ஸ்ரீமத் பாகவதம், கஜேந்திரா,வாமன, மத்ஸ்ய அவதாரங்கள்
|| ஸ்ரீமத் பாகவதம் – மன்வந்தராதி சரிதம் என்ற எட்டாவது ஸ்கந்தம். ||
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-1
அரசன்பரீக்ஷித் வினவினான்: குரோ! இதுவரை ஸ்வாயம்புவ மனுவின் வம்சம் பற்றிச் சொன்னீர்கள். மற்ற மனு என்பவர்களும் உலகில் ஸ்ருஷ்டியை விஸ்தரிக்கவே வந்தவர்கள். அவர்களைப் பற்றிச் சொல்லுங்கள். ஸ்ரீ ஹரி தானே அவதாரம் செய்து பிறந்தான் என்றெல்லாம், கவிகள் பாடுகிறார்கள். ப்ரும்மன்! படைத்தவன் தானே ஏன் பிறக்கிறான்? என்ன இடைவெளியில் கடந்த காலத்தில் தோன்றினார்? தற்சமயம் ஸ்ரீ க்ருஷ்ணனாக வந்தது போல, வரும் காலத்திலும் பிறப்பாரா?
ரிஷி பதிலளித்தார்: ஸ்வயம்பு மனு தோன்றி பல பல காலம் ஆகி விட்டன. ஆறு கல்பங்கள் கடந்து வந்திருக்கிறோம். இது வரை நான் சொன்னது முதன் முதலில் தேவர்கள் பிறந்த சமயம் நடந்தவை. கபிலராக தர்ம, ஞான உபதேசம் செய்யப் பகவான் பிறந்தார். அது பற்றி சொல்லியிருக்கிறேன். ஸ்வாயம்புவ மனு தன் மனைவி ஆகூதியுடன் வனம் சென்றார். விரக்தியடைந்தவராக பல காலம் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தார். அதைப் பற்றி பின்னால் சொல்கிறேன்.
மனு சொன்னார்: விஸ்வம்- உலகம் முழுவதையும் செயல் பட வைப்பவன் தூங்குவது போல விழித்திருக்கிறான். இதை உலகம் அறிவதில்லை. அறிந்தாலும் அவனை எழுப்ப முயலவில்லை, முயன்றாலும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டது. அவனை மீறி பூமியில் யாரும் எதையும் தானே உண்டாக்கவோ, உண்ணவோ முடியாது. அவனாக அளித்தால் மட்டுமே – எனவே ஈஸ்வரார்ப்பணம் என்று எண்ணி அனுபவியுங்கள். எங்கும் பரவியிருப்பவன் என்றால் ஏன் கண்களுக்கு புலப்படுவதில்லை? கண் பார்த்தாலும் அறிவுக்கு எட்டுவதில்லை. அறிவின் சக்தியை அளிப்பவனும் அவனே. ஸுரியனின் ஒளி கூட காட்டுவதில்லை. எனவே கருடாரூடனான அந்த பகவானை வணங்குவோம்.
ஆதி, மத்யம், அந்தம் என்று தானே வியாபித்து இருப்பவன், உள்ளோ, வெளியோ, விஸ்வத்தின் ரூபம் என்று நாம் நினைப்பதை, அவரிடமிருந்து வந்ததே என்பதை அறிவோம். விஸ்வமே சரீரமாக உடையவன். புரூஹூதன் எனும் ஈஸ்வரன். சத்யமானவன், ஸ்வயம் ஜோதி ஸ்வரூபமானவன், பிறவி என்பதே இல்லாத புராண புருஷன். ப்ரும்மாவை தன் சக்தியால் படைத்து, அந்த உ ருவத்துக்கு கல்வியை – வேதங்களை- அளித்து, செயல் பட விட்டு, தான் தள்ளி நிற்கிறான். அதன் பின் ரிஷிகள் கர்மாக்களை விவரித்தனர். இவ்வாறு ஒரு ஏற்பாட்டை செய்து விட்டு தானே ராம, க்ருஷ்ண முதலான அவதாரங்களில் நடத்தியும் காட்டும் பர ப்ரும்மத்தை வணங்குவோம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி உபனிஷத் மந்த்ரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, யாது தானர்கள் மற்றும் அசுரர்கள், அவரை அழிக்க வேகமாக வந்தனர். யக்ஞ ஸ்வரூபியான பகவான் அவர்களை அழித்து சுவர்கத்தோடு தேவ லோகத்தைக் காத்தார்.
ஸ்வாரோசிஷம் என்ற இரண்டாவது யுகத்தில், அக்னியின் மகனாக மனு தோன்றினார். த்யும முதலானவர்கள் அவருடைய புத்திரர்கள். அந்த மன்வந்தரத்தில் யாக புத்திரன் ரோசனன் இந்திரனானான். அவனுக்கு துபிதாதிகள் புத்திர்கள் தோஷ, ப்ரதோஷ, சந்தோஷ, பத்ர, சாந்தி, இடஸ்பதி என்ற பெயர்கள்.
ஊர்ஜஸ்தம்பன் முதலான ஏழு ரிஷிகள். ப்ரும்மவாதிகள் என்ற தவசிகள். வேதசிரஸ் என்பவருக்கு மட்டும் துஷிதா என்ற மனைவி இருந்தாள். அவர்களுக்கு ஒரு மகன் விபு எனப்பட்டான். என்பத் தெட்டு ஆயிரம் முனிவர்கள் இருந்தனர். அந்த விபு என்ற சிறுவனுக்கு இவர்கள் அவசியமான விரதங்கள் பற்றி கற்பித்தனர்.
மூன்றாமவன் உத்தமன், ப்ரியவ்ரதன் மகன், மனுவானான். அவனுக்கும் பவனன், ஸ்ருஞ்சயன், யக்ஞ ஹோத்ரு என்று மகன்கள். வசிஷ்டருக்கு ஏழு மகன்கள். அனைவரும் ரிஷிகளானார்கள். ப்ரமதன், சத்யன், வேத்ஸ்ருதா, பத்ரா, தேவன், இந்திரன், சத்யஜித் என்பர்.
தர்ம தேவதைக்கு, சுன்ருதா என்ற மனைவி. பகவான் புருஷோத்தமனே மகனாக பிறந்து சத்யசேனன் ,சத்யவ்ரதன் என இருவர். அவர் அசத்வ்ரதன் (ஸத்யவ்ரதனுக்கு எதிர்பதம்) அசத்தாக சில யக்ஷ, ராக்ஷஸர்கள் உயிரினங்களை காரணமின்றி துன்புறுத்தினர். சத்யசேனன் ,சத்யவ்ரதன் உதவியோடு அவர்களை அழித்தார்.
அடுத்து உத்தம சகோதரன், மனு என்ற பெயரில் , ப்ருது, க்யாதி, நரகேது, என்று பத்து புதல்வர்கள். சத்யகா, ஹரய: வீரன், தேவா:, த்ரிசிகன், ஈஸ்வரன், ஜ்யோதிர்தாமன், என்று ஏழு ரிஷிகள். வித்ருதி என்பவரின் புதல்வர்கள் கால கதியடைந்தனர். இவர்கள் தான் தங்கள் திறமையால் வேதங்களை தொகுத்தனர். அங்கும் பகவான் ஹரி மேதஸ்-ஹரினீ தம்பதிகளுக்கு மகனாக பிறந்து ஹரி என்று பெயர் பெற்றார். இந்த ஹரி நாமம் தான் கஜேந்திரனை மகரம் -முதலையிலிருந்து காத்தது.
பரீக்ஷித் ராஜா, பாதராயனரே! அந்த சரித்திரத்தைச் சொல்லுங்கள். ஹரி எவ்வாறு கஜ ராஜனை, முதலையின் வாயிலிருந்து காப்பாற்றினார் ? அது மிகவும் புண்யமான சரித்திரம் என்று அறிவோம். தன்யம், மங்களத்தை தரும், சுபமானது, என்றும் எங்கெல்லாம் உத்தம ஸ்லோகனான ஹரியை பஜனை செய்து பாடுகிறார்களோ, அங்கெல்லாம் பிரசித்தமான கதை.
சூதர் சொன்னார்: வியாசர், பரீக்ஷித் இவ்வாறு கேட்கவும், அங்கிருந்த மற்றவர்களும், உத்சாகமாக கேட்கத் தயாராயினர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், முதல் அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 33
அத்யாயம்-2
த்ரிகூட என்று புகழ் வாய்ந்த மிகப் பெரிய ஒரு மலை இருந்தது. அதைச் சுற்றிலும் பால் போன்ற நீர் பல யோஜனைகள் பரவி இருந்தது. அந்த நீர் நிலையைச் சுற்றி மூன்று சிகரங்களுடன் மிகப் பெரிய மலை திசைகளை ஆக்ரமித்து வானளாவி நின்றது, அதன் சாரலில் வெள்ளி, இரும்பு, தங்கம் என்று உயர்ந்த தாதுக்கள் நிறைந்திருந்தது. மிக அரிய மரங்கள், ரத்னங்கள், தவிர விசித்திரமான தாதுக்கள், பல விதமான மரங்கள், கொடிகள், புதர்கள், இவைகளுடன் இரைச்சலாக விழும் பல அருவிகளையும் உடையதாக இருந்தது. அந்த நீர் வளத்தால், மலையடிவாரத்தில், மரகத பச்சை வண்ண புல் வெளி செழித்து வளர்ந்து இருந்தது. கண்ணுக்கு விருந்தான அந்த இடம் கின்னர, அப்ஸர, சித்த, சாரண, கந்தர்வ வித்யாதர, மஹோரக எனும் பலருக்கும் விளையாட்டு மைதானமாக விளங்கியது. அவர்கள் வருகையால் இனிய சங்கீத நாதம், அங்குள்ள குகைகளில் எதிரொலித்து, கர்ஜனை செய்யும் வனராஜனான சிங்கங்களுக்கு திகைப்பை மூட்டின. தனக்கு போட்டியாக மற்றொரு சிங்க ராஜாவா என்று எண்ணின போலும். காடுகள், பலவித மிருகங்களுக்கு அடைக்கலமாக இருந்தன. ஆங்காங்கு தேனீக்கள் கூடுகள் அலங்காரமாக தென்பட்டன. இனிய குரலில் பாடும் பறவைகள் தங்கள் வண்ண மயமான தோற்றத்தாலும், வித விதமான கூச்சல்களாலும் வனத்தையே நிறைத்தன.
நதிகள், ஏரிகள், சிறிய குட்டைகள், மணல் வெளிகள், தேவ ஸ்த்ரீகள் வந்து ஸ்னானம் செய்வதால் நீரில் கலந்த வாசனை திரவியங்களும் காற்றில் மிதந்து வந்தன. அந்த மலைச் சரிவில், பகவான் வருணன் ஒரு உத்யானத்தை , ருது என்ற பெயரில், தேவ மங்கைகளின் விளையாட்டுக்காக வளர்த்தான். திவ்யமான புஷ்பங்களாலும், பழ மரங்களாலும், மந்தார, பாரிஜாத, பாடல, அசோக, சம்பக புஷ்பங்கள் நிறைந்தும்,
மாமரம், ப்ரியாலம், பனசம்- பலா மரம், ஆம்ர, ஆம்ராதகை என்ற பழ மரங்களும், க்ரமுக, நாரிகேள, கர்ஜூரம்- பேரீச்சம் பழம், பீஜ பூரகங்களும். (விதைகள் நிறைந்த பழங்கள்,கொய்யா, மாதுளை, விளாம்பழம் போன்றவை) மதூக ( ஒரு வகை மரம் இதில் தேன் கிடைக்கும் என்பர்) சால, தால மரங்கள், தமால, ரஸனா அர்ஜுன மரங்கள், அரிஷ்ட, உதும்பர, ப்லக்ஷ, வட (ஆலமரம்) கிம்சுக, சந்தன மரங்கள்) பிசுமந்தம், கோவிதார: (எளிதில் உடையாது, சுவர்கத்தில் உள்ளது என்பர்) சரள, சுர தாரு, த்ராக்ஷா, இக்ஷு ரம்பா, ஜம்பூ, பதரி,அக்ஷபய, நெல்லி, பில்வம், கபித்த, ஜம்பீர, இவைகளைச் சூழ்ந்து பல்லாதகா எனும் கொடிகள், இவை, அந்த தடாகத்தை சுற்றிலும் இருக்க, அதனுள் பொன்னிற தாமரை மலர்கள் மலர்ந்து நிரம்பியிருந்தன. குமுத மலர்களும் கல்ஹார எனும் வெண் தாமரைகளும், சதபத்ர, முதலியவை லக்ஷ்மீகரமாக இருந்தன. மலர்கள் இருக்கும் இடத்தில் வண்டுகள் ரீங்காரம் செய்வது இயல்பே. இங்கும் மதம் கொண்டு பாடுவது போல ரீங்காரமும், சகுந்த பக்ஷிகளின் கூக்குரலும் இணைந்து கேட்டன. ஹம்சங்களும் காரண்டவ எனும் பக்ஷிகளும், சக்ரவாகங்களும், சாரஸ பக்ஷிகளும், ஜல குக்குடம் எனும் நீர் வாழ் கோழிகள், கோயஷ்டி, தாத்யூஹ, எனும் பறவைகள் கூட்டம் கூட்டமாக கூவிய படி சென்றன. மீன்களும் ஆமைகளும், சஞ்சரித்து பத்மங்களின் அடியில் நீரை சல சலக்க வைத்தன. கதம்பம், வேதஸ, நல நீப, வஞ்சுள, எனும் மலர்கள், மல்லிகை, குரபக, அசோக, சிரீஷம், குடஜம், இங்குதீ, குப்ஜகம், ஸ்வர்ணயூதீ, நாக, புன்னாக, ஜாதி புஷ்பங்கள், மல்லிகை, சத்பத்ரம், மாதவீ, ஜால்காதி இவை தரையில் பரவி கிடந்தன. சில அருகில் இருந்த மரங்களில் படர்ந்தன.
அங்கு ஒரு சமயம், அந்த மலைச் சரிவின் காடுகளில் வசிக்கும் யானைக் கூட்டம், அதன் தலைவன் முன்னால் வந்து, வழியில் இடறிய மரக் கிளைகளை உடைத்தும், முள்ளுடன் மூங்கில் மரங்களையும், விசாலமாக கிளை விரித்து படர்ந்து வளர்ந்திருந்த பெரிய மரங்களையும் ஒடித்தும் தாக்கியும், வழி அமைத்து கொடுக்க, விரைந்து வந்தது. அதன் வாசனையைக் கண்டே மரங்களில் இருந்த வானரங்கள், புலி முதலிய வன விலங்குகள், ஓனாய்கள், மான்கள், பெரு நாகங்கள், பயந்து ஓடி விலகின. வெண்மையான, மற்றும் க்ருஷ்ண சர்ப்பங்கள் சமரீ எனும் சிறு மிருகங்கள், நரிகள், வராஹங்கள், மஹிஷம், ருக்ஷசல்யா எனும் கரடிகள். பசு வால் கொண்ட கழுதை ஜாதி வன விலங்குகள், மர்கடங்கள், மற்றும் பல சிறிய வன விலங்குகள், சாதுவான ஹரிண எனும் மான்கள், முயல் இவைகள் மட்டும் பயமின்றி சஞ்சரித்தன.
கோடை காலத்து உஷ்ணத்தால் தாகத்தால் தவித்த யானைகள், ஆண்களும் பெண்களுமாக மத நீர் வழிய வேகமாக மலையைச் சுற்றி வந்ததில் வேர்த்து விறுவிறுக்க, மத நீரைச் சுற்றி வந்த வண்டுகளின் ஆக்ரமத்தையும் பொறுக்க மாட்டாமல், தடாகத்தின் குளிர்ந்த நீரையும், பங்கஜங்களின் நாளங்களையும் வெகு தூரத்திலிருந்தே வாசனையால் அறிந்து கொண்ட அந்த கூட்டம், யானைத் தலைவன் வழி காட்ட பாய்ந்து வந்து தண்ணீரில் இறங்கின. தாகம், நடந்து வந்த களைப்பு தீர நீரில் மூழ்கி மகிழ்ந்தன. அமுதம் போன்ற அந்த தெளிந்த நீர் பொன் நிற அரவிந்தங்கள், உத்பலங்கள் இவைகளின் வாசனை மேலிட்டிருந்ததை வேண்டுமளவு திருப்தியாக குடித்தன. வேரோடு பிடுங்கிய மலர்களைக் கொண்டு அந்த தடாகத்தில் வீசியும், தண்ணீரை தங்கள் மேல் தெளித்துக் கொண்டும் களைப்பு தீர விளையாடின.
தன் வீட்டிற்கு வந்த அதிதிகளை, தன் வீட்டுத் தோட்டத்து பூக்களைக் கொடுத்தும், ஸ்னான வசதிகளை செய்து கொடுத்தும், குடும்பத் தலைவன் உபசரிப்பது போல அந்த தடாகம், இந்த மதம் கொண்ட யானைக் கூட்டத்தின் அட்டகாசங்களை தடுக்காமல் அனுமதித்தது. அதுவும் பகவானின் மாயையே.
அரசனே! அங்கு விதி வசத்தால், ஒரு முதலை கோபத்துடன் வந்து, தன் வாய்க்கு சுலபமாக கிடைத்த தலைவனான யானையின் கால்களைப் பற்றியது. அந்த யானையும் தன்னால் முடித்த வரை போராடியது. கால்களை விடுவித்துக் கொள்ள திணறியது. முதலையின் பிடி விடவில்லை. மிகவும் வருந்தி ஓலமிட்ட தலைவனைக் கண்டு மற்ற பெண் யானைகள், குட்டியானைகள் அலறின. மற்ற ஆண் யானைகள் தாங்களும் முயன்று முடியாமல் வருந்தி ஓலமிட்டன. இரு பக்கமும் இரு யானைகள் பிடித்து இழுத்துப் பார்த்தன. யுத்தம் போலவே இருந்தது. இரு பக்கமும் பலமான பிடி, நக்ரம்- முதலையும் விடவில்லை, நீருக்குள்ளும் வெளியிலுமாக இரண்டும் சளைக்காமல் போராடின. முதலையின் பிடி விடுவதாயில்லை. உயிருடன் இரண்டும் பலகாலம் (ஆயிரம் ஆண்டுகள்) போராடியதைக் கண்டு தேவர்களே அதிசயித்தனர்.
நாளடைவில், கஜேந்திரன், தன் மன பலத்தை இழந்தது. தடாகத்தைக் கலக்கியதில் அதில் வாழ்ந்த ஜீவ ராசிகள் பெரிதும் பாதிக்கப் பட்டன. ப்ராண சங்கடம் என்ற நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சமயம் எதேச்சையாக, தன் சரீரத்தில் இருந்த பிடிப்பை விட்டு, ஆத்ம மோக்ஷம் என்பது பற்றிய சிந்தனை எழுந்தது. சுய புத்தியும் தீவிரமான போராட்டத்தில் இருந்த தன் கூட்டத்தாரிடம் இரக்கமும் எழுந்தது. தன்னை முதலையின் பிடியிலிருந்து விடுவிக்க அவர்களின் படும் துயரம் வாட்டியது. பொறி தட்டினாற்போல ஒரு எண்ணம், இந்த முதலையை பகவானே தான் அனுப்பியிருக்கிறான், சம்சாரம் பந்தம் என்று உழன்று கொண்டிருக்கும் என்னை விடுவிக்க – இந்த எண்ணம் வந்ததும் பரம் பராயணம் – பர ப்ரும்மம் இன்னுமா அவனை சரணடையாமல் இருக்கிறேன் என்று தன்னையே நொந்து கொண்டது.
அந்தகன் எனும் ம்ருத்யு அருகில் வந்தவுடனேயே, அவன் பிடியில் அகப்படாமல் தப்ப, பெரும் பாம்பின் வாயில் விழுந்தவன் போல அலறி அடித்துக் கொண்டு ஓடும் ஜீவனை, என்னதான் பலசாலியாக இருந்தாலும் பயம் ஆட்கொள்ள, காப்பாற்று என்று அலறியபடி சரணம் அடைந்தவனை காப்பாற்றுபவன், எவனிடம் அந்த அந்தகனே பயந்து தான் பீடித்த ஜீவனை விட்டு விட்டு தான் ஓட்டம் எடுப்பானோ, அந்த பராத்மாவை வணங்குகிறேன்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 33
அத்யாயம்-3
ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்த புத்தி வந்த உடன், மனம் சமாதானமாகி, யோக சாதனையில் மனதை ஹ்ருதயத்தில் வைத்து, ஜபம் செய்யலாயிற்று. கஜேந்திரன் தன் முந்தைய பிறவிகளில் பெற்ற அறிவு, பெரியோர்களால் சிக்ஷிக்கப் பட்டு அனுசரித்த ஜப தபங்கள், கை கொடுத்தன. மிகச் சிறந்த ஜபம், அந்த பராத்மாவை ஜபிப்பதே.
கஜேந்திரன் துதி: ॐ नमो भगवते तस्मै यत एतच्चिदात्मकम् । पुरुषायादिबीजाय परेशायाभिधीमहि ॥ २॥
ஸ்வயம் புவன்- தானாக தோன்றியவன், எவனிடத்தில் தோன்றியது என்றோ, எப்படி இது தோன்றியது என்றோ, எதற்காக என்றோ, தான் மட்டுமே அறியும் பரமாத்மா, இந்த பூமியிலிருந்தும், இதை தாண்டி ப்ரும்மாண்டத்திலும், அவனே பரம் பொருள், என்று சரணடைகிறேன்.
பராத்பரன் அவனே. தன் மாயையால் என்னுள்ளும் இருப்பவன். சில சமயம் தெரியும்படியும், மற்றொரு சமயம் மறைந்தும் கண்ணுக்கு புலப்படாமல் சாக்ஷியாக மட்டுமே இருப்பவன், ஜீவன்களின் கண்களுக்கு கண்ணாக இருப்பவன் அவன் என்னை காக்கட்டும்.
தோன்றியது அனைத்தும் மறையும் என்பது நியதி. மனிதர்களாக பிறந்தவர்கள் நான்கு பால்ய, யௌவன, க்ருகஸ்த, சன்யாச என்ற ஆசிரமங்களை கடந்த பின் ஐந்தாவது மரணம் என்பது காலத்தின் கட்டாயம். காலன் எங்கே கொண்டு செல்வான் ? இருட்டாக இருக்கும். அந்த தமசம் – என்று சொல்வார்கள். அதன் முடிவில் விபு:- பகவான் ப்ரகாசமாக தெரிவான் என்பது வேத வாக்யம். “ஆதித்ய வர்ணம் தமச: பரஸ்தாத்” आदित्यवर्णं तमस: परस्तात्” தேவர்களும் அந்த ரூபத்தைக் கண்டவரில்லை.
ரிஷிகளும், தேவர்களும் அறியாத பரம் பொருள் என்ற பின், பூவுலகில் பிறந்த ஒரு ஜந்து எப்படி அறியவோ, உணரவோ முடியும்? நாடகத்தில் கதா பாத்திரமாக நடிக்கும் நடன் போல அந்த சமயத்திகேற்ற நடை உடை பாவனைகளை ஏற்கிறான். சுய ரூபத்தில் அந்த நடன் யார் என்றோ என்ன தொழில் என்றோ என்ன அறிவோம்? அவ்வளவே அவதாரங்களை காணும் நாமும் அதை மட்டுமே அறிவோம். சுய ரூபனான அவதார புருஷன், பகவான் என்னை காக்கட்டும்.
எவருடைய சுமங்களமான பதத்தை, கண்களால் காணவே, சங்கத்தை தவிர்த்த சாதுக்கள், முனிவர்கள், வனங்களில் கடினமாக விரதங்களை ஏற்று தவம் செய்கிறார்களோ, அவர்கள் எந்த ஸ்வரூபத்தை காண்கிறார்களோ, அந்த பதம் எனக்கும் கிடைக்கட்டும்.
எவருக்கு கர்ம பந்தமோ, ஜன்மமோ இல்லையோ, பெயரோ, ரூபமோ, குண தோஷமோ ( முக்குணங்களால்-சத்வ,ரஜஸ்,தமஸ்- இவைகளால் பாதிப்பு) இல்லையோ, அப்படி இருந்தும், அவர் உலகை ஸ்ருஷ்டி செய்வதிலும், அதன் செயல்களை நடத்திச் செல்வதிலும் ஒவ்வொரு யுகத்திலும் தன் மாயையால் ப்ரளய காலத்தில் உடன் இருந்து அடுத்த யுகத்தை தோற்றுவிப்பதிலும் கவனமாக இருக்கிறார். அவர் என்னை காக்கட்டும்.
பரப்ரும்மம், மகேஸ்வரன், அனந்தன் –என்று பல பெயர்கள். அளவில்லா சக்தியுடையவன், உருவமே இல்லாமலும் இருப்பான், விசித்ரமான ரூபத்தோடும் வருவான், இப்படி ஆச்சர்யமான செயல்களை செய்பவனுக்கு நமஸ்காரம்.
ஸ்வயம் ப்ரகாசமானவன், உயிரினங்களின் ஆத்ம ப்ரகாசத்துக்கு சாக்ஷியாக இருப்பவன், அவனே பரமாத்மா.வாக்குக்கு எட்டாதவன். மனசால் உணர முடியாதவன். சேதஸ் என்ற புத்தியால் கண்டறிய முடியாதவன். (யதோ வாசா நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ- यतो वाचा निवर्तन्ते अप्राप्य मनसा सह – ஸ்ருதி வாக்யம்) அவருக்கு நமஸ்காரம்.
சுத்த சத்வா: என்று பெயர் பெற்ற தபஸ்விகளுக்கு காணக் கிடைப்பவன். அந்த தபஸ்விகளான ரிஷிகள், தங்கள் சாதனைகளால் கர்ம பந்தனம் என்பதிலிருந்து விடுபட்டவர்கள். இவர்கள் மோக்ஷம் என்பதையும் தாண்டி ப்ரும்ம நிர்வாணம் என்பதை அடைவதே நோக்கமாக இருப்பவர்கள். (பகவானுடன் ஐக்யமாவது) அவர்களுக்கு நமஸ்காரம்.
சாந்தமானவன், சமயத்துக்கு ஏற்ப கோர ருபங்களையும் ஏற்பவன், ஞானமே தனமாக இருப்பவன் ஆதலால், , உலகியலில் முக்குணங்களின் தர்மங்களையும் ஒரே விதமாக ஏற்றத் தாழ்வின்றி அரவணைத்துச் செல்கிறான். அவனுக்கு நமஸ்காரம்.
(பிறவிகள் பலவிதமாக இருக்கின்றன. – அதன் தேவைகளுக்கு சத்வ, ரஜஸ், தமோ குணங்கள் அமையும். மனிதர்களில் மட்டுமல்ல சகல ஜீவன்களிலும் சாதுவாக சில, பரபரப்பாக சில, ஆக்ரோஷமாக சில – தாமசமாக சில என்று இருப்பதால் அனைத்து ஜீவன்களையும் சமமாக பார்க்கும் பகவான், இவைகளில் தார தம்யம் காண்பதில்லை. அந்தந்த பிறவியின் தேவைகளை நிறைவேற்ற ஞானம் இயல்பாக அமையும். ஒரு பறவை செய்வதை, மற்றொரு மிருகமோ, மனிதனோ செய்ய முடியாது என்பது போல. மழை, பூகம்பம் முதலிவைகளை சிறு பிராணிகள் அறிந்து கொள்வதை போல மனிதன் அறிவதில்லை என்று பல உதாரணங்கள் ) அவனுக்கு நமஸ்காரம்.
க்ஷேத்ரக்ஞன் – பரமாத்மாவின் ஒரு பெயர். சரீரம், ஆத்மா என்ற தத்வங்களை அறிந்தவன் என்பது பொருள். அவனுக்கு நமஸ்காரம். அந்தர் யாமியான சர்வாத்மன்- உள்ளுறை பரம் பொருளான அவனுக்கு நமஸ்காரம்.
சாக்ஷியாக இருப்பவன், புருஷன் எனப்படுபவன். பழமையானவன்- முதன் முதலில் தோன்றியவன். (சரீரத்தின் அனைத்து பாகங்களும் உருவாகி, இந்திரியங்கள் இயங்க கண் காது முதலியவைகள் தோன்றிய பின்னும் அது வெறும் பிம்பமாக மட்டுமே இருந்தது. படைத்த ப்ரும்மா திகைத்தார். அதனுள் உணர்வை நிரப்பியவன் பரமாத்மா- பூரயதி இதி புருஷ: என்பது பதம். पूरयति इति पुरुष:நிரப்புபவன், ஜடமாக இருந்த உடலில் உணர்வை நிரப்பி அதை செயல் படச் செய்தவன் என்ற பொருளில், அதைத் தவிர முதன் முதலில் பிறந்தவன் -ஆதி புருஷன் என்பதாக பகவானைச் சொல்வர். மத்த: ஸ்ம்ருதிர்ஞானமபோஹனம் ச – मत्त: स्मृतिर् ज्ञानमपोहनम् च – என்று கீதை. அதன்படி என்னிலிருந்து உணர்வு, அறிவு தோன்றுகின்றன. அது மறைவதற்கும் நானே காரணம்.) ஆதி மூலம், மூல ப்ரக்ருதி என்ற பதங்களால் சொல்லப் படும் முழு முதற் கடவுளுக்கு நமஸ்காரம்.
இந்திரியங்களின் செயலை அதன் குண தோஷங்களை பார்த்துக் கொண்டிருப்பவர்- சப்தம் – அதற்கான இந்திரியம் காது, கேள்வி என்பது செயல் – இப்படி ஒவ்வொரு இந்திரியமும் இயல்பாக செயல்பட சாக்ஷியாக இருப்பவன். (வெளிப்படையாக விவரிக்காமல் மண் பானை, குயவன் பானையாக்கும் முன் மண்ணாக இருந்தது என்று அறிவது போல சாயையாக – ஊகித்துச் சொல்வது என்பது நியாய சாஸ்திரம். அது போல இந்திரியங்களின் செயல்களை பானையாகவும், அது செய்யப்பட்டது குயவனால் – பகவானால் என்பதை ஊகத்தால் அறிகிறோம்.)
நமோ நமஸ்தே, அகில காரணாய – உலகம் தோறவே காரணமானவன் என்று வணங்குகிறேன்.
அவனே காரணமின்றியும், சில சமயம் நாம் அறியாத அத்புத செயலுக்கு காரணமாகவும் இருப்பவன் என்று வணங்குகிறேன். ஆகம, வேதங்கள் என்ற பெரும் கடலாக இருப்பவன் (வேத ஸ்வரூபி) , அபவர்க பராயணன், படைத்தல் முதலிய செயல்களைச் செய்தாலும், தனித்த தன் இருப்பை – உலகியலுக்கு அப்பாற் பட்ட தன் உயர்ந்த நிலையை உடையவன் – அவனை வணங்குகிறேன்.
முக்குணங்களே அரண்யம், அது சூழ்ந்து இருப்பதால், மறைந்து இருக்கும் ஞானம் என்ற அக்னி, என்று இருக்க, அந்த அரண்யத்தை ஒடுக்கி, ஞானத்தை ப்ரகாசிக்க செய்ய வேண்டும். அந்த ஞானமே தன் ப்ரகாசமாக இருப்பவனை வணங்குகிறேன்.
என்னைப் போன்றவர்கள் சரணடையும் பொழுது, பசு பாசம் என்ற பந்தங்களிலிருந்து விடுவிப்பவன், மிகுந்த கருணையுடையவன், தனக்கு என்று எந்த பந்தமும் இல்லாதவன், என்றும் உள்ள அந்த பகவானுக்கு நமஸ்காரம். தன்னுடைய அம்சத்தை சகல உயிரினங்களுக்குள்ளும் வைத்து அவைகளின் மனதில் உணர்வை அளித்த பெருந்தன்மைக்கு நமஸ்காரம்
ஞானாத்மாவான ஈஸ்வரனுக்கு நமஸ்காரம். தன் ஆத்மா, தன்னுடைய சுற்றத்தார் என்றும் வீடு வாசல், தனம் என்றும் அதிலேயே மூழ்கி இருப்பவர்களுக்கு எட்டாத தூரத்திலும், சாதனைகள் மூலம், சங்கத்தை, ஆசைகளை விட்ட, தங்கள் உள்ளத்தில் சதா நினைத்திருக்கும் முக்தர்களுக்கு அருகிலும் இருக்கும் பகவானே!
தர்ம, அர்த்த, காமங்களிலிருந்து விடுபட நினைக்கும் சாதகர்கள், பஜித்து தாங்கள் விரும்பும் நல்கதியை அடைகிறார்கள். அவர்களைப் போலவே எனக்கும் விமோசனம் என்பதை அருள வேண்டுகிறேன். பகவானை நம்பி சரணாகதி செய்பவர்கள் கூட அவரிடம் எதையும் பிரார்த்திப்பது இல்லை. அவர்கள் ஆனந்தமாக அவரை பாடி அதிலேயே மகிழ்ந்து இருக்கிறார்கள்.
அக்ஷரமான அந்த ப்ரும்மம், பர ஈஸ்வரன்- முழு முதல் தலைவன் , இது தான் இந்த ப்ரப்ரும்மம் என்று வரையறுக்க முடியாதவன், அத்யாத்மிக சாதகர்களான யோகிகள் மட்டுமே அறியத் தகுந்தவன், ஸூக்ஷ்மத்திலும் ஸூக்ஷ்மானவன், (அணோரணீயான் – अणोरणीयान्- அணுவிலும் அணுவானவன்) எட்டாத தூரத்தில் இருக்கும் ஸூக்ஷ்மமான பொருள். (தத் தூரே ததந்திகே- तद्दूरे तदन्तिके) எனவே மனிதனின் கண்களால் காணவோ, காதுகளால் கேட்கவோ, மற்றும் புலன்களால் உணரவோ முடியாதவன். முதல்வன்- ஆத்யம், அனந்தன்- முடிவில்லாதவன், பரிபூர்ணன்-நிறைவானவன், அவனை வணங்குகிறேன். (பூர்ணஸ்ய பூர்ணன்)
ப்ரும்மா முதலானவர்கள் லவ லேசம் – மிக குறைந்த அளவு- அறிந்துள்ளார்கள். சராசரத்தில் உள்ள தேவர்கள், மனிதர்கள் உன் பெயர்களையும், ரூபங்களையும் அதன் பேதங்களையும் கேட்டிருக்கிறார்கள்.
ஸூரியனின் கதிர்கள் வெப்பத்தை அளிப்பதையும், அவை திரும்ப ஸூரியனிடமே லயமாவது போலவும், தீயின் ஜ்வாலையில் அதன் பொறிகள் லயமாவது போலவும், உலகில் சப்தம் முதலான தன்மாத்ரைகள், சத்வ,ரஜஸ், தமஸ் என்ற குணங்கள், புத்தி, மனம், மற்ற உடலின் செயல்கள் அனைத்தும் அந்த ப்ரும்மத்திடமே அடங்கி விடுகின்றன.
இது அல்ல, இது அல்ல என்று ஒவ்வொன்றையும் நிராகரித்து (नेति नेति) எது ப்ரும்மம் என்று உபனிஷதங்கள் தேடுகின்றன. தேவனோ, அசுரனோ, மனிதனோ அல்ல, பெண்ணோ, அலியோ, ஆணோ, வெறும் ஜந்துவோ அல்ல, இந்த செயலோ, நல்லதோ கெட்டதோ அல்ல, மறுப்போ, ஏற்போ அல்ல, அசேஷன் – மீதியில்லாத அனைத்தும் என இருப்பவனை வணங்குகிறேன்.
பகவானே! நான் உயிர் வாழ விரும்பவில்லை. இந்த முதலையின் பிடியிருந்து விடுபட்டு திரும்பவும் உலகில் வாழ்வது வேண்டாம். என்னை சூழ்ந்திருக்கும் அறியாமை விலக வேண்டும். அதிலிருந்து விடுபட வேண்டும். அந்த விடுதலை காலத்தால் அழியாது. எனக்கு ஞானத்தைக் கொடுங்கள். உலக வாழ்க்கை இந்த யானை பிறவியோடு முடியட்டும். மோக்ஷம் வேண்டுகிறேன்.
விஸ்வத்தை படைத்தவன், ( सर्वं खल्विदं ब्रह्म ) விஸ்வமே – உருவானவன். அனைத்து உலகங்களும் அவனே. விஸ்வம், அவிஸ்வம் – விஸ்வாத்மா, அஜன்- ஸ்வயமாக தோன்றியவன், ப்ரும்மா என அந்த பரமபத்தை வணங்குகிறேன்.
வாழ் நாள் முழுவதும் யோக சாதனைகளே செய்து, மனதில் யோகம் அன்றி வேறு சிந்தனை இல்லாமல், யோகமார்கத்தில் தேறி வந்து, யோகிகள் காணும் யோகேசனை வணங்குகிறேன்.
நமோ நமஸ்துப்யம்- உனக்கு அனேக நமஸ்காரங்கள். அளவில்லாத வேகமும், சக்திகளும் நிறைந்தவன். உன் சக்தி அல்லது உன் மாயை என்பதை பலர் அறிவதில்லை. ஆத்மாவாக இருந்து நீ அருளுவதை, புத்தியின் அஹங்காரம் மறைக்கிறது. உன் ஸ்வரூபத்தை தெரிந்து கொள்ள முயலுவதும் இல்லை. அகில உலகங்களின் சப்த ரூபமானவன், ஜீவன்களின் புத்தி ஞானம் இவை வெளிப்பட காரணமானவன், உன் எல்லையில்லா மாகாத்ம்யத்தை சாமான்யர்களால் அறியவா முடியும? உன் பதத்தில் வந்து வணங்கியவனை காப்பவன், என உன்னையே சரணடைகிறேன
ஸ்ரீ சுகர் சொன்னர்: இவ்வாறு கஜேந்திரன் செய்த துதியைக் கேட்டு ப்ரும்மா முதலான தேவர்களும் அதிசயித்தனர். நிர்விசேஷம் என்றும், பரப்ரும்மம் என்றும் கஜேந்திரன் வர்ணித்ததை பாராட்டினர். தங்கள் ரூபம், பதவி இவைகளில் அபிமானம் உள்ளவர்கள், இவர்கள் ஏன் முதலில் வரவில்லை? நிகிலாத்மகன் என அழைத்த ஸ்ரீ ஹரிக்குள் அந்த அமர கூட்டமே அடக்கம் தானே. அச்சமயம் அவரே அங்கு தோன்றினார். மிகவும் வருந்திய நிலையில் இருந்தவன் செய்த துதியினால் அக மகிழ்ந்தவராக. வேதமயன் எனும் கருடனின் மேல் ஏறி சக்ராயுதத்துடன் ஜகன்நிவாசன்- கஜேந்திரன் அருகில் வந்தார். தடாகத்தின் ஆழத்தில், முதலை வாயில் அகப்பட்டு கால்களை விடுவிக்க முடியாமல் தவித்த கஜேந்திரன், அந்த நிலையிலும், தன் துயரை மறந்து, கையில் சக்ரத்துடன், கருடன் மேல் ஆரோஹித்து வந்த ஸ்ரீ ஹரியைப் பார்த்து, ஒரு தாமரை மலரை வேரோடு பிடுங்கி துதிக்கையில் வைத்துக் கொண்டு மிக சிரமப் பட்டு இந்த வார்த்தையை சொல்லிற்று ‘நாரயணா! அகில குரோ பகவன் நமஸ்தே” नारायणा अखिल गुरो! भगवन्नमस्ते ”
உடனே, ஸ்ரீ ஹரி, கருடன் மேலிருந்து இறங்கி, பரபரப்புடன் அருகில் வந்தவர், முதலையுடன் சேர்த்து கஜேந்திரனை நீரிலிருந்து வெளியே கொண்டு வந்தார். அனைவரும் அதிசயத்துடன் பார்த்து இருக்கையில், முதலையின் தலையை சக்ரத்தால் துண்டித்து கஜேந்திரனை விடுவித்தார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 33
அத்யாயம்-4
அதன் பின் தேவ, ரிஷிகள், கந்தர்வர்கள், ப்ரும்மா, ஈசன் முதலானோர், ஸ்ரீ ஹரியின் செயலை ஸ்லாகித்து, பூமாரி பெய்தனர். துந்துபிகள் முழங்கின. கந்தர்வர்கள் நடனமாடினர். சிலர் பாடினர். புருஷோத்தமா, நன்று, என்று சொல்லி, ரிஷிகளும் சாரணர்களும், சித்தர்களும் மகிழ்ந்தனர்.
அந்த முதலையோவெனில், திடுமென ஆச்சர்யமான ரூபத்தில் வந்து நின்றது. தேவலன் என்பவருடைய சாபத்திலிருந்து விடுபட்டேன், நான் ஹூஹூ என்ற கந்தர்வன் என்றது. உத்தமஸ்லோகன் எனப் படும் ஸ்ரீஹரியை வணங்கி அவரை துதி செய்தபின், அவரை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, அனைவரும் பார்த்து நிற்கையிலேயே, தன் தவறும் அதனால் பெற்ற சாபமும் நீங்கியது என்று கந்தர்வனாக தன் இருப்பிடம் சென்றான்.
கஜேந்திரனும், பகவானின் ஸ்பர்சித்தால், தன் உலகியல் அறியாமை நீங்கப் பெற்று, அவருடைய அணுக்கத் தொண்டனாக, வைகுண்டத்தில் அவர் அருகில் உள்ளோர் போலவே, பகவானின் ருபத்தை பெற்று பீதாம்பரமும் சதுர்புஜமுமாக ஆனான்.
கஜேந்திரன் யார் என்று அனைவருக்கும் தெரிந்து கொள்ள ஆவல் மேலிட்டது. முன் பிறவியில் பாண்டிய ராஜாவாக, பாரதத்தின் தென் பகுதியில் த்ரவிட என்ற பகுதியின் அரசனாக புகழ் வாய்ந்தவன். மஹா விஷ்ணுவை சிரத்தையுடன் வணங்கி வந்தான். ஒருசமயம், ஆராதன காலத்தில், மௌன விரதம் ஏற்றுக் கொண்டு, ஸ்ரீ ஹரியை, தவம் செய்வோர் போல ஜடா தரனாக, குலாசல ஆசிரமத்தில் இருந்து பூஜை செய்து கொண்டிருந்தான். எதேச்சையாக புகழ்பெற்ற ஒரு முனிவர், சிஷ்ய கணங்களோடு, நடந்த களைப்புடன், வந்து சேர்ந்தார். அவரை பார்த்தும் விரத நியமங்களை பெரிதாக நினைத்து அவருக்கு உரிய அதிதி சத்காரங்களைச் செய்யாமல் தன் இடத்தில் மறைந்தே இருந்து பூஜையை தொடர்ந்ததை, அவர் தனக்கிழைத்த அவமானமாக எடுத்துக் கொண்டார். அதனால் சபித்தார். இவன் சாது இல்லை. துராத்மா. புத்தியில்லாதவன். இன்று அதிதியாக வந்த ரிஷியை அவமதித்து விட்டான். பூமியில் பிறக்கட்டும். தாமச குணத்துடன் கண்டும் காணாமல் இருப்பவன், மந்த புத்தியான யானை போல இருப்பவன், அதே போன்ற யானையாக பிறக்கட்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி சபித்து விட்டு அகஸ்தியர் என்ற அந்த முனிவர் சென்று விட்டார். இந்த்ரத்யும்னன் சாபத்தால் தன் நிஜ உருவை இழந்தான். தன் பூர்வ ஜன்ம வாசனையை இல்லாமல் ஆக்கும் ஒரு யானையின் வயிற்றில் ஜனித்தான். இருந்தும், முன் பிறவியில் ஸ்ரீ ஹரி யை பஜித்து வந்திருந்த பலத்தால் உடல் யானையாக இருந்தும் உள் உணர்வில் ஸ்ரீ ஹரியின் நினைவு எஞ்சியிருந்தது.
பத்மனாபனான ஸ்ரீ ஹரி, கஜேந்திரனை விடுவித்து, தன் அணுக்கத் தொண்டர்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டதை உறுதி செய்து கொண்டு, கருடனின் மேல் ஏறி தன் இருப்பிடம் சென்றார். கந்தர்வர்கள், சித்தர்கள் என்று அனைவரும் இந்த அத்புதமான செயலை பாடினார்கள். மஹாராஜா! இது தான் கஜேந்திர மோக்ஷம்- கஜ ராஜ மோக்ஷணம் என்றும் சொல்லப் படும் கதை. இதைக் கேட்டாலே, சுவர்கம் தரும், புகழ் வரும், கலி கல்மஷம் போகும், து:ஸ்வப்னம் வராது என்று சொல்வார்கள்.
அதனால் இதை பலரும் அந்தணர்கள் உள்பட, நன்மையை விரும்பி விடியற்காலையில், கெட்ட ஸ்வப்னங்களுக்கு பரிகாரமாக படிக்கிறார்கள். ஸ்ரீ ஹரியே கஜேந்திரனிடம் இதைச் சொன்னார், அனைவரும் சூழ்ந்திருக்கையில், அனைவரும் கேட்கச் சொன்னார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: என்னையும் உன்னையும், இந்த மலையை இதன் காடுகளையும்,
வேத்ர, கீசக வேணு மரங்கள் அடர்ந்திருப்பதை மற்றும் பல தேவலோக மரங்கள் நிரம்பிய இந்த மலையின் சிகரங்களில், உள்ள க்ஷீரோதம் என்ற இந்த புண்யமான இடத்தையும்,
ஸ்வேத த்வீபம் – வெண் நிற தீவு என்ற இந்த இடத்தில் ப்ரும்மாவை, என்னை , மகேஸ்வரனை, நினைத்து, இந்த க்ஷீரோதம் என்ற புண்யமான இடத்தையும், வெண் நிறத் தீவு என்று ப்ரகாசமாக இருக்கும் இடத்தையும்,
ஸ்ரீ வஸ்துபம், கௌஸ்துப மாலைகள், கதை, கௌமோதகியுடன் என்னை நினைத்து,
என் பாஞ்சஜன்யம், சுதர்சனம், பறவைகளின் அரசனான கருடன், மற்றும், சேஷன், மிக ஸூக்ஷ்மான என் கலை, (பகுதி) என்னை ஆஸ்ரயித்த தேவி ஸ்ரீ லக்ஷ்மியுடன் நினைத்து,
ப்ரும்ம ரிஷி நாரதர், மகேவரன், ப்ரஹ்லாதன், முதலிய பக்தர்களையும்,
மத்ஸ்ய, கூர்ம, வராக அவதாரங்களில் என்னுடைய செயல்களை கேட்டும் பாடியும்,
சூரியன், சந்திரன் , அக்னி, ப்ரணவம், சத்யமான வெளியில் தெரியும், பசுக்கள், அந்தணர்கள், இவர்கள், வெளியில் தெரியாத அழிவில்லாத தர்மம் என்பதையும்,
தாக்ஷாயணியை, சோம, கஸ்யபருடைய (ரிஷிகள்) இவர்களின் தர்ம பத்னிகள்,
கங்கா, சரஸ்வதி, நந்தா, காலிந்தீ, சித வாரணம், துருவன் சப்த ரிஷிகள், புண்ய ஸ்லோகர்கள் உலகில் நற்செயல்களைச் செய்த பெரியவர்கள், இவர்களை, பின் இரவில் எழுந்து, நினைப்பவர்கள் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள். இரவு முடியும் வேளையில், விடியற்காலையில் இந்த சரித்திரத்தைச் சொல்லி என்னை வணங்குபவர்களுக்கு மரணத் தறுவாயில் நல்ல எண்ணம் வரச் செய்கிறேன்.
இவ்வாறு சொல்லி ஹ்ருஷீகேசன், அந்த தடாக ஜலத்தை கையால் எடுத்து அனைவரையும் ஆசீர்வதித்து விட்டு, தன் கருட வாகனத்தில் ஏறினார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், கஜேந்திர மோக்ஷணம் என்ற நாலாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-26
அத்யாயம்-5
ஸ்ரீ சுகர் சொன்னார்: அரசனே. கஜேந்திர மோக்ஷணம் என்ற பாவனமான சரித்திரத்தைக் கேட்டாய். அடுத்த மன்வந்தரம் ரைவதம் என்பது. அடுத்த மனுவாக வந்தவர் -ஐந்தாவது மனு ரைவதர் என்பவர் காலத்தில் நடந்தது. அவர் தாமசத்தின் சகோதரர். அர்ஜுனன், பலி, விந்த்யா என புதல்வர்கள் . விபு என்பவன் இந்திரனாக இருந்தான். சப்த ரிஷிகள் ஹிரண்ய ரோமா, வேத சிரா, ஊர்த்வ பாஹு என்று அழைக்கப் பட்டனர். சுப்ரனுடைய மனைவி விகுண்டா. அவர்களும் தேவர்களே. தாயின் பெயரில் வைகுண்டர்கள் என்றே அழைக்கப் பட்டனர். அவர்களுடன், தானும் உடனிருந்து வைகுண்டத்தை ரமா விரும்பினாள் என்பதற்காக பகவான் அமைத்தார். பலவிதமாக வைகுண்டம் உயர்வாக வர்ணிக்கப் படுகிறது.
ஆறாவது மனு, சக்ஷு என்பவர். அவர் புதல்வர்கள் சாக்ஷுசர்கள் எனப்படுவர். புரு, புருஷ, சுத்யும்ன முதலானவர்கள். சாக்ஷுசனின் புதல்வர்கள். இந்திரன், மத்ரத்ருமன், என்ற தேவர்கள், ஆப்யாத கணம் எனப்பட்டனர். அதில் முனிவர்கள், ஹவிஷ்மத், வீரகன் முதலானோர். அங்கும் ஒரு தேவன், சம்பூதி என்பவளிடம் அஜிதன் என்ற மகன் பிறந்தான். அவன் பகவானின் ஒரு சம்சமே.
பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்கச் செய்தார். பாற்கடல் உள்ளே சுழன்ற மந்தர மலையைத் கூர்மமாக- ஆமை – கீழிருந்து தாங்கி நின்றார்.
அரசன் கேட்டான்: எப்பொழுது இது நடந்தது ? பகவான் பாற்கடலை எதற்காக கடைந்தார் ? மலையை ஏன் தாங்கி நிற்க வேண்டும்? நீர் வாழ் ஜந்துவாக தோன்றியது எதற்காக? தேவர்களுக்கு அம்ருதம் கிடைத்ததா? அம்ருதம் மட்டுமா? வேறு பொருட்களும் வந்தனவா? கேட்கவே அத்புதமாக இருக்கிறது. பகவானின் இந்த செயல். மேலும் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் பொழுது மேலும் அதிகமாக ரசிக்கும்படி இருக்கிறது. என் மனம் மகிழ பகவானின் மகிமையை விவரித்துச் சொல்லுங்கள்.
ஸுதர் சொன்னார்: கூடியிருந்த மற்ற ரிஷிகளும் சந்தோஷமாக கேட்கத் தயாரானார்கள். இதுவும் ஹரியினுடைய லீலையே என்றனர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: யுத்தம் என்று வந்தால் அசுரர்களிடம் தேவர்கள் தோற்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கூர்மையான ஆயுதங்களால் வெகுவாக பாதிக்கப் பட்டார்கள். அனேக சமயங்களில் உயிர் இழந்தவர்கள் போலவே விழுந்தபடி கிடந்து வெகு நாட்கள் எழுந்திருக்கவே முடியாமல் இருந்திருக்கிறார்கள்.
துர்வாசருடைய சாபத்தால், இந்திரனும் மற்றும் மூவுலகிலும் இருந்த தேவர்கள் லக்ஷ்மீ கடாக்ஷமே அற்றவர்கள் போல், உடல் சக்தியை இழந்தது போல தினசரி அக்னி காரியங்களைக் கூட செய்ய இயலாதவர்களாக ஆனார்கள். மகேந்திர வருணன் முதலானோரும் தங்கள் சக்திக்கு மீறிய சங்கடம் என்பதால் மேரு மலையில் ப்ரும்ம சபா நடப்பதைக் கேள்விப் பட்டு அங்கு சென்றனர். அங்கு அனைவருமாக பகவானிடம் முறையிட்டனர். உயிர் இல்லாத உடல் போலவும், சாரமில்லாத மரக்கட்டை போலவும் தங்கள் இயல்பான உடல் தேஜஸும் இல்லாமல், உலகில் அமங்களமாக நினைக்கப்படும் விதத்தில் இருந்த அவர்களின் தோற்றத்தைக் கண்டு விதாதா, மனதை அடக்கி பரம புருஷனை தியானம் செய்தார். சிறிது நேரம் சென்றபின், ஏதோ உபாயம் கிடைத்தது போல மலர்ந்த முகத்துடன் தேவர்களைப் பார்த்துச் சொன்னார். கேளுங்கள், நான், பவன்-ஈஸ்வரன், நீங்கள் அனைவரும் மற்றும் மனித, திர்யக்- விலங்குகள், தாவரங்கள், மற்ற பிறவிகள் அனைத்தும் எவருடைய அவதார அம்சமாக தோன்றினோமோ, அவரையே சரணடைவோம். அவருக்கு எவரையும் வதம் செய்யவோ, ரக்ஷிக்கவோ தேவையில்லை, இரு பக்ஷமும் அவரைப் பொறுத்த மட்டில் ஒன்றே. இருந்தாலும் படைத்தல், காத்தல், கலைத்தல் என்ற செயல்களை முக்குணங்களைக் கொண்டு நடத்துகிறாரோ, இதுவும் அவருடைய ஸ்திதி பாலனம் என்ற வகையில் தேவர்களான உங்களை காப்பதும் அவர் பொறுப்பே. அவரிடமே செல்வோம், அவர் என்ன சொன்னாலும் செய்வோம், எதை நமக்கு அருளுகிறாரோ அதுவே நமக்கு மங்களம், என்றவர், தானும் அவர்களுடன் அஜிதன் என்ற பெயரில் அவதரித்திருந்த பகவானிடமே சென்றார்.
இது வரை கேட்டது தான், அவருடைய ஸ்வரூபத்தைக் கண்டதில்லை. எனவே அழகான வார்த்தைகளைக் கொண்டு மனப் பூர்வமாக துதி செய்தனர்.
ப்ரும்மா சொன்னார்: அவிக்ரியம், சத்யம், அனந்தமாத்யம், குஹாசயம், நிஷ்கலம், அப்ரதக்யம், மனோக்ரயானம்-வார்த்தைகளால் இதுவரை சொல்லிக் கேட்டதில்லை, சிறந்த தேவர், அவரை வணங்குகிறேன்.
ப்ராணன், மனம், புத்தி, ஆத்மா மற்றும் இந்திரியங்கள் இவைகளை செயல் படச்செய்பவன். தூக்கம், உடல் காயங்கள் இவைகளால் பாதிக்கப்பட மாட்டான். குடை போல நிழல் தருபவன், எந்த இடத்தில் கருடனின் பக்ஷம் எட்டாதோ அங்கெல்லாம், வானமே அவன்தான், மூன்று யுகங்களிலும் அக்ஷரமானவன் அவனை வணங்குகிறேன்.
பிறவியில்லாத – ஆதியும் அந்தமும் இல்லாத- சக்கரம், மனோமயமானது. பதினைந்து ஆரங்கள் கொண்டது. வேகமாக செல்லும். மின்னல் போல வேகமானது, அஷ்ட நேமி, இதை அக்ஷமென்பர், சத்யமான அதை சரணடைகிறேன்.
தாமசம் என்பதே இல்லாத ஒரே வர்ணன், லௌகிகமானது அல்ல -தெளிவாக தெரியாதது. அனந்தம் அபாரம் என்பர். யோக ரதத்தில் கருடாரூடனான அவனை தீரர்கள் பஜிக்கின்றனர். அவருடையை மாயையை எவராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. ஜனங்கள் திகைக்கிறார்கள், அதன் பொருளையும் அறிய முடிவதில்லை. அவரை, தன் ஆத்மாவை அறிந்த , பரமேஸ்வரனான அவனை வணங்குகிறேன். பஞ்ச பூதங்களில் சஞ்சரிப்பவன் என்று வணங்குகிறேன்.
இதோ நாங்கள் இந்த சரீரம் பெற்றது அவரருளால். சத்வ குணம் மட்டுமே அதிகமாக இருக்க எங்களைப் படைத்தார். இந்த ஸூக்ஷ்மமான கதியை யாரும் அறிந்திலர். ரிஷிகளே அறியவில்லையெனில் அசுரர்கள் எவ்விதம் அறிவர்.
தானே செய்து கொண்ட ஏற்பாடு. பாதங்கள் தான் பூமி. இங்கு நான்கு விதமான பிறவிகள். (நடப்பன, பறப்பன, ஊர்வன, நீர் வாழ்வன) மஹாபுருஷனான அவன் தயை செய்ய வேண்டும். ப்ரும்மா அவனே, பெரும் விபூதியுடையவன்.
தண்ணிர் அவனது ரேதஸ். உதார வீர்யம் என்று அதைச் சொல்வர், ஏனெனில் தண்ணீரால் தான் உலகில் உயிரினங்கள் தோன்றுகின்றன. சோமோ, சந்திரனாக இருந்து, தாவரங்களுக்கு உணவையும், ஆயுளையும் தருகிறான். ப்ரஜன என்று புகழ்ந்து சொல்வர்- அளவிட முடியாத இந்த உதவியைச் செய்பவன் எங்களுக்கும் அருளட்டும். அக்னி அவனது முகம். அதிலிருந்து தான் ஜாத வேதர்கள் என்பவர்கள் தோன்றினர். வேதங்களின் கர்ம காண்டங்களை வகைப் படுத்துவதே அவர்கள் பிறப்பின் நோக்கமாக இருந்தது. சமுத்திரத்தின் அடியில் (ஸமுத்திரத்தின் வடவாக்னி தன் தாதுக்களை உணவுக்காகும் பொருட்களாக சமைத்து தருகிறான் என்பது பொருள்) தாதுக்களைக் கொண்டு உணவு தயார் செய்வது அக்னியின் ஒரு வேலை.
அந்த மகா விபூதிக்கு உரியவன் எங்களை காப்பாற்றட்டும். ஆதித்யன் அவன் கண்கள். தேவயானம் – அர்சி முதலியவைகளின் வழி காட்டும் தேவதை. ப்ரும்ம ஞானிகளின் உபாசன ஸ்தானம். ஆதித்யனின் உள் இருப்பது ஹிரண்மயமான மஹா புருஷன் என்பது ஸ்ருதி. தேவயானம் முக்திக்கு வாசல். அம்ருதம் புண்ய லோகம். ம்ருது காலாத்மகன், அந்த மகா விபூதிமான் எங்களைக் காக்கட்டும்.
வாயு சராசரங்களின் ப்ராணன். எந்த பர புருஷனின் ப்ராணத்திலிருந்து தோன்றியதோ, அது தான் உயிரினங்களின் மனதின் உத்சாகம், சாரீரம்- குரல் வளம் இவைகளை நிர்வகிக்கிறது. வாயுவின் பலம் ஓஜஸ். அது தான் இந்திரியங்களாகும். அவரை பின் பற்றுபவர்கள் நாம். அரசனைத் தொடர்ந்து செல்லும் பிரஜைகள் போல. அந்த மகா விபூதிமான் எங்களை அனுக்ரஹிக்கட்டும்.
பர புருஷனின் காதுகள் திசைகள். அவரின் காதுகளிலிருந்து அண்டத்தில் தடாகங்கள், பள்ளங்கள்,குகைகள் தோன்றின. மனிதனின் நாபி, உடலில் உள்ள துவாரங்கள், ஐந்து விதமான இந்திரியங்களின் செயல்கள், ப்ராணேந்திரியம்,என்று உலகில் ஜீவன்களில் என்று வகைப் படுத்தி வைத்த அந்த மகா விபூதிமான் அனுக்ரஹிக்கட்டும்.
இவருடைய பலத்திலிருந்து இந்திரன், ப்ரசாதம் -மகிழ்ச்சி, என்பதால் த்ரிதசா: எனப்படும் தேவர்கள், கோபத்திலிருந்து கிரீசன், புத்தியில் இருந்து விரிஞ்ச்சி, உடல் துவாரங்களிலிருந்து வேதங்கள், காயத்ரி முதலானவை, மற்றும் ரிஷிகள், ஜனன உறுப்பிலிருந்து ப்ரும்மா தோன்றினரோ, அந்த மகா விபூதிமான் எங்களை காக்கட்டும்.
அவருடைய மார்பிலிருந்து ஸ்ரீ- லக்ஷ்மி, நிழலில் இருந்து பித்ருக்கள், ஸ்தனத்திலிருந்து தர்மம், மற்றவர்கள் முதுகிலிருந்து, வானமே இவரது தலை, அப்சரஸ்கள், விளையாட்டினால் – அந்த மகா விபூதிமான் எங்களைக் காக்கட்டும்.
அவரது முகத்திலிருந்து அந்தணன், ப்ரும்மா அவருடைய ஜனன உறுப்பு. ராஜாக்கள் அவருடைய புஜங்கள், துடைகளில் வைஸ்யர்கள், பாதங்களில் -ஸூத்ரர்கள் வந்தனர். அந்த மகா விபூதிமான் எங்களைக் காக்கட்டும்.
அவருடைய கீழ் உதடுகளிலிருந்து லோபம், ப்ரீதி மேல் உதடுகள், மூக்கிலிருந்து பசுக்கள், ஸ்பர்சத்தால் காமம், புருவத்திலிருந்து-யமன், இமைகளிலிருந்து காலம், வெளி வந்தன. அந்த மகா விபூதிமான் எங்களைக் காக்கட்டும்.
த்ரவ்யம்-மூலப்பொருள்-தாது, ஆயுள், செயல்கள், குண விசேஷங்கள், இவைகளை யோக மாயா அளித்ததாகச் சொல்வர். அந்த மகா விபூதிமான் எங்களைக் காக்கட்டும்.
அந்த அமைதியான சக்திக்கு நமஸ்காரம். எங்களுக்கு ராஜ்யம் போன்றவை கிடைக்க அருளிய மகாத்மாவுக்கு , தான் உண்டாக்கிய மாயை, அதன் செயல்களால் தானே பாதிக்கப் படாமல் இருப்பவர். நபஸ்வான்- வாயு, அதுவும் அவரது லீலையே
அத்தகைய தயாளன், நீ எங்களுக்கு தரிசனம் தர வேண்டுகிறோம். உன்னை சரணடைந்தோம். புன்னகையோடு கூடிய உன் முகாம்புஜத்தை காண விரும்புகிறோம். உன் விருப்பம் போல ரூபம் எடுத்து, அந்தந்த காலத்தில், விபோ! எங்களால் நினைத்து கூட பார்க்க முடியாத செயல்களை பகவானே! நீ செய்கிறாய். க்லேசங்கள்-கஷ்டங்களே நிறைந்த, அதிலும் பயனற்ற செயல்களே , மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். விஷயங்களில் ஈடுபட்டு வருந்துகின்றனர். அவைகளையும் உனக்கே அர்ப்பிக்கிறோம். மிக அல்பமேயானாலும் ஈஸ்வரார்ப்பிதம் என்ற பின் அது மனிதனின் நன்மைக்கே. எப்படி மரத்தின் உடலும், கிளைகளும் தழைக்க, அதன் வேரில் நீரை விடுகிறோமோ, அதே போல மஹா விஷ்ணுவின் ஆராதனம், தனக்கும், மற்ற அனைவருக்கும் நலன் தருவதாக அமைகிறது.
அனந்தனான உனக்கு நமஸ்காரம். உன் செயல்களை விவரிக்கவோ, விமர்சிக்கவோ, நாங்கள் யார்? நிர்குணம், மஹேசன் , சத்வம் உள்ள இத்தில் இருப்பவன் என்றும் சொல்லி வணங்குகிறோம்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற ஐந்தாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-50
அத்யாயம்-6
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தேவர்கள் அனைவருமாக துதி செய்யவும் ஸ்ரீ ஹரி அங்கு தோன்றினார் (ஆவிரபூத்) திடுமென அந்த இடம் ஆயிரம் ஸூரியன்கள் ஒன்றாக உதித்தது போல பிரகாசமாக ஆயிற்று.. அந்த ஒளியினால் பார்வையே மறைக்கப்பட்டது போல தேவர்கள் திகைத்தனர். வானம், திசைகள், சுற்றிலும், தங்களுக்குள்ளேயே தேடினர். எங்கே? விபு வந்தாரே, எங்கே ? விரிஞ்சியும் மஹேஸ்வரனும் முதலில் கண்டு கொண்டனர். சுத்தமான மரகத பச்சை நிறத்தில். தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள். புடமிட்ட பொன் நிறத்தில், பீதாம்பரம் சல சலக்க, ப்ரசன்னமான அழகிய உடலும், சுமுகன், சுந்தரமான புருவங்களும், மகாமணி ஒளி விசும் கிரீடமும், கேயூரமும் அலங்கரிக்க, காதுகளின் ஆபரணம், கன்னத்தில் பள பளக்க, அழகிய லக்ஷ்மீகரமான முகம். இடுப்பின் காஞ்சீ, கலாபம், என்ற வளையங்கள், ஹாரமும், நூபுரமும், அழகூட்டின. கௌஸ்துபாபரணமும், ஸ்ரீ லக்ஷ்மியும், வனமாலையும் என மார்பில் அலங்கரிக்க,
சுதர்சனம் முதலான தன் அஸ்திரங்கள், அவைகள் உருவெடுத்து வந்து வணங்கி நிற்பது போல தெரிய, கண் முன் கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். அனவருமாக, தேவர்கள் பரம புருஷனை காண கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
ப்ரும்மா சொன்னார்: பிறவி, வாழ்தல், பின் மறைதல் என்ற சாதாரண ஜீவன்கள் போல அல்லாத, ஆதி புருஷனை, நிர்வாண குணமுடையவனை, சமுத்திரம் போல எல்லையில்லாத சுகமே உருவானவனை, அணுவிலும் அணுவாகவும், எண்ணி முடியாத ஆற்றலும் உடையவனை, மஹானுபாவன் என்ற சொல்லுக்கு உரித்தானவனை வணங்குகிறேன். நமோ நமஸ்தே.
புருஷர்ஷபா! இந்த உன் ரூபம், நன்மையை நாடும் அனைவருக்கும் போற்றத் தகுந்தது. வைதிகமோ, தாந்த்ரீகமோ, யோகமோ, ப்ரும்மாவே, மூவுலகையும் உன் மூர்த்தியில் காண்கிறேன். நீ முதலில் தோன்றினாய். மத்யத்திலும், பின் முடிவிலும் நீயே உன் ஆத்ம தந்திரம் என்பதுடன் விளங்குகிறாய். இந்த உலகங்களின் ஆதியும் அந்தமும், மத்யமாகவும், மண் பானையின் மண் போல பரத்திலும் பரமாக இருக்கிறாய். உன் மாயையால் நீயே, உன் அம்சமாக ஆத்மாவாக, அதன் ஆஸ்ரய ஸ்தானமாகவும், ஏற்படுத்தி, விஸ்வத்தின் உள் நுழைந்துள்ளாய். அறிவுடையோர் உன்னை அடையாளம் காண்கின்றனர். மனதினால் ஊகித்து அறிகின்றனர். ஏராளமான குணங்களின் நடுவில் நிர்குணமான உன்னை பிரித்து சாஸ்திரம் அறிந்தவர்களால் தெரிந்து கொள்ள முடிகிறது. எவ்வாறு மரக் கட்டையில் அக்னி (கடைவதால்), அம்ருதமான ஆஜ்யம்-நெய்- பசுவை கறந்து கிடைக்கும் பாலில் இருந்து (பாலை கறப்பது என்ற செயல்) பூமியில் அன்னம் விதைகளை விதைத்தும் மற்றும் பல செயல்களைச் செய்தும் கிடைக்கிறது, நீர் பூமியில் தோண்டி (கிணறுகள் வெட்டி) கிடைக்கிறது, முயற்சியாலும் உழைப்பாலும், வியாபாரம் முதலிய வாழ்க்கைக்கான தொழில் பலனளிக்கிறது. உழைப்பால், நீர் (அதற்கான கயிறு,ராட்டினம் போன்ற உபகரணங்கள் தேவையோ) உபாயங்களால், யோகிகள், மனிதர்கள் பலன் பெறுவது போல கவிகள், தங்கள் புத்தியால் உன்னை அறிந்து போற்றுகிறார்கள். சரோஜ நாப! கடுமையான தவத்தாலும், நீண்ட நாட்கள் உபாசனை செய்தும் உன்னை காண்பது அரிது என்று இருக்க நேரில் காணப் பெற்றோம். எங்கள் தாபம் தீர்ந்து நம்பிக்கை எனும் ஓளி கிடைக்கப் பெற்றோம். அதற்கு முன் தாவாக்னி நடுவில் நிற்பது போல உணர்ந்தோம்.. என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால், பகவானே, நீயே அந்தராத்மா, அசேஷ சாக்ஷி, நீ அறியாததா? நாங்கள் சொல்லித் தான் தெரிய வேண்டுமா? நீங்களே பரிகாரம் செய்து கொள்ளுங்களேன் என்றால், நாங்கள் உன் சக்தியின் துகள்கள், அக்னியின் பொறிகள் போல உன்னில் தோன்றி உன்னிலேயே ஐக்யம் ஆகும் அல்பர்கள். எது எங்களுக்கு நன்மை செய்யும் அல்லது தீமையே என்பதை கூட எங்களால் உணர்ந்து அறிய முடியாது. பகவானே, நீயே, தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் நன்மையை செய்வாயாக. இதைச் செய் என்று கட்டளையிடுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு விரிஞ்சி முதலானோர் வேண்டிக் கொண்டதைக் கேட்ட பின். அவர்கள் வேண்டுவது என்ன என்பதை உள்ளபடி புரிந்து கொண்ட பகவான், மேக நாதம் போன்ற தன் குரலில் கை கூப்பி நின்றிருந்தவர்களைப் பார்த்து பதிலளித்தார். தேவர்கள் நலனுக்காக சமுத்ர மதனம்- பாற் கடலைக் கடைவது- என்பதைச் சொன்னார். ப்ரும்மன்! சம்போ! ஹே தேவா:! கேளுங்கள். கவனமாக கேளுங்கள். அனைவருக்கும் ஸ்ரேயஸ்- நன்மை என்பதால் தேவர்களே! தைத்யேயர்களிடம் சமாதானமாக பேசி ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள். காலத்தால் அனுக்ரஹிக்கப் பட்டவர்கள் அவர்கள் உங்களிடம் அனுகூலமாக இருக்கும்படி பேசுங்கள். சில சமயம் எதிரிகள் என்பவர்களும் அரவனைத்துக் கொண்டு போக வேண்டியுள்ளது. அரிய செயல் நடக்க அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் முடியும். எலியும் பாம்புமாக இருக்கும் நீங்கள் தற்சமயம் சிரமத்திலும் அவர்கள் பதவியும் ஐஸ்வர்யமுமாக வாழ்கிறார்கள்.
அம்ருதம் என்பதை உண்டாக்க வேண்டும். அதற்கான பிரயத்னங்கள் கடுமையானவை. இதில் மேலும் தாமதிக்காமல் செயல்படுங்கள். அம்ருதம் கிடைத்தால் அதை அருந்தி எந்த ஜந்துவானாலும் மரண பயமின்றி அமரனாக ஆகலாம். பாற்கடலில் எல்லோருமாக புல், கொடிகள், ஔஷதிகள் இவைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாகப் போட்டு, கயிறாக வாசுகியை சுற்றி, என் உதவியுடன் நீங்கள் அனைவருமாக பாற்கடலைக் கடையுங்கள். சற்றும் தளராமல் இதைச் செய்யுங்கள். பலசாலிகளான தைத்யர்களும் உழைப்பால் உடன் இருப்பார்கள். உங்களுக்கும் பலன் கிடைக்கும். தைத்யர்களும் சம்மதித்தால், இதைச் செய்யுங்கள். எப்பொழுதும் போரிட்டு வெல்வது தான் வழி என்று இல்லை. சமாதானமாகவும் சில செயல்களை முடிக்க முடியும். பயப்பட வேண்டாம். சமுத்திரத்தைக் கடையும் சமயம் காளகூட விஷம் வந்தாலும் வரும். லோபமோ, கோபமோ வேண்டாம். கிடைக்கும் வஸ்து மிக உயர்வானது. அதற்கான சில கடினமான எதிர் விளைவுகளைத் தாங்கித் தான் ஆக வேண்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படிச் சொல்லி விட்டு புருஷோத்தமரான பகவான் மறைந்தார். சுதந்திரமான போக்கு உடையவர் தோன்றுவதும் மறைவதும் அவருடைய சங்கல்பமே.
பிதாமகர் முதலானோர் அவரை வணங்கி தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றனர். தேவர்கள் வேறு வழியின்றி செல்வ செழிப்பும், அடங்காத உடல் வலிமையும், தங்களே நாயகர்களாக மூவுலகையும் வசப் படுத்திக் கொண்டு இருந்தவர்களிடம் சந்தி-உடன்பாடு செய்து கொள்வதைப் பற்றிப் பேசினர். தயங்கியபடியே, அசுர வீரர்கள் புடை சூழ இருந்த வைரோசனி- விரோசனின் மகன், தன் அரியணையில் அமர்ந்து இருந்த சமயம் காணச் சென்றனர். செல்வ செழிப்பும், உலகத்தையே தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவந்த கர்வமும், அவர்கள் நிமிர்ந்து நின்றதிலேயே வெளிப்படியாக தெரிவதைக் கண்டனர். புருஷோத்தமன் சொன்ன சொற்களை மனதில் திரும்பத் திரும்ப நினைத்து உருவேற்றிக் கொண்டவன் போல மகேந்திரன் குழைவாக சாந்தமாக பேசினான். அதை தைத்யேஸ்வரன் மட்டுமல்ல, உடன் இருந்த அவனுடைய மந்திரிகள், மற்ற அசுர பதிகளும் கேட்டனர். த்ரிபுர வாசிகளான சம்பரனும், அரிஷ்ட நேமியும் கூட அங்கு இருந்தனர். முடிவில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கை தயாரானது. கடினமான செயலைச் செய்து அம்ருதம் பெறுவதை அனைவருமே ஏற்றுக் கொண்டனர்.
மந்தர கிரியை அவர்கள் தங்கள் பலத்தால் பெயர்த்து எடுத்து ஆடிப் பாடிக் கொண்டு பாற்கடலுக்கு கொண்டு வந்தனர். அடி மரம் போல புஜங்கள் உடைய வீரர்கள். வெகு தூரம் அதைக் கொண்டு வந்ததில் இரு பக்கத்தினரும் வெகுவாக களைத்தனர். இந்திரனும் அவனைச் சேர்ந்தவர்களும், வைரோசனனைச் சேர்ந்தவர்களும் தாங்க முடியாமல், பாதி வழியில், தவற விட்டனர். அதன் பலனாக, மந்தர கிரி விழுந்த வேகத்தில் அதன் அடியில் பல தேவர்களும் அசுரர்களும் நசுக்கப் பட்டனர்.
கனகாசலம் – மந்தர மலையில் மற்றொரு பெயர்- தன் பாரத்தால் அவர்களை தூள் தூளாக்கி விட்டது. மனம் உடைந்து கைகால்கள் உடைந்து, பகவானை பிரார்த்தித்தனர். கருட த்வஜனானான பகவான் அங்கு வந்தார். மலையில் அடியில் விழுந்து நொறுங்கிய கை கால்களுடன் இருந்த இரு பக்ஷத்தினரையும் தன் அருள் பார்வையால் பிழைப்பித்தார். அவர்களும் அடி பட்ட சுவடு கூட இல்லாமல் புத்துயிர் பெற்றவர்களானார்கள். மலையை அனாயாசமாக ஒரு கையால் எடுத்து கருடனின் மேல் வைத்தவர், தானும் அதில் ஏறிக் கொண்டு பாற்கடலை நோக்கிச் சென்றார். அனைவரும் கூட்டமாக பின் தொடர்ந்தனர். தன் தோளிலிருந்து மலையை இறக்கி, கடலில் ஆழத்தில் அதை நிலை நிறுத்திய பின் கருடன் பகவானிடம் அனுமதி பெற்று திரும்பியது.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற ஆறாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-39
அத்யாயம்-7
அதன் பின், நாக ராஜனான வாசுகியை அழைத்தனர். கிடைக்கப் போகும் அம்ருதத்தில் பங்கு தருவதாகச் சொல்லி நாகராஜனை சம்மதிக்க வைத்தனர். வாசுகியை மந்தர மலையைச் சுற்றி கயிராக சுற்றிக் கட்டி மகிழ்ச்சியுடன் கடைதலுக்கு தயாரானார்கள்.
முதலில் ஸ்ரீ ஹரி நாகத்தின் முக பாகத்தில் அதைத் பிடித்துக் கொண்டதும் மற்ற தேவர்களும் அவரை பின் பற்றினர். அதில் தைத்யர்களுக்கு சந்தேகம் வரவும் மகா புருஷன் செய்வதால் ஏதோ காரணம் இருக்கும் என்றெண்ணியோ, நாங்கள் வால் பாகத்தை பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று மறுத்தனர். பாம்பின் வால் அமங்களம் என்றனர். அவர்களும் ஸ்வாத்யாயம், ஸ்ருதி என்ற வேத பாடம் கற்றவர்கள், ஜன்ம கர்மங்களால் பெரும் புகழ் பெற்றவர்கள், வீம்புடன் வாளா இருக்கவும், புருஷோத்தமன், சிரித்துக் கொண்டே, முன் பாகத்தை விட்டு வால் பாகத்தை பிடித்துக் கொண்டார். அமரர்களும் அதே போல வால் பாகத்துக்கு வந்தனர்.
இவ்வாறு ஸ்தானம் தீர்மானம் ஆன பின் கஸ்யப குலத்தினர் கடைய ஆரம்பித்தனர். மிகுந்த பிரயாசையுடன் அம்ருதம் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ந்தவர்களாக பாற்கடலைக் கடைந்தனர். வேகமாக கடையவும் ஆதாரம் இல்லாமல் நடுக் கடலில் நின்ற மந்தர மலை, பலி முதலானவர்கள் இறுக்கி பிடித்தும், அதன் கனம் காரணமாக வேகமாக விழுந்தது.
அனைவருக்கும் முகம் வாடியது. செய்வதறியாது திகைத்தனர். தங்கள் ஆற்றல் அனைத்தும் விதியினால் வீணானதைக் கண்டு நம்மை மீறிய தெய்வபலம்- நாம் அழிந்தோம் என்று மிக வருந்தினர். பெரிய செயலை செய்ய முனையும் பொழுது விக்னம் வருவது இயற்கை. மிக வேகமாக செயல்படும் வீரனான பகவான், தான் ஆரம்பித்து வைத்த உடன்பாடும், உழைப்பும் வீ ணாக விடாமல், சட்டென்று, அதிசயமான ஆமை -கூர்ம வடிவம் எடுத்து நீரினுள் பாய்ந்தார். ஆழம் வரை நுழைந்து மலையை தூக்கிப் பிடித்தார்.
திடுமென குலாசல மலை தானே எழுந்து வந்ததைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் திகைத்தாலும் மகிழ்ச்சியுடன் மறுபடி கடைய முனைந்தனர். அந்த மலையோ பெரும் தீவு போல தென்பட்டது. லக்ஷ யோஜனை விஸ்தாரணம் உள்ள பூமி பாகமோ என அதிசயப் பட வைத்தது.
இரு பக்ஷத்தினரின் புஜ வீர்யமும் சோதனைக்குள்ளாகியது. சுழலும் மலையின் ஒரு பகுதியை தாங்கியவாறே, அதனுடைய சுழற்சியை தாங்கிய ஆதி கச்சபம் என்ற முதல் ஆமை தன் முதுகில் எவரோ கைகளால் பிறாண்டுவது போல தவித்தது.
இரு பக்கத்தினரும் களைத்த நிலையில் பகவான் அசுரர்களின் உடலில் அசுரனாக, தேவர்களின் உடலில் தேவனாக தானே ப்ரவேசித்தார். அவர்களும் புத்துணர்வும் புது பலமும் பெற்றவர்களாக நாக ராஜனை திரும்பப் பற்றினர். தன் மேல் மலையரசனை தாங்கியபடி, தன் மற்றொரு கையால் அதன் முடி பாகத்தையும் பற்றியதைக் கண்ட ப்ரும்மாவும், பவனும் பூமாரி பொழிந்தனர். அவரே ஸஹஸ்ர பாஹு – ஆயிரம் கைகளுடன் உள்ளவர் தானே.
மலையின் மேல் பாகத்தை ஒரு கையால் அழுத்தி பிடித்தபடி, முதுகில் அதைத் தாங்கியபடியும், வாசுகிக்கு நித்ரையை கொடுத்து அது திமிராமல் இருக்கச் செய்தும், இரு பக்ஷத்தினரின் உடலிலும் ப்ரவேசித்து பலத்தை அளித்தும், வேகமாக மந்தர மலையை சுழற்றி அதற்கு ஈடாக ஆமை வேகமாக சுழலும் படி செய்தும் பகவான் உடன் இருந்து பாற்கடலை கடையச் செய்தார்.
விழித்துக் கொண்ட நாக ராஜனின் ஆயிரம் முகங்களிலிருந்தும், அதன் சுவாசக் காற்று, அக்னியும் புகையும் கலந்து வீசுவது போல தாக்கவும் அசுரர்கள் தவித்தனர். பௌலோம, காலேய, பலி, இல்வல என்ற அசுரர்கள் தாவாக்னியில் அடிபட்டது போல வாடினர். தேவர்களும் அந்த சுவாசக் காற்றைத் தாங்க முடியாமல், அழகிய உடை, ஆபரணங்கள் நிலை குலைய முகம் வாடியதைக் கண்ட பகவான், மேகங்கள் தூறலாக மழை பொழியவும், காற்று சமுத்திர ஜலத்தின் குளுமையுடன் சுகமாக வீசவும் செய்தார்.
கடைதல் தொடர்ந்தது. தேவ, அசுரர்கள், கூட்டம் கூட்டமாக அம்ருதம் இதோ வரும் வரும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் இடைவிடாது கடைந்தனர், பகவானும் அந்த கடைதலில் சேர்ந்து கொண்டார்.
மேக ஸ்யாமளன், கனக-பொன் நிற ஆடை அணிந்தவன், காதுகளில் பளீரென்று ஒளிவிசிய குண்டலங்கள் மின்னலாக கன்னங்களில் பட்டு ஒளி வீச, தலையில் கேசம் கலைந்து ஆட, மாலைகளையும், அணிகளையும் அணிந்தவர், இயல்பிலேயே சிவந்த கண்கள் மேலும் சிவக்க, தோள்பட்டையின் இரு பக்கமும் உலகுக்கு அபயம் தரும் தந்த சூகம் (दन्द शूकम् -பாம்பு) என்பதை தாங்கியபடி, மலை ரூபமான மத்தை வைத்து கடையும் சமயம் அதற்கு இணையான மற்றொரு கிரி போலவே விளங்கினார்.
வேகமாக கடைந்தவர்கள் பாற்கடலில் இருந்து வரும் விஷத்தைக் கண்டனர். மகா பயங்கரம். ஹால ஹாலம் என அழைக்கப் படும் கடும் விஷம். சமுத்திரத்தின் வாழும் மீன்களும், மகரங்களும், சிறு ஜீவன்களும், கடல் வாழ் யானைகளும், ஆமைகளும், முதலைகள், திமிங்கிலங்கள் அனைத்தும் பதறி அலை பாய்ந்தன. இங்கும் அங்குமாக ஆகுலமாக ஓடின. உக்ர வேகமாக பெருகி வரும் விஷம் திசைகள் தோறும் பரவி, மேன் மேலும் நாகராஜன் முகத்திலிருந்து வெளி வந்தபடி இருந்த விஷத்தைக் கண்டு பயந்து ஓடினர். ப்ரஜைகள், தேவர்கள் , தலைவர்கள் என்ற பாகுபாடின்றி, யார் காப்பாற்றுவார் என்று தெரியாத நிலையில் சதாசிவனை சரணடைந்தனர். அவரோ தவத்தில் ஆழ்ந்திருந்தார். தன் கைலாச மலையில் தேவியின் ப்ரியன், முனிவர்களின் முதல் குரு, மூவுலகிற்கும் தந்தை ஸ்தானத்தில் உள்ளவர், உலக நன்மைக்காக தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டனர். தவத்தை கலைக்க அனைவருமாக துதி செய்தனர்.
ப்ரஜாபதிகள்: தேவ தேவா! மஹாதேவா! பூதாத்மன்! பூத பாவன! த்ராஹி- எங்களை காப்பாற்றுங்கள். மூவுலகையும் எரித்து அழிக்கக் கூடிய மகா விஷம் பெருகி வருகிறது. உங்களை சரணடைகிறோம், காப்பாற்றுங்கள். பிறப்பு எடுத்த ஜீவன்களின் பந்த மோக்ஷத்துக்கு நீங்கள் ஒருவரே ஈஸ்வரன். நல்ல நிலைமையில் இருப்பவரும் அண்டியவனை காப்பவர் என்றும் தங்கள் குரு என்றும் உங்களை போற்றுகின்றனர். மூவராக ரூபம் எடுத்தாலும், ப்ரும்மா, சிவன், விஷ்ணு, என்று அழைக்கப் பட்டாலும் நீங்கள் ஒருவரே என்று அறிவோம். கண்கள் சதா சுழன்று, உலகை காணும். விபோ, முக்குணங்கள் , ஸ்வ சக்தி இவைகளைக் கொண்டு உலகம் தோன்றுவதையும், நிலை பெறுத்தலையும், மறைவதையும் நீங்கள் நிர்வஹிக்கிறீர்கள்.
நீங்களே ப்ரும்மா. பர ரகசியமானவர். சத்தும் அஸத்தும் உங்களால் ஆளப்படுகின்றன. பல வித சக்திகளுடைய ஜகதீஸ்வரன். வெளியில் தெரியாமல் உயிரினங்களின் உள் ஆத்மாவாக இருப்பவர். நாதங்களுக்கு, சப்தங்களுக்கு, அதாவது வேதங்களுக்கு ஆதாரம் நீங்களே. அதனால் ஞானம் தானே உங்களை வந்தடைந்தது. உலகங்களின் ஜகத் முதலானவைகளின் மஹத் தத்வம்- ஆத்மா வாக இருப்பவர், ப்ரணேந்திரிய, த்ரவ்யம் (மூலப் பொருள்) இவைகளின் (முக்)குணங்களின் காரண பூதன், ஸ்வபாவம்- தன்னியல்பு என்பது தாங்களே. அங்கு க்ரது: சங்கல்பம், காலன், யாக ரூபி, சத்யம், உண்மை என்ற தர்மமே வடிவானவன், என்றும் உங்களை அழிவற்ற த்ரிவித் – முக்குணங்களின் ரூபமாக எந்த அக்ஷரம் ப்ரதானமோ, அதுவே உங்களை ஆஸ்ரயித்து உள்ளது. மூன்றெழுத்துக்களின் கூட்டான ப்ரணவம் என்ற அக்ஷரம் உங்களால் ப்ரகாசம் (பெருமை) அடைகிறது.
அகில தேவதாத்மா ! உங்கள் முகமே அக்னி. தங்களுடைய பாத பத்மங்களே பூமி. லோக பவ! காலம் உங்கள் கதி-நடை. அகில தேவதாத்மாவான உங்கள் காதுகளே திசைகள். நாக்கு ஜலேசம்- நீருக்கு அதிபதியான வருணன். நாபி- வானம், மூச்சுக் காற்று வாயு, கண்களே ஸூரியன், தண்ணீர் ரேதஸ், பர அவர என்ற ஆத்மாக்கள் உங்களுடைய ஆத்மா, சோமன் எனும் சந்திரன் மனம், ஆகாயம் பகவானே, உங்கள் சிரஸ். வயிறு சமுத்திரங்கள், மலைகள் எலும்புகள், ரோமங்கள் அனைத்து தாவரங்களும், வளர்வன அனைத்தும், சந்தஸ் எனும் வேத மந்திரங்கள் சப்த தாதுக்கள், த்ரயீ – மூன்று வேதங்களுமே உருவான உங்கள் ஹ்ருதயம் சர்வ தர்மங்களுமாக, ஐந்து முகங்களும் பஞ்ச உபனிஷதங்கள், ஈசனே! அதிலிருந்து தோன்றியவையே முன்னூற்று எட்டு மந்திர வர்கங்கள், சிவன் என்ற பரமார்த்த தத்வம், உங்களுடைய ஜோதியே உங்கள் இருப்பிடம். நிழல் அதர்மம், அதன் தம்ப லோபாதிகள் சம்ஹாரம், ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி உங்களுடைய மூன்று கண்கள், சாங்க்யம்- ஞானம். சாஸ்திரங்களை செய்தவர்களின் ஞானம் உங்கள் பார்வை, சந்தஸ்- காயத்ரி முதலான சந்தஸ் உங்கள் ரூபம், புராணமான ரிஷி- ஆதி ரிஷி. அகில லோக பால, கிரித்ர! பரம் ஜோதி ஸ்வரூபன், உங்கள் இருப்பிடம், விரிஞ்சி வைகுண்ட சுரேந்த்ர வாசிகளுக்கும் எட்டாதது. சத்வமான அந்த பர ப்ரும்மமே, பேத பாவங்களை வென்றவர்களே உங்களைக் காண முடியும்.
தங்கள் நெற்றிக்கண் என்ற அக்னி, அதன் பொறியினால், ஸ்ருஷ்டியை பஸ்மமாக்கியதை அறியாதவர்கள் தான், காமனை எரித்ததை, தக்ஷ யாகத்தை நிறுத்தியதை, மற்றும் பல சிறிய செயல்களை உயர்வாக சொல்வர். ஏனெனில் ஸ்ருஷ்டியின் அந்தம் யாருக்குத் தெரியும்? ஆத்மாராமர்களான ஞானிகளுக்கு, ரிஷிகளுக்கும் குருவாக இருப்பவர், உமையுடன் தவம் செய்வதையும் முடிவில் ஸ்மசானத்தில் உக்ரபுருஷனாக இருப்பதையும் எல்லோராலும் அறிந்து கொள்ளவா முடியும்?
சத் அசத் என்பவைகளுக்கு அப்பாற்பட்ட, பர புருஷன், உங்களை துதி செய்ய கூட எங்களுக்கு சக்தியில்லை. மஹேஸ்வரா! லோகத்தை காக்க வந்தவன், எங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டவன் என்று மட்டுமே உணர்ந்து வேண்டுகிறோம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அவர்களின் துயரம் வெளிப்படையாகத் தெரியவும், அனைத்து ஜீவன்களுக்கும் நண்பனான மஹேஸ்வரன், சதியைப் பார்த்து சொன்னார்:
ஸ்ரீ சிவ பெருமான் சொன்னார்: அஹோ! பவானி, இதைப் பார். ப்ரஜைகளின் கஷ்டம் – பாற்கடலை கடைய ஆரம்பித்தனர், கால கூட விஷம் பெருகி வந்து விட்டதாம். பயந்து விட்டார்கள். உயிர் போகும் நிலையில் இருப்பது போல வருந்துகிறார்களே, இவர்களுக்கு அபயம் அளிக்கிறேன். தீனனான யார் வந்து உதவி என்று கேட்டாலும் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டியது என் போன்றோர்களின் கடமை அல்லவா? சாதுக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்தாவது ப்ராணாபத்தில் இருக்கும் மற்றொரு உயிரை காக்கிறார்கள். க்ஷணபங்குரன்- நீர் குமிழ் போன்றது, ப்ராணன் உடலில் தங்குவது நம் கையில் இல்லை என்று உபதேசமா செய்வர் ? தீவிரமான விரோதம் என்றாலும், மோகத்தில் ஆழ்ந்த ஜீவன்கள் என்றாலும், அந்த சமயத்தில் இவைகளை கவனிப்பதில்லை. மற்றொரு மனிதனுக்கு உதவி செய்தால் சர்வாத்மாவான ஸ்ரீ ஹரி ப்ரீதி அடைகிறார். ஸ்ரீ ஹரி மகிழ்ந்தால், உலகமே மகிழும். அதனால், இந்த விஷத்தை நான் உண்கிறேன். எல்லா ப்ரஜைகளுக்கும் நன்மை உண்டாகட்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பவானியிடம் விடை பெற்று வந்த மகேஸ்வரன், விஸ்வ பாவனன், உலக நன்மைக்காக அந்த விஷத்தை விழுங்க தீர்மானித்தார். அவர் ப்ரபாவத்தை அறிந்திருந்த ஸ்ரீ ஹரி அதை அனுமதித்தார். அதன் பின் பரவிக் கொண்டிருந்த ஹாலாஹல விஷத்தை தன் கைகளில் ஏந்தினார். அப்படியே வாயில் இட்டு விழுங்கினார். க்ருபையே உருவானவர். பூத பாவன: அனைத்து உயிரினங்களையும் நேசிப்பவர்.
(ஹர ஹர , நம: பார்வதீ பதயே! ஹர ஹர மஹா தேவ! )
ஜல கல்மஷம்- நீரின் களங்கம் – அவரிடமும் தன் சக்தியை காட்டியது. அவர் கழுத்தை நீலமாக்கியது. சாதுவான பரமேஸ்வரனுக்கு அதுவே அலங்காரமும் ஆயிற்று. உலகத்தார் தவித்தால் சாதுவான பெரியவர்கள், தாங்களும் வருந்துவர். அகிலாத்மாவான அவர் விஷத்தையும் தனக்கு நிவேதனமாக ஆக்கிக் கொண்டு விட்டார். அதைக் கேட்டு பிரஜைகள், அவர் மனைவி தாக்ஷாயணி, ப்ரும்மா, வைகுண்டமே ஸ்தம்பித்தது. மீடுஷ: – அனவருக்கும் அவரவர் விரும்பியதைக் கொடுப்பவர், என்று புகழ் பெற்றிருந்த மஹேஸ்வரனின் இந்த செயலை புகழ்ந்து பாடலானார்கள். அவருடைய விரல்களின் நடுவிலிருந்து நழுவிய விஷத்தை பருகிய ஜந்துக்கள், தேள், பாம்பு, முதலிய விஷ ஜந்துக்கள், சில மருந்துகள் விஷத்தைக் கொண்டு தயாரிக்கபடுவதும் தோன்றின. (தந்த சூகா: பல்லில் விஷம் உடையவை)
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற ஏழாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-46
அத்யாயம்-8
ஸ்ரீ சுகர் சொன்னர்: ஸ்ரீ ருத்ரன் வந்து இவ்வாறு விஷத்தை தானே அருந்தியபின், தடை நீங்கிய நிம்மதியுடன் அமர தானவர்கள் திரும்பவும் பாற்கடலைக் கடையலானார்கள். சற்று நேரத்தில் (ஹவிர்தானி) காமதேனு பசு அதிலிருந்து வந்தது. அதை அக்னி ஹோத்ரிகளான ரிஷிகள், ப்ரும்ம வாதிகள் எடுத்துக் கொண்டனர். அவர்கள் ப்ரும்ம லோகம் செல்ல வழி வகுக்கும் யாகங்களை செய்பவர்கள், தங்கள் யாகங்களில் ஹோமம் செய்யவும், பவித்ரமான ஹவிஸ் என்பதை செய்ய நெய் மற்றும் பொருட்களை அதன் மூலம் பெற்றனர்.
அதன் பின் உச்சைஸ்ரவஸ் என்ற வெண்ணிற குதிரை சந்திரன் போன்ற நிறத்துடன் வந்தது. தைத்ய ராஜாவான பலி அதை விரும்பினான். இரு பக்கத்தினரும் இணைந்து செய்த செயல், ஆரம்பித்திலேயே, பகவான் இருவருக்கும் பொதுவானது என்று சொல்லி இருந்ததால் இந்திரன் பேசாமல் இருந்தான். அதன் பின் ஐராவதம் என்ற கஜ ராஜன், பரமேஸ்வரனின் கைலாச மலையின் வெண் சிகரங்கள் போன்ற நான்கு தந்தங்கள், பிரகாசிக்க வந்தது. ( ஐராவத்துடன் வந்த எட்டு யானைகளும் திக்கஜங்களாயின)
அதன் பின் கௌஸ்துபம் என்ற ரத்னம் பெரும் கடலில் இருந்து வெளி வந்தது. பத்மராகம் என்ப்டும் அதை ஸ்ரீ ஹரி விரும்பினார், அவர் மார்பில் அது அலங்காரமாக ஆயிற்று. அதன் பின் பாரிஜாதம் வந்தது. தேவலோகத்துக்கு பூஷணமாயிற்று. அரசனே! அதுவும் உன்னைப் போல, எப்படியென்றால் யார் வந்து எதை வேண்டினாலும் நிறைவேற்றும் தன்மையுடையது.
அதன் பின் அப்சரஸ் நல்ல குரல் வளம் உள்ள அழகிய ஆடைகளை அணிந்த ரமணிகள் என்ற பெண்கள் வந்தனர். அவர்கள் ஸ்வர்க வாசிகளை தங்கள் நடை உடை பாவனைகளால் கவர்ந்தனர். .
அதன் பின் சாக்ஷாத் ஸ்ரீ லக்ஷ்மி ஆவிர்பவித்தாள். ரமா, பகவானுக்கு பிரியமானவள். மின்னலின் ஒளி சௌதாமினி- ஸ்படிக மலைகள் மீது பட்டால் திசைகள் ப்ரகாசமாவது போல, ஒளி வீசுவது போல ப்ரகாசமாக வந்தாள். அவளை சுர அசுரர்கள், மனிதர்கள் அனைவரும் விரும்பினர். அவள் ரூபம், அழகு இவற்றால் ஆகர்ஷிக்கப் பட்டனர். மகேந்திரன் அவளுக்கு ஆசனம் கொண்டு வந்து கொடுத்தான். நதிகள் உருவம் எடுத்து வந்து பொற்குடங்களில் சுத்தமான ஜலத்தைக் கொண்டு வந்தனர். அபிஷேகம் செய்வதற்கான பொருட்களை சகல ஔஷதிகளும் கொண்டு வந்தன. பசுக்கள் பஞ்ச கவ்யம் என்ற பவித்ரமான பொருள்களை, வசந்தன் மது மாத்வம் என்பவைகளை, ரிஷிகள், முறைப்படி அவளுக்கு அபிஷேகம் செய்வித்தனர்
கந்தர்வர்கள் மங்களம் பாடினர், நடனம் அறிந்தவர்கள் பாடிக் கொண்டே ஆடினர். மேகங்கள் ம்ருதங்கம், பணவம் முரசு, ஆனக, கோ முகான் என்ற தாள வாத்யங்களை முழங்கின. சிலர் சங்கங்களை, மற்றும் சிலர் வேணு, வீணை முதலிய வாத்யங்களை இசைத்தனர். பத்ம கராம், சதீ எனப்படும் ஸ்ரீ தேவியை, திக்கஜங்கள் பூர்ண கலசங்களைக் கொண்டு அபிஷேகம் செய்ய, அந்தணர்களும் மற்றவர்களும் சூக்த வாக்யங்களைச் சொல்லிக் கொண்டே உடன் வந்தனர். சமுத்திரம் பொன் நிற பட்டாடையைக் கொண்டு வந்தது. வருணன் நல் வாசனை வீசும் வைஜயந்தீ என்ற பூ மாலையை வண்டுகள் மொய்க்க கொண்டு வந்தான். ப்ரஜாபதியான விஸ்வகர்மா விசித்ரமான பூஷணங்களைக் கொண்டு வந்தார். சரஸ்வதி ஹாரத்தையும், ப்ரும்மா பத்மத்தையும், நாகங்கள் குண்டலங்களையும் கொண்டு வந்தன.
பெரியவர்கள் ஆசீர்வாதங்கள் செய்தனர். அதன் பின் , அழகிய உத்பல பூக்களால் ஆன மாலையைக் கையிலேந்தி குண்டலங்கள் கன்னத்தில் ஒளி வீச, வெட்கத்துடன் மெல்ல சிரித்தபடி வந்தாள். சமமான ஸ்தனங்கள், அதி க்ருசமான இடை, சதா சந்தனமும் குங்குமமும் பூச்சுகள் பூசப் பட்ட, நூபுரம் மெல்ல ஓசை செய்ய, பொற் கொடி ஒன்று ஆடி வருவது போல வந்தாள். தன் பாதங்களையே பார்த்தவளாக தலை குனிந்து யக்ஷ,கந்தர்வ,அசுர, சித்த கணங்கள் சுவர்க வாசிகள் இவர்களைக் கடந்து முன் சென்றாள்.
ஒவ்வொருவரை அணுகும் பொழுதும், அவர்களின் குண நலன்களை ஒப்பிட்டு மனதினுள் நிராகரித்துக் கொண்டே நடந்தாள். தவம் செய்பவர்களில் துர்வாசர் போல கோபத்தை ஜயிக்காதவர்கள் உண்டு. குரு சுக்ரன் போன்றவர்களும் விதி விலக்கல்ல. ப்ரும்ம, சோமன் போல காமத்தை வெல்லாதவர்கள், இந்திரன் போல பிறர் பொருளுக்கு ஆசைப் படுவோர், பரசு ராமர் போல, அனைத்து ஜீவன்களிடமும் நட்பு பாராட்டத் தெரியாதவர்கள், சிபி போல, முக்தி தராத தியாகிகள், கார்த்த வீர்யார்ஜுனன் போல வீர்யம் இருந்தாலும் நிரந்தரமல்ல. சனகாதி முனிவர்கள் போல சமாதி நிஷ்டை என்று இருப்பவர்கள், மார்க்கண்டேயன் போல, தவ சீலர்கள், ஹிரண்ய கசிபு போல ஆயுளும் வீர்யமும் இருந்தாலும் பகவத் த்வேஷி, ஸ்ரீ ருத்ரன் தோஷம் எதுவும் இல்லாவிட்டாலும் ஸ்மசான வாசி, அமங்களம், கடைசியாக ஸ்ரீ முகுந்தன் அருகில் வந்ததும் நின்றாள்.
ஆத்மாராமன், சுமங்களம் தான், பக்ஷபாதம் இல்லாதவன், சற்று யோசித்தாள். ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாக, இதுவரை பார்த்தவர்களில் சர்வோத்தமன் என்று மாலையுடன் அருகில் சென்று நின்றாள்.
சில இடங்களில் தர்மம் இருக்கும், ஆனால் நட்பு இருக்காது, சக ஜீவன்களிடம் ஒட்டுதல் இருக்காது. சில இடங்களில் த்யாகம் இருக்கும், சரியான காரணம் இல்லாமல் தியாகம் ஏற்புடையதல்ல. மனிதர்களில் வீர்யம் இருக்கும், ப்ரும்மாவின் கைப் பாவைகள், நிரந்தரமல்ல, குண சங்கம் இல்லாத மற்றொருவர் இல்லை. நீண்ட ஆயுள், ஆனாலும் சீலம் இல்லை, சீலம் மட்டும் இருந்தாலும் ஆயுஷ் இல்லை, இரண்டும் உள்ளவர், தானே அமங்களமாக இருக்கிறார். நான் விரும்புவது சுமங்களமான ரூபவானையே. இப்படி நினைத்தபடியே, ரமா முகுந்தனை வரித்தாள். அவருடைய தோளில் கையிலிருந்த புது தாமரை மலை மாலையை அணிவித்தாள். நாணத்துடன் கண்கள் சிரிக்க, மலர்ந்த முகத்தோடு, அவர் அருகில் சென்று நின்றாள்.
மூவுலகிற்கும் தாயான ஸ்ரீ லக்ஷ்மி தேவியை, ஜகத்ஜனகன், தன் மார்பில் ஏற்றுக் கொண்டார். ஸ்ரீ லக்ஷ்மி தேவி, தன் ப்ரஜைகளை கருணை நிறைந்த விழிகளால் ஆட் கொள்ள, பதியுடன் கூடி மூவுலகத்தாரையும் காண வசதியாக அவருடைய மார்பில் அமர்ந்தாள். அதே சமயம் சங்கம், துர்யம், மிருதங்க வாத்யங்கள் பெரும் சப்தத்துடன் முழங்க உடன் தேவ ஸ்த்ரீகள் பாடுவதும் கேட்டது. பலர் உடன் நடனம் ஆடினர். ப்ரும்ம, ருத்ர ஆங்கிரச போன்றவர்கள், புஷ்பங்களுடன் அதற்கான தகுந்த மந்திரங்களை சொல்லி ஆசீர்வதித்தனர். பின் ஸ்ரீ தேவியின் அருட் கண் பார்வை கிடைக்கப் பெற்ற ப்ரஜாபதியுடன் மற்ற ப்ரஜைகளும் நிம்மதி அடைந்தனர். சீலம் நிறைந்த குணவான்களான பலருக்கும் லக்ஷ்மி கல்யாணம் மன மகிழ்ச்சியை அளித்தது. தைத்ய தானவர்கள் ஏமாற்றத்துடன் நடப்பவைகளை பார்த்து எதுவும் பேசாமலும் செய்யாமலும் நின்றனர்.
அதன் பின் வாருணி தேவி என்பவள் வந்தாள். கமல லோசனா – பெயர் அல்லது கமலம் போன்ற கண்கள் உடையவள். அசுரர்கள் அவளை ஏற்றுக் கொண்டனர். அதை ஸ்ரீ ஹரி சம்மதித்தார். திரும்பவும் கடலைக் கடைந்தனர். காஸ்யபர் முதலியவர் அம்ருதம் வேண்டும் என்ற விருப்பத்துடன் கடையும் சமயம் ப்ரும்மாண்டமாக ஒரு புருஷன் வந்தான். நீண்ட உருண்டு திரண்ட புஜங்கள், சங்கு போன்ற கழுத்தும், சிவந்த கண்களும், ஸ்யாமளன், மாலையுடன், சர்வாபரணங்களும் அணிந்து, பீதாம்பரமும் , விரிந்த மார்பில் ஏராளமான மணி குண்டலங்கள், அலை அலையான கூந்தல், சிங்கம் போன்ற விக்ரமம் தெரிய,, அம்ருத கலசத்தை ஏந்தியவராக, ஏந்திய கைகளில் வளையங்கள் அலங்கரிக்க, பகவானின் சாக்ஷாத் அம்ச பூதன், தன்வந்திரி என்று பெயர் பெற்றவர், ஆயுர் வேதத்தில் கரை கண்டவர், யாகத்தில் பங்கு பெறும் தகுதியுடையவர், யில் அம்ருத கலசத்தோடு தோன்றினார்.
அம்ருத கலசத்தைக் கண்டவுடன் அசுரர்கள் போட்டது போட்டபடி விட்டு விட்டு கலசத்தை அபகரித்துக் கொண்டு சென்று விட்டனர். தேவர்கள் திகைத்தனர். அம்ருதம் இருவருக்கும் என்று இதுவரை உடன் இருந்தவர்கள், ஸ்ரீ ஹரியை சரணடைந்தனர். பகவானும் சமாதானம் செய்தார். வருந்த வேண்டாம். ஏதாவது செய்கிறேன் என்றார்.
அசுர்களிடையே கடும் போட்டி. நான் முதலில், நான் முதலில் என்று கலகம் மூண்டது. சில தேவர்கள் அவர்களிடம் எங்களுக்கும் இதில் பங்கு உண்டு என்று சொல்ல முயன்றதை லட்சியமே செய்யவில்லை. பலசாலிகள், மற்றவர்களை முஷ்டியினால் தள்ளினர்.
இதற்கிடையில் விஷ்ணு பகவான், உபாயங்களை யோசித்து, அழகிய பெண்ணாக உருக் கொண்டார். பரம அத்புதமான ரூபம். கண் கொள்ள அழகு. அழகிய உடல் அங்கங்கள், முகத்தை மலராக நினைத்தோ, கேசத்தில் சூடியிருந்த மலர்களை நாடியோ, வட்டமிடும் வண்டுகளின் ரீங்காரம், அழகிய கழுத்தை ஆபரணம் அலங்கரிக்க, புஜங்களில் அங்கத பூஷணங்கள், நல்ல உடையும், காஞ்சி எனும் இடையாபரணத்தால் உடலழகு மேலும் பிரகாசிக்க, நடக்கையில் நூபுரங்களின் ஓசை செவிக்கு இனிமையாக ஒலிக்க, சற்றே வெட்கத்துடன் சிரிப்பும், அதனால் புருவம் நெரிந்தும், கண்கள் பார்வையும், தைத்ய வீரர்களின் மனதை மயக்கியது. அவர்கள் உள்ளத்தில் காமத்தைக் கிளப்பியது.
. (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற எட்டாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-46
அத்யாயம்-9
அம்ருத கலசத்தை அபகரித்துக் கொண்டு வந்த அசுரர்கள், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயம் அங்கு வந்த ஒர் அழகிய பெண்ணை பார்த்தனர். ஆஹா, என்ன ரூபம், என்ன அழகு இளமையின் கவர்ச்சியுடன் இருந்த அவளைப் பார்த்து மயங்கினர். யார் நீ, கமல பத்ரம் போன்ற கண்களையுடையவளே என்று பேச்சுக் கொடுத்தனர். யாருடைய மனைவி அல்லது மகள் நீ, எங்கள் மனதைக் கவர வந்து நிற்கிறாய் என்றனர். நாங்கள் அறிந்தவரை, நீ தேவர்களில் ஒருவளோ, அல்லது சித்த கந்தர்வர்களிலும் இல்லை. யாரும் உன்னை இதுவரை விரலால் கூட தொட்டது இல்லை என்று தெரிகிறது. விதிதான் அனுப்பியிருக்கிறது. உன்னைக் கண்டதுமே மனதில் மகிழ்ச்சி நிரம்பி விட்டது. சுமத்யமே! எங்களுக்குள் எதற்கு போட்டியும் வைரமும். தாயாதிகள் நாங்கள், எங்களுக்குள் சண்டை – அதை தீர்த்து வை. எங்களுக்கு நன்மையை செய்வாயாக. நாங்கள் அனைவருமே கஸ்யப குலத்தினர். எங்களுக்குள் இந்த அம்ருதத்தை நியாயமாக பகிர்ந்து அளிப்பாயாக. இவ்வாறு அவர்கள் கேட்டதும், மாயாவியான ஸ்ரீ ஹரி, அழகிய கண்களால் அவர்களை நோட்டம் விட்டபடி சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: கஸ்யப தாயாதிகள், முன் பின் அறியாத என்னிடம் எப்படி நம்பிக்கை வைத்து இப்படி சொல்கிறீர்கள்? சாதாரணமாக பண்டிதர்கள், விவரம் அறிந்தவர்கள், அப்படி செய்வதில்லையே. சில பிறவிகள், மனிதரிலும், விலங்குகளிலும், திருப்தியே இல்லாதவைகள், மேலும் மேலும் ஆசை, புதுப் புது விஷயங்களில் மோஹம் கொண்டவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் அல்ல. இதைக் கேட்டும் அசுரர்கள், அவளிடம் நம்பிக்கை வைத்து அம்ருத கலசத்தை கொடுத்தனர். அதை வாங்கிக் கொண்டு உங்களுக்குள் பேதம் இல்லை என்றால் நான் பகிர்ந்து அளிக்கிறேன் என்று சொல்லி கலசத்தை வாங்கிக் கொண்டாள். ஆனால் என்னை கேள்வி கேட்கக் கூடாது. முழுவதும் என் பொறுப்பிலேயே விட வேண்டும். சம்மதமா ? அசுர வீர்கள், மனம் மயங்கி இருந்த நிலையில், எந்த வித சந்தேகமும் இல்லாமல் ஒத்துக் கொண்டனர்.
அசுரர்கள் சந்தோஷமாக ஸ்னானம் செய்து புது வஸ்திரங்களை உடுத்திக் கொண்டு, அக்னி காரியங்களை செய்து, நித்ய கர்மாக்களான பசு, அந்தணன், பஞ்ச பூதங்கள் இவைகளுக்கு தானங்கள் செய்தும் வணங்கியும் அவர்கள் உடன் இருந்த அந்தணர்கள் வழக்கமான மங்கள வாக்கியங்களைச் சொல்லி ஆசிர்வதித்த பின், விருப்பமான ஆடை அணிகளை அணிந்து அம்ருதத்தை உண்ண ஆசனங்களில் அமர்ந்தனர். தேவர்களும் அதே போல தயாராக வந்து அமர்ந்தனர். அந்த சபை மாலைகளாலும் தூப தீபங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
அந்த பெண்ணும் நல்ல பட்டாடைகளை அணிந்து நூபுரங்களும் மற்ற அணிகளும் ஒலிக்க, கையில் கலசத்துடன் நுழைந்தாள். அவளைப் பார்த்த மாத்திரத்தில் தேவ அசுரர்கள் அனைவரும் செயலிழந்தனர். ஸ்ரீ சகி, பொன்னாலான குண்டலங்களும் கூடிய அழகிய முகம். காதுகளும், மூக்கும், கன்னமும் ஒன்றுடனொன்று மிஞ்சும் அழகுடன் பரதேவதா என்பவள், அனைவரையும் பார்த்து முறுவலித்தவாறு, கண்களால் பார்த்தே அனைவரையும் மோகம் கொள்ளச் செய்தபடி, நடந்து வந்தாள்.
அசுரர்களுக்கு அம்ருதம் கொடுப்பது சர்ப்பத்துக்கு கொடுப்பது போல என்று நினைத்து பிறவியிலேயே கொடும் குணம் கொண்டவர்கள் அவர்கள் என்பதால் அச்யுதன் அவர்களுக்கு அம்ருதத்தை தரவில்லை. இரு தரப்பினரையும் இரு வரிசையாக அமரச் செய்த பின் கலசத்தை அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு பரிமாற ஆரம்பித்தாள். முதுமையையும், மரணத்தையும் தவிர்க்கும் குணம் உள்ள அம்தருத்தை தள்ளி அமர்ந்திருந்த தேவர்களுக்கு மட்டுமே கொடுத்தாள். அசுரர்கள் அந்த பெண்ணிடம் பேசுவதையே பரமானந்தமாக எண்ணி இதைக் கண்டு கொள்ளவேயில்லை. தங்களுக்கு செய்யப்பட்ட துரோகம் என்று உணரும் நிலையில் இல்லை. அவள் அவர்களிடம் மிக அன்புடனும், ஆவலுடனும் பேசியதில் அவர்கள் தங்களிடம் அவள் உண்மையாக இல்லை என்றும் உணரவில்லை. இடை மறித்தால் அவள் தங்கள் அருகில் வருவதையே நிறுத்தி விட்டால் என்ற தயக்கமே மேலோங்கி நின்றது. தவிர, அவளிடம் கண்டவுடன் ஏற்பட்ட மரியாதை.
ஸ்வர்பானு என்பவன் மட்டும் தேவர்கள் கூட்டத்தில் மறைந்து இருந்து அம்ருதத்தை கைகளில் வாங்கி அருந்தும் முன், சந்திரனும் ஸூரியனும் கண்டு கொண்டு மோஹினியிடம் காட்டிக் கொடுத்தனர். கூர்மையான ஆரங்கள் உள்ள தன் சக்கரத்தால், வாயில் இட்ட கவளத்துடனேயே அவன் தலையை கொய்தார். அவனோ தலை வேறு உடல் வேறு என்று கபந்தனாக அம்ருதத்தால் குளிப்பாட்டப் பட்டவன் போல விழுந்தான். அம்ருதம் குடித்த தலை அமரத்வம் பெற்றது. ப்ரும்மா அதை க்ரஹங்களில் ஒன்றாக அங்கீகரித்தார். அதுவே ராஹு. உடல் பாகம் சாயாக்ரஹம் என்று பெயர் பெற்றது- அதுவே கேது. இதனால் ஏற்பட்ட விரோதத்தால், ஸுரிய சந்திரர்களை பருவ காலங்களில் துரத்தி வருகிறது.
அனைத்து தேவர்களும் அம்ருதம் உண்ட பின், ஸ்ரீ ஹரி, தன்னை வெளிப் படுத்திக் கொண்டார். அசுரர்களும், தேவர்களும் இருந்த அந்த சபையில் அவர்கள் எதிரில் தன் சுய ரூபத்தில் நின்றார்.
இப்படித்தான் சுர, அசுரர்கள், சமமான காரணம், தேசம், காலம். உழைப்பு என்று இருந்தும் இறுதியில் ஒருவருக்கு அதன் பலனும், மற்றவருக்கு ஏமாற்றமுமே அமைந்தது. இந்த விகல்பம்- வித்தியாசம் எப்படி விவரிக்கபடுகிறது. ஏன் அமரர்கள் உயர்வு, அசுரர்கள் அவர்கள் உழைப்புக்கான பலனைப் பெறாமல் போனார்கள்? ஒரே ஒரு சமாதானம் அவர்கள் என்றும் பகவானின் அடியார்களாக இருந்தனர். அசுரர்கள் எதிர்த்தனர். எவரானாலும், தன் உயிர், செல்வம், செயல்கள், மனம், வாக்கு, உடல் இவைகளை தன்னலம் இன்றி மற்றவர்களுக்காக செலவழிக்கிறானோ, அவர்களால் தான் உலகில் நன்மைகள் ஏற்படுகின்றன. பகவானை நம்பி அவருக்கே தங்களை அர்பணித்து விட்டால், மரத்தின் வேரில் விட்ட நீர், கிளைகளைக் காப்பது போல அவரே காக்கிறார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற எட்டாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-46
அத்யாயம்-10
தானவ தைத்யர்கள், தங்களுக்கு அம்ருதம் கியைக்கவில்லை என்பதை உணர்ந்தனர். இணைந்து அம்ருத மதனம் என்ற செயலைச் செய்த பின்னும் அம்ருதம் அவர்களுக்கு கிடைக்காமல் போனது ஏன்? வாசுதேவனை வெறுப்பவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். பகவானோ தன் பக்தர்களுக்கு மட்டும் அம்ருதத்தை அளித்து விட்டு அவர்கள் கண் எதிரிலேயே மறைந்து விட்டார். சபத்னி மக்கள், தாயாதிகள் அவர்களே அதர்மமாக நடந்து கொண்டதில் வெகுண்ட திதியின் மைந்தர்கள், பொறுக்க மாட்டாமல் தேவர்கள் மேல் தங்கள் ஆயுதங்களுடன் பாய்ந்து அடித்து நொறுக்கினர். அம்ருதம் உண்ட பலத்தில் தேவர்களும் எதிர்த்து நின்றனர். தேவாசுர யுத்தம் பயங்கரமாக நடந்தது. சமுத்திரத்தின் (பாற்கடலின்) கரையின் நடந்த இந்த யுத்தம் அத்புதமாக, பார்ப்பவர்களுக்கு ரோமாஞ்சனம் உண்டுபண்ணுவதாக இருந்தது. பலவிதமான ஆயுதங்கள், இரு தரப்பினரிடமும் இருந்தன. சங்க துர்ய மிருதங்க வாத்யங்கள், பெரிய பேரி டமரு, குதிரைகள், யானைகள், ரதங்கள் அனைத்து யுத்த தளவாடங்களும் வந்து போரிட்டன. கழுகுகளும், அதன் ஜாதியைச் சேர்ந்த பல பறவைகளும் வட்டமிட்டன. (க்ருத்ரம்,ஸ்யேனம், பாச) கடல் வாழ் ஜீவன்களிலும் மிகப் பெரிய ஜந்துக்கள், சரபங்கள், திமிங்கிலங்கள், மற்றும் மஹிஷங்கள், பசு, எருமைகளின் பல வகைகள், குள்ளநரிகள் (ஸிவா:) எலிகள், க்ருகலா என்ற சிறு விலங்கு, முயல்கள், க்ருஷ்ண சாரம் என்ற விலங்கு, தவிர, ஹம்சம் போன்ற நீர் வாழ் பறவைகள், பன்றிகள், நீர்வாழ், நிலம் வாழ் பறக்கும் என்ற அனைத்து வகை உயிரினங்களும், இரு பக்கத்து சேனைகளிலும் வந்து சேர்ந்து கொண்டன. வித விதமான கொடிகள் பறக்க, வஜ்ர தண்டங்கள், பல வர்ணங்களில் குடைகள், சாமரங்கள், மயில் இறக்கைகள் காற்றில் அசைந்தபடி தெரிந்தன. இவைகளின் இடையில் ஸூர்யனின் ஒளியைப் போன்ற கூர்மையான சஸ்திரங்கள், இரு பக்கமும் இருந்தன. தேவ தானவர்களில் ரதத்தின் கொடிகள் சமுத்திரத்தின் அலை போல பலவாறாக இருந்தன.
அசுரர்களின் தலைவனாக பலி, விருப்பம் போல இயங்கும் வைஹாயஸம்- ஆகாயத்தில் செல்லும் வாகனத்தில் முன் நின்றான். அந்த வாகனம் மயனால் நிர்மாணிக்கப் பட்டது. இது வரை கண்டிராத அளவில் போர் தளவாடங்கள், நேர்த்தியான ஆயுதங்களுடன் ஆச்சர்யமான யுத்தம், ஒப்பில்லாத ஏற்பாடுகள். அந்த வாகனத்தில் அசுர வீரர்கள் தங்கள் உடை, ஆயுதங்கள் அனைத்தும் ஒளிவிட வந்தனர். சந்திரன் உதித்தது போல. நமுசியும் சம்பரனும் தங்கள் பட்டத்து யனை மேல் வந்தனர். பாணன், விப்ரசித்தி, அயோமுகன் ,த்வி மூர்தா, காலனாபன், ப்ரஹேதி, ஹேதி, இல்வலன், சகுனி, பூத சந்தாபன், வஜ்ர தம்ஷ்ட்ரன், விரோசனன், ஹயக்ரீவன், சங்கு சிர: கபிலன், மேக துந்துபி, தாரகன், சக்ரத்ருக், சும்ப சிசும்பர்கள், ஜம்பன், உத்கலன், அரிஷ்டன், அரிஷ்டனேமி, மயன், த்ரிபுராதிபன், இவர்கள் தவிர, பௌலோமி, காலேயன், நிவாத கவசன் என்போர், அம்ருத பங்கு கிடைக்காத உழைப்பில் மட்டும் பங்கு பெற்ற அனைவரும் போர் முனையின் ஒன்று கூடினர். தேவர்களை எதிர் கொண்டனர்.
சிம்ஹ நாதமும், சங்க முழக்கங்களும், பெரும் ஓசையாக வானத்தை நிறைத்தன.
இதைக் கண்ட இந்திரனும் தன் ஐராவதம், மற்றும் திக்கஜங்களுடன் போருக்கு வந்தான். அனைத்து தேவர்களும் தங்கள் வாகனங்களில் கூரிய ஆயுதங்களுடன், லோக பாலர்களும் சேர்ந்து கொள்ள பெரும் படை, அத்துடன் வாயு, அக்னி வருணன் முதலானோர், யுத்த பூமியில் ஒருவரையொருவர், வசை பாடியும், முழக்கமிட்டும் போரை துவக்கினர்.
பலி இந்திரனுடன் மோதினான். தாரகனை குஹன் அடித்தார். வருணன் ஹேதியை, மித்ரன், ப்ரஹேதியுடன் மோதினான். யமன் கால நாபனுடன், விஸ்வகர்மா மயனுடன், சம்பரன் த்வஷ்ட்ரா வுடன், சவிதாவை விரோசனன், அபராஜிதனுடன் நமுசி, அஸ்வினி குமாரர்கள் வ்ருஷபர்வாவுடன், ஸூரியனுடன் பலியின் புதல்வர்கள், பாணன், அவன் நூறு புதல்வர்களுடன், ராகுவுடன், சோமன், புலோமா என்பவனுடன் அக்னி, நிசும்ப சும்பர்களுடன் சக்தி தேவி பத்ரகாளி, வ்ருஷாகபி என்பவன் ஜம்பன் என்ற அசுரனை, மஹிஷனுடன் விபாவசு, இல்வலனை வாதாபியுடன் ப்ரும்ம புத்திரர்கள், காமதேவனுடன் துர்மர்ஷன், உத்களன் மாத்ருக்களுடன், ப்ருஹஸ்பதி உசனஸ முனிவருடன், நரகனுடன் சனைச்சரன். மருதன் நிவாத கவச (காற்று நுழையாத கவசம் உடையவர்கள்) என்றவர்களுடன், காலேயன் என்பவர்களுடன் வசுக்கள் என்ற தேவர்கள், விஸ்வதேவர்கள் பௌலோம என்பவரின் வம்சத்தினரிடம், ருத்ரர்கள் க்ரோத வசா: என்பவர்களுடன், போர் நீடித்தது. ஒருவருக்கொருவர் சளைக்காமல் த்வந்த யுத்தம், சில சமயம் கூர்மையான ஆயுதங்கள், என்று வெற்றியே குறியாக போரிட்டபடி இருந்தனர். வித விதமான ஆயுதங்கள், புசுண்டி, கதை, சக்கரம், பட்டசம் முதலானவை.
யானைகளும், குதிரைகளும், ரதங்களும், பாதசாரிகளான வீரர்களும், பலவிதமாக அடித்தும் அடிபட்டும் கிழிந்த த்வஜங்களும், உடைந்த கவசங்களும், தெரித்து விழுந்த ஆபரணங்களும், புஜங்களிலும், தலையிலும் அணிந்திருந்த கவசங்கள், கிரீடங்கள் காணாமல் போக, அவர்கள் காலடியில் உடைந்த ரதங்கள் பொடிப் பொடியாக, போரில் இருந்து சரீர பாகங்கள் இரைந்து மற்றும் அங்கு எழுந்த புழுதி படலம் த்யுமணி எனும் ஸூரியனையே மறைத்தன.
தலையை அலங்கரித்த கிரீடமோ, குண்டலங்களோ, தென்படவில்லை. கண்களின் பார்வையே கோணலாகி விட்டது போலவும், தானே பற்களால் உதட்டைக் கிழித்து விட்டது போல தொங்கிய உதடுகளும், பெரிய புஜங்கள் மட்டும் இன்னமும் ஆபரணங்களோடு, அதில் மாட்டிய ஆயுதங்களுடனும், கபந்தங்கள் நடமாடுவது போல ரண பூமி காட்சியளித்தது. ஆங்காங்கு அவை ஓடி மேலும் பயங்கரமாக தோற்றமளித்தன.
பலி இந்திரனை, பத்து சரங்களாலும், ஐராவதத்தை மூன்று சரங்களாலும், நான்கு சரங்களால் அவன் வாகனத்தையும், அடித்தான். இருவரும் பலவிதமாக சண்டையிட்டனர். திடுமென அசுரர்களின் கைவசமான மாயா யுத்தம் செய்யலாயினர். தாங்கள் மறைந்து நின்றபடி ஆயுதங்களை மழையாக பொழிந்தனர். பெரிய மலைகளே தேவ சேனையின் மேல் விழுந்தது. மரங்கள் எரிந்தன. தாவாக்னி எனும் கொடும் அக்னி ஜ்வாலை சுட்டெரித்தது. அவர்களுடைய பலம் தாங்காமல் மலைச் சிகரங்கள் பொடிப் பொடியாக உதிர்ந்தன. பெரும் நாகங்கள் எங்கிருந்தோ வந்தன. பற்களில் விஷமுடைய நாகங்கள், தேள்கள் போன்றவை பெருகின. சிம்ஹ, வராஹ, வ்யாக்ரங்கள்-புலிகள் பெரும் யானைகளுடன் மோதின. யாது தானர்கள் என்ற அசுர வீரர்கள் பெரும் குரலில் அட்டகாசமாக ஓலமிட்டபடி வானத்தை நிறைத்தனர். காற்று வீசுவதே நெருப்புப் பொறி பறப்பது போல இருந்தது. தைத்யன், பெரும் அக்னியை மூட்டி விட்டு விட்டது போலவும், அதற்கு வாயுவே சாரதியாக இருப்பது போலவும், ஊழிக் காலம் போல மேகங்கள் உடைந்து விட்டது போலவும் பயங்கர ஓசையுடன் உக்ரமான ஒலி பரவியது. சமுத்திரம் அலைகள் பெருகி கொந்தளிப்பது போல இருந்தது. சண்ட ப்ரசண்டமாக வீசிய காற்றின் உதவியுடன் அலைகளை மேலே வீசி விளையாடுவது போலவும், திரும்பி விழும் அதே அலைகள் பெரும் ஓசையுடன் வேகமாக விழுவதும் காணவே பயங்கரமாகவும் இருந்தன.
இவ்வாறு தைத்யர்களின் மகா மாயை இன்னதுதான் செய்கிறது என்று புலப்படாமல், மேன் மேலும் பெருகி வந்த மாயா யுத்தம், தேவர்கள் தவித்தனர். தங்கள் புஜ பலமோ, சேனை பலமோ உதவாது என்ற நிலையில் பகவானை நினைத்தனர். பகவானும் கருடாரூடனாக வந்து சேர்ந்தார். வழக்கமான, பீதாம்பரமும், வெளியில் தெரியாத அஷ்ட ஆயுதங்களும், ஒளி வீசிய கௌஸ்துபமும், லக்ஷ்மி தேவியும், புது மலர் பொன்ற கண்கள் பிரகாசிக்க வந்தவுடனேயே, அசுரர்களின் மாயா யுத்தம் நின்றது. கனவில் கண்ட விபத்து ஹரியைக் கண்டதும் விலகியது போல ஆயிற்று.
கருடன் காலநேமியை வாகனத்தோடு தூக்கி வீசியது. பகவானின் சக்கரம் மாலி சுமாலி போன்றவர்களை விரட்டியது. அசுர வீரர்கள் அலறி அடித்துக் கோண்டு ஓடினர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற பத்தாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-57
அத்யாயம்-11
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவானின் அருளால், அது வரை அசுரர்களின் தாக்குதலை எதிர்க்க முடியாமல் திணறிய தேவ வீரர்கள், சற்று ஆஸ்வாசப் படுத்திக் கொண்டார்கள். திரும்பவும் போரிட ஆயத்தமானார்கள்.
இந்திரன் வஜ்ராயுதத்தை விரோசன் மகன் வைரோசனி- பலியின் மேல் பிரயோகிக்க எடுத்த பொழுது உலகில் அனைவரும் ஹா ஹா என்று அலறினர். இந்திரன் அவர்களை மாயா யுத்தம் செய்ததை தூஷித்தான். ஆனால் பலி அமைதியாக பதில் சொன்னான். யுத்தம் என்று வந்தால் வெற்றி தோல்வி நிச்சயமில்லை. காலத்தின் அதீனத்தில் இருப்பவை இவை. கீர்த்தியோ, ஜயம், அபஜயமோ, ம்ருத்யுவோ மாறி மாறி வருவது தானே. இதில் நான் ஜயித்தேன் என்று பெருமைப் படவோ, தோற்றேன் என்று வருந்தவோ என்ன இருக்கிறது. அறிவுள்ளவர்கள், இப்படி வெற்றி என்று சந்தோஷமும் மற்றவனை தோற்றவன் என்று தாழ்வாக நினைக்கவும் மாட்டார்கள். அறிவு இருந்தால் தானே. நீங்கள் அனாவசியமாக பெருமையுடன் கொண்டாட – காலத்தின் செயல் – உன் சொல்லை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பொருளற்ற வீண் தம்பம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பலி மேலும் கடுமையான வார்த்தைகளால் சாடினான். அவன் சொன்னதில் உண்மை இருப்பதை அறிந்தும், இந்திரன் தன் தவறை உணராமல் அங்குசத்தால் குத்தப் பட்ட யானை போல வெகுண்டான். தன் குலிசம் என்ற ஆயுதத்தை பிரயோகித்து விட்டான். பெரும் மலை ஒன்று இறக்கைகள் அறுபட்டு விழுவது போல பலி பூமியில் விழுந்தான். பலியின் சகாவான ஜம்பன் பொறுக்க மாட்டாமல், இந்திரனை எதிர்த்தான். சிம்ஹ வாகனத்தில் வந்தான். கதையால் இந்திரனின் தாடையில் ஓங்கி அடித்தான். அவன் வாகனமான யானையையும் அடித்தான். அந்த அடி தாங்காமல் யானை சுருண்டது, பூமியில் விழுந்து அலறியது. அதன் பின், மாதலி ரதத்தில் ஏராளமான குதிரைகளைப் பூட்டி கொண்டு வந்தான். தன் வலியை பொருட்படுத்தாமல் ரதத்தில் ஏறி, ஜம்பனை வஜ்ரத்தால் அடித்தான். நடந்து கொண்டிருக்கும் யுத்தம் பற்றி நாரதரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட ஜம்பனுடைய உறவினர்கள் நமுசி முதலானோரும் போர் நடக்கும் இடம் வந்தனர். இந்திரனை பலமாக தாக்கினர். சமமான பல வீர்யம் உள்ளவர்கள், சமமான அஸ்திரங்கள் இருவரிடமும் இருந்தன, யுத்தம் பயங்கரமாக நடந்த து. தேவ சேனை வசமாக மாட்டிக் கொண்டன. சத்ருக்கள் அதிக பலசாலிகள். இதை எதிர்பாராத தேவ சைன்யத்து வீரர்கள் ஓலமிட்டனர். நடுக்கடலில் வணிகனின் பொருட்கள் நிரம்பிய படகு உடைந்து விழுந்தாற் போல திகைத்தனர். சந்திரன், தன்னை மறைத்த மேக கூட்டத்தில் இருந்து வெளிவருவது போல இந்திரன் தன் மேல் விழுந்த அம்புகளீல் இருந்து வெளி வந்தான். நமுசியின் தலைமையில் யுத்தம் தொடர்ந்தது. தன் வஜ்ராயுதமே அந்த அசுரர்களிடம் பலனளிக்கவில்லை என்பதைக் கண்டு இந்திரன் திகைத்தான், பெரிய மலை போன்ற ஸூலத்தை எடுத்துக் கொண்டு அழிந்தாய் நீ என்று சொல்லியபடி நமுசி வருவதைக் காண மிருக ராஜன் போலவே இருந்தது. தன் வஜ்ரம் அவன் உடலின் தோலைக் கூட பாதிக்கவில்லை என்பதை இந்திரன் கண்டான். வ்ருத்திரனை வீழ்த்திய வஜ்ர ஆயுதம், அதற்கும் முன் மலைகளின் இறக்கைகளை துண்டித்தது இந்த அல்ப அசுரர்களிடம் ஏன் பலனளிக்கவில்லை என்று யோசித்தான். அந்த சமயம் அசரீரியாக ப்ரும்மா சொன்னார். நான் கொடுத்த வரம் நமுசிக்கு – ஈரமும் உலர்ந்தும் உள்ள பொருளால் அடித்தால் தான் அழிவான்- இதைக் கேட்டு பலவிதமாக யோசித்து -ஃபேனம்- சமுத்திரத்தின் நுரை – இந்த இரு விதமாகவும் உள்ளதாக இருக்க அதை எடுத்து நமுசியை அடித்தான். தேவர்கள் உத்சாகம் பெற்றனர். மற்றவர்களையும் முடிந்தவரை வெற்றி கொண்டனர்.
அந்த சமயம் நாரதர் வந்தார். பகவான் உடன் இருந்து அவர் அருளால் அம்ருதம் கிடைக்கப் பெற்றீர்கள். போதும். அத்துடன் திருப்தியாக இருங்கள். சண்டையை நிறுத்து. எனவும், இந்திரன் ஏற்றுக் கொண்டான். அடி பட்டு விழுந்த பலியை எடுத்துச் சென்றனர். யுத்தத்தில் அங்க ஹீனம் ஆனவர்களை உசனஸ் என்ற ரிஷி மந்திர சக்தியால் வைத்யம் செய்தார். அவர்களுடன் பலியும் தன் காயங்கள் நீங்கப் பெற்றான். யுத்த முடிவு பற்றி அவன் வருந்தவில்லை. தத்துவ ஞானம் உள்ளவன் ஆதலால் தன் உடல் நேரானதில் மகிழ்ச்சியே அடைந்தான்.
. (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற பத்தாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-57
அத்யாயம்-12
ஸ்ரீ பாதராயனர் சொன்னார்: பெண் வடிவத்தில் தானவர்களை மோகம் கொள்ளச் செய்து தேவர்களுக்கு அம்ருதத்தை ஸ்ரீஹரி கொடுத்தார் என்ற செய்தியை வ்ருஷத்வஜன்- மகேஸ்வரன் அறிந்தார். தன் ரிஷப வாகனத்தில் தேவியுடன் மது சூதனனைக் காணச் சென்றார். அவரும் அவர்களை வரவேற்று உத்சாகமாக பேசிக்கொண்டிருந்தார்.
மஹாதேவர் கேட்டார்: ஜகத்வ்யாபி- உலகம் முழுவதும் பரவி இருக்கும் தேவ தேவர் நீங்கள். எல்லா உணர்வுகளுக்கும் ஆத்மாவும், காரணமும் ஆன ஈஸ்வரன். ஆதி அந்தமும், மத்யமுமானவர். உள்ளும் புறமும் ஆன அழிவற்ற சித்ரூபி. ஏற்கனவே பற்று அற்றவர்கள், சங்கத்தை தவிர்த்து தவம் செய்பவர்களான முனிவர்கள் உங்களை உபாசிக்கிறார்கள். பூர்ணன், அம்ருத ரூபி, முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவன், ஆனந்தமே உருவானவன், எனவே சோகம் உங்களை அண்டாது விஸ்வத்தின் காரணமானவர். த்வயமும் அத்வயமும் தாங்களே. இவை செய்யப் படும் நகைக்கு ஏற்ப உருவம் கொள்ளும் பொன் போன்றவை. இவ்வாறு பலவாறாக துதி செய்தபின் கேட்டார். உங்கள் அவதார கதைகளை அறிவேன். எதற்காக தைத்யர்களை மோகம் கொள்ளச் செய்து தேவர்களுக்கு அம்ருதம் அளிக்க பெண் வடிவம் எடுத்துக் கொண்டீர்கள்? நான் அந்த சமயம் பார்க்கவில்லையே. அந்த ரூபத்தை எனக்கு காட்ட வேண்டும். என்றார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: என் வேஷத்தைக் கண்ட தைத்யர்கள் குதூகலம் அடைந்தனர். தேவ காரியம் என்பதால் அம்ருதம் என்பதை பகிர்ந்து அளித்தேன். அந்த ரூபம் தானே, காட்டுகிறேன் என்று சொல்லிக் கொண்டே அந்தர்தானம் ஆனார். உபவனத்தில் அழகிய பெண், மலர்களால் அலங்கரித்துக் கொண்டு, பட்டாடை அணிந்து கையில் மலர் பந்தை வைத்துக் கொண்டு, நிற்பதைக் மகேஸ்வரன் கண்டார். கனமான ஹாரங்கள் அவளது நடையில் ஒவ்வொரு அடிக்கும் சப்தமிட , அதற்கு இணையாக தாளம் தப்பாமல் உடல் அங்கங்கள் ஆட, ஆடிக் கொண்டே வருபவளைப் பார்த்தார்.
பந்தை வீசி அதைப் பிடிக்கும் பாவனையில் கண்களும் அபினயம் காட்ட, குண்டலங்கள் ஆட, அதன் ஒளியில் கன்னங்கள் மின்ன வந்தவளைப் பார்த்தார்.
தன் மாயையால், அனாயாசமாக நழுவும் மேலாடையை இடது கையால் சரி செய்தபடி, வலது கையால் பந்தை வீசும் ஜகன் மோஹன ரூபத்தைக் கண்டார்.
அதைக் கண்ட ஈஸ்வரன், அது பெண் வேஷமிட்ட தேவன் என்பதையோ, தான் யார் என்பதையோ, அருகில் இருக்கும் உமையையோ, தன்னுடன் வந்த கணங்களையோ அருகில் இருப்பதையே மறந்தார். பெண்னைக் கண்ட சாதாரண ஆண் மகனாக ஆனார். அழகிய பெண், மனோரமா- மனதை கவர்ந்திழுக்கும், கண்களின் அழகில் சொக்கியவராக பவானி பார்த்துக் கொண்டிருக்கையிலேயே வெட்கம் இன்றி அந்த பெண்ணைத் தொடர்ந்தார். அவளோ அவர் வருவதைப் பார்த்து மரங்கள் பின்னால் ஒளிந்து கொண்டாள். பெண் யானையை தொடரும் மத்த கஜம் போல அவளைத் தொடர்ந்து ஓடினார். ஆங்காங்கு அவருடைய வியர்வை ஜலம் விழுந்தன. பூமியில் விழுந்தவை வெள்ளியாகவும், தங்கமாகவும் ஆயின. பிடி படாமல் பல இடங்களிலும் அலைந்து திரிந்து கடைசியில் அருகில் சென்ற சமயம் தன் புருஷ உருவத்தை எடுத்துக் கொண்டு பகவான் சிரித்துக் கொண்டே,இதுவும் என் மாயையே. உங்கள் வீர்யம் வெளிப்பட்டது. பெண் மோகத்தை ஜயித்தவர் யார்? இது உங்களை பாதிக்காது. மாயா மயமான இந்த ஸ்ருஷ்டியில் தாங்களும் பாகம் வகிப்பவரே.
அதன் பின் தன் இருப்பிடம் வந்து பவானியிடமும், மற்ற ரிஷிகளிடமும் தான் மோகம் அடைந்து பகவானின் மோஹினி ரூபத்தை பின் தொடர்ந்து சென்றதை சொன்னவர், இது அவன் மாயை என்று அறிந்து பின்னால் ஓடினேன், பவானி பார்த்துக் கொண்டிருக்க, மற்ற புருஷர்கள் இருந்த சபையில் தன் வசமின்றி சென்றது நான் தானா என்று வியக்கிறேன். மனதை கட்டுப் படுத்தியவன் என்று என்னை சொல்வர். நானே இப்படி மோகித்தால் சாதாரண ஜனங்கள் எம்மாத்திரம் என்றார்..
ஸ்ரீ சுகர் சொன்னார்: அரசனே இது தான் சார்ங்கதன்வன் என்று அழைக்கப் படும் பகவானின் விக்ரமம். பாற்கடலைக் கடைய தன் முதுகில் பெரும் மலையைத் தாங்கினார். இந்த சரித்திரம் பெரிய செயல்களைச் செய்பவர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். சம்சார பரிஸ்ரமம்- உலக வாழ்க்கையின் சிரமங்களுக்கு பரிஹாரமாக அல்லது முன்னுதாரணமாக இருக்கும். எதற்கு இந்த சிரமம், பாற்கடலை கடைவது என்ற மிக அரிய செயல். அப்படியாவது தன்னை நம்பிய தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக, பெண் வேஷம் போட்டு, எதிரிகளான அசுர்களுக்கு கிடைக்காமல் செய்த அரிய செயல், அவருக்கு நமஸ்காரம், என்றார் ஸ்ரீ சுகர். .
. (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற பதினொன்றாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 48
அத்யாயம்-13
ஸ்ரீ சுகர் சொன்னார். விவஸ்வத மனுவின் ஏழாவது மகன் ஸ்ரார்த தேவன் அவன் வம்சத்தினர் பற்றிச் சொல்கிறேன் கேள்.
இக்ஷ்வாகு, நபகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாக:, மற்றும் ஏழாவதாக திஷ்டன் கரூஷன், ப்ருஷத்ரன், வசுமான் என்றவர்களையும் சேர்த்து பத்து பிள்ளைகள். ஆதித்யன், வசவோ, ருத்ரா. விஸ்வேதேவா மருத்கணங்கள், அஸ்வினி தேவர்கள் என்ற இரட்டையர், புரந்தரன் என்பவன் இந்திரன் ஆனான்.
கஸ்யபர், அத்ரி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், கௌதமர், ஜமதக்னி, பரத்வாஜர் என்று ஏழு ரிஷிகள். இந்த யுகத்திலும் பகவான் கஸ்யபருடைய மகனாக பிறந்தார். ஆதித்யர்களின் கடைசியாக வாமனனாக பிறப்பார்.
ஏழு மன்வந்தரங்கள் பற்றி சுருக்கமாகச் சொன்னேன். தற்சமயம், விஷ்ணுவின் சக்தியுடன் கூடிய விவரங்களோடு, சொல்கிறேன்..
விவஸ்வானுக்கு இரு மனைவிகள், விஸ்வகர்மாவின் மகள் கள். சங்ஞா, சாயா என்பவர்கள். இது முன்னாலேயே உனக்குத் தெரியும். மூன்றாவதாக வடவா என்று ஒருவள். சங்ஞாவின் புதல்வர்கள் மூவர்- யமன், யமீ, ஸ்ரார்த தேவன்- எனப்படுவர். சாயா புதல்வர்கள்- சாவர்ணி, தபதீ என்ற பெண் சம்வரணன் மனைவியானாள். மூன்றாவது சனைச்சரன்- அஸ்வினி குமாரர்கள் வடவா புதல்வர்கள்.
எட்டாவது மன்வந்தரத்தில் சாவர்ணி மனுவாவாக கடும் தவம் செய்து தேவலோகம் செல்வான். . விரஜன், நிர்மோகன் என்று அவன் புதல்வர்கள். இவர்கள் கடும் தவம் செய்து தேவர்கள் ஆவார்கள். விரஜா விரோசன சுதன் பலி இந்திரனாவான். பலி தன்னிடம் யாசித்த விஷ்ணுவிற்கு மூன்று அடி நிலம் தானமாக கொடுப்பான். இந்திரபதவியை மறுத்து விட்டு சித்தியடைவான். இவனை பகவான் சுதலம் என்ற உலகில் இருக்கச் செய்வார். அங்கு தற்சமயம் சுவர்கத்தை விட அதிக சுக போகங்களுடன் வாழச் செய்வார். இந்திரனுக்கு சமமான அந்தஸ்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பான்.
ராஜன்! இந்த மன்வந்தரத்தில் காலவ என்ற சப்த ரிஷிகள் தோன்றுவர். பல ராம:, பரசுராம: த்ரோண புத்ர: அஸ்வத்தாமா, கிருபர், ருஷ்ய ஸ்ருங்க:, மற்றும் எங்கள் தந்தை பாதராயணர். இவர்கள் தங்கள் யோக ப்ரபாவத்தால் தங்களுக்கென்று தனி ஆஸ்ரம மண்டலங்களில் இருப்பர்.
தேவ குஹ்யம் என்று சரஸ்வதி நதிக் கரையில் சார்வபௌம என்ற அரசனாக அவதரித்து, புரந்தரனிடமிருந்து இந்திர பதவியை பலிக்கு அளிப்பார். ஆறாவது மன்வந்தரத்தில், துர்வாசரின் சாபத்தால், தன் சக்தியையும், செல்வத்தையும் இழந்த இந்திரன், பகவானின் உதவியால் அம்ருதம் உண்டு, பலியை வெற்றி கொண்டு, தன் பழைய அந்தஸ்தைப் பெற்று தேவர்களுடன் இந்திர பதவியை தக்கவைத்துக் கொண்ட கதையை நினைவு கொள். பார்கவரால் பலம் கிடைக்கப் பெற்ற பலி அந்த இந்திரனை தள்ளி விட்டு, மூவுலகிலிலும் சாம்ராஜத்தை நிறுவி ஏக சக்ரவர்த்தியானான். அதன் பின் ஆதித்யர்களில் கடைசி மகனாக பிறந்து பகவான் பலியிடம் யாசிப்பார். பத த்ரயம் – மூன்றடி என்ற வியாஜத்தால் மூவுலகையும் பலியிடம் பெற்று பழையபடி புரந்தரன் -இந்திரனை தன் இடத்தில் ஸ்தாபித்து பலியை அனுக்ரஹித்தார். ‘உனக்கு இந்திர பதவியை விட மேலான யாருக்கும் கிடைக்காத, பதவியைத் தருகிறேன். சாவர்ணிக்கு பிறகு இந்திரனாவாய். அதுவரை சுதளத்தில் இரு. விஸ்வகர்மா உனக்கு தேவையான ராஜதானியை நிர்மாணித்து தருவான். ‘ என்றார். எட்டாவது மன்வந்தரத்தில் நீ இந்திரனாவாய்.
ஒன்பதாவது மன்வந்தரத்தில் வருணனின் புத்திரன் தக்ஷசாவர்ணி என்பவன், ஒன்பதாவது மனு ஆவார். அரசனே! பூதகேது, தீப்த கேது என்று அவர் வம்சம் தொடரும். அந்த மன்வந்தரத்து தேவர்கள், பரா, மரீசி புதல்வர்கள், த்யுதிமான் முதலான ஏழு ரிஷிகள், தோன்றுவார்கள்.
ஆயுஷ்மான்-அம்புதாரா என்ற தம்பதிகளுக்கு பகவானின் அம்சமாக ருஷபன் மூவுலகையும் ஜயித்து ஆளுவான்.
பத்தாவது ப்ரும்மா சாவர்ணி, உபஸ்லோக சுதன், மாஹானாக இருப்பான். அவன் மகள் பூரிஷேணா, ஹவிஷ்மத் என்பவர். ஹவிஷ்மான், சுக்ருதி, சத்யன், ஜயன், மூர்தி, த்விஜா: சுவாசன, விருதா என்ற தேவர்கள். சம்பு: சுரேஸ்வரன். விஸ்வஜித் என்பவரின் க்ருஹத்தில், விஷ்வக்சேனன் என்ற பகவானின் அம்சாவதாரமாக விஷூசி என்பவளிடம் பிறந்து இந்திரனான சம்புவிடம் நட்பாக இருப்பார்.
தர்மசாவர்ணி என்பவர் பதினொன்றாவது மனுவாக வருவார். அவர் புதல்வர்கள், சத்யதர்மன் முதலானோர். விஹங்கமன், காமகமன், நிர்வாண ருசி என்று தேவர்கள், இந்திரனாக, வைத்ருதன், அருணன் முதலானோர் ரிஷிகள். ஆர்யகர் என்பவருடைய மகன், தர்ம சேது என்பவன், வைத்ருதா என்பவளிடம் ஹரியின் அம்சமாக மூவுலகையும் காப்பார். ருத்ர சாவர்ணி என்பவர் பன்னிரண்டாவது மன்வந்தர மனு. தேவன், உப தேவன் என்பவர்கள் தேவர்கள், ஸ்ரேஷ்டன் முதலானோர் புத்திரர்கள். ருத தாமா என்பவர் இந்திரனாவார். ஹரிதர் முதலானோர் தேவர்கள். தபோ மூர்த்தி ஆக்னீந்த்ரகர் முதலானோர் ரிஷிகள். ஸ்வதாமோ என்பவர் ஹரியின் அம்சமாக பிறந்து மனுவாவார். அதன் பின் சத்ய சஹஜன் சுன்ருதா என்பவளிடம் பிறப்பார்.
பதின்மூன்றாவது மனு தேவ சாவர்ணி என்பவர். இவர் ஆத்மவான் எனப் பெயர் பெறுவார். சித்ர சேன, விசித்ர முதலானோர் தேவ சாவர்ணி புதல்வர்கள். சுகர்ம சுத்ராம என்பவர்கள், திவஸ்பதி: இந்திரன், நிர்மோக தத்வ தர்சி என்பவர்கள் ரிஷிகளாகத் தோன்றுவர். தேவ ஹோத்ரனுடைய மகன் உபஹர்தா. திவஸ்பதி-இந்திரன். யோகேஸ்வரன் என்பவராக ஹரியின் அம்சமாக ப்ருஹதீ என்பவரிடம் தோன்றுவார். இந்த்ர சாவர்ணி என்பவர் பதினான்காவது மனுவாவர். உரூ, கம்பீர புத்தி என்பவர்கள் இந்திர சாவர்ணியின் மகன்கள்.
பவித்ரா முதலானவர் தேவர்கள், சுசி என்ற பெயரில் இந்திரன் வருவான். அக்னிவாஹர், முதலான ஏழு ரிஷிகள் தோன்றுவர். ஆக்னீந்த்ர:, காஸ்பன், பௌலஸ்த்யன், மாகதன், பார்கவோ, அக்னிபாஹு, சுசி, ஆங்கிரஸ், முக்தன் ஆத்ரேயனான சுத்த வாசிஷ்டன் – எனப் படுவர்.
சத்ராயண-விதானா தம்பதிகளின் தனயனாக ப்ருஹத்பானு என்ற பெயரில் ஸ்ரீ ஹரி சந்ததியை விஸ்தரிப்பார்.
அரசனே! இந்த பதினான்கும் மூன்று காலங்களுடையவை. இவைகளுடன், . ஆயிரம் யுகங்கள் சேர்ந்து கல்பம் எனப்படும்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், மன்வந்தரானுவர்ணனம் என்ற பதின் மூன்றாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 36
அத்யாயம்-14
மன்வந்தரங்கள் என்றும், , ஒவ்வொரு மன்வந்தரத்துக்கும் மனு என்றும் விவரித்து சொன்னீர்கள். அவர்களுக்கு என்ன வேலை, யார் நியமிப்பார் ? என்று அரசன் பரீக்ஷித் கேட்டான்.
ரிஷி சொன்னார்: மனு என்பவர்கள் மனுவின் வழி வந்த அவர் புதல்வர்கள், மற்றும் முனிகள். இந்த்ரனாக நியமிக்கப் பட்டவர்கள், அசுர-தேவ கணங்கள் அனைத்துமே பர புருஷனுடைய ஆட்சியில் அடங்குவர். இவைகளை நியமிப்பவர் அவரே.
யாகங்கள் பற்றி சொன்னேனே, மனிதர்கள் உலக வாழ்க்கையை சீராக நடத்திச் செல்ல யாகங்கள் அவசியம். பர புருஷனுடைய தனயர்கள் -புதல்வர்கள் இந்த யாக காரியங்கள் நடக்க உதவுவார்கள். நான்கு யுகங்கள் என்ற கால கட்டம். அதில் ஸ்ருதி கணங்கள், என்பவைகளை கண்டறிந்த ரிஷிகள் சொன்னது தான் தர்மம். அழிவில்லாத சனாதனமான தர்மம். நான்கு பகுதிகளாக தர்மம் என்பதை ஸ்ரீ ஹரி சொன்னார். அவைகளை தாங்களும் அனுசரித்து, ப்ரசாரம் செய்து மக்களிடையே அந்தந்த காலங்களுக்கு பூமியில் நிலை நிறுத்தியவர்கள் இவர்கள்.
ப்ரஜாபாலர்கள் என்பர். ஒவ்வொருவரும் ஒரு பிரிவின் தலைவராவார். அந்த அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி உலகில் மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களையும் வழி நடத்துகின்றனர். யாகங்களில் பெறும் ஹவிஸ் என்பதை உணவாகக் கொண்டு தேவர்கள் வாழ்கிறார்கள். இந்த மனு முதலானோரும் அவர்களை அனுசரித்தவர்கள்.
இந்திரன் பகவான் கொடுத்த மூவுலக தலைமை என்ற பதவியில் இருந்து பெறும் செல்வங்களைக் கொண்டு மூவுலகையும் ஆளுகிறான். பெரும்பகுதி இந்த உலகில் செலவழிகிறது.
ஒவ்வொரு யுகத்திலும் ஸ்ரீ ஹரி ஞானோபதேசம் செய்கிறார். அதற்கேற்ப உருவங்களை எடுத்துக் கொள்கிறார். ரிஷியாக உருவம் கொண்ட பொழுது, கர்ம காண்டத்தை பிரசாரம் செய்கிறார். யோகேசனாக வரும் சமயம் யோகத்தை. ப்ரஜேசன்- ப்ரஜைகளுக்கு ஈஸ்வரன் என்ற உருவத்தில், யுகங்கள் பற்றி காலத்தின் சக்தி பற்றி சொல்வார். இந்திரனாக திருடர்கள், அதர்மிகளை கண்டிப்பார். காலனாகவே வந்து அனைத்தையும், இல்லாமல் செய்வது வேறு.
ஜனங்கள் பலவிதமாக துதிகள் செய்கின்றனர். அவர் மாயையால் எடுத்துக் கொண்ட ரூபங்கள், அந்தந்த சமயம் செய்த செயல்கள், அந்தந்த காலத்தில் ஏற்றுக் கொண்ட பெயர்கள், இவைகளை புகழ்ந்து பாடுவர். இந்த அவதாரங்களில் பலவித நிகழ்ச்சிகள், உபதேசங்கள் இவைகளை அறிந்து கொள்வர். ஆயினும் அவரைக் கண்டதில்லை. கல்பம், விகல்பம் என்பது கால அளவு. ஒவ்வொரு கல்பத்துக்கும் இவ்வளவு உலக நாட்கள் என்பதும் சொல்லப் பட்டுள்ளது. இவைகளில் வசதிக்காக மன்வந்தரங்கள் என்ற உட் பிரிவை விவரங்கள் அறிந்தவர்கள் செய்தார்கள். அவை பதினான்கு என்று பார்த்தோம்.
. (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், மன்வந்தரானுவர்ணனம் என்ற பதி நான்காவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 36
அத்யாயம்-15
பலியிடம் யாசித்து பெற்ற மூன்றடி பூமியில், மூவுலகையும் திரும்ப பெற்றார் என்று சொன்னீர்கள். .அதைப் பற்றிச் சொல்லுங்கள். யாகம் செய்து முடித்து நிறைவாக இருந்த பலியை கட்டியது எதற்காக? அவன் குற்றம் எதுவும் செய்யவில்லையே.
அவன் யுத்தத்தில் தோற்று உயிர் போகும் நிலையில் பார்கவர் உயிர்ப்பித்தார். அவரை அவன் மிகவும் மதித்தான். பெரும் பொருள் கொடுத்தும், வசதிகள் செய்து கொடுத்தும் மிக மரியாதையாக நடந்து கொண்டான். அதனால் பார்கவ குலத்தினர் அனைவரும் விஸ்வஜித் என்ற யாகத்தை செய்ய பலியை ஊக்குவித்தனர். மஹானுபாவர்கள்- அவனிடம் அவர்கள் ஈடுபாட்டை காட்ட, முவுலகையும் வெற்றி கொண்டவனை மஹாபிஷேகம் செய்வித்து மகிழ்ந்தனர். அதன் பின் பொன்னால் ஆன ரதத்தில் பல வர்ணங்களில் குதிரைகளும், சிம்மக் கொடியும், ப்ரகாசிக்க திக்விஜயம் செய்து பின் யாகம் செய்தான். அவனுக்கு பிதாமகர் திவ்யமான பொன் கவசமிட்ட தனுஷைக் கொடுத்தார். என்றும் குறையாத அம்புகளைக் கொண்ட தூணுர – அம்புகளை வைக்கும் உறை – என்பதையும் கொடுத்தார். திவ்யமான கவசத்தையும் கொடுத்தார். பாட்டனாரான ப்ரஹ்லாதன் என்றும் வாடாத புஷ்ப மாலையை கொடுத்தார். சுக்ராசாரியர் நீரில் விளைந்த சங்கு கொடுத்தார். கூடியிருந்த அந்தணர்களும் மற்றவர்களும் மங்களாசாஸனம் செய்தனர். பலி அவர்களை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்த பின், பாட்டனார் ப்ரஹ்லாதரிடம் அனுமதியுடன், விடை பெற்று, ஆயிரக் கணக்கான போர் வீர்களுடன் புறப்பட்டான். குரு சுக்ராசார்யர் தந்த சங்கத்தை ஊதி தன் திக்விஜயத்தை ஆரம்பித்தான். திவ்யமான பூ மாலைகளும் வரமாக கிடைத்த ஆயுதங்களுடன், ப்ரகாசமாக மகர குண்டலங்கள் ஆட, சுவர்க லோகத்தில் இருப்பவன் போலவே விளங்கினான்.
தன்னை ஒத்த அசுர வீரர்கள் புடை ஸூழ இந்திர புரியை அடைந்தான். அவர்கள் செல்கையில் பூமியே நடுக்கம் கண்டது போல ஆயிற்று. இந்திரபுரி ரம்யமாக இருந்த து. லக்ஷ்மீகரமான உபவனங்கள். அங்கு கூச்சலிடும் பறவைகள். மதுரமாக பாடும் குயில் வகைகள். பவளம் போன்ற நிறத்தில் புஷ்பங்களைத் தாங்கிய மரங்கள், அந்த மரங்களையே மறைத்து அடர்ந்து பூத்திருந்தன. ஹம்ஸ சாரஸ சக்ரவாக காரண்டவ மலர்கள் பூத்த குளங்கள் நாட்டியம் ஆடுவது போல இடை இடையே தெரிந்த தாமரை மலர்கள், தேவி ஆகாய கங்கை கோட்டை போல அந்த நகரை அணைத்தபடி ஸூழ்ந்து ஓடியது. கோட்டை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது போல உயர்ந்த வெள்ளியாலும் தங்கத்தாலும் இழைத்த சுவர்கள், கோபுரங்கள், ரத வீதிகள், அனைத்தும் விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பட்டவை. பெண்களும் நித்ய யௌவனர்களாக, அலங்கார பூஷிதைகளாக வளைய வந்தனர். அந்த பெண்களின் தலையிலிருந்து விழுந்த மலர்களின் வாசனையைத் தாங்கி வாயு மெள்ள இதமாக வீசியது போல இருந்தது.
முத்துக்களும், நவரத்னங்களும் பதிக்கப் பட்ட கொடிகள் வரிசையாக இருந்தன. மிருதங்கமும், சங்குகளும் துந்துபிகளும் ஏக காலத்தில் ஒலித்தன. ஆங்காங்கு நடனங்கள் அதற்கான வாத்யங்களுடன் நடந்து கொண்டிருந்தன. அதர்மிகளோ, துஷ்டர்களோ, அறிவில்லாத மூடர்களோ, பர ஹிம்சை செய்பவர்களோ, காமிகளோ, பேராசை, லோபம் கொண்டவர்களோ அந்த நகரில் நுழையவே முடியாது. அந்த தேவ ராஜதானியை தன் படையுடன் பலி மகாராஜா அடைந்தான்.
இந்திரன் தன் முக்ய பரிவாரங்களோடு வந்து குருவான ப்ருஹஸ்பதியிடம் வந்து முறையிட்டான். பகவன்! முன் நம் விரோதியாக இருந்த மகாபலி, மிகவும் பலசாலியாக தேஜசுடன் வளர்ந்து நம்மை தாக்க வருகிறான். அவனை எதிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். எந்த இடத்திலும் எப்படியும் இந்த மிகப் பெரிய சேனையை சமாளித்து ஜயிக்க முடியாது. திசைகளை விழுங்கி விடுவது போலவும், பத்து திசைகளையும் எரித்து விடுவது போலவும், கண்களிலேயே சம்வர்த்தாக்னியை கொண்டது போலவும் அவன் வீரர்கள் தெரிகிறார்கள். பகவானே! என்ன செய்வது எப்படி சமாளிப்பது, சொல்லுங்கள்.
குரு சொன்னார்: மகவன்! நான் அறிவேன். உன் சத்ருவின் இந்த மேன்மைக்கு காரணம், ப்ரும்மவாதியான சுக்ராசார்யரின், மற்றும் அவருடன் உள்ள ஞானிகள், சிஷ்யனான பலியை அங்கீகரித்து ஆசீர்வதித்து இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள். ஓஜஸ்வி- மிகுந்த ஆற்றலுடைய இந்த பலியை வெற்றி கொள்ள உன்னால் முடியாது. உன்னால் மட்டுமல்ல, யாராலுமே முடியாது. சாதாரண மனிதன் க்ருதாந்தன்- யம தேவனை எதிர் கொள்வது போல ஆகும். அதனால் நீங்கள் உங்கள் உங்கள் இருப்பிடத்தை விட்டு விலகி, மகாபலியின் கண்ணில் படாமல் இருங்கள். அது தான் ஒரே வழி. இவன் குருவின் ஆசீர்வாதத்தால் நிமிர்ந்து நிற்கிறான். அவர்களிடம் எந்த சமயம் முரண் படுகிறானோ, அவர் சொல்வதைக் கேட்காமல் தானாக எதோ செய்ய முயலுகிறானோ, அது தான் அவனை அடக்க ஏற்ற சமயம். காத்திருங்கள். இதைக் கேட்டு இந்திரன் தன் பரிவாரங்களோடு நகர் நீங்கினான்.
தேவர்கள் அந்த நகரிலிருந்து வெளியேறி விட்டதை அறிந்த மகாபலி தேவ லோகத்தை தன் வசமாக்கிக் கொண்டான். மூவுலகும் அவன் ஆட்சியில் வந்தது. மூன்று உலகங்களையும் வெற்றிக் கொண்ட தங்கள் சிஷ்யனிடம் பேரன்பு கொண்டிருந்த குரு சுக்ராசாரியாரும், ப்ருகு குலத்து பெரியவர்களும் நூறு அஸ்வமேத யாகங்கள் ( சதமேத யாகம் ) என்பதைச் செய்ய வலியுறுத்தினார்கள். நூறு யாகம் செய்தவன் இந்திரனாவான் என்பதால். அதனால், விஸ்வஜித் என்று பெயர் பெற்ற மகாபலி, தன் வலிமையை மேலும் நிலை நாட்ட அந்த நூறு அஸ்வமேதம் என்ற செயலை ஏற்று சிறப்பாகச் செய்ய, மஹாமனா: நல்ல மனதுடையவனாக தீர்கமான சங்கல்பத்தைச் செய்து கொண்டான். ஏராளமான செல்வம் சேர்ந்தது. த்விஜர்கள்- அந்தணர்கள் மற்றும் பலர் ஆசிர்வதிக்க, யாகங்கள் சிறப்பாக நடந்தன. தான் க்ருத க்ருத்யனாக ஆனதாக உணர்ந்தான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், மன்வந்தரானுவர்ணனம் என்ற பதினைந்தாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 35
அத்யாயம்-16
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தன் புதல்வர்கள் அனைவரும் காணாமல் போகவும் அவர்களின் தாயான அதிதி தனித்து விடப்பட்டவளாக வருந்தினாள். தைத்யர்கள்- திதியின் மைந்தர்கள் தான் காரணம் என்பதை அறிந்தாள். ஒரு சமயம் கஸ்யபர் அங்கு வந்தார். (திதி,அதிதி இருவருமே அவர் மனைவிகள்) வெகு காலம் எதுவும் பேசாமல், எந்த உணர்வும் இன்றி சமாதி என்ற நிலையில் இருந்து வந்திருக்கிறார். மனைவியின் வாடிய முகத்தைக் கண்டு, தன் ஆசனத்தில் அமர்ந்தவாறே, என்ன விஷயம் என்று வினவினார். அவள் சொன்னதைக் கேட்டு நடந்ததை ஊகித்துக் கொண்டவராக அவளிடம் சமாதானமாக சொன்னார்.
பத்ரே! இது அந்தணர்களுக்கு நல்லதல்ல. தர்மத்திற்கும், உலக மக்களுக்கும் நல்லதல்ல. மனித உலகத்தினர் ம்ருத்யுவின் கால கணக்கில் வாழ்பவர்கள். நம் வீட்டின் நிலை என்ன? க்ருஹமேதினீ! – வீட்டை நிர்வஹிப்பவள் – தர்ம,அர்த்த,காம எனும் குடும்பத்திற்கு தேவையான அனைத்தும் சரியாக இருக்கின்றனவா? இது குடும்பஸ்தனின் யோகம். அவர்களுக்கு வேறு யோகம் தேவையில்லையே. அதிதிகளுக்கு நல்ல விதமாக உணவு உடை அளித்து உபசாரம் செய்கிறாயா? வீட்டிற்கு வந்த அதிதியை தண்ணீர் கூட குடிக்காமல் வெளியேற்றினால் அந்த வீடு ஓனாய் வசிக்கும் குகை போல ஆகும். வேளை தவறாமல் அக்னி காரியங்கள் செய்தாயா, ஹவிஸ் அளித்து ஹோமம் செய்தாயா? நான் வீட்டில் இல்லாத பொழுது உன் மனமும் சஞ்சலமாக இருப்பதால் கேட்கிறேன். இவைகளை ஒழுங்காக செய்வதால் க்ருஹஸ்தன் – இல்லறத்தான், நல்ல கதியை அடைகிறான். அக்னியும் அந்தணனும் சர்வ தேவாத்மனான பகவானுடைய முகமாகும். உன் புதல்வர்கள் குசலமா? உன்னைப் பார்த்தால் ஏதோ தவறு என்று என் மனம் சொல்கிறது.
ப்ரும்மன்! பசுக்களும் அந்தணர்களும் நலமாக இருக்கிறார்கள். தர்மத்திற்கும், இங்குள்ள ஜனங்களுக்கும் எந்த குறைவுமில்லை. மூன்று யுகத்திலும் சிறப்புடைய க்ஷேத்ரம் இது. இங்குள்ள வீடுகளும், அதில் வசிப்பவர்களும் நலமே. அக்னி காரியமோ, அதிதிகளோ, பணியாட்களோ, யாசகர்களோ, தேவை என்று வரும் இரவலர்களோ, உங்களுடைய அனுத்யானத்தால், குறைவின்றி நடக்கின்றன. பகவன்! உங்கள் அருளால் எனக்கு எந்த குறைவுமில்லை. ப்ரஜாபதி நீங்கள், தர்மத்தை அறிந்தவர் மற்றும் மற்றவர்களுக்கும் சொல்பவர். மாரீச! (மரீசி முனிவரின் மகன்) உங்கள் மானச, சாரீர ப்ரஜைகள் தான் இந்த உலகம் முழுவதும். சத்வ ரஜ,தமோ குணத்தால் உருவானவர்கள். நீங்கள் சுர, அசுரர்களிடம் சமமாகவே இருப்பவர். ஆயினும் பக்தனை மகேஸ்வரன் அதிகமாக நேசிக்கிறார். அதனால் உங்களை வேண்டி கேட்கிறேன். என் ஸ்ரேயஸை நினைத்து பாருங்கள். சபத்னி புத்திரர்களால் என் புதல்வர்கள் பதவியிலிருந்து நீக்கப் பட்டார்கள். எங்களை காப்பாற்றுங்கள். ஐஸ்வர்யம், லக்ஷ்மி கடாக்ஷம், மதிப்பு, அந்தஸ்து அனைத்தும் எங்களிடமிருந்து பலவந்தமாக பிடுங்கப்பட்டன, ப்ரபோ. அதனால் சோக கடலில் மூழ்கி இருக்கிறேன். என் வயிற்றில் பிறந்த என் மகன் கள், இழந்த ராஜ்யம், பதவிகளை திரும்ப பெற என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: கஸ்யபர் சற்று யோசித்து சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். அஹோ! விஷ்ணுவின் மாயா பலம். அவருடைய அன்பிற்கு கட்டுப்பட்டது இந்த ஜகத் முழுவதும்.
தேஹம் என்பது என்ன? பௌதிகமான இந்த உலகில் ஆத்மாவை அறியாதவன், இயற்கை விதிகளுக்கு மேலான ஆத்மா என்பதும் தெரிந்தால், யார் உன் பதி, எவர் உன் புதல்வர்கள், அனைத்தும் மோகமே. இந்த அறியாமை தான் காரணம். எழுந்திரு, பகவானை, ஜனார்தனனை, நினை. அனைத்து உயிரினங்களிலும் உறையும் பர புருஷனை ஜகத்குருவான வாசுதேவனை வேண்டிக் கொள். அவர் தான் உன் குறைகளை நீக்கி வேண்டியதை அளிக்க வல்லவர். தீனர்கள் எனும் எளியவர்களிடம் கருணை உடையவர். , பகவத் பக்தியை விட வல்லமை உடையது வேறு எதுவுமில்லை என்பது தான் என் கருத்து.
அதிதி கேட்டாள்:
ப்ரும்மன்! நான் எந்த விதமாக பகவானை வேண்டி சங்கல்பம் செய்வேன், என் சங்கல்பம் நிறைவேறும் படி ஜகத்பதியான பகவானை துதிக்கிறேன். த்விஜஸ்ரேஷ்ட- அந்தணோத்தமரே! எனக்கு அந்த விதி முறைகளைச் சொல்லித் தாருங்கள். என் புதல்வர்களும் நானும் சங்கடம் தீர்ந்து நன்மை பெறும்படி பகவானை நான் வேண்டுகிறேன்.
கஸ்யபர் சொன்னார்: முன் ஒரு சமயம் பத்மத்தில் ஜனித்த ப்ரும்மா என்னிடம் கேட்டார். அவர் ஸ்ருஷ்டி செய்வதில் முனைந்திருந்த சமயம். கேசவனான பகவானை சந்தோஷப் படுத்தும் விரதத்தை அவருக்கு சொன்னது போலவே உனக்கும் சொல்கிறேன். பால்குண மாதத்து சுக்ல பக்ஷத்தில், பன்னிரண்டு நாட்கள் பயோ விரதம் எனும் விரதம் மேற்கொண்டு பக்தியுடன் அரவிந்தாக்ஷனை ஆராதிக்க வேண்டும். அமாவாசையன்று புற்று மண் கொண்டு உடலில் தேய்த்து ஸ்னானம் செய்ய வேண்டும். நதிக்கரையில் நின்று இந்த மந்திரத்தைச் சொல்.
ஆதி வராஹமாக வந்து பூ தேவியின் துயர் தீர்த்து, அவளுக்குரிய ஸ்தானத்தை கொடுத்தாய். ஆழ்கடலில் இருந்து பூமியை தூக்கி நிறுத்திய பகவான் நீ, என் துயரையும் தீர்ப்பாயாக. தினசரி ஸ்னானம் முதலியவைகளை முடித்துக் கொண்டு தேவையான தானியங்கள், பூஜை சாமான்களை சேகரித்துக் கொண்டு சுத்தமான இடத்தில் அமர்ந்து இந்த விரதத்தை செய்வாயாக. தியானம்-*
இந்த துதிகளைச் சொல்லி அர்ச்சனை செய். நமஸ்துப்யம் முதலான எட்டு ஸ்லோகங்கள். அதன் பின் கந்தம், புஷ்பம் பால், இவைகளால் அபிஷேகம், வஸ்திரங்கள் அணிவித்து, ஆபரணங்கள் முதலான உபசாரங்களைச் செய். தூபம் , தீபம் காட்டி பன்னிரண்டு அக்ஷரங்களைச் சொல்லி பூஜையை முடி. பாலில் வெந்த அன்னம், தனியாக சாதம், வெல்லம் கலந்து செய்த சாதம், இவைகளை மூல மந்திரம் சொல்லி நிவேதனம் செய். பக்தர்களுக்கு அந்த நிவேதன அன்னத்தை பகிர்ந்து அளித்த பின், ஆசமனம் செய்து தாம்பூலம் கொடு. அஷ்டோத்தர சதம் -108 முறை நாம ஜபம் பண்ணு. ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள், தண்டவத் நமஸ்காரம் என்ற வழக்கமான முறையில் செய்து, தேவனை யதாஸ்தானத்தில் வை. விருந்தினர்களுக்கு அளித்தபின் மீதியானதை சாப்பிடு. மறு நாளும் அதே போல என்று ஒரு பக்ஷம், இந்த விரதத்தை செய். தினமும் பூஜை முடிந்தபின் முடிந்தவரை சிறுவர்களுக்கும், அந்தணர்களுக்கும் அன்னமிட வேண்டும், பன்னிரண்டு நாள் இந்த விரதம் செய்து முடித்து, – ப்ரதமையில் இருந்து த்ரயோதசி வரை- விரத சமயம் சுத்தமாகவும், அசத்தான கதைகள் பேசுவதை தவிர்த்தும், வாசுதேவ பாராயணமே நினைவாக எந்த ஜீவ ஹிம்சையும் செய்யாமல் த்ரயோதசியில் சாஸ்திர முறைப்படி விஷ்ணுவுக்கு ஸ்னானம் முதலான உபசாரங்கள், பூஜைகள் செய்து வா. விவரம் அறிந்த பெரியவர்களை உதவிக்கு வைத்துக் கொள். ப்ரும்மா, பரம சிவ ரூபங்களையும் தியானம் செய்து கிரமமாக பூஜைகளைச் செய்யவும். ஆசார்யனாக வந்து உதவிகள் செய்த ஞானியான குருவுக்கு நல்ல ஆடைகள், ஆபரணங்கள், நல்ல உணவு இவைகளால் திருப்தி படுத்த வேண்டும், அதன் பின் முடிந்தவரை தானங்கள் அளித்து, நல்ல உணவளித்து வந்தவர்களை மரியாதை செய்து அனுப்ப வேண்டும். அதன் பின் ந்ருத்தம், வாத்யங்கள், கீதம் ஸ்வஸ்தி வாசகங்கள் என்ற பதினாறு உபசாரங்களை செய்து விரதத்தை முடிக்க வேண்டும். இது தான் பயோ விரதம் என்ற முறையில் பகவானை பூஜிப்பது. ப்ரும்மாவுக்குச் சொன்னது போலவே உனக்கும் விவரமாக சொல்லியிருக்கிறேன்.
மஹாபாகே! ஆத்ம சுத்தியோடு இந்த விரதம் செய்து பகவானை பூஜை செய். அவர் தவம், தானம், விரதம், யாகங்கள் இவைகளில் மிக மகிழ்ச்சியடைவார். பத்ரே! சிரத்தையுடன் செய், அவர் அருளால் உன் துன்பம் விலகும்.
नमस्तुभ्यं भगवते पुरुषाय महीयसे ।सर्वभूतनिवासाय वासुदेवाय साक्षिणे ॥ २९॥
नमोऽव्यक्ताय सूक्ष्माय प्रधानपुरुषाय च ।चतुर्विंशद्गुणज्ञाय गुणसङ्ख्यानहेतवे ॥ ३०॥
नमो द्विशीर्ष्णे त्रिपदे चतुःशृङ्गाय तन्तवे ।सप्तहस्ताय यज्ञाय त्रयीविद्यात्मने नमः ॥ ३१॥
नमः शिवाय रुद्राय नमः शक्तिधराय च ।सर्वविद्याधिपतये भूतानां पतये नमः ॥ ३२॥
नमो हिरण्यगर्भाय प्राणाय जगदात्मने ।योगैश्वर्यशरीराय नमस्ते योगहेतवे ॥ ३३॥
नमस्त आदिदेवाय साक्षीभूताय ते नमः ।नारायणाय ऋषये नराय हरये नमः ॥ ३४॥
नमो मरकतश्यामवपुषेऽधिगतश्रिये ।केशवाय नमस्तुभ्यं नमस्ते पीतवाससे ॥ ३५॥
त्वं सर्ववरदः पुंसां वरेण्य वरदर्षभ ।अतस्ते श्रेयसे धीराः पादरेणुमुपासते ॥ ३६॥
अन्ववर्तन्त यं देवाः श्रीश्च तत्पादपद्मयोः ।स्पृहयन्त इवामोदं भगवान् मे प्रसीदताम् ॥ ३७॥
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின் அதிதி பயோ விரத வர்ணனம் என்ற பதினாறாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 63
அத்யாயம்-17
ஸ்ரீ சுகர் சொன்னார்: ராஜன்! அந்த தாயாரும், கணவன் சொன்னபடியே பயோவ்ரதம் என்பதை முறையாகச் செய்தாள். பன்னிரண்டு நாட்கள் கடந்தன.பகவானை அனவரதமும் மனதில் நினைத்தபடி வேறு சிந்தனையோ, இடையூறோ இன்றி புத்தியினால் மனதை கட்டுக்குள் வைத்தவளாக தவம் போலவே செய்தாள். அவளிடம் ஆதி புருஷனான பகவானே வந்தான்.. சங்க சக்ர கதா தாரியாக, நான்கு புஜங்களுடன் நின்றவரைப் பார்த்து அதிதி பரபரப்புடன் எழுந்து நின்றாள். முழு உடலும் நிலத்தில் பட விழுந்து நமஸ்கரித்தாள். மகிழ்ச்சியில் திக்கு முக்காடினாள். எழுந்து கை கூப்பியவாறு பேச வாயெழாமல் கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருக, உடல் புல்லரிக்க, பார்த்தபடியே பேசாமல் நின்றாள். அன்புடன் ஸ்ரீ ஹரியை, ரமாபதி, யக்ஞபதி, ஜகத்பதி என்பவரை துதித்தாள்.
யக்ஞேச, யக்ஞ புருஷா. அச்யுதா! தீர்தபாதா, தீர்த்த-நீரில் ஆஸ்ரயம்-இருப்பிடம் கொண்டவனே, உன்னை அண்டியவர்களின் இகலோக துன்பங்களை விரட்டியடிப்பவனே, தீன நாதா, எங்களுக்கும் நன்மையை செய்வாயாக.
விஸ்வமே நீ, உலகத்தின் தோற்றம், நிலை பெறுதல், மறைதல் என்ற செயல்களைச் செய்பவன், பூமியின் புரு -உருவாக்கும் சக்தியை ஏற்றுக் கொண்டாய், பூர்ண போதன் நீ, என்றும் சீரான உடல் நிலை உள்ளவன், தானே எடுத்துக் கொண்டு தாமச விருத்தியும், உடைய ஸ்ரீ ஹரியே நமஸ்காரம்.
உடல் உள்ள ஜீவன் களுக்கு வாழ்நாள் மிக அவசியம். லக்ஷ்மீ கடாக்ஷம் அளவில்லாமல் இருக்க வேண்டுவர். சகல யோக குணம் உள்ள அனந்தன், அனைத்தும் உன்னுள் அடக்கம் என்று சொல்லும் ஞானியர் உன் தரிசனமே ஆனந்தம் என்று சொல்வர். உன்னிடம் என்ன யாசிப்பேன்? சபத்னியின் மக்களை வெற்றி கொள்ள வேண்டும் என்று எண்ணியது தற்சமயம் தேவையே யில்லை.
அனைத்து ஜீவன் களிலும் உள்ளுறை பகவான் – க்ஷேத்ரக்ஞன்- சொன்னார்.:
தேவ மாதா! நீ வேண்டிக் கொண்டாய். வெகு நாட்களாக மனதில் இருந்த குறை உன் புதல்வர்கள் சக்களத்தி மக்களிடம் செல்வத்தை இழந்து தங்கள் பதவியையும் இழந்தனர். எங்கோ மறைவிடத்தில் இருக்கிறார்கள் என்பது உன் கவலை. அவர்களை வென்று திரும்பவும் உன் புதல்வர்கள் ஜயஸ்ரீயை -வெற்றி லக்ஷ்மியை பெற வேண்டும் என்பது தானே உன் விருப்பம். உன் மக்கள் வெற்றி பெறவும், அவர்கள் வீட்டுப் பெண்கள் துக்கத்துடன் கண்ணீர் விடுவதையும் பார்க்க விரும்புகிறாய். உன் புதல்வர்கள் தேவ லோகத்தில் செல்வ செழிப்பில், திரும்பப் பெற்ற பதவி, பெருமைகளுடன் தேவலோகத்தில் விளையாடி களிக்க வேண்டும் என்று விரும்புகிறாய். அனேகமாக அந்த அசுர படையின் தலைவன், அவனைக் கடந்து செல்ல முடியாது என்பது என் கருத்து, தேவி. அவர்களுக்கு தெய்வ பலமும், அந்தணர்களான குரு க்ருபையும் தான் அவன் உயர்வுக்கு காரணம். உடல் பலம் விக்ரமம் மட்டும் அவனளவு சுகங்களை பெற முடியாது. உன் விரத பலன் என்பதை எதைத் தருவது என்று யோசித்தபின் நான் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். என்னை பூஜித்து செய்த விரதம் வீணாகக் கூடாது. அதற்கான பலன் கிடைத்தே ஆக வேண்டும். சிரத்தைக்கு ஏற்ற பலன் என்பது நியதி.
நீ என்னை அர்ச்சித்தது உன் புதல்வர்களின் நன்மைக்காக. பயோ வ்ரதம் உடனடியாக பலன் தரும். காஸ்யபரும் தவத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கும் உனக்கும், என்னுடைய அம்சத்துடன் மகனாக பிறக்கிறேன். உடனடியாக உன் கணவரிடம் செல் பத்ரே!! நேர்மையே உருவானவர் அவர். என்னைக் கண்டதையும், இந்த ரூபத்தையும் சொல். இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் நல்லபடியாக நடக்கும், இது தேவ ரகசியம் என்றவர் அவள் கண் முன் மறைந்து விட்டார்.
அவளும் உடனே தன் கணவன் இருக்குமிடம் ஓடிச் சென்றாள். மிகுந்த பக்தியுடனும், தன் விரதம் பலித்த திருப்தியுடனும், சமாதி யோகத்தில் இருந்தவரை எழுப்பி விஷயத்தைச் சொன்னாள். அவரும் சம்மதித்து வெகு நாட்களாக தவத்தில் இருந்ததால் மரத்தில் மறைந்திருக்கும் அக்னி போல பாது காத்திருந்த தன் வீர்யத்தை அவளுக்கு அளித்தார்.
அதிதியின் வயிற்றில் கரு வளரத் தொடங்கியதும், ப்ரும்மா அதை அறிந்து சனாதனன் பகவான் தான் அவதரிக்கப் போகிறார் என்பதால் ரகசியமான பெயர்களால் அவரை துதித்தார்.
ப்ரும்மா சொன்னார்: ஜய உருகாய- பலவிதமாக புகழ் பெற்ற உனக்கு ஜயம். மஹா பராக்ரமம் உடையவன் நீ, உனக்கு நமஸ்காரம். அதிதியிடம் முன்பு ப்ருஸ்னி என்ற பெயரில் இருந்த சமயமும் வேதங்களை காப்பாற்றினாய். உலகில் மனிதனாக அவதாரம் செய்யத் துணிந்த உனக்கு நமஸ்காரம். அது உனக்கு புதிதல்ல, உன் பெயரே, விஷ்ணு- எங்கும் வியாபித்து இருப்பவன் என்பதே. வேத கர்பன், வேதமே நீ தான், என்றும், உன் ரூபங்கள் -பத்ம நாபன், சிபிவிஷ்டன் என்ற மகேஸ்வரன் என்றும் ஆன மகாவிஷ்ணு. – ஆதி புருஷன், ப்ரளய காலத்தில் அனைத்தையும் உன்னுள் வத்திருந்து அடுத்த யுகத்தில் பிறக்கச் செய்கிறாய் என்றும் அறிவோம். நீயே கால ரூபன். நதி வெள்ளத்தில் தன்னுடன் இலை தழைகளையும் அடித்துச் செல்வது போல மூவுலகையும் உன் கால சக்தி, ப்ரளயத்தை உருவாக்கி அனைத்தையும் அடித்துச் செல்கிறது, கடலில் மூழ்குபவனுக்கு கிடைத்த படகு போல நீ தற்சமயம் அனைத்தையும் இழந்து தவிக்கும் தேவ சமூகத்துக்கு பிடிமானமாக ஆவாய்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின் வாமன ப்ராதுர்பாவம் என்ற பதினேழாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 28
அத்யாயம்-18
இவ்வாறு ப்ரும்மாவே துதி செய்த பின், அதிதியின் மகனாக, அவதரித்தார். சங்க, சக்ர, கதை,பத்மம் தாங்கிய சதுர்புஜங்கள், பீதாம்பரனாக, நளினம்-தாமரை போன்ற அகன்ற கண்கள் , மேக ஸ்யாமளன், மகர குண்டலங்கள், அதன் ஒளியில் பிரகாசிக்கும் கன்னங்கள், ஸ்ரீவத்சம் விளங்கும் மார்பும், அங்கதங்களும், வளையங்களும் அலங்கரிக்க, கிரீடமும், இடையில் காஞ்சி, கால்களில் நூபுரமும், வனமாலையும், ஸ்ரீ ஹரி தன் இயல்பான மந்த ஹாஸமான முகத்துடன் தரிசனம் அளித்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த கௌஸ்துபம் கூட தன் ஒளியை இழந்தது போல அந்த சிரிப்பு தெரிந்தது.
திசைகள் பிரகாசமாக ஆயின. சமுத்திரங்கள் பொங்கி மகிழ்ச்சியை வெளிப் படுத்தின. ப்ரஜைகள் மகிழ்ந்தனர். அந்த சமயத்து பருவ நிலை மனோகரமாக ஆயிற்று. வானம், அந்தரிக்ஷம், பூமி, அக்னி ஜிஹ்வா- யாகங்கள்,பசுக்கள், அந்தணர்கள், மிகவும் மகிழ்ந்தனர். மலைகளும் கூட மகிழ்ந்தவையாக காட்சி தந்தன.
ஸ்ராவண மாதத்து (ஆவணி) ஸ்ரவண- திருவோண நக்ஷத்திரத்தில், அபிஜித் முஹூர்தத்தில் ப்ரபு, அவதரித்த சமயம், மற்ற நக்ஷத்திர, தாரா கணங்கள், அவருடைய பிறப்பை கொண்டாடின. த்வாதசி வரவும், சூரியன் மத்யான்ன வேளையில் இருந்த சமயம், விஜயா எனப்படும். பகவான் அவதரித்த காலம்.
சங்க துந்துபிகள் முழங்கின. ம்ருதங்க பணவ அக கோமுக என்ற தாள வாத்யங்கள் வாசிக்கப் பட்டன. விசித்ரமான பல வாத்யங்கள் சேர்ந்து ஒரே சமயத்தில் வாசிப்பது போல நாதம் இனிமையாக கேட்டது.
அன்புடன் அப்சரஸ்கள் நடனம் ஆடினர். கந்தர்வ முக்கியஸ்தர்கள் பாடினர். முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள், அக்னிகள், அனைவரும் குதூகலமாக வளைய வந்தனர். சித்த வித்யாதர கணங்கள், சகிம்புருஷ, கின்னரர்கள், சாரணர்கள், யக்ஷ, ரக்ஷர்கள், சுபர்ணன்- கருடன் முதலான பறவைகள், புஜகோத்தமா:- சிறந்த நாகங்கள், அனைவரும் பாடிக் கோண்டோ, புகழ்ச்சியாக ஏதாவது சொல்லிக் கொண்டோ, ஆடிக் கொண்டோ, பலரும் பின் தொடர, அதிதியின் ஆஸ்ரமபதம் வந்து பூக்களை வாரி இறைத்தனர்.
தன் வயிற்றில் பிறந்த பாலகனை, பரம புருஷன் என் தெரிந்து கொண்டு சந்தோஷம் அடைந்தாள். கஸ்யபரும் ஜய ஜய என்று சொன்னார். அந்த சிறிய உருவத்துக்கு ஏற்ற ஆபரணங்களை விபு தரித்துக் கொண்டார். அவைகளுடன் வாமனனாக வளர்ந்தார். நாடகத்தில் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, சிறுவன், பெரியவனாக ஆவது போல,சற்று நேரத்திலேயே அத்யயனம் செய்யும் மாணவன் போல தோற்றம் அளித்தார்.
மஹரிஷிகள் அதைக் கண்டு திகைத்தாலும், செய்ய வேண்டிய சம்ஸ்காரங்களை ப்ரஜாபதி கஸ்பருடன் சேர்ந்து செய்தனர். காயத்ரி மந்திரத்தை உபதேசிக்கும் உபனயனம் என்ற சம்ஸ்காரத்தை செய்தனர்.
காயத்ரி மந்திர அதிகாரியான சவிதா தானே வந்தாள். ப்ருஹஸ்பதி ப்ரும்ம சூத்ரம் அளித்தார். கஸ்யபர் மேகலை என்பதை அணிவித்தார். பூமி க்ருஷ்ணாஜினம் என்ற கறுப்பு மானின் தோலைக் கொடுத்தாள். சந்திரன் தண்டம், வனஸ்பதிகள் கௌபீனம் எனும் உடையை, தாயார் தேவலோகத்து குடையைக் கொடுத்தாள். அவரே ஜகத்பதி, தேவலோகத்து சத்ரம் என்பது என்ன உயர்வு ? கமண்டலுவை வேத கர்பன் கொடுத்தார். தர்பை எனும் புல் கட்டுகளை சப்த ரிஷிகள் கொடுத்தனர். சரஸ்வதி தேவி தன்னுடைய அழியாத அக்ஷமாலை என்பதைக் கொடுத்தாள். யக்ஷ ராஜா ஒரு பாத்திரத்தைக் கொடுத்தான். பிக்ஷாம் தேஹி எனவும், சாக்ஷாத் ஜகதம்பா சதீ, பிக்ஷை அளித்தாள். ப்ரும்மவர்சஸ் நிரம்பிய- தவம்,யோகம், அனுபவம் இவைகளால் மேம்பட்ட அறிஞர்கள், ப்ரும்ம ஞானம் அடைந்தவர்கள், ஆசீர்வதித்து அந்த உபனயனம் ஆன ப்ரும்ம சாரியை, தந்தையான மாரிஷன்- மரீசியின் புதல்வன், காஸ்பர் தானும் அன்புடன் ஆசீர்வதித்தார்.
பலி சக்ரவர்த்தியின் யாகத்தில் அனைவருமாக அக்னியை மூட்டி, சமித் முதலிய யாகத்திற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்து மிகப் பெரிய யாகம் செய்தனர். அஸ்வமேத யாகம் செய்து வரும் பலி யஜமானனாக இருக்க, பார்கவர் சுக்ரசாரியார் மற்றும் அவர் வழி வந்தவர்கள் முறைபடி வேத வித்துக்களுடன் யாகத்தை செய்தனர்.
இந்த தேவ பக்கத்தில் இருந்த கஸ்யபரின் ரிஷிகளும், மற்றவர்களும் கூட்டமாக அந்த யாகத்தைக் காணச் சென்றனர். பூமியே அதிர்ந்தது அவர்களின் பாரத்தால். நர்மதை நதியின் வடக்கு பகுதியில் பலியும், ப்ருகு, கச்ச என்பவர்கள், (ப்ருகு வம்சத்தினர்) உத்தமமான யாகத்தை விதி முறைகள் தவறாமல், செய்தனர். ஸூரியனே இறங்கி வந்து விட்டாரோ எனும்படி அவர்கள் தங்கள் தேஜஸால் சபையை நிரப்பியிருந்தனர்.
அவர்களையும் மீறி இந்த வாமனனுடைய தேஜஸ் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. சூரியனே இறங்கி வந்து விட்டதா, விபாவசுவா, சனத் குமாரர்களார என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்தது. அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கையிலேயே, சிறுவன் வாமனன் கையில் தண்டம், குடை, ஜலம் நிரம்பிய கமண்டலு, இவைகளுடன் அஸ்வமேத யாக சபையில் ப்ரவேசித்தான்.
மௌஞ்சி எனும் புல்லால் இடையில் கட்டிய மேகலை, மான் தோல் ஆடைக்கு மேல் தெரிந்த புது உபவீதம் (பூணூல்) மாயா மாணவனான ஸ்ரீ ஹரியை ஏதோ வாமனன் (பதத்தின் பொருள்- உயரம் குறைந்தவன்) என்று தள்ள முடியவில்லை. பிரவேசித்தவுடன் ரிஷிகளும் அவர்களின் சீடர்களும், கையில் யாக அக்னி, மற்றும் பாதி யாகத்தில் எப்படி இருந்தார்களோ அதே போல எழுந்து நின்று சிறுவனின் தேஜஸால் கவரப் பட்டவர்களாக ஆச்சர்யம் வெளிப் பட மனோரமம், கண்களுக்கு விருந்தாக இருந்த அழகிய ரூபம், என்ன அனுரூபமான உடல் வாகு என்று வியந்தவர்களாக வாமன ப்ரும்மசாரிக்கு ஆசனத்தை அளித்தனர்.
அங்கு இருந்த பலி சக்ரவர்த்தி, யஜமானன் என்பதால் தானே வந்து ஸ்வாகதம் சொல்லி வரவேற்று குனிந்து அவர் பாதங்களில் நீர் விட்டு அந்த நீரை தலையில் தெளித்துக் கொண்டார். பகவானுடைய பாதத்தில் பட்ட நீர் ஜனங்களின் பாபங்களை போக்கும். சுமங்களமான எந்த நீரை (கங்கை பகவானின் பாதத்தில் தோன்றியதாக வரலாறு) தேவ தேவனான கிரீசன் சந்த்ரமௌலி தன் தலையில் பக்தியுடன் தரித்துக் கொண்டிருக்கிறாரோ, அதே போல விவரம் அறிந்த தர்மவான் பலி சக்ரவர்த்தியும் பக்தியுடன் பாத ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டார். அதன் பின் அந்த வாமன ப்ரும்மசாரியைப் பார்த்து, ப்ரும்மன்!, நல்வரவாகுக. , ஸ்வாகதம் , நமஸ்துப்யம்- வணக்கம். நான் என்ன செய்ய வேண்டும்? பார்த்த உடனேயே சாக்ஷாத் ப்ரும்ம ரிஷி என்று தெரிந்து கொண்டேன். இன்று என் குலம் தழைத்தது. என் முன்னோர்கள் திருப்தி அடைந்தனர். எங்கள் குலம் பவித்ரமாகியது. இந்த யாகம் கௌரவிக்கப் பட்டது. பகவானான தங்களே தேடி வந்து விட்டீர்கள். எங்கள் இல்லங்கள் பாவனமாகின. இன்று நாங்கள் செய்த வேள்வியின் அக்னிகள் நல்ல விதிப்படி ஹோமம் செய்யப்பட்டு அந்தண சிறுவனே, தங்கள் பாதங்களை வணங்கிய ஜனங்களுடன் எங்கள் குறைகள் தீர்ந்தன, இந்த பூமியே புனிதமானது உங்கள் பாதம் பட்டதால்.
ப்ரும்மசாரி சிறுவனே, எது வேண்டுமானாலும் கேள். எதையெல்லாம் விரும்புகிறாயோ, கேள். நீ யாசகன் அல்ல, அந்தண சிறுவன். பூமியா, பொன்னா, நல்ல உணவா, அன்னம் பலவிதமாக ருசியாக தயாராக உள்ளன, மணம் செய்து கொள்ள பெண் வேண்டுமா? நிறைவான கிராமங்கள், எல்லா வசதிகளுடன், குதிரைகள், யானைகள் நிரம்பியுள்ளன, அவை வேண்டுமா? தகுதியான அதிதி உன்னை விட வேறு யார் இருக்க முடியும், ரதங்களா, எது வேண்டுமானாலும், கேள். – என்றான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின் பலி வாமன சம்வாதோ என்ற பதினெட்டாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 32
அத்யாயம்-19
ஸ்ரீ சுகர் சொன்னார்: வைரோசனி- விரோசனன் மகன் – சொன்னதைக் கேட்ட பகவான், அழகாக தர்மம் நிறைந்த சொற்கள் என்று மிகவும் மகிழ்ந்தார். பலி சக்ரவர்த்தியை பாராட்டி பின் வருமாறு சொன்னார்:
ஸ்ரீ பகவான் சொன்னார்: இந்த உன் வார்த்தைகள் மிகவும் சிறப்பானவை. அழகாக பேசினாய். ஜனதேவ-அரசனே! உன் குலத்துக்கு ஏற்றது. தர்ம சாஸ்திரம் சொல்வதை அனுசரித்தது. உன் புகழை வளர்க்கும். இதற்கு ப்ரமாணம் ப்ருகு குலத்தினர், சுக்ராசாரியார் அவரது சிஷ்யர்கள், மற்றும் அவரைச் சார்ந்தவர்களும். பாட்டனார் குல மூத்தவர் ப்ரஹ்லாதன் பரலோக விவகாரங்களில் ப்ரமாணம். அதனால் இன்றும் தாரா கணங்களின் இடையில் சந்திரனாக புகழ் வாய்ந்தவனாக இருக்கிறான். அந்த குலத்தில் பிறந்தவன் அறிவும் ஆற்றலும் இல்லாமல் இருப்பது அரிது. லோபியாகவோ, கருமியாகவோ தருவதாகச் சொல்லி மாற்றுச் சொல் சொல்பவர்களும் அல்ல. அதுவும் அந்தணர்களுக்கு வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்கள். மனிதர்கள் தீர்த ஸ்தானங்களில் யாசகர்களிடம் பாராதது போல செல்வதுண்டு. யுத்தத்திலும், தைர்யம் இல்லாத அரசர்கள் கண்டு கொள்ளாது செல்வதும் உண்டு. உன் குலத்தில் அது போல யாரும் இல்லை. அதற்கும் முன் ஹிரண்யாக்ஷன் தன் கதையே ஆயுதமாக, தன் பலமே ஸகாயமாக உலகம் முழுவதும் தேடியும் சமமாக அவனுடன் போரிட யாரும் இல்லை. பூமியை சுருட்டி எடுத்துக் கொண்டு ப்ரதி பக்ஷன்- எதிர் நின்று போர் செய்யும் வல்லமை உடையவன் கிடைக்கவில்லை. போரிடுபவனைத் தேடி அலைந்தான். வராக அவதாரத்தையும், பூமியை உத்தரணம் செய்ததையும் ஹிரண்யாக்ஷனுடன் யுத்தம் செய்து ஜயித்தாலும் பகவான் அதை ஜயமாக நினைக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டினார். சம மான வீரன். போரில் வெற்றி தோல்வி நிச்சயம் இல்லை என்பதால். தன் சகோதரன் போரில் மடிந்தான் என்று ஹிரண்யகசிபு அறிந்தவுடன், சகோதரனைக் கொன்ற விஷ்ணுவை முறியடிப்பேன் என்று தீவிரமாக விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டமே சென்றான். க்ருதாந்தன்- யமன் போல ஸூலத்தோடு வந்து கொண்டிருந்த ஹிரண்ய கசிபுவை பார்த்து, அந்த சந்தர்பத்துக்கு ஏற்றபடி என்ன செய்வது என்று யோசித்தார். காலம் அறிந்தவர், அவனுடைய முடிவு அதற்கான காலத்தில் தான் வரும் என்பதை அறிந்தவர்.
நான் எங்கே சென்றாலும் இவன் ம்ருத்யு போல தொடர்ந்து வருவான். இவன் காண முடியாத இடம் இவன் ஹ்ருதயமே. அதனால் அவன் ஹ்ருதயத்துள் ப்ரவேசிக்கிறேன் என்று தீர்மானித்தார். ஸூக்ஷ்ம தேகம் எடுத்துக் கொண்டு, வேகமாக எதிர்த்து கொல்ல ஓடி வரும் எதிரியின் ப்ராண ரந்த்ரத்தில் (மூச்சுக் குழல்) ப்ரவேசித்து விட்டார். அந்த வீரன் சூன்யமாக இருந்த வைகுண்டத்தைப் பார்த்து கோபம் கொண்டான். பெரும் குரலில் அழைத்துப் பார்த்தான். பூமி, வானம், குகைகள் அந்தரிக்ஷம், என்று எல்லா இடங்களிலும் தேடித் தேடி விஷ்ணுவைக் காணாமல், என் சகோதரனைக் கொன்றவனை உலகம் முழுவதும் தேடி விட்டேன், ஓடியவன் திரும்பி வந்து தானே ஆக வேண்டும், என் உயிர் உள்ளவரை இந்த விரோதம் போகாது என்றான். வைரம் என்ற விரோதம் ஒருவன் மனதை விட்டு அகலாது, அறியாமையில் விளைவது, நான் என்ற தன் நம்பிக்கையில் வளருவது, மன்யு என்று இதை மிக கொடியவனாக சொல்வார்கள். அவன் மகன் ப்ரஹ்லாதன் உன் தந்தை, வித்வான், குரு, அந்தணர்களிடம் பிரியமாக இருப்பவன், தன் வாழ் நாள் முழுவதும் யாசிப்பவர் யாராக இருந்தாலும் வேண்டியதைக் கொடுத்தான். தேவர்கள் கூட அவனுடன் நட்பாக இருந்தனர். நீ அவர் குணங்களைக் கொண்டு பிறந்திருக்கிறாய். க்ருஹஸ்தர்கள் ஆசரிக்கும் தர்மங்களை அறிந்திருக்கிறாய். உனக்கு முன் பிறந்தவர்கள் ஸூரர்களாக புகழ் வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அதனால் ஒரு சிறு துண்டு நிலம் உன்னிடம் யாசிக்கிறேன். நீ வரதன்- அளவின்றி கொடுப்பவன், தானி -வள்ளல் என்பவர்களில் சிறந்தவன். தைத்யேந்த்ரா! மூன்றடி நிலம் என் காலால் அளந்து தர வேண்டுகிறேன். ராஜன்! வேறு எதுவும் வேண்டேன். ஜகதீஸ்வரன், எல்லையின்றி கொடுக்கும் வள்ளல், என்பது தெரிந்தே, எனக்கு தேவை என்பதை மட்டுமே கேட்கிறேன். அது தான் பெரியவர்கள் சொல்வது- தேவையானதை மட்டுமே தானமாக பெறுவதால் ப்ரதிக்ரஹம்,யாசிப்பது என்ற பாபம் அண்டாது என்பர்.
பலி சக்ரவர்த்தி இதைக் கேட்டு அஹோ! அந்தண சிறுவனே, நீ சொல்வது வயதான அந்தணர்களுக்கு சரி. நீ சிறுவன், உலகம் அறியாதவன். உன் தேவை என்ன என்பதைக் கூட அறியாதவன். இவ்வளவு நேரம் பேசி விட்டு, மூவுலக நாயகனாக இருக்கும் என்னிடம் மூவடி நிலம் கேட்கிறாய். ஜம்புத்வீபத்தையே கேட்டாலும் தருகிறேன். என்னிடம் தானம் பெற்றவன், மற்றொருவரித்தில் தானம் பெற நிற்கக் கூடாது. அதனால் ப்ரும்மசாரி சிறுவனே! மேலும் மேலும் விருத்தி அடையச் செய்யும், பூமியை தானமாக தருகிறேன்.
ஸ்ரீ பகவான் சொன்னார். மூவுலகிலும் பிரியமான வஸ்துக்கள் நிறைய தானம் செய்திருப்பாய். தன் அடக்கம் இல்லாதவனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது தான். அதுவே ஆத்மாவை அறிந்தவன், ஜிதேந்திரியன் இவைகளை பொருட்டாகவே நினைக்க மாட்டான். மூன்று அடி நிலத்தில் சந்தோஷம் அடையாதவன், சப்த த்வீபங்களையும் கொடுத்தால் கூட மன நிறைவை அடைய மாட்டான். சப்த த்வீப – ஏழு தீவுகளையும் ஆளும் சக்ரவர்த்தி பதவி கிடைத்தால் கூட த்ருஷ்ணா – பேராசையுடையவன் போதும் என நினைக்க மாட்டான். எதேச்சையாக தனக்கு கிடைத்த செல்வம், சுகம் இவைகளில் திருப்தியடைபவன் சந்தோஷமாக இருப்பான்.
அர்த்த காமங்களில் நிறைவு அடையாத மனிதன் மீண்டும் மீண்டும் திருப்தியில்லாத ஜீவனாகவே இருப்பான். ஆசைகளை விட்டவன் தான் முக்தன்-விடுபட்டவன். அவன் தேஜஸ் வளரும். அது போல தன்னடக்கம் உள்ளவனுடைய அசந்தோஷம் அல்லது அத்ருப்தி அவனுடைய சாதகமே தீர்த்து விடும். அக்னியை தண்ணீர் அணைத்து விடுவது போல. அதனால் நான் வேண்டுவது எனக்கு மூன்றடி நிலம் மட்டுமே. அதிலேயே நான் மகிழ்வேன். உபயோகமான பொருள் இருந்தாலே போதும் என நினைப்பவன்.
ஸ்ரீ சுகர் சொல்கிறார், இப்படி கேட்டவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே பலி சக்ரவர்த்தி தனது இடது கையால் ஜல பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, கேட்ட அளவு மூவடி நிலம் தர சித்தமாக, வாங்கிக் கொள் என்றான். அதைக் கண்ட சுக்ராசாரியார், அசுர ராஜனைப் பார்த்து, ஏதோ சூது, விஷ்ணுவின் உண்மையான எண்ணம் வேறு என்று சந்தேகம் கொண்டவராக சிஷ்யனை தடுத்த படி, ‘விரோசனன் மகனே! பொறு. இவன் சாதாரண மனிதனல்ல. சாக்ஷாத் விஷ்ணுவே. கஸ்பருடைய மகனாக அதிதியின் வயிற்றில் பிறந்தவன். தேவர்களின் காரியத்தை செய்து தருவதற்காக வந்திருக்கிறான். இவனுக்கு நீ தருவதாக வாக்களித்திருக்கிறாயே, அனர்த்தம் என்பதை அறியாமல், இது நல்லதல்ல, என் மனதில் சந்தேகம் வருகிறது, தைத்யர்களுக்கு பெரும் கெடுதல் சம்பவிக்கும் என நினைக்கிறேன். மாயையால் மாணவன் போல வந்து நிற்கிறான். ஸ்ரீ ஹரியே இவன். உன்னிடமிருந்து ஐஸ்வர்யம், லக்ஷ்மி கடாக்ஷம், தேஜஸ், புகழ், நீ கற்ற கல்வி அனைத்தையும் பிடுங்கி சக்ரனுக்கு- இந்திரனுக்கு தரப் போகிறான். மூன்றடி நிலத்தால் லோகங்களை அளந்து விட விஸ்வகாயம்- விஸ்வரூபம் எடுத்துக் கொள்ளலாம். அதன் பின் மூடா! எப்படி வாழ்வாய்? பூமி, தேவலோகம் இவைகளை அளக்க இரண்டியானால், மூன்றாவது எங்கே வைப்பான்? மகனே! வாக்கு கொடுத்து விட்டேன் என தானம் செய்ய முனைந்து நிற்கிறாய். தகுதியில்லாத பாத்திரத்தில் தானம் இடுவது கூட பாபமே, நரகம் போகும் வழி அது. தன்னை மீறி தன்னையே அழித்துக் கொள்ளும் தானத்தை புகழ்ந்து சொல்வதில்லை. தானம், யக்ஞம், தவம், செயல் இவை உலகின் வாழும் வழிகள். தர்மத்திற்கு ஒரு பங்கு, தன் புகழை வளர்க்க ஒரு பங்கு, செல்வம் சேர்க்க ஒரு பங்கு, காமத்தின் செலவு ஒரு பங்கு, தன் மக்களுக்கு ஒரு பங்கு என்று ஐந்தாக பிரித்து செலவழிக்க வேண்டும். அதுதான் இந்த உலகிலும், பர லோகத்திலும் சுகம் தரும்.
அசுரோத்தமா! இன்னும் கேள். இது போன்ற சங்கடம் வரும் காலத்தில் நம் சாஸ்திரங்கள் என்ன அனுமதிக்கின்றன என்று சொல்கிறேன். ஓம் என்று சொல்லி விட்டால் அது சத்யமே. அதை மறுத்தால் அசத்யம் என்பது பொது விதி. மரத்தின் வேருக்கு நீர் விட்டால் அது புஷ்பங்களையும் பழங்களையும் தரும் என்பது உண்மை. ஆனால் அந்த மரமே சாய்ந்து விட்டால் நீ வேரில் விடுவது என்னாகும்? மரம் உயிரின்றி பட்டுப் போன பின் வேரில் ஜலம் விடுவது எப்படி பலன் இல்லையோ, அதே போல,
நீ அசத்யம் என்று நினைப்பதும் – உன்னையே அழித்து விடும். சந்தேகமேயில்லை. அதனால் இதற்கு ஒரு விதி விலக்கும் தரப் பட்டிருக்கிறது. கவனம் இன்றி ஓம் என்று சொன்னாலோ, பெண்ணை மகிழ்விக்க, வதூ வரர்களின் தகுதியை உயர்வாக சொல்வதில், ப்ராண சங்கடத்தில், தொழில் முறையில் தன் விருத்தியை-ஜீவனோபாயமாக உள்ள செயலை காத்துக் கொள்ள, பசுக்களை, அந்தணர்களை காப்பாற்ற, அநியாயமாக ஏதோ ஒரு உயிர் வதைக்கப் படுகிறது, அது ஹிம்சை என்று தெரிந்தால் அதை தடுக்க சத்யம் என்பது அந்த சமயத்திற்கேற்ப பொருள் மாறும். தன்னைக் காத்துக் கொள்ள அசத்யமும் சத்யமே.
( இது வரை மஹா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த எட்டாவது அத்தியாயத்தில் வாமன ப்ராதுர்பாவம் என்ற பத்தொன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்- ஸ்லோகங்கள்-43)
அத்யாயம்-20
ஸ்ரீ சுகர் சொன்னார்: குல ஆசாரியன் இவ்வாறு சொல்லவும், பலி சக்ரவர்த்தி சற்று யோசித்து நிதானமாக குரு சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டு பதில் சொன்னான்.
பகவான் சொன்னது சரியே. குடும்பஸ்தர்களுக்கு இந்த தர்மமும், விதி விலக்கும் தேவையே. இதனால் அர்த்தம், காமம், புகழ், வ்ருத்தி-தொழில் இவைகள் பாதிக்கப் படாமல் இருக்கும். ஆனால் நான் செல்வத்தின் ஆசையால் இந்த அந்தண சிறுவனுக்கு தர மறுப்பது சரியா? ப்ரஹ்லாதன் மகன் தருவதாகச் சொல்லி பின் தரவில்லை என்பது அபகீர்த்தி இல்லையா? கிதவ- வேண்டும் என்றே அசத்யமாக நடப்பவன், போல. நீங்கள் தற்சமயம் சொன்னதற்கு மேல் வேறு தர்மம் இல்லை என அறிவேன். எதானாலும் விளைவை நான் பொறுத்துக் கொள்கிறேன். வாக்கு மீறினான் என்ற அதர்மத்தை விட என் கஷ்டம் பெரிதல்ல. எனக்கு பயம் இல்லை. நரகம் வாய்க்கும் என்றோ, செல்வம் முழுவதும் போகும் என்றோ, இதுவரை அனுபவித்த சுகங்கள் இனி இராது என்றோ, இந்த பதவி போகும் என்றோ, இந்த சிறுவனுக்கு கொடுப்பதால் என் ம்ருத்யு நிச்சயம் என்றோ நான் வருந்தவில்லை. உலகில் செல்வத்தை சேர்த்து வைத்த செல்வம் உடன் வருவதுமில்லை அதை இப்பொழுதே இந்த அந்தண சிறுவன் பொருட்டு தானம் செய்தால் அவனாவது மகிழ்வான். பல சாதுக்கள் மற்றவர்கள் பொருட்டு உயிரையே தந்திருக்கிறார்கள். ததீசி, சிபி போன்றவர்கள், இதில் நிலத்தைக் கொடுப்பதால் என்ன நஷ்டம். பகவன்! எனக்கு முன் பிறந்தவர்களும் யுத்தபூமியில் புற முதுகு காட்டாதவர்கள். பூமியை வெகு காலம் அனுபவித்தார்கள். காலம் அவர்கள் பூமியை, போகங்களை அழித்தது. ஆனால் அவர்களடைந்த புகழை எதுவும் செய்யவில்லை. அந்தணோத்தமரே! உலகில் உயிரை கூட விடுவார்கள், தனம் – செல்வத்தை விட தயங்குவார்கள். தகுதியான ஒரு யாசகனுக்கு வேண்டியதைத் தருபவர் குறைவு. எனவே அந்த கடினமான செயலை நான் செய்யப் போகிறேன். மனஸ்வி- நல்ல மனம். நல்ல மனமும், கருணையும் உள்ளவன், வேண்டுபவனுக்கு வேண்டியதை தருவதினால் தனக்கு நஷ்டம் என நினைப்பது இல்லை. உங்களைப் போன்ற ப்ரும்மவாதிகள் பற்றி கேட்பானேன். எனவே இந்த சிறுவனுக்கு அவன் கேட்டதைத் தருகிறேன்.
நீங்கள் வேத சாஸ்திரங்களை நன்கு அறிந்தவர்கள். யாக காரியங்களில் சதா ஈடுபட்டவர். வந்தவர் விஷ்ணுவாகவே இருக்கட்டும். அல்லது வேறு யாரோ என்றாலும் சரி. முனிவரே! அவர் விரும்பி கேட்ட நிலத்தை கொடுக்கிறேன். ஒருவேளை, நீங்கள் சொல்வது போல குற்றமற்ற என்னை அதர்மமாக கட்டினாலும், நான் அவனை பதிலுக்கு தாக்க மாட்டேன். பயந்தவன், ப்ரும்மசாரியாக தோற்றம் எடுத்துக் கொண்டு வந்தவன் எதிரியே ஆனாலும் இது தான் என் முடிவு. உத்தமஸ்லோகன் என்று பெயர் பெற்ற விஷ்ணு, இது போல வாமனனாக வந்து என்னை வீழ்த்த திட்டமிட்டால் அவர் புகழ் தான் அழியும். யாசித்து நான் தராவிட்டால், வா போருக்கு என்றாலும் என்னால் அவரை ஜயிக்கவா முடியும்? அதனால் தானம் செய்வதே மேல்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: தன் சிஷ்யன் சொல்வதில் நியாயம் இருப்பதை உணர்ந்தாலும் ஏனோ, சுக்ராசாரியர் கோபம் கொண்டார். பகவானின் சங்கல்பம் தான் அவரை அந்த உத்தம சிஷ்யனை சபிக்கத் தூண்டியிருக்க வேண்டும். சபித்தார். சத்யசந்தன், பெருந்தன்மை உடையவன் தனக்கு உண்மையாக இருந்த சிஷ்யன் என்ற யோசனைகள் இல்லாமல், ‘தன்னை பண்டிதனாக எண்ணிக்கொண்டு என்னை அலட்சியம் செய்கிறாயா? புத்தி இல்லாதவனே! என் சொல்லைக் கேட்காதவன், உன் செல்வங்கள் அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை’ என்றார்.
அதைக் கேட்டும், சத்ய சந்தனான பலி சக்ரவர்த்தி கலங்கவில்லை. வாமனனாக வந்த சிறுவனுக்கு, முறைப்படி நீர் வார்த்து தானம் செய்ய தயாரானான். மனைவி விந்த்யாவலி அந்த சமயம் பொன் கலசத்தில் நீருடன் வந்து சேர்ந்தாள். அவள் நீர் வார்க்க, யஜமானன் தானே ஸ்ரீமத் பாதங்களை அலம்பி அந்த பாவனமான நீரை தலையில் தெளித்துக் கொண்டார். விஸ்வ பாவனமான ஜலம் அல்லவா?
பார்த்துக் கொண்டிருந்த தேவ கணங்கள், கந்தர்வ வித்யாதர கணங்கள், சித்த சாரணர்கள் அந்த நேர்மையான செயலை சிலாகித்து பூமாரி பொழிந்தனர். புகழ்ந்து பேசினர். மகிழ்ச்சியுடன் துந்துபிகளை முழங்கினர். ஆயிரக் கணக்கான கந்தர்வ கிம்புருஷர்கள் பாடினர். இவனுடையை பெருந்தன்மை தான் என்னே என்று, மிக கடினமான செயலை அனாயாசமாக செய்து விட்டான், வந்தவன் எதிரி என்று தெரிந்தும் தன் வாக்கை நிறைவேற்றி விட்டான் என்றனர். மூவுலகையும் தானமாக கொடுத்து விட்டான்.
உடனே அந்த வாமன ரூபம் வளர ஆரம்பித்தது. அத்புதமாக அனந்தனான ஸ்ரீ ஹரியின் முக்குணங்களால் ஆன விஸ்வரூபம். பூமி, வானம், திர்யங் ந்ரு தேவா: -குறுக்காகவும், நெடிலுமாக, தேவலோகம் உட்பட ப்ரம்மாண்டம்- ரிஷிகள் அங்கு வசித்தனர். அந்த விஸ்வரூப சரீரத்தை, பலி சக்ரவர்த்தியும், கூடியிருந்த ஆசார்ய, ருத்விக்குகள், சபையினர் அனைவருமாக பார்த்தனர். உலகம் முழுவதும், முக்குணங்களால் ஆனது, அந்த குணங்களுக்கு அதிபதியான தேவனிடம் கண்டனர். பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள் அதன் விவரங்களோடு உயிருடையதாக கண்டனர். பாதாளத்தில் வைத்த ஒரு பாதம், பூமி அதன் கணுக்கால் அளவே ஆனது. மலைகள் அந்த மகா உருவத்தின் முழங்கால் அளவே வந்தன. பறவைகள் பறக்கும் வானத்தில் இடுப்பு பாகம், துடைகளில் மாருத கணங்கள், இவற்றைக் கண்டனர். பெரும் உருவம் எடுத்த பகவானின் பீதாம்பரம் அதன் நிறத்தால் சந்த்யாவாக தெரிந்தது. குஹ்யம் என்ற பகுதியில் பிரஜாபதிகள், ஜகனம் எனும் பின் பாகத்தில் அவரைச் சார்ந்தவர்கள், நாபியில் வானம், வயிற்றில் ஏழு கடல்களும், மார்பில் நக்ஷத்திர கூட்டங்களை மாலையாக கண்டனர். ஹ்ருதயத்தில் தர்மம், முராரியின் ஸ்தனங்களில் ருதம் (சரியான உச்சரிப்புடன் வாக்கு), சத்யம் (உண்மை) என்பவர், மனதில் சந்திரன், மார்பில் லக்ஷ்மி தேவி கையில் அரவிந்த மலருடன், கழுத்தில் சாமம் முதலிய வேதங்கள். சமஸ்த ரேஃபான்- रेफान्- இது ஒரு இலக்கண சங்கேதம். ‘அ’ முதலான அனைத்து அக்ஷரங்களையும் குறிக்கும்.
புஜங்களில் இந்திரனை முன்னிட்ட அமரர்கள், காதுகளில் திசைகள். அண்டாண்டம் உச்சம்தலையில், கேசங்களில் மேகங்கள், நாசி துவாவரங்களில் ப்ராண வாயு, கண்களில் ஸூரியன், முகத்தில் அக்னி.
வாக்கில் சந்தஸ் எனும் வேத அங்கங்கள், நாக்கில் ஜலநிதியான சமுத்திரம். புருவங்களில் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி என்ற சாஸ்திரங்கள், இமைகளில் இரவு-பகல், பரம புருஷனின் நெற்றியில் மன்யு என்ற க்ரோதம். அதரங்களில் லோபம். தொடு உணர்வுக்கான தோலில் காமம், ரேதஸில் ஜலம், நகங்களில் சிலா: பாறைகள், புத்தியில் அஜன் என்ற ப்ரும்மா, தேவ கணங்கள் ரிஷிகள் இவர்களை தன் ப்ராணனில், இந்திரியங்கள், மற்றும் உடலில் சராசராத்மகத்தில் உள்ள பிறவிகள், அசையும் அசையா பொருட்கள் அனைத்தும், ஒன்றுக் கொன்று வித்தியாசமானவைகளும் இருக்கக் கண்டனர்.
உலகத்தையே வியாபித்து நின்ற அந்த விஸ்வரூபத்தைக் கண்டு அசுரர்கள் மலைத்தனர். ஆச்சர்யமும் துக்கமும் ஒன்று சேர அவர்களை ஆட்கொன்டன.
அந்த விஸ்வரூபத்தில் பகவானின் சுதர்சன சக்ரம் முதலிய ஆயுதங்கள் கண்கள் கூசும் அளவு பிரகாசமாக, சார்ங்கம் என்ற தனுஷ்(வில்) மேக நாதம் போல, ஜலத்தில் தோன்றிய சங்கம் கொட்டும் மழை போன்ற ஓசையுடன், வேகமாக சுழலும் கௌமோதகீ என்ற கதாயுதம், நந்தக என்றும் வித்யாதர என்றும் சொல்லப் படும் வாள், அதன் உறையில் சந்திராகாரமான அடையாளங்கள், எடுக்க எடுக்க குறையாத அம்புகளையுடைய தூணீ- அம்புகளை வைக்கும் பை – இவைகள் வந்து சேர்ந்தன. சுனந்தன் தலைமையில் ஸ்ரீ ஹரியின் பார்ஷதர்கள் அணுக்கத் தொண்டர்கள், அவர்களுடன் லோக பாலர்கள், அவரருகில் தங்கள் ஸ்தானங்களில் நின்று கொண்டனர். ராஜன்! அந்த சமயம் பகவான் கிரீடம் பள பளக்க, தேன் சிந்தும் மலர்களால் ஆன மாலை ஊசலாட, கௌஸ்துப, ஸ்ரீவத்ஸ, வனமாலை இவைகளுடன் தென்பட்டார். ஒரு காலால் பலியின் பூமியை ஆக்ரமித்தார் -அளந்தார். ஆகாயத்தை சரீரத்தால், திசைகளை புஜங்களால்.
இரண்டாவது அடியால் தேவலோகத்தை அளந்தார். மூன்றாவது அடிக்கு அங்கு இடம் தேடித் தேடி மேலும் மேலும் நீண்ட அடியை மஹர் லோகம், தபஸ்விகளின் இடம், சத்ய லோகம் வரை வரை நீட்டினார்.
(இது வரை மஹா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த எட்டாவது ஸ்கந்த்தின் விஸ்வரூப தரிசனம் என்ற இருபதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்- ஸ்லோகங்கள் 34)
அத்யாயம்-21
ஸ்ரீ சுகர் சொன்னார்: சத்ய லோகத்தில், அப்ஜபவன்- தாமரைப் பூவில் உதித்தவன், ப்ரும்மா , திடுமென ஒரு பாதமும் அதன் நகங்களின் ஒளி சந்திரனின் ஒளி போல இருக்க, தன் உலகத்தின் பிரகாசமே அதன் முன் குறைவதைக் கண்டு, நடப்பதை அறிய ஆவலுடன் வெளி வந்தார். அதே போல மற்றவர்களும் அச்சர்யத்துடன், மரீசி, மற்றும் பல ரிஷிகள் நீண்ட நாட்களாக விரதங்களை அனுஷ்டித்த சனந்தன் முதலியவர்கள் நர தேவ, யோகிகள், அனைவரும் பகவானின் பாதத்தை போற்றித் துதித்தனர்.
அவர்கள் வேதங்கள் உபவேதங்கள் – இவைகளைக் கற்றறிந்தவர்கள், நியமங்களை அனுஷ்டிப்பவர்கள், யம நியம என்ற யோக சாதனைகள் செய்தவர்கள், தர்க்க, இதிஹாஸ, புராண சம்ஹிதைகளை அறிந்தவர்கள், சிலர், யோகம் என்ற காற்று வீசி பிரகாசமாக்கிய ஞானம் என்ற அக்னியின் பலத்தால் வினைப் பயன்களை முற்றாகத் தாண்டியவர்கள், அனைவரும், அகர்மகன்- ப்ரும்மாவிடம் வந்து சேர்ந்தனர். ப்ரும்மா, தன் கமண்டலு ஜலத்தால் சத்ய லோகத்தில் தென்பட்ட பகவானின் பாதத்தை மரியாதையுடன் அலம்பினார். பவித்திரமான அந்த ஜலம் சராசரங்களிலும் விழுந்து அங்குள்ளோர்களை பவித்ரமாக்கியதோடு, பகவானின் கீர்த்தியையும் எடுத்துச் சொல்வது போல ஆயிற்று.. புஷ்பங்கள், திவ்ய கந்தங்களால் பூஜித்து, தூப தீபங்கள், காட்டி, பொரி, அக்ஷதை,பழங்கள், நிவேதனம் செய்து, துதிகளால் பாடியும், ஜய கோஷம் செய்தும் அவருடைய வீர்யத்தைச் சொல்லி, நடனமும், வாத்யங்களும் பாடல்களுமாக சங்க துந்துபி கோஷங்களொடு, கரடி ராஜனான ஜாம்பவான் பேரியை முழக்கிக் கொண்டு, திசைகள் தோறும் வேகமாகச் சென்று விவரம் சொன்னார். மஹோத்சவமாக கொண்டாடினர்.
அசுரர்கள் வெகுண்டனர். மூவடி என்று சொல்லி, பூமி முழுவதையும் சுருட்டிக் கொண்டு விட்டாதாக புலம்பினர். தங்கள் அரசனை நம்ப வைத்து ஏமாற்றிய விஷ்ணுவை திட்டினர். ப்ரும்ம பந்து- இது ஒரு வசைச் சொல். மாயாவி, அந்தண வேஷத்தில் ஒளிந்து கொண்டு வந்து, மனதில் கல்மஷத்தோடு, கெட்ட எண்ணத்துடன் , தேவர்களுக்கு சாதகமாக செய்து விட்டான் என்றனர். இந்த யாசகன் வந்து கை நீட்டி வாங்கிக் கொண்டு நமக்கு நாசத்தை செய்திருக்கிறான். குருவிடம் பயிலும் மாணவனாக தன்னைக் காட்டிக் கொண்டானே. நம் அரசன் எந்த நிலையிலும் சத்யமே பேசுபவன், தயாளு. அதுவும், யாக தீக்ஷையில் இருந்த சமயம் ப்ராஹ்மணனான சிறுவனிடம் தருவதாகச் சொன்னதை மறுத்துச் சொல்லவில்லை. அதனால் இவனை வதம் செய்வோம். நம் அரசனைக் காப்போம் என்று ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வந்தனர். பெரும் கோபத்துடன், ஸூலம்,பட்டிசம் என்ற பயங்கரமான ஆயுதங்களுடன் தாக்க வந்தனர். விஷ்ணு பக்கத்தைச் சேர்ந்தவர்கள் பதிலுக்கு எதிர்த்து வந்தனர், அவர்கள் பலம் அதிகம், வீணாக போரிட வேண்டாம் என்று பலி சக்ரவர்த்தி தன் பக்கத்து வீரர்களை சமாதானப் படுத்தினார். சுக்ராசார்யருடைய சாபத்தை நினைத்து சர்வ நாசம் ஆவதை தடுக்கும் பொருட்டு, ஒவ்வொருவராக பெயரிட்டு அழைத்து, யுத்தம் வேண்டாம் திரும்பி வாருங்கள் என்று அழைத்தான். ஹே விப்ரசித்தோ!, ஹே ராஹோ! நாம் யுத்தம் செய்ய ஏற்ற நேரம் அதுவல்ல. திரும்பி வாருங்கள், என்றான். இந்த அரசன் நமக்கு ஐஸ்வர்யம் கிடைக்கவும், பதவிகள் கிடைக்கச் செய்து, தேவர்களை ஜயித்து நமக்கு நன்மையைச் செய்தான். இப்பொழுது காலம் நமக்கு சாதகமாக இல்லை. பலியின் மந்திரிகளும், கடினமான மந்திரங்கள், ஔஷதிகள், சாம முதலான உபாயங்களால் இந்து நமக்கு நல்ல காலமல்ல என்று அவர்களுக்கு தெளிவாக புரிய வைத்தனர். நாம் திரும்பவும் இவர்களை வெற்றி கொள்வோம். தைவ பலம் நமக்கும் கிடைக்கும். அதனால் காத்திருங்கள். நமக்கு நல்ல காலம் வரும் வரை பொறுத்திருங்கள் என்றார். வீணாக அணுக்கத் தொண்டர்களிடம் அடிபட வேண்டாம் என்று சொன்னதன் பேரில், அவர்களும் பாதாள லோகம் சென்று விட்டனர். விராட் ரூபத்தில் இருந்த பகவான் அனுமதியுடன் கருடன் வந்து பலி சக்ரவர்த்தியை வருண பாசத்தால் கட்டினான். அன்றைய தினம் யாகத்தை முடித்து, சோமபானம் எனும் செயலை செய்து நிறைவு செய்திருக்க வேண்டிய நாள். திசைகள் ஜனங்களின் ஹா ஹா சப்தத்தால் நிறைந்தது.
பலி சக்ரவர்த்தியைப் பார்த்து, பகவான் சொன்னார், அரசனே, நீ கொடுத்த மூவடியில், இரண்டு அடி பூமியையும் வானத்தையும் அளக்க போதுமாக இருந்தது. மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்றார்.
ஸுரியன் உலகை தபிக்கும் வரையிலும், சந்திரன் தன் நக்ஷத்திர கூட்டங்களோடு சஞ்சரிக்கும் வரையிலும், மேகங்கள் மழை பொழியும் வரையிலும் இந்த பூமி உன்னுடையதே. அதை நான் இரண்டு கால்களால் அளந்து எடுத்துக் கொண்டேன். மூன்றாவது அடி வைக்க இடம் தரா விட்டால் உனக்கு சத்யத்தை மீறியவன் என்பதால் ஸ்வர்க வாசம் கிடைக்காது. நரகத்தில் உழலுவாய், என்றார்.
அத்யாயம்-22
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவானே இவ்வாறு சொன்னதைக் கேட்டு பலி சக்ரவர்த்தி அனைத்தையும் இழந்த நிலையிலும் மனம் தளராமல் தெளிவான சொற்களால் பதில் சொன்னான்.
உத்தம ஸ்லோகன் என்று உங்களைச் சொல்வார்கள். தேவர்களின் தலைவனே, . வாக்குத் தவறுவேன் என்றா நினைத்தீர்கள். என் சொல் தவறாது. மூன்றாவது அடியை இதோ என் தலையில் வையுங்கள் – நான் நரகம் என்று பயப்படவில்லை. பதவி போனதற்காக வருந்தவில்லை. இதோ இப்படி கட்டிப் போட்டதற்காக துக்கமும் இல்லை. செல்வம் பறி போனது பெரிதில்லை. உங்களிடம் வாக்கு தவற மாட்டேன். என்னை தரக் குறைவாக பேசி என்னைக் கோபம் கொள்ளச் செய்ய நினைத்திருந்தால் அது நடக்காது.
மனிதர்களுக்கு தகுதி வாய்ந்த பெரியவர்களிடம் தண்டமும் ஸ்லாக்யமே. என்னை தாய் தந்தையோ, சகோதரனோ, நண்பர்களோ இதுவரை ஆனையிட்டு எதுவும் சொன்னதிலை. நீ எப்பொழுதும் அசுரர்களுக்கு பாரபக்ஷமாக இருப்பவன் போல் வெளியில் தெரிந்தாலும் அவர்களுக்கும் நீயே பரம குரு. இதோ என்னை தண்டிப்பதே எனக்கு பரம அனுக்ரஹம் என்று எடுத்துக் கொள்கிறேன். இதில் எனக்கு தலை குனிவும் இல்லை, துக்கமும் இல்லை. தாங்களே குருவாக இருப்பதால் அது சரியே. அது கூட என் பாட்டனார் பக்தனான ப்ரஹ்லாதனின் பேரன் என்பதால் செய்த அனுக்ரஹமாகவே இருக்கலாம். வைரம்- விரோதம் என்ற முறையிலேயே, அசுரர்களை தண்டித்து பின் அணைத்து நல் கதி அடைய செய்வதே உங்கள் நோக்கம். மதாந்தமாக வழி தவறிச் செல்பவர்களை வழி காட்டி திருப்ப இது ஒரு ஆயுதம். எங்கள் முன்னோர்களுக்கும், விரோதம் என்ற அணுகு முறையே அவர்களுக்கு நல்ல கதியை அளித்திருக்கிறது. ஊகித்து அறிய முடியாத அளவு பராக்ரமும் செய் திறனும் உடையவர் நீங்கள். தற்சமயம் என்னை வருண பாசத்தால் கட்டியதற்காக எனக்கு லஜ்ஜையும் இல்லை, வருத்தமும் இல்லை. உங்களை எதிர்த்த என் குல மூத்தவர் ஹிரண்யகசிபு அடி பட்டார். அவருக்கும் மோக்ஷம். பக்தியுடன் அவர் மகன் ப்ரஹ்லாதன் அடி பணிந்தார்.
இந்த உலகில் வாழ் நாளில் புத்திரர்கள் பந்துக்கள் வளைய வருவதும், அதே சமயம் மரணத்திற்குப் பின் மறந்து போவதும், சகஜம். ஒரு விதத்தில் இவர்களும் திருடர்களே, தந்தையின் செல்வத்தையும், அவர் உடல் உழைப்பையும் கொண்டு வளர்ந்தவர்கள் தானே. கூடவே இருந்து உலக வாழ்கைக்குத் துணையாக இருக்கும் மனைவியால் மட்டும் ஆத்மாவுக்கு என்ன பலன்? சிரமப் பட்டு சேர்த்த வீடு வாசல் இவைகளும் ஆயுள் முடிந்த பின் என்ன பயன்? இவ்வாறு நினைத்து என் பாட்டனார் உங்கள் நினைவாகவே, தியானம் செய்தார், சரணடைந்தார். அவருடைய பேரன் என்பதாலேயே, அவருடைய பஜனை ஆத்ம சமர்ப்பணம் இவைகளின் பிரபாவத்தால் இன்று எனக்கு தங்கள் அருகில் இருக்கவும் அடி பணியவும் கிடைத்தது. என் குலத்துக்கு விரோதியாக வெளியில் தெரிந்தாலும், உண்மையில் அசுரர்களின் ஸ்தூல ஸூக்ஷ்ம தேகங்களுக்குதான் எதிரி. மோக்ஷம் தரவே ஏதோ காரணம் சொல்லி அருகில் வந்து தன் பக்கம் இழுத்துக் கொள்வது உங்கள் வழி. என்னிடமும் பலவந்தமாக என் செல்வத்தை நீக்கி, எந்த செல்வத்தால் மனம் தடுமாறி, ம்ருத்யு இதோ அருகில் தான், இந்த வாழ் நாள் நிரந்தரமல்ல என்றே நினைக்க விடாமல் புத்தியை மழுங்கச் செய்கிறதோ, அந்த செல்வம் என்னை விட்டு நீங்கியது.
அந்த சமயம், ஹே குரு ஸ்ரேஷ்ட! (பரீக்ஷித் ராஜனே!) பூர்ண சந்திரன் உதித்தது போல பிரகாசமாக பகவானின் பிரியமான பக்தன் ப்ரஹ்லாதன் அங்கு வந்தார். லக்ஷ்மீ கடாக்ஷமே இரு கண்களாக இருப்பது போல நீண்ட கண்களும், பீதாம்பரமும், ஸ்யாமள வர்ணமும், நீண்ட ஆஜானுபாஹுவான புஜங்களும், கட்டான உடலமைப்பும், கொண்ட தன் பாட்டனாரைப் பார்த்து பலி சக்ரவர்த்தி கூர்ந்து பார்த்தான். அடுத்த இந்திர பதவியை வகிக்க தகுதி பெற்ற பலி சக்ரவர்த்தி. தலை வணங்கினான்.
பகவானைப் பார்த்து ப்ரஹ்லாதன் : தாங்களே கொடுத்த உயர்ந்ததான இந்திர பதவி. தாங்களே அதை இன்று பறித்துக் கொள்கிறீர்கள். அது சோபனம்- அழகு தான். இவனுக்கு நீங்கள் செய்ததும் அனுக்ரஹம் என்றே எடுத்துக் கொள்கிறேன். தன் செல்வம், தன் பெருமை என்ற மோஹம் அவன் மனதிலிருந்து அகற்றப் பட்டு விட்டது. இந்த செல்வ மோஹம் வித்வான்களையும் விடுவதில்லை. உங்கள் செயலை யார் தான் அனுமானிக்க முடியும். அதனால் நஸ்காரம். ஜகதீஸ்வரனான நாரயணனுக்கு நமஸ்காரம். அகில லோக சாக்ஷியாக இருப்பவனுக்கு நமஸ்காரம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ராஜன்! ப்ரஹ்லாதன் கை கூப்பி அஞ்சலி செய்தபடி சொன்னதைக் கவனமாகக் கேட்ட ஹிரண்யகர்பனான அனைவரும் கேட்டனர். தன் கணவன் கட்டப் பட்டு கிடப்பதைப் பார்த்து விந்த்யாவலி, அவன் மனைவி பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். குனிந்த தலை நிமிராமல், கை கூப்பியபடி பகவானிடம் சொன்னாள்:
விந்த்யாவலி: பகவானே, இது உங்களுக்கு விளையாட்டு. மூவுகையும் படைத்து உங்கள் தலைமையில் சிலரை ஆங்காங்கு பதவியில் அமர்த்தியுள்ளீர்கள். நீங்கள் நேரில் வந்து கேட்டிருந்தால் தந்திருக்க மாட்டாரா? உன்னுடையது, நீயே எடுத்துக் கொள் என்று சொல்லியிருப்பார். மூன்று அடி என்று கேட்டு, அவரை அனாவசியமாக பேச வைத்து விட்டீர்கள். மற்றொரு இடத்தில் போய் தேஹி என்று நிற்கக் கூடாது என்று சொன்னது அதிகம் என்று கட்டுப் பட்டாரா? உலகம் இயங்க சிலரை நீங்களே தலைவர்களாக நியமித்து விட்டு, அவர்கள் தாங்கள் தன்னிச்சைபடி செய்யத் துணிந்தால், செயல்- கர்த்ரு வாதம் – என்பது என்ன? கொடுத்த கடமையை சரிவரச் செய் என்பது தானே கர்த்ரு வாதம்.
ப்ரும்மா இடை மறித்தார். பூத பாவன, பூதேச, இவனை விடுவியுங்கள். இவனிடமிருந்த அனைத்தையும் பறித்தாயிற்று. இவனுக்கு இந்த தண்டனை நியாயமல்ல. அனைத்தையும் தானமாக கொடுத்தான். பூ லோகங்கள் அவன் சுயமாக சம்பாதித்தது. அனைத்தையும் நிவேதனமாக கொடுத்தான், சற்றும் மனதில் கல்மஷம் இல்லாமல் தானே கொடுத்தான். எந்த பாதங்களில் மூடன், நீர் விட்டு அலம்பி, தூர்வாங்குர – அருகம் புல் துளிர்களைக் கொண்டு அர்ச்சித்து, மனைவியும் உடன் இருக்க, தானம் செய்தானோ, அந்த பாதங்களின் குணமே அவனுக்கு உத்தமமான கதியை அளித்திருக்க வேண்டும். மூவுலகையும் சற்றும் யோசியாமல் தங்களுக்கு அளித்தவன், எப்படி துன்பப்படலாம்?
பகவான் சொன்னார்: ப்ரும்மன்! நான் ஒருவரை தேர்ந்தெடுத்து அனுக்ரஹம் செய்ய நினைத்தால், முதலில் தன் ஐஸ்வர்யங்களை எண்ணி அவன் மனதில் உள்ள அகங்காரத்தை நீக்குவேன். இவன் குரு சபித்த பொழுது கூட தான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் என்று உறுதியாக இருந்தான். நான் என்னை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் தர்ம உபதேசம் செய்தேன். அதன் பின்னும் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் இவனுக்கு அமரர்களுக்கு கூட கிடைக்க முடியாத ஸ்தானம் அளிக்கப் போகிறேன். இந்த யுக முடிவில் இவன் இந்திரனாவான். அதுவரை இவன் சுதலத்தில், விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட நகரில், அங்கு ஆதி வியாதிகள் இருக்காது. உடல் வருத்தமோ, தந்திரங்களோ-(சோம்பலோ) , அவமானமோ, இராது. என் பராமரிப்பில் இருப்பதால், அங்குள்ளோர் நிரந்தரமாக உபத்ரவம் இன்றி பயமின்றி இருப்பர்.
தானே, பலி சக்ரவர்த்தியைப் பார்த்து, இந்த்ரசேன, மஹாராஜா, எழுந்திரு. உன் உறவினர்கள் பந்து ஜனங்களோடு, சுதலம் செல்வாய். அந்த இடம் ஸ்வர்க வாசிகள் கூட விரும்பும் இடம் . யாரும் இடையூறாக இருக்க மாட்டார்கள். உன் சாஸனத்தை எவரேனும் மீறினால் என் சக்கரத்தால் தண்டிப்பேன். எப்பொழுதும் என் கவனத்தில் இருப்பாய், உன்னை ரக்ஷிப்பது என் பொறுப்பு. எப்பொழுதும் நான் அருகில் இருப்பதாக உணர்வாய். அசுர குலத்தில் பிறந்தவன் அதன் பாதிப்பு இருந்தாலும், என் அருகாமையும், என் ஈடுபாடும் அந்த குல குணத்திலிருந்து உன்னை விடுவிக்கும்.
(இது வரை மஹா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த எட்டாவது ஸ்கந்தத்தின் விஸ்வரூப தரிசனம் என்ற இருபத்து ஒன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம்- ஸ்லோகங்கள் 36)
அத்யாயம்-23
பகவான் தானே இவ்வாறு சொல்லவும், பலிசக்ரவர்த்தி, நாத் தழ தழக்க, உலகில் சாதுக்கள் வணங்கும் மஹானுபாவன், கை கூப்பியவாறு பதிலுரைத்தான்.
பலி சொன்னான்: லோக பாலர்கள், தேவர்கள், சத்வ ப்ரதானமன ரிஷிகள் இவர்களுக்கு கூட கிடைக்காத பெருமை அசுர குலத்தில் பிறந்த எனக்கு கிடைத்தது, என் பாக்கியம். இவ்வாறு சொல்லி ஸ்ரீ ஹரியிடம் விடை பெற்று ப்ரும்மாவை வணங்கி விட்டு சுதலம் சென்றான் பலி சக்ரவர்த்தி. இவ்வாறு அதிதியின் வேண்டுதலுக்கு இணங்க தேவர்களிடம் த்ரிவிஷ்டபம் என்ற தேவலோகத்தை கொடுத்தார். ப்ரஹ்லாதன் தன் பேரனை விடுவித்ததற்காக தன் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். என்னுடைய வம்சத்தில் வந்தவன் பலி, உண்மையில் பகவானால் ஆட்கொள்ளப் பட்டான். இந்த ப்ரசாதம் விரிஞ்சி என்ற ப்ரும்மாவுக்கோ, ஸ்ரீ தேவிக்கோ, சிவ பெருமானுக்கோ கூட கிடைத்தில்லை, மற்றவர்கள் பற்றி என்ன சொல்ல. அசுரர்களான எங்களுக்கும் நீயே தான் ரக்ஷகன்.
அப்படி உலகம் முழுவதும் வணங்கும் பாதத்தை என் குலத்து பலியின் தலையில் வைத்தாய். (பாத தீக்ஷை) . ப்ரும்மா முதலானோர் சரணம் என்று வந்தால் அவர்களுக்கு விபூதி – ஐஸ்வர்யங்களை, வேண்டியதை வர்ஷிப்பாய் என்று கேட்டிருக்கிறோம். பிறவியால் நாங்கள் அவர்களை விட தாழ்ந்தவர்கள் என்று உலகில் சொல்வார்கள். உன் தாக்ஷிண்யம் நிறைந்த கடாக்ஷம் எங்களுக்கு உலகில் ஒரு அந்தஸ்தை கிடைக்கச் செய்துள்ளது. உன் மாயையால் தோன்றிய உலகம், கல்பதரு போல வணங்கியவர்கள் யாரானாலும் உன்னருள் பெறுவது உறுதி எனும் பொழுதே, ஒரு ஒவ்வாமையும் உள்ளது. கல்பதரு கேட்டால் தான் கொடுக்கும் நீயோ பக்த ப்ரியன், கேட்காமலே நன்மையை செய்வாய்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: மகனே! ப்ரஹ்லாதா! பத்ரம் தே, உனக்கு நன்மை உண்டாகட்டும். நீயும் சுதலாதலம் போ. உன் பௌத்ரர்கள், மற்றும் பந்து ஜனங்களுடன் சந்தோஷமாக இரு. நித்யம் கதா பாணியாக நான் காவல் இருப்பதை உணர்ந்து அறிவாய். என் தரிசனம் கிட்டியதாலேயே, உன் வினைப் பயன்கள் அடி பட்டுப் போய் விட்டன.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவானின் கட்டளையை ஏற்று நல்லறிவு மிக்க ப்ரஹ்லாதன் பலி சக்ரவர்த்தியுடன் கூட சரி என்று சொல்லி தலை வணங்கி விடை பெற்றார். ஆதி புருஷனை, அசுர குலத் தலைவன், வணங்கி விடை பெற்று சுதலம் சென்றான்.
சுக்ராசாரியார் யாக சாலையில் செய்வதறியாது வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். அவருடன் மற்ற ருத்விக்குகள் என்ற யாக செயலில் ஈடுபட்டிருந்த அந்தணர்களும் இருந்தனர். அவரை பார்த்து, பகவான் சொன்னார்: ப்ரும்மன்! ஆரம்பித்த இந்த யாகத்தை முடித்து வையுங்கள். யஜமானன் பலி இல்லையே என்று யோசிக்க வேண்டாம். உங்கள் சிஷ்யன் செயலில் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய உங்களுக்கு அதிகாரம் உள்ளது. ப்ரும்ம த்ருஷ்டம்- ப்ராம்மணர்களால் இது வரை உடனிருந்து செய்த யாகம் பாதியில் நிறுத்த வேண்டாம். கர்மா- யாக கர்மாவுக்கு பலன் தருபவன் யக்ஞேசன் என்ற ஈஸ்வரனே. யக்ஞமயன் புருஷன்.
சுக்ராசாரியர் சொன்னார்: யாக காரியத்தில் குறைபாடு எங்கிருந்து வந்தது? அவனுடைய செயலுக்கு பலனளிப்பவரே தாங்கள் தான். உங்களை அவன் மனப் பூர்வமாக, உள்ளன்புடன் பூஜித்தான். வந்தது யார் என்று தெரியாத நிலையிலும் யக்ஞேசன், யக்ஞபுருஷன் உங்களை மனதார பூஜித்தான். மந்திர, தந்திர, குறைகள், தேச காலத்தால் வரும் இடையூறுகள், நாம சங்கீர்த்தனத்தால் தீரும். இருந்தாலும், நீங்கள் சொல்வதால் செய்கிறேன். இதில் அனைவருக்கும் ஸ்ரேயஸ் என்பதோடு, பரம புருஷனான உங்கள் ஆணையை நிறைவேற்றினேன் என்பதும் எனக்கு திருப்தி.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஸ்ரீ ஹரியின் ஆணையை பாராட்டி சிலாகித்து, அவரே குறைவடைந்த யாகத்தை பூர்த்தி செய்தார். பலி ஆரம்பித்த யாகம், அறிவிற் சிறந்த அந்தணர்கள் உடனிருக்க செய்து முடித்தார்.
ராஜன்! இது தான் நடந்தது. பலியிடம் பூமியை யாசித்து வாங்கிக் கொண்டு, தன் உடன் பிறந்த மஹேந்திரனுக்கு அவன் இழந்த தேவ லோகத்தை மீட்டுக் கொடுத்தார். ப்ரஜாபதியின் பதி- ப்ரும்மா, தேவ ரிஷி பித்ரு, பூமியில் அரசர்கள், தக்ஷ, ப்ருகு, ஆங்கிர என்ற ரிஷிகள், குமாரனும் பவனும், கஸ்யப – அதிதி தம்பதிகளின் ப்ரீதியால், உலக நன்மைக்காக, உலக மக்கள், லோக பாலர்கள் அனைவருக்கும் நன்மை என்பதால் தானே வாமனனாக வந்த பகவானே தலைவர் என்று ஏற்றுக் கொண்டனர். அவரே, வேதங்களுக்கும், சர்வ வேதங்களின் தர்ம த்திற்கும், புகழும், செல்வமும், மங்களமும், விரதங்களின் பலனும், கல்ப முடிவில் சுவர்கம், அபவர்க என்ற அனைத்தையும் நிர்வஹிக்க, அவர் ஆணையின் கீழ், உபேந்திரனை நியமித்தார். உலகத்தில் உயிரினங்கள் அமைதியுடன் சம்மதித்தன. பகவான் தன் இருப்பிடம் சென்று ஸ்ரீ தேவியுடன் மிக்க மகிழ்ச்சியுடன் கவலையின்றி இருந்தார்.
யாகத்துக்கு வந்திருந்த மற்றவர்கள், ப்ரும்மா முதலானவர்கள் தங்கள் தங்கள் விமானங்களில் கிளம்பி விட்டனர். வெகு காலம் வரை பகவானின் மிகப் பெரிய செயல் வாமனனாக வந்து வளர்ந்து உலகளந்த அத்புத அனுபவத்தைப் பற்றி பேசி மகிழ்ந்தனர்.
குல நந்தனா! அரிய செயல். கேட்பவர்களுக்கும் குறை தீரும். அதிசயமான இந்த செயலால் பகவானிடம் ஜீவன்களுக்கு நம்பிக்கை அதிகரித்து, இயல்பாக தங்களுக்கிருந்த, தான், தன்னுடைய என்ற எண்ணங்கள் குறையும் என்று அங்கு இருந்த மந்திர தரிசிகளான ரிஷிகள் வாழ்த்தினர். பித்ருக்கள் காரியத்திலோ, தேவ காரியங்களின் நடுவிலோ இந்த சரித்திரத்தை கேட்பதும் நன்மை பயக்கும் என்றனர்.
(இது வரை மஹா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த எட்டாவது ஸ்கந்தத்தின் விஸ்வரூப தரிசனம் என்ற இருபத்து மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம்- ஸ்லோகங்கள் 31)
அத்யாயம்-24
அரசன் கேட்டான்: பகவன்! ஸ்ரீ ஹரியின் அத்புதமான செயல்களை மேலும் கேட்க விரும்புகிறேன். முதல் அவதாரமான மாய மத்ஸ்யன்- மீனாக பிறந்த கதையைச் சொல்லுங்கள். எதற்காக மீன் ரூபம் எடுத்துக் கொண்டார். தாமசமான ஜீவன் அல்லவா மீன்? ஏதோ பெரிய செயல் செய்தாக வேண்டும் என்பது போல ஈஸ்வரன் மீனாக பிறப்பானேன்? எவ்வளவு கேட்டாலும் உத்தம ஸ்லோகன் கதை சர்வ லோகத்துக்கும் சுகத்தைக் கொடுப்பது. அதனால் சொல்லுங்கள்.
ஸூதர் சொன்னார்: பாதராயணி- வியாசர் சம்மதித்து, அந்த சரித்திரத்தைச் சொல்லலானார். பசுக்கள், அந்தணர்கள் சாதுக்கள் மற்றும் வேதங்கள் இவைகளை நான் என்றும் காப்பாற்றுவேன், இவைகளுக்கு ஏதோ தீங்கு நேரிட்டால் நான் சரீரம் எடுத்து பூமியில் பிறப்பேன், தர்மத்தையும் செல்வத்தையும் காக்க வேண்டும் என்பதற்காக. அதற்காக அந்தந்த சமயத்தில் சரீரம் எப்படி தேவையோ அந்த ஜீவனின் சரீரம் மட்டுமே அவருடையது. வாயு சரீரத்தில் நுழைந்து வெளி வருவது போல, எதுவும் வாயுவில் ஒட்டுவதில்லை என்பது போலவே, பகவானும் பஞ்ச பூதங்களால் ஆன சரீரங்களில் அவதரித்திருக்கிறார். ஆனால் அந்த அவதாரத்தில் செயல் முடிந்தபின் திரும்ப வரும் சமயம் தன் இயல்பான ரூபத்திலேயே திரும்பி விடுகிறார். நிர்குணன்- குணங்களின் பாதிப்பு அவருக்கு கிடையாது என்பதால் அவதார சரீரத்தின் பாதிப்பு அவருக்கு வராது.
கால சக்ரம் ஒரு முறை சுழன்ற பின் ஒவ்வொரு கல்ப முடிவிலும் ப்ரளயம் என்பது நியதி. அந்த ப்ரளயம் ஒரு முறை ப்ரும்மா உறங்கிக் கொண்டிருந்த சமயம் வந்தது. மழையோ வேறு ஏதோ காரணமோ இன்றி பெரும் ப்ரளயம் வரும் என்பது பகவானே செய்த ஏற்பாடு. அந்த ப்ரளயத்தில் பூமி முதலான மூவுலகமும் சமுத்திரத்தில் மூழ்கி மறையும் என்பதால் அதை நைமித்திக ப்ரளயம் என்பர். தூங்கும் ப்ரும்மாவின் முகத்திலிருந்து வேதங்கள் நழுவி விழுந்தன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹயக்ரீவன் என்ற அசுரன் தன் யோக பலத்தால் அவைகளை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான்.
ப்ரளய ஜலம் சூழ்ந்து இருந்த சமயம், நீரினுள் சுலபமாக சஞ்சரிக்க மீன் ரூபமே ஏற்றது, வேதங்களை ரக்ஷிக்க வேண்டிய ப்ரும்மா அவைகளைத் திரும்பப் பெற, பகவான் ப்ரளய ஜலத்தில் ஹயக்ரீவாசுரனை தேடினார்.
அங்கு ஒரு ராஜ ரிஷி சத்யவ்ரதன் என்பவன் நாராயண பக்தன், தவம் செய்து கொண்டிருந்தான். ஜலமே ஆகாரம்.அந்த மஹா கல்பத்தில், விவஸ்வானின் மகனாக ஸ்ரார்த்த தேவன் என்ற பெயருடன் ஸ்ரீ ஹரியினால் மனுவாக நியமிக்கப் பட்டவர்.
ஒரு சமயம் க்ருதமாலா- வைகை நதியில் ஜல தர்ப்பணம் செய்து கொண்டிருந்த சமயம், கையில் ஏந்திய ஜலத்தில், அஞ்சலிக்குள் ஒரு சிறு மீன் தோன்றியது. த்ரவிட ராஜா, அந்த மீனை கையின் ஜலத்தோடு நதி நீரில் விட்டார். அந்த குட்டி மீன் பேசியது. தீனமான குரலில், தீன வத்சல, என் தாயாதிகள் சமுத்திரத்தில் நிறைய இருக்கிறார்கள். இப்படி நீரில் என்னை அனாதரவாக விட்டால் அவர்களால் எனக்கு கெடுதல் வரும் என்று பயப்படுகிறேன். என்னை காப்பாற்று என்றது. அரசனுக்கு ஒரே ஆச்சர்யம், மீன் பேசுவதைக் கேட்டு அதனிடமே கேட்டான், உன்னை ஜலத்தை விட்டு வெளிக் கொணரவும் முடியாதே, என்ன செய்வேன்? என்று சொல்லியபடியே தன் கலச ஜலத்தில் திரும்ப எடுத்துக் கொண்டு தன் ஆசிரமம் சென்றான். ஓரிரவில் அது வளர்ந்து கமண்டலு ஜலத்துக்கு மேல் பெரிதாக ஆனது. திரும்பவும் அரசனிடம், அரசனே! இந்த கமண்டலு ஜலத்தில் என்னால் வசிக்க முடியாது. அரசனும் அதை மிகப் பெரிய பாத்திரத்தில் விட்டான். சிலர் கிணற்றில் விட்டதாகச் சொல்வர். முஹூர்த்த நேரத்தில் அது மூன்று முழம் வளர்ந்து விட்டது. அரசன் திரும்பவும் அதை எடுத்துக் கொண்டு போய் குளத்தில் விட்டான். அரசன் கண் முன்னே அந்த மீன் குளத்து அளவு வளர்ந்து விட்டது. அது போதவில்லை என அந்த மீன் சொன்னதால் அதை விட பெரிய குளம் அதையும் விட பெரிய குளம் என்று கொண்டு போய் விடவும் அது அதற்கும் மேலாக பெரிதாக காட்சியளிக்கவும் வேறு வழியின்றி சமுத்திர ஜலத்தில் கொண்டு விட்டான். அப்பொழுது அந்த மீன் அரசனிடம், வீரனே, என்னை இங்குள்ள மகரம் போன்ற நீர் வாழ் ஜந்துக்கள் விழுங்கி விடுமே என்று பரிதாபமாக சொன்னது. என்னை இங்கு விட்டு ப் போகாதே. சற்றே யோசித்த அரசன் கேட்டான்- யார் நீங்கள்? இப்படி மீன் வடிவத்தில் வந்து என்னை தடுமாறச் செய்கிறீர்கள்? நீர் வாழும் ஜந்து பேசிக் கேட்டதில்லை. அதற்கும் மேல் வளர்ந்து அந்த பெரிய குளத்தில், ஒரே நாளில் நூறு யோஜனை வளர்ந்த விதம் சாதாரணமில்லை. பகவன்! இது நிச்சயம் உங்கள் மாயை தான். சாக்ஷாத் ஹரி நாராயணனே. உலகை உய்விக்க இப்படி நீர் வாழ் அல்ப ஜந்துவாக வந்து அவதரித்து ஜீவன்களுக்கு அனுக்ரஹம் செய்யவே வந்து உள்ளதாக நினைக்கிறேன்.
புருஷ ச்ரேஷ்ட நமஸ்காரம். ஸ்திதி, உத்பத்தி, முடிவு என்று மூன்று விதமாக உங்கள் செயல் என்பதை அறிவேன். பக்தர்களுக்கு, எங்களைப் போல நீயே கதியென்று சரணடைந்தவர்களுக்கும் ஒரே கதி நீங்களே. அனைத்தும் உங்கள் லீலா அவதாரமே. பிறவியெடுத்த ஜீவனங்களுக்கு நன்மை செய்யவே, என்பது தெரிந்தாலும், இந்த ரூபத்தை ஏன் எடுத்துள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
அரவிந்தாக்ஷ! உங்களைத் தவிர மற்ற எவரிடமும் சரணாகதி அடைவதில் பலனில்லை. தேக, ஆத்ம அபிமானிகள் தான் மற்றவர்கள். எங்களுக்கு அத்புதமான இந்த ரூபத்தை காட்டிக் கொடுத்து விட்டீர்கள்..
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி பேசும் அரசனைப் பார்த்து, ஜகத்பதி, சத்யவ்ரதனை எச்சரிப்பது போலவும், அரசனின் நன்மையை விரும்பியும், சத்யவ்ரத! இன்றிலிருந்து ஏழாவது நாள் பூ:,புவ:,சுவ: என்ற மூன்றுலகமும் சமுத்திரத்தில் மூழ்கப் போகிறது. அப்படி மூவுலகமும் ப்ரளய ஜலத்தில் மூழ்கும் சமயம் உன்னிடம் மிகப் பெரிய படகை ஒப்படைக்கிறேன். நீ என்ன செய்ய வேண்டும் என்றால், அனைத்து ஔஷதிகள்- தாவரங்கள், அவைகளின் பீஜங்கள், சப்த ரிஷிகளுடன், எல்லா விதமான பொருட்கள், உயிருள்ளவை அனைத்தும், எடுத்துக் கொண்டு இந்த பெரிய படகில், ரிஷிகளின் தேஜஸால் நீரில் விழாமல் காக்கப் படுவாய்- காற்று பலமாக வீசும், அதனால் படகு ஆட்டம் காணும். அந்த படகை மஹாஹி, பெரும் பாம்பான ஆதி சேஷனால் (அதை கயிறாக பயன் படுத்தி) என் கொம்பில் கட்டி விடு. ரிஷிகளுடன் உன்னையும், இந்த படகையும் இழுத்துக் கொண்டு ப்ரும்மாவின் இரவு முடிந்து விடியல் வரை செல்வேன். என் மகிமையைத் தான் ப்ரும்மா என்றேன். நீயும் ஏதோ என்று மலைக்காதே. உன்னை அனுக்ரஹிக்கவே, இந்த செயல். உன் கேள்விக்கு பதில் கிடைத்ததா? சொல்லிக் கொண்டே இருந்தாற் போல பகவான் அந்தர்தானமானார். சத்ய விரத அரசன் காலத்தை எதிர் நோக்கி இருந்தான். மத்ஸ்ய- மீன் ரூபத்தில் பகவானை தியானம் செய்த படி தவம் செய்யலானான். தர்பையை பரப்பி, மேற்கு நோக்கி அமர்ந்து, தவத்தில் ஈடுபட்டான்.
திடுமென சமுத்திரம் கொந்தளித்தது. பூமியை மூழ்கடித்துக் கொண்டு மேலும் மேலும் அட்டகாசமாக பெருகிறது. ஆகாயத்தில் மகா மேகங்கள் பரவி நின்று மழை பொழிவது போல இருந்தது. அதனிடையில் பெரிய படகு வருவதைப் பார்த்தான். பகவான் சொல்லிய படி, ஔஷதிகள்- தாவர வர்கங்கள், ஏழு ரிஷிகள் இவர்களுடன் படகில் ஏறினான். தாங்களும் பகவானை வேண்டியபடி இருந்த முனிவர்கள் அரசனிடமும் “இந்த சங்கடம் தீர பகவான் தான் துணை. நீயும் பகவானை தியானம் செய்து வேண்டிக் கொள் ‘என்றனர். அதேசமயம் அரசன், சமுத்திரத்தில் ஒற்றைக் கொம்புடன் ஒரு ப்ரும்மாண்டமான மீன் பொன்னிறமாக, பல யோஜனை தூரம் நீண்டதாக, எழுந்து வருவதைப் பார்த்தான். அது அருகில் வந்தவுடன் பகவான் சொன்னபடி, பெரிய பாம்பை-ஆதி சேஷனை, கயிறாகக் கொண்டு படகை அதனுடைய கொம்பில் இணைத்தான்.
ஆதி முதல் தொடர்ந்து வரும் அவித்யா- அறியாமை சூழ்ந்து உள்ள ஆத்மா இந்த சம்சாரத்தில் உழலும் ஜீவன்கள். அறியாமை காரணமாகவே சம்சாரத்தில் பலவித கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்று தெரிந்தே, பூ உலகில் பிறக்கச் செய்தாய். தங்கள் வினைப் பயனாக சுகத்தை தேத் தேடி அலைவார்கள், ஆனால், துக்கமே அடைவார்கள். அத்தகைய தோல்வி எங்களை பாதிக்க கூடாது. ஒரு சில சாதகர்கள் உன்னை பஜித்து உன்னை வந்தடைந்தார்கள், அதுவும் உன் சங்கல்பமே. எங்கள் குருவாக சாக்ஷாத் நீங்களே தான் இந்த முடிச்சை- பிறவி எனும் பந்தத்திலிருந்து எங்களை விடுவிக்க வேண்டும். அக்னியில் புடம் போட்டால் தான் தங்கம் ஒளி விடுகிறது. ப்ரகாசமாக ஆகிறது. மற்றபடி நீரால் கழுவினால் மட்டும் அதன்மேல் படிந்த அழுக்கு நீங்குவதில்லை. அது போல யாகங்கள், வைதிக கர்மாக்கள் செய்வதால் ஓரளவு மனம் தூய்மையாகிறது. ஆனாலும் முழுவதும் விடுதலைப் பெற உன் சேவை, உன்னை பஜித்தல் இவையே வழி
மற்ற தேவர்கள், குரு ஜனங்கள், தன்னைச் சார்ந்த நலம் விரும்பிகள், ஒன்று கூடி, மனித லோகத்தின் ஜீவன்களுக்கு உதவி செய்கிறார்கள் எனில் அது லக்ஷத்தில் ஒரு பாகம், உன் கருணையின் எதிரில் தூசு போல ஆகும். அவர்களும் ஈஸ்வரனான தேவன், உன்னையே பஜிக்கிறார்கள். அப்படிப் பட்ட உனக்கு நமஸ்காரம்.
கண்களில்லாதவனுக்கு அவனைப் போலவே மற்றொரு கண் இல்லாதவன் வழி காட்டுவது போல தன் மாணவனின் அறியாமையை போக்க திறமையில்லாத ஏதோ ஒரு அபுத்தி- புத்தியில்லாதவனை குருவாக ஏற்றுக் கொண்ட உன் பக்தனையும் நல்லகதியை அடையச் செய்வாய். எப்படியெனில், நீயே ஸூரியனைப் போல அனைத்தையும் காண்பவன், கண்டதை அலசி ஆராய்ந்து பார்க்கும் தன்மையுடையவன், உன்னையே அடைய வேண்டும் என்ற எண்ணம் உடைய பக்தர்களுக்கு நீயே குருவாகவே ஆகி வந்து விடுவாய்.
உலகில் உலகாயதமாக பெற வேண்டியவைகளைப் பெற வழி காட்டிகளாக சிலர் வருவார்கள். அவர்கள் செய்யும் உபதேமும் அதே போல உலக வாழ்க்கையை செவ்வனே செய்ய மட்டுமே பயன் படும். ஆனால் உன்னை நம்பினோர் பெறுவது, அழிவில்லாத ஞானம். அமோகமான உன் அருளை உடனடியாக தந்து விடும். சர்வ லோகத்துக்கும் நண்பன் நீயே. அனைவருக்கும் பிரியமான ஈஸ்வரன். உள்ளுறை ஆத்மா நீயே. குருவும் நீயே. ஞானத்தை அளிப்பவன். வேண்டியதை வேண்டியபடி தருபவன். சித்தியைத் தருபவன். இருந்தாலும், மந்த புத்தி உள்ள பூ உலகத்தார் உன்னை அறிவதில்லை. உன் மாயை- அவன் மனதில் நிறைந்து இருக்கும் ஆசைகள் மறைக்கின்றன. . தேவர்களில் சிறந்தவனான உன்னை சரணடைகிறோம். எங்கள் புத்தியில் இருக்கும் பொருளே பெரிது என்று இருக்கும் தவறான எண்ணத்தை அறுத்து எறி. இந்த பந்தனம் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் கொண்டது. உன் வார்த்தைகள் கூரிய கத்தியாக இருந்து இதிலிருந்து எங்களை விடுவிக்க வேண்டுகிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஆதி புருஷனான பகவான், மீன் உருவத்தில் சமுத்திர ஜலத்தின் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு நகர்ந்தும் அருகில் வந்தும் பதில் சொன்னார். அந்த அரசனுக்கு, புராண சம்ஹிதம் என்ற திவ்யமான ஞான நூல். யோக க்ரியை பற்றிய விவரங்கள் அனைத்தும் அதில் உள்ளன. சத்ய வ்ரத அரசனுக்கு, அதை முழுவதுமாக, தன் ஹ்ருதயத்தில் இருந்த விதமே, உபதேசித்தார். அரசனும் மற்ற ரிஷிகளும் அதைக் கேட்டனர். ஆத்ம தத்வம் என்பதை ஒன்று விடாமல் முழுவதையும் கவனமாக கேட்டு தங்கள் உள்ளத்தில் இருத்திக் கொண்டனர். சனாதனமான ப்ரும்ம தத்வம் அது.
அதன் பின் ப்ரளய பயம் சற்று குறையவும், தூங்கிக் கொண்டிருந்த ப்ரும்மாவும் எழுந்து வந்தார். ஹயக்ரீவ அசுரனை வதைத்து, அவரிடம் வேதங்களை திருப்பிக் கொடுத்தார் ஸ்ரீ ஹரி.
சத்ய வ்ரதன் என்ற அந்த அரசன், ஞானம், அதற்கும் மேல் விக்ஞானம் என்று நன்கு அறிந்தவனாக ஆனான். ஸ்ரீ விஷ்ணுவின் ப்ரசாதத்தால், இந்த கல்பத்தில் வைவஸ்வத மனு ஆனான்.
ராஜரிஷியான சத்யவ்ரதன், சார்ங்க தன்வீ என்று புகழ் பெற்றவன் தன் மாயையால் தானே எடுத்துக் கொண்ட மத்ஸ்ய அவதாரம், இவைகளிடையே நடந்த உரையாடல்கள், இவைகளை கேட்டாலே மனம் தூய்மை அடைவார்கள்.
இதுவும் ஸ்ரீ ஹரியின் ஒரு அவதாரம். அவருடைய சங்கல்பம். அவரே இதைச் சொல்லி கீர்த்தனை செய்பவர்களைக் காப்பார்.
ப்ரளய பயோதி- ப்ரளய ஜலம், தூங்கிக் கொண்டிருந்த ப்ரும்மாவின் முகத்திலிருந்து வேதங்கள் நழுவ, அதை அபகரித்த தைத்யனிடம் இருந்து மீட்டு அவரிடம் திருப்பிக் கொடுத்த வரலாறு இது. சத்யவ்ரதன் ப்ரும்ம சத்யனிடம், கேட்டபடியே, அகில லோக காரண பூதனான பகவான் எடுத்துக் கொண்ட வளைந்த மீன் உருவத்தை வணங்குகிறேன்.
(இது வரை ஸ்ரீ வியாசர் அருளிய மஹா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த எட்டாவது ஸ்கந்தத்தின் மத்ஸ்யாவதார சரிதானுவர்ணனம் என்ற இருபத்து நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம்- ஸ்லோகங்கள் 61)