ஸ்ரீமத் ராமாயணம் யுத்த காண்டம் 1 – 15
ஸ்ரீமத் ராமாயணம்
யுத்த காண்டம்
அத்தியாயம் 1 (408) ஹனுமத் ப்ரசம்சனம் (ஹனுமானை பாராட்டுதல்) 7
அத்தியாயம் 2 (409) ராம ப்ரோத்சாஹனம் (ராமரை உற்சாகப் படுத்துதல்) 8
அத்தியாயம் 3 (410) லங்கா து3ர்கா3தி கத2னம் (லங்கையின் கோட்டை முதலியவற்றை விவரித்தல்) 9
அத்தியாயம் 4 (411) ராமாபி4ஷேணனம் (ராமன் போருக்கு ஆயத்தங்கள் செய்தல்) 11
அத்தியாயம் 5 (412) ராம விப்ரலம்ப: (பிரிவாற்றாமையால் ராமன் புலம்புதல்) 18
அத்தியாயம் 6 (413) ராவண மந்த்ரணம் (ராவணன் மந்த்ராலோசனை செய்தல்) 20
அத்தியாயம் 7 (414) சசிவோக்தி: (மந்திரிகளின் ஆலோசனை) 21
அத்தியாயம் 8 (415) ப்ரஹஸ்தாதி வசனம் (ப்ரஹஸ்தன் முதலானோர் சொல்வது) 23
அத்தியாயம் 9 (416) விபீ4ஷண சமாலோசனம் (விபீஷணன் ஆலோசனை சொல்லுதல்) 24
அத்தியாயம் 10 (417) விபீ4ஷண பத்2யோபதே3ச: (விபீஷணன் நன்மையை எடுத்துச் சொல்லுதல்) 26
அத்தியாயம் 11 (418) த்3விதீய மந்த்ராதி4வேச: (திரும்பவும் மந்திரி சபையைக் கூட்டுதல்) 28
அத்தியாயம் 12 (419) கும்ப4கர்ண மதி: (கும்பகர்ணனின் ஆலோசனை) 30
அத்தியாயம் 13 (420) மகா பார்ஸ்வ வசோபி4னந்தனம்(மகா பார்ஸ்வன் சொன்னதைக் கொண்டாடுதல்) 33
அத்தியாயம் 14 (421) ப்ரஹஸ்த விபீ4ஷண விவாத3: (ப்ரஹஸ்தனும், விபீஷணனும் வாதம் செய்தல்) 34
அத்தியாயம் 15 (422) இந்திரஜித், விபீ4ஷண விவாதம் (இந்திரஜித்தும், விபீஷணனும் வாதித்தல்).. 36
அத்தியாயம் 16 (423) விபீஷணாக்ரோச: (விபீஷணன் கோபம்) 38
அத்தியாயம் 17 (424) விபீ4ஷண சரணாகதி நிவேத3னம் (விபீஷண சரணாகதி) 39
அத்தியாயம் 18 (425) விபீஷண ஸங்க்ரஹ நிர்ணய: (விபீஷணனை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தல்) 43
அத்தியாயம் 19 (426) ஸர தல்ப சம்வேச: (தர்ப்பை ஆசனத்தில் அமருதல்) 46
அத்தியாயம் 20 (427) சுக்3ரீவ பே4தனோபாய: (சுக்ரீவனை கலைக்க உபாயம் செய்தல்) 48
அத்தியாயம் 21 (428) சமுத்ர ஸம்க்ஷோப: (சமுத்திரத்தை வற்றச் செய்தல்) 50
அத்தியாயம் 22 (429) சேது ப3ந்த4: (சேதுவைக் கட்டுதல்) 53
அத்தியாயம் 23 (430) லங்காபி4ஷேணனம் (லங்கையை முற்றுகையிடுதல்) 57
அத்தியாயம் 24 (431)ராவண ப்ரதிக்ஞா (ராவணன் சூளுரைத்தல்) 58
அத்தியாயம் 25 (432) சுக, சாரண ப்ரேஷணாதிகம்(சுகனையும், சாரணனையும் அனுப்புதல்) 61
அத்தியாயம் 26 (433) கபி ப3லாவேக்ஷணம் (வானர படை பலத்தை, (ராவணன்) தானும் காணுதல்) 63
அத்தியாயம் 27 (434) ஹராதி வானர பராக்ரமாக்யானம்(ஹரன் முதலிய வானரங்களின் பராக்ரமம் பற்றி வர்ணனை) 66
அத்தியாயம் 28 (435) மைந்தா3தி பராக்ராமாக்2யானம்(மைந்தன் முதலானவர்களின் வலிமை பற்றிய வர்ணனை) 69
அத்தியாயம் 29 (436) சார்தூ3லாதி சார ப்ரேஷணம் (சார்தூலன் முதலான ஒற்றர்களை அனுப்புதல்) 71
அத்தியாயம் 30 (437) வானர ப3ல சங்க்யானம் (வானர படையை எண்ணிச் சொல்லுதல்) 73
அத்தியாயம் 31 (438) வித்யுத் ஜிஹ்வ மாயா ப்ரயோக: (வித்ய்த் ஜிஹ்வன் என்பவனின் மாயை) 75
அத்தியாயம் 32 (439) சீதா விலாப: (சீதை வருந்தி புலம்புதல்) 77
அத்தியாயம் 33 (440) சரமா சமாஸ்வாஸனம் (சரமா வந்து சமாதானம் செய்தல்) 80
அத்தியாயம் 34 (441) ராவண நிச்சய கத2னம் (ராவணன் தீர்மானத்தை தெரிந்து கொண்டு வந்து சொல்லுதல்) 83
அத்தியாயம் 35 (442) மால்யவது3பதேச: (மால்யவான் முதலானோர் உபதேசித்தல்) 85
அத்தியாயம் 36 (443) புரத்3வார ரக்ஷா: (கோட்டை வாசலை ரக்ஷித்தல்) 87
அத்தியாயம் 37 (444) ராம குல்ம விபாக: (ராமன் தன் படையை அணிவகுத்து நிறுத்துதல்) 89
அத்தியாயம் 38 (445) சுவேளாரோஹணம் (சுவேள மலையில் ஏறுதல்) 90
அத்தியாயம் 39 (446) லங்கா த3ரிசனம் (லங்கையை தரிசித்தல்) 92
அத்தியாயம் 40 (447) ராவண சுக்3ரீவ நியுத்3த4ம் (ராவணன் சுக்ரீவனுடன் கை கலத்தல்) 93
அத்தியாயம் 41 (448) அங்க3த3 தூ3த்யம் (அங்கதன் தூது செல்லுதல்) 95
அத்தியாயம் 42 (449) யுத்3தா4ரம்ப4: ( யுத்த ஆரம்பம்) 101
அத்தியாயம் 43 (450) த்3வந்த4 யுத்3த4ம்… 103
அத்தியாயம் 44 (451) நிசா யுத்தம் (இரவில் யுத்தம்) 106
அத்தியாயம் 45 (452) நாக3 பாச ப3ந்த4: (நாக பாசத்தால் கட்டுண்டது) 108
அத்தியாயம் 46 (453) சுக்3ரீவாத்3யனு சோக: (சுக்ரீவன் முதலானோர் வருத்தம்) 109
அத்தியாயம் 47 (454) நாக3 ப3த்3த4 ராம லக்ஷ்மண ப்ரத3ர்சனம் நாக பாசத்தால் மூர்ச்சித்த ராம லக்ஷ்மணர்களை காட்டுதல்) 112
அத்தியாயம் 48 (455) சீதாஸ்வாஸனம் (சீதையை சமாதானம் செய்தல்) 113
அத்தியாயம் 49 (456) ராம நிர்வேத3: (ராமனின் மன வருத்தம்) 115
அத்தியாயம் 50 (457) நாக பாச விமோக்ஷணம் (நாக பாசத்திலிருந்து விடுபடுதல்) 117
அத்தியாயம் 51 (458) தூ3ம்ராபி4ஷேணனம் (தூம்ரன் போருக்கு வருதல்) 121
அத்தியாயம் 52 (459) தூ3ம்ராக்ஷ வத4ம் (தூம்ராக்ஷனை வதம் செய்தல்) 123
அத்தியாயம் 53 (460) வஜ்ரதம்ஷ்டிர யுத்தம் (வஜ்ர தம்ஷ்டிரன் செய்த யுத்தம்) 125
அத்தியாயம் 54 (461) வஜ்ரத3ம்ஷ்டிர வத4ம் (வஜ்ர தம்ஷ்டிரனின் வதம்) 127
அத்தியாயம் 55 (462) அகம்பன யுத்தம் (அகம்பனனுடன் போர் புரிதல்) 129
அத்தியாயம் 56 (463) அகம்பன வத4ம் (அகம்பனனை வதம் செய்தல்) 130
அத்தியாயம் 57 (464) ப்ரஹஸ்த யுத்தம் (ப்ரஹஸ்தனுடன் யுத்தம் செய்தல்) 132
அத்தியாயம் 58 (465) ப்ரஹஸ்த வதம் (ப்ரஹஸ்தனின் வதம்) 135
அத்தியாயம் 59 (466) ராவணாபி4ஷேணனம் (ராவணன் போருக்கு புறப்படுதல்) 138
அத்தியாயம் 60 (467) கும்பகர்ண ப்ரபோத4: (கும்பகர்ணனை எழுப்புதல்) 147
அத்தியாயம் 61 (468) கும்ப4கர்ண வ்ருத்த கத2னம் (கும்பகர்ணனிடம் நடந்ததைச் சொல்லுதல்) 152
அத்தியாயம் 62 (469) ராவணாப்4யர்த்தனா (ராவணனின் வேண்டுகோள்) 154
அத்தியாயம் 63 (470) கும்பகர்ணானுசோக: (கும்பகர்ணனின் வருத்தம்) 156
அத்தியாயம் 64 (471) சீதா ப்ரலோப4னோபாய:(சீதையை ஆசை காட்டி இணங்கச் செய்ய உபாயம் செய்தல்) 160
அத்தியாயம் 65 (472) கும்பகர்ணாபி4ஷேணனம் (கும்பகர்ணன் போர் முனைக்குச் செல்லுதல்) 162
அத்தியாயம் 66 (473) வானர பர்யவஸ்தாபனம்(வானரங்களின் தடுமாற்றமும், திரும்ப நிலை நிறுத்துதலும்) 165
அத்தியாயம் 67 (474) கும்பகர்ண வத4: (கும்பகர்ணனின் வதம்) 167
அத்தியாயம் 68 (475) ராவணானுசோக: (ராவணன் வருந்துதல்) 178
அத்தியாயம் 69 (476) நராந்தக வத4: (நராந்தகனின் வதம்) 179
அத்தியாயம் 70 (477) தேவாந்தகாதி வத: (தேவாந்தகன் முதலானோர் வதம்) 185
அத்தியாயம் 71 (478) அதிகாய வத4: (அதிகாயனின் வதம்) 188
அத்தியாயம் 72 (479) ராவண மன்யு சல்யாவிஷ்கார: (ராவணனை மன்யு எனும் கோபம் துளைத்தெடுப்பது) 194
அத்தியாயம் 73 (480) இந்திரஜித் மாயா யுத்தம் (இந்திரஜித்தின் மாயா யுத்தம்) 195
அத்தியாயம் 74 (481) ஔஷதி4 பர்வதானனம் (ஔஷதி மலையைக் கொண்டு வருதல்) 199
அத்தியாயம் 75 (482) லங்கா தா3ஹ: (லங்கையை எரித்தல்) 204
அத்தியாயம் 76 (483) கம்பனனாதி வத: (கம்பனன் முதலானோர் வதம்) 207
அத்தியாயம் 77 (484) நிகும்ப4 வத4: (நிகும்பனின் வதம்) 211
அத்தியாயம் 78 (485) மகராபி4ஷேணனம் (மகராக்ஷன் போருக்கு வருதல்) 213
அத்தியாயம் 79 (486)மகராக்ஷ வத4: (மகராக்ஷனை வதம் செய்தல்) 214
அத்தியாயம் 80 (487) திரோஹித ராவணி யுத்தம் (ராவணன் குமாரன், மறைந்திருந்து போர் செய்தல்) 216
அத்தியாயம் 81 (488) மாயா சீதா வத4: (மாயா சீதையை வதம் செய்தல்) 218
அத்தியாயம் 82 (489) ஹனுமதா3தி நிர்வேத3: (ஹனுமான் முதலானோர் வருந்துதல்) 220
அத்தியாயம் 83 (490) ராமாஸ்வாஸனம் (ராமரை சமாதானப் படுத்துதல்) 222
அத்தியாயம் 84 (491) இந்திரஜித் மாயா விவரணம் (இந்திரஜித்தின் மாயா பற்றி சொல்லுதல்) 225
அத்தியாயம் 85 (492) நிகும்பிளாபியானம் (நிகும்பிளை நோக்கி படையெடுத்தல்) 226
அத்தியாயம் 86 (493) ராவணி ப3ல கத2னம் (ராவண குமாரனின் பலத்தை விவரித்தல்) 228
அத்தியாயம் 87 (494) விபீஷண, ராவணி பரஸ்பர நிந்தா3 (விபீஷணனும் ராவணன் மகன் இந்திரஜித்தும் பரஸ்பரம் ஏசிக் கொள்ளுதல்) 230
அத்தியாயம் 88 (495)சௌமித்ரி ராவணி யுத்தம் (சௌமித்ரியும் ராவணன் மகனும் யுத்தம் செய்தல்) 232
அத்தியாயம் 89 (496) சௌமித்ரி சந்துக்ஷணம் (லக்ஷ்மணனை போருக்கு புறப்பட தூண்டுதல்) 235
அத்தியாயம் 90 (497) சௌமித்ரி ராவணி யுத்தம் (சௌமித்திரியும் ராவணியும் போரிடுதல்) 236
அத்தியாயம் 91 (498) ராவணி வத| (ராவணன் மகன் இந்திரஜித்தை வதம் செய்தல்) 239
அத்தியாயம் 92 (499) ராவணி சஸ்திர ஹத சிகித்ஸா (இந்திரஜித்தின் சரங்களால் பட்ட காயங்களுக்கு சிகித்சை செய்தல்) 243
அத்தியாயம் 93 (500) சீதா ஹனனோத்யம நிவ்ருத்தி (சீதையைக் கொல்ல முயன்றதை தடுத்தல்) 245
அத்தியாயம் 94 (501) கா3ந்த4ர்வாஸ்திர மோகனம் காந்தர்வாஸ்திரத்தைக் கொண்டு மயங்கச் செய்தல்) 248
அத்தியாயம் 95 (502) ராக்ஷஸி விலாப| (ராக்ஷஸிகளில் புலம்பல்) 251
அத்தியாயம் 96 (503) ராவணாபி4ஷேணனம் (ராவணன் போருக்குச் செல்லுதல்) 254
அத்தியாயம் 97 (504) விரூபாக்ஷ வத4ம் (விரூபாக்ஷனின் வதம்) 257
அத்தியாயம் 98 (505) மகோதர வத4| (மகோதரன் வதம் செய்யப்படுதல்) 259
அத்தியாயம் 99 (506) மகா பார்ஸ்வ வத|| (மகா பார்ஸ்வனின் வதம்) 260
அத்தியாயம் 100 (507) ராம ராவணாஸ்த்ர பரம்பரா(ராம, ராவணர்களின் தொடர்ந்த அஸ்திரங்களின் தாக்குதல்) 262
அத்தியாயம் 101 (508) லக்ஷ்மண சக்தி ஷேப| (சக்தி ஆயுதத்தால் லக்ஷ்மணன் அடிபட்டு விழுதல்) 265
அத்தியாயம் 102 (509) லக்ஷ்மண சஞ்ஜீவனம் (லக்ஷ்மணனை மூர்ச்சை தெளிவித்தல்) 268
அத்தியாயம் 103 (510) ஐந்த்ர கேது பாதனம் (இந்திர கேது எனும் கொடியை விழச் செய்தல்) 272
அத்தியாயம் 104 (511) ராவண சூல ப4ங்க3|| (ராவணனின் சூலத்தை உடைத்தல்) 274
அத்தியாயம் 105 (512) தசக்ரீவ விசூர்ணனம் (தசக்ரீவ ராவணனை அலைக்கழித்தல்) 276
அத்தியாயம் 106 (513) சாரதி விஞேயம் (சாரதியின் விண்ணப்பம்) 278
அத்தியாயம் 107 (514) ஆதித்ய ஹ்ருதயம்… 280
அத்தியாயம் 108 (515) சுபா4 சுப4 நிமித்த தரிசனம் (சுப அசுப நிமித்தங்களைக் காணுதல்) 282
அத்தியாயம் 109 (516) ராவண த்4வஜோன்மத2னம் (ராவணன் கொடியை விழச் செய்தல்) 284
அத்தியாயம் 110 (517) ராவணைக சத சிரச் சே2த3னம் (ராவணனின் நூற்றியொரு தலையை கொய்தல்) 286
அத்தியாயம் 111 (518) பௌலஸ்த்ய வத|| (புலஸ்திய குலத்தினனான ராவணனின் வதம்) 289
அத்தியாயம் 112 (519) விபீ4ஷண விலாப : (விபீஷணன் வருந்தி புலம்புதல்) 290
அத்தியாயம் 113 (520) ராவணாந்த:புர பரிதே3வனம் (ராவணனின், உற்றார், உறவினர்கள் வருந்துதல்) 292
அத்தியாயம் 114 (521) மந்தோ3த3ரீ விலாப|| (மந்தோதரி அழுது புலம்புதல்) 294
அத்தியாயம் 115 (522) விபீ4ஷணாபி4ஷேக: (விபீஷணனுக்கு முடி சூட்டுதல்) 300
அத்தியாயம் 116 (523) மைதிலி பிரிய நிவேத3னம் (மைதிலிக்கு பிரியமானதைச் சொல்லுதல்) 302
அத்தியாயம் 117 (524) சீதா பர்த்ரு முகோத்வீக்ஷணம் (சீதை கணவனின் முகத்தைப் பார்த்தல்) 305
அத்தியாயம் 118 (525) சீதா ப்ரத்யாதே3ச: (சீதையை ஏற்க மறுத்து திருப்பி அனுப்புதல்) 307
அத்தியாயம் 119 (526) ஹுதாசன ப்ரவேச: (அக்னி பிரவேசம்) 308
அத்தியாயம் 120 (527) ப்ரும்ம க்ருத ராம ஸ்தவ| (ப்ரும்மா செய்த ராம துதி) 310
அத்தியாயம் 121 (528) சீதா ப்ரதிக்3ரஹ|| (சீதையை ஏற்றுக் கொள்ளுதல்) 312
அத்தியாயம் 122 (529) தசரத ப்ரதிசயாதேச: (தசரதன் வந்து பரிந்துரை செய்தல்) 314
அத்தியாயம் 123 (530) இந்திர வர தானம் (இந்திரன் வரம் அளித்தல்) 316
அத்தியாயம் 124 (531) புஷ்பகோபஸ்தாபனம் (புஷ்பக விமானத்தை வரவழைத்தல்) 317
அத்தியாயம் 125 (532) புஷ்பகோத்பதனம் (புஷ்பக விமானம் கிளம்புதல்) 319
அத்தியாயம் 126 (533) ப்ரத்யாவ்ருத்தி பத2 வர்ணனம்.(திரும்பி சென்ற வழியை விவரித்தல்) 320
அத்தியாயம் 127 (534) ப4ரத்3வாஜாமந்த்ரணம் (பரத்வாஜர் விருந்துண்ண அழைத்தல்) 323
அத்தியாயம் 128 (535) ப4ரத ப்ரியாக்2யானம் (பரதனுக்கு பிரியமானதை தெரிவித்தல்) 324
அத்தியாயம் 129 (536) ஹனுமத் பரத சம்பாஷணம் (ஹனுமானும் பரதனும் சம்பாஷித்தல்) 327
அத்தியாயம் 130 (537) ப4ரத சமாக3ம: (பரதனை சந்தித்தல்) 330
அத்தியாயம் 131 (538) ராம பட்டாபிஷேக|| ( ராம பட்டாபிஷேகம்) 333
அத்தியாயம் 1 (408) ஹனுமத் ப்ரசம்சனம் (ஹனுமானை பாராட்டுதல்)
நடந்ததை நடந்தபடி ஹனுமான் சொல்லக் கேட்ட ராமன், மனம் மகிழ்ந்து அன்புடன் பதில் சொன்னார். ஹனுமான் செய்தது மிக அரிய செயல். இந்த உலகில் கடினமான இந்த செயலை வேறு யாரும் மனத்தளவில் கூட செய்யலாம் என்று நினைத்திருக்க முடியாது. பெரிய சாகரத்தை தாண்டியதே மிகப் பெரிய காரியம். கருடனோ, வாயுவோ, அன்றி இப்பொழுது ஹனுமான் அன்றி வேறு யாராலும் முடியாது. தேவ, தானவ, யக்ஷர்களில், கந்தர்வ, உரக, ராக்ஷஸர்களில், ராவணன் கவனமாக பாதுகாத்து வரும் லங்கையின் உள்ளே பிரவேசிக்க முடியாது. வீரமும், பலமும் மிக்க ராவணனின் நகரில், எதிரிகள் தரப்பிலிருந்து யாரும் தடுக்கப் படாமல் உள்ளே நுழைவானா, அப்படியே நுழைந்தாலும் உயிருடன் திரும்பி வருவானா என்பது சந்தேகமே. உயிருடன் திரும்புவது சுலபமல்ல. அப்படியிருக்க, லங்கா நகரின் கோட்டைக்குள் நுழைந்து வெளியிலும் வந்துள்ள ஹனுமானுக்கு இணை அவனேதான். சுக்ரீவன் இட்ட கட்டளையை நிறைவேற்றி, தான் சிறந்த மந்திரி என்று நிரூபித்து விட்டான். மகத்தான இந்த காரியத்தில் தன் பலம், புத்தி, விக்ரமம் அனைத்தையும் பிரயோகித்து காரியத்தை செவ்வனே செய்து காட்டியிருக்கிறான். கடினமான காரியம் செய்ய ஒருவரை நியமிக்கும் பொழுது அதை பிரியமாக விருப்பத்துடன் செய்பவனே புருஷோத்தமன். சதுர்த்தனாக – ஆற்றலுடையவனாக- இருந்தும், தலைவனின் விருப்பத்தை நிறைவேற்றாமல், ஓரளவு செய்து முடித்து திரும்புபவன், மத்யமன். இதை செய் என்று சொல்லி அனுப்பிய போதும், சக்தியுடையவனாக இருந்தும், செய்யும் முறை அறிந்தும் செய்யாமல் வருபவன் அதமன். அப்படியிருக்க ஹனுமான் நியமித்த காரியத்தை செய்யும் பொழுது தன்னையும் தாழ்வாக காட்டிக் கொள்ளவில்லை. சுக்ரீவனையும் திருப்தி செய்து சந்தோஷமாக்கியிருக்கிறான். நானும், ரகு வம்சமும், லக்ஷ்மணனும், வைதேஹியை கண்டு கொண்டதால், தர்மம் தவறாமல் காப்பாற்றப் பட்டோம். மனம் கலங்கி தீனனாக இருந்த எனக்கும் மன நிம்மதி கிடைத்தது. இங்கு வந்து எனக்கு பிரியமானதை சொன்னவனுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். ஹனுமானே, என் மனப் பூர்வமான ஆலிங்கனம் உனக்கு எல்லா க்ஷேமத்தையும் கொடுக்கட்டும். மகத்தான செயலை செய்த ஹனுமானுக்கு இதுதான் நான் தரும் பரிசு என்று சொல்லி மகிழ்ச்சி பூரிப்போடு ஹனுமானை தழுவிக் கொண்டார். தனக்கு இடப்பட்ட கட்டளையை செவ்வனே முடித்து விட்டு வந்தவனை ஆரத் தழுவிக் கொண்டார். சற்று நேரம் யோசித்து பின்னர், ரகோத்தமன், சுக்ரீவனும் கேட்டுக் கொண்டிருக்கையில், சீதையை தேடிக் கண்டு பிடித்தது ஒரு நல்ல ஆரம்பம். சாகரத்தை நினைக்கும் பொழுது கவலையாக இருக்கிறது. எப்படித்தான் நீர் நிறைந்த சாகரத்தை வானர வீரர்கள் தாண்டிச் சென்று அக்கரை அடைவார்களோ, வழியில் நீரில் மூழ்காமல், எதுவும் அசம்பாவிதம் ஆகாமல் படை வீரர்கள் அக்கரை போய் சேர வேண்டும். வைதேஹி வ்ருத்தாந்தம் கேட்டு சமாதானம் ஒரு புறம் இருக்க, அடுத்து செய்ய வேண்டிய செயல்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஹனுமத் ப்ரஸம்சனம் என்ற முதல் அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 2 (409) ராம ப்ரோத்சாஹனம் (ராமரை உற்சாகப் படுத்துதல்)
இவ்வாறு சிந்தனை வயப் பட்ட ராமனை சுக்ரீவன் ஆறுதல் சொல்லி உற்சாகமடையச் செய்தான். சாதாரண ஜனங்கள் போல ராமா, நீயும் கலங்கலாமா? நீ சுத்த வீரன். செய் நன்றி மறந்தவன் நண்பனை கை விடுவது போல இந்த கவலையை கை விடு. இந்த சமயம் இந்த கவலை தேவையே இல்லை. ஜானகி இருக்கும் இடம் தெரிந்தாயிற்று. சத்ருவின் இருப்பிடம் தெரிந்து கொண்டு விட்டோம். ராகவனே, நீ புத்திசாலி. சாஸ்திரம் அறிந்தவன். பண்டிதன். க்ருதாத்மா எனும் சாதகனுக்கு சுய நிந்தை அனாவசியம். ஆபத்து கூட. (தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை சாதகனுக்கு இடையூறே) . பெரிய பெரிய ஆமைகள், முதலைகள் நிரம்பிய சமுத்திரத்தை தாண்டிச் செல்வோம். லங்கையில் நுழைவோம். ராவணனை வதைப்போம். உற்சாகத்தை இழந்து கவலைப் படுபவன், சோகத்திலேயே மூழ்கியவனாக, தன் பொருளை இழக்கிறான். காரியத்தையும் செய்வதில்லை. நமது வானர வீரர்கள் சூரர்கள். சமர்த்தர்கள். உனக்கு பிரியமானதைச் செய்யத் துடிப்பவர்கள். நெருப்பில் விழக் கூட தயாராக இருக்கிறார்கள் இவர்களின் குதூகல ஆரவாரத்தை வைத்து சொல்கிறேன். மேலும் நான் ஊகித்துச் சொல்கிறேன், நம்பிக்கையுடன் சொல்கிறேன். நாம் நம் பலத்தை திரட்டி ராவணனை போருக்கு அழைத்து, வெற்றிக் கொடி நாட்டி, சீதையை அழைத்து வருவோம். பாப காரியத்தை செய்த ராவணனுக்கு நீ தண்டனை தர வேண்டியதும் அவசியம். இடையில் பாலம் கட்டி நாம் லங்கையை அடைவோம். த்ரிகூட சிகரத்தில் அமைந்துள்ள நகரத்தைப் பார். ராவணன் தோற்று விழுவதைக் கண் குளிரப் பார். அதற்கு முன், சமுத்திரத்தின் மேல் பாலம் கட்டுவது மிக முக்கியமான காரியம். இது இல்லாமல் நம் வானர சேனை வீரர்கள் சேதமடையாமல் அக்கரை போய் சேருவது சிரமமே. வானரங்கள் என்ன, இந்திரன் உள்ளிட்ட தேவர்களே திகைக்கும் செயல். சேதுவைக் கட்டி, லங்கையின் அருகாமை வரை பாதை அமைத்து சைன்யம் அங்கு போய் சேர்ந்து விட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். இந்த வானரர்கள், தங்கள் விருப்பம் போல உருவம் எடுத்துக் கொண்டு தளராமல் யுத்தம் செய்யக் கூடியவர்கள். அதனால் நாம் உடனடியாக செய்ய வேண்டியதை சிந்திப்போம். தயக்கமும், சோகமும், மனிதனை உயர விட்டாமல் தடுக்கும், ஆணி வேரையே அழிக்க வல்லவை இவை. தயக்கம் சர்வார்த்த நாசினி என்றால், சோகம் சூரனையும் அவன் தன் சௌர்யம் இழக்கச் செய்து விடும். உற்சாகத்தோடு, தன்னம்பிக்கையோடு, எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய ஊக்கத்தைத் தரும் சத்வ குணத்தை வரவழைத்துக் கொள். மகத்தான பொறுப்புகளையுடைய உன் போன்ற சூர வீரர்கள், கஷ்டமோ, நஷ்டமோ எதுவானாலும் கவலைப் படுவதில்லை. அது அவர்களின் இயல்பும் இல்லை. நீயோ புத்திசாலிகளுள் ஸ்ரேஷ்டன். சாஸ்திரங்களை நன்கு அறிந்தவன். நானும், என்னைப் போன்ற மந்திரிகளும் உனக்கு உதவ காத்திருக்கிறோம். எங்களை சரியான முறையில், முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவாய். ராகவா, மூன்று உலகிலும் நான், உன் போல யுத்தத்தின் முன்னிலையில் வில்லும் கையுமாக நிற்கும் வீரனைக் கண்டதில்லை. இந்த வானரங்கள் இதே நினைவாக, போர் புரியும் ஆவலுடன் தயாராக நிற்கின்றார்கள். இவர்களுடன் எந்த ஆபத்தையும் நீ எதிர் கொள்ளலாம். சீக்கிரமே இந்த சமுத்திரத்தைக் கடந்து சென்று சீதையைக் காண்பாய். பூபதே, அரசனே, அதனால் சோகத்தை தவிர்த்து, க்ரோதம் கொள். க்ஷத்திரியன், சுபாவமாக கோழை, படை பலமும் இல்லை என்றால் தான் செயலிழந்து சண்டைக்கு பயப்படுவான். ராகவா, இந்த சமுத்திரத்தை தாண்டி எப்படி செல்லலாம் என்று சூக்ஷ்ம புத்தியுடன் யோஜனை செய். இந்த நத நதிபதியை நாம் எல்லோருமாக தாண்டி விட்டோமானால் வெற்றி நிச்சயம். இந்த வானர வீரர்கள் போரில் சூரர்கள். கற்களையும், மரங்களையும் கொண்டே, மழையாக பொழிந்து எதிரி படையை த்வம்சம் செய்து விடுவார்கள். வருணாலயம் என்ற இந்த சாகரத்தை தாண்டி விட்டால் ராவணன் ஒழிந்தான் என்றே கொள். அதிகம் சொல்வானேன். நீ விஜயனாக திரும்பி வருவாய். நிமித்தங்களும், என் மனதில் பெருகும் மகிழ்ச்சியுமே சாட்சி. நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராம ப்ரோத்சாஹனம் என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 3 (410) லங்கா து3ர்கா3தி கத2னம் (லங்கையின் கோட்டை முதலியவற்றை விவரித்தல்)
சுக்ரீவன் ஆறுதலாக சொன்னதையும், ஹனுமானின் ஆலோசனையையும் ராகவன் அப்படியே ஏற்றுக் கொண்டான். இந்த சம்பாஷனையில், சுக்ரீவன் சொல்லில், காரணங்களும், பொருளும், ஹனுமனின் வாக்கில் பரமான தத்வார்த்தமும் நிறைந்திருந்தது. ராகவன் சொன்னான், தவம் செய்து அணை கட்டுவோம். அல்லது சாகர ஜலத்தை வற்ற செய்வோம். எப்படியும் இந்த சாகரத்தை தாண்டியே ஆக வேண்டும், செய்வோம். ஹனுமானே, லங்கையில் நுழைய முடியாத கோட்டைகள் எவ்வளவு? நீ கண்ட வரையில் விவரமாக சொல். படையின் அளவு என்ன? கோட்டை வாசல் எப்படி பாதுகாக்கப் படுகின்றது. ஒற்றர்கள் இருக்கிறார்களா? ரசசிய உளவாளிகள் லங்கையில் உள்ளனரா? ராக்ஷஸர்களின் வீடுகள் எப்படி அமைந்துள்ளன? எப்படி நீ லங்கையில் கண்டாயோ, சுகமாகவோ வேறு விதமாகவோ, நீ கண்டபடி சொல். எல்லாவற்றையும் விவரமாக சொல்வதில் நீ தேர்ச்சி பெற்றவன் என்பதிலும் சந்தேகமேயில்லை என்றான். சொல்லின் செல்வனான, மாருதாத்மஜன், ராமரின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் துவங்கினான். கேளுங்கள். கோட்டை அமைப்பு இவற்றை, நான் கண்டபடியே சொல்கிறேன். லங்கா நகரம் மிகவும் பாதுகாப்பாக எளிதில் நெருங்க முடியாதபடி அமைந்துள்ளது. படை வீரர்கள் நாலா புறமும் காணப்படுவார்கள். ராக்ஷஸர்களும் ராவணனை விருப்பத்துடன் அனுசரித்து இருப்பவர்கள். ராவணனின் தேஜஸால் படை வீரர்கள் உற்சாகம் அடைவார்கள். லங்கையின் செழிப்பை சொல்லி முடியாது. படை பலத்தையும், அதன் பிரிவுகளையும், வாகனங்களின் எண்ணிக்கை, சமுத்திரத்தின் பயங்கரமும் முக்கியமாக முதலில் சொல்கிறேன். மதம் பிடித்த யானைகள் உலவும் லங்கா நகரம், மிகவும் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக இருக்கிறது. பெரிய ரதங்கள் தெருக்களில் ஓடுகின்றன. கூட்டம் கூட்டமாக ராக்ஷஸர்கள் தென்படுவார்கள். குதிரைகளும், அதை ஓட்டுபவர்களும், நிறைய உண்டு. வெளி மனிதர் யாரும் எளிதில் உள்ளே சென்று விட முடியாது. திடமாக தாழ்ப்பாள் போடப் பட்டு, குறுக்காக பெரிய சட்டங்கள் போடப் பட்டு இருக்கும். நான்கு வாசல்கள், பெரிய கதவுகள் அகலமும் உயரமுமாக இருக்கும். இந்த கதவுகளிலும் யந்திரங்கள் பொருத்தப் பட்டுள்ளன. இக்ஷுபலா என்ற இந்த யந்திரங்களும் மிகப் பெரியவை, மிகுந்த பலம் கொண்டவை. வெளியிலிருந்து வரும் சைன்யத்தை இவை இங்கேயே நிறுத்தி திருப்பி விடும். வாசலில் நன்றாக சோதித்து அப்பழுக்கு இல்லாத சதக்4னீ என்ற ஆயுதம், கூர்மையாக இரும்பினால் செய்யப் பட்டு நூற்றுக் கணக்காக வைத்து, ராக்ஷஸ கூட்டங்களால் பாதுகாக்கப் படுகின்றன. வெளி ப்ராகாரத்தில் நுழையவே முடியாது. பொன்னிறமாக, பவழம், மணி வைடூரியம், முத்து இவை பதிக்கப் பெற்ற பெரும் ப்ராகாரம். குளிர்ந்த நீரை எடுத்துச் செல்லும் பெரிய அகழிகள். ஆழமானவை. இதில் முதலைகளும், மீன்களும் நிரம்பி இருக்கும். நான்கு வாசல்களிலும் யந்திரங்கள் பொருத்தப் பெற்ற நீண்ட பாலங்கள் காணப்படும். வரிசையாக வீடுகள். வேற்று சைன்யம் வந்தால் இந்த பாலத்தை தாண்டுவதே அச்சம் தரும் செயலாகும். பெரிய உத்தரங்கள் இந்த யந்திரங்களால் இயக்கப் படும். ஒருவனாக இந்த பாலத்தை இறக்கி விட முடியாது. அவ்வளவு திடமானது. கனமானது. பொன்மயமான பல தூண்களும் யாக சாலைகளும் அழகாகத் தெரியும். ராவணன் ஸ்வயமாகவே சண்டையிட விருப்பம் உள்ளவன். அவனது இயல்பே யுத்தம் செய்வது. தானாக முன்னுக்கு வந்தவன். எதற்கும் கலங்காதவன். படைகளை பாதுகாத்து வைத்து, பராமரிப்பதில் வல்லவன். லங்கையோ நெருங்க முடியாத கோட்டைகள், அகழிகள் சூழ்ந்தது. பயங்கரமானது. நதி, பர்வதம், வனம் தவிர செயற்கை என்ற நான்கு விதமான தடைகள் கோட்டைக்குள் நுழைய விடாமல் தடுக்கும். சமுத்திரத்தின் அக்கரையில் அமைந்துள்ளது. சமுத்திரமோ, வெகு தூரம் பரவி கடக்க கஷ்டமாக அமைந்துள்ளது. இதில் கப்பல் போகவும் வழியில்லை. இந்த நகரமும் மலையின் உச்சியில் நிர்மாணிக்கபட்டது. எளிதில் நுழைய முடியாதபடி, தேவர்களின் தலை நகரம் போன்றது. மாற்று சாதனங்களும் எதுவும் இல்லை. குதிரைகளும் யானைகளும் கணக்கிலடங்கா. இந்த லங்கையை எளிதில் ஜயிக்க முடியாது தான். பரிக4ம் எனும் ஆயுதமும், சதக்4னீ எனும் ஆயுதமும் வித விதமான யந்திரங்களும், இந்த துராத்மாவான ராவணனின் ஊரை அலங்கரிக்கின்றன. பத்தாயிரம் ராக்ஷஸர்கள் கிழக்கு வாயிலில் கையில் சூலத்துடன், பலசாலிகளாக, வாள் வித்தையில் தேர்ந்தவர்களாக, காவல் நிற்கிறார்கள். நூறு பத்தாயிரம் வீரர்கள், தென் திசையில் காவல் இருக்கிறார்கள். நான்கு விதமான (ரத, கஜ, துரக, பதாதி-கால் நடை வீரர்கள்) போர் வீரர்கள், சைன்யங்களாக பிரிந்து, தேர்ந்தெடுத்த உத்தமமான காவல் வீரர்கள் நிற்கிறார்கள். மேற்கு பகுதியில் ஒரு கோடி ராக்ஷஸர்கள் இருப்பார்கள். உரையுடன் வாள் அலங்கரிக்க, எல்லா அஸ்திர ஞானமும் உடையவர்கள். வடக்கில் நூறு கோடி ராக்ஷஸர்கள் காவல் இருப்பார்கள். ரதம் ஓட்டுபவர்கள். குதிரை பராமரிப்பவர்கள் என்று பலரும், ராவணனால் நன்றாக போஷித்து வளர்க்கப் பட்டவர்கள். நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் அடுத்த பதவியில் இருக்கிறார்கள். இவர்களும் போர் வீரர்களே. எளிதில் இவர்களையும் முறியடிக்க முடியாது. இந்த பாலங்களையே நான் தகர்த்து எறிந்தேன். அகழிகளை நிரப்பி விட்டேன். லங்கா நகரை எரித்தேன். ப்ராகாரங்களை த்வம்சம் செய்தேன். உடல் பலம் ஒன்று மட்டும் கொண்டு ராக்ஷஸர்களை ஓட வைத்தேன். எப்படியாவது ஏதாவது செய்து சமுத்திரத்தை தாண்டி விட்டோமானால், இந்த வானரங்கள் லங்கையை அழித்து விட்டார்கள் என்றே கொள்ளலாம். அங்க3த3ன், த்3விவித3ன், மைந்த3ன், ஜாம்ப3வான், பனஸன், நளன், நீலன், சேனாபதி, தவிர வானர சைன்யம் முற்றிலும் இருக்கும் பொழுது நமக்கு என்ன குறை? கடல் தாண்டிச் சென்று ராவணன் ஊரை அடைந்து, மலைகளுடனும், தோரணங்களுடனும், ப்ராகாரங்களுடனும், அதில் உள்ள வீடுகள், மாளிகைகள் இவற்றுடன் லங்கா நகரையே தூக்கிக் கொன்டு வந்து விடுவார்கள். சீக்கிரம் கட்டளையிடுங்கள். படை திரண்டு முஹுர்த்த நேரத்தில், புறப்பட ஆயத்தம் செய்து விடுவோம்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் லங்கா து3ர்கா3தி கத2னம் என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 4 (411) ராமாபி4ஷேணனம் (ராமன் போருக்கு ஆயத்தங்கள் செய்தல்)
வரிசைக் கிரமமாக ஹனுமான் தான் கண்டதைச் சொல்லக் கேட்ட சத்ய பராக்ரமனான ராமன் பதில் சொன்னான். பலசாலியான ராவணனின் ஊரைப் பற்றிச் சொன்னாய். லங்கா புரியின் உயர்வைச் சொன்னாய். வெகு சீக்கிரம் அதை துவம்சம் செய்து விடுகிறேன். மத்தால் கடைவது போல் கடைந்து விடுகிறேன். பார்த்துக் கொண்டே இரு. இது சத்யம் என்றவன், சுக்ரீவனைப் பார்த்து உடனே கிளம்ப சரியான நேரம் இது தான். விஜய என்ற முஹுர்த்தமும், சூரியன் நடு வானில் வந்து விட்டதும் நல்ல சகுனங்கள். என் சீதையை அபகரித்துக் கொண்டு போனவனை நேரில் தெரிந்து கொள்வோம். என் விஷயமாக விவரங்கள் தெரிந்த பிறகு இப்பொழுது நம்பிக்கையுடன் உயிர் தரித்து இருப்பாள். காத்திருப்பாள். இதோ உயிர் போய் விடும் என்ற சமயம் வியாதியஸ்தன், அமுதத்தைப் பருகி, நம்பிக்கை துளிர் விட காத்திருப்பது போல இருப்பாள். இன்று பங்குனி மாத உத்திரம். நாளை ஹஸ்தம். சுக்ரீவா, சேனையை தயார் செய். எல்லோருமாக கிளம்புவோம். நல்ல நிமித்தங்களும் தோன்றுகின்றன. ராவணனை வதைத்து ஜானகியை அழைத்து வர இவை சாதகமான சகுனங்களே. என் கண்களின் இமைகள் துடிக்கின்றன. என் மனோரதம் நிறைவேறும், வெற்றி பெறுவேன் என்று சொல்வது போல இருக்கிறது. இதைக் கேட்டு லக்ஷ்மணனும், சுக்ரீவனும் மரியாதையுடன் வணங்கி நிற்க, மேலும் விவரமாக சொல்லலானார். சேனையின் தலைமையில் நீலன் போகட்டும். வேகமாக செல்லக் கூடிய நூறாயிரம் வானர வீரர்களுடன் வழியை சரி பார்த்துக் கொண்டு முன்னால் செல்லட்டும். சேனாபதி நீலனே, பழங்களும் காய் கிழங்குகளும் நிறைந்து, குளிர்ந்த ஜலம், காடுகள் அடர்ந்தவழியில் உன் வீரர்களை அழைத்துச் செல். வழியில் மது நிறைந்த பூக்களுடன் இருந்தால் இன்னும் விசேஷம். சீக்கிரம் கிளம்பு. துஷ்டர்கள் இந்த ஜலத்தை, பழம், காய் கிழங்குகளையும் கெடுத்து விடாமல் பார்த்துக் கொள். காவல் இருக்கும் ராக்ஷஸர்களிடம் ஜாக்கிரதையாக இரு. பள்ளமான குகைகளில், அடர்ந்த காடுகளில் வானரங்கள் குதித்து போகும் பொழுது கவனமாக செல்லுங்கள். எதிரிகளின் பலம் மறைந்திருந்து தாக்கலாம். பயங்கரமான செயலில் இறங்குகிறோம். தைரியமாக விக்ரமத்தை காட்ட வேண்டிய சமயம். உங்களிடம் அதிகமாக சேமித்து வைக்கப் பட்டுள்ள பலத்தை இப்பொழுது காட்டுங்கள். கடல் போன்ற இந்த சைன்யத்தின் முன் நிற்கும் வீரர்கள், நல்ல பலசாலிகளாக கபி சிங்கங்களாக நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக செல்லுங்கள். மலை போன்ற க3ஜனும், மகா பலசாலியான க3வயனும், க3வாக்ஷனும், முன்னால் செல்லுங்கள். வீரர்களே, நீங்கள் சேனைத் தலைவர்கள், தலைமை தாங்கி படையை நடத்திச் செல்லுங்கள். வானர சேனை கிளம்பட்டும். தென் பகுதியை ருஷப4னென்ற வானரன் கவனித்துக் கொள்ளட்டும். (க3ந்த4 ஹஸ்தி) மத ஜலம் பெருக்கெடுத்து ஓடும் யானையைப் போல எதிர்க்க முடியாத பலம் உடையவன் க3ந்த4 மாத3னன், இடது பகுதியில் இருந்து கவனித்துக் கொள்ளட்டும். சேனைகள் நடுவில் நான் செல்வேன். ஐராவதத்தின் மேல் ஏறி இந்திரன் வருவது போல ஹனுமானின் முதுகில் ஏறி, நாலா புறமும் வீரர்களை மகிழ்வித்துக் கொண்டு வருவேன். இந்த லக்ஷ்மணன் அந்தகன் போல போரில் விளங்குபவன், அங்கதனோடு வரட்டும். சார்வபௌ4மன் என்ற யானையில் மேல் குபேரன் (தனாதிகாரி) வருவது போல வருவான். ஜாம்பவானும், சுஷேணனும், வேக3 த3ர்சீ என்ற வானர வீரனும், மூவருமாக மையப் பகுதியை கவனித்துக் கொள்ளுங்கள். ராகவன் சொன்னபடியே சுக்ரீவன், சேனையை அணி வகுத்தான். வானர கணங்களுக்கு கட்டளைகள் பிறப்பித்தான். எல்லா வானர வீரர்களுமே, யுத்தம் செய்யும் ஆவலுடன், குகைகளில் இருந்தும், மலை சிகரத்திலிருந்தும் குதித்து வேகமாக வந்தன. இதன் பின் வானர ராஜனும், லக்ஷ்மணனும் வணங்கி நிற்க, ராமன் தென் திசை நோக்கி சேனையுடன் தன் பிரயாணத்தை துவங்கினார்.
நூற்றுக் கணக்காக, நூறாயிரம், கோடி, பத்து கோடி யானை போன்ற பெருத்த உருவமுடைய வானர வீரர்களுடன் போருக்கு கிளம்பினான். முன் நின்று நடத்திச் செல்லும் அவனைத் தொடர்ந்து வானர வீரர்களின் பெரும் சேனை, மகிழ்ச்சியுடன் ஆனந்தத்துடன் குதித்துக் கொண்டு கிளம்பின. சுக்ரீவனால் நன்றாக பரிபாலிக்கப் பட்டு வந்த பிரஜைகள், அரசனிடம் தங்கள் அபிமானம் வெளிப்பட குதூகலமாக கிளம்பினர். கர்ஜித்துக் கொண்டும், பெரும் ஆரவாரம் செய்து கொண்டும் தென் திசை நோக்கிச் சென்றன. நல்ல வாசனையுள்ள பழங்களை சாப்பிட்டுக் கொண்டும், மதுவைக் குடித்துக் கொண்டும், திருப்தியாக சென்றன. பெரிய மரங்களை தோளில் சுமந்து கொண்டு சென்றன. மகரந்த பொடி நிறைந்த கொத்து கொத்தான பூக்களுடன் மரங்களை வேரோடு பிடுங்கி, ஒருவருக்கொருவர் திடுமென போட்டி போட்டுக் கொண்டு தூக்கிச் சென்றன. சில சமயம் கீழே போட்டன. கிழே விழும் நிலையில் உள்ளதை சில தள்ளி விட்டன. அடுத்து வந்தவனை தள்ளி விட்டு மகிழ்ந்தன சில. ராவணனை நாம் கொல்ல வேண்டும். மற்ற ராக்ஷஸர்களையும் விட்டு வைக்க வேண்டாம். ராகவன் சமீபத்தில் வந்து இவ்வாறு கத்தி விட்டுச் சென்றன. முன்னால் ருஷபனும், நீலனும், குமுதனும் செல்ல, வழியை சீராக்கிக் கொண்டு பல வானரங்களை ஏவி வேலை வாங்கியபடி சென்றனர். நடுவில் அரசன் சுக்ரீவன், ராம, லக்ஷ்மணன், மூவரும் பலமான போர் வீரர்களால் சூழப் பட்டவர்களாக, எதிரிகளுக்கு நெருங்க முடியாத சக்தி வாய்ந்த பலசாலிகள் பலர் சூழ பாதுகாப்பாக சென்றனர். இந்த வானர சேனையை கட்டுக்குள் வைத்து பாதுகாத்தபடி கேஸரி, பனஸன், க3ஜன், அர்க்கன் என்ற தலைவர்கள் நடந்தனர். சுக்ரீவனுக்கு பின்னால் ஜாம்பவான், சுஷேணன், ருக்ஷன் என்ற தலைவர்கள் சேனையின் பின் பகுதிக்கு தலைமை தாங்கினார்கள். நீலன் என்ற சேனாபதி நாலாபுறமும் சுற்றி வந்து ஆணைகள் கொடுத்துக் கொண்டிருந்தான். த்ரிமுகன், ப்ரஜங்க3ன், ரம்ப4ன் ரப4ஸன், என்பவர்கள் வானரங்களை வேகமாக செல்லத் தூண்டியபடி சென்றனர். தங்கள் பலத்தில் கர்வம் கொண்டவர்களாக, ராமனின் கட்டளை என்பதால், வழியில் மலைகளையோ, வனங்களையோ, குளம், பூக்கள் நிறைந்து காணப்படும் நீர் நிலைகளையோ, பழம் காய்கள் நிறைந்து கிடந்த மரங்களையோ, செடி கொடிகளையோ, ஏறிட்டு கூட பார்க்கவில்லை. சமுத்திரம் போல இருந்த அந்த வானர சேனை, நகரங்களையும், ஜனபதங்களையும் தவிர்த்து ஒதுக்குப் புறமாகவே சென்றது. சமுத்திரத்திற்கு இணையாக ஜய கோஷம் செய்தன. தாசரதியின் அருகில் இருந்த வானர வீரர்கள், சூரர்களாக, சிறந்த வானர வீரர்கள், வேகமாக குதிரை மேல் ஏறிச் செல்வது போன்ற வேகத்துடன் குதித்துச் சென்றனர். நர ருஷபம் (மனிதர்களுள் காளை போன்ற கம்பீரம் உடையவர்கள்) என வர்ணிக்கப்பட்ட ராஜ குமாரர்கள், இந்த செயல்களை ரசித்தவாறு சென்றனர்.
பெரும் கிரகங்களால் சூழப்பட்ட சந்திரன் போல இருவரும் விளங்கினர். வானர ராஜாவான சுக்ரீவனும், லக்ஷ்மணனும் உடன் வர, ராமன் பெரும் சைன்யத்துடன் போருக்கு ஆயத்தமாக சென்றான். அங்கதன் தோள் மேல் அமர்ந்திருந்த லக்ஷ்மணன், கூடிய சீக்கிரம் சீதையை காப்பாற்றி, ராவணனை வதம் செய்து விட்டு, நம் எண்ணமும் நிறைவேறி விடும், நாமும் செல்வம் கொழிக்கும் அயோத்திக்கு திரும்பிச் செல்வோம் என்று ஆவலும் நம்பிக்கையுமாக ராமனிடம் சொன்னான். ராகவா, ஆகாயத்திலும், பூமியிலும் பல நல்ல சகுனங்கள் தெரிகின்றன. இந்த நிமித்தங்கள் சுபமான பலன்களைச் சொல்கின்றன. வெற்றியை சூசகமாக தெரிவிக்கின்றன. நம் சேனைக்கு அனுகூலமாக காற்று கூட இதமாக வீசுகிறது. இனிய குரலில் பறவைகள் கூவுகின்றன. மிருகங்களின் சத்தமும் வாழ்த்துவது போல கேட்கின்றன. நாலா திசையும் ப்ரஸன்னமாகத் தெரிகிறது. சூரியனின் ஒளியும் விமலமாகத் தெரிகிறது. சுக்ரனும், சுபமாக நோக்குகிறான். பா4ர்கவன் உனக்கு அனுகூலமாக இருக்கிறான். ரிஷிகளின் கூட்டமும், ப்ரும்ம ராசியாக, விசுத்3த4மாக காட்சி அளிக்கின்றன. இவை எல்லாமே நல்ல பிரகாசமான கிரணங்களோடு (பார்வையோடு) பிரதக்ஷிணமாகச் செல்கின்றன. புரோஹிதருடன், த்ரிசங்குவும் ராஜ ரிஷியாக விமலமாகத் தெரிகிறார். இவர் நமக்கு பாட்டனார். இக்ஷ்வாகு குலத்தின் மூதாதையருள் ஒருவர். நிர்மலமான விசாக நக்ஷத்திரத்தில், உபத்ரவம் செய்யாத யோகத்தில் நிற்கிறார். இந்த நக்ஷத்திரம், இக்ஷ்வாகு வம்சத்தினருக்கு மிகவும் சிறந்த நக்ஷத்திரம். தென்மேற்கு திசையில், நிருருதனைக் காண்கின்றோம். மூலம், மூலமான தூமகேதுவினால் பீடிக்கப் பட்டதாக பிரகாசமாகத் தெரிகிறது. இவை அனைத்தும் ராக்ஷஸர்களின் வினாசத்திற்காக என்றே இப்படி கூடியிருக்கின்றன. காலன் நெருங்கி வந்து விட்டதால் தான், அவர்களைச் சுற்றி கிரகங்களும், நக்ஷத்திரங்களும் இப்படி அமைந்துள்ளன. ஜலம் ப்ரஸன்னமாக ருசியோடு இருக்கிறது. வனங்களில் பழங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பருவத்துக்கான பூக்கள், பழங்கள் இவைகள் மணம் வீசி, மரங்கள் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கின்றன. இந்த வானர சைன்யம் அணி வகுத்து செல்வதே அவ்வளவு இனிய காட்சியாகத் தெரிகிறது. ப்ரபோ, தாரகாசுரனை வதம் செய்ய, தேவ சேனை புறப்பட்டுச் சென்றது போல இருக்கிறது. இவைகளைப் பார்த்து மனம் மகிழ்ச்சி கொள்வாய். ஆர்ய, இவைகளை அன்புடன் பார். என்று சொல்லி லக்ஷ்மணன் நிறுத்தினான். சேனை சுற்றிக் கொண்டு, பூமியை பிரதக்ஷிணம் செய்தவாறு, நடந்தது. ருக்ஷ, வானர, சார்தூலங்கள், நகமும், பற்களுமே ஆயுதங்களாக கைகளினாலும், பாதங்களாலும் பூமி அதிர நடக்கவும், புழுதி ஏகமாக கிளம்பியது. சூரியனின் ஒளியையே மறைத்து விடும் போல அந்த புழுதிப் படலம் எழுந்து நின்றது. மலைகளையும், காடுகளையும் கடந்தபடி தென் திசை நோக்கி வானர சேனை பிரயாணம் செய்தது. மேகத்தின் உறவினர்கள் இறங்கி வந்து விட்டது போல, ஆகாயத்தை மறைத்தபடி, வெகு தூரத்துக்கு வெகு தூரம், வானர சேனையே காணப்பட்டது. நதிகளையும், அருவிகளையும், வயல் வெளிகளையும், நீர் நிறைந்த குளங்களையும், மரங்கள் அடர்ந்த மலைகளையும், சமவெளியான பூமி பிரதேசங்களையும், வனங்களையும், பழங்கள் நிறைந்த மரங்களையும் மத்தியிலும், எதிரிலும், குறுக்காகவும், கீழிருந்தும், நுழைந்து கடந்தனர். பூமியை மறைத்தபடி பெரும் சேனை அணி வகுத்துச் சென்றது. எல்லோரும் மனதில் மகிழ்ச்சி நிரம்பியவர்களாக, காற்று வேகத்தில் சென்றனர். ராகவன் காரியத்திற்காக, விக்ரமத்தை வரவழைத்துக் கொண்டவர்களாக வானர வீரர்கள் சென்றனர். ஒருவருக்கொருவர், தங்கள் மகிழ்ச்சியையும், பலத்தையும் காட்டிக் கொண்டு விளையாட்டாக முன்னேறினர். வழியில், இளம் வீரர்கள், தங்கள் வயதுக்குரிய சாகஸங்களை செய்தவாறு சென்றனர். சிலர் வேகமாக நடந்தனர். சிலர் ஓடினர். சிலர் தாவி குதித்து சென்றனர். வனத்தில் வசிக்கும் வானரங்கள் சில கிளு கிளுவென நகைத்தன. வால்களை தரையில் ஓங்கி அடித்தும், பாதங்களால் தரையில் மிதித்தும், மரங்களை வேரோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு சில, மலைகளின் மேல் புஜங்கள் உராய நடந்து சில, தங்கள் உற்சாகத்தை வெளிக் காட்டின. மலையின் மேல் தாவி ஏறி உச்சியை அடைந்து கீழே இருப்பவர்களைப் பார்த்து சில சத்தமிட்டன. கோஷமிட்டன. தங்கள் கால்களால் கொடிகளை அழுத்தி மிதித்து, வழி செய்தன. பெரிய மலைகளையே பெயர்த்து எடுத்துக் கொண்டு விட்டது போல, பெரிய பாறாங்கற்களை தூக்கிக் கொண்டு வழி நடந்தன. நூற்றுக் கணக்காக, ஆயிரம் நூறாக, கோடிக் கணக்காக, ஆயிரமாயிரம் கோடி கணக்காக, பயங்கரமான வானர வீரர்கள் நடமாடி நிரம்பி பூமி அதிர்ந்தது. இரவும் பகலுமாக அந்த வானர சேனை சென்றபடி இருந்தது. சுக்ரீவன் அவர்கள் தேவைகளை கவனித்து எந்த விதமான குறையும் இன்றி பாதுகாத்தான். யுத்தம் செய்யும் ஆவலே தூண்டுதலாக அவர்கள் வேக வேகமாகச் செல்ல உதவியது. சீதையை விடுவிக்க வேண்டும், கால தாமதம் செய்யக் கூடாது என்று எண்ணி, எங்கும் முஹுர்த்த நேரம் கூட நிற்காமல் சென்றன. இப்படியாக, நடந்து நடந்து, மரங்கள் அடர்ந்த, பல விதமான மிருகங்கள் நிறைந்த மலய மலையை வந்தடைந்தனர். விசித்ரமான காடுகளையும், நதிகள், நீர் வீழ்சசிகள், அருவிகளையும், பார்த்தபடி ராமர் முன்னால் சென்றார். சஹ்ய, மலய மலைகளில் சம்பக, திலக, சூத, அசோக, சிந்து வாரகம், கரவீர, தினிசம் என்ற மரங்களை, அதன் கிளைகளை உடைத்தபடி வானர வீரர்கள் சென்றனர். அங்கோல, கரஞ்ச, ப்லக்ஷ, ந்யக்ரோத, திந்துக, ஜம்பூக (நாவல்) ஆம்வலிக (நெல்லி) நீபன் (வேம்பு) போன்ற மரங்களையும் விட்டு வைக்கவில்லை. சமவெளி பிரதேசத்திலும் பலவிதமான அழகிய காடுகளும் மலைகளும் காணப்பட்டன. காற்று வேகத்தில் புஷ்பங்களை உதிர்த்தன. சந்தனத்தின் குளிர்ச்சியுடன் காற்று இதமாக வீசியது. வண்டுகள் பாட்டிசைக்க, மதுவின் மணம் வீசும் புஷ்பங்களை நாடி பறந்தபடி இருந்தன. அந்த மலையரசன், தாது பொருட்களும் அணிகலன் போல விளங்க, அழகாகத் தெரிந்தான். தாதுக்களின் பொடி காற்றில் பரவி தூசியாக எங்கும் பரவி நின்றது. பூமியை மறைத்து நின்ற அந்த பெரிய வானர சேனை கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரவியிருந்தது. மலைச் சாரல்களில், ரம்யமாகத் தெரிந்த பூக்களுடன் கூடிய செடி கொடிகள், புதர்கள், தாழம்பூ, சிந்துவாரம், வாஸந்தி, மனோரமா, மாத4வி, க3ந்த4 பூர்ணா, முல்லை, மல்லிகைப் புதர்கள், பூக்கள் அடர்ந்து விளங்க, சிரி பி3ல்வம், மதூகம், வஞ்சுளா, வகுளா என்ற புஷ்பங்கள், ஸ்பூர்ஜகா, திலகா, நாக வ்ருக்ஷம், இவைகளிலும் பூக்கள் நிறைந்திருக்க, சூதா, பாடலி, கோவிதா3ரம் என்ற புஷ்பங்களும், முசுலிந்த, அர்ஜுன, சிம்சுபா, குடஜா, த4வ, சால்மலி, சிவந்த குரவகம், ஹிந்தாள, தினிச, சூர்ணகா, நீபிகா, நீலாசோகம், வரணா, அங்கோல, பத்3மகம் மற்றும், பலவகைத் தாவரங்களும், குதித்து தாவி ஓடிய வானரங்களால் மிதி பட்டு, நசுக்கப் பட்டு த்வம்சம் செய்யப் பட்டன. அந்த மலையில் கிணற்று நீர் குளிர்ந்து இருந்தது. அதே போல குளங்கள் தெளிவான குளிர்ந்த நீருடன் காணப்பட்டன. சக்ரவாகங்கள் பின் தொடர காரண்டவங்கள் காணப்பட்டன. ப்லவ, க்ரௌஞ்ச, பக்ஷிகள் நிறைந்து கிடந்தன. வராக, மான் முதலியவைகளும், கரடிகளும், சிங்கங்களும், புலிகளும், பயங்கரமான விஷப் பாம்புகளும், பெரிய பெரிய உருவத்துடன் சஞ்சரித்தன. நல்ல வாசனையுடைய பத்மங்களும், மலர்ந்த குமுதங்களும், உத்பல புஷ்பங்களும், நீரில் விளையும் பலவிதமான புஷ்பங்களுடன் அந்த நீர் நிலைகள் ரம்யமாக விளங்கின. அந்த மலைச் சாரலில் பலவிதமான பறவை இனங்கள், கோலாகலமாக கூவின. அந்த வானரங்கள் குளித்தும், குடித்தும் அந்த தண்ணீரில் விளையாடியும் மகிழ்ந்தன. மலை மேல் ஏறி போட்டி போட்டுக் கொண்டு தண்ணீரில் குதித்து விளையாடின. அம்ருதம் போன்ற பழங்களையும், காய் கிழங்குகளையும், பூக்களையும், வானர வீரர்கள் பறித்தன. மதம் தலைகேற, மரங்களில் ஏறி உதிரச் செய்தன. த்3ரோணம் (ஒரு அளவு-மரக்கால், எட்டுபடி கிட்டத்தட்ட பத்து கிலோ) அளவு தொங்கிக் கொண்டிருந்த தேன் கூடுகளை கலைத்து மதுவை அருந்தின. இதற்காக, மரக் கிளைகளை வளைத்தும், உடைத்தும் இந்த செயலின் காரணமாக கொடிகளை மிதித்து அழித்தும், கால் அதிர, மலைப் பிரதேசங்களில் நடந்தும் வானர வீரர்கள், மேலும் நடந்து சென்றன. சில வானரங்கள், அளவுக்கு மீறி மதுவை அருந்தியதால், செய்வதறியாது மரங்களின் மேலேயே நடனமாடின. மற்றும் சில தள்ளாடியபடி மரத்தின் மேலிருந்து கீழே விழுந்தன. பூமியில் கண்டபடி இந்த வானரங்கள் விழுந்து கிடந்தன. பாத்திகளும் வரப்புமாக, பயிர் செய்ய தயார் நிலையில் இருந்த விளை நிலங்கள் போல இவை காணப்பட்டன. இதன் பின் மகேந்திர மலையை அடைந்து ராமர் அந்த மலையில் ஏறலானார். மரங்கள் அலங்காரமாக இருந்த மலையுச்சியை அடைந்தான். அந்த மலையுச்சியிலிருந்து தசரதகுமாரன், ஆமைகளும், மீனும் வளைய வரும் பெரும் சமுத்திரத்தைக் கண்டார். சஹ்யம் என்ற மலையைக் கடந்து மலயம் என்ற பெரிய மலையையும் தாண்டி, கிரமமாக எல்லோரும் கடற்கரையை அடைந்தனர்.
கடற்கரை பெரும் ஓசையுடன், கம்பீரமாக காணப்பட்டது. அதை அடுத்து இருந்த வேலாவனம் என்ற இடத்திலிருந்து ராமன் லக்ஷ்மணனுடனும், சுக்ரீவனுடம் சமுத்திரத்தை ஆராய்ந்தார். கற்களை குளிப்பாட்டுவது போல அலைகள் வேகமாக வந்து மோதி, நீரை வாரியிறைத்து நனைத்து விட்டு திரும்பிச் சென்றன. கண்கொள்ளா காட்சியாக இருந்தது. திடுமென ஒரு அலை புறப்பட்டு வருவதும், கரையின் கற்களில் மோதி திரும்பிச் செல்வதுமாக இருந்ததைப் பார்த்த ராமன், சுக்ரீவனிடம் சொன்னார். சுக்ரீவா, இதோ நாம் வருணாலயம் என்று அழைக்கப் படும் சமுத்திரத்தை வந்தடைந்து விட்டோம். நாம் முன்னே நினைத்தபடியே அதே சிந்தனை தான் இப்பொழுதும் தோன்றுகிறது. கரையே தெரியாது பரவிக் கிடக்கும் இந்த சாகரம், நதிகளின் அரசன். ஏதாவது உபாயம் செய்து தான் இதைத் தாண்ட முடியும். தற்சமயம் இங்கேயே தங்குவோம். வானரர்களை அக்கரை சேர்ப்பிக்க என்ன வழி என்று யோசிப்போம். சீதையை இழந்த துயரத்தால் மனம் நொந்து இருந்தாலும், அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் ராமன், எல்லோருமாக கடற்கரையில் தங்க ஏற்பாடுகளைச் செய்வதில் முனைந்தார். பலவிதமாக உத்தரவுகள் பிறப்பித்து வானரங்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் தெளிவு படுத்தினார். யாரும் தங்கள் சேனையை விட்டு விலகிச் செல்லக் கூடாது. அவரவர்கள் இருக்கும் இடத்தில் அப்படியே இருங்கள். நாம் யோசித்து முடிவு செய்யும் வரை சேனைத் தலைவர்கள், தங்கள் பொறுப்பில் உள்ள வானரங்களை கண் காணித்து பாதுகாப்பாக வைத்திருங்கள். ஆபத்து காலத்தில் எப்படி கவனமாக இருப்போமோ அது போல. இதைக் கேட்டு சுக்ரீவனும், லக்ஷ்மணனும் சமுத்திரக் கரையிலிருந்து சற்று தள்ளி இருந்த மரங்கள் அடர்ந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். அந்த வானர படையும் அங்கு தங்க, அருகிலேயே மற்றொரு சமுத்திரம் உண்டானது போல காட்சியளித்தது. வேளாவனத்தின் இனிய நீரை, வெண்ணிறமாக இருக்கக் கண்டு, அதை திரும்ப திரும்பக் குடித்து திருப்தியடைந்த வானரங்கள், அடுத்து சமுத்திரத்தைக் கடக்கும் நேரத்தை எதிர் நோக்கி இருந்தனர். இவர்கள் இங்கு தாங்கள் தங்கவும், உண்ணவும் உறங்கவும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த சமயம் கிளப்பிய ஆர்பாட்டத்தையும் மீறி சமுத்திரத்தின் அலை ஓசை ஓங்கி கேட்டது. சுக்ரீவன் தன் படை வீரர்களை மூன்றாக பிரித்து, அதற்கான தலைவர்களையும் நியமித்து கவனமாக போருக்கு ஆயத்தங்களைச் செய்து வைத்தான். அனைவரும் ராம காரிய சித்திக்காக போர் புரிய உறுதி எடுத்துக் கொண்டு, சமுத்திரத்தை பார்த்தவாறு காத்திருந்தனர். வெகு தூரத்தில் ராக்ஷஸ ராஜதானி தெரிந்தது. இடையூறாக குறுக்கிடும் பெரிய சமுத்திரத்தைப் பார்த்து வருந்தினர்.
இரவின் ஆரம்பத்தில், சமுத்திரம், கோரமாக சிரிப்பது போல (நுரை தள்ளிக் கொண்டு) தோற்றம் அளித்தது. பயங்கரமான முதலைகளும், ஆமைகளும் அலைகளுடன் நடனமாடுவது போல ஒரு சமயம் காட்சியளித்தது. சற்றுப் பொறுத்து சந்திரோதயம் ஆகும் வேளையில், தன் பதியான சந்திரனின் வரவை மகிழ்ச்சியோடு எதிர் கொள்வது போல அலைகளான கைகளை நீட்டி ஆரவாரித்தது போல இருந்தது. நுரையே சந்தனமாக, அதை தன் அலைகளால் பிசைந்து தயார் செய்து வைப்பது போலவும், அதை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, திசைகள் எனும் பெண்கள், சந்தனத்தை சந்திரனுக்கு பூசுவது போலவும், தோன்றியது. வேகமாக வீசிய காற்றில், பெரிய முதலைகளும், திமிங்கிலங்களும், பாம்புகளும் நிறைந்த புஜகாலயமாக விளங்கியது. பலவிதமான ஜந்துக்கள் மூழ்கி நீரில் வளைய வர, அசையாமல் இருந்தவை, மலைகள் விழுந்து கிடப்பவை போலத் தோன்றின. என்ன தான் முயன்றாலும், எளிதில் கடக்க மார்கம் இல்லை. ஆழமான, அசுரர்களின் இருப்பிடமான சமுத்திரம். எப்படி கடப்பது? நேரம் ஆக ஆக, நீரினுள் தெரிந்த பாம்புகளும், நாகங்களும், முதலைகளும் காற்றில் அலை பாய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. மேலும் கிழுமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்த பெரிய பெரிய நீர் வாழ் ஜந்துக்களை இது வரை கண்டதேயில்லை. தேவர்களுக்கு எதிரிகளான அசுரர்களின் இருப்பிடமான பாதாளம் வரை பரவியிருந்த சமுத்திரத்தின் ஆழம் தெரியாமல், மேற்பரப்பில் சிதறும் நீர்த் திவலைகள் நெருப்புப் பொறி பறக்க, வெளிப் பார்வைக்கு மற்றொரு ஆகாயம் போலவே இருந்தது. ஆகாயம் சாகரம் போல என்று சொல்லலாமா, சாகரம் அம்பரம் (ஆகாயம்) போல என்று சொல்லலாமா? இரண்டும் ஒன்றே. இந்த நீரும் ஆகாயத்துடன் தொடர்புடையது. ஆகாயமும் நீரின் ஒரு பகுதி உடையது. தாரா கணங்கள் நிறைந்தது ஆகாயம் என்றால் ரத்னங்களையுடையது சாகரம். ஆகாயத்தில் மேகங்கள் மாலை மாலையாக சஞ்சரிப்பது போலவே, சமுத்திரத்தின் அலைகளும் மாலை மாலையாக போட்டி போட்டுக் கொண்டு வீசுகின்றன. இவை இரண்டுக்கும் இடையில் அதிக வித்தியாசமே இல்லை போல அந்த இரவின் பின் பகுதியில் ஆகாயமும், சமுத்திரமும் ஒன்றோடொன்று இணைந்தும் காட்சி தந்தது. ஆகாயத்தில் பெரும் ஓசையுடன் இடி இடிக்கும் மேகம் உண்டு என்றால், சமுத்திர ராஜனின் அலைகள் யுத்தத்தில் முழங்கும் மகா பேரி என்ற வாத்தியத்தின் நாதம் போல ஓங்கி ஒலிக்கின்றது. ரத்னங்களை உள்ளடக்கிய சமுத்திரத்தின் அடங்கிய நாதம் காற்றினால் பெரிதாக்கப் பட்டு கம்பீரமாக கேட்கிறது. இந்த நாதத்தால் ஈர்க்கப் பட்டு முதலைகள் வேகமாக வந்து ஒன்றோடொன்று முட்டிக் கொள்வதால், தடாலென்று கீழே விழுகின்றன. காற்றும், சமுத்திரத்தின் அருகாமையும் வானர வீரர்களை குதூகலமாக இருக்கச் செய்தது. இயற்கையின் அழகை ரசித்து, சாகரத்தைக் கண்ட வியப்பு அடங்காமலே வானரங்கள் இரவைக் கழித்தன. அவர்களுக்குள் சமுத்திரம் தன் பரபரப்பான அலைகளின் ஓசையால், தானே தடுமாறுவது போல கற்பனை செய்து மகிழ்ந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராமாபி4ஷேணனம் என்ற நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 5 (412) ராம விப்ரலம்ப: (பிரிவாற்றாமையால் ராமன் புலம்புதல்)
நீலன் என்ற வானர வீரன், அந்த பெரிய வானர சேனையை வகைப் படுத்தி, அணி அணியாக சாகரத்தின் வட கரையில் சௌகர்யமாக இருக்கச் செய்தான். மைந்த3னும், த்3விவித3னும் மாறி மாறி காவல் இருந்து ரக்ஷித்தனர். நத நதீ பதி (நதம்-கிழக்கிலிருந்து மேற்கே பாயும் நதி, நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாயும்) எனப்படும் சாகரத்தின் கரையில் சேனையை ஒழுங்கு படுத்தி நிலை நிறுத்திய பின், ராமன் லக்ஷ்மணனைப் பார்த்துச் சொன்னார். சாதாரணமான துக்கமானால், காலப் போகில் மறந்து விடும். சீதையைப் பிரிந்த என் துக்கம் நேர் எதிராக தினம் தினம் அதிகரிக்கிறது. என் பிரியமான மனைவி வெகு தூரத்தில் இருக்கிறாள். ராக்ஷஸன் அபகரித்துச் சென்று விட்டான், என்ற கவலைகள் ஒரு புறம் இருக்க, இந்த இளம் வயதில் அவள் தனிமையை அனுபவிக்கிறாளே, அவள் யௌவனமே வீணாகிறதே என்ற கவலையும் என்னை வாட்டுகிறது.
காற்றே, நன்றாக வீசு. என் காந்தாவைத் தொட்டு என்னையும் தொடு. நீ என்னை ஸ்பரிசிக்கும் சமயம், சந்திரனோடு என் பார்வை கலக்கட்டும். விஷம் குடித்தவன் உடல் தகிப்பது போல என் உடல் தகிக்கிறது. ராவணன் அபகரித்துச் சென்ற பொழுது ஹா நாதா, என்று என் சீதை அலறினாளே, அதை நினைத்து அந்த பிரிவே எரி பொருளாக, அவளைப் பற்றிய சிந்தனையே பெரும் நெருப்பாக, மதனாக்னி இரவும் பகலுமாக என்னை தகிக்கிறான். இந்த சமுத்திரத்தில் நான் மூழ்கி இந்த சூட்டை தணித்துக் கொள்கிறேன். லக்ஷ்மணா, நீ இங்கேயே நில். நீருக்குள் மூழ்கி எப்படியோ தூங்கும் என்னை காமன் தகிக்க மாட்டான். நானும், என் பிரிய மனைவியும் ஒரே பூமியில் இருப்போம் என்ற எண்ணம் கூட தகிக்கும் என் உள்ளத்திற்கு சாந்தி தரும். நீர் நிரம்பிய வயல் வரப்பு, நீர் வற்றி விட்ட அடுத்த வயலுக்கு ஈரத்தைத் தருவது போல, உயிர் வாழ்கிறாள் என்று கேட்டதால் நானும் உயிர் வாழ்கிறேன். ஜானகி உயிர் தரித்து இருக்கும் செய்தி, நம்பிக்கை வறண்டு போன என் மனதிலும் நம்பிக்கை எனும் நீரை தெளித்து விட்டிருக்கிறது. சதபத்ரம் போன்று நீண்ட விழிகளையுடைய என் பிரிய மனைவியை எப்பொழுது காண்பேனோ. சத்ருக்களை ஜயித்து லக்ஷ்மீகரமான சீதையைக் காண்பேனா? பத்மம் போன்ற அவள் முகத்தை கைகளால் தூக்கி, சற்றே உயர்த்தி உதடுகளை ஸ்பரிசித்து முத்தமிடுவேனா? வியாதிக் காரனுக்கு மருந்து போல அது எனக்கு நன்மை தரும். தாள பழம் போன்ற ஸ்தனங்களை இறுக்கி அணைத்துக் கொள்ள என் கை துடிக்கிறது. ராக்ஷஸர்களின் மத்தியில் பயத்தால் நடுங்கியபடி, என்னை நாதனாக உடையவள் அனாதையாக தவிக்கிறாள். ஜனக ராஜனின் மகள். என் பிரிய மனைவி. தசரத ராஜாவின் மருமகள். இவ்வாறு இருந்தும் ராக்ஷஸிகளின் மத்தியில் அகப்பட்டுக் கொண்டு எப்படித்தான் தூங்குகிறாளோ. எப்பொழுது தான் ராக்ஷஸிகளின் மத்தியில் இருந்து வெளி, வருவாளோ. நீலமான ஆகாயத்தில், சரத் கால சந்திரன் தென்படுவது போல மெல்லிய கீற்றாக ஒளி வீசியபடி தெரிவாள். ஸ்வபாவமாகவே மெல்லிய தேகம் உடையவள். இப்பொழுது சாப்பிடாமல், சோகத்தினாலும் மேலும் இளைத்து, காணப்படுவாள். ராக்ஷஸனின் மார்பில் அம்புகளை பொழிந்து கீழே வீழ்த்தி விட்டு, எப்பொழுது தான் நான் சீதையை மீட்டுக் கொண்டு வருவேனோ. தேவ லோக ஸ்த்ரீகள் போன்ற லாவண்யம் மிக்க என் சீதை, என் தோளில் முகம் பதித்து, தன் கஷ்டம் நீங்க ஆனந்த பாஷ்பம் சொரியும் நாள் எப்பொழுது வருமோ. மைதிலியை பிரிந்த இந்த துக்கம் என்று தான் என்னை விட்டு அகலுமோ. மாசு படிந்த ஆடையை நினைத்த மாத்திரத்தில் களைவது போல இந்த துக்கத்தை களைய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? புத்திசாலியான ராமனே இப்படி புலம்புவதைக் கேட்ட சூரியனும், பகல் முடிவில் மந்தமான பிரகாசத்துடன் இருந்தவன் அஸ்தமனம் அடைந்தான். லக்ஷ்மணன் வந்து சமாதானம் செய்ய ராமன் எழுந்து சந்த்யா கால வந்தனைகளைச் செய்யலானார். மனதில் கமல பத்ராவான சீதையே நிறைந்திருந்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராம விப்ரலம்போ என்ற ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 6 (413) ராவண மந்த்ரணம் (ராவணன் மந்த்ராலோசனை செய்தல்)
லங்கையில் ஹனுமான் செய்த சாகஸங்களைக் கண்டு ராக்ஷஸேந்திரனான ராவணன் வெட்கினான். குனிந்த தலையுடன், தன் சபையோரைப் பார்த்து நடந்ததை விவாதிக்க ஆரம்பித்தான். நமது ராஜதானியான லங்கையில் யாரும் நுழையவே முடியாது என்பதை பொய்யாக்கியதும் அல்லாமல், பெரும் சேதம் விளைவித்து, தப்பியும் சென்று விட்டான் ஹனுமான். ஒரு வானரம் வந்து நம் காவலில் உள்ள ஜானகியை பார்த்து விட்டு போய் இருக்கிறான். உறுதியான சைத்ய மாளிகை சேதமாகி இருக்கிறது. பலசாலிகள் என்று பெயர் பெற்ற ராக்ஷஸர்கள் வதம் செய்யப்பட்டிருக்கிறார்கள். லங்கா நகரத்தையே ஒரு கலக்கு கலக்கி விட்டு ஹனுமான் சென்றிருக்கிறான். என்ன செய்வேன்? உங்கள் அனைவருக்கும் மங்களம் உண்டாகட்டும். மேற் கொண்டு நாம் செய்ய வேண்டியது என்ன? சொல்லுங்கள். எதை செய்தால் சரியாக இருக்கும் ? பெரியோர்கள், சபையோரை கலந்தாலோசித்து செயல் படுவது தான் வெற்றிக்கு வழி என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இதனால் ராம விஷயமாக உங்கள் கருத்தை தெரிந்து கொள்ளத்தான் இந்த கூட்டத்தைக் கூட்டி இருக்கிறேன். உலகில் மூன்று விதமான மந்திரிகள் உண்டு. உத்தம, மத்யம, அதம என்றபடி. இந்த மூன்று வகை மந்திரிகளைப் பற்றிச் சொல்கிறேன். ஒரு செயலை ஆரம்பிக்கும் முன், தெய்வத்தை வேண்டி, மூன்று விதமான மத்ராலோசனைகள் செய்து, சாமர்த்யம் மிக்க மந்திரிகளுடன் கலந்தாலோசித்து, சமமான அந்தஸ்தில் உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் அணுகி அவர்கள் கருத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, தானும் யோசித்து தீர்மானம் செய்து கொண்டு அடுத்து செய்ய வேண்டிய முயற்சியைத் தொடங்கினால் அவனை புருஷோத்தமன் என்று சொல்லலாம். ஒரே ஒரு விஷயத்தை விஸ்தாரமாக எண்ணி ஆலோசித்து, ஒரே தர்மத்தில் மனதை செலுத்துபவன், ஒருவனாக செயல் படுபவன் மத்யமன். செய்யப் போகும் செயலின் நன்மை தீமைகளை ஆராயாமல், தர்மத்தையும் விட்டு, செய்வேன் என்று ஒரே செயலில் தானே முனைந்து நிற்பவன் புருஷ அதமன். எப்படி மனிதர்களில் உத்தம, மத்யம, அதமர்கள் உண்டோ, அதே போல மந்த்ராலோசனைகளும் மூன்று வகைப் படும். சாஸ்திரங்களில் நல்ல தேர்ச்சியும், சுயமாக அறிவும், ஸ்திரமான புத்தியும் உள்ள மந்திரிகள், உறுதியுடன் ஒரு விஷயத்தை வலியுறுத்தும் பொழுது அது உத்தமமான மந்த்ராலோசனையாகும். பலவிதமான கருத்து வேறுபாடுகள் கொண்டு, ஆலோசனை முடிவில் ஒரு விஷயத்தை வலியுறுத்துவது மத்யமமாகும். பலரும் பலவிதமான முரண்பாடான கருத்துக்களைச் சொல்லி, எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளாமலே முடிவது அதமமான மந்த்ராலோசனை. ஆகையால், பெரியோர்களே, நீங்கள் சொல்வது கருத்து ஒருமித்த நல்ல ஆலோசனையாக இருக்கட்டும். செய்ய வேண்டியதை அறிந்து கொள்ளுங்கள். இதைதான் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லக் காத்திருக்கிறேன். ஆயிரக் கணக்கான வானர வீரர்கள் சூழ, நம்மை தாக்க ராமன் வந்து கொண்டிருக்கிறான். ராகவன் இந்த சாகரத்தையும் சுலபமாக தாண்டி வந்து விடுவான். சகோதரனுடனும், வேகம் மிக்க படை வீரர்களுடனும் சமுத்திரத்தை வற்றத்தான் செய்வானோ, வேறு என்னதான் செய்வானோ. இப்படி இருக்க வானரர்களுடன் நாம் விரோதம் பாராட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். தற்சமயம் நாட்டுக்கும், நமக்கும் நன்மை எது என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆலோசனை சொல்லுங்கள் என்று ராவணன் வேண்டிக் கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண மந்த்ரணம் என்ற ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 7 (414) சசிவோக்தி: (மந்திரிகளின் ஆலோசனை)
இவ்வாறு ராவணன் வேண்டிக் கொள்ளவும், சபையில் இருந்த ராக்ஷஸ வீரர்கள், கை கூப்பி வணங்கி, தங்கள் கருத்துக்களை சொல்லலாயினர். எதிரி பலத்தை அறிந்து கொள்ளாமல், நீதிக்கு புறம்பாக, அறிவில்லாத சிலர் தன் பக்க பலத்தையும் தெரிந்து கொள்ளாமல் அரசனை பயமுறுத்துவர். ராஜன், நமது சேனையோ மிகவும் விஸ்தாரமானது. ஆயுதங்களோ கணக்கிலடங்கா. பரிக4ம், சக்தி, இஷ்டி, சூல, பட்டஸம் எனும் ஆயுதங்கள் நிரம்பி கிடக்கின்றன. அப்படி இருக்க, அரசனே, தங்கள் மனதில் கவலை ஏன்? குழப்பம் ஏன்? எந்த விதமான தாழ்வு மனப்பான்மைக்கும் இடம் கொடுக்காதீர்கள். போ4கவதி சென்று, பன்னகர்களை நீங்கள் வெற்றி கொண்டு வந்தீர்கள். பல யக்ஷர்கள் காவல் இருக்கும் கைலாஸ சிகரம் சென்று மலையை அசைத்து கலக்கி, குபேரனை உங்கள் வசத்தில் செய்து கொண்டீர்கள். மகேஸ்வரனை சக்யம் செய்து கொண்டு, மகேஸ்வரனே உங்களை சிலாகித்துச் சொல்ல, விபோ4 லோக பாலர்களை வெற்றி கொண்டீர்கள். மகா பலசாலிகள் எனும் யக்ஷர்கள் கூட்டத்தை நசுக்கி, அடக்கி, தாங்கள் கைலாச சிகரத்திலிருந்து இந்த விமானத்தை அபகரித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். தா3னவ அரசனான மயன், உங்கள் நட்பை விரும்பி, பயமும் காரணமாக, தன் மகளை உங்களுக்கு மணம் செய்து கொடுத்தான். ராக்ஷஸ புங்கவா, யாருக்கும் அடங்காமல் மது என்ற தானவ அரசன், கும்பீனஸம் எனும் ஊரில் தன் பலத்தால் அடங்கா கர்வம் கொண்டு திரிந்த பொழுது அவனை யுத்தத்தில் வென்று அவன் கர்வத்தை அடக்கினீர்கள். ரஸாதலம் சென்று, நாகர்களை வென்று, வசமாக்கிக் கொண்டீர்கள். வாசுகியும், தக்ஷகனும், சங்கனும், ஜடீ எனும் நாக ராஜனும் பலவந்தமாக உங்கள் வசம் ஆனார்கள். பலம் மிக்க, வீரர்களான பல ராக்ஷஸர்கள் வரங்கள் பெற்று, அழிவில்லாதவர்களாக இருந்தவர்கள், இவர்களையும் ஒரு வருஷம் நீண்ட யுத்தம் செய்து, அவர்களை வெற்றி கொண்டீர்கள். படையுடன் சென்று, தன் பலத்தாலும், மாயா யுத்தம் செய்தும், ராக்ஷஸர்கள் பலரையும் தங்கள் ஆளுகைக்கு கீழே கொண்டு வந்தீர்கள். லோக பாலர்களை வென்ற பின், விளையாட்டாக இந்திர லோகம் சென்று, இந்திரனை வீழ்த்தினீர்கள். வருணனுடைய மகன்கள் சூரர்கள். நான்கு வித சேனையோடு வந்தவர்களை, போர் முடிவில் தோற்கடித்தீர்கள். யம லோகம் என்ற பெரும் கடலையும் நீங்கள் விட்டு வைக்கவில்லை. ம்ருத்யு தண்டம், நிஜ சமுத்திரத்தின் பெரிய முதலைகள் போல இருக்க, சால்மலி (ஸிலக சஒததஒந தரக்ஷெக்ஷெ) மரங்கள் அடர்ந்ததும், கால பாசம் எனும் பெரும் அலைகள், யம கிங்கரர்கள் தான் பாம்புகள், இப்படி இருந்த யம லோகம் என்ற சமுத்திரத்திலேயே மூழ்கி எழுந்து பெரும் வெற்றி அடைந்தீர்கள். (ம்ருத்யு தண்டம், கால பாசம், யம கிங்கரர்கள் இவர்களைக் கூட தாண்டி வந்து விட்டவர் தாங்கள்). யமனை தடுத்து நிறுத்தினீர்கள். நேர்மையான யுத்தம் செய்து, வீரர்களான அவர்களும் மகிழ்ச்சி அடையச் செய்தீர்கள். இந்திரனுக்கு சமமான பல க்ஷத்திரியர்களுடன் உங்கள் ராஜ்யம், வசுமதியாக, செல்வம் நிறைந்தவளாக, வசுமதியாகவே (பெரிய மரங்கள் அடர்ந்த இந்த பூமி போலவே) ஆயிற்று. (பூமிக்கு மரங்கள் போல, அரசனுக்கு சிற்றரசர்கள்) இந்த வீரர்களது சாகஸத்துக்கு முன்னால் ராமனது வீரம் ஒன்றுமே இல்லை. ராமன் இவர்களுக்கு சமமாக ஆக மாட்டான். பல சிறந்த வீரர்களை அடக்கி ஒடுக்கி உங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள். மகாராஜனே இந்த வானரங்களை எண்ணி ஏன் கவலைப் பட வேண்டும். இந்திரஜித் ஒருவனே இவர்களை அடக்கி விடுவான். இந்திரஜித் யாகம் செய்து மகா உத்தமமான மாகேஸ்வரம் எனும் அஸ்திரத்தை வரமாகப் பெற்றிருக்கிறான். இது உலகில் யாரிடமும் இல்லாத அரிய சக்தி. தேவர்களின் சேனை ஒரு சமுத்திரமாக இருந்தது. சக்தியும் தோமரமும் மீன்களாக, விளிசீர்ண, அந்த்ர என்ற பாசிபடர்ந்து, யானைகள் ஆமைகள் போல, அஸ்வங்கள் குதிரைகள் தவளைகளாக நிறைந்து கிடந்தது. ருத்ரனும், ஆதித்யனும் பெரிய முதலைகளாக காட்சி தந்தனர். மருத் கணங்களும், வசுக்களும் சமுத்திரத்தில் காணப் படும் பாம்புகள் போல ஆயினர். ரதங்களும், அதில் பூட்டிய குதிரைகளும் நீரில் தோன்றும் அலைகள் போல இருக்க, காலாட்படை, மணல்போல ஆயிற்று. இப்படிபட்ட தேவர்களின் சேனையான சமுத்திரத்தையே கலக்கி, தேவராஜனான இந்திரனைப் பிடித்து லங்கைக்கு கொண்டு வந்தீர்கள். இதன் பின், பிதாமகரான ப்ரும்மா வேண்ட, அவனை விடுவித்தீர்கள். அந்த தேவராஜனோ, சம்பரன், வ்ருத்ரன் என்ற ராக்ஷஸர்களை அழித்தவன். அவனே, ப்ரும்மாவின் சகாயத்தால் விடுபட்டு திரும்பிச் சென்றான். தேவர்களின் தலைவன் அவன். அந்த இந்திரஜித் என்ற தங்கள் மகனையே போருக்கு அனுப்புங்கள். ராமனுடன் கூட சேர்த்து வானர சேனையை எதிர்த்து போரிட்டு வென்று வருவான். சாதாரண ஜனங்களிடமிருந்து வந்த ஆபத்து தான் இது. இதை மனதில் போட்டு கலங்கத் தேவையே இல்லை. நிச்சயமாக தாங்கள் ராமனை வதம் செய்து விடுவீர்கள், கவலையே வேண்டாம் என்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சசிவோக்தி என்ற ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 8 (415) ப்ரஹஸ்தாதி வசனம் (ப்ரஹஸ்தன் முதலானோர் சொல்வது)
கரு நீல மலை போல உருவம் கொண்ட ப்ரஹஸ்தன் என்ற சேனாபதி பேசலானார். இவர் அறிவு மிக்கவர், சூரனான ராக்ஷஸ மந்திரி ஆனாலும், கை கூப்பி பணிவாகவே பேசத் தொடங்கினார். தேவ க3ந்த4ர்வ தா3னவர்களோ, பிசாச, பக்ஷிகள், உரகங்கள் (பாம்புகள்) இவை எதுவானாலும் உன்னை அசைக்க முடியாது. இந்த மனிதர்கள் எம்மாத்திரம் என்று நாம் அனைவரும் நம்பிக் கொண்டு அலட்சியமாக இருந்து விட்டோம். அந்த சமயம் வானரம் வந்து நம்மை ஏமாற்றி, நாசம் விளைவித்து விட்டு போய் விட்டது. நான் உயிருடன் இருக்கும்பொழுது மற்றொரு முறை அந்த வானரம் வந்து உயிருடன் திரும்ப முடியாது. சாகரம் வரை பரவியுள்ள, மலைகளும் காடுகளும், வனங்களும், வானரமே இல்லாமல் போகும்படி அழித்து விடுகிறேன், கட்டளையிடுங்கள். இனி நமது காவல் துறையில் அதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன். வானரம் எதுவும் நகரத்துக்குள் நுழைய முடியாதபடி காவலை பலப் படுத்தி விடுகிறேன். ராக்ஷஸ ராஜனே, இனி தோல்வி என்று நீ மனமுடைந்து போக விட மாட்டேன் என்றார். அடுத்து து3ர்முகன் என்ற ராக்ஷஸன், நம் எல்லோருக்கும் இந்த தாக்குதல் ஒரு பாடமே. இதை இனியும் பொறுத்திருக்க மாட்டோம். நம் ஊரும், அந்த:புரமும், மாற்றான் ஒருவன் வந்து நாசம் செய்து விட்டு போகும் அளவு காவல் பலமின்றி இருந்திருக்கிறது. நாம் கவனம் இன்றி இருந்து விட்டோம். நமது மதிப்புக்குரிய ராக்ஷஸ ராஜனின் நகரத்துக்குள் வந்த வானரத்தை சும்மா விட மாட்டோம். நான் ஒருவனே போய், அந்த வானரம் பயங்கரமான கடலுக்குள் ஒளிந்திருந்தாலும், ரஸாதலமே சென்று மறைந்திருந்தாலும், கண்டு பிடித்து வதைத்து விட்டு வருவேன், என்றான். இதன் பின் மிகவும் கோபத்துடன் வஜ்ரதம்ஷ்டிரன் என்ற ராக்ஷஸன் எழுந்தான். ஒரு பெரிய உத்தரத்தை எடுத்தான். ரத்தமும் நிணமும் தோய்ந்து கிடந்த அதை முன் நிறுத்திக் கொண்டு, இந்த ஹனுமானை அடித்து நமக்கு ஆகப் போவது என்ன? துராத்மா, அவனை விடுவோம். ராமன், சுக்ரீவனோடும், லக்ஷ்மணனோடும் யுத்தம் செய்வோம், இவர்கள் இருக்க, அல்பனான ஹனுமானுடன் நமக்கு என்ன பேச்சு? இதோ இந்த பரிகத்தை வைத்துக் கொண்டு இப்பொழுதே போய் ராமனை சுக்ரீவனோடும், லக்ஷ்மணனோடும் சேர்த்து வதைத்து விட்டு திரும்பி வந்து விடுவேன் என்று மார் தட்டினான். நான் ஒருவனே போதும். வானர சைன்யத்தை வேரோடு அழிக்க ஒரு உபாயமும் சொல்கிறேன். விரும்பினால் கேளுங்கள். ராக்ஷஸேந்திரா, நமக்குள் ஒற்றர்களை அனுப்பி விஷயங்களைத் தெரிந்து கொண்டு அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தாக்குவோம். நமது பக்ஷத்தில், விருப்பம் போல உருவத்தை மாற்றிக் கொள்ளவும், விரும்பிய நேரத்தில் விரும்பிய இடம் செல்லவும் சக்தி பெற்ற பல ராக்ஷஸர்கள் இருக்கிறார்கள். நாம் ஆயிரக் கணக்காக, காகுத்ஸன் நம்பும் விதமாக அமைதியாக உருவம் எடுத்துக் கொண்டு செல்வோம். பயந்த தோற்றத்துடன் மனிதர்களாக காகுத்ஸனிடம் போய் உன் இளைய சகோதரன் பரதன் தான் அனுப்பி வைத்தான். வன வாச காலம் முடிந்து திரும்பும் நாள் வந்து விட்டது. அப்படி நீ வந்து விடாமல் தடுக்க, வதம் செய்து விடச் சொல்லி எங்களுக்கு உத்தரவு என்று சொல்வோம். அவன் உடனே பரதனை சந்திக்கச் சென்று விடுவான். உடனே நாம் நம் படை வீரர்களைத் திரட்டி ஆகாயத்தில் நின்றபடியே, கத்திகள், சூலங்கள், க3தை4 போன்ற ஆயுதங்களை வைத்துக் கொண்டு வானர சைன்யத்தை அழித்து விடுவோம். கூட்டமாக ஆகாயத்திலிருந்து கற்களை மழையாக பொழிந்து அவர்கள் எதிர்க்க இயலாமல் செய்து விடுவோம். அனைத்து வானரங்களும் ஒரே சமயத்தில் யமலோகம் செல்ல வழி செய்வோம். ஏதாவது சொல்லி, ராம லக்ஷ்மணர்களை அப்புறப் படுத்தி விட்டால், மற்றவர்கள் உயிரை பறிப்பது எளிதே, என்றான். இதன் பின், கும்பகர்ணன் மகனான நிகும்பன் பேசினான். இவனும் நல்ல வீரனே. மகா கோபத்துடன் ராவணனைப் பார்த்து எஎல்லோரும் இங்கேயே இருங்கள். நான் ஒருவன் போகிறேன். ராகவனை, லக்ஷ்மணனோடு சேர்த்து கொன்று விட்டு வருகிறேன். சுக்ரீவனையும், ஹனுமானையும் மற்ற வானரங்களையும் ஒரே அடியில் வீழ்த்தி விடுவேன். என்றான். இதன் பின், மலை ஒன்று எழுந்தது போல எழுந்த வஜ்ரஹனு என்ற ராக்ஷஸன், கோபத்துடன், நாக்கை சுழற்றி ஏற்கனவே ஈரமான உதடுகளை ஒரு முறை ஒற்றி, தயார் செய்து கொண்டவனாக பேசினான். நாம் எல்லோரும் வேகமாக செயல் படுவோம். பயம் எதற்கு? நான் ஒருவனே அந்த வானரங்களைத் தின்று தீர்த்து விடுவேன். சௌக்யமாக, யுத்தத்தில் மதுவை குடித்து மகிழ்ந்து இருங்கள். நான் ஒருவனே சென்று சுக்ரீவனையும், லக்ஷ்மணனையும் வதம் செய்து விட்டு வருகிறேன். அங்கதனையும், லக்ஷ்மணனையும், ஏன், யுத்த களத்தில் யானை போல உலவும் ராமனையுமே அழித்து விடுவேன் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப்ரஹஸ்தாதி வசனம் என்ற எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 9 (416) விபீ4ஷண சமாலோசனம் (விபீஷணன் ஆலோசனை சொல்லுதல்)
இதன் பின் பலர் பேசினர். நிகும்பன், ரபஸன், சூர்ய சத்ரு என்ற பலசாலியான ராக்ஷஸன், சுப்தக்னன் (தூங்குபவரைக் கொல்பவன்), யக்ஞஹா (யாகத்தை அழிப்பவன்), மகா பார்ஸ்வான், மகோதரன், அக்னிகேது, துர்தர்ஷன், ரஸ்மிகேது என்ற வீரன், மகா தேஜஸ்வியான இந்திரஜித், (ராவணனுடைய மகனான இவன், சிறந்த போர் வீரன்), விரூபாக்ஷன், முதலானோர். இதற்குள், தங்கள் தேஜஸால் சுயமாகவே நெருப்பு போன்று ஜ்வலித்த, ப்ரஹஸ்தன், வஜ்ரதம்ஷ்டிரன், தூம்ராக்ஷன், அதிகாயன், துர்முகன் என்ற ராக்ஷஸன் இவர்கள் பரிகம், பட்டஸம், ப்ராஸங்கள், சக்தி, சூல, பரஸ்வதம் எனும் ஆயுதங்கள், வாள், வில், அம்புகள் கூட நிறைய கூர்மையான வாட்கள், இவைகளை எடுத்துக் கொண்டு, ஆங்காரமாக கோஷம் இட்டுக் கொண்டு, ராவணனிடம் வந்து, ராவணனைப் பார்த்துச் சொன்னார்கள். இன்றே போய் ராமனை வதம் செய்வோம். லக்ஷ்மணனோடு, சுக்ரீவனையும் வதம் செய்வோம். லங்கையை நாசம் செய்த அல்பனான ஹனுமானையும் அடித்து வீழ்த்துவோம் என்று கோஷம் செய்தவர்களை அடக்கி விட்டு விபீ4ஷணன் எழுந்தான். பணிவாக பேச ஆரம்பித்தான். திரும்பவும் கூச்சலிட்ட அவர்களை அடக்கி அமரச் செய்து விட்டு, தொடர்ந்தான். தமையனே மூன்று விதமான உபாயங்களை செய்தும் நமது காரியம் ஆகவில்லையென்றால் தான் நான்காவதான பலத்தை பிரயோகம் செய்ய வேண்டும். விஷயம் அறிந்தவர்கள் நமக்கு இப்படித்தான் அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். அதுவும், நன்றாக சோதித்து பார்த்து முறைப்படி செய்ய வேண்டும். விழிப்புடன், படையுடன் வந்து நிற்கும் வீரனை, ஏற்கனவே நமது செயலால் ரோஷத்துடன், எதிர்க்க முடியாத தன்னம்பிக்கையுடன் நம்மை போருக்கு அழைக்கும் பொழுது, எப்படி எதிர் கொள்வாய்? நம்மை ஜயிக்க என்று அவன் உறுதியுடன் திட்டமிட்டுக் கொண்டு வந்து நிற்கிறான். இந்த பயங்கரமான நத நதீபதியான சமுத்திரத்தை தாண்டி போய் விட்ட ஹனுமானை யார் தான் ஜயிக்க முடியும்? நினைக்கவே கூட முடியவில்லை. நமது நிசாசர பலம் அளவிட முடியாதது. நமது சேனையும் அளவில் பெரியது. இருந்தும் எதிரியின் பலத்தை அலட்சியப் படுத்தி மட்டமாக நினைக்க கூடாது. அதுவும் தீர விசாரிக்காமல் நாம் ஒரு முடிவுக்கு வருவது எப்படி சரியாகும்? மேலும், ராக்ஷஸ ராஜன், முன்னால் ராமனுக்கு தீங்கிழைத்திருக்கிறான். ஜனஸ்தானத்திலிருந்து அவன் மனைவியை அபகரித்துக் கொண்டு வந்திருக்கிறான். அவனது கீர்த்தி அறியாமல் மோதிய க2ரனை அவன் வீழ்த்தி விட்டதும் தெரிந்ததே. ஜீவன்கள் எதுவானாலும், ஒரு உயிரை காப்பாற்றுவது தான் தர்மம். தவிர, பிறன் மனைவியைத் தூக்கி வந்தது மனிதத் தன்மையும் இல்லை. புகழ் தரும் தீரச் செயலும் இல்லை. பொருளை நாசம் செய்யும் கோரமான பாபம். மேலும் மேலும் பாபம் செய்யத் தூண்டும். ஆகையால், அபகரித்து வந்த வைதே3ஹியை நாம் விடுவித்து விட வேண்டும், அனாவசியமாக கலகத்தை வரவழைத்து யாருக்கு என்ன பயன்? அவர்களும் நல்ல வீரர்கள். தவிர தர்ம வழியில் செல்பவர்கள். அவர்களுடன் எதிர் நின்று போர் செய்ய நம்மால் முடியாது. பயனின்றி ஒரு விரோதம் நமக்குத் தேவை தானா? மைதிலியைக் கொடுத்து விடலாம். ரத்னங்கள் நிறைந்த, யானைகளும், குதிரைகளும் நிரம்பிய இந்த ஊர், அந்த ராமனின் படைகளால் தாக்கப் படும் முன், மைதிலியைக் கொடுத்து விடலாம். வானர சைன்யம், பயங்கரமாக, கணக்கில்லாமல் கூட்டமாக வந்து, நம்மால் எதிர்க்க முடியாமல், லங்கையை நாசம் செய்து விட்டு போகும் முன், மைதிலியைக் கொடுத்து விடலாம். லங்கையும் நாசமாகும், சூரர்களான நமது வீரர்களும் பெருமளவில் மடிவார்கள். நாமாக, ராமனின் மனைவியை பெருந்தன்மையாக திருப்பித் தராவிட்டால், இந்த கஷ்டங்கள் வந்து சேருவது நிச்சயம். உடன் பிறந்தவன் என்ற உரிமையில் சொல்கிறேன். நான் சொல்வதைக் கேள். உனக்கு நன்மையும், தர்மம் என்றும் உணர்ந்து சொல்கிறேன். மைதிலியைக் கொடுத்து விடலாம். ராமன் வந்து சேருமுன், சரத்கால சூரிய கிரணங்களைப் போல அம்புகளைக் கொண்டு, கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு, ஒப்பில்லாத உயர்ந்த அஸ்திரங்களைக் கொண்டு, ராஜகுமாரன், உன்னை வதம் செய்யும் பொருட்டு வந்து நிற்கு முன், தாசரதியிடம் மைதிலியை திருப்பித் தந்து விடலாம். கோபம் கொள்ளாதே, ராஜன், சுகத்தையும், தர்மத்தையும் நாசம் செய்யும் இந்த அனாவசிய ரோஷத்தை விடு. உன் புகழையும், சௌக்யத்தையும் வளர்க்கக் கூடிய தர்ம வழியை பின்பற்றுவாயாக. தயவு செய். நாம் எல்லோரும் பந்து ஜனங்களுடன் நல்ல முறையில் வாழ வழி செய். நம் புத்திரர்களுடன் மற்றவர்களும் நலமாக வாழ வழி செய். தாசரதியிடம் மைதிலியைக் கொடுத்து விடலாம். விபீஷணன் சொன்னதைக் கேட்டு, ராக்ஷஸேந்திரனான ராவணன், எதுவும் சொல்லாமல் அந்த சபையை விட்டு வெளியேறி, தன் மாளிகை சென்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீஷண சமாலோசனம் என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 10 (417) விபீ4ஷண பத்2யோபதே3ச: (விபீஷணன் நன்மையை எடுத்துச் சொல்லுதல்)
மறு நாள் விடியற்காலை, விபீஷணன் தன் மனதினுள் தர்மம், அர்த்தம் இவற்றை எண்ணி, ஒரு தீர்மானம் செய்து கொண்டவனாக ராக்ஷஸ ராஜனின் வீட்டினுள் நுழைந்தான். தன் செயலையும், தான் சொல்லப் போகும் செய்தியையும், ராவணன் எப்படி எடுத்துக் கொள்வானோ, என்று பயந்தபடியே சென்றான். மலைச் சிகரம் போலவே கம்பீரமாக, உயர்ந்து நின்ற மாளிகை. அழகான அறைகளாக தடுக்கப் பட்டு, ஜனங்கள் நிறைந்து காணப்பட்டது. புத்திசாலிகளான (மகா அமாத்யர்கள்) மகா மந்திரிகள், தாங்களும் ஈ.டுபாட்டுடன் நிர்வகித்ததால், அழகுற விளங்கியது. எங்கும் ராக்ஷஸர்கள் காவல் காத்தபடி நின்றிருந்தனர். மதம் கொண்ட யானைகளின் பெருமூச்சு காற்று சூழ் நிலையின் காற்றையே கலக்கி அடித்தது. சங்க கோஷம் பெரும் கோஷமாக கேட்டது. தூரி, பேரிகையின் முழக்கம், அதைத் தொடர்ந்து வந்தன. பெண்கள் கூட்டம் கூட்டமாக வளைய வந்தனர். ராஜ வீதியில் பேச்சுக் குரல்களைக் கேட்டனர். புடமிட்ட, பொன்னால் செய்யப் பட்ட வளைவுகள், வியூகங்கள் கொண்டு அழகாக அலங்காரங்கள் செய்யப் பட்டிருந்தன. க3ந்த4ர்வர்கள் தங்கும் இடமோ, மருத் என்ற இனத்தினர் வசிக்கும் ஆகாயமோ, எனும் படி ரத்னங்கள் குவித்து வைக்கப் பட்டிருந்த மாளிகை. போகிகளின் (சிற்றின்பத்தில் திளைத்தவன், நாகம்) மாளிகை போல இருந்தது. (ரத்னங்களின் இருப்பிடம் நாகங்கள், மித மிஞ்சி கிடப்பதால், நாகங்களே வசிக்கும் இடமோ என்று ஐயம் , செல்வந்தன் வீட்டில் ரத்னங்கள் சேமித்து வைக்கப் பட்டிருப்பது செல்வ செழிப்பைக் காட்ட- இது சொல்லின் இரு பொருளையும் இணைத்து வர்ணிக்கும் காவ்ய அலங்காரம்). ஆகாய மண்டலம் போன்று பரந்து, விஸ்தாரமாக ஒளி மிகுந்து இருந்த தன் தமையனின் மாளிகைக்குள் விபீஷணன் நுழைந்தான். மங்கள கீதங்கள் இசைக்கப் படுவதையும், விடியற்காலையில் ஆசிர்வதிக்கும் விதமாக வாழ்த்துக்களையும் கேட்டபடி நடந்தான். வேத கோஷங்களும் கேட்டன. தன் தமையனின் நலனுக்காக, வெற்றிக்காக விசேஷமாக செய்யப் படும் வேத பாராயணங்கள் என்று உணர்ந்தான். ப்ராம்மணர்கள் தயிர் நிரம்பிய பாத்திரங்களையும், நெய், புஷ்பம், அக்ஷதைகள் இவைகளுடன் மந்திரங்கள் சொல்லி பூஜை செய்வதைக் கண்டான். மற்ற ராக்ஷஸர்கள் வணங்கி மரியாதை செய்ய, தன் தேஜஸால் கொழுந்து விட்டெரியும் தீயின் ஜ்வாலை போல பிரகாசித்த, த4னதா3னுஜன், குபேரன் தம்பியான ராவணன் ஆஸனத்தில் அமர்ந்து இருப்பதையும் கண்டான். அருகில் சென்று வணங்கி நின்றான். சபையின் நடை முறைகளை அறிந்தவனாதலால், பொன்னாலான ஆஸனத்தில் அமர்ந்திருந்த அரசன், பார்வையால் தனக்கு ஆஸனத்தை அளித்த பின், அதை ஏற்றுக் கொண்டு அமர்ந்தான். மந்திரிகள் முன்னிலையில், மற்ற பொது ஜனங்கள் இல்லாத அந்த சமயத்தில் தன் மனதினுள் காரண காரியங்களோடு தீர்மானம் செய்து வைத்து இருந்த ஒரு விஷயத்தைச் சொல்ல தயக்கத்துடன், ராவணனுக்கு இதமாக எப்படி சொல்லலாம் என்று சிந்தனையோடு ஆரம்பித்தான். தேச காலங்களையும், உலக வழக்குகளையும் அறிந்தவன் தான் விபீஷணன். தமையனை வாழ்த்தி, சமாதானமாக, கோர்வையாக பேச ஆரம்பித்தான். ராஜன், நீங்கள் சீதையை எப்பொழுது இங்கு கொண்டு வந்து சிறை வைத்தீர்களோ, அன்று முதல் பல கெட்ட நிமித்தங்களையே காண்கிறோம். நமக்கு அசுபமான துர் நிமித்தங்கள். அக்னி, மந்திரம் சொல்லி வளர்க்கும் பொழுதும் நேராக எரிவது இல்லை. தீப்பொறிகளோடு, புகையோடு, ஜ்வாலை புகையினால் மாசு பட்டதாக, வளருகிறது. ப்ரும்ம ஸ்தலம் எனும் யாக சாலைகளிலும், அக்னி ஹோத்ரம் செய்யும் இடங்களிலும் பூச்சி புழுக்கள் ஊர்வன காணப்படுகின்றன. ஹவ்யம் எனும் யாகத்தில் போடப் படும் ஹவிஸில் எறும்புகள் காணப்படுகின்றன. (யாகத்துக்காக அக்னியை வளர்க்கும் பொழுது புகை தோன்றக் கூடாது என்று சாஸ்திரம்). பசுவின் பால் சிவப்பாக காண்கிறது. யானைகள் சோர்ந்து போய் வீரம் இன்றி காண்கின்றன. குதிரைகள் தீனமாக கணைக்கின்றன. புல்லை கூட விரும்பி உண்பது இல்லை. கோவேறு கழுதைகள், குதிரை போன்றவை ரோமங்கள் உதிர்ந்து காண்கின்றன. தன் இயல்பான ஸ்வபாவத்துடன் நடமாடுவதில்லை. கட்டப் பட்டு இருக்கும் இடத்திலும் ஏதோ கவலையுடன் காணப்படுகின்றன. காக்கைகள் கூட்டமாக நம் எதிரிலேயே கத்துகின்றன. கூட்டமாக மாளிகைகளின் மேல் அமர்ந்தபடி காணப்படுகின்றன. கழுகுகள் கூட்டமாக வட்டமிடுகின்றன. ஊர் பூராவும் இரண்டு சந்த்யா காலங்களிலும் ஏராளமான குள்ள நரிகள், அமங்களமாக ஊளையிடுகின்றன. மாமிசம் உண்ணும் மிருகங்கள், நகரின் வாயிலில் கூட்டமாக நின்று கத்துகின்றன. இதன் எதிரொலியும் சேர்ந்து நாராசமாக ஒலிக்கின்றது. இது போன்ற நிலையில் நாம் பிராயச்சித்தம் செய்ய வேண்டியது அவசியம். ராஜன், தங்களுக்கு சரி என்று தோன்றினால், வைதேஹியை ராமனிடத்தில் திருப்பிக் கொடுத்து விடுங்கள். இதைச் சொல்லும் பொழுது நான் என் அறியாமையினால் சொல்கிறேன் என்று மகாராஜா நினைத்தாலும், தவறான காரியத்தைச் செய்யக் கூடாது. இந்த தோஷம் எல்லா ஜனங்களையும் பாதிக்கும். ராக்ஷஸ, ராக்ஷஸிகளையும், ஊரில், அந்த:புரத்தில் எல்லோரையும் இந்த தோஷம் தாக்கும். எல்லா மந்திரிகளும் தங்கள் எண்ணத்தைச் சொல்லி விட்டார்கள். நான் கேட்டதையும், கண்டதையும் சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் சொன்னேன். இதில் உள்ள நியாயத்தை தாங்கள் உணர்ந்து கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். மந்திரிகள் நிறைந்த சபையில், அவர்களுக்கு எதிரிலேயே, இளையவன் தன் தமையனைப் பார்த்துச் சொல்லி விட்டான். தன் மனதில் ராவணனுக்கு நலம் தரும், நோய் தீர்க்கும் மருந்து போன்று பத்யமானது என்று நம்பிய விஷயங்களை கூடியவரை நிதானமாக சொன்னான். காரண காரியங்களுடன், இதமாக, பொருள் பொதிந்த இனிய சொற்களால், கடந்த காலத்து வன் செயலும், அதன் நிகழ் கால பாதிப்பையும் எடுத்துச் சொன்னான். இந்த விவரங்கள் ராவணன் அறியாததல்லவே. ஆயினும், ஜுரம் வந்தவன் போலும், வெறி பிடித்தவன் போலும், ராவணன் தன் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்த விஷயங்களை, நன்மை தரும் ஆலோசனைகளை கேட்கவே விரும்பாதவன் போல, அலட்சியமாக பதில் சொன்னான். இதில் ஒரு பயமும் இல்லை. எனக்குத் தெரிந்து எந்த ஆபத்தும் இல்லை. என்ன முயன்றாலும், ராகவன் மைதிலியைத் திரும்ப பெறப் போவதில்லை. அது நடக்க விட மாட்டேன். தேவர்கள் இந்திரனுடன் வந்தாலும், லக்ஷ்மணனின் தமையன், என் முன்னால் நிற்கக் கூட முடியாது. தன் ஆற்றலில் அளவிட முடியாத நம்பிக்கையோடு, கர்வத்தின் உச்சியில் இருந்த ராவணன், அசுர சைன்யத்தின் நாசத்துக்கு தானே காரணமாக இருக்கப் போவதை அறியாதவனாக, மகா பலசாலியான ராவணன், உடன் பிறந்தவன் என்ற உரிமையுடன் நல்லதைச் சொல்ல வந்த விபீஷணனை திருப்பி அனுப்பி விட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் விபீஷண பத்2யோபதே3சோ என்ற பத்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 11 (418) த்3விதீய மந்த்ராதி4வேச: (திரும்பவும் மந்திரி சபையைக் கூட்டுதல்)
மைதிலியிடம் தான் கொண்ட காதல் மயக்கத்தால், உடல் இளைத்து வருந்திய ராவணன், நண்பர்கள் இந்த பாப செயலை உயர்வாக எண்ணி பாராட்டாத காரணத்தால், மேலும் ஆத்திரம் அடைந்தவனாக, காலம் கடந்த சமயம் மந்திரி சபையை திரும்பவும் கூட்டினான். தன் ஆடம்பரமான, பொன்னும், மணியும், ரத்னங்களும் இழைத்துச் செய்யப் பட்ட ரதத்தில், குதிரைகள் பணிவாக ஏற வசதியாக குனிந்து கொடுக்க, ஏறிக் கொண்டான். ஸ்ரேஷ்டமான அந்த ரதத்தில், பெரிய மேகம் போன்ற அமைப்பும், கர்ஜிப்பது போன்ற சப்தமும் கூடிய அந்த ரதத்தில் ஏறி சபையை நோக்கிச் சென்றான். உரையுடன் கூடிய வாளை ஏந்திய போர் வீரர்களும், மற்றும் பலவிதமான ஆயுதம் ஏந்திய வீரர்களும் ராக்ஷஸர்கள், ராக்ஷஸேந்திரனுடைய ரதத்தின் முன்னால் சென்றனர். பலவிதமான அலங்காரங்களுடன், பலவிதமான வேஷங்களுடன் முன்னும் பின்னும் பக்கங்களிலும் அரசனைச் சூழ்ந்து பாதுகாவலாகச் சென்றனர். அதி ரதர்கள், ரதத்திலும், யானையின் மேல் ஏறியும் வீரர்கள், மதம் கொண்ட யானைகளை திறம்பட செலுத்திக் கொண்டும், குதிரைகளை அறிந்த வீரர்கள் விளையாட்டாக குதிரைகளைச் செலுத்திக் கொண்டும், பின் தொடர்ந்தனர். க3தை4யும் , பரிக4ம், சக்தி, தோமரம் என்ற ஆயுதங்களுடன் சிலர், சிலர் சூலத்துடன், உடன் சென்றனர். ஆயிரக் கணக்கான தூ4ரி எனும் வாத்யம் இசைக்கப் பட, அதற்கு இணையாக சங்கு சப்தமும், சபைக்கு ராவணன் செல்லும் பொழுது முழங்கின. திடுமென, ஓடும் சக்கரங்களின் ஒலி அதிர, ரதம், லக்ஷ்மீகரமாக விளங்கிய ராஜ மார்கத்தை வந்தடைந்தது. வெண் கொற்றக் குடைகள் விரிந்து அழகாகத் தெரிந்தன. சந்திரனுக்கு இணையாக தூய வெண்ணிற குடைகள், ராக்ஷஸேந்திரனை மறைத்தன. வலது, இடது புறங்களில் தங்கத்தை தூளாக்கி ஸ்படிகத்தால் ஆன பிடியினுள் போட்டு செய்யப் பட்டிருந்த சாமரங்கள், வ்யஜனங்கள் இருபுறமும் வீசப் பட்டன. வழி முழுவதும் கூப்பிய கரங்களுடன் ஜனங்கள் அரசனைக் காண நின்றிருந்தனர். பல ராக்ஷஸர்கள், ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான ராவணனை தலை குனிந்து வணங்கினர். ராக்ஷஸர்கள் துதி செய்தும், ஜய கோஷம் செய்தும், வாழ்த்தியும், வழி முழுவதும் கொண்டாட, ராக்ஷஸ ராஜா, தன் சபை வந்து சேர்ந்தான். அந்த சபையில் உத்தரங்கள், உயர் தரமான பொன்னால் செய்யப் பட்டிருந்தன. சுவர்ணம், வெள்ளி இவற்றால் ஆன தூண்கள். பரிசுத்தமான ஸ்படிகம் போன்ற தூய்மையுடன் உட்புறம். அறுநூறு பிசாசங்கள், பாதுகாப்பாக, த்ருஷ்டி பரிகாரங்களாக வைக்கப் பட்டிருந்தன. விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கபட்ட இந்த சபையினுள், தன் தேக காந்தியால் தானும் பிரகாசமாக விளங்கிய ராவணன், நுழைந்தான். பிரியங்க3 என்ற வகை மான் தோல் விரிக்கப் பெற்ற வைமூடுரியம் பதிக்கப் பெற்ற உயர்ந்த பிடிகளைக் கொண்ட வராசனத்தில் ராவணன் சென்றமர்ந்தான். தூதர்களை அழைத்து, எல்லா ராக்ஷஸ பிரமுகர்களையும் அழைத்து வர ஆணையிட்டான். மிக முக்கியமான காரியம் ஒன்று இருக்கிறது. அது பற்றி ஆலோசனை செய்ய வேண்டும் என்றான். தூதர்கள் பறந்தனர். எல்லா இடங்களிலும், வீடுகளிலும், படுக்கையறைகளிலும், உத்யான வனங்களிலும், வீட்டைச் சுற்றி இருந்த உல்லாச க்ருஹங்களிலும் பயப்படாமல் சென்று, அரசனின் கட்டளையைத் தெரிவித்தனர். சிலர் அழகிய ரதத்திலும், சிலர் கிடைத்த ரதங்களிலும், தனியாகவே குதிரை மேல் ஏறியும், யானையில் மேல் ஏறி சிலரும், எதுவும் தயாராக இல்லாத பலர் நடந்தும் ராஜ சபையை அடைந்தனர். திடுமென அந்த நகரம், ரதங்கள், குதிரைகள், யானைகள் ஜனங்கள் நடமாட்டத்தால், பரபரப்படைந்தது. அமைதியாக இருந்த ஆகாயத்தில் திடுமென பறவைகள் கூட்டமாக தெரிவது போல இருந்தது. வாகனங்களை வெளியில் நிறுத்தி விட்டு, அவர்கள் நடந்து சபைக்குள் நுழைந்தனர். மலை குகைக்குள் சிங்கங்கள் நுழைவது போல நுழைந்தனர். அரசனின் பாதங்களில் வணக்கம் செலுத்தி, பதிலுக்கு ராஜ மரியாதையையும் ஏற்றுக் கொண்டு, ஆசனங்களில் சிலர், விரிப்புகளில் சிலர், பூமியில் சிலர் என்று அமர்ந்தனர். அரசனின் கட்டளை என்று வந்து கூடியிருந்த பிரமுகர்கள், தங்கள் தகுதிக்கு ஏற்ப, ராவண ராஜாவை முகமன் கூறி வணங்கியும், வாழ்த்தியும் அமர்ந்தனர். குறிப்பிட்ட விஷயங்களில் பண்டிதர்களான மந்திரிகளும், நல்ல குணம் நிறைந்த அமாத்யர்களும், விவரம் அறிந்த அறிஞர்கள், புத்திமான்களாக பல துறைகளில் பிரகாசிப்பவர்கள், நூற்றுக் கணக்காக அங்கு வந்து சேர்ந்தனர். அதில் பலர் சூரர்கள். ரம்யமாக இருந்த சபையில், எல்லா விதத்திலும் சுகமாக இருந்த ராக்ஷஸேந்திரனுடைய ராஜ சபையில் கூட்டமாக கூடினர். ராக்ஷஸர்கள் தங்கள் அரசனை நாலாபுறமும் சூழ்ந்தவாறு அமர்ந்தனர். விபீஷணனும், உயர்ந்த வேலைப்பாட்டுடன் அமைந்த தன் ரதத்தில் ஏறி தமையனின் சபைக்கு வந்து சேர்ந்தான். தன் முன் பிறந்தவனான சகோதரனுக்கு, இளையவன் தன் பெயர் சொல்லி வந்தனம் செய்து, கால்களைப் பிடித்து திரும்பவும் வணங்கி விட்டு அமர்ந்தான். சுகனும், ப்ரஹஸ்தனும் அதே போல வந்து அரசனை வணங்கி தங்களுக்கு அளிக்கப் பட்ட ஆசனங்களில் அமர்ந்தனர். அழகிய பொன்னாபரணங்கள், ஆடைகள், வாசனை திரவியங்கள், மிக உயர்ந்த அகரு, சந்தனம், இவை தவிர, மணம் நிறைந்த மலர் மாலைகள் இவைகளை அணிந்து காட்சியளித்த ராக்ஷஸர்களின் சமூகத்தால் அந்த சபையே மணம் வீசிற்று. யாரும் உரக்க பேசவில்லை. யாரும் பொய் சொல்லி உள்ளே நுழையவில்லை. குறுக்காக யாரும் நடமாடவில்லை. எல்லோருமே திருப்தியாக, நல்ல வீர்யம் உள்ளவர்கள், அரசன் ஏதோ முக்யமான விஷயம் சொல்ல இருக்கிறான் என்பதால், அவன் முகத்தைப் பார்த்தபடி இருந்தனர். அந்த ராவணன், சஸ்திரங்கள் தாங்கிய மகா பலசாலிகாளான வீரர்கள் கொண்ட சபைக்குத் தலைவன், வசுக்களின் மத்தியில் வஜ்ரம் ஏந்திய இந்திரன் போல பிரகாசமாகத் தெரிந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் த்விதீய மந்த்ராதிவேசோ என்ற பதினொன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 12 (419) கும்ப4கர்ண மதி: (கும்பகர்ணனின் ஆலோசனை)
யுத்தத்தில் வெற்றி வாகை சூடியே பழகிய அந்த அரசன், ப்ரஹஸ்தன் எனும் சேனாபதியை அழைத்துச் சொன்னான். சேனாபதியே, நான்கு விதமாகவும் கல்வி கற்ற போர் வீரர்களைக் கொண்டு நகரத்தை பாதுகாக்க ஏற்பாடு செய். இதைக் கேட்ட ப்ரஹஸ்தன், அரசனின் கட்டளையை சிரமேற்கொண்டு, உடனே அந்த மாளிகையின் உள்ளும் புறமும், காவலை பலப்படுத்தினான். நகரத்தைக் காவல் செய்ய ரகஸியப் படைகளையும் தயார் செய்து தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு, ப்ரஹஸ்தன் அரச சபையில் வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். அரசனே, காவல் வீரர்களை உள்ளும் புறமும், நம்பிக்கையான விதத்தில் பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்து நிற்கச் செய்து விட்டேன். இனிமேலும் தயங்காமல், தாங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள் என்றான். ராஜ்யத்தின் நலனை முன்னிட்டு, ப்ரஹஸ்தன் உடனடியாக செய்த ஏற்பாடுகளை புரிந்து கொண்ட அரசன் ராவணன், தன் நண்பர்கள், தனக்கு ஆப்தர்கள், என்று கூடியிருந்த ஜனங்களின் மத்தியில் தான் சொல்ல நினைத்ததைச் சொல்ல ஆரம்பித்தான். பிரியமோ, அப்ரியமோ (மனம் இசைந்தோ, இசையாமலோ), சுகம், துக்கம், லாபம் நஷ்டம், நன்மையோ தீமையோ, தர்மம், அர்த்தம், காமம் எனும் புருஷார்த்தங்களை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அரச காரியங்கள் அனைத்திலும், உங்களை கலந்தாலோசித்து, உங்கள் சம்மதத்துடன் தான் செய்து வந்திருக்கிறேன். உங்களுடன் நான் செய்த மந்த்ராலோசனைகள் எதுவுமே இதுவரை பலனளிக்காமல் போனதில்லை. சந்திரன், க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள், மருத்கணங்கள், இவற்றுடன் இந்திரன் இருப்பது போல, நான் உங்களுடன் இருந்து வந்திருக்கிறேன். இந்த பெரும் செல்வத்தையும் அடைந்தேன். உங்களிடம் எல்லா விவரங்களையும் சொல்லப் போகிறேன். கும்பகர்ணன், தூங்கிக் கொண்டிருந்ததால், அவனுடன் இது விஷயமாக ஆலோசனை செய்யவில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் எழுந்திருக்கிறான். எல்லா சஸ்திரங்களையும் பிரயோகிக்கத் தெரிந்தவன், பலசாலி, ஆனால் தூக்கம் அவனை ஆறு மாதங்களாக ஆட்கொண்டிருந்தது நாம் அறிந்ததே. மற்றொரு விஷயம், தண்டகாரண்யத்திலிருந்து, ராமனுடைய பிரியமான மனைவி, ராக்ஷஸர்களின் இயல்புக்கு ஏற்ப கொண்டு வரப் பட்டாள். அவளோ, என் மனைவியாக, என் படுக்கையறைக்கு வர மறுக்கிறாள். அவள் நடையழகு ஒன்றே போதும், மூன்று உலகிலும் அந்த சீதையைப் போல மற்றொரு பெண்ணை நான் கண்டதில்லை. சிறுத்த இடையும், பெருத்த பின்னழகும், சரத் கால சந்திரன் போன்ற முகமும், பொற்சிலை உயிர் பெற்றது போன்ற வடிவும், இனிமையான குணமும் உள்ளவள். மயன், தன் மாயையால் சிருஷ்டி செய்தானோ எனும்படி, தனித்து விளங்கும் அழகுடையவள். சிவந்து மென்மையாக விளங்கும் பாதங்களின் அமைப்பும், மிக நேர்த்தியாக தாமிர வர்ண நகத்துடன் கூடிய பாதங்களின் அழகைக் கண்டே நான் சொக்கிப் போனேன். என் உடலில் காம வேட்கை தகிக்கிறது. நெருப்பின் ஜ்வாலை போலும், சூரிய கிரணம் போலும் ப்ரபையுடையவளும், விசாலமான கண்களையுடையவளான சீதையைக் கண்ட உடனேயே நான் மன்மதனின் வசம் ஆகி விட்டேன். சற்றே நிமிர்ந்த வதனமும், பெரிய அழகிய கண்களும் என்னை நிலை தடுமாறச் செய்து விட்டன. அந்த க்ஷணமே நான் அவள் வசம் ஆகி விட்டேன் என்றால் மிகையாகாது. காமனின் வசம் ஆகி விட்டேன். க்ரோதமும், மகிழ்ச்சியும் தரக் கூடிய, உடல் வெளிறி, நிதானத்தை இழக்கச் செய்யக் கூடிய காமனால் நான் நிலை குலைந்து போனேன். சோகமும், தாபமும் என்னை வாட்டுகிறது. பாமினியான அவள், ஒரு வருஷ காலம் அவகாசம் வேண்டினாள். தன் கணவன் வந்து விடுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறாள். அழகிய நீண்ட கண்களைப் பார்த்து, நான் இந்த ஒரு வருஷ காலம் அவகாசம் கொடுத்தேன். மன்மதனின் இடைவிடாத தாக்குதலால் இந்த ஒரு வருஷ காலத்திற்குள் நான் களைத்து விட்டேன். வெகு தூரம் ஓடிய பிறகு குதிரைகள் களைத்து விழுவதைப் போல இருக்கிறேன். வற்றாத சமுத்திரத்தை இந்த வானரங்கள் எப்படி தாண்டி வரப் போகின்றன. கடல் வாழ் ஜந்துக்கள் நிறைந்து பயங்கரமான சமுத்திரத்தை இந்த தசரத குமாரர்கள் தான் எப்படித் தாண்டி வரப் போகிறார்கள். ஆனால், ஒரே ஒரு வானரம் வந்து நம் நகரத்தை சூறையாடி விட்டுப் போய் விட்டது. இப்பொழுது செய்வதறியாது திகைக்கிறேன். சொல்லுங்கள். உங்களுக்குத் தோன்றும் வழிகளைச் சொல்லுங்கள். மனிதனிடத்தில் எனக்கு பயம் இல்லை. ஆனாலும் உங்களையும் கலந்து ஆலோசிக்க விரும்புகிறேன். சொல்லுங்கள். உங்கள் உதவியால் தான் தேவாசுர யுத்தங்களை நான் ஜயித்தேன். அந்த ராஜ குமாரர்கள், சுக்ரீவன் முன்னிட்ட வானர சைன்யத்துடன் சமுத்திரத்தின் அக்கரை வந்து சேர்ந்துள்ளனர். சீதையின் இருப்பிடம் தெரிந்து விட்டது. அதனால் சமுத்திர கரை வரை வந்து விட்டார்கள். சீதையைத் தரக் கூடாது. தசரத குமாரர்களையும் வதம் செய்ய வேண்டும். இந்த விதமாக நீங்கள் யோசித்து ஒரு வழி சொல்லுங்கள். நீதி மார்கமாக ஆராய்ந்து சொல்லுங்கள். உலகில் வேறு யாருக்கும் என்னளவு சக்தி இருப்பதாகத் தெரியவில்லை. இந்த வானரங்கள் சமுத்திரத்தைக் கடந்து வரவா போகின்றன? நிச்சயம் வெற்றி எனக்குத் தான் என்று இவ்வாறு சொல்லிக் கொண்டே போனான். ஒரு விதமான ஜுர வேகத்தில், தான் சொல்வது சரிதானா என்று உணராமல் உளறியதைக் கேட்டு கும்பகர்ணன் கோபம் கொண்டான். தான் பேச ஆரம்பித்தான். ராமனையும், லக்ஷ்மணனையும் அடக்கி சீதையை கொண்டு வந்திருந்தால், நீ சொல்வது சரியே. சற்று யோசித்து கவனமாக கையாண்டிருக்கலாம். யமுனை வெள்ளம் போல கட்டுக் கடங்காமல் போகும் உன் மனதை கட்டுப் படுத்திக் கொள். மகாராஜா இவையனைத்தையும், ஆரம்பத்திலேயே எங்களிடம் சொல்லி ஆலோசனை கேட்டாயா? நீ செய்தது தவறு என்று தான் எனக்கும் தோன்றுகிறது. அரசனாக இருப்பவன், தீர்மானித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். செய்த பின் நியாய அநியாயங்களை விமரிசித்து என்ன பயன்? செயலில் இறங்கும் முன் ஆராய்ந்து முடிவு செய்து கொண்டு செயல் பட்டால், அந்த செயலில் அசையாமல் உறுதியாக நிற்க முடியும். அது தான் நியாயமான அரசனுக்கு அழகு. யோசிக்காமல், விபரீதமான காரியங்களை எந்த வித உபாயமும் பற்றி சிந்திக்காமல் செய்தால், அதன் பலனும் விபரீதமாகத் தான் இருக்கும். புலன்களை அடக்கி நியமங்களை அனுஷ்டித்து செய்யப் படாத யாகத்தின் ஹவிஸ் வீணாகப் போவதைப் போல போகும். புத்தி மோகத்தால் நினைத்தபடி செய்து விட்டு, பின்னால் பலா பலன்களை ஆராய்பவன் என்ன நியாயத்தையும், அநியாயத்தையும் பிரித்து உணரப் போகிறான். சபல புத்தியுடையவனுடைய செயலில் உடன்பாடு இல்லையென்றால், பறவைகள் க்ரௌஞ்ச மலையின் பொந்துகளை மாற்றுவது போல பிரஜைகள் மாற்றி விடுவர். மிகப் பெரிய காரியத்தை யோசிக்காமல் ஆரம்பித்திருக்கிறாயே, அதிர்ஷ்ட வசமாக ராமன் உன்னை வதம் செய்யவில்லை. மாமிச உணவில் விஷம் கலந்தது போல உடனே உன்னை வதம் செய்யாமல் விட்டானே, ஆயினும், மற்றவர்கள் உன் செயலைக் குறை கூறினாலும், நான் உன் பக்கமே இருந்து, உன் சத்ருக்களை அழிப்பேன். இந்திரனும், விவஸ்வானும் சேர்ந்து வந்தாலும், காற்றும் அக்னியும் சேர்ந்து வந்தாலும், குபேர வருணர்கள் இணைந்து வந்தாலும், நான் அவர்களை யுத்தத்தில் அழிப்பேன். பெரிய மலை போன்ற என் சரீரத்தையும், என் கையில் உள்ள கூர்மையான சூலத்தாலும், என் கூரிய பற்களுடன் நான் யுத்த வெறி கொண்டு ஆடும் பொழுது புரந்தரனான இந்திரனே நடுங்குவான். மற்றொரு ஆயுதம் எடுத்து அவன் என்னை அடிக்கும் முன் நான் அவன் ரத்தத்தைக் குடித்து விடுவேன். நிச்சயம். கவலைப் படாதே. தசரத குமாரர்களை வதம் செய்து உனக்கு சுகமாக, வெற்றியைக் கொண்டு வர நான் முயற்சி செய்கிறேன். லக்ஷ்மணனோடு ராமனையும் அழித்து வானர வீரர்கள் சைன்யம் அனைத்தையும், விழுங்கி விடுவேன். நீ கவலையின்றி, உன் தினசரி காரியங்களில் ஈடுபடு. நன்றாக, அக்ரிய வருணீம் என்ற மதுவைக் குடித்து ரமித்துக் கொண்டிரு. உனக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை செய்து கொண்டிரு. என் கையால் அடிபட்டு ராமன் யம லோகம் சென்ற பின், நிச்சயம் சீதா உன் வசம் ஆகி விடுவாள் என்றான் கும்பகர்ணன்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கும்பகர்ண மதி: என்ற பன்னிரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 13 (420) மகா பார்ஸ்வ வசோபி4னந்தனம்(மகா பார்ஸ்வன் சொன்னதைக் கொண்டாடுதல்)
ராவணன் கோபமாக இருப்பதை அறிந்து, மகா பலசாலியான மகா பார்ஸ்வன், சற்று யோசித்து விட்டு, பணிவாக கை கூப்பியபடி, சொல்லலானான். எவன், மிருகங்களும், விஷப் பாம்புகளும் உள்ள வனத்தில் நுழைந்த பின், எளிதாக கிடைக்கும் மதுவை உண்ணாமல் திரும்பி வருவானோ அவனை அறிவிலி என்றே கொள்ள வேண்டும். சத்ருக்களை வென்று, வாகை சூடும் தலைவனே, உனக்குத் தலைவனாக வேறு யார் உண்டு? சத்ருக்களை ஒட்ட நசுக்கி விட்டு, நீ வைதேஹியுடன் சுகமாக இருப்பாய். குக்குட நியாயம்ஏ (சேவல்கள் விதி) என்பதை அனுசரித்து பலாத்காரமாக சீதையை ஆக்ரமணம் செய்து அனுபவித்து மகிழ்ந்து இரு. உன் விருப்பம் நிறைவேறிய பின், என்ன ஆபத்து வந்தாலும் நல்லதோ, பொல்லாதோ, சமாளித்துக் கொள்ளலாம். நம்மிடம் கும்பகர்ணனும், இந்திரஜித்தும், இந்திரனின் வஜ்ரமேயானாலும் தடுத்து எதிர் அம்பு விடத் சக்தியுடையவர்கள் நிறைய உண்டு. (சாம), சமாதானப் பேச்சுக்கள், (தானம்) நிறைய தானம் கொடுத்தும், (பேதம்) தகுந்த அறிஞர்களைக் கொண்டு எதிரியின் பலத்தை பிளவுப் படுத்தியும், கடைசியில் தண்டமும் பிரயோகம் செய்து. உன் காம, அர்த்தங்களை சாதித்துக் கொள்வாய். இங்கு கூடியிருக்கும் நாங்கள் அனைவரும், உன் சத்ருக்களை, சஸ்திரங்களை மழையாகப் பொழிந்து நம் வசம் ஆக்கி விடுவோம். கவலை வேண்டாம். இது நிச்சயம். மகா பார்ஸ்வன் இவ்வாறு சொல்லக் கேட்டு, ராவணன் மகிழ்ந்து அவனுக்கு உபசாரம் செய்தான். மகா பார்ஸ்வனே, ஒரு விஷயம், ரகஸியம் சொல்கிறேன், கேள். வெகு காலத்திற்கு முன் நடந்தது. அதில் எனக்கு நேர்ந்த பாதிப்பையும் சொல்கிறேன். பிதாமகருடைய பவனத்திற்கு புஞ்சிகஸ்தலா என்ற பெண் போய்க் கொண்டிருந்தாள். ஆகாயத்தில் அக்னி கொழுந்து போல பிரகாசமாக, கண்ணை பறிக்கும் விதமாக சென்று கொண்டிருந்தவளை நான் கண்டேன். அவளை ஆடைகளை விலக்கி பலாத்காரமாக நான் அனுபவித்தேன். அவள் ஸ்வயம்பூவான ப்ரும்மாவின் வீட்டிற்குச் சென்றதும், அவர் அவளுடைய நிலையையும், என் செயலையும் தெரிந்து கொண்டு விட்டார். மகா கோபத்துடன் அவர் என்னை சபித்து விட்டார். இன்று முதல், நீ எந்த ஸ்த்ரீயையும் அவள் விருப்பம் இல்லாமல் நெருங்குவாயானால், உன் தலை நூறாக சிதறிப் போகும், ஜாக்கிரதை என்று என்னைப் பார்த்துச் சொன்னார். இதனால் தான், சாபத்தின் பயத்தால், சீதையை நெருங்கவும் பலாத்காரமாக என் படுக்கையறைக்கு அழைத்து வரவும் தயங்குகிறேன். சாகரத்துக்கு சமமான என் வேகம், மாருதனான காற்றுக்கு சமமான என் நடை, இவைகளை தாசரதி அறிய மாட்டான். அவன் என் முன் வந்து சேரக் கூட முடியாது. மலை குகையில் தூங்கும் சிங்கத்தை தட்டி எழுப்பினால், அது பயங்கரமான கோபத்துடன், சாக்ஷாத் யமனே வந்து நின்றது போல சிலிர்த்துக் கொண்டு வருமே, அது போலத்தான் என் மேல் அவன் படையெடுத்து வருவதும். தானே வந்து என்னிடம் போர் தொடுத்தால், இரட்டை நாக்குடைய பாம்புகள் போல சீறிப் பாயும் என் அம்புகளின் சக்தியை யுத்தத்தில் ராமன் காணுவான். சீக்கிரமே, வஜ்ரத்துக்கு சமமான என் பாணங்கள், கூர்மையான இரட்டை அம்புகள், ராமனை தகித்து விடும். யானையை, நெருப்பு பொறிகளைக் கொண்டு அடக்குவது போல அடக்கி விடுவேன். அதனால், பெரும் படையுடன் வந்துள்ள அவன் பலத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உதிக்கும் சூரியன், நக்ஷத்திரங்களின் பிரபையை அளப்பது போல. ஆயிரம் கண் படைத்த இந்திரனையே போரில் வெற்றி கொண்டவன், நான். திரும்பவும் அந்த இந்திரனே வந்தாலும், வருணனே வந்தாலும், என்னை ஜெயிக்க முடியாது. இந்த நகரத்தை நான் புஜ பலத்தால் அடைந்தேன். முன் காலத்தில் வைஸ்ரவனன் என்ற குபேரனின் பாதுகாப்பில் இருந்ததை நான் போரில் கைபற்றினேன்.ஏ என்றான், ராவணன்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மகா பார்ஸ்வ வசோபினந்தனம் என்ற பதின் மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 14 (421) ப்ரஹஸ்த விபீ4ஷண விவாத3: (ப்ரஹஸ்தனும், விபீஷணனும் வாதம் செய்தல்)
ராக்ஷஸேந்திரனுடைய பேச்சைக் கேட்டு, கும்பகர்ணன் கர்ஜித்ததையும் கேட்டு, விபீஷணன் தன் எண்ணத்தை சொல்ல விரும்பினான். ராவணனின் நன்மையைக் கருதி, காரண காரியங்களோடு விவரமாக, சொல்ல ஆரம்பித்தான். ராஜன், நீ சீதை என்று எண்ணி இருப்பது ஐந்து விரல், ஐந்து தலையுடைய பெரிய பாம்பு. உள்ளும் புறமும் உன்னை சூழ்ந்து நிற்கும் விஷப் பாம்பு என்று கொள். அவள் புன்னகை என்று நீ நினப்பது, இந்த விஷப் பாம்பின் கூரிய பற்கள் என்று புரிந்து கொள். மலை குகைகளில் வசிக்கும் இந்த வானரங்கள். லங்கையை ஆக்ரமித்து, தங்கள் பற்களாலும், நகங்களாலும், (இவைகளே அந்த வானரங்களின் ஆயுதம்) நாசம் செய்யும் முன், தாசரதியிடம் மைதிலியை ஒப்படைத்து விடு. நமது ராக்ஷஸ வீரர்களின் தலைகளை ராவணனுடைய கூரிய பாணங்கள் கொய்து கொண்டு போகும் முன், வஜ்ரம் போல கடுமையாக, காற்றிலும் வேகமாக வந்து தாக்கும் முன், தாசரதியிடம் மைதிலியை ஒப்படைத்து விடு. கும்ப கர்ணனோ, இந்திரஜித்தோ, ராஜன், மகா பார்ஸ்வனோ, மகோதரனோ கூட, நிகும்பனும், கும்பனும், அதிகாயனும் சேர்ந்து வந்தாலும் கூட யுத்தத்தில் ராமன் முன்னால் நிற்க முடியாது. ராமனுக்கு எதிரில் நின்று போரிட்டு, நீ உயிருடன் தப்பிக்கவே முடியாது. என்ன தான் சூரியனையே அடைக்கலம் அடைந்தாலும், மருத் கணங்களை சரணடைந்தாலோ, இந்திரன் மடியிலேயே பதுங்கி கிடந்தாலும், ம்ருத்யுவிடம், ஆகாயத்தில், பாதாளத்தில் ஓடி ஒளிந்து கொண்டாலும், தப்ப முடியாது. விபீஷணன் சொன்னதைக் கேட்டு, ப்ரஹஸ்தன் பதில் சொன்னான். எங்களுக்கு எதிலும் பயம் இல்லை. தேவர்களிடமோ, தானவர்களிடமோ, வேறு இடத்திலோ, யக்ஷ, கந்தர்வ, மகா உரக, பக்ஷி ராஜனிடத்திலோ எங்களுக்கு பயம் கிடையாது. அப்படி இருக்க, சாதாரண மனிதர்களின் தலைவனாக இருக்கும் அரச குமாரன் யுத்தம் செய்ய வந்தால், அந்த ராமனிடம் ஏன் பயந்து நடுங்கப் போகிறோம். ஹிதமில்லாத ப்ரஹஸ்தனின் அர்த்தமில்லாத பேச்சைக் கேட்டு, விபீஷணன், தர்மார்த்த, காமம் எனும் விஷயங்களில் தெளிவான ஞானம் உடையவனான விபீஷணன், அதை மறுத்து மேலும் சொன்னான். ப்ரஹஸ்தா, நீயும் ராஜாவும், கும்பகர்ணனும் ராமனைப் பற்றி அறிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள். அது நடக்காது. அதர்மத்தில் புத்தியை செலுத்தியவன், ஸ்வர்கம் போக ஆசைப் படுவது போலத்தான் உங்கள் பேச்சு. ப்ரஹஸ்தா, ராமனை வதம் செய்வது, உனக்கோ, எனக்கோ, ராக்ஷஸர்கள் அனைவரும் சேர்ந்தோ எப்படி முடியும்? பெரிய கடலை படகு கூட இல்லாமல் நீந்தி கடப்பது சாத்யமா? தர்மமே முக்யமானவன், மகா ரதி, இக்ஷ்வாகு வம்சத்தின் சிறந்த அரசன். அவனிடம் ப்ரஹஸ்தா, தேவர்களும் அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ராமனிடம் செயலற்று நின்று விடுகிறார்கள். ராகவனின் கையிலிருந்து விடுபடும் அம்புகள், கூர்மையானவை. எதிர்க்கவே முடியாது. எதிரியின் உடலைத் துளைத்துக் கொண்டு செல்லும் வல்லமையுடையவை. ப்ரஹஸ்தா, அறியாமல் அவனைப் பற்றி மட்டமாக பேசுகிறாய். பிதற்றுகிறாய். ராவணனோ, இல்லை அதிக பலசாலியான த்ரிசீர்ஷனோ, கும்பகர்ணனோ, அவன் மகன் நிகும்பனோ, இந்திரஜித்தோ, நீயோ, தாசரதியான ராமனுடன் யுத்தம் செய்து சமாளிக்க சக்தியுடையவர்கள் அல்ல. இந்திரனை ஜயித்தால் ராமனையும் ஜயிக்க முடியும் என்று நினைக்காதே. தேவாந்தகனோ, நராந்தகனோ, அதிகாயனோ, அதிரதனோ, மகாத்மாவான அகம்பனனோ, இந்த அகம்பனன் பெரிய மலை போல அசையாது நிற்க கூடியவன், இவனே கூட ராமனை எதிர்த்து யுத்தம் செய்ய சக்தியுடையவன் அல்ல. இந்த அரசன் (ராவணன்) கவலையினால் குழப்பத்தில் இருக்கிறான். நண்பர் என்ற போர்வையில் இவனுக்கு நன்மையைச் சொல்லாத கூட்டதினர் சூழ்ந்து நிற்க, உண்மையை அறிய மாட்டான். மோகத்தில் ஆழ்ந்திருக்கிறான். சுபாவமாக கூர்மையான புத்தியுடையவன், ஏனோ, ராக்ஷஸ ஜனங்களின் அழிவுக்காகவே போலும், ஆராய்ந்து பார்க்காமல் செயல் படுகிறான். நீங்கள் எல்லோருமாக இந்த அரசனை காப்பாற்றுங்கள். அனந்தன் என்ற பாம்பு, ஆயிரம் தலை நாகம், பீமன் எனும் பலசாலியான நாகம் இவை பலாத்காரமாக இவனைச் சுற்றி சூழ்ந்து படர்ந்து கிடக்கின்றன. இந்த சிக்கலில் இருந்து அவனை விடுவியுங்கள். தற்சமயம் எப்படி பூதம், பிசாசு பிடித்து கொண்டு விட்ட மனிதனை, தலை கேசத்தை பிடித்து உற்றாரும், சுற்றாரும் சேர்ந்து முழு மூச்சுடன் விடுவிக்க முயற்சி செய்வார்களோ, அப்படி நீங்கள் எல்லோருமாக சேர்ந்து அரசனை உலுக்கி விழிக்கச் செய்யுங்கள். உங்கள் அரசன், கண் மூடித்தனமாக, தலை குப்புற, பாதாளத்தை நோக்கி விழ இருக்கிறான். ராமன் என்ற சாகரம், திடுமென, பெருகி, நாலாபுறமும் அவனை சூழ்ந்து கொண்டு, தன்னுள் மூழ்கடிக்கும் முன் அவனை காப்பாற்றுங்கள். காகுத்ஸன், சாதாரணமானவன் அல்ல, சாகரம் போல, பாதாளம் போல பயங்கரமானவன். நான் என்னுடைய இந்த அறிவுரையைத் திரும்பத் திரும்ப சொல்கிறேன். இது தான் நம் நகரத்துக்கும், அரசனுக்கும், ராக்ஷஸ ஜனங்களுக்கும், நம் நண்பர்கள், பந்துக்களுக்கும், நன்மை தரக் கூடியது. திரும்பவும் சொல்கிறேன். மனிதர்களின் அரசன், அவன் மனைவியை திருப்பிக் கொடுத்து விடுவோம். எதிரியின் பலத்தையும், நம் பலத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்த பின் மந்திரி அறிவுரை சொல்ல வேண்டும். நமது நிலையையும், இதனால் ஏற்படக் கூடிய நாசத்தையும், புத்தி பூர்வமாக ஆராய்ந்து கொள்ள வேண்டும். தவிர, நம் அரசனின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும், இவையெல்லாம் நல்ல மந்திரியின் பொறுப்புகள் அல்லவா?
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ப்ரஹஸ்த விபீஷண விவாதம் என்ற பதிநான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 15 (422) இந்திரஜித், விபீ4ஷண விவாதம் (இந்திரஜித்தும், விபீஷணனும் வாதித்தல்)
விபீஷணன் ப்ருஹஸ்பதிக்கு சமமான புத்தியுடையவன் என்று மதிக்கப் பெற்றவன் தான். ஆயினும், அந்த சமயம், அவன் அறிவுரைகளை ராக்ஷஸ படை வீரர்களில் முக்கியமான இந்திரஜித் ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தையே | இந்த சிற்றப்பனின் பேச்சைக் கேட்டு ஏன் பயந்தவன் போல பேசாமல் இருக்கிறீர்கள். இந்த குலத்தில் பிறந்த யாருமே இப்படி கோழையாக இருக்க மாட்டார்கள். கோழைத்தனமாக பேசவோ, செய்யவோ மாட்டார்கள். தங்களுடைய வீர்யம், சக்தி, பராக்ரமம், சௌர்யம், தைரியம், தேஜஸ் இவைகளுக்கு சற்றும் பொருந்தாத விதமாக, இந்த விபீஷணன் நம் குலத்தில் தப்பி பிறந்து விட்டான். கடைசியில் பிறந்தவன். இந்த ராஜகுமாரர்கள் இருவரும் என்ன பிரமாதமான பலசாலிகள்? எங்களில் ஒரு ராக்ஷஸனோ, ஏன் சாதாரண ஒரு குடி மகனே கூட வீழ்த்தி விடுவான். எதற்கு அனாவசியமாக பயமுறுத்துகிறாய்? கோழை நீ, வீரம் இல்லாதவன். தேவராஜன், மூவுலகுக்கும் நாதன் என்று பெயர் பெற்ற இந்திரனையே நான் வெற்றி கொண்டு பூமியில் விழச் செய்தேன். அது முதல், என்னிடம் திசைகள் தோறும், தேவ கணங்கள் எல்லோரும் பயந்த வண்ணமே இருக்கிறார்கள். ஐராவதத்தை தள்ளி பூமியில் அலறிக் கொண்டு விழச் செய்தேன். அதனுடைய தந்தங்களை பலாத்காரமாக நான் பிடுங்கிய பொழுது தேவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னை தடுக்க அவர்களுக்கு தைரியமும் இல்லை, வலிவும் இல்லை. அந்த நான், தேவர்களின் கர்வத்தை அடக்கியவன், உத்தமமான தைத்யர்களுக்கும் சோகத்தை அளிப்பவன், ஏன் ஒரு நரேந்திர குமாரனிடம் சக்தியற்றுப் போவேன் என்று சொல்கிறாய்? நான் சிறந்த வீரன். சாதாரண கீழ் மட்ட மனிதர்கள் இருவர். அவர்களிடம் நான் பயப்படுவேனா? சாஸ்திரங்கள் அறிந்த விபீஷணன், பின்னும் தன் அமைதியை காத்தபடி பதில் சொன்னான். இந்திரனுக்கு சமமானவன், எதிர்க்க முடியாதவன், நல்ல பலசாலி, தேஜஸ் உடையவன், தன் பலத்தில் அசைக்க முடியாத தன்னம்பிக்கை உடையவன், என்று சொல்லப் படும் இந்திரஜித்தின் பேச்சைக் கேட்டும், தன் மனதில் பட்ட நிதர்சனமான உண்மை நிலையை எடுத்துச் சொல்லவே முனைந்தான். குழந்தாய், ,நீ சிறுவன். இந்த மந்த்ராலோசனையில் அபிப்பிராயம் சொல்ல உனக்கு அனுபவம் போதாது. உன் மனம் இன்னும் பக்குவப் படவில்லை. அதனால் அர்த்தமற்ற, தன் நாசத்துக்கு வழி சொல்லும் விதமாக பிதற்றினாய். புத்ரன் என்பதால் ராவணனுக்கு மிகவும் நெருங்கியவன் நீ. பந்துவாக அவனுக்கு நன்மை எது என்று தெரிந்துகொண்டு சொல்ல வேண்டிய சமயம் இது. சம்பந்தமில்லாத யாரோ, வெளி மனிதர்கள் சொல்லும் பொதுவான அறிவுரையைச் சொல்கிறாய். இது தீமை என்று உனக்குத் தோன்றவில்லையா? ராமனை எதிர்த்து அழிவைத் தேடிக் கொள்ளும் வழியை சொல்கிறாய்? உன் மோகம் கண்களை மறைக்கிறது. அடக்கம் இன்றி தவறான ஒன்றை கர்வத்துடன் பேசுகிறாய். வெறும் சாகஸமே உடையவன் நீ. சிறுவன். எப்படி இந்த மந்த்ராலோசனை சபையில் நுழைந்தாய். முதலில் உன்னை தண்டிக்க வேண்டும்.. இந்திரஜித், நீ சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறாய். வினயமும் இல்லை, விவரமும் இல்லை. பிடிவாதமாக உனக்குத் தோன்றியதை சரியென்று சாதிக்கிறாய். துராத்மா, மூர்க்கனே, அறிவிலியே, உன்னை வியாபித்து இருக்கும் அகங்காரம் எனும் மாயையை விலக்கிப் பார். யார் தான், ப்ரும்ம தண்டம் போல பிரகாசிக்கும் ராமனின் வில்லிலிருந்து புறப்படும் கூர்மையான பாணங்களை எதிர்த்து நிற்க முடியும் என்று நினைக்கிறாய்? ராமனுடைய பாணங்கள் யம தண்டம் போன்றவை. தனம், ரத்தினங்கள், ஆபரணங்கள், நல்ல ஆடைகள், பல விதமான மணிகள் இவற்றுடன் சீதையை ராமனிடத்தில் சேர்ப்பித்து விட்டு, நாம் கவலையின்றி நிம்மதியாக இருப்போம், என்றான் விபீஷணன்.
இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் இந்திரஜித் விபீஷண விவாதம் என்ற பதினைந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
Translation மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்….
Your effort is commendable. Excellent.
Very good and very easy to understand thank you