை மாமன் வீட்டுக்கு நீயே அனுப்பி வைத்திருக்கிறாய்.  அருகில் இருந்தால் தான் பாசம் இருக்கும். மரம், செடி, கொடிகள் கூட எதிரில் இருக்கும் பொழுது தான் பாசம் ஏற்படும்.  பரதன் மட்டுமல்லாமல் சத்ருக்னனையும் அனுப்பி வைத்திருக்கிறாய். இவனாவது பரதனுக்கு பரிந்து பேசுவான். லக்ஷ்மணன் ராமனுக்கு கூடவே இருப்பது போல பரதனுக்கு சத்ருக்னன். லக்ஷ்மணனை ராமன் பாதுகாத்துக் கொள்வான்.  அஸ்வினி குமாரர்கள் போல இவர்கள் இருவரின் ஒற்றுமை தெரிந்ததே. அதனால் லக்ஷ்மணனிடத்தில் ராமனுக்கு பயம் இல்லை. ஆனால் பரதனிடத்தில் அப்படி இருக்க மாட்டான்.  சந்தேகம் இல்லாமல் பரதனை அடக்கி ஆளத்தான் முனைவான்.  அதனால் தேவி,  இந்த ராஜமாளிகையை விட்டு உன் மகன் வனத்திற்கு போகட்டும். இதில் தான் உனக்கும் நன்மை.  எனக்கும் சரியென்று தோன்றுகிறது. உன்னைச் சார்ந்தவர்களும் க்ஷேமமாக இருப்பார்கள். அல்லது, இதே ராஜ்யத்தை பரதன் அரசனிடமிருந்தே பெற்றால்,  தர்ம வழியில் அரசனே கொடுத்து விட்டாலும், ராமன் உடன் பிறந்த சத்ருவாக ஆவான்.  உன் மகன் சுகமாக இருக்கப் பிறந்தவன். செல்வம் நிறைந்து வளமாக இருந்து விட்டு, செல்வமழிந்து எப்படி மற்றவர்களை அண்டி இருக்கப் போகிறாய்?  யானைக் கூட்டத்தை சிங்கம் துரத்துவது போல, உன் மகனை ராமன் துரத்தப் போகிறான். உன் மகனை காப்பாற்று.  செல்வச் செழிப்பில், கர்வத்தோடு, ராம மாதாவை பல முறை இகழ்ந்து பேசி, நடந்து கொண்டிருக்கிறாய்.  சக்களத்தியான அவள்,  இப்பொழுது விரோதம் பாராட்ட மாட்டாள் என்பது என்ன நிச்சயம். ராமன் எப்பொழுது சமுத்திரம் முதல் மலையடிவாரம் வரை உள்ள இந்த ராஜ்யத்தை அடைகிறானோ, அப்பொழுதே நீ அசுபமான அவமானத்தையும், தீனம் (தாழ்வையும்) பரதனோடு சேர்ந்து அனுபவிக்கப் போகிறாய்.  பா4மினி | ராமன் ராஜ்யத்தை அடைந்தால், பரதன் இருக்கும் இடம் தெரியாமல் போவான்.  அதனால் யோசித்துக் கொள். தன் மகனுக்கு ராஜ்யமும், மற்றவனுக்கு நாடு கடத்தலும் இன்றே யோசித்து செயல் படுத்து.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், மந்தரோப ஜாபம் என்ற எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)   

 

அத்தியாயம்  9  ராம ப்ரவாசனோபாய சிந்தா (ராமனை நாடு கடத்தும் யோசனை)

 

மந்தரை இவ்வாறு  தூண்டி விடவும், கைகேயி கோபம் அடைந்தாள். கண்கள் சிவக்க பெருமூச்சு விட்டுக் கொண்டு மந்தரையைப் பார்த்து சொல்லலானாள். இன்று, ராமனை உடனே காட்டுக்கு போகும்படி செய்வேன். யுவராஜ்யத்தில் சீக்கிரமே  பரதனை முடி சூட்ட வைப்பேன். மந்தரே, கொஞ்சம் யோசித்து சொல்லேன். என்ன உபாயம் செய்து இந்த எண்ணத்தை செயல் படுத்துவது. ராஜ்யம் பரதனுக்குத்தான் கிடைக்க வேண்டும். ஒரு போதும் அது ராமன் கைக்குப் போய் சேர விடக் கூடாது. பாபத்தையே காணும் குணமுடைய மந்தரை மகிழ்ந்தாள். ராமனுக்கு கெடுதலை விரும்புபவளாக, கைகேயியிக்கு புத்தி சொன்னாள். கைகேயி, பயப்படாதே. நான் உன் மகன் யுவராஜாவாக முடி சூட வழி சொல்கிறேன். உனக்கு நிஜமாகவே நினைவு இல்லையா? இல்லை தெரிந்திருந்தும் தெரியாதது போல பேசுகிறாயா? உன் மனதில் உள்ளதையே நான் சொல்லி கேட்க வேண்டும் என்று பார்க்கிறாயோ. அல்லது நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றாலும் நான் சொல்கிறேன் கேள். கேட்டு விட்டு மேற் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். இதைக் கேட்டு தன் படுக்கையிலிருந்து ஓரளவு எழுந்து அமர்ந்தவளாக, தானாக அமர்ந்துவிட்ட மந்தரையைப் பார்த்து கேட்டாள். மந்தரா சொல்லு. என்ன உபாயம் செய்யலாம். ராமனுக்கு ராஜ்யம் போகக் கூடாது. என் பரதனுக்குத் தான் ராஜ்யம். பாப தர்சினியான மந்தரை, ராமனுக்கு கெடுதலையே எண்ணும்  மந்திரை, கூனி, உபாயத்தைச் சொன்னாள்.

 

முன்பு ஒரு சமயம், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை மூண்டது. ராஜரிஷிகளுடன் கூட உன்னையும் அழைத்துக் கொண்டு, ராஜா இந்திரனுக்கு உதவி செய்யச் சென்றான். தண்டகா வனத்தை நோக்கித் தென் திசையில் –திமித்வஜன்- (மீன் கொடியை உடையவன்) என்ற அசுரனுடைய வைஜயந்தம் என்ற புகழ் பெற்ற ஊரை நோக்கிச் சென்றான். அந்த மாயையில் வல்ல சம்பாசுரன், இந்திரனுக்கு சமமாக போரிட்டான். அவனை ஜயிக்க இந்திரனால் முடியவில்லை. அந்த யுத்தத்தில் அடிபட்டு ரணமான ஜனங்களை, இரவில் தூங்கும் பொழுது,

படகுகளில் வந்து ராக்ஷஸர்கள் கொன்று  விட்டுச் சென்றனர். அந்த யுத்தத்தில் தசரத ராஜா, அசகாய சூரனாக போரிட்டான். அந்த அசுரர்களின் பாணங்களால் சல்லடையாகத் துளைக்கப்பட்டான். நினைவிழந்து கிடந்தவனை, போர்க் களத்திலிருந்து அகற்றிக் கொண்டு வந்து நீ பணிவிடை செய்து உயிர் ஊட்டினாய். அதனால் மகிழ்ந்த அவன் இரண்டு வரங்கள், உனக்கு கொடுத்தான். தேவையான பொழுது வாங்கிக் கொள்கிறேன் என்று நீ அதை அப்பொழுது உடனே வாங்கிக் கொள்ளவில்லை. அரசனும் சம்மதித்து தேவையான பொழுது கேள் என்று சொன்னான். எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறாயா? நீயே தான் என்னிடம் இவ்விவரங்களை சொல்லி இருக்கிறாய். இந்த சம்பவத்தை நீ என்னிடம் சொன்னதை, உன்னிடத்தில் என் சினேகம் காரணமாக நான் மனதில் வைத்துக் கொண்டு இருந்திருக்கிறேன். ராமன் முடி சூட்டு வைபவங்களை நிறுத்து. அதே மூச்சில் ராமனை பதினான்கு வருஷம் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேள். பதினான்கு வருஷ காலம் ராமன் நாட்டை விட்டு வனங்களில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் சமயம், ப்ரஜைகள் பரதனிடம் அன்புடையவர்கள் ஆகி விடுவார்கள். அசைக்க முடியாதபடி பரதன் ராஜ்யத்தில் ஸ்திரமாகி விடுவான். அஸ்வபதியின் மகளே, மிகுந்த கோபம் கொண்டவள் போல கோப க்ருஹம் சென்று பூமியில் அழுக்கு வஸ்திரங்களை உடுத்திக் கொண்டவளாக படுத்துக் கொள். அரசன் வந்தால் ஏறிட்டும் பார்க்காதே. பேச்சும் கொடுக்காதே. அரசனைக் கண்டவுடன் மிகுந்த துக்கத்துடன் பலமாக அழு. உன் கணவனுக்கு நீ மிகவும் பிரியமானவள். அதில் சந்தேகமேயில்லை. உனக்காக அந்த அரசன் நெருப்பில் கூட குதிக்கக் கூடியவன். உன்னை கோபத்துடன் காணச் சகிக்க மாட்டான். உனக்கு கோபம் வரும் என்றால் அந்த செயலையே செய்யாதவன் அவன். உன்னை சமாதானப் படுத்த அரசன் தன் உயிரையே தியாகம் செய்ய தயங்க மாட்டான். அந்த சக்ரவர்த்தியான அரசன், உன் வார்த்தையை மீறி எதுவும்  செய்யத் துணிய மாட்டான் என்பது நிச்சயம். மந்த புத்தியால், உன் கணவனிடம் உனக்கு உள்ள செல்வாக்கை உணராமல் இருக்கிறாய். ராஜா தசரதன், மணி, முத்து, தங்க, ரத்னங்கள், பல விதமாக கொடுத்து உன்னை சமாதானப் படுத்த முயலுவான். அவைகளை ஏறிட்டும் பார்க்காதே. சம்பாசுர யுத்தத்தில் உனக்கு கொடுத்த வரங்களை நினைவு படுத்து. இந்த பொருட்கள் விலை உயர்ந்ததானாலும் உன் கவனத்தை அவற்றில் செலுத்தாதே. ராகவன் (தசரதன்) தானே முன் வந்து இந்த வரங்களைத் தருவதாகச் சொன்னவுடன், ஒரு வரத்தால் ராமனுக்கு பதினான்கு வருஷம் வனவாசம் என்று கேட்டு வாங்கிக் கொள். பரதனை அரசன், உலக நாயகனாக ஆக்கட்டும். பதினான்கு வருஷம் நாட்டை விட்டு ராமன் வெளியில் இருக்கும் பொழுது, உன் மகன் த்ருடமாகவும், தன்னை முழுவதும் ஸ்திரப் படுத்திக் கொண்டவனாகவும் ஆகி விடுவான். ராமனை நாடு கடத்தும் வரத்தை முதலில் கேள். அதில் தான் உன் மகனுக்கு எல்லா விதமான செல்வமும் கிடைக்க வழி இருக்கிறது. இவ்வாறு நாட்டை விட்டு விரட்டினால் ராமன், (அராமன் ஆகி விடுவான்) இல்லாமல் போய் விடுவான். உன் பரதனும் (அமித்திரன்) மித்திரன் இல்லாதவனை அழித்தவனாக, அரசனாக ஆள்வான். ராமன் திரும்பி வரும் காலத்திற்குள், உன் மகன் தன்னை ஸ்திரமாக ஸ்தாபித்துக் கொண்டவனாக, அசைக்க முடியாத பலவானாக ஆகி விடுவான். தன் நண்பர்கள் மூலம் ஜனங்களை தன் வயப் படுத்திக் கொண்டு, நல்ல அரசன் என்று பெயர் பெற்று விடுவான். உனக்கு நேரம் ஆகிறது. அரசன் வரும் நேரம் ஆகி விட்டது. ராமனுக்கு முடி சூட்டுவதிலிருந்து உன் பக்கம் திருப்பிக் கொள்.

 

அனர்த்தம் என்று உணராமல், தனக்கு நன்மை என்று எண்ணி கைகேயி, கூனியின் வார்த்தைகளை அப்படியே மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டவளாக, தவறான வழியில் மகிழ்ச்சியோடு செல்லும் சிறு குழந்தை போல மகிழ்ச்சியுடன் கூனியிடம் மந்தரை, உலகில் உள்ள கூனிகளில் நீ மிகவும் புத்திசாலி தான். உன் அறிவுரையை மீற மாட்டேன். எனக்கு ஹிதத்தை நினைப்பவள் நீ ஒருத்தி தான். நீ சொல்லாமல் அரசன் செய்ய நினைத்த  காரியத்தை நான் புரிந்து கொண்டிருக்க மாட்டேன். கோணலான சரீர அமைப்புக் கொண்ட கூனிகள் பயங்கரமாக இருப்பார்கள். ஆனால் நீ, தாமரை மலர் காற்றில் ஆடுவது போல இருக்கிறாய். என்ன, தோள் உயர்ந்து விட்டதால், சரீரத்தின் முன் பாகம் உள்ளடங்கி விட்டது. மற்றபடி குறுகிய இடையும், அகன்ற ஜகன பிரதேசமும், நிறைந்த மார்பகமும், விமலமான சந்திரன் போன்ற முகமும், எனக்கு முன்னால் வெண் பட்டு அணிந்து செல்லும் பொழுது ராஜ ஹம்ஸம் போல விளங்குகிறாய். சம்பாசுர யுத்தத்தில் அசுர ராஜனிடத்தில் ஆயிரக்கணக்காக  மாயா யுத்தம் செய்தவை உன் முதுகு கூனலில் மறைந்து விட்டன போலும். பலவிதமான (மதி) அபிப்பிராயங்கள், க்ஷத்திர வித்தைகள், மாயைகள் இந்த உயர்ந்து நிற்கும் கூனலுக்குள் நிரம்பி இருக்கின்றன. இந்த தங்க மாலையை எடுத்துவிட்டு, ராமனும் காட்டுக்குப் போய், பரதனும் முடி சூட்டிக்கொண்ட பின், நல்ல சொக்கத் தங்கத்தால், உன் கூனல் முழுவதும் கவசமிடுகிறேன். முகத்தில் சுபமான ஜாத ரூபம் என்ற தங்கத்தால் திலகம் இடுவேன். பலவிதமான மங்கள ஆபரணங்களை அணிவிக்கிறேன். மந்தரையே, நல்ல வஸ்திரங்கள் அணிந்து தேவதை போல சஞ்சரிப்பாய். சந்திரனைக் கூப்பிடுவது போல உன் முகத்தால், எதிர்க்கும் ஜனங்களை வசை பாடிக் கொண்டு நீ அரச மாளிகையில் வளைய வருவாய். நீ எனக்கு எப்போதும் ஏவல் செய்வது போல, உனக்கு ஏவல் செய்ய கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று கேட்க, கூனிகளையே நியமிக்கிறேன். கைகேயி இவ்வாறு புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, இடை மறித்து கூனி சொன்னாள். தண்ணீர் வடிந்த பின் அணை கட்டி என்ன பயன்? படுக்கையில் படுத்திருப்பதை விட்டு எழுந்திரு. கல்யாணீ, அரசன் வரும் நேரமாகி விட்டது. அவனை எதிர்  கொள்ள தயார் ஆவாய். தன் சௌபாக்ய மதம், கர்வமாக தலைக்கேற, கூனியுடன் சென்ற கைகேயி, கோபாகாரம் எனப்படும் கோபம் வந்தால் தங்கும் மாளிகை சென்றடைந்தாள். பல மதிப்புள்ள முத்து  மாலைகளையும், உயர்ந்த ஆபரணங்களையும் களைந்து வீசி விட்டு, கூனியின் வார்த்தைகளில் மயங்கி, ஹேமோபமா (தங்கம் போன்றவள்- இதற்கு உரை சொல்லும் பொழுது – சரீரத்தால் மட்டும் பொன்னிறம் உடையவள் அல்ல. மனதாலும் சொக்கத் தங்கம் போன்றவள். அதனாலேயே கூனியின் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுக்கும்படி ஆயிற்று, என்கிறார்கள்) தரையில் படுத்தாள். இங்கேயே கிடந்து நான் இறந்து போனாலும் அரசனுக்குத் தெரியப் படுத்து. ராமன் வனம் சென்று, பரதன் முடி சூடும் வரை, எனக்கு இந்த ரத்னங்களாலோ, ஆபரணங்களோ ஒரு பயனும் இல்லை. ஆகாரமும் தேவையில்லை. ராமன் முடி சூடினால், அது என் வாழ்க்கையின் முடிவுக்கு வழி வகுத்ததாகும். இதன் பின்னும் கூனி அங்கேயே இருந்து, அந்த அரச குமாரியின் மனதைக் கலைக்கும்படி ராமனுக்கு விரோதமாக பேசிக் கொண்டே இருந்தாள். இனிமையான அந்த வார்த்தைகளின் விபரீதத்தை உணராமல் கைகேயி கேட்டுக் கொண்டிருந்தாள். ராமன் அரசனுக்கு எப்படி மகனோ அதே போலத்தான் பரதனும் மகனே. அதனால் நீ முயற்சி செய்து பரதனுக்கு முடி சூடச் சொல்வதில், தவறு எதுவுமில்லை. தயங்காமல் அரசனிடம் உனக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறுவாய். இப்படி திரும்பத் திரும்ப கூனி கூரிய அம்புகள் போன்ற தன் வார்த்தைகளால், குத்திக் கிளறுவது போல தன் கட்சியை வலுப் படுத்தும் வகையில் பேசப் பேச, கைகேயிக்கும் உஷ்ணம் ஏறியது. என் உயிர் போனாலும் விட மாட்டேன். ராமன் வனம் போனால் தான் என் மகன் தன் இஷ்டம் பூர்த்தியானவனாக ஆவான். எனக்கு இந்த உயர்ந்த ஆசனங்களோ, மாலைகளோ, சந்தனம் பூசிக் கொள்வதோ, கண் மை போன்ற அழகு சாதனங்களோ, ஆகாரமோ, பானமோ எதுவுமே வேண்டாம்.  எனக்கு எதுவுமே வேண்டாம். ராமன் வனம் புகாத வரை, எனக்கு என் உயிரும் ஒரு பொருட்டே அல்ல. பறந்து கொண்டிருக்கும் பறவை ஒன்று திடுமென விழுந்தாற் போல கைகேயி ஆபரணங்கள் எதுவுமில்லாமல் தரையில் படுத்து புரண்டவளாக, தானே வளர்த்துக் கொண்ட ஆங்காரத்தீயில் மூழ்கியவளாக, முகத்தில் கருமை படர, உத்தமமான சுபமான மாலைகளையும் கலைந்து, ஆகாயம்  நக்ஷத்திரங்கள் இல்லாமல் இருப்பது போல ஒளி யிழந்து காணப் பட்டாள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், ராம ப்ரவாஸனோபாய சிந்தா என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 10 (87)   கைகேயி அனுனய||  (கைகேயியை சம்மதிக்கச் செய்தல்)

 

கெட்ட எண்ணம் கொண்ட மந்தரை சொல்லிக் கொடுத்தபடி, கைகேயி, ஒரு சிறு குழந்தை அடிபட்டு, மயங்கி கிடப்பது போல பூமியில் கிடந்தாள்.  தான் செய்ய வேண்டியது என்ன என்று மந்தரையுடன் கலந்து பேசி தீர்மானித்துக் கொண்டு தன் செயலில் எள்ளளவும் சந்தேகம் இல்லாதவளாக (நன்மைக்காகவே என்ற எண்ணத்துடன்) பெருமூச்சு விட்டுக் கொண்டு, நாக கன்னிகை போல மந்தரையின் வார்த்தைக்கு கட்டுபட்டு ஆடிக் கொண்டிருந்தாள்.  ஒரு முஹுர்த்த நேரம் தனக்குள் யோசித்து முடிவு செய்து கொண்டு தன் தோழியாகி விட்ட மந்தரையிடம் விவரித்தாள்.

 

செல்வத்தையே குறியாக கொண்ட மந்தரை மகிழ்ந்தாள். முகத்தை சுருக்கிக் கொண்டு, திவ்யமான ஆபரணங்களையும், முத்து மாலைகளையும், விசித்ரமான மற்ற ஆபரணங்களையும் கழற்றி கீழே வைத்தாள். ஆகாயத்தை நக்ஷத்திரங்கள் அலங்கரிப்பது போல அவை அந்த தரையை அலங்கரித்தன.  அந்த க்ரோத க்ருஹத்தில் அழுக்கு வஸ்திரத்தை உடுத்திக் கொண்டு,  ஒரு பக்கமாக தலையை இறுக்க முடிந்து கொண்டு, விதியின் கை பொம்மையாக கிடந்தாள். இங்கு, மகாராஜா, ராமனின் முடி சூட்டு விழாவிற்காக, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய கட்டளைகளைப் பிறப்பித்து விட்டு, அனுமதி கொடுத்து அனுப்ப வேண்டியவர்களை அனுப்பி விட்டு மாளிகையின் உள்ளே நுழைந்தார். மனதினுள், ராமனுக்கு முடி சூட்டு வைபவத்தையே திரும்ப திரும்ப அசை போட்டபடி,  பிரியமான மனைவியிடம், பிரியமான விஷயத்தை தானே சொல்ல விரும்பி, அந்தஃபுரத்தில் கைகேயியின் இருப்பிடம் நோக்கி நடந்தார்.  வெண் மேகம் சூழ்ந்த ஆகாயத்தில், சந்திரனை ராகு பிடிக்க காத்திருப்பது போல,  கிளிகளும்,  மயில்களும் க்ரௌஞ்ச பக்ஷிகளும், ஹம்ஸங்களும் வளர்க்கப் பட்டு வரும் அந்த மா ளி கையினுள் நுழைந்தார். வாத்யங்களின் ஓசை நிறைந்திருந்தது. குப்ஜா எனும் கூனிகளும், சிறு உருவம் உடைய (வாமன) பெண்களும் நடமாடிக் கொண்டிருந்தனர்.  (ஏவல் செய்பவர்கள்)  லதா க்ருஹங்களும், சித்ர சாலைகளும், சம்பக, அசோக மரங்கள் நிறைந்து அழகு சேர்க்கும் விதமாக, அழகிய வெள்ளி, தங்க தகடுகள் வேயப் பெற்ற முன்னறைகள். சுற்றிலும், எப்பொழுதும் மலரும் மலர்களைக் கொண்ட நந்தவனம்.  அழகிய ஆசனங்களுடன் தோட்டங்கள். அன்னம், பானம், பலகாரங்கள் பலவிதமாக தயார் செய்யப் பட்டு, யார் எப்பொழுது வந்தாலும், நன்கு உபசரிக்கப் பட்டு வயிராற உண்டு மகிழ்ந்து செல்லும்படியாக இருந்த அறைகளும், தேவர்களுக்கு சமமாக அலங்கரித்துக் கொள்ள ஆபரணங்களுமாக இருந்த அறைகளைக் கடந்து தசரத ராஜா, தன் அறைக்கு வந்தார். மகாராணியான கைகேயியை அங்கு காணாமல் திகைத்தார்.  உத்தமமான சயனம் (படுக்கை)  கேட்பாரின்றி கிடக்க, மிகவும் வேட்கையுடன் வந்திருந்த அரசன் காம வசம் ஆனார்.  அங்குள்ளோரை விசாரித்தார். இதற்கு முன் ராணி இந்த நேரத்தில் எங்கும் சென்றதில்லையே.  அரசனின் வருகையை எதிர் நோக்கியே இருப்பவள் இன்று எங்கு சென்றாள்? ஒரு போதும் அரசன் அந்த மாளிகையை சூன்யமாகக் கண்டதில்லை. கைகேயியைப் பற்றி விசாரிக்கவும், ஒரு காவல் பணிப் பெண் நடுங்கிக் கொண்டு, கை கூப்பியபடி, தேவனே, தேவி, மிகவும் கோபித்துக் கொண்டு கோபாக்ரஹம் சென்று விட்டாள் என்றாள்.

 

இந்த செய்தியை நம்பவும் முடியாமல், சஞ்சலமடைந்த மனதுடன்,  குழப்பத்துடன் க்ரோதாகாரம் எனும் மாளிகையை அடைந்த அரசன், தரையில் விழுந்து கிடந்த தேவியைக் கண்டார். கண்டதும், அரசனின் மனம் நெருப்பினால் சுட்டது போல வாடியது. துக்கம் பொங்க, அந்த வயது முதிர்ந்த அரசர், இள வயதினளான மனைவியை, உயிருக்கும் மேலாக நேசிக்கும் தன் பத்னியை, கல்மஷம் சற்றும் இல்லாதவன், பாபமே உருவாக தரையில் கிடந்த மனைவியைக் கண்டு உருகினார்.  பிடுங்கி எறியப் பட்ட கொடியைப் போலவும், தேவலோகத்திலிருந்து கீழே விழுந்த தேவதா ஸ்த்ரீயைப் போலவும் அடிபட்ட சிறு குழந்தை போலவும், கால் தடுக்கி விழுந்து விட்ட அப்ஸர ஸ்த்ரீயோ எனும் படி,  அழகிய மாலை நழுவி விழுந்தது போலவும், மான் குட்டி ஒன்று தன்னைக் காத்துக் கொள்ள போராடுவது போலவும், வேடனால் விஷம் தோய்ந்த அம்பினால் அடிக்கப் பட்ட யானைக் குட்டி போலவும் கிடந்தவளை பெரிய யானை தடவிக்கொடுப்பது போல, அரசன் மிகவும் வாத்ஸல்யத்துடன் தொட்டார். மனதில் பலவிதமான கவலைகளுடன், பயத்துடனும், காமமும் அலைக்கழிக்க, அவளை அணைத்து சமாதான படுத்திய படி சொன்னார்.  தாமரை மலரின் இதழைப் போன்ற கண்களையுடைய  அந்த பெண்ணிடம் மனதை பறி கொடுத்த கணவனாக, அவளிடம் பரிவுடன் விசாரித்தார். தேவி, இது போல கோபம் கொண்டு நான் கண்டதேயில்லையே. யார் உன்னை அவமானப் படுத்தியது? யார் உன்னை ஏவியிருக்கிறார்கள். என் மனம் துக்கம் அடையும் படி இந்த பூமியில் படுத்து, நான் உயிருடன் இருக்கையில் புழுதியில்  படுத்து, ஏன் இந்த கோலம்?  என் சித்தத்தை அலைக்கழிக்கிறாய். பஞ்ச பூதங்களால் ஆட்டுவிக்கப் படும் சேதனனைப் போல, நான் தவிக்கிறேன்.  என் சபையில் நல்ல வைத்யர்கள் இருக்கிறார்கள்.  என்னிடம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.  என்ன வியாதி உன்னை வருத்துகிறது சொல், பாமினி, உன்னை உடனே நல்ல முறையில் குணப்படுத்தி விடுவார்கள்.  யாருக்கு என்ன செய்தால் உனக்கு மன சமாதானம் ஆகும் சொல். உடனே செய்கிறேன்.  யார் உனக்கு இஷ்டமில்லாததைச்  செய்தார்கள்? சொல், அவர்களை தண்டிக்கிறேன். இதோ இப்பொழுதே சொல், யாருக்கு நல்லது, யாருக்கு கெடுதல் செய்ய வேண்டும் சொல். அழாதே, தாயே, அழாதே. வருந்தாதே.  தேவி உன்னை வருத்திக்  கொள்ளாதே. நீ கட்டளையிட்டால் எது வேண்டுமானாலும்  செய்வேன்.  கொல்லத் தகாதவனைக் கொல்ல வேண்டுமா? கொலை தண்டனை பெற்றவனை விடுவிக்க வேண்டுமா?  சொல். தரித்திரனை தனவானாக செய்ய வேண்டுமா?  பணம் படைத்தவனை செல்லாக் காசு இல்லாதவனாக ஆக்க வேண்டுமா? நானும், என்னைச் சார்ந்த அனைத்துமே உன் வசத்தில் தானே உள்ளன.  நீ சொல்லி எதையும் நான் மறுத்ததில்லையே. என் உயிரைக் கொடுக்கவும் சித்தமாக இருக்கிறேன். சொல். உன் மனதில் என்ன இருக்கிறது என்பதைச் சொல். என் பலம் நீ அறிந்ததே. சந்தேகம் கொள்ள வேண்டாம். நான் செய்துள்ள நற்காரியங்களின் பேரில் சபதமிட்டுச் சொல்கிறேன்.   என் பூமி விசாலமானது.  சூரியனின் சக்கரம் சுழன்று முழு சுற்று வரும் வரை வியாபித்துள்ளது.   கிழக்கு திசையினர், (த்ராவிடாஃ என்றும் பாடம்)  சிந்து சௌவீர தேசத்தவர், தக்ஷிண தேசத்தினர், சௌராஷ்டிர  தேசத்தினர், வங்க, அங்க, மகத, மத்ஸ்யர்கள் நிறைந்த காசி, கோசல தேசத்தவர், இங்கும் எங்கும் உற்பத்தியான பெரும் செல்வம், தன தான்ய, கால் நடைகள், இவைகளில் எது வேண்டுமானாலும் கேள், கைகேயி, எது உன் மனதிற்கு இசைந்ததோ, அதை தர நான் சித்தமாக இருக்கிறேன்.  இப்படி ஆயாசமாக ஏன் இருக்கிறாய்?  எழுந்திரு, எழுந்திரு, பயப்படாதே. சோபனே, உண்மையைச் சொல்.  ஏன் பயப்படுகிறாய்? என்ன காரணம் என்று சொல், உடனே நான் நிவர்த்திக்கிறேன். சூரியனைக் கண்ட பனித்துளி  போல உன் கஷ்டங்களை விலக்குகிறேன்.  இவ்வளவு சொன்ன பின் சமாதானம் அடைந்தவளாக, தான் சொல்லப் போகும் விஷயம், அரசனுக்கு அப்ரியம்- பிடிக்காமல் போகலாம் என்று தெரிந்திருந்தும், கணவனை மேலும் துன்புறுத்தும் விதமாக பேச முற்பட்டாள்.

 

இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில்,  கைகேயி அனுனயஃ   என்ற பத்தாவது  அத்தியாயத்தின் தமிழாக்கம்.)  

 

அத்தியாயம் 11 (88)   வரத்3வய நிர்ப4ந்த||(தனக்கு தந்த இரண்டு வரங்களையும் தரும்படி நிர்பந்தித்தல்)

 

மன்மதனுடைய கூரிய பாணங்களால் துளைக்கப் பட்டவனாக தன்னிடம் வந்து வேண்டும் அரசனிடம் கைகேயி கடுமையாக பேசினாள். யாரும் என்னை விட்டு போகவும் இல்லை. யாரும் என்னை அவமானப் படுத்தவும் இல்லை. எனக்கு ஒரு விருப்பம் உள்ளது.  அதை தங்கள் மூமூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறேன்.  செய்வேன் என்று முதலில் பிரதிக்ஞை செய்து கொடுங்கள். பின் என் விருப்பதைச் சொல்கிறேன்.   இதைக் கேட்டு அரசன் சிரித்தான். அவளைப் பார்த்து பரிவுடன் தலையை கைகளில் தாங்கி, உச்சி முகர்ந்து, தரையில் அமர்ந்திருந்தவளிடம் அசடே, உனக்குத் தெரியாதா? உன்னை விட எனக்கு பிரியமானவர்கள், மனிதர்களுள் புலி போன்ற ஒரே மனிதனான என் ராமனைத் தவிர வேறு யார் உண்டு?  மகாத்மாவான, ராகவர்களுள் முக்யமான, யாராலும் வெல்ல முடியாத பராக்ரமம் உடைய ராமன் பெயரில் சபதமிடுகிறேன்.  என் வாழ்க்கை யாரால் பயனுள்ளதாக ஆயிற்றோ, அந்த ராமன் பெயரால் சபதமிடுகிறேன்.  நீ சொல். உன் மனதில் உள்ளதைச் சொல்.  எந்த ராமனை முஹுர்த்த நேரம் காணாவிடில் தவித்துப் போவேனோ, உயிரையே இழந்து விட்டவன் போல வாட்டமடைவேனோ, அந்த ராமன் பேரில் சபதமிடுகிறேன்.  நீ சொல்வதை கண்டிப்பாக செய்வேன்.  மற்ற பிள்ளைகள், நான் எல்லோரையும் சேர்த்து ஒருவனை வேண்டு என்றால் எந்த ராமனை வேண்டுவேனோ, அவன் பேரில் சபதமிடுகிறேன். கைகேயி நீ விரும்புவதைத் தருவேன். என் உடலிலிருந்து ஹ்ருதயத்தை பிரித்து தர வேண்டுமானாலும் கேள். இதையெல்லாம் யோசித்து எது வேண்டும் என்று சொல்.  என் பலம் உனக்குத் தெரிந்ததே.  என்னை சந்தேகப்படாதே.  என் புண்யங்கள் அனைத்தின் பேரிலும் சபதமிட்டுச் சொல்கிறேன்.  நீ வேண்டுவதைத் தருவேன்.  இதையே எதிர் நோக்கி இருந்த கைகேயி, தன் வழிக்கு அவன் வந்து விட்டதை உணர்ந்து, சந்தோஷத்துடன் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினாள். அரசனுடைய சமாதானமான பதிலால், தன் இஷ்டம் நிறைவேறும் என்று நினைத்தவளாக, நம்பிக்கையோடு கடுமையான தன் விருப்பத்தை சொன்னாள்.  மகா பயங்கரமான, அந்தகனே வந்து நின்றது போன்ற கடுமையான சொற்கள் அவள் வாயிலிருந்து வெளிப்பட்டன.  எனக்கு வரங்களைத் தருவதாக வரிசையாக சபதமிட்டு  சொன்னாயே, அதை அக்னி முதல் முப்பத்து முக்கோடி தேவர்களும் கேட்கட்டும். சந்திரன், ஆதித்யன், ஆகாசமும்,  ராத்திரி, பகல் , திசைகளும், லோகங்களும், பூமியும், கந்தர்வ ராக்ஷஸ கூட்டங்களும், இரவில் சஞ்சரிக்கும் ஜீவன்களும்,

வீடுகளில் உள்ள குல தெய்வங்களும், மற்றும் உள்ள ஜீவ ஜந்துக்கள்,  பஞ்ச பூதங்களும் அறியட்டும்.  நீ பேசியதை, உன் சொல்லை கேட்கட்டும். தேவதைகளே, இந்த அரசன், சத்ய சந்தன், மகா தேஜஸ் உடையவன், தர்மம் அறிந்தவன், சுய கட்டுப்பாடு உடையவன், இந்த ராஜா எனக்கு வரம் கொடுத்திருக்கிறார்.  கேளுங்கள்.  ப்ருஹஸ்பதியைக் குறித்து சபதமிட்டு பின் சொல்லலானாள்.  உணர்ச்சி வசமானதில், வரத்தைக் கொடுத்து விட்ட அரசனைப் பார்த்து  அரசனே, நினைவு படுத்திக் கொள். முன்பு  ஒரு சமயம் தேவாசுரர்களுக்கு இடையில் நடந்த யுத்தத்தில், சத்ருக்கள் உங்களைத் தாக்கி, உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த உங்களை நான் காப்பாற்றியிருக்கிறேன்.  மிகவும் ஜாக்ரதையாக பாதுகாத்து  தேற்றியிருக்கிறேன்.  அப்பொழுது எனக்கு வரம் தருவதாக சொன்னீர்கள். அந்த இரண்டு வரங்களையும் உடனே ஏற்றுக் கொள்ளாமல் உங்களிடமே விட்டு வைத்தேன். இப்பொழுது அந்த வரங்களை வேண்டுகிறேன்.  எனக்குத் தருவதாக வாக்களித்த வரங்களைத் தான் வேண்டுகிறேன். மறுத்தால், எனக்கு தாங்கள் செய்யும் மிகப் பெரிய அவமானமாக கருதி உயிரை விடுவேன்.  இப்படி வார்த்தைகளாலேயே கைகேயி அரசனை அலைக்கழித்து தன் வசம் ஆக்கிக் கொண்டாள். தானே வலையில் விழுந்த மான் போல ஆனான் அரசன். வரம் தருபவனான தசரத ராஜா, செய்வதறியாது மயங்கி நின்றிருந்த சமயம்,  கைகேயி,  வஞ்சகமான தன் எண்ணத்தை நயமாக விவரித்தாள்.  மஹீபதே, அந்த சமயம் நீங்கள் வாக்களித்த இரண்டு வரங்களையும் இப்பொழுது பெற்றுக் கொள்கிறேன்.  ராகவனான ராமனுக்கு முடி சூட்டு விழா, அபிஷேகம் என்று செய்யப் பட்டுள்ள இந்த ஏற்பாடுகளைக் கொண்டு என் பரதனுக்கு ராஜ்யாபிஷேகம் நடக்கட்டும். மிகவும் மகிழ்ந்து இரண்டாவது வரம் தந்தீர்களே, தேவாசுர யுத்த சமயம், அதையும் கேட்கும் காலம் வந்து விட்டது. ஒன்பதும் ஐந்துமாக வருஷங்கள் தண்டகா வனத்தில்  வல்கலையும், ஜடையும் தரித்து ராமன் தபஸ்வியாக ஆகட்டும்.  என் பரதன் எந்த வித தடையுமின்றி இந்த யுவ ராஜா பதவியை அனுபவிக்க வேண்டும்.  நீங்கள் கொடுத்த வரத்தை தான் கேட்கிறேன். இது தான் என் ஆசை. இன்றே ராமன்,  வனம் புறப்பட்டுச் செல்வதை நான் காண வேண்டும்.  அரசனே, நீங்கள் சத்ய சந்தனான ராஜ ராஜாவாக ஆகுங்கள். உங்கள் குலத்தையும் சீலத்தையும், வாழ்க்கையையும் ரக்ஷித்துக் கொள்ளுங்கள். தபோதனர்கள் ஒரே இடத்தில் வசிப்பதை உத்தமமாக கருத மாட்டார்கள்.  அதே போல வாக்குத் தவறுவதும்  அவர்களுக்கு அழகல்ல.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், வரத்3வய நிர்பந்தஃ என்ற பதினொன்றாவது  அத்தியாயத்தின் தமிழாக்கம்.)  

அத்தியாயம் 12 (89)  கைகேயி நிவர்த்தன பிரயாஸ|| (கைகேயியை திருத்த முயற்சி)

 

கைகேயியின் இந்த கடும் வார்த்தைகளைக் கேட்டு அரசன் நிலை குலைந்து போனான்.  ஒரு முஹுர்த்த காலம் தவித்தான். எனக்கு புத்தி பேதலித்து விட்டதா? கனவு காண்கிறேனா?  எந்த துர்க்3ரஹமாவது என்னை பிடித்து ஆட்டுவிக்கிறதா?  மனதின் உபத்ரவமா? இப்படி பலவும்  எண்ணி அரசன் மறுகினான்.  கைகேயியின் வார்த்தைகளால் அடிபட்டு நினைவிழந்தவன்,  நினைவு திரும்பியதும், கொடூரமான  பெண் புலியை எதிரில் கண்ட மான் குட்டி போலானான். கடும் விஷம் கொண்ட நாகம் மந்திரத்தால் கட்டுபடுத்தப் பட்டு செய்வதறியாது திகைப்பது போல திகைத்து நின்றான். மிகவும் கோபமும், தாபமுமாக, (அஹோ| திக்|) என்று தன்னைத் தானே நொந்து கொண்டவனாக, மறுபடியும் நினைவிழந்தான்.  சோகம் அவனை தள்ளி  விட்டது. வெகு நேரம் சென்ற பின் திரும்பவும் நினைவு வந்ததும், வருத்தத்துடன்,  கண்களால் அவளை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டு, கோபத்துடன் கைகேயியிடம் சொன்னான்.  இந்த குலத்தைக் கெடுக்க வந்த துஷ்ட சாரித்ரே |  கொடூரமானவளே | ராமன் உனக்கு என்ன கெடுதல் செய்தான்? நான் தான் என்ன கெடுதல் செய்தேன்? எப்பொழுதும் தன் தாயாருக்கு சமமாக உன்னை எண்ணி மரியாதை கொடுத்து வந்திருக்கிறான். அவனுக்கு ஒரு அனர்த்தம் செய்ய, இப்படி பிடிவாதம் கொண்டு நிற்கிறாயே.  என்னை நானே அழித்துக் கொள்ளத்தான் இந்த மாளிகைக்குள் வரவழைத்தாயோ?  கடும் விஷம் கொண்ட பாம்பு நீ என்று அறியாமல் போனேன்.  உலகம் பூராவும் ராமனின் குணங்களை பாராட்டுகிறது. எந்த அபராதத்தை உத்தேசித்து, என் உயிருக்குயிரான மகனை வெளி யேற்றுவேன்.  கௌசல்யையை விட்டாலும், சுமித்திரையை விட்டாலும், ராஜ்ய லக்ஷ்மியை விட்டாலும், என் உயிரையே விட்டாலும் விடுவேன். தந்தையிடம் பற்று மிக்க ராமனை நான் தியாகம் செய்ய மாட்டேன்.  என் மூத்த மகனைக் காணும் போதெல்லாம் என் மனதில் அன்பு பிரவாகம் எடுத்து ஓடும்.  அவனைக் காணாத பொழுது என் உணர்வையே இழந்தது போலாவேன். உலகமே சூரியன் இல்லாது ஸ்தம்பித்து நிற்கட்டும். பயிர்கள் ஜலமில்லாமல் வாடட்டும். ராமன் இல்லாமல் என் உடலில் உயிர் தரிக்காது.  பாபம் செய்யத் துணிந்தவளே|  இந்த பாப காரியத்தை செய்யும் எண்ணத்தை விட்டு விடு.  உன் கால்களில் தலை வைத்து  வணங்க வேண்டுமானாலும் வணங்குகிறேன்.  கருணை காட்டு.  பாபியே| இது போன்ற கொடிய எண்ணம் உனக்கு ஏன் வந்தது?  என்னை பரீக்ஷை செய்து பார்க்கிறாயா?  பரதனிடத்தில் எனக்கு அன்பு உண்டா என்று சோதித்து பார்க்கிறாயா?  ராமனை புகழ்ந்து பேசியது உனக்கு பிடிக்கவில்லையா?  எப்படியும் அவன் என் மூத்த மகன்.  தர்மம் அறிந்தவன்.  ஸ்ரீமானான அவன் என்னை விட தர்மத்தில் சிறந்தவன்.  அதைக் கேட்டு என்னை வருத்துகிறாயா?  சூன்யமான இந்த மாளிகையில் நுழைந்திருக்கிறாய். இங்குள்ள துர்தேவதைகள் உன்னை பிடித்துக் கொண்டு விட்டதோ?  எப்பொழுதும் நயமாக பேசுபவளே, இப்படி ஒரு அநியாயமான வார்த்தை உன் வாயில் இக்ஷ்வாகு குலத்திற்கு வந்து சேர்ந்த உன்னால்  எப்படி சொல்ல முடிகிறது. தவறாகவோ, சொல்லக் கூடாததையோ நான் எப்பொழுதும் உன்னிடம் பேசியதில்லையே. உனக்கு ராமன் பரதனுக்கும் மேல் என்று நீயே பலமுறை  கதை கதையாக சொல்லியிருக்கிறாய். அந்த தர்மாத்மாவை வனம் போகச் சொல்ல எப்படி துணிந்தாய்? அதுவும் ஒன்பது வருஷம், பின்னுமொரு ஐந்து வருஷம் என்று கேட்கிறாயே.  தர்மத்தில் மனம் ஒன்றி இருக்கும் ராமன் மிகவும் சுகுமாரன்,  அவனை எப்படி பயங்கரமான வனத்தில் வாசம் செய்ய அனுப்புவேன். நீ தான் எப்படி துணிந்து கேட்கிறாய்.  உனக்கு சேவை செய்யும் ராமனை அபிராமனான ராமனை, அழகிய சுபமான கண்களை உடையவளே | எதற்காக இந்த வனவாசம்.  பரதனை விட அதிகமாக ராமன் தானே உனக்கு பணிவிடைகள் செய்து வந்திருக்கிறான். அதனால் பரதன் அருகில் இல்லாததை கூட உணரவில்லையே. நீ சொன்னதை உடனே செய்தும், உனக்கு மரியாதையும், கௌரவமும் அளித்து, பணிவிடைகளையும் குறைவில்லாமல் செய்து வந்திருக்கிறான்.  அவனிடம் என்ன துவேஷம்.  மனித ருஷபன் என்று சொல்லும்படி கம்பீரமான ராமனைத் தவிர வேறு யாரால் இப்படி நடந்து கொள்ள முடியும்? இவ்வளவு ஆயிரக் கணக்கான ஸ்த்ரீகள், பரிசாரிகைகள் நடமாடும் இடத்திலும், ராமனை இகழ்ந்து அபவாதமாக ஒரு   சொல் சொல்ல அவன் இடம் அளித்ததில்லை. சுத்தமான மனதோடு எல்லா ஜீவன்களையும் சமாதானப் படுத்திக் கொண்டு, விஷயத்தில் ஈ.டுபட்டவர்களையும் பிரியமான வார்த்தைகளால் திருத்துகிறான். சத்யத்தால் உலகங்களை ஜயித்தவன். தீனர்களான ஏழைகளை தானம் கொடுத்து வசப்படுத்திக் கொள்கிறான். குரு ஜனங்களை தன் பணிவிடையால் வசப் படுத்திக் கொள்கிறான். யுத்தத்தில் சத்ருக்களை தன் பராக்ரமத்தால் ஜயிக்கிறான். ராகவனிடத்தில் என்ன இல்லை? சத்யம், தானம், தவம், த்யாகம், நட்பு, ஒழுக்கம், காருண்யம், நேர்மை, வித்யா, குருவிடம் பணிந்து இருத்தல் இவையனைத்தும் ராகவனிடத்தில் உள்ளன.

 

தேவர்களுக்கு சமமானவன், நேர்மையே உருவானவன், மகரிஷிகளுக்கு சமமான தேஜஸ் உடையவன். இந்த ராமனிடத்தில் எப்படி பாபத்தை செய்ய நினைக்கிறாய். மற்றவர்கள் அவனிடம் கடுமையாக, வன்மையாக பேசியதைக் கூட மறந்து விடுவான். தான் எப்பொழுதும் பிரியமாகவே பேசுவான். அவனிடத்தில் எப்படி  சொல்லுவேன். உனக்காக, உன்னை திருப்தி படுத்த அவனிடம் இவ்வளவு தகாத வார்த்தைகளை சொல்ல எனக்கு நா எழ வேண்டுமே? அவனை விட்டால் எனக்கு வேறு கதியே இல்லையே. பொறுமை யாரிடத்தில் குடியிருக்கிறதோ,  தவமும், த்யாகமும், சத்யமும், தர்மமும், செய் நன்றியும், ஜீவ ஜந்துக்களை சிறிதளவும் ஹிம்ஸை செய்யாத குணமும், உடைய ராமன் தானே எனக்கு கதி. கைகேயி, வயது முதிர்ந்து என் முடிவை  நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கருணை காட்டு. தீனனாக செய்வதறியாமல் நிற்கும் என்னிடம் கருணை காட்டு. சமுத்திரம் சூழ்ந்த இந்த பூமியில் என்னவெல்லாம் தர முடியுமோ,  அவ்வளவையும்  உனக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த கோபத்தை விடு. கை கூப்பி வணங்குகிறேன்.  பாதங்களில் விழுகிறேன். ராமனுக்கு சரணம் அளி.  என்னை அதர்மம் தொடராமல் இருக்கட்டும்.  இவ்வாறு புலம்பும் அரசனைப் பார்த்து கைகேயி மேலும் கடும் கோபமே கொண்டாள். அதிக ஆத்திரத்துடன் முன்னிலும் கடுமையாக பேசினாள். எனக்கு இரண்டு வரங்களைக் கொடுத்து விட்டு இப்பொழுது மறுக்கிறாயே, அரசனே| உன்னை உலகில் தார்மிகனாக ஏற்றுக் கொள்வார்களா?  ராஜரிஷிகள் கூடும் சபையில் கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள் ?  யார் தயவால் இன்று நான் உயிருடன் இருக்கிறேனோ,  சமயத்தில் என்னைக் காப்பாற்றினாளோ அந்த கைகேயியிக்கு துரோகம் செய்து விட்டேன் என்று சொல்லுங்கள். அரச குலத்துக்கே இப்பொழுது ஒரு களங்கமாக ஆகிவிட்டீர்கள், அரசனே. இதோ வரம் கொடுத்து விட்டு, பின்னாலேயே வேறு ஏதேதோ பேசுகிறீர்கள். சிபி சக்ரவர்த்தி, புறாவுக்காக கழுகுக்கு தன் மாமிசத்தையே கொடுத்தான். அலர்க்கன் உத்தமமான கண்களை தானம் செய்து விட்டு நல்ல கதியை அடைந்தான். சமுத்திரம் சத்யத்திற்கு கட்டுப் பட்டு தன் எல்லையை மீறுவதில்லை. உங்களுடைய கெட்ட எண்ணம் எனக்குத் தெரிகிறது. தர்மத்தை விட்டு ராமனுக்கு முடி சூட்டிவிட்டு, கௌசல்யையோடு சுகமாக இருக்க விரும்புகிறாய்.  தர்மமோ, அதர்மமோ, சத்யமோ, அசத்யமோ, எதுவானாலும் சரி.  இப்பொழுது என்னிடம் வாக்கு கொடுத்தது தான். இதில் மாற்றமே இல்லை. ஏராளமாக விஷம் குடித்து உன் எதிரிலேயே சாவேன்.   ராமனுக்கு முடி சூட்டி அரசனாக்க நினைத்தாயானால், மற்றவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டு  ராம மாதா நிற்பதை பார்க்க நான் உயிருடன் இருக்க மாட்டேன். அதைக் காண்பதை விட எனக்கு மரணமே மேல்.  ராமனை காட்டுக்கு அனுப்பாதவரை எனக்கு நிம்மதியில்லை.  மகிழ்ச்சி இல்லை. என் பேரிலும், பரதன் பேரிலும் சபதமிட்டு இதைச் சொல்வேன்.   கைகேயி இவ்வாறு சொல்லி நிறுத்தினாள். அழுது கொண்டிருந்த அரசனை அவள் சட்டை செய்யவும் இல்லை, பேச்சு கொடுக்கவும் இல்லை.  கடுமையான இந்த வார்த்தைகளைக் கேட்டு அரசன் கலங்கினான்.

 

ராமனுக்கு வனவாசம், பரதனுக்கு ஐஸ்வர்யம் இதையே திரும்ப திரும்பச் சொல்லும் கைகேயியிடம் பேசவும் மனம் வரவில்லை. இந்திரியங்கள் நிலை குலைய ஒரு நிமிஷம் இருந்தான்.  இதுவரை பிரியமாக இருந்தவள், எப்படி இவ்வளவு கடும் சொற்களை சொல்பவளாக ஆனாள் என்று யோசிப்பது போல அவளை நிமிர்ந்து பார்த்தான். எப்பொழுதும் அவளைக் காணும் பொழுது ஏற்படும் சுகானுபவம் ஏற்படவில்லை. வஜ்ரம் போல அவளது வார்த்தைகள் ஹ்ருதயத்தை பிளந்தன.  தான் செய்த சபதங்களையும் அதன் பின் விளைவுகளையும் நினைத்து ராமா என்று அழைத்தபடி வேரோடு சாய்ந்த மரம் போல கீழே விழுந்தான்.  உன்மத்தன் போல,  மிகுந்த கஷ்டத்தில் இருப்பவனைப் போல, தன் தேஜஸை இழந்த மகா நாகம் – பெரிய யானை – போல விழுந்தான். பூமியில் கிடந்த அரசன் தீனமான குரலில் கைகேயியிடம் பேசினான். என்றுமில்லாமல் இந்த பொருளாசை எப்படி வந்தது? இதன் பலன் அனர்த்தம், தான் என்பது தெரியவில்லையா.   ஏதோ பூத பிசாசுகளால் பீடிக்கப் பட்டவள் போல வெட்கமின்றி பேசுகிறாய்.  இப்படி ஒரு துர்குணம் கொண்டவள் என்பது எனக்கு முன்னால் தெரியாமல் போய் விட்டதே. குழந்தை போல வெகுளியாக இருந்தாய். இப்பொழுது விபரீதமாக உணருகிறேன். யாரிடம் உனக்கு பயம்? ஏன் இந்த விதமாக வரம் கேட்கிறாய்.    பரதன் அரியணையில் அமரவும், ராமன் வனம் போகவும் விரும்புகிறாய். எதற்கு இந்த விபரீத ஆசை.  உலகத்துக்கும், பரதனுக்கும், உன் கணவனான எனக்கும் நன்மை விரும்புவாயானால்,  இந்த விபரீத ஆசையை விடு. கொலைக்கும் அஞ்சாத துர்குணம் கொண்டவளே. பாபத்தை சங்கல்பம் செய்து கொண்டு,  அல்பமாக பேசுகிறாயே.  என்னிடமோ ராமனிடமோ உனக்கு என்ன கஷ்டம், ஏன் இப்படி கெடுதல் செய்ய நினைக்கிறாய்? நீயாக நினைத்துக் கொண்டால் கூட நாங்கள் அதற்கு இடம் கொடுத்ததில்லையே.  எப்படியோ ராமனை விரட்டி விட்டாலும் கூட பரதன் ராஜ்யத்தை ஆள முடியாது.  ராமனை விடவும் அதிக தர்ம சிந்தனை உடையவன். வனம் போ என்று நான் சொன்னால்,  கேட்கும் ராமனது முகம் எப்படி வாடும்.    அதை நான் எப்படி சகிப்பேன்.  சந்திரனை கிரகங்களால் மறைத்தால் போல அவன் முகம் வாடுமோ?  நான் என் நண்பர்களுடன் கூடி எடுத்த முடிவை இப்பொழுது மாற்றிக் கொண்டால், எல்லா திக்குகளிலும் இருந்து வந்துள்ள அரசர்கள் என்ன செய்வார்கள் ? இந்த இக்ஷ்வாகு ராஜன், வெகுகாலமாக ஆட்சி செய்தான், இப்பொழுது சிறு பிள்ளைத்தனமாக இப்படி ஒரு செயலை செய்கிறானே என்று தூற்ற மாட்டார்களா ? பல ஞானிகள், பெரியவர்கள் வந்து விசாரிப்பார்களே, என்ன சொல்வேன்?  அவர்களிடம், கைகேயி பிடிவாதம் பிடித்தாள், அதனால் உத்தமமான என் மூத்த பிள்ளையை காட்டுக்கு விரட்டி விட்டேன் என்று சொல்வேனா? சத்யம் என்று இதைச் சொன்னால் மற்றது அசத்யமாகும். கௌசல்யையிடம் போய் உன் மகனை காட்டுக்கு அனுப்பி விட்டேன் என்று சொல்ல எனக்கு எப்படி தைரியம் வரும். இப்படி ஒரு பாபத்தை செய்யச் சொல்கிறாயே. கௌசல்யை தாஸி போலவும், சினேகிதி போலவும், என் மனைவியாகவும், சகோதரி போலவும், சமயங்களில் தாயார் போலவும் என்னிடம் நடந்து கொண்டிருக்கிறாள். எப்பொழுதும் என்னிடம் பிரியமாகவே பேசுவாள். அவளுக்கும் புத்திரனிடத்தில் அளவில்லாத அன்பு உண்டு.  எப்பொழுதும் நன்மையையே நாடுபவள்.  இருந்தும், அவளை என் மரியாதைக்கும், மதிப்புக்கும் உரியவளாக இருந்தும்,  உன் காரணமாக அவளை அலட்சியப் படுத்தினேன்.  உனக்கு நான் வாரி வாரி செய்ததையெல்லாம் நினைத்தால் என் மனம் கொதிக்கிறது.  கெடுதலை தரும் பதார்த்தங்களோடு அன்னத்தை உட்கொண்ட ஒருவன், வியாதியினால் தவிப்பது போல ராமனுக்கு கொடுத்ததை மாற்றி விட்டேன், இன்று காட்டுக்கு போகிறான் என்று அவளிடம் எப்படி சொல்வேன்.  இதை எல்லாம் பார்த்து சுமித்ரா நடுங்குவாள். என் அருகில் வரவே பயப்படுவாள்.  என்னை எப்படி நம்புவாள்? வைதேஹி என்ன நினைப்பாள்? இரண்டு விரும்பத்தகாத விஷயங்களை அவளிடம் சொன்னால் என்னை அற்பன் என்று நினைப்பாள்.  நானும் காலகதியடைந்து, ராமனும் வனத்துக்கு போய் விட்டால், வைதேஹி எப்படி காலம் கழிப்பாள்?  இமயமலைச் சாரலில்,  கின்னரனான கணவனைப் பிரிந்த கின்னரி போல அழும் மைதிலியை காண நேர்ந்தால் நான் உயிர் வாழவே மாட்டேன்.    நீ விதவையாகி உன் புத்திரனோடு ராஜ்யத்தை அனுபவி. சதி என்று உன்னை நினைத்திருந்தேன். அசதி என்று இப்பொழுது தான் புரிகிறது.   அளவுக்கு மீறி மதுவைக் குடித்தவன், விஷக் கன்னிகையை அழகி என்று நினைத்தது போல மோகம் என் கண்களை மறைத்து விட்டது. பொய்யான சமாதான வார்த்தைகள் பேசி என்னை சமாதான படுத்த முயலாதே. கீதத்தைக் கேட்டு மயங்கி வந்த மானை அடிப்பது போல அடித்து விட்டாய். பண்புள்ளவன் என்று நினைத்த பிராம்மணன், கள்ளுண்டால் பெரியவர்கள் ஒதுங்குவார்கள். தெருவில் அவனைக் கண்டால்  விலகி நடப்பார்கள். இவன் புத்ரனையே விலை பேசி விட்டானே என்று என்னை திட்டுவார்கள்.  ஆ, இது என்ன துக்கம்? இது என்ன கஷ்டம். வார்த்தைகளே இல்லையே,  உன்னைத் திட்ட. எப்பொழுதோ செய்த ஒரு அசுபமான காரியத்தின் பலன் இப்பொழுது வந்து தாக்குகிறது.  பாபியான நீ என்னை காப்பாற்றியிருக்கவே வேண்டாம். அறியாமல் என் கழுத்தை இறுக்கும் கயிறாக வந்து சேர்ந்தாய். நீ எனக்கு ம்ருத்யு என்று அறியாமல் உன்னுடன் ரமித்தேன்,  தொடக் கூடாத க்ருஷ்ண சர்ப்பத்தை ஒரு சிறுவன் ரசசியமாக கைக்குள் பாதுகாத்து வைத்திருப்பதைப் போல உன்னை ரக்ஷித்தேன். தசரத ராஜா அறிவிலி,  காமாத்மா. ஸ்த்ரீ (மனைவி) சொன்னாள் என்று புத்திரனை காட்டுக்கு அனுப்பி விட்டான் என்று என்னைத் தூற்றுவார்கள். விரதங்களையும் ப்ரும்மசர்யத்தையும் அனுசரிக்கும் பெரியவர்கள் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். என் மகன் என்னை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேச மாட்டான்.  வனம் போ என்று நான் சொன்னால், அப்படியே ஆகட்டும்  என்று கிளம்பி விடுவான்.  நான் சொல்லி, அவன் எதிர்த்து பேசினாலும் எனக்கு சம்மதமே.  ஆனால், அவன் அவ்வாறு செய்ய மாட்டான்.  அவன் நேர்மையே உருவானவன். சுத்தமான மனோ பாவம் உடையவன்.  என் மனதில் தற்சமயம் தோன்றும் இந்த எண்ணத்தை நினைத்து கூட பார்க்க மாட்டான்.  எல்லோரிடமும் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டு, ராமனை வனத்துக்கு அனுப்பிய பின், சுலபமாக ம்ருத்யு என்னை அழைத்துச் செல்ல வந்து விடுவான்.  மனிதருள் மாணிக்கமான ராமனை வனத்துக்கு அனுப்பி விட்டு, நானும் காலகதியை அடைந்தபின், என் இஷ்ட ஜனங்களிடம் நீ எப்படி  நடந்து கொள்வாயோ.  என்னவெல்லாம் கொடுமைகள் செய்வாயோ.  கௌசல்யா என்னையும் புத்திரனான ராமனையும் பிரிந்து எப்படி வாழ்வாள்?  நிச்சயம் அவள் என்னை பின் தொடருவாள்.  கௌசல்யா, சுமித்திரா, என் மூன்று குழைந்தைகள் எல்லோரையும் அழித்து விட்டு, கைகேயி, நீ சுகமாக இரு.  நானும் ராமனுமாக  உருவாக்கி வைத்த இந்த இக்ஷ்வாகு ராஜ்யத்தை சின்னா பின்னமாக்கப் போகிறாய். இந்த ராம வன வாசம் பரதனுக்கு சம்மதமாக இருப்பின் அவன் எனக்கு மரணத்திற்கு பின் செய்யும் பித்ரு கடன்களை செய்ய வேண்டாம். ஹா, பண்பற்றவளே, எனக்கு சத்ருவாக வந்து வாய்த்தாயே. நீ விரும்பியதை அடைந்து, சுகமாக இரு.  நானும், என் பிரியமான மகனான ராமனும் இல்லாமல் , விதவையாக உன் மகனோடு ராஜ்யத்தை ஆளப் போகிறாய் போலும்.  உன்னை அரசகுமாரி என்று எண்ணி என் மாளிகையில் இடம் கொடுத்தேன்.  அபவாதமும் அகீர்த்தியும் தான் எனக்கு மிஞ்சும் போல் இருக்கிறது.  மிகப் பெரிய தவற்றை செய்தவனை கண்ட இடத்தில் அவமானப் படுத்துவதைப் போல நானும் அவமானம் செய்யப் படுவேன். அலட்சியம் செய்யப் படுவேன்.  ராஜகுமாரனாக, பிரபுவாக இருந்து என் குழந்தை ராமன், யானை மேலும் குதிரையிலும், ரதத்திலுமாக பவனி வந்தவன், நடந்து நடந்து எப்படியெல்லாம் கஷ்டப் படப் போகிறானோ.  காதுகளில் குண்டலம் அணிந்த சேவகர்கள், நான் நான் என்று போட்டி போட்டுக் கொண்டு ராமனுக்கு ஆகார வகைகளையும், பானங்களையும் பரிமாறுவார்கள். அவனுக்காகவே புது பது வகைகளை தயார் செய்வார்கள். இப்பொழுது வனத்தில் என்ன சாப்பிடுவான்?  கசப்பும் புளிப்புமாக காட்டில் கிடைத்ததை புசித்து என் மகன் காலத்தை கழிக்க போகிறான்.  மிகச் சிறந்த வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் அணிந்து என் மகன் சுகமாக வசித்தவன், காஷாய உடையும், ஜடையுமாக  தரையில் படுப்பானா? எப்படி இவ்வளவு கொடுமையாக உன்னால் சிந்திக்க முடிந்தது.  ராமனை வனத்துக்கு அனுப்பு, பரதனுக்கு முடி சூடு. இதுவே தான். பெண்களே இப்படித்தான். சுய நலக்காரர்கள். திக். எல்லா ஸ்த்ரீகளையும் சொல்லவில்லை, பரதனைப் பெற்றவளான இவள் மட்டும்தான். அனர்த்தமே உருவானவளே, கொலைக்கும் அஞ்சாத கொடியவளே, என்னை வருத்தவே வந்து சேர்ந்தாயே. நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்? எப்பொழுதும், எங்கும் நன்மையையே காணும் ராமன் தான் உனக்கு என்ன கெடுதல் செய்தான்? அவனிடத்தில் என்ன குறை கண்டாய்? தந்தை மார் பிள்ளைகளைத் தியாகம் செய்வதுண்டு. பத்னிகள் கணவன்மாரை விட்டுப் பிரிவது உண்டு. ஆனால் ராமனைத் துறந்தால், ஜனங்கள் தூற்றுவார்கள். உலகமே உன்னையும் என்னையும் பார்த்து கோபிக்கும். விசேஷமாக அலங்கரித்துக் கொண்டு என் மகன், யானை மேல் தேவ குமாரன் போல வருவதைப் பார்த்து எவ்வளவு மகிழ்ந்திருக்கிறேன். என் வயதே குறைந்து விட்டது போல குதூகலித்திருக்கிறேன். சூரியன் இன்றி உலகம் இயங்கலாம்.  இந்திரன் மழை பெய்யாமல் இருக்கலாம். ஆனால், ராமன் வெளியேறுவதை பார்த்த பின் என் உணர்வுகள் செயல் பட மாட்டா.  நாசத்தை கொண்டு வந்த உன்னை, என் சத்ருவை, எனக்கு பாதகமே செய்யும் ம்ருத்யு போன்றவளை இந்த வீட்டில் குடி வைத்தேனே. பல சமயம் மடியில் இருத்தி அன்பாக பேசி இருக்கிறேனே.  விஷ நாகம் போன்ற உன்னுடன் சல்லாபித்து இருந்ததன் விளைவு தான் இந்த சர்வ நாசம் போலும்.  உன்னாலேயே நான் அழிகிறேன். மோகமே என்னை வீழ்த்தி விட்டது. எங்கள் மூவரையும் விட்டு, நான் ராமன், லக்ஷ்மணன் இல்லாத ராஜ்யத்தை உன் மகன் உன்னோடு மட்டும் அனுபவிக்கட்டும். இந்த ஊர், ராஜ்யம், மலை சூழ்ந்த பரந்த பூமி எல்லாவற்றையும் என் எதிரிகளுடன் கூட உல்லாசமாக இருந்து அனுபவி.  கொலைகாரி, இவ்வளவு தீர்மானமாக நிதானமாக பேசுகிறாயே, உன் நாக்கு நூறு நூறு துண்டுகளாக தெறித்து விழட்டும்.  இது போல வன்மையாக பேசக் கூட ராமனுக்கு வராது. இது போன்ற துஷ்டத்தனமான வார்த்தைகளை அவன் அறிய மாட்டான். நீயும் அவனுடன் இனிமையாகத் தானே பேசிக் கொண்டிருந்தாய். திடீரென்று அவனிடத்தில் என்ன குற்றம் கண்டாய். ராமன் சொல் எல்லோருக்கும், எப்பொழுதும் சம்மதமாக இருக்கும். மிகப் பெரிய கவலை உன்னை வாட்டட்டும், பெரிய கஷ்டங்களை அனுபவிப்பாய்.  நஷ்டம் வந்து வருந்துவாய். பல ஆயிரம் துண்டுகளாக கிழிக்கப் பட்டு பூமியில் விழுவாய். கேகய ராஜ்யத்திற்கே களங்கத்தை உண்டு பண்ணி விட்ட பெண்ணே உன் சொல்லை நான் கேட்கப் போவதில்லை.  எனக்கு சிறிதும் நன்மையில்லாத இந்த விஷயத்தை நான் ஏன் செய்ய வேண்டும்? கூர்மையான கத்தி போன்றவள் நீ.  பிரியமாக பேசுவது போல பேசி,  என் குலத்தையே நாசம்  செய்யும் உன் எண்ணத்தை உள்ளடக்கி நல்லவள் போல நடந்து வந்திருக்கிறாய். என் மனதை கட்டி வதைக்கும் உன்னை காணவே எனக்கு பிடிக்கவில்லை. உயிருடன் இருக்கவும் விட மாட்டேன். எனக்கு வாழ்வே இல்லையென்றாகி விட்டது.  பின் சுகம் ஏது? என் மகனைப் பிரிந்து எனக்கு என்ன சௌக்யங்கள் வேண்டியிருக்கிறது. எனக்கு துரோகம் செய்யும் தேவி, உன் கால்களில் விழுந்து வேண்டுகிறேன்.  அனாதை போல அந்த சக்ரவர்த்தியான தசரத ராஜா கைகேயியின் கால்களில் விழுந்தார். ஹ்ருதயத்தில் அடி வாங்கியவனாக, பெரும் வியாதிக்காரன் சங்கடப் படுவது போல தவித்தார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், கைகேயி நிவர்த்தன ப்ரயாஸோ   என்ற பன்னிரெண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 13 (90)  தசரத விலாப  (தசரதன் புலம்புதல்)

 

 

புண்யங்கள் தீர்ந்தவுடன் தேவலோகத்திலிருந்து கீழே பூமியில் விழுந்த யயாதியைப் போல தசரத ராஜா, கிடந்தார். தரையில் படுத்தறியாத இக்ஷ்வாகு ராஜா, பெண்களை வணங்கி அறியாத தசரத ராஜா,  தன் தகுதிக்கு ஏற்காத இவ்விரு செயல்களையும் கைகேயி முன் செய்தார்.  கைகேயி மேலும் கடுமையானாள். பயம் அவளை விட்டு அகன்றது. தன் எண்ணம் ஈடேறாதது ஒன்றே அவள் மனதில் நிறைந்தது. அனர்த்தமே உருவானவள் போலானாள்.  திரும்பவும் அந்த வரங்களைப் பற்றியே பேசினாள்.  கடுமையான விரதங்களை அனுஷ்டித்தவர், சத்யவாதி என்றெல்லாம் பெயர் பெற்ற மகா ராஜா இப்பொழுது பிதற்றுகிறீர்கள். என்னுடைய இந்த வரங்களை எவ்வாறு தரப் போகிறீர்கள் என்று கேட்க, சற்று நேரம் பேசாது இருந்த அரசன் பதில் சொன்னார்.  மனிதருள் மாணிக்கமான ராமனும் வனம் சென்று, நானும் இறந்த பின்,  ஹா, பண்பற்ற என் விரோதியே, இஷ்டம் போல இரு.  ஸ்வர்க்கம் போனால் கூட தேவர்கள் ராமனைப் பற்றி என்னிடம் குசலம் விசாரிப்பார்கள்.  என்ன செய்வேன்?  கைகேயியின் இஷ்டத்தை நிறைவேற்றுவதற்காக, ராமனை காட்டுக்கு அனுப்பி விட்டேன்.  இது சத்யமா? மற்றது சத்யமா? எதை ஏற்றுக் கொண்டாலும் மற்றது பொய்யாகும். புத்ரனே இல்லாமல் இருந்தேன். பலவித சிரமங்களுக்குப் பிறகு, ராமன் பிறந்தான். நீண்ட கைகளுடனும், சூரனாகவும் பிறந்தான். அவனைப் பிரிந்து எப்படி இருப்பேன்.  நல்ல கல்வி கற்றவன். கோபத்தை அடக்கியவன்.  பொறுமையே உருவாக இருப்பவன். கமல பத்ரம் போன்ற கண்களையுடைய ராமனை எப்படி நான் வெளி யேறச் சொல்வேன். இந்தீவரம் போன்ற ஸ்யாமள நிறத்தினன், பலம் பொருந்திய தீர்கமான புஜங்களையுடையவன், பார்த்தவுடனேயே மனதை வசீகரிக்கும் குணமுடைய அபிராமனான ராமனை தண்டகா வனம் போ என்று எப்படித் தான் துரத்துவேனோ. துக்கம் என்றால் என்ன என்றே அறியாதபடி வளர்த்தேன்.  சுக போகங்களிலேயே  வளர்த்து விட்டு, இப்படி துக்கத்தில் மூழ்கடிப்பேனா. புத்திமான் ராமன். இந்த துக்கத்தை அவனுக்கு தராமலே என் காலம் முடிந்து விட்டால் நன்றாக இருக்குமே.  ராமனும் சுகமாகவே இருப்பான். கொலைகாரி, பாபத்தை சங்கல்பம் செய்து கொண்டவளே,  எனக்கு பிரியமில்லாததை ஏன் செய்யச் சொல்கிறாய். சத்ய ப்ராக்ரமனான ராமனுக்கு, என் பிரியமான ராமனுக்கு, ஏன் துன்பம் விழைவிக்கிறாய். அளவில்லாத கெட்ட பெயரும், அவமானமும் தான் எனக்கு வந்து சேரும், என்று அழும் தசரத ராஜாவைப் பார்த்து சூரியனும் வருந்தியது போல இரவு சூழ்ந்தது.  மூன்று யாமங்களும் அந்த அரசனின் புலம்பலைக் கேட்டவாறே கழிந்தது. ஆகாயத்தில் கண்களை பதித்தபடி படுத்திருந்த அரசன்,  நிசியே, நக்ஷத்திரங்கள் அலங்கரிக்க இந்த இரவு நீடிக்கட்டும்.  விடியவே வேண்டாமே என்று வேண்டிக் கொண்டான். என்னிடத்தில் தயை காட்டுங்கள். இதோ நான் கை கூப்பி வணங்குகிறேன். அல்லது சீக்கிரம் விடியட்டும். இந்த கொலைகாரியை காணக் கூட எனக்கு பிடிக்கவில்லை. இவளால் தானே  இவ்வளவு துக்கமும் என்றவன், திரும்பவும் கைகேயியை யாசிக்க ஆரம்பித்தான். வயதானவன் தீ3னன், இதுவரை உனக்கு நல்லதையே செய்து வந்தவன் என்ற முறையில் கொஞ்சம் கருணை காட்டு கைகேயி. அரசன் என்று யோசித்துப் பார். சூன்யத்தில் இதை நான் சொல்லவில்லையே. பெண்ணே, இரக்கம் கொள். நீ கொடுத்து ராஜ்யத்தை ராமன் அடையட்டும். நீயாக ராமனுக்கு அரசு முடியைக் கொடுத்து விட்டால், அளவில்லாத பெரும் புகழ் அடைவாய்.  எனக்கும், ராமனுக்கும், கைகேயி,  பரதனுக்கும்  மற்ற பெரியவர்களுக்கும் இது தான் இஷ்டமாக இருக்கும்.  அழகான கண்களும் முகத்தையும் உடைய பெண்ணே,  நல்ல பெண்ணல்லவா, என்றெல்லாம் கெஞ்ச ஆரம்பித்தான். சுத்தமான மனதுடன், கண்களில் நீர் நிரம்பி வழிய அரசன் வேண்டிக்   கொண்டதைக் கேட்டும், கைகேயி பதிலேதும் சொல்லவில்லை.  கண்கள் சிவந்து, பரிதாபமாக தெரிந்த அரசன், கைகேயியின் கொடுமை நிறைந்த உள்ளத்தை பாதிக்கவில்லை.  மனைவியின் இந்த அலட்சியத்தால், அரசன் மனம் நொந்து மூர்ச்சையானார். புத்ரனை நாடு கடத்துவதா என்ற எண்ணமே அவரை நினைவிழக்கச் செய்தது. சரிந்து பூமியில் விழுந்தார். மற்றவர்கள் உறங்க, அரசன் பரிதவிக்க, இரவும் கழிந்தது.  எழுப்ப வந்த சேவகர்களை சைகையால் தடுத்து மறுத்தார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், தசரத விலாபம் என்ற பதிமூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 14 (91)   கைகேயி உபாலம்ப:  (கைகேயி நிந்தனை செய்தல்)

 

பூமியில் நினைவிழந்து படுத்துக் கிடந்த தசரத ராஜவைப் பார்த்து, ஏற்கனவே புத்திரனைப் பிரியப் போகும் துக்கத்தால் வாடி இருந்தவரை, சற்றும் லட்சியம் செய்யாமல் மேலும் நிஷ்டூரமாக கைகேயி சாடினாள். ஏதோ பாபம் செய்து   விட்டவனைப் போல பூமியில் தூங்குகிறீர்கள். நான் சொன்னதைக் கேட்டு வருந்த என்ன அவசியம் ? ஆசனத்தில் அமருங்கள். சத்யமே பெரிய தர்மம் என்று சொல்வார்கள். தர்மம் அறிந்த யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். தர்ம மார்கத்தில் தான் நானும் உங்களை சத்யத்தை அனுஷ்டித்து நடக்கச் சொன்னேன்.  அரசனான சிபி சக்ரவர்த்தி, கழுகுக்கு தன் சரீரத்தை தருவதாக ஒப்புக் கொண்டு அவ்வாறே கொடுத்தான்.  அதனால் நல்ல கதியை அடைந்தான். வேத பாடங்களில் சிறந்த ஒரு பிராம்மணனுக்கு தேஜஸ்வியான அலர்க்கன் என்ற ராஜா,  அவன் யாசித்த பொழுது சற்றும் மனம் கலங்காமல் தன் கண்களை எடுத்துக் கொடுத்து விட்டான்.  நதிகளின் அரசனான சமுத்திரம் தன்னளவில், சிறிதேயானாலும், மரியாதையையும், சத்யத்தையும் கை கொண்டு, தன் அலைகளை அடக்கி, எல்லையை மீறாமல் பார்த்துக் கொள்கிறது.  சத்யம் தான் ப்ரும்மா. சத்யத்தில் தர்மங்கள் அத்தனையும் அடங்கும்.  சத்யம் தான் குறைவில்லாத வேதங்கள். சத்யத்தினால் தான் பரகதியை அடைகிறோம். தர்மத்தில் ஈடுபாடுடையவன் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால், சத்யத்தைக் கடை பிடி.  தாங்களாக கொடுத்த வரம் தான். அது எனக்கு பயனுள்ளதாக ஆகட்டும்.  தர்மம் தான் என்று நம்பிக்கையோடு, நான் சொல்வதைக் கேட்டு,  ராமனை நாடு கடத்து. நான் இதை கட்டாயமாகத் தான் சொல்கிறேன். மூன்று முறை சொல்கிறேன்.  இது தான் சமயம். இன்று நான் சொல்லியபடி நீங்கள் கேட்கவில்லையெனில் உங்கள் எதிரிலேயே உயிர்  விடுவேன்.  சற்றும் கூச்சமில்லாமல் கைகேயி இவ்வாறு சொல்லவும், இந்திரனால் பலிக்காக கட்டப் பட்ட ஆடு போல, தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் திணறினான் அரசன். முகம் வெளிறி புத்தி பேதலித்தவன் போலானான்.   இரண்டு சக்கரங்களுக்கிடையில் மாட்டிக் கொண்ட து4ரி (ஏர்க்கால்) ஆனான்.  சக்தியில்லாத கண்களால் பார்ப்பது போல கைகேயியைப் பார்த்து,  கஷ்டத்துடன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, சொன்னான். உன்னைக் கை பிடித்த பொழுது மந்திரம் சொல்லி, பாபியே, அக்னியில் நீரை விட்டேனே,  அதை இப்பொழுதே விட்டு விட்டேன். உன்னையும் உன் புத்திரனையும் இந்த நிமிஷமே தியாகம் செய்து விட்டேன்.  ராத்திரி முடிந்து விட்டது. சூரியன் உதிக்கும் சமயம். அபிஷேக ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பவர்கள், என்னை துரிதப் படுத்துவார்கள். முடி சூட்டு விழாவிற்காக கொண்டு வரப்பட்ட பொருட்களைக் கொண்டே ராமன் எனக்கு நீர்க்கடன்களை செய்யட்டும். நீயும் உன் மகனும் எனக்கு நீர்க் கடன்களை செய்ய வேண்டாம். அமங்களமான செயலை செய்பவளே, ராமனின் யுவராஜ அபிஷேகத்தை நான் காண விடாமல் செய்து விட்டாய்.  தலை குனிந்த நிலையில், குற்றவாளி  போல ராமனை சந்திக்க எனக்கு திராணியில்லை என்று தசரத ராஜா புலம்பிக்கொண்டு இரவைக் கழித்தார். பொழுதும் விடிந்தது. பின்னும் கைகேயி வெந்த புண்ணில் வேல் சொருகுவது போல மேலும் கடுமையாக பேசினாள். (அவளையே அங்க3ருஜோபமம்- உடலில் தோன்றிய புண் போன்றவள் என்று கவி சொல்கிறார். உதற முடியாத துன்பம் என்ற பொருளில்)  கைகேயியின் பேச்சில் அனல் தெறித்தது.  ஆத்திரத்துடன் கத்தினாள்.  என்ன பேச்சு பேசுகிறீர்கள். இங்கு ராமனை வரவழையுங்கள். ராஜ்யத்தில் என் புத்திரனை அமர்த்தி விட்டு, ராமனை நாடு கடத்திய பின் தான் இந்த செயல் பூர்த்தியாகும். எனக்கு இடையூறு இல்லாமல் செய்து விட்டு என்ன செய்வீர்களோ, செய்யுங்கள் என்றாள்.  உயர் ஜாதி குதிரை சாட்டையால் அடிவாங்கியது போல உடல் சிலிர்த்து எழ, அரசன் துணுக்குற்று கைகேயியிடம் சொன்னான். தர்ம பாசத்தினால் கட்டுப்பட்டேன்.  என் புத்தி நஷ்டமாகி விட்டது.  தார்மிகனான என் மூத்த மகனைக் காண விரும்புகிறேன். சூரியன் உதித்தவுடன், நக்ஷத்திர யோகங்கள் சேர்ந்து முஹுர்த்தம் சமீபிக்கவும்,  நற்குணம் நிறைந்த வசிஷ்டர், தன் சிஷ்யர்கள் சூழ வந்து சேர்ந்தார். அவரை  தகுந்த உபசாரங்கள் செய்து வரவேற்றனர்.   நீர் தெளித்து நன்கு சுத்தம் செய்யப் பட்ட வீதிகளையும், அலங்காரமாக கொடிகள் கட்டி தொங்கவிட்டும், மலர்களாலும் மற்ற பொருட்களாலும் தோரணங்கள் கட்டியும், மாலைகள் அழகுற மாட்டியும் ஊர் ஜனங்கள் மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு வளைய வருவதைப் பார்த்தார்.  ஜனங்கள் நிரம்பி வழியும் கடை வீதிகளைப் பார்த்தவாறே நடந்தார். ராகவனின் மகோத்ஸவத்திற்காக   வந்து கூடியிருந்த ஜனங்களால் நகரம் நிரம்பி வழிந்தது.  மகிழ்ச்சியுடன் ராகவனை எதிர்நோக்கி காத்திருந்த ஜனங்கள் அந்த நகரையே இந்திரபுரியாக ஆக்கி விட்டார்கள்.  எங்கும் சந்தனம், அகரு, தூபங்கள் இவற்றின் வாசனை நிறைந்தது. ஜனபதங்களிலிருந்து வந்து கூடிய ஜனங்களும், பிராம்மணர்களும்,  யாக விதிகளை அறிந்த அறிஞர்கள், பலவிதமான கலைஞர்கள்,  மற்றும் பலரும் சதஸை நிறைத்தனர். இந்த சதஸை பார்த்துக் கொண்டே வசிஷ்டர், அந்த ஜனங்களிடம் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக் கொண்டார்.  மிகவும் மகிழ்ச்சியடைந்த வசிஷ்டர்,  ரிஷி கணங்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, சுமந்திரர் வெளி யேறுவதைப் பார்த்தார்.

 

அரசனின் சிறந்த சாரதியும், பிரியமாக பேசுபவருமான மந்திரி சுமந்திரரிடம்,  வசிஷ்டர், நான் வந்து விட்டேன் என்று அரசனுக்கு தெரிவி என்று சொல்லி அனுப்பினார். இதோ,  கங்கை நீர் நிரம்பிய குடங்கள், சமுத்திரங்களில் இருந்து காஞ்சனம், ஔது3ம்பரம்,  ப4த்ரபீடம் இவை அபிஷேகத்திற்காக  கொண்டு வரப் பட்டன.  எல்லாவிதமான பீ3ஜங்களும், வாசனைத் திரவியங்களும், பலவிதமான ரத்னங்களும், பால், தயிர் நெய், பொரி, தர்ப்பங்கள், நல்ல தூய்மையான நீர், எட்டு கன்னிகைகள், சிறந்த யானைகள், நான்கு குதிரைகள் பூட்டிய ரதம்,  உத்தமமான தனுஷ், வாகனம் ஓட்டுபவரோடு கூட, குடை, சந்திரன் போல

குளிர்ச்சி தருவதாக வெண் சாமரங்கள், தங்க மயமான ப்ருங்காரம், உயர்ந்த திமில்களில் தங்க முலாம் பூசப் பட்ட கவசங்களோடு காளைகள்,  நான்கு பற்களையுடைய கேஸரி, (சிங்கம்) மகா பலம் பொருந்திய உத்தமமான குதிரை, புலி போன்ற அமைப்புடைய சிங்காஸனம், சமித்துக்களும், அக்னியும், வாத்யம் வாசிக்கும் கோஷ்டிகளும், நன்கு அலங்கரித்துக் கொண்ட  வேசிகள், ஆசார்யர்கள்,  ப்ராம்மணர்கள்,  பசுக்கள், புண்யமான ம்ருக, பக்ஷிகள், ஊர் ஜனங்கள், ஸ்ரேஷ்டமானவர்கள்,  பாண்டித்யம் மிக்க நிகமம் என்ற வேத முறைகளை அறிந்த  நைகமா: கூட்டம் கூட்டமாக இன்னும் பலர், மிகவும் ஆவலோடு, பிரியமாக பேசிக் கொண்டு,  வருபவர்கள், மற்ற தேச அரசர்களுடன் ராமனின் அபிஷேகத்தைக் காண நிற்கிறார்கள்.  சூரியோதயம் ஆகி, பகல் பொழுது ஆரம்பித்து விட்டது. அரசனை துரிதப் படுத்து. நல்ல யோகங்கள், நக்ஷத்திரங்கள் கூடிய சுபமான வேளையில் ராமன் ராஜ்யத்தை ஏற்கட்டும்.  இவ்வாறு சொன்ன வசிஷ்டரை வணங்கி, சாரதியான சுமந்திரன் மாளிகையினுள் நுழைந்தார்.  அவரை  யாரும் தடுக்கவில்லை.

 

அரசன் அருகில் சென்ற பின்பும்,  அரசனின் நிலையை அறியாமல் வழக்கம் போல துதி பாட ஆரம்பித்தார். எப்பொழுதும் போல கை கூப்பி,  அரசனை துதி செய்யும் பாடல்களை ஆரம்பித்தார். சூரியன் உதித்தவுடன் சமுத்திரம் எப்படி ஆரவாரிக்கிறதோ, உங்கள் பிரஜைகளான எங்களை தானும் சந்தோஷமாக இருந்து எங்களையும் சந்தோஷமாக பாலிப்பாயாக. இந்த நேரத்தில் மாதலி என்ற இந்திர சாரதி இந்திரனை இப்படித்தான்  துயிலெழுப்புவான்.  அதே போல துயிலெழுப்புகிறேன். வேதங்கள் அதன் அங்கங்களோடு தானே தோன்றிய பிரபுவான ப்ரும்மாவை இப்படித்தான் துயிலெழுப்பும்.,  அது போல துயிலெழுப்புகிறேன்.  சூரியன் சந்திரனுடன் கூட சுபமான  பூமியை தன் விடியலால் துயிலெழுப்புகிறானோ, அது போல அரசனை நான் துயிலெழுப்புகிறேன்.  அரசனே, எழுந்திருங்கள். மங்களங்கள் உண்டாகட்டும்.  மேரு மலையில் திவாகரன், (சூரியன்) பிரகாசிப்பது போல ஒளி வீசிக் கொண்டு, ராஜ சார்தூலா, எழுந்திரு சூரியனும் சந்திரனும், காகுத்ஸா, சிவனும் வைஸ்ரவனும்,  வருணனும், அக்னி, இந்திரனும், உங்களுக்கு வெற்றியைத் தரட்டும். ப4கவதியான இரவு அகன்று,  சுபமாக பகல் பொழுது வந்து விட்டது. ராஜ சார்தூலா, எழுந்திரு. தினசரி கடமைகளைச் செய்வாயாக.  ராமனின் அபிஷேக வேளை நெருங்கி விட்டது. ஊர் ஜனங்கள், புர ஜனங்கள், ஜனபத , சிற்றுர் ஜனங்கள் சிறந்த நைகமர்களுடனும், வசிஷ்டர் தானே ப்ராம்மணர்களோடும் வந்து நிற்கிறார்.  ராஜன் | சீக்கிரம் ராமனுடைய முடி சூட்டு விழாவை ஆரம்பித்து வையுங்கள். அரசன் தென்படாவிட்டால், ராஜ்யம் காவல் காக்கும் தலைவன் இல்லாத பசுக்கள் போலவும், நாயகன் இல்லாத சேனை போலவும், சந்திரன் இல்லாத இரவு போலவும், பசுக்கள் காளையின்றி இருப்பது போலவும், இருக்கும்.  இவ்வாறு சாந்தமாக, பொருள் பொதிந்த பாடல்களால் சுமந்திரர் துதி பாடிக் கொண்டே போகவும், மஹீபதியான அரசன் அவரை அழைத்து, தீனமாக சோகத்தால் சிவந்த கண்களுடன் தடுத்தார்..  சுமந்திரா, உன் வார்த்தைகளால் ஏற்கனவே நொந்து போய் இருக்கும் நான் மேலும் வருந்துகிறேன். மகாராஜாவை பார்த்து திடுக்கிட்ட சுமந்திரர், தான் இருந்த இடத்திலிருந்து வெளி  வந்து  கேள்விக் குறி முகத்தில் தெரிய வணங்கி நின்றார்.  தானே எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்த அரசரை முந்திக் கொண்டு கைகேயி, தானே பேசலானாள். சுமந்திரரே, அரசர் இரவு பூராவும் தூங்காமல் விழித்திருந்து இப்பொழுது தான் தூங்கினார். அதனால் நீ சீக்கிரம் போய் ராமனை அழைத்து வா.  புகழ் வாய்ந்த அரச குமாரனை உடனே அழைத்து வா, யோசிக்காதே.  என்றாள். ஏதோ நல்லது தான் என்று எண்ணி, மனதுள் மகிழ்ந்தவராக, அரச கட்டளையை ஏற்று சுமந்திரர், வேகமாக வெளி யேறினார். கைகேயி அவரசரப் படுத்திய விதம் கவலையை தோற்றுவித்தது  நினைக்க நினைக்க ஏதோ இயல்பாக இல்லாதது போல மனதில் பட்டதை தானே சமாதானமும் செய்து கொண்டார்.  ராமன் அபிஷேகம் செய்து கொள்ள  இங்கு வரப் போவது நியாயம் தானே.  இந்த கவலையை ராமனைக் காணும் ஆவல் துரத்தியடிக்க, வேகமாக சென்றார்.

 

அந்த:புர வாசலில் இருந்து ஆரம்பித்து,  சமுத்திரம் போல திரண்டிருந்த ஜனங்களைத் தாண்டி, மாளிகை வாசலை அடைந்தார். வாசலில் திரண்டிருந்த அரசர்களையும், வாயில் வரை வந்துள்ள பிரமுகர்களையும், பல பெரிய தனவந்தர்களையும் கவனித்த படி அவசரமாக வெளி யேறினார். 

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், கைகேயி உபாலம்போ என்ற பதிநாலாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)   

 

அத்தியாயம் 15 (92)  சுமந்திர ப்ரேஷணம் (சுமந்திரரை அனுப்புதல்)

 

இரவு முடிய காத்திருந்தது போல, ராஜ புரோஹிதர்கள், வேதங்களை கரை கண்ட பிராம்மணோத்தமர்கள்,  ராஜ சபைக்கு கிளம்பினார்கள். முக்கிய அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், நிகமத்தில் கரை கண்டவர்கள், ராமனுக்கு முடி சூடும் வைபவம் என்ற மகிழ்ச்சியுடன்,  சூரியன் உதித்து புஷ்ய நக்ஷத்திரம் கூடிய சுப தினம் ஆரம்பமானவுடனேயே கர்க்கடக லக்னத்தில் கர்கடகன் வரவும்,  சந்திரன்   இருக்கும் சமயம், ராமனுக்கு அபிஷேகம் என்று சபையின் தூண்களாக வர்ணிக்கப்படும்,  ப்ராம்மணர்கள் தங்களுக்குள் பேசி தீர்மானித்துக் கொண்டு செயல் பட்டனர்.  தங்க குடங்களில்  ஜலம் நிரப்பி, பத்ர பீடம் நன்கு அலங்கரிக்கப் பட்டது.   ரதத்தில் நல்ல ஆசனங்கள் போடப் பட்டது. புலித் தோலால் ஒளி வீச அலங்கரிக்கப் பட்டது. கங்கையும் யமுனையும் கூடும் சங்கம க்ஷேத்ரத்திலிருந்து  ஜலம் கொண்டு வந்து, மேலும் பல புண்ய நதிகளிலிருந்தும், புண்யமான குளங்கள், கிணறுகள்,  சிறு நதிகள் இவைகளிலிருந்தும் ஜலம் கொண்டு வரப் பட்டன.  கிழக்கு நோக்கி பிரவகிக்கும் நதிகள்,  மேல் நோக்கி பாயும் சில நதிகள்,  குறுக்காக பாயும் நதிகள் இவைகளிலிருந்தும் ஜலம் கொண்டு வரப் பட்டன. சமுத்திரங்கள் அனைத்திலிருந்தும் ஜலம் வந்து சேர்ந்தது. பொரி நிரம்பிய கலசங்கள், மூடப்பட்ட கலசங்களில் பாலில் செய்யப் பட்ட பதார்த்தங்கள், பொன்னாலும் வெள்ளியிலுமான கலசங்கள், புண்ய தீர்த்தங்கள் நிறைந்து பத்மமும் உத்பலமும் சேர்ந்தது போல விளங்கின.  பாலில் செய்த சாமான்கள், தயிர், நெய், பொரி, தர்பங்கள், நல்ல பரிசுத்தமான நீர், எல்லா விதமான ஆபரணங்களையும் அணிந்து கொண்டு, நல்ல நடத்தையுள்ள வேஸ்யா ஸ்த்ரீகள், தங்கத்தால் செய்யப் பட்டு, ரத்னங்கள் இழைத்து செய்யப் பட்ட சாமரங்கள் ராமனுக்காக காத்திருந்தன.  சந்திர மண்டலம் போல  வெண்மையான குடை, அபிஷேகத்திற்காக தயார் செய்யப் பட்டுள்ளது.  வெண் குதிரையும், வெண்மையான ரிஷபமும் தயார் நிலையில் உள்ளன.  அரச குலத்து யானை அலங்காரமாக நிற்க, அதைக் கடந்து சுமந்திரன் போனார்.  எட்டு கன்னிகைகள், மங்கள வஸ்துக்களை ஏந்தி, எல்லா வித ஆபரணங்களும் ஏந்தி எதிர் கொள்ள,  பல விதமான வாத்யங்களை வாசிப்பவர்களும், பாடுபவர்களும், இக்ஷ்வாகு குல ராஜாவுக்கு அபிஷேகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போல ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அரசன் தானே அறிவித்தபடி,  அபிஷேகம் என்று ஒருவரையொருவர் முந்தியபடி எல்லோரும் அங்கு குழுமியிருந்தனர். அரசனைக் காணவில்லையே, சூரியன் உதித்து நேரமாகிறதே என்றும், யுவ ராஜ அபிஷேகத்திற்காக ராமன் தயாராகி விட்டான் என்றும், தங்களுக்குள் பேசிக் கொண்டதைக் கேட்டு, கூடியிருந்த பெரிய ராஜ்யங்களை ஆளும் மதிப்பு மிக்க அரசர்களையும், சிற்றரசர்களையும் பார்த்து, சுமந்திரர், மகாராஜா ராமனை அழைக்கிறார். அழைத்து போக நான் வந்திருக்கிறேன்  என்றார்.  சீக்கிரம் அழைத்து வரச் சொல்லி உத்தரவு. உங்கள் அனைவருக்கும் மகாராஜா பூஜ்யர். ராமனுக்கும் அப்படியே. இப்படிச் சொல்லிக் கொண்டே அந்த:புரம் வாசல் வரை வந்து விட்டார்,  எப்பொழுதும் நிறைந்து இருக்கும் அந்த மாளிகையில் நுழைந்தார்.  நரேந்திரனான அரசனது  படுக்கையறை வந்து நின்றார்.  சுபமான ஆசிகள் சொல்லி ராக4வனை வாழ்த்தினார்.  வணங்கினார். காகுத்ஸ, சந்திர சூரியர்களும், சிவனும், வைஸ்ரவனும், வருணனும், அக்னியும், இந்திரனும் உனக்கு வெற்றியை அளிக்கட்டும். பகவதி ராத்திரி அகன்று பகல் விடிந்து விட்டது. ந்ருபசார்தூல, எழுந்திரு. மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வாயாக. ப்ராம்மணர்களும், சேனைத் தலைவர்களும், நைகமர்களும் வந்து விட்டனர்.  உன்னை தரிசனம் செய்ய காத்திருக்கின்றனர்.  ராகவா, துயிலெழுவாயாக. மந்திரங்கள் அறிந்த சுமந்திரர் இப்படி துதி பாடி எழுப்பவும், அரசன் விழித்தெழுந்து, ராமனை அழைத்து வரும்படி இவள் சொன்னாளே, ஏன் இன்னும் அழைத்து வரவில்லை என்று சுமந்திரரை துரிதப் படுத்தினார்.  ராஜ ஆணையை ஏற்று சுமந்திரர், தன் மனதினுள் நல்லதையே நினைத்தபடி ராம

மாளிகையை வந்தடைந்தார்.

 

வழி முழுவதும் ராமனை புகழ்ந்து பாடும் பாடல்களை கேட்டபடி, அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ரசித்தபடி, கைலாஸ சிகரம் போலிருந்த

ராம மாளிகை வந்து சேர்ந்தார். இந்திரன் மாளிகை போல இருந்தது ராம மாளிகை. மிகப் பெரிய தாழ்ப்பாள்களும், நூற்றுக் கணக்கான முற்றங்கள், (விதர்தீ3: -பால்கனிகள், அல்லது திறந்தவெளி )  மற்றும் பல இடங்களிலும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. தங்க நிறமாக, பிரகாசமாக, மணிகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப் பட்டு விளங்கின. மேக மண்டலம் நிறைந்த சரத் கால ஆகாயம் போல, மேரு மலையின் ஒளி வீசும் குகையோ எனும் படியும், இருந்த மாளிகை. சிறந்த மணி, புஷ்பங்கள் அலங்கரிக்க, முத்துக்களும், மணிகளும் ஒளி வீச, சந்தன, அகரு வாசனைகள் நிறைந்திருக்க, மனதைக் கவரும் நல்ல சுகந்தமான வாசனை இழுக்க, சாரஸ பக்ஷிகளும், மயில்களும் கூவிக் கொண்டு அழகூட்ட, பயிற்றுவிக்கப் பட்ட ஓனாய்கள் காவல் காக்க, அழகிய சுவர்கள் பார்ப்பவர்கள் கண்களையும் மனதையும் கவர்ந்து இழுக்க, குபேர பவனமோ எனும்படி, ஒளி  மிகுந்ததாக, ராம பவனத்தை சுமந்திரர் பார்த்தார். மகேந்திரனுக்கு இணையான

மாளிகை இது என்று எண்ணியபடி, அருகில் நெருங்கவும், அங்கு கூடியிருந்த மக்கள் கை கூப்பி வரவேற்றனர். ராமனுக்கு முடி சூட்டு விழா என்று முக மலர்ச்சியோடு வளைய வரும் ஜனபத மக்கள்.  ராஜ குலத்து ஜனங்களும் ஊடே அலங்கரித்து கொண்டு வந்து சேர்ந்தனர். இவற்றை ரசித்தபடி மகா த4னம் எனும் ராம மாளிகையின் வாசலை வந்தடைந்தார்.  உடல் புல்லரிக்க உள்ளே நுழைந்தார். மான்களும் மயில்களும் நடமாடும் கர்ப்ப க்ருஹம். தகுதி வாய்ந்த இந்திரன்

மாளிகை போல நிர்மாணிக்கும் பொழுதே அலங்காரமாக அமைக்கப் பட்டிருந்த அறை வாசல்கள்.  ராமனுக்கு பிரியமான பல ஜனங்களை பரிச்சயமான முகங்களை கண்டு மகிழ்ந்தபடி சுத்தாந்தபுரத்தை நோக்கி சென்றார். வாகனத்தை ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு உள்ளே வந்த ஜனங்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதையும், அனைவரும் விரும்பி எதிர்பார்த்து இருந்த மங்கள நாள் வந்து விட்டது என்று தெரிவிப்பது போல இருந்த கோலாகலத்தையும் கண்டபடி உள் அறையை அடைந்தார். ராமனுடைய பட்டத்து யானை, மிகப் பெரிய மேகத்தின் பகுதி போல நின்றிருந்தது. யானைப் பாகன் அங்குசத்தோடு நின்றிருந்தான்.  குதிரைகள் பூட்டிய அலங்கார ரதங்கள், யானை மேல் வந்த அமைச்சர்கள், பிரமுகர்கள், நூற்றுக் கணக்கான தொழில் வல்லவர்கள், இவர்களைக் கடந்தும் , கூடவே நடந்தும் சம்ருத்3த4மான (நிறைவான) அந்த:புரத்தை அடைந்தார். விமானங்களோடு, மேகமோ, மலைச் சிகரமோ என்று வியக்கும் படி இருந்த மாளிகையின் உள்ளே,  யாராலும் தடுக்கப் படாமல்,  ரத்னங்கள் நிறைந்த சமுத்திரத்தில் திமிங்கிலம் நுழைவது போல நுழைந்தார்.  

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், சுமந்திர ப்ரேஷணம் என்ற பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)  

 

அத்தியாயம் 16 (93)  ராம ப்ரஸ்தா2னம் ( ராமர் கிளம்புதல்)

 

தசரத ராஜாவின் மந்திரிகளுள் ஒருவரான சுமந்திரன், அறிவாளி  என்று மதிக்கப்பட்டவர். புராணங்களை அறிந்தவர் என்பதாலும் ஜனங்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.  அவர் ஜனங்களை விலக்கிக் கொண்டு, தடுப்புகளைத் தாண்டி முன்னேறினார். குண்டலங்கள் அணிந்த, ஆயுதங்கள்  தரித்த காவல் வீரர்கள், ஏகாக்ர சித்தத்துடன் காவல் காத்து வந்தனர். ஒரு புறம் காஷாயம் தரித்து, கைகளில் தடியுடன் நின்றிருந்த கிழவர்கள், அதைத் தவிர அறை வாசலில் மூன்று தலைவர்கள் என்று காவல் ஏற்பாடுகள் திருப்தி கரமாக இருப்பதை கவனித்தபடி சென்றார்.  சுமந்திரனைக் கண்டதும் அவர்கள் தங்கள் ஆசனத்திலிருந்து பர பரப்பாக எழுந்திருந்தனர். அவர்கள் அனைவருமே ராமனுக்கு நன்மையை விரும்புபவர்கள். தங்கள் பொறுப்பில் செம்மையாக செயல் படுபவர்கள் ஆதலால் சுமந்திரர் அவர்களிடம் பணிவாக சீக்கிரம் ராமரிடம் சுமந்திரனான நான் வந்திருப்பதை தெரிவியுங்கள் என்றார்.  அவர்களும் அவசரமாக சென்று பத்னியுடன் இருந்த ராமரிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.  தந்தையின் அந்தரங்க தோழனும் சாரதியுமான சுமந்திரர் வந்திருக்கிறார் என்று  கேள்விப் பட்டதும், அவரை அந்த அறைக்குள்ளேயே அழைத்து வர செய்தார்.  வைஸ்ரவன் போல அலங்கரித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் ராமனை, தங்கத்தாலான கட்டிலில், (வராஹ ரத்தம் போன்ற -உயர் ரக சந்தனம் என்பது இப்படி வர்ணிக்கப்படுகிறது) சிவந்த சுத்தமான சந்தனத்தை பூசிக் கொண்டு, அருகில் சாமரத்தால் வீசிக் கொண்டு சீதை நிற்க,  சித்ரா நக்ஷத்திரம் சந்திரனோடு இருப்பது போல ஒளி வீசும், தன் சரீரத்தின் இயல்பான காந்தியோடு விளங்கும் ராமனை சுமந்திரர் கண்டு வணங்கினார்.  சாரதியாக துதி பாடி, வணங்கினார். பின், பணிவாக குசலம் விசாரித்தபடி, தான் வந்த காரியத்தை  சொல்ல தயாரானார். வினயம் அறிந்தவன், என்று அரசனால் கௌரவிக்கப்பட்டவர் அவர். விஹார சயனாசனத்தில் தற்சமயம் அமர்ந்திருக்கும் ராமரிடம்  கௌசல்யா சுப்ரஜா ராமா, ராஜா உன்னை பார்க்க விரும்புகிறார். மகிஷியான கைகேயியுடன் இருக்கிறார். சீக்கிரம் அழைத்து வரச் சொல்லி உத்தரவு. போகலாம், வாருங்கள் என்றார்.  உற்சாகமான மன நிலையில் இருந்த ராமர், இதைக் கேட்டு  சீதையிடம் தேவி தேவனும்,தேவியும் (ராஜாவும், கைகேயியும்) அபிஷேகம் சம்பந்தமாக என்னைப் பற்றி பேசிக்  கொண்டிருந்திருப்பார்கள்.  மதி3ரேக்ஷணே,  கைகேயி, சுத3க்ஷிணா – நல்ல பரிவும், அன்பும் உடையவள். என் நலத்தை விரும்புவள். தாயான அவளுடன் இருந்து,  தந்தை தசரத ராஜா, தூது அனுப்பியிருக்கிறார். கைகேயி ஏதோ ஒரு அபிப்பிராயத்தை நினைவு படுத்தி இருப்பாள். அதைச் சொல்ல தகுதியான தூதன் இவரே என்று அனுப்பியிருப்பார்கள். பிரியமான பட்ட மகிஷியுடன் இருந்தபடி, அங்குள்ள சபை எப்படியோ அதற்கு தகுந்த தூதன், ஹா நேரமாகிறதே, நான் போய் மகாராஜாவைப் பார்க்கிறேன். மகாராஜா நினைத்ததை உடனே செய்து முடிப்பவர். இன்றே என்னை யுவராஜாவாக முடி சூட துரிதப் படுத்துகிறார், போலும். நீ உன் பரிவாரங்களோடு ஓய்வு எடுத்துக் கொள்.   பதியினால் சம்மானிக்கப் பட்ட  சீதை, வாசல் வரை வந்து வழியனுப்பினாள். மங்களா சாஸனம் செய்தாள். ப்ராம்மணர்கள் சூழ, ராஜ சூய யாகங்கள் செய்து புனிதமான அரசு பதவியில் இன்று ராஜா, இந்திரன் போல உலகை நடத்திச் செல்ல யுவராஜாவாக நியமிக்கப் போகிறார்.  தீக்ஷை  எடுத்து, விரதங்கள் அனுசரித்து, உயர்ந்த வஸ்திரங்கள் தரித்து, சுத்தமாக  தூயவனாக, குரங்க சாரங்க பாணியாக உங்களைக் காண விரும்புகிறேன். கிழக்கில் வஜ்ர தரனான இந்திரன் உங்களை ரக்ஷிக்கட்டும்.  தக்ஷிண திசையில் யமன் காவலாக இருக்கட்டும். மேற்கில் வருணன் பாதுகாக்கட்டும். தனாதிகாரியான குபேரன் உத்தர திசையில் காக்கட்டும்.  பிறகு சீதையிடம் விடை பெற்றுக் கொண்டு, கௌதுக மங்களங்களை ஏற்றுக் கொண்டு, சுமந்திரனுடன் மாளிகையை விட்டு வெளியே வந்தார்.  மலை குகையில் வாழும் சிங்கம் புறப்பட்டது போல இருந்தது. வழியில் லக்ஷ்மணன் வந்து சேர்ந்து கொள்ள, மற்ற நண்பர்களைக் கண்டு சற்று நின்று,  பேசி, குசலம் விசாரிப்பதும், வரவேற்பதுமாக நடந்தபடி மலை போல் இருந்த தன் ரதத்தில் ஏறினான்.  ராஜ நந்தனனான ராமன், ராஜத ரதத்தில் ஏறினான். (ராஜத- வெள்ளி) கண்களை கூசச் செய்யும் மணிகளாலும், புஷ்பங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்த ரதம், உத்தமமான குதிரைகள், ஒவ்வொன்றும் யானைக் குட்டி போல பெருத்த குதிரைகள் பூட்டப் பட்டிருந்தது. வேகத்தில் இந்திரனுடைய ரதத்துக்கு இணையானது.  திடுமென மழை பெய்தாற் போல ஆரவாரம் எழ, ஆகாயத்தில் சந்திரன் உதித்தாற் போல பவனி வந்தான். லக்ஷ்மணன், சத்ர சாமரங்களை ஏந்தியவனாக உடன் ஏறினான்.  லக்ஷ்மணனும் பின்னால் வசதியாக அமர்ந்த பின் ரதம் கிளம்பியது. கல கல வென சப்தம் ஜனக் கூட்டதிலிருந்து எழுந்தது. தங்கள் முன்னால் ராமன் கிளம்பிச் செல்வதைக் கண்டு வாழ்த்தி ஆரவாரம் செய்தது. ராமனுடைய ரதத்தை பின் தொடர்ந்து, உயர் ஜாதி குதிரைகள் மேலும், யானைகள் மேலும், படைகள் புறப்பட்டன. முன்னால் சேவகர்கள், வில்லும் வாளும் ஏந்தி விறைப்புடன் சென்றனர். சந்தனம் முதலிய வாசனை திரவியங்களை தெளித்தபடி சிலர் சென்றனர். பாடகர்கள் பாடுவதும்,  வாத்ய கோஷமும் ஒன்றாக எழுந்தன.  வழியில் சில சூரர்கள், சிம்ம நாதம் செய்தனர்.  ஸ்த்ரீகள் வழியிலிருந்த

மாளிகைகளின் வெளி வாராந்தாக்களில் நின்றபடி புஷ்பங்களை வாரி இரைத்தனர்.  எதிர் பட்டவர்கள் யாவரும் ராமனை வணங்கிச் சென்றனர். சிலர் வீடுகளிலிருந்தும், தரையில் நிற்பவர்கள் வாய் வார்த்தையாகவும் வணங்கினர்.  மாத்ரு நந்தனா, தாயாருக்கு பிரியமானவனே, உன் தாய் கௌசல்யா வாழ்க. மகிழ்ச்சியுடன் நீடுழி வாழ்க. மணமான ஸ்த்ரீகள் அனைவரிலும் சீதை உயர்ந்து நிற்கிறாள். ராமனுக்கு உகந்த பெண் அவளே என்று பெண்கள் சீதையைக் கொண்டாடினார்கள்.  இந்த தேவி முன் ஜன்மத்தில் நிறைய தவம் செய்திருக்க வேண்டும். சந்திரனை ரோஹிணி அடைந்ததைப் போல ராமனைக் கணவனாக அடைந்திருக்கிறாள். இவ்வாறு மாளிகைகளின் உச்சியில் நின்றபடி பெண்கள் பேசிக் கொண்டனர்.  தன்னைக் குறித்த இந்த வார்த்தைகளை ரதத்தில் சென்று கொண்டிருந்த ராமனும் கேட்டான். புர ஜனங்கள் மகிழ்ச்சியுடன் வெளி ப்படையாக பேசிக் கொண்டதை கேட்டு மகிழ்ந்தான்.  தசரத ராஜாவின் தயவால் இவன் நமக்கு அரசனாக ஆகப் போகிறான்.  ராஜ்ய லக்ஷ்மியை அடையப் போகிறான். நமக்கும் இதில் நன்மையே.  வெகு நாட்கள் இந்த ராஜ்யத்தை பரிபாலிக்கட்டும். நன்மைகள் பெருகட்டும். யாருக்குமே இவனிடத்தில் அபிப்பிராய பேதம் கிடையாது. இவனை வெறுப்பவர் யாருமில்லை. ராஜ்யத்தில் ராகவன் அமர்ந்திருக்கும் வரை யாருக்கும் எந்த துன்பமும் வராது. இப்படி ஊர் ஜனங்கள் ஒருபுறம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, பாடுபவர்கள், ஆடுபவர்கள், ஸ்வஸ்தி வசனம் சொல்பவர்கள், கட்டியம் கூறிக் கொண்டு முன் செல்பவர்கள், என்ற கூட்டமும், அதற்கும் முன்னால் குதிரைகளும், யானைகளும் செய்த சத்தம் இதையும் தாண்டிக் கேட்க, தேர்ந்த வாத்யக்காரர்கள், மங்கள வாத்யம் இசைத்துக் கொண்டு வர, வைஸ்ரவனன் போல சென்றான்.  அந்த பெரிய வீதி முழுவதும், யானைக் குட்டிகளும், பெரிய ரதத்தை இழுக்கும் குதிரைகளும், சமுத்திரம் போல ஜனக் கூட்டமும் தொடர்ந்து வந்த நிலையிலும், அந்த பெரிய கடை வீதிக ளி ல், ரத்னங்களும் மற்றவையும், மும்முரமாக வியாபாரம் நடந்து கொண்டிருந்த அழகிய காட்சியையும் ராமன் கண்டான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், ராம ப்ரஸ்தானம் என்ற பதினாறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)  

 

அத்தியாயம் 17 (94)  ராமாக3மனம் (ராமன் வருகை)

 

பிரதான வீதிகளில் ரதம் சென்றது. வீதி கொள்ளாமல் ஜனத்திரள்.  வீதிகளில் வாசனை திரவியங்கள்  தெளிக்கப்பட்டிருந்ததையும், தோரணங்களால் அழகுற அலங்கரிக்கப் பட்டிருந்ததையும், ஜனங்கள் உற்சாகமாக உடன் வந்ததையும் பார்த்தபடி, நிறைந்த மனத்தினனாக ராமன் சென்றான். ஜனங்கள் உத்தமமான பட்டாடைகள் அணிந்து, ஸ்பாடிக, முத்து மாலைகளையும் அணிந்து, உயர்ந்த வாசனை திரவியங்களை தங்கள் உடலிலும் பூசிக் கொண்டு வந்திருந்தனர். வழியில் தென்பட்ட கடைகளில் இனிப்பு வகைகளும், மற்றும் பல விதமான தின்பண்டங்களும் நிறைந்திருந்தன. அந்த பகல் வேளையில் தேவராஜனின் இந்திரனின் நகரம் போல இருந்தது அயோத்தி மா நகரம். பெரியவர்கள் ஆசிர்வதித்து அளித்த அன்பளிப்புகளை, தயிர், அக்ஷதை, பொரி, அகரு சந்தனங்கள், தூபங்கள், பலவிதமான மாலைகள் இவற்றை பெற்றுக் கொண்டும்,  அவர்களுக்கு பதில் மரியாதை செலுத்திய வண்ணம், உடன் வந்த நண்பர்களுடன் இடையிடையே பேசிக் கொண்டும் ராமனின் ஊர்வலம் தொடர்ந்தது. பலர், இன்று முடி சூட்டிக் கொண்டு, நீயும், பாட்டனார், முப்பாட்டனார் காலத்திலிருந்து வந்த நல்ல வழக்கங்களை அனுசரிப்பாயாக என்று வாழ்த்தினர். முதியவர்கள் பலர், உன் தந்தை காலத்திலும், அதற்கும் முன்னும் நாங்கள் மதிப்பும் மரியாதையும் பெற்று வாழ்ந்தோம், அது தொடரட்டும் என்று வாழ்த்தினர்.  ராமன் அரசனானால் இதை விட அதிகமான மதிப்பும், மரியாதையும் பெறுவோம், சந்தேகமேயில்லை என்று தங்களுக்குள் பேசிக் கொள்வதும் ராமன் காதில் விழுந்தது. இதை விட பரமார்த்தம் வேறு என்ன வேண்டும், முடி சூட்டிக் கொண்டு ராமன் இந்த வழியாக வருவதைக் காண காத்திருப்போம் என்றனர் சிலர்.  இவ்வாறு நண்பர்களும், மற்றவர்களும் தன்னைப் பற்றி உயர்வாக பேசுவதைக் கேட்டுக் கொண்டே ராமன் அந்த பிரதான வீதியில் சென்றான். தங்களை கடந்து சென்ற பின்னும் ஜனங்கள் ராமனிடம் வைத்த கண்களையும், மனதையும் திரும்பப் பெறாதவர்கள் போல  பார்த்துக் கொண்டே நின்றனர்.  அந்த இடத்தை விட்டு நகர கூட முயற்சிக்கவில்லை போல இருந்தது. எவன் ராமனை பார்க்கவில்லையோ, எவனை ராமன் பார்க்கவில்லையோ, அவன் உள்ளமே அவனைச் சாடும், உலகத்திலேயே நிந்தைக்குள்ளாகும் துரதிருஷ்டசாலி அவன் ஒருவனே ஆவான். எந்த வர்ணத்தாராயினும், ராமன் அவர்களிடம் கருணை காட்டி பேசுவான். நான்கு விதமான வயதினரிடமும், அந்தந்த வயதுக்குரிய முறையில் உரையாடுவான்.  நான்கு மார்கங்களிலும் இருந்த தெய்வ சன்னிதிகளையும், பெரிய கோவில்களையும் ராமன் பிரதக்ஷிணமாக கடந்து சென்றான். அரச குலம் வசித்த வீதியில் நுழைந்த ரதம், மேக மண்டலம் போல உயர்ந்த கூட கோபுரங்களோடு இருந்த மாளிகைகளை, கைலாஸ சிகரமோ எனும்படி உயரமான விமானங்களும், ஆகாயத்தை தொட்டு விடும் போல இருந்த மாளிகை, வெண்மையாக பூசப் பெற்றிருந்த வீடுகளையும் கடந்து,  அதை அடுத்து பூமிக்கு ஒரு விளக்காக அமைந்த தசரத அரசனின் மாளிகை, இந்திர பவனம் போல தெரிந்த தந்தையின் மாளிகையினுள் நுழைந்தான். தன் தேக காந்தியே தன்னை யார் என்று காட்டிக் கொடுக்கும் படி, குதிரையில் அமர்ந்து  மூன்று அறைகளைக் கடந்தான்.  அடுத்த இரண்டு அறைகளை நடந்து சென்று, மற்றவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி விட்டு தான் மட்டுமாக சுத்தாந்த:புரம் அடைந்தான்.  சமுத்திரம் சந்திரோதயத்தை எதிர் நோக்கி இருப்பதைப் போல ஜனங்கள் ராமன் திரும்பி வருவதை எதிர்பார்த்து, அறையினுள் நுழைந்த ராமனின் பின்னால் காத்திருந்தனர். தங்களுக்குள் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், ராமாக3மனம் என்ற பதினேழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) (ஸ்லோகங்கள் – 22).

 

அத்தியாயம் 18 (95) வனவாஸ நிதேஸ: (வனம் செல்ல ஆணையிடுதல்)

 

தந்தையின் அறையில் நுழைந்த ராமன் தீனமான முகத்துடன் அமர்ந்திருந்த தந்தையை, பின், அருகில் அமர்ந்திருந்த கைகேயியையும் கண்டான்.  முதலில் தந்தையையும், பின் தாயான கைகேயியையும்  வணங்கினான்.  கண்களில் நீர் நிறைந்து வழிய ராமா என்று அழைத்து விட்டு, தசரத ராஜா, தீனனாக அதற்கு மேல் பேச முடியாதவராக, நிமிர்ந்து பார்க்கவும் திராணியில்லாதவராக, தலை குனிந்து தவித்தபடி இருந்ததைக் கண்டான். இது வரைக் கண்டிராத இந்த கோலம், பயத்தை அளிக்கும் உடல் நிலை, இவற்றைக் கண்டு,  ராமன் பாம்பை மிதித்தவன் போல பதறினான். இந்திரியங்கள் நிலை குலைந்து, சோகத்தாலும், தாபத்தாலும் வாடும்,  மேல் மூச்சு வாங்க மனம் கலங்கி இருந்த மகா ராஜாவை, கலங்கிய மனமும் புத்தியும்  வெளிப்படையாகத் தெரிய, அலை வீசும் பெருங்கடல் வற்றியது போலவும்,  சூரியன் மறைக்கப் பட்டது போலவும்,  ஒரு ரிஷி தன் மார்கத்திலிருந்து விலகி பொய் சொன்னது போலவும்,  நினைத்துக் கூட பார்க்க முடியாத  சோகத்துள் மூழ்கி கிடக்கும் தந்தையைக் கண்டு, ராமனின் மனமும், பர்வ காலங்களில் கொந்தளிக்கும் சமுத்திரம் போல  சஞ்சலம் அடைந்தது.  தந்தையின் நலத்தையே எண்ணும் ராமன் நினத்தான். இன்றைக்கு என்றும் போல எதிர் கொண்டழைக்கவில்லையே. அன்புடன் அணைத்து கொஞ்சவில்லையே. கோபமாக இருந்தாலும் என்னைக் கண்டதும் சாந்தமாகி விடுவாரே.  இன்று என்னைக் கண்டதும் அதிக வாட்டம் அடைய என்ன காரணம்? சக்தியை முழுதும் இழந்தவன் போல தீனனாக முகம் வாடி இருக்கிறாரே.  இவ்வாறு எண்ணி, கைகேயி இருந்த பக்கம் திரும்பி, அவளை  வணங்கி, என் அறியாமையினால் நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா? என்று வினவினான்.  என்னிடம் கோபமா? எப்பொழுதும் வாத்ஸல்யம் ததும்ப பேசுபவர், இன்று என்னைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததாக  தெரியவில்லையே. கலங்கிய கண்களும்,  வெளிறிய முகமும் , உடல் சக்தியற்றவரைப் போலவும் இவரைக் கண்டதே இல்லையே. என்னிடம் ஏன் பேசவில்லை? ஏதோ ஒன்று இவர் மனதையும் உடலையும் பாதித்திருக்கிறது. ஏதோ சந்தாபம், சீதளம் இவரை வாட்டுகிறது.  எப்பொழுதும் சுகமாக இருப்பது துர்லபம் தானே. நீங்கள் தான் கொஞ்சம் சமாதானம் செய்யுங்கள். பிரியமான தோற்றம் கொண்ட பரதனிடத்திலோ, மகா புத்திசாலியான சத்ருக்னனிடத்திலோ, என் தாய்மார்கள் விஷயத்திலோ நான் வருத்தம் அடையும் படி நடந்து கொண்டு விட்டேனா? தந்தை சொல்லை மீறினேனா? அரசன் என்னிடம் கோபம் கொண்டால் முஹுர்த்தம் கூட நான் உயிருடன் இருக்க மாட்டேன். தான் உருவாக காரணமாக இருந்த, ப்ரத்யக்ஷ தெய்வம் போன்ற பெற்றோரிடம் மனிதன் எப்படி உதாசீனமாக நடந்து கொள்ள முடியும்? அபிமானம் காரணமாக ஏதாவது கடுமையாக சொல்லி, நீங்கள் கோபித்துக் கொண்டு அதனால் மன வாட்டம் அடைந்தாரா? நான் சிரத்தையோடு கேட்கிறேன், பதில் சொல்லுங்கள் தேவி.  என்ன காரணத்தினால், என் தந்தை என்றுமில்லாத முக வாட்டத்துடன் இருக்கிறார். இவ்வாறு மகாத்மாவான ராமன் கேட்டதும், கைகேயி பதில் சொன்னாள். தயக்கமோ வருத்தமோ இன்றி பேசினாள். சற்றும் லஜ்ஜையில்லாமல், தன் காரியமே குறியாக ராமனிடம் சொன்னாள். ராமா, அரசனுக்கு கோபம் இல்லை.  எந்த விதமான வருத்தமும் இல்லை. இவர் மனதில் ஒன்று இருக்கிறது. உன்னிடத்தில் வெளிப் படையாக பேசத் தயங்குகிறார். உன்னிடத்தில் பயப்படுகிறார். பிரியமான மகன் நீ. உனக்கு அப்ரியமான, விரும்பத் தகாத விஷயத்தைச் சொல்ல இவருக்கு நா எழும்பவில்லை. அதனால் இவர் சொல்லி கேட்டதை நான் சொல்கிறேன். நீ கண்டிப்பாக செய்ய வேண்டும்.  முன்பொரு சமயம் என்னிடம் மிகவும் மகிழ்ந்து வரங்கள் கொடுத்தார். இப்பொழுது பாமரன் போல அந்த செயலுக்காக வருந்துகிறார். தருகிறேன் என்று எனக்கு வரங்களைக் கொடுத்து விட்டு, இப்பொழுது தயங்குகிறார். பத்து திக்குகளிலும் பரவிய பெரிய சாம்ராஜ்யத்தை ஆளும் மகா ராஜா இவர்.  தண்ணீர் வடிந்த பிறகு சேதுவைக் கட்ட முயலுவது போல இருக்கிறது இவர் செயல். ராமா, அரசனாக இருப்பவன் எப்பொழுதும் சத்யத்தை விடக் கூடாது. இது எல்லோரும் அறிந்ததே. தர்மத்திற்கு ஆதாரமே இது தான். ராஜா சொல்வது, சுபமானாலும், அசுபமானாலும், நீ செய்வாயா? அப்படியானால் நான் முதலில் இருந்து நடந்ததை திரும்பச் சொல்கிறேன். அரசன் சொல்வது உனக்கு பிடிக்காமல் போனாலும் எதிர்க்காமல் இருந்தால் நான் சொல்கிறேன்.  இவர் தானாக சொல்ல மாட்டார். இவ்வாறு அரசன் முன்னாலேயே கைகேயி சொல்லவும், ராமன் மிகவும் வருந்தினான். அஹோ | திக், கஷ்டமே.   தேவி, என்னைப் பார்த்து இப்படி பேசுகிறாயே, ராஜாவின் கட்டளை என்றால் நான் நெருப்பில் கூட குதிப்பேன் என்பது தெரியாததா?  கொடிய விஷமானாலும் சாப்பிடுவேன். சமுத்திரத்தில் மூழ்கச் சொன்னாலும் செய்வேன்.  தந்தை எனக்கு குரு, அரசன்.  என் நலத்தையே விரும்பும் அன்புடையவர். அவர்  சொல்லி மறுப்பேனா? அதனால், தேவி, நீ சொல்லு. ராஜாவின் மனதில் என்ன விருப்பம் உள்ளது? நான் கண்டிப்பாக செய்வேன். இதோ பிரதிக்ஞை செய்கிறேன்.  ராமன் எப்பொழுதும் இரண்டு வார்த்தை பேச மாட்டான். இப்படி நேர்மையே உருவாக நின்றவனிடம், பண்பற்ற கைகேயி, மென்மையாக  உண்மையையே எப்பொழுதும் பேசும் ராமனிடத்தில், கொடுமையான வார்த்தைகளை சொன்னாள். 

 

முன்பு, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடந்த பொழுது, உன் தந்தை எனக்கு இரண்டு வரங்கள்  கொடுத்தார். ராகவா,  நான் அவரை காப்பாற்றியதால் சந்தோஷமாக இரண்டு வரங்கள் கொடுத்தார். மிகப் பெரிய அந்த யுத்தத்தில், அம்பு தைக்கப் பட்டு, உயிருக்கு மன்றாடிய அவரை நான் பிழைக்கச் செய்தேன்.   அந்த வரத்தைக் கொண்டு நான் பரதனுக்கு ராஜ்யத்தை யாசித்தேன்.  நீ தண்டகாவனம் செல்ல வேண்டும் என்றும் கேட்டேன். உன் தந்தையை சொன்ன சொல் மீறாதவன், சத்யப்ரதிக்ஞன் என்ற நற்பெயர் கெடாதவாறு செய்ய, நீயும்  அதே போல வாக்கு மீறாதவன் என்ற பெயரை காப்பாற்றிக் கொள்.  இதோ நான் சொல்வதைக் கேள். அரசன் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்று. ஒன்பது வருஷம், பின்னும் ஐந்து வருஷம் நீ காட்டில் வசிக்க வேண்டும். பரதன் முடி சூட வேண்டும். உனக்கு முடி சூட்டுவதற்காக செய்துள்ள இதே ஏற்பாடுகள், ஆயத்தங்களைக் கொண்டே பரதன் முடி சூடுவான்.  ஏழு, ஏழு வருஷங்கள், தண்டகாரண்யத்தில் வசிப்பாயாக. இந்த பதவியை தியாகம் செய்து விட்டு, ஜடை முடி தரித்தவனாக, வனம் செல். பரதன் இந்த கோஸல புரத்தை ஆளட்டும். பலவிதமான ரத்னங்கள் நிறைந்ததும், குதிரைகளும் யானைகளும் நிறைந்த இந்த பூமியை பரதன் அடைவான். கருணையால், அரசன் தானே இதை உன்னிடம்  சொல்லத் தயங்குகிறார். உன்னை நிமிர்ந்து பார்க்கவும் இயலாமல் தலை குனிந்து சோகத்துடன் இருக்கிறார்.  ரகு நந்தனா, அரசனது இந்த கட்டளையை நிறைவேற்று. நராதிபனான உன் தந்தையை சத்யம் என்ற பெரிய சக்தியினால், காப்பாற்று.  இவ்வளவு கடுமையான வார்த்தையை கைகேயி சொல்லக் கேட்டும் ராமன் மனதில் வருத்தம் தோன்றவில்லை.  அரசனோ, தன் மகனுக்கு வந்துள்ள மிகப் பெரிய கஷ்டத்தை நினைத்து அளவிட முடியாத தாபத்திற்கு ஆளானான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், வன வாஸ நிதேஸோ என்ற பதினெட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) (ஸ்லோகங்கள் – 41).

 

அத்தியாயம் 19 (96) ராம ப்ரதிக்ஞை (ராமன் சத்தியம் செய்தல்)

 

இந்த கடும் வார்த்தையை கைகேயி சொல்லக் கேட்டும் ராமன் மனம் கலங்கவில்லை.  கைகேயியிடம் அப்படியே ஆகட்டும். வனத்தில் வசிக்க இதோ கிளம்புகிறேன். ஜடை முடி தரித்து அரசனின் ஆணையை சிரமேற்கொண்டு கிளம்புகிறேன். ஆனால் ஒரு விஷயம் தெரிய வேண்டும். ஏன் என் தந்தை வழக்கம் போல என்னைக் கண்டதும் மகிழ்ந்து வரவேற்கவில்லை? கோபிக்க வேண்டாம் தேவி. உன் எதிரில் சொல்கிறேன், நான் போகிறேன். நீ சந்தோஷமாக இரு. வல்கலையும், ஜடை முடியும் தரித்து நான் வனம் போகிறேன். என் தந்தை எப்பொழுதும் என் நலம் நாடுபவர்,  எனக்கு குரு. செய் நன்றி மறவாதவர். மேலும் அரசன். அவர் கட்டளையிட்டு, நான் அதை செய்யாமல் போவேனா?  அவர் ஏன் நம்பிக்கையோடு கவலையற்று என்னிடம் தானே சொல்லவில்லை. ஏதோ ஒரு விஷயம் நம்ப முடியாமல் என் மனதை வாட்டுகிறது. ராஜா ஏன் தானே என்னிடம் சொல்லக் கூடாது. பரதனுக்கு அபிஷேகம் செய்யப் போவதாக ராஜாவே என்னிடம் சொல்லியிருக்கலாம். முன்னாலேயே கோடி காட்டியிருந்தால்  நான் சீதையையோ, ராஜ்யத்தையோ, உயிரையோ, இஷ்ட ஜனங்களையோ, செல்வத்தையோ, சந்தோஷமாக பரதனுக்கு கொடுத்திருப்பேன். மனிதருள் இந்திரன் போன்ற என் தந்தை தானே உங்களுக்கு கொடுத்த வாக்கையும், அதை தான் காப்பாற்ற இருப்பதையும் என்னிடம் சொல்லியிருக்கலாம்.  இப்பொழுது லஜ்ஜையினால் முகம் கவிழ்ந்து இருக்கும் அவரை சமாதானப் படுத்துங்கள்.  சக்ரவர்த்தியாக இருந்து கொண்டு பூமியை நோக்கி முகம் கவிழ்ந்து கண்ணீர் விடுகிறார்.  தூதர்கள் வேகமாக செல்லும் குதிரைகளில் செல்லட்டும்.  ராஜாவின் கட்டளை என்று இன்றே பரதனை அழைத்து வரட்டும். உடனே நானும் தண்டகாரண்யம் இதோ போகிறேன், வேகமாக.  பதினான்கு வருஷம் வனத்தில் வசிக்க வேண்டும் என்ற தந்தையின் வார்த்தையை யோசிக்காமல் ஏற்றுக் கொள்கிறேன்.  ராமனின் இந்த பதிலைக் கேட்டு கைகேயி மகிழ்ந்தாள். அவனை சீக்கிரம் அனுப்புவதே குறியாக, முகம் மலர இருந்தவள், ராமனை துரிதப் படுத்தினாள். அவ்வாறே ஆகட்டும், வேகமான குதிரைகளில் ஏறி தூதர்கள் செல்வார்கள். ஜனங்கள் பரதனை மாமன் வீட்டிலிருந்து அழைத்து வரச் செல்வார்கள்.  நீ உற்சாகமாக கிளம்பியவன் தாமதம் செய்வது சரியல்ல. ராமா, நீ இங்கிருந்து சீக்கிரம் வனம் செல்.  லஜ்ஜையினால் ராஜா தானாக உன்னிடம் பேச முற்படவில்லை. இதனால் உனக்கு மனத் தாங்கல் இருக்கலாம். அதை லட்சியம் செய்யாதே. அவசரமாக நீ எதுவரை இந்த ராஜ்யத்தை விட்டு, ஊரை விட்டு  நீ வனம் போகவில்லையோ அதுவரை ராஜா, உன் தந்தை ஸ்னானம் செய்ய மாட்டார், சாப்பிடவும் மாட்டார்.  இதைக் கேட்டு -திக்-  கஷ்டமே என்று சொல்லியபடி ராஜா மூர்ச்சையாகி தங்கத்தாலான அந்த கட்டிலிலிருந்து கீழே விழுந்தார். அவரைத் தூக்கி படுக்கையில் கிடத்தினான். கைகேயியின் கடுமையான வார்த்தைகள் வேகமாக செல்லும் உயர் ஜாதி குதிரை கசையடி பட்டது போல துடிக்கச் செய்தது.    பண்பற்ற கைகேயி துரிதபடுத்துவது எதற்காக?  அவளைப் பார்த்து சற்று காட்டமாகவே செல்வத்தின் பின்  செல்லும் அல்பன் நான் அல்ல தேவி.  உன் ராஜ்யத்தில் தங்கி என்னுடையதாக ஆக்கிக் கொள்ள மாட்டேன். என்னை ரிஷிகளுக்கு சமமாக எண்ணுவாய். தர்மம், தர்மம் ஒன்றேயே பின் பற்றுபவன். இங்கு இதோ, இவருக்கு சிறிதளவாவது பிரியமாக செய்ய முடியுமானால்,  என் உயிரைக் கூட மதியாமல் கண்டிப்பாக செய்பவன் நான், இதை தெரிந்து கொள்.  என் தந்தைக்கு பணிவிடை செய்வதைக் காட்டிலும் மகத்தான தர்மாசரணம், தர்மத்தை கடை பிடித்தல் என்பது வேறு எதுவுமே இல்லை. அந்த முறையில் உன் வசனத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.  இந்த பெரியவர் தானே சொல்லாவிட்டலும் கூட, உடன் இருந்து நீ சொல்வதை மதித்து, நான் ஜனங்கள் இல்லாத அடர்ந்த காட்டில் பதினான்கு வருஷம் வசிப்பேன்.  என்னிடத்தில்  நல்ல குணம் இருப்பதாக நீ நினைக்கவில்லை கைகேயி.  நான் மிகவும் மதிப்பு வைத்திருந்த அரச மகிஷியான நீ அரசனிடம் சொன்னாயே, அது மிகக் கொடியது.  என் தாயை வணங்கி விடை பெறும் வரை, சீதையிடம் விஷயத்தைச் சொல்லி சமாதானம் செய்யும் வரை அவகாசம் கொடு.  இன்றே தண்டகாவனம் போகிறேன். பரதன் ராஜ்யத்தை ஆளட்டும்.  நீ என்ன செய்கிறாயோ, அது தான் பெரிய தர்மம், பழமையான தர்மம் என்ற ராமனின் வார்த்தைகள் கேட்டுக் கொண்டிருந்த தசரத ராஜாவின் நெஞ்சில் தைத்தன.  பெருங்குரலில் அழ ஆரம்பித்தார், எதுவுமே பேசவோ, சொல்லவோ அவரால் முடியவில்லை. நினைவிழந்த தந்தையின் சரனங்களில் வணங்கி விட்டு, பட்டென்று வெளியேறினான். வெளியே,தன் நண்பர்களைக் கண்டான். மகா கோபத்துடன் கண்களில் நீர் வழிய லக்ஷ்மணன் ராமனை பின் தொடர்ந்தான். அபிஷேகத்திற்காக வைத்திருந்த கலசங்களை வலம் வந்து வணங்கி விட்டு, கண்களை எடுக்காமலே,  சுற்றிலும் பார்வையை செலுத்தாமல், ராமன் வேகமாக சென்றான். மிகப் பெரிய ராஜ்ய லக்ஷ்மி தன்னை விட்டு விலகியது கூட ராமனுக்கு வருத்தத்தை தரவில்லை,  பூமியை தியாகம் செய்து விட்டு வனம்  செல்லும் உறுதி பூண்டவன் மனம் சற்றும் தளரவில்லை.  பரிஜனங்கள் அளித்த சுபமான குடையையும், சாமரங்களையும் தடுத்து விட்டு, தன் ஜனங்களையும் விலக்கி விட்டு, ரதத்தையும், ஊர் ஜனங்களையும் தவிர்த்து, கால் நடையாகவே,  வேகமாக தாயாரின் மாளிகையினுள் நுழைந்தான். இந்திரியங்களை கட்டுப் படுத்தி, தன் உணர்ச்சிகளை சற்றும் வெளிக் காட்டாமல், மனதில் பொங்கும் துக்கத்தையும், கோபத்தையும் அடக்கி விரும்பத் தகாத செய்தியை தாயிடம் சொல்ல தயாரானான்.  உற்றார்கள், சுற்றத்தார் அவன் முகக் குறிப்பிலிருந்து எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. சத்யவாதி, ஸ்ரீமான், அவன் தன் சந்தோஷத்தை   வெளிக் காட்டாமல் இருப்பது உசிதமே என்று எண்ணினர், சரத் சந்திரன் தன் தேஜஸை வெளிப் படுத்திக் கொள்வதில்லையே என்று நினைத்தனர்.  எல்லா ஜனங்களையும் மதுரமான வார்த்தைகளால் விசாரித்து விட்டு, தாயின் சமீபம் சென்றான். குணங்களால் அவனுக்கு சமமான லக்ஷ்மணனும்  அதே போல பின் தொடர்ந்தான். மிகவும்  கோலாகலமாக, வெளிப்படையாக மகிழ்ச்சி தெரிய நடமாடிய ஜனங்கள் நிறைந்து இருந்த மாளிகையில், தன்னை கண்டு, நண்பர்களும், மற்றவர்களும் எதையும் தெரிந்து கொண்டு விட முடியாத படி முகத்தில் எந்த வித சலனமும் காட்டாது இருந்தான்.

 

இதுவரை வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், ராம ப்ரதிக்ஞா  என்ற பத்தொன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) (ஸ்லோகங்கள் – 40).

 

 

 

ஸ்ரீமத் ராமாயணம் பால காண்டம் 56 to 77

அத்தியாயம் 56ப்ரும்ம தேஜோ பலம்(ப்ரும்ம தேஜஸின் பலம்)

 

வசிஷ்டர் இவ்வாறு சொல்லவும்,மகா பலசாலியான விஸ்வாமித்திரர் ஆக்னேய அஸ்திரத்தைப் போட்டு, நில், நில் என்று கூவினார். மற்றொரு கால தண்டம் போன்ற தன் ப்ரும்ம தண்டத்தை உயர்த்தி, பகவான் வசிஷ்டர் கோபத்துடன் சொன்னார் -க்ஷத்திர பந்தோ,(இது ஒரு நிந்திக்கும் சொல்) இதோ நிற்கிறேன், உன்னிடம் உள்ள சக்தியைக் காட்டு. உன் கர்வத்தையும், சஸ்திரத்தையும் ஒன்றாக அடக்குகிறேன், கா3தி4 பிள்ளையே, உன் க்ஷத்திரிய பலம் எங்கே,என் ப்ரும்ம பலம் எங்கே, க்ஷத்திரிய குலத்துக்கே களங்கமாக வந்தவனே, இதோ என் ப்ரும்ம பலத்தின் சக்தியைப் பார் என்று சொல்லி,விஸ்வாமித்திரர் போட்ட ஆக்னேயாஸ்திரத்துக்கு மாற்றாக நீரில் அக்னி அனைவது போல, வேறொரு அஸ்திரத்தால் அடக்கினார். வாருணம், ரௌத்ரம், ஐந்திரம், பாசுபதம், ஐஷீகம் போன்ற அஸ்திரங்களை சர மாரியாக விட்டார். விஸ்வாமித்திரர் மானவம், மோஹனம், காந்தர்வம், ஸ்வாபனம் என்றும் ஜ்ரும்பனம், மாதனம் என்றும் சதாபன விலாபனம் போன்றவை, சோஷணம், தாரணம், வஜ்ரமஸ்திரம், எதிர்க்க முடியாத ப்ரும்ம பாசம், கால பாசம், வாருண பாசம் போன்றவை, பைனாகாஸ்திரம், சுஷ்கார்த்ரே, அசனீ என்ற இரட்டைகள், தாண்டாஸ்திரம், பைசாசம், க்ரௌஞ்சமாஸ்திரம், தவிர, தர்ம சக்கரம், கால சக்கரம், விஷ்ணு சக்கரம் போன்றவை, வாயவ்யம், மதனம், ஹயசிரஸ் என்ற அஸ்திரம், சக்தி த்வயம் என்ற அஸ்திரம், கங்காலம், முஸலம் போன்றவை, வைத்யாதரம், மகாஸ்த்ரம், காலாஸ்த்ரம், மேலும் தாருணம், த்ரிசூலமஸ்திரம், கோரம், காபாலம் மேலும் கங்கணம், இது போன்ற அஸ்திரங்களை, வரிசையாக எல்லா அஸ்திரங்களையுமே பிரயோகித்தார்.ரகு நந்தனா, எதோ அதிசயம் போல, தன் தண்டத்தில் இத்தனையையும் வசிஷ்டர் க்ரஹித்துக் கொண்டு விட்டார். இவை எல்லாம் சாந்தமான பின், கா3தி4 நந்தனான விஸ்வாமித்திரர் ப்ரும்மாஸ்திரத்தை பிரயோகம் செய்தார்.

அந்த அஸ்திரத்தை விட்டதையறிந்து தேவர்கள், அக்னி முதலானோர், தேவ ரிஷிகள் எல்லோருமே பர பரப்படைந்து என்ன நடக்குமோ என்று பயந்தார்கள். மூன்று உலகுமே ஸ்தம்பித்து நின்றது. ப்ரும்மாஸ்திரம் மகா கோரமானது என்றாலும், அதையும் தன் தண்டத்தில் தாங்கி நின்றார் வசிஷ்டர். ப்ரும்மாவின் அந்த அஸ்திரத்தை தன் ப்ரும்ம தேஜசால் வெற்றி கொண்டார். ப்ரும்மாஸ்திரத்தைக் கிரஹித்துக் கொண்டவுடன், வசிஷ்டருடைய ரூபம், மூவுலகையும் மயக்கும் ரௌத்ரமான, மிக பயங்கரமான ரூபமாக ஆயிற்று. வசிஷ்டருடைய மகானான சரீரத்தில், ரோம ரோமங்களிலிருந்து , மரீசி-ஒளிக் கற்றைகள், நெருப்புத் துணுக்குகள் விழுவது போல விழுந்தன. வசிஷ்டர் கையிலிருந்த ப்ரும்ம தண்டம் ஒளி வீசியது. காலாக்னி புகையின்றி வந்தது போலவும், மற்றொரு யம தண்டம் போலவும் அது விளங்கியது. முனி ஜனங்கள், வசிஷ்டரைத் தோத்திரம் செய்தனர். உன்னுடைய இந்த பலம் எதிர்க்க முடியாதது. உன் தேஜஸால் இதைத் தாங்குவாயாக. ப்ரும்மன், உன்னால் விஸ்வாமித்திரர் அடக்கப் பட்டார். மகா பலசாலியான அவரே ஒடுங்கியபின், தயை செய்து சாந்தமாகுங்கள். ஜபம் செய்பவர்களுள் உத்தமமானவரே, உலகின் கஷ்டம் நீங்கட்டும். தயை செய்யுங்கள் என்று முனி கணங்கள் பிரார்த்திக்க, சாந்தம் அடைந்தார். விஸ்வாமித்திரரும், தன் கர்வம் அடங்கி, பெரு மூச்சு விட்டவாறு, தி4க் பலம், க்ஷத்திரிய பலம் அர்த்தமற்றது. ப்ரும்ம தேஜோ பலமே பலம், ப்ரும்ம தேஜஸுடன் கூடிய சக்தியே சக்தி. ஒரே ஒரு ப்ரும்ம தண்டம்  மூலம் என்னுடைய ஆயிரக்கணக்கான அஸ்திரங்களை தடுத்து நிறுத்தி விட்டார். இதையறிந்து நான் மனம், வாக்கு, காயம் இவற்றால், ப்ரஸன்னமாக தவம் செய்யப் போகிறேன். மகா தவம் செய்வேன். எவ்வளவு தவம் செய்தால் ப்ரும்மத்வம் கிடைக்குமோ, அதுவரை தவம் செய்வேன்- என்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ப்ரும்ம தேஜோ பலம் என்ற ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 57 திரிசங்கு யாஜன பிரார்த்தனை (திரிசங்குவின் வேண்டுகோள்)

 

தான் தோல்வியடைந்ததை நினைத்துநினைத்து மனம் கொந்தளிக்க, திரும்பத் திரும்ப பெருமூச்சு விட்டபடி, தோல்வியைத் தாங்க முடியாமல், அதனாலேயே வைரத்தை, பகையை வளர்த்துக் கொண்டு, விஸ்வாமித்திரர் தென் திசை சென்று மனைவியுடன் பயங்கரமாகத் தவம் செய்தார்.ராகவா, தீவிரமான தவத்தில் ஈ.டு பட்டார்.பழம், கிழங்கு வகைகளை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு, சாந்தமாக தவமே குறியாக நடமாடிக் கொண்டிருந்தார்.அவருக்கு சத்ய தர்ம பராயணர்களாக புத்திரர்கள் பிறந்தனர்.ஹவிஷ்யந்தன், மதுஷ்யந்தன், த்ருட நேத்ரன், மகாரத: என்று பெயரிட்டார்.ஆயிர வருஷ முடிவில் ப்ரும்மா அவர் எதிரில் தோன்றி இனிமையாக, தபோதனரான விஸ்வாமித்திரரிடம் சொன்னர். – ராஜரிஷியே, குசிகாத்மஜா, உலகங்கள் உன்னால், தவத்தின் பயனாக ஜயிக்கப் பட்டன.இந்த தவப் பயனாக உன்னை ராஜரிஷியாக அங்கீகரிக்கிறோம். இவ்வாறு சொல்லி, மற்ற தேவதைகளோடு மறைந்தார்.உலகுக்கெல்லாம் ஈஸ்வரனான, ப்ரும்மா,ப்ரும்ம லோகம் என்றும் த்ரிவிஷ்டபம் என்றும் அழைக்கப் படும் தன் இருப்பிடத்தைச் சென்றடைந்தார்.அவர் மறைந்ததும், வெட்கத்தில் தலை குனிந்தவராக, துக்க மிகுதியால், கோபத்துடன், விஸ்வாமித்திரர் தனக்குள் சொல்லிக் கொண்டார்.இவ்வளவு தவம் செய்த பின்னும், என்னை ராஜரிஷி என்று அழைக்கிறார்களாம்.தேவர்களும், ரிஷி கணங்கள், எல்லோருமாக வந்து இதை சொல்லி விட்டு போகிறார்கள்.இது என் தவத்திற்கு உரிய பயனே இல்லை என்றே எண்ணுகிறேன்.தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டு, திரும்பவும் தவம் செய்ய முனைந்தார்.மிகவும் தன்மானம் கொண்டவரான அவர், தவம் செய்தார்.இதே சமயத்தில், சத்யவாதியும், மனக் கட்டுப் பாடு உடையவனுமான, இக்ஷ்வாகு குல அரசனான த்ரிசங்கு என்பவன், தான் ஒரு யாகம் செய்வேன் என்று ஆரம்பித்தான்.இந்த யாக முடிவில், நான் சரீரத்துடன் தேவலோகம் செல்வேன் என்று தீர்மானித்து, வசிஷ்டரைக் கூப்பிட்டு, தன் எண்ணத்தைச் சொன்னான்.அது முடியாது என்று வசிஷ்டர் , மறுத்து விடவும், ஊர் திரும்பும்சமயம் தெற்கு நோக்கி வந்தான்.வசிஷ்டருடைய பிள்ளைகள் வெகு காலமாகத் தவம் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.மனதில் இதே எண்ணத்தோடு அவர்களை அணுகி விசாரித்தான்.வசிஷ்ட புத்திரர்கள் நூறு பேர்.அனைவரும் கடுமையானத் தவம், விரத, நியமங்கள் செய்து மகா தேஜஸ்வியாக இருந்தனர். தானே அந்த குரு புத்திரர்கள் இருக்கும் இடம் வந்து, வெட்கத்தினால் தலை வணங்கியவனாக, கை கூப்பியபடி, எல்லோரும் ஒன்றாக இருந்த சமயம் தன் ஆசையை  வெளி யிட்டான். நான் உங்களை சரண் அடைகிறேன்.நீங்கள் எனக்கு அபயம் அளிக்க வேண்டும்.வசிஷ்டர் என் ஆசையை பூர்த்தி செய்ய முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டார்.உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்.ஒரு பெரிய யாகம் செய்ய விரும்புகிறேன்.அதற்கு அனுமதி கொடுங்கள். குரு புத்திரர்களான உங்கள் அனைவரையும் காலில் விழுந்து வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.நீங்கள் தவத்தில் ஈ.டுபட்டுள்ள ப்ராம்மணர்கள். அதனால் இதில் தவறில்லை. என் இஷ்டம் பூர்த்தியாகும் விதத்தில் நீங்கள் யாகத்தை நடத்துங்கள்.இந்த சரீரத்தோடு நான் தேவலோகம் செல்ல வேண்டும்.வசிஷ்டர் மறுத்து திருப்பி அனுப்பிய பிறகு எனக்கு வேறு யார் கதி, அதனால் தான் குருபுத்திரர்களான உங்களை வந்து வேண்டுகிறேன்.வேறு யாரிடம் போவேன். இக்ஷ்வாகு குலத்திற்கு, குருவான புரோஹிதர்கள் தான் எல்லாம்.அவர்கள் தான் அரசர்களை கஷ்டங்களிலிருந்து கரையேற்றுகிறார்கள்.வழி வழியாக நடந்து வருவது இது. நான் உங்களிடம் சொல்லி விட்டேன், இதன் பின் உங்கள் இஷ்டம் என்று சொல்லி நிறுத்தினான் த்ரிசங்கு.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில்,திரிசங்கு யாஜன ப்ரார்த்தனா என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 58 த்ரிசங்கு சாபம் (திரிசங்கு பெற்ற சாபம்)

 

வசிஷ்டர் மறுத்ததினால் ஏற்பட்ட கோபம்  வெளிப்படையாகத் தெரிய, அரசனான திரிசங்கு சொன்னதைக் கேட்டு குரு புத்திரர்கள் நூறு பேரும், அரசனிடம் -உங்கள் குரு சத்யவாதி.அவரே திருப்பி அனுப்பிய பிறகு வேறு மார்கத்தை நாடி நீங்கள் வருவது என்ன நியாயம்? இக்ஷ்வாகு அரசர்களுக்கு புரோஹிதர்களான குருவே எல்லாம் என்று சொன்னீர்கள்.அவருடைய வார்த்தையை மீறுவது தகாது. அவர் சொல்லை மீறி நாங்கள் தான் என்ன செய்ய முடியும். ஒரே வார்த்தையில் அசக்யம், முடியாது என்று வசிஷ்டர் சொல்லிவிட்டார்.அதனால் இந்த யாகத்தை முடித்துக் கொடு என்று நீங்கள் எங்களிடம் கேட்பது குழந்தைத் தனமானது. நரஸ்ரேஷ்ட, திரும்ப ஊர்போய் சேருங்கள்.என்று சொல்லி விட்டனர்.யாகம் செய்வதில், மூன்று உலகுக்கும் குருவாகஇருந்து செய்ய அவர் ஒருவரே சக்தராவார் (சக்தி உடையவராவார்). அதனால் அரசனே, அவரை மீறி அவமதிப்பது போல ஒரு காரியம் செய்யலாமா? அதை நாங்கள் எப்படி செய்ய முடியும்? கோபத்தை  வெளிக் காட்டாமல் ஆனால், கோபத்துடன் கண்கள் சிவக்க அவர்கள் சொன்ன வார்த்தைகள், அரசன் செவியில் ஏறவில்லை.ராஜா திரும்பவும் சொன்னார்.என் குருதான் என்னை திருப்பி அனுப்பி விட்டார் என்றால், குரு புத்திரர்களும் என் வேண்டுகோளை மறுக்கிறார்கள்.தபோதனர்களே, சுகமாக இருங்கள்.  நான் வேறு யாரிடமாவது செல்கிறேன் என்று கிளம்பினார்.  இந்த வார்த்தைகள், ரிஷி குமாரர்களை வெகுண்டெழச் செய்தது. சண்டாளனாக ஆவாய் என்று சபித்துவிட்டு தங்கள் ஆஸ்ரமத்திற்குள் சென்று விட்டனர்.இரவு பொழுது கழிந்ததும் அரசன் சண்டாளனாக, நீல வஸ்த்ர தாரியாக, தானும் நீலமாக, பார்க்கவே பயப்படும்படி, தலயில் கேசம் அவிழ்ந்து தொங்க, இரும்பு ஆபரணங்களை தரித்தவனாக, அதற்கு உகந்த மாலை, அனுலேபம் (வாசனை திரவியங்கள் கொண்டு பூசிக் கொள்வது), உடையவனாக ஆனான். அவனைக் கண்ட மந்திரிகள், சண்டாளன் என்று அவனை விட்டு விலகினர்.ஊர் ஜனங்கள், இதுவரைத் தொடர்ந்து வந்தவர்கள், பயந்து ஓடினர்.மிகுந்த தன்மானம் கொண்டவனான அரசன், தனியாகவே சென்றான்.இரவும், பகலும், மனம் வேதனையில் வெந்து கொண்டிருக்க, தபோதனரான விஸ்வாமித்திரரை வந்து அடைந்தான்.சண்டாள உருவத்தில், உபயோகமற்றவனாக ஆகிவிட்ட, அரசனைப் பார்த்து, விச்வாமித்திரர் கருணையுடன் விசாரித்தார்.ராமா, உனக்கு மங்களம் உண்டாகட்டும்.சண்டாளனாக, கண்ணால் காணச் சகிக்காமல் பயங்கரமாக இருந்த திரிசங்கு ராஜாவிடம் பின் வருமாறு சொன்னார் -ராஜ புத்திரனே, நீயே பலசாலி.இருந்தும் இங்கு வந்த காரணம் என்னவோ? அயோத்யாதி பதியான வீரனே, எப்படி சண்டாளத் தன்மையை அடைந்தாய்? இதைக் கேட்டு அரசன், முதலில் தன் குருவினாலும், பின்னர் குருபுத்திரர்களாலும் அவமதிக்கப் பட்டதையும், திருப்பி அனுப்பப் பட்டதையும் சொன்னான்.நான் விரும்பியதை அடையவும் இல்லை. அதற்கு முன் இப்படி விபரீதம் நிகழ்ந்து விட்டது.சரீரத்துடன் தேவலோகம் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் யாகம் செய்ய ஆரம்பித்தேன்.நூறு யாகம் செய்தேன்.அதன் பலனும் எனக்கு கிடைக்கவில்லை.நான் பொய் சொன்னதில்லை.சொல்லவும் மாட்டேன்.மிக கஷ்டமான நாட்களிலும் இந்த விரதத்தை நான் கடை பிடித்து வந்திருக்கிறேன்.இது சத்யம் முனி புங்கவரே, என் க்ஷத்திரிய தர்மத்தின் பேரில் ஆணையிட்டுச் சொல்கிறேன்.பல விதமாக யாகங்கள் செய்தேன்.ப்ரஜைகளை தர்மத்தின் வழியில் பாலித்து வந்தேன்.குரு ஜனங்களை நன்னடத்தையால் மகிழ்வித்தேன்.தர்ம வழியில் சென்று வந்த என் யாகத்தைக் கெடுக்க முயலும் குரு ஜனங்கள், என் வேண்டுகோளை புறக்கணித்து விட்டனர்.இப்போது தைவம் (விதி) தான் பெரியது என்று நினைக்கிறேன்.பௌருஷம- மனித முயற்சியும், ஈ.டுபாடும் உபயோகமற்றவை.விதி தான் எல்லாவற்றையும் நடத்திச் செல்கிறது.நான் மிகவும் நொந்து போய் இருக்கிறேன்.யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று ஏங்கி போய் இருக்கிறேன்.எனக்கு ஏதாவது செய்ய முடியுமானால் செய்யுங்கள்.உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்.வேறு வழியும் இல்லை.வேறு யாரையும் அண்டவும் மாட்டேன்.எனக்கு சரணம் அளிப்பவர்கள் வேறு யார்.-

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில்,த்ரிசங்கு சாபம் என்ற ஐம்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 59 வாசிஷ்ட சாபம் (வசிஷ்டரின் பிள்ளைகளை சபித்தல்)

 

இவ்வாறு வருத்தத்தோடு புலம்பும் அரசனைப் பார்த்து குசிகாத்மஜரான, விஸ்வாமித்திரர் மதுரமாக பேசலானார். சண்டாள உருவம் அடைந்திருந்த அரசனிடம் -இக்ஷ்வாகு வம்சத்து அரசனே, தர்மத்தில் ஈடுபாடு கொண்ட உன்னை நான் அறிவேன். உனக்கு ஸ்வாகதம்.உன் வரவு நல் வரவாகுக.உனக்கு அபயம் அளிக்கிறேன்.பயப் படாதே. நான் மகரிஷிகளை வரவழைக்கிறேன்.புண்ய கர்மாவான யாகத்தில் உதவி செய்யும் மற்றவர்களையும் அழைக்கிறேன்.யாகத்தைச் செய்வோம்.குரு சாபத்தினால் நீ அடைந்த இந்த உருவத்துடனேயே தேவலோகம் செல்வாய்.நீ கௌசிகனை வந்து சரணடைந்து விட்டாய்.உனக்கு ஸ்வர்கம் கிடைத்து விட்டதாகவே எண்ணுகிறேன்.இவ்வாறு சொல்லி தன் புத்திரர்களை அழைத்து, மகா புத்தி சாலிகளான அவர்களை யாக ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்.எல்லா சிஷ்யர்களையும் அழைத்தும், குழந்தைகளே, எல்லா ரிஷி முனிவர்களையும் நான் அழைத்ததாகச் சொல்லி அழைத்து வாருங்கள் என்று சொல்லியனுப்பினார்.சிஷ்யர்கள், நன்பர்கள்,ரித்விக்குகள், படித்த ஜனங்கள், இவர்களை அழைத்து வாருங்கள். யாராவது என் வார்த்தைக்கு எதிராக சொன்னாலோ, என்னிடம் வந்து சொல்லுங்கள்.அவர்களும் அவருடைய கட்டளையை ஏற்று பல திக்குகளிலும் சென்றனர்.பல இடங்களிலிருந்தும் ப்ராம்மணர்கள் வந்து சேர்ந்தார்கள்.அந்த சிஷ்யர்களும் திரும்பி வந்து யார் என்ன சொன்னார்கள் என்பதை முனிவரிடம் சொன்னார்கள்.வசிஷ்டரின் பிள்ளை மகோதயன், மற்றும் நூறு பிள்ளகள் தவிர, மற்ற இடங்களிலிருந்து ப்ராம்மணர்கள் வந்தனர்.இந்த வசிஷ்டரின் பிள்ளைகள் சொன்னதைக் கேளுங்கள் என்று ஒருவன் சொன்னான்.-ஒரு க்ஷத்திரியன் யாகம் செய்கிறான், சண்டாளனுக்காக.சுரர்களூம், ரிஷிகளும் எப்படி சபைக்கு வந்து ஹவிஸ் (யாகத்தில் தேவர்களுக்கு என்று தரப்படும் பாகம்) ஏற்றுக் கொள்வார்கள்.இந்த ப்ராம்மணர்களும் தான், மகாத்மாக்கள், சண்டாளன் யஜமானாக இருந்து அளிக்கும் போஜனத்தை எப்படிச் சாப்பிடுவார்கள்.எப்படி ஸ்வர்கம் போவார்கள்? கண் சிவக்க இவ்வாறுநிஷ்டூரமாக பேசினார்கள்.முனி சார்தூலா, வசிஷ்ட புத்திரர்கள், எல்லோரும் சேர்ந்து கேலியாக பேசினார்கள் என்று சொல்லவும், விஸ்வாமித்திரர் கடும் கோபம் கொண்டார். ரோஷத்துடன், குற்றமற்றஎன்னை தூஷிக்க இவர்கள் யார்? நான் உக்ரமான தவம் செய்வது இவர்களுக்குத் தெரியாதா? துஷ்டர்கள் பஸ்மமாகப் போவார்கள்.சந்தேகமேயில்லை. இன்று அவர்களை கால பாசம் இழுக்கிறது.எல்லோருமாக, அவர்கள் இதுவரை செய்த தவம் அழிந்தவர்களாக, எழுனூறு ஜன்மங்கள் இருக்கட்டும்.தயையே இல்லாத நாய் மாமிசம் சாப்பிடுவர்களாக, அழகில்லாத வடிவம் உடையவர்களாக, நடமாடட்டும்.துர்புத்தி மகோதயன், (வசிஷ்டர் பிள்ளை), தேவையின்றி என்னை தூஷித்தான்.இவன் உலகில் எல்லோராலும் மட்டமாக நினக்கப்படும் நிஷாதன் வேடனாக பிறக்கட்டும்.உயிர்களை பறிப்பதிலேயே குறியாக, சிறிதளவும் மனதில் தயை என்பது இல்லாதவனாக, வெகு காலம் என் கோபத்தின் பலனாக கஷ்டம் அனுபவிப்பான்.மகா முனியான விஸ்வாமித்திரர், ரிஷிகளின் மத்தியில், இவ்வாறு கூறி நிறுத்தினார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், வாசிஷ்ட சாபம் என்ற ஐம்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 60 த்ரிசங்கு ஸ்வர்கம் (திரிசங்கு சுவர்கம்)

 

மகோதயன் உள்ளிட்ட வசிஷ்ட புத்திரர்களை, தவப் பயனை இழக்கச் செய்து விட்டு, விஸ்வாமித்திரர் ரிஷிகள் மத்தியில் இவ்வாறு சொன்னார் இதோ இருக்கும் இக்ஷ்வாகு தாயாதி, திரிசங்கு என்று பெயர் பெற்றவன், என்னை சரணம் என்று வந்தடைந்துள்ளவன், தன் சரீரத்துடன் ஸ்வர்கம் போக விரும்புகிறான்.இவன் விருப்பம் நிறைவேறும் விதமாக யாகம் செய்வோம்.சரீரத்துடன் இவன் ஸ்வர்கம் போக, எப்படி யாகம் செய்ய வேண்டுமோ, அந்த ரீதியில் என்னுடன் கூட யாகம் செய்யுங்கள்.மகரிஷிகள், தங்களுக்குள் கூடிப் பேசினார்கள். இந்த முனிவர் மிகவும் கோபம் கொண்டவர்.இவர் சொன்னபடியே செய்வோம்.அக்னி போன்ற இந்த முனிவர் கோபம் வந்தால் நம்மையும் சபித்து விடுவார்.சுந்தேகமேயில்லை அதனால் நாம் யாக காரியத்தில் ஒத்துழைப்போம்.விஸ்வாமித்திரருடைய தேஜஸ் பலத்தால், இந்த இக்ஷ்வாகு தாயாதி, சரீரத்துடன் ஸ்வர்கம் போக முடியுமானால் போகட்டும்.எல்லோரும் தயாராகுங்கள்.அவரவர் வேலையை ஒழுங்காக செய்யுங்கள்.யாஜகனாக, தலமை தாங்குபவராக, யக்ஞத்தில் விஸ்வாமித்திரர் அமர்ந்தார்.வரிசைக் கிரமப்படி, ரித்விக்குகள், மந்திரங்களை அறிந்து தேர்ந்தவர்கள், மற்ற காரியங்கள் அனைத்தும் செய்தனர்.எப்படி செய்ய வேண்டுமோ, எப்படி விதிக்கப் பட்டுள்ளதோ, முறைப்படி செய்தனர்.நாட்கள் கடந்தன.மகா தபஸ்வியான விஸ்வாமித்திரர், தேவதைகள் எல்லோரையும் ஆவாஹனம் செய்து, தங்கள் பங்கைப் பெற அழைத்தார்.ஆவாஹனம் செய்து அழைத்தபொழுது, தேவதைகள் யாருமே வரவில்லை. (யாகத்தில் ஹவிஸ் என்ற பாகத்தை தேவதைகள் பெற்றுச் செல்வார்கள்) இதனால் கோபமடைந்த விஸ்வாமித்திரர் ஸ்ருவம் என்ற யாக கரண்டியை கையில் எடுத்துக் கொண்டு, கோபத்துடன் திரிசங்குவிடம் சொன்னார். நரஸ்ரேஷ்டனே, இப்போது பார். தவம் செய்து நான் சேர்த்து வைத்த தவப் பலனைக்கொண்டு உன்னை சரீரத்துடன் ஸ்வர்கம் அனுப்புகிறேன்.சரீரத்துடன் ஸ்வர்கம் போவது கடினம். ஆனாலும் உன்னை நான் அனுப்புகிறேன்.நானே, தவம் செய்து சேர்த்துக் கொண்டது ஏதேனும் ஒரு துளியும் இருந்தால், ராஜன், அந்த பலத்தில் நீ ஸ்வர்கம் போவாயாக விஸ்வாமித்திரர் இப்படி சொல்லி முடிக்கும் முன், அரசன் மற்ற முனிவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, தன் சரீரத்தோடு தேவலோகம் செல்லலானான்.தேவலோகம் சென்றடைந்தவனைப் பார்த்து பாக சாஸனான இந்திரன், மற்ற தேவர்கள் கூட்டம் புடை சூழ வந்துஏ த்ரிசங்கோ,  திரும்பிப் போ.இது நீ இருக்கத் தகுந்த இடமல்ல.குரு சாபம் அடைந்தவனே, திரும்ப பூமியில் விழு, தலை கீழாக என்று சொல்ல த்ரிசங்கு தலைகீழாக பூமியை நோக்கி விழுந்தான். விஸ்வாமித்திரரைப் பார்த்து தபோத4னா, காப்பாற்றுங்கள், என்று பலமாக கத்திக் கொண்டே விழும் அவனைப் பார்த்து, அக்னியின் ஜ்வாலை போன்ற கோபத்துடன், கௌசிக முனிவர், திஷ்ட, திஷ்ட, நில், நில் என்று உத்தரவிட்டார்.ரிஷிகள் கூட்டத்தில், மற்றொரு பிரஜாபதி (ப்ரும்மா) போன்று நின்று கொண்டு, தெற்கு திசையில் இருக்கும் சப்த ரிஷிகள், மற்றவர்கள், நக்ஷத்திரக் கூட்டம் இவைகளை வேறு தனியாகவே ஸ்ருஷ்டி செய்யவே ஆரம்பித்து விட்டார்.தென் திசையில் நின்று கொண்டு முனிகள் நடுவில், தன் தவப் பலம் தெரிய, நக்ஷத்திர வம்சங்களை சிருஷ்டித்து,- அன்யம் இந்தி3ரம் கரிஷ்யாமி, அத2வா லோகோ வா சந்து அனிந்த்3ரகம்- மற்றொரு இந்திரனை ஸ்ருஷ்டிக்கிறேன், அல்லது, உலகமே இந்திரன் இல்லாமல் இருக்கட்டும், -தேவர்களையும் கோபத்தில் சிருஷ்டி செய்ய ஆரம்பித்து விட்டார்.இதன் பிறகு மிகவும் பர பரப்படைந்த தேவர்களும், அசுரர்களும், ரிஷி கணங்களும் விஸ்வாமித்திர முனிவரை சமாதானப் படுத்தும் வகையில், பேச முற்பட்டார்கள். மகானுபாவா, இந்த அரசன் குரு சாபத்தால் பீடிக்கப் பட்டவன்.சரீரத்துடன் தேவ லோகம் செல்ல அருகதையற்றவன்.தேவர்களின் இந்த பதிலைக் கேட்டு, முனி புங்கவர் (சிறந்த முனிவர்), எல்லா தேவதைகளையும் பார்த்து உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். சரீரத்துடன் அனுப்புவதாக இவனுக்கு வாக்கு கொடுத்தவன் நான்.இப்பொழுது அதை மீற மாட்டேன்.நான் ஸ்ருஷ்டி செய்த நக்ஷத்திரங்கள், மற்றவை சேர்ந்த இது புதிய ஸ்வர்கமாகவே, திரிசங்குவிற்கு இருக்கும். உலகம் உள்ளிவும், இவையும் நிலைத்து நிற்கும்.நான் ஸ்ருஷ்டி செய்த சப்தரிஷி மண்டலம் முதலியவற்றை நீங்களும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.அவர்களும் பதில் சொன்னார்கள் எஅப்படியே இருக்கட்டும். முனிஸ்ரேஷ்டரே, உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்.நீங்கள் ஸ்ருஷ்டி செய்த இவை ஆகாயத்தில் சூரியனுடைய பாதைக்கு  வெளிப் புறமாக அதே போல ஜ்வலித்துக் கொண்டு, தலை கீழாக இப்பொழுது உள்ளது போலவே, அந்த உலகில் தேவர்களுக்கு சமமாக இருக்கட்டும்.இந்த அரசனையும் இந்த ஜோதி மண்டலம் தொடர்ந்து செல்லும்.இந்த அரசன் நீடூழி வாழ்வான்.இவன் விருப்பம் நிறைவேறியது.ஸ்வர்கம் அடைந்து, இணையில்லாத புகழும் அடைவான்.தேவர்கள் விஸ்வாமித்திரரைத் தோத்திரம் செய்து, ரிஷிகள் மத்தியில் சரி என்று சொல்லவும், யாகத்தை முடித்து ரிஷி கணங்களும் அவரவர் இருப்பிடம் சென்றனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நான்கு ஆயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில் த்ரிசங்கு ஸ்வர்கம் என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

 

அத்தியாயம் 61 சுன:சேபவிக்ரய: (சுன:சேபன் என்பவனை விற்றல்)

 

இவ்வாறு கிளம்பிய ரிஷிகளைப் பார்த்து விஸ்வாமித்திரர், இந்த தென் திசை வந்து நமக்கு தவத்தில் மிகப் பெரிய விக்னம் ஏற்பட்டு விட்டது.வேறு இடம் சென்று நம் தவத்தை தொடருவோம் என்று சொன்னார். விசாலமான மேற்கு திசையில் புஷ்கர க்ஷேத்திரம் செல்வோம். மகாத்மாக்களே, அது ஒரு தபோவனம் ஆனதால் இடையூறு இன்றி தவம் செய்வோம். இவ்வாறு சொல்லி மகா முனி, மற்றவர்களோடு புஷ்கரக்ஷேத்திரம், சென்று, பழம், கிழங்கு வகைகளை மட்டும் உண்பவராக, மிகக் கடுமையாகத் தவம் செய்யலானார். இந்த சமயத்தில் தான், அயோத்தியை ஆண்ட அரசன் அம்பரீஷன் என்பவன் யாகம் செய்ய ஆரம்பித்தான். இவன் யாகம் செய்யும் போது, இந்திரன் யாக பசுவை அபகரித்துச் சென்றான். யாக பசு தொலைந்தவுடன் ப்ராம்மணர்கள் அம்பரீஷனிடம் வந்து, உன் தவறான நியமத்தால் தான் யாக பசு தொலைந்தது.சரியாக ராஜ்ய பாலனம் செய்து காப்பாற்றத் தெரியாத அரசனை, அவன் தோஷங்களே அழிக்கும். பிராயச்சித்தமாக ஒரு மனிதனையோ, பசுவையோ கொண்டு வா. அரசனே, சீக்கிரமாக ஒரு பசுவைக் கொண்டு வா, நாம் யாகத்தைத் தொடருவோம், உபாத்யாயர்கள் சொன்னதைக் கேட்டு அரசன், அனேக பசுக்களிடையில் தன் யாகப் பசுவைத் தேடலானான். பல தேசங்களையும், ஜனபதங்களையும், நகரங்கள், வனங்கள், ஆசிரமங்கள், புண்யமான இடங்கள் என்று தேடிக்கொண்டே போனவன், புத்திரனுடனும், மனைவியுடனும் மலைக் குகையில் வசித்து வந்த ருசீகன் என்ற முனிவரைக் கண்டான். தவத்தின் வலிமையால், பிரகாசமாக இருந்த அவரை வணங்கி, ராஜரிஷியான அம்பரீஷன் விசாரித்தான். குசலம் விசாரித்த பின், அவரிடம், என் யாக பசுவைக்காணவில்லை. பல இடங்களிலும் தேடி பார்த்து விட்டேன். நூறாயிரம் பசுக்களை ஏற்றுக் கொண்டு, உங்கள் பிள்ளையை எனக்கு விற்பதானால், ரிஷியே, என் யாக பசுவிற்கு பதிலாக உபயோகித்துக் கொள்வேன். பார்கவரே, உங்கள் பிள்ளைகளில் ஒருவரை விலைக்கு கொடுப்பதானால் கொடுங்கள்.இதைக் கேட்டு ருசீகரும் யோசித்து, என் மூத்த மகனை நான் தர மாட்டேன் எனவும் தாயார், கடைசி மகனை நான் தர மாட்டேன் என்றாள். சிறியவனான சுனகன், எனக்கு பிரியமானவன்.சாதாரணமாக மூத்த பிள்ளைகள் தந்தையிடம் அதிக பாசத்துடன் இருப்பார்கள். தாயாருக்கு கனிஷ்டனிடம் தான் அதிக பாசம். இவர்கள் இருவரும் இவ்வாறு பேசுவதை கேட்டு ராஜா யோசித்துக் கொண்டு நிற்கையிலேயே, மத்யமனான சுன:சேபன், தானே முன் வந்து சொன்னான். ராஜன், தந்தை மூத்தவனை விற்க மறுத்தார். தாயார் சின்னவனை, அதனால் என்னை விற்றாகி விட்டது என்று நினைக்கிறேன். என்னை அழைத்துச் செல்லுங்கள், என்று கிளம்பி விட்டான். இந்த அரசன், ப்ரும்ம வாதியான அந்த முனிவருக்கு, இந்த சம்பாஷனைக்குப் பின், கோடிக் கணக்கான தங்க வெள்ளி நாணயங்களையும், ரத்னங்களையும் நூறாயிரம் பசுக்களையும் கொடுத்து, சுன:சேபனை வாங்கிக் கொண்டான். மிகவும் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றான். அவனை அவசரமாக ரதத்தில் ஏற்றி, வேகமாக சென்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், சுன:சேப விக்ரயோ என்ற அறுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 62 அம்ப3ரீஷ யக்ஞம் (அம்பரீஷனின் யாகம்)

 

சுன:சேபனை பெற்ற அந்த அரசன், புஷ்கரத்தில் மத்யான்ன நேரம் சற்று ஓய்வு எடுக்கத் தங்கினார். அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போதுசுன:சேபன், புஷ்கரத்திரத்தில் இருந்த விச்வாமித்திரரைக் கண்டான்.ரிஷிகளுடன் தவம் செய்யும் மாமனைக் கண்டு மிகவும் வருத்தத்துடன் முகம் வாடி, தீனனாக, தாகத்துடனும், சிரமத்தாலும், முனிவரின் மடியில் வீழ்ந்து கதறினான். எனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. பந்துக்களோ தாயாதிகளோ யாருமே இல்லை. முனி புங்கவரே, சௌம்யமானவரே, தர்மம் அறிந்தவரே, என்னைக் காப்பாற்றுங்கள். காப்பாற்றக் கூடியவர் நீங்கள் ஒருவர் தான். நீங்கள் தான் என் நிலையை உள்ளபடி உணரக் கூடியவர். ராஜாவும் க்ருத க்ருத்யனாக, அவர் காரியம் நிறைவேறியவராக செல்ல வேண்டும். நானும் தீர்காயுளோடு இருக்க வேண்டும்.உத்தமமான தவம் செய்து ஸ்வர்க லோகம் அடைய வேண்டும். அனாதையான எனக்கு நீங்கள் தான் நாதனாக இருக்க வேண்டும்.நிறைந்த மனதோடு என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். குற்றம் செய்த மகனை தந்தை காப்பாற்றுவது போல, தர்மாத்மாவே, என்னை காப்பாற்றுங்கள்., என்று கெஞ்சினான். அதைக் கேட்டு, விஸ்வாமித்திரர் பலவிதமாக அவனை சமாதானப் படுத்தி தன் புத்திரர்களை அழைத்து சொன்னார்.சுபத்தை விரும்பும் ஜனங்கள் புத்திரர்களை பெறுவது எதற்காக? இகத்திலும் பரத்திலும் ஹிதத்தை விரும்பித்தான் புத்திரர்களை பெறுகிறார்கள். நீங்கள் எனக்கு உங்கள் கடமையை செய்யும் காலம் வந்து விட்டது. இந்த முனிகுமாரன் என்னைசரணடைந்துள்ளான். இவன் உயிருடன் இருக்கும்படி செய்யுங்கள். புத்திரர்களே, எல்லோரும் நல்ல காரியம் செய்பவர்கள், தர்மத்தில் பாராயணம் உள்ளவர்கள், நீங்கள் எல்லோருமே பசுவாக அரசனின் யாகத்தில் அக்னிக்குத் திருப்தியாக ஆகுங்கள்.சுன:சேபனுக்கு அடைக்கலம் கொடுத்ததும் காப்பாற்றப் பட வேண்டும், யாகமும் குறைவறநிறைவேற வேண்டும். தேவர்கள் யாகத்தில் பெற வேண்டியதைப் பெறுவார்கள். எனது பிரதிக்ஞையும் சத்யமாகும். முனியின் வார்த்தையைக் கேட்டு மதுஷ்யந்தன் முதலான புத்திரர்கள், அபிமானத்தோடு சிரித்து, அவமதிப்பது போல – தன் புத்திரர்களை அழித்து ஏன் மற்றவன் மகனைக் காப்பாற்ற முயலுகிறீர்கள்? இது தேவையற்றது என்றுநினைக்கிறோம். சாப்பாட்டில் நாய் மாமிசம் போல என்றனர்.- புத்திரர்கள் இவ்வாறு எதிர்த்து பேசவும், முனி புங்கவர் கோபத்துடன், கண்கள் சிவக்க சொல்லலானார். -என் புத்திரர்களாக இருந்து நீங்கள் பேசுவது சரியல்ல. தர்மமும் அல்ல. தர்மத்தாலும் கண்டிக்கப் பட வேண்டியதே. என் வார்த்தையை மீறி, கொடியசொற்களைப் பேசிய புத்திரர்களே, நீங்களும் வசிஷ்டர் பிள்ளைகளைப் போலவே நாய் மாமிசம் தின்னும் ஜாதியினராக, ஆயிரம் வருஷம் முடிய பூமியில் இருங்கள்- என்று சபித்து விட்டார். புத்திரர்களுக்கு சாபம் கொடுத்துவிட்டு, முனிவர் சுன:சேபனிடம் சொன்னார். அவனுக்கு நோய் நொடி அண்டாமல் இருக்க    ரக்ஷையைக் கட்டி விட்டு, பவித்ரமான பாசத்தால் சிவந்த புஷ்பங்களால் ஆன மாலையால் கட்டி, வைஷ்ணவம் என்ற யாகஸ்தம்பத்தை அடைந்து – நான் சொல்லித் தரும் வார்த்தைகளால் அக்னியை வேண்டிக் கொள். இதோ, இந்த இரண்டு பாடல்களையும் விடாமல் பாடுவாயாக. அம்பரீஷ யாகத்தில், இந்த பாடல்களை மனமுருக பாடு. வெற்றியடைவாய்- என்று வாழ்த்தினார். தன்னை சமாளித்துக் கொண்டு, அந்த இரண்டு பாடல்களையும்கிரஹித்துக் கொண்டு வேகமாகச் சென்று அம்பரீஷ ராஜாவிடம் -ராஜசிங்கம் போன்றவனே, சீக்கிரம் சபைக்குச் செல்வோம். உன் தீ3க்ஷையை ஏற்றுக்கொள்.-  மகிழ்ச்சியுடன் ரிஷி புத்திரன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அரசனும் வேகமாக யாக சாலையை அடைந்தான். பவித்ரமாக அலங்கரித்து, சபையின் அனுமதியோடு, பசுவை, சிவந்த வஸ்திரங்களால் அலங்கரித்து யூபஸ்தம்பத்தில் கட்டினான். யூபஸ்தம்பத்தில் கட்டப் பட்ட சுன:சேபன், சுரர்களை, முனி சொல்லிக் கொடுத்த ஸ்தோத்திரங்களால் துதி செய்தான். இந்திரனையும், இந்திரன் தம்பியையும், வரிசைப் படி தொடர்ந்து துதி செய்ய, இதனால் சந்தோஷமடைந்த ஸஹஸ்ராக்ஷன் எனும் இந்திரன், ரஹஸ்யமாக செய்யப்பட்ட இந்த துதியினால் திருப்தியடைந்து, சுன:சேபனுக்கு தீர்காயுளை வரமாக அளித்தான். அந்த அரசனும் யாகத்தை முடித்தான். இந்திரனுடைய பிரசாதத்தால், பல மடங்கு அதிக நல்ல பலனையும் பெற்றான். விஸ்வாமித்திரர் திரும்பவும் தவம் செய்ய ஆரம்பித்தார். பத்தாயிரம் ஆண்டுகள் புஷ்கரத்தில் இருந்து தவம் செய்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், அம்பரீஷ யக்ஞம் என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 63 மேனகா நிர்வாச: (மேனகையை  வெளி யேற்றுதல்)

 

ஆயுரம் வருஷ முடிவில், விரதம் முடிந்து ஸ்னானம் செய்த மகா முனியை எல்லா தேவர்களும் வந்து தவத்தின் பலனை தர விரும்பி வந்து சேர்ந்தார்கள். ப்ரும்மா மிகவும் மகிழ்ச்சியோடு ரிஷியாகிறாய். இன்று முதல்உன் தவத்தின் மூலம் நீ ரிஷி என்ற நிலையை சுயமாக பெற்றவனாகிறாய். இவ்வாறு சொல்லி தேவர்களின் தலைவன் திரும்பிச் சென்று விட்டார். விச்வாமித்திர மகா முனிவர் திரும்பவும் தவம் செய்யலானார். மிகச் சிறந்த அழகியான அப்சரஸ் ஸ்த்ரீ மேனகா என்பவள், சில காலத்திற்கு பின் அங்கு வந்து சேர்ந்தாள். புஷ்கரத்திரத்தில் ஸ்னானம் செய்ய வந்தாள். அவளைப் பார்த்த மகா தேஜஸ்வியான முனிவர், மேகத்தில் மின்னல் போல, ரூபத்தில் சொல்ல முடியாத அழகு வாய்ந்தவளான அவளைக் கண்டு, மயங்கி அவளிடம் சொன்னார். -அப்ஸர ஸ்த்ரீயே, உன் வரவு நல் வரவாகுக. நீயும் இங்கேயே வசிப்பாயாக.காமனால் பீடிக்கப்பட்ட என்னை ஏற்றுக் கொள்வாய்.- என்று வேண்ட அவளும் சம்மதித்து, அங்கேயே இருந்தாள். பத்து வருஷங்கள் அவள் அந்த ஆஸ்ரமத்தில் வசிக்க, விச்வாமித்திரர் சௌக்யமாக இருந்தார். காலம் கடந்ததும் ஒரு சமயம் விச்வாமித்திரர் விழித்துக் கொண்டு, வெட்கமும் வேதனையும் அடைந்தார்.கோபமும் சிந்தனையும் அவர் மனதை அலைக்கழித்தன. இது அனைத்தும் தேவர்களின் வேலையே. தவத்தைக் கலைக்கும் முயற்சியே. ஓர் இரவு போல பத்து வருஷங்கள் ஓடி விட்டன. காமம், மோஹம் இவை வியாபித்து தவத்திற்கு இடையூறு செய்து விட்டன.பச்சாதாபத்தால் மனம் வருந்தி, பெருமூச்சு விட்டபடி, கை கூப்பியபடி நடுங்கும் அப்ஸரசை பார்த்து, மதுரமான வார்த்தைகளால் அவளை சமாதானப் படுத்தி அனுப்பிவிட்டு,குசிக புத்திரர், உத்திர திசையில் மலையடிவாரம் சென்றார். நிஷ்டையில் மனம் ஒன்றி, தவம் செய்யும் எண்ணத்துடன், கௌசீகி நதிக் கரையை அடைந்து, பயங்கரமாக தவம் செய்தார். ஆயிரம் வருஷங்கள் கடும் தவம் செய்யும் அவரைக் கண்டு தேவர்கள் பயந்தனர். எல்லா ரிஷிகளையும் அழைத்து சேர்ந்து கூட்டமாக வந்து, -இவர் மகரிஷி எனும் தகுதியை அடையட்டும், குசிகாத்மஜர் இதுவரை செய்த தவம் மிகச் சிறந்ததே- என்று ப்ரும்மாவிடம் சொல்ல, சர்வலோக பிதாமகரான அவர் தபோதனனான விச்வாமித்திரரைப் பார்த்து மதுரமாக சொன்னார். -மகரிஷியே, ஸ்வாகதம். குழந்தாய், உன் உக்ரமான தவத்தால் மகிழ்ந்து மகத்வம், ரிஷி முக்யத்வம் தருகிறேன் விரதங்களின் சிறந்த விரதமுடையவனே- என்று சொல்ல, ப்ரும்மாவின் இந்த வார்த்தைகளால் வருத்தமும் அடையவில்லை, சந்தோஷமாகவும் இல்லை. அஞ்சலி செய்து வணங்கி ப்ரும்மாவிடம் சொன்னார். -ஈ.டு இணையில்லாத ப்ரும்மரிஷி சப்தம், என் தவத்தின் பலனாக பெற, நான் இந்திரியங்களை வென்றவனாக, அருகதை உள்ளவனா, இல்லையா? இதற்கு, ப்ரும்மா பதில் சொன்னார்.-இதுவரை நீ செய்தது சரி. நீ இன்னும் ஜிதேந்திரியன் ஆகவில்லை. முயற்சி செய்என்று சொல்லி மறைந்து விட்டார்.தேவேசன் சென்ற பிறகு, முனிவர் கைகளை உயரத் தூக்கி, பிடிமானம் இல்லாதவராக, வாயுவையே ஆகாரமாகக் கொண்டு, தவம் செய்யலானார். நல்ல வெய்யில் காலத்தில் பஞ்சாக்னி நடுவிலும், மழைக்காலத்தில் வெட்ட வெளி யிலும், குளிர் நாளில் நீரில் நின்று கொண்டும், இரவு பகல் எனப் பாராது,ஆயிரம் வருஷம் கோரமான தவம் செய்தார். இவ்வாறு இவர் தவம் செய்யும் போது, வாசவனுக்கும், மற்ற தேவர்களுக்கும், மிகவும் கவலையும், பயமும் உண்டாயிற்று. ரம்பை என்ற அப்ஸரசை அழைத்து தன் நன்மைக்காக குசிகாத்மஜரின் தவத்தைக் கலைக்க வேண்டினான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், மேனகா நிர்வாசோ என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 64 ரம்பா சாபம் (ரம்பையின் சாபம்)

 

இது தேவ கார்யம் ரம்பையே, நீ கண்டிப்பாக செய்துதான் ஆக வேண்டும். காம, மோஹம் இவற்றால் குசிக புத்திரரை மயக்கி, தவத்தை கலைக்க வேண்டும். சஹஸ்ராக்ஷன் இவ்வாறு சொல்லவும், வெட்கம் அடைந்த ரம்பா, அஞ்சலியுடன் இந்திரனை வேண்டினாள். இந்த மகா முனிவரான விச்வாமித்திரர் பயங்கரமானவர். என்னிடத்தில் கோபத்தைக் காட்டுவார். சந்தேகமேயில்லை. அதுதான் என் பயம். தேவராஜனே தயை செய். இவ்வாறு பயந்து நடுங்கும் ரம்பையைப் பார்த்து இந்திரன் -பயப்படாதே, ரம்பா, உனக்கு மங்களம் உண்டாகட்டும். என் கட்டளைப் படி செய். உன் அருகில் இனிமையாக கூவும் கோகிலமாக, உள்ளம் கொள்ளை கொள்ளும்படி கூவிக் கொண்டு மாதவ மரத்தில் உன் அருகிலேயே கந்தர்ப்பன் கூட நானும் இருப்பேன். நீ மிக அழகாகஅலங்கரித்துக் கொண்டு தவம் செய்யும் அந்த முனிவரின் தவத்தைக் கலைப்பாய்எனவும், அவளும் புன்னகையுடன், விச்வாமித்திரரை அணுகி அவரை மயக்க முயன்றாள். கோகிலத்தின் இனிமையான ஸ்வரத்தை கேட்டு, மிக மனம் மகிழ்ந்த முனிவர் அவளையும் பார்த்தார். அந்த சப்தமும், அதிசயமான கீதமும், எதிரில் ரம்பையையும் பார்த்து சந்தேகம் கொண்டார். இது இந்திரன் வேலையே என்று ஊகித்து, ரம்பையை கோபத்துடன் சபித்து விட்டார். எஎன்னை மயக்க என்று வந்தாயா பெண்ணே, காம, க்ரோதத்தை ஜயிக்க வேண்டும் என்றே நான் தவம் மேற் கொண்டுள்ளேன். ஆயிரம் வருஷம் கல்லாக கிடப்பாய். நல்ல தேஜசும், தவ வலிமையும் உள்ள பிராம்மணர்கள் உனக்கு சாப விமோசனம் தருவார்கள். – இவ்வாறு சொல்லி முடித்த முனிவர் க்ரோதத்தை அடக்க முடியாத தன்னிடமே வருத்தம் கொண்டார்.ரம்பா கல்லானாள். மகரிஷியின் வார்த்தையைக் கேட்டு கந்தர்ப்பனும் வெளியே வந்தான். ராமா, என்னதான் தவம் செய்தாலும், கோபத்தை அடக்காத வரையில் முனிவருக்கு சாந்தி ஏற்படவில்லை. தன் தவத்தைக் கலைத்த கோபம், அடக்க மாட்டாமல் எழுந்தாலும், – இனி கோபம் கொள்ள மாட்டேன், எதுவுமே சொல்ல மாட்டேன் என்று பிரதிக்ஞை செய்தார். அல்லது ஸ்வாசமே விட மாட்டேன். நூறு வருஷங்கள், என் இந்திரியங்களை ஜயித்து, என்னையே வற்றச் செய்து கொள்கிறேன். எதுவரை நான் ப்ரும்ம ரிஷி என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறேனோ, அதுவரை, மூச்சு விடாமல், ஆகாரம்இல்லாமல், நின்று கொண்டு சாஸ்வதமாக இருப்பேன். இது போல் நான் தவம் செய்யும் போது என் சரீரம் வாடாது. என்று ஆயிரம் வருஷங்கள் தவம் செய்வதாக தீக்ஷை எடுத்துக் கொண்டு உலகில் இதுவரைகேட்டிராத பிரதிக்ஞை செய்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ரம்பா சாபம் என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 65 பிரும்ம ரிஷித்வ ப்ராப்தி (ப்ரும்ம ரிஷி பதவி பெறுதல்)

 

இந்த ஹைமவதியான வட திசையையும் விட்டு கிழக்கில் சென்று, தன் கடினமான தவத்தைத் தொடர்ந்தார்.உத்தமமான மௌன விரதம் ஏற்றுக் கொண்டு, ஆயிரம் வருஷங்கள் மிக கடினமான தவத்தைச் செய்தார். ஆயிர வருஷ முடிவில் கட்டையாக ஆகிவிட்ட முனிவர், பல விதமான இடையூறுகளையும் சந்தித்து, பக்குவப்பட்டு, கோபமும் அவரிடத்திலிருந்து விலகியது.  அழிவில்லாத, தவத்தை செய்வதாக தீர்மானித்து விரதம் முடிந்த நிலையில், ஆயிரம் வருஷம் முழுவதும் ஆன நிலையில் அன்னத்தை சாப்பிட ஆரம்பித்தார். அப்பொழுது இந்திரன் பிராம்மணனாக வந்து அந்த அன்னத்தை யாசித்தான்.அவனுக்கு உடனேயே அன்னத்தை கொடுத்து விட்டு, அன்னம் மீதியில்லாமல் தீர்ந்து போயிருக்க, சாப்பிடாமலேயே மௌன விரதம் காரணமாக அந்த பிராம்மணனிடமும் எதுவும் பேசாமலே இருந்து விட்டார். மூச்சை நிறுத்தி தவம் செய்தவாறு ஆயிரம் வருஷங்களாக உள்ளடக்கிய மூச்சு, புகையாக அவர் தலையிலிருந்து

வெளிப்படலாயிற்று.மூன்று உலகமும் இதனால் பரபரப்படைந்து வெப்பம் தாங்க முடியாதபடி தகிக்க ஆரம்பித்தது. அப்பொழுது தேவர்கள், கந்தர்வர்கள், பன்னக, அசுர, ராக்ஷஸர்கள், அந்த தேஜஸால் மோஹம் அடைந்து, தங்கள் பலம் குன்றி, பிதாமகரை வந்து அடைந்தார்கள். பல காரணங்களால், தேவனே,, விச்வாமித்திர மகாமுனி, நாங்கள் ஆசை காட்டியும்,கோபத்தைக் கிளப்பி விட்டும், பாதிக்கப் படாமல், தவத்தில் இடைவிடாது வளர்ந்து வருகிறார். இவரிடத்தில் மிகசூக்ஷ்மமான குற்றம் கூட தென்படவில்லை. இவர் விரும்பியதை தராவிட்டால், இவர் தவத்தாலேயே சராசரமும் அழிந்துவிடும். இப்பொழுதே திசைகள் ஒளி மங்கித் தெரிகின்றன. சமுத்திரம் வற்றிக் கொண்டு வருகிறது. மலைகள் சிதறும் நிலைக்கு வந்து விட்டன. பூமி நடுங்குகிறது. வாயு மிகவும் கவலையுடன் சஞ்சரிக்கிறது. ப்ரும்மன், ஜனங்கள் நாஸ்திகர்களாக ஆகி விடுவார்கள்.மூவுலகும் வருந்தியதாக, செய்வதறியாது மூடமாக ஆகலாம். பாஸ்கரன், இவருடைய தேஜஸுக்கு எதிரில், ஒளியற்றவனாகத் தெரிகிறான். மகாமுனி, நாசம் செய்துவிடுகிறேன் என்று ஆரம்பிக்கு முன், சாக்ஷாத் அக்னியாகத் தெரியும் இந்த முனிவர் திலகத்தை, காலாக்னி வந்து மூவுலகையும் சூழ்ந்து தகிக்கும் முன், தேவராஜ்யம் செய்கிறேன் என்று கிளம்பும் முன், இவருக்கு இவர் வேண்டியதைக் கொடுத்து விடுங்கள். இதன் பிறகு, பிதாமகரின் பின்னால் அனைத்து தேவர்களும் விச்வாமித்திர முனிவர் இருக்கும் இடம் சென்றனர்.முனிவரைப் பார்த்து மதுரமாக ப்ரும்ம ரிஷியே, ஸ்வாகதம்- என்று ஆரம்பித்தார். தங்கள் தவத்தால் மகிழ்ந்தோம். கௌசிகரே, உக்ரமான தவத்தால், ப்ரும்மத்வம் என்ற தன்மையை அடைந்துள்ளீர்கள். உங்களுக்கு தீர்கமான ஆயுசையும் தருகிறேன். மருத்கணங்களுக்கு சமமாக இருப்பீர்கள். நல்ல நிலைமை அடைவீர்கள். மங்களம் உண்டாகட்டும் என்று சொல்லி பிதாமகர் விடை கொடுத்து அனுப்பினார். பிதாமகர் இவ்வாறு சொல்லவும், எல்லா தேவர்களும் நின்றிருக்க, அவரை வணங்கி, விச்வாமித்திரர் ப்ரும்மன், ப்ராம்மணத்வம் எனக்கு கிடைத்து விட்டது என்றால், தீர்கமான ஆயுளும் அடைந்தபின், ஓங்காரமும், வஷட்காரமும், வேதங்களும், என்னை வந்து அடையட்டும். க்ஷத்திரிய தர்மத்தில் ஸ்ரேஷ்டனான, ப்ரும்ம வேதம் அறிந்தவர்களிலும் முதல்வரான வசிஷ்டர் சொல்லட்டும். இது தான் என் மிகப் பெரிய விருப்பம்- இதை நிறைவேற்றி விட்டு தேவர்கள் செல்லுங்கள் என்றார். உடனே தேவர்கள் வசிஷ்டரிடம் சென்று விஷயத்தைச் சொல்லி வேண்டிக் கொள்ள, அவரும் வந்து நட்புடன்,நீ ப்ரும்ம ரிஷியே தான் எனவும், சந்தேகமேயில்லை,நீங்கள் ப்ரும்ம ரிஷியே தான், எல்லா சம்பத்துக்களும் உங்களைத் தேடி வரும் என்று தேவர்களும் சொல்லி, விடை பெற்றுச் சென்றனர்.தர்மாத்வான விச்வாமித்திரரும், ப்ரும்ம ரிஷி ஸ்தானத்தைப் பெற்று, வசிஷ்டரை வணங்கி மரியாதைகள் செய்து தன் காரியம் ஆன திருப்தியுடன் உலகெல்லாம் சுற்றி வந்தார். ராமா, இவ்வாறுதான் இவர் ப்ரும்ம ரிஷியானார். இவர் தவமே உருவானவர். தர்ம சிந்தனையோடு வீர்யமும் உள்ளவர். இவ்வாறு சொல்லி அந்த ப்ராம்மண ஸ்ரேஷ்டர் நிறுத்தினார். இதுவரை ராம லக்ஷ்மணர்களோடு சதானந்தர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜனகரும், ஆச்சர்யத்துடன் விச்வாமித்திரரைப் பார்த்து -தன்யனானேன். அனுக்ரஹம் கிடைக்கப் பெற்றேன். இந்த காகுத்ஸர்களையும் அழைத்துக் கொண்டு என் யாகத்திற்கு வந்தது என் பாக்கியம்.உங்கள் தரிசனமே பாவனம். உங்களைப் பார்த்து பல நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். விஸ்தாரமாக உங்கள் கதையை இன்று தான் கேட்டேன். ராமனுடன் கூட எனக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது. சபையினரும் கேட்டனர்.உங்கள் தவம் அளவிட முடியாதது. அது போலவே உங்கள் சக்தியும் அளவிட முடியாதது. உங்கள் குணங்களும் அளவிட முடியாதவைகளே.குசிகாத்மஜரே, ஆச்சர்யமான இந்த கதையைக் கேட்டு இன்னமும் கேட்க ஆசைப் படுகிறேன். இதில் இன்னமும் திருப்தி ஏற்படவில்லை. காரியம் ஆகவேண்டியது நிறைய இருக்கிறது. சூரிய மண்டலம் மறையத் தொடங்கி விட்டது. நாளை காலை மறுபடியும் சந்திப்போம். தவஸ்ரேஷ்டரே, தாங்களாக வந்து என்னை அனுக்ரஹித்துள்ளீர்கள். அனுமதி தாருங்கள்.- இவ்வாறு புகழ்ந்து சொன்ன ஜனகரை, முனிவர் அனுமதி தந்து வழி அனுப்பினார். மிதிலாதிபதியான வைதேஹரும், முனிவரை தன் பந்துக்கள், உபாத்யாயர்களோடு பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விடை பெற்றனர். ராம, லக்ஷ்மணர்களுடன், விச்வாமித்திரரும் யாக சாலையை வந்தடைந்தார். அங்கு இருந்த மகரிஷிகள் வணங்கி வரவேற்று மரியாதைகள் செய்தனர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ப்ரும்ம ரிஷித்வ ப்ராப்தி என்ற அறுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 66 த4னு:ப்ரசங்க: (வில்லைப் பற்றிய விவரம்)

 

மறு நாள் விடிந்தவுடன், நிர்மலமான அந்த காலை நேரத்தில் மகாராஜா ஜனகர், தன் வேலைகளை முடித்துக் கொண்டு, ராக4வர்களுடன் விஸ்வாமித்திரரை அழைத்துச் செல்ல வந்தார். ரிஷிகளையும், முனிவரையும் சாஸ்திர விதிமுறைப் படி உபசரித்து, ஸ்வாகதம் சொல்லி, முனிவரின் பதிலை எதிர்பார்த்து நின்றனர்.ஆணையிடுங்கள், நானும் தங்கள் ஆணைக்குட்பட்டவனே என்று ஜனகர் பணிவாகச் சொல்ல, விஸ்வாமித்திர மகாமுனிவர், -அரசனே, இந்த குழந்தைகள் தசரதருடைய புத்திரர்கள். உலக புகழ் பெற்றவர்கள். உங்களிடம் உள்ள வில்லை பார்க்க விரும்புகிறார்கள். இவர்களுக்கு வில்லை காட்டுங்கள். அது தான் அவர்களுடைய விருப்பம். வில்லை பார்த்து விட்டு சௌகர்யம் போல் திரும்பி விடுவார்கள்- என்றார். இதைக் கேட்டு ஜனக ராஜா சொன்னார். -இந்த தனுஷ், அதாவது வில் ஏன் இங்கு இருக்கிறது தெரியுமா? நிமி வம்சத்தில் ஆறாவது மகாராஜா தேவராதன் என்று ஒரு அரசன் இருந்தார்.இந்த வில் தேவ தேவனான மகாதேவனுடைய வில். இந்த தேவராத அரசனிடம் பாதுகாத்து வைக்கும்படி கொடுக்கப் பட்டது. தக்ஷ யக்ஞத்தில் இந்த வில்லை எடுத்துக் கொண்டு ருத்ரன், தேவர்களை பார்த்து கோபத்துடன், என்னுடைய பங்கை இந்த யாகத்தில் எனக்குத் தராமல் மற்ற தேவர்கள் வாங்கிக் கொண்டார்கள். அந்த தேவர்களை இந்த வில்லினால் அழிப்பேன் என்று ஆரம்பித்தார். அவர் கோபத்தின் முன் செய்வதறியாது திகைத்த தேவர்கள், பலவிதமாக தோத்திரங்கள் செய்து அவரை மகிழ்வித்தனர். இதனால் கோபம் குறைந்து சாந்தமடைந்த ருத்ர தேவன், அவர்களுக்கு வரங்கள் கொடுத்தார். இது அந்த ருத்ரனுடைய வில். எங்கள் முன்னோர்களிடம் -ந்யாசமாக- பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தது. பிறகு ஒரு சமயம் நான் பூமியை உழும் பொழுது கலப்பையிலிருந்து பூமியிலிருந்து உண்டானாள் சீதை என்று பெயர் பெற்ற என் மகள்.பூமியை சமன் செய்யும் பொழுது தோன்றியவளை என் மகளாக வளர்த்து வந்திருக்கிறேன். தானாக தோன்றிய இந்த பெண் மகவை, -வீர்ய சுல்கா- வெற்றி பெறுபவருக்கு பரிசாக நான் அறிவித்து விட்டேன்.பூமியிலிருந்து தோன்றி என் மகளாக வளர்ந்து வரும் இந்த கன்னியை பலரும் மணம் செய்து கொள்ள விரும்பி வந்தனர்.எல்லோரும் பூமியை ஆளும் அரசர்கள், மகா ராஜாக்கள்.இவள் வீர்யத்தால் ஜயித்து பெற வேண்டியவள் என்று சொல்லி யாருக்குமே தர நான் சம்மதிக்கவில்லை. எல்லா அரசர்களும் மிதிலை வந்தார்கள். தங்கள் பலத்தைக் காட்டும் விதமாக, வில்லை பார்க்க விரும்பினார்கள். ஈஸ்வரனுடைய இந்த வில் கொண்டு வரப்பட்டது. இந்த வில்லை பிடிக்கவோ, தூக்கவோ கூட யாராலும் முடியவில்லை. தாங்கள் பெரிய வீரர்கள் என்று மார் தட்டிக் கொண்டு வந்தவர்கள், தங்கள் வீர்யம் மிகவும் அல்பமே என்று உணர்ந்து திரும்பினார்கள். தபோதனரே, மேலும் கேளுங்கள். மிகவும் கோபம் கொண்ட அரசர்கள், மிதிலையை ஆக்ரமித்தனர். ஒரு வருஷ காலம் இந்த நிலை நீடித்தது. ராஜ்யம் எங்கும் பெருத்த நஷ்டம் ஏப்பட்டது. அதனால் நான் மிகவும் வருந்தினேன். தேவர்களைக்குறித்து தவம் செய்து அவர்கள் தயவை வேண்டினேன். சதுரங்க சேனையை அந்த தேவர்கள் அனுப்பி வைத்தனர்.இதனால் முற்றுகையிட்டிருந்த அரசர்களை வென்று, அவர்களும் மூலைக்கு ஒருவராக ஓடி மறைந்தனர்.வீரர்கள் என்று நம்பிக் கொண்டு வந்தவர்கள், தங்கள் உண்மை பலம் தெரிந்து மந்திரிகளுடன் ஓட்டமெடுத்தனர். வீணாக பாபம் செய்ய முனைந்தவர்கள் ஆனார்கள். இது தான் இந்த உத்தமமான வில்லின் கதை. ராம, லக்ஷ்மணர்களுக்கும் அதைக் காட்டுகிறேன். தபோதனரே, இந்த வில்லை ராமன் எடுத்து நாணை ஏற்றுவான் எனில், என் அயோனிஜாவான மகள் சீதையை தசரத புத்திரனான ராமனுக்கு கொடுக்கிறேன்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், த4னு: ப்ரசங்க: என்ற அறுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

 

 

அத்தியாயம் 67 த4னுர்பங்க: (வில்லை உடைத்தல்)

 

ஜனகருடைய வார்த்தையைக் கேட்டு விஸ்வாமித்திரர், ராமருக்கு தனுஷைக் காட்டு என்றார். அந்த அரசன் ஜனகனும் மந்திரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அந்த வில்லைமுன்னால் கொண்டு வந்து வைத்து விட்டு நகர்ந்து சென்றனர். மிகவும் கஷ்டப்பட்டு, எட்டு சக்கரம் கொண்ட வண்டியில், பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தனுஷை, இரும்பு பெட்டியுடன் அரசனின் முன்னால் கொண்டு வந்து வைத்தனர். இதன் காரணமாக, நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான அரசர்கள் முயற்சி செய்து தோற்றிருக்கின்றனர். தேவர்களுக்கு சமமான ஜனக ராஜாவிடம், மந்திரிகள் –ராஜேந்திரா, இந்த தனுஷ் மிகவும் விசேஷமானது. இந்த மிதிலையை ஆண்டு வந்த அரசர்களால் பூஜிக்கப்பட்டு வந்துள்ளது. இதைக் காட்ட விரும்பினால் காட்டு- என்றனர். இதன் பின் ஜனகர் அஞ்சலி செய்து விஸ்வாமித்திர முனிவரிடம், ராம லக்ஷ்மணர்களைப் பார்த்தவாறுசொன்னார். –ப்ரும்மன், இதோ இந்த வில் ஜனக வம்சத்தினரால், மரியாதையாக பூஜை வழிபாடுகள் செய்து பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது, இதுவரை பல அரசர்கள், இதை தூக்கிக்கட்ட முயன்று முடியாமல் விட்டிருக்கிறார்கள். இதை தேவர்கள் கூட்டமோ, அசுரர்களோ, ராக்ஷஸர்களோ, கந்தர்வ, யக்ஷ ப்ரவரர்களோ, கின்னர மகோரகர்கள் எனப்படும் நாக வம்சத்தினரோ, யாருமே இதை எடுத்து நாண் பூட்டுவதில் சமர்த்தர்களாக இல்லை. மனிதன் எம்மாத்திரம்? இதை தூக்காவோ, தூக்கி நிறுத்தி, நாணை கட்டவோ எப்படி முடியும்? இந்த விசேஷமானவில்லை கொண்டு வந்து விட்டோம். முனி புங்கவரே, ராஜ குமாரர்களுக்கு காட்டுங்கள். விஸ்வாமித்திரர் ஜனகர் சொல்லி முடிக்கும் வரை கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, -வத்ஸ, ராமா, தனு:பஸ்யகுழந்தாய், ராமா வில்லைப் பார்- என்றார். ப்ரும்மரிஷி சொன்னபடி, ராமர் வில் இருக்கும் இடம் வந்து, பெட்டியைத் திறந்து வில்லைப் பார்த்து சொன்னார். –ப்ரும்மன், இந்த புனிதமான வில்லை நான் கையினால் தொடட்டுமா? இதை தூக்கி, நாணைப் பூட்டவும் முயற்சி செய்கிறேன்- என்றார். அப்படியே செய் என்று முனிவரும், அரசனும் சம காலத்தில் சொன்னார்கள். முனி வசனத்தை ஏற்று, விளையாட்டாக, வில்லின் நடுவில் பிடித்து, நூற்றுக் கணக்கான அரசர்கள், மற்றும் பலர் பார்த்துக் கொண்டுஇருக்க, ரகுநந்தனன் விளையாட்டாக வில்லைத் தூக்கி நிறுத்தினார். நிறுத்தி வைக்கப்பட்ட வில்லில் நாணை பூட்ட முனைந்தார். நாணை இழுக்கவும் அந்த வில் நடுவில் முறிந்தது. மகானான அந்த நரஸ்ரேஷ்டன் கையில் இருந்து வில் முறிந்த சத்தம் மிகப் பெரியதாக கேட்டது. அந்த பெரும் ஓசையில் பூமி நடுங்கியது. மிகப் பெரிய பர்வதம் பிளந்ததோ,என்று இருந்தது. இந்த சத்தத்தினால் மூர்ச்சித்து விழுந்தவர் பலர்.முனிவரரான விஸ்வாமித்திரரையும், ஜனக ராஜாவையும், இரண்டு ராஜ குமாரர்களையும் தவிர மற்றவர் அனைவரும் மயங்கினர். ஜனங்கள் சுய நினைவு திரும்பியதும், கவலை நீங்கிய அரசன் முனி புங்கவரிடம் சொன்னார். –பகவானே, ராமனுடைய வீரத்தை நான் கண்டு கொண்டேன். தசரதரின் மகனின், ஒப்பற்ற, மனதால் கூட எண்ணிப் பார்க்க முடியாத இந்த சிறுவனின் வீரம், நான் சற்றும் எதிர் பாராதது. தசரதன் மகனான இந்த ராமனை கணவனாக அடைந்து, என் மகள் சீதா, ஜனக வம்சத்திற்கே, மிகப் பெரிய புகழையும், பெருமையையும் தரப் போகிறாள். என் ப்ரதிக்ஞையும் சத்யமாயிற்று. -வீர்ய சுல்கா- (வீரத்திற்கு பரிசு) வெற்றி பெற்றவனுக்கே என் மகள் என்று நான் வைத்திருந்த பணயம்வென்றது.என் உயிருக்கும் மேலாக நான் அன்பு வைத்துள்ள சீதையை, என் மகளை ராமனுக்குத் தருகிறேன். ப்ரும்மன், அனுமதி தாருங்கள். மந்திரிகள் சீக்கிரம் கிளம்பிச் செல்லட்டும். அயோத்தி நோக்கி ரதங்களில் செல்லட்டும். கௌசிகரே, உங்களுக்கு மங்களம். ராஜாவை தகுதியான வார்த்தைகளைச் சொல்லி, மந்திரிகள் என் ஊருக்குஅழைத்து வரட்டும். ராமன் தன் வீர்யத்தால் வெற்றி கொண்ட கன்னியை தருகிறேன் என்ற கதையை விவரமாக சொல்லுங்கள். அரசனிடம், முனிவரின் பாதுகாப்பில், அரச குமாரர்கள் நலமாக இருப்பதை தெரிவியுங்கள். சீக்கிரம், வேகமாக ஓடும் வாகனங்களில் அரசரை அழைத்து வாருங்கள். கௌசிகர் அவ்வாறே செய்ய சம்மதிக்க, மந்திரிகளை அழைத்து, நடந்ததைச் சொல்லி, அரசரை அழைத்து வர, ஜனகர் தேர்ந்தெடுத்த மந்திரிகளிடம் விவரமாக சொல்லி அனுப்பினான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தனுர் பங்கோ என்ற அறுபத்தி ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 68 தசரதாஹ்வானம் (தசரதரை அழைத்தல்)

 

ஜனகரின் உத்தரவை ஏற்று, மந்திரிகளும், தூதர்களுமாக இரவு யாத்திரை செய்து அயோத்யா நகரை அடைந்தனர்.ராஜ பவனம் என்று வாயில் காப்போனிடம் பின் வருமாறு சொன்னார்கள். -நாங்கள் ஜனக மகாராஜாவின் தூதர்கள். சீக்கிரம் சென்று உங்கள் அரசனிடம் தெரிவியுங்கள்.- என்றனர். துவாரபாலகர்கள் வந்து அரசனிடம் தெரிவித்ததும், அரசன் உடனே அனுப்பு என்று சொல்ல, துவாரபாலகர்கள் வந்து அவர்களை அவசரமாக உள்ளே அழைத்துச் சென்றனர். தசரத ராஜாவைக் கண்ட தூதர்கள், தேவ ராஜா போன்ற காந்தியுடன் இருந்த முதியவரான அரசனைக் கை கூப்பி வணங்கியவர்களாக, ராஜாவைப் பார்த்து, மதுரமாக சொல்ல ஆரம்பித்தனர். -மிதிலா தேசத்து அரசனான ஜனகன் உங்களை குசலம் விசாரித்தார். அக்னி ஹோத்ரிகள், உபாத்யாய, புரோஹிதர்கள் எல்லோரையும் குசலம் விசாரித்தார். நலம் அறிய விரும்புகிறார். திரும்பத் திரும்ப மிகவும் ஸ்னேகமாக, மதுரமான வார்த்தைகளால், ஜனக ராஜா தங்கள் நலத்தை, ஊர் ஜனங்கள் நலத்தை, மற்றும் அனைவரும் நலமா என்றும் விசாரித்த பின், இந்த செய்தியை சொல்லச் சொன்னார். -என் மகளான சீதையை முன்பு, வீர்ய சுல்கா வெற்றி பெற்றவனுக்கே பரிசு என்ற விதமாக பிரதிக்ஞை செய்திருந்தேன். பல அரசர்கள், மிகவும் கர்வத்தோடு வந்து முயன்று தோற்றுப் போனார்கள். ராஜன், விச்வாமித்திர முனிவருடன் யதேச்சையாக வந்த தங்கள் குமாரனால் என் மகள் ஜயிக்கப்பட்டாள். ராமனால், தெய்வீகமான என் வில், நடுவில் முறிக்கப்பட்டது. யாகத்தின் முடிவில் ஜனக் கூட்டத்தின் முன், ராமனுடைய இந்த பராக்ரமம் தெரிய வந்தது.நான் பிரதிக்ஞை செய்திருந்தபடி, என் மகளைத் தந்தே ஆகவேண்டும். நான் என் பிரதிக்ஞையை நிறைவேற்ற விரும்புகிறேன். தாங்கள் அனுமதிக்க வேண்டும். புரோஹிதர்கள், உபாத்யாயர்கள், மற்றும் அனைவரையும் அழைத்துக் கொண்டு, சீக்கிரம் வாருங்கள். அரசனே, உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். ராகவர்கள், ராம லக்ஷ்மணர்களைக் காண வாருங்கள். நான் செய்த மிகப் பெரிய இந்த பிரதிக்ஞையை நீங்கள் வந்து நிறைவேற்றித் தர வேண்டும். தங்கள் புத்திரரின் வீர்யத்தால் ஜயிக்கப்பட்ட, என் மகளைப் பார்த்து, நீங்களும் ப்ரீதியை அடைவீர்கள். இவ்வாறு பணிவாக, விதேக ராஜாவான ஜனகர் சொல்லச் சொன்னார். விச்வாமித்திரர் அனுமதி அளித்து விட்டார்,சதானந்தரும் அங்கு இருக்கிறார என்று சொல்லி நிறுத்தினர். இதைக் கேட்டு அரசன் மிகவும் மகிழ்ந்து, வசிஷ்டரையும், வாமதேவரையும், மற்ற மந்திரிகளையும் அழைத்து, விஷயத்தைச் சொன்னான் கௌசல்யை மகன், குசிக புத்திரரின் பாதுகாப்பில், சகோதரனான லக்ஷ்மணனுடன் விதே33 தேசத்தில் வசிக்கிறான். ஜனகன் அவனுடைய வீர்யத்தைக் கண்டு மகிழ்ந்து, மகளை ராக4வனுக்கு கொடுக்க விரும்புகிறார். உங்களுக்கு, ஜனகருடைய இந்த விருப்பம் சம்மதமானால், சீக்கிரமாக புறப்படுவோம். கால தாமதம் வேண்டாம். மந்திரிகளும் சம்மதிக்க, மகரிஷிகளையும் கலந்து ஆலோசித்து, நாளை யாத்திரை என்று தீர்மானித்து, ஜனகரின் மந்திரிகளிடம்சொன்னார். அவர்களும் தசரத ராஜாவின் விருந்தினர்களாக, மிகவும் கௌரவிக்கப் பட்டு, இரவு சுகமாக இருந்தனர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தசரதா2ஹ்வானம் என்ற அறுபத்து எட்டாவதுஅத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 69தசரத2 ஜனக சமாகம: (தசரதரும், ஜனகரும் சந்தித்தல்)

 

பொழுது புலர்ந்ததும், உபாத்யாயர்களும், பந்துக்களும் சூழ, தசரத ராஜா சுமந்திரரை வரவழைத்து மகிழ்ச்சியுடன், -இன்று த4னாதி4காரிகள், ஏராளமாக தனம், பொருள் எடுத்துக் கொண்டு முன்னால் செல்லட்டும்.விஷயம் அறிந்தவர்களாக, எல்லா விதமான ரத்னங்களையும் எடுத்துக் கொள்ளட்டும்.நால் வித படையும், சீக்கிரமாக தயார் ஆகட்டும். நான் ஆணையிடும் நேரத்துக்குள், உத்தமமான இரண்டு வாகனங்கள் தயாராகட்டும். வசிஷ்டர், வாமதே3வர், ஜாபா3லி, காஸ்யபர், மார்க்கண்டேயர், சுதீர்காயு, ரிஷி காத்யாயனர், இந்த பிராம்மணோத்தமர்கள் முன்னால் செல்லட்டும். என் ரதத்தை தயார் செய். இந்த தூதர்கள் அவசரப் படுத்துகிறார்கள். கால தாமதம் வேண்டாம்- என்றார். அரசரின் கட்டளைப் படி, நால் வகை சேனைகளும் தயாராயின. ரிஷிகளுடன் அரசன் செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றது. நான்கு நாட்கள் பிரயாணம் செய்து, மிதி2லையை அடைந்தனர். ஜனக ராஜா வந்து மரியாதையுடன் வரவேற்றார். வயது முதிர்ந்த தசரத ராஜாவைக் கண்டு, ஜனகர் மிக மகிழ்ந்தார்.நரஸ்ரேஷ்டிரரான ஜனகர், அதே போல் நர ஸ்ரேஷ்டிரரான தசரதரிடம் -ஸ்வாகதம். உங்கள் வரவு நல்வரவாகுக. நல்ல படியாக வந்து சேர்ந்தீர்கள். உங்கள் புத்திரர்களைக் கண்டு மகிழ்வீர்கள். அவர்கள் வீர்யத்தால் ஜயித்த என் மகளையும் கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். வசிஷ்டர் வந்திருக்கிறார்.பகவானான வசிஷ்டர் வந்தது என் பாக்கியம். தேவர்கள் சூழ இந்திரன் வருவது போல, ப்ரம்மணோத்தமர்களோடு வந்திருக்கிறீர்கள். என் கஷ்டங்கள் விலகின. என் குலமும்பெருமை அடைந்தது. அதிர்ஷ்டவசமாகமகா வீரர்களான ராகவர்களுடன் சம்பந்தம் செய்து கொள்ளப் போகிறேன். இது என் பாக்கியமே. நரேந்திரனே, நாளைக் காலையில் இதை நடத்தித் தர வேண்டும் யாக முடிவில் விவாகம் செய்வது ரிஷிகள் சம்மதித்து நடப்பது வழக்கம் தான்.ரிஷிகள் மத்தியில் ஜனகர் இவ்வாறு சொல்லவும்,பொருள் பட பேசுவதில் வல்லவனான தசரத ராஜா பதில் சொன்னார். -ப்ரதிக்3ரஹோ தா3த்ரு வசே – கொடுப்பவன் கொடுத்தால் தான் வாங்கிக் கொள்பவன் வாங்கிக் கொள்ள முடியும். இதில் கொடுப்பவன் சௌகர்யம் தான் முக்கியம். நீங்கள் சொல்வது படியே செய்வோம். தர்மம் அறிந்தவனும், புகழ் வாய்ந்தவனுமான தசரத ராஜா சொன்னதைக் கேட்டு ஜனக ராஜா ஆச்சர்யம் அடைந்தார். பிறகு எல்லா முனி ஜனங்களும், ஒருவருக்கொருவர் சந்தித்து, அந்த இரவு பூராவும் மகிழ்ச்சியுடன் கழித்தனர். ராமரும், லக்ஷ்மணரும், விச்வாமித்திரரைத் தொடர்ந்து வந்து, தந்தையான தசரதனை வணங்கி நின்றனர். ஜனகரும், யாக காரியங்களையும், தன் புத்திரிகள் விவாக விஷயமாக செய்ய வேண்டிய காரியங்களையும் செய்தவாறு இரவைக் கழித்தார். தசரத ராஜா தன் புத்திரர்களைக் கண்டு மகிழ்ந்து ஜனகரின் உபசாரத்தை ஏற்று மகிழ்ந்து இரவை நிம்மதியாக கழித்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தசரத ஜனக சமாகமோ என்ற அறுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 70 கன்யா வரணம் (பெண் கேட்டல்)

 

விடிந்தது.ஜனகர் மகரிஷிகளுடன் கூடி செய்ய வேண்டிய பல காரியங்களைச் செய்து முடித்து விட்டு சதானந்தரிடம் வந்தார். –சதானந்தரே, என் இளைய சகோதரன் தார்மிகன் என்று பெயர் பெற்றவன், குசத்வஜன், ஊரில் இருக்கிறான், இந்த சுபமான நகரம், வார்ய பலகம் வரை பரவியுள்ளது. இக்ஷுமதி என்ற நதியும், புஷ்பக விமானம் போன்றதுமான சான்காசி என்ற ஊரில் இருக்கும் என் சகோதரனைக் காண விரும்புகிறேன். யாக ரக்ஷகனாக அவன் இருப்பான். என்னுடன் கூட இந்த யாகத்தை வெற்றி கரமாக முடிக்கும் சமயம் அவனும் இருந்தால் அதிக சந்தோஷமாக இருக்கும்.சதானந்தரிடம் அரசர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சிலர் அங்கு வந்தனர். ஜனக ராஜா அவர்களுக்கு உத்தரவுகள் கொடுத்து அனுப்பினார். அவர்களும் அரசரின் ஆணையை ஏற்று வேகமாகச் சென்றார்கள். சான்காசி சென்று, குசத்வஜனைக் கண்டு, அரசரின் விருப்பத்தை தெரிவிக்கவும், அவரும் உடனே புறப்பட்டு வந்தார். ஜனகரையும், சதானந்தரையும் சந்தித்து, அவர்களை வணங்கி விட்டு, அரசனுக்கு என்று இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். அதன் பின் மந்திரிகளை நியமித்து இக்ஷ்வாகு ராஜாவையும், குமாரர்களையும் அழைத்து வர பணித்தார்.அவர்களுக்கு உபசாரங்களை குறைவறச்செய்து அழைத்து வரச் சொல்லி அனுப்பினார். அவர்களும் தசரத ராஜா தங்கியிருந்த இடம் சென்று, ரகு நந்தனனைக் கண்டு தலை வணங்கி அயோத்யாதி4பதே, விதே3ஹ ராஜாவான மிதி2லாதிபன் தங்களைக் காண விரும்புகிறார். வீரனே, உபாத்யாயர்கள், புரோஹிதர்கள் கூட தாங்கள் வர வேண்டும் என, தசரத ராஜாவும், ரிஷி கணங்கள், பந்துக்கள் கூட, ஜனகர் இருக்கும் இடம் வந்து சேர்ந்தார்.விதேஹ ராஜாவைப் பார்த்து, தசரதர் –அரசனே, உங்களுக்குத் தெரிந்திருக்கும். இக்ஷ்வாகு குலத்தில், எப்பொழுதும் ரிஷியான வசிஷ்டர் தான் பேசுவார். அவர் சொல் தான் எங்களுக்குப் பிராமாணம். விஸ்வாமித்திரர் அனுமதியோடு, மற்ற மகரிஷிகளும் அருகில் இருக்க, இந்த வசிஷ்டர் முறையாக உங்களுடன் பேசுவார் என்று சொல்லி நிறுத்தினார்.

 

உடனே வசிஷ்டர் பேச ஆரம்பித்தார். ஜனகரும், அவர் புரோஹிதரும், மற்றவர்களும் கேட்கலானார்கள்.சாஸ்வதமான ப்ரும்மா, நித்யன், அழிவற்றவன், என்றும் அழியாத சக்தியுடையவர் என்றும் புகழப்படுபவர்,அவருடைய பிள்ளை மரீசி. மரீசியின் பிள்ளை கஸ்யபர். கஸ்யபர் பிள்ளை விவஸ்வான்.வைவஸ்வதன் என்று சொல்லப் படும் மனு அவருடைய பிள்ளை. மனு பிரஜாபதி.மனுவின் பிள்ளை இக்ஷ்வாகு. இந்த இக்ஷ்வாகு தான் அயோத்தியின் முதல் அரசன்.இக்ஷ்வாகுவின் பிள்ளை ஸ்ரீமான் குக்ஷி என்பவன்.குக்ஷிக்கு விகுக்ஷி என்று ஒரு பிள்ளை. விகுக்ஷியின் பிள்ளை மகா பிரதாபியான பா3ணன் என்பவன்.பா3ணன் பிள்ளை அனரண்யன் என்பவன்.நல்ல பிராதாபம் உடைய அனரண்யனின் மகன் ப்ருது2.ப்ருதுவின் பிள்ளை த்ரிசங்கு. த்ரிசங்குவின் பிள்ளை து3ந்து3மாரோ என்று புகழ் பெற்றவன். துந்துமாரனிடம் யுவனாஸ்வன் பிறந்தான். யுவனாஸ்வனின் மகன் மாந்தா3தா என்ற அரசன்.மாந்தா3தாவின் மகன் சுசந்தி4. சுசந்திக்கு இரண்டு பிள்ளைகள். த்3ருவ சந்தி4, ப்ரஸேனஜித் என்ற இருவர். த்ருவசந்தியின் மகன் தான் யஸஸ்வியான ப4ரதன்.பரதன் அசிதன் என்ற மகனைப் பெற்றான். இவனை எதிர்த்து பல அரசர்கள் சண்டையிட்டனர்.ஹைஹயா, தாள ஜங்கர்கள், சூரர்கள், சசிபிந்தவர்கள், என்ற பலரும் யுத்தம் செய்ய வந்தனர். இவர்களுடன் யுத்தம் செய்து தோற்று,ராஜ்யத்திலிருந்து விரட்டப் பட்டான். ஹிமாசலம் சென்று ப்4ருகுப்ரஸ்ரவனம் என்ற இடத்தில் வசித்தான். அல்ப பலம் கொண்ட இந்த அரசன் சீக்கிரமே காலம் சென்றான். இவருடையை இரு பத்னிகளும் கர்பவதிகளாக இருந்ததாக கேள்வி. இதில் ஒருவள் மற்றவளுக்கு க3ரம் என்ற விஷத்தைக் கொடுத்து கர்பத்தைக் கலைக்க முயன்றாள். அந்த சமயம், மலையடிவாரத்தில் பா4ர்கவ ஸ்யவனன் என்ற பெயருடைய முனிவர், இமய மலையை தன் வாசஸ்தலமாக கொண்டு வசித்து வந்தார். இருவரில் ஒருவள் காளிந்தீ என்றபெயருடையவளும், பத்ம பத்ரம் போன்ற கண்களுடையவளுமான,(விஷம் கொடுக்கப் பட்ட) இந்த பத்னி இவரை வணங்கி, தனக்கு பிறக்கப் போவது மகனாக இருக்க வேண்டும் என்னு வேண்டினாள்.அவளை ஆசிர்வதித்து ரிஷி -உன் வயிற்றில், சுபுத்திரனாக, மகா பலசாலியாக, மகா வீரனாக, தேஜஸ்வியாக சீக்கிரமே பிள்ளை பிறப்பான் – என்றார்.விஷத்துடனே பிறப்பான். க3ரம் என்ற விஷத்துடன் பிறப்பதால் சக3ரன் எனப்படுவான். என்று முனிவர் சொல்லவும், அந்த பெண் இறந்த தன் பதியை நினைத்த படியே புத்திரனைப் பெற்றெடுத்தாள்.சகரன் என்ற அந்த அரசனுக்கு, அசமஞ்சன் என்ற பிள்ளையும், அவனுக்கு அம்சுமான் என்ற பிள்ளையும், அவனுக்கு திலீபனும், திலீபனுக்கு ப4கீரதனும், பகீரதனிடத்தில் காகுத்ஸனும் பிறந்தனர். காகுத்ஸனுக்கு ரகு4 பிள்ளையாக பிறந்தான். ரகுவுக்கு, தேஜஸ்வியான கல்மாஷபாதோ3என்ற மகனும், அவனுக்கு சங்க2ணன், சங்கணனுக்கு சுத3ர்சனன், சுதர்சனனுக்கு அக்னி வர்ணன், அவனுக்கு சீக்4ரகன் என்று பிள்ளை. சீக்ரனுக்கு மருவும், மருவுக்கு சுஸ்ருகன், சுஸ்ருகனுக்கு, அம்ப3ரீஷன் என்று மகன். அம்பரீஷன் பிள்ளை நகுஷன், நகுஷனுக்கு யயாதி. யயாதிக்கு நபா4கன். நாபாகனுக்கு அஜன். அஜனின் பிள்ளை தசரதன்.இந்த தசரத குமாரர்கள் தான் ராம, லக்ஷ்மணர்கள்.ஆதியிலிருந்தே உயர்ந்த குலத்தில்,பரம தார்மீகர்களான இக்ஷ்வாகு குலத்தில் பிறந்து வளர்ந்த இந்த ராம லக்ஷ்மணர்கள், சத்யவாதிகள். வீரர்கள். இவர்களுக்கு உங்கள் பெண்களை வேண்டுகிறோம். அரசனே| சத்3ருசமான (சமமான) பையன்களுக்கு அதே போல உள்ள உன்பெண்களைத் தருவாய் என்று சொல்லி நிறுத்தினார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல்தொகுப்பில், பால காண்டத்தில், கன்யா வரணம் என்ற எழுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) ( ஸ்லோகம்- 46)

 

அத்தியாயம் 71 கன்யாதான ப்ரதிஸ்ரவ: (கன்யாவை தர சம்மதித்தல்)

 

இவ்வாறு வசிஷ்டர் சொல்லி முடிக்கவும்,ஜனகர் கை கூப்பி அஞ்சலி செய்தவராக எங்கள் குலத்தைப் பற்றியும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று ஆரம்பித்தார். இவ்வாறு கன்யா தானம் செய்யும்போது, குலத்தைப் பற்றி முழுவதுமாக சொல்ல வேண்டியது முறை.மகா முனிவரே கேளுங்கள். தன் செயலால் மூவுலகிலும் பிரஸித்தி பெற்ற ஒரு அரசன் இருந்தான். நிமி என்ற பெயருடையவன். தர்மாத்மா. நல்லவர்கள், விஷயம் அறிந்தவர்கள் மத்தியிலும், சத்வன், நல்ல குணக்குன்று என பெயர் பெற்றவன். அவனுக்கு மிதி2 என்று ஒரு மகன். ஜனகன் மிதி புத்திரன். முதல் ஜனக ராஜா, அவனுக்குஉதா3வசு என்று ஒரு பிள்ளை. உதாவசுவுக்கு தே3வராதன் என்ற மகா பலசாலியான பிள்ளை. ராஜரிஷியாக இருந்த தேவராதனுக்கு, ப்ருஹத்3ரதன் என்று மகன். இவனுக்கு மகா சூரனான மகாவீரன் என்ற பலசாலியான மகன். மகாவீரனுக்கு த்ருதிமான், த்ருதிமானுக்கு சுத்4ருதி. சுத்ருதிக்கு த்3ருஷ்ட கேது, த்ருஷ்டகேது என்ற ராஜரிஷிக்கு ஹர்யஸ்வன் என்ற மகன். ஹர்யஸ்வனுடைய பிள்ளை மரு. மருவின் பிள்ளை ப்ரதீந்தகன். இவனுக்கு கீர்த்திரதன் என்று மகன். தே3வமீடன் என்று கீர்த்திரதன் பிள்ளை.தேவமீடனுக்கு, விபு3தன், விபுதனுக்கு மஹீத்ரகன், மஹீத்ரகனுக்கு கீர்த்திராதன், கீர்திராதனுக்கு, மகாரோமா என்பவன் பிறந்தான். இவனுக்கு பிறகு வந்த ஸ்வர்ணரோமன், ராஜரிஷியாக இருந்தான். இவனுக்கு ஹ்ரஸ்வரோமன் பிறந்தான். தர்மம் அறிந்த இவனுக்கு இரண்டு பிள்ளைகள். நான் மூத்தவன். இளையவனான என் தம்பி குசத்4வஜன். நல்ல வீரன். மூத்தவனான எனக்கு ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைத்து விட்டு, குசத்வஜனை என் பொறுப்பில் விட்டு, என் தந்தை வனம் சென்றார். வயதாகி என் தந்தை காலம் ஆனதும், என் தம்பியை அன்புடன் வளர்த்து வந்தேன்.ஸான்காசி என்னும் இடத்திலிருந்து வந்த வீர்யமுள்ள சுத4ன்வா என்ற அரசன் மிதிலையை ஆக்ரமித்து, சைவமான வில்லையும், என் மகளான சீதையையும் தனக்குத் தர வேண்டினான். நான் மறுத்ததால் சண்டை மூண்டது. என்னை நேருக்கு நேர் எதிர்த்து நின்ற சுதன்வாவை நான் அழித்தேன். அவனை அழித்துவிட்டு, சாங்காசி என்ற அந்த இடத்திற்கு, என் தம்பியை அரசனாக நியமித்தேன். மிக்க மகிழ்ச்சியுடன் எங்கள் இரண்டு குமாரிகளையும் தருகிறோம். சீதையை ராமனுக்கும், ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கும் தருகிறோம். வீர்ய சுல்காவான என் சீதை, தேவ ஸ்த்ரீகளுக்கு சமமானவள். அவளையும் இளையவளான ஊர்மிளையும் சந்தேகமில்லாமல் தருகிறேன். ஒரு தடவைக்கு மூன்று தடவையாக தருவதாகச் சொன்னார். ராம லக்ஷ்மணர்களுக்கு கோதானம் செய்து வையுங்கள். பித்ரு கார்யங்களையும், உங்களுக்கு மங்களம், விவாக காரியங்களையும் செய்வீர்கள். இன்று மகா நக்ஷத்திரம். மூன்றாவது நாள் பால்குனி உத்திரா நக்ஷத்திரம். அன்று விவாகம் நடக்கட்டும். இந்த தானம் ராம, லக்ஷ்மணர்களுக்கு சுகோதயமாக, சுபமான ஆரம்பமாக இருக்கட்டும். ஏ என்றார்.

 

இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், கன்யாதான ப்ரத்ஸ்ரவோ என்ற எழுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (ஸ்லோகம்-24)

 

அத்தியாயம் 72கோ3தா3ன மங்களம் (கோ3தா3ன மங்களம்-காப்பு கட்டுதல்)

 

ஜனகர்சொல்லி நிறுத்திய பின், விஸ்வாமித்திரரும், வசிஷ்டரும்சேர்ந்தாற் போல சொன்னார்கள். இக்ஷ்வாகு குலமும், விதேஹ குலமும் மிகவும் பெருமை வாய்ந்தது . இரண்டுமே சிறந்த குலங்கள். இவை இரண்டிற்கும் இணையாக வேறு எதுவும் இல்லை. இப்போது சம்பந்தம் செய்து கொள்வதால், தர்மம், ரூபம், செல்வம் சமமாக உள்ள குலங்களின் பெருமை மேலும் ஓங்கும். ராம, லக்ஷ்மணர்களுக்கு, சீதா, ஊர்மிளையை திருமணம் செய்து கொள்வது மிக விசேஷம். நரஸ்ரேஷ்டிரரே, நான் சொல்ல வந்தது என்னவெனில், கவனமாக கேளுங்கள். இளையவனான இந்த குசத்வஜனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இருவரும் நல்ல அழகுடையவர்கள். தர்மாத்மாவான இந்த ராஜனின் குமாரிகளை ராஜன், மற்ற இரு ராஜ குமாரர்களுக்கு நாங்கள் வரிக்கிறோம். குமாரன் ப4ரதனுக்கும், சத்ருக்4னனுக்கும் இந்த இரண்டு குமாரிகளையும் தாருங்கள். தசரத2 ராஜனின் இந்த குமாரர்களும் ரூபம், யௌவனம் நிரம்பியவர்கள்.லோகபாலகர்களுக்கு சமமான பராக்ரமமும், தேவர்களுக்கு சமமான ப்ராக்ரமமும் உடையவர்கள். இந்த இருவர் சம்பந்தமும் நிச்சயமாகட்டும்.இக்ஷ்வாகு வம்சம் ஈடு இணையில்லாததாக ஆகட்டும். விஸ்வாமித்திரர் இவ்வாறு சொல்லவும், வசிஷ்டரும் அதை ஆமோதித்தார். ஜனகர் மிக்க மகிழ்ச்சியோடு அஞ்சலி செய்தவாறு சொன்னார் என் குலம் பாக்கியம் செய்தது. நீங்களாகவே வந்து இந்த சம்பந்தத்தையும் கட்டளையிடுவது போல சொல்கிறீர்கள். அப்படியே ஆகட்டும். உங்களுக்கு மங்களம். குசத்வஜனுடைய இந்த இரண்டு குழந்தைகளும், பரத, சத்ருக்னர்களுக்கு பத்னிகளாக ஆகட்டும். ஒரே நாளில் நான்கு ராஜ குமாரிகளையும், நான்கு ராஜ குமாரர்களும் பாணிக்ரஹணம் செய்து கொள்ளட்டும். மகாமுனிவரே, பால்குனி மாதத்து உத்தரா நக்ஷத்திரத்தில், அறிஞர்கள் விவாகம் செய்வதை உயர்வாக சொல்லிஇருக்கிறார்கள். அன்று ப4கன் ப்ரஜாபதியாக இருக்கிறான். இவ்வாறு சொல்லி இரண்டு முனிவர்களையும் பார்த்து ஜனக ராஜா எனக்கு மிகவும் அனுக்ரஹம் செய்துள்ளீர்கள். இன்று முதல் நானும் தங்கள் சிஷ்யனே. இந்த உயர்ந்த ஆசனங்களில் அமருங்கள். தசரத ராஜாவுக்கு இந்த ஊரும், எனக்கு அயோத்தியும் இனி ஒன்றே. உங்கள் ப்ரபுத்துவத்திற்கு சந்தேகமேயில்லை. நீங்கள் இங்கும் உங்கள் அதிகாரத்தைச் செலுத்தலாம். – ஜனகர் சொல்லி நிறுத்தியதும், தசரதர், அவர்கள் இருவரையும் பார்த்து, மிதிலா தேசத்து சகோதரர்களே, நீங்கள் இருவருமே, நல்ல குணவான்கள். ரிஷிகளும், எங்களுடன் வந்த அரச சமூகமும் நன்றாக உபசரிக்கப் பட்டனர். ஸ்வஸ்தி உண்டாகட்டும். நான் என் இருப்பிடம் செல்கிறேன். செய்ய வேண்டியசிரார்த காரியங்களைச் செய்கிறேன், என்று சொல்லி எழுந்தார். அரசரிடம் விடை பெற்றுக்கொண்டு, முனிவர்கள் இருவரும் உடன் வர வேகமாக சென்றார். தன் இருப்பிடம் சென்று சிரார்தம் செய்து, விடியற்காலையில் சீக்கிரம் எழுந்து கோதான மங்களம் செய்வித்தார். நராதிபனான தசரதன், ஒவ்வொரு ப்ராம்மணனுக்கும்நூறாயிரம் பசுக்களைக் கொடுத்தார். ஒவ்வொருவருக்கும், தன் புத்திரர்களை உத்தேசித்து, தானங்கள் கொடுத்தார். சுவர்ண சிருங்கம் (கொம்பு) உடையவை, நிறைந்த கன்றுகளுடன் கூடிய பசுக்கள், ஏராளமாக பால் கறக்கக் கூடியவைகளாக நான்கு முறை நூறாயிரம் பசுக்களைத் தானமாக கொடுத்தார். மேலும் பல செல்வங்கள், ப்ராம்மணர் கூட்டத்திற்கு, தன் புத்திரர்களின் நலனை உத்தேசித்து கொடுத்தார் இந்த கோதான மங்களம் செய்து முடித்து, சௌம்யமாக ப்ரஜாபதி போல வீற்றிருந்தான்.

 

இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், கோதானமங்களம் என்ற எழுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (ஸ்லோகம்-25)

 

அத்தியாயம் 73 தசரத2 புத்ரோத்3வாஹ: (தசரதரின் புத்திரர்களின் விவாகம்)

 

கோதானம் செய்த அன்றே, யுதா4ஜித் வந்து சேர்ந்தான். இவன் கேகய ராஜ குமாரன். ப4ரதனுடைய தாய் மாமன்.குசலம் விசாரித்த பின், யுதா4ஜித்கேகயாதிபதியான ராஜா, ஸ்னேகத்துடன் தங்களை நலம் விசாரித்தார். அங்கு எல்லோரும் நலமே. தன் பெண்ணின் குமாரர்களைக் காண விரும்புகிறார் அரசர். அதன் பொருட்டு அயோத்தி வந்தேன். அயோத்தியில், தங்கள் புத்திரர்களின் விவாகத்தின் காரணமாக, நீங்கள் இங்கு வந்திருப்பது தெரிந்தது. அதனால் வேகமாக இங்கு வந்தேன்எனவும்,பிரியமான அதிதிதானே வந்து சேர்ந்ததில் மிகவும் மகிழ்ந்த தசரத ராஜா, மிகச் சிறப்பாக உபசாரங்கள் செய்து வரவேற்றான்.அன்று இரவு புத்திரர்களோடு இருந்துவிட்டு, விடியற்காலை எழுந்து, செய்ய வேண்டிய காரியங்களைக் கவனிக்கலானார். ரிஷிகளைத் தொடர்ந்து யக்ஞ வாடம் வந்து சேர்ந்தார்.

 

சரியான முஹுர்த்தத்தில், சுபமான சமயத்தில், எல்லா வித ஆபரண, அலங்காரங்களையும் தரித்த சகோதரர்களுடன் தானும் கௌதுக மங்களம் செய்து கொண்டவராக, மகரிஷிகள் உடன் வர, வசிஷ்டரைத் தொடர்ந்து ராமர் தந்தையான தசரதர் இருக்கும் இடம் வந்து சேர்ந்தார். வசிஷ்டர் முன் சென்று ஜனக ராஜாவிடம் தசரத ராஜா கௌதுக மங்களங்கள் செய்து புத்திரர்களை அழைத்துக் கொண்டு, நீங்கள் தானம் செய்வதை எதிர் நோக்கி நிற்கிறார் என்று சொல்லி, தானம் செய்பவரும், வாங்குபவரும் எல்லா விதத்திலும்செல்வம் முதலிய சுகங்கள் நிரம்பப் பெற்றவர்களாக விளங்குகிறார்கள். உன் தர்ம விதிப்படி விவாகம் செய்வாய் என்று அனுமதி அளிக்க, ஜனகர் பதில் சொன்னார். யார் என்னை தடுக்கிறார்கள்? யாருடைய கட்டளையை எதிர் பார்க்க வேண்டும்? தன் வீட்டில் என்ன விசாரம்? இது எப்படி என் ராஜ்யமோ அப்படியே தங்களுடையதும் ஆகும். என் குமாரிகளும், கௌதுக மங்களம் செய்யப்பட்டவர்களாக, வேதி மூலம் வந்து சேர்ந்து விட்டார்கள். உங்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். எதற்காக கால தாமதம் செய்ய வேண்டும்? நிர்விக்4னமாக மேற்கொண்டு ஆக வேண்டியதைக் கவனிப்போம். என்று ஜனகர் சொல்லவும், ரிஷி கணங்கள் கூட தன் புத்திரர்களையும்உள்ளே அழைத்துச் சென்றார். பிறகு விதேக ராஜா வசிஷ்டரிடம் சொன்னார். லோக ராமனான ராமனின் விவாக காரியங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டு நடத்துங்கள், எனவும், அப்படியே ஆகட்டும் என்று வசிஷ்டரும், விச்வாமித்திரரையும், சதானந்தரையும் உடன் அழைத்துக் கொண்டு வேதியை கந்த புஷ்பங்களால் அலங்கரித்து, நீர்முதலியவைகளை கொண்டு முறைப்படி வேதியை தயார் செய்து, சுவர்ணபாலிகைகளும், துவாரம் உள்ள கும்பம்,முளை கட்டிய பயிர்களுடனும், முளை வந்த பயிர்கள் உள்ள பாத்திரங்கள், தூ4ப பாத்திரங்கள் தூ4பத்துடனும், சங்க பாத்திரம்,அர்க்யம் நிரம்பிய பாத்திரத்தில் கரண்டிகள், பொரி நிரம்பிய பாத்திரங்கள்,நன்றாக தயாரிக்கப்பட்ட அக்ஷதைகள், இவைகளுடன் தர்ப்பங்களை சமமாக பரப்பி மந்திரங்கள் சொல்லி, வேதியில் அக்னியை வளர்த்து, முறைப்படி அக்னியில் ஹோமம் செய்தார், வசிஷ்ட மகா முனிவர். பிறகு எல்லாவிதமான ஆபரணங்களையும் அணிவித்து, சர்வாலங்கார பூஷிதையாக சீதையை அழைத்து வந்து, ராகவனான ராமனுக்கு எதிரில், அக்னிக்கு முன்னால் நிறுத்தி, ஜனக ராஜா சொன்னார். இயம் சீதா மம சுதா, சஹத4ர்ம சரீ தவ – இந்த சீதை , என் மகள், உன் சகதர்மிணியாக இருப்பாள். உனக்கு மங்களம் உண்டாகட்டும். இவளை ஏற்றுக் கொள். இவள் கைகளை உன் கைகளால் பற்றிக் கொள் என்று சொல்லி, பதிவிரதையாக, நல்ல அதிர்ஷ்டம் நிரம்பியவளாக, எப்போதும் உன் நிழல் போல உன்னையே அனுசரித்து வாழ்வாள் என்று சொல்லி, மந்திரம் சொல்லி பவித்திரமான ஜலத்தை விட்டார். சாது, சாது என்று தேவர்களும், ரிஷிகளும் அந்த சமயம் சொன்னார்கள். தேவ துந்துபி கோஷமும் முழங்க, பூ மாரி பொழிந்தது. இவ்வாறு மந்திர ஜலம் விட்டு, சீதையை கொடுத்துவிட்டு, ஜனக ராஜா மிகவும் மகிழ்ச்சியுடன், லக்ஷ்மணா வா, உனக்கு மங்களம். ஊர்மிளாவை ஏற்றுக் கொள். கைகளைப் பிடித்துக் கொள். தாமதம் செய்யாதே என்றார்.பிறகு பரதனைப் பார்த்து பரதா, மாண்டவியின் கைகளை பற்றுவாயாக, என்றுசொல்லி, மாண்டவி என்ற ராஜ குமாரியை அவனுக்கு கொடுத்து, சத்ருக்னனை அழைத்து ஜனகேச்வரரான ராஜா சொல்வார், ஸ்ருதகீர்த்தி என்ற இவள் கைகளைப் பற்றி ஏற்றுக் கொள். சத்ருக்னா, என்று சொல்லி அவன் கையில் கொடுத்தார். இவ்வாறு நீங்கள் எல்லோரும் சௌக்யமாக, எல்லோரும் நல்ல சரித்திரமும், விரதமும் உடையவர்களாக, காகுத்ஸர்களே, பத்னிகளுடன் நீடுழி வாழ வேண்டும் என்று ஆசிர்வதித்தார். கால தாமதம் செய்ய வேண்டாம் என்று ஜனகர் சொல்ல, எல்லோரும் அவரவர் பத்னிகளை கைபற்றி, அக்னியை வலம் வந்து, வேதியையும் அரசனையும் பிரதக்ஷிணம் செய்து, ரிஷிகளையும்மனைவிகளுடன் வணங்கி, சாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி, நியமம், மற்ற நியதிகளுடன் விவாகம் செய்து கொண்டனர். அந்தரிக்ஷத்தில் இருந்து, இந்த காகுத்ஸ குமாரர்கள் லலிதமான குமாரிகளை (மென்மையான) பாணிக்ரஹணம் செய்து கொண்ட சமயம், புஷ்ப மாரி பொழிந்தது. திவ்யமான துந்துபி வாத்யமும், கீதங்கள், வாத்ய ஸ்வரங்களுடன் கூட அப்சர ஸ்திரீகள் நடனமாடினர். கந்தர்வர்களும், கலம் என்ற பாட்டை பாடினர். ரகு முக்யர்களான குமாரர்களின் விவாகத்தில் அவர்கள் அத்புதமாக பாடினர். இவ்வாறுஎங்கும்கோலாகலமாகநிறைந்து இருக்கும் பொழுது, மங்கள வாத்யங்கள் முழங்க, மூன்று விதமான அக்னியை வலம் வந்து, புது மனைவிகளுடன்,ஔபகார்யம் என்ற ஹோமத்தை பத்னிகளுடன் செய்தனர். அரசனும் பந்துக்களுடனும், ரிஷிகளுடனும் கலந்து கொண்டான்.

 

(இது வரை, வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தசரத புத்ரோத்வாஹ: என்ற எழுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) (ஸ்லோகம்-41)

 

அத்தியாயம் 74ஜாமத3க்னி அபி4யோஹ: (ஜமதக்னி மகன் வந்து எதிர்த்தல்)

 

அன்று இரவு தங்கியிருந்து விட்டு விஸ்வாமித்திர முனிவர் இரண்டு அரசர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு வடக்கு திசை நோக்கிச் சென்றார். குமாரர்களை நன்கு ஆசிர்வாதம் செய்து விட்டு விஸ்வாமித்திரர் சென்றபின், தசரத ராஜா மிதிலாதிபதியான விதேஹரிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கள் ஊர் திரும்பிச் செல்ல கிளம்பினார். அவரைஉடன் வந்து வழியனுப்பஜனகர் வந்தார். கன்யா தனம் என்றுநிறைய கொடுத்தார். நூறாயிரம் பசுக்களை, மற்றும் பலவற்றை, கம்பளங்களையும், புது பட்டு வஸ்திரங்களையும், யானை, குதிரை, ரத, பதாதி இவைகளை நல்ல அலங்காரத்துடன் கொடுத்தார். உத்தமமான தாசிகளை உடன் அனுப்பினார். சுவர்ணம், தங்கம், முத்து, பவளம் என்று கன்யா தனமும் கொடுத்து அரசரை வழியனுப்பிவிட்டு, மிதிலை அரசன் தன் வீடு திரும்பினார். சேனை வீரர்கள் நாலாபுறமும் புடை சூழ, மந்திரிகளும் ரிஷிகளும் உடன் வர, குமாரர்களுடன் கிளம்பினார் அயோத்யா அரசன். கிளம்பிச் செல்லும் அந்த அரசரை பக்ஷிகள் கோரமாக சத்தமிட்டுக் கொண்டு ஏதோ எச்சரித்தன. மிருகங்கள் பூமியில் பிரதக்ஷிணமாக ஓடிச் சென்றன.இவைகளைப் பார்த்து, ராஜ சார்தூலனான தசரதன்,வசிஷ்டரை கேட்டார். பக்ஷிகள்இனிமையின்றி கோரமாக கத்துகின்றன.பூமியில் மிருகங்களும் பிரதக்ஷிணமாக சுற்றுகின்றன. இது என்ன அபசகுனம்? என் மனம் வருந்துகிறதே. தசரத ராஜாவின் இந்த கவலையை நீக்கும் விதமாக வசிஷ்டர் பதில் சொன்னார் -அரசனே, கேள். இதன் பலன், ஏதோ ஒரு விபரீதம் வருகிறது என்று பக்ஷிகள் சொல்லுகின்றன. அந்த ஆபத்து நீங்கி விடும் பயப்படாதே என்று மிருகங்கள் சொல்லுகின்றன.  இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே, பலமாக காற்று வீசியது. பூமியை நடுங்க வைத்துக் கொண்டு, மரங்களை கீழே தள்ளிக் கொண்டும், சூரியனை புகையில் மறைத்தவாறு, திசை எதுவென்றே தெரியாதபடி ஒரே தூசியினால் அந்த இடம் என்ன, ஏது, எதனுடைய பலம் என்று எதுவுமேதெரியாமல் அமர்க்களமாக ஆயிற்று. வசிஷ்டரும், மற்ற ரிஷிகளும், அரசனும், அரசகுமாரர்களும் தவிர மற்றசேதனங்கள் நினைவிழந்தன போலாயிற்று.அந்த சேனை தூசியினால் மறைக்கப் பட்டு, அந்தகாரம் சூழ்ந்தது. ஜடா மண்டலங்களை தரித்தபடி, பயங்கரமான வடிவுடன், ஜாமதக்னியான பா4ர்கவர், (க்ஷத்திரிய) ராஜ, ராஜாக்களை அழிப்பவர். அசைக்க முடியாத கைலாச மலை போலவும், தாங்க முடியாத காலாக்னி போலவும், தன் தேஜஸினால், கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல, கண்ணால் பார்க்க முடியாதபடி, சாதாரண ஜனங்களின் கண்ணுக்கு புலப்படாதவராக, தோளில்பரசுவைத் தாங்கியவராக, மின்னல் கூட்டம் போன்ற வில்லையும் அம்பையும் தாங்கிக் கொண்டு, திரிபுரத்தை அழிக்கச் சென்றபரமசிவன் போன்ற தோற்றத்துடன், வந்த அவரைப் பார்த்து வசிஷ்டர் முதலானோர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். தந்தையைக் கொன்றதால் கோபம் கொண்டு க்ஷத்திரியர்களை அழித்து வந்த இந்த பார்கவர்,கோபம் தணிந்து, தன் ஜ்வரம் தணிந்தவரானார். மறுபடியும்க்ஷத்திரியர்களை நிர்மூலம் செய்ய விரும்புகின்றாரா என்ன?இவ்வாறு சொன்னாலும் அர்க்யம் எடுத்துக் கொண்டு பார்கவரின் முன்னால் சென்று, ராம, ராம என்று மதுரமாக அழைத்தார்கள் ரிஷிகள் கொடுத்ததாலும், அவர்கள் உபசாரத்தை அங்கீகரிக்க வேண்டியும், அர்க்யத்தை ஏற்றுக் கொண்டாலும், தசரத ராமனைப் பார்த்து கடுமையாக பேச ஆரம்பித்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ஜாமதக்3னி அபி4யாயோ என்ற எழுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (ஸ்லோகம்-25)

 

அத்தியாயம் 75 வைஷ்ணவ த4னு: ப்ரசம்ச: (வைஷ்ணவ வில்லின் பெருமை)

 

தாசரதியான ராமா,, உன் வீர்யத்தைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறோம். வில்லை உடைத்ததாக முழு விவரமும் என் செவிக்கு வந்து சேர்ந்தது. வில்லை உடைத்தது அத்புதமே.என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மற்றொரு சுபமான வில்லையும் எடுத்துக் கொண்டு உன்னை பார்க்க வந்தேன். இதைப் பார். பயங்கரமானது.ஜாமதக்னியான என் வில்.இதில் நாணைப் பூட்டு. உன் பலத்தை எனக்குக் காட்டு. இந்த வில்லில் நீ நாண் பூட்டுவதைக் கண்டு நான் உன் பலத்தை எடை போடுவேன். அதன் பின் த்வந்த யுத்தம் செய்வோம். எனக்கு வீரர்களைப் பிடிக்கும். அதனால் உன் வீர்யத்தைக் கண்டு சிலாகிக்கிறேன். அவருடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு தசரத ராஜா நடுங்கிவிட்டார். முகம் வாடி, தீனமாக, கை கூப்பியவாறு வேண்டினார். க்ஷத்திரியர்களை கோபித்து எதிர்த்து வந்த நீங்கள் சாந்தம் ஆனீர்கள். தற்சமயம், உத்தமமான பிராம்மணராக, புகழோடு விளங்குகிறீர்கள். என் குழந்தைகள் பா3லர்கள். இவர்களுக்கு அபயம் அளியுங்கள். பார்கவ குலத்தில் பிறந்தவர், தங்களுடைய அத்யயனம், விரதம் இவற்றில் ஈடுபாட்டுடன், உலகத்திலிருந்து ஒதுங்கி இருப்பவர்கள். சஹஸ்ராக்ஷனுக்கு பிரதிக்ஞை செய்ததால், ஆயுதத்தை கை விட்டீர்கள். இதன் பின் தர்மத்தில் சிந்தனையோடு, காஸ்யபருக்கு பூமியைக் கொடுத்து விட்டு, மகேந்திர மலையில் வாசம் செய்து வருகிறீர்கள். மகாமுனியே, என் சர்வ நாசத்திற்கு என்று வந்தீர்களா? ஒரு ராமனை நீங்கள் அழித்தால் நாங்கள் யாருமே உயிருடன் இருக்க மாட்டோம். இவ்வாறுதசரதர் புலம்புவதைக் கேட்டு, ப்ரதாபம் மிக்கவரான ஜாமதக்னி, அவரை ஒரேயடியாக புறக்கணித்து விட்டு, ராமனிடமே பேச்சுக் கொடுத்தார். இவை இரண்டு வில். திவ்யமானவை. உலகப் புகழ் பெற்றவை. அழுத்தமாகவும், பலமுள்ளதாகவும் செய்யப் பட்ட சிறந்த வில் இவை. தேவர்கள் கார்யத்திற்காக விஸ்வகர்மாவினால் செய்யப்பட்டது. ஒன்று த்ரயம்ப3கனுக்கு, யுத்தம் செய்ய சென்றபோது, திரிபுரத்தை அழித்த சமயம், கொடுத்தார்கள். அதை நீ உடைத்தாய். சுரர்கள் சேர்ந்து, மற்றொன்றை விஷ்ணுவிற்கு கொடுத்தார்கள். இது வைஷ்ணவ வில். ரௌத்ர தனுஷ், இதற்கு சமமானதே. அதனால் தேவதைகள் எல்லோருமாக பிதாமகரைக் கேட்டார்கள். சிதிக் கண்டனான சிவ பெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் பலம் யாருக்கு அதிகம் என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக சொன்னார்கள். இவர்களூடைய அபிப்பிராயத்தை அறிந்து கொண்ட பிதாமகர், இவர்கள் இடையில் விரோதத்தைக் கிளப்பி விட்டார். இதன் காரனமாக பயங்கரமான யுத்தம் நடந்தது. இப்போது நினைத்தாலும் மயிர் கூச்செரிகிறது. பரஸ்பரம் வெற்றி பெற வேண்டும் என்று விஷ்ணுவும், சிதிகண்டரும்மோதிக் கொண்டனர். அப்பொழுது, உயர்ந்த பராக்ரமம் உடைய சைவமான வில், கொட்டாவி விடுவது போல சத்தம் செய்தது. அந்த ஹும் காரத்தால்,முக்கண்ணன் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றார். தேவர்கள் ஓடி வந்தனர். ரிஷிகளும், சாரணர்களும் இருவரையும் சாந்தமடைய வேண்டினர். விஷ்ணு பராக்ரமத்தால், சைவ வில் சத்தம் செய்தது என்றதால், தேவர்கள் விஷ்ணுவை பெரியவராக மதித்தனர். ருத்ரன் கோபம் கொண்டு அந்த வில்லை விதேஹ ராஜாவான தேவ ரதன் என்ற ராஜரிஷியிடம் கொடுத்து விட்டார்.அம்புகள் எல்லாவற்றையும் சேர்த்தே கொடுத்தார். ராமா, இது வைஷ்ணவ வில். எதிரிகளை அடியோடு அழிக்கக் கூடியது. பார்கவரான ரிசீகரிடம் கொடுத்து விஷ்ணு பாதுகாப்பாக வைத்திருக்கச் சொன்னார். தன் மகனான, என் தந்தையிடம், அவருடைய அபரிமிதமான பராக்ரமத்தைப் பார்த்து, ரிசீகர் இதை அவரிடம் கொடுத்தார். என் தந்தை ஜமதக்னி, சஸ்திரங்களைத் துறந்து தவத்தில் ஈடுபட்டு விட்ட சமயம், புத்தியில்லாமல், கார்தவிர்யார்ஜுனன், அவரைக் கொன்று விட்டான். கடுமையான, நம்ப முடியாத இந்த செயலால் என் தந்தை இறந்தது எனக்கு தாங்க முடியாத கோபத்தை உண்டாக்கியது. பல தடவை, க்ஷத்திரியர்களை அடியோடு அழித்து விடுவதாக கிளம்பினேன். பல க்ஷத்திரியர்களை அழித்து, நிலத்தை காஸ்யபருக்கு கொடுத்து விட்டேன், யாக முடிவில் தக்ஷிணையாக. இதன் பின் மகேந்திர மலைக்குச் சென்று தவம் செய்து வருகிறேன். இந்த வைஷ்ணவ வில் என் முன்னோர்களுடையது. க்ஷத்திரியனுடைய தர்மத்தைக் காப்பாற்றும் விதமாக இதை பிடித்துக் கொள். உத்தமமான இந்த தனுசை ஏற்று, இதில் அம்பை பூட்டு. இந்த வில் எதிரியை அழிக்ககூடியது, இதை வளைத்து நாண் ஏற்ற முடியுமானால் செய்து காட்டு. அதன் பின் நாம் இருவரும் த்வந்த யுத்தம் செய்வோம் என்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், வைஷ்ணவ தனு:ப்ரசம்ச: என்ற எழுபத்துஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (ஸ்லோகம்-28)

 

அத்தியாயம் 76ஜாமத3க்3ன்ய ப்ரத்ஷ்டம்ப4: (ஜமதக்னி புத்திரரை அடக்குதல் )

 

ஜாமதக்னியின் அந்த வார்த்தைகளைக் கேட்டு, தாசரதியான ராமன், பா4ர்கவரே, நீங்கள் தங்கள் தந்தையின் பொருட்டு செய்த இந்த செயல்களை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.என் பலத்தை குறைவாக எடை போட வேண்டாம். இதோ என் பராக்ரமத்தை காட்டுகிறேன், பாருங்கள் என்று சொல்லி, ராமன் பார்கவரின் (ஸராஸனம்) வில்லை வாங்கி, அதில் அம்பையும் பூட்டி சுலபமாக வில்லை நிமிர்த்தி அதை பிரயோகிக்க சித்தமாக வைத்துக் கொண்டார். ஜாமதக்னியைப் பார்த்து கோபத்துடன்,ப்ராம்மணர் என்பதால் என் மதிப்புக்கு உரியவர். விச்வாமித்திரர் சொன்னதன் பேரிலும் உம்மை மதிக்கிறேன்.உங்கள் உயிரை பறிக்கும் அம்பை இப்பொழுது நான் பிரயோகிக்கப் போவதில்லை. நீங்கள் விரும்பினால் தவத்தால், தவ பலத்தால் சம்பாதித்த உங்கள் பாத கதியை, ஈடு இணையில்லாத லோகங்களை அழிக்கிறேன். இந்த விஷ்ணுவின் திவ்யமான சரம் (அம்பு) எதிரியை அழிக்க கூடியது. வீணாகாது. தன் வீர்யத்தால் பலத்தையும், கர்வத்தையும் அடக்கக்கூடிய இந்த அம்புக்கு, இலக்கு வேண்டும். இவ்வாறு சொல்லி, வில்லைத் தாங்கியபடி நிற்கும், தசரத ராமனைக் காண ரிஷி கணங்களுடன், ப்ரும்மாவும் மற்ற தேவர்களும் வந்து சேர்ந்தனர். கந்தர்வர்களும், அப்சர, சித்த, சாரணர்களும், யக்ஷ, ராக்ஷஸ, நாகர்களும், அத்புதமான இந்த காட்சியைக் காணக் கூடி விட்டனர்.வில்லை கையில் ஏந்தி, இலக்கு நோக்கி ராமர் காத்திருக்கும் பொழுது, உலகமே ஜடமாகி விட்டது. வீர்யம் இழந்தவராக ஜாமதக்னி, தசரத ராமரைப் பார்த்தார். களையிழந்தவராக, ஜாமதக்னி, கமல பத்ராக்ஷனான ராமரிடம், மெதுவாக, மிக மெதுவாக சொன்னார். காஸ்யபருக்கு நான் நிலத்தை கொடுத்த பொழுது, அந்த நிலத்தில் நான் வசிக்க கூடாது என்று காஸ்யபர் கேட்டுக் கொண்டார். அதனால் நான் குரு வசனத்தை ஏற்று, இரவில் பூமியில் தங்குவதில்லை. காஸ்யபருக்கு என்று இந்த பூமியை பிரதிக்ஞை செய்து கொடுத்த பின், இந்த கதியை நீ அடிக்க அனுமதிக்க முடியாது. ராமா, மனோ வேகத்தில் நான் மகேந்திர மலை போய் சேருவேன். இணையில்லாத லோகங்கள் என் தவ வலிமையால் ஜயிக்கப் பட்டன. அவைகளின் மேல் உன் அம்பை விடு தாமதம் வேண்டாம். நான் உன்னை அறிவேன். உன் கை ஸ்பர்சத்தால், இந்த வில் பாவனம் அடைந்தது. இதோ தேவர்கள் கூட்டம் பார்த்துக் கொண்டு நிற்கிறது. ஈடு இணையில்லாத உன் செயலைக் கண்டு பிரமித்து, யுத்தத்தில் எதிர்க்க முடியாத உன் பலத்தை அறிந்து வியப்புடன் நிற்கின்றனர். இதனால் எனக்கு ஒரு தலை குனிவும் இல்லை. த்ரிலோக நாதனான உன்னால் நான் தோற்கடிக்கப்பட்டேன். இந்த சிறந்த அம்பை, விடு. நல்ல விரதங்கள் உடையவனே, நீ அம்பை விட்டவுடன் நான் மகேந்திர மலை செல்கிறேன். ஜாமதக்னி சொன்னபடியே, ராமர் வில்லை இழுத்து அம்பை விட்டார். அது தான் சம்பாதித்து சேர்த்து வைத்த தவ லோகத்தை அழித்ததை பார்த்த பின் ஜாமதக்னி மகேந்திர மலை சென்றார். நால் திசைகளில் இருந்தும் தேவர்கள் ராமரை புகழ்ந்தனர்.

 

தாசரதியான ராமரை, ஜாமத்க்னியான ராமர் புகழ்ந்து, பிரதக்ஷிணம் செய்து தன் வழி சென்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ஜாமத3க்3ன்ய ப்ரதிஷ்டம்ப4: என்ற எழுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (ஸ்லோகம்-24)

 

அத்தியாயம் 77 அயோத்யா பிரவேசம்(அயோத்தியில் பிரவேசித்தல்)

 

ஜாமதக்னி ராமர் சாந்தமடைந்து சென்றபின், தாசரதியான ராமர், வில்லை வருணனிடம் கொடுத்து, அம்புகளையும் கொடுத்து, வசிஷ்டரையும் மற்ற முனிவர்களையும் வணங்கி, தந்தை நிலை குலைந்து கிடப்பதைக் கண்டு அவரிடம் சென்றார். ஜாமதக்னி ராமர் போய் வெகு நேரமாயிற்று. நால் வகை சேனைகளும் கிளம்புங்கள். அயோத்யா செல்வோம்.தசரதர், மகன் சொன்னதைக் கேட்டு மனம்  தெளிந்தவராக, அவனை ஆலிங்கனம் செய்து,தோளில் தாங்கி,உச்சிமுகர்ந்து,(பரசு) ராமர் போய்விட்டார் என்று அறிந்து சந்தோஷமடைந்து,தன் மகனான ராமர் திரும்ப வந்து பிறந்ததாகவே எண்ணினார். (பிழைத்தது புனர்ஜன்மம் என்பதாக). சேனையை ஊர் நோக்கி செல்ல பணித்து விட்டு, சீக்கிரமே ஊர் வந்து சேர்ந்தனர். கொடிகளும் தோரணங்களும் அழகாக அலங்கரிக்க, மங்கல வாத்யங்கள் முழங்க, நீர்   தெளித்து சுத்தமான ராஜ வீதியில், அழகாக பூக்களை இறைத்து வாசனை மிகுந்ததாய், ராஜ பிரவேசத்திற்கு உகந்ததாய், ஊர் ஜனங்கள் சுகமாக, மங்கள வாத்யங்களை வாசித்துக் கொண்டு நிறைந்திருக்கும் தன் நகரத்தில் அரசன் பிரவேசித்தான். எதிர் கொண்டழைக்க வந்த ஜனங்கள், தாங்களும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, பிராம்மணர்களும், மற்றவர்களும் புடை சூழ,புத்திரர்களுடனும், அவர்கள் பத்தினிகளுடனும், புகழ் வாய்ந்த தன் க்ருஹத்தில் , தனக்கு பிடித்தமானதும், இமயமலை போன்று உயர்ந்ததுமான வீட்டில் நுழைந்தான். மிகவும் சந்தோஷமாக, தன் வீட்டில் இருந்த அரசன், கௌசல்யா, சுமித்ரா, கைகேயி முதலியவர்கள் மருமகள்கள் நால்வரையும் வரவேற்க, மற்ற ராஜ மகிஷிகள், லக்ஷ்மிகரமான சீதையையும், புகழ் வாய்ந்த ஊர்மிளையையும், குசத்வஜ புத்திரிகள் இருவரையும் வரவேற்று அழைத்துச் சென்றனர். நல்ல பட்டாடையுடுத்தி சுபமான சம்பாஷனைகளாலும், அரண்மனை சோபை பெற்று விளங்கியது. தேவதைகள் இருந்த பூஜையறையில் பூஜை செய்தனர். வணங்க வேண்டியவர்களை வணங்கி, எல்லா ராஜ குமாரிகளும், குபே3ர பவனம் போன்ற தங்கள் தங்கள் மாளிகைக்கு வந்து, பிராம்மணோத்தமர்களை, பசு, தன, தான்யங்களால் திருப்தி செய்து, இரவில் கணவன்மார்களோடு சுகமாக இருந்தனர். குமாரர்களும் மகாத்மாக்களாக, தங்கள் ஒப்புவமையில்லாத வீர்யத்தால் புவியில் புகழ் பெற்றவர்களாக, பத்னிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தனர். அஸ்த்ர, சஸ்த்ரங்கள் அறிந்தவர்களாக, நிறைந்த செல்வத்துடன், நண்பர்களும், உறவினரும் சூழ, தந்தைக்கு பணிவிடை செய்து கொண்டு சந்தோஷமாக இருந்தனர். அவ்வப்போது, நீதியை அறிந்த பெரியவர்களை அழைத்து, மரியாதையுடன் உபசரித்து மகிழ்வித்துக் கொண்டும் இருந்தனர். சில காலம் சென்றதும், அரசன், கைகேயி புத்திரனான பரதனிடம் சொன்னான். இதோ கேகய ராஜ குமாரன், உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறான். உன் மாமனான யுதாஜித் காத்திருக்கிறான். அவனுடன் போய் வா, எனவும், பரதன், சத்ருக்னனுடன் கிளம்பத் தயார் ஆனான். தாயார்களை வணங்கி, ராமனிடமும், மற்றவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு இருவரும் யுதாஜித்துடன் சென்றனர். யுதாஜித்,இருவருடனும் ஊர் போய் சேர்ந்தான். அவன் தந்தை, பரதனின் பாட்டனார், மிகவும் மகிழ்ந்தார். பரதன் சென்றதும், ராமனும், லக்ஷ்மணனும் தேவர்களின் ஒருவனோ எனும்படியான தசரதனை உபசரித்து, மரியாதையுடன் இருந்து வந்தனர். அவர் உத்தரவுப்படி ஊர்க் காரியங்களையும், ஏற்றுச் செய்தனர். ராமன் ஊராருக்கு பிரியமானதையும், ஹிதமானதையும் செய்து வந்தான். தாயார்களுக்கு அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து வந்தான். குருவுக்கு வேண்டியதை காலம் அறிந்து செய்தனர். தசரதன் கவலையின்றிநிம்மதியாக இருந்தான்.ராமருடைய சீலத்தால், ஊரில் வசித்த ஜனங்கள், ராமனை சத்ய பராக்ரமன், என்று புகழ்ந்தனர். ஸ்வயம்பூ போன்று குணவானாக இருந்தான். ராமன் சீதையுடன் கூட பல ருதுக்கள் சந்தோஷமாக கழித்தான். மனம் ஒன்றி மனஸ்வினியான அவளும், தன்னை அவனுக்கே சமர்ப்பித்தாள். தந்தையர் செய்து வைத்த திருமணம், என்பதாலேயே சீதை ராமனுக்கு அதிக பிரியமானவள் ஆனாள். குணம், அன்பு, ரூப குணங்கள் இவற்றால், அன்பும் வளர்ந்தது. அவளுக்கு, கணவன் இரு மடங்கு மனதில் வளர்ந்தான். மனதில் புதைந்து கிடக்கும் பாசத்தையும் வார்த்தைகளால்  வெளி யிட்டாள்.விசேஷமாக ஜனகாத்மஜா, ஜனகர் மகள் என்பதால் மைதிலி பிடித்தமானவள் ஆனாள் என்றால், சாக்ஷாத் லக்ஷ்மி தேவி போன்ற உடல் அழகிலும், தேவதைகளுக்கு சமமானவள் என்பதாலும் உள்ளம் கவர்ந்தவளாக ஆனாள். ராஜரிஷி போன்ற ராமன், அந்த அழகிற் சிறந்த பெண்ணான, உத்தமமான ராஜகன்னிகையுடன் சேர்ந்து மிகவும் சோபையுடன் விளங்கினான். அமரேச்வரரான விஷ்ணு ப்ரபு, லக்ஷ்மி தேவியுடன் இருந்தது போல இருந்தான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், அயோத்யா பிரவேசோ என்ற எழுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (ஸ்லோகம்-31)

 

ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் பால காண்டம் முற்றும்

 

 

 

பால காண்டம் 31 to 55

அத்தியாயம் 31 (மிதிலைக்கு புறப்படுதல்)

 

ஏற்றுக் கொண்ட காரியத்தை முடித்த திருப்தியோடு அன்று இரவு ராம லக்ஷ்மணர்கள், சந்தோஷமாக மனம் நிறைந்தவர்களாக கழித்தனர். விடிந்தவுடன் பர்வ, ஆஹ்னிக காரியங்களை செய்து முடித்தபின், விஸ்வாமித்திரர், மற்ற முனிவர்களுடன் இருக்கும் இடத்திற்குச் சென்று வணங்கிச் சொன்னார்கள். தன் தேக காந்தியால் அக்னியை போன்று விளங்கிய முனிவரிடம், மதுரமாக பேசும் இருவரும் –முனிவரே, இதோ, உங்கள் கிங்கரர்களான நாங்கள் தயாராக இருக்கிறோம். என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள். நாங்கள் செய்கிறோம் எனவும், மகரிஷிகள் விச்வாமித்திரரை முன்னிட்டுக் கொண்டு, சொல்லலானார்கள். மிதிலாதிபதியான ஜனகராஜா, தர்மம் அறிந்தவர். அவர் ஒரு யாகம் செய்கிறார். நாங்கள் எல்லோரும் அங்கு போகப் போகிறோம். மனிதர்களில் சிங்கமான, ராமா, நீயும் எங்களுடன் அந்த யாகத்துக்கு வா. அங்கு அதிசயமான ஒரு வில் இருக்கிறது. அதையும் பார்க்கலாம் வா, என்றனர். சபையில் எல்லோரும் காண, தேவர்கள் அவரிடம் கொடுத்த வில். பிரகாசமாக, பலமுடையதாக, கண்ணால் காணவும் பயங்கரமாக இருக்கும், இந்த வில் ஒரு யாகத்தில் அவருக்கு கிடைத்தது.தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, ராக்ஷஸர்களோ இதில் நாணேற்ற சக்தியுடையவர்கள் இல்லை. மனிதர்களைப் பற்றிக் கேட்பானேன். இந்த வில்லின் பெருமையைக் கேட்ட அரசர்கள், அதை சோதித்துப் பார்க்க எண்ணி வந்தவர்கள், யாராலும் நாண் ஏற்ற முடியவில்லை. மகா பலசாலியான அரச குமாரர்களும் தோற்றனர். மிதிலா தேசத்து அரசனுடையஉத்தமமான வில்லை நீ பார்க்க வேண்டும். கூடவே யாகமும் நல்ல முறையில் நடக்கும். மிதிலா அரசனான ஜனகன் ஒரு முறை யாகத்தின் முடிவில் இந்த வில்லை (சுனாப4ம் என்ற பெயருடையது) ப்ரும்மாவிடம் யாசித்தான். மற்ற தேவதைகளோடு பூஜிக்கத் தகுந்த தேவதையாக இந்த வில் அவருடைய இல்லத்தில் இன்றளவும் இருக்கிறது.பலவிதமான வாசனைப் பொருட்கள், தூப தீபங்கள், இவற்றால் அர்ச்சிக்கப்பட்டு, மரியாதையாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு சொல்லி முனி கணங்கள் நாங்கள் கிளம்புகிறோம் என்று சொல்லி கிளம்பினர். முனிவரான விஸ்வாமித்திரரும், ரிஷிகளுடனும், காகுத்ஸர்களுடனும் (ராம, லக்ஷ்மணர்களுடனும்) வன தேவதைகளிடம் விடை பெற்றுக் கொண்டு, சித்தாஸ்ரமமே சித்தி அடைவாயாக. உனக்கு மங்களம் உண்டாகட்டும், நாங்கள் கிளம்புகிறோம் என்று சொல்லி வடக்கு நோக்கி செல்ல ஆரம்பித்தனர். கிளம்பிய முனி ஸ்ரேஷ்டிரரை பின் தொடர்ந்து, ப்ரும்ம வாதியான நூறு சிஷ்யர்களும், மான்களும், பக்ஷிகளின் கூட்டமும் பின் தொடர்ந்தன. மகா முனிவரான விச்வாமித்திரரை சித்தாஸ்ரம வாசிகளான இவையும் தொடர்ந்து வந்தன. முனிவர் அவைகளைத் திருப்பி அனுப்பிவிட்டு, சூரியன் மலை வாயில் விழும் வரை காத்திருந்து, தூரத்தில் அத்வானம் வரை அவைகள் செல்வதை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு முனிவர், சோரை நதிக்கரையில் தங்கினார், சூரியன் மறைந்ததும் ஸ்னானம் செய்து, அக்னியை வணங்கி, எல்லோருமாக அமர்ந்தனர். ராமனும், லக்ஷ்மணனும் விச்வாமித்திரர் முன்னால் வந்து எதிரில் அமர்ந்தனர். மகா தேஜஸ்வியான ராமன், விஸ்வாமித்திரரைப் பார்த்து பகவன், இது என்ன ராஜ்யம்? அடர்ந்த வனங்கள் சூழ அமைந்துள்ளதே. இதைப் பற்றிச் சொல்லுங்கள். விரதங்கள் அனுஷ்டித்து, தவ வலிமை மிகுந்த முனிவரும், ராம வாக்யத்தால் தூண்டப்பட்டவராக, ரிஷிகளின் மத்தியில் அந்த தேசத்தின் விசேஷத்தை விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், மிதிலா ப்ரஸ்தானம்என்ற முப்பத்துஒன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 32 குசனாப கன்யா உபாக்யானம் (குச நாபர் மகளின் கதை)

 

ப்ரும்மாவின் புதல்வர்களுள் ஒருவரான குசன் என்பவர், சிறந்த தபஸ்வியாக இருந்தார். நல்ல ஜனங்கள் அவரை பெரிதும் மதித்தனர். குறைவில்லாத விரத அனுஷ்டானங்கள் செய்து தர்மம் அறிந்தவர் என்று புகழப்பட்டார். நல்ல குலத்தில் தோன்றிய தனக்கு, குணம், ரூபம் இவற்றில் சமமான, விதர்ப தேசத்து பெண்ணிடம் தன்னைப் போலவே நான்கு பிள்ளைகளைப் பெற்றார்.குசாம்பன், குசனாபன், அதூ4ர்த்த ரஜஸ், வசு என்ற நால்வர். நால்வரும் நல்ல புத்திசாலிகளாகவும் உத்சாகம் மிகுந்தவர்களாகவும், உண்மையே பேசுபவர்களாகவும் இருந்தனர். நால்வருமே ராஜ்ய பரிபாலனம் செய்ய விரும்பினர்.  க்ஷத்திரிய தர்மத்தை விரும்பும் தன் புதல்வர்களைப் பார்த்து குசனும் அனுமதி அளித்தார், ராஜ்ய பாலனம் செய்யுங்கள். தர்மமான வழியில் ஏராளமான புகழ் அடைவீர்கள் என்று வாழ்த்தினார். இதைக் கேட்டு, நால்வரும் ஜனங்களின் சம்மதத்துடன் நகரங்களின் உள்ளே நுழைந்தனர். குசனாபன் மகோதயம் என்ற ஊரையும், வசு என்பவன் கிரிவ்ரஜம் என்ற ஊரையும் நிர்மாணித்தனர். இந்த பூமி வசுவினுடையது. எதிரில் ப்ரகாசமாக தெரிகிற ஐந்து மலைக் குன்றுகள், மாக3தீ3 என்ற நதி,இவை யாவும் பாவனமானவை.நல்ல பூமி, நல்ல விளை நிலம் கொண்டது.முன் காலத்தில் வசுவினால் சமன் படுத்தப்பட்டது.குச நாப4ன் ராஜ ரிஷியாக இருந்தான்.த்4ருதாசீ என்ற பெண்ணிடம் நூறு உத்தமமான பெண்களைப் பெற்றான். நன்கு அலங்கரிக்கப் பட்டவர்களாக, அழகும் யௌவனமும் கூடி, உத்யான பூமிக்குச் சென்று பாடுவதும் ஆடுவதுமாக, வாத்யங்கள் வாசித்தும், நல்ல ஆபரணங்களை விருப்பம் போல அணிந்து மகிழ்ந்தவர்களாகவும் இருந்தனர்.இணையற்ற அழகுடைய அந்த பெண்கள் பூமியில், உத்யானத்தின் மத்தியில், நல்ல இருட்டில் நக்ஷத்திரங்கள் போல பிரகாசித்தனர். நல்ல குணமும், ரூப, யௌவனமும் நிறைந்த இவர்களைப் பார்த்து சர்வாத்மகனான வாயு ஆசைக் கொண்டான். எனக்கு மனைவி ஆகுங்கள் என்று வேண்டினான். நான் உங்களை விரும்புகிறேன். இந்த மனித உடலை விட்டு தெய்வ சரீரம் பெறுவீர்களாக. தீர்காயுள் பெறுவீர்கள். இவ்வாறு தயக்கமின்றி வாயு பேசியதைக் கேட்ட பெண்கள், சிரித்து அலட்சியமாக -சுர ஸ்ரேஷ்டனே, நீ ஜீவ ராசிகளின் உள்ளும் சஞ்சரிப்பவன், உன் ப்ரபாவத்தை நாங்கள் எல்லோருமே அறிவோம். எங்களை ஏன் அவமதிக்கிறாய்? நாங்கள் குசனாபனுடைய பெண்கள். எல்லோருமே சமர்த்தர்கள். தேவர்களில் சிறந்தவனே, உன்னை பதவியிலிருந்து நீக்கவும் எங்களால் முடியும். எங்களுடைய தவ வலிமையை நாங்கள் காத்து வருகிறோம். சத்ய வாதியான தந்தையை அவமதித்து, எங்கள் விருப்பம் போல ஸ்வயம்வரம் செய்து கொள்ளும்படியான கஷ்ட காலம் எங்களுக்கு வரவே வேண்டாம். இதை நாங்கள் விரும்பவும் மாட்டோம்.இது எங்கள் தர்மமும் அல்ல. தந்தை தான் எங்களுக்கு குரு, தெய்வம், பரம், எங்களுக்கு. அவர் யாருக்கு எங்களைத் தருகிறாரோ, அவர் தான் எங்களுக்குப் பதியாவார்.- இவ்வாறு இவர்கள் பேசியதைக் கேட்ட வாயு அடங்கா கோபம் கொண்டான். அவர்கள் எல்லோருடைய சரீரத்திலும் புகுந்து வளைத்து விட்டான். இந்த கன்னிகள் வாயுவினால் வளைக்கப் பட்ட சரீரத்துடன் அரச மாளிகையினுள் சென்றனர். வெட்கம் பிடுங்கித் திங்க, கண்ணீர் நிரம்பிய கண்களுடன், பூமியில் விழுந்து புரண்ட அந்த பெண்கள், தீனர்களாக, அழகிய சரீரம் பலவிதமாக கோணலாக தெரியக் கண்ட ராஜா பர பரப்படைந்து ஏன் இப்படி ஆயிற்று என்று பெண்களைக் கேட்டான். யார் அது தர்மத்தை அவமதிக்கிறவன்? கூனிகளாக உங்களை ஆக்கியவன் யார்? எல்லோரும் நடுங்கிக் கொண்டு பேசாமல் இருக்கிறீர்களே? யார் இந்த கீழ்த் தரமான காரியத்தை செய்தவன், நான் தெரிந்து கொள்ள வேண்டாமா? சொல்லுங்கள் என்ற ராஜா மிக்க வருத்தத்துடன் வாயடைத்து நின்றான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், குசனாப கன்யோபாக்யானம் என்ற முப்பத்திரண்டாவது அத்தியாயம்)

 

அத்தியாயம் 33 விஸ்வாமித்திர வம்ச வர்ணனை

 

புத்திமானான குசனாபன் இவ்வாறு வருந்துவதைக் கண்டு அவர் கால்களில் வீழ்ந்து வணங்கி எழுந்த பெண்கள் நடந்ததை விவரித்தனர்.சர்வாத்மகனான வாயு எங்களை மணந்து கொள்ள வந்தான். நிர்பந்தித்தான், அதர்மம் இது. எங்கள் தந்தை இருக்கையில் நாங்களாக தன்னிச்சையாக எதுவும் செய்ய மாட்டோம், என் தந்தையிடம் கேட்டுப் பார், அவர் சம்மதித்து தந்தால் சரி, என்று சொன்னோம்.எங்கள் வார்த்தையை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் கூனியாக ஆக்கி விட்டான், பாபி, என்று சொல்லி அழுதனர்.பரம தார்மிகனான ராஜா அந்த நூறு பெண்களையும் சமாதானப் படுத்தி பொறுமையாக இருங்கள் புத்திரிகளே தற்சமயம் அது தான் செய்யக் கூடியது. நீங்கள் செய்தது மிகப்பெரிய காரியம்.குலத்தின் பெருமையை மனதில் கொண்டு, ஒரே குரலாக வாயுவிடம் எதிர்த்து போராடியிருக்கிறீர்கள்.பெண்ணானலும் சரி, ஆணானாலும் சரி, பொறுமை தான் மிகச் சிறந்த குணம்.பொறுமையே தானம், பொறுமையே சத்யம்.பொறுமையே யாகமும் ஆகும்.என் புத்திரிகளே, பொறுமையே புகழ்தர்மம். உலகத்தை நிலைத்து நிற்க வைப்பதும் இந்த பொறுமைதான்.இப்படி சொல்லி சமாதானம் செய்து விட்டு அரச சபைக்குச் சென்ற அரசன், தன் மந்திரிகளுடன் கலந்து பேசி என்ன செய்வது என்று யோசித்தான். இந்த கால தேச, வர்த்தமானங்களைக் கொண்டு மெற் கொண்டு என்ன செய்வது என்பதை யோசித்துச் சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டான்.அந்த சமயம் சூலி என்ற முனிவர் உக்ரமாக ப்ரும்ம தவம் செய்து கொண்டிருந்தார்.நியமம் தவறாமல் தவம் செய்து கொண்டிருந்த இவரிடம் ஒரு கந்தர்வ ஸ்திரீ வந்து சேர்ந்தாள்.ஊர்மிளையின் பெண் சோமதா என்பவள் தான் அந்த பெண். அவரை வணங்கி பணிவிடைகள் செய்து கொண்டு வந்தாள்.முனிவரும் அவளிடம் மகிழ்ந்து ஒரு நாள். அவளிடம் -பெண்ணே| உன் பணிவிடையால் திருப்தி அடைந்தேன். உனக்கு என்ன வேண்டும் சொல், என்று கேட்க, அவள், சாமர்த்யமாக,   தெளிவான வார்த்தைகளில் தன் விருப்பத்தை தெரிவித்தாள். -முனிவரே| ப்ரும்ம தேஜசுடன் கூடிய புத்திரனைவிரும்புகிறேன். எனக்கு பதியும் இல்லை.யாருக்கும் நான் மனைவியும் இல்லை. ப்ரும்ம சக்தியினால் எனக்கு புத்திரனைக் கொடுங்கள் என்று யாசிக்க, முனிவரும் அவ்வாறே முனிவரும் சந்தோஷமாக அவளுக்கு புத்திரனைக் கொடுத்தார். ப்ரும்ம தத்தன் என்ற பெயருடன், சூலியின் மானஸ புத்திரனாக அவதரித்தான்.சோமதாவின் அந்த பிள்ளை, காம்பினி என்ற ஊரில்,தேவலோகத்தில் தேவராஜன் போல லக்ஷ்மீகரமாக இருந்து வந்தான். குசனாபன் இந்த ப்ரும்ம தத்தனுக்கு தன் நூறு பெண்களையும் விவாகம் செய்து கொடுக்க நிச்சயித்தான். அந்தராத்மா சுத்தமாக, அந்த ப்ரும்மதத்த ரிஷியை அழைத்து வந்து தன் நூறு பெண்களையும் வரிசையாக கன்யா தானம் செய்தான்.வரிசையாக ஒவ்வொருவராக பாணிக் கிரஹணம் செய்யச் செய்ய,தேவ பிதாவான ப்ரும்மாவுக்கு சமமான அவர் தொட்ட மாத்திரத்தில் கூனித் தன்மை நீங்கிஜ்வரமும் விலக, அழகிய சரீரத்துடன் பழைய படி ஆகி விட்டனர்.தன் புத்திரிகளை பழையபடி பார்த்த அரசன் மகிழ்ந்தான்.அவர்களை விவாகம் முடிந்து, ப்ரும்மதத்தருடன் உபாத்யாய கணங்களுடன் அனுப்பி வைத்தான். சோமதாவும் தன் புத்திரன் இந்த பெண்களை மணந்து கொண்டதன் மூலம் நியாயமாக நடந்து கொண்டதாக எண்ணி மகிழ்ந்தாள். மருமகளை வரவேற்று, உச்சி முகர்ந்து மகிழ்ந்தாள்.குசனாபனையும், வாழ்த்தினாள்.

 

(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்தி நாலாயிரம் பாடல்தொகுப்பில்,பால கண்டத்தில் ப்ரும்ம தத்த விவாகம் என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.

 

அத்தியாயம் 34 விஸ்வாமித்திர வம்ச வர்ணனை

 

ப்ரும்ம தத்தர் விவாகம் முடிந்து சென்ற பின், புத்திரன் இல்லாத குசனாபன் புத்திரனை வேண்டி புத்ரேஷ்டிம் என்ற யாகத்தை செய்தான். யாகம் நடந்து கொண்டு இருக்கும் பொழுதே, ப்ரும்ம குமாரனான குசன் மிகவும் மகிழ்ச்சியுடன் -உன்னைப் போலவே புகழ் வாய்ந்த புத்திரனைப் பெறுவாய், உலகில் சாஸ்வதமான கீர்த்தியையும், கா3தி4ம்-விரும்பியதை அடைவாய் என்று ஆசிர்வதித்து,  குசனாபனை விட்டு ஆகாயமார்கமாக ப்ரும்மலோகம் சென்று விட்டார். காலம் சென்ற பின், கா3தி4 என்ற பெயருடனேயே ஒரு புத்திரன் பிறந்தான். காகுத்ஸா, அவர் தான் என் தந்தை. பரம தார்மிகர். குச வம்சத்தில் பிறந்ததால் கௌசிகன் ஆனேன் என்று நிறுத்தினார்  முனிவர். எனக்கு மூத்த சகோதரி, சத்யவதி நல்ல குணவதி. த்4ருதாசிக்கு பிறந்தவள். அவள் கணவனைத் தொடர்ந்து ஸ்வர்க லோகம் சென்றாள். கௌசிகீ என்ற மகா நதியாக வந்தாள்.இமயமலையை அடைந்து அங்கிருந்து அழகிய, பாவனமான, திவ்ய தீர்த்தமாக பெருகி வந்தாள்.உலகின் நன்மைக்காக என் சகோதரி பிரவகித்து வருகிறாள். அதனாலேயே நான் இமயமலை அருகிலேயே அதிகம் வசிக்கிறேன்.கௌசிகீ என்ற என் சகோதரியிடம் எனக்கு பாசம் அதிகம். நியமங்கள் காரணமாக அவளை விட்டு சித்தாஸ்ரமம் வந்தவன் உன் சக்தியால் இப்போது சித்தனானேன்.இது தான் என் குலத்தின் கதை. இந்த தேசத்தின் விசேஷம் பற்றிக் கேட்டாயே, பாதி இரவு ஆகிவிட்டது.கதை சொல்லி சொல்லி நேரம் போனதே தெரியவில்லை. இப்போது தூங்கு.பாதி வழியில் உனக்கு சிரமம் இருக்கக் கூடாது.மங்களம் உண்டாகட்டும். மிருக, பக்ஷிகள் அடங்கி திரும்பிச் சென்று விட்டன. பக்ஷிகள் சப்தமேயில்லை. மரங்களும் அமைதியாக இருக்கின்றன. தமோ குணமான இருட்டினால் நாலு திக்குகளும் சூழப்படுள்ளன. மெதுவாக சந்த்யா இருட்டிலிருந்து விடுபடுவாள். கண்களைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும், நக்ஷத்திர, தாரா, க33னம்இவை ஜோதியினால் ஒளி பெற்று விளங்கும். சீதாம்சுவான சந்திரன், உலகின் தமஸை அகற்ற உதிக்கப் போகிறான்.தன் பிரபையால் உலகத்தார் மனதை சந்தோஷப்படுத்திக் கொண்டு வருவான்.ஆங்காங்கு இரவில் சஞ்சரிக்கும் யக்ஷர்களும், ராக்ஷஸக் கூட்டங்களும், பயங்கரமான பிணம் தின்னும் கூட்டத்தினர் மட்டும் இந்த இரவிலும் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்லி நிறுத்தினார். சாது4, சாது4 என்று மற்ற முனிவர்கள் அவரைக் கொண்டாடினார்கள். குசிகர்களுடைய இந்த வம்சம் தர்ம வழியில் வந்தது. ப்ரும்மாவுக்கு சமமான பலம் உடையவர்கள், இந்த வம்சத்து உத்தமமான மனிதர்கள். அதிலும் விசேஷமாக தாங்கள், சிறந்த தவ வலிமையுடைய விஸ்வாமித்திரர்.பெரும் புகழ் உடையவர்கள் ஆவீர்கள். சிறந்த நதியான கௌசிகியும், உங்கள் வம்சத்தில் உதித்து, குலத்தை விளங்க செய்து வருகிறாள். பேசிக் கொண்டேயிருந்த முனிவர் தூங்கி விட்டார். சந்திரன் அஸ்தமித்தது போல இருந்தது. சிறிது ஆச்சர்யம் அடைந்த ராமரும் லக்ஷ்மணனுடன், முனிவரை புகழ்ந்து பேசியபடி தூங்கச் சென்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், விஸ்வாமித்திர வம்ச வர்ணனை என்ற முப்பத்து நான்காவது அத்தியாயம்)

 

 

அத்தியாயம் 35 உமா கங்கா விருத்தாந்த ஸம்க்ஷேபம்

(உமா, கங்கையின் கதைகளின் சுருக்கம்)

 

மீதி இரவை அந்த சோணா நதிக்கரையில் கழித்துவிட்டு, மகரிஷிகளுடன் விடியற்காலையில் எழுந்த விஸ்வாமித்திரர் சொன்னார். –ராமா, நன்றாக விடிந்து விட்டது. பூர்வா சந்தியும் வந்து விட்டது. எழுந்திரு, எழுந்திரு. உனக்கு மங்களம் உண்டாகட்டும். வா, கிளம்பி மேலே செல்ல தயாராகு. என்றார். அதைக் கேட்டு ராமர் எழுந்து, பர்வ காலத்துக்கான, ஆஹ்னிக- தினசரி செய்ய வேண்டிய காரியங்களை, செய்துவிட்டு, கிளம்பத் தயாராகி முனிவரிடம் சென்றார். இந்த சோணா நதி மிக ஆழமாக இருக்கிறது. ஜலம் நன்றாக இருந்தாலும், மண் நிறைந்திருக்கிறது. இதை எப்படி கடந்து செல்வோம் என, முனிவர் பதில் சொன்னார்.இதோ ஒரு வழி தெரிகிறது பார். இதில் தான் மகரிஷிகள் செல்வார்கள். இதில் போகலாம் வா, என்றார். வெகு தூரம் நடந்து, பாதி நாள் கழிந்த நிலையில், ஜாஹ்ணவி என்று அழைக்கப்படும், நதிகளில் ஸ்ரேஷ்டமான, முனி ஜனங்களால் வணங்கப்படும் கங்கையைக் கண்டார்கள். அதன் கரையில்எல்லோரும் தங்க இடம் பிடித்து அமர்ந்தனர். பின் ஸ்னானம் செய்து, பித்ரு தேவதைகளுக்கு தர்ப்பணம் முதலியவற்றைச் செய்து, அக்னி ஹோத்ரம் என்ற ஹோமத்தை செய்து, உத்தமமான ஹவிஸை சாப்பிட்டு,சந்தோஷமான மனதுடன், ஜாஹ்ணவி கரையில் அமர்ந்தனர். விச்வாமித்திரரை சுற்றி அமர்ந்தனர். ராமர் அவரிடம் கேட்டார். பகவன், கங்கை என்றும், த்ரிபத2கா3 என்றும் பெயர் கொண்ட கங்கை நதி மூன்று உலகங்களையும் கடந்து எப்படி நத3, நதீ3 பதிஎன்று அழைக்கப்படும் கடலை அடைகிறாள்? விஸ்வாமித்திரர் கங்கையின் பிறப்பையும், வளர்ந்ததையும் விவரமாக சொல்லலானார். சைலேந்திரன் என்றும் ஹிமவான் என்றும் சொல்லப்படும் மலையரசன், தா4துக்கள் நிறைந்த உருவம் உடையவன். அவனுக்கு இரண்டு பெண்கள். மிக அழகு வாய்ந்தவர்கள். சுமத்4யமா என்ற மனைவியிடம் பிறந்தவள் மேரு து3ஹிதா. மற்றொரு மனதிற்கு ரம்யமான மனைவிமேனா. இவளிடம் கங்கை முத்தவளாக, இளையவளாக உமா என்று இரண்டு பெண்கள். ராகவா, இந்த மூத்தவளான கங்கையை த்ரிபத2கா3 என்ற நதியை தேவர்கள் தேவ கார்யம் நடக்க வேண்டும் என்பதற்காக சைலேந்திரனிடம் வேண்டினர். இமவானும்தன் இஷ்டப்படி சஞ்சரிக்கக் கூடிய, லோக பாவனியான கங்கையை,  மூவுலகின் நன்மைக்காக கொடுத்தான். மகிழ்ச்சியுடன் தேவர்கள், இமவானின்  மூத்த மகளான கங்கையை அழைத்துச் சென்றனர். மற்றொரு பெண்ணான உமா, உக்ரமான தவம் செய்தாள். மிகவும் கடினமான விரதங்களை ஏற்று தவம் செய்தாள். இளைய மகளான இவளை, உக்ரமான தவம் செய்து உலகமே போற்றும் ருத்ரனுக்கு மணம் செய்து கொடுத்தார். ராகவா, இருவருமே இமவானின் பெண்கள். சைலேந்திரனின் மகள் கங்கா, பாவனமான நதியாக சுர லோகம் போய், த்ரிபத2கா3வாக ( மூன்று வழியுடையவளாக- ஆகாயம், பூமி, பாதாளம் மூன்றிலும் பிரவகிப்பவளாதலால் த்ரிபத2கா3) பாவனமான ஜலத்தை தாங்கிச் செல்பவளாக இருக்கிறாள்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், உமா, கங்கா விருத்தாந்த ஸம்க்ஷேபம் என்ற முப்பத்து ஐந்தாவது அத்தியாயம்)

 

அத்தியாயம் 36உமா மாகாத்ம்யம்.

 

ராம லக்ஷ்மணர்கள் இருவரும், முனிவர் சொன்ன கதையைக் கேட்டு, மேலும் வினவினார்கள். முனி புங்கவரே, சைலராஜனின் மூத்த மகளைப் பற்றி சொல்லுங்கள். விவரமாக சொல்லுங்கள். தேவ, மானுஷ உலக சம்பவங்கள் உங்களுக்கு விவரமாகத் தெரிந்திருக்கிறது. என்ன காரணத்தினால்,லோக பாவனியான கங்கா மூன்று பகுதியாக ஓடுகிறாள். பிரவாகமாக பாய்கிறாள். நதிகளில் உயர்ந்த கங்கா, ஏன் த்ரிபத2கா3 என்று பெயர் பெற்றாள். எந்த விதமான செயல்களில் சம்பந்தப்பட்டிருக்கிறாள். இவ்வாறு காகுத்ஸன் கேட்ட பொழுது, விஸ்வாமித்திர முனிவர், முழு கதையையும், ரிஷிகள் மத்தியில் சொல்ல ஆரம்பித்தார். ராமா, முன்பு ஒரு காலத்தில், சிதிகண்டனான மகாதேவன் தேவியுடன், நூறு வருஷம் வாழ்ந்தும், ஒரு மகன் பிறக்கவில்லை. தேவர்கள் கவலை கொண்டு, பிதாமகரான ப்ரும்மாவையும் அழைத்துக் கொண்டு, மகாதேவனிடம் சென்றனர். மகாதேவா, தேவர்களுக்கெல்லாம் தலைவனே, உலகத்தின் நன்மையை எண்ணி வேண்டியதை செய்பவனே, கருணை செய். உங்கள் தேஜஸை பூமி தாங்காது. ப்ரும்ம தேஜஸோடு கூடிய தாங்கள் தேவியுடன், தவம் செய்யுங்கள்.பூவுலகின் நன்மைக்காக உங்கள் இருவரின் சக்தியைத் இணைத்து தாங்குவாயாக. இந்த உலகை காப்பாற்றுங்கள்.தேவர்களின் வாரத்தையைக் கேட்டு, சர்வ லோக மகேஸ்வரன், அப்படியே என்று சொல்லி, சற்று யோசித்து, திரும்பவும் சொன்னார். உமையுடன் கூட நானும், இந்த சக்தியைத் தாங்குகிறேன். தேவர்களும், இந்த பூமியும் நலம் பெறட்டும். ஆனால், வறண்ட இந்த பூமியில், ஒப்பில்லாத என் சக்தியைத் தாங்கப் போவது யார் ? தேவர்களே, நிச்சயம் செய்து கொள்ளுங்கள். உடனே தேவர்கள், கூடிப் பேசி, ரிஷபத்வஜனான பகவானிடம் சொன்னார்கள். பூமி தாங்குவாள் என்றனர். மலை, காடு இவற்றை தன்னுள் கொண்டுள்ள பூமியில், அவரது சக்தியை விட, அது பூமியைச் சூழ்ந்தது. தேவர்களும், கந்தர்வர்களும், அக்னியை வேண்டி, பெருமானுடைய சக்தியில், நீயும், வாயுவுமாக சேர்ந்து கொள்ளுங்கள். அது அக்னியும் சேர்ந்து வெண் பர்வதமாக தோற்றமளித்தது. சரவணம் என்ற தெய்வீகமான பொய்கை, அக்னியும், ஆதித்யனும், சேர்ந்து பாவனமாக கார்த்திகன் உதித்தான். இதன் பின், உமாவையும், மகாதேவனையும், தேவர்கள் வணங்கித் துதித்தார்கள்.சைல சுதா கோபத்துடன், கையில் ஜலத்தை எடுத்து, எனக்கு பிரியமில்லாததைச் செய்த நீங்கள், அதன் பலனை அடைந்தே ஆக வேண்டும், என்று சபித்து விட்டாள். புத்திரனை விரும்பிய என்னைத் தடுத்தீர்களே உங்கள் மனைவிகளிடம், புத்திரர்களைப் பெற மாட்டீர்கள், உங்கள் மனைவிகள், பிரஜைகள் இல்லாமல் போகட்டும், என்று சபித்தவள், பூமியைப் பார்த்து, அவனே,(பூமிக்குப் பெயர்) பலருக்கு மனைவியாவாய் என்றும் சபித்தாள்.புத்திரனைப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சியை நீங்களும் அடைய மாட்டீர்கள் என்று சொல்லி விட்டு, வருணனின் திசையில் சென்றாள். மகேஸ்வரனும், உமையுடன், இமய மலைச் சாரலில் தவம் செய்யலானார். இது உமையின் கதை. கங்கையின் பிரபாவம், சொல்கிறேன் கேள், என்றார்.

 

இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பாலகாண்டத்தில், உமா மாகாத்ம்யம், என்ற முப்fபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

அத்தியாயம் 37 குமாரோத்பத்தி(குமரன் என்ற முருகன் பிறப்பு)

 

மகாதேவன் தவம் செய்துகொண்டிருக்கும் பொழுது, ரிஷி கணங்கள் சேனாபதியை விரும்பியவர்களாக, பிதாமகரை சென்றடைந்தனர். அக்னி முதலான தேவர்கள் அவரிடம்வேண்டிக் கொண்டனர். -நமக்கு, முன்பு பகவான் சேனாபதியைக் கொடுத்தார். ஆனால், நமது வைரிகளை அடக்கக்கூடிய சேனாபதி இதுவரை பிறக்கவில்லை. அவரோ இமய மலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். உமையுடன் கூட விசேஷமான தவம் செய்து கொண்டிருக்கிறார். உலகின் நன்மைக்காக இதன் பிறகு செய்ய வேண்டிய காரியம் என்ன? என்பதை யோசிப்போம். தாங்கள் தான் எல்லாம் அறிந்தவர். சொல்லுங்கள். என்ன செய்யலாம்? தேவர்களின் வார்த்தையைக் கேட்டு, சர்வலோக பிதாமகரான ப்ரும்மா அவர்களை சமாதானப் படுத்தி, மதுரமாக சொல்லலானார். – சைல புத்திரி உங்களை சபித்தது, தன் பத்னிகளிடம் புத்திர ப்ராப்தி அடைய மாட்டீர்கள் என்று, அது சத்யமானதே. சந்தேகமே இல்லை. இதோ ஆகாயத்தில் இருக்கும் கங்கை, இவளிடத்தில் அக்னி மகனை பிறக்கச் செய்வான். தேவர்களின் சேனாபதியான, சத்ருக்களை நாசம் செய்யும் வீரனை பிறக்கச் செய்வான். மூத்தவளான சைல சுதா அந்த மகனைக் கொண்டு வருவாள். உமா தேவிக்கும் அது உகந்ததாகவே இருக்கும்.  இதைக் கேட்டு தேவர்கள் கைலாச மலைக்குச் சென்று, தாது நிறைந்த அந்த இடத்தில் அக்னியை புத்திரனை வேண்டி நியமித்தனர். தேவ கார்யம் இது நீதான் செய்ய வேண்டும், மகா சக்தியை சைல புத்திரியான கங்கையில் விடு.தேவதைகளின் சொல்படி கங்கையை அடைந்து, அக்னி தேவன் கர்பத்தை நீ தரிப்பாயாக என்று சொல்லி, அவளிடம் தர, அந்த கர்ப்பம் துண்டு துண்டாக சிதறியது. அதை சேர்த்து அணத்தவாறு இருந்த கங்கையை அக்னி தேவன் அபிஷேகம் செய்தான். அதன் காரணமாக நீர் பிரவாகம் பெருக, கங்கையின் கிளை நதிகள் பூர்ணமாக நிரம்பி வழிய, என்னால் தாங்க முடியவில்லை என்று கங்கை சொல்லவும், மற்ற தேவர்கள், ஹிமவானின் அடிவாரத்தில் கர்ப்பத்தை கவனமாக வை என்று உபதேசித்தனர். மிகவும் அதிகமாக சூரியனுடைய ப்ரகாசத்துடன் தகிக்கும் கர்ப்பத்தை அவள் தன் கிளை நதி பிரவாகங்களின் விட்டாள். விட்டவுடனேயே, நெருப்பில் புடமான தங்கம் போன்ற ஒளியுடன், காஞ்சனம் பூமியை வந்தடைந்தது. தாம்பிரமும், கார்ஷ்னாயசம் (ஒரு வகைஇரும்பு), என்ற தாதுவும் பூமியை வந்தடைந்தன. இந்த தீக்ஷ்ணத்தாலேயே, த்ரபுசீகம் என்ற தாதுவும் தோன்றியது. இந்த தாதுக்கள் பூமியில் விழுந்து பலவிதமாக வளர்ந்தன. தேஜசுடன் கூடிய அந்த கர்ப்பத்தை வைத்த மாத்திரத்திலேயே, மலையும் மலை சார்ந்த இடமும் செக்கச் செவேலென்று, பொன்னிறமாக ஆயின. ஜாத ரூபம் என்று அன்று முதல் பெயர் வழங்கலாயிற்று.நெருப்புக்கு சமமான நிறம் உடைய சுவர்ணம் அது தான். புல், மரம், கொடி, புதர் எல்லாமே பொன் நிறமாயிற்று. இவ்வாறு தோன்றிய குமாரனை, மருத்கணங்கள் இந்திரனோடு கலந்து ஆலோசித்து பால் புகட்ட, க்ருத்திகா ஸ்த்ரீகளை நியமித்தனர். பிறந்தவுடன், அவர்களும் உத்தமமான சமயத்தில், பால் புகட்டினர். இவன் எங்கள் அனைவருக்கும் புத்திரனாவான் என்றனர்.  தேவர்கள் அவனை கார்த்திகேயன் என்ற அழைத்தனர். இந்த புத்திரன் மூவுலகும் போற்றும்புகழ்பெறுவான், இதில் சந்தேகமேயில்லை என்று தேவர்கள் வாழ்த்தினர். கர்ப்பத்தை தாங்கும் போதே சிதைந்து (ஸ்கன்னம்) போனதால் ஸ்கந்தன் என்றும் அழைத்தனர். அக்னி போன்றே பிரகாசித்த அந்த குழந்தையைக் குளிப்பாட்டி லக்ஷ்மீகரமாக விளங்கிய ஸ்கந்தனைக் கொண்டாடினார்கள். க்ருத்திகா ஸ்த்ரீகள் பாலை புகட்டவும், ஆறு முகனாகத் தோன்றி அந்த பாலைப் பருகினான் கார்த்திகேயன். ஒரு நாள் பாலைக் குடித்தவுடனேயே, சுகுமாரனான சரீரம் உடையவனாக ஆகி, தை3த்ய சைன்யத்தை கூட்டத்தோடு தன் வீர்யத்தால் அழித்தான்.தேவ சேனாபதியான அவனை, நிர்மலமான குணம் உள்ளவனை அக்னி முதலானதேவர்கள், தேவ சேனாபதியாக அபிஷேகம் செய்தனர். இதுதான் கங்கையின் விஸ்தாரமான கதை. குமார சம்பவம் என்ற இந்த சரித்திரமும் தன்ய: பாவனமானது, புண்யமானது. உலகில் எந்த மனிதன் கார்த்திகேய பக்தனாக விளங்குகிறானோ, அவன் ஆயுளையும், புத்ர பௌத்திரர்களோடு, ஸ்கந்த சாலோக்யம் என்ற பதவியையும் அடைவார்கள்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், குமாரோத்பத்தி என்ற முப்பத்துஏழாவது அத்தியாயம்)

 

 

அத்தியாயம் 38சகர புத்ர ஜனனம் (சகர புத்திரன் பிறப்பு)

 

இந்த கதையை கௌசிகர் ராமருக்குச் சொல்லி, சற்றுப் பொறுத்து மதுரமான வார்த்தைகளால் திரும்பவும் காகுத்ஸனான ராமரிடம் சொல்ல ஆரம்பித்தார்அயோத்யாவில் சூரனான ஒரு அரசன் இருந்தான். சகரன் என்ற பெயருடையவன். சந்ததியில்லாத அவன் ஒரு புத்திரனை வேண்டி இருந்தான். வைதர்ப தேசத்து ராஜகுமாரிகேசினீ என்பவள் அவனுடைய முதல் தர்ம பத்தினி. தர்மத்தில் சிந்தனையுடையவள். சத்யமே பேசும் உயர்ந்த குணம் உடையவள். அரிஷ்டனேமி என்பவளின் மகள். மிக அழகிய ரூபம் உடையவள். சகரனின் இரண்டாவது மனைவி சுமதி நல்ல புத்தியும், அறிவும் உடையவள். இவர்கள் இருவருடன், இமய மலைச் சாரலுக்குச் சென்று, ப்ருகு ப்ரஸ்ரவன கிரியில் இருந்து சகர ராஜன் தவம் செய்யலானான். நூறு வருஷங்கள் நிறைந்தபின், தவத்தால் ஆராதிக்கப்பட்ட ப்ருகு முனிவர், சகரனுக்கு வரம் அளித்தார். உனக்கு சிறந்த புத்திர பாக்கியம் கிடைக்கப் போகிறது. உலகில் அளவில்லாத புகழையும், பெருமையையும் அடைவாய் என்று ஆசிர்வதித்தார். -உன் பத்னிகளின் ஒருவள் வம்சத்தை விளங்கச் செய்யும் ஒரு மகனைப் பெறுவாள். மற்றவள் ஆறாயிரம் மகன்களைப் பெறுவாள் இவ்வாறு சொல்லும் முனிவரை ராஜகுமாரிகள் வணங்கி,எங்களுக்குள் யாருக்கு வம்சகரமான பிள்ளை பிறப்பான், யாருக்கு பல புத்திரர்கள் பிறப்பார்கள், இதை விவரமாக சொல்லுங்கள்.உங்கள் வாக்கு பொய்யாகாது. என்று கேட்டனர். பரம தார்மீகரான ப்ருகு,நீங்களே இஷ்டம் போல் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.ஒரே ஒரு வம்சம் விளங்க வைக்கும் பிள்ளையா, அல்லது பலசாலியான,கீர்த்தியும்,உத்சாகமும்உள்ளபல பிள்ளைகளா? யாருக்கு எது வேண்டும்? வரம் கேளுங்கள் எனவும், கேசினீ, அரசர் முன்னிலையில் வம்சம் விளங்கச் செய்யும் ஒரு புத்திரனை வேண்டினாள். சுமதி ஆறாயிரம் பிள்ளைகளை வேண்டினாள். அவள் சுபர்ணனின் சகோதரி.மகா உத்சாகமும், கீர்த்தியும் நிறைந்த பிள்ளைகளை வரமாக வேண்டினாள்.முனிவரை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து அரசன் மகிழ்ச்சியுடன் பத்னிகளுடன் ஊர் போய் சேர்ந்தான். சுமதிக்குப் பிறந்தது கர்பத்தின் துண்டங்களாக இருந்தன. இதனின்று ஆறாயிரம் பிள்ளைகள் தோன்றினர். நெய் நிரம்பிய குடங்களில் தாத்ரி எனப்படும் வைத்யம் அறிந்த தாதிகள் அவற்றை பராமரித்து வந்தனர். நாளடைவில் அவர்களும் வளர்ந்து பெரியவர்களாகி யௌவனம் அடைந்தனர். வெகு நாட்களுக்குப் பின், ரூபமும் இளமையும் கூடிய குமாரர்களாக சகரனுக்கு ஆறாயிரம் குழந்தைகள் ஆயின.சகரனுடைய மூத்த பிள்ளை, கேசினியின் மகனான அசமஞ்சன், குழந்தைகளைப் பிடித்து சரயூ நதியில் போட்டு சிரிப்பான். அவர்கள் அலறுவதையும், மூழ்குவதையும் பார்த்து ரசிப்பான். இந்த கொமூடுரத்தைத் தாங்க முடியாமல், ஊர்ஜனங்களின் நன்மைக்காக இந்த பிள்ளையை நாடு கடத்தி விட்டான் அரசன். இந்த அசமஞ்சனின் பிள்ளை அம்சுமான் என்பவன், வீரனாக, எல்லோருக்கும் பிடித்தவனாக, பிரியமாக பேசுபவனாக, எல்லோரையும் அணைத்துக் கொண்டு போகும் குணசாலியாக வளர்ந்தான். காலம் செல்லச் செல்ல சகரனுக்கு யாகம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. இவ்வாறு நிச்சயம் செய்தவுடன், உபாத்யாயர்களையும், மற்றவர்களையும் அழைத்து யாக காரியத்தை ஆரம்பித்தான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், சகர புத்ர ஜனனம்என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயம்)

 

அத்தியாயம் 39 ப்ருது2வீ விதா3ரனம் (பூமியைத் தோண்டுதல்)

 

இந்த கதை முடிந்தவுடன், ரகு நந்தனான ராமன், முனிவரிடம் இந்த கதையை இன்னும் விஸ்தாரமாக சொல்லும்படிக் கேட்டான். ப்ரும்மன், என் முன்னோர்கள் இந்த யாகத்தை எப்படிச் செய்தார்கள். இதைக் கேட்டு முனிவர் சிரித்துக் கொண்டே தொடர்ந்தார். சகரன் என்ற மகாத்மாவின் கதையை விவரமாகவே சொல்கிறேன், கேள் என்று ஆரம்பித்தார். சங்கரரின் மாமனார் ஹிமவான் மலைகளுக்கு அரசனாக விளங்கினான். ஒரு முறை விந்த்ய மலையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இந்த தேசம் யாகம் செய்ய சிறந்த இடம் என்று புருஷோத்தமன், சகரன் இருவருக்கிடையில் -இரு மலைகளிடையில்- யாகம் செய்ய விரும்பினான். சகரனின் விருப்பப்படி பேரனான அம்சுமான், அந்த மலையில் யாகத்தை ஆரம்பிக்கவும், இந்திரன் ராக்ஷஸ உரு எடுத்து வந்து யாக குதிரையை அபகரித்துச் சென்றான். இந்த யாகக் குதிரையை அபகரித்துச் செல்வதைப் பார்த்து உபாத்யாயர்கள் அரசனிடம் வந்து தெரிவித்தனர். இந்த மலையில் யாகக் குதிரையை யாரோ வேகமாக கடத்திச் செல்கிறார்கள்.காகுத்ஸா, கடத்திச் செல்பவனை கொன்று விடு, யாக குதிரையை மீட்டு வா, இந்த யாகம் தடைப் பட்டால் நம் எல்லோருக்கும் துன்பம் விளையும். ராஜன்,  எப்படி யாகம் இடையூறு இல்லாமல் முடியுமோ அந்த விதத்தில் நீ உடனே செயல் படு என்று உபாத்யாயர்கள் அரசனிடம் கூறினர். அந்த சபையில் பார்த்திபனான சகரன், ஆறாயிரம் பிள்ளைகளைப் பார்த்துச் சொன்னான். புத்திரர்களே, இந்த ராக்ஷஸன் சென்ற வழி எது என்று தெரியவில்லை. மந்திரங்கள் ஓதி, பவித்ரமாக மகாபா4கர்களான அறிஞர்கள், இந்த பெரிய யாகத்தை செய்ய ஆரம்பித்து விட்டனர். உங்களுக்கு நன்மையுண்டாகட்டும். புத்திரர்களே, உடனே சென்று யாக குதிரையைத் தேடிக் கொண்டு வாருங்கள். சமுத்திரம்மாலையாக சூழ்ந்த இந்த பூமி முழுவதும் தேடுங்கள். ஒவ்வொரு யோஜனை தூரத்தையும் புத்திரர்களே, விஸ்தாரமாக நன்கு அலசித் தேடுங்கள். குதிரையைக் காணும் வரை பூமியைக் குடைந்து செல்லுங்கள். குதிரையைக் கவர்ந்தவனை என் ஆணைப்படி தேடிச் செல்லும் நீங்கள், குதிரையைக் கண்டு வரும் வரை, பேரன்களோடு தீக்ஷை ஏற்றுக் கொண்ட நான் உபாத்யாயர்களோடு இங்கேயே இருப்பேன்.மங்களம் உண்டாகட்டும், சென்று வாருங்கள் என்று சொல்லி அனுப்பினான். அவர்களும் சந்தோஷமாக, தந்தை சொல்லை மேற் கொண்டு, மகீதலம் வரை சென்றனர். உலகம் முழுவதும் தேடி, பலசாலிகளான அவர்கள், குதிரையைக் காணப் பெறாமல் ஒவ்வொரு யோஜனை தூரத்தையும் அலசித் தேடியும் காணாத நிலையில், பூமியை பிளக்க ஆரம்பித்தனர். வஜ்ர ஸ்பர்சம் போன்ற கூர்மையான நகத்தாலும், சூலங்கள் கொண்டும், கல்லால் ஆன ஹலம் என்ற ஆயுதத்தாலும், பூமியைக் குடைந்தனர். வசுமதியான பூமி, பயங்கரமான இந்த ஆயுதங்களால் தாக்கப் படவும் அழ ஆரம்பித்தாள். பலவிதமான நாகங்கள் வதைப் பட்டன. அசுரர்கள் அழிந்தனர். ராகவா, இந்த ராக்ஷஸர்களிலும் சத்வ குணம் உடையவர்கள் ஓலமிட ஆரம்பித்தனர். ஆறாயிரம் யோஜனை தூரம் பூமியைக் குடைந்து, உத்தமமான ரஸாதலம் சென்று, பர்வதங்கள் நிறைந்த ஜம்பூத்வீபத்தை அரச குமாரர்கள் குடைந்தபடி எல்லா இடங்களிலும் திரிந்தார்கள். பின்னர் தேவர்களும் கந்தர்வர்களும், அசுரர்களும், நாகங்களுடன் கூடியவர்களும், மனம் வருந்தி ப்ரும்மாவிடம் சென்றனர். பகவன், பூமியை சகர புத்திரர்கள் தோண்டி நாசம் செய்கிறார்கள். ஜலத்தில் வசிக்கும் பல பிராணிகள் இதனால் வருந்துகின்றன. இவன் தான் எங்கள் யாக குதிரையைத் திருடியவன், இவன் தான், இவன் தான் என்று ஒவ்வொருவரையும் சகர புத்திரர்கள் வதைக்கின்றனர், என்றார்கள்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ப்ருத்வீ விதாரணம் என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயம்)

 

அத்தியாயம் 40 கபில தர்ஸனம் (கபிலரைக் காணுதல்)

 

தேவர்கள் முறையீட்டைக் கேட்டு ப்ரும்மா அவர்களை நோக்கினார். பயந்து நடுங்கியபடி, யமன் வாசல் வரை சென்று வந்தவர்கள் போல இருந்த அவர்களைக் கண்டு -இந்த பூமி முழுவதும் வாசுதேவனுடையது. மாதவனுடைய மகிஷி இவள். அந்த பிரபுவான பகவான் (காபிலம்) கபிலனுடைய உருவம் எடுத்து பூமியை தாங்குவான். எப்போதும் தாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய கோபம் கொண்ட கண் பார்வையிலேயே, அரச குமாரர்கள் மடிவார்கள் என்றும் சொன்னார். பூமியையும், சனாதனனான பகவான் அதன் சுய ரூபத்திற்கு கொண்டு வந்து விடுவான், அல்பஆயுள் கொண்ட சகர புத்திரர்கள் சீக்கிரமே அழிவார்கள். முப்பத்து  மூன்று கோடி தேவர்களும் பிதாமகரின் விளக்கத்தால் மிக்க சந்தோஷம் அடைந்தவர்களாக, நிம்மதியாக வந்தபடியேசென்றனர். பூமியை பிளந்து வழி அமைத்த படியே பிரதக்ஷிணமாக சுற்றி சுற்றி பூமியை தோண்டியதில் சகர புத்திரர்கள் களைப்படைந்தனர். சாகரர்கள் எல்லோருமாக தந்தையை அடைந்துஉலகம் பூராவும் சுற்றிப் பார்த்தோம். நடுவில் இடைப்பட்ட நல்ல ஜந்துக்கள் கூட அடி பட்டன. தேவ, தானவ, ராக்ஷஸ, பிசாச, உரக, பன்னக- என்று எல்லோரையும் தேடியாயிற்று.அஸ்வத்தைக் கவர்ந்து சென்றவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. என்ன செய்வோம். தகப்பனாரே, உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். புத்தி பூர்வமாக யோசித்து ஒரு வழி சொல்லுங்கள். தன் மகன்களின் இந்த வார்த்தையைக் கேட்டு சகரன் கோபம் கொண்டான். கோபத்துடனேயே -திரும்பச் சென்று தேடுங்கள். இதுவரை தேடாத இடங்களிலும் தேடுங்கள். தோண்டுங்கள். குதிரையைக் கடத்தியவனைப் பிடித்துக் கொண்டு காரியம் ஆனவர்களாக திரும்பி வாருங்கள்.-  வேறு வழியின்றி அவர்கள் திரும்பச் சென்று பூமியில் வழிகள் செய்து கொண்டு, ரசாதலம் சென்று தேடினர். பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் திக்கஜங்களைக் கண்டனர். மிகப் பெரிய பர்வதம் போன்றயானைகள், பூமியைத் தலையால் தாங்கிக் கொண்டு நின்றன. காகுத்ஸா, சற்று ஓய்வெடுக்கும் விதமாக இந்த கஜங்கள் மலைகளில் தலையைச் சாய்த்து நின்றாலோ, உரசினாலோ, பூ கம்பம் உண்டாகும். அந்த யானைகளை சகர புத்திரர்கள் பிரதக்ஷிணம் செய்து வணங்கி, அவர்களுக்கு மரியாதை செய்து விட்டு, இன்னமும் குடைந்து கொண்டு சென்றனர்.முதலில் கிழக்குத் திசையில் தோண்டி எடுத்து, விரூபாக்ஷன் என்ற யானையைக் கண்டு, பின் தென் திசை நோக்கி சென்றனர். தக்ஷிண திசையிலும் மகா கஜத்தைக் கண்டனர். மிகப் பெரிய பர்வதம் போன்ற உருவத்துடன் , மகா பத்மம் என்ற மகாத்மாவான திக் பாலகர்களான யானைகள். தலையினால் பூமியைத் தாங்கி வரும் அவைகள், ஆச்சர்யம் அடைந்தன. அதையும் பிரதக்ஷிணம் செய்து வணங்கி, சகர புத்திரர்கள் மேற்கு திசையில் தேட ஆரம்பித்தார்கள். மேற்கு திசையிலும் அகலமான மலை போன்ற சௌமனஸம் என்ற திக் கஜத்தைப் பார்த்து, அதையும்வணங்கி பிரதக்ஷிணம் செய்து, குசலம் விசாரித்து, தோண்டியபடியே ஹிமவான் இருக்கும் வடக்குத் திசை வந்து சேர்ந்தனர். வடக்குத் திசையில் ரகுஸ்ரேஷ்டனே, அவர்கள் பனி மூடிய இடத்தில், வெள்ளை வெளேரென்ற பத்ரம் என்ற பெயருடைய திக்கஜம் தன் சுபமான சரீரத்தால் பூமியைத் தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். இதையும் கொண்டாடி, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து ஆறாயிரம் சகர புத்திரர்களும் திரும்பவும் வசுதா தலத்தை அடைந்தனர். முதலில் வட திசையில், பயங்கர வேகமும் பலமும் உடைய அவர்கள் பூமியை பிளக்கும் எண்ணத்துடன் ரோஷத்தோடு ஓங்கி ஒரு போடு போட்டனர். சனாதனனான வாசுதேவன் கபிலனாக அங்கு இருப்பதைக் கண்டனர். அருகிலேயே, யாக குதிரையும் நடமாடிக் கொண்டிருந்தது. ஒரே மகிழ்ச்சி. ரகு நந்தனா, அவர்கள் எல்லோரும் இந்த கபிலனை குதிரையைக் கடத்திச் சென்றவனாக நினைத்து, க்ரோதத்தால் சிவந்த கண்களுடையவர்களாக கனித்ர (தோண்டும் ஆயுதம்) லாங்கல (மண்ணை வாரும் ஆயுதம்) இவைகளை கையில் வைத்துக் கொண்டிருந்தவர்கள், பலவிதமான மரங்கள், கற்கள், உடைந்த மரக் கிளைகள் இவற்றைக் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்கள், கோபத்தோடு அவரை நோக்கி ஓடி வந்தார்கள். திஷ்ட, திஷ்ட நில், நில் என்றும் கத்தினர். எங்கள் குதிரையை நீ தான் கடத்தி வந்திருக்கிறாய். நாங்கள் சகர குமாரர்கள். எங்களை யார் என்று அறிய மாட்டாய். என்று இவர்கள் கத்தியதைக் கேட்டு கபிலன், ரோஷத்தோடு ஹுங்காரம் செய்தார். அளவில்லா பலமுள்ள கபிலனால், மகாத்மாவினால், காகுத்ஸா, சகரபுத்திரர்கள் பஸ்மமானார்கள்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், கபில தரிசனம்என்றநாற்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 41ஸகர யக்ஞ சமாப்தி

 

வெகு நாட்கள் ஆகியும் புத்திரர்கள் திரும்பி வராததைக் கண்டு ஸகரன் பேரனைக் கூப்பிட்டார். தனக்கு இணையான தேஜஸும், அறிவுக் கூர்மையும், நல்ல கல்வியும் உடையவனான அவனிடம் -குதிரையைக் கடத்திச் சென்றவனைத் தேடிச் சென்று, உன் பெற்றோர்களையும் தேடிப் பார்த்து வா. உள்ளும் புறமும் நல்ல வீரர்கள், சத்வமான நல்ல குணங்களை உடையவர்கள், அவர்களைத் திருப்பி அழைத்து வா. கத்தி, கார்முகம் முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொள். வணக்கத்துக்கு உரியவர்களை வணங்கியும், இடையூறு செய்பவர்களை அழித்தும், சித்தார்த்தனாக, என் யாகத்தின் முடிவைக் காண திரும்பி வா. – இவ்வாறு சகரன் புத்தி சொல்லி பேரனை அனுப்பி வைத்தான். வில்லையும், வாளையும் ஏந்தியவனாக, அதிக பழக்கமில்லாத அவன் சென்றான். பூமியின் அடியில் தந்தையர்களால் குடையப் பட்ட வழியில் சென்று அரசன் சொன்னபடியே, தேவ தானவ, ராக்ஷஸர்களாலும், பிசாச, உரக, பன்னக எனும் மற்றவைகளாலும் வணங்கப் பட்ட திக்கஜங்களைக் கண்டான். அவைகளை வணங்கி, பிரதக்ஷிணம் செய்து, குசலம் விசாரித்து, தன் தந்தையைப் பற்றியும், குதிரையைக் கடத்தியவனைப் பற்றியும் விசாரித்தான். திக் கஜங்கள் பதில் சொல்லின. -அம்சுமான் என்ற அசமஞ்சன் பிள்ளையே, உன் காரியம் நிறைவேறும். யாகக் குதிரையை சீக்கிரமே காண்பாய். -இதைக் கேட்டு ஒவ்வொரு திக்கிலும் இருந்த திக்கஜங்களை விசாரித்தவாறே சென்றான். அந்த திக் பாலகர்களான யானைகளும், விஷயமறிந்து, அழகான வாக்கியங்களையும், தேர்ந்தெடுத்த வார்த்தைகளோடு அழகாக பேசின. அவனை குதிரையோடு வருவாய் என்று வாழ்த்தி வழி அனுப்பின. மேலும் சென்று பித்ருக்கள் பஸ்மமாக கிடந்த இடத்தை அடைந்தான். அவர்கள் இறந்து பஸ்மமானதை அறிந்து ஓ வென்று அழுதான். துக்கம் தாளாமல் இங்கும் அங்கும் பார்க்க, யாக குதிரை சஞ்சரித்துக் கொண்டு இருப்பதையும் கண்டு, பித்ருக்களுக்கு ஜலக்ரியை செய்ய வேண்டி, ஜலம் இருக்கும் இடம் தேடினான். பல இடங்களிலும் தேடி கண்களுக்கு ஜலம் இருக்கும் இடம் புலப்படாத நிலையில், பறவைகளின் அரசனான சுபர்ணனைக் கண்டான். தன் தந்தையரின் மாமனான, பறவையரசனான சுபர்னனைப் பார்த்ததும், மகா பலசாலியான வைனதேயம் என்ற அந்த பறவைகள் அரசன், தானும் அம்சுமானைத் தெரிந்து கொண்டு -வருந்தாதே குழந்தாய், மனிதர்களுள் சார்தூலம் போன்ற பலசாலியே, இந்த வதம் உலக சம்மதமானதே. அளவில்லாத பலம் கொண்ட கபிலனால் இவர்கள் பஸ்மமாக்கப் பட்டார்கள். இவர்களுக்கு லௌகிகமான (உலகில் உள்ள)தண்ணீரைக் கொண்டு ஜலக்ரியை செய்ய முடியாது. பித்ரு கார்யங்கள் செய்ய முடியாது.ஹிமவானுடைய மூத்த மகளான கங்கை, அவளைக் கொண்டு உன் பித்ருக்களுக்கு கடன்களைச் செய். பஸ்மமாக செய்யப் பட்ட இவர்களை, உலகத்தை பவித்திரமாக்கும் கங்கை நல்ல கதியடையச் செய்வாள். அவளுடைய லோக காந்தியுடைய கங்கையின் நீரால் அலம்பப்பட்டு, இந்த ஆறாயிரம் சகர புத்திரர்களும் ஸ்வர்கம் செல்வார்கள். தேவ லோகத்திலிருந்து கங்கையைக் கொண்டு வா. பூமிக்கு கங்கையை கொண்டு வர முடியுமானால், கங்கையை இறக்கி கொண்டு வர சக்தி இருக்குமானால், இதோ இந்த குதிரையையும் பிடித்துக் கொண்டு சென்று வா. புருஷர்களில் ரிஷபம் போன்றவனே, பாட்டனாரின் யாகத்தையும் பூர்த்தி செய்து வை.- என்றான். சுபர்ணனின் வார்த்தையைக் கேட்டு அதி வீரனான அம்சுமான், அவசரமாக குதிரையைப் பற்றி இழுத்துக் கொண்டு, திரும்பி வந்தான். தீக்ஷையில் இருந்த அரசனைக் கண்டு நடந்தவற்றைச் சொல்லி, சௌபர்ணன் சொன்னதையும் சொல்லி, கோரமான வ்ருத்தாந்தங்கள், இவ்வாறு நடந்தது என்பதையும் சொல்லி, அம்சுமான் விவரிக்க, அரசன் முறைப்படி யாகத்தை முடித்து, தன் ஊரை அடைந்தான்.யாகத்தை முடித்த மகிழ்ச்சி எதுவும் இன்றி அரசன்,கங்கையைக் கொண்டு வருவதில் எதுவும் நிச்சயமாக செய்ய முடியாத நிலையில் இருந்தான். வெகு காலம் எதுவும் தீர்மானமாக செய்ய முடியாமல், முன்னூறு வருஷங்கள் ஆண்ட பின் தேவ லோகம் சென்றான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ஸகர யக்ஞ சமாப்திஎன்ற நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம்)

 

அத்தியாயம் 42ப4கீ3ரத2 வரப்ரதா3னம் (பகீரதனுக்கு வரம் அளித்தல்)

 

சகர அரசன் காலம் சென்றபின், ப்ரஜைகள் நல்ல தார்மீகனான அம்சுமானை அரசனாக்கத் தீர்மானித்தனர். ரகு நந்தனா, அந்த அம்சுமான் மிக நல்ல அரசனாக இருந்தான். அவனுடைய மகன் திலீபன் என்ற பெயர் பெற்ற அரசன். அவனிடத்தில் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு புண்யமான ஹிமயமலை சிகரத்தில் பயங்கரமாக தவம் செய்யலானான். இரண்டு, மூன்றுஆயிர வருஷங்கள் கடந்தன.மிகப் பெரிய அரசன், தபோவனத்திலேயே காலம் சென்றான். திலீபன் தன்முன்னோர்கள் வதம் செய்யப்பட்டதை அறிந்து துக்கம் அடைந்தாலும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான். எப்படி கங்கையை பூமிக்கு கொண்டு வருவது? எப்படிஅவர்களுக்கு நீர்க்கடன் செய்வது? இவர்களை எப்படி கரையேற்றுவேன் என்று கவலை கொண்டான். இது போல தினமும் கவலைப் பட்டுக் கொண்டிருந்த அவனுக்கு ப4கீரத2ன் என்ற மகன், பரம தார்மீகனான பிள்ளை பிறந்தான். திலீபன் பல விதமாக யாகங்கள் செய்தான். முன்னூறு ஆயிரவருஷங்கள் இருந்து ஆட்சி செய்தபின் அவர்களை உத்தாரணம் செய்வது பற்றி எதுவும் நிச்சயம் செய்ய முடியாமலேயே வியாதியினால் இறந்தான். தன் புண்ய கர்மாக்களின் பலனாக இந்திர லோகம் போய் சேர்ந்தான்.பகீரதன் ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைக்கப்பட்டான். ராஜ ரிஷியாக பரம தார்மீகனாக இருந்த பகீரதன், சந்ததியில்லாமல் புத்திரனை விரும்பியும், கங்கையைக் கொண்டு வரவும் என்ன செய்யலாம் என்று மந்திரி சபையைக் கூட்டி ஆலோசித்தான். மந்திரிகளிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு கங்கையைக் கொண்டு வருவதே குறியாக தவம் செய்யலானான். கோ3கர்ணம் என்ற இடத்தில் கடுமையாக தவம் செய்தான். இந்திரியங்களை அடக்கியவனாக, கைகளை மேலே தூக்கியவாறு, ஐந்து அக்னிகளுக்கு நடுவில் இருந்து மாதம் ஒருமுறை ஆகாரம் ஏற்றுக் கொள்பவனாக ஆயிரம் வருஷம் கழிந்தது. இந்த தவத்தால் மகிழ்ந்த ப்ரஜாபதியான ப்ரும்மா, தேவர்களின் தலைவன், தேவர்கள் கூட்டத்தோடு வந்து தவம் செய்யும் பகீரதனிடம் மகாபாஹோ, உன் தவத்தால் திருப்தியடைந்தேன். என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். மூவுலகுக்கும் பிதாமகரான அவரை, கை கூப்பி வணங்கியவாறு பகீரதன் உங்களுக்கு என் தவத்தினால் திருப்தி உண்டாயிற்று என்றால், தவத்திற்கு பலன் உண்டு என்றால், சகரனுடைய பிள்ளைகள் என் கையால் நீரை பருகட்டும்.கங்கையின் ஜலத்தில் அவர்கள் பஸ்மத்தை நனைத்தால் தான் அவர்கள் ஸ்வர்கம் செல்ல முடியும். என் தந்தைக்குத் தந்தை நல்ல கதி அடையவும், என் குலம் விளங்கவும் புத்திரனைக் கொடுங்கள்.  இக்ஷ்வாகு வம்சம் நசித்துப் போகாமல் இருக்க வரம் கொடுங்கள்.  என்று வேண்டினான். சர்வலோக பிதாமகரான ப்ரும்மா, சுபமான, மதுரமான வார்த்தைகளால் பதில் அளித்தார். உன் மனோரதம் சிறந்தது. மகா ரதியான பகீரதனே, அப்படியே ஆகட்டும். இக்ஷ்வாகு குலம் வளரட்டும். ஹிமவானின் மூத்த மகளான கங்கையைத் தாங்க சிவ பெருமானைப் பிரார்த்தனை செய். அவர் தான் அவளைத் தாங்கக் கூடியவர்.பூமி அவள் வேகத்தைத் தாங்காது. சூல பாணியான அவரைத்தவிர வேறு யாராலும் வேகமாக வரும் கங்கையைத் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு சொல்லி மருத் கணங்கள் புடை சூழ ப்ரும்மா திரும்பிச் சென்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், பகீரத வரப் பிரதானம்என்றநாற்பத்து இரண்டாவது அத்தியாயம்)

 

அத்தியாயம் 43 கங்கா அவதரணம் (கங்கை இறங்கி வருதல்)

 

தேவ தேவர் திரும்பிச் சென்றபின், கால் கட்டை விரலால் பூமியைத் தொட்டபடி நின்று கொண்டு (கால் கட்டை விரல் பலத்தில் நின்று கொண்டு) பூமியில் ஒரு ஆண்டு உபாசனை செய்தான். புஜங்களை உயரத் தூக்கியபடி, ஆதாரம் எதுவும் இல்லாமல், வாயுவே பக்ஷணமாக கொண்டு, வேறு புகலிடம் இல்லாதவனாக அசையாமல், ஸ்தா2ணுவைப் போல நின்று இரவும் பகலும் எதிரிகளை நாசம் செய்ய சக்தி வாய்ந்த அந்த அரசன், தவம் செய்தான். வருஷம் முடிந்த சமயம் எல்லா உலகும் வணங்கி நிற்க, பசுபதி ப்ரத்யக்ஷமானார். -உன் தவத்தினால் மகிழ்ந்தேன் அரசனே, உனக்குப் பிரியமானதைச் செய்கிறேன். சைல ராஜ சுதாவான கங்கையை என் தலையில் தாங்கிக் கொள்கிறேன். – என்றார். பின், ஹிமவானின்  மூத்த மகள், மிகப் பெரிய உருவம் எடுத்து தாங்க முடியாத வேகத்தோடு, ஆகாயத்திலிருந்து சிவ பெருமானின் தலையில் விழுந்தவள், அவருடைய முடியில் காணாமல் போனாள். அந்த தேவி மனதில் நினைத்தது வேறு.தாங்க முடியாத வேகம் உடைய கங்கை நான். சிவபெருமானையும் அடித்துக் கொண்டு பாதாளம் செல்வேன் என்று எண்ணியதைப் புரிந்து கொண்டு, அவளுடைய கர்வம் அடங்கத்தான் சிவ பெருமான் கோபம் கொண்டு அவள் புத்தியை மாற்ற நினைத்தார் முக்கண்ணனான பெருமான். புண்யமான ருத்ரனுடைய தலையில் விழுந்த பாவனமான கங்கை, ஜடா மண்டல பள்ளங்கள் குகைகள் போல, இமயமலையைப்போலவே இருக்க, பலவிதமாக முயற்சி செய்தும் பூமியை வந்தடைய முடியவில்லை. ஜடா மண்டலத்தில் சுற்றி சுற்றி வந்தவள் செய்வதறியாது,  வெளியில் வரவும் முடியாது திகைத்தாள். பல நூறு வருஷங்கள் இவ்வாறு பிரமையுடன் சுழன்று கொண்டிருந்தாள். திரும்பவும் பகீரதன் தவம் செய்தான். ரகு நந்தனா, அவனைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சிஅடைந்த சிவ பெருமான் பி3ந்து3 சரம் நோக்கி கங்கையை விட்டார். அவ்வாறு விடப் படும் போது ஏழு கிளைகள் தோன்றின. பிரவாகங்கள் தோன்றின. ஹ்லாதினீ, பாவனீ, நளினீ, இவை மூன்றும் கிழக்கு நோக்கிச் சென்றார்கள். சிவ ஜலமாக சுபமாக பிரவகித்துச் சென்றார்கள். சுச, சீதா, சிந்து, மகா நதிகளாக இவைகள் மேற்குத் திசையில் பிரவகித்துச் சென்றன. அலக நந்தா என்று புகழ்பெற்ற, உலக பாவனியான ஏழாவது நதி பகீரதனை நோக்கி பிரவாகமாக வந்தது.பகீரதனும் திவ்யமான தேரை எடுத்துக் கொண்டு முன் செல்ல, கங்கை அவனைத் தொடர்ந்து சென்றது. ஆகாயத்தில் இருந்து, சங்கரர் தலையிலிருந்து பூமி வந்தவள், பயங்கரமான சப்தத்துடன் நீரை வாரியிறைத்தவாறு வந்தாள். மீன், ஆமை இவைகள் கூட்டமாகவும், சிம்சுமார கணங்களும், கங்கையுடன் கூடவே விழும்போது கூடவே வந்து அழகாக விழுந்தன. அப்பொழுது தேவ, ரிஷி, கந்தர்வர்கள், யக்ஷர்கள், சித்த கணங்கள், ஆகாயத்திலிருந்து பூமிக்குச் செல்லும் கங்கை போவதைப் பார்த்தவாறு இருந்தனர். ஒரு ஊர் போன்ற பெரிய பெரிய விமானங்களிலும், குதிரை, யானைகளிலும் ஏறி, படகுகளில் ஏறிக் கொண்டும் தேவதைகள் அங்கு வந்து சேர்ந்தனர். கங்கை பூமியில் விழுவதுமிக அத்புதமான காட்சியாக இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த தேவ கணங்கள், கண் கொட்டாமல் பார்த்தனர், ஆபரணங்களின் ஒளியினால், சுர கணங்கள் கூடவே வரும்போது தெறித்த ஒளியினால், நூறு சூரியர்கள் பிரகாசமாக ஆகாயத்தில் உதயமானதை போலத் தெரிந்தது. சஞ்சலமான, சிம்சுமார கணங்கள், மீன்கள் இவை ஆகாயத்திலிருந்து விழும் மின்னல் போல விளங்கின. வெண்மையான தண்ணீரால் நனைந்து, பல விதமாக ஆயிரக் கணக்காக பிரதி பலிக்கும் ஹம்ஸங்கள், நீல வானத்தில் வெண் மேகங்கள் மிதப்பது போலத் தெரிந்தன. சில சமயம் வேகமாக வருகிறாள். சில சமயம் வளைந்து வளைந்து வருகிறாள். மிக வினயமாக ஒரு சமயம், ஒரு சமயம் மிக அத்புதமாகத் தெரிவாள். சில சமயம் மிக மெதுவாக நடந்து செல்வது போல, நீர் நீரினாலேயே அடி பட்டது போல, அடிக்கடி மேல் பாதையாகச் சென்று தடாலென்று விழுவதும், சங்கரருடைய தலையிலிருந்து விழுந்தது, பூமியில் திரும்ப விழுவது போலவும், அந்த நீரே நிர்மலமாக, கல்மஷமின்றித் தோன்றியது.பூமியில் வசித்தவர்கள், தேவ, ரிஷி, கந்தர்வர்கள், –ப4வாங்க3 பதிதம் தோயம் பவித்திரம்சிவ பெருமானின் சரீரத்திலிருந்து விழுந்த ஜலம் என்பதாலேயே பவித்திரமானது என்று கைகளால் தொட்டுப் பார்த்து, தலையில்   தெளித்துக் கொண்டனர். ஆகாயத்திலிருந்து பூமிக்கு, சாப வசத்தால் விழுந்தவர்கள், அபிஷேகம் செய்து கஷ்டம் தீரப் பெற்றனர். கங்கை நீரால், பவித்திரமான ஜலத்தால் பாபம் நீங்கப் பெற்றவர்களாக திரும்பவும் ஸ்வர்கம் அடைந்து தங்கள் தங்கள் உலகங்களை அடைந்தனர். உலகமே இந்த தண்ணீரைக் கண்டு மகிழ்ந்தது.கங்கையில் முழுக்காட்டப் பெற்று கல்மஷங்கள் நீங்கியவர்களாக மகிழ்ச்சியடைந்தனர்.பகீரதன் இவர்களைக் கண்டு ரசித்தபடி, முன்னால் திவ்ய ரதத்தில் செல்ல, கங்கை பின் தொடர்ந்து பிரவாகமாகச் சென்றாள். தேவர்களும், ரிஷி கணங்களும், தை3த்ய தா3னவ ராக்ஷஸர்களும், க3ந்த4ர்வ யக்ஷர்களும், கின்னர மகோரக3ங்களூம், எல்லா அப்ஸர ஸ்த்ரீகளும் ப4கீரத2னைத் தொடர்ந்து செல்லும் கங்கையையைத் தொடர்ந்து சென்றனர். மிகவும் சந்தோஷமாக, ஜலத்தில் வாழும் ஜீவ ராசிகளும், எங்கு பகீரத ராஜா இருக்கிறானோ, அங்கு புகழ் வாய்ந்த கங்கா இருப்பாள், நதிகளில் ஸ்ரேஷ்டமானவள், எல்லா பாபங்களையும் அழிப்பவள், இவ்வாறு கொண்டாட, கங்கையின் பிரவாகத்துக்கு ஏற்ப, அதைக் கண்டவர்களின் உற்சாகமும் கரை புரண்டோட, பின் தொடர்ந்து செல்லும் போது, ஜஹ்னோ என்ற ரிஷி யாகம் செய்து கொண்டிருக்கும் யாக சாலையில் யாகம் செய்யும் யக்ஞ வாடம் என்ற இடத்தை கங்கை அடித்துக் கொண்டு சென்று விட்டாள். ராகவா| இதை கங்கையின் அலட்சியம் என்று கோபித்துக் கொண்ட முனிவர், கங்கையின் பரம அத்புதமான நீரை முழுவதுமாக குடித்து விட்டார். பின்னால் வந்த தேவர்களும், கந்தர்வர்களும்ரிஷிகளும், ஆச்சர்யத்தில் திகைத்து நின்று விட்டனர். பின், பகீரதன் ஜஹ்னூ முனிவரை பலவிதமாக பூஜித்து, உத்தமமான அந்த ரிஷியிடம், கங்கையை தன் பெண்ணாக ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டினான். அதனால்சந்தோஷமடைந்த முனிவர், தன் காதுகளிலிருந்து அவளை வெளியே விட்டார். அதனால் ஜஹ்னு சுதா என்று கங்கை அழைக்கப் படுகிறாள். ஜாஹ்னவீ என்று பெயர் பெற்றாள். திரும்பவும் பகீரதனின் ரதத்தைத் தொடர்ந்து செல்லலானாள். ஸாக3ரத்தைச் (ஸாக3ரம்-ஸமுத்திரம்) சென்றடைந்தாள். ரசாதலம் சென்று தான் வந்த காரியம் பலன் பெற, பகீரதனும் ராஜ ரிஷியாக, தன் முயற்சியினால் கங்கையைக் கொண்டு வந்து, பஸ்மமாக ஆனாலும் மனதில் வருந்திய படி இருந்த தன் பாட்டனார்களை அவர்களின் பஸ்ம ராசியில் கங்கா ஜலத்தை பெருகச் செய்து, பாவங்கள் கரைந்தவர்களாக, ஸ்வர்க லோகத்தை அடையச் செய்தான். ரகோத்தமா, இதுதான் கங்கை கதை.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், கங்காவதரணம் என்றநாற்பத்து மூன்றாவது அத்தியாயம்)

 

அத்தியாயம் 44 ஸாக3ரோத்3தா4ரம் (ஸக3ர புத்திரர்களை கரையேற்றுதல்)

 

பகீரத ராஜா கங்கையைத் தொடர்ந்து சென்று, பூமியின் அடியில் அவர்கள் பஸ்மமாக இருந்த இடத்தைத் தேடிச் சென்றான். கங்கையின் நீரில் அந்த பஸ்மம் நனைந்தவுடனேயே, சர்வ லோக பிரபுவான ப்ரும்மா, ராஜாவிடம் – ஹே நர சார்தூல, ஸகரனுடைய ஆறாயிரம் பிள்ளைகள் இன்று பவ ஸாகரத்தைத் தாண்டி, தேவர்கள் போல தேவலோகத்தை அடைந்தனர். ஸாகர ஜலம் உலகில் இருக்கும்வரை, ஸகரனுடைய புத்திரர்கள் ஸ்வர்க லோகத்தில் இருப்பார்கள். உனக்கு இவள் மூத்த மகளாக இருப்பாள். உன்னைச் சார்ந்து இவள் பெயர் பெற்று புகழோடு விளங்குவாள். க3ங்கா3, த்ரிபத2கா3, பா4கீரதி2 என்ற பெயர்களுடன்  மூன்று மார்கமாக இவளை த்யானிக்க முடியும் என்பதால் த்ரிபதகா. உன் பட்டனார்களுக்கு தற்சமயம்,அரசனே, பித்ரு காரியங்கள் செய்வாயாக.உன் பிரதிக்ஞையை முடி. ராஜன், உன் முன்னோர்கள் பலசாலிகளாகவும், புகழ் வாய்ந்தவர்களாக இருந்தும் கூட, இந்தக் காரியத்தை செய்ய முடியவில்லை. அம்சுமான் கூட கங்கையை ப்ரார்த்தித்தான். ஆனாலும் பிரதிக்ஞையை முடிக்க முடியவில்லை. எனக்கு சமமான பலம் கொண்டஉன் தந்தை திலீபன்,ராஜ ரிஷி,குணவான், க்ஷத்திரிய தர்மத்தை கடை பிடித்தவன், என்று இவ்வளவு இருந்தாலும், கங்கையைப் பிரார்தித்தானே தவிர, கொண்டு வர சக்தியில்லை. அதை நீ சாதித்துக் காட்டியிருக்கிறாய். பிரதிக்ஞையை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறாய். எல்லோருக்கும் சம்மதமான பெரும் புகழை உலகில் அடைந்திருக்கிறாய். கங்கையை ஆகாயத்திலிருந்து கொண்டு வந்து தர்மத்தின் சிறந்த பலனையும் பெற்றவனாக ஆகிறாய்.உன் பாட்டனார் சாம்பலில் கங்கை நீரை பிரவாகமாக விழச் செய். நல்லவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த கங்கை நதி நீர், புண்யமானது, சுத்தமானது. உனக்கு மங்களம் உண்டாகட்டும் –  என்று சொல்லி ப்ரும்மா தன் உலகம் சென்றார். ராஜரிஷியான பகீரதனும், நீர்க் கடன்களை முடித்து விட்டு, சாகரர்களுக்குச் செய்ய வேண்டிய க்ரியைகளை விதி முறைப் படி செய்து முடித்து விட்டு, தன் ஊருக்கு போய் சேர்ந்தான். தன் விருப்பம் நிறைவேறிய திருப்தியோடு அரசை ஆண்டு வந்தான். அவனை அரசனாக பெற்று உலகம் மகிழ்ந்தது. நிறைந்த மன அமைதியோடு வாழ்ந்தான். ராமா, இது தான் கங்கையின் விஸ்தாரமான கதை. நீ கேட்டபடியே சொன்னேன். இதோ சந்த்யா காலமும் நெருங்கி விட்டது. உனக்கு மங்களம் உண்டாகட்டும்.கங்காவதரணம் என்ற இந்த சுபமான கதையை க்ஷத்திரியர்களுக்கும், மற்றவர்களுக்கும்யார் சொல்லுகிறார்களோ, அவர்களும் இந்த தன்யமான புகழையும் , ஆயுளையும், புத்திர செல்வத்தையும், ஸ்வர்க பதவியையும் தரும் சரித்திரத்தைக் கேட்கிறார்களோ அவர்களூம், விரும்பியவற்றை அடைவார்கள். இதனால் பித்ருக்கள் சந்தோஷமடைகிறார்கள். தேவதைகள் மகிழ்ச்சியடைகிறார்கள். கேட்பவர்கள் யாரானாலும், பாபங்கள் அகல, ஆயுளும் கீர்த்தியும் கிடைக்கப் பெறுவார்கள்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், சாக3ரோத்4தா4ரோஎன்றநாற்பத்து நான்காவது அத்தியாயம்)

 

அத்தியாயம் 45 அம்ருதோத்பத்தி(அம்ருதம் தோன்றுதல்)

 

லக்ஷ்மணனும், ராமனும், விஸ்வாமித்திரர் சொன்ன கதையைக் கேட்டு மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர்.-நீங்கள் சொன்ன இந்த கதை மிகவும் அத்புதமாக இருக்கிறது. கங்கையைக் கொண்டு வந்ததும், சமுத்திரத்தை நிரப்பியதும், புண்யமான இந்த கதையைக் கேட்டு இரவு எங்களுக்கு ஒரு க்ஷணம் போல சென்று விட்டது. – என்றனர். திரும்பத் திரும்ப இந்த கதையைப் பற்றி பேசிக் கொண்டும் நினைத்துக் கொண்டும் சகோதரர்கள் இருவரும் இரவைக் கழித்தனர். விடியற்காலை தன் நித்ய கர்மாக்களை முடித்துக் கொண்டு ராமர் விஸ்வாமித்திரரிடம் சொன்னார்.-இரவு நல்ல விதமாக சென்றது.நிறையத் தெரிந்து கொண்டோம். இப்போது புண்யமான த்ரிபதகா நதியான கங்கையைக் கடந்து செல்வோம்.நீங்கள் வந்திருப்பதை அறிந்து இதோ படகும் சீக்கிரமாக வந்து விட்டது. இங்குள்ள முனிவர்கள் சௌகர்யமாக பிரயாணம் செய்ய வசதியாக உள்ளது இந்த படகு.-இவ்வாறு ராகவன் சொல்லவும், ரிஷியும் மற்ற முனிவர்களுடன் படகில் ஏறிக் கிளம்பினார்.வடக்கு நோக்கி படகை செலுத்த ஆரம்பித்தனர். ரிஷி கணங்களை வழி அனுப்பி விட்டு, கங்கைக் கரையில் இறங்கி நடந்து விசாலமான ஒரு ஊரைக் கண்டனர். ஸ்வர்கத்திற்கு சமமான அந்த ஊரில், ராம லக்ஷ்மணர்களுடன் ரம்யமான காட்சிகளைப் பார்த்துக் கொண்டே, நடந்தனர். அப்போது ராமர் கேட்டார். இது யாருடைய ஊர்? விசாலமான இந்த ஊரைப் பார்த்து குதூகலம் உண்டாகிறது.இதை ஆளும் ராஜ வம்சம் எது? முனிவரே, உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்.இதை விவரமாகச் சொல்லுங்கள்.பழமையான விசாலமான அந்த ஊரின் கதையைச்சொல்ல முனிவர் ஆயத்தமானார்.ராமா, கேள். இந்திரனுடைய கதை, நான் கேட்டபடி சொல்கிறேன்.இந்த தேசத்தில் முன்பு க்ருதயுகத்தில், திதியின் புத்திரர்கள், மிக பலசாலிகளாக இருந்தனர். அதிதியின் புத்திரர்கள், மகாபாகர்களாக, வீரர்களாக, நல்ல தர்ம சிந்தனை உள்ளவர்களாக இருந்தனர். இப்படியிருக்கையில், மனிதர்களுள் புலி போன்றவனே, ராமா, இவர்களுக்கு ஒரு ஆசை வந்தது. முதுமை வராமலும், மரணம் இன்றியும், வியாதி அண்டாமலும் இருக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இவ்வாறு யோசித்து யோசித்து, ஒரு எண்ணம் அவர்கள் மனதில் உருப்பெற்றது.ஸாகரத்தைக் கடைந்து ரஸம் எடுத்து கிடைத்தால் சாப்பிட்டு பார்க்கலாமே.இந்த எண்ணத்தை உடனே செயல் படுத்த முனைந்தனர். வாசுகியை கயிறாகவும், மந்தர மலையை மத்தாகவும் கொண்டு பாற் கடலைக் கடைய ஆரம்பித்தனர். ஆயிரம் வருஷங்கள் கடைந்த பின் ஆயுர்வேதமே உருக் கொண்டது போல ஒரு மனிதன், கையில் கமண்டலுவும், தண்டமும் கொண்டு, மிகத் தார்மீகனாகத் தோன்றினான்.இந்த தன்வந்திரிக்கு முன், நீரைக் கடைவதால் உண்டான ரஸத்தில் இருந்து அப்ஸர (அப்பு-தண்ணீர், ரஸ மாற்றிப் போட்டால்ஸர, அப்ஸர) ஸ்த்ரீகள் உண்டாயினர். ஆறு கோடி உத்தமமான ஸ்த்ரீகள் இப்படித் தோன்றினர்.இவர்களுக்கு பரிசாரிக (வேலையாட்கள்) என்று கணக்கில்லாமல் கூட்டம் கூட்டமாக வரவும், தேவர்களும், தானவர்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. யாருமே ஏற்றுக் கொள்ளாததால், தங்கள் தனித் தன்மையை இழந்து சாதாரண ஸ்த்ரீகள் போல் ஆனார்கள். வருணனுடைய மகளான வாருணீ, இதிலிருந்துஉண்டானவள் தன்னை ஏற்றுக் கொள்ளும் கணவனைத் தேடினாள். திதியின் புத்திரர்கள் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. குற்றமற்ற அவளை அதிதியின் புத்திரர்கள் ஏற்றுக் கொண்டனர். இதன் பின் அசுரர்கள் தை3த்யர்கள் என்றும், சுரர்கள் அதிதி புத்திரர்கள் என்றும் ஆயிற்று. வாருணி கிடைத்ததிலிருந்து சுரர்கள் மனம் மகிழ்ந்தவர்களாகவும், திருப்தியுடையவர்களாகவும் ஆனார்கள். உச்சைஸ்ரவஸ் என்ற சிறந்த குதிரையும், கௌஸ்துபம் என்ற மணி ரத்னமும் அந்த சமயம் தோன்றின. நரஸ்ரேஷ்ட, அதன் பின் அமுதமும் தோன்றியது. இந்த அமுதத்தை பெற சண்டையும், அதன் பலனாகமிகப் பெரிய குலநாசமும் உண்டாயிற்று.அதி3தி புத்திரர்கள், தி3தி புத்திரர்களை அடித்தனர். ஒரே இடத்தில் அசுரர்கள் ராக்ஷஸர்களோடு வந்து சேர்ந்தனர். மூவுலகையும் கலக்கியபடி யுத்தம் நடந்தது. எல்லாமே அழிந்து போய்விடும் என்ற நிலையில் விஷ்ணு வந்தார். மகா பலசாலியான அவர், மாயாமயமான மோகினீ ரூபத்தை எடுத்துக் கொண்டு, அமுதத்தை அபகரித்துச் சென்று விட்டார். ப்ரப4விஷ்ணுவான விஷ்ணுவை எதிர்த்து நின்றவர்கள் நசுக்கப் பட்டனர். ப்ரத்யக்ஷமாய், புருஷோத்தமனான விஷ்ணுவைக் கண்டு கொண்ட வீரர்களான அதிதி புத்திரர்கள், திதி புத்திரர்களைக் கொன்று குவித்தனர்.தைத்யர்களுக்கும், ஆதித்யர்களுக்கும் நடந்த கோரமான யுத்தத்தில், திதி புத்திரர்களை அழித்து, ராஜ்யத்தையும் அடைந்து புரந்திரனான இந்திரன், ரிஷி கணங்களுடனும், சாரணர்களுடனும் கூடி மகிழ்ச்சியோடு ஆண்டு வந்தான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், அம்ருதோத்பத்திஎன்றநாற்பத்துஐந்தாவது அத்தியாயம்)

 

 

அத்தியாயம் 46 தி3தி கர்ப்ப பேதம் (திதியின் கர்ப்பத்தை அழித்தல்)

 

தன் புத்திரர்கள் கொல்லப் பட்டதால் திதி மிகவும் துக்கம் அடைந்தாள். கணவனான மாரீசனை வேண்டிக் கொண்டாள்.என் பிள்ளைகள் அனைவரையும் இழந்து விட்டேன். உன் புத்திரர்கள் தான் அவர்களைக் கொன்றனர்.அதனால் இந்திரனைக் கொல்லக் கூடிய ஒரு பிள்ளையை வேண்டுகிறேன். நீண்ட நாளானாலும் தவம் செய்து நான் ஒரு பிள்ளையைப்பெற வேண்டும் அவன் இந்திரனைக் கொல்ல வேண்டும். எனக்கு இப்படி ஒரு பிள்ளை பிறக்க அனுக்ரஹம் செய்யுங்கள். இவ்வாறு அவள் சொன்னதைக் கேட்டு மரீசி புத்திரரான கஸ்யபரும் அப்படியே ஆகட்டும் என்று அனுக்ரஹிக்க அவளும் கர்ப்பம் தரித்தாள். சுசியாக தவம் செய்வாயாக என்று சொல்லி ஆயிரம் வருஷ முடிவில் நீ -சக்ர ஹந்தாரம்- (இந்திரனைக் கொல்லக் கூடிய ) பிள்ளையைப் பெறுவாய். ஆனால் இந்த ஆயிரம் வருஷமும் நீ தவ நிலை கெடாமல், நியமம் தவறாமல், விரதங்களை அனுஷ்டித்து வரவேண்டும். அப்பொழுது என் மகனை, மூவுலகுக்கும் நாயகனாக இருக்கக்கூடிய, இந்திரனை ஜயிக்கக்கூடியபிள்ளையைப்பெறுவாய்என்று சொல்லி அவள் கண்ணீரைத் துடைத்து சமாதானம் செய்து மங்களம் உண்டாகுக என்று ஆசிர்வதித்து தான் தவம் செய்ய கிளம்பி விட்டார். அவர்  வெளியே சென்றதும், திதியும் குசப்லவம் என்ற இடத்திற்குச் சென்று மகிழ்ச்சியுடன் தவம் செய்ய ஆரம்பித்தாள். உக்ரமாக அவள் தவம் செய்து கொண்டிருந்த காலத்தில், நல்ல குணவான் போல இந்திரன் வந்து தவம் செய்யும் அவளுக்கு பணிவிடைகள் செய்து வந்தான். அக்னி, தர்ப்பை, விறகு, ஜலம், பழங்கள், கிழங்குகள் இவற்றைக் கொண்டு வந்து தந்தான். இது தவிர தேவையானதைக் கேட்டதும் கொண்டு வந்து தந்தான். அவள் சிரமம் தீர பல விதமாக உபசாரம் செய்தான். ஆயிரம் வருஷங்கள் முடிய பத்து நாட்களே இருக்கும் பொழுது, திதி அவனிடம் சொன்னாள்.தவம் செய்தபடியே ஆயிரம் வருஷங்கள் ஓடி விட்டன. சில நாட்களே பாக்கி. நீ உன் சகோதரனைக் காண்பாய். ஜயத்தை விரும்பும் அவனை,உன் காரணமாகவே தாங்குகிறேன். மூவுலகும் வெற்றி கொள்ளப் போகும் என் புத்திரர்களுடன் கூட கவலையின்றி அனுபவித்து இருப்பாய்.நான் யாசித்தவுடன் மகாத்மாவான உன் தகப்பனார், ஆயிரம் வருஷ முடிவில் எனக்கு பிள்ளை பிறக்கும் என்று வரம் தந்தார். இவ்வாறு இந்திரனிடம் சொன்ன திதி, மத்யான்ன வேளையில், நித்திரை கண்களைச் சுழற்ற, பாதங்களில் தலை படும் படி, தூங்கி விட்டாள். பாதத்தில் தலை பட தூங்கும் அவளை, சுசி-ஆசாரம், ஆசாரத்திலிருந்து வழுவியவளாகக் கண்டு இந்திரன் சிரித்தான். மகிழ்ந்தான். சரீர விவரத்தில் நுழைந்து கர்ப்பத்தை ஏழாக துண்டித்தான். வஜ்ரத்தால் அடித்து துண்டாக்கப் பட்டவுடன் கர்ப்பத்திலிருந்த குழந்தை அழுதது. உடனே திதி விழித்துக் கொண்டாள். அழாதே, அழாதே என்று இந்திரன் கர்ப்பத்தைப் பார்த்துச் சொன்னான்.சொல்லிக்கொண்டே மேலும் அழும் திதி கர்ப்பத்தை அடித்தான். கொல்லாதே, கொல்லாதே என்று திதி கூக்குரலிட, தாயின் வார்த்தைக்கு மதிப்பு தருபவனாக இந்திரன் நிறுத்தினான். தானும் கீழே குதித்தான். வஜ்ரத்தை கையில் வைத்தபடியே, கை கூப்பியபடி, திதியிடம் இந்திரன் சொன்னான். அசுசியாகத் தூங்கினாய் தேவி, நான் அந்த சமயத்தை பயன் படுத்திக் கொண்டு, யுத்தத்தில் இந்திரனைக் கொல்லக் கூடிய புத்திரன் என்று நீ வரம் கேட்டு, பெற போகும் பிள்ளையைக் கலைத்தேன். அதனால் என்னை மன்னித்து விடு என்றான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில்,திதி கர்ப்ப பேதம் என்றநாற்பத்துஆறாவது அத்தியாயம்)

 

 

அத்தியாயம் 47 விசாலா கமனம்.

 

தன் கர்ப்பம் ஏழாக துண்டிக்கப்பட்டதை அறிந்து திதி மிகவும் துக்கம் அடைந்தாள். எதிர்க்க முடியாத வீரனான ஸஹஸ்ராக்ஷனைபார்த்து குரல் தழதழக்க கூறினாள். என் தவற்றினால், கர்ப்பத்திலிருந்த என் குழந்தை ஏழாக துண்டிக்கப்பட்டது. எதிரி பலசாலியாக இருந்தால் ஆரம்பத்திலேயே அழிப்பது உன் வழக்கம். அதனால், இதில் உன்னையும் குற்றம் சொல்லவில்லை. என் கர்பம் வீணாகக் கூடாது. அதனால் ஒன்று செய். வாயுவின் ஏழு வகைகளிலும் ஸ்தான பாலகர்களாக இவர்கள் இருக்கட்டும். காற்றை வாகனமாக கொண்டு உலகில் ஸஞ்சரிக்கட்டும். மாருதர்கள் என்ற பெயருடனும், திவ்யமான ரூபத்துடனும் இந்த என் பிள்ளைகள் பெயர் பெற்று விளங்கட்டும். ப்ரும்ம லோகம் போகட்டும். இந்திர லோகமும் போகட்டும். திவ்ய வாயு என்ற புகழுடன் உன் சாஸனப்படி திசைகளை பாலிக்கட்டும். என் குழந்தைகள், தேவர்களாக சஞ்சரிப்பார்கள். மாருதர்கள் என்று புகழ் பெறட்டும். ஸஹஸ்ராக்ஷனான புரந்தரன் இதைக் கேட்டு, கை கூப்பியவாறு, திதியிடம் சொன்னான். நீங்கள் சொன்னபடியே இவை நடக்கும் தாயே, சந்தேகமேயில்லை, உன் பிள்ளைகள் தேவர்களாக சஞ்சரிப்பார்கள். இவ்வாறு அவர்களுக்கு உறுதி சொல்லி தபோ வனத்தில் தாய் தந்தையர்களை விட்டு விட்டு த்ரித்வம் என்று சொல்லப்படும் ஊருக்குச் சென்றான் என்பதாக நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். காகுத்ஸா |இந்த தேசம் தான் அது. முன்பு இந்திரன் வசித்த இடம்.அலம்புஸா என்ற ஸ்திரீயிடம், பிறந்த விசாலன் என்று அரசன் இங்கு இருந்து இதை நிர்மாணித்ததால், விசாலா என்று பெயர் பெற்றது. இந்த விசாலனுடைய மகன் ஹேம சந்திரன் என்பவன், அவனுக்குப் பிறகு சுசந்திரன், சுசந்திரன் மகன் துர்ம்ராஸ்வன், அவன் மகன், ஸ்ருஞ்சயன், அவன் பிள்ளை ஸஹதேவன். ஸஹதேவன் நல்ல பிரதாபம் உடையவன். இவன் மகன் தான் தார்மிகனான குஸாஸ்வன். குஸாஸ்வனுக்கு ஸோமதத்தன் என்ற பிள்ளை. ஸோமதத்தனின் மகன் காகுத்ஸன் என்று புகழ் பெற்று விளங்கினான். அவன் பிள்ளை தான் தற் சமயம் இந்த புரியை ஆளும் சுமதி என்ற அரசன். இக்ஷ்வாகுவின் பிரஸாதத்தால், இந்த வைசாலிகா நகரைச் சேர்ந்த அரசர்கள் நல்ல தர்ம சிந்தனையோடு, தீர்காயுசுடன், வீரர்களாக, மகாத்மாக்களாக இருக்கிறார்கள். இன்று இரவு இங்கு சுகமாக இருந்து விட்டு, நாளைக் காலை நாம் ஜனக ராஜாவை சந்திப்போம். சுமதியும், விஸ்வாமித்திரர் வந்திருப்பதையறிந்து, எதிர் கொண்டு அழைக்க வந்து சேர்ந்தான். விஸ்வாமித்திர முனிவரிடம், உபாத்யாயர்களுடனும், பந்துக்களுடனும், தக்க மரியாதை சன்மானங்கள் செய்து, கை கூப்பியவாறு, குசலம் விசாரித்தார். தன்யனானேன். உங்கள் அனுக்ரஹம் கிடைத்தது. முனிவர் வந்த விஷயம் அறிந்து வந்த எனக்கு தரிசனமும் கிடைத்தது. என் பாக்கியம் என்று சொன்னான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பாலகாண்டத்தில், விசாலாகமனம், என்ற நாற்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 48 சக்ர அஹல்யா சாபம் (இந்திரன் அகல்யை, இவர்களை சபித்தல்)

 

ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த பின், சுமதி என்ற அந்த அரசன் விஸ்வாமித்திர முனிவரிடம் -இந்த குமாரர்கள், உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும், தேவர்களுக்கு சமமான பராக்ரமம் உடையவர்களாக, யானயும் சிங்கமும் நடப்பது போல நடையும், வீரர்களாக, சார்தூலம், ரிஷபம் போன்ற காம்பீர்யம் உடையவர்களாக, பத்3மபத்ரம் போன்ற விசாலமான கண்களையுடையவர்களாக, கத்தியும், வில்லும், அம்புராத்தூணியும் ஏந்தி, அஸ்வினி குமாரர்கள் போன்ற அழகுடையவர்களாக, இப்பொழுது தான் இளமையடைந்தவர்களாகத் தெரிகிறார்கள்.தேவ லோகத்திலிருந்து  அமரர்கள் யதேச்சையாக பூமிக்கு வந்தவர்கள் போல, நடந்து இந்த இடம் வந்து சேர்ந்திருக்கிறார்கள். ஏன்? என்ன காரியம்? முனிவரே, இந்த தேசமே இவர்கள் வரவால் அழகு பெறுகிறது. ஆகாயத்தை சந்திர சூரியர்கள் அலங்கரிப்பதுபோல, இந்த பூமி இவர்களால் பிரகாசம் பெறுகிறது.பிரமாண, இங்கித, நடை இவைகளினால், ஒருவருக்கொருவர் சமமாக இருக்கிறார்கள். இவ்வளவு சிரமமான வழியில் நடந்து இங்கு வந்திருக்கிறார்கள். நரஸ்ரேஷ்டர்களான இவர்கள் என்ன காரியத்திற்காக இந்த கஷ்டத்தை மேற்க் கொண்டுள்ளனர்?  நல்ல ஆயுதங்களும் ஏந்தி, வீரர்களாகத் தோற்றம் தருகிறார்கள், முனிவரே விவரமாக சொல்லுங்கள்- என்றார். அரசன் சுமதி இவ்வாறு கேட்டவுடன், விஸ்வாமித்திர முனிவர் பதில் சொன்னார். நடந்தபடி அப்படியே சொன்னார். அயோத்தி அரசனின் குமாரர்கள், ராஜா தசரதனின் மைந்தர்கள், என்னுடைய யாகம் பூர்த்தி அடைவதற்காக ராம, லக்ஷ்மணர்களான இவர்கள் வந்தார்கள். இதைக் கேட்டு அரசன் மிக மகிழ்ந்தான். எனக்கு இன்று அதிதியாக தசரத குமாரர்கள் வந்திருக்கிறார்கள். ரொம்ப விசேஷம் என்று மகிழ்ந்து அவர்களுக்கு உபசாரங்கள், சத்காரங்கள் செய்து கொண்டாடினான். மகா பலசாலிகள் என்று இருவரையும் வாழ்த்தினான். இப்படி அரசனின் தனிப் பட்ட உயர்ந்த அதிதி சத்காரத்தை பெற்ற இரு ராஜ குமாரர்களும் அன்று இரவு அங்கேயே தூங்கி மறு நாள் மிதிலையை நோக்கி புறப்பட்டார்கள். முனிவர்கள் மிதிலையைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தார்கள். சாது, சாது, நன்று, நன்று என்று மிதிலையைப் பார்த்து பார்த்து ஆனந்தித்தார்கள். மிதிலையின்  வெளியே அசிரமத்தைக் கண்டு ராமர், பழமையானதும், ஜன சஞ்சாரம் அற்றதுமான அழகாக இருந்த உபவனத்தைக் கண்டு முனிவரிடம்ஏயாரோ பெரியவர்கள் அசிரமம் போலத் தெரிகிறது. ஆனால் இங்கு முனிவர்கள் யாருமே இல்லையே. ப்ரும்மன், இது முன்னால் யாருடைய ஆசிரமமாக இருந்தது? – எனவும், அழகிய வாக்கு உடைய முனிவரும், இந்த கேள்விக்குத் தக்க பதில் சொல்ல ஆரம்பித்தார்.–ஹந்த- (பரிதாபத்தை  வெளிப்படுத்த உபயோகிக்கும் சொல்) சொல்லுகிறேன் கேள், ராகவாஸ்ரீ முழுவதும் விவரமாக கேள். ஏன் இந்த ஆசிரமம், மகாத்மாவான ஒருவரால், கோபத்துடன் சபிக்கப் பட்டது என்பதைக் கேள். இது கௌதமர் என்ற முனிவரின் ஆசிரமாக இருந்தது. தேவர்களும் கண்டு மயங்கும்படி மிக நன்றாக பராமரிக்கப் பட்டு வந்தது. அகல்யாவுடன் இங்கு வசித்து தவம் செய்து வந்தார் முனிவர். பல வருஷங்கள் கழிந்தன. சசீபதியான இந்திரன் ஒரு நாள், முனிவர் வெகு தூரம் போய் இருந்தபோது, முனி வேஷத்துடன் வந்து அகல்யாவிடம் -பெண்ணே, அகாலமானாலும் வா- என்றழைத்தான். முனிவேஷத்தில் வந்திருப்பவன் ஸஹஸ்ராக்ஷன் என்று அறிந்திருந்தும், வந்திருப்பவன் தேவ ராஜன் என்ற குதூகலத்தினால் இணங்கினாள். சிறிது நேரம் சங்கமித்து இருந்த பின், சீக்கிரம் போ, தன்னையும், என்னையும் எப்பொழுதும் காப்பாற்றுவாயாக என்று சொல்லி அவசரப்படுத்தினாள். சிரித்துக் கொண்டே இந்திரன் அகல்யையிடம் –அழகியே- நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன், இதோ போகிறேன்- என்று சொல்லி வேகமாக அந்த குடிசையிலிருந்து பர பரப்புடன்  வெளியேறினான். வாயிலிலேயே கௌதமரைச் சந்தித்து விட்டான்.தேவ, தானவர்கள் சேர்ந்து கூட செய்ய முடியாத அளவு தவம் செய்து ஆன்ம பலம் பெற்ற அந்த முனிவரை, அப்பொழுது தான் ஸ்நானம் செய்து நனைந்த ஆடைகளுடன், அக்னி ஜ்வாலை கொழுந்து விட்டு எரிவது போல தேஜஸுடன் கூடிய முனிவரை, கையில், குசமும், சமித்தும் வைத்திருந்த முனிவரைக் கண்டு தேவராஜன் நடு நடுங்கி, முகம்  வெளியேறினான். முனி வேஷம் தரித்திருந்த சஹஸ்ராக்ஷனைப் பார்தது துர் நடத்தையுள்ள அவனை, நன்னடத்தையே உருவாக இருந்த முனிவர் கோபத்துடன் சபித்து விட்டார். என் வேஷம் போட்டுக் கொண்டு, செய்யக் கூடாத காரியத்தை செய்திருக்கிறாய். இனி என்றுமே இந்த செயலை செய்ய முடியாதபடி பயனற்றவனாக ஆவாய் என்றார். கௌதமர் இவ்வாறு சபித்தவுடன், இந்திரனுடைய ஆண் உறுப்புகள் கீழே விழுந்தன. அவனை இவ்வாறு சபித்த முனிவர் அகல்யையையும் சபித்தார். பல ஆயிரம் வருஷங்கள் இங்கு வசிப்பாய். வாயுவை சாப்பிட்டுக் கொண்டு, ஆகாரமின்றி தவம் செய்து கொண்டு இந்த தூசியில் கிடப்பாய். யார்கண்ணிலும் படாமல் இந்த ஆசிரமத்தில் வசிப்பாய். தசரதன் மகனான ராமர் இந்த கோரமான வனத்தில் அடியெடுத்து வைக்கும் பொழுது, பாவம் நீங்கியவளாக ஆவாய். கெட்ட நடத்தையுடையவளே, லோபமும், மோகமும் நீங்கி என்று அவனுக்கு அதிதி சத்காரம் செய்கிறாயோ, அன்று என் எதிரில் சுய உருவை அடைவாய்- இவ்வாறு தவறான வழியில் சென்ற அவளிடம் கத்தி விட்டு, சித்த சாரணர்கள் வந்துவணங்கும் பெருமை பெற்றிருந்த இந்த ஆசிரமத்தை விட்டு, இமய மலை சாரலுக்குச் சென்று தவம் செய்ய ஆரம்பித்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், சக்ர அஹல்யா சாபோ என்ற நாற்பத்து எட்டாவது அத்தியாயம்)

 

அத்தியாயம் 49 அஹல்யா சாப மோக்ஷம் (அகல்யை சாபத்திலிருந்து விடுபடுதல்)

 

இவ்வாறு உபயோகமற்றவனாக ஆன இந்திரன், அக்னி முதலிய தேவ கணங்களிடம் சென்றான். பயத்தால்  வெளிறிய முகத்துடன், கூட்டமாக ரிஷிகள், சாரணர்கள் நிரம்பிய சபையில்,கௌதம முனிவர் தவம் செய்வதை இடையூறு செய்ததால் மகாத்மா கோபம் கொண்டு என்னையும் இவ்வாறு சபித்து, அவளையும் நிராகரித்து விட்டார். சாபம் கொடுத்ததால் அவரது தவ வலிமையில் பெரும் பகுதி என்னால் அழிக்கப் பட்டது. இதுவும் தேவ காரியம் தானே. என்னை மறுபடியும் பழையபடி செய்ய வேண்டும் என்று ரிஷி கணங்களையும், சாரணர்களுடன், சிறந்த தேவர்கள் நிறைந்த சபையில் கேட்டான். அவர்கள் பித்ரு தேவதைகளை சென்றடைந்து, இதற்குப் பரிகாரம் என்ன என்று ஆலோசித்தனர். மருத்கணங்களும் உடன் வர அக்னியை வேண்டினர். நடந்ததைக் கேட்டு, -முதலில் யோசியாமல் மோகத்தினால் ரிஷி பத்னியை கெடுத்துவிட்டு, இந்த இந்திரன் முனி சாபத்தினால் அந்த க்ஷணமே தன் ஆண்மையை இழந்த பின் இப்பொழுது தேவர்களை கோபித்துக் கொள்கிறான்.இதோ இந்த மேஷம் முழுவதுமாக இருக்கிறது. இந்திரனுக்கு இல்லை. இதனுடைய ஆண் குறியை எடுத்து இந்திரனுக்கு பொருத்தி விடுங்கள். இந்த மேஷத்தை பலனில்லாமல் செய்வதையும் ஈ.டு செய்வோம்.அதற்கு தகுந்த நஷ்ட ஈ.டு செய்யுங்கள்- என்று அக்னி சொல்ல பித்ரு தேவதைகள் அவ்வாறே செய்து, அன்றிலிருந்து வேறு பிரயோஜனம் அற்ற மேஷத்தை எதோ விதத்தில் உபயோகம் உள்ளதாகச் செய்ய வேண்டும் என்பதற்காகஅதை சாப்பிடுகிறார்கள். அது கிடக்கட்டும், நீ வா ராமா, இந்த ஆசிரமம் புண்யகாரியங்கள் செய்த கௌதமருடையது. அகல்யாவை விமோசனம் செய். சுபாவமாக நல்லவளான அவள் இங்கு தேவ ரூபமாக மறைந்து நிற்கிறாள். லக்ஷ்மணனுடன் ராமரும், விஸ்வாமித்திரர் சொன்னதைக் கேட்டு, அவரை பின்தொடர்ந்து ஆசிரமத்தில் நுழைந்தனர். தேவ, அசுரர்களுக்கும் தென்படாமல், தவத்தினால்  வெளிப்பட்ட சோபையுடன் விளங்கிய அவளைக் கண்டனர்.ப்ரும்மாவே, ப்ரயத்னத்துடன் ச்ருஷ்டி செய்தது போன்ற தெய்வீக அழகுடையவளை, மாயமோ எனும் படியான தோற்றமும், பனித் துளிகளால் மறைக்கப் பட்ட பூர்ண சந்திரனோ, எனும் படியும், கொழுந்து விட்டெரியும் அக்னி புகையினால் மறைக்கப்பட்டுள்ளதோ எனும் படியும், பாதி ஆகாயத்தில் எட்ட முடியாத தகிக்கும் சூரிய பிரபையைப் போலவும், யாராலும் காண முடியுயாதபடி கௌதமர் சாபம் அவளை மறைத்து இருந்தது, ராமரைக் கண்டதும் விலகியது. மகானான முனி சாபத்தால், உலகில் மட்டுமல்ல, மூவுலகிலும் அவளை யாரும் காண முடியவில்லை. சாபத்தின்முடிவு வந்ததால் அவர்கள் கண்களுக்குத் தென் பட்டாள். ராகவர்கள் இருவரும் அவள் பாதத்தில் விழுந்து வணங்கினர். கௌதம வசனத்தை நினைவு வைத்துக் கொண்டு அவர்கள் இருவரையும்வரவேற்று பாத்யம் அர்க்யம் கொடுத்து அதிதி சத்காரம் செய்தாள். காகுத்ஸர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.தேவ துந்துபி வாத்யங்களோடு புஷ்ப வ்ருஷ்டியும் உண்டாயிற்று. கந்தர்வ அப்ஸர ஸ்த்ரீகளும் வெகுவாக உத்சாகத்துடன் கொண்டாடினர். சாது, சாது என்று தேவதைகள் அவளை வாழ்த்தினர். தவ பலத்தினால் சுத்தமானவளை கௌதமரும் ஏற்றுக் கொண்டார். ராமரை வரவேற்று, விசேஷமாக உபசரித்தார். இதன் பின் மிதிலைக்குச் சென்றார்கள்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில்,அஹல்யா சாப மோக்ஷம் என்ற நாற்பத்து ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 50ஜனக சமாக3மம்(ஜனகரை சந்தித்தல்)

 

இதன் பின் முதலில் வடக்கு நோக்கி சிறிது தூரம் சென்ற பின், விஸ்வாமித்திரர், ராம, லக்ஷ்மணர்களுடன் யக்ஞ வாடம் வந்து சேர்ந்தார். ராமர், விஸ்வாமித்திரரைப் பார்த்து-சாத்வீகமான யக்ஞ சம்ருத்தி, யாகத்தின் நிறைந்த தன்மை, இந்த ஜனகருடைய யாக சாலையில் விளங்குகிறது.பல தேசங்களிலிருந்தும்ஆயிரக் கணக்கானவர்கள் வந்திருக்கிறார்கள். பல ப்ராம்மணர்கள், வேதத்தை அத்யயனம் செய்தவர்கள், வந்திருப்பதும் தெரிகிறது. பல வண்டிச் சக்கர சுவடுகள், யக்ஞ வாடிகள் இருக்கும் இடம் நோக்கித் தென் படுகின்றன., இங்கு நாம் எங்கு இருக்கப் போகிறோம்? நமக்கு இருக்க இடம் தேடலாம்- என்றார்.ஆங்காங்கு நீர் நிலைகளுடன் அமைக்கப்பட்டிருந்த அந்த தேசத்தினுள் மூவரும் நுழைந்தனர். இதற்குள், விஸ்வாமித்திரர் வந்திருப்பதை அறிந்து அரசன் புரோஹிதரான சதானந்தரையும் உடன் அழைத்துக் கொண்டு முனிவரை வரவேற்க வந்து சேர்ந்தார். எதிர் கொண்டு சென்று வினயத்துடன், மகாத்மாவான ஜனக ராஜா தானேரித்விக்-வேதம் அறிந்தவர். அவசரமாக அர்க்யத்தை எடுத்துக் கொண்டு விஸ்வாமித்திரருக்கு மந்திரங்கள் சொல்லி, கையில் கொடுத்தார். ஜனகருடைய இந்த உபசாரத்தை ஏற்று, அரசனை குசலம் விசாரித்து, யக்ஞம் நல்ல படியாக நடக்கிறதா என்றும் விசாரித்தார். அவரும், முனியை அதே போல குசலம் விசாரித்து, உபாத்யாயர்களுடனும், புரோஹிதர்களையும் வரிசையாக அறிமுகப் படுத்தினார். மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்களும் முனிவரை வரவேற்றனர். பிறகு, ராஜா ஜனகர் முனிவரை, கை கூப்பியவாறு வேண்டினான்.இதோ ஆசனத்தில் தாங்கள் அமருங்கள். இந்த முனி புங்கவர்களும் அமரட்டும். ஜனகருடைய வார்த்தையைக் கேட்டு முனிவர் அமர்ந்தார். ஜனகருடைய புரோஹிதர்களும், மந்திரிகளும், உசிதமான ஆசனங்களில் எதிரில் அமர்ந்தனர். பின் அரசன் விஸ்வாமித்திரரைப் பார்த்துசொன்னார்.இன்று என்னுடைய யாக சாலை பாக்கியம் செய்தது,. தேவதைகளின் கிருபையால் தங்கள் தரிசனத்தால், எனக்கு யாகத்தின் பலனே கிடைத்து விட்டது. த4ன்யனானேன். அனுக்ரஹம் பெற்றேன். நீங்கள் முனிவர் கூட்டத்தோடு யாக சாலைக்கு வந்தது மிகப் பெரிய அனுக்ரஹம். இன்னம் பன்னிரண்டு நாள் மீதம் இருப்பதாக பெரியவர்கள் சொல்கிறார்கள். யாகத்தில் பங்கு கொள்பவர்களை கௌசிகரே, நீங்கள் வந்து பார்க்க வேண்டும். முகம் மலர, முனிவரிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தவர் மேலும் கேட்டார். இந்த குமாரர்கள், உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். தேவர்களுக்கு சமமான பராக்ரமம் உடையவர்கள், யானையையும், சிங்கத்தையும் போன்ற நடையழகு உடையவர்கள், சார்தூல, ரிஷபம் போன்ற கம்பீரமும், பத்ம பத்ரம் போன்ற விசாலமான கண்களும், கத்தியும் வில்லும், தோளில் அம்புறாத்தூணியுமாக, அஸ்வினி குமாரர்கள் போல சிறந்த ரூபமும், இப்பொழுதுதான் இளமையை அடைந்தது போன்றத் தோற்றமும், அமரர்கள், தேவலோகத்திலிருந்து யதேச்சையாக பூமிக்கு வந்தவர்கள் போலவும் நடந்து இங்கு வந்தது என்ன காரணத்திற்காகவோ?யாருடைய குழந்தைகள்? நல்ல ஆயுதங்களையும் வைத்திருக்கிறார்கள். இவர்கள் ஆகாயத்தை சந்திர, சூரியர்கள் அலங்கரிப்பதுபோல இந்த பூமியை அலங்கரிக்க வந்துள்ளார்கள். ஒருவருக்கொருவர் சமமான பிரமாண, இங்கித நடையுடை பாவனை உள்ளவர்கள். இந்த கரடு முரடான சிரமமான பாதையில் நடந்து வந்திருக்கிறார்களே, எங்களுடைய குலத்தையே ரக்ஷிக்க இங்கு வந்திருக்கிறார்களோ. காகபக்ஷம் (தலை அலங்காரம்) தரித்துள்ள இந்த சிறுவர்களை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். – என்றார். அவருடைய ஆர்வத்தை அறிந்து விஸ்வாமித்திரரும், சொல்ல ஆரம்பித்தார். தசரத ராஜாவின் குழந்தைகள். என்று ஆரம்பித்து, சித்தாஸ்ரமத்தில் வசித்ததையும், ராக்ஷஸ வதம் செய்ததையும், விசால நகரத்தைக் கண்டதும், அகல்யையைப் பார்த்து கௌதமரைச் சந்தித்ததையும், மகா தனுஷ் பற்றி கேள்விப் பட்டு, அதைக் கண்டு தெரிந்து கொள்ளூம் பொருட்டு மிதிலை வந்ததையும் ஜனகருக்கு விவரமாக சொல்லி நிறுத்தினார். 

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ஜனக சமாக3மோ என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 51 விஸ்வாமித்திரர் விருத்தாந்தம் (விஸ்வாமித்திரரின் கதை)

 

விஸ்வாமித்திரருடைய வார்த்தைகளைக் கேட்டு சதானந்தர் மிகவும் மகிழ்ந்தார். உடல் புல்லரிக்க வணங்கி நின்ற அவர் கௌதம முனிவரின் மூத்த மகன். மகா தேஜஸ்வியும், தவ வலிமையும் கொண்டவர். ராமரைப் பார்த்தே ஆச்சர்யம் அடைந்தார். ராஜகுமாரர்களை சுகமான ஆசனங்களில் அமரச் செய்த பின், விஸ்வாமித்திரரிடம் பேச்சைத் தொடர்ந்தார். புகழ் வாய்ந்த என் தாயார், பல நாட்களாக தவம் அனுபவித்து வருகிறாளே, அவளை இந்த ராஜ குமாரர்களுக்கு காட்டினீர்களா? முனி புங்கவரே,என் தாயார் எப்படி இருக்கிறாள்? காட்டில் இருந்தாலும், கிடைத்த பொருட்களைக் கொண்டு,சரீரம் உடைய அனைவருமே போற்றி புகழத் தகுந்த இந்த ராஜ குமாரர்களுக்கு செய்ய வேண்டிய அதிதி சத்காரங்களைச் செய்தாளா? முன் நடந்தது, நடந்தபடி ராமருக்குத் தெரிவிக்கப்பட்டதா? விதியினால் நடந்த தவறு,என் தாய் மேல் அனாவசியமாக குற்றம் சுமத்தப் பட்டது.என் தாய், தந்தை கௌதமருடன் இணைந்தாளா? ராம தரிசனத்திற்குப் பிறகு சாப விமோசனம் கிடைத்திருக்க வேண்டுமே? என் தந்தை கௌதமர் ராமரை சரியாக உபசரித்தாரா? அவருடைய மரியாதையை ஏற்றுக் கொண்டு தானே இங்கு வந்திருக்கிறீர்கள்? ராமன் வணங்கிய பொழுது, சாந்தமாக (கௌதம முனிவரான) என் தந்தை ஆசிர்வதித்தாரா?வார்த்தைகளை   தெளிவாக அறிந்தவரும், அதை பயன்படுத்துவதில் சமர்த்தருமான விஸ்வாமித்திரர் பதில் சொன்னார். எதுவுமே விடவில்லை முனிவரே,  (சதானந்தரே) நான் செய்ய வேண்டியதை செய்து விட்டேன். பா4ர்க3வருடன் ரேணுகா சேர்ந்தது போல் உன் தாயும் தந்தையும் சேர்ந்து விட்டனர். இதைக் கேட்டு சமாதானமடைந்த சதானந்தர், ராமரைப் பார்த்துச் சொன்னார். – உன் வரவு நல்வரவாகுக. நீ வந்ததே என் பாக்கியம். நர ஸ்ரேஷ்டனே, ராமா, நீ விஸ்வாமித்திரரை தொடர்ந்து வந்ததே விசேஷம். இந்த மகரிஷி தோல்வியே அறியாதவர். நினைத்துக் கூட பார்க்க முடியாத பல செயல்களைச் செய்தவர். ப்ரும்ம ரிஷி பட்டத்தை தன் முயற்சியால், தவ வலிமையால் பெற்றவர். இவரை அடைந்தவர்கள், தங்கள் விருப்பம் நிறைவேறாமல் போனதில்லை. உன்னை விட இந்த உலகில் பாக்கியசாலி வேறு யார் உண்டு? மகா தபஸ்வியான குசிக புத்திரர், உன்னை பாதுகாக்க இருக்கும் பொழுது, கவலையே இல்லை. இவருடைய பலம் என்ன என்பதை நான் சொல்கிறேன். என்ன நடந்தது என்று விவரமாக சொல்கிறேன் கேள். வெகு நாட்களாக இவர் அரசராக இருந்தார். சத்ருக்களை அழித்து, தர்மம் அறிந்தவரான இவர், கல்வியை கசடறக் கற்றுத் தேர்ந்தவராக, பிரஜைகள் நன்மையிலேயே கருத்துடையவராக இருந்தார்.பிரஜாபதியின் பிள்ளை குசன் என்பவர் அரசனாக இருந்தார். அவன் மகன் குசனாபன், தார்மீகனாக இருந்தார்குசனாபருடைய மகன் கா3தி4 என்று புகழ் பெற்றவர். கா3தி4யின் பிள்ளை தான் இந்த விஸ்வாமித்திரர் என்ற மகா முனி.விஸ்வாமித்திரர் ராஜ்யத்தை அடைந்து நியாயமாக ஆட்சி செய்து வந்தார். பல வருஷங்கள் அரசராக இருந்தார். ஒரு சமயம் இவர் சேனையையும்அழைத்துக்கொண்டு உலகை சுற்றி வரக் கிளம்பினார். நகரங்களையும் பல ராஜ்யங்களையும், நதிகளையும், மலைகளையும் கடந்து பல ஆசிரமங்களை தரிசித்துக் கொண்டு, வசிஷ்டருடைய ஆசிரமம் வந்து சேர்ந்தார். இந்த ஆசிரமம் பல விதமான மரங்கள் அடர்ந்து, பல விதமான மிருகங்களும், சித்தர்கள், சாரணர்கள் நடமாடும் இடமாகவும் இருந்தது.தேவர்கள், தானவர்கள், கந்தர்வ கின்னரர்கள், இவர்களால் அலங்காரமாக விளங்கியது.தவம் செய்வதில் கவனமாக அக்னியை பிரதி தினம் உபாசிப்பவர்கள் நிறைந்திருந்தது. இவர்களில் அனேகர் சித்தியடைந்த தபஸ்விகள். சிலர் நீர் மட்டுமே உணவாக கொள்பவர்கள். சிலர் வாயு மட்டுமே. சிலர் வாடிய இலை தழைகளை மட்டுமே உண்பவர். சிலர் பழங்களையும், கிழங்குகளையும் மட்டுமே ஆகாரமாக கொண்டனர். இப்படி கோபத்தை வென்றவர்களாகவும், இந்திரியங்களை வென்றவர்களாகவும், ரிஷிகள், ஜப ஹோம, பராயணம் செய்பவர் என்று பலரும் க்ருஹஸ்தாஸ்ரமத்தில் இருந்து கடமைகள் முடிந்து, வான ப்ரஸ்த ஆசிரமத்தில் இருந்தவர்களும் நிரம்பி கல கலவென்றிருந்தது. சாஷாத் ப்ரும்ம லோகமோ என்று வியக்கும்படி வசிஷ்டருடைய ஆசிரமம் இருந்தது. இதை, எப்பொழுதும் , எதிலும்வெற்றியே என்று இதுவரைவாழ்ந்து வந்திருந்த விஸ்வாமித்திரர், தன் மனதில் குறித்துக் கொண்டார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், விஸ்வாமித்திர விருத்தாந்தம்என்றஐம்பத்து ஓராவது அத்யாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 52 வசிஷ்டாதித்யம் (வசிஷ்டர் செய்த விருந்துபசாரம்)

 

வசிஷ்டரைக் கண்டதும் விஸ்வாமித்திரர் மிகவும் மகிழ்ச்சியோடு, ஜப தபங்கள் நிறைந்தவசிஷ்டரை விதிப்படி வணங்கி நிற்க, வசிஷ்டர்ஸ்வாகதம் என்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று, ஆஸனத்தில் அமரச் செய்த பின், வசிஷ்ட முனிவர், பழம், கிழங்கு வகைகள் கொடுத்து உபசரித்தார். சிறந்த அரசனான விஸ்வாமித்திரர், அவைகளை ஏற்றுக் கொண்டு, அக்னி ஹோத்திரம் செய்யும் சிஷ்யர்கள் சூழ நின்றிருந்த முனிவரிடம் குசலம் விசாரித்தார். மற்றும் அங்குள்ள மற்றவர்கள் நலமும் விசாரிக்க, வசிஷ்டரும் எல்லா இடத்திலும் நலமே என்று சொல்லி, ஆசனத்தில் சௌகர்யமாக அமர்ந்தபின் அரசனிடம், வசிஷ்டர் விசாரித்தார். ராஜன், நீ நலமா?தர்ம வழியில் ஜனங்களை திருப்தி செய்தபடி ராஜ்யத்தை ஆண்டு வருகிறாயா? நீ தர்மம் அறிந்தவன். ராஜ நீதி அறிந்தவன். அதனால் உன் ராஜ்யம் நியாயமாகத் தான் ஆளப்படும். வேலைக்காரர்கள் நிறைய இருக்கிறார்களா? உன் ஆணைப்படி நடக்கிறார்களா? சத்ருக்களை அழிப்பதில் சமர்த்தனே, எதிரிகளை அழித்து, எல்லோரையும் ஜெயித்து வந்தாயா? குற்றமற்றவனே, உன் புத்ர, பௌத்திரர்கள் நலமா? உன் சைன்யம், பொக்கிஷம், மித்திரர்கள், இவை நலமா? எல்லோரும் நலமே என்று அரசனும் பதில் அளித்தான். இருவரும் சந்தோஷமாக வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரம் மற்ற விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த பின், வசிஷ்ட முனிவர், அரசனைப் பார்த்து, சேனையுடன் கூட, எல்லோருக்கும் நான் ஆதித்யம், விருந்தோம்பலை செய்ய விரும்புகிறேன்.ஏதோ என்னால் முடிந்த அளவு, ஏற்றுக் கொள்ள வேண்டும். நீ அளவில்லாத பலம் உடையவன். நான் செய்யும் இந்த விருந்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ராஜன், நீ தேடிச் சென்று, அழைத்து வந்து உபசரிக்க வேண்டிய நல்ல அதிதி. இவ்வாறு அவர் சிரித்துக் கொண்டே சொல்லவும், விஸ்வாமித்திரரும், நீங்கள் இவ்வளவு தூரம் சொன்னதிலேயே ஆதித்யம் ஆகி விட்டது. ஆசிரமத்தில் உள்ள பழ, கிழங்குகளைக் கொண்டு உபசரித்தீர்கள். அதுவே போதும். பாத்3யம், ஆசமனீயம், உங்கள் தரிசனம் இவையே கிடைக்கப் பெறாதது கிடைத்ததே பாக்கியம். சிறந்த ஞானியே, உங்களைத் தேடி வந்து பூஜிக்க வேண்டியிருக்க, நீங்கள் உபசாரம் செய்து என்னை கௌரவப் படுத்தி இருக்கிறீர்கள். வணக்கம். நாங்கள் கிளம்புகிறோம். நண்பர்களாக, நட்பின் கண்ணோட்டத்தோடு, நான் சொல்வதை தவறாகக் கொள்ளாமல், அனுமதி தாருங்கள். இவ்வாறு சொன்ன அரசனை வசிஷ்டர் திரும்பவும் விருந்துக்கு அழைத்தார். தர்மாத்மாவான அவர், மேலும் மேலும் சொல்லி, வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார். சரி என்று சொல்லி விஸ்வாமித்திரரும் சம்மதித்தார். உங்கள் இஷ்டப் படியே ஆகட்டும் என்றார். உடனே வசிஷ்டர், சப3லே, வா, என்று அழைத்தார். (சப3லா என்ற பசு) இதோ நான் சொல்வதை கேள். பலத்துடன் (படையுடன் வந்திருக்கும், சுயமாக பலம் மிகுந்த என்று இரண்டு விதமாக பொருள்) வந்திருக்கும் இந்த அரசருக்கு, இவர் ராஜ ரிஷி , இவருக்கு விருந்து செய்து வைக்க ஆசைப் படுகிறேன். நல்ல ஆகாரம், நல்ல ருசியாக இருக்கும் படி செய். யாருக்கு எது, எப்படி பிடிக்குமோ, அதே போல அறு சுவை உணவு ஏற்பாடு செய். எனக்காக காமதேனுவான நீ ஏராளமாக ஏற்பாடு செய். நல்ல ரஸம், அன்னம், பானம், லேஹ்யம் சுவைத்து சாப்பிடும் வகைகள், இவற்றுடன் நிறைய அன்னமும் தயார் செய். சீக்கிரம்- என்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், வசிஷ்டாதித்யம் என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 53சப3லா நிஷ்க்ரய:

(சபலாவை தான் (விலை கொடுத்து) வாங்கிக் கொள்வதாக சொல்லுதல்)

 

சத்ருக்களை ஜயிக்கும் சக்தியுடைய ராமனே, வசிஷ்டர் இவ்வாறு சொன்னவுடன், காமதேனுவான சபலா, யாருக்கு எப்படி வேண்டுமோ, அது போல ஆகாராதிகளை கொண்டு வந்தது. கரும்பு, தேன், பொரி, மைரேயம் என்ற உயர்ந்த ரக தானிய வகைகள், குடிக்க பல வகையான பானங்கள், கடித்து சுவைத்து சாப்பிடக் கூடிய பலகார வகைகள், குறைவில்லாமல் சூடான சாதம்,இதன் அளவு மலையளவு கொட்டிக் கிடக்க, வடைகள், பல வித கலந்த சாத வகைகள், அறுசுவையோடு கூடிய பல விதமான ருசி மிகுந்த ரசங்கள், வர்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு வகைகள், பக்ஷணங்கள் ஆயிரக்கணக்காக இவை எல்லாம் மிகவும்திருப்தி வரும் வரை உண்டு களிக்கும் படி சைன்யம் கவனிக்கப்பட்டது. விஸ்வாமித்திர ராஜாவும் வயிறார உண்டவராக திருப்தியானார். அந்த:புர ஜனங்களோடு கூடிய ராஜா, பிராம்மண, புரோஹிதர்கள், மந்திரிகள், மந்திரிகளின் உதவியாளர்கள், வேலைக்காரர்கள் எல்லோருமே கௌரவிக்கப் பட்டனர். மிகவும் சந்தோஷமாக வசிஷ்டரிடம் சொன்னார். – ப்ரும்மன், நான் உங்களை உபசரிக்க வேண்டியது இருக்க, நீங்கள் என்னையும் என்னை சார்ந்தவர்களையும் மிகச் சிறப்பாக உபசரித்து விட்டீர்கள். அழகாக பேசுபவரே, நானும் என் விருப்பத்தை சொல்கிறேன். நூறாயிரம் பசுக்களை எடுத்துக் கொண்டு சப3லையை எனக்குத் தாருங்கள். ராஜ்யத்தில் எங்கே ரத்னம் இருந்தாலும், அது அரசனுக்கே உரியது. அது போல இந்த சப3லா ரத்னம் போன்றே விசேஷமானது, அதனால் அரசனான என்னிடம்ஒப்படையுங்கள் என்றார்.வசிஷ்டர் பதில் சொன்னார். ராஜன், நூறாயிரம் என்ன? நூறு கோடி கொடுத்தாலும் நான் சபலையைத் தர முடியாது. த4னமோ, வெள்ளியோ கொடுத்தாலும் முடியாது. இவளை நான் த்யாகம் செய்வது முறையல்ல. எதிரிகளை நாசம் செய்யும் பலம் பொருந்திய அரசனாக நீ இருந்த போதிலும், என்னிடமிருந்து இதைப் பிரிப்பது இயலாது. தன் மானம் உள்ளவனுக்கு கீர்த்தி போல இந்த சபலா என்னுடனேயே இருக்க வேண்டியவள். இவளிடம் ஹவ்யம் (நெய்), கவ்யம் (பித்ருக்களுக்கு தரப்படும் உணவு), ப்ராண யாத்ரா (உயிர் வாழத் தேவையான ஆதாரம்) இவை அடங்கியுள்ளது. அக்னிஹோத்ரம், பலி, ஹோமம் இவற்றையும், ஸ்வஹாகார, வஷட்கார, என்ற வித்யைகளும், இன்னும் பல விதமான வித்தைகளும் அடங்கியுள்ளன. சந்தேகமே இல்லை. என்னுடைய ஸர்வஸ்வம் (உடல், பொருள், ஆவி உள்ளிட்ட சகலமும்). சத்யமாக, எனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிக்கக்கூடியது இது தான். இது போன்ற பல காரணங்களால் சபலையை நான் தர முடியாது. வசிஷ்டர் இவ்வாறு சொல்லவும், விஸ்வாமித்திரர், திரும்பவும் தான் சொன்னதையே சொன்னார். தங்க முகப்படம் பூட்டிய, சுவர்ண அங்குசங்களுடன், அலங்கரிக்கப்பட்ட நாலாயிரம் யானைகள் தருகிறேன். பல வர்ணங்களில், வயது வித்யாசங்களில் உள்ள கோடிப் பசுக்களைத் தருகிறேன்.சபலையை எனக்குத் தாருங்கள். கேட்ட அளவு தங்கமோ, ரத்னங்களோ, அவ்வளவும் தருகிறேன். சபலையை எனக்குத் தாருங்கள். இவ்வளவு சொல்லியும் வசிஷ்டர் தர மாட்டேன், எப்படியும் தர மாட்டேன், ராஜன், இது தான் எனக்கு ரத்னம், இது தான் எனக்கு தனம், இது தான் எனக்கு எல்லாமே. இது தான் என் வாழ்வே. பௌர்ணமியோ,அமாவாஸ்யையோ, யக்ஞம், கிடைத்த தக்ஷிணைகள் எல்லாமே இது தான் ராஜன். பலவிதமான செயல்களும் இது தான். பேசிப் பயன் என்ன? சபலையைத் தர மாட்டேன்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், சபலா நிஷ்க்ரய:என்றஐம்பத்து  மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 54பப்லவாதி ஸ்ருஷ்டி (பப்லவர்களை உற்பத்தி செய்தல்)

 

காமதேனுவான சப3லையை, வசிஷ்ட முனிவர் தர மறுத்த பின், சப3லையை பலவந்தமாக விஸ்வாமித்திரர் இழுத்துச் செல்ல ஆரம்பித்தார். அரசனால் இழுத்துச் செல்லப் பட்ட சப3லை, வருத்ததுடன் மனதில் அழுதது.இந்த அரச சேவகர்கள் என்னை அபகரித்துக் கொண்டு போகும் போதும், வசிஷ்டர் ஏன் பேசாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்?இதனால் நான் வருந்துவது அவருக்குத் தெரியாதா?மகாத்மாவான அவருக்குத் தெரியாதா? நான் என்ன தவறு செய்தேன்? தார்மீகரான முனிவர், குற்றமற்ற என்னை, அவருக்கு இஷ்டமான என்னை, அதுவும் நானும் பக்தியுடன் அவருடன் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, கை விட்டு விட்டாரா? திரும்பத் திரும்ப பெரு மூச்சு விட்டுக் கொண்டு, இது போன்ற சிந்தனைகள் அலைக்கழிக்க, நூற்றுக் கணக்கான அந்த சேவகர்களை கீழே தள்ளி, வாயு வேகமாக ஓடி வந்து, மகாத்மாவான வசிஷ்டரை அடைந்தது. பலமாக அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் வசிஷ்டர் முன் நின்று கொண்டு, மேக துந்துபிக்கு இணையான குரலில், இவ்வாறு சொன்னது. ப்ரும்மாவின் புத்திரனே, என்னை ஏன் கை விட்டாய்? உங்கள் வசம் உள்ள என்னை இந்த அரச சேவகர்கள் இழுத்துக் கொண்டு போகிறார்களே, எனவும், ப்ரும்ம ரிஷி, தன் சகோதரி போன்றவளை, துக்கத்துடன் ஹ்ருதயம் பிளந்து விடும் போல அழுபவளை, சமாதானப் படுத்தும் விதமாக சொன்னார். -நான் உன்னை கை விட மாட்டேன். சப3லே, நீ எந்தத் தவறும் செய்யவும் இல்லை. இந்த ராஜா பலசாலி. என்னிடமிருந்து உன்னை பலவந்தமாக இழுத்துச் சென்று விட நினைக்கிறான். என் பலத்துக்கு சமமான பலம் எதுவுமே இல்லை. விசேஷமாக இந்த அரசனின் பலம், இன்றுள்ளது, ஒன்றுமேயில்லை. பூமியை ஆளும் அரசன், க்ஷத்திரியன், பலசாலியான ராஜா, இதோ இந்த அக்ஷௌஹணி சேனை, யானை, குதிரை, ரதம் இவை நிறைந்தது, த்வஜத்துடன் கூடிய நடந்து செல்லும் வீரர்களும் உடன் வர, இவன் என்னை விட பலவானாக எண்ணுகிறான். -விசிஷ்டர் இவ்வாறு சொல்லவும் சப3லா, வினயமாக, எல்லையில்லாத பெருமை கொண்ட வசிஷ்டரிடம் –ப்ரும்மன், க்ஷத்திரிய பலம் ஒரு பலமா? ப்ரும்ம பலத்துக்கு முன் நிற்கவே முடியாத பலம் அது. திவ்யமான ப்ரும்ம பலம், க்ஷத்திரிய பலத்தை விட மிகவும் அதிகம் சக்தி வாய்ந்தது என்று தான் நான் கேள்விப் பட்டு இருக்கிறேன். உங்கள் பலம் அப்ரமேயம் (அளவிட முடியாதது). உங்களை விட விஸ்வாமித்திரர் அதிக பலமுடையவர் என்பது சரியல்ல. மகா வீரனாக இருக்கலாம். உங்களுடைய தேஜஸ் நெருங்கமுடியாதது. என்னை உங்கள் ப்ரும்ம பலத்தை சூழ்ந்து நின்று பாதுகாக்கச் செய்யுங்கள். துராத்மாவான அரசனின் கர்வத்தை நான் அடக்குகிறேன். – இவ்வாறு அவள் சொல்லவும், வசிஷ்டர்ஸ்ருஷ்டி செய்து கொள். எதிரியை அடக்கத் தேவையான பலத்தை உண்டாக்கிக் கொள் எனவும், சுரபி4 (காம தேனு) யான சபலா ஸ்ருஷ்டி செய்து கொண்டாள். அவளுடைய முகத்திலிருந்து  வெளிப்பட்ட –ஹும்- என்ற ஓசையிலேயே, நூற்றுக் கணக்கான பப்ளவர்கள் உண்டானார்கள். இவர்கள், விஸ்வாமித்திரர் பார்த்துக் கொண்டு நிற்கையிலேயே, அவருடைய பலத்தை முழுவதுமாக அழித்தது. தன் சேனை அழிந்ததைக் கண்ட விஸ்வாமித்திரர், கோபத்தால் தகிக்கும் கண்களையுடையவராக, பப்லவாதிகளோடு சண்டையிடலானார். பலவிதமான அஸ்திர பிரயோகங்களை செய்து பப்லவாதிகளை அடித்தார். உடனே சபலா, யவன, மிச்ரர்கள், சகர்கள் என்ற கூட்டத்தை ஸ்ருஷ்டி செய்தது. பூமி யவன மிச்ர கூட்டத்தாலும், சகர்கள் என்ற கூட்டத்தாலும் நிறைந்தது. மகா பலம் பொருந்திய இந்த வீரர்கள், கூர்மையான கத்தி, பொன்னிறமான ஆடைகள்,இவற்றுடன் போரிட வந்தனர். நெருப்பினால் சுடுவது போன்ற பல திவ்ய அஸ்திரங்களை விஸ்வாமித்திரர் விடவும், யவன, காம்போஜ, பப்லவாதிகள் மிகவும் வருந்தினர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில்,பப்லவாதி ஸ்ருஷ்டி என்ற ஐம்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 55விஸ்வாமித்திர தனுர்வேதாதிகம்

(விஸ்வாமித்திரரின் வில் வித்தை முதலியன)

 

விஸ்வாமித்திரரின் அஸ்திரங்களினால், சபலையால் ஸ்ருஷ்டி செய்யப்பட்ட படை வீரர்கள் கஷ்டப்படுவதைக் கண்டு வசிஷ்டர், சபலையை மேலும் வேண்டிய அளவு ஸ்ருஷ்டி செய்து கொள்ளச் சொன்னார். அந்த பசுவின் ஹும்காரத்தினால் மேலும் பல காம்போஜர்கள், சூரியனின் தேஜஸுக்கு சமமான ஒளியுடையவர்களாகத் தோன்றினர். ஆயுதம் தாங்கிய ஊதஸ் என்பவர்கள், பர்பரா: என்ற தேசத்து சகர்கள், ரோமங்களில் இருந்து மிலேச்சர்கள், ஹாரிதர்கள், கிராதர்கள், இவ்வளவும் க்ஷண நேரத்தில் வந்து சேர்ந்து விஸ்வாமித்திரரை எதிர்த்தனர். பதாதி, ரத, கஜ, துரக என்ற நால்வகைப் படைகளுடன், விஸ்வாமித்திரரின் சேனை அழிந்தது. தங்கள் படை (பலம்) வசிஷ்ட பலத்தால் அழிந்தது கண்டு விஸ்வாமித்திரரின் நூறு புத்திரர்கள், வேகமாக ஓடி வந்து ஜபித்துக் கொண்டிருந்த வசிஷ்டரைத் தாக்கினார்கள்.தன் ஹும்காரத்தினாலேயே அவர்களைத் தகித்து விட்டார் முனிவர்.விஸ்வாமித்திரரின் பிள்ளைகள் தங்கள் நால் வித சேனைகளோடுநிமிஷ நேரத்தில் பஸ்மமாக ஆனார்கள்.தன் புத்திரர்கள் பஸ்மமாக ஆனதையும், சேனை பெரும்பாலும் அழிந்ததையும் கண்டு, வெட்கமடைந்த விஸ்வாமித்திரர்,சிந்தனை வசப்பட்டவராக ஆனார். வேகம் இழந்த சமுத்திரம் போலும், பல்லை இழந்த பாம்பு போலவும், சூரியன் சோபை இழந்தது போலும் திடீரெனத் தன் சக்தியனைத்தும் இழந்தவரானார். இறக்கையிழந்த பறவை போல தன் புத்திரர்களை இழந்த அரசர், கர்வம் அழிந்து உற்சாகம் இழந்தவராக, மிகவும் வேதனையை அடைந்தார். ஒரு புத்திரனிடம் ராஜ்யத்தை ஒப்புவித்து விட்டு நீ ஆண்டு வா, க்ஷத்திரிய தர்மம் தவறாமல் பாலனம் செய் என்று சொல்லி, தான் வனம் சென்றார். கின்னரர்கள், உரகர்கள், நிறைந்த ஹிமய மலைக்கே சென்று மகா தேவனைக் குறித்து தவம் செய்யலானார். கடுமையான தவம் செய்தார். சில காலம் சென்றபின்,ரிஷபத்தை த்வஜத்தில் உடைய மகா தேவன் ப்ரசன்னமாகி, விஸ்வாமித்திரருக்கு  வரம் தந்தார். எதற்காக தவம் செய்கிறாய் ராஜன், உனக்கு எது தேவை? எதை உத்தேசித்து தவம் செய்கிறாய்? நான் வரம் தர வந்துள்ளேன். உனக்கு வேண்டியதைக் கேள். என்று சொல்ல விஸ்வாமித்திரர், மகாதேவனை வணங்கித் -தாங்கள் என்னிடத்தில் தயை உள்ளவர்களானால் தனுர்வித்தை அதனுடைய அங்கங்கள் பூரணமாக எனக்கு சொல்லித் தாருங்கள். அங்க, உபாங்கங்களோடு கூடிய உபனிஷத் ரஹஸ்யங்கள் எல்லாமே தாருங்கள். தேவர்களிடம் உள்ள அஸ்திரங்கள், தானவர்களிடம் உள்ளவை, கந்தர்வ, யக்ஷ, ராக்ஷஸர்களிடம் உள்ளவை யாவும் எனக்கு கிடைக்க வேண்டும். உங்களுடைய க்ருபையால் நான் விரும்பியது கிடைக்க வேண்டும்.- என்றார். அப்படியே ஆகட்டும் என்று தேவ தேவனான மகாதேவன் சொல்லி மறைந்தார். இவ்வாறு திவ்யாஸ்திரங்கள் கிடைக்கப் பெற்ற ராஜரிஷியான விஸ்வாமித்திரர் மகா பலத்துடன், மகா கர்வியுமானார். பருவ கால சமுத்திரம் போல வளர்ந்து வந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டர் அழிந்தார் என்றே நினைத்தார். ஆஸ்ரமத்திற்கு வந்து தன் வசம் இருந்த அஸ்திரங்களை விட ஆரம்பித்தார். அந்த அஸ்திர பலத்தால் வசிஷ்டரது தபோ வனம் அழிந்தது. எரிந்து கொண்டு விழுந்த விஸ்வாமித்திரரது அஸ்திரங்களைக் கண்டு பயந்து சிஷ்ய ஜனங்களும், முனிவர்களும், நாலா புறமும் சிதறி ஓடினர். வசிஷ்டருடைய ஆசிரமம் சூன்யமாக ஆயிற்று. மிருகங்கள், பக்ஷிகள், பயந்து அலறி ஓடின. வசிஷ்டர் பயப்படாதே, பயப்படாதே என்று சொல்ல, சொல்ல ஒரு முஹுர்த்த நேரத்தில், ஆசிரமம் நி:சப்தமாக, ஆளரவமின்றி ஆகி விட்டது. கா3தே4யனை (கா3தி4 பிள்ளை) இதோ அழிக்கிறேன் என்று வசிஷ்டர் கிளம்பினார். அல்ப ஜந்துக்களை சூரியன் நாசம் செய்வது போல, என்று சொல்லிக் கொண்டே வந்தவர், எதிரே விச்வாமித்திரரைப் பார்த்து கோபத்துடன் பேசலானார்.வெகு காலமாக இருந்த என் ஆசிரமத்தை ஏன் அழித்தாய்? துராசாரனே, மூடனே, அதனால் இனி நீ இருக்க மாட்டாய் என்று சொல்லி காலாக்னி போல, மற்றொரு யம தண்டத்தை போல இருந்த தன் தண்டத்தை முன் நிறுத்தி வைத்துக் கொண்டு நின்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், விஸ்வாமித்திர த4னுர்வேதா3தி4கோ என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

ஸ்ரீமத் ராமாயணம் – பால காண்டம் 1-30

  ஸ்ரீமத் ராமாயணம்

பால காண்டம்

அத்தியாயம் 1 நாரத வாக்யம். 4

அத்தியாயம்2ப்ரும்மாவின் வருகை (ப்ரும்மா வருதல்) 9

அத்தியாயம் 3. காவ்ய ஸ்ம்க்ஷேபம், (கதை சுருக்கம்). 11

அத்தியாயம் 4 அனுக்ரமனிகா ( நிகழ்ச்சி நிரல்) 13

அத்தியாயம் 5அயோத்யா வர்ணனை…… 15

அத்தியாயம் 6ராஜ வர்ணனை…… 16

அத்தியாயம் 7அமாத்ய வர்ணனை (மந்திரிகள் பற்றிய வர்ணனை) 18

அத்தியாயம் 8 சுமந்திர வாக்யம் (சுமந்திரன் சொல்லியது) 19

அத்தியாயம் 9 ருஸ்யஸ்ருங்கோபாக்யானம் (ருஸ்ய ஸ்ருங்க முனிவரின் கதை) 21

அத்தியாயம் 10 ருஸ்ய ச்ருங்க முனிவரை வர வழைத்தல்.. 22

அத்தியாயம் 11ருஸ்ய ச்ருங்க முனிவர் அயோத்யா வருதல்.. 23

அத்தியாயம் 12 அஸ்வமேத ஏற்பாடுகள்.. 25

அத்தியாயம் 13 யக்ஞசாலா பிரவேசம். 26

அத்தியாயம் 14 அஸ்வமேதம். 27

அத்தியாயம் 15 ராவண வதோபாயம் (ராவணனை வதம் செய்ய உபாயம் தேடுதல்) 30

அத்தியாயம் 16பாயஸ உத்பத்தி. 32

அத்தியாயம் 17 ருக்ஷ வானர உத்பத்தி(கரடி, வானரங்களின் பிறப்பு) 33

அத்தியாயம் 18ராமாத்யவதார: (ராமன் முதலானோர் பிறப்பு) 35

அத்தியாயம் 19விஸ்வாமித்திர வாக்யம். 39

அத்தியாயம் 20 தசரத வாக்யம் (தசரதரின் பதில்) 40

அத்தியாயம் 21வசிஷ்ட வாக்யம் (வசிஷ்டரின் உபதேசம்) 42

அத்தியாயம் 22வித்யா ப்ரதானம்,(வித்யா-புதிய வித்தையை உபதேசித்தல்) 43

அத்தியாயம் 23 காமாஸ்ரம வாசம் (காமாசிரமம் என்ற இடத்தில் வசித்தல்) 45

அத்தியாயம் 24தாடகா வன ப்ரவேசம் (தாடகா வனத்தில் நுழைதல்) 46

அத்தியாயம் 25 தாடகா வ்ருத்தாந்தம், (தாடகையின் கதை) 48

அத்தியாயம் 26தாடகா வத4: (தாடகையின் வதம்) 49

அத்தியாயம் 27அஸ்திரக்ராம பிரதானம் (அஸ்திரங்களை பெறுதல்) 51

அத்தியாயம் 28 அஸ்திர சம்ஹார க்ரஹணம். 52

அத்தியாயம் 29 சித்3தா4ஸ்ரமம். 53

அத்தியாயம் 30 யக்ஞ ரக்ஷணம்(யாகத்தைக் காத்தல்) 55

அத்தியாயம் 32 குசனாப கன்யா உபாக்யானம் (குச நாபர் மகளின் கதை) 58

அத்தியாயம் 33 விஸ்வாமித்திர வம்ச வர்ணனை…… 59

அத்தியாயம் 34 விஸ்வாமித்திர வம்ச வர்ணனை…… 61

அத்தியாயம் 35 உமா கங்கா விருத்தாந்த ஸம்க்ஷேபம். 62

அத்தியாயம் 36உமா மாகாத்ம்யம். 63

அத்தியாயம் 37 குமாரோத்பத்தி(குமரன் என்ற முருகன் பிறப்பு) 64

அத்தியாயம் 38சகர புத்ர ஜனனம் (சகர புத்திரன் பிறப்பு) 66

அத்தியாயம் 39 ப்ருது2வீ விதா3ரனம் (பூமியைத் தோண்டுதல்) 67

அத்தியாயம் 40 கபில தர்ஸனம் (கபிலரைக் காணுதல்) 68

அத்தியாயம் 41ஸகர யக்ஞ சமாப்தி. 70

அத்தியாயம் 42ப4கீ3ரத2 வரப்ரதா3னம் (பகீரதனுக்கு வரம் அளித்தல்) 71

அத்தியாயம் 43 கங்கா அவதரணம் (கங்கை இறங்கி வருதல்) 72

அத்தியாயம் 44 ஸாக3ரோத்3தா4ரம் (ஸக3ர புத்திரர்களை கரையேற்றுதல்) 75

அத்தியாயம் 45 அம்ருதோத்பத்தி(அம்ருதம் தோன்றுதல்) 76

அத்தியாயம் 46 தி3தி கர்ப்ப பேதம் (திதியின் கர்ப்பத்தை அழித்தல்) 78

அத்தியாயம் 47 விசாலா கமனம். 79

அத்தியாயம் 48 சக்ர அஹல்யா சாபம் (இந்திரன் அகல்யை, இவர்களை சபித்தல்) 80

அத்தியாயம் 49 அஹல்யா சாப மோக்ஷம் (அகல்யை சாபத்திலிருந்து விடுபடுதல்) 82

அத்தியாயம் 50ஜனக சமாக3மம்(ஜனகரை சந்தித்தல்) 83

அத்தியாயம் 51 விஸ்வாமித்திரர் விருத்தாந்தம் (விஸ்வாமித்திரரின் கதை) 85

அத்தியாயம் 52 வசிஷ்டாதித்யம் (வசிஷ்டர் செய்த விருந்துபசாரம்) 86

அத்தியாயம் 53சப3லா நிஷ்க்ரய: 87

அத்தியாயம் 54பப்லவாதி ஸ்ருஷ்டி (பப்லவர்களை உற்பத்தி செய்தல்) 89

அத்தியாயம் 55விஸ்வாமித்திர தனுர்வேதாதிகம். 90

அத்தியாயம் 56ப்ரும்ம தேஜோ பலம்(ப்ரும்ம தேஜஸின் பலம்) 91

அத்தியாயம் 57 திரிசங்கு யாஜன பிரார்த்தனை (திரிசங்குவின் வேண்டுகோள்) 93

அத்தியாயம் 58 த்ரிசங்கு சாபம் (திரிசங்கு பெற்ற சாபம்) 94

அத்தியாயம் 59 வாசிஷ்ட சாபம் (வசிஷ்டரின் பிள்ளைகளை சபித்தல்) 96

அத்தியாயம் 60 த்ரிசங்கு ஸ்வர்கம் (திரிசங்கு சுவர்கம்) 97

அத்தியாயம் 61 சுன:சேபவிக்ரய: (சுன:சேபன் என்பவனை விற்றல்) 99

அத்தியாயம் 62 அம்ப3ரீஷ யக்ஞம் (அம்பரீஷனின் யாகம்) 100

அத்தியாயம் 63 மேனகா நிர்வாச: (மேனகையை  வெளி யேற்றுதல்) 101

அத்தியாயம் 64 ரம்பா சாபம் (ரம்பையின் சாபம்) 103

அத்தியாயம் 65 பிரும்ம ரிஷித்வ ப்ராப்தி (ப்ரும்ம ரிஷி பதவி பெறுதல்) 104

அத்தியாயம் 66 த4னு:ப்ரசங்க: (வில்லைப் பற்றிய விவரம்) 106

அத்தியாயம் 67 த4னுர்பங்க: (வில்லை உடைத்தல்) 107

அத்தியாயம் 68 தசரதாஹ்வானம் (தசரதரை அழைத்தல்) 108

அத்தியாயம் 69தசரத2 ஜனக சமாகம: (தசரதரும், ஜனகரும் சந்தித்தல்) 110

அத்தியாயம் 70 கன்யா வரணம் (பெண் கேட்டல்) 111

அத்தியாயம் 71 கன்யாதான ப்ரதிஸ்ரவ: (கன்யாவை தர சம்மதித்தல்) 113

அத்தியாயம் 72கோ3தா3ன மங்களம் (கோ3தா3ன மங்களம்-காப்பு கட்டுதல்) 114

அத்தியாயம் 73 தசரத2 புத்ரோத்3வாஹ: (தசரதரின் புத்திரர்களின் விவாகம்) 115

அத்தியாயம் 74ஜாமத3க்னி அபி4யோஹ: (ஜமதக்னி மகன் வந்து எதிர்த்தல்) 117

அத்தியாயம் 75 வைஷ்ணவ த4னு: ப்ரசம்ச: (வைஷ்ணவ வில்லின் பெருமை) 118

அத்தியாயம் 76ஜாமத3க்3ன்ய ப்ரத்ஷ்டம்ப4: (ஜமதக்னி புத்திரரை அடக்குதல் ) 120

அத்தியாயம் 77 அயோத்யா பிரவேசம்(அயோத்தியில் பிரவேசித்தல்) 121

ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் பால காண்டம் முற்றும். 123

 

அத்தியாயம் 1 – நாரத வாக்யம்

தபஸ்விகளுள் சிறந்த தபஸ்வி, வார்த்தைகளையும் பொருளையும் உணர்ந்தவர் என்று போற்றப்படும் நாரதரிடம் வால்மீகி கேட்கலானார். முனிவர் பெருமானே, இந்த உலகில் தற்சமயம் சிறந்த குணவான் யார்? வீரமுள்ளவன் யார்? எவன் தர்மத்தை அறிந்தவன்? செய்நன்றி மறவாதவன், சத்யமான வாக்குடையவன், தன் கொள்கையில் பிடிப்பும் உறுதியும் உள்ளவன், இவ்வளவும் இருந்தும் ஒழுக்கமும் நன்னடத்தையும் உடையவன் யார்? எந்த ஜீவராசியானாலும், நன்மையே செய்ய நினைக்கும் கருணாமூர்த்தி யார்? வித்வானாகவும் செயல் திறன் மிக்கவனும், கண்ட மாத்திரத்தில் பிரியமாக இருப்பவனும், தன்னம்பிக்கை உடையவன், கோபத்தை வென்றவன், அசூயை அண்ட முடியாதவன், புத்திமான், நீதிமான், ஸ்ரீமான், நல்ல நாவன்மை உடையவன், இவ்வளவு குணங்கள் உள்ளவன் வெகுண்டால் உலகமே நடுங்கும் – இப்படி ஒரு மனிதப்பிறவி இருக்க முடியுமா? இருந்தால் எனக்குச் சொல்லுங்கள். நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மகரிஷியே, நீங்கள் எல்லாம் அறிந்த ஞானி. நீங்களே இப்படிப்பட்ட ஒருவரை அறியக்கூடியவர். வால்மீகியின் சரமாரியான கேள்விகளுக்கு மிக சந்தோஷமாக நாரதர் பதில் அளிக்க தயார் ஆனார். – கேள் – என்று சொல்லி ஆரம்பித்தார். நீ சொன்ன குணங்கள் மிக அதிகம். இவை ஒரு மனிதனிடத்தில் அமைவது அரிது. ஆயினும் அப்படி ஒரு மகானை நான் அறிவேன். இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன். இராமன் என்ற பெயர் உடையவன். நல்ல வீரமும் தன்னடக்கமும் உடையவன். கல்வி கேள்விகளில் சிறந்தவன். நீ கேட்ட குணங்கள் அனைத்தும் அதற்கு அதிகமாகவும் உள்ளவன். தன் கொள்கையில் அசையா பிடிப்பு உடையவன். புத்தி, நீதி, நல்ல வாக்கு, லக்ஷ்மி கடாக்ஷம் உடையவன். சத்ருக்களை அடக்கக்கூடிய வீரமும் உள்ளவன். அகன்ற தோளும் நீண்ட புஜங்களும் சங்கு போன்ற கழுத்தும் அழகிய தோற்றமும் பொலிவும் உள்ளவன். இவன் அறியாத தர்மம் இல்லை. சத்யமே உருவானவன். மக்களின் நலத்தையே பிரதானமாக நினைத்து செயல் படுபவன், புகழும், ஞானமும் இவனை அண்டி பெருமை பெறும். உள்ளும் புறமும் தூய்மையும், பார்த்தவரை வசீகரிக்கும் தோற்றமும், தவ வலிமையும் உடையவன். பிரும்மாவிற்கு சமமானவன், விஷ்ணுவுக்கு சமமான செல்வம் உடையவன்.பூமியைப் போல் பொறுமையுடையவன். ஆயினும் சத்ரு என்று வந்தால் பயங்கரமாக கோபம் கொள்வான். தர்மத்தின் காவலனாக, ஜீவ லோகத்தை ரக்ஷிப்பவனாக, தன் தர்மத்தையும், ஜனங்களின் தர்மத்தையும் மதித்து நடப்பவன், வேத வேதாந்தங்களோடு தனுர் வித்தை கற்றவன். சாஸ்திரங்களையும் அறிந்தவன். ஆதலால், நல்ல ஞாபக சக்தியும் பிரதிபாவும் (தேக காந்தி) உடையவன், அதனாலேயே எல்லோருக்கும் பிரியமானவன். சாது, அதனால் தீனன் என்று பொருள் அல்ல. நல்ல திறமைசாலி. யாராலும்,எப்பொழுதும் அணுகத்தகுந்த வகையில் எளிமையானவன். உதாரணம் சொல்ல வேண்டுமானால், நதிகள் சமுத்திரத்தை அடைவது போல் இயல்பாக இவனை காணலாம். எப்பொழுதும் பிரியமான வார்த்தைகளை பேசும் போதும், தான் ஒரு மகான் என்பதை உணர்த்தக்கூடிய வல்லமை பெற்றவன்.

இவ்வளவு நல்ல குணங்கள் ஒருங்கே அமையப் பெற்றவன் யாரோ எனில், அவன் தான் கௌசல்யை பெற்ற மகன், இராமன் என்று ஊருக்குள் பெயர் பெற்றவன். இவனை வர்ணிக்கப் போனால், சமுத்திரத்தின் காம்பீர்யமும் (கம்பீரமான தோற்றமும்) இமய மலை போன்ற தைரியமும், விஷ்ணு போன்ற பராக்ரமும், சந்திரன் போன்ற பிரியமான தோற்றமும், கோபம் வந்தால் காலாக்னி போலவும், பொறுமையில் பூமிக்கு சமமாகவும் உள்ளவன். தியாகம் செய்வதில் இவனுக்கு ஈடு, இணை கிடையாது. சத்யத்தில் தர்மராஜனே வந்தது போலவும் உள்ள இவனை, தந்தையான ராஜா தசரதன் யுவராஜாவாக நியமிக்க எண்ணி பட்டாபிஷேகம் செய்ய முனைந்தான். மிகவும் மகிழ்ச்சியுடன் நாளை யுவராஜ பட்டாபிஷேகம் என்று அறிவித்தான்.

அபிஷேக ஏற்பாடுகளைப்பார்த்த கைகேயி முன் கொடுத்த வரத்தை நினைவுபடுத்தி, இப்போது கேட்கலானாள். ராமனை வனத்துக்கு அனுப்பு, என் மகனான பரதனுக்கு முடி சூட்டு என்று கேட்டாள்.தர்ம பாசம் போன்ற, சத்ய வசனத்திற்கு கட்டுப்பட்டு, ராஜா தசரதன் பிரியமான மகனான ராமனை வனத்துக்கு அனுப்ப இசைந்தான்.கொடுத்த வாக்கை காப்பாற்றும் பொருட்டு, தந்தை சொல் மீறாத தனயனாக , ராமனும்காட்டுக்குச் சென்றான்.கைகேயி மனம் மகிழ வனம் கிளம்பிய ராமனை சகோதரன் என்ற சொல்லுக்கே இலக்கணமான லக்ஷ்மணன் பின் தொடர்ந்தான். ஜனக ராஜாவின் மகளும்,ராமனின் பிரியமான பத்னியுமான சீதையும் உடன் வரத் தயராக ஆனாள்.ஊர் ஜனங்கள் தொடர்ந்து வர, மூவரும் தந்தை தசரதனை நினைத்தபடியே ச்ருங்கிபேரபுரம் எனும் இடத்தை அடைந்தனர். கங்கை கரையில் அமைந்த இந்த இடத்தில்சாரதியான சுமந்திரரை திருப்பி அனுப்பிவிட்டு, அடர்ந்த கானக வழியில் சென்றனர். பல நதிகளையும்காடுகளையும் கடந்து பரத்வாஜரை சந்தித்து, அவர் அனுமதியுடன் சித்ர கூடத்தில் வசிக்கலானார்கள். அழகிய பர்ணசாலை கட்டிக்கொண்டு,தேவ கந்தர்வர்களுக்கு இணையான நிம்மதியும் சுகமுமாக வாழலாயினர்.

சித்ரகூடம் சென்ற ராமனை எண்ணி எண்ணி தசரத ராஜா உயிர் விட்டார். வசிஷ்டர் முதலிய குரு ஜனங்கள் பரதனை வரவழைத்து – நீயே ராஜா – என்ற போது பரதன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ராமனை அழைத்து வர அவனும் வனம் சென்றான். மஹாத்மாவும் சத்யபராக்கிரமமும் உடையவனான ராமனை தனக்கு மூத்தவன் என்ற முறையில்- நீயே தர்மம் அறிந்தவன். அரசனாக முடி சூட உரிமை உடையவன்- என்று வேண்டினான். தந்தையின் கட்டளையை மீற விரும்பாத ராமன் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தான். திரும்பத் திரும்ப தான் வர இயலாது என்று சொல்லி தன் பாதுகையை (காலணி ) ந்யாசமாக (அடையாளப் பொருளாக) தந்து அயோத்திக்கு பரதனை திருப்பி அனுப்பி விட்டான். தன் விருப்பம் நிறைவேறாமலே பரதன் ராம பாதுகையை சிரமேற்கொண்டு நந்தி கிராமத்தில் இருந்து கொண்டுராமன் திரும்பி வரும் நாளை எதிர் பார்த்தபடி ராஜ்யத்தை நிர்வகித்து வரலானான். பரதனும் திரும்பி சென்றபின் சத்யசந்தனும், இந்திரியங்களை ஜயித்தவனுமான ராமன் நகர ஜனங்களும் மற்றவர்களும் திரும்பவும் வரக்கூடும் என்று எண்ணி தண்டகா வனத்துள் பிரவேசித்தான். மிகப்பெரிய அந்த வனத்தில் நுழைந்த உடனேயே எதிர்பட்ட விராதனை அழித்த பின், சரபங்க முனிவரை கண்டான். சுதீக்ஷ்ணரையும், அகஸ்தியரையும், அகஸ்தியரின் சகோதரனையும் தரிசித்தனர். அகஸ்தியர் சொன்னபடி, இந்திரனுடைய விஷ்ணு தனுஷை எற்று கொண்டான். மிகவும் சந்தோஷமாக அவர் அளித்த வாள், குறையாத அம்புகளை உடைய தூணி (அம்பு வைக்கும் உறை) இவற்றையும் பெற்றுக்கொண்டான். அரண்யத்தில் வசித்த இந்த நாட்களில் அனேக முனிகளும், ரிஷிகளும் அந்த காட்டில் வசித்து வந்த மற்றவர்களுடன் வந்து ராமனிடம் அசுரர்களையும், ராக்ஷஸர்களையும் வதம் செய்து தங்களை ரக்ஷிக்கும்படி வேண்டிக்கொண்டனர். அப்படியே ஆகட்டும் என்று ராமனும் அவர்களுக்கு பிரதிக்ஞை (சத்யம்) செய்து கொடுத்தான். ராக்ஷஸர்களை ஒடுக்குவதாகவும் அக்னிக்கு சமமான தவ வலிமை கொண்ட அந்த தண்டகாரண்ய வாசிகளான ரிஷிகளுக்கு வாக்கு கொடுத்தான். அங்கு வசித்த சமயம் ஒரு நாள் தன் விருப்பம் போல் உருவம் எடுத்துக்கொள்ளும் வல்லமை வாய்ந்த சூர்பணகா என்ற ராக்ஷஸி, அங்க ஹீனம் செய்யப்பட்டாள். சூர்ப்பணகையால் தூண்டி விடப்பட்டு சண்டையிட வந்த ஜனஸ்தானத்து ராக்ஷஸர்களையும், கரன், த்ரிசிரஸ், தூஷணன் என்பவர்களையும் எதிர்த்து நின்று போரில் வென்றான். அவர்களை தொடர்ந்து வந்த ராக்ஷஸ சைன்யம், மொத்தம் பதினாயிரம் அரக்கர்களையும் கொன்று குவித்தான். தாயாதிகளான இவர்கள் வதம் செய்யப்பட்டதை கேள்விப் பட்டு வந்த ராவணன், மாரீசனை உதவி கோரினான். மாரீசன் பலவிதமாக தடுத்துப் பார்த்தான். பலவானான ராமனுடன் மோதாதே என்று மாரீசன் சொன்னது ராவணனுக்கு உறைக்கவில்லை. காலத்தால் துரத்தப்பட்டவன் போல் ராவணன், மாரீசனை உடன் அழைத்துக்கொண்டு ராமனுடைய ஆஸ்ரமம் இருந்த இடம் வந்து சேர்ந்தான். மாயாவியான மாரீசனால் வெகு தூரம் ராம, லக்ஷ்மணர்களை அழைத்து செல்லச் செய்து, ராம பத்னியை (சீதை) அபகரித்து கொண்டு சென்றான். செல்லும் வழியில் தடுத்த கழுகரசனான ஜடாயுவை கொன்றான். இறந்து கிடந்த கழுகு அரசனான ஜடாயுவை கண்டு சீதை அபகரிக்கப்பட்டாள் என்று அறிந்து ராமர் வேதனைக்குள்ளானார். இந்த வேதனைக்கிடையில் ஜடாயுவுக்கு ஸம்ஸ்காரங்கள் செய்து விட்டு சீதையை தேடிக்கொண்டு செல்லும் பொழுது, கபந்தன் என்ற ராக்ஷஸனை பார்த்தார். சாபத்தால் கோர வடிவம் பெற்ற கபந்தனை தகனம் செய்யவும், அவன் திவ்யமான தன் சுயரூபத்தை அடைந்து, சபரியைக் கண்டு மேலும் விவரங்கள் அறிந்து கொள், அவள் தர்மம் அறிந்தவள், தர்மத்தை கடைப் பிடிப்பவள் என்று சொல்லிமறைந்தான்.

மஹா தேஜஸ்வியான ராமர், எதிரியை போரில் வீழ்த்தக்கூடிய சாமர்த்யம் உடையவரான ராமர், சபரியைக் காண அவள் ஆஸ்ரமம் சென்றார். தசரத புத்ரன் ராமனுக்கு உகந்த விதத்தில்சபரியும் வரவேற்று உபசாரங்கள்செய்தாள். பம்பா தீரத்தில் அனுமனைக் கண்டார். அனுமன் சொல்படி சுக்ரீவனைக் கண்டார். சுக்ரீவனுக்கு நடந்தது அனைத்தையும் ராமர் விளக்கிக் கூறினார். அதுவரை நடந்த கதையும், விசேஷமாக சீதையைப் பற்றியும்சொன்னார். இவ்வளவையும் கேட்ட பின்னர் சுக்ரீவன், அக்னியை சாக்ஷியாகக் கொண்டு முறைப்படி சந்தோஷமாக சக்யம் (நட்பு)

செய்து கொண்டார்.அதன்பின் சுக்ரீவன் தனக்கும் வாலிக்கும் பகை தோன்றிய காரணத்தை நண்பனான காரணத்தால் உரிமையுடனும், துக்கம் தாங்காமல் நடந்தது அனைத்தையும் சொன்னான்.வாலியை வதம் செய்வதாக ராமர் ஒத்துக்கொண்டார். வாலியின் பலத்தை விவரித்து வானரமான சுக்ரீவன், ராமருடைய புஜபலத்தில் தனக்கு இருந்த அவநம்பிக்கையை வெளியிட்டான். மலையளவு கிடந்த துந்துபியின் சரீரத்தைக் காட்டினான். தனக்கு நம்பிக்கை உண்டாக வாலி செய்தது போல காலால் வீசி எறியச் சொன்னான். அந்த சரீரத்தை புன்னகையோடு கால் கட்டை விரலால் பல நூறுயோஜனை தூரம் தள்ளி விழச் செய்தார் ராமர். அப்படியும் சுக்ரீவன் சந்தேகம் தீராமல் நிற்பதைக் கண்டு, ஏழு சால மரங்ளையும் ஒரே அம்பினால் வீழ்த்திக் காட்டினார். மரங்களைத் துளைத்த அம்பு, மலைகளையம் ரசாதலத்தையும் கடந்து திரும்ப ராமரிடம் வந்து சேர்ந்தது. இதனால் நம்பிக்கையும், திருப்தியும், அடைந்த வானர ராஜவான சுக்ரீவன், கிஷ்கிந்தைக்கு ராமருடன் கூட கிளம்பிச் சென்றான். குகையை அடைந்து சுக்ரீவன் கர்ஜனை செய்தான். அந்த சப்தத்தைக் கேட்டு வானர அரசனான வாலி வெளியில் வந்தான். தடுத்த மனைவி தாரையை அலட்சியம் செய்து சுக்ரீவனோடு சண்டையிடத் தயார் ஆனான். அவனை ஒரே அம்பினால் ராமர் வீழ்த்தினார். சுக்ரீவனுக்கு கொடுத்த வாக்குப்படி, வாலியை வதம் செய்து சுக்ரீவனை வானர அரசனாக நியமித்து அபிஷேகம் செய்வித்தார்..

அவனும் எல்லா வானரர்களையும் ஒன்று கூட்டி ஜனகர் மகளான சீதையைத் தேட பல திக்குகளிலும் அனுப்பி வைத்தான். கழுகு அரசனான சம்பாதியின் அறிவுரையின் படி ஹனுமான் உப்பு நீர் நிறைந்த சமுத்திரத்தைக் கடந்து பல யோஜனைகள்தாவிச் சென்றான். ராவணன் பாலித்து வந்த லங்கா நகரை சென்றடைந்தான். அசோக வனத்தில் ராமனையே த்யானம் செய்துகொண்டிருக்கும் சீதையைக் கண்டான். அடையாளம் காட்டி, நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லி வைதேஹியை சமதானம் செய்தபின் தோரண வாயிலை இடிக்கலானான். அதைத் தடுத்த ஐந்து சேனாபதிகளையும், ஏழு மந்திரி குமாரர்களையும் ஜயித்து, அக்ஷணையும், சூரணையும் வீழ்த்தி, இந்திரஜித்திடம் தானாகவே கட்டுண்டான். பிரும்மாவிடம் தான் பெற்ற வரத்தின் பலத்தினால் அஸ்திரத்திலிருந்து விடுப்பட்டபோதிலும், ராக்ஷஸர்களின் துன்புறுத்தலை சகித்துக் கொண்டான். லங்கையை எரித்து, பின், சீதைக்கு அதனால் ஆபத்து இல்லை என்பதை உறுதியாக தெரிந்து கொண்டு ராமரிடம் விஷயம் சொல்லத் திரும்பி வந்தான். மஹாத்மாவான ராமரை அடைந்து வலம் வந்து பிரியமான(கண்டேன் சீதையை) என்ற செய்தியைத் தெரிவித்தான்.

பின்னர் சுக்ரீவன் உடன் வர சமுத்திரக்கரையை அடைந்து சூரியனுக்கு சமமான தேஜஸ் கொண்ட, சமுத்திரத்தைக் கலங்கச் செய்து, சமுத்திரராஜன் தானே வந்து வேண்டிக் கொள்ள சாந்தம் அடைந்து, அவன் அனுமதிப்படியே சமுத்திரத்தின் மேல் சேதுவைக்கட்டி , லங்கையை அடைந்து, ராவணனை யுத்தத்தில் ஜெயித்து, ராமர் சீதையைத் திரும்ப பெற்ற பொழுது வெட்கமும் வேதனையும் அடைந்தார். கூடியிருக்கும் ஜனங்கள் மத்தியில் அவளைக் கடுமையாக விமரிசித்தார். அதை பொறுக்க மாட்டாத சீதை அக்னி ஜ்வாலையில் பிரவேசித்தாள். அக்னி தேவன் தானே வந்து , சீதையை குற்றமற்றவள் என்று திருப்பித் தரவும், ராமர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். மூன்று உலகங்களிலும் தேவ ரிஷி கணங்கள் ராகவனின் இந்த செயலால் சந்துஷ்டியை அடைந்தனர்.

ராக்ஷஸேந்திரனான விபீஷணனை லங்கையில் முடி சூட்டி வைத்துவிட்டு, தான் நினைத்த காரியத்தை செய்து முடித்துவிட்ட திருப்தியுடன் ராமர் மகிழ்ச்சி அடைந்தார். தேவர்களிடம் வரங்கள் பெற்று வானரர்களைத் திரும்ப அவர்கள் இடத்தில் சேர்ப்பித்துவிட்டு புஷ்பக விமானத்தில் தோழர்களோடு அயோத்தி நோக்கி பிரயாணப்பட்டார். சத்ய பராக்ரமனான ராமர் பரத்வாஜர் ஆஸ்ரமத்தை அடைந்து, அனுமானை பரதனிடத்தில் செய்தி சொல்லி அனுப்பினார். சுக்ரீவனுடன் பேசிக்கொண்டே ராமர் புஷ்பகத்தில் ஏறி நந்திக்ராமம் வந்து சேர்ந்தார். நந்தி கிராமத்தில் ஜடா முடிகளைக் களைந்து சகோதரர்களுடன் கூட ராமர், சீதையுடன் ராஜ்யத்தையும் திரும்பப் பெற்றவர் ஆனார்.

உலகமே மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியது. திருப்தியும், நல்ல ஆரோக்யமான சரீரமும் உடையவர்களாய், தார்மிக சிந்தனை உடையவர்களாய், துர்பிக்ஷம் (வறுமை) பயம் இவை அண்ட முடியாதவர்களாய் இருந்தனர். தந்தை இருக்க தனயன் இறந்தான் என்பதே கிடையாது. அதாவது புத்ரன் இறந்து துக்கம் அனுபவிக்க நேரவே இல்லை. பெண்கள் பதிவிரதைகளாக, சுமங்கலிகளாக இருந்தனர். அக்னியால் பயமோ, நீரில் மூழ்கி இறப்போ, வாயுவினால் நஷ்டம் என்றோ ஜுரம் முதலியவற்றால் துன்பம் என்றோ இருந்ததில்லை. பசிக் கொடுமையோ, திருட்டு பயமோ வாட்டவில்லை. நகரங்களும், பெரிய ஊர்களுமாக, தன தான்யஙகள் நிரம்பியிருந்தன. க்ருதயுகத்தில் இருந்ததுபோல ஜனங்கள் மகிழ்ச்சியோடு வசித்தனர்.

பல நூறு அஸ்வமேத யாகங்கள் செய்து, பலவிதமாக பொன், பசுக்கள், இவைகளை தகுதி அறிந்து ப்ராம்மணர்களுக்கும், மற்றவர்களுக்கும் கொடுத்தும் கணக்கில்லாத தானங்கள் செய்தும், நூறு மடங்கு ராஜ வம்சங்களை ராமர் நிலை நிறுத்துவார். சாதுர்வர்ண்யம் (நால் வகை பிரிவினர்) தங்கள், தங்கள் தர்மத்தில் பிடிப்புஉள்ளவர்களாக , திருப்தியாக இருப்பார்கள். பத்தாயிரம், பத்து நூறாயிரம்வருடங்கள் ராமர் ராஜ்யத்தை ஆண்டு விட்டு பிரும்மலோகம் போவார். இந்த பாவனமான ராம சரித்திரம் வேத மந்திரங்களுக்கு இணையானது. இதை படிப்பவர்கள், எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள். ஆயுளைத் தரக்கூடிய இந்த ராமாயணத்தைப் படித்து மனிதர்கள், புத்ரன், பௌத்திரன் என்று வம்சம் விளங்க ஸ்வர்கம் செல்லுவர். பிராம்மணர் படிப்பதால் வாக்கு வன்மை பெறுவர். க்ஷத்திரியர் ஆளும் பூமியை அடைவர். வாணிபம் செய்வதன் பலனை வைஸ்யனும் சூத்திரனானவன் மகானாகவும் ஆவார்கள்.

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில் -நாரத வாக்யம்- என்ற முதல் அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் – 2

ப்ரும்மாவின் வருகை (ப்ரும்மா வருதல்)

நாரதரின் வார்த்தையைக் கேட்டு சொல் வளம் மிக்க முனிவரான வால்மீகி, தன் சிஷ்யர்களுடன் அவருக்கு தகுந்த மரியாதைகள் செய்தார். நாரதரும் புறப்பட்டு போனார். நாரத முனிவர் தேவலோகம் சென்ற ஒரு நாழிகை பொழுது கடந்த பின்பும், அதே நினைவாக, சிஷ்யனான பரத்வாஜனுடன் அருகில் இருந்த கங்கையின் கிளை நதியான தமஸா நதிக்கு ஸ்னானம் செய்ய சென்றார். தெளிவான தமஸா நதியின் நீரைக் கண்டு பரத்வாஜனிடம் சொன்னார் -தெளிவான இந்த நீரைப் பார் பரத்வாஜா, கண்ணுக்கு ரம்யமாகவும், மகிழ்ச்சி தரும் விதமாகவும், நல்ல மனிதர்களின் உள்ளம் போல தெளிந்த இந்த ஓடை நீரை பார்-என்று சொல்லிக் கொண்டே அவனிடம் கலசத்தையும், தன் மரவுரி ஆடைகளையும் வாங்கிக் கொண்டு ஸ்னானம் செய்ய நீரில் இறங்கினார். நீரில் நின்றபடி நாற்புறமும் அடர்ந்து கிடந்த வனத்தை சுற்றி பார்வையை செலுத்திய முனிவர் ஜோடியாக பறந்து வந்த க்ரௌஞ்ச பக்ஷிகளை கண்டார். அந்த சூழ்நிலையும், ஜோடி பக்ஷிகளும் மனதை நிறைத்த அதே வேளையில், பாபம் செய்வதே தன் குறிக்கோள் என்பது போல் ஒரு வேடன் பக்ஷிகளில் ஒன்றை அடித்தான். முனிவர் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே, பெண் பறவை ரத்தம் சொட்டச் சொட்ட துடி துடித்து இறந்தது. மனைவி இறந்து வீழ்ந்ததைக் கண்ட ஆண் பறவை வேதனை நிறைந்த குரலில் அழுது அரற்றலாயிற்று. கூடவே பறந்து வந்த தன் சகதர்மிணியை நிமிஷ நேரத்தில் இழந்த துக்கத்தில் ஆண் பறவை படும் பாடு ரிஷியின் மனதில் அளவில்லாத கருணையை சுரக்க செய்தது. இது அதர்மம் என்று எண்ணிய ரிஷி, வேடனைப் பார்த்து, தன்னையுமறியாமல் பின் வருமாறு சொன்னார்.

-மா நிஷாத3 ப்ரதிஷ்டாம்த்வமக3ம: ஸாஸ்வதீ: சமா: | யத் க்ரொளஞ்ச மிது2னாத் ஏகமவதீ4: காம மோஹிதம். ||

வேடனே நீ நல்ல கதியடைய மாட்டாய். காதல் வயப்பட்ட இந்த ஜோடிப்பறவைகளில் ஒன்றை அடித்துவிட்டாயே -என்று கதறினார். இவ்வாறு சொல்லி கண் கலங்கிய ரிஷி, தான்சொன்ன வார்த்தைகளை திரும்பவும் நினைத்துப் பார்த்தார். சோகத்தில் மூழ்கிய பக்ஷியைப்பார்த்து தானும் சோகத்துடன் சொன்ன வார்த்தைகள் புது வடிவும், அர்த்த செறிவும் நிறைந்த ஸ்லோகமாக வெளிப்பட்டதைக் கண்டார்.(வேடனைக் கடிந்து கொண்டதாகத் தோன்றும் இப்பாடல் -லக்ஷ்மி வாசம் செய்யும் ஸ்ரீமந்நாராயணனே,என்றென்றும் வாழ்வாயாக.இரட்டையர்களாக இருந்த இரு அரக்கர்களில்காமத்தின் வசமான ராவணனை வதம் செய்தாய் அல்லவா,- என்றும் பொருள் கொள்ளலாம். } மேலும் பலவிதமாக உரைகள்பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். தான் சொன்ன சொற்களையே திரும்ப ஒரு முறை சொல்லிப் பார்த்த முனிவர்சீடனான பரத்வாஜனைப் பார்த்துச்சொன்னார். பாதங்களாக அமையப்பெற்று சமமான அக்ஷரங்களுடன், தாளக் கோப்புடையதாகவும், அழகிய ஸ்லோகமாக வந்து விட்டதே, என் சோகம் ஸ்லோகமானது விந்தையே என்றார். சீடன் வாயால் அதை சொல்லக்கேட்ட முனிவர் அக மகிழ்ந்தார். நீர் நிரம்பிய குடத்துடன் சீடன் உடன் வர, பர்ணசாலையை அடைந்தார். சற்று நேரத்தில் முனிவர் த்யானத்தில்ஆழ்ந்தார். அந்த சமயம் முனிவரைக் காண ப்ரும்மா யதேச்சையாக வந்தார். அவரைக் கண்டதும் வால்மீகி முனிவர் அவசரமாக எழுந்து நின்று வரவேற்று, அர்க்யம், ஆசனம் முதலியவைக் கொடுத்து உபசரித்து, கை கூப்பி நின்றவராக, எதிர் பாராது வந்த ப்ரும்மாவின் முன் நின்றார். ப்ரும்மா ஆசனத்தில் தான் அமர்ந்த பின்பு வால்மீகியை பார்த்து ஆசனத்தில் அமரச் சொன்ன பின் அவரும் தன் ஆசனத்தில் அமர்ந்தார். அனாவசியமான வைர புத்தியுடன், பாபியான வேடன் க்ரௌஞ்ச பக்ஷியை அடித்ததும், அதைத்தொடர்ந்து ஆண் பறவையின் வேதனையும், காரணமின்றி பரிதவிக்க விட்ட விதியையும் நினைத்து அவர் மனதில் வேதனை பொங்கிக் கொண்டு இருந்தது. இதை நினைத்தவுடன் கூடவே தன் ஸ்லோகமும் நினைவில் வந்தது. தன் மன சங்கடத்தை அடக்க முயன்ற முனிவரைப் பார்த்து ப்ரும்மா லேசாக சிரித்தவாறு கேட்கலானார். -நீ சொல்லியது ஸ்லோகமே. இதில் வருத்தம் அடைய வேண்டாம். என் தூண்டுதலால் உன் வாக்கில் சரஸ்வதி விளையாடி இருக்கிறாள். ராமர் சரித்திரத்தை, குறையின்றி முழுவதுமாக எழுதுவாய். ரிஷிகளில் சிறந்தவனே, உலகில் புத்தியுள்ளவனும், தர்மாத்மாவுமான, குணவானான ராமனின் கதையை நாரதரிடம் கேட்டபடி இயற்றுவாய்.அந்த மகானின் வாழ்வில் நடந்தது ரகசியமோ, வெளிப்படையாகவோ, ராமருடைய, சௌமித்ரியின், ராக்ஷஸர்களின், வைதேகியின் வாழ்க்கையில் உள்ளும் புறமும் உனக்கு விளங்கும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்இந்த காவ்யத்தில் உன் சொல் பயனற்று போகாது. இந்த ராம கதையை ஸ்லோகமாக அமைத்து அழகிய பாடலாக செய். பூமியில் நதிகளும் மலைகளும் உள்ள அளவு உன் காவ்யமும் நிலைத்து நிற்கும். இந்த ராமாயண கதை உன்னால் எழுதப்பட்டது நிலவி வரும் வரையில் நீயும்,மேலும், கீழும் என்னால் ஸ்ருஷ்டி செய்யப்பட்ட எல்லா உலகங்களிலும் சஞ்சரிப்பாய். – இவ்வாறு சொல்லி ப்ரும்மா மறைந்தார்.

ஆச்சர்யம் நீங்கப் பெறாத முனிவர் சீடனைத் திரும்பவும் அந்த வார்த்தைகளைச் சொல்லச் சொல்லி கேட்டார். சமமான அக்ஷரங்களுடனும், நான்கு பாதங்களுடனும், பாட எளிதாக அமைந்த சொற்றொடர்களுடனும் அழகிய ஸ்லோகமாக அமைந்தது. அவர் மனதில் இந்த ஸ்லோகத்துக்கு புதுப் புது அர்த்தங்களும் தோன்றின.இதே போல ராமாயண காவ்யம் முழுவதையும் நான் படைப்பேன் என்று உறுதி பூண்டார். உயர்ந்த தத்வார்த்தங்களை உள்ளடக்கி, அழகிய சொற்களால், உதார குணமுடைய ராம கதையை, உதார மனம் உடைய முனிவர் இயற்றலானார். சமாசங்களும் (சம்ஸ்க்ருத இலக்கணம் சம்பந்தப்பட்டது), சந்தி யோகங்களும் நிறைந்த சுலபமான, மதுரமான, பொருள் நிறைந்த வார்த்தைகளைக் கொண்டு முனிவர் இயற்றிய தச முக வதம், ராமசரிதம் என்ற காவ்யத்தைக் கேளுங்கள்.

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில் -ப்ரும்மாவின் வருகை- என்ற இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 3 – காவ்ய ஸ்ம்க்ஷேபம், (கதை சுருக்கம்).

தர்மாத்வான அந்த முனிவர், காவ்யத்தின் உள்ளடக்கத்தை கிரமமாக தன் மனதுள் நினைவு படுத்திக்கொண்டு, நீரைத் தொட்டபடி, தர்ப்பாசனத்தில் கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு, கை கூப்பியபடி ராம சரிதத்தை த்யானம் செய்தவராக தான் எழுதப் போகும் காவ்யத்தின் அமைப்பை தீர்மானித்துக் கொண்டார். ராம,லக்ஷ்மண,சீதைக்கும், அரசனான தசரதனுக்கும், மனைவியுடன், ராமருடன் என்ன நடந்ததோ, நடந்தபடி, சிரித்ததும், பேசியதும், நடந்ததும், செய்ததும் அனைத்தையும் தன் தர்மத்தின் பலத்தால் நடந்த படி மனக்கண்ணில் கண்டார். ஸ்த்ரீயுடன், மூவருமாக வனத்தில்அலைந்த பொழுது என்ன கிடைத்ததோ, சத்ய சந்தரான ராமர் எதையெல்லாம் கண்களால் கண்டாரோ, யோகத்தில் இருந்த முனிவர் அவையனைத்தையும் ப்ரத்யக்ஷமாகத் தெரியக் கண்டார். நடந்தது அனைத்தும் உள்ளங்கை நெல்லிக்கனி போல அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. சிறந்த தேஜஸ்வியான அந்த முனிவர், தர்மத்திலிருந்து விலகாமல் மனக்கண்ணால் கண்டபடி, மனத்திற்கு உகந்த ராமரின் கதையைப் புனைய முனைந்தார். தர்மம், அர்த்தம் நிறைந்ததும், தர்ம, அர்த்த, காம குணங்களை விவரிப்பதும்சமுத்திரத்தைப் போல உயர்ந்த மணி முத்துக்களைக் கொண்டதும், பாடலாக இசைத்துக் கேட்க மனோரஞ்சகமாகவும் மஹரிஷி நாரதர் சொன்னது போலவே, ரகு வம்சத்தின் ரகுநாதனின் கதையை ரிஷி புங்கவரான வால்மீகி செய்தார்.

ராமருடைய பிறப்பு ,அவருடைய அளவில்லாத பலம், யாவருக்கும் இசைந்த நல்லகுணம், ஜனங்களிடம் அன்பு, பொறுமை, இனிமையானத் தன்மை, சத்யசீலம், விஸ்வாமித்ரருடன் நடந்தபோது, பேசிய, கேட்ட பலவிதமான சித்ர கதைகள், ஜானகியுடன் விவாகம், தனுசை முறித்தது, பரசுராம, ராம விவாதம், தசரதனுடைய குணங்கள், ராம அபிஷேக ஏற்பாடுகள், கைகேயியின் துஷ்ட பாவனை, அபிஷேகத்தை நிறுத்தியது, ராமருடைய வனவாசம், அரசனின் சோகம், பரலோகத்தை அடைதல், ஜனங்கள் வருந்துதல், அவர்களை திருப்பி அனுப்புதல், வேடர் குல அரசனை சந்தித்துப் பேசியது, சுமந்திரரை திருப்பி அனுப்பியது, கங்கையை கடந்து சென்றது, பரத்வாஜரை தரிசித்தது, அவரது அறிவுரைப்படி சித்ர கூடத்தில் வசித்தது, வாஸ்து தர்மப்படி பர்ணசாலையை கட்டிக்கொள்ளுதல், பரதன் வந்து சேருதல், ராமரை பரதன் வேண்டுதல், தந்தையின் இறுதிக் கடன் செய்தல், பாதுகைக்கு அபிஷேகம் செய்து, பரதன் நந்தி கிராமத்தில் வசித்தல், ராமர் தண்டகாரண்யத்தில் பிரவேசித்தல், விராதனை வதைத்தலும் சரபங்கர் என்ற முனிவரைக் காணல்,சுதீக்ஷ்ணரை சந்தித்தல், அனசூயையின் உதவி, சீதைக்கு அங்கராகம் (உடலில் பூசிக்கொள்ள வாசனைப் பொடி) அளித்தல், அகஸ்தியரைக் கண்டது, அவரிடம் விஷ்ணு தனுசை பெற்றுக்கொண்டது, சூர்ப்பணகையுடன் சம்பாஷனை, விரூபம் ஆக்கியது, கர த்ரிசிரஸ் முதலானவர்களின் வதம், ராவணன் வெகுண்டு எழுதல், மாரீசனின் வதம், வைதேஹி அபஹரனம், ராகவனின் வேதனை, ஜடாயு தரிசனம், ஜடாயு சம்ஸ்காரம் கபந்தனைக் காணுதல், பம்பா நதியைக் கடந்து சபரியைக் காணுதல், ஹனுமானைக் காணுதல், ருஸ்யமூக மலையை அடைதல், சுக்ரீவனைக் கண்டு நட்புக் கொள்ளுதல், வாலி சுக்ரீவ யுத்தம், சுக்ரீவன் அடிபடுதல், பின் வாலி வதம், தாரா வருத்தம், மழைக் காலம் என்று அங்கேயே தங்குதல், ராகவ சிங்கமான ராமர் கோபம், சுக்ரீவன் சைன்யத்தைத் திரட்டுதலும் பல திக்குகளிலும் சீதையைத் தேட அனுப்புதலும், பூமியிடம் வானரங்கள் வேண்டிக்கொள்ளுதல், ருக்ஷனுடைய குகையைக் காணல், ப்ராயோபவேசம் (தர்ப்பாசனங்களில் அமர்ந்து வடக்கு நோக்கி சாகும் வரைஉண்ணா விரதம் இருத்தல்) செய்ய முனைதல், சம்பாதி வருகை, பர்வதத்தின் மேல் ஏறுதல், லங்கையைக் காணல், சிம்ஹிகாவை வதம் செய்தது, லங்கையின் மலய மலையைக் கண்டது, இரவில் லங்கையில் நுழைந்தது,ஒரு ஸ்த்ரீயை (சீதையை) தேடல் மது சாலைகளை (பான பூமி) காணல்,மாளிகையின் பல இடங்களிலும் சுற்றிச் சுற்றித் தேடல், ராவணனைக் கண்டது, புஷ்பக விமானத்தைக் கண்டது, அசோக வனத்தில் சீதையைக் கண்டு கொண்டது, அடையாளத்தைத் தருதல், சீதையுடன் பேசுதல், ராக்ஷசிகளின் பயமுறுத்தல், திரிஜடை தன் கனவு பற்றிச் சொல்லக் கேட்டல், சீதை சூடாமணியைத் தருதலும், மரங்களை முறித்தல், ராக்ஷஸர்களை வீழ்த்துதல், கிங்கரர்களை ஹனுமன் அடித்தது, பிடிபட்டது, லங்கையை எரித்துவிட்டு திரும்பி வந்து மதுவனத்தை நாசம் செய்தது,சுக்ரீவன் ராகவனை ஆஸ்வாசப்படுத்துதல், மணியைத் தருதல், சமுத்திர ராஜனை சென்றடைதல், சேது பந்தனம், சமுத்ர ராஜனின் உதவியுடன் சமுத்திரத்தைக் கடத்தல், இரவில் லங்கையில் பிரவேசித்தல், விபீஷணன் வருகை, ராக்ஷஸ வதத்திற்கான உபாயங்களைச் சொல்லுதல், கும்பகர்ண, இந்திரஜித்மரணம், ராவணனை அழித்தல்,எதிரியின் ஊரில் சீதையை அடைந்தது, விபீஷணன் ராஜ்ய பட்டாபிஷேகம், புஷ்பக விமானத்தில் அயோத்யாசென்றது, பரதனை சந்தித்தல்,ராம பட்டாபிஷேகம், எல்லா சைன்யங்களையும்திருப்பி அனுப்பியது தன் ராஜ்யத்தில் சந்தோஷமாக இருப்பதையும், வைதேஹியை கை விட்டதையும், ராமர் பூமியில் வசித்த பொழுது நடை பெறாத மற்ற விஷயங்களை உத்தர காவ்யத்தில் பகவான் வால்மீகி முனிவர்இயற்றினார்.

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில் -காவ்ய ஸம்க்ஷேபம்- என்ற நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 4 அனுக்ரமனிகா ( நிகழ்ச்சி நிரல்)

ராஜ்யத்தை அடைந்து ராமர் அரசனாக இருந்தபொழுதே விசித்ரமான பதங்களைக் கொண்ட இந்த சரிதத்தை முனிவர் இயற்றி முடித்து விட்டார். இதில் இருபத்து நாலாயிரம் ஸ்லோகங்கள், ஆறு காண்டங்கள், ஐநூறு சர்க்கங்கள் இதைத் தவிர உத்தரக்காண்டத்தில் நடக்கப்போவதையும் எழுதி முடித்த முனிவர், இதை எப்படி வெளியிடுவது என்று யோசிக்கலானார். நல்ல எண்ணம் கொண்ட முனிவர் இவ்வாறு யோசனையில் ஆழ்ந்திருந்த சமயம் குச, லவர்கள் வந்து பாதத்தில் வணங்கி நின்றார்கள். இந்த இருவரும், தர்மம் சார்ந்த அறிவும், புகழும் வாய்ந்த அரச குமாரர்கள். ஆஸ்ரமத்தில் வசித்த இச்சகோதரர்கள்நல்ல குரல் வளமும், சங்கீத ஞானமும் உடையவர்கள். வேதம் கற்றுத் தேர்ந்தவர்கள். முறையாக வேதத்தை அத்யயனம் செய்துவைக்க என்றே, வால்மீகி முனிவர் அவர்களை ஆஸ்ரமத்தில் ஏற்றுக் கொண்டிருந்தார். இவர்களுக்கு, மகத்தான -சீதாயா: சரிதம் மஹத் – (சீதையின் உயர்ந்த கதை),-பௌலஸ்திய வதம்- (புலஸ்திய வம்சத்தினரின் வதம்), என்றும், பெயரிட்ட ராமாயண காவ்யம் முழுவதையும் படிக்கவும், பாடவும் பயிற்சி அளித்தார். இந்த காவ்யம் இனிமையானது, மூன்று வித ப்ரமாணங்களும் கொண்டது, ஏழு விதமானஜாதிகளில் அமைக்கப் பெற்றது, ஸ்ருதி, லயம் இசைந்து பாடத் தக்கது, ஸ்ருங்காரம், கருணை, ஹாஸ்யம், ரௌத்3ரம், ப4யானகம் என்ற வீரம், இந்த ரஸங்கள் நிறைந்த காவ்யத்தைப் பாடினார்கள். கந்தர்வ கான முறைகளை அறிந்திருந்த சகோதரர்கள் இருவருமே, மதுரமான குரலும், இனிமையாகப் பேசும் சுபாவமும் உள்ளவர்கள். பிம்பத்திலிருந்து வெளிப்பட்ட மற்றொரு பிம்பம் போன்ற உருவ ஒற்றுமை உடையவர்கள். ராமரின் வாரிசாக உதித்த அரச குமாரர்கள். உத்தமமான இந்த ஆக்யானம் அல்லது கதையை மாசற்ற இந்த இளம் குமரர்கள், வாயினால் சொல்லிப் பார்த்து, விதி முறைப்படி கற்றுத் தேர்ந்து, முனிவர்கள், பிராம்மணர்கள், சாதுக்கள் கூடும் இடங்களில் பாடிக் காட்டினார்கள். இதைக் கேட்டு தர்ம வழியில் நிற்கும் முனிவர்கள் மற்றும் சாதுக்கள், கண் கலங்க நன்று, நன்று என்று ஆச்சர்யத்துடன் .இச்சிறுவர்களைப்புகழ்ந்து, மனம் நிறைந்த ஆனந்தத்துடன்,பாடும் குச லவர்களை, (பாடகர்களை என்றும் பொருள்) – பாராட்டுக்குரியவர்கள் என்பதால் மனதார பாராட்டினார்கள். கீதத்தின் இனிமை என்ன ? ஸ்லோகங்களன் விசேஷம் தான் என்ன ? என்றோ நடந்தது நேரில் கண்டது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கொண்டாடினார்கள். பா4வத்தை உணர்ந்து அக்குமாரர்கள் பாடினார்கள். இருவரும் இணைந்து ரஞ்சகமாக ஸ்வர சம்பத்துடன்பாடினார்கள். தபஸ்விகளான முனிவர்கள் அனுபவித்துக்கேட்க, சிறுவர்கள் தாங்களும் மேலும், மேலும் அனுபவித்து பாடலானார்கள். ஒரு முனிவர் மிகவும் சந்தோஷமடைந்து கலசத்தை அன்பளிப்பாக கொடுத்தார். ஆனந்தமடைந்த மற்றொருவர் வல்கலத்தையும், மற்றொருவர் மான் தோலையும், மௌஞ்சி என்ற கயிற்றை ஒருவரும், ஒருவர் கமண்டலுவும், ஒருவர் யக்ஞசூத்திரத்தையும் பரிசாக கொடுத்தனர். உடும்பரீ என்ற சிறந்த பாயை ஒருவர் அன்பளிப்பாகத் தரவும், மற்றவர் ஜப மாலையை அளித்தார். ஆடையை ஒருவர் தர, மற்றவர் குடாரம் எனும் காய், கிழங்குகளை வெட்டப் பயன் படும் ஆயுதம், அதைத் தந்தார். ஒருவர் காஷாய வஸ்த்ரம் தந்தார் எனில், மற்றவர் மரவுரியை கொண்டு வந்து கொடுத்தார். வாயார -ஆயுஷ்மான் பவ- என்று வாழ்த்தினார்கள்.சத்ய வாதிகளான முனிவர்கள் பல விதமான நல்லாசிகளைவழங்கினர்.வரங்களைக் கொடுத்தனர். வால்மீகி முனிவரால் பாடப்பட்ட இந்த காவ்யம் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது என்று பாராட்டினார்கள்.வருங்கால கவிகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடியது, கிரமமாக முடிக்கப் பெற்றது, நன்றாக பாடத்தெரிந்தவர்கள் முறையாக பாட இசைவாக அமைக்கப் பெற்றது. கேட்பவர்கள் மனதைக் கவரும் வண்ணம் எங்கும் புகழ் பெற்றவர்களாய், ஆயுள், ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாய் உள்ள இந்தசரித்திரத்தைப் பாடிக்கொண்டு ராஜ வீதிகளில் நடந்து வரும் பொழுது, ராமர் பார்த்தார். குச லவர் என்ற சகோதரர்களை, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, தானே சத்ருக்களை அழிக்கும் வல்லமை வாய்ந்த ராமர், அச் சிறுவர்களை, மரியாதைக்குரியவர்களாக மதித்து, முறையாக உபசாரம் செய்தார். தன் பொன்னாலான சிம்மாசனத்தில் அமர்ந்து ராமர் மந்திரிகளையும், சகோதரர்களையும் உசிதமான ஆசனங்களில் அமரச் செய்தார். அழகே வடிவான அந்த சிறுவர்களை வியந்து பார்த்த ராமர், பரத, சத்ருக்ணன், லக்ஷ்மணன் இவர்களிடம் -தெய்வீகத் தன்மைக் கொண்ட இச்சிறுவர்களின் ஆக்யானம், காவ்யத்தைக் கேளுங்கள். விசித்ரமான பதங்களைக் கொண்ட இந்தப் பாடலை இவர்கள் அழகாகப் பாடுகிறார்கள் – என்றார். அவர்களும் இனிமையாக, தங்களுக்கு ஏற்ற ஸ்ருதியில், வாத்ய, லயம் இவற்றுடன், மிக விஸ்தாரமாக பாடினார்கள். உடல் புல்லரிக்க, மனமும் ஹ்ருதயமும் ஆனந்தத்தால் நிறைய, அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் கேட்டு மயங்க பாடல் சுகமாக அமைந்தது. ராமர் -இந்த முனிவர்கள் ராஜ லக்ஷணங்கள் உடையவர்கள், சிறந்த பாடகர்கள், தவ வலிமையும் உடையவர்கள், சிறந்த (மகானுபாவம்) இந்த சரித்திரத்தை புரிந்து கொண்டு கேளுங்கள்- என்றார். ராமரின் இந்த வார்த்தைகளால் ஊக்குவிக்கப்பட்ட சிறுவர்கள் நன்றாக பாடினார்கள். மார்கம், விதானம் என்ற முறைகளை அனுசரித்துப் . கூட்டத்தோடு அமர்ந்து ராமரும், லயித்து, ஈ.டுபாட்டுடன் கேட்கலானார்.

(மகானுபாவம் சரிதம் என்பதன் பொருள் – நடந்ததை நடந்தபடி சொன்ன சரித்திரம் என்பது மட்டுமல்ல,அதை வெளிப்படுத்தும் காவ்யத்தின் அழகு, அதை சிறப்பித்து மகா அனுபவம் என்றும் கொள்க. கேட்ட மாத்திரத்தில் ஆனந்தம் அளிக்கும் காவ்யம். சீதையின் சரிதம், ராம சரிதத்தை விட விசேஷமானது என்று சொல்லப்பட்டதாக ஆகிறது.)

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பாலகாண்டத்தில், அனுக்ரமணிகா என்ற நான்காவது அத்தியாயம்).

அத்தியாயம் 5 -அயோத்யா வர்ணனை

(ஸர்வா பூர்வமியம் என்று ஆரம்பிக்கிறார் வால்மீகி முனிவர். விஸ்தாரமாக ராமாயணத்தை ஆரம்பித்த கவி, சத்ய வாக்யமாக, தெய்வீகமான ஸர்வாபூர்வம் என்று ஆரம்பித்தது விசேஷம். யதேச்சையாக நேர்ந்த பத சேர்க்கை என்றாலும், அர்த்த செறிவும் உள்ளது. இந்த காவ்யம் ஸர்வா பூர்வம்- எல்லாவற்றிற்கும் முந்தையது. ஸர்வாதிசாயி- அதிசயமானது, ஸர்வாபாதேயம் – எல்லோரும் வணங்கத்தக்கது என்று இவ்வாறு-ப4விஷ்ஸ்யதி பிற்காலத்தில் இவ்வாறுஉயர்வாக எண்ணப்படும் என்ற உள்ளர்த்தங்களை பெரியவர்கள் காண்கிறார்கள்.)

பூமி அணைத்தும் யாருக்கு சொந்தமாக இருந்ததோ, ப்ரஜாபதியில் ஆரம்பித்து, வெற்றி வாகை சூடி வந்த அரசர்களுள் ஒருவர் சகரர். இவரால் சாகரம்-சமுத்திரம் வெட்டப்பட்டது. ஆறாயிரம் பிள்ளைகள் இவரைச் சூழ்ந்து கொண்டு சென்றார்கள். இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த இந்த மஹான்களான அரச பரம்பரையில்நடந்த கதை ராமாயணம் என்று பெயர் பெற்றது. அதை முழுவதுமாக நான் சொல்லப்போகிறேன்.

தர்ம, காம, அர்த்தங்கள் நிறைந்த இந்த காவ்யத்தை அசூயை இல்லாமல் கேளுங்கள். கோசலம் என்ற விசாலமான ஜனபதம் (பெரிய ஊர்), சரயூ நதிக்கரையில் அமைந்திருந்தது. மகிழ்ச்சி நிறைந்த, தன, தான்யம் நிரம்பப் பெற்ற ஊர். அதனுள் அயோத்யா என்ற சிறு ஊர் (நக3ரீ) உலகப் புகழ் பெற்று விளங்கியது. மானவேந்திரனான மனுவினால் தானே உண்டாக்கப்பட்டது. பன்னிரண்டு யோஜனை பரப்புள்ளது. மூன்றுவிதமான -மகா பதா- என்ற பெரிய வீதிகள், அகலமாக நல்ல விதமாக போடப்பட்டிருந்தது, இந்த பெரிய வீதிகள், தினமும் நீர் தெளித்து, பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, லக்ஷ்மீ கரமாக, ராஜ மார்கமாக விளங்கும். தேவலோகத்தில் இந்திரன் வசிப்பது போலவே, இந்த ஊரில் ராஜா தசரதன் வசித்து வந்தான். இவன் எப்பொழுதும் தன் ராஜ்யத்தை விஸ்தரிப்பதிலேயே கவனமாக இருந்து வந்தான். தோரணங்களும், அழகிய தாழ்ப்பாழ்களும், திட்டமிட்டு அமைக்கப்பட்ட கடை வீதிகளும், யந்த்ரங்கள் பொருத்தப்பட்ட கடைகளும், சில்பிகள், பாடகர்கள், மாகதர்கள் எனும் துதி பாடும் கூட்டத்தினர், நிறைந்து இருந்தனர். உவமை சொல்ல முடியாதபடி காந்தியுடைய உயர்ந்த மாடங்கள், அதன் மேல் பறக்கும் நூற்றுக் கணக்கான கொடிகளுடன், அழகாக விளங்கின. பல இடங்களில் நடன, நாடக அரங்கங்கள், உத்யானங்கள், மாமர வகைகள், ஒட்டியானம் போன்று சால மரங்கள் சுற்றிலும் இருக்க, கம்பீரமான கோட்டை, அகழி சூழ்ந்ததும், யாரும் எளிதில் நுழைய முடியாதபடி பாதுகாப்பாக அமைந்த கோட்டை. யானைகளும், குதிரைகளும், பசுக்களும், ஒட்டகங்களும், கோவேறு கழுதைகளும், (கோலாங்கூலம்), நிறைந்தது. பிரமுகர்களும், ராஜ உத்யோகஸ்தர்களும், யாகம் செய்பவர்களும் காணப்பட்டனர். வாணிபம் செய்ய நாலா தேசத்திலிருந்தும் வந்து கூடிய வணிகர்களால் கல கலப்பாக இருந்தது. பலவிதமான ரத்னங்கள் இழைத்துக் கட்டிய மாளிகைகள், பர்வதம் போல் உயர்ந்து நிற்கின்றன. கூடாகாரம் எனும் தான்யம் வைக்கும் குதிர்கள் நிறைந்து காணப்பட்டன. இந்திரனுடைய அமராவதி போல சமதளமான பூமியில் கட்டப்பட்ட, ஓட்டை, விரிசல் இல்லாமல் பார்த்து கட்டப்பட்ட வீடுகள், விமானங்கள் (கூரைகள்) அழகூட்ட, பலவிதமான ரத்னங்கள் நிறைந்ததாக, எட்டு கோண வடிவங்களிலான,அழகிய பெண்டிர்களும் மற்றவர்களும்வளைய வர நிறைவாக காணப்பட்டன. அரிசி, நெல் நிறைந்த குதிர்கள், கரும்பு போல் இனிக்கும் குடிநீர், துந்துபி, வீணை, ம்ருதங்கம், பணவம் எனும் வாத்யஓசைகள் சதா விளங்க, உத்தமமான சித்தர்கள் தங்கள் தவப் பயனாக பூமியிலிருந்து தேவலோகம்செல்ல பயன் படும் விமானம் போலவும், அழகாக அமைக்கப்பட்ட வீடுகளின் வரிசைகளும், உள்ளே வசிக்கும் உத்தமமான மனிதர்கள் பாதுகாப்பாக இருக்க பாணங்களால் துளைக்கப் படாதவாறு அமைக்கப் பட்டிருந்தன. மிக சாமர்த்ய சாலிகளான சப்த வேத்யம் என்ற கை வேலை அறிந்தவர்களால் வேலைப்பாடு செய்யப்பெற்று விளங்கின. கூர்மையான பாணங்களாலும், தங்கள் புஜ வலிமையாலும், சுற்றியிருந்தவனங்களில் மதம் பிடித்து தன்னிஷ்டம் போல் திரியும் சிங்கம், புலி, வராகம் இவற்றை வேட்டையாடும் வீரர்கள் ஆயிரக்கணக்காக, பெரிய ரதங்களில் சுற்றிக்கொண்டிருப்பர். இவ்வளவு பெருமை வாய்ந்த அயோத்யா நகரில் ராஜா தசரதர் வசித்து வந்தார். வேதங்களை, அதன் ஆறு அங்கங்களுடன் கற்றுத் தேர்ந்த பிராம்மணோத்தமர்கள், அக்னி ஹோத்ரம் முதலியவற்றை இடை விடாது செய்து வந்தனர்.இது போல சத்யம், நியாயம் என்ற குணங்கள் நிறைந்த ஆயிரக்கணக்கான மகாத்மாக்கள், சாதாரண ரிஷிகள், மகரிஷிகள்என்று படிப்படியாக ரிஷி கணங்களும் சூழ்ந்து இருந்தனர்.

(இது வரை வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், அயோத்யா வர்ணனை என்றஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்).

அத்தியாயம் 6 – ராஜ வர்ணனை

இந்த அயோத்தியில், வேதம் அறிந்தவர்கள் ஊர் ஜனங்களின் பிரியத்திற்கு பாத்திரமானவர்களாகவும், தேஜஸ் வாய்ந்தவர்களாகவும்,முக்காலமும் அறிந்தவர்களாகவும், இருந்தனர். அதிரதீ என்று சொல்லப்பட்ட ராஜா தசரதர், தர்மத்தில் நம்பிக்கைஉள்ளவராக, புலனடக்கம் உள்ள மகரிஷியாக, உலகில் பலசாலி என்று பெயர் பெற்றவராக, எதிரிகளை அழித்து, தன் மக்களைக் காப்பவர், புலன்களை அடக்கியவர், செல்வமும், சேமித்து வைக்கப்பட்ட மற்ற பொருள்களாலும் இந்திரன், குபேரனுக்கு சமமானவர்.உலகை மனு எப்படிகாத்து வந்தாரோ அதே போல வாழ்ந்து உலகை ஆண்டு வந்தார்.சத்ய சந்தனான இந்த அரசனால் இந்திரனுடைய அமராவதி போல அயோத்யா பாதுகாக்கப்பட்டது.இந்த நகரத்தில் ஜனங்கள் மகிழ்ச்சியாகவும், தர்ம சிந்தனையோடு, நிறைய கற்றவர்களாகவும், திருப்தியாகவும், செல்வம் நிரம்பியவர்களாகவும், சத்யமேபேசுபவர்களாகவும், இருந்தனர். இந்த உத்தமமான நகரில், செல்வம் குறைவு என்று யாருக்குமே இல்லை. பெரிய குடும்பத்தை உடையவன், தன் செயலை செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறான் என்றோ, இவனிடம் பசு, குதிரை, தன, தான்யம் எதுவும் இல்லை என்றோ யாரும் இல்லை. காமியாகவோ, ஒழுக்கம் கெட்டவர்களாகவோ யாரும் இல்லை. கொடூரமாகவோ, அதிக ஆத்திரம் உடையவனாகவோ யாரையும் காண முடியாது. நாஸ்திகனோ, கல்வியறிவு இல்லாதவனோ காணவே முடியாது. எல்லா ஆண்களும், பெண்களும் கட்டுப்பாட்டுடனும், தர்ம சீலர்களாகவும் இருந்தனர்.மகரிஷிகள் போல் குற்றமற்றவர்களாகவும், நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களாகவும் இருந்தனர்.குண்டலம், மகுடம், மாலை, அலங்காரங்கள், வாசனை திரவியங்கள் இவை எல்லாம் இன்றி யாரையுமே காண முடியாது. தானம் கொடுப்பதில் தயக்கம் காட்டுபவரோ, தான் அனுபவிக்காத லோபியோ, கிடையாது.கைகளில் ஆபரணம் சூடாதவர்களே இல்லை. அதே போல சுய மரியாதையும் நிறைந்து இருந்தனர். நித்யம் அக்னி வளர்க்காத அல்ப புத்தி உடையவர்களோ, திருடரோ, எப்பொழுதும் அயோத்தியில் இருந்தது இல்லை.பிராம்மணர்கள், தம் காரியங்களில் மும்முரமாக ஈ.டுபாட்டுடன், சுயக் கட்டுப்பாடுடன் இருந்தனர். தானம், அத்யயணம் என்று தங்களுக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்வார்கள். தானம் பெறும் விதத்திலும் கட்டுப்பாடுடன் இருந்தனர். நாஸ்திகம் பேசுபவனும் இல்லை. பொய் பேசுபவனும் இல்லை. முழுமையான கல்வியறிவு பெறாதவனும் இல்லை. அசூயை உடையவனோ, சக்தியற்றவனோ, புத்தியற்றவனோ இல்லை. வேதம் கற்றவர்கள், வேதத்தை அதன் ஆறு அங்கங்களூடன் கற்றவர்களாக இருந்தனர். விரதங்களை அனுசரிப்பவர்கள், ஆயிரக்கணக்காக தானம் செய்தனர். தீனனாக எவரையும் காண முடியாது. அல்ப புத்தி உடையவனோ, வருந்துபவனோ கிடையாது. அழகற்ற பெண்களோ, ஆண்களோ, அயோத்தியில் எப்போதுமே இருந்தது இல்லை.ராஜாவிடம் விஸ்வாசமில்லாத பிரஜையும் அயோத்தியில் கிடையாது. பிராம்மணர் முதலிய நான்கு வர்ணத்தினரும், தேவதைகள், அதிதிகள் இவர்களை பூஜித்தனர். செய் நன்றி மறவாத கொடையாளிகள். சரீர பலமும், மன தைர்யமும் உடையவர்கள். தர்மத்தையும், சத்யத்தையும் கடைப்பிடித்து பல்லாண்டு வாழ்பவர்கள். புத்ரபௌத்திரர்களுடன், மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தனர். முன்பு மனு என்ற ராஜா தன் ராஜ்யத்தை பரி பாலித்தது போலவே, தசரத ராஜா ஒரு குறையும் இன்றி பிரஜைகளைப் பாலித்து வந்தார். அக்னி போன்ற வீரர்கள், மிருதுவான, மனோ பலமில்லாதவர்களைபொறுக்க மாட்டார்கள். தன் வித்தையில் தேர்ந்தவர்கள், குகையில் கிடக்கும் சிங்கம் போன்றவர்கள். காம்போஜ நாட்டு உயர் தர குதிரைகள், காடுகளிலும், விந்த்ய மலையில் பிறந்த உயர் ரக யானைகளும், பர்வதம் போன்ற பெரிய உருவம் உடைய யானைகள், ஐராவதம் போன்ற குலத்தில் பிறந்த ஜாதி யானைகள், மகா பத்ம குலத்தைச் சேர்ந்தவைமதம் பிடித்த நிலையில் எப்பொழுதும் தயாராக உள்ள நிலையில் யானைப் படையை உடைய அயோத்யா,இரண்டு யோஜனை தூரத்திலிருந்தே எளிதில் நுழைய முடியாத பாதுகாவலோடு இருந்தது. இந்த நகரை தசரத ராஜா பாலித்து வந்தான். நக்ஷத்திரங்களை சந்திரன் அடக்கி ஆளுவது போல ஆண்டான். இந்திரனுக்கு சமமான இந்த அரசன், அழகிய தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள், பல விதமான வேலைப்பாடுகளுடன் கூடி மங்களகரமாக விளங்கும் அயோத்யா நகரில், பல சிற்றரசர்கள் சூழ ஆட்சி செய்தான்.

(இது வரை வால்மீகி முனிவரின்,ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ராஜ வர்ணனை என்ற ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 7அமாத்ய வர்ணனை (மந்திரிகள் பற்றிய வர்ணனை)

இக்ஷ்வாகு வம்சத்து மந்திரிகள், அரசனின் எண்ணத்தைக் கோடி காட்டினாலே புரிந்து கொள்பவர்களாகவும், உள் நடப்புகள் பற்றித் தெரிந்தவர்களாகவும், இருந்தனர்.எப்பொழுதும் பிரியமாக இருப்பதிலும், ஹிதமாக செயல்படுவதிலும், சிறந்து விளங்கினர். புகழ் வாய்ந்த மகான்களாக எட்டு மந்திரிகள், ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். ராஜ காரியங்களில் முழு மனதோடு ஈ.டு பட்டவர்கள். த்ருஷ்டி, ஜயந்தன், விஜயன், சித்தார்த்தன், அர்த்த சாதகன், அசோகன், மந்த்ரபாலன், சுமந்திரன் என்ற எட்டுபேர்.ரித்விக் என்ற வேத பாண்டித்யம் பெற்ற மகான்கள்இருவர், வசிஷ்டரும், வாமதேவரும்.சுயக்ஞன், ஜாபாலி, காச்யபன், கௌதமன், மார்க்கண்டேயன் என்ற பெரியவர், காத்யாயணர் என்ற பிராம்மணர்,இவர்களும், பிரும்ம ரிஷிகளாகவும், நித்யம் யக்ஞம் செய்பவர்களாகவும் இருந்து அரசனுக்கு ஆலோசனை சொல்வார்கள்.நிறைந்த கல்வியினால் வணங்கி இருப்பவர்கள், சாமர்த்யமும், ஒருவருடன் ஒருவர் ஸ்னேகமாகவும், நீதி அறிந்தவர்களாகவும், நிறைய படித்தவர்களாயினும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்தவர்கள், சாஸ்திரங்களை அறிந்த திடமான கொள்கையுடையவர்கள்,கீர்த்தி வாய்ந்தவர்கள், சொன்ன சொல்லை நடத்திக் காட்டுபவர்கள்.. தேஜஸ், பொறுமை, புகழ் – இவை இவர்களை அடைந்து புகழ் பெறும்.மெதுவாகபுன்னகையுடன் இனிமையாக பேசுபவர்கள்.கோபத்தாலோ, காம வசப்பட்டோ பொய் பேசாதவர்கள். தன் விஷயமோ, வெளி விஷயமோ, இவர்கள் அறியாதது எதுவுமே இல்லை. செய்து கொண்டிருக்கும் வேலை, செய்யப்பட்டது இவைகளை தூதர்கள், ஒற்றர்கள் மூலமாக கண் காணிக்கும் சக்தி வாய்ந்தவர்கள். நட்புடன் பழகுவதில் கெட்டிக்காரர்கள். அவசியம் நேர்ந்தால்,தன் மகனையும் தண்டிக்கத் தயங்காதவர்கள்.பொக்கிஷத்தையும், பலத்தையும் பாதுகாப்பதில் கவனமாக இருப்பவர்கள். அறிவற்ற ஒருவன் தவறாக செய்தால் கூட தண்டிக்க மாட்டார்கள். வீரர்களாக இருந்தாலும் உத்ஸாகத்தைக்கட்டுக்குள் வைத்துக் கொண்டிருப்பவர்கள். ராஜ தர்மத்தை அனுசரிப்பவர்கள், ஒழுக்கத்துடன் இருப்பவர்களை மதிப்பவர்கள், அதே சமயம் விஷயத்தில் சபலமுடையவர்களையும், பிராம்மணனோ,க்ஷத்திரியனோ துன்புறுத்த மாட்டார்கள். இவர்கள் பொக்கிஷத்தை எப்பொழுதும் நிரப்பியே வைத்திருப்பார்கள். யாவரும் அறிந்த இவர்கள் ஒரே குறிக்கோள் உடைய சிறந்தஅறிஞர்கள்.மனிதனின் பலாபலம் அறிந்து, கடுமையாக தண்டிக்கவும் கூடியவர்கள் என்பதால், நாட்டில் யாருமே பொய் சொல்பவனோ, துஷ்டனோ, பிறன் மனையை நாடும் தூர்த்தனோ, கிடையாது. இதனால் நாடும், சுற்றுப்புற நகரங்களும் அமைதியாக இருந்தன. நல்ல வசதியான வாழ்க்கை, ஆடை ஆபரணங்களோடு,அரசனின் நன்மையையே நினைப்பவர்களாக, நீதி நியாயம் இவற்றோடு குருவின் குணங்களை பின்பற்றும் சீடர்களாக,பராக்கிரமத்தில் பெயர் பெற்றவர்களாக, வெளி நாடுகளில் கூட மதிக்கப்பட்டவர்களாக, நல்ல புத்தியும் குணமும் நிறைந்து, இருந்தனர்.குணமற்றவர் என்று ஒருவருமே இல்லை. அரச நீதியான சந்தி, விக்ரஹம் இவற்றை அறிந்த, சுபாவமாகவே மந்திராலோசனை செய்வதில் வல்லவர்களாக, சூக்ஷ்மமான புத்தி உடையவர்களாக,செல்வந்தர்களாக, நீதி சாஸ்திரங்களில் விசேஷ க்ஞானம் உடையவர்களாக இருந்தும் பிரியமாக பேசுபவர்களான மந்திரிகளுடன் தசரத ராஜா பூமியை நல்ல முறையில் ஆண்டு வந்தான். ஒற்றர்கள் மூலம் நாட்டு நடப்பை அறிந்து கொண்டு, தர்மத்தின் துணையோடு பிரஜைகளை சந்தோஷப்படுத்தி பாலித்து வந்தான். கொடையாளிஎன்று உலகம் முழுவதும் பெயர் பெற்றான். தனக்கு சமமான, தனக்கு மிஞ்சிய சத்ருவை, அவன் சந்திக்கவே இல்லை.பிரமுகர்களும், தனவான்களும்,எப்பொழுதும் வணங்கி நிற்க, பலவிதமான நண்பர்களுடன், இந்திரன் தேவ லோகத்தை ஆண்டது போல, ராஜ்யத்தை ஆண்டான். புத்தி சாமர்த்தியமும், செயல் திறனும் கொண்ட, நன்மையே விரும்பும், அன்பும் ஈ.டுபாடும் கொண்ட மந்திரிகளின் உதவியால் அப்பொழுது தான் உதித்த சூரியன் தன் பிரகாசம் பொருந்திய கிரணங்களுடன் விளங்குவது போல விளங்கினான்.

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல்கள் தொகுப்பில், பால காண்டத்தில், அமாத்ய வர்ணனை என்ற ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 8 சுமந்திர வாக்யம் (சுமந்திரன் சொல்லியது)

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த தர்மம் அறிந்த மகானான ராஜா தசரதன் ஒரு மகனுக்காக தவித்தான். வம்சம் விளங்க அவனுக்கு ஒரு மகன் இல்லை. யோசித்து யோசித்து, வம்சம் விளங்க ஒரு புத்திரன் வேண்டும் என்று வேண்டி ஏன் நான் அஸ்வமேத யாகம் செய்யக்கூடாது என்று தீர்மானித்தான். யாகம் செய்வது என்று தீர்மானித்தபின் எல்லா மந்திரிகளையும் அழைத்து ஆலோசனை கேட்டான். மந்திரிகளில் முக்கியமானவனான சுமந்திரரிடம் சொன்னான் -புரோகிதர்களையும், எல்லா குரு ஜனங்களையும் சீக்கிரம் அழைத்து வா- என்று. சுமந்திரனும் வேகமாக சென்று, சமஸ்த மந்திரிகளையும், வேத விற்பன்னர்களையும் அழைத்து வந்தான். சுயக்ஞன், வாமதேவன், ஜாபாலி, காஸ்யபன், புரோகிதரான வசிஷ்டர், மற்றுமுள்ள ப்ராம்மணோத்தமர்கள் எல்லோரும் கூடினர். அவர்களை முறைப்படி வணங்கி மரியாதை செய்த பின், ராஜா தசரதன், தர்மம் அர்த்தம் நிரம்பிய தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டான். – கொஞ்சி குலாவ எனக்கு மகன் இல்லை என்பது எனக்கு குறையாகவே உள்ளது. அதனால் அஸ்வமேத யாகம் செய்ய நினைக்கிறேன். சாஸ்திரத்தில் சொல்லியபடி, இந்த யாகத்தை நான் எவ்வாறு செய்ய வேண்டும்? என் விருப்பம் நிறைவேறுமா? நீங்கள் நன்றாக யோசித்து சொல்லுங்கள்- என்று வேண்டிக் கொண்டான். -நல்லது நல்லது- என்று ப்ராம்மணர்களும், மற்றவர்களும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். வசிஷ்டர் உள்ளிட்ட ப்ராம்மணர்கள், மகா மந்திரிகள், அரசனின் விருப்பத்தை அப்படியே செய்வோம். சரயூ நதிக்கரையில் யாக பூமியை அமைப்போம். ஏற்பாடுகளை கவனிக்கலாம். குதிரையை விடுவோம். நல்லபடியாக யாகம் முடித்து நீ விரும்பிய புத்திரனை பெறுவாய் அரசனே என்று வாழ்த்தி, -புத்திரனை விரும்பிய நீ இது போல தார்மீக வழியில் யோசித்தாயே, நல்லது.- என்று சொல்லிச் சென்றனர். இதனால் மகிழ்ந்த அரசன் மந்திரிகளை கூப்பிட்டு எற்பாடுகளை ஆரம்பிக்கச் செய்தான்.-குதிரைகளைப் பற்றி அறிந்த சாமர்த்யசாலிகளானவீரர்களிடம் பயிற்சி பெற்ற குதிரையை ஓட விடுங்கள். அதை பயிற்றுவித்த வீரர்களும் உடன் செல்லட்டும். சரயூ நதிக் கரையில் யக்ஞ பூமியைக் கட்டுங்கள். விதி முறைப்படி சாந்தி பாடங்கள் நடக்கட்டும். எல்லா அரசர்களூம் இந்த யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த உயர்ந்த யாகத்தை செய்யும் பொழுது எந்த விதமான தவறும் நேரக்கூடாது. கஷ்டம் ஏற்படக்கூடாது. எங்கே இடைவெளி கிடைக்கும், நாம் உள்ளே புகுந்து கெடுக்கலாம் என்று பிரும்ம ராக்ஷஸர்கள் காத்திருப்பார்கள். யாகம் அழிந்தால், அதைச் செய்யும் கர்த்தாவான எஜமானன் அழிவான். அதனால் கவனமாக, எப்படி இந்த யாகம் விதி முறைகள் எள்ளிவும் பிசகாமல் நடக்குமோ, அப்படி ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.-  என்றான். அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, அரசனின் மரியாதையை ஏற்றுக் கொண்டு, மந்திரி சபை கலைந்தது. அவர்கள் அரசனை வாழ்த்தி விடை பெற்றுச் சென்றனர்.அவர்களை வழி அனுப்பிய பின் ராஜா தசரதன் அடுத்த நிலையில், (பதவியில்) இருந்த மந்திரிகளை அழைத்துச் சொன்னான். -வேதம் அறிந்த ரிஷிகளால் முறைப்படி யாகம் செய்யலாம் என்று உபதேசம் பெற்று விட்டேன். அதனால் நீங்கள் தான் இதை நல்ல முறையில் முடித்து தர உதவ வேண்டும். நீங்கள் சாமர்த்யசாலிகள், செய்ய வேண்டிய காரியங்களை உடனே ஆரம்பியுங்கள் – என்று சொல்லி அவர்களையும் அனுப்பி விட்டு தன் அரண்மனைக்குள் சென்றான். அந்தரங்கமான பிரியம் கொண்ட தன் மனைவிகளை அழைத்து அவர்களிடம் -பிள்ளை வேண்டி யாகம் செய்யப் போகிறேன்,நீங்களும் விரதம் மேற்க் கொள்ளுங்கள் – என்றான்.அந்த மனைவிகளின் அழகிய வதனங்களும், பனி விலகிய பின் மலரும் தாமரையைப் போல விகசித்தன.

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல்தொகுப்பில், பால காண்டத்தில், சுமந்திர வாக்யம் என்ற எட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 9 ருஸ்யஸ்ருங்கோபாக்யானம் (ருஸ்ய ஸ்ருங்க முனிவரின் கதை)

அன்று இரவில் சந்தித்தபொழுதுசுமந்திரர் அரசனிடம் தனியாக ஒரு விஷயம் சொல்லலானான். –அரசே,  நான் முன் ஒரு முறை கேள்விப் பட்டதைச் சொல்கிறேன். ரித்விக் எனப்படும் பண்டிதர்கள் சொல்லி நான் கேட்டேன். சனத்குமாரர் ஒரு முறை சொன்னாராம். ரிஷிகளிடத்தில்.உங்களுக்குப் பிள்ளை இல்லையே என்பது பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது, உங்களுக்கு புத்திர பிராப்தி உண்டு என்றாராம். காச்யபருடைய பிள்ளை விபாண்டகன் என்று ஒரு முனி. அவருக்கு ருஸ்ய ச்ருங்கர் என்று ஒரு பிள்ளை.தந்தை சொல் ஒன்றே அறிந்தவனாக, காட்டில் தன்னந்தனியாக வளர்ந்தவன். முனிவர் வேறு எதுவுமே அறிய அவனை விடவில்லை.இவ்வாறு பிரும்மசர்ய விரதத்தைக் காத்து வந்தான். கடுமையான விரதம்.உலகில் இதைப் பற்றி பிராம்மணர்கள் பேசிக் கேட்டிருக்கிறோம். அக்னியை வணங்குவதும், வளர்ப்பதும், தந்தை சொல் கேட்பதுமாகவே இந்த பிள்ளை வளர்ந்துபெரியவன் ஆனான். அந்த சமயம் அங்க ராஜ்யத்தை ரோமபாதர் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் ராஜ்யத்தில், இதுவரைக் கண்டு அறியாத கொடிய கஷ்டம். மழையே இல்லாமல் வறட்சியாக ஆயிற்று ஜனங்கள் படும் பாடு சகிக்காமல் ராஜா மந்திரிகளையும், குரு ஜனங்களையும் அழைத்து என்ன செய்யலாம்என்று விசாரித்தார். -நீங்கள் எல்லோரும் தர்மம் அறிந்தவர்கள். உலகத்தின் கஷ்ட நஷ்டங்களைஉணர்ந்தவர்கள். பிராயசித்தம் செய்ய வேண்டுமா ? நன்கு யோசித்து எனக்கு ஒரு வழிச் சொல்லுங்கள்- இவ்வாறு அரசன் வேண்டிக் கொண்ட பின் அந்த அறிஞர்கள் ஒன்று கூடிச் சொன்னார்கள். –அரசனே,  விபாண்டகரின் புத்திரனான ருஸ்ய ஸ்ருங்கரை எப்படியாவது இங்கு அழைத்து வந்து, உன் பெண் சாந்தாவை அவருக்கு விவாகம் செய்து கொடு.- என்றனர்.இதைக் கேட்டு அரசன் கவலைf கொண்டார். அந்த ருஸ்யஸ்ருங்க முனிவரை எப்படி என் நாட்டிற்கு வரவழைப்பேன் என்று யோசித்தார். அவர் மந்திரி சபையைக் கூட்டி,புரோஹிதர்களையும், மகா மந்திரிகளையும் அனுப்ப முடிவு செய்தார்.அப்பொழுது அவர்கள் தலை குனிந்தவாறு, விபாண்டக முனிவரிடம் எங்களுக்கு பயம்,நாங்கள் போய் இந்த செயலை நிறை வேற்ற முடியாதுஎன்று மறுத்து விட்டார்கள்.அவர்களே அரசனுக்கு ஒரு உபாயமும் சொன்னார்கள். கணிகா ஸ்த்ரீகளை அனுப்பி, ருஸ்ய ச்ருங்கரைவர வழைத்துக் கொள்வோம் என்று சொல்ல, அவ்வாறே ருஸ்ய ச்ருங்க முனிவரை அழைத்து வந்து, மகள் சாந்தாவை மணம் செய்து கொடுக்க, மழையும் பொழிந்தது,. மருமகனான ருஸ்ய ச்ருங்கர், உனக்கும்புத்திர செல்வத்தை அனுக்ரஹிப்பார்என்று இதுவரை சனத்குமாரர் சொன்னதாக நான் கேட்டதைச் சொன்னேன்- என்று சுமந்திரன் முடிக்க, மகிழ்ச்சி அடைந்த தசரத ராஜா, ருஸ்ய ச்ருங்கரை எப்படி அழைத்து வந்தார்கள் விவரமாக சொல்லு என்று வேண்டிக் கொண்டார்.

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ருஸ்ய ச்ருங்க முனிவரின் கதை என்ற ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 10 ருஸ்ய ச்ருங்க முனிவரை வர வழைத்தல்

சுமந்திரர், அரசன் கேட்டுக்கொண்டபடி, மேலும் சொல்லலானார். ருஸ்ய ச்ருங்கரை, எப்படி எந்த உபாயம் செய்து மந்திரிகள் அழைத்து வந்தார்கள் அதுவும் எனக்குத் தெரியும், சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்.ரோமபாதரிடம், முனிவர்கள் தயங்கியவாறு சொன்னார்கள். -நல்ல உபாயம் இல்லை தான், இருந்தாலும் வேறு வழியில்லை என்பதால் சொல்லுகிறோம்.ருஸ்ய ச்ருங்கர் வனத்திலேயே வளர்ந்தவர், தவம் செய்வதன்றி வேறு எதுவும் அறியாதவர். பெண்களையும், அவர்களிடம் விஷய சுகம் பெறலாம் என்பதும்அவர் அறியாதது. அதனால் இதையே தொழிலாக கொண்ட சில பெண்களை அனுப்புவோம். நல்ல அழகிய பெண்கள், நன்கு அலங்கரித்துக் கொண்டு செல்லட்டும். முனிவரைத் தகுந்தபடி மயக்கி அழைத்து வரட்டும்.–  சரி என்று அரசரும் சம்மதித்துஅவ்வாறே தேர்ந்தெடுத்து எடுத்த சில பெண்கள் வனத்திற்குச் சென்றனர்.ஆசிரமத்திற்கு வெகு தூரத்தில் இருந்தே அவரை கண்களால் காண முயற்சி செய்தனர். தந்தை சொல்லை மீறாத தனயன், காட்டை விட்டு வெளி வந்ததே இல்லை. பிறந்ததில் இருந்து வேற்று மனிதரை, ஆணோ, பெண்ணோ கண்டதேயில்லை.நகர, ராஜ்யங்களில் நடப்பது என்ன என்றும் உணராதவனாகவே வளர்ந்து விட்டவர். யதேச்சையாக அந்த பக்கம் ஒரு முறை வந்தார். விபாண்டகர் மகன், இனிமையாக பாடும், நல்ல அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்த, அழகிய பெண்களைக் கண்டார். அவர்களும் ரிஷியை சூழ்ந்து கொண்டு விசாரித்தனர். -யார் நீங்கள்? எப்படி இருக்கிறீர்கள் பிரும்ம ரிஷியே?- என்று குசலம் விசாரித்து, தனியாக இந்த அடர்ந்த காட்டில் வசிக்க பயம் இல்லையா? என்று கேட்க, அது வரை கண்டிராத அந்த பெண்களின் மயக்கும் உடல் அழகில் மகிழ்ந்து போய் பதில் சொன்னார். உடனே தன் தகப்பனாரிடம் சொல்ல வேண்டும் அன்று அவர் மனதில் தோன்றியது. -நான் விபாண்டகர் மகன். ருஸ்ய ச்ருங்கர் என்பது என் பெயர். இங்கு அருகில் தான் எங்கள் ஆசிரமம். மங்களகரமான தோற்றம் உடையவர்களே – அங்கு வாருங்கள் .உங்களுக்கு நான் அதிதி சத்காரம் செய்ய விரும்புகிறேன்.- ரிஷி புத்திரனின் வார்த்தைகளைக் கேட்டு அவர்கள்சரி என்று கூடவே சென்றனர். அதிதிகளான அவர்களுக்கு, முனிவர் விதிப்படி மரியாதைகள் செய்தார்.இதோ அர்க்யம், இது பாத்யம், இது கிழங்கு, இது பழம் என்று எடுத்துக் கொடுக்க, அவர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.பின், விபாண்டக முனிவர் வந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து, வேகமாக திரும்பிச் செல்ல முனைந்தனர். எங்களுடைய விசேஷமான பழங்கள், உணவுப்பண்டம் இவை என்று சொல்லி,மோதகங்களையும், மற்றும் பல விசேஷமாக தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும் கொடுத்தனர்.வாங்கி கொள்ளுங்கள், சீக்கிரம் சாப்பிடுங்கள் என்றனர். ஆலிங்கனம் செய்து அவரிடம் விடை பெற்றுக் கொண்டு அந்தப் பெண்கள், முனிவர் வருமுன் கிளம்பி விட்டனர். இதுவரை சுவைத்தறியாத, பக்ஷணங்களின் ருசி(அவைகளையும் பழம் என்றே எண்ணி முனிவர் உட்கொண்டார்). அவர்கள் கிளம்பிச் சென்ற பின், ஏதோ ஒரு வித அவஸ்தையும் துக்கமும் அலைக்கழிக்க, முனிபுத்திரர் தானாகவே முதல் நாள் அந்த பெண்களை சந்தித்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.மனதைக் கவரும் விதமாக ஆடை உடுத்தி, வசீகரமான புன்னகையுடன் எதிர்கொண்டழைத்த அந்த பெண்கள், எங்களுடைய ஆசிரமத்திற்கு நீங்களும் வாருங்கள், ரிஷி குமாரா, என்று அழைத்தனர். அங்கும் பலவிதமான பழங்களும், கிழங்குகளூம் உண்டு என்று பலவிதமாக குழைந்து பேசவும், முனிவரும் அவர்களுடன் வரத் தயார் ஆகி விட்டார். அந்தப் பெண்கள் சந்தோஷமாக முனிவரை அழைத்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தனர்.ஊர் எல்லையில் மகானான அவரது காலடி பட்டதுமே, மழை பொழியலாயிற்று.மழையைக் கண்டதுமே, முனிவர் வந்து விட்டார் என்பதை அறிந்து, அரசனான ரோமபாதர், எதிர் கொண்டழைத்து, தலை வணங்கி, ஊருக்குள் அழைத்துச் சென்றார். அர்க்யம் முதலியன சமர்ப்பித்து, பிராம்மணோத்தமரான அந்த முனிவரிடம் வேண்டிக் கொண்டார். -அனுக்ரஹம் செய்ய வேண்டும் முனிவரே, கோபம் கொள்ளக் கூடாது – என்றார். வீட்டிற்குள் அழைத்து வந்து, மகளான சாந்தாவை மணம் செய்து கொடுத்து, இருவரையும் ஒன்றாகக் கண்டு அரசர் மிகவும் மகிழ்ந்து போனார்.முனிவரை சந்தோஷமாக வைத்திருக்க, மரியாதைகள் செய்துராஜா ரோமபாதரும் திருப்தி அடைந்தார், முனிவரும் மனைவியான சாந்தாவுடன், சந்தோஷமாக இருந்தார்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ருஸ்ய ச்ருங்கரை அங்க தேசத்துக்கு அழைத்து வந்த விதம் என்ற பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 11ருஸ்ய ச்ருங்க முனிவர் அயோத்யா வருதல்

சுமந்திரர் மேலும் சொல்லுவார். -தேவ லோகத்தில் சனத்குமரர் சொன்னபடியே, நான் திரும்பவும் சொல்வதைக் கேளுங்கள் அரசரே.  அவர் சொன்னது -இக்ஷ்வாகு வம்சத்தில் நல்ல தார்மிகனான, ராஜா தசரதன் என்று ஒருவன் சத்யத்தையே தன் உயிர்மூச்சாக கொண்டு பிறப்பான். அந்த அரசன் அங்க தேசத்து அரசனான ரோமபாதருடன் நட்புக் கொள்வான். அபத்யம் (சந்ததி)இல்லாதவனாக ஆகி விட்டேன், தர்மாத்மாவான அங்க தேசத்து அரசனே,சாந்தாவின் பதியை அனுப்பி என் யாகத்தை பூர்த்தி செய்து கொடு என்று வேண்டுவான். இதைக் கேட்டு அந்த அரசனும், சற்று யோசித்து, தீர்மானம் செய்து கொண்டவராக, புத்திரனுடன் கூடிய சாந்தாவையும், அவள் கணவனையும் அனுப்பி வைப்பார்.யாகம் செய்ய விரும்பும் தசரத ராஜா, அந்த முனிவரை வணங்கி, விண்ணப்பித்து, மரியாதையுடன் அழைத்து வந்து யாகத்தை பூர்த்தி செய்வான். அவனுக்கு நான்கு புத்திரர்கள் பிறப்பார்கள்.-என்று இது வரை சனத் குமாரர் ப4விஷ்ய வாணியாக கூறியதை நான் சொன்னேன், என்று சுமந்திரர் சொல்லி நிறுத்தி, அதனால் அரசனே, இப்பொழுது நீங்கள் நேரில் சென்று அவரை அழைத்து வாருங்கள்.வாகனங்களையும், சேனையையும் அழைத்துச் செல்லுங்கள், என்றும் சொன்னான். வசிஷ்டரையும் கலந்து ஆலோசித்துக் கொண்டு, சுமந்திரர் சொன்னதையும் மனதில் கொண்டு, அந்தப்புரத்து பெண்டிரையும், மந்திரிகளையும் அழைத்துக் கொண்டு, மெதுவாக பல நதிகளையும்வனங்களையும் கடந்து சென்று, ரோமபாதர் மாளிகையில் இருந்த முனிவரைத் தேடிச் சென்றார் ராஜாதசரதர்.அக்னி பிழம்பாக ஜ்வலித்துக் கொண்டிருந்த முனிவரை வணங்கி, அவருக்கு தகுந்த மரியாதைகளைச் செய்தார். நண்பன் என்பதால் மிகவும் மகிழ்ச்சியுடன் ரோமபாதரும் தசரதரைப் பற்றி முனிவரிடம் சொன்னார். ஏழெட்டு நாட்கள் சென்ற பின் தசரத ராஜா ரோம பாதரிடம் சொன்னார். – உன் மகள் சாந்தாவும், அவள் கணவரான ருஸ்ய ச்ருங்கரும், என் தேசத்துக்கு வரட்டும். மிக முக்யமான காரியம் ஒன்று உள்ளது- என்றார். அரசரும் அப்படியே ஆகட்டும் அன்று சொல்லி, முனி புத்திரரும், தன் மருமகனுமான ருச்ய ச்ருங்கரிடம் -மனைவியுடன் தாங்கள் போய் வாருங்கள்- என்று சொல்லவும், அவரும் சம்மதித்து தன் மனைவியுடன் கிளம்பினார். ரோம பாதரும், தசரதரும் ஒருவரையொருவர், ஸ்னேகத்துடன் அஞ்ஜலி செய்து கொண்டும், மார்போடு அணைத்து ஆலிங்கணம் செய்து கொண்டும்விடை பெற்றுக் கிளம்பினர். வேகமாக செல்லும் சில தூதர்களை முன் கூட்டியேநகரத்தை அலங்கரித்து வைக்கும்படி உத்தரவிட்டு அனுப்பினார்.கொடிகளாலும், மாலைகளாலும், வாசனை திரவியங்களாலும், நகரத்தைஅழகு படுத்துங்கள் என்று அரசன் சொல்லி அனுப்பியபடியே, ஊர் அலங்கரிக்கப்பட்டு, ஜனங்கள் சந்தோஷமாக ராஜாவை எதிர் கொண்டு அழைத்தனர். சங்க, துந்துபி கோஷங்களுடன், பிராம்மணோத்தமர்கள் முன் செல்ல, தசரத ராஜா ஊருக்குள் பிரவேசித்தார். நகர ஜனங்களும், தங்கள் அரசனுடன் வரும் ரிஷி குமாரரைக் கண்டு மிகவும் மகிழ்ந்து, தேவ லோகத்தில்இந்திரனுடன் தேவர்கள் எப்படி காஸ்யபரை வர வேற்றார்களோ அதே போல வரவேற்று உபசரித்தனர். அரசனின் மாளிகைக்குள் அழைத்துச் சென்று வசதியாக அவர் தங்க ஏற்பாடுகள் செய்து கொடுத்த பின், நிம்மதியுடன் சென்றனர்.அந்தப்புரத்து ஸ்த்ரீகள் சாந்தாவை தங்களுடன் மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றனர். சில நாட்கள் அவர்கள் இருவரும் அரசனின் விருந்தினர்களாக அங்கேயே தங்கினர்.

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ருஸ்ய ச்ருங்க முனிவரின் அயோத்யா பிரவேசம் என்ற பதினோராவது அத்யாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 12 அஸ்வமேத ஏற்பாடுகள்

பல பக்ஷங்களும் நாட்களும் ரம்யமாக கழிந்தபின், வஸந்த ருது வந்ததும், அரசர் தன் யாகத்தைப் பூர்த்தி செய்ய விரும்பினார். ரிஷி புத்திரரை தலை குனிந்து வணங்கி, தன் குலத்திற்கு சந்தானத்தை வேண்டி யாகம் செய்ய வருமாறு வேண்டிக் கொண்டார் தசரத ராஜா. சரி என்று அவரும் சம்மதித்து, ஏற்பாடுகள் செய்யுங்கள், குதிரையை அவிழ்த்து விடுங்கள், சரயூ நதியின் வடக்கு பகுதியில் யாக சாலை அமைக்கலாம் என்றார். அப்போது அரசர் சுமந்திரனைப் பார்த்து சொன்னார் –சுமந்திரா, ரித்விக்குகளான, உத்தமமான பிராம்மணர்களை, சுயக்ஞன், வாமதேவன், ஜாபாலி, காச்யபன் புரோகிதரான வசிஷ்டர் மற்றும் உள்ள பிராம்மணர்களையும் அழைத்து வா.-அவ்வாறே சுமந்திரர் வேகமாகச் சென்று அவர்கள் அனைவரையும் அழைத்து வரவும், அரசர் அவர்களுக்கு தகுந்த மரியாதைகள் செய்த பின் தர்ம அர்த்தங்கள் நிறைந்த வார்த்தைகளைச் சொன்னார். –நான் மிகவும் விரும்பும், ஒரு குழந்தைக்காக ஏங்கும் எனக்கு, புத்திர பாக்யம் இதுவரை இல்லை. அதனால் அஸ்வமேத யாகம் செய்வோம்என்று என் மனதில் பட்டது. சாஸ்திர விதிப்படி நான் இந்த யாகத்தை செய்ய விரும்புகிறேன். இந்த ரிஷி புத்திரர் மிகவும் மகிமை வாய்ந்தவர். இவர் அருளால் நான் விரும்பியதைப் பெறுவேன் என்றுநம்புகிறேன்.- இவ்வாறு அரசன் சொன்னதும், சாது, சாது (நன்று, நன்று)என்று கூடியிருந்த பிராம்மணர்களும், வசிஷ்டர் முதலான எல்லோரும் அரசரது வார்த்தையை ஏற்று, ருஸ்ய ச்ருங்கரின் தலைமையில்யாகத்தை செய்யத் தயாராயினர். யாகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வோம், சரயூ நதிக் கரையில் யாக சாலையை அமைப்போம், நான்கு பலசாலிகளான பிள்ளைகளைப் பெறுவாய் என்று ஆசிர்வதித்தனர். இதைக்கேட்டு அரசன் அகமகிழ்ந்தான். குதிரையை பயிற்றுவிப்பதில் திறமை வாய்ந்தவர்களால் பயிற்சி பெற்றிருந்த குதிரை அவிழ்த்து விடப்படட்டும், அதற்குபயிற்சி அளித்தவரும் உடன் செல்லட்டும். சரயூ நதிக் கரையில் யாக சாலையை அமையுங்கள்.சாந்தி பாடங்கள் நடக்கட்டும்.எல்லா அரசர்களும் இந்த யாகத்தைச் செய்ய முடியும். எந்த விதமான அபராதமோ, கஷ்டமோ வராது. ப்ரும்ம ராக்ஷஸர்கள் உள்ளே புகுந்து இடைஞ்சல் செய்யக் காத்திருப்பார்கள். யாகத்தைக் கெடுத்தால், அதன் கர்த்தா அழிவான். அதனால் இந்த யாகம் நல்ல விதமாக முடியும் விதமாக, நிபுணர்களாக வந்து இந்த காரியங்களைச் செய்யுங்கள் என்றுஉத்தரவிட்டான்.அப்படியே ஆகட்டும் என்று மந்திரிகளும் அவ்வாறே செய்வதாக சொல்லி விடை பெற்றனர்.அவர்கள் விடை பெற்றுச் சென்ற பின் அரசர் தன் அரண்மனைக்குள் நுழைந்தார்.

(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில் அஸ்வமேத சம்பாரோ என்ற பன்னிரண்டாம் அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 13 யக்ஞசாலா பிரவேசம்

திரும்ப வசந்தம் வரவும், ஒரு வருடம் ஓடி விட்டது. அஸ்வமேத யாகத்தைச் செய்ய முனைந்த அரசன், வசிஷ்டரை வணங்கி, என் யாகத்தை முடித்துக் கொடுங்கள் என்று வேண்டினான். யாகத்தின் பல பகுதிகளையும் விக்னமின்றிசெய்யுங்கள். நீங்கள் எனக்கு குரு மட்டுமல்ல, நெருங்கிய நண்பரும் ஆவீர்கள். என்னிடம் அன்பு கொண்டவர். இந்த யாகத்தின் நிர்வாகப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என, அவரும் ஆகட்டும்என்று ஒத்துக் கொண்டார். உன் இஷ்டபடியே செய்கிறேன் என்று சொல்லி, யாக கர்மத்தில் தேர்ந்த பல முதியவர்களையும், பிராம்மணர்களையும், தர்ம சிந்தனை உள்ளவர்களையும் அந்தந்த இடத்தில் நியமிக்கிறேன், வேலையில் திறமையுள்ள சில்பிகள், தோண்டுபவர்கள், கட்டடம் கட்டுபவர்கள், தவிர, நடன, நாடகம் ஆடுபவர்கள், பல விதமான சாஸ்திரங்களை அறிந்த, நேர்மையான பண்டிதர்கள், வேதம் அறிந்தவர்கள், யாக காரியத்தை ஏற்றுக் கொள்ள வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். இந்த யாக காரியங்களை நன்கு அறிந்த சாகஸம் மிகுந்தகலைஞர்களை அழைத்து வாருங்கள்.அரசனுக்கு, அவர் செய்ய வேண்டிய விரத காரியங்களை செய்து தர வாருங்கள்.நூற்றுக்கணக்கான ப்ராம்மணர்கள் தங்க இடங்கள் ஏற்பாடு செய்யுங்கள். அன்னம், பானம், பக்ஷ்யம் முதலியவை நிறைய தயார் செய்யுங்கள்.ஊர் ஜனங்களுக்கும் இவை தாராளமாக கிடைக்க விஸ்தாரமாக ஏற்பாடுகள் செய்யுங்கள். வெகு தூரத்திலிருந்து வரும் அரசர்கள் தங்க தனித் தனியாக, இட வசதி செய்து தாருங்கள். குதிரை, யானை கட்டும் இடங்களும், இரவு ஓய்வு எடுக்க படுக்கையறைகளும்,கூட வரும் சேவகர்களுக்கு இருப்பிடம் முதலியனவையும், வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கு எல்லா வசதிகளும், எல்லா தேவைகளும் குறைவற இருக்குமாறு,அன்னம், பானம் , பக்ஷ்யம் முதலியவை குறைவில்லாமல் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யுங்கள்.ஊர் ஜனங்களுக்கும் நிறைவாக அன்ன தானம் செய்ய வேண்டும். மரியாதையாக உபசரித்து செய்யுங்கள். கேலியாகவோ, விளையாட்டாகவோ செய்யாதீர்கள். எல்லா வர்ணத்தினருக்கும், அவரவர் தகுதிக்கு ஏற்ப மரியாதை செய்யுங்கள்.

காமத்தினாலோ, கோபத்திலோ, மறந்தும் கூட யாரையும் அவ மரியாதை செய்து விடாதீர்கள். யாக காரியத்தில் மூழ்கி இருக்கும் ஜனங்கள், சில்பி முதலானவர்கள், இவர்களை விசேஷமாக கவனியுங்கள். இவர்களுக்கு நல்ல முறையில் மரியாதை செய்து, பணமும், போஜனமும் குறைவற கொடுக்க வேண்டும். அவரவர்கள் தாங்களே விரும்பி பங்கெடுத்துக் கொண்டு, விக்னமில்லாமல் எல்லா காரியங்களும்நடக்க ஒத்துழையுங்கள். இவ்வாறு வசிஷ்டர் சொல்லவும், எல்லோரும் வசிஷ்டரிடம் வந்து அப்படியே செய்வதாக வாக்களித்தனர்.எதையும் விட மாட்டோம் என்றனர்.சுமந்திரரைக் கூப்பிட்டு வசிஷ்டர் ஆணையிட்டார். பூமியில் உள்ள தார்மீகனான அரசன் ஒருவர் கூட விடாமல், எல்லோரையும் அழைத்து வர ஏற்பாடு செய். பிராம்மணர்கள்,க்ஷத்திரியர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள் அணைவரும் வருமாறு தேவையான ஏற்பாடுகள் செய்து வை. மிதிலாதிபதியான ஜனகன், மகா வீரன், சத்ய சந்தன், அவரை நீயே நேரில் போய் அழைத்து வா. காசி ராஜன் எப்பொழுதும் பிரியமாக பேசுபவன். தேவர்களுக்கு இணையான நல்ல பெயர் பெற்றவன். இவரையும் நீ நேரில் போய் அழைத்து வா. அதே போல கேகய ராஜா பெரியவர். பரம தார்மீகர். நமது அரசருடைய மாமனார். அவரையும் அவரது மகனையும் சேர்த்து அழைத்து வா. அங்கதேச அரசன் ரோம பாதன், நம் அரசனின் சினேகிதர். கிழக்கு தேசத்து அரசர்கள், சிந்து, சௌவீர அரசர்கள், சௌராஷ்டிரத்தைச் சேர்ந்த அரசர்கள், தக்ஷிண தேசத்துஅரசர்கள் எல்லோரையும் வரவழை. இந்த .அரசர்கள் எல்லோருமே நம்அரசரிடம் மதிப்பும் அன்பும் உடையவர்கள். இவர்கள் எல்லோரையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, பந்துக்களுடனும், மித்திரர்களுடனும் வரும்படி சொல்.வசிஷ்டரின் வார்த்தைகளைக் கேட்டு சுமந்திரர், உடனடியாக செயல் பட்டார். அரசர்களை அழைத்து வர தகுந்த மனிதர்களை உத்தரவிட்டு அனுப்பினார். நன்கு விஷயமறிந்த தூதர்களை அரசரதுஆணையை தெரிவித்து, உடன் அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினார்.வசிஷ்டர் சொன்னபடி தானும் கிளம்பினார். வேகமாக போய் எல்லா அரசர்களையும் அழைத்து வர விரைந்தார். வேலைகளை அறிந்தவர்கள் வசிஷ்டரிடம் வந்து செய்யவேண்டியவற்றை விளக்கிச் சொல்லி அனுமதி பெற்றுச் சென்றனர். வசிஷ்டரும் அவர்களிடம் சொன்னார். தானம் செய்யும் போது அலட்சியமாகவோ, விளையாட்டாகவோ தரக்கூடாது.அலட்சியமாக கொடுக்கும் தானம் கொடுப்பவனையே அழித்து விடும்.ஞாபகம் இருக்கட்டும் என்று எச்சரித்தார். சில நாட்களில் இரவிலும், பகலிலுமாக மற்ற தேசத்து அரசர்கள் வந்து சேர்ந்தனர். ராஜா தசரதனுக்கு பலவிதமான ரத்னங்களைக் கொண்டு வந்தனர். வசிஷ்டர் சந்தோஷமாக அவர்களைவரவேற்று தசரதனிடம் – உங்கள் விருப்பப்படி இவர்கள் அனைவரையும் வரவழைத்து விட்டேன்- என்று சொன்னார். யாகத்துக்கான பூர்வ காரியங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. யாகத்தை ஆரம்பிக்கலாம் என்றார். மனதால் நிர்மாணித்து பின் உருவம் கொடுத்தது போல செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ப்ரயத்யக்ஷமாக காண்பாய். அரசரும், ருஸ்ய ச்ருங்கரும் அதை அப்படியே என்று ஆமோதிக்க, நல்ல நக்ஷத்திரமும், யோகமும் கூடிய தினத்தில் புறப்பட்டார். ருஸ்ய ச்ருஙகர்

முன் செல்ல பின்னால், வசிஷ்டர் முதலான உத்தமமான முனிவர் கணங்கள் யாக சாலையை அடைந்து, யாகத்தை ஆரம்பித்து வைத்தனர்.  யாக சாலைக்குச் சென்று, சாஸ்திர முறைப்படி, ஸ்ரீமானான தசரதன், தன் பத்னிகளோடு தீக்ஷயை ஏற்றுக்கொண்டார்.

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், யாகசாலை பிரவேசம் என்ற பதின்மூமூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம்.)

அத்தியாயம் 14 அஸ்வமேதம்

ஒரு வருடத்திற்குப் பிறகு யாக குதிரை திரும்பி வந்தது. சரயு நதியின் வடக்கில் யாக சாலையில் அரசன் யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தான். பிராம்மணோத்தமர்கள் அரசனுடைய மகா யக்ஞமான அஸ்வமேத யாகத்தில் ருஸ்ய ச்ருங்க முனிவரை பின் பற்றி, அவர் தலைமையில் காரியங்களைச் செய்தனர். தாங்களே வேத சாஸ்திரங்களை அறிந்தவர்கள், எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அறிந்தவர்கள், எல்லா யாக காரியங்களையும் சிரத்தையுடன் செய்தார்கள். யாகத்தின் பூர்வாங்க காரியங்களை காலையில் செய்து முடித்து, மத்யான்ன காலத்தில் யாகத்தை வளர்த்தனர். நடுவில் அரசனுக்கு அவர் செய்ய வேண்டியதையும் சொல்லிக் கொடுத்து செய்ய வைத்தனர். மூன்றாவது நாள் யாகமும் குறைவற நடந்தது. இதில் இந்திரன் முதலானவர்களை அழைத்தனர். ருஸ்ய ச்ருங்கர் தலைமையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திர வாக்யங்களைச் சொல்லி, சரியான முறையில், மதுரமான பாடல்களாலும், மந்திர மயமான ஆஹ்வானங்கள் (அழைப்புகள் விடுத்தல்) செய்து, தேவ லோகத்தில் உள்ள தேவதைகளைக் கூப்பிட்டு, ஹவிஸ் பாகங்களை சமர்ப்பித்தனர். ஹோதா என்ற யாகம் செய்பவர், ஒவ்வொரு தேவதையையும் கூப்பிட்டு ஹவிஸ் பாகம் தரும் பொழுது சிறிதளவு கூட தடங்கலோ, வார்த்தை தடுமாறலோ ஏற்படாமல் சிரத்தையாக கொடுத்தனர்.பிரும்மாவே வந்து நடத்தியது போல க்ஷேமம் ஒன்றையே குறியாக யாகம் நடந்தது.நாள் பூராவும் அவர்கள் களைத்தவர்களாகவோ, பசியினால் வாடுபவர்களாகவோ தென் படவில்லை. ஒவ்வொரு ரிஷி முனிவருக்கும் குறைந்தது நூறு சிஷ்யர்கள். இதில் யாருமே அவித்வான், கல்வியறிவுகளில் குறையுடையவர்கள், என்பதே இல்லை. பிராம்மணர்கள் உணவு கொண்டார்கள் என்றால், அவர்களுடன் கூட வந்தவர்களும் சாப்பிட்டார்கள். தாபஸர்கள், ஸ்ரமணர்கள் என்ற பிரிவினர், முதியவர்களும், வியாதியால் பீடிக்கப்பட்டவர்களும், பெண்களும்,குழைந்தைகளும் கணக்கில்லாமல் இருந்தனர். இடை விடாது அன்ன தானம் நடந்தது.- தீ3யதாம் தீ3யதாம் அன்னம்  அன்னம் ஆகாரம் கொடுங்கள், திரும்ப திரும்ப கொடுங்கள், வஸ்த்ரங்களும் அதே விதமாக கொடுங்கள் என்று அரசரால் தூண்டப்பட்டு, அவ்வாறே செய்தனர். மலை போல குவிந்த அன்னம் ஆங்காங்கு தென்பட்டன. நாளுக்கு நாள்அந்த யாகத்தில்பல தேசங்களிலிருந்தும் வந்து சேர்ந்த மனைவி மக்களோடு கூடிய ஜனங்கள், அந்த யாகத்தில் அன்ன பான வகைகளால் விசேஷமாக கவனித்து உபசரிக்கப்பட்டவர்களாக, பலவிதமாக புகழ்ந்து பேசலானார்கள். தசரதனிடம் வந்து, ஆஹா, திருப்தியாக சாப்பிட்டோம்,உனக்கு நன்மை உண்டாவதாக, என்று சொல்லி விடை பெற்றார்கள். தாங்களும் நன்றாக அலங்கரித்துக்கொண்டு வந்த ஜனங்கள், பிராம்மணர்களை சூழ்ந்து கொண்டு உபசரித்தனர்.வேறு சிலர் பெரிய பெரிய மணி குண்டலங்களை அணிந்து கொண்டு வந்திருந்தனர். இடை இடையில் சிலர்காரண காரியங்களைக் குறித்து பேசிக்கொண்டும், ஒவ்வொருவரையும் அறிந்து கொள்ளும் ஆசையினால், பரஸ்பரம் விசாரித்துக் கொண்டும்,நாளுக்கு நாள் அங்கு ஜனங்கள் சௌக்யமாக இருந்தனர். எல்லா காரியங்களையும் சாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி நடத்தினர். அந்த அரசனது சபையில், வாதம் செய்வதில் சமர்த்தர்களும், நிறைய கல்வி கற்றுத் தேர்ந்தவர்களும், வேதங்களை ஆறு அங்கங்களோடு பாராயணம் செய்தவர்களும், விரதங்களை ஏற்றுக் கொண்டு முறையாக செய்பவர்களும்இருந்தனர். யூபம் என்று சொல்லப்படும் யாக தண்டம் அலங்காரமாக தங்க முலாம் பூசப்பெற்றது.இருபத்தியொரு யூபங்களுக்கு இருபத்தியொரு வஸ்திரங்கள், ரத்னங்கள் என்று ஒவ்வொன்றும் அலங்கரிக்கப்பட்டன.ஆறு பில்வம், காதிரம், பர்ணினம், ஸ்வேஷ்மாதகம், தேவதாரு இரண்டு – இவை கொடி கட்டப்படும் மரங்கள்.இவைகளை நன்றாக திடமாக நிற்கும்படி சில்பிகள் நட்டு வைத்தனர்.எட்டு பக்கமும் முட்டுக் கொடுத்து நிறுத்தினார்கள். புஷ்பங்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்கரித்தனர். யாக தீக்ஷை ஏற்ற ஏழு முனிவர்கள், சப்த ரிஷிகள் போல விளங்கினர். சாஸ்திரவிதிப்படி ஒவ்வொன்றையும் முறையாக செய்தனர். சாஸ்திர க்ஞானம்கொண்ட குசலமான பிராம்மணர்களால் யாக அக்னி மூட்டப் பெற்றது. (இதன்பின் யாக முறைகள் விவரமாக வர்ணிக்கப்படுகிறது.) ராஜ சிங்கமான தசரதனுக்கு உசிதமான முறையில் யாகாக்னி வளர்க்கப்பட்டது. பொன் நிறத்தில் கருடன் பதினெட்டு ரூபத்தில் மும்மடங்காக, அந்தந்த தேவதைகளை உத்தேசித்து பசுக்கள் கட்டப்பட்டன, உரகங்கள், பக்ஷிகள் என்றுசாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி குதிரைகள், நீர்வாழ் ஜந்துக்கள், இவைகளை ருத்விக்குகள் சாஸ்திர விதிப்படி நிர்மாணித்தார்கள். முன்னூறு பசுக்கள் யூபஸ்தம்பங்களில் கட்டப்பட்டன. தசரத ராஜாவின் அஸ்வ ரத்னம் கொண்டு வரப்பட்டது. கௌஸல்யா அந்த குதிரையை நடத்திக் கொண்டு வந்தாள்.(இதன் பின் யாகத்தில் கொடுக்கப்பட்ட பலிகளைப் பற்றிய வர்ணனை).யாக முடிவில் ரித்விக்குகளுக்கு அரசன் நிலத்தை தானம் செய்தபொழுது, -நீங்கள் தான் இந்த நிலத்தை ரக்ஷிக்க சக்தியுடையவர்கள், இதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்- என்று அரசனிடமே திருப்பிக் கொடுத்து விட்டனர். -நாங்கள் அத்யயனத்திலும், தவத்திலும் ஈ.டுபட்டவர்கள், அதிக விலையில்லாத பொருட்கள், மணிகளோ, ரத்னம், சுவர்ணமோ, பசுக்களோ எது முடியுமோ கொடு- என்று கேட்க, அரசன் பிராம்மணர்களுக்கும், வேதம் அறிந்தவர்களுக்கும் நூறு நூறு பசுக்கள் கொடுத்தான். கோடிக்கணக்கான தங்க, வெள்ளிக் காசுக்கள் கொடுத்தான். ருஸ்ய ச்ருங்க முனிவருக்கும், வசிஷ்டருக்கும் அதில் நியாயமாக சேர வேண்டிய பங்கை கொடுத்து விட்டு பிராம்மணர்கள் சந்தோஷமாக சென்றனர். குற்றேவல் செய்த மற்றவர்களுக்கும்கோடிக்கணக்கான தங்க காசுக்கள் கொடுத்தான், அரசன்.ஏழையான ஒரு பிராம்மணனுக்கு கைகளுக்கு கங்கணம் பரிசாக கொடுத்தான். யாசித்தவனுக்கு வேண்டியதைக் கொடுத்தான். இவ்வாறே வந்திருந்த அரசர்களையும், பிராம்மணர்களையும் திருப்தி செய்து வைத்து வணங்கி நின்ற அரசனை எல்லோரும் ஆசிர்வதித்து, வாழ்த்தினார்கள். பூமியில் விழுந்து வணங்கிய, உதார குணமுள்ள அந்த அரசன் யாக சாலை வந்து ருஸ்ய ச்ருங்கரிடம், என் குலம் விளங்க நீங்கள் செய்ய இருக்கும் விசேஷ யாகத்தை ஆரம்பியுங்கள் என்று வேண்டிக்கொண்டான். அப்படியே ஆகட்டும் என்று சொல்லிய முனிவர், குலத்தை விளங்கச் செய்யும் நான்கு புத்திரர்கள்உனக்கு பிறப்பார்கள் என்று ஆசிர்வதித்தார்.    

(இது வரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில் அஸ்வமேதம் என்ற பதினான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 15 ராவண வதோபாயம் (ராவணனை வதம் செய்ய உபாயம் தேடுதல்)

மேதாவியான அந்த முனிவர், சற்று நேரம் த்யானம் செய்து விட்டு, அரசனிடம் சொன்னார. -புத்திரனை வேண்டி செய்யும் அந்த புத்திர இஷ்டியை நான் செய்கிறேன். அதர்வ வேதத்தில் சொல்லியிருக்கும் முறைப்படி, அந்த மந்திரங்களைக் கொண்டுயாகத்தை செய்கிறேன். இது சிறந்த பலனை அளிக்க வல்லது. – இதன் பின் யாகத்தை ஆரம்பித்தார். புத்திரனை விரும்பிச் செய்யும் அந்த யாகத்தில், மந்திரங்களைச் சொல்லி அக்னியில் ஹோமம் செய்தார். தேவர்கள், கந்தர்வர்கள், பரம ரிஷிகள், தங்கள் பங்கைப் பெற வந்து சேர்ந்தார்கள். அவர்கள் எல்லோரும், தவிர அழைப்புக்கிணங்கி அங்கு வந்திருந்த தேவர்களும் பிரும்மாவிடம் பேச ஆரம்பித்தார்கள். – லோக கர்த்தாவான பிரும்மாவே, உங்கள் கருணையால் வரம் பெற்ற ராவணன் என்ற ராக்ஷஸன் எங்களைத் துன்புறுத்துகிறான். பலத்தைக் கொண்டு அவனை வீழ்த்த எங்களால் முடியவில்லை. பகவானே, முன்பு மிகவும் மகிழ்ந்திருந்த சமயம் நீங்கள் அவனுக்கு வரத்தைக் கொடுத்தீர்கள். அதன் பின் நித்யம் அவனுடைய அட்டகாசங்களைப் பொறுத்து வருகிறோம். மூன்று உலகங்களிலும் உயர் நிலையில் உள்ளவர்களை அவன் வெறுக்கிறான். பாடாய் படுத்துகிறான். தேவ லோக அரசனான இந்திரனைக் கீழே தள்ள விரும்புகிறான். நீங்கள் கொடுத்த வரம் அவன் கண்களை மறைக்கிறது. ரிஷிகள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், தேவர்கள் எல்லோரையும் மரியாதையின்றி வதைக்கிறான். சூரியன் அவன் அருகில் சுடுவதே இல்லை. காற்று அதி வேகமாக வீசுவதில்லை. இது நிஜம். சதா அலைகள் அடித்துக் கொண்டிருக்கும் சமுத்திரம் அவனைக் கண்டு ஆடாதுஅசங்காது நிற்கிறது. பார்வைக்கும் கோரமாக இருக்கும் அவனிடம் நாங்களும் நடுங்குகிறோம்.பகவானே, அவனைக் கொல்ல நீங்களே தான் வழியும் சொல்ல வேண்டும்.- தேவர்களின் முறையீட்டைக் கேட்ட பிரும்மா, சற்று யோசித்துச் சொன்னார். அட,  ஒரு வழி இருக்கிறது. அவன் என்னிடம்வரம் கேட்டபொழுது, கந்தர்வர்கள், யக்ஷர்கள், தேவ தானவர்கள், ராக்ஷஸர்கள்- இவர்கள் என்னைக் கொல்லக் கூடாது என்று கேட்டான். நானும் சரி என்று வரம் கொடுத்தேன். தெரிந்தோ தெரியாமலோ, அலட்சியமோ, அவன் மனிதர்களால் மரணம் கூடாது என்று கேட்கவில்லை. அதனால் அவனை ஒரு மனிதன் தான் கொல்லவேண்டும். வேறு விதத்தில் அவனுக்கு மரணம் சம்பவிக்க வழியே இல்லை- என்றார். இதைக் கேட்டு தேவர்களும், மகரிஷிகளும் மகிழ்ந்தனர். இந்த செய்தி அவர்களுக்கு பிரியமாக இருந்தது. இதே சமயத்தில் அங்கு பகவான் விஷ்ணு வந்து சேர்ந்தார். உலக நாயகனான அவர், சங்கம், சக்கரம், கதை இவைகளைத் தாங்கியவராக,பீதாம்பரம் அணிந்தவராக அந்த கூட்டத்தினிடையே வந்து நின்றார்.அவரை வணங்கி தோத்திரம் செய்து எல்லா தேவர்களுமாக சேர்ந்தாற்போல் அவரிடம் பேச ஆரம்பித்தனர். – ஹே விஷ்ணு,  உலகத்தின்நன்மைக்காக உன்னை நியமிக்கிறோம். அயோத்யாபதியான ராஜா தசரதனுக்கு மகனாக பிறப்பாயாக. இந்த தசரதன் தர்மம் அறிந்தவன். கொடையாளி. மகரிஷிக்கு சமமான தேஜஸ் உடையவன். இவனுக்கு மூன்று மனைவிகள். லஜ்ஜை, லக்ஷ்மி, கீர்த்தி இவை தான் இம்மூவருக்கும் உவமையாக சொல்லத் தகுந்தவை. இந்த குணங்களே உருவெடுத்து வந்தது போல் உள்ளனர். நீ உன்னை நான்கு பாகங்களாக பிரித்துக் கொண்டு இந்த தம்பதிகளுக்கு மகன்களாக பிறப்பாயாக. இங்கு நீ மனிதனாக வளைய வருவாய். வளர்ந்து உலகத்திற்கே இடைஞ்சலாக இருக்கும் இந்த ராவணனை அழிப்பாயாக.இவனை தேவர்களால் அழிக்க முடியவில்லை இந்த ராவணன் யாராலும் எதிர்க்க முடியாதபடி வரங்கள் பெற்றுள்ளதைர்யத்தால் ரிஷிகளை எப்போதும் பயமுறுத்துகிறான். கந்தர்வர்களை, சித்தர்களை, முனிவர்களை யாரையும் விடுவதில்லை. கந்தர்வ ஸ்திரீகள் நந்தவனத்தில் விளையாடும் பொழுது, ரௌத்திரமாக வந்து துன்புறுத்துகிறான். இவனை வதம் செய்ய வேண்டும் என்று யாசிக்கவே வந்தோம். எங்களுடன் சித்தர்களும், முனிவர்களும், கந்தர்வ, யக்ஷர்களும் வந்திருக்கிறார்கள். உன்னையே சரண் அடைகிறோம். எங்கள் எல்லோருக்கும் நீயே தான் கதி, பரந்தாமனே, இந்த தேவ சத்ருவை, உலகில் அரசர்களுக்கு எதிரியாக இருக்கும் இவனை வதம் செய்ய நீ மனம் வைத்தால் தான் நாங்கள் உய்வோம் –  இவ்வாறு தேவர்களால் வேண்டிக்கொள்ளப்பட்ட மகா விஷ்ணு, பிரும்மாவை முன்னிட்ட அந்த தேவ லோக கூட்டத்தைப் பார்த்து வணங்கி விட்டு சொன்னார். -பயத்தை விடுங்கள்.உங்களுடைய நன்மைக்காக யுத்தத்தில் ராவணனை, புத்திர, பௌத்திரர்களோடு, மந்திரி வர்கங்களோடு, மித்திரன், பந்துக்கள், தாயாதிகளுடன் சேர்த்து அழிக்கிறேன். பூ உலகில் மனிதனாக வாழ்கிறேன். இந்த பூமியை ஆளுபவனாக, பத்தாயிரம், மேலும் ஆயிரம் வருஷங்கள் இந்த உலகில் வசிக்கிறேன்.- இவ்வாறுதேவர்களுக்கு வரம் அளித்த, ஆத்மவான் என்று போற்றப்படும் விஷ்ணுதன் பிறப்புக்கு ஏற்ற மனிதனைத் தேடி யோசிக்கலானார்.பின், தாமரையை போன்ற கண்களையுடையஅவர், தன்னை நான்கு விதமாக பிரித்துக் கொண்டு, தானே நான்கு பிள்ளைகளாக பிறக்க தசரத அரசனை தந்தையாக ஏற்றுக்கொண்டார். அப்போது மதுசூதனான விஷ்ணுவை, தேவ, ரிஷி, கந்தர்வ, ருத்ர, அப்சர கணங்கள் திவ்யமான தோத்திரங்களால் போற்றினர். ராவணன் உக்ரமான பலம் பொருந்தியவன். கர்வம் அதிகமாகி விட்டது. அதனால் தேவர்களின்தலைவனான இந்திரனை சத்ருவாக நினைக்கிறான். சாதுக்கள், தபஸ்விகள், தவத்தைக் கலைக்கிறான். இப்படி பயத்தைக் கொடுக்கும் இவனை அழித்து உலகத்தை விராவணம்- ராவணன் இல்லாமல் செய்வாயாக. உக்ரமான பௌருஷம் உடைய இவனை இவன் சைன்யத்தோடு, பந்துக்களோடு அழித்து லோகத்தை காத்த பின் ஸ்வர்கத்திற்குச் செல்வாயாக. அது வரை சுரேந்திரன், ஸ்வர்கத்தை கவனமாக பாதுகாத்து, தோஷங்கள், கல்மஷங்கள் விலக ரக்ஷித்து வைப்பான்.

( இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், ராவண வதோபாய:என்ற பதினைந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 16பாயஸ உத்பத்தி

தேவர்கள் சமூகத்தால் இவ்வாறுநியமனம் செய்யப்பட்ட மகா விஷ்ணு தெரிந்திருந்தும், அவர்களைப் பார்த்துஇவ்வாறு கேட்டார். –தேவர்களே, அந்த ராக்ஷஸ ராஜனைக் கொல்ல என்ன உபாயம்? ரிஷிகளுக்கு உபத்ரவமான அவனை எப்படி நான் அழிப்பேன்?- தேவர்கள் அழிவில்லாத விஷ்ணுவைப் பார்த்து பதில் சொன்னார்கள். -மனிதனாக உருவம் எடுத்துக் கொண்டு ராவணனை யுத்தம் செய்து அழிப்பாயாக.- என்றனர். ராவணன் வெகு நாள் தவம் செய்தான். லோகத்தை சிருஷ்டி செய்யும், உலகின் முதல்வனான ப்ரும்மா இதனால் மகிழ்ச்சியடைந்தார். அந்த சந்தோஷத்தில் அவனுக்கு, ராக்ஷஸனுக்கு, வரங்கள் கொடுத்துவிட்டார்.உலகில், மனிதனைத் தவிர, மற்றவர்களால் அழிவு வராதபடி வரம் வாங்கி கொண்டான். வரம் வாங்கிய சமயத்தில் மனிதனை ஒரு பொருட்டாக எண்ணாமல் அலட்சியமாக இருந்து விட்டான். இப்படி பிதாமகரான ப்ரும்மாவிடம் வரம் பெற்றதும் கர்வம் அடைந்தான். மூன்று உலகையும் வருத்துகிறான். பெண்களை அபகரிக்கிறான். அதனால் இவனை மனிதர்களால் தான் கொல்ல முடியும். இவ்வாறு தேவர்கள் சொல்லக் கேட்ட பகவான், தன் தந்தையாக தசரதனையே ஏற்றவனாக கண்டான். அந்த சமயத்தில் நல்ல பராக்ரமம், புகழ் உடையவனாக இருந்தும் பிள்ளையில்லாமல் புத்திரனை விரும்பியாகம் செய்து கொண்டிருப்பவன்.இவ்வாறு, மனதில் நிச்சயம் செய்து கொண்ட பகவான் விஷ்ணு, ப்ரும்மாவை அழைத்து விடை பெற்றுக் கொண்டு,தேவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டு மறைந்து போனார். இங்கு யாக சாலையில், யாகம் செய்யும் அக்னியிலிருந்து, ஒரு பெரிய பூதம், பலசாலியாக, பெரும் வீரன் போன்றதோற்றத்துடனும்  வெளிப்பட்டது. துந்துபி போன்ற குரல். சிவந்த முகமும், ஆடையும், கறுத்த தேகமும், ஸ்னேகமான முக பாவத்துடனும், அடர்ந்த கூந்தலும், மீசையுமாக, திவ்யமான ஆபரணங்களைத் தரித்து, சுபமான லக்ஷணங்களை உடையவனாக, மலை உச்சியை கிள்ளி எடுத்தது போலவும், மதம் கொண்ட சிறுத்தையை போன்ற பராக்ரமமும், திவாகரனைப் போன்ற அழகிய தெய்வீகமான நெருப்பு ஜ்வாலை போலவும் ஒளி வீசிக்கொண்டு, நெருப்பில் புடமிட்ட தங்கம் போலவும், வெள்ளியினால் ஓரங்களில் அலங்கரிக்கப்பட்டது போலவும், பத்னியை பிரியமாக அணைப்பது போல பாயஸம் நிரம்பிய பாத்திரத்தை கையில் ஏந்தி, இரண்டு பெரிய புஜங்களால் கஷ்டப்பட்டு தூக்குவது போல, தானே மாயாவியோ என்று ஐயம் தோன்ற, இவர்களைப் பார்த்துச் சொன்னான். -தசரத ராஜனே, ப்ரஜாபதியின் ஆள் நான். அவர் அனுப்பி இங்கு வந்திருக்கிறேன்.எனவும் அரசன் நடு நடுங்கிவினவினான். –பகவானே, உன் வரவு நல் வரவாகுக. நான் செய்ய வேண்டியது என்னவோ? இதற்கு பதிலாக, ப்ரஜாபதியின் தூதுவனான அந்த பூதம் சொன்னான். தேவர்களை நீ வேண்டி, அர்ச்சித்துக் கொண்டிருப்பதால்உனக்கு இதைக்கொடுக்க வந்தேன். தேவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த பாயஸத்தை, புத்திரனைத் தரக்கூடிய இதை ஏற்றுக்கொள். தன்யமான இது ஆரோக்யத்தைக் வளர்க்கும்.அனுரூபமான உன் பத்னிகளை சாப்பிடச் செய். அவர்களிடம் எதை வேண்டி நீ யாகம் செய்கிறாயோ, அந்த புத்திர ப்ராப்தியை அடைவாய்.- அப்படியே ஆகட்டும் என்று அரசன் அதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தலையில் வைத்துக் கொண்டு, பொன்னாலான அந்த பாத்திரத்தை,தேவர்களால் தயாரிக்கப்பட்ட திவ்ய அன்னம் நிரம்பிய அந்த பாத்திரத்தை, அத்புதமான பூதமாக தோன்றினாலும், பிரியமாக பேசிய பூதத்தை வணங்கி பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, மிகவும் சந்தோஷமாக ஆனான். தேவர்களின் அனுக்ரஹத்தால் கிடைத்த இந்த பாயஸத்தைப் பெற்று, பரம ஏழையான தரித்திரன் நிறைய செல்வத்தைப் பெற்றது போல மகிழ்ச்சியில் திக்கு முக்காடினான். தன் வேலையை முடித்துக் கொண்டு அந்த அத்புதமான பூதம் அங்கேயிருந்து மறைந்தது. அந்த:புரம் மகிழ்ச்சியினால் பிரகாசமாயிற்று. புது ஒளிஸ்ரீ வெள்ளம் பாய்ந்தது போல ஆயிற்றுஅந்த:புரத்தில் நுழைந்த உடனேயே,தசரதர் கௌசல்யையிடம் சொன்னார், இதோ, புத்திரனைத் தரக் கூடிய பாயஸத்தை ஏற்றுக்கொள். பாதி பாயஸத்தை கௌஸல்யையிடம் அரசர் கொடுத்தார்.. சுமித்ரையிடம், நராதிபனான தசரதன், பாதியிலும் பாதியைக் கொடுத்தார். மீதியில் பாதியை கைகேயியிடம் கொடுத்தார்.பின்னும் மீந்ததை யோசித்து சுமித்திரையிடம் கொடுத்தார். தனித் தனியாக தன் மனைவிகளிடம் அம்ருதம் போன்ற பாயஸத்தைக் கொடுத்தவுடன் அவர்களும் மிகப் பெரிய சன்மானம் கிடைத்ததாக எண்ணி, மனம் உவகையால் பூரிக்க, அதை அருந்தினார்கள். அந்த உத்தமமானஸ்திரீகள்,புவி ஆளும் அரசனிடமிருந்து உத்தமமான பாயஸத்தை தனித் தனியாக பெற்று அக்னியும், ஆதித்யனும் போன்ற தேஜஸுடன் சீக்கிரமே கர்பம் தரித்தனர். தங்கள் மனம் விரும்பிய,பிள்ளைகளின் கர்பத்தை தாங்கிய நிலையில் நாளாக, நாளாக, அவர்களைப் பார்த்து அரசன், ஸ்வர்க லோகத்தில் நாராயணன், சித்த ரிஷி கணங்கள் சூழப்பட்டவனாக, எப்படி ஆனந்தமாக இருப்பானோ, அதே போல சந்தோஷமாக, ஆனந்தமாக இருந்தான். 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், பாயஸ உத்பத்திஎன்ற பதினாறாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 17 ருக்ஷ வானர உத்பத்தி(கரடி, வானரங்களின் பிறப்பு)

அந்த மகானான அரசனிடம் மகாவிஷ்ணு, புத்திரனாக பிறப்பது என்று ஆனவுடன்,ஸ்வயம்பூவான ப்ரும்மா, மற்ற தேவதைகளிடம் பேசலானார். நமக்கு நன்மை செய்யும்உத்தேசத்துடன் சத்ய சந்தனான மகா விஷ்ணு, மனிதனாக பிறக்க ஒத்துக் கொண்டுள்ளான். அவனுக்கு உதவியாக பலசாலிகளாக, விருப்பம் போல் வடிவம் எடுத்துக் கொள்ளும் சக்தியுடையவர்களாக, மாயை அறிந்தவர்களாக, சூரர்களாக, வாயுவுக்கு சமமான வேகம் உடையவர்களாக, நீதி அறிந்தவர்களாக, புத்திமான்களாக, விஷ்ணுவுக்கு சமமான பராக்ரமம் உடையவர்களாக, எளிதில் வீழ்த்த முடியாதவர்களாக, உபாயங்களை அறிந்தவர்களாக, சிங்கம் போன்று கர்ஜிக்க கூடியவர்களாகஅமுதமுண்டவர்கள் போலவும் எல்லா வித அஸ்திர க்ஞானம் உடையவர்களாக, முக்கியமான அப்சர ஸ்த்ரீகளின் சரீரத்திலும், கந்தர்வ ஸ்த்ரீகளின் உடலிலும், கின்னர ஸ்த்ரீகளிடமும், வானர ஸ்த்ரீகள், யக்ஷர்கள், பன்னக, வித்யாதரர்களிடமும், வானர ரூபமுடைய புத்திரர்களை சிருஷ்டி செய்து கொடுங்கள்.ஏற்கனவே நான் ஜாம்பவான் என்ற கரடிகளில் சிறந்தவனை சிருஷ்டி செய்து விட்டேன். யதேச்சையாக கொட்டாவி விடும் பொழுது, என் வாயிலிருந்து  வெளிப்பட்டான் அப்படியே ஆகட்டும் என்று அவர்களும் அந்த உத்தரவை ஏற்றுக் கொண்டவர்களாக, வானர ரூபத்தில் பிள்ளைகளைப் பெற்றார்கள். மகானான ரிஷிகளும், சித்த வித்யாதரர்களும், சாரணர்களும், வனத்தில் சஞ்சரிக்கும் புத்திரர்களைப் பெற்றனர். மகேந்திரன் போல காந்தியுடைய வாலியை இந்திரன் பெற்றான். தகிக்கும் சூரியன், சுக்ரீவனைசிருஷ்டித்தார்.பிருகஸ்பதி தாரம் என்ற பெரிய வானரத்தைப் பெற்றார். வானர கூட்டத்திலேயே மிகவும் உத்தமமான புத்திமான் இவன். குபேரனுடைய புத்திரனாக க3ந்த3 மாத3னன் என்ற வானரம்.விஸ்வகர்மா நளன் என்ற பெரிய வானரத்தை பெற்றார். அக்னியின் பிள்ளை நீலன் என்பவன் அக்னிக்கு சமமான காந்தியுடையவன். தேஜஸாலும், புகழாலும், வீர்யத்தாலும் தந்தையை மிஞ்சினவனாக ஆனான்.அழகிற் சிறந்த அஸ்வினி குமாரர்கள், செல்வமும் நிறைந்தவர்கள், மைந்த3ன், த்3விவிதன் என்ற வானரங்களை உத்பத்தி செய்தான். வருணன் சுஷேணன் என்ற வானரத்தை பிறப்பித்தார்.பர்ஜன்யன், சரப4ன் என்ற பலசாலியான வானரத்தை பிறக்கச் செய்தார். மாருதனின் சரீரத்திலிருந்து தோன்றிய ஹனுமான் என்ற வானரன், ஒருமுறை வஜ்ரத்தினால் அடிபட்டான். வைனதேயன் போல் வேகமாக சஞ்சரிக்க கூடியவன்.மற்ற முக்யமான வானரங்களை விடவும் புத்திசாலி, பலவானும் கூட. இவர்கள் பத்து தலை ராவணனின் வதத்திற்காக என்றே சிருஷ்டிக்கப்பட்டவர்கள். இப்படி ஆயிரக்கணக்கில் தோன்றினார்கள். அளவிட முடியாத பலமும், வீரமும், தன் விருப்பம் போல் வடிவம் எடுத்துக் கொள்ளக் கூடிய ஆற்றலும், யானை போன்றும், மலை போலவும் சரீரம் உடையவர்கள். கரடிகள் வானரங்கள், பசு மாட்டின் வால் போன்ற வாலுடையவர்கள், சீக்கிரமே பிறந்தனர். எந்த தேவதையின் அம்சமோ, அதே போல உருவம், பராக்ரமம் உடையவர்களாக தனித் தனி அடையாளங்களோடு பிறந்தனர். பசு போன்ற வாலுடைய கரடிகளிடம் சிலர் பிறந்தனர். பெண் கரடியிடம் சிலர், கின்னர ஸ்த்ரீகளிடம் சில வானரங்கள், தேவர்களும், மகரிஷிகளும், கந்தர்வர்களும், தீக்ஷ்ண புத்தியுடைய யக்ஷர்களும், புகழ் வாய்ந்த நாகர்கள், கிம்புருஷர்கள், சித்த வித்யா தரர்கள், பலரும் சந்தோஷமாக ஆயிரக்கணக்கான புத்திரர்களை ஈன்றனர். இந்த வானரங்கள் பெரிய உருவமும், வனத்தில் சஞ்சரிக்கும் குணமுள்ளவையாகவும் இருந்தன. அப்சர ஸ்த்ரீகளும், வித்யாதர ஸ்த்ரீகளும், நாக கன்யா, கந்தர்வீ இவர்களின்உதவியால், வேண்டியபடி உருவம் பலம், இஷ்டம் போல் சஞ்சரிக்கும் குணம் இவற்றைப்பெற்றவர்களாக சிங்கம்போலும் சார்தூ3லம் போலும் நடை போட்டனர். பெரிய பெரிய கற்களைத் தூக்கி எறிந்து உடைக்க கூடியவர்கள். வேரோடு மரங்களை பிடுங்கும் பலம் உடையவர்கள். நகங்களும் பற்களும் கூர்மையாக உடையவர்கள். தவிர அஸ்திரங்களைப் பற்றி அறிந்தவர்கள். பெரிய மலையை அசைக்கக் கூடியவர்கள். ஸ்திரமாக இருக்கும் பெரிய மரங்களை பிளந்து விடுபவர்கள். நதிகளின் பதியான சமுத்திரத்தை வேகமாக பறந்து குறுகச் செய்யும் ஆற்றல் உடையவர்கள். காலால் மிதித்து பூமியை பிளக்க செய்பவர்கள். கடலை நீந்திக் கடந்து விடுவார்கள். ஆகாயத்தில் பறந்துச் சென்று மேகங்களை கைகளால் பிடிப்பார்கள். வனத்தில் தன்னிஷ்டம் போல் போய்க் கொண்டிருக்கும் மதம் பிடித்த யானைகளையும் பிடித்து அடக்கும் வல்லமையுடையவர்கள். பறந்து செல்லும் பறவைகளை பலமாக ஒலி எழுப்பி விழச் செய்வார்கள். இது போன்ற வானரங்கள் நூறு நூறு ஆயிரம், சேனை தலைவர்களாகவும், சேனைத் தலைவர்களிடமும் உண்டாயினர். மற்றொரு புறம் கரடிகள் ஆயிரக்கணக்கான கரடிகளை உத்பத்தி செய்தன. மற்றவை பலவிதமான காடுகளுக்கும் மலைச்சாரல்களுக்கும் சென்றன. சூர்ய புத்திரனான சுக்ரீவனும், இந்திர புத்திரனான வாலியும் சகோதரர்களாக பிறந்தனர். நலன், நீலன், ஹனுமான் போன்ற வானரங்கள் யுத்தம் செய்வதில் தேர்ச்சி பெற்று, கூர்மையான புத்தியும் பலமும் கொண்டு நடமாடின. அளவில்லாத பலமுடைய வாலி இவர்களை, தன் புஜ பலத்தால் பாதுகாத்து வந்தான். இது போன்ற கரடி, வானரம், பசு வால் கொண்ட கரடிகள், இவை கர்வத்துடன் சிங்கம், புலி, சிறுத்தை, பாம்புஇவற்றை சீண்டி விளையாடின. பூமி இவைகளால் நிறைந்து இருந்தது. ராம சகாயம் என்ற காரணத்தால் பயங்கரமான பெரிய உருவம் கொண்ட இந்த வானர வீரர்கள், மேகம் போன்றும், விந்த்ய மலை போன்றும், தோற்றம் கொண்டவர்களாக பூமியில் சஞ்சரித்தனர்.  

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், ருக்ஷ வானர உத்பத்தி என்ற பதினேழாவதுஅத்தியாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 18ராமாத்யவதார: (ராமன் முதலானோர் பிறப்பு)

மகாத்மாவான ராஜா தசரதனின் யாகம்நிறைவுற்றதும், தேவர்கள் யாகத்தில் தங்கள் பங்கைப்பெற்றுக்கொண்டு தம் இடம் செல்லவும், தீக்ஷா நியமங்களை முடித்துக்கொண்டு, தன் பத்னிகளுடனும்,வேலையாட்கள்,சேனைக் கூட்டங்களுடனும் அரசன் அயோத்யா நகரில் பிரவேசித்தான். மற்ற அரசர் சமூகமும்,தகுதிகேற்றவாறு, மரியாதைகள் பெற்று சந்தோஷமாக அரசனை வணங்கி விடை பெற்று தங்கள் இருப்பிடம் சென்றனர். அந்த நகரத்திலிருந்து தங்கள் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்ற அவர்களைப் பார்த்து அரசனின் பாதுகாவல் வீரர்கள் கவலை நீங்கி நிம்மதி அடைந்தனர். ப்ராம்மண சிரேஷ்டரான ருஸ்ய ச்ருங்கரும், சாந்தாவுடன், அரசருடன் அயோத்யா சென்று, நன்றாக மரியாதைகள் செய்யப் பெற்றவராக கிளம்பிச் சென்றார். சிறிது தூரம் உடன் சென்று ராஜா வழியனுப்பி வைத்தார்.இவ்வாறுஎல்லோரையும்அனுப்பிவிட்டு மனம் நிறைந்தவனாக புத்திரர்கள் பிறக்கும்நாளை எதிர் நோக்கி,சுகமாக காலத்தைக் கழித்து வந்தான். யாகம் முடிந்து ஆறு ருதுக்கள் சென்றன. பன்னிரெண்டாம் மாதத்தில், சித்திரை மாத நவமி திதியில், அதிதி தைவ நக்ஷத்திரத்தில், தன் உச்ச இடத்தில் ஐந்து கிரஹங்கள் இருக்கும் பொழுது, கர்க்கடக லக்னத்தில், வாக்பதி இந்துவுடன் கூடியிருக்கும் பொழுது,எல்லா உலகும் வணங்கத் தகுந்தஜகன்னாதனை, எல்லா லக்ஷணங்களும் கூடியவனாக ராமரை, கௌசல்யை பெற்றெடுத்தாள்.இக்ஷ்வாகு குலத்தை விருத்தி செய்யப் பிறந்த மகனை , விஷ்ணுவின் பாதி அம்சமான மஹா பாக்யசாலியானராமனை கௌசல்யா ஈன்றெடுத்தாள். அதிசயமான தேக காந்தியுடன் கூடிய இந்த பிள்ளையை பெற்றெடுத்த கௌசல்யா, அதிதி, தேவராஜனான இந்திரனைப் பெற்ற பொழுது இருந்தது போலவே சோபையுடன் விளங்கினாள். கைகேயியிடம் பரதன் என்ற, சத்ய பராக்ரமனான மகன் பிறந்தான். சாக்ஷாத் விஷ்ணுவின் நான்கில் ஒரு பாகமாக, எல்லாவிதமான நற்குணங்களும் அமையப் பெற்றவனாக விளங்கினான்.பிறகு, லக்ஷ்மண, சத்ருக்னர்களை சுமித்ரா ஈன்றாள். இவ்விருவரும் எல்லா அஸ்த்ர சஸ்த்ர ஞானமும் உடையவர்களாக, விஷ்ணுவின் பாதி அம்சமாக இணைந்து விளங்கினர். புஷ்ய நக்ஷத்திரத்தில், மீன லக்னத்தில், எப்பொழுதும் நிறைந்த மனதுடையவனாக பிறந்தவன் பரதன். சார்ப்பே- ஆயில்ய நக்ஷத்திரத்தில் சுமித்ரா புத்திரர்கள், சூரியன் அப்பொழுது தான் உதயமாகி இருக்க, (குலீரே), பிறந்தனர். அரசனுக்கு நான்கு புத்திரர்கள், தனித் தனியாக பிறந்தனர். குணம் நிறைந்தவர்களாக, ஒரே விதமான ரூபம், ருசி உடையவர்களாக, பாதத்தின் மேல் பாதம் வைத்தது போலஒன்று போல இருந்தனர். கந்தர்வர்கள் பாட, அப்சர கணங்கள் ஆட, தேவர்கள் துந்துபிகளை முழங்கினர். ஆகாயத்திலிருந்து பூ மாரி பொழிந்தது.அயோத்தியில் உத்ஸவம் ஏராளமான அளவில் கொண்டாடப் பட்டது. ஜனங்கள் கூட்டம்கூட்டமாக வீதிகளில் கூடிக் கொண்டாடினார்கள்.நடனம் ஆடுபவர்களும்,நர்த்தனம் ஆடுபவர்களும், பாடுபவர்களும், பலவிதமான வாத்யங்கள் இசைப்பவர்களுமாக தெருக்களில் நிரம்பினர். எல்லோரும் பலவிதமான ரத்ன ஆபரணங்களை அணிந்தவர்களாக வீதியை நிறைத்தனர். துதி பாடும் பாடகர்கள், (இவர்களை வந்தி, மாகதர்கள் என்று அழைப்பர்). இவர்களுக்கு அரசன் தாராளமாக தனத்தை அள்ளிக் கொடுத்தான். பிராம்மணர்களுக்கு செல்வமும், பசுக்களையும் ஆயிரக்கணக்கில் தானம் செய்தான். பதினோரு நாள் ஆனவுடன் நாமகரணம் செய்வித்தான். மூத்தவனான பிள்ளையை –ராமன்- என்றும், கைகேயி பிள்ளையை –பரதன் என்றும், சௌமித்ரியை –லக்ஷ்மணன்- மற்றவனை –சத்ருக்னன்- என்றும், பெயர் வைத்தான். வசிஷ்டர் மிகவும் விருப்பத்துடன் இந்த நாமகரண வைபவத்தைநடத்தி வைத்தார். பிராம்மணர்களுக்கு போஜனம் செய்வித்தார் ஊர் ஜனங்கள், சுற்றியுள்ள நகரத்தைச் சேர்ந்தவர்கள், அனைவருக்கும் அன்ன தானம் செய்தான்..ஜன்மக் கிரியைகளை செய்து வைத்த பிராம்மணர்களுக்கு அமோகமான ரத்னங்களை அள்ளிக் கொடுத்தான். இவர்களில் மூத்தவனான ராமன் கேதுவைப் போல, மிகவும் மனம் கவரும் தோற்றம் உடையவனாக இருந்தான். தந்தை உள்ளம் கவர்ந்தவனாக, ஜீவ ராசிகளுக்கு பிரும்மாதிரும்பி வந்தது போல இருந்தான். வளர, வளர எல்லோருமே வேதம் கற்று அறிந்தனர். சூரர்களாக ஆனார்கள். எல்லோருமேஜனங்களின் நன்மையைக்கருதி செயல் படும் குணமுடையவர்களாக விளங்கினர். நல்ல குணங்கள் நிரம்பியவர்களாக, ஞானம் நிறைந்தவர்களாக ஆனார்கள். இவர்களுள் ராமன், மற்றவர்களைக் காட்டிலும் அதிக தேஜஸும், சத்ய பராக்ரமம் உடையவனாகவும் தனித்து விளங்கினான். நிர்மலமான சந்திரனைப் போல எல்லோருக்கும் பிடித்தவனாக ஆனான். யானை ஏற்றம், குதிரை ஏற்றம், ரதம் ஓட்டுதல் இவற்றில் தேர்ச்சி அடைந்தனர். தனுர் வித்தையும் கற்றனர். தந்தைக்கு உதவி செய்வதிலும், தானாக முன் வந்து செய்தனர். குழந்தையிலிருந்தே, லக்ஷ்மணன் மிகவும் அன்புடையவனாக, லக்ஷ்மனோ லக்ஷ்மி வர்த4ன: என்று சொல்லும்படி, மூத்தவனான ராமனுக்கு, உலகமே அவனுக்கு அன்பு செலுத்தினாலும் கூடவே இருந்து சரீரத்தால் ராமனுக்கு பிடித்ததைச் செய்பவனாக, மற்ற எல்லோரையும் விட ராமனுக்கு மிகவும் நெருக்கமானவனாக இருந்தான். ராமனின் மற்றொரு உயிர் வெளியில் நடமாடுகிறது என்று சொல்லும்படி, லக்ஷ்மி சம்பன்னனான லக்ஷ்மணன் இருந்தான். புருஷோத்தமனான ராமன் அவனன்றிஉறக்கம்கொள்ள மாட்டார். அறுசுவை உண்டியை கொண்டு வந்து தந்தாலும், லக்ஷ்மணன் இல்லாமல் தொட மாட்டார். குதிரையின் மேல் ஏறி வேட்டைக்குச் செல்லும்பொழுது, இந்த ராகவனை, கையில் வில்லுடன் பாதுகாத்தவாறு, லக்ஷ்மணன் பின் தொடருவான். லக்ஷ்மணனின் சகோதரன் சத்ருக்னன் பரதனை நெருங்கி இருந்தான். பரதனுக்கு தன் உயிரை விட மேலான சகோதரனாக, எப்போதும் பிரியமாக இருந்து வந்தான். இது போல குணம் மிகுந்த நான்கு பிள்ளைகளுடன் தசரத ராஜா, மிகவும் ஆனந்தமாக, தேவர்கள் சூழ, பிதாமகரான பிரும்மா இருப்பது போல பெருமையுடன் விளங்கினான். நாளடைவில் அவர்கள், ஞானம் நிறைந்தவர்களாக, குணவான்களாக, லஜ்ஜையும், கீர்த்தியும் உடையவர்களாக, எல்லாம் அறிந்திருப்பதுடன், தொலை நோக்கு உடையவர்களாகவும், நல்ல தேக காந்தியுடனும் பிரபாவத்துடனும் வளைய வந்தனர். இவர்களைப் பார்த்துப் பிதாவான தசரதர் எல்லையில்லாத ஆனந்தம் அடைந்தார். வேத அத்யயனமும் ஈ.டு பாட்டுடன் செய்து முடித்து விட்டனர். தந்தைக்கு வேண்டிய உதவிகளையும் விருப்பமாக செய்தனர். தனுர் வித்தையும் கற்றுத் தேர்ந்து விட்டனர். இப்போது இவர்களுக்கு தகுந்த மனைவிகளைத் தேட வேண்டுமே என்று தசரதர் கவலை கொண்ட சமயம், தன் உபாத்யாயர்களிடமும், பந்துக்களிடமும், இது பற்றி பேசலானான். 

இவ்வாறு மந்திரி மண்டலத்தில் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, மகா தேஜஸ்வியான மஹா முனிவர் விஸ்வாமித்ரர்வந்து சேர்ந்தார். அவர் அரசனைக் காண வேண்டி,துவாரபாலகர்களைப்பார்த்து -சீக்கிரமாக போய் கா3தி4யின் பிள்ளை, கௌசிக முனியான, நான் வந்திருக்கிறேன் என்று அரசனிடம் சொல்- என்றார். அதைக் கேட்டு பயமும் மரியாதையுமாக அரசனின் ஆட்கள் ஓடிச் சென்று, மனம் படபடக்க, மாளிகையினுள் இருந்த அரசனிடம், விஸ்வாமித்திரர் வந்திருக்கிறார் என்பதைத் தெரிவித்தனர்.இந்த வார்த்தையைக் கேட்டதுமே, புரோஹிதர்களும், அங்கு இருந்த மற்றவர்களும் உடன் வர, இந்திரன் பிரும்மாவை எதிர் கொண்டழைப்பதைப்போலபரபரப்புடன், அரசன் விஸ்வாமித்திரரை எதிர் கொண்டழைக்க விரைந்து வந்தான். விரதங்கள் அனுஷ்டித்து, தன் தேஜஸால் ஜ்வலித்துக்கொண்டிருக்கும் அவரைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியுடன் முகம் மலர, அவருக்கு அர்க்யங்கள் சமர்ப்பித்தான். அவரும் அரசனின் அர்க்யத்தை முறைப்படி வாங்கிக் கொண்டு, அரசனைக் குசலம் விசாரித்தார்.நகரத்தில், செல்வ நிலையில், நலமா என்று விசாரிக்க ஆரம்பித்தவர், ஜனங்கள், அவர்கள் நடமாடும் இடங்களில், பந்துக்களிடம், நண்பர்களிடம், சுமுகமாக, நலமாக இருக்கிறதா என்றும் வினவினார். குசிக புத்திரரான விஸ்வாமித்திரர், தசரத ராஜாவை மேலும் விசாரித்தார். சாமந்தர்கள் பிரமுகர்கள், தனவான்கள் உனக்கு வணங்கி இருக்கிறார்களா? சத்ருக்களை ஜயித்து, தெய்வ காரியங்களையும், மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் குறைவில்லாமல் செய்கிறாயா? இதற்குள் வசிஷ்டரும் வந்து சேரவே, அவரையும், மற்ற ரிஷிகளையும் முறைப்படி குசலம் விசாரித்தார். எல்லோருமே மகிழ்ச்சியுடன் அரசனின் மாளிகையினுள் நுழைந்தனர். தகுதிக்கேற்ற ஆசனங்களில் அமர்ந்தனர். பின், தசரத ராஜா, மகா முனிவரான விஸ்வாமித்திரரைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சொன்னார் -அம்ருதம் கிடைத்தது போலவும், நீரே இல்லாமல் வறண்டு கிடக்கும் பொழுது மழை வந்தது போலவும், குழந்தை பேறுஇல்லாதவன் தனக்கு சமமான மனைவியிடம் புத்திரர்களைப் பெற்றது போலவும், பொருளைத் தொலைத்தவன் திரும்பப் பெற்றது போலும், நல்லஉயர்வை அடையும் போது தோன்றும் நியாயமான மகிழ்ச்சியைப் போலவும், உங்கள் வரவு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.மகா முனிவரே, உங்கள் வரவு நல் வரவாகுக. என்ன பெரிய வேலையானாலும், சொல்லுங்கள், நான் மகிழ்ச்சியுடன் செய்து தருகிறேன். நீங்கள் இங்கு வந்ததே என் பாக்கியம். எந்த விதமான பணியானலும்,நீங்கள் என்னிடம்சொல்லி நிறைவேற்றிக் கொள்ளலாம். மகா முனிவரே, இன்று என் வாழ்க்கை பயன் பெற்றது. என் பிறப்பும் பயனுடையதாக ஆயிற்று.முதலில் தவ வலிமையால், ராஜ ரிஷி பட்டம் பெற்று, திரும்பவும் தவம் செய்து ப்ரும்ம ரிஷியானீர்கள். அதனாலேயே எனக்கு உங்களிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது. அத்புதம், பவித்ரம், உங்கள் தரிசனம் கிடைக்கப்பெற்றதால் நல்ல கதியடைந்தேன் பிரபோ, தாங்கள் வந்த காரியம் என்ன சொல்லுங்கள். எது தேவையோ சொல்லுங்கள். உங்கள்அனுக்ரஹம் மேலும் மேலும் எனக்கு கிடைக்க வேண்டும். கௌசிக முனிவரே, நான் என்ன செய்ய வேண்டும் ? என்ன காரியம் என்பதை விவரமாக சொல்லுங்கள். நீங்கள் எனக்கு தெய்வத்துக்கு சமமானவர்கள். உங்களுக்காக எதுவும் செய்ய தயாராக இருக்கிறேன். எனக்கு புதியதொரு நன்மை வர இருக்கிறது போலும். அதனால் தான் தங்கள் பாதம் இங்கு பட்டுள்ளது. உங்கள் வரவினால், என் தர்மார்த்தங்கள் மிக உயர்ந்த நிலையை அடைந்து விட்டன.- இவ்வாறு மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன், இனிமையாக, வினயத்துடன்,சொன்ன வார்த்தைகளை கேட்டு,தன் செயலால் புகழும், பெருமையும் அடைந்தகுணங்களின் சிறந்த பரம ரிஷியான விஸ்வாமித்திரரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.  

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின்,ராமாத்யவதாரம் என்ற பதினெட்டாவதுஅத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 19விஸ்வாமித்திர வாக்யம்

இவ்வளவு விரிவாக, அத்புதமாக, ராஜ சிங்கமான தசரதன் சொன்னதைக் கேட்டு, உடல் புல்லரிக்க, மகா தேஜஸ்வியான விஸ்வாமித்திரர் பேசலானார். – இந்த உலகில் வேறு யாராலும் இவ்வாறு பேச முடியாது. உன் தகுதிக்கு ஏற்றவாறுபேசினாய். ராஜ சார்தூலா,  (அரசர்களுக்குள் சிறுத்தை போன்று வலிமை மிக்கவன்)நீ பிறவியிலேயே மகான். நல்ல குலத்தில் பிறந்தவன், வசிஷ்டரை குருவாக பெற்றவன்.அவர் அறிவுரை கிடைக்கப் பெற்றுள்ளாய்.அதனால் நான் நினைத்து வந்த காரியம் நிறைவேறியதாகவே எண்ணுகிறேன்.செய் அரசனே, உன் சத்யத்தை நிலை நிறுத்தும்குணத்தில் எள்ளளவும் சந்தேகமில்லை.நான் சில சித்திகளை அடைய விரும்பி, நியமங்கள், விரதங்கள் ஏற்று யாகம் நடத்தி வருகிறேன். அதை இடையூறு செய்யும் இரண்டு ராக்ஷஸர்கள், விருப்பம் போல் ரூபம் எடுத்துக் கொள்ளும் மாயாவிகள், பல காலமாக விரதம் இருந்து இதோ முடிக்கும் தறுவாயில் இருக்கும்போது அரச ஸ்ரேஷ்டனே, மாரீசன், சுபா3ஹு என்ற இரண்டு ராக்ஷஸர்கள், நல்ல பயிற்சி பெற்றவர்கள், மாமிசம், ரத்தம் இவற்றை என் யாக சாலையில் வர்ஷிக்கின்றனர்.பாடு பட்டு இவ்வளவு நாள் தவம் இருந்து,முடியும் தறுவாயில் பலனின்றி போவதா, என்று உற்சாகமிழந்து அங்கிருந்து புறப்பட்டு வந்தேன். அரசனே, என் கோபத்தை  வெளியிடவும் மனம் வரவில்லை. என் விரதம் அப்படிப்பட்டது. விரதத்தில் இப்படி சாபம் கொடுப்பதும் மறுக்கப்பட்டுள்ளது. அதனால் சிங்கம் போன்ற பராக்ரமசாலியான அரசனே, உன் மகனான ராமனை, சத்ய பராக்ரமனை தருவாய். காக பக்ஷம் என்ற சிகை அலங்காரம் செய்து கொண்டுள்ள சிறுவன், ஆயினும் சூரன். இந்த ராமனை தா. இவன் சக்தியும், என் உள்ளடங்கிய தேஜஸும் சேர, இந்த ராக்ஷஸர்களை அடக்கவும், அழிக்கவும் முடியும். இவனுக்கு பல விதமான நன்மைகளை நான் பெற்றுத் தருவேன், சந்தேகமேயில்லை. மூன்று உலகங்களிலும்,இப்பொழுது செய்யும் இந்த செயலால் பெருமையடைவான்.அவர்கள் இருவரும் ராமனுக்கு எதிரில், நிற்க கூட முடியாது.இவர்களை ராமனை அன்றி வேறு மனிதர்களால் கொல்லவும் முடியாது.நல்ல வீரம் உடையவர்கள் அவ்விரு ராக்ஷஸர்களும். கால பாசம் அவர்களை நெருங்குகிறது என்பதைத் தான் அவர்கள்  உணரவில்லை.. ராஜ சார்தூலா,  ராமனுடைய பராக்ரமத்திற்கு எதிரில் அவர்கள் இருவரும்ஒன்றுமேயில்லை.பார்த்திபனே, என் மகன் என்று பாசத்தால் கட்டுப் பட தேவையேயில்லை. நான் உனக்கு பிரதிக்ஞை செய்து தருகிறேன். அந்த இரு ராக்ஷஸர்களும் அழிந்தார்கள் என்றே கொள்ளலாம். சத்ய பராக்ரமனான ராமனை நான் அறிவேன். (அஹம் வேத்3மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம்). இதோ இருக்கும் வசிஷ்டரும் அறிவார். மற்றும் இங்குள்ள தபஸ்விகள், தேஜஸ் வாய்ந்த க்ஞானிகள் அறிவார்கள். உலகில் தர்மமும், புகழும் தான்உயர்ந்தது என்று நீ எண்ணினால், இவை நிலைத்து நிற்க வேண்டும் என்று நீ விரும்பினால், ராஜேந்திரா, ராமனை எனக்குத் தா. உன் மந்திரிகள் அனுமதியையும் கேட்டுப் பெற்றுக் கொள். வசிஷ்டரையும், மற்ற அறிஞர்களையும் கலந்து ஆலோசித்து ராமனை என்னுடன் அனுப்பு. மிகவும் அன்புடைய, பாசமுடைய மகனை எனக்குத் தா. பத்து ராத்திரிகள், ராஜீவ லோசனான ராமனை, என்னுடன் அனுப்பு. யக்ஞம் முடியும் வரை என்னுடன் இருக்க அனுமதி கொடு. இதில் மன வருத்தம் அடையாதே. அவசியமே இல்லை. – இவ்வாறு கூறி தர்ம, அர்த்தம் நிறைந்த தன் வேண்டுகோளைச் சொல்லி முனிவர் நிறுத்தினார்.விஸ்வாமித்திரரின் கோரிக்கையைக் கேட்டு, சுபமேயானாலும், அரசன் சோகத்தில் மூழ்கினான். மோகம் கண்களை மறைக்கத் தடுமாறினான். பின் சமாளித்து, எழுந்திருந்துபயத்துடன் சொல்ல ஆரம்பித்தான். தன் ஹ்ருதயமே பிளந்து விடுமோ என்ற துக்கத்துடன், தன் ஆசனத்திலிருந்து தடுமாறி எழுந்திருந்து, வருத்ததுடன், பதில் உரைத்தான்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், விஸ்வாமித்திரர் வாக்யம்என்ற பத்தொன்பதாவதுஅத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 20 தசரத வாக்யம் (தசரதரின் பதில்)

விஸ்வாமித்திரர்வார்த்தைகளைக் கேட்டு ராஜ சார்தூலன் என்று பெயர் பெற்றிருந்த அரசன் ஒரு முஹுர்த்த நேரம்தன் நினைவு இன்றி மூர்ச்சித்தவனாக இருந்தான். மூர்ச்சை தெளிந்து எழுந்துபேசலானான். -பதினாறுவயது நிரம்பாத பாலகன் ராமன் ராஜீவ லோசனன்.யுத்தம் செய்யும் தகுதி இவனிடம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதுவும் ராக்ஷஸர்களுடன். அக்ஷௌஹிணி நிறைந்த சேனை, இதன் தலைவன் நான், இந்த சேனை சூழ வந்து அந்த ராக்ஷஸர்களை, இரவில் சஞ்சரிக்கும் மாயாவிகளை அடிக்கிறேன். இவர்கள் சூரர்கள், விக்ரமம் உடையவர்கள், அஸ்த்ர ஞானம் உடையவர்கள். என் சொல்படிக் கேட்கக் கூடியவர்கள். இந்த சேவகர்கள், ராக்ஷஸக் கூட்டத்துடன் மோதிபோரிட யோக்யதை உள்ளவர்கள்.இவர்களை அழைத்துச் செல்லுங்கள், ராமனை அழைத்துச் செல்லவேண்டாம்.நானே வில்லை ஏந்தியவனாக யுத்த பூமியில் முன்னின்று, உயிருள்ளவரை போராடி ராக்ஷஸர்களை அழிக்கிறேன். உங்களுடைய நியமும், விரதமும்நல்லபடியாக காப்பாற்றப்படும். நான் வருகிறேன். ராமனை அழைத்துச் செல்ல வேண்டாம். பாலகன் இவன். கற்க வேண்டியதை இன்னும் முழுமையாக கற்றுத் தேறாதவன். பலாபலன்களை அறிய மாட்டான். அஸ்த்ர பலமும் இல்லை. யுத்தம் செய்து அறியாதவன்.ராக்ஷஸர்களை அடக்க இவனால் முடியாது. அவர்களோ மறைந்து நின்று சண்டையிடுவார்கள் என்பது நிச்சயம். ராமனை விட்டுப் பிரிந்துநான் ஒரு முஹுர்த்த காலம் கூட உயிர் வாழ மாட்டேன். அதனால், முனிசார்தூல,  ராமனை அழைத்துச் செல்ல வேண்டாம். அப்படி ராமன் வந்து தான் ஆக வேண்டுமானால், சதுரங்க சேனையோடு நானும் வருகிறேன்.குசிகர் மகனே,ஆறாயிரம் வருஷத்திற்குப் பிறகு மிகவும் கஷ்டப்பட்டு, வேண்டிபெற்ற மகன் இவன். இந்த ராமனை அழைத்துச் செல்ல வேண்டாம். நான்கு பிள்ளைகளில் இவன் தான் எனக்கு மிகவும் பிரியமானவன்.மூத்தவனான இவன் தர்மமே பிரதானமாக நினைப்பவன். இவனை அழைத்துச் செல்ல வேண்டாம்.உங்கள் ராக்ஷஸர்களின் வீரம் என்ன? யார் அவர்கள்? யாருடைய பிள்ளைகள்? எவ்வளவு சக்தியுடையவர்கள்? இவர்களை பாதுகாத்து ரக்ஷிப்பவர்கள் யாவர்? ராமன் அவர்களுடன் எப்படி போரிட வேண்டும்? என் பலத்துடன் நானும் வந்தால், மறைந்து போரிடும் அவர்களுடன் எப்படி போர் செய்ய வேண்டும்? இவையனைத்தையும் விளக்கிச் சொல்லுங்கள்.பகவானே, அவர்கள் முன் எப்படி நிற்க வேண்டும்? துஷ்ட எண்ணம்கொண்டவர்கள், வீர்யம் மிகுந்தவர்கள் ராக்ஷஸர்கள்.- ராஜாவின் இந்த வார்த்தையைக் கேட்டு விஸ்வாமித்திரர்சொன்னார். -புலஸ்திய வம்சத்தில் சிறந்த ராவணன் என்று ஒரு ராக்ஷஸன். அவனுக்கு ப்ரும்மா வரங்கள் கொடுத்திருக்கிறார். அந்த பலத்தில் அவன் உலகை துன்புறுத்தி வருகிறான். மகா பலசாலியான மகா வீர்யவான். பல ராக்ஷஸர்கள் சூழ வலம் வருகிறான். ராக்ஷஸாதிபதியான இந்த ராவணன் மிகுந்த பராக்ரமம் உடையவன் என்று கேள்வி. இவன் விஸ்ரவஸின் பிள்ளை.வைஸ்ரவனான குபேரன் தம்பி. தானே யாகங்களைக் கெடுக்க வர முடியாமல் போனால், அவன் அனுப்பி வைக்கும் இரண்டு ராக்ஷஸர்கள், மாரீசன், சுபா3ஹு, என்ற இருவர், இவர்களும் நல்ல பலசாலிகளே, யாகத்தைக் கெடுக்க வந்து விடுவார்கள்.- முனிவர் இவ்வாறு சொல்லவும், ராஜா -யுத்தத்தில் நானே அந்த துராத்மாக்களின் எதிரில் நின்று போரிடத் தயங்குவேன். என் மகனிடம் கருணை காட்டுங்கள். அல்ப பாக்யனான எனக்கு நீங்கள் தான் தெய்வம். தேவ, தானவ, கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள், யாருமே ராவணன் முன் நின்று யுத்தம் செய்ய சக்தியுடையவர்கள் அல்ல. மனிதர்கள் எம்மாத்திரம்? ராக்ஷஸன் யுத்தம் செய்ய எதிர் வரும் வீர்யம் மிக்கவர்களின் வீர்யத்தையும் அபகரித்துக் கொண்டு விடுவான். அதனால் நானும், என் பலத்தோடு கூட ராவணனை எதிர்த்து போரிட சக்தியற்றவன் தான்.முனி ஸ்ரேஷ்டரே, என் பலமோ, என் படை பலமும் சேர்ந்தோ கூட அந்த ராக்ஷஸனை வீழ்த்த முடியாது எனும் பொழுது, சங்க்4ராமம், ரணம் இவற்றை அறியாத என் பிள்ளையை எப்படித் தருவேன். பாலகனான என் மகனைத் தர மாட்டேன். ப்ரும்மரிஷியே,சுந்தன், உபசுந்தன் இருவரும் காலனுக்கு சமமானவர்கள்.யாகத்தைக் கெடுக்க என்றே வந்தவர்கள். என் மகனைத் தர மாட்டேன். அவர்களுடன் நான் பந்து மித்திரர்களுடன் வந்து யுத்தம் செய்வேன். உங்களையும் அழைத்துச் செல்வேன். –  இவ்வாறு பலவிதமாக ஜல்பிதம், உளற ஆரம்பித்து விட்ட அரசனைக் கண்டு குசிக புத்திரரான விஸ்வாமித்திரருக்கு கடுமையான கோபம் வந்தது.மகரிஷி,  தானே, தன் யாகத்தில் ஆஜ்யத்தில் நனைத்துப் போடப் பெற்ற ஆகுதி எப்படி ஜ்வாலையோடு விளங்குமோ, அது போல கோபத்தில் அக்னி பிழம்பாக ஜ்வலிக்கலானார்.  

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தசரத வாக்யம் என்ற இருபதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 21வசிஷ்ட வாக்யம் (வசிஷ்டரின் உபதேசம்)

பாசமும், கவலையும் அலைக்கழிக்க, தசரத ராஜா, மகா வருத்ததுடன் சொன்னதைக் கேட்டு மிகுந்த கோபம் கொண்ட விஸ்வாமித்திரர், அரசனிடம் -முதலில் தருவதாக சொன்ன பொருளை இப்பொழுது தர மறுக்கிறாய். ராகவ குலத்திற்கே இது இழுக்கு. இவ்வளவுதான் நீ என்றால், அரசனே, இதோ நான் போகிறேன். வாக்கை மீறியஅரசனே, இஷ்ட மித்திர பந்துக்களுடன் சுகமாக இரு- என்று கோபத்துடன் சொல்லி விட்டு கிளம்பினார். ஆத்திரத்துடன் விஸ்வாமித்திரர் இவ்வாறு சொல்லவும், நல்ல புத்திமானான அவரது வார்த்தையின் தீக்ஷ்ணம் (கடுமை)பூமண்டலத்தையே கலக்கியது. தேவர்களும் பயந்தார்கள். மகரிஷி கோபம் கொண்டு விட்டார்என்ற செய்தி அறிந்து உலகம் முழுவதும் என்ன நடக்குமோ என்று அஞ்சுகையில், விரத அனுஷ்டானங்களில் சிறந்த வசிஷ்ட முனிவர், தசரத ராஜாவைப் பார்த்து சொன்னார்: – ஸ்ரீமானே,  நீ இவ்வாறு தர்மார்தத்தை கை விடக் கூடாது. ரகு குலத்தை சேர்ந்தவர்கள், தர்மாத்மா என்று பெயர் பெற்றவர்கள். மூவுலகிலும் அதனாலேயே இவர்களுக்கு மதிப்பு. இதை நீயும் பின் பற்றுவாயாக. அதர்மமாக ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, உன் பேரில் பாவத்தை ஏன் சுமக்கிறாய்? முதலில் தருகிறேன் என்று சொல்லிவிட்டு பின்னால் மறுத்தால், தடாகங்களையும், நந்தவனங்களையும் அழித்த பாபம் வந்து சேரும்.அதனால் ராமனை கொடு- என்றார். அஸ்திரம் தெரியுமோ, தெரியாதோ, விஸ்வாமித்திரரின் பாதுகாப்பில் இருக்கும்வரை, ராக்ஷஸர்கள் எதுவும் செய்ய முடியாது. அம்ருதம், சுற்றிலும், அக்னியுடன் இருந்தால், எப்படியோ அப்படி ராமன் பாதுகாக்கப்படுவான். இவர் தர்மமே உருவாக வந்தவர். வீரர்களுள் சிறந்தவர். தவம் செய்வதில் இவருக்கு இணை இல்லை. புத்திமான்களுள் இவரை மிஞ்சியவர்கள் இல்லை. மூவுலகிலும், சராசரங்களிலும் உள்ள எல்லா அஸ்திரங்களும்இவருக்கு தெரிந்ததே.மற்ற சாதாரண மனிதர்கள் இவரை இதுவரை அறிந்து கொண்டதுமில்லை, இனி அறியப்போவதும் இல்லை.தேவர்களோ, ரிஷிகளோ, அசுரர்களோ, ராக்ஷஸர்களோ, கந்தர்வ, யக்ஷ ப்ரவரர்களோ, எல்லா அஸ்திரங்களையும் ப்ருஸாஸ்வர் (சில பதிப்புகளின் க்ருஸாஸ்வர்) என்பவரின் புத்திரர்களிடம்ஒப்படைத்து இருந்ததை, இவர் ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்த நாட்களிலேயே, இவருக்கு சமர்ப்பித்து விட்டனர். தக்ஷ கன்னிகைகள் இருவர் ஜயா, சுப்ரபா என்று பெயர் கொண்ட அழகிய பெண்கள். இவர்களிடம்உயர்ந்த அஸ்திர ஸஸ்திரங்கள் இருந்தன. ஜயா என்ற பெண் ஐநூறு பிள்ளைகளைப் பெற்றாள். சுப்ரபாவும் ஐநூறு பிள்ளைகளை, விருப்பம் போல் வடிவம் எடுத்துக்கொள்ளும் சக்தியுள்ள, பலம் பொருந்திய மாயாவிகளான அசுரர்களைப் பெற்றாள் யாராலும் எதிர்க்க முடியாத சம்ஹாரம் என்ற அஸ்திரங்களை, இந்த வம்சத்தில் வந்த குசிக புத்திரரான விஸ்வாமித்திரர் அறிவார். இதைத் தவிர புதிய அஸ்திரங்களை உண்டு பண்ணுவதிலும் இவர் சமர்த்தர். அதனால் இந்த முனிவர், சர்வக்ஞனான மகான். இவர் இதுவரை நடந்ததையும் அறிவார், இனி நடக்கப் போவதையும் அறிவார். இவருடன் ராமனை அனுப்பநீ யோசிக்கவே வேண்டாம். இந்த ராக்ஷஸர்களை இவரே அடக்க முடியும். உன் பிள்ளையின் நன்மைக்காக உன்னை அண்டி யாசிக்கிறார். சூரிய குலத்தில் பிறந்த அரசன் தசரதன், இவ்வாறு வசிஷ்டர் சொல்லியதை கேட்டபின், மனம்   தெளிந்து குசிக புத்திரரான முனிவருக்கு தன் மகனைத் தர இசைந்தான்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், வசிஷ்ட வாக்யம் என்ற இருபத்தோராவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 22வித்யா ப்ரதானம்,(வித்யா-புதிய வித்தையை உபதேசித்தல்)

வசிஷ்டர் இவ்வாறுசொன்னபின்,ராஜா தசரதன்,லக்ஷ்மணனுடன் இருந்த, ராமனை அழைத்தார். தாய், தந்தை, குரு வசிஷ்டர் எல்லோரும் இவர்களை ஆசிர்வதித்தனர்.  புரோஹிதரான வசிஷ்டர் மங்களாசாஸனம் செய்து வைத்தார். பிரியமான புத்திரனை உச்சி முகர்ந்து, அந்தராத்மா சுத்தமாக விருப்பத்துடன், விஸ்வாமித்திரர் கையில் ஒப்படைத்தார். ராஜா தசரதன்.அப்போது காற்று சுகமாக மாசின்றி, தூசு தும்பு இன்றி வீசியது. (வாயு என்பதால், வாயுவின் அபிமானிகளான தேவர்கள் என்று பொருள். புறப்படும் சமயம், வரப் போகும் மங்களத்தைச் சுட்டிக் காட்டும் வகையில், தந்தை மகனை பாசத்துடன் வருடுவது போல, சுகமான ஸ்பர்சத்தால், சரீரத்தின் மேல் சுகமாக வீசியது என்று பாவனை).விஸ்வாமித்திரரிடம் ஒப்படைக்கப் பட்ட சமயம், ராஜீவ லோசனான ராமன் மேல் பூமாரி பொழிந்தது. தேவர்களின் துந்துபி ஒலித்தது. அந்த மகாத்மா கிளம்பிய பொழுது சங்கத்வனியும், துந்துபி வாத்ய முழக்கமும்கேட்டன. விஸ்வாமித்திரர் முன்னே செல்ல,ராமன் பின் தொடர்ந்தான். காகபக்ஷம் என்ற சிகையலங்காரத்துடன் இருவரும், கையில் வில்லேந்தி பின் சென்றனர். சௌமித்திரியும் அவ்வாறே பின் தொடர்ந்தான். மூன்று தலை நாகம் போவது போல மூவருமாக வேகமாக சென்று மறைந்தனர்.இதன் பின் குசிக புத்திரைத் தொடர்ந்து, சகோதரர்களான அழகிய வடிவம் உடைய ராஜகுமாரர்களான ராம லக்ஷ்மணர்கள். நன்றாக அலங்கரித்துக்கொண்டவர்களாக, ரக்ஷைக்காக கைகளில் கட்டப் பட்ட காப்புகளுடன், பிரகாசமான வாளையும் ஏந்தி, லக்ஷ்மீ கரமான சோபையுடன் கூடியவர்களாக, முனிவரைத் தொடர்ந்து செல்வதைக் காண, ஸ்தாணுவான மகாதேவனை, நம் சிந்தைக்கு அப்பாற்பட்ட பரம் பொருளை, அக்னி குமாரர்கள் பின் தொடர்ந்து செல்வது போல இருந்தது. அரை யோஜனை தூரம் சென்ற பின், விஸ்வாமித்திரர், ராமா என்று மதுரமான குரலில் அழைத்தார். நேரத்தை வீணாக்க வேண்டாம். தண்ணீரை எடுத்துக் கொள். ப3லா, அதிப3லா என்ற மந்திரங்களை இப்போது உனக்கு உபதேசிக்கப் போகிறேன். கிரஹித்துக் கொள். இதனால் உனக்கு, சிரமமோ, ஜ்வரமோ, ரூபத்தில் மாறுதலோ ஏற்படாது. தூங்கிக் கொண்டிருந்தாலும், கவனமில்லாமல் இருந்தாலும் இதன் பலத்தால் ராக்ஷஸர்களிடம் இருந்துகாப்பாற்றப்படுவாய். ராக்ஷஸர்கள் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. உலகில் பலம் என்று சொன்னால், புஜ பலத்திற்கு சமமாக எதுவுமேயில்லை. ராகவா, மூன்று உலகிலும் உனக்கு சமமானவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் .இந்த இரண்டு வித்தைகளும்,உன்னை அனைவருக்கும் மேலான ஸ்தானத்தில் வைக்கும். பலா, அதிபலா இவை இரண்டும் எல்லா ஞானத்துக்கும் தாயார் போன்ற மந்திரங்கள்.பலா, அதிபலா என்ற இந்த மந்திரங்களை அறிந்தவர்கள் பசி, தாகம் இவற்றால் வருந்த மாட்டார்கள். இந்த இரண்டு வித்தைகளையும் கற்றுக் கொள்வதால், உன் புகழும் கூடும். பிதாமகரான ப்ரும்மாவின் புத்திரர்கள் இந்த இரண்டு வித்தைகளும். இதைப் பெற உனக்குத்தான் தகுதி இருக்கிறது.தர்மம் அறிந்தவனே, நிச்சயம் இவை உன்னை அடைந்து பல மடங்கு விஸ்தாரமாக ஆகும். தவ வலிமையால், அடக்கி வைத்திருந்த இவை பல ரூபங்களின் தோன்றப் போகின்றன. இதன் பின் ராமன் ஜலத்தை தொட்டுக்கொண்டு, (சுசி) சுத்தமானவனாக, மகா தேஜஸ்வியான முனிவரிடமிருந்து அந்த வித்தைகளை வாங்கிக் கொண்டான் மலர்ந்த முகத்துடன் வித்தை கை வரப் பெற்ற ராமன், அதிக சோபையோடு, எல்லையில்லா விக்ரமம்உடையவனாக காணப் பட்டான். சரத் காலத்தில் சூரியன் ஆயிரம் கிரணங்களுடன் விளங்குவது போல இருந்தான். குசிக புத்திரரான குருவின் தேவைகளையறிந்து செய்து விட்டு அன்றுஇரவு சரயூ நதி கரையில் தூங்கிக் கழித்தனர். பழக்கமில்லாத, அனுசிதமான புல் படுக்கையில் படுத்த போதிலும், அருகில் படுத்து, தாலாட்டுவது போல விஸ்வாமித்திரர் பேசியதை கேட்டபடியே, தசரத புத்திரர்களுக்கு, அந்த இரவு ஒரு க்ஷணமாக கழிந்தது.

.(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், வித்யா ப்ரதானம் என்ற இருபத்திரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 23 காமாஸ்ரம வாசம் (காமாசிரமம் என்ற இடத்தில் வசித்தல்)

இரவு முடிந்து விடிந்தவுடன், புல் படுக்கையில் உறங்கும் காகுத்ஸனைப் பார்த்து மிகவும் அன்புடன், விஸ்வாமித்திரர் சொன்னார். -கௌஸல்யா சுப்ரஜா ராம,பூர்வா ஸந்த்3யா ப்ரவர்த்ததே| உத்திஷ்ட நர சார்தூ3ல, கர்த்தவ்யம் தை3வமாஹ்னிகம் ||கௌசல்யையின் தவப் புதல்வனே, ஹே ராம, எழுந்திரு, விடியற்காலை ஸந்த்யா நேரம்.நர சார்தூல, சிங்கம் ஓன்று வீர நடை போடுவது போல நடைபோடும் ராஜகுமாரா, கண் விழிப்பாய்.தெய்வ காரியங்களையும், நித்ய காரியங்களையும் செய்ய வேண்டும், வா, – மகரிஷியின் மிக உத்தமமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அரச குமாரர்கள், உடனே எழுந்து, ஸ்னானம் முதலியன செய்து ஜபம் செய்ய ஆரம்பித்தனர். நித்ய கர்மாக்களைச் செய்தபின்,வீரர்களான இருவரும், தபோதனனான விஸ்வாமித்திரரை வணங்கி, சந்தோஷமாக கிளம்பத் தயாரானார்கள். நடந்து செல்லும் பொழுது, சரயூ நதி கங்கையைக் கடக்கும் இடத்தை கண்டனர். த்ரிபதகா என்ற திவ்யமான நதியான கங்கைக் கரையில், புண்யாத்மாக்களான ரிஷிகளின் ஆஸ்ரமத்தை கண்டனர். உக்ரமான தேஜஸ் உடையவர்களாக அந்தமுனிவர்கள் பல வருஷ காலமாக சிறந்த தவம் செய்து வந்தவர்களாகத் தெரிந்தது. இதைப் பார்த்த குமாரர்கள் விஸ்வாமித்திரரை கேட்டனர்.-இந்த புண்யமான ஆஸ்ரமம் யாருடையது? தற்சமயம் இங்கு யார் வசிக்கிறார்கள்? பகவன், நாங்கள் இதை அறிந்து கொள்ள ஆசைப் படுகிறோம் என்றனர். சிரித்துக்கொண்டே முனிவர் பதில் சொன்னார். – அப்படியா, கேளுங்கள். இது முன்னால் யாருடைய ஆஸ்ரமமாக இருந்தது தெரியுமா? கந்தர்ப்பன் (மன்மதன்) உருவமுடையவனாக இருந்தான். காமன் என்றும் விஷயம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள். இங்கு ஸ்தா2னு என்று போற்றப்படும் சிவ பெருமான் தவம் செய்து கொண்டிருந்தார். நியமத்துடன் புலன்களை அடக்கி, சமாதியில் இருந்த அவரை, தேவேந்திரனின் கட்டளைப்படி, மருத் கணங்களுடன் வந்து காமன் அவர் தவத்தைக் கலைத்தான். மகாத்மாவான சிவ பெருமான் ஹும் என்று சொன்னார். ரௌத்திரமான மூன்றாவது கண் திறக்க, காமனின் சரீரம் எரிந்து சிதறியது. காமன் சரீரத்தை இழந்தான். இதன் பிறகு, ஈ.ஸ்வரன் அவனை அசரீரியாக ஆக்கிவிட்டார்இதன் பின் காமன் அனங்கன் என்றே அழைக்கப்படுகிறான். ராகவ- காமன் சரீரத்தை விட்ட இடம் , அதனால் இது காமாஸ்ரமம் என்றே அழைக்கப்படுகிறது. அப்பொழுது இங்கு இருந்த முனிவர்களின் சிஷ்யர்கள் தர்ம சிந்தனையோடு இங்கு வாழ்கிறார்கள். பாபம் தீண்டாத, மாசில்லாத குணத்தினர். இன்று இரவை நாம் இங்கு கழிப்போம். ராகவா, எவ்வளவு அழகான இடம் இது, பார்த்தாயா? புனிதமான நதிகளின் இடையில் நாளை படகில் கடந்து செல்வோம்.குளித்து ஜபங்களை முடித்து நித்ய கர்மாககளைச் செய்த பின் கிளம்புவோம். இரவு இங்கு நிம்மதியாக இருக்க முடியும். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்த முனிவர்கள், தவம் செய்து செய்து தீர்கமான நயனங்களால் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவர்கள், விஸ்வாமித்திரரின் இந்த முடிவைக் கேட்டு மகிழ்ந்தனர். குசிக புத்திரரான முனிவருக்கு அர்க்யம், பாத்யம் இவற்றை அளித்து, ஆதித்யம், (விருந்தோம்பல்), செய்து பின்னால் ராம, லக்ஷ்மணர்களுக்கும் அதிதி சத்காரங்கள் செய்தனர்.இதன் பின் பல கதைகளைப் பேசி மகிழ்ச்சியாக சந்த்யா ஜபங்களை முடித்துக் கொண்டு அங்கு இருந்த முனிவர்களோடு கழித்தனர். விவரம் அறிந்த மற்றவர்களும் வந்து சேர, அந்த இடம் விரத சம்பன்னர்களான முனிவர்களால் நிறைந்தது. காமாஸ்ரமத்தில் சுகமாக, சுவாரஸ்யமான இனிய கதைகளைப் பேசியபடி இரவைக் கழித்தனர்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், காமாஸ்ரம வாசம் என்ற இருபத்து மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 24தாடகா வன ப்ரவேசம் (தாடகா வனத்தில் நுழைதல்)

மறு நாள் விடியற்காலையில், நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்த பின், சகோதரர்கள் இருவரும் விஸ்வாமித்திரரை தொடர்ந்து நதிக்கரை வந்து சேர்ந்தனர். அங்கு இருந்த முனிவர்கள் அனைவரும், விரதங்கள், அனுஷ்டானங்கள் செய்து முடித்தவர்கள். கூடவே வந்து படகில் ஏற்றிவிட்டு முனிவரிடம் – நீங்களும் ஏறிக் கொள்ளுங்கள். அரச குமரர்களுடன் உங்கள் யாத்திரை இடையூறு இன்றி சௌகர்யமாக இருக்கட்டும். தாமதம் செய்ய வேண்டாம். கிளம்புங்கள் – என்று விடை கொடுத்தனர். முனிவரும் சரி, அப்படியே ஆகட்டும் என்று அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டார். கங்கை நதியை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த கிளை நதியின் ஓட்டத்தோடு, சகோதரர்கள் இருவருடனும் படகில் சென்றார். –ஹோ- என்ற இரைச்சலுடன் வந்தநதியின் சப்தத்தை கேட்டனர். நீரின் நடுவில் படகு சென்று கொண்டிருந்த போது, ராமனும், லக்ஷ்மணனும் முனிவரிடம் சப்தத்தின் காரணத்தை அறிய, -ஜலம் பிளந்து போகும் போது இது என்ன பெரும் ஓசை எழுகிறதே, இது என்ன த்வனி?- என்று குதூகலமாக ராமன் கேட்டவுடன், முனிவர் விவரமாக சொல்ல ஆரம்பித்தார். -கைலாச மலையில், ப்ரும்மா தன் மனதால் நிர்மாணித்த ஒரு நதி இருந்தது.இது அவருடைய மானஸம், மனதில் உதித்த நதி.அயோத்யாவில் ஓடும் சரயூ இதிலிருந்து பிரிந்து வந்தது தான். அதனால் இந்த கோலாஹலமான சத்தத்துடன் திரும்பஜாஹ்னவியான கங்கையை வந்தடைகிறது. தண்ணீரின் மோதுதலால் உண்டாகும் சப்தம் இது.இதை வணங்குங்கள். – இரு நதிகளும் சேரும் அந்த இடத்தில், அரச குமாரர்கள் இருவரும் நமஸ்காரம் செய்து, தென்கரையை அடைந்துமெதுவாக நடந்து சென்றனர்.அந்த வனம் ஏனோ சாதாரணமாக இல்லை. கோரமாக தென்படுகிறது என்று சந்தேகம் கொண்டு ராமர் முனிவரிடம் கேட்டார். அஹோ, இந்த வனம் அடர்ந்து, இருக்கிறது. ஆந்தை கூக்குரல் தான் அதிகம் கேட்கிறது.பயங்கரமான நாய்களும், கூக்குரலிடும் பக்ஷிகளும், காட்டுப் பறவைகள் நிறைந்தும்காண்கின்றது.ஆனால் பறவைகள் இப்படி கோரமாக ஓசை எழுப்புவது அதிசயம்.சிங்கம், புலி, வராஹம், யானைகள் இவைகளும் அழகாக இருந்தும், த4வ, அஸ்வகர்ண, க2திர, வில்வம், திந்து3க, பாடல, ப33ரீ என்று இன்னும் பல மரங்களும் நிறைந்திருந்தும், ஏன் இது பயங்கரமாக காட்சியளிக்கிறது? மகா தேஜஸ்வியான முனிவர் ராமரின் சந்தேகத்தைத் தீர்க்கும் விதமாக பதில் சொன்னார். குழந்தாய், கேள். இது யாருடைய வனம் என்பதைச் சொல்லுகிறேன். முன்பு விருத்திரனை வதம் செய்தபோது, சேற்றில், மூழ்கியவன் போல், உடல் பூராக அழுக்குடன், பசியாலும் வாடிய ஸஹஸ்ராக்ஷனான இந்திரனை ப்ரும்மஹத்தி தோஷமும் சேர்ந்து கொண்டது. அப்பொழுது இந்திரனை ஸ்நானம்செய்வித்து தேவர்களும், ரிஷிகளும், மற்ற தபோதனர்களும் கலசங்களால் நீர் எடுத்து உடல் அழுக்கை தேய்த்துக் கழுவினர். அந்த அழுக்கையெல்லாம் இந்த பூமியில் தள்ளி, திரும்பத் திரும்ப உடல் மேல் படிந்த கறுப்பைத் தேய்த்துக் கழுவி கீழே தள்ளினார்கள். இதனால் இந்திரன் தன் சரீரம் நிர்மலமாகவும், கருமையான அழுக்கு இன்றியும் ஆனதில் மகிழ்ச்சி அடைந்தான். தன் சரீரத்தின் அழுக்கைத் தாங்கிய இந்த பூமிக்கு வரங்கள் கொடுத்தான். இந்த விசாலமான ஜனபதம், உலகில் பெரும் கீர்த்தியை அடையும் என்பதாக. தேவர்களும் சாது, சாது, நன்று நன்று என்றனர். தேவேந்திரனின் வரத்தால், இந்த இடம் வெகு காலம் செழிப்பாகவும், தன தான்யம் நிறைந்தும் இருந்தது. வெகு காலம் சென்ற பின் ஒரு யக்ஷி இங்கு தோன்றினாள். தன் விருப்பம்போல் வடிவம் எடுத்துக் கொள்ளும் திறன் உடையவளாகவும், மாயாவியாக, ஆயிரம் யானை பலம் கொண்டவளாகவும் இருந்தாள். தாடகா என்று பெயர். ராமா, உனக்கு மங்களம் உண்டாகட்டும். இவள் சுந்தனுடைய மனைவி.இந்திரனுக்கு சமமான பலம் உள்ள மாரீசன் இவள் மகன். உருண்ட புஜங்களும், பெரிய தலையும், அகலமான வாயும், மகா பெரிய உடலும், பயங்கரமான தோற்றமும் உடைய ராக்ஷஸன் இவள் மகன். இந்த ஜனபதத்தை தினமும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். துஷ்டசாரிணியான தாடகை, இங்கு வழியை அடைத்துக் கொண்டு, அரை யோஜனை தூரத்தில் வசிக்கிறாள். தாடகா வனத்திற்கு இந்த வழியாகத் தான் போக வேண்டும். உன் புஜ பலத்தால், நீ இவளை ஜயிக்க வேண்டும்.என் அனுமதியோடு, இவளைக் கொன்று விடு.இந்த தேசத்தை இடையூறு செய்யும் இவளைக் கொன்று, இதை பழையபடி வளமாக இருக்கச் செய். நாம் வந்தது போல இந்த பிரதேசத்திற்கு வேறு யாரும் எளிதில் வர முடியாது. இந்த யக்ஷியால், பொறுக்க முடியாத கோர வடிவுடையவளால், இந்த இடம் துன்புறுத்தப் பட்டு தவிக்கிறது. யக்ஷி வந்ததிலிருந்து நாசமான இந்த இடம் இன்று வரை அதே போல பயங்கரமாகவே இருக்கிறது. இது தான் இந்த இடத்தின் கதை.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், தாடகா வன பிரவேசம் என்ற இருபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 25 தாடகா வ்ருத்தாந்தம், (தாடகையின் கதை)

இணையில்லாத மகானான முனிவரின் வார்த்தைகளைக் கேட்டு, ஆண் சிங்கம்போன்ற ராமர், மேலும் வினவினார். சாதாரணமாக யக்ஷர்கள் அதிக பலமில்லாதவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அபலையான இவள் ஆயிரம் யானை பலம் பெற்றது எப்படி? லக்ஷ்மணனுடன் சேர்த்து, ராமருக்கு பதில் சொல்லும் விதமாக, விஸ்வாமித்திரர், அவர்கள், மனம் கலங்காமல், கேட்கும் படி வேடிக்கையான வார்த்தைகளால் விவரித்தார். எப்படி ஏராளமான பலத்தைப் பெற்றாள் என்பதைக் கேள், ராகவா, வர தானத்தால் கிடைத்த பலம் இது.சுகேது என்று ஒரு யக்ஷன் இருந்தான். குழந்தை இல்லையென்று தவம் செய்தான். பிதாமகரான ப்ரும்மா மகிழ்ந்து அவனுக்கு கன்யா ரத்னமான தாடகையை மகளாகக் கொடுத்தார். அவளுக்கு ஆயிரம் யானை பலத்தையும் ப்ரும்மா தான் கொடுத்தார். இந்த யக்ஷனுக்கு பிள்ளையைக் கொடுக்கவில்லை. வேகமாக வளர்ந்து வந்த இந்த பெண்ணை சுந்த3னுக்கு மணம் செய்து கொடுத்தான். சில காலம் சென்ற பின் யக்ஷி ஒரு மகனைப் பெற்றாள். மாரீசன் என்ற அந்த மகன் சாபத்தால் ராக்ஷஸனாக ஆனான். அகஸ்தியரின் சாபத்தால் சுந்தன் இறந்தான். சுந்தன் இறந்தவுடன் இவள் புத்திரனுடன் சேர்ந்து அகஸ்தியரை அழிக்க முயன்றாள்.ஆங்காரத்துடன் பலமாக சத்தமிட்டுக் கொண்டு ஓடி வந்தாள். வேகமாக மேலே விழுந்த அவளைப் பார்த்து அகஸ்திய முனிவர், ராக்ஷஸனாக ஆவாய் என்று மாரீசனை சபித்தார். தாடகையையும் சபித்தார். மகா யக்ஷியாக, நர மாமிசம் தின்பவளாக ஆவாய் என்றும், கோரமான முகமும் உடையவளாக ஆவாய் என்றார். உடனே அவள் அழகிய உருவம் நீங்கி, கோரமான பயங்கரமான உருவம் அடைந்தாள். அவளோ சாபம் பெற்றும், அடங்கா கோபம் கொண்டவளாக அகஸ்தியர் நடமாடி வந்த இந்த இடத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறாள்.இந்த யக்ஷி மகா பயங்கரமானவள். பசு, பிராம்மணர்கள் இவர்களின் நன்மைக்காக இவளைக் கொன்று விடு ராகவா. இவள் பராக்ரமம் நன்மை செய்வது அல்ல. இவள் நடத்தையும் மகா துஷ்டையாக ஆகி விட்டது. சாபத்தால் பீடிக்கப் பட்ட இவளை எந்த மனிதனும் பொறுக்க மாட்டான். இவளைக் கொல்ல, இந்த மூவுலகில் வேறு யாராலும் முடியாது. அதனால் ராகவா, ஸ்த்ரீயாயிற்றே, வதம் செய்யாலாமா என்று அருவருப்பு அடையாதே. நான்கு வர்ணத்தாரும் அடங்கிய ஜனங்களின் நன்மைக்காக, ராஜ குமாரர்கள், தயையோ, தயையில்லாமலோ, பிரஜைகளின் ஹிதம் ஒன்றே குறியாக சில சமயம் துணிந்து செயல் படத்தான் வேண்டும். நல்லவர்களை காப்பாற்ற, பாவனமோ, தோஷமுடையதோ, சில காரியங்களைச் செய்து தான் ஆக வேண்டும். ராஜ்ய பாரம் வகிப்பவர்களுக்கு இது சனாதனமான தர்மம். அதர்மம் என்ற எண்ணத்தை விடு, காகுத்ஸா, இவளிடம் தர்மம் என்பதே இல்லை. முன்பு விரோசனன் மகளான மந்தரையை, அவள் பூமியைக் கொல்ல முனைந்த போது, இந்திரன் அடித்தான். விஷ்ணுவும் ஒரு முறை பதிவிரதையான ப்3ருகு3 பத்னியை, காவ்ய மாதா (பிருஹஸ்பதியின் தாயார்) அடிக்க நேர்ந்தது. அவள், அனிந்திரம், உலகமே இந்திரன் இல்லாமல் இருக்கட்டும் என்று இந்திரனை அழிக்க கிளம்பினாள். அதனால் அவளை அழித்தார். மகாத்மாவான பல ராஜ குமாரர்கள், அதர்மத்தில் ஈ.டுபட்டவர்கள், பெண்களாக இருந்தாலும் அழிக்கத்தான் வேண்டி இருந்திருக்கிறது. அதனால் இந்த தயக்கத்தை விட்டு, இவளை அடி. அரசகுமாரனே, என் உத்தரவுப் படி அடித்து கொல்லு, என்றார்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தாடகா விருத்தாந்தம் என்ற இருபத்து ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 26தாடகா வத4: (தாடகையின் வதம்)

சந்தேகத்துக்கு இடமின்றி முனிவர் பேசியதைக் கேட்ட பின்பும், தன் கொள்கையை எளிதில் மாற்றிக் கொள்ளாத குணம் கொண்ட ராமர் முனிவரிடம் சொன்னார். -என் தந்தை உத்தரவிட்டபடி, அவர் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், குசிக முனிவரின் வார்த்தை என்பதாலும்நான் சிறிதும் மனதில் சந்தேகமின்றிஉடனே செய்ய வேண்டியவன் தான். தாங்கள் சொல்லை மீறக் கூடாது என்றும், அலட்சியப் படுத்தக் கூடாது என்றும், அயோத்தியிலிருந்து கிளம்பு முன்னே தந்தை கண்டித்துச் சொல்லியிருக்கிறார். அதனால் தந்தைசொல்லைக் கேட்பவனாக, ப்ரும்ம வாதியானநீங்கள் சொல்வதாலும் தாடகையை வதம் செய்கிறேன். அதில் சந்தேகமேயில்லை. பசு, பிராம்மணர்கள்இவர்களின் நன்மைக்காக, இந்த தேசத்தின் நன்மைக்காகவும், இணையில்லாத புகழ் வாய்ந்த தங்கள் சொல்லை ஏற்று முனைந்து செய்கிறேன்.இவ்வாறு சொல்லி, வில்லின்நடுவில் பிடித்தபடி, எதிரிகளை நாசம் செய்வதில் வல்லவரான ராமன், நான்கு திக்குகளிலும் எதிரொலிக்கும்படி, நாணின் ஒலியை எழுப்பினான். இந்த சப்தத்திலேயே தாடகா வன வாசிகள் அலறியடித்துக் கொண்டு வர, இதைக் கேட்ட தாடகா, மிகவும் கோபம் கொண்டு, சப்தம் வந்த திசையை உத்தேசமாக கொண்டு, க்ரோதத்தில் வேறு எதுவும் தோன்றாதவளாக, ராக்ஷஸி, வேகமாக ஓடி வந்தாள். அவள் வந்த வேகத்தாலும், அதனால் எற்பட்ட சத்தத்தினாலுமே, ராகவன் அவள் யார் என்பதைத் தெரிந்து கொண்டான்.கோரமான உருவம் இன்னும் க்ரோதத்தால் விகாரமாகி, வயதானவளாக தோற்றத்தால் தெரிந்து கொண்ட ராமன், லக்ஷ்மணனிடம் சொன்னான்.–லக்ஷ்மணா, இந்த யக்ஷிணியின் கோரமான பயங்கர உருவத்தைப் பார். பயந்த ஸ்வபாவம் உடையவர்கள் இவளைக் கண்ட மாத்திரத்திலேயே ஹ்ருதயம் பிளக்க நடுங்குவார்கள்.யாராலும் அடக்க முடியாத மாயா பலம் உடைய இவளை,காது மூக்குகளை அரிந்து திரும்பி ஓடச் செய்கிறேன். ஸ்த்ரீ என்பதால் இதுவரை ரக்ஷிக்கப்பட்டு வந்திருக்கிறாள். இவளைக் கொல்ல வேண்டாம் என்று தோன்றுகிறது. இவளுடைய வீர்யத்தையும், நடையையும் அழித்தால் போதும் என்று நினைக்கிறேன். – இவ்வாறு ராமன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அதி பயங்கரமான கோபத்துடன் வந்த தாடகை, கைகளை தூக்கிக் கொண்டு கர்ஜித்தபடி ராமனை நோக்கி ஓடி வந்தாள். விஸ்வாமித்திரர் –ஹும்- காரம் செய்து அவளை நிற்கச் செய்து, ராகவர்களுக்கு ஸ்வஸ்தி வசனங்கள் சொல்லி, வெற்றி உண்டாகுக என்று வாழ்த்தினார். ஏகமாக புழுதியைக் கிளப்பி அவர்கள் இருவரையும் சிறிது நேரம் தாடகை, கண் திறக்க முடியாமல் அவஸ்தைப் பட செய்தாள். உடனே மாயா ஜாலத்தால், மறைந்து நின்று கற்களால் அடிக்க ஆரம்பித்தாள்.இதன் பின் ராகவன் கோபம் கொண்டான். மலை கற்களை அவள் மழையாக பொழிந்த போது அம்புகளால் அதை தடுத்து நிறுத்தியதோடு, திரும்பி தூர ஓடிப் போகயத்தனித்தவளைதடுத்து கைகளை வெட்டினான். புஜங்கள் இற்று விழ, கோரமாக கர்ஜிக்கும் அவளை, லக்ஷ்மணன் துரத்திச் சென்று காதுகளையும், மூக்கு நுனியையும் அறுத்தான். உடனே வித விதமான ரூபம் எடுத்துக்கொண்டு, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து நின்று கொண்டு அந்த யக்ஷி, மாயையினால் அவர்களை பலவிதமாக அலைக்கழித்தாள். கற்களை மழையாக பொழிந்தவாறு பயங்கரமாக நடமாடினாள். கற்களை மழையாக பொழியும் அவள் போக்கைத் தடுக்க எண்ணி, கா3தி4 புத்திரர் (விஸ்வாமித்திரர்) ராமனைப் பார்த்து -தயக்கம் வேண்டாம், ராமா,இவள் துஷ்டை, பாப காரியங்களே செய்யும் பாபி. மாயையால் இன்னும் வளருவாள். யாகங்களை விக்னம் செய்யும் யக்ஷி. சந்த்யா வருமுன் இவளை வதம் செய்து விடு. ராக்ஷஸர்கள்சந்த்யா காலத்தில் அடக்க முடியாத பலம் பெற்று விடுவார்கள்.- இவ்வாறு விஸ்வாமித்திரர் சொல்லவும், மேலே விழும் கற்களாலே மட்டுமே அவள் இருக்கிறாள் என்பது தெரிய, மறைந்து நின்ற தாடகையை, சப்த வேதி என்ற அஸ்திரங்களைக் கொண்டு அம்புகளால் சரமாரியாக அடித்தார்.அவள் அம்புகளால் தடுத்து நிறுத்தப் பட்ட அந்த நிலையிலும் , திரும்பத் திரும்ப இருவரையும் அடிக்க ஓடி வந்தாள். வேகமாக வந்து விழும், மலை சிகரம் போன்ற அவளை, மார்பில் அம்பினால் அடித்துக் கொன்றார். பயங்கரமான தோற்றத்துடன் அவள் இறந்து விழுந்ததும், சுர பதியான இந்திரனும், மற்ற தேவதைகளும் சாது, சாது, நன்று,நன்றுஎன்று பாராட்டினார்கள். ஸஹஸ்ராக்ஷனான இந்திரனும், மற்ற தேவர்களும் விஸ்வாமித்திரரிடம் வந்து, அவரை பாராட்டி -கௌசிக முனியே- உங்களுக்கு மங்களம்உண்டாகட்டும். இந்திரன் உள்ளிட்ட மருத் கணங்கள் ராகவனின் இச்செயலால் மகிழ்ச்சியடைந்தோம். எங்கள் அன்பை அவனுக்குத் தெரிவியுங்கள். பிரஜாபதி, ப்ருஸாஸ்வ புத்திரர்கள், சத்ய பராக்ரமம் உடையவர்கள், தவ வலிமை உடையவர்கள். இவர்கள் அன்பையும் ராமனுக்குத் தெரிவியுங்கள். ப்ரும்மன், நீங்கள் தகுதியான குரு. அதனால் தான் உங்களைத் தொடர்ந்து வர இசைந்திருக்கிறான். அரசகுமாரனான இவன் இன்னும் மகத்தான காரியங்ளை செய்து, தேவர்கள் மகிழச் செய்யப் போகிறான் என்று மகிழ்ச்சியுடன் வந்த வழியே சென்றார்கள்.. அவர்கள் விஸ்வாமித்திரரை வணங்கி விடை பெறவும், சந்த்யா காலமும் வந்து சேர்ந்தது. தாடகையின் வதத்தால் சந்தோஷம் அடைந்த முனிவர், ராமனை உச்சி முகர்ந்து, கொண்டாடினார். ராமா இன்று இரவு இங்கேயே வசிப்போம். நாளைக் காலை என் ஆஸ்ரமத்திற்குச் செல்வோம் என்றார்.சரி என்று ஆமோதித்த ராஜகுமாரர்களும் அன்று இரவு அந்த தாடகா வனத்தில் சுகமாக இருந்தனர். சாபத்திலிருந்து விடுபட்ட அந்த வனம், அன்றே ரமணீயமாக ஆகி விட்டது. சைத்ரவனம் போல் ஆகிவிட்டது. (தேவலோகத்து வனத்தின் பெயர்). தேவர்களும், சித்தர்களும் வாழ்த்த, அந்த இரவு, ராம, லக்ஷ்மணர்கள் முனிவருடன், கூடவே வசித்து, தூங்கி, அவரால் விடியற்காலையில் எழுப்பப்பட்டனர்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தாடகா வதம் என்ற இருபத்தாறாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 27அஸ்திரக்ராம பிரதானம் (அஸ்திரங்களை பெறுதல்)

அன்று இரவு தூங்கி எழுந்தவுடன், விஸ்வாமித்திரர், ராமனை புகழ்ந்து பேசி, இனிமையாக பேசியவாறு -அரசகுமாரனே, உனக்கு மங்களம் உண்டாகட்டும். உன் செயலால் மிகவும் மகிழ்சியடைந்தேன். மனமுவந்து, பிரியமாக இந்த அஸ்திரங்களை உனக்குத் தருகிறேன். எந்த அஸ்திரங்களால், தேவ கந்தர்வ கணங்களோ, உரக(நாக) கூட்டமோ, எதிர்த்தாலும்,யுத்தத்தில் எதிரிகளை அடக்கி, வதம் செய்து வெற்றி பெறுவாயோ. அந்த திவ்யமான அஸ்திரங்களை உனக்கு முழுவதுமாக தருகிறேன். த3ண்ட சக்ரம் என்ற திவ்யமான அஸ்திரம் இது. ராகவா, த4ர்ம சக்ரம் என்று ஒரு அஸ்திரம், கால சக்ரம் என்று ஒன்று, விஷ்ணு சக்ரம், உக்ரமான ஐந்த்ராஸ்திரம், வஜ்ரம் என்ற அஸ்திரம், சைவம், சூலம் என்ற விசேஷமான ஆயுதம், ப்ரும்ம சிரஸ் என்ற அஸ்திரம், ஐஷிகம் என்று ஒரு அஸ்திரம், இவைகளை உனக்குத் தருகிறேன். இதைத் தவிர, மஹாபா3ஹோ, ப்ரும்மாஸ்திரம் என்ற உத்தமமான அஸ்திரமும் தருகிறேன். இந்த இரண்டு க3தைகளும், மோத3கீ, சிகரீ, என்று பெயர் உடையவை, இவைகளையும் தருகிறேன். தர்மபாசம் என்று ஒரு அஸ்திரம், அதே போல, கால பாசம் என்று மற்றொன்று, பாசம், இதைத்தவிர, வாருணம் என்ற அஸ்திரம், இவைகளையும் தருகிறேன். இரண்டு சிறிய பாதி கற்களையும் தருகிறேன். பினாக பாணியின் பைனாகம் என்ற அஸ்திரமும், நாராயணம் என்றதும், ஆக்3னேயம், சிகரம் என்று பெயருடையதும், வாயவ்யம், பிரத4னம் என்ற ஒன்று, உனக்கு இவைகளைத் தருகிறேன்.இவை தவிர, ஹயசிரோ என்ற அஸ்திரம், க்ரௌஞ்சம் என்ற இவை இரட்டையான சக்திகள். இவைகளையும் தருகிறேன். கங்காலம், முஸலம் இவை கோரமானவை. காபாலம் என்று ஒன்று, கங்கணம் இவைகளை ராக்ஷஸர்களை வதம் செய்யும் பொருட்டு உனக்குத் தருகிறேன். வைத்யாதரம், மகாஸ்திரம், நந்தனம் இவை உயர்ந்த வாள் வகைகள். இவைகளையும் தருகிறேன்.காந்தர்வாஸ்திரம், மானவம் இவைகளோடு, சௌரம் இவைகளையும் வர்ஷிக்கவும், வற்றச் செய்யவும், நெருப்பால் சுடச்செய்வதும், நெருப்பை அணைப்பதுமான அஸ்திரங்கள், மோகனம் என்ற எதிர்க்க முடியாத அஸ்திரம் , கந்த3ர்ப்ப த3யிதம் என்றதையும், பைசாசமான அஸ்திரத்தையும், மாத3னம் என்பதையும் தருகிறேன். அரசகுமாரனே, தாமசம், சௌமனம் இவை இரண்டும் மிகவும் பலம் வாய்ந்தவை. சம்வர்த்தம், மௌஸலம் இவையும் எதிர்க்க முடியாதவை, சத்யம் என்று ஒரு அஸ்திரம், மாயாத4ரம் என்ற ஒன்று, சௌரம் என்றஅஸ்திரம் தேஜஸைக் கொடுக்கும், எதிரியின் தேஜஸை அபகரிக்க கூடியது. சௌம்யாஸ்திரம், குளிர்ச்சியான சிசிரம், த்வாஷ்டிரம் என்ற அஸ்திரம், பயங்கரமானது. சூரியனுக்கும் குளிர்ச்சி தரக்கூடிய சீதேஷும் தவிர, மானவம், இவைகள் நல்ல பலம் வாய்ந்தவை. இவைகளை ஏற்றுக்கொள், சீக்கிரம். கிழக்கு முகமாக நின்று, சுசியாக, முனிவர் இவற்றை ராமனுக்கு சந்தோஷமாக கொடுத்தார். மந்திர அடிப்படையில் அமைந்ததும், உத்தமமானதும், தேவர்களுக்கும் கிடைக்க முடியாத சர்வ சங்க்ரஹம் என்ற முறையில் அனைத்தையும் ராமனுக்கு கொடுத்துவிட்டார். ஜபம் செய்துகொண்டிருந்த, புத்திமானான விஸ்வாமித்திர முனிவரிடமிருந்து இந்த அஸ்திரங்கள் ராமனை வந்தடைந்தன. ராமனை வணங்கி அந்த அஸ்திரங்கள் சந்தோஷமாக -ராகவா, இதோ நாங்கள்எல்லோரும் இனி உனக்கு கிங்கரர்கள். உன் சொல்படி, ஆணைப்படி நடக்க வேண்டியவர்கள். எங்களைக் கொண்டு என்ன என்ன செய்ய விரும்புகிறாயோ, செய்து கொள். நாங்கள் உன் சித்தப்படி செய்வோம்.-என்றன.இவ்வாறு அவை ஓன்று சேர்ந்து சொல்லவும், ராமனும் மிக்க மகிழ்ச்சியடைந்து, அவைகளை கைகளில் வாங்கிக் கொண்டு, நீங்கள் அனைவரும் என் மானஸா- மனதில் வசிப்பவர்களாக இருங்கள் என்று வேண்டிக் கொண்டான். பிறகு விஸ்வாமித்திரரை வணங்கி, கிளம்பத் தயாரானார்கள்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், அஸ்திர க்ராம ப்ரதானம் என்ற இருபத்தேழாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 28 அஸ்திர சம்ஹார க்ரஹணம்

எல்லா அஸ்திரங்களையும் பெற்றுக் கொண்ட காகுத்ஸனான ராமன், மகிழ்ச்சியுடன்,முனிவருடன் நடந்து கொண்டே கேட்டான் . முனி புங்கவரே, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கூட கிடைக்காத அஸ்திரங்களைக் கிடைக்கப் பெற்றேன். இவைகளை அடக்குவதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். – இவ்வாறு ராமன் சொல்லவும், விஸ்வாமித்திரர், சுசியாக, சுத்தமாக விரதங்களை அனுசரித்து வந்துள்ள முனிவர், அவைகளை அடக்கும்வழி முறைகளையும் சொன்னார். சத்யவந்தம், சத்ய கீர்த்திம், த்3ருஷ்டம், ரப4ஸம், ப்ரதிஹாரதரம், பராங்முக2ம், அவாங்முகம், லக்ஷ்யாலக்ஷ்யா என்ற இரண்டு, த்ருடனாப, சுனாபகௌ, தசாக்ஷ, தச வக்த்ர என்ற இரட்டை, த3ச சீர்ஷ, ச்ருதோதரௌ, பத்3மனாப, மகானாப என்ற இரட்டை, து3ந்து3னாப4, ச்வனாப4 என்றஇரட்டை, ஜ்யோதிஷம், க்ருசனம், நைராஸ்ய விமல, யௌக3ந்த3ர வினித்3ரௌ, தை3த்ய ப்ரமத2னௌ, சுசிபா3ஹோ, மகாபா3ஹோ, நிஷ்குளி, விருசி, சார்சிமாலி, த்3ருதிமாலி, வ்ருத்3தி4மான், ருசிர, பத்ரியம், சௌமனசம், விதூ3த மகர: என்ற இருவர்,கரவீரகரம், த4ன தா4ன்யௌ, காமரூபம், காமருசிம், மோகனம், மாரனம், ஜ்ரும்ப3கம், சர்வனாப4ம், சந்தானாவரௌ, ப்ருசாஸ்வதனயான், பா4ஸ்வரான், காமரூபின:, இவற்றைப் பெற்றுக் கொள்ள தகுதியுடையவன் நீ ஒருவன் தான் ராம, இவைகளை ஏற்றுக்கொள்.  ராமனும் சந்தோஷத்துடன் அவற்றை ஏற்றுக் கொண்டான்.திவ்யமான, ப்ரகாசமான தேகத்துடன் சில நேரில் வந்து, சில நெருப்பு போன்றவை, சில புகை போன்றவை, சந்திர, சூரியன் போன்றவை, சில கை கூப்பியவாறு, அஞ்சலி செலுத்துபவராக சில, ராமனிடம் மதுரமாக பேசினர். -இதோ நாங்கள் வந்துள்ளோம். என்ன செய்ய வேண்டும் சொல்,-  என்று கேட்க, -மானஸா வாக இருங்கள்,வேண்டும்போது உதவி செய்யுங்கள் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்பி விட்டான். அவைகள் ராமரை பிரதக்ஷிணம் செய்து வணங்கி விடை பெற்றுச் சென்றன. மேலும் நடந்து செல்கையில், விஸ்வாமித்திரரைப் பார்த்து ராமர் கேட்டார். -இது என்ன, மலைக்கு அருகில் மேகம் போல தெரிகிறதே, மரங்கள் போல தெரிகின்றன, அழகாக இருக்கிறது. மான்கள் சுற்றி சுற்றி வருகின்றன, மனோகரமாக இருக்கிறது. தவிர, பக்ஷிகள் கீச், கீச் என்று கோலாகலமாக இரைவதும் கேட்க இனிமையாக இருக்கிறதே, இவ்வளவு அழகிய ஆஸ்ரமத்தை விட்டுயாரோ வெளியேறி விட்டார்கள் என்று தெரிகிறது. இந்த தேசத்தில் அடி வைத்ததுமே, சுகமான ஒரு உணர்வு ஏற்படுவதால், பகவானே, இது யாருடைய ஆஸ்ரமமாக இருந்தது? தயவு செய்து எனக்கு விளக்கி சொல்லுங்கள். துஷ்டசாரிகளும், பாபிகளுமான ராக்ஷஸர்கள், உங்கள்யாகத்தை நாசம் செய்யும் துராத்மாக்கள் இருக்கும் இடம் வந்து விட்டோம் என்று நினைக்கிறேன். பகவன், உங்களுடைய யாகம் நடக்கும் இடம் எது? நான் ராக்ஷஸர்களை வதம் செய்து ரக்ஷிக்க வேண்டும் என்று சொல்லி அழைத்து வந்தீர்களே, இவை எல்லாவற்றையும் விவரமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். முனிஸ்ரேஷ்டரே, சொல்லுங்கள்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், அஸ்திர சம்ஹார க்3ரஹனம் என்ற இருபத்து எட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 29 சித்3தா4ஸ்ரமம்

ஈடு இணையில்லாத குணவானான ராமர், வனம் பற்றி விசாரித்தவுடன், மகா முனிவரான விஸ்வாமித்திரர் விளக்கிச் சொன்னார். இங்கு தான் தேவர்களில் வரிஷ்டரான (சிறந்தவரான) ப்ரபு விஷ்ணு, தவம் செய்வதே பலனாக, பல வருஷங்கள், யுகங்கள், தவம் செய்து வந்தார். தபஸ்வியாக அவரே வசித்த இடம் இது. வாமனருடைய பூர்வாஸ்ரமம்.சித்தாஸ்ரமம் என்று பெயர் பெற்றது. இங்கு தவம் செய்தவர்கள் சித்தர்கள் ஆனார்கள். ராஜா வைரோசனி (விரோசனன் மகன்), பலி,தேவர்களையும், இந்திரன் உள்ளிட்ட மருத்3 கணங்களையும் வென்று, மூவுலகிலும் புகழ்வீச ராஜ்யம் ஆண்டு வந்தான். அசுரன் தலைவனான அவன் பெரிய யாகம் செய்தான். பலி எஜமானனாக இருந்து யாகம் செய்த போது தேவர்கள், அக்னி தேவன் தலைமையில் இந்த ஆஸ்ரமத்திற்கு வந்து விஷ்ணுவை சந்தித்தார்கள். விரோசனன் மகனான பலி யாகம் செய்கிறான். இந்த யாகம் முடியுமுன், தாங்கள் வந்த காரியத்தை செய்து முடியுங்கள். யாசகம் பெற வந்தவர்கள், இங்கும் அங்குமாக சஞ்சரிக்கிறார்கள். யார், எது, எப்பொழுது கேட்டாலும் அப்படியே தருகிறான் பலிசக்ரவர்த்தி.ஆதலால் நீங்கள், தேவர்களின் நன்மைக்காக, மாயா யோகத்தை அடைந்து, வாமனனாக ஆகி எங்களுக்கு நன்மை செய்ய வேண்டுகிறோம். ஹே விஷ்ணுவே, என்று பிரார்த்தித்தனர்.இதே சமயத்தில், அக்னி பிழம்பு போன்ற தேஜஸ் உடையவர், காஸ்யபர் என்பவர், அதிதி என்ற தன் மனைவியுடன், வரம் அருளும் மதுசூதனனை தோத்திரம் செய்தார். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நியமத்துடன், விரதம் இருந்து தவம் செய்து, பெரும் மதிப்பும், மரியாதையும் பெற்றவர் , இந்த காஸ்யபர். தவமே உருவானவர் போலும், தவமே உருக் கொண்டு வந்தது போலவும், தவமே பொருளாகவும் உள்ள மதுசூதனனைப் பார்த்து, என் தவப் பலனே, உங்களை நேரில் காண்கின்றேன். நான் இதுவரை ஆராதித்து வந்த புருஷோத்தமனையே நேரில் காணும் பாக்கியம் பெற்றேன். உலகு அனைத்தையும் உன் சரீரத்தில் விளங்கக் காண்கின்றேன். நீயே ஆதியும் ஆவாய். இப்படித்தான் என்று உறுதியாக சொல்லமுடியாத,எல்லையில்லாத,தன்மை உடையவன்.உன்னை நான் சரணம் அடைகிறேன். மாசற்ற குணவானான காஸ்யப முனிவரைப் பார்த்து, மனம் மகிழ்ந்தவராக ஹரி சொன்னார். – உனக்கு வேண்டிய வரம் எதுவானாலும் கேள். உங்கள் இருவருக்கும் வரம் தருவது மிக அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது.-  என்றார். இதைக் கேட்டு மரீசி புதல்வரான காஸ்யபர், -எனக்கும், அதிதிக்கும் மகனாக பிறப்பாயாக. இந்திரனுக்கு இளைய சகோதரனாக ஆவாய். எதிரிகளை அழிக்கும் பலம் உடையவனே, சோகத்தில் மூழ்கியுள்ள தேவர்களுக்கு உதவி செய். உன் அருளால், இந்த இடம் சித்தாஸ்ரமம் என்று ப்ரஸித்தமாக ஆகப்போகிறது. உன் காரியம் ஆன பின்இந்த இடத்தை விட்டுச் செல்வாய்,- என்றார்.இதன் பின் அதிதிக்கு மகனாக பகவான் பிறந்தார். வாமனனான (குள்ளமான) உருவம் எடுத்துக் கொண்டு, வைரோசனியான, பலிச்சக்ரவர்த்தியின் யாகம் நடக்கும் இடம் சென்றார். மூன்று அடி மண் கேட்டு, முதலில்பூமியை வாங்கிக் கொண்டு, மகேந்திரனுக்கு பூலகைதிருப்பித் தந்தார். பூவுலகம் திரும்ப இந்திரன் வசம் ஆனது. சர்வ லோக க்ஷேமத்தின் பொருட்டு, இரண்டாவது அடியால் உலகையெல்லாம் வாங்கிக் கொண்டு, தன் சக்தியால் பலியை அடக்கி, மகேந்திரனுக்கு மூவுலகையும் திருப்பித் தந்தார். மூவுலகும் திரும்ப இந்திரன் வசம் ஆனது. வாமனர் முன்னால் இருந்த இடம் என்பதால் பக்தியுடன் நானும் இந்த இடத்தில் வசித்தேன்.இங்கும் யாகத்துக்கு இடையூறு செய்யும் ராக்ஷஸர்கள் வருகிறார்கள்.  துஷ்டசாரிகளான அவர்களை, நீதான் அடக்க வேண்டும். வா, சித்தாஸ்ரமம் செல்வோம். இந்த ஆஸ்ரம பதம் எப்படி எனக்கு பழகிய இடமோ, அப்படியே தான் உனக்கும்.என்று சொல்லியபடி அன்புடன், ராம, லக்ஷ்மணர்கள் கையைப் பிடித்துஅழைத்துக் கொண்டு ஆஸ்ரமத்துள் நுழைந்தார். மூடியிருந்த பனி விலகி, புனர்வசுவுடன்கூடிய சந்திரன் போல,   தெளிவாக நின்றார். மகா தேஜஸ்வியான அவரைக் கண்டதும் சித்தாஸ்ரமத்து முனிவர்கள் எல்லோருமே வந்து விஸ்வாமித்திரரை வணங்கி நின்றனர். மரியாதையுடன் அவரை உபசரித்து வரவேற்றனர். அதே போல ராஜ குமாரர்களுக்கும் அதிதி சத்காரங்களைச் செய்தனர். ஒரு முஹுர்த்த காலம் ஓய்வெடுத்துக் கொண்டு, முனிவர் எழுந்தவுடன், கை கூப்பியபடி வினயமாக,- இன்றே தாங்கள் தீக்ஷை எடுத்துக் கொள்ளுங்கள். முனிபுங்கவரே, உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். சித்தாஸ்ரமம் சித்தமாக ஆகட்டும்.உங்கள் வாக்கு பலிக்கட்டும்- என்று வேண்டினர். முனிவரும் அதை ஏற்று, தன் கட்டுப்பாடுகள் நிறைந்த விரதம், நியமம் இவற்றுடன் தீக்ஷையை மேற் கொண்டார். குமாரர்களும் அன்று இரவு தூங்கி, விடியற் காலையில், எழுந்து, நீரைத் தொட்டுக் கொண்டு, ஜபம் முதலியவற்றை செய்து, நியமத்துடன் அக்னி காரியங்களை செய்து முடித்த பின் முனிவரை வணங்கினர்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், சித்தாஸ்ரமம் என்ற இருபத்தொன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

அத்தியாயம் 30 யக்ஞ ரக்ஷணம்(யாகத்தைக் காத்தல்)

தேச காலம் அறிந்தவர்களும், நல்ல வீரர்களுமான அரச குமாரர்கள், தேச கால வர்த்தமானங்களை அனுசரித்து பேச வல்லவர்கள், கௌசிகரிடம் விவரம் அறிந்து கொள்ளும் ஆவலுடன் வினவினர். -ப4கவன், இந்த நிசாசரர்கள் எப்போது வருவார்கள். அந்த க்ஷணமே அவர்களை அடிக்கிறோம். – யுத்தம் செய்ய ஆசையுடன் பரபரக்கும் காகுத்ஸ குமாரர்களைப் பார்த்து, மற்ற எல்லா முனிவர்களும்மகிழ்ந்தனர்.குமாரர்களை புகழ்ந்தார்கள்.- இன்றிலிருந்து ஆறு இரவுகள் நீங்கள் காவல் காக்க வேண்டும். தீக்ஷையை ஏற்றுக் கொண்டுள்ள இந்த முனிவர் மௌன விரதம் இருப்பார்- என்றனர். இதைக் கேட்டு ராஜ குமாரர்கள், தூக்கம் இன்றி, ஆறு இரவுகள் காவல் காத்தனர். கைகளில் வில்லை ஏந்தியபடி, விஸ்வாமித்திர முனிவரை பாதுகாப்பவர்களாக உபவாசம் மேற் கொண்டனர்.இவ்வாறு நாட்கள் செல்லச் செல்ல ஆறாவது நாளும் முடியும் தறுவாயில், ராமர் சௌமித்திரியிடம் கவனமாக இரு என்று சொன்னார்.முதல் முறையாக யுத்தம் செய்யும் பரபரப்புடன் ராமர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வேதியில் நெருப்பும் கொழுந்து விட்டெரிந்தது. உபாத்யாயர்கள், புரோஹிதர்கள் யக்ஞ அக்னியை மூட்டினர். (உபாத்யாயர்-ப்ரும்மா, புரோஹிதர்-உபத்3ருஷ்டா. யுத்தம் செய்யும் ஆவலுடன் ராமன் பரபரத்து சொல்வதும், யாகத்தீ மூண்டெழுவதும் சம காலத்தில் நடக்க, ராக்ஷஸர்கள் எந்த நிமிஷமும் வரலாம் என்பது விளங்குகிறது). தர்ப்பம், சமித்து, சமசம், ச்ருக் (நெய் விடும் கரண்டி), குசுமம் (பூ), இவற்றுடன், ரித்விக்குகளால் சூழப் பட்ட விச்வாமித்திரர் யாகத் தீயை மூட்டினார். மந்திரங்கள் சொல்லி நியமமாக நடக்க வேண்டிய முறைப்படி யாகம் வளர்ந்தது.இதே சமயத்தில் ஆகாயத்தில் பயங்கரமான சத்தம் உண்டாயிற்று.மழை நாளில் மேகத்தை பிளந்து கொண்டு மழை பொழியும் முன் இடி இடிப்பது போல பயங்கரமான சத்தம் உண்டாயிற்று. மாயாவிகளான ராக்ஷஸர்கள் இங்கும் அங்குமாக ஓடலாயினர்.கண்ணுக்குத் தெரியாமல் நின்ற மாரீசனும், சுபாஹுவும் அவர்களைத் தொடர்ந்து வந்த அவன் கூட்டத்தாரும் பயங்கரமான உருவம் உடையவர்களாய், ரத்தம் வடியும் மாமிசம் இவற்றை வர்ஷித்தனர். ரத்தமும் நிணமும், வேதியை நணைக்கும் முன், ராமர் அவர்களைப் பார்த்து பரபரப்புடன் ஓடி வந்து, லக்ஷ்மணனைப் பார்த்துச் சொல்வார் – லக்ஷ்மணா, பார். தப்பு காரியம் செய்ய முனைந்த இந்த ராக்ஷஸர்களைப் பார். மேகங்களை அக்னி விலக்குவது போல மானவாஸ்திரம் போட்டு இவர்களை விலக்குகிறேன். இவர்களை கொல்ல வேண்டாம் என்று எண்ணுகிறேன். – இவ்வாறு சொல்லியவாறே, ராஜீவ லோசனான ராமன், வேகமாக வில்லில் நாணைப் பூட்டி, பரம பாஸ்வரமான மானவம் என்ற அஸ்திரத்தைத் தொடுத்து மாரீசனின் மார்பில் படும்படி அடித்தார். அவனும் அந்த அஸ்திரத்தால் அடிபட்டு, முழு நூறு யோசனை தூரம் துரத்தப்பட்டு, சமுத்திரத்தில் விழுந்தான். நினைவிழந்து, அடிபட்ட வலியால் துடித்துக் கொண்டு, சீதளமான சமுத்திர ஜலம் இன்னும்அதிக வேதனையளிக்க விழுந்து கிடந்த மாரீசனைப் பார்த்து ராமர் லக்ஷ்மணனிடம் சொன்னார். –லக்ஷ்மணா, பார். (சீதேஷு ப3லம் – சீதேஷு என்ற அஸ்திரத்தின் பலம் – இந்த அஸ்திரத்தின் குணம். அதாவது இந்த அஸ்திரத்தை பிரயோகிப்பதால் எதிரி நடுங்குவார். இங்கு குளிரால் நடுங்க செய்துள்ளது. இந்த சீதேஷு மானவம்என்ற அஸ்திரத்தின் தர்மத்துடன் கூடிய தன்மை இது. இவனை மோகிக்கச் செய்து அழைத்துச் சென்று விட்டது, உயிரை எடுக்கவில்லை. பார்த்தாயா. இவர்களையும் வதைக்கிறேன், மனதில் ஈ.ரமில்லாமல், துஷ்ட காரியங்களையே செய்வதில் கவனமாக இருப்பவர்கள், இந்த யாகத்தை கெடுக்க வந்து பாபாத்மாக்களான இவர்களை கொல்லுகிறேன் என்று லக்ஷ்மணனிடம் சொல்லியபடி லாகவமாக தன் வில்லை எடுத்து, தன் திறமையைக் காட்டுவது போல, நாணையும் பூட்டி ஆக்னேயாஸ்திரத்தை சுபா3ஹுவின் மார்பில் அடித்தார். உடனே அவன் அடிபட்டு வீழ்ந்தான்.மற்றவர்களைவாயவ்யாஸ்திரத்தைக் கொண்டு அடித்தான்.  யக்ஞத்தைக் கெடுக்க வந்த ராக்ஷஸர்கள் அனைவரையும் அழித்து விடவும், இந்திரன் விஜயனாக வந்த போது முன்னொரு சமயம், பூஜிக்கப்பட்டது போலவே,  முகம் மலர, ராகவனை மிகவும் உதார குணமுடையவனாக,முனிவர்கள் கொண்டாடினர்.  யாகம் முடிந்தவுடன், முனிவர் வடக்கு திசையைப் பார்த்து ராகவனிடம் பின்வருமாறு சொன்னார். –ராகவா, குருவின் வார்த்தையைக் கேட்டு நன்றாக செய்தாய். நானும் கிருதார்த்தனானேன். புகழ் பெற்றவனே, இந்த சித்தாஸ்ரமம் பெயருக்கு ஏற்ப சித்தமாக ஆகியது. – இவ்வாறு ராமனை புகழ்ந்தவாறு, மாலை நேர ஜபங்களை செய்யலானார்.

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தின், யக்ஞ ரக்ஷணம் என்ற முப்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்)

தேவி மாஹாத்ம்யம்- ரஹஸ்ய த்ரயம், க்ஷமா ப்ரார்த்தனா

 

 தேவி மாஹாத்ம்யம்- ரஹஸ்ய த்ரயம்  

 

1) ப்ராதானிக ரஹஸ்யம்

 

அரசன் சொன்னான்-

பகவன்- பெரியவரே – இது வரை சண்டிகையின் அவதார விஷயங்களை விவரமாக தாங்கள் சொல்லி தெரிந்து கொண்டோம்.  நாங்கள் ஆராதிக்க தகுந்த வகையில் தெளிவாக உள்ளது எது –  அவதார வரிசைகளில் தேவியின் எந்த ரூபத்தை நாங்கள் பூஜிக்க வேண்டும் என்பதை தாங்கள் உறுதியாக சொல்ல வேண்டும். அதன் விதி முறைகளையும் தெரிந்து கொள்ள ஆவலுடன் வணக்கத்துடன் கேட்கிறேன்

ரிஷி பதிலளித்தார்.  இது பரம ரஹஸ்யம்- வெளியாருக்கு சொல்லக்கூடாது – என்பது எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டளை. ஆயினும் நீ என் பக்தன். பக்தியுடன்  ஆவலுடன் கேட்பதாலும் சொல்கிறேன்.  உனக்கு சொல்லத் தடையில்லை.

பரமேஸ்வரியான மஹாலக்ஷ்மியே அனைவருக்கும் ஆத்யா- அதாவது முதல் தெய்வம்.  மூன்று குணங்களையுடையவள். உலகை வியாபித்து – உலகெங்கும் நிறைந்திருப்பவள்.  புலன் அறிவுக்கு எட்டியும் எட்டாமலும் இருப்பவள்.  ஜீவ ராசிகள் அனைத்துக்கும் தாயாக இருப்பவள்.  கைகளில் கதை, கேடம், பானபாத்ரம் இவைகளை வைத்திருப்பவள். தலையில் லிங்கம், நாகம், இவைகளும் இருக்கும்.  புடமிட்ட தங்கம் போன்ற உடல் நிறமும், அதே போன்று புடமிட்ட தங்க ஆபரணங்களுடனும் பிரகாசமுடன் காட்சி தருவாள். அது வரை சூன்யமாக இருந்த உலகை தன் ஒளியால் நிரம்பச் செய்து விட்டாள். சூன்யமாக கிடந்த உலகை உயிர்ப்பிக்க தானும் தாமஸமான உருவையே எடுத்துக் கொண்டாள். கருமையான உடல் நிறமும், கோரைப் பற்களும், பெரிய கண்களும், சிற்றிடையுமாக தோன்றினாள். நான்கு கைகள். அவைகளில் கட்கம், பாத்திரம், கேட்டை – என்பவைகள் அலங்கரித்தன.  மிகச்சிறந்த பெண்மணியாக, மஹாலக்ஷ்மியிடம் சென்று வணங்கி – எனக்கு ஒரு பெயரும், செயலும் தரவேண்டும் என வினவினாள். மஹாலக்ஷ்மியும், அவ்வாறே தருவதாகச்சொல்லி அனுக்ரஹித்தாள்.

உனக்கு பெயரும், நீ செய்ய வேண்டிய செயல்களையும் சொல்கிறேன் என சொல்லி வரிசையாகச் சொன்னாள்.

மஹா மாயா, மஹா காளி, மஹாமாரீ, க்ஷுதா, த்ரூஷா,  நித்ரா, த்ருஷ்ணா, ஏகவீரா, காலராத்ரி, துரத்யயா – இவைகளே உன் பெயர்கள். உன் செயல்களையும்  விவரிக்கின்றன. இவை உன் செயல்கள் என்று அறிந்து கொண்டு உன்னை வழிபடுபவன் நல்ல கதியை அடைவான் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்வாறு அவளிடம் சொல்லிவிட்டு, மஹாலக்ஷ்மி மற்றொரு உருவம் எடுத்துக் கொண்டாள். சத்வமாக, அதி சுத்தமான வெண்மை நிறமும் சந்திரனைப் போன்ற ஒளி சிந்தும் தண்மையான

உருவம். கைகளில் அக்ஷ மாலை, அங்குசம், வீணை, புஸ்தகம் இவைகளுடன், ஒப்பில்லாத அழகிய பெண்ணாகத் தோன்றினாள். அவளுக்கும், தேவி, பெயர்களையும், செய்ய வேண்டிய செயல்களையும் விவரித்தாள்.

மஹா வித்யா, மஹா வாணீ, பாரதீ, வாக், சரஸ்வதி, ஆர்யா, ப்ரஹ்மி, காமதேனு, வேத கர்பா, அறிவுக்கு அதிபதி. – இவையே.

அதன் பின் மஹா காளியையும், மஹா சரஸ்வதியையும் பார்த்து, மஹா லக்ஷ்மி சொன்னாள்- நீங்கள் இருவருமாக உங்கள் தேவைக்கேற்ப  தம்பதிகளாக ஸ்ருஷ்டி செய்து கொள்ளுங்கள் என்றவள், பின் யோசித்து, தானே ஸ்ருஷ்டி செய்யத்துவங்கினாள். இருவரை, அழகானவர்களாக, ஹிர்ண்யகர்ப எனும் பெயருடன், கமலாஸனத்தில், ஆணும் பெண்ணுமாக தோன்றச்செய்தாள். அதில் ஆணாக இருந்தவரை ப்ரும்மன், விதி, விரிஞ்சி, தாதா என்றும், அந்த பெண்ணுக்கு ஸ்ரீ, பத்மா, கமலா, மாதா என்றும் பெயர்கள் சூட்டினாள். 

 

இதற்கிடையில், மஹா காளி, பாரதி என்ற இருவர். இவர்களுடன் தோன்றிய ஆணுக்கு பெயர்கள் வருமாறு- நீல கண்டன், ரக்தபாஹூ, வெண் நிறத்தான், சந்த்ரசேகரன் என்றும், ருத்ரன், சங்கரன், ஸ்தாணு, கபர்தி, த்ரிலோசனன் என்றும் பெயர்கள். அடுத்து, பாஷா, அக்ஷரா, ஸ்வரா, காமதேனு, என்றழைக்கப் படும் சரஸ்வதி

கௌரி என்ற பெண்ணையும், க்ருஷ்ணம் என்ற ஆணையும் தோற்றுவித்தாள். அவர்களுடைய பெயர்கள், விஷ்ணு, க்ருஷ்ணன், ஹ்ருஷீகேசன், வாசுதேவன், ஜனார்தனன் என்றும், உமா, கௌரி, சதீ, சண்டி, சுந்தரி, சுபக, சிவா, என்ற இப்பெண்களும் உடனேயே சரீரம் உடையவர்களாக ஆனார்கள். ( புரம்-தேஹம், தேஹீ- சரீரம் உடையவன் என்பது போலவே புரம் என்ற உடலையுடையவன் புருஷன்) இவர்களை சாரதாரண மனிதக் கண்களால் காண இயலாது.

மஹாலக்ஷ்மி, இதன் பின் ப்ரும்மாவுக்கு பத்னியாக, த்ரயீ, ருத்ரனுக்கு வரம் தரும் குணமுடையவளாக கௌரீ, வாசுதேவனுக்கு ஸ்ரீ, என்றும் அளித்தாள்.

த்ரயீ (ஸ்வரா என்றும் பெயர்) என்பவளுடன் விரிஞ்சி ஒரு பூ கோளத்தை உண்டாக்கினார். வீர்யவானான ருத்ரன், அதை கௌரியுடன் கூடி பிளந்தார். அந்த அண்டம்- கோளத்தின் மத்தியிலிருந்து தான், அரசனே, பிரதானமான செயல்கள் தோன்றின. மஹாபூதங்கள் – ஆகாசம், வாயு, அக்னி, நீர், மண் – இவை தோன்றின. அசையும், அசையாப் பொருட்கள் மற்றும் ஜீவன்கள் தோன்றின. கேசவன் லக்ஷ்மியுடன் அவைகளை பாதுகாத்து, வளரச் செய்தான். கௌரியுடன் மஹேஸ்வரன் அதை திரும்பவும் மஹா சம்ஹாரம் செய்தான். இவ்வாறாக உயிர்கள் தோன்றவும் மறையவும், பின் தோன்றுவதுமாக சுழன்று வரும் சக்கரத்தை அனைத்தும் தானாகவே இருந்து நடத்தி வருகிறாள் தேவியான மஹாலக்ஷ்மி. மஹாராஜா, அவளுக்கு தனியான ரூபமோ, பெயரோ கிடையாது. வெவ்வேறு பெயர்கள் குறிப்பவை அவளையே தான் என்பதை அறிவாய்.

                                                             ************

2) வைக்ருதிக ரஹஸ்யம்.- 

ரிஷி சொன்னார்- ஓம். சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களுடையவள் தேவி. அவளே சர்வா, சண்டிகா, துர்கா, பத்ரா, பகவதி, ஆவாள்.

ஹரியின் யோக நித்ராவாக இருக்கும் பொழுது, தமோ குணம் நிறைந்த மஹா காளியாவாள். இவளை மது கைடப அசுரர்களை வதம்  செய்யும் பொருட்டு, ப்ரும்மா

எழுப்பினார். அவளும் மாயையாக வந்தாள். பத்து வாய், பத்து புஜங்கள், பத்து கால், கைகள், முப்பது விசாலமான கண்கள், பற்கள் என்று பயங்கரமாக இருந்தாலும், மஹாலக்ஷ்மியால் உருவாக்கப் பட்டவளாதலால் தனித் தன்மையுடையவளாக கவர்ச்சியாகவே இருந்தாள். கைகளில், வாள், பாணம், கதை, சூலம், சக்கரம், சங்கம், புசுண்டி என்ற ஆயுதம், இவைகளையும், பரிகம், கார்முகம், சிர்ஷம் என்பவைகளையும்  வைத்திருந்தாள். இவளே வைஷ்ணவி மாயா. மஹாகாளியே இவள். எளிதில் இவளை நெருங்க முடியாது. வணங்கி ஆராதனை செய்யும் பக்தர்களுக்கு வசப்படுவாள்.

அனைத்து தேவ சரீரங்களிலும் இருந்து, தோன்றிய மஹாலக்ஷ்மி, மஹிஷமர்தினி என்ற பெயர் பெற்றவள். வெண்ணிறமும், அதை விட வெண்மையான ஸ்தனங்களும், கருமையான புஜங்களும், சிவந்த மத்ய பாகமும், பாதங்களும், கருமையான முழங்கால்களும், அழகிய பின் பாகமும், சித்ர விசித்ர ஆபரணங்களுமாக, வாசனைப் பொருட்கள் நிறைந்த அங்க ராகங்களுமாக, காந்தி, உடலமைப்பு, இவைகளால் மங்களகரமாக , விளங்குபவளுமாக, பதினெட்டு புஜங்களும், சில சமயம், ஆயிரம் கைகளுடையவளுமாக, சதியான இவளை பூஜிப்பவர் சொல்வர். இவள் கைகளிலுள்ள ஆயுதங்கள் – அக்ஷ மாலா, கமலம், பாணம், அசி என்ற வாள், குலிசம், கதை, சக்கிரம், த்ரிசூலம், பரசு, சங்கம், கண்டா- மணி, பாசக்கயிறு, சக்தி, தண்டம், சர்ம, சாபம், பான பாத்ரம், கமண்டலு, இந்த ஆயுதங்களுடன் கமலத்தில் அமர்ந்தவளான மஹா லக்ஷ்மி, அனைத்து தேவர்களும் ஒன்றாக விளங்கும் மகா சக்தி ஆவாள். இந்த விதமாக பூஜிப்பவர்கள், இவ்வுலகிலும், பரலோகத்திலும் ப்ரபுவாக, அரசனாக ஆள்வான்.

அதே போல, சத்வ குணம் நிறைந்த கௌரியின் உடலில் இருந்து வெளிப்பட்டவளே சாக்ஷாத் சரஸ்வதி என்பவளாவாள். அவளே சும்பாசுரனை அழித்தவள். அதன் பொருட்டு எட்டு புஜங்களையும், பாண முஸலங்களையும், சூல, சக்கரங்களையும், சங்கையும், கண்டா என்ற மணி இவை தவிர லாங்கலம், கார்முகம் என்பவைகளையும் தரித்தவள். பக்தியுடன் இவளை நன்றாக பூஜை செய்பவர்களுக்கு சர்வஞத்வம் – அனைத்தையும் அறியும் சக்தி என்பதைத் தருவாள். இவளே நிசும்ப மதினி- நிசும்பனை சம்ஹாரம் செய்தவள். அரசனே, இவைகள் தான் அம்பிகையின் ரூபங்கள். இவர்களை உபாசிக்கும் விவரங்களையும் சொல்கிறேன் கேள்.  பூமியை ஆளும் அரசனே. ஜகன்மாதாவின் பல விதமான உபாசனை முறைகளையும் தெரிந்து கொள்,

மஹாலக்ஷ்மியை பூஜை செய்யும் பொழுது, மஹா காளி, மஹா சர/ஸ்வதி – இவர்களை முறையே, தெற்கு, வடக்கு திசைகளில் பூஜிக்க வேண்டும். பின் பாகத்தில் இரட்டையர்களான மூவரும் இருக்க வேண்டும். ப்ரும்மா, ஸ்வரா என்பவளுடன் மத்தியிலும், ருத்ரன் கௌரியுடன் தென் பாகத்திலும், இடப் பக்கத்தில், லக்ஷ்மி தேவியுடன் ஹ்ருஷீகேசனையும், முன் பாகத்தில் மூன்று தேவதைகளையும், பதினெட்டு கைகளையுடைய ரூபம் மத்தியிலும், அவளது இடப்பக்கத்தில் பத்து முகங்களையுடையவள் என்ற பொருளில் தசானனா என்பவளையும், தென் பாகத்தில் எட்டு கைகளையுடைய லக்ஷ்மியை மஹதி என்றும் பூஜிக்க வேண்டும்.

பதினெட்டு கைகளையுடைய தேவியாக பூஜிக்க நினைத்தால் , நராதிபனே, இந்த தசானனா, தென் பாகத்திலும் எட்டு கைகளையுடையவளாக வடக்கிலும் வைக்க வேண்டும்.

இடர்கள் தீர, கால ம்ருத்யு இவர்களையும் பூஜை செய்ய வேண்டும். எட்டு கைகளையுடையவளாக, சும்பாசுரனை வதைத்தவள், அவளுடைய ஒன்பது சக்திகளையும் பூஜிக்க வேண்டும். அத்துடன் ருத்ர, மற்றும் வினாயகரையும் பூஜிக்க வேண்/டும். நமோ தேவ்யா என்ற மந்திரத்தால் மஹா லக்ஷ்மியை அர்ச்சிக்க வேண்டும். மூன்று அவதாரங்களை அர்ச்சிக்கும் மந்திரங்கள், துதிகளைச் சொல்ல வேண்டும். மஹிஷ மர்தினி – எட்டு கைகளுடையவள். மஹா லக்ஷ்மியே, மஹா காளி, மஹா சரஸ்வதி என்றும் அழைக்கப் படுவர். சர்வ லோக மஹேஸ்வரி, புண்ய பாபங்களை நிர்வஹிப்பவள்.  மஹிஷனை வதைத்தவள் என்று, ஜகத்ப்ரபுவே பூஜித்தார். சண்டிகா பகவதீ என்ற இவளே, பக்த வத்ஸலா. அர்க்யம் முதலானவைகளும், அலங்காரங்களும், கந்த புஷ்பங்கள், அக்ஷதைகள், தூப தீபங்கள், பல விதமான நைவேத்யங்கள், ப்ரணாம, ஆசமனியங்கள், சுகந்தமான சந்தனம், கர்பூரம் சேர்த்த தாம்பூலங்கள், இவைகளை பக்தி பாவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இடது பாகத்தில், தேவியின் எதிரில் மகா அசுரனின் சிதைந்த தலையை வைக்க வேண்டும், இவனும் தேவியின் கரத்தால் வெட்டுண்டதால் சாயுஜ்யம் என்ற பதத்தை அதைந்தான் அன்றோ. தென் பாகத்தில் தேவியின் முன் தர்மமே உருவான சிங்கம் விளங்கும். இது தேவியின் வாகனம்.

இதன் பின் மனம் ஒன்றி தேவியை துதிக்க வேண்டும். கைகூப்பி வணங்கியபடி, இந்த சரிதங்களை சொல்லி துதிக்க வேண்டும். மத்யம சரிதம் என்ற ஒரு அத்யாயம் மட்டுமாக துதிக்கலாம். மற்ற பகுதிகளை தனியாக சொல்வதில்லை. பாதி சரித்திரத்தில் நிறுத்தக் கூடாது. அது பாதி ஜபம் – என்பதால். பிரதக்ஷிண நமஸ்காரங்கள், தலியில் அஞ்சலி செய்பவனாக ஜகன் மாதாவிடம் அபராத க்ஷமா என்பதை செய்ய வேண்டும். முடிந்தால் பிரதி ஸ்லோகத்திற்கும் பாயசம் வைவேத்யம் செய்யலாம்.

எள், நெய், சுத்தமா ஹவிஷ் முதலியவையும் நைவேத்யம் செய்யலாம். ஸ்தோத்ர மந்திரங்களால் அர்ச்சிக்க வேண்டும்.  பின் நாம பஜனைகள், ஆத்ம நிவேதனம் என்ற பாவனையுடன் தன்னையே சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மனம் ஒன்றி தேவியை பூஜிப்பவன், சகல விதமான போக்யங்களை இக லோகத்தில் அனுபவித்து பின் தேவியின் சாயுஜ்யம் என்ற பதவியை அடைந்து விடுகிறான். பக்த வத்ஸலாவான இந்த தேவியை பூஜிக்கத் தெரியாதவன், தெரிந்தும் செய்யாதவன், புண்யங்கள் அழிய, தேவியினாலேயே வதைக்கப் படுவான். பூபால, அதனால், பூஜை செய். சர்வ லோக மஹேஸ்வரி இவள். உசிதமான விதத்தில் பூஜை செய். சுகத்தை அடைவாய்.

                                                                     **************

 

3) மூர்த்தி ரஹஸ்யம் –

ரிஷி சொன்னார்-

ஓம். தேவி நந்தனுக்கு மகளாக நந்த என்ற பெயருடன் பிறப்பாள். அவளை துதித்து, பூஜை செய்து வந்தால் மூவுலகும் உன் வசமாக காண்பாய். உத்தமமான பொன் நிறத்தினளாக, அதே போல பொன் நிற ஆடையுடன், பொன் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளாக பிரகாசமாகத் தெரிவாள். நான்கு கைகளிலும், கமலம், அங்குசம், பாசம், தாமரை மலர் வைத்திருப்பாள். அவளே, ஸ்ரீ, இந்திரா, கமலா, லக்ஷ்மி என்ற பெயர்களுடன், பொன் மயமான தாமரை மலர் வடிவினாளான ஆசனத்தில் வீற்றிருப்பாள். மாசற்ற அரசனே, இவளைப் பற்றி நான் முன்பே சொல்லியிருக்கிறேன். ரக்த தந்திகா என்ற பெயருடன் அவள் கோலத்தை வர்ணிக்கிறேன் கேள், அது உன் பயத்தை போக்கும். ரக்தாம்பரா- சிவப்பு ஆடை தரித்தவள், தானும் சிவந்த நிறத்தினள், அவள் ஆபரணங்களும் சிவந்தவையே. அதே நிற ஆயுதங்கள், அவள் கண்களும் சிவந்து, கேசம் கூட சிவந்து பயங்கரமான தோற்றமளிக்கும். விரல்களில் நகங்களும் சிவந்து, பற்களும், சிவந்து காணப்படும். இந்த தேவியை ஒரு பெண் தன் பதியைத் தொடர்ந்து போவது போல, பக்தியுடன் பின் பற்றி, தொழ வேண்டும். இவள் பூமியைப் போல விசாலமான உருவமும் உடையவள். இரு சுமேரு மலைகளும் அச்சமயம் இவள் ஸ்தனங்களாகும். மனோஹரமாக பெருத்துக் கணப்படும் ஸ்தனங்கள், எல்லா ஆனந்தங்களையும் உள்ளடக்கிய கடல். பக்தர்களுக்கு அனைத்து

விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வல்லவை இவை. கட்கம், பாத்ரம், முஸலம், லாங்கலம் என்ற ஆயுதங்கள், நான்கு கைகளிலும் தரித்திருப்பாள்.  ரக்த சாமுண்டா என்றும் யோகேஸ்வரி என்றும் அழைப்பர். தாவர, ஜங்கம  – அசையும், அசையா பொருட்களைக் கொண்ட இந்த உலகம் அவள் ஆளுமைக்கு உட்பட்டது. அவளே வியாபித்து இருப்பாள். இவளை பூஜிப்பவன் சராசரங்களையும் அடைவான். ரக்த தந்தி என்ற கோலத்தில் தேவியை உணர்ந்து பூஜிப்பவன்,  அன்பான மனைவி கணவனுக்கு பணிவிடை செய்வது போல செய்பவன், ஒரு நிலையில் அவள் தனக்கு அனுக்ரஹம் செய்வதையும் உணர்வான்.

துர்கா என்று புகழ் பெற்ற கோலத்திலும் அவளுக்கு பல பெயர்கள். சாகம்பரி, நீல வர்ணா, நீலோத்பலம் போன்ற கண்களுடையவள்- நீலோத்பல விலோசனா, என்பவை. கம்பீரமான உடல் அமைப்பு உடையவளாக வர்ணிக்கப் படுகிறாள். நாபியைச் சுற்றி த்ரிவலீ, உயர்ந்த ஸ்தனங்கள், முஷ்டியும், கூர்மையான சிலீ முகம் என்ற ஆயுதமும், கமலமும் வைத்திருப்பாள். கமலாசத்தில் அவளை தியானிக்க  வேண்டும். புஷ்பம், துளிர்கள், வேர், பழ வகைகள், காய் வகைகள், ருசியான ரசம் நிறைந்த பயிர் பச்சைகள், பசியையும், தாகத்தையும் பயத்தையும் நீக்கக் கூடியவைகளை – இவைகளை இவள் சரீரத்தில் உற்பத்தி ஆவதைக் காணலாம். பள பள வென்ற கார்முகம் என்ற ஆயுதம் தரித்த அவள் பரமேஸ்வரி என்று போற்றப் படுகிறாள். மற்றும் சாகம்பரி, சதாக்ஷி, என்றும் இவள் பெயர்கள்.

அவளே பார்வதியாகவும் துதிக்கப் படுவாள். விசோகா – சோகம் என்பது அண்ட முடியாதவள், துஷ்ட தமனி – துஷ்டர்களை அடக்குபவள், வினைப் பயனால் வரும் பயங்களையும் தீர்த்து வைப்பவள் என்ற பொருளில், சமனீ துரிதாபதாம் என்று வணங்கப்படுகிறாள். உமா, கௌரி, சதீ, சண்டீ, காலிகா என்பது இவளுக்கு பெயர்கள். சாகம்பரியாக இவளைக் கண்டு துதி செய்து, வணங்கி. ஜபம், தியானம் முதலியவைகளையும் குறைவற செய்பவன், அக்ஷயமான அன்னம், பானம், அம்ருத மயமான பழங்கள், இவைகளை சீக்கிரமே அடைவான். காலராத்ரி என்ற பெயருடன் விளங்குபவளை, துதித்தால் விரும்பியதை பெறலாம். அவள் தோற்றம் பயங்கரமானது. நீல வர்ணமும், கோரை பற்களுமாக இருந்தாலும், அருள் பாலிப்பவளே. விசாலமான கண்கள், பெருத்த ஸ்தனங்கள், சந்த்ர ஹாசம், டமரு, அரக்கனின் தலை, பாத்ரம் இவைகள் இவள் கைகளில் விளங்கும். ஏகவீரா என்றும் சொல்வர். அதே போல மஹா மாரீ என்பவளும் கண்களை கூச செய்யும் ஒளி மயமான சூழலில் இருப்பாள். இவளுடைய மற்றொரு பெயர், ப்ராமரீ. இவள் ஆடை அலங்காரங்கள் விசித்ரமாக இருக்கும். கையில் ப்ரமரம்-வண்டு வைத்திருப்பாள்.

இவ்வாறாக தேவியின் பல ரூபங்களையும் விவரித்துச் சொல்லி விட்டேன். ஜகன் மாதாவான தேவி விரும்பியதை தருவதில் காமதேனுவுக்கு ஒப்பானவள். இது ரஹஸ்யமாக சொல்லப் படுகிறது. நீ யாரிடமும் விவரிக்க வேண்டாம். விரும்பிய பலனைத் தரவல்ல, தேவியை உன் மனதில் நினைத்து மனம் ஒன்றி தியானம் செய். அதுவே செயல் அதுவே பலன் என்பதாக நினைத்து அனவரதமும் ஜபம் செய். ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் தொலைந்து, போகக் காண்பாய். ப்ரும்ம ஹத்தி பாபம் கூட தேவியின் ஸ்மரணத்தால் அழியும். பாராயணம் செய்வதால் பல கஷ்டங்களிலிருந்தும் விடுபடுவார்கள். மிக மிக அரிய ரஹஸ்யம் என்ற இந்த தேவியின் தியான யோக முறைகளை உனக்கு தெளிவாக சொல்லியிருக்கிறேன். ஆகவே, முழு முயற்சியுடன் ஈடுபாட்டுடன் இவைகளை செய்து பலனடைவாய்.

(அதனால் எல்லோரும் மதிக்கத் தகுந்தவனாக ஆவாய். தேவியே எல்லா ரூபங்களுமாவாள். உலகமே தேவி மயமாகும். அதனால் விஸ்வரூமான தேவியை, பரமேவரியை வணங்குகிறேன்.

இத்துடன் மூர்த்தி ரகஸ்யம் சம்பூர்ணமாகிறது.

 க்ஷமா ப்ரார்த்தனா –

பரமேஸ்வரி, நாள் தோறும் பல அபராதங்கள் செய்தாலும், உன் தாஸன் என்று என்னை மன்னிக்க வேன்டுகிறேன். எனக்கு ஆவாஹனமோ, விசர்ஜனமோ, (பூஜையை ஆரம்பித்து செய்வதோ, முடிப்பது போன்ற விவரங்கள் ) அறிந்தும் அறியாமலும் செய்வதை ஏற்றுக் கொள். மந்திரத்தில்., செயலில், பக்தியில் குறைவிருந்தாலும், சுரேஸ்வரி, நீ, என் பூஜையை பரிபூர்ணமாக செய். நூற்றுக் கணக்கான அபராதங்கள் செய்தாலும் ஜகதம்பா என்று உச்சரித்து பெறும் ப்லனை ப்ரும்மா முதலானவர்கள் கூட பெற மாட்டார்கள் என்று கேட்டிருக்கிறேன். ஜகதம்பிகே, உன்னையே சரணம் என்று அடைந்து விட்டேன். உன் விருப்பப்படி என்னை ஆட்கொள். பரமேஸ்வரி, நான் தவறாக செய்தாலும் அதற்கு காரணம், என் அறியாமை, மறதி, ப்ரமை, இவையே. அதனாலேயே நான் செய்வது குறைவாகவோ, அதிகமாகவோ ஆகிறது. ஆகவே இவைகளை பொருட்படுத்தாமல் என்னை மன்னித்து ஏற்றுக் கொள். தயை செய். பரமேஸ்வரி, நீயே ஜகன்மாதா, காமேஸ்வரி, சச்சிதானந்த விக்ரஹா. மிக ரகஸ்யமான இந்த ஜபத்தை நான் செய்கிறேன். , உன் அருளால் எனக்கு சித்தி கிடைக்க வேண்டும். தேவி அருள் செய்.

ஸ்ரீ துர்கார்ப்பணமஸ்து.

4 வது அத்யாயம்

Janaki Krishnan's avatarJanakikrishnan's Blog

 

 

(தேவர்கள் செய்யும் துதி-

த்யானம் – கார் மேகம் போன்ற வர்ணத்தினாள்.  கடாக்ஷத்தாலேயே எதிரி படையை கலங்கச் செய்பவள். தலையில் இளம் பிறையைச் சூடியவள். சங்கம், சக்ரம்,வாள், திரிசூலம் இவைகளை ஏந்தியவளாக, முக்கண்ணுடன், சிங்கத்தின் தோளில் வருபவள், மூவுலகையும் தன் தேஜஸால் நிரப்புவள், அப்படிப்பட்ட துர்கா தேவியை, ஜயா என்ற பெயருடையவளை, தேவதைகள் சூழ நிற்பவளை, தங்கள் விருப்பங்கள் நிறைவேறி, பல சித்திகளை அடைந்துள்ள யோகிகளுடன் தியானம் செய்ய வேண்டும். 

ரிஷி சொன்னார் (1)

2. பலசாலி என்று உலகை ஆட்டி வைத்த மகிஷனை வீழ்த்தி, வெற்றி வாகை சூடி நின்ற தேவியை இந்திரன் முதலான தேவர்கள் வாழ்த்தி தோத்திரம் செய்தனர். தலை வணங்கி மரியாதையுடன், மகிழ்ச்சி நிறைந்த குரலில், உடல் புல்லரிக்க வார்த்தைகளால் துதித்தனர்.

3. ஜகதாத்ம சக்தியோடு, தேவ கணங்களiன் சக்திகளை ஒட்டு மொத்தமாக ஏற்றுக் கொண்டு எந்த தேவி, செயற்கரிய செயலைச் செய்தாளோ, அந்த தேவியை அகில உலகில் தேவர்களும், மகரிஷிகளும் போற்ற நின்றவளை, நாங்கள் பக்தியுடன் தொழுகிறோம். எங்களுக்கு ஜயத்தை அருளுவாயாக.

4. எவளுடைய பிரபாவத்தை பகவான் அனந்தனோ, ப்ரும்மாவோ, ஹுரனோ கூட விவரித்துச் சொல்ல முடியாதோ, அந்த சண்டிகா, உலகம் முழுவதும் காக்கவும், அசுபங்களை நாசம் செய்யவும் முன் வரட்டும்.

5. எந்த தேவி, தானே நற்காரியங்களை செய்பவர்களின் ப4வனங்களில், இருக்கிறாளோ, பாபாத்மாக்களின் கிருஹத்தில் அவளே அலக்ஷ்மியாக இருக்கிறாள். நல்ல…

View original post 903 more words

அத்யாயம் – 13

 

 த்யானம் – இளம் சூரிய மண்டலத்தில் விளங்குபவள். நான்கு புஜங்களும், மூன்று கண்களும் உடையவள். பாச, அங்குசம், வர, அபீதி, முத்ரைகளைத் தாங்கியவள், சிவ பத்னியான சிவா – மங்களாவான தேவியை பஜிக்கிறேன்.

ரிஷி சொன்னார் – அரசனே !  இதுவரை உத்தமமான தேவி மாகாத்ம்யத்தைச் சொன்னேன். இந்த உலகையே தாங்குகிற தேவியின் பிரபாவம் மிக உயர்ந்தது  பகவான் விஷ்ணுவின் மாயையால்,  வித்யா என்று தோன்றுகிறாள். அவளே நீயும் இந்த வைஸ்யனும்,  விவேகம் உள்ளவர்களான மற்ற பலரும் மோகத்தில் ஆழ காரணமாக இருக்கிறாள். ஏற்கனவே மோகத்தில் மூழ்கி இருப்பவர்களும், வேறு விதமான மோகத்தை அடைகிறார்கள். மகா ராஜா, அவளை சரணம் அடையுங்கள். பரமேஸ்வரியான அவள், தன்னை வணங்குபவர்களுக்கு, அரசர்களோ யாரானாலும் போகங்களை, ஸ்வர்கங்களை தருபவள்.

மார்கண்டேயன் சொன்னார் – இப்படி அவர் சொல்லவும், சுரதன் என்ற வைஸ்யனும், அரசனும், மகா பா4கா என்று போற்றப் படும் தேவியை  வணங்கினர். விரதங்களை செய்து, கனிந்து இருந்த ரிஷியிடமும் வணங்கி விடை பெற்றனர்.  ராஜ்யத்தை பறி கொடுத்ததால் வருந்தியவன், அதற்கு காரணம், தன்னுடையது, தான் என்ற அபிமானம் தான் என்று உணர்ந்து தவம் செய்வதில் ஈடுபட்டான். அந்த வைஸ்யனும், அம்பாளை தரிசிக்க விரும்பி, நதி மணலில் இருந்து  தவம் செய்தான். உயர்ந்ததான தேவி சூக்தத்தை ஜபித்தான். மணலிலேயே தேவியின் மூர்த்தத்தை ஸ்தாபனம் செய்து, புஷ்பம், தூபம், அக்னி இவைகளை அளித்து, பூஜித்தான்.

ஆகாரத்தை விட்டும், மிதமாக சாப்பிட்டும், தேவியை மனதில் இருத்தி, ஒருமைப் பாட்டுடன், பலி கொடுத்து, அதுவும் தங்கள் சரீரத்திலிருந்து கீறிக் கொண்டு, இப்படி மூன்று வருஷங்கள் ஒரே நினைவோடு ஆராதித்து வந்தனர்.  உலக நாயகியான சண்டிகா, மிக மகிழ்ந்து ப்ரத்யக்ஷமானாள்.

தேவி சொன்னாள் – அரசனே, குல நந்தனனான வைஸ்யனே நீயும் எதை எண்ணி தவம் செய்தீர்களோ, அதை என்னிடம் கேளுங்கள்.  மிக்க மகிழ்ச்சியுடன் அனைத்தையும் தருகிறேன்.  – என்றாள்.

மார்கண்டேயர் சொன்னார் – உடனே அரசன் இழந்த ராஜ்யம் வேண்டும். சத்ரு பயம் நீங்க வேண்டும். அடுத்த பிறவியிலும், குறைவில்லாத ராஜ்யம் வேண்டும் என்று வேண்டினான். f  வைஸ்யனோ, ஞானம் வேண்டும் என்றான். மனதில் வருத்தமே இல்லாமல், நான் எனது என்ற அபிமானம் தோன்றாமல், சங்கத்தால் வரும் உயர்வு தாழ்வு எதுவும் இல்லாமல் சிறந்த ஞானியாக வேண்டும் என்றான்.

தேவி சொன்னாள். – அரசனே, சில நாட்களிலேயே, உன் ராஜ்யத்தை திரும்பப் பெறுவாய்.  உன் எதிரிகளை அடியோடு அழித்து, உன் ராஜ்யத்தை நலமாக ஆண்டு வருவாய்.  இறந்த பின் விவஸ்வத  தேவர்களிடமிருந்து திரும்ப ஜன்மம் பெற்று, சாவர்ணிகன் என்ற பெயருடன்,  மனுவாக நீ பூமியில் தோன்றுவாய். வைஸ்யவரனே, நீ கேட்ட வரமும் தருகிறேன். என்னிடம் நீ விரும்பி கேட்டபடி,  உன் தவத்தின் சித்தி (நிறைவு) நல்லபடியாக அமைய ஞானம் தருகிறேன். அந்த ஞானமே உன் மேன்மைக்கு காரணமாக அமையும்.

மார்கண்டேயன் சொன்னார் – இப்படி அவர்கள் விரும்பியபடி வரங்களைக் கொடுத்து விட்டு மறைந்தாள். உடனே அவர்களும் பக்தியுடன் துதி செய்தனர். இப்படியாகத் தான், தேவியிடமிருந்து சுரதன் என்ற க்ஷத்திரியன் விவஸ்வான் என்ற சூரியனிடமிருந்து  ஜன்மம் கிடைக்கப் பெற்று, சாவர்ணீ என்ற மனுவாக பிறப்பான்.

இப்படியாகத் தான், தேவியிடமிருந்து சுரதன் என்ற க்ஷத்திரியன் விவஸ்வான் என்ற சூரியனிடமிருந்து  ஜன்மம் கிடைக்கப் பெற்று, சாவர்ணீ என்ற மனுவாக பிறப்பான்.

ஓம் தத் ஸத் ||

அத்யாயம் – 12

 

அத்யாயம் – 12

த்யானம் – மின்னல் போன்ற ஒளiயுடையவள்,  ம்ருக ராஜாவான சிங்கத்தின் மேல் விளங்குபவள், பயங்கரமானவள்.  கன்யா, கரவால, கேட, இவைகளை கையிலேந்தி பாதுகாவலாக நிற்பவள். கைகளில் சக்ர, க3தை, அஸி, கத்தி, கே2ட, விசிகம், வில், நாண், அம்பு, தர்ஜனீம், என்ற ஆயுதங்களை, இவைகளுடன் அக்னி ரூபமாக சந்திரனையும் தரித்தவளான,  துர்கையை,  முக்கண்ணாளை வணங்குகிறேன்.

தேவி சொன்னாள். இது போன்ற ஸ்தோத்திரங்களால், என்னை நித்யம் எவர், ஒருமைப்பாட்டுடன் துதிக்கிறார்களோ, அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தையும் நாசம் செய்வேன். சந்தேகமேயில்லை.

மது கைடபர்களை நாசம் செய்தது, மகிஷாசுரனை வதைத்தது, சும்ப நிசும்ப வதம், இவைகளை புகழ்ந்து பாடப் போகிறார்கள். அஷ்டமியிலோ, சதுர்தசியிலோ,  உத்தமமான என் மாகாத்ம்யத்தை, மனம் ஒருமைப் பட்டு யார் பக்தியுடன் கேட்கிறார்களோ, அவர்களுக்கு துஷ்க்ருதம் என்று எதுவும் இல்லை. துஷ்கர்மாவினால் வரும் ஆபத்தும் வராது. அவர்களுக்கு தரித்திரம் வராது. இஷ்ட ஜனங்கள் பிரிவு கிடையாது. சத்ருக்களிடம் பயம் கிடையாது. திருடனிடமோ, ராஜாவிடமோ பயம் கிடையாது. சஸ்திரங்கள், நெருப்பு, தண்ணீரில் மூழ்குதல், போன்றவை எப்பொழுதும் நடக்காது. அதனால் இந்த என்னுடைய மாகாத்ம்யத்தை, படியுங்கள். மனம் ஒன்றி படியுங்கள்.  பக்தியுடன் கேளுங்கள். அதுவே நன்மை பயக்கும். மகாமாரி தோன்றுவதால் ஏற்படும் உபாதைகள் அனைத்தையும், அது தவிர, பலவிதமான இயற்கை சீற்றங்களையும் என் மாகாத்ம்யம் அடங்கச் செய்து விடும்.  எந்த வீடுகளiல் நித்யம் இந்த மாகாத்ம்யம் கவனமாக படிக்கப் படுகிறதோ, அங்கு என் சாந்நித்யம் நிச்சயம் இருக்கும். எப்பொழுதும் இருக்கும்படி செய்வேன். பலி கொடுக்கும் பொழுது, பூஜைகளில், அக்னி காரியங்களில், மகா உத்ஸவங்களில், எல்லா இடங்களிலும் என் சரித்திரத்தை உச்சரித்தும், மற்றவர்களை கேட்கச் செய்தும் வர வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ, பலி, பூஜைகளை இப்படி செய்து விட்டாலும், அக்னி ஹோமம் செய்வதை எதிர்நோக்கி இருப்பேன். சரத்காலத்தில், வருஷாந்திர மகா பூஜை செய்யப்படுகிறதே, அதில் என்னுடைய இந்த மகாத்ம்யத்தைக் கேட்டு, பக்தியுடன் வணங்குபவர்கள் என் தயையினால்,  எல்லா விதமான துன்பங்களிலிருந்தும் விடு பட்டவர்களாக, த4ன, தா3ன்ய, புத்ரன் முதலானோர்களுடன் மனிதர்கள் சொக்யமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.  ப்ராம்மணர்கள் பூஜித்தால் நல்ல மதியைத் தருவேன். காடுகளிலோ, வனாந்தரங்களிலோ, காட்டுத்தீ சூழ்ந்தாலோ,  திருடர்கள் சூழ்ந்தாலோ, சூன்யமான இடத்தில், சத்ருக்கள் பிடித்துக் கொண்டாலோ, சிங்கம், புலி, போன்றவை காட்டில் தாக்கினாலும், காட்டு யானைகள் தாக்கினாலும், அரசன், கோபித்து வதம் செய்ய ஆணையிட்டாலோ, சிறை செல்ல நேர்ந்தாலும்,  காற்றும் மழையும் வருத்தினாலும், பெரும் கடலில் கப்பலில் அலை பாய்ந்தாலும், கீழே விழுந்தாலும், மிக பயங்கரமான யுத்தத்தில், சஸ்திரங்களால் அடிபட்டாலும், எந்த விதமான துன்பமானாலும் மன வேதனை வாட்டினாலும் என் இந்த சரித்திரத்தை நினைத்தாலே மனிதர்கள் சங்கடத்திலிருந்து விடு படுவார்கள். என் பிரபாவத்தால், சிங்கம் முதலியவை, திருடர்கள், வைரிகள், இந்த என் சரித்திரத்தைக் கேட்டு, அப்படி ஸ்மரிப்பவர்களை வருத்தாமல்,  வெகு தூரத்திலிருந்தே ஓட்டம் பிடிப்பார்கள்.

ரிஷி சொன்னார் – சண்டிகா இவ்வாறு சொல்லி விட்டு, தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மறைந்து விட்டாள். சண்ட விக்ரமா – அரிதான செயல் திறம் உடையவள், இந்த தேவி. தேவர்கள், முன் போல் தங்கள் உரிமைகள் கிடைக்கப் பெற்று, இனி யக்ஞ பாகமும் நமக்கே என்ற திருப்தியோடு, மன மகிழ்ச்சியுடன் சென்றார்கள். எதிரிகள் என்று வந்தவர்கள் யாரும் இப்பொழுது இல்லையே. தேவ விரோதிகளான சும்பனும், நிசும்பனும், தேவி கையால் யுத்தத்தில் அடி பட்டதால், பாதாளம் சென்றனர்.  உக்ரமான, ஒப்புவமை இல்லாத விக்ரமம் உடைய தேவியின் எதிரில் நின்று போரிட்டுத் தோற்றாலும் அழியாமல் பாதாளம் சென்றனர். உலகையே ஆட்டிப் படைக்கும் வல்லமை வாய்ந்த தேவியின் மகிமை இது.  இவ்வாறு பகவதியான தேவி, திரும்பத் திரும்ப நித்யாவாக ஜகத்தை பரிபாலிக்கிறாள்.  அவள் தான் இந்த உலகை மோகத்தில் ஆழ்த்துகிறாள். அவளே உலகை ஸ்ருஷ்டியும் செய்கிறாள். வேண்டுபவர்கள், யாசித்தால், நல்ல ஞானத்தையும் தருகிறாள். ப்ரஸன்னமானால் நிறைந்த செல்வத்தைத் தருகிறாள். அவள் தான் உலகத்தை வியாபித்து நிற்கிறாள். ப்ரும்மாண்டத்தை நிறைத்து இருப்பவளும் அவள் தான். அரசனே, மகா காளியினால், மகா காலத்தில், மகா மாரி ஸ்வரூபத்துடன், அவளே சமயங்களில், மகா மாரி, அவளே தான் பிறப்பில்லாதவளாக, ஸ்ருஷ்டித் தொழிலையும் செய்கிறாள், ஜீவன்களின் ஸ்திதி எனும் வாழ்க்கைக்கு அவளே பொறுப்பு.  சனாதனியான அவளே சமயங்களில் காலனாகவும் விளங்குவாள்.

அரசர்களின் பவ (நிறைவான நல்ல) ஆட்சி காலத்தில் வீடுகளiல் விருத்தியைத் தரும் லக்ஷ்மியாக இருக்கிறாள். அவளே அபாவ காலத்தில், அலக்ஷ்மியாக விநாசத்திற்கும் காரணமாக இருக்கிறாள். புஷ்பம், தூபம், கந்தம் முதலியவைகளால் பூஜித்து,  துதியும் செய்தால், மனம் மகிழ்ந்து, செல்வம், புத்ரர்கள், நல்ல மதி,  தர்மத்தில் கதியும், சுபமான மற்ற எல்லா செல்வங்களையும் அருளுவாள். 

அத்யாயம் – 11

 

 

 

த்யானம் – இளம் சூரியன் போன்ற பிரகாசமுடையவள், இந்துவை கிரீடத்தில் வைத்திருப்பவள்,  உயர்ந்த ஸ்தனங்களும், மூன்று கண்களும் உடையவள், இளம் முறுவலுடன் கூடினவள், வரத3, அங்குச, பாச, அபீதி (அபய) கரங்களுடன், உள்ள புவனேஸ்வரியை வணங்குகிறேன்.

ரிஷி சொன்னார் – தேவியால் அந்த மகா அசுரன் வதம் செய்யப்பட்ட பிறகு, இந்திரனும் மற்ற தேவர்களும், அக்னியின் தலைமையில் அவள் இருக்குமிடம் சென்றனர். காத்யாயினி என்று சொல்லி அவளை வணங்கி துதி செய்தனர். மகிழ்ச்சி தாண்டவமாடும் முகத்துடன், நம்பிக்கையுடன் மலர் தூவி துதித்தனர்.

3.  தேவி !  தயை செய்.  (உன்னை) பணிந்தவர்களின் துயர் தீர்ப்பவளே ! தயை செய். மூவுலகிலும், அகில ஜனங்களுக்கும் தாயானவள், விஸ்வேஸ்வரி! தயை செய். காப்பாற்று. சராசரம் அடங்கிய இந்த உலகுக்கு தேவி ! நீயே ஈஸ்வரி.

4. நீ ஒருவளே, இந்த உலகுக்கு ஆதாரமானவள். பூ (மி) ஸ்வரூபமாக இருப்பவள், நீராக இருப்பவளும் நீ,  உன்னாலேயே இந்த உலகம் முழுவதும் தண்ணீர் என்ற தத்வம் நிறைந்தது. எந்த விதத்திலும், உன்னை எதிர்த்தோ மீறியோ செல்ல முடியாத வீரம் உள்ளவள் நீயே.

5. நீ தான் வைஷ்ணவி என்ற சக்தி.  அனந்த வீர்யமுடையவள் நீ. நீயே பரமா மாயை. உலகின் பீஜமாக இருப்பவள். உன் மாயையால் இந்த உலகம் முழுவதும் மோகிக்கப் பட்டது. பூமியில் நீ தான் ப்ரஸன்னமாகி (மகிழ்ந்து) முக்தியை அளிக்க வல்லவள்.

6. எல்லாவிதமான வித்யைகளும், உன் பல விதமான ரூபங்களே. உலகில் உள்ள பெண்கள் அனைவரும் உன் ஸ்வரூபமே. உன் ஒருவளால், அம்பா, இந்த உலகமே நிறைந்தது. உயர்ந்த வாக்குகளால் துதிக்கத் தகுந்தவள் நீ. உன்னை துதி செய்ய ஸ்தோத்திரம் என்று எதைச் சொல்வோம்.

7. எல்லா ஜீவன்களiலும் நிறைந்தவள் நீ. சுவர்கத்தை, முக்தியை தரக் கூடியவள் நீ. உன்னை துதிக்க வந்தோம் என்றால், உயர்ந்த சொல் வளம் வேண்டுமே, உயர்ந்த சொற்கள் எவை என்று எப்படித் தெரிந்து கொள்வோம்.  (அதையும் நீயே தான் அருள வேண்டும் தேவி)

8. எல்லோர் உள்ளத்திலும் புத்தி ரூபமாக இருப்பவள் நீயே. சுவர்கத்தைக் காட்டிலும் உயர்ந்த ஸ்தானத்தை தருபவளே, நாராயணீ!  உனக்கு நமஸ்காரம்.

9. ஒரு கலையின் காஷ்டா (ஒரு கால அளவு) மிகச் சிறிய அளவில் உன் கடாக்ஷம் பெற்றாலே பரிணாமத்தின் பலனைத் தருபவள் நீ. உலகமே அழிந்தாலும் சக்தியாக மீதி இருப்பவளான நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

10. சர்வ மங்களங்களுக்கும் மங்களமானவளே, சிவே! எல்லா விதமான தேவைகளையும் தருபவளே, (அர்த்தம் – பொருள், பொருளை வேண்டுவோருக்கு அதே போல அருளுபவள்) உலகுக்கு சரணமாக இருப்பவளே !  த்ரயம்பகே!, கௌரி! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

11. ஸ்ருஷ்டி, ஸ்திதி, விநாசம், என்ற மூன்று நிலையிலும் சக்தியாக இருப்பவளே !, சனாதனீ !, நிரந்தரமானவள் நீயே. நல்ல குணங்கள் உன்னை ஆச்ரயித்து பெருமை பெறுகின்றன. நீயே குணங்கள் நிரம்பியவள்.

12. சரணம் என்று வந்த தீனர்களiன் துயர் துடைக்க முனைந்து நிற்பவளே !. அனைவரின் கஷ்டங்களைத் தீர்ப்பவளே. தேவி, நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

13. ப்ரம்மாணீ என்ற ரூபத்தை தரித்தவளே ! ஹம்சம் பூட்டிய விமானத்தில் செல்பவளே. வெண் பட்டுடுத்தியவளே, நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

14. மாகேஸ்வரி ஸ்வரூபமாக உள்ளவளே ! த்ரிசூலம், சந்த்ரஹாரம் என்ற ஆயுதங்களைத் தரித்தவளே !, பெரும் ரிஷப வாகனத்தில் செல்பவளே !, நாராயணீ உனக்கு நமஸ்காரம்.

15. கௌமாரியாக ரூபம் ஏற்றவளே !, மாசற்றவளே ! மயில், கோழி, இவை சூழ, வந்தவளே, நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

16. வைஷ்ணவி ரூபமாக விளங்கியவளே ! சங்க2ம், சக்ரம், க3தா, சார்ங்க4ம் என்ற பரமாயுதங்களை ஏந்தியவளே!  தயை செய், நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

17. வராஹ ரூபமான சிவே! , உக்ரமான மகா சக்ரத்தைக் கொண்டு, பூமியை தன் பற்களால் விடுவித்தவளே ! , நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

18. உக்ரமான ந்ருசிங்க ரூபம் ஏற்று, தைத்யர்களை கொல்ல முயற்சி செய்தவளே ! மூவுலகையும் காக்க சக்தியுடையவளே, நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

20. சிவ தூதி என்ற ஸ்வரூபத்தில் மகா அசுர படைகளை அழித்தவளே ! கோரமான ரூபம் உடையவளே ! யுத்தத்தில், எதிரிகளை பெரிதும் வாட்டக் கூடியவளே, நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

21. பற்களுடன், கராளமான (அழகில்லாத, கறுத்த) முகத்தையுடையவள். தலைகளால் (கபாலங்களால்) ஆன மாலை அணிந்தவளே. சாமுண்டே ! முண்டனை வதைத்தவளே, நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

22. லக்ஷ்மி, லஜ்ஜா, மகா வித்யா, ஸ்ரத்தை, புஷ்டி, ஸ்வதா4, த்4ருவா, மகா ராத்ரி, மகா வித்யா, – இவை உன்னை வர்ணிக்கும் பெயர்களே. அப்படிப் பட்ட நாராயணீ உனக்கு நமஸ்காரம். 

23. மேதா4 என்ற புத்தி விலாசம் உள்ள சரஸ்வதியே! வரம் தருபவளே !

பூ4தி, பா3ப்4ரவி, தாமஸீ என்ற பெயர்களுடன் விளங்குபவளே, தயை செய். நீயே நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

24. ஸர்வ ஸ்வரூபமும் நீயே. சர்வத்துக்கும் ஈச, தலைமை தாங்குபவளும் நீயே. சர்வ சக்தியும் ஒன்றாக இணைந்தவள், பயங்களிலிருந்து எங்களை காப்பாற்று, துர்கே, தேவி, உனக்கு நமஸ்காரம்.

25. இதோ சௌம்யமாக இருக்கும் உன் வதனம், மூன்று கண்களுடன் அலங்காரமாக தெரிகின்றது. எல்லா வித துன்பங்களிலிருந்தும் எங்களை காப்பாற்றும் காத்யாயனீ, உனக்கு நமஸ்காரம்.

26. அதி உக்ரமான (அக்னி) ஜ்வாலை போல காட்சி தரும், அசுரர்களை நாசம் செய்த உன் த்ரிசூலம் எங்களை காக்கட்டும். பத்ரகாளி! உனக்கு நமஸ்காரம்.

27. தைத்யர்களுடைய தேஜஸை அழிக்க, தன் ஒலி – நாதத்தாலேயே உலகத்தை வியாபித்து நின்ற உன் கண்டா மணிகள், உன் குழந்தைகள் போன்ற எங்களை பயங்களிலிருந்து காப்பாற்றட்டும்.

28. அசுர, சுர என்று இரு பக்க வீரர்களும் அடிபட்டு சிந்திய ரத்தம் சேறாக, உன் கையில் பிரகாசமாக விளங்கும் வாள் எங்களுக்கு ஜயத்தை தரட்டும். சண்டிகே உன்னை நாங்கள் வணங்குகிறோம்.

29. எல்லா விதமான ரோகங்களையும் தீர்த்து வைப்பாய். நீ மகிழ்ந்து இருந்தால், அதாவது நீ விரும்பினால் விரும்பிய வரம் அனைத்தும் தருவாய். உன்னை ஆஸ்ரயித்த – அண்டிய நரர் – மனிதர்களுக்கு விபத்து என்பதே கிடையாது. அது தவிர, உன்னை அண்டியவர்கள், தாங்களே மற்றவர்களுக்கு அபயம் தரும் தன்மையையும் அடைந்து விடுகிறார்கள்.

30. இதோ, இப்பொழுது செய்தாயே, யுத்த பூமியில் வதம் என்று, பல விதமான ரூபங்களை ஏற்று, தர்மத்திற்கு விரோதிகளான மகா அசுரர்களை அழித்து,  அந்த ரூபமே, அம்பிகே, அது போல வேறு யாரால் செய்ய முடியும்.

31. வித்தைகளiல், சாஸ்திரங்களiல், விவேக தீபங்களாக விளங்கும் ஆதி வாக்யங்களiல்,  வேதங்களiல், உன்னையன்றி வேறு யார், மமத்வ- நான் எனது என்ற,  அதி அந்தகாரமான இருட்டிலும் நடமாடுவார்கள்,  இந்த உலகம் முழுவதிலும் சஞ்சரிப்பார்கள்.

32. ராக்ஷஸர்கள், கொடிய விஷம் உள்ள நாகங்கள் எங்கு உள்ளனவோ, எங்கு எதிரிகள், அசுர பலங்கள், காட்டுத் தீ போல பரவுகிறதோ, நடுக்கடலில் விபத்து என்றாலோ, அங்கெல்லாம் நீ கண்டிப்பாக எங்களை காக்க வந்து விடுவாய்.

33. விஸ்வேஸ்வரி நீ,  உலகை பரிபாலிப்பாய். விஸ்வாத்மிகா – உலகத்தினுள் உறைந்த அந்தர்யாமியாக உள்ளவள் நீ – உலகை தாங்குகிறாய் என்பதால், உலகம் முழுவதும் வணங்கத் தக்கவள், சரணம் வேண்டி வந்தவர்களுக்கு உடனே அடைக்கலம் தரக்கூடியவள் நீ ஒருவளே, எனவே உன்னை பக்தியுடன் வணங்கி நிற்கிறோம்.

34. தேவி! , தயை செய். எதிரிகளை கண்டு பயப்படும் எங்களை காப்பாற்று. இன்று செய்தது போல உடனுக்குடன் அசுர வதம் செய்து விடு. உலகம் முழுவதும் பயம் என்பதே இல்லாமல் செய். உலகம் முழுவதும் சாந்தமாகட்டும்.  

35. வணங்கியவர்களுக்கு தயை செய். தேவி ! , உலகில் துன்பத்தை துடைப்பவள் நீயே. மூவுலகிலும் வசிப்பவர்கள் வணங்கத் தக்கவளே, அவர்களுக்கு என்றும் வரம் தருபவளாக இரு.

தேவி சொன்னாள். – வரம் தருபவள் தானே நான்.  தேவ கணங்களே, மனதில் என்ன விரும்புகிறீர்களோ, அந்த வரத்தைக் கேளுங்கள். தருகிறேன். உலகுக்கு நன்மை தரக் கூடிய வரங்களே கேளுங்கள்.

தேவர்கள் சொன்னார்கள். – (38)

இப்பொழுது செய்தாயே அது போல எப்பொழுதும் எங்கள் எதிரிகளை அழித்து உபகாரம் செய். மூவுலகம் போற்றும் அகிலநாயகி நீ, எல்லா வித கஷ்டங்களையும் அடக்க கூடியது உன் கருணையே.

தேவி சொன்னாள். – 28 வது யுகத்தில் வைவஸ்வத மந்தரம்வரும் பொழுதும் சும்பனும் நிசும்பனும் மற்றும் பல மகா அசுரர்கள் தோன்றுவார்கள். நந்த கோப க்ருஹத்தில் யசோதா வயிற்றில் பிறந்தவளாக அவர்களை நாசம் செய்வேன். விந்த்ய மலையில் வசிப்பேன். திரும்பவும் அதி ரௌத்ரமான ரூபத்துடன் பூமியில் தோன்றி வைப்ரசித்த என்ற தைத்யர்களை அழிப்பேன்.

அவர்கள் மிக உக்ரமானவர்களாக இருப்பார்கள். மகா அசுரர்களான வைப்ரசித்தர்களை விழுங்கி, என் பற்கள் சிவந்து விடும். ரக்த தந்திகா என்று போற்றுவார்கள்.

திரும்பவும் நூறு ஆண்டுகளில் மழை இன்றி, நீர் இன்றி தவிக்கும் பொழுது, முனிவர்கள் துதிப்பார்கள்.  பூமியில் அயோனிஜாவாக தோன்றுவேன். அப்பொழுது 100 கண்களோடு முனிவர்களுக்கு அருள் புரிவேன். அதனால் மனிதர்கள் என்னை சதாக்ஷி என்று அழைப்பார்கள். (சதாக்ஷன் என்பது இந்திரன் பெயர், மழை பொழிவது இந்திரன் செயல்). அப்பொழுது உலகம் முழுவதும் என் உடலில் தோன்றும் விளை பொருட்களால் நிரப்புவேன். பிராணனைத் தரும் அந்த காய்கறிகளால், விளை பொருட்களால் மகிழ்ந்து தேவர்கள் துதிப்பார்கள். சாகம்பரி என்று புகழ் பெறுவேன்.  அதன் பின் துர்கம் என்ற மகா அசுரனை வதைப்பேன். துர்கா தேவி என்று பெரும் புகழ் பெறுவேன். அதுவே என் பெயராகும். திரும்பவும் ஹிமாசலத்தில் பயங்கரமான ரூபம் எடுத்துக் கொண்டு  முனிவர்களை காப்பாற்ற, ராக்ஷஸர்களை விழுங்குவேனா, அப்பொழுது அவர்கள் எல்லோருமாக தலை குனிந்து, வணங்கி துதி செய்வார்கள். பீமா தேவி என்று எனக்கு பெயர் வந்து சேரும். அருணன் என்பவன் பெரும் உபத்ரவம் செய்வான். அவனை நான் வண்டு ரூபம் எடுத்து கணக்கில்லாத தேனீக்களாக மாறி மகா அசுரனான அவனை உலக நன்மைக்காக வதம் செய்வேன். அந்த சமயம் உலகத்தார் என்னை ப்ராமரி என்று போற்றுவர். இப்படி யார், எப்பொழுது தானவர்களால் துன்பப் படுகிறார்களோ, அந்த அந்த சமயம் அவதரித்து எதிரிகளை அழிப்பதை செய்வேன்.