பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் உத்தர காண்டம் 1 – 13

பிப்ரவரி 26, 2014

ஸ்ரீமத் ராமாயணம்

உத்தர காண்டம்

அத்தியாயம் 1 (538) ராம ப்ரச்ன: (ராமனின் கேள்வி) 5

அத்தியாயம் 2 (539) பௌலஸ்த்ய குலோத்பத்தி (புலஸ்திய குலம் தோன்றுதல்) 7

அத்தியாயம் 3 (540) வைஸ்ரவன லோக பால பத3 ப்ராப்தி, லங்காதி3 ப்ராப்தி ச (வைஸ்ரவனன் லோக பாலன் என்ற பதவி அடைதலும், லங்கையை பெறுதலும்) 9

அத்தியாயம் 4 (541) ராவணாதி பூர்வ ராக்ஷஸ உத்பத்தி கதனம்(ராவணனுக்கு முந்தைய ராக்ஷஸர்கள் தோன்றிய கதை) 11

அத்தியாயம் 5 (542) மால்யவதா3த்3யபத்யோத்பத்தி : (மால்யவான் மற்றும் வாரிசுகள் தோன்றுதல்) 12

அத்தியாயம் 6 (543) விஷ்ணு மால்யவதா3தி3 யுத்தம் (மால்யவான் முதல்வரோடு விஷ்ணு யுத்தம் செய்தது) 14

அத்தியாயம் 7 (544)  மாலி வத:: (மாலியை வதம் செய்தது) 17

அத்தியாயம் 8 (545) சுமால்யாதி நிக்3ரஹ: (சுமாலி முதலானவர்கள் வதம்) 19

அத்தியாயம் 9 (546) ராவணாத்யுத்பத்தி (ராவணன் முதலானோர் பிறந்தது) 21

அத்தியாயம் 10 (547) ராவணாதி வர தானம் (ராவணன் முதலானோருக்கு வரம் தருதல்) 23

அத்தியாயம் 11 (548)  ராவண லங்கா ப்ராப்தி: (ராவணனுக்கு லங்கை கிடைத்தல்) 25

அத்தியாயம் 12 (549)  ராவணாதி விவாக: (ராவணன் முதலானோர் திருமணம்) 28

அத்தியாயம் 13 (550)  த4னத3 தூ3த ஹனனம் (குபேரனுடைய தூதனை வதம் செய்தல்) 29

அத்தியாயம் 14 (551) யக்ஷ ராக்ஷஸ யுத்தம் (யக்ஷர்களும், ராக்ஷஸர்களும் போரிடுதல்     32

அத்தியாயம் 15 (552) புஷ்பக ஹரணம் (புஷ்பக விமானத்தை அபகரித்தல்) 33

அத்தியாயம் 16 (553) ராவண நாம ப்ராப்தி: (ராவணன் என்ற பெயரைப் பெறுதல்) 35

அத்தியாயம் 17 (554) வேத3வதீ சாப: (வேதவதி என்பவள் கொடுத்த சாபம்) 37

அத்தியாயம் 18 (555) மருத்த விஜய: (மருத் கணங்களை ஜயித்தல்) 39

அத்தியாயம் 19 (556) அனரண்ய சாப: (அனரண்யன் கொடுத்த சாபம்) 41

அத்தியாயம் 20 (557) ராவணன் சந்துக்ஷணம் (ராவணன் போர் முழக்கம் செய்தல்) 43

அத்தியாயம் 21 (558) யம, ராவண யுத்தம். (யமனும் ராவணனும் சண்டையிடுதல்) 44

அத்தியாயம் 22 (559) யம ஜய: (யமனை ஜயித்தல்) 46

அத்தியாயம் 23 (560) வருண ஜய: (வருணனை ஜயித்தல்) 49

அத்தியாயம் 24 (561) க2ர, சூர்ப்பணகா2 த3ண்டகா வாஸாதே3ச:  (கரனையும், சூர்பணகையையும் தண்டக வனத்தில் வசிக்க கட்டளையிடுதல்). 51

அத்தியாயம் 25 (562) மது வத வாரணம் (மது என்ற அரக்கனை கொல்லாமல் தடுத்தல்) 53

அத்தியாயம் 26 (563) நள கூபர சாப: (நள, கூபரனுடைய ) சாபம். 55

அத்தியாயம் 27 (564) சுமாலி வத: (சுமாலியை வதம் செய்தல்) 58

அத்தியாயம் 28 (565) ஜயந்தாபவாகனம் (ஜயந்தனை தூக்கிச் செல்லுதல்) 60

அத்தியாயம் 29 (566) வாசவ க்ரஹணம். (வாசவனைப்பிடித்தல்) 62

அத்தியாயம் 30 (567) இந்திர பராஜய காரண கதனம் (இந்திரன் தோல்வியுறக் காரணம்). 64

அத்தியாயம் 31 (568) ராவண நர்மதாவகாஹ: (ராவணன் நர்மதையில் இறங்குதல்) 67

அத்தியாயம் 32 (569) ராவண கிரஹணம் (ராவணனைப் பிடித்தல்) 69

அத்தியாயம் 33 (570) ராவண விமோக்ஷ: (ராவணனை விடுவித்தல்) 72

அத்தியாயம் 34 (571) வாலி ராவண சக்2யம் (வாலியும் ராவணனும் நட்பு கொள்ளுதல்) 74

அத்தியாயம் 35 (572).. ஹனுமதுத்பத்தி (ஹனுமான் பிறப்பு) 76

அத்தியாயம் 36 (573) ஹனுமத்வரப்ராப்தியாதி (ஹனுமான் பெற்ற வரங்கள்). 79

அத்தியாயம் 37 (574) பௌரோபஸ்தானம் (பிரஜைகளை சந்திப்பது) 82

அத்தியாயம் 38 (575) ஜனகாதி பிரதி பிரயாணம். (ஜனகர் முதலானோர் திரும்பிச் செல்லுதல்) 83

அத்தியாயம் 39 (576)வானர ப்ரீணனம் (வானரங்களை திருப்தி படுத்துதல்) 84

அத்தியாயம் 40 (577) ஹனுமத் பிரார்த்தனா (அனுமனின் வேண்டுகோள்) 86

அத்தியாயம் 41 புஷ்பக புனரப்4யனுக்ஞா (புஷ்பக விமானத்தை திருப்பி அனுப்புதல்) 87

அத்தியாயம் 42 (579) ராம சீதா விஹார:  (ராமர் சீதை மகிழ்ச்சியுடன் இருத்தல்) 88

அத்தியாயம் 43 (580)  ப4த்3ர வாக்ய ஸ்ரவணம் (ஒற்றன் சொல்லைக் கேட்டல்) 90

அத்தியாயம் 44 (581) லக்ஷ்மணாத்யானயனம். (லக்ஷ்மணன் முதலியோரை அழைத்து வரச் செய்தல்) 91

அத்தியாயம் 45 (582) சீதா ஸமுத்ஸர்கா3தேஸ: (சீதையை  வெளியேற்ற கட்டளை) 92

அத்தியாயம் 46 (583) சீதா கங்காதீராநயனம் (சீதையை கங்கை கரைக்கு அழைத்துச் செல்லுதல்.) 93

அத்தியாயம் 47 (584) ராம சாஸன கத2னம் (ராமருடைய கட்டளையைத் தெரிவித்தல்) 95

அத்தியாயம் 48 (585) சீதா பரித்யாக: (சீதையை தியாகம் செய்து விடல்) 96

அத்தியாயம் 49 (586) வால்மீகி ஆசிரம பிரவேச: (வால்மீகியின் ஆசிரமத்தில் நுழைதல்). 98

அத்தியாயம் 50 (587) சுமந்திர ரஹஸ்ய கதனம் (சுமந்திரர் சொன்ன ரகசியம்) 99

அத்தியாயம் 51 ( 588) துர்வாச வாக்ய கதனம் (துர்வாசர் சொன்ன சொல்) 100

அத்தியாயம் 52 (589) ராம சமாதானம்(ராமன் சமாதானமடைதல்) 101

அத்தியாயம் 53 (590) ந்ருக சாப கதனம். (ந்ருகன் பெற்ற சாபம்) 102

அத்தியாயம் 54 (591) ந்ருக ஸ்வப்ர பிரவேச: (ந்ருக ராஜா பள்ளத்தில் நுழைதல்) 104

அத்தியாயம் 55 (592) நிமி வசிஷ்ட சாப: (நிமி, வசிஷ்ட சாபங்கள்). 105

அத்தியாயம் 56 (593) மைத்ராவருணித்வ ப்ராப்தி (மைத்ரா வருணன் என்ற நிலையை அடைதல்) 106

அத்தியாயம் 57 (594) நிமி நிமிஷீகரணம் (நிமியை கண் இமையில் இருக்கச் செய்தல்) 107

அத்தியாயம் 58 (595) யயாதி சாப: (யயாதியின் சாபம்) 108

அத்தியாயம் 59 (596) புரூ ராஜ்யாபிஷேக: (புருவின் ராஜ்யாபிஷேகம். ) 109

அத்தியாயம் 60 (597) பா4ர்க்கவ ச்யவனாத்3யாக3மனம் (பார்க்கவ, ச்யவன முனிவர்கள் வருகை) 110

அத்தியாயம் 61 (598) லவணத்ராண ப்ரார்த்தனா (லவணனிடமிருந்து காப்பாற்ற வேண்டுதல்) 111

அத்தியாயம் 62 (599) சத்ருக்ன பிரார்த்தனா. (சத்ருக்னனின் வேண்டுதல்) 112

அத்தியாயம் 63 (600) லவண வதோபாய கதனம். (லவணனை வதம் செய்ய வழி சொல்லுதல்) 113

அத்தியாயம் 64 (601) சத்ருக்ன ப்ரஸ்தானம். (சத்ருக்னன் கிளம்புதல்) 114

அத்தியாயம் 66 (603) குச லவ ஜனனம் (குச லவ பிறப்பு) 116

அத்தியாயம் 67 (604) மாந்தா4த்ரு வத4: (மாந்தாத்ருவின் வதம்) 117

அத்தியாயம் 68 (605) லவண சத்ருக்ன விவாத: (லவணனும் சத்ருக்னனும் விவாதித்தல்) 118

அத்தியாயம் 69 (606) லவண வத: (லவணனை வதம் செய்தல்) 119

அத்தியாயம் 70 (607) மது4புரி நிவேச: (மதுவின் நகரத்தில் பிரவேசித்தல்) 121

அத்தியாயம் 71 (608) சத்ருக்ன பிரசம்ஸா (சத்ருக்னனை புகழ்தல்) 122

அத்தியாயம் 72 (609) சத்ருக்ன ராம சமாகம: (சத்ருக்னனும் ராமனும் சந்தித்தல்) 123

அத்தியாயம் 73 (610) ப்ராம்மண பரிதேவனம் (பிராம்மணனின் வருத்தம்) 124

அத்தியாயம் 74 (611) நாரத வசனம் (நாரதர் சொன்னது) 125

அத்தியாயம் 75 (612) சம்பூக நிசய: (சம்பூகனை தேடுதல்) 127

அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்) 128

அத்தியாயம் 77 (614) ஸ்வர்கி பிரச்ன: (ஸ்வர்கியின் கேள்வி)) 130

அத்தியாயம் 78 (615) ஆபரணாகம: (ஆபரணங்கள் வந்து சேர்வது) 131

அத்தியாயம் 79 (616) தண்ட ராஜ்ய நிவேச: (தண்ட ராஜ்யத்தில் நியமித்தல்).. 132

அத்தியாயம் 80 (617) அரஜா சங்கம: (அரஜாவைக் காணல்) 133

அத்தியாயம் 81 (618) தண்ட சாப: (தண்டனுக்கு கிடைத்த சாபம்.) 134

அத்தியாயம் 82 (619) ராம நிவர்த்தனம் (ராமரை வழியனுப்புதல்) 135

அத்தியாயம் 83 (620) ராஜ சூய ஜிஹீர்ஷா (ராஜ மூசூய யாகம் செய்ய விரும்புதல்) 136

அத்தியாயம் 84 (621) வ்ருத்ர தபோ வர்ணனம். (வ்ருத்ரனின் தவம்) 138

அத்தியாயம் 85 (622) வ்ருத்திர வத: (வ்ருத்திரனை வதம் செய்தல்) 139

அத்தியாயம் 86 (623) ப்ரும்ம ஹத்யாஸ்தரணம் (ப்ரும்ம ஹத்தி தோஷத்திலிருந்து விடுவித்தல்.) 140

அத்தியாயம் 87 (624) இலா ஸ்திரீத்வ ப்ராப்தி (இலா பெண் தன்மையடைதல்) 141

அத்தியாயம் 88 (625) புத சமாகம: (புதன் வந்து சந்தித்தல்) 142

அத்தியாயம் 89 (626) புரூரவ ஜனனம் (புரூ ரவன் பிறப்பு) 143

அத்தியாயம் 90 (627) இலா புருஷத்வ ப்ராப்தி: (இலா புருஷத் தன்மையை அடைதல்) 144

அத்தியாயம் 91 (628) யக்ஞ சம்விதானம் (யாகசாலையை நிறுவுதல்) 145

அத்தியாயம் 92 (629) ஹய சர்ச்சா (குதிரையைப் பற்றிய விவாதம்) 147

அத்தியாயம் 93 (630) வால்மீகி சந்தேஸ: (வால்மீகியின் செய்தி) 148

அத்தியாயம் 94 (631) ராமாயண கானம் (ராமாயணத்தைப் பாடுதல்) 149

அத்தியாயம் 95 (632)  வால்மீகி தூத ப்ரேஷணம் (வால்மீகி முனிவரை அழைக்க துர்தர்களை அனுப்புதல்) 151

அத்தியாயம் 96 (633) வால்மீகி ப்ரத்யாய தானம் (வால்மீகி உறுதி அளித்தல்) 152

அத்தியாயம் 97 (634) சீதா ரஸாதள ப்ரவேச: (சீதை பூமிக்குள் மறைதல்) 153

அத்தியாயம் 98 (635) ராம கோபோபசம: (ராமரின் கோபமும், சாந்தமடைதலும்) 154

அத்தியாயம் 99 (636) கௌஸல்யாதி கால தர்ம: (கௌஸல்யை முதலானோர் காலகதி அடைதல்) 156

அத்தியாயம் 100 (637) கந்தர்வ விஜய விஜய யாத்ரா (கந்தர்வனை வெற்றி கொள்ள விஜய யாத்திரை) 157

அத்தியாயம் 101 (638) தக்ஷ, புஷ்கல நிவேச: (தக்ஷன், புஷ்கலன் இவர்கள் பதவியேற்றல்) 158

அத்தியாயம் 102 (639) அங்கத, சந்திர கேது நிவேச: (அங்கதன், சந்திர கேது பதவியில் அமர்த்தப் படுதல்) 159

அத்தியாயம் 103 (640) காலாகமனம் (காலன் வருதல்) 160

அத்தியாயம் 104 (641) பிதாமஹ வாக்ய கதனம் (பிதாமகரான ப்ரும்மாவின் செய்தியை தெரிவித்தல்) 160

அத்தியாயம் 105 (642) துர்வாசாகம: (துர்வாசர் வருகை) 162

அத்தியாயம் 106 (643) லக்ஷ்மண பரித்யாக: (லக்ஷ்மணனை தியாகம் செய்தல்) 163

அத்தியாயம் 107 (644) குசலவாபிஷேக: (குச லவர்க ளின் அபிஷேகம்) 164

அத்தியாயம் 108 (645) விபீஷணாத்யாதேஸ: (விபீஷணன் முதலானோருக்கு செய்தி) 165

அத்தியாயம் 109 (646) ஸ்ரீ ராம மகா ப்ரஸ்தானம் (ஸ்ரீ ராமரின் மகா பரஸ்தானம்) 166

அத்தியாயம் 110 (647)  ஸஹானுகம ஸ்ரீராம ஸ்வர்காரோஹனம் (உடன் வந்தவர்களுடன் ஸ்ரீ ராமர் சுவர்கம் செல்லுதல்) 167

அத்தியாயம் 111 (648) ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி: (ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி) 169

அத்தியாயம் 1 (538) ராம ப்ரச்ன: (ராமனின் கேள்வி)

 

ராக்ஷஸர்களை வதம் செய்து, ராஜ்யத்தை அடைந்து ராமர் அயோத்தியில் இருந்த பொழுது, முனிவர்கள் வாழ்த்துச் சொல்ல வந்தார்கள். கௌசிகர், யவக்ரீதன், கா3ர்க்யன், காலவர், கண்வர், மேதா4தி புத்ரன், இவர்கள் கிழக்கு திசையிலிருந்து வந்தார்கள். ஸ்வஸ்தி வாசகம் சொல்லியபடி ஆத்ரேயர், ப4கவான் நமுசி, ப்ரமுசி, அகஸ்தியர், அத்ரி பகவான், சுமுக, விமுகர் இவர்கள் அகஸ்தியருடன் தென் திசையிலிருந்து வந்தார்கள். ந்ருஷத்3ரு, க3வஷன், தௌ3ம்யன், ரௌத்3ரேயன் என்ற மகான் ரிஷி, இவர்களும் தங்கள் சிஷ்யர்களுடன் மேற்குத் திக்கிலிருந்து வந்து சேர்ந்தார்கள். வசிஷ்டர், காஸ்யபர், அதாத்ரி, விஸ்வாமித்திரர், கௌதமருடன் ஜமத3க்3னி, ப4ரத்3வாஜர், சப்த ரிஷிகள், எப்பொழுதுமே வடக்கில் இருப்பவர்கள், இவர்களும் வந்து சேர்ந்தார்கள். அனைவரும் மகாத்மாவான ராமரைக் கண்டு ஆசீர்வதிக்க வந்தார்கள். வேத வேதாந்தங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள், எல்லா வித சாஸ்திரங்களையும் அறிந்தவர்கள், தங்கள் தேஜஸால் அக்னிக்கு சமமாக இருந்தவர்கள், வாசலில் இருந்த காவல்காரனைப் பார்த்து அகஸ்தியர் சொன்னார் தாசரதியிடம் போய் சொல். ரிஷிகள் நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொல் என்றார். அகஸ்தியரை யார் என்று தெரிந்து கொண்ட காவல்காரன் உடனே ஓடிப் போய் ராமரிடம் செய்தியைத் தெரிவிக்கச் சென்றான். வாயில் காப்போன் ஆனாலும், நயம் அறிந்தவன், இங்கிதம் அறிந்தவன், சாமர்த்யசாலி. தைரியமும், சமயோசித புத்தியும் உடையவன். தருணம் அறிந்து ராமரிடம் அகஸ்தியர் முதலானோர் வந்திருப்பதை தெரிவித்தான். பூர்ண சந்திரன் போன்ற ஒளியுடன் அமர்ந்திருந்த ராகவன், இவர்கள் வந்து காத்திருக்கிறார்கள் என்று கேட்ட மாத்திரத்தில் அவர்களை சௌக்யமாக உள்ளே அழைத்து வா என்று உத்தரவிட்டு, தானும் கை கூப்பியபடி அவர்களை வரவேற்கத் தயாராக வந்து சேர்ந்தார். பாத்3யம் அர்க்4யம் இவைகளைக் கொடுத்து பூஜித்து, அரண்மனைக்குள் மரியாதையாக அழைத்து வந்து தகுந்த ஆசனங்க ளில் அமரச் செய்தார். பொன் வேலைப்பாடமைந்த விரிப்புக ளில் சிலர், குசம் என்ற புல்லைப் பரப்பி சிலர், மான் தோல் விரித்து சிலர் என்று தங்கள் சௌகர்யம் போல அமர்ந்தனர். ராமர் குசலம் விசாரித்தார். வந்திருந்த மகரிஷிகள், வேதம் அறிந்த பண்டிதர்களும் ராமரைக் குசலம் விசாரித்தனர். ரகு நந்தனா, நாங்கள் நலமே. எங்கும் யாவரும் நலமே. நல்ல வேளையாக உன்னையும் நலமாகக் காண்கிறோம். சத்ருக்களை அழித்து விட்டு வந்திருக்கிறாய். உலகை துன்புறுத்திக் கொண்டு இருந்த ராவணனை அழித்தாய். புத்ர பௌத்ரர்களோடு ராவணன் அழிந்தான். ராமா, உனக்கு இது ஒரு பொருட்டல்ல. வில்லைக் கையில் எடுத்தால் நீ மூவுலகையும் வெற்றிக் கொள்ளக் கூடியவனே. உன் கையால் ராக்ஷஸ ராஜா, அவர்கள் தலைவன் ராவணன் மடிந்தான். மிகப் பெரிய வீரனை வென்று வெற்றி வாகை சூடியவனாக உன்னைக் காண்கிறோம். சகோதரன் லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் சௌக்யமாக திரும்பி வந்தாயே, அதுவே நல்ல காலம் தான். சந்தோஷம். சகோதரர்கள் ஒன்று சேர்ந்தது சந்தோஷம். சொல்லப் போனால், ப்ரஹஸ்தன், விகடன், விரூபாக்ஷன், மகோதரன், அகம்பனன், துர்தர்ஷோ போன்ற ராக்ஷஸர்கள் அரிய உடலமைப்பு கொண்டவர்கள். பெரும் தேகமும் ப3லமும் கொண்டவர்கள். இவர்களே உன்னிடம் தோற்று வீழ்ந்தார்கள் என்பது போற்றக்கூடியதே. கும்பகர்ணனும், த்ரிசிரஸும், அதிகாயனும், நராந்தக, தேவாந்தகர்களும் போரில் மடிந்தார்கள். கும்பனும், நிகும்பனும் கூட நல்ல வீரர்கள். பார்க்கவே பயங்கரமான சரீரம் கொண்டவர்கள். கும்பகர்ணன் பிள்ளைகளான இவர்களும் மடிந்தார்கள். யுத்தம் என்றாலே மதம் கொண்டு வரும் காலாந்தக, யமாந்தகர்கள், யக்ஞ கோபன், தூம்ராக்ஷன் – இவர்கள் சாஸ்திரமும் நன்றாக அறிந்தவர்கள். காலனுக்கு சமமான பாணங்களால் இவர்களை அடித்து வீழ்த்தினாய். நல்லது. தேவர்களால் ஜயிக்க முடியாத ராக்ஷஸ ராஜனோடு த்வந்த யுத்தம் செய்தாயா? வரங்கள் பெற்றவன், அவனையே ஜயித்து விட்டாய். சந்தோஷம். ராவணியை (இந்திரஜித்) முன்னாலேயே வதம் செய்தது நல்லதாயிற்று. காலம் ஓடுவது போல ஓடி மறையக் கூடியவன். விஜயனாக வந்து நிற்கும் உன்னை நாங்கள் பாராட்டுகிறோம். இந்திரஜித் வதம் கேள்விப் பட்டவுடனேயே, இனிக் கவலையில்லை என்று நிம்மதியடைந்தோம். மகா மாயாவி. யாராலும் ஜயிக்க முடியாத படி வர தானம் பெற்றவன், சுயமாகவே பலசாலி. ரகு குல நந்தனா, இந்த ராக்ஷஸர்களை அழித்து விபீஷணனுக்கு அபயம் கொடுத்து நல்லதே செய்தாய். மேலும் மேலும் வெற்றிகளைப் பெற்று அமோகமாக இருப்பாய். இப்படி உள்ளன்போடு ரிஷிகள் சொல்லி வாழ்த்தி, பாராட்டியதைக் கேட்டு ராமர், பணிவோடு வினவினார். எனக்கு ஒரு விஷயம் ஆச்சர்யமாக இருக்கிறது. கும்பகர்ணனையும், ராவணனையும் விட்டு, நீங்கள் ராவணியை ஏன் இப்படி புகழ்ந்து பேசுகிறீர்கள்? மகோதரன், ப்ரஹஸ்தன், விரூபாக்ஷன் போன்ற ராக்ஷஸர்கள், போரில் மதம் பிடித்தவர்களாக செயல் படும், தேவாந்தக, நராந்தகர்களை விட்டு, நீங்கள் குறிப்பாக இந்திரஜித்தை, ராவணியை புகழ்ந்து பேசுவது ஏன்? அவனுக்கு என்ன விசேஷ தன்மை, பிரபாவம் இருந்தது? அரசனாக நான் கட்டளையிட்டுக் கேட்கவில்லை. சொல்லக் கூடுமானால் சொல்லுங்கள். இதில் ரகஸியம் எதுவுமில்லையே? என்றார். இந்திரனையும் அவன் ஜயித்ததாக கேள்விப் பட்டேன். யாரிடம் என்ன வரம் பெற்றான். தந்தையை விட பலசாலியாக எப்படி வளர்ந்தான். ராக்ஷஸனாக பிறந்தவன் ஏன் இந்திரனுடன் மோதினான்? வெற்றி பெற்றதும் பெரிய விஷயமே. விவரமாக சொல்லுங்கள், முனிவர்களே, என்று கேட்டுக் கொண்டார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான மத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 2 (539) பௌலஸ்த்ய குலோத்பத்தி (புலஸ்திய குலம் தோன்றுதல்)

 

ராமனின் கேள்விக்கு மகா தேஜஸ்வியான கும்பமுனி என்ற அகஸ்தியர் பதில் சொன்னார். இதைக் கேள். அவன் யாராலும் வெல்ல முடியாத பலம் பெற்றதையும், தேஜஸும் பலமும் அவனுக்கு எப்படி வளர்ந்தது என்பதையும் நான் சொல்கிறேன், என்று ஆரம்பித்தார். அதற்கு முன் ராவணன் குலம், அவன் பிறப்பு, வரம் பெற்றது யாரிடம் என்பதை சொல்கிறேன். முன்பு க்ருத யுகத்தில் ப்ரஜாபதியின் மகன் புலஸ்தியன் என்ற ப்ரும்ம ரிஷி இருந்தார். பிதாமகர் போலவே மகானாக இருந்தார். ப்ரஜாபதியின் புத்ரன் என்பதே போதும், அவன் குணம் தர்மம், சீலம் இவைகளை தனியாக சொல்ல வேண்டியதில்லை. மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் இவன் அதிக பலசாலியாக இருந்தான். தன் குணங்களால் எல்லோருக்கும் பிரியமானவன் ஆனான். இமய மலைச் சாரலில் த்ருண பி3ந்து4 என்ற மகானின் ஆசிரமத்திற்கு ஒருமுறை சென்றான். யதேச்சையாக சென்றது தான், எதையும் நினைத்து செல்லவில்லை. அங்கு வசிக்கும் பொழுதும் தன் தவத்தை விடாமலும், ஸ்வாத்யாயம் என்ற படித்ததை மனனம் செய்யும் முறையையும் கவனமாக செய்து வந்தான். அச்சமயம் சில ஸ்த்ரீகள் அந்த ஆசிரமத்திற்கு வந்து இடையூறு செய்தனர். அவர்களும் அந்த இடத்தின் ரம்யத்தினால் கவரப் பட்டு வந்தவர்களே. ஆடவும் பாடவும் ஏற்ற இடம். தவிர பூக்களும், பழங்களும் பருவ காலம் இன்றியும் கிடைக்கும் இடம். நித்யமான வளமும் அழகும் உடைய இடம் ஆதலால் உல்லாசமாக பொழுது போக்க வந்த தேவ, பன்னக கன்னிகள். அதிலும் புலஸ்திய ரிஷி இருந்த இடம் தான் அவர்கள் ஆடவும் பாடவும் ஏற்றதாக இருந்தது போலும். தவம் செய்யும் முனிவருக்கு இது இடையூறாக இருந்தது. இது அவர்கள் அறியவும் இல்லை. முனிவரோ கோபம் கொண்டார். சபித்தார். இந்த பெண்க ளில் யார் என் முன் வந்தாலும் அவள் கர்பிணி ஆவாள். இதைக் கேட்ட பெண்கள் ப்ரும்ம சாபம் என்பதால் பயந்து ஓடி ஒளிந்தனர். இதை அறியாத த்ருண பிந்துவின் மகள் மட்டும் மற்றவர்கள் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தாள். ராஜ ரிஷியின் மகள், சற்றும் பயமின்றி நடமாடிக் கொண்டிருந்தாள். அதே சமயம் ப்ரும்ம ரிஷி, ஸ்வாத்யாயம் செய்ய அந்த இடம் வந்தார். தவ வலிமையுடன் கூட வேத கோஷம் கேட்டவள், திடுமென தன் உடல் வெளுக்க,  தெளிவாக தெரிந்த கர்பத்துடன் உடல் மாற்றம் அடைந்தாள். தன் தோஷம் என்ன, எதனால் இந்த உரு மாற்றம் என்பதும் புரியாமல் நடுங்கி விட்டாள்.  தந்தையின் ஆசிரமத்தை அடைந்து அவரிடம் அழுகையினூடே எனக்கு என்னவோ ஆகி விட்டது என்றாள். த்ருண பிந்து மகளைப் பார்த்து திகைத்தார். இது என்ன ஏடாகூடமாக ஆகி விட்டதே, என்ன நடந்தது என்று வினவ, அவள். தெரியவில்லை அப்பா. நான் புலஸ்திய முனிவரின் ஆசிரமம் போனபொழுது சகிகள் யாரையும் காணவில்லை. அங்கேயே சற்று நேரம் தேடிக் கொண்டு நின்றேன். திடுமென இது போல ஆகி விட்டது என்று அழுதாள். என் உடல் மாற்றத்தைக் கண்டு பயந்து ஓடி வந்தேன் என்றாள். தன் தவ வலிமையால், தியானம் செய்து நடந்ததை அறிந்து கொண்ட முனிவர், தன் மகளை கையை பிடித்து அழைத்துக் கொண்டு புலஸ்தியர் தவம் செய்யும் இடம் சென்றார். புலஸ்தியரைப் பார்த்து, மகரிஷியே, இவள் என் மகள். நல்ல குணங்களுடன் சீலமாக வளர்க்கப் பட்டவள். இவளை தானமாக தருகிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு பணிவிடை செய்வாள். தவத்துக்கு உதவியாக இருப்பாள். இவள் கவனமாக இவைகளை செய்வாள், சந்தேகமே இல்லை என்று சொல்லவும், புலஸ்திய முனிவரும் ஏற்றுக் கொண்டார். அவளுடைய சீலமும், நடத்தையும் முனிவரைக் கவர்ந்தது. மிகவும் மகிழ்ச்சியோடு அவளிடம் சொன்னார். அழகிய பெண்ணே, உன் பணிவிடைகளால் நல்ல குணத்தால் நான் மிகவும் மகிழ்ந்தேன். அதனால் உனக்கு எனக்கு சமமான புத்திரனைத் தருகிறேன். நம் இருவரின் வம்சத்தையும் விளங்கச் செய்பவனாக, பௌலஸ்தியன் என்ற பெயருடன் புகழ் பெற்று விளங்குவான். நான் வேதம் சொல்லி நீ கேட்டதால்., அவன் விஸ்ரவா என்ற பெயரும் பெறுவான். இதைக் கேட்டு அந்த பெண்ணும் மன நிம்மதியடைந்து, நாளடைவில் விஸ்ரவஸ் என்ற மகனைப் பெற்றாள். இவன் மூவுலகிலும் பெரும் புகழ் பெற்றான். தர்மம், யஸஸ்-புகழ் இவனிடம் நிறைந்தன. காட்சிக்கு             எளியவனாக, நியாயம் அறிந்தவனாக, கல்வி கற்றவனாக, எல்லா ஜீவன்களையும் சமமாக காணும் மனப் பான்மையும், விரத ஆசாரங்களுடன் தன் தந்தையைப் போலவே தவம் செய்வதில் ஈடுபாட்டுடன், மகன் விஸ்ரவஸ் வளர்ந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 3 (540) வைஸ்ரவன லோக பால பத3 ப்ராப்தி, லங்காதி3 ப்ராப்தி ச (வைஸ்ரவனன் லோக பாலன் என்ற பதவி அடைதலும், லங்கையை பெறுதலும்)

 

புலஸ்திய புத்திரனான விஸ்ரவஸ், வெகு சீக்கிரத்திலேயே, தந்தையைப் போலவே தவம் செய்து, சத்யவானாக, சீலவானாக, சாந்த குணத்துடன், ஸ்வாத்யாயம் இவற்றில் கவனமாக, நித்யம் தர்ம பரனாக, சீலமும், அடக்கமுமாக, ஆடம்பர போகங்களை வெறுத்தவனாக இருந்து வந்தான், இதையறிந்த ப4ரத்3வாஜர் தன் மகள் தேவ வர்ணினி என்பவளை மணம் செய்து கொடுத்தார். பரத்வாஜர் மகளிடம் தங்கள் வம்சம் விளங்க ஒரு மகனைப் பெற்றான் விஸ்ரவஸ். எல்லாவிதமான ப்ரும்ம குணங்களும் நிறைந்த குழந்தையைக் கண்டு, குழந்தையின் பாட்டனார், (தந்தையின் தந்தை) மிகவும் மகிழ்ந்தார். ஸ்ரேயஸ்- நன்மை தரும் விதமான புத்தி இயல்பாகவே உடையவன், அதனால் இவன் த4னாத்யக்ஷன் ஆவான் என்று ஆசிர்வதித்தார். செல்வத்துக்கு அதிபதி. பெயர் வைக்க தேவ ரிஷிகளுடன் கலந்து ஆலோசித்தார். விஸ்ரவஸ் புத்திரன் ஆனதால், வைஸ்ரவனன் என்ற பெயர் வந்தது. இவனும் தந்தையைப் போலவே இருப்பான் என்று ஆசிர்வதித்தார். வைஸ்ரவனனும் தபோவனம் சென்றான். ஆஹுதி செய்து வளர்க்கப் படும் யாகாக்னி போல வளர்ந்தான். ஆசிரமத்தில் இருக்கும் பொழுது ஏதாவது விசேஷமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. உயர்ந்த தர்மம் எதுவோ அதை அனுஷ்டிக்க வேண்டும் என்று தீர்மானித்து, தவம் செய்து வந்தான். ஆயிரம் வருஷம் தவம் செய்தபடி வனத்தில் இருந்தான். உக்ரமான விரதங்களை சங்கல்பம் செய்து கொண்டு, ஆயிரம் வருஷங்கள் அவைகளை செய்து முடித்தான். ஜலம் மட்டுமே உணவாக, பின், மாருதம்-காற்றே உணவாக, பின் அதுவும் இல்லாமல் ஆகாரமே இல்லாமல் என்று இப்படி ஒரு வருஷம் போல தோன்றியது, ஆயிரம் வருஷங்கள் ஓடி விட்டன. மிகவும் மகிழ்ந்த ப்ரும்மா, மற்ற ரிஷி கணங்களுடன் ஆசிரமம் வந்து குழந்தாய், மிகவும் சந்தோஷம், உன் தவச் சிறப்பை மெச்சுகிறேன். என்ன வரம் வேண்டுமோ, கேள் என்றார். ப்ரும்மாவை எதிரில் கண்ட வைஸ்ரவணன், ப4கவன், நானும் லோக பாலனாக ஆக வேண்டும், செல்வத்தைக் காப்பாற்றுபவனாக, உயர்ந்த பதவி வேண்டும் என்றான். ப்ரும்மாவும் அப்படியே ஆகட்டும் என்று மகிழ்ச்சியுடன் ஆசிர்வதித்து, நானே நாலாவது லோக பாலனை நியமிக்க எண்ணியிருந்தேன். இந்திரன், வருணன், யமன் இவர்களுக்கு சமமான அந்தஸ்தை பெறுவாய். அதனால் த4னாதிபதி (செல்வத்துக்கு அதிபதி என்ற பதவியை ஏற்றுக் கொள். சக்ர-இந்திரன், அம்பு – வருணன், யமன், த4னதன்- குபேரன் என்ற நால்வரும் லோக பாலர்களாக விளங்குவீர்கள் என்றார். இதோ, புஷ்பக விமானம். சூரியன் போல பிரகாசமானது. இது உனக்கு வாகனமாக இருக்கும்., தேவர்களுக்கு சமமாக சஞ்சரிப்பாய். ஸ்வஸ்தி உண்டாகட்டும். கிளம்புகிறோம், என்று சொல்லி விடை பெற்றுச் சென்றார். ப்ரும்மாவும் உடன் வந்த தேவர்களும் சென்ற பின் வைஸ்ரவனன் தந்தையிடம் வந்து வணங்கி, தேவலோகத்தில் வாசம் செய்ய என்னை அனுமதிக்கவில்லை. ஆயினும், எனக்கு தேவையான, பிடித்த வரங்களை ப்ரும்மாவிடம் கேட்டு வாங்கிக் கொண்டு விட்டேன். த4னாதிபதி ஆகி விட்டேன். அதனால் அப்பா, நான் வசிக்க தகுந்த இடமாக தேடுங்கள் என்றான். எந்த பிராணிக்கும் எந்த விதமான கஷ்டமும் ஏற்படக் கூடாது. அப்படி ஒரு இடம் தேடுங்கள், எனவும், தந்தையும் சற்று யோசித்து விட்டு, ஒரு இடத்தை விவரித்தார். தென் சமுத்திரக் கரையில், த்ரிகூடம் என்று ஒரு பர்வதம். அதன் மேல் விசாலமாக மகேந்திரனின் நகரம் போலவே, லங்கா என்ற நகரம் ரம்யமாக அமைந்துள்ளது. விஸ்வகர்மா, இந்திரனுக்கு அமராவதி போல இது ராக்ஷஸர்களுக்கு என்று கட்டியிருக்கிறார். இந்த லங்கை தான் நீ வசிக்க ஏற்றது. உனக்கு மங்களங்கள் உண்டாகட்டும். லங்கை மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டது. தங்கத்தால் தூண்கள், பிரகாரம். யந்திரங்களும், சஸ்திரங்களும் நிரப்பப் பட்டுள்ளன. தோரணங்களும், செம்பொன்னில், வைடூரியம் இழைத்து செய்யப் பட்டவை. விஷ்ணுவிடம் பயந்து ராக்ஷஸர்கள் இந்த நகரை விட்டு ஓடி விட்டார்கள். எல்லோரும் ரஸாதளம் சென்று விட்டதால் நகரம் சூன்யமாக இருக்கிறது. தற்சமயம் லங்கையின் நாயகன், தலைவன் என்று யாரும் இல்லை. புத்ரா, அந்த இடத்தில் நீ சௌக்யமாக வசிக்கலாம். போய் வா என்று சொல்லி அனுப்பினார். அங்கு எந்த இடையூறும் இருக்காது. உன் வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும். இதைக் கேட்டு வைஸ்ரவணன் லங்கையை தன்னுடையதாகக் கொண்டு, மலையின் உச்சியில் தன் இஷ்ட மித்ர பந்துக்கள் ஆயிரக் கணக்காக உடன் வர, சந்தோஷமாக ஆட்சியை ஆரம்பித்தான். அவனுடைய ஆட்சியின் கீழ், யாவரும் மன நிறைவோடு இருக்கலாயினர். நைருதந் -வடமேற்கு பகுதியின் தலைவன், என்ற பெயரோடு, சமுத்திரம் சூழ்ந்த அந்த பகுதியில் இருந்து கொண்டு, அவ்வப்பொழுது புஷ்பகம் என்ற தன் விமானத்தில், தாய் தந்தையரைக் காண வந்து கொண்டிருந்தான். தேவ, கந்தர்வர்கள், இவனுடைய குணத்தாலும், ஆற்றலாலும் சந்தோஷமாக வாழ்த்தினர். அப்ஸரஸ் கணங்கள் வந்து நாட்டியமாடி மகிழ்வித்தனர். சூரியன் தன் கிரணங்களால் பிரகாசமாக விளங்குவது போல இருந்தான். அடிக்கடி தந்தையிடம் வந்து அவருடன் காலம் கழித்தான்.

 

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 4 (541) ராவணாதி பூர்வ ராக்ஷஸ உத்பத்தி கதனம்(ராவணனுக்கு முந்தைய ராக்ஷஸர்கள் தோன்றிய கதை)

 

கதை சொல்லிக் கொண்டிருந்த அகஸ்தியரை இடை மறித்து, ராமர் வினவினார். ராக்ஷஸர்கள் லங்கைக்கு எப்பொழுது வந்தார்கள்? தலை சாய்த்து கேட்ட ராமனை திரும்பி பார்த்த அகஸ்தியர் கண்களுக்கு, மூன்று விதமான அக்னிகளும் சேர்ந்து உருவெடுத்து வந்தது போல தென் பட்டான். ராக்ஷஸ ராஜா வருமுன்னே லங்கை இருந்தது என்பது இப்பொழுது தான் தெரியும். புலஸ்திய வம்சத்தில் தான் ராக்ஷஸர்கள் தோன்றினார்கள் என்பது கேள்விப்பட்டிருக்கிறோம். ராவணன், கும்பகர்ணன், ப்ரஹ்லாதன், விகடன் இவர்களை விட, ராவண புத்திரர்களை விட பலசாலிகளாக இருந்தார்களா? இவர்களுக்கு முன்னோர் யாவர்? விஷ்ணுவிடம் என்ன அபராதம் செய்து லங்கையை விட்டு ஓடினார்கள். விவரமாக சொல்லுங்கள். அகஸ்தியர் தொடர்ந்தார். ப்ரஜாபதி முன்பு ஒரு சமயம் ஜலத்தை உற்பத்தி செய்தார். அப என்ற நீரில் தோன்றும் இனத்தையும், அதற்கு அனுசரணையாக மற்ற ஜீவராசிகளையும் சிருஷ்டி செய்தார். இந்த ஜீவ ராசிகள் தங்களை சிருஷ்டி செய்தவனை வணங்கி நின்றன. பசி, தாகம் என்றால் என்ன செய்வோம், என்று கேட்டன. ப்ரஜாபதியும் யோசித்து, சிரித்துக் கொண்டே, உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றவர் தொடர்ந்து என்ன செய்வீர்கள் என்றும் வினவினார்.  ரம-காப்பாற்றிக் கொள்கிறோம் என்று சிலர், யம-யாகம் செய்கிறோம் என்று சிலர்,  பதில் சொல்லவும்,  ரம-ரமிக்கிறோம் என்று சொன்னவர்கள் ராக்ஷஸர்களாகவும், யம-யாகம் செய்கிறோம் என்று சொன்னவர்கள் யக்ஷர்கள் ஆகட்டும் என்றார். இதன் பின் ஹேதி, ப்ரஹேதி என்ற இருவர் ராக்ஷஸ தலைவர்கள் ஆனார்கள். மது, கைடபன் போல எதிரிகளை ஜயித்து வீரர்களாக இருந்தனர். ப்ரஹேதி வனம் சென்று தவம் செய்தான், ஹேதி மணந்து கொள்ள ஒரு பெண்ணைத் தேடி அலைந்தான். தேடித் தேடி காலனின் சகோதரி, அவள் தோற்றம் பயங்கரமாக இருந்த பொழுதிலும், மணந்து கொண்டு வந்தான். பயா என்ற அவளிடம் வித்யுத்கேசன் என்ற மகனைப் பெற்றான். அவனும் பெரும் பெயரும் புகழும் பெற்று வளர்ந்தான். நல்ல தேஜஸோடு, கொளுத்தும் பகல் நேர வேய்யில் போல இருந்தான். வயது வந்தவுடன் மணம் செய்து வைக்க தந்தை முனைந்தார். சந்த்யாவின் மகள் பௌலோமி என்பவளை மணந்தான். சிறிது காலம் சென்றது. பௌலோமி கர்ப்பமுற்றாள். சமுத்திரத்திலிருந்து மேகம் தோன்றுவது போல இருந்தது அவள் கர்ப்பமுற்றது. அந்த ராக்ஷஸி, மந்தரம் சென்று கங்கை கார்த்திகேயனைப் பெற்றது போல பெற்றாள். குழந்தையின் குரல் மேகம் இடிப்பது போல இருந்தது. ஒரு சமயம் அழும் குழந்தையை கவனிக்காமல் அந்த ராக்ஷஸி, தன் கணவனுடன் ரமித்துக் கொண்டிருந்தாள். சரத் கால சூரியன் போன்ற ஓலியுடன் அந்த குழந்தை விரலை வாயில் வைத்து அழுவதை, அவ்வழியே விருஷப வாகனத்தில் சென்று கொண்டிருந்த பார்வதி, பரமேஸ்வரர்கள் கேட்டனர். பார்வதி கருணையுடன் நோக்கவும் அவன் வளர்ந்து தன் தாய் வயது வளர்ந்தவனாக ஆகி விட்டான். பார்வதியின் வேண்டுகொளுக்கு இணங்கி ப4வன் என்ற ஈஸ்வரன், அவனை அமரனாக்கி (மரண பயமின்றி ஆக்கி) அந்த ராக்ஷஸனுக்கு ஒரு ஊரையும் கொடுத்தார். அக்ஷரன், அவ்யயன் என்று போற்றப் படும் ப4வ – ஈஸ்வரனின் அருளைப் பெற்ற அந்த குழந்தைக்கு, உமையும் ஒரு வரம் தந்தாள். ராக்ஷஸ குலத்தினர் கர்ப்பம் உற்ற உடனேயே பிரஸவம், பிரஸவித்த சிறிது காலத்திலேயே வளர்ந்து வயதுக்கு வருதல் இயல்பாயிற்று. சுகேசன் என்ற அந்த ராக்ஷஸன் வர தானத்தால் கர்வம் அடைந்தான். தன் இஷ்டம் போல சுற்றினான். செல்வமும் சேர இந்திரனை போல சுற்றினான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 5 (542) மால்யவதா3த்3யபத்யோத்பத்தி : (மால்யவான் மற்றும் வாரிசுகள் தோன்றுதல்)

 

சுகேசன் என்ற ராக்ஷஸன் வரங்கள் கிடைக்கப் பெற்று தார்மிகனாகவும் இருந்ததைக் கண்டு க்ராமணீ என்ற கந்தர்வன், தனது இரண்டாவது மகளான தேவ வதியை மணம் செய்து கொடுக்க முன் வந்தான். அந்த பெண், ரூபத்தில் மற்றொரு லக்ஷ்மி போல இருந்தாள். அவளை விதி முறைப்படி மணம் செய்து கொடுத்தான்.  சுகேசன் வர தானம் பெற்று மூவுலகிலும் அதிக மதிப்புடன் இருந்ததால், இந்த பெண்ணும் அவனுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். தேவ வதியிடம் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். மால்யவான், சுமாலி, மாலி என்ற மூவரும் பலசாலிகளாக வளர்ந்தனர். மூவரையும் கண்களை இமை காப்பது போல காத்து வந்தனர், அந்த தம்பதி. அவர்களும் அக்னி போல தேஜஸ்விகளாக வளர்ந்தனர். தந்தையைப் போலவே வரதானம் பெறவும், ஐஸ்வர்யம் கிடைக்கப் பெறவும் தவம் செய்யக் கிளம்பினார்கள். கடினமான நியமங்களை ஏற்று தவம் செய்தனர். சத்யம், நேர்மை, பொறுமை இவைகளுடன் இவர்கள் புலனடக்கி தவம் செய்தது, மூவுலகையும் தகிக்கச் செய்தது. தேவ, அசுர, மனிதர்கள் யாவரும் பாதிக்கப் பட்டனர். சதுர்முக ப்ரும்மா, தன் விமானத்தில் ஏறி வந்து, சுகேசி புத்திரர்களைப் பார்த்து வரம் தர வந்திருக்கிறேன், என்ன வரம் வேண்டும், கேளுங்கள் எனவும், கை கூப்பியபடி, காற்றில் ஆடும் மரங்கள் போல உடல் ஆட்டம் காண, தேவா, சிரஞ்சீவியாக இருக்க வரம் வேண்டும் என்று பிரார்த்தித்தனர். நெடுநாள் வாழ வேண்டும். சத்ருக்களை எப்பொழுதும் ஜயிக்க வேண்டும். யாரும் எங்களை ஜயிக்கக் கூடாது, ப்ரபவிஷ்ணுவாக, எதையும் சாதிக்கும் வல்லமையுடையவர்களாக ஆவோம் என்று கேட்க, ப்ரும்மாவும் சம்மதித்து வரமளித்துச் சென்றார். ராமா இரவில் சஞ்சரிப்பவர்கள் என்று இவர்களுக்கு ஒரு பெயர் உண்டு. அதற்கேற்ப, வரம் கிடைக்கப் பெற்றதும், இவர்கள் இரவு பகல் இன்றி தேவர்களையும் அசுரர்களையும் வாட்ட ஆரம்பித்தனர். ரிஷிகளும், சாரணர்களும், தேவ லோக வாசிகளும் பயந்து, நடுங்கினர். தங்களைக் காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்று தவித்தனர். அதே சமயம், யதேச்சையாக வந்த விஸ்வகர்மாவை ராக்ஷஸர்கள் சில்பிகளுள் சிறந்தவர் தாங்கள். நீங்கள் தான் எங்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும். தற்சமயம் பலத்துடன், செல்வாக்குடன் இருப்பதால், எங்களுக்கு தகுதியாக வீடு, நகரம் அமைத்துத் தர வேண்டும் என்று வேண்டினர். தேவர்களுக்கு மனதில் நினைத்த படி கட்டிக் கொடுத்ததாக கேள்விப் பட்டிருக்கிறோம். ஹிமவான் மேலோ, மேரு மந்தரத்திலோ, மகேஸ்வரனுடைய வீடு இருப்பது போல எங்களுக்கும் கட்டிக் கொடுங்கள். விஸ்வகர்மாவும், தக்ஷிண சமுத்திரக் கரையில், இந்திரனுடைய அமராவதிக்கு இணையாக, த்ரிகூட மலையின் சிகரத்தையடுத்த சுஷேண மலையின் மேல் நகரம் அமைத்துக் கொடுத்தார். மலை மேல், சமுத்திரம் நாலா புறமும் சூழ்ந்திருக்க, (சகுனம்) ஆந்தைகள் கூட நுழையாதபடி பாதுகாப்பாக கட்டிக் கொடுத்தார். நாலாபுறம் அகழிகள், கோட்டைகள் இவற்றுடன், முன்னூறு யோஜனை விஸ்தீர்ணமும், நூறு யோஜனை தூரம் நீண்டதுமான நகரை நிர்மாணித்தார். அதில் நீளமான ப்ராகாரங்கள் ஸ்வர்ணத்தால் ஆனவை, நாலாபுறமும் அழகிய தோரணங்களுடன் விளங்கின. இந்திரன் கட்டளையிட்டு, லங்கா என்ற நகரை நிர்மாணித்தேன், இதில் நீங்கள் வசிக்கலாம். இதுவும் இந்திரனின் அமராவதிக்கு இணையானதே. ராக்ஷஸர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். லங்கையின் கோட்டையைக் கண்டு மலைத்தனர். அதை தங்கள் வாசஸ்தலமாக கொண்டு இஷ்ட மித்திர பந்துக்களுடன் வசிக்கலாயினர்.  வெளியார் யாரும் நெருங்க முடியாத லங்கைக்குள் சேவகர்கள், பரிசாரகர்கள் இவர்களுடன், லங்கையை தலை நகராக கொண்டு வசிக்கலாயினர். நூற்றுக் கணக்கான         மாளிகைகள், உறுதியாக அமைக்க பட்டு கம்பீரமாக நின்றன. இந்த சமயம் தான் நர்மதா என்ற கந்தர்வ பெண் தோன்றினாள். ராகவா அவளுக்கு மூன்று பெண்கள். ஹ்ரீ, ஸ்ரீ, கீர்த்தி என்ற மூவரையும் ஒத்த அழகும், தேஜஸும் உடையவர்கள். இவர்களை இந்த மூன்று ராக்ஷஸர்களுக்கும் மணம் செய்து கொடுத்தாள். சுகேசனின் புத்திரர்கள் இப்பொழுது மனைவியும் கிடைக்கப் பெற்று சுகமாக இருந்தனர். மால்யவானின் மனைவி சுந்தரிக்கு, வஜ்ர முஷ்டி, விரூபாக்ஷன், துர்முகன், சப்தகர்னோ, யக்ஞ கோபன், மதோன்மத்தன் என்ற பிள்ளைகளும், அனலா என்ற ஒரு பெண்ணும், பிறந்தனர். சுமாலிக்கு, கேதுமதீ என்ற மனைவி, பிரஹஸ்தன், அகம்பனன், விகடன், கால கார்முகன், துர்ம்ராக்ஷன், தண்டன், சுபார்ஸ்வன், ஸம்ஹ்ராதி, பிரகஸன், பாஸ கர்ணன் என்று மகன்கள், ராகா, புஷ்போத்கடா, கைகயி என்றும், கும்பீனஸீ என்றும் பெண்கள். மாலிக்கு வசுதா என்ற பெண் மனைவியானாள். இவளுக்கு அனிலன், அனலன் என்றும், ஹரன், ஸம்பாதி என்ற புத்திரர்களும். இவர்கள் விபீஷணின் மந்திரியாக இருந்தனர். இப்பொழுது புத்திரர்களும் உதவி செய்ய ராக்ஷஸர்கள், இந்திரனையும், ரிஷி, நாக, யக்ஷர்களையும் துன்புறுத்துவதை விளையாட்டாகக் கொண்டனர். பலமும், வீர்யமும், அவர்கள் கண்களை மறைத்தன. காற்றைப் போல உலகை சுற்றி வந்து, யுத்தம் என்று வந்தால், காலனே வந்து நின்றது போல யுத்தம் செய்பவர்களாக, முக்கியமாக யாக காரியங்களைத் தடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைந்தவர்களாக திரிந்தனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 6 (543) விஷ்ணு மால்யவதா3தி3 யுத்தம் (மால்யவான் முதல்வரோடு விஷ்ணு யுத்தம் செய்தது)

 

தேவர்களும், ரிஷிகளும், தபோதனர்களும் இவர்களால் வதைக்கப் பட்டு வருந்தினர். பயந்து நடுங்கியவர்களாக தேவ தேவனான மகேஸ்வரனை சரணம் அடைந்தனர். ஜகத் ஸ்ருஷ்டியை அழிக்கும் தொழிலை ஏற்று நடத்துபவரும், பிறப்பு, இறப்பு இல்லாத முழு முதற்கடவுளும், கண்களுக்கு புலப்படாத உருவம் உடையவருமான ஈ.ஸ்வரனை, உலகுக்கு ஆதாரமாக நின்ற, எல்லோராலும் ஆராதிக்கப் பட்ட பரம குருவுமானவரும், காமாரி, த்ரிபுராரி, த்ரிலோசனன் என்றும் போற்ற படும் மகா தேவனை நாத்தழு தழுக்க வேண்டினர். பிதாமகர் கொடுத்த வரத்தினால் கர்வம் தலைக்கேறி, சுகேசி புத்திரர்கள் எங்களைத் துன்புறுத்துகிறார்கள். யார் என்று இல்லை, எல்லோரையும் வம்புக்கு இழுத்து அடித்துக் கொல்கிறார்கள். யார் வந்தாலும் அடைக்கலம் தரும் எங்கள் ஆசிரமங்கள், இப்பொழுது யாரையும் காப்பாற்ற இயலாத இடமாக ஆகி விட்டது., ஸ்வர்கத்தையும் விடவில்லை. தாங்கள் தான் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டு விளையாடுகிறார்கள். நான் தான் விஷ்ணு, நான் தான் ருத்ரன், நான் ப்ரும்மா, தேவராஜன் நான் தான், நான் யமன், வருணன், சந்திரன், சூரியனும் நானே என்று சொல்லிக் கொண்டு மாலி, சுமாலி, மால்யவான் மூவரும் அட்டகாசம் செய்கிறார்கள். அவர்கள் எதிரில் யார் வந்தாலும் உடனே சண்டை தான். அதனால் தேவனே, பயத்தில் வாடும் எங்களுக்கு அபயம் தர வேண்டும். தேவர்களுக்கு எதிரிகளான இவர்களை நாசம் செய்ய தகுந்த உருவம் எடுத்துக் கொண்டு வர வேண்டும், என்று வேண்டினர். நீல கண்டனான சிவன் சற்று யோசித்து, என்னால் நேரடியாக அவர்களை வதம் செய்ய முடியாது. வர தானம் பெற்றவர்கள். ஆனாலும் ஒரு வழி சொல்லித் தருகிறேன். நீங்கள் நேராக விஷ்ணுவிடம் போங்கள். அவர் தான் இந்த ராக்ஷஸர்களைக் கொல்ல சக்தி வாய்ந்தவர். ஏதாவது செய்து உங்கள் கஷ்டத்தை நீக்குவார், என்று சொல்லி அனுப்பி வைத்தார். ஜய கோஷம் செய்து மகேஸ்வரனை வாழ்த்தி, தேவர்கள் கூட்டம், விஷ்ணு இருந்த இடம் வந்து சேர்ந்தனர். சங்க சக்ர தரனான பிரபுவை வணங்கி, துதி செய்து, சுகேசி தனயர்களான ராக்ஷஸர்களிடம் தாங்கள் படும் கஷ்டங்களை விவரித்தனர். மூவரும் மூன்று அக்னி போல. எங்கள் நகரை ஆக்ரமித்துக் கொண்டு, எங்களை துரத்தி விட்டார்கள். இருக்க இடம் இல்லை.  துன்புறுத்தும் வகைக்கு அளவே இல்லை. மதுசூதனா, நீ எங்கள் நன்மைக்காக அவர்களை வதம் செய். என்று வேண்டினர். உன்னை சரணடைகிறோம். சுரேஸ்வரா, எங்களுக்கு அபயம் அளிப்பாய் என்றும் வேண்டினர். யுத்தத்தில் வல்ல இந்த ராக்ஷஸர்களை வதம் செய்து எங்களை காப்பாற்று. துஷ்டர்கள், மதம் கொண்டு அலைகிறார்கள். இவர்களை கூட்டத்தோடு அழித்து விடு. உன் சக்ரத்தால் தலைகளை துண்டித்து யமனுக்கு நிவேதனம் செய் என்றனர். உன்னையன்றி எங்களைக் காப்பாற்ற வேறு யார் இருக்கிறார்கள்.   பனித்துளிகள் பாஸ்கரனைக் கண்டவுடன் விலகுவது போல, உன்னைக் கண்டு, எங்கள் கஷ்டங்கள் விலகட்டும். இதைக் கேட்டு ஜனார்தனன் அபயம் அளித்தார். அண்டி வந்த தேவ தேவர்களுக்கு அபயம் அளித்தார். எதிரிகளுக்கு பயத்தை தரும் தேவ தேவன், மேலும் சொன்னார். எனக்கும் தெரியும், சுகேசன் வர தானம் பெற்றதும், அட்டகாசம் செய்வதையும் நான் அறிவேன். அவனையும் அவன் புத்திரர்களையும் அறிவேன். மால்யவான் மூத்தவன். எல்லையை மீறும் இவர்கள் கர்வத்தை அடக்குவேன். தேவர்களே, கவலையின்றி போய் வாருங்கள். என்று சொல்லி அனுப்பினார். அவர்களும், ஜனார்தனனை புகழ்ந்தபடி, திரும்பிச் சென்றனர். மால்யவான் நடந்ததை அறிந்து கொண்டு விட்டான். மற்ற இருவரையும் பார்த்து அமரர்களும், ரிஷிகளும் போய் மகேஸ்வரனான சங்கரனிடம் முறையிட்டிருக்கிறார்கள். சுகேசி தனயர்கள் எங்களைத் துன்புறுத்துகிறார்கள், என்று சொல்லி அழுதிருக்கிறார்கள். நம்மை வதம் செய்ய சொல்லி வேண்டியிருக்கிறார்கள். வரம் பெற்ற கர்வத்தால் அடக்க மட்டாத பலத்துடன் எங்களைத் தாக்குகிறான். எங்கள் வீடுகளில் நாங்கள் வசிக்கக் கூட விடுவதில்லை. பயமுறுத்தி துரத்துகிறார்கள். இந்த ராக்ஷஸர்களை உன் ஹுங்காரத்தால் வதம் செய்து எங்களைக் காப்பாற்று என்று கேட்டிருக்கின்றனர். இதைக் கேட்டு காலனை உதைத்த தலையையும், கையையும் ஆட்டி இது என்னால் ஆகாது, வரதானம் என்னையும் கட்டுப் படுத்துகிறது. ஒரு வழி சொல்கிறேன், இதோ இந்த சங்க சக்ர கதா பாணியாக, பீதாம்பரனான இருக்கிறானே, அந்த ஜனார்தனனை சரணடையுங்கள்., அவன் தான் ஹரி, நாராயணன், அவனை சரணடையுங்கள். என்று சொல்லியிருக்கிறார். இவர்களும் நாராயணனை சரணடைந்து அழவும், அவரும் அபயம் அளித்திருக்கிறார். தேவர்கள் விரோதியை நான் அழிக்கிறேன். சுகேசி புத்திரர்களை நான் வதம் செய்து விடுகிறேன், கவலையின்றி திரும்பி போங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். இப்படி இந்த தேவர்கள் வேண்டிக் கொண்டதால் நம்மை வதம் செய்வதாக நாராயணன் பிரதிக்ஞை செய்திருக்கிறார். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்போம், ஹிரண்ய கசிபுவை இந்த நாராயணன் வதம் செய்து கேட்டிருக்கிறோம். இவனை நம்மாலும் எதிர்க்க முடியாது. அஸ்வினி குமாரர்கள், இந்திரனுக்கு மந்திராலோசனை சொல்வது போல, மாலியும் சுமாலியும் மால்யவானுக்கு மந்த்ராலோசனை சொன்னார்கள். நமக்கு இஷ்டம் போல ஐஸ்வர்யம் கிடைக்கப் பெற்றோம். அதைக் காப்பாற்றி வருகிறோம். வியாதியில்லாத ஆரோக்யமான வாழ்வும் பெற்றோம். தேவர்கள் என்ற சமுத்திரத்தை அடக்கி நமது சஸ்திரங்களால் மூழ்கி எழுந்து வெற்றி கொண்டோம். அதனால் நமக்கு ம்ருத்யு பயம் கிடையாது. நாராயணன் என்ன, ருத்ரனோ, இந்திரனோ, யமனோ, யாரானாலும் நம் முன்னால் யுத்த பூமியில் நிற்க கூட அஞ்சுவார்கள். விஷ்ணுவுக்கு நம்மிடம் துவேஷம் கிடையாது. இந்த தேவர்கள் துவேஷம் கொண்டு அவர் மனதை கலைத்திருக்கின்றனர். அதனால் நாம் உடனே அந்த தேவர்களையே அடிப்போம். உடனே எல்லா வீரர்களையும் திரட்டி பெரும் சேனையோடு, கோஷம் செய்தபடி ஜம்பன், விருத்திரன் இவர்களைப் போல தேவர்களை முற்றுகை இட்டனர். ஒவ்வொருவரும் மலை போல சரீரம் உடையவர்கள், ரதங்களும், யானைகளும், குதிரைகளும் கூட்டம் கூட்டமாக தொடர, கோவேறு கழுதைகளும், ஒட்டகங்களும் சிம்சுமார பாம்புகள், மகர, கச்சபங்கள், மீன் போல நீர் வாழ் ஜந்துக்கள், ஆகாயத்தில் பறக்கும் பறவைகள், கருடனுக்கு சமமான பக்ஷிகள், சிங்கம், வ்யாக்ரம் (புலி) வராகம், ஸ்ருமரம், சமரம் எனும் வன விலங்குகள், இவர்களுடன் லங்கையை விட்டு தங்கள் பலத்தால் கர்வத்துடன் போர் செய்ய கிளம்பினார்கள். தேவ லோகத்தை நோக்கி படை முன்னேறியது. லங்கைக்கு ஏதோ ஆபத்து என்று அறிந்து லங்கையில் வசித்த ஜீவ ராசிகள்  வெளிப் படையாக பயம் முகத்தில் தெரிய, வாடிய மனத்துடன் உடன் கிளம்பினர். நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள். வழியிலேயே தேவர்களை எதிர் கொண்டனர். பயங்கரமான பல ஜீவராசிகள், பூதங்கள், இவையும் எப்பொழுதும் தன் கடமையை செய்யும் பூமியை சார்ந்தவர்கள், அந்தரிக்ஷத்தில் திரண்டு வந்தனர். ராக்ஷஸர்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே நோக்கமாக காலன் கட்டளையிட, போர் தொடர்ந்தது. மேகங்கள் எலும்புத் துண்டுகளாக வர்ஷித்தன. உஷ்ணமாக ரத்தக் கறையுடன் இவை வந்து விழுந்தன. சமுத்திரத்தின் அலைகள் ஓங்கி அடித்தன. பூ44ரா: என்ற மலைகள் அசைந்து ஆடின. மேகம் இடி இடிப்பது போல முழக்கம் செய்து கொண்டு, அட்டகாசமாக சப்தம் செய்து கொண்டு ஆட்டம் போட்டன. பயங்கரமான தோற்றத்துடன் குள்ள நரிகள் ஊளையிட்டன. நெருப்பை உமிழும் முகத்தோடு கழுகுகள் வட்டமிட்டன. மின்மினி பூச்சிகள் வட்டமாக சக்கரம் போல ராக்ஷஸர்களின் தலை மேல் ஆகாயத்தில் கூடின. புறாக்களின் கால்கள் ரத்தத்தில் தோய்த்து எடுத்தது போல இருந்தன. சாரிகா என்ற பக்ஷிகள், துரத்தப் பட்டவை போல பறந்தன. காகங்கள் கரைந்தன. பூனைகள் இரண்டு கால்களால் நடந்தன. இவையனைத்தும் துர்நிமித்தங்கள். இவைகளை அலட்சியம் செய்து ராக்ஷஸர்கள் மேலும் மேலும் முன்னேறிச் சென்றனர். தங்கள் பலம், கர்வம் இவை அவர்களுக்கு அளவற்ற தன்னம்பிக்கையுடன் செல்ல வைத்தது. திரும்பி பார்க்காமல் சென்றனர். ம்ருத்யு பாசம் தான் அவர்களை இழுத்துச் செல்கிறதோ எனும்படி சென்று கொண்டே இருந்தனர். மாலியும், சுமாலியும், மால்யவானும் படைக்குத் தலைமை தாங்கி முன்னால் சென்றனர். யாகங்களில் அக்னி முன் நிற்பது போல நின்றார்கள். தேவதைகள் ப்ரும்மாவை அண்டி இருப்பது போல ராக்ஷஸ படை மால்யவானை தலைவனாகக் கொண்டு அவன் சொல்படி நடந்தன. ஜய கோஷம் செய்து கொண்டு, வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு மால்யவானை முன்னிட்டுக் கொண்டு ராக்ஷஸ வீரர்கள் தேவலோகத்தை சென்றடைந்தனர். இப்படி இவர்கள் கோலாகலமாக வருவதை தேவ தூதர்கள் பார்த்து ஓடிச் சென்று ஸ்ரீமன் நாராயணனிடம் தெரிவித்தனர். அவரும் தயாராக, ஆயுதங்களுடன், ஆயிரம் சூரியன் போன்று  ஒளி வீசிய கவசத்தை அணிந்து கொண்டு, தன் தூணியில் அம்புகளை நிரப்பி முதுகில் சேர்த்து கட்டிக் கொண்டு, வில்லின் நாண் வாள் இவற்றையும் சேகரித்துக் கொண்டு, சங்க சக்ர, கதா சார்ங்க, கட்க என்ற உயர்ந்த ஆயுதங்களுடன், மலை போன்ற சுபர்ணன் எனப்படும் கருடனான வைனதேயன் மேல் ஏறி ராக்ஷஸர்களை வதம் செய்யப் புறப்பட்டார். சுபர்ணனின் முதுகில் பீதாம்பரனான ஹரி, நீலமேக ஸ்யாமளனாக, பொன்மலையின் சிகரத்தில், மின்னலுடன் கூடிய மேகம் வந்து அமர்ந்தாற்போல அமர்ந்திருந்தார். சித்த, தேவரிஷி, மகோரகங்கள் இவர்கள் துதி செய்து பாட, கந்தர்வ, யக்ஷர்களும் சேர்ந்து கொள்ள, வந்து சேர்ந்தார். சுபர்ணனின் இறக்கைகள் அடியில் உள்ள காற்றின் அழுத்தத்தால் மேலே எழும்பி நின்ற பதாகங்களோடு ராக்ஷஸ சைன்யத்தை ஒரு கை பார்த்தார். நீல மலையிலிருந்து கற்கள் உருண்டு கீழே விழுவது போல இருந்தது, அந்த காட்சி. இதன் பின் ராக்ஷஸர்களும் சளைக்காமல் பதில் அடி கொடுத்தனர். தங்களுடைய பாணங்களால் அடித்து பழகியவர்கள். நெருப்பு பரவுவது போல தாக்கும் அஸ்திரங்களை பிரயோகித்தனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 7 (544)  மாலி வத:: (மாலியை வதம் செய்தது)

 

ராக்ஷஸர்கள் ஆரவாரமாக கோஷம் செய்து கொண்டு நாராயண கிரியை அடைந்தனர். நீல மலை மழையில் நனைவது போல, நீல மேக ஸ்யாமளனான விஷ்ணு அவர்கள் வர்ஷித்த பாணங்களின் நடுவே நின்றார். வெட்டுக் கிளிகள், நீர் நிரம்பிய பாத்திகளில் வந்து விழுவது போலவும், ஈ. முதலிய பூச்சிகள் நெருப்பில் விழுவது போலவும், அமுதம் நிரம்பிய கலசத்தை விஷ ஜந்துக்கள் மொய்ப்பது போலவும்,முதலைகள் சமுத்திரத்தை ஆக்ரமிப்பது போலவும்,விபத்து காலங்களில் ஜனங்கள் விபரீதமாக நடந்து கொள்வது போலவும் ராக்ஷஸர்களின் வில்லில் இருந்து  வெளிப்பட்ட பாணங்கள் வஜ்ரம் போன்றும், காற்று மற்றும் மனோ வேகம் போல வேகமாகவும் ஹரியை தாக்கின. வெகு இயல்பாக அவருள் ஐக்கியமாயின. ரதங்களில் வந்தவர்கள் அதே ரதங்களுடனும், யானைகளின் மேல் வந்தவர்கள் யானையுடன், குதிரையுடன் வந்தவர்கள் குதிரையுடன், கால் நடையாக வந்தவர்கள், வானில் வெட்ட  வெளியில் நின்றும், மலை போன்ற சரீரம் உடைய ராக்ஷஸர்கள் ஹரியை தாக்கினர். சக்தி, இஷ்டி, தோமரம், அம்புகள் இவைகள் ஹரியை மூச்சு விட முடியாமல் நிறைத்தன. ப்ராம்மணனை ப்ராணாயாமம் மூச்சு விட முடியாதபடி செய்வது போல செய்தது. புருஷோத்தமன், தன் பாஞ்ச ஜன்யத்தை எடுத்து ஊதி ஒலி எழுப்பினார். ஹரியோ, ராக்ஷஸர்களின் அடி தன் மேல் பட்ட பொழுது, சமுத்திரத்தில் அலைகளால் மீன்கள் அடிக்கப் படுவது போலவே உணர்ந்தார். சார்ங்கம் எனும் வில்லை எடுத்து பதிலடி கொடுத்தார். சங்கத் த்வனியைக் கேட்டு சமுத்திர ராஜா பொங்கி எழுந்தார். சங்க ராஜா என்று சமுத்திரத்தை அழைப்பர். பெரும் ஓசையுடன் காட்டில் சிங்க ராஜா மற்ற மிருகங்களை பயமுறுத்துவது போல இருந்தது அந்த ஓசை. சங்க சப்தம் கேட்டே குதிரைகள் ஸ்தம்பித்து நின்றன. யானைகள் அமைதியாயின. ரதங்களிலிருந்து வீரர்கள் நழுவி கீழே விழுந்தனர். சார்ங்கம் என்ற அந்த வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள், ராக்ஷஸ வீரர்களை துளைத்துக் கொண்டு பூமியில் நெட்டுக் குத்தாக நின்றன. மலை போன்ற சரீரம் உடைய ராக்ஷஸர்கள், அந்த மலைகள் வஜ்ரத்தால் அடிபட்டு விழுந்ததைப் போலவே அடுத்தடுத்து விழுந்தனர். அருவி நீர் போல ரத்தம் பெருக்கெடுத்து ஓடலாயிற்று.  சங்கத்தின் நாதமா, சார்ங்கத்தின் நாண் எழுப்பும் ஓசையா, ராக்ஷஸர்களின் ஓலமா இவைகளுக்கு மேல் விஷ்ணுவின் கோபமா எது என்று சொல்ல முடியாதபடி குழப்பமான சப்தங்கள் கேட்டன. விஷ்ணுவின் கை பாணங்கள், ராக்ஷஸர்களின் தலை. கை வில், ரதம், கொடி இவற்றுடன் சேர்ந்து துண்டித்து விழச் செய்தன. சூரியனின் கிரணங்கள் போலவும், சமுத்திர அலைகள் போலவும், மலை மேல் ஊர்ந்து செல்லும் நாக ராஜாக்கள் போலவும், மேகத்திலிருந்து இடை விடாது பொழியும் மழை தாரை போலவும், சார்ங்கத்திலிருந்து விடுபட்டு வந்த நாராயண சரங்கள், நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக  வெளிப்பட்டன. சரபத்தைக் கண்டு சிங்கம் பயப்படுவது போலவும், சிங்கம் யானைகளையும், யானைகள் புலிகளையும், புலிகள் சிறுத்தையையும், சிறுத்தைகள் நாய்களையும், நாய்கள் பூனைகளையும், பூனைகள் சர்ப்பங்களையும், சர்ப்பங்கள் வெட்டுக் கிளியையும் எப்படி ஓட ஓட விரட்டுமோ, அது போல ப்ரபவிஷ்ணுவான விஷ்ணு செலுத்திய பாணங்கள் ராக்ஷஸர்களை விரட்டி அடித்தது. (ஸாராறாஈ ர் fர்றஉலஒஉஸ ர்நிமால ஸாiட தஒ ஹாவக்ஷெ 8 லஙெஸ ர்நட ஸதரஒநஙரெ தஹாந தஹக்ஷெ லிஒந ) ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் மடிந்து விழவும், சுமாலி தானே போரில் முன் நின்று ஹரியை அடிக்க ஆரம்பித்தான். சூரியனை பனி  மூடுவது போல அவன் சரங்கள் நாராயணனை மறைக்கும்படி செய்தான். இதைக் கண்டு ஆற்றல் மிகுந்த சில ராக்ஷஸர்கள், இழந்த தைரியத்தை திரும்பப் பெற்றனர். யானை தும்பிக்கையை ஆட்டுவது போல தன் கரங்களை இடதும் வலதுமாக ஆட்டிக் கொண்டு, உற்சாகத்துடன் ஆட்டம் போட்டான். மேகம் மின்னலுடன் வந்து விட்டதோ எனும்படி கூச்சலிட்டான். வெறி பிடித்தவன் போல ஆடிய சுமாலியின் காது குண்டலங்கள் பள பளக்க, அவற்றுடன் சேர்த்து அவன் தலையை கொய்து எறிந்தபின், அவனுடைய ரதம், குதிரைகள், இவற்றையும் அடித்து நொறுக்கினார், விஷ்ணு. இதனால் ராக்ஷஸ வீரர்கள் திகைத்தனர். குதிரைகள் இலக்கின்றி சுற்றின. அவர்கள் எஜமானர்கள் இலக்கின்றி இந்திரியங்கள் போன வழியில் திரிந்தது, போல இருந்தது. சுமாலி விழுந்த பின், மாலி வந்தான். க்ரௌஞ்ச பக்ஷிகள் போல அலங்கரிக்கப் பட்ட அவனது பாணங்கள் சரமாரியாக விஷ்ணுவைத் தாக்கின. ஜிதேந்திரியன், அதாவது புலனடக்கியவனை மன வியாதி எதுவும் செய்ய முடியாதது போல, இந்த சரங்கள் விஷ்ணுவை பாதிக்கவில்லை. வில்லின் நாண் ஒலியைக் கேட்டு திரும்பி பார்த்தவர், மாலியைக் கண்டு தன் வில்லை எடுத்து அம்புகளால் அவனை வதம் செய்தார். அவன் குதிரை, ரதம், த்வஜம் இவற்றையும் அடித்து தள்ளிய பின், மாலி கதையை எடுத்துக் கொண்டு வந்தான். மலை குகையிலிருந்து சிங்கம் புறப்பட்டு வருவது போல வந்தான். கதையினால் கருடன் மேல் அமர்ந்திருந்த, அந்தகனே உருவெடுத்து வந்தானோ எனும்படி போர் செய்த விஷ்ணுவின் நெற்றியில் அடித்தான். கருடன் மேல் விழுந்தது அந்த அடி. வேதனையால் கருடன் சற்றுத் தள்ளி சென்றது. கருடன் திரும்பவும், விஷ்ணு பகவான் தான் அடிபட்டு, திரும்புவதாக நினைத்து ராக்ஷஸ சைன்யத்தில் கோலாகலம் எழுந்தது. இதைக் கேட்டு கருடன் பழைய படி திரும்பி நின்று கொள்ளவும், பகவான் சக்கரத்தை எறிந்தார். சூரிய மண்டலம் போல பிரகாசித்த அந்த சக்கரம் மாலியின் தலையை துண்டித்து விழச் செய்யும் கால சக்கரமாயிற்று. முன்பு ஒரு சமயம் ராகுவின் தலை துண்டித்து விழுந்தது போல இந்த தலையும் ரத்தம் தோய்ந்து கீழே விழுந்தது. மாலி இறந்ததை அறிந்து சுமாலியும், மால்யவானும் லங்கையை சென்றடைந்தனர். சைன்யங்களை திருப்பி அழைத்துக் கொண்டு வருத்தத்துடன் நகரின் உள்ளே சென்றனர். தன் பக்ஷங்களை அடித்துக் கோபத்தை காட்டியபடி கருடன், எஞ்சியிருந்த ராக்ஷஸர்களை விரட்டி விட்டான். அங்கஹீனம் ஆன ராக்ஷஸர்கள் கடலில் விழுந்தனர். சிலர் கத்தியின் வீச்சில் காயம் அடைந்தனர்., சிலர், அஸ்திரங்கள் தாக்கி விழுந்தனர். நாராயணன் தன் பாணங்களால் இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களை தாக்கி விழச் செய்தார். குடைகள் இறைந்து கிடந்தன. ஆயுதங்கள் உடைந்து விழுந்தன. உடல் நடுங்கியது. கண்களில் பயம்  வெளிப்படையாகத் தெரிய, யானைக் கூட்டம், சிங்கம் துரத்த ஓடியது போல ஓடி, குட்டி யானைகளும், பெரிய யானைகளும் போகும் இடம் எல்லாம் சேதம் விளைவித்துக் கொண்டு செல்வது போல சென்றனர். காற்றினால் அலைக்கழிக்கப் படும் மேகங்கள் போல விரைந்தனர். சக்கரம் அடித்தும், கதையினால் அடிக்கப் பெற்றும், மலைகள் இரண்டாக பிளந்து விழுவது போல விழுந்தனர். எங்கும் நீல நிற மலையோ எனும்படி மணி ஹார குண்டலங்களோடு பெருத்த சரீரம் உடைய ராக்ஷஸர்களின் கறுத்த உடல் கிடந்தது.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 8 (545) சுமால்யாதி நிக்3ரஹ: (சுமாலி முதலானவர்கள் வதம்)

 

தன் சைன்யம் பத்மனாபனான விஷ்ணுவால் தாக்கப் பட்டு அழிந்த வருத்தத்துடன் தன் இருப்பிடம் சென்ற மால்யவான், கரையைத் தொட்டு திரும்பும் கடல் அலை போல திரும்பவும் போர்க்களமே வந்து சேர்ந்தான். நாராயணா, நீ யுத்த தர்மத்தை மீறி விட்டாய். யுத்தம் செய்ய விருப்பம் இன்றி பயந்து நின்ற என் வீரர்களை அடித்தாய். பராமுகமாக யுத்தம் செய்பவன், அதாவது எதிரி தயாராக நில்லாத சமயம் அடிப்பவன், பாபம் அடைவான். வீர சுவர்கம் போக மாட்டான். சங்க, சக்ர, க3தா44ரனாக நிற்கிறாயே, இதோ நான் தயார் . என் மேல் உன் பாண பிரயோகத்தைக் காட்டு. இந்திர சகோதரனான விஷ்ணு பதிலளித்தார். தேவர்களுக்கு நான் அபயம் அளித்திருக்கிறேன். அவர்கள் உங்களிடம் பயந்து நடுங்குகிறார்கள். ராக்ஷஸர்களை வதைத்து அவர்களை காப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். அதனால் நீங்கள் பாதாளத்தில் ஒளிந்து கொண்டால் கூட நான் வதைப்பேன். சிவந்த தாமரை போன்ற கண்களையுடைய தேவ தேவன் சொன்னதைக் கேட்டு மேலும் ஆத்திரம் கொண்டு, தன் சக்தியினால் அவரது புஜத்தில் அடித்தான். மால்யவானின் கையால், மணியோசையுடன் வீசப் பட்ட சக்தி ஆயுதம் ஹரியின் மார்பில் உரசியது, மேகத்தில் மின்னல் தோன்றியது போல இருந்தது. அந்த சக்தி ஆயுதத்தையே, பிடுங்கி மால்யவானின் மேல் வீசினார். கோவிந்தனின் கையிலிருந்து  வெளிப்பட்ட அந்த ஆயுதம் ஸ்கந்தனின் கையிலிருந்து புறப்பட்டு மலையை பிளந்தது போல ராக்ஷஸனைத் தாக்கியது. ஹாரங்கள் அலங்கரித்த அந்த விசாலமான மார்பில் கிரியின் மேல் வஜ்ரம் பட்டது போல விழுந்தது. இந்த சக்தியினால் பிளக்கப் பட்ட உடல் கீழே விழாமல் முட்கள் நிறைந்த பயங்கரமான சூலம் ஒன்றை எடுத்து எதிர்த்து நின்ற ஹரியின் மார்பை குறி வைத்து வீசினான். தன் முஷ்டியினாலும் அவரை பலமாக குத்தி வில் நழுவி விழச் செய்தான். விஷ்ணுவை அடித்தபின், கருடனையும் தாக்கினான். வைனதேயனான கருடன் மகா கோபம் கொண்டு, இறக்கைகளை அடித்துக் கொண்டு வேகமாக வந்தான். இதில் கிளம்பிய காற்று, பெரும் புயல் காற்றில் உலர்ந்த இலைகள் பறப்பது போல ராக்ஷஸனைத் தூக்கி அடித்தது. மால்யவான் கருடனின் இறைக்கைகள் அடித்து உண்டாக்கிய பெரும் காற்றில் வீசியெறியப் பட்டு லங்கையை வந்தடைந்தான். வெட்கம் அவனைப் பிடுங்கித் தின்றது. இவ்வாறு அந்த ராக்ஷஸர்கள் ஹரியினால் பந்தாடப் பட்டனர். லங்கையில் இருக்கவே முடியாது என்ற நிலையில், பத்னிகள் குழந்தைகளுடன் பாதாளம் சென்று விட்டனர். நீ வதம் செய்த ராவணனை விடவும் இவர்கள் பலம் மிகுந்தவர்கள். சுமாலி, மால்யவான், மாலி இவர்கள் ராவணனின் முன்னோர்கள். சங்க, சக்ர, க3தா4 தா4ரியான நாராயணன் தான், சதுர்புஜனாக வந்து இவர்களை வதம் செய்ய முடிந்தது. அண்டியவர்களை காக்கவே என்று அவ்வப்பொழுது அவதரிக்கிறான். சரணாகத வத்ஸலனான அஜேயன், அவ்யயன் என்று போற்றப் படும் பிரபு வந்து தோன்றுகிறான். இது தான் ராமா, ராக்ஷஸர்கள் வளர்ந்த கதை. ராவணன் பிறந்தது பற்றிச் சொல்கிறேன், கேள். அவன் மகன் சிறப்பையும் கேள். வெகு காலம் ரஸாதளத்தில் ஒளிந்து வாழ்ந்த சுமாலி, விஷ்ணுவிடம் கொண்ட பயத்தால் அங்கேயே இருந்ததால், தன் புத்ர பௌத்ரர்களுடன் குபேரன், லங்கையில் வசிக்கலானான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

 

அத்தியாயம் 9 (546) ராவணாத்யுத்பத்தி (ராவணன் முதலானோர் பிறந்தது)

 

சில காலம் சென்றது. பின் சுமாலி என்ற ராக்ஷஸன் மெதுவாக மர்த்ய லோகம் எனும் இந்த பூலோகத்தில் சஞ்சரிக்க வந்தான். லக்ஷ்மிக்கு இணையான அழகுடைய மகளுடன், நீல மலை ஒன்று, குண்டலங்கள் தரித்து உலாவுவது போல பூலோகத்தில் சஞ்சரித்த பொழுது, புஷ்பகத்தில் குபேரன் செல்வதைக் கண்டான். புலஸ்தியர் மகனும், தன் தந்தையுமான அவரைக் கண்டு, ஆச்சர்யத்துடன் மேலும் கவனமாக நோக்கினான். அமரர்களுக்கு இணையான தேஜசுடன், சுதந்திரமாக, அந்தஸ்து தந்த பெருமை  வெளிப்பட, இருந்த குபரனை நினைத்தபடியே ரஸாதலம் சென்றான். நாம் எப்படி இந்த கஷ்டத்திலிருந்து மீண்டு நல்ல கதியை அடைவோம் என்று யோசிக்கலானான். தன் மகள் கைகயியை பார்த்து புத்ரி, உனக்கு மணம் செய்து கொடுக்கும் வசதி எனக்கு இல்லை. யௌவனம் வீணாக நீ தனியாக நிற்கிறாய். என்னிடம் பயந்து கொண்டு யாருமே உன்னை வரன் கேட்டு வரவில்லை. சாக்ஷாத் லக்ஷ்மி தேவி போல குணமும் அழகும் இருந்தும் மகளே, உன்னை தகுந்த இடத்தில் மணம் முடித்துக் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன். பெண் மகவைப் பெற்ற எல்லோருக்கும் உள்ள கவலை தான் இது. தாய் வீடு, புகுந்த வீடு, தந்தை வழி குலம் மூன்றையும் ஒரு பெண் தன் குணத்தால் நிலை நிறுத்துகிறாள். அதனால் மகளே, நீ பௌலஸ்தியன், ப்ரஜாபதி குலத்தில் உதித்தவனும், விஸ்ரவஸ் எனப்படும் புலஸ்தியனை நீயாக வரிந்து மணம் செய்து கொள். உனக்கு பிறக்கும் குழந்தைகள் மகா தேஜஃஸ்விகளாக பாஸ்கரனுக்கு இணையான கம்பீரத்துடன் இருப்பார்கள். இந்த தனாதிபதி குபேரனுக்கு சற்றும் குறைவில்லாமல் புகழுடன் விளங்குவார்கள். இதைக் கேட்டு, தந்தையிடம் உள்ள மரியாதை காரணமாக, தானே விஸ்ரவஸ் இருக்கும் இடம் நாடிச் சென்றாள். தவம் செய்து கொண்டிருந்த விஸ்ரவஸை அணுகினாள். இச்சமயம் புலஸ்திய குமரனான பிராம்மணன், அக்னி ஹோத்ரம் செய்து கொண்டு, மூன்று அக்னிகளுக்கு மேலாக நான்காவது அக்னி போல விளங்குவதைக் கண்டாள். நேரம், காலம் எதுவும் யோசியாமல், பயங்கரமான அந்த வேளையில், தந்தை சொன்னது ஒன்றே மனதில் மேலோங்கி இருக்க, அவன் காலடியில் சென்று நின்றாள். (ஒரே நாளில் நல்ல வேளை, நல்ல நேரம் என்று குறிப்பிடுவது போல தவிர்க்கப் பட வேண்டிய சில நேரமும் சொல்லப் படுகிறது. அதை தாருணா:: பயங்கரம் என்று சொன்னதாக கொள்ளலாம்). கால் கட்டை விரலால் பூமியில் கோலம் போட்டபடி நின்றவளைப் பார்த்து வியந்த விஸ்ரவஸ் விசாரிக்கலானார். பூர்ண சந்திரன் போன்ற அழகிய முகம் உடைய பெண் திடுமென எதிரில் வந்து நிற்கவும் அவர் திடுக்கிட்டார். பத்ரே, நீ யாருடைய மகள்? இங்கு ஏன் வந்தாய்? என்ன காரியம்? விவரமாக சொல்வாய் என்று கேட்டான். கை கூப்பியபடி அவள் பதில் சொன்னாள். ப்ரும்ம ரிஷியே, நான் தந்தையின் கட்டளைப் படி இங்கு வந்தேன். உன் தவ வலிமையால் மற்றவைகளை உணர்ந்து கொள். என் பெயர் கைகயி என்றாள். முனியும் சற்று நேரம் தியானம் செய்து விஷயங்களைத் தெரிந்து கொண்டபின். பத்ரே, உன் உள்ளக் கிடக்கை என்ன என்று புரிந்து கொண்டேன். மகவை விரும்பி வந்திருக்கிறாய். இந்த நேரம் இங்கு வந்ததால், கேள், எப்படிப்பட்ட புத்திரர்களை பெறப் போகிறாய் என்பதைச் சொல்கிறேன். தாருணா: பயங்கரமான வடிவமும், பயங்கர குணமும், செயலும் உள்ள ராக்ஷஸர்களை பிரஸவிக்கப் போகிறாய். அவள் உடனே, ப்ரபோ, இது போன்ற புத்திரர்கள் எனக்கு வேண்டாம். உன் போன்ற ப்ரும்ம வாதியான புத்திரர்களை அனுக்ரஹிக்க வேண்டும் என்று வேண்டினாள். இதைக் கேட்டு முனியும், கடைசி மகன் என் குலம் விளங்கச் செய்யும் தர்மாத்மாவாக இருப்பான் என்று அருளினார். நாட்கள் கடந்தன. உரிய காலத்தில் அவளும் த3சக்3ரீவனைப் பெற்றெடுத்தாள். பெரிய பற்களும், நீல மலை போன்ற உருவமும் உடையவனாக ராக்ஷஸன் பிறந்தான். தாமிர நிறம் உடைய உதடுகளும், இருபது புஜங்களும், பெரிய வாயும், தலை மயிர் நெருப்பு போல பிரகாசிக்க, மகன் பிறந்தான். அவன் பிறந்த சமயம் நெருப்பை உமிழும் குள்ள நரிகள் திரிந்தன. மாமிச பக்ஷிணியான பறவைகள் இடது புறமாக அப்ரதக்ஷிணமாக பறந்தன. தேவர்கள் ரத்த மழை பொழிந்தனர். சூரியன் பிரகாசம் இன்றி காணப்பட்டது. மேகம் இடித்தது கூட கர்ண  கடூரமாக இருந்தது. பெரிய பெரிய மின்மினி பூச்சிகள் பூமியில் விழுந்தன. (உல்கா::-நக்ஷத்திர துண்டுகள்) பூமி ஆடியது. பெரும் சுழற் காற்று வீசியது. வற்றாத சமுத்திரமும் வற்றியதோ எனும்படி இருந்தது. இந்த குழந்தைக்கு தந்தை பெயர் வைத்தார். தகுதியில் ப்ரும்மாவுக்கு இணையான முனிவர், தசக்ரீவன்- பத்து தலைகளுடன் பிறந்தவன் தசக்ரீவன் என்றே அழைக்கப் படட்டும். இவனுக்கு அடுத்து பிறந்தவன் கும்பகர்ணன். மகா பலசாலியாக இருந்தான். ஏதோ காரணம் தெரியவில்லை. கும்பகர்ணன் என்று பெயர் வைத்தார். இதன் பின் விகாரமான முகத்துடன் சூர்ப்பணகா பிறந்தாள். கடைசியில் கைகயிக்கு, தர்மாத்மாவான விபீஷணன் பிறந்தான். இவன் பிறந்த பொழுது, புஷ்ப வர்ஷம் உண்டாயிற்று. ஆகாயத்தில் தேவர்கள் துந்துபி முழங்கி கொண்டாடினார்கள். சாது, சாது என்று கோஷமும் ஆகாயத்தை நிறைத்தது. இருவரும் அரண்யத்தில் வளர்ந்தனர். இருவரில் தசக்ரீவன் சுபாவமாகவே க்ரூரனாக இருந்தான். கும்பகர்ணன் மதம் பிடித்தவன் போல உலவினான். தர்ம வழியில் சென்ற மகரிஷிகளை தின்று தீர்த்தான். மூவுலகிலும் தேடித் தேடி மகரிஷிகளை தின்றும் திருப்தியின்றி அலைந்தான், இதில் விபீஷணன் தர்மாத்மாவாக தினமும் தர்மத்தை அனுசரிப்பவனாக, ஜிதேந்திரியனாக, தன் அத்யயனம், முதலியவற்றில் ஈ.டுபாட்டுடன் வசித்து வந்தான். சில காலம் சென்றது. ஒரு சமயம் வைஸ்ரவனன் (குபேரன்) தன் புஷ்பகத்தில் ஏறி தந்தையைக் காண வந்தான். தனாதிகாரியான அவன் தேஜஸைப் பார்த்து கைகயி தசக்ரீவனிடம் வந்து முறையிட்டாள். புத்திரனே, வைஸ்ரவனை பார். அவன் தேஜஸ் எப்படி இருக்கிறது. தன் தேக காந்தியாலேயே ஒளிச் சுடராக இருக்கிறான், பார். இருவரும் சகோதரர்கள். சமமானவர்கள், இருந்தும் உன் நிலையைப் பார். தசக்ரீவா, நீயும் அவனைப் போல மேன்மையடைய வேண்டும். முயற்சி செய். அளவில்லாத பலம் உடையவன் நீ. உன்னால் முடியாததா? நீ என் மகன். வைஸ்ரவனனுக்கு சமமானவன் என்று நாம் பெருமைப் படும் படி இருக்கக் கூடாதா? தாயின் இந்த வார்த்தையைக் கேட்டு தசக்ரீவன், கடும் கோபம் கொண்டான். பிரதிக்ஞை செய்தான். தாயே, நான் உனக்கு சத்யம் செய்து தருகிறேன். என் சகோதரன் குபேரனுக்கு சமமாகவோ, அதிகமாகவோ ஆவேன். என் ஆற்றலில் அவனை மிஞ்சுவேன். இந்த மகா வருத்தம் வேண்டாம். கவலையை விடு. இதே கோபத்துடன் தன் உடன் பிறந்த கும்பகர்ணனுடன், தவத்தில் மனதை செலுத்தி கடுமையாக தவம் செய்தான். தவம் செய்து, நான் விரும்பிய வரங்களைப் பெறுவேன் என்று கடும் விரதங்களோடு கோகர்ண ஆசிரமத்தை வந்து சேர்ந்தான். ராக்ஷஸன், தன் உடன் பிறந்த சகோதரனுடன் தவம் செய்தான். தன்னிகர் இல்லாத பலசாலி, ஆற்றல் மிகுந்தவன் தவம் செய்ததும் மிகவும் உக்ரமாக செய்தான். பிதாமகரான ப்ரும்மாவை சந்தோஷம் அடையச் செய்தான். அவரும் மகிழ்ந்து வெற்றியைத் தரும் பல வரங்களைத் தந்தார்.

 

(இதுவரை வஎல்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 10 (547) ராவணாதி வர தானம் (ராவணன் முதலானோருக்கு வரம் தருதல்)

 

ராமர் ஆச்சர்யத்துடன் முனிவரை வினவினார். இது எப்படி சாத்தியம்? மகா பலசாலிகள், எப்படி காட்டில் இருந்து தவம் செய்ய முடிந்தது? அகஸ்தியரும் ராமனது ஆர்வத்தை புரிந்து கொண்டு மேலும் உற்சாகமாக சொன்னார். தர்ம மார்கத்தை நன்றாக தெரிந்து கொண்டு தான் ஆரம்பித்தார்கள். கும்பகர்ணன் விதி முறைகளை கேட்டறிந்து கொண்டான். அதன் படி வெய்யில் காலத்தில் பஞ்சாக்னி மத்தியிலும், மழை நாட்களில் வீராசனம் போட்டு அமர்ந்து கொட்டும் மழையில் அசையாது நின்றான். குளிர் காலத்தில் நீருக்குள் நின்று தவம் செய்தான். இது போல பல வருஷங்கள் தவம் செய்தனர். தர்மாத்மாவான விபீஷணன் ஐயாயிரம் ஆண்டுகள் ஒரு காலில் நின்று, தவம் செய்தான். இவன் விரதம் முடியும் காலத்தில் அப்சரப் பெண்கள் நடனமாடினர். தேவர்கள் மகிழ்ந்து பூமாரி பொழிந்தனர். இதன் பின் ஐயாயிரம் வருஷங்கள் சூரியனை உபாசித்தான். தலைக்கு மேல் கைகளைத் தூக்கியபடி, நின்று தன் கொள்கையில் திடமாக இருந்து தவம் செய்தான். இவ்வாறு விபீஷணன் தவம் செய்து ஸ்வர்கத்தில் இருந்த தேவர்களை மகிழ்வித்தான், பத்தாயிரம் வருஷங்கள் ஓடி விட்டன. இந்த பத்தாயிரம் வருஷங்களும் ஆகாரம் இன்றி, தசானனன் தவம் செய்து, பத்தாயிர வருஷ முடிவில், தன் தலையையே அக்னியில் ஹோமம் செய்து விட்டான். இப்படி ஒன்பதாயிரம் வருஷங்களில் அவனது ஒன்பது தலைகள் அக்னியில் சேர்ந்து விட்டன. பத்தாவது முறை, மீதியிருந்த ஒரு தலையையும் வெட்டி அக்னியில் ஹோமம் செய்ய முற்பட்ட பொழுது, ப்ரும்மா அங்கு வந்து சேர்ந்தார். பிதாமகர் மிகவும் திருப்தியுடன் மற்ற தேவர்கள் கூட்டத்தோடு, அங்கு தோன்றினார். தசக்ரீவா, உன் தவத்தால் மகிழ்ந்தேன். சீக்கிரமாக வேண்டும் வரங்களைக் கேள். தர்மம் அறிந்தவனே, நீ பட்ட சிரமம் வீணாகக் கூடாது. வேண்டும் என்பதைக் கேள். இதைக் கேட்டு தசக்ரீவன் மனதுள் மிகவும் மகிழ்ந்தான், மகிழ்ச்சியால் நாத்தழ தழக்க, ப்ரும்மாவை வேண்டினான். ப்ரும்மாவே, பிராணிகளுக்கு மரணத்தையன்றி வேறு யாரிடம் பயம்? அதனால் அமரத் தன்மையை வேண்டுகிறேன். எனக்கு மரணமே வரக் கூடாது. இதைக் கேட்டு ப்ரும்மா அமரத்வம் அதாவது மரணமின்றி இருத்தல் என்பது நடக்க சாத்யமே இல்லை. அதனால் வேறு ஏதாவது கேள், என்றார். ராமா, இப்படி ப்ரும்மா பதில் சொன்னவுடன் தசக்ரீவன் அஞ்சலி செய்தவனாக வினயத்துடன் வேண்டினான். சுபர்ண, நாக யக்ஷர்களோ, தைத்ய, தானவ, ராக்ஷஸர்களோ, தேவதைகளோ என்னைக் கொல்லக் கூடாது. மற்ற பிராணிகளில் எனக்கு பயம் கவலை இல்லை. மற்ற மனிதர்கள் எனக்கு அற்ப பதருக்கு சமமானவர்கள். அவர்களைப் போன்ற மற்ற அல்ப பிராணிகளிடம் எனக்கு பயம் இல்லை, எனவும் ப்ரும்மாவும் அப்படியே என்று வரம் அளித்தார். இதைத் தவிர, ப்ரும்மா தானாகவும் ஒரு வரம் அளித்தார். நீ அக்னியில் ஹோமம் செய்த உன் தலைகள் வந்து சேரும் என்றும், விரும்பியபடி உருவம் எடுத்துக் கொள்ளும் சக்தியையும் கொடுத்தார். மகிழ்ச்சியுடன் இரு என்று சொல்லி வாழ்த்தினார். இதன் பின் ராவணன் தன் தலைகளையும் திரும்பப் பெற்றான், எளிதில் பெற முடியாத மற்ற வரங்களையும் பெற்றதால் மகிழ்ந்தான். இதன் பின் விபீஷணனைப் பார்த்து ப்ரும்மா, விபீஷணா, நீ என்ன வரம் பெற விரும்புகிறாய்? குழந்தாய், தர்மத்தின் வழி நிற்பவன் நீ, உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். வேண்டும் வரங்களைக் கேள், தவ நெறிகளை சற்றும் தவறாது செய்து உடல் வலிமை கூடியவனாக ஆகி விட்டாய் என்று, சொல்லவும், விபீஷணன், வணக்கத்துடன் கை கூப்பியபடி வேண்டினான். ப4கவன், நான் த4ன்யனானேன். சந்திரன் ஒளிக் கிரணங்களுடன் கூடி இருப்பது போல சத்குணங்கள் சூழ்ந்து நிற்க, சுவ்ரதனாக, நல்ல தவ வலிமையடைய தாங்களே முன் வந்து வரம் தருவதாக சொன்னதே என் பாக்கியம். ஐயனே, நான் கேட்பது இது தான். என்ன கடுமையான ஆபத்து வந்தாலும், என் மனம், புத்தி, தர்மத்தை விட்டு விலகக் கூடாது. நான் இதுவரை கற்றுக் கொள்ளாத ப்ரும்மாஸ்திரம் எனக்கு கிடைக்க வேண்டும். என் மனம் செல்லும் இடமெல்லாம் எந்த எந்த ஆசிரமம் ஆனாலும் அங்கு தர்மம் நிலவட்டும். அந்த திக்கில் உள்ளவர்கள் தர்மத்தில் ஈ.டுபாடு உள்ளவர்களாக திகழட்டும். இது தான் நான் வேண்டும் வரம், தர்மத்திற்கு ஜயம் உண்டாகட்டும் என்றான். ப்ரும்மா இதைக் கேட்டு அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குழந்தாய், உன் விருப்பப்படியே ஆகட்டும். உன் நல்ல குணம் எனக்கு மகிழ்ச்சிய ளிக்கிறது. ராக்ஷஸ குலத்தில் பிறந்தும், உன் புத்தி அதர்மத்தில் செல்லவில்லை. உனக்கு அமரத்வம் தருகிறேன் என்று வரம் அளித்து விட்டு, கும்பகர்ணன் பக்கம் திரும்பினார். உடனே தேவர்கள் அவரிடம் வந்து, கும்பகர்ணனுக்கு வரம் எதுவும் தராதீர்கள். துஷ்டன், இவன் இப்பொழுதே மூவுலகையும் துன்புறுத்தி வருகிறான். பலரை இவன் தின்றே தீர்த்து விட்டான். ஒரு சமயம் நந்தவனத்தில் பத்து அப்ஸர ஸ்திரீகளை, மகேந்திரனை பூஜைசெய்து கொண்டிருந்த பத்து ரிஷிகளை, மற்றும் கணக்கில்லாத மனிதர்களை இவன் விழுங்கி விட்டான்.  எந்த வித வர பலமோ, உதவியோ இன்றியே இவன் இப்படி செய்து வருகிறான். வரமும் கிடைத்து விட்டால் மூவுலகையும் இவன் அழித்து விடுவான். வரம் தருவதாக தந்து இவனை மோகத்தில் ஆழ்த்தி விடுங்கள். வினயமோ, வணங்கும் வழக்கமோ இவனுக்கு கிடையாது. உலக நன்மைக்காக இவனை சற்றுத் தட்டி அடக்கி வையுங்கள் என்று வேண்டினர். ப்ரும்மா இதைக் கேட்டு சற்று சிந்தனை வயப் பட்டார். அருகில் தேவி சரஸ்வதி நின்றிருந்தாள். அவள் சொன்னாள். தேவா, என்ன சிந்தனை. நான் ஏதாவது செய்ய முடியுமானால் சொல்லுங்கள் என்றாள். சரஸ்வதியைக் கண்டதும் ப்ரும்மாவின் முகம் மலர்ந்தது. ஒரு தீர்வு கண்ட மகிழ்ச்சியில், வாணீ, நீ ராக்ஷஸனான கும்பகர்ணனின் வாக்கில் இரு. தேவர்களுக்கு உதவி செய் என்றார். கும்பகர்ணனும், தேவ, தேவ, பல வருஷங்கள் தூங்க விரும்புகிறேன் என்றான். உடனே அப்படியே ஆகட்டும் என்று சொல்லி ப்ரும்மா மறைந்து விட்டார். தேவி சரஸ்வதியும் உடன் சென்று விட்டாள். அனைவரும் சென்ற பின் ராக்ஷஸனுக்கு சுய புத்தி உறைத்தது.  மிகவும் துக்கமடைந்தான். துஷ்டனானாலும், புத்திசாலியானதால் உடனே புரிந்து கொண்டான். இது என்ன? என் வாயிலிருந்து இப்படி ஒரு சொல் வெளி வந்தது எப்படி சாத்தியம்? தேவர்கள் தான் ஏதோ செய்து என்னை மோகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள். என் சகோதரர்கள் நல்ல வரங்கள் பெற்று தேஜஸுடன் விளங்கும் பொழுது என்னை இப்படி வீழ்த்தி விட்டார்கள் என்று உணர்ந்தான். இதன் பின் ஸ்லேஷ்மாதக வனம் என்ற இடம் சென்று சுகமாக வசித்தனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 11 (548)  ராவண லங்கா ப்ராப்தி: (ராவணனுக்கு லங்கை கிடைத்தல்)

 

இந்த ராக்ஷஸர்கள் வரங்கள் பெற்று ஆற்றல் மிகுந்தவர்களாக ஆனதைக் கேள்விப் பட்ட சுமாலியின் பயம் விலகியது. ரஸாதலத்திலிருந்து பரிவாரங்கள் சூழ வெளி வந்தான். மாரீசனும், ப்ரஹ்லாதனும், விரூபாக்ஷனும், மகோதரனும் இந்த ராக்ஷஸனுக்கு மந்திரிகளாக வந்து அமர்ந்தனர். சுமாலி இந்த மந்திரிகளோடு தசக்ரீவனை அணைத்துக் கொண்டு ஆசிர்வதித்துக் கொண்டாடினான். குழந்தாய், அதிர்ஷ்டவசமாக உன்னால் என் மனோரதம் பூர்த்தியாயிற்று. நீ த்ரிபுவன ஸ்ரேஷ்டன் என்று போற்றப் படும் ப்ரும்மாவிடமிருந்து வரங்கள் பெற்றிருக்கிறாய். என்ன காரணத்தினால் நாங்கள் லங்கையை விட்டு ரஸாதலம் சென்றோமோ அந்த பயம் நீங்கியது. விஷ்ணுவிடம் எங்களுக்கு இருந்த பெரும் பயம் விலகியது. அடிக்கடி இவரிடம் பயந்து தங்கள் வீடுகளை விட்டு நாங்கள் ரஸாதலம் ஓடியிருக்கிறோம். எல்லோருமாக ஓடுவோம். இந்த லங்கை நமதே. ராக்ஷஸர்களுக்கு வசிக்க ஏற்றது. உன் சகோதரன் மதியினால் நாங்கள் இங்கு குடியேற்றப்பட்டோம்.  சாம, தான, பேத, தண்டம் என்ற உபாயங்களால் இதை திரும்பி பெறவும் முயற்சிக்கலாம். குழந்தாய், நீ தான் சந்தேகம் இல்லாமல் லங்கேஸ்வரன். மூழ்கி கிடந்த ராக்ஷஸ குலம் உன்னால் தூக்கி நிறுத்தப் பட்டது. மகாபலசாலியே, எங்கள் யாவருக்கும் நீயே தலைவனாக இருப்பாய். இப்படிச் சொல்லும் தாய் வழி பாட்டனாரைப் பார்த்து தசக்ரீவன் தனாதிபதியான குபேரனை நமக்கு முன்னோடியாக நீங்கள் சொல்வது சரியல்ல. என்று ஆரம்பித்தான். எதிரில் நின்று பேசும் தசக்ரீவனைப் பார்த்து அவன் உள்ளக் கிடக்கையை புரிந்து கொண்ட பெரியவர் உடனே எதுவும் மறு மொழி சொல்லவில்லை. ஆனால், பின் ஒரு சமயம், வஸந்த காலத்தில் இதே வாக்கியத்தை ப்ரஹஸ்தனிடம் சொன்னவுடன், ப்ரஹஸ்தன் காரணங்களோடு விவரமாக பதில் சொன்னார். தசக்ரீவா, நீ இப்படி சொல்வது சரியல்ல. சூரர்களாக இருப்பவர்கள் உடன் பிறந்தவர்கள் என்று பார்ப்பது இல்லை தான். இருந்தும் நான் சொல்வதை முழுவதுமாகக் கேள். திதி அதிதி இருவரும் சகோதரிகள். இருவரும் கஸ்யபர் என்ற ப்ரஜாபதியின் மனைவிகளாக ஆனார்கள். அதிதி தேவர்களைப் பெற்றாள். திதியும் அவரைப் போலவே தேஜஸுடன் பிள்ளைகளைப் பெற்றாள். இவர்கள் தைத்யர்கள்-திதி புத்திரர்கள்- இவர்களுக்கு பூ லோகம், சமுத்திரத்தை எல்லையாகக் கொண்ட பூமி அதன் மலைகள், வனங்கள் உட்பட உரிமையாயிற்று. இவர்களும் மிகுந்த ஆற்றலுடனும், சக்தியுடனும் இந்த பூமியில் வசித்து வந்தனர். ஒரு சமயம் விஷ்ணு, இவர்களைப் போரில் தோற்கடித்து இந்த தேசம் முழுவதும் தேவர்கள் வசமாக்கினார். தனி ஒருவனாக நீ இதை மாற்றியமைக்க முடியாது. நான் சொல்வதைக் கேள் என்றார்.  சற்று யோசித்து விட்டு ராவணனும் அந்த யோஜனையை ஏற்றுக் கொண்டான். சில ராக்ஷஸர்களுடன் த்ரிகூட மலையில் நின்று கொண்டு, ப்ரஹஸ்தனை தூதனாக அனுப்பி வைத்தான். ப்ரஹஸ்தன், அழகாக பேசக் கூடியவர், சரிவர காரியத்தை முடித்துக் கொண்டு வரக் கூடியவர் என்ற நம்பிக்கை தோன்றி இருந்தது. ப்ரஹஸ்தா, சீக்கிரம் போ. லங்கா ராஜனிடம் சொல். நான் சொன்னதாக சமாதானமாகவே இதைச் சொல். இந்த லங்கா புரி ராக்ஷஸர்கள் வசிக்க என்று கட்டப்பட்டது. இதில் நீ நுழைந்து கொண்டு இருக்கிறாய். தவறு என்று சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது எங்கள் லங்கையை நீயாக திருப்பித் தருகிறாயா? அது தான் தர்மமும் உசிதமும் ஆன செயல். அப்படித் தந்தால் எங்களுக்கு திருப்தியாக இருக்கும். தர்மத்தை எண்ணி எங்களிடம் ஒப்படைத்து விடு இந்த செய்தியை குபேரனிடம் சொல்ல ப்ரஹஸ்தன், அந்த லங்கா நகரினுள் நுழைந்தார். வித்த பாலன்- செல்வத்தை பாதுகாக்கும் அதிகாரியான குபேரனைப் பார்த்து சொல்ல ஆரம்பித்தார். மஹாபா3ஹோ, உன் சகோதரன் த3சக்3ரீவன் என்னை அனுப்பியிருக்கிறான். சஸ்திரங்களை எடுத்து போர் புரியும் வீரர்களுள் சிறந்தவனே, நீ சாஸ்திரமும் அறிந்தவன். தசானனன் சொன்னதை அப்படியே நான் சொல்கிறேன். கேட்டு விட்டு உன் முடிவைச் சொல். இந்த அழகிய நகரம் முன் காலத்தில் சுமாலி முதலானவர்கள் ஆண்டு அனுபவித்த இடம். அதனால் விஸ்ரவஸ் மகனே, இப்பொழுது வினயமாக உன்னைக் வேண்டிக் கொள்கின்றனர். அவர்களுடைய நகரை திருப்பிக் கொடுத்து விடு. குழந்தாய், அவர்கள் யாசிக்கும் பொழுது கொடுத்து விடுவது தான் விவேகமாகும்.  இவ்வாறு ப்ரஹஸ்தன் சொல்லவும், குபேரன் பெரியவரே, இந்த நகரம் சூன்யமாக, ராக்ஷஸர்களோ, வேறு யாருமே இன்றி எனக்குத் தரப் பட்டது. இங்கு யக்ஷர்களையும், தானவர்களையும் குடியேற்றி, இந்த நகரை செம்மைப் படுத்தி வைத்திருக்கிறேன். தசக்ரீவனிடம் போய் சொல்யுங்கள். என்னுடைய ராஜ்யமும், நகரமும் எனக்கு உள்ளதைப் போலவே உனக்கும் உரிமை உண்டு. அனுபவித்து, ஆண்டு மகிழ்ந்திரு. எந்த வித இடையூறும் இன்றி ராஜ்யத்தை பிரிக்காமல் முழுவதுமாக சேர்ந்தே இருப்போம். இஷ்டம் போல் இந்த நகரத்தில் வந்து வசி. என்று சொல்லி விட்டு குபேரன் தன் தந்தையிடம் சென்று, ராவணன் ப்ரஹஸ்தன் மூலம் சொல்லியனுப்பிய செய்தியைச் சொன்னான். தந்தையே, இந்த ராவணன் ஒரு தூதனை அனுப்பியிருக்கிறான். இந்த நகரம் முன்பு ராக்ஷஸர்களின் வாசஸ்தலமாக இருந்தது இப்பொழுது திருப்பி கொடுத்து விடு என்கிறான். நான் செய்ய வேண்டியது என்ன நீங்களே சொல்லுங்கள், என்றான். விஸ்ரவஸ் என்ற அந்த ப்ரும்ம ரிஷி, வணங்கி நின்ற மகனைப் பார்த்து, தசக்ரீவனுக்கு நானும் நிறைய சொல்லி பார்த்து விட்டேன். பயமுறுத்தியும் பயனில்லை. பலசாலி. துர்மதி. யார் சொல்லியும் கேட்க மாட்டான். இவனுடன் மோதி பயனில்லை. கைலாஸ மலைக்கு நீ சென்று விடு. உன் பரிவாரங்களை, வேலையாட்களுடன் அங்கு குடியேற்றி வை. அங்கு அழகிய மந்தாகினி நதி இருக்கிறது. நதிகளுள் சிறந்த நதி. சூரிய ஒளிக்கு இணையான பொன் நிற தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் நீர் நிலைகளுடையது. வாசனை மிகுந்த குமுத மலர்களும், உத்பல மலர்களும் நிறைந்தது. அங்கு தேவர்களும் கந்தர்வர்களும், அப்ஸர, உரக, கின்னரர்களும் விளையாட என்றே வருவார்கள். எப்பொழுதும் சந்தோஷமாக பொழுதை கழிக்க இந்த இடத்தை தான் எடுத்துக் கொள்வர். இந்த ராக்ஷஸனான ராவணனுடன் விரோதம் பாராட்டி, உனக்கு வீண் சிரமம் தான் மிஞ்சும். இவனுடன் மோதாதே. இவனுக்கு கிடைத்துள்ள வரங்களைப் பற்றி உனக்குத் தெரியும். வரங்கள் கிடைக்கப் பெற்றதால், கர்வம் தலைக்கேற துர்மதி, யாரை மதிக்க வேண்டும், யாரை வணங்க வேண்டும் என்ற சாதாரண புத்தி கூட மழுங்கி போனவனாக, தூர்த்தனாக இருக்கிறான். என்னிடம் சாபம் பெற்று, பயங்கரமான உருவை அடைந்தும், அவன் கர்வம் குறையவில்லை. இவ்வாறு தந்தை சொன்னதைக் கேட்டு குபேரன், அவரிடம், உள்ள கௌரவத்தால், உடனே தன் மனைவி, மக்கள், மந்திரிகள், வாகனங்கள் இவற்றுடன் நகரை விட்டு  வெளியேறி விட்டான். லங்கா நகரை சூன்யமாக விட்டுச் சென்று விட்டான். ப்ரஹஸ்தன் திரும்பி வந்து தசக்ரீவனைப் பார்த்து விஷயத்தை சொன்னார். குபேரன் லங்கா நகரை விட்டு விலகி விட்டான். நீ உன் மந்திரிகள், சகோதரர்களுடன் லங்கையை ஏற்றுக் கொண்டு எங்கள் யாவரையும் பரிபாலித்து வரலாம். எந்த வித தடையுமில்லை. லங்கா நகரம் சூன்யமாக கிடக்கிறது. த4னதன் பயந்து ஓடி விட்டான் என்றார். அழகிய வீதிகளையும், நன்கு பரிபாலிக்கப் பட்டு சிறந்து விளங்கிய லங்கா நகரம் எந்த வித எதிர்ப்புமின்றி கைக்கு எட்டவும், தசக்ரீவன், உடனே தன் சகோதர்களுடனும், சேனை, குற்றேவல் செய்யும் வேலைக்காரர்களுடனும் அதை ஆக்ரமித்துக் கொண்டான். சுவர்கத்தை இந்திரன் அடைந்தது போல, தானும் இந்த அழகிய நகரை கைப்பற்றிய பெருமையோடு அரியாசனத்தில் அமர்ந்தான். மற்ற ராக்ஷஸர்கள் அவனுக்கு முடி சூட்டி மகிழ்ந்தனர். நீல மேகம் போன்ற உடலுடைய பல ராக்ஷஸர்களை அங்கு குடியமர்த்தினான். தனாதிபதியான குபேரன் தந்தை சொன்னதை ஏற்று, சந்திரனுக்கு சமமாக விமலமான கைலாச மலையில் தன் வாசஸ்தலத்தை நிறுவிக் கொண்டான். புரந்தரன் அமராவதியில் இருப்பது போலவே, தன் நகரையும் அழகிய வேலைப்பாடமைந்த பவனங்கள் நிறைய கட்டி வைத்து மகிழ்ச்சியுடன் இருந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதினொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 12 (549)  ராவணாதி விவாக: (ராவணன் முதலானோர் திருமணம்)

 

சகோதரர்கள் சேர்ந்து, ராவணனை ராக்ஷஸேந்திரனாக அபிஷேகம் செய்து வைத்தனர். அடுத்ததாக, தசக்ரீவன், தன் சகோதரியின் திருமணம் குறித்து ஏற்பாடுகள் செய்ய முனைந்தான். வித்யுத்ஜிஹ்வன் என்ற காலக குலத்தில் வந்த தானவ ராஜனுக்கு தன் சகோதரி சூர்ப்பணகையை மணம் செய்து கொடுத்தான். ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்ற பொழுது மயன் என்பவரைச் சந்தித்தான். திதி புத்திரன் இவர். ஒரு கன்னிப் பெண்னுடன், தனியாக காட்டில் இருந்தவரைப் பார்த்து விசாரித்தான். இந்த பெண் தவிர யாரும் உங்களுக்கு ஆதரவு இல்லையா? ஏன் காட்டில் தனியாக இருக்கிறீர்கள் என்று வினவினான். மயனும் விவரமாக சொன்னார். ஹேமா என்ற அப்சர ஸ்திரீ பற்றி கேள்வி பட்டிருப்பாய். இந்திரனுக்கு பௌலோமி என்ற சசி போல எனக்கு இவள் மனைவியாக வாய்த்தாள். பத்தாயிர வருஷம் அவளுடன் இனிமையாக காலம் கழித்தேன். ஏதோ தேவ காரியம் என்று போனவள் பதினான்கு வருஷம் ஓடி விட்டது. அவளுக்காக தங்க மயமாக, ஹேம மயமாக ஊரை அலங்கரித்து வைத்திருக்கிறேன். மாயையால் அமைத்த ஊர். மனைவியின் பிரிவால், தனிமையில் தவித்த நான், மன ஆறுதலுக்காக மகளையும் அழைத்துக் கொண்டு வனம் வந்தேன். இவள் எங்கள் மகள். பெண்ணைப் பெற்றவன் கவலை, இவளுக்கு சரியான வரன் தேட வேண்டுமே என்று அலைந்து கொண்டிருக்கிறேன். நீ தான் இவளுக்கு சரியான வரன் – நீ கிடைத்து விட்டாய். பெண் மகவை பெற்றவருக்கு கவலையும் உடன் வந்து விடுகிறது. பெண் இரண்டு குடும்பத்தையும் சந்தேகத்தில் ஆழ்த்தி வைத்து விளையாடுகிறாள். எனக்கு என் மனைவியிடம் இரண்டு மகன்களும் உண்டு. ஒருவன் மாயாவி. துந்துபி இரண்டாமவன். என் கதையை சொல்லி விட்டேன். நான் இப்பொழுது தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? பணிவுடன் தசக்ரீவனும் பதில் உரைத்தான். நான் பௌலஸ்த்யனுடைய மகன். (புலஸ்தியனுடைய மகன் பௌலஸ்தியன், அவன் மகன், புலஸ்தியன் பேரன்). தசக்ரீவன் என்று பெயர். விஸ்ரவஸ முனிவருக்கு மூன்றாவது மகன் ப்ராம்மணனாக இருந்தான். அவர் மகன் நான். எனவும் மயன் மகிழ்ந்தான். மகரிஷி புத்திரன் என்பதால் எல்லையற்ற ஆனந்தத்துடன் தன் மகளை மணம் செய்து கொடுக்க இசைந்தான். தசக்ரீவன் கையில் தன் மகள் கையை வைத்து, தைத்ய அரசனான மயன், ராக்ஷஸ ராஜனிடம் இதோ, என் மகள், எனக்கும் ஹேமா என்ற அப்ஸர ஸ்த்ரீக்கும் பிறந்தவள், மந்தோதரி என்ற பெயருடைய என் மகளான கன்னிகையை பத்னியாக ஏற்றுக் கொள். தசக்ரீவனும் உடனே சரி என்று ஏற்றுக் கொண்டான். அக்னியை மூட்டி அந்த இடத்திலேயே மந்தோதரியை பாணிக்ரஹணம் செய்து கொண்டான். அவன் தான் பெற்ற சாபத்தை சொல்லாமல் விட்டான். பாட்டனார் குலப் பெருமையை எண்ணி மயன் மகிழ்ச்சியுடன் மகளை தாரை வார்த்துக் கொடுத்தான். அளவிட முடியாத பெருமை வாய்ந்த சக்தி என்ற ஆயுதத்தையும் கொடுத்தான். இந்த சக்தியை, கடுமையான தவ விரதங்கள் அனுசரித்து கிடைக்கப் பெற்றிருந்தான், இதைக் கொண்டு தான் இராவணன் லக்ஷ்மணனை அடித்தான், நினைவு இருக்கிறதா? இப்படியாக மனைவியுடன் லங்கைக்கு வந்த தசக்ரீவன், அதோடு நிற்கவில்லை. தன் சகோதரர்களுக்கும் பத்னிகளைத் தேடி, விரோசனனுடைய மகள் வயிற்று பேத்தியான வஜ்ர ஜ்வாலா என்ற பெயருடைய பெண்ணை தன் சகோதரன் கும்பகர்ணனுக்கு மணமுடித்தான். சைலூஷன் என்ற கந்தர்வனின் மகளை, சரமா என்பவளை விபீஷணன் மணந்தான். (குளத்தின் கரையில் உண்டான மானஸ புத்ரி. ஜலம் வரும் காலத்தில் அந்த குளம் நிறைந்து பெருகலாயிற்று. தாய் மகளைப் பார்த்து ஸ்னேகத்துடன் சரோ மா வர்தஸ்வ- குளத்தில் நீர் அதிகம் பெருகும்படி செய்யாதே என்று கடிந்து கொண்டதால், சர மா – என்று பெயர் பெற்றாள்.) இப்படி மணம் செய்து கொண்ட பத்னிகளுடன் ராக்ஷஸர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். தங்கள் தங்கள் பத்னிகளிடம் கந்தர்வர்கள் போல உல்லாசமாக நாட்களைக் கழித்தனர். காலம் செல்லவும், மந்தோதரி மேகனாதன் என்ற மகனைப் பெற்றாள். அவனைத் தான் நீங்கள் இந்திரஜித் என்று அழைக்கிறீர்கள். பிறந்த உடனே இந்த ராவணன் மகன், மேகம் இடி இடிப்பது போல உரத்த குரலில் அழுதான். அந்த ஓசையில் லங்கா நகரமே ஸ்தம்பித்து விட்டது. அதனால் தந்தை மேக நாதன் என்று பெயரிட்டான். இவன் ராவண க்ருஹத்தில் உயர்ந்த ஸ்திரீகளால் போற்றி வளர்க்கப் பட்டான். கட்டையில் மறைந்து நிற்கும் அக்னியை வளர்ப்பது போல வளர்த்தனர். தாய் தந்தையருக்கு எல்லையில்லாத ஆனந்தத்தை தருபவனாக வளர்ந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

 

அத்தியாயம் 13 (550)  த4னத3 தூ3த ஹனனம் (குபேரனுடைய தூதனை வதம் செய்தல்)

 

இதன் பின், ப்ரும்மாவின் வரம் காரணமாக கும்பகர்ணனுக்கு அளவில்லாத தூக்கம் வரலாயிற்று. அரசனான சகோதரனைப் பார்த்து, ராஜன், உறக்கம் என்னை வாட்டுகிறது. எனக்கு தகுந்தாற்போல் வீட்டை நிர்மாணித்து தா என்று வேண்டினான். உடனே அரசனும், விஸ்வகர்மாவுக்கு இணையான சில்பிகளை நியமித்து கைலாசம் போல ஒரு மாளிகையை கும்பகர்ணனுக்காக கட்டுவித்தான். ஒரு யோஜனை தூரம் விஸ்தீர்ணம்- நீளமும் இரண்டு மடங்கு அகலமுமாக மாளிகை உருவாகியது. எந்த வித இடையூறும் இன்றி தூங்க வசதியாகவும், அழகாகவும் கும்பகர்ணனுக்காக    மாளிகையை கட்டுவித்தான்.  ஸ்படிகம், பொன் இவைகளைக் கொண்டு ஸ்தம்பங்கள் பல இடங்களிலும் அழகுற அமைக்கப் பெற்றன. வைடூரியத்தால் இழைத்து கட்டப் பெற்ற மாடிப்படிகள், ஜன்னல்களில் மணிகள் கட்டப் பெற்றன. அழகிய தோரணங்கள், வஜ்ரத்தாலும், ஸ்படிகத்தாலும், வேதிகள் மனோகரமாகவும் எல்லா வித வசதிகளும் நிறைந்ததுமாக அமைக்கப் பட்டன. மேரு மலையின் குகை போல எல்லா விதத்திலும் சுகத்தை தரும் வண்ணம் அமைந்திருந்தது. அங்கு கும்பகர்ணன் என்ற மகா பலசாலி, உறக்கத்தில் ஆழ்ந்தான். பல வருஷங்கள் தூங்கியபடி இருந்தான். எழுந்திருக்கவே இல்லை. கும்பகர்ணன் இவ்வாறு உறங்கி கழித்த பொழுது, ராவணன், தேவ, ரிஷி, யக்ஷ, கந்தர்வர்களை போரில் வென்றான்.  உத்யானங்கள், அழகிய நந்தவனங்கள், தேவலோகத்து நந்தனம் போன்ற இடங்களை குறி வைத்து, அழிப்பதில் ராவணன் முனைந்து நின்றான். நந்தவனம் என்றாலே கோபம் மேலிட அழித்தான். நதிகளில் யானைகள் புகுந்து கலக்குவது போல கலக்குவான். மரங்களை உலுக்கி சித்ரவதை செய்வான். வஜ்ரத்தால் மலைகள் அடிபட்டதை நினைவுறுத்துவதைப் போல த்வம்சம் செய்வான். இப்படி அழிப்பதையே காரியமாகக் கொண்ட தசானனனை திருத்த எண்ணி குபேரன் ஒரு தூதனை அனுப்பினான். தன் குலத்தில் பிறந்தவன், தகாத செயலை செய்வதை தடுக்க வேண்டும் என்று நினைத்து,  தான் முன்னோடியாக நடந்து கொண்டதை (அவன் கேட்டதும் லங்கையை திருப்பிக் கொடுத்ததை) சுட்டிக் காட்டி, அறிவுரை சொல்லி அனுப்பினான். அந்த தூதன் முதலில் விபீஷண க்ருஹம் சென்றான். அவனை நன்றாக உபசரித்து, விபீஷணன் வந்த காரணத்தை வினவினான். தாயாதிகள், உறவினர்கள் நலம் விசாரித்த பின் விபீஷணன் தூதனை சபைக்கு அழைத்துச் சென்று ஆசனத்தில் அமர்ந்திருந்த அரசனுக்கு அறிமுகப் படுத்தினான். உத்தமமான ஆசனத்தில், அழகிய விரிப்புகள் போடப் பெற்று அலங்காரமாக விளங்கிய ஆசனத்தில், தன் தேக காந்தியால் பிரகாசமாகத் தெரிந்த அரசனை ஜய கோஷம் செய்து வாழ்த்திய பின், தூதன் தான் சொல்ல வந்த செய்தியை சொன்னான். ராஜன், உன் சகோதரன் சொன்ன விஷயங்களை அப்படியே தெரிவிக்கிறேன். உங்கள் இருவருக்குமே சமமான குலம், செல்வங்கள் உள்ளன. இதுவரை நடந்த விஷயங்களை பரிசீலித்து பார்த்தபின் ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன். நீ தர்மத்தில், நியாயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நந்தன வனத்தை அழித்ததாகவும், ரிஷிகளை வதைத்ததாகவும் கேள்விப் பட்டோம். தேவதைகளை நீ துரத்தி அடித்த செய்தியையும் கேள்விப் பட்டேன். ராஜன், பலரை அழித்து நாசமாக்கியதாகத் தெரிகிறது. ராஜனே, குற்றமே புரிந்தவன் ஆனாலும், தன் குலத்தை சேர்ந்த சிறுவர்களை, பெரியவர்கள் உறவினர் காப்பாற்றத் தான் வேண்டும். நான் ஹிமய மலையின் அடிவாரம் சென்று தர்ம காரியங்களைச் செய்து வருகிறேன். தேவியான உமையை, ருத்ரனோடு தரிசித்தேன். கடுமையான தவங்கள் செய்து இந்த பெருமையை அடைந்தேன். என் இடது கண் பார்வையை தேவிக்கு சமர்ப்பித்தேன். யாராக இருக்கும் என்று அறிந்து கொள்ள ருத்ராணி வந்தாள். தேவியின் தேவ ப்ரபாவத்தால் என் இடது கண் பொசுங்கி போயிற்று. தீபத்தின் மேல் புழுதி படிந்தது போல என் கண் மஞ்சள் (பழுப்பு) நிறமாயிற்று.  இதன் பின் அதே மலையில் வேறு இடம் சென்று கடினமான நியமங்களுடன் தவத்தை தொடர்ந்தேன். என் தவம் முடியும் நேரம், மகேஸ்வரனான பிரபு, மிகவும் மகிழ்ச்சியடைந்து என்னிடம் சொன்னார். தேவியின் ரூபத்தை பார்த்ததால் கண் பார்வை மஞ்சள் நிறம் பெற்றது. உன் தவத்தால் மகிழ்ந்தேன். நானும் இதே போல தவம் செய்திருக்கிறேன். தற்சமயம், நம் இருவரைத் தவிர மூன்றாவது நபர் யாருமில்லை. இவ்வளவு கடினமான தவத்தை செய்த நீ எனக்குத் தோழனாவாய். தனாதிபா, என் தோழனாக இரு. உன் தவத்தினால் நான் ஜயிக்கப் பட்டேன். தேவியினால் தகிக்கப் பட்ட உன் இடது கண் பிங்கள, மஞ்சள் நிறமாக அப்படியே இருக்கட்டும். உன் பெயர் ஒரு கண் மஞ்சளாக உள்ளவன் என்றே நிலைத்து நிற்கும். நிரந்தரமாக நீடூழி வாழ்வாய் என்றார். இவ்வாறு சங்கரனின் நட்பையும் நண்பன் என்ற தகுதியையும் அடைந்து இங்கு வந்து பார்த்தால், உன் செயல்கள் தலை குனிய வைக்கின்றன. உன் பாப காரியங்கள் விரும்பத் தக்கவையாக இல்லை. குலத்தின் பெருமையை கெடுக்கும் அதர்ம செயல்களை பற்றி நிறைய கேள்விப் பட்டேன். மேலும் இப்படி அதர்மமான செயல்களை செய்யாதே. யோசித்து திட்டம் வகுத்து நீ ரிஷி கணங்களை அடித்தது போலவே, அவர்களும் உன்னை வதம் செய்ய என்ன வழி என்று யோசித்து வருகிறார்கள். என்று தூதன் சொல்லிக் கேட்ட, ராவணனின் கோபம் கட்டுக் கடங்காது போயிற்று. கைகளை முறித்து, பற்களை கடித்து தூதனே, எனக்கு தெரிந்து விட்டது. நீ யாருக்கு தூதனாக வந்திருக்கிறாய் என்பது. என் சகோதரன் அனுப்பி நீ வரவில்லை. இது எனக்கு நன்மை தருவதும் இல்லை. தனாதிபன் இப்படி ஒரு உபதேசம் சொல்லி இருந்தால், ருத்ரனிடம் நட்பு கொண்டதை பெரிய விஷயமாக எனக்குச் சொல்ல வந்து விட்டாய். இதை இன்னும் என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இது வரை அவனை எதுவும் செய்யாமல் விட்டு வைத்தேன். எனக்கு மூத்தவன், குரு என்பதால் பொறுத்தேன். இப்பொழுது எனக்கு உபதேசம் சொல்லி அனுப்பும் வரை வந்து விட்டானா? என் புஜ பலத்தால் மூவுலகையும் ஜயிப்பேன். இவன் ஒருவனுக்காக நான்கு லோக பாலர்களையும் யம லோகம் அனுப்புகிறேன், பார். என்று சொல்லிக் கொண்டே, தசக்ரீவன் தூதனை தன் வாளால் தலை துண்டித்து விழச் செய்தான். துராத்மாக்களான ராக்ஷஸர்களுக்கு உணவாக கொடுத்து விட்டான். இதன் பின் துதி பாடும் தன் ஜனங்கள் ஸ்வஸ்தி மங்களங்கள் சொல்லி வாழ்த்த, மூன்று உலகையும் வெற்றி கொள்ள நிச்சயித்தான். முதலில் தனாதிபன் இருக்கும் இடம் சென்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தரகாண்டத்தின் பதின்மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

From → Uncategorized

One Comment
  1. B.RAMAKRISHNAN's avatar
    B.RAMAKRISHNAN permalink

    Bageeratha Muyarchikku ananthakodi Namaskarankal.

B.RAMAKRISHNAN -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி