பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் ( ஸ்ரீ ராம பட்டாபிஷேகம்)

பிப்ரவரி 26, 2014

அத்தியாயம் 131 (538) ராம பட்டாபிஷேக|| ( ராம பட்டாபிஷேகம்)

 

தலை மேல் கை குவித்து கைகேயியின் மகன் பரதன், சத்ய பராக்ரமனான அண்ணன் ராமனைப் பார்த்துச் சொன்னான். என் தாய் சொல்லை மதித்து நடந்தாயிற்று. எனக்குக் கொடுக்கப் பட்ட ராஜ்யம் இது. இதை திரும்ப உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ கொடுத்தது போலவே அப்படியே தந்து விட்டேன். ஒரே ஒரு பலசாலியான ரிஷபம் தாங்கி வந்த பாரத்தை, கன்றுக்குட்டியின் தலையில் நுகத்தடியோடு வைத்தது போல இந்த ராஜ்ய பாரம் என் தலையில் சுமத்தப்பட்டது. என்னால் இந்த பாரத்தை தாங்க முடியவில்லை.  வேகமாக ஓடி வரும் நீரின் வேகத்தில், கரை அரித்துச் செல்லப் படுவதைப் போல, இந்த ராஜ்யத்தில் ஏற்படும் குறை குற்றங்களை இட்டு நிரப்புவது மிகவும் கடினமான வேலை என்று நினைக்கிறேன்.  சேதுவில் தோன்றும் துவாரத்தை, அந்த துவாரத்தின் வழியே வெளிப்படும்  நீரின் வேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு அடைப்பது போலத் தான் இந்த ராஜ்ய நிர்வாகமும் என்று புரிந்து கொண்டேன்.  அஸ்வத்தின் நடையை கோவேறு கழுதை நடந்து பழகுவது போலவும், ஹம்ஸத்தின் நடையை காகம் பார்த்து தானும் அதே போல நடக்க முயற்சி செய்வது போலவும், நான் உன் மார்கத்தில் நடந்து பழக முயற்சி செய்தாலும், தொடர்ந்து செய்ய சக்தியற்றவனே.  ராமா, மரத்தை நட்டு வளர்ந்து வருவதைப் பார்த்துக் கொண்டே இருந்தவன், ஏற முடியாத உயரத்துக்கு அது வளர்ந்து பெரிதாகி, கப்பும் கிளையுமாக பரவி நிற்கும் பொழுது, ஏகமாக பூத்துக் குலுங்கி பழங்களையே தரவில்லையென்றால்,  மரம் நட்டவன் எதை விரும்பி நட்டானோ, நீர் விட்டு வளர்த்தானோ, அந்த பலன் கிடைத்ததாகச் சொல்ல முடியுமா?  உன் விஷயத்தில் இது தான் சரியான உவமானம். பக்தர்களாக, சேவகர்களாக இருக்கும் எங்களை நீ சரியாக வழிகாட்டி, சாஸனம் செய்யவில்லையென்றால், சரியான பலன் கிடைத்ததாக ஆகாது. இன்று உலகம் முடி சூட்டிக் கொண்ட ராமனை பார்க்கட்டும்.  எப்பொழுதும் பிரகாசிக்கும் ஆதித்யன், நன் பகலில் அதிக வெப்பத்தைக் கொடுப்பது போல காண்பார்கள். ராகவா| இனி காலையில் தூர்ய, சங்கு இவைகளின் ஓசையுடன், காஞ்சி நூபுரம் என்ற நகைகள் உராயும் ஓசையும் சேர்ந்து மதுரமான கீத சப்தங்கள் கேட்டு நீ துயிலெழுவாய்.  பூ சக்கரம் சுழலும் வரை வசுந்தரா நிலைத்து நிற்கும் வரை நீ இந்த உலகில் அனைத்து ஜீவன்களுக்கும் ஸ்வாமியாக தலைவனாக இருந்து வருவாய். எதிரி நகரை வென்று வெற்றி வாகை சூடி வந்தவனான ராமன், பரதன் சொன்னதை ஏற்றுக் கொண்டு சுபமான வராஸனத்தில் அமர்ந்தான்.

 

இதன் பின் சத்ருக்னன் ஏற்பாடு செய்திருந்தபடி, நிபுணர்களான நாவிதர்கள், கை ராசியுள்ளவர்கள், வேகமாக செய்யக் கூடியவர்கள் வந்து ராகவனை தயார் செய்தனர். முதலில் பரதன் ஸ்னானம் செய்து, லக்ஷ்மணனும் ஸ்னானம் செய்த பின் சுக்ரீவ வானரேந்திரனும், ராக்ஷஸ ராஜன் விபீஷணனும் ஸ்னானம் செய்து வந்த பின், ஜடையைத் தவிர்த்து ஸ்னானம் செய்து விசித்ரமான அங்க ராகங்களை பூசிக் கொண்டு, உயர்ந்த ஆடைகளை தரித்து, லக்ஷ்மீகரமான பொலிவுடன் வந்தான். இந்த ஆடை ஆபரணங்கள் அவனுக்கு உரியதே அன்றோ. ராமனுக்கு அலங்காரங்கள் செய்வித்தனர். இக்ஷ்வாகு குலத் தோன்றலான, லஷ்மி சம்பன்னனான லக்ஷ்மணனுக்கும் அணிகலன்கள் , ஆடைகள் என்று அலங்காரம் செய்விக்கப் பட்டது. தசரதன் மனைவிகள், மனப்பூர்வமான அன்புடன், கருத்துடன் சீதைக்கு அலங்காரம் செய்தனர். கௌசல்யை பெரு முயற்சியோடு வானர பத்னிகள் அனைவருக்கும் அலங்காரம் செய்து விட்டாள். தன் புத்ரன் மேல் கொண்ட வாஞ்சையால் சிரமத்தை பார்க்காமல் , கூடியவரை அழகாக இருக்கச் செய்தாள்.  சத்ருக்னன் சுமந்திரன் என்ற ராஜ சாரதியை அழைத்து வந்தான்.  சாரதி ரதத்தை அழகாக தயார் செய்து,  உடனேயே கிளம்பத் தயாராக,  கொண்டு வந்து நிறுத்தினான்.  சூரிய மண்டலம் போல ஒளி வீசிய அந்த ரதத்தில் ராமர் ஏறி அமர்ந்தார். சுக்ரீவனும் ஹனுமானும் கூட ஸ்னானம் செய்தபின், சுபமான வஸ்திரங்கள், காதில் குண்டலங்கள் என்று அலங்கரித்துக் கொண்டு கிளம்பினர். அதே போல சுக்ரீவ பத்னிகளும் ஆடை ஆபரணங்களுடன், உற்சாகமாக  நகரை வேடிக்கைப் பார்க்க கிளம்பினர். அயோத்தியில் இருந்த மந்திரிகள், தசரத ராஜாவின் காலத்திலிருந்து இருந்த பலர், புரோஹிதருடன் கலந்து ஆலோசனைகள் செய்ய அழைக்கப்பட்டிருந்தனர்.  அசோகன், விஜயன், சுமந்திரன் மூவரும்,  கூடிப் பேசி, ராம வ்ருத்திக்காகவும், நகரத்தின் வளர்ச்சிக்காகவும் மங்கள பூர்வமாக எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து புரோஹிதருக்குச் சொன்னார்கள். எதையும் விடாமல் குறைவற செய்ய திட்டமிட்டனர். வெற்றி வீரனாக திரும்பி இருந்த ராமனின் ராஜ்யாபிஷேகம், அனைவருக்கும் மன நிறைவைத் தந்தது.  அதையே பேசி பேசி மகிழ்ந்தனர்.  நகரத்தை விட்டு வெளியே வந்து ராமனைக் காண காத்திருந்தார்கள்.  சகஸ்ராக்ஷணான இந்திரன் போல ராமன் ரதத்தில் ஏறி நகரை நோக்கி வந்தான். பரதன் ரதக் கயிற்றை பிடித்துக் கொள்ள, சத்ருக்னன் குடையை ஏந்தி வந்தான். லக்ஷ்மணன் சாமரத்தை எடுத்து தலைக்கு மேல் வீசினான். ராக்ஷஸேந்திரனான விபீஷணன் மற்றொரு வெண் சாமரத்தை எடுத்துக் கொண்டு முன்னால் நின்றான்.  சந்திரனே புது உருவம் எடுத்து வந்தது போன்ற  வெண் நிற சாமரம்.  ஆகாயத்தில் ரிஷிகளின் கூட்டமும், மருத் கணங்களும், தேவர்களும் துதி பாடியது மதுரமாக கேட்டது. சத்ருஞ்சயம் என்ற யானை மலை போல பெரிய யானை, இதன் மீது சுக்ரீவன் ஏறி அமர்ந்தான். வானரங்கள் புது வஸ்திரங்கள், ஆபரணங்களுக்கு ஏற்ப மனித உருவம் எடுத்துக் கொண்டு ஆயிரம் யானைகளில் ஏறி வந்தன.  சங்க வாத்யமும், தூர்ய கோஷமும், துந்துபிகள் முழங்க,  புருஷ வ்யாக்ரனான ராமன் வரிசையாக வீடுகள் மாலையாக அமைந்திருந்த வீதிகளில் வலம் வந்தான். எதிரில் ராகவன் வருவதை ஜனங்கள் கண்டனர். ரதத்தில் அதி ரதியாக தன் தேக காந்தியால் பிரகாசித்தபடி வருவதைக் கண்டனர். வாழ்த்துக்கள் சொல்லி ராமன் அவர்களுக்கு திரும்ப வாழ்த்து அல்லது நன்றி சொல்ல, சகோதரர்கள் சூழ, மகாத்மாவான ராமனை பின் தொடர்ந்து சென்றனர்.  மந்திரிகளும், ப்ராம்மணர்களும் மற்றும் ஊர் ஜனங்களும் தொடர, லக்ஷ்மீகரமாக, நக்ஷத்திரங்களுடன் சந்திரன் பிரகாசிப்பது போல பிரகாசித்தான். முன்னால் சென்ற வாத்யக்காரர்கள், துர்யம், லயம் என்றவை, ஸ்வஸ்திகம் இவற்றை ஏந்திச் சென்றவர்கள், சந்தோஷமாக வாசித்துக் கொண்டு செல்ல, மங்களகரமாக வந்தான். ராமனுக்கு சுக்ரீவனுடன் ஏற்பட்ட சக்யத்தையும்,  அனிலாத்மஜனான ஹனுமானிடம் ராமனுடைய ப்ரபாவத்தையும், வானரங்களின் அரிய செயல்களையும், ராக்ஷஸர்களின் பலத்தையும், விபீஷணனின் சம்யோகம்- (நன்மை பயக்கும் சந்திப்பு) , இவற்றை விவரித்தபடி சென்றனர். அக்ஷதை, ஜாதரூபம் என்ற பொன், பசுக்கள், கன்னிப் பெண்கள், ப்ராம்மணர்கள், கையில் மோதகம் வைத்துக் கொண்டு ஜனங்கள், ராமனின் முன்னால் நடந்தனர். ராம  கதைகளை பேசியபடி ஆச்சர்யத்துடன் கேட்டபடி ஜனங்கள் நடந்தனர்.  ராமர் வாயாலேயே இவைகளைக் கேட்டபடி, வானரங்கள் புடை சூழ, மகிழ்ச்சி ஆரவாரம் செய்த ஜனங்களோடு ராமரும் நகருக்குள் பிரவேசித்தார். ஊர் ஜனங்கள் வீடுகள் தோறும் கொடி ஏற்றி வரவேற்றனர்.  இக்ஷ்வாகு வம்சத்தினர் வசித்து வந்த தன் தந்தையின் க்ருஹம் வந்து சேர்ந்தார்.

 

ராஜ குமாரன் ராமன், தர்மம் நிறைந்த பரதனைப் பார்த்துச் சொன்னார்.  தந்தையின் மாளிகைக்குள் வந்து விட்டோம். கௌசல்யா, சுமித்ரை இவர்களுடன் கைகேயியையும் வணங்கு, என்றார். இந்த சொல்லில் பொதிந்திருந்த பொருளை உணர்ந்து கொண்டான் பரதன். ராமர் மேலும் சொன்னார். ஸ்ரேஷ்டமான பவனம் எதுவோ,  அசோக வனத்துடன் கூடியது, முத்துக்களும், வைடூரியங்களும் இழைத்துக் கட்டப் பட்டது, அதை சுக்ரீவனுக்கு கொடு. உடனே பரதன், சுக்ரீவனை கைகளைப் பிடித்து அழைத்துப் போய் அந்த பவனத்தில் இருக்கச் செய்தான். உடனே சத்ருக்னனின் கட்டளைப் படி, எண்ணெய் தடவி பள பளத்த கட்டில்களையும், உயர்ந்த விரிப்புகளையும் கொண்டு வந்து ஆட்கள் அதன் அறைகளில் நிரப்பினர்.  பரதன் சுக்ரீவனைப் பார்த்து, ராமனின் அபிஷேகத்திற்காக உன் தூதுவர்களை அனுப்பு.  நான்கு சுவர்ண கலசங்களில் வானரேந்திரர்கள் சாகர ஜலத்தைக் கொண்டு வரச் சொல், என்றான். உடனே சுக்ரீவனும் ரத்ன மயமான குடங்களைக் கொடுத்து நான்கு சாகரத்திலிருந்தும் விடியுமுன் பூர்ண கும்பங்களோடு வந்து சேரும்படி சொல்லி அனுப்பினான். யானை போன்ற பெருத்த உடலுடைய சில வானரங்கள் ஆகாயத்தில் தாவி குதித்து கருடனுக்கு சமமான வேகத்தில் சென்றனர். ஜாம்பவானும், சுசேஷனும், வேக தர்சீ என்ற வானரமும், ருஷபனும் கலசங்களில் நீர் நிரப்பிக் கொண்டு வந்தனர். நூற்று ஐந்து (105) நதிகளின் ஜலத்தை குடங்களில் நிரப்பிக் கொண்டு வந்தன. கிழக்கு சமுத்திரத்திலிருந்து, ரத்ன மயமான குடத்தில் சுஷேணன் நீரை நிரப்பிக் கொண்டு வந்தான். ரிஷபன் தக்ஷிண திசையிலிருந்து வேகமாக சமுத்திர ஜலத்தைக் கொண்டு வந்தான். சிவப்பு சந்தன கிளைகளால் மறைத்து தங்க குடத்தில் கவயன், மேற்கு திசையிலிருந்து சமுத்திர ஜலத்தைக் கொண்டு வந்தான். இவனும் மாருதனுக்கு சமமான வேகம் உடையவனே. ரத்ன கும்பத்திலும் நீரைக் கொண்டு வந்தான். வடக்கு திசையிலிருந்து நளன், கருடன், வாயு இவர்களுக்கு போட்டியாக வேகம் எடுத்து சென்றது போல வேகமாக, சமுத்திர ஜலத்தைக் கொண்டு வந்தான். இவன் தர்மாத்மா, பல நல்லியல்புகள் உள்ளவன். இப்படி கொண்டு வந்து சேர்த்த ஜலத்தை பார்த்து சுக்ரீவன் மந்திரிகளுடன் இருந்த புரோஹிதரிடம் தெரிவித்தான்.

 

இதன் பின், வயது முதிர்ந்த பெரியவரான வசிஷ்டர் தலைமையில், ப்ராம்மணர்கள் ராமரை ரத்ன மயமான பீடத்தில், சீதையுடன் அமரச் செய்தனர். வசிஷ்டரும், வாம தேவரும், ஜாபாலியும், காஸ்யபரும், காத்யாயனரும், சுயக்ஞனும், கௌதமரும், விஜயனும், நரவ்யாக்ரமான ராமரை ப்ரஸன்னமான சுகந்தம் வீசும் நல்ல ஜலத்தால் அபிஷேகம் செய்து வைத்தார்கள். வசுக்கள் வாஸவனான இந்திரனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்தது போல செய்து வைத்தனர். ரித்விக்குகள், ப்ராம்மணர்கள், பின் கன்னிப் பெண்களும், மந்திரிகளும், அதன் பின் போர் வீரர்களும் அபிஷேகம் செய்வித்தனர். வேத மந்த்ரங்களோடு அபிஷேகம் செய்தனர். மகிழ்ச்சியுடன் செய்தனர். எல்லா விதமான ஔஷதி ரஸங்களும், திவ்யமானதுமான ஜலத்தால், தேவ லோகத்திலும், ஆகாயத்திலுமாக நின்ற படி, நான்கு லோக பாலர்கள் மற்ற தேவதைகளுடன் வந்து அபிஷேகம் செய்தனர்.  ப்ரும்மாவால் நிர்மாணிக்கப் பட்ட, ரத்னம் சோபையுடன் தெரிய இருந்த கிரீடம், முன்பு எதைக் கொண்டு மனு என்ற அரசனுக்கு குடி சூட்டினார்களோ, அதைக் கொண்டு, அதன் பின், அந்த வம்சத்தில் வரிசையாக முடி சூட்டிக்,கொண்டார்களோ அந்த அரசர்களின் கிரீடங்களைக் கொண்டு, அதன் பின், இந்த வைபவத்திற்காக ப்ரத்யேகமாக தயார் செய்யப் பட்டிருந்த, தங்கத்தால் செய்யப் பட்டு, மகா ரத்னங்கள் அலங்காரமாக செதுக்கப் பெற்று, ஒளி வீசிய ரத்ன மயமான பீடத்தில், முறைப்படி தயார் செய்து வைத்த கிரீடத்தையும் வசிஷ்டர் அணிவித்தார். ரித்விக்குகளைக் கொண்டு ஆபரணங்களை இதற்கு மேலும் அணிவித்தார். சுபமான வெண் கொற்றக் குடையை சத்ருக்னன் எடுத்துக் கொண்டான். வானர ராஜன் வெண்மையான வாலவ்யஜனம் எனும் சாமரத்தை எடுத்துக் கொண்டான். சந்திர சங்காசமான (சமமான) மற்றொரு சாமரத்தை விபீஷணன் ஏந்தி வீசினான். வாஸவனான இந்திரன் அனுப்பி வைத்த ஜ்வலிக்கும் மாலையை, நூறு தங்க புஷ்பங்களால் அலங்காரமாக கோக்கப் பட்டிருந்ததை, வாயுதேவன் கொண்டு வந்து ராகவனுக்கு கொடுத்தான். எல்லா ரத்னங்களும் இழைத்து, விசேஷமான மணிரத்னம் கோத்து செய்யப் பட்டிருந்த முக்தா ஹாரத்தையும் இந்திரன் சார்பில் நரேந்திரனுக்கு அணிவித்தான். தேவ கந்தர்வர்கள் பாடினார்கள். அப்ஸரகணங்கள் நடனமாடினர்.

 

தகுதி வாய்ந்த ராமனுக்கு அபிஷேகம் நடந்த பொழுது பூமித் தாய் தான்யம் நிரம்பி இருந்தாள்.  கனி மரங்கள் கனிகள் நிறைந்து விளங்கின.  புஷ்பங்கள் வாசனை நிறைந்து காணப்பட்டன.  ராகவனின் முடி சூட்டு வைபவத்தை ஒட்டி, ஆயிரம், நூறாயிரம் குதிரைகளும், பசுக்களும், கன்றுகளும் மேலும் நூற்றுக் கணக்கான காளைகளையும் ப்ராம்மணர்களுக்கு தானமாக கொடுத்தனர். முன்னூறு கோடி தங்க நாணயங்களும் தானமாக கொடுத்தார். பலவிதமான ஆபரணங்கள், வஸ்திரங்கள், விலையுயர்ந்த, சூரியனின் ஒளிக்கு சமமான மணிகள் கோத்து தங்கத்தில் செய்த மாலையை சுக்ரீவனுக்கு அணிவித்தார். மனிதருள் மானிக்கமாக போற்றப் பட்ட ராகவன், வைடூரிய மணிகளால் சித்தரிக்கப் பட்டு, சந்திர கிரணங்கள் போல பிரகாசித்த இரண்டு அங்கதங்களை வாலி புத்ரனான அங்கதனுக்கு கொடுத்தார்.   மணிகள் கோத்து உத்தமமாக இருந்த ஒரு முத்து மாலையை சீதையிடம் ராமர் கொடுத்தார். சந்திரனின் கிரணம் போல ஒளி வீசும் இதை மாசற்ற அழகிய வஸ்திரங்கள், சுபமான ஆபரணங்கள் இவற்றை வாயு புத்திரனுக்காக காத்திருந்து அவனிடம் கொடுத்தாள், சீதா. தன் கழுத்திலிருந்து ஹாரத்தை கழற்றி வானர வீரர்களையும், தன் கணவனையும் மாறி மாறி பார்த்தவள், யோஜனையுடன் நிற்பதைப் பார்த்து ஜனகாத்மஜாவிடம் ராமன் சொன்னார். சுப4கே3, ஹாரத்தை யாருக்குத் தர விரும்புகிறாயோ, கொடு.  பா4மினீ, நீ யாரிடம் அதிக திருப்தியுடன் இருக்கிறாயோ, அவருக்கே கொடு என்று சொல்ல, தேஜஸ், தன்னம்பிக்கை, புகழ், தாக்ஷண்யம், சாமர்த்யம், வினயம், நியாயம், பௌருஷம், விக்ரமம், புத்தி இவை யாரிடம் நித்யம் விளங்குகிறதோ அந்த வாயு புத்திரனுக்கு முத்து மாலையை கரு விழியாளான வைதேஹி கொடுத்தாள். அந்த மாலையணிந்து ஹனுமான், விசேஷமாகத் தெரிந்தான். மலை மீது சந்திரனின் கிரணங்கள் வெண்மையாகப் படிந்து இருப்பது போல சோபித்தான். இதன் பின் த்விவித, மைந்தர்களுக்கும், நீலனுக்கும் பரந்தபனான ராமர், அவர்களின் எல்லா விதமான நல்ல குணங்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கினார். வானர முதியவர்கள் யாவரும், எல்லா வானர அரசர்களும், வஸ்திரங்களாலும், பூஷணங்களாலும் முறைப்படி பூஜிக்கப் பட்டனர், கௌரவிக்கப்பட்டனர்.  விபீஷணனும், சுக்ரீவனும், ஹனுமான், ஜாம்பவானும், மற்ற முக்கியமான வானர வீரர்களும் ராமனுடைய குறைவற்ற தெளிவான செயலால், முறைப்படி கௌரவிக்கப் பட்டனர். அவரவர்கள் விரும்பியபடி ரத்னங்களோ, மற்ற பொருட்களோ, கிடைக்கப் பெற்று மகிச்சியுடன் நிறைந்த செல்வந்தர்களாகவே அனைவரும் திரும்பிச் சென்றனர்.   மகாத்மாவான ராஜா ராமனை வணங்கி விடை பெற்று கிஷ்கிந்தை சென்றனர்.  வானரஸ்ரேஷ்டனான சுக்ரீவனும், ராமனின் அபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டு,  முறைபடி கௌரவிக்கப் பட்டவனாக விடை பெற்று கிஷ்கிந்தை சென்றான். விபீஷணனும் தன்னுடன் வந்த ராக்ஷஸ வீரர்களுடன் விடை பெற வந்தான். அவனுக்கு குலதனம் கிடைத்தது. குலதனம்-பூஜா விக்ரஹம். (ரங்கநாதர் என்பது வழக்கு)  அதைப் பெற்றுக் கொண்டு லங்கையை நோக்கி விபீஷணன் புறப்பட்டான். ராஜ்யம் முழுவதுமாக பரிபாலித்துக் கொண்டு, பெரும் புகழுடன், எதிரிகள் யாரும் இன்றி மிகவும் சந்தோஷமாக இருந்து வந்தான் ராகவன். லக்ஷ்மணனை அழைத்து தன்னுடன் சேர்ந்து ராஜ்ய நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ள பணித்தார்.  தர்மம் அறிந்தவன் நீ, நம் முன்னோர்கள் ஆண்ட ராஜ்யம் இது, நீயும் எனக்கு சமமாக தந்தையால் வளர்க்கப் பட்டவன்,  யுவ ராஜாவாக முடி சூட்டிக் கொண்டு எனக்குத் துணையாக துரம் (துரம்-நுகத்தடி-ராஜ்ய பாரம்) -இதை தாங்க வா என்றார். பலவிதமாக வேண்டியும் லக்ஷ்மணன் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து விடவே, பரதனை யுவ ராஜாவாக நியமித்தார்.

 

பௌண்டரீக அஸ்வமேத யாகங்கள் செய்து வாஜபேயம் எனும் யாகத்தையும் அடிக்கடி செய்து பார்த்திவ குமாரன் இன்னும் பல யாகங்களையும் செய்தான். ராஜ்யத்தை அடைந்து பத்தாயிரம் வருஷங்கள் நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்து புகழ் பெற்றான். முழங்கால் வரை நீண்ட கைகளும் (நீள் தடக் கைகளும்) உயர்ந்த தோளும், ப்ரதாபமும் உடையவனாக, பலவிதமான யாகங்களை, தாயாதிகள், பந்துக்கள், நண்பர்களுடன் சேர்ந்து நடத்தினார்.  ராமராஜ்யத்தில் யாரும், கணவனை இழந்து விதவை கோலம் பூண நேரவில்லை. பாம்பு கடிக்குமே என்ற பயமோ, வியாதி வருத்துமே என்ற கவலையோ இருக்கவில்லை. ராமன் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் நிம்மதியாக கஷ்டங்கள் எதுவும் இன்றி வாழ்ந்தனர். திருடர்கள் இல்லாமல் உலகம் கவலையின்றி இருந்தது. மற்றவர்கள் பொருளை யாரும் தொடக் கூட மாட்டார்கள். முதியவர், பாலர்களுக்கு அந்திம சம்ஸ்காரங்களை செய்ய நேரவே இல்லை. எங்கும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. எங்கும் தர்மமே தலை தூக்கி நின்றது. ராமனையே அனுசரித்து இருந்தனர். யாரும், தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. அடித்துக் கொள்வதில்லை. ஆயிரம் வருஷங்கள் ஆயிரக் கணக்கான புத்திரர்களோடு வாழ்ந்தனர். வியாதியின்றி, வருத்தம் இன்றி, ராமன் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் சுகமாக இருந்தனர். ராமா, ராம, ராம என்றே ப்ரஜைகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்,  கதைகள் ராமனைச் சுற்றியே, ராமனைப் பற்றியே பேசினர்.  ராம மயமாகவே உலகம் விளங்கியது. ராமன் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்களின் மனதில் ராமரே நிறைந்திருந்தார். மரங்கள் நித்யம் பூத்துக் குலுங்கின. பழங்கள் பழுத்துத் தொங்கின. கிளைகள் படர்ந்து விஸ்தாரமாக நின்றன.  பருவ காலங்களில் விடாது மழை பெய்தது.  காற்று இதமாக வீசியது. ப்ராம்மணர்களோ, க்ஷத்திரியர்களோ, வைஸ்யர்களோ, சூத்ரர்களோ, யாரானாலும் லோபம் எனும் கெட்ட குணம் இன்றி இருந்தனர். தங்கள் தங்கள் கடமைகளை ஈ.டுபாட்டுடன் செய்தனர். தங்கள் செயல்களிலேயே திருப்தியுடன் இருந்தனர். ப்ரஜைகள் தர்மத்தில் நம்பிக்கையுடன் அனுசரித்தும் வந்தனர். ராமன் ராஜ்ய பாலனம் செய்த பொழுது, ப்ரஜைகள் பொய் பேச மாட்டார்கள். எங்கும் சத்யமே வழக்கில் இருந்தது. எல்லோருமே லக்ஷணம், அழகு பரி பூர்ணமாக விளங்க, தர்ம பராயணர்களாக  இருந்தனர். பத்தாயிரம் வருஷங்கள், மேலும் பத்து நூறு வருஷங்கள், சகோதரர்களுடன்  ஸ்ரீமானான ராமன் ராஜ்யத்தை பரிபாலித்து வந்தார்.

 

 

ஆதி காவ்யமான இது மகானான வால்மீகியினால் இயற்றப் பட்டது. ஆர்ஷம் எனப்படும் – (பெரியோரின், ஆன்றோரின் வாக்கு என்பது பொருள்.) த4ன்யமானது, பாவனமானது, புகழைத் தரக் கூடியது. ஆயுளை வளர்க்கும். அரசர்களுக்கு வெற்றியைத் தரும். இதை யார் படிக்கிறார்களோ, உலகில் கேட்கிறார்களோ, அந்த மனிதன் தன் பாபங்களிலிருந்து விடுபடுவான். புத்ர காமனாக இருப்பவன் புத்திரனை அடைவான். செல்வத்தை விரும்புபவன் செல்வங்களை அடைவான். ராமாபிஷேக வைபவத்தை கேட்பவர்கள் பெரும் நற்பயனை அடைவார்கள். ராஜாவாக இருப்பவன் பூமியை ஜயிப்பான். எதிரிகள் தொல்லையின்றி ஆளுவான். ராகவனால் மாதா கௌசல்யா, சுமித்ரா லக்ஷ்மண, சத்ருக்னனோடு, பரதனுடன் கைகேயி இருந்தது போல  தாய்மார்கள் ஜீவ புத்திரர்களாக விளங்குவர்.  புத்ர பௌத்ரர்களுடன் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பர். ராமாயணம் கேட்டு தீர்கமான ஆயுளைப் பெறுவர். ராமனுடைய விஜயத்தையும், அவனுடைய தெளிவான மற்ற செயல்களையும் யார் கேட்கிறார்களோ, வால்மீகி முனிவரால் இயற்றப் பட்ட இந்த காவ்யத்தை கேட்கிறார்களோ, அவர்கள் காரியத்தில் கருத்துடையவர்களாக, கோபத்தை வென்றவர்களாக, கோட்டைகளை கடந்து செல்லும் மா வீரர்களாக இருப்பர். வெகு தூரம் பயணம் செய்பவர்கள் பிரிவின் முடிவில்  இதனைக் கேட்டு, பந்துக்களோடு இணைவர்.  ராகவனிடம் பிரார்த்திக்கும், வேண்டும் வரங்கள் அனைத்தையும் கிடைக்கப் பெறுவர்.  இதைக் கேட்பதால், தேவர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள். இடையூறுகள் நீங்கும். வீடுகளில் தோன்றும் கஷ்டங்கள் விலகும். பூமியை அரசன் வென்று விஜயனாக இருப்பான். வெளி  நாடு சென்றவன் சௌக்யமாக திரும்பி வருவான். இளம் பெண்கள் கேட்டு உத்தமமான புத்திரர்களைப் பெறுவார்கள்.  இந்த புராதனமான இதிகாசத்தை படித்தும், பூஜித்தும் வழி படுபவர்கள் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுவர்.  தீர்கமான ஆயுளைப் பெறுவார்கள். தலை வணங்கி வினயத்துடன் ப்ராம்மணர்கள் படிக்க, க்ஷத்திரியர்கள் கேட்கலாம். ஐஸ்வர்யமும், புத்ர லாபமும் உண்டாகும், சந்தேகமேயில்லை. ராமாயணம் முழுவதுமாக கேட்பவர்களும், சதா படிப்பவர்களும் எல்லா நன்மைகளையும் அடைவர் என்பதில் சந்தேகமேயில்லை. அது தவிர, ராமரும் இதனால் ப்ரீதியடைகிறார்.  அவர் தான் சனாதனமான விஷ்ணு பகவான். ஆதி தேவன். மஹாபாஹுவான ஹரி நாராயணன் என்ற பிரபு.  ரகு ஸ்ரேஷ்டனாக வந்த ராமன் தான் சாக்ஷாத் நாராயணன். சேஷன் எனும் ஆதி சேஷன் தான் லக்ஷ்மணன் என்று அழைக்கப் படுகிறார்.

 

 

குடும்ப வ்ருத்தி, தன தான்ய வ்ருத்தி, உத்தமமான ஸ்த்ரீகள், உயர்ந்த சுகம், இவை சுபமான இந்த காவ்யத்தைக் கேட்பதன் மூலம் பெறுவதோடு, பெரும் செல்வத்தையும் அடைகிறார்கள். உலகில் பொருள் நிறைந்து, ஆரோக்யம் பெற்று வாழ்வர். இந்த ராமனுடைய காவ்யம், ஆயுளைத் தரக் கூடியது, ஆரோக்யமான வாழ்வைத் தரும். புகழைத் தரும்..  சகோதரனைக் கொடுக்கும். நல்ல சகோதரர்கள் அமைவார்கள். சுபமானது, புத்தியை தரக் கூடியது. இதை நியமமாக நல்லவர்கள் சொல்லக் கேட்க வேண்டும். சொல் வன்மையும், நாவளமும் அளிக்க வல்லது. மேன் மேலும் மேன்மையடைய விரும்புபவர்கள் இதன் மூலம் தங்கள் எண்ணம் நிறைவேறப் பெறுவார்கள்.

 

 

இது தான் முன் நடந்த  கதை.. உங்கள் அனைவருக்கும் நன்மையுண்டாகட்டும். பத்ரமஸ்து. விஸ்தாரமாக இதை விளக்கிச் சொல்லுங்கள்.  விஷ்ணுவின் பலம் பெருகட்டும். தேவர்களும் இதை ஏற்றுக் கொள்வதாலும், கேட்பதாலும் திருப்தியடைகிறார்கள். ராமாயண ஸ்ரவனத்தால், பித்ருக்கள் திருப்தியடைகின்றனர். ரிஷி தானே இணைத்து செய்த இந்த மகா காவ்யத்தை பக்தியுடன் ராம கதையை யார் எழுதுகிறார்களோ, அவர்களும் நற்கதியடைவார்கள்.  அவர்களும் த்ரிவிஷ்டபம் எனும் தேவலோகத்தில் வாசம் செய்யும் பெருமையை அடைவார்கள்.

 

(இது வரை வால்மீகி முனிவர் எழுதிய ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடம் தொகுப்பில், யுத்த காண்டத்தில், ராமபட்டாபிஷேகோ என்ற நூற்று முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

(இத்துடன் வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டம் நிறைவுற்றது.)

 

ஸ்ரீ ராம் ஜய ராம், ஜய ஜய ராம் – ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்

ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் – ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்

 

ஆஞ்சனேய ஸ்வாமிக்கு ஜெய்  

 

 

 

From → Uncategorized

One Comment
  1. Banukumar Kumar's avatar
    Banukumar Kumar permalink

    மிக மிக அருமையான பதிவு இதை படிக்கும் போதே நேிரிலே காண்பது போல இருக்கிறது

    நன்றிகள் பல

Banukumar Kumar -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி