ஸ்ரீமத் பாகவதம் – மன்வந்தராதி, ஸ்ரீ ராம சரிதம்
ஒன்பதாவது ஸ்கந்தம்
|| ஓம் நமோ பகவதே வாசு தேவாய ||
அத்யாயம்-1
அரசன் வினவினான்: மன்வந்தரங்கள் அனைத்தும் பற்றி கேட்டோம். ஸ்ரீ ஹரியின் அனந்தமான வீர செயல்களைச் சொல்லிக் கேட்டோம். இந்த சத்ய வ்ரதன் என்ற திராவிட தேசத்து அரசன் எப்படி கல்ப முடிவில் பரம புருஷனை உபாசித்து ஞானம் அடைந்தான் என்று அறிந்தோம்.
விவஸ்வானின் மகன், மனுவாக இருந்தான் என்பதும் தெரிந்து கொண்டோம்.. அவருடைய புதல்வர்கள் இக்ஷ்வாகு முதலானோர், அவர்கள் வம்சம் பற்றியும் அறிந்தோம். புண்யகீர்த்தி என்று புகழ் பெற்ற- செயற்கரியன செய்தவர்கள் என்பதால் புகழ் பெற்றவர்கள், யார் யார் இருந்தனர், இன்னும் வரப் போகும் யுகங்களில் யார் யார் இருப்பார்கள் என்பதையும் சொல்லுங்கள்.
பரீக்ஷித் ராஜா சபையில் இவ்வாறு கேட்டவுடன் ஸ்ரீ சுகர் தானாகவே முன் வந்து சொல்ல ஆரம்பித்தார்.
மனுவின் வம்சம் பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன், கேளுங்கள். இக லோகத்திலும் பர லோகத்திலும் உயிரினங்களின் ஆத்மாவாக இருப்பவர் ஒருவரே. ஒவ்வொரு கல்பத்திலும் அவர், தானே இந்த விஸ்வமாக இருப்பார். வேறு யாருமில்லை. அவருடைய நாபியில் தோன்றிய பத்மகோசம், (விதைகள் அடங்கிய பத்மம்), ஹிரண்மயனாக வந்த சமயம் நான்முகனாக ஸ்வயம்பூ வை சிருஷ்டி செய்தார். அதன் பின் மனு, ஸ்ரார்த தேவன் என்ற பெயரில் வந்தான். ஸ்ரத்தா என்பவளிடம் பத்து பிள்ளைகளைப் பெற்றான். இக்ஷ்வாகு, ந்ருக, சர்யாதி, திஷ்ட, த்ருஷ்ட, கரூஷன், நரிஷ்யந்தன், ப்ருஷத்ரன், நபகன், என்பவர்கள்,
மனு முதலில் புத்திரன் இல்லாமல் இருந்த சமயம் குல குரு வசிஷ்டர், மித்ரா வருண என்ற யாகத்தைச் செய்ய சங்கல்பம் செய்து கொண்டிருந்தார். மனுவின் மனைவி ஸ்ரத்தா, பயோவிரதம் என்ற விரதத்தை அனுஷ்டித்து வந்தவள், எதேச்சையாக அங்கு வந்தாள். அவர்களை வணங்கி தனக்கு பெண் மகவு வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தாள். அத்வர்யு என்ற முக்கியமாக புரோஹிதர் கவனம் சிதற, ஹவிசில் வஷட்காரம் என்ற மந்திரம் சொல்லி ஹோமம் செய்வதில் தவறு நேர்ந்து விட்டது. அந்த சிறு மாறுதலால் பிறந்தது பெண் மகவாக இருந்து. இலா என்ற பெயர். மனு அந்த பெண் குழந்தையைப் பார்த்து மகிழ்ச்சியடையவில்லை.
யாகத்தைச் செய்த குரு ஜனங்களிடம் ‘பகவன் இது என்ன? எப்படி இவ்வாறு விபரீதமாக விடலாம்? நீங்கள் அனைவரும் ப்ரும்ம வாதிகள். கற்றலும், அதன் பின் சாதனைகளும் செய்த பெரியவர்கள். மந்திரங்கள் அறிந்தவர்கள், தவம் செய்து மாசின்றி இருப்பவர். சங்கல்பம் தவறி விட்டது என்று சொல்வது சரியா? சிறந்த ஞானி அசத்யம் செய்வது போல. இவ்வாறு பேசிக் கொண்டே போனவனை முப்பாட்டனார், ப்ரும்மா தடுத்தார். பிரஜை இல்லை என்றவனுக்கு இப்பொழுது பிரஜை பெண்ணானால் என்ன, இதுவும் பகவானின் சங்கல்பமே. நல்ல மகவை பெற்றிருக்கிறாய். தன் தேஜஸால் உன் பெண் மகவையே மாற்றித்தருகிறேன் என்று சொல்லி, ஆதி புருஷனை வேண்டினார். ஈஸ்வரனான ஹரியும் இலாவை வலிமை மிக்க புருஷனாக மாற்றி விட்டார். சுத்யும்னன் என்ற பெயருடன் வளர்ந்தான்.
ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்றான். பல மந்திரிகள், பணியாட்கள் இவர்களுடன், சைந்தவம் என்ற குதிரையில் ஏறி பெரிய வில் , அத்புதமான அம்புகள், இவைகளுடன் கண்ணுக்குத் தென்பட்ட ஒவ்வொரு மிருகத்தையும் அடித்துக் கொண்டே வெகு தூரம் சென்று விட்டான். வட திசையில் மேரு மலையின் அடிவாரத்தில் குமார வனம் என்னும் இடம் வந்தான். அங்கு சர்வன் शर्व:- உமையுடன் ஏகாந்தமாக ரமித்துக் கொண்டிருந்த இடம் அது. அந்த இடத்தில் நுழைந்துமே சுத்யும்னன் தான் பெண்ணாக மாறியதை உணர்ந்தான். சைந்தவம் என்ற அந்த குதிரையும் வடவா என ஆயிற்று. அவனைப் பின் தொடர்ந்து வந்தவர்கள், அனைவரும் தங்கள் உடல்களில் ஆண்கள், பெண்ணாக மாற்றங்களைக் கண்டனர். அதில் மிகுந்த மன வருத்தம் அடைந்தனர். ஒருவரையொருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அரசன் வினவினான்: அது எப்படி? அப்படி என்ன அந்த தேசத்தின் விசேஷம்? பகவன்! யார் இப்படி செய்தது?
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு சமயம் சில ரிஷிகள் கிரீசனைக் காண அந்த இடத்துக்கு வந்தனர். அவர்கள் வரவால், அவர்களின் தவ வலிமையால் அந்த இடம் பிரகாசமாக ஆயிற்று. அந்த சமயம் அம்பிகையும் பெருமானும் கூடி இருந்ததால், குறைவான ஆடைகளுடன் இருந்த தேவி வெட்கத்துடன் மறைந்தாள். ரிஷிகள் முன் அறிவிப்பின்றி வந்த தங்கள் செய்கைக்காக வருந்தி, தம்பதிகளை இடையூறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து திரும்பி நர நாராயணன் இருக்கும் மலைக்குச் சென்று விட்டனர். அதன் பின் தன் பிரிய மனைவியை சமாதானப் படுத்த பகவான் கிரீசன், இனி இந்த இடம் யார் வந்தாலும் பெண்களாக ஆவர் என்று உறுதியளித்தார். அதன் பின் அந்த இடத்துக்கு ஆண்கள் போவதில்லை.
அந்த பெண்களின் கூட்டம், அந்த வனத்திலேயே அலைந்து கொண்டிருந்தனர். வனம் வனமாக சென்று கொண்டிருந்தவர்களை புத பகவான் பார்த்தார். சோம ராஜனின் மகன் புதன். பெண்ணாக மாறிய சுத்யும்னனும் அவனிடம் மயங்கினாள். அவர்களுக்கு புரூரவசன் என்ற மகன் பிறந்தான்.
சில காலம் சென்றது. பெண்ணாக மாறிய தன் நிலையைக் கண்டு தானே இரங்கி குல குரு வசிஷ்டரை நினைத்தான். அவரும் வந்து அவனை நிலையைப் பார்த்து வருந்தினார். தானே பகவான் சங்கரரைக் குறித்து தியானம் செய்தார். ப்ரத்யக்ஷமான பகவான் சங்கரரிடம் விண்ணப்பித்துக் கொண்டார். அரசகுமாரன், அரசை ஆள வேண்டியவன், என்று மன்றாடினார். அந்த இடத்தின் தன்மையால் பெண் ஆனவன், ஒரு மாதம் ஆண் மகனாக ராஜ்ய காரியங்களை செய்யட்டும், ஒரு மாதம் சாபத்துக்கு உட்பட்டு பெண்ணாக இருக்கட்டும் என்று இருவரும் சம்மதித்தனர். ஆசார்யரின் அனுக்ரஹத்தால் தன் இயல்பையடைந்த சுத்யும்னன் ராஜ்யத்தை பாலனம் செய்தான். மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. அவன் புதல்வர்கள் தென் நாட்டில் அரசர்களாக ஆனார்கள்.வயதானதும் தன் மகன் புரூரவசிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு வனம் சென்றான். |
அத்யாயம்-2
ஸ்ரீ சுகர் சொன்னார்: சுத்யும்னன் வனம் சென்றபின் மனு பலகாலம் யமுனைக் கரையில் தவம் செய்தார். அதன் பலனாக ஸ்ரீஹரியைக் கண்டார். அவரை வேண்டி, தனக்கு சமமான புதல்வர்களைப் பெற்றார். இக்ஷ்வாகு முதலானவர்கள் அவர்களே.
ப்ருஷத்ரதன் என்பவனை அவன் குரு, கோபாலனாக, பசுக்களை காப்பவனாக நியமித்தார். இரவில் அவன் வீராசனம் என்பதில் அமர்ந்து விரதம் மேற்கொண்டான். ஒரு நாள் மழை வலுத்தது. சார்தூலம் என்ற புலி பசுக்களின் கொட்டகையில் மழைக்கு ஒதுங்கி நுழைந்து விட்டது. பயந்த பசுக்கள் அலறின. பதறி இங்கும் அங்குமாக ஓடின. புலி ஒரு பசுவை பிடித்துக் கொண்டது. அந்த பசுவின் அலறல் கேட்டு காவல் இருந்த ப்ருஷத்ரதன் ஓடி வந்தான். சார்தூல-புலி என்று நினைத்து அந்த உருவத்தை தன் வாளால் அடித்தான். உண்மையில் அது பப்ரூ என்ற ரிஷி. बभ्रु- இரவு நேரம், மழையால் வானத்தில் நக்ஷத்திரங்களும் இல்லை, அறியாமல் அந்த உருவில் வந்த பப்ரு- கபிலர் என்ற முனிவரை அடித்து விட்டிருந்தான். மறு நாள் விடிந்தவுடன் தேடிச் சென்று தான் அடித்த புலி உண்மையில் பப்ரு என்ற ரிஷி என்று அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தான். ஆனால், குலாசார்யனான வசிஷ்டர் சபித்தார். க்ஷத்திரியன் நீ, யோசிக்காமல் அடித்து விட்டாய், இது போல அடிப்பது ஸூத்ர குணம், நீயும் ஸூத்ரனாக போ என்று சபித்தார்.
அவர் கால்களை பிடித்துக் கொண்டு கதறினான். பின், குருவின் சாபத்தை ஏற்றுக் கொண்டு தன் சாதனையைத் தொடர்ந்தான்.
இரவில் விரதம் அனுஷ்டித்தான். ஊர்த்வரேதஸ் எனும் கடுமையான தவத்தை சாதனை செய்தான். முனிவர்களுக்கு அது பிரியமானது. சர்வ லோக சுஹ்ருத்- நண்பனாக இருக்கும் வாசுதேவனிடத்தில் மனதை வைத்து, சர்வாத்மாவான அவரின் அமலமான பதத்தையே தியானித்து ஏகாந்தமாக பக்தியுடன் விரதம் இருந்தான். தவம் செய்யும் முறை தவறாமல், சங்கத்தை தவிர்த்து, சாந்தனாக, புலன்களை அடக்கி, எதையும் எவரிடமும் பெறாமல், யதேச்சையாக கிடைத்தவைகளையே உண்டு, இந்த விரதத்தை அனுஷ்டித்தான். தன் ஆத்மாவில் அந்த பரமாத்மாவை நிலை நிறுத்தி, ஞானம் பெறவேண்டும் என்பதே குறிக் கோளாக அந்த வனத்தில் சஞ்சரித்தான். ஜடம் போல, குருடன் போல, செவிடன் போல தன் தேகத்தை அடக்கிக் கொண்டு, வாழ்ந்தான். ஒரு சமயம் வனத்தில் தாவாக்னி என்ற பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதில் தன் தேகத்தை தியாகம் செய்து விட்டான்.
இளையவன் கவி என்பவன், சிறு வயதிலேயே உலக வாழ்க்கையில் நாட்டமின்றி, ஒத்த மனமுடைய உறவினர்களோடு வனம் சென்றான். அங்கு தவம் செய்தான். குமாரனாக இருந்த சமயமே, பர லோகம் சென்று விட்டான்.
கரூஷான் என்ற மானவர்கள்- மனு புத்திரர்கள்- மனிதர்கள் , க்ஷத்திரியர்களாக, உத்தர தேசத்தை ஆண்டனர். அவர்கள் தர்ம வத்சலர்களாக, அந்தணர்களை ஆதரிப்பவர்களாக இருந்தனர்.
த்ருஷ்டன் என்பவன் வம்சம் தார்ஷ்ட்ரம் என வளர்ந்தது. க்ஷத்திரிய தர்மத்தை பாலனம் செய்தனர்.
ந்ருகன் என்பவன் வம்சத்தில் சுமதி, பூத ஜோதி, வசு என்பவர்கள். வசுவின் மகன் ப்ரதீகன். அவன் மகன் ஓகவான். ஒரு பெண் ஓகவதி என்பவள், அவளை சுதர்சனன் மணந்தான். சித்ரசேனன் என்பவன் நரிஷ்யந்தனின் மகன். அவன் மகன் அக்ஷன். அதன் பின் மீட்வாம்சன், கூர்ச, அவன் மகன் இந்த்ரசேனன் என்பவன். இந்திர சேனனின் மகன் வீதி ஹோத்ரன். அவனுக்கு சத்யஸ்ரவா, அவன் மகன் ஸ்ருஸ்ரவா:, அவன் மகன் தேவதத்தன் அதன் பின் அக்னிவேசன் என்ற மகன் பகவான் அக்னியே தான். கானீன என்று பெயர் பெற்றான். ஜாதூகர்ண்யன் என்ற பெரிய ரிஷியானான். அதன் பின் அக்னிவேசன் மூலம் ப்ரும்ம குலம் வந்தது. இது வரை நரிஷ்யந்தன், அவன் வம்சம்.
அடுத்தது திஷ்ட என்பவனின் வம்சம். நபாகன் என்பவன் திஷ்டனின் மகன். செயலால் வைஸ்யன் ஆனான். அவன் மகன் பலந்தனன் – அவன் மகன் வம்சப்ரீதி. அவன் மகன் ப்ராம்சு என்பவன், அவன் மகன் ப்ரமதி என்பவன். அவனுக்கு கனிநேத்ரன், சாக்ஷுசோ, விவிம்சதி: என்ற புதல்வர்கள். விவிம்சதி மகன் ரம்பன். அவனுக்கு கனி நேத்ரன், கரந்தமன் என்ற புதல்வர்கள்.ஆவீக்ஷி என்பவனின் மகன் மருத், அவன் சக்ரவர்த்தி ஆனான். பல காலம் யாகங்கள் செய்தான். அவனுக்கு மகா யோகியான ஆங்கிரஸ் என்பவர் மகனாக பிறந்தார். மருதன் செய்த யாகத்துக்கு இணையாக வேறு எவரும் செய்ததில்லை என்பர். அனைத்தும் பொன் மயமாக இருந்தது. இந்திரன் சோம ரசத்தில் மூழ்கினான். அந்தணர்கள் தக்ஷிணைகளால் மூழ்கடிக்கப் பெற்றனர். காற்று இதமாக வீசியதே சாமரம் போல ஆயிற்று. விஸ்வே தேவா: சபையை நிறைத்தனர். மருதனுக்கு மகன் தமன் பிறந்தான். அவனையடுத்து ராஜ்ய வர்தனன், சுத்ருதி, அதன் பின் சௌத்ருதிகள் என்று வம்சம் வளர்ந்தது. அவன் மகன் கேவலன், அவன் மகன் பந்துமான், வேகவான் என்பவர்கள், பந்துவின் மகன் த்ருண பிந்து அரசன் ஆனான். சிறந்த அப்சர ஸ்த்ரீயான அலம்புஷா அவர்களுக்கு மனைவியானாள். இட,விடா என சந்ததி. அவளிடம் விஸ்ரவா தனதன் என்ற மகனைப் பெற்றார். அவன் பரம யோகேஸ்வர் ஆன தந்தையிடம், நல்ல கல்வி கேள்விகளைப் பெற்றான். விசாலன், சூன்ய பந்து, தூம்ர கேது, என்று அவன் புதல்வர்கள். விசாலன், வம்சம் வளர்ந்தது. வைசாலி என்ற ஊரை நிர்மாணித்தான். ஹேமசந்திரன் என்பவன் அவன் மகன். தூம்ராக்ஷன் என்பவன் அவன் மகன். அவன் மகன் சம்யமன், அவனுக்கு க்ருசாஸ்வன், சஹ தேவன் என்பவர்கள். க்ருசாஸ்வனுக்கு சோமதத்தன் மகன். அவன் அஸ்வ மேத யாகங்கள் செய்தான். சோமதத்தன் பேரன் சுமதி அவன் மகன் ஜனமேஜயன். இவர்கள் வைசால தேச அரசர்கள். த்ருணபிந்துவின் புகழை வளர்த்தனர்.
(இதுவரை மகா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில், இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம். ) ஸ்லோகங்கள்-36
அத்யாயம்-3
ஸ்ரீ சுகர் சொன்னார்: மனுவின் மகன் சர்யாதி என்பவர் ப்ரும்ம நிஷ்டன் என்று பெயர் பெற்றவர்.. ஆங்கிரஸ் முனிவரின் யாகத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவர். அவருக்கு சுகன்யா என்ற அழகிய மகள் இருந்தாள். கமல லோசனா. அவளுடன் வனத்தில் ஸ்யவனர் என்பவரின் ஆஸ்ரமம் சென்றார். உடன் வந்த சகிகளுடன் தேடி பிடித்து விளையாடும் பொழுது, ஒரு புற்றின் மேல் பள பள வென்று நக்ஷத்திரம் போல ஏதோ தெரிந்தது. அவளுடைய போதாத வேளை, அந்த பள பளப்பான பொருளை ஒரு முள்ளால் குத்திப் பார்த்தாள். எதிர்பாராத விதமாக அந்த பொருளில் இருந்து ரத்தம் சொட்டியது. திடுமென உடன் வந்த சேனை வீரர்கள் சிறுநீர் வெளிவராமல் அடைபட்டு. திணறினர். ராஜ ரிஷி இது என்ன என்று குழம்பினார். வீரர்களிடம் கேட்டார், வீரர்களே, இது பார்கவரின் ஆசிரமம். ஏதாவது தவறு நடந்து விட்டதா? யாரோ ஆசிரமத்திற்கு கெடுதலாக ஒரு செயலை செய்திருக்க வேண்டும். சுகன்யா நடுங்கிக் கொண்ட தந்தையிடம் சொன்னாள். புற்றின் மேல் எதோ ஜோதி தெரிந்தது கையால் தொடாமல் முள்ளால் தொட்டேன். அதைக் கேட்டு சர்யாதி , புற்றின் உள்ளே யாரோ தவம் செய்து கொண்டிருந்ததை ஊகித்து, மெதுவாக சமாதானம் செய்ய விழைந்தார். அவர் கேட்டபடி தன் மகளை அவருக்கு கொடுத்தார். மகளைப் பிரியும் வேதனை மேலிட, வேறு வழியின்றி நகரம் திரும்பினார்.
மகா கோபம் உடைய அந்த முனிவரிடம் பொறுமையாக நடந்து கொண்டாள். எந்த தவறும் வராமல், அமைதியாக இருந்தாள். ஒரு சமயம் ஆசிரமத்திற்கு வந்த அஸ்வினி குமாரர்களிடம் ஸ்யவன முனிவர் வேண்டினார். நான் இல்லறம் திரும்ப விரும்புகிறேன். இளம் மனைவி. அவள் மனதுக்கு இசைந்த கணவனாக இருக்க விரும்புகிறேன். அதற்கு தேவையான இளம் வயதும் ரூபமும் எனக்கு அருள வேண்டும்.
அவர்களும் சம்மதித்து அருகில் இருந்த, சித்தர்கள் ஏற்படுத்தியதால் விசேஷ குணங்கள் கொண்ட ஒரு குளம் – அதில் மூழ்கி எழுந்திருக்கச் சொன்னார்கள். தவம் செய்து மெலிந்து உயிரை கையில் வைத்திருப்பது போல முதுமையின் பிடியில் இருந்த முனிவர் அவ்வாறே குளத்தில் மூழ்கி ஸ்னானம் செய்தார். அவருடன் அஸ்வினி குமாரர்களும் மூழ்கினர். அதன் பின் மூவரும் ஒரே விதமான உருவ ஒற்றுமைகளுடன் பலசாலிகளாக வெளி வந்தனர். மூவரும் பெண்கள் மோகிக்கும் அழகிய உருவமும், பத்மங்களை மாலையாக அணிந்து கொண்டு, குண்டலங்களும் அழகிய வஸ்திரங்களும், ஒரே விதமாக, ஸூரியன் ஒளியோ எனும் பிரகாசத்துடன் இருந்தவர்களைப் பார்த்து, இதில் எது தன் கணவன் என்பதை நிர்ணயிக்க முடியாமல், அஸ்வினி குமாரர்களையே சரணம் அடைந்தாள். தானே தன் பதியை தெரிந்து கொள்ள அவளுக்கு அவர்கள் உதவினர். இருவரையும் ஆசீர்வதித்து, சுகன்யாவின் பொறுமையையும், முனிவரின் அபிலாஷையையும் பாராட்டி விடை பெற்றனர்.
சர்யாதி சோம யாகம் செய்ய முணைந்தார். ஸ்யவனரின் ஆசிரமம் வந்தார். தன் மகளின் அருகில் தேஜஸ்வியான ஒரு இளம் வயது ஆண் மகன் இருப்பதைக் கண்டு குழம்பினார். காலில் விழுந்து வணங்கிய மகளை ஆசீர்வாதம் செய்யக் கூட மறந்தார். மகளிடம், என்னம்மா இது, உலகமே வணங்கும் ஸ்யவன முனிவர் உன் பதி. முதியவர் என்று அவரை விட்டு விலகி விட்டாயா? இது யார்? என்றார். ஏதோ நாடோடி போல இருக்கிறான் என்றார். நல்ல குலத்தில் பிறந்தவள், குலத்தையே தலை குனிவு ஏற்படும் ஒரு செயலை செய்து விட்டாயே என்று புலம்பினார்.
சுகன்யா சிரித்துக் கொண்டே, தந்தையே!, இது யாரோ அல்ல, உங்கள் மாப்பிள்ளை ப்ருகு நந்தனர் தான், என்றவள், நடந்த விஷயங்களை அவரிடம் விவரமாகச் சொன்னாள். அதைக் கேட்டு மகிழ்ந்த தந்தை சர்யாதி மகளை அன்புடன் அணைத்துக் கொண்டார். சோம யாகம் நிறைய செய்தவர் ஸ்யவனர், சோம க்ரஹத்தை அடைந்தார்.
சோம யாகத்தில் அஸ்வினி குமாரர்களுக்கு மற்ற தேவர்கள் பெறும் சோம பானம் மறுக்கப் பட்டிருந்தது. தன் தேஜஸால், அஸ்வினி குமாரர்களுக்கும் அந்த யாக முடிவில் சோம பானம் கிடைக்கச் செய்தார். யாகத்தில் சோம பானம் பெறுவது ஒரு தகுதியாக கருதப்பட்ட காலம். அதைக் கண்டு கோபித்த இந்திரன் வஜ்ராயுதத்தை எடுத்துக் கொண்டு கொல்ல வந்தான். பார்கவர் இந்திரன் தங்களை நெருங்கும் முன் வரும் வழியிலேயே, வஜ்ரத்தை கையில் வைத்தபடி ஸ்தம்பித்து செயலிழந்து நிற்கச் செய்தார். வைத்யர்கள் என்பதால் அவர்களுக்கு சோம பானம் கிடையாது என்று இந்திரன் முதலானோர் செய்த ஏற்பாடு. ஸ்யவனரின் குறுக்கீட்டால் தேவர்கள் சம்மதித்து அஸ்வினி குமாரர்களுக்கு சோம பானம் வழங்க ஒத்துக் கொண்டனர்.
அரசன் சர்யாதிக்கு, உத்தான பர்ஹிஷ், ஆனர்தோ, பூரிஷேணன் என்று மூன்று புதல்வர்கள். ஆனர்த்தன் மகன் ரேவதன். சமுத்திரத்தின் அடியில் குசஸ்தலீம் என்ற நகரை நிர்மாணித்துக் கொண்டு, சுகமாக வாழ்ந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர். ககுத்பித் என்பவன் மூத்தவன். தன் மகள் ரேவதியை அழைத்துக் கொண்டு அவளுக்கு ஏற்ற மணவாளனைத் தேடிச் கொண்டு ப்ரும்ம லோகம் சென்றான். கோலாஹலமாக பாட்டும் நடனமும் நிறைந்து இருந்த ப்ரும்மாவின் சபையில் காத்திருந்தவரை ப்ரும்மா வந்து குசலம் விசாரித்தார். நீ மனதில் நினைத்து வந்த காலம், அந்த சமயம் வசித்தவர்கள் அனைத்தும் மாறி விட்டன, அன்று இருந்தவர்கள், அவர்கள் புதல்வர்கள் அவர்கள் வம்சம் என்று மாறி யார் என்ன கோத்ரம் என்பது கூட மறந்து விட்டது என்று சிரித்தபடியே சொன்னார். மூன்று ஒன்பது- இருபத்தேழு, சதுர் யுகங்கள் கடந்து விட்டன. அதனால் தேவ தேவனின் அம்சமான பல தேவன் மகா பலசாலி, உன் கன்யா ரத்னத்தை அவனுக்கு கொடு என்றார். உன் மகள் கன்யா ரத்னம். அவன் மனிதர்களில் ரத்னம். அவனுக்கு கொடு. பூமியில் பாரம் அதிகரித்து விட்டது, அதைக் குறைக்க பகவான் அவதரிக்கப் போகிறார். தன் மகளுடன் ஊர் திரும்பிய பின் தன் மகளை பலனுக்கு மணம் செய்து கொடுத்து விட்டு தான் பதரிகாஸ்ரமம் சென்று விட்டான்.
(இதுவரை மகா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில்,மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம். ) ஸ்லோகங்கள்-36
அத்யாயம்-4
ஸ்ரீ சுகர் சொன்னார்: நபகன் என்பவனுடைய மகன் நாபாகன். நிறைய புத்திரர்கள். அவர்களில் இளையவன், கவி என்ற மகன் ப்ரும்மசாரியாக வனம் சென்றவன் திரும்பி வந்தான். சகோதரர்கள் அதற்குள் ராஜ்யத்தை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு விட்டிருந்தனர். என் பங்கு எங்கே என்றவனிடம் தந்தையை நீ வைத்துக் கொள் என்றனர். வயதானவர். தந்தையிடம் சென்ற அந்த மகன், தந்தையே, உன்னை எனக்கு தந்தனர், என்றான். அவர் மகனே, கவலைப் படாதே, உனக்கு ஜீவனோபாயம் நான் சொல்லித் தருகிறேன் என்றார். இதோ அங்கிரசின் வம்சத்தினர் யாகம் செய்கின்றனர். கற்றவர்கள் தான் என்றாலும், மிகப் பெரிய யாகம், பலவித நியமங்கள் கொண்டது. ஆறு நாட்களுக்கு முன் செய்ய ஆரம்பித்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறார்கள். அங்கு போய், இந்த சூக்தங்கள் இரண்டையும் அவர்களுக்கு சொல்லிக் கொடு. வைவஸ்வதேவ யாகம் அது. அவர்கள் யாகத்தை முடித்து விட்டு ஸ்வர்கம் போகும் பொழுது, யாகத்துக்காக சேமித்த பொருட்களை, யாகத்தில் செலவழித்தது போக மீதியை உனக்கு அளிப்பர். அதே போல கவி என்ற அந்த மகன் யாக சாலைக்குச் சென்றான். அவர்களிடம் தந்தை சொல்லிக் கொடுத்த சூக்தங்களைச் சொல்லி யாகம் செவ்வனே முடியச் செய்தான். அவர்களும் யாக பரிசிஷ்டம்- யாகத்தில் மீந்ததை அவனுக்கு கொடுத்து விட்டுச் சென்றனர். அவைகளை சேகரித்துக் கொண்டிருந்த சமயம் கருமையான உடலுடன் ஒருவன் வந்து இவை என்னுடையவை என்றான். வாஸ்துகம்- யாக பூமியில் கொண்டு வைத்த பொருட்கள் இவை எனக்கு விதிக்கப் பட்டவை என்றான். கவி, எனக்கு கொடுத்தனரே என்றான். உன் தந்தையிடமே போகலாம் அவருக்குத் தெரியும் என்றான். எனவே இருவருமாக அவரிடம் சென்றனர். அவர் சொன்னார் யாக பூமியில் மீந்தவை ருத்ரனுக்குரியதே. தக்ஷ யாக சமயம் இந்த உடன்பாடு செய்யப்பட்டது. இந்த தேவன் ருத்ரனுக்கு அனைத்தையுமே கொடுக்கலாம், இந்த மீதியான பொருட்கள் எம்மாத்திரம் என்றார்.
நாபாகன் (கவி என்ற மகன்) வந்தவனை வணங்கி ஐயா, இவைகள் உங்களுக்கே என்றான். அவன் சொன்னான்: தந்தையைப் போலவே நீயும் சத்ய சந்தனாக இருக்கிறாய். மந்திரன் அறிந்த உனக்கு சனாதனமான ஞானத்தை தருகிறேன். இந்த செல்வத்தையும் எடுத்துக் கொள். ஞானோபதேசம் செய்தபின் பகவான் ஸ்ரீ ருத்ரனாகவே காட்சி தந்து மறைந்தார்.
கவி என்ற நாபாகனின் இந்த சரித்திரம் எப்பொழுதும் ஸ்மரிக்கத் தக்கது. நாபாகன் என்ற கவியின் மகன் அம்பரீஷன். அவனும் மகா பாகவதனாக இருந்தான். ப்ரம்ம தண்டம் கூட அவனை எதுவும் செய்யவில்லை.
ராஜா பரீக்ஷித் ‘அது கதையைச் சொல்லுங்கள், கேட்டிருக்கிறேன், அவர் ராஜ ரிஷி, புத்திமான், அவர் மேல் பிரயோகித்த ப்ரும்ம தண்டம் திரும்ப பெறப் பட்டது என்று.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அம்பரீஷன் பெருந்தன்மை வாய்ந்தவன். சப்த த்வீபம்- ஏழு தீவுகள் கொண்ட பூமியை முழுவதுமாக ஆண்டான். நிறைந்த செல்வமும் மதிப்பும் மரியாதையும் பெற்று வாழ்ந்தான். அத்துடன் செல்வம் நிலையானதல்ல. மனித வாழ்க்கையே கனவு போல என்று அறிந்தவன். பகவான் வாசுதேவனிடத்தில் பக்தி செலுத்தி வந்தான். பக்தர்கள், சாதுக்கள் கூடிய சபையில் இருப்பான். பாகவதர்கள் சொல்வது போல மனம்- ஸ்ரீ க்ருஷ்ணனின் பதாரவிந்தத்தில், வாய் வைகுண்ட வர்ணனைக்கே, கைகள் ஸ்ரீ ஹரி ஆலயங்களை பெருக்கவே, காதுகள் அச்யுதனின் சத் கதையைக் கேட்கவே, முகுந்தனின் விக்ரஹங்களைக் காணவே கண்கள், பகவானின் அடித் தொண்டர்களாக உள்ளவர்களையே எங்கள் சரீரத்தை தொட அனுமதிப்போம், எங்கள் நாசி அவன் பாத தாமரையில் அர்ச்சனை செய்த துளசியையே உணரட்டும், நாக்கும் அப்படியே, பாதங்கள், ஸ்ரீ ஹரியின் க்ஷேத்ரங்களுக்கு செல்லவே, தலை ஹ்ருஷீகேசனை வணங்கவே, தாசனாக சேவை செய்வதில் தான் காமம்-ஆசை, உத்தம ஸ்லோகன் என்ற பகவானிடம் பக்தி உடைய மக்களிடையே தான் எங்கள் நடவடிக்கைகளும். இப்படியே உள்ளம் நிறைந்த பக்தியுடன் ராஜ்யத்தை செவ்வனே ஆண்டான். அஸ்வ மேத யாகங்கள் செய்தான். வசிஷ்டர் கௌதமர் முதலிய ரிஷிகளைக் கொண்டு யாக காரியங்கள் நடந்தன. தாராளமாக தானங்கள் கொடுத்தான். அந்த யாகத்திற்கு வந்த தேவர்களும், ருத்விக்குகள் என்பவர்களும்,(யாக காரியங்களைச் செய்பவர்கள்) ஒரே போல உயர்ந்த ஆடைகள் முதலியவைகளில் வித்தியாசமின்றி இருந்தனர். தேவர்களை கண் இமைக்காததை வைத்தே அறிய முடிந்தது. இப்படி பகவத் காரியங்களில் நேரத்தை செலவழித்தவன், வீடு வாசலோ, மனைவி மக்களோ, பந்துக்களோ, செல்வம், ஆபரணங்கள், வாகனங்கள் என்ற பற்றுதலே இல்லாமல் வாழ்ந்தான். அதைக் கண்டு ஸ்ரீ ஹரி தானாகவே தன் சக்கரத்தை பாதுகாப்புக்காக அளித்திருந்தார்.
ஸ்ரீ ஹரியை துதிக்கவும் விசேஷ ஆராதனைகள் செய்யவும் மனைவியுடன் ஒரு வருஷம் த்வாதசி விரதம் இருந்தான். கார்த்திகை மாதம் விரதம் முடியும் சமயம், மூன்று இரவுகள் விரதம் இருந்து காலிந்தி நதியில் ஸ்னானம் செய்து மது வனத்தில் ஸ்ரீ ஹரியை உபாசித்தான். மஹா அபிஷேக விதிகளை அனுசரித்து, அனைத்து பொருட்களையும் கொண்டு அபிஷேகம் செய்வித்தான். வரிசையாக வஸ்த்ர, ஆபரணங்கள், கந்த மாலைகள், தூப தீபம், நைவேத்யம், ஆரத்தி என்று கவனமாக பூஜை செய்தான். அந்தணர்களை அழைத்து அவர்களுக்கும் வஸ்திரங்கள், பசுக்கள் வெள்ளி, பொன் முதலியவியவைகளைத் தானமாக கொடுத்து அறுசுவை உணவு படைத்தான். அவர்களும் விரும்பியது கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியாக ஆசிர்வதித்து அரசனை பாராயணம் (விரதம் முடித்தல்- உணவு ஏற்றல்) செய்ய அனுமதித்தனர். அந்த சமயம் அதிதியாக சாக்ஷாத் துர்வாச முனிவர் வந்து சேர்ந்தார்.
அவரை வரவேற்று ஆஸனங்கள் கொடுத்து, வணங்கினான். அவர் துவாதசி விரதம் முடிக்க இருக்கிறான் என்று அறிந்து பாராட்டி, தானும் ஸ்னானம் செய்து விட்டு வந்து கலந்து கொள்வதாகச் சொல்லி காலிந்தி நதிக் கரை சென்றார். இன்னம் ஒரு முஹூர்த்தமே பாக்கி விரதத்தை முடிக்க குறித்த நேரம். அரசனும் உடன் இருந்த மற்ற அந்தணர்கள், அரச உத்யோகஸ்தர்கள், கவலைப் பட்டனர். விரதமும் முடிய வேண்டும், வந்த அதிதியை விட்டு நான் முன்னதாக உண்டால் ஏற்படும் அதர்மமும் என்னை பாதிக்க கூடாது என்று, யோசித்து, பசித்து இருக்கும் மற்றவர்களுக்காக நீர் மட்டும் அருந்தி பாரணையை முடித்தான். துர்வாச முனிவரும் வருவதை எதிர் நோக்கி காத்திருந்தான்.
காலிந்தீ நதியில் சாவகாசமாக குளித்த பின் தன் நித்ய கர்மாக்களையும் செய்து விட்டு திரும்பிய துர்வாசர் தன் ஞான த்ருஷ்டியால் அரசன் நீரைக் குடித்து பாரணையை முடித்ததை அறிந்தார். மகா கோபத்துடன், என்னை நிமந்த்ரணம்- அழைத்துவிட்டு, நீ முன்னால் உண்டால் அதர்மம் என்பது தெரியாதா? அதற்கான பலனை அனுபவி என்று சொல்லியபடியே தன் ஜடையை அவிழ்த்து விரித்து அதிலிருந்து க்ருத்தி என்ற துர்தேவதையை வரவழைத்தார். அவளோ காலானலம்-ஊழித் தீ- போல இருந்தாள். அவள் அட்டகாசமாக கையில் வாளையும் வைத்துக் கொண்டு பூமி நடுங்க எதிரில் நின்ற பொழுதும் அரசன் அசையவில்லை. ஆனால், பகவான் முன்னால் என் பக்தனை காப்பாற்று என்று சொல்லி அனுப்பியிருந்த ஸ்ரீ சக்கரம் அவளைத் துரத்தியது. தானே அறியாமல் தீயில் விழுந்த பாம்பு போல மறைந்தாள். சக்கரம் துர்வாச முனிவரை துரத்தலாயிற்று.
தன் முயற்சி பலிக்காததைக் கண்ட முனிவர் ஓடினார். ஓடி மேரு மலையின் அடியில் ஒளிந்து கொண்டார். பகவானின் கையில் இருந்த ஆயுதம் அங்கும் துரத்தியது. நாலா திசைகளும் ஓடினார், வானம் பூமி, குகைகள், சமுத்திரங்கள், என்று கடந்து லோகாந்தரமும் ஓடினார். அவர் ஓடும் இடமெல்லாம் சுதர்சன சக்கரமும் தொடர்ந்தது. வேறு வழியின்றி ப்ரும்மாவிடம் தஞ்சம் புகுந்தார். அவர் சொன்னார் ‘ என்னுடைய ஸ்தானம் பகவான் கொடுத்தது. இந்த உலகில் இரவும் பகலுமாக, விளையாட்டின் முடிவில், தன் புருவ அசைவினால், காலாத்மாவான பகவான் க்ஷணத்தில் அழித்து விடுவான். நான் யார் அவன் ஆயுதத்தை தடுக்க? தக்ஷ, ப்ருகு முதலானவர்களோ, பவன், நான், ப்ரஜேசன், பூதேசன் சுரேசன் என்ற அனைவருமே நியமத்துக்கு கட்டுபட்டவர்கள். எங்களுக்கு விதிக்கப் பட்ட கடமையை தலையால் தாங்கிச் செய்கிறோம். அவ்வளவே என்று மறுத்த பின், துர்வாசன், சர்வன் – शर्व:-சர்வன் என்ற மகேஸ்வரனிடம் சென்றார். ஸ்ரீ ருத்ரன் ‘ மகனே எங்களுக்கு பூமியில் அதிகாரம் கிடையாது. அதைத் தாண்டி அஜன்- பிறவியில்லாத பகவானின் ஜீவ கோசம் என்பவை இவை அனைத்தும். காலம் என்பது இறுதியான நிலை. அதன் முன் நாங்கள் செயலிழந்தவர்களே. நாங்கள், நான், சனத் குமாரன், நாரதர், அஜனான பகவான், கபிலர், அடுத்து வந்த தேவலன், ஆசுர தர்மம், மரீசி முதலானவர்கள், மற்றும் சித்தர்கள், தொலை நோக்குடைய தபஸ்விகள், எவருமே, அந்த மாயையை மீற முடிந்ததில்லை. மாயை எங்களை சுற்றிச் ஸூழ்ந்து கட்டியது போல அந்த கால சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கிறோம். அந்த விஸ்வேஸ்வரனுடைய ஸ்ரீ சக்கரம், எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. காலாத்மாவான பகவானையே சரணடை ‘ என்றார். .
நிராசையுடன் துர்வாச முனிவர் பகவானிடம் வந்தார். வைகுண்டம் என்ற இடம் ஸ்ரீ நிவாசனாக வாசம் செய்யும் இடம். அச்யுதா என்று அலறியபடி சக்கரத்தின் வெப்பத்தால் தகிக்கப் பட்டவர், தவறு செய்து விட்டேன், என்னை காப்பாற்று என்று அவர் காலடியில் விழுந்தார். அச்யுதா, அனந்தா, வேண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் பெருமானே, விஸ்வ பாவன, என்னை காப்பாத்து. உன் மகிமை அறியாமல் உன் பக்தனுக்கு தீங்கு செய்து விட்டேன். உன் நாம உச்சாரணமே, நரகத்திலிருந்து மீட்கும் என்பார்களே.
ஸ்ரீ பகவான் சொன்னார்: அந்தண உத்தமரே! நான் பக்த பராதீனன். அவர்களுக்கு முன் சுதந்திரம் இல்லாதவன், பக்த ஜன ப்ரியன், சாதுக்கள் என்னை ஹ்ருதயத்தில் வைத்து பூஜிக்கின்றனர். என்னை நம்பியவர்களுக்கு சரணம் அளிப்பேன். செல்வம், மனைவி மக்கள் என்று அனைத்தையும் தியாகம் செய்து நீயே கதி என்று இருக்கும் என் அன்பர்களை கை விட மாட்டேன். சாதுக்களின் ஹ்ருதயம் என்னிடம் என்றால், என் ஹ்ருதயமும் அவர்களிடத்தில் உள்ளது. எப்படி அவர்கள் உன்னைத்தவிர வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறார்களோ, அதே போல எனக்கும் அவர்களன்றி எதுவும் இல்லை. ஒரு உபாயம் சொல்கிறேன். இது நீயே ஏற்றுக் கொண்ட அபிசாரம்- துன்பம். சாதுக்களின் மேல் பிரயோகித்தால் அது திரும்பி ஏவினவனையே தொடரும் என்பது தெரியாதா? நல்ல வித்தை, நிறைந்த தவ வலிமை இவை கூட வினயம் இல்லாவிட்டால், கெடுதலாக பிரயோகித்தால் தன்னையே சுடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே உதாஹரணமாக இருக்கட்டும்.
ப்ரும்மன்! பத்ரம் தே! நாபாக தனயனை (அம்பரீஷனை) சமாதானப் படுத்து. சாந்தியடைவாய் – என்றார்.
அத்யாயம்-5
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவானே இவ்வாறு சொன்னபிறகு, துர்வாசர், அம்பரீஷனைத் தேடி வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். தன் காலைத் தொட்டதால் கூச்சம் அடைந்த அரசன், ஸ்ரீ சக்கரத்தைப் பார்த்து பிரார்த்தித்தான்.
அம்பரீஷன்: நீயே அக்னி பகவான். ஸூரியனும் சோமனும் நீயே. நீராக, பூமியாக, வாயுவாக, உயிரினங்களின் இந்திரியங்களாக இருக்கிறாய், சுதர்சனா! உன்னை வணங்குகிறேன். ஆயிரம் ஆரங்களுடன் கூடியவனே, அச்யுதனுக்கு பிரியமானவன் நீ. அனைத்து அஸ்திரங்களையும் பொடிப் பொடியாக்குவாய். தேவா! உனக்கு ஸ்வஸ்தி உண்டாகட்டும்.
தர்மமும், ருதம், சத்யம் என்ற குணங்களும் நீயே. யாகமாகவே இருந்து யாகத்தை உண்பவனும் நீயே. சர்வாத்மா, லோக பாலனும் நீயே. தேஜஸாக பரம புருஷத்வம் நீ என்றும் அறிவோம்.
சுநாபா! வணக்கம். அகில தர்ம சேதுவானவனே, அதர்ம சீலர்களான அசுர குலத்துக்கு தூம கேதுவானவன். மூவுலகையும் ரக்ஷிப்பவன், விசுத்தமான தேஜஸ் உடையவன், மனோ வேகத்தில் செல்லக்கூடிய அத்புத கர்மா உனது, உன்னை வணங்குகிறேன்.
தர்ம மயமான உன் தேஜஸால் தமஸ் எனும் இருட்டு, ப்ரகாசம், இரண்டையும் நிர்வஹிக்கிறாய். உன் மகிமை அளவிட முடியாதது. गिरां கிராம் பதே! வாக்பதே, இந்த உன் ரூபம் சத் அசத் என்பவைகளைக் கடந்தது. உன்னை தைத்ய தானவர்கள் மேல் பிரயோகித்தால், அவர்கள் அழிந்தார்கள் என்பது நிச்சயம். கதையை ஏந்திய மஹா விஷ்ணுவின் அருகில் இருப்பவன். ஜகத்தை காக்க துர்ஜனங்களை தண்டிப்பது அவர் வழக்கம். இந்த அந்தணருக்கும், என் குல தெய்வத்துக்கும் நன்மையைச் செய். அதுவே எங்களுக்கு அனுக்ரஹம். எங்கள் குலத்தினர் அந்தணர்களை மதித்து பூஜித்து வந்துள்ளனர். யாகமும், தானங்களும், என் தர்மத்தை அனுஷ்டித்து நான் செய்ததை எண்ணியோ, சர்வ குணாஸ்ரயனான பகவான், சர்வ பூதங்களிலும் ஆத்மாவாக உறைபவன், அவருடைய சர்வாத்ம பாவத்தில் இவர் மட்டும் விலக்கல்ல என்று எண்ணியோ, என்னிடத்தில் சதா பரிவுடையவன் என்பதை எண்ணியோ இவரை விடுவித்து விடு. இந்த தாபம் நீங்கி அவர் சொஸ்தமாகட்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு விஷ்ணு சக்ரமான சுதர்சனத்தை ஸ்தோத்திரம் செய்யவும், தன் ராஜஸ கோபத்தால் தகித்த துர்வாச முனிவர் தாபம் நீங்கி நலம் பெற்றார். தன் கஷ்டம் நீங்கியதும் அரசனை ஆசீர்வதித்து, பெருந்தன்மையாக நடந்து கொண்டதை புகழ்ந்து பாராட்டினார். அஹோ! அனந்த தாஸர்களின் மகிமையை இன்று தெரிந்து கொண்டேன். அரசனே, என் மேல் தவறு இருந்தும் என்னை காப்பாற்றினாய். சாதுக்களுக்கு எது தான் கஷ்டம், மஹாத்மாவாக இருப்பவர்கள் எதைத் தான் தியாகம் செய்ய தயங்குவார்கள், சத் பாவங்களே உருவான ஸ்ரீ ஹரி, சாதுக்களின் நடுவில் ரிஷபமாக தனித்து காணப்படுபவன், எவனுடைய நாமத்தை சொன்னாலே மனிதர்கள் புனிதமாக ஆவார்களோ, அவருடைய தீர்த்த பாதங்களை நம்பியவன் எதைத்தான் அடைய மாட்டான். ராஜன்! அனுக்ரஹிக்கப் பட்டேன். அதி கருணையான உள்ளம் படைத்த உன்னால் என் மிகப் பெரிய தவறும் பின் தள்ளப் பட்டது. என் உயிரை காத்திருக்கிறாய்.
அரசன் அவரும் இன்னமும் உணவருந்தவில்லை என்பதை எண்ணி, தானும் அவருக்காக காத்திருந்து, அவருக்கு விருந்தினருக்கு செய்ய வேண்டிய உபசாரங்களைச் செய்து போஜனம் செய்வித்தான். அவர் திருப்தியாக, நிறைந்த மனதுடன் அன்புடன் அரசனே! புஜ்யதாம்-சாப்பிடு என்று பணித்தார். மிகவும் பரிவுடன் உபசரித்தாய். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உன்னைப் போன்ற உத்தமமான பாகவதர்களை காண்பதும் நன்று, அன்புடன் பேசி, விருந்தும் அளித்தாய் என்றார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அரசனை அசீர்வத்தித்து, புகழ்ந்து பேசி துர்வாசர் விடை பெற்றார். வான வழியில் ப்ரும்ம லோகம் சென்றார். ஒரு வருஷம் சாப்பிடாமல் காத்திருந்த அரசன் அம்பரீஷன், தன்னுடன் காத்திருந்த அந்தணர்களையும், அரசு அதிகாரிகளையும் ஊர் ப்ரமுகர்களையும் அழைத்து உணவருந்தச் செய்தான். மகரிஷி துர்வாசர், அவருக்கு ஏற்பட்ட துன்பத்தையும், அதிலிருந்து விடுபட்டதையும் கதையாக பேசிக் கொண்டனர்.
அதன் பின் தனயர்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு தான் வனம் சென்று, பஜனைகளில் காலத்தை கழித்தான். ஜனங்களும் பக்தனான தங்கள் அரசன் செயலைப் பாராட்டி தாங்களும் அவ்வாறே பாகவதர்களானார்கள்.
அம்பரீஷ சரித்திரத்தின் பல ஸ்ருதியாக, இதை பக்தியுடன் கேட்பவர்கள் விஷ்ணுவின் ப்ரசாதத்தால் முக்தி அடைவர்.
இது வரை ஸ்ரீமத் பாகவத்தில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில் துர்வாசோபாக்யனம் என்ற ஐந்தாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-27
அத்யாயம்-6
ஸ்ரீ சுகர் சொன்னார்: விரூபன், கேதுமான், சம்பு, என்று அம்பரீஷணின் தனயர்கள் மூவர். விரூபாக்ஷனுக்கு, ப்ருஷதஸ்வன் என்ற மகன், அவன் மகன் ரதீதரன். ரதீதரனுக்கு ப்ரஜைகள் இல்லாததால், அவன் மனைவி மிகவும் வற்புறுத்தியதால் அங்கிரஸ முனிவரிடம் ப்ரும்ம வர்சஸான மகன்களைப் பெற்றான். க்ஷேத்ரமாக மட்டுமே அவன் மனைவி இருந்ததால், ஆங்கிரஸ் என்றே அறியப் பட்டனர். ரதீதரன் க்ஷத்திரியன் ஆனாலும் அவன் மக்கள் அந்தணர்களானார்கள்.
க்ஷுவதன் என்பவன் மனுவின் மகன். இக்ஷ்வாகு மனுவின் மூக்கிலிருந்து பிறந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள். விகுக்ஷி நிமி, தண்டகர்கள். ஆர்யாவர்த்தம் என்ற இந்த தேசத்தை, ஒரு பக்கம் இருபத்தைந்து அரசர்கள் ஆண்டார்கள். பின்னால் மூவர், மத்தியில் மற்றவர்கள்.
ஒரு சமயம் எட்டு பேருடன் ஸ்ரார்தம் செய்ய, இக்ஷ்வாகு விகுக்ஷி என்ற மகனிடம், சீக்கிரமாக போய் மாமிசம் மேத்யத்திற்காக கொண்டு வா என்றான். அவனும் அவ்வாறே தேடி அந்த செயலுக்குத் தகுதியான சில மிருகங்களை வேட்டையாடி களைத்தவன் பசி பொறுக்க மாட்டாமல் ஒரு சிறு முயலை தான் உண்டு விட்டான். அது தவறு என்பது நினைவில் வரவில்லை. மீதியைக் கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்தான். அவர்களுடைய குரு சிரார்த்த கர்மாவில் நிவேதனம் (நீரை மந்திரத்துடன் உணவில் தெளிப்பது) செய்ய கையில் நீரை எடுத்து தெளிக்கும் முன் எப்படியோ அறிந்து, இது தப்பு, செய்யக் கூடாத செயல், என்றார். குருவின் வார்த்தை நிஜம் தான் என்பதை மகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட தந்தை. மகா கோபத்துடன் மகனை நாட்டை விட்டே துரத்தி விட்டார். விதிகளை மீறுவதாவது. அதன் பின் அந்தணர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு, சில காலம் சென்றபின் தேகத் தியாகம் செய்து நல் கதியை அடைந்து விட்டார்.
அதன்பின் விகுக்ஷி திரும்பி வந்து அரசனானான். நியாயமாக ராஜ்ய பரிபாலனம் செய்தவன் ஸ்ரீ ஹரியை தியானம் செய்து யாகங்கள் செய்தான் என்று கேள்வி. புரஞ்ஜயன் என்பவன் அவன் மகன். அவனுக்கு இந்த்ரவகன் என்ற மகன். தன் செயல்களால் ககுத்ஸ்தன் என்றும் பெயர் பெற்றான்-
க்ருத யுக முடிவில் தேவ, தானவர்களுக்கிடையில் பெரும் யுத்தம் மூண்டது. வீரனான இவனை தங்கள் பக்கம் இருந்து போர் செய்ய தேவர்கள் அழைத்தனர். அதுவரை தானவ-தைத்யர்களிடம் தோற்ற படி இருந்தனர். தேவ தேவனான மகா விஷ்ணு, வாகனமாக இந்திரனே மகா ரிஷபமாக இருக்க வேண்டும் என்றார். அதன்படி இந்திரன் விருஷபமாக வர, அவனுடைய ககுத்- திமில்- என்ற பாகத்தில் நின்றபடி தன் ஆயுதங்கள், வில், அம்புகள் இவைகளுடன் அதன் மேல் நின்றபடியே போரிட்டான்.
விஷ்ணுவின் தேஜஸ் அவனைச் சூழ்ந்து இருந்து காத்தது. அதனால் மேற்கு திசையில் தைத்யர்களின் கோட்டையை தேவர்கள் அவன் தலைமையில் ஆக்ரமித்தனர். அவனுடைய வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் தைத்யர்களை த்வம்சம் செய்து யம லோகத்துக்கு அனுப்பியது. அக்னியின் ஜ்வாலை போன்ற அந்த சரங்களால் தாக்கப் பட்ட தைத்யர்கள் ஓடி மறைந்தனர். அந்த நகரை ஜயித்து, புரம், தனம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வஜ்ர பாணியான இந்திரனுக்கு கொடுத்தான். ராஜரிஷி என்ற பெயர் பெற்றான். புரஞ்ஜயனின் மகன் அனேனன் . அவன் மகன் ப்ருது. விஸ்வகந்தி, சந்திரன், யுவனாஸ்வன் என்று வம்சம் வளர்ந்தது. ஸ்ராவன் என்பவன் அவன் மகன். அவன் ஸ்ராவஸ்தி என்ற நகரத்தை நிர்மானித்தான். ப்ருஹதஸ்வன் என்பவன் ஸ்ராவஸ்தி மகன். அதன் பின் குவலயாஸ்வாகன். அவன் உதங்கர் என்பவர் விரும்பியபடி, துந்து என்ற பெயருடைய பலசாலியான அசுரனை, அவன் இருபத்தோரு ஆயிரம் மகன் களோடு வதைத்தான். அதனால் துந்துமாரன் என்றே புகழ் பெற்றான். துந்துவின் முகத்திலிருந்து கிளம்பிய தீ ஜ்வாலைகளில் அவனும் அவன் மகன்களும் சாம்பலாயினர். மூவரே மிஞ்சினர். த்ருடாஸ்வன், கபிலாஸ்வன், பத்ரா என்ற மூவர். த்ருடாஸ்வ புத்ரன் ஹர்யஸ்வன், அவன் மகன் நிகும்பன் எனப்படுபவன்.
பர்ஹணாஸ்வன், நிகும்பன் மகன். க்ருஸாஸ்வன், அதையடுத்து சேனஜித் என்பவன். யுவனாஸ்வன் அவன் மகன். அவன் தனக்கு குழந்தை இல்லை என்பதால் வனம் சென்றான். நூறு மனைவிகளுடன் க்ருபாலவன் என்ற முனிவரைக் குருவாக கொண்டு, யாகம் செய்தான். ஐந்த்ரீம் என்ற அந்த யாகத்தை மிகவும் கவனமாக, சிரத்தையுடன் செய்தான். அரசன் இரவில் தாகத்தால் தவித்தவன் யாக சாலையில் நுழைந்தான். அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். மந்த்ரஜலம் என்று வைத்திருந்ததை எடுத்து குடித்தான். அந்த யாக சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் விழித்துக் கொண்டு கலசம் காலியாக இருக்கவும், யார் குடித்தது என்று விசாரித்தனர். பும்ஸவனம் ஜலம்- பிள்ளை வரம் அளிக்கும் மந்திரத்தால் மந்திரித்த ஜலம் அது. அரசன் குடித்தான் என்றவுடன் தெய்வ சங்கல்பம் , வேறு என்ன சொல்ல, அஹோ! தைவ பலம் பலம் என்று சொல்லி ஈஸ்வரனை நமஸ்கரித்தனர்.
அதன் பின் காலம் கனிந்த பின், யுவனாஸ்வனின் வயிற்றை இடது பக்கமாக கிழித்து, அவன் மகனை வெளிக் கொணர்ந்தனர். அவன் பிற்காலத்தில் சக்ரவர்த்தியாக ஆனான். யார் இவனுக்கு தாய் பால் கொடுப்பாள் என்ற பேச்சு எழுந்த சமயம், அதுவோ, பசியினால் அழ ஆரம்பித்து விட்டது. மாம் தாதா வத்ஸ- குழந்தாய் நான் தருகிறேன் , அழாதே என்று சொல்லி இந்திரன் அம்ருதத்தை தொட்ட சுட்டு விரலை அதன் வாயில் வைத்தான். அந்தணோத்தமர்களின் அருளால் யுவனாஸ்வன் உயிருக்கு ஆபத்து இல்லாமல் தப்பித்தான். அதன் பின் அவன் வனம் சென்று தவம் செய்து சித்தியடைந்தான். குழந்தையின் பெயர் த்ரஸத் தஸ்யு என வைத்தனர். ராவணன் போன்ற அசுரர்கள், எவரைக் கண்டு பயப்படுகிறார்களோ என்ற பொருளில். ஆனால் மாந்தாதா என்ற பெயரே நிலைத்தது. பூமி முழுவதையும் ஆண்டான். சக்ரவர்த்தி என பெயர் பெற்றான். பகவானின் அம்சமே எனக் கருதப் பட்டான். ஏழு தீவுகள் கொண்ட பூவுலகை அச்யுதனின் தேஜஸால் தான் ஒருவனே ஆண்டான்.
அறிஞர்களைக் கொண்டு யாகங்கள் செய்வித்தான். நிறைய தக்ஷிணைகள் கொடுத்து சர்வ தேவ மயமான தேவனை, சர்வாத்மகன், அதீந்திரியன் என்று போற்றப் படும் பகவானை குறித்து செய்யப் பட்ட யாகம். த்ரவ்யம், மந்த்ரம், விதி, யாக, யஜமானன், ருத்விக்குகள் தர்மம் , தேசம், காலம், இவையனைத்தும் பகவானின் ஆத்மாவே. ஸூரியன் தான் உதித்த இடத்திலிருந்து அஸ்தமனமாகும்வரை உலகில் உலவும் இடமெல்லாம் யுவனாஸ்வனின் ஆட்சிக்கு கீழ் வந்தவையே. மாந்தாதுவின் க்ஷேத்ரம் என்றே அழைத்தனர்.
சபிந்து என்பவரின் மகன் பிந்துமதி என்பவளை மணந்தான். புருகுத்சன், அம்பரீஷன், முசுகுந்தன் என்ற யோகி, அவர்கள் சகோதரிகள் ஐம்பது பெண்கள், அவர்களை சௌபரீ என்பவர் மணந்தார்.
சௌபரீ என்ற அந்த அந்தணர், யமுனை நதி ஜலத்தில் மூழ்கி இருந்து தவம் செய்தவர். மீன அரசன் தாம்பத்யத்தாலேயே நிவ்ருத்திம் என்ற நிலையை அடைந்து விட்டிருக்கிறான் என்பதைக் கண்டு தானும் தாம்பத்யத்தில் ஆசை கொண்டார். அரசனிடம் வந்து ஒரு மகளை கன்யா தானமாகத் தரும்படி வேண்டினார். அரசன் அந்த இக்கட்டான நிலையை சமாளிக்க, ‘ப்ரும்மன்! சுயம்வரத்தில் ஐம்பது பெண்களில் உங்களை விரும்பும் ஒருவளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி விட்டார். தன் பெண்கள் தவம் செய்து வற்றிய உடலுடன், நரைத்த மயிரும் காணவே அழகில்லாத அந்த தபஸ்வியை விரும்ப மாட்டார்கள் என்பதால் இந்த ஏற்பாடு செய்தான். ,முனிவரும் காவலர்கள் அழைத்துச் செல்ல அந்த:புரத்தில் ப்ரவேசித்தார். மனதினுள் வேண்டிக் கொண்டார். என்னை மணக்க சம்மதித்த பெண்ணை தேவ மகளிர் போல காப்பேன் என.
அந்த:புரம் அழகிலும் ஆடம்பரத்திலும் கண்களைக் கவர்ந்தது. அந்த எளிய தபஸ்வியை ஐம்பது பெண்களும் ஏற்றுக் கொண்டனர். பெண்களிடையே கலஹம் கூட தோன்றியது. யார் முதல் என்பதில். அந்த ஏராளமான வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவர், தன் தவ வலிமையால் வீடுகளும், பலவிதமான உபவனங்கள், தெள்ளிய நீரை உடைய குளங்கள், சௌகந்தம் நிறைந்த வனப் ப்ரதேசங்கள் என்றும், விலையுயர்ந்த சயனாசனங்கள், ஆடைகள், அலங்கார வஸ்துக்கள், நீராடவும், மேல் பூச்சுக்குமான வாசனை திரவியங்களும், என்று அவர்கள் விரும்பக் கூடிய பல பொருட்களுடனும் ரமித்து இருந்தார். இவருடைய இல்லறம் நல்லறமாக விளங்கியதைக் கண்டு சப்த தீவுகளின் பதியான அரசன் வியந்தான். பல நாட்கள், அனுபவித்து மகிழ்ந்தபின் சௌபரி என்ற அந்த முனிவர், ஒரு நாள் நினைத்துப் பார்த்தார். அடடா! ஒரு மீன் தன் அறிவுக்கு இசைந்த வாழ்க்கையை வாழ்வதைப் பார்த்து நான் ஏன் ஆசைப் பட்டேன். என் தகுதி என்னவாக இருந்தது. ஒழுக்க சீலனாக, நன்நடத்தை உள்ளவனாக, தவம் செய்தவன். நதி ஜலத்தில் நீர்வாழ் ஜீவனின் வாழ்க்கையைப் பார்த்து பிறவிப் பயனாக பெற்ற அனைத்தையும் தொலைத்தேன். அதனால் தான் முமுக்ஷு எனும் மோக்ஷம் விரும்புவோர் இல்லறத்தானை அருகில் இருக்க விடக் கூடாது என்பர் போலும். ஐம்பது பெண்களை மணந்து ஐயாயிரமாக பெருக்கி, இதற்கு முடிவு ஏது? என் மதியை ஏதோ மாயை தான் மாற்றி விட்டது போலும். இப்படி நினைத்து சில காலம் விரக்தனாக வாழ்ந்த பின், வனம் சென்றார். அந்த பத்னிகளும் உடன் சென்றனர். தீவிரமாக தவம் செய்து, ஆத்ம தரிசனம் கண்டு கொண்டவராக, அக்னியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு விட்டார். மனைவிகளும் தொடர்ந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், சௌபரி ஆக்யானம் என்ற ஆறாவது அத்யாயம். ) ஸ்லோகங்கள்-55
அத்யாயம்-7
ஸ்ரீ சுகர் சொன்னார்: மாந்தாதாவின் புதல்வர்களுல் சிறந்தவன் அம்பரீஷன் என்பான். பாட்டனாரான யுவனாஸ்வனின் மற்றொரு மகன் யௌவனாஸ்வன் என்பவனின் மகன் ஹாரீதன், அவன் மகன் இவர்களும் மாந்தாதாவின் வம்சத்தினரே.
நாகர்களான சகோதரர்கள் நர்மதா என்பவளை புருகுத்சன் என்பவனுக்கும் மணம் செய்வித்தனர். புஜகேந்திரன் -பாம்புகளின் தலைவன் அவளை பாதாள லோகத்துக்கு அழைத்துச் சென்றான். மகா சக்தியின் அம்சமானதால், வதம் செய்ய தகுதியான சில கந்தர்வர்களை அழித்தான். நாகங்கள்-பாம்புகள் மகிழ்ந்து வரம் கொடுத்தன. சர்ப்பங்களால் பயமின்றி இருக்கலாம் என்று அபயம் அளித்தன. த்ரசத் தஸ்யு –(மாந்தாதா), பௌரகுத்சோ, அனரண்யன் என்பவனின் தனயர்கள், சர்யஸ்வன் என்பவன் அவன் மகன்,அவனிடம் அருணன் மற்றும் த்ரிபந்தனன். சத்யவ்ரதனின் மகன் த்ரிசங்கு என்று பெயர் பெற்றான். சாபத்தினால் சண்டாளன் ஆகி, கௌசிகருடைய தேஜஸால் சரீரத்துடனேயே ஸ்வர்கம் சென்றான். இன்றளவும் வானத்தில் காணலாம். தலை கீழாக தேவர்களால் தள்ளப் பட்டவனை கௌசிக முனிவர் அங்கேயே நிலையாக நிற்க வைத்து விட்டார்.
த்ரிசங்குவின் மகன் ஹரிச் சந்திரன். விஸ்வாமித்ர வசிஷ்டர் இடையில் வாக்குவாதம் காரணமாக பல காலம் யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம். தனக்கு மகன் இல்லையே என்று நாரதரிடம் வருத்தத்துடன் சொன்னதும், அவர் சொல்படி, வருணனை சரணம் அடைந்து தனக்கு மகன் வேண்டும் என்று வேண்டினான். அவன் வீரனாக பிறந்தால், அவனைக் கொண்டே உனக்கு யாக பாகம் தருகிறேன் என்றான். அப்படியே என்று வருணனும் அருள, ரோஹிதன் என்ற மகன் பிறந்தான்.
மகன் பிறந்து விட்டானே, எனக்கு யாக பலியாக கொடு என்று கேட்டுக் கொண்டு வந்து விட்டான் வருணன். பல் இல்லாத பசுவை தானம் அளிக்கலாகாது, பல் முளைக்கட்டும் என்று அரசன் தட்டிக் கழித்தான். பல் வந்து விட்டதே என்று வருணன் கேட்க, பால் பல் விழுந்து விடும், புது பல் முளைக்கட்டும், எனவும், புது பல் முளைத்தவுடன் வருணன் வந்தான். விழுந்த பல் முளைத்து விட்டதே, இப்பொழுது கொடு எனவும், அரச குமாரன் ஆயுத பயிற்சி பெறட்டும் அப்பொழுதுதான் தகுதியாவான் என்று இப்படியே மகனைப் பிரிய மனமின்றி அரசன் தட்டிக் கழித்தபடியே இருந்தான். ரோஹிதன் வளர்ந்து விட்டான். தந்தையின் தர்ம சங்கடத்தை உணர்ந்து தானாகவே, தன் வில் அம்புகளுடன் அரண்யம் சென்று விட்டான்.
வருணன் அப்படியும் விடாமல் ஹரிசந்திரனின் உடலில் மகோதரம் என்ற வியாதியை அளித்து விட்டான். ரோஹிதன் தன் ராஜ்யத்துக்கு வர கிளம்பியவனை இந்திரன் தடுத்தான். பூமியில் க்ஷேத்ராடனம் போ, அதுவும் காட்டில் வசிப்பதுக்கு சமமே, புண்யமானது என்று உபதேசித்தான். இவ்வாறு அடுத்த முறை கிளம்பியவனை, மூன்றாவது, நாலாவது, ஐந்தாவது முறையும் தடுத்தான். ஆறாவது முறை ரோஹிதன் இந்திரன் வரும் முன் பார்கவரான அஜீகர்த்தர் என்பவரின் மூன்று மகன்களில் மத்ய மகனை விலை கொடுத்து வாங்கினான், யாக பலியாக வருணனுக்கு கொடுக்க. சுன:ஸேஃபன் என்ற அந்த சிறுவனை பலியாக யூபஸ்தம்பத்தில் கட்டி யாகம் ஆரம்பித்தது. புருஷ மேதம்- மனிதனை யாக பலியாக வைத்து- ஹரிசந்திரன் யாகம் செய்யலானான். அதன் பின் வருணன் மகிழ்ந்தான், அவன் மகோதரம் விலகியது என்று செய்தி.
அந்த யாகத்தில் ஹோதாவாக அத்வர்யு- யாகத்தின் முக்கிய அதிகாரி- விஸ்வாமித்திரர், ஜமதக்னி ப்ரும்மாவாக,, வசிஷ்டர் சாம கானம் செய்பவர், – இந்த சுன:ஸேபன் பற்றி மேலும் பின்னால் சொல்கிறேன், விஸ்வாமித்திரர் அந்த சிறுவனை பலியாகாமல் தடுத்து ஞானோபதேசம் செய்தார். அவர் சொன்னபடியே துதி செய்ததால் இந்திரன் மகிழ்ந்து அவனை காப்பாற்றி பொன் மயமான ரதம் பரிசாக அளித்தான். விஸ்வாமித்திரர் கருணையுடன் சிறுவனுக்கு உலகியலின் நிலையாமையை சொல்லி, நிர்வாணம் என்ற முக்தி தரும் ஞானம் அளித்து காப்பாற்றி விட்டு தன் வழி சென்றார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தின், ஒன்பதாவது ஸ்கந்தம், ஹரிச்சந்த்ரோபாக்யானம் என்ற ஏழாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-27
அத்யாயம்-8
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஹரிதன் என்பவன் ரோஹிதனின் மகன். சம்பா என்ற நகரத்தை நிர்மாணித்தான். சுதேவன், விஜயன் என்று அவன் புதல்வர்கள். பரூகன் என்று அவன் மகன், அவனுக்கு வ்ருகன், அதன் பின் பாஹுகன். அவன் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு, ராஜ்யத்தை இழந்து மனைவிகளுடன் வனம் சென்றான். வயதான காலத்தில், அவன் கால கதியடைந்த சமயம் அவன் மனைவி உடன் கட்டை ஏற முயன்றாள். கர்பவதியான அவளை மற்றவர்கள் தடுத்தனர். அவள் கருவுற்றிருப்பதையறிந்து மற்ற மனைவிகள் பொறாமையால் விஷத்தை கொடுத்து விட்டனர். ஆனால் அந்த மகன் விஷத்துடனே பிறந்தான். गरम्-விஷம் सगर-சகரன் எனப் பட்டான். சகரன் பெரும் புகழ் பெற்ற சக்ரவர்த்தியானான். அவன் புதல்வர்கள் சாகரம் என்ற சமுத்திரத்தை உண்டாக்கினர். தன் புதல்வர்களுடன் தாள ஜங்கான், யவன, சகரர்கள், இவர்களுடன் ஹைஹயர்கள், பர்பர என்ற ப்ரஜைகளுக்கு தொல்லை கொடுத்த எதிரிகளை அழித்தான். குரு சொன்னதால், மீசை உடையவர்கள், தலை வழுக்கையானவர்கள், அல்லது தலை விரி கோலமாகவோ, பாதி கேசம் மட்டுமே உள்ளவர்களையோ வதைக்காமல் அங்கஹீனம் மட்டும் செய்தான். அரை குறையாக ஆடை அணிந்தவர்கள் நாடோடிகளாக திரிந்தவர்களையும் வதைக்காமல் விட்டான். ஔர்வ என்ற தன் குரு சொன்னபடி யாகம் செய்தான். ஈஸ்வரனான ஸ்ரீ ஹரியை தன் ஆத்மாவாக அறிந்து முழு மனதுடன் யாகத்தில் ஈடுபட்டான். யாக பசுவான குதிரையை இந்திரன் அபகரித்தான். சுமதி என அவன் மனைவியின் புதல்வர்கள் தந்தையின் ஆணைப்படி அதைத் தேடிக் கொண்டு சென்றனர். பூமியை குடைந்து கொண்டே சென்றனர். முதலில் கிழக்கில், சென்றவர்கள் கபிலரின் ஆசிரமத்தில் குதிரையைக் கண்டனர். கண் மூடி தவம் செய்து கொண்டு இருந்த முனிவரை திருடன் திருடன் என்று கத்தியபடி கொல்ல முயன்றனர். ஆறாயிரம் பேர், தங்கள் ஆயுதங்களுடன் அவரைத் தாக்கினர். அவர் மகேந்திரன் தான் அவர்கள் மனதில் அந்த தவறான எண்ணத்தை தோற்றுவித்திருந்தான் என்பதை அறிந்தார். தவம் செய்து செய்து தகித்த அவரது உடல் வெம்மையிலேயே அனைவரும் க்ஷண நேரத்தில் பஸ்மமாகினர்.
முனி கோபத்தால் தகித்தார் என்பது தவறு. அவரோ தவம் செய்வதில் புலனடக்கி, காம க்ரோதங்களை வென்று ஒரே தியானமாக சத்வ குணமே உருவாக இருந்தவர். தாமசமான ரோஷம் அவரிடம் இல்லை. உலகையே புனிதமாக்கும் ஆத்மாவாக இருந்தவர். பூமியில் தான் புழுதி. வானத்தில் ஏது?
அவரோ ஞான மயமான சாங்க்ய யோகத்தை அனுஷ்டித்தவர். கடினமான அந்த மார்கத்தை மோக்ஷம் விரும்பி சாதனைகள் செய்பவர் கூட சுலபமாக ஏற்க மாட்டார்கள். பவார்ணவம் என்ற சம்சாரக் கடல் இதைக் கடக்க உதவும் பிறவி மரணமற்ற அபவர்கம் என்பதை எண்ணி தவம் செய்பவர், வேறு விதமாக எண்ணக் கூட முடியுமா?
கேசினி என்ற மனவியிடம் பிறந்தவர்கள், அசமஞ்ஜர்கள். அவன் மகன் அம்சுமான். அவன் தன் பாட்டனாரைப் போல குணங்கள் கொண்டிருந்தான். அசமஞ்சன் அவன் பெயருக்கு ஏற்ப குணம் இல்லாத அசடனாக இருந்தான். முன் பிறவியில் யோகியாக சாதனைகள் செய்து பாதியில் விட்டவன் போல இருந்தான். உலகில் பொதுவில் மனிதர்கள் அருவருக்கும் செயல்களைச் செய்தான். சரயு நதிக் கரையில் விளையாடும் பாலகர்களை பிடித்து வீசி எறிவான். தந்தை அவனை நாடு கடத்தி விட்டார். யோக பலத்தால் அந்த பாலகர்களை காட்டி விட்டு மறைந்தான். அவன் மகன் அம்சுமான்.
அயோத்யா வாசிகள் தங்கள் பாலகர்கள் திரும்பி வந்ததால் மகிழ்ந்தனர். அம்சுமான், சகரன் சொல்லி, தன் முன்னோர்களைத் தேடிக் கொண்டு சென்றான். பஸ்மம் தென்பட்ட அடையாளங்களை தொடர்ந்து சென்று முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். அங்கு அதோக்ஷஜனான கபிலரைக் கண்டு வணங்கினான்.
அம்சுமான் சொன்னான்: பரமாத்மா! எங்கள் உறவினர்கள் அறியாமல் செய்து விட்டனர். இன்றளவும் சமாதி யோகம் என்ற முறையில் தவம் செய்து கொண்டிருப்பவர் தாங்கள், இன்னமும் அதே யோக நிலையில் இருக்கிறீர்கள். வேறு யாராக இருக்க முடியும். மனம்,உடல்,புத்தி இவைகளை ஆட்டுவிப்பவனே தாங்கள். நாங்கள் இன்னமும் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லையே.
உங்கள் சக்தி வெளியில் தெரியாமல் மறைந்து இருக்கிறது. மாயை அவர்களை மோகத்தில் ஆழ்த்தி விட்டது. மனித பிறவி எடுத்த சாதாரண ஜீவன்கள், முக்குணங்களை ப்ரதானமாக கொண்டவர்கள், எதை அறிவார்கள்? தாமசமா, ராஜசமா, சத்வமா என்பதை?
தாங்கள் ஞானமே உருவானவர். உங்களை எந்த மாயையும், குண பேதங்களூம் மோகத்தில் ஆழ்த்த முடியாது.நான் எப்படி அறிவேன்? அந்த அளவு அறிவோ, மன பக்குவமோ எனக்கு இல்லையே. மிகவும் அமைதியான பற்றுதல்கள் அறவே அற்ற, குண கர்ம,உருவங்கள் தவிர இது தான் என பெயரிட்டு அழைக்க முடியாத சத்-அசத் என்ற வரையறைக்குள்ளும் அடங்காதவர், ஞான உபதேசத்துக்காகவே எடுத்த சரீரம், உங்களை நாங்கள் வணங்குகிறோம், தாங்களே பரம புருஷன், புராணன்- முன் தோன்றியவன் என்று வணங்குகிறோம்.
பகவானே! நீங்கள் விளையாட்டாக இந்த உலகை ஸ்ருஷ்டி செய்தீர்கள். இங்கு ஆசைகளும், செயல்களும், புலன்களின் அனுபவங்களுமே, எங்களை கட்டியுள்ளன. இப்பொழுது உங்கள் தரிசனத்தால் அந்த மோக பாசம்- கட்டு அவிழ்ந்தது.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு பாடலாக உணர்ச்சி பொங்க அவன் பாடியதைக் கேட்ட கபில முனிவர், அம்சுமானை அனுக்ரஹித்தார்.
ஸ்ரீ பகவான்- இதோ அந்த குதிரை, அழைத்துச் செல். குழந்தாய், உன் பாட்டனாரின் குதிரை இது. இதோ இங்கு தான் உன் தந்தைமார் பஸ்மமானார்கள். கங்கை நீர் தான் இவர்களை கரையேற்றும். வேறு எதுவும் பலனளிக்காது. இதைக் கேட்டு அம்சுமான், அவரை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, யாக பசுவான அந்த குதிரையை மீட்டு வந்து தர, சகரன் ஆரம்பித்து, நின்று போன யாகத்தையும் முடித்தான். அம்சுமானை ராஜ்யத்தில் அமர்த்தி விட்டு தான் குரு ஔர்வ என்பவரின் வழி காட்டலில் நல்ல கதியடைந்தான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், சகரோபாக்யானம் என்ற எட்டாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-31
அத்யாயம்-9
ஸ்ரீ சுகர் சொன்னார்: அம்சுமானும் கங்கையை கொண்டு வர தவம் செய்ய ஆரம்பித்தான். பல காலம் சென்ற பின்னும் எதுவும் நடக்கவில்லை. அவன் காலமும் முடிந்தது. அவன் மகன் திலீபன் அந்த செயலைத் தானும் தொடர்ந்து, தவம் செய்து கங்கையை வேண்டினான். அவனாலும் கங்கையை கொண்டு வர முடியவில்லை. கால கதி அடைந்தான். அதன் பின் பகீரதன் அரசனானான். இதே நினைவாக பெரும் தவம் செய்தான். அவனுக்கு கங்கா தேவி ப்ரசன்னமானாள். வரம் தர வந்திருக்கிறேன், என்ன வரமோ கேள் எனவும், தலை வணங்கி தன் விருப்பத்தை தெரிவித்தான். அவள் சொன்னாள்: என் வேகத்தை யார் தாங்குவார்கள். வேகமாக நான் பூமியில் விழுந்தால், அதை பூமி தாங்க மாட்டாள். அவளைத் துளைத்துக் கொண்டு நான் ரசாதளம் சென்று விடுவேனே என்றாள். அது தவிர நான் பூமியில் வந்தால் ஜனங்கள் என்னிடத்தில் தங்கள் பாபங்களை கரைக்க வருவார்கள். அந்த பாபத்தை அந்த சுமையை நான் எங்கு கரைப்பேன், ராஜன்! அதற்கும் ஒரு வழி கண்டு பிடி என்றாள்.
பகீரதன் சொன்னான்: நியாயமாக உள்ள சாதுக்கள் , சாந்தமாக, ப்ரும்ம வழியில் செல்பவர்கள் லோக பாவனர்கள் எனப்படுவர். அவர்கள் உன்னிடம் சேரும் பாபங்களை அகற்றி உன்னை தூய்மையாக்கி விடுவார்கள். பகவான் ஸ்ரீ ருத்ரனை வேண்டிக் கொள்கிறேன். அவர் உன் வேகத்தைத் தாங்குவார் என்றான். உடல் படைத்தவர்களின் ஆத்மானவர், அவர் தானே இந்த உலகத்தை, நூல்களை துணியாக்கும் தறி போல ஊடும் பாவுமாக தயாரிக்கிறார்.
இவ்வாறு சொல்லி அந்த அரசன், ஸ்ரீ ருத்ர தேவனை குறித்து தவம் செய்யலானான். அல்ப சந்தோஷி என்று பெயர் பெற்ற அவர் வெகு சீக்கிரமே அருள் பாலித்தார். நான் தாங்குகிறேன் என்ற சொல்லி, ஸ்ரீ விஷ்ணுவின் பாதத்தில் பெருகிய கங்கையைத் தாங்கினார். பகீரதனும் தன் முன்னோர்கள் பஸ்மமாகிக் கிடந்த இடத்துக்குச் சென்றான். வாயு வேகத்தில் ரதத்தில் செல்பவனை அதே வேகத்தில் கங்கை பின் தொடர்ந்தாள். போகும் இடங்களையெல்லாம் புனிதமாக்கியபடி, சகர புத்திரர்கள் எரிந்து சாம்பலாக கிடந்த இடத்தை நனைத்தாள். அந்த ஜல ஸ்பர்சம் மட்டுமே அவர்களை உடல் நலம் பெறச் செய்தது. அவர்களும் சுவர்கம் சென்றனர். கங்கா தேவியை சிரத்தையாக பூஜிப்பவர் என்ன தான் அடைய மாட்டார்கள்.
இதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. சுவர்க லோக நதியாக பகவானின் காலில் இருந்து ப்ரவகித்து சுவர்கத்தை வளமாக்கியவள், உலகில் பவ சாகரம் என்பதை கடக்க உதவுவாள். அவளிடம் தூய்மையான உள்ளத்துடன் ஸ்ரத்தையுடன் பூஜிக்கும் சிறந்த அறிஞர்களான முனிவர்கள், முக்குணங்களையும் கடப்பர். சிரம சாத்யமானது எனும் சாதனைகளைச் செய்து சீக்கிரமே தன்னையறிந்து இறைவனடி சேருவார்.
பகீரதனுக்கு நாபன் பிறந்ததாக கேள்வி. அவன் காலத்தில் சிந்து த்வீபம் என்று அழைக்கப் பட்ட இந்த தேசம் விரிவடைந்து பல ஆயிரம் மடங்கு விஸ்தீர்ணம் பெற்றது. ருது பர்ணன் என்பவன் நள ராஜாவின் சகா. நளன் அக்னி தேவனிடம் அஸ்வ வித்தை என்பதை கற்று அதில் தேர்ச்சி பெற்றிருந்தான். அக்ஷ ஹ்ருதயம் என்பதையும் அக்னி தேவன் கொடுத்தார். சர்வ காமன் என்பவன் அவன் மகன். அதன் பின் சுதாஸன், அவன் மகனின் மனைவி மதயந்தி. அவன் அரசனானான். அவன் கல்மஷாங்க்ரி – கறுத்த காலுடையவன்- என்று பெயர் பெற்றான் என்று சிலர் சொல்வர். வசிஷ்ட சாபத்தினால் ராக்ஷசனாக புத்ர பாக்யம் பெறாமலே தன் வினைப் பயனை அனுபவித்தான்.
அரசன் கேட்டான்: ஏன் என்ன காரணம்? குரு சாபம் பெறும்படி சௌதாசனின் மகன் என்ன செய்தான்? அதைச் சொல்லுங்கள். தெரிந்து கொள்ள விரும்புகிறேன், என்றான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: சௌதாசன் வேட்டையாடச் சென்றவன் தவறுதலாக ஒரு ராக்ஷஸனை வதைத்து விட்டான். அவனுடன் இருந்த ராக்ஷஸனை அவர் சகோதரன் என்பதால் தோன்றிய பரிவு காரணமாக உயிருடன் விட்டு விட்டான். அவனோ அதைக் க்ரோதமாக மனதில் வைத்துக் கொண்டு சமையற்காரனாக சௌதாசனிடமே வந்து சேர்ந்தான். ஒரு சமயம் குரு வசிஷ்டருக்கு போஜனம் செய்து வைக்க அவன் செய்த சமையலில் நர மாமிசத்தைக் கலந்து விட்டான். பரிஷேசனம் செய்யும் முன், இலையைப் பார்த்த பகவான் வசிஷ்டர், அதைக் கண்டு கொண்டார். அரசன் தனக்கு உண்ணத் தகாத உணவை படைத்து விட்டதாக கோபித்து ராக்ஷஸனாக ஆகும்படி அரசனை சபித்து விட்டார். சௌதாஸன் எப்படி இந்த தவறு நேர்ந்தது என்பதை ஆராய்ந்து பார்த்தவுடன், அனாவசியமாக என்னை ஏன் சபிக்க வேண்டும் என்று ப்ரதி சாபம் கொடுக்க ஜலத்தைக் கையில் எடுத்தான், அது தவறு, குருவுக்கு சாபம் கொடுப்பதாவது, அது அதர்மம் என்று அவன் மனைவி மதயந்தி அதைத் தடுத்தாள். அந்த ஜலம் அவன் காலில் விழுந்தது. அதன் பலனாக கால்கள் கருகின.
திசைகள், வானம், பூமி அனைத்தையும் பார்த்து தான் உயிருடன் ராக்ஷஸனாக இருப்பதையறிந்தான். ஒரு சமயம் வனத்தில் காட்டுத் தம்பதிகளைக் கண்டான். பசிக்கிறது என்று அந்தணனனை அபகரித்துக் கொண்டான்.
அந்த அந்தணனின் பத்னி, அவனைப் பார்த்து, ராக்ஷஸன் அல்ல நீ, இக்ஷ்வாகு அரசன், மகா ரதி என்று பெயர் பெற்றவன், ஏன் என் பதியை அபகரித்து என்னை நிராதரவாக ஆக்க நினைக்கிறாய். இளம் தம்பதிகள் நாங்கள், இன்னமும் எங்களுக்கு சந்ததி இல்லை, எனக்கு மகன் வேண்டும் என் பதியை திருப்பித் தா என்றாள். ராஜன்! இந்த தேகம் தான் வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றத் தேவை. அதை வதம் செய்தால் எல்லா விதமான அர்த்த காமங்களையும் அழித்தவனாக ஆவாய். இந்த ப்ராம்மணன் வித்வான், தவசீலன். நல்ல குணவான். ப்ரும்மனை ஆராதித்து மகா புருஷனை சர்வ பூதாத்ம பாவத்துடன் வணங்கி வந்தவன். தன் குணத்தால் அனைத்து உயிரினங்களிலும் அந்தராத்மாவாக இருக்கும் பகவானைக் கண்டு கொண்டவர். இந்த ப்ரும்ம ரிஷிகளிலும் சிறந்தவரான இவரைக் கொன்று, விபோ! மதயந்தியின் பதி நீ ,தர்மம் அறிந்தவன் என்று புகழ் பெற்றிருந்தவன் எப்படி விமோசனம் பெறுவாய். தந்தையே தனயனைக் கொல்வது போல அல்லவா இது.
எந்த விதமான பாபமும் அண்டாதவன். ப்ரும்மவாதி- வேத சாஸ்திரங்களை அறிந்தவன் சாது இவர். உனக்கு பசிக்கிறது, அதனால் உணவு தேவை என்றால் என்னை உண்பாயாக. பரம்பரையாக ப்ரும்ம வாதிகளாக இருந்த வம்சத்தில் பிறந்த இவரைக் கொன்று நீ என்ன சுகம் பேறு பெறுவாய். இவரை விட்டு தனியாக நான் வாழவும் வழியில்லை. நானும் உடன் மரிப்பேன் என்று இவ்வாறு மிகுந்த தீனமாக அந்த மனைவி அழுத போதும் பசித்த புலி மிருகத்தை அடிப்பது போல சௌதாஸன் அந்த ப்ரும்ம வாதியான அந்தணனை விழுங்கி விட்டான். ப்ரும்ம சாபம் தான் காரணம்.
அந்தணனின் மனைவி திகைத்தாள். கோபத்துடன் நரனை விழுங்கும் அதமனா நீ, என்று திட்டியதோடு சபித்தாள். என் கணவனை கொன்று விட்டாய். அவரிடம் நான் என் குழந்தைகளைப் பெற விரும்பி ஆவலுடன் இருந்தேன். இதே காரணமாக, காமத்துடன் பதியை நேசித்த என்னை பரிதவிக்க விட்டு விட்டாயே, நீயும் இதே போல பரிதவிப்பாய். அதனாலேயே உன் மரணமும் நிகழும். மூடனே, என்று மித்ர சஹன் என்ற சௌதாஸனை சபித்து விட்டு, தன் பதியின் அஸ்திகளை பொறுக்கி அக்னியில் போட்டு அந்த சிதையிலேயே தானும் விழுந்து மரித்தாள்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் சாப விமோசனம் பெற்று சுய உருவை அடைந்த சௌதாஸன், மனைவியை நெருங்கிய பொழுது அவள் இந்த சாபத்தை நினைவூட்டி, அவன் ஆசைக்கு இசைய மறுத்தாள். அதன் பின் பெண் சுகம் என்பதே அறவே இல்லாமல், தன் வினை காரணமாகவே சந்ததியும் இல்லாமல், போகவே அவன் அனுமதித்து வசிஷ்டர் மூலம் மதயந்திக்கு ப்ரஜை உண்டாயிற்று. அவள் ஏழு மடங்கு கர்ப காலத்தை தாங்கி, பெற்றதால் கல் வயிறு உடையவள் என்றும், அவள் மகன் அஸ்மகன்- கல்லில் பிறந்தவன் என்றும் அழைக்கப் பட்டனர்.
அஸ்மகன் மகன் மூலகன், அவன் அந்த: புரத்தில் பெண்களால் வளர்க்கப் பட்டான். அதனால் நாரீ கவசன் என பெயர் பெற்றான். க்ஷத்திரியனுக்குரிய குணங்கள் இல்லாமல் வளர்ந்தான். (பரசு ராமர் நி:க்ஷத்திரிய -அரச குலங்களை அழித்து வந்த சமயம் ஆதலால்). அவனுக்குப் பின் தசரதன், அவன் மகன் ஏடவித்,அதன் பின் ராஜாவான விஸ்வ சஹன், அவனுக்கு பிறந்த கட்வாங்கன் சக்ரவர்த்தியானான். அவன் தேவர்கள் வேண்டிக் கொண்டதால் தைத்யர்களுடன் போரிட்டு அவர்களை வதைத்தான். யுத்தத்தில் தோல்வியே காணாதவனாக இருந்தவன், நாளடைவில் விரக்தியடைந்தான். முஹூர்த நேரமே மனிதனின் வாழ்வு என்ற எண்ணத்துடன் திரும்பி தன் ராஜ்யத்துக்கே வந்தான். ப்ரும்ம குலத்தின் ப்ராணன்- இயல்பான ஞானமும் இல்லை, குல தெய்வங்களின் ஆசி இல்லாததால் சந்ததியும் இல்லை, செல்வமும் இல்லை, பூமியும் இல்லை, மனைவிகளும் அதிக பிரியத்துடன் இல்லை, நினைவில் கொள்ளும் படியான இள வயது அனுபவங்களும் இல்லை. ஒரு பொழுதும் அதர்மத்தில் என் மனம் சென்றதில்லை. உத்தம ஸ்லோகனான பகவானைத் தவிர மற்ற வஸ்து எதுவும் இல்லை. தேவர்கள் எனக்கு காம வரம் தந்தனர். அதையும் வேண்டேன். பூத பாவனன் பாவமே என் மனதில் உள்ளது. தேவர்களுக்கு இது போன்ற இந்திரிய சுகங்கள் கிடையாது. தன் மனதில் பிரியம் என்ற உணர்வே இல்லாதவர்கள். அவர்கள் என்ன வரம் கொடுப்பது?
ஆகையால், ஈஸ்வரனையே பஜிக்கிறேன். தன் மாயையால் தோற்றுவித்த பந்தங்கள், குணங்கள், கந்தர்வ புரம் போன்றவைகள். எதுவுமே வேண்டாம். என் இயல்பான குணம் விஸ்வ கர்த்தாவான பகவானை உள்ளூற அறிந்து கொண்டு விட்டேன். அவரையே சரணடைகிறேன். எந்த பகவானை வாசுதேவன் என்று சாதுக்கள் நம்பி வணங்குகிறார்களோ, சூக்ஷ்மானது. அசூன்யம், ஸுன்யம் போல காணக் கிடைக்காதது, அந்த ப்ரும்ம ரூபத்தை, அக்ஞானத்தை விலக்கி, மாற்று சிந்தனையின்றி அவரையே சரணடைகிறேன்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், ஸுர்ய வம்ச அனுவர்ணனே என்ற ஒன்பதாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-41
அத்யாயம்-10
ஸ்ரீ சுகர் சொன்னார்: கட்வாங்கனுக்கு தீர பாஹு எனப் புகழ் பெற்ற ரகு என்பவன் மகன், ரகுவின் மகன் ப்ருதுஸ்ரவா: என்பவன். அவனுக்கு அஜன் பிறந்தான். மகா ராஜாவாக இருந்தான். அவனுக்கு தசரத ராஜா, அதன் பின் பகவான் தானே ப்ரும்ம மயமான ஸ்ரீ ஹரியின் அம்சங்களாக நான்கு மகன்களாக அவதாரம் செய்தார். தேவர்கள் பிரார்த்தித்தனர் என்பதால் எடுத்த அவதாரம். ராம, லக்ஷ்மண, பரத , சத்ருக்ன என்ற பெயர்கள்.
|| ஜானகீ காந்த ஸ்மரணம் ஜய ஜய ராம ராம ||
அவர் சரித்திரத்தை தத்வ தரிசிகளான ரிஷிகள் பாடியிருக்கிறார்கள். சீதா பதியின் வரலாற்றை நீயும் கேட்டிருப்பாய். குருவான தந்தை சொன்னதால் ராஜ்யத்தை தியாகம் செய்தவர். பத்ம பாதா- தாமரை மலர் போன்ற மென்மையான பாதங்களையுடைய சீதா தேவி அவனை பின் தொடர்ந்தாள். கை பட்டாலே வாடி விடுமோ எனும் அளவு மென்மையான பாதங்கள், அவளுடன் வனத்துக்கு வனம் அலைந்தார். சூர்பணகையின் வரவும், அவளை விரூபமாக்கியதும், பிரியமான மனைவியை விட்டுப் பிரிந்த துக்கத்துடன் தேடிச் சென்ற சமயம் வானரத் தலைவன், சுக்ரீவன் மற்றும் தன் சகோதரனுடன் வசித்தார். புருவத்தை நெரித்து ரோஷம் தெரிய சமுத்திரத்தை தாண்ட சேது கட்டினவர், துஷ்டர்களை அடக்கி லங்கையை எரித்தவர், அந்த கோஸலேந்திரன் நம்மை காக்கட்டும்.
விஸ்வாமித்திரரின் யாக சாலை. மாரீசன் மற்றும் அவன் உடன் வந்த அரக்கர்களைக் கண்டு பயங்கர நிசா சரர்கள் என்று உலகத்தினர் பயந்தனர். அவர்கள் நிசா சரர்கள்- இரவில் சஞ்சரிக்கும் அரக்கர்கள் – யாகத்துக்கு இடையூறு செய்ய வந்தனர். அவர்களை, லக்ஷ்மணன் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அழித்து முனிவரின் யாகத்தை நிறைவாக செய்ய உதவினார்.
சீதா ஸ்வயம்வர மண்டபத்தில், அவர், உலகத்து வீரர்கள் அனைவரும் கூடியிருந்த சபையில், உக்ரமான மகேஸ்வரனுடைய வில்லை தூக்கி நிறுத்தினார். அதை சபைக்கு கொண்டு வரவே முன்னூறு பேர் வேண்டியிருந்தது. சிறப்பாக பூஜித்து அலங்கரிக்கப் பட்ட பெரிய வில். இளம் யானை கரும்பை தூக்குவது போன்ற லாகவத்துடன் தூக்கி வளைக்கவும், அது நடுவில் உடைந்து விழுந்தது.
குண, சீல, வயது, அங்க லாவண்யம் இவைகளுடன் அனுரூபமாக இருந்த சீதா தேவியை, சாக்ஷாத் லக்ஷ்மி தேவியை அடைந்தார். ஸ்ரீ தேவியே, முன் தன் மார்பில் ஏந்தி இருந்தவளே அவள். ஊர் திரும்பும் வழியில் பார்கவ ராமனை சந்தித்து, அவர் கர்வத்தை அடக்கும் விதமாக அவர் வில்லை கையில் எடுத்து நாணேற்றி, அவர் காட்டிய இடத்தில் எய்தார்.
தந்தையின் சத்யத்தைக் காக்கவே, பெண் வார்த்தை என்று தள்ளாமல், அரச மகிஷியான கைகேயியின் சொல்லை மதித்து, மனைவியுடன் ராஜ்யத்தை துறந்தார். ராஜ்யம், செல்வங்கள், உடன் இருந்த அன்பர்கள், தோழர்கள், வீடு வாசல் அனைத்தையும் துறந்து வனம் சென்றார். சங்கத்தை துறந்த சாதகர்கள் எளிதாக உயிர் மூச்சை விடுவதைப் போல.
ராக்ஷஸனின் சகோதரியின் அறிவில்லாத நடத்தையால், அவளை விரூபம் செய்து விரட்ட வேண்டியிருந்தது. அவள் சொல்லைக் கேட்டு போருக்கு வந்த கர, த்ரிசிரஸ் தூஷணன் முதலிய ராக்ஷஸர்களை பந்துக்களுடன் தான் ஒருவனாக எதிர்த்தார். பதினான்கு ஆயிரம் அரக்கர்கள், கோதண்ட பாணியாக அவர்களை ஒடுக்கினார்.
சீதாவைப் பற்றி சொல்லக் கேட்ட தசக்ரீவன் மனதில் ஆசை வளர்ந்தது. அது தீயாக அவனை சூழ்ந்து சுட்டது. அடக்க மாட்டாமல், பலவிதமாக யோசித்து, தவறான எண்ணத்துடன், அத்புதமான ஒரு மானாக மாரீசன் என்ற நண்பனை அனுப்பி, அவளை மோகிக்கச் செய்து அபகரித்தான். மாரீசன் கூர்மையான ராமருடைய பாணத்தால் அடிபட்டு உயிரை விட்டான்.
ராக்ஷஸ அதமன், ஓனாய் போன்று நடுக் காட்டில், ஒருவரும் அறியாமல் வைதேஹ ராஜனின் மகளை, கடத்திச் சென்றதை அறியாமல் காட்டில் சகோதரர்கள் இருவரும் அவளைத் தேடி அலைந்தனர். இது தான் உலகியல், பெண்ணுடன் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் எனக் காட்டவே என்பது போல.
கபந்தனை கண்டனர். தானே தன் தவற்றால் அடைந்த கோர ரூபம் அவனுடையது. அவனை வதைத்து, அவன் விருப்பம் போல தஹனம் செய்த பின், அவன் காட்டிய வழியில் வானர ராஜனைக் காணச் சென்றார்கள். கபந்தன் வானர ராஜனைப் பற்றிச் சொல்லி, அவனுக்குத் தெரியும் சீதையை யார் கொண்டு சென்றார்கள் என்பதை, அவனுடன் சக்யம் செய்து கொள் என்று அறிவுறுத்தினான். வாலியை வதைத்த பின், நாலா திசைகளிலும் சீதையின் நிலையை அறிந்து வர வானர சேனை சென்றது. தென் திசையில் சென்ற ப்லவகேந்திரன்- அனுமன் மூலம் விவரம் அறிந்து சமுத்திர கரை வந்து சேர்ந்தார்கள்.
அவருடைய ரோஷத்தைக் கண்டு சமுத்திர ராஜன் நடுங்கி விட்டான். முதலைகளும் ஆமைகளும் பயந்து அலை பாய்ந்தன. சமுந்திர ராஜன் தலை மேல் கை கூப்பியபடி ஸ்ரீ ராமனின் பாதங்களில் வணங்கினான். பகவானே! ப்ரபோ! எங்கள் அறிவுக்கு எட்டாத விஷயம் இது, ஜகதாத்மா, அந்தர்யாமியாக இருப்பவன், ஆதி புருஷன் என்பது எல்லாம் உடனடியாக புத்தியில் உறைப்பதில்லை. சத்வ குணங்களுடன் தேவர்கள், ராஜஸ குணத்துடன் பூமியில் அரசர்கள், உங்கள் மன்யு-கோபமே பூத பதியான மகேஸ்வரன் என்ற வரை அறிவோம். குணங்களின் தலைவன் தாங்கள். தங்கள் விருப்பப்படி செல்லுங்கள். விஸ்ரவஸ புத்திரன்- ராவணனை போரில் முறியடியுங்கள், உலகத்திற்கே ராவணனாக – உபத்ரவம் செய்பவனாக இருப்பவன் அவனை வென்று உங்கள் மனைவியை திரும்ப பெறுங்கள். அதற்கு வசதியாக, சேதுவை கட்டிக் கொள்ளுங்கள். அது என்றும் நிலைத்து நிற்கட்டும். திக்விஜயம் செய்பவர்களுக்கு அது வரப் பிரசாதமாக இருக்கும்.
அதன் பின் பலவிதமான கற்களைக் கொண்டு, மலைகளில் இருந்து கொண்டு வந்து வானர ராஜனின் ஆணைப்படி அனைத்து வானரங்களும் கைகளால் முடிந்த வரை கற்களைக் கொண்டுவந்து சேர்த்தன. அவைகளின் நடமாட்டத்தால் பூமியே நடுங்கியது போல ஆயிற்று. சுக்ரீவன், நீலன், ஹனுமான் மற்றும் பலர் உழைத்தனர். அதன் பின் விபீஷணன் வந்து சேரவும் அவன் சரணாகதியை ஏற்று சேர்த்துக் கொண்டு, முன்பே ஒரு முறை தீக்கு இரையான லங்கையை அடைந்தார்கள்.
வானரேந்திரனின் படை வீரர்களான வானரங்கள் நகரம் முழுவதும் விஹாரங்களிலும், கோபுரங்களிலும் பயமின்றி சஞ்சரித்து, கிடைத்ததை உடைத்தும், ப்ரதான கோட்டையை அடைந்து த்வஜத்தை கீழே தள்ளி, பொற் கலசங்களை சாய்த்து, அழகிய ஸ்ருங்கார வனங்களைத் த்வம்சம் செய்தும், யானை இறங்கிய குளம் போல களேபரமாக ஆக்கி விட்டன.
ராக்ஷஸ ராஜன் அதைக் கண்டு கோபத்துடன், நிகும்பன், கும்பன், தூம்ராக்ஷன், துர்முகன், சுராந்தக , நராந்தகன் முதலிய வீரர்களையும், ப்ரஹஸ்த புத்திரன்,அதிகாயன், விகம்பன் முதலியவர்களையும், தன் பரிவாரம் முழுவதுமே ஒவ்வொருவராக எதிர்த்து நிற்க அனுப்பி, பலனில்லாமல் கும்பகர்ணனை அணுகினான்.
அவனும், யாது தானர்களுக்கே உரிதான பயங்கர ஆயுதங்கள், ப்ராஸம், தோமரம், சக்தி, இஷ்டி, சர-அம்புகள், தோமர, வாள், துர்கம் என்ற ஆயுதம் இவைகளுடன் போர்களத்துக்கு வந்தான். சுக்ரீவனும், லக்ஷ்மணனும், மருத் சுதனான ஹனுமானும், கந்த மாதனன், நீலன், அங்கதன், ருக்ஷ பதி- கரடி ராஜன், பனஸன், இவர்கள் அவனுடன் மோதினர். அவர்கள் ரகு பதியின் சேனைத் தலைவர்கள். த்வந்த்வம்- நேரடியாக இருவர் மோதுவது, படை வீரர்கள் எதிர் தர்ப்பு படை வீரர்களுடன், யானை, குதிரை, ரதங்கள் இவைகளிலும் கால் நடையாக வந்த வீரர்களுடன், வானரங்கள் தங்கள் கைகளில் மரங்கள், மலையிலிருந்து கொண்டுவந்த கற்கள்,பெரும் பாறைகள், கதை, வில், இவைகளைக் கொண்டு, திருப்பி அடித்தனர். சீதையை கவர்ந்து வந்த செயலாலேயே ராவண படையினரின் மங்களமே அழிந்து விட்டது போல இருந்தது.
ராக்ஷஸ ராஜன், தன் பலம் அனைத்தும் இழந்த பின்னும் ரோஷம் அடங்காமல், ரதத்தில் ஏறி ஸ்ரீ ராமனை முற்றுகையிட்டான். மாதலி கொண்டு வந்த தன் ஸுரியனுக்கு ஒப்பான ப்ரகாசமுடைய ரதத்தில் ஏறி கூர்மையான அஸ்திரங்களை பிரயோகித்தார். அவனை நேருக்கு நேர் பார்த்து ராமர் சொன்னார்: புருஷாதமா! காட்டில் திரியும் சிறு நாய் போல ஒளிந்திருந்து வந்து என் மனைவியை அபகரித்தாய். வெட்கமின்றி செய்த செயல். மா பெரும் வீரன், மகா ராஜா என்ற உன் பதவிக்கும், தகுதிக்கும் அந்த செயல் ஏற்புடையதே அல்ல. அருவருக்கத் தகுந்த அந்த செயலுக்குத் தான் நான் பதில் தரப் போகிறேன். காலனே போல வந்துள்ள என்னை மீற முடியாத என் வீர சாகசங்களைப் பார், என்றார். சொன்ன வண்ணமே தன் வில்லில் உயர்ந்த பாணங்களை வைத்து வஜ்ரம் போல அவன் மேல் விழும்படி இடை விடாது அடித்தார். ராவணனுடைய ஹ்ருதயத்தை அவை பிளந்தன. ராவண ராஜா ரத்தம் சொட்ட பத்து முகங்களுடனும், விமானத்திலிருந்து விழுந்தான். ஹா ஹா என்ற ஓலம் எழுந்தது. சுக்ருதி- நல் வினைகள் செய்தவன் போல உயிரிழந்தான்.
யாது தானர்களின் மனைவிகள் ஆயிரக் கணக்கானவர்கள் லங்கையிலிருந்து வந்தனர். மந்தோதரியுடன் அனைவருமே ஓலமிட்டு அழுதனர். லக்ஷ்மணனில் பாணத்தால் அடிபட்டு உயிரிழந்த தன் பந்துக்கள் என்று சிலர், அந்த உடல்களைத் தேடி அடையாளம் கண்டு ஓவென்று அழுதனர். ஹா ஹதாஸ்ம என்று ராவண பத்னிகள் லோக ராவணனாக இருந்தாய், வீரனே, நீ இல்லாமல் இந்த லங்கையில் எப்படி வாழ்வோம், மகானாக, உனக்கு என்ன குறை இருந்தது, அனாவசியமாக சீதையிடம் மையல் கொள்ள, அப்படி ஒரு காம வசம் ஆனாய். அதன் பலன் தான். சீதையின் காரணமாகவே இந்த நிலைக்குத் தள்ளப் பட்டாய். இதோ பார், இந்த லங்கையே இப்பொழுது தலைவன் இன்றி அமங்களமான கோலம் கொண்டுள்ளது. குல நந்தனா! உன் வீரர்களின் உடல்கள் கழுகுகளுக்கு ஆகாரமாக ஆகி விட்டன பார், அவர்கள் ஆத்மாவுக்கு நரகம் தான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: கோஸலேந்திரன் அனுமதி அளித்தவுடன் விபீஷணன் தந்தைக்கு செய்வது போல அண்ணனான ராவண ராஜாவுக்கு அபர காரியங்களைச் செய்தான். அதன் பின் அசோக வனிகா என்ற ஆஸ்ரமத்தில், இளைத்து சிம்சுபா மரத்தடியில் வீற்றிருந்த சீதையை கண்டார். பிரியமான மனைவியைக் கண்டு மிகவும் வருந்தினார். தன்னைக் கண்டதும் மகிழ்ந்து முகம் மலர இருந்தவளைக் கண்டார். அவளை விமானத்தில் ஏற்றிக் கொண்டு, சகோதரர்களுடன், ஹனுமன் முதலானாரோடு கிளம்பினார். விபீஷணனுக்கு லங்கா ராஜ்யத்தைக் கொடுத்து, லங்கையுடன் கல்பாந்தம் ஆயுள், இவற்றையும் கொடுத்தார்.
தன் விரதம் முடிந்த நிலையில் நகரத்துக்குத் திரும்பினார். ஜனங்கள், பூக்களை வாரியிறைத்து கோலாஹலமாக வரவேற்றனர். சத த்ருதி முதலானவர்கள் முன்னின்று பாராட்டி பாடல்களாக பாடுவதைக் கேட்டபடி, வல்கலை தரித்து விரதம் இருந்த பரதனைக் காணச் சென்றார். அவன் புல்லைப் பரப்பி அதன் மேல் அமர்ந்தவனாக, உடலால் தீனமாக இருந்த போதிலும், மந்திரிகளை அழைத்து, ஊர் ப்ரமுகர்களையும் வரவழைத்து, ஸ்ரீ ராமர் வந்து விட்டார் என்று, பாதுகைகளை சிரசில் வைத்தபடி எதிர் கொண்டழைக்க வந்தான். நந்தி க்ராமத்திலிருந்து கீதங்கள் வாத்யங்கள், முழங்க, ப்ரும்ம கோஷமும், அடுத்து அடுத்து பாடிக் கொண்டே வேத விற்பன்னர்கள் வர, சுவர்ண கொடிகள், பதாகைகள் இவைகளுடன் விசித்ரமான அலங்காரங்களுடன் ரதங்களையும் உயர் ஜாதி குதிரைகளைப் பூட்டி, பொன்நிற சீருடைகள் அணிந்த காவலர்கள், போர் வீர்கள் அணி வகுக்க, நடந்து வந்த அணுக்கத் தொண்டர்கள், மிக உயர்ந்த தின்பண்டங்கள், நிறைய எடுத்துக் கொண்டு, எதிர் கொள்ள வந்தவன் அவரைக் கண்டதும் பாதங்களில் விழுந்தான்.
கண்களில் நீர் மல்க, பாதுகையை முன் வைத்து அவர் அதில் ஏறிய பின், இறுக அணைத்து வெகு நேரம் தோளோடு தோளாக, கண்ணீராலேயே நீராட்டுவான் போல இருந்தான். அதன் பின், லக்ஷ்மணனை வணங்கினான். சீதா தேவியையும் மற்ற வேத விற்பன்னர்களான அந்தணர்களையும், தகுதி வாய்ந்த பெரியார்களையும் வணங்கினான். அங்கு கூடியிருந்த அயோத்யா வாசிகள் பரதனை வணங்கினர்.
உத்தர கோசலை நகரத்து மக்களும் தங்கள் அரசன் திரும்பி வந்ததைக் கொண்டாடினார்கள். ஆடியும் பாடியும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். பாதுகை அதுவரை பரதன் தன் இடத்தில் அடைக்கலமாக வைத்து சாமர, வ்யஜனங்களோடு அரசனுக்குரிய மரியாதையுடன் நடத்தப் பட்டு வந்திருந்தது. அதை சத்ர சாமர, மற்றும் வெண் குடையுடன் சுக்ரீவனும், விபீஷணனும், அனுமானுமாக ஏந்தி வந்தனர். வில்லையும் அம்புறாதூணியையும் சத்ருக்னனும், தீர்த்த கலசத்தை சீதையும் எடுத்துக் கொண்டனர். அங்கதன் பொன்னாலான பிடியுடன், தோல் உறையில் இருந்த வாளை எடுத்துக் கொண்டு பின் தொடர, கைகளில் பூக்கள் நிறைந்த தாளங்கலோடு, பெண்களும் வந்திகள் எனும் பாடகர்களும் தொடர்ந்தனர். க்ரஹங்கள் சூழ சந்திரன் உலா வருவது போல பகவான் வந்தார். சகோதரர்கள் நால்வருமாக உத்சாகமாக நகருள் நுழைந்தனர். வைதேஹியும் லக்ஷ்மணனும் உடன் வர, ஸ்ரீ ராமன் தாய் மார்களை வணங்கினார். அவர்களும் தங்கள் தங்கள் மகன் களை ஆசீர்வதித்து அணைத்து மகிழ்ந்தனர்.
ஜடைகளைக் களைந்து விதி முறைகளின் படி குல குரு, மூத்தவர்கள், ரிஷிகள் அனைவருமாக நான்கு திசையிலிருந்தும் கடல் ஜலம் கொண்டு வந்து அபிஷேகம் செய்தனர். தலை முழுகி சுத்தமான ஆடைகளை அணிந்து, அரசனுக்குரிய அலங்காரங்களுடன் சிம்ஹாஸனத்தில் சீதையுடனும் சகோதர்களுடனும் அமர்ந்தார். தன் இளையவன் மரியாதையுடன் வணங்கி, அதுவரை பாதுகாத்து வைத்திருந்த ராஜ்ய பாரத்தை, தமையனிடம் கொடுத்த விவரம் அறிந்த அனைவரும் மிகவும் மகிழ்த்து கொண்டாடினர்.
ஸ்ரீ ராமனுடைய ஆட்சியில் ப்ரஜைகள் தர்மத்தை அறிந்து அனுசரிப்பவர்களாக இருந்தனர். வர்ணாஸ்ரமத்தை அதன் குறிகோள்களுடன் அறிந்து கை பிடித்தனர். தந்தையாக இருந்து ராமன் ராஜ்யத்து ப்ரஜைகளை பாலனம் செய்தான், ப்ரஜைகளும் தந்தையாகவே அவரை உணர்ந்தனர். த்ரேதா யுகம் போலவே காலம் அமைதியாகச் சென்றது. தர்மவானான ராஜா ராமன். பிரஜைகளும் சுகமாக இருந்தனர். வனங்கள், நதிகள், மலைகள், மழை பொழிவது, தீவுகள் , பெருங்கடல்கள், அணைத்தும் வேண்டியதைத் தருபவைகளாக இருந்தன. பரத வழித் தோன்றலே! பரீக்ஷித்!, ராம ராஜ்யத்தில், உடல் வியாதிகள், மனோ வியாதிகள் தென்படவில்லை. முதுமை நரை, என்று மனிதர்கள் துக்கமோ, பயமோ உடல் வருத்தமோ அனுபவிக்கவில்லை. ம்ருத்யுவும், எதிர்பாராத இடத்தில், அகாலமாக யாரையும் அண்டவில்லை. ஏக பத்னி-ஒரே மனைவி என்ற கொள்கையுடன் வாழ்ந்தனர். ராஜ ரிஷியாக இருந்த அரசனைப் போலவே ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். ஸ்வ தர்மம், இல்லற தர்மம் என்பதை தாங்களே அறிந்து கொண்டவர்களாக இருந்தனர்.
சீதா தன் அன்பினால், பணிவிடைகளால், தன் சீலம், பரிவு, அடக்கம், பயம், வெட்கம், இவைகளுடன், கணவனின் குறிப்பறிந்து ராமனின் மனம் கோணாமல் நடந்து கொண்டு அவன் அன்புக்கு பாத்திரமானாள்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், ராம சரிதம் என்ற பத்தாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-56
அத்யாயம்-11
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவான் தானே ஆத்மாவாக இருந்தும், தன்னை ராமன் எனும் மனிதனாகக் கருதியே சர்வ தேவ மயமான தேவனை தன் குரு ஜனங்களுடன் யாகங்கள் செய்தார். யாகத்தில் ஹோத்ரு- என்ற முதன்மையான குருவிற்கு கிழக்கு திசையையும், ப்ரும்மாவாக அமர்ந்தவருக்கு தென் திசையையும், அத்வர்யு என்பவருக்கு மேற்கு திசையையும், சாம கானம் செய்தவருக்கு வடக்கு திசையையும் அளித்தான். ஆசார்யருக்கு மீதியை அளித்தார். மீதி இருந்த நிலத்தை அவருக்கு அளித்தார். அவை ஆசைகளற்ற அந்தணர்களுக்கு உரியது என எண்ணினார். ஆடை அலங்காரங்கள் என்று மீதியிருந்தவர்கள் கிடைக்கப் பெற்றனர். மகா ராணியான சீதா தன் மங்கள ஆபரணங்கள் மட்டுமே கொண்டிருந்தாள்.
அவர்கள், ப்ரும்மண்ய தேவர்கள் என பெருமை வாய்ந்த பேரறிஞர்கள், அரசனது மதிப்பை ஏற்று மற்ற பொருட்களை திருப்பி கொடுத்து விட்டனர். பகவன், புவனேஸ்வர! எங்கள் மனதில் அறியாமை எனும் இருட்டை அகற்றி உன் ப்ரகாசத்தால் ஒளி கூட்டி விட்டாய். அதுவே பெரும் பரிசு, உலகியல் பொருட்களால் நாங்கள் என்ன செய்வோம். உன்னிடமே இருக்கட்டும் என்றனர். துதிகள் செய்தனர்.
நமோ ப்ரும்மண்ய தேவாய, ராமாயாகுண்ட மேதஸே| உத்தம ஸ்லோக துர்யாய, ந்யஸ்த தண்டார்பித்தாங்க்ரயே||
ஒருசமயம், இரவில் ராஜ்யத்தில் நடப்பதை தெரிந்து கொள்ள ஊருக்குள் நடமாடிக் கொண்டிருந்தார். யாரோ தன் மனைவியைப் பற்றி பேசுவதைக் கேட்டார். ‘ துஷ்டை நீ, உன்னை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். மாற்றான் வீட்டில் இருந்திருக்கிறாய். ராமன் சீதையை ஏற்றுக் கொண்டிருப்பான், ஸ்த்ரீலோபி, அவன் ஏற்பான். நான் மாட்டேன்’
இப்படி எவ்வளவு பேர் பேசுகிறார்கள், தெரியவில்லையே என்று அவர் மனம் யோசித்தது. இது எதில் கொண்டு விடுமோ என்ற பயம் தோன்ற மனைவியைத் தியாகம் செய்தார். அவள் வால்மீகியின் ஆசிரமத்தில் வந்து சேர்ந்தாள். கருவை சுமந்தவள், யார் என்று அறியாமலே, ஆசிரமத்து பெண்கள் அவளை பாதுகாத்தனர். இரட்டையாக மகன்களை ப்ரசவித்தாள். முனிவர் அறிந்தார் அந்த சிசுக்கள் அரசனுடைய வாரிசு என்பதை. லவன், குசன் எனப் பெயரிட்டு வளர்த்தார்.
லக்ஷ்மணனுடைய புதல்வர்கள், அங்கதன், சித்ர கேது எனப்படுவர். தக்ஷன் तक्षन् , புஷ்கலன் என்று பரதனின் மற்றும் சுபாஹு, ஸ்ருத சேனன் என்று சத்ருக்னனின் புதல்வர்கள். பரதன் திக்விஜயம் செய்து பல கந்தர்வர்களை வென்றான். அந்த வெற்றியில் பெற்ற செல்வங்களைக் கொண்டுவந்து பொக்கிஷத்தில் சேர்த்தான். சத்ருக்னன் மது என்ற அரக்கனின் மகனை லவணன் என்பவனை அழித்து, மது வனம் என்ற இடத்தில் மதுரா என்ற நகரை ஸ்தாபித்தான்.
சீதை தன் புதல்வர்களை முனிவரின் பொறுப்பில் விட்டு விட்டு, ஸ்ரீ ராமரையே தியானம் செய்தவளாக பூமியினுள் நுழைந்து விட்டாள். பகவான் ராமர் அவளை மனதார நேசித்தவர், குற்றமற்றவள் என்று தெரிந்தும், கை விட்டவர், இதைக் கேட்டு அவள் குணங்களை ஸ்லாகித்து அழுகையை அடக்க மாட்டாமல் திணறினார்.
ஆண் பெண் உறவு இப்படித்தான், எங்கும் எதிலிருந்தும் அபாயம் வரலாம், பிரியமானவர்களை பிரிய நேரிடலாம், செல்வந்தர்கள் கதியே இப்படி என்றால் சாதாரண ப்ரஜைகள் என்ன செய்வர்? அதன் பின் தன் பிரிய மனவியைத் தவிர எதையும் எண்ணாமல் ப்ரும்ம சாரியாக வாழ்ந்தார். பல ஆண்டுகள், முப்பதாயிரம் ஆண்டுகள், அக்னி ஹோத்ரம் இடை விடாது செய்பவராக, தண்டகா வனத்து முட்கள் குத்திக் கிழித்த தன் பாதங்களை வணங்குபவரின் மனதில் ஆத்ம ஜோதியாக நிலைத்து நிற்பவராக ஆனார்.
தேவர்கள் வேண்டிக் கொண்டதால், அவர்கள் குறை தீர்க்க மனிதனாக அவதாரம் செய்தவர். அவரிடம் இல்லாத திறமைகளா, ராக்ஷஸனை வதம் செய்யவும், சமுத்திரத்தின் குறுக்கே அணை கட்டவும் வானர சேனையின் உதவியை நாடினார் என்பது அவருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. அவருடைய புகழை இன்றளவும் சபைகளில் பாடுகிறார்கள். ரிஷிகள் அதைக் கேட்பதே மனிதர்களின் பாபங்களை போக்கும் என்று சொல்கின்றனர். திக்கஜங்கள், நாகபாலன், வசுபாலன். என்பவர்களும் வந்து தங்கள் கிரீடம் அவர் பாதங்களில் பட வணங்குகிறார்கள். அப்படிப்பட்ட ரகுபதியை சரணடைவோம்.
கோசல ராஜ்ய வாசிகள், அவர் சரீரத்தை தொட்டதாலோ, அருகில் இருந்து குரலைக் கேட்டதாலோ, பின் தொடர்ந்து நடந்ததாலோ பெரும் யோகிகளுக்கு கூட கிடைக்காத நல் கதியை அடைந்தனர். மனிதர்கள் ராம சரித்திரத்தை கேட்டு மனதில் இருத்திக் கொள்வதால், தாங்களே மற்ற ஜீவன்களிடத்தில் பரிவு மிக்கவர்களாக ஆகி விடுவர். இயல்பாக கர்ம பந்தம் அவர்களை விட்டு விலகும்.
அரசன் பரீக்ஷித் கேட்டான்: பகவான் ராமனை, அவர் சகோதரர்கள் அனுசரித்து வந்தனர் என்பது சரி. ப்ரஜைகள், ஊர் ஜனங்கள் அனைவரும் ஈஸ்வரனாக எப்படி தெரிந்து கொண்டு அனுசரித்தார்கள்?
ஸ்ரீ சுகர் சொன்னார்: தன் சகோதரர்களுடன் திக்விஜயம் செய்தார். புவனேஸ்வரனான தான், புர ஜனங்களிடையில் தானே சென்றார். சென்ற இடங்களில் எல்லாம் மார்கங்களில், நீர் தெளித்து, வாசனை திரவியங்கள் தூவி, மத ஜலம் பெருக யானைகளின் அணி வகுப்புடன், ஊர் ஜனங்கள் வரவேற்றனர். தங்கள் மகிழ்ச்சியைக் காட்ட, ப்ராகார, மாளிகைகள் கோபுரங்கள், சபைகள், ஓய்வு எடுக்கும் சைத்ய க்ருஹங்கள், என்று அனைத்து இடங்களிலும் பொற்குடங்களில் நீர் வைத்துக் கொண்டு வரவேற்றனர். பதாகைகளும், பாக்கு, வாழை மரங்கள் கட்டியும், அலங்கார பட்டிகளாலும், சுபமான வாசஸ்தலங்களை அலங்கரித்து, மலர் மாலைகளும், தோரணங்களுமாக தங்கள் குதூகலத்தைக் காட்டினர்.
ஆங்காங்கு ஊர் ஜனங்கள் எதிர் கொண்டழைத்து, அர்க்யம் முதலிய சத்காரங்களை ஏந்தியபடி, வணங்கியபடி அவர் ஆசிகளைப் பெற்றனர். பல நாட்களுக்குப் பிறகு கண்டதால், தங்கள் அரசனை வீடுகளிலிருந்து வெளி வந்து பெண்களும் ஆண்களும், சிறுவர் சிறுமிகளும், வணங்கினர். பலர் வீட்டின் மாளிகையின் உப்பரிகைகளிலிருந்து மலர் தூவி வரவேற்றனர். கண்கள் இமைக்காமல் கண்டும் திருப்தியில்லாமல் பார்த்தபடி இருந்தனர்.
இப்படி ராஜ்யம் முழுவதும் சென்று மக்களைப் பார்த்துப் பேசி பரிச்சயம் செய்து கொண்டதால் அவர்களின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் பாத்திரமானார். தன் முன்னோர்கள் அரசு செலுத்தி வாழ்ந்த அரண்மனைக்குத் திரும்பியதும் பொக்கிஷம், விலையுயர்ந்த பொருட்கள் இவைகளைப் பார்வையிட்டார். பவழங்கள் பதித்த வாசல்கள், உதும்பர – உயர்தரமான மரங்களால் ஆன- நுழை வாயில்கள், வைதூர்யத்தால் ஆன ஸ்தம்பங்கள் வரிசையாக, தரைகள் மரகதங்கள் பதிக்கப் பெற்று, சுத்தமாக இருக்க, சுவர்கள் ஸ்படிகம் போல இருந்தன.
விசித்ரமான மலர் மாலைகள், தோரணங்கள், இனிய ஓசையிடும் மணிகள் கோர்த்து தொங்க விடப் பட்ட வளையங்கள், மனதைக் கவரும் வண்ணம் அலங்காரமாக இருந்த அரண்மனை. தூபங்களும் தீபங்களும், ஆண்களும் பெண்களுமாக வளைய வர, மலர்களின் மணமும், பூஷணங்களின் ஒலியும் தேவ லோகத்துக்கு இணையாக இருந்தது.
அதில் தன் பிரியமான மனைவியுடன் பகவான் ராமன் சுகமாக சந்தோஷமாக இருந்தார். சீதையுடன் பலகாலம் தீரர்களுக்குள் ரிஷபம் போன்றவன் ரமித்து இருந்தான். உலகில் தர்மத்தை வாழ்ந்து காட்டுபவனாக வருங்காலத்திலும் நினைவில் கொள்ளும் படியான அரசாட்சியை கோசல ராஜ்ய மக்கள் பெற்றனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், ஸ்ரீ ராமோபாக்யானம் என்ற பதினோராவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 36
அத்யாயம்-12
ஸ்ரீ சுகர் சொன்னார்: குசன் என்ற அரசனுக்கு அதிதி, அவனுக்கு நிஷதன், அவன் மகன் நபன், அவனுக்கு புண்டரீகன் அவன் மகன் க்ஷேம தன்வா என்று வம்சம் வளர்ந்தது. தேவானீகன் அவனுக்கு பின் பாரியாத்ரன், அவனுக்குப் பின் பலஸ்தன், அவனுக்கு வ்ரஜனாபன் என்பவன் ஸூரியனின் மகனாக பிறந்தான்.
க(ख्)கணன் அவன் மகன். அவனிடம் வித்ருதி, அதன் பின் ஹிரண்ய நாபன் என்பவன் ஜைமினி என்ற யோகாசார்யரிடம் மாணவனாக இருந்தான். கௌசல்ய சிஷ்யனாக அத்யாத்மம் என்பதையும், யாக்ஞவல்க்யரிடம் யோகத்தையும் கற்றான். யோக முறைகளிலேயே மகோதயம் எனப்படும், சிறந்த முறை அது, ரிஷிகளின் ஹ்ருதய க்ரந்தி (முடிச்சு) யை பிளக்க வல்ல யோக முறை.
புஷ்யன் என்பவன் ஹிரண்யனாபனின் மகன். அவனுக்கு த்ருவ சந்தி, சுதர்சனன், அதன் பின் அக்னிவர்ணன், சீக்ரன் என்பவன், அவன் மகன் மரு: எனப்பட்டான். இவனும் யோக சித்தி அடைந்தான். கலாப க்ராமம் என்பதை ஆஸ்ரயித்தான். கலியின் முடிவில் ஸூர்யவம்சம் நஷ்டமாகும் என்பதை அறிந்திருந்தான். அவன் மகன் ப்ர சுஸ்ருதன், அவனுக்கு சந்தி, அவனுக்கு அமர்ஷணன்,மஹஸ்வான், அவனிடம் விஸ்வசாஹ்யோ என்பவனும் பிறந்தனர். அவனுக்கு ப்ரஸேன ஜித், அவனுக்கு तक्षकन्- தக்ஷகன், அதன் ப்ருஹத்பலன் என்பவன் இவனைத் தான் உன் தந்தை யுத்தத்தில் வதைத்தார்.
இவர்கள் இக்ஷ்வாகு வம்சத்து அரசர்கள். இவர்களில் கடைசியாக வந்த ப்ருஹத்பலனின் மகன் ப்ருஹத்ரணன் எனப்படுவான். அவனுக்கு உருக்ரியன், வத்ஸவிருத்தன் என்ற மகன்கள். அடுத்து அந்த வம்சம் ப்ரதிவ்யோமன், பானு, திவாகன், வாஹிணீபதி, சஹதேவன், அவனுடைய மகன் வீரனான ப்ருஹதஸ்வன், பானுமான், ப்ரதீகன், அவன் மகன் சுப்ரதீகன் , மருதேவன், சுனக்ஷத்திரன், புஷ்கரன், அந்தரிக்ஷன், சுதபன் அதன் பின் அமித்ரஜித் என்று வம்சம் தொடர்ந்தது. ப்ருஹத்ராஜன் அவன் பின் பர்ஹி, க்ருதஞ்சயன், ரணஞ்ஜயன், சஞ்சயன் என்று வரிசைக் கிரமாக சந்ததிகள். அவனுக்கு छाक्यन्- சாக்யன் என்றும், சுத்தோதன் என்றும் மகன் கள், லாங்கலன் என்பவன், அதன் பின் ப்ரஸேனஜித், அவனுக்கு க்ஷுத்ரகன், என்று அந்த வம்சம் வளரும். ரணகன் என்பவன் தோன்றுவான். அவனுக்கு சுரதன் சுமித்ரோ நிஷ்டாந்தா என்ற இவர்கள் பார்ஹத்பலரின் வம்சத்தினர். இக்ஷ்வாகு வம்சம் சுமித்ரன் வரை வந்த பின் மறையும். அதன் பின் கலியுக அரசர்கள் வருவார்கள்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், பன்னிரண்டாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-16
அத்யாயம்-13
ஸ்ரீ சுகர் சொன்னார்: நிமி என்பவன் இக்ஷ்வாகுவின் மற்றொரு மகன். வசிஷ்டரை அழைத்து யாகம் செய்ய முனைந்தான். வசிஷ்டர் சொன்னார்: ஏற்கனவே இந்திரனுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அவன் யாகத்தை நான் முன்னின்று நடத்த வேண்டும், அதை முடித்து விட்டு வருகிறேன். அது வரை காத்திரு என்றார். நிமி எதுவும் பதில் சொல்லவில்லை. அவரும் இந்திரன் யாகத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
நிமி தானே வித்வான். மற்ற ருத்விக்குகளுடன் யாகத்தை ஆரம்பித்து விட்டான். பாதி யாகத்தில் குரு வசிஷ்டர் திரும்பி வந்து விட்டார். தான் வருவதற்குள் தானாக யாகம் செய்யத் துணிந்தவன், தன்னை பண்டிதனாக நினைத்தவன் என்று சொல்லி நிமி யை சபித்தார். உன் சரீரம் விழட்டும் என்றார். நிமி அதற்கு ப்ரதியாக தானும் வசிஷ்டருக்கு ஒரு சாபத்தை அளித்தான். உன் சரீரமும் போகட்டும், லோபி, இந்திரனுக்கு சேவகம் செய்ய சென்றது அதர்மம் என்றான். நிமி அத்யாத்ம கோவிதன்- அத்யாத்மத்தில் சிறந்த அறிவுடையவன் என்பதால் தன் சரீரத்தை தியாகம் செய்தான். பிதாமஹரான வசிஷ்டரும் மித்ராவருண -ஊர்வசி தம்பதிகளிடம் பிறந்தார். (ஊர்வசியைக் கண்ட மாத்திரத்தில் மித்ராவருணரிடம் உண்டாகி, கும்பத்தில் பிறந்ததாக கதை)
நிமியின் சரீரத்தை வாசனை தைலங்களில் மூழ்கி இருக்கச் செய்து விட்டு அவன் ஆரம்பித்த யாகத்தை மற்றவர்கள் முடித்தனர். யாகம் முடிந்த பின், தேவர்கள் யாகத்தில் பங்கு பெற வந்தவர்களிடம், அரசன் நிமி உடல் தியாகம் செய்து விட்டதைச் சொல்லி, உங்களால் செய்ய முடியுமானால், அரசன் உடல் இது, இதை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்றனர். அவர்கள் பதில் சொல்லும் முன் நிமி மறுமுறை தேக பந்தத்தில் மாட்டிக் கொள்ள மறுத்து விட்டான். இந்த தேகம் நிரந்தரமல்ல என்பதால் யோகிகள் பிறவியையே வேண்டுவதில்லை. ஸ்ரீ ஹரி சரணாம்போஜத்தையே முனிவர்கள் பஜித்து மறு பிறவியற்ற நிலையை வேண்டுகின்றனர். அதனால் எனக்கு தேகம் வேண்டாம். நீர் வாழ் ஜந்துக்கள் மீன் முதலியவை பூமிக்கு வந்தால் மரிப்பது போலத் தான் சரீரம்.
தேவர்கள் சொன்னார்கள்; விதேஹ – தேகமில்லாதவனே, சரீரம் உடைய பிறவிகளிலின் கண்களில் வசிப்பாயாக. உன்மேஷ-நிமேஷ என (கண்களை இமைப்பது, மூடி திறப்பது) என்ற இமைகளில் செயலில் அத்யாத்ம தத்வம் இருப்பதால், உன் விருப்பம் போல உலகியல் அல்லாத அத்யாத்ம தத்வமே உன் இருப்பிடம் என்றாகும்.
அராஜகம்- அரசரின்மை- தலைமை இல்லாமல் போனால் நாட்டில் குழப்பங்கள் ஏற்படும் என்பதால். மஹரிஷிகள் சேர்ந்து நிமியின் உடலைக் கடைந்தனர். ஒரு குமாரன் பிறந்தான். ஜன்மனா ஜனக: – விதேஹனின் மகன் வைதேஹன், மிதில- கடைதல் என்ற செயலால் தோன்றியவன் என்பதால் அந்த அரசன் தான் நிர்மாணித்த நகருக்கு மிதிலா எனப் பெயரிட்டான்.
மிதிலையின் அரசனான ஜனகனுக்கு உதாவசு என்ற மகன். அவன் மகன் நந்திவர்தனன். அதன் பின் சுகேது, அவன் மகன் தேவராதன். தேவராதன் மகன் ப்ருஷத்ரதன், அவனுக்கு மஹாவீர்யன், சுத்ருத்பிதா. சுத்ருதின் மகன் த்ருஷ்டகேது, அவன் மகன் ஹர்யஸ்வனும் மருத் என்பவனும். மருவின் மகன் ப்ரதீபகன், அவனிடம் க்ருத ரதோ அவன் மகன் தேவமீடன், அவன் மகன் விஸ்ருதன் மற்றும் மஹாத்ருதி: . க்ருதிராதன், மஹாரோமன், வர்ணரோமா, ஹ்ரஸ்வரோம என்று அவன் புதல்வர்கள். அதன் பின் வந்தவன் சீரத்வஜன் என்பவன். சீரத்வஜன் யாகத்திற்காக பூமியை தோண்டிய சமயம் சீதா- கலப்பை, அதன் நுனியில் அகப்பட்ட பெண் மகவு, அவளுக்கு சீதை என்றே பெயரிட்டான். அரசனும் சீரத்வஜன் என்றே புகழ் பெற்றான்.
குஸத்வஜன் என்பவன் அவன் மகன். தர்மத்வஜன் அவன் மகன். தர்மத்வஜனுக்கு இரு புதல்வர்கள். க்ருத்வஜ, அமிதத்வ்ஜ என்பர். க்ருத்வஜனுக்கு கேசித்வஜன், மித த்வஜன் மகன் खाण्दिक्यन्- காண்டிக்யன். கேசித்வஜன் ஆத்மா வித்யா விசாரதனாக இருந்தான். காண்டிக்யன் கர்ம தத்வக்ஞன் என புகழ் பெற்றான். மற்றவன் பீதன். கேசித்வனின் மற்றொரு மகன் த்ருதன். அவன் மகன் பானுமான். சத த்யும்னன் அவன் மகன். சுசி என்ற மகனிடம் சனத்வாஜன் என்பவன் பிறந்தான். ஊர்த்வ கேது சனத்வஜன் மகன், அடுத்து புருஜித். அரிஷ்டனேமி அவன் மகன் ஸ்ருதாயு சுபார்ஸ்வக: என்று அவன் மகன் கள், அதன் பின் சித்ரதன் , அதன் பின் க்ஷேம தீ என்பவன் மிதிலாதிபன் ஆனான். அவன் மகன் சம ரதன், அவனுக்கு சத்யரதன். அவன் உப குருவாக – உதவி ஆசிரியர்- அவனிடம் பிறந்த உபகுப்தன் அக்னியில் தோன்றியவன். வஸ்வனந்தோ அவன் மகன். யுயுதோ என்ற மகன் அழகாக பேசக் கூடியவன் என்று கேள்வி. அவனுக்கு ஜயன், விஜயன் த்ருதன் என்று மக்கள்.
சுனகன் என்று அவன் மகன். வீத ஹவ்யன், த்ருதி, பஹுலாஸ்வன், த்ருதியின் மகன், அவன் மகன் மகாவசீ. இவர்கள் தான் மிதிலா ராஜ வம்சம். அனைவருமே ஆத்ம வித்யா விசாரதர்கள் என்பர். யோகேஸ்வரனின் அருளால், இல்லறத்தில் இருந்தாலும் சுக துக்கம் என்ற இரட்டைகளால் பாதிக்கப் படாமல் இருந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவத த்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், நிமி வம்சானுவர்ணனம் என்ற பதின்மூன்றாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-27
அத்யாயம்-14
ஸ்ரீ சுகர் சொன்னார்: அரசனே, சோம வம்சத்து அரசர்கள் பற்றிச் சொல்கிறேன். அதில் நளன் முதலிய ப்ரசித்தி பெற்ற அரசர்கள் இருந்தனர். சஹஸ்ரசிரஸ் என்று போற்றப்படும் பகவானின் நாபியில் தோன்றிய பத்மத்தில் பிறந்தவன் தான் தாதா-ப்ரும்மா, ப்ரும்மாவின் மகன் அத்ரி – முதல் ரிஷி.
அந்த ப்ரும்மாவின் கண்களில் தோன்றியவன், சோமன், அம்ருதமயன் என்பர். விப்ர – அந்தணர்கள், ஔஷதி, உடு கணங்கள் என்ற தாரகைகள் நக்ஷத்திர கூட்டங்கள் இவைகளின் தலைவனாக ப்ரும்மாவால் நியமிக்கப் பட்டான். சோமன் ராஜ சூயம் என்ற யாகம் செய்தான். மூவுலகையும் வெற்றி கொண்டவன். அதில் தோன்றிய தர்ப்பம்- கர்வம், அதனால் ப்ருஹஸ்பதியின் மனைவி தாராவை அபகரித்தான். தேவ குரு வினயமாக திருப்பித் தரும்படி பல முறை இறைஞ்சியும் தரவில்லை. அதுவே சுர -தானவர், தேவர்களுக்கும் அசுர்களுக்கும் இடையில் பெரும் பகை ஏற்படக் காரணமாயிற்று.
சுக்ராசார்யர் ப்ருஹஸ்பதியிடம் இருந்த த்வேஷத்தால், அசுரர்களுடன் சோமனை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். ஹரன் என்ற மகேஸ்வரன், அங்கிரஸ் என்ற முனிவரின் மகனான ப்ருஹஸ்பதியை ஆதரித்து பூத கணங்களுடன் வந்து விட்டார். இந்திரன் தன் பரிவாரங்களோடு அவருடன் இணைந்தான். பெரும் யுத்தம் மூளக் கூடும் என்பதால் ப்ரும்மா தலையிட்டு சோமனை தாராவை திருப்பித் தரும்படி வற்புறுத்தினார். வேறு வழியின்றி தாராவை ப்ருஹஸ்பதியிடம் ஒப்படைத்தான். திரும்பி வந்த தன் மனைவி கர்பவதியாக இருப்பதையறிந்து தேவ குருவான ப்ரஹஸ்பதி வெகுண்டார்.
என் மனைவி என்பதால் என் வம்சத்தை விளங்க வைக்க சந்ததிகளை நீ பெற்றுத் தருவாய் என்பதால் உன்னை தகிக்காமல் விடுகிறேன். எனக்கு க்ஷேத்ரமாக இருக்க வேண்டியவள், யாரிடமோ பெற்ற கர்பத்தை கலைத்து விடு என்றார். அதை த்யஜ- விலக்கு என்றார். அவள் எதுவும் பேசாமல் இருந்தாள். கோபத்தால் தகித்து விடக் கூடியவரே என்பதால் பயந்தாள். ப்ரசவ காலம் வந்ததும் குழந்தை பிறந்தது.
யார் தந்தை என்ற குழப்பம் நீடிக்கவும், அவளும் வாய் பேசாமல் இருக்கவும் பிறந்த குழந்தையே பேசிற்று. அஸத் வ்ருத்தே! என்று அழைத்து கோபத்துடன் ஏன் சொல்லாமல் மறுக்கிறாய், எதற்கு பொய்யாக வெட்கப் படுவது போல நடிக்கிறாய்? என்னிடமாவது சொல் என்றது. ப்ரும்மா தனிமையில் அவளைச் சந்தித்து விசாரித்தார். அவள் சோமனுடையது என ஒப்புக் கொண்டாள். பிறந்த குழந்தை சோமனைப் போல பொன் நிறமாக இருந்தது. ப்ரும்மாவிடம் அவள் சொன்னதை அறியாமல், அழகிய சிசுவைக் கண்டதும் ஆங்கிரஸ்-ப்ருஹஸ்பதி அதனிடம் பற்றுதல் கொண்டார். சோமனும் போட்டிக்கு வந்தான். தன் மகன் என்று அந்த சிசுவை எடுத்துக் கொண்டு புதன் என்று பெயரிட்டான். கம்பீரமாக, புத்திசாலியான மகன் என்று கொண்டாடி மகிழ்ந்தான்.
புதன், இலா என்ற மனைவியிடம் புரூரவா: என்ற புதல்வனைப் பெற்றான். அவனைப் போலவே அழகிய உருவமும், கம்பீரமும், கவர்ச்சியுமாக இருந்த புரூரவனைப் பற்றி அனைவரும் புகழ்ந்து பேசினர். ஊர்வசி இந்திரனுடைய வீட்டில் இருந்தவளும் அந்த புகழ்ச்சிகளைக் கேட்டாள். அதே சமயம் மித்ர வருணன் என்பவரின் சாபத்தால் பூலோகம் வர நேர்ந்தது. ஏற்கனவே புரூரவனைப் பற்றி கேட்டு அவனிடம் மையல் கொண்டிருந்தவள் அவன் இருக்கும் இடம் தேடித் தானே வந்தாள். கந்தர்ப்பன்- மன்மதம் போல ரூபமுடையவனைக் காணும் ஆவலுடன் அவன் எதிரில் நடமாடினாள். யதேச்சையாக அவளைக் கண்ட புரு அவள் அழகில் மயங்கி உடல் புல்லரிக்க மகிழ்ச்சியுடன் யார் என்று விசாரித்தான்.
அரசன் புரு: வராரோஹே! அழகிய உடல் அமைப்பு கொண்டவளே! ஸ்வாகதம். உன் வரவு நல்வரவாகுக . உட்கார். என்ன வேண்டும்? நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும்,சொல். உன்னைக் கண்டதுமே என் மனதில் உன்னை அடைய வேண்டும் என்ற ஆசை பெருகுகிறது. என்னுடன் இருந்து நீயும் மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.
ஊர்வசி: சுந்தர! எந்த பெண் தான் உன் தோற்றத்தைக் கண்டு மயங்காதிருப்பர்? மனதுக்கும், கண்ணுக்கும் விருந்தாக இருக்கிறாய். நான் சம்மதிக்கிறேன். இந்த ஆடுகளை (மேஷங்களை) பாதுகாத்து வைப்பாயாக. நல்ல வரன் வந்தால் பெண்கள் ஏன் மறுக்கப் போகிறார்கள். நெய் மட்டும் தான் என் உணவு. நாம் கூடியிருக்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் உன்னை ஆடையின்றி கண்ணால் கூட காண மாட்டேன். சரி என்று அரசனும் ஒத்துக் கொண்டான். அஹோ ரூபம், அஹோ பாவோ, மனித பிறவியில் யாரானாலும் மயங்காமல் இருக்க மாட்டார்கள். தேவி, என் நல்ல காலம் தான் தானாக என்னிடம் வந்து இருக்கிறாய் என்று மகிழ்ந்தான். அவளுடன் அந்த அரசன், சாதாரண ஆண்கள் போல அவளுடன் ரமித்துக் கொண்டிருந்தான். அனைத்தையும் மறந்தவனாக, அவளுடன் தேவ உத்யான வனங்களில், சைத்ர ரதங்களில் என்று விருப்பம் போல சுற்றினர். பல ஆண்டுகள் இவ்வாறு கழிந்தன.
ஊர்வசியை தேவ லோகத்தில் காணாமல் இந்திரன் அவளைத் தேட ஆணையிட்டான். என் அரச சபை ஊர்வசி இல்லாமல் சோபையே இழந்து விட்டதே என்று அங்கலாய்த்தான். அவன் பரிவாரங்கள் ஊர்வசியைத் தேடி வந்தவர்கள் மேஷங்களைக் கண்டதும் அவைகளை அபகரித்துச் சென்று விட்டனர். அரசனிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப் பட்டவை அவை. ஊர்வசி அந்த மேஷ ரூபத்தில் இருந்த தன் புதல்வர்கள் கதறுவதைக் கேட்டு அலறினாள். வீரன் என்று நினைத்தேனே, நீ எதற்கும் உதவாதவன், நாதனாக நம்பினேன் கெடுத்து விட்டாயே என்று பழிச் சொன்னாள். நான் நாசமானேன், என் செய்வேன்? என் புதல்வர்களைக் காணோம் என்று புலம்பினாள். நம்பி உன்னிடம் ஒப்படைத்தேன். அதை திருடர்கள் கொண்டு சென்று விட்டனர். ஊர்வசி அரசன் புருவை வாய்க்கு வந்தபடி திட்டலானாள். பகலின் வீரனாக வேஷம் போடுகிறாய், இரவில் பெண் பிள்ளை போல தூங்குகிறாய் என்றாள். அங்குசத்தால் குத்தப் பட்ட யானை போல அரசன் வேதனையுடன் விழித்துக் கொண்டு,நடந்ததை அறிந்து, மேஷங்களைத் தேடியபடி ஆடையை கூட அணியாமல், இருட்டில் சென்றான். கந்தர்வர்கள் இதற்குள் ஊர்வசியின் இருப்பிடம் தெரிந்து விட்டதால் அவைகளை விட்டு, தாங்கள் ப்ரகாசமாக மின்னல் போல ஆனார்கள். அந்த வெளிச்சத்தில் மேஷங்களை பிடித்துக் கொண்டு திரும்பி வந்த அரசனை ஆடையின்றி பார்த்தாள், அவர்கள் உடன் பாட்டின்படி மறைந்து விட்டாள்.
அவன் மனைவி இலா தன் கணவனைக் காணாமல் பித்து பிடித்தவள் போல அலைய ஆரம்பித்தாள். குருக்ஷேத்ரம் என்ற இடத்தில் அவளையும் ஐந்து சகிகள் உடன் இருக்க, சரஸ்வதி நதிக் கரையில், கண்ட புரூரவன் சொன்னான். (உடல் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தவன்- அசரீரியாக பரிவுடன் )- அவர்கள் முகத்தைப் பார்த்ததுமே மகிழ்ந்தான். அவள் நதியில் மூழ்கி விடுபவள் போல இருப்பதையறிந்து அதை தடுக்கும் விதமாக புரூரவன் ‘நில், நில், ப்ராணனை விடாதே, நான் உன்னை விட்டு விலகவில்லை. இந்த தேகம் உன்னிடமிருந்து அபகரிக்கப் பட்டு வெகு தூரம் கொண்டு செல்லப் பட்டு விட்டது. பூமியில் விழுந்தால் இதை ஓனாய்கள் சாப்பிடும். கழுகுகள் கொத்தும். உன் அன்புக்கு ஏற்கும் நிலையில் நான் இல்லை. (ஓனாய்கள், கழுகுகள், இந்திரியங்கள், மனிதனை வாட்டுபவை) ஊர்வசி இதை கேட்டு பதில் சொன்னதாக ‘நீ செய்த ப்ரதிக்ஞை- எனக்கு கொடுத்த வாக்கு – அதை மீறினாய். பயப்படாதே, உன்னை ஓனாய்களோ, கழுகுகளோ எதுவும் செய்யாது. தீரனாக இரு. இனி எந்த அறியாத பெண்ணிடமும் போகாதே. கவனமாக இரு. பொதுவாக உலகில் பெண்கள் கருணையற்றவர்கள். க்ரூரர்கள், கட்டுக் கடங்காத கோபம் உடையவர்கள், பிரியமாக இருப்பது போல சாகஸம் செய்வார்கள். சிறிய காரணத்திற்காக கூட கொல்வார்கள். நம்பிய கணவனோ, சகோதரனோ கூட பொருட்டல்ல. பொய்யாக ஒரு பாசம் தன்னிடம் நம்பிக்கை கொள்ள. அறிவற்றவர்களை சிறிதும் கவனிக்க மாட்டார்கள். புதுப் புது பொருட்கள் வேண்டுவார்கள் என்று சொல்வார்கள்.
ஓராண்டு இப்படி வெளியில் தென்படாமல் இருப்பாய். பின் நான் வந்து உன் உடலையும், மனைவி மேலும் குழந்தைகளையும் பெறச் செய்கிறேன். ஊர்வசி தன் கர்பத்தை தாங்குவதாக இதன் மூலம் அறிந்து கொண்ட புரூரவன் தன் ஊர் திரும்பினான்.
ஆண்டு முடிவில் ஊர்வசி வந்தாள். அவளுடன் ஓரிரவு வாழ்ந்தான். கந்தர்வர்களை வேண்டிக் கொள். அவ்வாறே அவனும் அவர்களை வணங்கி வேண்டிக் கொள்ள அக்னிஸ்தாலி ( தீயை காக்கும் பாத்திர விசேஷம்) -என்பதைக் கொடுத்தாள். அதுவே ஊர்வசி என மனதில் ஏற்றுக் கொண்டு வனத்தில் அதை வைத்து விட்டு, தன் வீடு, குடும்பம் இவற்றை நினைத்தபடி திரும்பினான். த்ரேதா யுக முடிவில், திடுமென நினைவு வந்தது. அக்னிஸ்தாலியை வைத்த இடத்தை தேடிக் கொண்டு வனத்திற்கு வந்தான். அது இருந்த இடத்தில் ஒரு மரம் வளர்ந்து நின்றது. அஸ்வத்தம் என்ற அந்த மரம் , நெருப்பை உள்ளடக்கியது என்று அறிந்தான். அதிலிருந்து இரண்டு கட்டைகளை எடுத்து யக்ஞ ஈசன்- எனப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணனை நினைத்து யாக சாலையை அமைத்துக் கொண்டு, சர்வ தேவ மயனான ஸ்ரீ ஹரியை தியானம் செய்தான். இரண்டு அரணிக் கட்டைகளை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து, ஒன்றை தானாகவும், மற்றொன்றை ஊர்வசியாகவும் தானாக ஆவாஹனம் செய்து கடைந்தான். அதிலிருந்து ஜாதவேதம் என்ற நெருப்பு உண்டாயிற்று. புத்ரனை வேண்டும் மந்திரங்களைச் சொல்லி கடைந்தான். மூன்று விதமான வேதங்கள் அவன் மகனாக கல்பித்துக் கொண்டான். जातम् वेदो धनम् भोग्यम् यस्मात्- மூன்று வித்யைகளால் ஆதான आधान- கர்பத்தை தாங்கும் – சீமந்த காலத்தில் சொல்லும் மந்திரங்கள்-பும்ஸவன – மந்திரங்கள் – புத்ரன் இருந்தால் தான் புண்ய லோகங்கள் போக முடியும் என்பதால். அதுவரை ப்ரணவம் மட்டுமே வேத ரூபமாக இருந்ததை, த்ரேதா யுக முடியும் சமயம், புரூரவனால் மூன்று வேதமாக வளர்ந்தது என்பது பொருள். அக்னியின் அருளால் புத்திரர்களைப் பெற்று, காந்தவர்வ லோகம் சென்றான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஓன்பதாவது ஸ்கந்தம், ஏலோபாக்யானம் என்ற பதினான்காவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-49)
அத்யாயம்-15
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஊர்வசியிடம் ஆறு குழந்தைகள் பிறந்தன. ஆயு, ஸ்ருதாயு, சத்யாயு, ரயன், விஜயன், ஜயன் என்று பெயர்கள். ஸ்ருதாயுவுக்கு வசுமான், சத்யாயுவுக்கு சுதஞ்ஜயன், ரயனுக்கு ஏகன், ஜயனுக்கு அமிதன், விஜயனுக்கு பீமன், பீமனுக்கு காஞ்சனன், அவனுக்கு ஹோத்ரகன் , அவனுக்கு ஜஹ்னு என்ற மகன். இந்த ஜஹ்னு தான் கங்கையை குடித்து விட்டவர். ஜஹ்னுவின் மகன் புரு, அவனுக்கு பலாகன், அவனுக்கு அஜகன் என்பவன். அஜன் மகன் குசன், குசனுக்கு குசாம்பு. அவன் மகன் வசு, குசனாபனுக்கு நால்வர் காதி என்ற விஸ்வாமித்திர் இவன் மகன். சத்யவதி என்ற மகள், ருசீகர் என்ற ரிஷி மணந்தார். அந்த வரன் (ருசீகன்-ரிஷி) தன் சகோதரிக்கு ஏற்ற வரன் அல்ல என்று காதி வாதிட்டார். குசிகர்கள் நாங்கள், கன்யா சுல்கமாக, கறுமையான காதுகளுடன் சந்திரன் போன்ற நிறத்தில் ஆயிரம் குதிரைகள் கொடுத்தால் தான் மகளைத் தருவோம் என்றனர்.
ப்ருகு வம்சத்து ரிஷி புரிந்து கொண்டார். வருணனிடம் சென்று அவர்கள் சொன்னபடியே குதிரைகளை யாசித்து பெற்றார். அவைகளைக் கொடுத்து கன்யாவான சத்யவதியை மணந்தார். சத்யவதியின் தாயாரும், மனைவி இருவருமே சந்ததி வேண்டுமென்று சொன்னதால், மந்திர ஜபம் செய்து, க்ஷத்திரிய, ப்ராஹ்மண என்ற இரண்டு குல குணங்களும் இருக்கும்படி பாயசத்தை தயார் செய்து வைத்து விட்டு நீராடச் சென்றார். தாயாரும் அந்த பாயசத்தில் ஒரு பகுதியை விரும்பியதால் சத்யவதி பாதியை அவளுக்கு கொடுத்து விட்டு மீதியைத் தான் உண்டாள். விவரம் அறிந்த ரிஷி, அடடா,என்ன காரியம் செய்து விட்டாய், உன் சகோதரன் கோரமான தண்டிப்பவனாக பிறப்பான் என்றார். பார்கவரின் மகன் ப்ரும்ம வித்தாக, அறிஞனாக, ஆனால் பயங்கரமாக தண்டிப்பவனாக இருப்பான் என்றார். சத்யவதி பயந்து, அதை தடுக்க முடியாதா என்று கேட்டாள். அவள் தவற்றை உணர்ந்து வருந்துவதைப் பார்த்து ருசீகர், ஒரு பரம்பரை தாண்டி அடுத்த பிறவியில் அதாவது பார்கவரின் பேரனாக பிறக்கட்டும். ஜமதக்னி சுதனாக பெயர் பெறுவான் என்றார்.
பின்னால், இந்த சத்யவதி தான் கௌசிகீ என்ற புண்ய நதியாக பிரவஹித்தாள். ரேணூ என்பவரின் மகள் ரேணுகாவை ஜமதக்னி மணந்தார். அவளிடம் வசுமதன் முதலிய மூவர், கடைசியாக ராமர் என்று பெயரிட்டார். இவரை வாசுதேவாம்சம் என்பர். ஹைஹய என்ற குலத்தை இவர் அழித்தார். இருபத்தோரு முறை பாரத வர்ஷம் முழுவதும் சுற்றிச் சுற்றி க்ஷத்திரியர்களை அழித்தார். துஷ்ட க்ஷத்திரியர்கள், ப்ரும்ம குலத்தை மதிக்காமல் தான் தோன்றித் தனமாக ராஜ்ய சாஸனம் செய்ததை பொறுக்காமல் இவர்கள் பூமிக்கு பாரம் என்றார். ராஜஸ, தாமஸ குணங்களே ஓங்கியிருக்க அல்ப அதர்மம் தென்பட்டாலும் பொறுக்காதவராக தண்டித்தார்.
அரசன் வினவினான்: எதற்காக? அரசர்கள் ரிஷிகளைப் போல தன்னடக்கம் பயிலுவதில்லையே. அதிகாரம் தான் அரசன் குணம். அவனை ஏன் தண்டிக்க வேணும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஹைஹய ராஜா, கார்த்த வீர்யார்ஜுனன் சக்ரவர்த்தியாக இருந்தான். அவனுடைய பணிகள், சேவைகளைப் பார்த்து நாராயணன் தன் அம்சமாக அனுமதித்தார். பத்து நூறு- ஆயிரம் கைகள் வேண்டினான். அதைத் தவிர அமரர்களிடம் அடி படக் கூடாது என்றும், செல்வமும், அழியாத புகழும், ஆரோக்யமும்,பலமும் வேண்டிப் பெற்றான். யோகேஸ்வரனாக ஆனான். அணிமாதி சக்திகள், அளவில்லா ஐஸ்வர்யம் இவையும் தானே வந்து சேர்ந்தன. தடையின்றி உலகங்கள் முழுவதும் சுற்றுவான். வாயுவுக்கு இணையாக சுற்றி வரும் சமயம் கண்களில் தென்பட்ட அழகிய பெண்களைக் கவர்ந்து வருவான். ஒரு சமயம் அந்த பெண்களுடன் ரேவா என்ற நதி ஜலத்தில் நீராடிக் கொண்டு இருந்த சமயம்,வைஜயந்தீ என்ற மாலையை அணிந்து கொண்டு, கைகளால் நதி ஜலத்தை தடுத்து தாங்கள் அனைவருமாக நீராட வகை செய்து கொண்டான்.
தசானனன்- ராவணன் அந்த சமயம் தன் குடிலில் இருந்தவன் எதிர்த்து வந்த நதி ஜலத்தால் தன் குடில் அடித்துச் செல்லப்படுவதை பொறுக்க மாட்டாதவனாக, எதிர்த்து போரிட வந்தான். ஸ்த்ரீகளுக்கு முன்னால் தன்னிடம் போரிட வந்தான் என்பதை ஹைஹய அர்ஜுனன் காரணமாகச் சொல்லி அவனை கட்டி மாஹிஷ்மதி என்ற தன் நகரில் சிறையிட்டான். அதன் பின் வாலி என்ற கபி:-வானரம் வந்து விடுவித்தான்.
ஒரு சமயம் வேட்டையாடச் சென்றவன் ஜமதக்னியின் ஆசிரமத்தினுள் நுழைந்து விட்டான். சேனையுடன் வந்த அவனுக்கு ஜமதக்னி அதிதி சத்காரம் செய்தார். தபோதனரான அவர், தன்னிடம் இருந்த ஹவிஷ்மதீ என்ற பசுவின் உதவியால் அனைவருக்கும் உணவு படைத்தார். அதை அறிந்த ஹைஹயன் ஆச்சர்யத்துடன் முனிவரின் ஆத்ம சக்தியை பாராட்டியவன், கூடவே தன் அபிலாஷையையும் தெரிவித்தான். அந்த பசுவைத் தனக்கு தருமாறு வேண்டினான். முனிவர் தனக்கு ஹோம காரியங்களுக்கு பசுவின் பால் முதலியவை தேவை என்றும், அதனால் தர முடியாது என்று வினயமாகவே சொல்லி மறுத்து விட்டார். அவர்கள் கிளம்பி விட்டனர். ஆனால் அரசனின் உடன் இருந்தவர்கள் கர்வத்தால், அந்த பசுவை கடத்திச் செல்ல விரும்பினர். அரசன் எதுவும் சொல்லவில்லை. கதறக் கதற அந்த பசுவையும் அதன் கன்றையும் மாஹிஷ்மதிக்கு கொண்டு சென்றனர்.
அரசன் அகன்றதும், பரசுராமர் ஆசிரமம் வந்தார். நடந்ததைக் கேள்விப்பட்டு என்ன துஷ்டத்தனம் அந்த அரசனுக்கு என்று வெகுண்டவராக, கோரமான பரசுவை அத்துடன் வில், அம்புகள் வைக்கும் தூணி அனைத்தையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார். அடக்க முடியாத கோபம். ம்ருகேந்திரன் இரையை பிடிக்க ஓடுவது போல சென்றார்.
ப்ருகுவர்யன்- பார்கவ குலத்தவன், வேகமாக வருவதை பார்த்து, கையில் வில்லும் அம்புகளும், பாணங்களும் பரஸ்வதங்களும், மான் தோல் ஆடை உடுத்தியவனாக, ஸூரியன் போன்ற ப்ரகாசத்துடன், ஜடை பறக்க, ஊருக்குள் நுழைந்தவனைக் கண்டனர்.
அவர்களும் கஜ,துரக, பதாதி என்று அனைத்து விதமான படை வீரர்களையும் கொண்ட சேனைகளுடன் எதிர்த்தனர். யானை மேல் ஏறி வந்தனர். பதினேழு அக்ஷௌஹிணி பாணங்கள், ஈட்டிகளுடன், சதக்னீ, சக்திகளுடன் பயங்கரமான உருவத்துடன் வீரர்கள் வந்தனர். பரசுராமன் ஒருவனே எதிரில் நின்றார். பரஸ்வதம் என்ற ஆயுதத்தில் இருந்து மனோ வேகமோ, வாயு வேகமோ எனும்படி அவரிடம் இருந்து வெளிப்பட்ட அஸ்திரங்களால் கை கால் உடைந்து விழுந்தனர் பலர், வாகனங்கள் உடைய, சாரதிகளை இழந்து ரதங்கள் கை விடப் பட்டன, சைன்யமே ரத்த விளாறாக தரையில் கிடந்தது.
அதைக் கண்ட ஹைஹயன் தானே வந்தான். நேரில் கண்டவன் திடுக்கிட்டான். மான் தோல் ஆடையில், கைகளில் வில்லுடன் கம்பீரமாக நின்றவனைப் பார்த்து அசந்தான். இருந்தாலும் கை மீறிப் போன சூழ்நிலை தானும் வில் அம்புகளுடன் வந்து போரிட்டான். பெரிய கைகளால் மலைகளின் நுனிகளைப் போன்ற கற்களை வீசினான். பரசுராமரின் பாணங்களால் கை உடைந்து, மலை சிகரம் போன்ற தலையும் அறுந்து விழுந்தது. அவனுடைய புதல்வர்கள் பயந்து ஓடி விட்டனர். அக்னி ஹோத்ரீ- அக்னி ஹோத்ரத்துக்கு உதவும் பசுவை அதன் கன்றுடன் அழைத்துக் கொண்டு ஆசிரமத்துக்கு வந்து, பசுவை இழந்து வருந்திக் கொண்டிருந்த தந்தையிடம் கொடுத்தான். தான் போர் செய்ததை, எதிரிகள் பயந்து ஓடியதை அவர்களிடம் விவரித்தான்.
ஜமதக்னி மகனிடம், ராம ராம, நீ செய்தது சரியல்ல. அரசன் தேவனுக்கு சமமானவன். அவனை வீணாக கொன்று விட்டாய். நாம் ப்ரும்ம வழியில் செல்லும் அந்தணர்கள். பொறுமையால் தான் நமக்கு பெருமை. லோக குருவான தேவன், பாரமேஷ்ட்யம்- மிக சிறந்த பதவியை அடைந்தான். க்ஷமம்-பொறுமை தான் நமக்கு பூஷணம். பொறுமையே ப்ராஹ்மி, பொறுமையே லக்ஷ்மி தேவி விரும்புவதும், ஸுரியனுடைய சௌரி, ப்ரபா இவர்கள் அனைவரும் பொறுமையாக இருந்து நன்மை அடைந்தவர்கள்., பொறுத்தவர்கள், பொறுமையாக இருப்பவர்களை ஸ்ரீ ஹரியும் விரும்புவார். தலையில் நீர் விட்டு அபிஷேகம் செய்யப் பட்ட அரசன், அவனை வதம் செய்வது ப்ராம்மணனை வதம் செய்வதற்கு சமமாகச் சொல்லப் படுகிறது. தீர்தாடனம் செய். உன் தவற்றுக்கு பிராயச்சித்தம் செய். என்றார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், பதினைந்தாவது அத்யாயம். )
அத்யாயம்-16
தந்தை இவ்வாறு சொல்லவும் பரசு ராமன் அதை ஏற்றுக் கொண்டு தீர்த்தாடனம் செய்யக் கிளம்பினார். ஓராண்டு பாரத தேசம் முழுவதும் உள்ள புண்ய தீர்த்தங்களில் நீராடினார். அதன் பின் ஆசிரமத்திற்கு வந்தார்.
ஒரு சமயம் ரேணுகா கங்கையின் ஜலத்தில் பூக்களின் இடையில் அப்சர ஸ்த்ரீகளிடம் விளையாடிக் கொண்டிருந்த கந்தர்வ ராஜனைக் கண்டாள். அந்த காட்சியில் மனதை பறி கொடுத்தவள் சற்று நேரம் பார்த்தபடி இருந்தவள், சட்டென்று நினைவு வர நீரை கலசத்தில் நிரப்பலானாள். அந்த சித்ர ரதமே மனதில் நிற்க, ஹோம வேளை வந்திருக்குமே என்று பரபரப்புடன் நீரை நிரப்பிக் கொண்டு ஆசிரமம் திரும்பினாள். தாமதமாக வந்தது முனிவருக்கு கோபத்தை உண்டு பண்ணியது. நடந்ததை, அறிந்த முனிவர், இவள் யாரோ பர புருஷனைப் பார்த்து விட்டு வந்திருக்கிறாள், இவளை கொல்லுங்கள் என்று புதல்வர்களுக்கு ஆணையிட்டார். ஒருவரும் முன் வரவில்லை. சற்று யோசித்து பரசுராமன் முன் வந்து தந்தை சொன்னபடியே தன் தாய், சகோதரர்கள் அனைவரையும் வதைத்தான்.
சத்யவதியின் மகன் – ஜமதக்னி மகிழ்ந்து அவனுக்கு வரங்கள் கொடுத்தார். அதைக் கொண்டு தன் தாய் சகோதர்களை உயிர்ப்பிக்கவும், நடந்தது அவர்கள் நினைவில் தங்காமல் இருக்க வேண்டும் என்றும் வேண்டினார். அதன் படியே தூங்கி எழுந்தது போல அவர்கள் எழுந்தனர். அதை எண்ணி அர்ஜுனனின் புதல்வர்கள், உடனே எதிர்த்து போராட தயங்கினர்.
பரசு ராமனும் சகோதரர்களும் ஏதோ காரியமாக வனம் சென்றிருந்த பொழுது, இது சரியான சமயம் என்றெண்ணி, ஆசிரமத்திற்கு வந்தனர். அக்னி காரியம் செய்து கொண்டிருந்த முனிவர் அதே தியானமாக இருந்த பொழுது கொன்று விட்டனர். ரேணுகா மிக துக்கத்துடன் யாசித்தாள். அதை பொருட்படுத்தாமல் தங்கள் பாப புத்தியால் அவர் தலையை கொய்து எடுத்துச் சென்று விட்டனர். ராம ராம என்றும், குழந்தைகளே என்றும் அவள் அலறுவதைக் கேட்ட நால்வரும் ஓடி வந்தனர். தந்தை கொலை செய்யப் பட்டிருப்பதைக் கண்டனர். பெரிதும் துக்கத்துடன் அரற்றினர். ஹே சாதோ! தர்மிஷ்ட என்று கதறினர். அழுது கொண்டிருந்த சகோதர்களிடம் தந்தையின் தேகத்தை ஒப்படைத்து விட்டு பரசுராமன் மாஹிஷ்மதி நகரம் சென்றார். சோபை இழந்து கிடந்த நகரத்தில் அந்த புதல்வர்களை, ப்ரும்ம ரூபமாக தியானத்தில் இருந்த தந்தையைக் கொன்றவர்களை தேடித் தேடி அவர்கள் தலைகளால் பெரும் குவியலாக மலை போல கிடக்கச் செய்து விட்டார். அதுவே காரணமாக க்ஷத்திரியர்கள், அந்தணர்களை அவமானப் படுத்துபவர்களை ஒழிப்பேன் என்று சபதம் செய்தவராக, இருபத்தோரு முறை பூமியைச் சுற்றி, க்ஷத்திரிய வம்சமே இல்லாமல் போகும்படி செய்தார். .
சமந்த பஞ்சகம் என்ற இடத்தில் அந்த உதிரத்தை நிரப்பி, தந்தையின் தலையை திரும்ப கொண்டு வந்து உடலோடு சேர்த்து வைத்து, அவர் செய்து கொண்டிருந்த யாகத்தை தொடர்ந்து செய்யச் செய்தார். கிழக்கு திசையை ஹோத்ரு என்பவருக்கும், தென் திசையை ப்ரும்மாவாக வந்தவருக்கும், மேற்கு திசையை அத்வர்யு என்றவருக்கும், வடக்கு திசையை உத்காத்ர என்பவருக்கும் கொடுத்தார். அவாந்தர திசைகளில் மற்றவர்களுக்கும் கஸ்யபருக்கு மத்தியில் உள்ள நிலப் பகுதியையும், ஆர்யாவர்த்தம் என்பதை உபத்ரஷ்டா என்பவருக்கும் மீதி இருந்ததை சபையில் இருந்த மற்றவர்களுக்கும் தானம் செய்தார். அதன் பின் அவப்ருத ஸ்னானம் செய்து விட்டு சரஸ்வதி நதிக் கரையில் ஆகாயத்தில் அம்சுமான் எனும் சூரியன் இருப்பது போல இருந்தார்.
தன் தேகம் கிடைக்கப் பெற்ற ஜமதக்னி ரிஷிகள் மண்டலத்தில் ஏழாவது ரிஷியாக ஆனார். ஜாமதக்னி வரும் நாட்களில் மேலும் பல வீர செயல்களைச் செய்வார். சித்த கந்தர்வ சாரணர்கள் புகழ்ந்து பாடினர். இவ்வாறு ப்ருகு குலத்தில் விஸ்வாத்மாவான ஸ்ரீ ஹரி, ஈஸ்வரன், அவதாரம் செய்து பூமியின் பாரத்தைக் குறைக்க பல அரசர்களை தண்டித்தார். இன்றளவும், மகேந்திர மலையின் தண்டத்தை கை விட்டு, சாந்தமாக சித்த கந்தர்வ சாரணர்களுடன் இருக்கிறார்.
गाधि யின் மகனாக நெருப்பு போல் தூய்மையானவராக தவம் செய்து தன் க்ஷத்திரிய குலத்தைத் துறந்து அந்தணராக ஆனவர் விஸ்வாமித்திரர். (ஜமதக்னியின் புத்ரனை வேண்டிப் பெற்ற பாயசத்தின் பலனாக பிறந்த வம்சத்தினர் ஆனதால் அவருக்கு ப்ரும்மத்வம் கிடைத்தது என்று உரையாசிரியர்) விஸ்வாமித்திரருக்கும் நூறு புதல்வர்கள் பிறந்தனர். மத்தியில் இருந்தவன் மதுசந்தன் என்பவன். ஹரிச்சந்திரனின் மகன், அஜீகர்த்தர் என்ற அந்தணரிடமிருந்து ஒரு மகனை யாசித்து தனக்கு பதிலாக யாக பசுவாக இருக்க வேண்டினான். ( புத்ர வரமளித்த வருணனுக்கு தன் மகனைத் தருவதாக சொல்லி, கொடுக்க மனமில்லாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். மகன் பெரியவனாகி விவரம் அறிந்தவனாக ஆன பின், தந்தையின் வாக்கை காக்கவும் அதே சமயம் தான் பிழைக்கவும், மற்றொருவர் மகனை விலைக்கு வாங்கி யாகம் செய்ய முயன்றான். அஜீகர்த்தர், மூத்தவனை தந்தை தர மறுக்க, இளையவனை தாயார் தர மறுக்கவும், இடையில் இருந்த சுன:ஸேபன் தன்னை விற்று விட்டதாக சொல்லி தானே கிளம்பி வந்தான் என்று ஸ்ரீமத் ராமாயணம்)
அந்த யாகத்தில் சுன:ஸேபன் (शुन:शेप:) யாகத்தின் யூப ஸ்தம்பத்தில் கட்டப்பட்டான் யாக பசுவாக. விஸ்வாமித்திரர் அந்த யாகத்தில் பங்கேற்க வந்தவர், அதைக் கண்டு வருந்தினார். பார்கவனான சுன:ஸேபனைக் காப்பாற்ற தன் மூத்த மகனாக வரித்துக் கொண்டார். அதனால் அவன் குசிக கோத்ரனாக ஆனான். இளையவர்கள் என்ற தகுதியில் தன் புதல்வர்களை யாக பசுவாக வர ஆணையிட்டார். தந்தையின் சொல்லை அவர்கள் மறுத்ததால் கோபம் கொண்டு தன் புதல்வர்களையே ம்லேச்சர்கள்-சண்டாளர்களாக சபித்து விட்டார். இந்திரனைக் குறித்த இரண்டு துதிகளைச் சொல்லிக் கொடுத்து இந்திரனிடம் சொல்லி அவனை பலியாகாமல் தடுத்தார். தேவ யாகத்தில் காதி-விஸ்வாமித்திரால் காப்பாற்றப் பட்டவன் என்ற பொருளில் சுன:ஸேபன் தேவராதன் எனப்பட்டான்.
மதுச்சந்தனுடன் ஐம்பது பேரும் தந்தையிடம் நீங்கள் சொல்வது தான், எங்களை மூத்தவனாகவோ, இளையவனாகவோ அங்கீகரிப்பது உங்கள் விருப்பம் என அடி பணியவும் அவர்களை வீர புத்திரர்களைப் பெறுவீர்களாக என்று அசீர்வதித்தார். கௌசிக கோத்ரத்தினர்களாக அவர்கள் புகழ் பெறுவார்கள் என்றார். அவர்களும் தேவராதனை மூத்தவனாக ஏற்றுக் கொண்டனர். இதன் பின் பார்கவ கோத்திரத்தில் பிறந்தாலும் தேவராதன் குசிக கோத்திரனாக ஆனான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், பதினாறாவது அத்யாயம் )
அத்யாயம்-17
ஸ்ரீ சுகர் சொன்னார்: புரூரவசின் மற்றொரு மகன் ஆயு, அவன் மகன் நகுஷன் என்பவன். அவனுக்கு க்ஷத்ர விருத்தன், ரஜீ, ரம்பன், அனேனா என்று புதல்வர்கள். க்ஷத்ர வ்ருத்தனுக்கு சுஹோத்ரன், அவன் மகன் அஜன், அவனுக்கு மூவர். காஸ்யன், குசோ,க்ருசமத என்பவர்கள். க்ருத்ஸமதனுக்கு ஸுனக:, ஸுனகனின் மகன் ஸௌனகன் என்பவன் ப்ரும்ம வர்சஸ் ஆனவன். காஸ்யபனுடைய மகன் காசி, காசிக்கு ராஷ்ட்ரன் என்பவன் அவனுக்கு தீர்க தமன், தன்வந்தரி, என்ற ஆயுர்வேத ப்ரவர்த்தகர் அவன் மகன். வாசுதேவாம்சம் கொண்டவன். அவனை நினைத்த மாத்திரத்தில் துன்பம் போகும். அவன் மகன் கேதுமான். அவனுக்கு பீமரதன் மகன். திவோதாசன் த்யுமான், த்யுமானுக்கு ப்ரதர்தன. அவன் சத்ருக்களை வென்று ருதத்வஜன் என்று புகழ் பெற்றான். (என்றும் கீழிறங்காத கொடியுடையவன்) அவனுக்கு குவலாஸ்வன். அலர்க்கன் என்பான் அவன் மகன். இவன் நீண்ட காலம் – அறுபது ஆயிரம் வருஷங்கள் – ஆட்சி செய்தான். அலர்க்கனுடைய சந்ததி, சுனீதி, சுகேதன என்பவர்கள். சுகேதன மகன் தர்ம கேது, அவனுக்கு சத்ய கேது. அவன் மகன் த்ருஷ்ட கேது, சக்ரவர்த்தியானான். வீதி ஹோத்ரன் பார்க பூமி என்ற தேசத்தின் அரசன் ஆனான்.
அனேனன் வம்சம் பற்றி சொல்கிறேன் கேள். இவன் வம்சத்தில் ப்ரும்மா பிறந்தார். சுத்தன், சுசி, த்ரிககுத் என்பார்கள். ரஜன் என்பவனுக்கு ஐம்பது புதல்வர்கள். இவர்கள் சாந்தமாக நியாயமாக ஆட்சி செய்தனர். தேவர்கள் யாசித்ததால், ரஜன் இந்திரனுக்கு சகாயம் செய்தான். ப்ரஹ்லாதன் எதிர்க்கக் கூடும் என்று இந்திரன் பயந்து கொண்டிருந்தான். ரஜனுக்கு பிறகு அவன் புதல்வர்கள் இந்திரன் அழைத்தும் உடன் செல்ல மறுத்து விட்டனர். த்ரிவிஷ்டபம் என்ற மகேந்திரனுக்கு தர வேண்டிய யாக பாகத்தை தராமல் தாங்களே அனுபவித்தனர். அதனால் அனைவரும் குருவினால் சபிக்கப் பட்டனர்.
அதன் பின் ஹர்யவன என்பவன் அரசன் ஆனான். அவன் மகன் சஹதேவன், அதன் பின் ஹீநன் என்பவன், ஜய சேனன் அவன் மகன். அவனுக்கு சங்க்ருதி. க்ஷத்ர த்ர்மா என்பவன் மஹா ரதீ எனப் பட்டான். இனி நகுஷ வம்சம்
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், பதினேழாவது அத்யாயம்)
அத்யாயம்-18
ஸ்ரீ சுகர் சொன்னார்: யதி, யயாதி, சம்யாதி, ஆயதி, வியதி, க்ருதி, என்ற அறுவர், நகுஷனுடைய புதல்வர்கள். தந்தையே அளித்தும் யதி ராஜ்யத்தை விரும்பவில்லை. அதனால் ஏற்க வேண்டிய பொறுப்புகளையும், கஷ்ட நஷ்டங்களையும் அறிந்தவன். அரசு பொறுப்பை ஏற்றவன் தன்னை அறிவதில்லை. ( தந்தை நகுஷன் இந்திர பதவியை அடைந்தான். பதவி தந்த மமதையால் இந்திராணியை அடைய நினைத்ததும், அவள் சபித்தாள்.அதனால் சர்ப்பமாக பூமியில் விழுந்தான்)
அதனால் யயாதி அரசன் ஆனான். நால்வரை நான்கு திசைகளிலும் அவரவர் மனைவிகளுடன், ராஜ்ய பாலனம் செய்ய அனுப்பினான். தானும் சுக்ராசார்யார் மகளையும், வ்ருஷ பர்வண என்ற தானவேந்திரனின் மகளையும் மணந்தான்.
அரசன் வினவினான்: சுக்ராசார்யர் ப்ரும்ம ரிஷி. க்ஷத்ர பந்து – தானவ குல அரசன் வ்ருஷ பர்வணன் – ராஜ குலத்தில் பிறந்தவன் அந்தணரின் மகளை எப்படி மணந்தான். ப்ரதி லோமம் என்பார்களே.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு சமயம் தானவ அரசனுடைய மகள் சர்மிஷ்டா என்ற பெண், தன் ஆயிரம் சகிகளுடன் , குரு புத்ரியான தேவயானியுடன் நகரத்தில் இருந்த உத்யான வனத்தில் பொழுது போக்காக விளையாடி மகிழச் சென்றாள். பாட்டு பாடியும், புஷ்பங்களைப் பார்த்து மகிழ்ந்தும், மணல் வெளியில் அமர்ந்தும் களித்தனர். கடைசியில் ஒரு நீர் நிலையில் நீராடச் சென்றார்கள். கரையில் ஆடைகளை வைத்து விட்டு நீரில் இறங்கினர். திடுமென வ்ருஷ கிரீசன், தேவியுடன் ஆகாய மார்கமாக செல்வதைக் கண்டனர். உடனே அவர்கள் அவசரமாக அவரவர் உடையை எடுத்து அணிந்து கொண்டனர். சர்மிஷ்டா கையில் கிடைத்த ஆடையை கவனிக்காமல் தனது என்று எண்ணி அணிந்து கொண்டாள். அது குரு புத்ரியான தேவயானியுடையது. தேவயானி வெகுண்டாள்: அஹோ! இந்த தாசியின் சேஷ்டையை பார்த்தீர்களா? நான் அணிய வேண்டியதை எடுத்து அணிந்து கொண்டிருக்கிறாள். யாக பாகத்தை நாய் நக்குவது போல, என்றாள். ப்ருகு, என் தந்தை, மற்றும் பல தவ சீலர்களின் பலத்தால் ப்ரும்ம குலம் பரம புருஷனுடைய முகத்தில் தோன்றியது. அவர்கள் தான் நலம் தரும் வைதிக மார்கங்களை நடை முறையில் லோக க்ஷேமத்திற்காக அனுசரிக்கிறார்கள். தேவர்கள் தலைவன், லோக நாதர்கள் என்பவர்களும் ப்ராம்மணர்களை மதித்து வணங்குவார்கள். அவ்வளவு ஏன், ஸ்ரீ தேவியை மார்பில் தரித்த ஸ்ரீநிவாசனே, விஸ்வாத்மா, பகவானாக இருந்தும் இவர்களை வணங்குவார். அதிலும் ப்ருகு வம்சத்தினர் நாங்கள். இந்த சர்மிஷ்டா அசுர குலத்தில் வந்தவள். எங்கள் சிஷ்யர் கூட இல்லை. இந்த அறிவில்லாதவள், வேண்டுமென்றே, என் வஸ்திரத்தை எடுத்து உடுத்திக் கொள்டிருக்கிறாள். வேத சாஸ்திரங்களை அறிய அருகதையே இல்லாத நாலாம் வர்ணத்தினர் போல.
சர்மிஷ்டாவும் இந்த மமதையை கண்டு ஆத்திரம் அடைந்தாள். அடி பட்ட நாகம் போல பெருமூச்சு விட்டவளாக, ஏ பிக்ஷுகீ! ஏய் யாசிப்பவளே! உன் குலத்தைப் பற்றி இவ்வளவு பெருமை பேசுகிறாயே, என் தந்தை போன்றோரை அன்னத்திற்காக வட்டமிடும் காகம் போலவும், நாய் போலவும் அரச குலத்தை அண்டி தானே வாழ்கிறீர்கள். அவர்கள் போடும் பிச்சை தானே உங்கள் வாழ்க்கை என்றாள். சண்டை முற்றியது. சர்மிஷ்டா கோபத்துடன் குரு புத்ரியை ஒரு கிணற்றில் தள்ளி விட்டு விட்டு சகிகளுடன் புறப்பட்டு போய் விட்டாள்.
அவள் வீடு போய் சேர்ந்த பின், யதேச்சையாக அரசன் யயாதி வேட்டையாட வந்தவன், தேவயானியைக் கண்டான். அவளுக்கு தன்னுடைய உத்தரீயத்தை அளித்து, கை கொடுத்து மேலே தூக்கி விட்டான். மேலே வந்த தேவயானி, வீரனான அவனிடம் ராஜன்! என் கைகளை பிடித்தவன் நீ, அதனால் நான் உனக்குரியவள் என்றாகிறது. தெய்வச் செயல் தான் இது. வீரனே! நமது சம்பந்தம் அமைய வேண்டும் என்பது நாம் எண்ணி செய்ததில்லை. நான் இந்த கிணற்றில் கிடப்பதும், யதேச்சையாக நீங்கள் வந்து மீட்பதும் உங்களை நான் சந்திக்கவே என்பது போல அமைந்துள்ளது. ப்ராம்மணப் பெண்ணான என்னை மணக்க மனதால் கூட நினைத்திருக்க மாட்டீர்கள் என்பது நிச்சயம். பார்ஹஸ்பதியான கசனால் முன் சபிக்கப் பட்டவள். அதனால் என்னை ப்ராம்மண குலத்தில் ஏற்க மாட்டார்கள். யயாதியும் இது தெய்வ செயலே என்று அவளை ஏற்றுக் கொண்டான். அரசன் அகன்றதும் அவள் தன் தந்தையிடம் அழுது கொண்டே சர்மிஷ்டா செய்த துஷ்ட செயலை விவரித்தாள். (கசன் சுக்ராசார்யரிடம் சஞ்சீவனி மந்திரத்தை கற்க வந்த பொழுது, தேவயானி அவனை விரும்பினாள். குரு புத்ரி எனக்கு மரியாதைக்குரியவள், என்று சொல்லி மறுத்து விட்டான். நீ கற்ற கல்வி பலிக்காமல் போகட்டும் என்று இவள் சபிக்க, அவனும் பதிலுக்கு உன்னை எந்த அந்தணனும் மணக்காமல் போகட்டும் என்று பதில் சாபம் கொடுத்தான் )
ஸுக்ராசாரியர் இதைக் கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தார். இது என்ன வாழ்க்கை. புரோஹிதம் என்பது மதிப்புகுரியது என்று நினைத்தோம், உணவை யாசிப்பவர்களா நாம் என்று வருந்தினர். இந்த தொழிலே வேண்டாம் என்று மகளுடன் ராஜ்யத்தை விட்டே விலகி விட்டார்.
வ்ருஷ பர்வண ராஜா இதையறிந்து அவரிடம் தலை வணங்கி விண்ணப்பித்து, அவரும் கோபம் தணிந்து, தனியாக இவளை விட்டு வர முடியாதே, என்றார். அந்த சமயம் தேவயானி தன் மனோரதத்தை வெளிப்படுத்தினாள். யயாதியை விரும்புவதாகவும், காட்டில் நடந்த விஷயங்களையும் சொன்னாள். ஏற்கனவே ராஜ புத்ரி சர்மிஷ்டாவை மணந்திருந்தான். அவளிடம் மகனையும் பெற்ற அரசன் யயாதி. அரசன் இந்த விஷயத்தைச் சொன்ன பின்னும் தேவயானி பிடிவாதமாக இருந்தாள். விவாகம் ஆனதும் மற்ற யாருடனும் தாம்பத்யம் செய்யக் கூடாது என்ற நிபந்தனையோடு அவரும் சம்மதித்தார். அதே கவனமாக சர்மிஷ்டாவை அரசன் சந்திக்கவே விடவில்லை. காலம் சென்றது.
தேவயானி கர்பமுற்றதும், சர்மிஷ்டா தானும் தாயாக வேண்டும் என வேண்டியதும், அதுவும் நியாயம் தானே என்று எண்ணியவனாக அரசன் ரகசியமாக அவளுடன் கூடி மகிழ்ந்தான். சுக்ராசாரியார் முன்னமே எச்சரித்திருந்தை மறந்து விட்டிருந்தான்.
யது துர்வசு என்று இரு மகன் களை தேவயானி பெற்றாள். த்ருஹ்யம், அனும், புரு என்பவர்கள் சர்மிஷ்டாவின் புதல்வர்கள். அவளுக்கும் புதல்வர்கள் பிறந்தனர் என்ற செய்தியை கணவனே சொல்லக் கேட்ட தேவயானி கொதித்து எழுந்தாள், கோபத்துடன் தந்தையிடம் சென்றாள். அரசன் சமாதானம் செய்தது எடுபடவில்லை. சுக்ரர் இதையறித்து அரசனை கோபித்து ‘சொன்ன சொல்லை மறந்து விட்டாயே, அனார்ய, உன்னை ஜரா என்ற முதுமை வந்து சேரட்டும். மந்த புத்தியே, முதுமை வந்தால் உன் ரூபம் என்ன ஆகும் தெரியுமா? ‘ என்று சபித்தார். அதன் பின் அதன் பின் விளைவை எண்ணியோ, தன் மகள் பற்றி நினைத்தோ, பரிகாரமாக யாரிடமாவது முடிந்தால் அதைக் கொடுத்து இளமையை வாங்கிக் கொள், என்றார்.
யயாதி சொன்னான்: ப்ரும்மன்! உங்கள் மகளிடம் என் மனம் ஈடுபடவில்லை. பொருந்தாத திருமணம். என் தாம்பத்யத்தில் திருப்தியில்லை. எனவே நீங்கள் சொன்னபடி முதுமையை ஏற்கிறேன். எப்படியிருந்தாலும் காலம் செல்லச் செல்ல அனுபவிக்கப் போவது தானே’ என்றான். ஆனால் உண்மையில் அந்த சாபம் பலித்தபின் தான் வாழ்க்கையில் இழந்த இளமை அவனை வருத்தியது. அதனால் தேவயானியின் மகனிடம் உன் தாய் வழி பாட்டனார் சபித்து விட்டார். மகனே! இந்த முதுமையை நீ ஏற்றுக் கொண்டு உன் இளமையைத் தா. சில காலம் அனுபவித்து விட்டு திரும்பவும் பழையடி ஆகி விடுவோம் என்றான். உன் தாயுடன் திருப்தியாக வாழவும் இல்லை என்றான்.
யது: எனக்கு சம்மதமில்லை. நடு வயதில் உங்களுக்கு வந்த முதுமையை இளைஞனான நான் ஏன் ஏற்க வேண்டும். அறிவு இல்லாமல் க்ராம்ய சுகத்தில் வாழ்ந்து விட்டு, இப்பொழுது தவிக்கிறீர்கள், என்றான். அதன் பின் துர்வசு என்ற இளயவனிடம் சென்றான். அவனும், அடுத்து த்ருஹ்யனும், அனுவும் மறுத்து விட, புரூ வயதில் சிறியவனானாலும், அதிக குணவான், குழந்தாய் நீயும் உன் மூத்த சகோதரர்களைப் போலவே மறுத்து விடுவாயோ என்று சந்தேகத்துடனேயே கேட்டான்.
புரூ: மனுஷ்யேந்திர! தந்தை தன் ஆத்மாவாக தனயனை வளர்க்கிறார். அவருடைய அன்புக்கு ப்ரதிகாரம் செய்பவன் எவனோ அவனே நல்கதியை அடைகிறான். இவ்வாறு சொல்லி மனதார தன் இளமையை அவருக்கு கொடுக்க சம்மதித்தான். சப்த தீவுகளின் பதியாக, தன் ப்ரஜைகளை தந்தை போல பாலித்து விட்டு தான் அனுபவிக்காமல் விட்ட சுகங்களை அனுபவித்து விட்டு, தன் விருப்பம் நிறைவேறியவனாக ஆனான்.
தேவ யானியும் தினமும் தன் மனோ, வாக், தேகம் இவைகளால் ப்ரேமையுடன் ஒத்து வாழ்ந்தாள். பல யாகங்களைச் செய்து யாக புருஷன் எனும் பகவானை பூஜித்தான். நிறைய தக்ஷிணைகள் கொடுத்து சர்வ தேவ மயமான தேவனை சர்வ வேத மயமான ஸ்ரீ ஹரியை திருப்தி செய்தான்.
வானத்தில் தோன்றும் நீர்துளிகள் இருப்பது போலவும் இல்லாதது போலவும் காணப் படுகிறதோ, அதே விதமாக கனவும் நனவுமான மாயா மனோரதங்கள். அதனால் அதன் நிலையாமையை எண்ணி மனதை வாசுதேவனிடத்தில் செலுத்தி ப்ரபுவை, ஆசைகளைக் கடந்தவனாக பூஜித்தான். பல வருஷங்கள் (ஆயிரம் வருஷங்கள்) மனம் கொண்ட மட்டும் மனதுடன் ஆறான இந்திரிய சுகங்களை அனுபவித்து விட்டு திருப்தி அடையாத அந்த சக்ரவர்த்தி, யோசித்தான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், பதினெட்டாவது அத்யாயம்)
அத்யாயம் 19
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு நாள், தன் வாழ் நாள் பெண் சுகத்திலேயே கழித்து விட்டோமே என்ற பச்சாதாபம் தோன்ற மனைவியிடம் சொன்னான். பார்கவி! கேள். என்னைப் போன்றவர்களின் நிலையை சொல்வதாக அமைந்த இந்த பாட்டைக் கேள். எங்களைப் பார்த்து தீரர்களாக உள்ள அறிஞர்கள் பச்சாதாபப்பட்டு பாடியது.
பாவம், ஒரு வெள்ளாடு வனத்தில் திரிந்துகொண்டிருந்த சமயம், தன் வினைப் பயனால் கிணற்றில் விழுந்த பெண் ஆட்டைக் கண்டது. அதை தூக்கி விட உபாயம் யோசித்து, தன் கொம்பினால் தூக்கி மேலே கொண்டு வந்தது. குடிக்கத் தண்ணீர் கொடுத்து ஆஸ்வாசப் படுத்தியது. அதுவோ அந்த ஆட்டையே விரும்பியது. அதைப் பார்த்த பல பெண் ஆடுகள் காமத்தால் தவித்துக் கொண்டிருந்தவைகள், தகுந்த துணை கிடைக்காத இதனிடமே மோகித்து, கொழுத்து, மீசையுடன், கவர்ச்சியாக இருந்த அதையே அனைத்து பெண் ஆடுகளும் மோகித்தன, ,அதுவும் ஏராளமான ஆடுகளுடன் ரமித்துக் கொண்டு காலம் சென்றதையே அறியாமல் தன்னையே அறிந்து கொள்ளவில்லை. அவை அணைத்து ஆடுகளுடனும் ரமித்துக் கொண்டிருந்தை, தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டிருந்த கிணற்றில் விழுந்த முதல் பெண் ஆடு பொறுக்கவில்லை. பொறாமை கொண்டது. அந்த வெள்ளாடு தனக்கு துரோகம் செய்து விட்டதாக பொறுமியது. சிற்றின்ப பிரியன், எளிதில் மாறும் குணம் உள்ளவன் என்றெல்லாம் ஏசியது. தன் எஜமானனிடம் வருத்தத்துடன் சென்று புலம்பியது. அந்த உரிமையாளன் அதை சமாதானப் படுத்த வெள்ளாட்டை தண்டிக்க நினைத்து அதன் ஆண் உறுப்பைச் சிதைத்து விட்டான். பின் யோசித்து இதனால் அந்த பெண் ஆடும் தன் பிரியமான வாழ்க்கையை இழக்குமே என்ற நினைவு வந்து வெள்ளாட்டை தன் உறுப்புடன் இணைத்து கொடுத்தது.
இவ்வாறு தண்டனை பெற்று திரும்ப அந்த கிணற்றில் விழுந்த ஆட்டிடமே பல காலம் வாழ்ந்த வெள்ளாடு தன் காமம் தீராமல் இன்று வரை திரிகிறது. அந்த வெள்ளாட்டுக்கும் எனக்கும் என்ன வேறு பாடு. நானும் காமியாக வாழ் நாள் முழுவதும் காமத்திலேயே மூழ்கி என்ன அறிய வேண்டும், என்னறிவை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நினைவே இல்லாமல் கழித்து விட்டேன். உன் மோகத்தில் மூழ்கி பரிதாபமான என்னை நானே நொந்து கொள்கிறேன். உலகில் தானிய விதைகள், பொன், பசுக்கள், பெண்கள் மனிதனுக்கு மனதுக்கு இதமாக இருப்பவை. உன்னைப் போன்றவர்களிடம் அளவு மீறிய காமம் கொண்ட மனிதன் அழிவைத்தான் அடைவான்.
ஒருபொழுதும் சிற்றின்பங்கள் அனுபவித்து தீராது. ஹோமத் தீயில் விட்ட நெய் போல மேலும் மேலும் பெருகும். சர்வ ஜீவன்களுக்கும் அமங்களமான இதை கட்டுக்குள் வைத்திருப்பவன் தான் உலக நன்மைக்காக எதையும் செய்ய முடியும். இதிலிருந்து விடுபட மனிதனாக பிறந்தவன் அனைத்து உயிரினங்களையும் சமமாக பாவித்தால், எல்லா திசைகளிலும் தன் மதிப்பைப் பெறுவான். ஆனால், இந்த காமத்தை துறப்பதும் எளிதல்ல. தான் ஆட்டுவிக்கும் மனிதனை, உயிருள்ள ஜீவன்களை உருக்குலைக்கும், , தான் அழியாது. தாய், சகோதரி, தன் மகள், இவர்களிடம் கூட தள்ளியே இருக்க வேண்டும். வித்வானாக இருப்பவனைக் கூட அந்த ஆசை விடாது. நூறு வருஷம் வாழ்ந்தவன் கூட, திருப்தியடைந்ததாக சொல்ல மாட்டான். அதனால், ப்ரும்ம தியானத்தில் மனதைச் செலுத்தியபடி இந்த வாழ்க்கையை பயனுடையதாகச் செய்கிறேன். அதனால் அனைத்தையும் துறந்து வனம் செல்வேன். காட்டு மிருகங்களோடு அகங்காரம் இன்றி அமைதியாக தவம் செய்யப் போகிறேன்.
இதுவரை நான் கண்டதும், கேட்டதும், அறிந்ததும் என் அருகில் கூட வர விட மாட்டேன். ஆத்மாவை நாசம் செய்யும் உலக வாழ்க்கையை அடியோடு துறப்பேன். இப்படிச் சொல்லி விட்டு, தன் மனைவி, நகரம், ராஜ்யம் அனைத்தையும் புரூவின் பொறுப்பில் விட்டு விட்டு சற்றும் பற்றின்றி பகவானை தியானம் செய்ய வட திசையில் சென்று விட்டான். புரூவிடம் பூமண்டலம் அனைத்தையும் அளித்து அபிஷேகம் செய்வித்தான். தான் பெற்ற இளமையை அவனிடம் திருப்பிக் கொடுத்து ஆசீர்வதித்தான்.
பல வருஷங்கள் சிற்றின்பம் அனுபவித்து, ஆறு விதமான புலனின்பங்களையும், லௌகிகமான சௌகர்யங்களையும் சுகங்களையும் அனுபவித்தவன் க்ஷண நேரத்தில் அனைத்தையும் துறந்தான். பறவைக் குஞ்சு இறக்கை முளைத்தவுடன் பறந்து விடுவது போல. வனத்தில் தனிமையில், ஆத்மானு பூதியை அடைந்து, பர ப்ரும்மமான வாசுதேவனித்தில் அடங்கினான். பாகவதர்கள் அடையும் நல் கதியை அடைந்தான்.
அருவி கொட்டுவது போல வேகமாக சென்ற வாழ்க்கை. அதுவும் ப்ரபுவின் மாயையால் தோன்றியதே. கனவும், விழிப்பும் போலவே என்று பார்கவி, தேவயானையும் உணர்ந்தாள். ஸ்ரீ க்ருஷ்ணனிடம் பக்தி செலுத்தி அமைதியாக வாழ்ந்தாள். நாளடைவில் தானும் மறைந்தாள்.
நமஸ்துப்யம் பகவதே வாசுதேவாய வேதஸே | சர்வ பூதாதிவாஸாய சாந்தாய ப்ருஹதே நம: ||
( இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில். பத்தொன்பதாவது அத்யாயம்)
அத்யாயம்- 20
ஸ்ரீ சுகர் சொன்னார்: புரூ வுடைய வம்சம் பற்றிச் சொல்கிறேன். பாரதா! நீ அந்த வம்சத்தினன். அதில் பல ராஜரிஷிகள், ப்ரும்ம ரிஷிகள் பிறந்தனர்.
ஜனமேயஜன் என்பவன் புரூவின் மகன். அவனுக்கு ப்ரசின்வான் என்பவன். ப்ரவீரன், நமஸ்யு, அவனுக்கு, சாருபதன் என்பவன் பிறந்தான். அவனுக்கு சுத்யு, அவனுக்கு பஹுகவன் , சம்யாதி, அவனுக்கு ஹம்யாதி, அவன் மகன் ரௌத்ராஸ்வன் என்பவன். க்ரத்யு என்பவன், அவனுக்கு கக்ஷேயு:, ஸ்தண்டிலேயு:, க்ருதேயுகன், ஜலேயு:, சந்ததேயு:, தர்ம, சத்யவ்ரத, யவன் என்ற பத்து பேர். இவர்கள் அப்சரசின் மகன்கள். வனேயு என்பவன் கடைசி. க்ருதாசீ என்பவளிடம், ஜகதாத்மாவின் படைப்பில் உள்ள இந்திரியங்கள் போன்றவர்கள் அவன் மகன்கள். ருதேயன் என்பவனுக்கு ரந்தி பாரன் பகன், மற்றும் மூன்று பெண் மகவுகள். சுமதி, த்ருவோ, அப்ரதிரத:. அப்ரதிரத: என்பவளிடம் கண்வர் பிறந்தார். இவர் பின் நாளில் மகரிஷியானர். கண்வரின் மகன் மேதாதிதி, அவனுக்கு ப்ரஸ்கண்வன் முதலானோர், இவர்கள் த்விஜாதி என்ற அந்தணர்கள். சுமதியின் மகன் ரைப்யன் என்பவன், துஷ்யந்தன் அவன் மகன். துஷ்யந்தன் வேட்டையாடச் சென்ற சமயம், கண்வாஸ்ரமம் சென்றான். அங்கு வசித்த ஒரு பெண், தேவ மாயா போன்றும், தன் அழகால், ப்ரகாசத்தால் அந்த ப்ரதேசத்தையே அழகுறச் செய்தவளாகத் தோன்றினாள். கண்டவுடன் அவளிடம் மயங்கினான். படர்கள்- காவல் வீரர்கள் சூழ்ந்து நின்றிருந்தனர். அவளிடம் பேச்சுக் கொடுத்து, யாரென்று தெரிந்து கொண்டான்.
அவளைக் கண்டதாலேயே, தன் களைப்பு நீங்கி, புத்துணர்வு பெற்றதாக உணர்ந்தான். காமனால் தூண்டப்பட்டவனாக அவளிடம் ஆவலுடன் உரையாடினான்.
‘யார் நீ, கமல பத்ராக்ஷி? உன் பெற்றோர் யாவர்? என் மனதை கவருகிறாய். நிர்ஜனமான வனம் இங்கு ஏன் தங்கியிருக்கிறாய்.? ஏதோ அரச குமாரி என்று உன் தோற்றம் சொல்கிறது. புரு வம்சத்தில் வந்தவன் நான். என் மனம் அதர்மத்தில் செல்லாது.
சகுந்தலா சொன்னாள்: விஸ்வாமித்திருடைய மகள். நான். மேனகா என் தாய். என்னை வனத்தில் கண்வ ரிஷி கண்டெடுத்து வளர்த்தார். சொல்லுங்கள், எங்களிடத்துக்கு வந்த அதிதி. உங்கள் தேவை என்ன? உட்காருங்கள். இதோ அர்ஹணம். இங்கு தானியங்கள், பழங்கள் இவையே உணவு. சாப்பிடுங்கள். விரும்பினால் இங்கு தங்கலாம். மகரிஷி கண்வர் இதோ வந்து விடுவார்.
துஷ்யந்தன் சொன்னான்: குசிகரான விஸ்வாமித்திரர் மகள் இப்படித்தான் இருப்பாள் என்பது போல மதுரமாக பேசினாய். ராஜ குமாரி நீ, நான் உன்னை எனக்கு ஏற்றவளாக நினைக்கிறேன். சம்மதித்தால், இப்பொழுதே ஓம் என்று சொல்லி காந்தர்வ விவாஹம் செய்து கொள்வேன். அப்படியே அவளும் சம்மதிக்க, காந்தர்வ விதியால் ராஜா அந்த தேச காலத்தின் விதி முறைகளை அறிந்தவனாக அவளை மணந்தான். அமோக வீர்யம் உடையவன். அவளும் தகுதியான மஹிஷி. அன்றே அவள் கருத்தரித்தாள். மறுநாள், துஷ்யந்தன் தன் நகரம் சென்றவன் நடந்ததை மறந்து விட்டான். சகுந்தலை காலம் செல்லவும், ஒரு மகனைப் பெற்றாள்.
கண்வர் வனத்தில் அந்த மகனுக்கு தேவையான சம்ஸ்காரங்களைச் செய்தார். அவன் சிங்கங்களுடன் விளையாடினான். அவன் விக்ரமம், தாங்க முடியாததாக இருந்தது. ஸ்ரீ ஹரியின் அம்சாம்சமாக பிறந்தவன் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அவனை அழைத்துக் கொண்டு ராஜ க்ருஹம் சென்றாள். அவன் அவளை மனைவியாகவோ, மகனை தனது என்றோ ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான். ராஜ க்ருஹத்தில் இருந்தவர்கள் அசரீரியாக ஒரு வாக்கை கேட்டனர். ‘ தாய் தாங்குவாள், மகன் எந்த புருஷனிடம் தோன்றினானோ அவன் தான் தந்தை. துஷ்யந்தா! உன் மகன் தான், ஏற்றுக் கொள், சகுந்தலையை தவறாக நினைக்காதே, அது அவளுக்கு அவமானம். காலம் சென்ற உன் வம்சத்து முன்னோர்கள் ஆசியால் புத்திரர்கள் பிறக்கின்றனர். நீ தான் அவளுக்கு கர்பத்தை அளித்தவன். சகுந்தலா சொன்னது சத்யமே”
அதன் பின் துஷ்யந்தன் மகனை ஏற்றுக் கொண்டான். தந்தைக்கு பின் பரதன் அரசனாக, சக்ரவர்த்தியாக ஆனான். அவன் புகழ் உலகில் பரவியது. ஹரியின் அம்சம் என்றனர். அவன் வலது கையில் சக்கரமும், பத்ம கோசம் அவன் பாதங்களிலும் இருக்கக் கண்டனர். ப்ரஜைகளும் மந்திரிகளுமாக அவனுக்கு பட்டாபிஷேகம் விமரிசையாக செய்வித்தனர். ஐந்து ஐநூறு- குதிரைகளுடன் அஸ்வ மேத யாகம் கங்கைக் கரையில், அதே போல யமுனைக் கரையில் என்று பல யாகங்கள் செய்தான். மேலும் பல சப்ததி மேத்ய என்ற அஸ்வங்கள் வசு என்ற தேவன் கொடுத்தான். அவைகளையும் பசுக்களையும் தேவையானவர்களுக்கு, அந்தணர்களுக்கு தானமாக கொடுத்தான்.
மற்ற அரசர்கள் அதிசயமாக எண்ணும்படி, மேலும் பல அஸ்வங்களை வெற்றி பெற்றுக் கொண்டு வந்தான். தேவ மாயை என்றனர். துஷ்யந்தன் மகன் மாயை அறிந்தவன், மிகப் பெரிய அதிசயங்களை செய்வான், வீரன் அவன் என்று பலவாறாக மக்களால் போற்றப் பட்டான். எதிரிகளை ஜயித்து, அவர்களிடம் கைப் பற்றிய வெண்மையான பற்களையுடைய மிருகங்கள், கருப்பு மான்கள், இவைகளை தானம் செய்தான். அவன் புஜ பலத்தை வியந்தனர். இதுவரை இப்படி எந்த அரசனும் இருந்ததில்லை, எவரும் பிறக்கப் போவதுமில்லை என்றனர். கிராதர்கள், ஹூனர்கள், யவனர்கள், ஆந்த்ரான், கங்கான், खशान् கசான் ,च्छ्का:, म्लेच्छार्, अब्रह्मण्यान्, ப்ராம்மணர்களை வெறுத்தவன், இவர்களை திக் விஜயம் செய்து போரிட்டு தோற்கடித்து, முழுவதுமாக அவர்களை தன் நாட்டிலிருந்து விரட்டி விட்டான். முன் ஒரு சமயம் அசுரர்கள் தேவர்களை தோற்கடித்து, தேவ ஸ்த்ரீகளை பாதாளத்தில் அடைந்து வைத்திருந்தனர். அவர்களை திரும்ப கொண்டு வந்து தேவர்களிடம் சேர்ப்பித்தான். அவன் ஆட்சியில் ப்ரஜைகள் வேண்டியதைப் பெற்றனர். இருபத்தேழாயிரம் ஆண்டுகள் பூமியில் திசைகள் தோறும் சுற்றி வந்தான். சக்ரவர்த்தியாக, லோக பாலனாக ஐஸ்வர்யம் நிரம்பியவனாக, தன் பதம்-கொள்கையிலிருந்து நழுவாதவனாக இருந்தான்.
விதர்ப ராஜனின் மூன்று பெண்கள் அவன் மனைவியரானார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற குழந்தைகளை அவனுக்கு சமமாக இல்லையென்பதால், தாங்களே அழித்து விட்டனர். (தன்னைப் போல இல்லை என்று அவன் மறுத்து விடுவானோ என்பதால்) இவ்வாறு வம்சமே இல்லாமல் போகவும் அவன் மருத், சோமன் இவர்களை குறித்து புத்ரனை வேண்டி யாகம் செய்தான்.
முன் ஒரு சமயம் ப்ருஹஸ்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். கண் தெரியாத குழந்தையாக பிறந்ததால் அந்த தமஸ் என்றனர். அதை தாயார் தியாகம் செய்து விட்டு போய் விட்டாள். மருத் கணங்கள் அதை வளர்த்தனர்.
தாயால் கைவிடப் பட்ட குழந்தை என்பதால், குழந்தையில்லாத பரதனுக்கு மருத் கணங்கள் கொடுத்தனர். விததன் என்று பெயரிட்டு தன் மகனாக ஏற்றுக் கொண்டான். பரத்வாஜர் எனவும் அழைக்கப் பட்டான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், இருபதாவது அத்யாயம்.)
அத்யாயம்-21
ஸ்ரீ சுகர் சொன்னார்: விததன் என்பவனுக்கு மன்யு, ப்ருஹத்க்ஷத்ரன், ஜயன் அதன் பின் மகா வீரனான நரன், கர்கன், சங்க்ருதி என்பவன் நரனுடைய மகன். குரு, ரந்தி தேவன், சங்க்ருதியின் புதல்வர்கள். ரந்தி தேவன் உலகில் புகழ் வாய்ந்தவனாக இருந்தான். ஏராளமான தனம், அதை தானம் செய்தே கரைத்தான். பசியோடு யார் வந்தாலும் இல்லையெனாமல் அன்னம் அளித்தான். கடைசியில் எதுவும் மீதியின்றி தானும் தன் குடும்பத்தினரும் வறுமையில் வாடும் படி செல்வம் அனைத்தும் கரைந்தது. நாற்பத்தெட்டு நாள் முழு பட்டினி. நீர் கூட குடிக்காமல் வாடினர். ஒரு நாள் காலை நெய் , கோதுமை கலந்து செய்த பாயசம் , குடிக்கத் தண்ணீர் இவை கிடைத்தன. குடும்பத்தோடு அமர்ந்து வெகு நாட்களுக்குப் பின் உணவைக் கண்டதால் ஆவலுடன் உண்ணத் தயாராக ஆயினர். அந்த சமயம் ஒரு ப்ராம்மணன் அங்கு வந்து சேர்ந்தான். அவனும் உணவை வேண்டியே வந்திருந்தான். தன்னிடம் இருந்த அன்னத்தை பகிர்ந்து அவனுக்கு ஒரு பங்கை ரந்தி தேவன் கொடுத்தான். அவனும் ஸ்ரீ ஹரியை தியானம் செய்து விட்டு அதை விரும்பிச் சாப்பிட்டான். அவன் அகன்றதும் ஒரு சூத்ரன் வந்தான். அவனும் கையேந்தி உணவை வேண்டினான். நேற்றிலிருந்து எதுவுமே கிடைக்கவில்லை என்றான். ராஜன்! எனக்கும் அன்னத்தைக் கொடுங்கள், என் வீட்டாரும் பசியோடு இருக்கிறார்கள் என்றான். மிதி இருந்த பாயசத்தை அவனுக்கு கொடுத்து விட்டான்.
அதன் பின் ஒரு நாயுடன் சைவன் ஒருவன் வந்தான். பசி என்று வந்தவன் ,ஸ்வப்ய: ஸ்வபதயே ஸ்ரீ ருத்ரம் – என்ற விபுவாக நினைத்து கொடுத்தான். (Svaanam- dog ) குடி நீர் மட்டும் தான் பாக்கி. அதையும் வந்தவன் கேட்டு வாங்கிக் கொண்டான். அவன் கெஞ்சி கேட்டதை கொடுத்த பின்னும் ரந்தி தேவன் இன்னமும் நிறைய கொடுக்கவில்லையே என்பது போல மனம் வருந்தி ஒரு பாடலைச் சொன்னான். ‘ஈஸ்வரனுக்கு சம மான அந்தஸ்து எனக்கு வேண்டாம். அஷ்ட லக்ஷ்மி எனும் எட்டு வித செல்வங்களும் சேர்ந்து அனுபவிக்க கிடைக்க வேண்டாம். மறு பிறவியில்லாத மோக்ஷமும் வேண்டாம். என்னிடம் கஷ்டம் என்று வருபவர்களின் கஷ்டத்தைத் தீர்க்க என்னிடம் வசதி இருக்க வேண்டும். என்னிடம் வந்து யாசித்து, கிடைக்காமல் வருத்தத்துடன் யாரும் திரும்பி போகக் கூடாது.
பசி தாகம், உடல் களைப்பு, சிரமம், தீனமான நிலை, கஷ்டங்கள், மேலும் மேலும் சோகமும், வருத்தமுமே இருந்து, மோகத்தாலும் வாடிய ஜீவனின் ஒரு எளிய ஜந்து இன்று என் கையால் நீர் பெற்று தாகம் தீரப் பெறட்டும். பாவம், இவன் தாகத்தால் உயிரை விட்டு விடுபவன் போல இருக்கிறான் என்று சொல்லி அந்த வேடனுக்கு தன்னிடம் இருந்த தண்ணீரை கொடுத்து விட்டான். உடனே பகவான் விஷ்ணுவின் மாயையால் மூவுலகத்துக்கும் தலைவர்களான, வரமளிக்கும் தெய்வங்கள், தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். என்ன வரம் வேண்டுமோ கேள், என்றனர். அவனும் அவர்களை நமஸ்கரித்தான். பகவான் வாசுதேவனிடத்தில் பக்தியே வேண்டினான். என் மனம் என்றும் இப்படியே பர ப்ரும்மத்தில் லயிக்க வேண்டும் என்றான். இது போன்ற பசி தாகம் என்னை விட்டு விலகி விட்டன, இனி ஒரு பொழுதும் நான் உலக வாழ்க்கையில் வருந்த மாட்டேன். அதே போல என்னிடம் வருபவர்கள் பிணியையும் நான் தீர்க்க வேண்டும் என்றான்.
கனவு போன்ற வாழ்க்கை, என்று தெளிந்தவன் ஆனதால் பெரிதாக எதையும் கேட்டுப் பெறவும் இல்லை. அவனை அண்டியவர்களும் யோகிகளாக ஆனார்கள். நாராயண பராயணர்களாக வாழ்ந்தார்கள்.
கர்கர் என்பவருக்கு, சினி, அதன் பின் கார்க்யர் க்ஷத்திய தர்மத்தை விட்டு ப்ரும்மகுலம், அந்தணராக ஆனார். அவருக்கு துரித க்ஷயன், மஹா வீர்யன், அவனுக்கு த்ரய்யாருணி, கவி, புஷ்கராருணி என்ற இவர்களும் ப்ராம்மணர்களாக ஆனார்கள். ப்ருஹத் க்ஷத்ரஸ்ய மகன் ஹஸ்தி என்பவன். இவன் ஹஸ்தினாபுரம் என்ற நகரத்தை நிர்மாணித்தான். அஜமீடன், த்விமீடன், புருமீடன் , என்பவர்கள் ஹஸ்தியின் புதல்வர்கள். அஜமீடனின் வம்சத்தினர் ப்ரிய மேதா என்பவர்களும் அந்தணர்கள் ஆனார்கள். அஜமீடனின் மகன் ப்ருஹதிஷு, அவனுக்கு ப்ருஹத் தனு என்ற மகன். ப்ருஹத் காயன் என்பவன் அடுத்து, அவன் மகன் ஜயத்ரதன். ஜயத்ரதன் மகன் விசதன் என்பவன். அவனுக்கு சேனஜித் என்பவன் மகன். ருசிராஸ்வன், த்ருட ஹனு:, காஸ்யன் என்பார்கள் அவன் புதல்வர்கள். ருசிரன் மகன் அஸ்வசுதன், பாரன், ப்ருது சேனன் என்று அவன் மகன்.
பாரனுடைய தனயன் நீபன். அவனுக்கு நூறு புதல்வர்கள். அவன் க்ருத்வீ என்ற சுக கன்யாவிடம் ப்ரும்ம தத்தன் என்பவனை பெற்றான். அவனும் யோகியாக இருந்து கவி என்ற மனைவியிடம் விஷ்வக்சேனன் என்ற மகனைப் பெற்றான். இந்த விஷ்வக் சேனர் தான், ஜைகீஷருடைய உபதேசம் பெற்று, யோக தந்த்ரம் என்பதை செய்தார். உதக் ஸ்வனன் என்ற மகன், அவனுக்கு பல்லாதோ என்ற பார்ஹதீஷர்கள்.
யவீனரன் என்பவன் த்விமீடன் மகன், அவனுக்கு க்ருதிமான், அவன் மகன் சத்ய த்ருதி என்று புகழ் பெற்றான். அவனுக்கு த்ருட நேமி , சுபார்ஸ்வ க்ருத் என்று புதல்வர்கள். சுபார்ஸ்வனுடைய மகன் சுமதி, அவனுக்கு சன்னதிமான் என்பவன், க்ருதி, ஹிரண்ய நாபனிடமே, (பகவானிடமே) ஆறு வேதங்களையும் கற்றான். பரம யோகியானான். அத்யயனம் செய்ய விரும்புபவர்களுக்கு கற்றுக் கொடுத்தான். க்ருதியின் மகன் உக்ராயுதன். க்ஷம்யன் என்ற மகன், அவனுக்கு ரிபுஞ்ஜயன் மகன்.
அதன் பின் பஹுரதன் என்ற புர மீடனுக்கு சந்ததி இல்லை. நளினி என்பவளிடம் அஜமீடனுக்கு நீலன், சாந்தி என்று புதல்வர்கள். சாந்திக்கு சுசாந்தி, அவன் மகன் புருஜன், அதன் பின் அர்க்கன். அவன் மகன் பர்ம்யாஸ்வன் எனப்பட்டான். அவனுக்கு ஐவர் முத்கலர் என்பவர்கள். யவீனரன், ப்ருஹதிஷு, காம்பில்யன், சஞ்சயன் என்பவர்கள். அலம், இது போதும், இந்த ஐந்து மகன்களே போதும்- என்றதால் பஞ்சாலர்கள் எனப்பட்டனர்.
முத்கலன் என்பவனிடம் இருந்து ஒரு கோத்ரம் துவங்கியது மௌத்கல்யம் என்பர். மிதுன் முத்கலன் மகன், பர்ம்யாஸ்வன் மகன் திவோதாஸன், அவன் மகள் தான் அஹல்யா, கௌதமர் அவளை மணந்தார். அவர்களுக்கு சதானந்தர் பிறந்தார். சதானந்தரின் மகன் சத்ய த்ருதி, தனுர் வேத விசாரதன் என புகழப் பட்டான். அவன் மகன் சரத்வாம்சன். அவன் தான் நேரில் ஊர்வசியைக் கண்டவுடன், உணர்ச்சி மேலிட அவன் விந்து புல் படுக்கையில் விழுந்தது. அதில் ஒரு ஜோடி குழந்தைகள் பிறந்தன. அந்த வழியில் சென்ற சந்தனு, கருணையுடன் குழந்தைகளை எடுத்து வளர்த்தார். க்ருபன் என்று குமாரன், க்ருபி என்று கன்யா. இந்த க்ருபி தான் த்ரோணரை மணந்தாள்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், இருபத்தோராவது அத்யாயம். )
அத்யாயம் – 22
மித்ரேயு திவோ தாசனின் மகன். அவன் மகன் ச்யவனன். அவனுக்கு சுதாஸ:, சஹதேவன், சோமகன், ஜந்து ஜன்ம க்ருத் என்பவர்கள் புதல்வர்கள். அவனுக்கு நூறு பிள்ளைகள். கடைசியாக மகன் ப்ருஷதன், இவன் மகன் தான் த்ருபதன். ப்ருஷதன் நிறைந்த சம்பத்துக்கள் உடையவனாக இருந்தான். த்ருபதன் மகள் த்ரௌபதி, த்ருஷ்த்யும்னன் என்ற மகன். த்ருஷ்த்யும்னன் மகன் த்ருஷ்டகேது, இவர்கள் பாஞ்சாலகர்கள் எனப்பட்டனர். அஜமீடனின் மகன். மற்ற மகன் ருக்ஷன், அவன் மகன் சர்வரணன். தபதி மகள் ஸூர்ய கன்யா என்பவளை மணந்தான். அவர்கள் மகன் குரு. அவன் தான் பின்னால் குருக்ஷேத்ர பதியானான். பரீக்ஷித், சுதனு, ஜஹ்னு,நிஷதாஸ்வ: என்று குருவின் புதல்வர்கள்.
சுதனு என்பவனின் மகன் சுஹோத்ரன். அடுத்து ச்யவனன். அதன் பின் மகள் க்ருதீ. வசு, அடுத்து, ப்ருஷ்ரதன் முதலானவர்கள். குஸாம்ப, மத்ஸ்ய,ப்ரத்யக்ர, சேதிபன் இவர்கள் சேதிபர்கள் எனப்பட்டனர். ப்ருஹத்ரதனுக்கு குஸாக்ரன், அவனுக்கு ருஷபன். சத்ய ஹிதனுக்கு புஷ்பவான், அவன் மகன் ஜஹ்னு. ப்ருஹத்ரதனின் மற்றொரு மனைவியிடம் பிறந்த குழந்தை இரு துண்டுகளாக நடுவில் பிளந்தது போலவும் தலை கீழாக இருப்பதைக் கண்டு, தாயார் அதை வீசி எறியவும், ஜரா என்பவள் அதை எடுத்து, சேர்த்து வைத்து ஜீவ,ஜீவ, பிழைத்துக் கொள் என்று சொல்லி, அதற்கு உயிர் வரச் செய்தாள். ஜராசந்தன் எனப் பெயர் வந்தது.
அதன் பின் சஹதேவன். சோமாபி, அவனிடம் ஸ்ருத ஸ்ரவா: என்பவர்கள். பரீக்ஷித்துக்கு சந்ததி இல்லை. சுரதன் மகன் ஜாஹ்னவன். அதன் பின் விதூரன் அவனுக்கு சார்வபௌமன் , ஜயஸேனன், அவன் மகன் ராதிகன், மற்றும் அயுதன். அடுத்து க்ரோதன், அவனுக்கு தேவாதிதி, ருஷ்யன் இருவர். ருஷ்யனுக்கு திலீபன், ப்ரதீபன் அவன் மகன்.
சந்தனு, பாஹ்லீக என்று இருவர். தேவாபி தந்தையின் ராஜ்யத்தில் விருப்பமில்லாதவனாக வனம் சென்றான். சந்தனு அரசன் ஆனான். அவன் முந்தைய ஜன்மத்தில் மஹாபிஷ எனப்பட்டான். எதைத் தொட்டாலும் வயது முதிர்ந்தவை இளமையாகும் என்பது அவனுடைய சிறப்பாக இருந்தது. அவன் ராஜ்யத்தில் தொடர்ந்து பன்னிரண்டு வருஷங்கள் மழை பெய்யவில்லை. சந்தனு பட்டத்துக்கு வந்ததும் மழை பொழிந்தது. எந்த ப்ரச்னையானாலும் அவன் பொறுமையாக தீர்த்து வைத்தான் என்பதால் சந்தனு எனப் பெயர். ப்ராம்மணர்களிடம் இந்த வறட்சி ஏன் வந்தது எனக் கேட்கவும் அவர்கள் உன் தமையன் வேத சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாமல் தன் போக்கில் இருந்தான். தவிர, தமையனிடம் அனுமதி பெறாமல் ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டாய், ஒரு விதத்தில் அது அபகரணம் என்ற குற்றம். வனத்தில் அவனை சந்தித்து அழைத்து வா என்றனர். தேவாபியோ, தன் போக்கில் இருந்தான். சந்தனு வனம் சென்று அழைத்த சமயம் அவன் யோக மார்கத்தில் ஈடுபட்டு கலாப க்ராமத்தில் இருந்தான். கலி முடிவில் ஸோம வம்சத்தில் திரும்ப க்ருத யுகம் ஆரம்பிக்கும்.
பால்ஹீகன் மகன் சோமதத்தன். அவனுக்கு, பூரி, பூரிஸ்ரவஸ் என்று மகன்கள். ஸலன், என்பவன் சந்தனுவுக்கு கங்கையில் பிறந்தவன், பின்னால் பீஷ்மர் ஆனார். சர்வ தர்மங்களும் அறிந்தவராக, மகா பாகவதனாக ஆனார். வீரன், படைத் தலைவர், பலராமனும் அவரை போற்றினான். சந்தனுவுக்கு சித்ராங்கதன் என்று ஒரு மகன். விசித்ர வீர்யன் என்பவன் இளையவன். சித்ராங்கதன் வினோதமான முறையில் கொல்லப் பட்டான். விசித்ர வீர்யனுக்கு பராசரர் மூலம் ஹரியின் அம்சமாக பிறந்த வேத குப்தன் க்ருஷ்ண த்வைபாயனன் என்று அழைக்கப்பட்டவர். பகவான் பாதராயணர் -வியாசர் என்பர். வேதத்தை வரிசைப் படுத்தி காத்தவன் என்பதால் சாக்ஷாத் பகவானின் அம்சம் என்பர். சர்வ வேத இதிஹாச சார பூதமான இந்த பாகவதத்தை படைத்து தன் மகனான எனக்கு கற்பித்தார். சாந்தமாக நான் இருந்ததும் விசேஷமான இந்த புராணத்தை நான் புரிந்து கொள்வேன் என்று நினைத்தாரோ.
விசித்ர வீர்யன், காசி ராஜாவின் புதல்விகள் இருவரை, சுயம்வரத்தில் அபகரித்துக் கொண்டு வந்து மணந்தான். அம்பிகா, அம்பாலிகா என்ற இருவர். அவர்களிடம் ஆசையுடன் இருந்தவன் தன் வியாதியால் மறைந்தான். ப்ரஜைகள் இல்லாத அரச வம்சத்தைக் காப்பாற்ற, அந்த அரச குமாரிகள் க்ஷேத்ரமாக இருக்க பாதராயணி த்ருதராஷ்ட்ரன், பாண்டு, விதுரன் என்ற மூவரையும் பிறக்கச் செய்தார். காந்தாரியிடம் த்ருத ராஷ்டிரன் நூறு புதல்வர்களை பெற்றாள், துரியோதனன் மூத்தவன். து:சலா என்ற ஒருபெண் மகவு.
சாபத்தினால் தாம்பத்யம் மறுக்கப் பட்ட பாண்டுவுக்கு, குந்தியிடம் மஹாரதிகளான புதல்வர்கள், தர்ம, வாயு, இந்திரன் இவர்களிடம் யுதிஷ்டிரன், முதலான மூவர். நகுல சகதேவர்கள் மாத்ரி புதல்வர்கள். த்ரௌபதியிடம் யுதிஷ்டிரனுக்கு ப்ரதி வந்த்யன், ஸ்ருதசேனன் வ்ருகோதரனுக்கு, ஸ்ருத கீர்தி அர்ஜுனன் மகன், சதானீகன் என்பவன் நகுலனுக்கும், சஹ தேவன் மகன் ஸ்ருத கர்மா என்பவன். யுதிஷ்டிரனுக்கு பௌரவி என்பவளிடம் தேவகன், பீமன் இடும்பி தம்பதிக்கு கடோத்கஜன், சஹதேவன்-விஜயா இவர்களுக்கு சுஹோத்ரன், பார்வதி, நகுலன்-கரேணுமதி இவர்களுக்கு நரமித்ரன், அர்ஜுனன்- உலுபி – இவர்களுக்கு இராவதன், பப்ரு வாஹனன், மணிபூர தேசத்தில் பிறந்தான். உன் தந்தை அபிமன்யு சுபத்ரா விடம் பிறந்தவன். அவன் அதிரதன் எனப் புகழ் பெற்றான். அபிமன்யு-உத்தரா தம்பதிகள் தான் உன் பெற்றோர்.
குரு வீரர்கள் தோற்ற பின், துரோணர் மகன் ப்ரும்மாஸ்திரத்தால் அடித்த பொழுது உன்னை ஸ்ரீ க்ருஷ்ணன் காப்பாற்றினார். உன் தனயன் ஜனமேஜயன் முதலானோர், ஸ்ருத சேன, பீமசேன, உக்ரசேன, இவர்களும் வீரர்கள். தக்ஷகன் கடித்து உன் மரணம் சம்பவிக்கும். அதை நினைத்து அவர் சர்ப்ப யக்ஞம் செய்வான். ப்ரும்மா அவனுக்கு நல் புத்தி சொல்லி தடுத்து அஸ்வ மேத யாகம் செய்ய வைப்பார். அவன் உலகங்களை ஜயித்து பல யாகங்கள் செய்வான். அவன் மகன் சதானீகன், யாக்ஞ வல்க்யரிடம் வேதங்கள் அத்யயனம் செய்து, அஸ்த்ரங்கள் மற்றும் க்ரியா பற்றிய ஞானம் சௌனகரிடம் பெறுவான்.
அவன் மகன் சஹஸ்ராணிகன், அஸ்வமேதம் செய்து பிறப்பான். அசீம க்ருஷ்ணன், நேமி சக்ரன் என்ற புதல்வர்களைப் பெறுவான். கஜாஹ்வயம் என்ற இடத்தில், கௌசாம்பி நதிக் கரையில், வசிப்பார்கள். சித்ர ரதன், அவனுக்கு கவிரதன் என்று புதல்வர்கள் என்று கேள்வி. அவனுக்கு வ்ருஷ்டிமான், சுஷேணன் என்பவன் மஹீபதியாவான். சுனீதன் என்று அவன் மகன் அடுத்து ந்ருசக்ஷு என்பவன். அவன் மகன் பரிப்லானன், அவனுக்கு மேதாவி, சுனயன், ந்ருபஞ்சயன் என புதல்வர்கள், அதன் பின் அவனுக்கு தூர்வஸ்திமி பிறப்பான்.
திமி என்பவனுக்கு ப்ருஹத்ரதன், அவனுக்கு சதானீகன், சுதாஸ மகன், சதானீகனுக்கு துர்தமன், அவன் மகன் மஹீனரன். தண்டபாணி, நிமி என புதல்வர்கள். அவனுக்கு க்ஷேமகன். ப்ருஹ்ம க்ஷத்ரனுக்கு தேவ ரிஷியின் ஆசியால் வம்சம் வளரும். க்ஷேமகனை அடைந்து கலி காலத்தில் , ராஜ வம்சம் நிலை பெறும்.
அதன் பின் மகத வம்சத்தினர், ஆள்வார்கள். அது பற்றிச் சொல்கிறேன். சஹதேவனுக்கு, மார்ஜாரியிடம் ஸ்ருத ஸ்ரவன் முதலானோர். அயுதாயுதன், அவனுக்கு நிரமித்ரன், அவனுக்கு சுனக்ஷத்ர:, அவனுக்கு ப்ருஷத் சேனன், அவனுக்கு கர்மஜித், சுதஞ்சயன் என்பவனுக்கு விப்ரன், சுசி என்பவர்கள் தோன்றுவார்கள். க்ஷேமன் என்பவனுக்கு சுவ்ரதன், அவனுக்கு தர்மசூத்ரன், சமன் என்பவர்கள். த்யுமத்சேனன், சுமதி, சுபலன் என்று புதல்வர்கள் பிறப்பார்கள். சுனீதன், சத்ஜித், விஸ்வஜித், ரிபுஞ்சயன், பார்ஹத்ரதன், இவர்கள் அரசர்களாக பல ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்வார்கள்.
இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், இருபத்திரண்டாவது அத்யாயம்)
அத்யாயம்-23
ஸ்ரீ சுகர் சொன்னார்: அனோ என்பவனுக்கு சபா நரன், சக்ஷு, பரோக்ஷன் என்று மூவர். சபா நரனுக்கு கால நரன், ஸ்ருஞ்ஜயன் அவன் மகன். அவன் மகன் ஜனமே ஜயன், அவன் மகன் மஹா சீலன், மகா மனா:- பெருந்தன்மையானவன் எனப் பட்டான். அவனுக்கு உஸீனரன், திதிக்ஷு, என்று இரண்டு புதல்வர்கள். சிபி:, வனன், ஸமி, தக்ஷன் என அவன் புதல்வர்கள் நால்வர். ஊசீனரனின் மகன் கள், வ்ருஷாதர்பன், சுவீரன், மத்ரன், கைகய என்று அவன் புதல்வர்கள்.
சிபிக்கும் புதல்வர்கள் நால்வர், திதிக்ஷுவுக்கு ருஷத்ரதன், ஹேமன், சுதபா, எனப்படுவர். சுதபஸ் என்பவனின் மகன் பலி. அங்க வங்க கலிங்க, சுத்ம, புண்ட்ர, ஆந்த்ர என்ற பெயருடன் தீர்க தமஸ் புதல்வர்கள் பலியின் க்ஷேத்ரத்தில் அரசர்கள் ஆனார்கள். அவர்கள் பெயரே இந்த ஆறு ராஜ்யங்களின் பெயரும் ஆயிற்று. தங்கள் ராஜ்யங்களை ஆள்பவர்களாக கிழக்கு திசையில் இருந்தனர். கனபானன் அங்கதன் என்பவனை பெற்றான். அவனுக்கு த்விரதன், அவன் மகன் தர்மரதன், அவன் மகன் சித்ர ரதன், இவனுக்கு ப்ரஜைகள் இல்லை. ரோம பாதன் என்ற பெயர் பெற்ற அரசன், தசரதனுடைய சகா. சாந்தா என்ற தன் மகளை, ருஷ்யஸ்ருங்கருக்கு கொடுத்தான். தேவர்கள் மழை பொழியாமல் விட்ட பொழுது, அவள் அவரை அழைத்து வந்தாள். ஹரிணி சுதன் என்று அவருக்கு மற்றொரு பெயர். நாட்டியம், சங்கீதம் வாத்யங்கள், அணைத்து உபசாரங்கள் செய்தும் ஊருக்குள் அழைத்து வந்தனர். அவர் ஊருக்குள் நுழைந்ததுமே மழை கொட்டியது. மருத் என்ற தேவனைக் குறித்து யாகம் செய்து புத்திரன் இல்லாத அரசன் தசரதனுக்கு புதல்வர்கள் கிடைக்கச் செய்தார்.
ரோமபாதருடைய மகன் சதுரங்கன். ப்ருதுலாக்ஷன் அவன் மகன். ப்ருஹத்ரதன், ப்ருஹத்கர்மா, ப்ருஹத்பானு என்று அவன் புதல்வர்கள். ஆதியில் ப்ருஹத்மான் என்ற பெயருடன் ஜயத்ரதன் பற்றிச் சொன்னோம். விஜயன் தனது சம்பீதி என்ற மனைவியிடம் த்ருதி என்ற மகனைப் பெற்றான். த்ருத வர்மா, அவனுக்கு சத்கர்மா, அதிரதன். இந்த அதிரதன் தான் கங்கைக் கரையில் புதருக்குள் கிடந்த குந்தியின் புத்திரனை தன் மகனாக வளர்த்தான். அவனுக்கு ப்ரஜைகள் இல்லை. கர்ணன் என்று ஜகத்பதியானான். அவன் மகன் வ்ருஷ சேனன்.
த்ருஹ்யனின் தனயன் பப்ரு என்பவன். அவன் மகன் சேது, ஆரப்தன் என்பவன் அவன் மகன். காந்தாரன் அவன் மகன். தர்மன், த்ருதன் என்று அடுத்து வந்தவர்கள். த்ருதனுக்கு துர்மதன். அவனுக்கு ப்ரசேதஸ். ப்ராசேதர்கள் நூறு பேர். ம்லேச்சாதிபதிகள் என்று வடக்கு திசையை ஆக்ரமித்து கொண்டனர். துர்வசு மகன் வஹ்னி. அவன் மகன் பர்கன், பானுமான் என்பவர்கள். த்ரிபானு என்பவன் அவன் மகன். அவன் மகன் கரந்தமன் என்பவன் உதார குணம் படைத்தவன். அவன் மகன் மருதன், அவனுக்கு சந்ததி இல்லை. துஷ்யந்தனை அவன் பௌரவன் – புரு வம்சத்தினன் என்பதால் தத்து எடுத்துக் கொண்டான். துஷ்யந்தன் என்ற அந்த மகன் மூலம் அவன் ராஜ்யம் வளர்ந்தது. யயாதியின் ஜ்யேஷ்ட புத்ரன் யது, அவன் வம்சம் பற்றிச் சொல்கிறேன். அந்த வம்சம் பகவான் அவதரித்ததால் பெருமை பெற்றது.
யதுவின் புதல்வர்கள் நால்வர். சஹஸ்ரஜித், க்ரோஷ்டா, நேத்ரன், நலன், ரிபு என்றழைக்கப் பட்டனர். சஹஸ்ர ஜித்தின் மகன்கள், சத்ஜித் முதல்வன், மஹாஹயன், வேணுஹயன், ஹைஹயன் என்பர். தர்மன் என்பவன் ஹைஹயனின் மகன். நேத்ரனின் மகன் குந்தன். சோஹஞ்ஜி என்பவன் குந்தனின் மகன், மற்றும் மஹிஷ்மான், பத்ர சேனகன். துர்மதன் பத்ர சேனனின் மகன், க்ருத வீர்யனின் மகன் தனகன். க்ரிதாக்னி, க்ருத வர்மா, க்ருதௌஜா தனகனின் புதல்வர்கள். க்ருதவீர்யனுடைய மகன் அர்ஜுனன். அவன் சப்த த்வீபத்துக்கும் அதிபதியானான். ஸ்ரீ ஹரியின் அம்சமான தத்தாத்ரேயரின் அனுக்ரஹம் பெற்றவன். யோகங்கள் அறிந்தவன். குணவானாக இருந்தவன். அவனைப் போல எந்த அரசனும் யாகங்கள் செய்தோ, தானங்களோ, தவமோ, யோகமோ, செய்ததில்லை. மற்ற ஸ்ருத வீர்யர்கள் யாராலும் அந்த அளவு புகழ் பெறவில்லை. எண்பத்து ஐந்து ஆயிரம் ஹவ்யம் – யாகத்தில் தேவர்களுக்கு தருவது- கொடுத்து அளவற்ற பலம் பெற்றான். அவன் செல்வம் குறையவே குறையாது என்பது போல என்றும் நிரம்பியிருந்தது. ஆறு விதமான போகங்களையும் குறைவற அனுபவித்தான். அவனுக்கு ஆயிரம் புதல்வர்கள். அவர்களில் ஐந்து பேர் ஜயத்வஜ: ஸூர சேனன், வ்ருஷபன், மது, ஊர்ஜித: மட்டுமே பிழைத்தனர். பார்கவ ராமனால் மற்றவர்கள் உயிரிழந்தார்கள் என்பதாக.
ஜயத்வஜன் மகன் தாள ஜங்கன், அவனுக்கு நூறு புதல்வர்கள். க்ஷத்ர தர்மம், இவர்களின் வரவால் புத்துயிர் பெற்றது. அவர்களில் மூத்தவன் வீதி ஹோத்ரன், வ்ருஷ்ணி மதுவின் மகன். இவனுக்கும் நூறு புதல்வர்கள். இவர்களின் கோத்ரம் வ்ருஷ்ணியில் தொடங்கியது. மாதவர்கள்-மதுவின் வம்சத்தினரும் வ்ருஷ்ணிகளே. யாதவர்கள் என்றும் சொல்லப் படுவர். க்ரோஷ்டன் என்பவனின்மகன் வ்ருஜினவான் எனப்பட்டான்.
ஸ்வாஹி, ருஸிகு, சித்ரரதன், சஸ பிந்து, மஹாயோகி, மஹாபோஜன் – இவர்களில் மகா போஜன் ப்ரசித்தி பெற்றான். பதினான்கு மஹா ரத்னங்கள் உடையவனாக சக்ரவர்த்தியானான். (கஜ,வாஜி, ரத,ஸ்த்ரீ,புருஷன், நிதி, மாலாம்பர த்ருமா:, சக்தி, பாச, மணி,சத்ர, விமானம்)ஆயிரம் பத்னிகள். பத்து பேர் மட்டுமே ஏராளமான புதல்வர்களைப் பெற்றனர். அவர்களில் ஆறு பேர் ப்ரதானமாக இருந்தனர். ப்ருதுஸ்ரவஸன் என்பவனின் வம்சம்.
தர்மன் என்பவனுக்கு உசனா , அவன் நூறு ஹயமேதங்கள் செய்தான். அவன் மகன் ருசகன். அவனுக்கு அறுபத்தைந்து புதல்வர்கள். புருஜித், ருக்ம என்பவர்கள் ப்ரதானமாக இருந்தனர். அவர்களின் ஜ்யாமகன் என்பவனுக்கு ப்ரஜைகள் இல்லை. அதனால் போஜ கன்யாவை தத்து எடுத்துக் கொண்டு வந்தான். ரதத்தில் அவளைப் பார்த்த மற்றொரு மனைவி சைப்யா என்பவள், கோபத்துடன் யார் இது, என் ஸ்தானத்தில் கொண்டு வந்திருக்கிறாய் என்று அதட்டவும் சமயோசிதமாக உனக்கு மருமகளாக இருப்பாள் என்று சமாளித்தான். அது எப்படி, நானோ மலடி, சபத்னியும் இல்லை, எனக்கு எப்படி மருமகள் வருவாள் என்றாள். அரசன், ராணியே, உனக்கும் மகன் பிறப்பான். என்றான். அவனுக்கு இவள் மனைவியாவாள். விஸ்வே தேவர்கள் அந்த நேரத்தில் அவன் சொன்னதை அனுமோதித்தார்கள். அதனால் சைப்யா கர்பம் தரித்து, மகனைப் பெற்றாள். அவன் விதர்பன் எனப்பட்டான். அவன் போஜ கன்யாவை மணந்து தந்தையின் வாக்கு படி மருமகளாக ஆக்கினான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், இருபத்து மூன்றாவது அத்யாயம்.)
அத்யாயம்-24
ஸ்ரீ சுகர் சொன்னார்: அந்த பெண்ணிடம் விதர்பன் இரு புதல்வர்களைப் பெற்றான். குசன்.க்ரது எனப்படுவர். மூன்றாவதாக ரோம பாதன். இவன் விதர்ப குல நந்தனனாக ஆனான். ரோமபாதனின் மகன் பப்ரூ. பப்ருவுக்கு க்ருதி என்ற மகன். அவன் மகன் உசிகன். அவனிடம் சேதி, அவன் வம்சத்தினர் சைத்யா: எனப்பட்டனர்.
க்ரது என்பவனுக்கு குந்தி, மகன் த்ருஷ்டி, அவனுக்கு நிர்வ்ருத்தி. அதன் பின் தசார்ஹன், அவனுக்கு வ்யோமன் என்பவன் மகன். மற்றும் ஜீமூதன், அவனுக்கு விக்ருதி, விக்ருதி மகன் பீமரதன். கரம்பி என்பவன் சகுனியின் மகன். தேவராதன் அவன் மகன். தேவ க்ஷத்ரன் அவன் மகன். அவனுடைய மகன் மது:, குருவசன் என்பவனின் மகன் அனு:. புருஹோத்ரன் என்பவன் அணு என்பவனின் மகன். அவனுக்கு ஆயு, சாத்வதன், பஜமானன், பஜி, திவ்யன், வ்ருஷ்ணி, தேவாவ்ருதனுக்கு அந்தகன். (अन्धक:)
சாத்வதனின் மகன் கள்: ஏழு பேர். மஹா போஜனுக்கு மாரிஷன், பஜமனுக்கு நிம்லோசி:, கிங்கின, த்ருஷ்டி. என்பவர்கள். இது ஒரு மனைவியிடம். மற்றொரு மனைவியிடம் மூவர். சதாஜித், சஹஸ்ராஜித், அயுதாஜித் என்பர்.
பப்ரு தேவாவ்ருதனின் மகன். இவர்களைப் பற்றி ஒரு சொல்லாடல் உண்டு. ‘ தூரத்தில் இருந்து எப்படி கேட்கிறோமோ, அதே போல அருகிலும் காண்போம்’ என்பதாக. பப்ரு மனிதர்களில் ஸ்ரேஷ்டன் எனப் பெயர் பெற்றான். தேவாவ்ருதன், தேவர்களுக்கு சமமாக இருந்தான். இவர்கள் வம்சத்தினர் அறுபத்தைந்துஆயிரம், அதன் பின்னும் ஆறாயிரம் அம்ருதத்வம்- மரணமில்லாத தன்மையை அடைந்தனர்.
மஹாபோஜன் தர்மாத்மா. அவன் வம்சத்தினர் போஜா எனப்பட்டனர். விஷ்ணுவின் மகன் சுமித்ரன், யுதாஜித் யுதாஜித் மகன் சினி, அவனுக்கு அனமித்ரன், அவனுக்கு நிம்னன். சத்ராஜித்துக்கு ப்ரசேனன், நிம்னனுக்கு ஆப்யாயசது:. அனமிதனின் மற்றொரு மகன் சினி, அவனுக்கு சத்யகன். யுயுதான:, சத்யகி அவன் மகன் சாத்யகி. அவனுக்கு ஜயன், அவனுக்கு குணி, யுகந்தரன், அனமிதனின் மகன், விஷ்ணி; என்ற மற்றொரு மகன்.
ஸ்வாபல்கன், சித்ர ரதன், காந்தினீ என்பவளிடம் பிறந்தனர். அக்ரூரர் முதலான பன்னிரண்டு பேர் புகழ் பெற்றனர். ஆசங்கன், சாரமேயன், ம்ருதுரன், ம்ருதுவித்கிரி, தர்மவ்ருத்தன், சுகர்மா, க்ஷேத்ர, உபேக்ஷோ அரி மர்தனன். சத்ருக்னன், கந்தமாதன், ப்ரதிபாஹு என்று பன்னிரெண்டு பேர். அவர்கள் சகோதரி சுசீரா என்பவள். அக்ரூரருக்கு தேவவான், உபதேவன் எனபவர்கள் சித்ர ரதாவின் மகன்கள். ப்ருது, விதூரதன் ஆத்யா என்று வ்ருஷ்ணி வம்சத்தினர் பலர். குகரன், பஜமானன், சுசி, கம்பல பர்ஹி என்பவன் மக்கள். குகரன் மகன் வஹ்னி. அவன் தனயன் விலோமன். கபோதரோமா என்பவனுக்கு அனு: அவன் தும்புருவின் சகா. அந்தகனுக்கு துந்துபி.அவனுக்கு அவித்யோதன், புனர்வசு என்பவர்கள். அவனுக்கு ஆஹுகீ என்ற மகள். வைவாஹுகா , தேவகன், உக்ரசேனன், என்று நால்வர் தேவகன் மக்கள்.
தேவன், உபதேவன், சுதேவன், தேவ வர்தனன், அவர்களுக்கு ஏழு சகோதரிகள். த்ருததேவா, சாந்தி தேவா, உப தேவா, ஸ்ரீ தேவா, தேவ ரக்ஷிதா, சஹதேவா, தேவகீ முதலானோர். தேவகியை வசுதேவர் மணந்தார்.
கம்சன், சுனாமன், ந்யக்ரோத:, கங்கன், சங்கு, சுஹூ, ராஷ்டபாலன், ஸ்ருஷ்டி, துஷி, மானா, உக்ர சேனர் புதல்வர்கள். கம்சா, கம்சவதி, கங்கா, ஸுர்பூ, ராஷ்ட்ரபாலிகா, உக்ரசேனரின் பெண்கள், வசுதேவருடைய சகோதரிகள்.
ஸூரன், விதூரதன் மகன். அவனுக்கு பஜமான என்ற மகன். அவனுக்கு சினி, அவனுக்கு போஜனே மகனாக ஹ்ருதீகன் அவன் மகன் என்பர். தேவ பாஹு, சத தனு:. க்ருத வர்மா என்று அவன் மக்கள். தேவமீடனின் மகன் ஸரன் என்பவனுக்கு மரீஷா என்பவள் பத்னியானாள். அவளிடம் பத்து பிள்ளைகள். அனைவரும் குணவான்களாக இருந்தனர். வசு தேவன் தேவ பாகம், தேவ ஸ்ரவ, சமானக, ஸ்ருன்ஞ்சய ஸ்யாமக, கங்க, ஸமீக, வத்சக, வ்ருக, என்பவர்கள். வசுதேவன் பிறந்த பொழுது தேவதுந்துபி முழங்கியது என்பதால் வசுதேவர் ஆனக துந்துபி எனப்பட்டார்.
ஆனக துந்துபியான வசுதேவர் ஸ்ரீ ஹரியின் ஸ்தானமாக சொல்வர். ப்ருதா, ஸ்ருத தேவா, ஸ்ருத கீர்தி, ஸ்ருத ஸ்ரவா: ராஜாதி தேவீ, என்று சகோதரிகள் ஐவர். குந்தனின் சகாவின் சிறிய தந்தை ஸூரன், அவனுக்கு சந்ததி இல்லை என்பதால் ப்ருதாவை தத்து கொடுத்தார்.
துர்வாசர் ஒருசமயம் அவளிடம் மகிழ்ந்து பரிசாக தேவஹூதீ -தேவனை அழைக்கும் மந்திரம்- என்ற வித்யையை கொடுத்தார். அதனுடைய வீர்யத்தை பரீக்ஷை செய்ய முயன்றவள், ஸூரியனைப் பார்த்து வா என்றழைத்தாள். உடனே வந்து விட்ட தேவனைக் கண்டு அதிசயித்தவள், எனக்கு நம்பிக்கை வர ப்ரயோகித்தேன், மன்னித்து விடுங்கள் தயவு செய்து போங்கள் எனவும், என் தரிசனம் அமோகமானது தேவி. உன்னிடத்தில் என் மகனை ஸ்தாபிக்கிறேன். உன் யோனியும் அதனால் களங்கமாகாது. நான் பொறுப்பு, சுமத்யமே! அழகிய பெண்ணே! பயப்படாதே என்று சொல்லி அவள் உடலில் கர்பத்தைக் கொடுத்து விட்டு ஸூரியன் தேவ லோகம் சென்று விட்டான். உடனேயே ஸுரியனுக்கு சமமான ப்ரகாசமான மகனும் பிறந்து விட்டான்.
லோகாபவாதத்துக்கு பயந்து அந்த குழந்தையை நதி தீரத்தில் விட்டு விட்டாள். உன் பாட்டனார் பாண்டு அவளை மணந்தார்.
ஸ்ருததேவன் என்பவன் காரூஷன் மகளான வ்ருத்த சர்மா, என்பவளை மணந்தார். அவளுக்கு தந்தவக்த்ரன் பிறந்தான். அவன் திதியின் மகன், ரிஷியினால் சபிக்கப் பட்ட வைகுண்ட காவலரில் ஒருவன்.
கைகேயனுக்கு த்ருத கேது, அவனுக்கு ஸ்ருத கீர்த்தி, சந்தர்தநா என்ற இருவர். சந்தர்தனா என்பவளிடம் பிறந்த ஐவர், கைகயா: எனப்பட்டனர்.
ராஜாதிதேவி என்பவளிடம் அவந்தி ராஜனிடம் ஜயசேனன், அஜனிஷ்ட என்பவர்கள் பிறந்தனர். தமகோஷன் என்ற சேதி ராஜன் ஸ்ருத ஸ்ரவஸா என்பவளிடம் சிசுபாலனைப் பெற்றான். தேவ பாகன் கம்சா என்பவளிடம் , சித்ரகேதுவிடம் ப்ருஹத்பல என்பவர்களையும் கம்சவதி என்பவளிடம் தேவ ஸ்ரவஸ் சுவீர, இஷுமான் என்ற புதல்வர்கள். கங்கா (कन्ङ्गा) என்பவளிடம் ஆனகருக்கு பிறத்தவன் சத்ய ஜித், புருஜித் இருவரும்.
ராஷ்ட்ர பாலீ என்பவளிடம் ஸ்ருன்ஞ்சயன், வ்ருஷ, துர்மர்ஷ்ண, ஹரி கேச, ஹிரண்யாக்ஷ என்பவர்கள், ஸூரபூமி என்பவளிடம் ஸ்யாமகன். மிஸ்ர கேசி என்ற அப்சரசிடம், வ்ருக முதலானோர், வத்சகன் என்பவர்கள், தக்ஷ, புஷ்கர ஸாலா என்பவர்கள், துர்வார்க்ஷீ என்பவளிடம் வ்ருகனுக்கு பிறந்தனர்.
சுமித்ரா, அர்ஜுன பாலன் இருவர்களையும் ஸமீகா என்பவளிடம், சுதாமினீ கங்க இருவரும் கர்ணிகாவிடம் ருத தாம, ஜயா இருவரும். பௌரவீ, ரோஹிணீ, பத்ரா, மதிரா, ரோசனா, இலா, தேவகீ முதலானவர்கள், ஆனக துந்துபியின் மனைவிகள். பலம், கதம், சாரணம் , துர்மதம், விபுலம், த்ருவம் இவர்கள் வசுதேவருக்கு ரோஹிணியிடம் பிறந்தனர். மற்றும் க்ருத முதலானோர்.
சுபத்ரோ, பத்ர வாஹன், துர்மதன், பத்ரன், பௌரவ்யா என்பவளின் தனயர்கள். பூதாதி முதலான பன்னிரண்டு பேர்.
நந்த, உப நந்த, க்ருதக. ஸூரன் முதலானோர், மதிராவின் புதல்வர்கள். கோசல தேசத்து பத்ரா – கௌசல்யா என்ற வசுதேவரின் மனைவி குல நந்தனனாக கேசீ என்ற ஒரே ஒரு மகனைப் பெற்றாள்.
ரோசனா என்பவளிடம் ஹஸ்த ஹேமாங்கதன் முதலானோர். இளா என்பவளிடம் உரு வல்க முதலானோர், இவர்கள் அனைவரும் யது குலத்தில் முக்கியமானவர்கள்.
விப்ருஷ்டன் த்ருத தேவா என்பவளிடம், ஆனக துந்துபி சாந்திதேவா என்பவளிடமும், ஸ்ருத ப்ரதிசுத முதலானோர்.
அரசர்கள், கல்மவர்ஷ முதலானோர், உப தேவன் என்பவனின் மக்கள் பத்து பேர். வசுஹம்ஸ, சுவம்ஸன் முதலானோர், ஸ்ரீதேவா என்பவளிடம் ஆறு புதல்வர்கள்.
தேவ ரக்ஷிதா என்பவளிடம் ஒன்பது, கगदन्தன் முதலானோர், சஹதேவா என்பவளிடம் எட்டு குழந்தைகள்.
புரு விஸ்ருத முக்ய என்பவர்கள் வசுக்கள் போல சாக்ஷாத் தர்மமே உருவாக இருப்பது போல இருந்தனர்.
வசுதேவர், தேவகியிடம் எட்டு குழந்தைகளைப் பெற்றார். கீர்த்திமான், சுஷேணன், பத்ர சேநன், உதாரதீ:, ருஜு, சம்மர்தனன், பத்ரன், சங்கர்ஷணன்- இவனும் பகவானின் அம்சமாக பிறந்தவன். எட்டாவது மகனாக ஸ்ரீ ஹரி தானே அவதரித்தான். சுபத்ரா, உன் தந்தை வழி உறவினள், அத்தை அவளும் ஸ்ரீஹரியின் அம்சமே.
யதா யதா இஹ தர்மஸ்ய க்ஷயோ, வ்ருத்திஸ்ச பாப்மன: | ததா து பகவானீஸ, ஆத்மானம் ஸ்ருஜதே ஹரி: ||
இவருடைய அவதாரத்துக்கு காரணம் தேவையில்லை. இவர் செயல்களுக்கும் அதே போல எதுவும் காரணமல்ல. ஆத்ம மாயா என்பது தவிர, பகவானின், தன்னையறிந்த அறிஞர்களும் அவரிடம் எதையும் காண்பதில்லை. அவருடைய எந்த மாயை மனிதனை ஆட்டுவிக்கிறதோ, ஸ்திதி, உத்பத்தி, லயம் என்பதை சூழ்ந்து நிற்கிறதோ அதுவே அவர் அனுக்ரஹம். தன் விருப்பம் போல தன் மாயையால் ஆட்டுவிக்கிறார்.
அக்ஷௌஹிணீ கணக்கில் சேனைகள் உள்ள மாபெரும் அசுரர்கள், பூமி முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டு, பாரம் மிகுந்ததாக செய்து கொண்டிருந்தனர். தேவர்கள் வேண்டிக் கொண்டதால், பல விதமான காரியங்களைச் செய்தார். சங்கர்ஷணனும் பகவான் மதுசூதனனே. கலி காலத்தில் பிறக்கப் போகும் துக்கம், சோகம் தாமசமான அறிவு இவற்றை அழிக்கவும், அனுக்ரஹம் செய்யவும் பக்தர்களுடைய நல்வினைப் பயனாக அவதரித்து புகழ் எய்தினார். எவருடைய காதுகளில், இவருடைய சரித்திரம் என்ற அம்ருதம் ஒரு முறை நிரம்பினாலும் , கைகள் அஞ்சலி செய்து, அவருடைய சரித்திரம் என்ற தீர்த்தத்தை ஸ்பர்சித்தாலும், வினைப் பயன்கள் அடியோடு நீங்கப் பெறுவர்.
போஜ, வ்ருஷ்ணி, அந்தக, மது, ஸூரசேன, தசார்ஹகர்கள், பாராட்டுக்குரியவர்கள் எப்பொழுதும் குரு, ஸ்ருன்ஞ்சய பாண்டு முதலானோர். பரிவுடன் மென் முறுவலுடன், கண்களால் கடாக்ஷித்தும், உதார வாக்யங்களால் விக்ரம லீலைகளால், மனித உலகில் ரசிக்கும் படி, மனம் மகிழ்ந்து இருக்கும் படி, தன் ஸ்வரூபத்தால், சர்வாங்கமும் அழகிய மூர்த்தியால் சுற்றி உள்ளவர்கள் ஆனந்தமாகவே இருக்கச் செய்தார்.
எவருடைய முகம் அழகிய கர்ண ஆபரணமான , மகர குண்டலங்களின் ஒளி கன்னங்களில் ப்ரதி பலிக்க,, அழகிய மனம் கவரும் மென் சிரிப்பு, நித்யோத்ஸ்வமாக காண்பவர்கள் கண்களால் பருகுவது போல கண்டும் திருப்தியே அடைவதில்லையோ, நாரிகளும், நரர்களும், மகிழ்ச்சியுடன் , தங்கள் இமைகளைத்தான் குற்றம் சொல்வர், இடை இடையே மறைக்கிறது என்பதால்.
பிறந்தவுடனேயே தந்தையின் இருப்பிடத்திலிருந்து வ்ரஜ தேசம் சென்றார். அங்கும் எதிரிகளை அழித்து, நூறு மகன்களையும், அனுகூலமான மனைவிகளையும் அவர்களைக் கொண்டு புருஷ க்ரது- யாகங்களைச் செய்வித்து, தன்னையும் தன் நிகமங்களையும் உலக மக்களிடையே ப்ரசித்தமாக பரவும் படி செய்தார்.
பூமியின் தாங்க முடியாத பெரும் பாரம், அதைக் குறைத்தார். குரு வம்சத்தில் கிளம்பிய கலியின் காரணமாக பெரும் யுத்தமும், அரசர்கள் கூட்டம் கூட்டமாக மடிவதையும், தன் அகக் கண்ணால் முன் கூட்டியே கண்டவர் போல, விஜயனுக்கு ஜயம் என்ற ஞானோபதேசம் செய்து, உத்தவருக்கு அருள் உபதேசம் செய்து தன் வைகுண்ட தாமம் திரும்ப வந்து சேர்ந்தார்.
( இதுவரை ஸ்ரீமத பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தின் ஸ்ரீ ஸுர்ய, சோம,அனுவம்ச கீர்த்தனம் என்ற இருபத்து நான்காவது அத்யாயம்.)
|| ஒன்பதாவது ஸ்கந்தம் இத்துடன் நிறைவுறுகிறது ||
|| ஓம் தத் சத் ||